Go Back

22/03/21

ஓர் உருவாயினை


முன்னுரை:

நான்காவது தலையாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து, வித்தியாசமான பல பதிகங்கள் பாடினார். அப்போது அவர் பாடிய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன. அத்தகைய பதிகங்களில் ஒன்று தான் திருவெழுகூற்றிருக்கை என்று அழைக்கப்படும் இந்த பதிகம். மொழிமாற்றுப் பதிகம் (1.117) மாலைமாற்றுப் பதிகம் (3.117) வழிமொழி விராகப் பதிகம் (3.67) ஏகபாதம் (1.127) திருவிருக்குக்குறள் (1.90) ஆகியவற்றை சிந்தித்த நாம் இப்போது திருவெழுகூற்றிருக்கை திருப்பதிகத்தை சிந்திப்போம். இந்த பதிகம் அகவல் முறையில் அமைந்துள்ளது. இந்த பதிகத்திலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதிகங்கள் போன்று சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்கள் குறிப்பிடப் படுகின்றன.

மிகவும் அழகான அலங்காரத்துடன் வீதி வலம் வரும் பெருமானின் அழகினைக் கண்டு இரசிப்பதற்கு அனைவரும் விரும்புவார்கள். அதிலும் தேரில் உயர்ந்த இடத்தில் அமர்ந்து வீதி வலம் வரும் பெருமானை காண்பதற்கு சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்புவார்கள். திருஞான சம்பந்தர் ஒரு படி மேல் சென்று, பெருமானை தானே தேரில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்று விரும்பினார் போலும். சொற்களாலான தேரினை உருவாக்கி அந்த தேரினில் பெருமானின் பண்புகளையும் தன்மையையும் சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களையும் வைத்து நாம் அனைவரும் படித்து இன்புறும் வண்ணம் ஒரு பதிகத்தினை இயற்றுகின்றார். இவ்வாறு சொற்களால் அமைந்த தேரினில் இறைவனின் பலவிதமான பெருமைகளை குறிப்பிட்டு அழகு பார்க்கின்றார். சொற்களால் அமைந்துள்ள தேர் என்பதை நாம் உணரும் வண்ணம் தேரின் மேல் பாகம் அமைந்திருப்பது போன்று எண்களை வைத்து பல வரிசைகளாய் அடுக்கியுள்ளார். இத்தகைய கவிதை நடையினை இரதபந்தம் என்று வ்டமொழியில் அழைப்பார்கள். இதனை தமிழ்மொழியில் மிகவும் அழகாக திருவெழுகூற்றிருக்கை (திரு எழு கூற்று இருக்கை) என்று அழைக்கின்றனர். திரு=தெய்வம்; எழு=எழுந்தருளும்; கூற்று=சொற்களாலான; இருக்கை=அமரும் இடம், தேர்;

இனி, எண்களைக் கொண்டு எவ்வாறு தேரின் அமைப்பினை சம்பந்தர் உணர்த்துகின்றார் என்பதை நாம் காண்போம். முதல் வரிசையில் 13 சதுரங்கள் அதற்கு மேல் வரிசையில் 11 சதுரங்கள் அதற்கும் மேல் 9 சதுரங்கள் அதற்கும்மேல் உள்ள வரிசைகளில் 7 சதுரங்கள் 5 சதுரங்கள் 3 சதுரங்கள் வைக்கப்பட்டுள்ள அமைப்பினை கற்பனை செய்து பார்த்தால் ஒரு தேரின் மேல் பகுதியை ஒத்திருக்கும் உண்மையை நாம் அறியலாம். கீழ் வரிசையில் ஒன்று முதல் ஏழு வரை எண்களை முதலில் ஏறு வரிசையிலும் பின்னர் இறங்கு வரிசையிலும் அமைத்து, ஒவ்வொரு எண்ணையும் ஒரு சதுரத்தை உணர்த்துவதகக் கொண்டால் இந்த வரிசையில் பதின்மூன்று சதுரங்கள் இருப்பதை (1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1) நாம் உணர்ந்து அறியலாம். இவ்வாறு கீழ் வரிசையில் உள்ள சதுரங்களின் எண்ணிக்கையை உணர்த்திய ஞானசம்பந்தர் அதற்கும் மேல் உள்ள வரிசைகள் முறையே பதினோரு சதுரங்கள் (1 2 3 4 5 6 5 4 3 2 1) ஒன்பது சதுரங்கள் (1 2 3 4 5 4 3 2 1) ஏழு சதுரங்கள் (1 2 3 4 3 2 1) ஐந்து சதுரங்கள் (1 2 3 2 1) மற்றும் மூன்று சதுரங்கள் (1 2 1) வைத்திருப்பதை நாம் காணலாம். இந்த அமைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் காணும் நமக்கு தேரின் மேற்கூரையின் மேல் உள்ள அமைப்பு தென்படும்,

(1 2 1)

(1 2 3 2 1)

(1 2 3 4 3 2 1)

(1 2 3 4 5 4 3 2 1)

(1 2 3 4 5 6 5 4 3 2 1)

(1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1)

பாடலின் 19ஆம் வரியிலிருந்து 31ஆம் வரிகள் வரை ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் வரும் வண்ணம் அமைத்துள்ள சம்பந்தர், மீண்டும் பாடலின் 32ஆம் வரியிலிருந்து 42ஆம் வரிகள் வரையிலும் ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்கள் ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் வரும் வண்ணம் அமைந்துள்ளார். இவ்வாறு அமைந்துள்ள நிலையினை தேர் தட்டின் கீழ் பாகம் என்றும் கூரை என்றும் கொள்வதும் பொருத்தமாக உள்ளது, இனி இந்த பாடல் உணர்த்தும் பொருளை நாம் காண்போம்.

பாடல் வரிகள்: 1 & 2

ஓர் உரு ஆயினை மான் ஆங்காரத்து

ஈர் இயல்பாய் ஒரு விண் முதல் பூதலம்

விளக்கம்:

ஓருரு என்று ஈரியல்பு ஒரு விண் என்று ஒன்று இரண்டு ஒன்று ஆகிய எண்கள் இங்கே உணர்த்தப் படுவதை நாம் காணலாம். ஓர் உரு=ஒப்பற்ற ஒரு உருவம்; அனைத்து தத்துவங்களையும் கடந்ததும், சொற்களுக்கும் எண்ணங்களுக்கும் எட்டாமல் இருப்பதும் ஆகிய நிலை பெருமானின் இயல்பு நிலை. இதனை சொரூப நிலை என்றும் இயல்பு நிலை என்றும் கூறுவார்கள்; அருவம் உருவம் அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளையும் தாண்டி எண்குண வடிவினனாய் எங்கும் பரந்தும் நிறைந்தும் சர்வ வியாபியாக நிற்பவன் இறைவன். அவனது அந்த தன்மையை யாரும் காண இயலாது. எனினும் உயிர்கள் பால் இரக்கம் கொண்டு ஐந்தொழில்கள் செய்யும் நோக்கத்துடன், தன்னிச்சையாக எந்த ஒரு உருவமும் கொள்ளும் வல்லமை படைத்தவன் பெருமான். அவ்வாறு சிவமாகவும் சக்தியாகவும் இறைவன் கொண்டுள்ள உருவமே மேலே குறிப்பிட்ட செயல்களை செய்வதற்கு பெருமானே எடுத்துக் கொண்ட ஒப்பற்ற உருவம். இதனை தடத்த நிலை என்று கூறுவார்கள். இவ்வாறு ஒப்பற்ற உருவங்களை உடையவன் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது; மான்=பெண் இங்கே சக்தியை குறிக்கின்றது; ஆங்காரம்=தீர்மானம் செய்து, ஒரு செயலை இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று எடுத்த முடிவு; உலகத்தில் உள்ள உயிர்களை உய்விக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஐந்து தொழில்களைச் செய்து உயிர்கள் தங்களது வினைகளை கழித்துக் கொண்டு தன்னை வந்து அடைவதற்காக வழி வகுத்த நிலை; ஈர் இயல்பாய்=சக்தி சிவம் என்று வேறு வேறு இயல்புகளைக் கொண்டு நிற்கும் நிலை; சிவம் உலகத்தை மீண்டும் தோற்றுவிக்க வேண்டும் என முடிவு செய்து நினைக்கின்றது. சக்தி அந்த நினைவுகளை செயலாக்குகின்றது. இந்த தன்மை இங்கே ஈரியல்பு என்று உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு உலகத்தை படைக்கும் இறைவன், ஆணவக் கலப்புடன் விளங்கும் உயிர்களை தகுந்த உடல்களுடன் சேர்த்து, அந்த உயிர்கள் மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டு பதியைச் சார்ந்து இருக்கவும், ஆணவம் கன்மம் மாயை என்ற மலங்களைக் கழித்துக் கொள்ளவும் உதவி புரிகின்றான். இந்த உதவியும் ஈரியல்பாய் உள்ள சிவமும் சக்தியும் இருவரும் இணைந்து செய்வது தான்.

படைப்பின் அடிப்படையாக நாதத்திலிருந்து எழுவது ஆகாயம் (வெளி என்றும் கூறுவார்கள்) இந்த ஆகாயத்திலிருந்து காற்று தீ நீர் மற்றும் நிலம் ஆகிய மற்ற பூதங்கள் தோன்றுகின்றன. இவ்வாறு ஆகாயம் முதல் உலகம் ஆகிய பஞ்ச பூதங்களை தோற்றுவிக்கும் நிலை விண் முதல் பூதலம் என்ற தொடரால் விளக்கப் படுகின்றது. ஆகாயத்திற்கு ஒப்பற்ற என்ற பொருளைத் தரும் ஒரு என்ற அடைமொழியைச் சேர்த்து ஒரு விண் என்று சம்பந்தர் கூறுகின்றார். மற்ற நான்கு பூதங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ள ஆகாயம், தான் எந்த பூதத்தையும் சார்ந்து தோன்றாமல் இருந்த ஒப்பற்ற நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. ஈரியல்பாய் ஒரு என்ற தொடருக்கு, இரண்டு வேறு வேறு இயல்புகளுடன் செயல்பட்டாலும், சிவமும் சக்தியும் இணைந்து ஒரே உருவமாக மாதொரு பாகனாக இருக்கும் நிலையினை குறிப்பிடுகின்றது என்றும் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கமும் மிகவும் பொருத்தமானதே.

பொழிப்புரை:

சர்வ வியாபியாக அனைத்து உயிர்களுடன் கலந்து நிற்கும் பெருமானே, நீ உயிர்கள் மீது கொண்டுள்ள கருணையால் ஐந்து தொழில்களையும் புரியும் பொருட்டு ஒப்பற்ற உருவத்தையும் தாங்கி நிற்கின்றாய்; உலகிலுள்ள உயிர்களை உய்விக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பெண்ணாகிய சக்தியுடன் சேர்ந்து இரு வேறு இயல்புகளுடன் ஐந்து தொழில்களைச் செய்து உலகத்தையும் உலகத்தில் உள்ள உயிர்களையும் இறைவன் இயக்குகின்றாய். உன்னால் தான் வேறு பூதங்களின் கலப்பின்றி தோன்றியது என்ற ஒப்பற்ற பெருமையை உடைய ஆகாயமும், மற்ற நான்கு பூதங்களும் தோற்றுவிக்கப் படுகின்றன.

பாடல் வரிகள்: 3–5

ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும்

படைத்து அளித்து அழிப்ப மும் மூர்த்திகள் ஆயினை

இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை

விளக்கம்:

ஒன்றிய, இருசுடர், மும்மூர்த்திகள், இருவரோடு, ஒருவன் என்ற சொற்கள் மூலம் முறையே ஒன்று இரண்டு மூன்று இரண்டு ஒன்று ஆகிய எண்கள் குறிப்பிடப்படுகின்றன. இரு சுடர்=சூரியன் மற்றும் சந்திரன்; ஒன்றிய இரு சுடர் என்ற தொடர் மூலம், சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய சுடர்களுடன் ஒன்றி இறைவன் அவற்றை இயக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

ஒன்றிய என்ற சொல்லுக்கு சிவம் சக்தியுடன் ஒன்றி இருக்கும் நிலை என்ற விளக்கம் சிலரால் கூறப்படுகின்றது. விண் முதல் பூதலம் என்ற தொடரினைத் தொடர்ந்து ஒன்றிய இரு சுடர் என்று வருவதால், சூரிய சந்திரர்களை இயக்கும் இறைவன் என்று பொருள் கொள்வதே மிகவும் பொருத்தமானது. அளித்து=பாதுகாப்பினை அளித்து; உயிர்கள் பொருந்தியுள்ள உடல்களை அழிப்பது இந்த பிறவியில் கழித்துக் கொள்ளாது எஞ்சியிருக்கும் வினைகளை, உயிர்கள் அடுத்த பிறவியில் கழித்துக் கொள்வதற்கு வழிவகுக்கவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

உம்பர்கள் பிறவும்=தேவர்கள் உட்பட பலரையும்; பெருமான் புரியும் ஐந்து தொழில்களில் மூன்று தொழில்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. மூன்று தொழில்களையும் புரிபவன் பெருமான் தான் என்பது மிகவும் விளக்கமாக சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.21) முதல் மூன்று பாடல்களில் ஞானசம்பந்தரால் உணர்த்தப் படுகின்றது. அந்த பாடல்களை நாம் இங்கே காண்போம். புவம்=வானம்: வளி=காற்று; புனல்=தண்ணீர்; கனல்=தீ; கலை=அறுபத்து நான்கு கலைகள்; திரிகுணம்=சாத்துவீகம், ராஜசம் மற்றும் தாமசம் ஆகிய மூன்று குணங்கள்; அமர் நெறி=விரும்பத்தக்க வழிமுறைகள்; திவம்= தேவலோகம்; மருவி=கூடி பொருந்தி, பிரமனால் படைப்புத் தொழில் எவ்வாறு செய்யப் படுகின்றது என்பது இந்த பாடலில் கூறப்படுகின்றது. தாவரங்கள் முதலாக தேவர்கள் வரை ஏழு வகையான உடல்களில் அந்தந்த உயிரின் வினைத் தொகுதிக்கு ஏற்ப உயிர்கள் பொருத்தப் படுகின்றன. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனது மனதினில் சிவபெருமான் பொருந்தி இருப்பதால், பிரமனால் படைப்புத் தொழிலை ஒழுங்காக செய்ய முடிகின்றது. பிரமன் தனது தொழிலை ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற கருத்தினை மனதில் கொண்டு, இறைவனை வணங்கி செயல்படுவதால், சிவபெருமான் பிரமனது மனதினில் அமர்ந்து அருள் புரிகின்றார் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

புவம் வளி கனல் புனல் புவிகலை உரை மறை

திரிகுணம் அமர்நெறி

திவமலி தரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர்

அவை அவை தம

பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது

மருவிய

சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலை

பெறுவரே

பதிகத்தின் இரண்டாவது பாடலில் திருமால் காத்தல் தொழிலைப் புரியும் நிலை விளக்கப் படுகின்றது. மனிதர்கள், தேவர்கள் உட்பட அனைத்து உயிர்களும் உலகில் நிலை பெற்று வாழும் பொருட்டு அவர்களை காத்தருள வேண்டும் என்ற எண்ணத்தில் பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள திருமாலின் மனதினில் நிலை பெற்று இருக்கும் சிவபெருமான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். மேற்கண்ட பாடலில் பிரமன் தனது தொழிலினைச் சரிவரச் செய்வதற்காக சிவபெருமானை வேண்டுவது போன்று, திருமாலும் தனது தொழிலினை சரிவரச் செய்யும் வண்ணம் பெருமானை வேண்டுகின்றார் என்று உணர்த்தப் படுகின்றது. திருமால் புரியும் யோக நித்திரை அறிதுயில் என்று சொல்லப் படுகின்றது தூங்குவது போன்று காட்சி அளித்தாலும் உலகில் நடப்பது அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர் திருமால் என்பதால் அவர் கொண்டுள்ள நித்திரை யோக நித்திரை என்று அழைக்கப்படுகின்றது.

மலை பல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி

மனிதர்கள்

நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை

நினைவொடு மிகும்

அலைகடல் நடு அறிதுயில் அமர் அரி உரு இயல்

பரன் உறை பதி

சிலை மலி மதிள் சிவபுரம் நினைபவர் திருமகளொடு

திகழ்வரே

பதிகத்தின் மூன்றாவது பாடலில் அழித்தல் தொழில் நடைபெறும் முறை விளக்கப் படுகின்றது. கடலால் சூழப் பட்ட உலகங்களில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கும் வண்ணம், அழிக்கும் தொழிலினைச் செய்யும் உருத்திரனின் உருவில் எழுந்தருளும் சிவபிரான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார்.

பழுதில கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி

குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலமலி தரும்

உயிரவை அவை

முழுவதும் அழிவகை நினைவொடு முதல் உருவியல்

பரன் உறை பதி

செழுமணி அணி சிவபுரநகர் தொழும் அவர் புகழ் மிகு

மூவுலகிலே

மேற்கண்ட மூன்று பாடல்களிலும் உள்ள கருத்தினை, சிவபெருமான் மூவராகவும், அவர்களின் தலைவராகவும் உள்ள நிலை, சம்பந்தரால் முதுகுன்றம் பதிகத்தின் (1.53) முதல் பாடலில் கூறப்படுகின்றது. மறை சேர் நாவர்=வேதங்களை ஓதும் நாவினை உடைய அந்தணர்கள்: எரி=தீ; கால்=காற்று; விரை மலரோன்=நறுமணம் உடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன்;

தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்

நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்

மேவாராய விரை மலரோன் செங்கண் மால்

ஈசன் எனும்

மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் (6.54) ஒன்பதாவது பாடலில் நாரணனாகவும், பிரமனாகவும் பெருமான் விளங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. பண்ணியான்=ஆக்கியவன்; படிறன்=வஞ்சகன், மறைப்பது வஞ்சகர் செய்யும் தொழில் என்பதால் கங்கையைச் சடையில் மறைத்த இறைவனை படிறன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நண்ணியவன்=நெருங்கி நின்று துணையாக இருந்தவன். நளிர்=குளிர்ச்சி

பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப்

படர்சடை மேல் புனல் கரந்த படிறன் தன்னை

நண்ணியனை என்னாக்கித் தன்னானானை நான்மறையின்

நற்பொருளை நளிர் வெண்திங்கள்

கண்ணியனைக் கடியநடை விடை ஒன்று ஏறும் காரணனை

நாரணனைக் கமலத்து ஓங்கும்

புண்ணியனைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே

ஆற்ற நாள் போக்கினேனே

அதிகை தலத்தின் மீது அருளிய ஏழைத் திருத்தாண்டகத்தின் (6.3) முதல் பாடலில், இதே செய்தி கூறப்படுகின்றது. பறவைகளின் அரசன் என்று கருதப்படும் கருடனை வாகனமாகக் கொண்ட திருமால் என்றும் பொன் நிறத்தினை உடைய பிரமன் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் இவர்கள் இருவரையும் குறிப்பிடுகின்றார்.

வெறிவிரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டத்தானை

வெள்ளேற்றினானைப்

பொறி அரவினானைப் புள்ளூர்தியானைப் பொன்

நிறத்தினானைப் புகழ் தக்கானை

அறிதற்கரிய சீர் அம்மான் தன்னை அதியரைய மங்கை

அமர்ந்தான் தன்னை

எறிகெடிலத்தானை இறைவன் தன்னை ஏழையேன் நான்

பண்டு இகழ்ந்தவாறே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.29) ஒரு பாடலில் வெள்ளியர் (உடல் முழுவதும் திருநீறு பூசியதால் வெண்மை நிறத்துடன் காணப்படும் சிவபெருமான்), கரியர் (திருமால்) மற்றும் செய்யர் (பொன் நிறத்தில் உள்ள பிரமன்) ஆகிய மூவராக இருப்பவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தெள்ளியார்=தெளிந்த உள்ளம் கொண்ட ஞானியர்கள்: பள்ளியார்=பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால்: ஒள்ளியர்=ஒளி தருபவர்

வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள்

நெஞ்சுள்

ஒள்ளியர் ஊழிஊழி உலகமது ஏத்த நின்ற

பள்ளியர் நெஞ்சத்துள்ளார் பஞ்சமம் பாடி ஆடும்

தெள்ளியார் கள்ளம் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளியாரே

வேணுபுரத்தின் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) அருளப்பட்ட பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.9.2) சம்பந்தர், படைப்பவனாகவும், காப்பவனாகவும், அழிப்பவனாகவும் விளங்குவதுடன், இந்த தொழில்களின் முடிந்த பயனாகிய முக்தி நிலையாகவும் சிவபெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். கிடை=வேதம் ஓதும் கூட்டம்

படைப்புந் நிலை இறுதிப் பயன் பருமையொடு

நேர்மை

கிடைப் பல்கணம் உடையான் கிறி பூதப்படை

உடையான் ஊர்

புடைப் பாளையின் கமுகின்னொடு புன்னை

மலர் நாற்றம்

விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே

பொதுவாக மும்மூர்த்திகள் என்றால் மூவரும் சமமான நிலையில் உள்ளவர்கள் என்று பொருள் கொள்ளப் படுகின்றது. ஆனால் மும்மூர்த்திகளுக்கு பெருமை கிடைப்பதன் காரணமே, பெருமான் அவர்களுடன் இணைந்து இருந்து அவர்கள் தங்கள் தொழிலினைச் செய்யும் வண்ணம் இயக்குவதே ஆகும். எனவே பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரிடமிருந்து பெருமான் வேறுபட்டவர் என்பதை உணர்த்தும் பொருட்டும், பெருமான் தான் அவர்கள் இருவரையும் இயக்குகின்றான் என்பதையும் உணர்த்தும் பொருட்டும் இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மும்மூர்த்திகளிலும் தனியாக விளங்குபவன் பெருமான் என்று சம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு திருவாசகப் பாடல் (திருச்சதகம்) ஒன்றினை நினைவூட்டுகின்றது. தகர்=ஆடு; அவிதா=அச்சக் குறிப்பு சொல்; நம்மவர்=நம்மைப் போன்று அழியும் நிலையில் உள்ள பிரமனும் திருமாலும்;

சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று

நஞ்சம் அஞ்சி

ஆவ எந்தாய் என்று அவிதா விடும் நம்மவர் அவரே

மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு

மண் மேல்

தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே

தக்கனுக்கு அஞ்சி அவன் செய்த வேள்வியில் பங்கு கொண்டு அவிர்ப்பாகம் எடுத்துக் கொண்டவர்களும் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சின் தாக்கத்தினை தாங்க முடியாமல், எந்தை பெருமானே காப்பாற்று என்று அலறியவர்களும் எவ்வாறு பெருமானுக்கு சமமாக மூவர்களில் ஒருவன் என்று தங்களை எண்ணிக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் இருவரும், மண்ணுலகில் பலரும் தங்களை வழிபடுதலை நினைத்து மூவரில் தாங்களும் ஒருவர் என்றே இறுமாப்புடன் இருப்பது எத்தனை பெரிய பாவம் என்பதை அறியாமல் இருக்கின்றார்களே என்று அவர்கள் இருவரது நிலையை நினைத்து அடிகளார் இரக்கம் கொள்கின்றார். மூவரில் ஒருவனாகிய உருத்திரன், குறிப்பிட்ட செயலைச் செய்யும் பொருட்டு இயங்கும் இறைவனின் ஒரு அம்சமாகும். எனவே உருத்திரனை சிவன் என்று கொள்வதும் தவறு என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. சாவ முன்னாள் தக்கன் என்று குறிப்பிட்டு, வீரபத்திரனின் வலிமையின் முன்னே தக்கன் செயலற்று நின்ற தன்மையை குறிப்பிட்டு, அத்தகைய தக்கனுக்கு அஞ்சி வேள்வியில் பங்கேற்ற இருவர் என்று இழிவாக கூறுவதையும் நாம் உணரலாம்.

கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.80.9) சுந்தரர், இறைவனை மூவராகவும் இருவராகவும் ஒருவனாகவும் இருப்பவன் என்று கூறுகின்றார். தங்களது பாவத்தையும் வினைகளையும் அறுத்துக் கொள்ள விரும்பும் அடியார்கள், மாதோட்ட நகரில் அமைந்துள்ள கேத்தீச்சரத்து இறைவனை தொடர்ந்து வழிபடுகின்றனர் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மூவரென இருவரென முக்கண் உடை மூர்த்தி

மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்னகரில்

பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல்

தேவன் எனை ஆள்வான் திருகேதீச்சரத்த்தானே

இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை என்ற தொடர் ஏகபாத திருமூர்த்தி உருவத்தினை குறிப்பிடுகின்றது என்றும் விளக்கம் கூறப்படுகின்றது. ஏகபாதர் என்று இறைவனின் இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களில் ஒன்று. இந்த மூர்த்தங்கள் இறைவனின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை என்று கூறுவார்கள். சோமாஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர்: தத்புருட முகத்திலிருந்து தோன்றியவை, பிக்ஷாடனர், காமாரி (காமனை அழித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), ஜலந்தராரி (ஜலந்தரனை அழித்தவர்), திரிபுராரி (திருபுரங்களை அழித்தவர்) ஆகும். சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றியவை, இலிங்கோத்பவர், சுகாசனர், உமாமகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), மற்றும் அர்த்த நாரீஸ்வரர் ஆகும். அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (பாசுபத மூர்த்தி) மற்றும் நீலகண்டர். வாமதேவ முகத்திலிருந்து தோன்றியவை, கங்காளர், சக்ரதானர், கஜமுகானுக்ரகர் (ஐராவதத்திற்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் ஆகும்,

முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில், மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் தொன்றுவது போல் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம். பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் உள்ளது.

இவ்வாறு ஏகபாத திருமூர்த்தியாக விளங்கும் பெருமானின் தன்மை திருவெண்காடு தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடலில் (6.35.2) குறிப்பிடப் படுகின்றது. தரித்தல்=மனதினில் நினைத்தல்: ஏதம்=துன்பம்: ஓதம்=கடலலைகள் எழுப்பும் ஒலி; ஊர் உண்டு=பல ஊர்கள் அடங்கிய உலகத்தினை விழுங்கி; உலகமும் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கிய பின்னரும் தான் ஒடுங்காது இருக்கும் இறைவனின் தன்மை, மற்றவரிடமிருந்து மாறுபட்டது என்பதால், மிகவும் பொருத்தமாக விகிர்தனார் என்று இறைவன் இந்த பாடலில் அழைக்கப் படுகின்றார், இந்த பாடலில் சிவபிரானின் திருவடிகளைத் தங்களது மனதினில் நினைத்து வழிபடும் அடியார்களுக்கு திருவடி தீட்சை தந்து அருளும் பெருமான் என்று தனது வாழ்க்கையில் இறைவன் புரிந்த அருளினை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பெருமை மணிவாசகருக்கும் கிடைத்ததை நாம் திருவிளையாடல் புராணத்திலிருந்து அறிகின்றோம்.

பாதம் தரிப்பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழுருவப்

பாய்ந்த பாதர்

ஏதம் படாவண்ணம் நின்ற பாதர் ஏழுலகுமாய் நின்ற

ஏக பாதர்

ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டேறி ஒத்து உலகமெல்லாம்

ஒடுங்கிய பின்

வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு

மேவிய விகிர்தனாரே

பெருமான் மும்மூர்த்திகள் தோன்றும் இடமாக தானே விளங்கி பின்னர் அவர்கள் ஒடுங்கும் இடமாக தான் இருக்கும் நிலையை பெருமான் நமக்கு உணர்த்துவதே ஏகபாத திரிமூர்த்தி திருவுருவம் என்று வேதங்களும் ஆகமங்களும் கூறுகின்றன, அவரது இரண்டு பக்கங்களிலிருந்து பிரமன் திருமால் ஆகிய இருவரும், அவரது இதயத்திலிருந்து உருத்திரனும் தோன்றும் மூர்த்தம் ஏகபாத திருமூர்த்தி என்றும் மும்மூர்த்திகளும் ஒடுங்கும் நிலை திரிபாத திருமூர்த்தி என்றும் அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் பெருமானின் அறுபத்து நான்கு மூர்த்தங்களில் அடங்கியவை.

பொழிப்புரை:

சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு சுடர்களுடன் இணைந்து அவற்றை இயக்கும் பெருமானே, நீ தேவர்கள் உள்ளிட்ட பல உயிர்களையும் படைக்கும் செயலையும், அந்த உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் செயலையும், அழிக்கும் செயலையும் செய்யும் பொருட்டு மூன்று மூர்த்திகளாக இயங்குகின்றாய்; மேலும் பிரமனையும் திருமாலையும் தோற்றுவித்து ஏகபாத திரிமூர்த்தியாகவும் விளங்குகின்றாய்;

பாடல் வரிகள்: 6—9

ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும்

முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளி நெறி

காட்டினை நாட்டம் மூன்றாகக் கோட்டினை

இரு நதி அரவமோடு ஒரு மதி சூடினை

விளக்கம்:

மேற்கண்ட வரிகளில் ஒன்று இரண்டு மூன்று நான்கு மூன்று இரண்டு மற்றும் ஒன்று ஆகிய எண்கள் ஏறு வரிசையிலும் பின்னர் இறங்கு வரிசையிலும் வருவதை நாம் உணரலாம். பெருமான் அமர்ந்து உபதேசம் செய்த இடம் என்பதால் ஒப்பற்ற ஆலமரத்தின் நிழல் என்று இங்கே சொல்லப்படுகின்றது. ஒண்கழல்=ஒளிவீசும், சிறந்த; அறியாமை என்ற இருளினை போக்குவதால் ஞானம் ஒளியாக உருவகப் படுத்தப்படுகின்றது. நாட்டம்=கண்கள் இரு=பெரிய; கோட்டினை=அழித்தனை; மும்மலங்களையும் அழிக்கும் வல்லமை உடைய பெருமான் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது.

உலகங்களை படைத்த போது எங்கும் இருள் சூழ்ந்திருந்த நிலையின் காரணமாக, பிரமன் முதலான உயிர்கள் எதையும் காணமுடியாத வண்ணம் அந்தகாரத்தில் ஆழ்ந்திருந்த படியால், அந்த இருளினை போக்க வேண்டி, சூரியன் சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்றினையும் தனது மூன்று கண்களாகக் கொண்டு பெருமான் இருளை நீக்கி, பிரமன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் பொருட்களை காணும் வண்ணம் அருள் புரிந்தான் என்று சான்றோர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

பொழிப்புரை:

பெருமானே, ஒளிவீசும் திருப்பாதங்களை உடைய நீ, ஒப்பற்ற ஆலமரத்தின் கீழே அமர்ந்து உன்னை மூன்று போதுகளிலும் புகழ்ந்து வணங்கிய சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும், அவர்களது அஞ்ஞானத்தை அழிக்கும் வண்ணம் உயர்ந்த நன்னெறியாம் சின்முத்திரை காட்டி ஞானவொளியை வழங்கினாய். சூரியன் சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்று சுடர்களை மூன்று கண்களாகக் கொண்டுள்ள நீ, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களையும் அழிக்கும் வல்லமை கொண்டவன் ஆவாய். நீ, பெரிய நதியாகிய கங்கையையும் பாம்பினையும் என்றும் மாறாது ஒற்றைப் பிறையுடன் விளங்கும் சந்திரனையும் உனது சடையில் அணிந்துள்ளாய்.

பாடல் வரிகள்: 10–13

ஒரு தாள் ஈர் அயின் மூவிலைச் சூலம்

நாற்கால் மான் மறி ஐந்தலை அரவம்

ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்து

இரு கோட்டு ஒரு கரி ஈடு அழித்து உரித்தனை

விளக்கம்:

பெருமானை எதிர்த்து வந்த மத யானையின் இயல்புடன் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று ஆகிய எண்களை இணைத்துள்ளதை நாம் உணரலாம். இந்த வரிகளில் ஒன்று முதல் ஐந்து வரை உள்ள எண்கள் ஏறு வரிசையிலும் பின்னர் இறங்கு வரிசையிலும் உள்ளதை நாம் காணலாம். தாள்=அடிமரம், காம்பு; ஈர் அயின்=ஈர்க்கும் தன்மை கொண்ட கூர்மை; பிளக்கும் தன்மை கொண்ட கூர்மை;

ஒரே தண்டினில் மூன்றாக பிரியும் சூலத்தை ஏந்தும் இறைவன் என்று சம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு பதினோராம் திருமுறையின் பாடல் வரிகளை நினைவூட்டுகின்றது. ஒரே தண்டினில் மூன்று கிளைகளாக பிரிந்துள்ள மூவிலைச் சூலத்தினை பெருமான் ஏந்துதல் நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் தானே என்பதையும் மூன்று தொழில்களும் செய்பவன் தானே என்பதையும் உணர்த்தும் பொருட்டு என்று ஓற்றியூர் ஒருபா ஒருபது பதிகத்தின் ஆறாவது பாடலில் பட்டினத்து அடிகள் (பதினோராம் திருமுறை) கூறுகின்றார்.

மூவிலை ஒரு தாள் சூலம் ஏந்துதல்

மூவரும் யான் என மொழிந்தவாறே

மூன்று தொழில்களைச் செய்யும் மூவிலைச் சூலம் என்று அப்பர் பிரானும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.89.3) கூறுகின்றார். தொழில் மூன்றும் ஆயின என்ற தொடரினை மூவிலைச் சூலம் என்ற தொடருடன் கூட்டி, பெரியபுராண விளக்கம் நூலின் ஆசிரியர் சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் கூறுகின்றார். வடமொழி ஆகமத்தில் ஜனனி ரோதயித்திரி ஆரணி ஆகிய மூன்று சக்திகளை உடையது பெருமானின் மூவிலைச் சூலம் என்று கூறப்படுகின்றது. பிரணவ மந்திரமே மூவிலைச் சூலத்தின் தண்டாக விளங்குகின்றது என்று கூறுவார்கள்,

மூன்று மூர்த்தியுள் நின்றியலும் தொழில்

மூன்றும் ஆயின மூவிலைச் சூலத்தன்

மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்

மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே

நாற்கால் மான்மறி=நான்கு வேதங்களையும் நான்கு கால்களாக உடைய மான் கன்று; ஐந்தலை அரவம்=பஞ்சாக்கர மந்திரத்தின் ஐந்து எழுத்துகளை ஐந்து தலையாக கொண்டுள்ள பாம்பு; நால்வாய்=தொங்கும் வாய், துதிக்கை; கோடு=தந்தம்; காய்ந்த= கோபத்துடன் வந்த; கரி=ஆண் யானை; ஈடு=வல்லமை

பொழிப்புரை:

பிரணவ மந்திரத்தினை உணர்த்தும் ஒரு தண்டினை அடிபாகமாகக் கொண்டு, பிளக்கும் தன்மை கொண்டுள்ள மூன்று இலைகள் போன்று கூர்மையாக உள்ள முனைகளை உடைய சூலத்தினை ஏந்தியவாறு, மூன்று தொழில்களையும் புரிபவன் நான் ஒருவனே என்பதை உணர்த்தும் பெருமானே, நான்கு வேதங்களை நான்கு கால்களாகக் கொண்டுள்ள மான் கன்றினை ஏந்தியவனே; மிகுந்த கோபத்துடன் உன்னை நோக்கி வந்ததும், தொங்குகின்ற துதிக்கையை வாயாகக் கொண்டதும், மூன்று இடங்களில் மதநீர் பொழிவதும், இரண்டு தந்தங்களையும் உடையதாக ஒப்பற்ற வலிமையுடன் வந்த ஆண் யானையின் வலிமையை அழித்து அதன் தோலினை உரித்துப் போர்த்துக் கொண்ட பெருமானே,

பாடல் வரிகள்: 14–19

ஒரு தனு இரு கால் வளைய வாங்கி

முப்புரத்தோடு நானிலம் அஞ்சக்

கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை

ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்

முக்குணம் இரு வளி ஒருங்கிய வானோர்

ஏத்த நின்றனை

விளக்கம்:

இந்த வரிகளில் ஒன்று முதல் ஐந்து வரை உள்ள எண்கள் முதலில் ஏறு வரிசையிலும் பின்னர் இறங்கு வரிசையிலும் சொல்லப் படுகின்றன. தனு=தனுசு என்ற வடமொழிச் சொல்லின் கடைக்குறை. வில் என்று பொருள். ஒரு தனு=மேரு மலையினை வளைத்து செய்யப்பட்ட ஒப்பற்ற வில்; இரு கால்=வில்லின் இரண்டு முனைகள்; நானிலம்=முறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்று நால்வகை நிலங்களை கொண்டுள்ள பூமி; தலம்=முப்புரம் அவுணர்=அரக்கர்கள்; வானோர்=சிறப்பினை உடைய தவயோகிகள்; மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்பவை நான்கு அந்தக்கரணங்கள்; கடுமையான முயற்சியால் அடைந்த பயிற்சி கொண்டு ஐந்து புலன்களை அடைதல் எளிது என்று கூறும் வண்ணம், மனதின் செயல்பாட்டினை அடக்கும் நிலை மிகவும் கடினமாக உள்ளதை நாம் அறிவோம். முக்குணம்=இராஜசம் சாத்துவீகம் தாமசம் ஆகிய மூன்று குணங்கள்; வளி=காற்று;

பொழிப்புரை:

பெருமானே, அதன் இரண்டு முனைகளும் வில்லின் இரண்டு கால்களாக இருக்கும் வண்ணம் ஒப்பற்ற முறையில் மேரு மலையினை வளைத்து, வலிமை வாய்ந்த அம்பினை அதனில் பொருத்தி, முப்புரத்து அரக்கர்களும் உலகமும் அச்சம் கொள்ளும் வண்ணம், முப்புரத்து அரக்கர்களை முற்றிலும் நீ அழித்தாய். தங்களது ஐந்து புலன்களை ஒருமுகப் படுத்தி அடக்கி, மனம் தனது செயல்பாட்டினை நிறுத்தும் வண்ணம் மனம் புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய நான்கு அந்தக்கரணங்களையும் ஒருநிலைப் படுத்தி, தாமசம் இராஜசம் சாத்துவீகம் ஆகிய மூன்று குணங்களும் இல்லாதவர்களாய், உள்ளே செல்வதும் வெளியே வருவதும் ஆகிய பிராணவாயுவினை மூலாதாரத்தில் அடக்கி ஒன்றிய மனத்துடன் தவம் புரியும் உயர்ந்த தவயோகிகள் உனது பெருமையை அறிந்து கொண்டு உன்னை புகழ்கின்றனர்.

பாடல் வரிகள்: 19–24

ஒருங்கிய மனத்தோடு

இரு பிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறை முடித்து

நான்மறை ஓதி ஐ வகை வேள்வி

அமைத்து ஆறு அங்கம் முதல் எழுத்து ஓதி

வரன் முறை பயின்று எழு வான் தனை வளர்க்கும்

பிரமபுரம் பேணினை

விளக்கம்:

மேற்குறிப்பிட்ட வரிகளில் ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்கள் ஏறு வரிசையில் இருப்பதை நாம் காணலாம். எழுவான் என்ற சொல்லில் உள்ள எழு என்ற பகுதி ஏழு எனப்படும் எண்ணினை குறிப்பதாக கொள்ளவேண்டும். இந்த வரிகளில் சீர்காழி நகரில் வாழும் அந்தணர்களால் பேணி போற்றப்படும் பெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், சீர்காழி நகரத்து அந்தணர்களின் தன்மைகளை இங்கே குறிப்பிடுகின்றார். இருபிறப்பு என்பது அந்தணர்களின் வாழ்க்கையில் இரண்டு பகுதியை குறிக்கும். முதலாவது உபநயனம் சடங்கு நடைபெறுவதற்கு முன்னர், இரண்டாவது உபநயனம் நடந்தேறிய பின்னர். அந்தணச் சிறுவர்கள் அனைவரும் உபநயனம் சடங்கு நடைபெற்ற பின்னர், ஞானத்தைத் தேடும் வழியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாக கருதப் படுகின்றனர். வேதங்களைக் கற்று அறிந்து கொள்ளும் தகுதி அவர்களுக்கு உபநயனம் முடிந்த பின்னர் தான், கிடைக்கின்றது. என்வே தான் தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்து உடல் வளரத் தொடங்குவது முதல் பிறப்பாகவும், உபநயனம் முடிந்த பின்னர் ஞானம் வளரத் தொடங்குவது இரண்டாவது பிறப்பாகவும் கருதப்பட்டு, அவர்களை இருபிறப்பாளர்கள் என்று அழைக்கின்றனர். உப=இரண்டு; அயனம்=பிறப்பு; உபநயனம் என்ற சொல்லுக்கே இரண்டாவது பிறப்பு என்று பொருள்,

உபநயனம் முடிந்த பின்னர் அவர்களது வாழ்க்கை நிலையிலும் மாறுதல் ஏற்படுகின்றது. தங்களது மகனை மிகவும் செல்லமாக வளர்த்த பெற்றோர்கள், அந்த மகனுக்கு உபநயனச் சடங்கு செய்வித்த பின்னர், ஒரு நல்ல ஆசானை தேர்ந்தெடுத்து, அந்த ஆசானிடம் தங்களது மகனை ஒப்படைத்து வேதங்கள் கற்றுத் தருமாறு வேண்டுகின்றனர். அந்த குழந்தையும் தனது பெற்றோறரை விட்டுப் பிரிந்து, குருகுலம் சென்று அடைந்து பாடம் கற்றுக் கொள்ளத் தொடங்குகின்றான். பாடம் கற்றுக் கொள்வதுடன் தனது தேவைகளை தானே கவனித்துக் கொள்ளவும் தொடங்குகின்றான். சங்கரமடம் போன்ற நிறுவங்களின் ஆதரவில் நடைபெறும் வேத பாடசாலைகளில் இன்றும் இந்த நிலை வழக்கில் இருப்பதை நாம் காணலாம். இவ்வாறு மாறுபட்ட இரண்டு வாழ்க்கையை மேற்கொள்ளும் அந்தணர்களை பண்டைய நாளில் இருபிறப்பாளர் என்று அழைத்தனர். குறை=கடமை; முப்பொழுது குறை என்று மூன்று வேளைகளிலும் அந்தணர்கள் செய்ய வேண்டிய சந்தியாவந்தனம் முதலான கடமைகளை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். ஐவேள்வி என்ற சொல் பொதுவாக தேவயாகம் முதலான யாகங்களை குறிக்கும் என்றாலும், அந்தணச் சிறுவர்களை குறிப்பிடும் போது அந்த விளக்கம் பொருந்தாது. எனவே ஐவேள்வி என்று இங்கே குறிப்பிடப்படுவது, குருவழிபாடு, சிவவழிபாடு, மாகேச்சர வழிபாடு, மறையவர் வழிபாடு மற்றும் அதிதி வழிபாடு என்பவற்றை குறிக்கும் என்று சிவக்கவிமணியார் விளக்கம் கூறுவது மிகவும் பொருத்தமாக உள்ளது. முதல் எழுத்து=பிரணவ மந்திரம்; வரன்முறை=முறையாக; வான்=மழை, வானவர்கள், முக்தி நிலை என்று பல பொருள்கள் கொண்ட சொல். அந்தணர்கள் செய்யும் வேள்வி முதலான செயல்களால் மழை பொழிகின்றது, தேவர்கள் வேள்வி ஆகுதி பெற்று வளர்கின்றனர்; அந்தணர்கள் தாங்கள் வீடுபேறு அடையும் தகுதி பெறுகின்றனர் என்றும் பொருள் கொள்ளலாம். ஓர்ந்து=உணர்ந்து; ஆறங்கம் அமைத்து=தாங்கள் செய்யவேண்டிய ஆறு செயல்களைச் செய்து (வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், தானம் அளித்தல், தானம் பெற்றுக் கொள்ளுதல்).

ஒருங்கிய மனம் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மனம் எப்போதும் அலைபாயும் தன்மையை உடையது. அதிலும் குறிப்பாக, உடலின் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்ற சிந்தனையை முதலாகக் கொண்டு அதே நினைப்பில் இருப்பது. தனது உடலுக்கு உணவினைத் தேடுவதிலும், விருப்பம் போல் தூங்கிக் கழிப்பதிலும், பிற உயிர்களால் தனக்கு ஏற்படும் ஆபத்தை நினைத்து பயந்தும், போகங்களை அனுபவித்து ஐந்து புலன்களையும் திருப்திப் படுத்துவதிலும் ஆழ்ந்து சிந்தனை செய்கின்றது. அத்தகைய சிந்தனைகள் ஏதுமின்றி, பெருமானின் திருப்பாத கமலங்களில் ஒன்றி வழிபாடு செய்யும் மனம் வேண்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு ஒருங்கிய மனம் என்று இங்கே கூறுகின்றார். சம்பந்தர் வாழ்ந்த நாட்களில், சீர்காழியில் வாழ்ந்த அந்தணர்கள் அவ்வாறு இருந்தமை இந்த பாடலில் புலனாகின்றது.

பொழிப்புரை:

இரு பிறப்பாளர்களாக தாங்கள் இருக்கும் தன்மையினை நன்கு உணர்ந்து அந்த தன்மையின் வழியே ஒழுகி, ஒன்றிய மனத்துடன், மூன்று வேளைகளிலும் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்தும் நான்மறைகளை ஓதியும் ஐந்து வகையான வேள்விகளை வளர்த்தும், வேதம் ஓதுதல் முதலாகிய தாங்கள் செய்யவேண்டிய ஆறு செயல்களைச் செய்தும், வேதங்களின் மூலமாகிய முதல் எழுத்து என்று சொல்லப்படும் பிரணவ மந்திரத்தை ஓதியும், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வரைமுறையின் படி வாழ்க்கையை நடத்தியும் உலகில் குறைவின்றி மழை பொழியவும், ஆகுதி பெற்று வானவர்கள் வாழவும் வழிவகுக்கும் அந்தணர்கள் நிறைந்த பிரமபுரத்தை, இறைவனே நீ உனது உறைவிடமாகக் கொண்டு அங்கே விருப்பத்துடன் இருக்கின்றாய்.

பாடல் வரிகள்: 25–31

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை

இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை

பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை

பாணி மூவுலகும் புதைய மேல் மிதந்த

தோணிபுரத்து உறைந்தனை தொலையா இருநிதி

வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை

வரபுரம் ஒன்றுணர் சிரபுரத்து உறைந்தனை

விளக்கம்:

மேற்கண்ட வரிகளில் ஆறு முதல் ஒன்று வரை எண்கள் வரிசையாக அமைந்துள்ளதை நாம் காணலாம். விரும்பினை அமர்ந்தனை என்ற சொற்களில் உள்ள ஐ சார்ந்த உயிர்மெய் எழுத்து எண் ஐந்திணை உணர்த்துவதாக கொள்ள வேண்டும். பதம்=கால்; அறுபதம்=ஆறு கால்களைக் கொண்டுள்ள வண்டு; இகலி=மாறுபட்டு; பொங்கு நாற்கடல்=நான்கு திசைகளிலிருந்தும் சினத்துடன் பொங்கி எழுந்த; பாணி=நீர்; ஏய்ந்தனை=பொருந்தி இருத்தல் இரு=பெரிய;

பொழிப்புரை:

பெருமானே, நீ வண்டுகள் முரலும் சோலைகள் நிறைந்த வேணுபுரம் என்று அழைக்கப் படும் தலத்தை மிகவும் விரும்பி ஆங்கே உறைகின்றாய்; பிரளயத்திலும் அழியாத தனிச் சிறப்பு கொண்டு மற்ற தலங்களிலிருந்து மாறுபட்டு விளங்கும் புகலி என்று அழைக்கப்படும் தலத்தில் அமர்ந்து உள்ளாய்; மிகுந்த சினத்துடன் பிரளய காலத்தில் பொங்கி நான்கு திசைகளிலும் கடல்நீர் சூழ்ந்த போதிலும், அந்த வெள்ளத்தில் மூழ்காது நின்ற வெங்குரு என்று அழைக்கப்படும் தலத்தில் நீ விளங்குகின்றாய்; பிரளய காலத்து வெள்ளம் மூன்று உலகங்களையும் மூழ்கடித்த போதிலும் அந்த வெள்ள நீரினில் மூழ்காது மேலே மிதந்த தோணிபுரம் என்று அழைக்கப்படும் தலத்தில் பெருமானே நீ பொருந்தி உறைகின்றாய்; என்றும் அழியாது இருக்கும் சங்கநிதி பதுமநிதி உடையது போன்று அழியாத செல்வச் சிறப்பினை உடைய பூந்தராய் என்று அழைக்கப்படும் தலத்தில் பெருமானே நீ பொருந்தி உறைகின்றாய்; அடியார்கள் வேண்டும் வரத்தினைத் தரவல்ல சிரபுரம் என்று அழைக்கப் படும் தலத்தில் பெருமானே நீ உறைகின்றாய்.

பாடல் வரிகள்: 32–38

ஒரு மலை எடுத்த இரு திறல் அரக்கன்

விறல் கெடுத்து அருளினை புறவம் புரிந்தனை

முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்

பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்

ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை

எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை

விளக்கம்:

மேற்கண்ட வரிகளில் ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்கள் ஏறு வரிசையில் அமைந்து உள்ளன. ஒரு மலை=ஒப்பற்ற கயிலை மலை; இரு திறல்=மிகவும் அதிகமான வலிமை; விறல்=வெற்றி கொள்ளும் வலிமை; திறல்=வலிமை; முந்நீர்=மழைநீர் ஆற்றுநீர் ஊற்றுநீர் ஆகிய மூவகை நீர்களும் சென்று சேரும் கடல்; ஐயுறும் அமணர்=உறுதியான நிலைப்பாடு ஏதுமின்றி சந்தேகத்துடன் தங்களது கொள்கைக்கு விளக்கம் அளிக்கும் சமணர்கள்; இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று இருவகையாக உயிர்களின் அனைத்து தன்மைகளுக்கும் விளக்கம் கூறுவது சமணர்களின் கொள்கையாக அந்நாளில் இருந்தது போலும். அறுவகை=அழியும் வகை; உடல் அழிவதே முக்தி நிலை என்ற கொள்கை உடையவர்கள் புத்தர்கள்; தேரர்=புத்தர்; அறுவகைத் தேரர் என்ற தொடருக்கு ஆறு சுவைகளும் நிறைந்த உணவினை புசிப்பதில் நாட்டம் உடைய புத்தர்கள் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். எச்சன்=யக்ஞம், யாகம் செய்பவன்; ஏழிசை=மிகுந்த புகழ்; பல வேள்விகளைச் செய்வதால் மிகுந்த புகழ் உடையவனாக விளங்கிய பராசர முனிவர். ஊழி வெள்ளத்தால் சீர்காழி தளம் அழியாமல் நின்ற நிலையை, மிகவும் நயமாக ஊழி உணராமல் நின்றது என்று சம்பந்தர் கூறுகின்றார்.

கொச்சையோன் என்ற சொல்லுக்கு, மீனவப் பெண் மச்சகந்தியைப் புணர்ந்ததால், பராசர முனிவரின் உடலிலும் மீன் வாடை வீசத் தொடங்கியது என்றும் அந்த கொச்சையான நாற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு சிவபெருமானை நோக்கி தவம் செய்து, பராசர முனிவர் அந்த நாற்றத்தை நீக்கிக் கொண்டார் என்றும் செவிவழிச் செய்தி நிலவுகின்றது. கொச்சையை மெச்சினை என்ற தொடர் மூலம், கொச்சையான நாற்றம் கொண்டிருந்த பராசர முனிவரின் தவத்தினை மெச்சி, பெருமான் அவருக்கு அருள் புரிந்தார் என்று உணர்த்துவதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் தருமபுரம் ஆதீனத்தார் வெளியிட்டுள்ள திருமுறை விளக்கத்திலும் காணப்படுகின்றது,

பொழிப்புரை:

இறைவனின் உறைவிடம் என்பதால் ஒப்பற்ற மலையாக விளங்கும் கயிலாய மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த, மிகுந்த வல்லமை கொண்டிருந்த அரக்கன் இராவணனின் வலிமையை, எப்போதும் வெற்றியே கண்டிருந்த அவனது வீரத்தினை, பெருமானே, நீ அடக்கினாய்; புறாவின் வடிவெடுத்து மன்னன் சிபியை சோதனை செய்ததால் மீண்டும் தனது உருவினை அடைய முடியாமல் திகைத்த தீக்கடவுள் தனது உருவத்தினை மீண்டும் பெறும் வண்ணம், பெருமானே நீ தான் அருள் புரிந்தாய்; முந்நீர் என்று அழைக்கப்படும் கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும் நான்கு முகங்களைக் கொண்டுள்ள பிரமனும், உனது திருவடியையும் திருமுடியையும் அறிய முடியாத வண்ணம் நீண்ட நெருப்புப் பிழம்பாக நின்றவனே, சண்பை என்று அழைக்கப்படும் தலத்தில் நீ விரும்பி அமர்ந்துள்ளாய்; தங்களது கொள்கைகளில் உறுதியான நிலைப்பாடு ஏதுமின்றி இரண்டு வகையாக விளக்கம் கூறி சந்தேகம் கொண்டவர்களாக விளங்கும் சமணர்களும் உடல் அழியும் நிலையினை (உடல் உலகத் துன்பங்களிலிருந்து விடுபடுகின்றது என்று கருதி) முக்திநிலை என்று தவறாக கருதும் புத்தர்களும் உன்னை அறிய முடியாமல் திகைத்து நிற்பது போன்று, நீ உறைகின்ற சீர்காழி தலத்தினை ஊழி வெள்ளமும் அறிய முடியாமல் நின்றது. பல வேள்விகளையும் யாகங்களையும் செய்ததால் மிகுந்த புகழுடன் விளங்கிய பராசர முனிவர், மீனவப் பெண் மச்சகந்தியைப் புணர்ந்த தனது கொச்சையான கீழ்மைச் செயலால் விளைந்த பாவத்தை போக்கிக் கொள்ள உதவிய கொச்சைவயம் என்று அழைக்கப்படும் தலத்தினை, பெருமானே நீ மிகவும் புகழ்ந்து அதனை உனது இருக்கையாகக் கொண்டுள்ளாய்;

பாடல் வரிகள்: 39–47

ஆறு பதமும் ஐந்து அமர் கல்வியும்

மறை முதல் நான்கும்

மூன்று காலமும் தோன்ற நின்றனை

இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்

மறுவிலா மறையோர்

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்

அனைய தன்மையை ஆதலின் நின்னை

நினைய வல்லவர் இல்லை நீள் நிலத்தே

விளக்கம்:

மேற்கண்ட வரிகளில் ஆறிலிருந்து இறங்குமுகமாக ஒன்று வரை எண்கள் வருகின்றன. ஆறு பதம் என்ற தொடர், பிரத்தி, பிரத்தியாகாரம், துல்லியம், துல்லியாதீதம், வித்தை அவித்தை ஆகியவற்றை குறிக்கின்றது என்று சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். பதம் என்றால் மந்திரம் என்று பொருள். நமச்சிவாய மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களை பிரணவ எழுத்துடன் சேர்த்து ஆறுபதங்கள் என்றும் கூறுவார்கள். இந்த ஆறு பதங்களாக உள்ளவன் பெருமான் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். வேதங்களும் ஆகமங்களும் சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து எழுந்தவை என்று கூறுவார்கள். உற்ற ஐம்முகங்களால் பணித்து அருளியும் என்று மணிவாசகர் கீர்த்தித் திருவகவலில் கூறுகின்றார். இந்த ஐந்து முகங்களிலிருந்து எழுந்த வேதங்களையும் ஆகமங்களையும் கற்பதை ஐந்தமர் கல்வி என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அந்த கல்வியாக இருப்பவனும் பெருமான் தான். 45ஆம் வரியில் உள்ள கவுணியன் என்ற சொல்லினை கம்+ உணியன் என்று பிரித்து பொருள் காண வேண்டும். கம்=பிரம கபாலம்;

பொழிப்புரை:

ஐந்தெழுத்து மந்திரம் மற்றும் பிரணவ மந்திரங்களில் உள்ள ஆறு மந்திர எழுத்துகளாக உள்ளவனும், தனது ஐந்து முகங்களின் வாயிலாக சொல்லப்பட்ட ஆகமங்களாகவும் இருப்பவனும், நான்கு வேதங்களாக இருப்பவனும், கடந்தகாலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களாக தோன்றுபவனும் பெருமானாகிய நீ தான். நீ பல காரணங்களை முன்னிட்டு இரண்டு வேறு வேறு உருவங்களாக, சிவனாகவும் சக்தியாகவும், காட்சி அளித்தாலும் இரண்டு உருவங்களும் ஒரு முழுமுதல் கடவுளாகிய உன்னையே உணர்த்துகின்றது. தனக்கு நேராக எவரும் இல்லாத பெருமையை உடையவனாக ஒப்பற்றவனாக நீ விளங்குகின்றாய். குற்றங்கள் ஏதும் இல்லாத மறையவர் குடியில் வந்தவனும் கழுமலம் எனப்படும் தலத்தில் பிறந்தவனும் கவுணிய கோத்திரத்தின் வழியில் வந்தவனும் ஆகிய ஞானசம்பந்தர் இயற்றிய இந்த பாடலின் தன்மையை, பெருமையை பிரமகபாலத்தில் பிச்சை ஏற்று உணவு உட்கொள்ளும் பரமன் அறிவான். அத்தகைய பெருமானின் உண்மைத் தன்மையை உள்ளவாறு உணர்த்தும் இந்த பாடலின் பொருளை உணர்ந்து நினைக்கும் வல்லமை படைத்த மாந்தர்கள், மீண்டும் இந்த நிலவுலகினுக்கு வருவதைத் தவிர்த்து பெருமானுடன் முக்தி உலகில் இணைந்து இருப்பார்கள்.

முடிவுரை:

சொற்களால் ஆகிய இரதத்தினில் பெருமானின் பெருமைக்கு உரிய பண்புகளையும் தன்மைகளையும் அமர்த்தி அழகு பார்த்த திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய அழகான பதிகம் இது. ஒவ்வொரு படியாக பல படிகளில் பெருமானின் பெருமையை உணர்த்தும் சம்பந்தர், சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் இங்கே குறிப்பிடுகின்றார். எனவே இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள் பெருமானின் புகழினை பாடுவதால் அடையும் பயனையும், மந்திரச் சொற்களாக விளங்கும் சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களையும் சொல்வதால் விளையும் பயனையும் பெறுகின்றனர்.

இரதபந்தம் என்ற வகையில் அமைந்தது என்று சொல்லப்படும் இந்த பதிகத்தை முன்மாதிரியாகக் கொண்டு திருமங்கை ஆழ்வார் குடந்தைப் பெருமாள் மீது ஒரு பாசுரத்தை இயற்றியுள்ளார். அருணகிரிநாதரும் இதனைப் போன்று ஒரு திருப்புகழ் பாடியுள்ளார். இந்த திருப்புகழ் பாடலில் அருணகிரிநாதர், ஞானசம்பந்தர் முருகப் பெருமானின் திருவவதாரம் என்றே கூறுகின்றார். பதினோராம் திருமுறையில் அமைந்துள்ள நக்கீரர் அருளிய ஒரு பதிகமும் இதே முறையில் அமைந்துள்ளது. இவ்வாறு பலரும் ஞானசம்பந்தரைப் பின்பற்றி பாடியதிலிருந்து இந்த அமைப்பு எந்த அளவுக்கு தமிழ் புலவர்களின் உள்ளத்தை கவர்ந்தது என்பதை நாம் உணரலாம். இந்த பதிகத்தை ஓதினால் முக்திநிலை வாய்க்கப் பெறும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அதனை உணர்ந்து நாமும் இந்த பதிகத்தை தினமும் ஓதி முக்தி நிலை அடையும் தகுதியை பெறுவோமாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Oar Uruvaayinai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

ஓர் உருவாயினை


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: