பதிக எண்: 2.16 - திருமணஞ்சேரி - இந்தளம்
பின்னணி:
குறுக்கை வீரட்டானம் அன்னியூர் பந்தணைநல்லூர் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் திருமணஞ்சேரி, எதிர்கொள்பாடி வேள்விக்குடி ஆகிய தலங்கள் திருஞானசம்பந்தர் சென்றதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். எதிர்கொள்பாடி தலத்தில் அருளிய பதிகம் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. துருத்தி வேள்விக்குடி மணஞ்சேரி எதிர்கொள்பாடி ஆகிய நான்கு தலங்களும், ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட தலங்களாகும். துருத்தி தலத்தில் அம்பிகை பரத முனிவரின் மகளாக அவதரித்து, பெருமானையே கணவராக அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தவம் செய்ததால், மனம் இரங்கிய இறைவன் பிராட்டியை மணம் புரிந்து கொள்ள இசைந்தார் என்றும் அந்த திருமணத்திற்கான வேள்விகள் நடைபெற்ற இடம் வேள்விக்குடி என்றும் திருமணம் நடைபெற்ற இடம் திருமணஞ்சேரி என்றும் திருமணக் கோலத்துடன் வந்த தம்பதியரை பரத முனிவர் வரவேற்ற இடம் எதிர்கொள்பாடி என்றும் பாலிகை கரைக்கப்பட்ட இடம் குறுமுனைப்பாடி என்றும் கூறுவார்கள். இந்த தலங்களில் செய்யப்படும் வழிபாடுகள் ஒருவரின் வாழ்வினில் காணப்படும் திருமணத் தடைகளை தகர்த்தெறியும் என்றும் விரைவில் திருமணம் நடைபெறவும் வழி வகுக்கும் என்றும் நம்பப் படுகின்றன அப்பதி=பந்தணைநல்லூர். இந்த பாடலுக்கு முந்திய பெரியபுராணப் பாடலில் பந்தணைநல்லூர் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே அப்பதி என்பது பந்தணை நல்லூர் தலத்தினை குறிக்கும் சொல்லாக கருதப்பட வேண்டும்.
அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரி
செப்பரும் சீர்த் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி
எப்பொருளும் தரும் ஈசர் எதிர்கொள்பாடிப் பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்விக்குடி உற்றார்.
இந்த தலத்தினை கீழைத்திருமணஞ்சேரி என்றும் கூறுவார்கள். அருகில் உள்ள எதிர்கொள்பாடித் தலம் மேலைத் திருமணஞ்சேரி என்று அழைக்கப் படுகின்றது. இந்த திருக்கோயிலில் உள்ள கல்யாணசுந்தரர் சன்னதி மிகவும் விசேடமானது. திருமணமாகாத கன்னிப் பெண்கள், இந்த தலம் வந்தடைந்து தலத்து இறைவனுக்கு மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் கல்யாணம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பரமனின் திருமணத்தைக் காண வந்த தேவர்களை, திருமால் வரவேற்றதால் எதிர்கொள்பாடி என்று அழைக்கப் படுவதாகவும் சொல்லப் படுகின்றது. இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகமும் கிடைத்துள்ளது. இறைவனின் திருநாமம்=அருள் வள்ளல் நாதர், உத்வாக நாயகர்; இறைவியின் திருநாமம்=யாழின் மென்மொழியம்மை; குயிலின் மென்மொழியம்மை, கோகிலாம்பாள்; மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பதினெட்டு கி.மீ. தூரம். மயிலாடுதுறை கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள குத்தாலம் இரயில் நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ, தூரத்தில் உள்ளது, அகத்திய முனிவருக்கு இறைவனின் திருமணக் கோல தரிசனம் கிடைத்த தலம்.
தலபுராணத் தகவல்களின் படி பூலோகத்தில் நடைபெறும் திருமணச் சடங்குகளை பின்பற்றி தன்னை பெருமான் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஒரு சமயம் அம்பிகை ஆவல் கொண்டார். தனது ஆசையினை பெருமானிடம் தெரிவிக்க பெருமானும் அதற்கு இசைந்தார். எனினும் அந்த ஆசை நிறைவேற்றப் படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தைக் கண்ட அம்பிகை மனம் வருந்தினாள். அந்த வருத்தம் அவளது செயல்களிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. அதனால் கோபம் கொண்ட பெருமான் தேவியை பூமியில் ஒரு பசுவாக பிறக்குமாறு செய்தார். பிராட்டிக்கு துணையாக இலக்குமி சரசுவதி இந்திராணி ஆகியோரும் பசுக்களாக நிலவுலகத்திற்கு வந்தனர். திருமால் அந்த நான்கு பசுக்களையும் மேய்க்கும் இடையனாக வந்தார். பசுவாக வந்த பிராட்டி தேரழுந்தூர் தலத்தில் உள்ள இலிங்கத்திற்கு தினமும் பாலைச் சொரிந்து வழிபாடு செய்தார். ஒரு நாள் அந்த பசுவின் குளம்பு இலிங்கத்தில் பட்ட போது, பெருமான் இலிங்கத்திலிருந்து தோன்றி அம்மைக்கு ஆறுதல் சொல்லி பரத முனிவருக்கு மகளாக வளருமாறும் தான் முனிவர் வளர்க்கும் வேள்வித் தீயினில் தோன்றி தேவியை திருமணம் புரிந்து கொள்வதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய பெருமான், பூலோக முறைப்படி பிராட்டியை மணந்து கொண்டதாக தலபுராணம் தெரிவிக்கின்றது. பிரமன் இந்த திருமணத்தை, புரோகிதராக நடத்தி வைத்தார் என்றும் சொல்லப் படுகின்றது. அம்பிகை மற்றும் ஐயனின் திருமணக் கோலத்தை பார்த்த வண்ணம், மேற்கு திசை நோக்கிய வண்ணம், லட்சுமி நாராயணர் திருக்கோயில் உள்ளது. பசுவாக பிராட்டி உலவிய இடம் அச்வதக்காடு என்றும், பசுவை மேய்ப்போனாக வந்த இடம் கோமல் என்றும், பசுவின் குளம்பு இலிங்கத்தில் பட்ட இடம் கோழம்பம் என்றும் பசுக்கு முக்தி கிடைத்த இடம் திருவாவடுதுறை என்றும் கூறுகின்றனர். சித்திரை மாதம் பூச நட்சத்திர நாளை ஒட்டி, மூன்று நாட்கள் கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது.
மன்மதன் வழிபட்டு உயிர் பெற்ற தலமாகவும் கருதப்படுகின்றது. நித்ய கல்யாணத் தலமாக கருதப் படுவதால், நவகிரக சன்னதி இந்த திருக்கோயிலில் இல்லை. இராகு தோஷ பரிகாரத் தலமாகவும் கருதப்படுகின்றது. இராகுவை நாம் மனித கோலத்தில் கேடயம் ஏந்திய வண்ணம் காதினில் அணிகலனுடன் இருக்கும் தோற்றத்தில் காணலாம். இந்த தலத்து இராகு பகவானை வழிபட்டு மகப்பேறு அடையலாம் என்று நம்பப் படுகின்றது. அம்பிகையின் உருவம் மணப் பெண்ணுக்கு உரிய வெட்கம், நாணம் பொங்க, கண் பார்வை தாழ்ந்து நிலத்தை நோக்கியவாறு அமைந்திருக்கும்.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம் கொண்ட திருக்கோயில். மூலவர் சுயம்பு மூர்த்தம். மூலவர் சன்னதிக்கு வலது புறத்தில் கல்யாணசுந்தரர் சன்னதி காணப்படுகின்றது. பலிபீடத்தை அடுத்துள்ள முன் மண்டபத்தில் அம்பிகை சன்னதியை காணலாம். மூல அம்பிகையை சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் தெற்கு திசை நோக்கி இருப்பதை நாம் காணலாம். வலது புறத்தில் விநாயகர் சன்னதியையும் இடது புறத்தில் நடராஜர் சன்னதியையும் காணலாம். கருவறையைச் சுற்றி உள்ள சுவர்களில் நாம், பால கணபதி, பிக்ஷாடனர், நடராஜர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், இராகு, துர்க்கை, கங்கா விசர்ஜனர் ஆகிய மூர்த்தங்களை காணலாம். உள் பிராகாரத்தில் நால்வர், சுப்ரமணியர், கஜலக்ஷ்மி, கால பைரவர், சனி பகவான் சன்னதிகள் மற்றும் சண்டேசுவரர் சன்னதி உள்ளன. நடராஜர், திருமணக் கோல நாதர், விநாயகர், பிரதோஷ மூர்த்தி, சண்டீசர், மாணிக்கவாசகர், வெண்கலச் சிலைகள் மிகவும் அழகு வாய்ந்தவை. திருக்கோயிலில் ஶ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சன்னதியும் உள்ளது. பெருமாள் சன்னதியில் நந்தி தேவரை நாம் காணலாம். துர்க்கையின் அருகே உள்ள இராகு பகவான், மங்கள இராகு என்று அழைக்கப் படுகின்றார். செங்கல் கட்டிடமாக இருந்த திருக்கோயில் பராந்தகச் சோழன் மற்றும் உத்தமச் சோழன் காலத்தில் கருங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. கோயிலைச் சுற்றி அகழி போன்ற அமைப்பு காணப்படுகின்றது. பெருமானின் திருமணத்தைக் காண, மாலைகளாக மாறி வந்த ஏழு கடல்களினால் ஏற்பட்ட அமைப்பு என்று கூறுவார்கள். திருக்கோயில் கோபுரத்திலும் நாம், இறைவன் அம்மையின் கையினை பிடித்த வண்ணம் திருமணக் கோலத்தில் இருக்கும் சிலையினை காணலாம்.
வணிகர் குலத்து மங்கை ஒருத்தியும் அவளது நாத்தனாரும் ஒரே காலத்தில் கருவுற்றனர். தமக்கு பிறக்கும் குழந்தைகளை கொண்டும் கொடுத்தும்சம்பந்தம் செய்து கொள்வதாக உறுதி பூண்டனர். ஒருத்திக்கு பெண் மகவு பிறக்க, அடுத்தவளுக்கு ஒரு ஆமை குழந்தையாக பிறந்தது. ஆமைக்குத் தனது பெண்ணை மணம் புரிந்து தரமாட்டேன் என்று முதல் பெண்மணி கூற, அடுத்தவள் வருத்தமுற்றாள். ஆமையாக பிறந்த குழந்தை, சிவபெருமானை வழிபட்டு உரிய பருவத்தில் ஆண் உருவத்தைப் பெறவே, இரண்டு பெண்மணிகளும் தாங்கள் செய்து கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றினர் என்று தலபுராணம் கூறுகின்றது. பராந்தகச் சோழன் மற்றும் அதற்கு பின்னர் வந்த பல சோழ மன்னர்களின் காலத்தைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. செம்பியன் மாதேவி அளித்த நன்கொடைகள் பற்றிய விவரங்களும் கல்வெட்டில் காணப்படுகின்றன. இராஜ கோபுரம் மல்லப்பா நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. தீர்த்தம்=சமுத்திர தீர்த்தம், சப்த சாகர தீர்த்தம் என்றும் அழைக்கப் படுகின்றது. தலமரம் கரு ஊமத்தை, வன்னி, கொன்றை; மூன்றாம் இராஜேந்திரச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட மத்யநேசுவரர் திருக்கோயில் அருகில் உள்ளது. இந்த கோயிலில் முன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திரன் மற்றும் குலோத்துங்கச் சோழன் காலத்தைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
பாடல் 1:
அயிலாரும் அம்பதனால் (2.016) பின்னணி மற்றும் பாடல்கள் 1, 2 (திதே 0470)
அயில் ஆரும் அம்பதனால் புரம் மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒரு கூறாகி
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே
விளக்கம்:
அயில்=கூர்மை; தலத்து அம்பிகையின் திருநாமம் யாழின் மென்மொழியம்மை. இனிய குரல் உடைய அம்பிகை என்ற பொருள் பட அமைந்துள்ள இந்த திருநாமத்தை நினைவூட்டும் வகையில் குயில் ஆரும் மென் மொழியாள் என்று திருஞானசம்பந்தர் இங்கே பிராட்டியை அழைக்கின்றார். கோகிலாம்பாள் என்ற திருநாமத்தை திருஞான சம்பந்தர் நமக்கு நினைவூட்டுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஆரும்=பொருந்திய; பயிலுதல்=தொடர்ந்து பழகுதல்; இங்கே இறைவன் இந்த தலத்தில் தொடர்ந்து உறைவதை குறிப்பிடுகின்றது. நாம் செய்யும் பல தீய செயல்களுக்கும், அத்தகைய செயல்களால் விளையும் பாவங்களுக்கும், உலகப் பொருட்களின் மீதும் உலகத்து உயிர்களின் மீதும் நாம் வைத்துள்ள பற்றே காரணமாக உள்ளது. ஆனால் நமது மனமோ ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டு வாழும் தன்மை உடையது. எனவே உலகப் பற்றை நாம் முழுவதும் நீக்க வேண்டும் என்றால் பற்றேதும் இல்லாத இறைவனை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு பற்றிக்கொண்டால் உலகப் பற்றுகளால் வரும் பாவங்கள் நம்மை வந்து அணுகா. இந்த கருத்தினை திருஞானசம்பந்தர் இங்கே சொல்வது நமக்கு திருக்குறள் ஒன்றினை நினைவூட்டுகின்றது. விடாது வந்து நம்மைப் பற்றும் பற்றினை விடுவதற்கு பற்றேதும் இல்லாத இறைவனைப் பற்றிக் கொள்க என்று உணர்த்தும் திருக்குறள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுகப் பற்று விடற்கு
அம்பிகையின் மொழி இனிமைக்கு, குயில், வீணை, யாழ், கிளி, மழலைச் சொல், தேன், புல்லாங்குழல், வெல்லப்பாகு, கரும்பு, பால் ஆகியவை உதாரணமாக பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளன. குயிலின் மொழி உவமையாக சொல்லப்படும் சில பாடல்களை நாம் இங்கே காண்போம்.
திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.8) திருஞான சம்பந்தர், பிராட்டியை குயிலின் நேர் மொழியாள் என்று குறிப்பிடுகின்றார். ஆன்மாவினை, தனது தலைவனுடன் சேரத் துடிக்கும் தலைவியாக உருவகித்து, இறைவனைத் தலைவனாக உருவகித்து, ஆன்மா எவ்வாறு இறைவனுடன் சேர்ந்து என்றும் அவனிடமிருந்து பிரியாமல் இருப்பதற்கு தலைப்பட வேண்டும் என்றும், தனது ஆசை நிறைவேறாத ஆன்மா எவ்வாறு வருந்தி, தனது விருப்பத்தை இறைவனிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இத்தகைய அகத்துறைப் பாடல்கள் மூலம் அருளாளர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். எதற்காக தணியாத இந்த வேட்கை ஆன்மாவிடம் ஏற்படவேண்டும் என்று கேள்வி கேட்போர்க்கு விடையளிக்கும் முகமாக, இந்த பாடல் அமைந்துள்ளது. பரகதி=உயர்ந்த நிலை, முக்தி நிலை; தொடர்ந்து இறைவனின் புகழினைப் பாடும் அடியார்கள் பரகதி அடைவார்கள் என்றும், அவ்வாறு இறைவனின் புகழினை நினைக்காதவர்கள் பரகதி அடைய மாட்டார்கள் என்றும் கூறுகின்றார். இறைவனின் புகழினைப், பெருமையினைப் புரிந்து கொண்டு அவனது மேன்மையை உணர்வதே இறை வழிபாட்டின் முதல் படி என்பதால், அந்த முதல் படி, படிப்படியாக நம்மை உயர்த்தி, பக்குவம் அடையச் செய்து உய்வினை அளிக்கும் என்பதால், இறைவனின் புகழினை நாம் உணரத் தலைப்பட வேண்டும் என்று கூறுகின்றார். குயில் போன்று இனிய மொழியினை உடையவளும், கொடி போன்று மெல்லிய இடையினை உடையவளும் ஆகிய உமையன்னை, கலக்கம் அடையும் வண்ணம், சிறந்த கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறொரு இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தைத் தொடரலாம் என்று முயற்சி செய்த அரக்கன் இராவணன் செயல் இருந்தமையால், அன்னையின் அச்சத்தை நீக்கும் பொருட்டு, அரக்கனின் ஒளிவீசும் கிரீடங்களை அணிந்த பத்து தலைகள் மற்றும் இருபது தோள்களும் கயிலை மலையின் அடியில் அகப்பட்டு நசுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றிய சிவபெருமான். மயிலினைப் போன்று சாயல் உடைய உமை அன்னையுடன் வலஞ்சுழித் தலத்தினில் அமர்ந்துள்ளான். இத்தகைய தன்மை உடைய பெருமானின் புகழினைத் தொடர்ந்து பயிலும் அடியார்கள், பெருமானின் அருளினால் மறுமையில் உயர்ந்த கதி பெறுவார்கள்; அவ்வாறு இறைவனைப் புகழாத மாந்தர்கள் அந்த உயர்ந்த நிலையை அடைய முடியாதுஎன்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய
கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர்முடி தோள் இருபதும் ஊன்றி
மயிலின் நேர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.53.11) அப்பர் பிரான், பிராட்டியை குயிலாரும் மென்மொழியாள் என்று குறிப்பிடுகின்றார். வெயிலாய=சூரியனின் ஒளி; சூரியனின் ஒளி மற்ற அனைத்து ஒளிகளையும் தன்னுள் அடக்கி பிரகாசிக்கும். அது போன்று மற்ற ஒளிகளை அடக்கி மிஞ்சும் வண்ணம் ஒளி வீசும் பரமன் என்று உணர்த்தப் படுகின்றது. அயில்=கூர்மை; தனது இருப்பிடமாகிய கயிலாய மலையினை பேர்க்கத் துணிந்த அரக்கனை மன்னித்த செய்கை, ஏனையோரிலிருந்து மாறுபட்ட செய்கையாக கருதப் படுகின்றது. கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணன் கதறி விழுமாறு. தனது கால் விரலால் கயிலை மலையை அழுத்தியவரும், தனது தவறினை உணர்ந்த அரக்கன் சாமகானம் பாடி மகிழ்வித்த போது அவனை மன்னித்து அருள் புரிந்தவரும், குயில் போன்று இனிய சொற்களை உடைய உமையம்மை மகிழும் வண்ணம் நடனம் ஆடும் இளமை பொருந்திய அழகரும், ஏனைய ஒளிகளை தாழ்த்தும் வண்ணம் மிகுந்த ஒளி வீசி பிரகாசிப்பவரும் ஆகிய இறைவன் அகன்ற திருவீழிமிழலை தலத்தில் உறைகின்ற விகிர்தர் ஆவார். கூர்மை மிகுந்த திரிசூலத்தை படையாக கொண்டுள்ள சிவபெருமான் அடியேனை ஆட்கொண்டவராவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கயிலாய மலை எடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்து அருளிச் செய்தார் போலும்
குயில் ஆரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்தாட வல்ல குழகர் போலும்
வெயிலாய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்
அயிலாரும் மூவிலை வேற்படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
பொழிப்புரை:
கூர்மை பொருந்திய அம்பு ஒன்றினை எய்து திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்தவனும், குயிலின் குரல் போன்று மென்மை பொருந்திய இனிய மொழிகளை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு கூறாகக் கொண்டவனும் ஆகிய பெருமான், மயில்கள் பொருந்தி நடமாடும் சோலைகள் மலிந்த மணஞ்சேரி தலத்தில் தொடர்ந்து உறைகின்றான். அந்த இறைவனின் திருவடிகளைப் பற்றி நிற்கும் அடியார்களை பாவங்கள் பற்றாது; அதாவது பாவங்களை விளைவிக்கும் தீய செயல்களை விளைவிக்கும், உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பற்றுகள் நீங்கிவிடும்.
பாடல் 2:
அயிலாரும் அம்பதனால் (2.016) பின்னணி மற்றும் பாடல்கள் 1, 2 (திதே 0470)
விதியானை விண்ணவர் தாம் தொழுது ஏத்திய
நெதியானை நீள்சடை மேல் நிகழ்வித்த வான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரி
பதியானைப் பாட வல்லார் வினை பாறுமே
விளக்கம்:
விதி=நெறிமுறை; நெதி=நிதி என்ற சொல் நெதி என்று திரிந்தது.; பாறும்=அழியும்; வண்பொழில்=வளமை மிகுந்த சோலைகள்; பதி=தலைவன்; விதி என்ற சொல்லுக்கு பிரமன் என்று பொருள் கொண்டு, அனைத்தையும் படைக்கும் பிரமனாக விளங்குபவன் இறைவனே என்று உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. விதியான் என்பதற்கு நெறிமுறையை வகுத்தவன் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. பெருமான் தானே வேதங்களையும் ஆகமங்களையும் அருளியவன். எனவே, அந்த ஆகமங்களிலும் வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள வாழ்க்கை நெறி முறைகளை அருளியவன் அவனன்றி வேறு எவர் இருக்கமுடியும்.
பொழிப்புரை:
வேத ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள வாழ்க்கை நெறியாக இருப்பவனும், தேவர்கள் அனைவரும் தொழுது வணங்கும் வண்ணம் முக்தி எனும் பெருஞ் செல்வத்தை உடையவனும், தனது நீண்ட சடையின் மேல் வானில் உலவும் பிறைச் சந்திரனை வைத்தவனும் வளமை மிகுந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரி தலத்தின் தலைவனாகவும் உள்ளவனும் ஆகிய பெருமானை இசைப் பாடல்கள் பாடி அவனை புகழ வல்லவர்களின் வினைகள் முற்றிலும் அழிந்துவிடும்.
பாடல் 3:
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல் 3 (திதே 0471)
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0472)
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0473)
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் 4, 5, 6(திதே 0474)
எய்ப்பானார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய
இப்பாலா என்னையும் ஆள உரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே
விளக்கம்:
மேவி நிற்றல்=விரும்பி நிற்றல்; வைப்பான=பெருமை மிகுந்த; மெய்ப்பான்=உண்மையான மெய்ப்பொருள் எய்ப்பானார்=தொண்டு செய்து இளைத்தவர்; எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம் பெருமான் என்று மணிவாசகர் கூறியது நமது நினைவுக்கு வருகின்றது. பல பிறவிகள் எடுத்து அல்லல் பட்டு இளைத்தோம் என்பதை உணரும் பிறவிகள், இனியும் பிறவி எடுத்து உழலவேண்டாம் என்ற எண்ணத்தில் மிகவும் திவீரமாக இருப்பார்கள்; அத்தகைய மனிதர்களுக்கு, இறைவன் தங்களை ஆட்கொள்வது மிகவும் இனிமையாக இருக்கும் அல்லவா. அவ்வாறு பல பிறவிகள் எடுத்து வருந்திய தான், உண்மைப் பொருளான பெருமானைக் கண்டு கொண்டு அவனது அருளால் வீடுபேற்றினை அடைந்ததாகவும் மணிவாசகர் திருவாசகம் சிவபுராணத்தில் கூறுகின்றார்.
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்
பிறவி எடுத்ததற்கு மணிவாசகர் வருந்துவது போன்று திருஞானசம்பந்தர் வருந்தியதை நாம் துருத்தி தலத்தின் மீது அவர் அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றில் காணலாம். இந்த (2.98.5) பாடலில் திருஞான சம்பந்தர், தான் சென்ற பிறவியில் இறைவனை ஒரு பொழுதும் மறக்காமல் இருந்ததாகவும், அவ்வாறு இருந்த தனக்கு முக்தி அளிக்காமல் மறுபடியும் மண்ணுலகில் பிறக்கச் செய்தது ஏன் என்றும் இறைவனிடம் கேள்வி கேட்பதை நாம் இந்த பாடலில் உணரலாம். பிறப்பிறப்பினைத் தவிர்க்கும் வழியை நீ எனக்கு உணர்த்தாமல், பிறவிப் பிணியினை எனக்குத் தந்து சென்ற பிறவியில் இறக்குமாறும் இந்த பிறவியில் மறுபடியும் இந்த மண்ணுலகில் பிறக்குமாறும் செய்தது நியாயமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. துறத்தல் என்பதை ஒரு துறவி தான் அடுத்தவருக்கு கற்றுத் தரமுடியும் என்பதால், பகலில் துறவிக் கோலம் பூண்டு வேதங்களை உபதேசம் செய்தவனாகிய துருத்திப் பெருமானை நோக்கி இந்த கேள்வி கேட்கப்படுகின்றது. இவ்வாறு மறுபடியும் நான் பிறப்பு எடுப்பதற்கு நான் செய்த தவறு தான் என்னே என்றும் திருஞான சம்பந்தர் இங்கே கேட்கின்றார்.
துறக்குமாறு சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின் மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப் படும் உடம்பு விட்டு
இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே
மணிவாசகர் தனக்கு இனிமேல் பிறவியேதும் இன்றி இறைவன் திண்ணமாக அருள் புரிவான் என்பதில் நம்பிக்கை வைத்து, வீடுற்றேன் என்று கூறுவது போல் இப்பாலா என்னையும் ஆள உரியான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுவதை நாம் உணரலாம். திருவாசகம் பாடல்கள் உலகுக்கு கிடைக்கவேண்டும் என்பதற்காக மணிவாசகருக்கு பிறவி அருளியது போன்று, உலகுக்கு தேவாரப் பதிகங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருஞான சம்பந்தர்க்கு இறைவன் இந்த பிறவியை அளித்ததை திருஞானசம்பந்தர் உணர்ந்தது இந்த பாடலில் வெளிப்படுகின்றது. இவ்வாறு இருவரையும் திருவாசகம், தேவார பதிகங்கள் பாட வைத்தது இறைவன் தமிழ் உலகுக்கு புரிந்த மிகப் பெரிய கருணைச் செயல்.
எய்ப்பானார் என்பதற்கு உடல் இளைத்தவர் என்று பொருள் கொண்டு, வயிற்றினை வளர்ப்பதை பிரதானமாகக் கொள்ளாமல் இறைவனை தியானித்து விரதமிருந்து இளைத்த உடலினை உடைய அடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பல பாடல்களில் குண்டர்கள் என்று சமணர்களை ஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. அவ்வாறு உடலினை வளர்க்கும் சமணர்கள் போன்று இராமல் பெருமானின் அடியார்கள் இருந்த நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது.
தனது அடியார்களின் உள்ளத்தில் சிவானந்தத் தேன் ஊறும் வண்ணம் அருள் புரிபவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. அத்தகைய குறிப்புகள் காணப்படும் திருமுறைப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே சிந்திப்போம். அரசிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.95.2) திருஞானசம்பந்தர், பெருமானை ஊறு தேனவன் என்று அழைக்கின்றார். தன்னை எதிர்த்து வந்த யானையை உதைத்துக் கொண்டு, அதன் தோலுடன் இணைந்துள்ள வெண் புலால் தனது உடலுடன் கலக்கும் வண்ணம், தனது உடல் மீது போர்த்தவர் என்று பெருமானை குறிப்பிடுவதை நாம் உணரலாம். இளமையும் மதமும் உடையதாக விளங்கிய ஆண் யானை தன்னை எதிர்த்து வந்த போது, அதனை உதைத்துக் கொன்ற பின்னர்,. அதன் தோலை தனது உடல் மீது போர்த்துக் கொண்டதாக கூறுகின்றார். எற்றி=உதைத்து; அடியார்களின் சிந்தனையில் ஊறும் தேனாக விளங்கும் பெருமான், தேவர்கள் போற்றும் ஒப்பற்ற தலைவனாக விளங்குகின்றார் என்றும் ஒளி பொருந்திய சிறந்த சுடர் என்றும் கங்கை சூடிய சடையை உடையவர் என்றும் கூறுகின்றார்.
ஏறு பேணி அதேறி இளமதக் களிற்றினை எற்றி
வேறு செய்து அதன் உரிவை வெண் புலால் கலக்க மெய் போர்த்த
ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல்லொளி கொள் ஒண்சுடராம்
ஆறு சேர் தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே
நமது சிந்தையை எவ்வாறு சிவமாக மாற்றுவது என்பதை அப்பர் பிரான், செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (4.29.4) மூலம் கற்றுக் கொடுக்கின்றார். இந்த பாடலில் தேவர்கள் எவ்வாறு பெருமானைத் தங்களது சித்தத்தை சிவமாகி மாற்றிக் கொள்கின்றனர் என்று குறிப்பிட்டு, நம்மையும் அந்த வழியை பின்பற்றுமாறு அறிவுரை அளிக்கின்றார். தானவன்=தானம் வழங்குபவன், கொடை வள்ளல்: திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் சிவபெருமான், அனைவர்க்கும் தந்தையாகவும் தாயாகவும், அவர்கள் வேண்டியது அளிக்கும் கொடை வள்ளலாகவும், ஞான வடிவினராகவும் விளங்குகின்றார். மேம்பட்ட தேவர்கள் எல்லோரும் ஒன்று கூடி, இருக்கு முதலாய நான்கு வேதங்களை முறையாக சொல்லி, பெருமானே, நாங்கள் உன்னிடம் சரணடைகின்றோம் என்று சிவபெருமானை புகழ்ந்து வணங்க, அவர்களின் சிந்தையில் சிவமாக, திருச்செம்பொன் பள்ளியில் உறையும் பெருமான் விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச்
சிந்தையுள் சிவமதானார் திருச்செம்பொன் பள்ளியாரே
பயற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (4.32.8) அப்பர் பிரான், நமது உள்ளம் எப்போது சிவமாக மாறும் என்பதை உணர்த்துகின்றார். உள்குதல்=நினைத்தல், தியானித்தல்; பெருமானே, தனது தாய் தந்தை, உலகத்தில் தனக்குள்ள பற்று என்ற முடிவுடன் இறைவனை தியானித்து வந்த அப்பர் பெருமானது சிந்தையே சிவமாக மாறிய தன்மை இங்கே நமக்கு உணர்த்தப் படுகின்றது. தன்னடக்கம் காரணமாக, தனது சிந்தனை அவ்வாறு மாறியது என்று கூறாமல் இறைவனை எப்பொழுதும் உள்ளத்தில் தியானிப்பவரின் சிந்தை என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமானை விடவும் பெரிய உறவு நமக்கில்லை. எனவே அவனே நமக்குத் தாய், தந்தை மற்றுள்ள சுற்றம் என்று கொள்வது அருளாளர்களின் பண்பாக இருப்பதை நாம் பல பாடல்களில் காண்கின்றோம்.
தந்தையாய்த் தாயுமாகித் தரணியாய்த் தரணியுள்ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழுலகு உடனும் ஆகி
எந்தை எம் பிரானே என்றென்று உள்குவார் உள்ளத்து என்றும்
சிந்தையும் சிவமும் ஆனார் திருப்பயற்றூரனாரே
சிவபெருமானை நாம் நினைத்தால், நமது சிந்தையில் அவன் தெளிந்த கருப்பஞ்சாறு போன்று இனிய உணர்வினைத் தருவான் என்று அப்பர் பிரான் சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் குறிப்பிடுகின்றார். பொந்தை=ஓட்டை, இங்கே ஓட்டைகள் கொண்ட உடல் என்று பொருள் கொள்ள வேண்டும்; பொருக்கென=விரைவாக: தேறல்=தேன்; ஓட்டைகள் உடைய உடலினை நிலையான பொருளாக எண்ணி, நிலையான பொருளாகிய சிவபெருமானை எண்ணாது எனது காலத்தை நான் வீணே கழித்து விட்டேன்; காலமும் வேகமாக கழிந்து விட்டது; எனது தந்தையே, தனிப் பெரும் தெய்வமே என்று உன்னை ஏத்தாது இத்தனை நாட்கள் நான் இருந்து விட்டேன்; தனு, கரண, புவன போகங்களைத் தந்து உலகப் பொருட்களுடன் நம்மை பிணைக்கும் பந்தமாகவும், அந்த பந்தத்திலிருந்து விடுபட்டால் நாம் அடையும் வீடுபேற்று இன்பமாகவும் விளங்குபவனும் ஆகிய சிவபெருமான் சோற்றுத்துறையில் உறைகின்றான். நாம் அவனை தியானித்தால் நமது சிந்தனையில் தேன் போன்று இனிப்பான். இந்த உண்மையை அறியாது நான் எனது காலத்தை வீணாக கழித்து விட்டேன் என்று தான் சமணர்களுடன் சார்ந்து வீணாக கழித்த காலத்தை குறிப்பிட்டு அப்பர் பிரான் வருத்தம் தெரிவிக்கின்றார்.
நன்மையைப் பொருளா எண்ணி பொருக்கெனக் காலம் போனேன்
எந்தையே ஏகமூர்த்தி என்று நின்று ஏத்த மாட்டேன்
பந்தமாய் வீடுமாகிப் பரம்பரமாகி நின்று
சிந்தையுள் தேறல் போலும் திருச்சோற்றுத்துறையனாரே
நமது சிந்தையில் தெளிவினை ஏற்படுத்துபவர் சிவபெருமான் என்று ஆப்பாடி தலத்துப் பாடலில் (4.48.5) அப்பர் பிரான் கூறுவதை நாம் இங்கே காண்போம். முக்தி அடைந்து, இறைவனின் திருப்பாதங்களைச் சென்றடைந்து பேரானந்தத்தில் திளைத்து இருப்பதே ஆன்மாவின் உண்மையான விருப்பம். இந்த விருப்பம் நிறைவேற நாம் ஞானம் பெற வேண்டும். இதற்கான படிகள் நான்கு என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது. கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை, கூடல் என்பன அந்த நான்கு படிகள். தக்க ஆசானிடத்தில், இறைவனைப் பற்றிய விவரங்களை கேட்டல் முதல் படி. கேட்டறிந்த விவரங்களில், ஐயம் ஏதும் இருக்குமானால்., தகுந்த நூல்களை படித்தோ, கற்றவர்களிடம் கேட்டு அறிந்தோ, தனது ஐயங்களைப் போக்கிக் கொண்டு எப்போதும் கேட்ட விவரங்களை சிந்தித்தவாறு இருத்தல் அடுத்த படி; இவ்வாறு சிந்தித்து சிந்தித்து தெளிவினை அடைதல் மூன்றாவது படி; இவ்வாறு தெளிவடைந்த சிந்தை மூலம் உணர்ந்த இறைவனை எப்போதும் தியானித்து இருப்பது நான்காவது படி. இந்த நான்காவது படியால் விளைவது தான் வீடுபேறு அடையும் நிலைக்கு தகுதியாக உள்ள நிலை. இந்த நான்கு படிகளிலும் நமக்கு உதவியாக இருப்பது சிவபெருமானின் அருள் தான். இதனைத் தான், சிந்தையுள் தெளிவாக இருப்பதாகவும், அந்த தெளிந்த நிலையில் தியானித்து சிவமாக இருப்பதாகவும், அந்த தியானத்தின் விளைவாக ஏற்படும் நல்ல பயனான வீடு பேறாகவும் இறைவன் இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். வாணுதல்=வாள்+நுதல், ஒளி வீசும் நெற்றி என்றும் வாளினைப் போன்று கூர்மையான நுனி கொண்ட நெற்றியை உடைய உமை அம்மை என்றும் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப் படுகின்றது.
சிந்தையும் தெளிவும் ஆகித் தெளிவினுள் சிவமுமாகி
வந்த நற்பயனும் ஆகி வாணுதல் பாகமாகி
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென்கரை மேல் மன்னி
அந்தமோடு அளவிலாத அடிகள் ஆப்பாடியாரே
இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.15.2) அப்பர் பிரான், பெருமானை நினைத்ததால், தனது உள்ளத்தில் சிவானந்தம் ஊறிப் பெருகி நிறைந்தது என்று கூறுகின்றார். அனைத்து உயிர்களுடன் கலந்து இருக்கும் பெருமானை நாம் காண முடியாது. இவ்வாறு நாம் வெளிப்படையாக காண முடியாத பெருமானை, மாயன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். புளிறு=மிகுந்த இளமை; ஒற்றைப் பிறையுடன் இருந்த நிலையினை, மிகவும் இளமையாக இருந்த சந்திரன் என்று கூறுகின்றார். பிள்ளை மதி என்று சந்திரன், தனது அளவில் குறைந்த நிலையில் இருந்த தன்மை பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. மிகவும் குறைந்த தன்மை என்பதை உணர்த்தும் வண்ணம் புளிற்றுப் பிள்ளை என்று கூறுவது மிகவும் அரிதான சொல்லாட்சி. உயிர்கள் காண முடியாதபடி, உயிர்களின் மனதினில் மறைந்து இருக்கும் மாயவனும், குற்றமற்ற ஒளி வடிவாக இருப்பவனும், பிறந்த குழந்தையைப் போன்று அளவில் மிகவும் சிறுத்து இருந்த நிலையில், அடைக்கலம் புகுந்த வெண்பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனும், எனக்குத் தாயாக இருந்து என்னை காப்பவனும், எனது தலைவனும் ஆகிய இடைமருது ஈசனை நினைத்துநினைத்து எனது உள்ளம் நிறைந்துள்ளது என்று அப்பர் பிரான் பெருமிதத்துடன் உணர்த்தும் பாடல்.
மனத்துள் மாயனை மாசறு சோதியை
புனிற்றுப் பிள்ளை வெள்ளை மதி சூடியை
எனக்குத் தாயை எம்மான் இடை மருதினை
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே
மாறுபடும் சிந்தைனையில் உள்ள மாறுபாட்டினை ஒழித்து செம்மைப் படுத்தி சிவானந்த அனுபவத்தை ஊறச் செய்யும் பெருமான் என்று ஆனைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் அப்பர் பிரான் (5.31.2) கூறுகின்றார்.
திருகு சிந்தையைத் தீர்த்துச் செம்மை செய்து
பருகி ஊறலைப் பற்றிப் பதம் அறிந்து
உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே
நமது சிந்தனை திருந்த வேண்டும் என்று நாம் நினைத்தால் மருகல் பெருமானை வழிபடுவது ஒன்று தான் தீர்வு என்று இந்த பாடலில் (5.88.1) அப்பர் பிரான் கூறுகின்றார். மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அத்தகைய சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், பெருமானை வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் வேறு பலன்களையும் இங்கே குறிப்பிடுகின்றார். மருகல் எனப்படும் தலத்தில் உறையும் இறைவனின் திருவடிகளை வாழ்த்திப் பாடி வணங்கினால், தவம் செய்வதால் ஏற்படும் நல்ல பயன்கள் நமக்கு கிடைக்கும்; மேலும் நமது உயிரைப் பிணைத்துள்ள ஆணவ மலத்தினால் நமக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமை நீங்கும்: உண்மையான மெய்ப்பொருளை நாம் உணர்ந்து உலகப் பொருட்களால் நமக்கு ஏற்படும் மாயையிலிருந்து விடுபடலாம்; வேறு ஏதேனும் மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அந்த சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும்; பரம்பொருளாகிய சிவபெருமானைத் தியானம் செய்து அதன் மூலம் நமக்கு ஏற்படும் பரமானந்தத்தை, சிவானந்தத் தேனை நாம் பருகலாம் என்பதே இந்த பாடலில் பொழிப்புரை. .
பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே
தனது இளைய வயதினில் அடுத்தடுத்து வந்த இழப்புகளால், வாழ்க்கையில் பற்று ஏதும் இன்றி வாழ்ந்த மருள்நீக்கியார் (அப்பர் பிரானின் இயற்பெயர்) நல்ல நெறியினை தெரிந்து கொள்வதற்காக சமண சமயம் சார்ந்தவர், அங்கே தனது சிந்தை தெளிவடையவில்லை என்பதை இந்த பாடல் மூலம் நமக்கு தெரிவிக்கின்றார். ஆதிமா தவத்துள்ளான் என்று தவம் என்பதை முதன்முதலில் செய்து அடுத்தவர்களுக்கு வழி காட்டியவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். தவம் செய்யும் பல முனிவர்கள் சடை வளர்த்தார்கள் என்பதை நாம் அறிகின்றோம். ஆனால் எந்த முனிவரும் சடையை உடையவன் என்ற பொருள் பட சடையான் என்று அழைக்கப் படவில்லை. உபநிடதங்களும் முனிவர்களுக்குள் பெரிய முனிவன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றது. எனவே சிவபெருமான் ஒருவனுக்கே சடையான் என்ற பெயர் பொருந்துகின்றது.
இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத்
தெருளாத சிந்தை தனை தெருட்டித் தன் போல் சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த
அருளானை ஆதி மாதவத்து உளானை ஆறங்கம் நால்வேதத்து அப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.59.9) அப்பர் பிரான், தனது உள்ளத்தில் சிவானந்தம் ஊறும் வண்ணம் அருள் புரிபவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். விளங்கு கிளரும் என்பது விளம் கிளரும் என்று, எதுகை நோக்கி குறைந்தது. கிளரும்= மிகுந்து காணப்படும்; வேணி=கூந்தல், சடை; பெருமானிடம் சரண் அடைந்த பின்னர், சந்திரன் வளம் மிகுந்து காணப்பட்ட நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. மன்னுதல்=நிலை பெற்று இருத்தல்; களம்=இருப்பிடம்; அண்ணித்தல்=இனிமையாக இருத்தல்; விளம்=ஒளி; தேவர்கள் அனைவரும் நஞ்சின் தாக்கத்தினை தாங்க முடியாமல் சிதறி ஓடிய தருணத்தில், அவர்களை காப்பாற்றும் பொருட்டு விடத்தை உட்கொண்ட பெருமானது செயல், ஏனையோரிடமிருந்து மாறுபட்ட செயலாகும். ஏனையோரை பதறி ஓடச் செய்த ஆலகால விடம், பெருமானிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதால் வல்லமை மிகுந்தவன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். மைந்தன்=வலிமை பெற்றவன்; தன்னிடம் சரண் அடைந்த பின்னர், வளம் கொழித்து விளங்கிய சந்திரனைத் தனது சடையில் சூடியவரும், வானவர்களுக்காக நஞ்சினை உண்டு அவர்களை காப்பாற்றிய பின்னரும், நஞ்சினால் ஏற்படும் கேட்டினைத் தடுக்கும் வல்லமை பெற்றவராக இருந்தவரும், எனது இதயத்தைத் தான் உறையும் இடமாக ஏற்றுக்கொண்டு நிலையாக அங்கே தங்கியவரும், கச்சி ஏகம்பம் கோயிலில் உறையும் கடவுளாரும், அடியார்களின் உள்ளம் குளிரும் வண்ணம் பல நன்மைகள் செய்து அவர்களது உள்ளத்தில் அமுதமாக ஊறி நின்று இனிமையாக இருப்பவரும், அனைவரிலும் மேம்பட்டவராக எல்லா திசைகளிலும் பரவி இருப்பவரும், ஒளி வீசும் மழு ஆயுதத்தை ஏந்தியவராக இருப்பவரும் ஆகிய பெருமான், வெண்ணி என்று அழைக்கப்படும் தலத்தில் உறையும் விகிர்தனார் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வளம் கிளர் மாமதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சுண்ட மைந்தனாரும்
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும்
உளம் குளிர அமுதூறி அண்ணிப்பாரும் உத்தமராய் எத்திசையும் மன்னினாரும்
விளங்கிளரும் வெண்மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே
செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.84.7) அப்பர் பிரான், பெருமானை தனது உள்ளத்தில் ஊறும் தேன் என்று குறிப்பிடுகின்றார். இல்லாத் தெய்வம்= தெய்வத்தன்மை இல்லாத தெய்வம்; பொத்தி=மூடி, இங்கே மனதினுள் இருத்தி என்று பொருள் கொள்ளவேண்டும்; போத=இழுத்து; கச்சி ஏகம்பம் தலத்தை குறிப்பிடும் அப்பர் பிரானுக்கு, ஆங்கே வாழ்ந்து வந்த சமணர்களும், அவர்களது பொய்யான கொள்கைகளும் நினைவுக்கு வந்தன போலும். சமண சமயத்தின் கொள்கைகளால் தனது மனம் ஈர்க்கப்பட்டு, அவர்களுடன் கலந்திருந்து வீணாக வாழ்நாட்களை கழித்த தன்னை அந்த மாய வாழ்க்கையிலிருந்து இறைவன் மீட்டதை மிகுந்த மகிழ்ச்சியுடன் இங்கே குறிப்பிடுகின்றார். உலகின் அனைத்து இடங்களிலும்நிறைந்து எல்லாத் திசைகளிலும் பரவி இருப்பவனும், கச்சி ஏகம்பம் தலத்தில் உறைபவனும், தெய்வத்தன்மை ஏதும் இல்லாதவரை தெய்வம் என்று கருதி தங்களது மனதினுள் இருத்தி தங்களது தலை முடிகளை பறித்துக் கொள்ளும் சமணர்களின் பொய்யான மாயப் பேச்சுகளில் ஆழ்ந்து போகாத வண்ணம் அடியேனுக்கு சூலை நோய் கொடுத்து இழுத்துக் கொண்டு அடியேனுக்கு பக்தி நெறியை காட்டி ஆட்கொண்டவனும், அடியேனது பாவங்களைத் தீர்த்தவனும், அடியேனை அச்சுறுத்திய பழவினைகளின் தாக்கத்தை நீக்கியவனும், எனது மனதினில் தேன் ஊறுவது போன்று இனிமையான நினைவுகளுடன் நிலைத்து இருப்பவனும் ஆகிய இறைவனை, அடியேன் திருச்செங்காட்டங்குடி தலத்தில் கண்டேன் என்று தனது இனிய நினைவுகளை அப்பர் பிரான் பகிர்ந்து கொள்ளும் பாடல்.
எத்திக்குமாய் நின்ற இறைவன் தன்னை ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம்
பொத்தித் தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கிப்
பத்திக்கே வழிகாட்டிப் பாவம் தீர்த்துப் பண்டை வினைப் பயமான எல்லாம் போக்கித்
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனைச் செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே
இடையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.31.10) சுந்தரர், தன்னை சிவானந்தம் ஊறும் வாயினன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதை நாம் உணரலாம். எய்த மான்=யாவராலும் எளிதில் எய்யக் கூடிய நிலையில் இருக்கும் இறைவன்; தன் பால் உண்மையான அன்பு வைத்து வழிபடும் தன்னை வழிபடும் அடியார்கள் அனைவரும் தன்னை எட்டும் வகையில் அருள் புரிபவன் இறைவன் என்பதை உணர்த்துகின்றார். வினை எவ்விடம் என்ற தொடர் மூலம், அத்தகைய அடியார்களின் வினைகள் காணாமல் போய்விடும் என்று கூறுகின்றார். மேலும் அத்தகைய அடியார்களின் உடலும் உள்ளமும் குளிர்ந்து காணப்படும் என்றும் கூறுகின்றார்.
ஊறு வாயினன் நாடிய வன்றொண்டன் ஊரன்
தேறுவார் சிந்தை தேறும் இடம் செங்கண் வெள்ளேறு
ஏறுவார் எய்த மான் இடையாறு இடைமருதைக்
கூறுவார் வினை எவ்விடம் மெய் குளிர்வாரே
ஒரு பொது பதிகத்தின் பாடலில் (7.63.4) சுந்தரர், உயிர்களின் இடையே அமுதமாக ஊறும் நம்பி என்று பெருமானை குறிப்பிடுகின்றார். நம்பி என்றால் ஆண்களில் சிறந்தவன் என்று பொருள். உயிர்க்கெல்லாம் என்ற தொடரினை, ஊறு நம்பி மற்றும் உரிய நம்பி ஆகிய இரண்டு தொடர்களுக்கும் பொருத்தி பொருள் காண்பது சிறப்பு. தன்னை உணரும் உயிர்களின் உள்ளத்தில் அமுதமாக ஊறும் நம்பி என்றும் அனைத்து உயிர்களும் புகலடைந்து உய்வினை அடையக் கூடிய வழியாக இருப்பவன் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். தெரிய=தெரியும் வண்ணம், நன்கு பொருள் உணரும் வண்ணம்; சனகாதி முனிவர்களுக்கு வேதம் மற்றும் அங்கங்களின் பொருளை நன்கு உணரும் வண்ணம் அருள் புரிந்தவன் பெருமான். குமைத்த= அடக்கி அழித்த; குமையாப் புலன்=அடக்குவதற்கு மிகவும் அரிதாக திகழும் ஐந்து புலன்கள்; சீறு=சினந்தெழுந்து; செழுங்கோடு=செழுமையாக வளர்ந்த கொம்புகள்; தான் எந்த பிறவி எடுத்தாலும், எத்தனை பிறவி எடுத்தாலும் பெருமானே, தனக்கு தலைவனாக இருப்பான் என்று மிகவும் உறுதியாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
ஊறு நம்பி அமுதா உயிர்க்கெல்லாம் உரிய நம்பி தெரியம் மறை அங்கம்
கூறு நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையாப் புலன் ஐந்தும்
சீறு நம்பி திரு வெள்ளடை நம்பி செங்கண் வெள்ளைச் செழும் கோடு எருது என்றும்
ஏறு நம்பி என்னை ஆளுடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
நள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.68.3) பாடலில், சுந்தரர் சிவபெருமானை புகழ்ந்து காமரத்து இசை பாட, தனது நாவில் அமுதம் ஊறுகின்றது என்று கூறி மகிழ்கின்றார். நினைத்தாலே தேன் போன்று இனிக்கும் சிவபெருமானைப் புகழ்ந்து பாடினால் அமுதம் போன்று இனிப்பதால், அவனை மறந்து நாம் வேறு நினைவுகளில் ஆழ்ந்து விடக் கூடாது என்று இங்கே சுந்தரர் உணர்த்துகின்றார். சீகாமரம் என்ற பண் காமரம் என்று சொல்லப் படுகின்றது.
பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப் புவியைக் காற்றினைப் புனல் அனல் வெளியைச்
சேவின் மேல் வரும் செல்வனைச் சிவனை தேவதேவனைத் தித்திக்கும் தேனைக்
காவியங் கண்ணி பங்கனைக் கங்கை சடையனைக் காமரத்து இசை பாட
நாவில் ஊறு நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
திருவாசகம் சிவபுராணம் பதிகத்தில் (8.1.47) மணிவாசகர், சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சிறந்த அடியார் என்ற தொடர், அடியார்களில் ஒரு வகையை குறிப்பிடுகின்றது. இறையுணர்வு பெற்ற அனைவரும் அடியார்களே. உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அதே நேரத்தில், இறை உணர்வுடன் வாழும் அடியார்கள் ஒரு வகையினர். எனை நான் என்பது அறியேன் பகல் இரவு ஆவதும் அறியேன் என்று அடிகளார் உணர்த்தும் வண்ணம், மனித உயிர்களுக்கு இயல்பாக அமைந்த அனைத்தையும் அடக்கி, அறுபது நாழியும் இறையுணர்வில் ஈடுபட்டு தம்மையே மறந்து நிற்கும் அடியார்கள் மற்றொரு வகை. அவர்களே சிறந்த அடியார்கள் ஆவார்கள். இத்தகைய அடியார்களின் சிந்தனையில் ஊறி நிற்கும் இறைவன், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் போது தான் அத்தகைய அடியார்களை நாம் இனம் கண்டு கொள்ள முடியும். இந்த நிலை அடைந்த அடியார்கள், இனியும் பிறப்பெடுத்து வினைகளை கழிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர்கள். எனவே அவர்கள் எடுத்துள்ள இந்த பிறப்பே அவர்களது கடைசிப் பிறவியாக அமைந்துள்ளது. இதனை உணர்த்தும் முகமாகத் தான் பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த அடிகள் மூலம், பெருமான் உயிர்களின் சிந்தனையில் தேனாக ஊறி நின்றால் ஏற்படும் விளைவு, பிறப்பிறப்புச் சுழற்சியில் இருந்து விடுதலை அடைதல் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
திருவாசகம் திருச்சதகம் பதிகத்தின் பாடலில் (8.5.29.) மணிவாசக அடிகளார், பெருமானை, அமுதம் ஊறி அகம் நெகவே ஆண்டு கொண்டான் என்று குறிப்பிடுகின்றார். செச்சை=வெட்சி மலர்; மலர் புரை=மலரினை ஒத்த; விச்சை=வித்தை; உயிர் தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு பிறவியிலும் ஏற்படும் அனுபவத்தின் காரணமாக, சிறிது சிறிதாக பக்குவம் அடைந்து இறையினை உணரும் வழியில் முன்னேறிச் செல்கின்றது என்று கூறுவார்கள். இன்று ஒரளவேனும் இறையுணர்வில் நாம் திளைப்பற்கு காரணம், சென்ற பிறவியில் நாம் அடைந்த பக்குவத்தின் தொடர்ச்சியே ஆகும். மன்னனிடம் மந்திரியாக பணியாற்றி வந்த, வாதவூரார், சென்ற பிறவியில் தான் இறைவனை நாடாமல் இருந்திருந்த காரணத்தால் தான், இந்த பிறவியில் இறையுணர்வில் தனது மனம் ஆழவில்லை என்ற முடிவுக்கு வந்தார் போலும். அவ்வாறு இருந்த தன்னை திருப்பெருந்துறைக்கு வரவழைத்த பெருமான், ஒரே நொடியில் அடியார்களின் கூட்டத்தில் இணைய வைத்ததை, பெரிய மாயம் என்று கருதினார் போலும். இந்த செயலை ஒத்த மாயம் வேறெதும் இல்லை என்று கூறுகின்றார். அந்த இறைவன் ஏற்படுத்திய மாற்றம் தான் யாது. அடியார்களின் கூட்டத்துடன் இணைக்கின்றார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல்,உயிர்களின் பெரிய அச்சமாகிய பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியுள்ள நிலையிலிருந்து விடுதலை அளிக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். மறுமையில் தனக்கு பேரானந்தத்தை உறுதி செய்த பெருமான், இம்மையில், தனது உள்ளத்தில் புகுந்து கொண்டதன் விளைவாக, தனக்கு பெருமான் பால் அன்பு பெருகியது என்றும், தனது மனம் அவரையே நினைந்து, காதலாகிக் கசிந்து நெகிழ்ந்தது என்றும் தனது உள்ளத்தில் சிவானந்த அமுதம் ஊறியது என்றும் அடிகளார் குறிப்பிடுகின்றார். இவ்வாறு தனது மனதினில் புகுந்து கொண்டு தன்னை ஆட்கொண்ட பெருமானின் தன்மைகளை அடுத்த இரண்டு அடிகளில் உணர்த்துகின்றார்.
விச்சை தான் இது ஒப்பது உண்டோ கேட்கின் மிகு காதல் அடியார் தம் அடியனாக்கி
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி அகம்நெகவே புகுந்தாண்டான் அன்புகூர
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசமாகி ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்ற
செச்சை மாமலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே
திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் பாடலில் (8.6.11) மணிவாசக அடிகளார், தனது மனதினில் ஊறும் தேன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். மட்டு=தேன்; மேலும் இந்த பாடலில் நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந் தகையே என்று மணிவாசகர் பெருமானை குறிப்பிடுகின்றார். நெடிது நீண்ட பொன்னார் மேனியின் மீது ஒளிவீசும் திருநீறு பூசியவனாக பெருமான் இருக்கின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். மேலும் பெருமானின் இனிய நினைவுகள் தனது மனதினில் தேன் போன்று சுரந்து ஆனந்த பரவசத்தை அளிக்கின்றது என்றும் கூறுகின்றார். வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு முக்தி நிலை அடையவேண்டும் என்ற தனது விருப்பத்திற்கு மாறாக, தனது ஐந்து புலன்களும் செயல்படுவதால், தான் இறைவனின் திருப்பாத மலர்களை நினையாது இருந்ததாகவும், அதனால் இறைவனை தன்னை இந்த நிலவுலகில் விட்டுவிட்டு சென்று விட்டார் என்று மணிவாசகர் வருத்தம் அடைகின்றார்.
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன் மணி மலர்த் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய் வினையேன் மனத்தே
ஊறு மட்டே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந் தகையே
திருப்பல்லாண்டு பதிகத்தின் பாடலில் (9.29.3) தனது மனதினில் ஊறும் அமிர்து என்று, சேந்தனார், பெருமானை குறிப்பிடுகின்றார். இறைவனைப் பற்றிய சிந்தனையில் தனது உடல் நிட்டையில், அசையாது நிற்பதற்கு துணை செய்த இறைவன் என்று இங்கே சேந்தனார் கூறுகின்றார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தில் கூறுவது போன்று, இறைவன் தான், தன்னை அடிமையாக மாற்றி ஆட்கொண்டான் என்று சேந்தனார் கூறுகின்றார். பட்டன்=புலவன், கல்வி கேள்விகளில் தேர்ந்தவன்: ஆல நீழலில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு, வேதங்களில் அவர்களுக்கு இருந்த ஐயங்களைத் தீர்த்தவனை புலவன் என்று சொல்வது தானே பொருத்தம்.
நிட்டை இலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவனடியாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்து
அட்ட மூர்த்திக்கு என் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு ஆலநீழல்
பட்டனுக்கு என்னைத் தன்பால் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே
அடியார்களின் சிந்தனையில் இறைவன் உறைவதால் விளையும் பயன் யாது என்பதை மிகவும் அழகாக மாணிக்கவாசகர் எடுத்து உரைக்கின்றார். சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் என்று சிவபுராணத்தில் குறிப்பிட்ட வண்ணம், அடியார்களின் உள்ளத்தில் புகுந்து உறைகின்ற பெருமான், அத்தகைய அடியார்களுக்கு இனிய உணர்வினை நல்குகின்றார் என்று பொற்சுண்ணம் பதிகத்தின் பாடலில் (8.9.15) குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பெருமானை ஞானக் கரும்பு என்று கூறுகின்றார். பெருமானின் திருவடிகளை சென்றடையும் வழிகளில் ஞான மார்க்கம் என்பதும் ஒன்று. நாம் யார், இறைவன் யார், நமக்கும் இறைவனுக்கு உள்ள தொடர்பு தான் என்னே என்பது போன்ற பல வினாக்களை எழுப்பி, உடலை வருத்தி தவம் செய்து இறுதியாக அவனை அடைவது ஞான மார்க்கம். இவ்வாறு ஞான மார்க்கத்தால் அடையும் பொருளாக இருப்பவன் இறைவன் என்பதை ஞானக் கரும்பு என்று அடிகளார் குறிப்பிடுகின்றார். கரும்பின் சாற்றினை பெறுவதற்கு கரும்பினை ஒடித்துப் பிழிய வேண்டும்; சாற்றில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கு அதனை நெருப்பில் இட்டு காய்ச்ச வேண்டும். அதாவது அந்த சாற்றிலிருந்து பாகு பெறுவதற்கு மேலும் உழைக்க வேண்டும். அறிவின் துணை கொண்டு இறைவன் பற்றி சிந்திக்கையில் நான் எனும் உணர்வு முதலில் தலை தூக்குகின்றது. அவனது அருள் என்ற நெருப்பில் இட்டு ஞானத்தை காய்ச்ச, நான் எனும் உணர்வு சிறிது சிறிதாக மறைய, இறையுணர்வு மட்டும் கட்டியாக தங்கி விடுகின்றது. இவ்வாறு நாடி பெறுவதற்கு அரிய வழியாக ஞானமும், ஞானத்தை அடையும் பயனாக இறைவன் இருப்பதையும் நாடற்கரிய நலம் என்று அடிகளார் குறிப்பிடுகின்றார். அதே சமயத்தில் தேன் என்றும் பழச்சுவை என்றும் இறைவனுக்கு உவமை கூறுகின்றார். நந்தா என்றால் கெடாத் தேன் என்று பொருள். தேனை எடுப்பதற்கும் வேடுவர்கள் பலவிதமாக உழைக்கின்றனர். மரத்தில் தொங்கும் தேன் கூடுகளை சுற்றி பாதுகாக்கும் தேனீக்களின் கடியில் அகப்படாமல் தேனை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் தேனும் மகரந்தப் பொடிகள், சிறு இலைகள் மொக்குகள் கலந்து காணப்படும். அவற்றைப் பிரித்து எடுத்தால் தான் நல்ல தேன் கிடைக்கும். பழரசம் என்பது மிகவும் சிறிய முயற்சி எடுத்தாலே கிடைக்கப் பெறுவது. பாகு தேன் பழரசம் ஆகிய மூன்றும் இனிய சுவை தந்தாலும், அவை பெறுவதற்கு உண்டான வழிகள் ஒரே மாதிரி எளிதாக இருப்பதில்லை. அன்பினால் இறைவனை அடையும் வழி மிகவும் எளிதாகவும் விரைவில் கிடைப்பதாகவும் உள்ள நிலை பழச்சுவை என்ற உவமை மூலம் குறிப்பிடப் படுகின்றது. அதுவும் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு என்றால், மிகமிக எளிதாக, விரைவில் கிடைப்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். பெருமானைக் கண்ட ஆறே நாட்களில் பெருமானின் அன்புக்கு பாத்திரமாகி, அவனுக்கு அருகே இடம் பிடித்தவர் கண்ணப்பர். அதனால் தான், கண்ணப்பன் ஒப்பதொர் அன்பு தன்னிடம் இல்லை என்று மணிவாசக அடிகளார் வருந்துவதை நாம் மற்றொரு திருவாசகப் பாடலில் காண்கின்றோம். அன்பின் துணை கொண்டு உணரப்படும் இறைவன், நமது சித்தம் புகுந்து இனிய சிவானந்த உணர்வினை தருவதாக அடிகளார் குறிப்பிடுகின்றார். எனவே அவன் பால் அன்பு வைத்து அவனது திருநாமங்களை மீண்டும்மீண்டும் சொல்லிச்சொல்லி பயனடையுமாறு அறிவுரை கூறுகின்றார். பானல்= கருங்குவளை மலர்கள்; தடம்=அகன்ற; மடந்தை=மகளிர்;
ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை நாடற்கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயினானைச் சித்தம் புகுந்து தித்திக்க வல்ல
கோனைப் பிறப்பறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நாத்தழும்பேற வாழ்த்திப்
பானற் றடங்கண் மடந்தை நல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே
திருவாசகம் பொன்னூசல் பதிகத்தின் பாடலில் (8.16.2) மணிவாசக அடிகளார், அடியார்களின் உள்ளத்தில் தித்தித்து அமுதூறித் தங்கும் பெருமான்,அவர்களது ஊனை உருக்குகின்றார் என்று கூறுகின்றார். இலங்கு=விளங்கும்; மூவாத=மூப்பு அடையாத; தேவர்கள் நரை திரை மூப்பு அடையாதவர்கள் என்று நம்பப் படுகின்றது. அடியார்களின் உள்ளத்தில் நிலையாக தங்கி இருக்கும் பெருமானின் திருவடிகளின் தன்மை இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.
மூன்றங்கு இலங்கு நயனத்தன் மூவாத
வான் தங்கு தேவர்களும் காணா மலரடிகள்
தேன் தங்கி தித்தித்து அமுதூறு தான் தெளிந்தங்கு
ஊன் தங்கி நின்று உருக்கும் உத்தர கோச மங்கைக்
கோன் தங்கு இடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங்கு அன நடையீர் பொன்னூசால் ஆடாமோ
இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் மணிவாசக அடிகளார், அடியார்களின் உள்ளத்தில் அமுதம் ஊறும் வண்ணம் செய்பவர் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். புஞ்சம்=தொகுதி, கூட்டம், மிகவும் அதிகமாக; துஞ்சல்=இறத்தல்; அண்டத்தவர்=தேவர்கள்; மஞ்சு=மேகம்; அஞ்சொலாள்=அம்+சொலாள்; அழகிய சொல்லினை உடைய உமையன்னை; தேவர்களை காக்கும் பொருட்டு, ஆலகால விடத்தை உட்கொண்டு தனது கழுத்தினில் தேக்கிக் கொண்டவனும், தேவர்களின் தலைவனும், மேகங்கள் படியும் வண்ணம் உயர்ந்த மாடங்களைக் கொண்ட உத்தரகோச மங்கை தலத்தினில் உறைபவளும் அழகிய சொல்லினை உடையவளும் ஆகிய உமை அன்னையுடன் கூடி இருப்பவனும், அடியார்களின் நெஞ்சினில் நிலைத்து நின்று அவர்களின் உள்ளத்தில் சிவானந்தத் தேனை சொரிபவனும், அடியார்கள் பால் கருணை கொண்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து அவர்களை விடுவிப்பவனும் ஆகிய பெருமானின் தூய்மையான புகழினை, நெருக்கமாக வெண்மை நிறத்து சங்கு வளையல்களை தங்களது கைகளில் அணிந்து கொண்டுள்ள பெண்மணிகளே, நீங்கள், பாடியவாறு பொன்னூசல் ஆடுவீர்களாக என்று சொல்லி, ஊஞ்சல் விளையாடும் போதிலும் இறை சிந்தனையுடன் இருக்கும் வண்ணம், மணிவாசக அடிகளார் பெண்களை, ஈடுபடுத்தும் பாடல்.
நஞ்சமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்
மஞ்சு தோய் மாடமணி உத்தரகோச மங்கை
அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறி கருணை செய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ் பாடி
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ
நமது சிந்தையில் உள்ள மலத்தினைக் கழுவி தூய்மை செய்யும் ஆற்றல் உடையது சிவானந்தம் என்று திருத்தசாங்கம் பதிகத்தின் பாடலில் (8.19.4) மணிவாசக அடிகளார் கூறுகின்றார். வான் வந்த என்ற தொடரை, ஆனந்தம் என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்ள வேண்டும். வான்=உயர்ந்த இடம்; இழிய=கீழே இறங்குதல்; கிளியினை செல்வீ என்று அழைக்கின்றார். பைஞ்சிறகு= பசுமையான சிறகு;
செய்ய வாய்ப் பைஞ்சிறகிற் செல்வீ நம் சிந்தை சேர்
ஐயன் பெருந்துறையான் ஆறு உரையாய் —- தையலாய்
வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்திழியும்
ஆனந்தம் காண் உடையான் ஆறு
ஏழுலகத்தையும் ஆளும் வண்ணம் உயர்ந்தவனாக இருப்பினும், அடியார்கள் பால் அன்பு வைத்துள்ள பெருமான், அவர்களது உள்ளங்களில் சிவானந்த அமுதத்தை ஊறச் செய்கின்றான் என்று குயில் பத்து பதிகத்தின் பாடலில் (8.18.6) மணிவாசகர் கூறுகின்றார். கொம்பு=மரக்கிளை; மிழற்றும்=கூவும்; தீர்ந்த அன்பு=தலையாய அன்பு;
இன்பம் தருவன் குயிலே ஏழுலகும் முழுதாளி
அன்பன் அமுதளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன்
நன்பொன் மணிச் சுவடு ஒத்த நற்பரி மேல் வருவானைக்
கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி நாதனைக் கூவாய்
திருவாசகம் கோயில் திருப்பதிகத்தின் பாடலில் (8.22.1) மணிவாசக அடிகளார், தன்னில் அமுதமாக ஊறி நின்றவர் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமானை அன்பே என்று மணிவாசகர் அழைப்பதை நாம் இந்த பாடலில் காணலாம். உயிரின் விருப்பத்திற்கு மாறுபட்டு வஞ்சனையாக செயல்படும் ஐந்து புலன்களின் தாக்கத்தை அடக்கி அமுதமாக தனது உள்ளத்தில் ஊறிய இறைவனை, தான் காணுமாறு அருள் புரிய வேண்டும் என்று அடிகளார் இங்கே வேண்டுகின்றார். அன்பே சிவமாகவும், அந்த சிவமே தனது உள்ளத்தில் ஊறும் அமுதமாகவும், அந்த அமுதம் விளைவிக்கும் அளவற்ற இன்பமாவும் இருக்கும் நிலையினை தான் உணர்ந்ததை அடிகளார் இந்த பாடலில் தெரிவிக்கின்றார். தங்களுக்குள்ளே மாறுபட்டு தத்தம் வழியே தன்னை இழுத்துச் செல்ல இடைவிடாது முயற்சி செய்யும் வஞ்சக ஐம்புலன்கள், தன்னைத் தங்களின் வசப்படுத்தும் வழியினை, இறைவனின் உதவியுடன் தான் அடைத்ததால் தனது உள்ளத்தில் பரஞ்சோதி சுடர் விட்டது என்று இந்த பாடலில் அடிகளார் கூறுகின்றார்.
மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழியடைத்து அமுதே
ஊறி நின்று என்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காண வந்து அருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறை உறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே
திருவாசகம் கோயில் திருப்பதிகம் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (8.22.5) மணிவாசக அடிகளார், தன் பால் அன்பு வைக்கும் அடியார்களின் சிந்தையில் தயக்கம் ஏதுமின்றி சிவானந்தத்தை பெருமான் பாய்ச்சுகின்றார் என்று கூறுகின்றார். இந்த பாடலில் கோதிலா அமுது என்று குறிப்பிட்டு மணிவாசகர் அமுதமும் குறை உடையது என்று நமக்கு உணர்த்துகின்றார். அமுதம் உண்ட தேவர்கள் எவரும் இறப்பிலிருந்து தப்பிக்கவில்லை: மேலும் அமுதம் தோன்றிய இடம், நஞ்சு தோன்றிய பாற்கடலாகும். ஆனால் சிவபெருமானோ அத்தகைய குறையேதும் இல்லாதவர். அதனால் தான் அவரை கோதிலா அமுது என்று இங்கே மணிவாசகர் குறிப்பிடுகின்றார். குறையேதும் இல்லாமல் நிறைவாக இருப்பவனும், குற்றங்கள் இல்லாத அமுதமாக இருப்பவனும், முடிவு என்பது இல்லாமல் எப்போதும் தொடர்ந்து எரியும் சுடராக விளங்குபவனும் ஆகிய சிவபெருமான், வேதத்தின் சொற்களாகவும், அந்த சொற்களின் பொருளாகவும் தனது மனதினில் நிலை பெற்று இருப்பதாக மணிவாசகர் கூறுகின்றார். சிறை என்பதற்கு நீரின் போக்கினை தடுத்து நிறுத்தும் கரை என்று பொருள் கொள்ளவேண்டும். நீரின் இயல்பு பொதுவாக பள்ளம் நோக்கி பாய்வது. அவ்வாறு பாய்ந்து தேவைப்படும் சமயத்தில் உதவாமல் நதிகளின் நீர் வீணாக கடலில் சென்று கலந்து விடுவதை தவிர்க்கும் பொருட்டே, கரைகள் உயர்த்தி எழுப்பப் படுகின்றன. தன் பால் அன்பு வைக்கும் உயிர்களின் சிந்தை அனைத்திலும், தங்குதடை ஏதுமின்றி சிவானந்தத் தேனை இறைவன் பாய்ச்சுவதால், அவ்வாறு பாயும் கருணைத் தன்மைக்கு, சிறை பொறா நீர் என்று உவமையாக கூறுகின்றார். கரைகள் ஏதும் இல்லாத நீர் பாய்வது போன்று, தங்கு தடை ஏதும் இன்றி தனது சிந்தையில் ஊறும் சிவபெருமான், தனது உடலில் இடம் கொண்டமையால், தான் இனிமேல் இறைவனிடம் ஏதும் வேண்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் இங்கே உணர்த்துகின்றார். இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும், பெருமானை சீருறு சிந்தை எழுந்ததோர் தேன் என்று அடிகள் அழைக்கின்றார்.
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே
சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே
இறைவனே நீ என் உடல் இடம் கொண்டாய் இனி உன்னை என் இரக்கேனே
திருவாசகம் அடைக்கலப்பத்து பதிகத்தின் பாடலில் (8.24.7) மணிவாசக அடிகளார், பெருமான் தனது உடலினுள்ளே அமுதமாக ஊறி தித்தித்தவர் என்று குறிப்பிடுகின்றார். மின் கண்=ஒளி வீசும் கண்கள்; வெகுளி என்ற சொல் இங்கே ஊடல் என்ற பொருளைத் தரும் வகையில் கையாளப் பட்டுள்ளது. நம் மேல் பொய்யாக கோபம் கொண்டது போன்று ஊடி நின்று, நம்மை அவர்கள் பால் மேலும் ஈர்ப்பு உற செய்வதற்காக ஆடும் நாடகம்; நுடங்கும்=நுண்ணிய;புன்கண்=துன்பம்; புரளுதல்=துடித்தல்; என் கண்=என் பால்; அங்கணன்=அழகிய கண்களை உடையவன்; கருணை நிறைந்த பார்வை தான்,தெய்வங்களுக்கு அழகு சேர்ப்பதாக கருதப் படுகின்றது.
மின் கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டுப்
புன் கணனாய்ப் புரள்வேனைப் புரளாமல் புகுந்தருளி
என் கணிலே அமுதூறித் தித்தித்து என் பிழைக்கு இரங்கும்
அங்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே
திருவாசகம் கண்டப்பத்து பதிகத்தின் முதல் பாடலில் (8.31.1) மணிவாசகர், தனது சிந்தனையை தெளிவாக்கி, தன்னுள் இருந்த சிவத்தன்மையை வெளிப்படுத்தி ஆட்கொண்ட பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அந்தரம்=பல புவனங்கள்; இந்திரியங்களின் வயப்படும் உயிர்கள், தனது விருப்பத்திற்கு மாறாக இந்திரியங்களால் இழுத்துச் செல்லப்பட்டு, மேலும்மேலும் வினைகளை சேர்த்துக் கொள்வதால் அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் வினைகளை கழிப்பதற்காக மேலும்மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றது. இந்த தன்மையே இறப்பதற்கு காரணமாகி அந்தரமே திரிந்து போய் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. அந்த நிலைக்கு செல்லாமல் தன்னை அந்தமிலா ஆனந்தம் தரும் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்பவன் பெருமான் என்று இந்த பாடலில் அடிகளார் கூறுகின்றார்.
இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்து போய் அருநரகில் வீழ்வேனை
சிந்தை தனை தெளிவித்து சிவமாக்கி எனையாண்ட
அந்தமில்லா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே
நாம் அவனது திருவடி பால் வைக்கும் அன்பே சிவமாக மிளிர்கின்றது என்பதை மணிவாசக பெருமானார் பிடித்த பத்து பதிகத்தில் கூறுகின்றார். அன்பினில் விளைந்த ஆரமுது என்று இறைவனை இந்த பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான் நமக்கு ஆரமுதமாக இனிக்க வேண்டும் என்றால், நாம் சிவபெருமான் பால் அன்பு கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக அன்பினில் விளைந்த ஆரமுது என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். பெருமானிடத்தில் நாம் வைக்கும் அன்பு முதிர்ந்த நிலை அடையும் போது சிவானந்தம் விளையும். அந்த சிவானந்தத்தை ஆரமுது என்று மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார். பொய்ம்மை=பொய்யான, நிலையில்லாத பொருட்கள் நிறைந்துள்ள உலக வாழ்க்கை; சுருக்கும்=வீணாக்கும்: பெருமானை நினையாமல், நிலையில்லாத உலக இன்பங்களில் வீழ்ந்து கிடக்கும் நிலையினை பொழுதினை வீணாகக் கழித்தல் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தாய் தந்தையர் தந்த உடலைக் கொண்டு வாழும் இவ்வாழ்க்கை, வினையின் வயப்பட்டது. இறைவன் நம்மை ஆட்கொண்டு முக்தி அளிக்கும் வாழ்க்கை, வினைத் தொகுதிகளின் செயல்பாடுகள் அற்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்வினை அளிக்கும் வல்லமை படைத்த இறைவனை அம்மை என்றும் அப்பன் என்றும் அடிகளார் இந்த பாடலில் அழைக்கின்றார். அழுக்குகள் நிறைந்த, மலங்கள் சூழ்ந்த உடலினை உடைத்த தன்னை, புழுத்தலைப் புலையன் என்று மிகவும் தாழ்வாக கூறிக் கொள்வதை நாம் உணரலாம்.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.6.8) சேந்தனார், என்றும் அழியாத சிவானந்த வெள்ளத்தை ஊறச் செய்யும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் பால் தீராத காதல் கொண்ட தனது மகளின் நிலை பற்றி, அவளது தாய் எடுத்துரைக்கும் அகத்துறைப் பாடல். நவகோடி சித்தபுரம் என்பது இந்த தலத்தின் மற்றொரு பெயர். அதனை உணர்த்தும் பொருட்டு, எண்ணற்ற முனிவர்களால் தொழப்படும் மூர்த்தி என்று பெருமானை சேந்தனார் குறிப்பிடுகின்றார். ஒழிவு ஒன்றிலா= என்றும் அழிவற்றதாக விளங்கும்; உலப்பிலள்=இடைவிடாது சொல்லுபவள்; இன்ப வெள்ளமாக தனது மனதினில் ஊறிக் கொண்டிருக்கும் சிவானந்தத்தை உணர்ந்த, தலைவி, வற்றாத காவிரி நதியையும் தவம் செய்யும் எண்ணற்ற முனிவர்களையும் எண்ணற்ற இறைவனின் திருவுருவங்களையும் தான் கண்டு உணர்ந்ததாக இங்கே கூறுகின்றாள். செல்வ=இறைவனின் திருவுருவங்கள்; சாந்தையூர் என்பது திருவாவடுதுறை தலத்தைச் சார்ந்த மற்றொரு தலம். இத்தகைய நிலை, இழிவு ஏதும் இல்லாமல் பெருமைக்கு உரிய நிலை என்பதால், தனது மகள் பெருமிதம் கொண்டு இறுமாப்புடன் இருப்பதாக அவளது தாய் கூறுவதையும் நாம் உணரலாம்.
ஒழிவு ஒன்றிலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறின்ப வெள்ளமும்
ஒழி ஒன்றிலாப் பொன்னித் தீர்த்தமும் முனி கோடியா மூர்த்தியும்
அழிவு ஒன்றிலாச் செல்வச் சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினான்
இழிவு ஒன்றிலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள மானே
திருமந்திரம் இரண்டாம் தந்திரம் சிவநிந்தை கூடாமை அதிகாரத்தின் பாடலில் திருமூலர் அளிந்து அமுது ஊறிய ஆதிப் பிரான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். விளிந்தவர்= என்றோ ஒரு நாள் அழியும் தன்மையில் உடையவர்; முளிந்தவர்=இருவினைப் போகத்தால்
பல இன்ப துன்பங்களுக்கு ஆளாகி, உலர்ந்து வருந்தும் உடல் கொண்டவர்கள்; பிரமன் திருமால் உட்பட அனைத்து தேவர்களும் அசுரர்களும் வினைவயத்தால் கட்டுண்டு வருந்தி ஒரு நாள் இறப்புக்கு உட்படும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பொதுவாக தேவர்களும் அசுரர்களும், வல்லமை வாய்ந்தவர்களாக கருதப் பட்டாலும், இறப்பு என்பதை தவிர்க்க முடியாதவர்களாக அவர்கள் இருக்கும் நிலை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. மெய்ந் நின்ற=உண்மையான ஞானம்; அஞ்ஞானம், உயிர்களை, இறைவனை உணர முடியாமல் தடுத்து நின்று, உயிரினை மீண்டும்மீண்டும் பல பிறவிகளில் ஆழ்த்தி, வருந்தச் செய்கின்றது; மெய்ஞ் ஞானம், உயிர்களை இறையுணர்வில் ஆழ்த்தி, பிறப்பிறப்பினை நீக்கிக் கொள்ளும் வகையை காட்டுகின்றது. அத்தகைய ஞானம் உடைய உயிர்கள், இறைவன் பால் அன்பு செய்து தங்களது பிறவிப் பிணியினை நீக்கிக் கொள்வதால், குளிர்ந்து காணப்படுகின்றன என்று திருமூலர் இங்கே கூறுகின்றார். தளிதல்=குளிர்தல்; துன்பத்தில் கிடந்து வருத்தத்தில் ஆழ்ந்து இருப்பதை வெய்யிலில் உலர்தல் என்றும் இன்பத்தில் ஆழ்ந்து இருப்பதை குளிர்ந்து இருத்தல் என்றும் சொல்வது இலக்கிய மரபு. மெய்ஞ் ஞானம் வளர்ந்து, தற்போதம் அற்ற நிலையில் பெருமான் அமுதமாக தனது உள்ளத்தில் ஊறி இன்பம் அளிப்பதை, உயிர்கள் உணரலாம் என்று இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார்.
முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந் நின்ற ஞானம் உணரார்
அளிந்து அமுது ஊறிய ஆதிப் பிரானை
தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே
திருமந்திரப் பாடல் ஒன்றினில் (நான்காம் தந்திரம் பூரண சக்தி அதிகாரம்) திருமூலர் தனது அடியார்களுக்கு, அவர்களது சித்தத்தில் ஊறும் பேரின்பமாக பிராட்டி இருக்கின்றாள் என்று கூறுகின்றார். எத்தகைய அடியார்கள் என்பதையும் இந்த பாடலில் திருமூலர் விளக்குவதை நாம் உணரலாம். புறக் கண்களால் காண்பதை விடுத்து, தங்களது அகக் கண்களால் உள்ளே நோக்கி பிராட்டி தங்களுடன் கலந்து இருப்பதை உணரும் அடியார்கள் என்று கூறுகின்றார். ஆறி இருந்த=தனது சக்தியை வெளிப்படுத்தாது பிராட்டி சிவத்துள் அடங்கி இருக்கும் நிலை; மாறி இருந்த=திருவருளாகிய சக்தி முற்பட்டு சிவம் பின்னே இருத்தல்; சிவ என்ற தன்மையிலிருந்து மாறி வசி என்று இருத்தல்; சிவ என்ற எழுத்தில் உள்ள சிகாரம் பெருமானையும் வகாரம் அவனது அருட்சக்தியாகிய பிராட்டியையும் உணர்த்தும் என்பதையும் நாம் அறிவோம். இந்த நிலை தான் உடையாள் நடுவில் பெருமான் இருக்கும் நிலை; தேறி இருந்து=சக்தியின் வழியே சிவனை உணர்தல்; உள்ளுடையார்=தியானம் செய்பவர்; பயோதரம்=ஞானத்தை உள்ளடக்கிய பிராட்டியின் மார்பகங்கள்; பிராட்டியை தியானித்து உணரும் அடியார்களின் புருவ மத்தியில் வெளிப்படும் தீபத்து ஒளியில் பிராட்டி கலந்து இருப்பாள் என்று கூறுகின்றார். அமுத பயோதரி என்ற தொடர்,பிராட்டி எண்ணரிய சிவஞானம் கலந்து திருஞானசம்பந்தருக்கு பால் ஊட்டியதன் பின்னணியை உணர்த்துகின்றது
ஆறி இருந்த அமுத பயோதரி
மாறி இருந்த வழி அறிவார் இல்லை
தேறி இருந்து நல் தீபத்து ஒளியுடன்
ஊறி இருந்தனள் உள்ளுடையார்க்கே
திருமந்திரப் பாடல் ஒன்றினில் திருமூலர் (ஐந்தாம் தந்திரம் கிரியை நான்காம் பாடல்) சித்தம் சிவமயமாக மாறும் தன்மையை குறிப்பிடுகின்றார். துரிசு=குற்றம்; துரிசற்ற=குற்றமற்ற; சரியை மற்றும் கிரியை நெறிகளில் இறைவனை வழிபடும் ஆன்மா, நாளடைவில் யோக நிலையில் ஆட்படுகின்றது. பின்னர் இறையருளால் ஞானம் வாய்க்கப் பெற்று சிவத்தைச் சென்றடைய, ஜீவன் சிவனாக மாறிவிடும் என்று கூறுகின்றார்.
பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குருவருளால் சிவமாகுமே
திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் சிவதரிசனம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர், பெருமானின் உண்மை நிலையினை அறிந்து உணர்கின்ற உயிர்களின் மயிர்க்கால் தோறும் அமுதம் போன்று இனிக்கும் உணர்வு ஊறும் என்று கூறுகின்றார். பெருமான் ஐந்தொழில் செய்யத் திருவுள்ளம் கொள்ளும் போது, அருவம் உருவம் அருவுருவம் ஆகிய மூன்று உருவங்களை எடுக்கின்றார். இந்த மூன்று உருவங்களையும் கடந்தவனாக சொரூப நிலையில் இறைவன் இருக்கும் தன்மை மெய்ஞ் ஞான நூல்களால் குறிப்பிடப் படுகின்றது. இந்த நிலையினை, உயிர்கள் தன்னில் வேறாகவும், உடனாகவும் உணரும் பொழுது,அந்த உயிர்களின் மயிர்க்கால் தோறும் தவறாது ஊறித் ததும்புகின்ற ஆனந்தமே பேரானந்தம் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. பிறழாத=தவறாத; பேதம்=பெருமானை வேறாக உணர்வது; அபேதம்=பெருமானை தன்னில் உடனாக இருக்கும் தன்மையில் உணர்வது;
ஓதின் மயிர்க்கால் தொறும் அமுதூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை
வேதமது ஓதும் சொரூபி தன் மேன்மையே
திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் திருக்கூத்து தரிசனம் அதிகாரத்தின். பாடலில் திருமூலர் பெருமானின் திருக்கூத்தினை காண்போரின் உள்ளத்தில் அமுதம் ஊறும் என்று கூறுகின்றார். புளியைப் பார்த்த போதே ஒருவருக்கு நாவில் நீர் ஊறுவது போல, பரமானந்தத்தை விளைவிக்கும் தில்லைத் திருக்கூத்தைக் கண்டவர்க்கு எல்லாம் கண்களில் நீர் அரும்பும்; ஒருங்கி நிற்கும் உள்ளம் உருகும்; அவ்வுள்ளத்தே அருளொளியும் அந்த ஒளிக்குள் அருளானந்தமும் அமுதும் ஊறி நிற்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
புளிக் கண்டவர்க்கு புனல் ஊறுமா போல்
களிக்கும் திருக்கூத்து கண்டவர்க்கு எல்லாம்
துளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே
பொழிப்புரை:
பல பிறவிகள் எடுத்து வருந்திய பின்னர் இந்த பிறவியிலேனும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளைச் சென்று அடையவேண்டும் என்ற ஏக்கத்துடன் இறைவனின் தொண்டராக மாறும் அடியார்களுக்கு, அவர்களது பிறப்பினைத் தவிர்த்து முக்தி நிலையினை அருள்வதற்கு வழி கோலி, தேனைச் சுவைத்தது போன்று இன்பத்தை அவர்களுக்கு அருளும் பெருமான், அடியேனுக்கும் முக்திநிலை அளித்து ஆட்கொள்ளும் உரிமை பெற்றவனாக விளங்குகின்றான். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை, சிறந்த மாட மாளிகைகள் சூழ்ந்த மணஞ்சேரி தலத்தில் உறையும் இறைவனை, விரும்பி அவனைத் தொழுது நிற்கும் அடியார்களின் வினைகள் முற்றிலும் அழிந்து போகும்.
பாடல் 4:
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் 4, 5, 6(திதே 0474)
விடையானை மேலுலகு ஏழும் இப்பார் எலாம்
உடையானை ஊழி தோறு ஊழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடும் மணஞ்சேரி
அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே
விளக்கம்:
விடை=எருது; விடையான்=எருதினை வாகனமாக உடையவன்; உயிர்களின் அறியாமையை அறுத்தெறிந்து அவர்களின் மனதினில் ஞானத்தை தோற்றுவிப்பதே தனது கடமையாக இறைவன் நினைப்பதால் தான், ஒவ்வொரு ஊழி முடிந்த பின்னரும் உலகினையும் உலகப் பொருட்களையும் தோற்றுவித்து உயிர்களை பல உடல்களுடன் இறைவன் இணைக்கின்றான். அவனைப் பணிந்து வணங்கும் உயிர்களின் அறியாமையாகிய இருள் கிழிக்கப்பட்டு ஞானம் இறைவனால் தோற்றுவிக்கப் படுகின்றது. இதனையே மணிவாசகர் ஞானவாள் ஏந்தும் ஐயர் என்று திருப்படை எழுச்சி பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இறைவனின் புகழினைப் பாடியும் அவனது சிறப்புகளைச் சொல்லி அவனை வாழ்த்தியும் அடியார்கள் இறைவனைக் குறித்து வணங்குவதும் நாதப்பறை அறைதல் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. உலகின் படைப்புக்கே ஆதாரமாக விளங்கும் நாதத்தின் உதவி கொண்டு, நாதத் தலைவனை புகழ்தல் பொருத்தம் தானே. இடபத்தினைத் தவிர்த்து வேறு எந்த விலங்கினையும் இறைவன் தனது வாகனமாகக் கொண்டதில்லை. மணிவாசகப் பெருமானுக்கு அருளும் பொருட்டு குதிரை வியாபாரியாக வந்த பெருமான் குதிரை ஏறி வந்ததை நாம் திருவாசகப் பாடல்கள் மூலம் உணர்கின்றோம். மானம்=பெருமை. மா=விலங்கு, விலங்காகிய குதிரை; அத்தகைய பெருமை வாய்ந்த குதிரையின் மீது ஏறி மதுரை வந்த பெருமானுக்கு, அவனது அருளினால் நமக்கு விளைந்த அறிவு எனப்படும் வெண்குடை ஏந்துவோம், என்றும் அவனது திருநீற்றைக் கவசமாகக் கொண்டு மாயப்படையுடன் நாம் போரிடுவோம் என்றும் கூறுகின்றார். உலகப் பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் நம்மை அவர்களது பாச வலையில் வீழ்த்தி என்றும் அறியாமையில் ஆழ்த்தி முக்தி உலகுக்கு நாம் செல்வதை தடுக்கின்றன. எனவே இந்த படைகளை நாம் போரிட்டு வெல்லவேண்டும். அந்த போருக்கு தேவையான வாள், குடை, பறை, கவசம் ஆகியவை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றன. அந்த கருவிகளை நன்கு பயன்படுத்தி வெற்றி கொண்டு, மாயப் படைகள் நெருங்க முடியாத முக்தி உலகினை அடைவீர் என்று அறிவுரை கூறும் பாடல்.
ஞானவாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்
மானமா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவிமின்
ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்
வான ஊர் கொள்வோம் நாம் மாயப்படை வாரமே
பொழிப்புரை:
எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவனும், நிலவுலகம் மட்டுமன்றி மேலுள்ள ஏழு உலகங்களையும் தனதாகக் கொண்டவனும், ஒவ்வொரு ஊழியிலும் ஞானத்தை தனது படையாக கொண்டு உயிர்களின் அறியாமையை அகற்றுபவனும் பண்ணோடு பொருந்திய இசைப் பாடல்கள் எப்போதும் இசைக்கப்படும் மணஞ்சேரி தலம் வந்தடைந்து ஆங்கே நிலையாக பொருந்தி உறைபவனும் ஆகிய இறைவனின் திருவடிகளைச் சென்றடைந்து சரண் அடையவல்ல அடியார்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் அடையாது.
பாடல் 5:
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் 4, 5, 6(திதே 0474)
எறியார் பூங்கொன்றையினோடு இளமத்தம்
வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைத்தானை
மறி ஆரும் கை உடையானை மணஞ்சேரி
செறிவானைச் செப்ப வல்லார்க்கு இடர் சேராவே
விளக்கம்:
எறி=பறித்தல் என்றும் ஒளி விடுதல் என்றும் இரண்டு விதமான பொருள்கள் உள்ளன. பறித்தல் என்ற பொருள் இங்கே பொருத்தமாக உள்ளது. அன்று பறித்த என்று பொருள் கொள்ள வேண்டும்; அன்று மலர்ந்த மலர்கள் வீசும் ஒளி, அடுத்த நாளில் மங்குவதையும் நாம் காண்கின்றோம். வெறி=மணம் விரிதல்; மிலைத்தல்=சூட்டிக் கொள்ளுதல்; செறிதல்= நெருங்குதல்; வெறி ஆரும் செஞ்சடை என்று பெருமானின் சடைமுடி இயற்கையில் நறுமணம் வீசுவதாக இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பிராட்டியின் கூந்தல் இயற்கை நறுமணம் கொண்டது போல், பெருமானின் சடை முடியும் நறுமணத்துடன் விளங்கியதை அவர் உணர்ந்தார் போலும்.
பொழிப்புரை:
அன்று பறிக்கப்பட்ட ஒளி வீசும் கொன்றை மலர்களுடன் இளமையான ஊமத்தை மலர்களை, இயற்கையாகவே நறுமணம் வீசும் தனது செஞ்சடையில் பொருந்தும் வண்ணம் சூட்டிக் கொண்டவனும், துள்ளி விளையாடும் மான்கன்று பொருந்திய கையினை உடையவனும், திருமணஞ்சேரி தலத்தினை நெருங்கி அடைந்து உறைபவனும் ஆகிய பெருமானின் திருநாமங்களையும் அவனது புகழினையும் சொல்ல வல்ல அடியார்களை, துன்பங்கள் வந்து அடையாது.
பாடல் 6:
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் 4, 5, 6(திதே 0474)
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல் 6 தொடர்ச்சி (திதே 0475)
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல் 6 தொடர்ச்சி (திதே 0476)
மொழியானை முன்னொரு நான்மறை ஆறங்கம்
பழியாமைப் பண்ணிசையான பகர்வானை
வழியானை வானவர் ஏத்து மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே
விளக்கம்:
வடமொழியாகவும் தமிழ் மொழியாகவும் பெருமான் இருக்கும் தன்மை மொழியானை என்ற சொல் மூலம் குறிப்பிடப் படுவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். உலகத்தில் தோன்றிய முதல் இரண்டு மொழிகளாக தமிழும் வடமொழியும் கருதப் படுகின்றன. மேலும் இந்த இரண்டு மொழிகளும் மிகவும் சிறப்பு வாய்ந்த மொழிகளாகவும் உள்ளன. வடமொழியில் வேதங்கள் அருளியவன் சிவபெருமான். மேலும் சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டின் அரசனாக இருந்து, தமிழ் சங்கத்தில் பங்கேற்று தமிழ் மொழியை வளர்த்த பெருமான், அகத்தியருக்கு, இன்னம்பர் தலத்தில் தமிழ் இலக்கணம் கற்பித்ததாக கருதப் படுகின்றது. அகத்தியர் இயற்றிய அகத்தியம் எனப்படும் நூலே தமிழ் இலக்கணத்திற்கான முதல் நூல் என்றும், தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக விளங்கியது அகத்தியம் என்று கூறுவார்கள்.
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.23.5) பெருமானை ஆரியன் என்றும் தமிழன் என்றும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மூரி=மிகுந்த ஒலி; ஏரி நிறைந்தனைய செல்வன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு, ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு என்று வள்ளுவப் பெருந்தகை கூறிய திருக்குறளை நினைவூட்டுகின்றது. பேரறிவு படைத்த பெருமானது செல்வமாகிய முக்திச் செல்வமும், பக்குவமடைந்த அடியார்கள் அனைவர்க்கும் பயன்படுவதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். வாரி=வெள்ளம்; மிகுந்த ஒலியுடன் கரையில் மோதும் அலைகள் உடைய நீராக இருப்பவனும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தில் திருமேனியை உடையவனும், அனைவர்க்கும் முதல்வனாக இருப்பவனும், நீர் நிறைந்த ஏரி ஊரில் உள்ள அனைவர்க்கும் பயன்படுவது போன்று, தன்னிடம் உள்ள முக்திச் செல்வத்தை பக்குவம் அடைந்த சிறந்த அடியார்கள் அனைவர்க்கும் அளித்து அவர்களை நிலையான பேரின்பத்தில் ஆழ்த்துபவனும், வடமொழியாகவும் தமிழ் மொழியாகவும் இருப்பவனும், திருவண்ணாமலையில் உறையும் அண்ணலாக இருப்பவனும், வெள்ளம் போன்று மதநீரினைப் பெருக்கும் யானை போன்று மிகுந்த கருணை உள்ளம் படைத்தவனாக அனைத்து உயிர்களுக்கும் பல நன்மைகள் செய்பவனும், ஆகிய இறைவன், திருமறைக்காடு தலத்தில் மணாளனாக திகழ்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை
மூரி முழங்கொலி நீர் ஆனான் கண்டாய் முழுத் தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன்னடியார்க்கு இன்பம் விளைப்பான்கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையெம் அண்ணல்கண்டாய்
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே
சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.87.1) அப்பர் பிரான் வடமொழியாகவும் தென் மொழியாகவும் இருப்பவன் இறைவன் என்று உணர்த்துவதை நாம் கீழ்க்கண்ட பாடல் மூலம் அறியலாம். தேவர்களுள் ஒருவனாக பெருமான் இருப்பது போல் தோன்றினாலும், அவனை தேவன் என்று கருதக் கூடாது, தேவர்களுக்கும் தலைவனாக இருப்பவன் அவன் என்பதை உணர்த்தும் பொருட்டு, வானவர்க்கும் மேலானான் காண் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுவதை நாம் உணரலாம்.
வானவன் காண் வானவர்க்கும் மேலானான் காண் வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் ஆனைந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தியாடும்
கானவன் காண் கானவனுக்கு அருள் செய்தான் காண் கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும்
தேனவன் காண் சென்றடையாச் செல்வன் தான் காண்’ சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே
அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.77.4) திருஞானசம்பந்தர், அடியார்கள் தங்களால் இயன்ற அளவு வடமொழியிலும் தமிழ் மொழியிலும் சொல்லும் தோத்திரங்கள் பெருமானின் திருவடிகளைச் சென்று சேர்கின்றன என்று கூறுகின்றார். தோத்திரப் பாடல்களை மனம் ஒன்றி சொல்லி பெருமானின் திருவடிகளை வழிபடும் அடியார்கள் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம், நாம் சொல்லும் தோத்திரங்கள், எந்த மொழியில் அமைந்திருந்தாலும் அதன் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்கு சம்பந்தர் உணர்த்துகின்றார். அவ்வாறு பொருள் தெரிந்து கொண்டால் தானே, நம்மால் மனம் ஒன்றி இறை வழிபாட்டில் ஈடுபடமுடியும். .
மைம்மலர்க் கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினர் எனவும்
செம்மலர்ப் பிறையும் சிறை அணி புனலும் சென்னி மேலுடையர் எம் சென்னி மேல் உறைவார்
தம் மலரடி ஒன்றி அடியவர் பரவத் தமிழ் சொலும் வடசொலும் தாள் நிழல் சேர
அம்மலர் கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே
புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.92.7) திருஞான சம்பந்தர், அடியார்கள் தமிழ் மொழியிலும் வடமொழியிலும் இசைப் பாடல்கள் பாடுகின்றனர் என்று குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு, பண்டைய நாளில், அடியார்கள், வேறுபாடு இன்றி, இரண்டு மொழிகளிலும் உள்ள பாடல்களை பாடியும், வேறு பல ,மொழிகளில் உள்ள பாடல்களை பாடியும், இறைவனை போற்றி வழிபட்டனர் என்பதை நாம் உணருகின்றோம். இத்தகைய பாடல்களை பாடிய அடியார்களின் நோக்கம், தங்களது மனதினில் இருக்கும் அறியாமை அகன்று மெய்ஞ்ஞானம் திகழ வேண்டும் என்பதே ஆகும். அஞ்சனம்=மை; விஞ்சமர்=மேலான; வேதங்கள் வடமொழியில் தோன்றியமையால், மேலான வடமொழி என்று கூறினார் போலும்.
தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்துத்
துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல் புகலூரில்
அஞ்சனம் பிதிர்ந்தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே
குடமூக்கு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.59.2) திருஞானசம்பந்தர், இந்த தலத்தினை வடமொழி தோத்திரங்களும் தமிழ் மொழிப் பாடல்களும் இடைவிடாது இசைக்கப்படும் தலம் என்று குறிப்பிடுகின்றார். வேதங்கள் பக்தியுடன் ஓதப்படுவதால் ஓத்து என்று வேதங்கள் அழைக்கப் படுகின்றன. குழுவாக சேர்ந்து வேதங்களை ஓதும் வழக்கம், இன்றிருப்பதைப் போன்று, பண்டைய நாளிலும் பழக்கத்தில் இருந்த நிலையினை இந்த பாடல் உணர்த்துகின்றது. அரவம் என்றால் ஒலி என்று பொருள். அரவங்கள் என்று பன்மையில் சொல்லியபடியால் பலர் ஒன்று சேர்ந்து கூட்டமாக வேதங்கள் ஓதினார்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இன்றும் பல வேத பாடசாலைகள் கொண்டுள்ள குடந்தை நகரம், பண்டைய நாளிலும் வேத பாடசாலைகளும் வேத விற்பன்னர்களும் மிகுதியாக கொண்டிருந்த தலமாக விளங்கியது போலும். வேதங்கள் இறைவனை வழிபட்ட இடம் என்பதை உணர்த்தும் முகமாக திருவோத்தூர் என்றே தொண்டை நாட்டில் ஓரு தேவாரத் தலம் அழைக்கப் படுகின்றது. முதல் அடியில் உள்ள அரவங்கள் என்ற சொல் வேத மந்திரங்களை குறிப்பிடுவது போன்று இரண்டாவது அடியில் உள்ள அரவங்கள் என்ற சொல் பெருமானின் திருநாமங்களை சொல்வதாலும் தேவார பதிகங்களை பாடுவதாலும் ஏற்படும் ஓசைகளை உணர்த்துகின்றன என்று பொருள் கொள்வது சிறப்பு. தேவார முதலிகள் மூவரும், வடமொழியை வெறுக்கவில்லை; மாறாக பெருமான் வடமொழியாகவும் தென் தமிழ் மொழியாகவும் இருக்கின்றார் என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர். குழுவாக ஒன்று சேர்ந்து வேதங்கள் ஓதப்படும் ஒலிகளுடன், காவரி நதி பாய்ந்து வரும் ஆரவாரமும் சேர்ந்து ஒலிக்கும் பின்னணியில், பூக்கள் கொண்டு தூபம் தீபம் காட்டியும் பெருமானின் திருவடிகளை வழிபடும் அடியார்கள் பெருமானைப் போற்றி பாடும் தேவார இசைப் பாடல்களின் ஒலியும், அர அர அவனது திருநாமங்களை பலரும் சேர்ந்து சொல்லும் ஓசையும் இணைகின்றன. கேட்போர் மனதினுக்கு இனியவையாக திகழும் இந்த சூழ்நிலையில் இடைவிடாத ஆரவாரத்துடன் இறைவன் திருநடனம் புரிகின்றார். அத்தகைய இறைவன், இளமையும் அழகும் ஒருங்கே கொண்டுள்ள இறைவன், குடமூக்கு தலத்தினைத் தனது இடமாகக் கொண்டு உறைகின்றார். அனைவரும் அவனது புகழினைப் பாடல்களாக பாட, குடமூக்கு தலத்தில் வீற்றிருக்கும் இறைவனே எமது தலைவன் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து அயலே
பூத்து அரவங்களோடும் புகை கொண்டடி போற்றி நல்ல
கூத்து அரவங்கள் ஓவாக் குழகன் குடமூக்கு இடமா
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே
கடம்பந்துறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.18.3) அப்பர் பிரான் ஆரியம் தமிழோடு இசை ஆனவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். கூரிய= சிறந்த; உலக சிற்றின்பங்களில் ஆழ்ந்து வாழ்க்கையினை வீணாக கழிக்கும் மனிதர்களுக்கு இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் அறிவுரை கூறிய அப்பர் பிரான், அடியார்களை அழைத்து கூறும் பாடல் இது. இந்த தலம் சென்றடைந்து இறைவனைப் பணிந்து, தங்களுக்கு தெரிந்த தோத்திரங்களையும் பாடல்களையும் பாடி, இறைவனின் அருளினைப் பெறுமாறு நம்மை அப்பர் பிரான் வழிநடத்தும் பாடல். காரிகை=அழகான பெண், இங்கே பார்வதி தேவி; குறி=இலக்கு, எல்லை; இந்த பாடலில் சீரியல் பத்தர் என்று, சிறந்த இயல்புகளை உடைய பத்தர்கள் என்று, சிவனடியார்கள் சிறப்பான பத்து குணங்களை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புற குணங்கள் என்றும் பிரிக்கின்றனர். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவசரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் உணவு உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும் போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும். வடமொழியாகவும் தமிழ் மொழியாகவும் நல்ல இசையாகவும் இருப்பவனும், சிறந்த குணத்தினை உடைய அடியார்கள் தாம் சென்று அடைய விரும்பும் இலக்காக இருப்பவனும், அழகிய பெண்ணாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக உடையவனும், கடம்பந்துறை இறைவனும் ஆகிய பெருமானை, சிறப்பு மிக்க பத்து குணங்களை உடைய அடியார்களாகிய நீங்கள் சென்று அடைவீர்களாக என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.
ஆரியம் தமிழோடு இசை ஆனவன்
கூரிய குணத்தார் குறி நின்றவன்
காரிகை உடையான் கடம்பந்துறை
சீரியல் பத்தர் சென்று அடைமின்களே
திருமூலரும் ஆகமச் சிறப்பு அதிகாரத்தில் இடம்பெறும் மந்திரம் ஒன்றினில், ஆரியமும் தமிழும் உமையம்மைக்கு சொன்னவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு உமை அம்மைக்கு சொல்லியதன் நோக்கமும், இந்த பாடலில் கூறப்படுகின்றது. புலன் உணர்வினால் ஆட்கொள்ளப்பட்டு அல்லலுறும் உயிர்கள் தங்கள் அறியாமை நீங்கி மெய்ந்நெறியில் செல்லும் வழியினை உணர்த்தும் வடமொழி மற்றும் தமிழ் நூல்களை கற்றறிந்து உய்வினை அடையவேண்டும் என்பதே அந்த நோக்கம் ஆகும். இந்த இரண்டு மொழிகள் மட்டும், இங்கே குறிப்பிட்டு மக்களுக்கு உய்வினை அளிக்கும் மொழிகள் என்று திருமூலர் குறிப்பிட்டது, உண்மையான ஞானத்தை தரும் நூல்கள் இந்த இரண்டு மொழிகளில் தோன்றுவதற்கு இறைவன் திருவுள்ளம் கொண்டிருந்தான் என்பதை நமக்கு உணர்த்துகின்றது. மேலும் வேதங்களும் முதலில் உமையம்மைக்கு சொல்லிய பின்னரே அவற்றை ஏனையோருக்கு பெருமான் உபதேசித்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொலிக்
காரிகையார்க்குக் கருணை செய்தானே
இறைவன் உமையம்மைக்கு சொல்லிய இந்த இரண்டு மொழிகளையும் பாணினி மற்றும் அகத்தியர்க்கு அருளினான் என்று காஞ்சி புராணம் கூறுகின்றது.
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கு இணையாத்
தொடர்பு உடைய தென் மொழியை உலகமெலாம் தொழுது ஏத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்
சீர்காழி தலத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தை (2.11) நல்லான் என்று இறைவனை அழைத்துத் திருஞானசம்பந்தர் தொடங்குகின்றார். நன்மையே வடிவான இறைவன் என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வேதங்களிலும் அதன் ஆறு அங்கங்களிலும் வல்லவனாக உள்ள பெருமான், வேதங்களில் காணப்படும் துதிகளின் வடிவமாகவும் உள்ளார் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். வல்லவர்=வேதங்கள் மற்றும் ஆறு அங்கங்களில் வல்லவராக திகழ்ந்த அந்தணர்கள்; அந்தணர்கள் சொல்லிய வேதங்களின் சொற்களாக இருப்பவன் பெருமான் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.
நல்லானை நான்மறையோடு இயல் ஆறங்கம்
வல்லானை வல்லவர் பால் மலிந்து ஓங்கிய
சொல்லானைத் தொல் மதில் காழியே கோயிலாம்
இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.7.7) அப்பர் பிரான், பெருமான் சொல்லாகவும் அந்த சொற்கள் உணர்த்தும் பொருளாகவும் இருக்கின்றான் என்று கூறுகின்றார். துகள்=களங்கம்: நல்லான்=நலம் உடையவன். சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம்(நலன்) என்று பொருள். சிவன் என்ற வடமொழிச் சொல்லுக்கு இணையான பொருள் தரும் வகையில் அப்பர் பிரான் நல்லான் என்ற சொல்லினை கையாண்டு இருக்கின்றார். நிறைந்த மங்கலத்தைத் தரக்கூடியவனும், நலன்களைத் தரக்கூடிய நான்மறைகளிலும் வேதங்களின் ஆறு அங்கங்களிலும் வல்லவனாகத் திகழ்பவனும் ஆகிய சிவபெருமான், தன்னை உணரவல்லும், நினைக்கவல்லும் அடியார்களின் மனத்தினில் உறைகின்றான். மிகுந்த வல்லமை உடைய அவன், சொல்லாகவும், சொற்கள் உணர்த்தும் பொருளாகவும் உள்ளான். களங்கம் ஏதும் இல்லாத அவனை, நான் எனது மனத்தினில் வைத்துள்ளேன் என்று அப்பர் பிரான் மிகுந்த பெருமிதத்துடன் சொல்லும் பாடல்.
நல்லானை நல்லான நான்மறையோடு ஆறங்கம்
வல்லானை வல்லார் கண் மனத்து உறையும் மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்
இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தேனே
சொல்லாக இருக்கும் பெருமான், அந்த சொற்கள் விளக்கும் பொருளாகவும் இருக்கின்றான் என்று அப்பர் பிரான் நமச்சிவாயப் பதிகத்தின் பாடலில் (4.11.8) குறிப்பிடுகின்றார். இல்=இல்லம். நமது உடல், உயிர் குடி கொண்டிருக்கும் இடம் இல்லம் என்று இங்கே அழைக்கப் படுகின்றது. நமது உடலில் உள்ள மனத்தில் நமச்சிவாய மந்திரம் துதிக்கப்பட்டு ஞான விளக்கு ஏற்றி வைக்கப் பட்டால் நம்மைப் பிணித்திருக்கும் அறியாமை என்ற இருள் விலகுகின்றது. சிவபிரான் சொற்களுக்குத் துணையாக இருக்கும் நிலை, இதே பதிகத்தின் முதல் பாடலிலும், சொற்றுணை வேதியன் என்ற தொடர் மூலம்கூறப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களுடனும் சிவபெருமான் கலந்து இருப்பதால் பல்லக விளக்கு என்று கூறப்பட்டுள்ளது. நமச்சிவாய மந்திரம், நமது உள்ளத்தில் ஞான விளக்காக நின்று நம்மை பிணைத்திருக்கும் மலங்களை அகற்றும்; சொற்களுக்குத் துணையாக நின்று சொற்களுக்குப் பொருளை அளிக்கும்; என்றும் நிலைத்து நிற்பது, பல்லாயிரக் கணக்கான உயிர்களின் உள்ளே நிற்பது; பக்குவப் பட்ட நிலையில் நின்று பாசங்களை அறுத்த பலரும் காண்பது: நல்ல உள்ளங்களில் வீற்றிருப்பது ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே
சொல்லாகவும் சொல்லின் பொருளாகவும் இருப்பவர் பெருமான் என்று அப்பர் பிரான், சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.41.3) குறிப்பிடுகின்றார். பல் இலம் திரியும் செல்வர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது செல்வராக இருப்பினும் உலகத்தவரின் நலன் கருதி, பக்குவப்பட்ட உயிர்களுக்கு முக்தி அளிக்கும் வண்ணம், பலியேற்கின்றார் என்றும் தனக்கு கிடைக்கும் பிச்சையாக பெரிய செல்வமாக உகந்து ஏற்றுக் கொண்டு மகிழ்கின்றார் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டு விளக்கங்களும் மிகவும் பொருத்தமாக உள்ளன. கல்=மேரு மலை; மேரு மலையை வில்லாக வளைத்து திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற நிகழ்ச்சி குறிப்பிடப் பட்டுள்ளது. இலம்=இல்லம் என்பதன் திரிபு. சொல்=வேதங்களில் சொல்லப்படும் சொற்கள் என்று பொருள் கொள்வது மிகவும் சிறப்பு. மேரு மலையை வில்லாக வளைத்து, ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் எரித்த சிவபெருமானை, என்றும் குறையாத அன்பினோடு அவரை இரவும் பகலும் உங்கள் உள்ளத்தில் தியானித்து, ஏகாந்தமாக இருந்து வழிபடுவீராக. பல் இல்லாத வெண் தலையை, பிச்சைப் பாத்திரமாக ஏந்தி பல வீடுகளுக்கு செல்லும் சிவபெருமான், உண்மையில் செல்வராவார். எவரிடமும் இல்லாத முக்தி எனப்படும் வீடுபேறு செல்வம், அவரிடம் உள்ளது. எனவே அவரை விட செல்வர் வேறு எவரும் இல்லை. வேதமாகவும் வேதத்தின் கருத்துப் பொருளாகவும் உள்ள சிவபெருமான் சோற்றுத்துறையில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் கருத்து.
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே
எல்லியும் பகலும் முன்னே ஏகாந்தமாக ஏத்தும்
பல்லில் வெண்தலை கையேந்திப் பல் இலம் திரியும் செல்வர்
சொல்லு நன் பொருளும் ஆவார் திருச்சோற்றுத்துறையனாரே
சொற்களாக இருப்பவன் பெருமான் என்று உணர்த்தும் விதமாக, சொல்லன் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (5.17.4). நல்லன்=நன்மையே வடிவானவன்; கல்=மலை, இங்கே கயிலாய மலை; கல்லன்=மலையை உடையவன்: சொல்லன் என்பதற்கு திருவைந்தெழுத்தினைத் தனது திருநாமமாக உடையவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நன்மையே வடிவமாக உள்ளவனும், புகழுடன் விளங்கும் நான்கு வேதங்களை நன்கு அறிந்தவனும், வேதங்களில் காணப்படும் சொற்களாக உள்ளவனும், ஒளி வடிவாக உள்ளவனும், சூரியன் போன்று ஒளி விட்டு கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனும், வல்லமை வாய்ந்த காவல்களை உடைய மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்த வில்லினை உடையவனும் ஆகிய பெருமானை, அடியேன் நேற்று, வெண்ணி என்று அழைக்கப்படும் தலத்தில் கண்டேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
நல்லனைத் திகழ் நான்மறை ஓதியைச்
சொல்லனைச் சுடரைச் சுடர் போல் ஒளிர்
கல்லனைக் கடி மா மதில் மூன்று எய்த
வில்லனை நெருநல் கண்ட வெண்ணியே
அருளாயின சொல்லன் என்று குறிப்பிட்டு எழுதாக் கிளவியாக விளங்கும் வேதங்களில் காணப்படும் சொல்லாக உள்ளவன் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல் திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (5.68.8). பல வடமொழி காவியங்கள் ஓலைச் சுவடியில் எழுதப்பட்டன. மகாபாரதம். வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமான், தனது தந்தத்தை முறித்து அதன் கூர்மையான நுனியால் ஓலைச் சுவடிகளில் எழுதியதாக கூறுவார்கள். ஆனால் காலத்தால் அனைத்து காவியங்களுக்கும் முற்பட்டது என்று கருதப்படும் வேதங்கள் அவ்வாறு ஓலைச் சுவடிகளில் எழுதப் படவில்லை. ஒவ்வொரு தலைமுறையாக, குரு தனது சீடர்களுக்கு வாய்மொழியாக சொல்லிக் கொடுத்தவை வேதங்கள். எனவே அதனை எழுதாக் கிளவி என்று கூறுவார்கள். இவ்வாறு வெளிப்படையாக இல்லாமல், மறைத்து வைக்கப்பட்டு, வாய் மொழியாக ஒருவரிடமிருந்து மற்றொருவர் (குருவிடமிருந்து சீடன்) கற்றுக் கொள்வதை உணர்த்தும் முகமாக மறை என்று மிகவும் அழகாக தமிழில் வேதங்களை அழைக்கின்றனர் என்று தெய்வத்தின் குரலில் காஞ்சி மகா பெரியவர் குறிப்பிடுகின்றார். அலர்=அல்லாதார், நல்லவர் அல்லாதார். சனகாதி முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை அருளிச் செய்த சொற்களை உடையவன் என்றும், எழுதாக் கிளவியாக விளங்கும் வேதங்களின் பொருளாக உள்ள சோதியான் என்றும் வல்லவன் என்றும் சிவபெருமானை துதிக்க வல்ல அடியார்கள் தங்களது வாழ்வினில் வளம் மிகுந்தவராக வாழ்வார்கள். அத்தகைய நல்லவர்களுக்கு நல்லவனாக என்றும் துணை நிற்பவன் திருநள்ளாறு தலத்தில் உறையும் இறைவன் ஆவான். அவ்வாறு நல்லவர்களாக இல்லாதவர்களுக்கு இறைவனும் நல்லவனாக இருக்க மாட்டான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அல்லன் என்றும் அலர்க்கு அருளாயின
சொல்லன் என்றும் சொல்லா மறைச் சோதியான்
வல்லன் என்றும் வல்லார் வளம் மிக்கவர்
நல்லன் என்றும் நல்லார்க்கு நள்ளாறனே
புனிதமான வேதங்களில் உள்ள சொற்களாக உள்ளவன் பெருமான் என்று திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.20.8) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சொல்லான்=சொற்களின் கண் உள்ளவன்; சொல் என்பது வேதங்களில் இடம் பெரும் சொற்களை குறிக்கும். புனிதமான வேதங்களில் காணப்படும் சொற்களின் உள்ளே இருப்பவனும், சுடர் விட்டு ஒளி வீசும் பவளம் போன்ற சிவந்த திருமேனியை உடையவனும், பண்டைய நாளில் திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்து வந்த மூன்று கோட்டைகளையும் வெற்றி கொண்டு எரியச் செய்த வில்லினை ஏந்தியவனும், அனைத்து உயிர்களிலும் மேம்பட்டவனும், மென்மையான உடலும் குணங்களும் வாய்க்கப் பெற்ற உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், நான்கு வேதங்களின் பொருளையும் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் விளக்கம் அளித்தவனும், திருக்காளத்தி மற்றும் திருக்கயிலை மலைகளில் பொருந்தி உறைபவனும், அடியார்கள் அனைவர்க்கும் நன்மை பயப்பவனும், எனது தலைவனும், திருநள்ளாறு தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனை அடியேன் தியானித்து வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் சொல்லும் பாடல்.
சொல்லானைச் சுடர்ப் பவளச் சோதியானைத் தொல்லவுணர் புரம் மூன்றும் எரியச் செற்ற
வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும்
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானைக் காளத்தியானைக் கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.28.6) அப்பர் பிரான் சொல்லாகி சொற்பொருளாய் நிற்பவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சோமன்=சந்திரன்: ஆ=தண்ணீர், இங்கே கங்கை நதியை குறிப்பிடுகின்றது; நா மன்னும் மற்று ஆ மன்னும் எனப்படும் சொற்கள், நாமனையும் என்றும் ஆமனையும் என்று, எதுகை கருதி திரிந்தன. தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதனின் உடலினை நெற்றிக் கண்ணால் விழித்து நோக்கி எரித்தவராகவும், கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினைத் தனது கழுத்தினில் அடக்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவராகவும், சந்திரனைத் தனது செஞ்சடையில் வைத்தவராகவும், சொல்லாகவும் அந்த சொற்களின் பொருளாகவும் இருப்பவராகவும், வேதங்கள் பொருந்தி நிற்கும் நாவினை உடையவராகவும், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவராகவும், கங்கை நதி பொருந்தி அடங்கிய சடையை உடையவராகவும் ஆகிய கோலத்தில் அழகிய திருவாரூர் தலத்தின் மூலட்டானத்து பெருமான் எனது மனக்கண்ணுக்கு காட்சி அளிக்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
காமனையும் கரியாக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்
சோமனையும் செஞ்சடை மேல் வைத்தார் போலும் சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்
நாமனையும் வேதத்தார் தாமே போலும் நங்கையோர் பால் மகிழ்ந்த நம்பர் போலும்
ஆமனையும் திருமுடியார் தாமே போலும் அணியாரூர் திருமூலட்டனானாரே
சொற்கள் உணர்த்தும் பொருளாக இருப்பவன் பெருமான் என்று திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.37.10) அப்பர் பிரான் உணர்த்துகின்றார். வில்லாடுதல்= வில்லை பயன்படுத்துதல்; சூழல்=சூழ்ந்து நிற்பன; சொல்லாய சூழல்= சொல்லும் சொற்கள் உணர்த்தும் பொருள்; சுலா=எங்கும் பரந்த நிலை; அல்லா=தடையாக இருக்கும்; வில்லைப் பயன்படுத்தும் வேடன் உருவத்தில் தோன்றி அர்ஜுனனுக்கு அருள் புரிந்தவனே, திருமேனி முழுவதும் வெண்ணீறு பூசியவனே, சொல்லாகவும் சொற்கள் உணர்த்தும் பொருளாகவும் இருப்பவனே, எங்கும் பரந்து இருப்பதும் தொன்மையானதும் ஆகிய நன்னெறியாக இருப்பவனே, அடியேனுக்கு எல்லாச் செல்வங்களாகவும் எனது உயிர் போன்று எனக்கு மிகவும் அருமையாகவும் இருப்பவனே, இலங்கை மன்னன் இராவணனின் தோள்களை மலையின் கீழே நெருக்கியவனே, உன்னுடன் இணைவதற்கு தடையாக இருக்கும் எனது வினைகளை தீர்ப்பவனே, திருவையாறு தலத்தில் உறைபவனே என்று உன்னை பலவாறும் வாய்விட்டு அழைத்து அடியேன் மனம் உருகுகின்றேன் என்று அப்பர் பிரான் சொல்லும் பாடல்.
வில்லாடி வேடனே என்றேன் நானே வெண்ணீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே
சொல்லாய சூழலாய் என்றேன் நானே சுலாவாய தொல் நெறியே என்றேன் நானே
எல்லாமாம் என்னுயிரே என்றேன் நானே இலங்கையர் கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே
அல்லா வினை தீர்க்கும் ஐயாறு அன்னே என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
சொல்லாகவும் அதன் பொருளாகவும் இருப்பவன் பெருமான் என்று நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.41.3) அப்பர் பிரான் கூறுகின்றார். அல்=இரவு: செல்வாய்= நடப்பித்தல்; பொருளால், அதாவது செல்வத்தால் தான், உலகில் அனைத்தும் இயங்குகின்றன என்பதை உணர்த்தும் பொருட்டு செல்வாய்த் திரு என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பகலாகவும் இரவாகவும் இருப்பவனும், தொன்மை வாய்ந்த கயிலாய மலையில் உறைபவனும், கல்லால மரத்தின் கீழே அமர்ந்து நால்வர்க்கு அறம் உணர்த்தியவனும், திருக்காளத்தி தலத்தில் அடியார்கள் வேண்டும் வரமனைத்தும் அளிக்கும் கற்பகமாக இருப்பவனும், சொற்களாகவும் சொற்கள் உணர்த்தும் பொருளாகவும் இருப்பவனும், சோற்றுத்துறை தலத்தில் உறைபவனும், உலகினில் பல செயல்களும் நடப்பதற்கு மூல காரணமாக உள்ள செல்வமாக இருப்பவனும் ஆகிய பெருமானாகிய நீ, நெய்த்தானம் தலத்தில் நிற்கின்றாய். நீ எனது நெஞ்சினில் நிறைந்து நிற்கின்றாய் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.
அல்லாய்ப் பகலானாய் நீயே என்றும் ஆதிக்கயிலாயன் நீயே என்றும்
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்திக் கற்பகமும் நீயே என்றும்
சொல்லாய்ப் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறையாய் நீயே என்றும்
செல்வாய்த் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சுளாயே
ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.46.3) அப்பர் பிரான், பெருமானை, சொல்லுவார் சொற்பொருளின் தோற்றமாகி இருப்பவர் என்று கூறுகின்றார். விதையிலிருந்து முதலில் தோன்றுவது முளை. முளைத்த பின்னர் தோன்றுவது வேர். எனவே வித்து முளை வேர் என்று வரிசைப் படுத்தும் பாங்கினை நாம் இந்த பாடலில் உணரலாம். அடியார்களின் உள்ளத்தை தான் உறையும் இடமாக பாவித்து அங்கே உறைபவனும், பவளக் கொழுந்தாகவும் மாணிக்கக் குவியலாகவும் மிகவும் அரிதாகத் திகழ்பவனும், தூய்மையான நல்ல நெறியாக நிற்பவனும். தன்னை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் தன்னை புகழ்ந்து சொல்லும் அடியார்களின் சொற்கள் தோன்றுவதற்கு ஏதுவாக அவர்களின் உள்ளத்தில் உணர்வாக இருப்பவனும், அனைத்துப் பொருட்களுக்கு விதை போன்று மூலமாகவும், விதையிலிருந்து கிளைத்தெழு முளையாகவும். முளை வேரூன்றி வளர்வதற்கு உதவும் வேராகவும் இருந்து பொருட்களை பாதுகாத்து வளரச் செய்பவனும், பொருட்களின் பயனாக இருப்பவனும், ஊழ்வினையின் தொடர்பால் வரும் கொடுமையான துன்பங்களைத் தீர்க்கும் தலைவனாகத் திகழும் பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானைப் பவளக் கொழுந்தினை மாணிக்கத்தின்
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச் சொல்லுவார் சொற்பொருளின் தோற்றமாகி
வித்தினை முளைக் கிளையை வேரைச் சீரை வினை வயத்தின் தன் சார்பை வெய்யத் தீர்க்கும்
அத்தனை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே
வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.48.1) வேத வேள்விச் சொல்லாக இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த பதிகத்தை நல்லான் என்ற சொல்லுடன் அப்பர் பிரான் தொடங்குகின்றார். தலத்து பெருமானின் திருநாமம் (மனத்துணை நாதர்), அடியார்களின் மனதினில் உறைந்து அவர்களுக்கு துணையாக பெருமான் நின்று வழிநடத்துவார் என்பதை உணர்த்துகின்றது. நமக்குத் துணையாக இருந்து நம்மை நல்வழிப் படுத்துபவன் நல்லவனாகத் தானே இருக்க முடியும். இந்த கருத்தினைத் தான், அப்பர் பிரான் நல்லான் என்ற சொல் மூலம் நமக்கு உணர்த்தும் முகமாக பதிகத்தினைத் தொடங்குகின்றார். ஊழிக் காலத்தில் வானவர்கள் உலகம் உட்பட அனைத்து உலகங்களும் அழிந்தாலும் சிவலோகம் அழியாமல் இருப்பதால், தொல்வான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தொன்மையான அந்த சிவலோகத்தை தனது அடியார்களுக்கு ஈயும் கருணை உள்ளம் கொண்டவன் சிவபெருமான் என்று இங்கே கூறப்படுகின்றது. நம்பன்=விரும்பப் படுபவன்; தன்னை வழிபடும் அடியார்களுக்கு நன்மை செய்பவனும், நான்மறைகளின் வடிவமாக இருப்பவனும், அனைவராலும் விரும்பப் படுவானும், சிவநெறியிலிருந்து விலகிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினை எய்தி அழித்தவனும், தேவர்களுக்கும் உயர்ந்தவனாக விளங்குபவனும், மெல்லிய தன்மையை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், வேதங்களில் காணப்படும் மந்திரச் சொற்களாக உள்ளவனும், சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று சுடர்களாக உள்ளவனும், தனக்குத் தொண்டராகி திருத்தொண்டுகள் ஆற்றி வழிபடும் அடியார்களுக்கு தொன்மையான வானுலமாகிய சிவலோகத்தை அளிக்கும் வல்லமை வாயந்தவனும், வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும், வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது மனதினில் நிலையாக உள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேலானான் காண் மெல்லியலாள் பாகன் காண் வேத வேள்விச்
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே
கயிலைத் திருத்தாண்டகத்தின் பாடல் ஒன்றினில் (6.55.7) அப்பர் பிரான், பெருமானை எண்ணாகவும் எழுத்தாகவும் சொல்லாகவும் இருப்பவன் என்று குறிப்பிடுகின்றார். பாவித்தல்= தியானித்தல்; பாவிப்பார்=இறைவனை உள்ளத்தில் தியானிப்பவர். பண்ணாகவும், பண்ணிலிருந்து பிறக்கும் இசையாகவும் நிற்பவனே, உன்னை உள்ளத்தில் தியானிப்பவர்களின் பாவத்தை அறுப்பவனே, எண்ணாகவும், எழுத்தாகவும், எழுத்துக்கள் அடங்கிய சொற்களாகவும் உள்ளவனே, எனது சிந்தையில் நீங்காது இருப்பவனே, விண்ணாகவும், மண்ணாகவும், தீயாகவும், மற்றும் உள்ள நீராகவும், காற்றாகவும் இருப்பவனே, மேலோர்களுக்கேல்லாம் மேலான தலைவனே, கண்ணின் மணியாகத் திகழ்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி
பொழிப்புரை:
வடமொழியாகவும் தென் தமிழ் மொழியாகவும் இருப்பவனும், பண்டைய நாளில் நான்கு வேதங்களையும் அந்த வேதங்களைக் காக்கும் பொருட்டு ஆறு அங்கங்களையும் படைத்தும் அந்த வேதங்களை எவரும் பழியாதவாறு காத்தும், இசையுடன் கலந்து அந்த வேதங்களை பாடுபவனும், நல்ல நெறியில் வாழ்வினை அமைத்துக் கொண்டு செல்ல வழி வகுத்தவனும் ஆகிய பெருமான் விண்ணவர்கள் ஏத்தும் வண்ணம் திருமணஞ்சேரி தலத்தில் வீற்றிருக்கின்றான். அவனை இகழாது புகழ்ந்து ஏத்தும் அடியார்களுக்கு என்றும் இன்பங்களே எய்தும்.
பாடல் 7:
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல்கள் 7, 8 (திதே 0477)
எண்ணானை எண்ணமர் சீர் இமையோர்கட்கு
கண்ணானைக் கண் ஒரு மூன்றும் உடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேச நின்றார் பெரியோர்களே
விளக்கம்:
எண்ணான்=எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டவன்; எண்ணமர்=எண்ணிக்கையில் அடங்கிய, முப்பத்து மூன்று கோடி என்ற எண்ணிக்கையுடைய; பெண்ணான்=மங்கையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவன்; எண்ணான் என்பதற்கு எட்டு குணங்களை உடைய இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அட்ட மூர்த்தியாக எங்கும் வியாபித்து நிற்கும் இறைவன் கீழ்க்கண்ட எட்டு குணங்களை உடையவனாக விளங்குகின்றான். தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். இந்த எட்டு குணங்களே சைவ சித்தாந்தத்தில் சிவபெருமானது குணங்களாக கூறப்படுகின்றன.
பொழிப்புரை:
நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவனும், முப்பத்து முக்கோடி என்ற எண்ணிக்கையினை உடைய சிறந்த தேவர்களால் தங்களது கண்ணாக பாவிக்கப் படுவானும், மூன்று கண்களை உடையவனும், நிலத்தின் வடிவமாக இருப்பவனும், பெரிய வயல்கள் சூழ்ந்த மணஞ்சேரி தலத்தில் உறைபவனும், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய இறைவனைப் புகழ்ந்து பேசும் பாடல்களை பாட வல்ல அடியார்கள் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள்.
பாடல் 8:
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல்கள் 7, 8 (திதே 0477)
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல் 8 தொடர்ச்சி, 9 (திதே 0478)
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டு தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை உடையானை
மடுத்து ஆர வந்து இசை பாடும் மணஞ்சேரி
பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே
விளக்கம்:
எடுத்தான்=கயிலை மலையை எடுத்தவன்; கேடிலாச் செம்மை=என்றும் அழிவில்லாமல் விளங்கும் முக்திச் செல்வம்; மடுத்து=வயிறார உண்டு; முந்தைய பாடலிலும் இந்த பாடலிலும் பெரியோர்களின் தன்மை யாது என்று உணர்த்தப் படுகின்றது. பல திருமுறைப் பாடல்களில் பெரியோர்களின் தன்மை உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
சிவபெருமானின் பெருமையை கற்றவர்களும் கேட்பவர்களும் பெரியோர்கள் என்று, தான் அருளிய முதல் பதிகத்தின் இரண்டாவது பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். முற்றல்= முதிர்ந்த; ஆமை என்பது இங்கே ஆமை ஓட்டினை குறிக்கும். வெகு காலத்திற்கு முன்னர் தோன்றிய கூர்மாவதாரம் என்பதைக் குறிப்பிட முற்றல் ஆமை என்று குறிப்பிட்டார்.; ஏனம்=பன்றி; முளைக் கொம்பு=பன்றியாகிய திருமாலின் வாயினில் பல் போன்று முளைத்த கொம்பு; பூண்டு=ஆபரணமாக அணிந்து கொண்டு; வராக அவதாரம் எடுத்த திருமாலின் பல் அரக்கனின் உடலில் பட்டமையால் அவனது தீய குணங்கள் இவரை ஆட்கொள்ள, அரக்கனைக் கொன்ற பின்னரும் மிகுந்த வெறியுடன் குதித்த போது, அவரது தொல்லை தாளாமல் தேவர்கள் அனைவரும் பெருமானிடம் முறையிட, பெருமான் அந்த பன்றியினை அடக்கி ஆட்கொண்டார். இவ்வாறு பன்றியை அடக்கியதை உணர்த்தும் பொருட்டு, பன்றியின் கொம்பினைத் தனது மார்பினில் பெருமான் ஆபரணமாக அணிந்தார் என்று புராணம் கூறுகின்றது. இளநாகம்=அடிக்கடி தனது சட்டையை உரிப்பதால், நரை திரையின்றி இருக்கும் பாம்பு. பல சதுர் யுகங்களையும் கடந்து நிற்கும் அனந்தன் முதலிய பாம்புகள் இளநாகம் என்று அழைக்கப் படுவதாக சிவக்கவிமணியார் விளக்கம் கூறுகின்றார். வற்றலோடு=தசை வற்றிய ஓடு; பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை பெருமான் கிள்ளியதால், அந்நாள் வரை உடலுடன் கொண்டிருந்த தொடர்பு நீங்கியதால், உலர்ந்து காணப்படும் ஓடு;
முற்றல் ஆமை இளநாகமோடு ஏன முளைக் கொம்பு அவை பூண்டு
வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
புகலூர் திருத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.2.3) திருஞானசம்பந்தர், தன்னைத் தொழுது வணங்கும் பெரியார்களின் மனதினில் பொருந்தி இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களுடன் கலந்து உயிர்களை பெருமான் இயக்குகின்றான் என்றாலும், உயிர்களின் விருப்பத்தில் இறைவன் தலையிடுவதில்லை. உயிர்களுக்கு பூரண சுதந்திரம் அளிக்கும் பெருமான், உயிர்கள் தங்களது விருப்பம் போன்று செயல்பட அனுமதி தந்துள்ளான். அதே உயிர்கள் தன்னை நினைத்து தொழுதால், அந்த உயிர்களின் அடிமனதினில் எப்போதும் தங்கி. அந்த உயிர்கள் இறை உணர்வுடன் இருக்கும் வண்ணம் பெருமான் அருள் புரிகின்றான். இவ்வாறு அருள் புரிவதையே இங்கே ஆவியிலிருந்து நீங்காமல், செயல்படும் இறைவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நிலாவ=விளங்க; இறை=முன்கை; இசை பொருந்திய மறை பாடல்களை பாடுபவனும், முன்கையில் வளையல்கள் அணிந்த பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாதியில் உடையவனும் ஆகிய பெருமானது திருவடிகளை, பெரியோர்கள் தொழுது ஏத்துகின்றனர். அத்தகைய அடியார்களின் உள்மனதினில் நீங்காது இடம் பெறும் இறைவன், புகலூர் தலத்தினில் உறைகின்றான் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
பண் நிலாவும் மறை பாடலினான் இறை சேரும் வளை அங்கைப்
பெண் நிலாவ உடையான் பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த
உள் நிலாவியவர் சிந்தையுள் நீங்கா ஒருவன் இடம் என்பர்
மண் நிலாவும் அடியார் குடிமைத் தொழில் மல்கும் புகலூரே
கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.5.8) திருஞான சம்பந்தர், பெரியோர்களின் தலைவனாக விளங்குபவன் பெருமான் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில் காட்டுப்பள்ளி இறைவனுக்கு ஆட்பட்டு நமது துன்பங்களை போக்கிக் கொள்ளலாம் என்றும் நமது வினைகளை நீக்கிக் கொள்ளலாம் என்றும் அறிவுரை கூறும் திருஞானசம்பந்தர், இறைவனுக்கு ஆட்பட விரும்பும் நாம் முதலில் என்ன செய்யவேண்டும் என்பதை இந்த பாடலில் கூறுகின்றார். பொதுவாக தனது பதிகங்களின் எட்டாவது பாடலில் இராவணனின் கயிலாய நிகழ்ச்சியை குறிப்பிட்டு, அன்று வரை பல குற்றங்களைப் புரிந்தவனாக அரக்கன் இராவணன் இருந்த போதிலும், சாமகானம் பாடி இறைவனிடம் இறைஞ்சியபோது, அவனது குற்றங்களை பொருட்படுத்தாமல் அவனுக்கு பல அருள்கள் புரிந்தவர் பெருமான் என்று பெரும்பாலான பதிகங்களிலும் குறிப்பிட்டு, இந்நாள் வரை பல குற்றங்கள் புரிந்த நாம் பெருமானின் அருளினைப் பெறுவதற்கு தகுதியானவரா என்று தாழ்வு மனப் பான்மை கொண்டு தயக்கத்தினால் பெருமானை வழிபடாமல் நிற்கும் நிலையிலிருந்து மாறி, தயக்கம் ஏதும் கொள்ளாமல், இறைவனை வழிபட்டு பயனடைய வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் குறிப்பிடும் திருஞானசம்பந்தர் அந்த பாணியிலிருந்து வழுவுவதை நாம் இந்த பதிகத்தில் உணரலாம். மற்ற இரண்டு குறிப்புகள், அண்ணாமலை சம்பவம் மற்றும் சமணர் குறித்த குறிப்புகள் ஆகியவை இந்த பதிகத்தின் பத்தாவது பாடலில் காணப்படுகின்றன. இவ்வாறு இராவணனைக் குறிப்பிடாமல், மற்ற இரண்டு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் அரிய பதிகங்களில் இந்த பதிகம் ஒன்றாகும். பெம்மான்= பெருமைக்கு உரிய தலைவன்; வார்=நீண்ட; குரை கழல்=ஒலி எழுப்பும் பாதங்கள்; குறையுடையான் என்பதற்கு அடியார்கள் தங்களது நேர்த்திக் குறையினை நிறைவேற்றிக் கொள்வதற்காக வரும் தலம் காட்டுப்பள்ளி என்று உணர்த்துவதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர். குறை என்பதற்கு எஞ்சிய என்று பொருள் கொண்டு எக்காலத்திலும் அழியாமல் எஞ்சி நிற்கும் தன்மை படைத்த பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பிறைச்சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டவனும், பெரியோர்களால் தங்களது தலைவன் என்று பெருமையுடன் கொண்டாடப் படுபவனும், பெரியோர்களால் நாள்தோறும் போற்றப்படும் வீரக்கழல்கள் பொருந்திய திருப்பாதங்களை உடையவனும், வேதங்களை அருளியவனும், மழுவாட் படையினை உடையவனும், திரிவிக்ரமனாக நீண்டு நெடிது உயர்ந்து மூவுலகினையும் தனது இரண்டு அடிகளால் அளந்த திருமால் பள்ளி கொள்கின்ற பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உட்கொண்டு கழுத்தினில் தேக்கியதால், கருமை நிறம் பொருந்திய கழுத்தினை உடையவனும், தனது தவத்தைக் கலைக்க முயற்சி செய்தான் என்பதற்காக கோபம் கொண்டு நெருப்புப் பொறிகளை உமிழும் நெற்றிக் கண்ணினால் மன்மதனை எரித்தவனும், அன்பர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தனது குறையாக ஏற்றுக்கொண்டு அவற்றை தீர்ப்பவனும், குறுகிய கால்களை உடைய பூதகணங்களைத் தனது படையாகக் கொண்டவனும் ஆகிய இறைவன் காட்டுப்பள்ளி தலத்தில் உறைகின்றான். ஒலி எழுப்பும் கழல்களை அணிந்த அவனது திருப்பாதங்களை, நாம் கைகள் கூப்பி வணங்குவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பிறையுடையான் பெரியோர்கள் பெம்மான் பெய்கழல் நாடொறும் பேணி ஏத்த
மறையுடையான் மழுவாள் உடையான் வார் தரு மால் கடல் நஞ்சம் உண்ட
கறை உடையான் கனலாடு கண்ணால் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளி
குறையுடையான் குறட்பூதச் செல்வன் குரை கழலே கைகள் கூப்பினோமே
வியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.13.10) திருஞானசம்பந்தர், புத்தர்கள் மற்றும் சமணர்களுடன் நட்பு பேணாமல், தொடர்ந்து இறைவனைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை பெரியோர் என்று குறிப்பிடுகின்றார். தடுக்கு=ஓலைப்பாய்; பிடக்கு=பிடகம் எனப்படும் புத்தர்களின் புனித நூல்; சீவரம்=பழுப்பு அல்லது காவி நிறம் ஊட்டப் பெற்ற ஆடை. பனை ஓலைத் தடுக்குகளால் தங்களது உடலை மறைத்துக் கொள்ளும் சமணர்களையும், பழுப்பு அல்லது காவி நிறம் தோய்க்கப்பட்ட ஆடையைத் தங்களது உடலின் மீது போர்த்துக் கொண்டு பிடகம் எனப்படும் நூலின் கருத்துகளை உரைத்து திரியும் புத்தர்களையும் ஒரு பொருட்டாக கருதி அவர்களுடன் நட்பு கொள்வதைத் தவிர்த்து வாழும் நமது பெரியோர்கள், கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினைத் தான் உட்கொண்டு அதன் பின்னர் வந்த அமுதத்தை தேவர்களுக்கு வழங்கி அருள் செய்தவனும், விடையினைத் தனது கொடியில் சித்திரமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய பெருமானை வணங்கி வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபடப்படும் பெருமான் உறையும் இடம் நீர்வளம் மிகுந்த வியலூர் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவர மூடிப்
பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர்
கடல் சேர் தரு விடம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் செய்த
விடை சேர் தரு கொடியான் இடம் விரிநீர் வியலூரே
பேணுபெருந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (1.42.7) திருஞானசம்பந்தர், நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் முறையாக கற்று பிழையின்றி முன்னோர் ஓதிய முறையில் ஓதுவோரை பெரியோர் என்று கூறுகின்றார். விருப்பம் பொருந்திய உள்ளத்தோடு, உச்சரிப்பு பிழையினை தவிர்த்து நன்றாக அமைந்த நாவின் கண், தங்களது வினைகளை இறைவனின் அருளால் அழித்துக் கொள்ளும் நோக்கத்துடன் வேதங்கள் ஓதுகின்றனர் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். விழையார்=விருப்பம் உடையவர்கள்;
விழையார் உள்ள நன்கு எழு நாவில் வினை கெட வேதம் ஆறங்கம்
பிழையா வண்ணம் பண்ணியவாற்றால் பெரியோர் ஏத்தும் பெருமான்
தழையார் மாவின் தாழ் கனி உந்தித் தண் அரிசில் புடை சூழ்ந்து
குழையார் சோலை மென்னடை அன்னம் கூடு பெருந்துறையாரே
விரிந்த சடைமுடியை உடையவரும் எரி போன்று சிவந்த திருமேனியை உடையவரும் ஆகிய மருதவாணரை, தாமதம் ஏதும் செய்யாமல் துதிப்பவர் உலகினில் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள் என்று திருவிடைமருதூர் தலத்து பாடலில் (1.95.4) சம்பந்தர் கூறுகின்றார்.
விரியார் சடை மேனி
எரியார் மருதரைப்
தரியாது ஏத்துவார்
பெரியார் உலகிலே
கள்ளில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.119.2) திருஞானசம்பந்தர், பெரியோர், பெருமானின் புகழினை பரசுவார்கள் என்று கூறுகின்றார். பாடு=பெருமை; அரவம்=பாம்பு; கலன்=உண்கலன்; ஆடல் பாடல்களில் வல்லவனும், பாம்புகளை தனது உடலின் பல இடங்களிலும் அணிகலனாக அணிந்து கொண்டவனும், பிரம கபாலத்தைத் தவிர்த்து வேறு எதனையும் தனது உண்கலனாக கருதாதவனும், காட்டினில் உறைவதையே பழக்கமாகக் கொண்டவனும், கள்ளில் தலத்தில் பொருந்தி உறைபவனும் ஆகிய பெருமானின் புகழினை, பெரியோர்கள் குறிப்பிட்டு வணங்குகின்றனர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
ஓடலால் கலன் இல்லான் உறை பதியால்
காடலால் கருதாத கள்ளின் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசுவாரே
சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.41.2) திருஞானசம்பந்தர், பெருமானை பெரியோர்களின் தலைவன் என்று கூறுகின்றார். வாய்=அகன்ற; வாய்க்காடு= அகன்ற காடு; பேய்க்கு ஆடல்=பேய்களின் பாடலுக்கு ஏற்ப நடமாடுதல்; பேய்கள் உலவும் இடம் என்பதால், சுடுகாட்டினை பேய்க்காடு என்று குறிப்பிடுகின்றார். விடையான்=இடபத்தை வாகனமாகக் கொண்டவன்; புகார் நகரத்தின் ஒரு பகுதியாக சாய்க்காடு தலம் விளங்கும் நிலை இங்கே புகார்ச் சாய்க்காடு என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது; முதுமரம்= பழமையான கல்லால மரம். பெருமானே என்ற சொல்லினை மூன்றாவது அடி மற்றும் நான்காவது அடிக்கு பொதுவான சொல்லாக கருதி பொருள் கொள்ள வேண்டும். பேய்கள் உலவும் சுடுகாட்டில் மறைந்து வாழ்வதை தனது வழக்கமாக உடைய பெருமான், பூம்புகார் நகரத்தில் உள்ள சாய்க்காடு தலத்தினைத் தனது இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றான். அவன் இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளான். அகன்ற காட்டினில் உள்ள கல்லால மரம் வந்தடைந்து, அதன் கீழே அமர்ந்து நான்கு முனிவர்களுக்கும் அறம் உரைத்த பெருமான், பேய்களின் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றான். அத்தகைய பெருமானை, பெருமைக்கு உரியவனாக கருதி சான்றோர்கள் புகழ்கின்றனர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பேய்க்காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த
பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே
பெருமானைப் பேணும் அடியார்கள் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள் என்று கூறுவதன் மூலம், பெருமானைப் பேணி போற்றாத மனிதர்கள் பெரியோர்களாக மதிக்கப்பட மாட்டார்கள் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். இந்தக் கூற்று திருஞான சம்பந்தர் அருளிய ஆமாத்தூர் தலத்து பதிகத்தின் பாடல்களை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடலில் (2.44.1), பெருமானின் திருவடிகளைப் போற்றி புகழாத மனிதர்களின் அழகும் ஒரு அழகோ என்று கேள்வி கேட்கின்றார். அம்=அழகிய; பொக்கம்= பொலிவு மற்றும் அழகு: பெய்=உடைய, துன்னம் பெய்=தைக்கப்பட்ட; பிறைச் சந்திரனைத் தனது சடையில் பெருமான் சூடிக் கொண்ட பின்னர், சந்திரன் தான் அழியும் நிலையிலிருந்து தப்பித்து, நாளும் ஒரு பிறை பெற்று வளர்ந்தமையை குறிப்பிட பிள்ளை மதி என்று இங்கே கூறுகினார்.
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை
பின் அம் சடை மேலோர் பிள்ளை மதி சூடி
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான் தன்
பொன் அம் கழல் பரவா பொக்கமும் பொக்கமே
தலச்சங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.55.2) பெரியோர் வாழும் தலைச்சங்கை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மல்கு=நிறைந்த; கண்டம்=கழுத்து; அண்டர்=தேவர்கள்; மாண்பு=மாட்சிமை, பெருமை; அணி=அழகு; கோவணத்தையும் தோல் ஆடையினையும் அணிந்த பெருமானின் எளிய திருக்கோலம் திருஞானசம்பந்தரை மிகவும் கவர்ந்தது போலும். அந்த எளிமையான கோலத்தினை காட்டி, தன்னை ஆட்கொண்டவர் பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். இந்த தலத்து அந்தணர்கள் நனிபள்ளி தலம் சென்று ஆங்கே திருஞானசம்பந்தரை சந்தித்து, இந்த தலத்திற்கு வருகை தருமாறு வேண்டினார்கள் என்பதையும் தங்களது ஊருக்கு வந்தவரை பூரண கும்பம் கொடுத்து சிறப்பான முறையில் வரவேற்றனர் என்பதையும் பெரிய புராணத்தில் காண்கின்றோம்.. அத்தகைய அந்தணர்கள் ஒழுக்கத்தில் சிறப்புடன் விளங்கினார்கள் என்பதை உணர்த்தும் பொருட்டு, பெரியோர் என்று அவர்களை குறிப்பிடுகின்றார். தேவர்களால் பெருமை உடையவனாக கருதப்படும் சிறப்பினை பெற்றிருந்த போதிலும் துணியிலான கோவணத்தையும் தோல் ஆடையினை அணிந்து எளிமையான தோற்றத்துடன் இருக்கும் பெருமானே, உனது இந்த எளிமையான கோலம் அடியேனை மிகவும் கவரவே, அடியேன் உமக்கு அடிமையாக மாறிவிட்டேன்; அவ்வாறு உமக்கு அடிமையாக என்னை மாற்றி ஆட்கொண்ட பெருமானே, சிறப்பு வாய்ந்த நீல மணி பதிக்கப் பட்டது போன்ற, ஆலகால விடத்தை தேக்கியதால் கருமை நிறத்துடன் காணப்படும் கழுத்தினை உடையவனே, பூணூல் பொருந்திய மார்பினை உடையவர்களாக, பெரியோர்களாக, கருதப்படும் அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தில் உள்ள அழகு வாய்ந்த கோயிலையே உமது கோயிலாகக் கொண்டு நீர் எழுந்தருளியுள்ளீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
துணி மல்கு கோவணமும் தோலும் காட்டித் தொண்டு ஆண்டீர்
மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பானீர்
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச் சங்கை
அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே
கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.63.4) பிறையுடை வார்சடையானை பேண வல்ல அடியார்கள் பெரியோர்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பறை=தோல் இசைக்கருவி; இயம்ப= ஒலிக்க; கண்களின் கீழ் பாகத்தில் சிகப்பு நிற கோடுகள் காணப்படுவது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்தும். அத்தகைய செவ்வரிகளை வேலில் படிந்துள்ள இரத்தக் கறைகளுக்கு ஒப்பிட்டு, கறை படிந்த வேல் போன்று நீண்டு கூர்மையாக உள்ள கண்கள் என்றும் செவ்வரி ஓடிய கண்கள் என்றும் கண்களின் தன்மையை குறிப்பிட்டு, அத்தகைய கண்களை உடைய மகளிர் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார் என பொருள் கொள்வது பாடலின் நயத்தை உணர்த்துகின்றது.
பறையோடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர் நெடுமாடம்
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர் கடம்பூரில்
மறையொலி கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும்
பிறையுடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே
அறையணிநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.77.1) திருஞானசம்பந்தர் பெரியோர்கள் பெருமானைப் போற்றுவதால் பெருமை அடைகின்றனர் என்று கூறுகின்றார்.. வீடிலார்=அழிவில்லாத நித்தியர்; பீடு=பெருமை; பேதைமை=அறியாமை; தீதிலா வீடு=முற்றும் துறந்து பற்றற்ற நிலை; தங்களது இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து பெருமானைத் தொழும் அடியார்கள், என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
பீடினால் பெரியோர்களும் பேதைமை கெடத் தீதிலா
வீடினால் உயர்ந்தார்களும் வீடிலார் இள வெண்மதி
சூடினார் மறை பாடினார் சுடலை நீறணிந்தார் அழல்
ஆடினார் அறையணிநல்லூர் அங்கையால் தொழுவார்களே
திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.115.11) பெருமானை அந்தமில்லா அனல் ஆடலான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் இந்த தலத்து பெரியோர்கள் பெருமானைப் புகழ்ந்து போற்றுகின்றனர் என்றும் கூறுகின்றார். அனைத்துப் பொருட்களையும் எரித்து அழித்த அனல் என்பதால் அந்தமில்லா அனல் என்று கூறுகின்றார் போலும். அந்தமில்லா என்ற சொல்லினை பெருமானுக்கு உரித்தாக்கி அழிவற்ற பெருமான் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. இந்த பாடலில் சிறந்த அறிவினை உடைய பெரியோர்கள் புகழ்ந்து ஏத்தும் புகலூர் என்று குறிப்பிடுகின்றார். பெருமானுடன் இணைந்த விடை, நித்தியத்துவம் பெற்ற தன்மையால், இடபமும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. யுக முடிவினில் அழிந்த உடல்களின் சாம்பலைப் பூசிய வண்ணம் பெருமான் இருக்கும் கோலமும் இங்கே உணர்த்தப் படுகின்றது.
புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர் தனுள்
வெந்த சாம்பற் பொடி பூசவல்ல விடையூர்தியை
அந்தமில்லா அனல் ஆடலானை அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாடி ஆடக் கெடும் பாவமே
தனது புகழினை குறிப்பிட்டு வணங்கும் பெரியோர்களின் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்து, அவர்களை முக்தி நிலைக்கு பெருமான் உயர்த்துவான் என்று, ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.84.3) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பிறவாத தன்மை உடையவன் என்பதால், பிறப்பு என்றால் என்ன என்பதை அறியாதவன் சிவபெருமான் என்று நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார். தக்கன், தன்னை யாகத்திற்கு அழைக்காததையும், அவிர்பாகம் கொடுக்க மறுத்ததையும், இழிவாகப் பேசியதையும் சிவபெருமான் முதலில் பொருட்படுத்தாமல் தான் இருந்தார். யாகத்திற்கு சென்ற தாக்ஷாயிணியை, தக்கன் இழிவாகப் பேசியதன் விளைவாக பிராட்டி அவமானம் தாங்க முடியாமல் யாககுண்டத்தில் உயிரினை விட்ட பின்னர், சிவபெருமான் தனது கோபத்தை தடுக்க முடியாமல், வீரபத்திரரை, தக்கனின் யாகத்தை அழிக்க அனுப்புகின்றார். பெரியார்=வேதங்களைக் கற்றும் கேட்டும் அறிந்த பெரியார். தக்கன் செய்த பல தவறுகளையும் பொறுத்த சிவபெருமான், தக்கனது தவறுகள் எல்லை மீறியவுடன், வீரபத்திரரை அனுப்பி அவனது யாகத்தினைத் தகர்த்தார். நெருப்பின் தன்மை பொருந்தி விளங்கும் சூலத்தினை உடையவர் சிவபெருமான்: இமையாத மூன்று கண்களை உடையவனும், மேன்மை வாய்ந்த அடியார்களின் பிறவிப் பிணியினைத் தீர்ப்பவனும் ஆகிய சிவபெருமான் பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்டவன். பிறப்பு என்றால் என்னதென்று அறியாத, அவனது திருவடி நிழலின் கீழே எனது ஆருயிர் நிலை பெற்று நிற்கின்றது என்று அப்பர் பிரான் மிகுந்த பெருமிதத்துடன் உணர்த்தும் பாடல் இந்த பாடல்.
தரியா வெகுளியனாய்த் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த
எரியார் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண்
பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை
அரியான் அடிநிழல் கீழது அன்றோ எனது ஆருயிரே
தில்லைச் சிற்றம்பலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.2.7) அப்பர் பிரான், பெரியார்கள், சிவபெருமானது பெருமையை பேசுகின்றனர் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களுமே புலியூர் சிற்றம்பலமே சென்று புக்கார் தாமே என்று முடிகின்றன. அனைத்து கோயில்களிலும் உள்ள மூர்த்தங்களில் பொதிந்துள்ள கலை, தினமும் அர்த்தஜாம பூஜை முடிந்த பின்னர், சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானின் திருவுருவத்தில் சேர்வதாக ஐதீகம். இந்த காரணம் பற்றியே தில்லைச் சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை, மற்ற திருக்கோயில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்த பின்னரே, சுமார் ஒரு மணி நேரம் கழித்து, செய்யப் படுகின்றது. இந்த செய்தியே புலியூர் சிற்றம்பலமே புக்கார் தாமே என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது என்று கூறுவார்கள். இறவாதார் என்ற சொல்லுக்கு, நீண்ட வாழ் நாள் உடையவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். யோகம் முதலியவற்றால் தங்களது வாழ்நாளை நீட்டிக் கொண்டவர்கள். அனைவரும் தமது பெருமையே பேசும் வண்ணம், பெருமான் அனைவரின் மனதினிலும் பொருந்தி நிற்கின்றார் என்றும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இந்த பாடலில், மழுவாட் செல்வர் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். .
இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியார் தம் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாட் செல்வர்
புறந்தாழ் சடை தாழப் பூதஞ் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார் தாமே
பொழிப்புரை:
கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் அழகிய கிரீடங்கள் தரித்த பத்து தலைகளும் தோள்களும் வலிமை கெடும் வண்ணம், மலையின் கீழே அரக்கனை அடர்த்து நெரித்தவனும், என்றும் அழிவற்றதும் பேரின்பம் அளிப்பதும் ஆகிய முக்திச் செல்வத்தினை உடையவனும் ஆகிய பெருமான், சோலை மலர்களில் உள்ள தேனை வயிறார உண்ட வண்டுகள் மகிழ்ச்சியுடன் இசை பாடும் மணஞ்சேரி தலத்தில் உறைகின்றான். அத்தகைய பெருமானின் திருவடிகளைப் பற்றாக பிடித்துக் கொண்டு கொண்டாடும் அடியார்கள் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள்.
பாடல் 9:
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல் 8 தொடர்ச்சி, 9 (திதே 0478)
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல்கள் 9 தொடர்ச்சி 10, 11 (திதே 0479)
சொல்லானைத் தோற்றம் கண்டானும் நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுது ஓங்க
வல்லார் நன் மாதவர் ஏத்து மணஞ்சேரி
எல்லாமாம் எம் பெருமான் கழல் ஏத்துமே
விளக்கம்:
சொல்லான்=சொற்களின் வடிவமாகவும் சொற்கள் விளக்கும் பொருளாகவும் விளங்கும் இறைவன்; தோற்றம் கண்டான்=படைப்புத் தொழில் புரியும் பிரமன்; கல்லான்=பிரமனும் திருமாலும் கற்க முடியாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக திகழ்ந்த பெருமான், இந்த பாடலில் எல்லாமாக பெருமான் நிற்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. ஸ்ரீருத்ரத்தின் பொருளை உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ள நின்ற திருத்தாண்டகம் பதிகத்தில் (6.94) அப்பர் பிரான் சிவபெருமான் எல்லாமாக நிற்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். திருவதிகைத் திருத்தாண்டகம் ஒன்றினை (6.05) எல்லாம் சிவன் என நின்றாய் போற்றி என்று அப்பர் பிரான் தொடங்குகின்றார். சிவபெருமானின் திருநாமமாகிய பஞ்சாக்கர மந்திரத்தை அறிந்து உணர்ந்தவர்களையே, அப்பர் பிரான் கற்றார் என்று கருதுகின்றார். எஞ்சியோரை அவர் கல்லாதார் என்று கருதுகின்றார்.
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி
அனைத்துப் பொருட்களிலும் கலந்தும் அனைத்து உயிர்களுடன் இணைந்தும் நிற்கும் சிவபெருமானே போற்றி, சூரிய சந்திரர்கள் ஆகிய இரண்டு சுடர்களாக உள்ளவனே போற்றி, கொலைத் தொழிலைச் செய்யும் சக்தி வாய்ந்த மழுப் படையை உடையவனே போற்றி, உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதையே தொழிலாகக் கொண்ட கூற்றுவனை உதைத்தவனே போற்றி, ஐந்தெழுத்தினை கல்லாத மூடர்கள் காண்பதற்கு அரியவனாகத் திகழ்பவனே போற்றி, ஐந்தெழுத்தினை கற்று, அதனை எப்போதும் உச்சரிக்கும் அடியார்களின் துன்பங்களை களைபவனே போற்றி, அகன்று காணப்பட்ட மூன்று பறக்கும் கோட்டைகளையும் வில்லினைக் கொண்டு அழித்தவனே போற்றி. அதிகை வீரட்டத் திருக்கோயிலின் மீது காதல் கொண்டு அங்கே உறையும் பெருமானே என்று இறைவனை பலவாறு அழைக்கும் அப்பர் பிரான், நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும் என்று இறைவனிடம் இந்த பாடல் மூலம் வேண்டுகின்றார்.
சொல் என்று பொதுவாக சொன்னால் வேதங்களில் உள்ள சொற்களை குறிக்கும். சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.47.1) சொல் அடைந்த தொன் மறை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பொருள் பொதிந்த சொற்கள் நிறைந்த வேதங்களை முதன் முதலில் உலகினுக்கு அருளியவன் பெருமான், என்பதால் அந்த சொற்களுக்கு உரியவனாக, சொல்லானாக பெருமான் கருதப் படுகின்றான். வேதங்களில் உள்ள சொற்களுக்குத் துணையாக இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான், சொற்றுணை வேதியன் என்று, குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய பழமையான வேதங்கள், வேதங்களை சரியாக முறையாக அறிந்து கொள்ள உதவும் ஆறு அங்கங்கள் மற்றும் பிற கலைகள் கற்றுணர்ந்த செல்வர்கள் என்று தலத்து அந்தணர்களை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். செல்லடைந்த= சென்று அடையும்
பல்லடைந்த வெண் தலையில் பலி கொள்வதும் அன்றியும் போய்
வில்லடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே
சொல்லடைந்த தொன் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல்லடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே
கோழம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.13.7) திருஞானசம்பந்தர் பெருமானை சொல்லான் என்று அழைக்கின்றார். சொல்லான் என்பதற்கு பலராலும் புகழப்படும் சொற்களை உடையவன் என்றும் அனைத்துச் சொல்லாகவும் சொல்லின் பொருளாகவும் இருப்பவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். எல்லோராலும் புகழப் படுபவனும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்த, அனலாக விளங்கிய அம்பு தொடுக்கப்பட்ட வில்லினை உடையவனும், வேதமாகவும், வேள்வியாகவும் இருப்பவனும், கொல்லும் தன்மை வாய்ந்ததும் தன்னை எதிர்த்து நோக்கி வேகமாக வந்ததும் ஆகிய மதயானையின் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், கோழம்பம் தலத்தினில் பொருந்தி உறைபவனும் அனைத்து உயிர்களுக்கும் நல்லவனாகத் திகழ்பவனும் ஆகிய பெருமானைப் புகழ்ந்து வணங்கினால் உமது துன்பங்கள் முற்றிலும் ஒழிந்து விடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சொல்லானைச் சுடுகணையால் புரம் மூன்று எய்த
வில்லானை வேதமும் வேள்வியும் ஆனானைக்
கொல்லானை உரியானை கோழம்பம் மேவிய
நல்லானை ஏத்துமின் நும் இடர் நையவே
திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.60.1) திருஞானசம்பந்தர், பெருமானை, செஞ்சொல்லார் என்று அழைக்கின்றார். அடியார்களின் சொற்களிலும், சிந்தையிலும், தலை மேலும் பொருந்தி இருப்பவர் இறைவன் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்து என் மனத்துள்ளார்
மைந்தா மணாளா என்ன மகிழ்வார் ஊர் போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே
சொல்லாகவும் சொற்கள் உணர்த்தும் பொருளாகவும் இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இதே பதிகத்தின் ஆறாவது பாடலின் விளக்கத்தில் சிந்தித்து மகிழ்ந்தோம். அத்தகைய பாடல்கள் மேலும் சிலவற்றை நாம் இப்போது சிந்திப்போம். கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.67.5) அப்பர் பிரான், பெருமானை சொல்லான் என்று அழைக்கின்றார். வேதங்களும் அதன் ஆறு அங்கங்களும் விரித்துச் சொல்ல முடியாத தன்மையான் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு திருஞானசம்பந்தர் அருளிய திருச்சிராப்பள்ளி பதிகத்தின் ஒரு பாடலை (1.98.8) நினைவூட்டுகின்றது. பல செய்திகளையும் தத்துவங்களையும் விளக்கமாக உரைக்கும் வேதங்களும், அருளாளர்கள் இயற்றிய பாடல்களும், பெருமானின் ஒரு சில செய்கைகளையே சொல்ல முடிகின்றது என்று உணர்த்தி, பெருமானின் பெருமை சொற்களையும் கடந்தது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். எண்ணங்களையும் சொற்களையும் கடந்தவர் அல்லவா சிவபெருமான். அவரது பெருமையை முழுவதுமாக எவரால் சொல்ல முடியும். உயிர்களுக்கு நன்மை செய்து நல்லவனாக விளங்குபவனும், வெண்மை நிறத்தில் உள்ள காளையைத் தனது ஊர்தியாக கொண்டவனும், நான்கு வேதங்கள் மற்றும் அதன் ஆறு அங்கங்களும் தங்களது சொற்களால் முழுவதுமாக உணர்த்த முடியாதவனும், சூரியன் சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்று சுடர்களாக இருப்பவனும், திருத்தொண்டுகள் செய்து தன்னை வழிபடும் அடியார்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவனும், திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற போது மேரு மலையினை வில்லாக வளைத்துக் கொண்டவனும், மென்மையான உடலினைக் கொண்ட பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவனும், உண்மையாக தன்னை தியானிக்காதவர்களின் வினைகளை தீர்க்காமல் இருப்பவனும் ஆகிய பெருமானை, கீழ்வேளூரை ஆளும் அரசனாக அந்த தலத்தில் குடிகொண்டிருக்கும் கேடிலிப் பெருமானை நாடிச் சென்று அவனை வழிபடும் அடியார்கள், தாங்கள் இறந்த பின்னர் மறுபடியும் பிறத்தலாகிய கேட்டினை நீக்கியவர்களாக விளங்குவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நல்லானை நரைவிடை ஒன்று ஊர்தியானை நால்வேதத்து ஆறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச் சுடர் மூன்றும் ஆனான் தன்னைத் தொண்டாகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை
வில்லானை மெல்லியலோர் பங்கன் தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே
திருநாரையூர் தலத்தின் பதிகத்தினை (6.74) அப்பர் பிரான் சொல்லானைப் பொருளானை என்றே தொடங்குகின்றார். சுருதி=வேதங்கள்: அல்=இரவு: தன்னிடம் அன்பு இல்லாதார்க்கு அரியானாகவும், தன்னிடம் அன்பு கொண்ட அடியார்களுக்கு எளியவனாகவும் விளங்கும் பெருமான் என்று இங்கே குறிப்பிடும் அப்பர் பிரான், இறைவனின் அத்தகைய தன்மைகளுக்கு இந்த பாடலில் உதாரணம் அளிப்பதையும் நாம் உணரலாம். சிவபெருமானை நிந்தனை செய்து வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்களை அழித்ததும், பெருமானிடத்தில் பக்தி கொண்டு தவம் செய்த அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் அளித்ததும், பெருமானின் பண்பினை விளக்க அப்பர் பிரான் உணர்த்தும் செயல்கள்; சொல்லாகவும் பொருளாகவும் பொருள் நிறைந்த சொற்களைக் கொண்ட வேதங்களாகவும் உள்ள சிவபெருமான், ஒளி மிகுந்த சக்கரப் படையை திருமாலுக்கு அருள் செய்தவர். இரவாகவும் பகலாகவும் இருக்கும் பெருமான், தன்னிடம் அன்பு இல்லாதவர்களுக்கு அரியவனாகவும், தன்னிடம் அன்பு கொண்ட அடியார்களுக்கு மிகவும் எளியனாகவும் உள்ளான். தன்னிடம் அன்பு கொள்ளாத திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றினையும் அழித்தவர் சிவபெருமான். தன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்த அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளியவர் சிவபெருமான். சூரியன் மற்றும் முனிவர்கள் சிவபெருமானை, விருப்பத்துடன் மிகவும் மகிழ்ந்து வணங்குகின்றார்கள். இவ்வாறு எல்லார்க்கும் நல்லவனாகவும், அனைவரும் நம்பிக்கையுடன் விரும்பும் வண்ணம் பண்புகளை உடையவனாகவும், விளங்கும் பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன் என்று அப்பர் பிரான், பெருமானை, தான் நாரையூர் தலத்தில் கண்டதை விவரிக்கும் பாடல்.
சொல்லானைப் பொருளானை சுருதியானைச் சுடராழி நெடுமாலுக்கு அருள் செய்தானை
அல்லானைப் பகலானை அரியான் தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த
வில்லானைச் சரம் விசயற்கு அருள் செய்தானை வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி ஏத்தும்
நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.78.5) அப்பர் பிரான் பெருமானை, சொல்லும் பொருளும் ஆனார் என்று குறிப்பிடுகின்றார்.அல்=இரவுப் பொழுது; பொதுவாக திருக்கோயில்களில் ஆறு கால பூஜைகள் செய்வது வழக்கம்; காலை நேரம், உச்சிக் காலம், மற்றும் இரவுக் காலம் ஆகிய நேரங்கள் தவிர, காலையும் பகலும் சந்திக்கும் நேரம் (காலசந்தி=காலை எட்டு மணிக்கு), பகலும் இரவும் சந்திக்கும் மாலை நேரம் (சாயரட்சை மாலை ஐந்தரை மணி) மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் (இரண்டாம் கால பூஜை மாலை ஏழரை மணி) ஆகிய நேரங்களிலும் இறைவனுக்கு வழிபாடுகள் நடக்கின்றன. இவ்வாறு வழிபாடு நடக்கும் நேரங்களாக இறைவன் இருக்கின்றார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இரவும் பகலுமாக நிற்கும் இறைவன், தான் வழிபடப்படும் ஆறு காலங்களாகவும் இருக்கின்றார்; சொல்லாகவும் சொற்கள் உணர்த்தும் பொருளாக இருப்பவரும், தன்னைப் புகழ்ந்து பாடப்படும் பாடல்களாக இருப்பவரும், இறைவன் உயிர்கள் மற்றும் உலகப் பொருட்கள் (பதி, பசு, பாசம்) ஆகிய மூன்றின் இருப்பையும் தன்மைகளையும் உணர்த்தும் சாத்திர நூல்களாக இருப்பவரும், உலகம் மற்றும் உலகிலுள்ள பொருட்களின் தன்மை ஆகியவை உணர்த்தப்படும் பாடல்களாக இருப்பவரும், பழையனூர் தலத்தினை மிகவும் விருப்பத்துடன் தனது இருப்பிடமாகக் கொண்டவரும். உயிர்கள் இறுதியில் சென்று அடையவேண்டிய நிலை வீடுபேறு என்பதை நமக்கு உணர்த்துபவரும், ஆகிய இறைவன் திருவாலங்காடு தலத்தில் உறையும் செல்வனாக விளங்குகின்றார்.
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே
பல்லுரைக்கும் பாவெலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே
திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.92.2) அப்பர் பிரான், பெருமானை, சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் என்று குறிப்பிடுகின்றார். பல்லாடு தலை=பற்கள் வெளியே தோன்றும் பிரம கபாலம்; என்பறாக் கோலம்=எலும்பு மாலைகள் நீங்காமல் எப்போதும் அணிந்திருக்கும் தன்மை; இந்த பாடலில் பெருமானை பகவன் என்றும் அழைக்கின்றார்.
பல்லாடு தலை சடை மேல் உடையான் தன்னைப் பாய்புலித் தோல் உடையானைப் பகவன் தன்னை
சொல்லோடு பொருளனைத்தும் ஆனான் தன்னைச் சுடருருவில் என்பறாக் கோலத்தானை
அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுது ஆனானை
கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
நின்ற திருத்தாண்டகத்தின் பாடலில் (6.94.3) அப்பர் பிரான், சொல்லாகி சொல்லுக்கோர் பொருளானவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். கல்=மலை: களறு=புல்லும் முளைக்காத நிலம், களர் நிலம்; கான்=காடு; கால்=நீர்க்கால், வாய்க்கால்; புதர் என்ற சொல் புதல் என்று மருவியுள்ளது. சுலாவு=போக்குவரவு; கழி=கடற்கரையில் உள்ள நிலம்; இந்த பாடலில் பல வகையான நிலங்களாகவும், அந்த நிலங்களில் உள்ள நீர்நிலைகளாகவும், நிலமும் நீரும் இணைந்தால் உருவாகும் பலவகையான தாவரங்களாகவும், பெருமான் உள்ள நிலை விளக்கப் பட்டுள்ளது. பல்வேறு எழுத்துக்களாக இறைவன் உள்ள நிலையை இதே பதிகத்தின் முந்தைய பாடலில் உணர்த்திய அப்பர் பிரான், இங்கே எழுத்துக்கள் இணைந்த சொல்லாகவும், அந்த சொற்கள் உணர்த்தும் பொருட்களாகவும் இறைவன் உள்ள நிலையினை குறிப்பிடுகின்றார். கல்லாகவும், களர் நிலமாகவும், காடாகவும், காவிரி போன்று பல நதிகளாகவும், நதிகளிலிருந்து பிரியும் வாய்க்கால்களாகவும், கடற்கரைக் கழிகளாகவும், புல்லாகவும், புதராகவும், சிறிய செடிகளாகவும், பெரிய நகரங்களாகவும், சொற்களாகவும், அந்த சொற்களுடன் பொருந்திய பொருளாகவும், பல வகையான உயிர்கள் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கும் நிலையாகவும், உயிர்களின் போக்குவரவு நடைபெறும் இடமான உலகங்களாகவும், நிலனாகவும், நீராகவும். நிலனும் நீரும் இணைந்தால் உண்டாகும் நெல் போன்ற பயிர்களாகவும் உள்ள எம்பெருமான், நெடிய சுடராக எங்கும் பரவி இருக்கும் நிலை மிகவும் வியக்கத்தக்கது. இவ்வாறு எங்கும் வியாபித்து இருக்கும் சிவபெருமான், பறந்து கொண்டு மற்றவர்களை வருத்திய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் அழித்த வல்லமை படைத்தவன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கல்லாகிக் களறாகிக் கானுமாகிக் காவிரியாய்க் கால் ஆறாய்க் கழியுமாகிக்
புல்லாகிப் புதலாகிப் பூடுமாகிப் புரமாகிப் புரம் மூன்றும் கெடுத்தானாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளுமாகிச் சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழலாகி
நெல்லாகி நிலனாகி நீருமாகி நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்றவாறே
அஞ்சைக்களத்தின் மீது தான் அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.4.7) சுந்தரர் இறைவனை நோக்கி அனைவரும் சொல்லும் சொற்களின் பொருளாக இருப்பவன் நீயே என்று கூறுகின்றார். சேரர்களின் தலைநகரின் ஒரு பகுதியாக இருந்த இந்த தலம் பண்டைய நாளில் கடல் வாணிகத்திற்கு மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது போலும். கடல் வாணிபத்தில் கொண்டு வரப்படும் விலையுயர்ந்த பொருட்களாக விளங்குபவனும் இறைவன் தான் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
ஆக்கும் அழிவும் ஐயன் நீ என்பன் நான் சொல்லுவார் சொற்பொருள் அவை நீ என்பன் நான்
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உன்னை நன்கு உணர்ந்தேன்
நோக்கும் நெதியம் பல எத்தனையும் கலத்தில் புகப் பெய்து கொண்டேற நுந்தி
ஆர்க்கும் கடல் அங்கரை மேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைகளத்து அப்பனே
பொழிப்புரை:
சொற்களின் வடிவமாகவும் சொற்களின் பொருளாகவும் விளங்குபவனும், படைப்புத் தொழில் புரியும் பிரமனும் நெடுமாலும் கற்றுணராத வண்ணம் பெருமை உடையவனாக நீண்ட தீப்பிழம்பாக நின்றவனும், தாம் கற்ற இசைப் பாடல்களை பாடி பெருமானின் புகழினை எடுத்துரைக்கும் நல்ல பெரிய தவமுடையவர்கள் போற்ற, அனைத்தும் தானே ஆகியும் நிற்கும் பெருமானின் திருவடிகளை போற்றுவீர்களாக.
பாடல் 10:
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல்கள் 9 தொடர்ச்சி 10, 11 (திதே 0479)
சற்றேயும் தாம் அறிவில் சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணம் ஒர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே
விளக்கம்:
சொற்றேயும்=சொல் தேயும், பயனற்ற அறிவற்ற பொருளற்ற தன்மையால் நாளடைவில் மறக்கப்பட்டு தேய்ந்து போதல்; சமணர்கள் மற்றும் புத்தர்களின் பயனற்ற பிதற்றல்கள் காலங்களைக் கடந்து நிற்க முடியாமல் அழிந்துவிடும் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
சிறிதும் அறிவில்லாமல் சமணர்களும் புத்தர்களும் சொல்லும் சொற்கள், பொருளின்றி பயனின்றி இருப்பதால் நாளடைவில் மறக்கப்பட்டு அழிந்துவிடும். இவ்வாறு அத்தகைய பயனற்ற பொருளற்ற சொற்கள் அழியும் வண்ணம் செய்வானும், சிறந்த செம்மையான பொருளாக உடைய சிவநெறியினை உடையவனும், வற்றாத நீர்நிலைகள் கொண்ட மணஞ்சேரி தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனது திருப்பாதங்களை பற்றுக்கோடாக பற்றிக் கொள்ளும் அடியார்களின் மேல் வினைகள் பற்றாமல் பிரிந்து விடும்.
பாடல் 11:
அயிலாரும் அம்பதனால் (2.016) பாடல்கள் 9 தொடர்ச்சி 10, 11 (திதே 0479)
கண்ணாரும் காழியர் கோன் கருத்து ஆர்வித்த
தண்ணார் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
மண் ஆரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாட வல்லார்க்கு இல்லை பாவமே
விளக்கம்:
கண்=மூங்கில்; தண்ணார் சீர்=பெருமானின் அருளினால் ஏற்பட்ட குளிர்ச்சியையும் சிறப்பினையும் குறிக்கின்றது. கண்ணார என்ற சொல்லுக்கு கண்ணுக்கு இனிய காட்சிகள் உடைய என்று பொருள் கொண்டு அழகான இயற்கை வளம் நிறைந்த சீர்காழி தலம் என்றும் பொருள் கொள்கின்றனர்.
பொழிப்புரை:
மூங்கில்கள் வளத்துடன் வளரும் சீர்காழி தலத்தின் தலைவனாகிய ஞானசம்பந்தன், பெருமானின் குளிர்ச்சியான திருவருளைப் பெற்றதால் சிறப்பினை அடைந்த ஞானசம்பந்தன், வளம் நிறைந்த மண்ணினை உடைய மணஞ்சேரி பெருமான் மீது இயற்றிய இந்த தமிழ் மாலையினை பண்ணுடன் பொருத்தி பாடும் வல்லமை வாய்ந்த அடியார்களுக்கு பாவங்கள் விளையாது.
முடிவுரை:
இந்த பதிகத்தை மனம் ஒன்றி பக்தியுடன் ஓதினால், இல்லத்தில் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும், தம்பதிகளின் இடையே பிணக்கு ஏதேனும் இருப்பின் அவை தீர்க்கப்பட்டு மனமொத்த தம்பதியர்களாக வாழ்வார்கள் என்றும் நம்பப்படுகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானை வழிபட்டால் நாம் அடையவிருக்கும் பலன்கள் உணர்த்தப் படுகின்றன. மணஞ்சேரி இறைவனை பற்றி நின்றால் நமக்கு பாவங்கள் இல்லை என்று பதிகத்தின் முதல் பாடலிலும், இறைவனை புகழ்ந்து பாடினால் வலிமை வாய்ந்த வினைகளும் அழிந்துவிடும் என்று இரண்டாவது, மூன்றாவது மற்றும் பத்தாவது பாடல்களிலும், இறைவனைச் சென்றடையும் அடியார்களுக்கு துன்பங்கள் இல்லை என்று நான்காவது பாடலிலும், இறைவனின் திருநாமங்களை மற்றும் அவனது புகழினைச் சொல்லும் அடியார்களை துன்பங்கள் சென்று அடையா என்றும் ஐந்தாவது பாடலிலும், பெருமானை இகழாது புகழும் அடியார்கள் என்றும் இன்பமுடன் வாழ்வார்கள் என்று ஆறாவது பாடலிலும் கூறும் திருஞானசம்பந்தர், அடுத்த இரண்டு பாடல்களில் பெருமானைப் போற்றி பேசும் அடியார்கள் பெரியோர்களாக மதிக்கப் படுவார்கள் என்றும் கூறுகின்றார். எனவே நாம் அனைவரும் பெருமானின் திருப்பாதங்களை புகழுவோம் என்று நம் அனைவரையும் ஒன்பதாவது பாடல் மூலம் தூண்டும் சம்பந்தர், பதிகத்தின் கடைப் பாடலில் இசையுடன் பொருத்தி இந்த பதிகத்து பாடல்களை பாடும் அடியார்களுக்கு துன்பம் ஏதும் இல்லை என்று கூறுகின்றார். மணஞ்சேரி மணாளனை மனதினால் நினைத்து, அவனது புகழினை உணர்த்தும் இந்த பதிகத்து பாடல்களை பாடி, இம்மையில் எந்த குறையும் இன்றி வாழ்ந்து மறுமையில் நிலையான இன்பம் பெற்று மகிழ்வோமாக.