Go Back
22/03/21
நறவ நிறை வண்டு
முன்னுரை:
புறவம் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் பெயர்களில் ஒன்றாகும். மன்னன் சிபியை சோதிக்கும் நோக்கத்துடன் இந்திரன் புறா வடிவத்தோடும் அக்னி கழுகு வடிவத்துடனும் வந்தனர். அவ்வாறு சோதனை செய்த அக்னியும் இந்திரனும், தாங்கள் தவறாக மன்னன் சிபியை நினைத்தற்கு மன்னிப்பு கோரி பெருமானை வழிபட்ட தலம் என்பதால் புறவம் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். புறவன் (புறாவுக்கு உரியவனாகிய பருந்து உருவில் வந்த
இந்திரன்) தான் இழந்த புறாவின் நிறைக்கு ஈடு கட்டும் விதமாக, வேதங்களும் அமரர்களும் ஒப்பும் விதமாக நீதி அருளும்படி விண்ணப்பிக்க, பொறையன் (சிபிச் சக்ரவர்த்தி) தனது உடலையே அந்த புறாவுக்கு நிகராகும்படி ஈந்த வரலாற்றை கூறும் வகையில் திருஞான சம்பந்தர் அருளிய ஒரு தேவாரப் பாடல் அமைந்துள்ளது. மன்னனது தியாகத்தை அனைவரும் புகழ, மன்னன் தனது உடல் பெறுமாறு அருளிச் செய்ததும் இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. மறை அமரர் என்று புறாவாக வந்த அக்னியும், பருந்தாக வந்த இந்திரனும் குறிப்பிடப்பட்டுள்ளனர். நிறைதையுழி என்றால் நிறைவு வேண்டியிருந்த போது என்று பொருள். அதாவது தான் இழந்த புறாவின் எடைக்குச் சமமாக தனக்கு சதை வேண்டும் என்று புறாவை துரத்தி வந்த பருந்து கோர, அதற்காகத் தன்னையே அளித்து புறாவின் எடைக்கு நிறைவாகச் செய்த சிபி மன்னனின் செயலை இங்கே சம்பந்தர் கூறுகின்றார். இந்த நிகழ்ச்சியை உணர்த்தும் பாடல் நரருலகு சுரர் என்று தொடங்கும் பதிகத்தின் எட்டாவது பாடாலாகும் (3.67.8).
அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய
நிறுவி விரல் மா
மறையின் ஒழி முறை முரல் செய் பிறை எயிறன்
உற அருளும் இறைவன் இடமாம்
குறைவின் மிக நிறைதையுழி மறை அமரர் நிறை
அருள முறையொடு வரும்
புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற
அருளும் புறவம் அதுவே
மேற்குறித்த பாடலின் முதல் இரண்டு அடிகள் இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை மலை நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றன. அறம் அழிவு பெற=உலகினில் தருமம் அழியும் வண்ணம் பல கொடிய செயல்கள் புரிந்த அரக்கன் இராவணன். தெறு=அழித்த; புயவன்=வலிமையான தோள்களை உடைய அரக்கன்; விறல்=வலிமை; விரல் நிறுவி= விரலை ஊன்றி; மாமறை=சிறந்த வேதமாகிய சாமகானம்; முறை=முறையாக; முரல் செய்= பாடிய; முரல்=வண்டு செய்யும் ரீங்காரம்; பிறை எயிறன்=பிறைச் சந்திரன் போன்று வளைந்த பற்களை உடைய அரக்கன்; உற=நீண்ட வாழ்நாளும், சிறந்த வாளும் இராவணன் என்ற பெயரும் பெரும் வண்ணம் அருள் புரிந்த இறைவன்; தனது உணவாகிய புறாவினை தான் உட்கொள்ள முடியாமல் புறாவினுக்கு அபயம் அளித்த மன்னன் சிபியிடம்; தான் இழந்ததை, புறா வடிவில் இருந்த தனது உணவினை, ஈடு செய்து நீதி வழங்குமாறு அக்னியாக வந்த கழுகு முறையிட்டது. அக்னியின் இழப்பினை ஈடு செய்யும் நோக்கத்துடன் மன்னன், முதலில் தனது தொடையின் ஒரு பகுதியினை அறுத்து தராசுத் தட்டில் வைக்கின்றான். ஆனால் புறா இருந்த தட்டு தாழ்ந்து இருந்தமையால், கழுகு இரண்டு தட்டுகளும் ஒரே நிலையில் இருக்கும் வண்ணம் மேலும் மாமிசம் அளிக்கும் படி வேண்டியது. இரண்டு தட்டுகளும் நேராக இருக்கச் செய்யும் முயற்சியில் முடிவில் மன்னன் தானே தராசுத்தட்டில் அமர்ந்து தனது உடலினை முழுவதுமாக கழுகுக்கு ஈந்தான். பொறை=பாரம், எடை; தனது உடலையே புறாவின் எடைக்கு நேராக ஈந்ததால், மன்னனுக்கு பொறையன் என்ற பெயர் வந்தது.
முதல் மூவரின் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்த நிகழ்ச்சிகளைக் குறிக்கும் பழமொழி இது தான். பாலை கொடுத்து சூலை கொடுத்து ஓலை கொடுத்து. மூவரும் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தேவார பாடல்கள் புனைய ஆரம்பித்து பல தலங்களுக்குச் சென்று சிவநெறியை பரப்பலானார்கள். வானில், விடையின் மீது தனது துணையுடன் அமர்ந்தவராக பெருமான் காட்சி அளித்ததைக் காணும் பேற்றினைப் பெற்ற திருஞான சம்பந்தர், குளக்கரையில் (மண்மிசை) நின்றிருந்த வேதியர் குலச் சிறுவனாகிய சம்பந்தர், தனது கண்களின் வழியாக தான் அறிந்த கொண்ட கருத்து என்றும் பிரியாமல் மனதினில் இருக்கும் வண்ணம் கலந்தைமையால், பெருமானைக் காண்பதற்காக யானைக் கன்று போன்று சிறப்பு வாய்ந்தவராக விளங்கிய சம்பந்தர், திருக்கோயிலின் உள்ளே சென்றார் என்று சேக்கிழார் கூறுகின்றார். போதகம்=யானைக் கன்று.
அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும்
அன்பாலே
மண் மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும்
கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏக
புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உட்புக்கார்
மூன்று வயதுக் குழந்தை, தான் கேட்ட கேள்விக்கு பதிலாக பாடல் பாடியதையும். அந்தப் பாடலில் இறைவனின் பெருமைகளை அழகாக உணர்த்தியதையும், தனக்கு பால் அளித்தவர் பெருமான் என்று அவரை சுட்டிக் காட்டியதையும் உணர்ந்த சிவபாத இருதயரின் கையில் இருந்த கொம்பு அவரை அறியாமல் கீழே விழுந்தது; எல்லையற்ற தவம் செய்த தந்தை என அனைவரும் புகழும் வண்ணம், இறைவன் சம்பந்தருக்கு இறைவன் அருள் செய்தமை அமைந்திருந்தது. மாறு விழுந்த=கையினால் இறுகப் பற்றியிருந்த நிலையிலிருந்து மாறி கீழே விழுந்த நிலை; தந்தையார் இரு கைகளையும் குவித்து, தனது மகன் காட்டிய திசை நோக்கி, மகிழ்ச்சியினால் கூத்தாடினார். தான், தனது மகன் எச்சில் பாலைக் குடித்தான் என்று நினைத்து தவறு என்றும், நடந்தது வேறு ஒரு அதிசயம் என்பதையும் உணர்ந்த தந்தையார், தனது மகனைத் தான் தவறாக நினைத்தமையால் இறைவனின் கோபத்திற்கு ஆட்பட்டுள்ள தனக்கு என்ன நேருமோ என்றும் அச்சம் கொண்டார்; வெருட்சி=இறைவனின் திருவருளினை உணராமல் தனது மகனைக் கோபித்துக் கொண்டதால் ஏற்பட்ட பயம்; வியப்பு=நடந்த அதிசயத்தை நினைத்து வியப்பு அடைந்த நிலை; விருப்பு=புறச் சமயத்தின் தாக்குதலை முறியடிக்கும் மகன் வேண்டும் என்ற தனது கோரிக்கை நிறைவேற்றப் பட்டதால் மகனின் மேல் மேலும் கூடிய விருப்பு; இவ்வாறு அச்சம், வியப்பு, விருப்பு ஆகிய வேறுவேறு உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்பட்ட சிவபாத இருதயர், சம்பந்தர் மொழிந்த பதிகத்தில் அமைந்துள்ள கருத்தினை ஆராய்ந்து எண்ணினார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.
ஈறில் பெருந்தவம் முன் செய்து தாதை எனப்பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடி
வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும்
கூறும் அருந்தமிழின் பொருளான குறிப்பு ஓர்வார்
மேலும் சிவபிரான் மற்றும் உமையம்மையின் தரிசனம் தான் காணப் பெறாவிடினும் நடந்த நிகழ்ச்சிகளிலிருந்து குழந்தைக்கு தரிசனம் கிடைத்த பேற்றை புரிந்து கொண்ட சிவபாத இருதயர் தோணிபுரத்தாரின் அருளை நினைந்து வியந்து குழந்தையுடன் கோயிலுக்குள் சென்றதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகிறார். இந்த பாடலில் காதலர் என்று அன்புக் குழந்தை குறிப்பிடப்படுகின்றது. தனது குழந்தையை பின் தொடர்ந்து சிவபாத இருதயர் கோயிலுக்குள் சென்றார் என்றும் இந்தப் பாடலில் கூறப்பட்டுள்ளது. இறைவனின் திருவருள் பெற்று மேன்மை பெற்றவராக விளங்கிய குழந்தையின் பெருமையினை உணர்ந்த தந்தையார் குழந்தையின் முன்னே செல்லாமல் பின்னே சென்றார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இந்த கருத்து பெரியபுராணம் அளிக்கும் வாழ்வியல் கருத்துக்களில் ஒன்றாகும். நமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய எவரேனுடனும் நாம் செல்ல நேர்ந்தால், அவருக்கு முன்னே செல்லாமல் அவரைப் பின் தொடர்ந்து சொல்லவேண்டும் என்பதே அந்த கருத்தாகும். தனது மகனே ஆயினும், அவனது பெருமையினை உணர்ந்தமையால் தந்தையார் பின் தொடர்ந்தமை இங்கே உணர்த்தப் படுகின்றது. காதலர்=நாளுக்கு நாள் சம்பந்தர் பால் அவரது தந்தையார் வைத்திருந்த பெருகிய நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.
தாணுவினைத் தனி கண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல்
காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டுள்ளார்
தோணிபுரத்து இறை தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம்
பேணும் மனத்தொடு முன் புகு காதலர் பின் சென்றார்
தந்தை பின் தொடர சன்னதியை அடைந்த சம்பந்தர், நறவம் நிறை வண்டு (1.74) எனத் தொடங்கும் பதிகத்தை அருளுகின்றார். தோணியப்பரையும் உமை அம்மையையும் ஒரு சேரக் கண்ட சம்பந்தப் பெருமான் இந்த பதிகத்தின் பத்து பாடல்களிலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே என முடிக்கிறார். உமை அம்மையோடு இறைவனை இணைத்து உமையாளொடும் இருந்த விமலன் என்று கடைக்காப்பு பாடலிலும் கூட குறிப்பிடப் பட்டுள்ளது. அனைத்து பாடல்களிலும் உமை அம்மையின் குறிப்பு காணப்படும் அரிதான பதிகங்களில் இதுவும் ஒன்று. சேக்கிழார் இந்த செய்தியை தனது பாடலில் குறிப்பிடுகின்றார். மால் விடை=சிறந்த இடபம்; வாழ்வு என்பது இங்கே பெருமான் அடியார்களுக்கு அளிக்கும் முக்தி நிலையினை குறிப்பிடுகின்றது. எனை ஆளுடையான் என்று சம்பந்தர் இந்த பதிகத்தின் நான்காவது பாடலில் குறிப்பிடுவதை சேக்கிழார் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இறைவன் தன்னை ஆட்கொண்டதை குறிப்பிடும் தனது வாழ்க்கையில் நடந்ததை இந்த குறிப்பு மூலம் உணர்த்துகின்றார். சம்பந்தர் தனது வாழ்வினில் அருளிய இரண்டாவது பதிகம் இது. முதல் பதிகம் குளக்கரையில் நின்றவாறு அருளப்பட்டமையால், இந்த பதிகமே திருக்கோயில் சந்நிதானத்தில் சம்பந்தர் அருளிய முதல் பதிகமாகும்
பொங்கொளி மால் விடை மீது புகுந்து அணி பொற்றோணி
தங்கி இருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே
இங்கெனை ஆளுடையான் உமையோடும் இருந்தான் என்று
அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்
பாடல் 1:
நறவ நிறை வண்டு அறை தார்க் கொன்றை நயந்து
நயனத்தால்
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா
விழி செய்தான்
புறவம் உறை வண் பதியா மதியார் புரம் மூன்று
எரி செய்த
இறைவன் அறவன் இமையோர் ஏத்த உமையோடு
இருந்தானே
விளக்கம்:
நறவம்=தேன்; அறை=ஒலிக்கின்ற; தார்=மாலை; நயந்து=விரும்பி; நயனம்=கண்; இங்கே நெற்றிக்கண்; சுறவம்=மீன்; பொடி=சாம்பல் பொடி; வண்=சிறந்த; செறி=நெருங்கிய, சென்று அடைந்த; மன்மதன் மீனக்கொடியினை உடையவன். அறவன்=நீதியே தனது உருவமாக கொண்டுள்ள இறைவன்; தனது இந்த பதிகத்தில் மன்மதன் மற்றும் திரிபுரத்து அரக்கர்களை சுட்டெரித்து சாம்பலாக மாற்றிய செயல் குறிப்பிடப் படுகின்றது. ஐம்புலன்களை வென்ற இறைவனின் தவம் மன்மதனின் கணைகள் எந்த விதத்திலும் பாதிக்கக் முடியாது. எனினும் தவத்தினில் ஆழ்ந்து இருக்கும் எவரையும் அணுகி துன்புறுத்துதல் தவறு என்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் மன்மதனை இறைவன் எரித்தாரோ என்று தோன்றுகின்றது. அழித்த செயல்கள் ஆயினும் இரண்டு செயல்களும் தருமத்தின் வழியே நின்று செய்யப் பட்டமையால் புண்ணியமே வடிவமாக உள்ள இறைவன் என்று இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
தேன் நிறைந்ததால் வண்டுகள் சூழ்ந்து கொண்டு ரீங்காரம் செய்யும் தன்மையை உடைய கொன்றை மாலையினை விரும்பி அணிந்தவன் பெருமான்; சுறா மீன் உருவம் பொருந்திய கொடியினை உடைய மன்மதனின் உடல் சாம்பல் பொடியாக மாறும் வண்ணம் தனது நெற்றிக் கண்ணினை விழித்தவன் பெருமான். புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தினை சிறந்த உறைவிடமாக கருதி குடிகொண்டுள்ள இந்த இறைவன், வேதநெறியை மதியாது வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவன் ஆவான். புண்ணியமே வடிவமாக உள்ள இந்த இறைவன், தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான்.
பாடல் 2:
உரவன் புலியின் உரி தோலாடை உடை மேல் பட நாகம்
விரவி விரி பூங் கச்சா அசைத்த விகிர்தன் உகிர் தன்னால்
பொரு வெங் களிறு பிளிற உரித்துப் புறவம் பதியாக
இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு
இருந்தானே
விளக்கம்:
உரவன்=வலிமை உடையவன்; விகிர்தன் என்பதற்கு எவராலும் தோற்றிவிக்கப் படாமல் தானே தோன்றியவன் என்றும் ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன் என்று இரண்டு பொருள்கள் கூறப்படுகின்றன. இவை இரண்டுமே இறைவனுக்கு பொருந்தி இருப்பதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
மிகுந்த வலிமை உடையவனும், புலியினை உரித்து அதன் தோலினைத் தனது உடையாகக் கொண்டவனும், புலித்தோலாடையின் மேல் படமெடுக்கும் பாம்பினை இறுக கச்சாகக் கட்டியவனும், அந்த பாம்பினை பூமாலை அசைப்பது போன்று அசைப்பவனும், ஏனையோரிலிருந்து மாறுபட்டவனும் தனது நகத்தினால் போர்க்குணம் கொண்ட யானை பிளிறி அலறுமாறு அதன் தோலினை உரித்தவனும் ஆகிய பெருமான் புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு இரவும் பகலும் தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான்
பாடல் 3:
பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பு ஆர்க்கக்
கந்தம் மல்கு குழலி காண கரி காட்டு எரி ஆடி
அந்தண் கடல் சூழ்ந்த அழகார் புறவம் பதியா
அமர்வு எய்தி
எந்தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு
இருந்தானே
விளக்கம்:
பந்தம்=பிரியாத பிணைப்பு; பந்தம் என்ற சொல்லுக்கு உதரபந்தம் அணிகலன் என்று பொருள் கொண்டு அந்த ஆபரணத்தை அணிந்த பூத கணங்கள் என்றும் விளக்கம் அளிக்கின்றனர். ஆர்க்க=ஒலிக்க கந்தம்=நறுமணம் அந்தண்=அழகியதும் குளிர்ந்ததும்; அமர்வு எய்தி=விரும்பி அமர்ந்து; பந்தம் உடைய என்ற சொல்லுக்கு தீப்பந்தத்தை ஏந்திய பூதங்கள் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். இரவில் நடனம் ஆடுவதால், வெளிச்சம் வேண்டி தீப்பந்தங்கள் பிடிக்கப் படுகின்றன.
இந்த பாடலில் நறுமணம் கமழும் கூந்தலை உடையவள் என்று அன்னையை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டும். பல தேவாரப் பாடல்கள் அன்னையின் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் கொண்டது என்பதை உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளன, தெய்வீக நறுமணம் வீசும் கூந்தல் என்று உணர்த்தும் அதிகை வீரட்டானத்து திருத்தாண்டகப் பாடல் (6.4.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இயற்கையில் நறுமணம் கமழும் கூந்தலுக்கு மேலும் மணம் சேர்க்கும் வகையில் அன்று அலர்ந்த மலர்கள் சூட்டப்பட்டுள்ளன என்றும் அப்பர் பிரான் கூறுகின்றார்.
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும்
செஞ்சடை எம் பெருமானே தெய்வ நாறும்
வம்பின் நாண் மலர்க் கூந்தல் உமையாள் காதல்
மணவாளனே வலங்கை மழுவாளனே
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார்
புரம் மூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே அண்ட கோசரத்துளானே அவனாகில்
அதிகை வீரட்டனாமே
திருவெறும்பூர் தலத்து இறைவியின் திருநாமம் நறுங்குழல் நாயகி என்பதாகும். இந்த பெயரினை சற்று மாற்றி நறுங்குழல் மடவாள் என்று அப்பர் பிரான் அழைக்கும் குறுந்தொகைப் பதிகத்து பாடல் (5.74.2) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. பிறங்கு=விளங்கும்; கறங்கு=சுழலும், ஓரிடத்தில் நில்லாமல் சுற்றித் திரியும்; சீர்=புகழ் பேணும்=விரும்பும்; பிராட்டியின் கூந்தலை குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு பெருமானின் சடையின் தன்மை நினைவுக்கு வந்தது போலும். அழகாக பின்னப்பட்டு விளங்கும் செஞ்சடை என்று உணர்த்துகின்றார். பிஞ்ஞகன் என்றால் அழகிய தலைக்கோலம் உடையவன் என்று பொருள்.
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணு சீர்க்
கறங்கு பூதகணம் உடைக் கண்ணுதல்
நறுங்குழல் மடவாளொடு நாள் தொறும்
எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே
திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்துப் பாடல் (6.91.3) ஒன்றினில் அப்பர் பிரான் மலரின் நறுமணத்தினை வென்ற கூந்தலை உடையவள் என்று அன்னையை குறிப்பிடுகின்றார். கடுஞ்சுடர்=பேரொளியை உடைய விளக்கு; படிந்து=நிலத்தில் வீழ்ந்து; ஒரு=ஒப்பற்ற; ஓத வேலி=அலைகளையுடைய கடல்; நிறை=மிகுதியாய் காணப்படுகின்ற; மருவை வென்ற= மலர்களின் மணத்தை வென்ற நறுமணம்;
கருவை என் மனத்திருந்த கருத்தை ஞானக் கடும்
சுடரைப் படிந்து கிடந்து அமரர் ஏத்தும்
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகின்
நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த
மயானத்து மாசிலா மணியை வாசத்
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்று அடையப் பெற்றேன்
நானே
கொண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (4.67.10) அப்பர் பிரான் நறுமணம் கமழ்ந்து கருமையும் மென்மையும் கலந்து காணப்படும் கூந்தலை உடையவள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். விரை=நறுமணம்:: பாறி=சிதறி: வெருவர=அச்சம் கொள்ள: விலங்கல்=மலை, கயிலை மலை: ஞான்று=நாளன்று என்பதன் திரிபு: பருவரை= பருத்த மலை: நறுமணம் கமழ்ந்து கருமையும் மென்மையும் கலந்து காணப்படும் கூந்தலையும், ஒளிவீசும் அணிகளையும், வேல் போன்று நீண்டும் ஒளிபடைத்தும் காணப்படும் கண்களையும் உடைய உமையம்மை அச்சம் கொள்ளுமாறு, கயிலை மலையினை பேர்த்து எடுக்க அரக்கன் இராவணன் முயற்சி செய்த அன்று, அவனது பருத்த மலை போன்று விளங்கும் தோள்களும் தலைகளும் சிதறி விழுமாறு, தனது கால் விரல் ஒன்றினை கயிலை மலை மீது ஊன்றியவன் திருக்கொண்டீச்சரம் என்று அழைக்கப்படும் தலத்தில் உறையும் சிவபெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்து..
விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேல்
ஒண்கண்ணாள்
வெருவர இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்து
ஞான்று
பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழக்
திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சரத்து
உளானே
தில்லைத் திருத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (3.1.2) நறுமணம் கமழும் கூந்தலை உடைய அன்னை என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நுதல்=நெற்றி; கொட்டம்=நறுமணம்
கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது
ஏறினாய் நுதல்
பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர்
பிரியாத சிற்றம்பலம்
இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை
கொலோ
திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் தேவியின் திருநாமம் மருவார்குழலி என்பதாகும். மணம் பொருந்திய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.25.1) மருவார் குழலி என்று குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் மணம் கமழும் கூந்தலை உடைய தேவியை ஒரு பாகத்தில் வைத்தவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார்.
மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன்பள்ளி மேவிய
கருவார் கண்டத்து ஈசன் கழல்களை
மருவாதார் மேல் மன்னும் பாவமே
விசயமங்கை தலத்தின் அருளிய பதிகத்தின் (3.17) முதல் பாடலில் அம்மையை மருவமர் குழலி என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். மரு=வாசனை. இயற்கையாகவே நறுமணம் சென்று அமரும் கூந்தலை உடைய தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மாணிக்க வாசகரும் தனது கீர்த்தித் திருவகவலில் மருவார் குழலி என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார்.
மருவமர் குழல் உமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கை எம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழில் அணி விசயமங்கையே
என்றும் குறையாது நறுமணம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும் கூந்தலை உடைய அன்னை என்று கண்ணார்கோயில் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.101.4) திருஞானசம்பந்தர் கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். தரு=மரங்கள்; கானம்=காடு; துங்கம்= உயர்வு; மரங்கள் செழித்து வளர்ந்துள்ள காட்டில் வாழும் உயர்ந்த பெரிய யானை என்று பெருமானை எதிர்த்து வந்த யானையின் வலிமையை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கண்ணார்கோயில் கருவறையில் அமர்ந்துள்ள இறைவனை அடைந்து தொழும் மனிதர்கள் கற்றோர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்
மரு வளர் கோதைஅஞ்ச உரித்து மறை நால்வர்க்கு
உரு வளர் ஆலநீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
கரு வளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே
கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.133.1) நறுமணம் கமழும் கூந்தலை உடையவள் என்ற பொருள் பட, கந்தம் மல்கு குழலி என்று பிராட்டியை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். காஞ்சி நகரத்து அடியார்களை எல்லையற்ற நற்குணங்கள் பொருந்திய அடியார்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
வெந்த வெண்பொடிப் பூசு மார்பின் விரி நூல் ஒரு
பால் பொருந்த
கந்தமல்கு குழலியோடும் கடி பொழில் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தார் அவர் போற்ற அணங்கினொடு ஆடல்புரி
எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த இடர் கெடுமே
திருக்கோளிலி தலத்தின் மீது பதிகத்தின் பாடலில் (7.20.7) சுந்தரர் நறுமணம் உடைய கூந்தல் கொண்ட உமையம்மை என்று குறிப்பிடும் வண்ணம் வம்பமரும் குழலாள் என்று கூறுவதை நாம் இந்த பாடலில் காணலாம். தன்னிடத்தில் அன்பு உடையவனே என்று பெருமானை அழைத்து, பெருமானே உன்னை அல்லால் வேறு எவரொருவர் எனக்கு உதவி செயவல்லார், நீயே குண்டையூரில் இந்த நெல்மலையினை திருவாரூர் மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுந்தரர் கோரும் பாடல்.
எம்பெருமான் உனையே நினைத்து ஏத்துவன்
எப்பொழுதும்
வம்பமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகை சூழ் திருக்கோளிலி
எம்பெருமான்
அன்பதுவாய் அடியேற்கு அவை அட்டித் தரப் பணியே
பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.48.8), நறுமணம் உலாவும் கூந்தலை உடையவள் என்று பார்வதி தேவியை சுந்தரர் குறிப்பிடுகின்றார். வம்பு= நறுமணம்; கொம்பு=மரக்கிளைகள்; நம்பன்=விரும்பத் தக்கவன்; தரம் வாய்ந்த பொன்னின் நிறத்தை ஒத்த சடையை உடைவன் பெருமான் என்று இந்த பாடலில் சுந்தரர் கூறுவதை நாம் உணரலாம். கோலினாய்=வளைத்தாய்; பெருமானது சடையின் சிறப்பினை உணர்த்திய சுந்தரர் அம்மையின் கூந்தலின் சிறப்பையும் உணர்த்த ஆசை கொண்டார் போலும்.
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீயெழச் சிலை
கோலினாய்
வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக்
கோட்டிடைக்
கொம்பின் மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக்
கொடுமுடி
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா
நமச்சிவாயவே
பிராட்டியின் கூந்தல் இயற்கை மணம் வாய்ந்தது எனும் தேவாரப் பாடல் குறிப்புகள் நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றன. பரஞ்சோதி முனிவர் தாம் அருளிய திருவிளையாடல் புராணத்தில், இந்த நிகழ்ச்சியை, தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் மற்றும் கீரனை கரையேற்றிய படலம் ஆகிய இரண்டு படலங்களில் கூறுகின்றார். பெருமான் தருமிக்கு எழுதிக் கொடுத்த பாடல் குறுந்தொகை எனப்படும் சங்க இலக்கியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இறைவன் எழுதிக் கொடுத்த பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே
வண்டினை நோக்கி பாடுவதாக அமைந்த இந்த பாடலின் கருத்து; நறுமணத்தினை ஆராய்ந்து திரியும் வாழ்க்கையை உடைய அழகிய சிறகுகளை உடைய வண்டே, பயிற்சி மிக்க நட்பும் மயில் போன்ற சாயலும் நெருங்கிய பற்களும் உடைய எனது தலைவியின் கூந்தலில் வீசும் நறுமணத்தினை விடவும் அதிகமான நறுமணம் கொண்ட பூவினை நீ இதுவரை கண்டதுண்டோ. எனது கேள்விக்கு விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி உண்மையான பதிலை நீ கூறுவாயாக. இந்த பாடல் பொருட்குற்றம் உள்ள பாடல் என்று நக்கீரன் உரைக்க, இறைவன் நேரில் தோன்றி, நக்கீரனிடம், நீ வணங்கும் ஞானப் பூங்கோதையின் (திருக்காளத்தி தலத்து அம்மை) கூந்தலுக்கு இயற்கையில் நறுமணம் இல்லையா என்று கேட்க, நக்கீரன் இல்லை என்று முதலில் பதில் உரைத்தார். பின்னர் தான் தவறு செய்தேன் என்று ஒப்புக்கொண்டு, கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, கோப பிரசாதம், திருவெழுகூற்றிருக்கை ஆகிய பாடல்களை (பதினோராம் திருமுறை) பாடியதாகவும் பரஞ்சோதி முனிவர் கூறுகின்றார்.
பொழிப்புரை:
பெருமானை விட்டுப் பிரியாத பூத கணங்கள் பாட, அந்த பாடலுக்கு ஏற்ப தனது கால் சிலம்பு ஒலிக்கும் வண்ணமும், இயற்கையாகவே நறுமணம் நிறைந்த கூந்தலை உடைய அன்னை காணும் வண்ணமும், சுடுகாட்டில் காணப்படும் தீப்பிழம்பைத் தனது கையினில் ஏந்தியவாறு இறைவன் நடமாடுகின்றார். இத்தகைய பெருமான் அழகும் குளிர்ச்சியும் ஒருங்கே பொருந்திய கடல்களால் சூழப்பட்டதும் எழில் மிக்கதும் புறவம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழித் தலத்தில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்துள்ளார். மேலும் அவர் தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமை அன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான்
பாடல் 4:
நினைவார் நினைய இனியான் பனியார் மலர் தூய
நித்தலும்
கனையார் விடை ஒன்று உடையன் கங்கை திங்கள்
கமழ் கொன்றை
புனை வார் சடையின் முடியான் கடல் சூழ் புறவம்
பதியாக
எனை ஆளுடையான் இமையோர் ஏத்த உமையோடு
இருந்தானே
விளக்கம்:
கனைத்தல்=குரல் கொடுத்தல்; பனியார் மலர்=பனித்துளிகள் படிந்த மலர்கள்; விடியலில் பறிக்கப்பட்ட மலர்கள் தானே பனித்துளிகளை உடைய மலர்களாக இருக்கும். மேலும் தூய மலர்கள் என்று குறிப்பிடுவது, வண்டுகள் தேனைப் பருகுவதற்கும் முன்னம் பறிக்கப்பட்ட மலர்கள் என்பதையும் உணர்த்துகின்றன.
என்னை ஆளுடையான் என்று பெருமானை சம்பந்தர் குறிப்பிடுவதை இந்த பாடலில் நாம் காணலாம். தோடுடைய செவியன் என்று தொடங்கும் முதல் பதிகத்தில் தனது தந்தையார் கேட்ட கேள்விக்கு விடையாக இறைவனின் அடையாளங்களை குறிப்பிட்ட பிள்ளையார், தனக்கு பெருமானுக்கு இடையே இருந்த தொடர்பினை என் உள்ளம் கவர் கள்வன் என்ற தொடரினைத் தவிர வேறு எந்த முறையிலும் குறிப்பிடவில்லை. ஆனால் மூன்று வயதுக் குழந்தை பதிகம் பாடிய தன்மையிலிருந்து, பெருமான் அந்த குழந்தையை ஆட்கொண்டு அருளியதை உலகம் உணர்கின்றது, நாமும் புரிந்து கொள்கின்றோம். அதற்கு அடுத்து அருளிய இந்த பதிகத்தில், என்னை ஆளுடையான் என்று இந்த பாடலிலும், என்னை உடையான் என்று ஆறாவது பாடலிலும் குறிப்பிட்டு இறைவன் தன்னை ஆட்கொண்ட தன்மையை சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார்.
அப்பர் பிரான் தனது முதல் பதிகத்தின் முதல் பாடலில், ஏற்றாய் அடிக்கே என்று குறிப்பிட்டு இறைவன் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டதை குறிப்பிடுகின்றார்.
கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன
நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன்
எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி
முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை
அம்மானே.
சுந்தரரும் தான் அருளிய முதல் பதிகத்தில், அனைத்துப் பாடல்களிலும் உனக்கு நான் அடிமை அல்ல என்று இனி சொல்ல மாட்டேன் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் அவரை அடிமை ஓலை காட்டி ஆட்கொண்ட பின்னர் அருளிய பாடல் என்பதால், பெருமான் தன்னை ஆட்கொள்ள முயற்சி செய்த போது தான் எதிர்ப்பு தெரிவித்ததை குறிப்பிட்டு வருத்தம் தெரிவிக்கும் வகையில் இனி அவ்வாறு செய்ய மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். மணிவாசகரும் திருவாசகத்தில் பல இடங்களில் பெருமான் தன்னை ஆட்கொண்டதை உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
பனித்துளிகள் படர்ந்து காணப்படுவதும் வண்டுகள் தேனைச் சுவைப்பதன் முன்னம் பறிக்கப்படுவதும் ஆகிய தூய்மையான மலர்களை தனது திருமேனியின் மீது தூவி தினமும் மறவாமல் நினைத்து வழிபடும் அடியார்களின் நினைவினில் இனிமையாக இருப்பவனும், உரத்த குரலில் கனைக்கும் எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவனும், கங்கை நதி பிறைச் சந்திரன் மற்றும் கொன்றை மலர் ஆகியவை புனையப்பட்ட நீண்ட அழகிய சடையினை உடையவனும், ஆகிய பெருமான் கடலால் சூழப்பட்ட புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான். அவனே என்னை ஆட்கொண்ட இறைவன் ஆவான்.
பாடல் 5:
செங்கண் அரவு நகு வெண் தலையும் முகிழ் வெண்
திங்களும்
தங்கு சடையன் விடையன் உடையன் சரி கோவண
ஆடை
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகார் புறவம்
பதியாக
எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு
இருந்தானே
விளக்கம்:
முகிழ்தல்=முளைத்தல்; சரி=தொங்கும்; பிளவு பட்டு வாய் திறந்து இருப்பது போன்று காட்சி அளிப்பதால் சிரிக்கும் தோற்றத்தினைக் கொண்டுள்ள தலை என்பதை உணர்த்த நகுவெண்தலை என்று கூறுகின்றார். நகுவெண்தலையை சடையில் சூட்டிக் கொண்டவன் என்று பெருமான் தலைமாலை தலைக்கு அணிந்துள்ள நிலையினை சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பல திருமுறைப் பாடல்களில் பெருமான் தலைமாலை அணிந்துள்ள நிலை குறிப்பிடப்படுகின்றது. நாம் இப்போது அப்பர் பிரான் அருளிய அங்கமாலை பதிகத்தின் முதல் பாடலை( 4.9.1) காணலாம். தலைமாலை=ஒவ்வொரு ஊழி முடிவிலும் அழியும், பிரமன் திருமால் ஆகியோரின் தலைகளைக் கொண்ட மாலை. தலைமாலை தலைக்கு அணிந்தவன் என்ற தொடர் மூலம், சிவபெருமான் ஒருவனே என்றும் அழியாமல் இருப்பவன் என்ற செய்தி உணர்த்தப்படுகின்றது. மகா சங்கார காலத்தில், அனைத்து உயிர்களும் தன்னிடம் ஒடுங்கிய பின்னர், செத்து செத்து பிறக்கும் தன்மை உடைய திருமால், பிரமன், இந்திரன் ஆகியோரின் தலைகளை மாலையாக அணிந்து கொண்டு, தன்னைத் தவிர வேறு எவரும் நிலையானவர்கள் அல்ல; தான் ஒருவன் தான் நிலையானவன் என்ற உண்மையை அனைவருக்கும் சிவபெருமான் உணர்த்துகின்றார். எனவே அவரைத் தவிர வணங்கத்தக்க தெய்வம் வேறு எவரும் இல்லை.
தலையே நீ வணங்காய் – தலை
மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.
பொழிப்புரை:
சிவந்த கண்களை உடைய பாம்பும், சிரிப்பது போன்று வாய் பிளந்து தோன்றும் தலையும், முளைத்த பிறைச் சந்திரனும் தங்கும் சடை முடியினை உடையவனும், இடபத்தை வாகனமாக கொண்டவனும், கீளில் கட்டப்பட்டு சரிந்து தொங்கும் கோவண ஆடையினை அணிந்தவனும் ஆகிய பெருமான் பொங்கி எழும் அலைகள் நிறைந்த கடலால் சூழப்பட்டதும் அழகாக விளங்குவதும் புறவம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு, அனைத்து இடங்களிலும் பரவி இருக்கும் இமையோர்கள் வந்து தொழுது தன்னைப் புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான்
பாடல் 6:
பின்னு சடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய்
அன்ன நடையார் மனைகள் தோறும் அழகார் பலி
தேர்ந்து
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகார் புறவம்
பதியாக
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு
இருந்தானே
விளக்கம்:
கேழல் எயிறு=பன்றியின் கொம்பு; பிறழ=விளங்க; பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்ற பெருமான் பன்றியின் கொம்பினை அணிந்தவாறு சென்ற போதிலும், ஆங்கிருந்த முனிவர்களின் மனைவியர், வந்தவர் சிவபெருமான் என்பதை உணர முடியாமல் பெருமானது அழகில் அவர்கள் மயங்கிய நிலை, இங்கே அழகுடன் பலி தேர்ந்து என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. மடல்=தாழை மடல்; இறைவனின் அழகு தாருகவனத்து இல்லத்தரசிகளை ஈர்த்தது போன்று, இறைவனின் கருணை உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஈர்க்கும் வல்லமை கொண்டது என்ற கருத்து இங்கே உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
பின்னப்பட்ட தனது சடைகள் தாழுமாறும், மார்பினில் தான் அணிந்திருந்த பன்றியின் கொம்பு விளங்கிச் தோன்றுமாறும் தாருகவனம் சென்ற பெருமான், ஆங்கிருந்த அன்னம் போன்று நடை உடையவர்களாக விளங்கிய முனிவர்களின் மனைவியர் இருந்த இல்லங்கள் தோறும் தனது அழகான உருவத்துடன் சென்று பிச்சை கேட்டார். இந்த பெருமான் புன்னை மற்றும் தாழை மடல்கள் நிறைந்த சோலைகள் உடைய அழகான நகரமும், புறவம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான் இவரே என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டவர் ஆவார்.
பாடல் 7:
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர்
விண்ணில் பொலிய அமுதம் அளித்த விடை சேர் கொடி
அண்ணல்
பண்ணில் சிறை வண்டு அறை பூஞ்சோலைப் புறவம்
பதியாக
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு
இருந்தானே
விளக்கம்:
தோழம்=எண்ணிறந்த; பாற்கடலிலிருந்து கருமையான விடம் பொங்கி வந்த போதே அதன் தாக்கத்தினால் அனைத்து தேவர்களும் இறந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எவரும் இறவாமல், விண்ணில் பொலிவுடன் வாழும் வண்ணம், அந்த நஞ்சினை உட்கொண்டவன் பெருமான் என்று, பெருமான் நஞ்சினை உண்டு அமரர்களைக் காத்த செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது
பொழிப்புரை:
எவரும் உட்கொள்ள முடியாத நஞ்சினைத் தான் உண்டு எண்ணற்ற தேவர்கள் விண்ணில் பொலிவுடன் வாழும் வண்ணம் அமுதம் உண்பதற்கு வழி வகுத்த இறைவன், இடபம் வரையப் பெற்ற கொடியினை உடையவன் ஆவான். சிறகினை உடைய வண்டுகள் இடைவிடாது ரீங்காரமிடும் வளமான பூஞ்சோலைகளை உடையதும் புறவம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு தன்னை எண்ணற்ற இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றார்
பாடல் 8:
விண் தான் அதிர வியனார் கயிலை வேரோடு
எடுத்தான் தன்
திண் தோள் உடலும் முடியும் நெரிய சிறிதே ஊன்றிய
புண் தான் ஒழிய அருள் செய்தான் புறவம் பதியாக
எண் தோளுடையான் இமையோர் ஏத்த உமையோடு
இருந்தானே
விளக்கம்:
வியனார்=அகலமுடைய; மிகுந்த ஆரவாரத்துடன் இராவணன் கயிலை மலையினை நோக்கிச் சென்றதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மேலும் பெருமான் சிறிதே ஊன்றினான் என்று கூறுகின்றார். சற்று பலமாக ஊன்றியிருந்தால் அரக்கன் என்னவாகி இருப்பான் என்பதை நமது கற்பனைக்கு சம்பந்தர் விட்டு விடுகின்றார். சிறிதே ஊன்றினான் என்று சம்பந்தர் சொல்வது, அப்பர் பிரான் திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பாடல்களை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களில் (4.47) அப்பர் பிரான், இறைவன் சற்றே தனது கால்விரலின் அழுத்தத்தை கூட்டியிருந்தால், எவரும் அரக்கன் இராவணனை மீண்டும் காணும் வாய்ப்பே இருந்திருக்காது என்று கூறுகின்றார். களித்தவன்=கயிலை மலையினை தான் பேர்த்து எடுக்கப் போகின்றோம் என்ற எண்ணத்தில் மிகுந்த மனக் களிப்புடன்; நெளித்தவன்=உடலினை வளைத்துக் கொண்டும் நெளித்துக் கொண்டும்; நேரிழை=அன்னை பார்வதி; வெளித்தவன்=அடியார்க்கு தன்னை மறைக்காமல் வெளிப்படுத்துபவன்; மளித்து=மீண்டும் மீண்டும்
களித்தவன் கண் சிவந்து கயிலை நன்மலையை ஓடி
நெளித்தவன் எடுத்திடலும் நேரிழை அஞ்ச நோக்கி
வெளித்தவன் ஊன்றி இட்ட வெற்பினால் அலறி
வீழ்ந்தான்
மளித்து இறை ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை
தானே
பொழிப்புரை:
விண் அதிரும் வண்ணம் ஆரவாரத்துடன், அகன்ற கயிலை மலையினை நோக்கி வந்த அரக்கன் இராவணன், அந்த கயிலை மலையினை அடியோடு பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது அவனது வலிமையான தோள்களும் உடலும் தலைமுடிகளும் சிதறி வீழும் வண்ணம் தனது கால் விரலை சிறிதாக ஊன்றியவன் பெருமான். இவ்வாறு அழுத்தியதால் மலையின் கீழே அமுக்குண்டு அரக்கன் அலறி பின்னர் சாமகானம் இசைத்து இறைவனை வேண்டிய போது, மலையின் கீழே அழுந்தியதால் ஏற்பட்ட காயங்கள் மறையும் வண்ணம் அவனுக்கு அருள் செய்தவர் சிவபெருமான். இத்தகைய பெருமான், வலிமையான எட்டு தோள்களை உடையவன், புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றார்
பாடல் 9:
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக்
காண்கில்லாப்
படியா மேனி உடையான் பவள வரை போல் திரு
மார்பில்
பொடியார் கோலம் உடையான் கடல் சூழ் புறவம்
பதியாக
இடியார் முழவார் இமையோர் ஏத்த உமையோடு
இருந்தானே
விளக்கம்:
நெடியான்=நீண்ட உருவம் கொண்ட திரிவிக்ரமனாக அவதாரம் எடுத்த திருமால்; பொடி= திருநீறு; படியா மேனி=அளவுக்கு உட்படாத;
பொழிப்புரை:
நெடியவனாகிய திருமாலும் நீண்ட தாமரை மேல் உறையும் பிரமனும் கீழே அகழ்ந்தும் மேலே பறந்தும் காணமுடியாத வண்ணம் எந்த அளவுக்கும் உட்படாத அழல் உருவாகிய திருமேனியை உடையவன் சிவபெருமான். அவன் தனது பவள வண்ணத்தில் உள்ள திருமேனியின் மேல் திருநீறு பூசிய கோலத்தை உடையவன். அவன் தான், கடலால் சூழப்பட்டதும் புறவம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு இருக்கும் பெருமான் இடி போன்று முழங்கும் முழவம் ஒழிக்க நடனம் ஆடும் தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றார்
பாடல் 10:
ஆலும் மயிலின் பீலி அமணர் அறிவில் சிறு தேரர்
கோலும் மொழிகள் ஒழியக் குழுவும் தழலும் எழில்
வானும்
போலும் வடிவும் உடையான் கடல் சூழ் புறவம் பதியாக
ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு
இருந்தானே
விளக்கம்:
ஆலும் மயில்=அகவும் மயில்; கோலும்=புனைந்து பேசும் மொழிகள்; குழலும்=கூடி;; ஏலும்=பொருந்தும்
பொழிப்புரை:
அகவும் மயிலின் இறகினை கையினில் ஏந்திய சமணர்களும், குறைந்த அறிவு உடையவர்களாக விளங்கிய புத்தர்களும், பொய்களைக் கலந்து புனைந்து பேசும் சொற்கள் மக்களிடையே பரவாமல் தாழச் செய்பவனும், கூடிக் கொழுந்து விட்டெரியும் தீச்சுடர் மற்றும் செவ்வானத்தின் நிறத்தில் திருமேனியை உடையவனும் ஆகிய இறைவன் கடலால் சூழப்பட்டதும் புறவம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி நகரத்தில் தன்னை இமையோர்கள் வந்து பொருந்தும் வகையில் தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றார்
பாடல் 11:
பொன்னார் மாடம் நீடும் செல்வப் புறவம் பதியாக
மின்னார் இடையாள் உமையாளோடும் இருந்த
விமலனைத்
தன்னார்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்
மாலை
பன்னாள் பாடி ஆடப் பிரியார் பாலோகம் தானே
விளக்கம்:
பொன்னார் மாடம்=பொன் போன்று அழகும் செல்வச் செழிப்பும் உடைய மாளிகைகள்; விரகன்=வல்லவன்
பொழிப்புரை:
பொன் போன்று அழகியதும் செல்வச் செழிப்பும் உடையதும் நெடிது உயர்ந்ததும் ஆகிய மாளிகைகள் நிறைந்த செல்வ வளம் கொழிக்கும் புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டுள்ள பெருமான், மின்னல் போன்று மெலிந்த இடையினை உடைய உமையன்னையுடன் இணைந்து உறைகின்றான். இயற்கையாகவே மலங்கள் நீங்கிய இறைவனை, அவன் பால் அன்பு வைத்துள்ளவனும், தமிழ் மொழியில் வல்லவனும் ஆகிய அடியேன் உரைத்த இந்த தமிழ் மாலையினை பல நாட்கள் பாடி ஆடும் அடியார்கள் மறுமையில் மேலுலகத்தை அடைந்து பிரியாது வாழ்வார்கள்.
முடிவுரை;
இதனிடையில் திருக்கோயிலில் நடந்ததை கண்டவர்களும் கேட்டவர்களும், இத்தகைய அற்புதம் வேறெங்கும் நடைபெறவில்லை என்று சொல்லியவாறு தோணிபுரத்து திருக்கோயிலின் வாயிலில் வந்து சூழ்ந்தனர். தனது வாழ்வினில், இங்கே விளக்கம் அளிக்கப்பட்டுள்ள பதிகத்தினை இரண்டாவது பதிகமாக பாடிய திருஞான சம்பந்தர் திருக்கோயிலுக்கு வெளியே வருகின்றார். வெளியே குழுமியிருந்த வேதியர்கள் காண, இறைவனின் அருளினால் ஏழிசைகள் பொருந்திய செந்தமிழ் பாடல்களை பாடும் திறமை பெற்றவராகவும் இறைவனுக்கு அடிமைத் தொண்டு புரிபவராகவும் மாறிய மூன்று வயதுக் குழந்தையினைத் தனது தோளில் சுமந்தவாறு சிவபாத இருதயர் திருக்கோயிலிலிருந்து புறப்பட, அவரை எதிர்கொண்ட பல தொண்டர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றனர். சீர்காழி தலத்தின் தவப் பயனாய் தோன்றியவனே என்றும், கவுணியர் கோத்திரத்து தோன்றிய தனமே என்றும், ஆழ்கடல் போன்று கலை ஞானம் மிகுந்தவரே என்றும், கடலில் தோன்றிய அமுதே என்றும், உலகத்தவர் உய்யும் வண்ணம் அவதாரம் எடுத்தவரே என்றும், பெருமான் மற்றும் பிராட்டி ஆகிய இருவரின் அருளினையும் பெற்றவரே என்றும், மறைகளை வளர்க்கும் செல்வரே என்றும், வைதீக நெறியின் நிலையான பொருளே என்றும், புண்ணியங்களின் முதலே என்றும் பலவாறு அவரை புகழ்ந்து போற்றிய வண்ணம் அடியார்கள் திருஞானசம்பந்தரை பின் தொடர்ந்தனர். மேலும் அவரது திருப்பாதங்களில் தங்களது தலைகளை வைத்து வணங்கினார்கள்.
மூன்று வயதில் தீஞ்சுவை தமிழ் பாடல்கள் பாடும் அதிசய குழந்தையை அழைத்துக்கொண்டு சிவபாத இருதயர் தனது வீடு திரும்பும் முன்னர் சீர்காழி நகரத்திலுள்ள அனைவருக்கும் நடந்த அதிசயத்தின் விவரங்கள் தெரிய வரவே சீர்காழி திருக்கோயிலின் முன்பு மக்கள் கூட்டம் கூடி விட்டது. மகிழ்ச்சியில் மக்கள் தங்கள் உடலின் மேல் இருந்த உத்தரீயத்தை எடுத்து கொடி போல் விரித்து ஆட்டினர் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகிறார். சீர்காழி தெருக்களில் சிவானந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்று சேக்கிழார் கூறுகின்றார். அறுவை=உடை மீது கட்டப் பட்டிருக்கும் ஆடை; இந்த காட்சி, ஆற்றினில் சுழித்துக் கொண்டு வரும் நுரைக் குமிழிகள் ஆற்றின் ஓட்டத்திற்கு இணங்க மேல் ஏறியும் கீழே இறங்கியும் வருவது போன்று இருந்தது என்று இந்த பாடலில் சேக்கிழார் கூறுகின்றார். மேலும் நகர மக்கள் தமது இல்லங்களில் அதிசயம் நிகழ்ந்தது போல் கருதி குளிர்ந்த மலர்களையும் வண்ணப் பொடிகளையும் நெற்பொறிகளையும் தூவியும், மங்கல இசை முழங்கியும், வேத கீதங்கள் இசைத்தும், நிறை குடங்களின் மீது விளக்குகளை ஏற்றி வைத்தும், சங்குகள் ஒலித்தும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
மாமறையோர் குழாத்தினுடன் மல்கு திருத்தொண்டர்
குழாம் மருங்கு சூழ்ந்து
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும்
தன்மையாலே
பூ மறுகு சிவானந்தப் பெருக்காறு போத அதன் மீது
பொங்கும்
காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன போல் விளங்கு
பெரும் காட்சித்தாக
இவ்வாறு அனைவராலும் கொண்டாடப்படும் வகையில் பதிகங்கள் இயற்றிய திருஞான சம்பந்தரின் பாடல்களை பொருளுடன் உணர்ந்து, மனம் ஒன்றி அந்த பாடல்களை பாடி இறைவனின் திருவருள் பெற்று நாம் வாழ்வினில் உய்வோமாக.
Tag :
#thirugnanasambandhar thevaram
#Naravam Nirai Vandu
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram
Written by:
என். வெங்கடேஸ்வரன்