Go Back

22/03/21

அவ்வினைக்கு இவ்வினை


பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையில் தனது வாழ்க்கையில் முதன் முறையாக கொங்கு நாட்டுத் தலங்களுக்கு சென்ற திருஞானசம்பந்தர், முதலில் கொடிமாடச் செங்குன்றூர் தலத்திற்கு சென்று, வெந்த வெண்ணீறு என்று தொடங்கும் பதிகத்தினை (1.107) பாடி மாதொருபாகனைப் போற்றி வணங்கிய பின்னர், திருநணா (தற்போதைய பெயர் பவானி) தலம் சென்று பதிகம் பாடி இறைவனை வணங்குகின்றார். மாதொரு பாகனின் திருக்கோலம் அவரது மனதினை விட்டு நீங்காது இடம் பெற்றிருந்த தன்மையை, திருநணா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.72) ஐந்து பாடல்களில் மாதொருபாகனின் தன்மையை குறிப்பிட்டு இருந்தமையிலிருந்து நாம் உணரலாம். இவ்வாறு மீண்டும் மீண்டும் அந்த கோலத்தை தனது திருநணா பதிகத்தில் குறிப்பிட்ட போதிலும் அவருக்கு மன நிறைவு ஏற்படவில்லை போலும். மீண்டும் கொடிமாடச் செங்குன்றூர் சென்று பெருமானின் மாதொருபாகன் திருக்கோலத்தை காண வேண்டும் என்று விரும்பியவராக அவர், பவானியிலிருந்து கொடிமாடச் செங்குன்றூர் செல்கின்றார். இதனிடையில் மழைக்காலம் முடிவுறவே முன்பனிக்காலம் வந்தது. பனியினை வெறுக்கும் வண்டினங்கள் வெளியே வருவதை தவிர்க்க, தாமரை மலர்கள் போதிய வெப்பம் இல்லாமையால் கருக, மரகத மணியினை கோத்தது போன்று மெல்லிய அருகம்புல்லின் முனையில் பனித் துளிகள் படிய பனிக்காலம் இருந்தது என்று சேக்கிழார் விவரிக்கின்றார். அனைத்து வகையான உயிரினங்களும் தத்தம் துணையோடு தங்களது இருப்பிடங்களில் ஒடுங்கி இருக்கும் வண்ணம் பனி கடுமையாக இருந்தது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மேலும், பல மக்கள் மஞ்சளும் குங்குமமும் சேர்த்து அரைத்து, நெருப்பிட்டு அதனில் அகில் பொடிகளைத் தூவி நறுமணம் மிகுந்த புகை எழுப்பி, குளிர் காய்ந்தனர். இத்தகைய சூழ்நிலையில் பல நாட்களாக இந்த தலத்தினில் ஞானசம்பந்தரும் அவருடன் சென்ற அடியார்களும் தங்கியிருந்ததால், அடியார்கள் பலருக்கு மலைநாட்டினில் ஏற்படும் குளிர்சுரம் பாதித்து அவர்களை நடுங்க வைத்தது. அடியார்கள் ஞானசம்பந்தரிடம் சென்று தங்களது துன்பத்தை தெரிவிக்க, ஞானசம்பந்தர் குளிரும் குளிர்சுரமும் மலை நாட்டின் இயல்பு என்று குறிப்பிட்டு எனினும் அந்த இயல்பினால் விளையும் கொடுமைகள் பெருமானின் அடியார்களை சாராமல் இருக்கவேண்டும் என்ற கருத்துடன் இறைவனை வேண்டி, இந்த பதிகம் பாடினார்.

அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எலாம்

முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே

இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறா என்று

சென்னிமதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்

அந்த பதிகம் தான் அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்கும் இந்த பதிகம். இறைவனார் உட்கொண்ட நஞ்சினைத் தடுத்து வானவர்க்கும் உலகத்தவர்க்கும் எங்கும் பொங்கிப் பரவிய ஆலகால விடத்தினால் எந்தவிதமான தீங்கும் நேரிடாமல் பாதுகாத்தது நீல நிறமாக மாறிய கழுத்து என்றும், அந்த நீலகண்டம் அடியார்களுக்கு துன்பம் வாராமல் பாதுகாக்கும் என்ற பொருள் பட இந்த பதிகம் பாடியதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். மேலும் நீலகண்டத்தின் சிறப்பு கருதி, திரு என்ற அடைமொழியை சேர்த்து திருநீலகண்டம் என்று அழைத்து ஆணையிடுவதாக இந்த பதிகம் அமைந்துள்ளது என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களும் அடியார்கள் தீவினை தீண்டப்பெறாது திருநீலகண்டம் பாதுகாக்கும் என்று முடிகின்றன.

அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த

வெவ்விடம் முன் தடுத்து எம்மிடர் நீக்கிய வெற்றியினால்

எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே

செய்வினை தீண்டா திருநீலகண்டம் எனச் செப்பினார்

ஞானசம்பந்தர் திருநீலகண்டத்தின் மீது ஆணை என்று உணர்த்தி பாடிய இந்த திருப்பதிகம், நமக்கு திருநீலகண்டத்தின் மீது ஆணை என்று தனது மனைவி ஆணையிட்டதைக் கேட்ட திருநீலகண்டக் குயவனாரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. பரத்தையின் அழகில் மயங்கிய தனது கணவர், நீலகண்டக் குயவனரின் மீது கோபம் கொண்ட அவரது மனைவி, அவருடன் பிணக்கு கொண்டு அவருடன் பேசுவதையும் தவிர்க்கின்றார். மனைவி தன் பால் கொண்ட கோபத்தை குறைக்க குயவனார் முயற்சி செய்கின்றார். பலவிதமாக இறைஞ்சி பேசிய போதும் மாணவி இணங்காததைக் கண்ட, குயவனார், தனது மனைவியை தொடுவதற்கு முயல, அவரது மனைவியார் திருநீலகண்டத்தின் மீது ஆணை வைத்து நீர் எம்மை தீண்டாதீர் என்று கூறுகின்றார். கணவரும் அதற்கு உடன்படவே ஒருவரை ஒருவர் தொடாமலே பல வருடங்கள் வாழ்ந்தார்கள், அவர்கள் அவ்வாறு இருந்ததை அயலவர்கள் எவரும் அறியாத வண்ணம் அவர்கள் வாழ்ந்தனர் என்பதையும், அவர்களின் தன்மையை உலகுக்கு உணர்த்த பெருமான் நடத்திய திருவிளையாடலையும் பெரிய புராணம் எடுத்துரைக்கின்றது. திருநீலகண்டத்தின் மீது ஆணை என்ற சொற்கள் எவ்வளவு உயர்வாக அந்நாளில் மதிக்கப் பட்டன என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகின்றது.

விஷஜுரம், குளிர்க்காய்ச்சல் ஆகியவற்றிலிருந்து விடுபடவும், தொண்டை நோய் குணமடைந்து குரல் வளம் பெறவும், செய்வினைகளால் வரும் துயரங்கள் நீங்கவும் ஓத வேண்டிய பதிகம் என்று, திருநீலகண்டப் பதிகத்தினை முன்னோர்கள் கூறுவார்கள். சிறந்த பலன்களைத் தரும் பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்றாக கருதப் படுகின்றது.

பாடல் 1:

அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃது அறிவீர்

உய்வினை நாடாது இருப்பது உம் தமக்கு ஊனம் அன்றே

கைவினை செய்து எம் பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

விளக்கம்:

அவ்வினை=சென்ற பல பிறப்புகளில் செய்த தீவினைகள்; இவ்வினை=பழைய வினைகளின் பயனாக இந்த பிறவியில் அனுபவிக்கும் துன்பங்கள்; பொதுவாக சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைகளின் பயனை, இன்பமாகவும் துன்பமாகவும் உயிர்கள் இந்த பிறவியில் நுகர்ந்து கழிக்க வேண்டும் என்பதே விதி. இந்த விதியினை மாற்றுவதற்கோ வினைகளை முற்றிலும் அகற்றவோ குறைக்கவோ, பெருமானைத் தவிர்த்து வேறு எவருக்கும் அதிகாரம் கிடையாது. எனவே இந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு பெருமானை வணங்கித் தொழுது உயிர்கள் தங்களது வினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்பதே அருளாளர்கள் மீண்டும் மீண்டும் நமக்கு வழங்கும் அறிவுரை ஆகும். இவ்வாறு நமது வினைகளைத் தீர்த்துக் கொள்ளும் உபாயம் இருக்கையில், அதனை விட்டுவிட்டு, வினைகளைக் கழித்துக் கொண்டு உய்யும் வழியினை நாடாமல் இருப்பது நமது தவறு தானே. இந்த குற்றத்தையே நமது ஊனம் என்று இங்கே ஞானசம்பந்தர் சுட்டிக் காட்டுகின்றார். பெருமானை நாடுவதற்கு நமக்கு உள்ள சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு வழிகளை கைவினை என்று குறிப்பிடுகின்றார். பெருமானை வழிபடாமல் வாழ்வது ஊனம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது, அப்பர் பிரான் தில்லைத் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. .

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

மனமொன்றி ஈசனை வழிபட்டால் நமக்கு ஏதும் ஊனம் இல்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். மாறாக நமக்கு நன்மையே விளையும் என்பதை நமக்கு உணர்த்தும் வகையில், இறக்கும் தருவாயிலும் சற்றும் மனம் கலங்காது பெருமானை வழிபட்ட சிறுவன் மார்க்கண்டேயன் அடைந்த பேற்றினை இங்கே குறிப்பிடுகின்றார். கன்றிய=சினந்த சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்து விட்ட நிலையில், அவனது உயிரினைக் கவரும் பொருட்டு தனது கடமையைச் செய்ய வந்த இயமனுக்கு, அந்தச் சிறுவன் தனது கடமையைச் செய்ய விடாமல் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது, கோபத்தை ஏற்படுத்தியது. பிறக்க முக்தி என்று திருவாரூரையும், இருக்க முக்தி என்று காஞ்சியையும், இறக்க முக்தி என்று காசியினையும், காண முக்தி என்று சிதம்பரத்தையும், நினைக்க முக்தி என்று அண்ணாமலையையும் குறிப்பிடுவார்கள். அந்தக் கருத்தினை வலியுறுத்தும் முகமாக சென்று தொழுமின்கள் தில்லையை என்று நமக்கு இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.

துன்பம் வந்தால் துவண்டு விடுவது மனித இயற்கை. அவ்வாறு துவண்டு நிற்கும் நிலையில், நமது மனம் தளர்ந்துள்ள நிலையில் நாம் நமது கவலைகளில் ஆழ்ந்து இறைவனை நினைப்பதை மறந்து விடுகின்றோம். எனவே தான், நாம் பெருமானின் அடியார்கள் என்ற நினைப்பு எப்போதும் நமக்கு இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம், நாம் அடியோம் என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அடியோம் என்று குறிப்பிட்டு, அவர்கள் துன்பத்திலும் இறைவனை சிந்திக்கவேண்டும். வழிபடவேண்டும் என்பதையே ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். அவர் சோற்றுத்துறை பதிகத்தின் கடைப் பாடலில் (1.28.11) கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. அடியார்களாக இருப்பவர்கள் எந்த நிலையிலும் இறைவனை சிந்திக்க வேண்டும் என்பதே இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. அடியார்களாக மாறியவர்கள் முதலில் செய்யவேண்டியது இறைவனை சிந்தித்தல், மற்றும் தேவார திருப்பதிகங்களை தமக்கு தெரிந்த அளவில் பாடுதல் என்ற கருத்து தெளிவாக இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது

அந்தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்

சிந்தை செய்ம்மின் அடியார் ஆயினீர்

சந்தம் பரவு ஞானசம்பந்தன்

வந்தவாறே புனைதல் வழிபாடே

விற்குடி வீரட்டம் தலத்தின் மீது அருளிய பாடலிலும் (2.108.1) ஞானசம்பந்தர் அடியாராகி நின்று ஏத்த வல்லார் தமை அருவினை அடையா என்று கூறுகின்றார். அருவினை=நீக்குதற்கு மிகவும் அரிய வினை; எனவே வினைகள் நம்மை அணுகாமல் இருக்கவும், அணுகிய வினைகள் நம்மை விட்டு நீங்கவும், நாம் செய்யவேண்டியது பெருமானைப் புகழ்வதே ஆகும்.

வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மது ஆர்ந்த

கடி கொள் கொன்றை அம் சடையினர் கொடியினர் உடை புலி

அதள் ஆர்ப்பர்

விடையது ஏறும் எம்மான் அமர்ந்து இனிதுறை விற்குடி வீரட்டம்

அடியாராகி நின்று ஏத்த வல்லார் தமை அருவினை அடையாவே

நோய்வாய்ப்பட்டபோது உடலும் உள்ளமும் நோயின் தன்மையால் வருந்த எவருக்கும் பொதுவாக இறையுணர்வு தோன்றுவதில்லை. நோயினால் களைத்த உடல் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கவும் ஒத்துழையாது போகலாம். ஆனால் அந்த தருணத்திலும் உறுதியாக நின்று பெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை நாம் உச்சரித்தால் ஏற்படும் விளைவினை, ஞானசம்பந்தர் திருவைந்தெழுத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.22.6) கூறுவதையும் நாம் இங்கே காண்போம். அம்மை என்பதற்கு மறுமை என்று பொருள். பல உரை ஆசிரியர்கள் அடுத்த பிறவியிலும் பஞ்சாக்கர மந்திரம் உயிரினுக்கு துணையாக இருக்கும் என்று பொருள் கூறியுள்ளனர். சிவக்கவிமணியார் அம்மை என்பதற்கு அன்னை என்று பொருள் கொண்டு, பெற்ற தாயினும் பரிந்து நன்மை புரியும் தன்மை கொண்டது பஞ்சாக்கர மந்திரம் என்று பொருள் கூறுகின்றார். பஞ்சாக்கர மந்திரம், வினைகளை அறுத்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கும் என்ற சம்பந்தரின் வாக்கினை அறிந்த நாம், பஞ்சாக்கர மந்திரத்தை ஓதும் அன்பர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்பதையும் நன்கு அறிவோம். மறுபிறப்பு ஒன்று இருந்தால் தானே, அந்த பிறவியில் பஞ்சாக்கர மந்திரம் உதவி செய்வதற்கு. எனவே அம்மை என்பதற்கு அன்னையினும் பரிந்து என்று பொருள் கொள்வது சிறப்பு. பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து உயிர்களுக்கு அருள் செய்பவன் பெருமான் அல்லவா.

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்

அம்மையிலும் துணை அஞ்செழுத்துமே

தனது உடல் எந்த வகையான இடரினில் ஆழ்ந்தாலும் தான் இடைவிடாது பெருமானின் திருவடிகளையே அரற்றுவேன் என்று ஞானசம்பந்தர் உறுதியாக கூறும் பாடல் ஆவடுதுறை மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (3.4.4). இத்தகைய உறுதியை நாம் வளர்த்துக் கொண்டு எந்த நிலையிலும் இறை சிந்தனையுடன் இருந்தால், வினைகள் நம்மை என்ன செய்ய முடியும்.

தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும்

அம் மலர் அடியலால் அரற்றாது என் நா

கைமல்கு வரி சிலைக் கணை ஒன்றினால்

மும் மதில் எரி எழ முனிந்தவனே

இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பெருமானுக்கு அடியானாக மாறி, அவனது அடிமையாக நம்மை கருதிக் கொண்டு பெருமானுக்கு பலவகையிலும் திருப்பணி செய்து கொண்டு வாழ்ந்தால், விலக்குவதற்கு மிகவும் அரிதாக உள்ள வலிமையான வினைகள் நம்மை ஒன்றும் செய்யாமல் விட்டு விடும் என்று அப்பர் பிரான் தில்லைப் பதிகத்தின் பாடல் (5.1.4) ஒன்றினில் கூறுகின்றார். அல்லல்=ஆகாமிய வினை, பழைய வினைகளை அனுபவிக்கும் போது நாம் செய்யும் செயல்களால் நாம் பெருக்கிக்கொள்ளும் வினைகள்; அருவினை=அனுபவித்தால் அல்லது தீராத வினை; வேறு எவராலும் தீர்க்கமுடியாது எனபதால் அருவினை என்று குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்லை வல்வினை=பழமையான சஞ்சித வினை; நம்மை மாயத் தோற்றத்தில் ஆழ்த்தும் வலிமை கொண்டமையால் வல்வினை என்று கூறப்பட்டுள்ளது.

அல்லல் என் செயும் அருவினை என் செயும்

தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்

தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு

எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே

சிவபிரானுக்கு அடிமையாக நாம் மாறிவிட்டால், நம்மை வினைகள் எவ்வாறு தொல்லை செய்யமுடியும் என்று அப்பர் பிரான் இங்கே கேள்வி கேட்பதைப் போல் காரைக்கால் அம்மையாரும், தனது அற்புதத் திருவந்தாதியின் 87ஆவது பாடலில் ஒரு கேள்வியினை எழுப்புகின்றார். வேறு எவரது பேச்சையும் கேளாமல், நமது அறிவினைப் பின்பற்றி, சிவபிரானுக்கு பாமாலை சூடியும் அவரது திருவடிகளுக்கு பூமாலைகள் சூடியும் வழிபட்டால், இருளாகிய கொடிய வினைகள் நம்மை எவ்வாறு பற்றும் என்பதே அந்த கேள்வி. எற்று=எப்படி, எவ்வாறு; அடுதல்=வருத்துதல்.

நாமாலை சூடியும் நம் ஈசன் பொன்னடிக்கே

பூமாலை கொண்டு புனைந்து அன்பாய் — நாமோர்

அறிவினையே பற்றினால் எற்று ஏது அடுமே

எறிவினையே என்னும் இருள்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக சமண சமயத்தில் முக்கியமான குருவாக வாழ்ந்த தருமசேனர் (சமணர்கள் அவருக்கு சூட்டிய பெயர்) எனப்படும் அப்பர் பிரான், தன்னை வந்தடைந்த சூலை நோயினை தீர்த்துக் கொள்ளும் முறை தெரியாமல் திருவதிகைப் பெருமானிடம் தஞ்சம் அடைந்த பின்னர், சூலை நோய் தீர்க்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளுடன் கூற்றாயினவாறு என்று தொடங்கும் (4.01) பதிகத்தினை படுகின்றார். நாற்பது வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சைவ மதம் திரும்பிய பின்னர், பெருமானுக்கு அடியானாகிய பின்னர், அவர் கூறும் உறுதி மொழிகளை நாம் காண்போம். இரவும் பகலும் பிரியாது வணங்குவேன் என்று முதல் பாடலிலும் என்றும் நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என்று இரண்டாவது பாடலிலும் ,உமக்கு ஆட்செய்து வாழலுற்றேன் என்று மூன்றாவது பாடலிலும் சலம் பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என்னாவில். மறந்தறியேன் என்று ஆறாவது பாடலிலும், என்று அப்பர் பிரான் கூறிய உறுதிமொழிகளில் மிகவும் முக்கியமானது நலம் தீங்கினும் உன்னை மறந்தறியேன் என்பதே ஆகும். அடியார்கள் அனைவரும் இதனை கருத்தில் கொண்டு, துன்பம் வந்த போதும், இறைவனை மறக்காமல் செயல்படவேண்டும் என்பதே அருளாளர்கள் நமக்கு கூறும் அறிவுரை ஆகும். இந்த கருத்தே, ஞானசம்பந்தரால், உய்வினை நாடாமல் இருப்பது ஊனம் அல்லவா, ஏன் அவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கேள்வியாக இந்த பதிகத்தின் முதல் பாடலில் கேட்கப்படுகின்றது. செய்வினை என்பது வினைத்தொகை; முன்னமே செய்த வினை, தற்போது செய்துகொண்டிருக்கும் வினை, இனி வரும் நாட்களில் செய்யவிருக்கும் வினை என்று மூன்று விதமான வினைகளையும் குறிக்கும்,.

பொழிப்புரை:

முற்பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாக இந்த பிறவியில் துன்பங்கள் நேரிடுகின்றன என்று பெரியோர்கள் சொல்வதை நீங்கள் அறிவீர்கள். ஆனாலும் இவ்வாறு சொல்வது சான்றோர்களின் மொழியில் ஒரு பகுதியே ஆகும். இந்த ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக் கொண்டு, மற்றோர் பகுதியை (பெருமானை வழிபடுதல்) மறந்து விட்டு வாழ்வினில் உய்வினை நாடாமல் இருக்கின்றீர்களே, இது உமது குறை என்பதை உணர்வீர்களாக. நாமெல்லாம் பெருமானின் அடியார்கள் என்பதை மறவாதீர்கள்; இறைவன் நமக்கு அளித்த கைகளை பயன்படுத்திக் கொண்டு, பெருமானுக்கு பல வகையான திருத்தொண்டுகள் செய்து, சரியை கிரியை முதலான திருப்பணிகள் செய்து, பெருமானின் திருப்பாதங்களை போற்றுவீர்களாக. அவ்வாறு செய்தால், பழைய பல பிறவிகளில் நாம் செய்த வினைகள் நம்மை வந்து தாக்காமல் நின்று விடும். உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன்.

பாடல் 2:

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்

தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

விளக்கம்:

பெருமானின் அடியவர்களாக இருக்கும் நாம், பெருமானின் திருவடிகளைப் போற்றுவோம் என்று பதிகத்தின் முதல் பாடலில் கூறிய ஞானசம்பந்தர், இந்த பாடலில் நாம் எவ்வாறு, நமது மனம் மொழி மெய்களால் இறைவனைப் போற்றுவது என்று சொல்கின்றார். மனதினால் பெருமான் திரிபுரத்து மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்ததை நினைவு கூர்ந்து, கைகளால் பூக்களைக் கொய்தும் அவரது திருவடிகளின் புகழினை வாயால் உரைத்தும் பெருமான் வழிபடவேண்டும் என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் சொல்கின்றார். மேலும் மலர்ச் சோலைகளை வளர்த்தும் குளங்களை வெட்டியும் பெருமானுக்கு திருத்தொண்டுகள் செய்யவேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். ஏ=அம்பு; வினை=செய்கை; கனி மனம்=பெருமான் பால் அன்பு வைத்து கனிந்த மனம்; பெருமான் எரித்து அழித்த மூன்று கோட்டைகள், ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்கள் என்று திருமூலர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. மலங்களே முற்றிலும் அழிந்த பின்னர், மலத்தின் விளைவுகளுக்கும் நோய்களுக்கும் இடமேது. .

பொழிப்புரை:

பெருமானின் திருமேனியின் மீது தூவி வழிபட மலர்ச் சோலைகளை வளர்ப்பதும் குளங்கள் பல வெட்டுவதும் போன்ற பல நல்லறங்களைச் செய்து பெருமானுக்கு திருத்தொண்டு செய்வீர்களாக. பெருமான் பால் அன்பினை வளர்த்து கனிந்த மனதினால், ஒரே அம்பினை எய்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் வீழ்த்தியது போன்ற பெருமானின் பல வீரச் செயல்களை நினைவு கூர்ந்து, காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு பொழுதுகளிலும் புதிதாக மலர்ந்த பூக்களைக் கொய்தும், அவ்வாறு பறித்த மலர்களை பெருமானின் திருவடிகளில் தூவி அவனது திருவடிகளை போற்றி வழிபடுவீர்களாக. அவ்வாறு அடியார்களாகிய நாம் பெருமானை வழிபட்டால் தீவினைகள் ஏதும் நம்மை வந்து தீண்டாது.. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன் , –

பாடல் 3:

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்

விலைத்து அலையா வணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்

இலைத் தலை சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்

சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

விளக்கம்:

தடம்=அகன்ற; சிலைத்து=சினந்து, ஆரவாரம் செய்து, முழங்கி; விலைத்து=விலையாகக் கொண்டு; பழவினைகளின் தாக்கத்தினால் நாம் பல துன்பங்களை அடைந்து, அந்த துன்பங்களால் வருத்தி வினைத்தொகுதியின் ஒரு பகுதியை நாம் கழித்துக் கொள்கின்றோம். திருஞானசம்பந்தர் தனது வாழ்வினில் எந்த விதமான துன்பமும் அடையாத வண்ணம், பெருமான் அவரை பாதுகாத்தமை இங்கே குறிப்பிடப்படுகின்றது. அவர் தனது வாழ்வினில் எந்த விதமான போகமும் அனுபவிக்கவில்லை என்பதையும் நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். எனவே வினைகளின் தாக்கமின்றி அவர் வாழ்ந்தார் என்பதை நாம் உணர்கின்றோம். இந்த தன்மைக்கு பெருமானின் அருளே காரணம் என்று இங்கே அவர் குறிப்பிடுகின்றார். முலைத்தடம் மூழ்கிய போகம் என்று இல்லறத்தில் மனிதர்கள் பெறுகின்ற சிற்றின்ப சுகம் குறிப்பிடப்படுகின்றது. இல்லறத்தில் ஆழ்வதற்கு விருப்பம் இல்லாதவராக திருஞானசம்பந்தர் இருந்தார். அதனால் தான் மற்றவர்களின் கட்டாயத்திற்கு இணங்கி அவர் திருமணம் செய்து கொள்வதற்கு இசைந்த போதிலும், திருமணப் பந்தலில் இருந்தவாறே பெருமானை நோக்கி, இல்லற சுகத்தைத் தான் எப்போதும் வேண்டாது இருந்தமை எனது பாடல்கள் உனக்கு தெரிவிக்கவில்லையா, என்னை ஏன் மனைவியின் காலினை கல்லில் ஊன்றுவது போன்ற திருமணச் சடங்குகள் செய்யும் வண்ணம் பணித்தாய் என்று கேட்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை (3.125.1) இங்கே காணலாம். .

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்

பல்லூர்ப் பெருமணம் பாட்டு மெய்யாய்த்தில

சொல்லூர்ப் பெருமணம் சூடலரே தொண்டர்

நல்லூர்ப் பெருமணம் மேய நம்பானே

இமையாத முக்கண் என்றதனால், தன்னைச் சரணடையும் அடியார்களை நோக்கி அவரது பார்வை படுகின்றது. உயிர்கள் பெருமானின் திருப்பாதங்களைச் சரணடைந்த மாத்திரத்தில், உயிர்கள் மீது பெருமானின் கடைக்கண் பார்வை படவே, வினைகள் தங்களது வலிமையில் குன்றி, தாங்கள் அந்நாள் வரை பிணைந்திருந்த உயிர்களை விட்டு விலகிவிடுகின்றன, என்பதை உணர்த்தும் வண்ணம், வலிமை மிகுந்த வினைகளும் இனித் தீண்டா என்று கூறுகின்றார். உயிர்கள் மீது தமது கருணைக்கண் படவேண்டும் என்பதற்காகவே, பெருமான் தனது கண்களை இமைக்காமல் வைத்திருக்கின்றாரோ என்று தோன்றுகின்றது.

பொழிப்புரை:

இல்லற வாழ்க்கை அளிக்கும் சிற்றின்ப சுகங்களும், புலன்கள் வழியாக கிடைக்கும் பல்வேறு இன்பங்களும் வாங்கிக் கொண்டு அதற்கு விலையாக வினைகளின் ஒரு பாகத்தை கழித்துக் கொண்டும், இந்த சுகங்களை அனுபவிப்பதால் மேலும் சில ஆகாமிய வினைகளை சேர்த்துக் கொண்டும் துன்பங்களை அனுபவித்தும் வருந்தும் வாழ்க்கையைத் தவிர்த்து என்னை ஆட்கொண்டவர், விரித்த சடையினையும் இல்லை போன்று கூர்மையான நுனிகளை உடைய சூலமும் தண்டாயுதமும் மழுவும் உடைய பெருமான் ஆவார். அடியார்களே, நம்மை ஆட்கொண்டு நமது துன்பங்களைத் தீர்க்கும் வல்லமை பெற்றவன் சிவபெருமான் ஒருவனே என்பது உணர்ந்து அவனை வழிபடுவீர்களாக; ஆராவரம் செய்து உம்மைத் தீண்டி வருத்தும் வினைகள் உம்மை விட்டு அகன்றுவிடும். உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன்

பாடல் 4:

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதர்களும் வேதியரும்

புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே

கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம்

திண்ணிய தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

விளக்கம்:

வித்தியாதரர் என்ற வடமொழிச்சொல் விச்சாதரர் என்று மாறியுள்ளது. திண்ணிய=வலிமை மிகுந்து; உறுதியாக உயிர்களைப் பற்றி இருப்பதால், உயிர்களால் நீக்கமுடியாத வினைகள் என்று குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் இமையாத மூன்று கண்களை உடையவர் பெருமான் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். இமையா முக்கண்ணினர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நெற்றியில் இருக்கும் கண் எப்போதும் மூடியே இருக்கும்; மற்ற இரண்டு கண்கள் எப்போதும் திறந்தே காணப்படும். இமையாத கண்கள் இமைத்து நிலை மாறிய போது விபரீதங்கள் ஏற்பட்டதை நாம் புராணங்களிலிருந்து அறிகின்றோம்,. எப்போதும் மூடியிருக்கும் நெற்றிக் கண் திறந்ததால், மன்மதன் உடல் எரிந்ததை நாம் அனைவரும் அறிவோம். இறைவன்; சிவபிரானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்கள் என்று சொல்லப்படும். ஒருமுறை விளையாட்டாக, பார்வதி தேவி, சிவபிரானின் கண்களை மூட, அனைத்து உலகங்களும் இருளில் மூழ்கின, உலகில் மொத்த இயக்கமும் நின்று போனது. தனது தவறினை உணர்ந்த பார்வதி தேவி, உடனே சிவபிரானின் கண்களை மறைத்த தனது கைகளை எடுத்துவிட்டார். பார்வதி தேவி தனது கண்களை மறைத்திருந்த கணப்பொழுதில் ஏற்பட்ட உலகத்தின் இருளைப் போக்குவதற்காக தனது நெற்றிக் கண்ணை, சிவபிரான் திறந்ததாக அப்பர் பிரான் கூறுகின்றார்.. தனது தவறினுக்கு வருந்திய பார்வதி தேவி, திருப்பாம்புரம் தலத்திற்கு வந்து, அங்கே தவம் செய்து ஒரு சிவராத்திரி நாள் அன்று, இறைவனின் தரிசனம் கிடைக்கப் பெற்றார். இந்த தகவல் அப்பர் பிரானால், தசபுராணப் பதிகத்தில் கூறப்படுகின்றது. நலம்=சிவம்; நலம் மலி மங்கை=நலத்தை அருளும் சிவனின் மனைவி உமையம்மை; அலர்தரல்=விரிதல்; அல்ர்வித்த=ஒளிவிடச் செய்த; (பாடல் 4.14.8)

நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா

உலகினை ஏழு முற்றும் இருள் மூட மூட இருள் ஓட நெற்றி ஒரு கண்

அலர் தர வஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல்

அலர் தரு சோதி போல் அலர்வித்த முக்கணன் அவனா நமக்கோர் சரணே

இமையாத முக்கண்ணினர் என்று திருமுறைப் பாடல்கள் இறைவனை உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். இமையாத முக்கண் என்று சம்பந்தர் கூறும் பாடல் (1.4.1.) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சீர்காழியில் வாழும் அந்தணர்கள், ஞான சம்பந்தர் நெடுநாட்கள் தலயாத்திரையில் இருந்ததால், தங்களது நகருக்கு உடனே திரும்பவேண்டும் என்று வீழிமிழலையில் இருந்த சம்பந்தரை சந்தித்து, வேண்டுகோள் விடுத்தனர். அடுத்த நாள் சம்பந்தர் வீழிமிழலைக் கோயிலுக்குச் சென்று சிவபெருமானின் கருத்தை அறிய முற்பட்ட போது, கோயில் விமானத்தில், சீர்காழியில் இருந்த கோலத்தை சிவபிரான் அவருக்கு காட்டியருளி, இன்னும் சில நாட்கள் மிழலையில் இருக்கவேண்டும் என்பதை குறிப்பாக உணர்த்தினார். அப்போது புகலி நிலாவிய புண்ணியன் விண்ணிழி கோயில் விரும்பி இருந்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பியவாறு சம்பந்தர் அருளிய பதிகம் இது.

மைம்மரு பூங்குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான்விழி

மங்கையோடும்

பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்தப் புகலி நிலாவிய

புண்ணியனே

எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என்

கொல் சொல்லாய்

மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண்ணிழி கோயில்

விரும்பியதே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (2.9.7) சம்பந்தர் இமையாத முக்கண்ணினன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மழபாடி மருந்து என்று பெருமானை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நமது உடலின் நோய்கள் தீருவதற்கு கொடுக்கப்படும் மருந்துகள், நாம் உட்கொள்ளவும் பூசிக்கொள்ளவும் தரப்படுகின்றன. ஆனால் இறைவன் எனப்படும் மருந்து, நமது மனதினை தூய்மை செய்வதற்காக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது என்பதால், இறைவன் எனப்படும் மருந்தினை நாம் சிந்திக்க வேண்டும், நினைக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம், மழபாடி மருந்தினை சிந்திப்பவர்களின் வினைகள் தேய்ந்து அறுந்துவிடும் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

சந்தவார் குழலாள் உமை தன்னொரு கூறுடை

எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம்பிரான்

மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடி மருந்தினைச்

சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே

ஆருயிர் திருவிருத்தம் எனப்படும் (4.84) பதிகத்தின் மூன்றாவது பாடல் இமையாத முக்கண் பெரியான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தரியா வெகுளியன் என்று பெருமானை இந்த பாடலில் அப்பர் பிரான் அழைக்கின்றார். பெருமான் கோபம் கொண்டால் எவராலும் தாங்க இயலாது என்பதை இந்த தொடர் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். தக்கன், தன்னை யாகத்திற்கு அழைக்காததையும், அவிர்பாகம் கொடுக்க மறுத்ததையும், இழிவாகப் பேசியதையும் சிவபிரான் முதலில் பொருட்படுத்தாமல் தான் இருந்தார். யாகத்திற்கு சென்ற தாக்ஷாயணியை (தக்கனின் மகள் என்பதால் அன்னைக்கு ஏற்பட்ட பெயர்), தக்கன் இழிவாகப் பேசியதன் விளைவாக அவள் அவமானம் தாங்க முடியாமல் யாககுண்டத்தில் உயிரினை விட்ட பின்னர், சிவபெருமான் தனது கோபத்தை தடுக்க முடியாமல், வீரபத்திரரை, தக்கனின் யாகத்தை அழிக்க அனுப்புகின்றார். பெருமனது திருவடி நிழலில் தனது உயிர் நிலை பெற்று இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். பிறந்த உயிர் தான் பிறந்த விதத்தையும் அன்னையையும் தந்தையையும், தனது அன்னை மூலம் உணர்கின்றது. தந்தையும் தாயும் இல்லாமல், தானே தோன்றிய பெருமான் எவ்வாற தனது பிறப்பு குறித்து அறிய முடியும். எனவே தான் பெருமானை, தனது பிறப்பு அரியான் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

தரியா வெகுளியனாய்த் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த

எரியார் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண்

பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை

அரியான் அடிநிழல் கீழது அன்றோ எனது ஆருயிரே

கடுமையான இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்ட போதும் நாம் கலங்காது இருக்கும் வண்ணம் நமக்கு புகலிடமாக இருப்பவன் பெருமான் என்று உணர்த்தும் பொதுப் பாடல் ஒன்றினில் (4.113.10) இமையாத மூன்று கண்களை உடைய பொன் குன்றம் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

கல் நெடுங்காலம் வெதும்பிக் கருங்கடல் நீர் சுருங்கிப்

பல் நெடுங்காலம் மழை தான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்றும்

என்னொடும் சூள் அறும் நெஞ்சமே இமையாத முக்கண்

பொன் நெடுங்குன்றம் ஒன்று உண்டு கண்டீர் இப்புகலிடத்தே

நெஞ்சமே, நெடுங்காலம் மழை இல்லாமல் போனால் மலைகள் தங்களது பசுமையை இழந்து வெப்பத்தினால் சூடேறிக் காணப்படும் என்றும், ஆறுகள் மற்றும் கடல்கள் வற்றிய நிலையில், மழை இல்லாததால் கொடிய பஞ்சம் ஏற்படும் என்றும் சூள் உரைக்காதே. அந்த நிலையிலும், இமையாத மூன்று கண்களை உடையவனாய் பொற்குன்றம் போன்று காட்சி அளிக்கும் சிவபெருமானை நாம் புகலடைந்தால், பஞ்சத்தால் நாம் வாடாமல் இருப்பதற்கு அவன் அருள் புரிவான் என்பது இந்த பாடலின் திரண்ட கருத்து. கடுமையான பஞ்சம் ஏற்பட்டு உணவு பற்றாக்குறை இருந்த காலத்திலும், வீழிமிழலை தலத்து இறைவன், அப்பர் பிரானுக்கும் ஞான சம்பந்தருக்கும் பொற்காசுகள் அளித்து, அவர்களைச் சார்ந்த அடியார்கள் உணவின்றி வாடாமல் காப்பாற்றிய நிகழ்ச்சி அப்பர் பிரானின் நினைவுக்கு வந்தது போலும்.

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றில் (5.47.4) இமையா முக்கண்ணர் ஆகிய பெருமான் தனது நெஞ்சத்தில் உள்ளார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அவரது உண்மையான தன்மையும் பெருமையையும் எவரும் அறிய முடியாத காரணத்தால் தேவர்களும் தொழுகின்ற பெருமான் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், நம்மையும் கச்சி ஏகம்பனைத் தொழுது நலம் பெறுமாறு தூண்டும் பாடல் இது.

இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர்

தமை யாரும் அறிவொண்ணாத் தகைமையர்

இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன்

நமை ஆளும் அவனைத் தொழுமினே

ஆமாத்தூர் திருத்தாண்டகத்தின் நான்காவது பாடலில் (6.09.4) அப்பர் பிரான் இமையா முக்கண்ணினர் என்று குறிப்பிடுகின்றார். பசைந்த=விருப்பம் உடைய; பிசைந்த=குழைத்த; படமெடுக்கும் பாம்பினை அணிந்தவராக இருந்தாலும், உடலெங்கும் திருநீறு பூசியவராக இருந்தாலும், உடலின் ஒரு பாகத்தில் பெண்ணுருவை கொண்டிருந்தாலும் பெருமான் அழகியவராக காணப்படுகின்றார் என்று அவரது அழகில் மயங்கிய இளம் பெண்ணின் எண்ணத்தை வெளிப்படுத்தும் பாடல் இது.

பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் படநாகக் கச்சையர்

பிச்சைக்கு என்று அங்கு

இசைந்ததோர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர்

நால்வேதத்தர்

பிசைந்த திருநீற்றினர் பெண்ணோர் பாகம் பிரிவறியா பிஞ்ஞகனார்

தெண்ணீர்க் கங்கை

அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர் அழகியரே ஆமாத்தூர்

ஐயனாரே

முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.85) மூன்றாவது பாடலில், இமையா முக்கண்ணினான் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நம்பன்=நம்பிக்கைக்கு உரியவன். திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற போது, தேரின் அச்சு முறிந்து விடவே, திருமால் இடபத்தின் வடிவம் எடுத்து பெருமானைத் தாங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த மால்விடையிலிருந்து வேறுபடுத்தி காட்டும் வண்ணம், நந்தியம்பெருமானை நரை விடை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நரை விடை= வெண்மை நிறத்து இடபம்; நவிலுதல்=பாடுதல்;

நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண்

கீதத்தை நவிற்றினான் காண்

இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏசற்று மனம்

உருகும் அடியார் தங்கட்கு

அன்பன் காண் ஆரழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று

யாவர்க்கும் அறிய ஒண்ணா

செம்பொன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன்

என் சிந்தையானே

இமையாத நெற்றிக்கண் இமைத்து திறந்த போது, அதனின்று வெளிப்பட்ட தீப்பொறிகளின் தாக்கத்தினால் மன்மதனின் எரிந்து அழிந்தது என்று கற்குடி தலத்தின் மீது அருளிய பாடலில் (6.60.3) அப்பர் பிரான் கூறுகின்றார். ஒளிர்கின்ற நெருப்பு என்பதைக் குறிக்க வயங்கு எரி என்று கூறப்பட்டுள்ளது வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை நம்மால் அறிய முடியாது அல்லவா. அத்தகைய விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமான திருநாமங்களை உடையவன் என்பதை உணர்த்தும் முகமாக தாரகைகள் தம்மின் மிக்க எண் என்று இறைவனை அப்பர் பிரான் இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார். ஐம்பூதங்களின் தன்மை விளக்கப்படும் பாடல். பரந்த வெளியிலிருந்து நாதம் பிறந்தமையால், ஆகாயத்தின் குணம் ஒலி என்று கூறுவார்கள். வீசும் காற்றில் ஒலி மற்றும் தொடு உணர்வு (ஊறு) ஆகிய இரண்டு பண்புகள் இருப்பதை நாம் உணர்கின்றோம். தீ, ஒலி கொண்டு உணரப்படுவதாகவும், தொடு உணர்வினால் அறியப்படுவதாக விளங்குவதுடன், ஒளியுடனும் திகழ்கின்றது. நீருக்கு, ஒலி, ஊறு, ஒளி, மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்கள் உள்ளன. நிலத்திற்கு, நீரின் நான்கு குணங்களுடன் வாசனை ஆகிய ஐந்தாவது குணமும் உள்ளது. மேற்கண்ட குணங்களாக இறைவனே இந்த ஐந்து பூதங்களிலும் பரவி இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

மண்ணதனில் ஐந்தை மாநீரில் நான்கை வயங்கெரியில் மூன்றை

மாருதத்து இரண்டை

விண்ணதனில் ஒன்றை விரிகதிரைத் தண்மதியைத் தாரகைகள்

தம்மின் மிக்க

எண்ணதனில் எழுத்தை ஏழிசையைக் காமன் எழில் அழிய எரியுமிழ்ந்த

இமையா நெற்றிக்

கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக்

கண்டேன் நானே

பொழிப்புரை:

பல விதமான வித்தைகளில் தேர்ச்சி உடையவராக விண்ணுலகத்தை ஆள்கின்ற தேவர்கள் மற்றும் வேதியர்களால், புண்ணியத்தின் வடிவமாக இருக்கும் இறைவனே என்று காலை மாலை ஆகிய இரு பொழுதுகளிலும் தொழப்பட்டு வருபவரும், உயிர்கள் தாங்கள் செய்த புண்ணியத்தின் பயனாக சென்று சாரக்கூடிய தன்மையில் உயிர்களுக்கு அருள் புரிபவரும் ஆகிய இறைவனே, இமையாத மூன்று கண்களை உடைய உமது சிறப்பு வாய்ந்த திருப்பாதங்களை நாங்கள் சரணடைந்தோம். எனவே வலிமை வாய்ந்த வினைகளும் எம்மை தீண்டா வண்ணம் அருள் புரிந்து காத்தருள்வீராக.. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன்

பாடல் 5:

மற்றிணை இல்லா மலை திரண்டன்ன திண் தோள் உடையீர்

கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை கொல்லோ

சொற்றுணை வாழ்க்கை துறந்தும் திருவடியே அடைந்தோம்

செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

விளக்கம்:

சொற்றுணை வாழ்க்கை என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். வாழ்வில் நமக்கு உண்மையான துணையாக இருந்து நம்மை காப்பாற்றுபவர் யார் என்று ஆராய்ந்தால், உண்மையான துணையாக இருப்பவர் எவரும் இல்லை என்பதை நாம் உணர்வோம். நெருங்கிய சுற்றமாக இருந்தாலும், உயிர்த் தோழனாக இருந்தாலும், அவர்கள் எவராலும் எப்போதும் எல்லா உதவியும் நமக்கு செய்ய இயலாது. எனவே அவர்களை சொல்லளவில் துணையாக கருதலாமே தவிர எப்போதும் அவர்கள் உதவி செய்வார்கள் என்று நம்புதல் தவறு. நமக்கு உண்மையான துணைவன் பெருமான் ஒருவனே. எனவே தான் சொல்லளவில் துணையாக இருக்கும் சுற்றத்தாரையும் நண்பர்களையும் சொற்றுணை என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே..

கிற்று=ஆற்றலால்; அடியார்கள் ஏதும் வேண்டாமலே, அவர்களின் துன்பங்களை அறிந்து கொண்டு, அந்த துன்பங்களை களைந்து உதவி செய்யும் ஆற்றல் படைத்தவன் இறைவன் என்று சம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு மணிவாசகரின் குழைத்த பத்து பாடலை நினைவூட்டுகின்றது. பெருமானிடம் நாம் யாதும் வேண்டாமலே, நமது தேவைகளைப் புரிந்து கொண்டு அருள் புரிபவர் பெருமான் என்ற கருத்தினை மணிவாசகர் குழைத்தபத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில் குறிப்பிடுகின்றார். நாம் வேண்டுவதற்கு தகுதி படைத்த பொருட்கள் என்னென்ன என்பதை நாம் அறிய முடியாது. மனித மனத்தின் விருப்பங்கள் விசித்திரமானவை; பல சமயங்களில் பின்னர் தீமை பயக்கும் என்று நமக்கு தோன்றும் பொருட்களையும் விரும்பி உடனே பெறவேண்டும் என்று துடிக்கின்றது. சர்க்கரை நோயாளி இனிப்புப் பண்டம் தனக்கு தீமை தரும் என்று தெரிந்திருந்தும், தனது ஆசையை அடக்க முடியாமல் அந்த பண்டத்தை உட்கொள்வதை நாம் காண்கின்றோம். சில சமயங்களில் நாம் ஆசை கொண்டு அடைய வேண்டும் என்று விரும்பும் பொருள் நமக்கு நன்மை பயக்குமா அல்லது தீமை பயக்குமா என்று முடிவு செய்யமுடியாத நிலையிலும் அந்த பொருள் வேண்டுமென்று மனம் விரும்புகின்றது. ஆனால் பெருமானோ அதனை அறிந்தவர்; அதனால் தான், நாம் விரும்பும் சில பொருட்கள் நமக்கு கிடைக்காமல் செய்கின்றார். ஆனால் அதனை உணராத நாம் பெருமானிடம் மீண்டும் மீண்டும் வேண்டி, அவ்வாறு பெருமானால் தவிர்க்கப் பட்ட பொருட்களை வேண்டிப் பெற்று பின்னர் இடர்ப்படுகின்றோம்.

வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ

வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி

கொண்டாய்

வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின்

அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உந்தன் விருப்பு

அன்றே

நமக்கு தீமை பயக்கும் என்று தெரிந்த இறைவன், ஏன் நமக்கு அந்த பொருளைத் தருகின்றான் என்ற ஐயம் நமக்கு எழலாம். நாம் மேலும் மேலும் அழுத்தத்தை கொடுத்து இறைவனிடம் வேண்டும்போது, இறைவன் தவிர்க்க முடியாமல், தான் அந்த பொருளினை அளித்து அருள் புரியாவிடில் தனது அடியான் வருந்துவான் என்ற எண்ணத்துடன், அந்த பொருளைத் தருகின்றான். இதனையே வேண்ட முழுதும் தருவோய் என்று அடிகளார் குறிப்பிடுகின்றார். அந்த பொருளினை தொடக்கத்தில் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் மனிதன், பின்னர் அது தீமை பயப்பதை அறியும் போது அவனது அனுபவம் விரிகின்றது. மேலும் நமது வினைகள், அத்தகைய பொருட்களின் மூலமாக நாம் துன்பம் அனுபவித்து நமது வினையின் ஒரு பகுதியை கழிக்கும் வண்ணம், நமது மனம் உந்துமேயானால், நாமும் அந்த பொருளை பெறவேண்டும் என்று இடைவிடாது பெருமானிடம் வேண்டி, நச்சரித்து அந்த பொருளினைப் பெற்று, பின்னர் அந்த பொருள் விளைவிக்கும் துன்பத்தையும் அனுபவித்து நமது வினையின் ஒரு பகுதியை கழித்துக் கொள்கின்றோம்.

அடியார்கள் கேளாமலே, அவர்களது தேவைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு அருளும் பெருமான், அடியார்கள் கொடிமாட செங்குன்றூர் தலத்தின் தன்மை புரிந்து கொண்டு அவர்களின் துன்பங்களை களையாமல் இருப்பது பெருமானுக்கு அழகா, அவரது பெருமைக்கு உரிய செயலா என்ற கேள்வியை ஞானசம்பந்தர் இங்கே எழுப்புகின்றார். அவ்வாறு இருப்பது பெருமானின் தன்மை அல்ல என்றும் கூறுகின்றார். சொற்றுணை வாழ்க்கை என்று அகப்பற்று மற்றும் புறப்பற்று ஆகியவற்றுடன் இணைந்த வாழ்க்கை என்று சிவக்கவிமணியார் தனது பெரியபுராண விளக்கம் நூலில் கூறுகின்றார்.

பொழிப்புரை:

ஒப்பற்ற மலைகள் போன்று திரண்டு வலிமையாக விளங்கும் தோள்களை உடைய பெருமானே, எங்களது துன்பங்களையும் வேண்டுகோள்களையும் நாங்கள் அறிவிக்காமலே அறிந்து கொண்டு அவற்றை தீர்க்கும் ஆற்றல் உடைய பெருமானே, நாங்கள் எங்களது வருத்தத்தை தெரிவித்த பின்னரும் அதனை செவிமடுத்துக் கேளாமல் இருப்பது தங்களுக்கு பெருமை சேர்க்கும் செயலில்லை. அகப்பற்று மற்றும் புறப்பற்று ஆகிய இரண்டினையும் முற்றிலும் ஒழித்து, பெருமானே, நாங்கள் உமது திருவடிகளை சரணடைந்தோம். எம்மை பிணித்துள்ள தீவினைகளை வெற்றி கொண்டு, அந்த தீவினைகள் எம்மை தீண்டாவண்ணம் அருள் புரிவீராக. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன்

பாடல் 6:

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்

பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ் பிழையாத வண்ணம்

பறித்த மலர் கொடு வந்து உமை ஏத்தும் பணி அடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

விளக்கம்:

பறித்த மலர் கொண்டு உம்மை புகழ்ந்து பாடுவோம் என்று ஞானசம்பந்தர் கூறுவது சிந்திக்கத் தக்கது. தற்போது பணம் கொடுத்து மலர்களை வாங்கி இறைவனுக்கு அர்ச்சிப்பது என்பது பழக்கமாக மாறிவிட்டது. ஆனால் இன்றும் ஒரு சில வீடுகளில், அவர்களது இல்லத்தில் வளரும் முல்லை, மல்லிகை, பாரிஜாதம், கருங்குவளை முதலிய மலர்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறு நாமே மலர்களை பறித்து இறைவனுக்கு சமர்ப்பிப்பதே சிறந்த வழிபடாக கருதப்படுகின்றது. இந்த செய்தியே இங்கே சொல்லப் படுகின்றது.

மலர்களைப் பறித்து வழிபடுவதில், மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் வியாக்ரபாதர். வண்டுகள் பூக்களில் உள்ள தேனைச் சுவைப்பதால், மலர்களின் தூய்மை குறைகின்றது என்று எண்ணிய முனிவர் அத்தகைய பூக்கள் இறைவனின் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்தார். அதனால் வண்டு சுவைக்கும் முன்னரே பூக்களைப் பறிக்க ஆசைப்பட்டார். அதற்கு வசதியாக விடியற்காலை இருட்டினில் தனக்கு கண்கள் நன்றாக தெரிய வேண்டும் என்றும், தான் மரத்தினில் ஏறும்போது பனியினால் நனைந்து இருக்கும் மரங்களின் தண்டுகளும் கிளைகளும், வழுக்காமல் இருக்க வேண்டும் என்றும் விரும்பிய முனிவர், இறைவனிடம் தனக்கு புலிக்கு உள்ளது போன்ற கண்களும் கால்களும் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். இறைவன் அருளால் அவரது ஆசை நிறைவேறியது. அன்று முதல் முனிவர் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். வியாக்ரம் என்றால் வடமொழியில் புலி என்று பொருள். இறைவனை வழிபட உதவும் மலர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று கூறும் அப்பர் பிரானுக்கு, வியாக்ரபாதர் நினவு வந்தது இயற்கையே. தில்லைத் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றினில் (5.01.02) பெரும்பற்றப் புலியூர் என்று தில்லைச் சிதம்பரத்தை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் மற்ற பாடல்களில் தில்லை என்றும், அம்பலம் என்றும், தில்லைச் சிற்றம்பலம் என்றும் சிற்றம்பலம் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த பாடலில் மட்டும் வியாக்ரபாதர் செய்த வழிபாட்டினை நினைவூட்டும் வகையில் பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரினை பயன்படுத்துகின்றார். இறைவன் பால் வியாக்ரபாதர் பெரும் பற்று கொண்டிருந்தமை, சிறந்த பூக்களைப் பறித்து பெருமானுக்கு படிக்கவேண்டும் என்பதில் கொண்டிருந்தமை, நமக்கு புரிகின்றது.

அரும்பு அற்றப்பட ஆய்மலர் கொண்டு நீர்

சுரும்பு அற்றப்படத் தூவித் தொழுமினோ

கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்

பெரும்பற்றப் புலியூர் எம் பிரானையே

மலர் கொண்டு தூவித் தொழுமினோ என்று அப்பர் பிரான் கூறுவதன் காரணம், அடுத்த அடியில் விளக்கப்பட்டுள்ளது. மன்மதனும் தனது கரும்பு வில்லில் மலர்களைப் பூட்டி, இறைவன் மேல் பொழிந்தான். ஆனால் அவனது செய்கையில் பக்தி இல்லை; இறைவனது தவத்தினைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இருந்தது. அதனால் தான் அவன் இறைவனால் எரிக்கப்பட்டான். மலர்கள் கிடைக்காத போது, பக்தியுடன் இலை கொண்டு வழிபடுவதையும் சிவபிரான் ஏற்றுகொள்கின்றார். ஏன், கல் எறிந்த சாக்கியருக்கும் அருள் செய்தவன் அல்லவா. சிவபெருமான். மறவாது கல் எறிந்த சாக்கியார் என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகின்றார். ஒருநாளும் மறவாது, தினமும் தான் உண்பதன் முன்னர், கல் கொண்டு இறைவனை வழிபட்டவர் சாக்கிய நாயனார். அவரது பக்தியின் காரணமாக, அவர் எறிந்த கல்லும், மலராக கருதப்பட்டு, இறைவன் அவருக்கு முக்தி அளித்த வரலாறு பெரிய புராணத்தில் காணப்படுகின்றது.

இவ்வாறு இறைவனை மலர் தூவித் தொழுவதால் நமக்கு கிடைக்கும் பயன் என்ன என்பதை அப்பர் பிரான் திருவையாற்றுப் பதிகத்தின் ஒரு பாடலில் கூறுகின்றார் (பதிக எண்: 4.80). சகம்=உலகம், இங்கே உலகத்தில் உள்ள உயிர்களைக் குறிக்கின்றது. துணை என்ற சொல் இணை என்ற பொருளில் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபிரானுக்கு ஒப்பாக சொல்லக்கூடியவர் வேறு எவரும் இல்லை என்ற உண்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. நாண்மலர்=அன்று பூத்த மலர்கள்; தங்கள் நகங்கள் தேயும் அளவுக்கு மலர்களைப் பறித்து, பக்தியினால் கண்ணீர் சோர இறைவனை வணங்கும் அன்பர்களின் மனதினைக் கோயிலாகக் கொண்டு, அங்கே இறைவனை குடி கொள்வான் என்று நமக்கு கூறி, இறைவனை எவ்வாறு வணங்கவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் பாடல் இது.

சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை

நகம் எலாம் தேயக் கையால் நாண் மலர் தொழுது தூவி

முகம் எல்லாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர்

அகம் அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

திருவடிப் பிழைத்தல் என்று பெருமானுக்கு அபச்சாரம் ஏதும் நடக்காதபடி நடந்து கொள்வதை ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மனித மனதின் இயல்பினை மறக்கும் மனம் என்று சுட்டிக் காட்டுவதையும் நாம் உணரலாம். பல வகையான இன்ப துன்பங்களுக்கு இடையே வாழ்வினைக் கழிக்கும் மனிதர்கள், அந்த இன்ப துன்பங்களின் தாக்கத்தை பெரிதாக கருதும் போது, அவர்களது மனதிலிருந்து இறை சிந்தனை பின்னுக்கு தள்ளப் படுதலோ, மறத்தலோ இயற்கையாக நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள். அத்தகைய மனம், எப்போதும் இறைவனை மறக்காது இருக்கும் வண்ணம் செய்வது இடைவிடாத பயற்சியால் மட்டுமே நடைபெறும். அத்தகைய பயிற்சி உடையவர்களாக நாம் விளங்க வேண்டும் என்பதே இங்கே திருஞானசம்பந்தர் வலியுறுத்திக் கூறும் அறிவுரை ஆகும்.

காரைக்கால் அம்மையார் கயிலாயம் சென்று சிவபிரானைக் காண்கின்றார். அப்போது சிவபெருமான் வேண்டும் வரம் யாது என்று அம்மையாரை கேட்கின்றான். அதற்கு அம்மையார் பிறவாமை என்ற வரத்தை முதலில் கேட்கின்றார். ஒருக்கால் பிறவி என்று ஒன்று நேர்ந்தால், அந்தப் பிறவியிலும் சிவபிரானை மறவாமல் இருக்க வேண்டும் என்ற வரத்தையே நாடுகின்றார். இந்தச் செய்தியை கூறும் பெரியபுராணப் பாடலை நாம் இங்கே காணலாம்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்

எனவே தான், பிறவி அறுக்க வேண்டும் என்று விரும்பும் அடியார்களே, அறத்தின் வடிவமாக விளங்கும் ஆரூர்ப் பெருமானை மறவாது புகழ்ந்து பாடுவீர்கள் என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் பாடலை (1.91.2) நாம் இங்கே காண்போம். இவ்வாறு இறைவனை மறவாது வழிபடுவதன் மூலம், நாம் பிறப்புக்கு காரணமாக உள்ள, யான் எனது எனப்படும் பற்றுகளை அறுத்தெறிந்து துறவியாக வாழ்ந்து, அதன் முடிவாக நமது பிறப்பையும் அறுத்துக் கொள்ளலாம் என்று நமக்கு ஞானசம்பந்தர் அறிவுரை கூறும் பாடல்.

பிறவி அறுப்பீர்காள்

அறவன் ஆரூரை

மறவாது ஏத்துமின்

துறவி ஆகுமே

பட்டீச்சரம் தலத்து இறைவனைத் தொழுது புகழும் அடியார்கள், வினைகளின் பிணைப்பு முற்றிலும் நீங்கியவர்களாக வாழ்ந்து, தேன் ஒழுகும் நறுமணம் கமழும் மலர்கள் கொண்டு, பலவிதமான பாடல்கள் பாடி, மறவாது இறைவனை வழிபடும் தன்மையில் இருப்பார்கள் என்று கூறும் பாடலை (3.73.7) நாம் இங்கே காண்போம்.

பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர் உலகு பேணல்

உறுவார்

துறவி எனும் உள்ளம் உடையர்கள் கொடி வீதி அழகாய தொகு சீர்

இறைவன் உரை பட்டீச்சரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும்

இலவாய்

நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாதவரே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பாடலில் (4.90.4) அப்பர் பிரான் நாளும் மறவாது தன்னைத் தொழும் அடியார்களின் பிறவியை அறுக்கும் குணம் உடையவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். பக்தன் என்று சொல்லும் போது, இறைவனிடத்தில் பக்தி உடையவன் என்று பொருளை மட்டும் குறிப்பிடுகின்றது. பத்தர் என்று சொல்லும் போது பத்து குணங்களை உடையவர்கள் என்பதையும் குறிக்கும் நேர்த்தியை நாம் உணரலாம். பத்து என்ற சொல்லினை பற்று என்ற சொல்லின் திரிபாகக் கொண்டு, பெருமானின் திருவடிப் பற்று கொண்ட அடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அடியார்களுக்கு இருக்க வேண்டிய குணங்களை பத்து புற குணங்கள் என்றும் பத்து அக குணங்கள் என்றும் சான்றோர்கள் வரைப்படுத்தி உள்ளார்கள். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்.

பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான்

முத்தர் கண் முன்னம் பணி செய்து பாரிடம் முன் உயர்ந்தான்

கொத்தன கொன்றை மணம் கமழும் திருவேதிகுடி

அத்தனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

எப்போதும் இறைவனை மறவாது புகழ்ந்து வணங்கினால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (5.6.1). அப்பர் பிரான் கூறுகின்றார். இறையும்=சிறிது நேரமும்; அப்போதும்=உடலினை விட்டு உயிர் பிரியும் அந்த நேரத்திலும்; ஏன் இறைவனை எப்போதும் மறவாது இருக்க வேண்டும் என்பதற்கு அப்பர் பிரான் இந்த பாடலில் காரணம் கூறுகின்றார். மனித மனம் பழக்கத்திற்கு அடிமைப் பட்டது. எனவே தான் எப்போதும் நாம் மறவாமல் இறைவனை நினைத்துக் கொண்டு இருந்தால் தான், இறக்கும் தருவாயிலும் நாம் அவனை நினைக்க முடியும். நாம் இறக்கும் தருவாயில், நமது உயிரினை தொடர்ந்து வரும் துன்பங்களிலிருந்து காக்க வல்லவன் இறைவனின் ஒருவன் தான் என்பதால், நாம் அவனது துணை நாட வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே தான் எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டு இருக்குமாறு அப்பர் பிரான் இங்கே அறிவுரை கூறுகின்றார். சிகப்பு என்ற சொல் செப்பு என எதுகை கருதி மருவியது. நாம் இறக்கும் தருணத்தில், அஞ்சேல் என்று அபயம் கொடுக்கும் பெருமான் என்று கூறுகின்றார். அதாவது, நரக வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றி, சிவலோகம் அழைத்துச் சென்று அருள் புரிவார் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

எப்போதும் இறையும் மறவாது நீர்

முப்போதும் பிரமன் தொழ நின்றவன்

செப்போதும் பொனின் மேனிச் சிவனவன்

அப்போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே

இந்த பாடலில் ஞானசம்பந்தர் பிறப்பில் பெருமான் என்று கூறுகின்றார். பிறப்பிலி என்பது பெருமானின் திருநாமங்களில் ஒன்று. பிறப்பையும் இறப்பையும் கடந்த பெருமான் என்று பொருள் கொள்வது ஒரு வகை. தனது அடியார்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்து அவர்களுக்கு இனிமேல் பிறவி ஏற்படாமல் செய்வதால் பிறப்பு இல் பெருமான் என்று கூறியதாக பொருள் கொள்வது சிறப்பு.

கயிலாயத்தில் அணுக்கத் தொண்டனாக தான் வாழ்ந்த காலத்தில் செய்த ஒரு சிறு தவறினுக்காக, நிலவுலகினில் சுந்தரராக பிறக்க நேர்ந்தவர்க்கு, தான் எதனால் போவுலகில் பிறந்தோம் என்பது கூட மறந்துவிட்டது. ஆனால், தான் அவருக்கு அளித்த வாக்கினை நிறைவேற்றும் பொருட்டு, அடிமை ஓலை காட்டி பெருமான் ஆட்கொண்ட பிறகு, அவருக்கு அனைத்தும் நினைவுக்கு வரவே, பெருமானே இனிமேல் உன்னை மறவாது நினைக்கின்றேன் என்று உறுதி கூறும் பாடல் தான் (7.1.1), அவர் தனது வாழ்க்கையில் அருளிய முதல் பாடல்.

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா

எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

வைத்தாய் பெண்ணைத் தென்பால் நல்லூர் வெண்ணெய்

நல்லூர் அருட்துறையுள்

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

மனதின் இயற்கை தான் பற்றியதை விட்டு வேறொன்றைப் பற்றி, அதன் மயமாக மாறி, தான் அதுகாறும் பற்றியிருந்த பொருளையும் மறந்துவிடுதல். அதனால் மனதினை குரங்குடன் ஒப்பிடுகின்றனர். குரங்கு மரத்தின் ஒரு கிளையினை பற்றி இருக்கையில், அடுத்து எந்த கிளையைப் பற்றலாம் என்று மேலும் கீழும் பார்த்த வண்ணம் இருப்பது போன்று, மனமும் தான் ஒரு பொருளை பற்றியிருக்கையில் அடுத்து எங்கே தாவலாம் என்று நினைக்கின்றது. எனவே தான் ஒரே நிலையில் மனதினை நிலை நிறுத்துவது மிகவும் கடினம் என்று கூறுகின்றனர்.

ஈசனாரின் திருவடியை திருந்தடி என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். திருந்தடி என்ற தொடரினை, திரு உந்து அடி என்று பிரித்து, ஒரு சுவையான விளக்கமும் கொடுக்கப் படுகின்றது. திரு என்றால் செல்வம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நால்வர் பெருமானர்கள் செல்வமாக கருதுவது, பெருமானின் அருளையும், அனைத்துச் செல்வங்களிலும் சிறந்து, என்றும் அழியாது விளங்கும் முக்திச் செல்வம் என்பதால், அந்த பொருளையே நாமும் கொண்டு, அந்த உயர்ந்த செல்வத்தை நாம் பெறுவதற்கு ஊக்கமளிக்கும் திருவடி என்பதே அந்த சுவையான விளக்கம். உலக மாயைகளிலிருந்து விடுபட்டு உயிர்கள் திருந்த திருவருள் புரியும் அடி என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

அடியார்களுக்கு இனிமேல் பிறப்பு ஏற்படாவண்ணம் அவர்களை ஆட்கொண்டு அருள் புரியும் பெருமானே, உலகத்து இன்ப துன்பங்களில் ஆழ்ந்து அவற்றின் தாக்கத்தினால் அவ்வப்போது உன்னை மறந்துவிடும் மனதினை, உலக மாயையின் காரணமாக உன்னை அவ்வப்போது மறந்துவிடும் மனதினை, கடுமையான பயிற்சி மூலம் உயிரினை வற்புறுத்தி, உன்னை எப்போதும் மறக்காமல் இருக்கும் வண்ணம் இருக்கும் நாங்கள், உமக்கு திருத்தொண்டுகள் செய்வதில் ஈடுபட்டு, அத்தகைய திருப்பணிகள் செய்யும் போது உமக்கு சிவாபராதம் ஏதும் ஏற்படாத வண்ணம், தவறுகள் ஏதும் செய்யாத வண்ணம் உம்மை வழிபடுகின்றோம். மேலும் அன்று அலர்ந்த மலர்களை பறித்துக் கொண்டு வந்து உமது திருவடிகளில் தூவி, உம்மை புகழ்ந்தும் போற்றியும் வழிபடுகின்றோம். எனவே, உயிர்களின் சிறப்பினை குறைக்கும் தன்மை உடைய தீவினைகள் தீண்டா வண்ணம் அருள்புரிந்து எம்மை காப்பீராக. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன்

பாடல் 7:

பதிகத்தின் ஏழாவது பாடல் சிதைந்தது

பாடல் 8:

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே

உருகி மலர் கொடு வந்து உமை ஏத்துதும் நாம் அடியோம்

செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே

திருவிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

விளக்கம்:

கருவை=பழைய வினைகளின் தாக்கத்தால் இந்த பிறவியில் எதிர்கொள்ள நேரிடும் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் போது உயிர்கள் சேர்த்துக் கொள்ளும் ஆகாமிய வினைகள்; இதற்கு வேறொரு விதமாக ஒரு சுவையான விளக்கம் ஆங்கீரச சர்மா அவர்களால் அளிக்கப் படுகின்றது. தாயின் வயிற்றினில் கருவாக உருவெடுத்து வளரும் உயிர், சொல்லவொண்ணாத துயரங்களை அனுபவிக்கும் போது, பெருமானே நான் கருவினில் அனுபவித்த துன்பங்களை இனிமேல் ஒரு முறையேனும் அனுபவிக்கலாகாது. எனவே கருவிலிருந்து வெளிப்பட்டு பிறந்த பின்னர், மீண்டும் கருவில் புகாத வண்ணம் இருப்பதற்காக, உன்னை நினைத்து வாழ்ந்து பிறவிச் சுழலிலிருந்து விடுதலை பெறுவேன் என்று உறுதி பூணும்; ஆனால் நிலவுலகில் பிறந்த பின்னர், அனைத்தையும் மறந்து விட்டு உலகப் பொருட்களின் மீது புலன்கள் வைத்துள்ள ஆசையினை நிறைவேற்றுவதையே தனது கடமையாகக் கொண்டு வாழும் என்று பல நூல்கள் சொல்கின்றன என்று கூறுகின்றார். திருவிலி=செல்வம் இல்லாத வினைகள், செல்வத்தை அகற்றும் வினைகள். இங்கே செல்வம் என்று பெருமான் பால் உயிர்கள் வைத்திருக்கும் அன்பினை குறிப்பிடுகின்றார். பெருமான் பால் வைத்துள்ள அன்பின் காரணமாக உயிர்கள் பெறுகின்ற சிறந்த செல்வமாகிய முக்திச் செல்வம் என்று பொருள் கொள்வதும் சிறப்பு. செருவில் என்ற சொல்லினை செரு இல் என்று இரண்டு சொற்களாக பிரித்து, அரக்கன் இராவணனுடன் பகை ஏதும் பெருமானுக்கு இல்லை என்றாலும், முறையற்ற செயலை, கயிலை மலையினை பேர்த்து எடுக்க அவன் முயற்சி செய்ததை கண்டித்து, அவனை வருத்தினார் என்று ஞானசம்பந்தர் கூறுவதாகவும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. செருவில் அரக்கன் என்பதற்கு, இராவணன் கொண்டிருந்த வலிமை காரணமாக, எவரும் அவனுடன் போர் செய்ய அஞ்சியவர்களாக பயந்து நின்ற நிலையில், அவனுக்கு அனைவரும் பணிந்தார்கள் என்றும், அதனால் தன்னை எதிர்ப்பார்கள் எவரும் இன்மையின் போர் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல், செருக்குடன் திரிந்த அரக்கன் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

பொழிப்புரை:

அன்னையின் கருவில் இருக்கும் உயிர், அந்த கருவினில் தான் இருக்கும் போது தனக்கு ஏற்படும் பலவிதமான துன்பங்களை நினைத்து, இனிமேல் கருவில் புகாத வண்ணம் தான் வாழவேண்டும் என்று உறுதி பூண்டாலும், கருவிலிருந்து வெளியே வந்த பின்னர், தனது புலன்கள் அழைத்துச் செல்லும் வழியே நடத்தும் வாழ்க்கையைக் கடிந்த அடியார்களாக நாங்கள், உனது திருவடிகளை நினைத்து உருகி, உனது திருப்பாதங்களில் மலர்கள் தூவி உம்மைப் பலவிதமாக புகழ்ந்து வாழ்கின்றோம். தனது வலிமை மீது மிகுந்த செருக்கு கொண்டு, கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தைத் தொடரலாம் என்ற நினைப்புடன், கயிலாய மலையினைப் பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடலினை நெருக்கி பின்னர் அவனுக்கு அருள் புரிந்த பெருமையை உடையவரே, உம்மை குறித்து நாங்கள் செய்யும் வழிபாடுகளின் பலனாக, உன்பால் நாங்கள் கொண்டுள்ள அன்பாகிய செல்வத்தை ஒடுக்கும் வண்ணம் செயல்படும் தீயவினைகள் எம்மை தீண்டா. வண்ணம் அருள் புரிந்து எம்மை காப்பாற்றுவீராக. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன்

பாடல் 9:

நாற்ற மலர் மிசை நான்முகன் நாரணன் வாது செய்து

தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அறியீர்

தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்

சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

விளக்கம்:

இந்த பாடலில் திருமாலும் பிரமனும் செய்த வாது குறிப்பிடப் படுகின்றது. ஒரு சமயம் மேரு மலையின் வெளியே நின்றுகொண்டு பேசிக் கொண்டிருந்த திருமால் மற்றும் பிரமனின் இடையே, தங்கள் இருவரில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்தது. உலகத்தைப் படைப்பதால் தானே பெரியவன் என்று பிரமன் சொல்ல, பிரமனையும் தான் படைத்த காரணத்தால் தானே பெரியவன் என்று திருமால் சொல்ல, இருவரும் அடுத்தவரின் சொல்லை மறுக்கவே, வாதம் பல நாட்கள் தொடர்ந்தது. வேதங்கள் அவர்கள் இருவரின் முன்னே தோன்றி, சிவபெருமான் அவர்கள் இருவரிலும் பெரியவர் என்பதால், அவர்கள் இருவரும் மேற்கொண்ட வாதம் பொருளற்றது என்றும் தேவையற்றது என்று கூறியபோதும் அவர்கள் தொடர்ந்து வாதம் செய்தனர். இந்த வாதமே இங்கே குறிப்பிடப்படுகின்றது. அப்போது அவர்களின் எதிரே பெரிய நெருப்புத்தழல் தோன்றியது. அந்த தழலின் அடியையும் முடியையும் காண்பவர் எவரோ அவரே தங்களில் உயர்ந்தவர் என்று இருவரும் ஒப்புக் கொண்டு, தழலின் அடியையும் முடியையும் நெருங்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தது வரலாறு. மாறுபட்டு தங்களுக்குள் வாதம் செய்த தகவல் திருவாசகம் தோள்நோக்கம் பதிகத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் இங்கே காணலாம்.. இறந்து என்றால் கடந்து என்று பொருள். அளவு கடந்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.

பிரமன் அரி என்று இருவரும் தம் பேதைமையால்

பரமம் யாம் பரம் என்று அவர்கள் பதைப்பொடுங்க

அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் திருமந்திரப் பாடலிலும், தானே பெரியவன் என்று பிரமனும் திருமாலும் ஒருவருக்கொருவர் வாதம் செய்தது குறிப்பிடப் படுகின்றது. பேதைமை என்று அவர்களது அறிவற்ற செயல் உணர்த்தப்பட்டுள்ளது.

பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்

பிரமன் மால் தங்கள் தம் பேதமையாலே

பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க

அரனடி தேடி அரற்றி நின்றாரே

சென்ற பாடலில் புலன்களின் வழியே செல்லும் வாழ்க்கையைக் கடிந்து உன்பால் அன்பு வைத்து வாழ்வோம் என்று தாங்கள் உறுதி பூண்டுள்ளதாக சொன்ன அடியார்கள், ஒரு கால் தாங்கள் மறு பிறவி எடுக்க நேரிடினும் பெருமானைத் தொடர்ந்து வணங்குவோம் என்று கூறுவதாக பாடலின் மூன்றாவது அடி அமைந்துள்ளது. தோற்றினும் தோற்றும்=வினைகளின் பயனால் மீண்டும் உலகினில் தோன்றும் நிலை ஏற்படினும்; திருமாலும் பிரமனும் தங்களது வலிமையின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக உமது அடியையும் முடியையும் தேடிக் கலைத்து தங்களது முயற்சியை கைவிட்டனர்; ஆனால் உமது அடியார்களாகிய நாங்கள், உமது கருணையின் மீது நம்பிக்கை வைத்து என்கிறது முயற்சியில் ஈடுபடுவதால், எங்களுக்கு ஒரு முறை நிச்சயம் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், பல பிறவிகள் எடுத்தாலும் தொடர்ந்து உமது திருவடியை அடைந்து சார்ந்து இருக்க முயற்சி செய்து வெற்றி பெறுவோம் என்று கூறுவதாக அமைந்த பாடல்.

பொழிப்புரை:

நறுமணம் வீசும் தாமரை மலர் மேல் உறைகின்ற பிரமனும் நாராயணனும் தங்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட விவாதத்திற்கு, தங்கள் இருவரில் யார் பெரியவர் என்று தர்க்கத்திற்கு, ஒரு முடிவு காணும் பொருட்டு, தங்கள் முன்னே எழுந்த அழல் தூணின் அடியையும் முடியையும் எவர் முதலில் காண்கின்றனரோ அவரே தங்களில் உயர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்து, தழல் தூணாக தோன்றிய உமது அடியையும் முடியையும் காண்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்த போதிலும், அவர்கள் இருவரின் முயற்சி தோல்வியுறும் வண்ணம் நீண்டு நெடிய பிழம்பாக நின்ற இறைவனே, உமது கருணையின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அடியார்களாகிய நாங்கள், இந்த பிறவியில் உம்மை அடைய முடியவில்லையாயினும் உம்மை அடைவதற்காக இனி தொடர்ந்து வரும் பிறவிகளிலும் உம்மைத் தொழுது வணங்குவோம். அதனால், உயிர்கள் மீது சீற்றம் கொண்டு உயிர்களை இன்ப துன்பங்களில் ஆழ்த்தி, மேலும் வினைகளைச் சேர்க்கும் வினைகள், எங்களைத் தீண்டா வண்ணம் அருள் புரிந்து எம்மை காப்பாற்றுவீராக. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன்

பாடல் 10:

சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்

பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்

பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்

தீக்கமழ் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

விளக்கம்:

பாக்கியம் இன்றி=இன்பங்களை, போகங்களை அனுபவிக்கும் வாய்ப்பு இம்மை மறுமை ஆகிய இரு பிறவிகளிலும் இல்லாமல் வருந்தும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இங்கே சமணத் துறவிகளையும் புத்தத் துறவிகளையும் அவர் சுட்டிக் கட்டுகின்றார். அந்த துறவிகள் இம்மையில், தவம் புரிவதாக நினைத்துக் கொண்டு, அவமே புரிந்தாலும், உலக சிற்றின்பங்களை தவிர்த்து வாழ்வதால், இம்மையில் அவர்களுக்கு இன்பம் கிடைப்பதில்லை. எப்போதும் சிவபெருமானை இழித்துக் கூறி வருவதால், அவர்களுக்கு மறுமையிலும் முக்தி உலகம் சென்றடைந்து இன்பம் அடையும் வாய்ப்பு கிட்டாமல் போகின்றது. இந்த நிலையினை இருதலைப் போகமும் விட்டார் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார்.

பொழிப்புரை:

துவர்ப்பட்டு ஆடையினை அணியும் புத்தர்களும் உடையினை தவிர்த்து வாழும் சமணர்களும் துறவியாக, உலகத்து சிற்றின்பங்களை ஒழித்து வாழ்வதால் இம்மையில் இன்பம் அடையாமல் வாழ்கின்றனர். எப்போதும் பொய்யான சொற்களை உரைத்து பெருமானை நிந்திப்பதால், மேலும் மேலும் பாவங்களை சேர்த்துக் கொண்டு மறுமையில் முக்தி இன்பம் அடைவதையும் அவர்கள் தவிர்க்கின்றனர். அவர்களது தவறான பேச்சுகளை புறக்கணித்து, நறுமணம் கமழும் கொன்றை மலர்களைத் தனது சுருண்ட சடையினில் சூட்டிக் கொண்டுள்ள பெருமானே, தொடர்ந்து உமது திருப்பாதங்களை நாங்கள் போற்றுகின்றோம். எனவே, தீக்குழியாகிய நரகத்தில் உயிர்களைத் தள்ளும் வினைகள் எம்மைத் தீண்டா வண்ணம் எம்மை காத்து அருள் புரிவீராக. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன்

பாடல் 11:

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான்

இறந்த பிறவி உண்டாகில் இமையவர் கோன் அடிக் கண்

திறம் பயில் ஞானசம்பந்தன செந்தமிழ் பத்தும் வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே

விளக்கம்:

வானவர் கோன்=சிவபெருமான்; இறந்த=கடந்து; கிடைத்தற்கு அரிய மானிடப் பிறவி வாய்க்கப் பெற்ற நாம் இந்த பிறவியினில் பெருமானின் திருவடிகளைச் சரணடைந்து போற்றுவோம் என்று சொல்வது நமக்கு அப்பர் பிரான் தில்லைத் திருத்தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடலை (4.81.5) நினைவூட்டுகின்றது. மனித்தப் பிறவியும் என்று குறிப்பிட்டு இதே பதிகத்தின் முந்தைய பாடலில் மனிதப் பிறவியின் இழிந்த நிலையை அப்பர் பிரான் குறிப்பிட்டார். அந்த இழிந்த நிலையினைப் போக்கும் வழியினை நமக்கு இங்கே சொல்லிக் கொடுக்கின்றார். இறைவனுக்கு அடிமையாக நாம் மாறுவதன் மூலம் நாம் உய்யமுடியும் என்று இங்கே கூறுகின்றார். பத்தருள்ளீர் என்று குறிப்பிடுவதன் மூலம் இந்த பாடல் சிவபிரானின் அடியார்களை நோக்கி பாடப்பட்ட பாடல் என்பதை நாம் உணரலாம். கூழைமை=கடமை. சிவபிரானின் அடியார்களுள் ஒருவராக விளங்கும் நீர் இழிந்த மனிதப் பிறவி எடுத்து விட்டோமோ என்று வருந்த வேண்டாம், தன்னை வேண்டி நின்ற பார்த்தனுக்கு பாசுபதம் அருளிச் செய்தவனும், அம்பினில் வில்லைக் கோத்த நிலையில் தனது சிரிப்பு ஒன்றினால் மூன்று புரங்களையும் எரித்த வல்லமை உடையவனும் ஆகிய சிவபிரானுக்கு அடிமையாக இருப்பதே நமது கடமையாகும். அவ்வாறு இருப்பதன் மூலம் நாம் நமது பிறவியை மதிக்க கற்றுக் கொள்ளலாம் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்

பார்த்தற்கு பாசுபதம் அருள் செய்தவன் பத்தருள்ளீர்

கோத்தன்று முப்புரம் தீ வளைத்தான் தில்லை அம்பலத்துக்

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நந்தம் கூழைமையே

முதல் அடியில் உள்ள எம் செல்வன் கழல் அடைவான் பிறந்த பிறவி என்று மாற்றி அமைத்து பொருள் கொண்டால், மானிடப் பிறவி கிடைத்ததே இறைவனைப் போற்றி வாழ்வதற்கே என்ற பொருள் அமைகின்றது. திறம் பயில்=உறுதி வாய்ந்த; வானவர் கோன் என்ற சொல்லுக்கு இந்திரன் என்று பொருள் கொண்டு, அடுத்த பிறவியில் தேவர்களாக பிறப்பார்கள் என்று பொருள் கொள்வதும் ஒரு வகை. சிவபெருமானின் திருவடிகளைச் சார்வோம், அவரது திருவடிகளைச் சென்று அடைவோம் என்று பல இந்த பதிகத்தின் பாடல்களில் திருஞானசம்பந்தர் கூறி இருப்பதால், வானவர் கோனென்று சிவபெருமானையே அவர் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. உயிர்கள் கொள்ளும் எழுவகை பிறப்புகள், தாவரம், நீரில் வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் என்பன.

பொழிப்புரை:

பெறுவதற்கு அரிய இந்த மானிடப் பிறவியில் எமது செல்வனாகிய சிவபெருமானைப் போற்றி வாழ்ந்து அவனது திருவடிகளைச் சென்றடைய முயற்சி செய்யும் அடியார்களாகிய நாங்கள், ஒரு கால் இந்த பிறவியின் முடிவில் அந்த முக்தி நிலையினை அடைய முடியாமல் போனாலும், அதனால் மனம் தளராது இனி வரும் பிறவிகளில் தொடர்ந்து முயற்சி செய்து, உமது திருவடிகளை அடையும் பொருட்டு திறமை வாய்ந்த ஞாநசம்பந்தனின் பதிகங்களை முறையாக ஓதுவோம் என்று உறுதியுடன் இந்த பதிகத்தின் பத்து செந்தமிழ் பாடல்களையும் ஓதும் வல்லமை பெற்ற அடியார்கள், இந்த உலகினில் நிறைவான வாழ்க்கை அடையப்பெற்று, மறுமையில் வானோர்களின் தலைவனாகிய சிவபெருமானுடன் கூடி இருப்பார்கள்.

முடிவுரை:

திருநீலகண்டம் என்று இந்த பதிகத்தின் பாடல்கள் முடிவதால், திருநீலகண்டத் திருப்பதிகம் என்றே இந்த பதிகம் அழைக்கப் படுகின்றது. இந்த குறிப்புடன் ஆணை நிகழும் வண்ணம் இந்த பதிகத்தினை திருஞானசம்பந்தர் பாடிய பின்னர், இவருடன் சென்ற அடியார்கள் மட்டுமன்றி, அந்நாளில் அந்த நாட்டில் இருந்த அனைவரும் தங்களைப் பீடித்திருந்த குளிர் சுரம் நீங்கப் பெற்றார்கள் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. இன்றும் இந்த பதிகத்தினை பக்தியுடன் பாடினால் குளிர்சுரம் முதலிய பிணிகள் நம்மை வருத்தாது என்பதை தங்களது அனுபவத்தில் கண்டதாக சான்றோர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலத்தின் இயல்பினை இந்த பதிகம் மாற்றிய விவரத்தை நாம் இங்கே கண்டோம். இதே போன்று பாலையாக கிடந்த நனிபள்ளி நிலத்தின் இயல்பு, காரைகள் கூகை முல்லை என்று தொடங்கும் (2.84) பதிகத்தினால் மாற்றப்பட்டது. மதுரை மாநகரில் சமணர்களுடன் அனல் வாதம் செய்த போது, ஞானசம்பந்தர் அருளிய போகமார்த்த பூண்முலையாள் (1.49) என்று தொடங்கும் திருப்பதிகம் நெருப்பின் தன்மையை மாற்றி, அந்த பதிகம் எழுதப்பட்ட ஓலை, கொழுந்து விட்டெரிந்த நெருப்பினில் இட்ட போதிலும் தொடர்ந்து பச்சை நிறத்துடன் இருந்த அதிசயம் நிகழச் செய்தது. மேலும் திருஞானசம்பந்தரும் அவரது அடியார்களும் மதுரையில் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் நள்ளிரவில் இட்ட தீ, அடியார்களுக்கு எந்த தீங்கும் இழைக்காது பாண்டிய மன்னனை வெப்பு நோயாக பற்றிக் கொண்ட அதிசயத்தை நிகழ்த்தியது, செய்யனே திரு ஆலவாய் (3.51) என்று தொடங்கும் பதிகமாகும். சமணர்களுடன் புனல் வாதம் செய்த போது, வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகம் (3.54) எழுதப்பட்ட ஓலை, நீரின் போக்கினை எதிர்த்துச் சென்ற அதிசயத்தை நிகழ்த்தியது. கடுமையான காற்றும் மழையும் இடைவிடாமல் பொழிந்ததால் ஓடத்தினை செலுத்த முடியாமல், ஓடங்களைத் துறையில் கட்டி வைத்து விட்டு ஓடக்காரர்கள் சென்ற நிலையில், ஞானசம்பந்தரும் அவரது அடியார்களும் ஓடத்தில் அமர்ந்து கொண்ட தருணத்தில், அருளப்பட்ட பதிகம், கொட்டமே கமழும் என்று தொடங்கும் திருப்பதிகம் (3.06). இந்த திருப்பதிகம் மிகுந்த வேகத்துடன் வீசிய காற்றையும் வானிலிருந்து பொழிந்த கடுமையான மழையையும் வெற்றி கொண்டது. இவ்வாறு பஞ்ச பூதங்களின் தன்மையையும் வெற்றி கொண்டவை ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகங்கள் என்பதால், அவர் அருளிய பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாக வகுக்கப் பட்டன போலும். மேலும் இந்த காரணத்தால், சைவ சமயத்தின் ஆச்சார்யராக திருஞானசம்பந்தர் கருதப் படுகின்றார்.

இந்த பதிகத்தின் பாடல்களில் அடியார்களாகிய தாங்கள் எவ்வாறு பெருமானைப் போற்றுகின்றனர் என்பதை உணர்த்தி, நாம் எவ்வாறு சிவபெருமானை போற்றி வணங்கவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதை நாம் உணரலாம், சிவபெருமானுக்கு பலவிதமான திருத்தொண்டுகள் செய்து அவனது திருப்பாதங்களைப் போற்றுவோம் என்று முதல் பாடலிலும், சோலைகள் வளர்த்து குளங்கள் வெட்டி திருப்பணிகள் செய்தும், அன்றலர்ந்த மலர்களைத் தூவியும் பெருமானை வழிபடுவோம் என்று இரண்டாவது பாடலிலும், உலகச் சிற்றின்பங்களைத் துறந்து உமது திருவடிகளில் பற்று வைத்து வழிபடும் வண்ணம் எமக்கு அருள் புரிந்தவரே என்று அவரை வாழ்த்தி வழிபடுவோம் என்று மூன்றாவது பாடலிலும், புண்ணியத்தின் பயனாக நாங்கள் உம்மை வழிபடும் வண்ணம் ஆட்கொண்ட பெருமானே என்று வழிபடுவோம் நான்காவது பாடலிலும், யான் எனது என்ற இரண்டு பற்றுக்களையும் துறந்து பெருமானை வழிபடுவோம் என்று ஐந்தாவது பாடலிலும், பெருமானின் திருவடிகளுக்கு அபச்சாரம் ஏதும் நேராத வண்ணம் வழிபடுவோம் என்று ஆறாவது பாடலிலும், பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு வருந்திடும் வாழ்க்கையைக் கடிந்து அதனின்று விடுபடும் நோக்கத்துடன் உருக்கத்துடன் பெருமானை வழிபடுவோம் என்று எட்டாவது பாடலிலும், இனி வரும் பிறவிகளிலும் பெருமானை வழிபடுவோம் என்ற உறுதியுடன் வாழ்வோம் என்று ஒன்பதாவது பாடலிலும் புறச் சமயத்தாரின் பேச்சுகளை புறக்கணித்து தொடர்ந்து பெருமானின் திருவடிகளை வழிபடுவோம் என்று பத்தாவது பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அவர் குறிப்பிட்ட வழியினில் நாமும் பெருமானை வண்ணகி, நமது வாழ்வினில் உய்வினை தேடிக் கொள்ளும் மார்க்கம் சிவபெருமானை வழிபடுவது ஒன்று தான் என்பதை முற்றிலும் உணர்ந்து, அவர் அருளிய திருநீலகண்டத் திருப்பதிகத்தினை முறையாக ஓதி, பலன் பெறுவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Avvinaikku Ivvinai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

அவ்வினைக்கு இவ்வினை


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: