Go Back

22/03/21

மடையில் வாளைபாய - பாடல் 6


மடையில் வாளைபாய - பாடல் 6


வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்

கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்

கொடிகொள் விழவார் கோலக்காவுள் எம்

அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே

விளக்கம்:

வெடிகொள் வினை=ஒரு வினையிலிருந்து மற்றொரு வினை கிளைத்தெழும் நிலை; நாம் பழைய பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள வினைகளின் தன்மையால் இந்த பிறவியில் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றோம். ஆனால் அந்த இன்ப துன்பங்களை அனுபவிக்கும் போது, நமது வினைகள் தாம் இந்த துன்பங்களுக்கு காரணம் என்பதை உணர்வதில்லை; அதற்கு மாறாக வினைகளின் கருவிகளாக துன்பங்களை விளைவிக்கும் மற்றவரை பழித்தும் வெறுத்தும் மேலும் பல வினைகளை தேடிக்கொள்கின்றோம் இதே போன்று இன்பங்களை அனுபவிக்கும் போது, நமது திறமையால் ஏற்பட்ட இன்பங்கள் எனக் கருதி யான் எனது என்ற செருக்கில் ஆழ்ந்து மேலும் பல வினைகளைத் தேடிக் கொள்கின்றோம். இவ்வாறு, முற்றிய தன்மையில் உள்ள வெண்டைக்காய் வெடித்துச் சிதறி பல செடிகளை உருவாக்குதல் போல ஒரு வினை மேலும் பல வினைகளுக்கு முதலாக இருந்து உயிர்களை என்றும் வினைக்குழியில் ஆழ்த்துகின்றன. இவ்வாறு சேரும் வினைகளை ஆகாமிய வினைகள் என்று கூறுவார்கள். வீட்ட=நீக்கிக்கொள்ள;

பொழிப்புரை:

வெடித்துச் சிதறும் முற்றிய காய்களும் கனிகளும் மேலும் பல புதிய செடிகள் உருவாவதற்கு காரணமாக இருப்பது போன்று, மேன்மேலும் பல வினைகளை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும் வினைகளை முற்றிலும் நீக்க விருப்பம் கொண்டுள்ளவர்களே, உங்களுக்கு, அந்த வினைகளை நீக்கிக்கொள்ளும் வழியினை நான் காட்டுகின்றேன்; நறுமணம் மிகுந்த கொன்றை மலர்கள் கலந்த சென்னியை உடையவனும், கொடிகள் கட்டப்பெற்று பல திருவிழாக்கள் நடைபெறும் திருக்கோலக்கா தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை சென்றடைந்து பணிந்து, உங்களது வினைகள் நீங்கப்பெற்று நலமுடன் வாழ்வீர்களாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Madaiyil Vaalai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

மடையில் வாளைபாய - பாடல் 6


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: