Go Back

22/03/21

மடையில் வாளைபாய - பாடல் 1


மடையில் வாளைபாய - பாடல் 1


மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கை கோலக்கா உளான்

சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்

உடையும் கொண்ட உருவம் என் கொலோ

விளக்கம்:

மடை=வாய்க்கால்களில் நீரைத் தேக்கி வைத்து, அந்த வாய்க்கால்களில் மடைகள் கட்டி தேவையான வயல்களுக்கு ஆற்றுநீரினை பாய்ச்சுவது வழக்கம்; இவ்வாறு மடைகளால் இயக்கப்படும் வாய்க்கால்களையும் மடை என்று அழைப்பது வழக்கம். சடை பிறை சாம்பல் பூச்சு மற்றும் கீளுடை என்பன பெருமானின் அடையாளங்கள்; குடையும்=குடைந்து நீராடும்; இறைவனது பற்றற்ற தன்மையை குறிக்கும் விதத்தில் மெய்யில் சாம்பல் பூசி கோவண ஆடை அணிந்திருக்கும் நிலையை நமக்கு இந்த பாடல் உணர்த்துகின்றது. மாதர்கள் குடைந்து விளையாடும் பொய்கைகள் கொண்ட தலம் என்று குறிப்பிட்டு, அந்த தலத்திலும், வாசனைப் பொடிகள் பூசி பட்டாடை உடுத்தி ஒய்யாரமாக இல்லாமல் பற்றின்றி விளங்கும் ஈசனை குறிக்கும் சம்பந்தப் பெருமான் இறைவன் ஏன் அவ்வாறு இருக்கிறான் என்ற கேள்வியை கேட்டு, இறைவனது பற்று அற்ற நிலை தான் காரணம் என்ற விடையை நமக்கு சொல்லாமல் சொல்லி விளக்கும் நேர்த்தியை இந்த பாடலில் நாம் காணலாம். எல்லாம் இருந்தும் தான் பற்று அற்ற யோகியாக இருப்பதன் மூலம் உயிர்களுக்கு யோக நெறி காட்டி விடுதலை பெறுவதற்கான வழியையும் காட்டும் தலைவன் என்று பரமனை குறிப்பதை நாம் உணரலாம். கீள் என்றால் கிழிக்கப்பட்டது என்று பொருள். எனவே கீள் என்பதற்கு இடையில் கட்டியுள்ள துணியாலான கயிறு என்று பொருள் கொள்வதே பொருத்தம். சில பதிப்புகளில் கீழ் என்று உள்ளது. அது பொருத்தமற்றது. கீளுடை என்பது அந்த துணிக்கயிற்றுடன் சேர்ந்த கோவண ஆடையைக் குறிக்கும். தான் பற்றற்ற கோலத்தில் இருப்பதன் மூலம், உயிர்களும் உலகப் பொருட்கள் மற்றும் உலகிலுள்ள உயிர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள பற்றினை நீக்கி, இனிமேலும் பாசத்தால் பற்றால் ஏற்படும் வினைகளை தவிர்த்து, தன்னை வந்தடையும் பக்குவத்தைப் பெற வேண்டும் என்ற பெருமானின் விருப்பம் இந்த நிலை மூலம் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

நீரினை தேக்கி வைத்து வெளியிடும் மடைகளில் வாளை மீன்கள் துள்ளி விளையாட அந்த மீன்களைப் போன்று தங்களது கைகளால் நீரினைக் குடைந்து குடைந்து பெண்கள் நீராடும் நீர்நிலைகள் நிறைந்த கோலக்கா தலத்தில் இறைவன் இருக்கின்றான். தனது சடை முடியினில் பிறைச் சந்திரனை ஏந்திய வண்ணம் உள்ள பெருமான் தனது திருமேனியில் சாம்பலைப் பூசியவாறும் இடுப்பினில் கீளும் கோவணா ஆடையும் அணிந்தவாறு இருப்பதன் காரணம் புரியவில்லையா. இந்த கோலம் பெருமானின் பற்றற்ற நிலையினை உணர்த்துகின்றது. நீங்களும் உங்களது பற்றினை நீக்கிக் கொண்டு மெய்ப்பொருளை உணர்ந்து, வினைகளைக் கழித்துக் கொண்டு வீடுபேறு அடைவதற்கான நிலையினை அடைய வேண்டும் என்பதே பெருமானின் விருப்பம் ஆகும்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Madaiyil Vaalai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

மடையில் வாளைபாய - பாடல் 1


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: