Go Back

05/12/20

தோடுடைய செவியன் - பாடல் 10


தோடுடைய செவியன் - பாடல் 10


புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற நெறி நில்லா

ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்

மத்த யானை மறுக உரி போர்த்ததோர் மாயம் இது என்னப்

பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மன் இவன் அன்றே

விளக்கம்:

பொறியில்=அறிவற்ற; இந்த பாடலில் பித்தர் என்று இறைவனை சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். சுந்தரரும் இறைவனை பித்தா என்று தனது முதல் பதிகத்தில் நமது நினைவுக்கு வருகின்றது. யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் எவரும் அதனை அணிய மாட்டார்கள். ஆனால் பெருமான், ஏனையோரிடமிருந்து மாறுபட்டு அணிந்து கொண்டமையை குறிப்படும் வண்ணம் பித்தர் என்று சம்பந்தர் அழைத்தார் போலும். பெருமான் பலி ஏற்கும் நோக்கத்தை அறியாதவராக பொருந்தாத சொற்களை புத்தரும் சமணரும் கூறிய போதிலும், அந்த சொற்களை பொருட் படுத்தமால் பெருமான், உலகத்தவர் தனக்கு பிச்சையிட்டு உய்வதற்கு வாய்ப்பினை தொடர்ந்து அளிக்கும் வண்ணம் பிச்சை ஏற்கின்றார் என்பதை இங்கே உணர்த்துகின்றார். சமணர்களின் கொட்டத்தை அடக்கி, சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டுவதே சம்பந்தப் பெருமான் அவதரித்த நோக்கம் என்பதால், பாடல்தோறும் சமணர்கள் மற்றும் புத்தர்களின் தவறான கொள்கை பெரும்பாலான பதிகங்களின் பத்தாவது பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

அறிவற்ற சமணர்களும் புத்தர்களும் பெருமானின் பெருமைக்குரிய செயல்களை (பலி ஏற்பது போன்ற செயல்கள்) சரியாக புரிந்து கொள்ளாமல், பிழைபட்ட கருத்துக்களை சொல்லி வந்த போதும், அத்தகைய சொற்களால் மயங்கி தங்களது மனம் போன போக்கில் உலகத்தவர் பலரும் பழித்து கூறிய போதிலும், அத்தகைய சொற்களை பொருட் படுத்தாது உலகத்தவருக்கு உய்யும் வாப்பினை அளிக்கும் பொருட்டு பெருமான் தொடர்ந்து உலகெங்கும் திரிந்து பலி ஏற்கின்றார். இத்தகைய பண்பினை உடைய பெருமான், எனது உள்ளத்தைக் கவர்ந்து விட்டார். தன்னை தாக்கும் நோக்கத்துடன் தன்னை நாடி வந்த மதயானை மருளும் வண்ணம் அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது பெருமான் போர்த்துக் கொண்டதைக் கண்ட அனைவரும், யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறியாமல் போர்த்துக் கொள்ளும் இவர் என்ன பித்தரா என்று எண்ணினராகிலும், யானையின் பசுந்தோலால் பெருமானுக்கு கேடு ஏதும் விளையாததைக் கண்டு ஈது என்ன மாயம் என்று வியந்தனர். இத்தகைய ஆற்றல் உடைய பெருமான், பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் உறைகின்றார். அவரே எனது உள்ளம் கவர்ந்தவரும் எனது பெருகைக்குரிய தலைவரும் ஆவார்.

Tag :

#thirugnanasambandhar thevaram thiruppiramapuram
#Thodudaya seviyan
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
தோடுடைய செவியன் - பாடல் 10


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: