Go Back

05/12/20

தோடுடைய செவியன் - பாடல் 8


தோடுடைய செவியன் - பாடல் 8



வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த

உயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளம் கவர் கள்வன்

துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்

பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

வியர்=வேர்வை; வியர் என்ற சொல் அகலமான பண்பினை குறிப்பதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. இலங்கு=விளங்கும்; உலகில் உள்ள உயிர்கள் தங்களது வினைப் பயன்களைக் கழித்துக் கொள்ளும் போது இன்ப துன்பங்களை அனுபவிப்பதால் துயர் இலங்கும் உலகம் என்று குறிப்பிடுகின்றார். முற்றூழி காலத்தில் அனைத்து உயிர்களும் தன்னிடம் ஒடுங்கிய பின்னரும், மீண்டும் உலகினை தோற்றுவித்து தன்னிடம் ஒடுங்கிய உயிர்களை பெருமான் தோற்றுவிப்பது, உயிர்கள் பால் கருணை கொண்டுள்ள பெருமான் மீண்டும் ஓர் வாய்ப்பு அளிப்பது, அந்த உயிர்கள் தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினை உள்ளடக்கியது. இதனை உணர்த்தும் முகமாக பல ஊழிகள் தோன்றி அழிந்த பின்னரும் உலகம் மீண்டும் தோன்றி இயங்குகின்றது என்று கூறுகின்றார்.

இந்த பாடலில் இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. பொதுவாக தனது பதிகத்தின் எட்டாவது பாடலில் இந்த நிகழ்ச்சியை குறிப்பிடுவது திருஞான சம்பந்தரின் பழக்கம். தான் வாழும் கயிலை மலையையே பேர்த்து எடுக்கச் துணிந்த அரக்கன் இராவணனது வலிமை குன்றும் வண்ணம் மலையில் கீழே அடக்கி நெரித்தமையும் பின்னர் அரக்கன் தனது தவற்றினை உணர்ந்து சாமகானம் பாடியபோது அவனுக்கு அருள் புரிந்தமையும் இத்தகைய பாடல்கள் மூலம் உணர்த்தப் படுகின்றன. அப்பர் பிரானும் பெரும்பாலான பதிகங்களில் இந்த நிகழ்ச்சியைத் தனது கடைப் பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பின் நோக்கத்தை நாம் உணர்த்து கொள்ள வேண்டும். எவரையும் வெல்லும் ஆற்றல் உடையவர் பெருமான் என்பதும், பகைவனுக்கும் அருளும் கருணை நெஞ்சம் கொண்டவர் பெருமான் என்பதும், தனது தவறினை உணர்வோரை மன்னித்து அருள்பவர் பெருமான் என்பதும் இந்த குறிப்பு மூலம் உணர்த்தப் படுகின்றது. எனவே இந்நாள் வரை நாம் எந்த தவற்றினை செய்திருந்தாலும், இனி அந்த தவறுகளை செய்யாமல், இறைவனை வாழ்த்தி வணங்கினால் நமக்கும் இறையருள் கிடைக்கும் என்ற முக்கியமான செய்தியை தேவார ஆசிரியர்கள் இந்த குறிப்பு மூலம் எடுத்துரைக்கின்றனர். திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமான தேவாரப் பாடல்களில் இடம் பெரும் (அறுநூறு பாடல்களுக்கும் மேலாக) நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

தவறு செய்த உயிர்கள், தமது தவறினை பொறுத்திட வேண்டியும், இனிமேல் அந்த தவறினை செய்யாது இருப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் இறைவனை உள்ளன்போடு வேண்டினால் இறைவன் உயிர்களை மன்னித்து அருள்வான் என்பதை உணர்த்தும் பொருட்டு சம்பந்தரின் பதிகங்களில் எட்டாவது பாடல் அமைந்துள்ளது என்று சேக்கிழார் உணர்த்தும் பெரியபுராண பாடலை நாம் இங்கே காண்போம். பிழைத்தல்=தவறு செய்தல்

மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின்

கண் நுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட

எண்ணமிலா வல்லரக்கன் எடுத்து முறிந்து இசை பாட

அண்ணல் அவர்க்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார்

பொழிப்புரை

வியர்வை பெருகுவதும் மலை போன்று உயர்ந்ததும் ஆகிய தோள்களைக் கொண்டுள்ள அரக்கன் இராவணன், தனது வழியில் குறிக்கிட்டது என்று தவறாக கருதி கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, அவனது வலிமையை அடக்கிய பெருமான் எனது உள்ளத்தினைக் கவர்ந்தவர் ஆவார். உயிர்களுக்கு துன்பம் விளையும் இடமாக உள்ள இந்த உலகம் பலமுறை அழிந்து மீண்டும் தோன்றிய போதும், தான் அழியாமல் இருக்கும் பெருமையினை உடைய பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் உறையும், எனது பெருமைக்குரிய தலைவனே, எனது உள்ளத்தினைக் கவர்ந்த கள்வர் ஆவார். :

Tag :

#thirugnanasambandhar thevaram thiruppiramapuram
#Thodudaya seviyan
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
தோடுடைய செவியன் - பாடல் 8


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: