Digital Library
Home Books
Ainkurunuru is another significant work of classical Tamil literature from the Sangam period, known for its rich poetic expressions. It is part of the Ettuthokai anthology, which consists of eight collections of poetry, and it focuses specifically on the "Akam" (inner) genre, which deals with personal and romantic themes.
முன்னுரை
"தமிழே உணர்வோ டொழுக்கமு மாதலால்
தமிழே தமிழர்க் குயிர்"
'என்று பிறந்தவள்' என்று காலவரையாக எதனையும் வகுத்துக் கூறவியலாத தொல்பெரும் பழைமையோடு, 'என்றும் இளங் கன்னி' என்றபடி எழிலும் வளனும் ஒயிலும் பொருந்த விளங்குபவன் நம் செழுந்தமிழ் அன்னை. தமிழினத்தாரின் உயிர்ப்போடே உறவாடிக் கலந்துநின்று, தமிழினத்தின் வாழ்வையும் செவ்வியையும் வளமோடே பேணிக்காத்து, 'தமிழனம்' என்னும் போதிலேயே ஒரு பெருமித உணர்வு நம்மிடம் முகிழ்த்தெழச் செய்து வருபவளும், தமிழ் அன்னையே யாவாள்!
தமிழினத்தின் வழியிலே வந்து பிறந்த பெரும் பேற்றினைப் பெற்ற நமக்கு, கிடைத்தற்கரிய மிகப் பெருஞ் செல்வக் களஞ்சியமாகத் திகழ்வன தொல்காப்பியமும் எட்டுத் தொகை பத்துப்பாட்டென்னும் சங்கத் தொகை நூற்களும் ஆகும்.
அன்றைய உலகத்தின் பெரும்பகுதியினரான மக்களும் அறிவுநிலை பெறாதேயே வாழ்ந்துவந்த அந்தத் தொல்பழங்காலத்திலேயே, மொழி வளத்தைச் செப்பமாகப் பேணும் நினைவினை மேற்கொண்டு, நாடு முழுதும் சிதறிக்கிடந்த சான்றோரின் செய்யுட்களைத் தொகுத்து ஆராய்ந்து, முறையோடே வகைப்படுத்தித்தந்த சிறப்பும் நம் தமிழ் முன்னோர்களுக்கே என்றும் உரியதாகும். போக்குவரத்துச் சாதனங்களும் அச்சுக்கருவிகளும் பங்கிப் பெருகியுள்ள இற்றை நாளினும், பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் மிகமிகப் பலவாயுள்ள இற்றை நாளிலும் செய்ய நினையாத, செய்யவியலாத மாபெருந் தமிழ்ப் பணியைத் தலைக் கொண்டு, அதனை என்றும் நின்று நிலைக்கும் இணையிலாச் செழுமையோடு செய்து உதவிய சங்கச் சான்றோர்களுக்கும், அவர்களைப் போற்றிப் புரந்து காத்துநின்ற அந்நாளையத் தமிழ் மன்னர்களுக்கும், வள்ளல்களுக்கும், தமிழினம் மிகப் பெருங் கடன்பட்டிருக்கின்றது.
சங்கத் தொகை நூற்களுள், எட்டுத்தொகை என்னும் நூல்களுள் ஒன்றாக ஒளிர்வது இந்த ஐங்குறு நூறு என்னும் அமுதத் தமிழ்க்கடல் ஆகும். அடி அளவாற் குறுமையேனும், விரிக்கும் பொருள் நயத்தாலும், விளக்கும் உணர்வுக் களங்களாலும், உரைக்கும் உரைப்பாங்கினாலும், மிக உயர்ந்து நிற்பது இத் தொகை நூல் ஆகும். குறுமுனிவனின் தமிழ்ச் செவ்வியேபோல, இக் குறுநூறுகள் ஐந்தும், உணர உணர உணரும் உள்ளத்தே ஓவியங்களாக விரிந்து விரிந்து, அக்கால மாந்தரோடே நம்மை ஒன்றுகலக்கச் செய்யும் ஒப்பற்ற சொற் சித்திரங்களாகும்.
ஒத்த அன்பினரான தலைவனும் தலைவியும் தாமே தம்முட் கண்டு காதலித்துக் களவுறவிலேயும் ஒன்று கலந்து விடுகின்ற கலப்பிலே, அவர்பால் எழுகின்ற உணர்வலைகளின் முகிழ்ப்பிலே, அலையாகச் சுழித்து எழுகின்ற எண்ணற்ற நினைவுகளையும், அவற்றின் நடுவாக நின்றியக்கும் பண்பாட்டு மரபினையும், இச்செய்யுட்களிலே நாம் கண்டு கண்டு களிக்கலாம். அந்தக் களவு உறவு பல க ஆரணங்களாலே இடையீடு படப்பட, அவர் தம் நினைவுகள், உணர்வுகள், கனவுகள், மனக்கட்டவிழ்ந்தவாய்ப் பரவி விரித்தலையும், அவற்றால் அந்தக் காதலர்களும் அவருக்கு அணுக்கரானோரும் எய்தும் இன்பதுன்பங்களையும் இந்நூற் செய்யுட்களிலே நாம் காணலாம்.
இஃதிஃது இன்னதொரு தன்மைத்து என்று புறத்தார்க்கு முற்றவும் புலனாகுமாறு விளக்கிச் சொல்ல இயலாததாய், அவரவரும் தத்தம் உள்ளத்தேயே நுகர்ந்து நுகர்ந்து தோய்வதாய் விளங்குவதே அகப்பொருள் இன்பம் ஆகும். சொற்கடந்து நின்று, மக்களின் வாழ்வியலின் மூலக்களனான மனையறத்துக்கே அடிப்படையாக விளங்கும் இந்த உணர்வெழுச்சிகள், அனைத்து மக்களும் இன்பமாகவும் செம்மையாகவும் வாழல் வேண்டுமென்னும் கருத்தினரான தமிழ்ச் சான்றோரைப் பெரிதும் கவர்ந்தன. அவர்கள் புலமையும், அளவிலா இனிமையே தானாக அமைந்த செழுந்தமிழும், அந்தக் காட்சிகளை மேலும் நயமாக்கியும், சுவைபட எழிலாக்கியும், இலக்கிய வடிவங்களாக்கி நமக்காக வைத்துள்ளன. என்றும் வழிகாட்டும் பான்மையோடு, உணர உணர உள்ளத்தே உவகை பெருக்கும் நுட்பத்தோடு விளங்கும் இச்செயுட்கள் அனைத்தும், தமிழினத்தின் அளப்பரும் பெருப்புகழ்ச் செல்வக் களஞ்சியத்தின் அளப்பரும் பெரும்புகழ்ச் செல்வக் களஞ்சியங்களாகும் என்பதில் எவருக்குமே ஐயம் இருக்க வியலாது.
இந்த ஐங்குறு நூற்றினைத் தொகுத்து அமைப்பதற்கான பேராறிவாளரைத் தேர்ந்து, பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து, அவர்க்கு வேண்டும் வகையால் எல்லாம் பொன்னும் பொருளும் ஆளும் பிறவும் உதவிய பெருந்தகை, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையாவான்.
இவன் பழந்தமிழ்க் குடியினரான பொறைகளுள்ளே இரும்பொறை மரபிலே தோன்றியவன், தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும், சோழன் இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் வாழ்ந்த புகழ் மிகுந்த நாளிலே தானும் வாழ்ந்து, தமிழினத்தின் மாண்பைப் போற்றிக் காத்துப் புகழ் கொண்டவன். அந்தணாளரான தமிழ்ச் சான்றோரும், குறிஞ்சித்திணைச் செய்யுட்களைச் செய்தலிலே ஒப்பற்றோரும், வேள்பாரியின் உயிர்நட்பினராக விளங்கியவருமான பெரும் புகழ்க் கபிலரின் நட்பைப் பெற்றவன். ஆராத தமிழன்பும், தீராத பேராண்மையும், தணியாத வள்ளன்மையும், குறையாத தமிழ்ப் புலமையும் தனதாக்கிக் கொண்டவன். குறுங்கோழியூர் கிழாரால் போற்றிப் புகழ்ந்து பாராட்டப் பெற்றவன்.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியோடும். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனோடும் போரிட்டு, அதனால் சோழ பாண்டிய அரசர்களின் பகைமைக்கு உள்ளானபோதும், தாய்த் தமிழின் செவ்விபேண நினைத்தபோது, பாண்டியன் ஆதிக்கத்திலிருந்த மதுரைச் சங்கத்தாருடனும் சோணாட்டாரான பெருங்கோழியூர்க் கிழாரோடும் மனங்கலந்து நெருக்கமான உறவு கொண்டவன். 'தமிழ் மேன்மை' அந்நாளைய தமிழகத்துத் தலைவர்கள்பால் எந்த அளவுக்கு வேரூன்றி நின்றதென்பதையும், அத் பிறபிற உறவு வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி நின்று உயர்ந்திருந்ததென்பதையும், இதனால் நான் உணரலாம்.
தண்பொதியச் செந்தேனாய் இனிக்கும் சிலப்பதிகாரக் காப்பியத்திலும், இவனைப் பற்றிய செய்திகள் சில கட்டுரை காதையுள் கூறப்பட்டுள்ளன.
என்னும் இவனைக் காணற் பொருட்டுச் சோணாட்டிலிருந்து சென்றவன் பராசரன் என்பான் ஆவான். இவன் வடமொழியிலே மிகவும் வல்லமை பெற்றவன். இவன் இம்மாந்தரனின் அவைக் கண்ணே சென்று, தன் வடமொழிப் பிலமையை அங்கிருந்த மன்னனும் வட மொழிவாணரும் வியக்க எடுத்துக் காட்டினன். இதனை,
இவன் மீண்டதாகச் சிலம்பு கூறுகின்றது. இதனால், செழுந்தமிழ் சிறந்தோங்கிய அந்நாளிலேயே, வடமொழிப் புலமையினும் விஞ்சி நின்றவர் பலர் தமிழகத்தே வாழ்ந்தமையும், அவர்தம் புலமையை மதிப்பீடு செய்து பரிசளிக்கும் அளவிற்கு இம் மாந்தரஞ்சேரல் அம்மொழிப் புலமையும், தன்மொழிப் புலமையோடு பெற்றுத் திகழ்ந்தமையும் நாம் அறியலாம். பராசரன் இவனுடைய அன்பான அளவுக்கு மிஞ்சிய உபசாரங்களாலும், இவன் அளித்த அளவிலாப் பெரும் பரிசில்களாலும், எண்ணியே கண்டிராத பெருவள நிலையினை எய்தி, அதனால், இவனையே எப்போதும் போற்றி மகிழும் சால்புடையோனாகவே விளங்கினான் என்றும் அறிகின்றோம்.
இவனிடமிருந்து, பெற்ற பரிசில்களோடு, தன் நாடு நோக்கி மீள்பவன், ஒரு நாள் பாண்டியனது திருத்தங்காலிலே இளைபாறுதற் பொருட்டுத் தங்குகின்றான். அப்படித் தங்கியவன், தன் நாட்டு மன்னனையோ, தான் தங்கியுள்ள இடத்திற்கு உரியோனான பாண்டியனையோ வாழ்த்திப் பாடுதலைமறைந்து, தன்னைப் பாராட்டிய சேரமானையே வியந்து வியந்து போற்றி வாழ்த்துகின்றான் என்றால், இச்சேரமானின் உள்ளச் செவ்வி, எத்துணை அளவுக்கு உயர்ந்ததாக இருந்திருத்தல் வேண்டும்.
என்று அவன் வாழ்த்தினான் என்கிறது சிலம்பு. பாண்டியனோடு போரிட்டு, அப்போரிலே தோற்றுச் சிறைப்பட்டு, எவ்வாறோ சிறையினின்றும் தப்பிச் சென்றவன் இம் மாந்தரஞ்சேரல் என்றும் குறப்படுகின்றது. இவனைப் பாண்டி நாட்டிலேயே வந்திருந்து வாழ்த்துகின்றான் பாராசரன் எனில், இவனுடைய பிறபிற குணநலன்கள் அத்துணைச் சிறப்பு வாய்ந்தன என்றே நாம் கொள்ளல் வேண்டும்.
சேரநாட்டுத் தொண்டிப் பட்டினத்திலிருந்து அரசாண்டவன் இவன். யானைக்கட்சேய் எனச் சிறப்புப் பெயரும் பெற்றவன். இவன் தோன்றிய இரும்பொறை மரபினருள் புகழ்பெற்ற பிற மன்னர்கள், செல்வக்கடுங்கோவாழியாதனும், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையும் ஆவர். யானைகள் தம் கன்றுகளைப் பேணிக் காக்கின்ற பெருவிழிப்போடே தன் ஆட்சிக்கு உட்பட்டவர்களைக் காத்துப் பேணுகின்ற ஆட்சிச் சால்பினன் என்பதனால், இவனை 'யனைக் கண்சேய்' என்று கூறிச் சான்றோர் சிறப்பித்தனர் ஆகலாம்.
'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து, அதனை அவன்கண் விடல்' என்னும் செயல்கொள்ளும் பாங்கிலேயும் சிறந்த ஆற்றலினான இவன், இத் தொகை நூலைத் தொகுக்கும் பெருப்பணியினைப் 'புலத்துறை முற்றியவர்' என்னும் பெரும் புகழ்மையினைக் கொண்டவரான கூடலூர் கிழாரிடம் ஒப்பித்தனன். இவர், மலைநாட்டுக் கூடலூரினர் என்று சொல்லப்படுகின்றனர். இதனைக் கம்பத்தையடுத்த மதுரை மாவட்டக் கூடலூராகவே கொள்ளல் மிகவும் பொருந்தும்.
'வானத்தே ஒரு விண்மீனின் வீழ்ச்சியைக் கண்ட இவர், அது வீழ்ந்த காலநிலையை ஆராய்ந்து, அது வீழ்ந்தது மாந்தரனின் மறைவை முன்னதாக உணரக் காட்டுவதெனவும், அம் மறைவு இன்ன நாளிலே நிகழும் எனவும் தெளிவாகக் கணித்து வைத்திருந்தவர். அவ்வாறே அவனும் அந் நாளிலேயே உறைந்தானாக, பெரிதும் ஆற்றாமையால் இவர் பாடியதே புறநாநூற்றின் 229ஆம் செய்யுள் ஆகும். இதனால், இவர் காலக் கணிதத் திறனும், தம் தமிழ்ப் புலமையோடு சேரப் பெற்றிருந்தனர் என்றும் நாம் அறியலாம். இத் தொகையைச் செய்ததன்றியும், குறுந்தொகையுள் 3 செய்யுட்களையும் இவர் செய்திருக்கின்றனர் என்றும் காண்கின்றோம்.
இத்தொகை நூற்குக் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்த்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனாரே யாவர். அதன் சிறப்பினை எல்லாம் நூலினுள்ளே காணலாம். இதன்,
முதல் நூறான மருதம் ஓரம்போகியாராலும், இரண்டாம் நூறான நெய்தல் அம்மூவனாராலும், மூன்றாம் நூறான குறிஞ்சி கபிலராலும், நான்காம் நூறான பாலை ஓதலாந்தையாராலும், ஐந்தாம் நூறான முல்லை பேயானராலும் பாடப் பெற்றுள்ளன. இதனைக் குறிக்கும் பழைய வெண்பா,
என்பதாகும். இவற்றுள் மருதமும் நெய்தலும், ஐங்குறு நூறு தெளிவுரையின் முதற்பகுதியாக இந்நூலுள் அமைந்துள்ளன.
கூடலூர் கிழார், அவ்வத் திணைச் செயுட்களைச் செய்வதிலே புகழ் படைத்தோரான சங்கத் தமிழ்ச் சான்றோர்களிடம் தம்முடைய பொறுப்பைக் கூறி, அவர்கள் செயுட்களைச் செழுமையோடு ஆக்கித்தர, அவற்றை ஆராய்ந்து, அவற்றுட் சிறந்தவாகத் தாம் கண்ட ஐவர் நூல்களைத் தொகுத்துத் தம்முடைய பணியை எளிதாக்கி வெற்றி கண்டவர் எனலாம். இவர்களின் நட்பையும் அன்பான ஒத்திசைவையும் பெற்றவர் என்றும் கூறலாம்.
'முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே' என்னும் இலக்கண விதியினை ஒதுக்கி, மருதம் நெய்தல் குறிஞ்சி பாலை முல்லை என முறைப்படுத்தித் தொகுத்து இந்நூலை இவர் தமிழுலகுக்குத் தந்திருக்கின்றனர். வேளாண் குலத்தவராதலால் மருதத்தை முதலிலும் மாந்தரன் நெய்தல் நிலத்துத் தொண்டியிலிருந்தோனாதலின் அதனை அதற்கடுத்தும், நடுநாயகமாகும் சிறப்பினது என்பதால் குறிஞ்சியை நடுவாக வைத்தும், முல்லையின் எழிலைக் கருதி அதனை இறுதியில் வைத்தும், குறிஞ்சியும் முல்லையும் திரிந்தே பாலையென்னும் நிலையை எய்தலால் பாலையைக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையில் வைத்தும் இவர் தொகுத்தனர் என்று கருதலாம். இது நம் ஊகமாக அமையலாமேயன்றி, முறையான காரணம் எனல் பொருந்தாது. ஆனால் விதியை மீறுவோர் அதற்கான காரணமுமுணர்ந்த புலமைச் சால்பினர் என்னும் போது, அதன் காரணம் ஆராய்தற்கு உரியது என்றே நாம் கொள்ளல் வேண்டும். ஆய்வாளர்கள் இம்முயற்சியிலேயே சிறிது மனஞ் செலுத்துவாராக.
இத்தொகை நூலையும் தேடியாராய்ந்து செப்பமுற வெளியிட்ட தமிழ் வள்ளன்மையாளர் டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களே யாவர். அவர்களின் தமிழார்வமும் முயற்சியுமே தமிழ்ச் செல்வங்களை நாம் எளிதாகப் பெற்று உணர்வதற்கு உதவுகின்றன. டாக்டர் அய்யர் அவர்களின் தமிழ் உள்ளத்தைப் போற்றி நினைந்து வணங்குகின்றேன். அவர்களைத் தமிழகம் வாழ்தற்பொருட்டு உருவாக்கி உதவிகுவரும், அய்யரவர்களுக்கு இப்பணியிலே உதவியவர்களுமான திரிசிரபுரம் மகாவித்துவான் தியாகராசச் செட்டியாராவர்களையும் மனம் நினைந்து போற்றி வணங்குகின்றேன். இவ்விரு தமிழ்ப் பெரியார்கட்கும் நினைவாலயங்களோ, நினைவு அமைப்புகளோ செயல் மறந்த தமிழகம் இன்னும் நிறுவிற்றில்லை என்பதையும், இவர்கள் நினைவுநாட்களைக்கூட ஆயிரமாயிரம் தமிழ்த் துறை மாந்தரும் போற்ற மறந்துள்ளனர் என்பதையும், மிகமிக வருத்தத்தோடே நினைக்கின்றேன். இவர்கள் தமிழால் தாம் வாழாமல், தமிழுக்காகத் தாம் வாழ்ந்த தகுதியாளர்கள் ஆவர்.
அய்யரவர்கள் பதிப்பிலே பழைய உரையும், செய்யுள் நலத்தைப் புரிந்து கொள்வதற்கான அரியபல குறிப்புகளும் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. நாடெல்லாம் ஐங்குறுநூற்றின் செவ்வியினை அறிந்தறிந்து இன்புற உதவிய சிறப்புக்கு, இப்பதிப்பே முதல் உரிமையுடையதாகும்.
இதன்பின் மர்ரே கம்பெனியாரின் மூலப்பதிப்பும் சைவ சித்தாந்த சமாசத்தார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்களின் துணையோடு வெளியிட்ட, சங்க இலக்கியப் பெரும் பதிப்பும் அருமையாக வெளிவந்தன.
இதன்பின், உரைப்பெருங் கடலான சித்தாந்தச் செம்மல் ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்களின் மிக விரிவான உரைப் பதிப்பும் வெளிவந்தது.
எனினும், தமிழார்வத்தார் அனைவரும் எளிதாகக் கற்றறிந்து தமிழின்பப் பயன்பெற உதவும் வகையிலே, தெளிவுரை அமைப்பு ஒன்றும் தேவை என்பதனை நினைந்து, இத்தெளிவுரை அமைப்பை உருவாக்கியுள்ளேன்.
பிற எட்டுத் தொகை நூற்களுக்கும் யான் எழுதி வந்துள்ள தெளிவுரை மரபையே இதனிடத்தும் கொண்டுள்ளேன். ஆகவே, இந்தத் தெளிவுரை அமைப்பும் தமிழ் அன்பர்க்கும் மாணவர்க்கும் சிறந்த உதவியாக அமையும் என்று நம்புகின்றேன்.
தமிழ் நலம் நிலவப் பல்லாற்றானும் விருப்போடு உதவிவரும் பண்பாளரும், தமிழன்பும் தமிழ்ச்சால்புமே தாமாக விளங்குபவரும், இத்தெளிவுரைப் பதிப்பை அழகுற வெளியிட்டு உதவுபவரும், என்னுடைய தமிழ்ப்பணிக்கு என்றும் இனிதே துணைநின்று ஊக்கியும் உதவியும் வருபவருமான, பாரி க.அ. செல்லப்பர் அவர்களைப் பெரிதும் போற்றுகின்றேன்; நன்றியோடு நினைந்து வாழ்த்துகின்றேன்.
தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் இத்தெளிவுரைப் பதிப்பு நல்லதொரு விருந்தாக விளங்கும் என்று நினைந்து, அவர்களையும் மனமுவந்து வாழ்த்திப் போற்றுகின்றேன்.
வாழ்க தமிழ்!
வளர்க தமிழார்வம்!
அனைத்துச் செயல்களையும் தொடங்கும்போதில், முதற்கண் கடவுளைப் போற்றியே தொடங்குதல் நலமாகும் என்னும் கொள்கை, எந்த நூலின் தொடக்கத்தும் கடவுள் வாழ்த்து இருந்தாக வேண்டும் என்றொரு முடிவுக்குப் பிற்காலத்திலே வழிவகுத்தது. அந்தப் பழைய நாளில், பாரதம் பாடிய பெருந்தேவனார், சங்கத் தொகை நூல்களுள் கடவுள் வாழ்த்து அமையாதனவற்றுக் கெல்லாம், தாமே கடவுள் வாழ்த்துப் பாடியமைத்தனர். அவ்வாறு, அவர் பாடிச் சேர்த்த கடவுள் வாழ்த்துக்களுள், இந்நூலின் கடவுள் வாழ்த்தும் ஒன்றாகும்.
வாழ்த்து, வணக்கம், பொருளியல்பு உரைத்தல் என்னும் மூவகை வாழ்த்து மரபுகளுள், இச்செய்யுள் 'பொருளியல்பு உரைத்தல்' ஆகும். இது கடவுளின் இயல்பை மட்டுமே கூறி, 'அவ்வியல்புடையானை வாழ்த்துவோம், போற்றுவோம்' என்றெல்லாம் கூறாமல், அவற்றைப் படிப்பவர்க்கே புலனாகுமாறு விட்டு விடுவதாகும்.
மிகப் பிற்காலத்துப்போல் விநாயகரை வாழ்த்தியே எதனையும் தொடங்குதல் என்றில்லாமல், தத்தமக்கு விருப்புடைய கடவுளரை வாழ்த்திச் செல்லும் மரபையும், 'உமையொருபாகம் உடையானை' வாழ்த்தும் இச் செய்யுளால் அறியலாம். இவ்வாசிரியரே பல கடவுளரையும் வாழ்த்திப் பாடியுள்ள பொதுநோக்குப் பிற தொகைநூற் கடவுள் வாழ்த்துக்களால் காணப்படும்.
செய்தமிழ்ப் புலவரான இப்பெருந்தேவனார், வடமொழியாளரோடும் தொடர்பு கொண்டு, அம்மொழியினும் சிறந்த புலமை பெற்ற, அதன் கண்ணுள்ள மகாபாரதக் கதையினைத் தமிழிற் செய்யுள் வடிவிலே பாடினவர். பிறமொழியறிவு பெற்ற பெருந்தமிழர்கள், அவ்வறிவு நலத்தால் தமிழ் நலமே பேணி மிகுத்து வந்தனர் என்பதும், வரவேண்டுவதே கடனென்பதும், இவர் அரும்பணியாற் காணலாம். இவர் செய்த மகாபாரதச் செயுட்கள் இந்நாளில் முற்றவும் மறைந்தனவேனும், இவர் செய்த கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் மட்டும், இன்றும் நின்று, இவர் பெரும் புலமைக்குச் சான்று பகரவும் செய்கின்றன; தமிழுக்கு வளமும் சேர்க்கின்றன.
'தேவு' என்னும் தமிழ்ச் சொல்லினின்றும் பிறந்து, உமாமகேசனைக் குறித்து வந்த 'பெருந்தேவன்' என்னும் பெயரைப் பெற்றவர் இவர். பிற பெருந்தேவனார்களினும் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டாக, இவர் செயல்களினுள் போற்றுதற்கு உரித்தாக விளங்கிய 'பாரதம் பாடிய' புகழைச் சேர்த்து, இவரைப் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' எனத் தமிழ்ச் சான்றோர் போற்றி வந்தனர். தென்தமிழ் நாட்டின் மறவர் குடியினருக்குள் வழங்கி வரும் 'தேவர்' என்னும் பெயரும், தமிழகப் பெரியோர்களுக்கு வழங்கி வரும் 'நக்கீர தேவர்', 'மெய்கண்ட தேவர்', 'அருணந்தி தேவர்', 'கருவூர்த் தேவர்' என்றாற் போல்வனவும், இச்சொல்லின் பரந்த பழந்தமிழாட்சியைக் காட்டும்.
பின்னர்த் தோன்றிப், பாரதத்தை வெண்பா யாப்பிலே பாடினவர் மற்றொரு பெருந்தேவனார் என்பவர்; பெயரை நோக்கின், அவரும் இவர் மரபினரே ஆகலாம். அதுவும் பெரும்பகுதி காலச்சேற்றில் கரைந்து மறைந்து விட்டது. அதன் பின்னர், வில்லிப்புத்தூரார் விருத்த யாப்பிலே செய்த வில்லி பாரதமே, இன்று வழக்கிலிருந்து வருகின்ற பாரதத் தமிழ்ச் செய்யுளாக்கமாகும்.
இச்செய்யுள், 'சிவசக்தி'யாக ஒன்றித் தோன்றும் இறைமையின் அருள் வடிவைக் குறித்துப் போற்றும் சிறந்த ஒரு செய்யுளும் ஆகும். ஆசிரியப்பாவின் இழிவான மூன்றடி எல்லைக்கு நல்ல எடுத்துக்காட்டும் ஆகும்.
தெளிவுரை: நீலமேனியினளான, தூய அணிகள் பூண்ட தேவியைத் தன் இடப்பாகத்தே உடையவனான ஒப்பற்ற பெருமானின், இரு திருவடிகள் நிழலின் கீழாக, 'மேடு நடு கீழ்' என்னும் மூவகை உலகங்களும், உமறையே, பண்டு தோன்றின.
கருத்து: அத்தகைய அனைத்துக்கும் மூலவித்தாம் பேராருளாளனின் திருவடி நீழலை, நாமும் வேண்டி, நம் செயற்கும் துணையாகக் கொண்டு உய்வோமாக.
சொற்பொருள்:வாலிமை - தூய்மை; வாலிழை - தூய அணிகளை உடையாளான அம்பிகை. ஒருவன் - ஒப்பற்றவன்; அவன் ஒருவனே ஒருபாதி ஆணும், மற்றொரு பாதி பெண்ணுமாகி அமைந்தவன் என்பதுமாம். மூவகை உலகு - மேல், நடு, கீழ் என்னும் உலகங்கள்; 'உலகு' எனவே, உலகமும் அதிலுள்ளன யாவும் எனப் பொருள் விரித்தும் கொள்ளலாம்; அவன் அவள் அது எனும் மூவகையாற் சுட்டப்படும் உலகும் ஆம். முறையே - ஒன்றன்பின் மற்றொன்றாக; முதலில் தேவருலகங்களும், அடுத்து மானிட உலகும், இறுதியில் பாதலமும் தோன்றியதெனக் கூறும் தோற்ற முறைமையையும் இது குறிக்கும்.
விளக்கம்: 'நீலமேனி வாலிழைபாகமான வடிவம்' நினைவிற்கும் பேரின்பம் அளிப்பது; ஒரு பாதி செவ்வண்ணம், மற்றொரு பாதி நீலவண்ணம். ஒளிசெறிந்த இவை தம்முள் கலந்து இணைந்து ஒளிவீசக் காணும் பாவனைக் காட்சியே அளப்பிலாப் பேரின்பமாவதாகும். 'பெண்ணுரு ஒரு திறன் ஆகின்றது' எனப் புறமும் (புறம் 379) இவ்வழகைப் போற்றும். மூவகை உலகமும் முகிழ்த்தற்கு இடனாகிய தாள்நிழல் சேரின், நமக்கும் நலன் விளைதல் உறுதி என்பதும், இதனால் கற்பாரை உணர வைத்தனர். அத் தாள்நிழல் இந்நூலை என்றும் காப்பதாக என்பதும் கூறினர்.
'அவன் அவள் அது' என்னும் மூவகை உலகமாகக் கொள்ளின் 'முறையே முகிழ்த்தன' என்பதற்கும் அதற்கு இயையவே பொருள் விரித்துக் கொள்க. அவனிலே அவள் தோன்றி, அவளிலே அனைத்துப் பிரபஞ்சமும் அடுத்தடுத்துத் தோன்றின என்னும் சிவசக்தித் தத்துவக் கோட்பாட்டினையும், அப்போது உளத்திலே நினைக்க.
வாலிமை - தூய்மை; 'வாலறிவன்' என்னும் குறட்சொல்லுக்குத் 'தூய அறிவினன்' என்றே பொருள் உரைக்கப்படும்.
'இருதாள்' என்று எண்ணம் சுட்டிக் கூறியது, வலது இறைவன் தாளும், இடது இறவி தாளும் என விளங்கும் தனிச்சிறப்பு நோக்கியெனவும், அம்மையும் அப்பனுமாகிய இருவரையும் பணிதல் நோக்கி எனவும் கொள்க.
'முறையே முகிழ்த்தன' என்றது, முறையே வாழ்ந்தன, வாழ்கின்றன, வாழ்வன என்னும் நிலையையும் உளங்கொண்டு போற்றியதுமாம்.
இலக்கணம்: ஆசிரியப்பாட்டின் இழிவு மூன்றடி (தொல். செய், 157) என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த, ஈற்றியல் அடி மூச்சீர் பெற்றுவந்த நேரிசை ஆசிரியப்பா இதுவாகும் எனக் காட்டுவர்.
பாடபேதம்: 'நீலமேனி' என்பது 'மா அமேனி' எனவும் மாமலர் மேனி' எனவும் சொல்லப்படும். இவையும் அம்மையின் மேனி வண்ணத்தை உரைக்கும் சொற்களேயாதல் தெளிக.
அகத்துறையின் ஐந்திணை ஒழுக்கங்களுக், மருதம் பற்றிய செய்யுள்கள் நூறும் இத்தொகை நூலிலே முதற்கண் வைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு ஒரு திணைச் செகயுட்களே தொடர்ந்துவர அமைந்த மற்றொரு தொகைநூல் கலித்தொகை. அதன்கண் 'பாலைக்கலி' முதலாவதாக அமைந்துள்ளது. தனித்திணை பற்றிய முல்லைப் பாட்டும், குறிஞ்சிப் பாட்டும், பட்டினப்பாலையும் பத்துப்பாட்டுள் அமைந்த தனிநெடும் பாட்டுகள் ஆகும்.
ஒரு திணை பற்றி, ஒரு சான்றோர் செய்த செய்யுட்கள் பல தொடர்ந்து வருவதனால், அத்திணை பற்றி கருத்துத் தெளிவையும், அப்புலவரின் புலமை ஆற்றலையும் உணர்தற்குரிய நல்வாய்ப்பு, கலியாலும், இந்நூலாலும் நமக்குக் கிடைக்கின்றது.
ஒவ்வொரு திணைக்கும் நூறூ நூறு எனவும், அவற்றைப் பத்துப் பத்துச் செய்யுள்களாகத் தனித்தனித் தலைப்பின் கீழும் அமைத்துள்ள அமைப்புமுறை, எண் வரையறைப்படுத்து அதன்பால் முதன்மை நோக்கோடு நூலமைக்கும் ஒரு மரபினைத் தமிழாசிரியன்மார் மேற்கொண்டிருந்ததனையும் காட்டுவதாகும். 'பதிற்றுப்பத்தும்' இவ்வாறு எண்முறைமை பேணிய வழக்கில் அமைந்ததே. திருக்குறளும் 'பத்துப்பா' எண் மரபையே போற்றுகின்றது. பிற்காலத்தார் நூறு நூறு செய்யுட்களாக எண்ணெல்லை வகுத்துப் பாடிய சதக நூல்களுக்கும், தேவாரம், பிரபந்தம் ஆகியவைகட்கும் இந்நூலமைப்பே முன்னோடியாக வழிகாட்டி இருக்கலாம்.
'வேந்தன் மேய தீம்புனல் உலகம்' என்னும் மருதம், பல்பொருள் வளமையால் பெருக்கமுற்றிருந்தது போன்றே மக்களின் வாழ்வியல் வகையாலும், பிறநிலத்து மாந்தரினும் தனித்தன்மை பெற்றிருந்தது. மழைநோக்கி வாழ்வாராதலால் சிலகாலத்துக் கடின உழைப்பும், விளைவு பெற்ற பின்னர் சிலகாலத்தே நெடிய ஓய்வும் பெற்ற வாழ்வினராக மருத மக்கள் விளங்கினர். பெருவளம் உடையாரும், அவர்பால் உழைத்துக் கூலியேற்று உண்பாருமாக, மேற்குடியினரும் கீழ்க்குடியினரும் என்னும் பிரிவு தோன்றிற்று. இதனால், ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சார்ந்தே, ஒருவரையொருவர் போற்றியே, ஒருவர்க்கொருவர் உறுதுணை நின்றே வாழ்தலென நிலவிய பழந்தமிழரின் பிறதிணை ஒழுக்க மரபுகளுக்கும் மருதத்தில் ஒழுக்கம் உண்டாயிற்று. பொன்னும் பொருளும் விரும்பி, அதனைப் பெறுதலை வேட்டுப், பிறருக்கு அடித்தொண்டு செய்வாரும், அவற்றை வழங்கி அத்தொண்டேற்று மனம் களிப்பாருமாக, மக்கள் மனநிலையாலும் பிளவுபட்டனர். மருதத்தின் நிலையானது, சமுதாய வாழ்வியல் ஒழுக்கமானது தன் நெறிமையிலே தளர்வுற்று, ஆடவர்க்கு ஒன்றும் பெண்டிர்க்கு மற்றொன்றுமாகவும் கருதப்பட்ட நிலையதாயிற்று. ஆகவே, பரத்தைமை ஒழுக்கம் தோன்றிப் பரவியதும் மருதத்தின் கண்ணேதான். பரத்தமை பழிக்கப் பெற்றாலும், ஒழுக்கவியலினரும் சகித்துப் போகவேண்டிய ஒன்றாகக் கருதிச் சகிக்கப்பட்டதும், மருதத்திணையின் மரபாயிற்று.
ஆகவே, தலைவன் தலைவியரிடையே அத்தகைய பிரிவுக் காலத்தே எழும் மனவுணர்வுகளின் நுட்பமான தன்மைகளையும், அதிலும் உரிமையுடைய தன்னைத் துறந்து, பிற பொருட் பெண்டிர்களோடு, காமமே நினைவாகக் கருத்தழிந்து திரியும் தலைவனை வெறுத்தாற்போல ஊடினாலும், குடும்பநலம் கருதிப் பொறுத்து ஏற்று வாழும் தலைவியரின் மனச்செழுமையையும், மருதம் நமக்குக் காட்டுகிறது. நம் உள்ளத்தேயும் அக்காட்சிகள் உணர்வெழுச்சிகளைக் கட்டுப்படுத்தத் தூண்டுகின்ற செவ்வியையும், நாம் மருதச் செய்யுட்களாலே அறிந்து மேற்கொண்டு திருந்தலாம்.
ஐங்குறுநூறான இத்தொகையின் மருதச் செய்யுள்கள் நூறையும் பாடியவர் 'ஓரம்போகிறார்' ஆவர். குறுந்தொகையுள் 10, 70, 122, 127, 384-ஆம் செய்டுக்ளையும்; அகநானூற்றுள் 286, 316-ஆம் செய்யுட்களையும்; நற்றிணையுள் 20, 306ஆம் செய்யுட்களையும்; புறத்துள் 284ஆம் செய்யுளையும் இவர் செய்தவராகவும் காணப்படுகின்றனர்.
'ஓரம்போகி' என்பது இவரின் ஊர்ப்பெயர் எனவும், இவரது இயற்பெயரே எனவும் சான்றோர் கருத்து வேறுபடுவர். 'ஓர் அம்பு போக்கி' என்னும் வில்லாண்மை குறித்த புகழ்ச் சொல்லே 'ஓரம்போகி' என்றாயிற்று எனவும், 'ஓர் அம்பு ஏவி' என்பது 'ஓரம்பேவி' 'யாகி' 'ஓரம்போகி' என்றாயிற்று எனவும், ஓரம் என்பது உண்மைக்கு மாறாக நீதியை வளைத்துக்கூறல்; அங்ஙனம் கூறாத மனத்திண்மையாளர் இவராதலால் 'ஓரம் போகிலார்' எனப் பெற்றனர்; அஃதே திரிந்து 'ஓரம் போகியார்' என்றாயிற்று எனவும்; 'ஓர் அம் போகியார்' என்னும் 'ஒப்பற்ற அழகிய போகத்தே திளைப்பவர்' என்பதே ஓரம்போகியார் என்று அமைந்தது எனவும், ஆய்வாளர்கள் பலபடக் கூறுவர். 'தனக்கு இழிந்தானைப் பெயர்புற நகுமே' (புறம் 248) எனத் தமிழ் மறவனின் சால்பை ஓவியப்படுத்தும் இவரைத் தமிழ் மறமாண்பிலேயும் சிறந்தார் எனவும், 'ஓர் அம்பு போக்கி' வெல்லும் திறல் பெற்றார் எனவும் கருதுதலே மிகமிகப் பொருந்துவதாகும்.
இவர் செய்யுட்களிலே, மாந்தர் மனவுணர்வுகளின் ஆழ்ந்தகன்ற நினைவுக்கூறுகளை அறிந்தறிந்து வியக்கலாம்; 'பொன்மொழிகளே' எனப் போற்றிப் பேணத்தகுந்த பல சொற்றொடர்களையும் காணலாம். குருகாற் பற்றப்பட்டு மீண்ட கெண்டையானது, அயலே தோன்றி தாமரையின் முகையினைக் கண்டதும், குருகெனவே கருத்திற் கொண்டதாகி அஞ்சி நடுங்கும் என்று காட்சிப்படுத்தி, அச்சமுறும் மனவியல்புகளைத் தமிழோவியப்படுத்தும் தனித்திறலார் இவர் ஆவர். மருதத்திணை பற்றிய இந்தச் செய்யுட்கள் நூறும், மருதநில மாந்தர் தம் வாழ்வுப் போகிகினையும், இல்லறப் பண்பு நலன்களையும், அகவாழ்வின் ஒழுகலாறுகளையும், நாமும் நன்கு உணரச் செய்வனவாகும்.
இம் மருதத்துள் - வேட்கைப் பத்து (1) வேழப் பத்து, (2) களவன் பத்து, (3) தோழிக்கு உரைத்த பத்து, (4) புலவிப் பத்து, (5) தோழி கூற்றுப் பத்து, (6) கிழத்தி கூற்றுப் பத்து, (7) புனலாட்டுப் பத்து, (8) புலவி விராய பத்து (9) எருமைப் பத்து, (10) எனப் பத்துப் பத்துகள் உள்ளன.
ஆதன், எழினி, அவினி, சோழன், கடுமான் கிள்ளி, பாண்டியன், மத்தி, விராஅன் என்போர் குறிக்கப் பட்டுள்ளனர். தேனூர், ஆமூர், இருப்பை, கழாஅர் என்னும் ஊர்கள் பற்றிய செய்திகளையும் காணலாம்.
இந்நூலின் அமைப்பும், செய்யுட்கள் அமைந்து செல்லும் பாங்கும், அவை விளக்கிச் செல்லும் மனப்போக்குகளும், அவற்றைச் சொல்லாட்சிப்படுத்தும் சொல்நயமும், இந்நூல் அந்நாளைய பெரும்புலவர்கள் ஐவர், ஐந்திணை மரபுகளையும் ஒருங்கே தெளிவுபடுத்தும் பொருட்டாகத் திட்டமிட்டுச் செப்பமாகப் பாடியமைத்த செய்யுட்களின் வகைப்படுத்தித் திணை துறைகளுக்கு ஏற்பத் தொகுத்த அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் தொகை நூல்களினும் பிற்பட்டு எழுந்த தொகை நூலாதல் பொருந்தும். கலித்தொகைக்குப் பின்னர் எழுந்திருக்கலாம் என்றுகூடச் சொல்லக்கூடும்.
திட்டமிட்டுச் செய்யப்பெற்ற செய்யுட்கள் என்பதால், சொல்லிச் செல்லும் பொருளின் அமைதியிலே இனிமை நயமும், வளமைச் செறிவும் மிகுதியாயிருக்கும் நலத்தினையும், நாம் உய்த்துணர்ந்து மகிழ வேண்டும்; போற்ற வேண்டும்!
1. வேட்கைப் பத்து
'வேட்கை' என்பது விருப்பம் ஆகும்; புறத்தொழுக்கிலே நெடுநாள் ஒழுகிய தலைவனின் உடனுறைவின்பம் பெற்றிலாத காலத்திலே, தலைவியின் மனவேட்கை எவ்வாறு பொறுப்புணர்வோடு சென்றது என்பதும், அவள் நலத்தையே கருதியவரான தோழியரின் மனவேட்கை எவ்வாறு நிகழ்ந்தது என்பதும், இதன் கண் விரிவாக உரைக்கப்படுகின்றன.
தானிழந்த கூட்டத்தின் இன்பம் பற்றிய மனக்குறையும், தன்னை ஒதுக்கிச் சேரிப் பரத்தையரை நச்சித்திரியும் தலைவனின் போற்றா ஒழுக்கத்தின் அவலநினைவும் உடையவளேனும், தலைவி, தன்னுடைய இல்லறக் கடமைகளிலே தன் மனத்தை முற்றச் செலுத்தியிருக்கும் மனையறமாண்பினையும் இப்பகுதியிற் காணலாம். அவள் தோழியரோ, 'இத்தகு பண்பினாளின் பிரிவுத்துயரம் தீரும் நாள் வாராதோ?' என்று, அவளைப் பற்றியே நினைத்தவராக, அவள் நலத்தையே விரும்பி வேண்டுகின்றனர். இவ்வேட்டலை, இறையருளை விரும்பி வழிபட்டு வேட்டலாகவே கொள்க.
1. நெற்பல பொலிக!
துறை: புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, 'இது தகாது' எனத் தெளிந்த மனத்தனாய், மீண்டும் தலைவியோடு கூடி ஒழுகா நின்று தலைமகன், தோழியோடு சொல்லாடி, 'யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?' என்றாற்கு, அவள் சொல்லியது.
(துறை விளக்கம்) 'இது தகாது' எனத் தெளிந்த மனத்தினனாகத் தலைவன் தன்னில்லம் மீண்டான். தலைவியோடும் கூடி இன்புற்றும் ஒழுகி வருகின்றான். அக்காலத்து, அவன் உள்ளம், 'அந்நாட்களிலே தன்னைப் பற்றி இவர்கள் எவ்வாறு நினைத்திருப்பார்கள்?' என்று அறிகின்றதிலேயும் சற்று வேட்கை கொள்ளுகின்றது. அவன், தலைவியில்லாத இடத்தே, அதுப்பற்றித் தோழியிடம் உசாவுகின்றான். அவள், அவனுக்குத் தலைவியின் உயர்வைக் காட்டிச் சொல்வதாக அமைந்த செய்யு இது.
'வாழி ஆதன்; வாழி அவினி!
நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க!'
எனவேட் டோளே யாயே; யாமே,
'நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன். வாழ்க!
பாணனும் வாழ்க!' என வேட்டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! நெல் பலவாக விளைவதாக; பொன்வளம் பெரிதாகிச் சிறப்பதாக' எனத் தலைமகள் வேண்டினால். 'பூவரும்புகள் கொண்ட காஞ்சி மரத்தையும், சினைகளைக் கொண்ட சிறுமீன்களையும் மிகுதியாகவுடைய ஊருக்குரியவனாகிய தலைவன் வாழ்க; அவன் ஏவலனாகிய பாணனும் வாழ்க!' என, யாங்கள் வேண்டினோம்.'
கருத்து: 'தன் இல்லறக் கடமைகள் சிறப்பதற்காவன வற்றைத் தலைவி விரும்பி வேண்டினாள்; யாங்களோ, அவள் நலன் பெருகுவதற்காக, நின் நலனை வேண்டினோம்.'
சொற்பொருள்: வேட்டல் - வேண்டுதல். யாய் - தாய்; தலைவியை அவளின் சால்புமிகுதியால் சிறப்பித்துக் கூறியது; அவன் புதல்வனைப் பெற்ற தாய் என்பதும் ஆம்: தன்னைத் தலைவன் துறந்தமைக்கு நோவாது, தன் இல்லத்தைத் தாயாகித் தாங்கும் அறநெறிக் கடனிலேயே மனஞ்செலுத்தின உயர்வை நினைந்து கூறியதாகவும் கொள்ளலாம். நனை - பூவரும்பு. சினை - முட்டை. சிறுமீன் - சிறிய உருவுள்ள மீன். ஊரன் - ஊரே தன்னுரிமையாகக் கொண்ட தலைவன்.
விளக்கம்: 'ஆதன் என்றது குடியினையும், 'அவினி' என்றது அக்குடியினனாகத் தம் நாட்டினைக் காத்துவந்த அரசனையும் குறிப்பதாம். காவலன் நெறியோடே காவாதவிடத்து அறமும் நிலைகுன்றுமாதலின், 'அவன் வாழ்க' என முதற்கண் வாழ்த்தினள். 'நெற்பல பொலிக' என்றது. உயிர்களின் அழிபசி தீர்த்தலான பேரறத்திற்கு உதவியாகும் பொருட்டு; 'பொன் பெரிது சிறக்க' என்றது. நாடிவந்து இரவலர்க்கு வழங்கி உதவுதற்கு. தலைமகளின் வேட்கை அறம்பேணும் கடமைச் செறிவிலே சென்றதால், அத்தகைய அவள் வாழ்வு சிறக்கத் தலைவனின் நலத்தைத் தோழியர் வேண்டுகின்றனர். பாணனும் வாழ வேட்டது, அத்தகு பெருங் கற்பினாளுக்குத் தலைவன் துயர்விளைத்தற்குக் காரணமாகிய பரத்தையைக் கூட்டுவித்த அவன், அத்தீச்செயலின் விளைவாலே துயருறாதபடிக்கு இறையருளை விரும்பி வேட்டதாம். இது, அவன் தலைவனின் ஏவலால் இயங்கிவனேயன்றித் தன்னளவில் தலைவிக்கு ஊறு செயநினைந்து எயற்பட்டிலன் என்பதனை நினைந்த அருளினாலும் ஆம். ஆகவே, தலைவனும் ஊறின்றி வாழ வேண்டினதும் கொள்க.
உள்ளுறை: 'நாளைய காஞ்சியும் சினைய சிறுமீனும் முகுதியாகவுடைய ஊரன்' என்றது, முகுதியென்ற நிலையில் உயர்ந்த ஒன்றையும் இழிந்த ஒன்றையும் ஒருசேர இணைத்துக் கூறுதலேபோலத், தலைவியையும் பரத்தையையும் காம நுகர்வு பற்றிய மட்டிலே ஒன்று போலவே நினைத்த பேதையாளனாயினாள் என்றதாம்.
மேற்கோள்: 'இது வாழ்த்தல் என்னும் மெய்ப்பாட்டில் வந்தது' என இளம்பூரணனார் காட்டுவர். (தொல் - மெய்ப் பாட்டியல், சூ. 12 உரை).
குறிப்பு: 'வாழி ஆதன்' என்பதனை, 'வாழியாதன்' எனவே கொண்டால், சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குறிப்பதும் ஆகலாம். அப்போது, அவனுக்கு உட்பட்ட குறுநிலத் தலைவனாக 'அவினி'யைக் கொள்க. கொங்கு நாட்டு 'அவினாசி' என்னும் ஊர்ப் பெயர் அவினியை நினைவுபடுத்தும். மதுரைப் பக்கத்து 'அவனியா புரம்' அவினி அப்பகுதித் தலைவனாகப் பாண்டியனுக்கு உட்பட்டிருந்தவன் என்று நினைக்கவே நம்மைத் தூண்டும்.
2. விளைக வயலே!
துறை: மேற்செய்யுளின் துறையே யாகும்.
'வாழி ஆதன்; வாழி அவினி!
விளைக வயலே; வருக இரவலர்!'
எனவேட் டோளே! யாயே; யாமே,
'பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை யூரன் கேண்மை
வழிவழிச் சிறக்க!' எனவேட் டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! வயல் விளைக; இரவலர் வருக' எனத் தலைமகள் விரும்பி வேண்டினாள். 'பலவான இதழ்களைக் கொண்ட நீலத்தோடு நெய்தலும் நிகராக மலர்ந்திருக்கும், குளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊருக்கு உரியவனான தலைவனின் நட்பானது, தலைவியோடே வழிவழிச் சிறப்பதாக' என, யாங்கள் வேண்டினோம்.
கருத்து: தலைமகளோ, 'தன் இல்லறம் செழிக்க அறநெறி காக்கும் அரசன் நன்கு வாழ்தலையும், வயல்கள் பெருக விளைதலையும், வரும் இரவலர் உதவி பெற்று மகிழ்ந்து போதலையுமே' வேண்டினாள். யாமோ, 'நின் நட்பு வழிவழி அவள்பாற் சிறப்பதனையே வேண்டினோம்' என்பதாம்.
சொற்பொருள்: நீலம் - கருங்குவளை; மருதத்து நீர் நிலைகளில் பூப்பது. நெய்தல் - நெய்தல் நிலத்து நீர்நிலைகளிலே பூப்பது. கேண்மை - நட்பு; கேளிராக அமையும் உறவு. வழிவழி - பிறவிதோறும் புதல்வன், அவன் புதல்வன் எனத் தொடர்ந்து, குடிபெருகி வழிவழிச் சிறத்தலைக் குறிப்பதும் ஆம்; 'வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொள்ளம்' என மதுரைக் காஞ்சியிலே குறித்தாற் போன்று கொற்றம்' என மதுரைக் காஞ்சியிலே குறித்தாற் போன்று (194), நாள்தோறும் சிறக்க எனப் பொருள் கொள்வதும் பொருந்தும்.
விளக்கம்: வயல் விளைக என்றது விருந்தாற்றுதற்கும், இரவலர் வருக என்றது எளியோரைப் பேணுதற்கும் மனங்கொண்ட அறக்கட்டமை உணர்வே மேலோங்கி, தலைவியிடம் நின்றதெனக் காட்டுவதாம். தொழியரோ, அவள்தன் இன்ப நலமும் வழிவழிச் செழிப்பதன் பொருட்டு வேண்டினர்; அவர்கள் கேண்மை வழிவழி சிறப்பதனையும் விரும்புகின்றனர். பிறவி தோறும் நீங்கள் இப்படியே தலைவன் தலைவியராகி இன்புற்று மகிழ்க என்பது தோழியர் வேண்டுதற் கருத்தாகும்.
உள்ளுறை: மருதத்திற்கு உரிமையோடு கூடிய நிலத்துக்கு நிகராக, உரிமையற்ற நெய்தலும் செயித்து மலர்ந்திருக்கும் ஊரன் என்றது, உரிமையாட்டியான தலைவிக்கு நிகராக உரிமையற்ற பரத்தையையும் ஒப்பக் கருதி விரும்பித் திரியும் தலைவனின் இழுக்கத்தைச் சுட்டி காட்டுதற்கு.
3. பால் பல ஊறுக.
துறை: இதுவும் மேற்சொல்லிய துறையினதே.
'வாழி ஆதன் வாழி அவினி!
பால்பல ஊறுக; பகடு பல சிறக்க!
என வேட்டோளே' யாயே; யாமே,
'வித்திய உழவர் நெல்லொடு பெயரும்
பூக்கஞல் ஊரன் தன்மனை
வாழ்க்கை பொலிக' என வேட்டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! பசுக்களிடத்திலே பாற்பயன் மிகுதியாகச் சுரப்பதாக; பகடுகள் பலவாகப் பெருகுக' என வேண்டினள் தலைமகள். யாமோ, வயல்களிலே விதைவிதைத்துத் திரும்பும் உழவர்கள், அவ்வடிடியிலே நெல்லைக் கொண்டவராகத் தம் வீடுநோக்கிச் செல்லும், பூக்கள் நிரம்பிய ஊரனான, தலைவனின் மனையற வாழ்க்கை என்றும் சிறப்பதாக' என வேண்டினோம்.
கருத்து: தலைவியோ இல்லறக் கடனாற்றுவதில் முட்டுப் பாடற்ற வளமை முகுதியையே வேண்டினாள்; யாங்களோ நுங்கள் மனைவாழ்க்கை சிறப்படைவதையே விரும்பி வேண்டினோம்.
சொற்பொருள்: ஊறுக - சுரக்க, பகடு - எருமை வித்திய - விதைத்த. கஞல் - முகுதியாகவுடைய, மனைவாழ்க்கை - மனையாளோடு கூடிவாழும் இன்ப இல்லற வாழ்க்கை.
விளக்கம்: குடும்ப நல்வாழ்வுக்குப் பாற்பயன் முகுதியும், வயல்வளம் செழித்தற்குப் பகடுகளின் பெருக்கமும் தலைவி வேண்டினாள், அவளது இல்லறக் கடனைச் செழுமையாக நிகழ்த்தலின் பொருட்டு என்க. 'வித்திய உழவர் நெல்லோடு பெயரும்' என்றது, முன் வித்தி விளைந்ததன் பயனைக் கைக்கொண்டு மீள்வர் என்பதாம். இஃது பயிர்த் தொழில் இடையறாது தொடரும் நீர்வளமிக்க ஊரன் என்பதற்காம். 'பூக்கஞல் ஊரன்' என்றது மணமலர் மிகுந்த ஊர் என்றற்காம்.
உள்ளுறை: தானடைதற்கு விரும்பிய பரத்தைக்கு வேண்டுவன தந்து, அவளோடு துய்ப்பதற்கான கலாச் செவ்வியை எதிர்நோக்கும் தலைவன், முன்னர் அவ்வாறு தந்து கூடுதற்கு முயன்ற மற்றொருத்தி, அப்போதிலே இசைவாகிவர, அவளோடுஞ் சென்று கூடி இன்புறுவானாயினான் என்பதைக் குறிப்பாகச் சுட்டி உணர்த்த, 'வித்திய உவார் நெல்லொடு பெயரும்' என்று கூறினளுமாம்.
2. 'பூக்கஞல் ஊரன்' என்றது, மலர்கள் மிகுதியாகி மணம் பரப்பி மகிழ்வூட்டுதலே போன்று, பரத்தையரும் பலராயிருந்து, நாள்நாளும் இன்பமூட்ட, அதிலேயே மகிழ்பவன் தலைவன் என்பதை உணர்த்துவதாம்.
3. 'பால் பல ஊறுக' என்றது, தலைவி மகப் பெற்ற தாயாகி மாண்படைந்தவள் என்னும் சிறப்பைக் குறிப்பாகச் சுட்டும்.
இறைச்சி: 'ஊரன் தன் மனைவாழ்க்கை பொலிக' என வேட்டேம்' என்றது, அதனைக் கைவிட்டுப் புறம்போன செயலால் அவளடைந்த துயரம் இனியேனும் நிகழாதிருப்பதாக என்று தெய்வத்தை வேண்டியதாம். தலைவனுடனிருந்து இயற்றுவதே மனைவாழ்க்கையிற் பொலிவான சிறப்புத் தருவது என்பது கருதி, அதற்கருளத் தெய்வத்தை வேண்டியதுதாம்.
4. பகைவர் புல் ஆர்க!
துறை: இதுவும் மேற்செய்யுளின் துறையே ஆகும்.
'வாழி ஆதன்; வாழி அவினி!
பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக!
என வேட்டோளே யாயே; யாமே,
'பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு
பழன மாகற்க' எனவேட் டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! பகைவர், தம் பெருமிதமிழந்து தோற்றாராய்ச் சிறைப்பட்டுப் புல்லரிசிச் சோற்றை உண்பாராக! பார்ப்பார், தமக்கான கடமையினை மறவாதவராக, தமக்குரிய மறைகளை ஓதிக்கொண்டே இருப்பாராக' என விரும்பி வேண்டினள் தலைமகள். யாமோ, 'பூத்த கரும்புப் பயிரையும், காய்த்த நெற்பயிரையும் கொண்ட கழனிகளையுடைய ஊரனின் மார்பானது, பலருக்கும் பொதுவான பழனமாகாதிருப்பதாக' என வேண்டினேம்.
கருத்து: தலைவியோ, நாடு பகை யொழிந்து வாழ்கவெனவும், மாந்தர் அவரவர் கடமைகளைத் தவறாது செய்திருக்க எனவும், பொதுநலனே என்றும் செழிக்க வேண்டினாள். யாமோ, தலைவன் புறவொழுக்கம் இல்லாதானாக, அவளுக்கே என்றும் உரிமையாளனாக, அவளுடனேயே பிரியாது இன்புற்று இருக்குமாறு அருளுதலை வேண்டினோம்.
சொற்பொருள்: புல் ஆர்க - பகைத்தெழுந்தவன் தோற்றுச் சிறைப்பட்டாராய்த் தம் பழைய செழுமையிழந்து புல்லரிசிச் சோறே உண்பவர் ஆகுக; பகையொழிக என்பதாம் பார்ப்பார் - ஓதலும் ஓதுவித்தலுமே கடனாகக் கொண்டு அறம்பேணி வருவார்; அவர், அவர் தம் கடனே தவறாது செய்வாராகுக. பழனும் - ஊர்ப் பொதுநிலம்; யாருக்கும் பயன்படுதற்கு உரிமையாகியும், எவருக்கும் தனியுரிமையற்றும் இருக்கும் நிலம்.
விளக்கம்: நாடு பகையற்றிருப்பதனையும், மாந்தர் அவரவர் கொண்ட கடன்களைச் சரிவரச் செய்து வருதலையும் வேண்டினாள், அவ்வாறே தன் இல்லறக் கடன்களையும் தான் செவ்விதே செய்தற்கு விரும்பும் விருப்பினாள் என்பதனால், 'பழன மாகற்க நின் மார்பு' என்று தோழியர் வேண்டியது, அத்தகு கற்பினாளுக்கே உரிமையுடைய இன்பத்தை, உரிமையில்லார் பலரும் விரும்பியவாறு அடைந்து களிக்கும் நிலை தொடராதிருக்க வேண்டியதாம். 'பார்ப்பார் ஓதுக' என்றது, அதனால் நாட்டிலே நன்மை நிலைக்கும் என்னும் அவரது நம்பிக்கையினை மேற்கொண்டு கூறியதாம்.
உள்ளுறை: பூத்துப் பயன்படாது ஒழியும் கரும்பையும் காத்துப் பயன்தரும் நெல்லையும் ஒருசேரச் சுட்டிக் கூறியது, அவ்வாறே பயனுடைய அறத்தினைத் தெரிந்து பேணா தானாகிக் குடிநலன் காக்கும் தலைவியையும், பொருளே கருதும் பரத்தையரையும் ஒப்பக் கருதி இன்பம்காணும் போக்கினன் தலைவன் என்று கூட்டி, அவன் பிழை காட்டுதற்காம்.
பரத்தையர் தம் குடிமரபு தழைக்கப் புதல்வர்ப் பெற்று உதவுகின்ற தகுதியற்ற நிலையை, 'அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து, நன்றிசான்ற கற்பொடு எம்பாடாதல் அதனினும் அரிதே' எனும் நற்றிணையால் உணர்க (நற். 330).
5. பிணி சேன் நீங்குக!
துறை: இதுவும் மேற்குறித்த துறை சார்ந்ததே.
'வாழி ஆதன்; வாழி அவினி!
பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக!
என வேட்டோளே யாயே; யாமே
'முதலைப் போத்து முழுமீன் ஆரும்
தண்துறை யூரன் தேர் எம்
முன்கடை நிற்க' என வேட்டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! நாட் பசியில்லாதாகுக; பிணிகள் நெருக்காதே நெடுந்தொலைவு நீங்கிப் போவனவாகுக' என விரும்பி வேண்டினள் தலைமகள். யாமோ, 'முதலையின் இளம்போத்தும் முதிர்ந்த மீனைப் பற்றி உண்கின்ற, குளிர்ந்த நீர்த்துறை அமைந்த ஊருக்கு உரியவனான தலைவனின் தேரானது, எம் வீட்டின் தலைவாயிலிலேயே எப்போதும் நீங்காதே நிற்பதாகுக' என வேண்டினோம்.
கருத்து: தலைமகள் நாடெல்லாம் நன்கு செழித்து வாழ்தலையே வேண்டினாள்; யாமோ, அவள் தலைவனோடு என்றும் கூடியின்புற்றுக் களிப்புடன் வாழ்தலையே விரும்பி வேண்டினேம்.
சொற்பொருள்: சேண் - நெடுந்தொலைவு. போத்து - இளம் பருவத்துள்ளது. முழுமீன் - முற்ற வளர்ந்த மீன். ஆர்தல் - நிறையத்தின்றல். முன்கடை - தலைவாயில்; 'முன்', 'கடை' என இரண்டையும் இணைத்துச் சொன்னது, வீட்டின் பின்பகுதியிலேயே கடைவாயிலாகத் தோன்றும் என்பது பற்றி என்க; இது பெண்டிர் தம் பேச்சு மரபு.
விளக்கம்: 'உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும் சேராதியல்வதே (குறள் 734)' சிறந்த நாடாதலின், அத்தகைய நாட்டிடத்தேயே இல்லற நல்வாழ்வும் நிலையாகச் சிறக்குமாதலின், அறக்கடைமையே நினைவாளாயினாள், அதனையே வேண்டினள் என்க. தோழியரோ, அவனும் அவளுடனிருந்து அவளை இன்புறுத்தித் துணை நிற்றலையே நினைவாராக, 'அவன் தேர் எப்போதும் தம் வீட்டுத் தலைவாயிலிலேயே நிற்பதாகுக' என வேண்டுவாராயினர். தலைவன் தேர் முன்கடை நீங்காதே நிற்பதாயின், அவனும் இல்லிலேயே தலைவியுடன் பிரியாதிருப்பவன் ஆவான் என்பதாம்.
உள்ளுறை: முதலைப் போத்தானது, தன் பசி தீர்த்தலொன்றே கருத்தாக முழு மீன்களையும் பற்றியுண்டு திரிதலே போலத், தலைமகனும் தன்னிச்சை நிறைவேறலே பெரிதாகப் பரத்தையரைத் துயுத்துத் திரிவானாயினன் என்பதாம், இதனால் துயருறும் தலைமகள், மற்றும் இல்லத்துப் பெரியோர் பற்றிய நினைவையே அவன் இழந்து விட்டனன் என்பதும் ஆகும்.
குறிப்பு: ஒன்று முதலாக ஐந்து முடியவுள்ள இச் செய்யுட்கள் எல்லாம் கற்பின்கண் நிகழ்ந்தவை காட்டுவன; 'தன்கண் தோன்றிய இசைமை பொருளாகப் பிறந்த பெருமிதம்' என்னும் மெய்ப்பாட்டினைப் புலப்படுத்துவன; பிரிவுத் துயரினை ஆற்றியிருந்த தலைவியின் பெருந்தகுதிப் பாட்டை, குலமகளிரின் நிறைவான மாண்பினைக் கூறுதலான பயனைக் காட்டுவன எனலாம். 'இல்லவள் மாண்பானால்' என வள்ளுவர் கூறும் பெருமாண்பும் இதுவேயாம்.
6. வேந்து பகை தணிக!
துறை: களவிற் பலநாள் ஒழுகி வந்து, வரைந்து கொண்ட தலைமகன், தோழியோடு சொல்லாடி, 'யான் வரையாது ஒழுகுகின்ற நாள், 'நீயிர் இங்கு இழைத்திருந்த திறம்யாது?' என்றாற்கு, அவள் சொல்லியது.
[து-வி: விரைவிடை வைத்துப் பிரிந்து சென்றவன், திரும்பி வந்து முறையாகத் தலைவியை வரைந்து, அவளோடே மணமும் கொண்டு, அத் தலைமகளோடே இல்லறமும் பேணி இன்புற்றிருக்கின்றனன். அதுகாலை, அவன் தோழியிடம், தான் வரையாது காலம் நீட்டித்த அந்தப் பிரிவுக் காலத்தே, அவர்கள் எவ்வாறு நினைந்திருந்தனர் என்பது பற்றிக் கேட்க, அவள் அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தே கொள்ளும் தலைவியின் பிரிவுத் துயரம் குறிஞ்சித் திணையின்பாற் படுவது; எனினும், இது இல்லறமாற்றும் காலத்தே உசாவிக் கேட்கச் சொன்னதான கற்பறக் காலத்ததாதலின் மருதத் திணையிற் கொளற்கும் உரித்தாயிற்று என்க; மருதக் கருப்பொருள் பயின்று வருதலையும் நினைக்க.]
'வாழி ஆதன்; வாழி அவினி!
வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக!
என வேட்டோளே, யாயே; யாமே,
'மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்துறை யூரன் வரைக
எந்தையும் கொடுக்க' என வேட்டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! வேந்தன் பகை தணிவானாக; இன்னும் பல ஆண்டுகள் நலனோடு வாழ்வானாக!' என விரும்பி வேண்டினள் தலைமகள். யாமோ 'அகன்ற பொய்கையிடத்தே, தாமரையின் முகைகளும் தோன்றும் குளிர்ந்த நீர்த்துறையுடைய ஊருக்குரியவனாகிய தலைமகன் வரைந்து வருவானாக; எம் தந்தையும் இவளை அவனுக்குத் தருவானாக' என வேண்டியிருந்தோம்.
கருத்து: நின்னை எதிர்பட்ட போதே, 'நீ வரைந்தாய், எனத் தலைவி உளங்கொண்டனள்; ஆதலின், இல்லறத்திற்கு வேண்டுவனவே விரும்பி வேண்டியிருந்தனள். யாமோ, 'தலைமகன் விரைவில் வரைந்து வருவானாக; என் தந்தையும் கொடுக்கத் தலைவியை மணந்து, என்றும் பிரியாது இன்புறுத்தி வாழ்வானாக' என நின்வரவையே வேண்டியிருந்தோம்.
சொற்பொருள்: நந்துக - பெருகுக. முகைதல் - அரும்புதல். எந்தை - எம் தந்தை; தலைமகளின் தந்தையே, உரிமை பற்றி இவ்வாறு தோழியும் தந்தையெனவே குறித்தனள்.
விளக்கம்: 'நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவுமாகும்' (தொலை பொருள் 43) என்னும் மரபின்படி இவை நினைக்கப்படுகின்றன. 'வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக' என்றலின், இப் பிரிவினை வாளாண் பிரிவாகக் கொள்ளுதலும் பொருந்தலாம்.
உள்ளுறை: மலராது முகையளவாகவே தோன்றினும், தோன்றிய தாமரை முகை பலராலும் அறியப்படுதலே போல, அவள் களவைப் புலப்படுத்தாது உளத்தகத்தே மறைந்தே ஒழுகினும், அஃது பலராலும் அறியப்பட்டு அலராதலும் கூடும் எனவும்; ஆகவே விரைந்து மணங்கோடல் வாய்க்க வேண்டும் எனவும் வேண்டினேம் எனக் கூறியதாகக் கொள்க.
மேற்கோள்: 'அற்றமில்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்' (தொல். கற்பு 9, இளம்). என்பதன் உரையில், களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் எல்லாத தலைவியைத் தலைவன் வரைந்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்தலின், அப்பரவுக் கடன் கொடுத்தல் வேண்டும் எனத் தலைவற்குக் கூறுமிடத்துத், தோழிக்கு இவ்வாறு கூற்று நிகழும் என்றும் உரைப்பர். ஆகவே, வேண்டிய தெய்வம் வேண்டியது அருளினமையால், அதற்குப் பரவுக் கடன் தரவேண்டும் என்று தோழி கூறியதாகவும் கொள்ளலாம்.
பிற பாடம்: துறைக் குறிப்பில், 'நீயிர் இழைத்திருந்த திறம்' என்னுமிடத்து, 'நீயிர் நினைத்திருந்த திறம்' எனவும் பாட பேதம் கொள்வர்.
குறிப்பு: 'மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்துறை ஊரன்' என்றதும், மலர்ந்து மணம் பரப்பும் மலர்களையுடைய தாமரைப் பொய்கையிடத்துத் தானே முகைகளும் முகிழ்த்துத் தோன்றுமாறு போல, கற்பறம் பேணி வாழும் மகளிரிடையே, தலைவியும் மணம் பெறாத முகை போல மணமற்றுத் தோன்றுகின்றனள் என்று உள்ளுறை பொருள் கூறலும் கூடும். முகை விரிந்து மணம் பரப்பலே போலத் தலைவியும் மணம் பெற்றுக் கற்பறத்தால் சிறப்பெய்த வேண்டும் என்பதாம்.
7. அறம் நனி சிறக்க!
துறை: இதுவும் மேற்செய்யுளின் துறையே யாம்.
'வாழி ஆதன்; வாழி அவினி!
அறம் நனி சிறக்க; அல்லது கெடுக!'
என வேட் டோளே, யாயே; யாமே,
'உளைப்பூ மருதத்துக் கிளைக்குருகு கிருக்கும்
தன்துறை யூரன் தன்னூர்க்
கொண்டனன் செல்க' என வேட்டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க' அறவினைகள் மிகுதியாக ஓங்குக; அறம் அல்லனவாகிய தீச்செயல்கள் இல்லாதேயாகி முற்றவும் கெடுவதாக' எனத் தலைமகள் விரும்பி வேண்டி இருந்தனள். யாமோ, 'உளை பொருந்திய பூக்களைக் கொண்ட மருத மரத்தினிடத்தே, குருகுகள் தன் இனத்தோடே அமர்ந்திருக்கும் குளிர்ந்த நீர்த் துறையுள்ள ஊருக்குரியவனான தலைவன், இவளைத் தன்னூர்க்குத் தன் மனையாளாக்கிக் கொண்டு செல்வானாகுக' என விரும்பி வேண்டியிருந்தோம்.
கருத்து: தலைமகளோ, நாடெல்லாம் நன்மையாற் செறிவுற்று வாழ்தலையே விரும்பி வேண்டினள்; யாமோ, அவள் நின்னை மணந்து மனையறம் பேணிக் கொள்ளலையே விரும்பி வேண்டியிருந்தோம்.
சொற்பொருள்: அல்லது - அறம் அல்லாதது; தீவினை. உளைப்பூ - உளை கொண்டதனா பூ; உளை - உட்டுளை. குருகு - நீர் வாழ் பறவை; நெய்தற்குரிய இதனை மருதத்துக் கூறினர். 'எந்நில மருங்கின் பூவும் புள்ளும்' என்னும் விதியால் (தொலை. பொ. 19) என்க.
விளக்கம்: 'அறம் நனி சிறக்கவே அல்லது கெடும்' எனினும், அதனைத் தனித்து 'அல்லது கெடுக' என்றது, தீவினை முற்றவுமே இல்லாதாதலை நினைவிற் கொண்டு கூறியதாம்.
உள்ளுறை: 'கிளைக்குருகு உளைப்பூ மருதத்து இருக்குமாறு போலத் தலைமகளும் நின் மனையாட்டியாக நின் இல்லத்தே இருந்து, தன் மனைக்கடன் ஆற்றுவாள் ஆகுக' என வேண்டினேம் என்பதாம்.
8. அரசு முறை செய்க!
துறை: இதுவும் மேற் செய்யுளின் துறையே கொண்டது.
'வாழி ஆதன்; வாழி அவினி!
அரசு முறை செய்க; களவு இல்லாகுக!'
எனவேட் டோளே, யாயே; யாமே,
'அலங்குசினை மா அத்து அணிமயில் இருக்கும்
பூக்கஞல் ஊரன் சூள், இவண்
வாய்ப்பதாக என வேட்டேமே!
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! அரசு முறை செய்வதாகுக; களவு எங்கணும் இல்லாது ஒழிக' என வேண்டினள் தலைமகள். யாமோ, 'அசையும் கிளைகளோடு கூடிய மாமரத்திலே அழகான மயில் இருப்பதாகின்ற, பூக்கள் நிறைந்த ஊருக்குரிய தலைவன், முன்னர்ச் செய்த சூளுறவானது இப்போது மெய்யாகி விளைவதாக' என வேண்டியிருந்தோம்.
கருத்து: அவளோ, நாட்டின் பொதுநலனையே வேண்டியிருந்தாள்; யாமோ அவள் திருமணம் விரைவில் வாய்ப்பதனையே வேண்டியிருந்தோம்.
சொற்பொருள்: முறை செய்க - நீதி வழங்குக; 'ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யாவர் மாட்டும், தேர்ந்து செய்வஃதே முறை' (குறள். 541) என்பதனை நினைவிற் கொள்க. களவு - வஞ்சித்தால் பிறர் பொருளைக் கொள்ளக் கருதுதல். அலங்கு சினை - அசையும் கிளை. மா - மாமரம். சூள் - தெய்வத்தை முன்னிறுத்தி ஆணையாகக் கூறல்; 'கொடுஞ்சுழிப் புகா அர்த் தெய்வம் நோக்கி அருஞ்சூள் தருகுவன' (அகம். 110) என வரும், 'நின்னைத் துறந்து வாழேன்' என்றாற் போல்வதான உறுதிமொழி இது.
விளக்கம்: மன்னன் முறை செய்யானெனின் நாடு கெடும்; களவு பிற தீவினைகளும் மலியும், ஆதலின், தலைமகள் அரசு முறை செய்தலையும், களவு இலையா தலையும் வேண்டினள். 'சூள் வாய்ப்பின் அவள் இன்புறுவள்' ஆதலின், யாம் அதனை வேட்டனம் என்கின்றாள்.
உள்ளுறை: 'அலங்கு சினை மாஅத்து அணிமயில் இருக்குமாறு போல, நின் வளமனையிலே தலைவியாகத் தலைமகள் அமைந்து, நின்குடிக்கு அழகு செய்வாளாக என்பதாம்.
குறிப்பு: சூள் பொய்த்தானைத் தெய்வம் வருத்தும்; சூள் பொய்ப்படின் தலைவியும் உயிர் கெடுவள்; ஆதலின், அவன் பொய்யாதானாகியும், அவள் மணம் பெற்று ஒன்று கூடியும் இன்புறுக என்று வேண்டியதுமாம்.
9. நன்று பெரிது சிறக்க!
துறை: இதுவும் முற்செய்யுளின் துறையே அமைந்தது.
'வாழி ஆதன்; வாழி அவினி!
நன்று பெரிது சிறக்க; தீது இல்லாகுக!'
என வேட் டோளே, யாயே; யாமே,
'கயலார் நாரை போர்விற் சேக்கும்
தண்துறை யூரன் கேண்மை
அம்பல் ஆகற்க' என வேட் டேமே.
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! நன்மைகள் பெரிதாகப் பெருகுவதாகுக; தீவினைகள் யாதும் இல்லாமற் போக' என விரும்பி வேண்டினாள், தலைமகள். 'கயல் மீன்களை உண்ட நாரையானது, நெற்போரிலே சென்று தங்கும் குளிர்ந்த நீர்த்துறையையுடைய ஊருக்குரிய வனின் உறவானது, பிறர் பழிக்கும் 'அம்பல்' ஆகாதிருப்பதாக' என யாம் வேண்டினேம்.
கருத்து: 'தலைவன் வரைந்து வந்த மணந்து கொள்ளும் வரையும், இவள் உறவு அம்பலாகாது இருப்பதாக' என்பதாம்; ஆகவே, அவன் விரைவில் வரைந்து வந்து மணங்கொள்க என்பதுமாம்.
சொற்பொருள்: நன்று - நன்மைச் செயல்கள். கயல் - கயல் மீன். போர்வு - நெற்போர்; வைக்கோற்போர் என்பர் சிலர்; பெரும்பாலும் வயலிடங்களில் நெற்போரே நிலவும் என்று அறிக. கேக்கும் - தங்கும். அம்பல் - சொல் நிகழாதே முணுமுணுத்து நிகழும் பழிப்பேச்சு (நக்கீரர் - இறையனார் களவியுலுரை).
விளக்கம்: நன்மை மிகுதியாக நாட்டிலே பெருகுதலையும், தீமை அறவே இல்லாது ஒழிதலையும் வேண்டுகின்றாள் தலைமகள், அந்நிலையே அவள் அறவாழ்வுக்கு ஆக்கமாதலின்.
உள்ளுறை: தலைவியின் நலனுண்டவனாகிய தலைமகன், அவளை முறையே மணந்து வாழ்தலைப் பற்றி எண்ணாதே, தன் மனையகத்தே வாளாவிருந்தனன் என்பதனை, 'கயலார் நாரை போர்விற் சேக்கும்' என்றதால் உணரவைத்தனள்.
நெற்போரிடைத் தங்கினும், கயலார் நாரை புலால் நாற்றத்தை வெளிப்படுத்துமாறு போல, அவன் தன் வீட்டிலேயே தன் களவுறவை மறைத்து ஒழுகினும், அது புறத்தார்க்குப் புலப்பட்டு அம்பலாதலை அவனாலும் மறைக்க வியலாது; ஆதலின், விரைவில் வந்து மணங்கொள்வானாக என வேண்டினேம் என்பதும் ஆம்.
10. மாரி வாய்க்க!
துறை: இதுவும் முற்செய்யுளின் துறையே.
'வாழி ஆதன்; வாழி அவினி!
மாரி வாய்க்க; வளம்நனி சிறக்க!'
என வேட் டோளே, யாயே; யாமே,
'பூத்த மாஅத்துப் புலால்அம் சிறுமீன்
தண்துறை யூரன் தன்னொடு
கொண்டனன் செல்க' என வேட்டேமே.
தெளிவுரை: 'ஆதன் வாழ்க; அவினி வாழ்க! மாரி இடையறவின்றிக் காலத்தே தப்பாமல் வாய்ப்பதாக; அதனால் வளமையும் மிகுதியாகப் பெருகுவதாக!' என வேண்டினள் தலைமகள். யாமோ, பூத்த மாமரத்தினையும், புலால் நாறும் 'சிறுமீன்களையும் கொண்ட தண்ணிய நீர்த்துறைக்கு உரியவனான தலைமகன், தலைவியை மணந்து, தன்னோடும் தன்னூர்க்கு அழைத்துச் சென்று, மனையறம் பேணுவானாக' என வேண்டினேம்.
கருத்து: 'தலைவியோ நாட்டு வளமையினையே விரும்பி வேண்டினள்; யாமோ, அவளது மனையற வாழ்வு விரைவிற் கைகூடுவதனையே விரும்பினோம்.'
சொற்பொருள்: மாரி - மழை; பருவமழையும் ஆம். புலால் அம் சிறுமீன் - புலான் நாற்றத்தையுடைய சிறு மீன். வளம் - நாட்டின் வளம்.
விளக்கம்: 'பூத்த மாமரங்களையும் புலால்நாறும் மீன்களையும் உடைய ஊரன்' என்றனள். 'அவ்வாறே தலைவியை உடன் அழைத்துப் போதலால் அவர் எழுமேனும், அவர்கள் உடனுறை மணவாழ்வால் கற்பறம் நிலைபெறும்' என்று சுட்டிக் கூறியதாம் என்றும் கொள்ளலாம். அப்போது உடன் போக்கினை நிகழ்விக்கத் தோழி தலைவனிடம் வற்புறுத்தியதும் ஆகும்.
குறிப்பு: 'ஆதன்' என்பதற்கு அனைத்தும் ஆதலை நிகழ்வித்த பேரருளாளன் எனப் பொருள் கொண்டு. 'வாழி ஆதன்' என்பதனை இறைவாழ்த்தாகவும், 'வாழி அவினி' என்பதனை அரச வாழ்த்தாகவும் கொள்ளலும் பொருந்தும். தன்னலம் மறந்து கற்புக் கடனே நினையும் பழந்தமிழ்நாட்டுத் தலைவியின் சால்பையும், அவள் நலனையே விரும்பி வேட்கும் தோழியரின் அன்புள்ளத்தையும் இதனாற் காணலாம்.
மேலும், தலைமகன் நாடுகாவற் பொறுப்புடையவன் என்பதும், அவனைக் காதலித்த தலைவியும் அதற்கேற்ப அவன் தலைவியாகும் நிலையிலே நாட்டின் நலனையே வேட்பாளாயினள் என்பதும் பொருளாகப் பொருந்துவதாம்.
கடமை மறந்து காமத்தால் அறிவிழக்கும் தளர்ச்சி ஆடர்தம் இழுக்குடைமையாக மட்டுமே விளங்கிற்று; பெண்டிரோ, தன்னை மணந்தானையன்றிப் பிறரைக் கனவினும் நினையாகக் கற்பினரகாவும், அவன் கொடுமையைப் பொறுத்து மீளவரும்போது ஏற்றுப்பேணும் கடமையுணர்வினராகவும் அன்றும் விளங்கினர் என்பதையும் இங்கே நினைக்க வேண்டும்.
2. வேழப் பத்து
'வேழப் பத்து' என்னும் இப்பகுதியின் பத்துச் செய்யுட்களிலும், 'வேழம்' என்னும் சொல் தவறாமல் வருகின்றது. இதனை 'வேழக் கரும்பு', 'கொறுக்கைச்சி', 'கொறுக்காந்தட்டை' என்றெல்லாம் வழங்குவர். இதன் தண்டு உள்ளே துளையுடையது. இதன் பூக்கள் வெண்மையாகக் கரும்பின் பூப்போலத் தோன்றும். மூங்கிற் சிமிழ்போலவே, இதன் தண்டையும் முறையாக நறுக்கி அஞ்சனம் பெய்து வைப்பதும் சிறுமியர் வழக்கம் ஆகும். இதன் தண்டுகள் கனமற்றவை யாதலின், அவற்றை வெட்டி ஒன்றாக இணைத்துக் கட்டி, மிதவையாக நீரிலிட்டு அதனைப் பற்றிப் புணையாகக் கொண்டு நீராடுவர். மருத நிலத்தே, நீர் வளம் மிகுந்திருக்கும் ஆற்றோரம் குளத்தோரங்களில் இது முகுதியாக வளர்ந்து அடர்ந்து காணப்படும். ஆற்றுக் கரையோரம் நீரரிப்பு ஏற்படாதிருக்க, இதனை மக்களே இட்டு வளரச் செய்வதும் உண்டு.
11. நல்லனும் அல்லனும்!
துறை: பாணன் முதலாயினார்க்குத் தலைமகனது கொடுமை கூறி வாயின்மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு, வாயில் நேர்வாள் கூறியது. (1) 'தலைவன் எவ்வாறு தப்பி ஒழுகினும், அவன் கொடுமை நின்னாற் புலப்படுதல் தகாது, என்று கழறிய பாங்கிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். (2).
(து.வி: (1) முதற்கண் தலைவன் பொருட்டாகத் தூதுவந்தாரான பாணன் முதலாயினார்க்குத் தான் மறுப்புரை செய்து போக்கினாள் தலைமகள்; ஆனால், பின் வந்து வாயில் வேண்டிக் கூறிய பாங்கனுக்குத் தன் இசைவினைப் புலப்படுத்துகின்றாள்; அவள் கூறுவதாக அமைந்தது இச் செய்யுள். (2) 'தலைவன் ஒழுக்கம் தவறுதலுடையனாயினும், அது நின்னாலே வெளிப்படல் தகாது' என்று சொன்னாள் பாங்கி; அவளுக்குத் தலைமகள் தன்னிலையை தோன்றச் சொல்லியதாகவும் இது அமையும்.)
மனைநடு வயலை வேழம் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
'நல்லன்' என்றும், யாமே;
'அல்லன்' என்னும், என் தடமென் தோளே!
தெளிவுரை: மனையிலே நடப்பெற்று வளர்ந்துவரும் வயலைக் கொடியானது, கொடிவீசிப் படந்து சென்று, புறத்தேயுள்ள வேழத்தினைச் சுற்றிப் படர்கின்ற துறை பொருந்திய ஊருக்குரியவன் தலைவன். அவன் செய்த கொடுமையானது அயலாருக்கும் புலனாகி அலராவதற்கு நாணினமாய், 'அவன் எமக்கு நல்லவன்' என்றே யாம் வாயாற் கூறுவோம். அப்படிக் கூறினாலும், எம் பெரிய மென்தோள்கள், தம் மெலிவாலே, ''அவன் நல்லவன் அல்லன்' என்னும் உண்மையைப் பிறரும் நன்றாக அறியுமாறு புலப்படுத்தி விடுமே!
கருத்து: யான், அவன் எனக்குச் செய்துவரும் கொடுமையை மறைப்பினும், என் தோள்கள் தம் மெலிவாலே பிறர் அறியுமாறும், பழித்துப் பேசுமறும் காட்டிவிடும் என்பதாம். ஆகவே, என் துயர் அடக்க அடங்கும் அளவினதன்று என்பதாம்.
சொற்பொருள்: வயலை - வசலைக் கீரை; பசலைக் கீரை எனவும் கூறுவர்; இது கொடி வகை; 'இல்லெழுவயலை' (நற் 179) என்பதும் காண்க. கொடுமை - பரத்தைமை நச்சிச் சென்ற ஒழுக்கத்தால், தன்னைப் பிரிவுத் துயருட்படுத்தி நலியுமாறு செய்திட்ட தொடிய செயல். கேழ் - பொருந்திய; கெழு என்பது உகரம் கெட்டும், எகரம் நீண்டும் 'கேழ்' ஆயிற்று (தொல் குற்றிய லுகரம் 76 உரை).
விளக்கம்: தலைவனின் பரத்தைமை நாடலாகிய போற்றாப் புறவொழுக்கம், மனத்துயரையும் உடல் நலிவையும் தலைவியிடத்தே மிகுவித்தல் உண்மையேனும், அதனைப் பிறர் அறியப் புலப்படுத்தாதே மறைத்து ஒழுகுவதே அவள் கற்பற நிலைக்குரிய தகுதியாகும் என, அவள் அடக்க முயல்கின்றாள். ஆயின், அவளைக் காண்பார், தாமே அவள் நலிவறிந்து உண்மையினைக் கண்டுணர அவள் தோள்கள் மெலிவு காட்டும் என்பதாம். 'சுற்றும்' - தான் படர்தற்கான மொழுகொம்பாகக் கொண்டு சுற்றிப் படரும். தன்னையும் தன்தோளையும் வேறுபடுத்தி உரைக்கும் பேச்சுநயமும் காண்க.
உள்ளுறை: மனைநடு வயலைக் கொடியானது, தான் சுற்றிப் படர்தற்கு வாய்ப்பான உறுதியான பந்தர் அருகேயே இருந்தும், அதனைவிட்டு மனைப்புறத்தே படர்ந்து சென்று, உள்ளீடும் வலிமையும் அற்ற வேழத்தைப் பற்றிச் சுற்றுவது போல, தலைவனும், தலைவி தன் மனைக்கண் தன் அருகே பெருமையும் பெண்மையும் ஒளிவீசும்படி இருக்கவும், அவளைக் கைவிட்டுப் புறத்தேயுள்ள சேரியிடத்துப் புல்லிய பரத்தையரை நாடிப் போவானாயினான் என்பதாம்.
மேற்கோள்: கற்பின்கண் தலைவனை நீங்கி, மிகத் தனிமையுற்று அலமரல் பெருகிய காம மிகுதியின்கண், தலைவிக்குக் கூற்று நிகழ்தற்கு இளம்பூரணரும் (தொல் - கற்பு); இதனுள் முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றும் கூறலின் நாடக வழக்கும், தலைவனைத் தலைவி கொடுமை கூறல் உலகியலாதலின் உலகியல் வழக்கும் உடன் கூற்றிற்' என நச்சினார்க்கினியரும் (தொல். அகத். 53) எடுத்துக் காட்டுவர். முதற் பொருள் - மருதம்; கருப்பொருள் - வேழமும் வயலையும்; உரிப் பொருள் - வாயில் நேர்தல்.
12. ஆற்றுக தோற்க!
துறை: உழையர் நெருங்கிக் கூறிய திறமும், தனது ஆற்றாமையும் நினைந்து, வாயில் நேரக் கருதிய தலைமகள், 'பரத்தையர்க்குப் பின்பும் அவன் சிறப்புச் செய்தான்' என்பது கேட்டுப், பொருளாய்க் கருத்தழிந்து, தன்னுள்ளேயே சொல்லியது.
(து.வி: அவன் தனக்காற்றிய கொடுமைகளை மறந்து, அவனை மீண்டும் ஏற்று உறவாடத் துணிந்தனள் தலைவி. அவ்வேளையிலே, அவன் மீண்டும் பரத்தையரை நாடினான் எனக் கேட்டு, அதனால் மனம் மிகவும் வெதும்பித் தன்னுள்ளேயே வருந்திச் சொல்லியதாக அமைந்தது இது.)
கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல, யாமே;
தோற்க தில்ல, என் தடமென் தோளே!
தெளிவுரை: கரையோரத்தே பொருந்தியிருக்கும் வேழமானது, வயலகத்தேயுள்ள கரும்பினைப் போலவே வெண் பூக்களைப் பூக்கின்றதான துறை பொருந்திய ஊரன் தலைவன். அவனது கொடுமையினை யாம் பெரிதும் பொறுத்தேமாய் ஆற்றியிருப்பேம்; எம் பெருமையும் மென்மையும் கொண்ட தோள்களோ, தாம் அப்பிரிவை ஆற்றவியலவாய்த் தோற்றுத் தாம் மெலிவதாயின், அவை அவ்வாறே மெலிவதாகுக!
கருத்து: அவன் கொடுமையை யாம் உளத்தகத்தேயே அடக்கினும், எம் தோள்கள் தம் மெலிவாற் புறத்தார்க்குத் தோன்றுமாறு புலப்படுத்தி விடுகின்றவே! அதனையும் என்னால் தடைப்படுத்த இயலாது என்பதாம்.
சொற்பொருள்: கொடுமை - கொடிதான செயல். நன்றும் - பெரிதும். நன்றும்; 'உம்'; அசை நிலை 'தில்'; விழைவுப் பொருளில் தன்மையிடத்து வந்தது. தோற்க - மெலிக; மெலிவால், தொடிகளைத் தாமும் இழந்து போக என்பதாம்; தழுவிக் களித்த தோள்கள் இப்போது மெலிந்து சோர்க என்றனளுமாம்.
விளக்கம்: அவளைப் பிரிவால் வாடச் செய்தது மட்டுமன்றி, அவள் தரும் இன்பத்திலும் பரத்தையஅரிற் பெறும் இன்பமே சிறந்ததாமென மயங்கியும் திரிந்தமையின், தலைவனின் இப்போற்றா ஒழுக்கத்தினைக் 'கொடுமை' என்றனர். உரிமயுள்ள தனக்குக் கொடுமை செய்துவிட்டுப் பொருளழித்துப் புல்லிய பரத்தையரை அதனை நாடிப் போகும் தலைவனின், அறமறந்த செயலால் புண்பட்ட மனநிலைமையினள் தலைவி என்பதும் இதனால் உணரப்படும்.
உள்ளுறை: 'இழந்த வேழம் கரும்பிற் பூக்கும்' என்றது, பூத்தலான இயல்பிலே அவற்றிற்குள் இழிவு உயர்வு என்பதேதும் இல்லை. அஃதேபோலத் தலைமகனுக்கு, யாமும் பரத்தையரும் இன்பம் கோடற்குரிய பெண்டிரென்று மட்டுமே சமமாகத் தோன்றினதன்றி, எம் உயர்வும், பரத்தையர் தாழ்வும் உணரும் தெளிவு இல்லை என்பதாம்.
மேற்கோள்: 'கருப்பொருளாகிய 'வேழம்' தானே உவமமாய் அமைந்து உள்ளுறை பொருள் தந்தது' எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். அகத்: 46). இதனுள், தலைமகன் கொடுமை கூறியதல்லது, அக்கொடுமைக்கு ஏதுவாகியதென்று விளங்கக் கூறியதிலள். ஆயினும், 'இழந்த வேழம் உயர்ந்த கரும்பிற் பூக்கும்' எனவே, அவற்றிற்கும் இழிவு உயர்வாம் என்பது ஒன்றில்லை; எல்லாரும் தலைமகற்கு இன்பம் கோடற்கு உரியர் என்றமையின் அவை கூறினாள் என்பது' என்று கூறி, எடுத்துக் காட்டுவர் பேராசிரியர் (தொல். உவம. 25). ஆகவே, இதனை பயவுவமப் போலி என்பர் அவர்.
13. யாமத்தும் துயிலறியார்!
துறை: 'வாயிலாப் புக்கார்க்குத், தலைமகள், 'அவன் பெண்டிர் நள்ளென் யாமத்தும் துயிலார்; அவர் அறியாமல் அவன் வரும் திறம் யாது?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது.
(து.வி: வாயில் வேண்டி வந்தார்க்கு, அவன் மனம் தெளிந்திலன்; பரத்தையர் வீடே கதியாகத் துயில்பவன் எனக்கூறி, வாயில் மறுத்தது இதுவாகும்.)
பரியுடை நன்மான் பொங்குளை அன்ன
அடைகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை ஊரன் பெண்டிர்,
துஞ்சு ஊர் யாமத்தும், துயிலஅறி யலரே!
தெளிவுரை: விரைந்து செலவினையுடைய நல்ல குதிரையின் தலைக்கணிந்த வெண்ணிறக் கவரியைப் போல, அடைகரைக் கண்ணே படர்ந்துள்ள வேழமானது வெண்ணிறப் பூக்களைக் கொடுத்திருக்கும், தண்ணிய நீர்த் துறையினைக் கொண்ட ஊரன் தலைவன். அத் தலைவனின் பெண்டிர், ஊரே அயர்ந்து துயிலும் இரவின் நடுயாமத்தினும், தாம் மட்டும் துயிலினை அறியாரா யிருப்பரே!
கருத்து: ஆகவே, அவரைப் பிரிந்து அவன் எம்பால் மீள்வான் என்பதும், எம்மோடு அன்புடன் கூடிவாழ்வான் என்பதும், இனி நடக்காததொன்றாம் என்று சொல்லி வாயில் மறுத்தனள் என்க.
சொற்பொருள்: பரி - குதிரைச் செலவு; பொங்கு உளை - பொங்கிக் கிடந்து நெற்றியிற் புரளும் தலைக்கு அணி. அடைகரை - அடையும் கரை; இரு பெயர் ஒத்துப் பண்புத் தொகை. பகரும் - ஒத்தலர்ந்து பிறரைக் கவர்ந்து அழைத்திருக்கும். பெண்டிர் - பரத்தையர்; இழிவாகச் சுட்டியது. அவன் பெண்டிர் - அவனோடும் உறவுடையாரான பரத்தையர்; இவர் பலராக, இவன் ஒரு வீட்டில் இருப்பப் பிறர் துஞ்சாராவர் என்று கொள்க. கூடாமுன்பு அவன் கூட்டம் வாய்ப்பதனைக் குறித்து நினைந்து ஏங்கியும், கூடிய பின்னர் அடுத்துத் தொடரும் அவன் பிரிவைக் கருதியும், அவர் துயிலறியாராயிருப்பர் எனக் கொள்க.
விளக்கம்: 'பரியுடை நன்மான் பொங்குளை' என்றது, அக்குதிரை ஓடுங்காலத்தே, தலையணியான உளையானது மேலெழுந்து அசைந்தாடுவதைக் குறிக்கலாம். அவ்வாறே, வேழத்தின் வெண்பூக்களும் காற்றிலே அசைந்தாடியபடி தோன்றும். இதுபற்றியே 'பகரும்' என்றனர். 'ஊரன் பெண்டிர்' என்றது அவனுக்கே உரியவரான காதற்பரத்தை, உரிமைப் பரத்தை போன்றாரை என்பதும் பொருந்தும்.
உள்ளுறை: 'வேழத்தின் வெண்பூவானது பரியுடை நன்மானின் உளைபோல் தோற்றும் அடைகரை' என்றனர்; அவ்வாறே பரத்தையரும் தலைவனக்குக் குலமகளிர் போலவே நலமுடையவராகக் காணப்படுவர் என்பதாம்.
மேற்கோள்: 'இஃது ஊடல் நிமித்தம்' என்பர் நச்சினார்க்கினியர் (தோல். அகத்: 14).
14. பனித்துயில் செய்யும்!
துறை: தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த தோழி, 'அவன் கொடுமை நினையாது, அவன் மார்பை நினைந்து ஆற்றாய் ஆகின்றது என்னை?' என்றாள். அவட்கு, 'அவன் கொடியனே ஆயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து; அதனாற் காண்' எனச் சொல்லியது.
(து.வி: அவன் கொடுமையறிந்திருந்தும் தலைவிக்கு அவனிடத்தே மனம்போக, அது குறித்துத் தோழி வினவுகின்றாள். அவட்குத் தலைமகள், தன் மனநிலையை இவ்வாறு புலப்படுத்துகின்றாள். 'நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்' என்றாற்போல்வது இது.)
கொடிப்பூ வேழம் தீண்டி, அயல
வடிக்கொள் மாஅத்து வண்தளிர் நுடங்கும்
அணித்துறை ஊரன் மார்பே
பனித்துயில் செய்யும் இன்சாயற்றே!
தெளிவுரை: வேழத்தின் நீண்ட வெண்பூவானது தீண்டுதலாலே, வடுக்கள் கொண்ட மாமரத்தின் வளவிப தளிர்கள் அசையும். அழகிய நீர்த் துறையினையுடையவன் தலைவன். அவன் மார்பானது, க உளிர்ந்த துயிலினைச் செய்யும் இனிய சாயலையும் உடையதாகுமே!
கருத்து: அது பற்றியே என் உள்ளமும் அதனை நாடிச் சென்றது என்பதாம்.
சொற்பொருள்: கொடி - ஒழுங்கு; நீட்சி. வடி - வடு - பிஞ்சு. வணிதளிர் - வளவிய தளிர். நுடங்கும் - அசையும். அணித் துறை - அழகிய துறை; 'மணித்துறை' பாடமாயின் நீலமணி போல் தெளிந்த நீர் கொண்டது துறையெனக் கொள்க. பனி - குளிர்ச்சி. சாயல் - அழகு; மென்மை.
விளக்கம்: வேழம் தீண்ட வளவிய மாந்தளிர் அசைதல் போல, தலைவன் பொருட்கொடையால் அணுகப் பரத்தையரும் அவனுக்கு இசைந்தாராகும் தளர்ந்த இயல்பினராவர் என்று கூறியதாகக் கொள்க. பனித்துயில் - குளிர்ச்சியான துயில்; கூடியின்புற்ற களிப்பிலே, அவன் மார்பே பாயலாகக் கொண்டு அயர்ந்து கிடந்து துயிலல்; இன்சாயல் - சாயல் காட்சிக்கும் கருத்துக்கும் இனிமை தருவது என்பதும் ஆம்.
உள்ளுறை: வேழப்பூத் தீண்டலால் வடிக்கொள்மாஅத்து வண்தளிர் அசைதல்போல, அவன் அவர்பாலே செல்லும் மனத்தனாகத் தலைவியின் உள்ளம் மெலிவுற்று ஆற்றாமை கொண்டது' என்பதாம்.
மேற்கோள்: தோழியிடத்துத் தலைவனைத் தலைவி உவந்து கூறியது என்பர் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு - 6).
15. ஊரன் அல்லன்!
துறை: சேணிடைப் பிரிந்து வந்து உடன் உறைகின்றனன் தலைவன்; அவனுக்குப் புறத்தொழுக்கம் உளதாகின்றது என்று குறிப்பினால் உணர்ந்து தலைமகள் வேறுபட்டாளாக, தோழி அதனை அறியாது, அவன் உடனுறையவும் வேறுபடுகின்றது என்னை?' என்றாட்கு, அவள் சொல்லியது.
(து.வி: 'அவன் உடனுறையும் போதும், பரத்தையர் உறவை நாடுகின்ற மனத்தனாகவே உள்ளனன்' என்று அவனது போக்கினைக் குறிப்பால் உணர்ந்த தலைமகள், தோழியிடம் இப்படிக் கூறுகின்றனள்.)
மணலாடு மலிர்நிறை விரும்பிய, ஒண்தழை,
புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும், ஊரன்அல் லன்னே.
தெளிவுரை: மணலை அலைத்துச் செல்லும் நீர்ப் பெருக்கினிடத்தே, விரும்பிய ஒள்ளிய தழையுடைகளை உடுத்தவராகப் புலனாட்டு அயர்வர் மகளிர். அவ்வாறு அயரும் மகளிர்க்குப் புணர் துணையாக அமைந்து உதவுகின்றவன் வேழம் நிறைந்த மூதூரனாகிய ஊரன். அவன் நம்மோடிருப்பதனாலே நம்மூரினிடத்தேயே உள்ளவன் என்றாலும், புறம்போன நெஞ்சத்தால், அவன் நம் ஊரம் அல்லன்காண்!
கருத்து: அவன் மனம் மாறினானே போலக் காட்டினும், முற்றவும் தன் பரத்தமையைக் கைவிடத் திருந்தினவன் அல்லன்.
சொற்பொருள்: மணலாடு - மணலை அலைத்தல்; வெள்ளம் மிகும்போது அதன் வேகத்தால் மணல் அரிக்கப்பட்டுப் போவது இது; 'ஆட்டு' என்பது 'ஆடு' என்று வந்தது. மலிர் நிறை நிறைந்து பெருகிச் செல்லும் நீர்; 'மலர்நிறை' பாடமாயின், மலர்களை வாரிக் கொண்டுவரும் புது வெள்ளம் என்க. ஒண்தழை - ஒள்ளிய தழையாடை; ஒண்மையான தளிர்களையும் மலர்களையும் கொய்து ஆடையாக்குவது இயல்பு; 'வெண்தழை' என்பதும் பாடம். துணை - துணையாகும் பொருள். வேழம் - வேழத்தண்டால் அமைந்த புணை; இது நீர் விளையாட்டுக்கு ஏற்ற மிதவையாக உதவுவது; 'வேழ வெண்புனை தழீஇ' என அகத்தும் வரும் (அகம் - 6). அல்லன் - அல்லாதவன்; ஊரிடத்தானாயினும் மனம் ஒன்றிக் கலவாமையால், அருகே இருந்தும் இல்லானாயினன் என்பதாம்.
விளக்கம்: 'புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும் வேழ மூதூர் ஊரன்' என்பதற்கு, புனலாட்டயரும் மகளிர்க்குத் துணையாக அவரோடு சேர்ந்து தானும் நீராடி அமைந்து உதவும்' வேழமிகுதியுடைய ஊரன்' என்பதும் பொருந்தும். 'மலரார் மலிர்ந்திறை வந்தெனப் புனலாடு புணர்துணை ஆயினள் எமக்கே' (ஐந். 72) எனத் தலைவன் கூற்றாக வருவதும், தலைமகன் இவ்வாறு பரத்தையரோடு சேர்ந்து புனலாடிக் களித்ததலைக் காட்டும்.
உள்ளுறை: வேழம்புணையானது புனலாடும் மகளிர்க்குப் பற்றும் துணையாகி விளங்குதலே போலத் தலைவனும் பற்றும் துணையாகி ஒழுகுதலால், அவன் அவர்பாற் செல்லும் மனத்தினனன்றி, நம்பாற் கலந்த உளத்தன் ஆகாமையின் 'ஊரன் அல்லன்' என்கின்றாள்.
16. கண் பொன் போர்த்தன!
துறை: வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, 'அவன் வரவையே நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்னை?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது.
(து.வி: 'அவனை நினைந்து நினைந்தும், அவன் வரவை நோக்கி நோக்கியும் சோர்ந்து தளர்ந்ததனால், இவள் கண்களும் பண்டை ஒளியற்றுப் பொன்னிறப் பசலை படர்ந்தன; இனி அவன் வந்துதான் இவள் பெறுவது என்னவோ?' எனக் கூறி மறுத்துரைத்தது இது.)
ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்
பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே.
தெளிவுரை: 'ஓங்கி உயர்ந்தெழுந்த பூவையுடைய வேழத்தின், துளையுடைய திரண்ட தண்டினிடத்தே, சிறுமியரான ஏவல் மகளிர்கள், தம் கண்ணுக்கு இடுதற்குரிய அஞ்சனத்தைப் பெய்து வைப்பர். அத்தன்மையுடைய பூக்கள் நிரம்பிய ஊரனையே நினைதலால், இவளுடைய குவளைப் பூப் போலும் மையுண்ட கருங்கண்களும், பொன்னிறப் பசலையினைப் போர்த்தவை ஆயினவே!'
கருத்து: 'இவளுடைய கண்ணொளியானது கருமை கெட்டுப் பொன்போற் பசலையும் படர்ந்ததன் பின்னர், அவன் மீண்டும் வந்துதான் இவட்குப் பயன் என்னையோ' என்று கூறி வாயில் மறுத்தனள் என்பதாம்.
சொற்பொருள்: தூம்பு - உள்ளே துளையுடைமை சிறு தொழு மகளிர் - குற்றேவல் செய்யும் சிறு மகளிர்; இவர், தம் அஞ்சனச்சிமிழாக வேழத்தின் திரண்ட தண்டினை ஏற்றபடி அறுத்துப் பயன்படுத்துவர். பூக்கஞல் ஊரன் - பூக்கள் மலிந்துள்ள ஊரன். பொன் - பொன்னிறப் பசலை.
விளக்கம்: 'சிறு தொழு மகளிரே தம் கண்ணழகினைப் பேணுதற்கான அஞ்சனத்தை வேழத்தண்டுச் சிமிழிலிட்டுப் பேணிவைக்கும் போதிலே, பூப்போல் உண்கண்ணுடையாளான தலைவியோ, நின்னை நினைந்து நினைந்து தன் கண்கள் பொன் போர்த்த நிலையினளாயினள்; இத்தகு கொடுமை செய்தவன் இனி வந்து அருள் புரிந்துதான் பயன் என்னையோ?' என்பதாம். கண் 'பொன்போற் பசத்தலை', 'உண்கட்கு மெல்லாம் பெரும் பொன் உண்டு' எனவும், 'பொன்னெனப் பசந்த கண்' எனவும் வரும் கலித்தொகையடிகளாலும் காணலாம். (கலி - 64, 77).
உள்ளுறை: வேழத்தண்டு சிறுதொழு மகளிரின் கண்ணழகு கெடாமைக்கான அஞ்சனச் சிமிழாகப் பயன்படுதலே போலத், தலைவனும், பரத்தையரின் அழகு கெடாதவாறு உடனுறைந்து இன்புறுத்தி அவரைக் களிப்பிப்பான் ஆயினன் என்பதாம். தனக்குரிய அவனைப் பிரிந்து, தன் கண்ணழகினையும் இழந்தாள் தலைவி; இனி அவனால் அவளைப் பண்டுபோல் அழகுண்டாக்க இயலாது; ஆகவே, அவன் வரவை இனி விரும்போம் என்பாதம்; அதனாற் பயனேதுமில்லை என்றதுமாம்.
17. நெஞ்சு வறிதாகின்றது!
துறை:'தலைமகன். பரத்தையிற் பிரிந்தவழி, 'இவ்வாறு ஒழுகுதலும் ஆடவர்க்கு இயல்பு அன்றே; நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
(து.வி: 'ஆடவரின் இயல்பே இவ்வாறு தலைவியரைப் பிரிவாலே வருந்தி வாடச் செய்து, பரத்தையரின் மயக்கிலே கட்டுண்டு திருவதுதானே! இதற்காக, நீயும் நொந்து நெஞ்சழியலாமோ?' என்று சொல்லித் தேற்ற முயலுகின்றாள் தோழி. அவட்குத் தலைவி சொல்வது இது.)
புதல்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு குருகின் தோன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்,
வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே.
தெளிவுரை: 'புதரின் மேலாகச் சென்று அசைந்தாடும் வேழத்தின் வெண்பூவானது, விசும்பிடத்தே பறந்து செல்லும் வெண்குருகே போலத் தோன்றும் ஊருக்குரியவன் தலைவன். அவன், இதுகாறும் செய்த கொடுமைகட்கும் மேலாக, இப்போதும், புதியரான பரத்தையரையே வதுவை செய்தற்கு விரும்புகின்றவனாக உள்ளனன். ஆதலினாலே, என் மடமை நிரம்பிய நெஞ்சமானது அறவே நம்பிக்கைழியந்து, மிகமிக வறுமையாகின்றது!
கருத்து: இனி, அவன் நம்பால் அன்புடையனாவான் என்னும் நம்பிக்கையினையே முற்றவும் இழந்து விட்டேன் என்பதாம்.
சொற்பொருள்: புதல் - புதர்; சிறு தூறு. நுடங்கும் - அசையும். குருகு - நாரைபோலும் வெண்ணிற நீர்ப் பறவை. புதுவோர் - புதியவரான பரத்தையர்; புதிதாகப் பரத்தைமைத் தொழில் மேற்கொண்டோர். மேவலன் - விரும்புதலை உடையான்; விருப்பம் - அவரை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல். மடம் - கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையாகின்ற பெண்மைப் பண்பு; அது கற்பறம் பேணிக் காப்பதும் ஆம். வறிதாகின்றது - வறுமைப் பட்டதாகின்றது; வறுமை, கணவனைப் பரத்தை கொள்ளத்தான் அவனை இழந்துவிடலான நிலை.
விளக்கம்: அவன், நம்மை இப்போது மறந்து திரியினும், என்றாவது நம்பால் அன்புடையனாகி மீள்வான் என்று நம்பியிருந்தோம். அவனோ, நாளும்நாளும் புதுவோரை வதுவை மேவலே தன் நினைவாகத் தொடர்ந்து திரிகின்றமையின், என் நெஞ்சம் அவனன்பை இழந்ததாகவே கொண்டு வறுமையுற்றது என்பாதம். புதர் வானம் போலக் கரிதாகவும், அதன்மேல் அசையும் வேழவெண்பூ வானிற் பறக்கும் குருகு போலவும் தோற்றும் என்க. 'வறிதாகின்று' என்றது, கொஞ்சம் உணர்விழந்து நினைப்பொழிந்து மகிழ்வழிந்து செயலற்றது என்றற்காம்.
உள்ளுறை: புதன்மிசை ஆடும் வேழ வெண்பூவானது, விசும்பாடு குருகு போலத் தோன்றுமாறு போல, சேரிக்கண்ணே திரியும் பரத்தையரும், தலைமகனுக்கு, நம்போற் குலமகளிராகவே தோன்றுவர் என்று கூறியதாகவும் கொள்க.
புதன்மிசை நுடங்கும் வேழவெண்பூப் போலத் தலைவன் மிக அண்மையானாயினும், நம்மளவில் விசும்பாடும் குருகே போலச் சேணோன் ஆயினன் என்று வருந்திச் சொல்வதாகவும் கொள்ளலாம்.
நனவிலே வானவெண்குருகாக நமக்கு எட்டானாயினும், கனவிலே புதன்மிசை வேழ வெண்பூப்போல அணியனாகத் தோன்றி நம்மை மயக்கி, மேலும் நலிவிப்பவன் என்பதும் ஆம். நனவிலே அன்பாற்றானாயினும், கனவிலே அன்புடையனாகத் தோன்றி நம்மை நலிவிப்பான் என்பதும் ஆம்.
மேற்கோள்: தலைவனைப் பிரிந்ததற்கண்ணே தோழியிடத்துத் தலைவிக்குக் கூற்று நிகழ்ந்ததற்கு எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு - 6).
18. கண் அழப் பிரிந்தனன்!
துறை: பரத்தையிற் பிரிந்து வந்து, தெளித்துக் கூடிய தலைமகற்குப், பின் அவ்வொழுக்கும் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது.
(து.வி: பரத்தைமையாற் பிரிந்தவன் இல்லத்திற்கு மீண்டு வந்து, தலைவிக்குச் சமாதானம் கூறிக் கூடியிருந்தான். பின்னரும், முன்போலவே விட்டுப் பிரிந்தவன், மீண்டும் தலைவியை விரும்பித் தன் வாயில்கள் மூலம் செய்தியனுப்ப, தலைமகள் மறுத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி யூரன்
பொருந்து மலர் அன்ன, என் கண்அழப்
பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே.
தெளிவுரை: கருங்கோரையைப் போன்ற செருந்தியோடு, வேழமும், கரும்பைப் போலக் காற்றினால் அசைந்தாடும் கழனிகளையுடைய ஊரன் தலைவன். அவன் என்னைத் தெளிவித்துக் கூடியபோது, 'இனிப் பிரியேன்' என்று உறுதிமொழி கூறியவன். இப்போதில், இணைமலர் போன்ற என் கண்கள் அழும்படியாக என்னைப் பிரிந்து போயினான் அல்லனோ!
கருத்து: அவன் சொல்லை அந்நாள் மெய்யெனக் கொண்டதற்கே இப்போது நோவேன்.
சொற்பொருள்: இருஞ்சாய் - பஞ்சாய்க் கோரை; கருநிறத் தண்டுடைமை பற்றி 'இருஞ்சாய்' என்றனர். செருந்தி - நெட்டிக் கோரை, தண்டாங் கோரை, வாட்கோரை எனக் கூறப்படும் கோரை; இதன் தண்டு சற்றுப் பெரியது; கனம் அற்றது; ஆகவே 'நெட்டிப் புல்' எனவும் சில பகுதியினர் கூறுவர். பொருந்து மலர் - இணையாக விளங்கும் மலர்; அழகு பொருந்திய மலரும் ஆம். 'நெருந்தி' என்றொரு மரமும் உள்ளது; அது நெய்தல் நிலத்து மரம். 'கரும்புபோல அசைந்தாடும் என்றது, அவரும் தலைவனின் உரிமை மகளிர் போலவே தம்மைக் காட்டித் திரிவர் என்றற்காம்.'
உள்ளுறை: வேழம் செருந்தியோடு சேர்ந்து, காற்றிற் கரும்பு போல அசைந்தாடும் என்றது, தலைவனின் ஆதரவால் பரத்தையர் தம் தோழியரோடும் கூடியவராக, ஊர்க் கண்ணே செருக்கித் திரிகின்றனர் என்றும் கூறியதாம். பிரியெலன் என்றவன் பிரிந்தனனாகி அவர்பாற் சென்றனன்; - ஆதலின் தகுதியற்ற புல்லியரான அவரும் தருக்கித் திரிகின்றனர் என்றதாம்.
19. கண் பனி யுகுமே!
துறை: "பன்னாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றயுளையாகிய நீ, சிலநாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?" என்ற தோழிக்கு, 'எதிர்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமகள் சொல்லியது. வாயிலாய்ப் புகுந்தார் கேட்டு, நெருக்காது மாறுதல் கருத்து.
(து.வி.: முன்னர், அவன் வேற்றுப்புலம் போயவழி, நெடுங்காலம் அவன் பிரிந்திருந்ததனைப் பொறுத்திருந்ததனை, இப்போது நேரும் சிறு பிரிவுக்கு மட்டும் எதனால் ஆற்றாயாய்த் துடிக்கின்றாய்?' என்று கேட்கின்றாள் தோழி. அதற்கு தலைவி, ஒரே ஊரிலே இருந்து கொண்டும், என்பால் வராதிருக்கும் அந்தக் கொடுமையைப் பொறுக்க இயலவில்லையே' என்று கூறிப் புலம்புகின்றாள்.)
எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணம் கமழும் தண்பொழில்
வேழ வெண்பூ வெள்ளுளை சீக்கும்
ஊரன் ஆகலின், கலங்கி
மாரி மலரிற் கண்பனி யுகுமே!
தெளிவுரை: எக்கரிடத்தேயுள்ள மாமரத்திலே புதிதாகப் பூத்துள்ள பெரிய அரும்புகள், தலைவரைப் புணர்ந்தோரின் மெய்யிடத்தே நின்றும் எழுகின்ற மணம் கமழ்கின்றதான குளிர்ச்சியான பொழிலினிடத்தே, வேழத்தின் வெள்ளிய பூவாகிய வெண்மையான உளை போன்ற மலரானது எழுந்து, அம் மணத்தைத் தோன்றாவாறு துடைக்கும் ஊரன், தலைவன். ஆதலினாலே, கலக்கமுற்று, மாரிக் காலத்தே மழையிற்பட்ட மலரிலிருந்து துளிகள் வீழ்தல் போலக் கண்களினின்றும் கண்ணீர் துளிகள் விழுவேமாயினேம் யாம்.
கருத்து: அவன்பால் நம்பிக்கை இழந்தோம் என்பதாம்.
சொற்பொருள்: எக்கர் - இடுமணலால் அமைந்த மணல் மேடு; நெய்தற்கண் கடலலைகளாலும், மருதத்தின் கண் ஆற்று வெள்ளத்தாலும் இத்தகைய மணல்மேடுகள் அமையும்; புதுப்பூம் பெருஞ்சினை -- புதிதாகப் பூத்துள்ள பெரிய பூவரும்புகள்; புதுப்பூக்கள் உடைய பெரிய கிளையும் ஆம். புணர்ந்தோர் - கூடிக் கலந்தோர். வெள்ளுளை - வெள்ளிய உளைபோல்வதான வேழப்பூ. சீக்கும் - கெடுக்கும்; போக்கும். மாரிமலர் - மாரியிற் பட்ட மலரினின்றும் உதிரும் நீரைக் குறித்துக் கூறியது.
விளக்கம்: கலந்தோர் மேனியிலேயிருந்து எழுகின்ற கலவியால் தோன்றிய புதுமணத்திற்கு மாவரும்பின் நறுமணத்தைப் பொருத்தமாக உவமித்தனர். வண்டினமும் இதன்பால் மயங்கி வந்து மொய்க்கும் என்பதனை, "பொறிகிளர் ஆகம் புல்லத், தோள் சேர்பு, அறுகாற் பறவை அளவில் மொய்த்தலின், கண்கோளாக நோக்கிப் 'பண்டும் இனையையோ?' என வினவினாள் யாயே" என வரும் நற்றிணையாலும் அறியலாம் (நற். 55). கண்பனி உகும் - கண்துளி சிதறும்.
உள்ளுறை: மாம்பூவின் நறுமணத்தைத் தன் தீமணத்தால் வேழவெண்பூ ஒழித்தலேபோல, தலைவன் என்னோடு இல்லறமாற்றி இன்புறுத்திய தண்ணளியைப், பரத்தையர் தமது அன்பற்ற பொய்ம் முயக்கத்தாலே ஒழித்தன் என்பதாம்.
மாம்பூ, புணர்ந்தோர் மெய்ம்மணம் கமழும் தண் பொழிலின் இனிமையினை, வேழ வெண்பூ தோன்றிக் கெடுத்தாற்போல, எம் இல்லறத்தின் இனிய வாழ்வினைத் தலைவனின் புறவொழுக்கம் சிதைத்தது என்பதும் ஆம்.
'வேழ வெண்பூவின் தீமணம் மாவின் நறுமணத்தை அழுக்குமாறு போலப், பரத்தையரின் பொய்ச் சாகசங்கள் என் பெருமையைத் தலைவனுக்கு மறைப்பவாயின என்பதும் ஆம்.'
குறிப்பு: பரத்தையரின் புணர்குறியோடு இல்வந்தானைக் கண்டதனாலே வெதும்பிக் கலங்கிக் கண்ணீர் உகுத்தனள் என்பதும், அன்னவனோடு மீண்டும் ஒன்றுபடுதல் இலையென்று வாயின் மறுத்தாள் எனவும் கொள்த 'பெருஞ்சினைப் புரணர்ந்தோர்' என்பதற்கு, பெருஞ்சினையின் நீழற்கண்ணே கூடினோர் எனவும் பொருள்கொள்வது ஏலுமேனும், அது களவுப் புணர்ச்சியாகலின், பொருள் சிறவாமையாகி விடும்.
20. நெகிழ்பு ஓடும் வளை!
துறை: தலைமகளை வாயில் நேர்வித்தற் பொருட்டாக, 'காதலர் கொடுமை செய்தாராயினும், அவர் திறம் மறவாது ஒழிதல் வேண்டும்' என்று முகம் புகுகின்ற தோழிக்கு, 'என் கைவளை நில்லாதாகின்றது அவரை நினைந்ததன் பயன் அன்றே; இனி அமையும்' எனத் தலைமகள் சொல்லியது.
(து.வி: 'காதலர் செயல் கொடியதே யாயினும், அவர், நமக்கு முன் செய்த தண்ணளியை நாம் மறத்தல் கூடாது; அவரை மீண்டும் ஏற்பதே நின் கற்பறக் கடமை' என்கின்றாள் தோழி. அவளுக்கு, 'அவரை நெஞ்சிற்கொண்டதன் பயன் கைவளைகள் இதோ கழன்றோடுகின்றன காண்' என்று கூறுகின்றாள் தலைவி.)
அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்பு கண் டன்ன தூம்பிடை, வேழத்துத்
துறைநணி யூரனை உள்ளி, என்
இறையோர் எல்வளை நெகிழ்போ டும்மே.
தெளிவுரை: ஆறாகிய சிறிய கால்களையும் அழகிய சிறையையும் உடைய தும்பியானது, நூறு மடல்களை யுடைய தாமரப் பூவின் கண்ணே இட்டுள்ள முட்டைகளைச் சிதைக்கும், மூங்கிலைக் கண்டாற் போன்ற உள்ளே துளையினையுடைய வேழம் செறிந்த துறைக்குரிய ஊரன், தலைவன். அவனை நினைந்து, என் முன்கையிற் பொருந்திய, அழகும் ஒளியும் உடைய வளைகளும் நெகிழ்ந்து கழன்று தாமே வீழ்கின்றனவே!
கருத்து: 'அவனை இனி யாம் ஏற்பதுதான் எதன் பொருட்டோ?' என்பதாம்.
சொற்பொருள்: சில் - சிறிய. சிறை - சிறகு. தும்பி - வண்டு வகை. சினை - தும்பியின் சினை. நூற்றிதழ்த் தாமரை - உயர்வகைத் தாமரை; இதசைன் சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ் நூற்றிதழ் அலர் (புறம் - 27) என்பதாலும் காண்க. காம்பு - மூங்கில். இறை - முன்கை. நெகிழ்பு ஓடும் - தாமே நெகிழ்ந்து கழன்று ஓடா நிற்கும்.
உள்ளுறை: தாமரைப் பூவிடத்துள்ள தும்பிச் சினையை, வேழப் பூவானது மோதிச் சிதைப்பது போல, தலைவி மாட்டு மீண்டும் வந்தானான தலைவனைப், பரத்தையர் மீளவும் நெருங்கிப் பிரித்துத் தம்பாற் கொண்டேகுவர் என்பதாம்.
வேழம், தாமரப் பூவிடத்துத் தும்பிச்சினையைச் சிதைக்குமாறு போல, தலைவன், தன் பொருத்தாச் செயலால், தலைவியின் இல்லற வாழ்வைச் சிதைப்பானாயின் என்பதும் ஆம்.
விளக்கம்: அறுசில் கால அஞ்சிறைத் தும்பியானது நூற்றிதழ்த் தாமரயிடத்தே தேனையுண்டு இன்புற்ற தேனும், அடுத்துத் தன் கால்களால் அப்பூவின் சினைகளையும் சிதைக்கின்ற கொடுமையையும் செய்யும் ஊரம் அவன். ஆதலின், அவனை இன்புறுத்திய நம் நலனையே அவனும் கொடுமை செய்து சிதைப்பானாயினான் என்பதும் ஆம்.
பாடபேதம்: 'நிறையே போல் வளை' என்பதாம். இதற்கு, நிறுப்ப நில்லாது அவன்பால் நெகிழ்ந்து செல்லும் என் நிறையினைப் போலவே, என் கைவளையும் நிறுப்ப நில்லாதே தானே கழன்றோடும்' என்று பொருள் கொள்க.
3. களவன் பத்து
'களவன்' என்பது கண்டு, இது ஒரு மருத நிலக் கருப்பொருள்; இப்பத்துப் பாடல்களினும், 'களவன்' பற்றிய செய்தி பயின்று வருவதால், இது 'களவன் பத்து' எனப் பெற்றது. 'களவன்' 'கள்வன்' எனவும், 'அலவன்' எனவும் வழங்கும். தமிழ்த் தொகை நூல்களில் நண்டினைப் பலரும் நயமுடன் எடுத்துக்காட்டி உவமித்துள்ளனர். அச்சமுடைய தாயினும், இறுகப்பற்றினால், பற்றிய பற்றை எதனாலும் சேரவிடாத வன்மையும் இதற்கு உண்டு என்பர்.
21. கண் பசப்பது ஏனோ?
துறை: 'புறத்து ஒழுக்கம் எனக்கு இனியில்லை' என்று தலைமகன் தெளிப்பவும், 'அஃது உளது' என்று வேறுபடும் தலைமகட்குத், தோழி சொல்லியது.
(து.வி.: தான் பரத்தமையைக் கைவிட்டு விட்டதாக உறுதி கூறித், தலைவியைத் தெளிவிக்கின்றான் தலைவன். அவளோ, அவன் கூறிய உறுதிமொழியை நம்பாதவளாக, 'அஃது அவன்பால் உளது' என்றே சொல்லி, அவனோடும் மீண்டும் புலந்து வேறுபடுகின்றாள். அவட்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்
தண்துறை யூரன் தெளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்கொல்? அன்னாய்!
தெளிவுரை: ''அன்னையே! முள்ளிச் செடிகள் உயரமாகப் படர்ந்துள்ளதும், பழைய நீரினைக் கொண்டதுமான அடைக்கரைக் கண்ணே, புள்ளிகளையுடைய நண்டானது ஆம்பலின் தண்டினை ஊடுபுகுந்து அறுக்கின்ற, குளிர்ந்த நீர்த் துறையமைந்த ஊருக்குரியவன் தலைவன். அவன் உறுதி கூறித் தெளிவிக்கவும் தெளியாதே, நின் மையுண்ட கண்கள் இவ்வாறாகப் பசந்து வேறுபடுவதுதான் எதனாலோ?''
கருத்து: 'அவன் தெளிவித்த பின்பும், தெளியாதே கலங்குவது ஏன்?'
சொற்பொருள்:முள்ளி - நீர்முள்ளி. புள்ளிக் களவன் - புள்ளிகளையுடைய நண்டு. தெளிப்பவும் - நின் கவலைக்குக் காரணமாய் பரத்தைமையைத் தான் அறவே கைவிட்டதாக உறுதி கூறுவதன் மூலம், நின் மனத்துயரைப் போக்கித் தெளிவு கொள்ளச் செய்யவும். பசத்தல் - பொன்னிறங் கொள்ளல். முதுநீர் - என்றும் வற்றாதேயிருக்கும் பழைய நீர்; 'கட்டுக்கிடைநீர்' எனலும் ஆம்.
விளக்கம்: முள்ளியும் ஆம்பலும் நண்டும் நீரிடத்தே யுள்ளன. எனினும், நண்டானது தன் குறும்பினாலே ஆம்பல் தண்டினை அறுத்தெறிந்து விளையாடிக் களிப்படையும் இயல்பு சொல்லப்பட்டது. அத்தகைய ஊருக்கு உரியவன் தலைவன் என்றனர். அவன்பாலும் அவ்வியல்பு உளதென்று உணர்த்தற்கு.
உள்ளுறை: களவன் ஆம்பலை அறுக்கும் 'தண்துறையூரன்' என்றது, அவ்வாறே, தலைவனும் தன்னுடைய கரை க டந்த காமத்தினாற் கொண்ட மடமையினாலே, இல்லறத்தின் இனிமையான மனைவாழ்வைச் சிதைத்தனன் என்பதாம். எனவே, தலைவி, அவன் தெளிப்பவும் தெளியா மருட்கையாளாகித் தான் மெலிந்தனள் என்பதுமாம்.
மேற்கோள்: 'இறுதியடி இடையடி போன்று நிற்கும் அகப்பாட்டு வண்ண'த்துக்குப் பேராசியிரிரும் 9 தொல். செய், 224); ''ஆய் என்று இற்ற ஆசிரியம்'' என யாப்பருங்கல விருத்தி உரைகாரரும் எடுத்துக் காட்டுவர். (யா.வி.செய் - 16).
22. நீயேன் என்றது ஏனோ?
துறை: களவினிற் புணர்ந்து, பின்பு வரைந்து கொண்டு ஒழுகாநின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகிய தலைமகள், தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: தலைவனின் பேச்சினை எடுத்துச் சொல்லி, அப்படி சொன்னது வேறு க உறிப்பினாற்றானே? எனத் தன் தோழியிடம் கவலையோடு உசாவுகின்றாள் தலைவி.)
அள்ளல் ஆடிய புள்ளிக் களவன்
முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்து, இனி
'நீயேன்' என்றது எவன்கொல்? அன்னாய்!
தெளிவுரை: ''அன்னையே! சேற்றிலே அளைந்தாடிய புள்ளிகளையுடைய நண்டானது, முள்ளிச் செடியின் வேர்ப் புறத்தான தன் வளையினிடத்தே சென்று தங்கும் ஊருக்குரியவனான தலைவன், நன்மையான சொற்களை நாம் தெளியுமாறு சொல்லி, நம்மையும் முன்னர் மணந்து கொண்டனன்; இப்போதும், 'நின்னைப் பிரியேன்' என்று அவன் சொன்னதுதான் எதனாலோ?''
கருத்து: 'அவன் சொன்னது, அவன் பிரியும் - குறிப்புக் கொண்ட மனத்தினன் என்பதைக் காட்டுகின்றதேயாம்.'
சொற்பொருள்: அள்ளல் - சேறு. அளை - வளை. நீயேன் - நீத்துச் செல்லேன். அன்னாய்: தோழியைக் குறித்தது. முன்னர்த் தோழி தலைவியை அன்னாய் என்றனள். இவ்வாறு பெண்களை 'அம்மா' என்று அழைப்பது தமிழர் மரபாகும்.
உள்ளுறை: களவன் அள்ளாடிச் சேறுபட்டதை நினையாதே, முள்ளி வேரளைக் கண்ணுள்ள தன் உளையிற் புகுந்தாற்போலத், தலைவனும் பரத்தையோடு இன்புற்றதன் அடையாளத்தோடேயே, தன் மனைக்கண்ணும் வந்து புகுவானாயினன்; அதுகண்டு ஐயுற்றாளை, 'நீயேன்' எனத் தேற்றுவானாயினன் என்பதாம்.
'யோறாடிய களவன் முள்ளி வேரளைச் செல்லும்' என்றது, பிறர் கூறிய அலர் கேட்டும் அஞ்ஞாது, தலைவன், பரத்தையர் மனைக்கண் தொடர்ந்து செல்வானாவான் என்றதாம்.
23. தாக்கணங்கு ஆவது ஏனோ?
துறை: இதுவும் அதே துறை.
முள்ளி வேரளைக் களவன் ஆட்டிப்
பூக்குற்று, எய்திய புனல் அணி யூரன்
தேற்றம் செய்து, நப் புணர்ந்து, இனித்
தாக்கணங் காவது எவன்கொல்? அன்னாய்!
தெளிவுரை: முள்ளிச் செடியின் வேர்ப்பக்கத்துள்ள தான அளையிடத்தேயுள்ள அலவனை ஆட்டி அலைத்து விளையாடியும், பூக்களைப் பறித்தும், எய்திய புனலானது அழகுடன் விளங்கும் ஊருக்கு உரியவனாகியவன் தலைவன். அவன் நாம் தெளியத் தகுவன செய்து முன்னர் நம்மைக் கூடினான். இப்போது, நம்மைத் தாக்கி வருத்தும் அணங்கினைப் போல வருத்திக் காட்டுவதுதான் எதனாலோ?
கருத்து: 'அவன் நடத்தையிலே மாற்றம் புலப்படுவது, அவன் மேற்கொண்டு ஒழுஙுகின்ற ஒழுக்கத் தவறினாலேதான்.'
சொற்பொருள்: களவன் ஆட்டு - அலவனாட்டு. பூக்குற்று - பூப்பறித்து. இவை மகளிர் விளையாட்டுகள். 'நம்'; தனித்தன்மைப் பன்மை. தாக்கணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம்; நம்மை உறவோடு க ஊடிக் கலந்தவன், இப்போது வெறுத்து வருத்தும் கொடுமையாளன் ஆயினனே என்பதாம்.
விளக்கம்: அலவனாட்டலும், பூப்பறித்தலும், இளமகளிரின் நீர் விளையாட்டுக்கள்; 'அலவனாட்டுவோள்' என்று பிறரும் கூறுவர் (நற். 363). 'சுனைப் பூக்குற்று' என்பதும் நற்றிணை (நற். 173).
உள்ளுறை: 'மகளிர் அலவனை அலைத்துப் பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன்' என்றது, 'தலைவன் தன் மனைவியைத் துன்புறுத்திப் பரத்தையர் உறவிலே திளைத்து இன்பங் காண்பவன்' என்று குறிப்பினாற் சொன்னதாம்.
'அலவனாட்டியும் பூப்பறித்தும் இளமகளிர் விளையாட்டயர்ந்த நீர் அழகு செய்யும் ஊரன்' எனவே, அந்நீர்தான் தெளிவிழந்ததாய்க் கலங்கித் தோன்றுமாறு போல, எம் இல்லறமும், அவன் எம்மைப் பிரிவினாலே நோயுறச் செய்து வருத்தியும் பரத்தையரோடு இன்புற்றுப் பழி விளைத்தும் வரும் கொடுமையால், அமைதியும், பெருமையும் தெளிவுமிழந்து கலங்கலுறுவதாயிற்று என்பதுமாம்.
24.நலங்கொண்டு துறப்பது ஏன்?
துறை: பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான் என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்பத், தலைமகட்குச் சொல்லியது.
(து.வி: பரத்தையொருத்தி மேற்கொண்ட காம மயக்கத்தினால் மட்டுமே அவன் நின்னைப் பிரிந்தான் அல்லன். அங்கும் ஒருத்தியை உறவாடித் துய்த்தபின் கழித்துவிட்டு, மற்றொருத்தியைப் புதிது புதியாகத் தேடிச் செல்லும் இயல்பினனே தலைவன் என்று, தோழி தலைவிக்குச் சொல்கிறாள். தலைமகனின் ஏவலர் கேட்பச் சொல்லியதால், வாயில் மறுத்ததும் ஆம்.)
தாய்சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன்,
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலம் கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்!
தெளிவுரை: 'அன்னாய்! தன் தாய்சாவத் தான் பிறக்கும் புள்ளிகளையுடைய நண்டினோடு, தன் பிள்ளையையே தான் தின்னும் முதலையையும் உடையது அவன் ஊர். அவ்வூரவனான நம் தலைவன் இவ்விடத்தே இன்னமும் வந்தனன் இல்லையோ? அவன், தம் பொற்றொடிகள் ஒலிக்கத் தன்னைத் தழுவிய பெண்களின் நலத்தினைக் கவர்ந்து கொண்டு, பின் அவரைப் பிரிவுத் துயராலே வருந்தி நலனிழியுமாறு கைவிடுவதுதான் எதனாலோ?'
கருத்து: நினக்கு மட்டுமே கொடுமை செய்தான் அல்லன்; தன்னைத் தழுவிய பெண்களை எல்லாம் நுகர்ந்தபின் அவர் வருந்தக் கைவிடுவதே அவன் இயல்பாகும். இதுதான் எதனாலோ? என்பதாம்.
பொருள்: 'தாய் சாப் பிறக்கும் களவன்' - தாய் சாவத் தான் பிறப்பெடுக்கும் நண்டு; 'கூற்றமாம் நெண்டிற்குத் தன்பார்ப்பு' என்பர் பிறரும் (சிறுபஞ். 11). 'பிள்ளை தின்னும் முதலை' - தன் பிள்ளையைத் தானே கொன்று தின்னும் முதலை; 'தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை' எனப் பின்னும் கூறுவார் (ஐங். 41). மகிழ்ந்ன் - மருதநிலத் தலைவன். தெளிர்ப்ப - ஒலிசெய்ய. நலம் - பெண்மை நலம். முயங்கியவர் - தழுவிய பெண்டிர்; பரத்தையரைக் குறித்தது.
விளக்கம்: தலைவனின் ஊர் எப்படிப்பட்ட அன்புன்ச செறிவையுடையது தெரியுமா? தான் பிறக்கத் தன் தாயையே சாகடிக்கும் நண்டையும்; தான் பெற்ற பிள்ளையையே கொன்று தின்னும் கொடிய முதலையையும் உடையது. ஆகவே, அவ்வாரனான அவனிடத்தே அன்பும் பாசமும் நிரம்பியிருக்குமென எதிர்பார்த்தது நம் மடமையேயன்றி அவன் தவறன்று என்கிறாள் தோழி. 'மகிழ்நன், பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கி, அவர் நலம் கொண்டு, துறப்பது எவன்கொல்?' என, அவன் பிறர்மாட்டுச் செய்துவரும் கொடிய செயல்களையும் அவன் இயல்பாகவே இணைத்துக் கூறலும் பொருந்தும்.
உள்ளுறை: தாய் சாவப் பிறக்கும் களவனையும், தன் பிள்ளை தின்னும் முதலையையும் உடைய கொடுமையான ஊரினனாதலால், அவன் விரும்பிய மகளிரை முயங்குதலும், நலன் உண்ணலும், பின் அன்பற்றுத் துறத்தலும் அவனுக்கும் உரிய அருளற்ற கொடுந்தன்மையேயாம் என்று கூறுவதாகக் கொள்க.
மேற்கோள்: 'தலைவன் கொடுமை கூறினமையின் உள்ளுறை யுவமம் துனியுறு கிளவியாயிற்று. தவழ்பவற்றின் இளமைக்குப் 'பிள்ளை' என்னும் பெயர் உரியது' என்பார் பேராசிரியர் (தொல். உவம. 28, மரபு. 5) தோழி, காலத்திற்கும் இடத்திற்கும் பொருந்துமாற்றால் உள்ளுறை உவமம் கூறியது என்றும் அவர் கூறுவர். (தொலை. உவம. 31, பேர்).
25. இழை நெகிழ் செல்லல்!
துறை: மேற்பாட்டின் துறையே.
புயல் புறந்தந்த புனிற்றுவளர் பைங்காய்
வயலைச் செங்கொடி களவன் அறுக்கும்
கழனியூரன் மார்பு பலர்க்கு
இழை நெகிழ் செல்லல் ஆக்கும் அன்னாய்!
தெளிவுரை: ''அன்னாய்! புயலானது புறத்தேயாகத் தூக்கித் தள்ளிவிட்ட, முற்றாத இளம்பிஞ்சுக் காய்களையுடைய வயலையின் சிவந்த கொடியினைக், களவன் புகுந்து அறுத்துப் போடும் கழனியைக் கொண்ட ஊருக்கு உரியவன் தலைவன். அவன் மார்பானது, நின் ஒருத்திக்கே அல்லாமல், மகளிர் பலருக்கும் இழைநெகிழச் செய்யும் துன்பத்தைத் தருவதாகும்.''
கருத்து: நின்னையன்றியும், அவனாலே துயரினைக் கண்டவர், மகளிர் பலராவர்!
சொற்பொருள்: புறந்தந்த - பந்தரினின்றும் இழுத்துக் கீழே தரையில் தள்ளிய. புனிற்றுவளர் பைங்காய் - இளம்பிஞ்சாக இருக்கும் பசுங்காய். செங்கொடி - சிவந்த கொடி, பசலையுள் ஒருவகை இது. செல்லல் - துயரம். இழை - அணிகலன்கள்; வளையும் தாடியும் போல்வன. புயல் - புயற் காற்று; அயல எனவும் பாடம்.
விளக்கம்: புயலிலே தன் பற்றுக் கோட்டினை விட்டுத் தரையிலே இழுத்தெறியப்பட்ட இளம் பிஞ்சுகளைக் கொண்ட வயலைக் கொடியினை, தானும் அருளின்றி அறுத்துக் களிக்கும் களவன் போலவே, தன்மேற் காதலால் தம் தாயாரின் தடையையும் மூறிவந்து கூடிய மகளிருக்கு ஊறுவிளைத்து, அவர் எவ்வகைப் பற்றுக்கோடும் இல்லாதவராகத் துடிப்பக் கண்டு களிக்கும் கொடிய மனத்தினன் ஊரன் என்பதாம். 'வயலைச் செங்கொடி' என்றது, அதன் மென்மைமிகுதியை உணர்த்தற்கு. ஈன்றணிமை கொண்ட மகளிரும் பசலைக் கொடி போல மென்மையுடையார் என்பது பற்றி அவரையும் பசலையுடம் புடையார் என்பதும் நினைக்க.
உள்ளுறை: 'வயலையின் பசுங்காய் சிதைய, புயலாலே வீழ்த்தப் பெற்ற அதன் கொடியை, அலவன் தானும் அறுத்துக் களித்தாற் போன்று, மகப்பெற்று வாலாமை கழியாதே மனையிடத்திற்கும் நம் நலத்தினைச் சிதைத்து, நம் புதல்வனுக்கும் கேடிழைக்கின்றான். நம் தலைவன்' என்பதாம்.
களவன் வயலைச் செங்கொடியை அறுத்தலால், விளைந்து முற்றிப் பயன்தர வேண்டிய, காய் பல காய்க்கும் செடிவாடி அழிந்தாற் போல, தலைவன் ஒருத்தியோடு ஒன்றி வாழ்தலான பண்பினை அறுத்துப் பரத்தமை பேணலால், அப் பெண்டிர் பலருக்கும் துயரம் செய்வான் ஆயினன் என்பதும், அம் மயக்கால் புதல்வனைக் காத்துப் பேணும் பொறுப்பையும் மறந்தனன் என்பதும் ஆம்.
26. இன்னன் ஆவது எவன்கொல்?
துறை: தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார், 'நின் முனிவிற்கு அவன் பொருந்தா நின்றான்' என்ற வழி. 'அவன்பாடு அஃதில்லை' என்பதுபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
(து.வி: தலைமகனுக்காகப் பரிந்துரை செய்யச் சென்றவர், 'நின் சினத்திற்கு அவன் பொருந்தவே நடந்து, நினக்குக் கொடுமையே செய்தான்' என்று, தலைவியின் புலவிக்கு இசைவது போலத் தலைவனைப் பழித்துச் சொல்லுகின்றனர். அவ்விடத்தே, 'அவன் இயல்பு அஃதில்லையே? எப்படி இவ்வாறு அவன் ஆயினான்? என்று தலைவி, தோழியிடத்தே அவனைப் போன்றிச் சொல்வதாக அமைந்தது. இச்செய்யுள்.)
கரந்தையஞ் செறுவில் துணைதுறந்து, களவன்
வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்
எம்மும், பிறரும், அறியான்;
இன்னன் ஆவது எவன்கொல்? - அன்னாய்!
தெளிவுரை: ''அன்னையே! கொட்டைக் கரந்தையையுடைய அழகிய வயலினிடத்தே, தன் துணையான பெட்டை நண்டைத் துறந்து களவன் செல்லும், அப்படிப் போகும் களவன், அயலேயுள்ள வளவளைக் கொடியினது. மெல்லிய தண்டினையும் அறுத்துப் போகின்ற ஊருக்கு உரியவன் தலைவன். அவன், எம் இயல்பையும், பரத்தையரின் இயல்பையும் அறியாத தெளிவற்ற நிலையினனாயினான். அவன் இங்ஙனம் தீச் செயலுடையனாவதற்குக் காரணந்தான் யாதோ?''
கருத்து: 'அவன் இவ்வாறு புறத்தொழுக்கிலே செல்லுதற்கும், பலர்க்கும் தீச்செயலே செய்தற்கும், யாதுதான் காரணமோ?' என்பதாம். அது அவன் நட்பாகக் கூடினார் கெடுத்த கேடு என்பது கருத்து.
விளக்கம்: பொதுவாக, வாயிலோர் தலைவனைப் போற்றிக் கூறுதலே அல்லாது, அவன் கொடுமை கூறிப் பழிப்பது என்பது கிடையாது. ஆனால், மனைவிக்கு உறுதி கூறுமிடத்து, இவ்வாறு தலைவனைக் குற்றம் கூறுதலும் உண்டு என்பர் (தொல். பொ. 166) இனி, பண்போடு நடக்கும் தலைவனுக்கேகூடத், தன்னிடத்தே உளம் அழிந்தாகொருத்தியை அடங்கக் காட்டுதலான செயலிடத்தே, புறத்தொழுக்கம் உளதாவதும் இயல்பு என்பதும் விதியென்பர் (தொல். பொ. 150). அவ்விதிப்படி நடந்தானோ என்று தலைவி ஐயுற்றதாகவும் நினைக்க.
சொற்பொருள்: கரந்தை - ஒரு வகைக் குத்துச் செடி: கொட்டைக் கரந்தை எனவும், கொட்டாங்கரந்தை எனவும் கூறப்படும், வெள்ளைக் கரந்தை, சிவகரந்தை, தரையிற்படரும் சிறுகரந்தை போல்வன இதன் வேறுபல வகைகள். துணை - துணையாகிய பெட்டை. வள்ளை - வள்ளைக் கொடி. மென்கால் - மெல்லிய தண்டு. இன்னாவது - இத்தன்மையன் ஆவது; இன்னான் ஆவது என்பதும் பாடம்.
உள்ளுறை: கரந்தைச் செறுவிலே துணைதுறந்து சென்ற களவன், மெல்லிய வள்ளைத் தண்டினை அறுத்து எறியும் என்றது, அவ்வாறே இல்லத்து மனையாளைத் துறந்து போயின தலைவன், பரந்தையர் மாட்டும் இன்புற்றுத் துறந்து அவரையும் வாடவிட்டு நலிவிக்கும் கொடுமையினைச் செய்வானாயினன் என்பதாம்.
ஈன்றணிமை உடையாளைத் துறந்து வாழ்வதற்கு நேர்ந்த மனவெறுமையே, பரத்தையர் மாட்டுச் சென்றொழுகி, அவரை வருந்தச் செய்யும் கொடுமைக்குக் காரணமாயிற்றுப் போலும் என்பதும் ஆம். 'துணை துறந்து' போகாதிருப்பின், அக் கொடுமை நிகழாது போலும் என்பதும் கொள்க.
27. அல்லல் உழப்பது ஏனோ?
துறை: தலைமகன் மனைக்கண் வருங்காலத்து வாராது தாழ்த்துழி, 'புறத்தொழுக்கம் உளதாயிற்று'எனக் கருதி வருந்தும் தலைமகட்குத், தோழி சொல்லியது.
(து.வி: தலைவன் வரவேண்டிய காலத்தே முறையாக இல்லத்திற்கு வந்தான் அல்லன்; அதனால், 'அவன் புறத்தொழுக்கத்தே புகுந்தான்' என்று நினைந்து வருந்துகின்றாள் தலைவி. அவளுக்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
செந்நெலம் செறுவிற் கதிர் கொண்டு, களவன்
தண்ணக மண்ணளைச் செல்லும் ஊரற்கு
எல்வளை நெகிழச் சாஅய்,
அல்லல் உழப்ப தெவன்கொல்? அன்னாய்!
தெளிவுரை: 'அன்னையே! செந்நெல் விளையும் விளைவயலிடத்தே கதிரைக் கவர்ந்து கொண்டு செல்லும் நண்டானது, குளிர்ச்சியான உள்ளிடம் கொண்ட தன் மண்ணளையிடத்தே அதனோடு சென்று புகும் ஊருக்கு உரியவன் தலைவன். அவன் பொருட்டாக, நீதான், நின் ஒளிவளைகள் நெகிழ்ந்தோட, மெலிந்து துயரப்படுவதுதான் எதற்காகவோ?'
கருத்து: 'அவனைக் குறித்துப் பிழைபட நினைத்து மனம் கவலை கொள்ளாதே! அவன் விரைந்து வந்து சேர்வான்!' என்பதாம்.
சொற்பொருள்: செந்செல் - சிவப்பு நெல், 'செஞ்சம்பா' என்பதும், 'செஞ்சாலி' என்பதும் இது. செறு - வயல் தண்ணக - குளிர்ந்த உள்ளிடத்தையுடைய. எல்வளை - ஒளி செய்யும் வளை. சாஅய் - மெலிந்து.
உள்ளுறை: அலவன் செந்நெற்கதிர் கொண்டு தன் மண்ணளை புகுமாறு போலத், தலைவனும், வினையாற்றுதலால் தேசிய பொருளைக் கொண்டானாய்த் தன் இல்லத்திற்கு விரைந்து மீள்வானாவன் என்பதாம். கற்புக் காலத்தே பொருள் வயிற் பிரிந்து சென்று, திரும்பி வரக் குறித்த காலம் தாழ்த்தஃதானைக் குறித்துச் சொல்லியது இதுவாகக் கொள்க.
மேற்கோள்: ''புறத் தொழுக்கத்தை உடையவனாகிய தலைவன் மாட்டு மனம் வேறுபட்ட தலைவியைப், 'புறத்து ஒழுக்கமின்றி நின்மேல் அவர் அனைபுடையர்' என, அவ்வேறுபாடு நீங்கத் தோழி நெருங்கிக் கூறியது; இதன் உள்ளுறையாற் பொருள் உணர்க'' என்பார் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு. 9). 'கதிர்... செல்லும் ஊரன்' என்பதற்கு உள்ளுறைப் பொருளாவது, 'வேண்டிய பொருளைத் தொகுத்துக் கொண்டு இல்லிற்கு வருவான் என்பது' எனவும் அவர் கூறுவர்.
28. தோள் பசப்பது ஏனோ?
துறை: இற்செறிவித்துத் தலைமகட்கு எய்திய வேறுபாடு கண்டு, 'இது தெய்வத்தினான் ஆயிற்று' என்று தமர் வெறி எடுப்புழி, அதனை விலக்கக் கருதிய தோழி, செவிலிக்கு அறத்தொடு நிற்றது.
(து.வி: இது துறையமைதியால் 'குறிஞ்சி'த் திணையது எனினும், 'களவன் வரிக்கும்' எனவந்த கருப்பொருளால் 'மருதம்' ஆயிற்று. 'வெறிவிலக்கல்' என்னும் குறிக்கோளோடு, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்று, தலைவியின் களவுறவை உணர்த்தியதாகவும் கொள்க.)
உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்,
தண்சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஒண்தொடி நெகிழச் சாஅய்,
மென்தோள் பசப்பது எவன்கொல்? - அன்னாய்!
தெளிவுரை: ''அன்னையே! 'நீருண்டும் துறையிடத்தேயுள்ள அணங்குதான் இவளிடத்தே நீங்காது தங்கியிருக்கும் நோய்க்குக் காரணம் என்று நீயும் நினைப்பாய்' என்றால், ஒள்ளியதொடியானது நெகிழ்ந்துபோக மெலிவுற்று, இவளது மென்மையான தோள் பசந்து நிறம் வேறுபடுத்தும் எதனாலோ?''
கருத்து: இது, உளத்தே கொண்ட காதல் நோயின் வெம்மைத் தாக்குதல் என்பதாம்.
சொற்பொருள்: உண்துறை - நீருண்ணும் துறை; உஃணு நீர் எடுக்கும், நீர்த்துறை. நீர்த்துறையிடத்தே அணங்கு உளதாதலைப் பிறரும் கூறுவர். (முருகு, 224; அகம், 146, 240). உறைநோய் - செயலற்றவளாக நீங்காதே தங்கியிருக்கும் காமநோய்; 'உறுநோய்' என்பதும் பாடம். வரிக்கும் - கோலம் செய்யும். 'தொடி நெகிழத் தோள் சாய்' என்பதனை, 'தொடி நெகிழ்ந்தனவே, தோள் சாயினவே' (குறுந். 239) என்பதனாலும் அறிக. தோள் பசத்தலைப் பிறரும் கூறுவர்: 'தாம் பசந்தன என் தடமென் தோளே - (குறுந், 121.)'
விளக்கம்: 'உண்டுறை யணங்கு இவளுறை நோயாயின்' என்றது, அன்னையும் பிறரும் கொண்ட முடிவைத் தான் எடுத்துச் சொல்லி மறுக்க முனைவதாகும். 'தோள் பசப்பது' நோக்கி, இவள் நோய் காமநோயாதலை உணர்க எனக்குறி, வெறிவிலக்கி, அறத்தொடு நின்றனள் தோழி என்க.
உள்ளுறை: அலவன் வரித்தலாலே தன் சேறும் அழகுற்றுத் தோன்றுமாப்போலே, தலைவன் வரைந்து வந்து இவளை கோடலால் இவளும் இந் நலிவின் நீங்கிப் புதுப் பொலிவு அடைவாள் என்பதாம்.
29. நின் மகள் பசலை ஏனோ?
துறை: வரைவெதிர் கொள்ளார் தமர், அவண் மறுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
(து.வி.: தலைமகனுக்கு உரியார் வரைந்து வரவும், தலைவியின் தமராயினார் அதனை ஏற்காது மறுத்தனர். அப்போது தோழி, தலைவியின் களவு உறவைச் செவிலித் தாய்க்குப் புலப்பட உரைத்து, அறத்தொடு நிற்கின்றதாக அமைந்த செய்யுள் இது.)
மாரி கடிகொளக், காவலர் கடுக,
வித்திய வெண் முளை களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்புற மரீஇத்,
திதலை அல்குல் நின்மகள்
பசலை கொள்வது எவன்கொல்? அன்னாய்!
தெளிவுரை: ''அன்னையே! மாரியும் மிகுதியான பெயலைச் செய்ய, காவல் செய்வோரும் விரைவாக வந்து பார்வையிட, விதைத்த வெள்ளிய முளைகளை அலவன் அறுத்துத் திரியும் கழனிகளையுடையவன் ஊரன்! அவன் மார்பினைப் பொருந்தத் தழுவி இன்புற்றதன் பின்னும், தேமற் புள்ளிகள் கொண்ட அல்குல் தடத்தை உடையவளான நின் மகள்தான், பசலை நோயினைத் தன்பாற் கொள்வதும் எதனாலோ?''
கருத்து: அவனையே அவளுக்கு மணமுடித்தல் அறத்தொடுபட்ட நெறியாகும்.
சொற்பொருள்:மாரி - கால மழை. கடிகொளல் மிக்குப் பெய்தல். கடுக - விரைவாக வர; மழை நின்ற வேளையிலே காவலர் வித்திய வயல் நோக்கி விரைந்து வந்தது பெருமழையால் வித்திய வித்துச் சேதமாதலைத் தடுத்தற் பொருட்டாக என்க. வெண்முளை - வெள்ளிய முளை; வித்தை முளைகட்ட விட்டு விதைப்பதே இன்றும் சேற்று விதைப்பினர் மரபு. அறுக்கும் - கெடுக்கும். மார்பு உறமரீஇ - மார்பு பொருந்தத் தழுவி; 'மார்புற அறீஇ' என்றும் பாடம். சிதலை - மேற்புள்ளிகள்; துத்தி என்பர்; திதலை அல்குல்' என்பர் பிறரும் (குறந். 27, அகம். 54). பசலை - பசத்தலாகிய காமநோய்க் க ஊறு.
விளக்கம்: இதுவும் கருப்பொருள் நோக்கி மருதமாகக் கொள்ளற்கு உரிய செய்யுளே. அறத்தொடு நிற்றலே இதன் துறையாவதும் அது குறிஞ்சிக்கு உரியதும் நினைக. இஃது 'உண்மை செப்பல் என்பர்'
உள்ளுறை: 'வித்திய விதையிடத்தே தோன்றும் முளையினை, அவ்வயலிடத்தே வாழ்தலை உளதான களவன் அறுக்கும் ஊரன்' என்றது, அவ்வாறே தம் மகளிடத்தே எழுந்த இல்லறக் கடமையின் செவ்வியான கற்பு மேம்படுதலை வரைவெதிர் கொள்ளாதே வரைவுடன் படற்கு மறுத்தாராய்த் தமரே இதைக்கின்றனர் என்பதாம்.
30. பெருங்கவின் இழப்பது ஏன்?
துறை; இதுவும் மேற்காட்டிய துறைச் செய்யுளே.
வேம்புநனை அன்ன நெடுங்கண் களவன்
தண்ணக மண் அளை நிறைய, நெல்லின்
இரும்பூ உறைக்கும் ஊரற்கு இவள்
பெருங்கவின் இழப்பது எவன்கொல்? - அன்னாய்!
தெளிவுரை: ''அன்னையே! வேம்பின் பூவரும்பைப் போன்ற நெடுங்கண் களையுடைய அலவனின் குளிர்ந்த நிறையும்படியாக, நெற்பயிரின் மிகுதியான பூக்கள் உதிர்ந்துகிடக்கும் விளைவயல்களையுடைய ஊரன் தலைவன். அவன் பொருட்டாக, நின் மகள் தன் பேரழகினை இழப்பதுதான் எதனாலோ?''
கருத்து: அவனே, இவளது கணவன் ஆதற்குரியன்; அதனால் வரைவுக்கு உட்படுதலைச் செய்வீராக.
சொற்பொருள்: வேம்புநனை - வேம்பின் பூவரும்பு; இது நண்டின் கண்ணுக்கு நல்ல உவமை; 'வேம்பு நனை அன்ன இருங்கண் நீர் ஞெண்டு' என்று அகமும் இதனைக் கூறும் (அகம், 176) உறைக்கும் - உதிர்ந்து கிடக்கும். கவின் - பேரழகு; காண்பார் உணர்வு முற்றும் தன்பாலதாகவே கவியுறுமாறு மயக்கும் வசியப் பேரெழில்.
விளக்கம்: அலவனின் கண்ணுக்கு வேம்பு நனையை உவமை கூறியது, வேம்பு பூக்கும் காலம் மணம் செய்தற்குரிய நற்காலமும் ஆகும் என்று புலப்படுத்துதற்காம்.
மேற்கோள்: மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது; தோழி அறத்தொடு நின்றது எனக் காட்டுவர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் (தொல். அகத். 12).
உள்ளுறை: 'அலவனின் மண்ணளை நிறைய வயலிடத்தின் நெற்பூ உதிர்ந்து கிடத்தலைப் போலவே, தலைவனின் மனையகத்தே, தீதின்றி வந்த குடியுரிமையான பெருஞ்செல்வம் நிரம்பிக் கிடக்கும்' என அவன் செல்வப் பெருக்கத்தினைக் கூறி வரைவுடம்படக் கூறியதாகவும் கொள்க.
4. தோழிக்கு உரைத்த பத்து
இப் பத்துச் செய்யுட்களும், கேட்போளாகிய தோழி பொருளாகத் தொகை பெற்றுள்ளன. 'அம்ம வழி தோழி' என்றே ஒவ்வொரு செய்யுளும் விளியோடு தொடங்குகின்றது. இங்குப் பேசுவோர் பலராயினும் கேட்பவள் தோழியே. தோழியருள்ளும் பலரிடம் கூறியிருத்தல் என்றல் பொருந்துமேனும், ஒருமையிற் கூறுதல் இலக்கிய மரபு நோக்கி என்க.
31. கடனன்று என்பானோ?
துறை: முன் ஒருநாள், தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 'இனிப் புறத்தொழுக்கம்விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன், பின்பும் பரந்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள், அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: முன்னோரு தடவை தலைவியோடு சென்று புதுப்புனல் ஆடினான் தலைமகன். அப்போது, அவளும் அவள் தோழியரும் கூடியிருக்கும் இடத்தே, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' எனச் சூளுரையும் விரும்பிச் செய்தான் அவன். பின்னாளில், பரந்தையரோடு புனலாட்டயர்கின்றான் என்பது கேட்டாள் தலைமகள். அவள் நெஞ்சம் பெரிதும் வேதனைப்படுகின்றது. தோழியிடம் சொல்வாள் போலத் தலைவனின் நெருக்கமான ஏவலர் பிறரும் கேட்கச் சொல்வதாக அமைந்தது இச் செய்யுள்.)
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
கடனன் றென்னும் கொல்லோ - நம்மூர்
முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
உடனாடு ஆயமோடு உற்ற சூளே!
தெளிவுரை: ''தோழி, ஒன்று சொல்வேன் கேட்பாயாக: நம் ஊரிடத்தே வளைந்து முதிர்ந்த மருத மரங்கள் நிறைந்துள்ள பெருந்துறைக்கண்ணே, நம்மோடும் புனலாட்டு அயர்ந்தவரான ஆயத்தாரும் அறியும்படி, நம் தலைவன் செய்த சூளுரையினைப் போற்றிக் காத்தல், தனக்குரிய கடனன்று என்று அவன் இப்போது சொல்வானோ?''
கருத்து: 'அச் சூளுரை பொய்த்து, அவன் பரத்தையரோடும் கூடிப் புதுப்புனலாட்டு அயர்தல் உடையன் என்று' நாம் கேட்கின்றோமே என்பதாம்.
சொற்பொருள்: 'அம்ம' என்பது கேட்பிக்கும் பொருட்கண் வந்த இடைச்சொல்; சங்க நூற்களுள் பலவிடங்களிற் காணப்படும்; 'அம்ம கேட்பிக்கும்' (தொல். சொல். 276). மகிழ்நன் - தலைவன்; மருதநிலத் தலைவனின் பெயர்; பெயரே மகிழ்வே குறியாகத் திரியும் இயல்பை உணர்த்துவது காணலாம்; முடம் - வளைவு; பெருந்துறை போல்வது. உழையர் - பக்கம் இருப்பார். கடன் - கடப்பாடு; போற்றியே ஆக வேண்டியதான உறுதிப்பாடு. உடனாடு ஆயம் - தோழியரும், தன்னுடன் நீராட்டயர்தற்கு உரிமையுள்ளவருமான ஆய மகளிர்.
விளக்கம்: உழையர் கேட்பக் கூறியது, அவர்தாம் அவனுக்கு உணர்த்தித் தெளிவித்தலும் கூடும் என்னும் கருத்தால், 'சூள்' தெய்வத்தை முன்னிறுத்திக் கூறும் உறுதி மொழியாதலின், அங்ஙனம் கூறினான். பொய்ப்பின் தெய்வம் அவனைப் பற்றி வருத்துதல் தவறாதாதலின், தன்னை மறப்பினும், அதனையேனும் நினைந்து போற்றானோ எனக் கவலையுற்றுச் சொல்லுகின்றாள் எனவும் கொள்ளலாம்.
மேற்கோள்: 'அம்ம' என்னும் சொல் கேட்பித்தற் பொருளில் வரும் என்பதற்கு மேற்கோள் காட்டுவர் (தொல். இடை - 29) உரையாசிரியர்கள்.
32. எழுநாள் அழுப என்ப!
துறை: வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
(து.வி: தலைமகள், தன் புறத்தொழுக்கத்தாலே தன்னோடும் ஊடிச் சினந்திருப்பதனை எண்ணி, அவளைத் தெளிவித்துத் தன்னுடன் உறவாடச் செய்யும் பொருட்டுத், தலைவன், தன் பாணர் பாங்கர் முதலியோரை ஏவுகின்றான். அவர்கள் கேட்டுத் திரும்புமாறு, தலைவி, தோழிக்குச் சொன்னாற்போல அமைந்த செய்யுள் இது.)
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
ஒருநாள் நம்மில் வந்ததற்கு, எழுநாள்
அழுப என்ப, அவன் பெண்டிர்
தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே!
தெளிவுரை: 'தோழி, நீ வாழ்வாயாக. மகிழ்நன் ஒருநாள் நம் இல்லத்திற்கு வந்தானாக, அதற்கே, அவன் பெண்டிர், தீயிற்பட்ட மெழுகினைப் போல விரைய உள்ளம் உருகினராய் ஏழு நாளளவும் அழுதிருந்தனர் என்று சொன்னார்களே!'
கருத்து: 'யாம் அவன் பிரிவை ஆற்றும் திறலுடையேம்; ஆற்றாது உருகும் அவரிடத்தேயே சென்று அவன் தலையளி செய்வானாக' என்பதாம்.
சொற்பொருள்: 'நம்' - தனித்தன்மைப் பன்மை. என்ப - என்பார்; அசையும் ஆம். ஒன்றுக்கு ஏழென்று மிகுத்துக் கூறுதல் இலக்கிய மரபு (குறள் 1269). 'அவன் பெண்டிர்' என்றது பரத்தையர் என்பார்களே! ஆதலின், அவரிடத்தேயே சென்று, தலைவன் அவருக்கே மகிழ்வு தருவானாகுக' என்றது மனவெறுப்பாலே, கூறியதாம். தன்போல் உரிமையற்றாரும், அவன் தரும் பொருளே கருதி அவனுக்கு இன்பம் அளிப்பாரும் ஆயினவரான பரத்தையர், அவ்வாறு நெஞ்சழிதல் இலர் என்பதே இதன் உட்கருத்தாம். பிறரிடத்தே தோன்றிய சிறுமை பொருளாகப் பிறந்த மருட்கை இது என்க.
33. தலைத்தலைக்கொள ஆடுவான்!
துறை: இதுவும் மேற்பாட்டின் துறையே யாகும்.
அம்ம வாழி, தோழி, மகிழ்நன்
மருதுயர்ந் தோங்கிய விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரொ டாடும் என்ப; தன்
தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே!
தெளிவுரை: ''தோழி! வாழ்வாயாக! மருத மரங்கள் மிகுந்தும் ஓங்கியும் வளர்ந்திருப்பதான, இதழ்விரிந்த பூக்களையும் மிகுதியாகவுடைய, பெரிய நீர்த்துறையிடத்தே, நம் தலைவன், குளிர்ந்த தாரணிந்த தன் மார்பினைப் பரத்தையர் தலைக்குத் தலை ஒவ்வொருவரும் புணையாகப் பற்றிக் கொண்டு நீராடி இன்புற்று மகிழுமாறு தந்து, அவருடன் கூடிக் களிப்புடன் நீராட்டயவர்வான் என்பார்களே!''
கருத்து: 'அவ்வாறு பலராலும் விரும்பித் தழுவப்படும் நம் தலைவனுக்கு, நம்முடையதான உறவுதான் இப்போதிலே தேவையற்றதல்லவோ' என்று கூறி, வாயில் மறுத்ததாம்.
சொற்பொருள்: 'தலைத்தலைக் கொள்' என்றது, தலைக்குத் தலை வந்து பற்றிக் கொள்ள. அவன் அதனால் களிப்பும், எவர்க்குத் துணையாவது என்றில்லாது பற்றினார்க்கெல்லாம் துணையாகும் இன்ப மயக்கமும் கொள்வான் என்றற்காம். 'விரிபூம் பெருந்துறை' என்றது, கரைக்கண் மரங்கள் உதிர்த்த பூக்களும், நீராடுவார் கழித்த பூக்களுமாகப் பெருகிப் பரந்து, நீரையே மேற்புறத்தே மூடிக் கொண்டிருக்கும் தன்னையுடைய பெரிய நீராடுதுறை என்றற்காம். இதனால், இவன் ஆடிய ஆட்டத்தை ஊராட் பலரும் காண்பர் என்பதும், அவன் அதனையும் நினையாத நாணிலியாயினான் என்று நொந்தததும் கொள்க. 'வவ்வு வல்லார் புணையாகிய மார்பினை' என்று அவருள், பிறரை ஒதுக்கிப் பற்றிக் கொள்ளும் வல்லமையுள்ளவளுக்குப் புணையாக மகிழும் மார்பினை உடையனாயினை என்று, பரிபாடல் இவ்வாறு ஒரு காட்சியை மேலும் நயப்படுத்தும் (பரி. 6).
34. ஆம்பல் வண்ணம் கொண்டன!
துறை: இதுவும் மேற்செய்யுளின் துறையே!
அம்ம வாழி, தோழி, நம் ஊர்ப்
பொய்கைப் பூத்த புழைக்கால் ஆம்பல்
தாதோர் வண்ணம் கொண்டன
ஏதிலா ளர்க்குப் பசந்த, என் கண்ணே!
தெளிவுரை: தோழி, கேட்பாயாக; நம்மிடத்தே அன்பற்றவனாகவே ஒழுகிவரும் தலைவனின் பொருட்டாகப் பசப்புற்று என் கண்கள், பொய்கையிடத்தே பூத்த, புழை பொருந்திய தண்டினையுடைய ஆம்பற் பூவின் தாதுபோலும் நிறத்தையும் கொண்டனவே! அதுதான் ஏனோ?''
கருத்து: நம்மை மறந்தானை மறக்கமாட்டாதே நாம் ஏங்கிச் சோரும் நிலையான இதுதான் என்னையோ? என்பதாம்.
சொற்பொருள்: பொய்கை - நீர்நிலை. 'மானிடரால் ஆக்கப்படாது தானாகவே அமைந்த நீர்நிலை' என்பர் நச்சினார்க்கினியர். புழை - துளை. கால் - தண்டு; ஆம்பலின் தண்டு உள்ளே துளையுடையது என்பதனை, 'நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால்' என்று (நற். 6) பிறரும் காட்டுவர். ஏர்; உவம உருபு. வண்ணம் - நிறம்; அது பொன்னிறம்.
விளக்கம்: 'பிழைக்கால் ஆம்பல்' என்று சொன்னது, அவ்வாறே உள்ளத்தே உள்ளீடான வலுவற்ற தன்மையன் தலைவன் என்று நினைந்து கூறியதும் ஆம். ஊர்ப் பொய்கை ஆம்பலின் தாது நாடி வரும் வண்டினத்துக் கெல்லாம் இனிமை தருவது போல, தலைவனும் தன்னை நாடிய பரத்தையர்க் கெல்லாம் இன்பம் அளிப்பானாயினான் என்பதுமாம்.
35. மாமைக் கவினும் பசந்ததே!
துறை: வாயிலாய்ப் புகுந்தார், தலைமகன் குணம் கூறிய வழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுது காண் என் மேனி பசந்தது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது இது.
(து.வி: ஊடியிருப்பாளிடம், தலைவனுக்குப் பரிந்து பேசச் சென்றவர்கள், தலைவனின் சிறப்பினைப் பலவாகக் கூறி நிற்க, அதுகேட்டுப் பொறாதாளான தலைவி, 'இப் பொய்யுரை கேட்டேபோலும் என் மேனி பசந்தது' எனத் தன் தோழியிடம் கூறுவாள் போல, அவர்கள் பேச்சையும் மறுக்கின்றனள்.)
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்
நிறத்தினும் நிழற்றுதன் மன்னே!
இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே!
தெளிவுரை: 'தோழி, வாழ்வாயாக! நம் ஊர்ப் பொய்கையிடத்தே யுள்ள ஆம்பலின், நார் உரிக்கப் பெற்ற மெல்லிய தண்டினுங் காட்டில் ஒளியுடையதாக முன்னர் இருந்தது என் மேனியுன் மாமைக் கவின். அதுதான், இப்போது, இவர் கூறும் பொய்யுரை பலவும் கேட்கவுந்தான் கெட்டழிய, அழகழிந்து பசந்ததே!'
கருத்து: 'அவன் பொய்ப் பேச்சினை எல்லாம் வாய்ம்பையே எனக் கொண்டு மயங்குதல் இனியும் இலேம்' என்பதாம்.
சொற்பொருள்: 'ஆம்பல் நார் உரி மென்கால் நிறம் மாமைக் கவினின் நிறத்துக்கு உவமையாகலின், இதனைச் செவ்வாம்பல் தண்டு என்று கொள்க. 'மன்' : கழிவிரக்கப் பொருளது. நற்றிணையிலும், 'நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால், நார் உரித்தன்ன மாமைக் கவின்' (நற்-6) என வருவது காண்க. கவின் - பேரெழில். பசந்தன்று - பசந்தது.'
விளக்கம்: நாருரிக்கப் பெற்ற சிவப்பு ஆம்பலின் தண்டு, பேரெழிலும் ஒளியும் உடையதேனும், அதனைக் கவிந்து பேணிக் காக்கும் நாரினை இழந்தமையாலே விரைவில் அழகழிந்து வாடிப்போவது போல, அவன் செய்யும் கொடுமையால், என் மாமைக் கவினும் காப்பாரின்றிக் கெட்டது என்பதாம். மாமைக் கவின் - மாந்தளிரின் எழில் கொண்ட மேனியின் வனப்பு.
36. நாம் மறந்திருத்தலும் கூடும்!
துறை: 'தான் வாயில் நேரும் குறிப்பினளாயினமை அறியாது தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால், அவட்குத் தலைமகள் சொல்லியது.'
(து.வி: தலைவன் பரத்தைமை ஒழுக்கத்துப் புறம்போனானாயினும், தலைவியால் அவனை மறக்க முடியவில்லை. தோழி வாயிலோர்க்கு இசைவு தருவதற்கு மறுத்தவிடத்து, அவள் தான் அவனை ஏற்கும் குறிப்பினளாதலைத் தெரிவிக்குமாறு சொல்லி, அத் தொழியிடம் தன்னடைய மனநிலையும் இவ்வாறு புலப்படுத்துகின்றனள்.)
அம்ம வாழி, தோழி! ஊரன்
நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே.
கயல்எனக் கருதிய உண்கண்
பயலைக்கு ஒல்கா வாகுதல் பெறினே.
தெளிவுரை: ''தோழி வாழ்வாயாக! தலைவன் நம்மை மறந்து இருப்பவனாயின், கயல் போலும் மையுண்ட நம் கண்கள், அது குறித்துப் பசலை அடையாதிருப்பதற்கு வேண்டிய உறுதிப்பாட்டினைப் பெற்றனவானால், அவனை நினையாதேமாய் மறந்து இருத்தல் நமக்கும் இயல்வதாகுமே!''
கருத்து: எம் கண்கள் பிரிவுத் துயரால் பசலையடையாதிருக்கப் பெற்றோமில்லையே; ஆகவே, அவனை ஏற்பதே செய்யத்தக்கது என்பதாம்.
சொற்பொருள்: 'அமைகுவானாயின்' எற்து, பரத்தையிடத்தேயே தங்கியிருக்கும் ஒழுக்கத்தனாயின் என்பதாம். ஒல்காவாகுதல் - தளராதிருத்தலைப் பெறுதல்.
விளக்கம்: அவன் பரத்தை வீட்டிலேயே தங்கிவிட்டாலும், தலைவியின் நெஞ்சம் அவனையே, அவனுறவையே தேடிப்போதல், அவள் கற்பறத்தின் செம்மையால் என்று கொள்க.
37. பொய்த்தல் வல்லன்!
துறை: 'தலைமகளைச் சூளினால் தெளிந்தான்' என்பது கேட்ட காதற் பரத்தை, தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: 'தலைமகளைச் சூளுரை கூறித் தெளிவித்து, அவளுடன் கலந்து உறவாடி இன்புற்றான் தலைவன்' என்பதனைக் கேட்டாள் அவன் காதற்பரத்தை. அவள் உள்ளம் அதனாலே துடிக்கின்றது. தலைமகளின் தோழியர் கேட்குமாறு, தன் தோழிக்குச் சொல்வதுபோல, இவ்வாறு வெதும்பிக் கூறுகின்றாள். அவள், தலைவனிடத்தே கொண்டிருந்த நம்பிக்கையும் இதனால் நன்கு விளங்கும்.)
அம்ம வாழி, தோழி, மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்துபனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்
தேற்றான் உற்ற சூள்வாய்த் தல்லே!
தெளிவுரை: ''தோழி! வாழ்வாயாக! மகிழ்நன், தான் செய்த சூள் பொய்யாத வகையில் நடந்து கொள்ளுதலையே என்றும் அறியமாட்டான். தன்னை விரும்பிய மகளிரின் மையுண்ட கண்கள் பசலை படர்ந்தவாய், நீர்த்துளிகளை மிகுதியாகச் சொரியும் வண்ணம், தான் அவர்க்குச் செய்த சூளுறவினைப் பொய்த்து, அவரை வருந்தச் செய்வதற்கே அவன் வல்லவன்!''
கருத்து: தலைவன், செய்த சூளினைப் பேணாது ஒழுகும் வாய்மையற்ற தன்மையன் என்பதாம்.
சொற்பொருள்: நயந்தோர் - விரும்பியோர்; காதலித்த மகளிர். பயந்து பசலைபூத்து; பசந்து என்பதும் பாடம். பனிமல்க - நீர் நிறைய. தேற்றான் - அறியான்; தன்வினைப் பொருளது. சூள்வாய்த்தல் - உரைத்த சூளுரை பொய்யாகாதபடி பேணி அவ்வண்ணமே நடத்தல்.
விளக்கம்: 'காதற் பரத்தை' சேரிப் பரத்தையின் மகளாயினும், ஒருவனையே மனம் விரும்பி அவனோடு மட்டுமே உறவு கொண்டு, அவன் உரிமயாளாக மட்டுமே வாழ்பவள். 'வல்லவன் வல்லவன்' என்று அடுக்கி வந்தது. அவன் சூள் பொய்த்தலே இயல்பாகக் கொண்டவன் என்றற்காம்; 'இனியும் இச்சூளும் பொய்ப்பன்; மீண்டும் தலைவியைப் பிரிந்து எம்மை நாடியும் வருவான்' என்று சொன்னதுமாம்.
38. தன் சொல் உணர்ந்தோர் அறியலன்!
துறை: 'தலைமகன் மனைவயிற் போகக் கருதினான்' என்பது சொல்லிய தன் தோழிக்குப், பரத்தை சொல்லியது.
(து.வி: 'தலைமகன் தன் வீட்டிற்குத் திரும்பிப் போவதை நினைக்கின்றான்' என்று தோழி வந்து, அவன் பரத்தையிடம் சொல்லுகின்றாள். அவளுக்கு, அப் பரத்தை தான் கருதுவதைக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.)
அம்ம வாழி, தோழி! மகிழ்நன்
தன்சொல் உணர்ந்தோர் அறியலன்; என்றும்
தண்தளிர் வௌவும் மேனி,
ஒண்தொடி முன்கை, யாம்அழப் பிரிந்தே.
தெளிவுரை: தோழி, வாய்வாயாக! குளிர்ச்சியான மாந்தளிரைப் போன்ற மேனியினையும், ஒள்ளிய வளைகள் அணிந்த முன்னங் கையினையும் உடையரான யாம், அவன் பிரிவினுக்கு ஆற்றாதே அழுகின்ற வண்ணமாக, அவன் எம்மைப் பிரியக் கருதினான் என்பாய். தலைவன் தான் தெளிவிக்கக் கூறிய சொற்களை வாய்ம்மையாக ஏற்றுக் கொண்டு தன்பால் அன்பு செலுத்திய மகளிரின் உளப்பாங்கினை அறிகின்ற அறிவானது என்றைக்கும் இல்லாதவனே யாவான்!
கருத்து: ஆகவே, அவன் அப்படிப் பிரிந்து போதலும் அவனது இயல்பேயாகும் என்று ஆற்றியிருப்பேம் என்பதாம்.
சொற்பொருள்: தன்சொல் - தெளிவித்து முதற்கண் கூடியபோது, தான் சொல்லிய உறுதிமொழிகள். உணர்ந்தோர் - வாய்மையாகக் கொண்டோர்.
விளக்கம்: தன்மாட்டு அன்புடையாரைப் பிரிதலால், அவர் அடையும் மனத்துயரங்களைப் பற்றி எல்லாம் அறியும் அறிவற்றவன் தலைவன். ஆதலால், அவன் செயலைக் குறித்து யாம் ஏதும் நோதற்கில்லை; நம் பேதைமைக்கே வருந்துதல் வேண்டும் என்பதாம். தளிர் மேனி வண்ணம் கெடும்; ஒண்தொடி முன்கை மெலியத் தொடிகள் சுழன்றோடும்; என்பதனைக் குறிப்பால் உணர்த்தவே, அவை சுட்டிக் கூறினாள். இவளைக் காதற் பரத்தையாகவோ, உரிமைப் பரத்தையாகவோ கொள்வதும் பொருந்தும்.
39. பிரிந்தாலும் பிரியலன்!
துறை: ஒருஞான்று தலைவன் தன் மனைக்கண் சென்றது கொண்டு, அவன் பெண்மை நலம் எல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தான் என்பது தலைவி கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பத், தன் தோழிக்குச் சொல்லியது.
(து.வி: தலைவன் வீடு திரும்பியதால், தலைவி அவன் உறவைப் பெற்று ஆறுதலும் பெற்றாள்; 'பெண்மை நலமெல்லாம் விரும்பியவாறு அவன் துய்த்து விட்டான்; இனி அறக்கடன் மேல் தன் மனஞ்செல்லாலே நம்பால் வந்தான்; இனி நம்மைப் பிரியான்' என்று அவள் தோழியரிடம் கூறினாள். இதனைக் கேள்விப்பட்ட பரத்தை, தன் தோழியிடம் சொல்வது போலத், தலைவிக்கு நெருங்கியோர் கேட்டுக் கலங்குமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அம்ம வாழி, தோழி! ஊரன்
வெம்முலை அடைய முயங்கி, நம்வயின்
திருந்திழைப் பணைத்தோள் நெகிழப்
பிரிந்தன னாயினும், பிரியலன் மன்னே!
தெளிவுரை: தோழி வாழ்வாயாக! ஊரனானவன், விருப்பந்தரும் நம்முடைய மார்பகங்கள் அழுந்துமாறு முற்றத் தழுவி இன்புற்றனன். அவன் நம்மிடத்திலிருந்தும், திருத்தமான அணிகளணிந்த நம் பெருத்த தோள்கள் நெகிழும்படியாகப் பிரிந்தனன் என்றாலும், விரைவில் நம்பால் மீள்வானாதலின், முற்றவும் நம்மைப் பிரிந்தவன் அல்லன்காண்!
கருத்து: அவன் மீண்டும் நம்பால் விரைய வருவான் என்பதாம்.
சொற்பொருள்: வெம்முலை - விருப்பத்தை விளைக்கும் கவின்பெற்ற மார்பகம். அடைய - முற்றவும் அழுந்தும்படி. பிரியலன் - புறத்தே பிரிந்தாலும், எம் நெஞ்சைவிட்டு என்றும் பிரிந்திலன்; இப்போது சில நாட்கள் பிரிந்தாலும், மீளவும் வரும் இயல்பினனாதலின் முற்றப் பிரிந்திலன் என்பதும் ஆம். நெகிழ்தல் - நழுவுதல்.
விளக்கம்: இதனைத் தன் பாங்காயினார் சொல்லக் கேட்கும் தலைவி, தன் நம்பிக்கை நிலையாதோவென்னும் ஏக்கத்தினளாவாள் என்பதாம். இதுவே பரத்தையின் விருப்பமும் ஆம்.
40. ஊரிறை கொண்டனன் என்ப!
துறை: ''உலகியல் பற்றித் தலைவன், தன் மனைக்கண் ஒருஞான்று போனதே கொண்டு, 'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று அயற்பரத்தையர் பலரும் கூறினார்'' என்பது கேட்ட காதற் பரத்தை, அவர் பாங்காயினார் கேட்பத் தான் தன் தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: உலகியலிலே செயற்குரியதான ஒரு செயலை முடிக்கக் கருதித், தலைவன், ஒரு சமயம் தன் மனைக்குப் போகின்றான். அதனை, அவன் தன் காதற் பரத்தையை முற்றவும் பிரிந்து தன் வீட்டிற்கே திரும்பினன். அங்கேயே மனைவியைப் பிரியாது இன்புற்றும் வாழ்கின்றனன்' என்று அயற்பரத்தையர் பலரும் தம்முள் பேசிக் கொள்கின்றனர். இதனைக் கேள்வியுற்ற அவன் காதற்பரத்தை, அந்த அயற் பரத்தையரின் பாங்காயினார் கேட்குமாறு, தன் தோழிக்குச் சொல்வாள்போல அமைந்த செய்யுள் இது.)
அம்ம வாழி, தோழி, மகிழ்நன்
ஒண்டிதொடி முன்கை யாம்அழப் பிரிந்து, தன்
பெண்டிர் ஊர்இறை கொண்டனன்' என்ப.
கெண்டை பாய்தர அவிழ்ந்த
வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே.
தெளிவுரை: 'தோழி, வாழ்வாயாக! கெண்டை மீன் பாய்ந்தலினாலே கட்டவிழ்நுது மலர்ந்த, வண்டு விரும்பும் ஆம்பல் பூக்களையுடைய நாட்டினன் தலைவன். அவன், ஒள்ளிய தொடியணிந்த முன்கையினையுடைய யாம் அழும்படியாக, எம்மைப் பிரிந்து சென்று, தன் பெண்டாகிய மனையாளின் வீட்டிலேயே, அவளைப் பிரியாதேயே தங்கி இன்புற்றிருக்கின்றனன் என்பார்களே! அதுதான் என்னையோ!'
கருத்து: அவர் அவ்வாறு சொல்வது நடவாது; அவன் என்பால் மீண்டும் விரைவில் வருவான் என்பதாம்.
சொற்பொருள்: பெண்டிர் - மனைவியைக் குறித்தது; இற்பெண்டிர் என்பது வழக்கு. இறைகொள்ளல் - நிலையாகத் தங்கியிருத்தல். பாய்தர - பாய.
விளக்கம்: 'உலகியல்பற்றி' என்றது, தேவவழிபாடு, சமுதாய விழா நிகழ்ச்சிகள் போன்றவற்றை. இவற்றுள், தலைவன் கலவாதவழி ஊரும் உறவும் பழிக்கும் ஆதலின், அவன் தன் மனைவியோடு தன் வீட்டில் சென்று தங்கியிருப்பானாயினன் என்பதாம். இது இன்றைக்கும் சமுதாயத்தில் நிகழ்ந்துவரும் ஒரு மரபாகவே இருப்பதைக் காணலாம். அவ்வாறு தன் வீடு சென்றவன், தன் மனைவியின் பெருமையையும், தன் சிறுமையையும், அவளின்றித் தன் குடிப்பெருமை சிறவாமையையும் நினைந்தானாகி, அங்கேயே தங்கி, அவளைத் தெளிவித்து இன்புற்றிருந்தனன் என்பதும் பொருந்தும்.
உள்ளுறை: கெண்டை பாய்தற்கு ஆம்பல் மலரினும், அதுதான் வண்டினைப் பிணைந்து நிற்பதேயன்றிக் கெண்டையை அல்லவாதல் போல, உலகியல் பற்றி அவன் தன் மனை சென்றானாயினும், அவன் அன்பு எம்மிடத்தேயே என்றும் மாறாதபடி நிலவுவதாகும் என்பதாம்.
5. புலவிப் பத்து!
புலவி பொருளாக அமைந்த செய்யுட்கள் ஆதலால், 'புலவிப் பத்து' என்றனர். 'புலவி' - சிறு காலம்.
'துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று' என்று, திருக்குறள், புலவியை வேண்டுவதும் நினைக.
'புலவி' என்பது புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடாமற், காலம் கருதிக் கொண்டு பயப்பதோர் உள்ள நெகிழ்ச்சி' என்பர் பேராசிரியர்.
தலைமகள் கூறுவதும், அவள் பொருட்டாகத் தோழி கூறுவதுமாக இவை அமைந்துள்ளன.
41. பொன்போற் செய்யுள் ஊரன்!
துறை: கழறித் தெருட்டற் பாலராகிய அகம்புகல் மரபின் வாயில்கள் புகுந்துழி, தலைவனையும் பாணன் முதலிய பக்கத்தாரையும் இகழ்ந்து தலைவி கூறியது.
(து.வி: தலைவிக்கு அறிவுரை கூறித் தெளிவிக்கும் உரிமையுடையவராகிய வாயில்கள் வந்து, 'தலைவனின் செயலை மறந்து, அவன் மீண்டும் இல்லத்துக்கு வரும்போது அன்புடன் ஏற்றுக் கடமை பேணுமாறு' அவளுக்குச் சொல்லுகின்றனர். அப்போது, உள்ளத்துத் துயரவேகத்தைத் தாங்காதாளான தலைமகள், தலைவனையும், அவனது பரத்தமை ஒழுக்கத்துக்கு உதவியாக அமைந்த பாணன் முதலியோரையும் இகழ்ந்து சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
'தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு
வெண் பூம் பொய்கைத்து, அவன் ஊர்' என்ப; அதனால்
தன் சொல் உணர்ந்தோர் மேனி
பொன்போற் செய்யும் ஊர் கிழவோனே!
தெளிவுரை: தானீன்று பார்ப்பினையே தின்னும் கொடுங் குணமுடைய முதலையொடு, வெண்மையான பூக்களும் நிறைந்த பொய்மையினை உடையது தலைவனின் ஊர்' என்பார்கள். அதனாலே, தன் சொல் உணர்ந்து அன்பு செய்தாரின் மேனியைத் தன் பிரிவாலே பொன்போலும் பசப்பினை அடைவிக்கும் கொடுமையினை அவனும் செய்கின்றான்!
கருத்து: 'அவன் பேச்சை நம்பும் மடமையாள் அல்லேன்' என்று வாயில் மறுத்ததாம்.
சொற்பொருள்: அன்பில் - அன்பில்லாத, வெண்பூ - ஆம்பற்பூ. தன்சொல் உணர்ந்தோர் - அவன் சொல்லை (பிரியேன் என்ற சூளுரையை) உண்மையெனக் கொண்டு, அவனுக்குத் தம் காதலை உரிமையாக்கிய மகளிர். 'மேனி' - மேனியின் நிறத்தினை. 'பொன் போற் செய்தல்' - பிரிவுத் துயரால் மேனியிற் பொன்னிறப் பசலை பூக்கச் செய்தல்.
விளக்கம்: முதலை தன் பார்ப்பைத் தின்னும் கொடுமையது என்பது முன்னும் கூறப் பெற்றது (ஐங். 24). பொய்கைத்து - பொய்கையை உடையது; மருதத்திலே வற்றாத நீர்வளம் கொண்ட நீர் நிலையை இதனால் காட்டுகின்றனர்.
உள்ளுறை: தானீன்ற பார்ப்பைத் தின்னும் கொடுங் குணமுடைய முதலையினைக் கொண்ட பொய்கையூரன் ஆதலின், தானே விரும்பி மணந்து கொண்ட தன் அன்பு மனையாளையும் வருந்தி நலிவித்து நலன் அழியச் செய்யும் கொடியவன் ஆயினான் என்று குறித்ததாகக் கொள்க.
தன் பார்ப்புத் தின்னும் முதலையும், வெண்பூவும் ஒருங்கிருக்கும் பொய்கையுடைய ஊரன் என்றது, தன்னை விரும்பி வருவாரையே பொன்னும் நலனும் உறிஞ்சிக் கெடுக்கும் பரத்தையரையும், மனைநலம் பேணும் குலமகளிரையும் ஒருங்கே ஒப்பாகக் கருதுபவனும் அவன் என்பதாம்.
மேற்கோள்: 'போல' என்பது உருவுவமத்திற்கு உரிய சொல்லலாம் என இளம் பூரணனாரும் (தொல். உவம - 16); தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை என்பது இன்னும் தலைமகனது கொடுமைக்கு உவமையாயிற்று; வெண்பூம் பொய்கைத்து அவனூர் என்பது தலைமகள் பசப்பு நிறம் பற்றி உவமையாயிற்று என்றும் கூறுவர். தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை என்பது தோழி கூற்று; என்னை! அவற்றின் செய்கையெல்லாம் அறியாளன்றே, தலைமகள் பெரும் பேதையாதலின் என்றும், பேராசிரியர் விளக்குவர். இவ்வாறு தோழி கூற்றாகக் கொள்வதே நயமுடைத்து ஆகும்.
''தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு வெஏண்பூம் பொய்கைத்து அவனூர் என்ப'' என்றாற்போலத் தலைவன் கொடுமையும் தலைவி பேதைமையும் உடனுவமம் கொள்ள நிற்கும்'' என்பர் நச்சினார்க்கினியர். அவர் கருத்தும் தோழி கூற்று என்பது இதனால் காணப்படும் (தொல். பொ. 230 உரை). தலைவியான குலமகள் இத்தகைய உயிரியல்புகள் எல்லாம் கண்டறியும் அளவுக்கு வெளிப்போந்து செல்லும் மரபினள் ஆகாள் என்னும் உயர்நிலை கருதியே, இருபெரு உரையாசிரியர்களும் இவ்வாறு தோழி கூற்றாகக் கூறினர் எனலாம்.
42. சிறப்ப மயங்கினள் போலும்?
துறை: தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை, 'தலைவன் பிற பரத்தையருடன் ஒழுகினான்' என்று புலந்தாளாக, அதனை அறிந்த தலைவி, அவன் தன் இல்லத்துப் புகுந்துழி, தான் அறிந்தமை தோன்றச் சொல்லியது.
(து.வி: பரத்தையுறவிலேயே களித்திருஃதானாகிய தலைவன், ஒருநாள் தலைவியின் நினைவு மேல் எழுந்ததாக, தன் வீட்டிற்கும் வருகின்றான். அவளிடம், 'தன்னைப் பரத்தையர் உறவுடையவனாக நினைப்பதே தவறு எனவும், வேறு வேறு செயல் நிமித்தமாகவே தன் வருகை இடையீடு படலாயிற்று' எனவும் பலப்பல பொய்கூறி அவளைத் தெளிவித்து, அவளுடன் மகிழ முயல்கின்றான். அப்போது அவள், அவனைக் குறித்துத் தான் கேட்டறிந்த நம்பும்படியான செய்தியொன்றைக் கூறி, அவனுக்கு இசைய மறுப்பதாக அமைந்த செய்யுள் இது.)
மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ
யாணர் ஊர! - நின் மாண்இழை அரிவை?
காவிரி மலிர்நிறை அன்னநின்
மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே!
தெளிவுரை: ''புது வருவாயினை உடைய ஊரனே! நினக்கு உரியவளும், மாண்பமைந்த அணிகள் பூண்டோளுமான அரிவையானவள், காவிரிப் பேராற்றின் நீர்ப் பெருக்குப்போல விளங்கும் நின் மார்பினை மிகுதியாக விலக்கத் தொடங்கினாளே! அவள் க்கஃளுண்டதன் களிப்பானது மென்மேலும் பெருகியதனாலே அப்படி மயக்கங் கொண்டனள் போலும்?''
கருத்து: அவள் குடிமயக்கால் நின்னை விலக்கியிருப்பாள், தெளிந்ததும் நின்னைத் தேடுவாள் என்பதாம்.
சொற்பொருள்: மகிழ்மிக - மது மயக்கம் மிகுதியாக. யாணர் ஊர - புதுவருவாய் உடைய ஊரனே! மலிர்நிறை - புதுவெள்ளம்; 'செங்குணக்கு ஒழுகும் கலுழி மலிர்நிறை காவிரி' என்று பதிற்றுப்பத்தும் கூறும் (பதிற். 50). தொடங்கியோள் - தொடங்கினாள்.
விளக்கம்: 'யாணர் ஊர' என்றது, நின் ஊர் என்றும் புது வருவாயினைக் கொண்டதாதலேபோல, நீயும் என்றும் புதிதாகக் கொள்ளும் பரத்தமை உறவினை உடையை' என்று குறிப்பால் சொல்லிப் பழித்ததாம். 'மாண் இழை அரிவை' என்று பரத்தையைக் குறித்தது, அவை தலைவனின் கொடையால் அமைந்ததே என்று கூறற்கும், தான் அவையற்று விளங்கும் எளிமையினைக் காட்டற்கும் ஆம். 'மலிர்நிறையன்ன மார்பு' என்றது, புதுவெள்ளம்போலப் பரத்தையர் பலரும் விரும்பிக் கலந்து ஆடிக் களித்து இன்புறுதற்குரியதாக நிலை பெற்ற மார்பு என்பதாம். விலக்கல் - தடுத்து ஒதுக்கல்.
''நீ பிறளான பரத்தையைக் கூடியதறிந்தே நின்னை விலக்குபவள், நீ இங்கு வந்தமையும் அறிந்தால் இன்னும் சினவாளோ? ஆதலின், நீதான் அவளிடத்தேயே மீளச் செல்வாயாக'' என்று மறுத்ததாகக் கொள்க.
மேற்கோள்: ஆசிரியர் நச்சினார்க்கினியார், இதனைத் தோழி சொல்வதாகக் கொண்டு உரைப்பர் (தொல். பொருள். 240). ''காவிரிப் பெருக்குப் போலத் தலைவியை நோக்கி வருகின்ற மார்பினைத் தான் விலக்குமாறு என்னை?'' எனத் தலைவியை உயர்த்துக் கூறித், தலைவனை ஏற்றுக் கொள்ள வேண்டுகின்றாள் தோழி'' என்று அப்போது கொள்க.
43. நின்னும் பொய்யன் நின் பாணன்!
துறை: பாணன் வாயிலாகப் புகுந்து தெளிப்ப, மறுத்த தலைமகள், பாணனோடு தலைவன் புகுந்து தெளித்துழிச் சொல்லியது.
(து.வி: தலைவனுக்காகப் பரிந்து பன்முறை இரந்து வேண்டிய பாணனிடம், தான் இசையாமையே சொல்லிப் போக்கினாள் தலைமகள். ஒருநாள், அப் பாணனோடு தலைவனும் சேர்ந்துவந்து, பலப்பல கூறித், தலைமகளின் புலவியைத் தணிவிக்க முயல்கின்றனன். அப்போது, தலைவி, தலைவனை நோக்கிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அம்பணத் தன்ன யாமை ஏறிச்
செம்பின் அன்ன பார்ப்புப்பல துஞ்சும்
யாணர் ஊர! நின்னினும்
பாணன் பொய்யன்; பல சூளினனே!
தெளிவுரை: 'மரக்காலைப் போலத் தோன்றும் தாய் ஆமையின் முதுகின் மீது, சிறு செம்பினைப் போன்றவான அதன் பார்ப்புகள் பலவும் ஏறிக்கிடந்தபடி உறங்கியிருக்கும், புது வருவாயினை உடைய ஊரனே! நின்னைக் காட்டினும், நின் ஏவலோடு வந்தானான நின் பாணன் பொய்யன்; பல பொய்ச் சூளினன்!'
கருத்து: பொய் கூறலிலும், உரைத்தலிலும், நின்னினும் நின் பாணனே வல்லவன் என்பதாம்.
சொற்பொருள்: அம்பணம் - மரக்கால்; தரகர் அளக்கும் மரக்கால் என்பர் அடியார்க்கு நல்லார் (சிலம்பு 14, 209-10). செம்பு - சிறு செப்புப் பாத்திரம், ஆமைப் பார்ப்பிற்கு உவமை; செம்புசொரி பானையின் மின்னி' என்பது நற்றிணை (நற். 153) சூள் - தெய்வம் சார்த்திக் கூறும் உறுதிமொழி.
விளக்கம்: 'பாணன் தலைவனின் உயர்வே கூறித் தலைவியை இரந்து நின்று சூளுரைப்பான்' என்பதால், தலைவனைக் காட்டிலும் அவன் சொற்களில் பொய்ம்மை மிகுதியாகவும், பொய்ச்சூள் பலவாகவும் விளங்கித் தோன்றிம் என்க. தலைவன் தலைவியின் இசைவு பெறுதற்குத் தாழ்ந்தும், குறையேற்றுப் பொறுத்தருளவும் வேண்டலும் கூடும். இவை பாணற்கு மரபன்று என்க.
உள்ளுறை: 'ஆமைப் பார்ப்புகள் அவற்றின் தாய் முதுகின்மேற் கிடந்து உறங்கும் வளமிகுந்த ஊரன்' என்றது, அவ்வாறே அவன் புதல்வனும் தன் தாயின் மார்பிற்கிடந்து உறங்குதலை அறிந்துவைத்தும், குலநலமும், இல்லறக் கடனும், மனைவிக்கு மகிழ்வளித்தலும் மறந்து, தன் காமவின்பமே போற்றிப் பரத்தையர்பால் மயங்கிக் கிடப்பானாயினான் தலைவன் என்றதாம்.
44. அறிந்தனையாய் நடப்பாயாக!
துறை: பரத்தையரின் மனைக்கண்ணே பன்னாள் தங்கித் தன் மனைக்கண்ணே வந்த தலைமகற்குத் தோழி கூறியது.
(து.வி: பரத்தையரின் வீடே கதியாகப் பலநாள் தங்கியிருந்த தலைவன், அதுவும் வெறுத்ததாகத் தன் மனைக்கு ஆவலோடு வருகின்றான். அவன் செயலைக் குறித்துப் பழித்து, அவன் வரவை மறுக்கும் தோழி, அவனிடம் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு
அதுவே ஐய, நின் மார்பே;
அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே.
தெளிவுரை: ஐயனே! இனிய நீரையுடைய பெரிய பொய்கையினிடத்தேயுள்ள ஆமையின் இளம் பார்ப்பானது, தன் தாயின் முகத்தை நோக்கியே வளர்வதுபோல, நின் மார்பை நோக்கியே வாழ்பவள் தலைவி. அதனை அறிந்தாயாய் நடந்து கொள்வாயாக! நினக்குரிய அறமும் அதுவேயாகும்!
கருத்து: நீதான் அறத்தையும் மறந்தாய்; அன்பினையும் துறந்தாய் என்பதாம்.
சொற்பொருள்: தீம் பெரும் பொய்கை - இனிய நீருடைய பெரிய பொய்கை. தாய்முகம் நோக்கி - தாயின் முகத்தைப் பார்த்துப் பார்த்து. 'மார்' ; அசைநிலை.
விளக்கம்: இனிதான பெருமையுடைய குடும்பத்தினளான நின் மனைவி நின் மார்பினை நோக்கி நோக்கி மகிழும் அந்த மகிழ்வாலேயே உயர்வாழ்பவள் என்கின்றனள். அதனை அவளுக்கு மறுத்த நின் செயல் மடமையானது, அறத்தொடும் பொருந்தாதது என்றும் கூறுகின்றனள். அதனால் தலைவி நலிய நின் இல்லற மாண்பும் வளங்குன்றும் என்றனளுமாம்.
45. பசப்பு அணிந்த கண்!
துறை: நெடுநாள் பரத்தையர் இடத்தனாய் ஒழுகிய தலைமகள், மனைவியின் சென்றுழித், தோழி சொல்லியது.
(து.வி: நெடுநாள் பரத்தையர்பால் மயங்கிக் கிடந்து வீட்டை மறந்திருந்த தலைவன், அவள் ஒதுக்கியதும், தன் வீட்டிற்கு வர, அவனுக்குத் தோழி சொல்லியது இதுவாகும். அவன் பொருந்தாச் செயலை எள்ளிக்கூறும் நயம் கொண்டதும் இச்செய்யுள் ஆகும்.)
கூதிர் ஆயின் தண்கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணிநிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று, நின் ஊரே;
பசப்பு அணிந்தனவால் - மகிழ்ந! - என் கண்ணே.
தெளிவுரை: தலைவனே! கூதிர்க் காலத்திலே தண்மையோடு கலங்கிய நீராய் விளங்கியும், வேனிற்காலத்திலே நீலமணியின் நிறத்தினைக் கொண்டும் விளங்கும் ஊற்றினாலே நின் ஊரானது அழகு பெற்றது. என் கண்களோ, எஞ்ஞான்றும் நீ இழைத்த கொடுமையால் பசலைநோயே பெற்றன!
கருத்து: கண்ணொளி கெட்டுக் கலங்கியவ ளாயினேன் என்பதாம்.
சொற்பொருள்: கூதிர் - ஐப்பசி கார்த்திகை மாதங்கள். வேனில் வைகாசி ஆனி மாதங்கள். முன்னது மழைக்கலாம்; பின்னது கோடைக் காலம். மழைக்காலப் புதுவரால் நீர் கலங்கலாகத் தோன்றும்; வேனிலிற் புதுவரவற்றமையால் தெளிந்து நீலமணி போலத் தோன்றும். அந்த ஆறால் அழகு பெற்றது நின் ஊர் என்பாள், 'ஆறு அணிந்தன்று' என்றனள்.
விளக்கம்: கூடலும் பிரிதலும் என்று இல்லாமல், என்றும் பிரிதலே நின் செயலாதலால், இவள் கண்கள் பசலை நோய் உற்றுத் தம் அழகு கெட்டன. நின் ஊர் ஆற்றுக்குக் கலங்களும் தெளிதலும் காலத்தான். உண்டு; எனக்கு எப்போதும் கலக்கமே என்பதாம். இதனைத் தலைவி கூற்றாகவும் கொள்ளலாம்.
46. எமக்கும் இனிதே!
துறை: மனைக்கண் வருதல் பரத்தை விலக்க விலங்கி, பின்பு, உலகியல் பற்றி அவள் குறிப்பினோடும் வந்தமை அறிந்த தோழி, தலைமகளைப் புலந்து சொல்லியது.
(து.வி: மனைநோக்கி வர நினைந்தாலும், பரத்தை அதனைத் தடுத்துக் கூறுதலாலே வராது நின்றான் தலைவன். அவன், பின்பொருநாள், உலகியல் பற்றி அவன் (பரத்தை) நினைவோடும் வீடு வந்தனன்; அப்போது அவனைச் சினந்து தோழி சொல்லியதாக அமைந்தது இது.)
நினக்கே அன்றுஃது எமக்குமார் இனிதே -
நின் மார்பு நயந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை யாகி
ஈண்டு நீ யருளாது ஆண்டுறை தல்லே.
தெளிவுரை: நின் மார்பினைத் தழுவியின் புறுதலை விரும்பியவளான, நல்ல நெற்றியையுடையவளுமான அரிவையானவள் விரும்பிய குறிப்பின்படியே நீயும் நடப்பவனாகி, இவ்விடத்திற்கு எம்மிடத்தேயும் வந்தருளுதலைக் கைவிட்டு, அவள் வீடான அங்கேயே நீ நிலையாகத் தங்கிவுடுதல் நினக்கு மட்டும் இனிதாவதன்று; அதுவே எமக்கும் இனிதாவதாகும் என்பதாம்.
கருத்து: பரத்தை குறிப்பிற்கேற்ப நடந்து கொண்டு, அவள் நினைவாகவே மயங்கியிருக்கும் நீ, இங்கு இடையிடையே வராதிருத்தலே எமக்கு இனிது என்பதாம்.
சொற்பொருள்: நயந்த - விரும்பிய. அரிவை - பரத்தையைக் குறிக்கும். நன்னுதல் என்றது, அவள் இளமையெழில் சுட்டுதற்கு; எள்ளற் சுட்டாகவே கொள்க. 'ஆண்டு' என்றது அவள் வீடாகிய அவ்விடத்தேயே என்றற்கு.
விளக்கம்: தொல்காப்பிய உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டுமாறு போலத் தலைவி சொன்னதாகவே பொருள் கொள்ளலும் பொருந்தும். 'எமக்குமார் இனிது' என்றது? எமக்குப் பிரவுத் துயரம் பகழிப் போனது; அதனால், யார் வருந்துதல் இலம்; ஆனால், இங்கு நீதான் வந்து போவதற்கு, அவள் வருந்தி நின்னை விலக்கின், நீதான் அதனைப் பொறுக்க மாட்டாய்; அதனுடன் அவள் நுதலழகும் கெடும் என்பதாம்.
மேற்கோள்: ''பிறள் மாட்டுத் தங்கிய ஒழுக்கத்துக் கிழவனைத் தாழ்ந்து, 'எங்கையர்க்கு உரை' என வேண்டிக் கோடற் கண்ணும் தலைவிக்கும் கூற்று நிகழும்'' என, இளம் பூரணனார் காட்டுவர் (தொல். கற்பு. 6).
''பரத்தையர் மாட்டு ஒழுகிக் கொடுமை செய்த தலைவன், தலைவி அடிமேல் வீழ்ந்து வணங்குழி, 'எங்கையர் காணின் இது நன்றெனக் கொள்ளார்' எனக் குறிப்பால் இகழ்ந்து கூறிக் காதலமைந்து மாறிய மாறுபட்டின்கண், தலைவிக்குக் கூற்று நிகழும் என்று நச்சினார்க்கினியர் காட்டுவர் (தொல். கற்பு. 6)''
47. நின் பொய் ஆயம் அறியும்!
துறை: பாணற்கு வாயில் மறுத்த தலைமகள், பின், அப்பாணனோடு தலைமகன் புகுந்து, தன் காதன்மை கூறியவழிச் சொல்லியது.
(து.வி: பரத்தைமை விருப்பினாலே தலைவியைப் பிரிந்திருந்தான் தலைவன். அவன், மீண்டும் தலைவி பாற் செல்வதற்கு விரும்புகின்றான். செய்த குற்றம் தலைவி மறுப்பாளென்ற அச்சத்தையும் கூடவே எழுப்புகின்றது. ஆகவே, தலைவியைத் தன் சினம் விட்டுத் தன்னை ஏற்குமாறு செய்துவரத் தன் பாணனை அவளிடம் தூது அனுப்புகின்றான். அவனை மறுத்துப் போக்கிய தலைமகள், பின்னர் அப்பாணனோடு தலைவனும் வந்து நின்று, தலைவிபால் தன் அன்புடைமை பற்றிப் பலபடியாகக் கூறத், தன் மனம் வெதும்பிச் சொல்லியதாக அமைந்தது இது.)
முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்
அரிகாற் பெரும்பயறு நிறைக்கும் ஊர!
மாணிழை யாயம் அறியும் - நின்
பாணன் போலப் பலபொய்த் தல்லே!
தெளிவுரை: முள்ளின் முனைபோலும் கூர்மையான பற்களையுடையவள் பாண்மகள். அவள் இனிய கெடிற்று மீனைக் கொணர்ந்து சொரிந்த அகன்ற பெரிய வட்டி நிறையுமாறு, மனையோளானவள், அரிகாலிடத்தே விதைத்துப் பெற்ற பெரும் பயற்றை இட்டுக் கொடுத்து அனுப்புவாள். அப்படித் தந்து அனுப்புகின்ற தன்மையுடைய மகளிரையுடைய ஊரனே! நின் பாணனே போல நீயும் பலப்படப் பொய்யே கூறுதலைச், சிறந்த இழையணிந்த பேச்சை மெய்யாகக் கொள்வேன்? நின்னையும் உவந்து ஏற்பேன்?
கருத்து: நின் பரத்தைமைதான் ஊரறிந்த செய்தியாயிற்றே என்பதாம்.
சொற்பொருள்: முள்ளெயிற்றுப் பாண்மகள் - முள்ளைப் போலக் கூர்மையான பற்களையுடையவளான பாண்மகள்; கெடிறு - ஒருவகை மீன்; 'கெளிறு' என்பார்கள் இந்நாளில், வட்டி - கடகப் பெட்டி. சொரிதல் - கொணர்ந்து கொட்டுதல். அரிகாற் பெரும்பயறு - நெல் அரிந்த தாளடியிலே வித்திப் பெற்ற பெரும்பயறு. ஆயம் - பாங்கியர். பாணன் - பாண்மகன்; தலைவனின் ஏவலை ஏற்றுச் செய்வோன்; அவன் பரத்தமைக்கு உதவியாகவும் நின்று செயற்படுவோன்.
விளக்கம்: 'முள்ளெயிற்றுப் பாண்மகள்' என்றது, அவள் சின்னஞ்சிறுமி என்பது தோன்றச் சொல்லியதாம். அவள், 'அகன்பெரு வட்டி நிறையக் கெளிறு கொணர்ந்து சொரிந்து, அதற்கு ஈடாகப் பெரும்பயிறு அதே வட்டி நிறையக் கொண்டு செல்வள்' என்றது, அவ்வூரவரின் பெருவளம் நிரம்பியதும், கொடைப் பண்பு சிறந்ததுமான மனைப்பாங்கை உணர்த்துவதாம். பெரும்பயிறு - பயறுவகையுள் ஒன்று; இன்றும் அரிகாலில் உளுந்து, பயறு, எள்ளு, கொள்ளு முதலியன விதைப்பது வழக்கம். அவை தாமே முளைத்துக் காய்த்துப் பயன் தந்து விடுதல் மனையாளின் பெருமித மனத்தையும் உணர்த்தும். மாணிழை - சிறந்த அணிவகைகள்.
உள்ளுறை: ''மீன் சொரிந்த வட்டி நிறையுமாறு பெரும்பயறு பெய்தனுப்பும் மனையோள் நிரம்பிய ஊராதலின், எமக்கு நீதான் சிறுமையே செய்தனையேனும், எம் பெருந்தகவால் நின்னை மீண்டும் ஏற்கும் நெகிழ்ந்த அன்பு மனத்தினர் யாமும் ஆவோம்'' எனக் குறிப்பால் தன் இசைவு புலப்படுத்தியதும் ஆம்.
'கெடிறு சொரிந்த வட்டி நிறைய மனையோள் பெரும் பயறு நிறைக்கும் ஊர' என்றது, நீ நின் காதல் சொல்லிப் பொருளொடு பாணனை விடுத்திட, அவரும் அதனையேற்று, அதற்கீடாகத் தம் சிறந்த காதலைச் சொல்லி வரவிடப் பெறுவாய்' என, அவன் பரத்தைமை ஒழுக்கத்தைச் சுட்டியதும் ஆம்.
குறிப்பு: 'மாணிழை' தலைவியைக் குறிக்கும் எனக் கொண்டனமானால், இதனைத் தோழி வாயின் மறுத்துக் கூறியதாகவே கொள்ளலாம்.
48. நின் வரவினை வேண்டேம்!
துறை: பரத்தையர் மாட்டு ஒழுகா நின்று, தன் மனைக்கண் சென்று தலைமகற்குத், தலைமகள் சொல்லியது.
(து.வி: பரத்தையரின் உறவிலேயே சிலகாலம் மயங்கிக் கிடந்த தலைவன், ஒருநாள் தன் மனையிடத்தேயும் செல்ல, அப்போது அவனுக்குத் தலைமகள் புலந்து கூறுகின்ற பாங்கில் அமைந்த செய்யுள் இது.)
வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல் சொரிந்த வட்டியுள், மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர!
வேண்டேம் பெரும! - நின் பரத்தை
ஆண்டுச்செய் குறியொடு ஈண்டு நீ வரலே.
தெளிவுரை: விலைவாசி மீன்பிடிக்கின்ற தொழிலிலே வல்லவனான பாண்மகனின், வெண்மையான பற்களையுடைய இளையமகள், வரால் மீனைக் கொணர்ந்து சொரிந்த வட்டியினுள்ளே, வீட்டுத் தலைவியானவள், ஆண்டு கழிந்த பழைய வெண்ணெல்லை நிறைத்து விடுக்கும் ஊருக்கு உரியோனே! நின் பரத்தையானவள் அவ்விடத்தே செய்த புணர்குறிகளோடே நீதான் இவ்விடத்துக்கு வருதலை, யாம் வேண்டுவோம் அல்லேம்!
கருத்து: 'அவளிடமே நீ மீண்டும் செல்வாயாக' என்பதாம்.
சொற்பொருள்: வலைவல் - வலைவீசிச் செய்யும் மீன்பிடி தொழிலிலே வல்லவனான; பாண்மகன் - பாணன். இதனால் நெய்தல் நிலத்துப் பரதவரேபோல, மருதநிலத்து நீர்நிலைகளிலே மீன்பிடித்து விற்கும் தொழிலினர் பாணர் குடியினர் என்பதும் காணப்படும். யாண்டுகழி வெண்ணெல் - அறுவடை செய்து ஓராண்டு கழிந்த பழைய வெண்ணெல்; ஆண்டு கழிந்த நெல்லையே பயன்படுத்துதல் இன்றும் பெருங்குடி வேளாளர் மரபு. அதனை வாரி வழங்கினள் எனவே, அவர்தம் மனையின் பெருகிய நெல்வளம் விளங்கும்.
விளக்கம்: 'வரால் சொரிந்த வட்டியுள் யாண்டுகழி நெல் பெற்று வரும் பாண்மகளிர்போல, நீ தரும் பொருளுக்கு எதிராகப் பரத்தையரின் தோள்முயக்கினை நின் பாணன் நினக்குப் பெற்றுத் தருவான்' என்பதாம். 'என்ன குறை செய்யுனும், யாம் நின்னை விழைந்து நெகிழ்கின்ற நெஞ்சத்தேம்' என்பது ஒருவாற்றான் உண்மையாயினும், நீதான் நின் பரத்தை அவ்விடத்தே செய்த புணர்குறியோடு இங்கு வந்தமையால், நின்னை ஏற்க விரும்பேம் என்பதுமாம். அவர் உறவினை நீ முற்றக் கைவிட்டுப் பின்னர் மனையிலேயே தங்குவோனாக எம்பால் வருவாயாயின், யாம் நின்னை உவந்து ஏற்பேம் எனக் குறிப்பாகக் காட்டிக் கூறியதாகவும் கொள்க.
49. யார் நலன் சிதையப் பொய்க்குமோ?
துறை: பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினான் என்பது கேட்ட தலைமகள், தனக்கும் பாணனால் காதன்மை கூறுவிப்பான் புக்க தலைமகற்குச் சொல்லியது.
(து.வி: 'பாணனின் வழியாகவே தலைமகன் ஒரு பரத்தையோடு உறவு பெற்று, அவளைக் கூடியிருப்பானு மாயினான்' என்று தன் தோழியர் வந்து சொல்லக் கேட்டாள் தலைமகள். தனக்கும், அவ்வாறே தன் காதல் உடைமையைச் சொல்வதற்கு, அதே பாணனைத் துணையாகக் கொண்டு வந்த தலைமகனுக்கு, உளம் நொந்து அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம்
யாணர் ஊர! நின் பாண்மகன்
யார்நலம் சிதையப் பொய்க்குமோ, இனியே?
தெளிவுரை: அழகிய சிலவாகிய கூந்தலையும், தலைச் சுமையின் பாரத்தாலே அசைந்ததசைந்து நடக்கும் நடையையும் கொண்டவளான பாண்மகள், சிலவான மீன்களைச் சொரிந்து பலவான நெல்லைப் பெற்றுச் செல்லும் வளமிகுந்த புது வருவாய் நிரம்பிய ஊரனே! நின் பாண்மகன், இனி யார்யார் நலமெல்லாம் சிதைந்து போகுமாறு பொய்யுரைத்துத் திரிவானோ?
கருத்து: 'அவன் இன்னும் தன் பொய்யால் யாரைக் கெடுப்பானோ?' என்பதாம்.
சொற்பொருள்: அஞ்சில் ஓது - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய. அசைநடை - அசைந்து அசைந்து நடக்கும் ஒருவகைத் தளர்நடை நலம் - பெண்மை நலம்.
விளக்கம்: 'சின்மீன் சொரிந்து பன்னெற் பெறும் பாண்மகள்' போல, நின் பாணனும் பொய்யாகச் சில சொற்களை நயமாகக் கூறி, எம் இசைவைப் பெறுதலிலே, எம் அத்தகுவண்மை, அதாவது சின்மீனுக்கு எதிராகப் பன்னெல் வழங்கும் பேருள்ளம் கருதிய நம்பிக்கையாளன் போலும்' என்று எள்ளினரும் ஆம். 'இனி யார்நலம் பொய்க்குமோ?' என்றது, இவனியல்பு ஊரே முற்றவும் அறிந்தது ஆதலின், இனி இவன் பேச்சைப் பரத்தையர் சேரியுள்ளேயும் எவரும் வாய்மையாக ஏற்று நம்பார்கள் என்பதாம்.
உள்ளுறை: 'சின்மீன் சொரிந்து பன்னெற் பெறூஉம் பாண்மகளே போல, நின் பாணனும் தன் சிறுமைமிக்க பொய்ச் சொற்களைச் சொரிந்து, இன்னும் பல பரத்தையரின் உறவினை நினக்குத் தேடிக் கூட்டுவான்' என்று குறிப்பாகத் தலைவன் செயலைப் பழித்ததாம். சின்மீனுக்கு நிகராகப் பன்னெற் கொண்டேகும் பாண்மகளே போல, நீயும் சிலசொல் பொய்யாகக் கூறிப், பெண்டிரின் நலத்தை அதற்கீடாகப் பெறமுயல்வாய் என்றதும் ஆம்.
50. தஞ்சம் அருளாய் நீயே!
துறை: மலையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பன்னாள் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.
(து.வி: தன் மனையாளைப் பிரிந்து, பல நாட்களாகப் பரத்தையின் வீட்டிலேயே தங்கியிருந்தவன், மீண்டும் தன் மனையாளை நாடியவனாகத் தன் வீட்டிற்கும் வருகின்றான். அவனுக்குத் தோழி மறுத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் -
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர!
தஞ்சம் அருளாய் நீயே; நின்
நெஞ்சம் பெற்ற இவளுமா ரமுமே!
தெளிவுரை: வஞ்சி மரங்கள் மிகவும் உயரமாக வளர்ந்திருக்கும் புதுவருவாயினைக் கொண்ட ஊரனே! நின்னையே தன் நெஞ்சத்திலே கொண்டு வாழ்பவளான தலைவியும், நின் அன்பின்மைச் செயலாலே இப்போது மிகுதியாக அழுவாளாயினாள். ஆதலினாலே, அவள் படும் துயர் மிகுதி கண்டு மனமிடிந்த யாங்களும், இல்லறக் கடனாற்றுதலின் பொருட்டாக நின் துணையோராகிய நின்பால் அன்பு கொண்ட பிறரும், பயன் பெறுதலின்றி வருந்தா நிற்கின்றேமே!
கருத்து: நின் அன்பை இழந்தாளான இவள் வருந்தி மெலிந்து அழுதவாறே இருப்பாளாயினள்; நின் நெருக்கம் இழந்த துணைவரும் இவளுக்கு நீ செய்த கொடுமை கண்டு வாடுவாராயினர்; நின் பெருஞ்செல்வமும் இவள் மனவூக்கமிழந்ததாலே, யார்க்கும் பயன்படுதலின்றிப் பாழே கிடக்கின்றது; நின் பெருமையிலே இவள் வாழ்வு சிறக்குமென்று கருதி, நினக்கு இவளைக் கூட்டி வைத்தலிலே ஆரம்ப முதல் உதவி செய்த யாமும் வருந்துகிறோம். ஆகவே, எமக்குத் தஞ்சம் அருள்வதற்கு இரக்கமுற்று முற்படுவாயாக என்பதாம்.
சொற்பொருள்: துணையோர் - ஆயத்தார்; இவர் தலைவிக்குப் பலவகையானும் ஏவற் கடமைகளைச் செய்து, அவளது மனைவாழ்வின் செம்மைக்குத் துணையாக அமைந்து விளங்குவோர். யாமும் - தோழியராகிய யாமும்; இவர் தலைவியோடு நெருங்கிப் பழகி உயிர்குகியிரான அன்பு பூண்டிருப்பவர். செல்வம் - மனையிடத்துள்ள பலவான பொன்னும் பொருளும் ஆகும் வளமை. வஞ்சி = ஒருவகை மரம்; மருதத்திற்கு உரியது. துணையோர் - தலைவனுக்குத் துணையாகி அமைந்தும், அவன் துணை பெற்றும், பொருள் செய்து கொள்ளும் செய்வினைக் கூட்டுறவுப் பான்மையோர் என்பதும் ஆம். அவன் அக்கடமையும் மறந்து பரத்தனாகவே மயங்கித் திரிதலால், அவர் ஈட்டும் செல்வநலமும் குன்றலாக, அவரும் அதனாலே நொந்து வருந்துவராயினர் என்பதாம்.
விளக்கம்: 'வஞ்சி ஓங்கிய யாணர் ஊர' என்றது, வஞ்சி மரங்கள் உயரமாக வளர்ந்திருக்கும் புது வருவாய் மிக்க ஊரன் என்பதுடன், 'வஞ்சி, கொடியுமாதலால்' எமன் கொடி போலும் 'வஞ்சியரின் புகழாலே சிறப்புற்றிருக்கும் இல் வளமுடைய ஊரன்' எனவும் பொருள்தந்து, தலைவனின் அறத்திற்கு மாறான புறவொழுக்கத்தைப் பழித்தலும் ஆகும். நின் நெஞ்சம் தனதாகவே முன்பெற்றிருந்த இவளும் அதனைத் தானிழந்தாளாகி மிகுதியாக அழிவாயினள்; ஆதலின் நீதான் இவட்குத் தஞ்சமாக அமைந்து அதனை மீளவும் தந்து அருள்வாயாக' என்று வேண்டியதாகவும் கொள்ளப்படும்.
6. தோழி கூற்றுப் பத்து
தோழி செல்லும் சொற்களேயாக அமைந்த செய்யுட்கள் பத்துக் கொண்ட பகுதியாதலால், இது 'தோழி கூற்றுப் பத்து' என்றாயிற்று.
தோழியாவாள் தலைவியோடு கூடவே வளர்ந்தவள்; செவிலித்தாயின் மகளுமாவாள் எனவும், அன்பும் அறிவாற்றலும் உலகியல் தெளிவும் உள்ளத் துணிவும் பெற்றவள் எனவும், எப்போதும் தலைவியின் நலமே தன் கருத்தாக, அவட்கு எவ்வாற்றானும் உதவி நிற்றலே தன் கடனாகப் பேணி வாழ்பவள் எனவும் அறிவோம்.
ஆகவே, தலைவியினுங் காட்டில், தோழியின் பேச்சு சற்றே அழுத்தமும், உறுதியும், தெளிவும் அமைந்து, நன்மையே உள்நோக்காக விளங்கி நயமுடன் வெளிப்படும் எனலாம். இந்தச் செறிவையும் செம்மையையும் இச் செய்யுட்களிலே நாமும் காணலாம். பேச்சிலே நயத்தை இழைத்துச் சொல்லும் பெண்மைத் திறத்தினையும் இவற்றுள்ளே காணலாம்.
51. புளிங்காய் வேட்கைத்து!
துறை: வாயில் பெற்றுப் புகுந்துபோய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது.
(து.வி: பரத்தமையாலே பிரிந்திருந்தவன், அதனைக் கைவிட்டுத் தன்வீடு மீண்டு, தலைவியின் ஊடல் தீர்த்துச் சிலகாலம் அவளோடும் கூடி மகிழ்வித்து இன்புற்றிருந்தனன். மீண்டும் அவன் அவளைப் பிரிந்து பரத்தையரை நாடிப் போகத், தலைவியின் உள்ளத்திலே மேண்டிம் துயரம் மிகுந்தது; சில நாட்கள் சென்ற பின்னே அவன் மீளவும் வீடு திரும்ப, அவள் அவனோடு புலவியுற்று ஊடி, அவனை அறவே ஒதுக்கி நின்றாள். அவன் மீண்டும் பணிமொழி பலகூறி வாயில் வேண்டத், தோழி வாயில் மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர!
புளிங்காய் வேட்கைத் தன்று, நின்
மலர்ந்த மார்பு - இவள் வயாஅ நோய்க்கே.
தெளிவுரை: நீரிலே வாழும் நீர்க் கோழியின் நீலநிறச் சேவலை, கூரிய நகங்களையுடைய அதன் பேடையானது, தன் வேட்கைமிகுதியாலே நினைந்திருக்கும் ஊரனே! இவளது வயாஅ நோய்க்கு, நின் மலர்ந்த மார்பானது, 'புளியங்காயின் வேட்கை போல' இராநின்றது.
கருத்து: இவள் நின்பால் எப்போதும் பெருங்காதலை உடையவளாவாள் என்பதாம்.
சொற்பொருள்: நீருறை கோழி - நீர்க்கோழி; இதனைச் சம்பங்கோழி என்றும் கூறுவர். வயாஅ - கருப்பமுற்றார் கொள்ளும் வேட்கைப் பெருக்கம்; சாம்பரைத் தின்னபதும் புளியங்காய அல்லது புளி தின்பதும் போல்வது; இதனைப் பிறர் தடுத்தாலும் அவரறியா வேளைபார்த்து மீண்டும் உண்ணற்கு விழைவதே இவர் அடங்கா வேட்கையின் இயல்பு ஆகும். உகிர் - நகம். புளிங்காய் - புளியங்காய்.
விளக்கம்: 'பசும்புள் வேட்கைக் கடுஞ்சூல் மகளிர்' எனக் குறுந்தொகை (287) மகளிர் கொள்ளும் இவ் வேட்கையையும், 'வீழ்பிடிக்கு உற்ற கடுஞ்சூல் வயா' எனக் கலி (40) பிற உயிரினம் இவ் வேட்கைகொள்ளலையும் காட்டும். 'மலர்ந்த மார்பு' என்றது, விரிந்தகன்ற மார்பு என்றற்காம். மலர்ந்த மலர் பலருக்கும் மணத்தையளித்து இன்புறுத்துதலேபோலப் பலருக்கும் தழுவக் கொடுத்தலால் இனிமை தரும் மார்பு என்று உள்வைத்துக் கூறியதுமாம்.
உள்ளுறை: ''நீர்க் கோழிப் பேடையும் தான் தன் வயா நோயால் துன்புறும் ஊரன்'' என்றது, 'கருவுற்றிருக்கும் நின் மனைவியும் அவ்வாறு துயர்படுதலை உடையாள்; நீதான் அதனை அறியாத மடமையாளன் ஆயினை' என்று மனைவி கருவுற்றிருத்தலைக் கூறி, அவன் உடனிராது பரத்தமை பேணித் திரிதற்கு இடித்துரைத்ததுமாம்.
பிறர் தடுப்பவும் அடங்காது, வயாவுற்ற மகளிர் புளியங்காயையே தின்பதற்கு வேட்கை மிக்கவராய்த், துடிப்போடு விளங்குதல் போல, நின் போற்றா ஒழுக்கத்தால் நின்னை வெறுத்து ஒதுக்குமாறு எம்போல்வார் பலப்பல சொல்லியும், அவள்தான், என்றும் நின் மார்பையே நினைத்துச் சோரும் விருப்பினளாயினாள் என்று, அவளின் மாறாக்காதலின் கற்புச் செவ்வியை உணர்த்தியதும் ஆம்.
'புளிங்காய் வேட்கைத்து' என்றற்கு, அடையா விடத்தும், அதனைப் பற்றிய நினைவே நாவில் நூர்ஊறச் செய்து, அச்சுவை யுண்டாற்போலும் மயக்கம் விளைப்பது போல, நின் மார்பும், இவள் அடையாத இப்போதும், நினையநினைய இன்ப நினைவாலே இவளை வாட்டி மயக்குவதாயிற்று என்றதாகவும் கொள்க.
மேற்கோள்: 'புளிங்காய்' என, அம்முச்சாரியை பெறாது மெல்லெழுத்துப் பெற்று முடிந்தது'' எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல், உயிர்மயங்கு, 44.)
நீருறை கோழி நீலச்சேவலை, அதன் கூருகிர்ப் பேடை நினைந்து கடுஞ்சூலான் வந்த வயாத் தீர்தற் பயத்தவாகும். அதுபோல, நின் மார்பை நினைந்து தன் வயவுநோய் தீரும் இவளும் என்றவாறு. 'புளிங்காய் வேட்கைத்து' என்பது நின் மார்புதான் இவளை நயவாதாயினும், இவள் தானே நின் மார்பை நயந்து, பயன் பெற்றாற்போலச் சுவைகொண்டு, சிறுது வேட்கை தணிதற்பயத்தள் ஆகும். புளியங்காய் நினைய வாய்நீர் ஊறுமாபோல' என எடுத்துக்காட்டி, விளக்கமும் தருவர் பேராசிரியர் - (தொல், உவம. 25).
52. நின் தேர் எங்கே போகிறது?
துறை: வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது.
(து.வி: புலவியால் ஊடியிருந்த தலைவியின் மனத்தைத் தெளிவித்து, உறுதி பல கூறி, அவளுடன் மீண்டும் சேர்ந்திருந்தான் தலைவன். அவனுக்குத் தலைவியின் தோழி, அவனுடைய பழைய போற்றா ஒழுக்கத்தைக் குறித்துச் சொல்லி நகையாடுவாள் போல, அவன் வீடகன்று புறப்படும் போது சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்
செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண்
செவ்வாய்க் குறுமகள் இனைய;
எவ்வாய் முன்னின்று - மகிழ்ந! - நின் தேரே?
தெளிவுரை: மகிழ்நனே! வயலையின் சிவந்த கொடியின் பிணையலைத் தொடுத்தலாலே, தன் சிவந்த விரல்கள் மேலும் ஞிவப்புற்றவளும், செவ்வரிகளையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும், சிவந்த வாயினையும் உடையவளுமான இவ்விளமையோள், அழுதழுது வாடி வருந்துமாறு, நின் தேர்தான் எவ்விடத்து நோக்கிச் செல்லக் கருதியதோ?
கருத்து: 'வெளியே புறப்பட்டாயிற்றோ' என்றதாம்.
சொற்பொருள்: பிணையல் தைஇ - மாலை புனைந்து; பிணைத்துப் பிணைத்துக் கட்டும் மாலையினைப் 'பிணையல்' என்றனர். செவ்விரல் சிவந்த - இயல்பாகவே சிவப்பான விரல்கள் செம்பசலைக் கொடியின் சாறுபட்டு மேலும் சிவப்படைய; 'செவ்விரல் சிவப்பூர' எனக் கலித்தொகையும் இதனைக் கூறும் - (கலி. 76). இனைய - தொடர்ந்து வருந்த; தொடர்ந்து அழுகைப் புலப்பம் இது. குறுமகள் - இளையோள்; என்றது தலைவியை. எவ்வாய் - எவ்விடம். முன்னின்று - கருதியது. 'தேர் எவ்வாய் கருதியது?' என்றது, 'நீ எவ்விடம் போகக் கருதினை?' என்றதாம்.
விளக்கம்: வயலைக் கொடியை மாலையாகப் பிணைத்துக் கட்டி அணியும் மகளிரது பழைய வழக்கத்தை இச்செய்யுள் ஆகட்டும். 'செவ்விரல் சிவந்த' என்றது, மென்மையான அக்கொடியைப் பிணைக்கும் அம்மெல்லினைக்கே நோவுற்றுச் சிவந்த என்பதுமாம்; இது, தலைவியின் மென்மைச் செவ்வியை வியந்ததாம்; அதற்கே, கண்கலங்கி அழுத மென்மையள் என்பதும் உணர்த்தியதாம். 'சேயரி மழைக்கண்' இயல்பான அவள் கண்களின் எழிலார் தோற்றம்; அதுதான் இதுபோது செவ்விரல் சிவப்ப இனைதலால், நீதான் மீளப் பிரிந்தனையாயின் இனியும் கெட்டழியும் என்பதாம். செவ்வாய் - சிவந்த வாய்; செவ்வையான பேச்சன்றிப் பிற பேசுதலறியாத பண்புமிக்க வாயும் ஆம்; உளம் மறைத்து இன்சொல் பேசும் பரத்தையர் செவ்வாயினர் ஆகார் என்பது குறிப்பு. முன்னின்று - கருதியது; நினைவில் முன்னாகத் தோன்றுவது என்பது பொருளாக வந்த சொல். 'முன்னியது' என்பது மனுவுறுதியும் செய்கைத் துணிவும் காட்டவது.
அவன் தேரேறி வெளியே செல்வதைக் காண்பவள், அவன் பழைய ஒழுக்கத்தை நினைத்தாளாக, மீண்டும் அவன் மனம் அதிற் செல்லாவாறு தடுப்பாள், இவ்வாறு சொல்லுகின்றனள் என்றும் கொள்க.
53. துறை எவன் அணங்கும்?
துறை: தலைவி தன்னுடன் போய்ப் புனலாடிய வழி, 'இது பரத்தையருடன் ஆடிய துறை' என நினைந்து பிறந்த மெலிவை மறைத்தமையை உணர்ந்த தலைமகன், மனைவயின் புகுந்துழி, 'தெய்வங்கள் உறையும் துளைக் கண்ணே நாம் ஆடினவதனால் பிறந்தது கொல், நினக்கு இவ்வேறுபாடு?' என்று வினையினாற்கு, அவள் சொல்லியது.
(து.வி: தலைவனோடு சென்று புனலாடியபோது, அத்துறை, முன்பு பரத்தையோடு கூடிக்களித்தானாக அவன் ஆடியதென்ற நினைவு மேலெழத், தலைவி அந் நினைவாலே வாடி மெலிந்தாள். 'தெய்வங்கள் வாழும் துறை என்பதால் நீ அஞ்சினாயோ?' எனத் தலைவன், அவளிடம் அதுகுறித்துக் கேட்கிறான், அவள் நினைவை மாற்றுதல் கருதி. அப்போது தலைவி, அவனுக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
துறை எவன் அணங்கும், யாமுற்ற நோயே?
சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன ஊர! - நீயுற்ற சூளே!
தெளிவுரை: அணைய அழித்துக் கொண்டு வேகமாக வருகின்ற புதுப்புனலாது, கழனியிடத்தே வந்தும் பாய்ந்த தென்று கலங்கித், தாமரைப் பூக்கள் மலர்கின்ற, பழனங்களையுடைய ஊரனே! நீ என்பால் உரைத்தது போன்ற சூளுரையினையே நின் பரத்தைக்கும் உரைத்திருப்பாய் என்று நினைத்து, அது பொய்த்த நின்னைத் தெய்வம் வருத்துமோ எனக் கலங்கி, யான் கொண்டதே இந்த மனநோய். துறையிடத்துத் தெய்வம் என்னை எதன் பொருட்டு வருத்தி நோய் செய்யுமோ?
கருத்து: 'சூள்பொய்க்கும் நின்னைத் தெய்வம் வருத்தாதிருக்க வேண்டும்' என்றதாம்.
சொற்பொருள்: துறை - துறைத் தெய்வம்; நீர்த்துறைக் கண் தெய்வங்கள் உறையும் என்பது மக்களின் நம்பிக்கை. எவன் அணங்கும் - எவ்வாறு வருத்தும். சிறை - அணை. சூள் - சூள் உரையாகிய உறுதிச் சொற்கள். பழனம் - ஊர்ப் பொது நிலம்.
விளக்கம்: 'நீயுற்ற சூள்' என்றது, அவன் புதியளான பரத்தை ஒருத்தியை விரும்பித், தலைவிக்குச் சொல்லிய உறுதி மொழிகளை மறந்து, மாறாக நடக்க நினைப்பதைக் குறித்ததும் ஆகலாம். இதனால், 'முன்னிறுத்திச் சூளுரைத்த தெய்வம் நின்னை அணங்கும்' எனவும், அதுதான் 'நின் நலமே நினையும் எம்போல்வர்க்குக் கவலைதரும்' எனவும் குறிப்பாக உரைப்பாள், 'யார் உற்ற நோய்' என்கின்றாளும் ஆம்.
உள்ளுறை: சிறையழி புதுப்புனல் கழனித் தாமரைகளைக் கலக்கி மலர்வித்தலே போல, இல்லறக் கடமையாகிய ஒழுக்கத்தையும், நின் உறுதிமொழிகளையும், பெருகிய காமத்தாலே மீறிச் செல்லும் நின் பொருந்தாச் செலவால், பரத்தையர் பலரும் மகிழ்வார்கள்; யாம் துன்புறுவோம் என்று கூறியதாகவும் கொள்க. துறைத் தெய்வம் அவனை அணங்கல் குறித்துக் கவலையுற்று நோய்ப்படுவதும் கொள்ளப்படும்; அதுவே சான்றாக அமைந்திருந்த வதனால்.
54. அஞ்சுவல் அம்ம!
துறை: வாயில் வேண்டி வந்த தலைமகற்குத், தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது.
(து.வி: பரத்தையிற் பிரிந்த தலைவன் தன் வீட்டிற்கு மீண்டும் வருகின்றான். தன் குற்றவுணர்வின் அழுத்தத்தால், தலைமகளின் முன் செல்லற்கே அஞ்சியவனாகத், தோழியைத் தனக்கு உதவ வேண்டுகின்றான். அவள் அவனுக்கு உதவ மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
திண்தேர்த் தென்னவன் நன்னாட் டுள்ளதை
வேனி லாயினும் தண்புனல் ஒழுகும்
தேனூர் அன்னவிவள் தெரிவளை நெகிழ,
ஊரின் ஊரனை நீதர, வந்த
பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல் அம்ம! அம்முறை வரினே!
தெளிவுரை: திண்மையான தேர்களை உடையவன் தென்னவனாகிய பாண்டியன், அவன் நல்ல நாட்டின் கண்ணே உள்ளது தேனூர். அது, வேனிற்காலமே யானாலும் குளிர்ந்த நீர் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றுவளமுடையது. அத் தேனூரினைப் போன்ற, ஆய்ந்தமைத்த வளைகள் நெகிழ்ந்தோடுமாறு. செழுமையான இவள் தோள்கள் மெலிய, நீதான் பிரிந்தனை, பரத்தையர் வீதியிலே நீ செல்லுங்கால், நின்பால் அப்போது சூழ்ந்து வந்த பஞ்சாய்க் கோதை மகரிக்க்கும், அம்முறை - அதாவது வளைதநெகிழும் நிலை - வருவதனை நினைந்து, யானும் அஞ்சுவனே!
கருத்து: 'நீதான் நிலைத்த காதலன் பினை இல்லாதவன்' என்றதாம்.
சொற்பொருள்: திண்தேர் - திண்மையான தேர்; தேரின் திண்மை உரைத்தது, தேருக்கு உடையானின் ஆட்சித் திறத்தின் திண்மை காட்டற்காம். நன்னாடு - நலம் செறிந்த நாடு. வேனில் - வேனிலாகிய வறட்சிக் காலம். தேனூர் - பாண்டி நாட்டுள். வையைப் பாய்ச்சலில், மதுரைக்கு அருகிலே உள்ள ஓர் ஊர்; 'தேர்வண் கோமான் தேனூர்' என்றும் கூறுவர்; தேனாறு எனவும் பாடம். பஞ்சாய்க் கோதை மகளிர் - பஞ்சாய்க் கோரை போலும் தலைமயிர் நீண்டிருக்கும் மகளிர் முறை - பிரிவால் பரத்தையரும் வளைநெகிழ மெலியும் அவல நிலை; முறை என்றது, 'அவரும் நின்னைப் பிரிந்து வாடுகின்ற வாடற்காலம்' என்பதனையாம்.
விளக்கம்: 'வேனிலாயினும் தண்புனல் ஒழுங்கும் தேனூர் அன்ன இவள்' என்றது, அவ்வாறே பிரிவாற்றாமையாலே தோள் மெலிந்து வாடுதல் பெறினும், நின்பால் தான் கொண்டிருக்கும் அன்பு மாறாதவளான தலைமகள் என்றற்காம். தெரிவளை - தோளிற்கு அமையும் அளவு தெரிந்தெடுத்து அணியும் வளை; உடல் மெலியமெலிய மெலிவு புறந்தோன்றாதவாறு மறைக்கும் பொருட்டுப் பின்னும் பின்னும் சிறியவாகத் தேர்ந்து எடுத்து அணியும் வளை; நெகிழ - அதுவும் நெகிழ்தல்; அதனினும் சிறிது தேடிப்பெற இயலாவாறு தோள் மிகமெலிவுற்றதால் என்பதாம். 'பஞ்சாய்க் கோதை மகளிர்' என்றது. நெடுங் கூந்தலுடைய இளம்பரத்தையரை; நீ தரவந்த மகளிர்' என்று, அவரைக் கொணர்ந்த தலைவனின் செயலைத் தான் அறிந்தமை கூறினாள், அவனை அடித்துக்கூறித் திருந்துமாறு முயல்தற்கு.
'தேனூர்' அன்ன இவளை, வாடிமெலியும் வகை வெறுத்து, பஞ்சாய்க் கோதை மகளிர் பின்னால் மயங்கிச் செல்லும் போக்கினன் நீ என்றும், அவரும் நின்னால் கைவிடப்பட நேர்ந்து நீ புதியரை நாடிப் போகும் கொடுமனம் உடையை எனவும் கூறுகின்றாளும் ஆம். 'முறைவரின்' என்றது 'அம்முறை வந்தாற்போலும் நீ இவண் வந்தது' எனக் கூறி, அவனை ஒதுக்கிப் போக்கியதுமாம்.
55. துரத்தலின் நுதல் பசந்தது!
துறை: வரைவு அணிமைக் கண்ணே, புறத்தொழுக்கம் ஒழுகி, வாயில் வேண்டி வந்து தன் மெலிவு கூறிய தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது.
(து.வி: வரைவு விரைய வாய்க்கும் பொழுதிலே, புறத்தொழுக்கம் ஒழுகியவனாகி, மீண்டும் வாயில் வேண்டி வந்து நிற்கின்றான் தலைவன். அவன் தன் மெலிவுகூறித் தனக்கு உதவ வேண்டும்போது, தோஇ, அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
கரும்பின் எந்திரம் களிற்றுறெதிர் பிளிற்றும்
தேர்வண் கோமான் தேனூர் அன்ன விவள்
நல்லணி நயந்து நீ துறத்தலின்,
பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே!
தெளிவுரை: கரும்பினைப் பிழியும் எந்திரமானது, களிற்றின் பிளிற்றுக் குரலுக்கு எதிராக ஒலித்தபடியிருப்பது தேரினையும் வண்மையினையுமுடைய மதுரையார் கோமானின் தேனூர் அதனைப் போன்றதான இவள் நல்லழகினை விரும்பி, இவளை வரைந்து கொண்டு, அடுத்து நீதான் துறத்தலையும் மேற்கொள்ளுதலாலே, இவளது நுதலானது, பலரும் நின் கொடுமை அறியுமாறு பசலை நோய் கொண்டதே!
கருத்து: நீதான், இதுபோது நின் மெலிவுகூறி நயத்தல், எம்மால் வெறுக்கவே தக்கது என்றதாம்.
சொற்பொருள்: கரும்பின் எந்திரம் - கரும்பை நசுக்கிச் சாறுபிழியும் எந்திரம்; கரும்பின் எந்திரத்தைப் புறமும் காட்டும் (புறம் 320). நல்லணி - நல்ல அழகு. 'தேர்வண் கோமான்' என்றது பாண்டியனை.
விளக்கம்: எதிர் பிளிற்றல் - எதிரெதிர் தொடர்ந்து ஒலி செய்தல்; இதனால் கரும்பாலை மிகுதியும் களிற்று மிகுதியும் கூறினர். 'நல்லணி' என்றது, திருமண நிகழ்வை. மணம் பெற்றுச் சிலகாலமே யானவன், தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடிப் போதலாற் பல்லோரும் பழிப்பாராயினர் என்க. தலைவியைக் களவுக்காலத்தே பலப்பல கூறித் தெளிவித்துக் கூடியும், பின் விரும்பி வரைந்து மணந்தும் கொண்டவன், விரைவிலேயே அவளை விட்டுப் பிரிதலைத் தாங்காமல், தலைவியின் நெற்றியிற் பசலை படர்ந்தது; அது பல்லோரும் அவன் கொடுமையை அறியக் காட்டுவது மாயிற்று.
உள்ளுறை: 'களிற்றெதிர் சிலம்பின் எந்திரம் பிளிற்றும்' என்றது, 'நின் மெலிவு பற்றிய நின் பேச்சுக்கு எதிரே இவள்தன் நெற்றிப் பசப்பு மிகுதியாகத் தோன்றி, இவள் மெலிவு பற்றி ஊருக்கெல்லாம் உரைத்துப் பழிக்குமே' என்றதாம்.
மேற்கோள்: தலைவி அவனூர் அனையாள் என வந்தது எனப் பேராசிரியரும் (தொல். உவம. 25); தலைவன் அறம் செய்தற்கும், பொருள் செய்தற்கும், இசையும் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்கும், தலைவியை மறந்து ஒழுகுதற்கும், தோழி அலர் கூறுதற்கும் இதனை மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு. 9, 21)
'பெருமை காட்டிய இரக்கம்' எனக் கூட்டுக; இதனாற் சொல்லியது, வாளாதே இரங்குதலின்றி, பண்டு இவ்வாறு செய்தனை, இப்போது இவ்வாறு செய்யா நின்றனை எனத் தலைவி உயர்ச்சியும், தலைமகனது நிலையின்மையும் தோன்ற இரங்குதலாயிற்று என்பர், இளம்பூரணர் - (தொல். பொருள். 150).
56. என் பயன் செய்யும்?
துறை: புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அக்து இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத், தோழி சொல்லியது.
(து.வி: தலைவன் புறத்தொழுக்கம் உடையவன் என்று அறிந்த தலைமகள், அது குறித்த கவலையாலே வாடி மெலிந்துனள். அப்போது தலைவன், 'அவள் அறிந்தவாறு தான் தவறியவன் அல்லன்' என்று உறுதிகூறித், தலைமகளைத் தேற்றுவதற்கு முயல்கின்றான். அவனுக்குத் தலைவியின் தோழி சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா,
வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள்
நலம்பெறு சுடர்நுதல் தேம்ப,
எவன்பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே?
தெளிவுரை: பகற்காலத்தின் ஒளியைக் கொள்ளும் விளக்குகளாலே, இரவுக் காலத்தின் உண்மையே தெரியாத படி ஒளியோடும் விளங்குவது, வெல்லுகின்ற போராற்றலிலே மிகுந்த சோழர்களுக்குரிய ஆமூர். அதனைப் போலும் ஒளியுடைய, இவளது அழகு பெற்ற ஒளிசுடரும் நெற்றியானது, இப்போதிலே பசலையால் தன் ஒளி கெட்டது. அவளைத் தேற்றும் பொருட்டாக நீ சொல்லும் வாய்மையற்ற சொற்கள், இனி என்ன பயனைத்தான் செய்யுமோ?
கருத்து: 'பொய்யான இந்தத் தேறுதல் உரைகளாலே மட்டும் பயனில்லை' என்றதாம்.
சொற்பொருள்: பகல் கொள் விளக்கு - ஒளிமிக்கவும் பலவாகப் பெருகியவுமான விளக்குகளாலே, இரவின் இருக் முற்றமறைந்து, இரவே பகலின் ஒளியைப் பெற்றுப் பகலே போல விளங்கிற்று என்பதாம; 'இன்கள்ளின் ஆமூர்' எனச் சிறுபாணும் இதனைக் காட்டும் (சிறுபாண் 188). தேம்ப - அழகழிந்து வருந்த. பயம் - பயன். தேற்றிய மொழி - தேற்றிக் கூறிய உறுதிச் சொற்கள்.
விளக்கம்: தேறுதல் உரைகள் பயன் செய்யாமை, முன்னும் பலகால் உறுதிகூறித் தேற்றிப், பின்னர் சொற் பிழைத்து ஒழுகித் தலைவிக்கு வருத்தம் செய்தவன் தலைவன் என்பதனாலே. 'ஆமூர்' இரவிலும் விளக்கொளிகள் இரவையோட்டிப் பகலாகச் செய்ய, ஆரவாரத்துடன் விளங்கும் செல்வவேளமுடையது என்பதாம். அஃதாவது என்றும் குன்றா வளமை; அத்தகு எழில்குன்றாத் தலைவியின் சுடர் நுதலின் ஒளியும் நின்னாலே இப்போது ஒளியற்றுக் கெட்டது என்கின்றனள். 'எவன் பயன் செய்யும்?' என்றது, 'இனியும் நின் பேச்சை வாய்ம்மை எனக்கொள்ளும் மயக்கத்தேம் யாமல்லோம்' என்று இடித்துரைத்ததாம்.
உண்மையிலேயே இரவு நேரத்தில் இருள்தான் உளதான போதிலும், அதனை மக்கள் ஒளிவிளக்குகள் பலவாக அமைத்தலாலே மாற்றிக் கொள்ளலைப் போல, பரத்தைமையாகிய புறத்தொழுக்கம் கொண்ட தலைவனும், தன் ஒளியான சொற்களாலே அதனைப் பொய்யாக்கிக் காட்டுவதற்கு முயல்கின்றான் என்பதுமாம்.
'ஆமூர் அன்ன நலம்பெறு சுடர்நுதல்' என்றது, என்றும் எதனாலும் ஒளிகுன்றா நுதல் என்றதாம்; அதுவும் ஒளிகெட்டது; எனவே, இனித் தேற்றித் தெளிவித்தல் அரிது என்றும் உணர்த்தினளாம்.
'தேற்றிய மொழி முன்பும். நிலையான பயன் தந்ததின்று; அதனை நீ பொய்த்தே ஒழுகினாய்; இனியும் எமக்குப் பயன் தருவதனின்று; நின் இயல்பறிந்த யாம், அதனை நம்புதலிலோம் என்பதும் ஆம்.
மேற்கோள்: 'இதனுள், இவள் நுதல் தேம்பும்படி நீ தேற்றிய சொல் எனவே, சோர்வுகண்டு அழிந்தாள் என்பது உணர்ந்தும், இப் பொய்ச்சூள் நினக்கு என்ன பயனைத் தரும்? எனத் தோழி, தலைவனை நோக்கிக் கூறியவாறு காண்க' என இச்செய்யுளை, 'சூள் நயத்திறத்தாற் சோர்வுகண்ட டழியினும்' என்பதனுரையில் நச்சினார்க்கினியர் காட்டுவர் (தொல். கற்பு. 9).
57. நயம் உடையாளோ அவள்?
துறை: தலைமகற்குப் புறத் தொழுக்கம் உளதாயிற்று என்பது கேட்டுத், தோழி அவனை வினாவியது.
(து.வி: 'தலைவன் புறத்தொழுக்கம் உடையனாயின்' எனக் கேட்ட தோழி, அவனையே அதுபற்றிக் கேட்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
பகலில் தோன்றும் பல்கதிர்த் தீயின்
ஆம்பலஞ் செறுவின் தேனூர் அன்ன
இவள் நலம் புலம்பப் பிரிய,
அனைநலம் உடையோளோ - மகிழ்ந! நின் பெண்டே?
தெளிவுரை: ஆம்பற்பூக்கள் நிறைந்திருக்கும் வயல் களையுடையது தேனூர் ஆகும். அதனைப் போன்ற சிறப்புடையதான இவளின் (தலைவியின்) அழகெல்லாம், பகற்போதிலே தோன்றுகின்ற பலவான சுடர்களையுடைய தீயிட்டதே சிக்கினாற் போன்று முற்றவும் வெந்தழியுமாறு, நீயும் இவளைப் பிரிந்தனை. மகிழ்நனே! அப்படிப் பிரிதற்கு நின்னைத் தூண்டிச் செலுத்தும் அத்துணைப் பேரழகு உடையவளோ நின் பெண்டு?' (பரத்தை). அதையேனும் எனக்குக் கூறுவாயாக!
கருத்து: 'தலைவியை விடவும் அப்பரத்தை அழகானவளோ?' என்றதாம்.
சொற்பொருள்: பகலில் - பகற்போதில், பல்கதிர்த் தீ - பலவான நாக்குகளோடு சுடரிட்டு எழுந்து எரியும் பெருந்தீ. தேனூர் - பாண்டியநாட்டுத் தேனூர். நலம் - அழகு; புலம்ப - வருத்தமுற்றதாற் கெட. அனைநலம் - அத்துணை நலம்; அனநலம் என்றும் பாடம். பெண்டு - நின் காதற் பரத்தை.
விளக்கம்: 'பகலிலே தோன்றும் பல்கதிர்த் தீயானது அளவுகடந்த வெம்மையுடையதாயிருக்கும்; எதிரிட்டதை எல்லாம் எரித்தழிக்கும்; அதுபோலவே நின் பிரிவாகிய தீயின் வாய்ப்பட்ட இவள் மிகப் பெருநலனும் கெட்டழிந்தது' என்றதாம். பிரிவாற்றாமையின் வெம்மை மிகுதிக்கு இது நல்ல உவமையென்று கொள்க. 'பகலெரி சுடரின் மேனி சாயவும்' என நற்றிணையும் கூறும். (நற். 128). வயல்களிலும் ஆம்பல் பூத்திருக்கும் வளமான தேனூர் போன்றது தலைவியின் வளமான அழகு என்றது, அதன் குன்றலில்லாச் சிறப்பை வியந்து கூறியதாம்.
ஆம்பலுக்கு உவமையாகப் பகலில் தோன்றும் பல்கதிர்ப் பெருந்தீயினைக் கொண்டால், அழகான மெல்லியலாராகத் தோன்றும் பரத்தையர், அவரைச் சார்ந்தாரைப் பகலெரி தீப்போல் தவறாதே எரித்தழிக்கும் கொடிய இயல்பினர் என்று உள்ளுறை பொருள் புலப்படுத்துக் கூறியவாறாகக் கொள்க.
மேற்கோள்: 'பிழைத்து வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித் தலைமகள் மாட்டாக்கிக் கொடுத்தற் கண்ணும் தலைவிக்குக் கூற்று நிகழும் எனக் கூறி இச்செய்யுளை இளம்பூரணம் கற்பியலுட் காட்டுவர் - (தொல். கற்பு. 9).
'வணங்கியன் மொழியால் வணங்கற்கண் தோழிகூற்று நிகழ்வதற்கு' நச்சினார்க்கினியரும் இதனைக் காட்டுவர். (தொல். கற்பு. 9).
58. பிறர்க்கும் அனையாயால்!
துறை: உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.
(து.வி: தலைவன் பலவறாகத் தெளிவிக்கவும் தெளியாளாய், மேலும் பலவியே மேற்கொண்ட தலைவியின் செயலால், தலைவன் மனவருத்தம் கொண்டனன். அதனைத் துய்ப்பதற்குக் கருதிய தலைவியின் தோழி, அவன் போக்கைக் காட்டி அவனுணருமாறு இவ்வாறு கூறிகின்றனள். இதனால் தலைவியும் தன் புலவி தீர்வாளாவது பயனாகும்.)
விண்டு அன்ன வெண்ணெற் போர்வின்
கைவண் விராஅன், இருப்பை யன்ன
இவள் அணங் குற்றனை போறி:
பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே!
தெளிவுரை: 'மலை போலத் தோன்றும் வெண்ணெல்லின் போர்களையும், வரையாதே வழங்கி மகிழும் கைவண்மையினையும் கொண்டவன் விரா அன் என்பவன். அவனது 'இ,உம்மை' நகரைப் போன்ற பேரெழில் வளம் பெற்றாள் இவள்.' இவளாலே, நீயும் வருத்தமுற்றாய் போலத் தோன்றுதி! பிற மகளிர்பாலும் நீ இத்தன்மையனே ஆதலால், நின் வருத்தம் தீர்ந்து அமைவாயாக!
கருத்து: 'நின் வருத்தமும் எம்மை மயக்கச் செய்யும் ஒரு நடிப்பே' என்றதாம்.
சொற்பொருள்: விண்டு - மலை; 'விண்டு அனைய விண்தோய் பிறங்கல்' என்பது புறம் - (புறம் 391); 'விண்' என்னும் சொல்லடியாகத் தோன்றிய தமிழ்ச்சொல்; வான் நோக்கி உயர்ந்தது என்பது பொருள். போர்வு - பெருங்குவியல்; நெற்போர், வைக்கோற்போர் என அதற்கும் வழங்குவர். கைவண் - கைவண்மை; இடையறாது வழங்கி மகிழும் கொடைக்குணம் உடைமை. விரா அன் - பாண்டி நாட்டுக் குறுநிலத் தலைவன்; விராலிமலைக்கு உரியவன்; இவன் தலைநகர் 'இருப்பை' என்பர்; 'தேர்வண் கோமான் விரா அன் இருப்பை' என்பது பரணர் வாக்கு (நற். 350). 'இலுப்பைக் குடி' 'இருப்பைக் குளம்' என்று இன்றும் இருப்பையின் பேரால் ஊர்கள் சில பாண்டிய நாட்டில் உள்ளன. அணங்குறல் - துன்புறல். போறி - போன்றிருந்தனை
விளக்கம்: விரா அன் தற்போது விராலிமலை என வழங்கும் இடத்திருந்த ஒரு வள்ளல்; அவன் வயல் வளத்தாற் சிறந்தவன் என்பது 'விண்டு அன்ன வெண்நெற் போர்வின்' என்பதாலும், அவன் வண்மையிற் சிறந்தான் என்பது 'கைவண்' என்பதாலும் கூறினார். அவனுக்கு உரிய ஊர் 'இருப்பை' என்பது; அது பல்வகை வளத்தாலும் உயர்ந்தது. அதுபோல் அழகுடையாள் தலைவி என்பது, அவ்வூரைச் சேர்ந்தார் அதனைவிட்டு நீங்குதலை நினையாராய் ஒன்றி யிருப்பது போல, அவளைச் சேர்ந்த தலைவனும் விட்டுப் பிரியானாய் ஒன்றியிருப்பதற்குரிய பேரழகினள் என்பதற்காம். 'இவள் அணங்கு உற்றனை போறி' என்றது, இவ்வாறு எவரொருவர் அழகியராக எதிர்ப்படினும், அவரைக் காமுறும் பரத்தமை இயல்புடையாய் என்று குறித்து அவனை பழித்ததும் ஆம். 'வாழி நீயே' என்றது, தான் நம்மை நலிவித்தல் மறந்தானாய், தான் நலிவதாகப் புனைந்து கூறிய நிலையை நோக்கி, தம் பெருந்தகு கற்பினால், அவன் பிழைமறந்து, அவன் உறவை ஏற்று வாழ்த்தியதுமாம்.
59. இவட்கு மருந்து ஆகிலேன்!
துறை: தலைமகள் ஆற்றாளாம் வண்ணம் மனைக்கண் வரவு சுருங்கிய தலைமகற்குப், புறத்தொழுக்கம் உளதாகிய வழி, ஆற்றாளாகிய தோழி சொல்லியது; 'தலைமகற்குத் தேற்றத் தேறாது ஆற்றாளாகிய' என்பதும் பாடம்.
(து.வி: தலைமகன் வீட்டிற்கு வருவது படிப்படியாகக் குறைகின்றது. தலைவி பிரிவாற்றாமையால் பெரிதும் நலிவெய்துகின்றாள். 'அவன் வராமைக்குக் காரணம் அவனுடைய பரத்தைமை ஒழுக்கமே' என்று அறிந்தாள் தோழி. அதனைப் பொறாதாளான அவள், அவனிடம் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
கேட்டிசின் வாழியோ, மகிழ்ந! ஆற்றுற
மையல் நெஞ்சிற் கெவ்வம் தீர
நினக்கு மருந்தாகிய யான், இனி,
இவட்கு மருந்தன்மை நோம், என் நெஞ்சே!
தெளிவுரை: மகிழ்நனே! நீ வாழ்க! இதனையும் கேட்பாயாக. இவளைக் கண்டு மையலுற்ற நின் நெஞ்சிடத்து வருத்தமானது தீருமாறு, இவளை நினக்குக் கூட்டுவித்து உதவி, நீயுற்ற நோய்க்கு மருந்தாக முன்னர் யான் விளங்கினேன். இப்பொழுது, நின் கொடுமையால் இவள் படும் துயர நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் அமைவதற்கு இயலாமல், நெஞ்சம் வருந்தா நின்றேன்!
கருத்து: 'நீதான் அன்புடையார் பேச்சிற்கு அகம் நிலைகொள்ளும் மனநிலை இழந்தனை' என்பதாம்.
சொற்பொருள்: கேட்டிசின் - கேட்பாயாக; 'சின், முன்னிலை அசை. ஆற்று உற - ஆறுதல் அடைய. நேரம் - வாடுதும்.'
விளக்கம்: முன்னர்த் தலைவனின் காமநோய்க்குத் தோழி மருந்தாகியது, களவுக் காலத்தே. அன்று என் பேச்சால் தலைவி நினக்கு மகிழ்ச்சி தந்தனள்; இன்று நீயோ அவளை ஒதுக்கியதுடன் என் பேச்சையும் ஏற்றுக் கேளாயாயினை என்று தோழி குறைப்படுகின்றாள்.
மேற்கோள்: பரத்தையர் மனைக்கண் தங்கி வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித், தலைமகள் மாட்டாக்கிக் கொடுத்தற்கண் தோழிக்குக் கூற்று நிகழும் என இளம்பூரணனாரும், நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் - (தொல். கற்பு. 9)
60. வேல் அஞ்சாயோ?
துறை: வரையாது ஒழுகும் தலைமகன் இரவுக்குறி வழிந்துழித் தோழி சொல்லியது.
(து.வி: சூளுரைத்தபடி தலைமகளை வரைந்து வராமல், அவள் உறவை விரும்பி மட்டும் ஒருநாள் இரவு தலைமகன் வருகின்றான். இரவுக் குறியிடத்தே அவனைச் சந்தித்த தோழி சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனியூர! நின் மொழிவல்! என்றும்
துஞ்சுமனை நெடுநகர் வருதி;
அஞ்சாயோ, இவள் தந்தைகை வேலே?
தெளிவுரை: பழனங்களிலே வாழ்கின்ற, சதா ஒலி செய்தபடியிருக்கும் சம்பங்கோழியானது, பிரிந்து சென்றுள்ள தன் சேவலைத் தன்னருகே வருமாறு கூவிக்கூவி அழைக்கும் கனிகளையுடைய ஊரனே! உள்ளிருப்பார் அனைவரும் அயர்ந்துறங்கும் பெருமனையிடத்தே, இரவு நேரத்தே, அஞ்சாமல் துணிந்து வருகின்றனையே! இவள் தந்தையின் கையில் உள்ள வேலுக்கு நீதான் அஞ்சமாட்டாயோ?
கருத்து: 'நினக்கு ஊறு நேருமோ?' என்றே யாம் அஞ்சுவேம் என்றதாம்.
சொற்பொருள்: கம்புள் - சம்பங் கோழி. பயிர்ப்பெடை - துணையை வேட்டுப் புலம்பற்குரல் எழுப்பியிருக்கும் பெட்டை; பயிற்பெடை எனவும் பாடம். துஞ்சு மனை - இருப்பார் உறங்கியிருக்கும் மனை. நெடுநகர் - பெரிய மாளிகை. மருதத்தே குறிஞ்சியாகிய இரவுக்குறி மறுத்தல் வந்தது இச் செய்யுளில்.
விளக்கம்: இரவுக்குறி மறுத்து வரைவு கடாயது இது. இவள் தந்தை கைவேற்கு நீ அஞ்சாயாய் வரினும், யாம் நினக்கது ஊறுசெய்யுமோ என எண்ணித் துன்புறுவோம்; ஆதலின், இனிப் பலரறிய மணதந்து கூடிவாழ்தலே செயத்தக்கது என்று தோழி கூறுகின்றனள். தன்னருகே சேவலைக் காணாத பெடை, அதற்கு, யாது துன்பமோ என நினைந்து அதனை அழைத்தழைத்துக் கூவுதல்போல, தலைவியும் நின்னைக் காணாதே நினக்கென்னவோ ஏதோ என்று புலம்பியிருப்பாள் எனத், தலைவியது காதற்செவ்வி உரைத்ததும் ஆகும். அந்த அழைப்பைக் கேட்டுச் சேவல் அதனருகே விரைவது போல, நீயும் இவளை மணந்து கோடற்கு விரைவாயாக என்பதாம்.
''துஞ்சுமனை நெடுநகர் அஞ்சாதே வருது; ஆயின் வரைவொடு வந்து தமரின் இசைவோடு மணந்து கொள்ள, விரைந்திலை; எம் தந்தை கைவேலுக்கும் அஞ்சினாய் இல்லை; என் கருதினையோ?' என்பதாம். இதனால் இரவுக்குறி மறுத்து வரைவு வேட்டனள் என்பதும் ஆயிற்று.
மேற்கோள்: திணை மயக்குறுதலுள்; மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது என இச்செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர், (தொல். அகத். 12).
7. கிழத்தி கூற்றுப் பத்து
இதன்கண் வரும் பத்துச் செய்யுள்களும், தலைவியின் பேச்சாகவே அமைந்தவை; ஆதலின், இப்பகுதி இப் பெயர் பெற்றது. இவற்றால், உயர்பண்பும், கற்புச்சால்பும், குடிப்பிறப்பும் உடையாளான தலைவியின், செறிவான பெருமிதம் நிரம்பிய உள்ளப்போக்கும், தகுதி மேம்பாடும் நன்கு காணலாம்.
61. நல்லோர் வதுவை விரும்புதி!
துறை: 'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையை விட்டு, சின்னாளில் மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள், அவன் மனைவியின் புக்குழிப் புலந்தாளாக, 'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது' என்றாற்கு, அவள் சொல்லியது.
(து.வி: தன்னைப் பிரிந்து போய்ப் பரத்தையொருத்தியின் மையலிலே தலைவன் சிக்கிக் கிடந்ததால், தன் மனம் தாங்கொணா வேதனையுற்றிருந்தவள் தலைவி. அவள், அவன், அந்தப் பரத்தையைக் கைவிட்டு வேறொரு பரத்தையை நாடி வதுவை செய்தான் என்றும் கேட்டாள். அப்போது, தலைவனும் தன் வீட்டிற்கு வருகின்றான். தலைவியோ முகத்தைத் திருப்பிக் கொள்ளுகின்றாள். தலைவன் 'நடந்தது நடந்துவிட்டது; இனி அவ்வாறி நிகழாது; என்னை மறாதே இவ்வேளை ஏற்றுக்கொள்' என்று பணிவோடு வேண்டுகின்றான். அவனுக்குத், தலைவி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்ழம்
நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்,
கைவண் மத்தி, கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி
வதுவை யயர விரும்புதி நீயே!
தெளிவுரை: மணமிகுந்த வடுக்களையுடைய மாமரத்திலே, நன்கு விளைந்து கனிந்து, கீழே விழுகின்ற இனிய பழமானது, ஆழ்ந்த நீரையுடைய பொழ்கையிடத்தே, 'துடும்' என்னும் ஓசையுடன் விழுகின்ற, கொடை வண்மையுடைய மத்தியின், 'கழா அர்' என்னும் ஊரைப் போன்ற, நல்ல பெண்களையே நாடிச் சென்று, நீயும் வதுவை செய்து கொள்ள விரும்புகின்றாய்!
கருத்து: ஆகவே, 'என்னிடத்து நீ அன்பாற்றாய்; ஆதலின் விலகிப்போக' என்றதாம்.
சொற்பொருள்: நறுவடி - நறுமணமுள்ள மாவடுக்கள்; வடுக்கள் - பிஞ்சுகள்; 'நறுவடிமா' என்று நற்றிணையும் கூறும் - (நற். 243). நெடுநீர்ப் பொய்கை - நிறைந்த நீர் நிலையாக இருத்தலையுடைய பொய்கை. 'மத்தி' என்பவன் கழாஅர்க் கீரன் எயிற்றியார். வதுவை - மணம். பரத்தையோடு முதல் தொடர்பு கொள்வார் அதனையே வதுவைபோலக் கொண்டாடுதல் என்பதும் மரபு. 'வதுவை அயர்ந்தனை என்ப' என, அகநானூற்றும் இவ்வாறு வரும். (அகம். 36).
விளக்கம்: நீர் வற்றாதிருக்கும் பொய்கைக் கரையிலேயுள்ள மாமரத்தின், மரத்திலேயே முதிர்ந்து கனிந்த அதன் பழம், துடுமென்னும் ஒலியோடே நீரில் விழும் என்றது, கழா அரின் வளமை பற்றிக் கூறியதாம். நல்லோர் நல்லோர் என்று பரத்தையரைக் குறிப்பிட்டதும், அவரோடு அவன் வதுவை அயர்ந்தான் என்றதும், தன்னுள்ளத்தே தோன்றிய எள்ளல் புலப்படக் கூறியதாம்.
உள்ளுறை: மாவின் முதிர்ந்த கனி தானாகவே குளத்து நீரில் துடுமென விழூஉம் என்றது. அவ்வாறே பரத்தையர் சேரியிலே பக்குவமான இளங்கன்னியர் தலைவனின் வலையிலே தாமாகவே வந்து ஆரவாரத்துடன் விழுவாராயினர் என்று, உள்ளுறையால், அவன் புறத்து ஒழுக்கம் சேரிப்பெண்டிரெல்லாரும் அறிந்ததாயிற்றென்று கூறினளாம்.
இல்லறமாற்றி இன்புற்றிருந்த தலைவன், அப்பிடிப் பினின்றும் விலகிப் பரத்தையர் வலையிலே போய் வீழ்ந்தான் என்பது, மாவின் நறுங்கனி பொய்கைக்கண் வீழ்ந்து அழிவது போலாகும் என்று உள்ளுறை கொள்வது பொருந்தும். மாங்கனி பயனின்றி நீரிலே துடுமென வீழ்தலே போலத், தலைவனும் ஆரவாரத்துடன் வதுவை மேவிப் பரத்தையருடன் திரிவான் என்பதும் ஆம்.
62. எவ்வூர் நின்றது தேர்?
துறை: மேற் செய்யுளின் துறையே.
இந்திர விழவிற் பூவின் அன்ன
புன்றலைப் பேடை வரிநிழல் அகவும்
இவ்வூர் மங்கையர்த் தொகுத்து, இனி
எவ்வூர் நின்றன்று - மகிழ்ந! - நின் தேரே?
தெளிவுரை: மகிழ்நனே! இந்த விழவினிடத்தே கலந்து மகிழ வருவார் பலரும் சூடியிருக்கும், வேறுவேறு வகையான பூக்களைப் போன்ற அழகுடைய, இவ்வூர்ப் பரத்தையரை எல்லாம் ஓரிடத்தே கொண்டு தொகுத்ததன் பின்னால், புல்லிய குயிற்பேடையானது வரிப்பட்ட நிழற்கண் இருந்து அகவும் இவ்வுரைவிட்டு, வேற்றூர் மகளிரையும் கொணர்தலின் பொருட்டுச் சென்று, இப்போது நின் தேர் எவ்வூரிடத்தே நிற்கின்றதோ?
கருத்து: 'நின் பரத்தையர் உறவுதான் வரை கடந்த்தாயிற்று' என்பதாம்.
சொற்பொருள்: இந்திர விழா - மருத நிலத்தார் இந்திரனுக்கு எடுக்கும் பெருவிழா. புன்றலை - புல்லிய தலை. பேடை - குயிற் பேடை; இளவேனிற் காலத்தே ஓயாது அகவும் இயல்பினது.
விளக்கம்: 'நின்தேர் எவ்வூர் நின்றன்று?' என்றது, நீதான் இவ்வூர்ப் பரத்தையரை எல்லாம் நுகர்ந்து முடிந்தபின், இப்போது எவ்வூரவளோடு போய்த் தொடர்புடைய்யோ என்றதாம்; பரத்தமை பூண்டாரின் மனவியல்பு இவ்வாறு ஒன்றுவிட்டொன்றாகப் பற்றித் திரிந்து களிக்க நினைப்பதாகும். இந்திரவிழா, அரசு ஆதரவில் நடக்கும் பெருவிழா என்பதைச் சிலப்பதிகாரம் காட்டும்; அவ்விழாக் காண வருவார், வேற்றூர் மகளிரும் ஆடவரும் பலராயிருப்பர் என்பதால், 'இந்திரவிழவிற் பூவின் அன்ன' என்று, அவர் சூடிய பலப்பல பூவகைகளையும் குறித்தனர். பல பூக்கள் என்றது, அவரவர் நிலத் தன்மைக்கு ஏற்பப் பூச்சூடும் மரபினையும் குறித்ததாகும். அவ்விழாவில் நடனமாடவரும் பலவூர்ப் பரத்தையரின் ஒப்பனைகளை இது சுட்டுவதும் ஆகலாம்.
'இவ்வூர் மங்கையர்த் தொகுத்து' என்பது, இந்திர விழாவில் ஆடலும் பாடலும் நிகழ்த்தற்பொருட்டு, ஊர்த் தலைவனான அவன், அவ்வூர்ப் பரத்தையரை எல்லாம் தன் தேரிலே ஏற்றிக் கொண்டு ஒருங்கு சேர்த்தலைக் கண்டும் கேட்டும், தலைவி அவன்பால் ஐயமுற்று, மனவுளைச்சலுற்றனள் என்பதும் பொருந்தும்.
63. பிறர் தோய்ந்த மார்பு!
துறை: பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது.
(து.வி: பரத்தையோடு மகிழ்ந்திருந்தபின் வீடு திரும்புகின்ற தலைவன், ஆர்வத்தோடு தலைவியை அணைப்பதற்கு நெருக்க, அவள் புலந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது. தலைவியின் உள்ளக்கொதிப்பை நன்கு காட்டுவதும் இதுவாகும்.)
பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊர!
எந்நலம் தொலைவது ஆயினும்,
துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே!
தெளிவுரை: பெருமானே! பொய்கையாகிய இடத்திலே வாழ்கின்றதும், புலவு நாற்றத்தைக் கொண்டதுமான நீர்நாயானது, வாளைமீனைத் தன் அன்றைய இரையாகப் பெறுகின்ற ஊரின் தலைவனே! எம் அழகெல்லாம் அழிவுற்று முற்றத் தொலைந்து போவதேயானாலும், பிறரைத் தழுவிய எச்சிலுற்ற நின்மார்பினை யாம் பெருந்தவே மாட்டோம்!
கருத்து: 'பிற மகளிராலே எச்சிற்பட்ட நின் மார்பினை யார் அணையோம்' என்றனதாம்.
சொற்பொருள்: பள்ளி - வாழும் இடம் என்னும் பொதுப் பொருளில் வந்தது. நாளிரை - அந்நாளுக்கான இரை. துன்னல் - பொருந்தத் தழுவல். பிறர் - உரிமையற்ற வரான பரத்தையர்.
விளக்கம்: நாய் போலத் தோன்றி நீரிடத்தே வாழும் உயிர்வகை நீர் நாய் ஆகும். அந்நாளைத் தமிழகத்தே பெருகக் காணப்பட்ட இதனை, இப்போது உயிர்க் காட்சிச் சாலைகளில் மட்டுமே காணமுடிகின்றது. வாளைமீன் இதற்கு விருப்புணவு என்பதனை, 'வாளை நாளிரை பெறூஉம் ஊரன்' எனக் குறுந்தொகை கூறுவதாலும் அறியலாம் - (குறுந். 364). 'எந்நலம் தொலைவது ஆயினும்' என்றது, அவன் உரிமை மனையாளாதலின், அவள் அழகெல்லாம் அழிவது பற்றி ஏதும் கவலைப்படுதலும் இல்லை என்று கூறியதாம். களவுக் காலத்தே தம் நலம் பெரிது பேணும் மகளிர், ஒருவனின் உரிமை மனைவியராயினபின் அதன்பாற் பெரிதும் கருத்துக் காட்டார்; கடமையே பெரிதாக நினைப்பர் என்பதும், இதனாற் கொள்ளப்படும்.
உள்ளுறை: 'நீர்நாய் அன்றன்றைக்கான இரைதேடிச் சென்று வாளைமீனைப் பற்றியுண்டல் போல, ஊரனாகிய நீயும், அன்றன்றைக்கு எழும் நின் ஆசை தீரும்பொருட்டுப் புதிய புதிய பரத்தையரைத் தேடிச் சென்று துய்த்து மகிழும் இயல்பினை' என்று, பழித்து உதுக்கினள் என்க.
மேற்கோள்: ''இது பிறப்பு உவமப் போலி; நல்ல குலத்திற் பிறந்தும், இழிந்தாரைத் தேடிப்போய்த் தோய்ந்தமையான் அவர் நாற்றமே நாறியது; அவரையே பாதுகாவாய்; மேற்குலத்துப் பிறந்த எம்மைத் தீண்டல்'' என்பாள், அஃது எல்லாம் விளங்கக் கூறாது, 'பொய்கைப் பள்ளிப் பிறந்த நீர்நாய் முன்னாள் தின்ற வாளைமீன் புலவு நாற்றத்தோடும், பின்னாளும் அதனையே வேண்டும் ஊரன்' என்றமையின், பரத்தையர் பிறப்பு இழிந்தமையும், தலைவி பிறப்பு உயர்ந்தமையும் கூறி, அவன் பிறப்பின் உயர்வும் கூறினமையின், இது பிறப்புவமப் போலியாயிற்று. இவையெல்லாம் கருதிக் கூறின், செய்யுட்குச் சிறப்பாம் எனவும், 'வாளாது நீர்நாய் வாளை பெறூஉம் ஊர' என்றதனான் ஒரு பயனின்று எனவும் கொள்க'' என்பர் பேராசிரியர் - (தொல். உவம. 25).
இவ் விளக்கத்தால், 'புலவுநாறு' என்பதற்கு, முதல்நாள் கூடிய பரத்தையின் சுவடு கலையாமலே என்றும், 'நாள் இரை' என்றற்கு, அன்றைக்கு அவளைவிட்டு மற்றொருத்தியை நாடின என்றும், குறிப்புப் பொருள் கொள்ளலாம்.
64. எம்மை மறையாதே!
துறை: தலைமகன் பரத்தையரோடு புனலாடினான் என்பது அறிந்த தலைமகள், அவன் மறைத்துழிச் சொல்லியது.
(து.வி: தலைவன் பரத்தையரோடு புதுப்புனலாடி மகிழ்ந்தான் என்று கேட்டதும், தலைவியின் நெஞ்சம் கொதிப்புற்று வெதும்புகின்றது. அவன், இல்லந் திரும்பியவன், ஆர்வத்தோடு தலைவியை நெருங்க, அவள் அதனைச் சொல்லிப் புலக்கின்றாள். அவன், அச்செய்தி பொய்யென மறுக்க, அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
அலமரல் ஆயமொடு அமர்துணை தழீஇ
நலமிகு புதுப்புனல்ஆடக் கண்டோர்
ஒருவரும் இருவரும் அல்லர்;
பலரே தெய்ய; மறையா தீமே.
தெளிவுரை: எப்போதும் சுற்றிச் சூழ்ந்தவராக வந்து கொண்டிருக்கும் ஆயமகளிரோடும் கூடிய, நின்னால் விரும்பப்படும் பரத்தையைத் தழுவிக் கொண்டவனாக, நீதான், நலத்தை மிகுவிக்கும் புதுப்புனலிலே நேற்று ஆடினை; அதனைக் கண்டோர் ஒருவரோ இருவரோ அல்லர்; அவர் மிகப்பலராவர்; ஆதலின், எம்பால் அதனை மறைத்து ஏதும் நீ கூறுதல் வேண்டா!
கருத்து: 'அவர்பாலே இனியும் செல்வாயாக' என்றதாம்.
சொற்பொருள்: அலமரல் ஆயம் - சுற்றிச் சூழ்ந்தவராக வரும் ஆயமகளிர். அமர்துணை - விரும்பிய பரத்தை. 'தெய்ய': அசைச் சொல். மறையா தீமே - மறையா திருப்பாயாக.
விளக்கம்: தம் தலைவி செல்லுமிடமெங்கணும் பாதுகாவலாகவும், ஏவுபணி செய்யவும் சுற்றிச் சூழ்ந்து வருபவராதலின், 'அலமரல் ஆயமகளிர்' என்றனள். 'ஆயமகளிர் அலமர நீ பரத்தையுடன் கூடிப் புனலாடினை' என, அவர் அவ்வுறவின் நிலையாமை பற்றிக் கலங்கி வருந்தியதாகவும், கொள்ளலாம். நலமிகு புதுப்புனல் - உ0ல் மன நலத்தை மிகவாக்கும் புதுப்புனல்; அழகுமிகுந்த புதுப்புனலும் ஆம். 'அமர்துணை' என்றது பரத்தைமை; 'நீ அமர்துணை யாமல்லேம், அவளே' என்று கூறியதும் ஆம். கண்டார் பலர் என்றது, அதனால் ஊரில் எழுந்த பழிச்சொல்லும் மிகுதியெனக் கூறியதாம். இவ்வாறு, தலைவர்கள் பரத்தையரோடு புதுப்புனலாடலையும், அதுகேட்டு மனைவியர் சினந்து ஊடலையும், அயர்ந்தனை என்ப' என அகநானூற்றும் இயம்பக் காணலாம். (அகம். 116).
65. புதல்வனை ஈன்ற மேனி!
துறை: ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகற்குத், தலைமகள் சொல்லியது.
(து.வி: புதல்வனைப் பெற்ற வாலாமை நாளில், திதலை படரவும் தீம்பால் கமழவும் தலைவி விளங்குகின்றாள். அவ்வேளை அவளைத் தழுவுதற்கு முற்பட்ட தலைவனுக்குத், தலைவி கூறித் தடுப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
கரும்புநடு பாத்தியிற் கலித்த ஆம்பல்
சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊர!
புதல்வனை ஈன்றவெம் மேனி
முயங்கன்மோ தெய்ய; நின் மார்பு சிதைப்பதுவே.
தெளிவுரை: கரும்பு நடுவதற்கேனச் செப்பஞ்செய்த பாத்தியிலே, தானாகவே தழைத்த நீராம்பலானது, வண்டினத்தின் பசியைப் போக்குகின்ற, பெரும்புனல் வளமுடைய ஊரனே! புதல்வனை ஈன்ற எம் மேனியைத் தழுவாதேகொள்! அதுதான் நின் மார்பின் அழகுப் புனைவுகளைச் சிதைத்துவிடும்!
கருத்து: 'அதனால், நின் பரத்தையும் நின்னை ஒதுக்குவாள்' என்றதாம்.
சொற்பொருள்: பாத்தி - பகுத்துப் பகுத்து பகுதி பகுதியாக அமைத்துள்ள நிலப்பகுப்பு. கலித்த - செழித்துத் தழைத்த. மார்பு சிதைப்பதுவே - மார்பின் எழிலைச் சிதைப்பதாகும்.
உள்ளுறை: 'கரும்பை நடுவதற்கென்று ஒழுங்குசெய்த பாத்தியில், ஆம்பல் கலித்துச் சுரும்புபசி களையும் பெரும்புனல் ஊரன்' என்றது. இல்லறம் செவ்வையுற நடத்தற்காக அமைத்த வளமனைக் கண்ணே வந்து சேர்ந்தாளான பரத்தையும், தலைவனுக்கு இன்பம் தருவாளாயினள் என்றதாம். தலைவன் தன்னைத் தழுவ முயலும்போது, அவன் மார்பின் பூச்சுப் புனைவுகளைக் கண்டு, அவன் பரத்தைபாற் செல்வதாக நினைத்து, 'எம்மைத் தழுவின் எம் மார்பின் பால்பட்டு அவ்வழகு சிதையும்; பரத்தையும் அதுகண்டு நின்னை வெறுப்பாள்' என்று தலைவி மறுத்துக் கூறினள் என்பதும் பொருந்தும்.
விளக்கம்: 'புதல்வனை ஈன்ற எம்மேனி' என்றது, அந்த உரிமை இல்லாதவள் பரத்தை என்று தன் சிறப்புரை கூறிக் காட்டற்காம். கரும்பு நடு பாத்தியில் ஆம்பல் கலித்தாற் போலத், தானிருந்து இல்லறமாற்றற்குரிய வளமனையில், தலைவன் பரத்தையைக் கொணர்ந்து கூடியிருந்தான் என்று கேட்ட செய்தியால் மனமிடிந்து, தலைவி கூறியதாகவும் கொள்க. பெரும்பாலுன் தமிழின மரபு முதற் பிள்ளைப்பேறு தாய்மனைக்கண்டே நிகழ்வதே ஆதலின், தலைவன், இவ்வாறு பரத்தையைத் தன் வீட்டிடத்தேயே கொணர்ந்து கூடியிருத்தலும் நிகழக்கூடியதே யாகும்.
மேற்கோள்: இது வினையுவமப் போலி; என்னை? தாமரையினை விளைப்பதற்கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே விளைந்த தாமரை, சுரும்பின் பசி தீர்க்கும் ஊரன் என்றாள். இதன் கருத்து. அது காதற் பரத்தையர்க்கும் இற்பரத்தையர்கும் என்று அமைக்கப்பட்ட கொயிலுள்யாமும் உளமாகி, இல்லறம் பூண்டு விருந்து ஓம்புகின்றனம்; அதுபோல என்பதாகலான், உவமைக்குப் பிரிதொரு பொருள் எதிர்த்து உவமம் செய்யாது, ஆண்டுப் பிறந்தனவற்றோடு நோக்கிக் கருத்தினாற் கொள்ள வைத்தலின், இஃது உள்ளுறை உவமம் ஆயிற்று. அவற்றுள்ளும், இது சுரும்பு பசிகளையும் தொழிலோடு, விருந்தோம்புதல் தொழில் உவமங்கொள்ள நின்றமையின், வினையுவம்பஃ போலியாயிற்று. இங்ஙனம் கூறவே, இதனை இப்பொருண்மைத்து என்பதெல்லாம் உணருமாறு என்னை? எனின், முன்னர், 'துணிவோடு வரூஉம் துணிவினோர் கொளினே' எனல் வேண்டியது, இதன் அருமை நோக்கியன்றே என்பது. அல்லாக்கால், கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை, சுரும்பு பசிகளையும் பெரும்புனல் ஊர என்பது பயமில வென்பது கூறலாம் என்பது'' என, இச் செய்யுளை, நன்கு விளக்குவர் பேராசிரியர் - (தொல். உவமம். 25).
புதல்வன் தோன்றிய நெய்யணி நயந்த கிழவனை, நெஞ்சு புண்ணுறுமாறு பண்ணிச் செறிவு நீக்கிய இளிவந்த நிலையின் கண், தலைவிக்குக் கூற்று நிகழும் எனக் காட்டுவர், இளம் பூரணர் - (தொல். கற்பு. 6).
புதல்வற் பயந்த காலத்துப் பிரிவு பற்றித் தலைவி கூறியது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு - 6).
பரத்தையினது இல்லிலிருந்து தலைவனது வரவைப் பாங்கிகூற, அதையுணர்த்த தலைவி, தலைவனோடு புலந்தது எனக் காட்டுவர் நம்பியகப் பொருள் உரைகாரர் - (கற்பு, 7).
66. யார் அவள் உரைமோ?
துறை: புதல்வனைப் பிரியாதவன் பிரிந்து, புறத்துத் தங்கி வந்தானாக, அவனோடு புலந்து தலைமகள் சொல்லியது.
(து.வி: புதல்வனைப் பிரியாதவனாக இருந்த தலைவன், ஒரு சமயம் அவனையும் பிரிந்துபோய், பரத்தையோடு உறவாடி விட்டு இரவினும் அங்கே தங்கியிருந்து காலையிலே வந்தான் என்றறிந்த தலைவி, அவனோடு மனமாறுபட்டுக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
உடலினென் அல்லேன்; பொய்யாது மோ;
யார் அவள், மகிழ்ந! தானே - தேரொடு, நின்
தளர்நடைப் புதல்வனை யுள்ளி, நின்
வளமனை வருதலும் வௌவி யோளே?
தெளிவுரை: மகிழ்நனே! உருட்டி விளையாடும் சிறுதேரின் பின்னாகத் தளர்நடை நடந்தவனாக வருகின்ற நம் புதல்வனைக் காணவிரும்பி, நின் வளமனைக்கு நீதான் வந்தடைந்தும், நின் பின்னாலேயே தொடர்ந்துவந்து, நின்னைப் பற்றிக் கொண்டு போனவள்தான், யாவள் என்று எனக்குக் கூறுவாயாக. யான் நிற்பாற் சினந்தேன் அல்லேன்; ஆதலின், உண்மைதான் ஈதென்று, நீயே சொல்வாயாக.
கருத்து: 'நின் வேற்றுறவு வீடுவரைக்கும் வந்துவிட்டதே' என்றதாம்.
சொற்பொருள்: உடலல் - சினத்தல். தேர் - சிறுதேர். தளர்நடை - அசைந்து நடக்கும் சிறுநடை; கால் வலுப் பெறாததால் தள்ளாடும் நடை. வளமனை - வளமான இல்லம். வௌவல் - கவர்ந்து கொண்டு போதல்.
விளக்கம்: புதல்வன் தெருவில் சிறு தேருருட்டிச் செல்லக் கண்ட தலைவன், அவன்பாற் பேரன்பினன் ஆதலின், தான் ஏகக்கருதிப் புறப்பட்ட பரத்தையின் இல்லம் நோக்கிப் போதலையும் மறந்து, புதல்வனைப் பின்பற்றி, மீளவும் வீட்டைநோக்கி வருகின்றான். அப்போது, அவனைக் காணாதே தேடிவந்த பரத்தையானவள், அவனைப் பற்றிக் கொண்டு தன்னிலம் நோக்கி அழைத்தேகினள். இதனைக் கண்ட தலைவி, பின்னர் வந்த தலைவனிடம் கூறியது இது.
பரத்தையே தலைவனின் புதல்வனைத் தெருவிடைக் கண்டதும், அவன்பால் ஆசைகொண்டாளாகத், தூக்கியணைத்தபடியே, தலைவனில்லத்துப் புகுந்தனள். புகுந்தவள், அங்கு எதிர்பட்ட தலைவனைத் தன்னில்லத்திற்குப் பற்றிச் சென்றனள் என்பதும் பொருந்தும். அதுகண்டு தலைவி ஊடினள் என்றும் அப்போது சொல்க.
'உடலினேன் அல்லேன்' என்றது, அவள் தன் கற்புச் செவ்வி தோன்றக் கூறியதாம்; 'பொய்யாது உரைமோ' என்றது, பொய்த்தலே தலைவனின் இயல்பாதலைச் சொட்டிக் கூறியதாம்.
மேற்கோள்: புதல்வனை நீங்கிய வழித் தலைவி கூறியதற்கு இதனை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு, 6).
67. அவள் மடவள்!
துறை: தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை, புறனுரைத்தாள் எனக் கேட்ட தலைவி, தலைமகன் வந்துழி, அவள் திறத்தாராய் நின்று ஒழுகும் வாயில்கள் கேட்பச் சொல்லியது.
(து.வி: பரத்தை தன்னைப் பற்றி இழிவாக ஏதோ கூறினாள் எனக் கேட்டாள் தலைவி; தலைமகன் வீடு வந்துவிடத்து, அப் பரத்தைக்கு வேண்டியவர்கள் கேட்குமாறு, அவனிடத்தே ஊடிச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
மடவள் அம்ம, நீ இனிக் கொண் டோளே -
'தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
பெருநலம் தருக்கும்' என்ப; விரிமலர்த்
தாதுண் வண்டினும் பலரே,
ஓதி யொண்ணுதல் பசப்பித் தோரே!
தெளிவுரை: தலைவனே! நீ இப்போது தலைக்கொண்டு ஒழுகும் பரத்தையானவள், தன்னை என்னோடும் நிகரினளாகக் கருதித், தன் பெருநலத்தைத் தருக்கடன் வியந்து கூறினாள் என்பர். நின்னாலே முன்பு நலனுண்ணப்பட்டு, ஓதியடுத்த ஒளிநுதல் பசப்பிக் கொண்டோரான மகளிர்கள், இதழ்விரிந்த மலர்களிலே தாதுண்டு பின் அதனை மறந்துவிடும் வண்டினாற் கழிக்கப்பட்ட மலர்களினும் பலராவரே! இதனை அவள் அறிந்திராத மடமையாட்டியே போலும்!
கருத்து: 'அவள் நின்னைப் பற்றிய உண்மையினை அறியாள் போலும்' என்றதாம்.
சொற்பொருள்: மடவள் - மடமையுடையவள். இனி - இப்பொழுது. கொண்டோள் - தன்பாற் பிணித்துக் கொண்டவள். நிகரி - நிகராகக் கருதி மாறுபட்டு, தருக்கும் - செருக்குக் கொள்ளும். விரிமலர் - மொட்டவிழ்ந்த புதுமலர்.
விளக்கம்: 'தலைவனின் காதற் பரத்தை, தலைவியோடு தன்னையும் ஒருசேரக் கருதினளாக ஒப்பிட்டுக் கொண்ட, தான் தலைவியினும் பலவாகச் சிறந்தவள் என்றும் கூறினாள்' எனக்கேட்டுப் புலந்திருந்தவள் தலைவி. தலைமகன் தன்னை நாடிவந்தபோது, அப்பரத்தையின் தொழியர் கேட்பத் தலைவனுக்குச் சொல்வது போல இப்படிக் கூறுகின்றாள். தன்னை இழிந்தாளான பரத்தை ஒருத்தி பழித்தற்குக் காரணமாஇனவன் தலைவனே என்று, அவன் செயலைப் பழித்ததும் ஆம். 'அவளையும் தலைவன் விரைவிற் கைவிட்டு வேறொருத்தியை நாடுவான்' என்று, அவன் நிலைமை கூறிப் பரத்தையின் செருக்கழிதற்கு உண்மையுணர்த்திக் காட்டியதுமாம்.
'விரிமலர்த் தாதுண் வண்டினும் பலரே ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோரே' என்பதற்கு, 'அவளைத் தழுவி யின்புற்றுப் பிரிந்து போயின ஆடவரும் மிகப் பலராவர்' என்று பொருள் காணலும் பொருந்தும்; தன் கற்புச்சால்பும் பரத்தையின் இழிவும் கூறியதாகவும் அது அமையும்.
உள்ளுறை: வண்டொன்று பலப்பல மலரினும் சென்று சென்று தேனுண்டு, பின் அப் பூக்களை நாடாது வாடியுதிர விட்டுக் கழித்தல்போலத், தலைவனும் புதியரான பரத்தையரை நாடிச் சென்று கூடி இன்புற்று, அவரைக் கைவிட்டு விடும் இயல்பினன், என்று உவமைப்படுத்தினள்.
மேற்கோள்: காமக் கிழத்தியர் நலம்பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின்கண், தலைவி கூற்று நிகழும். இதனுள் இப்பொழுது கிடையாதது கிடைத்தாக வரைந்து கொண்ட பரத்தை, தன்னொடு இளமைச் செவ்வோ ஒவ்வா என்னையும் தன்னொடு ஒப்பித்துத், தன் பெரிய நலத்தாலே மாறுபடும் என்பவென, அவள் நலத்தைப் பாராட்டியவாறும், நீ பசப்பித்தோர் வண்டு தாதுண்ட மலரினும் பலரெனத் தீமையின் முடித்தவறானும் காண்க என, இச்செய்யுளைக் கற்பியற் சூத்திர உரையிற் காட்டிப் பொருள்விளக்கம் தருவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு, 6) இதனையும் நினைத்து பொருள் கொண்டு மகிழ்க.
68. அடக்கவும் அடங்காள்!
துறை: பரத்தை, தான் தலைமகளைப் புறங்கூறி வைத்துத், தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி, தலைமகற்குச் சொல்லியது.
(து.வி: தலைமகளைப் பழித்துப் பேசின பரத்தை, தலை மகள் தன்னைப் பழித்ததாகப் புறங்கூறித் திரிகின்றாள். அதனைக் கேள்வியுற்ற தலைவி, தலைவினிடம் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
கன்னி விடியல், கணைக்கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர!
பேணாளோ நின் பெண்டே
யான்தன் அடக்கவும், தான் அடங்கலளே?
தெளிவுரை: திரண்ட தண்டையுடைய ஆம்பலானது, கன்னி விடியற்போதிலே, தாமரையைப் போலவே இதழ் விரித்து மலர்ந்திருக்கும் ஊரனே! யான் நின் போற்றா ஒழுக்கம் தெரிந்தும், என் வேதனையை அடக்கிக் கொண்டிருப்பவும், நின் பரத்தையானவள், தான் அடக்கமிலாது நடக்கின்றனளே! நின் பெண்டானவள் எப்போதுமே அடக்கத்தைப் பேண மாட்டாளோ?
கருத்து: 'அத்தகையாளையே நச்சிச் செல்லும் நின் தகைமைதான் யாதோ?' என்றதாம்.
சொற்பொருள்: கன்னி விடியல் - கதிரவன் உதயத்துக்கு முற்பட்ட இளங்காலைப் பொழுது; இதற்கு முந்திய இரவுப் போதைக் 'கன்னி இருட்டு' என்பார்கள். ஆம்பல் - செவ்வாம்பல். பேணாளோ - அடக்கத்தைக் காத்துப் பேணமாட்டாளோ? 'பெண்டு' என்றது காதற் பரத்தையை. யான் தன் அடக்கவும் - யான் என் சினத்தைத் தகுதியால் அடக்கியிருக்கவும்; அவள் பழித்தலைப் பாராட்டாதிருக்கவும், அடங்கலள் - அடங்காதே, என்னையே பழித்துப் புறங்கூறித் திரிவாளாயினள்.
விளக்கம்: தலைவியின் உயர்குடிப் பண்பும், பரத்தையின் குடிப்பண்பும் அவர்தம் அடக்கமுடைமை இன்மை பொருளாக இச் செய்யுளில் காட்டப் பெற்றன. தனக்குரியாளைக் கொண்ட பரத்தையைத் தலைவி பழித்தல் இயல்பேனும், அவள், தன் குடித்தகுதியால் அடக்கம் பேணுகின்றனள்; பரத்தையோ தன் இளமைச் செவ்வியும் தலைவியின் புதல்வற்பெற்ற தளர்ச்சி நலிவும் ஒப்பிட்டுத் தலைவியைப் பழித்தனள். இதற்குக் காரணமானவன் தலைவனே என்று தலைவி மனம் நொந்து கூறியதுமாம்.
உள்ளுறை: சிறப்பில்லாத சேதாம்பல் தாமரை போல மலரும் ஊரன் என்றது, சிறப்பற்ற பரத்தையும் தான் தலைவனுக்கு உரிமையாட்டி போலத் தருக்கிப் பேசுவாளாவள் என்பதைச் சுட்டிக் கூறியதாம்.
69. கண்டனம் அல்லமோ!
துறை: தலைமகன், பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையைக் களவில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள், தனக்கில்லை என்று அவன் மறைத்துழிச் சொல்லியது.
(து.வி: தலைவனின் பரத்தைமையுறவை அறிந்தாள் தலைவி. அவள் கேட்கவும், தலைவன் 'அவ்வொழுக்கம் தனக்கில்லை' என்று உறுதிபேசி மறுக்கின்றான். அப்போது தலைவி அவனுக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
கண்டனெம் அல்லமோ, மகிழ்ந! நின்பெண்டே?
பலராடு பெருந்துறை, மலரொடு வந்த
தண்புனல் வண்டல் உய்த்தென
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே!
தெளிவுரை: மகிழ்நனே! பலரும் கூடியாடுகின்ற ஆற்றுப் பெருந்துறையினிடத்தே, மலரோடும் பெருகி வந்த தண்ணிய புனலானது தான் அமைத்த வண்டலை அடித்துக் கொண்டு போயிற்றென, தன் மையுண்ட கண்கள் சிவப்படையுமாறு அழுது நின்றாளே, அவள் நின் பெண்டே அன்றோ! அவளை யாமும் அந்நாட் கண்டேம் அல்லமோ?
கருத்து: 'நின் பெண்டு யாரென்பதை யாம் அறிவோம்' என்றதாம்.
சொற்பொருள்: வண்டல் - மணலாற் கட்டிய சிற்றில். உய்த்தென - கொண்டு போயிற்று என. 'மலரொடு வந்த தண்புனல்'. எனவே புதுப்புனல் என்க. பலராடு பெருந்துறை - பலரும் சேர்ந்து நீராடியபடி இருக்கும் பெரிய நீர்த்துறை.
விளக்கம்: பலராடு பெருந்துறையிலே, வண்டல் இழைத்திருந்த பெண், அது நீரால் அடித்துப் போகப்பட, அது குறித்து உண்கண் சிவப்ப அழுதாள் என்பது, அவளது அறிய இளமைப் பருவத்தினைக் காட்டிக் கூறியதாம். மணல் வீடு அழிதற்கே அவ்வாறு தாங்காதே அழுதவள், நீ மறந்து கைவிட்டால் தாங்குவதிலள்; அதனால் நீயும் அவளிடமே செல்வாயாக என்று புலந்து ஒதுக்கியதுமாம். 'கண்டனெம்' என்றது' முன் நேரிற் கண்டதனை நினைவுபடுத்தியது.
மேற்கோள்: காமஞ்சாலா இளமையோளைக் களவின்கண் மணந்தமை அறிந்தேன் எனத் தலைமகனை நோக்கித் தலைவி கூறியது இது எனக் கற்பியலிற் காட்டுவர் நச்சினார்க்கினியர் - தொல். கற்பு, 6).
70. யாம் பேய் அனையம்!
துறை: பரத்தையரோடு பொழுது போக்கி, நெடிது துய்த்து வந்த தலைமகனோடு, தலைமகள் புலந்து சொல்லியது.
(து.வி: பரத்தையரோடு நெடுநேரம் கலந்திருந்து களித்தபின், தன் வீடு திரும்புகின்றான் தலைவன். அவனிடம், அத்தகவல் அறிந்தாளான தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
பழனப் பன்மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கும்
மாநீர்ப் பொய்கை யாணர் ஊர!
தூயர்; நறியர் - நின் பெண்டிர்;
பேஎய் அனையம், யாம் : சேய் பயந்தனமே!
தெளிவுரை: பழனத்தேயுள்ள பலவான மீன்களையும் பற்றியுண்ட நாரையானது, கழனியிடத்தேயுள்ள மருத மரத்தின் உச்சியிலே சென்று தங்குகின்ற, மிக்க நீர் நிறைந்த பொய்கையினையும், புதுவருவாய்ப் பெருக்கினையும் கொண்ட ஊரனே! யாம் சேயினைப் பெற்றுள்ளேமாதலின், நின் பார்வைக்குப் பேயினைப் போன்றவரே யாவோம்; நின் பெண்டிரான பரத்தையரோ தூய்மையும் நறுமணமும் உடையவராவர்!
கருத்து: 'அதுபற்றியே போலும் நீயும் அவரை நாடிச் சுற்றுவாய்' என்றதாம்.
சொற்பொருள்: பழனம் - ஊர்ப் பொது நிலம்; எப்போதும் நீர்ப்பெருக்கு உடையதாகிப் பலவகை மீன்கள் செழித்திருக்கும் வளம் பெற்றது ஆகும். அருந்த - அருந்திய. சேக்கும் - சென்று தங்கியிருக்கும். கழனி - வயல். சென்னி - உச்சி. மாநீர் - மிகுநீர். கருமையான நீரும் ஆம். தூயர் - மகப் பெற்றாரிடம் எழும் பால்நாற்றம் இல்லாதவர். நறியர் - நறுமணப் பொருள்களால் தம்மைப் புனைந்துடையோர். பேஎய் - வெறுக்க வைக்கும் உருவம் உடையதாகச் சொல்லப்படுவது: மெலிந்த மேனியும், குழிந்த கண்களும், ஒப்பனையிழந்து, பால்முடை நாறும் மார்பமும் கொண்டவள் தான் என்பது தோன்றக் கூறியது.
விளக்கம்: 'நின் கண்ணுக்கு யாம் பேய் அனையம்' எனினும், நின்குடிக்கு விளக்கம் தரும் புதல்வனைப் பெற்றுத் தந்த தகுதியும் உடையோம்' எனத் தன் தாய்மைப் பெருமிதம் தோன்றக் கூறியதாம். 'தூயர் நறியர்' என்றது, உடலால் தூயரேனும் மனத்தால் தூயரல்லர்; புனைவுகளால் நறியரேனும் பண்பால் நறியரல்லர் என்றதாம்.
உள்ளுறை: பழனப் பன்மீனுண்ட புலவு நாற்றத்தையுடைய நாரையானது. கழனி மருதின் சென்னிடத்தே சென்று தங்குமாறு போல, பரத்தையரோடு கலந்துறவாடிக் களித்த நீதானும், இப்போது சிறிதே இளைப்பாறுதலின் பொருட்டாக, எம் இல்லத்திற்கும் வந்தனை போலும் என உள்ளுறையாற் கூறினள்.
இழிந்த புலால் உண்ணும் நாரைக்கு, உயர்ந்த மருதின் சென்னி தங்குமிடம் ஆயினாற்போல, பரத்தையருறவே விரும்பிச் செல்லும் நினக்கும், மகப்பயந்து உயர்ச்சிகண்ட எம்மனைதான் தங்கிப் போகும் இடமாயிற்றோ என்பதும் ஆம்.
காதல் மனைவியோடு கலந்தின்புற்றுக் களித்த தலைவன், அவள் மகப் பெற்றுள்ள நிலையிலே, இன்ப நாட்டம் தன்பால் மீதூறலினாலே தளர்ந்த மனத்தினனாகி, இவ்வாறு பரத்தையர்பாற் செல்வதும், பின்னர் திருந்துவம் இயல்பாகக் கொள்க.
8. புனலாட்டுப் பத்து
இப்பகுதியில் அமைந்துள்ள பத்துச் செய்யுட்களும், மருத நிலத்தாரின் புனலாட்டும், அதன் கண்ணே நிகழும் செய்திகளும் கொண்டிருப்பன. தலைமகன் பரத்தையரோடு கூடிப் புனலாடினான் எனக் கேட்டுத் தலைமகள் புலந்து கூறுவதும், அவள் பொருட்டுத் தோழி கூறுவதும் மிகவும் நுட்பமான பொருட்செறிவு கொண்டனவாகும். அதனால், இதனைப் புனலாட்டுப் பத்து என்றனர்.
71. ஞாயிற்றொளியை மறைக்க முடியுமோ?
துறை: 'பரத்தையரோடு புனலாடினான்' எனக் கேட்டுப் புலந்த தலைமகள், தலைமகன் அதனை இல்லை என்று மறைத்துழிச் சொல்லியது.
(து.வி: 'பரத்தையரோடு நேற்று நின் தலைவன் புதுப்புனலாடி இன்புற்றான்' என்று, தலைவியிடம் கண்டார் பலரும் வந்து கூறிப் போகின்றனர். அதனால், அவள் உள்ளம் நொந்து மிகவும் வாடியிருந்தாள். அப்போது, அவள்பால் வந்த தலைவனிடம் அதுபற்றிக் கேட்க, அவன் இல்லவே இல்லை என மறைத்துப் பேசுகின்றான். அப்போது, தலைவி சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
சூதார் குறுந்தொடிச் சூர் அமை நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ, நெருநை
ஆடினை என்ப, புனலே; அலரே
மறைத்தல் ஒல்லுமோ, மகிழ்ந?
புதைத்தல் ஒல்லுமோ, ஞாயிற்ற தொளியே!
தெளிவுரை: மகிழ்நனே! உள்ளே துளைபொருந்திய குறியவான தொடிகளையும், அச்சம் பொருந்திய அசை வினையுமுடைய, நின் விருப்பத்திற்குரிய காதலியைத் 'தழுவினவனாக, நீயும் நேற்றைப் போதிலே புதுப்புனலாடினை என்பார்கள். ஞாயிற்றினது விரிந்து பரவும் ஒளியினை எவராலும் யாதாலும் மறைத்தல் முடியுமோ? அதுபோலவே, நீ புனலாடியதாலே எழுந்த பெரும் பழியினையும், நின் மாயப் பேச்சுக்களாலே நின்னால் மறைத்தற்கு இயலுமோ?'
கருத்து: 'நின் பொய்யுரை வேண்டா! யாம் உண்மை அறிவேம்' என்றதாம்.
சொற்பொருள்: சூதார் குறுந்தொடி - உள்ளே துறையுடையதாகச் செய்யப் பெற்ற குறுந்தொடி; சூதான சிந்தையோடு ஒலிக்கும் குறுந்தொடிகளும் ஆம். சூர் - அச்சம், சூர் அமை நுடக்கம் - துவண்டு நடக்கும் நடையழகால் ஆடவரைத் தம் வலைப்படுத்து அழித்தலால், இவ்வாறு அச்சம் அமைந்த அசைவு என்றனர். புதைத்தல் - மூடி மறைத்தல்.
விளக்கம்: ஞாயிற்றின் ஒளியை எவராலுமே மறைக்க வியலாதே போல, அதுதான் எங்கும் பரவி நிறைவதேபோல, நீ பரத்தையருடனே புனலாடினதால் எழுந்த பழிப்பேச்சும் எவராலும் மறைத்தற்கியலாததாய் எங்கும் பரவிப் பெரும்பழி ஆயிற்று; அதனை நின் மாயப் பேச்சால் மறைத்து மாற்ற வியலாத் என்கிறாள் தலைவி. 'ஞாயிற்று ஒளியை மறைத்தல் ஒல்லுமோ?' என்றது, நீ கலந்து புனலாடினையாதலின், நின்னை ஊரவர் யாவரும் அறிவாராதலின், அதனை நின்னால் மூடி மறைக்க இயலாது என்றதும் ஆம். அலர் அஞ்சியேனும் அவன் அவ்வாறு நடந்திருக்க வேண்டாம் என்பது அவள் சொல்வது; இது, அவன் புறத்தொழுக்கத்தோடு, ஊரறிந்த பழிப்பேச்சும் உள்ளத்தை வருத்தக் கூறியதாம்.
72. எமக்குப் புணர்துணை ஆயினள்!
துறை: தலைமகள் புலவி நீக்கித் தன்னோடு புதுப்புனல் ஆட வேண்டிய தலைமகன், களவுக் காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது.
(து.வி: தலைவன் பரத்தையரோடு புனலாடினான் எனக் கேட்டு, அவனுடன் ஊடியிருந்தாள் தலைவி. தலைவன் அஃதறிந்து வந்து, அவளைத் தன்னோடு புனலாட, வருமாறு அழைக்க, அவள் மறுக்கின்றாள். அப்போது அவன், தோழிக்குச் சொல்வதுபோல, தலைவியும் கேட்டு மனங் கொள்ளுமாறு, முன்னர்க் களவுக்காலத்தே, தான் அவளோடு புதுப்புனல் ஆடியது பற்றிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
வயன்மலர் ஆம்பல் கயிலமை நுடங்குதழைத்
திதலை அல்குல், துயல்வரும் கூந்தல்,
குவளை உண்கண், ஏஎர் மெல்லியல்
மலரார் மலிர்நிறை வந்தெனப்
புனலாடு புணர்துணை யாயினள், எமக்கே.
தெளிவுரை: வயலிடத்தே மலர்ந்த ஆம்பலாலே தொடுக்கப் பெற்றதும், மூட்டுவாய் கொண்டதுமான, அசைகின்ற தழையுடையினையும், திதலை படர்ந்த அல்குலையும், அசைந்தாடும் கூந்தலையும், குவளை மலர் போன்ற மையுண்ட கண்களையும் கொண்ட, அழகிய மெல்லியலாளான இவள், மலர் மிகுந்த புதுவெள்ளம் ஆற்றிலே பெருகி வந்ததாக, அதன் கண்ணே புனலாட்டயர்தற்கு, என்னோடும் இணைந்திருக்கும் துணையாகப் பண்டு விளங்கினவளே காண்!
கருத்து: அவள், 'இப்போதும் மறுக்கமாட்டாள்' என்றதாம்.
சொற்பொருள்: வயன் மலர் ஆம்பல் - வயலிடத்தே செழித்து மலர்ந்திருந்த ஆம்பல்; கயில் - மூட்டுவாய்; தழையுடையை இடுப்பில் இணைத்துக் கட்டுதற்கு உதவும் பகுதி. நுடங்கல் - அசைதல். ஏஎர் - அழகு. மெல்லியல் - மென்மைத் தன்மை கொண்டவள்; என்றது தலைவியை. மலரார் - மலர்கள் மிகுதியான. மலர்நிறை - புதுவெள்ளம். புணர்துணை - உடன் துணை.
விளக்கம்: பலரறி மணம் பெறுமுன்பே அவ்வாறு என் மேலுள்ள காதலன்பாற் புனலாட வந்தவள், அலரினைப் பற்றியும் நினையாதவள், இப்போது என் உரிமை மனையாளான பின் வராதிருப்பாளோ என்றதாம். அவள் அழகுநலம் எல்லாம் கூறினான், இன்றும், தான் அவற்றையே அவளிடம் காண்பதாகக் கூறி, தான் பிறரைச் சற்றும் நினையாதவன் எனத் தெளிவித்தற்காம்.
மேற்கோள்: 'இது தலைவி புலவி நீங்கித் தன்னோடு புனலாட வேண்டிய தலைவன், முன்பு புனலாடியதனை அவள் கேட்பத் தோழிக்கு உரைத்தது' என, இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். பொ, 191).
73. குவளை நாறிய புனல்!
துறை: மேற்பாட்டின் துறையாகவே கொள்க.
வண்ண ஒண்தழை நுடங்க, வாலிழை
ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்,
கண்ணறுங் குவளை நாறித்
தண்ணென் றிசினே - பெருந்துறைப் புனலே!
தெளிவுரை: அழகிய ஒளிகொண்ட தழையுடையானது அசைந்தாட, தூய அணிகளையும் ஒள்ளிய நுதலையும் கொண்ட அரிவையானவள், புனல் விளையாட்டிடத்தே பெருந்துறைப் புனலிலே பாய்ந்தாளாக, அந்நீரும் இவள் கண்ணென்னும் நறிய குவளை மலரின் மணத்தை உடையதாகித், தண்ணிதாகியும் குளிர்ந்து விட்டதே!
கருத்து: 'அவள் இப்போதும் என்னுடன் வர மறுப்பதிலள்' என்றதாம்.
சொற்பொருள்: வண்ணம் - அழகு; பல வண்ணமும் ஆம். ஒண்தழை - ஒளி செய்யும் தழையுடை; ஒளி செய்தல், பெரும்பாலும் தளிராலே தொடுக்கப்படலால்; வெண்தழை என்றும் பாடம். வாலிமை - தூய்மை. பண்ணை - விளையாட்டு.
விளக்கம்: இவள் புனலாட நீரிற் குதித்தபோது, நீரும் இவள் குவளைக் கண்ணின் சேர்க்கையால் குவளைநாறி, இவள் மேனியின் தொடர்பால் தண்ணென்றாயிற்று எனப் போற்றிப் புகழ்ந்து உரைக்கின்றனன். இதனால் மனம் பழைய நினைவிலே தாவிச் சென்று மகிழத், தலைவியும் தன் புலவி நீங்கித் தலைவனோடு புனலாடச் செல்வாள் என்பதாம்.
மேற்கோள்: இஃது உருவுவமப் போலி; நீ புனலாடிய ஞான்று பரத்தை பாய்ந்தாடிய புனலெல்லாம் தண்ணென்ற தெனக் கூறியவழி, அத்தடம்போல, இவள் உறக்கலங்கித் தெளிந்து தண்ணென்றாள் என்பது கருதி உணரப்பட்டது. அவளோடு புனல்பாய்ந் தாடிய இன்பச் சிறப்புக் கேட்டு நிலையாற்றாள் என்பது கருத்து என்பர் பேராசிரியர். (தொல். உவம, 25)
74. விசும்பிழி தோகை!
துறை: மேற்சொய்யுளின் துறையே இதுவும்.
விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே!
தெளிவுரை: பசும் பொன்னாலான ஒளியணிகள் விட்டு விட்டு ஒளிசெய்ய, கரையைச் சேர்ந்திருந்த மருத மரத்திலே ஏறி, நீர் விளையாட்டயரும் இடத்தே மேலிருந்தே பாய்பவளின் - அஃதாவது இத்தலைவியின் - குளிர்ந்த நறிய கூந்தலானது, விசும்பிலிருந்து இழியும் தோகை மயிலது சீரைப் போன்று இருந்ததே!
கருத்து: 'அத்துணை அழகியாளை மறப்பேனோ' என்றதாம்.
சொற்பொருள்: விசும்பு - வானம். இழிதல் - மேலிருந்து கீழாக இறங்கல். 'தோகை' என்றது, தோகையுடைய ஆண் மயிலை. சீர் - சிறந்த அழகு. 'பசும்பொன்' - மாற்றுயர்ந்த பொன். அவிரிழை - ஒளிசிதறும் அணிவகைகள். பைய - மெல்ல. நிழற்ற - ஒளி செய்ய. கரைசேர் மருதம் - கரையிடத்தே வளர்ந்துள்ள மருத மரம். பண்ணை - மகளிர் நீர் விளையாட்டு நிகழ்த்தும் இடம். பாய்தல் - மேலிருந்து குதித்தல். கதப்பு - கூந்தல்.
விளக்கம்: களவுக் காலத்தே அவளுடன் மகிழ்ந்தாடிய நீர் விளையாடலை நினைப்பித்து, அவள் மணத்தைத் தன்னிடத்தே அன்பு கனிந்து நெகிழுமாறு திருப்ப முயல்கின்றான் தலைவன். இளம் பெண்கள் இவ்வாறு மரமேறிக் குதித்து நீர் விளையாட்டயர்தலை, இக்காலத்தும் ஆற்றங்கரைப் பக்கத்து ஊர்களிற் காணலாம். சுனைகளிலும் கிணறு குளங்களிலும் கூட இவ்வாறு குதித்து நீராடுவர். பெண்கள் கூந்தலை மயிலின் தோகைக்கு ஒப்பிடல் மரபு என்பதனை, 'கலிமயிற் கலாவத்தன்ன இவள் ஒலிமென் கூந்தல்' என்னும் குறுந்தொகையிலும் காணலாம். (குறுந். 225) கூந்தலை வியந்தது அதுவே பாயலாகக் கூடியின் புற்றதும், அதனைத் தடவியும் கோதியும் மகிழ்ந்ததுமாகிய பண்டை நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தி, தன் பெருங் காதலை அவளுக்கு உணர்த்தியதுமாம்.
மேற்கோள்: தலைவி புலவி நீங்கித் தன்னோடு புனலாடல் வேண்டிய தலைவன், முன் புனலாடியதனை, அவள் கேட்பத் தோழிக்கு உரைத்தது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். கற்பு, 50).
75. இவண் பலர் ஒவ்வாய்!
துறை: பரத்தையோடு புனலாடி வந்த தலைமகன், அதனை மறைத்து கூறிய வழித் தோழி கூறியது.
(து.வி: பரத்தையோடு புனலாடினான் தலைவன் என்பது கேட்டுத் தலைமகள் புலந்திருக்கின்றாள். அதனை உணர்ந்த தலைவன், அவ்வாறு அவர்கள் நினைப்பது பொய்யானது என்று கூறுகின்றான். அப்போது தோழி, அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
பலரிவண் ஒவ்வாய், மகிழ்ந! அதனால்,
அலர் தொடங்கின்றால் ஊரே; மலர
தொன்னிலை மருதத்துப் பெருந்துறை,
நின்னோடு டாடினள், தண்புனல லதுவே.
தெளிவுரை: மகிழ்நனே! மலர்களைக் கொண்டவும், பழமையான நிலைமைத்தாகியவுமான மருத மரங்கள் நிறைந்த பெருத்துறையினிடத்தே, ஒருத்தி நின்னோடும் கூடிக் குளிர்ந்த புதுப்புனலிலே புனலாட்டயர்ந்தனள். அதனாலே அவளையும் நின்னையும் சேர்த்து ஊரிடத்தே அலர் எழுதலும் தொடங்கி விட்டது. ஆகவே, இவ்வூர் ஆடவர் பலருடமும், நீதான் நின் புறத்தொழுக்கத்தாலே தாழ்வுற்று, அவர்க்கு ஒவ்வாதாய் ஆயினை - அஃதாவது பழியுடையாய் ஆயினை!
கருத்து: 'ஆதலின் நின்னுடன் புனலாடத் தலைவி வருதல் இலள்' என்றதாம்.
சொற்பொருள்: பலர் - பலரான ஆடவர். ஒவ்வாய் - ஒப்பாகாய்; அவரெல்லாம் தத்தம் மனைவியரையன்றி, நின்போற் காமத்தால் அறியாமைப் பட்டுப் பரத்தையருடன் ஆடி மகிழும் பண்பற்றவர் அல்லராதலின், பின் மறுத்துப் பொய்யுரை பகர்வோரும் அல்லர். ஆகவே, நீ அவர்க்கு ஒப்பாகாய் என்றனள். தொன்னிலை மருதம் - நெடுங் காலமாகவே ஆற்றங்கரையில் நின்று நிழல் செய்யும் மருத மரங்கள்.
விளக்கம்: 'பரத்தையோடு புனலாடினை' எனத் தோழி சொல்ல, அது உண்மையேயாயினும், அதனை மறுத்துப் பேசிச் சாதிக்க முயல்கின்றான் தலைவன். அவன் பொய்ம்மையை மறுத்துத் தோழி இவ்வாறு கூறுகின்றனள். கண்டாரும் பலர்; ஊரிடத்தே அலரும் எழுந்து பரவுகின்றது; இனியும் மறைப்பது பயனில்லை என்றது இது. ''தொன்னிலை மருதத்து பெருந்துறை'' என்றது, வையையின் திருமருத முன்துறையைச் சுட்டுவதுமாகலாம். செயலும் பழிபட்டது. அதனை ஏற்று வருந்தித் திருந்தும் தெளிவின்றிப் பொய்யும் உரைப்பாய்; நீ நாணிலி; எம்மால் ஏற்கப்படாய் என்பது கருத்து.
76. அந்தர மகளிரின் தெய்வம்!
துறை: மேற்செய்யுளின் துறையே.
பைச்ஞாய்க் கூந்தல், பசுமலர்ச் சுணங்கின்
தண்புன லாடித், தன் னலமேம் பட்டனள்
ஒண்தொடி மடவரல், நின்னோடு,
அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.
தெளிவுரை: பஞ்சாயக் கோரை போன்ற கூந்தலோடும் பசுமலர் போலும் சுணங்கினையும் கொண்டவள் ஒருத்தி. ஒள்ளிய தொடியணிந்த மடவரலான அவள், நின்னோடும் குளிர் புனலிலே நீராட்டயர்ந்து, அந்தர மகளிர்க்குத் தெய்வமே போன்ற கவினையும் செற்றுத், தன் நலத்திலேயும் மேம்பட்டவளாயினளே!
கருத்து: 'ஊரறிந்த இதனையுமோ மறைக்க முயல்கின்றனை' என்றதாம்.
சொற்பொருள்: பஞ்சாய்க் கோரை ஒருவகை நெடுங்கோரை; பசுமையான தண்டுள்ளது. பசுமலர்ச் சுணங்கு - புதுமலர் போலும் தேமற்புள்ளிகள்; பசு - பசும்பொன்னைக் குறித்துச் சுணங்கின் பொன்னிறத்தைச் சுடக்கும். அந்தர மகளிர் - வானமகளிர். என்றது தேவலோகத்து மகளிரை. தெய்வம் - அவர் போற்றும் தெய்வம்.
விளக்கம்: தலைமகனோடு புனலடிய களிப்பால் பேரழகு பெற்றுச் சிறந்தாளின் வனப்பைக் கண்டு, அந்தர மகளிரும் மயங்கி, அவளை நீருறை தெய்வமோ எனக் கொண்டு போற்று வாராயினர் என்பது, பரத்தையைப் புகழ்வதே போல இகழ்ந்து கூறியதாம். பரத்தை தலைவனோடு புனலாடி நலத்தால் மேம்பட்டுத் தெய்வமாயினாள் என்றது. அவன் காதற் பரத்தையாகியதால், பிறரால் மதித்துப் போற்றப் பெறும் நிலைக்கு உயர்ந்தாள் என்றதுமாம். ஆகவே, அவளுள்ள போதிலே, நீதான் இங்கு வந்து வேண்டுதல் எதற்கோ என்று மறுப்புக் கூறியதுமாம்.
77. செல்லல் நின் மனையே!
துறை: முன்னொரு ஞான்று தலைவியோடு புனலாடினாள் எனக் கேட்டு, 'இவனுடன் இனி ஆடேன்' என உட்கொண்ட பரத்தை, புதுப்புனல் ஆடப்போது என்ற தலைமகற்குச் சொல்லியது.
(து.வி: ஊடுதலும் ஒதுக்குதலும் பரத்தையர்க்கும் உள்ளனவே. 'தலைமகன் தன் மனைவியோடு கூடிப் புனலாடினான்' என்று கேட்டு, அதனால் மனமாறுபட்டிருந்த அவன் பரத்தை, 'அவன் நீராடிவரப் புறப்படுவாய்' என்று அவளை அழைக்கவும், மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
அம்ம வாழியோ, மகிழ்ந! நின் மொழிவல்;
பேரூர் அலரெழ நீரலைக் கலங்கி,
நின்னொடு தண்புனல் ஆடுதும்;
எம்மொடு சென்மோ; செல்லல்நின் மனையே!
தெளிவுரை: மகிழ்நனே! நீதான் வாழ்வாயாக. நினக்கு யாம் சொல்லும் இதனையும் கேட்பாயாக. இப் பேரூர் முற்றவும் அலருரை எழுமாறு, நீர் அலைத்தலாலே சுலங்கி, நின்னோடு கூடியவராக யாமும் குளிர் புனல் ஆடுவோம்; நின் மனைக்கு மட்டும் இனிச் செல்லாதே; எம்மோடு எம்மனைக்கே வருவாயாக!
கருத்து: 'எம்மை விரும்பின், நின் மனைக்குப் போதலைக் கைவிட வேண்டும்' என்றதாம்.
சொற்பொருள்: மொழிவல் - சொல்வேன். நீரலைக் கலங்கி - நீரலைத்தலாற் கலங்கி, சென்மோ - செல்வாயாக; மோ : முன்னிலை அசை.
விளக்கம்: இது பரத்தைக்குத் தலைவன் மீதுள்ள பற்றுக் கோட்டு மிகுதியைக் காட்டுவதாகும். 'செல்லல் நின் மனை' என்று சொல்லுமளவு அவள் பிடிப்பு வலுத்து விட்டது. 'நீரலைப்பக் கலங்கி வருந்துவோமாயினும், நீ எம்மோடு துணையாகவரின், நின்னோடு தண்புனல் ஆடுதும்' என்கின்றாள். 'நினக்காக ஆடுதும்' என்பது கருத்து. 'செல்லல் நின் மனையே' எனப் பரத்தை சொல்லக் கேட்கும் தலைவன், அதுதான் தன் பெருந்தகுதிக்கு ஏலாமையின், அப்பரத்தையின் உறவை மறந்து, அவளைக் கைவிட்டு அகலுவான் என்பதும், இதனால் சிலசமயம் நிகழக் கூடியதாகும்.
78. எம்மொடு கொண்மோ!
துறை: இச் செய்யுளும் மேற்செய்யுளின் துறையையே கொண்டதாகும்.
கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த,
சிறையழி புதுப்புனல் ஆடுகம்;
எம்மொடு கொண்மோ, எம் தோள்புரை புணையே.
தெளிவுரை: ஒளிவீசும் இலையையுடைய நெடுவேலையும், கடிதாகச் செல்லும் குதிரையையும் கொண்டவன் கிள்ளி. அவனது பகைவரின் ஊர்மதிலை மோதியழிக்கும் போர்க்களிறே போலத், தான் விரையச் செல்லும் வழியிடையே குறக்கிடும் தடையை மோதி அழித்துச் செல்லும் வேகமுடைய புதுப் புனலிலே, எம் தோள்களை நிகர்க்கும் புணையைப் பற்றி, எம்மோடு புதுப்புனலாடுலையும் நீ மேற்கொள்வாயாக!
கருத்து: 'எம்முடன் புனலாட வருக' என்றதாம்.
சொற்பொருள்: இலை - இலைவடிவான வேல் முனை; கதிரிலை - ஒளிவீசும் வேல்முனை. கடுமான் - கடிதாகச் செல்லும் விரிவுடைய குதிரை; 'கடுமான் கிள்ளி' - ஒருவனது பெயரும் ஆம். கதழ்பு - விரைவு. இறை - தடை; அணை போல்வது. கொண்மோ - எம்மோடு புணை கொள்வாயாக.
விளக்கம்: 'கடுமான் கிள்ளி', சோழர்குல வேந்தன் ஒருவனின் இயற்பெயர் எனவும், அவன் வேற்போரிலே ஆற்றல் மிக்கானாதலின், 'கதிரிலை நெடுவேற் கிள்ளி' என்று போற்றப் பெற்றான் எனவும் கருதலாம். இவன் பகைவர் கோட்டைகள் பலவற்றைக் கைப்பற்றியவன்; அதற்கு உதவியது இவனுடைய வலிமுகுந்த யானைப்படை; அது சீற்றத்தோடு செல்லும் வேகத்திற்குச் சிறையழி புதுப்புனலை இங்கே உவமித்துள்ளனள். 'சிறை' - அணை; நிரைத் தடுத்து நெறிப்படுத்தும் அமைப்பு; இதை உடைத்துச் செல்லும் வேகமிக்கது புதுப்புனல் என்பது கருத்து.
உள்ளுறை: மதிலழிக்கும் களிறு போன்ற சினத்தோடு, குறுக்கிடும் சிறையழித்துச் செல்லும் புதுப்புனல் என்றது, சூளுரைத்துத் தன்னைக் கூடிய தலைவன், அதனையழித்துப் புதுக் காமத்தோடு தலைவியை நாடிச் சென்ற தன்மையை உள்ளுறத்துக் கூறியதாகும். கட்டுமீறித் தன்போக்கிற் செல்லும் இயல்பினன் அவன் என்று பழித்துக் கூறியதாம். அதனை விலக்க நினைப்பவள், 'புதுப்புனலாடலை எம்மோடுங் கூடிக் கொள்க' என்கின்றனள்.
மேற்கோள்: 'காமக் கிழத்தி, நின் மனைவியோடன்றி எம்மொடு புணைகொள்ளின் யாம் ஆடுதும் என்று புனலாட்டிற்கு இயைந்தாள் போல மறுத்தது' என்று காட்டுவர், ஆசிரியர் நச்சினார்க்கினியர். (தொல். கற்பு, 50).
79. யார் மகள் ஆயினும் அறியாய்!
துறை: தன்னொடு கூடாது தனித்துப் புனலாடுகின்றான் எனக் கேட்டு, தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை, தானும் தனியே போய்ப் புனலாடினாளாக, அவளை ஊடல் தீர்த்தற் பொருட்டாகத் தலைமகன் சென்று, தான் அறியான் போல நகையாடிக் கூறிக் கைப்பற்றிய வழி, அவள் தோழி சொல்லியது.
(து.வி: தலைவன் தனியாகப் புனலாடியனான்; அதுகண்டு ஊடிய பரத்தை, தானும் தனியாகவே ஒருபுறமாகப் புனலாடினாள். அதனைப் பார்த்தவன். அவள் ஊடலைத் தீர்த்தற் பொருட்டு, தான் ஏதும் அற்யான்போல அவள் கைப்பற்றிப் புனலாடுதற்கு வருமாறு அழைக்கின்றான். அப்போது அவள் தோழி சொல்லியதாக அமைந்தது இது.)
'புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்,
யார் மகள் இவள்?' எனப் பற்றிய மகிழ்ந!
யார் மகள் ஆயினும் அறியாய்;
நீ யார் மகனை, எம் பற்றி யோயே?
தெளிவுரை: 'புதுப்புனலிலே ஆடிச் சிவந்த கண்களை உடையவளான இவள் யார் மகள்?' என்று சொல்லியபடியே கைப்பற்றிய தலைவனே! இவள் யார்மகள் ஆயினும், நீதான் அறியமாட்டாய்; ஆயின், எம்மை வந்து பற்றியவனே, நீதான் யாவர் மகனோ?' என்பதாம்.
கருத்து: 'நீ எமக்கு அயலானே போல்வாய்' என்று கூறி ஒதுக்க முயன்றதாம்.
சொற்பொருள்: அமர்ந்த கண் - சிவந்த கண். அறியாய் - அறிய மாட்டாய். 'எம்' என்றது பரத்தையை உளப்படுத்திக் கூறியது.
விளக்கம்: 'யார் மகள் இவள்?' எனக் கேட்டவாறு கைப்பற்றியவன் ஆதலின், முன்பே தொடர்புடையவன் என்பதும், 'யார் மகள்?' என்றது அறியான் போல வினாவியது என்பதும், அது அவளிடம் பழைய உறவை நினைவுறுத்தித் தெளிவித்தற் பொருட்டு என்பதும் உணரப்படும். 'நீ யார் மகன்?' என்று தோழி வினாயது, அறிந்தும் அறியான் போல வினாவுகிற நீதான், நின்னை மறைத்துப் பேசுதலின், 'யாவர் மகனோ?' எனக் கேட்டதாம். 'பண்பாட்டி பெற்ற மனகல்லை' என்றதாகக் கருதுக.
'புதுப்புனலாடி அர்த்த கண்ணள்' என்றது, 'முன் கலவிக்களியாலே சிவந்த கண்ணளாகியவள்' என்று, பழைய களவுக் காலத்து உறவை நினைப்பித்ததுமாம்.
80. நின் கண் சிவந்தன!
துறை: ஒழியப் புதுப்புனலாடித் தாழ்ந்துவந்த தலைமகனோடு, தலைமகள் புலந்து சொல்லியது.
(து.வி: தன்னை உடனழைத்துப் போய்த் தன்னுடன் புனலாடி மகிழாமல், தான் மட்டுமே தனியனாகச் சென்று, அங்கு நீராடிய பரத்தையருடன் நெடுநேரம் கூடிப் புனலாடி வீடு திரும்புகின்றான் தலைவன். அவனின் சிவந்த கண்களையும், அவன் நீராடிவந்துள்ள நிலையையும் கண்டு, புலவி கொண்ட தலைமகள் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
புலக்குவேம் அல்லேம்; பொய்யாது உரைமோ;
நலத்தகை மகளிர்க்குத் தோள்துணை யாகித்,
தலைப்பெயற் செழும்புனல் ஆடித்
தவநனி சிவந்தன, மகிழ்ந! நின் கண்ணே.
தெளிவுரை: மகிழ்நனே! யாம் நின்பாற் புலவி கொள்ளவே மாட்டேம். அதனால், பொய்யாக மறைக்காது உண்மையையே உரைப்பாயாக. அழகு நலத்திலே சிறந்தாரான மகளிர்க்கு, அவரைத் தாங்கும் தோள்தரும் துணையாக அமைந்து, முதற்பெயலாலே பெருகி வந்த புதுப்புனலிலே நீராடினதால், நின் கண்கள் இப்போதில் மிகமிகச் சிவந்துள்ளனவே!
கருத்து: 'நீதான் பரத்தையரோடு கூடிப் புதுப்புனலாடிக் களித்தனையாய் வருகின்றனை' என்றதாம்.
சொற்பொருள்: புலக்குவேம் - புலவி கொள்வேம். நலத்தகை - அழகு நலங்களின் சிறப்பு; இயல்பான எழிலும், புனைவாலே பெற்ற எழிலும் சிறப்பாக அமைந்த தகுதிப்பாடு; யாம் மகப் பயந்தேமாக, அஃதற்றேம் என்று, தன் குடிமைப் பெருமிதம் உள்ளுறுத்திக் கூறியதுமாம். தோள் துணையாகி - தோள்கள் தெப்பமாக அவரைத் தாங்கும் துணையாக விளங்க. தலைப்பெயல் - முதல் மழை. தவநனி - மிக மிக.
விளக்கம்: நீரிடத்தே நெடுநேரம் ஆடிக் களிப்பின் கண்கள் சிவப்படையும் என்பதை, அகம் 278, 312, குறுந்தொகை 354 செய்யுட்களுள்ளும் கூறப்படுவதாலும், அநுபவத்தாலும் அறியலாம். இயல்பாகவே நெடுநேரம் புதுப்புனலாடிக் கண் சிவக்க வீடு வந்திருந்த தலைவனிடம், தலைவி, இவ்வாறு பதைத்துக் கூறிப் புலவி கொண்டனள் என்பதும் பொருந்தும். 'தலைப் பெயல்' என்பது 'கன்னி மழை' என்னும் காலத்தின் முதல் மழையைக் கூறிக்கும். 'செழும்புனல்' என்பதற்குச் 'செம்புனல்' என்றும் பாடபேதம் கொள்வர்; அது சிவந்த புனல் என்றும், பெரும்புனல் என்றும் பொருள் தரும். இனிக் கூடலிலே பரத்தையோடு இன்புற்று, அப்புணர்குறிகளோடு வீடு வந்தானிடம் ஊடிய தலைவி, அவன் புனலாடிக் கண்சிவந்தேன் எனப் பொய்ம்மைகூற, அவள் தான்றிந்தமை கூறிப் பொய்த்தல் வேண்டாவெனக் கூறியதாகவும் கொள்ளலாம். அவனை வெறுத்தற்கு இயலா மனத்தள் தலைவியாதலின்.
இப் புதுப்புனலாடல், பழைய நாளிலே ஒரு விழாவாகவே கொள்ளப் பெற்றது. கணவனும் மனைவியும் கைகோர்த்தே புனலாடல் இன்றும் மரபாகத் தென்னாட்டில் விளங்கி வருகின்றது. ஆகவே, மனைவியோடு சேர்ந்து புனலாடற்குரியவன், பரத்தையோடு கூடிக் களித்தாடின், அது பழியாகக் கொள்ளப்பட்டது என்க.
9. புலவி விராய பத்து
இத் தலைப்பின் கூழ் வருவன பத்துச் செய்யுட்களும் புலவி பொருளாகத் தலைவியும் தோழியும் பரத்தையும் கூறுவனவாக அமைந்துள்ளன. புலந்து கூறி வாயில் மறுத்தலும் இவ்வற்றுட் காணப்படும். ஆகவே, புலவி விராய பத்து எனப் பெற்றது.
81. மனையோள் வருந்துவள்!
துறை: 'தன்னைக் கொடுமை கூறினாள் தலைமகள்' என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
(து.வி: 'தன்னைப் பற்றித் தலைவி கொடுமை கூறினாள்' என்று கேட்ட பரத்தைக்குத் தலைவியின் மீது சினம் உண்டாகின்றது. எனினும், தலைவியைப் போலத் தனக்கு உரிமைப் பிடிப்பு இல்லாததனையும் அவள் மறந்தளில்லை, உள்ளம் பதறித் துடித்தவாறிருக்கின்றாள். அவ்வமயம், தலைவன் வந்து, அவள் முகம் கொடாமை கண்டு, அவள்பால் தான் கொண்டுள்ள அன்புடைமை பற்றிச் சொல்லி, அவளைத் தெளிவிக்க முயல்கின்றான். அப்போது, அவனுக்குச் சொல்வாள் போலத் தலைவியின் பாங்காயினாரும் கேட்டுணருமாறு, அப்பரத்தை சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,
மலர் அணி வாயில் பொய்கை, ஊர! நீ
என்னை 'நயந்தனென்' என்றி; நின்
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே!
தெளிவுரை: குருகுகள் உடைத்து உண்டு கழித்த வெள்ளிய வயிற்றையுடைய யாமையது இறைச்சியினை, அரிப்பறையை முழக்கும் தொழிலுடையோரான உழவர்கள், தம் மிக்க உணவோடு சேர்த்து உண்ணும், மலர்களால் அழகு பெற்ற நீர்த்துறைகளைக் கொண்ட, பொய்கைகள் விளங்கும் ஊரனே! நீதான் இங்கே வந்தனையாய், 'என்னையும் விரும்பினேன்' என்றும் கூறுகின்றனை. இதனை நின் மனையோள் கேட்டனளாயின், மனம் பொறாதாளாய் மிகவும் வருந்துவள் காண்!
கருத்து: ஆகவே, 'நீயும் என்னை மறத்தலே நன்று' என்றதாம்.
சொற்பொருள்: குருகு - நீர்ப்பறவை. அகடு - வயிறு. அரிப்பறை - அரித்தெழுகின்ற ஓசையுடைய உழவர் முழக்கும் பறை; அறுவடைக்கு முன்னர், வயலை வாழிடமாகக் கொண்ட புள்ளும் பிறவும் அவ்விடம் விட்டு அகன்று போதற் பொருட்டு, உழவர் பறை முழக்குதல் என்பது அருள்மிகுந்த தமிழ் மரபாகும். வினைஞர் - தொழிலர்; உழவர். அல்குமிசை - மிக்க உணவு: இட்டுவைத்து உண்ணும் கட்டுணவும் ஆம். வாயில் - நீர்த்துறை, மனையோள் - மனையாட்டி.
விளக்கம்: குருதினம் உண்டு கழித்த யாமையின் இறைச்சியை உழவர் தம் கட்டுச் சோற்றோடும் கூட்டியுண்பர் என்றது. அவ்வயல்கள் வயலாமைகள் மிக்குவாழும் நீர்வளம் மலிந்தன வென்பதாம். அரிப்பறை ஒலிகேட்டு அவை அகல, உழவர் குருகினம் விட்டுச் சென்ற மிச்சிலைத் தம் உணவோடு கூட்டி உண்பர் என்க. 'மலரணி வாயில் பொய்கை' என்றது, மலரால் அழகு பெற்று விளங்கும் பொய்கை என்றதாம். 'என்னை நீ விரும்பினேன் என்று கூறியதைக் கேட்டால், நின் மனைவி பெரிதும் மனம் வருந்துவாள்' என்றது. 'அவளினும் நீயே எனக்கு மிகவும் விருப்பினள்' என்று கூறுவான் என்பதறிந்து கூறியதாம். அதனைக் கேட்கும் தலைவியின் பாங்கியர் தலைவியிடம் கூற, அவள், தலைவனைத் தன்னாற் கட்டுப்படுத்த இயலாமைக்கு நெஞ்சழிந்து மேலும் நலிவாள் என்பதாம்.
உள்ளுறை: குருகுகள் உண்டுகழித்த யாமையின் இறைச்சியை, உழவர்கள் தம் சோற்றோடு சேர்த்து உண்பது போல, யாம் நுகர்ந்துகழித்த தலைவனைத் தலைவியும் விரும்பி நுகர்வாள் என்று, உள்ளுறைப் பொருள் தோன்றக் கூறியதாம்.
பாடபேதம்: 'வினைஞர் நல்குமிசை' எனவும் பாடம். நல்கு மிசை என்பது, பலர்க்கும் நல்கித் தாமும் உண்ணும் கட்டுணவு. இதற்கு, நின் மார்பினைத் தான் துய்த்தலன்றி, யாமும் துய்த்தற்கு உரிமையுடையோம் என்பதைத் தலைவி அறியாது போயினள் என்றதாம்.
82. வெகுண்டனள் என்ப!
துறை: மனைவயிற் புகுந்த பாணற்கும் தலைமகன் கேட்கு மாற்றல் தலைமகள் சொல்லியது.
(து.வி: பரத்தையுறவினனான தலைமகன், தன் பாணனோடும் தன் வீட்டிற்கு வருகின்றான். வந்தவன், ஆர்வத்தோடு தன் மனைவியை அணுக, அவள், பாணனுக்குக் கூறுவாள் போலத், தலைவனும் கேட்டுணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
வெகுண்டனள் என்ப, பாண! நின் தலைமகள்
'மகிழ்நன் மார்பின் அவிழிணர் நறுந்தார்த்
தாதுண் பறவை வந்து, எம்
போதார் கூந்தல் இருந்தன' வெனவே!
தெளிவுரை: பாணனே! மகிழ்நனது மார்பிடத்தேயுள்ள கட்டவிழ்ந்த பூங்கொத்துக்களோடும் கூடிய நறுமண மாலையிடத்தே மொய்த்துத் தேனுண்ட வண்டினம், எம்முடைய மலரணிந்த கூந்தலிலேயும் பின்னர் வந்து இருந்தன என்பதற்கே, நின் தலைவியாகிய பரத்தை வெகுண்டனள் என்று கூறுகின்றனரே!
கருத்து: 'அதற்கே வெகுள்பவள், தலைமகன் என்னைத் தழுவினனாயின் பொறுப்பாளோ?' என்றதாம்.
சொற்பொருள்: அவிழிணர் - இதழவிழ்ந்த மலர்க் கொத்து. நறுந்தார் - நறுமணம் கமழும் மாலை. தாதுண் பறவை - தேன் அருந்தும் வண்டினம். போதார் கூந்தல் - மலரணிந்த கூந்தல்.
விளக்கம்: மலர்தொறும் சென்று தேனுண்ணத் தாவும் வண்டினம் ஆதலின், அவன் மார்பிடத்துத் தாரில் மொய்த்தது தலைவியின் கூந்தலிற் சூடிய மலரிடத்தும் பின்னர்ச் சென்று மொய்த்தது என்க. இதனைக் கேட்கும் பரத்தை, அவர்கள் அத்துணை நெருங்கியிருந்தனர். அது தழுவல் குறித்ததே எனக் கொண்டு, தலைவன் மீது வெகுண்டாள் என்பதாம்.
'தாதுண் பறவை' போன்று, பெண்களை நாடித் திருபவன் தலைவன்' என உட்பொருள் தோன்றக் கூறி, அவன் அப் பரத்தையையும் ஒரு நாள் கைவிட்டு, இன்னொருத்திபாற் செல்வான் என்று சொன்னதும் ஆம்.
தலைமகன் மார்பின் மாலையினை 'அவிழ் இணர் நறுந்தார்' எனவும், தன் கூந்தல் மலர்களைப் 'போது' எனவும் குறிப்பிட்ட சிறப்பும் காண வேண்டும். தேனுண்ணற்கான அவன் மார்பின் மாலை மலர்களைவிட்டு எழுந்து. போதாக மலரும் செவ்வி நோக்கி இருக்கும் தன் கூந்தல் மலர்களில் மொய்த்தது பற்றிக் கூறியது. அதுதான் தான் விரும்பும் இனிய நுகர்வை அடையாது போகும் பேதைமை பற்றிக் கூறியதாம். இது மணம் பெற்று என்னோடும் கூடியின் புற்றிருந்த தலைவன், தன் பேதைமையாலே, இன்ப நுகர்வுக்குரிய பக்குவமும் பெறாத இளையாளான பரத்தையை நச்சித் திரிவானாயினனே என்று தலைவனின் அறியாமை சுட்டிக் கூறியதுமாகும்.
83. பையப் பிரிந்து வாழ்க!
துறை: வரைந்து அணிமைக் கண்ணே, தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகிய வழி, அதனை அறிந்த தலைவி, அவனோடு புலந்து சொல்லியது.
(து.வி: தலைவியை மணந்து மனையறம் தொடங்கி நெடுங்காலங்கூடக் கழியவில்லை. அதற்குள்ளேயே அவளை விட்டுப் பரத்தையுறைவை நாடிச் செல்வானானான் தலைவன். அதனைப் பலரும் சொல்லக் கேட்ட தலைவி, அவன் தன்னை அணுகும்போது புலந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்
தணந்தனை யாகி, உய்ம்மோ - நும்மூர்
ஒண்தொடி முன்கை ஆயமும்
தண்துறை ஊரன் பெண்டெனப் படற்கே.
தெளிவுரை: எம்மை விரும்பி மணந்து கொண்டோனாகிய நீதான், எமக்கு அருள் செய்தலைக் கைவிடுவாய் ஆயினும், நின் ஊரிடத்தேயுள்ள ஒள்ளிய தொடிவிளங்கும் முன் கையினரான பரத்தையர் மகளிர் பலரும், 'தண்ணிய துறை கொண்ட ஊருக்குரிய நின் பெண்டு' எனச் சொல்லப் படுவதற்கு உரியளாகுமாறு மெல்லமெல்ல எம்மை நீங்கினையாகிச் சென்று ஒழுகுவாயாக!
கருத்து: 'இதனையாவது அருளிப் பேணுவாயாக' என்ற தாம்.
சொற்பொருள்: பைபய-மெல்லமெல்ல. தணந்தனையாகி - நீங்கினையாகி. 'ஆயம்' பரத்தையர் மகளிரைக் குறித்தது. 'ஊரன் பெண்டு' என்றது, 'ஊரனுக்கு உரியவளான பெண் இவள்' எனப் பேர் பெறுவது.
விளக்கம்: தலைவனின் பிரிவால் மனம் வருந்திய தலைவி. இவ்வாறு பதைத்து மொழிந்தனள் எனவும் கொள்ளலாம். 'ஆயம்' என்பது, பொதுவாக மகளிரது உடன் விளையாட்டுத் தோழியரையே குறிக்கும்; எனினும், இங்கே தலைவனுக்குச் சார்த்திச் சொன்னது, அவன் பரத்தையரோடு புதுப்புனலாடியும் பிறவாறும் ஆடிக்களிக்கும் இயல்பினன் என்பதனால் ஆகும். எனக்கு, 'நின் பெண்டு' எனப்படும் தன்மையை மணத்தால் தந்துவிட்ட நீதான், அவர்க்கும் அப் பெருமையைத் தருதற்கு நினைப்பினும்,அ தனை மெல்லமெல்லச் செய்வாயாக' என்றனளாம். 'நின் பெண்டு' என்னும் பெயர் மட்டுமே தந்து, அதற்குரிய இன்ப வாழ்வைத் தருதற்கு மறந்து, புறத்தொழுகுவோன் எனப் பழித்து ஊடினள் எனவும் கொள்க. 'தண்துறையூரன்' என்றது, அவன் அவருடன் கூடி நீர்விளையாட்டயர்ந்து மகிழ்ந்ததனைத் தான் அறிந்தமை உணர்த்தினதும் ஆகும்.
84. கண்டால் என்னாகுவளோ?
துறை: பரத்தையர் மனைக்கண் தங்கிப், புணர்ச்சிக் குறியோடு வாயில் வேண்டி வந்த தலைமகற்குத், தோழி சொல்லியது.
(து.வி: தலைவன் பரத்தையுடன் மகிழ்ந்துவிட்டு, அடுத்துத் தன் வீட்டிற்கும் விரைந்து வருகின்றான். யாதும் அறியானே போல அவன் தலைவியை அணுக, அவள் ஊடி ஒதுங்குகின்றாள். அப்போது தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
செவியின் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்,
கண்ணிற் காணின், என்னாகுவள் கொல் -
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்,
பலர்படிந் துண்ணும் நின் பரத்தை மார்பே?
தெளிவுரை: மகிழ்நனே! நறுமண மலர்கள் அணிந்த கூந்தலையுடைய மகளிர்கள் படிந்தாடும், தைத்திங்கள் நாளிலே விளங்கும் குளிர்நீர்க் குளத்தைப் போல, பலரும் தழுவிக் கிடந்து நுகரும் நின் பரத்தைமை கொண்ட மார்பினைப், பிற மகளிர் சிறப்பித்துக் கூறுவதைச் செவியாற் கேட்டாலும், சொல்லுதற்கரிய கடுஞ்சினம் கொள்வோளான நின் தலைவி, நின் மார்பிற் காணும் இப்புணர்குறிகளைக் கண்ணாற் கண்டனளாயின், என்ன நிலைமையள் ஆவாளோ?
கருத்து: 'அவள் துடிதுடித்துப் போவாளே' என்றதாம்.
சொற்பொருள்: சொல் இறந்து - சொல்லும் அடங்காமற்படிக்கு. வெகுள்வோள் - சினங்கொள்வோள்; என்றது தலைவியை. ஐம்பால் - கூந்தல்; ஐம்பகுதியாகப் பகுத்து முடித்தலையுடையது. பரத்தை மார்பு - பரத்தையுடைய மார்பு; என்றது தலைவனின் மார்பினை உண்ணல் - நுகர்தல்; மார்பை உண்ணலாவது, அணைத்துத் தழுவி மகிழ்தல்.
விளக்கம்: பிற மாதரோடு நீ தொடர்புடையை எனக் கேட்டாலே சொல்ல முடியாத சினம் கொள்பவள். நீ புணர் குறியோடும் வருகின்ற இந்நிலையையும் கண்டால் என்னாகுவளோ? ஆதலின், இவ்விடம் விட்டு அகன்று போவாயாக என்பதாம். 'மகளிர் நீராடும் தண்கயம்' என்று உவமித்தது, அவர் கழித்த மலரும் சாந்தும் கொண்டு அது விளங்கும் தன்மைபோல, அவன் மார்பும் அவற்றோடு சேர்ந்ததாக விளங்கிற்று என்றற்காம். மகளிர் தைத்திங்கள் தண்கயம் ஆடி நோன்பு பூணல் தமக்கேற்ற துணைவரைப் பெருதற் பொருட்டாதலின், அவன், நின் மார்பினையும் 'விரும்பியாடி நின்னைத் தம் புகலாகப் பெற்றனர் என்பதுமாம். 'என்னாகுவள் கொல்?' என்றது, உயிர் நீப்பள் என்று எச்சரித்தாம்.
இவராடிய குளம் எனப் பிறர் ஒதுக்காது, தாமும் புகுந்து நீராடலே போல, நின் மார்பைப் பரத்தையர் பலர் முன் தழுவினர் என்பதறிந்தும், புதியரும் நீ தரும் இன்பத்திற்கும் பொருளுக்குமாக நின்னை வெறாது விரும்பித் தழுவி இன்புறுத்துவர்; ஆயின், அது தலைவியின் மாட்டும் கருதினை யாயின் பொருந்தாது என்கின்றனள். இதனால், தோழி வாயில் மறுத்தாள் என்பதும் அறியப்படும்.
85. நின்னைக் காண்பவர் சிரியாரோ?
துறை: தலைமகன் பரத்தையர் மேற் காதல் கூர்ந்து நெடித்துச் செல்வழி மனையகம் புகுந்தானாகத் தலைவி கூறியது.
(து.வி: தலைமகன் பரத்தையரை நாடிச் செல்வதற்குப் புறப்பட்டவன், சிறிது காலம் தாழ்த்துப் போகவேண்டியதாகவே, தன் மனையினுள்ளே சென்று புகுந்தான். அவன் ஒப்பனையும் பிறவுமறிந்த தலைவி, வருந்திக் கூறி, அவனைப் போக்கு விலக்கியதாக அமைந்த செய்யுள் இது.)
வெண்ணுதற் கம்புள் அரிக்குரற் பேடை
தண்ணறும் பழனத்துக் கிளையோ டாலும்
மறுவில் யாணர் மலிகேழ் ஊர! நீ
சிறுவரின் இனைய செய்தி;
நகாரோ பெரும! நிற் கண்டிசி னோரே?
தெளிவுரை: வெண்மையான தலையையுடைய சம்பங் கோழியின், அரித்த குரலையுடைய பேடையானது, தன் சேவல் பிரிந்ததென்று, கெளிர்ந்த நறுவிய பழனங்களிலுள்ள, தன் கிளைகளோடு சொல்லிச் சொல்லிக் கூவியபடியிருக்கும், குற்ற மற்ற மிகுதியான புதுவருவாயினைடைய ஊரனே! நீதான் சிறுவரைப் போல பின்விளைவு கருதாயாய் இத்தகைய செயலைச் செய்கின்றாயோ! நின்னைக் கண்டோர், நின் செயலைப் பற்றி எள்ளி நகையாட மாட்டார்களோ?
கருத்து: 'குடிப்பழி மிகுதலை நினைத்தாயினும், நின் பொருந்தாப் போக்கைக் கைவிடுக' என்றதாம்.
சொற்பொருள்: 'நுதல்' என்றது தலையின் மேற் பகுதியை; சம்பங்கோழியின் தலையின் மேற்பக்கம் வெள்ளையாயிருக்கும் என்பது இது. கம்புள் - சம்பங்கோழி. அரிக்குரல் - அரித்தரித்தெழும் குரல். கிளை - தன்னினப் பிற கோழிகள். ஆலும் - கூவும். மறுவில் - குற்றமற்ற; மறிவில் எனவும் பாடம்; தடையற்ற என்பது பொருள். 'நறும் பழனம்' என்றது, அதிலுள்ள பூக்களால். செய்தி - செய்வாய்.
விளக்கம்: சேவலைப் பிரிந்த கோழி, தன் துயரைச் சொல்லித் தன் இனத்தோடு கூவியபடியிருக்கும் பழனம்' என்றது, தானும் அவ்வாறே புலம்ப வேண்டியிருந்தும், குடிநலன் கருதித் தன் துயரை அடக்கியிருக்கும் தன் பெருந்தகைமை தோன்றக் கூறியதாம். சிறுவர், செய்வதன் பின் விளைவு அறியாதே செய்து, பின் பலராலும் நகையாடப் படுவர் என்பாள், 'சிறுவரின் இனைய செய்தி' என்றனள்; 'நீதான் பொறுப்புடைய குடித்தலைவன் ஆயிற்றே, அதனை மறந்தனையோ?' என்றனளுமாம். 'கண்டோர் நகாரோ' என்றது, 'ஊர் பழிக்கும் செயல் பரத்தமை' என்றும் சொல்லித், தாய் போல அறிவுறுத்தியதாம்.
'தாய்போற் கழறித் தழீஇக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கு உரித்தென மொழிப' என்னும் கற்பியல் சூத்திரத்தின் விளக்கம்போல அமைந்தது இச்செய்யுளாகும். (தொல். கற்பு, 32).
'நின் சிறுவரின்' என்பது பாடமாயின், 'அவன் புதல்வன், அழைக்கும் மாதரிடமெல்லாம் தாவிச் சென்று, அவர் அணைத்து முத்தமிடக் களிக்கும் அத் தன்மைபோல' என்றதாம். 'அவன் சிறுவன்; காமம் அறியான்; நீயும் அவ்வாறே செய்யின் நின் எண்ணத்தைக் குறித்து ஊர் பழியாதோ என்றதாம்.'
மேற்கோள்: இவ்வாறு கடிபவள், தலைவனை வெறுக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வாள் என்பதாம். மகனும் ஆற்றாமை வாயிலாகத் தலைமகன் வந்தபோது, தலைமகள் எதிர்கொண்டு சொல்லியது என்பர் நம்பியகப் பொருள் உரைகாரர்; அப்போது, புறம்போகப் புறப்பட்டவன் தன் மகனைக் கண்டதும், அவனை எடுத்துணைத்தவாறே மனைபுகத், தலைவி எதிர்கொண்டு சொல்வதாகக் கொள்க.
86. நின் மனையாளோடும் வாழ்க!
துறை: 'புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்' என்பது அறிந்த பரத்தை, அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.
(து.வி: தன் புதல்வன் சொல்லிய செய்தியைத் தலைவியின் பாங்கியர் வந்து சொல்ல, அப்படியே கேட்டு நடந்தான் தலைவன், அவன்பால் பேரன்புடையவன் ஆதலால். இதனையறிந்த பரத்தை, 'நின் மகன்மேல் நின் அன்பு அத்தகையதாயின், நீ இனி நின் மனைவியோடேயே இன்புற்றனையாகி, நின் இல்லிடத்தே இருப்பாயாக; இவண் வாரற்க' என்று சொல்லி ஊடுகின்றனள் எனக் காட்டுவது இச்செய்யுள்.)
வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குரல்
நீள்வயல் நண்ணி இமிழும் ஊர!
எம்மிவண் நல்குதல் அரிது!
நும்மனை மடந்தையொடு தலைப்பெய் தீமே.
தெளிவுரை: வெண்மையான தலையையுடைய குருகினது மெல்லப் பறத்தைலையுடைய பார்ப்புக்களின் கூப்பீடு குரலானது. நெடிய வயற்புறங்களையும் அடைந்து ஒலிக்கின்ற ஊரனே! இனி, நீதான் இவ்விடம் வந்து எமக்கு இன்பம் நல்குதல் என்பதும் அரிதாகும். நின் மனையிடத்தாளான மனையாட்டியோடும் கூடியிருந்து, அவளுக்கே என்றும் இன்பந் தந்தனையாய் வாழ்வாயாக!
கருத்து: 'நின் நினைவெல்லாம் நின் மகன் மீதே' என்றதாம்.
சொற்பொருள்: மென்பறை - பார்ப்புகள். விளிக்குரல் - அழைக்கும் குரல். இமிழும் - ஒலித்தபடி இருக்கும். 'மடந்தை' என்றது தலைவியை; அவள் மகப்பெற்று நலிவெய்தித் தன் அழகிழந்து முதுமையுற்றாள் என்றற்காம். நல்குதல் - இன்பம் தரல். தலைப்பெய்தல் - அருள் செய்தல்; கூடி மகிழல்.
விளக்கம்: 'குருகுப் பார்ப்புகள் தம் கூட்டிலேயிருந்தபடி கூவி அழைக்கும் குரலானது, வயலிடமெல்லாம் ஒலிக்கும் என்றது, அவ்வாறே நின் புதல்வனும் நின்னை அழைத்துக் கூப்பிடும் செய்தியானது, பரத்தையர் சேரிமுற்றவும் வந்து பரவுதலுற்றது' என்பதாம். 'அவனை மறக்கவியலாதவன் நீயாதலின், இனி இவண் வாராதிருக்க' என்கின்றாள். 'எம்' என்று தன்னோடும் பிற பரத்தையரையும் உளப்படுத்திக் கூறினாள் எனலாம். 'நும் மனை' என்றது. அதனிடத்தே தமக்கேதும் உரிமையில்லை என்பதனையும், அது முற்றவும் தலைவிக்கே உரிமையுளதென்பதையும் நினைந்து கூறியதாம். 'குருகும் பார்ப்புக்குரல் கேட்டதும் பாசத்தோடு திரும்பிவரும்' ஊரனாதலின், அவன் தன் மகன் பேச்சைக் கேட்டதும், பிறவற்றை மறந்து, அவன்பாற் செல்ல முந்துவானாயினான்' என்றதாம்.
87. மனையோள் யாரையும் புலக்கும்!
துறை: 'தலைமகள் தன்னைப் புறங்கூறினாள்' எனக் கேட்ட காதற் பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பத், தலைமகனோடு புலந்து சொல்லியது.
(து.வி: தன்னைத் தலைமகள் பழித்தாள் என்று கேட்டாள், தலைமகனின் காதற் பரத்தை. தலைவன் அவளிடம் வந்தபோது, தலைமகனின் பாங்கியர் கேட்டுணருமாறு, அவள் தலைமகனோடு ஊடிப் பேசுவதாக அமைந்த செய்யுள் இது.)
பகன்றைக் கண்ணி பல்லான் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்
யாணர் ஊர! நின் மனையோள்
யாரையும் புலக்கும்; எம்மை மற் றுவனோ?
தெளிவுரை: பகன்றைப் பூக்களைத் தொகுத்துத் தலைக்கண்ணியாகச் சூடியவரும், பலவான ஆனிரைகளை உடையவருமான கோவலர்கள், கரும்பைக் கையின் குறுந்தடியாகக் கொண்டு எறிந்து மாங்கனிகளை உதிர்க்கின்ற, புதுவருவாயினை உடைய ஊரனே! நின் மனையாள் யாவரையும் புலந்து பேசுபவளாதலின், அவ்வாறே எம்மையும் புலந்து கூறினாள் என்பது என்ன முதன்மைத்தோ?
கருத்து: 'நின் தலைவி பழித்துப் பேசுவது எதற்கோ?' என்றதாம்.
சொற்பொருள்: பகன்றை - வெண்ணிறப் பூப்பூக்கும் ஒருவகைச் செடி; பூக்கள் பெரிதாகக் கிண்ணம்போல் பனிநீர் நிறைந்து காலையில் தோன்றும் என்பர்! சிவதைச் செடி என்றும் கூறுவர். கண்ணி - தலைக்கண்ணி. கோவலர் - பசுமந்தை உடையோர். குணில்- குறுந்தடி.
விளக்கம்: 'மனையோள்' என்றது, மனைக்குரியோளான தலைவியை, 'யாரையும்' என்றது. தலைவனோடு உறவுடைய பிற பெண்டிரையும் என்றதாம். அன்றி, அவன் எவரொடும் மகிழ்ந்து உரையாடினாலே அதுபற்றிப் புலந்து கூறும் இயல்பினள் என்பதும், 'யாரையும் புலக்கும்' என்றதாற் கொள்ளப்படும்.
உள்ளுறை: கரும்பைக் கைக்கொண்ட கோவலர், அதனைச் சுவைத்து இன்புற்றதோடும் அமையாராய், அதனையே குறுந்தடியாகக் கொண்டு எறிந்து மாங்கனியையும் உதிர்க்கும் வளமுடைய ஊரன் என்றனள். இவ்வாறே, தலைவனும் பரத்தையரை நுகர்ந்து இன்புற்றபின், அவரையே இகழ்ந்து கூறித் தலைவியைத் தெளிவித்து, அவளையும் அடையும் இயல்பினன் என்று கூறுகின்றனள்.
'கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் ஊர' என்றது. யாங்கள் பழித்தேமென்று அவட்கு இனிய சொல் கூறி, அவள் எங்களைப் பழித்துக் கூறும் சொற்களை, நினக்கு இனியதாகப் பெறுவாய்' என்றவாறு என்பது பழையவுரை.
88. யாம் அது வேண்டுதும்!
துறை: தலைமகனை நயப்பித்துக் கொள்கையில் விருப்பில்லாதாள் போல, அவ்வாறு கோடலையே விரும்புவாள், 'அது தனக்கு முடியாது' எனத் தலைமகள் புறனுரைத்தாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார்க்குச் சொல்லியது.
(து.வி: 'தன்னிடமிருந்து தலைவனை முற்றவும் பரத்தையால் பிரித்துக் கொள்ள முடியாது' என்றும், 'அவள் விருப்பம் என்றும் நிறைவேறாது இடையிற் கெடும்' என்றும் தலைமகள் சொன்னாள். அதனைக் கேட்ட பரத்தை, தன்பாற் சொல்லிய தன் பாங்காயினார்க்குத் தன்னுடைய மேம்பாட்டைச் சொல்லுவதாக அமைந்த, செய்யுள் இது.)
வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
தண்டுறை யூரனை, எவ்வை எம்வயின்
வருதல் வேண்டுது மென்பது
ஒல்லேம் போல், யாம் அது வேண் டுதுமே.
தெளிவுரை: வளமான நீர்த்துறைகளிடத்தே எல்லாரும் விருப்போடே வேண்டியவளவு கொய்த்து கொள்ளுமாறு, வளவிய மலர்கள் மிகுதியாகப் பூத்திருக்கும் பொய்கையின், தண்ணிய நீர்த்துறையினையுடைய ஊரன் தலைவன். ''அவனை எம்மிடத்தேயே வருதலை வேண்டுகின்றோம்' என்று, தன் தங்கை புறங்கூறினாள்'' என்பர். யாம் அதற்கு விரும்பாதேம்போலப் புறத்தே காட்டிக் கொள்ளினும், உள்ளத்தே, அதனை நிகழ்தலையே வேண்டுகின்றோம்!
கருத்து: 'அவனை எம்மிற் பிரியாதிருக்கச் செய்தலையே' யாமும் வேண்டுகின்றேம் என்றதாம்.
சொற்பொருள்: வண்டுறை - வளவிய துறை; வளமை நீர் என்றும் வற்றாதிருக்கும் தன்மை. 'வண்டு உறை நயவரும்' எனக்கொண்டு, வண்டினம் நிலையாகத் தங்குதலை விரும்பும் என்பது பொருளாதல் கொளக்கூடும். 'வளமலர்' என்றது, செழுமையும் செறிவும் மிகுதியாகி அழகோடு மலர்ந்திருக்கும் நாளின் புதுமலர்களை. எவ்வை: 'எம் அவ்வை' எவ்வை என்று ஆயிற்று. தலைவனைத் தானும் அடைந்துள்ள முறை பற்றித் தலைவியைத் தன் மூத்தாளாகக் கொண்டு கூறியதாம். 'எவ்வை' என்றதற்கு, எவ்வகையினும் எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும்; தங்கை எனவும் கூறுவர். ஒல்லேம்போல் - பொருந்தேம் என்பது போலவே. வேண்டுதும் - விரும்புவோம்.
விளக்கம்: 'இவ்வாறு என்மேற் பழிகூறுதலைத் தலைவி இனி நிறுத்திலளாயின், அதனை அவ்வாறே முடியாது யானும் செய்து விடுகின்றேன்' என்று கூறுகின்றனள். எவ்வைக்குத் தங்கையென்பது, தலைமகன் எப்போதும் தன் மனைவியினும் இளமை வனப்புடையவளையே பரத்தமைக்கு உரியாளாக நாடுதலின் பொருந்தாதென்க. புதல்வனைப் பெற்றுத் தளர்ந்தவள் தலைவி என்பதும் இதனாற் பெறப்படும்.
உள்ளுறை: வள்ளிய துறையிடத்தே பூத்துக் கிடக்கும் வளவிய புதுமலர்களைக் கொண்ட பொய்கையுடைய ஊரன் என்றது, காண்பார் யாரும் விருப்போடே தாம் வேண்டுமட்டும் கொய்து கொள்ளுதலைப் போலத், தலைவனும், அவனை விரும்பும் மகளிரெல்லாம் எளிதாக அடைந்து இன்புறுதற்குரிய பொதுநிலைத் தன்மை கொண்டவன் என்றதற்காம்.
89. எவன் பெரிது அளிக்கும் என்ப!
துறை: தலைமகன், 'தலைமகளைப் போற்றி ஒழுகா நின்றான்' என்பது கேட்ட காதற் பரத்தை, அவன் பாணனுக்குச் சொல்லுவாளாய், அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
(து.வி: 'தலைமகன் இப்போதெல்லாம் தலைவியின் பாலேயே அன்புற்றுப் பெரிதும் களித்திருக்கின்றான்' என்று தன் தோழியர் மூலம் கேள்விப்பட்ட பரத்தை, அவன் பாணனுக்குச் சொல்லுவாள்போலத், தலைவியின் தோழியரும் கேட்டறியச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.)
அம்ம வாழி, பாண! எவ்வைக்கு
எவன்பெரி தளிக்கும் என்ப - பழனத்து
வண்டு தாதூதும் ஊரன்
பெண்டென விரும்பின்று, அவள்தன் பண்பே.
தெளிவுரை: பாணனே, நீ வாழ்க! பழனங்களிலே, வண்டினங்கள் மலர்களில் மொய்த்துத் தேனுண்டபடியே இருக்கும் ஊரன் நம் தலைவன். 'அவன் தலைவிக்குப் பெரிதும் தலையளி செய்திருக்கின்றான்' என்று நீ சொல்வது என்னையோ? அவளைத் தனக்கேற்ற காதன்மைக்குரிய பெண்டு என்று எண்ணி அவன் அவ்வாறு அவளிடத்தே ஒழுகுகின்றான் அல்லன். அவள் தன் மனைவியாக (மனைப் பாங்கின் தலைவியாக) ஒழுகும் அந்தப் பண்பினைக் கருதியே, அவளுக்குத் தலையளி செய்து, தன் கடமையாற்றுகின்றான்!
கருத்து: 'அவன் என்னிடத்தேயே பெருங் காதலுடையான்' என்றதாம்.
சொற்பொருள்: 'எவ்வை' தலைவியைக் குறித்தது. அளித்தல் - கூடியின்புறுதலாலே அவளுக்கு இன்பமும் மனநிறைவும் அளித்து உதவுதல். பெண்டு - காதற்பெண்டு. பண்பு - மனைவியாம் இல்லறத் தலைமைப் பண்பு.
விளக்கம்: தலைவிபால் காதலன்பு ஏதும் பெற்றிலன் எனினும், தன் மனையறம் செவ்வியதாக நிகழும் பொருட்டாகவும், ஊரவர் பழியாதிருக்கவும், அவள் தன்பாற் கொண்டுள்ள பற்றுதல் நீளவும், அவளுக்கும் தலைவன் தலையளி செய்வான் என்பதாம். ஆகவே, மீளவும் தன்பால் வருவான்; தலைவி அதுபற்றிய நினைவோடிருப்பாளாக என்று எச்சரித்ததாம்.
உள்ளுறை: 'பழனத்து வண்டு தாதூரம் ஊரன்' என்றது, அவ்வாறே பொதுமகளிர் சேரியிடத்தேயுள்ள இளம் பரத்தையரை ஒருவர் ஒருவராக நாடிச் சென்று இன்புறும், காமங் கட்டவிழ்ந்த இயல்பின்ன தலைவன் என்று கூறியதாம்.
பாட பேதம்: 'வேண்டென விரும்பின்று' எனவும் பாடம்; இப்பாடத்திற்கு, அவளை விரும்பியொழுகு என்று வாயில்கள் வேண்ட, அவன் அவளைச் சென்றுகூடித் தலையளி செய்தனன் என்று பொருள் கொள்ளுக.
90. யார் குணம், எவர் கொண்டது?
துறை: தலைமகன், தன் மனைக்கண் செல்லாமல் தான் விலக்குகின்றாளாகத் தலைமகள் கூறினாள் என்பது கேட்ட காதற்பரத்தை, தலைமகன் கேட்குமாற்றால், அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
(து.வி: 'தலைமகன், தன்னை விரும்பி வராமற்படிக்குத் தடுப்பவள் காதற் பரத்தையே' என்று, தலைமகள், ஒருநாள் பழித்துக் கூறினாள் என்று கேள்வியுற்றவள். அத்தலை மகட்குத் தோழியர் கேட்குமாறும், தலைமகனும் கேட்டுணருமாறும் கூறுவதாக அமைந்த, செய்யுள் இது.)
மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்?
அன்ன தாகலும் அறியாள்
எம்மொடு புலக்கும், அவன் புதல்வன் தாயே.
தெளிவுரை: மகிழ்நனின் மாண்பமைந்த குணங்களை வண்டுகள் கைப்பற்றிக் கொண்டனவோ? அன்றி, வண்டுகளின் மாண்புள்ள குணங்களை நம் மகிழ்நன்தான் கைப்பற்றிக் கொண்டானோ? அன்னது எங்ஙனம் ஆகலுற்றதெனவும், அவன் புதல்வனின் தாயான தலைவியானவள் அறிந்திலள். எம்முடனே வீணே புலக்கின்றனளே!
கருத்து: 'அவள் தலைவனை அறியாமல் என்னைப் பழிப்பது அறியாமையாகும்' என்றதாம்.
சொற்பொருள்: மாண்குணம் - மாண்புற்ற குணம்; 'இல்லவள் மாண்பானால்' எனக் கூறும் குணவமைதி. வண்டினம் புதுமலரையே தேடிக் கொண்டு பறத்தலே போலத், தலைவனும் புதியரான பரத்தையரையே நாடித் திரிபவனாவான் என்றதாம். இதனால் என்னைக் குறித்து மட்டும் பழிப்பது எதற்காகவோ என்கின்றனள். 'அவன் புதல்வன் தாய்' என்றது. மனைவியை; அவள் புதல்வனைப் பெற்றுத் தளர்ந்து மெலிந்தமை தோன்றவும், அவளின் குடிகாக்கும் உரிமையினை எவரும் எதனாலும் பறித்தல் இயலாதென்பது விளங்கவும் சொல்லியதாம்.
விளக்கம்: 'அவன் புதல்வன் தாய்' என்று தலைவியைக் குறித்தது, அவ்வுரிமை பெற்றாள் அவள்; யான் அது பெற்றிலேன் என்றதுமாம். வண்டின் மாண்குணம் புது மலரைத் தேர்ந்தே சென்று சென்று தேனுகர்தலும், அதன்பின் அவற்றை முறையே கழித்து விடுதலும் ஆம்; இக் குணத்தை நம் தலைவனிடமிருந்தே வண்டினம் பெற்றுள்ளன. ஆயின், முன் நுகர்ந்து கழித்த மகளிரையே ஓரொருகால் மீளவும் நாடிச் சென்று இன்புறுத்தலையும் நம் தலைவன் செய்வான்; இக்குணத்தை மட்டும் வண்டினத்தினும் மேலாக அவன் உடையன் என்றும் குறித்ததாம். ஆகவே, வண்டினத்தினம் ஒரோவகையில் தலைவனே நல்லவன் என்றதுமாம். இப்போது, என்னையும் பிரிந்து பிறள்பாற் செல்லும் அவனை நினைந்து, யானும் அதுகுறித்து மெலிவுற்று வாடியிருப்பதறியாத தலைமகள் என்னையே அவனைத் தடுப்பதாகக் கூறிப் பழிப்பது சற்றும் பொருந்தாது என்றனளுமாம்.
அவட்காவது 'புதல்வனின் தாய்' என்னும் உரிமையும், அப் புதல்வனின் முகமும் செயலும் கண்டு மனந்தேறும் வாய்ப்புகள் உள்ளன; யானோ அதுவும் தானும் பெற்றிலேன் என்று மனம் நொந்து உரைத்தனளும் ஆம்.
இதனைக் கேட்கும் தலைமகன், தன் நிலைக்கு நாணி, தன் காதற் பரத்தைக்குத் தலையளி செய்தற்கு மனங்கொள்வான் எனவும், தன் புதல்வன் நினைவே மேலெழுத் தன் மனையகம் சென்று, தலைவியைப் புலவி நீக்கி இன்புறுத்தி மகிழ்வான் என்பதும் கொள்க.
குறிப்பு: பரத்தையர் இவ்வாறு தலைவியைக் குறிக்கப் 'புதல்வன் தாய்' என்ற மரபை அடிக்கடி பேணுதல், அன்றைய சமுதாயம் அவர்க்கு அவ்வுரிமையை வழங்காததனை எண்ணிப் பொருமும் ஏமாற்றத்தாலேயே எனலாம்.
தலைவனுக்கே பிறந்தாரேனும், பரத்தையர்க்குப் பிறந்த புதல்வரும் புதல்வியரும், மனைவிக்குப் பிறந்தாரைப் போலக் குலப் பெருமைக்கும், குடியுரிமைச் சொத்துகளுக்கும், குடிப் புகழுக்கும் உரிமையாளர் ஆகமாட்டார் என்பதே அன்றைய சமுதாய நிலை. அவர் மீண்டும் தத்தம் குலத்தொழிலே செய்து வரலே அன்றைய ஒழுக்கமாயிருந்தது. இதற்கெல்லாம் மேற்குலத்தாரின் மேலாண்மை பிறப்புரிமை என்னும் நம்பிக்கையே காரணமாகவும் நின்றது.
10. எருமைப் பத்து
இப்பகுதியிடத்தே வரும் செய்யுட்கள் பத்திலும் எருமை பற்றிய செய்திகள் வருவதனால், இவ்வாறு தலைப்புத் தந்தனர். நீர் வளத்தையும் பசும்புல்லையும் விரும்பி வாழும் எருமையினம் மருதத்தாரின் உறுதுணைச் செல்வமாகவும், பாற்பயன் அளிக்கும் பெருமையுடையதாகவும் விளங்குகின்றன. பெருவலிமையும், கடும் உழைப்பிற்கேற்ற பாங்கும் கொண்டுள்ளமையால், எருமைகள் உழுதொழிலாளரால் விருப்போடு இன்றும் பேணப்பெற்று வருகின்றன.
எருமையின் செயல்கள் பலவும் இச் செயுட்களிலே மாந்தரின் செயலோடு உவமை பெற்றுச் சிறக்கின்றன. இது, புலவர் நாடோறும் கண்டின்புற்ற மனத்தோய்விலே நின்றும் எழுந்த சுவைமிகுந்த காட்சிகளே!
91. கருப்பம்பூ மாலையள் இவள்!
துறை: குறைவேண்டிப் பின்னின்று வந்த தலைமகற்குத் தோழி, 'இவள் இளையள்; விளைவு இலள்' எனச் சேட் படுத்தது.
(து.வி: தலைமகளைக் கொண்டு காமுற்றுக் கருந்தழிந்தவன். பலகால் முயன்றும் அவள் இசைந்து இணங்காளாக, அவள் தோழியிடம் தன் குறை தீர்க்க வேண்டிக் கேட்டு நிற்கின்றான். அவனுக்கு, அவள், 'தலைவி இன்னமும் காதலிக்கும் பருவத்தை அடையாத இளையள்' என்று கூறி, அவனை விலக்குதற் பொருட்டுச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. குறிஞ்சித் திணைத் துறையேனும், 'எருமை' என்னும் கருப் பொருள் வந்து, மருதத்திணையிற் கொளப்படுதலைப் பெற்றது.)
நெறிமருப் பெருமை நீல விரும்போத்து
வெறிமலர்ப் பொய்கை யாம்பல் மயக்கும்
கழனி யூரன் மகள்இவள்;
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே.
தெளிவுரை: நெறித்த கொம்பையுடைய எருமையின் கருமையான பெரிய கடாவானது, மணமுள்ள மலர்கள் நிறைந்த பொய்கையிலே சென்று, அதனிடத்தேயுள்ள ஆம்பலைச் சிதைக்கும். அத் தன்மையதும், கழனிகளை உடையதுமான ஊரனுக்கு இவள்தான் மகளாவாள். இவள், பழனங்களிலுள்ள கரும்பிடத்தே பூத்த மணமற்ற பூவால் தொடுத்து விளங்கும் மாலையினையும் உடையவள் காண்பாயாக!
கருத்து: 'அத்தகு மடமை கொண்டவளை விரும்பிச் சுற்றாதே போய்வருவாயாக' என்றதாம்.
சொற்பொருள்: நெறிமருப்பு - நெறித்தலுடைய கொம்பு; நெறித்தல் - வளைதல்; முறுக்குடன் தோன்றுதல். 'நீலம்', கருமை குறித்தது. போத்து - எருமையின் ஆண்; எருமைக் கடா. வெறி - மணம். மயக்கும் - சிதைத்து அழிக்கும். கழனி - விளைவயல்கள். வெதிர் - கரும்பு; 'பழன வெதிர்' எனவே, தானே கிளைத்து வளர்ந்துள்ள கரும்பு என்க; இது உண்ணற்காக வேழக் கரும்பும் பேய்க்கரும்பும் போல்வன. கொடிப் பிணையல் - பிணைத்துக் கொடி போலக் கட்டிய மாலை.
விளக்கம்: வெறிமலர் அருமையும் ஆம்பலின் மென்மையும் அறியமாட்டாத எருமைப் போத்தானது. பொய்கையுட் புகுந்து தான் நீராடிக் களிக்கும் வகையால், அவற்றைச் சிதைக்கும் ஊரன் மகள் என்றனள், இதனால், அவள் தந்தை தன் செயலிலே ஈடுபடுங்கால், பிறருக்கு நேரும் அழிவைப் பற்றி எல்லாம் நினைத்து ஒதுங்கும் தன்மையற்ற மடமையோன் என்றதாம். இதனால், இவள் தந்தையும் ஐயன்மாரும் நின் செயலறியின் நினக்கு ஊறு செய்வதிலே தப்பார் என்றும் சொல்லி எச்சரிக்கின்றனள்.
சிறப்பற்ற பழனவெதிரின் பூவைக் கொய்து, மாலை தொடுத்திருக்கம் தன்மையள் எனவே, அதுதான் சூடற்காக என்பதும் அறியா நனிபேதையள் அவள்; அவளை நீ விரும்புதல் யாதும் பயனின்று என்பதாம்.
மேற்கோள்: திணை மயக்குறுதலுள் மருதத்துள் குறிஞ்சி நிகழ்ந்தது; இஃது இளையள் விளைவிலள் என்றது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். அகத், 12).
92. நும் ஊர் வருதும்!
துறை: 'நினக்கு வரைந்து தருதற்குக் குறை, நின் தமர் அங்கு வந்து கூறாமையே' எனத் தோழி கூறினாளாக, தலைமகள் முகம் நோக்கி, 'இவள் குறிப்பினாற் கூறினாள்' என்பது அறிந்த தலைமகன், 'வரைவு மாட்சிமைப்படின் நானே வருவல்' எனத் தலைமகட்குச் சொல்லியது.
(து.வி: 'இவள் இந்நாள்வரை மணம் பெறாமல் வாடி நலிவது, நின் தமர் வந்து வரையாததன் குறையே' என்று தலைவனிடம் தோழி கூறுகின்றாள். தலைவியின் குறிப்பும் அதுவே யாதலை அறிந்த தலைமகன், 'வரைவதற்குரிய நிலைமை சிறப்பின் யானே வரைவொடு வருவேன்' எனத், தன் உள்ளவுறுதி தோன்றக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
கருங்கோட் டெருமைச் செங்கண் புனிற்றாக்
காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்
நுந்தை, நும்மூர் வருதும்
ஒண்தொடி மடந்தை! நின்னையாம் பெறினே.
தெளிவுரை: கரும் கொம்புகளையுடைய எருமையின், சிவந்த கண்களையுடைய புனிற்றாவானது, தன் அன்புக் கன்றுக்குச் சுரக்கும் முலையினைத் தந்து பாலூட்டும் நின் தந்தைக்குரிய நினது ஊருக்கு, ஒள்ளிய தொடியணிந்த படந்தையே! நின்னை யான் மனையாட்டியாகப் பெறுதல் கூடுமாயின், யானே வரைவொடு வருவேன!
கருத்து: 'தமர் வரவு தாழ்த்தவிடத்தும், தான் தாழாதே வரைந்து வருவேன்' என்று கூறியதாம்.
சொற்பொருள்: கருங்கோடு - கரிய கொம்பு. செங்கண் புனிற்றா - ஈன்றதன் அணிமையும், சிவந்த கண்களையுடைய தாய் எருமை. ஊறுமுலை - பால் ஊறுகின்ற முலை; பால் ஊறுதல் ஈன்றதன் பின்னரே என்பது குறிக்க, 'ஊறுமுலை' என்றனர். மடுக்கும் - உண்பிக்கும்; அதுதானே உண்ணாமையான், தான் அதன் வாயிலே பால்முறை சேர்த்து அதனை உண்பிக்கும் என்றதாம். நுந்தை நும்மூர் - நின் தந்தையதாகிய நுமது ஊர். பெரின் - பெற்றனமானால்; பலகாலமும் அடையப் பெறாதே ஏங்கித் திரும்பும் தன் ஏக்கம்புலப்படக் கூறியது. தான் வரைந்துவரின், தமது மறுப்பினும் தலைவி அறத்தொடு நின்றேனும், அவளைத் தான் பெறற்காவன செயல் வேண்டும் என்றதும் இதுவாகலாம்.
உள்ளுறை: 'தலைவியின் தாய் தன் மகள் மீதுள்ள பேரன்பால், தமர் மறுத்தவிடத்தும், அறத்தொடுநின்று மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவள்' என்னும் உறுதியைப் புலப்படுத்தவே, அவ்வூர்க் கன்றீன்ற எருமையும், தன் கன்றுக்கு ஊறுமுலை மடுக்கும் அன்பு மிகுதியைச் சுட்டிக் கூறினன் எனலாம். 'பெறினே வருதும்' 'என்றது, ''பெறுவதனால் வரைவொடு வருவோம்'' எனவுரைத்து, தோழியது ஒத்துழைப்பையும் விரும்பியதாம்.
மேற்கோள்: 'கிழவோன் சொல்லும் உள்ளுறையவுமம் தன்னுடைமை தோன்றச் சொல்லப்படும்; 'கருங்கோட்டு... பெறினே' என்றவழி, தாய் போன்று நும்மைத் தலையளிப்பலெனத் தலைமகன் தலைமை தோன்ற உரனொடு கிளந்தவாறு காண்க'' எனக் காட்டுவர் பேராசிரியர். (தொல். உவம, 27).
துணைமயக்குறுதலுள் இது மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தது என நச்சினார்க்கினியரும். (தொல். அகத், 12); திணை மயக்குறுதலுள் குறிஞ்சிக்குரிய புணர்தல் மருதத் திணையோடு மயங்கி வந்தது என இலக்கண விளக்க உரைகாரரும். (இ.வி. 394); இச் செய்யுளை எடுத்துக்காட்டிக் கூறுவர்.
93. தாதுண்ணலை வெறுத்த வண்டு!
துறை: முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால், பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, இதற்குக் காரணம் ஏன்?' என்று வினாவிய செவிலித்தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
(து.வி: களவிற் கலந்து இன்புற்று தலைவியின் மேனியிலே எழுந்த நறுமணத்தால் வண்டினம் மிகுதியாக வந்து மொய்க்கின்றன. அதுகண்டு ஐயுற்று வினாவிய செவிலித்தாய்க்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது. சிறப்புறத்தானாகிச் செவ்வி பார்த்திருக்கும் தலைவனும் கேட்டு, இனித் தலைவி இச்செறிக்கப்படுதலும் நேரும்; ஆகவே விரைந்து வரைந்து கொள்ளலே செயத்தக்கது என்று துணிவான் என்பதாம்.)
எருமைநல் லேற்றினம் மேயல் அருந்தென
பசுமோ ரோடமோ டாம்பல் ஒல்லா
செய்த வினைய மன்ற பல்பொழில்
தாதுண் வெறுக்கைய வாகி, இவள்
போதுவிழ் முச்சி யூதும் வண்டே.
தெளிவுரை: பலவான பொழில்களிலும் உள்ளவான மலர்களிலே சென்று தேனுண்ணல் வெறுத்தனவாகிய வண்ணினம், இவளது இதழ்விரி புதுமலர் விளங்கும் கூந்தலிலே வந்து மொய்த்தன. அதுதான் எருமையின் நல்ல ஏற்றினம் மேய்ந்துவிட்டதாலே, பசிய செங்கருங்காலியும் ஆம்பலும் பொருந்தாவாயினமை கண்டு, செய்தவோர் ஓர் வினையும் ஆகும்.
கருத்து: 'வண்டினம், புதுமைதேடி இவள் பூவிரி கூந்தலில் மொய்த்தனவன்றிப், பிற காரணம் ஏதுமன்று' என்றதாம்.
சொற்பொருள்: மேயல் அருந்தென - மேய்ந்து அருந்தி விட்டதாக பசுமோரோடம் - பசிய செங்கருங்காலி; இதன் பூ மிக்க நறுமணமுடையது; நறுமோரோடம் என்று நன்றிணை கூறும் (337). சிறுமாரோடம் என்பது குறிஞ்சிப் பாட்டு (78). மகளிர் கூந்தலின் இயல்பான நறுமணத்திற்கு மோரோடப் பூவின் மணத்தையும் ஆம்பலின் மணத்தையும் உவமிப்பது மரபு. செய்த வினைய - செய்ததான செயலாகும். வெறுக்கைய - வெறுத்தனவாக; செறிவுடையனவாகியும் ஆம். போதவிழ்முச்சி - இதழ்விரிந்த மலரணிந்த கூந்தல்.
விளக்கம்: புணர்ச்சியிலே திளைத்த மகளிர் மேனியிலேயிருந்து மாம்பூவின் நறுமணம் போன்றவொரு நறிய மணம் எழும் என்பதும், அஃதுணர்ந்த செவிலி ஐயுற்று வினவினள் என்பதும், அவள் ஐயத்தைத் தெளிவிக்கத் தோழி இவ்வோதம் புனைந்து கூறியதாகவும் கொள்க. மகளிர் கூந்தலின் மணத்தாற் கவரப் பெற்று, பூநாடிப் போகும் வண்டினம் மொய்க்கும் என்றது, பலரானும் காட்டப்பெறும் நிகழ்வாகும். இதனால், செவிலி ஐயுற்றனள் என்பதும், இனித் தலைவிக்குக் காவல் மிகவே, களவு கைகூடல் அரிதென்பதும், தலைவனுக்கு உணர வைத்தனள். மோரோடம் நிலத்தின் மரம்; ஆம்பல் நீர்க்கண் உள்ளது; இரண்டையும் எருமையேறு தின்று அழிக்கவே, அவை நாடிப் போகாமல், தலைவியின் போதவிழ் முச்சியை நாடின என்கின்றனள்; வண்டினத்து அறியாமையன்றிப் பிறிதல்ல அது என்பதாம். ஊரலர் எழும் என்றதும் ஆம் எப்போதும் தேனையே தேடிச் சென்று உண்ணலே தொழிலாக வுடைய வண்டினம், அதனை மறந்து, வாளாதே கூந்தலில் சென்று மொய்த்து முரலுதல், அவை அவ்வினை முடித்ததனாலே எனவும், கூந்தன் மலர்களை நாடி எனவும் கொள்க.
94. ஊர் இலஞ்சிப் பழனத்தது!
துறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், மீள்கின்றான் சொல்லியது.
(து.வி: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன், மீண்டு வரும்போது, அவளூரைத் தன் பாகனுக்குச் சுட்டிக்காட்டி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)
மள்ளர் அன்ன தடங்கோட் டெருமை
மகளிர் அன்ன துணையொடு வதியும்
நிழன்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே
கழனித் தாமரை மலரும்
கவின்பெறு சுடர்நுதல் தந்தை யூரே.
தெளிவுரை: கவின் பெற்று ஒளிசுடர்கின்ற நுதலுடையாளின் தந்தையது கழனிக்கண்ணே, தாமரை மிகுதியாக மலர்ந்திருக்கும் ஊரானது, மள்ளரைப் போன்ற பெரிய கொம்புகளையுடைய எருமையேறுகள், அவர்தம் மகளிரைப் போலும் தத்தம் துணைகளோடே சேர்ந்தவாய்த் தங்கியிருக்கும், நிழல் செறிந்த நீர்நிலையோடு கூடிய பழனத்திடத்தது ஆகும்!
கருத்து: 'அவ்வூரை நோக்கித் தேரினை விரையச் செலுத்துக' என்றதாம்.
சொற்பொருள்: மள்ளர் - போர் மறவர்; மகளிர் - அவர் தம் காதலியர். தடங்கோடு - பெரிய கொம்பு. இலஞ்சி - நீர் நிலை. நிழல் முதிர் - நிழல் செறிந்து அடர்ந்த. பழனம் - ஊர்ப் பொது நிலம். கவின் - எழில்; 'கவின் பெறு சுடர் நுதல்' என்றது, கவினைப் பெற்றுச் சுடரெரிக்கும் எழில் நுதல் உடையாளான தலைவியை நினைந்து கூறியதாம்.
விளக்கம்: 'எருமைகள் தத்தம் துணையோடும் சேர்ந்தவாக நிழன்முதிர் இலஞ்சிப் பழனத்து வதியும் ஊர்' என்றதும் அதனை மள்ளரும் அவர் மகளிரும் சேர்ந்து வதிதல் போல என்று உவமித்ததும், தான் தலைவியோடு கூடிச் சேர்ந்திருப்பதனை நினைவிற் கொண்டு கூறியதாகும். 'நிழல் முதிர் இலஞ்சி' என்றது, மரங்கள் அடர்ந்து நிழல் செய்தபடி களவிற்கூடியின்புற்ற இடம் அதுவெனலால், அதனைச் சுட்டிக் கூறியதாகவும் கொள்க. 'கழனித்தாமரை மலரும்' என்றது. தான் அவளை வரைந்து மணங்கொள்ள ஊரவர் அனைவரும் களிப்படைந்தாராய் மகிழ்வர் என்பதாம். 'கழனித்தாமரை மலரும் கவினைப் பெற்றுச் சுடர்கின்ற நுதல்' என்று தலைவியின் நுதலழகை வியந்ததாகக் கொள்ளுதலும் உணரப்படும். 'மள்ளர்' என்னும் சொல்லே 'மல்லர்' என்றாகிப், பொதுவாக மற்போரிடும் தன்மையரைக் குறிப்பதாயிற்று.
95. பகலும் நோய் செய்தனள்!
துறை: உண்டிக் காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கிப், பரத்தையிடத்தனாய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயிலாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது.
(து.வி: பரத்தையின் உறவுடையோன், தன் உணவுக்கு மட்டும் மனைநாடி வந்து போயினதால், அவனைக் காணுதலும் பேணுலுமாகிய அவற்றாலேனும் சிறிதளவுக்கு மன அமைதி பெற்று வந்தாள் தலைவி. அதனையும் கைவிட்டு, அவன் பரத்தையின் வீடே தங்குமிடமாகவும் அமைத்துக் கொள்ள, அந்தச் சிறிய மனவமைதியையும் இழந்தாள் அவள். அக்காலத்து ஒருநாள், தலைவன் வருகை தெரிவித்து வந்தாரான ஏவலர்களுக்கு அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
கருங்கோட் டெருமை கயிறுபரிந் தசைஇ,
நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும்
புனன்முற் றூரன் பகலும்
படர்மலி யருநோய் செய்தனன் எமக்கே.
தெளிவுரை: கரிய கொம்புகளையுடைய எருமையானது, தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக் கொண்டு சென்று, நீண்ட கதிர்களையுடைய நெற்பயிரினைத் தன் நாளுணவாக மேய்ந்திருக்கும், நீர்வளம் சூழ்ந்துள்ள ஊரன் தலைவன். அவன்தான், எமக்குப் பகற்போதிலும் படர்ந்து பெருகும் தீராத பெருநோயினைச் செய்தனனே!
கருத்து: 'அவன் எம்மை முற்றவும் மறந்தனன்' என்ற தாம்.
சொற்பொருள்: பரிந்தசைஇ - அறுத்துச் சென்று. நாள் மேயல் - அற்றை நாளுக்கு உண்ணற்கான உணவு. புனல் - நீர். முற்றுதல் - சூழ்ந்திருத்தல் - நிரம்பியவும் ஆம். படர் மலி நோய் - படர்ந்து பெருகும் நோய்; காமநோய். 'அருநோய்' என்றது, செய்தானையன்றிப் பிறவற்றால் தீராத அரிய தன்மையுடைய நோய் என்றதால்.
விளக்கம்: 'பகலும்' என்பதிலுள்ள உம்மை இரவின் கண்ணும், அவனைப் பிரிந்துறையும் துயரினால் நோயுற்றக் கண்ணும் படாதே நலிபவன், பகற் போதிலும் அவன் செயலின் கொடுமை பற்றிய நினைவாலும், அறிந்து வந்து பழிப்பாரின் பேச்சாலும், மனையறத்தின்கண் அவனில்லாதே விளையும் குறைகளாலும், மேலும் மனம் புண்பட்டு வருந்துவள் என்பதாம்.
ஆகவே, ''பொறுத்துப் பொறுத்துப் பழகிய இத்துயரோடேயே யான் அமைவேன்; மீளவும் என்பதால் மறைந்த உணர்வுகளை எழுப்பிவிட்டு என்னை வருத்தல் வேண்டா'' என்று வாயில் மறுத்ததாகக் கொள்க.
உள்ளுறை: 'எருமை தன்மைக் கட்டிய கயிற்றை அறுத்துப் போய், நெற்பயிரைச் சென்று மேயும் ஊரன்' என்றது, அவ்வாறே தலைவனும் தன் குடிப் பெருமையும், காதன் மனைவிக்குச் செய்யும் கடமையுமாகிய கட்டுப்பாடுகளை விட்டு நீங்கிச் சென்று, பரத்தையோடு உறவாடிக் களிப்பானாயினான் என்றதாம்.
உழவரின் சினத்துக்கும் ஒறுப்புக்கும் சிறிதும் அஞ்சாதே தன் நாச்சுவையே கருதிச் செல்லும் எருமைபோல, ஊராரின் பழிக்கும் உறவினரின் வெறுப்புக்கும் கவலையற்றுத், தன்னின்பமே நச்சித்திரியும் மடவோனாயினன் தலைவன் என்பதும், அவனைத் தகைப்பாரிலரே என்பதும் ஆம்.
இனி, எருமை, கட்டிய கயிறறுத்துப்போய் விளைவயலை மேய்ந்து களித்தாற்போலப், பரத்தையும், தன் தாயின் கட்டுக் காவலை மீறிச் சென்று தலைவனோடு உறவாடி இன்புறுவதன் மூலம், விளைவயல்போலப் பெரும் பயன் தருதற்குரிய தலைவியின் மனையற வாழ்க்கையைச் சிதைப்பாளாயினள் என்றலும் பொருந்தும்.
96. கழனி யூரன் மகள்!
துறை: பரத்தையர் பலரோடும் ஒழுகுதல் கண்டு, பொறாதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்கண் புகுந்துழி, உடன்படுதல் கண்ட வாயில்கள், தம்முள்ளே சொல்லியது.
(து.வி: தன்னைப் பிரிவாலும், ஊரவரின் அலர்ச் சொற்களாலும் நலியச் செய்தனவாகப், பரத்தையர் பலரோடும் களித்துத் திரிந்த தலைவனின் கொடுமையைப் பொறாதே வருந்தியிருந்தாள் ஒரு தலைவி. ஆனால் அவன், ஒரு சமயம் தன் மனையிடத்தேயும் புகுந்தபோது, அவள் தன்னுடைய வேதனையை எல்லாம் மறந்து, அவனோடும் இசைந்துகூடி அவனை இன்புறுத்தினள். அவளது, அந்தக் கற்புச் செவ்வியைக் கண்ட அவ்வீட்டு வேலையாட்கள், தமக்குள்ளே வியந்து, பெருமையோடு பாராட்டிச் சொல்லிக் கொள்வதாக அமைந்த செய்யுள் இது.)
அணிநடை எருமை ஆடிய அள்ளல்,
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்
கழனி யூரன் மகள், இவள்;
பழன ஊரன் பாயலின் துணையே!
தெளிவுரை: அழகான நடையையுடைய எருமையானது புகுந்து கலக்கிய சேற்றினிடத்தே, நீலமணியின் நிறத்தைக் கொண்ட நெய்தலோடு, ஆம்பலும் தழைக்கின்ற கழனிகளையுடைய ஊரனின் மகள் இவள்! இவள்தான் பழனங்களையுடைய ஊரனாகிய தலைவனின் பாயலிடத்தே பொருந்தி விளங்கும் இனிதான துணையாகவும் ஆயினளே!
கருத்து: 'இவள் கற்பின் மாண்புதான் என்னே!' என்றதாம்.
சொற்பொருள்: அணிநடை - அசைந்தசைந்து பெருமிதம் தோன்ற நடக்கும் நடை; 'அணிநிறம்' எனவும் பாடம். ஆடிய அள்ளல் - உழக்கிய சேறு. கலிக்கும் - முளைத்துச் செழித்து வளர்ந்திருக்கும். கழனி - வயல். பாயல் இன்துணை - பள்ளியிடத்தே இனிதான துணையாக விளங்கும் உயிர்த்துணை. பழனவூரன் - பொதுநிலம் உள்ள ஊரன்; இது அவன் பரத்தை பலருக்கும் உவப்பளிப்பானாக விளங்கிய பொதுத் தன்மை சுட்டியது.
விளக்கம்: தாம் செழித்து வளர்தற்குரிய இடமான கழனியிடத்தே புகுந்து, தம் நிலைக்க ஆதாரமான சேற்றிலே நடந்தும் புரண்டும் அதனை உழக்கி அழிவு செய்த எருமையின் மீது ஆத்திரப்படாமல், தான் மீண்டும் கலித்துச் செழித்து அதற்கே உணவாகிப் பலனளிக்கும் நெய்தலையும் ஆம்பலையும் கொண்ட கழனிகளுக்கு உரியவன் இவளின் தகப்பன்! அவன் மகளாதலின், இவளும், தனக்கே துயரிழைத்த தலைவனுக்கும் அத்துயர் மறந்து தண்ணருள் செய்வாளாய்ப், பாயலின் இன்துணையாக இன்புறுத்தும் செவ்வியளாயினள் என்பதாம். இக்கறுப்புச் சால்பு அவள் பிறந்து வளர்ந்த குடிமரபிலே வந்து படிந்து வலுப்பெற்ற பெருந்தகைமை என்றும் வியந்தனராம்!
உள்ளுறை: தலைவன் ஊர்ப் பொது நிலம் போலப் பரத்தையர் பருக்கும் இன்பளிக்கும் தன்மையனாயினும் அவள் உரிமையுடைய கழனியைக் காத்துப் பயன்கொள்ளும் ஊரனின் மகளாதலின், அவன் தனக்கேயுரியவன் என்னும் மணம் பெற்று உரிமையால், அவனை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு மகிழ்ச்சி தந்து உதவும் செவ்வியளாயினள் என்றதாம்.
மேற்கோள்: வாயில்கள் தலைவியது கற்புக் கூறியது என்று இச்செய்யுளைக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு, 11).
97. பொய்கைப் பூவினும் தண்ணியள்!
துறை: புறத்தொழுக்கம் இன்றியே இருக்கவும், உளதென்று அஃது உடையான் என நினைத்து ஊடியிருந்த போதில், அவ்வூடலைத் தன் தெளிவுரைகளாலும் பிறபிற அன்புச் செயல்களாலும் நீக்கித் தெளிவித்து, அவளோடு கூடி இன்புற்று மகிழ்ந்தான். அவன், அக் கூடலின் இறுதிக்கண், தலைவியின் தன்மையைத் தன்னுள்ளே நினைந்து வியந்து கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
பகன்றை வாற்மலர் மிடைந்த கோட்டைக்
கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்
பொய்கை யூரன் மகள் இவள்
பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே.
தெளிவுரை: பகன்றையது வெண்மையான மலர்கள் சுற்றியிருந்த தன் தாயது கொம்பைக் கண்டு, கருங்கால்களையுடைய அதன் கன்றானது அஞ்சும் தன்மையுடைய, பொய்கை விளங்கும் ஊரனின் மகள், இவள்! இவள்தான், அப்பொய்கையிடத்தே பூக்கின்ற ஆம்பற் பூவினும் மிகவும் குளிர்ச்சியான அன்புள்ளவள் ஆவாளே!
கருத்து: 'இவள் என்றும் என்பாற் குளிர்ந்த அன்பினளே' என்று வியந்ததாம்.
சொற்பொருள்: வான்மலர் - வெண்ணிறப் பூ. வெரூஉம் - அஞ்சும். பொய்கைப் பூ - பொய்கையிடத்தே பூத்திருக்கும் ஆம்பற் பூ. தண்ணியள் - தண்மையானவள்; தண்மை அன்பின் நெகிழ்வு குறித்தது; இதன் எதிர் சினத்தின் வெம்மை.
விளக்கம்: சேற்றையாடி வரும் எருமைக் கொம்புகளிலே சில சமயம் பூக்களோடு விளங்கும் பகன்றைக் கொடி சுற்றிக் கொண்டிருப்பதும் உண்டு, இதனை, 'குரூஉக் கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போர்ச்செறி மள்ளரிற் புகுதரும்' என்று, அகநானூற்றினும் காட்டுவர் - (அகம், 316). 'பொய்கைப் பூவினும் தண்ணியள்' என்றது. இயல்பாகவே தண்மையுடைய மலரினும், பொய்கை நீரிடத்தேயே பூத்திருக்கும் பூவிடத்தே தண்மை மிகுதியாயிருக்கும் என்பதறிந்து கூறியதாகும். இதனால், தன் மனைவியின் செவ்வியைப் பெரிதும் எண்ணி வியந்து போற்றினனாம்.
'பொய்கை' அணுகும் போதெல்லாம் தண்மையே தந்து இன்புறுத்தலேபோலப், பொய்கையூரனின் மகளான இவளும் எனக்கு என்றும் இனியவே செய்யும் இயல்பினளாயினள்' என்கின்றான்.
உள்ளுறை: தாயெருமையின் கோட்டிற் கிடந்த பகன்றை மலரைக் கண்டு, அதனை வேறாக நினைத்து அதன் கன்று வெருவினாற் போலத், தன் மார்பிடத்து மாலையினைக் கண்டு, பிறர் சூட்டியது எனப் பிறழக்கொண்டு, தன்னை வேறுபட்டானாக நினைத்துத் தலைவியும் வெறுவி அஞ்சினள் என்றதாம்.
கன்று அஞ்சினும், அதனை நெருங்கி அதன் அச்சம் தீர்த்துப் பாலூட்டி இன்புறுத்தும் தாயொருமையின் செவ்வி போல, அவள் தன்னைப் புறத்தொழுக்கத்தானென மயங்கிப் புலப்பினும், தான் அப்புலவி நீக்கி அவளை இன்புறுத்தும் அன்புச் செவ்வியின் எனத் தலைவன் சொல்வதாகவும், உவமையால் உய்த்து உணரப்படும்.
பொய்கைப் பூவானது நீரிடையுள்ளதன் வரையுமே அழகும் தண்மையும் பெற்று விளங்கி, நீரற்றபோதில் வாடியழிவதே போலத், தலைவியும் தன் காதலன்பிலே திளைக்கும் வரையும் அழகும் தண்மையும் உடையளாகி, அதிற் குறையுறின் வாடி நலனழியும் மென்மையள் என்று போற்றுவான், 'பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியள்' எனப் புகழ்ந்தான் என்பதும் ஆம்.
98. இவளின் கடியரோ?
துறை: புறத்தொழுக்கம் உளதாகிய துணையானே புலந்து, வாயில் நேராத தலைமகள் கொடுமை, தலைமகன் கூறக் கேட்ட தொழி, அவற்குச் சொல்லியது.
(து.வி: தலைவன் புறத்தொழுக்கம் உடையவனாகவே, தலைவி புலந்து ஊடியிருந்தாள். தலைவன் அஃதறிந்து, அவள் ஊடலைத் தீர்த்துத் தலையளி செய்ய, வாயில்கள் மூலம் முயன்றான். தலைவியோ இசைய மறுத்துக் கடுஞ்சொற் கூறி அவரைப் போக்கி விடுகின்றாள். இதனைப் பற்றித் தலைவன், தலைவியின் தோழியிடம் கூற, அவள் அவனுக்குப் பதிலுரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
தண்புன லாடும் தடங்கோட் டெருமை
திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர!
ஒண்தொடி மடமகள் இவளினும்
நுந்தையும் ஞாயும் கடியரோ, நின்னே!
தெளிவுரை: தண்ணிய புனலின் கண்ணே நீராடியபடியிருக்கும், பெரிய கொம்பினையுடைய எருமையானது, திண்ணிதாகப் பிணிக்கப்படுதலையுடைய அம்பிபோலத் தோன்றும், ஊரனே! நின்பாற் குறை காணும் போதிலே, அது குறித்து நின்னைக் கடிவதிலே, நின் தந்தையும் தாயும், ஒள்ளிய கொடியணிந்த மடமகளான இவளினும் காட்டில் கடுமையானவர்களோ?
கருத்து: 'நின்னைக் கடிந்து கூறித் திருத்தும் உரிமையுடையவள் நின் தலைவி' என்றதாம்.
சொற்பொருள்: அம்பி - படகு. திண்பினி - திண்மையாகச் சேர்த்துக் கட்டப் பெற்ற; அம்பியின் அமைப்புக் குறித்தது இது! பல மரங்களைச் சேர்த்துத் திண்மையாகக் கட்டியிருப்பது. மடமகள் - மடப்பம் பொருந்திய தலைவி.
விளக்கம்: நீரிலே திளைத்தாடும் எருமையின் முதுகிலே சிறார்கள் பலரும் அமர்ந்து வருகின்ற தோற்றத்தை, மக்களை ஏற்றியபடி நீரில் மிதந்துவரும் அம்பிக்கு (படகுக்கு) நிகராகக் கண்டனர். இஃது தலைவனும் அவ்வாறே பரத்தையர் பலருக்கும் களித்தற்கு உரியனாக விளங்கும் இயல்பினனாவான் என்று சுட்டிப் புலந்ததாம். தனக்குரியனாகிய நீதான் அவ்வாறு பிறர்க்கும் உரியனாகி ஒழுகும் தன்மை பெறாதாளான தலைவி, நின்னைக் கடிதலும் பொறுந்துவதே, செயவேண்டுவதே, என்கின்றாள் தோழி!
தம் குலமரபிற்குப் பழியென்று கருதி நின் தந்தையும் தாயும் நின்னைக் கடிவதினும், நின்னையே துணையாகக் கொண்டு மனையறம் பூண்டவள், நீதான் அது சிதைப்பக் கண்டு, நின்னை அவரினும் பெரிதாகக் கடிதலும் வேண்டுவதே, என்பதுமாம்.
ஒண்தொடியும் மடப்பமும் கொண்ட இவளும் கடிந்து உரைக்கும்படியான இழிவுடைய நடத்தை மேற்கொண்டது, அத் தலைவியால் மட்டுமின்றி, எம்போல்வாராலும் கண்டித்தற்குரியது என்கின்றனளும் ஆம்.
உள்ளுறை: ஆம்பி தன்மேற் கொண்டாரையெல்லாம் கரை சேர்த்து இன்புறுத்துவது; அதுவே தொழிலாக உடையது; நீராடும் எருமையோ தன் மேல் ஏறியிருக்கும் சிறுவர் பற்றி எதுவும் கருதாமல், தான் நீராடும் இன்பிலேயே முற்றத் திளைத்து இன்புறுவது. இவை தலைவனின் வரை கடந்த பரத்தைமைக்கு நல்ல உவமைகளாயின. அவன் பரத்தையர் தரும் இன்பமன்றி, அவர் வாழ்வு நலம் பற்றி யாதும் அக்கறையற்றவன் என்பதும் கூறினளாம்.
99. நோய்க்கு மருந்தாகியவள்!
துறை:தோழி முதலாயினோர், தலைமகன் கொடுமை கூறி விலக்கவும், தலைமகள் வாயில் நேர்ந்துழி, அவன் உவந்து சொல்லியது.
(து.வி: தலைமகன், தலைவியைப் பிரிவு நோயாலே வாடச் செய்து, பலநாளும் பரத்தையர் சேரியே தன் வாழிடமாகக் கொண்டு விளங்கினதால், அவள் தோழியரும் பிறரும் அவன்பால் வெறுப்பும் சினமும் மிக்கவராயினர். ஒருநாள் அவன் தன் மனைக்கு வர, அவனோடு உறவு வேண்டாதே அவனை விலக்குக என அவரெல்லாம் தலைவிக்கு உரைத்தவராக, இடைப்புகுந்து அவளை விளக்குகின்றனர். தலைவியோ, அவனை வெறாதே ஏற்று, மனைக்குள்ளேயும் அழைத்துச் சென்று, அவன் விரும்பியவாறு எல்லாம் நடந்து அவனை மகிழ்விக்கின்றனள். அவள் பண்பினைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த தலைமகன், தன்னுள் உவந்தானாகச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை
கழனி எருமை கதிரொடு மயக்கும்
பூக்கஞ லூரன் மகள், இவள்;
நோய்க்குமருந் தாகிய பணைத்தோ ளோளே!
தெளிவுரை: பழனத்துப் பாகலிலேயுள்ள முயிறுகள் மொய்த்து உறைகின்ற கூடுகளை, கழனியிடத்தே மேய்கின்ற எருமையானது நெற் கதிரோடும் சேர்த்துச் சிதைக்கும் தன்மை கொண்ட, பூக்கள் நிறைந்த ஊரனின் மகளான இவள்தான், யான் கொண்ட காமமாகிய நோய்க்கு மருந்தாக விளங்கி, அதனைத் தீர்த்த பணைத்த தோள்களையும்
உடையவளாவாள்!
கருத்து: 'நோய்க்கு மருந்தாகும் தோளாள் இவள்' என்றதாம்.
சொற்பொருள்: முயிறு மூசு குடம்பை - முயிறுகள் மொய்த்த படியிருக்கும் கூடு; முயிறுகள் மரத்தின் இலைகளைப் பிணைத்துத் தாம் முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பெற்று வளர்த்தற்கான கூடுகளை அமைப்பதை இன்றும் காணலாம். 'பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை கழனி நாரை உறைத்தலின், நெந்நெல், விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்' என அகநானூறும் காட்டும். (அகம், 255). மயக்கும் - சிதைக்கும். நோய் - காமநோய்.
விளக்கம்: உழவர்க்கே கழனியிடத்துப் பயன்காணலிலே உதவி நின்று சிறத்தற்குரிய எருமையானது, அக் கழனியிடத்தே பயன் நிரம்பிய நெற்கதிரைச் சிதைத்தலோடு, புறத்தே பழனத்திடத்தே பாகலில் விளங்கும் முயிறுகளின் கூடுகளையும் சிதைக்கின்ற கொடுமையினையுடைய ஊரனின் மகள் என்றது. ஆங்கதுதான் நெருக்கித் திருவாரின் இயல்பென உணர்ந்த வளாதலின், யான் எருமை விளைவயற்கதிர் சிதைத்தாற் போல அவளின் இல்லறத்தைச் சிதைவித்ததும், எருமை புறத்தே பழனப்பாகல் முயிறுமூசு குடம்பையை அழித்தாற் போல, பரத்தையர் சேரியிலே தாயரின் கட்டுக்காவலைக் கடந்துவரச் செய்து பரத்தையர் பலரை மயக்கி இன்பம் நுகர்ந்தபின் கைவிட்டதும் பற்றியெல்லாம், என்னைச் சினந்து வெறுத்தொதுக்காது, பூக்கஞல் ஊரனின் மகள், ஆதலின், தான் தன் நறும் பண்பிலேயே மேம்பட்டு நின்றாளாய், என் நோய்க்கும் மருந்தாகி, என்னையும் வாழ்வித்தனள் என்றனன்.
உள்ளுறை: இனித் தோழியரும் உறவோரும் என் கொடுமையினை எடுத்துரைத்து? அவள்பாலுள்ள அன்பின் மிகுதியாலே, அவளுக்குக் கொடுமை செய்த என்னை ஏற்காதபடி விலக்கவும், அவள் என்னை வெறுத்துப் போக்காளாகித், தன் கற்பின் பெருமிதத்தால் என் நோய்க்கு மருந்தாகி, எனக் கிசைந்து, யான் இன்பம் எய்துவதற்குத் தன்னை தந்து உதவியும் சிறந்தனள் என்று உள்ளுறையால் கூறினதும் ஆம்.
இவ்வாறு கொள்ளின் முயிறுமூசு குடம்பையை நெற்கதிரோடு எருமை மயக்கும் என்றதனை, யான் செய்த கொடுமையையும், அவர்கள் என்மேல் சினமுற்றுக் கூறியவற்றையும் சிதைத்து, என்பக்கலேயே அவள் நின்றாள் என்று, வியந்து போன்றி உரைத்ததாகக் கொள்க.
100. நரம்பினுன் இன கிளவியள்!
துறை: வாயில் நேர்தற் பொருட்டு, முகம்புகுவான் வேண்டி இயற்பழித்துழித், தலைமகள் இயற்பட மொழிந்த திறம், தலைமகற்குத் தோழி சொல்லியது.
(து.வி: பரத்தைமை பூண்டிருந்த தலைவன், தன் மனைவியின் நினைவெழத், தான் மனைக்கு வருவதான செய்தியை ஏவலர் மூலம் சொல்லி விடுகின்றான். அவர் வந்து கூறத், தலைவியின் உடனிருந்தாளான தோழி, தலைவி அவனை ஏற்றலே செயத்தக்கது என்னும் கருத்தினளாயினும், தலைவனின் கொடுமை கூறிப் பழித்து, அவள் இசையாள் என மறுத்து அவரைப் போக்க முற்படுகின்றாள். அப்போது, தலைமகள், தான் இசைவதாகச் சொல்லியனுப்புகின்றாள். அவள் சொவ்வியை வியந்து போற்றிய தோழி, தலைவன் வந்தபோது, அவனுள்ளத்தில் படுமாறு, அதனைப் பற்ற உரைக்கின்றதாக அமைந்த செய்யுள் இது.)
புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை,
மணலாடு சிமையத் தெருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகள், இவள்;
பாணர் நரம்பினு மின்கிள வியளே.
தெளிவுரை: புனலாடச் செல்வாரான பெண்கள் இட்டுச் சென்ற ஒள்ளிய அணிகலன்களை, அம் மணற் குன்றின் மேலிருந்து எருமைகள் கிளைத்து வெளிப்படுத்தும், புதுவரு வாயினையுடைய ஊரனின் மகள் இவள்! இவள்தான், பாணரது இசைழெயுப்பும் யாழினது நரம்பினுங்காட்டில் இனியவான சொற்களையும் உடையவள்காண்!
கருத்து: 'என்றும் இனியவே பேசுபவள் என் தலைவி' என்று போற்றியதாம்.
சொற்பொருள்: சிமையம் - உச்சி. கிளைக்கும் - காற்குளம்பாலும் கொம்பாலும் கிளைத்து வெளிப்படுத்தும். பாணர் நரம்பு - யாழ் நரம்பு; அதில் இசைத்தெழும் இன்னிசை சுட்டிற்று. கிளவி - பேச்சு.
விளக்கம்: 'புனலாடப் போவாரான மகளிர்கள், தாம் மணற் குன்றின்மேலே புதைத்துவைத்து, பின் மறந்து போயின ஒள்ளிய இழைகளைத், தான் மணலைக் கிளைத்து ஆடி மகிழ்ந்திருக்கும் எருமையானது, கிளைத்து வெளிப்படுத்தும் யாணர் ஊரனின் மகள்' என்றனள். இஃது எருமைகளும் கூடப் பெண்டிர்க்குத் தம்மையறியாதேயே உதவுகின்ற இயல்புடைய ஊரனின் மகள் தலைவி என்றதாம். ஆகவே, அம்மகளிர் தம் ஒள்ளிழைகளைச் சிலகாலம் இழைந்தாற்போல் கவலையுறினும், மீளவும் அவற்றைப் பெறுவர் என்பதாம். அவ்வாறே, சிலநாள் நின்னைப் பிரிந்து வருந்தினும் மீளவும் பெறுவோம் என்ற நம்பிக்கையிலே உறுதி கொண்டாளாதலின், நின் வரவை உவந்தேற்று இன்சொற் கூறினள் என்று, தலைவியின் குடிமரபின் வந்த சால்பைப் போற்றியதாம்.
புனலாடு மகளிர்தம் ஒள்ளிழைகள் புனலிடத்தே வீழ்ந்து போகாமற்படிக்கு, அவற்றைத் தாம் எளிதாக அடையாளங் கண்டு எடுத்துக் கொள்வதற்கு வசதியாக, மணல் மேட்டு உச்சியிலே வைத்துவிட்டுச் சென்று நீராடுவர். அப்படி வைத்தவற்றைக் காற்றாலும் பிறகாணத்தாலும் மேல் விழுந்து மணல் கிளைத்தாடும் எருமை அதனைக் கிளைத்து வெளிப்படுத்தி, அவருக்கு மகிழ்வூட்டும் என்று கொள்க.
உள்ளுறை: 'மகளிரது மறைந்த இழையை எருமை கிளைக்கும் ஊரன் மகள்' என்றது, இப்போது வாயில் நேர்ந்தலேயன்றிக் களவுக் காலத்து நீ செய்த நன்மை மறைந்தனவும் எடுத்துக் கூறினாள்' என்பதாம், என்னும் பழைய உரைக் கருத்தும் கொள்க.
மாறா அன்பிலே கனுந்து வரும் இனிய சொற்களாதலின், அதன் இனிமைக்குப் பாணர் மீட்டி எழுப்பும் யாழ் நரம்பிலிருந்தெழும் இசை நயத்தினை உவமிக்க எண்ணி, அதுவும் செவ்வியால் பொருந்தாமை கண்டு, 'அதனினும் இனிய சொல்லினள்' என்றனன்.
இவ்வாறு, மருதத்திணையின் நுட்பங்களை எல்லாம் உணரக் காட்டுவனவாக அமைந்த, ஓரம்போகியாரின் செய்யுட்கள் நூறும் அறிந்தனம். இந்நூறு பாட்டுகளையும் பத்துக் குறுந் தலைப்புகளின் கீழ், அவ்வத் தலைப்புகளோடு இசைந்து வரத் தொகுத்திருக்கும் சிறப்பினையும் கண்டோம்.
மருதம் நாகரிகச் செவ்வியாலே சிறப்பது. மன உணர்வுகள் கலைநயத்தோடு செயற்படுத்தப்படும். விரைவிலே, கடமையுணர்வுகள் வலுவற்றுப் பின் தங்கிப் போதலும் நிகழ்கின்றன. இந்த இழுக்கத்தின் விளைவே பரத்தைமையும் பிறவுமாகும். இவ்வாறு இலக்கியத்திலேயும் ஏறுதல் பெற்ற இழுக்கம் பரவலான மக்கட்பண்பு என்பது தவறு. துறைநயம் காட்டலின் பொருட்டாகப் புலமையாளர் கற்பித்துக் கொண்டனவும் பல என்னும் நினைவோடேயே இதனைக் கற்று இன்புறல் வேண்டும். மனைத் தலைவியின் வருத்தத்தை மிகுவிப்பது, மணந்தானின் பரத்தைமைப் பிரிவே எனினும், அதனையும் தன் பொருந்தகையால் அடக்கிக் கொண்ட, குடிமாண்பு போற்றும் பெண்மைச் சால்பினை வியந்து காட்டலே நோக்கமாகப், புலவர்கள் பலப்பல நிகழ்ச்சிகளைப் படைத்துக் காட்டியுள்ளனர். இதுவே நிலையாகும். அன்றிக் கட்டவிழ்ந்த காமத்தளர்ச்சியர் பண்டைத் தமிழரெனக் கொள்ளல் கூடவே கூடாது. அது தமிழ்ப் பண்பும் அன்று; மரபும் அன்று.
அம்மூவனார் செய்தருளிய
நெய்தல்
தொல் தமிழ்ப் பழங்குடியினரின் வாழ்வமைதிகள், பெருப்பாலுன் அவரவர்தம் வாழ்விடத்தின் நிலப்பாங்கையும், அந்நிலப்பாங்கிலே வாழ்வியல் நடாத்திய உயிரினங்களையும், செழித்தோங்கிய மரஞ்செடி கொடிகளையும், மற்றும் அமைந்த பலவான வளங்களையும் தழுவிச் செல்வனாவாகவே அமைந்திருந்தன.
அறிவொளி எழுந்து வளர்ந்து, மக்கள் தம்முள்ளே ஒன்றுகூடி, ஊரும் சேரியுமாகச் சேருந்து இருந்து வாழத் தொடங்கிச், சமுதாய நெறிமுறைகளும் வகுக்கப்பெற்று, வாழ்வியல் செம்மை பெற்றுச் செழுத்தபோதும், மேற்கூறிய நிலந்தழுவிய, சுற்றுச் சூழல்களைத் தழுவிய வாழ்வுப்போக்கே, அனைத்துக்கும் உள்ளீடாக நிற்கும் உணர்வாக அமையலாயின.
இந்நிலையிலே, 'நெய்தல்' என்பது, கடலும் கடல் சார்ந்த இடமும் தனக்குரிய நிலமாக அமைய, அங்கு வாழ்வியல் கண்டாரான மீன்பிடிப்பாரும், உப்பு விளைப்பாருமாகிய மக்களின் வாழ்வியலைத் தழுவிச் செல்லும், வாழ்வியல் ஒழுக்கமாக அமைந்ததாகும்.
காலப்போக்கில், ஒவ்வொரு நிலத்துவாழ் மக்களிடமும், பிறபிற நிலத்துப் பொருள்களிலே செல்லுகின்ற ஆர்வமும் தோன்றி, அதுவே தேவையாகவும் மலர்ந்து வளர்ந்தபோது, ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் வாழத் தொடங்கினர். அப்படி வாழ்ந்துவந்த மக்களிடையே, கருத்துப் பரிமாற்றங்களும் வழக்கம் பரிமாறல்களும் ஏற்படலாயின. இவ்வாறு கொள்வதும் கொடுப்பதுமாகிய தொழிலையே சிலர் வாழ்வியல் தொழிலாக மேற்கொண்டு, அதனால் பெரும் பயனையும் கண்டபோது, இதற்கெனவே வாணிக மக்களும் உருவாயினர். தாமே தனித்தும், தமக்கு உதவப் பலரையும் துணை அமைத்தும், இவர்கள் பெருவளமையோடு தம் தொழிலாற்றி வாழலாயினர்.
இந்தப் பண்டமாற்றமும், இதன் பயனாகக் குவிந்த பெருவளனும், மக்களிடையே தத்தம் விளைவுகளை 'விலைப்படுத்தி' அதற்கீடாகத் தத்தம் தேவைப் பொருள்களைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பண்டமாற்றல் மனப்பாங்கை உருவாக்கின. ஆகவே, மிகு பொருள் குவிக்கக் கருதிய மனவன்மையாளர்களும் தோன்றினர். தம் உரிமைகளை வலியுறுத்திப், பிறர் நலத்தைத் தமதாகக் கவரலாயினர். இதுவே சமுதாய நெறி மரபாக, அவர்தம் வலிமைக்கு எதிர் நிற்கவியலாத பிற மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பெற்ற போது, சமுதாய மக்கள் மேற்குடியினரும் கீழ்க்குடியினருமாக இருவகையாற் பிளவுற்றனர். பிறர் பணிகொண்டு தாம் இனிது மனம்போல் வாழும் உயர் குடியினரும், அவர்க்குப் பணிசெய்தே தம் வாழ்வியலை நடத்தும் ஏவல் உழைப்பாளருமாகத் தமிழினமும் இருவேறு ந்நிலையினதாகிப் பிளவு பட்டது. உயர்குடியினரும் வளமாகவும், வசதிகளோடும், பலர் உவந்து பணிசெய்யத் தம் மனம் விரும்பியவாறு களிப்போடே வாழ்ந்தனர். பொதுநெறிகள் அவர்களைச் சாராதே அன்றும் ஒதுங்கி நின்றனர். ஒன்றி வாழும் உரிமையினராக வாழ்ந்த மகளிருட் சிலர் அவர்களாற் காமப் பொருளாகவும் மதிக்கப்பட்டு நிலை தாழ்த்தனர்.
இத்தகைய நிலையிலே, நாகரிகமென்னும் பெயரோடு தமிழ்ச் சமுதாயம் நிலவிய நாளில், இலக்கியம் படைத்த தமிழ்ச்சான்றோரும், அத்தகைய சமுதாய ஒழுக்க நிலைகளின் வழிநின்றே, தம்முடைய சொல்லோவியங்களை உருவப்படுத்திச் சென்றனர்.
அம்முறையிலே, 'பெருமணல் உலகம்' என்னும் நெய்தல் நில மக்களின் அகவொழுக்கச் செல்வங்களைக் காட்டிச் செல்லும், நூறு குறுஞ்செய்யுட்களைக் கொண்ட நுட்பமான பகுதி இதுவாகும்.
இரங்கலும், இரங்கல் நிமித்தமும் உணர்வெழுப்பும் உணர்வுகளாக, நெய்தல் மகளிரும் மாந்தரும், தாம்தாம் கொண்ட நினைவுகளின் போக்கை, பேசிய பேச்சுக்களின் பாங்கை இலக்கிய நயம்படச் சொல்லும் சொல்லாற்றல் நளினத்தை இச் செய்யுட்களிலே சொல்தோறும் மிளிரக் காணலாம்.
உணர்வுடையோருக்கு, எல்லாப் பொருளமே உயிர்ப்புடன் உளத்தோடே கலந்து உறவாடுகின்றன. உயிருள்ளனவும் உயிரற்றனவும் என்ற பேதம் இல்லாமல், எல்லாமே அவர்தம் சிந்தனைக்கு வித்தாகின்றன. கழிழயும் கானலும், கடலும் கலனும், மீனும் உப்பும், நாரையும் குருகும், புன்னையும் தாழையும், நெய்தலும் அடும்பும், அன்றிலும் அலவனும், இவைபோலும் பிறவும், இலக்கிய நிலையிலே சான்றோரால் எடுத்துக் காட்டப் பெறும்போது, தத்தம் இயற்கையினும் பலவாகச் சிறப்புற்று விளங்கும் உயர்வினையும், நாம் இச்செயுட்களாற் காணலாம்; உணர்ந்து மகிழ்ந்து உவகையுறலாம்.
ஆசிரியர் அம்மூவனார்
ஐங்குறு நூற்றின், நெய்தல் சார்ந்த இந்த ஒரு நூறு குறுஞ் ஞெய்யுட்களையும், செய்தருளிய சான்றோர் அம்மூவனார் என்பார் ஆவார். இவர், தாம் கடற்கரைப் பாங்கிலேயே தோன்றி வளர்ந்தவராதலால், இவர் செய்யுட்கள் உயிரோவியங்களாக, உயிர்ப்பாற்றலுடன் விளங்குகின்றன. மேலும், பாடுபொருளும் 'இரங்கலாகிய' நினைந்துநினைந்து சோரும் உளவேதனையாதலால், கற்பாரின் உள்ளங்களிலும் கசிவை விளைவித்து, நிலைத்து நிழலாடி நிற்கும் பாங்கினையும் பெறுகின்றது.
இவறை, 'மூவன்' என்னும் இயற்பெயருடையார் எனவும், 'அம்' என்னும் சிறப்புப் பெயர் உடன்சேர 'அம்மூவன்' என்று அழைக்கப் பெற்றவர் எனவும் கருதுவர். தொன்மை சுட்டும் 'மூ' என்னும் சொல்லிலிருந்து தோன்றிய பழந்தமிழ்ப் பெயர்களுள் இஃதும் ஒன்றாகும். மூவன், மூதில், மூதூர், மூதுரை, மூப்பு, மூப்பன், மூத்தாள், மூத்தான், மூவேந்தர் என்றெல்லாம் வழங்கும் மூ முதற்பெயர்களும் தொன்மையையே சுட்டுவதைக் காணலாம். இனி, இவரை, 'அம்மூ' என்னும் அன்னைப் பழந்தெய்வத்தின் பெயரோடு, ஆண்பால் விகுதி பெற்றமைந்த 'அம்மூவன்' என்னும் பெயரினர் என்றும் சொல்லுவர் சிலர். இதுவும் பொருந்துவதே!
இந்நெய்தலுக்குரிய சிறுபொழுது எப்பாடு ஆகுத். அதனை ஓர் அழகோவியமாகவே வடித்துக் காட்டுவர், உரையாசிரியர் நச்சினார்க்கியனார். அவர் உரைப்பதனை அப்படியே அறிந்து இன்புறல் நன்று. அவ்வளவு நயமலிந்த சொற்சித்திரங்கள் அவை.
''செஞ்சுடர் வெப்பம் தீரத், தண் நறுஞ்சோலை தாழ்ந்து நீழல் செய்யவும்.''
''தண்பதம் பட்ட தெண்கழி மேய்ந்து, பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாம், குடம்பை நோக்கி உடங்கு பெயரவும்.''
''புன்னை முதலிய பூவின் நாற்றம் முன்னின்று கஞற்றவும்''
''நெடுந்திரை அழுவத்து நிலாக்கதிர் பரப்பவும்''
''காதன் மிக்குக், கடற்கானும் கானத்தானும் நிறை கடந்து, வேட்கை புலப்பட உரைத்தலின்''
''ஆண்டுக் காமக் குறிப்பு வெளிப்பட்டு இரங்கற் பொருள் சிறத்தலின்''
''ஏற்பாடு நெய்தற்கு வந்தது'' என்பன அவர்தம் சொற்கள்.
உணர்வெழுச்சிகளுக்குக் காலவமைதியும், நிலவமைதியும், பிறபிற வமைதிகளும் எவ்வளவு காரணமாகின்றன என்னும் மனவியல் நுட்பத்தை, நாமும் எதனைக் கொண்டு உளம் நிறுத்துவோமாகி, இச்செயுட்களைக் கருத்துடன் கற்போமாக.
1. தாய்க்கு உரைத்த பத்து
இதன்கண் அமைந்தனவாம் பத்துச் செய்யுட்களும், 'தாய்க்கு உரைத்த'லாகிய ஒன்றே பொருளாக அமைந்துள்ளன. ஆதலின், இப்பெயர் தந்துள்ளனர். செவிலியும் தாய்போலவே ஆன்பும், உரிமையும், பொறுப்புணர்வும் மிக்கவள்; பழந்தமிழ் உயர்குடியினரின் குடும்பங்களில், குடும்பத் தலைவிக்கு உயிர்த் தோழியாகவும், அவர்களுக்கு அடுத்த நிலையிலே அனைவராலும் மதிக்கப் பெற்றவளாகவும் விளங்கினவள். அவளிடத்தே சொல்பவளும், அவள் மகளும், தலைவியின் உயிர்த் தோழியும் ஆகியவளே! செவிலியிம் தோழியுமான இவ்விருவரும் தலைவியின் நலத்திலே எத்துணை மனங்கலந்த ஈடுபாட்டினர் என்பதையும் உணர்தல் வேண்டும். தன்னலம் அறவே விட்டுத், தான் அன்பு செய்யும் தலைவியின் நலனே கருதும் இந்தத் தொழியும், தலைவியும், தமிழ் அகவிலக்கியங்களில் காணும் அருமையான தியாக நிகரங்களாகும். தலைவியின் களவுக் காதலைக் குறிப்பாகத் தன் தாய்க்கு உணர்த்தி, அத்தலைவனையே அவளுக்கு எப்படியும் மணம் புணர்க்க வேண்டும் என்னும் தோழியின் பேச்சாக அமைந்த இச்செயுட்களிலும், தன்னலமற்ற அந்த அன்புக் கசிவின் அருமையைக் காணலாம்; அகங்கலந்த நட்பின் உயர்வை உணரலாம்.
101. வந்தன்று தேரே!
துறை: அறத்தொடு நின்ற பின்னர், வரை பொருட்குப் பிரிந்த தலைமகன், வரைவொடு புகுந்தவழி, தோழி, செவிலிக்குக் காட்டிச் சொல்லியது.
(து.வி: களவிலே தலைவியோடு கூடிக் கலந்து ஒன்று பட்ட தலைவன், அவளை வரைந்து முறையாக மணத்தாற் கொள்வதற்குத், தமர்க்குத் தரவேண்டிய பொருளிடைத் தேடி வரும் பொருட்டாகப் பிரிந்து, பிற புலம் சென்றான். அவன் பிரிவினாலே உளத்திற்படர்ந்த நோயும், பெற்றோர் வேற்று மணம் நாடுதலாலே பற்றிய துயரமும் பெரிதும் வருத்தத், தலைவி மிகச் சோர்ந்து மெலிகின்றாள். இந்நிலையிலே. அவன் தேர் வருதலைக் கண்டாள் தோழி. வரைவொடு அவன் வருதலாலே, இனித் தலைவியின் துயரமெல்லாம் அகலும் என்னும் களிப்போடே, அவனுக்கே அவளை மணமுடிக்கத் தன் தாயான செவிலியின் துணையையும் நாடியவளாக, அத் தேர் வரவைக் காட்டி, தலைவியுன் தளவுறைவையும், அவனையே அவள் மணத்தற்கு உரியவள் என்னும் கற்பறத்தையும் சொல்லி வலியுறுத்திகின்றாள்.)
அன்னை வாழி! வேண்டு அன்னை! உதுக்காண் -
ஏர்கொடிப் பாசடும்பு பரியவூர் பிழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின்மகள்
பூப்போல் உண்கண் மரீஇய
நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே!
தெளிவுரை: வாழ்க அன்னையே! யான் நின்பாற் சொல்லும் இதனையும் விருப்போடே கேட்பாயாக. அதோபாராய்! அழகிய கொடிகளையுடைய பசுமையான அடும்புகள் வருந்துமாறு ஏறியும் இறங்கியும், நெய்தலைச் சிதைத்தும், விரைவோடே வருகின்றது. இவளுக்குரியவனான தலைவனின் தேர்! நின் மகளின், நீலப்பூம்போலும் மையுண்ட கண்களிலே பொருந்தியிருந்த ஏக்கமென்னும் நோய்க்கு மருந்தாகித் திகழக்கூடியவன், அவனேதான்!
கருத்து: 'அவனை இல்லத்தார் விரும்பி வரைவுக்கு உடன்படுமாறும் செய்வாயாக' என்றதாம்.
சொற்பொருள்: உதுக்காண் - அங்கே அதோ பாராய். ஏர்கொடி பாசடும்பு - அழகிய கொடியோடே பசுமையாக விளங்கும் அடும்பு; இதனைக் குதிரைக் குளம்புக் கொடி என, இதன் இலையமைதி நோக்கி, இந்நாளிற் பலரும் கூறுவர். ஊர்பு இழிவு - ஏறியநும் இறங்கியும்; தேர்ச் சக்கரம் ஏறியிறங்கக் கொடிகள் உறுதுபட்டு சிதைபட்டுப் போகும் என்பதாம்; மயக்கி - சிதைத்து; இது கழியைக் கடக்கும்போது நெய்தற்கு நிகழ்வது. கொண்கன் - நெய்தல் நிலத் தலைமகன். 'கொண்கன் தேர்' என்றது, அவனது செல்வப் பெருமிதம் தோன்றக் கூறியதாம்.
விளக்கம்: 'நோய்க்கு மருந்தாகிய 'கொண்கன்' என்றது, அவன் நினைவே தலைவிக்கு நோய் தந்தது' என்னும் அவர்கள் களவுக் காதலையும் சுட்டி, 'அது தீர மருந்தும் அவனே' எனக் கற்பினையும் காட்டி வலியுறுத்தி, அறத்தொடு நின்றதாம். 'பூப்போல உண்கண் மரீஇய நோய்' என்றது, அவன் வரவு நோக்கி நோக்கிப் பலநாளும் ஏங்கித் துயருற்று, ஒளியிழந்து நோய்ப்பட்ட கண்கள் என்றதாம். 'நின் மகள்' எனத் தலைவியைக் குறித்தது, அன்புரிமை மிகுதி பற்றியாம்.
உள்ளுறை: 'அடும்பு பரியவும் நெய்தல் மயங்கவும் தேர் விரைய வந்தது' என்றது, அலருரைத்துக் களித்தாரின் வாயடங்கவும், உரியவர் தம் அறியமையினை எண்ணி வருந்தவும், தலைவன் வரைவொடு, ஊரறிய, வெளிப்படையாகத் தன் பெருமிதம் தோன்ற வந்தனன் என்றதாம்.
மேற்கோள்: 'திணை மயக்குறுதலுள், நெய்தற்கண் குறிஞ்சி மயங்கி வந்தது' என்று நச்சினர்க்கினியர், இச் செய்யுளைக் காட்டுவர் - (தொல். அகத், 12 உரை).
குறிப்பு: தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றலான குறிஞ்சித்திணை ஒழுக்கம், இங்கே நெய்தற்கு ஆகிவந்தது. 'உதுக்காண்' என்னும் சொல்லிலே தோன்றும் களிப் புணர்வும் எண்ணி மகிழ்க.
102. தேர் மணிக் குரல்!
துறை: மேற்சொய்யுளின் துறையே இதுவும்.
அன்னை வாழி! வேண்டு அன்னை! நம்மூர்
நீனிறப் பெருங்கடற் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கு மவர் தேர்மணிக் குரலே!
தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக. நம் ஊரிலுள்ள நீலநிறப் பெருங்கடலிடத்துப் புள்ளினைப் போல, நின் மகள் இடைவிடாதே வருத்தித் துன்புறும் அந்தத் துயரமானது நீங்கவும், நாம் அனைவரும் இன்புறவும், அவர் தேர்மணியின் குரல் அதோ இசைப்பதனை நீயும் நன்கு கேட்பாயாக!
கருத்து: ''அவனோடு இவளை மணப்படுத்தற்கு அவன செய்க'' என்றதாம்.
சொற்பொருள்: புள் - கடற்புள்; நாரையும் கடற் காகமும் குருகும் போல்வன. ஆனூது - இடைவிடாது; ஒழிவில்லாமல்.
விளக்கம்: தான் விரும்பும் மீனைப் பற்றுவதற்கு, இடையறாது முயன்று, உயரவும் தாழவுமாகப் பறந்து வருந்தும் கடற் பறவைகள் போலத், தலைவியும் தலைவனின் வரவை எதிர் பார்த்துக் கானற் சோலைக்குப் பலநாள் சென்றும், அவனைக் காணமாட்டாதே துன்புற்று வருந்துவாளாயினள் என்கின்றாள். அது நீங்க, 'அவன் தேர் வந்தது' என்றும், அவள் உள்ளமும், அவளுக்காக வருந்தும் தன்னுள்ளமும், அவள் நலனே நாடும் பிறர் உள்ளமும் இன்புறத் தேர்மணிக்குரல் கேட்பதாயிற்று எனவும், தோழி சொல்லுகின்றாள்.
'புள்ளின் ஆனது இசைக்கும் குரல்' என்று கொண்டால், பொருள் சிறவாது. அவ்வாறாயின் அவன் இரவுப் போதிலே வருவதாகவும், அவன் தேர் வரவாற் கானற்சோலையிலே அடங்கியிருந்த புள்ளினம் அஞ்சிக் குரலெழுப்பும் எனவும் பொருள் கொள்ள வேண்டும். முன்னர்க் களவுக் காலத்தே இரவுக் குறியிடத்திலே அவன் வந்து போயினபோது நிகழ்ந்ததனைக் கண்ட தலைவி, பின்னரும் இரவுப் பொழுதெல்லாம் கண்ணுறங்காளாய்ப், புட்குரல் கேட்கும் போதெல்லாம், தலைவன் வந்தனன் எனவே மயங்கி எதிர்பார்த்து, வராமையாலே வருந்தித் துன்புற்றுத் துயரடைவாளாயினள் என்றும் கொள்ளல் வேண்டும். 'வரைதற்கு வருபவன் பலரும் அறியப் பகற்போதிலேயே வருவன்' என்பதால், இது பொருந்தாது, என்க.
'அவன் தேர்வராவால் அஞ்சியெழுந்து ஒலிக்கும் புட்களின் அந்தத் துயரம் நீங்குமாறு' என்னின், முன்னர் அலரஞ்சி மணிநா தகைத்துவிடுதலாற் பறவையினம் துயருற்றன; இனி மணிக்குரல் கேட்கவே அவை துயரற்றன எனவும் கொள்ளலும் பொருந்தும்.
உள்ளுறை: 'கடற்புள்ளின் துயரம் நீங்க, அவன் தேரின் மணிக்குரல் இசைத்தது' என்பதற்கு, இடையறாதே அலருரை கூறிக்கூறித் திரிந்த அலவற் பெண்டிர்களின் வாயடங்க, அவன் வரைவொடு, ஊரறியத், தன் பெருமிதம் தோன்ற வந்தனன் என்பதும் உள்ளுறை பொருளாகக் கொள்க.
103. தானே அமைந்த கவின்!
துறை: அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழா நின்றுழி, தாய்க்குக் காட்டி, உவந்து சொல்லியது.
(து.வி: தோழி அறத்தோடு நின்றனள். உண்மையுணர்ந்த செவியும், பிறரை அறிவுறுத்தி வரைவுடம்படச் செய்தனள். திருமணமும் நிகழ்கின்றது. அப்போது, மகிழ்ச்சிப் பூரிப்புடன் தன் காதலனருகே அமர்ந்திருக்கும் தலைவியைத் தன் தாய்க்குக் காட்டித், தோழி, பொங்கும் உவகையோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அன்னை வாழி! வேண்டு அன்னை - புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கமைந் தனனால் தானே
தனக்கமைந் தன்றிவள் மாமைக் கவினே!
தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விருப்போடே காண்பாயாக. புன்னையோடு ஞாழலும் பூத்து மலர்ந்திருக்கும் குளிர்ந்த அழகிய கடற்றுறைக்கு உரியவன் தலைவன். அவன் இவளுக்கே உரியவனாக, இப்போது இவ்வதுவையாலே பொருந்தி அமைந்துவிட்டனன். அதனாலே, இதுவரையும் இவளையகன்று மறைந்திருந்த இவளது மாமைக்கவினும், இப்போதில், தானாகவே வந்து இவள் மேனியிலே பொருந்தி அமைந்து விட்டதே!
கருத்து: 'தலைவியின் களிப்பைக் காண்க' என்பதாம்.
சொற்பொருள்: ஞாழல் - புலிநகக் கொன்றை. அமைந்தனன் - மணவாகனாகிப் பொருந்தினன். மாமைக்கவின் - மாந்தளிரன்ன மேனியழகு.
விளக்கம்: 'புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்' என்றது, இவள் தன் இல்லறத்திலும் பலவகை நலனும் ஒருங்கே சேர்ந்து அமைந்து களிப்பூட்டும் என்றதாம். 'இவட்டு அமைந்தனனால் தானே' என்பதற்கு, 'இவளுக்கு எல்லாவகையானும் பொருத்தமான துணைவனாக அமைந்தனன் அல்லனோ?' எனக் கேட்பதாகவும் கருதுக.
உள்ளுறை: 'புன்னையொடு ஞாழல் பூக்கும்' துறைவனுடன், மணத்தால், உவந்து பலரும் வாழ்த்துரைக்க ஒன்றுபட்டதனால், இனி இரண்டு குடும்பத்தின் பெருமையும் உயர்ந்து ஓங்கி, உலகிற் புகழ்பறும் என்பதாம்.
மேற்கோள்: ''இது வதுவை நிகழா நின்றுழி, தாய்க்குக் காட்டித் தோழி கூறியது'' என்று நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் - (தொல். களவு, 24).
104. கொண்கன் செல்வன் ஊர்!
துறை: புதல்வன் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்று செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் நன்மை காட்டிச் சொல்லியது.
(து.வி: தலைவியின் இல்லறவாழ்விலே, அவள் புதல்வனைப் பெற்றிருக்கும் மங்கலநாளில், அவளைக் காணச் சென்றனள் செவிலி. அவளுக்கு, அவன் ஊரைக் காட்டித், தோழி போற்றிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அன்னை வாழி! வேண்டு அன்னை! - நம்மூர்ப்
பலர்மடி பொழுதின் நலமிகச் சாஅய்
நள்ளென வந்த இயல்தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃ தூரே!
தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விருப்போட நீ காண்பாயாக. நம் ஊரிடத்தே, பலரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவுப் பொழுதிலேயும், தன் சிறப்பெல்லாம் மிகவும் குன்றியவனைப் போல, நள்ளென்னும் ஒலியோடே, யாருமறியாத வகையிலே தேரூர்ந்து வந்தானாகிய, செல்வப் பெருக்குடைய தலைவனின் புதல்வனது ஊர் இதுவே! இதன் செவ்வியை உவப்போடு காண்பாயாக!
கருத்து: 'இவள் மனையறமாற்றும் ஊர்ச் சிறப்பைக் காண்பாயாக' என்றதாம்.
சொற்பொருள்: பலர் மடி பொழுது - பலரும் அயர்ந்துறங்கும் இரவின் நடுச்சாமப் பொழுது. சாஅய் - தளர்ந்து. நலம் - சிறப்பு. நள்ளென - நள்ளென - நள்ளெனும் ஒலியோடே. இயல் தேர் - இயலும்தேர். கொண்கன் - தலைவன். செல்வன் - மகன்; புத்திரப்பேறே மிகச் சிறந்த குடிச் செல்வமாதலின், மகனைச் 'செல்வன்' என்றல் பழந்தமிழ் மரபு; இப்படியே மகளைச் 'செல்வி' என்பதும் வழக்கு. இரு குடும்பத்தார்க்கும் அவர் உரியவர் என்பதும் நினைக்க.
விளக்கம்: 'அன்று இவன் தோன்றிய தளர்ச்சி நோக்கி, இவன் வளமையை யாதும் அறியாதே, 'தலைவிக்குப் பொருந்துவனோ?' என நீயும் ஐயுற்றனையே? இதோ பார், அவன் மகனின் ஊர் வளமையை'' என்று தன் தாய்க்குக் காட்டுகின்றாள்' என்றதால், அவன் பிறந்ததும் கொண்கனூரை அவனுரிமையாக்கி நயமுடன் தோழி கூறினாள். இன்றும், தமிழகச் சிற்றூர்ப் புறங்களிலே மகவு பிறந்ததும், அதைக் குறித்தே, 'இன்னானின் தந்தை, இன்னானின் தாய், இன்னானின் வீடு' எனவெல்லாம் வாழங்கும் உரிமைச் சால்பும் நினைக்க. பலர்மடி கங்குற்போதிலும், தான் தலைவிமேற் கொண்ட அன்புக் காதன் மிகுதியாலே தளர்ந்து வந்து இரந்து நின்றான் தலைவன். யாமும் அவன் வரவை நோக்கித் தளர்ந்திருந்தேம் எனத் தலைவன் தலைவியரின் ஒன்றுபட்ட இசைவான காதன்ம்யையும் நினைவுபடுத்தினள்.
இச்செய்யுள் பெரும்பாலும் மகப்பெறுதல் நிகழ்ச்சி, தலைப்பிள்ளை எனினும் கூட, கணவனின் இல்லத்தேயே நிகழ்வது தான் நம் பழைய தமிழ்மரபு என்பதைக் காட்டும். மகன் பிறக்கும் வீடு, அம்மகனுக்கே உரித்தான வீடாகவே இருத்தல் தானே, மிகவும் பொருத்தமும் ஆகும்.
மேற்கோள்: புதல்வற் பெற்றுழித் தலைவன் மனைக் கண் சென்று செவிலிக்கு, அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவனூர் காட்டிக் கூறியது எனக் காட்டி விளக்குவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு. 9)
இந்நாளைக்கு ஏற்பக் கொள்வதானால், மகப்பேற்றுக்குப் பின் தாயையும் மகனையும் தலைவனின் ஊரிற் கொண்டு சேர்த்த போதிலே, உடன் சென்று செவிலித்தாய்க்கு, தோழி அவனூரின் சிறப்புக் காட்டிக் கூறியது என்று கொள்க.
105. நுதல் சிவந்தது!
துறை: அறத்தொடு நின்றபின், வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன், வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது.
(து.வி: தலைவனுக்கு தலைவியைத் தருவதற்கு இசைந்த அவள் பெற்றோர், வரைபொருள் பற்றியும் வலியுறுத்தத், தலைவன் அது தேடிக்கொண்டு வருமாறு வெளியூர் நோக்கிப் போகின்றனன். அவன் சந்திப்பைப் பலநாள் இழந்த தலைவி சோர்ந்து தளர, அவள் நெற்றியும் பசலை படர்ந்தது. அவன் தமர் குறித்த வரைபொருளோடு, வந்து அதனைக் குவித்துப் பெருமிதமாக நின்றபோது, தலைவியின் பெற்றோரும் மகிழ்ந்து, வரைவுக்கும் உடன் பட்டுவிட்டனர். இஃதறிந்ததும், தலைவியின் உள்ளப் பூரிப்பால் அவள் நெற்றியின் பசலையும் மாறிப் பொன்னிற் சிறந்த ஒளியோடே அழகுற்று விளங்கிய தனை வியந்து, தோழி, செவிலித் தாய்க்குக் காட்டிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அன்னை வாழி! வேண்டு அன்னை - முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தெனப்
பொன்னினும் சிறந்தன்று; கண்டிசின் நுதலே!
தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விரும்பிக் காண்பாயாக! முழக்கமிடும் கடலலைகள் கொண்டு தந்த முத்துக்கள், வெண்மணலிடையே எடுப்பாரற்றுக் கிடந்து ஒளி செய்யும், குளிர்ந்த அழகிய துறைக்கு உரியவன் வந்தனன். அவன் வந்தான் என்றதும், இவள் நுதலானது பொன்னினும் சிறந்தவோர் புதிய ஒளிபெற்றதனை நீயும் காண்பாயாக.
கருத்து: ''அவள் களிப்பும் காதலும் அத்தகையது'' என்றதாம்.
சொற்பொருள்: முழங்கு கடல் திரை - முழக்கோடே வரும் கடல் அலை. திரைதரு முத்தம் - அலைகள் தாமே கொண்டு போட்டுச் செல்லும் முத்தம். பொன் - செம்பொன். 'சின்'; முன்னிலை அசை.
விளக்கம்: 'அவன் வரவே அவள் நுதலில் அழகுபடரச் செய்யின், அவர்களின் பிரிவற்றதாக உடனுறையும் இல்வாழ்வுதான் எத்துணை இன்பம் மிகுக்கும்' என்றதுமாம். திரைகள் முத்தைத் தாமே கொண்டு வெண்மல் சேர்ப்பதை, 'இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்' (அகம் - 130) எனப் பிறரும் காட்டுவர். தமிழ்க் கடல் வளமை, அத்தகையது.
உள்ளுறை: 'முழங்கு கடல் திரை தருகின்ற முத்தம், வெண்மணலிடையே கிடந்து இமைக்கும் துறைவன்' என்றது அவன் பெருமுயற்சியின்றியே, தலைவியின் பெற்றோர்கள் விரும்பிய பொருளைத் தேடிவந்து குவித்துத், தலைவியை மணத்தோடு அடைந்தனன் என்பதைக் கூறியதாம். அவன் உயர்வு வியந்ததும் இது.
மேற்கோள்: 'தோழி கூற்று; நொதுமலர் வரவு பற்றி வந்து முன்னிலைக் கிளவி' என்று காட்டுவர், இளம்பூரணர். (தொல். களவு, 24). தலைவன் வரவறிந்தே ஒளிபெறும் இவள் நுதற்கவின், நொதுமலர் வரைவுநேரின் மீண்டும் கெட்டழியும் எனக் கூறித், தோழி அறத்தொடு நின்றதாக, இத்துறைக்கு ஏற்பப் பொருள் காணவேண்டும். அப்போது வரைவுக்குத் தமர் இசைதலை வலியுறுத்தியதாகவும் கருதுக.
106. அம் கலிழ் ஆகம்!
துறை: அறத்தொடு நின்ற தோழி, அது வற்புறுப்பான் வேண்டிச், செவிலிக்குச் சொல்லியது.
(து.வி: தலைவியின் களவுறவைக் குறிப்பாகப் புலப்படுத்தி, அத்தலைவனுக்கே அவளை எவ்வாறும் மணமுடிக்க வேண்டும் என அறத்தொடுநின்ற தோழி, மீண்டும் அதனை வலியுறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! - அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும்
தண்டகல் வளையினும் இலங்குமிவள்
அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே!
தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக; அவர் நாட்டிடத்தேயுள்ள தோலடிப் பாதங்களையுடைய அன்னமானது, தன் துணையாகக் கருதி மிதிக்கும் குளிர்ந்த கடற்சங்கினும் காட்டில், வெண்மை பெற்று விளங்கும் இவளின் அழகொழுகும் மேனியையும் கண்டனை. இதனை நினைவிற் கொண்டேனும், நீதான் அவன செய்வாயாக.
கருத்து: 'அவனையன்றி இவள் நலமுறல் அரிது' என்பதாம்.
சொற்பொருள்: துதி - தோல்உறை. துதிக்கால் - தோல் அடி. துணை செத்து - துணைபோலும் எனக் கருதி. வளை - வெண்சங்கு. ஆகம் - மேனி; மிதித்தல் - மேலேறி மிதித்தல்; இது புணர்ச்சிக் குறிப்பும் ஆகலாம் எனினும், அது அறியா மயக்கமெனக் கொள்க.
விளக்கம்: 'மாமைக் கவின் பெற்ற இவள் மேனி, அவன் பிரிவாலே வளையினும் காட்டில் வெண்மை பெற்றதே! இனியும் இவளை அவனொடு மணம்புணர்ப்பதற்குத் தாழ்க்கின், இவள் இறந்தே படுதலும் கூடுமோ!'' என்கின்றனள் தோழி, இதனால் வேற்றுவரைவும் விலக்கினள்; அறத்தொடும் நின்றனள்.
உள்ளுறை: 'அன்னம் வெண்சங்கைத் தன் துணையாகக் கருதிச் சென்று மிதிக்கும் நாட்டினன் தலைவன்' என்றது. ''அவன் இவள்பாற் பெருங்காதலுடையவன் எனினும், இவளை உடனே வரைந்து கொள்வதற்கு முயலாது, வேறுவேறு செயல்களிலே ஈடுபட்டு மயங்கி உழல்வான்'' என்றதாம்.
குறிப்பு: வெண்மையொன்றே கருதி உன்னம் துணையென மயங்கினாற்போல, நீவிரும் இவள் மெலிவொன்றே நோக்கி, இஃது வேறு பிறவற்றால் (தெய்வம் அணங்கியதால்) ஆயிற்றெனக் கொண்டு மயங்குவீர் ஆயினீர்; அதனைக் கைவிடுக என்றதும்மாம். நறுநீர்ப் பறவையான அன்னத்தைக் கூறியது.
107. யானே நோவேன்!
துறை: தோழி, செவிலிக்கு, அறத்தொடு நிலை குறித்துக் கூறியது.
(து.வி: அறத்தொடு நின்று, 'தலைவியை, அவள் களவுக் காதலனாகிய தலைவனுடன் மணம்புணர்த்தலே மேற்கொள்ளத்தக்கது' என்று தோழி செவிலிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவும் ஆகும்.)
அன்னை வாழி! வேண்டு அன்னை! - என் தோழி
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப், படர்மெலிந்து,
தண்கடற் படுதிரை கேட்டொறும்
துஞ்சாள் ஆகுதல், நோகோ யானே!
தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக. என் தோழியான தலைவியானவள். தன் ஒளி சுடரும் நுதல் பசலை நோயடைந்தளர்வுற்றனள்; மென்மேற் படரும் காமநோயாலும் மெலிவடைந்தனள்; குளிர் கடலிலடத்தே மோதியெழும் அலைகளின் ஒலியை இரவிடையே கேட்கும்போதெல்லாம் கண் உறங்காதாளும் ஆயினள்! அது குறித்தே யானும் வருந்துவேன்!
கருத்து: 'அவள் நலனை நினைத்தேனும் பொருந்துவன உடனே செய்க' என்றதாம்.
சொற்பொருள்: சாஅய் - வருந்தித் தளர்ந்து. படர் - காமநோய். படுதிரை - மோதி ஒலிக்கும் அலை
விளக்கம்: இரவெல்லாம் அவன் நினைவாலேயே வாடி வருந்துதலன்றி, கண் உறங்காதும் துயருற்று நலிகின்றனள் தலைவி; நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்தும் போயினவள், உறக்கமும் பற்றாதே இருந்தால், இனி நெடுநாள் உயிர் வாழாள்; அது நினைந்தே யான் பெரிதும் நோவேன். அவள் சாவைத் தவிர்க்க வேனும், அவனோடு அவளை மணத்தால் விரைவிற் கூட்டுக என்றதாம். யான்தான் நோவேன்; நீயும் தமரும் அறியார்போல் வாளாவிருத்தல் முறையாமோ என்று நொந்ததுமாம்.
108. நயத்த தோள் எவன்கொல்?
துறை: அறந்தொடுநிலை பிறந்த பின்னும், வரைவு நீடிற்றாக, 'மற்றொரு தலைமகளை வரையுங்கொல்?' என்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தோழி, அவட்குச் சொல்லியது.
(து.வி: தோழி அறத்தோடு நின்று செவிலியும், பிறரும் அவளை அவனுக்கே தருவதெனவும் மனம் இசைந்து விட்டனர். அதன் பின்னரும் அவன் அவளை வரைந்து வருதலிலே மனம் பற்றாதானாய்க் காலம் தாழ்க்கச், செவிலியின் உள்ளத்தே கவலை படர்கிறது. 'வேறொருத்தியை அவன் வரைவான் போலும்' என்ற ஐயமும் எழுகின்றது. அதனைக் குறிப்பாலறிந்த தோழி, அதனை மாற்றக் கருதிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அன்னை வாழி! வேண்டு, அன்னை - கழிய
முண்டகம் மலரும் தண்கடற் சேர்ப்பன்
எந்தோள் துறந்தனன் ஆயின்
எவன்கொல் மற்றவன் நயந்த தோளே?
தெளிவுரை: வாழ்க அன்னையே! இதனையும் விரும்பிக் கேட்பாயாக. கழியிடத்தேயுள்ள நீர்முள்ளிகள் மலர்ந்து மணம் பரப்பியபடியிருக்கும் குளிர்ந்த கடற்கரைக் குரியவன் சேர்ப்பன். அவன், எம் தோள் நலத்தையே துறந்து கைவிட்டனனாயின், அவனால் விரும்பப்பட்ட பிற மகளிர்களிர் தோள்கள் தாம், என்னாகுமோ?
கருத்து: ''அவன் எம்மையன்றிப் பிறரை நாடான்'' என்றதாம்.
சொற்பொருள்: முண்டகம் - நீர் முள்ளி. 'எம்தோள்' தலைவியின் தோள் நலத்தைச் சுட்டியது; 'ஒன்றித் தோன்றும் தோழி மேன' என்னும் விதியையொட்டி வந்தது. துறந்தனன் - கைவிட்டனன்.
விளக்கம்: வரைவு நீடிக்கவே, செவிலி பலவாறாக எண்ணி ஐயங்கொள்கின்றாள்; அவள் ஐயம் அனைத்தும் பொருந்தாதெனத் தோழி மறுப்பவள், இவ்வாறு கூறுகின்றாள் என்று கொள்க. 'எம்மையே அவன் மறந்தான் என்றால், அவன் விரும்பிய பிறரின் கதிதான் யாதோ?' என்னும் கூற்றிலே, அவன் எம்மை மறக்கவே மாட்டான் என்ற உறுதிப்பாடே புலப்படக் காணலாம். 'உழுவலன்பாலே உன்றுபட்டார் இடையே வேற்றுவரைவுகள் நிகழா' என்பதும் நினைக்க.
மேற்கோள்: 'இதனுள் கழிய முண்டக மலரும்' என முள்ளுடையதனைப் பூ மலருமென்று உள்ளுறுத்ததனால், இருவர் காமத்துறைக் கண்ணும் ஒருதலை இன்னா, ஒருதலை இனிது என்றாள் என்பது. 'என் தோள் துறந்தனன்' என்பது முள் உடைமையோடு ஒக்க, 'என்னாங்கொல் அவன் நயந்த தோள்' என்றவழி அவன் அன்பில் திரியாமை கூறினமையின், முண்டக மலர்ச்சியோடு ஒப்பிக்கப்படும் என்பர் பேராசிரியர் - (தொல். உவம, 59).
'அறத்தொடு நின்றபின் வரைவுநீட மற்றொரு குலமகளை வரையுங்கொல்?' என்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தொழி, அவட்குக் கூறியது என்று காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். களவு, 23).
109. பல நாளும் வரும்!
துறை: அறத்தொடு நின்ற பின்பு, வரைவான் பிரிந்த தலைமகன், கடிதின் வாராதவழி ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான் போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்கு, தோழி சொல்லியது.
(து.வி: வரைந்து வருவதாகத் தலைவன் குறித்த காலம் கடந்து, மேலும் பல நாட்களும் கழிந்தும், அவனை வரக்காணாத செவிலியின் உளத்திலே, கவலையலைகள் எழுந்து மோதுகின்றன. 'அவன் உங்களை உதுக்கிவிட்டான் போலும்? அவன் உங்களிடம் என்னதான் சொல்லிப் போனான்?' என்று தோழியை நோக்கிக் கேட்கிறாள். அவட்குத் தோழி உறுதியோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அன்னை வாழி! வேண்டு அன்னை! - நெய்தல்
நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்
எம்தோள் துறந்த காலை, எவன்கொல்
பன்னாள் வரும் அவன் அளித்த பொழுதே?
தெளிவுரை: வாழ்வாயாக அன்னையே! இதனையும் விருப்போடே கேட்பாயாக. நீரிடத்தே படரும் நெய்தலது உட்டுளை கொண்ட கொடிகளிலே, மிகுதியான பூக்கள் மலர்ந்திருக்கும் துறைவனாகிய தலைவன், எம் தோளைத் தழுவிப் பிரிந்த அந்தக் காலத்திலே, அவன் எமக்குத் தலையளி செய்து மகிழ்வித்த அந்தப் பொழுதின் நினைவே, மீளவும் பல நாட்களும் எம்மிடத்தே வந்தபடி யுள்ளனவே! இதுதான் எதனாலோ அன்னாய்?
கருத்து: ''காலந்தாழ்ப்பினும், அவனே சொன்னபடி வந்து மணப்பான்'' என்பதாம்.
சொற்பொருள்: நீர்ப்படர் - நீரிலே படரும். தூம்ப - உள்ளே துளையுடைய தன்மை. அத்தன்மையுடைய நெய்தற் கொடிக்கு ஆயிற்று. பூக்கெழு - பூக்கள் பொருந்தியுள்ள 'தும்பின் பூ' என்று கொண்டு, துளையமைந்த பூவென்று உரைப்பினும் பொருந்தும். அளித்த பொழுது - தலையளி செய்து இன்புறுத்திய பொழுது.
விளக்கம்: அவன் குறித்த அந்த நாள் எல்லை கடந்தாலும் அவன் எம்மைத் தழுவிக்கூடியதான அந்தப் பொழுதின் நினைவு எம்மிடம் பல நாளும் மாறாதிருக்கின்றன; ஆதலின், அவன் வந்து எம்மை வரைந்து மணப்பான் என்னும் உறுதியுடையோம் என்கின்றனள். தலைவியின் காதன்மை மிகுதியும் ஆற்றியிருக்கும் திறனும் காட்டுவது இது. இதுவே பிரிந்தார் இயல்பாகும் என்பதைப் பிறரும் கூறக் காணலாம். (குறு. 326)
உள்ளுறை: 'நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன்' என்றது, நீருள்ளேயே படர்ந்து வெளித் தோன்றாவாறு மறைந்து விளங்கினும், நெய்தற் கொடியானது பூக்கெழுமிய தன் தன்மையிற் குன்றாதாய்ப் புறத்தே பலர் கண்டு மகிழுமாறு போலத், தலவனும், தன் நிலைமை பற்றியாதும் நமக்கு உணர்த்தாதேயும், சொன்னபடி வாராதேயும் காலம் தாழ்த்தவனாக விளங்கினும், மணத்தோடு ஊரறிய வருதலில் ஒருபோதும் தவறமாட்டான் என்பதாம்.
நெய்தல் நீர்ப்படர் தூம்பின் பூக்கெழு துறைவன் ஆதலின், நிருள்ளவரைக்குமே, அதுவும் செழித்துப் பூத்திருக்கும் என்பதும் உணர்வான். அவ்வாறே அவனோடு உடனுறையும் போதிலேதான் தலைவியும் மகிழ்ந்திருப்பாள் என்பதையும் அறிந்து, தன் சொற்பிழையானாய் விரைந்து வருவான், அவள்மேற் பெருங்காதலன் அவன் ஆதலின், என்பதுதாம்.
'அவன் எம்தோள் துறந்து காலையில், அவன் அளித்த பொழுதே. பன்னாள் எவன்கொல் வரும்?' என்று கூட்டி, 'அவனே எம்மைக் கைவிட்ட பொய்ம்மையாளன் ஆயினால், அவன் அருளிச் செய்த மாலைப்பொழுதும், பொய்யாதே எதனால் வருமோ?' என, காலம் பொய்யாதே போல அவனும் பொய்யான் என்றதுமாம்.
மேற்கோள்: இத்துறையை இவ்வாறே காட்டி, இச்செய்யுளை சந்நினார்க்கினியரும் களவியல் உரையுள் காட்டுவர் - (தொல். களவு, 23).
110. வாழிய பாலே!
துறை: நொதுமலர் வரைவின்கண், தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
(து.வி: களவிலே கலந்து இன்புற்று, அவனையே தன் கணவனாகவும் வரித்து, அவன் வரைவொடு வந்து தன்னைத் தமரிசைவோடே மணத்தலையும் எதிர்பார்த்திருக்கின்றாள் தலைவி. அவ்வேளையிலே, அவளை மணம்பேச நொதுமலர் (அயலார்) வருகின்றனர். அது கண்டு, செவிலிக்கு அறத்தொடு நின்று உண்மையைச் சுட்டியுரைப்பாளான தோழி, சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அன்னை வாழி! வேண்டு அன்னை! - புன்னை
பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை
என்னை என்றும் யாமே - இவ்வூர்
பிறிதொன் றாகக் கூறும்
ஆங்கும் ஆக்குமோ? வாழியே பாலே!
தெளிவுரை: வாழிய அன்னையே! யான் கூறும் இதனையும் நீ விரும்பிக் கேட்பாயாக. பொன்னின் நிறத்தைக் கொண்டவாக இதழ்விரிந்து மலர்ந்திருக்கும் புன்னைப் பூக்கள் மலிந்த துறைவனான தலைவனையே, யாம் 'எமக்குரியனாகிய தலைவன்' என்று கொள்வோம். ஆயின், இவ்வூரில் உள்ளவரோ, மற்றொன்றாகச் சுட்டிக் கூறாநிற்பர். ஊழ்தான் அவ்வண்ணமும் ஆகச் செய்யுமோ? செய்யாதாகலின், அதுதான் வாழ்க!
கருத்து: 'ஊழே கூட்டிய உறவாதலின், அது எதனாலும் மாறுதல் அன்று' என்றதாம்.
சொற்பொருள்: பொன்னிறம் விரியும் - பொன்னிறத்தோடே இதழ் விரியும். என்னை - என் ஐ; என் தலைவன். பால் - ஊழ். ஆங்கும் - அவ்வாறும். ஆக்குமோ - செய்யுமோ?
விளக்கம்: ''ஊழ் கூட்டிய உறவே தலைவனோடு பெற்று களவுறவாதலால், அதுதான் கடினமணமாகி நிறைவுறவும் அவ்வூழே துணை நிற்கும்; அதனின் மாறுபடக் கூறுவார் கூற்றெல்லாம் பொய்ப்படும்'' என்றதாம். 'புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவன்' என்றது, அதனைக் காணும் அவன், தலைவியை வரைவொடு சென்று மணத்தலிலேயும் மனம் செலுத்துகிறவனாவான் என்பதாம்.
உள்ளுறை: துறையும் புன்னையின் பொன்னிறம் விரிந்த பூக்களின் மிகுதியினாலே அழகும் மணமும் பெறுகின்ற தனைச் செய்யும் விதியே, அத்துறைவனையும் எம்மோடு மணத்தால் இணைத்து எமக்கு அழகும் மணமும் கூடிய நல்வாழ்வு வாய்க்கச் செய்யும் என்பதாம்.
மேற்கோள்: வேற்று வரைவுவரின் அது மாற்றுதற்குத் தலைவி கூறல் இது என்பர் இளம்பூரணனார் - (தொல். களவு, 20). இறந்துபாடு பயக்குமாற்றால், தன் திறத்து அயலார் வரையக் கருதிய ஞான்று, அதனை மாற்றுதற்குத் தலைவி கூற்று நிகழும் எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு, 20). இவர்கள் கருத்து, இது தலைவி கூற்று என்பதாம். அவ்வாறு கொள்வதும் பொருந்தும்; அவளும் அறத்தொடும் நிற்றல் இயல்பாதலின்.
2. தோழிக்கு உரைத்த பத்து
தலைமகள், தன் தோழிக்குத் தன் உள்ளத்தின் போக்கைச் சொல்வதாக அமைந்த இப்பத்துச் செய்யுட்களும். ஆதலின் இத்தலைப்பின்கீழ் தொகுத்துள்ளனர். தலைமகளின் ஆர்வமும் பண்பும், பேசும் பேச்சின் சால்பும், இவற்றுட் காணப்படும்.
111. பிரிந்தும் வாழ்ய்துமோ!
துறை: 'இற்செறிப்பார்' எனக் கேட்ட தலைமகள், வரையாது வந்து ஒழுகும் தலைவன் சிறப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லியது.
(து.வி: தலைவியை வரைந்து மணத்து கொள்வதற்கு முயலாது, களவின்பத்தையே பெரிதும் நாடுபவனாகத் தலைவன் தொடர்ந்து வருகின்றனன். தன் களவுறவைப் பெற்றோர் அறிந்தனராதலின் இற்செறிப்பு நிகழும் எனவும், அவனுக்கு ஊறு விளையும் எனவும், அவனைக் காணல் இயலாது எனவும் பெரிதும் அஞ்சுகின்றாள் தலைவி. குறித்த இடத்தே வந்து, செவ்வி நோக்கித் தலைவியைத் தழுவுதற்குக் காத்திருப்பவனாக, ஒரசார் மறைந்திருந்து, தான் வந்துள்ள குறிப்பைஉம் தலைவன் உணர்த்துகின்றான். அதனைக் கேட்டு, அவன் வரவு அறிந்த தலைவி, அவன் மனம் வரைதலில் விர்வுறுமாறு, தன்னுடன் இருக்கும் தன் தோழிக்குச் சொல்வாள் போல, அவனும் கேட்டறியச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அம்ம வாழி, தோழி! பாணன்
சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீச்
சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே -
அருந்தவம் முயறல் ஆற்றா தேமே?
தெளிவுரை: தோழி, இதனைக் கேட்பாயாக! பாண்மகன், கழிகள் சூழ்ந்த இடத்தே சென்று, தூண்டிற் கயிற்றிலே இரையை மாட்டி வைத்து, அதனைப் பற்றவரும் சினைப்பட்ட கயல்மீன்களை அகப்படுத்திக் கொல்லும் துறையையுடையவனின் உறவினைப் பிரிந்தும் நாம் உயிருடன் வாழ்வோமோ! அங்ஙனம் பிரிந்தும் உயிர்வாழ் வதற்கேற்ற மனவலுவைத் தரும் அரிய தவத்தினை மேற்கொள்ளவும், நாம் இயலேம் அல்லம் அன்றோ!
கருத்து: 'நம் இத்தகு அவலநிலையினை அவன் உணர மாட்டானோ?' என்பதாம்.
சொற்பொருள்: கழி சூழ் மருங்கு - கழிகள் சூழ்ந்துள்ள கடற்கரைப் பாங்கர். நான் இரை கொளீஇ - நாணிலே இரையினைக் கொழுவி வைத்து. முயலல் - செய்தல். ஆற்றாதேம் - இயலாதேம். ஆசையை அடக்குதலே தவம்; அதுவே மிக்கெழுதலால் 'அருந்தவன் ஆற்றாதேம்' என்கின்றனள்.
விளக்கம்: 'நாணிலே மீனுக்குரிய இரையை மாட்டி வைத்து, அதனைப் பற்றும் சினைகயல் தூண்டில் முள்ளிலே மாட்டிக் கொள்ளத், தான் அதனைப் பற்றிக் கொல்லும் பாணன்' என்றது, அவ்வாறே பொய்ச்சூள் பலவும் நமக்கு நம்பிக்கையுண்டாகுமாறு சொல்லி, நம்மைத் தெளிவித்துத் தன்னோடும் சேர்த்துக் கொண்ட நம் காதலன், நம்மை மணப்பதற்கு முயலாதே போவதால், நாம் இற்செறிப்பால் நலிந்து, பிரிவினாற் பெருகும் காமநோயால் இறந்து படுதலையையும் செய்யும் அருளில்லாக் கொடியனாயினான் என்பதாம்.
இதனைக் கேட்கும் தலைவன், தலைவியை மணந்து கொள்ளும் வரைவு முயற்சியினை விரையச் செய்தலிலே மனஞ் செலுத்துவான் என்பதாம்.
'நாளிரை' என்பதும் பாடம்; இதற்குப் பாணன் தன் நாளுணவை கொண்டபின், சினைக்கயலைச் சென்று மாய்க்கும் என்றும் பொருள் கொள்ளலாம். கூடியின்புற்று மகிழ்ந்த தலைவன், நம்மை முறையாக மணந்து வாழ்விக்க நினையாதே, மீளவும் களவுக்கூட்டமே கருதி வருவானாய், நம்மை இன்பம் காட்டிப் பற்றிப், பின் மாய்க்கும் துயருட் செலுத்துகின்றான் என, அதற்கேற்பப் பொருள் கொள்க. 'அருந்தவம் முயலல் ஆற்றாதேம்' என்றது, அவனை விரைந்து வரைவொடும் வருமாறு செய்தற்கும், அது பிழைத்த வழி பிரிவுத்துயர் பொறுத்திருந்து உயிரைப் போகாதே தடுத்துக் காத்தற்கும், 'இரண்டு ஆற்றாதேம்' எனத் தம் ஏலாமை கூறினாள் என்க.
உள்ளுறை: 'சூழ்கழி மருங்கில், பாணன், நாண் இரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன்' என்றது, தன் பேச்சிலே நமக்கு நிலையான இன்பமே கருதினான் போல உறுதி காட்டி, அதனை வாய்மையாகக் கொண்டு நாம் பற்றிக் கொள்ளவும், நம்மை அருளின்றி அழியச் செய்யும் இயல்பினன் ஆயினான் அவனும் என்பதை உள்ளுறுத்துக் கூறியதும் ஆம்.
112. வரக் காண்குவோமே!
துறை: களவு நீடுவழி, 'வரையலன் கொல்' என்று அஞ்சிய தொழிக்கு, தலைமகன் வரையும் திறம் தெளிக்கத், தெளிந்த தலைமகள் சொல்லியது.
(து.வி: தலைவன் தலைவியரிடையே களவுறவே தொடர்ந்து நீடிக்கின்றதனைக் கண்ட தொழி, 'இவன் இவளை வரைவான் அல்லன் போலும்!' என்று நினைத்து அஞ்சுகின்றாள். குறிப்பால் அதனை அறிந்த தலைவன், தான் தலைவியை வரைவதற்கான முயற்சிகளைச் செய்து வருதல் பற்றிக் கூறித் தலைவியைத் தெளிவுபடுத்துகின்றான். அவள், தன் தோழியின் அச்சம் நீங்கக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
அம்ம வாழி, தோழி! பாசிலைச்
செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான்வரக் காண்குவம் நாமே
மறந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே!
தெளிவுரை: கேட்பாயாக தொழி! பசிய இலைகளையுடைய செருந்தி மரமானது பரந்து கிளைத்திருக்கும் பெரிய கழியினையுடைய சேர்ப்பன், நம்மைத் தெளிவித்தபோது சொல்லிய உறுதிமொழிகளை எல்லாம், நாணத்தையுடைய நெஞ்சினேமாதலின், நாம் போற்றாதே மறந்தேமாய், அவன் வரைவொடும் விரைய வராமை பற்றியே அஞ்சிக் கலங்கினோம். அவன், தான் சொன்னவாறே வரைவொடு வருதலையும், இனி நாமே விரைவிற் காண்போம்!
கருத்து: ''அவன் சொற் பிழையானாய் வந்து நம்மை மணப்பான்'' என்றதாம்.
சொற்பொருள்: பாசிலை - பசுமையான இலை. செருந்தி - நெய்தற் பாங்கிலே செழித்து வளரும் மரவகையுள் ஒன்று. இருங்கழி - கரிய வழி.
விளக்கம்: 'நெருந்தி தாய' என்பதற்கு, செருந்தி மலர்கள் உதிர்ந்து கிடைத்தலையுடைய எனவும், செருந்தி கிளைத்துப் படர்ந்து தாழ்ந்து நிழல் செய்ய எனவும் பொருள் கூறலாம். கருங்கழியிலே நெருந்தியின் மலர்கள் உதிர்ந்து கிடத்தலைப் போல, இவள் கூந்தலில் மலர்சூட்டிக் கொள்வள் என்பதும் கொள்க. 'மறந்தேம்' என்றது, அவன் அது மறந்திலன் என்பதை வலியுறுத்தற்காம். 'நாணுடை நெஞ்சு' என்றது, அவனைக் களவிற் கூடும்போதும், 'விரைய வேட்டு வந்து என்னை மணங்கொள்க' என்று வலியுறுத்தற்கு மாட்டாது, வாயடைத்துவிட்ட நாணம் கவிந்த நெஞ்சம் என்றதாம்.
உள்ளுறை: இருங்கழியிடத்தும், பாசிலைச் செருந்தி தாய அழகினைக் கொண்ட சேர்ப்பன் அவனாதலின், அவனும் தானாகவே வந்து நமக்கு நலன் விளைக்கும் பெருந்தன்மை உடையவனாவான் என்பதாம்.
113. எம்மை என்றனென்!
துறை: வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, 'நெருநல் இல்லத்து நிகழ்ந்தது இது' எனத் தலைமகள் தொழிக்குச் சொல்லியது.
(து.வி: வரைவினை வேட்கும் தலைவி, மறைவாக நிற்கும் தலைவன் கேட்டு உணருமாறு, தன் தோழிக்குச் சொல்வது போல அமைந்ததே இச் செய்யுளும். நடந்ததாக நிகழ்ச்சி யொன்றைப் படைத்து நயம்படவும் அத்தலைவி கூறு கின்றனள்.)
அம்ம வாழி, தோழி! நென்னல்
ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார், 'பெண்டு'டென மொழிய, என்னை
அதுகேட்டு 'அன்னாய்' என்றனள், அன்னை;
பைபய 'எம்மை' என்றனென், யானே!
தெளிவுரை: தோழி வாழ்க! இதனையும் நீ கேட்பாயாக; நேற்று, ''உயர்ந்த அலைகள் வெண்மணலிடத்தை வந்து அலைக்கும் துறைவனுக்கு இவள்தான் பெண்டாயினாள்'' என்று, என்னைச் சுட்டி ஊரார்கள் அலர் கூறினர். அதனைக் கேட்டுச் சினந்தாளான செவிலித்தாய். என்னை நோக்கி, 'அன்னாய்'! என்றனள். யானும் மெல்ல மெல்ல, 'எம்மை' என்ற சொல்லைக் கூறினேன்.
கருத்து: 'அவள் நற்றாயிடம் உரைக்க, இனி நாம் இற்செறிக்கப்படுதல் உறுதியாகும்' என்றதாம்.
சொற்பொருள்: ஓங்குதிரை - ஓங்கி உயர்ந்தெழும் கடலலை உடைக்கும் - அலைத்துச் சிதறச் செய்யும். ஊரார் - அலருரைக்கும் இயல்பினரான ஊர்ப்பெண்டிர். பெண்டு - மனையாள். அன்னாய் - அன்னையே; இஃது அலர் சொல்வது மெய்யோ என வினவிய சினத்தால் எழுந்த ஒரு குறிப்புச் சொல்.
விளக்கம்: ஓங்கு திரை வந்து மோதிமோதி வெண் மணலை அலைத்து வருத்தலேபோல, அலருரைக்கும் பெண்டிர்கள் தம் பழி பேச்சால் நம்மை மிகவும் அலைத்து வருத்துவாராயினர் என்பதாம். 'எம்மை' என்றது கேள்வியின் விடையாக, 'எம்மையோ பழித்தனர், அதனை நீயும் நம்புகதியோ?' எனச் சொல்லித் தெளிவித்ததாகவும் கொள்க; 'எம்.ஐ' எனப் பிரிந்து, 'ஆம், அவனே எம் தலைவன்' எனக் குறிப்பாற் புலப்படுத்தியதெனலும் பொருந்தும்.
மேற்கோள்: ஈண்டு பெண்டென் கிளவி என்றே பாடங் கொள்ள வேண்டும். 'ஊரார் பெண்டென மொழிய' எனச் சான்றோர் கூறலின் என நச்சினார்க்கினியரும் - (தொல். பெயர், 9) உரைப்பர். பெண்டென்றதனைக் கேட்டு, 'அன்னாயென்றள் அன்னை' என அலர் தூற்றினமை கண்டு செவிலி கூறிய கூற்றினைத் தலைவி கொண்டு கூறியவாறு இதுவெறும் அவரே களவியலுள்ளும் காட்டுவர் - (தொல். களவு, 24).
உள்ளுறை: 'ஓங்கு திரை வெண்மணல் உடைக்கும் துறைவன்' என்றது, அவனும் தான் வரைவொடு வந்து நம்மை மணத்து கோடலினாலே, அலர்வாய்ப் பெண்டிரின் வாயடங்கச் செய்வான் என்பதனை உள்ளூறுத்துக் கூறியதாம்.
114. நாம் செல்குவமோ?
துறை: இடைவிட்டு ஓழுகும் தலைமகன், வந்து, சிறைப்புறத்தானாயினமை அறிந்த தலைமகள், அவன் கேட்கு மாற்றால் தொழிக்குச் சொல்லியது.
(து.வி: தலைவன் தலைவியரின் களவுக் காதற் சந்திப்புகள் தொடர்ந்து நிகழவில்லை. இடையிடையே பல நாட்கள் அவன் வாராதானாக, இவர்கள் ஏமாற்றத்தோடு வீடு திரும்பலும், அது குறித்து வருந்தி வாடுதலும் நிகழ்ந்தன. ஒரு நாள, குறித்தவிடத்தே வந்து, தலைவியும் தோழியும் இருப்பதைக் கண்டவன், தோழியை விலகச் செய்யும் குறிப்பொலியை அருகே ஒருசார் மறைந்திருந்து எழுப்புகின்றான். அப்போது தலைவி, அவனும் கேட்டுத் தம்முடைய துயரநிலையை உணரும்படியாகத், தான் தன் தோழியிடம் சொல்வது போலச் சொல்லும் செய்யுள் இது.)
அம்ம வாழி, தோழி! கொண்கன்
நேரேம் ஆயினும் செல்குவங் கொல்லோ
கடலின் நாரை இரற்றும்
மடலம் பெண்ணை அவனுடை நாட்டே?
தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக; நம் காதலை நம்பால் வரைந்து வருவதற்குக் காணப் பெறாதேம் நாம் ஆயினேம்; அதனால், கடல்நாரை தங்கியிருந்து ஒலித்தபடியே யிருக்கும். மடல் பொருந்திய பனைகளைக் கொண்டு அவனுடைய நாட்டிற்கு, நாமே சென்று அவனைக் கண்டு நம் துயரைச் சொல்லி வருவோமோ?
கருத்து: 'அவன் நம்மை வரைதற்கு நினைத்திலனே' என்பதாம்.
சொற்பொருள்: நேரேம் - நேராக வருதலைக் காணப் பெற்றிலேம். கடலின் நாரை - கடற் பாங்கிலே வாழும் நாரை. இரற்றும் - பெரிதாகக் குரலெடுத்து ஒலிக்கும் பெண்ணை - பனை. செல்குவம் கொல்லே - செல்வோமா?
விளக்கம்: 'நாமே செல்குவம் கொல்லோ?' என்றது, நம்மால் அவனைப் பிரிந்து உயிர்வாழ்தல் என்பது இயலாமையினால், அவன் நம்மை மறந்திருந்தானாயினும், அவனை மறவாதே, வாடி நலனழிந்து நலியும் நாமாவது, அவனைப் போய்க் காண்பேமா என்றதாம். இதனால் தலைவியின் ஏக்கத்தையும் காதல் மிகுதியையும் உணரும் தலைவன் அவளை வரைதற்கு விரைவிற் கருத்துக் கொள்வான் என்பதாம்.
'கடலினாரை யிரற்றும்' என்பதற்குக் கடல் முழக்கினைப் போன்று நாரைகள் குரலெழுப்பும் என்று பொருள் கூறலும் பொருந்தும். 'நேரேமாயினும்' என்பதற்கு, ஊரலரும் காவன் மிகுதியும் பிறவான குறுக்கீடுகளுமே அவனைச் சந்திக்க வியலாமல் செய்து வருகின்றன; அதனாற் காணேம் ஆயினேம் என்று கூறுவதாகவும் கொள்க.
உள்ளுறை: 'இரையுண்ட நாரையானது பெண்ணையின் மடலிடத்தேயிருந்து தன் துணையை விரும்பிக் கூவியழைக்கும் நாடன்' என்பதற்கு, ஊரலரும் காவன் மிகுதியும் பிறவான குறுக்கீடுகளுமே அவனைச் சந்திக்க வியலாமல் செய்து வருகின்றன; அதனாற் காணேம் ஆயினேம் என்று கூறுவதாகவும் கொள்க.
உள்ளுறை: 'இரையுண்ட நாரையானது பெண்ணையின் மடலிடத்தேயிருந்து தன் துணையை விரும்பிக் கூவியழைக்கும் நாடன்' என்று சொன்னது, அவ்வாறே தன் செயலால் நம்மை இடையிற் பலநாட்கள் மறந்திருந்த தலைவன், அது முடிந்ததும், இப்போது வந்து, நம்மை யழைத்தானாகக் குரலெழுப்புகின்றான்'' என்பதாம்.
பாடபேதங்கள்: கொண்கனை, நேரேனாயினும், பெண்ணையவருடை.
115. அன்னை அருங்கடி வந்தோன்!
துறை: இற்செறிப்புண்ட பின்னும், வரைந்துகொள்ள நினையாது, தலைமகன் வந்தானாக, அதனை அறிந்த தலைமகள், அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது.
(து.வி: தலைவியின் களவு பற்றிய ஊரலரும், அவள் அழகழிந்த நிலையும், அவளை ஐயுற்று இற்செறிப்புக்குத் தாயை உட்படுத்தச் செய்தன. தோழி மூலம் இஃதறிந்தும், வரைந்து வராதே காலம் கடத்தி வந்தான் தலைவன். அவன் ஒரு நாள் இரவு, தலைவியின் வீட்டுப் பக்கம் வந்து நின்று, தன் வருகையை அறிவிக்கும் குறிப் பொலியைச் செய்ய, தோழியுடன் அவ்விரவுக் குறியிடத்தே வந்திருந்த தலைவி, தலைவன் உள்ளத்திலே நம் துயரம் பற்றிய தெளிவு ஏற்படுமாறு, தான் தன் தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அம்ம வாழி தோழி! பன்மாண்
நுண்மணல் அடைகரை நம்மோ டாடிய
தண்ணந் துறைவன் மறைஇ,
அன்னை அருங்கடி வந்துநின் றோனே!
தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் கேட்பாயாக; பலவான காட்சிகளையுடைய, நுண்மணல் செறிந்த கடற்கரையிடத்தே, நம்மோடும் கூடியாடினவனாகிய, குளிர்ந்த துறைவனான தலைவன், அன்னையின் அரிய காவலமைந்த நம் இல்லின் புறத்தேயும் வந்து நின்றனனே!
கருத்து: 'அவன் ஊன்றிச் செல்லவேண்துமே என்றதாம்.'
சொற்பொருள்: பன் மாண் - பலமான மாட்சிகள்; இவை புன்னை நிழலும் பிறவும் போன்றவை; 'பன்மாண் நம்மோடாடிய' எனச் சேர்த்தும் பொருள் கொள்ளலாம். அடைகரை - கடற்கரைப் பாங்கர். அருங்கடி - அரிய காவல்; அதையுடைய தம் வீட்டைக் குறித்தது; ஆகு பெயர்.
விளக்கம்: 'அன்னை அருங்கடி வந்து, மறைஇநின்றோன் என்பதனால், 'அவன் வருகையைத் தான் அறிந்த போதிலும் அவனை அவ்விடம் சென்று சேரற்கு விரும்பிய போதிலும் அன்னையின் அருங்காவலால் அதுதான் இயலாதே போகப் பெரிதும் ஏக்கமுற்று வாடினதும் உணர்த்துகின்றாள். இதனால் வரைந்து மணங்கொண்டாலன்றி தலைவன் தன்னைப் பெறவியலாது என்பதை உணர்த்தி, அதனில் மனம் விரையத் தூண்டியதாம். 'பன்மாண் நம்மோடு ஆடிய தண்ணந் துறைவன்' என்றது, அத்தகு காதன்மை காட்டிக் களவிலே துய்த்து மகிழ்ந்தவன் முறையாக மணம் பேசிக் கொள்ளற்கு மறைந்தனனே' என்ற ஏக்கத்தாற் கூறியதாம். இதனை உணரும் தலைவன் வரைந்து கோடலே இனி அவளை அடையும் ஒரே வழியென்று, அதன்பால் கொள்வான் என்க.
உள்ளுறை: 'பன்மாண் நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடிய துறைவனை' என்றது, இவன் முன்பு நம்பாற் காட்டிய அந்த அன்பினை மறந்தான் என்றும், அவ்வாறு ஆடிய அவனைப் பலரும் அறிவாராதலின், மறைந்து நிற்பதனைக் காணின் ஐயுற்று ஊறிழைப்பர் என்பதை ஊணரானாயினான் என்றும் உட்பொருள் புலப்படக் கூறியதாம்.
மேற்கோள்: 'பெற்ற வழி மலியின் தலைவிக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு, இச்செய்யுளை இளம்பூரணனாரும், நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் - (தொல். களவு, 21, உரை)
116. மாலை வந்தன்று மன்ற!
துறை: ஏற்பாட்டின்கண் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்பத், தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: பகலெல்லாம் தலைவனைக் குறியிடத்தே எதிர்பார்த்து, அவன் வராமையால் சோர்ந்து வாடிய தலைமகள், அவன் மாலைப்போதிலே வந்து, சிறைப்புறத்தே செவ்வி நோக்கி நிற்பதறிந்து, தோழிக்குச் சொல்வாள் போல, அவனும் கேட்டுணருமாறு, தன்னுடைய துயரநிலையைத் தெறிவுபடுத்துவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
அம்ம வாழி தோழி! நாம் அழ
நீல இருங்கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று, மன்ற -
காலை யன்ன காலைமுந் துறுத்தே.
தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக. எம்மைப் போன்ற கொடிய தென்ற்றஃகாற்றை முற்பட விட்டுக் கொண்டதாக, நான் அவன் பிரிவுக்கு ஏங்கி அழும்படியாகச் செய்வதும் கருமையான பெரிய கழியிடத்து நீலமலரைக் குவியச் செய்வதுமான, மாலைப்போதும் வந்ததே!
கருத்து: 'எவ்வாறு தாங்கியிருப்பேனோ?' என்றதாம்.
சொற்பொருள்: நீலம் - நீல மலர்கள்; 'அவை கூம்பும்' என்றது இதழ் குவிந்து ஒடுங்கும் என்றதாம்; அவ்வாறே தலைவியும் தன் ஊக்கமிழந்து ஒடுங்கிச் சோர்வாளாயினள் என்பதாம்; காலையன்ன - காலனைப் போன்ற காலை முந்துறத்து - தென்றற் காற்றை முன்னாக வரவிட்டு.
விளக்கம்: 'நாம் அழ' என்றது, மாலையின் குறும்புக்கும் பிரிவென்னும் படர் நோய்க்கும் ஆற்றாதே துயருட்படுவதைக் குறித்ததாம். 'நீல இருங்கழி நீலம் கூம்பும் மாலை' என்றது. அவ்வாறே பகற்போதெல்லாம் தோழியருடன் பேசியும் ஆடியும் மறந்திருந்த பிரிவின் வெம்மை, மாலைப்போதில் மேலெழுந்து வாட்டித் துயருறச் செய்வதைக் கூறியதாம். மாலை - மாலை நேரம்; மயக்கத்தையும் குறிக்கும்; அதுவே பிரிந்தாரைப் பெரிதும் துயர்ப்படச் செய்தலால். 'தென்றலை முன்னாக விட்டுத் தொடர்ந்து வரும் மாலை 'காலன் போன்றது' என்பது, இவளை விரைவில் மணந்து கொண்டாலன்றி, இவளை இழக்கவே நேரும்' என்பதைத் தலைவனுக்கு உணர்த்தற்காம்.
117. சேர்ப்பனை மறவாதீம்!
துறை: வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: இதுவும் வரைதல் நினையாதே களவுறவிலேயே நாட்டம் மிகுந்தவனாகிய தலைவனுக்குத், தன் நிலைமை புலப்படுத்துவாள், தலைவி, தோழிக்குக் கூறுவாள் போற் கூறியதே யாகும்.)
அம்ம வாழி, தோழி! நலனே
இன்ன தாகுதல் கொடிதே - புன்னை
அணிமலர் துறைதொறும் வரிக்கும்
மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே.
தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனைக் கேட்பாயாக! புன்னையின் அழகான மலர்கள் ஒழுங்குபட உதிர்ந்தவாய்த் துறைதோறும் கோலஞ் செய்யும், கருநீலக் கடல் நீரையுடையனாகிய தலைவனை, மறவாதே எப்போதும் நினைத்திருப்போமாகிய நமக்கும், நம் நலன் இத்தன்மைத்தாகிக் கெடுதல்தான் மிகக் கொடியதேயன்றோ!
கருத்து: 'எம் நிலைதான் இனி யாதாகுமோ?' என்றதாம்.
சொற்பொருள்: நலன் - பெண்மை நலனாகிய பெருங்கவின்! 'இன்னதாகுதல்' என்றது, பசலையால் உண்ணப் பெற்றுக் கெட்டழிந்ததனைக் காட்டிக் கூறியதாம். கொடிதே - ஒழுங்குபட உதிர்க்கும். மணிநீர் - நீலமணிபோலும் நீர்: தெளிநீர் என்றும் பாடம் கொள்வர்; அதுவாயின் 'கழிவுநீர்' என்று கொள்க.
விளக்கம்: 'சேர்ப்பனை மறவாதோர்' என்றது, சேர்ப்பன் தந்த இன்பத்தினையும், அவன் நினைவையும். இவ்வாறு, அவனை நாம் நம் மனத்தகத்தேயே மறவாதே கொண்டிருக்கும் போதும் அவன் பிரிந்தான் என நம் நலன் அழிந்தே கெடுவதேன்? அது கொடிது அலவோ! என்கின்றனள். இதனால் தன் காதல் மிகுதியும் ஆற்றினும் அடங்காத் துயரமிகுதியும் புலப்படுத்தி, விரைய வரைதற்குத் தலைவனைத் தூண்டினளாம்.
உள்ளுறை: 'புன்னையின் அணிமலர் துறைதோறும் வரிக்கும் மணிநீர்ச் சேர்ப்பன்' என்றது. அதனைக் காண்பவன் உள்ளத்திலே தன் திருமணத்தைப் பற்றிய நினைவு தோன்றிற்றில்லையே என்பதை உள்ளுறுத்துக் கூறியதாம். புன்னை மலர்வது நெய்தல் நிலத்தார் மணங்கொள்ளும் காலம். ஆதலால் இவ்வாறு சொல்லியதும் பெருந்தும் என்க.
மேற்கோள்: காம மிக்கவழித் தலைவி கூறுதல் என இச்செய்யுளை இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் - (தொல். களவு, 21).
118. பின் நினைந்து பெரய்த்தேன்!
துறை: சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி வாயின் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூ உமாம்.
(து.வி.: தலைவன் வரையாது, களவே மேற்கோள்ளலால் வருந்தித் தோழி வாயின் மறுத்தனள். மறுநாளும் தலைமகள் வரத், தலைமகள், தோழி தடுக்கவும் நில்லாதே அவன்பாற் சென்றனள். பின் அவள் வந்து, தோழிக்குச் சமாதானம் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அம்ம வாழி, தோழி! யானின்று
அறனி லாளற் கண்ட பொழுதில்,
சினவுவென் தகைக்குவென் சென்ற னென்,
பின்நினைந்து திரங்கிப் பெயர்தந் தேனே!
தெளிவுரை: தோழி வாழ்வாயாக! இதனைக் கேட்பாயாக. இன்று, அறனில்லாதவனாகிய தலைவனைக் கண்ட பொழுதிலே 'அவன்பாற் சினங்கொள்வேன்; இனி அவன் இவண் வராதிருக்க என்று அவன் வரவையும் தடுப்பேன்'' என்றே நினைத்துச் சென்றேன். பின்னர், அது செய்தலால் பெருந்துயரமாம் என்று இரக்கமுற்றவளாய், யாதும் அவன்பாற் சொல்லாதேயே மீண்டேன்!
கருத்து: 'அவனை மறத்தல் நமக்கும் இயல்வதில்லையே' என்றதாம்.
சொற்பொருள்: அறநிலாளன் - அறமே அறியாதவன். தலைவனைச் சுட்டியது; அறமாவது களவிற் கலந்தானை அலராகா முன்பே மணங்கொண்டு, இல்லத் தலைவியாக்கிக் கொள்வது. தகைக்குவேன் - என்று எண்ணி; தகைத்தல் அவன் வரவை மறுத்தல். பின் நினைந்து - பின் விளைவை நினைந்து.
விளக்கம்: 'பின் நினைந்து இரங்கிப் பெயர்ந்தேன்' என்றது, ''அவனை வெறுத்து ஒதுக்கின், உயிர் வாழாமையே நம்முடைய நிலையாதலின், அவனை வெறுக்கவும் தடுக்கவும் முயலாதே, அவனுடன் இசைந்து ஒழுகி மீண்டேன்; இதனை நீயும் அறிவாய்; ஆதலின் என்னைப் பொறுப்பாய்'' என்பதாம். தொழியும், தலைவியின் கற்புச் செவ்வி நோக்கி, அவள் செயலையே சரியாகக் கொள்வாய் என்பதாம்.
119. பெரிதே அன்பிலன்!
துறை: 'வரைதற்கு வேண்டுவன முயல்வோம்' எனச் சொல்லி, வரையாது ஒழுகுகின்ற தலைமகன் சிறப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
(து.வி: 'வரைதலுக்கு முயல்வேன்' என்று உறுதிகூறிச் சென்றவன், அது செய்யாது, மீண்டும் களவையே விரும்பி வந்து, சிறைப்புறத்தானாகியது அறிந்த தலைவி, அவனும் கேட்டு அறியுமாறு, தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
அம்ம வாழி, தோழி! நன்றும்
எய்யா மையின் ஏதில பற்றி,
அன்பிலன் மன்ற பெரிதே -
மென்புலக் கொண்கன் வாராதோனே!
தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும், நீ கேட்பாயாக. நெய்தல் நிலத்தானாகிய தலைவன், நம்மை வரைதலான நல்ல மரபினை அறியாதேயே உள்ளனன்; அதனாலே, அயலானவைகளைப் பற்றியே செல்லுகின்றனன். அவன் நம்மீது பெரிதும் அன்பிலாதான் என்றே நாமும் அறிகின்றோம். (என் செய்வேம்.)
கருத்து: 'அவனை நம்பி நம்மைத் தந்த நாமே தவறினோம்' என்பதாம்.
சொற்பொருள்: மென்புலம் - நெய்தல் நிலம். நன்றும் - நன்மை தருவனவான ஒழுக்கங்களையும். எய்யாமை - அறியாமை. ஏதில - அயலான ஒழுக்கங்கள்; களவே நாடிப் பொறுப்பை உதுக்கிவரும் செயலும், நினைவும்.
விளக்கம்: அவன் வரைந்து வாராமை பிறவற்றால் அன்று; நமக்கு நன்மையாவது மணவாழ்வே என அறியாதவனாதலின், களவே நமக்கு இன்பமாவது என எண்ணி, அதுவே பற்றி நடந்து வருகின்றனன். ஆதலால், அவன் அன்பில்லாதவன் என்பதும் தெரிந்தோம். இனி நம் நிலை துயரேதான் போலும் என்று வருந்திக் கூறுவதுபோலக் கூறியதாகக் கொள்க. இதனைக் கேட்டவன், அவள்மேல் பேரன்பின்னாதலின் மேலும் காலம் நீட்டிக்காது வரைதற்கு முயல்வன் என்பதாம்.
120. நல்லவாயின தோளே!
துறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், வந்து சிறைப்புறத்தானாகத், தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
(து.வி: வரைவுக்குக் குறித்த காலம் கழிந்தும், வரைவொடு வராதவன், களவுறவை நாடியவனாக வந்து, குறியிடத்தே இருப்பதறிந்த தலைவி, பெருகிய மனத்துயரோடு, அவனும் கேட்டுணருமாறு, தோழிக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
அம்ம வாழி, தோழி! நலமிக
நல்ல வாயின, அளிய மென் தோளே -
மல்லல் இருங்கழி மல்கும்
மெல்லம் புலம்பன் வந்த மாறே!
தெளிவுரை: வாழ்வாயாக தோழி! இதனையும் நீ கேட்பாயாக; வளம் பெற்ற கரிய கழியினத்தே, நீர்வளம் மிகுந்து விளங்கும் நெய்தல் நிலத்தானாகிய நம் தலைவனும் வந்தனன். அதனாலே, நலம்கெட்டு அளிக்கத்தக்கவாயிருந்த எம் மெல்லிய தோள்களும், நலம் மிகுந்தவாய்ப், பண்டேபோல் நல்லெழில் உடையவாயினவே!
கருத்து: 'இனி, அவன் வரைவொடு இனி வருவான்' என்பதாம்.
விளக்கம்: 'மணப்பின் மாணலம் எய்திக் தணப்பின் நெகிழ்ப தடமென் தோளே' என்று குறுந்தொகையும் (299) கூறும், செவ்வியலே எழில் பெற்றன தலைவியின் தோள்கள் என்க. : 'மாறு'; ஏதுப் பொருள்படும் ஓர் இடைச்சொல். 'கழி நீர் அறல் விரியும்' எனப் பாடங்கொண்டு, 'கழிநீர் பெருகிப் பரந்து பலவிடமும் படர்தலாலே அறல்பட்டு அவ்விடங்களும் விளங்கும் என்றும் உரைக்கலாம். அவ்வாறே, அவன் வரைவொடும் வருதலாலே தலைவியும் புதிதான அழகு பெறுவாள் என்க.
'மல்லல் இருங்கழி மல்கும் மெல்லம் புலம்பன்' அவன் ஆதலின், அவனும் மிகத் தண்மையுடையான்; நமக்கு வெம்மை மிகுக்கானாய் இனி வரைந்து வருவான் என்று சொன்னதாம்.
மேற்கோள்: : ''பெற்றவழி மலியின் தலைவிக்குக் கூற்று நிகழும் என்று இளம்பூரணனாரும். (தொல். களவு, 21); தலைவி இடையீடின்றித் தலைவனை எதிர்ப்படப் பெற்ற ஞான்று புதுவது மலியின், அவளுக்குக் கூற்று நிகழும்'' என நச்சினார்க்கினியரும். (தொல். களவு, 20), இச் செய்யுளைக் காட்டிக் கூறுவார்கள்.
இப் பத்துச் செய்யுட்களும், பழந்தமிழ்க் காதல் வாழ்வில், தோழியின் சிறப்பான இடத்தை உணரச் செய்வனவாகும். உயர்குடிப் பிறந்து, குடித் தகுதியும் மரபும் பிறழாதே வாழும் தலைவி, பெரும்பாலும், இல்லத்துப் புறம் போந்து உலகநடையும் பிறவும் அறிந்து தெளிதற்கு வாய்ப்பற்றவளாகவே இருப்பள். இந்நிலையிலே அக்கட்டுப்பாட்டு வேலை தடை செய்யாதே எங்கும் செல்லவும் எவருடனும் பேசிப் பழகும் உரிமையும், அதற்கேற்ற மனவுறனும் பெற்றவளாகத் திகழும் தோழி, தலைவியினும் எதையும் முடிவு செய்யும் அறிவாற்றல் உள்ளவளும் ஆகின்றாள். மேலும், பாசத்தாலே அறிவின் நிதானத்தைத் தவறவிடும் நிலைமையும் அவள்பால் இல்லை. இத்துடன், தலைவியின் நல்வாழ்விலே அவள் மிகவும் அக்கறையும் பொறுப்புணர்வும் மிக்கவள். அவள் இன்ப துன்பங்களைத் தனதாகவே கருதிப் பேசும் பாங்கினள். எனவே, அவள் உடன்பாடு தலைவன் தலைவர்க்கு மிகவும் தேவையாகின்றது. இல்லத்தாரும் தலைவியின் உறுதுணையாகத் திகழும் அவளிடமே, தலைவியின் நினைவகம் செயலும் பற்றிய பலவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கின்றது.
நாணமும் மடமும் குடிப்பண்பும் தலைவியின் பேச்சைத் தடை செய்வன போலத் தோழியின் பேச்சைத் தடுப்பவனல்ல. அவள் பேச்சிலும் செயலிலும் தெளிவும் துணிவும் உடையவள். இப்படி ஒரு துணையை வகுத்துள்ள இலக்கியப் பாங்கும், அதற்குள்ள பொறுப்பான நிலையும் மிகவும் வியக்கற்பாலனவாம்.
3. கிழவற்கு உரைத்த பத்து
தலைமகனுக்குச் சொல்லிய பத்துச் செய்யுட்களின் தொகுப்பு இப்பகுதி. 'தலைமகன்', 'தலைவன்' என்னும் பெயர்களே, அவர்கள் குடிநெறி பிறழாத் தலைமை வாழ்வினரென்றும், தம்முடைய தலைமைப்பாட்டையும் அறநெறிகளையும் பேணுதற்கு உரியர் என்றும் காட்டும். இத்தகு தலைமையினைப் பிறப்பால் உடையாரும் தவறும்போது, அவர்க்குப் பிறர் அதனை உணர்த்திச் சொல்வன, ஆழமான உணர்வுநயச் சொற்களாகும். 'தலைவன்', 'கிழவன்' என்னும் உரிமைப் பெயரோடும் சுட்டுப்படுதலின், 'கிழவற்கு உரைத்த பத்து' என்றனர்.
121. நின் கேளைக் கண்டோம்!
துறை: பரத்தை தலைமகற்குச் சொல்லிது. (1) 'பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையோடு கூடி மறைந்து ஒழுகா நின்றான்' என்பது அறிந்து தலைவி புலந்துழி, 'இத்தவறு என் மாட்டு இலை; நீ இப் புலவியை நீக்க வேண்டும்' என்று தோழிக்குத் தலைமகன் கூற, புலவியை நீக்கக் கருதிய தோழி, அவள் இளமை கூறி நகையாடிச் சொல்லியதூஉம் ஆகும். (2).
(து.வி.: தலைவன் தன்னை மறந்தானாய்க் கைவிட்டுத், தன் மனைவியிடத்தே போதற்கு நினைகின்றான் என்பதனைக் குறிப்பால் உணர்ந்தாள், பரத்தை. அவள், அவனுக்கு அது பற்றிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. (1).
தலைவன் பரத்தையுறவினன் என்று அறிந்து, அவனோடு புலந்து ஒதுங்குகின்றாள் தலைவி. அதனை நீக்கிக் கூடியின் புறவும், அவளைத் தெளிவிக்கவும் கருதிய தலைவன், 'தான் ஏதும் பிழை பாடாக நடத்திலன்' என்று தோழிக்கு உறுதிகூறி, அவள் உதவியை நாடுகின்றான். அவள் தலைவியின் இளமைப் பற்றிச் சொல்லி, அவளை மறந்து பரத்தைமை நாடித் திரியும் அவன் இழுக்கம் பற்றியும் நகையாடிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது. (2).
இப்பகுதிச் செய்யுள்கள் அனைத்திற்குமே இத்துறைகளுள் ஒன்றே பொருத்திப் பொருள் கொள்ளல் வேண்டும். ஒரே துறையமைதியுடனும் அமைந்த பத்துச் செய்யுட்கள் இவை. 29, 30ஆம் செய்யுட்கள் காணப்பெறவில்லை; அதனை அறிந்து வருந்த வேண்டும்.)
கண்டிகும் அல்லமோ, கொண்க நின் கேளே!
முண்டகக் கோதை நனையத்
தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே!
தெளிவுரை: கொண்கனே! கழிமுள்ளிப் பூவாலே தொடுத்தணிந்த தன் தலைக்கோதை நனையுமாறு, தெளிந்த அலைகளையுடைய கடலின் கண்ணே பாய்ந்து, தான் தனியாக நீராடி நின்றவளான, நினக்கு உறவுடையாளை, யாமும் அன்று கண்டனம் அல்லமோ!
கருத்து: 'யாம் கண்டதை மறைத்துப் பொய்கூறேம்' என்பதாம்.
சொற்பொருள்: கண்டிகும் அல்லமோ - கண்டேம் அல்லமோ; தலைவனும் தானும் கண்டிருந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கூறியது; 'இகும்' என்னும் இடைச்சொல் தன்மைக் கண்ணும் வந்தது இது. (தொல். இடை, 27. இளம், நச், சேனா.) முண்டகம் - கழிமுள்ளி; முண்டகப் பூவைக் கோதையாகக் கட்டிச் சூடிக் கடலாட்டயர்வது நெய்தன் மகளிரின் இயல்பாதலை இதனால் அறியலாம். பௌவம் - கடல். நின்றோள் - நீராட்டயராதே நின்னை இன்னொருத்தியுடன் கண்டதும் செயலற்றுக் கோதை நனைய நின்றவள். கேள் - உரிமை கொண்டவள்.
விளக்கம்: நீராடி நின்னோடும் மகிழ்தற்குத் தன்னைப் புனைந்தவள், நீதான் வேறொருத்தியோடும் நீராட்டயர்தலைக் கண்டதும், தான் தனியளாகக் கடலிற் பாய்ந்து, நின் செயலாலே மனம்வருந்தித் தன் முண்டகக் கோதை நனையத் தான் நீராடாமற் செயலற்று நின்றனளே! அவளை யாமும் கண்டேம் அல்லமோ! ஆதலின் மறைத்துப் பயனில்லை; தலைவியை இரந்து வேண்டித் தெளிவித்து, அவள் இளமை வேகமும், அவள் நினக்கு உறவாட்டியென்னும் உண்மையும் உணர்ந்தாயாய் நடப்பாயாக என்றதாம். "பரத்தை சொன்னதாகக் கொள்ளின், 'நின்கேள் அவ்வாறு நின்றது கண்ட நீ, அவள்பால் நெஞ்சம் தாவிச் செல்ல, என்னையும் மறந்து அன்று மயங்கினையல்லையோ?" என்றதாகக் கொள்க.
தோழி கூற்றாயின், 'அவளைத் தனித்து நீராடும் துயரிலே வீழ்த்திவிட்டு, நீ இன்னொருத்தியோடு சென்று கடலாடலை, யாம் எம் கண்ணாரக் கண்டேமாயிருந்தும், நீதான் பொய்யுரைத்தல் எதற்கோ? இனியேனும், அவள் இளமை நெஞ்சறிந்து, அவள் நின் கேளென்ற நினைவின் உணர்வோடு, அவளைப் பிரிந்து வாடி நலனழியவிட்டுப் கூடியின்புற்று புறம் போகாவாறு, வாய்வாயாக' என்றதாகவும் கொள்க!
122. குருகை வினவுவோள்!
துறை: மேற்செய்யுளின் துறையே இதுவும்.
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே!
தெளிவுரை: கொண்கனே! தன் ஒள்ளிய இழையானது மணல் மேட்டிலே வீழ்ந்ததென்று, மிகவும் வருந்தியவளாக, அருகே காணப்பெற்ற வெள்ளாங்குருகினை விளித்து, 'நீ கண்டனையோ?' என்று வினவுகின்ற நின் உரிமையாட்டியை யாமும் கண்டேம் அல்லமோ!
கருத்து: 'அவள் நின் கேள் அல்லவோ!' என்றதாம்.
சொற்பொருள்: உயர் மணல் - மணல்மேடு. ஒள்ளிழை - ஒளி மிகுந்த இழை; எளிதாகவே கண்ணிற் படக்கூடியது என்பது கருத்து. வெள்ளாங் குருகு - கடற்பறவை இனத்துள் ஒன்று.
விளக்கம்: 'அத்தகு முதிரா அறிவினளின் நெஞ்சை நைந்து நோகச் செய்தல் நினக்குத் தகாது' என்பதாம்.
இது தலைவனிடமிருந்து உண்மையினை அறிவதற்காகச் சொல்லப்படும் குற்றச் சாட்டாகலாம். காமஞ்சாலா இளமையோளையும் நாடிப் பின்செல்லும் நீ, மடமையுற்றாய் என்றதாம்.
மேற்கோள்: காமக்கிழத்தி நலத்தினைப் பாராட்டிய தீமையில் முடிக்கும் பொருளின்கண் தலைவிக்குக் கூற்று நிகழும், (தொல். கற்பு, 6) எனவும், தலைவி மற்றொருத்தி குணம் இத்தன்மையள் எனச் சொல்லித் தலைமகனது குறிப்பினை அறிதற்கும் உரியள். (தொல். பொருள். 38) எனவும், இளம்பூரணனார், தலைவி கூற்றாகவே இச் செய்யுளைக் காட்டுவர்.
திணைமயக்குறுதலுள் இப்பத்தும் நெய்தற்கண் மருதம்; இவை பெதும்பை பருவத்தாள் ஒரு தலைவியொடு வேட்கை நிகழ்ந்தமையைத் தலைவி கூறித், தலைவன் குறிப்புணர்ந்து - (தொல். அகத், 12) எனவும்; தலைவன் வரையக் கருதினாளோர் தலைவியை, 'இனையள்' எனக்கூறி, அவன் குறிப்பறியக் கருதுதலின் வழுவாய் அமைந்தது. (தொல். பொருள், 40) எனவும் நச்சினார்க்கினியர் கூறுவர். முதலில் தலைவி கூற்றாகவும், பின் தோழி கூற்றாகவும் அவள் கொள்வதும் ஓர்க.
உள்ளுறை: வெள்ளாங்குருகு ஒள்ளிழை தேடித் தராதவாறு போல, அவளை நாடும் நின் நாட்டமும் என் வழியாக நினக்குப் பயன்தராது என்று கொள்க.
123. ஆயம் ஆர்ப்பத் திரை பாய்வோள்!
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின்கேளே?
ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத்
தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே!
தெளிவுரை: கொண்கனே! ஒளியமைந்த நெற்றியையுடைய ஆயமகளிர்கள் பலரும் ஆரவாரம் செய்ய, தண்ணென விளங்கும் பெருங்கடலிலே, அலையிற் பாய்ந்து கடல் நீர் ஆடுவாளான, நின் உறவாட்டியை, யாமும் கண்டேமல்லமோ?
கருத்து: ''ஏன் பொய்யுரை புகல்கின்றனை?'' என்றதாம்.
சொற்பொருள்: ஆயம் - ஆயமகளிர்; விளையாட்டுத் தோழியர். ஆர்ப்ப - ஆரவாரித்து ஒலி எழுப்ப.
விளக்கம்: அலையிலே பாய்ந்தாடுவாளை ஊக்கப்படுத்தும் மகிழ்ச்சினாலே, கரையிலுள்ள தோழியர் ஆரவார ஒலி எழுப்புவர் என்பதாம். அந்த ஒலியால் எம் கவனம் ஈர்ப்புற, அவளை, அங்கே யாமும் காண நேர்ந்தது என்றதாம்.
பரத்தை கூற்றாயின், 'திரைபாய்வோளைத் தலைவியெனவும், தோழி கூற்றாயின் பரத்தையாகவும் கொள்க அவளையே சென்று இப்போதும் இன்புறுத்துக என்றதாம்.
124. கடல் தூர்ப்பாள்!
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின்கேளே?
வண்டற் பாவை வௌவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே!
தெளிவுரை: கொண்களே! தானிழைத்து விளையாடிய வண்டற்பாலையைக், கடலலை மேலிவர்ந்து வந்து அழித்தனாலே சினங்கொண்டு, நுண்ணிய பொடிமணலை வாரி எறிந்து கடலையே தூர்க்கா நின்றவளான, நின் உரிமை யாட்டியை யாமும் கண்டுள்ளேம் அல்லமோ!
கருத்து: ''ஏன் மறைத்துப் பொய் புகல்வாய்?'' என்றதாம்.
சொற்பொருள்: வண்டற்பாவை - மணற்பாவை. வௌவல் - கவர்ந்து போதல். நுண்பொடி - நுண்ணிய பொடி மணல். அளைஇ - அள்ளித் தூற்றி.
விளக்கம்: தன் மணற்பாவையைக் கடலலை அழித்ததற்கே அவ்வாறு சினந்து ஆத்திரப்பட்டவள், நீயும் கொடுமை செய்தால் ஏற்றுப் பொறுமையாயிருப்பாளோ? ஆதலின் அவள் பாலே செல்க என்று தோழி கூறியதாகக் கொள்க.
பரத்தை கூற்றாயின், நுண்பொடி யளைஇக் கடலைத் தூர்த்தல் இயலாதவாறுபோல, நின்னை அலர் கூறி என்னிடமிருந்து மீட்டுக்கொள்ளவும், அவளால் ஒருபோதும் இயலாது என்றதாம்.
125. அழுது நின்றோள்!
கண்டிகும் அல்லமோ, கொண்க! - நின் கேளே?
தெண்டிரை பாவை வௌவ
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே!
தெளிவுரை: கொண்கனே! தெளிந்த கடலலையானது தானிழைத்து வண்டற் பாவையினைக் கவர்ந்து போகக்கண்டு, தன் மையுண்ட கண்கள் சிவப்ப அழுது நின்றோளான, நின் உரிமையாட்டியை நாமும் கண்டுள்ளேம் அல்லமோ!
கருத்து: 'அவள் உறவை மறைப்பதேன்?' என்றதாம்.
விளக்கம்: திரை மணற்பாவையை அழித்தற்கே வருந்தி, உண் கண் சிவப்ப அழுதவள், நீ அவள் வாழ்வையே அழிக்க முயலின் என்னாகுவளோ? என்பது தோழி கூற்றாகும்.
பரத்தை கூற்றாயின், 'காமவுறவுக்குப் பொருந்தாத அத்தகு இளையோளையோ நீயும் விரும்பினை' என்றதாகக் கொள்க.
126. திரை மூழ்குவோள்!
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
உண்கண் வண்டினம் மாய்ப்பத்
தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே!
தெளிவுரை: கொண்கனே! மைதீற்றிய தன் கண்ணிலே, வண்டினம் மலரென மயங்கி வந்து மொய்க்கவும், அதனைப் பொறாதே, தெளிந்த கடலின் பெரிய அலையிடையே மூங்குவோளான, நின் உறவாட்டியை, யாமும் கண்டேம் அல்லமோ!
கருத்து: ''அவள் நிலைதான் இனி என்னாகுமோ?'' என்றதாம்.
சொற்பொருள்: உண்கண் - மையுண்ட கண். நீலமலர் போலத் தோற்றலால் வண்டு மொப்ப்பவாயின. இது அவளது கண்ணெழில் வியந்ததும், முதிரா இளமைச் செவ்வி சுட்டிக் கூறியதுமாம். ''வண்டு மொய்ப்பத் திரை மூழ்குவோள், துயர் எழின் உயிர் வாழாள்'' என்றதாம்.
127. மாலை விலக்குவாள்!
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின் கேளே?
தும்பை மாலை இளமுலை
நுண்பூண் ஆகம் விலங்கு வோளே!
தெளிவுரை: கொண்கனே! தும்பை மாலையணிந்ததும், இளமுலைகள் பொருந்தியதும், நுண்ணிய பூண் அணிந்ததுமாகிய தன் மார்பினை, நீ தழுவாவகையிலே விலக்கிச் சொல்வோளான, நின் உரிமையாட்டியை, யாமும் கண்டேம் அல்லமோ!
கருத்து: ''அவள் புலவியை நீக்கி அவளையே போய் இன்புறுத்துக'' என்றதாம்.
விளக்கம்: தும்பைமாலை - தும்பைப் பூவாற் கட்டிய மாலை. 'இளமுலை' என்றது பருவம் முதிராதாள் என்றற்கு; இது பழமை சுட்டியது. அன்று நின்னை விலக்கினாள், இன்றும் நின்னை விலக்காளோ என்பதும் தோழி கூற்றாகும்.
128. பாவை ஊட்டுவோள்!
கண்டிகும் அல்லமோ, கொண்க! நின்கேளே?
உறாஅ வறுமுலை மடாஅ,
உண்ணாப் பாவை யூட்டு வோளே!
தெளிவுரை: கொண்கனே! உண்ணுதல் செய்யாத தன் மரப்பாவைக்கு, பாலூறிச் சுரக்கும் நிலையெய்தாத தன் வறிய முலையை வாயிலிட்டுப் பாலூட்டி மகிழ்வாளான, நின் உரிமையாட்டியை, யாமும் கண்டுள்ளேம் அல்லமோ!
கருத்து: 'அவள் ஆர்வத்தைச் சிதைத்தனையே?' என்றதாம்.
சொற்பொருள்: உறாஅ வறுமுலை - பால்சுரத்தலைப் பெறாத முலைகள்; உறா வறுமுலை எனவும் பாடம். மடாஅ-வாயிலிட்டு ஊட்டுவாளாக. உண்ணாப் பாவை - மரப்பாவை.
விளக்கம்: மனைவாழ்விலே அத்துணை ஆர்வத்தை அன்றே உடையாளை மறந்து, பரத்தைபாற் செல்வதேன் என்ற தோழி கூறியதாகக் கொள்க. பரத்தை கூற்றாகக் கொள்ளின், தலைவியைச் சிறுமியென நகையாடிக் கூறியதாகக் கொள்க.
129. ***
130. ***
இப்பகுதி பொதுவாக இளமையின் அறியாமைச் செயல்களையே சுட்டியவாய் அமைந்துள்ளன. பரத்தை கூற்றாயின், அத்தகு சிறுமித்தன்மை மாறாதவள் தலைவி என்று குறித்ததாகவும், தோழி கூற்றாயின், அத்தகு மெல்லுணர்வுகளைச் சிறுபோதிலேயே கொண்டவளாதலை அறிந்தும், தலைவன் அவளை வருந்தச் செய்வதன் கொடுமையைச் சுட்டிக் கூறியதாகவும் கொள்க.
4. பாணற்கு உரைத்த பத்து
பாணன் தலைவனின் வாயில்கள் (ஏவலர்கள்) பலருள் முதன்மையான ஒருவன். இவனே தலைவனைப் பரத்தையருடன் சேர்த்துவைப்பவன். கலைஞனாயினும், தலைவனின் சபல உணர்வுகளுக்குத் துணைநின்று பலரின் தூற்றலையும் பெற்று வருபவன். அவற்றை அதிகமாகப் பாராட்டாதே தலைவனின் ஏவலை நிறைவேற்ற முயலும் இயல்பும் கொண்டவன். இவன் தலைவன் பொருட்டாகத் தலைவிபாற் சென்று, தலைவன் சொன்னதைச் சொல்லும் வாயில் உரிமையும் பெற்றவன். தலைவனின் புறத்தொழுக்கத்ததால் வருந்தி வாடியிருந்த தலைவியிடம், பாணன் சென்று, 'தலைவனின் காதன்மை பற்றிக் கூறி, அவனை வெறுக்காது ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றான். அவனுக்குத் தலைவி விடை சொல்லுவதாக அமைந்தவையே இந்தப் பத்துச் செய்யுட்களும் ஆம்.
131. கௌவை எழாதேல் நன்று!
துறை: வாயில் வேண்டி வந்த பாணன், தலைமகனது காதன்மை கூறினானாகத், தலைமகள் வாயில் மறுப்பாள் அவற்குக் கூறியது.
(து.வி.: தலைவனைத் தலைவி உவந்தேற்று இன்புறுத்த வேண்டும் என்று கேட்கின்ற பாணன், தலைமகன் அவள்மீது கொண்டுள்ள காதலன்பைப் போற்றிக் கூறுகின்றான். அதற்கு இசைய மறுப்பவள், அவனுக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
நன்றே, பாண! கொண்கனது நட்பே -
ததில்லை வேலி யிவ்வூர்க்
கல்லென் கௌவை எழாக் காலே!
தெளிவுரை: பாணனே, கேளாய்! தில்லை மரங்களையே வேலியாகப் பெற்றுள்ள இவ்வூரின் கண்ணே, கல்லென்னும் படி அலரானது எழுந்து பரவாதாயின், தலைவனது நட்பும் பெரிதும் நன்றே யாகும்!
கருத்து: 'ஆனாற் கௌவைதான் எழுந்து, எங்கும் பரவி, அலராகின்றதே' என்றதாம்.
சொற்பொருள்: தில்லை - ஒருவகை மருந்துமரம்; தில்லைப் பால் மேனியிற் பட்டால் புண்ணாகும் என்பார்கள். ஊரைச் சுற்றித் தில்லை மரங்கள் அடர்ந்திருந்தமையின் 'தில்லை வேலி இவ்வூர்' என்றனள். நெய்தற் பாங்கில் இம்மரம் மிகுதி.
விளக்கம்: 'கௌவை எழா அக்கால் நட்பு நன்று' என்றது, 'எழுந்து விட்டமையின், அதுதான் நன்றாகாதாயிற்று; எனவே, நின் வேண்டுதலை யாம் ஏற்கோம்' என்றதாம். தில்லையைத் தழுவுவார் உடற்புண் உறுதலைபோலத் தலைவனைத் தழுவுமாறும் மனப்புண்ணும் உடல் நலிவும் உறுவர் என்றதுமாம்.
132. அலராகின்றது அருளும் நிலை!
துறை: வாயில் வேண்டி வந்த பாணன், ''நீர் கொடுமை கூறல் வேண்டா; நும்மேல் அருளடையர்'' என்றாற்குத் தலைமகள் சொல்லியது.
(து.வி.: ''அவர்மீது கொடுமை சொல்லாதீர்; அவர் நும்மீது என்றும் பேரருளுடையவர்'' என்று தலைவிக்குப் பாணன் கூற, அதுகேட்டு, அவள் விடையிறுப்பதாக அமைந்த செய்யுள் இது.)
அம்ம வாழி, பாண! புன்னை
அரும்புமலி கானல் இவ்வூர்
அலரா கின்றுவ ரருளு மாறே!
தெளிவுரை: பாணனே, வாழ்க நீ! புன்னையின் பூவரும்புகள் மலிந்து கிடக்கின்ற கான்றஃசோலையினையுடைய இவ்வூரிடத்தே, அவர் நமக்கு அருளுந்திறந்தான், பலராலும் பழித்துப் பேசும் அலராக உள்ளதே!
கருத்து: 'அவர் அருள் மறந்தார்' என்றதாம்.
சொற்பொருள்: கானல் - கானற்சோலை. அருளுமாறு அருளும் திறம்.
விளக்கம்: அரும்புமலி கானலைக் கொண்ட இவ்வூரும் அவரைக் குறித்தெழுந்த அலரினாலே மலிந்ததாயிற்று; ஆதலின் அருள்மறந்த அவரை யாம் அடைதலை இனியும் விரும்பேம் என்றதாம். மேலாகப் புன்னை அரும்பால் மலியினும், உண்மையிற் கானலே இவ்வூர்; அவ்வாறே பேச்சில் நயமுடையராயினும், உளத்தே நயமற்றார் காதலர் என்றதுமாம்.
133. புல்லென்றன தோள்!
துறை: வாயிலாய்ப் புகுந்த பாணன், தலைமகள் தோள் மெலிவு கண்டு, ''மனைப்புறத்துப் போய் வந்த துணையானே நீ இவ்வாறு வேறுபடுதல் தகாது,'' என்றாற்கு, அவள் சொல்லியது.
(து.வி.: தலைவனுக்குத் தூதாக வந்தவனான பாணன், தலைவியின் தோள் மெலிவைக் கண்டு, 'தலைவன் மனைப் புறத்துப் போய் வந்ததற்காக நீ இவ்வாறு வருந்தித் தோள்மெலிதல் தகாது' என்று கூறித் தேறுதல் கூறித் தெளிவிக்க முயல்கின்றான். அவனுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுத் இது.)
யானெவன் செய்கோ, பாண! - ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
புல்லென் றனவென் புரிவளைத் தோளே!
தெளிவுரை: பாணனே! மெல்லிதான நெய்தல் நிலத்தானான நம் தலைவன், என்னை மறந்தானாகிப் பிரிந்து போயினான் என்பதாக, என் முறுக்குண்ட வளைகளணிந்த தோள்கள் ஆற்றாதே, தாமே மெலிவுற்றனவே! யான் யாது செய்வேன்?
கருத்து: ''அவன் பிரிவைத் தாங்காதேனான என்னையும் அவன் பிரிந்தானே'' என்றதாம்.
சொற்பொருள்: மெல்லம் புலம்பன் - மென்னிலமாகிய நெய்தல் நிலத்தான்; நெய்தல் மென்னிலமாவது மணற்பாங்கே மிகுதியாகி, வனைமையற்று விளங்கலின். புரி - முறுக்கமைந்த. வளை - தோள்வளை.
விளக்கம்: தோள் மெலியச் செய்தானை இடித்துக் கூறித்திருத்த முயலாது, 'மெலிந்தேன்' என்று மட்டும் இவண் வந்து கேட்கின்றனையோ?' என்று சொல்லி வாயில் மறுத்தனள் என்க. 'அப்படிப் பிரிதற்கு உதவியாக நின்றவனான நீயோ வந்து இப்படிச் சொல்வது?' என்று பாணனைச் சுட்டிச் சினந்து கூறியதும் ஆகும்.
மேற்கோள்: இது நெய்தற்கண் மருதம். தலைவன் புறத்துப்போன அத்துணைக்கு ஆற்றாயாகுதல் தகாதென்ற பாணற்குத் தலைவி கூறியது என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 12).
134. கொண்கனோடு கவினும் வந்தது!
துறை: பிரிவின்கண், தலைமகள் கவின்தொலைவு கண்டு வெறுத்து ஒழுகுகின்ற பாணற்குத், தலைமகன் வந்துழிக் கவின் எய்திய தலைமகள் சொல்லியது.
(து.வி: தலைமகன் பிரிவாலே தலைவி கவின் இழந்தாள். அதனைக் கண்டு, அது தகாதென்று ஒதுங்கிச் சென்றனன் பாணன். தலைமகன் வந்துசேர அவள் கவினும் மீண்டும் வந்து விடுகின்றது. அப்போது, அவள் பாணனுக்குத் தன்னுடைய உளநிலையைக் காட்டிக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.)
காண்மதி, பாண! இருங்கழிப்
பாய்பரி நெடுந்தேர்க் கொண்கனொடு
தான்வந் தன்றென் மாமைக் கவினே!
தெளிவுரை: பாணனே, காண்பாயாக! பெரிய கழியிடத்தே பாய்ந்து செல்லும் குதிரைகளைக் கொண்ட நெடிய தேருக்குரியவனான தலைவனின் வருகையோடு, என் மாந்தளிர் போலும் மேனிக்கவின், தானும் என்பால் வந்ததே!
கருத்து: 'இனியேனும் அவன் பிரிவுக்குத் துணை செய்யாதே' என்றதாம்.
சொற்பொருள்: பாய்பரி - பாய்ந்து செல்லும் குதிரைகள். நெடுந்தேர் - பெரிய தேர். மாமை - மாந்தளிரின் தன்மை.
விளக்கம்: 'இருங்கழியிலும் பாய்ந்துவரும் குதிரைகள் பூட்டிய நெடுந்தேர்க் கொண்கன்' எனவே, அவன் வளமலிந்த பெருநிலை பெற்ற தலைமையோன் என்பதும் அறியப்படும். 'அவனொடு கவின் வந்தது' எனவே, அவனொடு கவினும் போயிற்றென்பதும், இனியும் போகும் என்பதும் உணர்த்தினள்.
135. யாம் வருந்தேம்!
துறை: பரத்தை ஒருத்தியைத் தலைப்பெய்வான் வேண்டி, அதனைத் தலைமகன் மறைத்து ஒழுகுகின்றதறிந்த தலைமகள், அவன் கேட்குமாற்றாற் பாணற்குச் சொல்லியது.
(து.வி: பரத்தை ஒருத்தியைத் தனக்கு உரியவளாக்கிக் கொள்ள முயல்கின்ற தலைவன், அதனை மறைத்தபடியே நடந்து வருக்கின்றான். இதனை அறிந்தாள் தலைமகள். அவன் கேட்குமாறு, அவன் பாணனுக்குச் சொல்வாள்போலச் சொல்லுகின்றாள்.)
பைதலம் அல்லேம், பாண! பணைத் தோள்
ஐதமைந் தகன்ற வல்குல்
நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே!
தெளிவுரை: பாணனே! மூங்கிலனைய தோள்களையும், மெல்லியதாய் அமைந்து அகன்ற அல்குல் தடத்தினையும், நெய்தலின் மலர்போலும் அழகிய கண்களையும் உடையாளை, யாம் எம் எதிரேயே காணப்பெறுவேமாயினும், அது குறித்து யாதும் யாம் வருத்தம் அடைவோம் அல்லேம்!
கருத்து: 'அது அவன் விருப்பிற்கு உட்பட்டது' என்றதாம்.
சொற்பொருள்: பாணை - மூங்கில். ஐது - மெல்லிது. 'நெய்தல் மலர் போலும் அழகிய கண்ணி' என்பதும், பிறவும் இகழ்ச்சிக் குறிப்பாகச் சொன்னதாகக் கருதலே பொருந்தும்.
விளக்கம்: இதனைக் கேட்கும் தலைவன், தலைவி தன்னுடைய பரத்தைமை இழக்கக் கேட்டை அறிந்தாள் என்பது தெளிதலின், மேலும் அதனைத் தொடராது திருந்துவன் என்பதாம். 'நேர்தல் பெறினே' என்றது, அது பெறாததனைக் கூறியதாம். இது தலைமகன் பாகனிடம் சொல்வது போலப் படைத்துத் தலைவி நகையாடிக் கூறியதெனக் கொள்ளுல் இன்னும் சிறப்பாகும்.
136. நாணில நீயே!
துறை: வாயிலாய்ப் புகுந்து, தலைமகன் குணம் கூறிய பாணற்கு, வாயின் மறுக்கும் தலைமகள் சொல்லியது.
(து.வி: தலைவனுக்கு ஆதரவாகத் தலைவியிடம் சென்று வேண்டுவானான பாணன். தலைவனின் உயர்குண நலன்களை எடுத்துக்கூறித், தலைவியிடம் மனமாற்றத்தை உருவாக்க முயல்கின்றான். அவனுக்கு, அவள் கூறும் பதிலுரையாக அமைந்த செய்யுத் இது.)
நாணிஇலை மன்ற, பாண! - நீயே
கோணோர் இலங்குவளை நெகிழ்த்த
கானலம் துறைவற்குச் சொல்லுகுப்போயே!
தெளிவுரை: பாணனே! நீயோர் நாணமில்லாதவனாயினையே! கொள்ளுதல் அமைந்த அழகிய வளைகள் நெகிழுமாறு, பிரிவு நோயைச் செய்தவனாகிய கடற்கான்றஃ சோலைத் தலைவனின் பொருட்டாக வந்து, சொற்களை வீணாகவே உதிர்த்தபடி நிற்கின்றனையே!
கருத்து: 'நின் பேச்சுப் பயனற்றது' என்றதாம்.
சொற்பொருள்: கோள் நேர் இலங்குவளை - கொள்ளுதல் அமைந்த அழகான வளைகள்; 'கொள்ளுதலாவது' செறிவாகப் பொருந்தி அமைதல். சொல் உகத்தல் - பயனின்றிச் சொற்களைச் சொல்லிப் பொழுதை வீணடித்தல்.
விளக்கம்: 'அவன் பொருந்தாத மனப்போக்கால வளைநெகிழ வாடியிருக்கும் என்முன்னே நின்று, அவன் குண நலன்களைப் போற்றிப் பலவாறு பேசுதலால், நீயோர் வெட்கங்கெட்டவன்' என்று சொல்லி, அவன் பேச்சை மறுக்கின்றாள் தலைவி. பொய்யெனத் தெளிந்தும் சொல்லலால் 'நாணிழந்தான்' ஆயினன். 'கான்றஃசோலைத் துறைவன்' இவ்வெம்மை விளைத்தல் இயல்பே என்னும் நுட்பமும் காண்க. வளை, கடற்கரைக்குரியதாகலின், அது நெகிழ்த்தல் அவன் தொழில் என்பதுமாயிற்று.
137. தம் நலம் பெறுவரோ?
துறை: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கினவிடத்தும், அவன் முன்பு செய்து தீங்கு நினைந்து தலைமகள் வேறுபட்டிருந்தாளாக, இனி 'இந்த வேறுபாடு ஏன்?' என்று வினவிய பாணற்கு, அவள் சொல்லியது.
(து.வி.: பிரிந்து சென்ற தலைவன், மீண்டும் வந்து தலைவியின் புலவி நீக்கி இன்புற்றவனாகி, அவளைப் பிரிந்தும் எங்கோ போயிருந்தனன். அவன் முன்பு செய்த தீமையையே நினைந்து வாடியிருந்தாளே அல்லாமல், அவன் வந்து செய்த தண்ணளியால் அவள் சிறிதேனும் களிப்படைந்திலள். அதுகுறித்து வினாவிய பாணனுக்கு, அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
நின்னொன்று வினவுவல், பாண! - நும்ஊர்த்
திண்தேர்க் கொண்கனை நயந்தோர்
பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே?
தெளிவுரை: பாணனே! நின்னை ஒன்று கேட்பேன். அதற்கு நேரான விடையாகச் சொல்வாயாக. திண்மையான தேரினியுடைய நம் தலைவனை விரும்பியவரான பெண்களுக்கே, யாரேனும், தம் பழைய அழகினை, நும் ஊரிடத்தே இதுகாறும் அழியாதே பெற்றுள்ளார்களோ?
கருத்து: 'அவனை விரும்பினார் நலன் கெடுதலே இயல்பல்லவோ' என்றதாம்.
விளக்கம்: 'திண்தேர்க் கொண்கன்' ஆதலின், அவன் பிறர் தம் வருத்தம் நோக்காது தன் போக்கிலேயே செல்லும் வன்மனமும் உடையன் என்கின்றான். 'நும் ஊர்' என்றது, தன்னை அவன் ஊரின் உறவினின்றும் பிரித்துக் கூறியது; அவனை மணந்து அவன் மனையாட்டியாகியவள் அவனூரைத் தன்னூர் என்றே கொள்ளல் இயல்பேனும், மனம் நொந்ததால் 'நும் ஊர்' என்றனள். 'பண்டைத் தம் நலம்' என்றது. அவனை நயந்து கூடுதற்கு முன்பு பெற்றிருந்த கன்னிமைப் பெருநலம். 'எவரும் தம் பண்டைநலம் பெறாதபோது, யான்மட்டும் பெறுதல் என்பது கூடுமோ?' என்பாள், அவன் செயலால், தானடைந்திருக்கும் வேதனையை உணர்த்துகின்றாள். 'நயந்தோர் பெறுபவோ' என்று, அவன் பெண்டிர் பலரென்பதும் உரைத்தாள்.
138. பண்பிலை பாண!
துறை: தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது.
(து.வி.: தலைமன், தூது அனுப்பித் தலைவியின் இசைவு பெற்று வந்து, தலைமகளோடேயும் கூடியிருக்கின்றான். அஃதறியாதே வந்து, அவனுக்காகப் பரிந்து தலைவியிடம் வேண்டுகின்றான் பாணன். அவனுக்கு, அவள் நகையாடிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
பண்பிஇலை மன்ற, பாண! - இவ்வூர்
அன்பில கடிய கழறி,
மென்புலக் கொண்கனைத் தாரா தோயே!
தெளிவுரை: பாணனே! மென்புலத் தலைவனாகிய கொண்கனைக் கண்டு, அன்பில்லாதனவும் கடியத்தக்கனவுமான சொற்களைச் சொல்லியேனும், அவன் பொருந்தாத போக்கை மாற்றி, இவ்வூரிடத்தே எம்மனைக்கண் கொண்டு தராதிருக்கின்றவனாகிய பொறுப்பற்ற நீயும், மக்கட் பண்பான இரக்கம் என்பதே இல்லாதவன் ஆவாய் காண்!
கருத்து: 'அவனைத் திருத்தும் நற்பண்பில்லாதவன் நீ' என்றதாம்.
சொற்பொருள்: பண்பு - பாடறிந்து ஒழுகும் இயல்பு. அன்பில கடிய - அன்பற்றவும் கடியவுமான சொற்கள்.
விளக்கம்: 'தலைவன் தவறான போக்கினனாகும் போதிலே, அவனை இடித்துப் பேசித் திருத்தி நடக்கச் செய்யுப் பண்பில்லாதவன் பாணன்' என்று கடிந்து சொல்கின்றாள் தலைவி. அவன் தவற்றொழுக்கினும் அவனையே சார்ந்து நின்று, அவன் பொருட்டு வாயிலாகவும் செயற்படும் பாணனின் போக்கைக் கடிந்து சொன்னது இதுவாகும்.
139. நின்னின் பாணன் கொடியன்!
துறை: ஆற்றாமை வாயிலாகப் புகுந்திருந்த தலைமகற்குப் பாணன் வந்துழித் தலைமகள் சொல்லியது.
(து.வி.: தலைவியின் உறவை மறக்கவியலாத ஆற்றாமை நெஞ்சமே வாயிலாகத், தலைவனும் தன் மனைக்கு வந்து சேர்ந்தான். அப்போது, அவனைத் தேடியவனாகப் பாணனும் அங்கே வந்து சேர்கின்றான். அவனுக்குத் தலைமகள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
அம்ம வாழி, கொண்க! எம்வயின்
மாணலம் மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலஞ்சிதைக் கும்மே.
தெளிவுரை: கொண்கனே! எம்மிடத்தே பொருந்தியிருந்த சிறந்த நலத்தை எல்லாம் அலைக்கழிக்கும் நின்னைக் காட்டினும், நின் பாணன், தன் பேச்சாற் பிற பெண்டிரை மயக்கி நினக்குக் கூட்டிவைக்கும் அந்தச் செயலினாலே, பல பெண்களின் அழகு நலங்களை மிகவும் சிதைத்து வருகின்றான்! அவன் வாழ்க!
கருத்து: 'அவன் என்று திருந்துவானோ' என்றதாம்.
சொற்பொருள்: மாண்நலம் - மாட்சி பொருந்திய அழகு நலம். மருட்டும் - அலைக்கழிக்கும்; சிதைக்கும். நல்லோர் - பெண்டிர்; பரத்தையரைக் குறித்தது; நல்லழகியர் என்பதாம்; இகழ்ச்சிக் குறிப்பு.
விளக்கம்: 'என் நலன் ஒன்றே கெடுக்கும் நின்னினும், நினக்காகப் பல பெண்டிரை மயக்கி இசைவிக்கும் நின் வாயிலான இந்தப் பாணன் மிகவும் கொடியவன்' என்பதாம். 'நல்லவர் நலம் சிதைப்பவன் எவ்வளவு கொடியவன்?' என்று உலக வறத்தின்பால் இணைத்துக் கூறியதாகவும் கொள்க.
140. நீ சொல்லுதற்கு உரியை!
துறை: பாணன் தூதாகச் செல்ல வேண்டும் கெறிப்பினளாகிய தலைமகள், அவற்குத் தன் மெலிவு காட்டிக் கூறியது.
(து.வி.: தலைமகனை அடைய வேண்டும் என்னும் ஆசை வேகம் மிகுதியாகின்றது தலைவிக்கு. தலைவனைத் தேடியவனாக வீட்டின்பால் வந்த பாணனிடம், தன் மெலிவைக் காட்டி, தலைவனைத் தன்பால் வரத் தூண்டித் திருத்துமாறு இப்படிக் கூறுகின்றாள்.
காண்மதி, பாண! - நீ உரைத்தற் குரியை -
துறைகெழு கொண்கன் பிரிந்தென
இறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே!
தெளிவுரை: பாணனே! துறை பொருந்திய கொண்கன் பிரிந்தனனாக, சந்து பொருந்தி விளங்கும் எம் ஒளிவளைகள் நெகிழ்ந்து நீங்கிப் போயினதான இந்த அவல நிலைமையினைக் காண்பாயாக. எம் இந்நிலையினைத் தலைவனிடம் சென்று நீதான் சொல்லுதற்கு உரியை யாவாய்!
கருத்து: 'என் மெலிவைச் சொல்லி அவரை வரச் செய்க' என்பதாம்.
சொற்பொருள்: துறை - கடற்றுறை. இறை - சந்து, கேழ் - பொருந்திய. எல்வளை - ஒளிவளை.
விளக்கம்: தலைவன் சார்பினனே பாணன் எனினும், தன் மெலிவை நோக்கியாவது, தலைவனிடம் சென்று, தன் நலிவைப் பற்றிச் சொல்லி, அவனை இல்லத்திற்குத் திரும்புமாறு செய்வதற்கு வேண்டுகின்றாள் தலைவி.
பரத்தையிற் பிரிந்தவழித் தலைவன் பாணனின் பேச்சையே பெரிதும் கேட்பவனாகிய மயக்கத்தோடு விளங்குவான்; ஆதலால், இவ்வாறு, அவனையே தனக்காக அவனிடத்தே தூது செல்ல வேண்டுகின்றாள் தலைவி. தலைவிபாலும் மதிப்பும் அன்பும் மிகவுடையனாதலின், பாணனும், அவள் நலமழியாது விளங்கத் தலைவனிடம் சென்று பரிந்துரைப்பான் என்றும் கொள்க. 'அவன் பிரிய இறைகேழ் எல்வளையும் பிரிந்தது' என்ற சொல்லிலே சோகம் அளவிறந்து புலப்படுதலையும் நினைக்க!
பரத்தைமை உறவிலே தலைவனுக்கு வேண்டியவே செய்யும் வாயிலாகச் செயற்படுபவன் பாணனே! ஆகவே; அவன் செயலால் புண்பட்ட தலைவியேனும், தலைவனை அடைய விரும்பும் ஏக்கத்தின் மிகுதியினால், அந்தப் பாணனையே இப்படி உதவுதற்கு வேண்டும் அவலத்தையும் காண்கின்றோம். கலைக் குடிப் பாணன், குலமகளிரின் இல்லற அமைதியைக் கலைத்துக் கெடுக்கும் கொடியவனாகவும், தன் சுயநலத்தால் பண்பிழந்து நடக்கும் அவலத்தையும் காண்கின்றோம். அவனுக்கு ஒரு முதன்மையும் சில சமயம் இப்படி ஏற்பட்டு விடுவதனையும் பார்க்கின்றோம்.
5. ஞாழற் பத்து
'ஞாழல்' என்பது கொன்றை மர வகையுள் ஒன்று. கடற் கானற் கழிப்பகுதிகளிலே, மிகுதியாகக் காணப் பெறுவது. 'புலிநகக் கொன்றை' இது வென்பர். நெய்தல் நிலத்து மகளிர், இதன் நிழலிலே ஆடியும் பாடியும் இன்புறும் வழக்கத்தினர். இப்பத்துச் செய்யுட்களும் ஞாழல் தொடர்புள்ளனவாக அமைந்துள்ளன. ஆதலின், இதனை ஞாழற்பத்து என்று தொகுத்து அமைத்துள்ளனர் எனலாம்.
141. பயலை செய்தன துறை!
துறை: வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகின்ற தலைமகள், 'அவன் வரைதற்குப் பிரியவும், நீ ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்து போயின காலத்திலே, அந்தப் பிரிவையும் தாங்கமாட்டாது வருந்தி நலிகின்றாள் தலைமகள். அது குறித்து அவளைக் கேட்கும் தோழிக்கு, அவள் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்
பயலை செய்தன பனிபடு துறையே!
தெளிவுரை: நீர் கொண்டு வந்து இட்டதான மணல் மேட்டினிடத்தே, ஞாழலோடு செருந்தியின் பூக்களும் ஒருசேர மணங்கமழ்ந்திருக்க, குளிர்ந்த நீர்த்துறையானது தண்ணிய திவலையான நீர்த்துளிகளை எம்மேல் வீசிப், பயலை நோயினையும் செய்தது காண்!
கருத்து: 'இயற்கையும் இன்ப வேட்கையை மிகுவித்தலால் ஏக்கமுற்று வாடலானேன்' என்றதாம்.
சொற்பொருள்: எக்கர் - நீர் கொண்டு இட்ட மணல்மேடு பயலை - பசலை நோய். பனிபடுதுறை - குளிர்ச்சியமைந்த நீர்த் துறை; கடற்கரையிடம்.
விளக்கம்: வரைவிடை வைத்த பிரிவென்று கொண்டு யான் ஆற்றியிருப்பேன். ஆயின், ஞாழலும் செருத்தியும் பூத்துப் பரந்த புதுமணமும், குளிர்ந்த நீர்த்துறையிலே அலைகள் என் மீது எறியும் நீர்த்துளிகளும், என் இன்ப நினைவை எழுப்பி, என்னைப் பெரிதும் வாட்டுகின்றனவே என்கின்றாள் தலைவி. ஞாழல் செருந்தியோடு கமழ்கின்றது, யான் அவரோடு சேர்ந்து மணக்கவில்லையே என்றதும் ஆம்.
மேற்கோள்: வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்கு, துறை இன்பமுடைத்தாகலன் வருத்திற்கு எனத் தலைவி கூறியது; சுரத்தருமை முதலியனவன்றி நெய்தற்குள் பாலை வந்தது (தொல். அகத், 9) என்பர் நச்சினார்க்கினியர்.
142. என் கண் உறங்காவே!
துறை: வரையாது வந்தெழுகும் தலைமகன், இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, 'நின் கண் துயில்தல் பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
(து.வி.: தோழியும் தலைவியும் வரைந்து கொள்ளலை வற்புறுத்திப் பல நாட் கூறியும், களவுறவையே வேட்டு, இரவுக் குறியிடத்தேயும் வந்து, தோழி அகன்று போவதற்குரிய ஒலிக்குறிப்பையும் செய்கின்றான் தலைவன். அதனைக் கேட்டாலும் கேளாதுபோல், தோழி, 'இப்படி உறக்கம் கெட்டால் நின்கதி யாதாகும்? நின் நலன் கெடுமே?; அதற்காகவேனும் அவனை மறந்து விடுவாய்' என்கிறாள் தலைவியிடம். அவள், தன் தோழிக்கு, அதற்கு விடையிறுப்பதாக அமைந்த செய்யுள் இது. இதனைக் கேட்பவள் வரைதலுக்கு விரைபவனாவான் என்பது தேற்றம்.)
எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூரும் துறைவனை
உள்ளேன் - தோழி! - படீஇயர் என் கண்ணே!
தெளிவுரை: தோழி! மணல்மேட்டிலுள்ள ஞாழலின் தாழ்வான கிளைகளிலேயுள்ள பூங்கொத்துக்களிடையே, கடற்புட்கள் வந்து தங்கும் துறையினையுடைய நம் தலைவனை, நீ கூறியவாறே இனி நினையேன்! என் கண்களும் இனி உறங்குவனவாக!
கருத்து: 'மறக்கவும் ஆற்றேன்; உறக்கமும் இழந்தேன்' என்றதாம்.
விளக்கம்: 'உள்ளேன்' எனவும் 'படீஇயர்' எனவும் சொன்ன சொற்கள், தன்னால் அவை இயலாமை குறித்தும், அதனால் கண்படுதல் வாயாமை சுட்டியும் சொன்னவாம். 'புள் இறை கூரல்'த்தம் இணையுடன் என்றும் கொள்க.
உள்ளுறை: ஞாழலின் தாழ்ந்த பூச்சினைகள் புள்ளினம் வந்தமரத் தாம் வருந்திக் கெடுதலுறுமாறு போல, பிரிவென்னும் துயரம் என்பதால் வந்து தங்குதலாலே, யானும் படர்மிகுந்து வருந்தி நலிவேன் என்றதாம்.
புள்ளினமும் உரிய நேரத்தில் வந்து தங்குதலை அறிந்திருக்கத், தலைவன் நம்மை மணந்து நம்மோடு இல்லிருந்து வாழ்தலை அறியாதே போயினனே என்பதுமாம்.
143. இனிய செய்து பின் முனிவு செய்தல்
துறை: புறத்துத் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.
(து.வி.: தலைவியைப் பிரிந்து பரத்தையில்லிலே சிலநாள் தங்கியிருந்தபின், மீண்டும், தன்மனைக்கு வந்த தலைவனுக்குத், தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை,
இனிய செய்து! நின்று, பின்
முனிவு செய்த - இவள் தடமென் தோளே!
தெளிவுரை: எக்கரின் கண்ணுள்ள ஞாழலிடத்தே, புள்ளினம் ஆரவாரித்தபடியிருக்கும் அகன்ற துறையிமத்தே, இவளுடைய பெரியவான மென்தோள்கள், முன் களவுக் காலத்தே நினக்கு இனிமையைச் செய்து, பின்னர் இப்போதெல்லாம் நினக்கு வெறுப்பையும் செய்துள்ளனவே!
கருத்து: 'நீதான் இவள்பால் இப்போது அன்பற்றவனாயினாய்' என்றதாம்.
சொற்பொருள்: புள்ளிமிழ் - புட்கள் ஆரவாரிக்கும். முனிவு - வெறுப்பு; அது பிரிவாற்றாமையினாலே அழகு கெட்டு மெலிந்ததனால் விளைந்தது.
விளக்கம்: களவுக் காலத்தே, எக்கரிடத்து ஞாழற்சோலையிலே போற்றிக் கூடி மகிழ்ந்த நிகழ்ச்சியையும், அவன் இப்போது அவளை வருத்தி நலியச் செய்யும் கொடுமையையும், தலைவியின் தோள் நலத்தின்மீது சார்த்தித், தோழி இவ்வாறு வெறுப்புற்றுக் கூறுகின்றனள். 'தடமென் தோள்' பற்றிக் கூறியது, முன் அவனே வியந்து பாராட்டியதனைச் சொல்லிக் காட்டியதுமாம்.
உள்ளுறை: 'ஞாழலின் பூச்சினை வருந்தப் புள்ளினம் தங்கி ஆரவாரிக்கும்' என்றது, இவள் நின் பிரிவால் வருந்தி நலிய, நீயோ பரத்தையரோடு களித்திருப்பவனாவாய் என்றதாம். வரைவிடைப் பிரிவாயின், நீ நின் செயலிலேயே மனஞ்செலுத்தி இவளை மறந்திருப்பாய் என்றதாகக் கொள்க.
பிறபாடம்: நின் துயில் துணிவு செய்த - இப்பாடத்திற்கு, முன் இவட்கு இனிய செய்த நின் முயக்கம், நீ புறத்துத் தங்கிவந்தாய் என்னும் நின் வேற்றுறவின் நினைவால், இதுகாலை வெறுப்பினைப் பயப்பதாயிற்றுப் போலும் என்று கூறினளாகக் கொள்க.
144. இனிப் பசலை படராது!
துறை: 'தலைமகன் வரைந்து கோடல் நினையாது, களவொருக்கமே விரும்பி ஒழுகா நின்றான்' என்பது அறிந்து வேறுபட்ட தலைமகள், 'அவன் கூறியவற்றால் இனிக் கடிதின் வரைவன்; ஆற்றாயாகாதது ஒழிய வேண்டும்' என்று தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: தலைவன் சொல்லிச் சென்றவாறு வரைந்து வந்திலன் என்று வருந்தியிருக்கின்றாள் தலைவி. அவளுக்கு, அவன் சொற்பிழையானாய் வந்து, நின்னை முறையே மணப்பான் என்று தோழி சொல்லித் தேற்ற முயல்கின்றாள்.)
எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
தனிக்குரு குறங்கும் துறைவற்கு
இனிப்பசந் தன்று - என் மாமைக் கவினே!
தெளிவுரை: எக்கரிடத்தே, ஞாழலின் பூங்கொத்துக்கள் பொருந்திய சோலைக் கண்ணே, துணை பிரிந்து தனிமைப்பட்ட குருகானது உறக்கங்கொள்ளும் துறைவனின் பொருட்டாக, என் மாமைக்கவின், இப்போது பசப்பெய்துவதாயிற்றே!
கருத்து: 'இதுகாறும் சொற்பேணாதவன் இனியுமோ பேணுவான்?' என்றதாம்.
சொற்பொருள்: பொதும்பர் - சோலை. தனிக்குருகு - துணைபிரிந்து தனித்திருக்கும் குருகு. உறங்கும் - தூங்கும். மாமைக் கவின் - மாந்தளிரனையை கவின்.
விளக்கம்: 'எக்கர் ஞாழல்இணர்படு பொதும்பர்த் தனிக்குருகு உறங்கும்' துறைவனாதலின், நம்மையும், நாம் அளித்த இன்பத்தையும், அன்பையும் அறவே மறந்தானாய்த், தனித்து வாழ்தல் அவனுக்கு எளிதுதான். ஆயின், அவனை நினைந்து நினைந்து என் மாமைக்கவினும் இப்போது பசந்து போயிற்றே! இதற்கு யாது செய்வாம்? என்பதாம்.
'இப்போது பசந்தது' என்றது, முன்னர், அவன் சொல்லை வாய்மையாகக் கொண்டு ஏமாந்திருப்பேமாகிய நம்நிலை அறியாமல், 'அவன் புதுவதாகச் சொன்ன உறுதியை நம்பி வந்து நீ கூறுதலால்' என்று கொள்ளலாம்.
உள்ளுறை: 'எக்கர் ஞாழல் குருகு தனித்து உறங்கும்' என்றது, காலம் வாய்த்தவிடத்தும் வரைந்து கொண்டு ஒன்றுபட்டு வாழ்தலை நினையாதே, தனித்துறைதலையே விரும்பும் இயல்பினன் தலைவன் என்றதாம்.
145. பசலை நீக்கினன் இனியே!
துறை: வரைவு மறுத்த தமர் உடம்படுமாற்றல், சான்றோரைத் தலைமகன் விடுத்ததறிந்த தோழி, தலைமகள் கேட்குமாற்றால் சொல்லியது.
(து.வி.: தலைவன் வரைந்து வந்தபோது, தலைவியின் தமர் இசைவளிக்காதே மறுத்துப் போக்கினர். அவன், அதன் பின், அவர் உடம்படுமாறு சான்றோரை அவர்பால் விடுக்கின்றான். அவர் வரத் தமரும், உடம்படுகின்றனர். இஃதறிந்த தோழி, தலைமகள் கேட்க, அச்செய்தியைக் கூறுகின்றாள்.)
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன், இனியே!
தெளிவுரை: எக்கரிடத்தேயுள்ள ஞாழலின் சிறிய இலைகளையுடைய பெரிய கிளையைக் கடல்நீர் வளைக்கும் துறைவன், இப்போது, மாமை நிறத்தாளான இவளின் பசலை நோயினையும் நீங்கிச் செய்தனனே!
கருத்து: 'இவள் இனி இன்பமே காண்பாள்' என்றதாம்.
சொற்பொருள்: ஓதம் - கடல்நீர் - வளைத்துக் கொள்ளும். மாயோள் - மாமைக் கவினுடையாளான தலைவி. நீக்கினன் - நீங்கச் செய்தனன்.
விளக்கம்: கடல்நீர் பொங்கியெழுந்து மோதுதலால், ஞாழலின் பெருஞ்சினையும் வளைந்து தாழும் என்றது, அடிமண் அரிப்புறலால் என்று கொள்க. இவ்வாறே தலைவியின் தருமம் சான்றோரின் பேச்சுக்களால் தம் உறுதியினைத் தளர்த்தினராக, வரைவுக்கு உடன்பட்டனர் என்றும் கொள்க. 'நீக்கினன்' என்று இறந்தகாலத்தாற் கூறினாள், நீங்குதல் விரைவிலே நிகழும் என்னும் உறுதி பற்றியதாகும். 'இறந்தகாலம் குறிப்பொடு கிளத்தல், விரைந்த பொருள் எம்னமனார் புலவர்' என்ற விதியைக் காண்க. (தொல். சொல், 243).
உள்ளுறை: ஞாழற் சினையை ஓதம் வளைக்கும் துறைவன் என்றது, தன் வழி வராத தலைவியின் சுற்றத்தாரைச் சாற்றோர் மூலம் தன் வழியாக்கும் உறதியினன் தலைவன் என்று கூறி, அவன் உறுதிக்கு வியந்ததாகும். இதனைக் கேட்கும் தலைவியும், தன் மனக்கலக்கம் நீங்கி மகிழ்வடைவாள் என்பதாம்.
146. கவின் இனிதாயிற்று!
துறை: வரைவு கடாவவும் வரையாது ஒழுகுகின்றுழி, 'நம்மை எவ்வளை நினைத்தார் கொல்லோ' என்று ஐயுற்றிருந்த தலைமகள், வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: வரைவினைத் தலைவி பலகால் வேண்டியும், தலைவன் வரையாதே ஒழுகிவர, அதனால் 'அவன் நினைவுதான் என்னவோ?' என்று வேதனைப்பட்டிருந்தாள் தலைவி. ஒருநாள், அவன் வரைவொடு தன் மனைக்கண் வரக்கண்டவள், தோழிக்கு மகிழ்வோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்ற - எம் மாமைக் கவினே.
தெளிவுரை: எக்கரிடத்து ஞாழலின் அரும்பு முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துக்கள், நறுமணம் கமழ்கின்ற துறைவனுக்கு, எம் மாமைக்கவின் இனிமையானதே காண்!
கருத்து: 'அவன் என்னை விரும்புவோனே' என்பதாம்.
விளக்கம்: ஞாழல் அரும்பு மலர்ந்து மணம் வீசும் தறைவன் ஆதலின், அவன் மனமும் நம்மை மணந்து கொள்வதை மறந்திலது என்கின்றனள்.
உள்ளுறை: ஞாழல் அரும்பு முதிர்ந்து அவிழ் இணர் நறிய கமழுமாறுபோல, அவன் அன்பும் முறையாக நிரம்பி வெளிப்பட்டு, இப்போது மணமாகவும் உறுதிப்பட்டது என்பதாம். அரும்பு முதிர்ந்து அவிழ்ந்த இணர் நறுமணத்தைத் துறையிடமெல்லாம் பரப்பல்போல, அவன் முயற்சி நிறைவுற்று மணம் வாய்த்தலால், அனைவரும் மகிழ்வெய் தினம் என்பதுமாம்.
147. நாடே நல்கினன்!
துறை: சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு மாட்சிமைப் படுத்தமை அறிந்த தோழி, உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குச் சொல்லியது.
(து.வி.: தலைமகன் தன் காதலியின் பெற்றோரை வரைவொடு வந்த சான்றோருடன் அணுகுகின்றான். பெற்றோரும் அவந்து வரவேற்று அவளை மணத்தால் தருவதாயின், இன்னின்ன எல்லாம் வரைபொருளாகத் கருதல் வேண்டும் என்கின்றனர். அவற்றை அளித்துர, அதன்மேலும் தந்து அவரை மகிழ்விக்க, அவர்கள் அவன் மாச்டி போற்றி உவகையோடு இசைகின்றனர். இதனைக் கண்ட தோழி, உள்வீட்டில் இருக்கும் தலைவியிடம் சென்று, உவகை ததும்பக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
ஒண்தழை அயரும் துறைவன்
தண் தழை விலையென நல்கினன் நாடே.
தெளிவுரை: மகளிர்கள், எக்கரிடத்து ஞாழலின் மலர்களைக் காணாமையாலே, அதன் ஒள்ளிய தழைகளைக் கொய்து தொடுத்த தழையுடையினை அணிந்தவராக விளையாட்டயரும் துறைவனான நம் தலைவன், நினக்குரிய தண்ணிய தழையுடையின் விலையாகத், தனக்குரிமையான ஒரு நாட்டையே நல்கினானடீ!
கருத்து: 'நினக்காக அவன் எதனையும் தருபவன்' என்ற தாம்.
சொற்பொருள்: அயர்தல் - வினையாடி மகிழ்தல் தழைவிலை - மணப் பெண்ணுக்குத் தருகின்ற வரைபொருள்; முலைவிலை என்றும் உரைப்பர். நாடு - அவன் வென்று கொண்ட நாடுகளுள் ஒன்றென்க; அவன் உயர்வும் இதனால் விளங்கும்.
விளக்கம்: தலைவியின் தமர் கேட்பவெல்லாம் தந்து களிப்பித்தவன், 'இந்நாடும் கொள்க' என்று அளிக்கவும், அவன் மாட்சியறிந்த அவர், அவனைப் போற்றி மகளைத் தர உடனேயே இசைந்தனர் என்பதாம். அத்துடன், அவன் அத்தகு வளமான பெருங்குடியினன் என்பதும், தலைவி மாட்டுப் பெருங்காதலினன் என்பதும் அறிந்து போற்றினர் என்பதுமாம்.
உள்ளுறை: ஞாழலிலே மலரில்லாமை கண்ட மகளிர் அதன் பசுந்தழையைக் கொய்து தழையுடையாக்கிக் கொண்டாற்போல, நினக்கு முலைவிலையாக உலகையே தருதற்கான உள்ளத்தானெனினும், அஃதில்லாமையாலே, தன்பாலிருந்த நாட்டை மட்டும் நல்கினன் என்று கொள்க.
148. நீ இனிது முயங்குவாய்!
துறை: களவொழுக்கத்தின் விளைவறியாது அஞ்சிய வருத்தம் நீங்கக், கரணவகையான் வதுவை முடித்த பின்பு, தலைமகளைப் பள்ளியிடத்து உய்க்கும் தோழி, சொல்லியது.
(து.வி.: 'தான் கொண்ட வதுவையில் முடியுமோ?' என்று கவலையுற்று வாடிய வருத்தம் நீங்கக், கரணவகையால் ஊரும் உறவும் களிகொள்ளத் தலைவியின் வதுவையும் நிறைவு செய்தியது. அதன்பின், தலைமகளைத் தலைவனுடன் இன்புற்று தோழி, உவகையோடு, அவளை வாழ்த்திச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீயினிது கமழும் துறைவனை
நீயினிது முயங்குமதி காத லோயே!
தெளிவுரை: அன்புடையாளே! எக்கர் ஞாழலினிடத்தே, வரம்பு கடந்து ஓங்கும் பெரிய சினையிடத்தே பூத்த பூக்கள், இனிதாக நாற்புறமும் மணம் கமழும் துறைவனை, இனி, நீதான் இனிதாகத் தழுவி இன்புறுவாயாக!
கருத்து: 'இனி ஏதும் துனி இடைப்படுதல் இல்லை' என்பதால், 'இனிது முயங்குமதி' என்கின்றனள், களிப்பால்.
சொற்பொருள்: வீ - பூ. இகந்து படல் - வரம்பு கடந்து உயரமாக விளங்கல், பெருஞ்சினை - பெரிய கிளை. முயங்கல் - தழுவி இன்புறல்.
விளக்கம்: தாழ்ந்துபடு சினைகளின் மலர்களை மகளிர் தம் துழையுடையில் தொடுத்தற்கும், கூந்தலிற் சூடற்கும் கொய்து போயினபோதும், பெருஞ்சினையிலுள்ள பூக்கள் மணம் பரப்பி நிற்கும் துறைக்குரியான் என்கின்றாள். அதன் மணம் இனிது எங்கணும் மகழ்தல் போல, நின் மணவாழ்வும் இனிதாகப் பலரும் வியக்க அமைக என்றதாம். 'காதலோய்' என்றது, தன் அன்புத் தோழியாதலாற் கூறியது; அல்லது, 'தலைவன் மாட்டு ஆராக் காதலுடையாளே! நீ, அவனை இனிது முயங்கி இனி இன்புறுவாயாக!' என்று வாழ்த்தியதுமாம்.
உள்ளுறை: நிலைகடந்த பெருஞ்சினை வீ இனிது கமழும் துறைவன் என்றது, அவனும் நம் தமர் விரும்பிய வெல்லாம் தந்து களிப்பித்து, நின்னை முறையாக வதுவை செய்து கொண்ட வரம்பிலாப் பெருங்காதலன் என்றதாம். முன் செய்யுளின் 'நல்கினன் நாடே' என்பதனோடு சேர்த்துப் பொருள்நயம் காண்க. பெருஞ்சினை வீ இனிது கமழுதல் போலப் பெருங்குடியினனான அவனும் இனிதே நடந்தனன் என்றுதுமாம்.
149. அணங்கு வளர்த்து அகலாதீம்!
துறை: வரைந்து எய்திய தலைமகன், தலைவியோடு பள்ளியிடத்து இருந்துழித் தோழி வாழ்த்தியது.
(து.வி.: வரைந்து மணந்து கொண்டபின், தலைமகனும் தலைமகளும் பள்ளியிடத்து இருந்துவிடத்தே, அவர்களின் களவுக் காலத்துக்கு உறுதுணையாயிருந்த தோழி, தலைவனை வேண்டி வாழ்த்துவதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்குவளர் இளமுலை மடந்தைக்கு
அணங்கு வளர்த் தகறல் வல்லா தீ மோ!
தெளிவுரை: எக்கரிடத்து ஞாழலின் பூவைப்போலச் சுணங்குகள் படர்ந்துள்ள, இளைய முலைகளுடைய மடந்தையான இவளுக்கு, வருத்தத்தை வளரச் செய்து, இவனைப் பிரிதலை ஒருபோதும் மேற்கொள்ளாதிருப்பீராகுக!
கருத்து: 'என்றும் பிரியாது இவளை இன்பமாக வைப்பீராக' என்றதாம்.
சொற்பொருள்: சுணங்கு - அழகுத்தேமல்; ஞாழற்பூவின் அன்ன சுணங்கு என்றதால், இளமஞ்சள் நிறத்துப் பொட்டுப் பொட்டாகப் படர்ந்து அழகு செய்வது என்க. இளமுலை - இளமைக் கவின் கொண்ட முலை. அணங்கு வளர்த்தல் - வருத்தம் வளரச் செய்தல். வல்லாதீமோ - வன்மையுறாதிருப்பீராகுக.
விளக்கம்: 'வல்லாதீமோ' என்றது, அத்தகு வன்கண்மை என்றும் பேணாது ஒழிவீராக என்றதாம். 'சுணங்குவளர்' இளமுலை மடந்தைக்கு அணங்கு வளர்த்தலைச் செய்யாதீராகுக என்று சொல்லும் சொல் நயத்தோடு, மனமுவந்து வாழ்த்தும் மனத்தையும் காண்க. அருமையான திருமண வாழ்த்துக்கள் இவை.
மேற்கோள்: தலைவனைப் பாங்கி வாழ்த்துதலுக்கு எடுத்துக் காட்டுவார் நம்பியுரைகாரர் - (கற்பு - 4).
150. புணர்வின் இன்னான்!
துறை: முன்பொருகால் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பிரிந்துழி, அவனை முயங்காளாக, தோழி, 'நீ இவ்வாறு செய்ததற்குக் காரணம் என்ன?' என்று வினவிய தோழிக்குத் தலைமகன் கேட்பச் சொல்லியது.
(து.வி.: முன்பொருகாலத்துத் தலைவி வருந்துமாறு பிரிந்து சென்ற தலைவன், மீண்டும் வந்து அவளைத் தெளிவித்துக் கூடியின்புற்றிருந்தான். அவளும், அவன் தன் சபலத்தை மறந்தான் என்று மனநிம்மதி பெற்றாள். மீண்டும் அவள் வாடப் பிரிந்து போய்த் திரும்பவும் வந்து அவளை முயங்க விரும்பினான் தலைவன். அவள் அவன் முயக்கிற்கு விரும்பாது ஒதுங்கினாள். 'ஏன் இவ்வாறு செய்தனை?' எனத் தோழி வினவ, அவளுக்குத் தலவி, தலைமகனும் கேட்டுத் தெளியுமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்
புணரி திளைக்கும் துறைவன்
புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே!
தெளிவுரை: எக்கரிடத்தேயுள்ள ஞாழலின் நறியமலர் களையுடைய பெருங்கிளையானது கடல்லைகளைச் சென்று தழுவி இன்புறுகின்ற துறைவன் நம் தலைவன். அவன் நம்மைப் புணரினும், அதனால் இன்பமளித்தலாயமையாது, தொடரும் பிரிவின் நினைவாலே எமக்குத் துன்பந் தருபவனாகவே இருப்பான்; மேலும், எப்போதோ நம்மை அருமையாக வந்து கூடிச் செல்பவன் அவன்; தழுவலை இன்றும் பெறாததால் யாதும் எமக்கு வருத்தமில்லை காண்!
கருத்து: 'அவன் அணைப்பிலே இன்பம் கொள்ளேன்' என்றதாம்.
சொற்பொருள்: புணரி - கடல் அலை. திளைக்கும் - அலையைத் தழுவித் தழுவி மகிழ்ந்தாடும். புணர்வின் - புணர்ச்சிக் காலத்தில், அரும்புணர்வினன் - அருமையாக எப்போதோ வந்து சேர்பவன்.
விளக்கம்: இதனால், அவன் நாட்டமெல்லாம், பரத்தையர் பாலேயாக, அவன் ஊர்ப்பழி கருதியே எம்மையும் நாடி வளருவானேயன்றி, எம்மை முற்றவும் மறந்துவிட்ட அன்பிலாளனே காண் என்றனளாம்.
உள்ளுறை: எக்கர் ஞாழல் நறுமலரப் பெருஞ்சினையானது புணரியால் மோதுண்டு திளைக்கும் துறைவன் என்றது, அவ்வாறே நிலைஆன மனையற வாழ்விலே நில்லாது, பரத்தையரால் தழுவப் பெற்றுத் தன் பெருமையும் பொருளும் சிதைப்பதிலே ஈடுபடும் இயல்பினன் தலைவன் என்றதாம்.
நறுமலர்ப் பெருஞ்சினையை அலைகள் வந்து மோதி மோதிச் செல்வதுபோல, அவனும் நம்பால் நிலையாகத் தங்கி வாழானாய், வந்து வந்து பிரிந்து போகும் வாழ்க்கையன் என்றும் கொள்ளலாம்.
பிறபாடம்: புணர்வின் அன்னான்.
குறிப்பு: இச்செய்யுட்களுள், 48, 49ஆம் செய்யுட்கள் தோழியர் திருமண மக்களை உவந்து வாழ்ந்தும் சிறந்த வாழ்த்தியல் உரைகளாகவும் விளங்குகின்றன. அவை,
'நீ இனிது முயங்குமதி காத லோயோ'
எனத் தலைவியை வாழ்த்துவதும்,
'அணங்கு வளர்த்து அகறல் வல்லா தீமே'
எனத் தலைவனை வாழ்த்துவதும் ஆகும். இவை நல்ல அறவுரைகளும் ஆகும்.
'தலைவனோடு இனிதாகக் கலந்திருந்து வாழ்க' என்பதில், அவனை இன்புறுத்தியும் அதிலே நீயும் இன்புற்றும், அவனைப் புறம்போக நினையாவாறு காத்தும் இனிது வாழ்க' என்னும் கருத்தும் காணப்படும்.
'பிற ஆடவர் போல நயும் இவளைப் பிரிவால் நலியச் செய்து வருத்தமுற வாட்டாதே, என்றும் கூடியிருந்து மகிழ்விப்பாயாக' என்னும் கருத்து, தலைவனை வாழ்த்தும், 'அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமே' என்பதால் புலப்படும்.
அன்புத் தோழியரின் இந்த நெருக்கமான அன்புடைமை இல்லாதபோதும், இன்றும் மணமனையில், 'தோழியர்தாம் மணப்பெண்ணுக்கு உறுதுணையாக நின்று நிகழ்ச்சிகட்கு உதவுகின்றனர். இது இந்தப் பழமையிலேயிருந்து வந்த எச்சமேயெனலாம்.
6. வெள்ளாங் குருகுப் பத்து
வெள்ளாங் குருகின் செய்திகள் வந்துள்ள பத்துச் செய்யுட்களைக் கொண்டமையால், இப்பகுதி இப் பெயரினைப் பெற்றுள்ளது.
'துறைபோது அறுவைத் தூமடியன்ன நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங்குருகு' என, நற்றிணை இக்குருகினை நமக்கு அறிமுகப்படுத்தும். கடற்கரைகளில் மிகுதியாகக் காணப்பெறும் கடற்பறவை வகைகளுள் இவையும் ஒன்று.
''வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை'' என்னும் இரண்டு அடிகளும் பத்துச் செய்யுட்களினும் தொடர்ந்து வருகின்றன.
வெள்ளாங் குருகு என்றது பரத்தையாகவும், பிள்ளை என்றது, அவளோடு தலைமகனுக்கு உளதாகிய ஒழுக்க மாகவும், காணிய சென்ற மடநடை நாரை என்றது வாயில்களாகவும், செத்தென என்றது அவ்வொழுக்கம் இடையிலே நின்றதாக எனவும் பொதுவாகக் கொண்டு-
தலைமகன் ஒரு பரத்தையோடு மேற்கொண்டிருந்த ஒழுக்கமானது இடையிலே நின்றுவிட்டதாக, மீண்டும் அவள் உறவை நாடிய தலைவன் வாயில்கள், அவளிடம் சென்று பேசி, அவளது நெஞ்சம் நெகிழ்த்த தலைவன்பாற் செல்லுமாறு நயமாகச் சொல்லுவதாகவும் உள்ளுறை பொருள் கொள்ளல் வேண்டும்.
இவ்வாறு பழைய உரையாளர் விளக்கி, இதற்கேற்பவே பொருள் கொள்வர். உரைப் பெருகும் பேராசிரியரான சித்தாந்தச் செம்மல் ஔவை துரைசாமிப் பிள்ளையவர்களோ, 'செத்தென' என்பதற்குப் 'போலும்' என்று பொருள்கொள்வர்.
'வெள்ளாங்குருகின் பிள்ளையைத் தன் பிள்ளையென்று கருதியதாய்க் காணச் சென்ற மட நடை நாரை' என்பது அவர்கள் கொண்டது. இதற்கேற்பவே அவர்கள் விரிவான பொருளையும் இயைபுபடுத்திக் கூறுவார்கள்.
'வெள்ளாங்குருகின் பிள்ளையே போலும் என்று காணச் சென்ற மடநட நாரை' என்று நேராகவே பொருள் கண்டு இத்தெளிவுரையானது செல்கின்றது.
தலைவன் ஊர்த்தலைவன் என்னும் பெருநிலையினன் ஆதலின், அவன் உறவாலே அடையும் பயன்களை நாடும் பரத்தையர், அவனை எவ்வாறு தமக்கு வசமாக்க முயல்கின்றனர். அவன் கலையார்வம் மிகுந்தவனாதலின், பாணன் ஒருவனும் அவனோடு பழகி வருகின்றான். அவன் பரத்தையர் குடியிற் பிறந்தவனே. அவனும், தலைவனின் பரத்தமை உறவாலே தானும் பயனடையலாம் என்று நினைத்து வருகின்றவனே!
ஊர் விழாக்களிலும், கடலாடு விழாக்களிலும் பரத்தையர்கள் ஆடியும் பாடியும் மக்களை மகிழ்விப்பர். ஊர்த்தலைவன் என்ற முறையில், தலைவனும் அவ்விழாக்களில் அவர்களோடு கலந்து கொள்வான். அவ்வேளையிலே இளையாள் ஒருத்தியைச் சுட்டிக்காட்டி,அ வள் தன் உறவினள் எனவும், தலைவனை அடைவதையே நாடி நோற்பவள் எனவும் அறிமுகப்படுத்துகின்றான் பாணன்.
பின்னொரு சமயம், தலைவனின் இன்ப நுகர்ச்சியார்வம் அடங்காமல் மேலெழவும், அவன் மனம் பரத்தையர் உறவை நாடுகின்றது. அவ்வேளை பாணன் காட்டிய பெண்ணின் நினைவும் மேலெழுகின்றது. அவனைப் பாணன் உதவியோடு காணச் செல்லுகின்றான். சேரிப்பெண்டிர் பலர் அவனைக் கவர்கின்றனர். ஒருவரை மாற்றி ஒருவர் என்ற நிலையில் அவன் தாவிக் கொண்டிருக்கின்றான்.
இந்நிலையில், முன் நுகர்ந்து கைவிட்ட ஒருத்தியின் நினைவு ஒரு நாள் மிகுதியாக, அவளிடம் வாயில்களை அனுப்புகின்றான். இவன் செயல் ஊரே பழிப்பதாகின்றது.
மீண்டும் தலைவியை நாடுகின்ற மனமும் ஏற்படுகின்றது. அவளும் அவள் தோழியும், அவன் உறவை ஏற்க மறுத்து வெறுத்து உரைப்பதாக அமைந்த செய்யுட்கள் இவை எனலாம்.
151. நெக்க நெஞ்சம் நேர்கல்லேன்
துறை: வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் வாயில் மறுப்பாள் சொல்லியது.
(து.வி.: தலைவனை ஏற்றுக்கொள்வாய் என்று தன்னை வந்து வேண்டிய தன் தோழிக்குத், தலைவியானவள் அதற்கு இசைய மறுப்பாளாகச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
மிதிப்ப, நக்க கண்போல் நெய்தல்
கட்கமழ்ந் தானாத் துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே!
தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளையே போலும் என்று காணச் சென்ற மடநடையினையுடைய நாரையானது மிதிப்பவும், அதன் மடச்செயலைக் கண்டு நகைப்பதுபோல மலர்ந்த கண் போன்ற நெய்தலின் தேன்மணம் இடைவிடாதே கமழும் துறைவனுக்கு, நெகிழ்ந்து நெகிழ்ந்து வலியிழந்து போன நெஞ்சத்தினையுடையளான நான், அவரை ஏற்றலாகிய அதற்கு இனியும் இசையேன்!
கருத்து: 'அவரை இனியும் ஏற்பதில்லேன்' என்பதாம்.
சொற்பொருள்: மடநடை - மடமையோடு கூடிய நடை; கால் மடங்கி நடக்கும் நடையும் ஆகும். நக்க - நகையாடிய, கள் - தேன். நெக்க - நெகிழ்ந்து சிதைந்த. நேர்கல்லேன் - இசையேன். பிள்ளை - பறவைக்குஞ்சின் பெயர். நாரை - நீர்ப் பறவை வகை; நாரம் (நீர்) வாழ் பறவை நாரையாயிற்று; நாரணன் என வருவதும் காண்க.
விளக்கம்: செத்தென - போலும் என்று; செத்ததென்று எனலும் பொருந்தும். அப்போது, மரத்திலே உடன்வாழ் உறவு நெருக்கத்தால் சாவு விசாரிக்கச் சென்றதென்று கொள்க. மடநடை - நடைவகையுள் ஒன்று; கடுநடை தளர்நடை போல்வது; இது கால் மடங்கி நடக்கும் நடை. நக்க - நகைத்த; இது நெய்தல் இதழ்விரிந்து மலர்ந்திருத்தலைச் சுட்டியது; அது மலர்தல், நாரையின் செயல்கண்டு நகைப்பது போலும் என்க. கள் - தேன்; தேனே பண்டு கள்ளின் மூலப்பொருளாயிருந்தது.
'நெக்க நெஞ்சம் நேர் கல்லேன்' என்பதற்கு, 'நெகிழ்ந்து வலியற்றுப் போயின நெஞ்சினளான யான், இனியும் அவனை விரும்பி ஏற்கும் ஆர்வநிலையினள் அல்லேன்' என்பதாகக் கொள்க.
உள்ளுறை: வெள்ளாங்குருகின் பிள்ளைபோலும் என்று அருளோடும் காணச்சென்ற நாரையின் மடச் செயலைக் குறித்தும் கண்போல் நெய்தல் நகையாடி மலர்ந்தாற்போல, இன்னார் உறவல்லோ என்னும் அருளாற் சென்ற தலைவன், அப்பரத்தைபால் மயங்கி நடந்துகொண்ட நிகழ்ச்சியைக் குறித்து ஊர்ப்பெண்டிர் நகையாடினார் என்பதும், மலர்ந்த நெய்தலின் தேன்மணம் துறையிடமெங்கும் கமழ்தலே போல, அவர் கூறும் பழிச் சொற்களும் ஊர் எங்கும் பரவி நிறைந்தன என்பதும் உள்ளுறுத்துக்கூறி, அதனால் தலைவனைத் தான் ஏற்க மறுப்பதாகத் தலைவி கூறினதாகக் கொள்க.
மேற்கோள்: வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது; திணை மயக்குறுதலுள் இப்பத்தும், நெய்தற்கண் மருதம் என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 12).
152. அறவன் போலும்
துறை: தலைமகள் வாயில் மறுத்துழி, 'இவன் நின்மேல் தொடர்ச்சியில் குறைவிலன்; அருளும் உடையன்; ஆதலால், நீ இவனோடு புலத்தல் தகாது' என நெருங்கி வாயில் நேர்விக்கும் தோழிக்கு, அவள் சொல்லியது.
(து.வி.: பரத்தையாளனான தலைவனின் பொருட்டாக வந்த வாயில்களிடம் தலைவி இசைவுமறுத்துப் போக்கி விடுகின்றனள். அது கண்ட தோழி, அவன் பிழையாதாயினும், அவன் நின்பால் அன்பும் உடையவன்; நின் உறவையும் விடாதே தொடர்பவன்; ஆகவே ஒதுக்காது ஏற்றின்புறுத்தலே தக்கது என்கின்றாள். அவளுக்குத் தலைவி சொல்லும் விடையாக அமைந்த செய்யுள் இது.)
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கையறுபு இரற்று கானலம் புலம்பந்
துறைவன் வரையும் என்ப;
அறவன் போலும்; அருளுமார் அதுவே!
தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளை போலும் என்று காணச் சென்ற மடநடையினையுடைய நாரையானது, அது அதன் பிள்ளையில்லாமை நோக்கிச் செயலற்று ஒலித்தபடி இருக்கும் கானலைச் சேர்ந்த கடற்றுறை நாட்டின் தலைவன், அவனையும் போய் வரைந்து கொள்வான் என்பார்கள் அவன் என்றாப் கொண்டுள்ள அருளுடைமையும் அச்செயலே! அவன் துணையற்ற பரத்தையர்க்குத் துணையாகி உதவும் அறவாளன் போலும்!
கருத்து: 'அன்பும் அறமும் மறந்தானுக்கு அகம் கொள்ளேன்' என்றதாம்.
சொற்பொருள்: கையறுபு இரற்று - செயலற்றுத் துயரக் கூப்பீடு செய்யும் இரற்று கானலம் புலம்பு - அவ்வொலி கேட்டபடியே இருக்கும் கான்றஃசோலையைக் கண்ட கடற்கரை நிலப்பாங்கு புலம்பு கடல் நிலம். அறவன் - அறநெறி பேணுவோன்; அருள் - அனைத்துயிர்க்கும் இரங்கி உதவும் மன நெகிழ்ச்சி.
விளக்கம்: குருகின் பிள்ளைபோலும் எனக் கருதிக் காணச் சென்ற நாரையானது, அவ்விடத்தே துயருற்று அரற்றும் குரலொலி கேட்டபடியே இருக்கும் கானற்சோலை என்க. 'வரையும்' என்ப என்றது. தான் விரும்பிய பரத்தையை வரைந்து இற்பரத்தையாக்கிக் கொள்ளப் போகின்றான் எனப் பிறர் கூறிய செய்தியாகும். அவனோ அறவன், அவன் அருளும் அதுவே அன்றோ? எனவே, அவனை இனி யான் விரும்பேன் என்கின்றனள்.
உள்ளுறை: தான்றிந்தாளின் உறவல்லளோவென்று அருளோடு காணச் சென்ற தலைவன், அவள் மையலிலே சிக்கி மீளவகையின்றி அரற்ற, அக்குரல் ஊரெல்லாம் ஒலிக்கும் அலராயிற்று என்று உள்ளுறுத்துக் கூறுவாள், 'காணிய சென்ற மடநடைநாரை கையறுபு இரற்று கானல் அம் புலம்பு அந்துறைவன்' என்கின்றனள்.
மேலும் அவன், அவளை வரைந்து உரிமையாக்கிக் கொள்ளப் போவதையும் சொல்லி, அவன் தன்பால் அருளற்றவனானதையும், கொண்ட மனையாளை நலிவிக்கும் அறமிலாளன் ஆயினமையும் சொல்லித், தான் அவனை ஏற்க விரும்பாத மனநிலையையும் விளக்குகின்றாள் தலைவி என்று கொள்க.
153. நாடுமோ மற்றே!
துறை: பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிய தலைமகன் கேட்குமாற்றல், வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி கூறியது. வாடி இருக்கின்றான் தலைவன். அவன் அவளைச் சினந்தணிவித்துத் தன்னை ஏற்குமாறு விட்ட வாயில்களையும் மறுத்துப் போக்கினாள். தன் குறையுணர்ந்த தலைவன். அவற் விருப்பம் மேலெழ, தன் வாயிலோரை முன்போக இல்லததுள் போக்கித், தான் அங்கு நிகழ்வதை அறியும் விருப்போடு புறத்தே ஒதுங்கி நிற்கின்றான். வாயிலோரை எதிர்வந்து தடுத்த தோழி, அத் தலைவனும் கேட்டு உணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுத் இது.)
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
கணிய சென்ற மடநடை நாரை
உளர வொழிந்த தூவி குவவுமணற்
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை
நன்னெடுங் கூந்தல் நாடுமோ மன்றே!
தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளையோ எனக் காணச் சென்ற மடநடை நாரையானது, அங்கே அதனைக் காணாத துயரத்தாலே கோதிக் கழித்து தூவிகள் , உயர்ந்த மணல் மேட்டிடத்தே நெற்போர்போலக் குவிந்திருக்கும் கடற்றுறைக்கு உரியவனான தலைவனின் கேண்மையினை, நல்லநெடிய கூந்தலை உடையவளான தலைவி தான், இனியும் நாடுவாளோ?
கருத்து: 'அவள் நாடாள் ஆதலின், நாடுவார்பாலே செல்லச் செல்லுக' என்பதாம்.
சொற்பொருள்: உளர - கோத; ஒழிந்த - கழித்து வீழ்ந்த, குவவு மணல் - காற்றால் குவிக்கப் பெற்று உயர்ந்த மணல்மேடு. போர்வில் பெறூஉம் - நெற்போர் போலக் குவிந்து கிடக்கும். நன்னெடுங் கூந்தல்; தலைவியைச் சுட்டியது. நாடுமோ - விரும்புமோ?
விளக்கம்: வெள்ளாங் குருகின் குஞ்சோவெனக் காணச் சென்ற நாரை தன் இறகைக் கோதிக் கழிக்க. அதுதான் போர் போல மணல் மேட்டிற் குவிந்து கிடக்கும் என்பது, அதன் துயர் மிகுதி கூறியதாம். கேண்மை - கேளாம் தன்மை; உறவாகும் உரிமை.
உள்ளுறை: 'நாரை உளர வொழிந்த தூவி போர்வில் பெறூஉம் துறைவன்' என்றது, பரத்தைபால் அருளோடு சென்ற தலைவன், அவள் மையலிலே சிக்கி வாரியிறைத்த பொன்னும் பொருளும் அளவில என்பதாம்.
குறிப்பு: 'நாணுமோ மற்றே' எனவும் பாடம்.
154. இவ்வூரே பொய்க்கும்!
துறை: தோழி வாயில்வேண்டி நெருங்கிய வழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது.
(து.வி.: பரத்தையிற் பிரிந்து வந்தானை, நின்பால் வரவிடுக என்று தலைவியிடம் சொல்லுகின்றாள் தோழி. 'அவனை வரவிடேன்' என்று மறுக்கும் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானற் சேக்கும் துறைவனோடு
யானஎவன் செய்கோ? பொய்கும் இவ்ஊரே?
தெளிவுரை: 'வெள்ளாங் குருகின் பிள்ளையோ' எனக் கருதிக் காணச் சென்ற மடநடை நாரையானது, கானலிடத்தே தங்கியிருக்கும் துறைவனோடு, யான் என்னதான் செய்வேனோ? இவ்ஊரும் அவனைக் குறித்துப் பொய்த்துப் பேசுகின்றதே!
கருத்து: 'அவன்பால் எவ்வாறு மனம் பொருந்துவேன்' என்றதாம்.
சொற்பொருள்: கானல் - கானற் சோலை. சேக்கும் - தங்கும். பொய்க்கும் - பொய்யாகப் பலவும் கூறும்.
விளக்கம்: 'யான் எவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே' என்றது, இவ்வூரனைத்தும் கூடிப் பொய் சொல்லுமோ? அதனை நம்பி நோவாதே யானும் யாது செய்வேனோ? அத்தகையானிடத்தே என் மனமும் இனிச் செல்லுமோ? என்பதாம்.
உள்ளுறை: வெள்ளாங் குருகின் பிள்ளையோவெனக் காணச் சென்ற மடநடை நாரையானது கானலிடத்தேயே தங்கிவிட்டாற் போல், தானறிந்தாள் ஒருத்தியின் மகளோ வென்று கருதிச் சென்ற தலைவன், அச்சேரியிடத்தேயே மயங்கிக் கிடப்பானாயினான் என்று உள்ளுறுத்துக் கூறுகின்றனள். இதனால், அவன் நம் மீது அன்பாற்றான் என்கின்றனள்; உறவும் பழமை என்கின்றனள்.
155. பாவை ஈன்றெனன்!
துறை: பலவழியாலும் வாயில்நேராளாகிய தலைமகள், 'மகப்பேற்றிற்கு உரித்தாகிய காலம் கழிய ஒழுகுகின்றாய்' என நெருங்கிய தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: தோழியும் பலவாறு சொல்லிப் பார்க்கின்றாள். தலைவியோ தன் மனம் இசையாதேயே இருக்கின்றாள். முடிவாக 'மகப்பேற்றிற்கு உரிய காலம் கழிந்து போகும் படியாக, நீதான் பிடிவாதமாக நடக்கின்றாயே' என்று, அவளது மனையறக் கடனைச் சுட்டிக்காட்டித் தலைவனுக்கு இசையுமாறு வேண்டுகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது.)
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யான!
தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளை போலுமெனப் பார்க்கச் சென்ற மடநடை நாரையானது, சிறகடித்தபடியே அங்குமிங்கும் அசைதலினாலே, நெருங்கிய நெய்தல்கள் கழியிடத்தே மோதிச் செல்லும் அலைகளோடே சேர்ந்து போகும் துறைவனுக்கு, யான் பைஞ்சாய்ப் பாவையினைப் பெற்றுள்ளேனே!
கருத்து: 'அதுவே எனக்கு இப்போதும் போதும்' என்றதாகும்.
சொற்பொருள்: பதைப்ப - அசைய. ததைந்த - நெருங்கிய. ஓதம் - கடல் அலை. பைஞ்சாய்ப் பாவை - சிறுமியாயிருந்த போது வைத்தாடிய கோரைப் பாவை.
விளக்கம்: 'தலைவனை ஏற்றுக் கொள்வது பற்றியே மீண்டும் மீண்டும் சொல்லுகின்றாயே; அவன் நம்மேல் சற்றும் அருள் அற்றவன்; பரத்தையர்பால் அன்புகாட்டுபவன்; பழிக்கஞ்சி இங்கு வரும்போதும், வாயில்கள் வந்து பரத்தை வாடி நலிவதாகக் கூறவும், அப்படியே அவர் பின்னாற்போய் விட்டவன்' என்று கூறித் தலைவி மறுத்து உரைக்கின்றாள் என்று கொள்க. மகப்பேற்றுக்கு உரிய காலமாயினும், உரிமையுடையவளும் யானே என்பது அறிந்தானாயினும், அவன் என்னை அறவே மறந்து பரத்தையர் சேரியிடத்தேயே வாழ்பவனாயினானே! இனி, நாம் முன் சிறுபோதிலே வைத்தாடிய பஞ்சாய்ப் பாவையினைப் பிள்ளையாகக் கொள்ள வேண்டியது தான்போலும் என்று வாழ்வே கசந்தவளாகத் தலைவி கூறுகின்றாள்.
உள்ளுறை: 'நாரை பதைப்பத் தகைந்த நெய்தல், கழிய ஓதமொடும் பெயரும் தறைவன்' என்றது, பெரியோர் இடித்துக் கூறுதலாலே எம்மை நோக்கி வருகின்றானான தலைவன், வாயில்கள் வந்து பரத்தையின் வருத்தம் பற்றிக் கூறவும், அவள்மேற்கொண்ட மருளால், அவர் பின்னேயே போவானாயினான் என்பதாம்.
156. எனக்கோ காதலன்!
துறை: பரத்தையிடத்து வாயில்விட்டு ஒழுகுகின்ற தலைமகனது, வாயிலாய் வர்த்தார்க்குத் தோழி வாயில் மறுத்தது.
(து.வி.: ஊடியிருந்தாளான பரத்தையிடம் தூதுவிட்டு, போயினவர் சாதகமான பதிலோடு வராமையாலே வருந்தி, தன் மனைவியிடமாவது செல்லலாம் என்று வீட்டிற்குத் தன் வாயில்களைத் தாதனுப்புகின்றான். அவர்களுக்குத் தலைவியின் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி
தெண்கழிப் பரக்கும் துறைவன்
எனக்கோ காதலன்; அனைக்கோ வேறே!
தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளை போலுமென்று காணச் சென்ற மடநடை நாரை, தன் இறகுகளைக் கோதுதலாலே கழித்த செவ்விய புள்ளிகளையுடைய தூவிகள் தெளிந்த கழியின் கண்ணே பரக்கும் துறைவன், என்னளவிலே தலைவிபால் காதலனாகவே தோன்றுகின்றான்; ஆனால், தலைவிக்கோ வேறாகத் தோன்றுகின்றனனே! அதற்கு யான் யாது செய்வேன்?
கருத்து: 'அவள் அவனைத் தானும் வெறுத்தனள்' என்றதாம்.
சொற்பொருள்: 'அன்னை' என்றது தலைமகளை; அவளின் மனைமாண்புச் செவ்வியறிந்து போற்றிக் கூறியதாகும். 'பதைப்ப' என்றது, தன் குஞ்சாகாமை நோக்கிப் பதைப்புற்று என்றதும் ஆம். மறு - புள்ளிகள்.
'எனக்கோ காதலன் அனைக்கோ வேறே' என்றது, எனக்கு அவன் தலைவிபால் அன்புடையவன் என்பது கருத்தேயானாலும், அன்னையான தலைவியின் மீதோ அன்பு மறந்து கொடுமை செய்தவனாயிற்றே' என்பதாம். இதனால் அவள் ஏற்க இசையாள் என்று மறுத்துப் போக்கினள்.
உள்ளுறை: 'நாரை பதைப்ப வொழிந்த செம்மறுத் தூவி தெண்கழிப் பரக்கும்' என்றது, தலைவன் உறவாடிக் கழிக்க வாடிவருந்தும் பரத்தையரின் துயரமும் வருத்தமும் ஊரெல்லாம் பரவி அலராயிற்று என்பதாம்.
மேற்கோள்: பல்லாற்றானும் வாயில் நேராத தலைவியை மகப்பேற்றிற்கு உரிய காலம் கழிய ஒழுகா நின்றாய் என நெருங்கிய தோழிக்கு, 'யான் களவின்கண் மகப்பெற்றேன்' எனக் காய்ந்து கூறியது இது வென்பர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு,6).
157. என் காதலோன் வந்தனன்!
துறை: பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டி ஒழுஙுகுகின்ற தலைமகள், புதல்வன் வாயிலாக வரும் எனக் கேட்டு அஞ்சிய தலைமகள், புதல்வன் விளையாடித் தனித்து வந்துழிச் சொல்லியது.
(து.வி.: பரத்தையிற் பிரிந்துபோன தலைவன் மீண்டும் தலைவியை மனந்தெளிவித்து அடைய விரும்பிப் பலரைத் தூதனுப்பி முயன்றும், அவள் தன் உறுதி தளராதிருக்கின்றாள். அப்போது, தெருவிலே விளையாடியிருக்கும் புதல்வனைத் தூக்கியபடி அவன் வருவான் என்று கேட்டு, அப்படி வரும் அவனை வெறுத்துப் போக்க முடியாதே என அஞ்சுகிறாள். அவ்வேளையிற் புதல்வன் மட்டுமே விளையாடிவிட்டுத் தனியே வரக்கண்டவள், நிம்மதி பெற்றுச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலை சேக்கும்
தெண்கடற் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனனெங் காத லோனே!
தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளையோ என்று காணச் சென்ற மடநடை நாரையானது, காலையிலேயிருந்து மாலை வரை அக்கான்றஃ சோலையிலேயே தங்கும் குளிர்ந்த கடற்சேர்ப்பான தலைவனோடும் சேர்ந்து, எம். காதன் மகன் வரவில்லை; அவன் மட்டுமே தான் தனியாக வந்தனன்!
கருத்து: 'ஒரு இக்கட்டிலே இருந்து விடுபட்டேன்' என்றதாம்.
சொற்பொருள்: சேக்கும் - தங்கும். 'காதலோன்' என்றது புதல்வனை. 'சேர்ப்பன்' என்றது தலைவனை. 'காலையிலிருந்து மாலை' என்றது, எப்போதும் என்னும் குறிப்பினதாம்.
விளக்கம்: புதல்வனை எடுத்துக்கொண்டு தலைவன் வீட்டினுள் வந்தால், தலைவியால் அவனைச் சினந்து பேசி ஒதுக்க முடியாதென்பதும், புதல்வன் தகப்பனிடம் விளையாடிக் களிப்பதைத் தடுக்க இயலாது என்பதும், சூழ்நிலையுணராத புதல்வன் இருவரிடமும் கலந்து விளையாடி மகிழத் தொடங்கின் அதனால் தானும் தலைவனுடன் நகைமுகம் காட்டிப்பேச நேரும் என்பதும் கருதி, தலைவி இவ்வாறு கூறி, மனநிம்மதி பெற்றனள் என்று கொள்க.
உள்ளுறை: காலையிலே சென்ற நாரையானது, மாலை வந்தும் கூட்டுக்குத் திரும்ப நினையாது தன் மடமையால் கழிக்கரை மரத்திலேயே தங்கிவிடும் தெண்கடற் சேர்ப்பன் அவன் ஆதலால், அவனும் நிலையாகப் பரத்தையர் இல்லிலேயே தங்கியிருப்பவனாகிவிட்டான் என்று உள்ளுறை பொருள் தோன்றக் கூறுகின்றாள்.
பரத்தையிடத்தே இவன் காலையில் போகவிட்ட வாயில்கள், அவள் இசைவினை மாலைவரையும் பெறாதே வருந்தி, இரவிலும் இசைவுவேண்டி அங்கேயே துயல்வாராயினர் என்றதாகவும் கொள்க.
மேற்கோள்: வாயில்வேண்டி ஒழுகுகின்றான், புதல்வன் வாயிலாக வரும் எனக் கேட்டு அஞ்சிய தலைவி, அவன் விளையாடித் தனித்து வந்துழிக் கூறியது இது என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு, 6).
158. எம் தோழி துயரைக் காண்பாயாக!
துறை: பரத்தை புலந்துழிப் புலவி நீக்குவானாய், அஃது இடமாக வந்தமை அறிந்த தோழி, தலைமகற்கு வயில் மறுத்தது.
(து.வி.: பரத்தை புலந்த போதிலே, தான் தன் மனைக்குப் போவது போலக் காட்டினால், அவள் புலவி தீர்வாள் என்று நினைத்து வந்தான் தலைவன். அவன் வந்த குறிப்பறிந்த தோழி, வாயில் மறுப்பாளாகக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.)
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்
தண்ணந் துறைவன் கண்டிகும்
அம்மா மேனியெந் தோழியது துயரே!
தெளிவுரை: வெள்ளாங் குருகின் பிள்ளை போலுமென்று காணச் சென்ற மடநடை நாரையானது, அதை மறந்து, கானலின் பெருந்துறையிடத்தே தன் துணையோடு திரியும் குளிர்ந்த கடற்றுறைத் தலைவன், அழகிய மாமைநிறங் கொண்ட மேனியளான எம் தோழியது துயரத்தைத் தீர்க்கும் பொருட்டு வந்துள்ளதைக் கண்டனமே! இஃது என்னே வியப்பு!
கருத்து: 'நின் பரத்தை இல்லிற்கே சென்று, அவள் புலவியை நீக்கி இன்புற்றிருப்பாயாக' என்றதாம்.
சொற்பொருள்: கண்டிகும் - கண்டோம். அம் மாமேனி - அழகிய மாமை நிறம் அமைந்த மேனி. கொட்டும் - திரியும்.
விளக்கம்: வெள்ளாங் குருகின் பிள்ளையோ என்று போன நாரை, அதை மறந்து துணையோடு திரியும் கானலம் துறைவன் என்றனள், அவன் புதல்வனிடத்தும் அன்புற்றவனாகிப் பரத்தை மயக்கிலேயே திரிவானாயினன் என்றற்கு துறைவன் கண்டிகும் என்பது எள்ளி நகையாடிக் கூறியதாம். அம்மாமேனி எம் தோழியது துயருக்கே காரணமாயின இவன், அது தீர்க்கும் உணர்வோடு வாரானாய்த், தன் பரத்தையின் புலவி தீர்க்கக் கருதி இல்லந்திருப்புவான் போல வருகின்றான் என்று, தான் அறிந்ததை உட்கொண்டு கூறியதாம்.
'கண்டிகும் அம் மாமேனி எம்தோழியது துயரே' என்றது. நின் பரத்தையின் பிரிவுத் துயரையும் யான் கண்டேன். ஆதலின், நீதான் அவள் பாற் சென்று அவள் புலவி தீர்த்து இன்புறுத்துவாயாக என்று மறுத்துப் போக்கியதுமாம்.
உள்ளுறை: பிள்ளை காணச் சென்ற நாரை, அதனை மறந்து தன் துணையொடு சுற்றித் திரியும் கானலம் பெருந்துறைத் துறைவன் என்றது, அவனும், தன் புதல்வனைக் காணும் ஆர்வத்தனாகக் காட்டியபடி இல்லம் வந்து, தலைவியுடன் இன்புற்றிருத்தலை நாடியவனாயுள்ளான் என்றதாம்.
மேற்கோள்: தண்ணம் துறைவன் என்பது விரிக்கும் வழி விரித்தல் எனக் காட்டுவர் இளம்பூரணரும் சேனாவரையரும் - (தொல். எச்ச, 7).
159. நலன் தந்து போவாய்!
துறை: மறாமற் பொருட்டு, உண்டிக் காலத்தே வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி கூறியது.
(து.வி.: உணவு நேரத்திற்கு வீடு சென்றால், தலைவி தன்னை மறுத்துப் போகுமாறு சொல்லமாட்டாள் என்று, அவள் குடும்பப்பாங்கினை நின்கறிந்த தலைவன், அந்த நேரமாக வீட்டிற்கு வருகின்றான். அப்படி வந்தவனைத் தோழி கண்டு உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பசிதின அலகும் பனிநீர்ச் சேர்ப்ப!
நின்னொன்று இரக்குவென் அல்லேன்;
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே!
தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளைபோலுமெனக் கருதிக் காணச் சென்ற மடநடை நாரையானது, பசியானது வருத்த வருந்தியபடி இருக்கும் குளிர்ந்த நீர் வளமுடைய சேர்ப்பனே! நின்னிடைத்தே யான் யாதொன்றும் தருகவென இருக்கின்றேன் அல்லேன். நீதான் கவர்ந்து போயினையே இவளுடைய அழகு, அதனை மட்டுமேனும் மீண்டும் இவளுக்குத் தந்துவிட்டுச் செல்வாயாக!
கருத்து: ''நின் கொடுமையால் இவள் நலினழந்தாள்'' என்றதாம்.
சொற்பொருள்: பசிதின - பசி பெரிதும் வருத்த. பனிநீர் - குளிர்ச்சியான நீர். அல்கும் - தங்கியிருக்கும்.
விளக்கம்: 'உன்னிடம் யாதும் இரக்கவில்லை அன்பனே! இவளிடமிருந்து பறித்துப் போயின நலத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போவாய்' என்கிறாள் தோழி. 'வஞ்சியன்ன என் நலம் தந்து சென்மே' என அகநானுற்றும் இப்படிக் கூறுவதாக வரும் - (அகம், 376) கலி 128-இலும் இவ்வாறு சொல்வதாக வரும் நின்பால் நினக்குரியதான் ஒன்றை இரப்பின் நீ தரலாம், தராது மறுக்கலாம்; ஆயினும், எம்மிடமிருந்து கவர்ந்து போயினதைத் தந்துவிட்டுப் போவதுதான் நின் ஆண்மைக்கு அழகு என்பதும் புலப்பட வைக்கின்றனள்.
உண்டி காலத்துத் தலைவி மறாமைப் பொருட்டு விருந்தோடு கூடியவனாகத் தலைவன் தன் வீட்டிற்கு வந்தான் என்று கொள்ளலும் பொருந்தும். விருந்தாற்றற் கடமையும், அவர்முன் தலைவனிடம் சினத்து கொள்ளாத அடக்கமும் தலைவியின் பண்பாதலை அறிந்தவன், அவள் சினத்தைத் தணிவிக்க இவ்வாறு வந்தனன் என்க.
உள்ளுறை: 'நாரை பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப' என்றது, பரத்தை நாட்டமேயுடைய நீயும், மிக்க பசி எழுந்தமையாலே வீட்டுப் பக்கம் உணவுக்காக வந்தனை போலும் என்று உள்ளுறுத்துக் கூறியதாம். நின் வயிற்றுப் பசிக்கு உணவு நாடி வந்தாயன்றி, நீ கவர்ந்து சென்ற தலைவியின் அழகை மீட்டும் தருதற்குரிய அருளோடு வந்தாயல்லை என்று வாயில் மறுத்ததும் ஆம்.
160. முயங்குமதி பெரும!
துறை: புலந்த காதற்பரத்தை, புலவி தீராது தலைமகன் வாயில் வேண்டி வந்தான் என்றது அறிந்த தலைமகள் வாயில் மறுத்தது.
(து.வி.: காதற்பரத்தையானவள், புலந்து தலைவனை ஒதுக்கியிருந்தாள். அவன் அவளைத் தனக்கு இசைவிக்கச் செய்தவனான முயற்சிகள் ப லனளிக்காது போகவே, அவன், தான் தன் மனைவியிடம் போயினால், அவள் தன்னை முற்றவும் மறப்பானோ என்று அஞ்சித் தனக்கு இசைவாள் என்று கருதினான். ஆகவே, மனைவியை நாடியும் வீட்டிற்கு வருகின்றான். அவன் குறிப்பறிந்த தலைமகள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ!
பண்டையின் மிகப்பெரிது இனைஇ
முயங்குமதி பெரும! மயங்கினள் பெரிதே!
தெளிவுரை: வெள்ளாங்குருகின் பிள்ளை போலுமென்று நினைத்துக் காணச்சென்ற மடநடை நாரையானது, நொந்து வருந்தியதன் மேலும் மிகுதியாகவும் வருந்தும் துறைக்கு உரியவனே! நின் காதற்பரத்தை நீதான் இங்கே வருவதறிந்து பெரிதும் வருந்தி மயங்கினள். ஆதலின், அவன்பாற் சென்று முன்னையினும் மிகப் பெரிது அன்புகாட்டி, அவளைத் தழுவி இன்புறுத்துவாயாக!
கருத்து: 'நின் காதற் பரத்தையையே சென்று இன்புறுத்துக' என்றதாம்.
சொற்பொருள்: இனைஇ - வருந்தி, முயங்குமதி - தழுவுவாயாக.
விளக்கம்: முன்னும் அவள் ஊடுதலும், நீ அது தீர்த்துக் கூடுதலும் உண்டே! இப்போது அவள் முன்னிலும் மிகப் பெரிதாக வருந்தினள், பெரிதும் மயங்கவும் செய்தனள்.
ஆகவே, அவளைத் தெளிவித்துப் பண்டையினும் பெரிதாக அன்புகாட்டி மகிழ்விப்பாயாக! என்று தலைவி கூறுகின்றனள். அவன் தன்பால் வருதலையே உள்ளம் நாடினும், அவன் பரத்தைமையால் மனம் வெதும்பிக் கூறியது இது.
உள்ளுறை: நாரை நொந்ததன் தலையும் நோய் மிகும் என்றது, நினக்கு வாயிலாகச் சென்றவர்கள், அவள் வருத்தங்கண்டு தாமும் வருந்தி நலிந்தாராய், அவள் பாலே அவளைத் தேற்றுவாராய்த் தங்கி விட்டனர். என்றதாம் இது, வாயிலாக சென்றவரும் அவள் ஊடலின் துயரம் நியாயமானதென்று கொண்டு மேலும் வருந்துவாராயினர் என்பதாம்.
நாரையும் குருகும் கடற்புட்களாயினும், இனத்தால் வேறானவை எனினும், உடன்வாழ் உறவினைக் கருதி அன்பு காட்டல்மேற் சென்றது நாரை. எனினும் அது சென்ற அவ்விடத்தே, தன் பழைய உள்ளக்கசிவை விட்டு, வேறுவேறு நிலைகளில் இயங்கலாயிற்று.
இவ்வாறே ஊர்த் தலைவனும் உயர்குடியினனுமாகிய தலைவன், பரத்தையர் மாட்டும் தன் ஊரவர் என்று விழவிற்கலந்து களித்தாடற் பொருட்டுச் சென்றவன், அதனை மறந்து, அவர்பாலே இன்பந்துய்ப்பானாகவும், அவர்க்கு வாரிவழங்கி மனையை மறந்தானாகவும் ஆயினன் என்க. அன்றி, இவ்வாறு கற்பித்து ஊடியதாகவும் நினைக்க.
7. சிறுவெண் காக்கைப் பத்து
இப்பகுதியின் செய்யுட்கள் பத்தினும், சிறு வெண் காக்கை பற்றிய செய்திகளே கூறப்படுதலான், இப்பகுதியைச் 'சிறு வேண் காக்கைப் பத்து' என்று தொகைப் படுத்தினர்.
இது, நீர்ப்பாங்கிலே பெரிதும் காணப்பெறும் பறவையினத்துள் ஒன்று. கூட்டம் கூட்டமாகச் செர்ந்து வாழும் இயல்பினது. காக்கையிற் சிறிதும், வலிகுறைந்ததும் ஆகும். மீனே இதன் உணவு; சில சமயங்களில் தவளை போன்ற வற்றையும் தின்னும். நீருள் மூழ்கி மீன்பிடிக்கும் இதனை நீர்க்கோழி போலும் என்றும் மயங்குவர் பலர். 'வெண் காக்கை' என்று கூறினும், இதன் நிறம் வெளிறிய கருநிறமே.
நிலமும் பொழுதும் கருப்பொருள்களும் மனித உணர்வுகளையும் வாழ்வுப் போக்கையும் எவ்வாறு உருவாக்குகின்றன. உருவாக்கும் ஆற்றலின என்னும் உண்மையை அறிஞர்கள் மிகவும் வலியுறுத்தியிருக்கும் சால்பையும் இச் செய்யுள்கள் காட்டும்.
'பெருங் கடற் பரப்பில் இரும்புறம் தோயச் சிறுவெண் காக்கை பலவுடனாடும்' துறை (நற். 231) எனவும், 'சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு எறிதிரைத் திவலை ஈர்ம்புறம் நனைப்ப' (குறுந். 334) எனவும், பிறசான்றோரும் இதனைக் கூறுவர்.
161. நெஞ்சம் நோய்ப்பாலது!
துறை: ஒருவழித் தணந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாளாய்ச் சொல்லியது.
(து.வி.: தலைவியை வரைந்து மணந்து கொள்ளாது, தலைவன் தன் மனையிடத்தேயே தங்கிவிட்டபோது, தலைவியின் உள்ளமும் உடலும் நலனழிந்து சிதைகின்றன. 'அவன் சொல் மறவான்; விரைவிலே வந்து நின்னையும் மணப்பான்' என்று தேறுதல் கூறும் தோழிக்கு, அவள் தன்னுடைய நிலையைக் காட்டிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்து நுதலழியச் சாஅய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பா லஃதே!
தெளிவுரை: பெரிதான கடற்கரை யிடத்ததாகிய சிறுவெண் காக்கையானது, கருமையான கொம்புகளையுடைய புன்னை மரத்திலே தங்கும் துறையினையுடையவன் தலைவன். அவன் பொருட்டாகப் பசலையுற்று, நெற்றியும் அழகழிந்து போக மெலிவுறுதலினாலே, அவனையே விரும்பியதான என் நெஞ்சமும், இப்போது நோய் கொண்ட தாயிற்றே!
கருத்து: 'நெஞ்சமும் நம்பிக்கையிழந்து வருத்தமுற்றதே' என்றதாம்.
சொற்பொருள்: பயந்து - பசந்து. க ருங்கோட்டுப் புன்னை - கூரிய கொம்புகளையுடைய புன்னை. அழிய - ஒளி குன்றிப் போக. சாஅய் - மெலிவுற்று. நயந்த - அவனே துணையாக விரும்பிக் கொண்ட நோய் - தளர்வம் கவல்வும்.
விளக்கம்: 'நயந்த நெஞ்சமே நோய்ப்பட்டது; ஒளி நெற்றியும் பசலையால் அழகழிந்தது; அவனோ வந்திலன்; யான் வாடி நலன்ழியாதே என் செய்வேன்?' என்கின்றனள்.
'அவனையே நாடிநாடி நலியும் நெஞ்சின் துயரத்தை எழாதவாறு தடுப்பதற்கு என்னால் இயலவில்லையே?' என்றதாம்.
உள்ளுறை: 'சிறுவெண் காக்கையானது தன் முயற்சியிலே மனங்கொள்ளாததாய்ப் புன்னையின் கருங்கோட்டிடத்தே தங்கும் துறைவன்' என்றது, 'அவனும் தான் செய்தற்குரிய வரைதன் முயற்சியற்றானாய்த் தன் மனைக்கண்ணேயே தங்கி வாளாயிருப்பானாயின்னான்' என்றதாம்.
162. சொல் பிறவாயினவே!
துறை: இதுவும் மேற்பாட்டின் துறையே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்து நீர் இருங்கழி இரைதேர்ந் துண்டு
பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லா பிறவா யினவே.
தெளிவுரை: பெரிதான கடற்கரை இடத்ததாகிய சிறுவெண் காக்கையானது நீந்துமளவுக்கு நீர்ப் பெருக்கையுடைய கரிய கழியிடத்தே இரையினைத் தேடி உண்டு விட்டுப், பூக்கள் மணங்கமழும் கானற்சோலையிடத்தே சென்று தங்குகின்ற துறைவனுடைய சொற்களோ, சொன்னபடியே யல்லாமல் வேறாகிப் போயினவே!
கருத்து: 'சொன்ன சொல்லையும் அவன் மறந்தானே' என்றதாம்.
சொற்பொருள்: நீத்து நீர்-நீந்தும் அளவுக்குப் பெருகிய நீர்; இது சிறிதளவுக்கு ஆழமான நீர்நிலைகளிலுள்ள சிறுமீன்களையே பற்றி உண்ணும் தன்மையது என்றதாம். பொதும்பர் - சோலை. சொல் பிறவாயினது, சொன்னபடி நிகழாமல் பிழைபட்டுப் போயினது.
விளக்கம்: சிறு வெண்காக்கை கழிமீனைத் தேர்ந்து பற்றி உண்டதன் பின்னே, பூக்களின் நறுமணங்கமழும் பொதும்பரிற் சென்று, அந்தப் புலால் நாற்றத்தோடு கூடியதாகவே தங்கியிருக்கும் என்றார். 'பெருங்கடற்கரையது சிறுவெண் காக்கை, நீத்து நீர் இருங்கழி இரை தேர்ந்துண்டு, புக்மழ் பொதும்பிற் சேக்கும் துறைவனொடு' எனக் குறுந்தொகையும் இந்த இயல்பை எடுத்துக் கூறும். அதன் இயல்பே, தலைவனிடமும் காணப்படுகின்றது என்றதும் இது. விரைய வரைந்து வந்து முறையாக நின்னை மணப்பேன் என்று கூறியதையும், அதுதான் பொய்த்ததையும் நினைந்து கலங்கி, இப்படிக் கூறுகின்றனள்.
உள்ளுறை: சிறுவெண் காக்கையானது சிறுமீனையுண்டு விட்டுத் தன் பசி தீர்ந்ததாலே, புக்கமழ் பொதும்பர்ச் சென்று இனிதே தங்கியிருத்தலேபோலத், தலைவனும் தன் ஆர்வந்தீர நம்மைக் களவின்கண்ணே முயங்கியபின்னே, தன் மனைக்கண் சென்று, நம்மை மறந்து மகிழ்வோடு இருப்பானாயினன் என்பதாம்.
துறைவன் சொல்லை வாய்மையெனக் கொண்டு, அவனை ஏற்றனமாகிய நாம், அதன்படி அவன் நடவாமையாலே நலனழிந்தும் உளம் கலங்கியும் வேறுபட்டு வருந்துவேமாயினேம் என்பதுமாம். அதனை மறந்து எப்படி ஆற்றியிருப்போம் என்பதும் உணர்த்தினள்.
தன் பசிக்கு உணவாகக் கருதுதலல்லது, மீனின் அழிவைப் பற்றி ஏதும் கருதாத காக்கை போலத், தலைவனும், நம்மை தன் காமப் பசிக்கு உணவாகக் கருதுதல்லது, நம்பால் ஏதும் அருளற்றவன் என்றதுமாம்.
163. கை நீங்கிய வளை!
துறை: மேற் செய்யுளின் துறையே.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியின் துஞ்சும்
துறைவன் துறந்தெனத் துறந்தென்
இறையேர் முன்கை நீங்கிய வளையே!
தெளிவுரை: பெரிய கடற்கரைக்கண் உளதான சிறுவெண் காக்கையானது, கரிய கழியிட்டதே எழும் அலைகள், கரையிலே மோதிச் சிறுதுளிப்படும் ஒலியினைக் கேட்டவாறே, உறக்கம் கொள்ளும் துறையினையுடையவன் தலைவன். அவன், என்னைப் பிரிந்தானாதலினாலே, சந்து பொருந்திய என் முன்கைகளிலே விளங்கிய வளைகளும் என்னைக் கைவிட்ட வாய்த் தாமும் நீங்கிப் போயினவே!
கருத்து: 'வளை கழன்று வீழும்படிக்கு வருந்தி மெலிவுற்றேன்' என்றதாம்.
சொற்பொருள்: துவலை - சிறு துளிகள். துவலை ஒலி - அலைமோதித் துவலைப்படும் போதிலே எழுகின்ற ஒலி. இறை - சந்து.
விளக்கம்: அவன் துறந்தான் என்பதனாலே, என்னிலும் தாமே நெருக்கமானவை போலக் கைவளைகள் தாமும் கைவிட்டு நீங்கிப் போயினவே என்று புலம்புகின்றனள். இதனால் உடம்பு நனி சுருங்கலைக் கூறினாளாம்.
உள்ளுறை: சிறு வெண் காக்கையானது, இருங்கழித் துவலையின் ஒலியிலே இனிதாகத் தூங்குவது பற்றி கூறினாள். அவ்வாறே தலைவனும், தன்னை நினையாதே, ஊரிடத்தே எழும் அலருரைகளைக் கேட்டும் தமக்கு உதவும் அறிவுவரலின்றி, அதிலேயே மயங்கி உறங்குவானாயினான் என்றதாம்.
164. அலர் பயந்தன்றே!
துறை: தலைமகனுக்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: தலைமகன் சேரிப்புறத்தேயும் பரத்தையுறவிலே விருப்பமுற்றுச் செலெலுகின்றனன். அதனாலே வாடி நலன் அழிந்த தலைவி, தன் தோழிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை யாரும்
தண்ணம் துறைவன் தகுதி
நம்மோடு டமையா தலர்பயந் தன்றே!
தெளிவுரை: பெருங் கடற்கரைக் கண்ணதான சிறுவெண் காக்கையானது, கரிய கழியிடத்தேயுள்ள அயிரை மீன்களைப் பற்றி உண்ணுகின்ற குளிர்ந்த நீர்த்துறைக்கு உரியவன் தலைவன். அவன் தகுதியானது, நம்மை நலிந்து வாடி நலனழியச் செய்தலோடும் நில்லாதே ஊரிடத்தும் அவர் பயப்பதாக ஆயிற்றே!
கருத்து: 'அவன் செயலால் ஊர்ப் பழியும் வந்ததே' என்றதாம்.
சொற்பொருள்: அயிரை - 'அயிரை' எனப்படும் மிகச் சிறு மீன் வகை. ஆரும் - மிகுதியாகப் பற்றி உண்ணும், தகுதி - தகுதிப்பாடு; அவன் குடி உயர்வும் அறிவுச் சால்பும் பிறவும்.
விளக்கம்: நம்மை வாடிவருந்தி நலனழியச் செய்த்தோடும் நில்லாது, அவன் ஒழுக்கம் ஊரும் அறிந்ததாய், பழித்துப் பேசும் பேச்சினையும் தந்துவிட்டதே என்பதாம். தன் துயரைத் தாங்கியே போதும், பிறர் பழிப்பேச்சை நினைந்து வருந்தும் தலைவியின் மனவேதனை இதனாற் காணப்படும்.
உள்ளுறை: சிறுவெண் காக்கை பெரிய கடற்கரையது என்றபோது, கடலிடத்துப் பெருமீன்களைப் பற்றியுண்டு வாழாது, கருங்கழிப் பாங்கிலேயுள்ள சிறுமீன்களாகிய அயிரைகளைப் பற்றித் தின்னும் என்றது, அவ்வாறே தலைவனும் தகைமிகு தலைவியோடு முறையாகக் கூடி மகிழாது, புல்லிய பரத்தையரையே விரும்பித் திரிவானாயினான் என்றதாம். 'துறைவன் தகுதி' என்றது, அவன் பரத்தையர் மாட்டும் அன்புற்று, அவர்க்கு நல்லன செய்தலும், அவரை இன்புறுத்தலும் செய்யும் அருளுடையான் ஆயினான் என்று, அவன் அருள் மிகுதி போற்றுவது போல, அதனை இழித்துக் கூறியதாம்.
165. வளை கொண்டு நின்ற சொல்!
துறை: இதுவும் மேற்செய்யுளின் துறையே.
பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை
அறுகழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல்லென்
இறையேர் எல்வளை கொண்டுநின் றதுவே!
தெளிவுரை: பெரிய கடற்கரைக் கண்ணதாகிய சிறிய வெண் காக்கையானது, நீரற்று வரும் கழியிடத்தேயுள்ள சிறு மீன்களை நிரம்ப உண்ணும் துறைவன் தலைவன். அவன் முன்பு சொல்லிய 'நின்னைப் பிரியேன்' என்னும் உறுதிச் சொல், சந்து பொருந்திய அழகு விளங்கும் என் வளையைக் கவர்ந்து கொண்டு நிற்பதாயிற்றே!
கருத்து: 'அவன் சொல்லை நம்பிய மடமையேன்' என்றதாம்.
சொற்பொருள்: அறுகழி - நீரற்றுப் போய்க்கொண்டு வரும் கழி. ஆர - நிரம்ப. மாந்தும் - உண்ணும். இறை - சந்து.
விளக்கம்: 'அவன் கூறிய உறுதிச்சொல் என்னை நலிவித்து என் கைவளைகளைக் கவர்ந்து கொண்டுதான் நின்றது' என்று, அவளது சொல்லைப் பேணாத கொடுமையை எண்ணிக் கூறுகின்றாள். இது பழைய இன்ப நினைவாலே பிறந்த ஏக்க மிகுதியாகும்.
உள்ளுறை: நீர் அறாத பெருங் கடற் சிறு வெண் காக்கை, அக்கடலிடத்து மீனையுண்டு வாழாது, நீர் அறுகாச் சிறு மீன் ஆர மாந்தும் புன்மைபோலத், தலைவனும் பெருமனையாளனாக இருந்தும் நீர்மைமிக்க மனைவியை மணந்து வாழாது, அன்புச் செறிவற்ற புல்லிய பரத்தையரிடம் மயங்கிக் கிடப்பானாயினான் என்றனளாம்.
166. நல்ல வாயின கண்!
துறை: வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத், தலைமகள் பசப்பிற்கு வருந்திய தோழி, அவனை இயற்பழித்துக் கூறியது.
(து.வி.: வரைதலை நாடாது, களவையே நாடி வந்து போகும் தலைவனின் போக்குகண்டு வருந்திய தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் நோக்கி, அவன் உள்ளம் தெளியுமாறு, அவனை இயற்பழித்துக் கூறியது இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
வரிவெண் டாலி வலைசெத்து வெரூஉம்
மெல்லம் புலம்பற் றேறி
நல்ல வயின நல்லோள் கண்ணே!
தெளிவுரை: பெரிய கடற்கரைக் கண்ணதான சிறு வெண் காக்கையானது, வரிகள் பொருந்திய வெள்ளிய பலகறைகளை வலையென்றே நினைத்து அஞ்சும், மென்மையான கடற்கரை நாட்டோன் தலைவன். அவன் சொற்களை வாய்மையாயினவாம் என்று தெளிதலாலே, இந்நல்லோளின் கண்களும், இதுகாலை பசலை படர்ந்து நல்லழகு பெற்றவை ஆயினவே!
கருத்து: 'அவன் அறத்தொடு வாய்பை பேணாதான்' என்றதாம்.
சொற்பொருள்: வரி - கோடுகள். தாலி - பலகறை; வலைகள் நீரினுள் அமிழ்ந்து மீனை வளைத்துப் போடிக்க உதவுவது; தாலி என்றது அது தொங்குதலால். தேறி - தெளிந்து; சூளுரைகளை வாய்மையெனக் கொண்டு.
விளக்கம்: 'நல்லவாயின' என்றது எதிர்மறைக் குறிப்பு அவன் பேச்சை அப்படியே நம்பி அவனொடும் காதன்மை கொண்டதன் பயனாலே, இவள் கண்கள் தம் பழைய அழகு நலம் கெட்டன என்பதாம். நல்லோள் - நல்ல அழகும் பண்பும் உடைய தலைவி.
உள்ளுறை: 'வரிவெண் தாலியை வலையெனக் கொண்டு சிறுவெண் க ஆக்கை அஞ்சும்' என்றது, அவ்வாறே தலைவனும் தலைவியை வரைந்து கொள்வது தன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்று கருதினன் என்று உள்ளுறுத்துக் கூறியதாம். அவன் பொறுப்பற்ற தன்மை சுட்டிப் பழித்ததும் இது.
167. தொல் கேள் அன்னே!
துறை: பரத்தையிற் பிரிந்த தலைமகன் விட, வரயிலாய் வந்தார்க்கு, அவன் கொடுமை கூறித் தோழி இயற்பழித்த வழித், தலைமகள் சொல்லியது.
(து.வி.: பரத்தையை நாடிப் பிரிந்து போன தலைவன்' அங்கும் மனம்பற்றாதவனாக மனைவிபால் வரவிரும்புகின்றான். தன் வரவுரைத்துத் தலைவியின் இசைவறிந்துவரச் சில, ஏவல்களை விடுக்கிறான். அவர்களிடம் தோழி, அவனைப் பழித்துக் கூறி வாயில் மறுத்தபோது, தலைவி, தன் பெருமிதம் தோன்றக் கூறியதாக அமைந்த செய்யுள் இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி
நல்கான் ஆயினும் தொல்கேள் அன்னே!
தெளிவுரை: பெரிய கடற்கரைக் கண்ணதான சிறுவெண் காக்கையானது, கரிய கழியிடத்தேயுள்ள இனமாகிய கெடிற்று மீனை உண்ணும் துறைக்குரியவனாகியவன் தலைவன். அவன் நமக்கு தலையளி செய்வான் போலக் கூறிப் பின்னர் செய்யாதே ஒழிந்தானாயினும், அவன் நமக்குப் பண்டே உறவாகிய அத் தன்மையினும் ஆவானே!
கருத்து: 'ஆகவே, அவனை வெறுத்தல் நமக்கு இயலாது' என்றதாம்.
விளக்கம்: பெருங்கடற்கரைக் காக்கையாயினும், இருங்கழியின் இனக்கெடிறு ஆரும் என்றது, அதன் இயல்பு அவ்வாறு சிறுமீன் நாடிப்போதலே என்பது உணர்த்தியதாம். 'நல்குவன் போலக் கூறி' என்றது, வரைந்துகொண்ட ஞான்று கூறியது; அது பொய்த்து, நல்கான் ஆயினான் என்பதாம். 'தொல் கேள்' என்றது, பிறவிதோறும் தொடரும் கேண்மை சுட்டியது; ஆகவே, அவனை வெறுத்தல் இயலாமையும் கூறினாள்.
உள்ளுறை: பெருங்கடற் காக்கையாயினும், இருங்கழிக்கண கெளிற்றினை நாடியே செல்லுமாறு போலத், தலைவனும் தன் தலைமைக்கேற்பத் தலைவியை மணந்துகூடி வாழாதவனாகப் பரத்தையர்பால் நாடிச்செல்லும் இழிதகைமையே கொள்வான் ஆயினான் என்கின்றனள்.
168. பால் அரும்பே!
துறை: நொதுமலர் வரைவு வேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள், ஆற்றாளாய்ப் பசியட நிற்புழி, இதற்குக் காரணம் என்னென்று செவிலி வினவத், தோழி அறத்தொடு நின்றது.
(து.வி.: தலைவி களவுறவிலே ஒருவனை வரித்து அவனுடன் மனங்கலந்துவிட்டாள். அஃதறியாத சுற்றத்தார், அவளை வரைவு வேண்டிப் பெரியோரைத் தமர்பால் விடுக்கின்றனர். 'பெற்றோர் அவருக்கு இசைவர் போலும்' என்று ஆற்றாமை மீதூர்ந்தாளான தலைவி, உணவும் மறுத்து வாடி நிற்கின்றாள். 'அஃதேன்' என்று செவிலித்தாய் கேட்பத் தோழி சொல்லி அறத்தோடு நிற்பதாக அமைந்த செய்யுள் இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
துறைபடி யம்பி யகமணை ஈனும்
தண்ணந் துறைவன் நல்கின்
ஒண்ணுதல் அரிவை பாலா ரும்மே!
தெளிவுரை: பெரிய கடற்கரையின் கண்ணதான சிறுவெண் காக்கையானது, துறையிடத்தே கிடக்கும் தோணியின் அகத்தே கூடுகட்டிக் கொண்டு முட்டையிடும். அத்தகைய குளிர்ந்த துறைக்கு உரியவனான தலைவன் வந்து நல்குவானாயின், ஒளிகொண்ட நெற்றியினளான இவளும் பாலுண்டு பசி தீர்வாள்!
கருத்து: 'அவனுக்கே ஏங்குபவள் இவள்' என்றதாம்.
சொற்பொருள்: அகமணை - உட்கட்டைக்குள்; படகு வலிப்பார் அமர்தற்காகக் குறுக்குவாட்டமாக அமைக்கப்பெற்றிருக்கும் இருக்கைக் கட்டை; இதனடியிலே காக்கை கூடுகட்டி முட்டையிடும் என்பது கருத்து. நல்கின் - வந்து வரைந்து மணப்பின். பால் ஆரும் - பால் உண்ணும். நொது மலர் - அயலார். பசியட நிற்றல் - பசியானது வருத்தவும் உண்ணாதே வருந்தி நிற்றல்.
விளக்கம்: 'துறையடி யம்பி' என்பதனைப் புதுப்படகு கொண்டார் கழித்துப் போடக் கரையிடத்தேயே கிடக்கும் பழம் படகெனக் கொள்க. பசிவருத்தவும் உண்ணாதிருத்தல் புணர்ச்சி நிமித்தமான மெய்ப்பாடுகளுள் ஒன்று என்பது தொல்காப்பியம் - (மெய்ப் 22). உணவு மறுத்தாளைப் பாலாவது பருகென வற்புறுத்த செவிலியிடம், தோழி சொல்வதாகக் கொள்க! 'துறைவன் நல்கி பால் ஆரும்' என்றது, நீயும் நானும் நல்கின் அருந்தாள் என்றதுமாம்.
உள்ளுறை: 'துறைபடி அம்பி அகமணை, காக்கை ஈனும்' என்றது, அவ்விடத்தே தீங்கு ஏதும் நேராதென்பது சுட்டி, அவ்வளவு நலஞ்சிறந்த துறையெனவும், அவ்வாறே அதற்குரிய தலைவனும் தலைவியை மறவாதே வரைந்து வருவன் என்பதும், இவளும் அவனை மணந்துகூடி அவன் குடிவிளக்கம் புதல்வனைப் பெற்றளித்துப் பெருமையடைவள் என்பதும் உள்ளுறுத்துக் கூறுகின்றனள் தோழி.
மேற்கோள்: ''நொதுமலர் வரைவுழி ஆற்றாது பசியட நின்றுழி, 'இதற்குக் காரணம் ஏன்?' என்ற செவிலிக்குத் தோழி கூறியது'' என்று காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கனவு, 23).
169. என் செய்யப் பசக்கும்!
துறை: காதற் பரத்தையைவிட்டு மற்றொருத்தியுடன் ஒழுகா நின்ற தலைமகன், வாயில் வேண்டி விடுத்துழி, வாயில் நேர்தர் வேண்டி நின்கண் பசந்தன காண் என்று முகம்புகு தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
(து.வி.: தலைவனின் வரவை வாயில்கள் வந்து சொல்லுகின்றனர். தலைவி சினந்து நோக்குகின்றாள். தோழியோ மீண்டும் அவள் வாழ்வு மலர்வதற்குத் தலைவனை ஏற்றலே நன்றெனக் கருதுகின்றாள்; அதையும் கூறுகின்றாள். அவளுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
பொன்னிணர் ஞாழல் முனையின், பொதியவிழ்
புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத் துண்மை யறிந்தும்
என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே!
தெளிவுரை: பெருங் கடற்கரையிடத்ததான சிறுவெண் காக்கையானது, பொன்போலும் பூங்கொத்துக்களையுடைய ஞாழலை வெறுத்ததனால், அரும்பவிழும் புன்னையது அழகிய பூக்களையுடைய கிளையிடத்தே சென்று தங்கும் துறைவன் தலைவன். அவன் என் நெஞ்சத்து என்றும் உளனாதலை அறிந்து வைத்தும், தோழி, என் கண்கள் தாம் யாது செயலைக் கருதி இவ்வாறு பசலை கொள்வனவோ?
கருத்து: 'அவனை என்றும் மறந்திலேன்; எனினும் கண்கள் அவனைக் காணாமையாற் கலங்கும்' என்றதாம்.
சொற்பொருள்: ஞாழல் - கொன்றை. முனையின் - வெறுப்பின். பூஞ்சினை - பூக்களையுடைய கிளை. உண்மை - உளனாகும் வாய்மை. பசக்கும் - பசலை கொள்ளும்.
விளக்கம்: கடற்கரைக்குரிய காக்கை கானற்சோலைப் புறம்போய்க் கொன்றை மரத்திலே தங்கும்; சிறிது போதிலே அதுவும் வெறுக்க, அங்கிருந்து அகன்று, புன்னைப் பூஞ்சினையில் சென்று தங்கும் என்று, ஓரிடம் பற்றியிருந்து மனநிறைவு கொள்ளாத அதன் சபலத்தன்மை கூறினாள். அத்துறைவனான தலைவனும் அத்தகைய மனப்போக்கினனே என்பதற்கு. 'கண் பசத்தல்' காணாமையாற் பசந்தது எனத் தன் துயரம் கண்மேலிட்டுச் சொல்லுகின்றாள்.
உள்ளுறை: 'கொன்றைக்கிளை வெறுப்பின் புன்னைக் கிளைக்குப் போய்த் தங்கும் சிறுவெண் காக்கைபோல, நம் மீதிலே வெற்றுப்புற்றவன், மற்றொருத்தியை நாடிப் போய்த் தங்குவானாயினான்' அவன் இயல்பு அஃதே என்பதறிந்தும், நம்மை மறந்தானை நம்மால் மறக்க வியலவில்லையே' என்பதாகும்.
170. நல்லன் என்பாயோ!
துறை: தலைமகற்குப் புறத்தொழுக்கம் உண்டாகிய வழி வேறுபட்ட தலைமகள், 'அவற்கு அவ்வாறு நிகழ்ச்சியில்லை; நம்மேல் அன்புடையவன்' என்ற தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: தலைமகன் பரத்தையுறவு நாடினான் என்பதறிந்து வேறுபட்டாள் தலைமகள். அதனால் அவன் வீட்டிற்கு வரும்போதும், அவனை உவந்து ஏற்காமல் வெறுத்து ஒதுங்கிப் போகலானாள். இதனைத் தவிர்க்க நினைத்த தோழி, 'நீ நினைப்பது போல் அவன் பரத்தையொழுக்கத்தான் அல்லன்; ஏன் அவனைவிட்டு ஒதுங்குகின்றாய்?' என்று கூறித் தெளிவு படுத்த முயல்கின்றாள். அவட்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
'நல்லன்' என்றி யாயின்
பல்லிதழ் உண்கண் பசத்தல்மற்று எவனோ?
தெளிவுரை: பெருங்கடற் கரையிடத்துச் சிறு வெண்காக்கையானது. பெரிய கழியிடத்தேயான நெய்தலைச் சென்று சிதைக்கும் துறையினைச் சேர்ந்தோனான தலைவனை, நீதான் நல்லவன் என்கின்றனை! அஃது உண்மையேயாயின், பலவான இதழ்களையுடைய பூப்போலும் மையுண்ட எம் கண்கள்தாம் அவன் கொடுமையினாலே வாடிப் பசப்பதுதான் யாது காரணமாகவோ?
கருத்து: 'அவன் பலநாள் பிரிந்து உறைதற்கு யாது காரணமோ?' என்றதாம்.
சொற்பொருள்: இருங்கழி - பெரியகழி. 'நெய்தல்' என்றது நெய்தல் மலர்களை. சிதைக்கும் - அழிக்கும்.
விளக்கம்: ''நமக்கு இன்னாதன செய்து பிரிந்து போயினவன், போயின பரத்தைக்கும் அதுவே செய்யும் வன்கண்மை உடையவனாயினான்; அவனை நல்லவன் என்கின்றாயே? எனினும், என்கண் அவனை காண விரும்புகின்றதே? என் செய்வேன்'' என்று தலைவி வருந்தியுரைக்கின்றனள். தலைவியின் சால்பும் இதனாலே அறியப்படும்.
உள்ளுறை: காக்கை இருங்கழி நெய்தல் சிதைப்பதே போல, இவனும் பரத்தையர் பருடைய நலன்களையும் வறியதே சிதைப்பானாயினான் என்பதாம். தனக்கு ஏதுமற்ற நெய்தலைக் காக்கை சிதைத்துப் பாழக்குதலே போலத், தலைவனும் தனக்கு நிலையான அன்புரியை அற்றவரான பரத்தையரை நலம் சிதைப்பான் என்றதும் ஆம். ஆகவே, அவரை வெறுத்ததாலேயே இங்கும் வர நினைக்கின்றான் என்கின்றனள்.
'அவன் நல்லவனானால் கண் பசப்பதேன்? கண் பசத்தலால் அவன் நல்லவன் அல்லன் என்று அறிவாயாக' என்றதுமாம்.
8. தொண்டிப் பத்து
பாண்டியர்க்குக் கொற்கையும், சோழர்க்குப் புகாரும் போன்று, சேரர்க்குரிய புகழ் பெற்ற கடற்கரைப் பேரூராக அந்நாளிலே விளங்கியது தொண்டிப் பட்டினமாகும். இப்பகுதியின் பத்துச் செய்யுட்களிலும் தொண்டியினை ஆசிரியர் உவமையாக எடுத்துக் கூறுவதால் இஃது இப்பெயர் பெற்றது.
அந்தாதித் தொடையிலமைந்த செய்யுட்களாக விளங்கும் சிறப்பையும் இச்செயுட்களிலே காணலாம். அந்தாதி நயம் விளங்கப் பாடும் பழைய மரபுக்கும் இதுசிறந்த சான்றாகும். பொதுவாகத் தொண்டியின் எழிலும் வளமும் தலைவியின் எழிலுக்கும் சிறப்புக்கும் உவமிக்கப்படுகின்றன. இதனால், ஆசிரியரின் நாட்டுப் பற்றுப் புலனாவதுடன், தொண்டியின் சிறப்பும் விளங்கும்.
இத்தொண்டியை இந்நாளைய 'அகலப் புழை' (Alleppy) என்னும் மலைநாட்டு நகராக இருக்கலாம் என்பர். இராமநாதபுர மாவட்டத்தும் ஒரு தொண்டிப் பட்டினம் உள்ளது.
171. நெஞ்சு கொண்டோள்!
துறை: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் ஆயத்தோடு செல்லும் தலைமகளைக் கண்டு சொல்லியது.
(து.வி.: இயற்கைப் புணர்ச்சி பெற்றுக் களிமகிழ்வுற்ற தலைவன், அதனின் நீங்கித் தன் ஆயத்தோடு செல்லும் தலைமகளைக் காதலோடு நோக்கி, வியந்து, தன்னுள்ளே சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
திரையிமிழ் இன்னிசை அளைஅ அயலது
முழவிமிழ் இன்னிசை மறுகுதொ றிசைக்கும்
தொண்டி யன்ன பணைத்தோள்
ஒண்டொடி யரிவை என் நெஞ்சுகொண் டோளே!
தெளிவுரை: கடலலைகள் முழங்கும் இனிதான இசையொலியோடே கலந்து, அயலதாகிய முழவுகளும் முழங்கும் இனிதான இசையும் தெருக்கள் தோறும் என்றும் ஒலித்தபடியே இருப்பது தொண்டி. அதன் செழுமைபோலப் பணைத்த தோள்களையும், ஒள்ளிய தொடிகளையும் கொண்ட அரிவையாள், என் நெச்சினைக் கவர்ந்தாளாய்த் தன்னோடும் கொண்டு செல்வாளே!
கருத்து: 'என் நெஞ்சம் அவளோடேயே செல்லுகின்றதே' என்றதாம்.
சொற்பொருள்: இன்னிசை - இனிதாக ஒலிக்கும் இசை. அளைஇ - கலந்து. இமிழ்தல் - முழங்கல். மறுகு - தெரு.
விளக்கம்: கடலலைகளின் முழக்கத்தோடே கலந்து மக்கள் முழக்கம் முழுவுகளின் முழக்கொலியும் இனிதாக ஒலிக்கும் தெருக்களையுடையது தொண்டி என்பது, அதன் களிப்பான வாழ்வைப் புலப்படுத்தக் கூறியதாம். 'இன்னிசை' என்றது, கேட்பார்க்கு இனிமை கருதலோடு, மென்மேலும் கேட்பதிலே விருப்பமும் மிகச் செய்யும் இசையொலி என்றதாம். 'மருகுதொறு இசைக்கும்' என்றது, ஒரு தெருவும் விடாதே எழுந்து ஒலிக்கும் என்பதாம். தெருத்தொறும் முழவொலி எழுதல், அங்கு வாழ்வாரின் மகிழ்வினைக் காட்டுவதாம். பணைத்தோளுக்கு அத்தகு தொண்டியை உவமை சொன்னது, அதுவும் நினைவில் அகலாதே நின்று களிப்பூட்டி வருதலால்.
உள்ளுறை: திரையொலியோடு முழவொலி கலந்து இனிதாக ஒலிக்கும் என்றது, உடன்போகும் ஆயமகளிரின் ஆரவார ஒலியோடு, எதிர் வருகின்றாரான உழையாரின் மகிழ்ச்சியொலியும் ஒன்று கலந்து இனிதாக எழுந்ததனை, வியந்து கூறியதாம்.
நீங்காதே தொடர்ந்து ஒலிக்கும் கடலலையோடு, காலத்தோட மக்கள் முயற்சியால் எழுந்தொலிக்கும் முழவெலி சேர்ந்து ஒலிக்கும் என்றது, பிறவிதோறும் தொடர்ந்துவரும் தலைவன் தலைவியென்னும் தொடர் உறவோடு, அன்று தோன்றி நெஞ்சு கொண்டேகும் அன்புச் செரிவும் அவளைத் தன்னோடும் பிணைத்த செவ்வியை நினைந்து கூறியதாம்.
குறிப்பு: 'ஆயத்தோடும் உழையரோடும் கலந்துவிட்ட அவளை, இனி எவ்வாறு மீளவும் காண்போமோ?' என்னும் ஏக்கவுணர்வும், அவனுள்ளம் செயலற்று மெலிந்து சோர்ந்த எளிமையும், இதனால் உணரப்படும். 'வளைகடல் முழவின் தொண்டி' என்று கடல் ஒலியை முழவொலிக்கு ஒப்பிட்டுக் காட்டும் பதிற்றுப்பத்து (88); இங்கோ இரண்டொலியும் இசைந்தெழுந்து இனிமை பரப்புதலைச் சுட்டுகின்றனர்.
172. நானும் துயிலறியேனே!
துறை: ''கண் துயில்கின்றிலை; இதற்குக் காரணம் என்?'' என்று வினவிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.
(து.வி.: காதலி நினைவால் இரவெல்லாம் துயிலற்றுச் சோர்கின்ற தலைவனைப் பரிவோடு நெருங்கி, 'இதற்குக் காரணம் என்னவோ?' என்று வினவுகின்றான் பாங்கன். அவனுக்குத் தலைமகன் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
ஒண்தொடி அரிவை கொண்டனள், நெஞ்சே!
வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக்கடல் ஒலித்திரை போல,
இரவி னானும் துயிலறி யேனே!
தெளிவுரை: ஒளி செய்யும் தொடியணிந்த அரிவை யானவளோ என் நெஞ்சினைத் தன்னோடும் கவர்ந்து போயினள். வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ந்த துறையைக் கொண்ட தொண்டிப் பட்டினத்தின்கண், பரந்த கடலானது ஒலித்தெழுப்புகின்ற அலைகளைப் போல, இரவென்றாலும் துயில்தல் அறியேனாய், யானும் ஓயாது புலம்புதலோடு வருந்தியிருப்பேன்.
கருத்து: 'நெஞ்சிழந்தவன் உறங்குவது எவ்வாறு?' என்றதாம்.
சொற்பொருள்: 'அரிவை' என்றது தன் மனங்கவர் காதலியை. இமிர்தல் - ஒலியோடு பற்றல். பனி - குளிர்ச்சி. உரவுக் கடல் - பரந்த கடல்; வலிய கடலும் ஆம்.
விளக்கம்: உயிர்த்தெழுந்து வரும் கடலலையானது கரையில் மோதியதும் அடங்கித் தளர்ந்து மீள்வதுபோல, அவன் நெஞ்சமும் அவளை அடைகின்ற நினைவினாலே பெரிதெழும் மனவெழுச்சியாலும், அவளை அடைய வியலாதோ என்னும் கவலையினாலே வருந்திச் சோரும் மனத் தளர்ச்சியாலும், அடுத்தடுத்துத் தொடர்ந்து நலிதலால், அவன் உறங்குதல் என்பதே அறியான் ஆயினன் என்று கொள்க.
'இரவினானும்' என்றது, பகலிற்றான் அவனைக் காண மாட்டேமா என வழிநோக்கி இருந்துவாடுவது இயல்பேனும், இரவுப் போதும் அவள் நினைவின் அழுத்தம் வருத்தலால் உறக்கத்தை ஓட்டியது என்றற்காம்.
உள்ளுறை: 'வண்டிமிர் பனித்துறைத் தொண்டி' என்றது, 'அறுகாற் சிறு உயிர்க்கும் தான் விரும்பியதைக் களிப்போடு பெற்று மகிழ்தற்கு உதவும் தொண்டி' என்று சுட்டி, தனக்கும் அவளை அடையும் மகிழ்வு வாய்க்கும் என்று கூறியதாம் . 'கடல் ஒலித்திரை போல... துயிலறியேனே' என்றது, நினைவு அவளிடத்தேயும் துயிலடத்தேயும் மாறிமாறிச் சென்று வருதலால், துயிலற்றேன் என்றதுமாம்.
உரவுக் கடல் ஒலித்திரை இரவினும் ஓயாதே எழுந்து மோதித் துன்புறுமாறு போல, யானும் துயிலிழந்து உணர்வெழுந்து அலைக்கழிப்ப வருந்தியிருப்பேன் என்றதுதாம்.
மேற்கோள்: 'ஆக்கல் செப்பல்' என்பதற்குக் களவியலுரையுள் இம்பூரணர் இச்செய்யுளை எடுத்துக் காட்டுவர் - (தொல். களவு, 9).
173. அரவுறு துயரம்!
துறை: தலைமகன் குறிவழிச் சென்று, தலைமகனைக் கண்ட பாங்கன், தன்னுள்ளே சொல்லியது.
(து.வி.: தலைமகன் குறித்துச் சொன்னவாறே சென்று தலைமகளைக் கண்டான் பாங்கன். அவளைக் கண்டதும் வியப்புற்றோனாக, அவன் தன்னுள்ளே கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
இரவி னானும் இன்றுயி லறியாது
அரவுறு துயரம் எய்துப தொண்டி
தண்ணறு நெய்தலில் நாறும்
பின்னிருங் கூந்தல் அணங்குற் றோரே!
தெளிவுரை: தொண்டி நகரத்துக் குளிர்ந்த நறுமண மிக்க நெய்தலைப் போல மணம் கமழும், பின்னப்பட்ட கருங்கூந்தலை உடையாளான இவளாலே தாக்கி வருத்தப்படுதலைப் பெற்றவர்கள், இரவு நேரமானாலும், இனிய துயிலைப் பெறாதே, பாம்பு தீண்டினாற்போலும் பெருந்துயரத்தையே அடைவார்கள்!
கருத்து: 'தலைவனின் பெருவருத்தம் இயல்பே' எனத் தெளிந்ததாம்.
சொற்பொருள்: அரவுறு துயரம் - அரவாலே தீண்டப்பெறுதலினாலே கொள்ளும் துயரம் நொடிக்கு நோடி மேலேறிப் போதல். நாறும் - மணங்கமழும். அணங்குற்றேர் - தாக்கி வருத்தப் பெற்றோர்.
விளக்கம்: தலைவன் சொல்லியபடியே அவளைக் கண்டு, தலைவனின் மயக்கம் சரியானதுதானா என்று தெளியச் சொன்றவன் பாங்கன். அவன் அவளின் பின்னலிடப் பெற்று கருங் கூந்தலின் அழகு நலத்திலேயே தன்னை இழந்து விட்டான். அதனின்று வந்த நறுமணம் நெய்தலின் குளிர் மணம் போன்று விளங்கும் கீர்த்தியும் உணர்ந்தான். 'இவளால் தாக்கி வருத்தம் செய்யப்பட்டவர்கள், இரவிலும் இனிய துயிலறியாராய், அரவு நீண்டியது போன்ற வேதனையையும் காண்பார்' என்று வியந்து போற்றுகின்றான்.
குறிப்பு: கூந்தல் நெய்தலின் நாறுதல், அவள் நெய்தற் பூச்சூடுதலால், 'அரவுறு துயரம்' என்றது, துயருற்ற அரவு சீறியெழுந்தும் அடங்கியும் வருந்துவது போன்ற துயரம் என்றதும் ஆகலாம். கண்மூடவும் அவள் கனவிலே தோன்ற ஆர்வமுடன், எழுவன், காணாதே சோர்ந்து படுத்து மீளவும் கண்மூடவும், அவள் மீளவும் தோன்ற எழவுமாக வருந்தும் தொடர்ந்ததுயிலற்ற துயரநிலை இது.
உள்ளுறை: தொண்டியின் தண்ணறு நெய்தல், தொலைவுக்கும் மணங்கமழ்ந்து உணர்வெழுச்சி யூட்டலே போலத், தன்னூரிலிருக்கும் அவளும் தொலைவிடத்தானை தலைவனிடத்தேயும் தன்நினைவாலே எழும் உணர்வு மீதூறச் செய்வாள் என்பதாம்.
மேற்கோள்: பாங்கன், தலைவனை நோக்கி, 'நின்னை அணங்காக்கியாள் எவ்விடத்தாள்?' என வினாய், அவ்வழிச் சென்று தலைவியைக் கண்டனன் எனக் காட்டுவர் இளம் பூரணம் - (தொல். களவு, 1). பாங்கன், கிழவோனை இகழ்ந்ததற்கு இரங்கல் என்பர் நம்பியகப் பொருள் உரைகாரர்.
174. பொழிற்குறி நல்கினள்!
துறை: குறிவழிச் சென்று தலைமகளைக் கண்டு வந்த பாங்கன், 'அவள் நின்றுழி நின்றாள்' என்று கூறியவழி, ஆண்டுச் செல்லக் கருதிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.
(து.வி.: தலைவன் சொன்னபடியே சென்று, குறித்த இடத்திலே தலைமகள் நிற்பதைக் கண்டவனாகத் திரும்பவும் தலைவனிடம் வந்து, 'அவள் நிற்கின்றாள்' என்று சொல்லுகின்றான் பாங்கன். அதனைக் கேட்டதும், அங்குச் செல்ல நினைத்தானாகிய தலைவன், தன்னுள்ளே சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன
மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கிழை
பொங்கரி பரந்த உண்கண்
அம்கலிழ் மேனி அசைஇய எமக்கே
தெளிவுரை: தெய்வம் இருத்தலை உடையதான குளிர்ந்த நீர்த் துறையையுடைய தொண்டியைப் போல மணங்கமழும் பொழிலின் கண்ணே, நுண்ணிய இழையினையும், மிகுந்த செவ்வரிபரந்த மையுண்ட கண்களையும், அழகு பொருந்திய மேனியையும் உடையாளான வள், அவளை அடைதலையே நினைந்து மெலிந்தோமாகிய எமக்கும், அவளைக் காணற்குரியதான இடத்தையும் ஈதெனக் கூறித்துக் காட்டினள்.
கருத்து: 'அவ்விடத்தே சென்று அவளை அடைவேன்' என்றதாம்.
சொற்பொருள்: அணங்கு - தெய்வம்; நீருறை தெய்வம் என்பர். பொழில் - சோலை. நுணங்கு இழை - நுண்ணிய வேலைப்பாடமைந்த இழை. அரி - செவ்வரி; 'பொங்கு அரி' என்றது மிக்கெழுந்த செவ்வரி என்றற்கு. அம்கலிழ் மேனி - அழகு ஒழுகும் மேனி. அசைஇய - மெலிவுற்ற.
விளக்கம்: நீர்த்துறையிடத்தே அணங்குகள் உளவாம் என்பதும், அவை அங்குச் செல்வாரைத் தாக்கி வருத்தும் இயல்பின என்பதும் முன்னோர் நம்பிக்கை. 'தொண்டிப் பனித்துறையும் அணங்குடைத்து' என்பது இச்செய்யுள். மணங்கமழ் பொழில் தொண்டி போல்வதெனவும், அவள் அதன்கண் அணங்கனையள் எனவும் பொருத்திக் கொள்க. 'நுணங்கிழை பொங்கும் அரி பரந்த உண்கண்' என்று கொண்டு, வளைந்த இழையான நெற்றிச்சுட்டி அசைந்தாடிய படி விளங்கும் செவ்வரி பரந்த மையுண்ட கண்' என்றும் பொருள் சொல்லலாம். மேனி அசைஇய - மேனியை நினைந்து மெலிவுற்று வாடிய. குறி நல்கினள் - சந்திக்கும் இடம் ஈதென்று குறித்துக் காட்டினள்.
மேற்கோள்: இனி உள்ளப் புணர்ச்சியானன்றி இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி, பின்தலைமகள் குறியிடம் கூறிய வழி, அதனைப் பாங்கற்கு உரைத்தல் என்று இச்செய்யுளைக் குறிப்பிட்டுக் காட்டுவர் இளம்பூரணர் - (தொல். களவு, 12).
''தான் வருந்திக் கூறுகின்ற கூற்றினைத் தலைவியைச் சார்த்திக் தலைவன் கூறலின், இவ்வாறு ஆற்றானாய் இங்ஙனம் கூறினான்'' என்று அஞ்சித், தோழி உணராமல், தலைவி தானே கூடிய பகுதிக்கு உதாரணம்'' என்று காட்டிக் கூறுவர் நம்பியகப் பொருள் உரைகாரர் - (களவு, 11) காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல் என்றும் அவரே கூறுவர் - (களவு, 28).
175. நன்னுதல் அரிவையொடு வந்திசின்!
துறை: பாங்கற்கூட்டம் கூடி நீங்கும் தலைமகன், 'இனி வருமிடத்து, நின் தோழியோடும் வரவேண்டும்' எனத் தலைமகட்குச் சொல்லியது.
(து.வி.: பாங்கனின் உதவியாலே தலைவியைக் கூடியபின், தலைவியைப் பிரிகின்ற தலைவன், 'இனி நீயும் நின் தோழியின் துணையோடும் வருக; தனியாக ஒருபோதும் வருதல் வேண்டா' எனத் தலைவிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
எமக்கு நயந் தருளினை ஆயின், பணைத்தோள்
நன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியோ, மடந்தை
தொண்டி யன்ன நின் பண்பு பல கொண்டே.
தெளிவுரை: மடந்தையே, நீ வாழ்வாயாக! தொண்டி நகரே போலகின்ற நின் பண்புகள் பலவற்றையும் கொண்டனையாய், எம்பாலும் விருப்பங் கொண்டு வந்து, எமக்கும் அருளிச் செய்தனை! ஆயின், இனி, பணைத்த தோள்களையும் நறிய நுதலையும் கொண்டாளான நின் தோழியோடும் கூடியவாறே, மெல்ல மெல்ல நடந்தனையாகி, இவ்விடத்துக்கு வருவாயாக! தனியே வருதல் வேண்டா!
கருத்து: 'நின் தோழியின் காவல் துணையோடு எச்சரிக்கையோடே வருக' என்றதாம்.
சொற்பொருள்: நயந்து - விருப்புற்று மென்மெல இயலி - மெல்லென நடந்து. வந்திசின் - வருவாயாக. பண்பு பல - பலவான எழிற் பண்புகள். கொண்டே - கொண்டனையாய்.
விளக்கம்: 'மென்மெல இயலி' என்றது, மென்மலர்ப் பாதவெழிலை நினைந்து கூறியது; 'சிலம்பு நகச் சின்மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி' என அகமும் கூறும் - (அகம், 261). தோழியிற் கூட்டம் வேண்டுவான், தலைவிக்கு உறுதுணையாக, பாதுகாவலாக அமைவாள் ஒருத்தியையும் விரும்புகின்றான் என்று கொள்க. அவளுக்கு வழியிடையே ஏதும் இடையூறு நேராதிருத்தல் கருதிக் கூறினதால், அவள் மீது அவன் கொண்டுள்ள காதன்மையும் விளங்கும்.
இனி, 'எமக்கு நயந்து அருளினையாயின், அரிவையோடு வந்திசின்' என்று கொண்டு, 'எமக்கு விருப்புற்று அருளிச் செய்தலான களவுக் கூட்டத்தைத் தருதற்கு நினைந்தனையாயின், இனி நின் தோழியொடும் கூடியே வருக' என்றும் பொருளை கொள்ளலாம். கருத்து, அவள் துணையில்லாது தனித்து வருதலை வேண்டாமையே 'நயந்து' என்றது அவளும் விரும்பிக் கூடிய களவுறவு என்றதாம்.
தோழியின்றித் தனியாகச் செல்லின், பிறர் ஐயுறவு கொண்டு பழித்துப்பேச நேரும் என்று நினைத்து இவ்வாறு கூறியதாகவும் கொள்க.
மேற்கோள்: தோழியுடம்பாட்டினைப் பெற்று களவுறவு மகிழற்கு இளம்பூரணர் இச்செய்யுளைக் காட்டுவர் - (தொல். களவு, 16). இது, பாங்கற் கூட்டம் கூடி நீங்கும் தலைவன், 'நீ வருமிடத்து நின் தோழியோடும் வரவேண்டுமெனத் தலைவிக்குக் கூறியது எனவும் - (தொல். களவு, 1); தோழியுடம்பாடு பெற்று மனமகிழ்தல் எனவும் - (தொல். களவு' 11) நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுவர்.
176. கூறுமதி தவறே!
துறை: தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழிச் சென்ற தலைமகன், 'இவள் என்னை இவை கோடற்குக் காரணம் என்?' என்று தோழியை வினாவியது.
(து.வி.: தலைமகள் யாதோ எண்ணினளாகித், தலைவனோடு மனம் பொருந்தாதே விலகி ஒதுங்கி நிற்கின்றாள். அதனால் பெரிதும் வருத்தமுற்றனன் தலைமகன். அவளும் தோழியும் ஒருங்கே நின்றபோது, அவ்விடம் சென்று, தோழிக்குச் சொல்வான் போல அவன் சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்தொடி,
ஐதுமைந் தகன்ற அல்குல்,
கொய்தளிர் மேனி! - கூறுமதி தவறே.
தெளிவுரை: தொண்டியின் குளிர்ந்த மணம் கமழுகின்ற புதுமலரைப் போல மணம் மகழ்கின்றவளே! ஒளியமைந்த தொடியினையும், அழகிதாக அமைந்தும் அகன்றும் விளங்கும் அல்குல் தடத்தினையும் கொண்டவளே! கொய்யத் தூண்டும் மென்தளிரைப் போன்ற மேனிக்கவினையும் பெற்றவளே! எனக்குரிய பண்புகளையும், என் உறக்கத்தையும், நின் தோழி கவர்ந்து கொண்டாளே! அதற்கு, யான் செய்த தவறுதான் யாதெனக் கூறுவாயாக!
கருத்து: 'இவளின் இந்தச் சினம் எதன் பொருட்டோ?' என்றதாம்.
சொற்பொருள்: பண்பு - உள்ள உரனும் பிறவும். ஐது - அழகிதாக. பாயல் - உறக்கம். 'புதுமலர்' என்றது, நெய்தல் மலரை. நாறும் - மணம் கமழும்; அவர் நெய்தற் புதுமலரினைக் கொய்து கூந்தலில் அணிந்திருந்த வனப்பை வியந்து கூறியது. கொய் தளிர் மேனி - கொய்யத் தூண்டும் வனப்புடைய மாந்தளிர் போன்ற மேனி; அவ்வாறே கண்டார் அடையக் காமுறும் மேனி என்றதுமாம். கூறுமதி - கூறுவாயாக.
விளக்கம்: 'தண்கமழ் புதுமலர் நாறும், ஐதமைந்தகன்ற அல்குல் கொய்தளிர்மேனி, ஒண்தொடி, பண்பும் பாயலும் கொண்டனள்' எனத் தலைவியோடு பொருந்தியும் பொருள் உரைக்கலாம். ''இத்துணை நலமுடையாள் அத்தகு கொடுமை செய்ய யான் செய்த தவறுதான் யாதோ?'' என்று கேட்பதாக அப்போது கொள்க. மதியுடம்படுத்தல் வேண்டித் தோழியைக் குறையுறுகின்றவன் தலைவனாகவே, அவளையே போற்றியதாக இவ்வாறு கொள்ளலும் தவறாகாது.
தன்னை நலிவித்துப் பாயலும் இழக்கும்படி பிரிவு நோய்க்கு உட்படுத்தினான் என்று ஊடிய தலைவியைக் குறித்து, ''அவள் நலனில் குறைந்தாளல்லள்; யானே அவளால் பண்பும் பாயலும் இழந்து நோவேன்'' என்கின்றான் தலைவன்.
மேற்கோள்: 'தோழி, இவள் கூறுகின்ற குறை தலைவியிடத்தேயாய் இருந்ததென்று அவள் மேலே சேர்த்தி, அதனை உண்மையென்று உணரத் தலைவன் கூறுதல் இதுவெண்பர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு, 11).
177. தவறிலராயினும் பனிப்ப!
துறை: தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழி. 'இவள் என்னை வருத்துதற்குச் செய்த தவறு என்?' என்று வினாய தலைமகற்குத், தோழி நகையாடிச் சொல்லியது.
(து.வி.: 'இவள் என்பால் எந்தத் தவறு நினைந்து என்னை இவ்வாறு வருத்தமுறச் செய்கின்றாள்?' என்று கேட்கின்றான் தலைவன். அவனுக்கித் தோழி நகையாடிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
தவறில ராயினும் பனிப்ப மன்ற
இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு
முண்டக நறுமலர் கமழும்
தொண்டி யன்னோள் தோள்உற் றோரே!
தெளிவுரை: ஒன்றினொன்று மேம்பட்டதாக எழுந்து மோதும் அலைகளாலே கொழித்திடப் பெற்ற மணல் பரந்த உயர்ந்த கரையிடத்தேயும், முண்டகத்தின் நறுமலர்களின் மணம் கமழுந்து கொண்டிருப்பது தொண்டிப்பட்டினம். அதனைப் போன்று நலமிக்கவளான தலைவியின் தோளை அடைந்தோர், தாம் தம்மிடத்தே தவறேதும் உடையவரல்லராயினும், தவறினார் போன்றே தளர்ந்து நடுங்குவர் போலும்!
கருத்து: 'தவறு ஏதும் இல்லாதேயே நீயும் இவ்வாறு நடுங்கிக் கூறுவது ஏன்?' என்றதாம்.
சொற்பொருள்: இவறுதல் - மென்மேல் ஏறுதல்; உலாவுதல். திளைக்கும் - பொருதும். இடுமணல் நெடுங்கோட்டு - குவித்த மணல்மேட்டின் உச்சியில். முண்டகம் - கழிமுள்ளி. பனிப்ப - நடுங்குப.
விளக்கம்: நீர்க் கண்ணேயே செழிக்கும் முண்கமானது, அலைகள் மென்மேல் எழுந்து மோதுதலாலே அலைப்புண்டு, குவித்த மணல்மேட்டின் உச்சியிடத்தே சென்று கிடந்து மலர்வதாயிற்று. நீரற்ற அவ்விடத்தும் முண்டக நறுமலர் மணம் கமழ்தலே போலத், தவறற்ற தலைவனிடத்தும் தவறுளபோலத் தலைவிக்குத் தோன்றிற்று என்பதாம்.
பாட்டிலே சொல்லிய பொருளுக்கு ஒத்துமுடிவதனை உள்ளுறை உவமம் எனவும், புறமாகி வேறுபட முடிவதனை இறைச்சி எனவும் கொள்வது முறை. இதை நினைவிற்கொண்டே இக் கருப்பொருளை நோக்கல் வேண்டும்.
இறைச்சி: 'நீர் அறா நிலத்து முண்டக நறுமலர் கமழும் தொண்டியன்னோள்' என்றது, 'இவள் நாம் அணுகி நுகர்தற்கு அரியவள்' என்று தலைவன் சொன்னனதாம்.
குறிப்பு: 'இடுமணல் நெடுங்கோட்டு முண்டக நறுமலர் கமழும்' என்றது, அது அதற்குரிய இயல்பு அல்லவெனினும், மோதும் அலைகளாலே அவ்விடத்தே சேர்க்கப்பட்டது என்பது உண்மையாகும். இவ்வாறே தலைவியின் உள்ளத்தே நின்பால் தவறு காணும் இயல்பு இல்லையேனும், அஃது அலருரை பகர்வார் இட்டுக் கூறியதனாலே நின்பால் ஐயற்று விளைந்த விளைவு என்று தோழி சமாதானம் சொல்வதாகச் சொல்லின், இது உள்ளுறை உவமமாக அமைந்து நிற்கும்.
'இவள் தோளுற்றோர் தவறிலராயினும் பனிப்ப' என்றதை, 'இடுமணல் நெடுங்கோட்டு முண்டக நறுமலர் தன் தவறற்ற போதும், அலையின் மோதற் செயலாலே வருந்தி நடுங்கும்' என்றதனோடு இணைத்துப் பொருள் கூறலும் கூடும். 'நின்பால் தவறில்லை எனினும், 'நின் சூழ்நிலை காரணமாக இவளைக் காணவியலாதே நீ துயருட்பட்டு வருந்துவாயாயினை' என்று தலைவனைச் சுட்டிக் கூறியதாகவும் கொள்ளலாம்.
''மணல் மேட்டின் உச்சியிடத்தே முண்டக நறுமலர் கமழும் தொண்டியன்னோள்'' என்றது, அதன் மணத்தைப் பலரும் அறியுமாறு போல, இவள் நலத்தையும் அறிந்தார் பலராதலின், இவளை வரைந்து கெள்ளற்கு அவரவர் முந்த விரைபவராவர்; அவ் வேற்று வரைவினை நினைந்தே இவள் வாடுவள்; அது தீர விரைந்து வந்து மணங்கொள்க' என்றதுமாம்.
178. வாழ்தல் ஒல்லுமோ?
துறை: தலைமகன் தோழியை இரந்து குறையுறுவான் சொல்லியது.
(து.வி.: தலைமகன் தோழியை இரந்து வேண்டித், தனக்குத் தலைவியை இசைவிக்கக் கேட்பவன், சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
தோளும் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே - செங்கோற்
குட்டுவன் தொண்டியன்ன
எற்கண்டு நயந்துநீ நல்காக் காலே?
தெளிவுரை: செங்கோன்மையாளனாகிய குட்டுவனின் தொண்டி நகரைப் போலும் என்னைக் கண்டு, நீயும் விருப்போடே அருள் செய்யாவிடத்து, இவளுடைய தோளும் கூந்தலும் பலவாகப் பாராட்டியபடி இவளோடு நெடுகிலும் கூடிவாழும் இல்வாழ்க்கைதான், எனக்கும் வாழ்க்குமோ?
கருத்து: 'என் இல்வாழ்வுக்கு நீயே உறுதுணையாய் நின்று உதவுதல் வேண்டும்' என்றதாம்.
சொற்பொருள்: ஒல்லுமோ - பொருந்துமோ. எற்கண்டு - என்னைப் பார்த்து. நயந்து - விரும்பி. நல்காக்கால் - அருளாவிட்டால்.
விளக்கம்: 'குட்டுவன் தொண்டி' எனத் தொண்டிக் குரிய சேரனைப் பற்றியும், 'அவன் செங்கோன்மை பிறழா தவன்' என்பான் 'செங்கோற் குட்டுவன்' எனவும் கூறினான், தானும் 'நெறிபிறழா நேர்மையன்' என்று தன் மேம்பாடு சுட்டிக் கூறுதற்காம்.
'நீ நல்காக்காலே... வாழ்தல் ஒல்லுமோ?' என்பான், தோழியைப் பெருமைப்படுத்திக் கூறி, மனத்தைத் தன்பால் இளகச் செய்தற்கு முயல்கின்றான்.
''தோளும் கூந்தலும் பல பாராட்டி வாழ்தல்' என்றது. உரிமையோடு, ஊரவர் வாழ்த்த வாழும் இல்லறவாழ்வினை. தழுவக் களிப்பூட்டும் தோளும், மலர்பெய்து எழிலகண்டு இன்புறும் கூந்தலும் சுட்டினான். அவளோடு பிரியாது கலந்து வாழும் இல்லற வாழ்வினைத் தான் உறுதியாக வேட்பதைத் தோழியாகிய அவட்கு உணர்த்தற்காம்.
'தோளும் கூந்தலும் பல பாராட்டி வாழ்தல் ஒல்லுமோ?' என்றது. நீ உதவாவிடில், யான் தோளும் கூந்தலும் பலவாகப் பாராட்டிக் கூடிமுயங்கி வாழ்கின்ற வாழ்வுப் பேற்றினைப் பெறுவேனோ? பெறேன் ஆதலின், நீதான் விரும்புதலோடு என் குறை முடித்தலும் வேண்டும்'' என்று தலைவியையே குறையிரந்து நின்றதாகவும் கொள்ளலாம்.
மேற்கோள்: தோழியைக் குறையுறும் பகுதி என்பர் இளம்பூரணர் - (தொல். களவு, 12). மதியுடம்பட்ட தோழி, 'நீர் கூறிய குறையை யான் மறந்தேன்' எனக் கூறுமாயின், அவ்விடத்துத் தன்னொடு கூடாமையால், தலைவி மருங்கிற் பிறந்த கேட்டையும், அவள் அதனை ஆற்றியிருந்த பெருமையையும் தலைவன் கூறுதல் இதுவென்பர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு, 11).
179. நின்னலது இல்லா நுதல்!
துறை: குறியிடத்து வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரவு கடாயது.
(து.வி.: பகற் குறியீடத்தே கூடி மகிழ்ந்தனர் காதலர்கள். தலைவனும் பிரியா விடை கொண்டு பிரிகின்றான். பிரிந்து போகும் அவனைத் தனியே வழியில் எதிர்ப்படும் தோழி, விரைவிலே அவர்கள் மணத்துக்கு முயலுமாறு வற்புறுத்திக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப!
அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்
இன்னொலித் தொண்டி அற்றே
நின்னல தில்லா இவள்சிறு நுதலே!
தெளிவுரை: பெருநீரான கடலின் கரையிடத்தோனாகிய சேர்ப்பனே! அலவன் தாக்குதலினாலே நீர்த்துறையிடத்தேயுள்ள இறால்மீன்கள் புரள்கின்றதும், இனிதான ஒலியைக் கொண்டதுமான தொண்டியின் எழில்போலும் இவளது சிறுநுதலின் அழகானது, நின்னைத் தன் அருகாமையிலேயே எப்போதும் பெறின் அல்லது இல்லையாகிப் போகும். அதனை யுணர்ந்து, நீயும் இவளுக்கு அருளினையாய் வாழ்வாயாக!
கருத்து: 'இவளை விரைவிலேயே மணந்து கொள்வதற்கு முயல்க' என்றதாம்.
சொற்பொருள்: நளி - பெருமை; தண்மையுமாம். நல்குமதி - விரைந்து மணங்கொண்டு அருள்வாயாக. அலவன் - நண்டு. பிறழும் - துயருற்றுப் புரளும். இன்னொலி - இனிய இசையொலிகள்.
விளக்கம்: 'அலவன் தாக்கத் துறையில் இறால் புரளும் துன்பத்தை யடைதலை' திருமணத்துக்கு விரையத் தூண்டுதற்கு எடுத்துக்காட்டுகின்றாள். இறால்மீனைத் தாக்கற்கு எவ்விதக் காரணமும் இல்லாதபோதும் அலவன் தாக்கிப் புரளச் செய்தலேபோல, இவளைப் பழிச் சொற்களால் துடிக்கச் செய்யும் மகளிரும் இவ்வூருட் பலராவர் என்பதாம். ஆகவே வரைதலில் விரைக என்றதாம். சிறுநுதல் - சிறுத்த நுதல்; இல்லாத்தாவது - ஒளிமழுங்கி மெலிந்துபோதல். 'இன்னொலித் தொண்டி' என்றது, தொண்டி மக்கள் மகிழ்ச்சியாற் செய்யும் ஆரவாரத்தையும், இசை எழுச்சிகளையும் ஆம்.
உள்ளுறை: அலவன் தாக்கத் துறையிறாப் பிறழுவது போன்றே, உங்கள் களவுறவை யறிந்த அலவற் பெண்டிர் பழிதூற்றத் தலைவியும் அதனாற் பெரிதும் நலிவடைவாள் என்பதாம்.
குறிப்பு: அவள் அத்துயரம் தாழாதே, இறத்தலும் நேரலாம் என்பவள் 'இல்லா' என்கின்றனள். இஃது தலைவன் உளத்திலே விரைய வரையும் பொறுப்புணர்வைத் தூண்டுவது உறுதி என்பதாம். 'நளிநீர்ச் சேர்ப்ப!' என்றது, அவனும் கடல்போல் தண்ணளி உடையவன் என்றதாம்.
180. சிறுநணி வரைந்தனை கொண்மோ!
துறை: தாழ்ந்து வரையக் கருகிய தலைமகனைத் தோழி நெருங்கி, 'கடிதின் வரைய வேண்டும்' எனச் சொல்லியது.
(து.வி.: களவின்பக் களிப்பிலே திளைப்பவன், அதிலேயே சிறிது காலம் இன்புற்றுப் பின்னர் மணக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாமென நினைக்கின்றான். அவன் நினைவுப் போக்கைக் குறிப்பால் உணர்ந்த தோழி, 'விரைவிலேயே வரைதல் வேண்டும்' எனச் சொல்லுவதாக அமைந்த செய்யுல் இது.)
சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
பறைதபு முதுகுருகு இருக்கும்
துறைகெழு தொண்டி அன்னவிவள் நலனே!
தெளிவுரை: கடலிடத்தே வலைவீசிப் பரதவர் பற்றிக் கொணர்ந்த கொழுமையான மீனுணவின் ப ஒருட்டாக, பறத்தலைத் தன் முதுமையினாலே கைவிட்டகிழக்குருகானது சென்று தங்கியிருக்கும், துறை பொருந்தியது தொண்டி அதனைப் போன்ற இவளது நலத்தினை, நீயும் மிகக்குறுகிய காலத்துக்குள்ளேயே, நினக்கு உரியதாக்கிக் கொள்வாயாக!
கருத்து: 'மிக விரைவிலேயே மணங் கொள்க' என்றதாம்.
சொற்பொருள்: சிறுநணி - மிக விரைவிலேயே; சிறுநனி என்பதும் பாடம். பெருநீர் - கடல். வலைவர் - வலையினாலே வளம் கொள்ளும் மீனவர்; 'வலைஞர்' என இன்றும் விளங்குவர். வல்சி - உணவு. பறைதபு - பறத்தலை விட்ட. இருக்கும் - எதிர்பார்த்தபடி தங்கியிருக்கும். நலன் - அழகு.
விளக்கம்: வலைவர் தம் பெருமுயற்சியாலே கொணர்ந்து போடும் மீன்களைத், தன் உணவுக்காகக் கவர்ந்து கொள்ளப் பறத்தற்கு இயலாதாய்க் கிழடுபட்டுப் போன குருகு சென்று காத்திருக்கும் துறைக்காட்சியைக் காட்டிக்கூறி, அவ்வாறே நின் காதன்மையாலே உரிமை கொண்ட இவள் நலனை, வேற்றார் வரைந்து வந்து பெறுதற்குக் காத்திருக்கின்றனர் என்கின்றாள். அப்படிக் கேட்டு வருவோர் முதுசான்றோர் எனவே, முதுகுருகைக் கூறினள். 'முதுகுருகும் வலைவர் தரும் மீனுண்டு பசியாறும் துறையினன்' என்றது, எவரும் துன்பந் தீர்ந்து இன்புறுதற்கு அருள்பவன் தலைவன் என்று, அவன் அருளுதற் பெருமை கட்டிப் புகழ்ந்ததுமாம்.
உள்ளுறை: 'வலைவர் தந்த கொழுமீன் வல்சிக் கண்ணே பறத்தல் கெட்ட முதுகுருகு இருக்கும்' என்றது, வேற்றுவரவு வேட்டு முதியோர் வருதற்குரியர் என்றதாம்.
குறிப்பு: வேற்றார் வரவு நேராமுன் மிகவிரைவில் நீயே வந்து வரைந்து கொள்க என்கின்றாள், 'சிறுநனி வரைந்தனை கொண்மோ' என்கின்றனள். வலைவர் சிறுபொழுது ஏமாறினால், முதுகுருகு கொழுமீனைப் பற்றிக் கொண்டு போதலேபோல, நீயும் காலங்கடந்தஃதினால் இவளை இழந்து போகவே நேரும் என்று எச்சரித்ததும் ஆம். முதுமை கண்டு இரங்கியும், வலைவர் தாமே மீனைத் தந்து விடாமைபோல, நொதுமலர் வரைவுக்கு உடன்படா வண்ணம் யாமும் அறத்தொடு நிற்பேம் என்பாள், 'முதுகுருகு இருக்கும்' என அதன் இருத்தல் மட்டுமே கூறி, அது கொண்டதென்று ஏதும் குறித்துக் கூற்றிற்றிலள்.
பறைதபு முதுகுருகு, பெருநீர் வலைவர் தந்த கொழுமீன் வல்சியை எதிர்பார்த்து இருத்தலேபோல, இவள் பெற்றோரும் இவள் மூலம் பெறும் வரைபொருள் மிகுதிக்கு எதிர்பார்த்தபடி யுள்ளனர் என்பதும் ஆம்.
சொல்வகையால் தொடர்ச்சி பெற்று அந்தாதித் தொடை பெறுதலோடு, கிளவி வகையாலும், சொல்லும் வகையாலும் தொடர்ச்சியுடையவை இப்பத்துச் சொய்யுட்களும் என்பதும் அறிக.
9. நெய்தற் பத்து
நெய்தற்கு உரியவான கருப்பொருள்கள் செய்யுள்தோறும் அமைந்து வருவதால், இதனை நெய்தற் பத்து என்றே குறித்தனர்.
'நெய்தல், கொடியும் இலையும் கொண்ட ஒரு நீர்ப் பூ வகை. இதன் பூக்கள் நீலநிறம் பெற்றவை. 'மணிக்கலத்தன்ன மாயிதழ் நெய்தல்' (பதிற். 30) எனவும் உரைப்பர். மகளிர்தம் கண்ணுக்கு உவமையாக இரைக்கப்படும் 'இது, வைகறைப் பேதிலே மலர்கின்ற தன்மையுடையது மாலையிலே கூம்புவது. 'நீலம்' என்பது வேறுவகைப் பூ; இது அதனின் வேறுவகை. இதனைக் கொய்து கொண்டு அலங்கரித்து இன்புறுவது நெய்தல் நிலச் சிறுமியரின் வழக்கம். கடற்கரைக் கழிகளில் இதனை இன்றும் காணலாம்.
181. உறைவு இனிது இவ்வூர்!
துறை: 'களவொழுக்கம் நெடிது செல்லின், இவ்வூர்க் கண் அலர் பிறக்கும்' என்று அஞ்சியிருதந்த தலைவி, 'தலைமகன் வரைந்து கெள்ளத் துணிந்தான்' என்ற தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: 'களவொழுக்கம் அலராகிப் பழியெழும் நிலைக்கு வந்துவிடக் கூடாதே' என்று மிகவும் அஞ்சுகிறாள் தலைவி. அவன் வரைவுக்குத் துணிந்தனன் என்று தோழி வந்து மகிழ்வோடு சொல்லவும், அவள் அது கேட்டுச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.)
நெய்தல் உண்கண் நேரிறைப் பணைத்தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண்மணற் குரவை நிறூஉம்
துறைகெழு கொண்கன் நல்கின்
உறைவினி தம்ம இவ் அழுங்கல் ஊரே!
தெளிவுரை: நெய்தலே போல விளங்கும் மையுண்ட கண்களையும், நேரிய முன்னங்கையோடு விளங்கும் பணைத்த தோள்களையும் உடையவரான, பொய்த்தலையே அறியாதாரான சிறு மகளிர்கள், தாம் பொய்தல் விளையாட்டயர்ந்த வெண்மணல் மேட்டினிடத்தே, கடல் தெய்வத்தை வேண்டிக் குரவையாடு தலையும் மேற்கொள்ளுகின்ற, துறைபொருந்தியவன் தலைவன். அவன், நீ சொன்னவாறே அருள்வானாயின், அலராகிய ஆரவாரமுடைய இவ்வூரும், நாம் தங்குவதற்கு இனிதாயிருக்குமே!
கருத்து: 'இன்றேல், இவ்வூரும் வருத்தம் செய்வதாகும்' என்றதாம்.
சொற்பொருள்: இறை முன்னங்கை பொய்தல் - சிறு மகளிர் கூடியாடும் ஆடல் வகை. குரவை - தெய்வம் வேண்டி எழுவர் மகளிர் கைகோத்து ஆடும் ஒருவகை ஆடல் வகை; குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை போல்வநு; குரவையிட்டு மகளிர் வாழ்த்துதலை இன்றும் திருமணம் போன்ற விழாக்களில் காணலாம்.
விளக்கம்: களவு உறவே பொய்த்தற்குத் தூண்டும் என்பது உண்மையாதலால், இவரை அதனைக் கொள்ளாத நிலையும் பருவமும் உடையவரெனச் சுட்டவே 'பொய்யா மகளிர்' என்றனர். ஒளித்துப் பிடித்து விளையாடும் சிறுமியர் விளையாட்டெனவும், கண்ணைக் கட்டிக் கொண்டு குறித்தாரைப் பற்றி யாடும் ஆட்டமெனவும் இதனைக் கருதலாம். பொய்கைக்கண் மூழ்கிப் பிடித்து விளையாடும் நீர் விளையாட்டும் ஆகலாம். 'பொய்தல் மகளிர் விழவணிக் கூட்டும்' என்பது அகம் (26); ஆடவராகிய சிறுவரும் ஆடுதலைப் 'பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்' என்று நற்றிணை காட்டும் (166). இவரை, 'மறையெனில் அறியா மாயமில் ஆயம்' என்றும் இதே கருத்தில் அகம் காட்டும் (2) இச் சிறுமகளிர் குரவை யயர்வது தமக்கு நல்ல வாழ்வைத் தந்தருள நீர்த் தெய்வத்தை வேண்டி யென்க.
'அழுங்கலூர்' என்றது, தான் பிறந்து வளர்ந்த ஊரையே, தன் களவுக் கற்பை அலர் கூறித் தூற்றுதலால் வெறுத்துக் கூறியதாம். 'கொண்கன் நல்கின்' அலர் அடங்கி ஊரவர் உவந்து வாழ்தல் மிகுதலின், 'உறைவு இனிது' என்கின்றனள்.
உள்ளுறை: 'பொய்தலாகிய பொய்யா மகளிர் குப்பை வெண்மணற் குரலை நிறூஉம்துறை' என்றது, அவர் பலரும் அறிதலாம், அலர் எழு நேருமாதலின், இனிக் களவுறவு வாய்த்தற்கில்லை என்றதாம்.
இனி, 'மகளிர் தம் காதலரோடு கலந்தாடும் துறைகெழு கொண்கன்' எனக் கொண்டு, 'அவன் நம்மை வரைந்து கொண்டு தானும் அவ்வாறு ஆடிக் களித்தலை நினையாதவனாக உள்ளனனே' என மனம் நொந்து கூறியதுமாம். 'பொய்தல் மகளிர்' காமக் குறிப்பு அறியாராயினும், அவரைக் காணும் தலைவன்பால் அஃது எழுதல் கூடும் என்றும்,அ வன் தலைவியை நாடிவரல் வேண்டும் என்றும் கருதிக் கூறியதும் கொள்க.
182. அருந்திறற் கடவுள் அல்லன்!
துறை: தலைமகள் மெலிவு கண்டு, தெய்வத்தால் ஆயிற்று எனத் தமர் நினைந்துழித் தோழி அறத்தொடு நின்றது.
(து.வி.: களவுக் கூட்டம் இடையீடுபடுதலால் தலைவி மேனி மெலிவுற்றனள். தாயாரும் பிறரும் அம்மெலிவு தெய்வத்தால் ஆயிற்றெனக் கருதி, அது தீர்தற்காவன செய்தற்குத் திட்டமிடுகின்றனர். அஃதுணரும் தோழி, குறிப்பாகத் தலைவியின் களவுக் காதலைச் செலவிலிக்கு உணர்த்தி, அவனுக்கே அவளை மணமுடிக்க வேண்டுகின்றதாக அமைந்த செய்யுள் இது.)
நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்
அருந்திறற் கடவுள் அல்லன்
பெருந்துறைக் கண்டுடிவள் அணங்கி யோனே.
தெளிவுரை: பொருந்துறையிடத்தே இவளைக் கண்டு வருத்தமுறச் செய்தவன், தடுத்தற்கு அரிதான பெரிய வளமையினைக் கொண்ட கடவுள் அல்லன். நெய்தலின் நறியமலரைச் செருந்தி மலரோடும் கலந்து, கைவண்ணத்தாற் புனையப் பெற்ற நறுந்தாரின் மணம் கமழ்ந்தபடியே இருக்கும், மார்பினை யுடையனகிய ஒரு தலைவன் காண்!
கருத்து: 'அவனோடு மணம் சேர்த்தாலன்றி இவள் மெலிவு தீராது' என்றதாம்.
விளக்கம்: அழகுணர்வும் மணவிருப்பும் உடையவனாதலின் தலைவன் நெய்தலின் நிலப்பூவினையும், செருந்தியின் பொன்னிறப் பூவினையும் கலந்து கட்டிய கதம்ப மாலையை மார்பில் விரும்பி அணிவான் என்க. 'அருந்திறற் கடவுள்' என்றது, நெய்தல் நிலத் தெய்வமான வருணனையே குறிப்பதாகலாம்.
உள்ளுறை: 'நெய்தலும் செருந்தியும் விரவிக் கட்டிய மாலை கமழும் மார்பன்' என்றது, தலைவனின் செல்வச் செழுமையினையும், அழகு வேட்கையையும், மணவிருப்பையும் காட்டி, அவன் இவளை விரும்பி மணப்பவனுமாவான் என்று உறுதிபடக் கூறியதுமாம். அவன் இவளுக்கு ஏற்ற பெருங்குடியினன் என்றதுமாம்.
குறிப்பு: 'மார்பன்' என்று சுட்டிக் கூறியது, அதனைத் தழுவித் தலைவி இன்புற்ற களவுறவை நுட்பமாக உணர்த்தற்காம்.
மேற்கோள்: 'குறி பார்த்தவழி வேலவனை முன்னிலையாகக் கூறியது' என இளம்பூரணரும் - (தொல். களவு, 24). அறத்தொடு நிற்றலில் வேலற்குக் கூறியது என நச்சினார்க்கினியரும் - (தொல். களவு, 23) உரைப்பர். இவர்கள் கருத்துப்படி, வெறியாடல் முயற்சி நிகழும் போது, தோழி தாய்க்கு உண்மை உணர்த்தியதாகவும் கொள்ளலாம். நெய்தன் மாந்தரும் முருகனை வேட்டு வழிபட்டதும் இதனால் அறியலாம். திருச்செந்திலே அலைவாய்ப் பெருங்கோயில்தானே!
183. காலை வரினும் களையார்!
துறை: வரைவிடை வைத்துப் பிரிந்துழி, ஆற்றாளாகிய தலைமகள் மாலைக்குச் சொல்லியது.
(து.வி.: தலைவன் வரைந்து வருவதாகச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை முடித்தற் பொருட்டாகத் தலைமகளைப் பிரிந்து இருக்கின்ற காலம். அவனைக் காணாத துயரால் தலைவி மனம் நொந்து மாலைக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாடன் நல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே!
தெளிவுரை: பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாக அமைகின்ற மாலைப்பொழுதே! திரட்சிமிக்க அருவிகள் வீழ்கின்ற நீர்வளம் மிகுந்த கானம் பொருந்திய நாடனும் சிறிய குன்றுகளையுடைய நாடனும், நல்வளம் கொண்ட வயல்களையுடைய நாடனுமான, குளிர்கடல் நிலத்துக்குரியவனாகிய நர் சேர்ப்பனாவன் நம்மைப் பிரிந்துள்ளான் என்பதனாலே, முன்பினுங் காட்டில் கடுமையுடையையாய் உச்சிப் போதிலும் வெம்மை காட்டியபடி வருகின்றனையே! வளைந்த கழியிடத்தேயுள்ள நெய்தல் மலர்களும் மாலையிலே இதழ்குவிந்து ஒடுங்கி காலையிலே மலர்வது போலக் கவிடனுடனே நீயும் வரினும், எம் துயரத்தைக் களைவார்தார் என்னருகே இல்லையே!
கருத்து: 'பொழுதெல்லாம் வருந்தி நலியும் எனக்கு எப்போது மாலையானால் என்ன?' என்றதாம்.
சொற்பொருள்: கணங்கொள் அருவி - திரட்சி கொண்ட அருவி; திரட்சி வீழ்நீரின் பெருக்கம். கான்கெழு நாடன் - காடுபொருந்தி நாட்டிற்குரியோன்; முல்லைத் தலைவன் குறும்பொறை - உயரம் குறைந்த பொற்றைகள் என்னும் சிறு குன்றுகள்; குறும்பொறை நாடன் - குறிஞ்சித் தலைவன்; நல்வயலூரன் - மருதத் தலைவன்; தண்கடற் சேர்ப்பன் - நெய்தல் தலைவன். ஆகவே, தலைவியின் காதலன் நானிலத்துக்கும் தலைமை கொண்ட அரசகுமாரன் என்பது கூறியதாயிற்று. கடும்பகல் - கடுமையான வெப்பங்கொண்ட பகற்போதான உச்சிவேளை; மாலை கடும்பகலினும் வருதல், மாலையிலே மிகும் பிரிவுத்துயரம் உச்சிப் பகற்போதிலும் மிக்கெழுந்து தோன்றி வருத்துதல். கையறு மாலை - பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலை நேரம். காலைவரினும் - காலைப் போதினும் துயர் மிகுந்து வருவதாயினும்.
விளக்கம்: பகலும் இரவுமாகிய நாள் முழுதுமே பிரிவுத் துயரத்தாலே தலைவனை நினைந்து நினைந்து வருந்துகின்றாளான தலைவி, மாலைப் போதிலே மட்டுந் தான் துன்புறுவதாக எண்ணித் தன்னைத் தேற்றும் தோழியின் செயல்கண்டு மனம் வெதும்பிக் கூறியதாக இதனைக் கொள்க. நெய்தல் மலர் கூம்புதல் மாலைப்போதில் என்பதனை, 'நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுகக் கல்சேர் மண்டிலம்' என வரும் நற்றிணையால் - (நற். 187) அறிக. 'பண்டையில் வருதி' நீதான் பண்டு போலவே வருவாயாயினும், அவர் பிரிந்தமையின் யான் துயரத்தே ஆழ்தலையே செய்கின்றனை என்றதாம்.
உள்ளுறை: 'பண்டு வரும் காலத்தேபோலத் தவறாதே கதிரவனும், அவனால் செயப்படும் பொழுது வரினும், தானின்றி யான் வாழமை தீரத் தெளிந்துளரெனினும், தலைவர் தாம் சொன்னாற்போலக் குறித்த காலத்தே வந்தனரிலரே' என்று, தலைவி ஏக்கமுற்றுக் கூறியதாகக் கொள்க. தன் வரவும் பிழைத்தான்; அதனால் தலைவி நலனும் கெட்டழியக் கேடிழைத்தான் என்க.
மேற்கோள்: பருவ வரவின்கண், மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறியது; நெற்யதற்கண் மாலை வந்தது என்று காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 12). இருத்தல் என்னும் உரிப்பொருள் வந்த நெய்தற் பாட்டு என்பர் நம்பியகப் பொருள் உரைகாரர் - (நம்பி. ஒழிபு, 42).
வேறு பாடம்: 'வருந்திக் கையறுமாறு, மாலை நெய்தலும் கூம்ப.'
குறிப்பு: தலைவனுக்கு நானிலத்தின் தலைமை கூறிப் பாலை மட்டும் கூறாமை அதன் உரிப் பொருளான பிரிதலைத் தலைவன் மேற்கொண்டதன் கொடுமையை நினைந்தென்றுங் கொள்க. மாலையிற் கூம்பும் நெய்தல் காலையிலே கதிர் தோன்ற மலரும்; தானே அவரில்லாமை யால் வாடிக்கூம்புதலே எப்போதும் உளதாவது என்றனளாகவும் கொள்க. 'கலைஞரோ இலர்' என்றது, எவரும் அவனிருக்குமிடம் சென்று அவனைத் தன்பால் வரவுய்த்துத் தன் துயரம் களைந்திற்றிலர் என்னும் வேதனையாற் கூறியது; அன்றிக் களையும் ஆற்றல் படைத்த காதலரோ அருகில் இலர் என்றதுமாம்.
நானிலத்தார்க்கும் நலஞ் செய்யும் பொறுப்புக் கொண்டவன், எளிமையாட்டியாகிய எனக்கு வந்து நலம் செய்திலனே என்று ஏகியதுமாம்.
184. கடலினும் பெரிய நட்பு!
துறை: வாயில் வேண்டி வந்தார், தலைமகன் அன்புடைமை கூறியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது.
(து.வி.: வாயில் வேண்டி வந்தாரான தலைமகனின் ஏவலர்கள், தலைமகன் 'தலையிடத்தே கொண்டிருக்கும் மாறாத அன்புடைமை பற்றி எல்லாம் கூறி, அவனை அவள் உவந்து ஏற்றலே செய்த்தக்கது' என்று பணிந்து வேண்ட, அவன் புறத்தொழுக்கத்தாலே புண்பட்டிருந்தவள், அவரை மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீனுண் குருகிளங் கானல் அல்கும்
கடலணிந் தன்றவர் ஊரே
கடலினும் பெரிதெமக் கவருடை நட்பே!
தெளிவுரை: நெய்தலிடத்தேயான பெரிய கழிப்பாங்கிலேயுள்ள நெய்தற்பூக்களை நீக்கிவிட்டு, அவ்விடத்தேயுள்ள மீன்களைப் பற்றியே தான் விரும்பி உண்ணும் குருகானது, அயலதான இளங்கானலிடத்தேயும் சென்று தங்கும். அத்தகு கடலால் அழகு பெற்றது அவருடைய ஊராகும். எமக்கு அவருடைய நட்பானது, அந்தக் கடலினும் காட்டிற் பெரிதாகுமே!
கருத்து: 'அந்நட்பை அவர்தாம் பேணுதல் மறந்தாரே' என்றதாம்.
சொற்பொருள்: இளங்கானல் - கடற்கரை அணுக்கத்துக் கானற்சோலை; நீரற்ற கானல் போலது, வெண்மணற் பரப்பானது மிகுகடல் நீரின் அருகேயிருந்தும், கானலாகிக் கிடப்பது என்று அறிக. கடல் அணிந்தன்று - கடலாலே அழகடைந்திருப்பது.
விளக்கம்: 'அவருடைய நட்பு எமக்குக் கடலினும் பெரிது' என்றது, தன்னளவிலே அதுவே உண்மையாயினும், தன்னை மறந்து பரத்தையின் பத்திலே ஈடுபட்டு வாழும் தலைவனளவிலே அது ஏதுமற்றதாய்ப் பொய்யாயிற்று; அவன் அன்பிலன், அறம் இலன், பண்பு இலன் என்றனளாம். 'குருகினம் கானல் அல்கும்' என்ற பாடம் கொண்டு, குருகினங்கள் கானலிடத்தே சென்று தங்கும் எனவும் பொருள் காணலாம். 'நெய்தல் இருங்கழி' - நெய்தற் பூக்களை மிகுதியாகக் கொண்ட இருங்கழி எனலும் ஆம்; இருங்கழி - கரும் கழி.
'அவருடைய நட்பு எமக்குக் கடலினும் பெரிது' என்றது, அவருக்கு அஃது பெரிதாகப் படவில்லையே என்று நொந்த தாம். அவர் வெறுத்து ஒதுக்கினும், மனையறக் கடமையினுமாகிய யாம், அவரை ஒதுக்குதலைக் கருதாதே என்றும் ஏற்கும் கடமையுடையோம் என்று, தன் மேன்மை உரைத்ததும் ஆம். ''மீனுண் குருகும் கானலில் தன் துணையோடு தங்கும்; அதன் காதலன்புகூட நம் தலைவரிடம் காணற்கு இல்லை'' என்றதுமாம்.
உள்ளுறை: கழியிடைச் செல்லும் குருகு, அவ்விடத்தே யான அழகிய நெய்தலை விருபாது, இழிந்த மீனையே விரும்பி உண்டுவிட்டு, இளங்கானலிலே சென்று தங்கும் என்றனள். இது தலைவனும் தலைவியின் பெருநலனைப் போற்றிக் கொள்ளாதே வெறுத்தானாய், இழிவான பரத்தையரையே விரும்பிச் சென்று நுகர்ந்து களித்தானாய், வேறெங்கோ சென்று தங்குவானுமாயினான் என்பதனை உள்ளுறுத்துக் கூறியதாம்.
185. நரம்பார்த்தன்ன தீங்கிளவியள்!
துறை: 'ஆய மகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவாள்?' என வினவிய தோழிக்குத் தலைவன் சொல்லியது.
(து.வி.: தலைவியைக் களவுறவிலே கூடி மகிழ்ந்தவன், அவளை நீங்காதே சூழ்ந்திருக்கும் ஆயமகளிர் காரணமாக, அவளைத் தனியே அதன்பின் சந்திக்கும் வாய்ப்புப் பெறவியலாத நிலையில், தலைவியின் உயிர்த்தோழியிடம், தனக்கு உதவியாக அமைய வேண்டித் தலைவன் இரந்து நின்கின்றான். அவள், 'நின் மனங்கவர்ந்தாள் எம் கூட்டத் துள்ளாருள் யாவளோ?' என்று கேட்க, அவன் அவளுக்குத் தன் காதலியைச் சுட்டிக்காட்டிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
அலங்கிதழ் நெய்தற் கொற்கை முன்றுறை
இலங்குமுத் துறைக்கும் எயிறுகெழு துவர்வாய்
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்பார்த் தன்ன தீங்கிள வியளே.
தெளிவுரை: அசையும் இதழ்களைக் கொண்ட நெய்தல்கள் பொருந்திய கொற்கை நகரிம் முன்றுறையிடத்தே காணப்படும். முத்தினைப் போன்ற பற்கள் பொருந்திய சிவந்த வாயினளும், அறத்தாலே பிளந்து இயற்றப்பெற்ற அழகான வளைகளை யணிந்துள்ள இளையோளும், யாழின் நரம்பிலே நின்றும் இசை எழுந்தாற்போன்ற இனிமையான பேச்சினை உடையவளுமான அவளே, என் காதற்கு உரியாள் ஆவாள்.
கருத்து: 'அவளை அடைதற்கு எவ்வாறேனும் உதவுக' என்று, இரந்ததாம்.
சொற்பொருள்: அலங்கல் - அசைதல் முன்றுறை - கடல் முகத்து நீர்த்துறை. இலங்கு முத்து - காணப்படும் முத்து; ஒளிவிளங்கும் முத்துமாம்; இது அலைகளாலே கொண்டு கரையிற் போடப்படுவது. துவர்வாய் - சிவந்த வாய்; பவள வாயும் ஆகும்; முத்துப் பற்களைக் கொண்ட பவழத்துண்டு போலும் சிவந்த வாய் என்க. குறுமகள் - இளையோள். நரம்பு - யாழ். நரம்பு கிளவி - பேச்சு.
விளக்கம்: அவள் அழகு நலம் எல்லாம் வியந்து கூறியது. அவளைத்தான் களவிற் கலந்துள்ளமை கூறியதாகும். 'கொற்கை' பாண்டியரின் கடற்றுறைப்பட்டினம்; தாமிர பரணி கடலோடு கலக்குமிடத்தே முன்னாள் இருந்தது; மிகமிகப் பழங்காலத்திலேயே முத்தெடுத்தலுக்குப் புகழ் வாய்ந்தது; பாண்டி இளவரசர்கள் கோநகராக விளங்கியதைச் சிலம்பு 'கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்' என்பதனால் அறியலாம். 'ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை' என்று நற்றிணையும் காட்டும் - (நற். 23). சொல்லினிமைக்கு யாழிசையினிமையை உவமித்தல் மரபு; இதனை ''வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே'' என்னும் அக நானூற்றாலும் (142) அறியலாம்.
அவள் தன்னை நயப்பதுணர்ந்த முறுவல் பெற்றமையும், இதழமுதுண்டமை காட்டத் துவர்வாய் வியந்தும், தழுவியது சொல்லக் கைவளை குறித்தும், பழகியமை தோன்றக் குறுமகள் எனச் சுட்டியும், உரையாடி இன்புற்றது புலப்பட நரம்பார்ந்தன்ன தீம்கிளவியள் என்றும், நயம்பொருந்தச் சுட்டியமை காண்க. இதனால், அவளும் தன்மேல் பெருவிருப்பினளே என்பதும் உணர்த்தியதாம்.
186. செல்லாதீர் என்றாள் தாய்!
துறை: பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.
(து.வி.: தலைவனும் தலைவியும் பகற்போதிலே கானற்சோலையிடத்தே தனித்துச் சந்தித்துக் களவின்பம் பெற்று மகிழ்ந்து வருகின்றனர். அதனை நீடிக்க விடாதே, அலரெழு முன் மணவாழ்வாக மலரச் செய்வதற்குத் தோழி விரும்புகிறாள். ஒரு நாள் தலைவியை இல்லிடத்தே இருக்க வைத்து விட்டுத், தான் மட்டும், தலைவனைச் சந்திக்கும் வழக்கமான இடத்துக்கு வருகின்றாள். தலைவியைக் காணாதே சோர்ந்து நீங்கும் தலைவனைக் கண்டு, தலைவி இற்செறிப்புற்றாள் என்று கூறி, விரைய வரைதற்கு முயலுமாறு உணர்த்துகின்றாள். அவள் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
நாரை நல்லினம் கடுப்ப, மகளிர்
நீர்வார் கூந்தல் உளரும் துறைவ!
'பொங்குகழி நெய்தல் உறைப்ப, இத்துறைப்
பல்கால் வரூஉம் தேர்' எனச்
'செல்லா தீமோ' என்றனள், யாயே!
தெளிவுரை: நாரையினது நல்ல கூட்டத்தைப் போல, நீராடிய மகளிர்கள் தம் நீரொழுகும் கூந்தலை விரித்துப் போட்டுக் கோதியும் தட்டியும் உலர்த்தியபடி இருக்கின்ற துறைக்குரியோனே! நீர் மிகுந்துள்ள கழியிடத்தேயுள்ள நெய்தல்கள் துளிகளைச் சிதறுமாறு, இத்துறையிடத்தே பலகாலும் ஒரு தேர் வருவதாகின்றது. ஆதலின், நீவிர் துறைப்பக்கம் செல்லாதிருப்பீராக'' எனக் கூறிவிட்டனள் எம் தாய்.
கருத்து: 'இனித் தலைவியை இவ்விடத்தே நீயும் காண்பதறிது' என்றதாம்.
சொற்பொருள்: கடுப்ப - போல. நாரை நல்லினம் - நாரையின் நல்ல கூட்டம்; 'நல்ல' என்றது மாசகற்றித் தூய்மை பேணுதலால். உளரும் - விரித்துக் காயவைக்கும். உறைப்ப - துளிப்ப. பல்கால் - பல ந ஏரங்களில்.
விளக்கம்: 'இத்துறைப் பல்கால் தேர் வரூஉம்' எனக் கேட்ட தாய், நீவிர் செல்லாதீர் என எம்மைத் தகைத்தனள் என்றது, அவள் எம்மை இற்செறித்தனள்; இனிக் களவுறவு வாய்த்தல் அரிது; இனி மணந்துகோடற்கு விரைக என்று அறிவுறுத்தியது ஆகும்; நின் தேரெனவும், நீயும் தலைவியை நாடியே வருகின்றாயெனவும் தாய் குறிப்பாலே கண்டு ஐயுற்றனள் என்பதும் ஆம். களவுக்காலத்தும் இப்படிப் பலரறியத் தேரூர்ந்து வரலும் தலைவர்கள் இயல்பு என்பதும், அதனால் அவர் தொலைவிடத்துப் பெருங்குடியினராதல் அறிந்து, தாய், அவரோடு தம் மகள் கொள்ளும் உறவைத் தடுப்பதும் இயல்பு.
உள்ளுறை: 'நீராடியதால் நனைந்த கூந்தலை, ஈரம் கெட விரித்துக் கைகளாலே அடித்துப் புலர்ந்தும் மகளிரையுடைய துறைவன்' என்றது. அப்படித் தம்மிடத்தேயுள்ள நீர்ப்பசையை நீக்கும் மகளிரே போல, நின்னாற் களவுறவிலே கொளப்பட்ட தலைவிக்கும் குற்றம் ஏதும் நேர்ந்துவிடா வண்ணம், வரைந்து வந்து, அவளை ஊரறிய மணந்து கொண்டு நின்னூர்க்கும் போவாயாக என்றதாம்.
'நீராடிய மகளிர் கூந்தலை உலர்த்தியபடி வருகின்ற துறைவன்' என்றது. அவ்வாறே வரும் இவ்வூர் மகளிரும் பலர் உளராதலின், அவர்மூலம் நும் களவுறவும் வெளிப்பட்டு, ஊர் அலர் எழவும் கூடும் என்றதாம். 'நெய்தல் உறைப்பத் தேர் பல்கால் வரும்' என்றது, ஊர்ப் பெண்டிர் கவலையுறத் தலைவன் அடிக்கடி வருவான் என்றதுமாம்.
187. மகளிரும் பாவை புனையார்!
துறை: தோழி கையுறை மறுத்தது.
(து.வி.: தலைவன் தலைவிக்குத் தன் அன்பைப் புலப்படுத்தக் கருதி, ஆர்வமுடன் தழையுடை புனைந்து கொணர்ந்து தோழியிடம் தந்து, தலைவிக்குத் தரவும் வேண்டுகின்றான். அவள் அதனை ஏற்க மறுத்துச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
நொதும லாளர் கொள்ளா ரிவையே;
எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்;
உடலகம் கொள்வோர் இன்மையின்,
தொடலைக் குற்ற சிலபூ வினரே!
தெளிவுரை: பெருமானே! இவற்றை அயலாரான பிற மகளிரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களே! எம்முடனே உடன் வந்து கடலாட்டயரும் மகளிரும், நெய்தலே மிகுதியாக இட்டுக்கட்டிய இப்பகைத் தழையினைத் தாம் அணியார் என்பது மட்டும் அல்ல, தாம் நிறுவி விளையாடும் மணற் பாவைக்குங்கூட இட்டுப் புனையமாட்டார்களே! உடற்கு அகமாக அணிவோர் யாரும் இங்கே இல்லாமையினாலே, தொடலை தொடுத்து விலைப்படுத்துவோரும், இதனிற் சிலபூக்களே கொண்டு தம் மாலைகளைத் தொடுப்பர். ஆகவே, இஃது எமக்கும் வேண்டாம். இனைப்பெறின், இல்லத்தாரும் பிறரும் ஐயுறற்கு இடனாகும்!
கருத்து: 'இதனைக் கொள்வேன் அல்லேன்' என்றதாம்.
சொற்பொருள்: நொதுமலாளர் - அயலார். 'இவை என்றது அவன் தந்த நெய்தல் தழையாலான கையுறைகளை. பகைத் தழை - ஒன்றினொன்று வண்ணத்தால் மாறுபட்டுத் தொடுத்த தழை. உடலகம் - உடலிடத்தே. தொடலை - மாலை: தொடுத்துக்கட்டுவது தொடலை ஆயிற்று; உடலைத் தொட்டுக் கிடப்பது எனவும் கொள்க.
விளக்கம்: நெய்தலே மிகுதியாகத் தேடித் தொடுத்த தழைகளை, நெய்தன் மகளிர் விரும்பி அணியார் என்பதும் இதனால் அறியப்படும். நீலமணி போலும் நெய்தலை இடையிடைப் பிறவற்றுடன் வைத்துத் தொடுப்பதே அழகுடைத்தென்பதனை, 'நெய்தல் அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ' எனப் பிறரும் கூறுதலால் அறியலாம் - (நற். 96). 'அயலாரும் கொள்ளார்; எம்மவரோ தம் பாவைக்கும் புனையார்'; எனவே, இதனை வேற்றான் தரப் பெற்றதாக அலர் எழுதலே இயல்பு; ஆகவே இஃது வேண்டா' என்றனள். 'பாவை புனையார்' என்றது. அவர்தம் விளையாடற் பருவத்தை நினைப்பித்துக் கூறியதாம். 'அணிதல் இயல்பல்பாத ஒன்றை அணியும் அது ஐயுறவுக்கு இடனாகும்' என்று தழையுடை மறுத்தனள்; அவ்வாறே அவன் உறவும் பொருந்தாமை காட்டி மறுத்தனளாம்.
மேற்கோள்: 'தோழி கையுறை மறுத்தது' என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். களவு, 23).
188. தகை பெரிய கண்!
துறை: விருந்து வாயிலாகப் புகுந்த தலைமகன், தலைவி இல்வாழ்க்கைச் சிறப்புக் கண்டு மகிழ்ந்து சொல்லியது.
(து.வி.: 'தன் புறத்தொழுக்கம் காரணமாகத் தலைவி தன்னை வெறுத்து ஒதுக்கியிருப்பாள்' என்று கருதினான் தலைமகன். பிற வாயில்கள் பலரும் வறிதே இசைவு பெறாது திரும்பவே, ஒரு விருந்தினரோடும் கூடியவனாக வீட்டிற்குள் செல்கின்றான். தலைவியும், தன் மனைமாட்சியாலே, தன் உள்ளச்சினத்தை எல்லாம் மறைத்துக் கொண்டு, விருந்தினரை விருப்போடும் புன்முறுவலோடும் உபசரிக்கின்றாள். அவளின் அந்தச் சிறப்பை வியந்து, தலைவன் மகிழ்வோடு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
இருங்கழிச் சேயிறா இனப்புள் ளாரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
வைகறை மலரும் நெய்தல் போலத்
தகை பெரி துடைய காதலி கண்ணே.
தெளிவுரை: கரிய கழியிடத்தேயுள்ளதான சிவந்த இறால் மீன்களைப் புள்ளினங்கள் பற்றியுண்ணும், கொற்கைக் கோமானது கொற்கை நகரத்தின் அழகிய பெரிய துறையிடத்தே, வைகறைப் போதிலே மலரும் நெய்தலைப் போல, எம் காதலியின் கண்கள், பெரிதான தகைமைகளைக் கொண்டன வாகுமே!
கருத்து: ''அதனைக் கலங்கச் செய்தலை இனிச் செய்யேன்'' என்றதாம்.
சொற்பொருள்: இனப்புள் - புள்ளினம்; புட்கள் இனம் இனமாக ஒருங்கே கூடியிருந்து மீன் பற்றி உண்ணும் இயல்பினவாதலின் இவ்வாறு கூறினன். வைகறை - விடியல். தகை - தகுதிப்பாடு.
விளக்கம்: விருந்து வரக்கண்டதும் மகிழ்ந்த முகத்தோடு வரவேற்ற, தன்னைக் குறித்த இனத்தையும் வெறுப்பையும் உள்ளடக்கி இன்முகம் காட்டிய தலைவியின் கண்ணழகினை, கதிர்வர மலரும் நெய்தலோடு உவமித்துப் போற்றுகின்றான். தன்னை வெறுத்தாற் போன்ற குறிப்பு எதுவும் பார்வையிற் கூடக் காட்டாதே, தன்பால் அன்பும் கனிவுமே அவர்முன் காட்டிய அந்தச் செவ்வியை வியப்பான், 'தகைபெரிதுடைய' என்றான். தான் அவட்குத் துயரிழைத்தாலும், அவள் தன் காதன்மையும் கடமையுணர்வும் மாறாதாள் என்பான், 'காதலி' என்றான். அவள் தன்னையும் இனி ஒதுக்காது ஏற்றருள்வாள் என்ற மனநிறைவாலே மகிழ்ந்து கூறுவன இவையெல்லாம் என்க.
கொற்கைக் கோமான் - பாண்டியன்; அவனுக்குரிய பேரூர் என்பான், 'கொற்கைக் கோமான் கொற்கை' என்றனன். அறம் குன்றாப் பாண்டியரின் ஆட்சிக்குட்பட்ட கொற்கையிலே, மகளிரும் தம் மனையறத்திலே குன்றாது விளங்கும் மாண்பு உடையவர் என்றதுமாம்.
உள்ளுறை: 'இருங்கழிச் சேயிறா இனப்புள் ஆரும்' என்றது, தன் பரத்தையர் சேரியிலே பரத்தரோடும் பாணரோடும் கூடிச்சென்று, அழகியரான பரத்தையரைத் தேடித் தேடி நுகர்ந்த இழிசெயலை உள்ளுறுத்து, நாணத்தாற் கூறியதுமாம்; தலைவியின் இல்லறச் செவ்வியினை வியந்து போற்றித் தன் எளிமைக்கு நாணியதுமாம்.
189. நல்ல வாயின கண்ணே!
துறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன்; வரைவான் வந்துழிக் கண்டு, உவகையோடு வந்த தோழி, 'நின் கண் மலர்ச்சிக்குக் காரணம் ஏன்?' என்று வினாயின தலைவிக்குச் சொல்லியது.
(து.வி.: தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் தேடி வரப்பிரிந்தான். வருவதாக உரைத்துச் சென்றகாலத்தும் அவன் வந்திலன். அதனால் வாடி நலிந்தள் தலைவி. அவள் வாட்டங்கண்டு கவலையுற்றுச் சோர்ந்தாள் தோழி. ஒரு நாள், அவன் வரைவொடும் வருகின்றான். தோழியின் கண்களிலே மகிழ்ச்சி எழுந்து கூத்தாடுகின்றது. தலைவியை நோக்கிப் போகின்றாள். தலைவி தோழியின் மகிழ்ச்சிக்குக் காரணம் யாதென்று வினவ, அவள் விடையளிப்பதாக அமைந்த செய்யுள் இது.)
புன்னை நுண்டா துறைத்தரு நெய்தல்
பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென
நல்ல வாயின தோழி என் கண்ணே!
தெளிவுரை: தோழி! புன்னையின் நுண்மையான பூந்துகள் படிந்து கிடக்கும் நெய்தல் மலர்கள், பொன்னிடைப் படுத்த நீலமணிகள்போல அழகுடன் காணப்படுகின்ற, மெல்லிய கடற்றுறைக்குரியோனும், வரைவின் பொருட்டு நம்மில்லத்தே வந்தனனாக, என் கண்களும், அதனைக் கண்டதனாலே பெரிதும் நல்லழுகுற்றனவாயின!
கருத்து: 'தலைவன் வந்தனன் தளர்வு தீர்வாய்' என்றதாம்.
சொற்பொருள்: உறைத்தரும் - உதிர்ந்து கிடக்கும். பொன்படு மணி - பொன்னிடைப் பொருத்திய நீலமணி. பொற்ப - அழகுபெற.
விளக்கம்: புன்னை மலரும் காலம் நெய்தற் பாங்கினர் மண விழாக் கொள்ளும் நற்காலமாதலின், அதனைச் சுட்டிக் கூறினளாகவும் கொள்க. புலம்பன் வந்தெனக் கண் நல்ல வாயின என்றதால், அதுகாறும் வராமை நோக்கி, வழி நோக்கிச் சோர்ந்து அழகழிந்தன என்றதும் கொள்க.
உள்ளுறை: 'புன்னை நுண்தாது உறைத்தரும் நெய்தல் பொன்படு மணியின் தோன்றும்' என்றது, நின் குடிப்பிறப்பு அவனோடு நிகழ்த்துகின்ற இல்லறமாண்பால், மேலும் சிறந்து புகழ்பெற்று விளங்கப் போகின்றது என்று உள்ளுறுத்து வாழ்த்தியதாம்.
புலம்பன் வந்தது கண்டதாலே இனி என் கண்கள் நல்லவாயின; நீயும் நின் துயர்தீர்ந்து களிப்பாய் என்றதாம்.
190. உண்கண் பனி செய்தோள்!
துறை: தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
(து.வி.: தலைவிக்கு வேற்றிடத்தில் மணம் புணர்ப்பது பற்றிப் பெற்றோர் பேச்சு நடத்துதல் அறிந்த தோழி, செவிலித் தாயிடம் தலைவியின் களவொழுக்கம் பற்றிக் கூறி, அவளை அவனுக்கே மணமுடிக்கக் கேட்பதாக அமைந்த செய்யுள் இது.)
தண்ணறும் நெய்தல் தளையவிழ் வான்பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம் புலம்பன் மன்ற - எம்
பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே!
தெளிவுரை: பலவான இதழ்கள் கொண்ட பூப் போலும் மையுண்ட எம் கண்கள் வருந்தி நீர் துளிர்க்கச் செய்தவன் - வெள்ளை நெல்லை அரிகின்ற உழவர்கள், குளிர்ச்சியும் நறுமணமும் கொண்ட நெய்தலின் கட்டவிழும் பெரிய பூக்களைத், தம் வாள் முனைப்பட்டுச் சிதையாதபடி அயலே ஒதுக்கிவிட்டு, நெற்கதிரை மட்டுமே அறுக்கின்ற, மெல்லினத் தலைவனே ஆவான்.
கருத்து: 'அவனே தலைவியை மணவாட்டியாக அடைதற்குரியவன்' என்றதாம்.
சொற்பொருள்: தளை - பிணி; கட்டு; முகையாக விருக்கும்போது ஒன்றாகப் பிணிபட்டிருந்த இதழ்கள், மலரும்போது கட்டவிழ்ந்த தனித்தனியாக விரிந்து அலர்கின்றதைத் 'தளையவிழ்' என்பர். இவ்வாறே 'ஐம்புலக் கட்டாற் குவிந்து கிடக்கும் மனம் குருஞானத் தெளிவால் மலர்தலையும்' தலையவிழ்தல் என்றே சொல்வர். வான்பூ - பெரிய பூ மாற்றினர் - ஒதுக்கித் தள்ளினராக. பனி செய்தல் - நீர்வாரத் துயரிழைத்தல்.
விளக்கம்: நெய்தல் கழியிடத்து மட்டுமன்றி, நெய்தல் நிலத்தின் விளைவயல்களிலும் செழித்துப் பூத்துக் கிடக்கும் என்பதும், நெல்லறிவார் அதனைத் தம் கருணையினாலே ஒதுக்கி ஒதுக்கி, நெல்லை மட்டுமே அறுப்பார் என்பதும் கூறினள். தலைவியின் உறுப்பைத் தனது போலக் கொண்டு கூறியது இது; இப்படித் கூறுதலும் உரிமை பற்று உளவாதலை, 'எம்மென வரூஉம் கிழமைத் தோற்றம் அல்லவாயினும் புல்லுவ உளவே' - (தொல். பொருள், 221) என்னும் தெய்வம் அணங்கிற்றெனத் தாயர் வெறியாடற்கு முனையும்போது, தோழி இவ்வாறு வெறிவிலக்கிக் கூறுதாகவும் கொள்ளலாம்.
எம் கண் பனி செய்தோனாயினும், அவனே எமக்கு இனி நலன் செய்வோன் ஆவன் என்ற கற்புச் செவ்வியும் உணர்த்திக் கூறினளாகக் கொள்க.
உள்ளுறை: நெல்லறிவோர் தமக்குப் பயனாகும் நெல்லை மட்டும் ஆராய்ந்து, அழகும் தண்மையுமுடைய நெய்தலை ஒதுக்கி விடுவதே போலத், தலைவனும் மனையறத்திற்கேற்ற பண்பு நலம் உடையாளாகத் தேர்ந்த தலைவியையே மணக்கும் உறுதி பூண்டவன், பிறபிற அழகு மகளிரை நாடாதே உதுக்கியவன் என்பதும் உள்ளுறையாற் பெறவைத்தனள். இதனால், அன்னையும் அவன் அன்புச் செறிவை மதித்து ஏற்பள் என்பதாம்.
10. வளைப் பத்து
'வளை' சிறப்பாகச் சங்குக்கே வழங்கப் பெறும் பெயராகும். சங்கறுத்து வளைகள் செய்வது அந்நாளிலும் மிகப் பெரிய கைவினைத் தொழிலாகவே விளங்கியிருக்கின்றது. 'சங்கறுப்போர்' என்றே சிலர் தம் குலத்தைக் குறிப்பதனையும் இலக்கியங்களிற் காண்கின்றோம்.
நெய்தல் மகளிரே அல்லாமல், பிற நானில மகளிரும் சங்கு வளையல்களை விரும்பி வாங்கி அணிந்திருக்கின்றனர். 'வளை' என்னும் சங்கின் பெயரே, பிற எவ்வாற்றானும் செய்தணியும் கையணிகளையும் குறிப்பதால், இதுவே முற்காலத்தில் பெருவழக்கிலிருந்த அணியென்பதனைக் காட்டும்.
'வலம்புரி வான்கோடு நரலும்' என வரும் நற்றிணைத் தொடரால், வலம்புரி இடம்புரி எனச் சங்குகள் சுழித்திருத்தலாற் பெயரிடும் பழைய மரபையும் அறியலாம். எல்லா வகையான விழாக்காலத் தொடக்கத்தும், மற்றும் சிறப்பான சமயங்களிலும், சங்கை உரத்து முழக்குதல் மங்கல வழக்காக அன்றும் விளங்கிற்று; இன்றும் பல பகுதிகளில் விளங்குகின்றது. ஒவ்வொருவரும் முழங்கும் சங்கோசையின் தனித் தன்மை பற்றிய செய்திகளும் வரலாற்றுள் காணப்படுகின்றன. அம்முழக்கே அவர் வரவை முன்னதாக உணர்த்தும் அறிகுறியாகவும் கொள்ளப்பெற்றது. போர் முகத்தில் எழும் இச்சங்கோசைகள் பற்றிய சிறப்பினை மகாபாரதக் கதையுள்ளே காணலாம்.
தெய்வங்களுக்கு வழிபாடற்றும்போது முழக்கவும், நீர் முகந்து நீராட்டவும் சங்குகளே சிறப்பாகப் பயன்படுத்தப் பெற்று வருகின்றன. மாசுபடராமை பற்றிய சிறப்பும் தூய வெண்மையாம் தகைமையும் சங்கினைத் தேர்ந்து வழி பாட்டுக்கு உதவியாகக் கொண்டதற்குக் காரணமாகலாம்.
பெண்கள் வளையணிதல் இயல்பாதலோடு, அது கழன்று வீழாமற் படிக்குச் செறிவாகவும் பார்த்து அணிவார்கள். இதனால், தலைவியர் பிரிவுத் துயரால் வருந்தி மெலியும்போது வளை நெகிழ்தலும் கழல்தலும் நிகழ்பவாயின. இதுபிறரும் அவர் உளத்துயரை அறியுமாறும் செய்தன. ஆகவே, காதல் வாழ்வில் உடனுறை காலத்தே செறிதலும் பிரிந்துறை காலத்தே நெகிழ்தலும் இயல்பாக, இலக்கியங்களினும் இவற்றைக் குறித்து நயம்படப் புலவர்கள் பலவும் காட்டி உரைப்பாராயினர்.
இவ்வாறு, செய்யுள் தோறும் வளையாகிய காதற் கருப்பொருள் சிறந்துவர அமைந்த பத்துச் செய்யுட்களைக் கொண்ட பகுதியாதலால், இதனை 'வளைப்பத்து' என்றனர். வளையொலியே அடையாளம் காட்டி அகத்தே அவளை நிரப்பித்தலும் காதற்றலைவனிடத்தே உளதாம் அக நெகிழ்ச்சியாகும்.
191. நெஞ்சம் கொண்டு ஒளிந்தோள்!
துறை: 'நின்னாற் காணப்பட்டவள் எவ்விடத்து, எத்தன்மையள்?' என்று வினாவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது.
(து.வி.: தலைவனின் காதலை முதன்முதலில் ஏற்காது தடுத்துப் பலவுரைத்தும், அவன் அதனையே பிடிவாதமாகப் போற்றி நிற்கப், பாங்கன், அவன் உளங்கொண்டாளைப் பற்றிய விவரங்களை வினாவுகின்றான். அவனுக்குத் தலைவன் அவளைப் பற்றி உரைப்பதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
கடற்கோடு செறிந்த வளையார் முன்கைக்
கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல்
கானல் ஞாழற் கவின்பெறு தழையள்
வரையர மகளிரின் அரியள் என்
நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே!
தெளிவுரை: கடற்சங்காலாயின செறிந்த வளைகள் விளங்கும் முன்னங் கைகளையும், கழிப்பூக்களால் தொடுக்கப்பெற்ற மாலை விளங்கும் கரிய பலவான கூந்தலையும், கானலிடத்து ஞாழலின் அழகிய தழையாலாயின தழையுடையினையும் கொண்டவளாகவும், வரையிடத்துச் சூரர மகளிரினுங் காட்டில் அரிய வனப்புடையவளாகவும் விளங்குபவளே, நிறையுடைமையால் கட்டுக்கு உட்படுத்த இயலாதே சிதைந்து தளர்வுற்ற என் நெஞ்சத்தினைக் கைப்பற்றிக் கொண்டு, மறைந்து போயினவள் ஆவாள்!
கருத்து: 'அவளை அடைந்தாலன்றி யான் இனிக் கணமும் உயிர் வாழேன்' என்றதாம்.
சொற்பொருள்: கோடு செறிந்த வளை - சங்கை யறுத்துச் செய்யப் பெற்ற செறிவான வளைகள். கழிப்பூ - கழியிலுள்ள பூ; நீலமும் நெய்தலும். கவின் - அழகு. வரையர மகளிர் - மலையிடத்தே வாழும் தேவமகளிர். நிறையரு நெஞ்சம் - ஒன்றைச் சார்ந்து நிறுத்தல், அரிய உள்ளம்; பலவாகச் சிதறிப் போகும் மனம்.
விளக்கம்: முன்கை, கூந்தல், தழையுடை ஆகியவற்றை வியந்து கூறியதனால், தான் அவளோடும் இயற்கைப் புணர்ச்சி பெற்று மகிழ்ந்ததையும் குறிப்பாற் கூறினான்; மீண்டும் அவளை அடையாது வறிதே அலைந்தேங்கி வருந்துவான், 'அது வரையர மகளிரின் மாயமா?' என்றும் கூறினான், அவளை அவரினும் சிறந்தாள் என்றும் மயங்கினான். 'சூரர மகளிரின் பெறற்கரியோள்' என்று அகத்தும் வரும் - (அகம், 162). 'நிறையரு நெஞ்சம் கொண்டு ஒளித்தாள்' என்றது, அவள்பால் சென்ற தன் நெஞ்சம் தன்பால் மீளாவகை தகைத்துத் தன்பாலேயே நிறுத்திக் கொண்டாள் எனப் புலம்பியதாம். இயற்கைப் புணர்ச்சி பெற்றுக் களித்தவன், பின் பிரிந்து ஆயத்தோடு செல்வாளின் பின்னே தன் உளத்தைப் போகவிட்டு? அவளை நினைந்தானாய்ப் புலம்பியது இதுவென்க. இது கேட்கும் பாங்கன், அவளைத் தான் சென்று கண்டு, தலைவனோடு மீளவும் கூட்டுவிக்க முயல்வான் என்பதாம்.
192. வீங்கின விளையே!
துறை: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள்போலத் தன் மெலிவு நீங்கினமை தோழிக்குச் சொல்லியது.
(து.வி.: வரைவை இடைவைத்துப் பிரிந்து போயிருந்த தலைவன் வரைவொடும் வந்தானாகத், தோழி மகிழ்வோடு தலைவியைப் பாராட்டும் பொருட்டுச் செல்கின்றான். அப்போது தலைவி, தான் பிரிவுக் காலத்தே கொண்ட மெலிவையும், அது தான் இப்போதும் நீங்கியதையும், தோழிக்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.)
கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழங்கப்
பாடிமிழ் பனித்துறை ஓடுகலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன
வீங்கின மாதோ - தோழி, என் வளையே!
தெளிவுரை: தோழி, சங்கினம் கரையிடத்தே போந்து உலவவும், கடலிடத்தே அலைகள் எழுந்து முழங்கவும், ஒலித்தலையுடைய குளிர்ந்த துறைக்கண்ணே ஓடுதற்குரிய கலங்களை நீரிடத்தே செலுத்தும் துறைவன் பிரிந்தான் என்பதாலே, நெகிழ்ந்து போயின என் கைவளைகள், இது போது அவனும் வந்தானாக, கையிற் கிணந்து வீங்கினவே! இதனைக் காண்பாயாக!
கருத்து: 'இனி என் நலிவும் தீர்ந்தது' என்றதாம்.
சொற்பொருள்: கோடு - சங்கு. புலம் - கடற்கரைப் பகுதி நிலம். கொட்ப - சுழல. உகைக்கும் - செலுத்தும்.
விளக்கம்: தலைவன் பிரிந்தான் என நீங்கிய வளைகள், அவன் வந்தானென அறியவே செறிவுற்று வீங்கின என்பாள், தன் மகிழ்ச்சியை வளைமேலேற்றிக் கூறினளாம்.
உள்ளுறை: கோடு நொதுமலராகவும், கடல் சுற்றத் தாராகவும், துறை அயலாராகவும், கலம் தலைவன் தேராகவும் உள்ளுறுத்து உரைத்ததாகவும் கொள்க. தலைவனின் தேர் வரவால், அயற்பெண்டிரான அவர்தம் ஆரவாரப் போக்கெல்லாம் அடங்கித், தான் மன நிம்மதியுற்றமை நினைந்து இவ்வாறு தலைவி உரைத்தனள் என்க.
193. தந்த வளை நல்லவோ?
துறை: வரையாது வந்தொழுகும் தலைமகன், தலை மகட்கு வளை கொண்டு வந்து கொடுத்துழி, 'பண்டை வளைகளைப் போலாவாய் மெலிந்துழி நீங்கா நலனுடையவோ இவை' எனத் தலைமகள் மெலிவு சொல்லித் தோழி வரைவு கடாயது.
(து.வி.: தலைவி வரைந்து மணந்து வாழ்தலையே உளத்தில் மிகவும் விரும்பினாலும், களவுறவின் களிப்பிலேயே தலைவனின் மனஞ்செல்ல, அவன் களவையே நாடி வரகின்றான். அப்படி வருபவன், ஒரு சமயம், சில வளைகளையும் தலைவிக்குத் தன் பரிசாகத் தருகின்றான். அவன் தன்னூர் மீளும்போது இடைமறித்த தோழி, அவனை விரைவில் வரைந்துவரத் தூண்டுவாளாகச் சொல்லியது இது.)
வலம்புரி உழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துறைகெழு கொண்க! நீ தந்த
அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே!
தெளிவுரை: வலம்புரிச் சங்குகள் அங்குமிங்குமாக ஊர்ந்து போதலாலே உழப் பெற்ற நெடிய மணல் பரந்த அடை கரையிடத்தே, விளங்கும் கதிர்களையுடைய முத்தங்கள் இரவின் இருள் நீங்குமாறு இமைத்தபடியே விளங்கும் துறை பொருந்திய தலைவனே! நீ தந்த, முழங்கும் கடற்பிறந்த இவ்வெள்வளைகள் தாமும் நல்லவை தாமோ?
கருத்து: 'பிரிவின்கண் நெகிழ்ந்தும் வரவின்கண் செறிந்தும் நிலைமாறிப் போகாதே, என்றும் ஒரேபோலச் செறிந்திருந்து அழகு செய்வனவோ?' என்றதாம்.
சொற்பொருள்: வலம்புரி - வலமாகச் சுழித்த சங்குகள். வார்மணல் - நெடுகப் பரந்து கிடக்கும் மணல். அடைகரை - கடலலை மோதியலைக்கழிக்கும் முன்கரை. இலங்குகதிர் முத்தம் - கதிரிடும் ஒளிவிளங்கும் நன்முத்தம். இமைக்கும் - விட்டுவிட்டு ஒளிரும். அறைபுனல் - முழங்கும் நீர்; கடல்.
விளக்கம்: 'வளை தாமே நல்லவோ?' என்றது, அவை என்றும் ஒரே நலமுடைத்தாய் விளங்குதற் பொருட்டு நீதான் இவளை விரைவிலேயே மணந்து கொண்டு, என்றும் பிரியாத இல்லறவாழ்வில் திளைப்பாயாக என்றதாம்.
உள்ளுறை: 'வலம்புரி உழுத வார்மணல் அடைகரை இருள்கெட முத்தம் இமைக்கும்' என்றது, அலர் பேசும் பெண்டிரின் வம்புப் பேச்சாலே தலைவியின் இல்லத்தார் அடைந்துள்ள மனமயக்கம் நீங்குமாறு, நின் வரைவொடு வருதல் நல்லொளி நிறைப்பதாகும் என்றதாம். இவள் மேனியும் நல்லொளி பெறும்; பெற்றோரும் பெருமகிழ்வு கொள்வர் என்க.
குறிப்பு: 'முத்தம் இருள்கெட இமைக்கும்' என்றது இரவுக்குறி எனக் காட்டிற்று.
194. கடுத்தனள் அன்னை!
துறை: பகற் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு, மனைக்கண் நிகழ்ந்தது கூறிச் செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.
(து.வி.: பகற்குறியிடத்தே தலைவியைச் சந்தித்ததற்கு வந்துபோகும் தலைவனை, இடையே தடுத்து நிறுத்தித் தோழி வீட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றைக் கூறி, 'இனித் தலைவி இற்செறிப்படைவாள்; அவளை விரைய வந்து மணந்து கொள்வாயாக' என்று அறிவுறுத்தியதாக அமைந்த செய்யுள் இது.)
கடற்கோ டறுத்த, அரம்போழ் அவ்வளை
ஒண்டொடி மடவரற் கண்டிகும் கொண்க
நன்னுதல் இன்றுமாஅல் செய்தெனக்
கொன்னொன்று கடுத்தனள் அன்னை; அது நிலையே
தெளிவுரை: கொண்கனே! கடற்சங்கினை அறுத்து அரத்தால் போழ்ந்து செய்யப்பெற்ற அழகான வளைகளையும், ஒளிகொண்ட தொடியினையும் உடையாளான, மடப்பம் பொருந்திய இத்தலைமகளை நன்று காண்பாயாக. இன்று, இவளின் நல்ல நெற்றியானது ஒளி மழுங்கிற்றாக, அதற்குக் காரணம் யாதேனும் ஒன்று உண்டெனக்கொண்டு அன்பையும் இவளை ஐயுற்றனள். இதுதான் எம் மனைக்கண் இப்போது உள்ள நிலைமையாகும்.
சொற்பொருள்: கோடு - சங்கு. அவ்வளை - அழகிய வளை. நொடி - தோள்வளை; தொட்டுக் கிடப்பது தொடியாயிற்று. மடவரல் - மடப்பம் வருதலையுடையவள்; தலைவி. மாஅல் செய்தல் - கருமை படர்தல். கடுத்தனள் - ஐயுற்றனள். அன்னை - நற்றாய்; செவிலித்தாயும் ஆம்.
விளக்கம்: நுதல் ஒளிகுன்றிக் கறுத்து வேறுபட்டது, தலைவன் இரவின் கண்ணே வந்துபோகும் வழியது கடுமையும் தீமையும் நினைத்து அஞ்சியும், அவன் பிரிவைப் பொறாதே வருந்தியும் உள்ளம் அலைந்து வேறுபட்டதனால் என்க. அதனைக் கண்டதும் அன்னை, இவள் களவுறவு கொண்டாள் போலும் என ஐயுற்றனள். ஆகவே, இனி இற்செறிப்புச் செய்வாள்; இவளை நீ விரைந்துவந்து மணந்து கொள்ளலே, இனி, நீ மேற்கொள்ளத் தக்கது என்கின்றனள் தோழி.
'வளை', 'தொடி' காண்க என்றது, அவை நெகிழ்ந்தல் நோக்கி, இவள்படும் வேதனையைக் காண்க என்பதாம். இவையன்றி, இவள் என்றும் நலனோடு திகழ, மணந்து பிரியாதே கூடி நிலையாக இன்புறுத்தலே நன்று என்பதும் ஆம். மால் செய்ததென - புதிய நறுநாற்றத்தால் மயக்கம் செய்தது என்று என்பதும் ஆம். புணர்ச்சி பெற்றார் உடலிலேயிருந்து மாம்பூவின் நறுமணம் கமழும் என்பது கருதிக் கூறியதும் இதுவாம்.
195. பாயல் வௌவியோள்!
துறை: வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் தனித்து உறைய ஆற்றானாய்ச் சொல்லியது.
(து.வி.: வரைவு இடைவைத்துத் தலைவியைப் பிரிந்து போய் வேற்று நாட்டைத் தனியாக வாழ்கின்றான் தலைவன். தனிமைத் துயரத்தைத் தாங்காதவனாக, அவன் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
வளைபடு முத்தம் பரதவர் பகரும்
கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்
கெடலருந் துயரம் நல்கிப்
படலின் பாயல் வௌவி யோளே.
தெளிவுரை: சங்கிடத்தே பிறக்கும் முத்துக்களைப் பிற புலத்தாருக்கு விலை கூறி விற்கும் தொழிலோரான பரதவர்கள் வாழும், கடல் வளம் பொருந்திய கொண்கனின் அன்புமிக்க மடமகள், எனக்கு தீங்குதற்கரிய துயரத்தினைத் தந்து, கண்டுபடுதலாகிய இனிய பாயலின் பத்தையும் என்னிடமிருந்து கவர்ந்து கொண்டாளே!
கருத்து: ''அவளை உரிய பொருளோடு சென்று வரைந்து விரைவில் மணந்து கொள்ளல் வேண்டும்'' என்றதாம்.
சொற்பொருள்: வளைபடு முத்தம் - வளையிடத்தே பிறக்கும் முத்தம். பகரும் - விலைகூறி விற்கும். கெடலரும் துயரம் - நீங்குதற்கரிதான துன்பம். படல் - கண்படல். பாயல் - தூக்கம். பாயல் வௌவுதல் - உறக்கத்தை வாராதே செய்தல்.
விளக்கம்: 'பகர்தல்' ஏனைய பொருள்களைப் பெறக் கருதி; ஆகவே, ஏனை நிலத்தாரிடம் சென்று விலைகூறல் என்று கொள்க. மற்றையார் மிக விரும்பும் வளைபடு முத்தினை அவர் தாம் தமக்கெனப் பேணி வைக்க நினையாதே விலைபகர்தல், அது அவர்க்கு என்றும் கிடைக்கும் மலிவான பொருளாகவும், பிறர் அவர் மூலம் பெறக்கூடிய அரும் பொருளாகவும் இருப்பதால். பொருள்மேல் மனம் செல்லப் பிரிந்து போயினபோதும், தொடர்ந்து அங்கும் சென்று வருத்தும் தன்மைத்து அவள் காதல் நினைவு என்றதாம். 'கெடலரும் துயரம்' என்று அவன் அத்துயராலே நெடிது மனம் வாடிக் கூறுகின்றான்.
உள்ளுறை: 'வளைபடு முத்தம் பரதவர் பகரும் கடல்கெழு கொண்கன் காதன் மடமகள்' என்றது, அவன் விரும்பியவரை பொருளைத் தந்தால், அவனும் அவளை எனக்கு மணஞ் செய்து தந்து விடுவான்; அஃது உடனே இயலாமையிலே யானும் இவ்வாறு பொருள்தேடித் தனித்துவந்து வாடி வருந்துகின்றேன் என்று நினைந்து, உளம் வருந்தியதாகவும் கொள்க.
வளைபடு முத்தமாகிய பெறற்கரிய ஒன்றையே விலைபகரும் பரதவர் ஆதலின், அவர் மகட்கும், அவர் விரும்பும் முலைவிலையான வரைபொருளைப் பெறுவதிலேயே நாட்டம் உடையவர் என்றதுமாம்.
மேற்கோள்: வரைவிடை வைத்துப் பிரிந்தோன் தனிமைக்கு வருந்தியது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 45).
196. வரைந்தனை கொண்மோ!
துறை: குறை மறுக்கப்பட்ட தலைமகன், பின்னும் குறை வேண்டியவழித் தோழி சொல்லியது.
(து.வி.: தன் குறை கூறித் தனக்கு உதவுமாறு தோழியைத் தலைவன் வேண்ட, அவள் அவன் களவுறவுக்குத் தான் உதவ இயலாதென மறுத்து விடுகின்றாள். மீண்டும் அவன் அவளிடம் வந்து குறைதீர்க்க வேண்டும்போது, 'இவளை வரைந்துவந்து மணந்து இன்புறுவாயாக' என்று, அவள் அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தெண்கழிச் சேயிறாப் படூஉம்
தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ!
தெளிவுரை: சங்கை அறுத்துச் செய்த ஒளியுடைய வளைவினையும், கொழுவிய பலவான கூந்தலையும், பொருத்தம் ஆய்ந்து அணிந்த தோளின் தொடியினையும் உடைய மடவரலான அவளை அடைதற்கு விரும்புகின்றனையானால், தெளிந்த நீருள்ள கழியிடத்தே சிறந்த இறா மீன்கள் அகப்படும் குளிர்ந்த கடல் நிலச் சேர்ப்பனே! இவளை வரைவொடு வந்தனையாகி மணங்கொள்ளுலை உடனே செய்வாயாக!
கருத்து: 'களவிலே அவளை அடைதல் நின்னால் இயலாது' என்றதாம்.
சொற்பொருள்: கொழும்பல் கூந்தல் - கொழுமையான பலவாகிய கூந்தல். பல கூந்தல் - பலவாக முடிக்கப்படும் கூந்தல். 'கொழுமணிக் கூந்தல்' என்பதும் பாடம். படூஉம் - அகப்படும். சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன். கோடு - சங்கு. தொடி - தோளணி. மடவரல் - மடப்பம் நிரம்பியவள்.
விளக்கம்: தலைவியின் களவுத் தொடர்பை அறிவாளாயினும், அதனை நீடிக்க விடுதலை விரும்பாத தோழி, உலகத்தார் வரைந்து வந்து பெண்கொள்ளுமாறு போல, நீயும் முறைப்படி வந்து பெண் கேட்டுத், தமர் உவந்துதர மணத்தாற் பெறுக என்கின்றனள்.
உள்ளுறை: 'தெண்கழிச் சேயிறாப் படூஉம் சேர்ப்ப' என்றது, அவ்வாறே நீயும் முயன்று வரைந்துவரின் இவளை அடைந்தனையாய்க் களிப்பாய் என்றதாம்.
மேற்கோள்: 'உலகத்தார் மகட்கொள்ளுமாறு கொள்' எனக் கூறுதல், எனக் காட்டுவர் இளம்பூரணர் - (களவு, 24). முன்னுறு புணர்ச்சி அறியாள்போல் கரந்த தோழி உலகத்தாரைப் போல வரைந்து கொள் எனக் கூறித் தலைவனை நீக்கியதெனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (களவு, 23). 'பாங்கி உலகியலுரைத்தல்' என்று நம்பியகப் பொருள் உரைகாரர் கொள்வர் (நம்பி. களவு, 28).
197. நலம் கேழாக நல்குவள்!
துறை: தலைமகள் இடந்தலைப்பாட்டின் கண் தலைவியது நிலைமை கண்டு சொல்லியது.
(து.வி.: களவுக் கூட்டத்திற்குக் குறித்த இடத்திலே வந்த தலைவி, தலைமகனை அடைந்து மகிழ்தற்குத் தன் நாணமும் அச்சமும் தன்னைத் தடை செய்ய, செயலற்று நினைற நிலையைக் கண்டு வியந்த தலைவன், தனக்குள்ளே சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை கதுப்பினள் இறைஞ்சிநின் றோளே
புலம்புகொள் மாலை மறைய
நலம்கே ழாக நல்குவள் எனக்கே!
தெளிவுரை: ஒளி விளக்குகின்ற வளைகள் ஒலிக்குமாறு அலவனை அலைத்து விளையாடியபடியும், முகத்தை மறைக்கும் கூந்தலுடையாளாகத் தலைகுனிந்தும் இவள் நின்றனள். தனிமை கொள்ளும் மாலைப்பொழுது மறைதலும், நன்மை பொருந்திய தன் மார்பினையும் இவள் எனக்குத் தருவாள்!
கருத்து: 'இவள் இன்று எனக்கு நலன் தருவாள்' என்றதாம்.
சொற்பொருள்: தெளிர்ப்ப - ஒலிக்க. அலவன் = நண்டு. அலைத்து - ஆட்டி விளையாடி. முகம் புதை - முகத்தை மூடி மறைக்கும். கதுப்பு - கூந்தல். புலம்பு - தனிமைத்துயரம். நலம் கேழாகம் - நன்மை பொருந்திய மார்பகம்; தழுவுவார்க்கும் தழுவத்தருவார்க்கும் நலம் தருவது என்க.
விளக்கம்: தலைவனோடு கூடிக் களவுறவிலே களித்தற்கே வந்தாளேனும், இயல்பான பெண்மைப் பண்பின் செறிவு அவளார்வத்தைத் தடை செய்வதால், காதற் குறிப்பை உணரக் காட்டியபடியும், ஏதுமறியாப் பேதைச் சிறுமி போல அலவனாட்டி விளையாடியவாறும், தலைவனை எதிர்படு காலையில் கூந்தலால் தன் முகம் மறையத் தலைகுனிந்தும் நின்றனள் என்பது, அவளின் மடம் நிரம்பிய மென்மைச் செவ்வியை உணர்த்தும் இலக்கிய நல் ஓவியமாகும். புவம்புகொள மாலையிலே, அவளும் அவனுறவை விரும்பி வேட்பினும், அயலாரும் ஆயமகளிரும் கண்டு அலரெழல் நேருமென அஞ்சினளாதலால், மாலை மறைந்து இருள் படரும் போதில், அவள் தன்னை அணைத்திட இசைவாள் என்று தலைவனு கூறுவது, அவளுள்ளம் உணர்ந்து காட்டும் நயமிக்கதாகும். 'நலங்கேழ் ஆகம்' என்றது, முன்பே தான் தழுவி நலம் பெற்ற செவ்வியும், அது பெறுதல் நினைவாகவே துடித்திருக்கும் மனத்துன்பமும் தோன்றக் கூறியதுமாகும். இவற்றால், ஆயத்தாரின் ஆடல்களோடு தானும் கூடிக் கலவாமல் தனித்தொதுங்கி நின்ற தலைவி நிலையும் விளங்கும். நெய்தற்கண் புணர்ச்சி பற்றிக் கூறியதனால், இதனைத் 'திணை மயக்கம்' என்று கொள்ளல் வேண்டும்.
வளை தெளிர்ப்ப அலவனாட்டியது தான் வந்தது உணர்த்தியது; முகம் புதைத்தனளாக இறைஞ்சி நின்றது நாணித்தலை கவிழ்ந்தது.
மேற்கோள்: ''இடந்தலைப் பாட்டில் தலைவி நிலை கண்டு கூறியது; என்று எடுத்துக்காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். அகம் 12). 'தலைவன் இவ்விடத்து இவ்வியற்று என்றல்' என்பர் நம்பியகப் பொருள் உரைகாரர் - (களவு - 21).
பாடபேதம்: 'ஆயத்து நின்றோளே' - இது இன்னும் சிறப்புடையதாகும். ஆயமகளிர் சூழ நிற்பவள் இவ்வாறு தலைவனுக்குக் காதற்குறிப்புக் காட்டினள் என்பது இதன் பொருள் நிலையாகும்.
198. நெடுந்தோள் அண்ணலைக் கண்டேன்!
துறை: பரத்தையர் மனைக்கண் பன்னாள் தங்கிப், பின்பு ஆற்றாமையே வாயிலாக வந்த தலைமகனை எதிர்ப்பட்ட தோழி, தலைமகட்குச் சொல்லியது.
(து.வி.: பலநாட்கள் பரத்தையரின் உறவிலேயே ஈடுபட்டு, அவர் வீடுகளிலேயும் தங்கியிருந்தான் தலைவன். அவர் உறவிலே இன்புறும் போதெல்லாம், சில சமயங்களில் தலைவியின் உளங்கலந்த அன்பு நெகிழ்வின் செவ்வியும், பரத்தையரின் போலியான நடிப்புணர்வும், அவனுள்ளத்தே நிழலாடுகின்றன. அவளை நினைந்து பெருகிய ஏக்கமும் எழுகின்றது. அவளை அடையாத ஆற்றாமையும் அரும்பி மிகுகின்றது. தன் மடமைக்கு நாணியும், அவளின் மாண்பினை நம்பியும், தன் வீடு நோக்கி வருகின்றான். அவனை எதிர்பட்ட தோழி வந்து, தலைமகட்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.)
வளையணி முன்கை வாலெயிற் றமர்நகை
இளைய ராடும் தளையவிழ் கானல்
குறுந்துறை வினவி நின்ற
நெடுந்தோள் அண்ணற் கண்டிகும் யாமே!
தெளிவுரை: வளைகள் அணி செய்திருக்கும் முன்னங் கையினையும், வெண்பற்களிடையே தோன்றும் விருப்பூட்டும் இளநகையினையும் கொண்டோரான இளமகளிர்கள், விளையாடியிருக்கும் முறுக்கவிழ்கின்ற மலர்களையுடைய கான்றஃ சோலையிடத்தே, 'குறுந்துறை எவ்விடத்ததோ?' என்று நம்மை அந்தாளிலே வினவியவாறு நின்ற, நெடுந்தோளினனான நம் தலைவனை, யாமும் இங்கே வரக் காண்போம். நீதான் நின்னை ஒப்பனை செய்து கொள்வாயாக!
கருத்து: 'அவனைச் சிறிது பொழுதில் இங்குக் காண்போம்'
சொற்பொருள்: 'வாலெயிறு - வெண்பற்கள். அமர்நகை - விருப்பூட்டும் இளநகை. இளையர் - இளமகளிர். தலைமுறுக்கு. கானல் - கானற்சோலை. குறுந்துறை - சிறிய துறை. அண்ணல் - தலைவன்'
விளக்கம்: 'குறுந்துறை வினவிநின்ற அண்ணல்' என்றது, முன் களவுக் காலத்தே நிகழ்ந்த அந்தமுதற்சந்திப்பின் நிகழ்ச்சியினை நினூவுபடுத்திக் கூறியதாகும். அத்துணை மகளிரிடையேயும், நின் நினைவேயாக, நின்னிடமே வந்து அறியானே போல வினவி நின்ற காதன்மைமிக்கவன். இடையே மனம் தளர்ந்து புறம்போயினும், மீளவும் நின்னையே நாடி வந்தனன் என்பது குறிப்பு. ஆகவே, அவனைச் சினந்து ஒதுக்காது, மகிழ்ந்து ஏற்று மகிழ்வித்து, இனியும், புறம்போகா வண்ணம் நின்னோடேயே பிணித்துக் கொள்க என்பதாம். நம் மெலிவு கேட்டதனால் ஏற்பட்ட இரக்கத்தால் வாராதே, தன்னுள்ளத்தெழுந்த ஆற்றாமையிலேயே அவன் வருகின்றானாதலின், அவனை இப்போது ஏற்றலே, அவனை என்றும் நீங்காதே நாம் நம்பாற் பிணித்துக் கொள்ளற்கு வழியாகும் என்பதுமாம்.
உள்ளுறை: தளையவிழ் கானலிலே, வளையணி முன்கை வாலெயிற்றமர் நகை இளையராடும் இடத்தே சென்றும், அவருள் யாரிடத்தும் மனம்போக்கி மயங்காதே, நின்னையே நாடுவானாகிக், ''புனுந்துறை யாது?'' என்றவனாகிய நெடுந்தோள் அண்ணல் என்றது, என்றும் அவன் நின்பாலேயே மாறாப் பேரன்பினன் 'என்பதனை' உள்ளுறுத்துக் காட்டிக் கூறியதாம்.
மேற்கோள்: ''தலைவன் புணர்ச்சியுண்மை அறிந்து தாழ நின்ற தோழி, தானும் குறையுற்றுத் தலைவி மாட்டுச் செல்லுதற்கண் கூற்று நிகழும்'' என, இதனைக் களவுக் காலத்து நிகழ்வாகவே எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர் - (தொல். களவு, 24).
''பாங்கியிற் கூட்டத்துள் தலைவன் இரந்து பின் நின்றமை கண்டு, தோழி மனம் நெகிழ்ந்து, தான் குறை நேர்ந்து, தலைவியிடத்தே சென்று குறை கூறுதல்'' என்று நச்சினார்க்கினியரும் இதனைக் களவுக்காலக் கூற்றாகவே கொள்வர் - (தொல். களவு, 23).
''பாங்கி இறையோற் கண்டமை கூறல்'' என நம்பியகப் பொருள் உரையும் களவுக் கூற்றாகவே கொள்ளும்.
குறிப்பு: களவுக் கூற்றாகக் கொள்ளுதலே நயம் - மிக்கதும் ஆகும். தன் களவுறவை மறைத்தொழுகிய தலைவியிடம், தான் அஃதறிந்தமை புலப்படக் கூறும் தோழி கூற்றாகவும், அல்லது தலைவன் குறையிரந்து நின்றதற்கிரங்கித் தலைவிபாற் சென்று தோழி அவளை வேண்டும் கூற்றாகவும் பொருள் கொண்டு மகிழ்க.
199. மணல் ஏறிக் காண்போம்!
துறை: தலைமகன் ஒருவழித் தணந்துழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கும் தோழி சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.
(து.வி.: தலைவன் சிறிது நாளாகத் தன்னைக் காணுதற்கு வராமையினாலே, அவன் நினைவே மிகுதியாகக் கூறுகின்ற தோழி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.)
கானல்லம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
வானுயர் நெடுமணல் ஏறி, யானாது
காண்கம் வம்மோ தோழி!
செறிவளை நெகிழ்த்தோள் எறிகடல் நாடே!
தெளிவுரை: தோழி! செறிவாகக் கையிடத்தே அமைந்து விளங்கிய நம் வளைகளை, நெகிழ்ந்து கழன்றோடச் செய்தானாகிய அத் தலைமகனது அலையெறியும் கடல் நாட்டினை, கான்றஃ பொருந்துறைக்கண்ணே, அலைகள் முழக்கத்தோடே எழுந்து வந்து அலைக்கின்றதும். வானுற உயர்ந்து கிடப்பதுமான நெடிய மணல்மேட்டின் மேலாக ஏறிநின்று நாமும் காணலாம் வருவாயாக!
கருத்து: 'அவன் நாட்டையாவது கண்டு நின் மனம் சிறிது தேறலாம்' என்றதாம்.
சொற்பொருள்: கலிதிரை திளைக்கும் - ஆர்ப்பரித்து வரும் அலைகள் மோதி அலைக்கும். வானுயர் - வானமளாவ உயர்ந்த எறிகடல் - அலையெறியும் கடல்; எறிதல் கரையிலே வந்து வந்து மோதிப் போதல்.
விளக்கம்: 'அவன் நாடு காண்போம்' என்றது, 'அவன் இன்றேனும் வருகின்றானா என்று பார்ப்போம்' என்பதைக் கருதிக் கூறியதாம். 'எறிகடல் நாடு' என்றது, 'அவ்வாறே அவனும் நம்முளத்தே எழுந்து மோதித் துயர்விளைப்பானாயினன் என்பதை நினைத்துக் கூறியதாம். 'வானுயர் நெடுமணல் ஏறிக் காண்போம்' என்றது, நன்றாகக் காணும் பொருட்டு. 'வளை நெகிழ்த்தோன்' என்றது, 'அவன் அருளற்றவனயினான்' என நொந்ததாம். 'குன்றின் தோன்றும் குவவுமணல் ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ' என வரும் நற்றிணைத் தொடரும் - (நற். 235), இவ்வாறு மகளிர் தலைவன் நாட்டைக் காண விரும்புதலைக் கூறும்.
'அவன் செயலாலே துயருறும் நம்போலவே, கலிதிரை திளைத்தலாலே வருந்தும் நெடுமணலில் ஏறிக் காண்போம்' என்றது, துயர்ப்படும் அது நம்மீது இரங்கி, நமக்கு உதவி செய்யும்' என்னும் உட்குறிப்பையும் கொண்டதாகும்.
மேற்கோள்: 'தலைவியை ஆற்றுவித்தது' இது எனக் காட்டுவர் இளம்பூரணர் - (தொல். களவு, 24).
200. நலங்கவர் பசலையை நகுவேம்!
துறை: உடன் போக்குத் துணிந்த வழி, அதற்கு இரவின் கண் தலைமகன் வந்ததறிந்த தோழி, தலைமகளைப் பாயலுணர்த்திச் சொல்லியது.
(து.வி.: தான் பிறந்து வளர்ந்த வீட்டையகன்று, தலைவனோடு உடன் போக்கிலே செல்வதற்குத் துணிந்துவிடுகின்றாள் தலைவி. இரவின் கடையாமத்தே, தலைவனும் அவள் இல்லின் ஒருபுறமாக வந்து மறைந்திருக்கின்றான். அவன் வரவறிந்த தோழி, தலைமகளைத் துயிலெழுப்பிச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.)
இலங்குவீங் கெல்வளை ஆய்நுதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே
விலங்கரி நெடுங்கண் ஞெகிழ்மதி
நலங்கவர் பசலையை நகுகம் நாமே!
தெளிவுரை: விளக்கமோடே கூடியவாய்ச் செறிவுற்றிருக்கின்ற ஒளிவளைகளை உடையவளே! நின் நுணுக்கமான நெற்றியானது அழகினை எய்தும்படியாக, பொன் தேரினையுடைய கொண்கனும், நின்னை உடன்கொண்டு போதற் பொருட்டாக, இப்போதில் நம் இல்லின் புறத்தே வந்துள்ளனன். விளங்குதலான செவ்வரி பொருந்திய நின் நீள் விழிகளை நீயும் திறப்பாயாக. நம் நலத்தைக் கவரும் பசலையை அதுதான் இனிக் கெடுதலை நோக்கி, நாமும் நகையாடி மகிழலாம்!
கருத்து: 'இனி நம்மை வாட்டும் பசலை நம்மை விட்டு அகலும்' என்றதாம்; 'துணிவோடு விரைந்து புறப்பட்டு எழுவாயாக' எனத் தூண்டியதுமாம்.
சொற்பொருள்: வீங்கு - செறிவாகப் பொருந்தியிருக்கும். 'எல்வளை' என்றது தலைவியை விளித்ததும் ஆம். ஆய் நுதல் - நுணுக்கமான அழகெல்லாம் பொருந்திய ஒளி நுதல்; என்றது, பண்டை அழகினைச் சுட்டி நினைப்பித்தது. பொலந்தேர் - பொன்மை நிறம் விளங்கும் தேர். இனியே - இவ்வேளையிலேயே. விளங்கரி - குறுக்காகப் படர்ந்திருக்கும் செவ்வரி. ஞெகிழ்மதி - மூடியுள்ள இமைகளை நெகிழ்வித்துக் கண்களைத் திறப்பாயாக; துயிர் நீத்து எழுவாயாக. நலம் கவர் - அழகைக் கவரும். நகுகம் - நகையாடுவோம்.
விளக்கம்: வரைவு நீட்டித்தலாலும், இற்செறிப்பின் கடுமையாலும், தலைவனைக் காணவியலாதே நுதல் பசப்புற்று வாடி நலனிழந்திருந்தாள் தலைவியாதலின், அஃது பிரிவில்லாதது மணவுறவுக் கூட்டத்தாலன்றித் தீராதென்பதாம். அது வாய்க்க உடன் போக்கு நினைந்தாள் ஆதலின், 'ஆய்நுதல் கவின, பசலையை நகுகம்' என்றனள். 'பொலந்தேர்க் கொண்கன்' என்றது, தமர் தடுக்க வியலாதபடி விரையச் செல்லும் தேருடனே வந்துள்ளான் என்றதாம். 'அவன் வந்தான்; நீயும் காலந் தாழ்த்தாயாய் உடனே புறப்படுக' என்பாள், 'இனியே நெடுங்கண் ஞெகிழ்மதி' என்கின்றனள். அதுகாறும் உறக்கம் பற்றாதிருந்தவள், 'உடன்போக்கிற்குத் தலைவன் இசைந்தான்' என்றதும் களிப்போடு நிம்மதியாகத் துயின்றனள் என்பதும், அவளைப் பிறர் காணாவகை அனுப்ப வேண்டுமே என்னும் கவலை மிகுதியால் தோழி துயிலற்றிருந்தனள் என்பதும் விளங்கும். உடன்போக்கு பின்சாமத்து இரவுப் போதிலேயே பெரிதும் நிகழக்கூடும் என்பதும் இதனால் அறியப்படும்.
'பசலையை நகுகம்' என்றது, 'பசலையால் ஐயுற்று, அலருரை சொல்லித் திரிந்தாரை எள்ளி நகுவோம்' என்றதாகும். கருதலாம். 'எல் வளை' என்றது, வளையைச் சுட்டி, அஃது ஒலியெழுப்பத் தாயார் வழித்துவிடல் நேராவாறு, விழிப்பாக எழுக' என்று குறிப்பாகச் சுட்டியதும் கொள்க.
பாடபேதம்: 'விலங்கரி நெடுங்கண் நெகிழ்மதி' என்பதற்குப் பதிலாக, 'நெடுங்கண் அனந்தல் தீர்மதி' எனவும் பாடம்.
மேற்கோள்: 'இதில் அனந்தல் தீர' உடன் கொண்டு போதற்கு வந்தானெனப் பாயல் உணர்த்தியது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். அகத், 39).
ஆசிரியர் அம்மூவனார் பாடியவும், புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தவுமான, நெய்தல் திணையின், ஐக்குறுநூற்றுச் செய்யுட்கள் நூறும் இதனோடே முடிந்தன.
இவற்றுள் 129, 130ஆம் செய்யுட்கள் கிடைத்தில. முதல் நான்கு பத்துக்களும் கேட்போர் பொருளாகவும், பிற ஆறும் கருப்பொருள் பொருளாகவும் அமைந்துள்ளன.
நெய்தலின் பல்வேறான தன்மைகளையும், நெய்தல் மக்களின் வாழ்வியல் ஒழுகலாறுகளையும், அவர்களுட் காதல் வயப்பட்டார் பல்வேறு நிலைகளிலே கொள்ளும் நினைவுச் சிதறல்களையும், ஒரு கருத்தை நயம்படச் சொல்லும் சொல்லின் திறத்தையும் இச்செயுட்கள் நன்கு ஓவியப்படுத்திக் காட்டுகின்றன.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |