2.39 ஆரூர் தில்லையம்பலம்
பின்னணி:
பெருமான் வீற்றிருக்கும் திருக்கோயில்கள் அமைந்துள்ள தலங்களின் பெயரைச் சொன்னாலும் நமக்கு புன்ணியம் கிடைக்கும் என்பது நமது முன்னோர்கள் கண்டது. ஏன் சில தலங்களின் பெயரை மனதால் நினைத்தாலும் நாம் பயனடையலாம் என்று கூறுவார்கள். நாம் முன்னரே சென்றிருந்த தலங்களின் பெயரை நாம் சொல்லும்போது, நாம் நமது மனக்கண்ணால் அந்த தலத்து இறைவனை காண்கின்றோம், மற்றும் அந்த தலங்களின் சிறப்பினை எண்ணுகின்றோம். எனவே அத்தகைய தலங்களின் திருப்பெயரினை நாம் சொல்லும் வண்ணம், ஷேத்திரக்கோவை, அடைவுத்திருத்தாண்டகம்,ஊர்த்தொகை மற்றும் நாட்டுதொகை பதிகங்களை அருளாளர்கள் அருளியுள்ளனர் போலும். நாம் இதுவரை செல்லாதிருந்த தலங்களின் பெயரினை மீண்டும் மீண்டும் சொல்வதால், நம்மை அறியாமலே அந்த தலத்திற்கு செல்லவேண்டும் என்ற அவா நம்முள் பிறந்து நாள்நாளும் அதிகரித்து, நாம் அந்த தலம் செல்லுமாறு நம்மைத் தூண்டி வழிவகுப்பதையும் நாம் உணர்கின்றோம். இந்த பதிகங்கள் ஓதுவதால், இதில் குறிப்பிட்ட தலங்கள் செல்லும் வண்ணம் வாய்ப்பு இறைவனின் அருளால் கிட்டும் என்பது பெரியோர்கள் கண்ட முடிவு.
பாடல் 1:
ஆரூர்தில்லை யம்பலம் வல்லந்நல்லம் வடகச்சியு மச்சிறு பாக்கநல்ல
கூரூர்குட வாயில் குடந்தைவெண்ணி கடல்சூழ்கழிப் பாலைதென் கோடிபீடார்
நீரூர்வய னின்றியூர் குன்றியூருங் குருகாவையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர்நன் னீள்வய னெய்த்தானமும் பிதற்றாய்பிறை சூடிதன் பேரிடமே.
விளக்கம்:
இந்த பதிகத்தின் முதல் பாடலை, இறைவன் வீற்றிருக்கும் தலங்களின் பெயரினை நாம் மீண்டும் மீண்டும் சொல்லி பிதற்ற வேண்டும் என்ற அறிவுரையுடன் மிகவும் பொருத்தமாக திருஞான சம்பந்தர் தொடங்குகின்றார். பீடு=பெருமை; பிறைசூடி=சந்திரசேகரன் என்ற வடமொழி திருநாமத்தின் நேர் தமிழ் மொழிபெயர்ப்பு. பிறைசூடி என்ற திருநாமம், நமக்கு பெருமானின் கருணையை உணர்த்துகின்றது. அத்தகைய பெருமானை நாம் பற்றுகோடாகக் கொண்டு, அவன் வீற்றிருக்கும் திருக்கோயில்கள் செல்வதால், அவனது அருள் நமக்கு திண்ணமாக கிடைக்கும் என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது. தில்லை அம்பலம்=தில்லை சிற்றம்பலம்; வட கச்சி=தமிழ் நாட்டின் வடபகுதியில் உள்ள கச்சி ஏகம்பம்; வல்லம்=திருவலம்; கூரூர் வைப்புத் தலமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இருப்பிடம் தெரியவில்லை. தென்கோடி= திருமறைக்காடு தலத்தினுக்கு அருகில் உள்ள கோடிக்குழகர்; பீடார் நீரூர் நின்றியூர்=பெருமை வாய்ந்ததும் நீர் நிறைந்ததும் ஆகிய திருநின்றியூர், குன்றியூர்=வைப்புத்தலம்; திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ளது. தற்போது குன்னியூர் என்று அழைக்கப்படுகின்றது. நீடு=நீண்ட புகழினை உடைய; கடலால் சூழப்பட்ட கழிப்பாலை என்று குறிப்பிடுகின்றார். தேவார முதலிகளின் காலத்தில் கடற்கரையோரத்தில் இருந்த கழிப்பாலை திருக்கோயில் கடலால் கொள்ளப் பட்டது. அந்த மூர்த்தம் தற்போது அண்ணாமலை பல்கழகத்தின் அருகே நிறுவப் பட்டுள்ளது.
பொழிப்புரை:
திருவாரூர், தில்லைச் சிற்றம்பலம், திருவலம், கோனேரிராஜபுரம் என்று இந்நாளில் அழைக்கப் படும் நல்லம், தமிழ்நாட்டின் வடக்கே உள்ள கச்சி ஏகம்பம்,அச்சிறுப்பாக்கம், நன்மை பயக்கும் கூரூர், குடவாசல் என்று அழைக்கப்படும் குடவாயில், குடந்தை எனப்படும் கும்பகோணம், வெண்ணி, கடலால் சூழப்பட்ட கழிப்பாலை, தென்கோடியில் இருக்கும் கோடிக்குழகர் கோயில், நீர் நிறைந்த பெருமை வாய்ந்த திருநின்றியூர், குன்றியூர், திருக்குருகாவூர், நாரையூர்,நீண்ட புகழ் உடைய கானப்பேர், நலம் தரும் நீள் வயல்கள் சூழ்ந்த நெய்த்தானம், ஆகிய தலங்கள் எல்லாம் பிறைசூடி ஆகிய பெருமானின் சிறந்த இருப்பிடங்கள் என்று கருதி, அவற்றின் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி, நெஞ்சமே நீ, பிதற்றுவாயாக.
பாடல் 2:
அண்ணாமலை யீங்கோயு மத்திமுத்தா றகலாமுது குன்றங் கொடுங்குன்றமுங்
கண்ணார்கழுக் குன்றங் கயிலை கோணம் பயில்கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணிநின்றே
எண்ணாயிர வும்பகலு மிடும்பைக்கட னீந்தலாங் காரணமே.
விளக்கம்:
பதித்தின் முதல் பாடலில் பெருமான் உறைகின்ற சில தலங்களை குறிப்பிட்டு, அந்த தலங்களின் பெயரை பிதற்றுமாறு பணித்த திருஞானசம்பந்தர்,அவ்வாறு பெருமான் உறையும் தலங்களின் பெயரைச் சொல்வதால் நாம் அடையவிருக்கும் பலனை இங்கே குறிப்பிடுகின்றார். அத்தி= அத்தீச்சரம் என்று அப்பர் பெருமானால் குறிப்பிடப்படும் தலம். தற்போது சிவசைலம் என்று அழைக்கப்படும் தலம். அத்ரி முனிவர் வழிபட்டதால் அத்தீச்சரம் என்ற பெயர் வந்தது. இவரது ஆசிரமம் அருகிலுள்ள மலையின் மேல் உள்ளது. இந்த பாடலில் குறிப்பிடப்படும் தலங்கள் அனைத்தும் மலையின் மேல் அமைந்திருப்பதால், இந்த தலமும் பண்டைய நாளில் மலையின் மீது அமைந்திருக்கலாமோ என்று தோன்றுகின்றது. கோணம்=திரிகோணமலை; பயில் கற்குடி= மக்கள் வாழும் கற்குடி;
பொழிப்புரை:
திருவண்ணாமலை, ஈங்கோய்மலை, அத்தீச்சரம், மணிமுத்தாறு நதி அகலாமல் அருகில் இருக்கும் திருமுதுகுன்றம், பிரான்மலை என்று தற்போது அழைக்கப்படும் கொடுங்குன்றம், கண் கவரும் வண்ணம் பசுமையாக விளங்கும் திருக்கழுக்குன்றம், கயிலாய மலை, திரிகோண மலை, மக்கள் வாழும் கற்குடி, காளத்தி மலை, வாட்போக்கி, பண் போன்று இனிய மொழியினை உடைய அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக வைத்துள்ள பரமன் உறைகின்ற பரங்குன்றம், பருப்பதம் ஆகிய தலங்களைப் பேணி, பொற்றி, இரவும் பகலும் நினைத்தால், துன்பங்கள் நிறைந்த பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கலாம்.
பாடல் 3:
அட்டானமென் றோதிய நாலிரண்டு மழகன்னுறை காவனைத் துந்துறைகள்
எட்டாந்திரு மூர்த்தியின் காடொன்பதுங்குளமூன்றுங் களமஞ்சும் பாடிநான்கும்
மட்டார்குழ லாண்மலை மங்கைபங்கன் மதிக்கும்மிட மாகிய பாழிமூன்றும்
சிட்டானவன் பாசூரென் றேவிரும்பா யரும்பாவங்க ளாயின தேய்ந்தறவே.
விளக்கம்:
அட்டானம் நாலிரண்டு என்று எட்டு வீரட்டானத்தலங்களை குறிபிடுகின்றார். கா என்று முடியும் தலங்களின் எண்ணிக்கை இங்கே குறிப்பிடப்படவில்லை.துறைகள் எட்டு என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அப்பர் பெருமான் தான் அருளிய பாடல் ஒன்றில் (6.71.11) பராய்த்துறை, தென்பாலைத்துறை,தவத்துறை எனப்படும் நெல்வாயில் அரத்துறை, வெண்டுறை, அன்பில் ஆலந்துறை, சோற்றுத்துறை, பூந்துறை, (சிந்து பூந்துறையாக கருதப்படுகின்றது.திருநெல்வேலி நகரின் ஒரு பகுதி) பெருந்துறை, குரங்காடுதுறை, மயிலாடுதுறை, கடம்பந்துறை, ஆவடுதுறை என்று பன்னிரண்டு தலங்களை குறிப்பிடுகின்றார். குரங்காடுதுறை என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற தலங்கள் இருப்பதை நாம் அறிவோம். மாந்துறை, பாற்றுறை,பேணுப்பெருந்துறை என்ற தலங்களும் அப்பர் பிரானால் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு மொத்தம் பதினாறு தலங்களின் பெயர்கள் துறை என்று முடிகின்றன. இந்த பாடலில் திருஞான சம்பந்தர் துறைகள் எட்டு என்று எவற்றை குறிப்பிடுகின்றார் என்று வரையறுக்க முடியவில்லை. சாய்க்காடு,திருவெண்காடு, தலையாலங்காடு, கொள்ளிக்காடும், திருமறைக்காடு, கச்சிநெறி காரைக்காடு, திருவாலங்காடு, திருவேற்காடு, தலைச்சங்காடு என்பன காடு என்று முடியும் ஒன்பது தலங்கள் (அனைத்தும் பாடல் பெற்ற தலங்கள்) குளம் மூன்றும் என்பதற்கு அப்பர் பிரான் தனது அடைவுத் திருத்தாண்டகத்தில் குறிப்பிடும் வளைகுளம், தஞ்சை தளிக்குளம், நல்லிடைக்குளம் (6.71.10) என்பன ஒத்துப்போகின்றன. களம் அஞ்சும் என்பவை எவையெவை என்பதற்கு விடை கிடைக்கவில்லை. பல உரையாசிரியர்கள் வேட்களம், நெடுங்களம், அஞ்சைக்களம் என்பதையே குறிப்பிடுகின்றனர். அப்பர் பெருமானும் இந்த மூன்று தலங்களையே தனது அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் (6.71.10) பாடலில் குறிப்பிடுகின்றார். பாடி நான்கு என்ற குறிப்பு, எதிர்கொள்பாடி,மழபாடி, திருவாப்பாடி, பாடி வலிதாயம் ஆகிய நான்கு தலங்களாக கருதப்படுகின்றன. மூன்று பாழி என்று குறிப்பிடப்படும் தலங்கள் யாவை என்பது தெரியவில்லை. அரதைப்பெரும்பாழி என்ற பாடல்பெற்ற தலம் ஒன்றே பலராலும் குறிப்பிடப்படுகின்றன. ஒரு சிலரால் களப்பாழி என்ற தலம் குறிப்பிடப்பட்டாலும் அதன் இருப்பிடம் முதலான விவரங்கள் தெரியவில்லை. சிட்டன் என்பது சிரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கமாக கருதப்பட்டு, மேலானவன் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. மட்டார்=தேன் ஒழுகும்
பொழிப்புரை:
அட்டவீரட்டானம் என்று தொகுப்பாக சொல்லப்படும் திருக்கண்டியூர், திருகோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, வழுவூர், திருக்குறுக்கை,திருக்கடவூர் ஆகிய தலங்களையும், அழகன் ஆகிய பெருமான் உறைகின்றதும் கா என்ற எழுத்துடன் முடிவதும் ஆகிய திருக்கோலக்கா, திருகுரக்குக்கா,திருவானைக்கா, திருநெல்லிக்கா, திருகோடிகா ஆகிய தலங்களையும், துறை என்ற சொல்லுடன் முடியும் எட்டு தலங்களையும், காடு என்ற சொல்லுடன் முடிவதும் திருமூர்த்தி உறைகின்றதும் ஆகிய சாய்க்காடு, திருவெண்காடு, தலையாலங்காடு, கொள்ளிக்காடும், திருமறைக்காடு, கச்சிநெறிகாரைக்காடு,திருவாலங்காடு, திருவேற்காடு, தலைச்சங்காடு ஆகிய ஒன்பது தலங்களையும், வளைகுளம், தஞ்சை தளிக்குளம், நல்லிடைக்குளம் ஆகிய குளம் என்று முடிகின்ற மூன்று தலங்களும் வேட்களம், நெடுங்களம், அஞ்சைக்களம் போன்று களம் என்ற சொல்லுடன் முடிகின்ற ஐந்து தலங்களையும், பாடி என்ற சொல்லுடன் முடிகின்ற எதிர்கொள்பாடி, மழபாடி, திருவாப்பாடி, திருவலிதாயம் பாடி ஆகிய நான்கு தலங்களையும், தேன் ஒழுகுவதால் நறுமணம் உடைய மலர்மாலைகளைத் தனது கூந்தலில் சூட்டிக்கொண்டுள்ள அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்ட பெருமானால் மதிக்கப்படுவதும்,பாழி என்ற சொல்லுடன் முடிவதும் ஆகிய அரதைப்பெரும்பாழி களப்பாழி முதலான மூன்று தலங்களையும் அனைவர்க்கும் மேலானவனாக கருதப்படும் பெருமான் விரும்பும் பாசூர் எனப்படும் தலத்தையும், நீக்குவதற்கு அரிதாக உள்ள பாவங்கள் தேய்ந்து அழியும் பொருட்டு, நீர் விரும்புவீராக.
பாடல் 4:
அறப்பள்ளி யகத்தியான் பள்ளிவெள்ளைப்பொடிப்பூசி ஆறணிவானமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளிதிருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான் விரும்பும்மிடைப் பள்ளிவண் சக்கரமால்
உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி யுணராய்மட நெஞ்சமே யுன்னிநின்றே.
விளக்கம்:
இந்த பாடலில் பள்ளி என முடியும் தலங்கள் பல தொகுக்கப்பட்டுள்ளன. திருமால் வழிபட்டதும் பள்ளி என்ற சொல்லுடன் முடிவதும் ஆகிய தலம் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வீழிமிழலை, திருமாற்பேறு என்ற தலங்களில் திருமால் இறைவனை வழிபட்டு சக்கரம் பெற்ற போதிலும் இந்த தலங்கள் பள்ளி என்ற சொல்லுடன் தொடர்பின்றி இருப்பதால், இந்த தலங்களை திருஞானசம்பந்தர் குறிப்பிடவில்லை என்று கொள்ளலாம். சக்ரவாகைப் பறவை வடிவில் அம்பிகை வழிபட்டதால், சக்கரப்பள்ளி என்று அழைக்கப்படும் தலத்தினில் திருமாலும் வழிபட்டதாக கருதப்படுவதால், சக்கரப்பள்ளி தலத்தையே இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்றே பலராலும் கருதப்படுகின்றது. அறப்பள்ளி என்பது கொல்லி அறப்பள்ளி என்று அழைக்கப்படும் வைப்புத் தலமாகும். கொங்கு நாட்டில் கொல்லிமலையின் மீதுள்ள தலம். சிறப்பள்ளி இடைப்பள்ளி என்பன வைப்புத் தலங்கள்; வண்=சிறந்த; உறைப்பு=ஆழ்ந்த அன்பு;
பொழிப்புரை:
கொல்லி அறப்பள்ளி, அகத்தியான் பள்ளி, வெள்ளைப்பொடியை உடலெங்கும் பூசிய வண்ணம் கங்கை நதியைத் தனது சடையில் சூட்டிக்கொண்டுள்ள பெருமான் விரும்பி அமர்கின்ற இடமாகிய காட்டுப்பள்ளி, சிறப்பள்ளி, திருச்சிராபள்ளி, செம்பொன்பள்ளி, திரு நனிபள்ளி, சிறப்பு வாய்ந்ததும் பிறப்பிலியாகிய பெருமான் உறைவதும் ஆகிய மகேந்திரப்பள்ளி, வெள்ளப் பெருக்குடன் மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியைத் தேக்கிக்கொண்ட பெருமான் விரும்பும் தலமாகிய இடைப்பள்ளி, சிறந்த ஆற்றல் உடைய திருமால் ஆழ்ந்த அன்புடன் போற்றி வணங்க சக்கரம் கொடுத்தருளிய பெருமான் உறைகின்ற சக்கரப்பள்ளி, ஆகிய தலங்களையும் அந்த தலங்களில் உறைகின்ற பெருமானையும் தியானித்து, நெஞ்சமே நீ உணர்வாயாக.
பாடல் 5:
* * * * * * *
ஆறைவட மாகற லம்பரையாறணியார்பெரு வேளுர் விளமர்தெங்கூர்
சேறைதுலை புகலூ ரகலா திவைகாதலித் தானவன் சேர்பதியே
விளக்கம்:
இந்த பாடலின் முதலிரண்டு அடிகள் சிதைந்தன. துலை என்பது வைப்புத்தலம். துலை என்ற சொல்லினை புகலூர் தலத்திற்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக கருதி, சிறந்த பல தலங்களுக்கும் இணையான புகலூர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
பொழிப்புரை:
பழையாறை வடதளி, தமிழ் நாட்டின் வடக்கே உள்ள திருமாகறல். திருவம்பர் மாகாளம், திருவையாறு, அழகிய பெருவேளூர், விளமர், தெங்கூர்,திருச்சேறை, துலை, புகலூர் ஆகிய தலங்களை பெருமான் மிகுந்த அன்புடன் விரும்பி அந்த தலங்களை சேர்ந்தடைந்து பிரியாமல் உறைகின்றான்.
பாடல் 6:
மனவஞ்சர்மற் றோடமுன் மாதராரு மதிகூர் திருக்கூடலி லாலவாயும்
இனவஞ்சொ லிலாவிடை மாமருது மிரும்பைப்பதி மாகாளம் வெற்றியூரும்
கனமஞ்சின மால்விடை யான்விரும்புங் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தனமென்சொலிற் றஞ்சமென் றேநினைமின் றவமாமல மாயின தானறுமே.
விளக்கம்:
மனவஞ்சர்=வ்ஞ்சகம் நிறைந்த மனத்தர், இங்கே சமணர்களை குறிப்பிடுகின்றது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் சமணர்களீன் தன்மையை குறிப்பிடுகின்றது. கொல்லாமை என்பதை தமது கொள்கையாக பேசிக்கொண்டு, அதற்கு விரோதமாக அந்நாளில் சமணர்கள் செயல்பட்ட தன்மையால் இவ்வாறு கூறுகின்றார். சைவ அடியார்கள் தங்கியிருந்த மடத்தினில் இரவினில், யாரும் அறியாத வண்ணம் தீ வைத்தது, அரசரிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கினை பயன்படுத்தி நீதிக்கு புறம்பாக செயல்பட வைத்தது, அப்பர் பெருமானை நீற்றறையில் வைத்தது, அவருக்கு நஞ்சு கலந்த சோற்றினை ஊட்டியது, யானை கொண்டு அவரை இடறித்தள்ள முயன்றது, கல்லுடன் பிணைத்து கடலில் தள்ளியது, சிவாலயங்களை மறைத்தது, அபிசார ஹோமம் செய்து கொடிய ஏவல்களில் ஈடுபட்டது. முதலிய செய்கைகள் பெரிய புராணத்தில் உணர்த்தப் படுகின்றன. மற்றோட=வாதினில் தோற்று ஓடும் வண்ணம்;மாதராரும்=மாதர்கள் நிறைந்த; மதிகூர்=கூர்மையான அறிவு கொண்ட; பாண்டிய மன்னனிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கினை பயன்படுத்தி,சைவர்களை பயமுறுத்தி வந்த சமணர்களின் கொட்டத்தை அடக்குவதற்கு உரிய ஆற்றல் படைத்தவர் திருஞானசம்பந்தர் என்பதை தீர்மானித்து அவரை மதுரைக்கு வரவழைத்த மங்கையர்க்கரசியாரின் செயல் மதி கூர்ந்த செயல் என்று பாராட்டப் படுகின்றது. கனமஞ்சின மால் விடை=கனம்+அம்+சினம்+மால் விடை=மேன்மை, அழகு, சினம் ஆகியவை உடைய திருமாலாகிய இடபம்; வெற்றியூர் இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள வைப்புத் தலம்;
பொழிப்புரை:
மனதில் வஞ்சனையான எண்ணம் கொண்டவர்களாக செயல்பட்டு சைவர்களை துன்புறுத்தியும் பயமுறுத்தியும் ஆதிக்கம் செலுத்தி வந்த சமணர்கள்,வாதங்களில் தோற்று அச்சமடைந்து ஓடும் வண்ணம் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்த கூர்மையான அறிவினை உடைய மாதாகிய மங்கையர்க்கரசியார் வாழ்ந்த மதுரைத் தலத்தினில் உள்ள திருவாலவாயையும், கடுமையான இனத்தைச் சார்ந்த சொற்களை பேசாத மக்கள் வாழும் இடைமருதையும், இரும்பை மாகாளம், வெற்றியூர், சிறப்பு அழகு கோபம் ஆகிய குணங்கள் உடைய திருமாலை இட்பமாக ஏற்றுக் கொண்ட பெருமான் விரும்பும் கருகாவூர், நல்லூர், பெரும்புலியூர் ஆகிய தலங்களை நமக்கு சிறந்த பற்றுகோடாக விளங்கும் செல்வம் என கருதி அந்த தலங்களில் உறையும் பெருமானிடம் தஞ்சம் அடைதல் தவமாகும், மேலும் இத்தகைய தவத்தினால் நம்மைப் பற்றியுள்ள மும்மலங்களும் தாமே நம்மை விட்டு அறந்தொழியும்.
பாடல் 7:
மாட்டூர்மடப் பாச்சி லாச்சிராம முண்டீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர்கடம் பூர்படம் பக்கங்கொட்டுங் கடலொற்றியூர் மற்றுறை யூரவையும்
கோட்டூர்திரு வாமாத்தூர் கோழம்பமுங் கொடுங்கோ வலூர்திருக் குணவாயில்
********
விளக்கம்:
இந்த பாடலின் கடைவரி சிதைந்து விட்டது. மாட்டூர் வைப்புத்தலம்; சோழநாட்டில் ஆக்கூர் தலத்திற்கு அருகில் உள்ளது.மடப்பாச்சிலாச்சிராமம்=மடங்கள் நிறைந்த பாச்சிலாச்சிராமம்; வாதவூர் வைப்புத்தலம்; மதுரைக்கு அருகே உல்லது; மாணிக்கவாசகர் அவ்தாரத்தலம்;வாரணாசி காசி என்று அழைக்கப்படும் வைப்புத்தலம்; காட்டூர் திருவாரூருக்கு அருகே கும்பகோணம் சாலையில் உள்ள வைப்புத்தலம்; படம்பக்கம் ஒரு வகையான் இசை வாத்தியம்; குணவாயில் ஒரு வைப்புத்தலம். கேரளாவில் கொடுங்கோளூருக்கு அருகில் உள்ள தலம். குணவாயில் கோட்டம் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
பொழிப்புரை:
மாட்டூர், மடங்கள் நிறைந்த பாச்சிலாச்சிராமம், முண்டீச்சரம், வாதவூர், வாரணாசி, காட்டூர், கடம்பூர், படம்பக்கம் இசைக்கருவி வாசிக்கப்படுவதும்,கடற்கரையின் அருகில் உள்ளதும் ஆகிய திருவொற்றியூர், உறையூர், கோட்டூர், திருவாமாத்தூர், கோழம்பம், சிறப்பு வாய்ந்த கோவலூர், குணவாயில் எனப்படும் தல்ங்கள்
பாடல் 8:
* குலாவுதிங்கட்சடையான்குளிரும் பரிதிநியமம்
போற்றூரடி யார்வழி பாடொழியாத்தென் புறம்பயம் பூவணம் பூழியூரும்
காற்றூர்வரை யன்றெடுத் தான்முடிதோ ணெரித்தானுறை கோயிலென்றென் றுநீகருதே.
விளக்கம்:
இந்த பாடலின் முதற்பகுதி சிதைந்தது. போற்றூர், பூழியூர் மற்றும் காற்றூர் என்பன வைப்புத் தலங்கள். இவற்றின் இருப்பிடம் முதலான விவரங்கள் தெரியவில்லை.
பொழிப்புரை:
பொருந்தி விளங்கும் பிறைச்சந்திரனைத் தனது சடையில் கொண்டுள்ள பெருமான் உறைகின்ற குளீர்ந்த தலம் பரிதிநியமம், போற்றூர், அடியார்கள் இடைவிடாது வழிபாடு செய்வதும் தென்னாட்டில் உள்ளதும் ஆகிய புறம்பயம், திருப்பூவணம், பூழியூர், காற்றூர், ஆகிய தலங்களை
பண்டைய நாளில் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் முடிகளையும் தோள்களையும் கயிலாய மலையின் கீழே அழுத்தி நெரித்த சிவபெருமான் உறைகின்ற திருக்கோயில்கள் என்று கருதுவாயாக.
பாடல் 9:
நெற்குன்றமோத் தூர்நிறை நீர்மருக னெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரந் நாகேச்சுர நளிர்சோலையுஞ் சேனைமா காளம்வாய்மூர்
கற்குன்றமொன் றேந்தி மழைதடுத்த கடல்வண்ணனு மாமல ரோனுங்காணாச்
சொற்கென்றுந் தொலைவிலா தானுறையுங் குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.
விளக்கம்:
கற்குன்றம்=கோவர்த்தன மலை; சொல்=புகழ்ச்சொற்கள்; தொலைவு=அழிவு; நெற்குன்றம் மற்றும் நற்குன்றம் வைப்புத் தலங்கள்; இந்த இரண்டு தலங்களுக்கு உரிய விவரங்கள் தெரியவில்லை. நெடுவாயில் வைப்புத்தலம்; நெடுவாசல் என்று தற்போது அழைக்கப்படும் தலம். மயிலாடுதுறை சன்கரன்பந்தல் சாலையில் உள்ளது. உஞ்சேனை மாகாளம் என்பது வடநாட்டில் உள்ள உஜ்ஜயினி தலமாகும். இதுவும் ஒரு வைப்புத் தலமே.
பொழிப்புரை:
நெற்குன்றம், ஓத்தூர், நீர்வளம் மிகுந்த மருகல், நெடுவாயில், குறும்பலாவைத் தலமரமாகக் கொண்ட குற்றாலம், நீண்ட புகழினை உடைய நற்குன்றம்,வலம்புரம், நாகேச்சுரம், குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட உஞ்சேனை மாகாளம், திருவாய்மூர், ஆகிய தலங்கள் மற்றும் கோவர்தன மலையினைத் தனது விரலில் ஏந்தி கடுமையான மழையால் பாதிக்கப்படாத வண்ணம் கோகுலத்து மக்களையும் பசுக்களையும் பாதுகாத்தவனும் கடல் நிறத்தில் மேனி உடையவனும் ஆகிய திருமாலும் சிறந்த மலராகிய தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்ட நான்முகனும் காணாத வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்றவனும், சொற்களைக் கடந்த புகழினை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற குடமூக்கு தலம் ஆகிய தலங்களின் பெயரினைத் சொல்லி பாராட்டுவீராக.
பாடல் 10:
குத்தங்குடி வேதி குடிபுனல்சூழ் குருந்தங்குடி தேவன் குடிமருவு
மத்தங்குடி தண்டிரு வண்குடியு மலம்புஞ்சலந் தன்சடை வைத்துகந்த
நித்தன்னிம லனுமை யோடுங்கூட நெடுங்கால முறைவிட மென்று சொல்லாப்
புத்தர்புறங் கூறிய புன்சமணர் நெடும்பொய் களைவிட்டு நினைந்துய்மினே.
விளக்கம்:
குத்தங்குடி என்பது கும்பகோணம் காரைக்கால் சாலையில் உள்ள வைப்புத்தலம்; குருந்தங்குடி மத்தங்குடி மற்றும் திருவண்குடி ஆகியவை வைப்புத்தலங்கள், இந்த த்லங்களின் விவரங்கள் தெரியவில்லை. தேவன்குடி=திருந்துதேவன்குடி, பாடல் பெற்ற தலம். அலம்பும்=ஆரவாரத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி; நெடும்=நீண்ட; நிம்லன் உமையொடும் கூட நெடுங்காலம் உறைவிடம் என்று கூறுவது நமக்கு மாதொருபாகனின் திருகோலம் தொன்மைக் கோலம் என்று குறிப்பிடும் திருவாசகம் கோத்தும்பீ பாடலை நினைவூட்டுகின்றது. மிகவும் தொன்மையான கோலம் என்று இதனை குறிப்பிடும்மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும் சாந்து, பைங்கிளி, வளையல்,முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைத்து குறிப்பிடும் இனிமையான பாடல்.
தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை
கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ
பொழிப்புரை:
குத்தங்குடி, வேதிகுடி, நீர் நிறைந்த வாய்க்கால்களால் சூழப்பட்ட குருந்தங்குடி, திருந்துதேவன்குடி, நிலைபெற்ற மத்தங்குடி, குளிர்ந்த திருவண்குடி, ஆகிய தலங்கள் மற்றும் மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையினில் தேக்கி மறைத்து மகிழ்ந்தவனும் நித்தனாக என்றும் அழியாது நிலையாக இருப்பவனும், இயற்கையாகவே மலங்களிலிருந்து நீங்கியவனும், பண்டைய நாளிலிருந்தே உமை அன்னையுடன் கூடி இருப்பவனும் ஆகிய பெருமானின் உறைவிடங்கள் என்று நினைத்து வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக. புத்தர்களும் கீழ்மைத் தன்மை உடைய சமணர்களும் இந்த தலங்களை இறைவன் உறையும் இடங்களாக கருதுவதில்லை. புத்தர்களும் புறம் கூறும் சமணர்களும் கூறி வரும் பெரும் பொய்ச் சொற்களை பொருட்படுத்தாது விலக்குவீர்களாக.
பாடல் 11:
அம்மானை யருந்தவ மாகிநின்ற வமரர்பெரு மான்பதியான வுன்னிக்
கொய்ம்மாமலர்ச் சோலை குலாவுகொச்சைக் கிறைவன் சிவஞானசம் பந்தன் சொன்ன
இம்மாலையீ ரைந்து மிருநிலத்தி லிரவும்பக லுந்நினைந் தேத்திநின்று
விம்மாவெரு வாவிரும்பும் மடியார் விதியார் பிரியார் சிவன்சேவடிக்கே.
விளக்கம்:
அம்மான்=தந்தை; உன்னி=நினைத்து; விம்முதல்=வெதும்பி அழுதல்; வெருவி=மெய் சிலிர்த்து நடுங்குதல்; அருந்தவம்=செய்தற்கு அரிய தவம். விம்மா வெருவா விரும்பும் அடியார் என்ற தொடர் மூலம், பெருமான் உறையும் திருத்தலங்களையும், பெருமானை விரும்புவது போன்று ஆழ்ந்த பக்தியுடன் தொழவேண்டும் என்பதை உணர்த்துகின்றார்.இரவும் பகலும் நினைந்தேத்தி என்ற தொடர், அப்பர் பிரான் அருளிய ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் என்ற தொடரை நினைவூட்டுகின்றது (4.01.1.) திருஞானசம்பந்தரும் அஞ்செழுத்துப் பதிகத்தின் முதல் பாடலில் (3.22.1) துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்திலும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக விளங்கும் பெருமானை, செயற்கரிய தவம் செய்து அனைத்து முனிவர்களுக்கும் முன்னோடியாய் நிற்பவனை,அமரர்களுக்கு தலைவனாகிய பெருமானின் உறைவிடங்களை நினைத்து, பறிக்கத் தகுந்த நறுமணம் வீசும் மலர்ச்சோலைகள் நிறைந்ததும் கொச்சைவயம் என்று அழைக்கப்படுவதும் ஆகிய சீர்காழி தலத்தின் தலைவனும் அம்பிகையால் தனக்கு கொடுக்கப்பட்ட ஞானப்பால் மூலம் சிவஞானம் பெற்றவனும் ஆகிய ஞானசம்பந்தன் சொன்ன இந்த பதிக மாலையின் பத்து பாடல்களை இரவும் பகலும் நினைத்து புகழ்ந்து நின்று துதிக்கும் அடியார்கள், அவ்வாறு துதிக்கையில் தம்மை மறந்து மனம் வெதும்பி அழுதும் உடல் சிலிர்த்தும் ஆனந்தப் பரவசம் அடையும் அடியார்கள் மறுமையில் பெருமானின் திருவடிகளை விட்டு நீங்காதவர்களாக முக்தி உலகினில் இடம் பெறுவார்கள்.