Go Back

22/03/21

வானத்துயர் தண்மதி


பின்னணி:

தனது ஐந்தாவது தல யாத்திரையாக திருவையாறு சென்ற திருஞானசம்பந்தர், அதன் அருகில் இருந்த பெரும்புலியூர், நெய்த்தானம், மழபாடி, கானூர், அன்பில் ஆலந்துறை, மாந்துறை ஆகிய பல தலங்கள் சென்ற பின்னர் பாச்சிலாச்சிராமம் தலத்திற்கு வருகின்றார். அங்கே அரசனாக விளங்கிய கொல்லி மழவனின் மகள் நீண்ட நாட்களாக முயலகன் என்ற நோயினால் பீடிக்கப்பட்டு வருந்தியதை அறிந்தார். உடனே பெருமானை துதித்து, அந்த இளம் பெண்ணை வருத்துவது பெருமானின் பண்புக்கு பொருந்திய செயல் அல்ல என்ற பொருள் பட, துணிவளர் திங்கள் என்று தொடங்கும் பதிகம் பாடி இறைவனிடம் வேண்ட, இறைவனும் அந்த பெண்ணுக்கு இருந்த நோயினைத் தீர்த்தார். இவ்வாறு பதிகம் பாடி, இறைவனின் அருளுடன் அதிசயம் நிகழ்த்திய ஞானசம்பந்தர் பின்னர் பைஞ்ஞீலி தலம் சென்ற பின்னர் ஈங்கோய்மலை சென்றார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். இந்த தலத்து இறைவனை வணங்கி பதிகம் பாடிய பின்னர், மேற்கு நோக்கி சென்றார் என்று சேக்கிழார் கூறுகின்றார். தேவர்கள் இறைவனை வந்து வணங்கும் இடம் ஈங்கோய்மலை என்று சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. நக்கீரர் அருளிய ஈங்கோய் எழுபது என்ற பதிகமும் (பதினோராம் திருமுறை) இந்த தலத்து இறைவனைப் புகழ்ந்து பாடப்பட்ட பதிகமாகும். அருகில் உள்ள சில தலங்களும், ஞானசம்பந்தர் சென்றதாக சேக்கிழார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அந்த தலங்களுக்கு உரிய பதிகங்கள் ஏதும் கிடைக்காமையால், அந்த தலங்கள் யாவை என்பன தெரியவில்லை.

செங்கண் குறவரைத் தேவர் போற்றும் திகழ்திரு ஈங்கோய்

மலையின் மேவும்

கங்கைச் சடையார் கழல் பணிந்து கலந்த இசைப் பதிகம்

புனைந்து

பொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்துள்ள தானங்கள்

எல்லாம் போற்றிக்

கொங்கில் குடபுலம் சென்று அணைந்தார் கோதில் மெய்ஞானக்

கொழுந்து அனையார்

திருச்சி சேலம் நெடும்பாதையில் முசிறி நகரத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம். கரூர் குளித்தலை ஆகிய இடங்களிலிருந்து சேலம் செல்லும் பேருந்துகள் இந்த தலம் வழியாக செல்கின்றன. மலை மேல் அமைந்துள்ள திருக்கோயில். திருச்சி மற்றும் நாமக்கல் ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது. மரகதமலை என்று மக்கள் அழைக்கின்றனர். திருவிங்கநாதமலை என்றும் அழைக்கப்படுகின்றது. பார்வதி தேவி இந்த தலத்தில் தவம் செய்து இறைவனை வழிபாட்டு, அவனது உடலில் இடது பாகத்தை வேண்டிப் பெற்றதால் சிவசக்தி மலை என்றும் அழைக்கப்படுகின்றது. இதனை உணர்த்தும் வண்ணம் இரட்டை மலையாக உள்ளது. சுமார் ஐந்நூறு படிகள் கொண்ட சிறிய குன்றின் மீது திருக்கோயில் அமைந்துள்ளது. உமையன்னை, திருமால், பிரமன், இந்திரன், அகத்திய முனிவர், நவசித்தர்கள், ஆகியோர் இறைவனை வழிபட்ட தலம். இறைவனின் திருநாமம் மரகதாசல ஈஸ்வரர், இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை; மூலவர் இலிங்கம் மரகதக் கல்லால் செய்யப்பட்டது. கரும்பச்சை நிறத்தில் மிகவும் அழகாக உள்ளது. மகாசிவராத்திரி அன்று சூரியனின் கதிர்கள் நேராக இலிங்கத்தின் மேல் விழும்போது, பலவித வண்ணங்களில் இலிங்கம் காணப்படும் காட்சி கண்ணைக் கவரும் காட்சியாகும். மூலவர் சுயம்பு மூர்த்தம். சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப் படுகின்றது. தேவியின் நிழல் விழுந்த இடம் என்பதால் சாயாபீடம் என்று அழைக்கப் படுகின்றது. சக்திபீடம் என்பதை உணர்த்தும் வகையில், இங்கே ஒரு லலிதாம்பிகை திருக்கோயிலும் காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான அடியார்கள் இறைவனைக் காண்பதற்கு காத்திருக்கையில் ஈயின் வடிவம் எடுத்து, பறந்து சென்று அகத்தியமுனிவர் வழிபட்டமையால் ஈங்கோய்மலை என்று பெயர் வந்ததாக கூறுவார்கள். அகத்திய முனிவர் வழிபட்ட விவரத்தினை சிறிய மாற்றத்துடன் தினமலர் வலைத்தளம் குறிப்பிடுகின்றது. இறைவனை வணங்குவதற்கு முன்னர் குளிக்கவேண்டும் என்று விரும்பிய அகத்திய முனிவர், குளித்துவிட்டு வரும் முன்னர் நடை சாத்தப்பட்டு விட்டதால் அவர் ஏமாற்றம் அடைந்தார். எப்படியாவது உடனே இறைவனைக் காணவேண்டும் என்ற முயற்சியில், தன்னை ஈயாக மாற்றிக்கொண்டு சன்னதியின் கதவில் உள்ள சாவித்துவாரம் வழியாக உள்ளே புகுந்து இறைவனை தரிசனம் செய்து வெளியே வந்த பின்னர், மீண்டும் தனது பழைய உருவம் பெற்றதாக இந்த வலைத்தளம் குறிப்பிடுகின்றது. இராமயண காவியத்தில் வரும் அரக்கன் கரன் வழிபட்ட தலமாக கருதப் படுகின்றது. தூஷணன் வழிபட்ட தலம் திருவெறும்பியூர் என்றும் திரிசிரன் வழிபட்ட தலம் திருச்சிராப்பள்ளி என்றும் கூறுவார்கள். கருவறை கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை உருவங்களை காணலாம். மகிடாசுரனை வதம் செய்யும் தோற்றத்தில் ஒரு துர்க்கை அம்மனும், சாந்த வடிவுடன் மற்றொரு துர்க்கை அம்மனும் இங்கே காட்சி தருகின்றனர். ஆதிசேடனுக்கும் வாயுதேவனுக்கு இடையே நடந்த போட்டியில் ஆதிசேடனின் தலையில் இருந்த இரத்தினக் கற்கள் சிதறி விழுந்த இடங்களில் இந்த தலமும் ஒன்றாக கருதப்படுகின்றது. சிவப்பு நிறத்துக்கல் அண்ணாமலையிலும், மரகதக்கல் ஈங்கோய்மலையிலும் மாணிக்கம் வாட்போக்கியிலும் நீலக்கல் பொதிகையிலும் வைரக்கல் பாண்டிக்கொடுமுடியிலும் விழுந்ததாக கூறுவார்கள். கிருத யுகத்தில் மரகத மலையாக இருந்த மலை, கலியுகத்தில் கல் மலையாக காட்சி அளிக்கின்றது என்று கூறுவார்கள்.

மணிவாசகரும் ஈங்கோய்மலையில் எழிலது காட்டியும் என்றும் ஈங்கோய்மலை எம் எந்தாய் என்றும் திருவாசகத்தில் குறிப்பிடுகின்றார். பாச்சிலாச்சிராமம் தலம் சென்று பொன் பெற்ற பின்னர், சுந்தரர் இந்த தலம் வந்ததாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. ஆனால் சுந்தரர் இந்த தலத்தின் மீது அருளிய பதிகம் ஏதும் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. சுந்தரரின் வருகை குறித்த செவிவழிச் செய்தி ஒன்றினை நாம் இங்கே காண்போம். தனது நண்பரான பெருமானிடம் பொன் கேட்டு பெறலாம் என்று இந்த தலத்திற்கு சுந்தரர் வந்த போது, பெருமான் ஒரு புளியமரத்தில் ஒளிந்து கொண்டதாகவும், சுந்தரர் மீண்டும் மீண்டும் வந்த போதும் அவருக்கு காட்சி கொடுக்காமல் இருந்தார் என்றும், தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு புளியங்காய் மட்டும் அவருக்கு கிடைக்கும் வண்ணம் செய்தார் என்றும், அந்த காயினை சுந்தரர் எடுத்தபோது மறைந்துவிட்டது என்றும் கூறுவார்கள். தன்னுடன் பெருமான் விளையாடியதை உணர்ந்த சுந்தரர், தனக்கு கிடைக்காத புளி எவருக்கும் கிடைக்க வேண்டாம் என்று சொன்னதால் புளிய மரம் மறைந்துவிட்டது என்றும் கூறுவார்கள். ஆனால் இந்த விவரம் பெரிய புராணத்தில் குறிப்பிடப் படவில்லை. தலமரம் புளியமரம் என்றாலும் தலத்தினில் புளியமரம் இல்லை. இந்த நிகழ்ச்சியை உணர்த்தும் நாட்டுப்புறப் பாடல் கிடைத்துள்ளது.

சுந்தரருக்கு புளியங்காய் ஈந்தது காண் அம்மானை

சுந்தரருக்கு புளியங்காய் ஈந்ததுவே ஆமாயின்

அத்தனையும் சொர்ணம் காண் அம்மானை

தைப்பூச நாள் அன்று, குளித்தலை (வாட்போக்கி) ஐயர்மலை (கடம்பந்துறை) தலங்களின் உற்சவ மூர்த்திகள் ஈங்கோய்மலை வந்து தங்கி, அடுத்த நாள் தங்களது இடத்திற்கு செல்வது, இன்றும் திருவிழாவாக கொண்டாடப் படுகின்றது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமையில், காலையில் கடம்பந்துறையும் பகலில் வாட்போக்கியும் மாலையில் ஈங்கோய்மலையும் சென்று வழிபடுவது சிறப்பாக கருதப் படுகின்றது. இதனை உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ள பழமொழி, காலைக் கடம்பர் மத்தியானச் சொக்கர், அந்தித் திரு ஈங்கோய்மலை நாதர், என்பதாகும்.

பாடல் 1:

வானத்து உயர் தண் மதி தோய் சடை மேல் மத்த மலர் சூடித்

தேன் ஒத்தன மென்மொழி மான் விழியாள் தேவி பாகமாக்

கானத்து இரவில் எரி கொண்டு ஆடும் கடவுள் உலகு ஏத்த

ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே

விளக்கம்:

கானம்=காடு, இங்கே சுடுகாடு; இரவில் நடனம் ஆடும் பெருமான் என்று குறிப்பிடுவது நமக்கு நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே என்னும் திருவாசகத் தொடரினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. பயிலுதல் என்றால் ஒரு செயலைத் தொடர்ந்து செய்தல் என்று பொருள். ஒவ்வொருவரும் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் தொடர்ந்து ஏதேனும் புதியதாக கற்றுக் கொண்டே வருவதால் தான், கல்வி பயிலுதல் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பெருமான் இடைவிடாமல் நடனம் ஆடுவதால் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மணிவாசகர் உணர்த்துகின்றார். எனவே இங்கே, நள்ளிருள் என்பதற்கு பிரளய காலத்தில் உலகம் உள்ள நிலை என்று பொருள் கொள்ளவேண்டும். பெருமானின் இந்த நடனம், பிறப்பு இறப்பினைக் கடந்த நிலையையும் ,அனைத்து உயிர்களும் அனைத்து உலகப் பொருட்களும் அழிந்த நிலையிலும் பெருமான் அழியாமல் நிலையாக இருப்பதையும், ஐந்து தொழில்களையும் பெருமான் இயற்றுவதையும் குறிப்பிடுவதால் உலகம் பெருமானின் நடனத்தைப் புகழ்வது இயற்கையே. ஏனம்=பன்றி; இழிதல்=கீழே இறங்குதல். பெருமான் நடனம் ஆடுவதை உலகம் புகழ்ந்து போற்றுவதாக ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை:

வானில் உலவும் பிறைச் சந்திரன் தோயும் தனது சடையில் ஊமத்தை மலரினைச் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், தேனைப் போன்று இனிய மொழியினை உடையவளும் மானினைப் போன்று மருண்டு அழகாக காணப்படும் கண்கள் உடையவளும் ஆகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டு, சுடுகாட்டினில் நள்ளிரவில் நடனம் ஆடும் பெருமானை, தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தி ஆடும் பெருமானை, உலகம் புகழ்ந்து போற்றுகின்றது. அத்தகைய புகழ் வாய்ந்த இறைவன், பன்றிகள் வேகமாக கீழே வந்து இறங்கும் சாரலை உடைய ஈங்கோய்மலையில் உறைகின்றார்.

பாடல் 2:

சூலப்படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடமாகக்

கோலச் சடைகள் தாழக் குழல் யாழ் மொந்தை கொட்டவே

பால் ஒத்து அனைய மொழியாள் காண ஆடும் பரமனார்

ஏலத்தொடு நல் இலவங்கம் கமழும் ஈங்கோய்மலையாரே

விளக்கம்:

நள்ளிருளில் நடனம் ஆடும் பெருமான் என்று முந்தைய பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், இந்த பாடலில், அந்த நடனம் எவ்வாறு அமைந்துள்ளது என்று விளக்குகின்றார். கோலச் சடை= அழகான சடை; சென்ற பாடலில் தேன்மொழியாள் என்று குறிப்பிட்ட, ஞானசம்பந்தர், இந்த பாடலில் பால் மொழியாள் என்று குறிப்பிடுகின்றார். பிராட்டி காண பரமன் ஆடுவதாக இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. பிரளய காலத்தில் பெருமான் நடனம் ஆடுவதை பார்வதி தேவியைத் தவிர்த்து வேறு எவரும் காண முடியாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, பிராட்டி காண நடனம் ஆடும் பரமனார் என்று இங்கே கூறுகின்றார். மூன்று வேறுவேறு வகையான இசைக் கருவிகளை கொட்ட என்று பொதுவாக குறிப்பிடுகின்றார். குழலை ஊதியும் யாழினை வாசித்தும் மொந்தையை கொட்டியும் என்று பொருள் கொள்ள வேண்டும். இசைக்கருவிகளை இயக்கி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பிராட்டியின் குரல் இனிமைக்கு, தேன், பால், குழல், மழலைச்சொல், கரும்பு, கிளி, குயில் ஆகியவை உவமையாக பல தேவாரப் பாடல்களில் கூறப்படுகின்றன. பால் போன்று இனிமை வாய்ந்த மொழியினை உடைய தேவி என்று குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

கொச்சைவயம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளிய பாடல் ஒன்றினில் (2.89.9) பால்மொழி என்று தேவியை குறிப்பிடுகின்றார். கால்=காற்று; ஏர்=அழகு; பார்கொள் விண்ணழல் கால் நீர் என்று பஞ்சபூதங்கள் குறிப்பிடப்படுகின்றன. பஞ்ச பூதங்களையும் தோற்றுவித்தவர் சிவபெருமான் என்பதால், அந்த பஞ்ச பூதங்களுக்கும் பண்புகளை (மண்ணில் திண்மை, நீரில் இன்சுவை, தீயின் வெம்மை, காலின் ஊக்கம், வானில் கலப்பு) அளித்தவரும் அவர் தானே. எனவே தான் பெருமானை, பஞ்சபூதங்களின் தன்மையாக இருப்பவர் (பண்பினர்) என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

சீர்கொள் மாமலரானும் செங்கண் மால் என்றிவர் ஏத்த

ஏர்கொள் வெவ்வழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்

பார்கொள் விண்ணழல் கால் நீர் பண்பினர் பால் மொழியோடும்

கூர் கொள் வேல் வலன் ஏந்திக் கொச்சைவயம் அமர்ந்தாரே

ஆலவாய் (மதுரை)பதிகத்தின் முதல் பாடலில் (3.115.1) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில், திருஞானசம்பந்தர் பாலின் நேர் மொழியாள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். நேர்= ஒத்த; இந்த பதிகத்தின் பாடல்களில் ஒரே சொல் இரண்டு பொருள் தரும் வண்ணம் ஒவ்வொரு அடியிலும் பயன்படுத்தி இருக்கும் நிலை, ஞானசம்பந்தரின் புலமையை நமக்கு உணர்த்துகின்றது.

இருக்கை=இருப்பிடம், இருக்கு வேதம். ஆல மரத்தின் நிழலைத் தனது இருப்பிடமாகக் கொண்டு நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிய பெருமான், இருக்கு முதலான நான்கு வேதத்து பாடல்களைக் கேட்பதை மிகவும் விரும்புகின்றார். பங்கன்=பாகமாக உடையவன், பங்கம் (கேடு) விளைவித்தவன்; பாலினைப் போன்று இனிய மொழி பேசும் உமை அன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், தனது திருவடிகளைப் போற்றாத திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து கேடு விளைவித்தவன் ஆவான். பூதம்=பூத கணங்கள், உயிருக்கு உயிராக இருக்கும் தன்மை; அழகிய திருநீற்றினை அணிந்து மேன்மையுடன் விளங்கும் பூதகணங்களைத் தன்னருகே கொண்டுள்ள பெருமான், குற்றமற்ற அடியார்களின் மனதினைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவர்களின் உயிருக்கு உயிராக விளங்குகின்றான். களம்=கழுத்து; அண்டர்களத்தன்=அண்டர்கள் அத்தன்; ஆலகால நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கி வைத்த பெருமான், ஆலவாய் என்று அழைக்கப்படும் தலத்தில் உறைகின்ற பெருமான், தேவர்களின் தலைவனாக விளங்குகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது

இருக்கையே

பாலின் நேர் மொழியாள் ஒரு பங்கனே பாதம் ஓதலர் புர

பங்கனே

கோல நீறு அணி மேதகு பூதனே கோதிலார் மனம் மேவிய

பூதனே

ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்

களத்தனே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.19.1) தேவியை அப்பர் பிரான் பாலொத்த மென்மொழியாள் என்று குறிப்பிடுகின்றார். கோலம்=அழகான வடிவம்; பாங்கு=துணை; மலைச் சாரல்களில் காணப்படும் அருவிகளில் நீர், மிகுந்த வேகத்துடன் கீழே விழுவதை நாம் உணர்கின்றோம். மலையின் உயரத்திற்கு ஏற்ப வேகம் அதிகரிக்கின்றது. இதிலிருந்து வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி எத்தனை வேகத்துடன் கீழே பாய்ந்தது என்பதை நாம் ஊகம் செய்யலாம். மேலும் ஆயிரம் முகங்களாக பிரிந்து பாய்ந்த கங்கையின் வேகம், நமது கற்பனைக்கும் எட்டாத வேகம் அல்லவா. அந்த கங்கை நதியினைத் தாங்கிய கோலத்தை உடையவன் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். சூழருவி என்பதற்கு பல முகங்களாக பிரிந்து ஒன்றாக சூழ்ந்து கீழே இறங்கிய கங்கை நதி என்று பொருள்.

சூலப் படையானை சூழாக வீழருவி

கோலத் தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை

பால் ஒத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய

ஆலத்தின் கீழானை நான் கண்டது ஆரூரே

கோளிலி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலில் (5.57.9) பாலின் மென்மொழியாள் என்று பிராட்டியை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அறிவொணா=அறிய முடியாத; கோலம்=அழகு; நித்தல்=நாள்தோறும்.

மாலும் நான்முகனாலும் அறிவொணாப்

பாலின் மென்மொழியாள் ஒரு பங்கனைக்

கோலாமாம் பொழில் சூழ் திருக் கோளிலி

நீலகண்டனை நித்தல் நினைமினே

மழபாடி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (6.39.9) அப்பர் பிரான் பாலாரும் மொழி மடவாள் (பால் போன்று இனிமையான சொற்களை உடையவள்) என்று உமை அம்மையை குறிப்பிடுகின்றார். அடையலர்=பகைவர்கள், திரிபுரத்து அரக்கர்கள்; பரமன் பலிக்கு செல்வதை பலரும் இகழ்ந்தாலும், அந்த இகழ்ச்சியை பொருட்படுத்தாமல், உயிர்களை உய்விக்கும் பொருட்டு, உயிர்கள் தங்களது மலங்களை இறைவனின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வதற்கு ஏதுவாக பெருமான் தொடர்ந்து பலிக்குச் செல்வதால், பண்பன் என்று அவனது கருணைப் பண்பினை ஏத்தி அப்பர் பிரான் வாழ்த்துகின்றார்.

ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர் தம் புரம்

மூன்றும் எய்தான் கண்டாய்

காலால் அக்காலனையும் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க்கு

அருள் செய்த காளை கண்டாய்

பாலாரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறிப் பலி

திரியும் பண்பன் கண்டாய்

மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னு

மணாளன் தானே

கூடலையாற்றூர் தலத்தின் மீது; அருளிய பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (7.85.9) சுந்தரர், பால் போன்று மிருதுவான சொற்களை உடைய தேவி என்று உமையம்மையை குறிப்பிடுகின்றார். வேலை=கடல், இங்கே பாற்கடல்; ஆலம் உண்ட இறைவனை ஆலன் என்று சுந்தரர் அழைக்கின்றார். திருப்புறம்பியம் தலத்தில் இறைவனை தொழுது வணங்கிய பின்னர் சுந்தரர் அங்கிருந்து திருமுதுகுன்றூர் தலம் செல்வதற்கு விருப்பம் கொண்டார். அந்த தலத்திற்கு செல்லும் வழியினை, தனது கண்ணில் பட்ட முதியவர் ஒருவரிடம் கேட்டார். தானும் அந்த வழி தான் செல்வதாக கூறிய முதியவர், கூடலையாற்றூர் வழியில் சுந்தரரை அழைத்துச் சென்று, கூடலையாற்றூர் அடைந்தவுடன் மறைந்து விடவே, தனக்கு வழிகாட்டி தன்னுடன் நடந்து வந்த முதியவர் சிவபெருமான் தான் என்பதை சுந்தரர் புரிந்து கொண்டார்; இவ்வாறு தன்னுடன் வந்து வழிகாட்டியதை அதிசயம் என்று பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் குறிப்பிட்டு, அதனை அறியாமல் தான் இருந்த நிலையினை நமக்கு உணர்த்துகின்றார்.

வேலையது நஞ்சுண்டு விடையது தான் ஏறிப்

பாலன மென்மொழியாள் பாவையொடும் உடனே

கோலமது உருவாகிக் கூடலையாற்றூரில்

ஆலன் இவ்வழிப் போந்த அதிசயம் அறியேனே

பாலின் இனிய சுவையுடன் தேவியின் மொழியை ஒப்பிட்ட பாடல்களை சிலவற்றை நாம் கண்டோம். இந்த உவமைகளையும் தாண்டி சுந்தரர் மேலே ஒரு படி செல்வதை நாம், கேதீச்சரம் தலத்தின் மீது அவர் அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.80.7) காணலாம். வானத்துறு=வால் நத்து; வெண்ணிறம் உடைய சங்குகள் பொருந்திய என்பது ஒரு பொருள்; வானத்துறு என்ற தொடர், கடல் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாக மாறி, ஆகாயத்தைச் சென்றடைந்து நீர் மேகமாக இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றது என்பது மற்றொரு விளக்கம். பானத்துறு= பாலும் விருப்பம் வைக்கும் மொழியை உடையவள்;

ஊனத்துறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி

வானத்துறு மலியும் கடல் மாதோட்ட நன்னகரில்

பானத்துறு மொழியாளொடு பாலாவியின் கரை மேல்

ஏனத்து எயிறு அணிந்தான் திருக் கேதீச்சரத்தானே

பொழிப்புரை:

தனது கையில் மூன்றுதலை சூலப்படை ஏந்தியவராக, நள்ளிருளில், அனைத்து உயிர்களும் தங்களது உடல்களிலிருந்து பிரிந்து அனைத்துப் பொருட்களும் அழிந்து உலகமே சுடுகாடாக மாறிய நிலையில், தனது நீண்ட அழகிய சடை தாழ்ந்து தொங்க, பூதகணங்கள் குழல் யாழ் ஆகிய இசைக் கருவிகளை இயக்க, முழவம் அதிர்ந்து முழங்க, பால் போன்று இனிய மொழிகள் உடைய பார்வதி தேவி காணும் வண்ணம் பரமன் நடனம் ஆடுகின்றார். இத்தகைய ஒப்பற்ற நடனம் ஆடும் பரமன் உறையும் இடம், ஏலம் இலவங்கள் ஆகிய பொருட்கள் நிறைந்து நறுமணம் கமழும் ஈங்கோய்மலை ஆகும்.

பாடல் 3:

கண் கொள் நுதலார் கறை கொள் மிடற்றார் கரியின் உரி தோலார்

விண் கொள் மதி சேர் சடையார் விடையார் கொடியார் வெண்ணீறு

பெண் கொள் திருமார்பு அதனில் பூசும் பெம்மான் எமை ஆள்வார்

எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே

விளக்கம்:

எண்கு=கரடி; அரி=சிங்கம்; கரி=ஆண் யானை, தாருகவனத்து முனிவர்களால் ஏவிவிடப்பட்ட மத யானை; நுதல்=நெற்றி; மிடறு=கழுத்து; கறை=ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் ஏற்பட்ட கருமை நிறம் உடைய கறை

பொழிப்புரை:

தனது நெற்றியில் ஒரு கண் உடையவரும், ஆலகால விடத்தினை தேக்கியதால் கருமை நிறத்து மாணிக்கக்கல் படிந்தது போன்ற கழுத்தினை உடையவரும், தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டவரும், வானில் உலவும் பிறைச் சந்திரன் சேர்ந்து பொருந்திய சடையினை உடையவரும், இடபச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடியினை உடையவரும், பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றுள்ளவரும், தனது மார்பினில் திருநீறு பூசியவராக காணப்படுபவரும் ஆகிய பெருமான் எம்மை ஆட்கொண்டவர் ஆவார். அவர், கரடிகளும் சிங்கங்களும் திரிகின்ற மலைச் சாரலை உடைய ஈங்கோய்மலையினை, தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார்.

பாடல் 4:

மறையின் இசையார் நெறி மென்கூந்தல் மலையான் மகளோடும்

குறை வெண்பிறையும் புனலும் நிலவும் குளிர் புன்சடை தாழப்

பறையும் குழலும் கழலும் ஆர்ப்பப் படுகாட்டு எரி ஆடும்

இறைவர் சிறை வண்டு அறை பூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே

விளக்கம்:

நெறி=ஒழுங்கான வடிவம்; நிலவும்=நிலவுதல், தங்குதல்; இந்த பதிகத்தின் பல பாடல்களில் பிரளய காலத்தில் பெருமான் நடனம் ஆடுவது குறிப்பிடப்படுகின்றது. முதல், இரண்டாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களில் பெருமான் நெருப்பினில் நின்று நடனம் ஆடுவது குறிப்பிடப்படுகின்றது. படுகாடு=சுடுகாடு; குறை வெண்பிறை=தக்கன் இட்ட சாபத்தினால் தனது கலைகள் குறைந்து அழியும் நிலையில் இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரன்;

பொழிப்புரை:

வேதங்கள் ஓதப்படும் இசை வடிவமாக இருப்பவரும், ஒழுங்கான வடிவுடன் அமைந்ததும் மென்மை வாய்ந்ததும் ஆகிய கூந்தலை உடைய மலையான் மகளாகிய பார்வதி தேவியுடன் கூடிய பெருமான், குறைந்து தேய்ந்து அழியும் நிலையில் தன்னைச் சரணடைந்த பிறைச் சந்திரன் அழியாமல் வளரும் வண்ணம் தனது சடையினில் ஏற்றுக் கொண்டவரும், பிறைச் சந்திரனுடன் கங்கை நதியும் பொருந்தியுள்ள குளிர்ந்த புன்சடை தாழும் வண்ணம், பறை குழல் ஆகிய வாத்தியங்கள் அதிர்ந்து முழங்க, தனது திருவடிகளில் அணிந்துள்ள கழல்கள் ஆரவாரம் செய்ய, பிரளய காலத்தில் சுடுகாடாக விளங்கும் உலகினில் நடனம் ஆடுகின்றார். இத்தகைய இறைவன், சிறகுகள் உடைய வண்டுகள் ரீங்காரம் இட்டு ஒலி செய்யும் பூஞ்சோலைகள் நிறைந்த மலைச் சாரலை உடைய ஈங்கோய்மலையில் உறைகின்றார்.

பாடல் 5:

நொந்த சுடலைப் பொடிநீறு அணிவார் நுதல் சேர் கண்ணினார்

கந்த மலர்கள் பலவும் நிலவு கமழ் புன்சடை தாழப்

பந்தண் விரலாள் பாகமாகப் படுகாட்டு எரி ஆடும்

எந்தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே

விளக்கம்:

கந்தம்=நறுமணம்; நொந்த=வருந்திய, நொந்த சுடலை என்ற தொடருக்கு இங்கே வளம் ஏதும் இல்லாத சுடுகாடு என்று பொருள் கொள்ள வேண்டும். கடி=நறுமணம். நொந்த=பதம் அழிந்த, வளமற்ற என்ற பொருளும் பொருந்தும். இறந்த உயிர்கள் எரிக்கப் படுவதால், அந்த நெருப்பு வெளிப்படுத்தும் வெப்பத்தினால் வளம் குறைந்து பசுமையான செடிகள் ஏதுமின்றி வறண்டு காணப்படும் சுடுகாடு என்றும் பொருள் கொள்ளலாம். நொந்த சுடலைப் பொடி என்பதற்கு எரிக்கப்பட்டதால் துன்பம் அடைந்த உடல் எரிந்த சாம்பல் என்பது மற்றொரு விளக்கம்.

பொழிப்புரை:

வளமற்ற சுடுகாட்டுச் சாம்பலைத் தனது உடல் முழுவதும் திருநீறாக பூசியவரும், தனது நெற்றியில் கண் உடையவரும், நறுமணம் வீசும் பல மலர்கள் பொருந்திய புன்சடை தாழும் வண்ணம், பந்துகள் சென்று அணையும் மெல்விரல்கள் கொண்ட பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், சுடுகாட்டு நெருப்பின் இடையே நின்று நடனம் ஆடுகின்றார். இத்தகைய தன்மை வாய்ந்த பெருமான், நமது தலைவராக இருக்கும் பெருமான், நறுமணம் வீசும் மலைச்சாரல் கொண்டுள்ள ஈங்கோய்மலையில் உறைகின்றார்.

பாடல் 6:

நீறார் அகலம் உடையார் நிரையார் கொன்றை அரவோடும்

ஆறார் சடையார் அயில் வெங்கணையால் அவுணர் புரம் மூன்றும்

சீறா எரி செய் தேவர் பெருமான் செங்கண் அடல் வெள்ளை

ஏறார் கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே

விளக்கம்:

அகலம்=அகலமான மார்பு; நிரை=வரிசை; அயில்=கூர்மையான; வெங்கணை=நெருப்புப் பிழம்புகள் கக்கும் அம்பு, கொடுமை விளைவிக்கும் அம்பு, அவுணர்=திரிபுரத்து அரக்கர்கள்; அடல்=வலிமை; ஏறு=எருது, இடபம்; தலபுராணத்து தகவல் படி, உமையன்னை இங்கே அமர்ந்து தவம் செய்து இறைவனின் உடலில் ஒரு பாதியைப் பெற்றாள். இரண்டு சிகரங்களை உடையதாக, சிவமும் சக்தியும் இணைந்திருக்கும் கோலத்தை நினைவூட்டும் இந்த மலை, சிவசக்தி மலை என்றும் அழைக்கப் படுகின்றது. இந்த தன்மையை உணர்த்தும் வண்ணம், அன்னையுடன் பெருமான் இங்கே வீற்றிருக்கின்றார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார் போலும். இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் கடை அடியில் மலையின் தன்மை, இயற்கை வளம் முதலியன குறிப்பிடப்படுவதால், உமையாளொடும் என்ற சொல் மலையின் தன்மையை குறிப்பதாக கொள்வது பொருத்தமாக உள்ளது. சரக்கொன்றை என்பது ஒரு வகை கொன்றை மலர் .

பொழிப்புரை:

திருநீறு பூசப்பட்ட அகலமான மார்பினை உடையவரும், சரம் சரமாக வரிசையாக மலரும் சரக்கொன்றை முதலான பல மலர்கள் பாம்பு மற்றும் கங்கை நதி ஆகியவற்றைத் தனது சடையில் அணிந்துள்ள பெருமான், திரிபுரத்து அரக்கர்களின் செய்கைகளால் மிகுந்த கோபம் கொண்டவராக, கூர்மை வாய்ந்ததும் நெருப்புப் பிழம்புகள் வீசுவதும் ஆகிய அம்பினைக் கொண்டு, திரிபுரத்து பறக்கும் மூன்று கோட்டைகளையும் எரித்தவர் ஆவார். தேவர்களுக்கு தலைவனாக விளங்கும் அவர் சிவந்த கண்கள் மற்றும் வலிமை கொண்டதாக விளங்கும் இடபத்தினை சின்னமாக உடைய கொடியினை உடையவர். அவர் உமை அன்னையுடன் வீற்றிருக்கும் தலம் ஈங்கோய்மலை ஆகும்.

பாடல் 7:

வினையாயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன் விரி

கொன்றை

நனையார் முடி மேல் மதியம் சூடு நம்பான் நல மல்கு

தனையார் கமலமலர் மேல் உறைவான் தலையோடு அனல்

ஏந்தும்

எனை ஆளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே

விளக்கம்:

நம்பான்=உயிர்களின் விருப்பத்திற்கு உரியவன். எண்ணற்ற பல பிறவிகளில் செய்த செயல்கள் காரணமாக, உயிர்கள் சேர்த்துக் கொண்டுவரும் வினைகளை, வலிமையாக உயிருடன் பற்றியுள்ள வினைகளை, உயிர்கள் நுகர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து அந்த வினைகளை நுகர்ந்து கழிக்கும் முயற்சியில், உயிர்கள் மேலும் பல புதிய வினைகளை (ஆகாமிய வினைகள் என்று சொல்வார்கள்) சேர்த்துக் கொள்வதால், புதியதாக சேர்ந்த அந்த வினைகளை கழிக்கும் முயற்சியில் மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றன. இவ்வாறு பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீளமுடியாமல் தவிக்கும் உயிர்கள் தங்களின் வினைகளை எளிதில் தீர்த்துக் கொள்வதற்கு உள்ள ஒரே வழி சிவபெருமானை வழிபடுவது தான். சிவபெருமான் ஒருவனே உயிர்களைப் பற்றியுள்ள வினைகளை முற்றிலும் அறுத்து நீக்கும் ஆற்றல் படைத்தவன் என்பதால் அவன் மற்ற தெய்வங்களிலிருந்து வேறுபட்டவன் என்பதை உணர்த்தும் வண்ணம் விகிர்தன் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். மேலும் இத்தகைய உதவியினை உயிர்களுக்கு அவன் செய்வதால் உயிர்களால் மிகவும் விரும்பப்படுகின்றான் என்பதை உணர்த்த நம்பான் என்றும் இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். தனையார்=பூக்களில் சிறந்த பூவாக இருப்பதால், தலைமையான பூ என்று தாமரை மலரை குறிப்பிடுகின்றார். நனை=அரும்பு;

திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதில் திருஞானசம்பந்தருக்கு நாட்டம் இல்லாமல் இருந்தது. எனினும், வேதநெறி தழைத்து ஓங்க அவதாரம் செய்த அவர், வேதநெறியில் குறிப்பிடப்படும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வது தவறு அவரது தந்தையாரும் மற்ற பெரியோர்களும் குறிப்பிட்டு வற்புறுத்தவே, தனக்கு முழு விருப்பம் இல்லாத போதிலும், திருமணம் செய்து கொள்வதற்கு ஞானசம்பந்தர் இசைகின்றார். நல்லூர் பெருமணம் என்று அழைக்கப்பட்ட தலத்தில் (இன்றைய பெயர் ஆச்சாள்புரம்) திருமணம் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. திருமண நாளன்று, திருஞானசம்பந்தர் இறைவனை நோக்கி, இறைவனே உன்னிடம் நான் எப்போதும் மணவாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டவில்லையே, எனது பதிகங்கள் எனது உண்மையான விருப்பத்தை உனக்கு தெரிவிக்கவில்லையா, ஏன் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து செய்யப்படும் திருமண வாழ்க்கையை எனக்கு நேரிடும் வண்ணம் செய்தாய் என்று இறைவனிடம் தனது கோரிக்கையை விடுக்கின்றார். தனது விருப்பங்கள் (பிறரின் நலனுக்காக விடுத்த வேண்டுகோள் பலவற்றையும் நிறைவேற்றிய பெருமானை நம்பானே என்று இந்த பாடலில் அழைக்கின்றார். நம்பனே என்ற சொல் நம்பானே என்று நீண்டது. கல்லூர்ப் பெருமணம் என்று தொடங்கும் இந்தப் பதிகம் (3.125) பாடி முடிக்கப் பட்ட பின்னர் வானிலிருந்து எழுந்த ஒரு அசரீரி வாயிலாக பெருமான், ஞானசம்பந்தர் விடுத்த வேண்டுகோளினை ஏற்று கொண்டதை தெரிவிக்கின்றார். திருமணம் முடிந்ததும், திருக்கோயிலில் தோன்றும் ஒரு சோதியின் வழியே உட்புகுந்து, தன்னை வந்து அடையுமாறு ஞானசம்பந்தரை பணிக்கின்றார். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் முன் செல்ல, ஞானசம்பந்தர் தனது மனைவியுடன் அந்த சோதியின் உள்ளே புகுந்து, சிவலோகம் சென்றடைந்தார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. இவ்வாறு அடியார்கள் விடுக்கும் வேண்டுகோளினை நிறைவேற்றும் பெருமானை, விரும்புவதற்கு உரியவன் என்று அழைப்பது தானே பொருத்தம்.

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்

பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய் ஆய்த்தில

சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்

நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.67.8) நீறு அணிந்த நம்பான் என்று பெருமானை, ஞானசம்பந்தர், குறிப்பிடுகின்றார். நஞ்சார்=நைஞ்சார், நைந்தார் என்பதன் மருவு; உடல் நைந்து இறந்துபட்ட உடல்கள் எரிந்த சாம்பல், நஞ்சார் சுடலை என்று குறிக்கப் படுகின்றது. பைந்தாமரை=பசுமையான தாமரை மலர்கள்; அஞ்சோடு அஞ்சும் ஆறு நான்கும்= இருபது; அடர=நெருங்க; மலையின் கீழே அமுக்குண்டு தோள்கள் குழைந்து ஒன்றுடன் ஒன்று கலந்து இருக்கும் நிலை; மஞ்சு=மேகம், இங்கே மேகங்கள் பொருந்திய ஆகாயம்; மாறா= மாறுபட்டு; கயிலை மலையினைக் காணும் அனைவரும் அந்த மலையின் புனிதத்தைக் கருத்தில் கொண்டு, மலையை வலம் வந்து வணங்குவது வழக்கம். ஆனால் அரக்கன் இராவணனோ, தான் செல்லும் வழியில் குறுக்கிட்ட மலை என்று கருதி, அந்த மலையினை பேர்த்து வேறொரு இடத்தில் வைத்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடரும் நோக்கத்துடன் அந்த மலையை பேர்க்க முயற்சி செய்தான். இந்த வேறுபாட்டினை குறிப்பிடும் வண்ணம் மாறா எடுத்தான் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வம்பு=நறுமணம்; நஞ்சார்=நச்சுத் தன்மை பொருந்திய; சுடலை= சுடுகாடு; மஞ்சோங்கு உயரம் என்பதனை மலை என்ற சொல்லுடன் இணைத்து பொருள் கொள்ள வேண்டும்.

மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறா எடுத்தான் தோள்

அஞ்சோடு அஞ்சும் ஆறு நான்கும் அடர ஊன்றினார்

நஞ்சார் சுடலைப் பொடி நீறு அணிந்த நம்பான் வம்பாரும்

பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.82.10) இறைவனை நம்பான் என்று ஞானசம்பந்தர் அழைக்கின்றார். அனைவரும் விரும்புவதற்கு தகுதி வாய்ந்தவராக விளங்கும் பெருமானின் தன்மையை புரிந்து கொள்ளாமல், அவரை விரும்பித் தொழுவதற்கு பதிலாக, சிரித்து ஏளனம் செய்யும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் பரிதாப நிலையினை இந்த பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார். சிக்கார்=சிக்கு பிடித்த உடை; தட்டு=ஓலைத் தடுக்கு; சிறிய ஓலைத் தடுக்கையே தங்களது உடையாகக் கொண்ட சமணர்கள்; பெருமானின் தன்மையை புரிந்து கொண்டு, மறைகளை ஓதி, வேள்விகள் செய்தும் மிகுந்த விருப்பத்துடன் பெருமானை வழிபடும் வீழி மிழலை அந்தணர்கள், தகுதி வாய்ந்தவர்களாக உலகினில் மேம்பட்டவர்களாக வாழும் நிலையும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. அலர்=வீண்பழி;

சிக்கார் துவராடைச் சிறுதட்டு உடையாரும்

நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்

தக்கார் மறை வேள்வித் தலையாய் உலகுக்கு

மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே

அனைவரின் விருப்பத்துக்கு உரியவனாக விளங்கும் பெருமானின் திருவடிகளின் சிறப்பினை நாள்தோறும் சொல்லாத மனிதர்களின் குற்றங்கள் தீரா என்று அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றனில் (1.83.3) ஞானசம்பந்தர் கூறுகின்றார். உயிரின் குற்றமாக கருதப் படுவது, உயிருடன் பிணைந்துள்ள வினைகளும் அவற்றின் தன்மையால் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் நிலையும் தான். எனவே பிறவிப் பிணியினைத் தீர்த்துக் கொள்வதற்கு நாம் வழிபட வேண்டியது சிவபெருமான் தான் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. ஊனம் என்பதற்கு பழி பாவம் என்று பொருள் கொண்டு, சந்திரன் சிவபெருமானை வழிபட்டு, தனது பாவங்களைத் தீர்த்துக் கொண்டது போன்று நாமும் பயனடைய வேண்டும் என்று சம்பந்தர் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. குற்றம் நீங்கிய சந்திரனை செல்வ மதி என்று கூறுகின்றார். நரையார் விடை=வெண்மையான இடபம்;

திரையார் புனலொடு செல்வ மதி சூடி

விரையார் பொழில் அம்பர் மாகாளம் மேய

நரையார் விடையூரும் நம்பான் கழல் நாளும்

உரையாதவர்கள் மேல் ஒழியா ஊனமே

நம்பான் மேய நன்னகர் போலும் குற்றாலம் என்று உணர்த்தும் பாடல் மூலம் (1.99.1), நமது நம்பிக்கைக்கு உரியவன் பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வம்பு=புதுமை; எத்தனை முறை கண்டாலும் புதுமையுடன் விளங்கும் குற்றாலம் என்று கூறுகின்றார். வம்பு என்பதற்கு நறுமணம் என்று பொருள் கொண்டு, நறுமணம் கமழும் குற்றாலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கொம்பு=கிளைகள், இங்கே வேங்கை மரத்தின் கிளைகள். அம் என்ற சொல்லினை ஆடல் என்ற சொல்லுடன் பொருத்தி, அழகிய நீராடல் என்று பொருள் கொள்ள வேண்டும். கோல வண்டு=அழகிய வண்டுகள்; இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் பெருமானை, ஞானசம்பந்தர் நம்பான் என்று அழைக்கின்றார். குறும்பலா என்று குறிப்பிட்டு குற்றாலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.71) இரண்டு பாடல்களிலும், பெருமானை நம்பான் என்று சம்பந்தர் அழைக்கின்றார்.

வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர் வேங்கைக்

கொம்பார் சோலைக் கோல வண்டு யாழ் செய் குற்றாலம்

அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான் அலர் கொன்றை

நம்பான் மேய நன்னகர் போலும் நமரங்காள்

கள்ளில் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.119.6), திருஞானசம்பந்தர் நம்பான் என்று இறைவனை அழைக்கின்றார். பக்குவம் அடைந்த உயிர்களின் முன்னே சென்று, அவர்களின் மலங்களைத் தான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் பலியாக ஏற்று, அந்த உயிர்களை முக்தி உலகினுக்கு அழைத்துச் செல்லும் பரமனை எந்த உயிர் தான் விரும்பாது. எனவே தான், அந்த உயிர்கள் விரும்பும் பரமான, நம்பான் என்று அழைக்கின்றார். அப்பர் பிரான் சிவபிரான் பலி ஏற்பது நம்மிடம் உள்ள தீய குணங்களை, மலங்களை அவனது பிச்சை பாத்திரத்தில் இட்டு நாம் தூய்மை அடைவதற்காகத் தான். இந்த கருத்தினை உள்ளடக்கி, மக்களுக்கு நன்மைகள் ஏற்பட பலியேற்கும் கொள்கை உடையவன் சிவபெருமான் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் நன்மை புரிய காத்திருக்கும் சிவபெருமானை நமது விருப்பத்திற்கு உரியவன் என்று அழைத்து நாம் அவனை ஏன் விரும்பவேண்டும் என்பதையும் நமக்கு சம்பந்தர் உணர்த்துகினார். தன்னை அடைய விரும்பி தவம் புரிவோர்க்கு சிவபெருமான் அத்தகைய அடியார்களின் மலங்களை நீக்குவான் என்றும் இங்கே கூறுகின்றார்.

நலனாய பலி கொள்கை நம்பான் நல்ல

வலனாய மழுவாளும் வேலும் வல்லான்

கலனாய தலை ஓட்டான் கள்ளின் மேயான்

மலனாய தீர்த்து எய்து மாதவத்தோர்க்கே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (2.11.7) திருஞானசம்பந்தர் இறைவனை நம்பா என்று அழைக்கின்றார். தன்னை அணுகும் அடியார்களின் வினைகளை நாசம் செய்யும் பெருமானை நம்பான் என்று அழைப்பது தானே பொருத்தம். நமது வினைகளை நாசம் செய்யும் பெருமான், நமக்கு செய்யும் மற்ற உதவிகளும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. நம்மை திருத்தும் வண்ணம் பல துன்பங்களை நமக்கு அளித்து நம்மை நல்வழிபட்டு திருத்தியும், நாம் துயரடையும் தருணங்களில் நமது துன்பங்களைத் தீர்த்தும் அருள் புரியும் இறைவன் இன்ப வடிவினாகவும் அன்பு வடிவினனாகவும் இருக்கின்றார். அவர், ஏழிசையின் நுணுக்கங்களை அறிந்து பாடல்களுக்கு உரிய பண்ணுடன் இசைத்துப் பாடிப் போற்றும் அடியார்களை பேணி பாதுகாக்கின்றார்.

துன்பானைத் துன்பம் அழித்து அருளாக்கிய

இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார்

அன்பானை அணிபொழில் காழி நகர் மேய

நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே

நாலூர் மயானம் என்ற தலத்தின் மீது பாடிய பாடல் ஒன்றிலும் (2.46.5) பெருமானை நம்பான் என்று குறிப்பிட்டு, அவனது திருவடிகளையே நினைத்து மயங்கும் அடியார்கள் மேல் பிறவி என்ற குற்றம் படியாது என்று கூறுகின்றார். பால் ஊரும்=பக்கத்தினில் ஊர்ந்து செல்லும்; மேலூரும்= மேலே பொருத்தப்பட்ட; மால்=மயக்கம்; பெருமான் பால் நாம் வைத்துள்ள அன்பு மயக்கமாக மாற வேண்டும் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

பாலூரும் மலைப் பாம்பும் பனி மதியும் மத்தமும்

மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல் சேர் மார்பினான்

நாலூர் மயானத்து நம்பான் தன் அடி நினைந்து

மால் ஊரும் சிந்தையர் பால் வந்து ஊரா மறுபிறப்பே

நமது விருப்பத்திற்கு உரியவன் சிவபெருமான் என்பதை உணர்த்து, அவனை நம்பா என்று அழைத்தால், நமக்கு பல விதங்களிலும் அருள் புரிபவன் சிவபெருமான் என்று உணர்த்தும் பாடல் (2.64.06) முதுகுன்றம் தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பாடலாகும் (2.64.6). வம்பு=நறுமணம்; மொய்ம்பு=நெருக்கம்; நறுமணம் நிறைந்த கொன்றை வன்னி ஊமத்தை முதலிய மலர்களை தனது திருமேனியின் மீது தூவி, நம்பா என்று தன்னை அழைத்து தொழும் அடியார்களுக்கு தனது அருளினை நல்கும் பெருமானாகிய இறைவன் உறையும் திருக்கோயில் உடைய தலம், கிளைகளை உடைய குரா மரமும் கொகுடி முல்லை கொடிகளும் எங்கும் பரந்து வளர்வதால் நெருக்கமாக உள்ளதும் வண்டுகள் இடைவிடாது பாடுவதும் ஆகிய சோலைகள் உடையதும் ஆகிய முதுகுன்றம் ஆகும்

வம்பார் கொன்றை வன்னி மத்த மலர் தூவி

நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில்

கம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்

மொய்ம்பார் சோலை வண்டு பாடு முதுகுன்றே

குற்றாலம் குறும்பலாவின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.71.2) திருஞானம்பந்தர் இறைவனை நம்மை ஆட்கொண்டருளும் நம்பான் என்று அழைக்கின்றார். பெருமானால் ஆட்கொள்ளப் படுவதற்கு நாம் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும். அத்தகைய பேறு பெற்றவர்கள், இறைவனை விரும்புவது இயற்கை தானே. அதனால் தான் ஆட்கொள்ளப்பட்ட பல மனிதர்களின் நம்பான் என்று இங்கே கூறுகின்றார். நாட்பலவும் சேர் மதியம்=பதினாறு நாட்கள், நாளுக்கு ஒரு கலையாக வளரக் கூடிய சந்திரன்; ஆட்பலவும்=பல வகையிலும் நாம் ஆட்கொண்டு அருள் புரியும் வல்லமை வாய்ந்த; அம்மான்=தாயைப் போன்று கருணை உள்ளம் கொண்ட தலைவன்; அந்தண்=அழகும் குளிர்ச்சியும் உடைய; கீட்பலவு=கிழித்து உண்ணக்கூடிய பலாக்கனி; கிளை=சுற்றம்; கோள்=குலை; கடுவன்=ஆண் குரங்கு. இதே பதிகத்தின் கடைப் பாடலிலும் நம்பான் என்று ஞானசம்பந்தர் இறைவனை குறிப்பிடுகின்றார்.

நாட்பலவும் சேர் மதியம் சூடிப் பொடி அணிந்த நம்பான் நம்மை

ஆட்பலவும் தானுடைய அம்மான் இடம் போலும் அந்தண் சாரல்

கீட்பளவும் கீண்டு கிளை கிளையன் மந்தி பாய்ந்துண்டு விண்ட

கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவன் உண்டு உகளும்

குறும்பலாவே

மேற்கண்ட பாடல்கள் உணர்த்தும் வண்ணம், நாம் விரும்புவதற்கு தகுதி படைத்தவனாக விளங்கும் பெருமானை, தான் நனவிலும் கனவிலும் மனம் ஒன்றி விரும்பி வழிபட்டு மறவாது இருந்த நிலையினை திருவாவடுதுறை தலத்து பாடல் ஒன்றில் (3.4.3) ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மனவினும்=மனம் ஒன்றி; தனது தந்தையார் வேள்வி செய்வதற்காக வேண்டிய பொருளை நாடி இறைவனிடம் ஞானசம்பந்தர் விண்ணப்பம் வைக்கும் பதிகம் இந்த பதிகம். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், பெருமானின் அருளினைப் பெறுவதற்கு தான் தகுதி வாய்ந்தவன் என்பதை குறிப்பிடுகின்றார்.

நனவினும் கனவினும் நம்பா உன்னை

மனவினும் வழிபட மறவேன் அம்மான்

புனல் விரி நறுங்கொன்றை போது அணிந்த

கனல் எரி அனல் புல்கு கையவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையே

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.13.3) அப்பர் பிரான் இறைவனை நம்பான் என்று அழைக்கின்றார். நணியான்=அருகில் இருப்பவன்: சேயான்=தொலைவில் இருப்பவன்; சமணர்கள் இழைத்த பல கொடுமைகளிலிருந்தும் தன்னைக் காத்த பெருமானை, தீர்க்க முடியாத கொடிய சூலை நோயிலிருந்து காப்பாற்றிய பெருமானை, கயிலைக் காட்சி அளித்தது போன்று பல விதங்களிலும் அருள் புரிந்த பெருமானை, அப்பர் பிரான் விரும்பியது இயற்கை தானே. தான் சைவ மதத்திற்கு திரும்பி வந்த பின்னரே, வாழ்வினில் உய்வினை அடைந்ததாகவும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்

துணியானே தோலானே சுண்ண வெண்ணீற்றானே

மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணி தீர்க்கும்

அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

திருவாரூர்ப் பெருமானைக் காண்பதே தனது கருத்தாக இருந்தது என்று உணர்த்தும் பதிகத்தின் பாடலின் (4.20.10) நம்பான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பிரமனும் திருமாலும் காணமாட்டாத தழலாக விளங்கிய பெருமானை நாம் எங்கு காண முடியும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் தெரிவிக்கின்றார். சிவபெருமானைப் புகழ்ந்து இசைப் பாடல்கள் பாடும் அடியார்களின் சித்தத்தினுள்ளே இறைவன் இருப்பதைத் தான் தேடிக் கண்டு கொண்டதாக இங்கே கூறுகின்றார். இறைவன் பேரில் பல பதிகங்கள் பாடிய அப்பர் பிரான், தன்னுள்ளே இறைவன் இருப்பதை, அனுபவ பூர்வமாக உணர்ந்ததை பல பாடல்களில் தெரிவித்துள்ளார். தங்களது அறிவு ஆற்றல் ஆகியவை மீது நம்பிக்கை வைத்து நாடினால் காண முடியாத, பெருமான் பால் மிகுந்த அன்பு வைத்து நாம் அழைத்தால் அவன் அருள் புரிவான் என்பதால் பல அடியார்களும் அவனைப் புகழ்ந்து போற்றி பல்லாண்டு பாடுகின்றனர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன்

நாடிக் காண மாட்டாத் தழலாய நம்பானைப்

பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு பத்தர்கள் சித்தத்துள்

புக்குத்

தேடிக் கண்டு கொண்டேன் திருவாரூர் அம்மானே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.5.6) அப்பர் பிரான் நாகம் அரைக்கசைத்த நம்பா என்று இறைவனை அழைக்கின்றார். இந்த பாடலில் பற்றினை விட்ட பக்குவம் அடைந்த உயிர்களுக்கு வீடுபேறு அருளும் பரமன் என்று குறிப்பிடுகின்றார். தாருகவனத்து முனிவர்கள் முதலில் பெருமான் மீது கோபம் கொண்டு அவரை அழிக்க மதயானை, பாம்புகள் ஆகியவற்றை ஏவிய போதும், யானையின் தோலைக் கிழித்து தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்டும், பாம்புகளை அடக்கி தனது உடலின் பல இடங்களிலும் அணிகலனாக பூண்டு கொண்டும், தங்களது முயற்சிகளை முறியடித்த பின்னர் பெருமானின் பெருமையை புரிந்து கொண்டனர். பெருமான் பால் விருப்பம் கொண்டு அவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கவே, பெருமானும் தாருகவனத்து முனிவர்கள் தங்களது கொள்கையிலிருந்து மாறியது கண்டு, ஆனந்தக் கூத்து ஆடியதை புராணங்கள் உணர்த்துகின்றன. இவ்வாறு தாருகவனத்து முனிவர்கள் பெருமானை விரும்பிய வரலாறு இங்கே உணர்த்தப் படுகின்றது.

பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய்

போற்றி

வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி வேழத்து உரி வெருவப்

போர்த்தாய் போற்றி

நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி நாகம் அரைக்கு அசைத்த

நம்பா போற்றி

ஆடும் ஆனைந்தும் உகப்பாய் போற்றி அலைகெடில வீரட்டத்து

ஆள்வாய் போற்றி

திருவெண்ணெய்நல்லூரில் தன்னை ஆட்கொண்ட இறைவன், விரும்பத்தக்கவன் என்று, தான் இரண்டு கண்களின் பார்வையை இழந்து கோலை ஊன்றி நடந்த நிலையிலும் சுந்தரர் அழைப்பதை நாம் திருமுல்லைவாயில் பதிகத்தில் (7.69.8) காணலாம். சம்பு என்ற வடமொழி சொல்லுக்கு இன்பம் உண்டாக்குபவன் என்று பொருள். நச்சரவு ஆட்டிய நம்பன் என்று மணிவாசகர் திருவண்டப்பகுதி அகவலில் குறிப்பிடுகின்றார்.

நம்பனே அன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை

ஆட்கொண்ட

சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா

செம்பொன் மாளிகை சூழ் திருமுல்லை வாயில் தேடி யான்

திரிதர்வேன் கண்ட

பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (7.47.6) சுந்தரர் நல்லூர் நம்பானே என்று இறைவனை அழைக்கின்றார். திருக்கயிலாயத்தில் பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக பணி புரிந்த போது செய்த சிறிய பிழையின் காரணமாக, நம்பி ஆரூராக பூவுலகில் பிறக்க நேரிடுகின்றது. அப்போது, சுந்தரர் இறைவனிடம், தான் பூவுலக மாயையில் சிக்கிக்கொள்ளாத வண்ணம் இறைவன் ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றார். நிலவுலகில் பிறந்த பின்னர், இவை அனைத்தும் சுந்தரருக்கு மறந்துவிடுகின்றது. ஆனால் இறைவன், தனது வாக்கினை நிறைவேற்றும் பொருட்டு, சுந்தரர் பால் கருணை கொண்டு, அவருக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி, அவரை திருவெண்ணெய் நல்லூர் தலத்திற்கு அழைத்துக் கொண்டு சென்று, அடிமை ஓலை காட்டி அவரை ஆட்கொண்டு அருள் புரிந்ததும், சுந்தரருக்கு அனைத்தும் நினைவுக்கு வருகின்றன. இறைவனின் கருணையை நினைத்து மனம் நெகிழ்ந்து பலவாறும் வியந்து அவரைப் புகழ்ந்து பாடுகின்றார். அதன் பின்னர், பல தலங்கள் சென்று பதிகங்கள் பாடியபோது பொன்னும் மணியும் அளித்து இறைவன் அருள் புரிந்ததை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். எனவே சுந்தரர் பெருமானை பெரிதும் விரும்பியதில் வியப்பு ஒன்றுமில்லை. தான் பெருமானை விரும்பியதை நல்லூர் நம்பான் என்ற தொடர் மூலம் சுந்தரர் தெரிவிக்கின்றார்.

தாங்கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே

வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே

நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே

பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே

பொழிப்புரை:

பக்குவபட்ட உயிர்களின் வினைகளைத் தீர்த்து அருள் புரிந்து, மற்ற தெய்வங்களிலிருந்து வேறுபட்டு இருக்கும் இறைவன் சிவபெருமான், தழைத்து விரிந்த கொன்றை மலர்கள் மற்றும் அரும்புகள் சூடப்பட்ட சடையின் மேல் பிறைச் சந்திரனை ஏற்றவனாக, அனைத்து உயிர்களும் விரும்பும் வண்ணம் உள்ளவனும் பல நலன்கள் உடையதாக பூக்களில் தலை சிறந்ததாக விளங்கும் தாமரை மலையினில் உறையும் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைத் தனது கையில் உணவு உட்கொள்ளும் பிரம கபாலமாகக் கொண்டவனும், தீப்பிழம்பினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் நடனம் ஆடுபவனும், என்னை ஆளுடைய பெருமானும் ஆகிய சிவபெருமான், உமை அன்னையுடன் சேர்ந்து உறையும் தலம் ஈங்கோய் மலையாகும்.

பாடல் 8:

பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவாய

அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணியார் விரல் தன்னால்

நெருக்கி அடர்த்து நிமலா போற்றி என்று நின்று ஏத்த

இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே

விளக்கம்:

பரக்கும்=பரந்த; அணியார்=அழகு மிளிரும்;

பொழிப்புரை:

பரந்த பெருமை உடைய அழகிய இலங்கைத் தீவினில் வாழும் அரக்கர்களுக்கு அரசனாகிய இராவணனின் மணிமுடிகளையும் தோள்களையும், தனது அழகிய கழல் அணிந்த திருவடியின் விரல் ஒன்றினால் மலையின் கீழே அமுங்கி வருந்தும் வண்ணம் நெருக்கிய பெருமான், பின்னர் தனது பிழைக்கு மனம் வருந்தி அரக்கன் இராவணன், நிமலனே போற்றி வழிபட, அவனது நிலைக்கு இரங்கி வரங்கள் பல புரிந்து அருள் புரிந்தவர் சிவபெருமான். அவர் உமை அன்னையுடன் வீற்றிருக்கும் தலம் ஈங்கோய்மலையாகும்.

பாடல் 9:

வரியார் புலியின் உரி தோல் உடையான் மலையான் மகளோடும்

பிரியாது உடனாய் ஆடல் பேணும் பெம்மான் திருமேனி

அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவில் பெருமையோடு

எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய்மலையாரே

விளக்கம்:

வரி=கோடு; பெம்மான்=பெருமான் என்பதன் திரிபு; பெருமைக்குரிய மகன் என்று பொருள்; நடனம் ஆடும் போதும் மாதொரு பாகனாக உள்ள தன்மை, இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. பெருமான் நடனம் ஆடும்போதும் வேதங்கள் ஓதும் போதும், பெருமானுக்கு மிகவும் அருகில் இருந்து கொண்டு அவனது செயல்களை ரசிக்கும் அன்னை, மாதொரு பாகனாக அவன் உள்ள நிலையிலும் பெருமானின் செயல்களை ரசிப்பதாக அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் (4.8.10) நமது நினைவுக்கு வருகின்றது. மாதொருபாகனாக இருக்கும் பெருமானின் திருவாயின் வலது பகுதி வேதத்தை சொல்வதாகவும், இடது பகுதி அந்த வேதத்தை கேட்டு ரசித்தபடியே புன்முறுவல் செய்வதாகவும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். புதுவிரி பொன் செய் ஓலை=ஒளியை பரப்பிக் கொண்டு இருக்கும் புதியதாக செய்யப்பட்ட பொன் தோடு. ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் சங்க வெண் குழையும் கொண்டு நிற்கும் மாதொரு பாகனின் கோலம் இங்கே கூறப்படுகின்றது.

புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஓர் காது சுரி சங்கு

நின்று புரள

விதி விதி வேத கீதம் ஒருபாடும் ஓதம் ஒருபாடும் மெல்ல

நகுமால்

மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல் பாகமாக

வருவர்

இது இவர் வண்ணம் வண்ணம் இவள் வண்ணம் வண்ணம் எழில்

வண்ணம் வண்ணம் இயல்பே

புதிய சுருள் பொன்னால் செய்யப்பட்ட தோட்டினை ஒரு காதிலும், மற்றோர் காதினில் வளைந்த சங்கு தோளில் புரளும் படியாக அணிந்துள்ள பெருமானின், திருவாயின் ஒரு பகுதி வேத கீதங்களைப் பாட, திருவாயின் மற்றொரு பகுதி பெருமான் பாடும் வேத கீதத்தை ரசித்தபடியே புன்முறுவல் பூக்கின்றது. சடையாக காணப்படும் வலது பகுதில், தேன் சொட்டும் கொன்றை மலர் விரிந்த படியே இருக்க, இடது பகுதியில் உள்ள கூந்தல் பின்னப்பட்டு அழகாக காணப்படுகின்றது, இவ்வாறு பெருமானின் தன்மையும் இயல்புகளும் ஒரு புறத்திலும் மற்றோர் புறத்தில் உமை அம்மையின் தன்மையும் இயல்புகளும் காணப்பட்டன, என்று மாதொரு பாகனின் திருவுருவத்தை தான் உணர்ந்த தன்மையை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல் தான். மிகவும் தொன்மையான கோலம் என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும் சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைந்து குறிப்பிடப்படும் இனிமையான பாடல்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்

பால் வெள்ளை நீரும் பசும் சாந்தும் பைங்கிளியும்

சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை

கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

இந்த கோலத்தைக் கண்டு மணிவாசகர் மனம் குளிர்ந்தது போன்று, நம்பியாண்டார் நம்பி மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் இந்த பழமையான கோலத்தை எவ்வாறு தாங்கள் கண்டனர் என்பதை கீழ்க்கண்ட பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன.

கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்ற பதிகத்தின் இருபத்தோராவது பாடலில் நம்பியாண்டார் நம்பி, இறைவனை, வலது காதில் குழையும் இடது காதில் தோடும் அணிந்தவனாக காண்கின்றார். கோஷன் என்ற சொல்லின் திரிபு கோடன்: விசயனுடன் போர் செய்வதற்காக ஆரவாரத்துடன் வந்த சிவபெருமான் கோஷன் என்று அழைக்கப் படுகின்றார். சிவபிரான் பேரில் காதல் கொண்டு, அதன் காரணமாக உடல் மெலிந்து தனது கை வளையல்களை இழந்த தலைவியின் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தோடு அணிந்த காது, இடது காது என்று குறிப்பிட்ட அம்மைக்கு உரிய பகுதியில் தோடு அணிந்து இருப்பதை இங்கே சுட்டிக் காட்டுகின்றார்.

வேடன் என்றாள் வில் விசயற்கு வெங்கணை அன்று அளித்த

கோடன் என்றாள் குழைக் காதன் என்றாள் இடக் காதில் இட்ட

தோடன் என்றாள் தொகு சீர் தில்லையம்பலத்து ஆடுகின்ற

சேடன் என்றாள் மங்கை அங்கை சரி வளை சிந்தினவே

மேற்கண்ட பாடலில் தோடும் குழையும் அணிந்தவனாக குறிப்பிட்டு, மாதொரு பாகனின் நிலையை உணர்த்தியதுடன் நம்பியார் திருப்தி அடையவில்லை போலும். இதே பதிகத்தின் ஐம்பதாவது பாடலில் மிகவும் விவரமாக, இறைவனின் வலது பாகத்தில் உள்ள பொருட்களையும் இடது பாகத்தில் உள்ள பொருட்களையும் பட்டியல் செய்கின்றார். இடம் என்ற சொல், இடது பாகம் மற்றும் இருக்கும் இடம் என்ற இரண்டு பொருட்களில் இந்த பாடலில் கையாளப் பட்டுள்ளது. வீ=பூச்செண்டு: பாந்தள்=பாம்பு; சங்கம்=வெண் சங்கால் அமைந்த வளையல்: அக்கு=எலும்பு மாலை: அங்கம்சரி=அங்கு+அம்+சரி: அங்கு, பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்: அம் சரி=அழகாக சரிந்த இடுப்பு. கங்கை, குண்டலம், மழு ஆயுதம், பாம்பு, தோலாடை, அக்கு மாலை, ஆகியவை அம்பலவனை உணர்த்தும் பொருட்களாகவும் தோடு, பூச்செண்டு, சங்கு வளையல், சேலை ஆடை, அழகாக சரிந்த இடுப்பு ஆகியவை அணங்கினை உணர்த்தும் பொருட்களாகவும் இன்கே குறிப்பிடப் பட்டுள்ளன.

கங்கை இடம் வலம் பூ வலம் குண்டலம் தோடு இடப்பால்

தங்கும் கரம் வலம் வெம்மழு வீயிடம் பாந்தள் வலம்

சங்கம் இடம் வலம் தோல் இடம் வலம் அக்கு இடம்

அங்கம் சரி அம்பலவன் வலம் காண் இடம் அணங்கே

சேரமான் பெருமான் நாயனாரும் தான் அருளிய பொன் வண்ணத் திருவந்தாதி என்ற பதிகத்தின் அறுபத்து ஐந்தாவது பாடலில் மாதொரு பாகனின் கோலத்தை விவரிக்கின்றார் வலது பகுதியில் வீரக்கழல், பாம்பு, திருநீறு, எரி, எலும்பு மாலை, மூவிலை வேல் நீரினைத் தாங்கிய சடை முதலியன பெருமானது வலது பக்கத்திலும், இடது பகுதியில் பாடகம். மேகலை, சாந்து, பந்து, மலர் மாலை, மோதிரம், முதலியன பெருமானது இடது பக்கத்திலும் இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது.

வலம் தான் கழல் இடம் பாடகம் பாம்பு வலம் இடம்

மேகலம் தான் வலம் நீறு இடம் சாந்து எரி வலம் பந்து இடம் என்பு

அலர்ந்தார் வலம் இடம் ஆடகம் வேல் வலம் ஆழி இடம்

சலம் தாழ் சடை வலம் தண் அம் குழல் இடம் சங்கரற்கே

பொழிப்புரை:

வரிவரியாக கோடுகள் நிறைந்த புலித் தோலை ஆடையாக உடைய பெருமான், இமவானின் மகளாகிய உமை அன்னையுடன் பிரியாது, மாதொருபாகனாக அவளுடன் சேர்ந்து நடனம் ஆடுவதை விரும்பும் தலைவராவார். இந்த பெருமான், திருமாலும் பிரமனும் முறையே திருவடியையும் திருமுடியையும் கண்டு அறியாத வண்ணம், தனது திருமேனி நீண்ட தீப்பிழம்பாக ஓங்கி நிமிர்ந்து நிற்கும் வண்ணம், அளவில்லாத பெருமைக்கு உரிய கோலத்துடன் காட்சி தந்த பெருமான், எங்களது தலைவன் உறையும் இடம் ஈங்கோய்மலையாகும்.

பாடல் 10:

பிண்டி ஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும்

மண்டை கலனாக் கொண்டு திரியும் மதியில் தேரரும்

உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது உமையோடு உடனாகி

இண்டைச் சடையான் இமையோர் பெருமான் ஈங்கோய்மலையாரே

விளக்கம்:

பிண்டி=அசோக மலர்கள்; சமணர்கள் தெய்வமாக கருதும் அருகதேவன் அசோக மரத்தின் நிழலில் அமர்ந்து இருப்பதாக கருதப் படுவதால், அசோக மரத்தினை மிகவும் புனிதமாக கருதும் சமணர்கள், அசோக மரத்தின் இலைகளை ஏந்திச் செல்வதை பெருமையாக கருதினர் என்பது இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. ஏன்று=தாங்கி; மண்டை=புத்தர்களின் உண்கலன்; இண்டை என்பது ஒரு வகைச் செடி என்றும் வட்டமாக கட்டப்பட்ட மாலை என்றும் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. இரண்டுமே இங்கே பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம். உண்டி வயிறார்=விரார் உண்பதால் பருத்த உடலுடன் சமணர்களும் புத்தர்களும் காணப்பட்டதாக ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

இந்த பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்கள் சொல்லும் பழிச்சொற்களை பொருட்படுத்தாமல் பெருமான் இருப்பதாக ஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமான் திருநீற்றினைத் தனது உடலெங்கும் பூசி இருக்கும் காரணத்தையும் உலகெங்கும் திரிந்து பலி ஏற்கும் செய்கையின் பின்னணியில் உள்ள நோக்கத்தையும் புரிந்து கொள்ளாமல், அந்த இரண்டு செய்கைகளை பரிகாசம் செய்வது புத்தர் மற்றும் சமணர்களின் வழக்கமாக இருந்து வந்தது. ஏற்பது இகழ்ச்சி என்பது முதுமொழி. ஆனால் சிவபெருமான் தன் பொருட்டு பலி ஏற்காமல் மக்களை உய்விப்பதற்காக பலி ஏற்பதால், அவன் எடுக்கும் பிச்சை இகழ்ச்சிக்கு உரியது அல்ல. இதனை புரிந்து கொள்ளாமல் பலர் பெருமான் பிச்சை எடுப்பதை இகழ்வாக கூறினாலும், பெருமான் அதனை பொருட்படுத்துவதில்லை. உயிர்கள் தங்களது மலங்களை பெருமான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைவதற்கு ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, பிறரது பழிச் சொற்களை புறக்கணித்து பிச்சை எடுக்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம், பழி ஓராது பெருமான் பலி ஏற்கின்றார் என்று திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.93.8) திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பல் செய்திகளையும் தத்துவங்களையும் விளக்கமாக உரைக்கும் வேதங்களும், அருளாளர்கள் இயற்றிய பாடல்களும், பெருமானின் ஒரு சில செய்கைகளையே சொல்ல முடிகின்றது என்று உணர்த்தி, பெருமானின் பெருமை சொற்களையும் கடந்தது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மலைமல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்

தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார்

சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்

சில வல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே

பொழிப்புரை:

அருகதேவன் வீற்றிருக்கும் அசோகமரம் என்று அந்த மரத்தின் பெருமையை கூறியவர்களாக பெருமையுடன் அசோக மரத்தின் தளிர்களை ஏந்தியவர்களாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பெயர்ந்து செல்லும் தன்மை உடையவர்களும், சிவபெருமான் தான் உண்மையான மெய்ப்பொருள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளாமல், சைவசமயத்தின் கொள்கைகளுடன் பிணங்கி மாறுபட்ட சமயநெறியில் நிற்கும் சமணர்களும், மண்டை என்று அழைக்கப்படும் உண்கலனை ஏந்திக் கொண்டு உணவுக்காக திரிந்து கொண்டு பிச்சை எடுத்து அறிவில்லாதவர்களாக திகழும் புத்தர்களும் வயிறார உண்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக பருத்த உடலுடன் திரிகின்றனர். அவர்களது பொய்யான உரைகளை பொருட்படுத்தாது ஒதுக்கித் தள்ளும் பெருமான், உமை அன்னையுடன் இணைந்தவனாக, இண்டை மாலைகளை அணிந்தவனாக காட்சி தரும் பெருமான், இமையோர்களின் தலைவனாக விளங்கும் பெருமான், ஈங்கோய்மலை எனப்படும் தலத்தினில் உறைகின்றான்.

பாடல் 11:

விழவார் ஒலியும் முழவும் ஓவா வேணுபுரம் தன்னுள்

அழலார் வண்ணத்து அடிகள் அருள் சேர் அணிகொள் சம்பந்தன்

எழிலார் சுனையும் பொழிலும் புடைசூழ் ஈங்கோய்மலை ஈசன்

கழல் சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே

விளக்கம்:

இந்த பதிகத்தினை முறையாக ஓதி பெருமானை வழிபடும் அடியார்களின் கவலை, எப்போது தாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவோம் என்பதாகவே இருக்கும். அந்த கவலையினை தீர்க்கும் வல்லமை வாய்ந்தவர் சிவபெருமான் ஒருவர் தான் என்பதையும், அந்த பேற்றினை நாம் பெறுவதற்கு உதவும் பதிகம் என்பதையும் உணர்த்தும் வண்ணம், பெருமானின் திருவடிகளில் சேர்ப்பிக்கும் பாடல்கள் கொண்ட பதிகம் என்ற பொருள் பட, ஈசன் கழல் சேர் பாடல் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். ஓவா=இடைவிடாது;

பொழிப்புரை:

திருவிழா ஆரவாரங்களும் முழவின் ஒலியும் இடைவிடாது ஒலிக்கும் வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தைச் சார்ந்தவனும், கொழுந்து விட்டெரியும் நெருப்புச் சுடர் போன்ற நிறத்தினில் திருமேனியை உடைய பெருமானின் அருள் சேரப் பெற்றவனும், தெய்வீக அழகு உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன்; எழில் மிகுந்த சுனைகள் மற்றும் சோலைகளால் சூழப்பட்ட ஈங்கோய்மலை தலத்தினில் உறையும் ஈசனின் திருவடிகளை நினைத்து பாடல்கள் பத்தினையும் முறையாக ஓதும் அடியார்கள் தங்களது துயரங்கள் தீர்க்கப்படுவார்கள்.

முடிவுரை:

இந்த பதிகத்தின் பல பாடல்களில் நள்ளிரவில் நட்டம் ஆடும் பெருமான் என்றும் சுடலைப் பொடி பூசிய பெருமான் என்றும் குறிப்பிட்டு, ஊழிக் காலத்தையும் கடந்து என்றும் அழியாது பெருமான் இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு காலத்தை வென்றவர் தானே, பிறப்பு மற்றும் இறப்பினைக் கடந்தவர் தானே, உயிருக்கு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்க முடியும். பிறப்பிறப்பினை வென்றவர் தானே, உயிர்களுக்கு அத்தகைய நிலையினை அளிக்க முடியும். எனவே இந்த கருத்தினை இந்த பதிகத்தின் மையக் கருத்து என்று நாம் கொள்ளலாம். பதிகத்தின் கடைப் பாடலிலும். பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்கள், தங்களது கவலையினை, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து என்று விடுபடுவோம் என்ற கவலையை, களைந்து கொள்ளும் திறமை உடையவர்களாக, இறைவனின் அருளால், மாறுவார்கள் என்று ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். தனது கலைகள் அனைத்தும் முற்றிலும் தேய்ந்து அழிந்த நிலையில் சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்த பெருமான் என்று அவரது கருணைச் செயல் பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்தப் படுகின்றது. இரண்டாவது பாடலில், உலகத்தின் அனைத்து உயிர்களும் உலகப்பொருள்களும் அழிந்த பின்னரும் இறைவன் அழியாது இருக்கும் நிலை குறிப்பிடப்பட்டு, பிறப்பும் இறப்பும் இல்லாதவன் இறைவன் என்று சொல்லப் படுகின்றது. வேறு ஒருவரும் இல்லாத வண்ணம், தனது நெற்றியில் கண் கொண்டு பெருமான் உள்ள ஒப்பற்ற நிலை மூன்றாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. நான்கு மறைகளையும் உலகுக்கு அருளிய பெருமான், அந்த வேதங்கள் ஓதப்படும் இசை வடிவமாகவும் இருக்கும் தன்மை நான்காவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டு, அனைத்து உயிர்களும் பொருட்களும் ஒரு நாள் அழிந்து சாம்பலாக மாறும் தன்மை கொண்டவை என்பதையும் தான் ஒருவனே நிலையானவன் என்பதையும் பெருமான் உணர்த்துகின்றார் என்று ஐந்தாவது பாடல் கூறுகின்றது. எவராலும் அழிக்க முடியாத திரிபுரத்து அரக்கர்களின் கொட்டைகளை அழித்த வல்லமை ஆறாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமான் ஒருவனே உயிர்களுடன் பிணைந்துள்ள வினைகளை நீக்கும் ஆற்றல் படைத்தவன் என்று ஏழாவது பாடலில் ஞானசம்பந்தர் கூருகின்றார். அடியார்களின் பிழையினை பொறுக்கும் கருணையாளன் என்பதை எட்டாவது பாடல் உணர்த்துகின்றது. திருமால் பிரமன் ஆகிய இருவரின் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவன் சிவபெருமான் என்பதை ஒன்பதாவது பாடலில் ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். சமணர்கள் மற்றும் புத்தர்கள் கூறும் பழிச் சொற்களை பொருட்படுத்தாமல் தனது கருணைச் செயல்களை தொடர்ந்து செய்துவரும் பெருமான் என்று பத்தாவது பாடல் உணர்த்துகின்றது. இத்தகைய பாடல்கள் மூலம் பெருமானின் பெருமைகளை சரிவர உணர்ந்து கொண்ட நாம், பெருமானின் புகழினை உணர்த்தும் பதிகங்கள் பாடி, அவனைப் பணிந்து வணங்கி இம்மையிலும் மறுமையிலும் நலமுடன் வாழ்வோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Vaanathhtu Uyar Thanmathi
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

வானத்துயர் தண்மதி


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: