Go Back

22/03/21

வெந்த வெண்ணீறு


பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக ஈங்கோய்மலை சென்ற திருஞானசம்பந்தர், அந்த தலத்திற்கு அருகில் உள்ள பல்வேறு தலங்களும் சென்ற பின்னர் மேற்கு நோக்கிச் கொங்குநாடு சென்றார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. அவ்வாறு சென்ற போது அவர் முதலில் சென்ற தலம் கொடிமாடச் செங்குன்றூர் என்ற தலமாகும். இந்நாளில் திருச்செங்கோடு என்று அழைக்கப்படுகின்றது. ஞானசம்பந்தர் சென்ற மற்ற கொங்கு நாட்டுத் தலங்கள் திருநணா (பவானி), கரூர், பாண்டிக்கொடுமுடி என்பன. அந்நாளில் அரசர்கள் வாழும் பெருநகரமாக திருச்செங்கோடு நகரம் விளங்கியது என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். கொண்டல்=மேகம்; புரிசை=மதில்;

அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து

தெண்டிரை நீர்த்தடம் பொன்னித் தென்கரையாம் கொங்கினிடை

வண்டலையும் புனல் சடையார் மகிழ்விடங்கள் தொழுது அணைந்தார்

கொண்டல் பயில் நெடும்புரிசை கொடிமாடச் செங்குன்றூர்

திருஞானசம்பந்தர் வருகை அறிந்த அந்த நகரத்து அடியார்களும் மற்றவர்களும் மிகவும் மகிழ்ந்து, நெடிய தோரணங்கள் கொண்டு நகரினை அலங்கரித்து, வாழை கமுகு நீர்க்குடங்கள் இவை தாங்கியவர்களாக ஊர் எல்லையில் ஞானசம்பந்தரை வரவேற்றார்கள். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு, சிவபெருமான் உறையும் ஆலயத்திற்கு சென்றனர். இறைவனின் சன்னதியை அடைந்த திருஞானசம்பந்தர், ஆங்கே தரையில் விழுந்து இறைவனைப் பணிந்து எழுந்த பின்னர் விண்ணவரும் மண்ணவரும் புகழும் வண்ணம், இறைவனை குறித்து பதிகம் பாடினார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இறைவனின் சன்னதியில் பாடப்பட்ட கொடிமாடச் செங்குன்றூர் பதிகம் இந்த ஒரு பதிகம் தான். இந்த தலத்தின் மற்றொரு பதிகம் (திருநீலகண்டப் பதிகம்) பாடப்பட்ட சூழ்நிலையை விரிவாக நாம் பின்னர் காண்போம். தனது அடியார்களுக்கு வந்த குளிர் சுரத்தினை, திருஞானசம்பந்தர் பதிகம் பாடி அகற்றிய அதிசயம் நடைபெற்றது இந்த தலத்தில் தான்.

இந்த தலம் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து இருபது கி.மீ. தொலைவில் உள்ளது. நாமக்கல் ஊரிலிருந்து முப்பது கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டு இடங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. மலையின் மீது அமைந்துள்ள திருக்கோயில். கோயிலின் அருகே செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது. முருகப் பெருமானின் சிறந்த தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. செங்கோட்டு வேலவன் என்று அவர் அழைக்கப்படுகின்றார். இறைவன் மற்றும் இறைவியின் திருநாமம்; மாதிருக்கும் பாதியன், மாதொருபாகன், கோடு என்றால் மலை என்று பொருள். இங்குள்ள மலை செம்மை நிறத்தில் உள்ளதால் செங்கோடு என்றும், பாம்பின் வடிவம் பதிந்து இருப்பது போல் நாகாசலம் என்று அழைக்கப்படுகின்றது. ஆதிசேஷன், திருமால், துர்க்கை, முருகன், உபமன்யு முனிவர் பிருங்கி முனிவர் வழிபாட்டு இறைவனின் அருள் பெற்றார்கள் என்று தலபுராணம் கூறுகின்றது. நவபாஷாணத்தால் மூர்த்தம் அமைந்த தலங்கள், இந்த தலம் மற்றும் பழனி ஆகும். பழனியில் உள்ள முருகனாரின் மூர்த்தம் கருமை நிறத்திலும் இங்கே உள்ள மூர்த்தம் வெண்மை நிறத்திலும் காணப்படுகின்றது. நவபாஷணத்தின் விசேட மருத்துவ குணத்தின் காரணமாக, இந்த மூர்த்தங்களுக்கு செய்யப்படும் அபிஷேகப் பொருட்களும் மருத்துவ குணம் கொண்டவையாக விளங்குவது இந்த இரண்டு தலங்களின் சிறப்பாகும். சன்னதியில் மாதொரு பாகனின் உருவத்திற்கு அருகில் பிருங்கி முனிவரின் உருவச்சிலையை காணலாம், ஊன்று கோல் உடையவராக எலும்புக் கூட்டின் தோற்றத்தில் முனிவர் இருப்பதை நாம் காணலாம். அஜந்தாக் குகைச் சிற்பங்களில் மாதொரு பாகன் மற்றும் பிருங்கி முனிவரின் உருவங்கள் இருப்பதிலிருந்து, இந்த மாதொருபாகனின் திருக்கோலம் மிகவும் சிறப்பாக அனைவராலும் கருதப்பட்டது என்பதை நாம் உணரலாம். பல கோயில்களில் மாதொருபாகனின் உருவம் கோஷ்ட மூர்த்தமாக காணப்படுகின்றது. சில கோயில்களில் செப்புச் சிலையாகவும் நாம் இதனை காணலாம்.

பிருங்கி முனிவர் சிவபெருமான் ஒருவரையன்றி வேறு எவரையும் வழிபடலாகாது என்ற பிடிவாதத்துடன் இறைவனை மட்டுமே வணங்கி வந்தார். பெருமானை மட்டுமே வலம் வந்து வழிபடுவராக அவர் திகழ்ந்தார். சிவபெருமானின் அருகில் பார்வதி தேவி இருந்த போதிலும் அம்மையை வழிபடாமல் பெருமானை மட்டும் வணங்கி வந்தார். இவரது திடமான கொள்கையை சோதனை செய்யும் பொருட்டு, அம்மையும் அப்பனும் மிகவும் நெருக்கமாக அமர்ந்த தருணத்தில், முனிவர், அம்மையை வலம் வருவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன், வண்டு உருவம் எடுத்து, இருவர்க்கும் இடையில் இருந்த சிறிய இடைவெளியில் புகுந்து இறைவனை மட்டுமே வலம் வந்தார். இதனைக் கண்ட பார்வதி தேவிக்கு மிகவும் கோபமும் வருத்தமும் ஏற்பட்டது. பெருமானின் திருவுடலில் ஒரு அங்கமாக தான் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற வருத்தமும், முனிவரின் செய்கையால் அவர் மீது கோபமும் உண்டாகியது. முனிவரைச் சினந்த தேவி, தனது கூறாகிய சக்தியை முனிவரின் உடலிலிருந்து நீக்கினாள். அதனால் வலிமை இழந்த முனிவர் நிற்கவும் முடியாமல் தடுமாறினார். முனிவர் கீழே விழாது நிற்க, இறைவன் அவருக்கு ஊன்றுகோல் அருளினார். பின்னர் இறைவன், சக்தி இல்லையேல் சிவம் இல்லை; சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்ற உண்மையை உணராது, சக்தி வழிபாட்டினை தவிர்ப்பது தவறு என்பதை முனிவருக்கு உணர்த்தினார். முனிவரும் தனது தவறை உணர்ந்து, அன்னையிடம் மன்னிப்பு கேட்டார். முனிவரை மன்னித்த அம்பிகை, அவர் இழந்த சக்தியை மீண்டும் அவருக்கு அளித்தாள். பின்னர் அம்பிகை இறைவனை வேண்டி தவம் செய்ய, இறைவன் இறைவியைத் தனது உடலின் ஓர் பாகத்தில் ஏற்றுக்கொள்வதாக வாக்களித்தார். அம்மையை அப்பன் தனது உடலின் வலது பாகத்தில் ஏற்ற நிகழ்ச்சி திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த வைபவம், திருநாளாக கார்த்திகையில் இன்றும் கொண்டாடப்படுகின்றது.

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுவதிலிருந்து இந்த தலத்தின் தொன்மையை நாம் உணரலாம். சூரிய உதயத்தின் போது செந்நிற வண்ணத்தில் இந்த மலை காணப்படுகின்றது. வடதிசையிலிருந்து காணும்போது இரண்டு பாம்புகள் பிணைந்து இருப்பது போன்றும், கிழக்கிலிருந்து பார்த்தால் இலிங்கமாகவும், மேற்கிலிருந்து பார்த்தால் ஒரு பாம்பு தனது தலையை உயர்த்தி வாயைப் பிளந்திருப்பது போல் தோன்றும் இந்த மலையின் தென்திசைக் காட்சியை திருக்கயிலாயம் என்று கூறுவார்கள்.

பதினோராம் திருமுறையில் உள்ள சிவபெருமான் திருவந்தாதி என்ற நூலில் இந்தத் தலம் இடம் பெறுகின்றது. தலைவியின் நிலை கண்ட ஒரு தோழி மற்ற தோழியர்கட்கு கூறுவதாக அமைந்த இந்த பாடல் கபில தேவ நாயனாரால் அருளப் பட்டுள்ளது. சிவன் அணிந்த கொன்றை மாலை கிடைக்கப் பெற்றமையால் தலைவியிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தோழி இங்கே உரைக்கின்றாள். தலைவியின் செய்கைகள், நாணுதல், நகுதல், செங்குன்றூர் என்று அவன் உறையும் தலத்தைக் கூறுதல், தலைவியின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. தலைவியின் செயல்கள், அவளது நினைப்பையும் (சிவபிரானைத் தழுவிக் கொள்ளுதல்) தோழிக்கு உணர்த்தவே, மற்ற தோழியர்கட்கு, தலைவியை சிவபிரான் இருக்கும் இடத்திலே விட்டுவிட்டு அகலுமாறு அறிவுரை கூறுகின்றாள்.,

சிவன் மாட்டு உக எழுதும் நாணும் நகும் என்னும்

சிவன் மேய செங்குன்றூர் என்னும் — சிவன் மாட்டு அங்கு

ஆலிங்கனம் நினையும் ஆயிழை ஈர் அம் கொன்றையால்

இங்ஙனம் நினையுமாறு

மாதொரு பாகனாக சிவபிரான் காட்சி தரும் கோலம் தொன்மையான கோலம் என்று மணிவாசகர் தனது கோத்தும்பீ பதிகத்தில் கூறுகின்றார். இந்தப் பாடலில் சிவபிரானின் வலது பக்கத்தில், தோல் உடை, குழை, வெண்ணீறு துதைந்த மேனி, சூலம் முதலியன கொண்டு இடது புறத்தில் பட்டுத் துகில், சுருள் தோடு, சாந்து, பைங்கிளி, நெருக்கமாக அணிந்த வளைகள் இவற்றை உடைத்ததாக, மாதொரு பாகனின் கோலம் நம் கண் முன் கொண்டுவரப் படுகின்றது.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்

பால் வெள்ளை நீரும் பசும் சாந்தும் பைங்கிளியும்

சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை

கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

பொன்வண்ணத் திருவந்தாதி (பதினோராம் திருமுறை) எனும் நூலில் மாதொரு பாகனின் கோலத்தை ரசித்து நாம் அனைவரும் உணரும் வண்ணம், சேரமான் பெருமாள் அருளியுள்ளார். பெருமானின் வலது பக்கத்தில் காணப்படும் பொருட்கள், வீரக்கழல், அரவு, திருநீறு, தீ, எலும்பு மாலை, மூவிலை சூலம் ஆகிய வேல், நீர் தாழ் சடை இவை ஆகும். இடப்பக்கத்தில் காண்பது பாடகம், மேகலை, சாந்து, பந்து, பொன் மாலை, சக்கரம், குளிர்ந்த கூந்தல் இவை ஆகும். நம் கண் முன்னே மாதொரு பாகனை கொணர்ந்து நிறுத்தும் அழகு என்னே.

வலம் தான் கழல் இடம் பாடகம் பாம்பு வலம் இடமே

கலந்தான் வலம் நீறு இடம் சாந்து எரி வலம் பந்து இடம் என்

பலந்தார் வலம் இடம் ஆடகம் வேல் வலம் ஆழி இடம்

சலம் தாழ் சடை வலம் தண் அம குழல் இடம் சங்கரற்கே

பாடல் 1:

வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ் மார்பில் நல்ல

பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தருளிக்

கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே

விளக்கம்:

இந்த தலத்தில் உள்ள மாதொருபாகனின் நின்ற திருக்கோல மூர்த்தம் வெண்மை நிறம் கொண்ட நவபாஷணத்தால் செய்யப்பட்டது. சர்வ சங்காரத்தின் பின்னர் தனது உடல் முழுவதும் வெள்ளை நீறு அணிந்தவராக, மீண்டும் உலகினை படைத்து உயிர்கள் தங்களது வினைகளை தீர்த்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடன் சிவமும் சக்தியுமாக செயல்பட்ட தத்துவத்தை உணர்த்தும் வண்ணம் அமைந்த திருவுருவம். எனவே தான் வெண்மை நிறத்துடன் மூர்த்தம் காணப்படுகின்றது என்பார்கள். அதனை நினைவூட்டும் வண்ணம், சம்பந்தர் இந்த பதிகத்தினை வெந்த வெண்ணீறு அணிந்து என்று தொடங்குகின்றார். வேதங்களை உலகினுக்கு அருளிய பெருமான் எப்போதும் வேதங்களை ஒதுபவராக இருப்பதால், அவரை அந்தணன் என்று திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. அவலம்=வினைகளால் வரும் பிறப்பு முதலான பல கேடுகள். வேதங்களையும் ஆகமங்களையும் தனது வாயினால் முனிவர்களுக்கு அருளியவனும் வேதங்களின் விளக்கங்களை சனகாதி முனிவர்களுக்கு அருளியவனும் ஆகிய பெருமானை விடவும், அந்தணன் என்றும் வேதியன் என்றும் அழைக்கப் படுவதற்கு மிகுந்த பொருத்தமாக உடையவர் வேறு எவரேனும் உள்ளரோ. அந்தணர் என்ற சொல்லினை அம் தணர் என்று பிரித்து, குளிர்ந்த உள்ளத்தை உடையவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தனது அடியார்களின் துயரத்தை களைபவனும், அடியார்களுக்கு அளவின்றி வரங்கள் அருள்பவனும் ஆகிய பெருமானை கருணை உள்ளம் கொண்ட பெருமானை, குளிர்ந்த உள்ளம் கொண்டவன் என்று குறிப்பிடுவதும் பொருத்தம் தானே. மாதொரு பாகன் உறையும் தலத்தில் உள்ள இறைவியை, இந்த பதிகத்தின் முதல் ஐந்து பாடல்களில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கொந்து=கொத்து; அணவும்=கலக்கும்;

பொழிப்புரை:

நன்றாக தீயினில் வெந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் சுடுகாட்டு சாம்பலை திருநீறாக தனது மார்பினில் அணிந்து கொண்டுள்ள பெருமான், முப்புரி நூல் மார்பினில் திகழும் வண்ணம் அணிந்தவராகவும், அழகான பந்துகள் சென்று அணையும் விரல்களை உடைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளவராகவும் காணப்படுகின்றார். அவர் கொத்து கொத்தாக பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூர் தலத்தில், உறைகின்றார். வேதங்களை அருளியதாலும் கருணை உள்ளம் கொண்டவராக இருப்பதால் அந்தணன் என்று பொருத்தமாக அழைக்கப் படுபவரும் ஆகிய பெருமானை, தொழுது வணங்கும் அடியார்கள் தங்களது துன்பங்களும் துயரங்களும் தீர்க்கப் பெறுவார்கள்.

பாடல் 2:

அலைமலி தண் புனலொடு அரவம் சடைக்கு அணிந்து ஆகம்

மலைமகள் கூறுடையான் மலையார் இள வாழைக்

குலை மலி தண்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே

விளக்கம்:

நின்ற பெருமான் என்று இந்த பாடலிலும் முந்தைய பாடலிலும் ஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பெருமான் உருவத் திருமேனியுடன் காணப்படுவது இந்த ஒரு தலத்தில் மட்டும் தான். பெருமான் இந்த தலத்தில், மாதொரு பாகனாக, நின்ற திருக்கோலத்தில் அருள் புரிவதை உணர்த்தும் வகையில் நின்ற பெருமான் என்று ஞானசம்பந்தர் சொல்கின்றாரோ என்று தோன்றுகின்றது. தலைமகன் என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களுக்கும் தலைவனாகத் திகழும் பெருமானை, அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக திகழும் பெருமானை, தலைமகன் என்று மிகவும் பொருத்தமாக ஞானசம்பந்தர் அழைக்கின்றார். ஆகம்=உடல்;

பொழிப்புரை:

அலைகள் வீசும் வண்ணம் நிறைந்த குளிர்ந்த நீர்ப்பெருக்கினை உடைய கங்கை நதியுடன், பாம்பினையும் தனது சடையினில் அணிந்துள்ள பெருமான், தனது உடலின் ஒரு பாகத்தில் மலைமகளாகிய உமையன்னையைத் தாங்கி நிற்கும் பெருமான், குலைகுலையாக இளவாழைகள் மிகுதியாக உடைய சோலைகள் நிறைந்த மலைச்சாரல் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூர் தலத்தினில் நிலையாக பொருந்தி உறைகின்றார். அனைத்து உயிர்களுக்கும் தலைவனாகத் திகழும் பெருமானை, தொழும் அடியார்களின் வாழ்வினில் ஏற்படும் தடுமாற்றங்களை, பெருமான் தகர்த்து எறிந்து அருள் புரிவார்.

பாடல் 3:

பாலன நீறு புனை திகழ் மார்பில் பல்வளைக்கை நல்ல

ஏலமலர்க் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தருளிக்

கோல மலர்ப் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்

நீலநன் மாமிடற்றான் கழல் ஏத்தல் நீதியே

விளக்கம்:

நீதி=நியதி, கடமை, வழிமுறை; ஏலம்=மயிர்ச்சாந்து; முதல் இரண்டு பாடல்களில் அடியார்களின் அவலத்தை களையும் பெருமான் என்றும், அடியார்களின் தடுமாற்றத்தை நீக்குவார் என்றும் குறிப்பிட்ட, ஞானசம்பந்தர், இந்த பாடலில், பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறம் ஒரு கறையாக பொருந்திய கழுத்தினை உடைய பெருமான் என்று குறிப்பிட்டு, தன்னை வணங்கிய தேவர்களுக்கு பெருமான் அருள் புரிந்த செய்கையை குறிப்பிடுகின்றார். மா=பெருமை வாய்ந்த; நன்=நன்மை பயந்த, நல்ல; உலகினுக்கு நன்மை பயந்த பெருமை வாய்ந்த கழுத்து என்று பெருமானது கழுத்து இங்கே உணர்த்தப் படுகின்றது. கொச்சைவயம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தை (2.83.1), நீலநன் மாமிடற்றான் என்றே தொடங்குகின்றார்.

நீலநன்மா மிடற்றன் இறைவன் சினத்தான் நெடுமா உரித்த நிகரில்

சேலன கண்ணி ஒரு கூறு உருக்கொள் திகழ் தேவி மேவு பதி தான்‘

வேலன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத

ஒலியின்

சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடியாடு கொச்சைவயமே

நஞ்சினைத் தனது கண்டத்தில் தேக்கி வைத்து தேவர்களை காத்த பெருமானின் கருணைச் செயலை குறிப்பிட்டு, அந்த பெருமானைச் சரண் அடைதல் நம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டே ஆகும் என்று ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். எனவே தான் பெருமானை வாழ்த்துதல் வாழ்க்கை முறை என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்கள் வாழ்க்கையின் நோக்கமே பெருமானை வழிபடுதல் தான் என்று உணர்த்துகின்றது. மேலும் பெருமானைத் தொழுது வணங்காத வாழ்க்கை வீணான வாழ்க்கை என்றும் உணர்த்துகின்றது. பெறுவதற்கு அரிய பிறவி மனிதப்பிறவி என்பதை நாம் அறிவோம். எனவே அத்தைகைய வாய்ப்பினைப் பெற்ற நாம், இறைவனைத் தொழுது அந்த வாய்ப்பினை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எனவே தான் பெருமானை வணங்கி வாழ்வதே வாழ்க்கையின் முறை என்று ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். இவ்வாறு அவர் கூறுவது, நமக்கு அப்பர் பிரான் தில்லைச் சிதம்பரம் மீது அருளிய பாடலை (4.81.5) நினைவூட்டுகின்றது. கூழைமை=கடமை, மானிட வாழ்க்கையின் பயன், சிவபெருமானை வழிபட்டு, அவரது அருளின் உதவியால் உலக மாயைகளிலிருந்து விடுபட்டு வீடுபேற்றினை அடைவதாகும். சிவபிரானை வழிபடாவிடில் வீடுபேறு கிடைக்காது; எனவே சிவபிரானை வழிபடாதவர்களின் வாழ்க்கை பயன் ஏதும் இல்லாமல் போகின்றது. நமக்கு வாய்த்த மனிதப் பிறவியை எவ்வாறு மதித்து நாம் வாழ வேண்டும் என்று அப்பர் பிரான் கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இந்தப் பாடலில் (4.81.5) தில்லைச் சிற்றம்பலவனுக்கு நாம் அடிமையாக வாழ்வது நமது கடமை என்றும் அவ்வாறு வாழ்வதே நமது வாழ்க்கையை நாம் மதிக்கும் விதமாகும் என்றும் இங்கே கூறுகின்றார்.

வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்

பார்த்தற்கு பாசுபதம் அருள் செய்தவன் பத்தருள்ளீர்

கோத்தன்று முப்புரம் தீ வளைத்தான் தில்லை அம்பலத்துக்

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நந்தம் கூழைமையே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர், பெருமானின் திருப்பாதங்களை வணங்காதவர்களின் வாழ்க்கையும் வாழ்க்கையோ என்ற கேள்வியை எழுப்பி, அவர்களது வாழ்க்கை வாழ்க்கையாக மதிக்கப் படாது என்று உணர்த்துகின்றார். கருடனை ஊர்தியாகக் கொண்ட திருமாலும், தாமரையை ஆசனமாகக் கொண்ட பிரமனும் தங்களது மனதினில் தியானிக்கும் பெருமானது தன்மையை அளவிட முடியாது என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். அள்ளல்=சேறு; தலத்தின் நீர்வளமும் நிலவளமும் குறிப்பிடப் படுகின்றன.

புள்ளும் கமலமும் கைக் கொண்டார் தாமிருவர்

உள்ளும் அவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே

அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் என்

வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே

திருமணஞ்சேரி தலத்தின் மீது அருளிய பாடலில் (5.87.5) அப்பர் பிரான், பெருமானின் கழலைப் புகழ்ந்து வாழ்த்தி வாழும் மனிதர்களின் வாழ்க்கையே வாழ்வாக கருதப் படும் என்கின்றார்.

துள்ளும் மான்மறி தூ மழுவாளினர்

வெள்ள நீர் சடை கரந்தார் மேலவர்

அள்ளலார் வயல் சூழ் மணஞ்சேரி எம்

வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே

சுந்தரரும் வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில், பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்றும், உணராதவர்களின் உணர்வு உணர்வாக கருதப்படாது என்றும், பேசாதவர்களின் பேச்சு பேச்சாக கருதப்படாது என்றும், துதிக்காதவர்களின் துதி துதியாக கருதப்படாது என்றும், பெருமானை குறித்த செய்திகளை கல்லாதவர்களின் கல்வி கல்வியல்ல என்றும், பெருமானை நினையாதவர்களின் நினைவு நினைவல்ல என்றும், பெருமானை நினைத்து மனம் நெகிழாதவர்களின் உருக்கம் உருக்கமல்ல என்றும் கூறுகின்றார். இந்த பதிகத்தின் (7.86) ஒரு பாடலை நாம் இங்கே காண்போம். படிறன்=வஞ்சகன், கள்வன்; மற்றவர்களின் வாழ்நாளை நிர்ணயித்த நாளில், அறுக்கும் காலனின் வாழ்க்கையை அறுத்த இறைவன் என்று சுந்தரர் கூறுகின்றார்.

மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்

கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்

பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் பனங்காட்டூர்

ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.90.3) பெருமானுக்கு ஆளாகி அவருக்குத் திருத்தொண்டு செய்யாமல் தங்களது வாழ்கையை கழிக்கும் மனிதர்கள் வீணான வாழ்க்கையை நடத்தி, முடிவினில் தங்களுக்கும் பயனன்றி ஏனையோருக்கும் எந்த விதத்திலும் பயனன்றி மண்ணோடு மண்ணாக மாறுகின்றனர் என்று கூறுகின்றார். ஆளாதல்=சிவபிரானுக்கு அடியவராக இருத்தல். மீளா ஆள்=என்றும் மாறாத அடிமைத் திறம். மெய்ம்மை=உண்மையான பரம்பொருள். தோளாத=உட்குழி இடப்படாத சுரைக் குடுக்கை. தொழும்பர்=அடிமை, இங்கே அடிமை நிலையில் இருக்கும் இழிந்தவர் என்ற பொருளில் வருகின்றது. வாளா=பயன் அற்று, வீணாக. கழிதல்=இறத்தல்; அறிவில் முழு வளர்ச்சி அடைந்து தனது காலில் நிற்கும் திறமை பெற்ற மனிதனை ஆள் என்று அழைக்கின்றோம். அப்பர் பிரான் சிவபிரானின் தொண்டர்கள் அல்லாதவரை ஆள் என்று கருதவில்லை என்றும் நாம் பொருள் கொள்ளலாம். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத்திறம் நமது வாழ்நாள் முழுவதும், அதனின்று மீளாமல் இருக்க வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் அறிவுரை கூறுகின்றார். .

ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்

மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்

தோளாத சுரையோ தொழும்பர் செவி

வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

பாலன நீறு என்று பால் போன்று வெண்மை நிறம் கொண்ட திருநீறு என்று மட்டும் இங்கே உணர்த்தப் படவில்லை. பருகுவதற்கு இனியதாக இருக்கும் பால், உடலுக்கு சக்தியையும் அளிக்கின்றது. பூசுவதற்கு இனியதாக உள்ள திருநீறு, ஞானம் அளித்து உயிர்களின் ஆன்மப் பசியையும் தீர்க்கின்றது. எனவே தான் பாலுடன் திருநீறு ஒப்பிடப்படுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். பத்தி தருவது நீறு, பரவ இனியது நீறு, முத்தி தருவது நீறு, பூச இனியது நீறு என்று குறிப்பிடும் திருநீற்றுப் பதிகம் நமது நினைவுக்கு வருகின்றது.

பொழிப்புரை:

பால் போன்று வெண்மை நிறம் உடையதாக விளங்கும் திருநீறு பூசப்பட்ட மார்பினை உடைய பெருமான், பல வளையல்களை அணிந்த திருக்கரங்களை உடையவளும் நல்ல நறுமணம் வீசும் மலர்களை அணிந்த கூந்தல் உடையவளும் ஆகிய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பொருத்தியவராக உள்ளார். இத்தகைய பெருமான், அழகான மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட கொடிமாட செங்குன்றூர் தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.

பாடல் 4:

வாருறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பின் நண்ணும்

காருறு கொன்றையொடும் கதநாகம் பூண்டருளிச்

சீருறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

நீருறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே

விளக்கம்:

மடவாள்=அழகும் இளமையும் உடைய பிராட்டி; மடவாள் என்ற சொல்லுக்கு மனைவி என்ற பொருளும் பொருந்தும். காருறு கொன்றை=கார் காலத்தில் அதிகமாக பூக்கும் கொன்றை பூக்கள்; கதநாகம்=கோபம் கொண்டு படமெடுத்துச் சீறும் நாகம்; கதம்=கோபம்; வார்=கச்சு; சீருறும்= வேதங்களை நன்கு பயின்று வேள்வி முதலான கிரியைகளைப் பேணி ஒழுக்கம் மிகுந்த வாழ்க்கையை நடத்தும் அந்தணர்கள். இந்த பாடலில் நீருறு செஞ்சடையான் பாதம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த தலத்தில் நூற்றெட்டு நீர்த்துறைகள் இருப்பதாக சொல்லப் படுகின்றது. பெருமானின் திருப்பாதத்தில் இன்றும் நீரூற்று உள்ளது. இது நீருறு பாதம் என்று அழைக்கப் படுகின்றது. இந்த செய்தியே இங்கே உணர்த்தப் படுகின்றது போலும். நீருறு என்ற சொல்லினை செஞ்சடையுடன் இணைத்து, கங்கை நதியைத் தாங்கிய பெருமான் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது.

பொழிப்புரை:

கச்சை அணியப் பெற்ற அழகான மார்பங்கள் மற்றும் அழகும் இளமையும் பொருந்திய பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டுள்ள பெருமான், கார் காலத்தில் மிகவும் அதிகமாக பூக்கும் தன்மை உடைய கொன்றை மலர்களுடன், கோபம் கொண்டு சீறி படமெடுத்து ஆடும் பாம்பினையும் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், சிறப்பினை உடைய அந்தணர்கள் வாழ்கின்ற கொடிமாடச் செங்குன்றூர் தலத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். தனது செஞ்சடையில் கங்கை நதியை ஏற்ற பெருமானின் திருப் பாதங்களை புகழ்ந்து வணங்குதல், வாழும் முறையாகும்.

பாடல் 5:

பொன்திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பின் நல்ல

பன்றியின் கொம்பு அணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்

குன்று அன மாளிகை சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்

மின் திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே

விளக்கம்:

பொன் என்பதற்கு அழகு என்று பொருள் கொண்டு பெருமானின் திருமேனியில் அழகுடன் பொலியும் ஆமையோடு என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. பெருமானுடன் சேர்ந்த பொருட்கள் அனைத்தும், அதற்கு முன்னர் எந்த நிலையினில் இருந்தாலும், பெருமானுடன் சேர்ந்த பின்னர் அழகுடன் பொலிவதாக அப்பர் பிரான் உணர்த்தும் திருநாரையூர் பதிகம் நமது நினைவுக்கு வருகின்றது. இந்த தலத்து இறைவனின் திருநாமம் சௌந்தர்யநாதர், அழகியநாதர் பெருமானின் அழகினில் மெய்ம்மறந்த அப்பர் பிரான், இந்த பெயரினுக்கு ஏற்ப தலத்து இறைவனுடன் சேர்ந்த பொருட்கள் அனைத்தும் அழகுடன் விளங்கி பெருமானுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக வியந்து, இந்த பதிகம் (5.55) பாடியுள்ளார். அம்ம என்பது வியப்பினை குறிக்கும் சொல். இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் அம்ம அழகிதே என்று முடிகின்றன. மடந்தையைத் தனது உடலின் ஒரு கூறாக கொண்டிருந்தாலும், வளைந்த ஒற்றைப் பிறையினை சூடியிருந்தாலும், கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றிருந்தாலும், புலித்தோலை ஆடையை உடுத்திருந்தாலும், உடலெங்கும் திருநீற்றினைப் பூசி இருந்தாலும், நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறத்தில் கறை கொண்ட கழுத்தினை உடையவராக இருந்தாலும், அருவருக்கத் தக்க காய்ந்த வெண்மை நிறம் உடைய மண்டையோட்டினை தனது கையில் தாங்கியிருந்தாலும், கொக்கின் இறகினை அணிந்திருந்தாலும், தலைமாலையுடன் காணப் பட்டாலும், விரித்த சடையினை உடையவனாக இருந்தாலும், வில்வ இலைகளை மாலையாக ஏற்றிருந்தாலும், எலும்பு மாலையை பூண்டிருந்தாலும், அழகேதும் அற்ற வேடுவக் கோலம் பூண்டிருந்தாலும், கூர்மையான மழு சூலம் முதலிய ஆயுதங்களை ஏந்தியிருந்தாலும், எருதினை வாகனமாக கொண்டிருந்தாலும், நண்பகலில் பலிக்கு திரிந்தாலும், பெருமானின் திருக்கோலம் மிகவும் அழகாக காணப் படுகின்றது என்று அப்பர் பிரான் இந்த பாடல்களில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்

கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும்

நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு

ஆறு சூடலும் அம்ம அழகிதே

பெருமை பொருந்திய இமயமலைக்கு அரசனாகிய, இமவானின் மகளாகிய பார்வதி தேவியினைத் தனது உடலில் கொண்டவனும், வளைந்த பிறையினைத் தனது சடையில் சூடியவனும், நறுமணம் வீசும் சோலைகள் சூழ்ந்த நாரையூர் நகரில் வீற்றிருக்கும் நம்பனும் ஆகிய சிவபெருமான், தனது சடையில் கங்கை ஆற்றினையும் தரித்துள்ளான்; ஆயினும் அவனது திருமேனி மிகவும் வியப்பூட்டும் அழகு பொருந்தியதாக விளங்குகின்றது என்பதே மேற்கண்ட பாடலின் திரண்ட பொழிப்புரை.

பொன் திகழ் ஆமை என்ற தொடரிலுள்ள பொன் என்ற சொல் செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் திருமகளை குறிக்கின்றது என்ற விளக்கம் தரப்படுகின்றது. திருமகளைத் தனது மார்பினில் தாங்கியுள்ள திருமாலாகிய வராகம் என்றும் பொருள் கொள்வது பொருத்தமே. நல்ல= அழகிய; பணைத்தோளி=மூங்கில் போன்று அழகிய தோளை உடைய உமையன்னை. மெய்ப்பொருள் என்று அழியாது என்றும் நிலைத்து நிற்கும் முக்தி உலகத்தினை குறிப்பிடுகின்றார். அழியும் நிலையில் உள்ள உலகமும் உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் பொய்யான பொருட்களாக கருதப் படுகின்றன. பணைத்தோளி என்று உமையன்னையைக் குறிப்பிடும் திருமுறைப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.5.1) திருஞானசம்பந்தர், பார்வதி தேவியை பணைத்தோளி என்று அழைக்கின்றார். இந்த பாடலில் திருமாலையும் பார்வதி தேவியையும் தனது உடலின் ஒரு பாகத்தில் பெருமான் வைத்துள்ளவனாக சம்பந்தர் கூறுகின்றார்.

செய் அருகே புனல் பாய ஓங்கிச் செங்கயல் பாயச் சில மலர்த்

தேன்

கை அருகே கனி வாழை ஈன்று கானல் எல்லாம் கமழ்

காட்டுப்பள்ளி

பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பணையான் பணைத்

தோளி பாகம்

மெய் அருகே உடையானை உள்கி விண்டவர் ஏறுவர் மேலுலகே

செய்=வயல்கள்: கை அருகே=கைக்கு எட்டும் உயரத்தில்; கானல்=காடு; பை=நச்சுப்பை; அழல் வாய்=நெருப்பினைப் போன்று கொடிய விடத்தினை கக்கும்; ஐவாய்=ஐந்து தலைகளை உடைய; பாம்பணையான்=பாம்பினைத் தனது தலையணையாகவும் படுக்கையாகவும் கொண்டுள்ள திருமால்; பணைத்தோளி=மூங்கில் போன்று அழகிய தோள்களை உடைய தேவி; விண்டவர்= விட்டவர், பெருமான் மீது வைத்துள்ள பற்றினைத் தவிர்த்து மற்றைய பற்றுக்களை விட்டவர்; உள்கி=நினைத்து; மேலுலகம்=அனைத்திலும் உயர்ந்ததாக விளங்கும் வீடுபேறு; பாம்பணையான் என்ற சொல்லினை பணைத்தோளி என்ற சொல்லுடன் இணைத்துப் பொருள் கொண்டால், பெருமான் திருமாலையும் பிராட்டியையும் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ளார் என்ற பொருள் பட வருகின்றது. அப்போது உள்கி என்ற வினைச்சொல்லுக்கு அடியார்கள் என்ற எழுவாய் பொருந்துகின்றது. பாம்பணையான் என்ற சொல்லுடன் உள்கி என்ற சொல்லினை இணைத்து, திருமால் பெருமானை நினைத்து உருகியதை குறிப்பிடுவதாகவும் விளக்கம் கூறுகின்றனர். பெருமானை தனது மனதிலே தியானித்து எப்போதும் அவரையே நினைத்துக் கொண்டு இருப்பதாகவும் அவரது மூச்சுக் காற்றின் அசைவுக்கு ஏற்ப பெருமான் நடனம் ஆடுவதாகவும், அந்த நடனமே அஜபா நடனம் என்று அழைக்கப்படுவதாகவும் திருவாரூர் தலபுராணம் கூறுகின்றது.

திருவக்கரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.60.2) உமையன்னையை, பணைத்தோளி என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஏய்ந்தவன்=பொருந்தியவன்; தேய்ந்து= தனது அனைத்துக் கலைகளும் தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் சந்திரன் இருந்த தன்மை; செப்புதல்=சொல்லுதல்; தனது அடியானுக்காக காலனைக் காய்ந்து காலால் உதைத்த கருணைச் செயல், மாதினை மதித்து தனது உடலில் ஒரு பாதியை ஈந்த செயல், திரிபுரங்களை எரித்த வீரச்செயல், தன்னைச் சரணடைந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்த ஆற்றல், மற்றும் இமையோர்களால் தொழப்படும் பெருமை வாய்ந்த நிலை ஆகியவை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றன.

பாய்ந்தவன் காலனை முன் பணைத்தோளி ஓர் பாகமதா

ஏய்ந்தவன் எண்ணிறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச

வாய்ந்தவன் முப்புரங்கள் எரி செய்தவன் வக்கரையில்

தேய்ந்து இள வெண்பிறை சேர் சடையான் அடி செப்புதுமே

பசுபதி திருவிருத்தம் என்று அழைக்கப்படும் பதிகத்தின் முதல் பாடலில் கங்கை நங்கையை மூங்கில் போன்று அழகிய (4.110.1) தோள்கள் உடைய நங்கை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஏம்பலித்தல்=வருந்துதல்; தரையில் புரண்டு வழிபடும் அடியார்கள் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்ப்பிடுகின்றார். பெருமானிடம் வேண்டிக்கொண்டு, தரையில் புரண்டு அங்கப்பிரதக்ஷணம் செய்யும் வழக்கம் அந்நாளிலும் இருந்தது போலும். தில்லை நகரத்தின் நான்கு வீதிகளின் பெருமையை மனதில் கொண்டு, நான்கு வீதிகளிலும் தரையில் புரண்டு தில்லைப் பெருங்கோயிலை அப்பர் பிரான் வலம் வந்த நிகழ்ச்சி பெரியபுராணத்தில் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு பெருமானைத் தொழுகின்ற அடியார்கள் பால் பெருமான் இரக்கம் கொண்டு அவர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கப்படுகின்றது. காம்பு= மூங்கில்; காம்பலைக்கும்=மூங்கிலை வருத்தும்; கங்கை நங்கையின் அழகிய தோள்களைக் கண்ட மூங்கில், தன்னை விடவும் கங்கை நங்கையின் தோள்கள் அழகாக உள்ளன என்று வருந்துவதாக அப்பர் பிரான் நயம்பட கூறுகின்றார். சடையில் கங்கை நங்கை மற்றும் பாம்பு ஆகிய இரண்டையும் ஒருங்கே வைத்துள்ளமையால், கங்கையின் அழகிய மார்புகள் மீது பாம்புகள் புரண்டு ஓடுவதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். தனது அலை கரங்ககளால் பாம்பினை கங்கை அலைக்கழித்து வருத்துகின்றாள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு நின் தாள் பரவி

ஏம்பலிப்பார்க்கட்கு இரங்கு கண்டாய் இரும் கங்கை என்னும்

காம்பலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வனமுலை மேல்

பாம்பலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே

பொழிப்புரை:

அழகுடன் பொழியும் ஆமை ஓட்டினைத் தனது மார்பினில் அணிந்தவனும், முப்புரி நூல் திகழ்ந்து தொங்கும் வண்ணம் மார்பினில் அணிந்தவனும் ஆகிய பெருமான், தனது மார்பினில் பன்றியின் கொம்பு பொலிந்து விளங்குமாறு அணிந்துள்ளான். மூங்கில் போன்று அழகிய தோள்களை உடைய பார்வதி தேவியை தனது உடலின் இடது பாகத்தில் ஏற்ற பெருமான், குன்று போன்று உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த கொடிமாட செங்குன்றூர் தலத்தினில் உறைகின்றான். வானில் தோன்றும் மின்னல் போன்று ஒளிவீசும் செஞ்சடையை உடைய பெருமானது திருப்பாதங்களைத் தொழும் அடியார்கள் என்றும் அழியாத முக்தி உலகத்தை அடைவார்கள்.

பாடல் 6:

ஓங்கிய மூவிலை நற்சூலம் ஒரு கையன் சென்னி

தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து

கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த

பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்றறுமே

விளக்கம்:

பதிகத்தின் முதல் ஐந்து பாடல்களில் பார்வதி தேவியை குறிப்பிட்ட ஞானசம்பந்தர், இந்த பாடலில் கங்கை நதியினைத் தனது தலையில் தாங்கிய பெருமானின் தன்மையை குறிப்பிடுகின்றார். பாங்கன்=நெருங்கிய தோழன்; அணவும்=கலந்த; ஓங்கிய=புகழில் ஓங்கிய என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மூவிலைச் சூலம் என்று பல திருமுறை பாடல்களில் குறிப்பிடப் பட்டாலும், அந்த சூலத்தின் தன்மை ஒரு சில பாடல்களில் மட்டுமே சொல்லப் படுகின்றது. இந்த பாடலில் நற்சூலம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். நன்மை விளைவிக்கும் சூலம் என்று சூலத்தின் தன்மை சொல்லப் படுகின்றது. திருவெழுகூற்றிருக்கை பதிகத்தின் வரிகளில் ஒரு நாள் ஈர் அயின் மூவிலைச் சூலம் சொல்லப் படுகின்றது. தாள்=அடிமரம்; காம்பு; ஈர் அயின்=ஈர்க்கும் தன்மை கொண்ட கூர்மை; பிளக்கும் தன்மை கொண்ட கூர்மை; ஒரே தண்டினில் மூன்றாக பிரியும் சூலத்தை ஏந்தும் இறைவன் என்று சம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு பதினோராம் திருமுறையின் பாடல் வரிகளை நினைவூட்டுகின்றது. ஒரே தண்டினில் மூன்று கிளைகளாக பிரிந்துள்ள மூவிலைச் சூலத்தினை பெருமான் ஏந்துதல் நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் தானே என்பதையும் மூன்று தொழில்களும் செய்பவன் தானே என்பதையும் உணர்த்தும் பொருட்டு என்று ஓற்றியூர் ஒருபா ஒருபது பதிகத்தின் ஆறாவது பாடலில் பட்டினத்து அடிகள் (பதினோராம் திருமுறை) கூறுகின்றார்.

மூவிலை ஒரு தாள் சூலம் ஏந்துதல்

மூவரும் யான் என மொழிந்தவாறே

மூன்று தொழில்களைச் செய்யும் மூவிலைச் சூலம் என்று அப்பர் பிரானும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.89.3) கூறுகின்றார். தொழில் மூன்றும் ஆயின என்ற தொடரினை மூவிலைச் சூலம் என்ற தொடருடன் கூட்டி, பெரியபுராண விளக்கம் நூலின் ஆசிரியர் சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் கூறுகின்றார். வடமொழி ஆகமத்தில் ஜனனி ரோதயித்திரி ஆரணி ஆகிய மூன்று சக்திகளை உடையது பெருமானின் மூவிலைச் சூலம் என்று கூறப்படுகின்றது. பிரணவ மந்திரமே மூவிலைச் சூலத்தின் தண்டாக விளங்குகின்றது என்று கூறுவார்கள்,

மூன்று மூர்த்தியுள் நின்றியலும் தொழில்

மூன்றும் ஆயின மூவிலைச் சூலத்தன்

மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்

மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே

முத்தொழில்களும் புரிந்து உயிர்களுக்கு தங்களது வினைகளை நீக்கிக் கொள்ளும் வாய்ப்பினை அளிக்கும் பெருமானின் செயலை நமக்கு நினைவூடுவதால் மூவிலை நற்சூலம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார் போலும். பழுவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலிலும் (2.34.1) ஞானசம்பந்தர் மூவிலை நல்வேலன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். முத்தன்=இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர்; முக்தி அருள்பவர்; விரி நூலன்=கலைகள் அனைத்துமாக விரியும் மறைகளின் பொருளாக விளங்குபவர்; மறைகளை அருளியவர்; அத்தன்=தந்தையாக இருப்பவன்; அண்ணல்=தலைவன்; மை=மேகம்; தழை=மேகம் பொழியும் மழையினால் தழைத்து செழித்து வளர்ந்த; சித்தர்=இறைவனது அருளினால் பல சித்திகள் கைவரப் பெற்று வியக்கத்தகும் செயல்களை செய்பவர்கள்;

முத்தன் மிகு மூவிலை நல் வேலன் விரி நூலன்

அத்தன் எமை ஆளுடைய அண்ணல் இடம் என்பர்

மைத்தழை பெரும் பொழிலின் வாசம் அது வீசப்

பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே

அப்பர் பிரானும் கஞ்சனூர் தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.90.1) மூவிலை நற்சூலம் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் அக்னி தேவன் இறைவனைப் போற்றிய செயல் குறிப்பிடப்படுகின்றது. அக்னி போற்றியதை உணர்த்தும் முகமாக தலத்து இறைவன் அக்னீஸ்வரர் என்று அழைக்கப் படுவதை நாம் காண்கின்றோம். வேள்விகளில் அளிக்கப்படும் ஆகுதிகளை, மற்ற தேவர்களின் சார்பாக அக்னி பெறுவதாக வேதங்கள் கூறுகின்றன. இவ்வாறு ஆகுதிகளைப் பெறும் அக்னி, ஒரு முறை அளவு கடந்த நெய்யினையும் சேர்த்து உண்டதால், அவனுக்கு சோகை நோய் ஏற்பட்டது. இந்த நோயினை போக்கிக் கொள்ள, அக்னி இந்த தலத்தில் சிவபெருமானை வழிபட்டார் என்பது தல வரலாறு. நாவலன்=புலவன். வேதங்களை அருளிய பெருமான் என்பதால் புலவன் என்றும், தருமிக்கு பொற்கிழி அளிக்க உதவும் வண்ணம் பாட்டு எழுதியமையால் புலவன் என்றும், பாண பத்திரர்க்கு உதவும் வண்ணம் கவிதை எழுதி சேரமான் புலவனுக்கு அளித்தமையால் (பதினோராம் திருமுறை முதல் பதிகம், மதிமலி புரிசை என்று தொடங்கும் பதிகம்) புலவன் என்றும் இறைவனை அழைத்தார் அப்பர் பிரான் என்று கூறுவதுண்டு

மூவிலை நற்சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர்க் கண்ணானை

மூர்த்தி தன்னை

நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால்வேதம் ஆறங்கம்

ஆயினானை

ஆவினில் ஐந்து உகந்தானை அமரர் கோவை அயன் திருமால்

ஆனானை அனலோன் போற்றும்

காவலனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக்

கண்டு உய்ந்தேனே

மூவிலைச் சூலத்தின் தன்மையை உணர்ந்த அப்பர் பிரான், மூவிலைச் சூலத்தின் சின்னம் தனது தோள் மேல் பொறிக்கப் படவேண்டும் என்று தூங்கானைமாடம் பதிகத்தின் முதல் பாடலில் (4.109.1) வேண்டுகின்றார். அந்த பாடலும் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கடந்தை என்பது தலத்தின் பெயர். இந்த தலம் இப்போது பெண்ணாகடம் என்று அழைக்கப்படுகின்றது. தூங்கானை மாடம் என்பது கோயிலின் பெயர். தலத்து இறைவனின் பெயர் சுடர்க்கொழுந்தீசர். இங்கே சுடர்க்கொழுந்து என்று குறிப்பிடப் பட்டுள்ளது. கூற்றுவன் போல் வந்த கொடிய சூலை நோயினைப் போக்கி தன்னை ஆட்கொண்ட இறைவனிடம், தூய்மையற்ற உடலுடன் வாழ தனக்கு விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவிக்காத அப்பர் பிரான், எனது ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் என்று கூறுவதன் மூலம், தூய்மையற்ற உடலினைத் தான் விட்டுவிட செய்துள்ள முடிவினை இங்கே தெரிவிக்கின்றார். அப்பர் பிரானின் திருவாயால், ஆயிரக்கணக்கான பாடல்கள் கேட்பதற்கும் அத்தகைய பாடல்கள் மூலம் சைவ மறுமலர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டிருந்த சிவபெருமான், அப்பர் பிரான் வாழவேண்டும் என்று தானே விரும்புவார். எனவே தான் அவரது விருப்பத்தை, சூலத்தின் உருவம் அவரது உடல் மீது பொறிக்கப் படுவதற்கு ஏற்பாடு செய்கின்றார்.

பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றிச்

செய்யும்

என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல

மின்னாரு மூவிலைச் சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல்

துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே

தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு ஆட்கொண்ட சிவபிரான், தனது சூலை நோயினைத் தீர்த்த கருணைச் செய்கையினை அனைவரும் அறிந்தாலும், தான் சமண மதத்தைச் சார்ந்து இருந்ததை ஒரு பழிச் சொல்லாக மற்றவர்கள் கூறுவதை அப்பர் பிரானால் தாங்க முடியவில்லை. அந்த பழிச்சொற்கள் நீக்கப்பட, தனது உடல் தூய்மையானது என்று உலகினுக்கு அறிவிக்கும் வகையில், சிவபிரானின் சின்னங்கள் அவனால் பொறிக்கப்பட வேண்டும் என்று இங்கே விரும்புகின்றார். அடிமையின் உடலின் மீது அடிமையின் உரிமையாளன் பெயர் எழுதப்படுவது போல், தான் சிவபிரானின் அடிமை என்பதை அனைவரும் அறிய சிவபிரானே, தனது சின்னங்களில் ஒன்றினை பொறித்து, அறிவிக்க வேண்டும் என்ற ஆசையினை நாம் உணரலாம்

பொழிப்புரை:

தனது வலது கையில் மூவிலைகள் கொண்டதும் உலகத்து உயிர்களுக்கு நன்மை புரிவதும் ஆகிய சூலத்தினை ஓங்கி நிற்கும் வண்ணம் தூக்கிப் பிடித்திருக்கும் பெருமான், தனது தலையினில் கங்கை நதியுடன் ஒற்றைப் பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளார். அவர் பல வகையான மரங்களுடன் கோங்க மரங்களும் கலந்து நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட கொடிமாட செங்குன்றூர் தலத்தினில் பொருந்தி உறைகின்றார். அவர் தனது அடியார்கள் துன்பம் அடையும் தருணங்களில், அவர்களின் நெருங்கிய நண்பன் போன்று செயல்பட்டு அந்த துன்பங்ளைத் தீர்க்கின்றார். இவ்வாறு உயிர்களின் நண்பனாக விளங்கும் பெருமானின் திருப்பாதங்களைத் தொழும் அடியார்களை வினைகள் பற்றா.

பாடல் 7:

நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ வெள்ளை

வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்க்

கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே

விளக்கம்:

சேடன்=சிரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு, சிறந்த ஞானம் உடையவன்; கோடல்= செங்காந்தள் மலர்கள்; குறிஞ்சி நிலத்திற்கு உரிய பூக்கள். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாக கருதப்படுகின்றன. புறவு=நிலம்; இந்த பாடலில் பிச்சை ஏற்பதையே தனது வாழ்க்கையின் நோக்கமாக கொண்டுள்ள பெருமான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு அப்பர் பிரான் அருளிய செம்பொன்பள்ளி தலத்து பாடலை (5.36.1) நினைவூட்டுகின்றது. பலி ஏற்கும் கொள்கையிலிருந்து தவறாமல் பலி ஏற்கின்றான் என்று நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். கான்=நறுமணம்: வெண் தலை=தசை நீங்காத தலை; அறாத=நீங்காத

கான் அறாத கடி பொழில் வண்டினம்

தேன் அறாத திருச்செம்பொன்பள்ளியான்

ஊன் அறாததோர் வெண் தலையில் பலி

தான் அறாததோர் கொள்கையன் காண்மினே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.56.5), இறைவன் ஒவ்வொரு நாளும் பலி ஏற்கின்றான் என்று சம்பந்தர் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

நச்சரவச் சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு

அச்சம் எழ விடை மேல் அழகார் மழு ஏந்தி நல்ல

இச்சை பகர்ந்து மிக இடுமின் பலி என்று நாளும்

பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே

பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான். இந்த நிலை வாழ்க்கைக்கு அப்பர் பிரான் ஒரு சிறந்த உதாரணம். சமணர்கள் கொடுமைகளால், பல துன்பங்கள் அனுபவித்த போதும், எல்லாம் ஈசன் செயல் என்று ஏற்றுக் கொண்ட அவர், இன்பங்களை அனுபவித்த போதும் ஈசனது செயல் என்றே செயல்பட்டார். புகலூரில் உழவாரப் பணி செய்து வருகையில், தரையில் கிடந்த விலை மதிப்பில்லாத மணிகளையும் குப்பைகளாக கருதி, கல்லுடன் மண்ணுடன் கலந்து அவற்றையும் அப்புறப் படுத்தினார். மேலும் அரம்பையர்கள் அவரின் முன்னே வந்து நடனமாடி, அவரது கவனத்தைத் தங்கள் பால் ஈர்க்க முயற்சி செய்த போதும், மனம் பேதலிக்காமல், அவர்களை எனது வழியிலிருந்து விலகிச் செல்லுங்கள், அல்லையேல் திருவாரூர் பெருமான் உங்களை தண்டிப்பார் என்று எச்சரிக்கை விடுத்து, அகன்றார்.

பரந்து உலகேழும் படைத்த பிரானை

இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்

நிரந்தரமாக நினையும் அடியார்

இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது நமக்கு அருள் புரிவதற்காக என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுவது, திருமூலரின் கருத்தினை பின்பற்றியே.

ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே

பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்

சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்

ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்

பெருமான் பலி ஏற்பது, உயிருடன் இணைந்துள்ள, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று பொருட்களை பெறுவதற்காக என்று கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.12.5) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கடை=வாயில்; உடையான் என்று உயிர்களைத் தனது உடைமையாக கொண்டுள்ள பெருமானை சம்பந்தர் இங்கே குரிப்பிடுகின்றார்.

சடையானைத் தலை கையேந்திப் பலி தருவார் தம்

கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்

புடையே பொன் மலரும் கம்பைக் கரை ஏகம்பம்

உடையானை அல்லாது உள்காது என் உள்ளமே

பொதுவாக பிச்சை ஏற்பவர் பெறும் பயன், பிச்சை இடுவோர் பெறும் பயனை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் சிவபெருமான் பிச்சை ஏற்பது, தான் பயன் அடைவதற்காக அல்ல. அவருக்கு பிச்சை இடுவோர்கள் தங்களது அகங்காரம் (மலங்கள்) அழியப் பெற்று நலம் பெறுவதற்குத் தான். இந்த உண்மை அப்பர் பெருமானால் கீழ்க்கண்ட திருவாரூர் தலத்து பாடலில் (4.53.6) விளக்கப்படுகின்றது. பிச்சை ஏற்கும் பெருமான் உண்பது நஞ்சு என்று பாடலின் மூன்றாவது அடியில் கூறும் அப்பர் பிரான், சிவபெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்பதையும் தெளிவு படுத்துவதை நாம் இங்கே காணலாம். இந்த பாடலில் குறிப்பிடப்படும் பிச்சை ஏற்கும் நிகழ்ச்சியை, தாருகவனத்து நிகழ்ச்சியாக கருதி, தாருகவனத்து மகளிரின் கர்வமும், பெண்மைக்குரிய இயல்புகளும் ஒழிந்து போகுமாறு, சிவபெருமான் பிச்சைப் பெருமானாக வலம் வந்தார் என்றும் விளக்கம் அளிப்பதும் பொருத்தமே. தானகம் என்ற சொல்லினை தான் அகம் என்று பிரித்து, அடியார்கள் தங்களது அகங்காரம் அழியும் பொருட்டு இறைவன் பலி ஏற்கின்றார் என்பதை உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

வானகம் விளங்க மல்கும் வளம்கெழு மதியம் சூடித்

தானகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்

ஊனகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளிகொள் நஞ்சம்

ஆனகத்து அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே

ஏற்பது இகழ்ச்சி என்பது முதுமொழி. ஆனால் சிவபெருமான் தன் பொருட்டு பலி ஏற்காமல் மக்களை உய்விப்பதற்காக பலி ஏற்பதால், அவன் எடுக்கும் பிச்சை இகழ்ச்சிக்கு உரியது அல்ல. இதனை புரிந்து கொள்ளாமல் பலர் பெருமான் பிச்சை எடுப்பதை இகழ்வாக கூறினாலும், பெருமான் அதனை பொருட்படுத்துவதில்லை. உயிர்கள் தங்களது மலங்களை பெருமான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைவதற்கு ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, பிறரது பழிச் சொற்களை புறக்கணித்து பிச்சை எடுக்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம், பழி ஓராது பெருமான் பலி ஏற்கின்றார் என்று திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.93.8) திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பல செய்திகளையும் தத்துவங்களையும் விளக்கமாக உரைக்கும் வேதங்களும், அருளாளர்கள் இயற்றிய பாடல்களும், பெருமானின் ஒரு சில செய்கைகளையே சொல்ல முடிகின்றது என்று உணர்த்தி, பெருமானின் பெருமை சொற்களையும் கடந்தது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மலைமல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்

தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார்

சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்

சில வல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே

பெருமான் இடும் பணியை தங்களது தலையால் செய்வதற்கு எண்ணற்ற தேவர்களும், பூத கணங்களும் காத்துக் கொண்டு இருக்கையில், பெருமான் தானே பலி ஏற்கச் செல்கின்றார் என்று அப்பர் பிரான் கஞ்சனூர் தலத்து பதிகத்தில் (6.90.7) கூறுகின்றார். அடியார்கள் தான் ஏந்திச் செல்லும் பிச்சைப் பாத்திரத்தில் தங்களுடைய மலங்களை பிச்சையாக இட்டால் அதனை ஏற்று அவர்களை உய்விக்கும் திறன் படைத்தவன் அவன் ஒருவன் தான் என்பதால், இந்த பணிக்கு வேறு எவரையும் நியமிக்காமல் தானே இறைவன் செல்கின்றான் என்பது பெரியோர்களின் விளக்கம். இந்த செய்கை உயிர்களின் பால் பெருமான் கொண்டுள்ள கருணையினையும், உயிர்கள் தங்களது மலங்களைக் களைந்து வீடுபேறு பதவியைப் பெற்று நிலையான இன்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்பதில் பெருமான் கொண்டுள்ள அக்கறையினையும் வெளிப் படுத்துகின்றது. பெருமான் பலியேற்க வருவதை நமது ஊனக் கண்களால் நாம் காணமுடியாது. எனவே, நாம் இடவிருக்கும் பலியினை ஏற்றுக் கொள்வதற்கு, அவர் நம்மைத் தேடி வருவதாக நாம் கற்பனை செய்து கொண்டு, யான் எனது என்ற செருக்கினையும், நம்மை பீடித்துள்ள மூன்று மலங்களையும் அவனது திருப்பாதங்களில் சமர்ப்பித்து, உய்வினை அடைவோமாக.

நாரணனும் நான்முகனும் அறியாதானை நால்வேதத்து உருவானை

நம்பி தன்னைப்

பாரிடங்கள் பணி செய்யப் பலி கொண்டு உண்ணும் பால்வணனைத்

தீவணனைப் பகல் ஆனானை

வார் பொதியும் முலையாள் ஓர் கூறன் தன்னை மான் இடம் கை

உடையானை மலிவார் கண்டம்

கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக்

கண்டு உய்ந்தேனே

பொழிப்புரை:

மாலை போன்று நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களுடன் கூடிய நீண்ட புன்சடை தாழ்ந்து தொங்க, தனது கையினில், தசைகள் வாடி உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்படும் பிரமனின் மண்டையோட்டினை பிச்சை பாத்திரமாக ஏற்று பல இடங்களிலும் தெரிந்து பலி ஏற்பதை தனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள பெருமான், செங்காந்தள் மலர்கள் நிறைந்த வளம் பொருந்திய வயல்களை உடைய கொடிமாட செங்குன்றூர் தலத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றான். தலை சிறந்த ஒழுக்கம் உடைய்வனகத் திகழும் பெருமானின் திருப்பாதங்களைத் தொழும் அடியார்களின் வினைகள் முற்றிலும் தேய்ந்து அழிந்துவிடும்.

பாடல் 8:

மத்த நன் மாமலரும் மதியும் வளர் கொன்றையுடன் துன்று

தொத்தலர் செஞ்சடை மேல் துதைய உடன் சூடிக்

கொத்தலர் தண்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய

தத்துவனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே

விளக்கம்:

தத்துவன்=அனைவரிலும் உயர்ந்தவன்; பிறந்து அழியும் அனைத்து உயிர்களின் நடுவே, என்றும் அழியாது நிலைத்து நிற்கும் இறைவனை விடவும் உயர்ந்தவர் வேறு எவரும் இல்லை என்பதால் இறைவனை தத்துவன் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். மத்த=ஊமத்தை மலர்; துன்று= நெருங்கிய, தொத்தலர்=கொத்தாக பூத்துள்ள மலர்கள்; துதைய=பொருந்தும் வண்ணம் தண் பொழில்=குளிர்ந்த சோலைகள்; வளர் கொன்றை=அன்றலர்ந்த கொன்றை மலர்கள்;

பொதுவாக தனது பதிகத்தினில் இராவணனைப் பற்றிய குறிப்பினை இணைத்தே பாடுவது ஞானசம்பந்தரின் வழக்கம். பல பதிகங்களில் எட்டாவது பாடலில் காணப்படாத இந்த குறிப்பு, வேறு பாடல்களில் இருப்பதையும் நாம் காணலாம். இராவணனைப் பற்றிய குறிப்பு காணப்படாத பதிகங்கள் மொத்தம் இருபத்தேழு பதிகங்கள். இந்த எண்ணிக்கையில், மூன்று குறிப்புகளும் (இராவணன், திருமால் மற்றும் பிரமன் தேடிக் காணாது திகைத்த தன்மை, சமணர்கள் மற்றும் புத்தர்கள்) இல்லாத ஆறு பதிகங்களும் அடங்கும். எஞ்சியுள்ள இருபத்தொரு பதிகங்களில், பதினொரு பதிகங்களில் இராவணன் பற்றிய குறிப்பு இல்லையென்றாலும், மற்ற இரண்டு குறிப்புகளில் ஏதேனும் ஒன்று உள்ளது. நாம் விளக்கமாக சிந்திக்கும் இந்த பதிகத்தினில், மற்ற இரண்டு குறிப்புகள் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் இருப்பதையும், எட்டாவது பாடலில் இராவணன் பற்றிய குறிப்பு இல்லாமல் இருப்பதையும் நாம் காணலாம். இத்தகைய பதிகங்கள் மொத்தம் பத்து உள்ளன. அந்த விவரங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

பதிக எண் தலம் முதற்சொல்

1.05 கீழைத் திருக்காட்டுப்பள்ளி செய்யருகே புனல்

1.25 செம்பொன்பள்ளி மருவார்குழலி

1.49 திருநள்ளாறு போகமார்த்த

1.83 அம்பர் மாகாளம் அடையார் புரமூன்றும்

1.87 வடுகூர் சுடுகூர் எரிமாலை

1.118 பருப்பதம் சுடுமணி உமிழ் நாகம்

1.119 கள்ளில் முள்ளின் மேல் முது

1.121 இடைமருதூர் நடைமரு திரிபுரம்

2.21 கழிப்பாலை புன்லாடிய புன்சடை

3.43 சீர்காழி சந்தமார் முலையாள்

3.104 பரிதிநியமம் விண்கொண்ட தூமதி

பொழிப்புரை:

அழகிய ஊமத்தை மலர்களும், ஒற்றைப் பிறைச் சந்திரனும், அன்றலர்ந்த கொன்றை மலர்களும் கொத்து கொத்தாகத் தனது செஞ்சடையினில் பொருந்தும் வண்ணம், ஒன்றுக்கொன்று நெருங்கி இருக்கும் வண்ணம் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், கொத்து கொத்தாக பூக்கள் பூக்கும் குளிர்ந்த சோலைகள் நிறைந்த கொடிமாடச் செங்குன்றூர் தலத்தினில் நிலையாக பொருந்தி உறைகின்றான். அனைத்து உயிர்களினும் மேலானவனாகிய இறைவனைத் தொழும் அடியார்கள் , தங்களது மனக்கவலைகள் நீங்கப் பெற்றவர்களாக, தடுமாற்றம் ஏதும் இன்றி வாழ்வார்கள். .

பாடல் 9:

செம்பொனின் மேனியனாம் பிரமன் திருமாலும் தேட நின்ற

அம்பவளத் திரள் போல் ஒளியாய ஆதி பிரான்

கொம்பு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய

நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே

விளக்கம்:

அம்=அழகிய; கொம்பு=மரக்கிளைகள்; அணவும்=செறிந்து, மிகவும் அதிகமாக; நம்பன்=உயிர்களால் விரும்பப் படுபவன்; மேய=நிலையாக பொருந்திய

பொழிப்புரை:

செம்பொன்னின் நிறத்தில் உடலை கொண்டுள்ள பிரமனும், திருமாலும் முறையே அடியும் முடியும் தேடிச் சென்றபோது, தனது திருவடியையும் திருமுடியையும் அவர்கள் காண முடியாத வண்ணம், அழகிய பவளங்கள் ஒன்று சேர்ந்தது போன்று ஒளிவீசும் நீண்ட நெருப்புத் தூணாக காட்சி அளித்த பெருமான், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாவான். அவர் அடர்ந்த மரக்கிளைகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட கொடிமாடச் செங்குன்றூர் தலத்தினில் பொருந்தி விருப்புடன் உறைகின்றார். அனைத்து உயிர்களாலும் விரும்பப்படும் பெருமானின் திருவடிகளைத் தொழும் அடியார்களின் வினைகள் முற்றிலும் அழிந்து அவர்களை விட்டு விலகிவிடும்.

பாடல் 10:

போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல்

ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர் வரிக்குயில்கள்

கோதிய தண்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

வேதியனைத் தொழ நும் வினை ஆன வீடுமே

விளக்கம்:

போதி மரத்தின் நிழலில் அமர்ந்த போது புத்தர் ஞானம் பெற்றமையால் போதி மரத்தினை புனிதமாக கருதியவர்கள் புத்தர்கள்; அசோக மரத்தின் (பிண்டிமரம்) நிழலில் அமர்ந்தவர் மகாவீரர். எனவே அசோக மரத்தினை புனிதமாக சமணர்கள் கருதினர். அதனால் முறையே போதியர்கள் என்றும் பிண்டியர்கள் என்றும் அவர்கள் அழைக்கப்பட்டனர். புறம்=உண்மையற்ற கட்டுக் கதைகள்; கோதிய=மூக்கினால் கொத்தித் தின்னும்; வேதியன்=வேதங்களை அளித்ததாலும், வேதங்களின் பொருளை சனகாதி முனிவர்களுக்கு விளக்கியதாலும், பெருமானை வேதியன் என்று அழைக்கின்றார். வீடுதல்=நீங்குதல்;

சமணர்கள் மற்றும் புத்தர்களின் பொய்யான பிரசாரங்களை புறக்கணித்து சிவபெருமானைத் தொழுது வாழும் அடியார்களின் வினைகள் நீங்கும் என்று உரைப்பதன் மூலம், இதன் எதிர்மறையாக வாழும் மனிதர்களை விட்டு வினைகள் விலகாது என்று ஞானசம்பந்தர் இங்கே விளக்குகின்றார். வேதங்களில் உள்ள சொற்களுக்குத் துணையாக இருக்கும் இறைவன் என்பதை கருத்தில் கொண்டு, சொற்றுணை வேதியன் என்று அப்பர் பிரான் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. .

பொழிப்புரை:

போதியர்கள் என்றும் பிண்டியர்கள் என்றும் அழைக்கப்படும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் பெருமானின் தன்மையை சரியாக அறிந்து கொள்ளாமல் பல பொய்யான தகவல்களை இட்டுகட்டிக் கலந்து பெருமானை பழித்துப் பேசுகின்றனர். அந்த உரைகளைக் கேட்டு தடுமாறி, பெருமானைத் தொழுவதைத் தவிர்த்து துன்பத்தில் உழலும் மனிதர்களே, அடியேன் சொல்வதை கேட்பீர்களாக, வரிக்குயில்கள் தங்களது மூக்கினால் கொத்தித் தின்னும் வண்ணம், தளிர் இலைகள் நிறைந்து செழுமையுடன் காணப்படும் குளிர்ந்த சோலைகள் நிறைந்த கொடிமாடச் செங்குன்றூர் தலத்தினில் நின்ற வண்ணம் காட்சி தரும் மாதொருபாகனை, வேதியனைத் தொழுதால் உங்களது வினைகள் உங்களை விட்டு நீங்கிவிடும். எனவே சிவபெருமானைத் தொழுது உங்களது வினைகளாய் நீக்கிக் கொண்டு இன்பம் அடைவீர்களாக.

பாடல் 11:

அலைமலி தண்புனல் சூழ்ந்து அழகார் புகலிந்நகர் பேணும்

தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்

கொலை மலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூர் ஏத்தும்

நலமலி பாடல் வல்லார் வினையான நாசமே

விளக்கம்:

இந்த பாடலில் தலைமகன் என்று தன்னை ஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். வேறு எவருக்கும் கிடைக்காத பேற்றினை, அம்மை அளித்த ஞானப்பாலை உண்டவன் என்பதால் பெருமானைத் தனது தந்தையாகவும் பிராட்டியைத் தனது தாயாகவும் பெற்ற பெருமையை உடைய தன்னை, தலைமகன் என்று பொருத்தமாக அழைப்பதை நாம் உணரலாம் மூவிலை நற்சூலம் என்று ஆறாவது பாடலில் உணர்த்திய ஞானசம்பந்தர் இந்த பாடலில் கொலைமலி மூவிலையான் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் மூவிலைச் சூலம் அந்தகனின் செருக்கினை அழிக்க பயன்பட்டது. இந்த வீரச்செயல் அட்டவீரச் செயல்களில் ஒன்றாக கருதப் பட்டாலும் மிகவும் குறைவான திருமுறைப் பாடல்களே இந்த செயலை குறிப்பிடுகின்றன. பல பாடல்கள் சூலத்தால் அந்தகனை அழுத்தி செருக்கினை அழித்தமை சொல்லப்படுகின்றது.

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.12.5) ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த அரக்கன் அந்தகனின் உடலினை, கூர்மையானதும் அழகு மிகுந்ததும் இரத்தக் கறை படிந்து காணப்படுவதும் மூவிலைச் சூலத்தின் வடிவில் அமைந்ததும் ஆகிய நீண்ட வேலினை முனையில் குத்தி ஏந்திய சிவபெருமான் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அந்தன்=அந்தகாசுரன்; அறையார்=ஒலிக்கின்ற; அயில்=கூர்மையான; கறை=இரத்தத்தால் ஏற்பட்ட கறை; ஒண் மலர்=சிறந்த மலர்கள்; முறையாயின=முறையாக சொல்லப்படும் வேத மந்திரங்கள்;

அறையார் கழல் அந்தன் தனை அயில் மூவிலை அழகார்

கறையார் நெடு வேலின் மிசை ஏற்றான் இடம் கருதில்

முறையாயின பல சொல்லி ஒண் மலர்ச் சாந்து அவை கொண்டு

முறையால் மிகு முனிவர் தொழ முதுகுன்று அடைவோமே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.09.3) சம்பந்தர் இந்த நிகழ்ச்சியை கூறுகின்றார். அந்தகனை வென்ற மூவிலைச் சூலத்தை உடைய பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் அருட் செயல்களை, அவர் புரிந்த வீரச் செயல்களை குறிப்பிட்டு அவரைப் புகழும் அடியார்களின் வலிய வினைகள் மாய்ந்துவிடும் என்று சம்பந்தர் கூறுகின்றார். இறைவனை நீராட்டுவதை திருமஞ்சனம் என்று அழைப்பது இன்றைய வழக்கிலும் உள்ளதை நாம் உணரலாம்.

நஞ்சினை உண்டு இருள கண்டர் பண்டு அந்தகனைச் செற்ற

வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமிழலையார்

அஞ்சனக் கண் உமை பங்கினர் கங்கை அங்கு ஆடிய

மஞ்சனச் செஞ்சடையார் என வல்வினை மாயுமே.

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (6.96.5) அப்பர் பிரான் அந்தகனின் உடலினை கூர்மையான சூலத்தால் பெருமான் அழுத்தியதாக குறிப்பிடுகின்றார். தனது வலிமையால் தேவர்களை வென்ற அரக்கன், பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்ட பல தேவர்களை பெண்களுக்கான உடையை அணியச் செய்து ஏளனம் செய்ததுடன் அவர்களை பல விதத்திலும் துன்புறுத்தினான். தேவர்களின் முறையீட்டுக்கு இரங்கிய சிவபெருமான், பைரவரை அந்தகனுடன் போருக்கு செல்லுமாறு பணிந்தார். பைரவரும் அந்தகனை வெற்றி கொண்ட பின்னர், அவனது உடலினை சூலத்தில் ஏந்தியவாறு பெருமான் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்தார். பெருமானை தரிசனம் செய்த உடன், பெருமானின் கடைக்கண் பார்வை அரக்கனது பாவங்கள் அனைத்தையும் அழிக்கவே, செருக்கு நீங்கிய அரக்கன் பெருமானை புகழ்ந்து துதித்தான். மனம் திருந்திய அவனை பெருமான் தனது கணங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார் என்று கந்த புராணம் கூறுகின்றது. அந்தகனை வென்ற இடம், திருக்கோவலூர் என்று கருதப் படுகின்றது.

அந்தகனை அயில்சூலத்து அழுத்திக் கொண்டார் அருமறையை

தேர்க் குதிரை ஆக்கிக்கொண்டார்

சுந்தரனைத் துணைக் கவரி வீசக் கொண்டார் சுடுகாடு நடமாடும்

இடமாக் கொண்டார்

மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக் கொண்டார் மாகாளன்

வாசல் காப்பாக் கொண்டார்

தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார் சமண் தீர்த்து என்னை

ஆட்கொண்டார் தாமே

அந்தகன் ஒரு அசுரன்; சுந்தரன்=ஆலால சுந்தரன் என்ற பெயருடன் திருக்கயிலையில் பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக விளங்கியவர்; பின்னாளில் நம்பி ஆரூரராக பிறந்தவர்; மாகாளர்=கயிலையின் மேற்கு வாசலை காக்கும் எழுவருள் ஒருவர்; தந்திரம்=வழிபாடு செய்யும் முறை; தந்திரம் என்ற சொல் ஆகமங்களை குறிக்கும் என்றும் கூறுவார்கள். அயில்=கூர்மை; திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போருக்கு சென்ற போது நான்கு வேதங்களும், பெருமானின் தேரினை இழுத்துச் செல்லும் குதிரைகளாக மாறின. துணை கவரி=இரண்டு சாமரங்கள்;

தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.63.9) அப்பர் பிரான் அந்தகனை அயில் சூலத்தால் கொன்றவன் என்று கூறுகின்றார். அயில்–கூரிய. தென்றல் மன்மதனின் தேராக கருதப் படுகின்றது. அந்தகன் என்ற சொல் இயமனை குறிப்பதால், இங்கே அந்தகன் என்று கூறியது இயமனை என்று சிலர் குறிப்பிடுகின்றனர். திருக்கடவூர் தலத்தில் காணப்படும் காலசம்ஹார மூர்த்தி கையில் சூலம் ஏந்தியவராக காணப்பட்டாலும் இயமனை காலால் உதைத்து பெருமான் வீழ்த்தினார் என்ற செய்தியே பல புராணங்களிலும் உள்ளது; மேலும் தேவாரப் பாடல்களும் அவ்வாறே உணர்த்துகின்றன. எனவே இந்த பாடலில் அந்தகாசுரனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்பதே பொருத்தம். கொன்றவன் என்பதற்கு அந்தகனது செருக்கினை அழித்தவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

தென்றல் நன்னெடும் தேர் உடையான்

பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன்

அன்று அந்தகனை அயில் சூலத்தால்

கொன்றவன் குரங்காடுதுறையனே

அரிசிற்கரைப் புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.9.2) சுந்தரர் நெருப்பினை உமிழும் சூலத்தை அந்தகனின் உடலில் பாய்ச்சியதாக கூறுகின்றார். பிரமனின் சிரம் அறுத்த வீரச்செயல் மற்றும் அந்தகனைக் கொன்ற வீரச் செயல் ஆகிய இரண்டு செயல்களை குறிப்பிட்ட சுந்தரர், திருமாலுக்கு ஆழி அளித்ததை குறிப்பிட்டு, மூன்றாவது வீரச் செயலாகிய, சலந்தரனை வென்றதையும் குறிப்பால் உணர்த்துகின்றார்.

அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர் செறுத்தீர் அழல் சூலத்தில்

அந்தகனைத்

திருமகள் கோன் நெடுமால் பல நாள் சிறப்பாகிய பூசனை செய்

பொழுதில்

ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவாக ஒர் கண்மலர்

சூட்டலுமே

பொருவிறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழிலார் திருப்புத்தூர்ப்

புனிதனீரே

கலயநல்லூர் தலத்தின் மீது அருளிய பாடலிலும் (7.16.2) இறைவன் அந்தகன் மேல் சூலம் பாய்ச்சிய செயல் குறிப்பிடப்படுகின்றது.

செருமேவு சலந்தரனைப் பிளந்த சுடர் ஆழி செங்கண் மலர்

பங்கயமாச் சிறந்தானுக்கு அருளி

இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனைத்

தோள் முரித்த இறையவன் ஊர் வினவில்

பெருமேதை மறையொலியும் பேரி முழவொலியும் பிள்ளையினம்

துள்ளி விளையாட்டு ஒலியும் பெருகக்

கருமேதி புனல் மண்டக் கயல் மண்டக் கமலம் களிவண்டின்

கணம் இரியும் கலயநல்லூர் காணே

அந்தகனின் செருக்கினை அடக்கிய வீரச் செயல், திருமூலராலும் குறிப்பிடப் படுகின்றது. ஆணவ மலத்தினை அடக்க முயற்சி செய்யும் உயிர்கள் இறைவனை வணங்கி, அவனது உதவியால் ஆணவ மலத்தினை அடக்கலாம் என்பதே இந்த பாடலின் உட்கருத்து என்று சான்றோர்கள் கூறுகின்றனர். குருத்து=நுனி; அந்தகன் பெருமானை வழிபட்டு பெற்ற வரத்தினால் வலிமை கொண்டு விளங்கினான் என்று கந்த புராணம் கூறுகின்றது. பலரையும் வருத்திய அந்தகன், அந்த கொடிய செயல்களுக்கு உரிய தண்டணையை இயமன் மூலம் பெறாமல், சிவபெருமானால் தண்டனை அளிக்கப்பட்டு பின்னர் பெருமானின் கணங்களில் ஒருவராக கருதப்படும் நிலைக்கு உயர்ந்தான் என்ற செய்தி, சிவதீக்கை பெற்ற அடியார்கள் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு உரிய தண்டனையை சிவபெருமான் மூலமே பெறுவார்கள் என்ற சிவாகமக் கருத்து இந்த நிகழ்ச்சி மூலம் உணர்த்தப் படுகின்றது என்று திரு அருணை வடிவேல் முதலியார் அவர்கள் விளக்கம் அளிக்கின்றார். அதாவது தனது அடியார்களுக்கு, இயமன் தண்டனை அளிப்பதைத் தவிர்ப்பவர் சிவபெருமான் என்ற செய்தி உணர்த்தப் படுகின்றது.

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்

வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்

வருத்தம் செய்தான் என்று வானவர் வேண்டக்

குருத்து உயர் சூலம் கைக் கொண்டு கொன்றானே

பொழிப்புரை:

அலைகள் மிகுந்து குளிர்ச்சி பொருந்திய நீர்நிலைகள் சூழப்பெற்று அழகுடன் காணப்படும் புகலி (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) நகரினைப் போற்றி வாழ்பவனும், பெருமான் மற்றும் உமையன்னை ஆகியோரின் மகனாக வாழும் பெருமையை உடையவனும், தமிழ் மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றவனும் ஆகிய ஞானசம்பந்தன், கொடிமாடச் செங்குன்றூர் தலத்தினில் பொருந்தியவனும், கொல்லும் தொழிலில் சிறந்த படையாகிய மூவிலைத் சூலத்தைத் தனது கையில் ஏந்தியவனும் ஆகிய பெருமானைக் குறித்து பாடிய பாடல்களாய், நலமளிக்கும் பாடல்களை பாடும் முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்களை பிணைந்துள்ள வினைகள் முற்றிலும் நாசமடைந்து அவர்களை விட்டு விலகிவிடும்.

முடிவுரை:

வெண்மை நிறத்துடன் காணப்படும் பெருமானின் திருவுருவத்தைக் கண்ட ஞானசம்பந்தர், வெண்ணிறம் கொண்ட திருநீற்றினைத் தானது உடலில் பெருமான் பூசிக் கொண்டுள்ள நிலையும் வெண்மை நிறம் கொண்ட மற்ற பொருட்களும் நினைவுக்கு வந்தன போலும். வெந்த வெண்ணீறு என்று பதிகத்தின் முதல் பாடலிலும் பாலன நீறு என்று மூன்றாவது பாடலிலும், குறிப்பிட்ட ஞானசம்பந்தர், வாடல் வெண்தலை என்று ஏழாவது பாடலில் குறிப்பிடுகின்றார். பெருமான் தனது சூடிக் கொண்டுள்ள சந்திரனும் வெண்மை நிறம் கொண்டது தானே. இவ்வாறு வெண்மை நிறம் கொண்ட பொருட்களை குறிப்பிடுவது, நமக்கு தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் உணர்த்தப்படும் பொருட்கள், தோடு இடபம் வெண்மதி சுடலைப்பொடி, ஆகிய அனைத்தும் வெண்மை நிறம் படித்தவை. பிராட்டி பிள்ளையாருக்கு ஊட்டிய பாலும் வெண்மை நிறம் உடையது. மேலும் பாலுடன் கலந்து கொடுக்கப்பட்ட ஞானமும் வெண்மை நிறம் வாய்ந்தது என்று பெரியோர்கள் கூறுவார்கள். அறியாமையை இருளுக்கும் ஞானத்தை வெண்மைக்கும் ஒப்பிடுவது வழக்கம். வெண்மை நிறம் கொண்ட பாலினையும் வெண்மை நிறத்தால் உணர்த்தப்படும் ஞானத்தையும் உமையம்மை வாயிலாக பெற்ற சம்பந்தர்க்கு வெண்மை நிறப் பொருட்களே முதலில் அவரது கண்களில் பட்டது போலும். பெருமானின் அடையாளங்களாக, பாம்பு. ஏனக்கொம்பு, பெண் கலந்த உருவம், கங்கை நதி, ஆமை ஓடு, கோவண ஆடை, கங்கணம், செஞ்சடை, சிவந்த திருமேனி முதலியவை இருக்க, வெண்மையான நிறத்தில் உள்ள பொருட்களை மட்டும் தேர்ந்து எடுத்தது இந்த பாடலின் தனிச் சிறப்பு.

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்

காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

நின்ற திருக்கோலத்தில் மாதொரு பாகனாக பெருமான், இந்த தலத்தினில், காட்சி தருகின்றார் என்பதை உணர்த்தும் வண்ணம், கொடிமாடச் செங்குன்றூர் நின்ற என்று பதிகத்தின் முதல், இரண்டாம், நான்காம், ஏழாவது, பத்தாவது மற்றும் பதினோராம் பாடல்களில் ஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானின் திருப்பாதங்களை நாம் உறுதியாக பற்றிக்கொண்டு, வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக, இந்த பதிகத்தின் பல பாடல்களில் (பாடல் எண்; 3, 4, 5, 6, 7, 9) பெருமானின் கழலை ஏத்துவீர் என்று ஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானை வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் பலன்கள் குறிப்பிடப்படுகின்றன. பெருமானைக் குறித்து செய்யப்படும் வழிபாடு நமது துன்பங்களையும் வருத்தங்களையும் நீக்கும் என்று முதல் பாடலிலும், நமது தடுமாற்றங்களை அறுக்கும் என்று இரண்டாவது பாடலிலும் குறிப்பிடும் ஞானசம்பந்தர், இந்த இரண்டு பயன்களை கருத்தினில் கொண்டு அவரை வழிபடுவதே நமது வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று மூன்றாவது மற்றும் நான்காவது பாடல்களில் கூறுகின்றார். இவ்வாறு நாம் வாழ்ந்தால், நிலையான அழிவற்ற இன்பத்தை அளிக்கும் முக்திநிலையை அடையலாம் என்று ஐந்தாவது பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார். நம்மை உறுதியாக பற்றியுள்ள வினைகள் நம்மை விட்டு நீங்கி விடும் என்று ஆறாவது பாடலிலும், நம் மேல் படர்ந்துள்ள வினைகள் தேய்ந்துவிடும் என்று ஏழாவது பாடலிலும், நாம் நமக்கு ஏற்படும் தடுமாற்றங்களை தவிர்க்கலாம் என்று எட்டாவது பாடலிலும் நமது வினைகள் முற்றிலும் நாசமாகி விடும் என்று ஒன்பதாவது பாடலிலும், நம்மை விட்டு வினைகள் விலகி ஓடிவிடும் என்று பத்தாவது பாடலிலும் உணர்த்தும் ஞானசம்பந்தர், இந்த பதிகத்தினை முறையாக ஓதும் அடியார்களது வினைகள் நாசமாகி விடும் என்று உறுதி கூறுகின்றார். கொடிமாடச் செங்குன்றூர் தலத்தில் உறையும் மாதொருபாகனை வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை இந்த பதிகம் மூலம் அறிந்து கொண்ட நாம், திருச்செங்கோடு தலம் சென்றடைந்து பெருமானைத் தொழுதும், இந்த பதிகத்தினை முறையாக அவரது சன்னதியில் பாடியும், அவரது அருளினைப் பெற்று, நமது வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, அழிவற்ற நிலையான பேரானந்தம் தரும் முக்தி உலகம் சென்றடைவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Ventha Venneeru
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

வெந்த வெண்ணீறு


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: