Go Back

22/03/21

படையார் தருபூதப்


பின்னணி:

ஆடினாய் நறு நெய்யொடு (3.01) என்று தொடங்கும் இன்னிசைப் பதிகம் பாடி, அந்த பதிகத்தினில் தில்லை வாழ் அந்தர்ணர்களை சிறப்பித்தும், பெருமானை வழிபடும் அடியார்களின் வினைகள் முற்றிலும் தீர்க்கப்படும் என்றும் உணர்த்திய ஞானசம்பந்தர், ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து, பெருமானிடம் விடை பெற்று பொன்னம்பலத்தை வலம் வந்த பின்னர் வெளி முற்றத்தை அடைந்தார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். பின்னர் திருவாயிலை வணங்கி எழுந்தார். அப்போது அவருடன் வந்த யாழ்ப்பாணர், தனது ஊரான எருக்கத்தம்புலியூர் முதலான நிவா நதிக்கரையில் உள்ள தலங்கள் சென்று வணங்க வேண்டுமென்று பிள்ளையாரிடம் விண்ணப்பம் வைத்தார். இன்றைய நாளில் வடவெள்ளாறு என்று அழைக்கப்படும் நதியே நிவா நதி. இந்த தலம் தற்போது இராஜேந்திரப் பட்டினம் என்று அழைக்கப் படுகின்றது. விருத்தாசலம் ஜெயங்கொண்டான் பாதையில், விருத்தாசலத்திலிருந்து பன்னிரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம்.

அப்புறத்திடை வணங்கி அங்கு அருளுடன் அணி மணித்

திருவாயில்

பொற்புறத் தொழுது எழுந்து உடன் போதரப் போற்றிய

புகழ்ப் பாணர்

நற்பதம் தொழுது அடியனேன் பதி முதல் நிவாக் கரை

மேய

ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை

செய்ய அது நேர்வார்

அந்த தலம் சென்றடைந்த பின்னர், ஞானசம்பந்தர் யாழ்ப்பாணரை நோக்கி, ஐயரே நீர் அவதரித்திட இந்த தலம் மிகுந்த தவம் செய்திருக்க வேண்டும் என்று சிறப்பித்து கூறிய பின்னர், திருக்கோயிலின் உள்ளே புகுந்த போது அருளிய பதிகமே இங்கே விளக்கம் அளிக்கப்படும் பதிகமாகும். ஐயர் என்றால் தலைவர் என்று பொருள். சாதி வேறுபாடு கருதாமல் உயர்ந்த குணம் கொண்டவர்களை அழைப்பதற்கு பயன்படுத்தப் பட்ட இந்த சொல், காலப்போக்கில் மாறி ஒரு சாதியரை குறிப்பதற்கு பயன்படுத்தப் படுவது காலத்தின் கோலமாகும். பண்டைய நாட்களில் நாயன்மார்கள் தங்களுக்குள்ளே சாதி வேறுபாடு கருதமால் பழகி வந்தார்கள் என்பதற்கு, ஞானசம்பந்தர் ஐயரே என்று யாழ்ப்பாணரை அழைத்தது ஆதாரமாக உள்ளது. நீலநக்கர் தான் வேள்வி வளர்த்து செய்யும் இடத்தில், யாழ்ப்பாணரை அவரது மனைவியாருடன் தங்க வைத்தது, திருஞான சம்பந்தர் சீர்காழியில் தனது இல்லத்தின் அருகே யாழ்ப்பாணரை தங்க வைத்தது முதலியவை நாம் நினைவில் கொள்ளத் தக்கது. வேளாளர் குலத்தில் பிறந்த அப்பர் பிரானை, அந்தணர் குலத்தில் அவதரித்த அப்பூதி அடிகள், சிறப்பித்து வணங்கி, தமது இல்லத்தில் அவருக்கு அமுது அளித்தமையும் நாம் இங்கே நினைவு கூர்வோமாக.

ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்பு

செய்தவாறு எனச் சிறப்பு உரைத்தருளி அச் செழும் பதி

இடம் கொண்ட

மைகொள் கண்டர் தம் கோயிலினுள் புக்கு வலம் கொண்டு

வணங்கிப் பார்

உய்ய வந்தவர் செழுந்தமிழ் பதிகம் அங்கு இசையுடன்

உரை செய்தார்

பாடல் 1:

படையார் தரு பூதப் பகடார் உரி போர்வை

உடையான் உமையோடும் உடனாய் இடு கங்கை

சடையான் எருக்கத்தம்புலியூர் தகு கோயில்

விடையான் அடி ஏத்த மேவா வினை தானே

விளக்கம்:

பகடு=யானை; பெருமானை எதிர்த்து வந்த மத யானை, பெருமானை எதிர்த்த செயலை இழித்து கூறும் வண்ணம், இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற ஆர் என்ற மரியாதை விகுதி சேர்க்கப் பட்டுள்ளது. படையார்=படைகளாக அமைந்த; மேவா=தமது வலிமையை காட்ட முடியாமல் இருக்கும் நிலை; உடையான்=உடமையாக உடையவன், என்னை ஏற்றுக் கொண்டவன்; இடு=பொருந்திய; தகு கோயில்=தகுதி வாய்ந்த கோயில்;

உடையான் என்று குறிப்பிட்டு, இறைவன் தனது அடிமையாக தன்னை ஏற்றுக்கொண்ட நிலையினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அருளாளர்கள் அனைவரும் தங்களை இறைவனது அடிமைகளாக நினைத்து வாழ்ந்து வந்த நிலையினை இந்த குறிப்பு நமக்கு உணர்த்துகின்றது. மேலும், தனது முதல் பதிகத்தின் முதல் பாடலில், ஏற்றாய் அடிக்கே என்று சிவபெருமான் தன்னை அவரது அடிமையாக ஏற்றுக் கொண்டதையும் இரவும் பகலும் பிரியாது அவரை வணங்குவேன் என்று அப்பர் பிரான் கூறியதையும் நினைவூட்டுகின்றது.

கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன

நான் அறியேன்

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன்

எப்பொழுதும்

தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி

முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை

அம்மானே

பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு சூலைநோய் தீர்த்ததும் அன்றி, தனக்கு திருநாவுக்கரசு என்ற பெயரையும் சூட்டியதால் பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டதை அப்பர் பிரான் உணர்ந்தார். தான் உணர்ந்ததை, அப்பர் பிரான் பல்லவ மன்னனின் ஆணையுடன் வந்த மந்திரிக்கு மறுமொழியாக உரைப்பதை நாம், அவரது மறுமொழித் தாண்டகத்தின் முதல் பாடலில் (6.98.1) உணரலாம். இந்தப் பாடலின் இறுதி வரியில் அப்பர் பிரான் மீளா ஆளாய், இறைவனது சேவடிக் கீழ் தஞ்சம் அடைந்ததாக கூறுகின்றார். இறைவனிடம் அன்பு பூண்ட அருளாளர்கள் தங்களை மீளா அடிமை என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமை அடைகின்றார்கள். இவ்வாறு இறைவனால் தான் ஆட்கொள்ளப் பட்டதை, மிகவும் பெருமையுடன் இறைவனது மீளா ஆளாக தான் இருக்கும் நிலையினை குறிப்பிட்டு பதிகத்தைத் தொடங்குகின்றார்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில்

இடர்ப்படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை

தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க

வெண் குழை ஓர் காதில்

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்

சேவடி குறுகினோமே

திருநாரையூர் பதிகத்தின் கடைப் பாடலிலும் (6.74.10) அப்பர் பிரான் தன்னை மீளாத ஆள் என்று குறிப்பிடுகின்றார். வெளி செய்த வழிபாடு என்றால் அறிவொளியால் செய்த வழிபாடு என்று பொருள்.

மீளாத ஆள் என்னை உடையான் தன்னை வெளி செய்த

வழிபாடு மேவினானை

மாளாமை மறையவனுக்கு உயிரும்வைத்து வன்

கூற்றின் உயிர் மாள உதைத்தான் தன்னை

தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள்

வலியும் தொலைவித்து ஆங்கே

நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை நாரையூர்

நன்னகரில் கண்டேன் நானே

சிவபிரானுக்கு மீளாத அடிமையாக மாறுவது தான், அடியார்கள் இறைவனுக்கு செய்யக் கூடிய கைம்மாறு என்று உணர்த்தும் அப்பர் பிரான் நம் அனைவரையும் சிவபிரானுக்கு மீளா அடிமையாக மாறச் சொல்வதை நாம், திருவையாறு (4.40.7) பதிகத்தின் ஒரு பாடலில் காணலாம். பூங்கொத்துகள் மலர்கின்ற வசந்த காலத்திற்கு அரசன் என்று மன்மதனை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

கீள் அலால் உடையும் இல்லை கிளர்பொறி அரவம்

பைம்பூண்

தோள் அலால் துணையும் இல்லை தொத்தலர்கின்ற

வேனில்

வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா

ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

சுந்தரமூர்த்தி நாயனாரும் தனது முதல் பதிகத்தில், தான் இறைவனுக்கு அடிமை என்பதை உணர்த்தும் வண்ணம். உனக்கு அடிமையாக நான் இல்லை என்று இனிமேலும் கூறலாமோ என்று பொருள்பட உனக்கு ஆளாய் அல்லேன் இனி எனலாமோ என்று பொருள் பட பதிகத்தின் (7,1) முதல் ஒன்பது பாடல்களையும் முடிப்பதை நாம் உணரலாம். பதிகத்தின் கடைப் பாடலில், ஆரூரன் பெருமாற்கு ஆள் அல்லேன் எனலாமே என்று முடிக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா

எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்

நல்லூர் அருட்துறையுள்

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

இறைவனிடம் அடிமைத்திறம் கொண்டுள்ள நாம், நமது வாழ்நாள் முழுவதும், அந்த அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார். இந்த பாடலில், மற்ற தெய்வங்களைத் தான் வேண்டாது இருந்த நிலையினையும், தனக்கு எத்தனை இடர்கள் வந்த போதிலும் சிவபெருமானுக்கு அடிமையாக இருந்த தனது நிலையிலிருந்து தான் மீளாது இருந்த தன்மையையும் சுந்தரர் கூறுகின்றார். தனது கண்பார்வையை இறைவன் பறித்ததால் தனது நெஞ்சம் மிகவும் வருந்துவதையும், அதனால் முகம் மிகவும் வாடி இருப்பதையும் கூறும் சுந்தரர், தான் ஏதும் கூறாமலே சிவபிரான் தனது வருத்தத்தின் காரணத்தை புரிந்துகொண்டு ஆவன செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததால் (தோழமை நிமித்தம்) தான் தனது குறையை சொன்ன பின்னரும் சிவபிரான் ஏதும் செய்யாமல் இருந்த நிலை சுந்தரரை மிகவும் கோபம் கொள்ளச் செய்தது போலும். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் ஒருவரை நாம் அணுகும்போது, நமக்கு உதவக்கூடிய நிலையில் இருந்தும் அவர் நமக்கு உதவி செய்ய மறுத்தாலோ, தாமதம் செய்தாலோ, நாம் அவர் பால் கோபம் கொண்டு, நீர் எனக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, நன்றாக வாழுங்கள் என்று நாம் பல சமயங்களில் கூறுகின்றோம் அல்லவா. இதே மன நிலையில் இருந்த சுந்தரர், சிவபெருமானை, எமக்கு உதவி செய்யாத நீர் வாழ்ந்து போதீரே என்று சொல்கின்றார்.

மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே

மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி

ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல்

சொன்னக்கால்

வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அப்பர் பிரான் ஆளாக கருதுவது, பெருமானது அடியார்களைத் தான். ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக் கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளாத சுரையோ தொழும்பர் செவி

வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

பட்டி என்ற சொல்லுக்கு மீளா அடிமை என்று பொருள். சோற்றுத்துறை மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (5.33.3) தனது நெஞ்சத்திற்கு, பட்டியாய் சிவபெருமானுக்கு பணி செய் மட நெஞ்சமே என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இது நமக்கு உணர்த்தும் அறிவுரையாகும். தனது நெஞ்சத்திற்கு சொல்வது போல் நமக்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி. நமது உயிருடன் ஒட்டி இருக்கும் பிறவிப்பிணி எனப்படும் நோயினையும் உயிருடன் பிணைந்து இருக்கும் வினைகளையும், நாம் கழிக்க வேண்டும் என்று விரும்பினால், பெருமானின் திருவடிகளை மனதினால் தொட்டு இறைவனுக்கு அடிமையாக மாறி அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

ஒட்டி நின்ற உடலுறு நோய் வினை

கட்டி நின்ற கழிந்து அவை போயறத்

தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே

பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே

பொழிப்புரை:

படைகளாக அமைந்த பூத கணங்களை உடையவனும், தன்னை எதிர்த்து வந்த மத யானையின் தோலை உரித்து அதனை போர்வையாக போர்த்துக் கொண்டவனும், உமை அம்மையுடன் இருப்பவனும், வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி பொருந்திய சடையினை உடையவனும், தகுதி வாய்ந்த எருக்கத்தம்புலியூர் தலத்தில் உள்ள திருக்கோயிலில் உறைபவனும், எருதினைத் தனது வாகனமாக உடையவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை புகழ்ந்து வணங்குவாரை வினைகள் வந்து சாராமல் விலகும் .

பாடல் 2:

இலையார் தரு சூலப் படை எம் பெருமானாய்

நிலையார் மதில் மூன்று நீறாய் விழ எய்த

சிலையான் எருக்கத்தம்புலியூர்த் திகழ் கோயில்

கலையான் அடி ஏத்த கருதா வினை தானே

விளக்கம்:

நிலையார்=உண்மை நிலை இல்லாதவர்கள்; திருமால் செய்த மாயத்தால் மதி மயங்கி புத்த மதத்தினைச் சார்ந்து சைவ நெறியினை விட்டு விலகிய திரிபுரத்து அரக்கர்களை நிலையான கொள்கை அற்றவர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். கலையார்= கலைகளின் பொருளாக உள்ளவர் என்றும் கலைமான் கன்றினை கையில் ஏந்தியவர் என்றும் இரண்டு பொருள்களும் பொருத்தமாக உள்ளன. நிலையார் என்றார் சொல்லுக்கு நிலை இல்லாதவர் என்று பொருள் கொண்டு, உணமையான நிலையான கொள்கை இல்லாதவர்கள் என்று சிவக்கவிமணி அவர்கள் தனது பெரிய புராண விளக்கம் நூலில் பொருள் கூறுகின்றார். ஆனால் பலரும், நிலை+ஆர் என்று பிரித்து நிலையான மதில்கள் என்று விளக்கம் அளிக்கின்றனர். தாங்கள் பெற்றிருந்த வரத்தின் தன்மையால் அழியாத நிலையினை உடைய மதில்களை உடைய திரிபுரத்து அரக்கர்களாக அவர்கள் திகழ்ந்த நிலை இதனால் உணர்த்தப் படுகின்றது. இறவாத நிலை என்றும் அழியாத நிலை இறைவன் ஒருவனுக்கே உரித்தானது. அவன் ஒருவனைத் தவிர மற்ற அனைத்து உயிர்களும் அழியும் தன்மை கொண்டவை. என்றாவது ஒருநாள் அழியும் நிலையில் உள்ள பிரமனும் திருமாலும், எவ்வாறு இறப்பு இல்லாத வாழ்க்கையை அடுத்தவர்க்கு வரமாக அளிக்க முடியும். அதனால் தான் கடுமையான தவம் புரிந்து வரங்களை பெறுகின்ற அரக்கர்கள், நடப்பதற்கு மிகவும் அரிதான ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்டு அத்தகைய நிகழ்ச்சி ஏற்பட்டால் தான் தங்களுக்கு மரணம் என்று வரம் வேண்டுகின்றனர். ஆனால் சர்வ வல்லமை பெற்ற இறைவனுக்கு முடியாத காரியம் என்பது இல்லை என்பதால், எத்தகைய அரிய நிகழ்ச்சியாக இருந்தாலும், அதனை நிகழ்வித்து, அரக்கர்கள் இறக்கும் வண்ணம் பெருமான் செய்கின்றார். எனவே நிலையற்ற, என்ற எதிர்மறைப் பொருளே மிகவும் பொருத்தமாக தோன்றுகின்றது.

பொழிப்புரை:

இலை வடிவமாக அமைந்து கூரிய நுனியினை உடைய சூலப்படையினை உடையவனும், எமது பெருமானும், நிலையற்ற கொள்கையை பின்பற்றிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் சாம்பலாக மாறும் வண்ணம் எரித்த அம்பு பொருத்தப் பட்ட வில்லினை உடையவனும், எருக்கத்தம்புலியூர் தலத்தில் திகழும் திருக்கோயிலில் உறைபவனும், கலைகளின் வடிவமாக இருப்பவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை கருதி வணங்கி போற்றும் அடியார்களை, வினைகள் தாங்கள் தாங்கும் இடமாக கருதாது விலகி ஓடி விடும்.

பாடல் 3:

விண்ணோர் பெருமானே விகிர்தா விடை ஊர்தீ

பெண் ஆண் அலியாகும் பித்தா பிறைசூடி

எண்ணார் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற

அண்ணா என வல்லார்க்கு அடையா வினை தானே

விளக்கம்:

விகிர்தன்=மாறுபட்டவன்; விடை=இடபம்; எண்ணார்=எண்ணத்தகும் பித்தா பிறைசூடி என்று இங்கே சம்பந்தர் உணர்த்தும் தொடரே சுந்தரரின் வாக்காக பின்னர் அமைந்தது. வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜா. அவர்கள் பித்தா பிறைசூடி என்ற தொடருக்கு ஒரு சுவையான விளக்கத்தினை, தனது திருமுறை மலர்கள் என்ற புத்தகத்தில் அளித்துள்ளார். தக்கனது யாகத்தில் பங்கேற்றதற்காக, சந்திரனைத் தனது காலால் தேய்த்த சிவபெருமான், அதே சந்திரன், தனது கலைகளை இழந்து அழியும் தருவாயில் சிவபிரானிடம் சரணடைந்த போது, எஞ்சியிருந்த ஒரே கலையினை தனது தலையில் வைத்துக் கொண்டு சந்திரன் அழியாமல் காப்பாற்றுகின்றார். காலால் தேய்த்த ஒரு பொருளினை எவரேனும் தலையில் வைத்துக் கொள்வார்களா என்ற கேள்வியை எழுப்பும் கி.வா.ஜா அவர்கள், பித்தா என்று அழைத்தது மிகவும் பொருத்தம் என்று வேடிக்கையாக கூறுகின்றார். பித்தா என்று அழைத்ததற்கு காரணத்தை நமக்கு உணர்த்தும் வகையில், பிறைசூடி என்று உடனே சுந்தரர் தனது முதல் பதிகத்தில் கூறுகின்றார் என்று திரு கி.வா.ஜா. அவர்கள் கருத்து தெரிவிக்கின்றார்.

சுந்தரருக்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஞானசம்பந்தரும், அப்பர் பெருமானும் பல பாடல்களில் சிவபெருமானை பித்தன் என்று அழைக்கின்றார்கள். காலால் தேய்த்த சந்திரனை தலையில் அணிந்து கொண்டது, எல்லோரும் அமுதம் உண்பதற்காக காத்திருந்த போது கடலில் இருந்து எழுந்த விடத்தை உண்டது, அனைத்து உலகங்களும் தனக்கு சொந்தமாக இருக்கையில் சுடுகாட்டில் சென்று உறைவது, மிகவும் சக்தி வாய்ந்த சக்கரப் படையை தான் வைத்துக் கொள்ளாமல் திருமாலுக்கு அருளியது, என்பது போன்று பல செயல்களை, பொதுவாக எவரும் தவிர்க்கும் செயல்களைச் செய்தவர் பித்தராகத் தானே இருக்க முடியும். மணிவாசகரும் பல பாடல்களில் பித்தன் என்று குறிப்பிடுகின்றார்.

தான் அருளிய முதல் பதிகத்தின் பத்தாவது பாடலில் (1.1.10) ஞான சம்பந்தர் பெருமானை பித்தர் போலும் என்று கூறுவதை நாம் இங்கே காணலாம். .யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் எவரும் அதனை அணிய மாட்டார்கள். ஆனால் பெருமான், ஏனையோரிடமிருந்து மாறுபட்டு அணிந்து கொண்டமையை குறிப்படும் வண்ணம் பித்தர் என்று சம்பந்தர் அழைத்தார் போலும். பெருமான் பலி ஏற்கும் நோக்கத்தை அறியாதவராக பொருந்தாத சொற்களை புத்தரும் சமணரும் கூறிய போதிலும், அந்த சொற்களை பொருட் படுத்தமால் பெருமான், உலகத்தவர் தனக்கு பிச்சையிட்டு உய்வதற்கு வாய்ப்பினை தொடர்ந்து அளிக்கும் வண்ணம் பிச்சை ஏற்கின்றார் என்பதை இங்கே உணர்த்துகின்றார்

புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா

ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர்

கள்வன்

மத்த யானை மறுக உரி போர்த்ததோர் மாயம் இது

என்னப்

பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன்

அன்றே

பாம்புரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.41.3) பெருமானின் திருக்கோலத்தை குறிப்பிடும் சம்பந்தர், பித்தராய் திரியும் கோலம் என்று குறிப்பிடுகின்றார். தைக்கப் பட்ட கோவணம் அணிந்து, அந்த கோவணத்தின் மேலோர் பாம்பினைச் சுற்றி, நீண்ட சடைகள் தொங்கும் வண்ணம் திரிபவரை பித்தர் கோலத்தவர் என்று அழைப்பது பொருத்தம் தானே. சூறை=காற்று; சூறை நல்லரவு=காற்றினை உட்கொள்ளும் பாம்பு. மூச்சிறைக்க, புஸ் புஸ் என்று சத்தமிட்டுக் கொண்டு சீறும் நாகத்தினை காற்றை உட்கொள்ளும் நாகம் என்று குறிப்பிட்டார் போலும்.

துன்னலின் ஆடை உடுத்து அதன் மேலோர் சூறை

நல்லரவு அது சுற்றிப்

பின்னு வார் சடைகள் தாழ விட்டு ஆடிப் பித்தராய்த் திரியும்

எம் பெருமான்

மன்னு மாமலர்கள் தூவிட நாளும் மாமலையாட்டியும்

தாமும்

பன்னு நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே

புள்ளிருக்கு வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.43.7) அழகிய திருமேனியை மறைத்த வண்ணம் யானைத் தோலை போர்த்துக் கொண்டும், கையினில் தீப்பிழம்பினை ஏந்தியும், பிச்சை ஏற்பதற்காக பல இடங்களிலும் பித்தரைப் போல் திரியும் பெருமான் என்று சம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் மற்றைய பாடல்களில் சடாயு மற்றும் சம்பாதி ஆகிய இருவரும் குறிப்பிடப் படுவதால், இந்த பாடலிலும் சடாயு மற்றும் சம்பாதி செய்த வழிபாட்டினை குறிப்பிடுவதாக நாம் கொள்ள வேண்டும்.

அத்தியின் ஈருரி மூடி அழகாக அனல் ஏந்திப்

பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணுமிடம்

பத்தியினால் வழிபட்டுப் பல காலம் தவம் செய்து

புந்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே

தனது அடியார்களுக்கு வரம் அளிப்பதில் வரம்பு ஏதும் இல்லாமல் அளிப்பதால் பெருமானை பித்தர் என்று பெரியோர்கள் குறிப்பிடுவார்கள். அத்தகைய பித்தரை நாம் வழிபட்டு பயன் அடையவேண்டும் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் இது (4.31.4). இரவின் நான்காவது கூறாகிய அதிகாலைப் பொழுதினில் எழுந்து குளித்த பின்னர், பெருமானிடத்தில் பக்தி கொண்டு, அரும்பு மற்றும் மலர்கள் பறித்து, உள்ளத்தில் பொங்கும் ஆர்வத்துடன், விளக்குகளை ஏற்றி, தூபங்களை முறைப்படி இறைவனுக்கு சமர்ப்பித்து, வழிபடும் அடியார்களுக்கு கட்டிக்கரும்பு போன்று கடவூர் வீரட்டனார் இனிப்பவராக இருப்பார் என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்து.

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி

அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை

உள்ளே வைத்து

விரும்பி நல் விளக்குத் தூபம் விதியினால் இட

வல்லார்க்குக்

கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே

நாட்டினில் நல்ல அரங்குகள் பல இருக்கையில், அவை அனைத்தையும் விடுத்து காட்டினை அரங்கமாகக் கொண்டு நடமாடும் பெருமானை பித்தன் என்று அப்பர் பிரான் அழைக்கும் பாடல் தில்லைத் தலத்தின் அருளிய பாடலில் (5.2.5) ஒன்றாகும்.

பித்தனைப் பெருங்காடு அரங்கா உடை

முத்தனை முளை வெண்மதி சூடியைச்

சித்தனைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற

அத்தனை அடியேன் மறந்து உய்வனோ

வாய்மூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (5.50.8) அப்பர் பிரான் சிவபெருமானை பித்தர் என்று கூறுகின்றார். பத்து பாடல்கள் பாடிய பின்னரும் அடைக்கப்பட்டு இருந்த மறைக்காடு தலத்தின், திருக்கோயில் கதவுகளை திறக்க முடியாமல், பதினோராவது பாடல் மூலம் திறந்த நானும், என்னிலும் அதிகமாக தமிழ்ப்புலமை வாய்க்கப்பெற்று பதிகத்தின் முதல் பாடல் மூலம் கோயில் கதவுகளை அடைத்த ஞான சம்பந்தரும் இருக்கும்போது, உன்னை நீ மறைத்துக் கொள்ள நினைத்தால் நீ பித்தனே என்ற பொருள் பட, பாடிய பாடல். அப்பர் பிரான் பாடியதற்கு ஏற்ப, இறைவன் தனது நடனக் கோலத்தை காட்ட, இருவரும் கண்டு மகிழ்ந்தார்கள்.

திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்

உறைப்புப் பாடி அடைப்பித்தாரும் நின்றார்

மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்

பிறைக் கொள் செஞ்சடையார் இவர் பித்தரோ

எளிதாக பிட்டு பெரும் வழிமுறைகள் பல இருக்கையில், அவற்றில் ஒன்றினைப் பின்பற்றாமல், பிட்டு வேண்டும் என்பதற்காக மண் சுமந்த பெருமானை பித்தன் என்று மணிவாசகர் கூறும் பாடல், திருக்கழுக்குன்றப் பதிகத்தில் காணப் படுகின்றது. சழக்கன்=குற்றம் உடையவன்: உன்னைப் பின்பற்றாத காரணத்தால் என்னால் உன்னை அடைய முடியவில்லை. ஆயினும் எல்லையில்லாத உனது கருணை, நாயினும் தாழ்ந்த என்னை ஆட்கொள்கின்றது. எனவே தான் நீ எனக்கு கழுக்குன்றத்தில் காட்சி அளித்துள்ளாய் என்று இறைவனின் கருணையை நினைத்து மணிவாசகர் மகிழும் பாடல்.

பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறைப் பெரும் பித்தனே

சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்

சிட்டனே சிவலோகனே சிறுநாயினும் கடையாய எம்

கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய்

கழுக்குன்றிலே

கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் கருவூர்த் தேவர், நாம் அவன் பால் வைக்கும் அன்பு மிகவும் சிறிய அளவினதாக இருந்தாலும் அதற்கு பரிசாக சிவலோகம் அளிப்பவன் சிவபெருமான் என்று குறிப்பிட்டு அவனை பித்தன் என்று பலரும் அழைப்பதன் காரணத்தை நமக்கு உணர்த்துகின்றார். இந்த பாடலில், மகளிர் பால் நாம் வைக்கும் அன்பினை ஒரு இலட்சம் கூறிட்டு, அதனில் ஒரு கூற்றுக்கு சமமான அன்பினை இறைவன் பால் வைத்தால், சிவலோகத்தை அளிக்கும் தன்மையன் என்று சிவபெருமானை கருவூர்த் தேவர் குறிப்பிடுகின்றார். இந்த கருணைச் செயல் புரியும் இறைவனை ஒவ்வொரு சமயம் பித்தன் என்று அழைக்கும் அடியார்கள் செய்யும் தவறுகளை பொறுத்து அருள் புரியும் இறைவனின் கரம், தனது தலையின் மீது வைக்கப்பட்டதாக கருவூர்த் தேவர் இந்த பாடலில் கூறுகின்றார். தத்தை=கிளி; தயா=அன்பு

தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த தயாவை

நூறாயிரம் கூறிட்டு அத்தில் அங்கு

ஒரு கூறு உன் கண் வைத்தவருக்கு அமருலகம் அளிக்கும்

நின் பெருமை

பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை

பொறுத்து அருள் செய்யும்

கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கை

கொண்ட சோளேச்சரத்தானே

பித்தா என்று பெருமானை அழைப்பது பெருமானுக்கு மிகவும் உகந்த செயலாக கருதப் படுவதால் அவ்வாறு அழைக்கும் அடியார்கள் வினைகளால் இடர்ப்படா வண்ணம் காக்கும் பெருமான் அவர்களுக்கு இன்பத்தை வழங்குகின்றார் என்று சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.102.4) சம்பந்தர் கூறுகின்றார்.

எண்ணார் முத்தம் ஈன்று மரகதம் போல் காய்த்துக்

கண்ணார் கமுகு பவளம் பழுக்கும் கலிக்காழி

பெண்ணோர் பாகா பித்தா பிரானே என்பார்க்கு

நண்ணா வினைகள் நாடொறும் இன்பம் நணுகுமே

பொழிப்புரை:

விண்ணவர்களின் தலைவனே, மற்ற தேவர்களில் இருந்து பண்பிலும் தன்மையிலும் உருவத்திலும் மாறுபட்டவனே, இடபத்தை வாகனமாகக் கொண்டவனே, பெண்ணாகவும் ஆணாகவும் அலியாகவும் உள்ளவனே, அடியார்களுக்கு வரம்பின்றி அருள் செய்வதில் பித்தர் போன்று செயல்படுபவரே, தன்னிடம் சரண் அடைந்த பிறைச் சந்திரனைத் தனது தலையில் சூட்டிக் கொண்டவனே, அனைவரும் எண்ணத்தகும் வண்ணம் சிறப்பு வாய்ந்த எருக்கத்தம்புலியூர் தலத்தில் உறைபவனே, அண்ணா என்று பலவாறு உன்னை புகழ்ந்து போற்றும் அடியார்களை வினைகள் சென்று அடையா.

பாடல் 4:

அரையார் தரு நாகம் அணிவான் அலர் மாலை

விரையார் தரு கொன்றை உடையான் விடையேறி

வரையான் எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற

திரையார் சடையானைச் சேரத் திருவாமே

விளக்கம்:

வரையான்=மலையினை உடையவன், இங்கே கயிலாய மலை குறிப்பிடப்படுகின்றது. திரு= முக்திச் செல்வம்; அரையார்=இடுப்பினில் பொருந்திய; விரை=நறுமணம்; திரு=செல்வம். பெருமானின் திருவடிகளைச் சென்று சார்வதால் பெறுகின்ற அவனது அருளே சிறந்த செல்வம் என்று சம்பந்தர் இங்கே கூறுவது அவர் அருளிய தில்லைப் பதிகத்தின் பாடலை (1.80.5) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் பெருமானின் சிறப்பினைப் பாடுவதே சிறந்த செல்வம் என்று சம்பந்தர் கூறுகின்றார். சேண்=ஆகாயம் வேறு எவரிடமும் இல்லாததும் அழிவிலாததும் ஆகிய முக்தி செல்வத்தை உடைய பெருமானே சிறந்த செல்வனாக கருதப் படுகின்றான். அவனை வணங்குவதாலும் அவனது புகழினைப் பாடுவதாலும் அவனது அருளினைப் பெற்று அதனால் அடையப்பெறும் முக்திச் செல்வத்தை விடவும் சிறந்த செல்வம் வேறு உளதோ.

செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்

செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற

செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே

பொழிப்புரை:

தனது இடுப்பினில் கச்சாக நாகத்தை இறுகக் கட்டியவனும், தான் சூட்டிக்கொள்ளும் மாலையாக நறுமணம் கமழும் கொன்றையினை உடையவனும், இடபத்தின் மீது ஏறி எங்கும் செல்பவனும், கயிலாய மலையினை தனக்குரிய இருப்பிடமாகக் கொண்டவனும், எருக்கத்தம்புலியூர் தலத்தினில் மகிழ்ந்து உறைபவனும், அலைகள் வீசும் வண்ணம் அதிகமான நீர்ப் பெருக்கு கொண்ட கங்கை நதியினைத் தனது சடையில் அணிந்தவனும் ஆகிய பெருமானைச் சென்று சார்வதே சிறந்த செல்வமாகும்.

பாடல் 5:

வீறார் முலையாளைப் பாகம் மிக வைத்துச்

சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான்

ஏறான் எருக்கத்தம்புலியூர் இறையானை

வேறா நினைவாரை விரும்பா வினை தானே

விளக்கம்:

வீறு=தனிப் பெருமை; ஏறான்=ஏற்றான், ஏறினை உடையவன, எருதினை வாகனமாக உடையவன்; ஏற்றான் என்ற சொல் எதுகை நோக்கி ஏறான் என திரிந்தது. வேறா=உயிர்களினின்றும் வேறுபட்டவனாக. வேறா என்ற சொல்லுக்கு உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது கொண்டுள்ள பாசத்திலிருந்து விடுபட்ட நிலை என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். அவ்வாறு பற்றற்ற நிலையில் நின்று இறைவனை தியானிக்கும் அடியார்கள் யான் எனது என்ற தற்போதம் நீங்கிய நிலையில் இருப்பதால், வினைகளால் அவர்கள் எந்த விதமான மாறுதலையும் அடைவதில்லை. இந்த தலத்து இறைவியின் திருநாமம் அபீதகுஜாம்பாள். உண்ணாமுலையம்மை என்று பொருள். எனவே தனிச்சிறப்பு வாய்ந்த மார்பன்களைக் கொண்ட அன்னை என்று கூறுவது பொருத்தம் தானே.

இறைவனின் சிறப்புகளை உணர்ந்து, அவன் மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டுள்ள நிலையினை உணர்ந்து, வழிபடவேண்டும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுவது நமக்கு அப்பர் பிரான் தில்லை தலத்தின் மீது திருத்தாண்டகப் பாடலை (6.1.5) நினைவூட்டுகின்றது. அருந்துணை-ஒப்பற்ற துணை; வான்புலன்கள்=வானத்தைப் போன்று பெரிய புலன்கள்; உண்மையான மெய்ப்பொருளை நாம் நினைக்காத வண்ணம், நம்மைத் திசைதிருப்பும் வல்லமை வாய்ந்த ஐம்புலன்களை, இகழ்ச்சி தோன்ற வான்புலன்கள் என்று குறிப்பிடுகின்றார்.

அருந்துணையை அடியார் தம் அல்லல் தீர்க்கும்

அருமருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி

வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள்

அகத்து அடக்கி மடவாரோடும்

பொருந்தணை மேல் வரும் பயனைப் போக மாற்றிப்

பொது நீக்கித் தனை நினைய வல்லோர்க்கு என்றும்

பெருந்துணையை பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத

நாளெல்லாம் பிறவா நாளே

சிவபிரான் துணையாக இருந்ததால் அமணர்களின் வஞ்சனையில் இருந்து தப்பித்த அப்பர் பிரான் தனக்கு ஒப்பற்ற பெருந்துணையாக இருந்த சிவபிரான், யாருக்கெல்லாம் பெருந்துணையாக இருப்பான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உடன் பிறந்தார், சுற்றத்தார், செல்வம் இவைகளின் மீது வைத்த பாசத்தை நீத்து, புலன்களின் மேல் செல்லும் மனத்தை அடக்கி மகளிர் தரும் சிற்றின்பப் பயனை அடியோடு ஒழித்து பொதுவாக பல தெய்வங்களை நினைப்பதை விடுத்து சிவபிரான் ஒருவனையே போற்றும் வல்லவர்களுக்கு பெருந்துணையாக சிவபிரான் இருப்பார் என்று இந்த பாடலில் கூறுகிறார்.. பற்றுகளை அறுத்தவரே, இயல்பாகவே பற்றற்ற பரமனைச் சேரலாம் என்ற கருத்து இந்தப் பாடலில் கூறப்படுகின்றது.

பொது நீக்கி என்று பொதுவான தேவர்களோடு இணைக்காமல், சிவபிரானின் தனித் தன்மைகளை புரிந்து கொண்டு அவரை நினைக்க வேண்டும் என்று இங்கே சொல்லப்படும் கருத்து திருவாசகம் அச்சப்பத்து பதிகத்தின் இரண்டாவது பாடலை நினைவூட்டும். இந்தப் பாடலில் மணிவாசகர், சிவபிரான் அல்லாத மற்றைய தேவர்களைத் தேவர்கள் அல்ல என்று கருதி, அவர்களை வெறுக்காதவரைக் கண்டால் நாம் பயம் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக் கடல்

கொளினும் அஞ்சேன்

இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரானாம்

திருவுரு அன்றி மற்று ஓர் தேவர் எத்தேவர் என்ன

அருவராதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

பொழிப்புரை:

ஒப்பில்லாத வண்ணம் சிறந்த அழகினை உடைய மார்பகங்கள் கொண்ட பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும், மிகுந்த சீற்றத்துடன் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்வதற்காக வந்த காலனின் சினத்தை அடக்கி அழித்தவனும், எருதினைத் தனது வாகனமாக உடையவனும், எருக்கத்தம்புலியூர் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானை, மற்ற சிறு தெய்வங்களுடன் ஒப்பாக நினையாமல் வேறாக நினைக்கும் அடியார்களை சென்று அடைவதற்கு வினைகள் விரும்பா.

பாடல் 6:

நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடிப்

புகுவான் அயம் பெய்யப் புலித்தோல் பியற்கு இட்டுத்

தகுவான் எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே

தொகுவான் கழல் ஏத்த தொடரா வினை தானே

விளக்கம்:

அயம்=ஐயம், பிச்சை; அயம் பெய்ய=பெண்கள் பிச்சை இடும் பொருட்டு; ஐயம் என்ற சொல் திரிந்து அயம் என வந்தது; தகைந்து=பொருந்தி; தொகுவன்=கூர்ந்து வெளிப்பட நிற்பவர்; வாய் பிளந்த நிலையில் இருக்கும் பிரமகபாலத்தை, நகு வெண்தலை என்று நகைச்சுவை தோன்ற சம்பந்தர் கூறுகின்றார்.

பொழிப்புரை:

வாய் பிளந்த நிலையில் சிரிப்பது போல் தோன்றும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம், பல விதமான பாடல்களை பாடியவாறு, மகளிர் இடும் பிச்சையை ஏற்பதற்காக செல்லும் இறைவன், புலித்தோலை தனது தோள்கள் மீது அணிந்துள்ளான். அவன் தகுதி வாய்ந்த எருக்கத்தம்புலியூர் தலத்தில் பொருத்தி உறைகின்றான். இவ்வாறு இந்த தலத்தில் நிலையாக அனைவரும் காணும் வண்ணம் உறையும் பெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருப்பாதங்களைப் புகழ்ந்து பாடும் அடியார்களை வினைகள் பின்பற்றி செல்லாது விலகி நிற்கும்.

பாடல் 7: சிதைந்தது:

பாடல் 8:

ஆவா என அரக்கன் அலற அடர்த்திட்டுத்

தேவா என்ற அருளார் செல்வம் கொடுத்திட்ட

கோவே எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்

தேவே என அல்லல் தீர்தல் திடமாமே

விளக்கம்:

அருளார் செல்வம்=அருளுடன் கூடிய பல செல்வங்கள்; மலையின் கீழே அழிந்தியவனை, அந்த அழுத்தத்திலிருந்து விடுவித்து மேலும் இராவணன் என்ற பெயர் அதிகமான வாழ்நாள் மற்றும் வாள் கொடுத்து அருள் புரிந்த செயல். ஆவா=ஆ ஆ என்ற இரக்கக் குறிப்பு. ஆ ஆ என்ற சொற்கள் இணையும் போது ஆவா என்று மாற்றம் அடைகின்றன. பெருமான் தன் மீது இரக்கம் கொண்டு, தனக்கு அருள் புரிய வேண்டும் என்பது தானே அருளாளர்களின் விருப்பம். அந்த விருப்பத்தினை ஆவா என இரங்கி அருள் புரிய வேண்டும் என்று தங்களது பாடல்களில் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

அப்பர் பிரான் தூங்கானைமாடம் தலத்தில் அருளிய பாடலை (4.109.2). நாம் இங்கே காண்போம். அடியார்களில் கடையவன் என்ற பொருள் பட, சிறுதொண்டன் என்று தன்னை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தூய்மையற்ற உடலைத் தாங்கி நின்றமையால் அவ்வாறு கருதினார் போலும். அரும்பிணி=அகற்றுவதற்கு அரிய பிணி. தனது உடலின் தூய்மை கேட்டுப் போன தன்மையை ஒரு நோயாக அப்பர் பிரான் கருதுகின்றார். என் நினைந்தான்=என்னவென்று நினைத்துக் கொண்டான். தனது தகுதிக்கு மீறிய வேண்டுகோளை விடுப்பதாக எண்ணி சிவபிரான், தனது வேண்டுகோளை ஏற்காமல் இருப்பாரோ என்ற ஐயம் அப்பர் பிரானுக்கு வருகின்றது. என்ன நினைத்து இந்தத் தொண்டன் இவ்வாறு வேண்டுகின்றான் என்று நினைத்து இறைவன் சும்மா இருந்தால், சிவபிரான் மேல் பழி சூழும் என்று எச்சரிக்கையினை அப்பர் பிரான் விடுக்கின்றார். தேவன் என்ற சொல் தலைவன் என்ற பொருளில் இங்கே வருகின்றது. தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாவர் தம் கடன் என்று கூற்றாயினவாறு எனத் தொடங்கும் பதிகத்தில் பாடிய அப்பர் பிரான் இங்கே, அன்பு கொண்டு பணியும் அடியார்களின் தலைவன் என்று சிவபிரானை குறிப்பிடுகின்றார். தனக்கு வரும் பழியினை தவிர்க்க வேண்டி இறைவன் தன் மீது இரக்கம் கொள்ளவேண்டும் என்று அப்பர் பிரான் கூறுவது ரசிக்கத் தக்கது.

ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும்பிணி

நோய்

காவாது ஒழியில் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார்

தேவா திருவடி நீறு என்னைப் பூசு செந்தாமரையின்

பூவார் கடந்தையுள் தூங்கானை மாடத்து எம் புண்ணியனே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.64.1), ஞானசம்பந்தர் அடியார்கள் அனைவரின் மீதும் இறைவன் இரக்கம் கொண்டு அருள் புரிகின்றார் என்று சொல்வதை நாம் இங்கே காணலாம். மூவா=மூப்பு அடையாத, நீண்ட நாட்கள் வாழ்கின்ற முனிவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். உவரி=கடல், இங்கே ஊழி வெள்ளத்தை குறிக்கின்றது. பல ஊழிகளைக் கடந்த தலமாக முதுகுன்றம் கருதப்படும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.

தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய்

பெரியோனே

ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்

ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்று ஏத்தி

மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலில் (5.31.4) அப்பர் பிரான், தன்னைக் கைதொழுது வணங்கும் அடியார்கள் அனைவர் மீதும் இறைவன் இரக்கம் கொள்கின்றான் என்று கூறுகின்றார். நறுமணம் மிகுந்த இறைவனின் செம்மையான திருவடிகளை, தங்களது நாவினால் இடைவிடாது புகழ்ந்து எப்போதும் இறைவனைப் பற்றிய சிந்தனை நிறைந்த உள்ளதுடன் இருந்து, இறைவனே எங்களை வினைத் துன்பங்களிலிருந்து காப்பாயாக என்று இறைவனை கை தொழுது வணங்க வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் அறிவுரை கூறுகின்றார்.

நாவால் நன்று நறுமலர்ச் சேவடி

ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார் வினை

காவா என்று தம் கை தொழுவார்க்கு எலாம்

ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே

திருவாசகம் ஆசைப் பத்து பதிகத்தில் மணிவாசகர் தனது உள்ளக் கிடக்கைளை வெளியிடுகின்றார். பதிகத்தின் முதல் பாடலில், இங்கே வா என்று குரல் கொடுத்து சிவலோகத்திற்கு பெருமான் தன்னை அழைத்துக் கொள்ள வேண்டும் என்று தனது ஆசையையும், இரணடாவது பாடலில் இறைவனை தான் காண வேண்டும் என்ற ஆசையையும் வெளியிட்ட அடிகளார், தனது ஆசைகள் நிறைவேறாத ஆசைகளாக மாறிவிடுமோ என்று கவலை கொண்டார் போலும், பதிகத்தின் மூன்றாவது பாடலில், பெருமானே நீ என் பால் சற்று இரக்கம் கொண்டு, எனது முகத்தைப் பார்த்து ஆஆ என்று சொல்ல மாட்டாயா என்று கெஞ்சுகின்றார். முதல் இரண்டு பாடல்களில் வெளிப்படுத்திய ஆசைகளை நிறைவேற்றாவிட்டாலும், தனது நிலை குறித்து இறைவன் இரக்கம் கொண்டால் போதும் என்று விரும்புகின்றார். இறைவன் தனது நிலையை நினைத்து ஐயோ பாவம் என்று இரக்கம் கொள்ளவேண்டும் என்று தனது ஆசையினை தெரிவிக்கும் அடிகளார், சர்வ வல்லமை படைத்த இறைவன் தனது நிலை கருதி இரக்கம் கொண்டால், தனது ஆசைகள் நிறைவேறி விடும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். அவரது வருத்தம் தான் என்னே. அழுக்குகள் நிறைந்த இந்த உடலுடன் தான் இருப்பதால் தானே சிவலோகத்திற்கு செல்ல முடியவில்லை; எனவே இந்த உடல் சிதைந்து ஆன்மா இதிலிருந்து விடுபடவேண்டும் என்பதே அவரது அவா.

சீ வார்ந்து ஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில்

இது சிதையக்

கூவாய் கோவே கூத்தா காத்து ஆட்கொள்ளும்

குருமணியே

தேவா தேவர்க்கு அரியானே சிவனே சிறிது என் முகம்

நோக்கி

ஆ ஆ என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

யாத்திரைப் பத்து பதிகத்தின் முதல் பாடலில், சிவலோகத்திற்கு செல்லும் தகுதி பெற்றுள்ள அடியார்களை, இரக்கம் கொண்டு இறைவனால் ஆவா என்று சொல்லப்பட்ட அடியார்கள் என்று கூறுகின்றார். இதிலிருந்து இறைவன் ஆ ஆ என்று இரக்கம் கொண்டால் அதனால் ஏற்படும் விளைவு யாது, இறைவனின் அருள் எத்தன்மையது என்று நாம் அறிந்து கொள்ளலாம். அதனால் தான், இறைவனே உன்னைத் தவிர என்னை காப்பாற்றுவார் வேறு எவரும் இல்லை என்று சொல்லி அழுது கை தொழும் அடியார்கள் பால் இரக்கம் கொண்டு ஆ ஆ என்று கூறுவான் என்று அப்பர் பிரான் ஆனைக்கா பதிகத்து பாடலில் கூறுகின்றார்.

பூவார் சென்னி மன்னன் எம் புயங்கப் பெருமான்

சிறியோமை

ஓவாது உள்ளம் கலந்து உணர்வாய் உருகும் வெள்ளக்

கருணையினால்

ஆ ஆ என்னப் பட்டு அன்பாய் ஆட்பட்டீர் வந்து

ஒருப்படுமின்

` போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு

உடையான் கழல் புகவே

பொய்யான, நிலையற்ற இந்த உடலை விட்டு விட்டு சிவலோகம் செல்வதற்கு தயாராக இருப்பீர்களாக என்று அடியார்களை பார்த்து அடிகளார் சொல்லும் பாடல். இறைவனது கருணை வெள்ளத்தில் நனைந்து, அவனது இரக்கத்திற்கு பாத்திரமாகி, ஆ ஆ என்று இரக்கச்சொல் இறைவன் சொல்லும் அளவுக்கு, அவனது அன்பினைப் பெற்ற அடியார்கள் என்று கூறுகின்றார். அவனது இந்த இரக்கம் கலந்த அருளினால் விளைவதே சிவலோகம் செல்வதற்கான காலம் பொருந்தி வந்த நிலை என்பதையும் இந்த பாடலில் மணிவாசகர் உணர்த்துகின்றார்.

திருவாசகம் ஆனந்த மாலை பதிகத்தின் பாடலில் மணிவாசகர், இறைவன் ஆவா என்று சொல்லி தன் மீது இரக்கம் கொள்ளாவிடில் தன்னை அஞ்சேல் என்று சொல்லி அபயம் அளித்து காப்பாற்றுவார் வேறு எவரும் இல்லை என்று கூறி புலம்புகின்றார். உனது கருணையைப் பெறுவதற்கு அடியேன் தகுதி உடையவன் என்று சொல்லுவார் எவரும் உனது அருகில் இல்லையோ என்று நான் திகைக்கின்றேன். இனியாவது நான் தெளிவு அடையும் வண்ணம் நீ என் மீது இரக்கம் கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றார்.

கோவே அருள வேண்டாவோ கொடியேன் கெடவே

அமையுமே

ஆவா என்னா விடில் என்னை அஞ்சேல் என்பார்

ஆரோ தான்

சாவார் எல்லாம் என்னளவோ தக்கவாறு என்று

என்னாரோ

தேவே தில்லை நடமாடீ திகைத்த்தேன் இனித் தான்

தேற்றாயே

திரைலோக்கிய சுந்தரம் தலத்தின் மீது அருளப்பட்ட திருவிசைப்பா பாடலில் கருவூர்த் தேவர், இறைவன் வருவான் என்ற நம்பிக்கையில் அவனை எதிர்நோக்கி காத்திருந்த ஒரு பெண்ணின் நிலையை உணர்த்தி, ஆவா என்று அந்த பெண்ணுக்கு அருள் புரியாயோ என்று இறைவனைப் பார்த்து கேள்வி கேட்கின்றார். ஏழை=பெண்மணி. தான் எதிர் நோக்கும் பெண் வரவில்லை எனினும், பெருமான் பால் தான் வைத்துள்ள அன்பு குறையாமல் இருக்கும் பெண்ணின் குவளை மலர் போன்ற அழகிய கண்களிலிருந்து தாரை தாரையாக பொழியும் நீர் கோர்க்கப்படாத முத்து மாலை போல் உள்ளது என்று கூறுகின்றார். இறைவன் பால் அன்பு கொண்டுள்ள அருளாளர்கள், தங்களை இறைவன் பால் தீராத காதல் கொண்டு அவனது அன்புக்கு ஏங்கி நிற்கும் பெண்ணாக உருவகித்து தங்களது எண்ணங்களை உணர்ச்சிகளை பாடலாக வடிப்பது வழக்கம்.

நீ வாராது ஒழிந்தாலும் நின் பாலே விழுந்து ஏழை

கோவாத மணி முத்தும் குவளை மலர் சொரிந்தனவால்

ஆவா என்று அருள் புரியாய் அமரர் கணம் தொழுது

ஏத்தும்

தேவா தென் பொழில் கோடைத் திரைலோக்கிய

சுந்தரனே

தில்லைச் சிதம்பரம் மீது அருளிய பாடலில் புருடோத்தமநம்பி, பெருமான் பால் காதல் கொண்டுள்ள பெண்ணின் ஏக்கத்தை விவரிக்கையில், பெருமான் அருள் புரியாவிடின், அவள் உயிர் வாழ்வது அரிது என்று உணர்த்துகின்றார். நீ தரித்திருக்கும் புலித்தோல் ஆடை மற்றும் உனது தூக்கிய திருவடி ஆகியவற்றின் அழகினைக் கண்டு உன்பால் காதல்கொண்டுள்ள இந்த பெண், பிரிவாற்றாமையால் ஏங்கி உடல் மெலிந்து தனது வெண்சங்கு வளையல்களை இழந்துள்ளாள். அவளது தனிமைத் துயரினை ஒரு கணம் நினைத்துப் பார்த்து, அவள் மேல் நீ இரக்கம் கொள்ளாவிடில், ஏக்கத்தினால் அவள் இறப்பது உறுதி என்று உணர்த்தும் பாடல்.

சேயிழையர்க்கு இனி வாழ்வு அரிது திருச்சிற்றம்பலத்து

எங்கள் செல்வா

தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை

நினைகிலை சங்கரா உன்

பாயிரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த

பொற்பாதமும் கண்டே

இவள் இழந்தது சங்கம் ஆவா எங்களை ஆளுடை ஈசனேயோ .

பொழிப்புரை:

இரக்கக் குறிப்பு தோன்ற ஆ ஆ என்று அரக்கன் இராவணன் அலறுமாறு அவனை கயிலாய மலையின் கீழே நெருக்கிய பெருமானே, பின்னர் அரக்கன் தேவா என்று உன்னை புகழ்ந்து அழுத போது அவனுக்கு அருள் புரிந்து நிறைந்த செல்வம் (நீண்ட வாழ்நாள், வாள், மற்றும் இராவணன் என்ற நாமம்) அளித்த தலைவனே, எருக்கத்தம்புலியூர் திருக்கோயிலில் உறையும் தேவனே என்று உன்னைப் போற்றும் அடியார்களின் இடர்கள் தீவது திண்ணம்.

பாடல் 9:

மறையான் நெடுமால் காண்பரியான் மழு ஏந்தி

நிறையா மதி சூடி திகழ் முத்தின் தொத்தே

இறையான் எருக்கத்தம்புலியூர் இடம் கொண்ட

கறையார் மிடற்றானைக் கருதக் கெடும் வினையே

விளக்கம்:

நிறையா மதி=கலைகள் குறைந்த பிறைச் சந்திரன் தொத்து=குவியல்; திருமேனி முழுவதும் திருநீறு பூசப்பட்டதால் வெண் முத்தின் தொகுப்பாக இருக்கும் திருமேனியை உடைய இறைவன், நெல்வாயில் அரத்துறை தலத்தில் சம்பந்தர்க்கு முத்துச் சிவிகை அளிக்க இருக்கும் நிகழ்ச்சி அடுத்து வரப் போவதை முன்னமே உணர்த்தும் குறிப்பு.

பொழிப்புரை:

வேதங்கள் ஓதும் மறையவனாகிய பிரமனும், ஓங்கி உலகளந்த நெடிய உருவினைக் கொண்ட திருமாலும் காண்பதற்கு அரியவனாக திகழ்ந்தவனும், மழுப் படையை ஏந்தியவனும், இளம் பிறைச் சந்திரனை சடையில் அணிந்து கொண்டு சந்திரன் தேய்ந்து அழியாமல் காத்து அருள் புரிந்தவனே, முத்தின் குவியல் போன்ற திருமேனியை உடையவனே, என்று பலவாறு போற்றி, எருக்கத்தம்புலியூர் உறைகின்ற கறைமிடற்று அண்ணலை நினைக்கும் அடியார்களின் வினைகள் முற்றிலும் கெட்டுவிடும்.

பாடல் 10:

புத்தர் அருகர் தம் பொய்கள் புறம் போக்கிச்

சுத்தி தரித்து உறையும் சோதி உமையோடும்

நித்தன் எருக்கத்தம்புலியூர் நிகழ்வாய

அத்தன் அறவன் தன் அடியே அடைவோமே

விளக்கம்:

சுத்தி தரித்து=உயிர்களை தூய்மை செய்து; அருகர்=சமணர்கள்; அருகக்கடவுளை போற்றி வணங்குவதால் அவர்களுக்கு அருகர் என்ற பெயர் வந்தது. புத்தர் மற்றும் சமணர் கூறும் உரைகளால் களங்கம் ஏதும் அடையாமல் தூய்மையாக இருப்பவன் இறைவன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். சமணர்களும் புத்தர்களும் பெருமானைக் குறித்து கூறும் இழிவான சொற்கள் உண்மையை ஆதாரமாகக் கொண்டிருந்தால் பெருமானுக்கு களங்கம் ஏற்படும். அவ்வாறின்றி பொய்யினை ஆதாரமாகக் கொண்ட சொற்களால் களங்கம் எவ்வாறு விளையும். அத்தன்=தலைவன்

பொழிப்புரை:

புத்தர்கள் மற்றும் சமணர்கள் கூறும் பொய்யான சொற்களை பொருட்படுத்தாமல் புறத்தே தள்ளி விலக்கியதுமன்றி, அத்தகைய சொற்களால் களங்கம் ஏதுமின்றி தூய்மையின் வடிவமாக இருப்பவன் பெருமான். ஒளி வடிவினனாக இருக்கும் பெருமான், உமை அம்மையுடன் கூடி நித்த மணாளனாக எருக்கத்தம்புலியூர் தலத்தில் விளங்குகின்றான். அத்தகைய தலைவனும் அறத்தின் வடிவமாக இருப்பவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை சென்று அடைந்து நாம் பயன் பெறுவோமாக.

பாடல் 11:

ஏரார் எருக்கத்தம்புலியூர் உறைவானைச்

சீரார் திகழ் காழித் திருவார் சம்பந்தன்

ஆரா அருந்தமிழ் மாலை இவை வல்லார்

பாரார் அவர் ஏத்த பதி வான் உறைவாரே

விளக்கம்:

ஏர்=அழகு; ஆரா=தெவிட்டாத பாரார்=உலகத்தவர்;

பொழிப்புரை:

நீர்வளம் கொண்டு அழகுடன் விளங்கும் எருக்கத்தம்புலியூர் தலத்தில் உறைகின்ற பெருமானை, சிறப்பு மிகுந்த சீர்காழித் தலத்தில் தோன்றிய தெய்வத்தன்மை பொருந்திய ஞானசம்பந்தன் அருளிய, தெவிட்டாத சுவையினை உடைய இந்த இனிய தமிழ் மாலையில் அடங்கிய பாடல்களை பாடும் வல்லமை பெற்றவர், உலகத்தவர் புகழும் வண்ணம் சிவலோகம் எய்துவார்கள்.

முடிவுரை:

தன்னுடன் இருக்கும் சிறந்த அடியார்களை குறிப்பிட்டு சிறப்பித்து பாடுவது தேவார முதலிகளின் இயல்பாகும். அவ்வாறு இருக்கையில், தன்னுடன் பல தலங்கள் தொடர்ந்து வந்த யாழ்ப்பாணரைப் பற்றிய குறிப்பு இந்த பாடலில் இல்லாமல் இருப்பது வியப்பினை அளிக்கின்றது. ஒருகால், இந்த பதிகத்தில் சிதைந்த ஏழாவது பாடலில் அத்தகைய குறிப்பு இருந்திருக்குமோ என்று தோன்றுகின்றது.

இந்த பதிகத்தின் பல பாடல்களில் பெருமானின் அடியார்களை வினைகள் அடையாது என்று சம்பந்தர் கூறுகின்றார். வினைகள் மேவா என்று முதல் பாடலிலும், கருதா வினைகள் என்று இரண்டாவது பாடலிலும், அடையா வினை தானே என்று மூன்றாவது பாடலிலும், விரும்பா வினை தானே என்று ஐந்தாவது பாடலிலும் தொடரா வினை தானே என்று ஆறாவது பாடலிலும், கெடும் வினையே என்று ஒன்பதாவது பாடலிலும் கூறுகின்றார். நமது உயிரினை பீடித்துள்ள வினைகளால் தானே நாம் இம்மையில் பல விதமான அல்லல்களுக்கு ஆட்பட்டு துயர் அடைகின்றோம்; மேலும் இந்த வினைகள் மேலும் வினைகளை நாம் பெருக்கிக் கொள்வதற்கு ஏதுவாக இருப்பதால் தானே, பிறவிச் சுழற்சியிலிருந்து வெளியே வர முடியாமல் நாம் தவிக்கின்றோம். எனவே இந்த வினைகளிலிருந்து விடுபட்டால், இம்மைத் துயர்கள் தீர்வதுமன்றி மறுமையிலும் நாம் முக்திச் செல்வம் பெற்று நிலையான ஆனந்தத்தில் ஆழ்கின்றோம். இந்த விளைவினை குறிப்பிடும் வண்ணம் பதிகத்தின் எட்டாவது பாடலில் அல்லல் தீர்த்தல் திடம் என்று கூறும் சம்பந்தர், கடைப் பாடலில் வானில் உறைவார்கள் என்றும் கூறுகின்றார். இந்த பதிகத்தினை ஓதியும் எருக்கத்தம்புலியூர் இறைவனை தியானித்தும் நாம் இம்மையில் பல நலன்களைப் பெற்றும் மறுமையில் முக்திச் செல்வத்தை பெற்றும் வாழ்வோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Padaiyaar Tharuboothap
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

படையார் தருபூதப்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: