Go Back

22/03/21

மடையில் வாளைபாய - பின்னணி


மடையில் வாளைபாய


தோடுடைய செவியன் என்றும் நறவநிறை வண்டு என்றும் தொடங்கும் பதிகங்களை பாடிய தனக்கு ஞானப்பால் அருளிய அன்னையையும், அதற்கு காரணமாக இருந்த தந்தையரையும் நினைத்தவாறே அன்றிரவு உறங்கிய திருஞானசம்பந்தர் அடுத்த நாள் பொழுது விடிந்ததும் திருக்கோயிலுக்கு சென்று தனது தந்தையும் தாயும் ஆகிய பெருமானையும் பிராட்டியையும் வணங்கினார் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பின்னர் அவர்கள் இருவரையும் வணங்கிய பின்னர் அருகிலுள்ள திருக்கோலக்கா தலம் சென்று ஆங்குள்ள இறைவனை தரிசிக்க விருப்பம் கொண்டார். இந்த விருப்பம் இறைவனின் திருவருளால் தோன்றியது. சீர்காழி தலத்திலே நிலையாக் தங்கியிராமல், பல தலங்களுக்கும் சென்று திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்கள் பாட வேண்டும் என்று இறைவன் திருவுள்ளம் கொண்டார் போலும். மேதகை=மேன்மை பொருந்திய; வெளியே=வெளிப்பட்டு; போத முலை=சிவஞானம் கலந்த பாலினைச் சுரந்த முலை; முன் வணங்கி போற்றி=கோலக்கா தலத்திற்கு செல்வதற்கு முன்னர் வணங்கி; திருக்கோலக்கா தலம் சென்றது திருஞான சம்பந்தரின் முதல் தலயாத்திரை. ஒவ்வொரு தலயாத்திரை மேற்கொள்ளும் முன்னரும், பயணத்தினை முடித்துக் கொண்டு திரும்பி வந்த பின்னரும், சீர்காழி தலத்து இறைவனையும் இறைவியையும் வணங்குவது பிள்ளையாரின் பழக்கமாக இருந்து வந்ததை இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது.

காதலுடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து

வீற்றிருந்த தங்கள்

தாதையாரையும் வெளியே தாங்கரிய மெய்ஞானம்

தம் பால் வந்து

போத முலை சுரந்தளித்த புண்ணியத் தாயரையும் முன்

வணங்கிப் போற்றி

மேதகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச

விருப்பில் சென்றார்.

இவ்வாறு சீர்காழி தலத்து அண்ணலையும் பிராட்டியையும் திருஞானசம்பந்தர் தந்தையாகவும் தாயாகவும் கருதினார் என்று சேக்கிழார் கூறுவது நமக்கு சம்பந்தர் வலிவலம் தலத்தின் மீது அருளிய தேவாரப் (1.50.7) நினைவூட்டுகின்றது. சிவஞானிகள் பலராலும் ஆராயப்படும் தன்மையினை உடைய பெருமானை அன்புடன் சிந்திக்க தனது மனம் பெருவிருப்பம் கொள்கின்றது என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் இறைவனை சிந்திக்கவொட்டாமல் ஐந்து பொறிகளும் செய்யும் மாயத்தைக் குறித்து தான் அஞ்சுவதாகவும் இந்த பாடலில் கூறுகின்றார்.

தாயும் நீயே தந்தையும் நீயே சங்கரனே அடியேன்

ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது

உள்ளம்

ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல்

ஒட்டார்

மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே

தான் சென்ற வழியில் அலைகள் பெருக ஓடும் காவிரி ஆற்றின் வாய்க்கால்களில் மங்கையர்கள் குடைந்து நீராடுவதை சம்பந்தர் கண்டார் என்று சேக்கிழார் கூறுகின்றார். பின்னர் கோலக்கா தலத்தில் பெருமான் குடி கொண்டுள்ள திருக்கோயிலினை வலம் வந்த மூன்று வயதுக் குழந்தை, தனது கைகளால் தாளமிட்டவாறு பெருமானின் புகழினை மடையில் வாளை என்று தொடங்கும் பதிகத்தினை பாடத் தொடங்குகின்றது. தேவாரப் பாடல்கள் இசைப் பாடல்களின் அமைப்பினில் அமைந்தமையால் பாட்டின் இசைக்கு ஏற்ப, கைகளை தட்டியும் நிறுத்தியும் எடுத்தும் குழந்தை தாளமிட்டது என்பதை சேக்கிழார், கைந்நிறைந்த ஒத்து அறுத்து என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். ஒத்து=தாளம், இசையுடன் இணைந்த குரலுக்கு பொருந்திய வண்ணம் கைகளை தட்டுதல். வேணி=சடை;

மெய்ந் நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் விழுப்

பொருளை வேணி மீது

பைந் நிறைந்த அரவுடனே பசுங்குழலித் திங்கள் பரிந்து

அருளுவானை

மைந் நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய

என்னும் வாக்கால்

கைந் நிறைந்த ஒத்து அறுத்துக் கலைப் பதிகம் கவுணியர்

கோன் பாடும் காலை

மேற்கண்ட பாடலில் கூறிய வண்ணம் சம்பந்தர் தான் பாடும் பாடலுக்கு ஒத்த வகையில் தாளமிட்டு வருவதைக் பெருமானின் திருவுள்ளத்தில் அன்பு கசிந்தது போலும். தனது கைகளில் தாளம் இன்றி, கைகள் வலிக்கும் வண்ணம் சிறு குழந்தை கைகளால் தாளமிட்டு வருவதை கண்டு இரக்கம் கொண்ட பெருமான், சிறுவனின் கைகளில், பொற்றாளம் வந்து பொருந்துமாறு அருள் புரிந்தார். அந்த தாளத்தில், நமச்சிவாய மந்திரம் பொறிக்கப் பட்டிருந்தது என்று சேக்கிழார் கூறுகின்றார். செய்ய சடை வானவர்=சிவந்த சடையினை உடைய பெருமான்;

கை அதனால் ஒத்தறுத்துப் பாடுதலும் கண்டருளிக்

கருணை கூர்ந்த

செய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும் எழுதிய

நற்செம் பொற்றாளம்

ஐயரவர் திருவருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த

அளவால் ஒத்த

வையம் எலாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத்தலத்து

வந்தது அன்றே

இறைவனின் அருளினால் தனது கைகளில் வந்து பொருந்திய தாளம் கண்டு மகிழ்வுற்று அந்த தாளம் இறைவன் அருளினால் வந்தது என்பதை உணர்ந்து கொண்ட ஞானக்குழந்தை, அந்த தாளத்தினை முதலில் தனது தலை மீது வைத்துக்கொண்டு கொண்டாடிய பின்னர், இறைவனின் அருளினை வெளிப்படுத்தும் வகையில் தகுந்த முறையில் கடைக்காப்பு பாடி பதிகத்தினை முடித்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திருத்

தாளக் கருவி கண்டு

வாழிய தம் திருமுடி மேல் கொண்டு அருளி மனம்

களிப்ப மதுர வாயில்

ஏழிசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப்

பதிகம் எய்தப் பாடித்

தாழு மணிக் குழையார் முன் தக்க திருக்கடைக்

காப்பு சாத்தி நின்றார்

சீர்காழி தலத்திற்கு தென்மேற்கில் இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள தலம் தற்போது தாளமுடையார் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. பண்டைய காலத்தில் இறைவனை மாசிலா நாயகர் என்றும் இறைவியை பெரிய நாயகி என்றும் அழைத்தனர் என்று ஊரார் கூறுகின்றனர். சம்பந்தப் பெருமானுக்கு இறைவன் தாளம் தந்தருளிய பின்னர், இறைவனை தாளபுரீசுவரர் என்றும் அம்மையை ஓசை கொடுத்த நாயகி என்றும் அழைக்கின்றனர். சம்பந்தர் தனது பதிகத்தில் இறைவனின் பெயரையோ இறைவின்யின் பெயரையோ எங்கும் குறிப்பிடவில்லை. பொதுவாக தங்கத்தால் செய்யப்பட்ட தாளத்தில் ஓசை எழாது. ஆனால் இந்த தாளத்தில் ஓசை எழுந்ததும் ஒரு அதிசயம் ஆகும். இந்த பதிகம் தக்கராகத்தில் பாடும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த முன்னுரையுடன் நாம் சம்பந்தப் பெருமான் அருளிய பதிகத்தின் பாடல்களை இப்போது சிந்திப்போம்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Madaiyil Vaalai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

மடையில் வாளைபாய - பின்னணி


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: