Go Back

22/03/21

நின்று மலர் தூவி


பின்னணி:

எருக்கத்தம்புலியூர் இறைவனை வணங்கி படையார் தருபூதப் படை என்று தொடங்கும் பதிகம் பாடிய பின்னர், அங்கிருந்து புறப்பட்டு திருமுதுகுன்றம் செல்ல விருப்பம் கொண்ட திருஞானசம்பந்தர், அவ்வாறு செல்கையில் பல தலங்கள் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். ஆனால் அந்த தலங்களின் விவரங்களும் ஆங்கே அருளப்பட்ட பதிகங்களின் விவரங்களும் நமக்கு கிடைக்கவில்லை. செல்லும் வழியில் முதுகுன்று சென்று அடைவோம் என்று முதுகுன்றத்து இறைவனைப் போற்றி பதிகம் பாடியவாறே சென்றார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. இந்த பதிகம் மத்தா வரை நிறுவிக்கடல் என்று தொடங்கும் (1.12) பதிகமாகும். இந்த தலத்தின் இறைவனைக் குறிப்பிட்டு ஞான சம்பந்தர் அருளிய ஏழு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. இந்த தலம் சென்ற சம்பந்தர், முதுகுன்றினை வலம் வந்த பின்னர் திருக்கோயிலுக்கு சென்றதாக சேக்கிழார் கூறுகின்றார். வான நாயகர்=தேவர்களின் தலைவர்; போனகம்=சோறு; பிராட்டியால், ஞானம் கலந்து ஊட்டப்பட பால் சோற்றினை உட்கொண்ட சம்பந்தர் ஞான போனகர் என்று அழைக்கின்றார்.

வான நாயகர் திருமுதுகுன்றினை வழிபட வலம்

கொள்வார்

தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக்குறள் துணை மலர்

மொழிந்து ஏத்தி

ஞான போனகர் நம்பர் தம் கோயிலை நண்ணி அங்கு

உள் புக்குத்

தேன் அலம்பு தண் கொன்றையார் சேவடி திளைத்த

அன்பொடு தாழ்ந்தார்

இந்த பதிகத்தினை இருக்குக்குறள் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். குறள் என்றால் சிறியது என்று பொருள். சிறிய அடிகளைக் கொண்ட பாடல் என்பதை உணர்த்தும் வண்ணம் குறள் என்று அழைக்கப் படுகின்றது. ஒவ்வொரு அடியிலும் இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல். மந்திரம் என்ற சொல், சொல் சுருக்கம் உள்ளது என்ற பொருளினைத் தரும். இருக்கு வேதத்தில் உள்ள மந்திரங்கள் அளவில் சிறியதாக இருக்கும் நிலை பற்றி இந்த பாடலையும் இருக்குக்குறள் என்று பெயரிட்டு சேக்கிழார் அழைத்தார் போலும். மந்திரங்கள் எண்ணுவர் எண்ணத்தை ஈடேற்றும் வல்லமை கொண்டது போன்று இந்த பதிகமும் அமைந்துள்ளது என்று தண்டபாணி தேசிகர் அவர்கள் கூறுவார்கள். இந்த பதிகம் உட்பட மொத்தம் ஏழு பதிகங்கள் திருவிருக்குக்குறள் பதிகங்களாக கருதப் படுகின்றன. அரனை உள்குவீர் என்று தொடங்கும் பிரமபுரம் பதிகமும் (1.90), சித்தம் தெளிவீர்காள் என்ற திருவாரூர்ப் பதிகமும் (1.91), வாசி தீரவே என்று தொடங்கும் வீழிமிழலைப் பதிகமும் (1.92) நின்று மலர் தூவி என்று தொடங்கும் இந்த பதிகமும் (1.93), நீலமா மிடற்று என்று தொடங்கும் திருவாலவாய்ப் பதிகமும் (1.94} தோடொர் காதினன் என்று தொடங்கும் இடைமருதுப் பதிகமும் (1.95), மன்னியூர் இறை என்று தொடங்கும் அன்னியூர் பதிகமும் (1.96) அத்தகைய பதிகங்கள் ஆகும். சம்பந்தர் பதிகங்கள் அனைத்துமே இருக்கு வேதத்தின் சாரமாக கருதப் படுவதாக சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் கூறுகின்றார். மேற்கண்ட இந்த பாடலில் சேக்கிழார் இருக்குக் குறள் துணை மலர் என்று குறிப்பிடுகின்றார். ஒன்றுக்கொன்று துணையாக உள்ள இரண்டு சீர்கள் கொண்ட அடிகள் என்பதை உணர்த்தும் வண்ணம் சேக்கிழார் இவ்வாறு கூறுகின்றார். எனவே இந்த பதிகங்கள் நான்கு அடிகள் கொண்ட பாடல்களே. மொழிந்து என்ற சொல்லினை திருக்கோயிலை நண்ணிய செயலுக்கு முன்னம் கூறியமையால், இந்த பதிகம் குன்றினை திருவலம் செய்த போது அருளிய பதிகமாக கருதப் படுகின்றது. மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள கொல்லி பண்ணுக்குரிய இரண்டு பதிகங்கள் (3.40 & 3.41) திருவிருக்குக்குறள் வகையச் சார்ந்தவையாக கருதப் படுகின்றன.

திரு கி.வா.ஜா அவர்களும் தனது திருமுறை மலர்கள் என்ற நூலில் இரண்டு சீர்கள் கொண்டுள்ள அடிக்கு குறளடி என்ற பெயர் உள்ளது என்றும், மந்திரத்தைப் போன்று சுருங்கிய உருவத்தில் அமைந்திருப்பதால் இந்த பதிகத்து பாடல்களை மந்திரம் என்று கூறுவார்கள் என்றும் கூறுகின்றார். மேலும் மந்திரத்தை இருக்கு என்றும் அழைப்பார்கள் என்றும் மந்திரமாக அமைந்துள்ள குறுகிய அடிகளைக் கொண்ட இப்பாடல்கள் திருவிருக்குக்குறள் என்று அழைக்கப் படுவதாக அவர் கூறுகின்றார். அடிகள் தோறும் நான்கு சீர்கள் கொண்டுள்ள திருமந்திரப் பாடல்கள், மந்திரமாகக் கருதப் படுவதை நாம் அறிவோம்

விருத்தாச்சலம் என்று அனைவரும் அறிந்த தலமே முதுகுன்றம் என்று தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப் படுகின்றது. பல ஊழிகளைக் கடந்த நின்ற தன்மை குறித்து இந்த தலம் முதுமையான குன்று உடையது என்று பொருள் பட முதுகுன்றம் என்று அழைக்கப் பட்டது. அழகான தமிழ்ப் பெயரினை விடுத்து விருத்தாச்சலம் என்று வடமொழிச் சொல்லால் இன்று அனைவராலும் அழைக்கப் படுவது பரிதாபமான நிலை. இறைவனின் திருநாமம் பழமலைநாதர் இறைவியின் திருநாமம் பெரியநாயகி.

பாடல் 1:

நின்று மலர் தூவி

இன்று முதுகுன்றை

நன்றும் ஏத்துவீர்க்கு

என்றும் இன்பமே

விளக்கம்:

நின்று=சென்று அடைந்து முன்னே நின்று; இன்று என்று குறிப்பிட்டு நாம் உடனே முதுகுன்றம் செல்ல வேண்டும் என்று சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். மேலும் ஒருநாள் அவ்வாறு இறைவனை மலர் தூவி வழிபட்டால், வாழ்நாள் முழுவதும் இன்பமாக இருக்கலாம் என்று கூறுகின்றார். சம்பந்தரின் திருவாக்கு என்றும் பொய்ப்பதில்லை என்பதால் நாம் அவரது கூற்றினை செயல்படுத்தி பலன் அடைவோமாக.

பொழிப்புரை:

இன்றே முதுகுன்றம் தலம் சென்று, அங்குள்ள குன்றினை வலம் வந்து, பழமலைநாதரை வழிபட்டு அவரது திருவடிகளில் மலர்களைத் தூவி வணங்கும் அடியார்களுக்கு வாழ்வினில் என்றும் இன்பமே நிலைக்கும்

பாடல் 2:

அத்தன் முதுகுன்றை

பத்தியாகி நீர்

நித்தம் ஏத்துவீர்க்கு

உய்த்தல் செல்வமே

விளக்கம்:

அத்தன்=தலைவன்; நித்தம்=தினமும்; உய்த்தல்=செல்வம். இந்த இறைவனை குறித்து செய்யப்படும் வழிபாடு இன்பம் அளிக்கும் என்று முந்திய பாடலில் கூறிய சம்பந்தர், இந்த பாடலில் செல்வம் பெருகும் என்று கூறுகின்றார். செல்வம் என்ற சொல் இம்மையில் பயன் அளிக்கும் பொருட்செல்வம் மற்றும் மறுமையில் பயன்படும் அருட்செல்வம் ஆகிய இரண்டையும் குறிக்கும் என்ற விளக்கம் மிகவும் பொருத்தமானதே.

பொழிப்புரை:

முதுகுன்றத்தின் தலைவனாக விளங்கும் இறைவன் பால் பக்தி கொண்டு அவனை தினமும் புகழ்ந்து வாழ்த்தி வழிபடும் அடியார்களது செல்வம் பெருகும்.

பாடல் 3:

ஐயன் முதுகுன்றைப்

பொய்கள் கெட நின்று

கைகள் கூப்புவீர்

வையம் உமதாமே

விளக்கம்:

ஐயன்=தலைவன்; வையம்=உலகம்; பொய்கள்=வஞ்சனையான சிந்தனைகள்; இறைவனின் சன்னதி முன்னர் பொய்கள் கெட நின்று வழிபட வேண்டும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். ஏன் அவ்வாறு பொய்கள் கெட நின்று வழிபடவேண்டும் என்பதற்கு அப்பர் பிரான் விடை அளிக்கும் பாடல் (6.56.5) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. வஞ்சனை எண்ணங்கள் உடைய நெஞ்சினில் புகுவதை இறைவன் தவிர்ப்பான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். எனவே இறைவன் நமது மனதினில் புகவேண்டும் என்று நாம் விரும்பினால் பொய்கள் கெட நாம் அவனை வழிபடவேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது

மை சேர்ந்த கண்ட மிடற்றாய் போற்றி மாலுக்கு

ஓராழி ஈந்தாய் போற்றி

பொய்ச் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என்

உள்ளத்து இருந்தாய் போற்றி

மெய் சாரப் பால் வெண்ணீறாடீ போற்றி மிக்கார்கள்

ஏத்தும் விளக்கே போற்றி

கை சேர் அனல் ஏந்தியாடீ போற்றி கயிலை

மலையானே போற்றி போற்றி

வஞ்சனை உடைய மனத்துடன் தன்னைத் தொழும் அடியார்களை இனம் கண்டுகொண்டு நாணி நிற்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் கூறுவதும் (5.90.9) நமது நினைவுக்கு வருகின்றது. பொக்கம்=பொய்ம்மை. தனது நடிப்பினால் ஒருவன் மனிதர்களை ஏமாற்றலாம். மனத்தளவில் இருக்கும் வஞ்சனையை மறைத்து, ஒருவரை மதிப்பது போலும் வணங்குவது போல் நடித்து ஏமாற்றுவது எளிது. ஆனால் இறைவனை அவ்வாறு ஏமாற்ற முடியாது என்று அப்பர் பிரான் நமக்கு எச்சரிக்கை தருகின்றார். நெக்கு=உள்ளம் நெகிழ்ந்து

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே

புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்

பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு

நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே

இதே கருத்து இன்னம்பர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் பாடலிலும் (5.21.8) உணர்த்தப்படுகின்றது. கீழ்க்கணக்கு=சிறு வரிகளால் எழுதப்படும் குறிப்பு. இன்னம்பர் தலத்தில் உறையும் இறைவனுக்கு கீழ்க்கணக்கர் என்பது ஒரு திருநாமம். இந்த தலத்து இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெயரும் உண்டு. அதனை உணர்த்தும் வகையில் எழுதும் கீழ்க்கணக்கு என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவதை நாம் உணரலாம். இந்த பாடலில் மனம், மொழி மற்றும் மெய்யினால் செய்யப்படும் வழிபாடு உணர்த்தப்படுகின்றது. மனத்தினால் இறைவன் பால் அன்பு கொண்டு, உடலால் தொழுதும் மலர்கள் தூவியும், வாயினால் அழுதும் அவனது திருநாமங்களை அரற்றியும் வழிபாடு செய்ய வேண்டும் என்று அப்பர் பெருமான் கூறுகின்றார்

தொழுது தூமலர் தூவித் துதித்தி நின்று

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்

பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கும் இறைவன், தன்னை வழிபடும் அடியார்களின் வழிபாட்டு நிலையையும் அறிந்து குறித்துக் கொள்கின்றான் என்று மேற்கண்ட இன்னம்பர் பதிகத்து பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு உணர்த்துவதன் மூலம் வஞ்சனையான வழிபாட்டினை, தவிர்க்குமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். இதே கருத்தினை உள்ளடக்கிய திருமந்திரப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கண்காணியாக உலகெங்கும் நிறைந்து நிற்கும் இறைவனின் தன்மையை உணர்ந்தவர்கள் தவறேதும் செய்ய மாட்டார்கள் என்று திருமூலர் இங்கே கூறுகின்றார்.

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்

கண்காணி இல்லா இடம் இல்லை காணுங்கால்

கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.

வஞ்சனை நிறைந்த நெஞ்சர்க்கு இறைவன் அரியவன் என்று அப்பர் பிரான் கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.07.1) குறிப்பிடுகின்றார் கரவு=கள்ளம், வஞ்சனை. இறைவனுக்கு உரிய நமது மனம், மொழி மெய்களை வேறு பொருட்களுக்கு உரித்தாக்குதல் வஞ்சனையான செயலாக அப்பர் பெருமானால் கருதப் படுகின்றது. அவ்வாறு இருப்பவர்களின் நெஞ்சத்தை வலிமையான நெஞ்சம் (கல் நெஞ்சம்) என்று இங்கே அப்பர் பெருமான் சாடுகின்றார்..

கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானைக் கரவார் பால்

விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை

அரவாடச் சடை தாழ அங்கையினில் அனலேந்தி

இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே

பொழிப்புரை:

முதுகுன்றத்து தலைவனை, மனதினில் வஞ்சனை ஏதுமின்றி தங்களது கைகளை தலைக்கு மேல் உயரத்தி கூப்பித் தொழும் அடியார்களுக்கு உலகமே உரிமைப் பொருளாக மாறிவிடும்.

பாடல் 4:

ஈசன் முதுகுன்றை

நேசமாகி நீர்

வாச மலர் தூவப்

பாச வினை போமே

விளக்கம்:

முதல் மூன்று பாடல்களில் முதுகுன்றத்து பெருமானைத் தொழும் அடியார்கள் இம்மையில் அடையும் பயன்களை குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் பெருமானைக் குறித்து நாம் செய்யும் வழிபாடு மறுமையில் இன்பத்திற்கு வழி வகுக்கும் என்று கூறுகின்றார். வீடுபேறு அடைவதற்கு முதல் படியாக கருதப் படுவது பாச நீக்கம். உலகத்து உயிர்கள் மீதும் உலகப் பொருட்கள் மீதும் நாம் வைத்துள்ள பாசத்தை நீக்குவது எளிதான செயல் அல்ல. இறைவனின் அருளும் துணையும் இருந்தால் தான் அந்த செயல் நிகழும். எனவே தான் இறைவன் பால் அன்பினை வளர்த்துக்கொண்டு அவனை வழிபட வேண்டும் என்று சம்பந்தர் நம்மை வழிநடத்துகின்றார். முந்தைய பாடலில் சம்பந்தர் உணர்த்திய வண்ணம் மனதினில் வஞ்சனையை நீக்கிக்கொள்ளும் நாம் அடுத்து இறைவன் பால் அன்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த பாடலில் கூறப்படும் அறிவுரை. ஈசன்=தலைவன், பசுபாசம் நீங்கப் பெற்று பதிபாசம் உடையவர்களாக நாம் மாற வேண்டும் என்பதே இங்கே சொல்லப்படும் அறிவுரை. பசுபாசம்=உலகம் மற்றும் உலகப் பொருட்களின் மீது உயிர்கள் வைக்கும் அன்பு.

பொழிப்புரை:

நமது தலைவனாகிய முதுகுன்றத்து இறைவன் பால் அன்பினை வளர்த்துக் கொண்டு, அவன் திருவடிகளில் நறுமணம் மிகுந்த மலர்களைத் தூவி வழிபடும் அடியார்களின் பசுபாச உணர்வுகளும் அதனால் ஏற்படும் வினைகளும் தீர்ந்துவிடும்,

பாடல் 5:

மணியார் முதுகுன்றைப்

பணிவார் அவர் கண்டீர்

பிணி ஆயின கெட்டுத்

தணிவார் உலகிலே

விளக்கம்:

தணிவார்=தாழ்வு என்ற தன்மை; தணிவார் என்ற சொல்லுக்கு தாழ்வு எனும் தன்மை அடைந்து ஆணவமலத்தின் வலிமை அடங்கும் நிலை என்று சிவக்கவிமணி அவர்கள் விளக்கம் கூறுகின்றார். மிகவும் பொருத்தமானதும் அழகானதும் ஆகிய விளக்கம். பழைய வினைகளை நீக்கிக் கொள்ளும் உயிர், தன்னை வினைகள் இனிமேல் சாராத வண்ணம் செயல்பட வேண்டும் அல்லவா. அதற்கு அடக்கம் மிகவும் அவசியம். யான் எனது என்ற உணர்வுகள் தாமே, நம்மை செருக்கு கொள்ளச் செய்து வினைகள் பெருகுவதற்கு அடி கோலுகின்றன. யான் எனது என்ற அந்த உணர்வுகளையே இங்கே பிணி என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அந்த உணர்வுகள் நீங்கி, நடப்பது அனைத்தும் இறைவன் செயல் என்ற பக்குவத்துடன் வாழ்க்கையை எதிர்கொண்டால், ஆணவ மலம் அடங்கி நிற்கும். இறைவன் மற்றும் உயிர்கள் போன்று ஆணவ மலமும் அநாதி என்றும் அழியாது நிற்கும் என்பதால், ஆணவ மலத்தை நம்மால் ஒழிக்க முடியாது, அடக்கத் தான் முடியும் என்று செய்தியும் இங்கே வழங்கப் படுகின்றது. இவ்வாறு தற்போதும் நீங்கி சிவபோதத்தினை வளர்த்துக் கொண்டு வாழும் வாழ்க்கை, வீடுபேறு அடைவதற்கு அடுத்த படியாகும். அத்தகைய அடியார்களைக் கண்டு, அவர்களை முன்மாதிரியாக ஏற்று நமது வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற அறிவுரை இங்கே வழங்கப் படுகின்றது. மணி=அழகு;

பொழிப்புரை:

மணி போன்று அழகிய முதுகுன்றத்துப் பெருமானை பணிந்து வாழும் அடியார்கள், யான் எனது என்ற தங்களது பிணிகள் தீர்க்கப் பெற்று பற்றற்றவர்களாக அடக்கத்துடன் உலகில் வாழ்வதை, உலகத்தவரே நீங்கள் காண்பீர்களாக. அத்தகைய அடியார்களைக் காணும் நீங்கள் அவர்களை பின்பற்றி வாழத் தொடங்குவீராக.

பாடல் 6:

மொய்யார் முதுகுன்றில்

ஐயா என வல்லார்

பொய்யார் இரவோர்க்குச்

செய்யாய் அணியாளே

விளக்கம்:

செய்யாள்=திருமகள்; மொய்க்கும்=திரண்டு வந்து நெருக்கும்; இறை வழிபாடு தீய குணங்களை நீக்கி நற்குணங்களை வளர்க்கும் என்பதை இந்த பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார். உலோபியாக இருந்து அடுத்தவர்க்கு ஏதும் கொடுக்காமல் வாழ்வது உயிரின் ஆறு உட்பகைகளில் ஒன்றாக கருதப் படுகின்றது. எனவே அடுத்தவர்க்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொண்டால், இறைவன் அவ்வாறு நாம் அடுத்தவர்க்கு உதவ தேவையான செல்வத்தை நமக்கு அருளுவார் என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார். இவ்வாறு சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் திருவையாறு பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது.

பொருள் இல்லாதவர்களுக்கு பொருள் உள்ளவர்கள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு ஈந்து உதவுவார்களை உலகம் புகழ்கின்றது. அவர்களின் மனதினில், அடுத்தவர்க்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை உருவாக்குபவர் இறைவன் என்று அப்பர் பிரான் ஐயாற்றின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (4.38.10) குறிப்பிடுகின்றார். தங்களிடம் பொருள் இருந்தும், இரப்பவர்களுக்கு உதவாதவர்களை உலகம் உலோபி என்று இகழ்கின்றது. அவ்வாறு இருத்தல் கொடிய செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், காமம் முதலான ஆறு குற்றங்களில் ஒன்றாக உலோபம் கருதப்படுகின்றது. இந்த குற்றத்தை இறைவன் பொறுக்கமாட்டார் என்றும் அதற்கு உரிய தண்டனை அளிப்பார் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அடுத்தவர்க்கு கொடுத்து உதவுவோர்க்கு இறைவனின் அருள் உண்டு என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இறைவன், கரப்பவர்க்கு தண்டனை அளிப்பார் என்பதை உணர்த்தும் விதமாக கங்கையைத் தனது சடையில் மறைத்த நிகழ்ச்சி இங்கே நயமாக குறிப்பிடப் படுகின்றது.

கபில முனிவரை, தங்களது தந்தை சகரன் செய்யவிருந்த அசுவமேத யாகத்து குதிரையைத் திருடியவன் என்று தவறாக கருதி, அவர் மீது பாய்ந்த சகரனின் புத்திரர்கள் அனைவரும் தியானத்திலிருந்து விழித்த கபிலரின் கண் பார்வையால் சாம்பலாக எரிந்தனர். தனது நீரினில் அந்த சாம்பலைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதி வழங்கும் தன்மை கங்கை நதிக்கு இருந்ததால் தான், பகீரதன் கங்கை நதியை பூவுலகத்திற்கு, தவம் செய்து வரவழைக்க முயற்சி செய்தான். ஆனால் அவ்வாறு உதவ மறுத்த கங்கை நதிக்கு பாடம் கற்பிக்கும் வகையில், வேகமாக இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் இறைவன் சிறை வைத்த நிகழ்ச்சி இங்கே நயமாக உணர்த்தப் படுகின்றது.

இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும்

வைத்தார்

கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள்

வைத்தார்

பரப்பு நீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம்

வைத்த

அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன்

ஐயாறனாரே

கங்கை நதியினைத் தனது சடையில் அடக்கிய பின்னர் அதனை சிறிதுசிறிதாக விடுவித்து, நிலத்தில் பாயச் செய்து புண்ணிய தீர்த்தமாக உலகோர் போற்றும் நிலைக்கு அருள் புரிந்தவர் பெருமான் தானே; மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியின் வேகத்தை இறைவன் தடுத்துத் தனது சடையில் அடக்கிக் கொண்டு சிறிய நீரோடையாக வெளியிட்டதன் பயனாக இன்றும் கங்கை நதி ஓடிக்கொண்டு இருக்கின்றது, அந்த நதியில் குளிப்பவர்களும் இதனால் பயனடைவதாக நம்பப் படுகின்றது. இவ்வாறு கங்கை நீர் ஏற்றம் பெறுவதற்கு காரணமாக இறைவன் இருந்த நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு அவரது சோற்றுத்துறை பதிகத்தின் ஒரு பாடலை (4.41.6) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், மிகவும் ஆரவாரத்துடன் வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் ஏற்று பின்னர் அதனை விடுவித்த தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கங்கை நதி அவ்வாறு விடுபட்டதால் தானே, புண்ணிய தீர்த்தமாக உலகோர் கருதப்படும் நிலைக்கு உயர்ந்தது. கங்கையில் நீராடுவோர் தங்களது பாவங்கள் தீர்க்கப் பெற்றாலும், அவர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு கங்கை நதி எவ்வகையிலும் உதவி செய்ய முடியாது. பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து எவரேனும் விடுதலை பெறவேண்டும் என்றால், பெருமானின் திருநாமங்களை பிதற்ற வேண்டும் என்ற செய்தியையும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த நிலவுலகத்திலிருந்து நிலையாக பிரிக்கப்பட்டு நிலையாக முக்தி நிலைக்கு செல்ல வேண்டும் என்பதே உயிரின் அவா.

பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை

பங்கன்

பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் தன் திறமே

ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை

ஏற்றுத்

தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத்

துறையனாரே

பொழிப்புரை:

அடியார்கள் திரண்டு வந்து நெருங்கி நின்று வணங்கும் முதுகுன்றத்து இறைவனை, தலைவனே என்று அழைத்துத் தொழும் அன்பர்கள் தங்களிடம் உள்ள செல்வத்தை, இல்லை என்று சொல்லாத வகையில் இரப்பவர்களுக்கு அளித்து உதவுவார்கள். அவர்கள் மேன்மேலும் பலருக்கு உதவும் வண்ணம், திருமகள் அவர்களுக்கு அணிகலனாகத் திகழ்ந்து அவர்களது செல்வத்தினை மேலும் பெருக்குவாள்.

பாடல் 7:

விடையான் முதுகுன்றை

இடையாது ஏத்துவார்

படையாயின சூழ

உடையார் உலகமே

விளக்கம்:

இடையாது=இடைவிடாது; பதிகத்தின் இரண்டாவது பாடலில் பெருமானைத் தொழுவதால் செல்வம் பெருகும் என்று கூறிய சம்பந்தர் அதற்கு அடுத்த பாடலில் அததகைய அடியார்கள் பால் உலகம் வசப்படும் என்று கூறியது போன்று, ஆறாவது பாடலில் செல்வம் வந்தடையும் என்று கூறிய சம்பந்தர் இந்த பாடலில் படை சூழ உலகத்து வேந்தராக மதிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றார். பெருமானை குறித்து செய்யப்படும் வழிபாடு செல்வம் மற்றும் வீரத்தினைப் பெற்றுத் தரும் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

இடபத்தினை வாகனமாகக் கொண்டுள்ள முதுகுன்றத்து இறைவனை இடைவிடாது புகழ்ந்து போற்றும் அடியார்கள், வலிமையான படைகள் உடையர்களாய் உலகத்தினை ஆட்சி செய்யும் தன்மையினை அடைவார்கள்.

பாடல் 8:

பத்துத் தலையோனை

கத்த விரல் ஊன்றும்

அத்தன் முதுகுன்றை

மொய்த்து பணிமினே

விளக்கம்:

மொய்த்து=நெருங்கி; இந்த பாடல் நமக்கு கூறும் அறிவுரையாக அமைந்துள்ளது, மேலே குறிப்பிடப்பட்ட ஏழு பாடல்களில், இறைவனைத் தொழுவதால் நாம் அடையவிருக்கும் பல பலன்களை கூறிய சம்பந்தர், இந்நாள் வரை இறைவனை பணியாது இருக்கும் மாந்தர்களை, இறைவனை நெருங்கிச் சென்று பணியுமாறு அறிவுரை கூறுகின்றார்.

பொழிப்புரை:

பத்து தலைகள் உடைய அரக்கனாகிய இராவணனை, அவன் கதறி அழும் வண்ணம் கயிலை மலையின் கீழே அடர்த்து தனது கால் விரலை ஊன்றிய நமது தலைவனாகிய இறைவனை, முதுகுன்றத்து மறையவனை, உலகத்தவரே நீங்கள் நெருங்கிச் சென்று பணிவீர்களாக.

பாடல் 9:

இருவர் அறியாத

ஒருவன் முதுகுன்றை

உருகி நினைவார்கள்

பெருகி நிகழ்வோரே

விளக்கம்:

இருவர்=திருமால் மற்று பிரமன். இறைவன் பால் அன்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பதிகத்தின் நான்காவது பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் அத்தகைய அன்பு நமது உள்ளத்தினை உருக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் அறிய முடியாத வண்ணம் நீண்ட நெடுந்தழலாக நின்ற ஒப்பற்ற முதுகுன்றத்து இறைவனை, தங்களது மனம் உருக நினைக்கும் அடியார்கள் பலவகையான பேறுகள் பெற்று வாழ்வார்கள்.

பாடல் 10:

தேரர் அமணரும்

சேரும் வகை இல்லான்

நேரில் முதுகுன்றை

நீர் நின்று உள்குமே

விளக்கம்:

உள்குதல்=தியானித்தல்; தேரர்=புத்தர்; நேரில்=நேர்+இல், ஒப்பில்லாத

பொழிப்புரை:

புத்தர்களும் சமணர்களும் தங்களது வினைப்பயனால் பெருமானைச் சென்று அடைய முடியாமல் நிற்கின்றனர்; அத்தகைய தீவினைகள் இல்லாதவராகிய நீங்கள் ஒப்பில்லாத முதுகுன்றத்து இறைவனை கண்டு வணங்கி அவனை குறித்து தியானம் செய்வீர்களாக.

பாடல் 11:

நின்று முதுகுன்றை

நன்று சம்பந்தன்

ஒன்றும் உரை வல்லார்

என்றும் உயர்வோரே

விளக்கம்:

நின்று என பதிகத்தின் முதல் பாடலைத் தொடங்கிய சமந்தர் கடைப் பாடலையும் நின்று என்றார் சொல்லுடன் தொடங்குகின்றார். இறைவன் உறையும் தலத்தினைச் சென்று அடைந்து முதுகுன்றை வலம் வந்த சம்பந்தர், பெருமானது நினைவுகளில் ஒன்றி பாடிய பாடல் என்பதை உணர்த்தும் வண்ணம், சம்பந்தன் ஒன்றும் உரை என்று குறிப்பிடுகின்றார். தான் வேறு பெருமான் வேறு அல்ல என்ற நிலையினை சம்பந்தர் அடைந்ததால் தான், அவரது பாடல்களும் ஓதுவார்க்கு பலவகையான பலன்கள் பெற்றுத் தரும் வண்ணம் அமைந்துள்ளன. நன்று=நல்ல பெருமையை உடைய. என்றும் என்பதற்கு இம்மை மற்றும் மறுமை என்று பொருள் கொள்ள வேண்டும்

பொழிப்புரை:

திருமுதுகுன்றம் சென்று ஆங்கே உள்ள இறைவனை வணங்கி, நல்ல பெருமைகளை உடைய ஞானசம்பந்தன், பெருமானுடன் ஒன்றிய உணர்வுடன், உரைத்த இந்த பதிகத்து பாடல்களை ஓதும் திறமை பெற்றவர், என்றும் (இம்மையிலும் மற்றும் மறுமையிலும்) உயர்வினை அடைவார்கள்.

முடிவுரை:

இந்த பதிகத்து பாடல்களில் முதுகுன்றை வழிபட்டு பலன் அடைய வேண்டும் என்று சம்பந்தர் உணர்த்துகின்றார். இந்த பழமையான தலமும், குன்றும், இறைவனைப் போன்று வணங்கத் தக்கன என்பது இங்கே கூறப்படுகின்றது. எனவே குன்றினை வலம் வருவது சிறப்பாக கருதப் படுகின்றது. சம்பந்தர் குன்றினை வலம் வந்த பின்னரே திருக்கோயிலின் உட்புறம் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதை நாம் இங்கே நினைவு கூர்வோம்.

பதிகத்தின் முதல் பாடலில் திருமுதுகுன்றத்திற்கு நம்மை அழைத்துச் சென்று குன்றையும் இறைவனையும் வணங்கச் சொல்லும் சம்பந்தர், அடுத்த பாடலில் பக்தியுடன் இறைவனை தினமும் வணங்க வேண்டும் என்றும் மூன்றாவது பாடலில் வஞ்சனைகள் ஏதும் இன்றி வணங்க வேண்டும் என்றும் நான்காவது பாடலில் அவன் மீது அன்பினை வளர்த்துக் கொண்டு காதலுடன் உளம் கசிந்து வணங்க வேண்டும் என்றும் படிப்படியாக நமது நிலையினை இறை வழிபாட்டினால் எவ்வாறு உயர்த்திக் கொள்வது என்பதை நமக்கு சொல்லிக் கொடுக்கும் அழகினை ரசிக்கலாம். ஐந்தாவது பாடலில் வினைகளை நீக்கிக் கொண்ட உயிர்கள் தற்போதம் நீங்கிய நிலையில் சிவபோதம் வளர்த்துக் கொண்டு வாழும் வழிக்கும் இறை வழிபாடு அழைத்துச் செல்லும் என்று கூறுகின்றார். ஆறாவது பாடலில் எளியோர்க்கு இரங்கி உதவும் வண்ணம் செல்வம் அவர்களுக்கு பெருகும் என்றும் ஏழாவது பாடலில் பலருக்கும் தலைவராக இருந்து ஆட்சி செய்யும் ஆற்றல் கூடுமென்றும் கூறுகின்றார். ஆறு மற்றும் ஏழாவது பாடல்களில் செல்வம் பெருகும் என்றும் வீரம் விளையும் என்று இறைவனைத் தொழும் அடியார்களுக்கு கிடைக்கும் பலன்களை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு இம்மையிலும் மறுமையிலும் பயனளிக்கும் இறைவனை சென்று தொழுமாறு எட்டாவது பாடலில் கூறுகின்றார். ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் இம்மையில் இன்பம் அளிக்கும் தன்மையை குறிப்பிடும் சம்பந்தர் கடைப் பாடலில் இந்த பதிகத்தினை உரைக்கும் அடியார்கள் பலவிதத்திலும் உயர்வு பெறுவர்கள் என்று முடிக்கின்றார். இந்த பதிகத்தினை ஓதி முதுகுன்றத்து முதியோனைத் தியானம் செய்து நாம் வாழ்க்கையில் பல விதத்திலும் உயர்ந்து மறுமையில் நமது உயிரினை உயர்த்திக் கொள்வதற்கும் முயற்சி செய்வோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Ninru Malar Thoovi
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

நின்று மலர் தூவி


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: