Go Back

22/03/21

வானார் சோதி மன்னு



பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு சென்ற ஞானசம்பந்தர் அதன் பின்னர், பெரும்புலியூர் நெய்த்தானம் மழபாடி ஆகிய தலங்கள் செல்கின்றார். மழபாடியில் சில நாட்கள் தங்கிய பின்னர், அங்கிருந்து கானூர் அன்பிலாலந்துறை மாந்துறை ஆகிய தலங்கள் சென்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. அதன் மருங்கு என்று மழபாடி தலம் குறிக்கப் படுகின்றது. இறைவனின் அருளினால் திருக்கானூர் பணிந்து ஏத்தி என்று சேக்கிழார் குறிப்பிடுவதை நாம் உணரலாம். இறைவன் உறையும் திருத்தலங்கள் சென்று அவனைக் கண்டு களிப்பதும், அவனது அருள் இருந்தால் தான் நடைபெறும். ஆனால் அடிப்படையாக உயிர்கள் அவ்வாறு பல தலங்கள் செல்லவேண்டும் என்று விரும்பவேண்டும். ஆன்ற=பல நற்குணங்கள் பொருந்திய; முதல் சைவர்=ஆதி சைவர்; கரடம்=அருவி; மதநீர் அருவி போன்று பெருகிப் பாயும் மதயானை; பல பதிகள் என்று சேக்கிழார் குறிப்பிடும் தலங்கள் யாது என்று அறிய முடியவில்லை; அந்த தலங்களுக்கு உரிய தேவாரப் பதிகங்களும் கிடைக்கவில்லை.. இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய ஒரு பதிகமும் அப்பர் பிரான் அருளிய ஒரு பதிகமும் நமக்கு கிடைத்துள்ளன. சுந்தரர் அருளிய பதிகம் ஏதும் கிடைக்கவில்லை. எனினும் சுந்தரர் இந்த தலத்து இறைவனை கானூர் கட்டியே என்று ஊர்த்தொகை பதிகத்தினில் அழைக்கின்றார்.

அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ

முதல் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனைத் தொழுது போற்றிப்

பத நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பல பதிகள் பணிந்து பாடி

மதகரட வரை உரித்தார் வடகரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர்

இந்த திருத்தலம் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி நகரத்திற்கு ஐந்து கி.மீ வடக்கே, உள்ள விஷ்ணம்பேட்டை ஊருக்கு அருகில் (இரண்டு கி.மீ தொலைவில்) உள்ளது. மணல்மேடு என்று அழைக்கப்படுகின்றது. இறைவனின் திருநாமம் செம்மேனி நாதர், கரும்பேஸ்வரர்; அம்பிகையின் பெயர் சிவயோக நாயகி, மற்றும் சவுந்தரநாயகி. கொள்ளிடக்கரையில் உள்ள இந்த திருக்கோயில் முழுதும் மணலால் மூடப்பட்டு இருந்தது. 1924ம் வருடம் கொள்ளிடத்தில் வந்த வெள்ளம் வடிந்த பின்னர், ஒரு கரும்பு முளைத்து எழுந்திருந்ததைக் கண்ட மக்கள், அந்த இடத்தை தோண்டி பார்க்க, மணல் குன்றின் அடியே திருக்கோயில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூலவர் சுயம்பு. அம்பிகை விக்ரம் சாளகிராமத்தால் ஆனது. பாவநாசப் பதிகத்தினில் அப்பர் பிரான் கானூர் முளைத்த கரும்பு என்று குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் பாடியதற்கு ஏற்ப இறைவன் ஒரு கரும்பின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள திருவுள்ளம் கொண்டான் போலும். பின்னர் கோயிலினை அகழ்ந்தெடுத்து குடமுழுக்கு செய்தனர். கோயில் குடமுழுக்கு செய்யப்பட்ட போது, காஞ்சி மகாசுவாமிகள் இங்கே தங்கியிருந்தார். பங்குனி மாதத்தின் நடுவில் மூன்று நாட்களில், சூரியனின் கதிர் மூலவர் மீது படிவதை, சூரியன் இறைவனுக்கு செய்யும் வழிபாடாக கருதுகின்றனர். மூலவர் விமானம் உருண்டை வடிவில் உள்ளது, அம்பிகை சிவபிரானை நோக்கி தவம் இருந்த போது, இறைவன் அவருக்கு அக்னிப் பிழம்பாக காட்சி அளித்ததை குறிப்பிடும் வகையில் சுவாமி செம்மேனிநாதர் என்று அழைக்கப்படுகின்றார். அம்பிகை கிரீடமின்றி ஜடாமகுடத்துடன் இருப்பதை காணலாம். அம்பிகை இங்கே தவம் புரிந்ததை உணர்த்தும் வகையில் அம்பிகையின் திருநாமம் சிவயோக நாயகி என்று வந்தது. பரசுராமர், வேதங்கள், சூரியன், உமையன்னை ஆகியோர் வழிபட்ட தலம். தலமரம்=வன்னி, வில்வம்; .

பாடல் 1:

வானார் சோதி மன்னு சென்னி வன்னி புனங் கொன்றை

தேனார் போது தானார் கங்கை திங்களொடு சூடி

மானேர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார்

கானூர் மேய கண்ணார் நெற்றி ஆனூர் செல்வரே

விளக்கம்:

வானார்=வானில் பொருந்திய; மன்னு=நிலையாக பொருந்திய; போது=மலர்; புனம்=காடு; மாலை ஆடுவார் என்று மாலை நேரத்தில் பெருமான் நடனம் ஆடியதை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினை உண்டு தங்கள் அனைவரையும் காப்பாற்றிய பெருமானுக்கு நன்றி சொல்வதற்கு ஒரு நாள் மாலை நேரத்தில் தேவர்களும் அனைவரும் சென்று அவரை வணங்கினார்கள். அதனால் மகிழ்ச்சி அடைந்த பெருமான், நந்திதேவரின் இரு கொம்புகளின் இடையே நின்ற வண்ணம் நடனம் ஆடினார். உமையன்னை முதலாக அனைவரும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். தேவியின் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருந்தது; ஆலகால விடம் உட்கொண்ட பின்னரும் பெருமானின் உடலுக்கு எந்த விதமான கேடும் நேராமல் இருந்தது மற்றும் மிகவும் அழகான நடனத்தினை தான் காணும் வாய்ப்பினை பெற்றது. ஆகிய இரண்டுமே தேவியின் உவப்பிற்கு காரணங்கள். தினமும் மாலை வேலை பிரதோஷ காலமாக கருதப்பட்டு திருவாரூரில் சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. இந்த நடனமே இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை:

வானில் உலவும் சூரியன் சந்திரன் போன்று நிலையான ஒளி வீசும் சென்னியில் வன்னி, காடுகளில் வளர்வதும் தேன் நிறைந்ததுமான கொன்றை மலர்கள், தானே வந்து விழுந்த கங்கை நதி, ஒற்றைப் பிறைச் சந்திரன் ஆகியவற்றை தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ள இறைவன், மான் போன்று மருண்ட பார்வை கொண்ட பார்வதி தேவி கண்டு உவக்கும் வண்ணம் மாலை நேரத்தில் நடனம் ஆடுகின்றார். இத்தகைய பண்புகள் கொண்ட பெருமான், தனது நெற்றியில் கண் உடையவரும், முக்திச் செல்வத்தை உடையவரும், எருதினைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களிலும் திரிபவரும் ஆகிய பெருமான் கானூர் தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.

பாடல் 2:

நீத்தலாகா வெள்ளம் மூழ்கு நீள்சடை தன் மேலோர்

ஏய்ந்த கோணல் பிறையோடு அரவு கொன்றை எழில் ஆரப்

போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போலாம்

காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே

விளக்கம்:

இந்த பதிகத்தின் சில பாடல்கள் அகத்துறை வகையில் அமைந்த பாடல்களாக உள்ளன. தாருகவனத்து மகளிரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த பாடல்கள் என்று கூறுவார்கள். பிச்சைப் பெருமானாக, தனது கையினில் ஓட்டினை ஏந்தியவராக பலியேற்க தாருகவனம் சென்ற பெருமானின் அழகினால் கவரப்பட்டு, முனிவர்களின் மனைவியர் பலரும், தங்களையும் அறியாத நிலையில், தாங்கள் இல்லத்தில் செய்து கொண்டிருந்த வேலைகளை விட்டுவிட்டு, பெருமானின் பின்னே தொடர்ந்து சென்றதாக புராணம் கூறுகின்றது. அன்று, தாங்கள் வாழ்ந்து வந்த இல்லங்களின் வழியே வீதிவலம் வந்த பெருமானின் கோலத்தினை, தனது அழகிய வாயினால் இனிமையான சொற்கள் கொண்டு பலி இடுவீர்களாக என்று கேட்டதை நினைக்கும் தாருகவனத்து மகளிரின் தன்மையை எடுத்துரைக்கும் பாடலாக உள்ளது. பைஞ்ஞீலி தலத்தின் மீது சுந்தரர் அருளிய பதிகத்தின் (7.36) பாடல்களும் இவ்வாறே அமைந்துள்ளன. நீத்தலாகா வெள்ளம்=நீந்திக் கடக்க முடியாத அளவு பெருகிய வெள்ளம்; மூழ்கு=மூழ்கி மறைந்த; ஏய்ந்த=பொருந்த; போந்த=வாயிலிருந்து வெளிவந்த; மைந்தர்=ஆண்மகன்; கோணல்=வளைந்த; வெகு நாட்களாகத் தன்னை விட்டு பிரிந்திருக்கும் தலைவனின் வருகையை ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிற்கும் தலைவி, கடந்த நாட்களில் தலைவனுடன் தான் சேர்ந்திருந்த இனிமையான பொழுதுகளை நினைத்து அசை போடும் தலைவியின் தன்மையை குறிப்பிடும் சங்க இலக்கியப் பாடல்களைப் போன்று இந்த பாடல் அமைந்துள்ள விதம் ரசிக்கத் தக்கது. தனது உள்ளம் கவர்ந்த தலைவன் பெருமான் தான் என்பதை சுட்டிக் காட்டும் வண்ணம் பெருமானின் சடையில் உள்ள பொருட்கள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. இந்த பாடல் போன்றே வரும் பாடல்களிலும் இறைவனின் அடையாளத்தினை சுட்டிக் காட்டும் சம்பந்த நாயகி, இறைவனை தனது உள்ளம் கவர்ந்த கள்வன் என்று கூறுகின்றாள். எப்படியெல்லாம் தனது உள்ளம் கவரப்பட்டது என்பதை விரிவாக கூறும் நோக்கம் தான் என்னே. அந்த அடையாளங்கள் கொண்ட இறைவனை நாம் கண்டு சம்பந்த நாயகியுடன் சேர்த்து வைத்து அவளின் துயர நிலையினை மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.

பொழிப்புரை:

நீந்திக் கடக்க முடியாத வண்ணம் பெருவெள்ளத்துடன், தன்னைத் தாங்குவதற்காக சடையினை விரித்த வண்ணம் நிற்கும் பெருமான் சடையினையும் மூழ்கடிக்கும் நோக்கத்துடன் வேகமாக கீழே இறங்கி பாய்ந்து வந்த கங்கை நதி, வளைந்த ஒற்றைப் பிறைச் சந்திரன், பாம்பு, கொன்றை மலர்கள் ஆகியவற்றைத் தனது நீண்ட சடையில் தாங்கிய பெருமான், அழகான தோற்றத்துடன் வீதிவுலா வந்த பெருமான் அழகிய இனிமையான சொற்களைப் பேசி இன்பம் பயந்தார்.அனைவரிலும் அதிகமான வல்லமை உடையவராக விளங்கும் பெருமான், திருநீற்றினை நறுமணம் தரும் சந்தனமாக கருதி தனது மேனி முழுவதும் பூசிக் கொள்கின்றார். அவரது இருப்பிடம் காந்தள் சடைகள் தழைத்து வளர்ந்து பூத்து நறுமணம் கமழும் கானூர் தலமாகும்.

பாடல் 3:

சிறையார் வண்டும் தேனும் விம்மு செய்ய மலர்க் கொன்றை

மறையார் பாடல் ஆடலோடு மால் விடை மேல் வருவார்

இறையார் வந்து என் இல் புகுந்து என் எழில் நலமும் கொண்டார்

கறையார் சோலைக் கானூர் மேய பிறையார் சடையாரே

விளக்கம்:

இறைவனே தனது இல்லத்திற்கு வந்ததாக இங்கே கூறப்படுகின்றது. பக்குவப்பட்ட ஆன்மாக்களைத் தேடி அவர்களின் அருகே சென்று, அவர்களது மலங்களைத் தனது கலத்தினில் பிச்சையாக ஏற்று அவர்களுக்கு முக்தி நிலை அருள்வது இறைவனுக்கு மிகவும் பிடித்த செய்கை அல்லவா. தனது இல்லம் இருக்கும் வீதிக்கு பெருமான் வந்ததை சென்ற பாடலில் குறிப்பிட்ட சம்பந்த நாயகி இந்த பாடலில் தனது இல்லத்திற்கு இறைவன் வந்ததாக குறிப்பிட்டு, இறைவன் பால் தீராத காதல் கொண்ட தன்னுடன் இறைவன் சேராமையால், தான் ஏக்கம் கொண்டு தனது அழகினை இழந்து நிற்கும் தன்மையை குறிப்பிடுகின்றாள். இந்த பாடலில் இறைவன் மறைகள் ஓதிய வண்ணம் வந்ததாக சம்பந்த நாயகி கூறுகின்றாள். மறைகள் ஓதி வந்தமையால் தனது கருத்தினைக் கவர்ந்த தலைவன், வஞ்சனை ஏதும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கை தனக்கு பிறந்ததாக உணர்த்தும் தலைவி, தனது அழகு குறைந்தது என்று குறிப்பிட்டு, தலைவனுடன் சேராத காரணத்தால் தான் ஏக்கம் கொண்டு உடலிளைத்தாக குறிப்பிட்டு, தனது அழகு குறைந்தது என்று கூறுகின்றாள். தனது அழகு குறைந்ததற்கு காரணம் இறைவன் என்பதால், இறையார் வந்து என் இல் புகுந்து எழில்நலமும் கொண்டார் என்று கூறுகின்றாள். விம்மு=நிறைந்து ததும்பும்; ஆர்=பொருந்திய; மால்=சிறப்பு வாய்ந்த; விடை=இடபம்; கறை=இருள்; செழித்து வளர்ந்த மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பின்னைப் பிணைந்து இருப்பதால், சூரியனின் ஒளிக் கதிர்கள் ஊடுருவிச் செல்ல முடியாமல் இருள் சூழ்ந்து காணப்படும் சோலை என்பதனை உணர்த்த கறையார் சோலை என்று கூறுகின்றார். இந்த குறிப்பு மூலம் தலத்தின் நீர்வளமும் நிலவளமும் உணர்த்தப் படுகின்றது.

தேவார முதல்வர்கள் வாழ்ந்து வந்த காலத்தில், அந்தணர்கள் வேதங்களை முறையாக கற்று, தெளிவான பொருளுடன் மற்றவர்க்கு கற்பித்தும், வேத மந்திரங்களை ஓதி இறைவனைப் புகழ்ந்து வழிபட்டவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் வாழ்ந்து வந்த தன்மை பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் வளர்ந்த சம்பந்த நாயகியும் இறைவன் வேதங்களை ஓதியவாறு தனது இல்லம் வந்தார் என்று கற்பனை செய்கின்றாள். அந்த சமயத்தில் அவரது சொற்களிலும் பண்பிலும் திருமேனி அழகிலும் தனது மனதினை பறிகொடுத்தாக கற்பனை செய்யும் தலைவி, இறைவன் தனது விருப்பத்தினை புரிந்து கொண்டு தனது காதலை ஏற்றுக்கொண்டு, தன்னை அவனுடன் இணைத்துக் கொண்டு அருள் புரிவார் என்று நம்பினாள். ஆனால் தனது எண்ணம் ஈடேறாமல் போகவே, வேதங்கள் ஓதிய இறைவன், தன்னை ஏமாற்றியதை குறித்து தனது ஏக்கத்தை தெரிவிக்கும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. உலகினில் இறைவன் ஒருவன் தானே ஆண்மகன்; அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்கும் அவரது திருவடிகளைச் சென்று அடைந்து, அவரிலிருந்து என்றும் பிரியாமல் இணைந்து வாழ வேண்டும் என்பது தானே அருளாளர்களின் விருப்பமாக மிளிர்ந்ததை நாம் பல பாடல்களில் காண்கின்றோம் அல்லவா. அந்த விருப்பம் தானே அனைத்து உயிர்களின் விருப்பமாகவும் இருக்க வேண்டும். இந்த விருப்பத்தினை வெளிப்படுத்தும் பாடலாக, தன்னை இறைவன் பால் தீராத காதல் கொண்ட பெண்ணாக உருவகித்துக் கொண்டு, ஞானசம்பந்தர் அருளிய பாடல் இது. இந்த கருத்தினை ஒட்டி அல்லவா பசுபதி என்று நாம் அவனை அழைக்கின்றோம்.

அப்பர் பிரானும், தன்னை இறைவன் பால் தீராத காதல் கொண்ட தலைவியாக தன்னை உருவகித்துக் கொண்டு, தனது அருகில் வந்த பெருமான், வாக்கால் மறை விரித்துப் பேசிய பெருமான், மாயமாக தன்னை விட்டு பிரிந்து விட்டாரே என்று ஏங்குவதாக, வலம்புரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.58.3) கூறுகின்றார். தீக்கூரும்=நெருப்பு மிகுந்து எரிவது போன்று தோன்றும்; அரி=திருமால்; தன்னிடம் ஆக்கூர் செல்வதாக கூறிய பெருமான், அந்த இடத்திற்கு செல்லாமல் வலம்புரம் தலத்திற்கு சென்றதாக அப்பர் நாயகி இந்த பாடலில் கூறுகின்றாள். தான் செல்வதாக சொன்ன இடத்திற்கு செல்லாமல், வேறு ஒரு இடத்திற்கு சென்ற பெருமான் வஞ்சகம் புரிந்ததாகவும் மாயம் பேசியதாகவும் கூறுகின்றாள். இவ்வாறு பெருமான் செய்த செயல், அவரது வேடத்திற்கு சற்றும் பொருந்தாத செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், அவரது கோலத்தினை இந்த பாடலின் மூன்றாவது மற்றும் நான்காவது அடிகளில், அப்பர் நாயகி குறிப்பிடுகின்றாள்.

தீக்கூரும் திருமேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம்

திகழ்ந்த செல்வர்

ஆக்கூரில் தான்தோன்றிப் புகுவார் போல் வருவினையேன் செல்வதுமே

அப்பால் எங்கும்

நோக்கார் ஒரு இடத்து நூலும் தோலும் துதைந்து இலங்கும்

திருமேனி வெண்ணீறாடி

வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே

மன்னினாரே

பரிதிநியமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.108.7) திருஞானசம்பந்தர் வெண்ணீறு தனது திருமேனி முழுதும் பூசியவராக வேத கீதங்கள் பாடியவராக தனது இல்லம் தேடி பலி ஏற்பதற்கு பெருமான் வந்ததாக கற்பனை செய்யும் சம்பந்த நாயகி, தன்னை விட்டு பிரிந்து விட்டார் என்றும், அந்த பிரிவினால் வருத்தம் அடைந்த தனது உடல் இளைத்து, முன் கை மிகவும் மெலிந்து தனது வளையல்கள் கழன்று விட்டதாகவும் குறிப்பிட்டு, தனது வளையல்கள் கவர்ந்த பெருமான் என்று இறைவனை குற்றம் சாட்டுகின்றாள்; பின் தயங்க=பின்புறம் விளங்கித் தொங்க; இறை=முன்கை;

பிறை வளர் செஞ்சடை பின் தயங்கப் பெரிய மழு ஏந்தி

மறையொலி பாடி வெண்ணீறு பூசி மனைகள் பலி தேர்வார்

இறைவளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்

பறையொலி சங்கொலியாழ் விளங்கும் பரிதிந் நியமமே

வெண்காடு தலத்தின் மீது அருளிய பாடலில் (6.35.7) அப்பர் பிரான், அப்பர் நாயகி வேதம் ஓதும் வெண்காடு விகிர்தனார், பால் போன்ற இனிமையான மொழிகளை பேசி தனது தன்மை அழியும் வண்ணம் செய்தார் என்று தனது தோழியிடம் கூறுகின்றாள். இந்த பாடல் தனது தோழியிடம், தலைவி கூறுவதாக அமைந்த பாடலாகும். கோணாகம்=வளைந்த நாகம் என்றும் கொடிய நஞ்சினை உடைய நாகம் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். பாலைப் பரிசு அழிய=பாலின் இனிய தன்மையும் தோற்று அழியுமாறு இனிய வார்த்தைகள் பேசுதல்; பேணா வாழ்க்கை=விரும்பாத வாழ்க்கை; சிவபெருமான் வாழும் வாழ்க்கை பெண்கள் விரும்பாத வாழ்க்கை என்று அப்பர் நாயகியின் வாக்காக இந்த பாடலில் கூறப்படுகின்றது. .சிவபெருமானின் உறவுகளாக, அவனை எப்போதும் சூழ்ந்து இருப்பன பேய்க்கணங்கள்; அவனது உண்கலனோ, உலர்ந்த மண்டையோடு; அவனது இருப்பிடமோ சுடுகாடு;. அவனது உடலில் ஒரு பாகத்தில் இருப்பதோ பார்வதி. இவ்வாறு காணப்படும் சிவபெருமனைக் காணும் எந்த பெண் அவன் மீது காதல் கொள்வாள் என்று கேட்கின்றாள்; இருப்பினும் தான் அவனது இனிய பேச்சினில் மயங்கி அவன் பால் தீராத காதல் கொண்டதாக கூறுகின்றாள். .

பெண்பால் ஒரு பாகம் பேணா வாழ்க்கைக் கோணாகம் பூண்பனவும்

நாணாம் சொல்லார்

உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றேல்

ஓவி உண்ணார்

பண்பால் விரிசடையர் பற்றி நோக்கிப் பாலைப் பரிசு அழியப்

பேசுகின்றார்

விண் பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே

மேற்கண்ட பாடலில் விகிர்தனார் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். விகிர்தர் என்றால் ஏனையோரிலிருந்து மாறுபட்டவர் என்று பொருள். இந்த பாடலில் உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் என்று பெருமானை அப்பர் நாயகி இந்த பாடலில் உணர்த்துகின்றாள்; உண்பதும் உறங்குவதுமே வாழ்க்கையாக கொண்டுள்ள உலக மக்களிடமிருந்து வேறுபட்டவர் என்பது இங்கே உணர்த்தப்பட்டு விகிர்தர் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கப்படுகின்றது. ஏனையோர் வாழ்வதோ பல வளங்களும் பொருந்திய வீடு, சிவபெருமான் வாழ்வதோ சுடுகாடு; ஏனையோர் இணைந்து வாழ்வது நன்மக்களுடன், பெருமான் இணைந்து இருப்பதோ பூத கணங்களுடன்; ஏனையோர் உண்பதோ அறுசுவை உணவு; பெருமான் உண்பதோ நஞ்சு; ஏனையோர் இரப்பதற்கு, பிச்சை எடுப்பதற்கு கூசுவார்கள், பெருமானோ விருப்பத்துடன் பிச்சை எடுக்கின்றார்; ஏனையோர் உடலில் பூசுவது நறுமணம் கமழும் வாசனைப் பொடி, சிவபெருமான் பூசுவதோ மயானத்து சாம்பல், ஏனையோர் அணிவது நுண்ணிய பருத்தியாடை மற்றும் பட்டாடை, சிவபெருமான் அணிவதோ யானைத்தோல் மற்றும் புலித்தோல்; ஏனையோர் அணிவதோ அழகான அணிகலன்கள், பெருமான் அணிவதோ பாம்பு, பன்றிக் கொம்பு, ஆமையோடு, ஏனையோர் ஆண் வேறு பெண் வேறு என்று உருவத்தில் இருப்பார்கள் பெருமான் இருப்பதோ ஆண் பெண் இரண்டும் கலந்த உருவத்தில்; ஏனையோர் தீயினைக் ஆண்டு அஞ்சுவார்கள், பெருமானோ தீயினைக் கையில் ஏந்தியவாறு நடனம் ஆடுகின்றார். இவ்வாறு பெருமானுக்கும் ஏனையோருக்கும் உள்ள வேறுபாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம். விளக்கம் மேலும் விரிவடையும் என்று அஞ்சி, இத்துடன் நிறுத்தப் பட்டுள்ளது. இந்த பண்புகளை சுருக்கமாக ஒவ்வா என்ற சொல்லினை பயன்படுத்தி, அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

சிறகுகளுடன் கூடிய வண்டுகள் விரும்பி உட்கொள்ளும் தேன் நிறைந்து ததும்பும் கொன்றை மலர்களைத் தனது சடையினில் அணிந்துள்ள பெருமான், வேதங்களில் பொருந்தியுள்ள கீதங்களை பாடியவாறும் அந்த பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடியவாறும், எனது இல்லம் வந்தார். அவர் சிறந்த இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளார். எனது இல்லம் புகுந்த இறைவரின் அழகில் மயங்கி அவர் பால் அடியேன் காதல் கொண்டேன். அவரும் என்னை விரும்பி அடியேன் பால் காதல் கொண்டவராக இருந்ததால் தான் எனது இல்லத்தின் உள்ளே வந்தார் என்று எண்ணிய நான், அவர் செல்லும்போது என்னையும் அழைத்துக் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்; ஆனால் அவரோ என்னை அழைத்துச் செல்லாமல் விட்டுவிட்டுச் சென்ற படியால், நான் மிகுந்த ஏக்கம் கொண்டேன். அந்த ஏக்கத்தினால், எனது உடலின் நிறம் மாறி; எனது உடல் மெலிய, உடல் நலம் குறைய, எனது அழகும் குறைந்தது; இவ்வாறு எனது உள்ளத்தையும் உடல் எழிலும் நலமும் கொள்ள கொண்ட இறைவர், தனது சடையினில் ஒற்றைப் பிறைச் சந்திரனை அணிந்த இறைவர், செழித்து வளர்ந்த மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பிணைந்து சூரியனின் கதிர்கள் ஊடுருவதை தடுப்பதால் இருண்டு காணப்படும் சோலைகள் நிறைந்த கானூர் தலத்தில் பொருந்தி உறைகின்றார்.

பாடல் 4:

விண்ணார் திங்கள் கண்ணி வெள்ளை மாலை அது சூடித்

தண்ணார் அக்கோடு ஆமை பூண்டு தாழ் புன் சடை தாழ

எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வ நோய் செய்தான்

கண்ணார் சோலைக் கானூர் மேய விண்ணோர் பெருமானே

விளக்கம்:

விண்ணார்=விண்ணில் பொருந்திய; வானில் உலவும்; கண்ணி=தலைமாலை; தண்ணார்=குளிர்ச்சி பொருந்திய; அக்கு=எலும்பு; எண்ணா=எண்ணாமல் இருந்த நிலை; அறியாமை காரணத்தினால் ஆன்மா இறைவனை எண்ணாது இருந்த நிலை; எவ்வம்=மிகுந்த துன்பம்; விரகதாபம்; தலைவனைப் பிரிந்த தலைவி அடையும் வருத்தம்; கண் என்ற சொல்லுக்கு இடம் என்று பொருள் கொண்டு, கண்ணார் சோலை இறைவன் உறையும் இடம் சோலைகள் பொருந்திய தலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த பாடலில் ஆன்மா எண்ணாது இருந்தபோதே இறைவன் வந்ததாக சம்பந்தர் கூறுகின்றார். தனது விருப்பத்தின் படியே இறைவனைச் சென்று அடைவதற்கும் அவனுடன் கலந்து இருப்பதற்கும் அவனை விட்டுப் பிரிவதற்கும் சுதந்திரம் அற்றது ஆன்மா. இதனை உணர்த்தும் வண்ணம் ஆன்மா எண்ணாது இருந்த போது இறைவன் வந்ததாக ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

இதனையே திருமூலர் தனது முதல் தந்திரத்தில் (உபதேசம் என்று சொல்லப்படும் அதிகாரத்தில்) கூறுகின்றார். மேலும் பசு (உயிர்கள்) பதியினை (இறைவனை) அணுகும் தன்மை உடையன என்றாலும், அந்த உயிருடன் பிணைந்துள்ள பாசம், உயிர்கள் பதியினை அணுக ஒட்டாது தடுக்கும் என்றும், உயிர்கள் தங்களது முயற்சியால் பாசத்தை அடக்கி பதியினை அணுக முயற்சி செய்தால், பாசம் உயிரினைப் பற்றி நில்லாது அதனை விட்டு நீங்கும் என்றும் கூறுகின்றார். பாசம் பதியினைச் சென்று அணுகாது என்றும் இங்கே கூறப்படுகின்றது. இந்த மூன்றையும் இறை உயிர் தளை என்றும் கூறுகின்றனர். பாசத்திற்கு அடையாளமாக இருப்பது ஆணவம், கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்கள். இந்த பாடலில் மூன்றாவது அடியில், பதியினைச் சென்று பசுவும் பாசமும் அணுக முடியாது என்று திருமூலர் கூறுவதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே இறைவன் உயிரினை வந்து அணுகுவதற்கும் இறைவனின் அருள் தேவைப் படுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உயிர்களும் அழிவதில்லை என்பதால் அநாதி என்று கூறுகின்றார். பிரளய காலத்திலும் இறைவனது உடலில் உயிர்கள் ஒடுங்குகின்றனவே அன்றி அழிவதில்லை. ஆணவ மலமும் அழிவதில்லை; நெல்லுக்கு உமி போன்றும் செம்புக்கு களிம்பு போன்றும், உயிருடன் என்றும் இணைந்து பிரியாது இருப்பது ஆணவமலம். ஆணவ மலத்தினை அழிக்க முடியாது, அதன் சக்தியை அடக்கி செயலற்று இருக்கச் செய்ய முடியும்.

பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு பாசம் அனாதி

பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்

பதி அணுகில் பசு பாசம் நில்லாவே

பொழிப்புரை:

வானில் உலவும் வெண்மை நிறத்து பிறைச் சந்திரனை, தனது தலையில் தலைமாலையாக சூடிய இறைவன், குளிர்ச்சி பொருந்திய எலும்புமாலை ஆமையோடு ஆகியவற்றை அணிந்தவனாக தாழ்ந்து தொங்குவதும் செம்பட்டை நிறத்தில் உள்ளதுமாகிய சடையுடன் விளங்கிய பெருமான், நான் அவனை எண்ணாது இருக்கும்போதே அவன் எனது இல்லம் வந்த பெருமான், பின்னர் எனது இல்லத்தை விட்டு சென்றதால், பிரிவுத் துயரில் மூழ்கிய நான், மிகுந்த துன்பம் அடைந்தேன். இவ்வாறு என்னை வருத்தியவன், காணும் கண்கள் மகிழும் வண்ணம் செழித்து காணப்படும் சோலைகள் நிறைந்த கானூர் தலத்தில் உறைபவனும் தேவர்களுக்கு தலைவனும் ஆகிய பெருமான் ஆவான்.

பாடல் 5:

தார்கொள் கொன்றைக் கண்ணியோடும் தண் மதியம் சூடி

சீர்கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து

ஊர்கள் தோறும் ஐயம் ஏற்று என்னுள் வெந்நோய் செய்தார்

கார்கொள் சோலைக் கானூர் மேய கறைக் கண்டத்தாரே

விளக்கம்:

தார்=மாலை; கார்=மேகம்; கார் கொள்=மேகம் போன்று கருமை நிறம் பொருந்திய; சேடர்=சிறந்த ஒழுக்கம் உடையவர், சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்; வெந்நோய்=கொடிய நோய்; பல ஊர்களுக்கும் சென்று பிச்சை ஏற்ற பெருமான், தனக்கு கொடிய நோய் உண்டாக்கியதாக சம்பந்த நாயகி கூறுவது பற்றி நாம் சற்று சிந்திக்க வேண்டும். பல ஊர்களுக்கும் சென்ற பெருமான் தனது இல்லத்திற்கும் வந்தார் என்பதையும், அவ்வாறு வந்த அவரின் அழகினில் மயங்கிய தனக்கு, அவரது பிரிவு வருத்தத்தையும், வருந்திய உள்ளத்தில் காதல் நோயினையும் ஏற்படுத்தியது என்பதையும் சம்பந்தர் நாயகி உணர்த்துவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். கடந்த மூன்று பாடல்களின் பின்னணியில் இந்த பாடலையும் நாம் கருதினால், மேற்குறிப்பிட்ட செய்தி நமக்கு புலப்படும். இந்த செய்தி நமக்கு திருவாசகம் அன்னைப் பத்து பதிகத்தின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. பிச்சை ஏற்பதற்காக தலைவியின் இல்லத்தினுள் புகுந்த பெருமான், பிச்சை மட்டுமா ஏற்றுக்கொண்டு சென்றார்; தலைவியின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டதால் தான், அவர் சென்றதை நினைத்து தலைவி, அவரை மீண்டும் காண்பது எப்போது என்ற ஏக்கத்துடன் உள்ளம் நைந்தவளாக காணப் படுகின்றாள் என்று தலைவியின் தோழி தலைவியின் அன்னைக்கு உணர்த்தும் பாடல் இது.

தையல் ஓர் பங்கினர் தாபத வேடத்தர்

ஐயம் புகுவரால் அன்னே என்னும்

ஐயம் புகுந்து அவர் போதலும் என் உள்ளம்

நையும் இது என்னே அன்னே என்னும்

தாபத வேடம்=தவ வேடம்; இந்த பாடலில் உமை அன்னையுடன் கூடி இருந்து இல்லறம் நடத்தும் பெருமான் தவ வேடத்துடன் இருப்பதாக மணிவாசகர் கூறுகின்றார். இல்லறமும் துறவும் ஒன்றுக்கொன்று எதிரான நெறிகள், முரண்பட்ட நெறிகள் என்று பலரும் சொல்வதால் எவ்வாறு அவ்வாறு, இந்த இரண்டு கோலங்களும் இணைந்தவராக பெருமான் இருக்க முடியும் என்ற சந்தேகம் நமக்கு எழுவது இயற்கையே. இயல்பாகவே ஐந்து புலன்களையும் அடக்கி வென்ற பெருமானுக்கு இல்லறம் துறவறம் இரண்டையும் ஒன்றாக கடைப்பிடிப்பது எளிதான காரியம் தானே. இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்.

மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம்

திங்களை முடிமேல்

கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட

சோளேச்சரத்தானை

அங்கை ஓடு ஏந்திப் பலி திரி கருவூர் அறைந்த சொல்

மாலையால் ஆழிச்

செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும்

சிவனருள் கடலே

ஏன் பற்றற்றவனாக இருக்கும் பெருமான் இவ்வாறு தேவியுடன் எப்போதும் இணைந்து இருப்பவராக காட்சி தருகின்றார் என்ற நமது ஐயத்தினை போக்கும் வண்ணம், திருச்சாழல் பதிகத்தினில் மணிவாசகர் ஒரு பாடலை அருளியுள்ளார். அருணை வடிவேல் முதலியார் அவர்கள், உயிர்கள் போகத்தை விரும்பி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெருமான் போகவடிவம் கொண்டு போகி போல் நிற்கின்றாரே அன்றி அவர் உண்மையில் போகம் அனுபவிப்பவர் அல்லர் என்று விளக்கம் கூறுவார். இதே கருத்து திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகரால் உணர்த்தப் படுவதையும் நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். பெருமான் பெண்ணைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டிராவிடில் உலகத்து உயிர்கள் எல்லாம் துறவு மேற்கொண்டு யோகத்தில் புகுவர்; அதனால் உலகம் வளராது நிற்கும். எனவே போகத்தில் ஆழ்ந்திருப்பது போன்று தோற்றத்தை நமக்கு பெருமான் நல்குகின்றான் என்பதே இந்த பாடல் உணர்த்தும் செய்தியாகும்.

தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்

பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி

பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்

விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும். இனப்பெருக்கம் தடைப்பட்டால் வினைகளுடன் பிணைந்திருக்கும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுத்து தங்களது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ள தேவையான உடல்கள் இல்லாமல் போய்விடும். எனவே உடல்களை தோற்றுவிக்கும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எனவே தான் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான். மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவி தான், உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும். இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப் படுவதற்கான தகுந்த உடல்கள் இனப்பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப் பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்கவேண்டிய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகம் தொடர்ந்து வளரும் பொருட்டு நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றான் என்ற செய்தி மேற்கண்ட திருவாசகப் பாடலில் உணர்த்தப் படுகின்றது.

எந்த கோலத்துடன் பெருமான் பிச்சை ஏற்பதற்காக தனது இல்லம் வந்தார் என்று தலைவியின் கூற்றாக அன்னைப்பத்து பதிகத்தில் உணர்த்திய மணிவாசகர், அவ்வாறு பிச்சை கேட்டு தனது இல்லம் வந்த பெருமான், தனது இல்லத்திலிருந்து வெளியே சென்ற பின்னர், தனது உள்ளம் நைந்து போனதின் காரணம் தனக்கு புரியவில்லை என்று கூறுவதாக சொல்கின்றார். பெருமானின் அழகினில், நற்பண்புகளில், ஆற்றலில் தனது மனதினை பறிகொடுத்த தலைவி, வெகு விரைவில் பெருமானுடன் இணையவேண்டும் என்று விரும்புவதே காரணம் என்று தேவார திருவாசக நூல்களில் காணப்படும் அகத்துறை பாடல்கள் நமக்கு விளக்குகின்றன. நாமும், இந்த பாடல்களில் சுட்டிக் காட்டப்படும் தலைவி போன்று, பெருமான் பால் தீவிரமான காதல் கொண்டு, அவனை அடைவதற்கு விருப்பம் கொள்ள வேண்டும் என்பதையே இந்த பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. .

பொழிப்புரை:

மாலையாக கோர்க்கப்பட்ட கொன்றை மலர்களையும் குளிர்ந்த பிறைச் சந்திரனையும் தனது தலைமாலையாக சூட்டிக் கொண்ட இறைவன், சிறப்பு மிக்க பாடல்களை பாடியவராக அதற்கேற்ப சிறந்த நடனம் ஆடியவராக, ஒழுக்க சீலராக பெருமான் எனது இல்லம் வந்தார். பல ஊர்களும் சென்று பிச்சை ஏற்ற பெருமான் எனது இல்லம் வந்த போது, நான் அவரது அழகினில் நற்பண்புகளில் ஆற்றலில் மயங்கி அவர் பால் தீராத காதல் கொண்டேன். எனது காதல் ஈடேறாத காரணத்தால், எனக்கு காதல் நோய் வாய்த்தது. இந்த நிலைக்கு காரணமாக உள்ள பெருமான், தனது கழுத்தினில் ஆலகாலம் உட்கொண்டதால் கருமை நிறம் பதித்து காணப்படும் பெருமான், அடர்ந்து நெருங்கி வளர்ந்து இருளுடன் காணப்படும் சோலைகள் நிறைந்த கானூர் தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 6:

முளி வெள்ளெலும்பு நீறு நூலும் மூழ்கு மார்பராய்

எளி வந்தார் போல் ஐயம் என்று என் இல்லே புகுந்து உள்ளத்

தெளிவு நாணும் கொண்ட கள்வர் தேறலார் பூவில்

களி வண்டு யாழ் செய் கானூர் மேய ஒளி வெண் பிறையாரே

விளக்கம்:

முளி=காய்ந்த; தேறல்=தேன்; எளி வந்தார்=இரக்கத்திற்கு உரியவர்; இந்த பாடலில் இறைவனை, சம்பந்த நாயகி கள்வர் என்று குறிப்பிட்டு, தான் அறியாமலே தனது கற்பினையும் நாணத்தையும் திருடிக் கொண்ட பெருமான் என்பதை உணர்த்துகின்றாள். தெளிவு=உள்ளத் தெளிவு; மிகவும் எளியவராக, இரக்கத்திற்கு உரியவராக, பிச்சை கேட்டு வந்தவர் என்பதால், தான் அவரை தனது இல்லத்தின் உள்ளே வருமாறு அழைத்ததாக கூறும் சம்பந்த நாயகி, உள்ளே வந்தவர், தான் நினைத்ததற்கு மாறாக தனது உள்ளத்தில் கலக்கத்தை உண்டாக்கிய பெருமான், தனது கற்பினையும் நாணத்தையும் நாணும் குணத்தையும் கொள்ளை கொண்டதாக கூறுகின்றாள். பொதுவாக அயல் ஆண்களைக் கண்டால் நாணம் கொள்வது உயர்ந்த குணமுடைய பெண்களின் பண்பு. எனவே அயலவரைப் பார்ப்பதையும் அவர்களை இல்லத்திற்குள்ளே அனுமதிப்பதும் அத்தகைய பெண்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் பிச்சை எடுக்கும் நோக்கத்துடன் வந்த பெருமான் என்று கருதியதாலும், முப்புரி நூல் தரித்து திருநீறு உடலெங்கும் பூசி வந்தமையாலும், பலியேற்க வந்தவர் பால் இரக்கம் கொண்டு இல்லத்தின் உள்ளே வர அனுமதி தந்தாள் போலும். மேலும் எந்த விதமான அணிகலனும் இன்றி காய்ந்த எலும்புகள் மட்டுமே ஆபரணமாக கொண்டுள்ள இறைவனை எளிய கோலத்தவ்ர் என்று தானே எவருக்கும் நினைக்கத் தோன்றும். இறைவனை, சேடர் என்று குணசீலாராக காட்சியளித்த பெருமான் என்று முந்திய பாடலில் குறிப்பிட்டதன் பின்னணியில், இல்லத்தின் உள்ளே வர சம்பந்த நாயகி அனுமதி அளித்தாள் என்று கருதுவதும் பொருத்தமே. இல்லத்தின் உள்ளே அவர் வரும் வரை சம்பந்த நாயகியின் மனதினில் தெளிவு இருந்தது. ஆனால் பெருமான் உள்ளே வந்த பின்னர், அவரது அழகினில் பண்புகளில் தனது மனதினை பறிகொடுத்த நாயகிக்கு உள்ளத்தில் கலக்கம் ஏற்ப்பட்டதை, இங்கே தெளிவும் கொண்ட கள்வர் என்று குறிப்பிடுகின்றாள். மேலும் அயலவரை நேரில் நிமிர்ந்து பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்த அவள், தனது மன கலக்கத்தின் காரணமாக, வந்தவரை உற்று பார்த்ததை நாணும் கொண்ட கள்வர் என்ற தொடரால் குறிப்பிடுகின்றாள். பண்டைய நாளில் அதன் முன்னர் அறிமுகம் ஆகாத ஆடவரை நினைத்தாலே பெண்கள், தங்களது கற்பு பறிபோயிற்று என்ற எண்ணம் கொண்டிருந்தனர். வந்தவரின் அழகு தந்த மயக்கத்தில், அவரை உள்ளே வரவழைத்தன் பயனாக, தனது நாணம் தெளிவு, கற்பு ஆகிய பண்புகளை இழந்த தலைவி, தனது மாறிய தன்மைக்கு வந்தவர் தான் காரணம் என்று அவரை கள்வர் என்று பழிக்கின்றாள். கண்டவுடன் தான் காதல் கொள்ளும் அளவுக்கு பெருமான் மிகுந்த அழகுடன் நல்ல பண்புகளுடன் திகழ்ந்தார் என்பதை தலைவி உணர்த்துவதாக உள்ள பாடல்.

இந்த பாடலிலும் சித்தாந்த கருத்து உணர்த்தப் படுவதை நாம் அறியலாம். மனதினில் தெளிவுடன் இருந்த ஆன்மா, இறைவன் தனது உள்ளத்தினில் புகுந்த பின்னர் தனது நிலையில் மாற்றம் அடைகின்றது. அந்நாள் வரை உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது கொண்டிருந்த ஆசை, பற்று, குறைந்து பாசத்திலிருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்கின்றது. இந்த நிலையே தெளிவு கொண்டார் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. நிலையற்ற உலகத்துப் பொருட்கள் மீது பாசம் வைத்து வாழ்வதே மனித உயிரின் பண்பு என்பதால், அந்த நிலையினை தெளிவு என்று கேலியாக குறிப்பிட்டார் போலும். உயிர் தனது உண்மையான விருப்பமான வீடுபேற்றினை அடைவதற்கு தகுதி பெறவேண்டும் என்றால், இந்த நிலையிலிருந்து மாறவேண்டும் என்பதால், இறைவனே ஆன்மாவின் உள்ளத்தில் புகுந்து, உலகப் பொருட்கள் மீது பாசம் வைத்துள்ள தெளிவான நிலையை மாற்றி, பாசமற்ற நிலையினை உருவாக்குவார் என்ற கருத்து இங்கே கூறப்படுகின்றது.

பொழிப்புரை:

காய்ந்த எலும்புகளை உடலில் ஆபரணமாக அணிந்து, மிகவும் எளிய கோலத்தவராக, உடல் முழுதும் திருநீறு பூசியவராக, முப்புரி நூல் மார்பினில் அணிந்தவராக, பிச்சை என்று கேட்டு வந்த பெருமான் எனது இல்லத்தின் உள்ளே புகுந்தார். அவரைக் கண்ட நான், அவரது அழகினில் நற்பண்புகளில் எனது மனதினை பறிகொடுத்ததன் விளைவாக, எனது மனதினில் அதுவரை இருந்த தெளிவு மறைந்து கலக்கம் ஏற்பட்டது. அந்நாள் வரை அயல் ஆடவரை பார்ப்பதையும் தவிர்த்து வந்த நான், அவரது தோற்றத்தில் மயங்கி, எனது நாணத்தையும் கற்பையும் இழந்தேன்; எனது மனத் தெளிவு, நாணம் கற்பு ஆகிய பண்புகளை கொள்ளை கொண்ட கள்வர், வெண் பிறைச் சந்திரனை அணிந்தவரும் கானூர் தலத்தில் உறைபவரும் ஆகிய பெருமான் ஆவார். தேன் நிறைந்த பூக்களில் உள்ள தேனை உண்டு களிப்புடன் திகழும், தங்களது இன்பக் களிப்பினை யாழின் இசை போன்று இனிய ரீங்காரம் மூலம் வெளிப்படுத்தும் வண்டுகள் திரியும் சோலைகள் நிறைந்த தலமாகும்.

பாடல் 7:

மூவா வண்ணர் முளை வெண் பிறையர் முறுவல் செய்திங்கே

பூவார் கொன்றை புனைந்து வந்தார் பொக்கம் பல பேசிப்

போவார் போல் மால் செய்து உள்ளம் புக்க புரி நூலர்

தேவார் சோலைக் கானூர் மேய தேவதேவரே

விளக்கம்:

மூவா=மூப்படையாது; முளைத்த=முளை விட்டெழுந்த, முளைத்தெழுந்த; தனது கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து முற்றிலும் அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் பெருமானை சரணடைந்த சந்திரன், அழியும் நிலையிலிருந்து மாற்றப்பட்டு, அன்றிலிருந்து வளரத் தொடங்கியதால், அழியும் வெண் பிறை முளை வெண் பிறையாக மாறியதை இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பொக்கம்=பொய்; மால்=மயக்கம்; தேவார்=தெய்வத்தன்மை பொருந்திய; புரிநூலர் என்பதால் ஒழுக்க சீலராக இருப்பார் என்று தான் நம்பிய பெருமான், அதற்கு மாறாக பொய் பேசுபவராகவும், தனது சிரிப்பினால் என்னை மயக்குபவராகவும் இருந்தார் என்று சம்பந்த நாயகி இந்த பாடலில் கூறுகின்றாள், அனைத்தும் கற்பனை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பெருமான் தன்னை மயக்கியதாகவும், தான் பெருமான் பால் காதல் கொண்டதாகவும் கற்பனை செய்து, அந்த கற்பனைக்கு ஏற்றவாறு பல நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு மகிழ்தல், பெருமான் பால் தீராத காதல் கொண்ட தலைவியாக தன்னை பாவிக்கும் அருளாளர்கள் விரும்பிச் செய்யும் செயல்கள். மூவா என்ற சொல்லுக்கு மங்காத என்று பொருள் கொண்டு ஒளிவீசும் வண்ணக் கலவையாக பெருமானின் திருமேனி விளங்கியதை உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. செம்மேனி நாதர் என்பது தலத்து இறைவனின் திருநாமம். இந்த திருநாமத்தை பவளவண்ணர் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் அடுத்த பாடலில் காணலாம். பவளத்தின் நிறம் போன்று மேனி, செம்பட்டை நிறத்தினில் சடை, வெண்மையான பிறைச் சந்திரன், சிவந்த கொன்ற மலர்கள், என்று அழகிய வண்ணக் கலவையாக பெருமான் விளங்குவதைக் காண்பதற்கு கோடிக் கண்கள் இருந்தாலும் போதாது அல்லவா.

பிச்சை ஏற்றுக்கொண்ட பின்னர் வெளியே போகின்றவர் போல் பாசாங்கு செய்து, தன்னை மயக்கும் சிரிப்பினோடும் தனது இல்லத்திலே பெருமான் தங்கியதாக சம்பந்த நாயகி கற்பனை செய்வது போன்று அப்பர் நாயகி கற்பனை செய்வதாக சுவையான கற்பனை கொண்ட பாடல் (6.35.5) வெண்காடு தலத்தின் மீது அப்பர் பிரானால் அருளப்பட்டுள்ளது. மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கும் குழை அணியை காதில் அணிந்தவராய், குட்டையான உருவத்துடனும் பருத்த உடலுடனும் அவருடன் வந்த பூதங்கள் கொடுகொட்டி என்ற இசைக் கருவியை இசைத்தும் பாடியும் அவரைச் சூழ்ந்து வர, அந்த பாடலுக்கும் இசைக்கும் ஏற்றவாறு நடனம் ஆடி வந்த பெருமான், எனது உள்ளத்தினை கொள்ளை கொள்ளும் நோக்கத்துடன் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தார். இவ்வாறு என்னைச் சுற்றித் திரிந்த பெருமானின் நோக்கத்தினை அறியாத நான் திரும்பிப் பார்த்தபோது, அவரது கள்ளவிழிப் பார்வை என்மேல் படுவதைக் கண்டேன்; என்னை நேராக பார்க்காமல் அரைக் கண்ணால் பார்க்கும் அவர், ஒரு சமயம் எனது கண்களுக்குள்ளே அகப்படுவார் போல் தோன்றினாலும் அடுத்த கணமே எனது கண் பார்வையிலிருந்து அகன்று விடுகின்றார். ஆனாலும் அவரது உருவம் எனது உள்ளத்தில் நிலையாக பதிந்து இருப்பதால் எனது அகக்கண்ணால் நான் அவரை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். இவ்வாறு எனக்கு போக்கு காட்டிய பெருமான், வெள்ளத்தைத் தனது சடை முடியில் அடக்கியவர், எப்போதும் வேதங்கள் ஓதும் நாவினை உடையவராக இருப்பவர். அவர் தான் வெண்காடு தலத்தினை விரும்பியேற்று, அதனில் உறைகின்ற விகிர்தனார் ஆவார் என்பதே இந்த பாடலில் பொழிப்புரை ஆகும்.

கொள்ளைக் குழைக் காதில் குண்டை பூதம் கொடுகொட்டி

கொட்டிக் குனித்துப் பாட

உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல உழிதருவர் நான் தெரிய

மாட்டேன் மீண்டேன்

கள்ள விழி விழிப்பர் காணாக் கண்ணால் கண்ணுள்ளார் போலே

கரந்து நிற்பர்

வெள்ளச் சடைமுடியர் வேத நாவர் வெண்காடு மேவிய

விகிர்தனாரே

பொழிப்புரை:

மூப்பு அடையாது என்றும் அழகாக விளங்கும் திருமேனியை உடையவனும் முளைத்து எழுந்து வளர்கின்ற நிலையில் உள்ள ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனும் ஆகிய பெருமான், புன்முறுவல் செய்தவாறு தனது சடையினில் கொன்றை மலர்களை சூடியவாறு எனது இல்லத்திற்கு வந்தார். இல்லத்திலிருந்து வெளியே போவார் போல் பாசாங்கு செய்து வெளியே போகாமல் எனது இல்லத்தில் இருந்தும் பல பொய்யான வார்த்தைகளை பேசி என்னை மயக்கியும் எனது உள்ளத்தில் இடம் கொண்ட அவர், முப்புரி நூல் அணிந்தவராக இருந்தார்; இவ்வாறு எனது இல்லம் புகுந்ததுமன்றி, என்னையும் அறியாமல் எனது உள்ளத்திலே புகுந்த அவர், தெய்வத்தன்மை வாய்ந்த சோலைகள் நிறைந்த கானூர் தலத்தில் பொருந்தி உறையும் தேவதேவர் ஆவார்.

பாடல் 8:

தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல

முழவ மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்

குமிழின் மேனி தந்த கோல நீர்மை அது கொண்டார்

கமழும் சோலைக் கானூர் மேவ பவள வண்ணரே

விளக்கம்:

நீர்மை=இனிமை; தமிழ் மொழியில் புலமை பெற்றவன் என்று பல பாடல்களில் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் ஞானசம்பந்தர் தான் தமிழ்மொழி பால் கொண்டுள்ள பற்றினை, அன்பினை, வெளிப்படுத்தும் வண்ணம் தமிழ் மொழி இனிமையானது என்று இந்த பாடலில் கூறுகின்றார். இடம் என்பது இங்கே நாயகியின் இல்லத்தை குறிக்கின்றது. பெருமானின் சொற்கள் தமிழ் மொழியினைப் போன்று இனிமையாக இருந்ததாக நாயகி இங்கே கூறுகின்றாள். குமிழின் மேனி=குமிழம்பூ நிறத்தில் உள்ள திருமேனி; குமிழம்பூ என்பது பாலை நிலத்தில் பூக்கும் ஒரு பூ வகை. பெண்களின் கூறிய மூக்கினுக்கு உவமையாக பல இலக்கியங்களிலும் சொல்லப் படுவது. பொன்னின் நிறத்திலும் மங்கிய சிவப்பு (Rose) வண்ணத்திலும் காணப்படுகின்றது. இங்கே பசலை பூத்த தனது மேனியின் நிறத்திற்கு உவமையாக குமிழம்பூ நிறத்தினை தலைவி குறிப்பிடுகின்றாள். கோல=அழகு; கோல நீர்மை=அழகின் தன்மை;

இல்லத்தின் உள்ளே வந்த பெருமான், அந்த இடத்தினை விட்டு பெயராமல் சிறிது நேரம் இருந்தார் என்று கூறும் தலைவி, பெருமான் அவ்வாறு இருந்ததை. தான் அவர் பால் காதல் கொண்டிருந்தது போல் அவரும் என் பால் கொண்டுள்ள காதலால் தன்னை விட்டு பிரியாமல், தனது இல்லத்தில் நீண்ட நேரமாக இருக்கின்றார் என்று எண்ணினாள் போலும். ஆனால் அவ்வாறு எண்ணிய மாத்திரத்தில், பெருமான் திடீரென்று மறைந்து விடவே, அவர் மறைந்ததால் ஏற்பட்ட ஆற்றாமையால் தனது மேனி இளைத்தது, உருவத்தின் அழகு குறைந்தது, தனது உடலில் பசலை படர்ந்து உடலின் நிறமே மாறியது. என்று கூறுகின்றாள்.

பொழிப்புரை:

தமிழ் மொழி போன்று இனிமையான சொற்களைப் பேசியும் முழவு மொந்தை தாளம் ஆகிய இசைக் கருவிகளுடன் வீணை மீட்டி வாசித்தும் பாடல்களைப் பாடியவாறு எனது இல்லத்தின் உள்ளே வந்த பெருமான், தான் இருந்த இடத்தினை விட்டு அகலாமல் சிறிது நேரம் நின்றார். அவ்வாறு பெருமான் நின்றதன் காரணம், நான் அவர் பெரில் காதல் கொண்டு அவரை மீண்டும் மீண்டும் பார்க்கத் துடிப்பது போன்று அவரும் என் பால் காதல் கொண்டுள்ளமை என்று நான் நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், திடீரென்று அவர் மறைந்து விட்டார். அவரின் பிரிவால் நான் தாங்கவொண்ணாத் துயரம் அடைந்தேன்; உடலும் மெலிந்து எனது அழகும் கெட்டது. எனது உடல் நலனையும் அழகினையும் கொள்ளை கொண்ட எனது தலைவர், பவளத்தின் நிறத்தினில் திருமேனி உடைய பெருமான் நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த கானோர் கானூர் தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.

பாடல் 9:

அந்தமாதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவரியான்

சிந்தை உள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான்

வந்து என் உள்ளம் புகுந்து மாலை காலை ஆடுவான்

கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே

விளக்கம்:

அந்தம் ஆதி=அனைத்து உயிர்களுக்கும் முடிவாகவும் தோற்றமாகவும் இருக்கும் இறைவன்; இந்த பாடலில் ஞானசம்பந்தர், பெருமான் தன்னை முழுமையாக ஆட்கொண்டதை உணர்த்துகின்றார். சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னிய ஈசன் என்று குறிப்பிட்டு, தனது நாவிலிருந்து வரும் சொற்களும், அந்த சொற்களுக்கு அடித்தளமாக உள்ள சிந்தனையும் ஈசனது வடிவம் என்று குறிப்பிட்டு, தேவாரப் பாடல்களில் உள்ள கருத்துகள் அனைத்தும் பெருமான் அருளியவை என்று நமக்கு உணர்த்துகின்றார். தனது சிந்தைனையில் உறைந்துள்ள ஈசனை, தான் காலையும் மாலையும் அகவழிபாடு செய்த தன்மையையும் நமக்கு இங்கே உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

அனைத்து உயிர்களின் முடிவுக்கு காரணமாக இருப்பவனும், அந்த உயிர்களின் தோற்றத்திற்கு காரணமாக இருப்பவனும் ஆகிய இறைவன், திருமாலும் பிரமனும் அறிய முடியாமல் திகைக்கும் வண்ணம் நீண்ட நெடிய தழற்பிழம்பாக நின்ற இறைவன், எவரும் அறிவதற்கு அரியவனாகத் திகழ்கின்றான். எனது இல்லம் வந்த அவன், எனது மனதினைக் கவர்ந்த அவன், எனது சிந்தையில் புகுந்த அவன், எனது நாவினிலும் தலை மீதும் பொருந்தி உறைகின்றான். அவன் எனது உள்ளத்தில் பொருந்தியுள்ள இறைவன் காலையிலும் மாலையிலும் நடனம் ஆடுகின்றான். எந்தையாக உள்ள பெருமான், நறுமணம் கமழும் கானூர் தலத்தினில் பொருந்தி உறைகின்றான்.

பாடல் 10:

ஆமை அரவோடு ஏன வெண் கொம்பு அக்கு மாலை பூண்டு

ஆமோர் கள்வர் வெள்ளர் போல உள் வெந்நோய் செய்தார்

ஓம வேத நான்முகனும் கோணாகணையானும்

சேமம் ஆய செல்வர் கானூர் மேய சேடரே

விளக்கம்:

ஏனம்=பன்றி; அக்கு=எலும்பு; வெள்ளர்=வெள்ளை உள்ளம் கொண்டவர்; எளிய பொருட்களை, எவரும் பொதுவாக தவிர்க்கும் பொருட்களை, அணிந்து கொண்டு வெள்ளை உள்ளம் கொண்டவர் போல் காட்சி அளித்த பெருமான் தனது கோலத்திற்கு பொருந்தாத வண்ணம் கள்வராக செயல்பட்டு தனது உள்ளத்தை கொள்ளை கொண்டதாக சம்பந்த நாயகி இங்கே குற்றம் சாட்டுகின்றாள். சேமம்=பாதுகாப்பு; கோணாகம்=வளைந்த பாம்பு; பொதுவாக திருஞானசம்பந்தரின் பதிகங்களில் எட்டாவது பாடலில் இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை நிகழ்ச்சியும் ஒன்பதாவது பாடலில் அரியும் அயனும் பெருமானை காண முடியாமல் திகைத்த செய்தியும், பத்தாவது பாடலில் சமணர்கள்/புத்தர்கள் பற்றிய குறிப்புக் காணப்படும். இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் இரவாணன் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. பதிகத்தின் பத்தாவது பாடலில் சமணர்கள் பற்றிய குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் ஒன்பதாவது பாடலில் அயனுக்கும் மாலுக்கும் அறிவரியான் என்ற குறிப்பு காணப்படுகின்றது. இவ்வாறு அண்ணாமலை சம்பவம் பற்றிய குறிப்புகள் மட்டுமே உடைய ஞானசம்பந்தர் பதிகங்கள் மிகவும் அரிது. கானூர் தவிர்த்து அத்தகைய பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.

தலம் பதிகத்தின் தொடக்கச் சொற்கள்

பெரும்புலியூர் மண்ணுமோர் பாகம் உடையார்

பாற்றுறை காரார் கொன்றை கலந்த

விளநகர் ஒளிரிளம் பிறை சென்னி

திருவாரூர் பவனமாய் சோடையாய்

திருவாய்மூர் தளிரிள வளரென

திருவாடானை மாதோர் கூறுகந்து

வடுகூர் சுடுகூர் எரிமாலை

பொழிப்புரை:

ஆமையின் ஓடு, பாம்பு, பன்றியின் வெள்ளைக் கொம்பு, எலும்பு மாலை ஆகிய எளிய பொருட்களை அணிகலனாகப் பூண்டு வெள்ளை உள்ளத்தவராக காட்சி அளித்த போதிலும், அவர் நடந்து கொண்ட விதம் ஒரு கள்வரைப் போன்று இருந்தது; ஒரு பொருளின் உடைமையாளர் அறியாத வண்ணம் அந்த பொருளினைத் திருடும் கள்வர் போன்று, எப்படித் திருடினார் என்று நான் அறியாத வண்ணம், எனது உள்ளத்தை கொள்ளை கொண்டவர் சிவபெருமான். எனது உள்ளத்தை அவரிடம் இழந்ததால், நான் காதல் நோய்ப்பட்டு வருந்துகின்றேன். வேள்விகளை முறையாக செய்யும் நெறியினை உணர்த்தும் வேதங்களை ஓதும் பிரமனும், வளைந்த நாகத்தை தனது படுக்கையாகக் கொண்ட திருமாலும், தங்களின் பாதுகாப்புக்கு உரியவராக கருதும் செல்வரும் ஒழுக்க சீலரும் ஆகிய பெருமான் பொருந்தி உறையும் தலம் கானூர் ஆகும்.

பாடல் 11:

கழுது துஞ்சும் கங்குல் ஆடும் கானூர் மேயானைப்

பழுதில் ஞானசம்பந்தன் சொல் பத்தும் பாடியே

தொழுது பொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்து நின்று

அழுது நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே

விளக்கம்:

கழுது=பேய்கள்; துஞ்சுதல்=தூங்குதல்; கங்குல்=நள்ளிரவு; இந்த பாடலில் அழுதும் சிரித்தும் பெருமான் பால் அன்பு செய்யும் தொண்டர்கள் தங்களது துன்பங்கள் இறைவனால் அறுக்கப்பட்டு இன்பம் அடைவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு ஞானசம்பந்தர் கூறுவது நமக்கு மணிவாசகர் அருளிய திருவாசகம் திருச்சதகம் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. இறைவனைத் தொழும் நிலையில் நமது உடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மணிவாசகர் திருச்சதகம் பதிகத்தின் முதல் பாடலில் சொல்வதைப் போன்று பொருத்தமாக வேறு எவராலும் சொல்ல இயலாது. கைகள் கூப்பி, வாயினால் தோத்திரங்களை உச்சரித்தாலும், நமது மனம் நமது கட்டுப்பாட்டில் இராமல் எங்கோ சஞ்சரித்தால், நாம் செய்யும் வழிபாட்டில் உருக்கம் ஏற்படாது. மனம் ஒன்றி செய்யப்படும் வழிபாடு தான், மனதினை நெகிழ்வித்து உள்ளம் உருகும் நிலைக்கு வழி வகுக்கும். அந்த நிலையில் உடலில் பல மாறுதல்கள் ஏற்படும், உடல் புளகாங்கிதம் அடைதல், கண்ணீர் ததும்புதல், பேச்சு எழாத நிலை ஏற்படுதல், உடல் நடுங்குதல், பொய்யான வெளித்தோற்றங்களைத் தவிர்த்தல், முதலானவை அந்த மாறுதல்கள். இத்தகைய மாறுதல்கள் ஏற்படும் வண்ணம், தான் உள்ளம் உருகி இறைவனை வழிபடுவதாக குறிப்பிடும் மணிவாசகர், இவ்வாறு வழிபடும் தன்னை இறைவன் அடிமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த பாடலில் இறைஞ்சுகின்றார். அரும்பி=புளகாங்கிதம் கொண்டு, விரை=நறுமணம்; ததும்பி= இமைகள் வழியாக வழியும் அளவு நிரம்பி; உடையாய்=என்னை அடிமையாக உடையவனே; கண்டு கொள்ளே=எனது இயல்பினை கண்டு அடிமையாக ஏற்றுக் கொள்வாயாக

மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர் கழற்கு என்

கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்

பொய் தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும்

கை தான் நெகிழவிடேன் உடையாய் என்னை கண்டு கொள்ளே

பெருமான் பால் பேரன்பு வைத்த தலைவியின் கூற்றினை தோழி வாயிலாக அவளது அன்னைக்கு உணர்த்தும் மணிவாசகரின் அன்னைப் பத்து பதிகத்தில், பெருமான் தனது உள்ளத்தின் உள்ளே நின்று அழிவில்லாத ஆனந்தத்தை அளித்து அதன் வெளிப்பாடாக ஆனந்தக் கண்ணீரைத் தனது கண்களில் உண்டாக்குகின்றார் என்று தலைவி கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உலப்பு=அழிவு

கண் அஞ்சனத்தர் கருணைக் கடலினர்

உள் நின்று உருக்குவர் அன்னே என்னும்

உள் நின்று உருக்கி உலப்பிலா ஆனந்தக்

கண்ணீர் தருவரால் அன்னே என்னும்

மிகுதியான அன்பின் வெளிபாடு அழுகை. நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் (3.49.1) பெருமானிடம் மிகுந்த அன்பு கொண்டு உள்ளம் கசிந்து கண்ணீர் மல்க ஓத வேண்டிய திருநாமம் நமச்சிவாய மந்திரம் என்று தானே திருஞான சம்பந்தர் கூறுகின்றார். திருநாமம்=அஞ்செழுத்து;

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே

தங்களது நகங்கள் தேயும் அளவுக்கு மலர்கள் கொய்து, அந்த மலர்களைத் தூவி, தங்கள் முகத்தினில் கண்ணீர் மல்க, இறைவனை வழிபடும் தொண்டர்களின் உள்ளம் இறைவன் உறையும் திருக்கோயில் என்று திருவையாறு பதிகத்தின் பாடல் (4.40.8) ஒன்றினில் அப்பர் பிரான் கூறுகின்றார், உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு அடிமை என்றும், அவரன்றி வேறு துணை எவருக்கு இல்லை என்றும் இந்த பாடலில் அவர் கூறுகின்றார். தான்= சிவபெருமான். அகம்=மனது

சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை

நகம் எலாம் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி

முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர்

அகம் அலால் கோயில் இல்லை அய்யன் ஐயாறனார்க்கே

இறைவன் பால் அதிகமான அன்பு கொண்டு, அழுதவாறு இறைவனின் திருநாமங்களை இடைவிடாது அரற்றும் அன்பர்களை இறைவன் குறித்துக் கொள்கின்றார் என்று அப்பர் பிரான் இன்னம்பர் தலத்து பாடல் (5.21.8) ஒன்றினில் கூறுகின்றார். கீழ்க்கணக்கு=சிறு வரிகளால் எழுதப்படும் குறிப்பு. இன்னம்பர் தலத்தில் உறையும் இறைவனுக்கு கீழ்க்கணக்கர் என்பது ஒரு திருநாமம். இந்த பாடலில் மனம், மொழி மற்றும் மெய்யினால் செய்யப்படும் வழிபாடு உணர்த்தப்படுகின்றது. மனத்தினால் இறைவன் பால் அன்பு கொண்டு, உடலால் தொழுதும் மலர்கள் தூவியும், வாயினால் அழுதும் அவனது திருநாமங்களை அரற்றியும் வழிபாடு செய்ய வேண்டும் என்று அப்பர் பெருமான் கூறுகின்றார்.

தொழுது தூமலர் தூவித் துதித்திடும்

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

திருவாரூர் திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.25.2) அப்பர் பிரான், வானவர்கள் அழுது அரற்றி பெருமானை வழிபடுவதாக கூறுகின்றார். எழுது கொடி இடையார்=சித்திரங்களில் தீட்டப்படும் அளவுக்கு அழகான இடையை உடைய பெண்கள்; நமது இளமைக் காலத்தில் நம்மை விரும்பும் பெண்கள், நாம் முதுமை அடைந்த பின்னர் நம்மை இகழ்வார்கள் என்று கூறி, வயது முதிர்ந்த பின்னர் நமது உடல் செயலற்று இருக்கும் தன்மையை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். அவ்வாறு உடல் செயலற்று இருக்கும் சமயத்தில், உற்சாகத்துடன் இறைப்பணியில் ஈடுபட்டுச் செய்வது கடினம் என்பதால் நாம் இளமையாக இருக்கும்போதே, இறைவனை வழிபடவேண்டும் என்று இங்கே நமக்கு அறிவுரை கூறுகின்றார். தனது நெஞ்சினை நோக்கி, பெருமானைத் தவிர்த்து வேறு எதையாவது நினைத்து பழுதுபட்டு போகாதே என்று அறிவுரை கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

எழுது கொடியிடையார் ஏழை மென்தோள் இளையார்கள் நம்மை

இகழா முன்னம்

பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டு தான் என்னோடு

பகை தான் உண்டோ

முழுதுலகில் வானவர்கள் முற்றும் கூடி முடியால் உற வணங்கி

முற்றம் பற்றி

அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும்

ஆரூர் தானே

உயிர் விரும்பும் செய்கையை, இறைவனை வழிபடுவதை, விரும்பாமல் நெஞ்சம் உயிரினை வேறு வழிக்கு அழைத்துச் செல்லும் தன்மை எதனால் ஏற்பட்டது என்று நெஞ்சத்தை நோக்கி அப்பர் பிரான் வினவுவதாக அமைந்த பாடல். நெஞ்சமே உனக்கும் எனக்கும் முந்திய பகை ஏதேனும் உண்டோ, ஏன் என்னுடன் நீ ஒத்துழைக்க மறுக்கின்றாய் என்று உயிர் வினவுவது போன்று அமைந்த பாடல். தீவினைகள் கொண்ட நெஞ்சமே, உனக்கும் எனக்கும் முந்தைய பகை ஏதேனும் உண்டோ? அவ்வாறான பகை ஏதும் இல்லையே. முதுமைக் காலம் அடைந்து, சித்திரத்தில் எழதப்பட்ட அழகான இடையையும் மெல்லிய தோள்களையும் கொண்ட மாதர்கள், நீ முதுமை அடைந்துவிட்டாய் என்று சொல்லி உன்னை இகழ்வதன் முன்னர், நீ பயனுள்ள செயல்களைச் செய்வாயாக. முதுமை அடைந்தபோது உன்னால் பயனுள்ள செயல்களைச் செய்ய முடியாமல் நேரலாம். உலகில் உள்ள தேவர்கள் எல்லோரும் கூடி, தங்களது தலையால் முழுமையாக வணங்கி, அழுது அரற்றி வழிபடுமாறு, சிவபெருமான் திருவாரூரில் கோயில் கொண்டுள்ளான். நீ அவனை நினையாது வேறு எதனையும் நினைத்து பழுதுபட்டு போகாதே, என்பதே இந்த பாடலில் திரண்ட கருத்து.

ஆவடுதுறை அரன், தேவர்களுக்கு மட்டுமா தலைவன், அவனை நினைத்து நினைத்து உருகி, கண்களில் நீர் மல்க, அவன் பால் மிகுதியான அன்பு வைத்து அவனது திருவடிகளைப் புகழ்ந்து போற்றும் அடியார்களுக்கும் அவன் தலைவன் என்று கூறும் திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் அப்பர் பிரான், பெருமானை நினைத்து அடியார்கள் அழுவதாக கூறுகின்றார். தான் இறக்கும் தருணத்தில் இறைவனின் திருநாமத்தை சொல்லும் வாய்ப்பு தனக்கு கிட்டுமாயின், அந்த நேரத்தில் எத்தனை கொடிய நோய்கள் வந்து வருத்தினாலும் தான் அவற்றால் மனத்துன்பம் அடையமாட்டேன் என்று உறுதியாக அப்பர் பிரான் கூறுவதை நாம் உணரலாம். இறக்கும் சமயத்தில் இறைவனின் திருநாமத்தை உரைப்பார்க்கு பிறவிப்பிணி நீங்குதல் திண்ணம் என்பதால், அந்த ஆனந்தத்தில் வேறு எந்த துன்பமும் தோன்றாது என்பதை இங்கே உணர்த்துகின்றார்.. அரையன்=தலைவன்

வரையார் மடமங்கை பங்கா கங்கை மணவாளா வார் சடையாய்

நின்றன் நாமம்

உரையா உயிர் போகப் பெருவேனாகில் உறுநோய் வந்து

எத்தனையும் உற்றால் என்னே

கரையா நினைந்து உருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின் கழலே

ஏத்தும் அன்பர்க்கு

அரையா அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும்

அமரர் ஏறே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.64.10) அழுதால் அவனைப் பெறலாமே என்று கூறுகின்றார். அப்பர் பிரான் பெருமானை அற்புதன் என்று கூறுகின்றார். இங்கே உலகங்களைத் தாங்கும் அதிசயமான செயலை புரிபவன் என்ற பொருளில், அற்புதன் என்ற சொல் கையாளப் பட்டுள்ளது. உழுவை=புலி; அதள்=தோல்; விம்மா நின்று அழுவார்=குரல் தழுதழுக்க அழும் அடியார்கள்.

வெம்மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான்

காண் என்று இயம்பி

விம்மா நின்று அழுவார்கட்கு அளிப்பான் தான் காண் விடையேறித்

திரிவான் காண் நடம் செய் பூதத்து

அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண்

சொற்பதமும் கடந்து நின்ற

எம்மான் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என்

எண்ணத்தானே

ஆடியும் பாடியும் அழுதும், தங்களுக்கு உன் மீது அடியார்கள் வைத்துள்ள அன்பினை நினைத்து பார்க்காது, அவர்களுக்கு அருள் புரியாமல் நீ இருத்தல் அழகோ என்று இறைவனை நோக்கி சுந்தரர் கேள்வி கேட்கும் பாடல் ஓணகாந்தன்தளி தலத்து பாடலாகும் (7.5.5). அடியார்களுக்கு அருள் புரியாமல் இருப்பது ஏனோ என்று சுந்தரர் வினவினாலும், தனக்கு பொன் கொடுக்காமல் இறைவன் இருக்கும் நிலையை உணர்த்தும் பாடல்களாக இந்த பதிகம் அமைந்துள்ளது. குறை ஏதும் இல்லாத வகையில் தாளத்துடன் பொருத்தி தான் பாடல்கள் பாடியதாக சுந்தரர் கூறுகின்றார். மேலும் ஊரூராக திரிந்து அவரைத் தேடும் தன் பால் பெருமான் கருணை காட்டாமல் இருக்கின்றார் என்றும், தான் அவரைத் தேடிய அனைத்துக் கோயில்களிலும் அவர் இருந்தாலும் தனக்கு எந்தவிதமான பற்றுக் கோடும் தாராமல் இருக்கின்றார் என்றும் அவரை குறை செய்வது போன்று, அவரது கருணையை வேண்டும் பாடல்.

கூடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறை படாமே

ஆடிப் பாட அழுது நெக்கு அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்

தேடித் தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்

ஓடிப் போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே

மணிவாசக அடிகளாரும், வினைகளால் சூழப்பட்டு, வினைகளின் கைதிகளாக இருக்கும் நாம், இறைவன் பால் அன்பு கொண்டு அழுதால் அவனது அருளினைப் பெறலாம் என்று உணர்த்தும் பாடல் திருச்சதகம் பதிகத்தில் உள்ளது. அடியார்களின் அன்பின் வெளிப்பாடாக அழுகை இருக்கின்றது என்பதை நாம் மேற்கண்ட பாடல்களிலிருந்து உணரலாம். பெருமானின் திருவடிகளை நாம் சென்று சேர்வதற்கும் அவனது திருவருள் வேண்டும் என்பதால், பெருமானே அடியேன் உன்னை வந்து சேருமாறு அருள் புரிவாய் என்று அடிகளார் வேண்டுவதை நாம் உணரலாம்.

யானே பொய். என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன் உன்னை வந்து உறுமாறே

புணர்ச்சிப் பத்து பதிகத்தில் (திருவாசகம்) மணிவாசகர், இறைவனை நினைத்து உருகித் தொழும் தருணத்தில், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் அடியார்கள் செய்யும் செய்கைகளை குறிப்பிட்டு, அவ்வாறு இறைவனைத் தொழுது இறைவனுடன் சேரும் நாள் எந்நாளோ என்று புலம்புவதை காணலாம். அழுதல், சிரித்தல், பல விதமாக கூத்து ஆடுதல், ஒரே நிலையில் இல்லாமல் நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் இருத்தல், சிலிர்சிலிர்த்தல் என்று பல செய்கைகளை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார்.

நெக்கு நெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்

நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்தும்

நவிற்றிச்

செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப்

புக்கு நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே

திருமூலரும் ஒரு திருமந்திரப் பாடலில் சிவபெருமானது திருவடிகளை துதித்து, அலறி, அழுது அவற்றையே விரும்பி நாள்தோறும் நினைக்க வல்ல அடியார்களுக்கு தனது திருவடியை பற்றுக் கோடாக அளிப்பவன் பரமன் என்று கூறுகின்றார். மேலும் அந்த திருவடி பற்றிய நினைப்பில் அடங்கி, திருவடியில் ஒதுங்கும் அடியார்களுக்கு, திருவடிகள் விளங்கித் தோன்றுமாறு அருள் புரியும் பெருமான், அத்தகைய அடியார்களின் அறிவில் நிற்கின்றான் என்றும் கூறுகின்றார். உரன்=வலிமை

அரனடி சொல்லி அரற்றி அழுது

பரனடி நாடியே பாவிப்ப நாளும்

உரனடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு

நிரனடி செய்து நிறைந்து நின்றானே

பெருமானின் உண்மை நிலையினை எவ்வாறு கண்டு கொள்வது என்று உணர்த்தும் திருமந்திரப் பாடலில், ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் சிவபெருமானை காண்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என்றும், அதன் பயனாக நாம் அவனது அருளினை முழுவதுமாக பெருலாம் என்றும், அத்தகைய அருளே அவன் நாம் அறிந்து கொள்வதற்கு உதவும் என்று திருமூலர் கூறுகின்றார். அப்போது உயிர் தனது அறிவு கொண்டு அவனை காண முயற்சி செய்வதை விட்டுவிட்டு, அவனது அருளினால் அவனைக் காணத் தொடங்குகின்றது. அப்போதும், இறைவன் உயிரிலிருந்து வேறுபடாமல் உயிருடன் இணைந்து இருக்கும் தன்மையைக் கண்டு புரிந்து கொள்ளும் என்று கூறுகின்றார். திருவருளை சக்தியின் அம்சமாக காண்பதால், ஊடுகின்றாள் என்று பெண்பாலாக கூறுகின்றார்.

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்

தேடியும் கண்டேன் சிவன் பெருந்தன்மையை

கூடியவாறே குறியாக் குறி தந்து என்

ஊடுகின்றாள் அவன் தன்அருள் உற்றே

அப்பர் பிரானின் கோலத்தை பல இடங்களில் பெரியபுராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். அந்த பாடல்களில் ஒரு பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் கண்ணீர் பொழிய அப்பர் பிரான் இருந்த நிலை குறிப்பிடப்பட்டுள்ளது. வார்தல் என்றால் இடையறாது பெருகுதல் என்று பொருள்.

மார்பாரப் பொழி கண்ணீர் மழைவாரும் திருவடிவும் மதுர வாக்கில்

சேர்வாரும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே

சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப்

பார் வாழத் திருவீதிப் பணி செய்து பணிந்தேந்திப் பரவிச் செல்வார்

திருவையாறு திருக்கோயிலில் கயிலாயக் காட்சியினை கண்ட அப்பர் பிரானின் செயல்கள் எவ்வாறு இருந்தன என்பதை உணர்த்தும் பாடலில் சேக்கிழார், ஆடினார் பாடினார் அழுதார் என்று கூறுகின்றார். நீரினை கைகளால் முகந்து அள்ளிக் குடிப்பது போன்று, ஆனந்தம் விளைவிக்கும் கடலினை கண்களால் முகந்து கொண்டார் என்று கூறும் சேக்கிழார், அப்பர் பிரான், தனது கைகளை தலைமேல் குவித்து இறைவனை வணங்கிய பின்னர் கீழே விழுந்து எழுந்தார் என்றும், என்ன செய்வது என்பதை அறியாதவராக ஆடினார் பாடினார் அழுதார் என்று கூறுகின்றார். ஆனந்தக் களிப்பினால் அப்பர் பிரானின் உள்ளத்தில் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை எவரும் சொல்ல இயலாத வண்ணம் இருந்தது என்றும் கூறுகின்றார்.

கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து

கொண்டு கைகுவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய

அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்

தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்

பொழிப்புரை:

பேய்களும் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடுபவனும், கானூர் தளத்தில் பொருந்தி உறைபவனும், ஆகிய இறைவனை, குற்றமேதும் இல்லாத ஞானசம்பந்தர் சொன்ன பத்து பாடல்களை பாடித் தொழுதும், நாளின் மூன்று பொழுதினிலும் தோத்திரங்கள் சொல்லி இறைவனை துதித்தும் அழுதும் சிரித்தும் இறைவன் பால் அன்பு செய்யும் அடியார்களது துன்பங்களை, இறைவன் அறுத்து அவர்களுக்கு இன்பம் அளிப்பான்.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் உமையன்னை காண மாலை நேரத்தில் நடனம் ஆடுபவர் என்று பெருமானை நமக்கு, திருஞானசம்பந்தர் அறிமுகம் செய்கின்றார். பெருமானின் அழகிய திருவீதிக் கோலம் கண்டு மகிழ்ந்த சம்பந்த நாயகி, அந்த இனிய நினைவுகளில் மூழ்கி ஆனந்தம் அடைவதை நமக்கு உணர்த்தும் திருஞானசம்பந்தர், பெருமானின் திருக்கோலத்தை ஒரு முறை கண்ட எவரும், அந்த காட்சியை நினைவுறும் தருணங்களில் மகிழ்ச்சி அடைவார்கள் என்று இரண்டாவது பாடலில் கூறுகின்றார். மூன்றாவது பாடலில் வேத கீதங்களை பாடியவராக வந்த பெருமான் தனது இல்லம் புகுந்து தனது உள்ளம் கவர்ந்த பின்னர், பிரிந்து சென்று விட்டதாக சம்பந்த நாயகி கூறுகின்றாள். அடுத்த ஐந்து பாடல்களில் மற்றும் பத்தாவது பாடலில் பிச்சை ஏற்பதற்காக தனது இல்லம் வந்த பெருமான் தனது கருத்தினை எவ்வாறு கவர்ந்தார் என்று கூறுகின்றாள். ஒன்பதாவது பாடலில் தனது சிந்தையிலும் நாவிலும் சென்னியிலும் பொருந்திய பெருமான், தனது உள்ளத்தில் அமர்ந்து காலையும் மாலையும் நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்து பாடல்களை பாடும் போதும் தோத்திரங்கள் சொல்லும் போதும் அழுதும் சிரித்தும் இறைவன் பால் மிகுந்த அன்பு வைக்கும் அடியார்களின் துன்பங்கள் இறைவனால் அறுக்கப்படும் என்று கூறுகின்றார். இந்த பாடலில் சம்பந்த நாயகி குறிப்பிடும் அனைத்து நிகழ்ச்சிகளும் அவளது கற்பனை என்பதை நாம் மறக்கலாகாது. மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையாகவே நடந்திருக்க கூடாதா என்ற தலைவியின் ஏக்கத்தினை வெளிப்படுத்தும் பாடல்களாக இவை அமைந்துள்ளன. பெருமான் பால் தீராத அன்பு கொண்ட தலைவியாக தன்னை உருவகப் படுத்திக் கொண்டு, தனது அன்பினை திருஞானசம்பந்தர் மிகவும் அழகாக இந்த பாடல்களில் வெளிப்படுத்துகின்றார். சங்க இலக்கியங்கள் போன்று காதற்சுவையை மிகவும் அழகாக வெளிப்படுத்தும் சிறுவன் சம்பந்தரின் வியக்கத்தக்க புலமை ரசிக்கத்தக்கது. பெருமான் மீது நாம் வைக்கவேண்டிய அன்பு, ஆழ்ந்த அன்பாக இருக்கவேண்டும் என்பதை இந்த பதிகத்தின் மூலம் உணரும் நாம், கானூர் தலம் சென்று இறைவனைப் பணிந்து இந்த பதிகம் பாடி அவனது அருள் பெற்று இம்மையும் மறுமையிலும் வளமாக வாழ்வோமாக..

Tag :

#thirugnanasambandhar thevaram
#Vaanaar Chothi Mannum
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

வானார் சோதி மன்னு


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: