Go Back

22/03/21

அரனை உள்குவீர்


பின்னணி:

சீர்காழி நகரில் அப்பர் பிரான் திருஞானசம்பந்தரை சந்தித்த பின்னர், இருவரும் ஒன்றாக சீர்காழி நகரத்து திருக்கோயிலின் உள்ளே சென்று பெருமானைத் தொழுதனர்; அதன் பின்னர் இருவருமாக அருகிலுள்ள திருக்கோலக்கா தலம் சென்றனர். இருவருமாக சீர்காழி திரும்பிய போது அப்பர் பிரான் காவிரிக் கரையினில் இருக்கும் பல தலங்கள் செல்வதற்கு விருப்பம் கொண்டவராக சீர்காழி நகரிலிருந்து புறப்பட்டார். தன்னிடம் விடைப் பெற்றுக் கொண்டு அப்பர் பிரான் சென்ற பின்னர் பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கியிருந்த திருஞான சம்பந்தர் பல பதிகங்களை சீர்காழி தலத்து இறைவன் மீது பாடினார். அத்தகைய பதிகங்களில் சில தமிழ் இலக்கியத்திற்கு முன்மாதிரியாக விளங்கின. இந்த தகவலை சேக்கிழார் அளிக்கும் பெரிய புராணத்து பாடலை நாம் இங்கே காண்போம். விகற்பம்=மாறுபட்ட

செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழி

மாற்றும்

வந்த சீர் மாலைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்

சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக்குறள் சாத்தி

எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு

நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும்

இராகம்

சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக

மூல இலக்கியமாக எல்லாப் பொருட்களும் உற்ற

ஞாலத்து உயர் காழியாரைப் பாடினர் ஞானசம்பந்தர்

மேலே குறிப்பிட்ட பெரியபுராணப் புராணப் பாடலில் சேக்கிழார் உணர்த்தும் பதிகங்களில் மொழிமாற்று, மாலைமாற்று, வழிமொழி மற்றும் ஏகபாதம் ஆகிய வகையினில் அமைந்த பதிகங்களை நாம் சிந்திந்தோம். தற்போது தமிழ் இருக்குக் குறள் என்று அழைக்கப்படும் சீர்காழி பதிகத்தினை காண்போம். மற்ற சித்திரக் கவிகளைப் போன்று இந்த பதிகமும் பன்னிரண்டு பதிகங்களைக் கொண்டதாகவும், சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களும் பதிகத்தில் வரும் வண்ணமும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பதிகம் குறிஞ்சி பண்ணில் அமைக்கப் பட்டுள்ளது. குறிஞ்சிப் பண்ணில் அமைக்கப்பட்டுள்ள ஏழு பதிகங்கள் (1.90 முதல் 1.96 வரை) இருக்குக் குறள் என்றே அழைக்கப்படுகின்றன. மேலும் கொல்லிப் பண்ணில் அமைக்கப்பட்ட இரண்டு பதிகங்களும் (3.41 & 3.42) இருக்குக் குறள் என்றே அழைக்கப் படுகின்றன.

இந்த பதிகத்தினை இருக்குக்குறள் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். குறள் என்றால் சிறியது என்று பொருள். சிறிய அடிகளைக் கொண்ட பாடல் என்பதை உணர்த்தும் வண்ணம் குறள் என்று அழைக்கப் படுகின்றது. ஒவ்வொரு அடியிலும் இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல். மந்திரம் என்ற சொல், சொல் சுருக்கம் உள்ளது என்ற பொருளினைத் தரும். இருக்கு வேதத்தில் உள்ள மந்திரங்கள் அளவில் சிறியதாக இருக்கும் நிலை பற்றி இந்த பாடலையும் இருக்குக்குறள் என்று பெயரிட்டு சேக்கிழார் அழைத்தார் போலும். மந்திரங்கள் தன்னை எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றும் வல்லமை கொண்டது போன்று இந்த பதிகமும் அமைந்துள்ளது என்று தண்டபாணி தேசிகர் அவர்கள் கூறுவார்கள். சம்பந்தர் பதிகங்கள் அனைத்துமே இருக்கு வேதத்தின் சாரமாக கருதப் படுவதாக சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் கூறுகின்றார். முதுகுன்றத்து பதிகத்தை குறிப்பிடும் பாடலில் சேக்கிழார் இருக்குக் குறள் துணை மலர் என்று குறிப்பிடுகின்றார். ஒன்றுக்கொன்று துணையாக உள்ள இரண்டு சீர்கள் கொண்ட அடிகள் என்பதை உணர்த்தும் வண்ணம் சேக்கிழார் இவ்வாறு கூறுகின்றார். எனவே இந்த பதிகங்கள் நான்கு அடிகள் கொண்ட பாடல்களே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பல பதிப்புகளில் இரண்டு அடிகள் கொண்ட பாடலாக இந்த பதிகங்கள் அச்சிடப் பட்டுள்ளன. சில பதிப்புகளில் இரண்டு அடிகளாக இருந்தாலும், இடையில் கமா எனப்படும் நிறுத்தக் குறியுடன் அச்சிட்டு நான்கு அடிகள் கொண்ட பாடல்கள் என்று உணர்த்துவதையும் நாம் காணலாம்.

பாடல் 1:

அரனை உள்குவீர்

பிரமனூருள் எம்

பரனையே மனம்

பரவி உய்ம்மினே

விளக்கம்:

உள்குதல்=நினைத்தல்; இந்த பாடலில் பெருமானை நினைப்பீர்களாக என்று உலகத்தவரை நோக்கி சம்பந்தர் கூறுகின்றார். பெருமானை மனதினால் நினைப்பது, பெருமானை குறித்து செய்யப்படும் வழிபாட்டின் முதற்படி என்பதால், இந்த பதிகத்தின் முதற்பாடலில், மிகவும் பொருத்தமாக பெருமானை நினைத்தல் சொல்லப்படுகின்றது. உய்தல்=பிழைத்தல், உயிர் வாழ்தல்; இங்கே நல்ல கதியைப் பெறுதல் என்ற பொருளில் வருகின்றது. நல்ல நெறி என்பது யாது என்பதை அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் (4.11.9) நமது நினைவுக்கு வருகின்றது. முதல்வனாகிய முக்கண்ணனே அனைவருக்கும் முன்னே தோன்றிய நெறியாவான். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபிரானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான, வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும் என்பதே இந்த பாடலின் கருத்தாகும்.

முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்

தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே

அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்

நன்னெறியாவது நமச்சிவாயவே

உள்குவீர் என்ற சொல்லுக்கு பரமனை நினைக்கும் அடியார்கள் என்று பொருள் கொண்டு, அவர்களை அழைத்து சொல்லப்படும் அறிவுரையாக இந்த பாடல் சிலரால் கருதப் படுகின்றது. பரன்=மேலானவன்; பரவுதல்=துதித்தல், புகழினைச் சொல்லுதல்;

பொழிப்புரை:

உலகத்தவரே, அரன் என்று அழைக்கப்படும் சிவபெருமானை உங்களது மனதினால் நினைமின்கள்; பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் வீற்றிருப்பவரும் உலகில் உள்ள அனைத்து உயிர்களினும் உயர்ந்த தன்மை உடையவனும் ஆகிய பெருமானை, உங்களது மனதினால் துதித்து வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.

பாடல் 2:

காண உள்குவீர்

வேணு நற்புரத்

தாணுவின் கழல்

பேணி உய்ம்மினே

விளக்கம்:

ஸ்தாணு என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் தாணு. நிலையாக நிற்பவர் என்று பொருள். பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் பெருமான் ஒருவன் தானே அழியாமல் நிலைத்து நிற்கின்றார். பிறவியின் நோக்கம், நமது வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு வீடுபேறு நிலை அடைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்து இருப்பது தானே. உயிரும் அதனையே விரும்புகின்றது அல்லவா. பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியுள்ள பிரமன் திருமால் மற்றுமுள்ள தேவர்கள் எவ்வாறு தாங்கள் மீள முடியாத சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற வழியினை அடுத்தவருக்கு அளிக்க முடியும். எனவே தான் பிறப்பிறப்புச் சுழற்சிக்கு அப்பாற்பட்ட சிவபெருமானை வழிபட வேண்டும் என்று தேவார முதலிகள் உணர்த்துகின்றனர். மேலும் பிரமன் மற்றும் திருமாலின் நிலையற்ற தன்மையும் பல தேவாரப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அப்பர் பிரான் அருளிய பாடலை (5.100.3) இங்கே நினைவு கூர்வது பொருத்தம்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்

ஆறு கோடி நாராயணர் அங்ஙனே

ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்

ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே

நொந்தினார் என்றும் நுங்கினார் எனும் இருவகையான பாட பேதங்கள் உள்ளன. நொந்தினார்=அழிந்தார்கள்: பிரளய காலத்தில் பிரமன், திருமால், குபேரன், யமன் போன்றவர்கள் அழிய, கூட்டம் கூட்டமாக இந்திரர்களும் உடன் அழிந்தாலும், சிவபிரான் அழியாமல் இருப்பதுடன், தனது மனைவியாகிய பார்வதியுடன் விளையாடுவதாக ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியின் இருபத்தாறாவது பாடலில் கூறுகின்றார். விரிஞ்சி=பிரமன்; பஞ்சத்வம்=உடலில் உள்ள ஐந்து பூதங்களும் தனித்தனியாக பிரிந்து போகும் நிலை, அதாவது மரணம்: வ்ரஜதி=அடைதல்; விரதிம்=முடிவு: ஆப்னோதி=அடைதல்; கீனாச=இயமன்; பஜதி=அடைதல்; தனத=செல்வங்களை உடைய குபேரன்; நிதனம்=மரணம்; யாதி=அடைதல்; மாஹேந்த்ரீ விததி அபி=கூட்டம் கூட்டமாக இந்திரர்கள்; ஸம்மீலித=கண்கள் மூடும் பெருந்தூக்கம்; த்ருசா=அழிதல்; ஸம்ஹாரே=பிரளய காலத்தில்; சதி=பார்வதியின் ஒரு பெயர்; விஹரதி=விளையாடுதல்;

விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்

விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்

விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருசா

மஹா ஸம்ஹாரேஸ்மின் விஹரதி சதி த்வத்பதி ரஸௌ

மனித வாழ்க்கையை ஒப்பிடுகையில் தேவர்கள் நீண்ட ஆயுள் பெற்றவர்கள். ஆனாலும் அவர்களுக்கும் முடிவு என்பதுண்டு, அவர்களின் தலைவனாக விளங்கும் இந்திரன், பிரமன், திருமால் ஆகியோரும் பிறப்பு இறப்புச் சுழற்சியில் உழல்பவர்கள் தாம். ஒவ்வொருவரின் வாழ்நாள் தான் வேறுபடும். ஆனால் நிலையாமை என்ற தகுதியின் அடிப்படையில் அனைவரும் சமமே. இதனை விளக்கும் பாடல் தான் அப்பர் பிரான் அருளிய இந்த பாடல்.

இந்த பாடல் கால நியதியை கணக்கிட்டு, அந்த நியதியைக் கடந்து நிற்கும் ஈசனின் மேலான தன்மையை உணர்த்துகின்றது. மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஓர் நாள். தேவர்களின் வாழ்நாளை விட, அவர்களுக்குத் தலைவனாக விளங்கும் இந்திரனின் வாழ்நாளை விடவும், மிகவும் அதிகமானது பிரமனின் வாழ்நாள். நான்கு யுகங்களின் மொத்த ஆண்டுகள் 43,20,000 மனித ஆண்டுகள் (கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள்: திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகள்: துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள்: கலியுகம் 4,32,000 ஆண்டுகள்). இந்த நான்கு யுகங்களை சதுர்யுகம் என்று அழைப்பார்கள். இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்தது பிரமனுக்கு ஒரு பகல். அதாவது இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரமனுக்கு ஒரு நாள். இந்த கணக்கினில் பிரமனின் ஆயுள் நூறு வருடங்கள். பிரமனின் ஒரு நாள் பதினான்கு இந்திரர்களின் மொத்த வாழ்நாள் ஆகும். திருமாலின் வாழ்நாள் பிரமனின் வாழ்நாளை விட ஆறு மடங்கு அதிகம் என்பார்கள். அதாவது ஒரு திருமாலின் வாழ்நாளின் முடிவினில் ஆறாவது பிரமனின் வாழ்நாளும், 14000வது இந்திரனின் வாழ்நாளும் முடிவடையும். எனவே பிரமனும் திருமாலும் இறந்த நாள் என்றால் அனைத்து உயிர்களும் இறந்த நாள் என்று கொள்ளலாம். அதனால் தான் ஆறு கோடி, நூறு கோடி என்று திருமாலையும் பிரமனையும் குறிப்பிடும் அப்பர் பிரான் கங்கைக் கரையின் மணல்களின் எண்ணிக்கையை விட அதிகமான இந்திரர்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கோடி என்ற சொல் கணக்கிலாத எண்ணிக்கையை குறிப்பிடும் விதத்தில் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. நூறு கோடி பிரமர்கள் பிறந்து அழிந்த பின்னரும், ஆறு கோடி நாராயணர்கள் பிறந்து அழிந்த பின்னரும், கங்கையாற்றின் இரு கரைகளிலும் உள்ள மணல்களை விடவும் எண்ணிக்கையில் அதிகமான இந்திரர்கள் பிறந்து அழிந்த பின்னரும், முடிவற்றவனாகத் திகழ்பவன் சிவபெருமான ஒருவனே என்பது தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அப்பர் பிரானின் பாடலின் திரண்ட கருத்தாகும்.

அரனை உள்குவீர் என்று பதிகத்தின் முதல் பாடலில் பெருமானை நினைக்கத் தூண்டும் சம்பந்தர், இந்த பாடலில் பெருமானின் திருவுருவத்தை கண்டு களிக்குமாறு நம்மை தூண்டுகின்றார். பெருமானை நினைத்த பின்னர் அவனை நேரில் சென்று காண்பது தானே அடுத்த படி. வேணு நற்புரம் என்ற தொடரை, நல் வேணுபுரம் என்று மாற்றி அமைத்து பொருள் காண வேண்டும். நன்மைகளைத் தரும் வேணுபுரம் தலம் என்று பொருள். பேணுதல்=பெருமான் விரும்பும் செயல்களை செய்து பெருமானை இடைவிடாது வழிபடுதல்; பெருமானின் புகழினை பாடுவதும் அவனே நிலையான மெய்ப்பொருள் என்பதை உணர்ந்து அவனை வழிபடுவதும் பெருமானுக்கு உகந்த செயல்களாகும். பெருமானைப் புகழ்ந்து சாமகானம் பாடியதால் தானே, கயிலாய மலையின் கீழே அமுக்குண்டு கதறிய இராவணன், அந்த இடரிலிருந்து விடுபட்டதும் அன்றி பல நன்மைகளும் பெற்றான். பெருமானை பேணுவதால் நாம் அடையும் நன்மை யாது என்பதை பெருமானின் வாய்மொழியாக பெரிய புராணத்தில் வரும் இரண்டு பாடல்களை நாம் இங்கே காண்போம்.

திருவாரூர் திருக்கோயில் தேவாசிரிய மண்டபத்தில் குழுமியிருந்த அடியார்களை கண்ட சுந்தரர் அந்த அடியார்களுக்கு அடியானாக தான் மாறும் நாள் எந்நாளோ என்ற கவலையுடன் திருக்கோயிலின் உள்ளே நுழைந்தார். அப்போது அவரின் எதிரே தோன்றிய தியாகேசர், அடியார்களின் பெருமையினை சுந்தரருக்கு எடுத்துரைத்து அவர்களைச் சென்று அடைவாயாக என்று சுந்தரரை பணித்தார். இறைவனின் வாய்மொழியாக கூறப்பட்ட கருத்து அடங்கிய பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அடியார்களின் பெருமைக்கு அவர்களது பெருமையே ஒப்பாகும் என்றும் இடைவிடாது இறைவனை நினைத்து போற்றுவதால் இறைவனைப் பெற்றவர்கள் என்றும், இறைவனோடு ஒன்றுபட்டு நிற்கும் நிலையினால் உலகையும் வெல்லும் தன்மை உடையவர்கள் என்றும் எத்தகைய துன்பங்களும் இல்லாதவர்களாய் இறைவனிடத்தில் கொண்டுள்ள அன்பினால் இன்பமே உடையவர்களாய், இம்மை மற்றும் மறுமையைக் கடந்தவர்கள் என்றும் அடியார்களின் தன்மையை இறைவன் சுந்தரருக்கு உணர்த்தியதை குறிப்பிடும் பாடல் இது. இறைவனைப் பேணுவதால் நாம் அவரைச் சென்று அடையலாம் என்று நமக்கு உணர்த்தும் பாடல் இது.

பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப்

பெற்றார்

ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்று

இல்லார்

அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம்

ஆர்வார்

இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று

பெருமான் வீற்றிருந்து அருளும் திருக்கயிலாய மலையின் மீது காலால் நடப்பது தகாது என்று கருதிய காரைக்கால் அம்மையார் தலையினால் நடந்து வந்ததைக் கண்ட உமையன்னை இவ்வாறு தலையினால் நடந்து வரும் அம்மை இறைவன் பால் வைத்திருக்கும் அன்பின் தன்மை மிகவும் வியக்கத்தக்கது என்று, இறைவனிடம் கூறினார். அம்மையின் சொற்களைச் செவியுற்ற இறைவன், அவ்வாறு எலும்புக்கூடாக மலையேறி வரும் பெண்மணி தன்னை (இறைவனை) பேணும் பெண்மணி என்று இறைவன், காரைக்கால் அம்மையாரை பார்வதி தேவியிடம் அறிமுகம் செய்கின்றார். காரைக்கால் அம்மையார் பெற்றிருந்த பேய் வடிவத்தினை பெருமை சேர் வடிவம் என்று இறைவன் குறிப்பிடுவது நாம் சிந்திக்கத் தக்கது.

வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே

மற்று இப்

பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று

பின்றை

அருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும்

செம்மை

ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்

இவ்வாறு பெருமானைப் பேணி போற்றும் அடியார்கள் பெருமானை முழுதும் உணர்ந்து வாழ்வார்கள். அத்தகையோருடன் பெருமான் ஒட்டி வாழ்வான் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பதிகப்பாடல் (6.25.1) நமது நினைவுக்கு வருகின்றது. உயிராவணம்=உயிராத வண்ணம்; உயிர்தல் என்ற சொல் மூச்சு விடுதல் என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது. உற்று நோக்கி=தியானத்தில் ஆழ்ந்து மனதினில் உருவகப்படுத்திய இறைவனின் உருவத்தினை நினைந்து; கிழி=திரைச்சீலை, துணி; உயிர் ஆவணம் செய்தல்=உயிரினை ஒப்படைத்தல் ஆவணம்=சாசனம்;. ஆவணம் என்பதற்கு ஓலை என்ற பொருள் கொண்டு அடிமை ஓலை எழுதி, தன்னை அடிமையாக இறைவனுக்கு ஒப்படைத்தல் என்றும் கூறுவார்கள். அயிராவணம்=கயிலை மலையில் உள்ள யானை, இரண்டாயிரம் தந்தங்களை உடையது. அயிராவணம் (நான்காவது அடியில் உள்ள சொல்)=ஐ இரா வண்ணம், ஐயம் ஏதும் இல்லாத வண்ணம் உள்ள உண்மையான மெய்ப்பொருள்.

உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின்

உரு எழுதி

உயிர் ஆவணம் செய்திட்டு உன் கைத் தந்தால்

உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி

அயிராவணம் ஏறாதே ஆனேறு ஏறி அமரர் நாடு ஆளாதே

ஆரூர் ஆண்ட

அயிராவணமே என் அம்மானே நின் அருட்கண்ணால்

நோக்காதார் அல்லாதாரே

ஒட்டி வாழ்தல்=உடனாகி இருத்தல்; இந்தப் பாடலில், இறைவன் யாரோடு ஒட்டி வாழ்வான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மனதினை ஒருமுகப்படுத்தி இறைவனை தியானித்து, அவனது உருவத்தை நமது மனதிலிருந்து நீங்காத வண்ணம் எழுதி வைத்து, நாம் அவனுக்கு பூரண அடிமை என்ற நிலையை அவனுக்கு உணர்த்தினால், அவன் அத்தகைய அடியார்களுடன் இணைந்து வாழ்வான் என்று இங்கே விளக்குகின்றார். அடியார்கள் மண்ணில் வாழ்ந்த போதே அவர்களுடன் ஒட்டி வாழும் சிவபெருமான், அத்தகைய அடியார்கள் தங்களது உடலைத் துறந்த பின்னர், அவர்களுக்கு முக்தி அளித்து அவர்களை விட்டுப் பிரியாது இணைந்து வாழ்வான் என்பதும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு ஒட்டிட்ட பண்பினாராய் வாழ்பவர்களை சிவ கணத்தவர்களாக சம்பந்தர் தனது மயிலைப் பதிகத்தின் முதல் பாடலில் கருதுகின்றார்.

மட்டிட்ட புன்னை அம் கானல் மட மயிலைக்

கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

எவரோடு இறைவன் ஒட்டி வாழ்வான் என்று முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், கடைசி அடியில், இறைவனை உணராதவர்கள், அவனது இன்பத்தைப் பெறுவதற்கு உரியவர்கள் அல்லர் என்று கூறுகின்றார். அருட்கண் என்று சிவபெருமான் நமக்கு அருளிய கண் என்று இங்கே கூறப்படுகின்றது.

அயிராவணம் என்று இரண்டாயிரம் தந்தங்களைக் கொண்ட பெருமை வாய்ந்த யானை கயிலையில் இருந்தாலும், அதனை வாகனமாகக் கொள்ளாமல், எளிமையான எருதினை வாகனமாகக் கொண்டு, தேவர்கள் உலகத்தினை ஆளும் திறமையும் வல்லமையும் கொண்டிருந்தாலும், தேவலோகத்தை ஆளாமல், அடியார்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரூர் நகரினை ஆளும் இறைவனே; தங்களது உயிர் மூச்சினை அடக்கி, உன்னை தியானித்து, உனது உருவத்தைத் தங்களது உள்ளத்தில் என்றும் அழியாத வண்ணம் பதித்து, உனக்கு அடிமையாகத் தங்களைக் கருதி, அந்த அடிமை சாசனத்தை உனது கையில் ஒப்படைக்கும் அடியார்களுடன், நீ இணைந்து வாழ்கின்றாய். எவருக்கும் எந்த ஐயமும் ஏற்படாமல் உண்மையான மெய்ப்பொருளாக இருப்பவனே, உன்னால் வழங்கப்பட்ட கண்கள் கொண்டு உன்னைக் காணாதவர்கள், உனது அருளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்லர் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை. இந்த பாடலின் மூலம் பெருமானின் திருவுருவத்தை நேரில் கண்டு வழிபடுவதன் சிறப்பு உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

பெருமானின் திருவுருவத்தினை நேரில் காண வேண்டும் என்று விரும்பும் உலகத்தவரே, நீங்கள் பல நன்மைகளை அடியார்களுக்கு புரியும் வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரம் சென்று, ஆங்குள்ள இறைவனை, என்றும் அழியாமல் நிலையாக இருக்கும் இறைவனின் திருவடிகளை போற்றி, இறைவனுக்கு விருப்பமான செயல்களை செய்து வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.

பாடல் 3:

நாதன் என்பீர்காள்

காதல் ஒண் புகல்

ஆதி பாதமே

ஓதி உய்ம்மினே

விளக்கம்:

பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் பெருமானை நினைத்தும் அவனைக் கண்டும் மகிழுமாறு நம்மைத் தூண்டிய சம்பந்தர், இந்த பாடலில் அவனை நமது தலைவனாக ஏற்றுக்கொண்டு நாதா என்று அழைக்குமாறு ஆலோசனை கூறுகின்றார். புகல்=புகலி நாதா என்று இறைவனை அழைத்து பலன் அடைவீர்களாக என்று சம்பந்தர் கூறும் பாடல் நமக்கு பழனம் தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடலை (1.67.1) நினைவூட்டுகின்றது. பெருமானை நமது தலைவனாக ஏற்றுக்கொண்டு நாதா என்றும் நக்கா என்றும் நம்பா என்றும் அவனை அழைத்து அவனது திருவடிகளை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்.

வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருது ஏறிப்

பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரி தோலார்

நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று

பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே

புகலி என்ற சொல் புகழ் என்று குறுகியுள்ளது. ஒள் என்ற சொல் புகல் என்ற சொல்லுடன் சேரும் போது ஒண்புகல் என்று மாறுபடுகின்றது ஒள் என்ற சொல்லுக்கு, ஒளி அழகு நல்ல மேன்மையுடைய என்று பல பொருட்கள் உள்ளன. ஒள் என்ற சொல்லினை புகலி என்ற சொல்லுடன் சேர்த்தும் ஆதி என்ற சொல்லுடன் சேர்த்தும் பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமே. புகல் ஆதி=புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் உள்ள ஆதி முதல்வன். .காதல் என்ற சொல்லினை ஓதி என்ற சொல்லுடன் இணைத்து, மிகுந்த அன்புடன் ஓதி என்று பொருள் கொள்ள வேண்டும்; ஓதி=துதித்து, புகழ்ந்து பாடி;

பொழிப்புரை:

சிவபெருமானை உங்களது தலைவனாக ஏற்றுக்கொண்டு அவனை நாதன் என்று அழைக்கும் அடியார்களே, புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் உறைபவனும், ஒளியுடன் பிரகாசிப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக திகழ்பவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை புகழ்ந்து பாடி, வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.

பாடல் 4:

அங்கம் மாது சேர்

பங்கம் ஆயவன்

வெங்குரு மன்னும்

எங்கள் ஈசனே

விளக்கம்:

பங்கம்=பாதி; மன்னும்=நிலையாக இருக்கும் பெருமானின் அருள் வடிவமாக இருப்பவள் சக்தி; எனவே பெருமான் மாதொரு பாகனாக இருக்கும் நிலை அவன் அடியார்களுக்கு அருள் வழங்க தயார் நிலையில் இருப்பதாக கருதப் படுகின்றது. சென்ற பாடலில் பெருமானை நமது தலைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கிய சம்பந்தர் இந்த பாடலில், அந்த தலைவன் உறையும் இடம் சீர்காழி என்று உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாதியாக ஏற்றுக்கொண்டுள்ள பெருமான், அடியார்களுக்கு அருள் வழங்கும் குறிப்பினை மாதொருபாகன் கோலத்தில் மூலம் உணர்த்துகின்றான். அத்தகைய பெருமான் வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தினில் நிலையாக, எங்களது தலைவனாக உறைகின்றான்.

பாடல் 5:

வாணிலாச் சடைத்

தோணி வண்புரத்து

ஆணி நற்பொனைக்

காணுமின்களே

விளக்கம்:

ஆணி=பொன்னின் மாற்றினைக் கண்டறிய கொல்லர்கள் வைத்திருக்கும் சிறிய பொன் கட்டி; மாற்றுப் பொன் கட்டி, மற்ற பொன்னின் தரத்தை அறிந்து கொள்வதற்கு உதவுவது போன்று, இறைவன் பல்வேறு உயிர்களின் பக்குவ நிலையினை எளிதில் உணர்த்து கொள்ளும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. மேலும் உயிர்களின் பக்குவ நிலையினை அறிந்து அதற்கேற்ப அருள் புரியும் பெருமானின் தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. மாற்றுப் பொன் கட்டி மற்ற பொன்னை விடவும் மிகவும் உயர்ந்த தரத்தில் இருப்பது போன்று ஏனையோரை விடவும் உயர்ந்தவனாக இருப்பவன் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வாள்+நிலா=வாணிலா; வாள்=ஒளி வீசும்; தோணி வண்புரத்து என்ற தொடரினை வண் தோணிபுரத்து என்று மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும். வண்= வளமை

பொழிப்புரை:

ஒளி வீசும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியுள்ள பெருமான், வளமை வாய்ந்த தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் உறைகின்றான். ஆணிப் பொன் போன்று அனைவரிலும் உயர்ந்தவனாக இருக்கும் பெருமானைக் கண்டு தொழுது வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக. அவன், உயிர்களின் பக்குவ நிலையினை அறிந்து உணர்ந்து அதற்கேற்ப அருள் வழங்கும் திறமை உடையவன் ஆவான்.

பாடல் 6:

பாந்தளார்ச் சடைப்

பூந்தராய் மன்னும்

ஏந்து கொங்கையாள்

வேந்தன் என்பரே

விளக்கம்:

பாந்தள்=பாம்பு; ஏந்து=ஏந்தியவளாக இருக்கும்; பிராட்டியின் மார்பகங்கள் மிகவும் அழகு வாய்ந்தவை என்பதை உணர்த்தும் பொருட்டு, பல தலங்களில் பிராட்டியின் திருநாமம் அமைந்துள்ளதை நாம் காணலாம். குன்றமுலை நாயகி (திருநாகேச்சரம்), நன்முலை நாயகி (திருவிடைமருதூர்), ஒப்பிலா முலையம்மை (திருவாவடுதுறை), போகமார்த்த பூண்முலையாள் (திருநள்ளாறு), அழகுமுலை அம்மை (வீழிமிழலை), உண்ணாமுலை அம்மை (திருவண்ணாமலை), இளமுலை நாயகி (திருவோத்தூர்) என்பன சில தலங்களில் வீற்றிருக்கும் அம்மையின் திருநாமங்கள்; வேந்தன்=தலைவன், அரசன்; இங்கே உமை அம்மையின் கணவன் என்ற பொருளில் வந்துள்ளது.

பொழிப்புரை:

பாம்பு பொருந்திய சடை முடியினை உடைய இறைவன் பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் நிலையாக உறைகின்றான். அவன் அழகிய மார்பகங்களை உடைய உமை அம்மையின் கணவன் என்று பலரும் அவனை புகழ்ந்து கூறுவார்கள்.

பாடல் 7:

கரிய கண்டனைச்

சிரபுரத்துள் எம்

அரசை நாடொறும்

பரவி உய்ம்மினே

விளக்கம்:

இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப இறைவன் உயிர்களுக்கு வழங்கும் அருள் இருக்கும் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் இறைவனின் அருளினை முழுமையாக பெறுவதற்கு பக்குவம் அடையவேண்டும் அல்லவா. அந்த பக்குவத்தினை அடையும் பொருட்டு, நாம் இறைவனை தினமும் தொழ வேண்டும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். மனம் இறை சிந்தனையில் ஆழ ஆழ, உண்மையான மெய்ப்பொருளாகிய இறைவனைப் பற்றிய நமது அறிவு விரிவடைகின்றது. அறிவு விரிவடைவதால் மெய்ப்பொருளை சென்று அடைந்து நிலையான இன்பம் பெற மனம் நாட, அதன் முதற்படியாக உயிர் பக்குவம் அடைகின்றது. எனவே தான் இறைவனைப் புகழ்ந்து பாடி உய்வினை அடையுமாறு சம்பந்தர் இந்த பாடல் மூலம் நம்மை ஊக்குவிக்கின்றார். கரிய கண்டன் என்ற தொடர் மூலம், உலகின் நலன் கருதி விடத்தையே உட்கொண்ட பெருமானின் கருணை உள்ளம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. பெருமானின் கழுத்தினில் இருக்கும் விடத்தின் கறை, பெருமான் பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினை உட்கொண்டதையும் அந்த செயல் வானவர்கள் மற்றும் அனைத்து உலகத்தவர்களின் நலன் கருதி செய்யப்பட்டது என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது அல்லவா.

பொழிப்புரை:

கரிய கண்டத்தை உடையவனாக தனது கருணைத் திறத்தினை உணர்த்தும் பெருமானை, சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் தலைவனை, எமது அரசினை தினமும் புகழ்ந்துப் பாடி, உலகத்தவரே வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.

பாடல் 8:

நறவம் ஆர் பொழில்

புறவ நற்பதி

இறைவன் நாமமே

மறவல் நெஞ்சமே

விளக்கம்:

தினமும் இறைவனின் புகழினைப் பாடி வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று சென்ற பாடலில் நமக்கு அறிவுரை கூறிய சம்பந்தர், அதனை மீண்டும் வலியுறுத்தும் வண்ணம், இறைவனின் திருநாமத்தை மறவாது நமது நெஞ்சம் இருக்க வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். நறவம்=தேன்;

பொழிப்புரை:

தேன் நிறைந்த பூக்கள் உடைய பூஞ்சோலைகள் நிறைந்ததும், அடியார்களுக்கு பல நன்மைகளை விளைவிப்பதும், புறவம் என்று அழைக்கப் படுவதும் ஆகிய சீர்காழி தலத்தில் உறையும் இறைவனின் திருநாமங்களை, உலகத்தவரே, மறவாது உங்களது நெஞ்சத்தில் வைப்பீர்களாக

பாடல் 9:

தென்றில் அரக்கனைக்

குன்றில் சண்பையான்

அன்று நெரித்தவா

நின்று நினைமினே

விளக்கம்:

தென்றில்=பகை; தென்றில் என்ற சொல் தெற்கு திசையினை உணர்த்துவதாக பொருள் கொண்டு தமிழகத்தின் தெற்கே உள்ள இலங்கைத் தீவின் மன்னன் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. குன்றில்=கயிலை மலையில்; சீர்காழி தலத்தில் கட்டு மலையில் மேல் அமைந்துள்ள கயிலாயக் காட்சி சன்னதி சம்பந்தர்க்கு அரக்கன் இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை நிகழ்ச்சியை நினைவூட்டியது போலும். அரக்கன் இராவணனது கயிலை நிகழ்ச்சி, சிவபெருமானின் வலிமையையும் அவரது கருணைத் திறத்தையும் ஒரு சேர உணர்த்தும் நிகழ்ச்சி. எவராலும் வெற்றி கொள்ள முடியாமல் அகந்தையுடன் திரிந்த அரக்கனது வலிமை குறைக்கப்பட்டு, அவனது அகந்தை அழிக்கப்பட்டது. தான் தங்கியிருந்த கயிலை மலையினை பேர்க்கத் துணிந்தவன் என்பதையும் பொருட்படுத்தாது, அரக்கன் சாம கானம் பாடி இறைஞ்சிய போது, அரக்கன் கொண்டிருந்த இடரிலிருந்து விடுவித்ததும் அன்றி, அவனுக்கு பல வரங்களும் அருளிய பெருமான், எல்லையில்லா கருணை உள்ளவன் கொண்டவன் என்பதையும் நாம் உணர்கின்றோம்.

கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (4.43..10) அப்பர் பிரான் இலங்கை மன்னனை தென்னவன் என்று குறிப்பிடுகின்றார். தென்னவன்=தென்னிலங்கை மன்னவனாகிய இராவணன்; கன்னல்=கரும்பு; இன்=இன்னருள்; சேயிழை=அணிகலன்கள் பூண்ட இளம் பெண், இங்கே பார்வதி தேவி

தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு

மன்னவன் விரலால் ஊன்ற மணிமுடி நெரிய வாயால்

கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்

இன் அவற்கு அருளிச் செய்தார் இலங்கு மேற்றளியானாரே

பொழிப்புரை:

தென் திசையில் இருந்த இலங்கை தீவுக்கு அரசனாகிய அரக்கன் இராவணனை கயிலை மலையில் கீழே பண்டைய நாளில் நெரித்து அவனது வலிமையை அடக்கிய இறைவன் சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறைகின்றான். உலகத்தவரே, இறைவனின் எல்லையற்ற ஆற்றலையும் அளவு கடந்த கருணையையும் உணர்த்தும் இந்த செயலை நினைவு கூர்ந்து அவனை போற்றி புகழ்வீர்களாக.

பாடல் 10:

அயனும் மாலுமாய்

முயலும் காழியான்

பெயலவை எய்தி நின்று

இயலும் உள்ளமே

விளக்கம்:

பெயல்=அருள் மழை; பெயலவை=அருள் பொழிதல்; இயலல்=உள்ளத்தை பொருத்துதல்; இறைவன் பால் உள்ளத்தை பொருத்தி மனம் ஒன்றி அவனை வழிபட வேண்டும் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். வேறு சிந்தனைகளில் மனம் அலை பாயாமல், மனம் ஒன்றி இறைவனை வழிபடவேண்டும் என்று பல திருமுறை பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. மனம் ஒன்றி இறைவனை வழிபடுவதால் நமக்கு நட்டம் ஏதும் இல்லை என்று உணர்த்தி மனம் ஒன்றி இறைவனை வழிபடவேண்டும் என்று அறிவுரை கூறும் அப்பர் பிரானின் பாடல் (4.81.3) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கன்றிய=சினந்த சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்து விட்ட நிலையில், அவனது உயிர்னைக் கவரும் பொருட்டு தனது கடமையைச் செய்ய வந்த இயமனுக்கு அந்தச் சிறுவன் தனது கடமையைச் செய்ய விடாமல் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது, கோபத்தை ஏற்படுத்தியது.

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

பிறக்க முக்தி என்று திருவாரூரையும், இருக்க முக்தி என்று காஞ்சியையும், இறக்க முக்தி என்று காசியினையும், காண முக்தி என்று சிதம்பரத்தையும், நினைக்க முக்தி என்று திருவண்ணாமலையையும் குறிப்பிடுவார்கள். அந்தக் கருத்தினை வலியுறுத்தும் முகமாக சென்று தொழுமின்கள் தில்லையை என்று நமக்கு இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். என்று வந்தாய் என்று கேட்ட சிவபிரானுக்கு, அப்பர் இந்த பதிகத்தில் விடை அளிக்கவில்லை. அத்தா உன் ஆடல் காண அடியனேன் வந்தவாறே என்று பத்தனாய் பாட மாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தில் அப்பர் பிரான் விடை கூறுகின்றார். இறைவனே இப்பொழுது தான் வந்தேன் என்று உணர்த்தும் வகையில் வந்தவாறே என்று கூறுவதையும். தனது வருகைக்கும் காரணம் உனது ஆடலைக் காண்பது தான் என்று சொல்லும் அழகும் நாம் ரசிக்கத்தக்கது.

திருஞான சம்பந்தரும் தான் அருளிய முதல் பதிகத்தின் கடைப் பாடலில் (1.1.11). ஒன்றிய உணர்வுடன் இறைவனை குறித்து தான் பதிகம் பாடியதை நமக்கு உணர்த்தி, ஒன்றிய மனத்துடன் இறைவனை வணங்க வேண்டும் என்ற வழிமுறைக்கு முன்மாதிரியாக இருப்பதை நாம் காணலாம்.

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை

அலர் மேய

பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்

தன்னை

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன்

உரை செய்த

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல்

எளிதாமே

பிரமனும் திருமாலும் தங்களுக்குள்ளே யார் பெரியவர் என்று வாதம் செய்த போது, பல முனிவர்கள் அவர்களது வாதத்தை தடுக்கும் நோக்கத்துடன், அவர்கள் இருவரை விடவும் சிவபெருமான் மிகவும் உயர்ந்தவர் என்று சொல்லி வாதத்தை தவிர்க்குமாறு வேண்டினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் வாதத்தினை நிறுத்தாமல், சிவபெருமானை விடவும் தாங்கள் பெரியவர்கள் என்று பேசினார்கள். தங்களின் முன்னே நெடிய தழல் பிழம்பாக பெருமான் தோன்றிய போதும், பிழம்பின் அடியையும் முடியையும் தங்களது முயற்சியால் காண்போம் என்று இறுமாப்புடன் பேசினர். இறுதியில் தங்களது முயற்சியில் தோல்வி அடைந்து பெருமானின் எல்லையற்ற ஆற்றலை நினைத்து இறைஞ்சிய போது, அவர்கள் அதற்கு முன்னம் செய்த தவறுகள் அனைத்தையும் மன்னித்த பெருமான், இலிங்க வடிவில் அவர்களுக்கு காட்சி தந்து அருளினார். இந்த கருணைச் செயல் இங்கே அருள் மழை என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை:

பிரமனும் திருமாலும் தங்களின் முன்னே எழுந்த நெடிய தழல் பிழம்பின் அடியையும் முடியையும் காண முயன்று அந்த முயற்சியில் தோல்வி அடைந்த பின்னர், சீர்காழி தலத்தில் விளங்கும் ஈசனிடம் இறைஞ்ச பெருமான் அவர்கள் பால் இறக்கம் கொண்டு இலிங்க உருவத்தில் காட்சி கொடுத்த கருணைச் செயலை அடியேனது மனம் நினைத்து, அவரது நினைவில் பொருந்துகின்றது.

பாடல் 11:

தேரர் அமணரைச்

சேர்வில் கொச்சை மன்

நேரில் கழல் நினைத்து

ஓரும் உள்ளமே

விளக்கம்:

மன்=மன்னன்; நேரில்=ஒப்பு அற்ற; ஓரும்=தியானிக்கும்; சேர்வில்=சேராத; ஓர்தல் என்ற சொல்லுக்கு ஆராய்தல் என்றும் பொருள். பெருமானே முழுமுதற்கடவுள் என்றும் சிவநெறியே முக்திக்கு அழைத்துச் செல்லும் நெறி என்றும் மற்ற நெறிகள் பிறவிக்கு காரணமாக இருப்பன என்றும் உள்ள உண்மை நிலையினை ஆராய்ந்து தெரிந்து கொண்டு பெருமானை எப்போதும் தியானித்தல் என்று பொருத்தமாக பொருள் கூறுவார்கள். முதலில் பெருமானை இகழ்ந்து பேசினும் தங்களது தவறுகளை உணர்ந்து வருந்திய பிரமன் மற்று திருமாலுக்கு அருள் புரிந்ததை குறிப்பிடும் சம்பந்தர் இந்த பாடலில். புத்தர்களையும் சமணர்களையும் பெருமான் சென்று சேரார் என்று கூறுகின்றார். இவர்கள் இருவரும் எப்போதும் பெருமானை பழிப்பதும், தாங்கள் செய்வது தவறு என்பதை உணராத நிலையில் இருப்பதுமே, பெருமான் அவர்களைச் சென்று சேராததன் காரணம் என்பதை மறைமுகமாக சம்பந்தர் உணர்த்துவது ரசிக்கத் தக்கது.

பொழிப்புரை:

புத்தர்கள் மற்றும் சமணர்களை சென்று அணுகாதவனும், கொச்சைவயம் என்று அழைக்கப் படும் சீர்காழி தலத்தின் அரசனும் ஆகிய ஒப்பற்ற இறைவனின் திருவடிகளை நினைத்து அடியேனின் உள்ளம் தியானம் செய்கின்றது.

பாடல் 12:

தொழு மனத்தவர்

கழுமலத்துறை

பழுதில் சம்பந்தன்

மொழிகள் பத்துமே

விளக்கம்:

பத்து=பற்றுக்கோடு; பழுதில்=குற்றமற்ற

பொழிப்புரை:

பெருமானைத் தொழுது உய்வினை அடையும் அடியார்கள் நிறைந்த கழுமலம் என்று அழைக்கப்படும் நகரில் உறைபவனும், குற்றமற்ற பாடல்களை பாடுவோனும் ஆகிய சம்பந்தனது பாடல்கள் உயிருக்கு பற்றுக்கோடாக விளங்குகின்றன.

முடிவுரை:

முதல் பாடலில் பெருமானை துதித்து பாடுமாறு உலகத்தவரைத் தூண்டும் சம்பந்தர், இரண்டாவது பாடலில் பெருமானது திருவுருவத்தை நேரில் கண்டு பேணுமாறும், மூன்றாவது பாடலில் அவனே நமது தலைவன் என்று புரிந்து கொண்டு பணிந்து வணங்குமாறும், நான்காவது பாடலில் அவன் ஒருவனே என்றும் அழியாமல் நிலையாக இருப்பவன் என்றும் அறிந்து கொள்ளுமாறும் ஏழாவது பாடலில் இறைவனை தினமும் நினைத்து பணிந்து வணங்குமாறும், எட்டாவது பாடலில் அவனது திருநாமங்களை என்றும் மறவாது நினைக்குமாறும், பதினோராவது பாடலில் இறைவனின் ஒப்பற்ற திருவடிகளை நினைக்குமாறும் நமக்கு அறிவுரை கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் மாற்று உரைக்கும் பொன் போன்று ஒப்பற்றவன் பெருமான் என்றும் ஆறாவது பாடலில் உமை அன்னையின் கணவன் என்றும், ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் இராவணன், பிரமன் மற்றும் திருமால் செய்த தவறுகளை மன்னித்து அவர்களுக்கு அருள் மழை பொழிந்ததை நினைவூட்டும் பெருமான், பதினோராவது பாடலில் பெருமான் தன்னை இகழ்ந்து பேசுவோரைச் சென்று சாரார் என்று கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்து பாடல்கள் நமக்கு பற்றுக்கோடாக இருந்து, சிவபெருமானின் தன்மைகளை புரிந்து கொண்டு அவனை வணங்கி வாழ்வினில் உய்வினை அடைய உதவும் என்று சம்பந்தர் கூறுகின்றார். சம்பந்தர் காட்டிய வழியில் சென்று பெருமானை வணங்கி சிவநெறியில் நின்று வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Aranai Ulguveer
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

அரனை உள்குவீர்


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: