Go Back

08/12/20

நறவ நிறை வண்டு - பாடல் 1


நறவ நிறை வண்டு - பாடல் 1


நறவ நிறை வண்டு அறை தார்க் கொன்றை நயந்து நயனத்தால்

சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழி செய்தான்

புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று எரி செய்த

இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

விளக்கம் :

நறவம்=தேன்; அறை=ஒலிக்கின்ற; தார்=மாலை; நயந்து=விரும்பி; நயனம்=கண்; இங்கே நெற்றிக்கண்; சுறவம்=மீன்; பொடி=சாம்பல் பொடி; வண்=சிறந்த; செறி=நெருங்கிய, சென்று அடைந்த; மன்மதன் மீனக்கொடியினை உடையவன். அறவன்=நீதியே தனது உருவமாக கொண்டுள்ள இறைவன்; தனது இந்த பதிகத்தில் மன்மதன் மற்றும் திரிபுரத்து அரக்கர்களை சுட்டெரித்து சாம்பலாக மாற்றிய செயல் குறிப்பிடப் படுகின்றது. ஐம்புலன்களை வென்ற இறைவனின் தவம் மன்மதனின் கணைகள் எந்த விதத்திலும் பாதிக்கக் முடியாது. எனினும் தவத்தினில் ஆழ்ந்து இருக்கும் எவரையும் அணுகி துன்புறுத்துதல் தவறு என்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் மன்மதனை இறைவன் எரித்தாரோ என்று தோன்றுகின்றது. அழித்த செயல்கள் ஆயினும் இரண்டு செயல்களும் தருமத்தின் வழியே நின்று செய்யப் பட்டமையால் புண்ணியமே வடிவமாக உள்ள இறைவன் என்று இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை :

தேன் நிறைந்ததால் வண்டுகள் சூழ்ந்து கொண்டு ரீங்காரம் செய்யும் தன்மையை உடைய கொன்றை மாலையினை விரும்பி அணிந்தவன் பெருமான்; சுறா மீன் உருவம் பொருந்திய கொடியினை உடைய மன்மதனின் உடல் சாம்பல் பொடியாக மாறும் வண்ணம் தனது நெற்றிக் கண்ணினை விழித்தவன் பெருமான். புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தினை சிறந்த உறைவிடமாக கருதி குடிகொண்டுள்ள இந்த இறைவன், வேதநெறியை மதியாது வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவன் ஆவான். புண்ணியமே வடிவமாக உள்ள இந்த இறைவன், தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Naravam Nirai Vandu
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
நறவ நிறை வண்டு - பாடல் 1


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: