Go Back

22/03/21

மடையில் வாளைபாய - பாடல் 2


மடையில் வாளைபாய - பாடல் 2


பெண் தான் பாகமாகப் பிறைச் சென்னி

கொண்டான் கோலக்காவு கோயிலாக்

கண்டான் பாதம் கையால் கூப்பவே

உண்டான் நஞ்சை உலகம் உய்யவே

விளக்கம்:

இறைவன் இருக்கும் நிலையினை முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், பெருமானுடன் இணை பிரியாது இருக்கும் தேவியின் நிலையினை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெண்மையை மதித்து பெண்மைக்குத் தனது உடலில் ஒரு பாகத்தை அளித்த தன்மையையும், பிறைச் சந்திரனுக்கு அபயம் அளித்ததையும் இந்த பாடல் குறிப்பிடுகின்றது. தக்கனது சாபத்தினால் பிறைகள் ஒவ்வொன்றாக கழிந்து ஒற்றைப் பிறையுடன் அழிந்து கொண்டிருந்த நிலையில் தன்னைச் சரணடைந்த பிறைச் சந்திரனுக்குத் தனது சடையில் இடம் கொடுத்து அபயம் அளித்த நிகழ்ச்சி பெருமானின் வல்லமையையும் அவரது கருணையையும் குறிப்பிடுகின்றது. உலகினை காக்கும் பொருட்டு கொடிய விடத்தினை உண்ட தியாகச் செயலும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் பற்றற்ற நிலையினையும் எளிமையான கோலத்தையும் குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில், அவனது ஆற்றல், கருணை, மற்றும் தியாக உணர்வினையும் இந்த பாடலில் குறிப்பிட்டு இறைவனின் பெருமையை உணர்த்துகின்றார். மேலும் பெருமானின் பற்றற்ற நிலை அவரது இயலாமையால் அல்ல என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.

பொழிப்புரை:

தனது மனைவியாகிய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான், தனது சடையில் பிறைச் சந்திரனையும் வைத்துள்ளான். அவன் திருக்கோலக்கா தலத்தில் உள்ள கோயிலைத் தான் உறையும் இடமாக கொண்டுள்ளான். பாற்கடலில் விடம் பொங்கி எழுந்த போது அதன் தாக்கத்தினை தாங்க முடியாமல் தவித்த தேவர்கள், தனது திருப்பாதங்களைத் தங்களது (தேவர்களது) கையினால் தொழுவதைக் கண்ட பெருமான்], உலகம் உய்யும் பொருட்டு அந்த விடத்தினைத் தானே உட்கொண்டான்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Madaiyil Vaalai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

மடையில் வாளைபாய - பாடல் 2


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: