இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


அகிலத்திரட்டு அம்மானை 1

அகிலத்திரட்டு அம்மானை (Akilathirattu Ammanai) is the primary scripture of the ஆய்வழி (Ayyavazhi) religion, which originated in South India. It is considered a divine work that narrates the history of the world, the past, present, and future, focusing especially on the incarnation of அய்யா வைகுண்டர் (Ayya Vaikundar), the principal figure of Ayyavazhi. The scripture was written by ஹரி கந்தம்பரண் (Hari Gopalan Seedar) as per the revelations given by அய்யா வைகுண்டர்.

அகிலத்திரட்டு அம்மானை - 1

அய்யா துணை

காப்பு

ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்

பாண்டவர் தமக்காய்த் தோன்றி
பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத்
தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை எழுத லுற்றேன்

சிவமே சிவமே சிவமணியே
தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ்
செய்த பவம றுத்தன்
அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா

அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே

திருமொழி சீதை யாட்குச்
சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி
உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச்
சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட
உவமையை உரைக்க லுற்றார்.

அகிலம் 1

1. நூல் சுருக்கம்

சிவமே சிவமே சிவமே சிவமணியே
தவமே தவமே தவமே தவப்பொருளே
சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில்
பாரான தெச்சணமே பரம னுறுதலத்தில்
போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து
ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து
நன்னியாய் நானூறு நாலுபத் தெட்டதினோய்
தண்ணீரால் தீர்த்த தர்மமது ஆனதையும்
செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து
வயது முகிந்தகலி மாளவந்த வாறுகளும்
முன்னாள் குறோணி முச்சூர னுடல்துணித்துப்
பின்னா ளிரணியனைப் பிளந்துஇரு கூறாக்கி
ஈரஞ்சு சென்னி இராட்சதரை யுஞ்செயித்து
வீரஞ்செய் மூர்க்கர் விடைதவிர்த் தேதுவரா
தேசாதி தேசர் சென்னிகவிழ்ந் தேபணியும்
தீசாதி யான துரியோதனன் முதலாய்
அவ்வுகத் திலுள்ள அவ்வோரை யும்வதைத்து
எவ்வுகமும் காணா(து) ஏகக்குண் டமேகி
பொல்லாத நீசன் பொருளறியா மாபாவி
கல்லாத கட்டன் கபடக்கலி யுகத்தில் 20

வம்பா லநியாயம் மாதேவர் கொண்டேகி
அம்பாரி மக்களுக்(கு) ஆக இரக்கமதாய்
அறுகரத் தோன்வாழும் ஆழிக் கரையாண்டி
நறுகரத் தோனான நாராயண மூர்த்தி
உருவெடுத்து நாமம் உலகமேழுந் தழைக்கத்
திருவெடுத்த கோலம் சிவனா ரருள்புரிய
ஈச னருள்புரிய இறையோ னருள்புரிய
மாய னருள்புரிய மாதும் அருள்புரிய
பூமாது நாமாது புவிமாது போர்மாது
நாமாது லட்சுமியும் நன்றா யருள்புரிய
சரசுபதி மாதே தண்டரள மாமணியே
அரசுக் கினிதிருத்தும் ஆத்தாளே அம்பிகையே
ஈரே ழுலகும் இரட்சித்த உத்தமியே
பாரேழு மளந்த பரமே சொரித்தாயே
பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க
மற்று நிகரொவ்வா வாய்த்த தசரதற்குச்
சேயா யுதிக்கச் செடமெடுத் ததுபோலே
மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
பிறந்து அறமேல் பெரிய தவம்புரிந்து
சிறந்த குழலாள் சீதை சிறையதுபோல் 40

இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும்
மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்
தர்ம வைத்தியமாய்த் தாரணியி லுள்ளோர்க்குக்
கர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்ததுவும்
ஏகாபுரிக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்
மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
கண்டு தொழுததுவும் கைகட்டிச்சே விப்பதுவும்
தொண்டராய்ச் சான்றோர் சூழ்ந்துநின்ற வாறுகளும்
பண்டார வேசம் பத்தினியாள் பெற்றமக்கள்
கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்
கண்டுமா பாவி கலைத்து அடித்ததுவும்
சாணா ரினத்தில் சாமிவந்தா ரென்றவரை
வீணாட்ட மாக வீறுசெய்த ஞாயமதும்
மனிதனோ சுவாமி வம்பென்று தானடித்துத்
தனுவறியாப் பாவி தடியிரும்பி லிட்டதுவும்
அன்புபார்த் தெடுத்து ஆளடிமை கொண்டதுவும்
வம்பை யழித்துயுகம், வைகுண்டந் தானாக்கி
எல்லா இடும்பும் இறையு மிகத்தவிர்த்துச்
சொல்லொன்றால் நாதன் சீமையர சாண்டதுவும்
நாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும் 60

மேலெதிரி யில்லாமல் வினையற்று ஆண்டதுவும்
இன்னாள் விவரமெல்லாம் எடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூற் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னைக்
காரணமா யெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யார மாக உள்வினைநோய் தீருமென்று
அய்யாவு மிக்கதையை அருளுகிறா ரன்போரே
பேயை யெரித்துப் புதுமைமிகச் செய்ததுவும்
ஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுவும்
சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும்
நீண்டபுகழ் தர்மம் நிறுத்தியர சாண்டதுவும்
பத்தும் பெரிய பாலருக்கா கவேண்டி
சத்தழியும் பாவி தடியிரும்பி லுமிருந்து
படுத்தின பாட்டையெல்லாம் பாலருக்கா கப்பொறுத்து
உடுத்த துணிகளைந்து ஒருதுகிலைத் தான்வருத்தித்
தேவ ஸ்திரீகளையும் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்ப்
பாவக் கலியுகத்தில் பாராத்தியங் கள்பட்டு
நாலு பிறவி நானிலத்தி லேபிறந்து
பாலுகுடித் தாண்டி பருவதத்தின் மேல்தாண்டி
நல்லோரை யெழுப்பி நாலுவரமுங் கொடுத்துப் 80

பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வானம் இடியால் மலைக ளிளகிடவும்
கானமது நாடாய்க் கண்டதுவுஞ் சூரியனும்
தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும்
ஒக்கவே நாதன் உரைக்கிறா ரன்போரே

அவையடக்கம்

அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள்முன்னே
மெய்யா யெழுதி விதிப்பேனா னென்பதெல்லாம்
ஆனை நடைகண்ட அன்றில் நடையதொக்கும்
சேனை சரிவதென்ன சிற்றெறும்பு பத்தியென்ன
குயில்கூவக் கண்டு கூகைக் குரலாமோ
மயிலாடக் கண்டு வான்கோழி யாடினதென
மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து
கடந்தை தாடேற்றும் கதைபோலே யானடியேன்
நாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்தபிரான்
மேலோன் திருக்கதையை எழுதுவே னென்றதொக்கும்
எம்பிரா னான இறையோ னருள்புரிய
தம்பிரான் சொல்லத் தமியே னெழுதுகிறேன்
எழுதுவே னென்றதெல்லாம் ஈசனருள் செயலால்
பழுதுமிக வாராமல் பரமே ஸ்வரிகாக்க

தெய்வம் பராவல்

ஈசன் மகனே இயல்வாய்வா இக்கதைக்குத் 100
தோச மகலச் சூழாமல் வல்வினைகள்
காலக் கிரகம் காமசஞ்சல மானதுவும்
வாலைக் குருவே வாரா மலேகாரும்
காரு மடியேன் கௌவை வினைதீர
வாரு மடியேன் மனதுள் குடிகொள்ளவே
தர்ம யுகமாக்கித் தாரணியை யாளுதற்குக்
கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை
சாகா திருக்கும் தர்மஅன் புள்ளோர்முன்
வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்.

அடியெடுத்தருளல்

வகுத்த பிரம்மனுக்கும் மாதா பிதாவதுக்கும்
தொகுத்த குருவதுக்கும் தோத்திரந் தோத்திரமே
தோத்திர மென்று சுவாமி தனைத்தொழுது
ராத்திரி தூக்கம் நான்வைத் திருக்கையிலே
ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்
கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்
தெய்தியிரு பத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே
சுகுதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில்
நாதனென் னருகில் நலமாக வந்திருந்து
சீதமுட னெழுப்பிச் செப்பினார் காரணத்தை
காப்பி லொருசீரு கனிவாய் மிகத்திறந்து 120

தாப்பிரிய மாகச் சாற்றினா ரெம்பெருமாள்
மகனேயிவ் வாய்மொழியை வகுக்குங் காண்டமதுக்கு
உகமோ ரறிய உரைநீ முதற்காப்பாய்
அதின்மேல் நடப்புன் உள்ளே யகமிருந்து
சரிசமனாய் நான்வகுப்பேன் தானெழுது காண்டமதை
நானுரைக்க நீயெழுதி நாடுபதி னாலறிய
யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள்முன்னே

நூற்பயன்

வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப்
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா
பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரி யாய்ப்பறைந்தோர்
கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார்
மலடியு மிக்கதையை மாவிருப்பத் தோடிளகி
தலமளந்தோ னைநாடி தான்கேட்பா ளாமாகில்
என்னாணை பார்வதியாள் எகாபரத்தின் தன்னாணை
உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா
குட்டமது கொண்டோர் குணம்வைத்துக் கேட்பாரேல்
திட்டமது சொன்னோம் தீருந் திருவாணை

தெச்சணா புதுமை

நாரா யணரும் நல்லதிருச் செந்தூரில்
பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண் டங்கிருந்து
ஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில் 140

நன்றான மாசி நாளான நாளையிலே
சான்றோர் வளரும் தாமரையூர் நற்பதியில்
மூன்றான சோதி உறைந்திருக்குந் தெச்சணத்தில்
வந்திருந்த நற்பதியின் வளமைகே ளம்மானை
மூவாதி மூவர் உறைந்திருக்குந் தெச்சணமே
தேவாதி தேவர் திருக்கூட்டந் தெச்சணமே
நாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே
அகத்தீ சுவரரும் அமர்ந்திருக்குந் தெச்சணமே
மகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே
தாணுமால் வேதன் தாமதிக்குந் தெச்சணமே
ஆணுவஞ்சேர் காளி அமர்ந்திருக்குந் தெச்சணமே
தோசமிகு கர்மம் தொலைக்கின்ற தெச்சணமே
நீச வினைதீர நீராடுந் தெச்சணமே
மாது குமரி மகிழ்ந்திருக்குந் தெச்சணமே
பாறு படவு பரிந்துநிற்குந் தெச்சணமே
ஆனைப் படைகள் அலங்கரிக்குந் தெச்சணமே
சேனைப் படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே
ஆகமக் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
பார்வதியாள் வந்து பரிந்திருந்த தெச்சணமே 160

சீர்பதியை ஈசன் செய்திருந்த தெச்சணமே
மாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே
ஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே
தெச்சணத்தின் புதுமை செப்பத் தொலையாது
அச்சமில்லாப் பூம அடவுகே ளம்மானை

கச்சணி தனத்தா ளோடு கறைமிடற் றண்ண லீசர்
பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத் தேவி
நிச்சய மான கன்னி நிறைந்திடும் பூமி யான
தெச்சாண புதுமை சொல்லிச் சீமையி னியல்புஞ் சொல்வோம்

சீமையின் இயல்பு

புன்னை மலர்க்காவில் பொறிவண் டிசைபாட
அன்ன மதுகுதித்து ஆராடுஞ் சோலைகளும்
கன்னல் கதலி கரும்பு பலாச்சுளையும்
எந்நேர மும்பெருகி இலங்கிநிற்குஞ் சோலைகளும்
எங்கெங்கும் நாதம் இடுகின்ற பேரொலியும்
பொங்கு கதிரோன் பூமேற் குடைநிழற்ற
நந்தா வனம்பூத்து நகரி மணம்வீச
செந்தா மரைபூத்துச் செலம் புமணம்வீச
அரகரா வென்று அபயமிடு மொலியும்
சிவசிவா வென்று துதிக்கின்ற பேரொலியும்
முடியு மடியுமில்லா முதலோனைப் போற்றொலியும் 180

மடியில் பணம்போட்டு மார்க்குத்தும் பேரொலியும்
முத்தாலே பாண்டி முதன்மடவா ராடொலியும்
மத்தாலே மோரு மடமடென்ற பேரொலியும்
சமுத்திரத்து முத்து தான்கரையில் சேருவதும்
குமுத்திரளாய்ப் பெண்கள் குரவை யிடுமொலியும்
சங்கீத மேளம் தானோது மாலயமும்
மங்கள கீதம் வகுக்கின்ற ஆலயமும்
காரண வேதக் கல்விமொழி ஆலயமும்
வாரணத்தின் மீதில் வரும்பவனி யாரபமும்
மாவேறி வீதி வரும்பவனி வீதிகளும்
கூரை யிலேமுத்து குலைசாய்க்கும் கன்னல்களும்
பாதையிலே பார்ப்பார்க்குப் பைம்பொன் னளிப்பாரும்
அன்னமிடுஞ் சாலைகளும் ஆலயங்கள் வைப்பாரும்
சொர்ண மளித்துச் சொகுசுபெற நிற்பாரும்
சிவனே சிவனேயென்று சிவகருத்தாய் நிற்பாரும்
தவமே பெரிதெனவே தவநிலைகள் செய்வாரும்
கோவிந்தா வென்று குருபூசை செய்வாரும்
நாவிந் தையாக நால்வேதம் பார்ப்பாரும்
மாரி பொழியும் மாதமொரு மூன்றுதரம்
ஏரி பெருகி ஏரடிக்க மள்ளரெல்லாம் 200

நாத்து நடும்புரசி நளினமிகு சொல்லொலியும்
கூத்து ஒலியும் குருபூசை தன்னொலியும்
எப்பாரெல் லாம்புகழும் ஏகா பதியதுபோல்
தப்பா தெச்சணத்தின் தன்மையீ தம்மானை

காமனை எரித்த ஈசன் கழலிணை மறவா வண்ணம்
பூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரி யான
சீமையின் குணமுஞ் சொல்லிச் சிறந்திடும் பூமி தன்னில்
நேமவர் தர்ம ஞாய நிலைதனை நிகழ்த்து வாரே

தர்மநீதம்

ஆதிப் பொருளை அனுதினமுந் தானோதி
சோதி யுடநீதம் சொல்லுவே னம்மானை
தெய்ன மனுநீதம் தேசாதி ராசநீதம்
மெய்யருந்தும் நீதம் விளம்புவே னம்மானை
ஆயிரத்து எட்டு ஆனதிருப் பதிக்கும்
வாயிதமாய்ப் பூசை வகுப்பு முடங்காது
கோயில் கிணறு குளங்கரைக ளானதையும்
தேய்வு வராதே சுற்றுமதில் கட்டிடுவார்
எளியோர் வலியோர் என்றெண்ணிமிகப் பாராமல்
களிகூர நன்றாய்க் கண்டவழக் கேயுரைப்பார்
அன்ன மடம்வைத்து ஆகங் களிகூர
எந்நேரம் பிச்சை இடுவா ரெளியோர்க்குப் 220

பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்க் களிப்பாரும்
எந்த இரவும் இருந்துபிச்சை யீவாரும்
ஆறி லொருகடமை அசையாமல் தான்வேண்டி
தேறியே சோழன் சீமையர சாண்டிருந்தான்
சிவாயநம வென்ற சிவவேத மல்லாது
கவாயமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள்
ஆறி லொருகடமை அதுதரவே மாட்டோமென்று
மாறொருவர் சொன்னால் மன்னன்மறுத் தேகேளான்
பன்னிரண் டாண்டு பரிவா யிறையிறுத்தால்
பின்னிரண் டாண்டு பொறுத்திறை தாருமென்பான்
இவ்வகையாய்ச் சோழன் இராச்சியத்தை யாண்டிருந்தான்
அவ்வகையாய்ச் சோழன் ஆண்டிருக்கும் நாளையிலே
மெய்யறிவு கொண்ட மேலாம்பதத் தெளிவோன்
தெய்வத் திருநிலைமை செப்புவே னம்மானை
இவ்வகை யாகச் சோழன் இருந்து ராச்சியத் தையாள
கவ்வைக ளில்லா வண்ணம் கலியுகம் வாழும் நாளில்
செவ்வகைத் திருவே யான திருவுளக் கிருபை கூர்ந்து
தெய்வமெய் நீதம் வந்த செய்தியைச் செலுத்து வாரே.

தெய்வ நீதம்

வாரம தில்லாமல் மன்னன் அதிசோழன் 240
நீதமாய்ப் பூமி நிறுத்தியர சாளுகையில்
கண்டு வேதாவும் கமலத் திருமகளும்
நன்று தெய்வாரும் நாரா யணருமெச்சி
அன்றந்த மாமுனிவர் அல்லோருந் தான்கூடி
சென்று சிவனார் திருப்பாதந் தெண்டனிட்டுச்
சாகா திருக்கும் சமூலத் திருப்பொருளே
ஏகா பரனே எங்கும் நிறைந்தோனே
மூலப் பொருளே முதற்பொருளே காரணரே
சாலப் பொருளே தவத்தோ ரரும்பொருளே
நாரணரும் வேதா நாடிப் பொரும்போரில்
காரணரே நீரும் கனல்கம்ப மானோரே
ஆலமு தருந்தி அரவை மிகவுரித்துக்
கோலத் திருக்கழுத்தில் கோர்வையா யிட்டோனே
ஆனைதனை யுரித்து அங்கமெல் லாம்புனைந்து
மானேந்திய கரனே மழுவேந்திய சிவனே
கோனேந்திர கிரியில் குடியிருக் குங்கோவே
தானே யிருக்கும் தவமே தவப்பொருளே
ஆதியாய் நின்ற அதியத் திருமுதலே
சோதியே சோழன் சொல்நெறியைக் கேளுமையா
வாடிவந்த பச்சினுக்கு வாளா லவனுடம்பைத்
தேடிவந்த வேடனுக்குத் துடையரிந் தீந்தவன்காண் 260

ஆறி லொருகடமை அவன்வேண்டிட் டானெனவே
மாறி யவன்புவியோர் மனதிற்கௌ வைகளில்லை
கோவில் சிவாலயங்கள் குளங்கூபம் வாவிகளும்
சேவித் தனுதினமும் செய்வானே தானதர்மம்
ஆதலால் சோழன் அரசாளுஞ் சீமையிலே
நீதமாய்த் தெய்வம் நிலைநிறுத்த வேணுமையா
என்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே
கன்றிருந்த ஈசர் கரியமா லோடுரைப்பார்
நல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க
வல்லவனே பூமா தேவி தனைவருத்தும்
வருணன் தனையழைநீ மாதமும் மாரிபெய்ய
கருணைக் குடைவிரிக்க கங்குல் தனையழையும்
வாசி யதுபூவாய் வழங்க வரவழையும்
தோசி மறலியையும் சொல்லி விலக்கிடுநீ
குருபூசை செய்யும் கூட்டமதிற் சிவமாய்
திருவீற் றிருக்கச் செய்திடுநீ கோலமது
நித்திரா தேவி நித்தமந்தப் பூமியிலே
மத்திபமாய்க் காக்க வையென்றா ரீசுரரும்
நினைத்தோர்க் குறுதி நினைவிலறி வுதோன்ற
எனைத்தோத் திரங்கள் இகழாமல் வையுமென்றார் 280

பன்றியோ டேகடுவாய் பண்புற் றிருந்திடவும்
அன்றிலோ டேகுயிலும் அன்புற் றிருந்திடவும்
கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும்
வாரி குளம்போல் வரம்பிலே நின்றிடவும்
இட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும்
பட்டியும் முயலும் பண்புற் றிருந்திடவும்
பசுவும் புலியுமொரு பக்கம்நீ ருண்டிடவும்
கசுவுங் கரைபுரளக் கரும்புமுத் தீன்றிடவும்
சாத்திர வேதம் சமயம் வழுகாமல்
சூத்திர மாகத் துல்வப் படுத்திடவும்
மனுவோர் தழைத்து மக்களொரு கோடிபெற்று
இனிதாக நாளும் இறவா திருந்திடவும்
சந்திர சூரியர்கள் தட்டுமிக மாறாமல்
இந்திரரும் தேவர் இருஷிநிலை மாறாமல்
தான தவங்கள் தப்பிமிகப் போகாமல்
வானவர்கள் தேவர் வளமாக நின்றிடவும்
ஈன மில்லாமல் இதுதெய்வ நீதமெல்லாம்
மானம் நிறுத்தி வையென்றா ரீசுரரும்

இப்படித் தெய்வ நீதம் ஈசுர ரிதுவே கூற
சொற்படி மறவா வண்ணம் திருமரு கோனுஞ் செய்தார் 300
அப்படித் தவறா நீதம் அம்புவி தனிலே வாழ
மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே

பெண்கள் நிலைமை

தெய்வத்திரு நிலைமை செப்பியபின் தேசமதில்
நெய்நிதியப் பெண்கள் நிலைமைகே ளம்மானை
கணவன் மொழியக் கலவுமொழி பேசாத
துணைவி நிலைமை சொல்லுவே னம்மானை
கற்கதவு போலே கற்பு மனக்கதவு
தொற்கதவு ஞானத் திருவுகோ லவள்மனது
அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும்
முன்பான சோதி முறைபோ லுறவாடிப்
போற்றியே நித்தம் பூசித் தவள்மனதில்
சாற்றிய சொல்லைத் தவறா மலேமொழிவாள்
அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக்
கரமா னதுதடவிக் கால்தடவி நின்றிடுவாள்
துயின்ற தறிந்து துஞ்சுவாள் மங்கையரும்
மயன்ற ஒருசாமம் மங்கை யெழுந்திருந்து
முகத்து நீரிட்டு நான்முகத்தோ னையுந்தொழுது
அகத்துத் தெருமுற்றம் அலங்கார மாய்ப்பெருக்கிப்
பகுத்துவ மாகப் பாரிப்பார் பெண்ணார்கள் 320

தவத்துக் கரிய தையல்நல்லார் தங்களுட
மனுநீதஞ் சொல்லி வகுக்க முடியாது
கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல்
இனிதாக நாளும் இருக்குமந்த நாளையிலே
வனியான சாதி வளமைகே ளம்மானை

சாதி வளமை

சான்றோர் முதலாய்ச் சக்கிலி யன்வரையும்
உண்டான சாதி ஒக்கவொரு இனம்போல்
தங்கள்தங்கள் நிலைமை தப்பிமிகப் போகாமல்
திங்கள் மும்மாரி சிறந்தோங்கி யேவாழ்ந்தார்
செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல்
அலுவல் தினஞ்செய்து அன்புற் றிருந்தனராம்
தான்பெரி தென்று தப்புமிகச் செய்யாமல்
வான்பெரி தென்று மகிழ்ந்திருந்தா ரம்மானை
ஒருவர்க் கொருவர் ஊழியங்கள் செய்யாமல்
கருதல் சிவன்பேரில் கருத்தா யிருந்தனராம்
செய்யும் வழக்குச் சிவன்பேரி லல்லாது
வையம்வழக்கு வாரா தேயிருந்தார்
அடிபணிய வென்று அலைச்சல்மிகச் செய்யாமல்
குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தா ரம்மானை
சேயினுட ஆட்டுச் செவிகேட் டிருப்பதல்லால்
பேயினுட ஆட்டோர் பூதரறியா திருந்தார் 340

இந்தப் படிமனுவோர் எல்லா மிருந்துவொரு
விந்துக் கொடிபோல் வீற்றிருந்தா ரம்மானை
இப்படித் தெய்வ இராச்சிய நீதமும்
மற்படித் தேச மனுவுட நீதமும்
நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக்
கற்பு ரீசர் கண்டு மகிழ்ந்தனர்

கயிலை வளமை

முத்தான சீமை மூன்று நீதத்தோடு
பத்தாசை யாகப் பண்பாய்த் தழைத்திடவே
நாலான வேதம் நல்ல கலியுகமாய்
மேலாம் பரமாய் விளங்கி யிருந்திடவே
தேவ ருறையும் திருக்கயிலை தன்வளமை
பாவலர்கள் முன்னே பாடினா ரம்மானை
ஈச ருறையும் இரத்தின கிரிதனிலே
வாசவனுந் தேவர் மறையோரும் வீற்றிருக்க
பொன்னம் பலநாதர் பொருந்திருக்கும் மண்டபமும்
கின்னரர்கள் வேதம் கிளர்த்துகின்ற மண்டபமும்
வேதப் புரோகி விளங்குகின்ற மண்டபமும்
சீத உமையாள் சிறந்திலங்கும் மண்டபமும்
நீதத் திருமால் நிறைந்திலங்கும் மண்டபமும்
சீதை மகிழ்ந்து சிறந்திருக்கும் மண்டபமும் 360

ஆதவனுஞ் சந்திரனும் அவதரிக்கும் மண்டபமும்
வேதாவும் ருத்திரனும் வீற்றிருக்கும் மண்டபமும்
ஆரு மறிந்து அளவிடக் கூடாத
பாரு படைத்த பரமே சுரனாரை
விசுவாச மேலோர் விமல னடிவணங்கி
வசுவாசு தேவன் வந்து மிகவணங்கி
மறைவேத சாஸ்திரங்கள் மலரோ னடிவணங்கி
இறவாத தேவர் இறைஞ்சி மிகவணங்கி
எமதர்ம ராசன் எப்போதும் வந்துநிற்க
பூமகளும் வேதப் புரோகிவந்து தெண்டனிட
காமதேவன் முதலாய்க் கணக்கர் மிகுமுனிவர்
நாமநெடி யோன்பதத்தை நாள்தோறும் போற்றிநிற்க
தலைவ னிருக்கும் தங்கத் திருக்கயிலை
நிலைமை யெடுத்துரைக்க நிலையாது அம்மானை
ஆறு செஞ்சடை சூடிய அய்யனார்
அமர்ந்து வாழுங் கயிலை வளமதைக்
கூறக் கூறக் குறைவில்லை காணுமே
கொன்றை சூடும் அண்டர் திருப்பதம்
வாறு வாறு வகுக்க முடிந்திடா
மகிழுங் குண்ட வளஞ்சொல்லி யப்புறம்
வேறு வேறு விளம்பவே கேளுங்கோ
மெய்யுள் ளோராகிய வேத அன்பரே

அகில வளமை

கயிலை வளமை கட்டுரைக்கக் கூடாது 380
அகில வளமை அருளக்கே ளம்மானை
தேவாதி தேவர் திருக்கூட்ட மாயிருக்க
மூவாதி மூவர் மிக்கவொரு மிக்கவொரு
சிங்கா சனத்தில் சிறந்திருக்கும் வேளையிலே
மங்காத தேவி மாதுதிரு லட்சுமியாள்
ஈரே ழுலகும் இரட்சித்த வுத்தமியாள்
பாரேழும் படைத்த பரமதிரு லட்சுமியாள்
நன்றா யெழுந்திருந்து நாரா யணர்பதத்தைத்
தெண்டனிட்டு லட்சுமியும் செப்புவா ளம்மானை
தேவரீ ரென்னைத் திருக்கலியா ணமுகித்துக்
கோவரி குண்டக் குடியிருப்பி லேயிருத்திப்
போவது என்ன புதுமை எனக்கறிய
தேவரீர் நீர்தான் செப்பிடீர் என்றுரைத்தாள்
பின்னுமந்த லட்சுமியாள் பெருமாள் தனைத்தொழுது
என்றும் இருக்க இறவா திருப்போனே
ஆதியால் சூட்சம் அளவெடுக்கக் கூடாத
நாதியாய் நின்ற நாரா யணப்பொருளே
தேவாதிக் கெல்லாம் திருமுதலாய் நின்றோனே
மூவாதிக் கெல்லாம் முதன்மையாய் நின்றோனே
உமக்கு எதிரி உலகமதி லுண்டோகாண்
தமக்கு எதிரிவந்த தன்மை மிகவுரையும் 400

உகத்துக் குகம்பிறந்து உலகிடத்தி லேயிருக்க
அகத்துவந்த ஞாயம் அருளுவீ ரெம்பெருமாள்
என்று திருவும் இதுவுரைக்க மாயவரும்
நன்று நன்றென்று நாரா யணருரைப்பார்

நீடிய யுகம்

சக்தி சிவமும் தானுதித்த காலமதில்
எத்திசையும் நாமள் இருபேர் பிறப்பதிலும்
ருத்திரர் மயே சுரருதித்த நாளதிலும்
பத்தியுள்ள தேவர் பரநாதர் நாளதிலும்
வானோர்கள் தெய்வார் மறைவேத சாஸ்திரமும்
ஈனமாய்ச் சண்டன் இவன்பிறந்த நாளதிலும்
ஆதித்தன் வாயு அண்டபிண்டம் தோன்றியபின்
ஈதுதித்த காலம் இராச்சியமொன் றுண்டுகண்டாய்
அவ்வுகத்தைக் கண்டு ஆதிபிரமா மகிழ்ந்து
இவ்வுகத்து நாமம் என்னவிடு வோமென்று
மாலும் பிரமாவும் மாயா திருப்போனும்
ஆலோசித் தவர்கள் ஆகமத்தைத் தான்பார்த்து
நீடிய யுகமெனவே நியமித் துறுதிகொண்டு
தேடிய முப்பொருளும் செப்பினர்கா ணம்மானை
அவ்வுகத்தை ஈசர் ஆர்ப்பரித்த காலமதில்
இவ்வுகத்துக் காரை இருத்துவோ மென்றுசொல்லி 420

எல்லோருங் கூடி இதமித்தா ரம்மானை
அல்லோருங் கூடி ஆலோசிக்கு மளவில்
தில்லையா ரீசன் திருவேள்வி தான்வளர்க்க
நல்லையா வேள்வி நன்றாய் வளர்த்திடவே
பிறந்தான் குறோணி பெரிய மலைபோலே
அறந்தா னறியா அநியாயக் கேடனுமாய்
பிண்டம் நிறையும் பொல்லாதான் தன்னுடம்பு
அண்டம் அமைய அவன்பிறந்தா னம்மானை
முகங்கண் களெல்லாம் முதுகுப்பு றமேலாட
நகக்கரங்கள் கோடி கால்க ளொருகோடி
தவங்க ளறியாச் சண்டித் தடிமோடன்
பவமே நாள்தோறும் பண்ணு மியல்புடையோன்
குறோணி யவனுயரம் கோடிநாலு முழமாய்
கயிலை கிடுகிடெங்கும் கால்மாறி வைக்கையிலே
அகிலங் கிடுகிடெங்கும் அவனெழுந்தா லம்மானை
இப்படியே குறோணி என்றவொரு அசுரன்
முப்படியே நீயே யுகத்தி லிருந்தான்காண்
இருந்து சிலநாள் இவன்தூங்கித் தான்விழித்து
அருந்தும் பசியால் அவனெழுந்து பார்ப்பளவில்
பாருகங் காணான் பலபேருடல் காணான் 440

வாருதி நீரை வாரி விழுங்கினன்காண்
கடல்நீ ரத்தனையும் கடவாய் நனையாமல்
குடலெல்லா மெத்தக் கொதிக்கு தெனவெகுண்டு
அகிலம் விழுங்க ஆர்ப்பரித்து நிற்பளவில்
கயிலை தனைக்கண்டு கண்கள்மிகக் கொண்டாடி
ஆவி யெடுத்து அவன்விழுங்கு மப்போது
தாவிக் குவித்துத் தப்பினார் மாயவரும்
மாயவரு மோடி மண்ணுலோகம் புகுந்து
தூயவரு மங்கே சிவனை மிகநினைத்துத்
தவசு இருந்தார்காண் தாமோ தரனாரும்
தவசு தனிலீசன் சன்னாசி போலேவந்து
ஆருநீ யிந்த ஆழ வனந்தனிலே
ஏதுநீ தவசு எனைநினைந்த வாறேது
என்று சன்னாசி இதுவுரைக்க மாயவரும்
பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவரோடே
கயிலை யெமலோகம் கறைக்கண்டர் சக்திவரை
அகில மதைக்குறோணி அசுரனென்ற மாபாவி
விழுங்கினான் நானும் உபாயமாய்த் தப்பிவந்தேன்
பளிங்கு மலைநாதன் பாரத்தே வாதிமுதல்
பண்டுபோல் நாளும் பதியி லிருந்திடவே 460

என்றுங் கயிலை இலங்கி இருந்திடவும்
முண்டு செய்தபாவி முகமு மவனுடம்பும்
துண்டா றதாகத் தொல்புவியி லிட்டிடவும்
கண்டங்கண்ட மாய்ப்போடக் கடிய வரமெனக்கு
தண்டமிழீர் நீரும் தரவே தவசிருந்தேன்
என்று திருமால் எடுத்துரைக்க வேயீசர்
மன்று தனையளந்த மாலோ டுரைக்கலுற்றார்
கேளாய்நீ விட்டிணுவே கேடன் குறோணிதனைத்
தூளாக்கி யாறு துண்ட மதுவாக்கி
விட்டெறிந்தா லவனுதிரம் மேலு மொருயுகத்தில்
கெட்டுக் கிளையாய்க் கொடிய சூரக்குலமாய்ப்
பிறக்கு மவனுதிரம் பொல்லாதான் தன்னுடம்பு
துண்ட மொன்றுதானும் தொல்புவியி லேகடிய
குண்டோம சாலியனாய்க் குவலயத்தி லேபிறப்பான்
அப்படியே குறோணி அவனுதிர மானதுவும்
இப்படியே ஆறு யுகத்துக் கவனுடம்பு
வந்து பிறப்பான்காண் மாற்றானா யுன்றனக்கு
உகத்துக் குகமே உத்தமனாய் நீபிறந்து
அகத்துக் கவன்பிறப்பு ஆறு யுகமதிலும்
உண்டு மவன்சீவன் உயிரழிவு வந்தவந்நாள் 480

பண்டு நடுக்கேட்டுப் பாவி யவனுயிரைக்
கொன்றுபோட் டேநரகக் குழிதூர்க்க நாள்வருங்காண்
என்று விடைகொடுத்தார் ஈசுரர்கா ணம்மானை
அன்று விடைவேண்டி அதிகத் திருமாலும்
குன்றுபோல் வந்த கொடிய படுபாவி
குறோணி தனைச்செயிக்கக் கோபம்வெகுண் டெழுந்து
சுறோணித வேதன் துடியாய் நடந்தனராம்
நாகத்தணை கிடந்த நாரா யணமூர்த்தி
வேகத்தால் குறோணிதனை வெட்டிப் பிளக்கலுற்றார்
வெட்டினா ராறு மிகுதுண்ட மம்மானை
கெட்டி தானென்று கிருபைகூர்ந்தே தேவர்
துண்டம தாறும் தொல்புவியி லேபோட்டுப்
பிண்டமதைச் சுமந்து போட்டனர்கா ணம்மானை
அந்தக் குறோணி அவனுதிர மானதையும்
கொந்து கொந்தாகக் குளம்போலே குண்டுவெட்டி
உதிரமதை விட்டு உயர்ந்தபீடம் போட்டுச்
சதுர யுகமெனவே தான்வகுத்தா ரோர்பீடத்தை

சதுரயுகம் - குண்டோமசாலி பாடு

அவ்வுகத் திலேயுதிரம் அசுரக் குலமாகி
முவ்வுகத்துப் பாவி முடிந்தவொரு துண்டமதைக்
குண்டோம சாலி எனவே கொடியவனாய்ப் 500

பண்டோர் குறோணி பாதகனாறு துண்டமதில்
வந்துபிறந் தான்சதுர வையகத்தி லம்மானை
முந்து பிறந்த முழுமோச மானதிலும்
மந்து முகமாய் மாபாவி தன்னுயரம்
நானூறா யிரமுழங்கள் நாடுமவன் கரங்கள்
முந்நூறு கால்கை வேழ்கள் துதிபோலே
உடைதோ ளுடம்பு உருவறியா மாபாவி
படைத்தோன் தனையறியான் பாரியென்று மறியான்
அட்டைபோ லேசுருண்டு அம்மிபோ லேகிடப்பான்
மட்டைபோ லேதிரிவான் வயிறு மிகப்பசித்தால்
அன்னுகத் திலுள்ள அசுரக் குலங்களையும்
தன்வயிற்றுக் கிட்டுத் தடிபோ லுருண்டிடுவான்
இப்படியே நாளும் இவன்குலங்க ளானதெல்லாம்
அப்படியே தின்று அவன்பசிக ளாற்றாமல்
அய்யையோ வென்று அலறினன்கா ணம்மானை
மெய்யை யனான விறுமா அதுகேட்டுச்
சிவனைத் தொழுது செப்புவா ரம்மானை
தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே
எவனோ ஒருத்தன் இட்டசத்த மானதிலே
தவலோக மெல்லாம் தானலைவ தேதெனவே 520

மாய னதுகேட்க வகுப்பா ரங்கீசுரரும்
ஆயனே நீயும் அறியலையோ ஞாயமது
குண்டோ மசாலி கொடியமா பாவியனாய்ப்
பண்டோர் குறோணி பாதகன்தன் துண்டமதாய்ப்
பிறந்தா னவனும் பேருதிரந் தன்கிளையாய்
இறந்தா ரவர்கள் இரையா யவன்தனக்கு
ஆன பசிகள் ஆற்றாம லேயவனும்
வானமது அலைய வாய்விட்டான் கண்டாயே
என்று சிவனார் ஈதுரைக்க மாயவரும்
அன்று மகாமாலும் அக்குண்டோ மசாலினுக்கு
இரையாகத் தேவர்களை ஏற்றநாங் கிலாக்கி
வரையா னதைத்தூண்டில் மறையைக் கயிறாக்கி
வாயுவைத் தோணி வருணன் தனைமிதப்பாய்த்
தேய மதைச்சூழத் திரைகடலைத் தான்வருத்தி
ஓடையாய்ச் சதுர யுகம்வழியே தானேவி
தேடரிய மாயன் திருவோணி தானேறி
மூவாதி மூவர் ஓணிதனைத் தள்ளிவரக்
காவாலி மாயன் கன்னியிலே தூண்டலிடச்
சதுர யுகமாளும் சண்டித்தடி மோடன்
எதிரே வருமாற்றில் இரையைமிகக் கண்டாவி 540

நாடிப் பசிதீர நல்லஇரை யாகுமென்று
ஓடிவந்து பாவி விழுங்கினான் தூண்டல்தனை
தூண்டில் விழுங்க சுரண்டி மிகக்கொளுவி
மாண்டனன் காண்பாவி வலிய மலைபோலே
பாவி மடிய பரமே சுரனாரும்
தாவிச் சலத்தால் சதுர யுகமழித்தார்

தேவர்கள் வேண்டுகோள்

சதுர யுகமழிய தானவர்க ளெல்லோரும்
மதுர மொழியீசன் மலரடியைத் தான்பூண்டு
தேவர் மறையோர் தெய்வேந் திரன்முதலாய்
மூவர்களும் வந்து முதலோ னடிபணிந்து
பரமனே நீரும் படைத்தயுகம் ரண்டதிலும்
வரமே துங்கேட்டு வாழ்ந்தவரைக் கண்டிலமே
அந்த சந்தமில்லை ஆணுவங்கள் தானுமில்லை
இந்த வகைச்சாதி இல்லாம லீசுரரே
பிறந்தா லவனும் பெரியோ னடிவணங்கி
வரந்தா ருமென்று வாளா யுதத்தோடே
வலுவும் பலமும் வாய்த்தசூ ரப்படையும்
கொலுவும் பெரிய குவிந்தமதில் கோட்டைகளும்
கெட்டுக் கிளைபாணி கிரண மதுவுடனே
நட்டுப் பயிரால் நாளும் பசிதீர்ந்து 560

இருந்து பொறுக்க இராச்சியமொன் றுண்டாக்கும்
வருந்தி மகாதேவர் மலரோ னடிவணங்க
ஆதி சிவனும் அதிகசந் தோசமதாய்
வேதியரைத் தான்வருத்தி விளம்புவா ரீசுரரும்

நெடிய யுகம்

தில்லைமலாலன் மல்லோசி வாகனன் பாடு

மாலும் பிரம்மாவும் வாய்த்தபர மேசுரரும்
நாலு மறையோரும் நடுவர்மிகக் கூடி
முன்னேயுள்ள துண்டம் ஒன்றைரண் டாக்கிவைத்துப்
பின்னே படைப்புப் பிரம்மா வுருப்படைக்க
சிவாயப் பொருள்தான் சீவ நிலைகொடுக்க
உபாயப் பொருள்தான் உல்லாச மேகொடுக்க
முண்ட மிருபேரும் உருவா யுருவெடுத்துத்
தெண்டமது கொண்டார் சிவனை மிகப்போற்றி
அப்போது மாயன் ஆதி யடிவணங்கி
இப்போது ஈசுரரே இவர்களிரு பேர்க்கும்
என்னபேர் தானும் இடுவோ மெனவுரைக்க
வன்னப் பரமேசு வரனார் வகுக்கலுற்றார்
திறந்தான் பெருகும் திருமாலே நீர்கேளும்
பிறந்த அசுரருக்குப் பேரிட வேணுமென்றால்
மாயனே நானுமொரு உபாயம் வகுப்பேன்காள்
ஆயனே நீயும் அதுகேட்க வேணுமென்றார் 580

அண்டபிண்டங் காணாத ஆதிகயி லாசமதில்
தெண்டனிட்டு நிஷ்டை செய்கிறான் சுருதிமுனி
இந்த முனியடுக்கல் இவர்கள்ரண்டு பேரைவிட்டு
அந்த முனிதவத்தை அழிக்கவே சொல்லிடுவோம்
என்று சிவமுரைக்க எல்லோருஞ் சம்மதித்து
அன்று பிறந்த அசுரர்களைத் தானேவி
போறாரே சூரர் பொருப்பொரு நூறானதுபோல்
வாறாரே சூரர் வாய்களிரு காதவழி
சூரருட கைகள் தொண்ணூற்றீ ரஞ்சதுவும்
மூரர்கால் நூறு உயர்ந்தசிர சன்பதுவும்
கண்களொருநூறு வெண்டரள மிருகலமே
துங்கணங் களாகச் சூர ரடந்தேறி
கண்கவிழ்ந்து யோகம் கருத்துருத்தாய் நிற்குகின்ற
வண்கவிழ்ந்த மாமுனியை வாரி யெடுத்தவர்கள்
அலைமே லெறிய ஆர்ப்பரிக்கு மவ்வளவில்
கலைமேல் பரந்த கடிய முனிபகர்வான்
ஏனடா என்னை இருந்த தவசழித்து
வீணடா செய்தாய் விழலா யறமோடா
என்னை யெடுத்து இக்கடல்மேல் போட்டாலும்
உன்னை யறுக்க ஓரம்பா யுருவெடுத்துப் 600

பங்கயக் கண்மாயன் பக்கமதில் நான்சேர்ந்து
உங்க ளிருபேரை ஊடுருவ நானறுத்து
இந்தக் கடலில் எடுத்துங்களை யெறிந்து
உந்தனி னூரை ஒக்கக்கரிக் காடாக்கி
நானும் வைகுண்டம் நற்பேறு பெற்றிருப்பேன்
வானுதிரு வாணையென்று மாமுனியுஞ் சாபமிட்டான்
உடனே முனியை உயர்த்தியெடுத் தேசூரர்
கடல்மே லெறிந்தார் கர்ம விதிப்படியால்
அந்த முனியும் அரனா ரருளாலே
மந்திரபுரக் கணையாய் வாரியலைக் குள்ளிருந்தான்
சுருதி முனிதனையும் தோயமதில் விட்டெறிந்து
உருதிக் குடிசூரர் ஓடிவந் தேகயிலை
மோச முடன்வந்த முழுநீசப் பாவியர்கள்
ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிநின்றா ரம்மானை

சுருதி முனியுட நிஷ்டை தொலைத்தவர்
கருதிய சூரர் கயிலை மேவியே
பருதி சூடும் பரமனைப் போற்றியே
வருதி கேட்டு வருந்தினர் சூரரே

சுருதி முனிதவத்தைத் தொலைத்தே யவன்தனையும்
பொருதி கடல்மீதில் போட்டெறிந்து வந்தவர்கள் 620

ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிவரங் கேட்டனராம்
வாசமுள்ள ஈசன் மாதுமையைத் தானோக்கித்
தூயவளே மாயவளே சூர ரிருவருக்கும்
நேயமுள்ள தோர்வரங்கள் நீகொடுக்க வேணுமென்றார்
வரங்கொடுக்க வென்று மறையோ னதிசயித்துச்
சிரசன் பதுடைய சீர்சூரனை நோக்கி
ஏதுவர முங்களுக்கு இப்போது வேணுமென்றார்
தீது குடிகொண்ட சிரசன்ப தோனுரைப்பான்
மாதவரே தேவர்களே மறையவரே மூவர்களே
ஆதவரே யெங்களுக்கு அதிகவரம் வேணுமென்றான்
அம்புவியி லுள்ள அஸ்திரங்கள் வாளாலும்
தம்பிரா னானாலும் தாண்டமுடி யாதவரம்
வானமிது பூமி மலைகளிது மூன்றிலுள்ள
தானவராய் வாழுகின்ற தங்களா லெங்களையும்
கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்
மல்லுக் குபாயமதும் வலுவும் பலமதுவும்
ஏவலாய் வானோர் எமைத்தொழுது நின்றிடவும்
தவறாம லிந்தவரம் தரவேணு மென்றுரைத்தான்
உடனே சிவனாரும் உற்ற அசுரருக்கு
அடமா யவன்கேட்ட அவ்வரங்கள் தாங்கொடுத்து 640

நீச னிருக்க நெடிய யுகம்வகுத்துப்
பாசனுக்குப் பேரு பகர்ந்தே விடைகொடுத்தார்
விடைவேண்டிப் பாவி விமலன் தனைத்தொழுது
மடைப்பாவி யான மல்லோசி வாகனனும்
தில்லைமல் லாலனுமாய்ச் சேர்ந்தங் கிருபேரும்
வல்ல சிவன்வகுத்த வையகத்தில் வந்தனராம்
வந்தார் சிவன்வகுத்த வையகத்தி லம்மானை
அந்த அசுரர் அவரிருக்கு மந்நாளில்
உதிர மதுசூரர் ஒக்க உதித்தெழுந்து
செதிர்சூரப் படையாய்ச் சேர்த்தங் கிருந்தனராம்
இப்படியே சூரர் இவர்சேர்க்கை தன்னுடனே
அப்படியே அந்தயுகம் ஆண்டிருந்தா ரம்மானை
ஆண்டிருந்த சூரர் அவரிருக்க மேடைகளும்
தாண்டிநின்ற வானத் தடாக உயரமதே
சூரப் படைகள் தொழுது அடிபணிந்து
பாதக ருக்குநித்தம் பணிந்தேவல் செய்திடுவார்
ஊழியங்கள் செய்து உற்றயிறை யிறுத்துப்
பாளையங் களாகப் பணிந்திருந்தா ரம்மானை
சூரர் கொடுமுடியைச் சூட்டி யரசாண்டு
பாரமுள்ள கோட்டைப் பண்ணினா ரம்மானை 660

இப்படியே சூரர் இவர்வாழு மந்நாளில்
முப்படியே சூரர் ஊழி விதிப்படியால்
இறப்ப தறியாமல் எரியைமிகக் கண்டாவி
உறப்பொசிக்கச் சென்ற விட்டி லிறந்தாற்போல்
தம்பி தமையன் சந்ததிகள் மந்திரிமார்
மும்பிலுள்ள சூரர் முடுக்கமதைக் கண்டாவி
நம்பிபத மறந்து நாம்தாம் பெரிதெனவே
கெம்பினார் சூரர் கெட்டனர்கா ணம்மானை
சூர ரவர்செய்த துட்டம் பொறுக்காமல்
வீர முள்ளதேவர் விரைந்தே முறையமிட
தேவர் முறையம் சிவனார் மிகக்கேட்டுக்
காவலாய் நித்தம் கைக்குள் ளிருக்குகின்ற
பெண்ணமுதைப் பார்த்துப் புகல்வாரங் கீசுரரும்
கண்ணே மணியே கருத்தினுள் ளானவளே
பூலோகந் தன்னிலுள்ள புருடரா யுதத்தாலும்
மேலோகம் வாழும் விமலரா யுதத்தாலும்
மலைமேலே வாழும் மாமுனிவர் தம்மாலும்
அலையா வரங்கள் அச்சூரர்க் கேகொடுத்தோம்
தரியா முடுக்கம் தான்பொறுக்காத் தேவரெல்லாம்
அரியோ யெனமுறையம் அநேகம் பொறுக்கரிதே 680

என்றீசர் சொல்ல இயல்கன்னி யேதுரைப்பாள்
மலைலோகம் மேலோகம் வையமதி லாகாட்டால்
அலைமேல் துயிலுமொரு ஆண்டியுண்டு கண்டீரே
முன்னேயச் சூரருக்கு முற்சாப மிட்டதொரு
வன்னச் சுருதிமுனி மந்திரபுரக் கணையாய்
வளர்த்தங் கிருப்பான்காண் மாயருட பக்கலிலே
கிளர்ந்த மொழிகேட்டுக் கிருபைகூர்ந் தேயீசர்
மாலை வரவழைத்து வளப்பமெல் லாமுரைக்கச்
சாலப் பொருளும் சம்மதித்தாங் காரமுடன்
அலையில் வளர்ந்த அதிகக் கணையெடுத்துச்
சிலையேற்றி யம்பைச் சிரித்து மிகத்தொடுக்க
அம்புப் பகையாலும் அதிகமால் பகையாலும்
பம்பழித்துச் சூரனூர் பற்பம்போல் தானாக்கிச்
சூர ரிருவருட சிரசை மிகஅறுத்து
வாரிதனில் விட்டெறிந்து வாளி சுனையாடி
மலரோ னடிபணிந்து வைகுண்டங் கேட்டிடவே
பலமான குண்டப் பதவி மிகக்கொடுத்தார்
அவ்வுகத்தை மாயன் அன்றழித்து ஈசரிடம்
செவ்வாக நின்று செப்பினா ரீசருடன்

கிரேதா யுகம்

இன்னமொரு யுகத்தை இப்போ படைக்கவென்று 700
மன்னதியத் திருமால் மனமே மிகமகிழ்ந்து
சொன்னவுட னீசுரரும் தொன்னூல் மறைதேர்ந்து
முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே
ஓரிரண்டு துண்டம் உகமாய்ப் பிறந்தழிந்து
ஈரிரண்டு துண்டம் இருக்குதுகாண் மாயவரே
நூல்முறையைப் பார்க்கில் நெடிய யுகங்கழிந்தால்
மேலுகந்தா னிங்கே மிகுத்தகிரே தாயுகந்தான்
இருக்குதுகா ணென்று ஈச ருரைத்திடவே
மருக்கிதழும் வாயான் மனமகிழ்ந்து கொண்டாடி
துண்டமொன்றை ரண்டாய்த் தூயவனார் தாம்வகிர்ந்து
மண்டலங்கள் மெய்க்க வாணாள் கொடுத்தருளி
சிங்கமுகச் சூரனெனும் திறல்சூர பற்பனெனும்
வங்கணமாய்ப் பிண்டம் வகுத்தனர்கா ணம்மானை
சூர னுடசிரசு தொளாயிரத்து நூறதுவும்
போரக்கால் கைகள் பொருப்பெடுக்கு மாபலமும்
சூரன் சுரோணிதத்தைச் சுக்கிலங்கள் தானாக்கி
ஊரேநீ போவென்று உற்ற விடைகொடுத்தார்
விடைவேண்டிச் சூரன் வேண்டும் படையோடே
திடமாகப் பூமி செலுத்தியர சாளுகையில்
வரம்வேண் டவென்று மலரோ னடிவணங்கி 720

திறமான ஓமமிட்டுச் செப்புக் குடம்நிறுத்தி
நின்ற தவத்தில் நெடியோனைக் காணாமல்
அன்றந்தச் சூரன் அக்கினி யில்விழுந்தான்
சூரபற்பன் விழவே சிங்கமுகச் சூரனவன்
பாரமுள்ள தன்சிரசைப் பறித்தெறிந்தா னக்கினியில்
ஆனதா லீசுரரும் அம்மைஉமை யுமிரங்கி
ஈனமாஞ் சூரனுக்கு ஏதுவரம் வேணுமென்றார்
ஈச னுரைக்க ஏற்றஅந்தச் சூரனுந்தான்
பாசமுடன் செத்த பற்பனென்ற சூரனையும்
எழுப்பித் தரவேணும் யாங்கள்மிகக் கேட்டவரம்
மழுப்பில்லா வண்ணம் வரமருள்வீ ரென்றுரைத்தான்
சூர னிவன்கேட்க சிவனா ரகமகிழ்ந்து
பாரமுள்ள ஓம பற்பமதைத் தான்பிடித்துச்
சிவஞான வேதம் சிந்தித்தா ரப்பொழுது
பவமான சூர பற்பன் பிறந்தனனாம்
இறந்து பிறந்தனற்கும் இளையோ னவன்தனக்கும்
சிறந்த புகழீசர் செப்புவா ரப்பொழுது
சூரரே உங்களுக்குத் தோற்றமுள்ள தோர்வரங்கள்
வீரரே கேளுமென்று வேத னிவையுரைக்க
அந்நாளில் சூரன் அகமகிழ்ந்து கொண்டாடி 740

உன்னாலு மைந்துமுகம் உள்ளவர்கள் தம்மாலும்
உலகமதில் பண்ணிவைத்த உற்றஆயு தத்தாலும்
இலகுமன்ன ராலும் இந்திரனார் தம்மாலும்
கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்
வல்லவனே நீயும் வாழுங் கயிலையதும்
தேவர்தே வேந்திரனும் திருக்கன்னி மாமறையும்
ஏவலா யுன்னுடைய லோகமதி லுள்ளவர்கள்
முழுது மெனக்கு ஊழியங்கள் செய்திடவும்
பழுதில்லா திந்தவரம் பரமனேநீர் தாருமென்றான்
தாருமென்று சூரன் தாழ்மை யுடன்கேட்க
ஆரு மொப்பில்லா ஆதி யகமகிழ்ந்து
கேட்டவர முழுதும் கெட்டியா யுங்களுக்குத்
தாட்டிமையா யிப்போ தந்தோ மெனவுரைத்தார்
வரங்கொடுத் தீசர் மலைகயிலைக் கேகாமல்
பரம உமையாளைப் பையஎடுத் தணைத்து
அலைமே லேஆயன் அருகிலே போயிருந்து
மலைமே லேசூரன் வாய்த்ததென் றவ்வரங்கள்
கயிலை முழுதும் காவலிட்டுத் தேவரையும்
அகில முழுதும் அடக்கியர சாண்டனனே
அப்படியே சூரன் அரசாண் டிருக்கையிலே 760

முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவரையும் வானவரைத் தெய்வேந் திரன்வரையும்
மூவரையும் பாவி முட்டுப் படுத்தினனே
ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட
ஈனமில்லா தாயன் எடுத்தா ரொருவேசம்
ஈசனிடஞ் சென்று இயம்பினா ரெம்பெருமாள்
வாசமுள்ள ஈசுரரே மாபாவிச் சூரனுக்கு
ஏது வரங்கள் ஈந்திர்கா ணென்றுரைக்கத்
தாது கரமணிந்த தாமன்பின் னேதுரைப்பார்
வையகத் திலுள்ள வலுவாயு தத்தாலும்
தெய்வலோ கத்தில் சிறந்தமன்னர் தம்மாலும்
அஞ்சு முகத்தாலும் அழியா தவனுயிரும்
தஞ்சமிட வானோர் தையல்தெய்வக் கன்னிமுதல்
கயிலை முழுதும் கமண்டலங்க ளேழுமுதல்
அகில முழுதும் அடக்கி வரங்கொடுத்தோம்
என்று வேதாவும் இவையுரைக்க மாலோனும்
நின்று தியங்கி நெஞ்சமது புண்ணாகிப்
பேயனுக் கென்னுடைய பிறப்பைக் கொடுத்தல்லவோ
தேயமதில் நானும் திரிந்தலையக் காரணந்தான்
என்று திருமால் இதுசதையஞ் சொல்லியவர் 780
இன்றந்தச் சூரர் இருவர்தமைக் கொல்லவே

கந்தன் அவதாரம்

ஆறு முகமாய் ஆய னளவிடவே
கூறிடவே சத்திதனைக் கொண்டார்வே லாயுதமாய்
நல்ல சிவனாரை நந்தீ சுரராக்கி
வல்ல பெலமுள்ள வாய்த்ததிக் கெட்டிலுள்ளப்
பாலரையும் வீரர்களாய்ப் பண்ணினா ரெம்பெருமாள்
வாலமுள்ள சன்னாசி மாரைப் பெரும்படையாய்க்
கந்தனெனும் நாமம் கனத்தசடை யாண்டியுமாய்க்
கொந்துகொந்தாய்ப் பீற்றைக் கூறைமிக வணிந்து
வேலு மிகப்பிடித்து வெண்ணீறு மேதரித்து
நாலுரண்டு சிரசில் நல்லருத்தி ராச்சமிட்டுப்
பத்துரண்டு காதில் பசும்பொன்னொவ்வாச் செம்பணிந்து
முத்திரிக ளிட்டுக்கந்தப் பொக்கணங்கள் தோளிலிட்டுச்
சன்னாசி போலே தானடந் தெம்பெருமான்
நன்னாதா னாவெனவே நாலஞ்சுகவி தான்பாடி
வந்து ஒருமலைமேல் வாய்த்தகூ டாரமிட்டுச்
சந்து மிகச்சொல்லி தான்விட்டார் சூரனுக்கு

வீரவாகுதேவர் தாது

சூர னிடத்தில் தூதாநீ சென்றேகிப்
பாரமுள்ள கயிலைச் பருவதமுந் தேவருட
சிறைக ளகற்றிவானோர் தேவரையும் நீயனுப்பித் 800

திறவா னாயாகச் சீமையர சாளுமென்று
இப்படியே ஆகாட்டால் இன்றுகழித் தெட்டாம்நாள்
அப்படியே உன்றனக்கும் ஆனகந்த சுவாமியர்க்கும்
சண்டை அன்றென்று தரங்கூறி வாவெனவே
அண்டர்பிரான் தூது அனுப்பினா ரம்மானை
தூதன் மிகநடந்து சிவனே செயலெனவே
காதமொன்று தான்கடந்து கண்டானே சூரனையும்
கந்த சுவாமி கருத்தா யுரைத்ததெல்லாம்
அந்த அசுரனுக்கு அத்தூதன் தானுரைத்தான்
சூரா கேள்கந்த சுவாமியரு ளென்றுரைக்க
ஏராத பாவி இகழ்த்தினா னப்போது
தூதனென்றோன் போகாமல் துடர்ந்து மிகப்பிடித்துப்
பாரதப் பெருவிலங்கில் பாவியைவை யென்றுரைத்தான்
ஆரடா நீதான் அறியாயோ என்பலங்கள்
பாரடா வுன்றன் கந்தன் படுகிறதை
ஈசுரனு மென்றனுக்கு இருந்த இடமுமருளி
மாயனிடம் போயலையில் வாழ்ந்ததுநீ கண்டிலையோ
எமலோகம் வானம் இந்திரலோ கம்வரையும்
நவகோளும் நானல்லவோ நாட்ட மறிந்திலையோ
முப்பத்து முக்கோடி உற்றதே வாதிகளும் 820

நாற்பத்துநாற் கோடிரிஷி நமக்கென்ற றிந்திலையோ
அறியாத வாறோகாண் ஆண்டிக்குத் தூதுவந்தாய்ச்
சிறியனென் றிராதேயென் சிரசுடம்பு கண்டிலையோ
உன்னுடைய கந்தன் உயரமது நானறிவேன்
என்னுடைய உயரம் இனிநீ யறிவாயே
ஆனதா லென்னுடைய ஆங்கார மத்தனையும்
கானகத்தில் வாழும் கந்தனுக் கேவுரைநீ
என்று மதமாய் இவன்பேசத் தூதனுந்தான்
அன்று அந்தச்சூரனுக்கு அறையாம லேதுரைப்பான்
நீயோ தானெங்கள் நிமலன் தனக்கெதிரி
பேயோரி நாய்நரிகள் பிய்ச்சிப் பிடுங்கியுன்னை
கண்ட விடத்தில் கழுக்கள் மிகப்பிடுங்கிக்
கொண்டோடித் தின்னவே லாயுதங் கொண்டுவந்தார்
தேவர் சிறையும் தெய்வமட வார்சிறையும்
மூவர் சிறையும் மும்முடுக்க முந்தீர்த்து
உன்னுடைய சேனை உற்றபடை யழித்து
நின்னுடைய கோட்டை நீறு பொடியாக்கி
அரசாள்வா ரெங்கள் ஆறுமுக வேலவனார்
துரையான கந்த சுவாமிசொல்லி யனுப்பினர்காண்
என்றேதான் தூதன் இவையுரைக்கச் சூரனுந்தான் 840

அன்றே மனது அளறித்துணிந் தேதுரைப்பான்
ஆனா லறிவோம் ஆண்டி தனையுமிங்கே
போனா லென்னோடே போருசெய்ய யேவிடுநீ
சூர னிவையுரைக்கச் சூலாயுதப் பெருமாள்
தூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு

சூரன்பாடு

சுவாமி மனமகிழ்ந்து சூரன் தனையறுக்கக்
காமிவே லாயுதத்தைக் கையிலெடுத்தா ரம்மானை
வேலா யுதமெடுத்து வேதப் படைசூழ
சூலாயுதப் பெருமாள் துடியாய் நடக்கலுற்றார்
கந்தனார் வேசம் கரந்திருந்த மாயவனார்
வந்தார்காண் சூரன் வலுவிழந்தா னம்மானை
சூர னவன்கண்டு தோசப் படையணிந்து
மூரன் படைக்கு முன்னே நடக்கலுற்றான்
கண்டா ரீராறு கரத்தோ னகமகிழ்ந்து
பண்டார வேசம்பண்பா யெடுத்திறுக்கி
முன்னே வருஞ்சூரன் முகத்தை யவர்பார்த்துப்
பின்னே சுவாமி புத்தி மிகவுரைப்பார்
வம்பி லிறவாதே வாழ்விழந்து போகாதே
தம்பி தலைவன் தளமு மிழவாதே
பற்பக் கிரீடப் பவுசு மிழவாதே 860

அற்ப மிந்தவாழ்வு அநியாயம் விட்டுவிடு
கரணமீ தில்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து
மரணம் வந்துசீவன் மாண்டுபோ கும்போது
நன்மை யதுகூட நாடுமே யல்லாது
தின்மை வராது தேவரையும் விட்டுவிடு
தீட்சை யுடன்புத்தி செவ்வேநே ரிட்டுவொரு
மோட்ச மதுதேட முடுக்கமதை விட்டுவிடு
இத்தனையும் நாதன் எடுத்து மிகவுரைக்கப்
புத்திகெட்டப் பாவி போர்சூர னேதுரைப்பான்
இரந்து திரியுகின்ற இரப்பனுக் குள்ளபுத்திப்
பரந்த புவியாளும் பாரமுடிக் காவலற்கு
ஏற்குமோ ஞானம் இரப்போருக் கல்லாது
ஆர்க்குமே சொல்லாதே ஆண்டிவுன் ஞாயமதை
சண்டைக்கு வாவெனவே தரங்கூறித் தூதுவிட்டப்
பண்டார மென்ற படைக்கார னும்நீயோ
என்னுடைய சேனை எல்லாமிக அழித்து
என்னையும் நாய்நரிக்கு இடுவேனென் றதும்நீயோ
என்றே யச்சூரன் இயம்பி மிகநகைத்துப்
பண்டார னோடே படையெடுத்தா னம்மானை
சூரனுட படைகள் துண்டந்துண்ட மாய்விழவே 880

வீரர்களும் வந்து வெட்டினா ரம்மானை
வெட்டிதினால் செத்தார் மிகுசூ ரக்குலங்கள்
பட்டார்க ளென்று பார்சூரன் தான்கேட்டு
வந்து எதிர்த்தான்காண் மாயாண்டி தன்னோடே
இன்றுவந்து வாய்த்துதென்று எம்பெருமா ளுமகிழ்ந்து
வேலா யுதத்தை விறுமா பதஞ்சேவித்து
மேலாம் பரனார் விமல னருளாலே
எறிந்தார்காண் சூரன் இறந்தானே மண்மீதில்
பறிந்தேவே லாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே
சூரன் மடிந்து துடித்துயிர் போகுகையில்
வீரமுள்ள நாதன் வீணனவன் முன்பில்வந்து
சொன்ன மொழியெல்லாம் சூட்சமாய்க் கேளாமல்
இந்நிலமேல் பாவி இறந்தாயே வம்பாலே
நாட்டமுடன் நானுரைத்த நல்லமொழி கேளாமல்
கோட்டையு முன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே
சந்துவிட்ட சொற்படிக்குத் தந்தரசு ஆளாமல்
விந்துக் குலங்களற்று வீணாய்நீ மாண்டாயே
மாளா வரங்கள் மாகோடி பெற்றோமென்று
பாழாக மாண்டாயே பண்டாரங் கையாலே
என்றந்த ஆதி இத்தனையுந் தான்கூற 900

முந்து பிறந்த முப்பிறப்புச் சூரமதால்
என்னையோ கொல்ல இரப்பனோ ஏலுவது
உன்னையோ கொல்ல ஒட்டுவனோ நான்துணிந்தால்
வேலா யுதத்தாலே வென்றுகொன்ற தல்லாது
ஏலாது வுன்னாலே இளப்பமிங்கே பேசாதே
என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன்
கொன்றாரே சூரனுட குறவுயிரை யம்மானை

சூரனைத் துணித்த சத்தி சூலமும் கடலில் மூழ்கி
வீரமால் பதத்தைப் போற்றி விளம்புவாள் சத்தி மாது
மூரனைச் செயிக்க முன்னே முச்சூலமாய்ச் சபித்த சாபம்
தீரவே வேணு மென்று திருப்பதம் வணங்கி நின்றாள்

ஆதியே நாதி அனாதித் திருவுளமே
சோதியே யென்னுடைய சூலசா பந்தீரும்
என்று உமையாள் எடுத்து மிகவுரைக்க
நன்றெனவே அந்த நாரா யணர்மகிழ்ந்து
சாப மதுதீரச் சாந்தி மிகவளர்த்தார்
தாபமுடன் மாயன் சாந்தி மிகவளர்க்க
அம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து
செம்மையுடன் கயிலை சென்றனள்கா ணம்மானை

இரணியன் பாடு

சத்திசா பந்தீர்த்துத் தவலோக மேயனுப்பித் 920
தத்தியாய்ச் சூரனையும் சங்காரஞ் செய்துஅந்த
சூரனூர் தன்னைத் தீயோன் தனக்களித்து
வீரசூ ரன்தனையும் மேலுமந் தவ்வுகத்தில்
பார இரணியனாய்ப் படைத்தார்கா ணம்மானை
சூர னிரணியனாய்த் தோன்றினா னவ்வுகத்தில்
மாய னொருகோலம் மகவா யுருவெடுத்து
வாயல் நடையில்வைத்து மாபாவிச் சூரனையும்
நெஞ்சை யவர்நகத்தால் நேரேப் பிளந்துவைத்து
வஞ்சக னோடே மாயன் மிகவுரைத்தார்
சூர பற்பனாகத் தோன்றினா யந்நாளில்
ஊரிரப்ப னாக உருவாக நான்தோன்றிக்
கொன்னே னானென்று கூறினே னப்போது
அந்நேரம் நீதான் ஆண்டியல்லக் கொன்னதென்றாய்
வேலா யுதத்தாலே வென்றாய்நீ யல்லாது
ஏலாது உன்னாலே என்றன்று பேசினையே
ஆயுதங்க ளம்பு அஸ்திரம்வா ளில்லாமல்
வாயிதமா யென்னகத்தால் வகிர்ந்தேனா னுன்வயிற்றை
என்றுமா யனுரைக்க ஏதுரைப் பான்சூரன்
பத்து மலையைப் பாரநக மாய்ப்பதித்து
இத்தலத்தி லென்னை இறக்கவைத்தா யல்லாது 940

ஏலாது உன்னாலே இந்தமொழி பேசாதே
மாலா னவேதன் மனதுகோ பம்வெகுண்டு
உன்னை யின்னமிந்த உலகில் பிறவிசெய்து
கொன்னா லேவிடுவேன் கிரேதா யுகம்வயது
திகைந்தல்லோ போச்சு திரேதா யுகம்பிறந்தால்
பகையுந் தானப்போ பார்மீதி லுண்டாகும்
முப்பிறவித் துண்டம் உயிர்ப்பிறவி செய்கையிலே
இப்பிறவி தன்னில் இசைந்தமொழி கேட்பேனான்
என்று இரணியனை இரணசங் காரமிட்டு
அன்று கிரேதா யுகமழித்தா ரம்மானை
அந்தக் கிரேதா யுகமழித்த அந்நாளில்
கந்தத் திருவேசம் கலந்திருந்த மாயவனார்
செந்தூர்ப் பதியில் சேர்ந்திருந்தா ரம்மானை 953

அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்து
ஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்து
வேதியரும் நன்றாய் விளம்புவா ரம்மானை
சூரபற்ப னென்ற சூரக்குலங் களைத்துணித்து
வீரம் பறைந்ததினால் மேலுமந்த அவ்வுகத்தில்
இரணியனாய்த் தோன்றி நின்றஇ ராச்சதனைக்
கொன்னு கிரேதா குவலயமும் நானழித்து
முன்னு கரந்திருந்த ஆறு முகவேசம்
செந்தூரு வாரி திரைமடக்கில் வாழ்ந்திரென்று
வந்தோங் காணய்யா மலர்ப்பாதந் தெண்டனிட
என்றேதா னாதி ஈசுரரோ டேதுரைப்பார்
அன்றேதா னீசர் அருளுவா ராயருக்கு

திரேதா யுகம் - இராவணன் பாடு

முன்னே குறோணி முடிந்ததுண் டாறதிலே
இன்னமூணு துண்டம் இருக்குதுகாண் மாயவரே
என்றீசர் சொல்ல எல்லோருந் தான்கூடி
அன்றிருந்த துண்டம் அதிலேயொரு துண்டமதை
உருவாய்ப் படைத்து உயிர்க்கொடுக்கு மவ்வளவில்
அருகே யிருந்த அச்சுதரு மேதுரைப்பார்
முன்னே இவனும் முற்பிறப் பானதிலே
என்னோடே பேசி எதிர்த்தான் காணீசுரரே 20

ஆனதா லிப்பிறப்பு அரக்க னிவன்றனக்கு
ஈனமில்லாச் சிரசு ஈரஞ் சாய்ப்படையும்
பத்துச் சிரசும் பத்துரண்டு கண்காதும்
தத்துவங் களோடே தான்படையு மென்றுரைத்தார்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
வாய்சிரசு பத்தாய் வகுத்தார்கா ணம்மானை
கூடப் பிறக்கக் குண்டிலிட்ட ரத்தமதை
வாட அரக்கர் குலமாய்ப் பிறவிசெய்தார்
அப்போ படைக்கும் அவ்வளவில் மாயவனார்
மெய்ப்பான மேனிதனில் வியர்வை தனையுருட்டி
விபீஷண னென்று மெய்யுருவந் தானாக்கிக்
கவுசலமா யரக்கன் தம்பியெனக் கருத்தாய்க்
கூடி யிருந்து அரக்கன் குறியறிந்து
வேடிக்கை யாக வீற்றிரென்று தானுரைத்தார்

இராவணன் வரம் வேண்டல்

பத்துத் தலையான பாவி அரக்கனவன்
மற்று நிகரொவ்வா வாய்த்தபர மேசுரரை
வணங்கி வரம்வேண்ட மனதிற் பிரியமுற்று
இணங்கியே ஈசர்பதம் இறைஞ்சிநின்றா னம்மானை
தவத்தருமை கண்டு தலைபத் தரக்கனுக்குச்
சிவத்தலைவ ரானோர் செப்புவா ரம்மானை 40

காதுரண்டு பத்து கண்ணிருப துள்ளோனே
ஏது வரம்வேணும் இப்போது சொல்லுமென்றார்
அப்போது ஈசுரரை அரக்க னவன்வணங்கி
இப்போது ஈசுரரே யான்கேட்கு மவ்வரங்கள்
தருவோ மெனவே தந்தி முகன்பேரில்
உருவா யெனக்கு உறுதிசெப்பு மென்றுரைத்தான்
அப்படியே ஈசர் ஆணையிட்டுத் தான்கொடுக்க
சொற்படிகேட் டேயரக்கன் சொல்லுவா னப்போது
மூன்றுலோ கத்திலுள்ள முனிவர்தே வாதிகளும்
வேண்டும்பல ஆயுதமும் விதம்விதமா யம்புகளும்
வீரியமாய் நானிருக்கும் விண்தோயுங் கோட்டைசுற்றிச்
சூரியனுஞ் சந்திரனும் சுற்றியது போய்விடவும்
சிவனா ரொருகோடி செய்ய வரந்தரவும்
புவனம் படைக்கும் பிரம்மா வொருகோடி
உமையா ளொருகோடி உற்ற வரந்தரவும்
இமையோ ரரைக்கோடி இப்படியே உள்ளவரம்
மூணரைக் கோடி உள்ளவர மத்தனையும்
கொடுக்கு மளவில் குன்றெடுத்தோன் தன்தேவி 60

அலைமேல் துயிலும் அச்சுதனார் தன்தேவி
சிலைவே லெடுத்துச் செயிக்கவல்லான் தன்தேவி
அலங்கா ரமாகி அன்னைப் பொழுததிலே
கலங்கா தான்தேவி கயிலைஉமை யாளருகே
மணிமேடை தன்னில் மகிழ்ந்திருக்கு மவ்வளவில்
கெணியா மலேயரக்கன் கெடுவ தறியாமல்
அம்மை தனைக்கண்டு அயர்ந்து முகஞ்சோர்ந்து
கர்ம விதியால் கைமறந்து நின்றனனே
நின்ற உணர்வை நெடிய சிவமறிந்து
அன்றந்த அரக்கனுக்கு ஆதிவரங் கொடுத்து
கேட்ட வரங்கள் கெட்டியாய்த் தான்கொடுத்து
நாட்ட முடன்சீதை நகையா லழிவையென்று
இரக்கமில் லான்கேட்ட ஏற்றவரங்க ளெல்லாம்
அரக்க னவன்றனக்கு ஆதிமிகக் கொடுத்தார்
ஆதிகொடுத்த அவ்வரங்க ளத்தனையும்
நீதியில் லான்வேண்டி நெடியோன் தனைவணங்கிக்
கொண்டுபோ கும்போது குன்றெடுத்த மாயவனார்
கண்டு மறித்துக் கௌசலமிட் டேமாயன்
அரைக்கோடி வரமாய் ஆக்கிவிட்டார் மாயவரும்
சரக்கோடி மூணும் தான்தோற்றுப் போயினனே 80

ஆதியைத் தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி
சீரிய சீதை யாலே சீவனுக் கிடறும் பெற்று
வாரிய மூணு கோடி வரமது தோற்றுப் பின்னும்
மூரியன் மூணு லோகம் முழுதுமே யடக்கி யாண்டான்

இராவணன் கொடுமை

முக்கோடி வரத்தை உச்சிக்கொண்டார் மாயவரும்
அக்கரைக் கோடி அரக்கன்வரம் கொண்டேகித்
தேவரையும் மூவரையும் தேவேந் திரன்வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை
வாசு அரக்கன் மணிமேடை தூராட்டால்
வீசுவேன் வாளாலே வெட்டுவேன் பாருவென்பான்
வருண னவன்மேடை வந்துத்தொளி யாதிருந்தால்
மரணம்வரும் வரையும் வலுவிலங்கில் வைப்பேனென்பான்
சந்திரருஞ் சூரியரும் சாய்ந்துமிகப் போகாட்டால்
சந்து சந்தாகச் சரத்தாலறுப் பேனென்பான்
தெய்வ மடவார்கள் திருக்கவரி வீசாட்டால்
கைவரைந்து கட்டிக் கடுவிலங்கில் வைப்பேனென்பான்
நாலு மறையும் நல்லாறு சாஸ்திரமும்
பாலு குடஞ்சுமந்து பணிந்துமுன்னே நில்லாட்டால்
அஸ்திரத்தால் வாந்து அம்மிதனில் வைத்தரைத்து
நெற்றிதனில் பொட்டிடுவேன் நிச்சயமென் பானரக்கன் 100

வானவர்க ளெல்லாம் மலரெடுத்து என்காலில்
தானமது பண்ணித் தாழ்ந்துநில்லா தேயிருந்தால்
சாகும் வரைக்கும் தடியிரும்பி லிட்டவரை
வேகும் படிக்கு வேள்வியதி லிட்டிடுவேன்
மாமறலி மூவர் வந்தென்சொல் கேளாட்டால்
காமனையும் ஈசன் கண்ணா லெரித்ததுபோல்
என்னுடைய கண்ணால் இயமனையுங் காலனையும்
துன்னுடைய வல்லத் தூதனையும் நானெரிப்பேன்
இவ்வுகத்தி லுள்ள இராசாதி ராசரெல்லாம்
முவ்வுகமுங் கப்பமிங்கே முன்னாடி தாராட்டால்
நெருப்பெடுத் திட்டிடுவேன் நேரேகொண்டு வாராட்டால்
எரிப்பே னொருஅம்பால் இராசாதி ராசரையும்
இப்படியே பாவி இந்திரலோ கம்வரையும்
அப்படியே அரக்கன் அடக்கியர சாண்டிருந்தான்

தேவர்கள் முறையம்

அப்படியே அரக்கன் ஆண்டிருக்கு மந்நாளில்
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவாதி தேவர் தினமேவல் செய்திடவே
மூவாதி மூவர் ஊழியங்கள் செய்திடவே
முறுக்கம தால்பாவி ஊழியங்கள் கொண்டதினால்
பொறுக்க முகியாமல் பூலோகத் தார்களெல்லாம் 120

தெய்வ ஸ்திரீயும் தேவாதி தேவர்களும்
அய்யா திருமாலுக்(கு) அபயம் முறையமென
அபயமிடு மொலியை அச்சுதருந் தானமர்த்திக்
கபயமிடும் வேதன் கயிலையது தானேகி
ஆதி பரமன் அடியைமிகப் போற்றி
சோதித் திருமால் சொல்லுவா ரம்மானை
பத்துத் தலையுடைய பாவி யரக்கனுக்கு
மற்றும் பலகோடி வரங்கள்மிக ஈந்ததினால்
தேவரையும் மூவரையும் தேவேந்தி ரன்வரையும்
நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை
ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட
ஈனமாய்க் கேட்டு இருக்க முடியுதில்லை
பள்ளி யுறக்கம் பரிவாய் வருகுதில்லை
தள்ளினால் தேவரையும் தற்காப்பா ராருமில்லை
என்ன வசமாய் எடுப்போஞ் சொரூபமது
தன்னிகரில் லாதவனே சாற்றுவீ ரென்றனராம்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுவா ரம்மானை
பாவி யரக்கனுக்குப் பண்டுநா மீந்தவரம்
தாவிப் பறிக்கத் தானாகா தென்னாலே 140

இராமாவதாரம்

என்றரனார் சொல்ல எம்பெருமா ளச்சுதரும்
அன்றெம் பெருமாள் ஆலோ சனையாகி
என்னை மகவாய் எடுக்கத் தசரதரும்
முன்னே வரங்கேட்டு உலகி லவரிருக்க
அன்னுகத்தி லுள்ள அரசன் தினகரனும்
பொன்னு திருவைப் பிள்ளையென வந்தெடுக்க
நெட்டையா யரசர் நெடுநாள் தவசிருக்க
சட்டமதைப் பார்த்துத் தானனுப்பு மீசுரரே
பின்னும் பெருமாள் பெரியோனைப் பார்த்துரைப்பார்
முன்னு முறையாய் முறைப்படியே தேவரையும்
வானரமாய்ப் பூமியிலே வந்து பிறந்திருக்கத்
தானவரே யிப்போ தான்படைக்க வேணுமென்றார்
ஏவலா யென்றனுக்கு இப்பிறப் பானதிலே
காவலா யென்றனுக்குக் கைக்குள்ளே நிற்பதற்குப்
பள்ளிகொண்டு நானிருந்த பாம்புரா சன்தனையும்
வெள்ளிமணி மெத்தையையும் வீற்றிருக்கு மாசனமும்
இம்மூணு வேரும் என்னோ டுடன்பிறக்கச்
சம்மூலப் பொருளே தான்படையு மென்றுரைத்தார்
மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மந்தப் படியே தெளிந்திருக்கப் 160

படைக்கும் பொழுதில் பரதேவ ரெல்லோரும்
அடைக்கலமே மாயன் அடியெனத் தெண்டனிட்டார்
தெண்டனிட்டுத் தேவரெல்லாம் செப்புவா ரம்மானை
மண்டல மெங்கும் மயமாய் நிறைந்தோனே
எங்களை லோகமதில் இப்போ படைப்பீரால்
மங்களமா யுள்ள வலுவும் பெலமதுவும்
ஆயனுக்கு நாங்கள் அடிபணிந் தேவல்செய்ய
நேயனே நீரும் நெறியாய்ப் படையுமென்றார்
ஈசர் மகிழ்ந்து இப்படியே தான்படைக்க
வாசத் தசரதரும் வந்து தினகரரும்
மகவாசை யுற்று மகாபரனைத் தானோக்கி
அகப்பாச மற்று அதிகத் தவமிருந்து
நாத னறிந்து நன்மறையைத் தான்பார்த்து
பாத னரக்கன் பத்துச் சிரத்தானைத்
தேவர் துயரமறத் திருமால் தசரதற்கு
மூவ ருடன்கூடி உலகமதி லேபிறக்க
அரக்கர் குலமறவே அம்மைசீதா லட்சுமியை
இரக்கம்போ லுள்ள ஏற்ற தினகரற்கு
மகவாய்ப் பிறக்க மறைதான் விதித்தபடி
செகமீதில் ஞான சிருஷ்டி சிவமயமாய் 180

இப்படியே வேதத்(து) எழுத்தின் படியாலே
அப்படியே ஈசர் அமைக்கத் துணிந்தனராம்
உடனே தசரதற்கு உற்றதிரு மாலைத்
திடமாய்ப் பிறவி செய்ய எனத்துணிந்தார்
அப்போது ராமர் அய்யா திருமாலை
இப்போ துபடைக்க ஈசுரனார் சம்மதிக்கப்
படைக்கும் பொழுது பரமசிவ னாரை
நடக்குந் திருமால் நாதனைப்பார்த் தேதுரைப்பார்
அவ்வுலகி லென்னை அதிகத் தசரதற்கு
இவ்வுலகு விட்டங்(கு) என்னைப் பிறவிசெய்ய
வந்த விபரம் வகைவகையா யீசுரரே
என்றனக்குத் தானமைத்து என்னை யனுப்புமென்றார்
மாய னிதுகேட்க மறையோ னகமகிழ்ந்து
தூயவரு மங்கே சொல்லுகிறா ரம்மானை
பரலோ கமென்ற பைம்பொன் கயிலையதில்
சாலோ கந்தன்னில் தானிருந்த மாமுனிவர்
துசுவீசு மாமுனியும் சுகசீல மாமுனியும்
விசுவாச மாயிருந்து விசாரம திட்டனராம்
வாருந் துசுவீசு மாமுனியே நீர்கேளும்
நீரும் நாமுங்கூடி நீணிலத்தில் போயிருந்து 200

நானுமொரு பெண்மதலை நல்ல மகவாகத்
தானுமோ ராண்மதலை தலைவன் தனைவாங்கிச்
சம்மந் தமாகித் தானிருந்து நாடாண்டு
உம்மந் தமான உதவிபெற வேணுமென்று
இருபேரு மிருந்து எனைநினைந்து மாமுனிவர்
உருவேற்றி வேள்வி ஓம மதுவளர்க்க
இந்தப் படியே இவர்களிரு மாமுனியும்
எந்தன் தனைநோக்கி இருந்தார் தவசுகண்டீர்

குறு முனி சாபம்

அல்லாமற் பின்னும் அரக்கன்ரா வணன்தனக்குக்
கொல்லாமற் கொல்லவொரு குறுமுனிவன் சாபமுண்டு
அரக்கன் வரம்வேண்டி அவன்போகு மவ்வளவில்
இரக்கமாய் மாமுனியும் இருந்தான் தவசதிலே
தவசுநிலை பாராமல் தலைபத் தரக்கனுந்தான்
பவிசு மதமாய்ப் படுவ தறியாமல்
முனியையவன் காலால் ஒத்தினான் மாபாவி
அநியாயப் பாவி அரக்க னவன்றனக்குக்
கூறினான் மாமுனியும் கொள்ளைகொண்டச் சாபமது
தூறின சாபத் துல்லியத்தை நீர்கேளும்
மாலை மிகப்போற்றி வாய்த்ததவம் நிற்கையிலே
காலெடுத்து ஒத்தினையே கள்ளாவுன் றனக்கு 220

இந்தத் தவசுதனில் ஈசுரரைத் தானினைந்து
உந்தன் தனையறுக்க ஒருராம பாணமது
வந்து பிறந்திடவும் மாய னதைத்தானெடுத்து
உந்தனுட மார்பில் ஊடுரு வவிடவும்
துசுவீசு மாமுனிவன் தசரதராய்ப் பூமிதனில்
பிறந்து இருந்திடவும் பின்னுஞ் சுகசீல
மாமுனியும் தினகரராய் வந்து பிறந்திடவும்
ஓமுனிக்கு லட்சமியும் வில்லோ டுதித்திடவும்
இராமபா ணத்தோடே இராமர் தசரதற்கு
முராகமத் தின்படியே உலகி லுதித்திடவும்
பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும்
நாணங்கெட் டரக்காவுன் நல்லதலைப் பத்திழந்து
சேனைத் தளமிழந்து சிரசிழந்து வாழ்விழந்து
வானரங்கள் வந்துன் வையகத்தைச் சுட்டழித்து
உன்சடல மெல்லாம் உழுத்துப் புழுப்புழுத்துத்
தன்சடலப் பட்டுச் சண்டாளா நீ மடிவாய்
வேண்டுவேன் தவசு விமலன் தனைநோக்கி
ஆண்டுபன்னி ரண்டாய் அவன்றவசு நின்றனனே
நின்ற தவத்தின் நிலைமையறிந் துமையாள்
அன்றைக்கு வந்து அருளினா ளாயிழையும் 240

உரைத்த மொழிகேட்டு உற்ற முனிதனக்குத்
துரைத்தனமா யித்தனையும் சொல்லி விடைகொடுத்தேன்
இப்படியே மாமுனிக்கு ஈந்திருக்கு மிவ்வரங்கள்
அப்படியே துசுவீசு மாமுனியுஞ் சுகசீல
மாமுனியும் நம்மை வருந்திநிஷ்டை செய்யுகிறார்
ஓமுனிக்கு நல்ல ஒழுங்குசெய்ய வேணுமல்லோ
அல்லாமல் தேவாதி அபயம் பொறுக்கரிது
எல்லா மிதுகண்டு இப்பிறவி செய்யுமென்றார்
நல்லதுகா ணென்று நல்லதிரு லட்சுமியை
வல்லமுள்ள பெட்டகத்தில் வைத்தார்கா ணீசுரரும்
இராமபா ணமதையும் நன்றாய்ப் பிறவிசெய்ய
சீராமஸ்ரீ யம்பகனும் சிவனு மகமகிழ்ந்து
என்ன விதமாய் இதுபிறவி செய்வோமென்று
பொன்னம் பலத்தோர் புத்திநொந்து தாமிருந்தார்
ஈசுரரு மப்போ இரத்தின கிரிதனிலே
வீசு பரனும் வேள்வி யதுவளர்க்க
வேள்வி வளர்த்து விமல னுருவேற்றத்
தாழ்வில்லா ஆயன் தற்சொரூபந் தானாகித்
திருக்கணைக் காலில் செய்ய நரம்புருவி
கருக்கணமாய் ராம பாணக் கணையெனவே 260

உறுதிகொண்டு வேள்விதனில் விட்டெறிந்தா ரம்மானை
பிறிதிகொண்டு லட்சுமியும் பிலத்த திருக்கரத்தில்
தூண்டு விரலில் துய்ய நரம்புருவி
வேண்டும் பெரிய வீரவில் லீதெனவே
ஆராரு மிந்தவில்லை அம்பேற்றக் கூடாமல்
சீரா மரேற்ற சிந்தித்தா ளம்மானை
உடனேயது வில்லாய் ஓம மதில்பிறக்கத்
திடமாக ராமர் திருக்கணைக்கா லுள்நரம்பு
பாணமதாய் வேள்விதனில் பரிவாயப் பிறந்திடவே
தாணரும் வானோரும் சங்கத்தோ ருங்காண
எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே
வல்லோர்க ளான வாய்த்ததே வாதியெல்லாம்
சங்கடங்கள் தீர்ந்ததென்று சந்தோசங் கொண்டாட
அங்கணங்க ளான அலகைமிகக் கூத்தாட
இராமபா ணத்தாலே இராவண சூரனையும்
ஸ்ரீராமர் சென்று தென்னிலங்கை தன்னிலுள்ள
அரக்கர்குல மறுப்பார் அச்சுதனா ரென்றுசொல்லி
இரக்கமுள்ள தேவரெல்லாம் இரங்கிமிகக் கொண்டாட
வில்லோ டுடன்பிறந்த வீரலட்சு மியெனவே
வல்லோர்க ளாராலும் வந்திந்த வில்லதையும் 280

வளைத்தோர்க்கு நல்ல மாலைசூட்ட லாமெனவே
தழைத்த சுகசீல தாட்டீக மாமுனியைத்
தினகரராய்ப் பூமிதனில் செய்துவைத்து லட்சமியை
மனோகரமாய்ப் பூமியிலே வைத்தபெட்ட கத்தோடே
வில்லோ டேபிறக்க விமல னருளினராம்
நல்ல துசுவீசு மாமுனியை நாடதிலே
தசரதராய்த் தோன்றவைத்துத் தேசாதி ராசனுக்கு
விசமாலை ராமருமாய் வீரக் கணையோடே
கூடப் பிறக்கக் குன்றெடுத்தார் தான்துயிலும்
நீட அரவணையை நீதலட்சு மணராக்கித்
தலையணை மெத்தையையும் சத்துரு பரதனுமாய்
நிலைவரமாய் ஈசன் நெறியாய்ப் பிறவிசெய்யத்
தேவரையும் வானரமாய்ச் சிவனார் பிறவிசெய்ய
மூவரை யும்பிறவி உள்ளதெல்லாஞ் செய்திடவே
கொடுமுடியாய்ப் பிறந்த கோளிலங்கைப் பாவிகளை
முடியடிவே ரில்லாமல் முழுது மறுப்பதற்கு
வேண்டும் பிறவியெல்லாம் விமல னருளிமிகத்
தாண்டவ சங்காரம் தானிதென்றா ரம்மானை
இராவணன் தன்னைக் கொல்ல இராம பாணங்க ளோடே
சிராம ராய்மாயன் தானும் தசரதன் தனக்குத் தோன்ற 300

விராகன மாது சீதை வில்லுட னுதிக்கத் தேவர்
மராம ரக்குலங் களாகி வந்தனர் புவியின் மீதே
சிராமருந்தான் ராவணனைச் செயிக்க ஒருவிதமாய்
இராமபா ணத்தோடே நாட்டில் பிறந்தனராம்
தென்னிலங்கை தான்முடிய சீதை சிறையிருக்கப்
பொன்னரிய வில்லோ(டு) உடன்பிறந்தாள் பொன்மாது
தேவரெல்லாம் வானரமாய்த் தென்னிலங்கை சுட்டழிக்கப்
பூவர் சுகுமுனிவர் போர்விசுவ கன்மனெனும்
வானரத்துக் கேற்ற மந்திரி தானாகித்
தானவரையு மனுப்பித் தரணிதனி லெம்பெருமாள்
லட்சும ணரெனவே ஏற்றசத்து ருபரதன்
கட்சியுடன் மாயன் கணையோ டுடன்பிறந்தார்
இப்படியே ராவணற்கு எல்லோ ரும்பகையாய்
முப்படியே உள்ள முறைநூற் படியாலே
வந்து பிறந்தார்காண் மாயவரு மம்மானை
இப்படியே ராமர் ஏற்ற தசரதற்கு
அப்படியே பிறந்து அங்கிருந்தா ரம்மானை

சீதா கல்யாணம்

சீதை வளர திருவில்லுந் தான்வளர
கோதைக் குழல்சீதைக் கோமான் மிகவளர
சிராமர் பிறப்போர் சிறப்பாய் வளர்ந்திடவே 320

இராமர் குலங்கள் இரகசிய மாய்வளர
அரக்கன் கொடுமை அண்டமள வேவளர
சீதை வளர்ந்து சிறந்த வயதானதிலே
மாதை மணமிடவே மாதா மனதிலுற்றுத்
தன்புரு சனோடே தையல்நின் றேதுசொல்வாள்
அம்பும்வில் லும்வளர ஆயிழையுந் தான்வளர்ந்து
பக்குவங்க ளாச்சே பைங்கிளிக்கு மாலையிட
ஒக்குவ தென்ன உரைப்பீரென் னுத்தமரே
என்று மடமாது ஏற்ற தினகரரை
நின்று வணங்கி நேரிழையுஞ் சொல்கையிலே
வில்லை வளைத்தல்லவோ மெல்லிமணஞ் சூடுவது
வல்ல கலைக்கோட்டு மாமுனியைத் தான்வருத்தி
இன்னபடி யீதென்று எடுத்துரைக்க மாமுனியும்
அன்னப் பொழுதில் அருளுவான் மாமுனியும்
பூரா சமான புவியைம்பத் தாறிலுள்ள
இராசாதி ராசரெல்லாம் இப்போ வரவழைத்து
வில்லை வளைத்தவர்க்கு மெல்லிமணஞ் சூட்டுமென்று
சொல்லியே மாமுனியும் தசரதனார் கண்மணியைக்
கண்டுநின்று மாமுனியும் கண்ணனார்க் கேதுரைப்பான்
பண்டு உனக்குப் பரம சிவனாரும் 340

வில்வளைத்து மாலையிட விதியில் விதித்திருக்குச்
செல்லந்த மன்னன் தினகரானர் தன்மகட்கு
இன்று கலியாணம் இப்போது அங்குசென்றால்
பண்டு அமைத்த பலனுனக்குக் கிட்டுமிப்போ
என்று கலைக்கோட்டு மாமுனியுந் தானேகி
சென்றான் தினகரரின் செல்வி மணந்தனிலே
அன்றைம் பத்தாறு அரசருக்கு மாளனுப்பி
தேசாதி தேசர் திசைவென்ற மன்னரெல்லாம்
மேசாதி யானோரும் மேவுந்தெய் வேந்திரனும்
இராவண சூரன் இராமர்முத லானவரும்
இராமர்குல ராசாதி நல்லமன்னர் வந்தனராம்
வில்லை வளைத்து வில்லில் நாண்பூட்டாமல்
முல்லைமன்ன ரெல்லாம் முகம்வாடிப் போயிருந்தார்
இராம ரெடுத்து இராம சரமேற்றி
சிராமர் மணஞ்செய்தார் சீதைத் திருமாதை
மணம் முகித்துவானோர் மங்களகீ தத்தோடே
துணைவர் தலைவரொடு சென்றா ரயோத்தியிலே
அயோத்தியா புரியில் ஆனதம்பி மாரோடும்
கையேற்று வந்த கன்னி திருவோடும்

ஸ்ரீராமர் வனவாசம்

வாழ்ந்திருக்கும் நாளில் மாதா கைகேசியம்மை 360
தாழ்ந்தமொழி சொன்னதினால் தம்பி பரதனையும்
நாடாள வைத்து நல்லஸ்ரீ ராமருந்தான்
கூடவொரு தம்பியோடும் குழல்சீதை மாதோடும்
நாடி நடந்தார் நல்லவன வாசமதில்
வாடிவந்து கானகத்தில் வாழ்ந்திருக்கும் நாளையிலே
லட்சுமண ருமங்கே ஏற்றகனி தான்பறிக்கக்
கட்சியுடன் நடந்து காட்டில் மிகப்போகச்
சூர்ப்பநகை தன்மகனும் துய்ய தவசுநிற்க
ஆர்ப்பரவா யீசர் ஆகாசத் தேவழியே
வாளை அயச்சார் வாய்த்தபர மேசுரரும்
தாழ வரும்போது தாமனந்த லட்சுமணர்
கண்டந்த வாளைக் கைநீட்டித் தான்பிடித்துத்
துண்டம் விழஆலைத் துஞ்சிவிழ வெட்டினர்காண்
பட்டந்த ஆலும் படபடெனச் சாய்ந்திடவே
வெட்டந்து வீழ்ந்தான் மீண்டுதிரம் பாய்ந்ததுவே
அரக்கன்தாய் கண்டு அலறி வெகுண்டெழுந்து
இரக்கமில்லாச் சூர்ப்பநகை இலட்சுமண ரைத்தேடி
தேடி ஸ்ரீராமர் சீர்பாதங் கண்டணுகி
நாடியெனைத் தாவுமென்று நாணமில்லா தேயுரைத்தாள்
என்பாரி யிங்கே இருக்கவே வேறொருவர் 380

தன்பாரி தன்னைத் தான்விரும்பேன் போடியென்றார்
போடிநீ யென்ற புத்திதனைக் கேட்டரக்கி
தேடியே லட்சுமணரைச் சேரவுற வாடிநின்றாள்
உறவாடி நின்ற ஒயிலை யவரறிந்து
பறபோடி யென்று பம்பத்தன மூக்கரிந்தார்
மூக்கு முலையும் முகமும் வடிவிழந்து
நாக்குரைக்க வாடி நாணங்கெட்டத் தீயரக்கி
தன்னுடனே கூடித் தமய னெனப்பிறந்த
மன்னன்ரா வணன்தமக்கு வகையா யுரைக்கலுற்றாள்
காட்டி லொருபெண் கமலத் திருமகள்போல்
நாட்டிலொவ்வாக் கன்னி நான்கண்ட தில்லையண்ணே
உன்றனக்கு ஆகுமென்று உற்றவளை நான்பிடித்தேன்
என்றனுட மூக்கரிந்தோர் இருவருண் டல்லாது
மற்றொருவ ரங்கே வாழ்ந்திருக்கக் கண்டதில்லை
கற்றொ ருவர் காணாது கையிலம்பு காணாது
மருவனைய அண்ணேவுன் வாய்த்த விரலதிலே
ஒருயிறைக்கே வுண்டு உற்றஅவர் தன்னுயரம்
என்றந்த அரக்கி ஈனம்பல துரைக்க
அன்றந்த ராவணனும் ஆகாசத் தேரேறிப்
பிச்சைக் கெனவே புறப்பட்டான் காடதிலே 400

அச்சமில்லா லட்சுமணர் ஆனஸ்ரீ ராமருமாய்
மானின் பிறகே மனம்வைத்து நின்றிடவே
வானின் செயலால் வானவர்கள் பார்த்திருக்க
நாரா யணர்தேவி நல்லதிரு லெட்சுமியை
ஏராத பாவி இலச்சைகெட்டத் தீயரக்கன்
தேரிலே அம்மைதனைத் திருடிக்கொண் டேகினனாம்
பாரிலே வுள்ள பட்சி பறவைகளும்
கண்டு பதறிக் கதறிமிக அழவே
அண்டர் முனிதேவர் எல்லோருந் தாமழவே
மான்வேட்டையாடி மாரீசனை யறுத்துத்
தான்வேட் டையாடும் தகையாலே தம்பியுடன்
வந்தார்காண் லட்சுமியும் வாழ்ந்திருக்கு மண்டபத்தில்
பந்தார் குழலனைய பாவையரைக் காணாமல்
கலங்கி மிகவாடி கண்ணீர் மிகச்சொரிய
மலங்கியே லட்சுமணர் மண்ணிற் புரண்டழுதார்
என்னே மணியே எனைப்பெற்ற மாதாவே
பொன்னே யமுதே பெற்றவளே யென்றழுதார்
இராமர் முகம்வாடி நாயகியைத் தான்தேடி
ஸ்ரீரா மர்கலங்கி சினேக முடனழுதார்
மனுவாய்ப் பிறக்க மனுவுடம்பு கொண்டதினால் 420

தனுவா னதையடக்கித் தானே புலம்பலுற்றார்
அன்ன மயிலோடும் அன்றில் குயிலோடும்
புன்னை மலரோடும் புலம்பி மிகவழுதார்
வன்னமுள்ள யானை வாய்த்தசிங் கத்தோடும்
பெண்ணமுதைக் கண்டீரோ என்று புலம்பலுற்றார்
இப்படியே ராமர் இளைய பெருமாளும்
அப்படியே சொல்லி அழுதழுது தான்வாடிச்
சோலை மரத்தின்கீழ்ச் சோர்ந்து முகம்வாடி
மாலவருந் தம்பி மடிமேல் துயின்றிருக்க
அஞ்சனை யாள்பெற்ற அனுமனதில் வந்தடைய
சஞ்சல மேதென்று சாரதியுங் தெண்டனிட
மின்செறியு மாயன் விழித்தவனைத் தானோக்கிக்
கவசகுண்ட லமணிந்த கார்குத்தா யாரெனவே
உபசரித்துச் சொன்ன உச்சிதத்தைத் தானறிந்து
அய்யரே யென்னை ஆட்கொண்ட நாயகமே
மெய்யரே நீங்கள் மெலிந்திருப்ப தேதெனவே
கேட்க அனுமன் கிருபைகூர்ந் தெம்பெருமாள்
சேர்க்கையுடன் சொன்னார் சீதையுட தன்வளமை
ஏற்கை யாகக்கேட்டு இயலுனுமன் ஏதுசொல்வான்
நல்லது அடியேன் கேட்டேன் நானினி வுரைக்கும் வாறு 440

சொல்லவுங் கேட்பீ ரெந்தன் திருவடை யாளஞ் சொன்னீர்
வல்லவர் தகப்ப னானீர் வரந்தர வேணு மிப்போ
புல்லர்வா ழிலங்கை சுட்டு அம்மையைக் கூட்டி வாறேன்
என்தாய் மொழிந்த இயலடையா ளத்தாலே
முன்தானே பெற்ற முதல்வர்தா னென்றனக்கு
அய்யா தானாகும் அடைக்கலமே யாமடியார்
பொய்யாம லென்றன் பேரனுமன் கண்டீரே
இலங்கை தனைச்சுட்டு அம்மையைக் கூட்டிவர
மலங்காதே போவென்று வாக்கருள வேணுமையா
சுக்ரீவன் சாம்புவனும் சுத்தமுள்ள வீரர்களும்
ஒக்கவொரு முகமாய் உடையோன் பதமடைய
கெருடன் மிகமறித்துக் கேலியிட்ட ஞாயமதும்
திருடன் கொடிய தீபாவி ராவணனும்
அம்மை தனைக்கொண்டு அவன்கோட்டை யானதிலே
செம்மையில்லாப் பாவி சிறையில்வைத்த ஞாயமதும்
எல்லா மறிந்து எம்பெருமாள் கோபமுற்று
வெல்லத் துணிந்தார் மிகுபடைகள் தான்திரட்டி
எழுபது வெள்ளம் ஏற்றவா னரங்களையும்
முழுதும் வருத்தி ஒப்பமிட் டெம்பெருமாள்
விசுவகம் மாளனையும் விரைவா யருகழைத்து 460

வசுவாசு மைந்தன் வாய்த்த அனுமனையும்
அனுமன் தனையேவி ஆன மலையெடுத்துத்
துனும னுடனே தோயக் கடலதுக்குள்
கோட்டைய திட்டுக் குக்குளித் தங்கேகி
ஓட்டனாய் விட்டார் உற்ற அனுமனையும்

அனுமன் தூது

பூட்டமுடன் வாயு புத்திரனுந் தான்மகிழ்ந்து
நாட்ட முடனிலங்கை நாடாளும் பாதகனைக்
கண்டு முடுகிக் கருத்தழியத் தான்பேசி
கொண்டு இலங்கை குப்பையிடத் தீக்கொளுத்தி
மால்கொடுத்த வாளி மாதுகையி லேகொடுத்து
வால்கொண்டு வீசி வனங்காவு தானழித்துக்
கேதார மாமலையும் கீர்த்தியுட னேகுதித்துப்
பாதார மென்று பணிந்தானே ராமரையும்

இராவணன் பாடு

அரக்க னவன்பேசும் அநியாயந் தான்கேட்டு
இரக்கமுள்ள எம்பெருமாள் எழுந்தார் படைக்கெனவே
படைக்கு இவர்நடக்க பார்த்துவி பீஷணனும்
அடைக்கல மென்று அவர்பாதஞ் சேர்ந்தான்காண்
சேர்ந்த வுடனே திருமால் மனமகிழ்ந்து
ஓர்ந்த படையோடே உடன்யுத்தஞ் செய்திடவே
அரக்கன் படையும் அச்சுதனார் தன்படையும் 480

இரக்க மில்லாமல் இருபேருஞ் சண்டையிட்டார்
படைபொருது வெல்லாமல் பத்துத்தலை யுள்ளோனும்
கடகரியுந் தோற்றுக் கையிழந்தா னம்மானை
பத்துத் தலையும் பார்மீதி லற்றுவிழ
மற்று நிகரொவ்வா மாயத் திருநெடுமால்
அரக்க னுயிரு அங்குமிங்கும் நிற்கையிலே
இரக்கமுடன் நின்றங்(கு) ஏதுரைப்பா ரம்மானை
கேளாய்நீ ராவணா கிரேதா யுகந்தனிலே
பாழாய் இரணியனாய்ப் பாரில் பிறந்திருந்தாய்
உன்னிடுக்கங் கண்டு உன்புதல்வ னானாகி
தன்னடுக்கல் வந்துவுன்னைச் சங்காரஞ் செய்தேனான்
மகனாய்ப் பிறந்து வதைத்தேனான் பாரறிய
பகை நானென்று பண்பு மிகக்கூற
அப்போது நீயும் அன்றுரைத்த வார்த்தையினால்
இப்போது உன்குலங்கள் எல்லாங் கருவறுத்து
நாணமில்லா துன்னிலங்கை நகரிதீ யாலழித்துப்
பாணமொன்றா லுன்னைப் படஎய்தேன் கண்டாயே
அல்லாம லுன்றனக்கு அங்கமொரு நூறு
எல்லாரும் வெல்லா ஈசன் கயிலையதும்
எடுத்த பெலமுமுண்டே ஈரஞ்சு சென்னியுண்டே 500

கடுத்த பெலமுள்ள காலாட்டுகள் பொரவுண்டே
இந்திரனை வென்ற ஏற்ற புதல்வருண்டே
சந்திரனுஞ் சூரியனும் தன்னிடத்தி லுண்டல்லவோ
மூணுலோ கத்தாரும் உன்னிடத்தி லுண்டல்லவோ
ஆணுவங்கள் பேசினையே அம்பொன்றில் மாண்டாயே
கோலுபோ லேயுயர்ந்த கொடும்பாவி நீகேளு
நாலு முழமல்லவோ நல்லதலை ஒன்றல்லவோ
என்கை வாளி எடுத்துவிடத் தாங்காமல்
உன்கை காலுமற்று உயிரழிந்து மாண்டாயே
பத்து மலைபோலே பருந்தலைகள் பெற்றதெல்லாம்
இத்தலத்தில் கண்டிலனே என்கையால் மாண்டாயே
மாண்டாய்நீ யென்று வசைகூறக் கேட்டரக்கன்
ஏண்டா மழுப்புகிறாய் இராமனோ கொல்லுவது
தம்பி யெனப்பிறந்து சத்துருப்போல் தான்சமைந்து
என்பெலங்க ளெல்லாம் எடுத்துரைத்தா னுன்றனுக்கு
ஆனதா லென்னுயிரு அடையாளம் பார்த்துலக்காய்
ஊனமுற எய்தாய் உயிரழிந்தே னல்லாது
நீயோடா என்பெலங்கள் நிலைபார்த்துக் கொல்லுவது
பேயா நீபோடா புலம்பாதே யென்னிடத்தில்
அப்போது மாயன் அதிகசீற் றத்துடனே 520

ஒப்பொன் றில்லாதார் உரைப்பார்கா ணம்மானை
உன்னுட தம்பி யாலே உயிர்நிலை யறிந்து யானும்
என்னுட சரத்தால் கொன்றேன் என்றியம்பிய அரக்கா வுன்னைப்
பின்னுகப் பிறப்பு தன்னில் பிறப்புநூ றோடுங் கூடி
அன்னுகந் தன்னில் தோன்ற அருளுவே னுன்னை நானே

என்னொரு தம்பி யாலே என்னையுங் கொன்றா யென்று
தன்னொரு மதத்தால் நீயும் சாற்றிய அரக்கா வுன்னைப்
பின்னொரு யுகத்தில் நூறு பிறப்புடன் பிறவி செய்து
இன்னொரு ஆளின் கையால் இறந்திடச் செய்வே னுன்னை

என்னுடைய தம்பி யாலேதா னென்னுயிரை
உன்னுடைய அம்பால் உயிரழிந்தே னல்லாது
என்னைநீ கொல்ல ஏலாது என்றுரைத்தாய்
உன்னை நானிப்போ ஒருபிறவி செய்யுகிறேன்
என்றுசொல்லி மாயன் எண்ணவொண்ணாக் கோபமுடன்
அன்று கயிலை அரனிடத்தில் சென்றிருந்து
முன்னேயுள்ள துண்டம் ஓரிரண்டு உள்ளதிலே
ஒன்னேயொரு துண்டம் ஒருநூறு பங்குவைத்துத்
துவாபர யுகம்வகுத்துத் துரியோதன னெனவே
கிரேதா யுகமழித்துக் கீழுலகில் தோணவைத்தார்

துவாபர யுகம்

பாவி பிறக்க பச்சைமால் தான்கூடத் 540
தாவிப் பிறந்த தம்பியர் மூவரையும்
விபீஷணனும் நல்ல வெற்றிச்சாம் புவனையும்
அபூருவமாய்க் குந்தியர்க்கு ஐவரையும் பிறவிசெய்தார்
ஐவரையும் பூமி அதிலே பிறவிசெய்து
மொய்குழ லான மெல்லி திரௌபதியாய்
அம்மை திருக்குழலில் அமர்ந்திருந்த பொற்சடையை
நம்மை விபீஷணற்கு நல்மக ளாக்கிவைத்து
அரக்கர் குலமறுக்க அம்மை யெழுந்தருளி
இரக்கர் புரமேகி இருக்குமந்த நாளையிலே
தோழியாய் முன்னிருந்த துய்யத் திரிசடையை
நாழிகை தன்னில் நாதன் பிறவிசெய்தார்
பின்னுமந்த மாயன் பெரியோ னடிவணங்கி
நின்னுகரங் குவித்து நெடியோ னுரைத்தனராம்
எழுபது வெள்ளம் ஏற்றவா னரங்களுடன்
முழுது மிலங்கை முடித்துநான் நிற்கையிலே
என்படைக ளான எழுபதுவெள் ளமதிலும்
உன்படைக ளெல்லாம் உயிரழிந் தாரெனவே
ஆராய்ந்து என்படையை அளவிட்டு நிற்கையிலே
தோராத மன்னன் துடியானச் சேவகன்தான்
ஒருவன் தனைக்காணேன் உடனே மறலிதனை 560

வருக அழைத்து வகையே தெனக்கேட்க
நானில்லை யென்றே நமன்தான் மிகவுரைக்க
ஏனில்லை யென்று இறுக்கிநான் கேட்கையிலே
அய்யாவே வும்முடைய ஆளான வீரனைத்தான்
கையால முள்ள கும்பகர்ண னொருசமரில்
பிடித்து நசுக்கிப் பிசைந்து திலதமிட்டான்
அடுத்துநின்று பார்த்து அரக்க னவனுயிரைக்
கொண்டேகி நானும் கொடுநரகில் வைத்திருக்கேன்
என்றே தான்மறலி இத்தனையுஞ் சொன்னான்காண்
ஆனதால் கும்ப கர்ண னவன்தனையும்
ஈனமில்லாக் கஞ்சன் எனப்படையு மிவ்வுகத்தில்
என்றே தான்மாயன் இதுவுரைக்க ஈசுரரும்
அன்றே தான்கும்பனையும் அப்படியே தான்படைத்தார்
படைத்த சடமதுக்குப் பரம னுயிர்கொடுக்கச்
சடத்தை மிகயெழுப்பித் தானனுப்ப ஈசுரரும்
துவாபர யுகமெனவே தொன்முறையைத் தான்பார்த்துத்
தவறாத வண்ணம் தான்படைத்தா ரெல்லோரும்
அப்படியே ஈசர் அன்று படைத்தபடி
இப்படியே வந்து இவர்கள் பிறந்தனராம்
முன்னுள்ள பீடத்து உதிரமெல்லாந் தானெழுந்து 580

அன்றுள்ள பாவி அவன்கூடத் தானிருக்க
அரக்க னிராவணனும் அதிகத்துரி யோதனனாய்
மூர்க்கன் பிறப்போர் ஒருநூறு பேரோடு
வந்து பிறந்தான்காண் வையகத்தி லம்மானை
சந்துபயில் மாயன் தன்னோ டுடன்பிறந்த
தம்பி பரதன் சத்ருக்கன் லட்சுமணன்
நம்பி விபீஷணனும் நல்லதொரு சாம்புவனும்
ஐவரும் பூமிதனில் அப்போது தோன்றினராம்
தெய்வத் திரிசடையும் தேவி துரோபதையாய்
மெய்வரம்பா யுள்ள மேன்மை யதின்படியே
ஐவருட தேவியென்று ஆயிழையுந் தோன்றினளாம்
கும்பகர்ண னென்ற கொடும்பாவி கஞ்சனுமாய்
வம்பகனாய் வந்து மதுரை தனில்பிறந்தான்
இப்படியே ஐபேரும் ஏற்றரிய நூற்றுவரும்
அப்படியே பங்கு வகைபாதி யாய்ப்பிறந்தார்
இராச்சியத்தி லுள்ள இறைதான முள்ளதெல்லாம்
தராச்சியமாய்ப் பாதியெனத் தங்கள்சில நாடாண்டார்
கஞ்ச னவன்பிறந்து கடிய கொடியவனாய்
வஞ்சனையும் பெற்ற மாதா பிதாக்களையும்
சிறையதிலே வைத்துத் தேசமதைத் தானாண்டு 600

இறைமிகுதி வேண்டி இராச்சியத்தை யாண்டனனே
ஆனதா லவனுடைய அம்புவியி லுள்ளோர்கள்
ஈனதுன்ப மாகி இருந்தார் பயமடைந்து
தேவரையும் வானவரைத் தேவேந்தி ரன்வரையும்
மூவரையுஞ் சற்றும் முனியாமல் மாபாவி
தெய்வ மடவாரைத் திருக்கவரி வீசிடவே
வைவ னவன்பிடித்து வாவெனவே ஆள்விடுவான்
வருணனொடு வாயுவையும் வலுவிலங்கில் தான்போட்டு
அருணன் முதலாய் அந்தி வரும்வரையும்
வேலை யவன்கொண்டு விடுவா னவன்தொழிலாய்
மாலை நினையான் மறையைமிக நினையான்
ஆலயங்கள் கோயில் அழிந்த மடங்கள்வையான்
சாலயங்கள் செய்யான் தர்மசிந்த னைகள்செய்யான்
அந்தணர்க்கு மீயான் அன்னதா னங்களிடான்
பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்தமக் களியான்
ஆவு தனையடைத்து அதுக்கிரைகள் போடாமல்
கோவுகளைக் கொல்வான் கொடும்பாவி நெட்டூரன்
கண்ட வழக்குரையான் கைக்கூலி கேட்டடிப்பான்
சண்டனைக்கண் டாருவென்பான் தன்னைப்பா வித்திருப்பான்
எம்மைப் படைக்க ஏலுமோ மற்றொருவர் 620

நம்மைப் படைத்ததுவும் நான்தா னெனவுரைப்பான்
இப்படியே கஞ்சன் எதிரியில்லை யென்றுசொல்லி
அப்படியே மீறி ஆண்டான்கா ணம்புவியை
மேலோகந் தன்னில் மிகுத்ததெய்வக் கன்னியரில்
வாலோக மான வாய்த்தகன்னி தேவகியும்
உரோகணியா ளென்னும் நுதல்மடவா ரண்டுபேரும்
புரோகணிய மான பொய்கைநீர் தானாடி
அக்காளுந் தங்கையுமாய் அவர்கள்ரண்டு மாமயிலும்
மிக்கான பட்டுடுத்து மேவிவழி தான்வரவே
மாயன் சிறுமதலை வடிவெடுத்துத் தானழவே
ஆயனுட கோலம் அறியாமல் மங்கையர்கள்
தெய்வகியும் பார்த்துச் சொல்லுவாள் தங்கையிடம்
நெய்நிதியக் கன்னி நெடியவிழி ரோகணியே
இன்னா அழுது இதில்கிடக்கும் ஆண்மதலை
பொன்னான பூமியிலும் பெண்ணே நான்கண்டதில்லை
காலில்சிவ சக்கரமும் கையில்மால் சக்கரமும்
மேலில்சத்தி சக்கரமும் விழிசரசு சக்கரமும்
வாயு பகவான் வடிவுமிகப் போலே
ஆயும் பலகல்வி ஆராய்ந்த அச்சுதர்போல்
கண்கொள்ளாக் காட்சி கைமதலை தன்னழகு 640

விண்கொள்ளாக் காட்சி மெல்லியரே யிம்மதலை
இம்மதலை தன்னை எடுத்துநாம் தாலாட்டி
பொன்மதலை தன்னைப் போட்டுவைத்துப் போவோம்நாம்
என்றுசொல்லி மாதர் இருபேருஞ் சம்மதித்து
வண்டுசுற்று மெல்லி வந்தெடுத்தா ரம்மானை
மதலை தனையெடுத்து மார்போடு தானணைத்து
குதலை மொழியமர்த்திக் கோதைரண்டு மாமயிலும்
கயிலை யதுக்கேகி கறைக்கண்டர் பாதமதில்
மயிலனைய மாமயிலார் வந்தார்கா ணம்மானை
வந்த மாடவர்கள் மார்பி லமுதிளகி
அந்தப் பரமே சுரனா ரவரறிந்து
கன்னியரே உங்கள் கற்பு அகன்றதென்ன
மின்னித் தனங்கள் மெல்லியுட லானதென்ன
பச்ச நிறமேனி பால்வீச்சு வீசுதென்ன
அச்சமில்லாக் கொங்கை அயர்ந்துஉடல் வாடினதேன்
ஏதெனவே சொல்லுமென்று ஈசுரனார் தான்கேட்க
சூதகமாய் நின்ற தோகைபோல் வாடிநின்றார்
வாடியே மடவார் தாமும்
மார்பதில் துகிலை மூடி
கோடியே அயர்ந்து ஏங்கிக்
குருவதைப் பாரா வண்ணம்
நாடியே தாழ்ந்து பெண்கள் 660

நாணியே நின்ற தன்மை
தேடியே மாயன் செய்தச்
செயலென அறிந்தா ரீசர்
அறிந்தார் மாயன் சேயாகி
அழுதே இரங்குங் குரலதினால்
செறிந்தார் குழலார் இவர்கள் சென்று
சேர்த்தே யெடுத்து அணைத்ததுவும்
பறிந்தே யிவர்கள் நாணினதும்
பால்தான் தனத்தில் பாய்ந்ததுவும்
அறிந்தே கன்னி யிருவரையும்
அழித்தே பிறவி செய்தனராம்
பிறவி யதுதான் செய்யவென்று
பெரியோ னுரைக்கப் பெண்ணார்கள்
அறவி யழுது முகம்வாடி
அரனா ரடியை மிகப்போற்றித்
திறவி முதலே திரவியமே
சிவமே உமது செயலைவிட்டு
இறவி யானா லெங்களுக்கு
இனிமேல் பிறவி வேண்டாமே
வேண்டா மெனவே மெல்லியர்கள்
விமல னடியை மிகப்போற்றி
மாண்டா ரெலும்பை மார்பணியும்
மறையோன் பின்னு மகிழ்ந்துரைப்பார்
தூண்டாச் சுடரோன் திருமாலைச்
சேயென் றெடுத்தச் செய்கையினால்
ஆண்டா ருமக்கு மகனாகி
அதின்மேல் பதவி உங்களுக்கே

மெல்லியரே உங்களுட மெய்வரம்பு தப்பினதால்
செல்ல ஏதுவாச்சு சீமையிலே யம்மானை
என்றே அரனார் இருகன்னி யோடுரைக்க
அன்றே மடவார் ஆதிதனை நோக்கி
ஆதியே நாதி ஆனந்த மெய்ப்பொருளே
சோதியே நாதி சொரூபத் திருவிளக்கே
அல்லாய்ப் பகலாய் ஆரிருளாய் நிற்போனே 680

வல்லாய்ப் புவியை வார்த்தையொன் றாற்படைத்த
ஆதிப் பொருளே அனாதித் திருவுளமே
சோதிப் பொருளே சொல்லொணா தோவியமே
எட்டாப் பொருளே எளியோர்க் கெளியோனே
முட்டாத செல்வ முதலே முழுமணியே
கண்ணுள் மணியே கருத்தினுள் ளானவனே
பெண்ணு மாணாகிப் பிறப்பில்லா நின்றோனே
இறப்புப் பிறப்பில்லாத எளியோர்க் கெளியோனே
பிறப்பு இறப்பில்லாத பேசமுடி யாதவனே
கருவிதொண்ணூற் றாறும் காவலைந்து பேருடனே
உருவு பிடித்து உயிர்ப்பிறவி செய்வோனே
மூவரு முன்றன் முடிகாண மாட்டாமல்
தேவருந் தேடித் திரிந்தலைய வைத்தோனே
மவ்வவ் வாகி வருந்தியவ்வும் ஒவ்வாகி
செவ்வவ் வாய்நின்ற சிவனே சிவமணியே
மாய னெடுத்த மகவான கோலமதை
நேய மறியாமல் நெறிதவறிப் போனதினால்
பின்னேநீ ரெங்களையும் பிறவிசெய்ய வேண்டாங்காண்
எந்நேரங் கயிலை இப்பூமி யானதிலே
தெய்வப் பசுப்போல் தேவரீ ரெங்களையும் 700

மெய்யறிவு கூடி மிகப்புடையு மேலோனே
அல்லாதே போனால் அடியார்க ளெங்களையும்
இல்லாதே செய்யும் இனிப்பிறவி வேண்டாங்காண்
அம்மை உமையாள் அருகே மிகஇருந்து
உம்மையும் போற்றி உம்மூழி யங்கள்செய்து
பூவுலகில் நாங்கள் பெண்ணாய்ப் பிறந்ததுண்டால்
பாவிகட்கு வேலைப் பண்ணி முடியாதே
பூவு முடித்துப் பூமேடை யும்பெருக்கி
நாவுலகு மெய்க்க நல்லகவி தான்பாடி
தம்புரு வீணை சப்தக் குழலுடனே
இன்புருக ராகம் இசைந்தமுறை தானிகழ்த்தி
நரசென்மம் வாழும் நசுரக் குலங்களிலே
அரசேநீ ரெங்களையும் அழுந்தப் படையாதேயும்
இப்படியே கன்னி இரங்கி யழுதிடவே
அப்படியே கன்னி அவர்களுக் காதியுந்தான்
சொல்லுவார் வேதச் சுடரோ னதிசயித்து
நல்லதுகாண் பெண்ணே நம்மைரண்டுஞ் சொல்லாதே
மாயன் துவாபர வையகத்தில் போய்ப்பிறக்க
வாயமிட்டா ருங்களையும் மாதா வெனவாக்க
நாமென்ன செய்வோம் நவ்விமால் செய்ததற்குப் 720

போமென் னஈசர் பிறவிசெய்தா ரம்மானை
வாயு மகாதேவன் வடிவென்ற இச்சையினால்
ஆசையா லுங்களுக்கு அவனே புருஷனென்றார்
சங்கு சரங்கொண்ட தம்பியென்ற இச்சையினால்
அங்குப் பகவதியும் அச்சுதரு முங்களுக்கு
மதலையென வந்துதிப்பார் வையமது கொண்டாட
குதலை மொழியாரே கொம்பே றிடையாரே
விலங்குச் சிறையும் மிகுசிறையு முங்களுக்கு
மலங்குவது மெத்த மாய்ச்சலுண் டாகியபின்
ஸ்ரீகிருஷ்ண னாகத் திருமா லுதித்தபின்பு
குறுக்கிட்ட தோசம் கொடுமை மிகத்தீர்ந்து
பின்னே பதவிப் பேறுண்டு முங்களுக்கு
மின்னே ரொளியை விமலன் பிறவிசெய்தார்
பிறவியரன் செய்யப் பிறந்தார்கள் பூமியிலே
திறவியது விட்டுத் தேவகியும் ரோகணியும்
மதுரைதனில் வந்து மாபாவிக் கஞ்சனுக்கு
இருதையல் மாமயிலார் ஏற்ற பிறப்பெனவே
கூடப் பிறந்தால் கொடியதோ சமெனவே
தேட வொருராசன் சிறுவி யெனப்பிறந்தார்
பிறந்தே தான்கஞ்சனுக்குப் பிறப்பெனவே பேசும்வளம் 740

சிறந்தே யிவர்கள் திருத்தமாய் வாழுகையில்
இப்படியே கஞ்சன் இவர்களிரு தங்கையையும்
அப்படியே கூட்டி அவன்வேட்டை யாடிவர
மாமுனிவன் தனக்கு வாய்த்திருந்த மாம்பழத்தைத்
தாமுனிந்து கஞ்சன் தானக்கனி பறித்துத்
தங்கையர்க்குத் தானீந்தான் சயோகமுனி யறிந்து
மங்கையர்க்கு வந்த மகனா லழிவையென்று
மாயனுட ஏவலினால் மாமுனியு மப்போது
பாயமுள்ள கஞ்சனுக்குப் படுசாப மிட்டனனே
சாபமது கஞ்சன் தானறியா வண்ணமுந்தான்
பாவமிக தான்வருத்தி மிகுத்தகே டுள்ளகஞ்சன்
சோதிரியங் கேட்கத் தொடர்ந்தான்கா ணம்மானை
அப்போது சோதிரிஷி அந்தமுனி சாபமதால்
எப்போது ஆகிடினும் இடுக்கம்வரு மென்றுரைத்தான்
சோதிரியங் கேட்டுத் துக்கமுற்றுக் கஞ்சனுந்தான்
வேதி யனையனுப்பி மிகுத்தகே டுள்ளகஞ்சன்
கலியாணஞ் செய்யக் கருத்தல்ல வென்றுசொல்லி
வலியான கஞ்சன் வைத்திருந்தா னம்மானை
அந்தநல்ல செய்தி அறிந்தந்த நாரதரும் 760

வந்துகஞ் சன்தனக்கு வளப்பமெல்லாஞ் சொல்லலுற்றார்
கேளாய் நீகஞ்சா கீர்த்தியுள்ள சாஸ்திரங்கள்
வாழாத மங்கையரை வைத்திருந்தால் ராச்சியத்தில்
தர்மந் தலைகெடுங்காண் சாஸ்திரத்துக் கேராது
வற்மம் வந்துசிக்கும் மாரியது பெய்யாது
கோத்திரத்துக் கேராது குடும்பந் தழையாது
சூத்திர நோய்கள் சுற்றுமடா அக்குடும்பம்
மானம் வரம்புகெட்டு மனுநீதி தானழிந்து
ஊனமடா அக்குடும்பம் உலகத்துக் கேராது
கோட்டை யழியும் குளங்கரைகள் தானிடியும்
நாட்டை முடிக்குமடா நல்லகன்னி காவல்வைத்தால்
பொன்னான சீதை பிலத்தகற் பானதிலே
கண்ணான இலங்கை கரிந்ததுவுங் கண்டிலையோ
இப்படியே வேதம் இயம்பி யிருப்பதினால்
அப்படியே பெண்ணார் அவர்கள்ரண்டு பேரையுந்தான்
காவலிட்டு வைத்தால் கற்பதினா லுன்றனக்குப்
பாவம்வந்து சுற்றும் பலிக்குமடா வேதமது
ஆனதால் பெண்கள் அவர்கள்ரண்டு பேரையுந்தாம்
மானமுள்ள மன்னனுக்கு மணஞ்செய்து தான்கொடுத்துக்
கெற்பமது உண்டாகிக் கீழே பிறக்கையிலே 780

அப்போநீ கொன்றாலும் ஆனாலும் பாரமில்லை
என்றுஅந்த நாரதரும் இத்தனையும் தான்கூற
நன்று மொழியெனவே நவ்வியே கஞ்சனுந்தான்
எனக்குப் படிப்புரைத்த ஏற்றவசு தேவன்
தனக்கு இவர்களையும் தான்சூட்ட வேணுமென்று
வேணுமென்று சீட்டோ விரும்பிவசு தேவனுந்தான்
வாணுவங்க ளோடே வந்தான் மதுரையிலே
தேவகியை ரோகணியைச் சிறப்பா யலங்கரித்து
வைபோக முள்ளவசு தேவனையு மொப்பிவித்துச்
சங்கீதத் தோடே தையல்ரண்டு பெண்களையும்
மங்களத் தோடே வசுதேவன் தாலிவைத்துக்
கட்டிக் கைபிடித்துக் கனசீ தனத்தோடே
கொட்டித் திமிர்த்தூதும் குழலோடே வீற்றிருந்தான்
வாழ்ந்திருந்து பெண்கள் வயிறு வளருகையில்
ஆய்ந்தறிந்து கஞ்சன் அருவிலங்கில் வைத்தனனே
தெய்வகியாளு மழுது சிந்தைமுகம் வாடிருப்பாள்
மெய்யன் வசுதேவன் மிகக்கலங்கி தானிருப்பான்
மங்கைநல்லாள் ரோகணியும் வாடி யழுதிருப்பாள்
சங்கையுள்ள தேவர்களும் தையல்தெய்வக் கன்னியரும் 800

எல்லோருங் கஞ்சனுட இடுக்கமது தன்னாலே
அல்லோரு மெத்த அறமெலிந்தா ரம்மானை
இப்படியே செய்யும் இடுக்கமதுக் காற்றாமல்
அப்படியே மாயனுக்கு அபயம் அமரரிட

தேவர் முறையம்

நிலந்தேவி ஆகாய நீர்தேவி யார்கூடி
தலந்தேவி மன்னன் தனக்கே யபயமிட
தேவாதி தேவர் தேவிமுறை யாற்றாமல்
மூவாதி முத்தன் முழித்தார்காண் பள்ளியது
கண்டுதே வாதிகளும் கன்னி புவிமகளும்
விண்டுரைக்கக் கூடாத விமல னடிபோற்றி
ஆதியே நாதி அய்யாநா ராயணரே
சோதியே வேதச் சுடரே சுடரொளியே
பத்தர்க்கு நித்தா பரனேற்றார்க் கேற்றோனே
மூவர்க்கு மாதி முழுமணியாய் நின்றோனே
தேவர்க்கும் நல்ல சிநேகமாய் நின்றோனே
கிட்டவரார்க் கெட்டாத கிருஷ்ணாவுன் நற்பதத்தைக்
கட்டவரு மட்டான கருணா கரக்கடலே
உச்சிச் சுழியே உம்மென் றெழுத்தோனே
அச்சிச் சுழியே அம்மென் றெழுத்தோனே
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் ஆதிஅ வென்றெழுத்தும் 820

நெஞ்செழுத்து மெட்டெழுத்தும் நீயாகி நின்றோனே
எண்ணொருபத் தெண்ணிரண்டும் இவ்வே நடுவாக
ஒண்ணெழுத்தாய் நின்ற உடைய பெருமாளே
தண்டரளத் தூணாகித் தருவைந்து பேராகி
மண்டலத்துள் ளூறலுமாய் மயமுமாய் நின்றோனே
போக்கு வரத்துப் புகுந்துரண்டு கால்வீட்டில்
நாக்குரண் டுபேசி நடுநின்ற நாரணரே
அல்லாய்ப் பகலாய் ஆணாகிப் பெண்ணாகி
எல்லார்க்குஞ் சீவன் ஈயுகின்ற பெம்மானே
பட்சிப் பறவை பலசீவ செந்துமுதல்
இச்சையுடன் செய்நடப்பு இயல்கணக்குச் சேர்ப்போனே
ஒருபிறப்பி லும்மை உட்கொள்ளாப் பேர்களையும்
கருவினமா யேழு பிறப்பிலுங் கைகேட்போனே
ஆறு பிறப்பில் அரியேவுன்னைப் போற்றாமல்
தூறு மிகப்பேசித் தொழாதபே ரானாலும்
ஏழாம் பிறப்பிலும்மை எள்ளளவுதா னினைத்தால்
வாழலா மென்றவர்க்கு வைகுண்ட மீந்தோனே
இப்படியே ஏழு பிறப்பதிலும் உம்மையுந்தான்
அப்படியே ஓரணுவும் அவர்நினையா தேயிருந்தால்
குட்டங் குறைநோய் கொடியகன்னப் புற்றுடனே 840

கட்டம் வந்து சாக கழுத்திற்கண்ட மாலையுடன்
தீராக் கருவங்கும் தீன்செல்லா வாய்வுகளும்
காதா னதுகேளார் கண்ணே குருடாகும்
புத்தியற்று வித்தையற்றுப் பேருறுப்பு மில்லாமல்
முத்திகெட்ட புத்தி முழுக்கிரிகை தான்பிடித்துப்
பிள்ளையற்று வாழ்வுமற்றுப் பெண்சாதி தானுமற்றுத்
தள்ளையற்று வீடுமற்று சப்பாணி போலாகி
மாநிலத்தோ ரெல்லாம் மாபாவி யென்றுசொல்லி
வானிழுத்து மாண்டு மறலியுயிர் கொள்கையிலே
நாய்நரிகள் சென்று நாதியற்றான் தன்னுடலைத்
தேயமது காணத் திசைநாலும் பிச்செறிந்து
காக்கை விடக்கைக் கண்டவிடங் கொண்டுதின்னப்
போக்கடித்துப் பின்னும் பொல்லாதான் தன்னுயிரை
மறலி கொடுவரச்சே வலியதண் டாலடித்துக்
குறளி மிகக்காட்டிக் கொடும்பாவி தன்னுயிரை
நரகக் குழிதனிலே நல்மறலி தள்ளிடவே
இரைநமக் கென்று எட்டிப் புழுப்பிடித்து
அச்சுத ரைநினையான் அய்யாவைத் தானினையான்
கச்சி மனதுடைய காமாட்சியை நினையான்
வள்ளிக்குந் தேவ மாலவருக் காகாமல் 860

கொள்ளிக்குப் பிள்ளையில்லாக் கொடும்பாவி யென்றுசொல்லி
எவ்வியே அட்டை எழுவாய் முதலைகளும்
கவ்வியே சென்று கடித்துப் புழுப்பொசிக்கும்
என்றுநீ ரேழு இராச்சியமுந் தானறிய
அன்று பறைசாற்றி அருளிவைத்த அச்சுதரே
வானமது பூமியிலே மடமடென வீழாமல்
தானவனே உன்விரலால் தாங்கிவைத்த பெம்மானே
வாரி வரம்பைவிட்டு வையகத்திற் செல்லாமல்
காரியமாய்ப் பள்ளி கடலில் துயின்றோனே
மானம் வரம்பு மகிமைகெட்டுப் போகாமல்
ஊன மில்லாதே உறும்பொருளாய் நின்றோனே
சீவனுள்ள செந்துகட்குத் தினந்தோறு மேபொசிப்புத்
தாவமுட னீயுகின்ற தர்மத் திறவோனே
வலியோ ரெளியோர்க்கும் மண்ணூருஞ் செந்துகட்கும்
கலிதீர ஞாயம் கண்டுரைக்கும் பெம்மானே
சிவசெந்துக் கெல்லாம் சீவனுமாய் நின்றோனே
பாவமும் புண்ணியமாய்ப் பாராகி நின்றோனே
கண்ணாகி மூக்குக் கருணா கரராகி
மண்ணாகி வேத மறையாகி நின்றோனே
சாத்திரமும் நீயாய் சந்திரனும் நீயாகிச் 880

சூத்திரமும் நீயாய் சுழியாகி நின்றோனே
நட்சேத்தி ரமாகி நாட்கிரகம் நீயாகி
இச்சேத்தி ரமாய் இருக்குகின்ற பெம்மானே
மெய்யனுக்கு மெய்யாய் மேவி யிருப்போனே
பொய்யனுக்குப் பொய்யாய்ப் பொருந்தி யிருப்போனே
இமசூட் சமாகி ஏகம் நிறைந்தோனே
நமசூட் சமான நாரா யணப்பொருளே
கல்வித் தமிழாய் கனகப் பொருளாகிச்
செல்வித் திதுவாய்ச் செவ்வாகி நின்றோனே
அண்ட பிண்டமாகி அநேகமாய் நின்றோனே
கண்ட இடமும் கண்ணுக்குள் ளானோனே
ஈசர் கொடுத்த ஏதுவர மானாலும்
வேசமிட்டு வெல்ல மிகுபொருளாய் நின்றோனே
நடக்க இருக்க நடத்துவதும் நீயல்லவோ
திடக்க மயக்கம் செய்வதும் நீயல்லவோ
ஆரு மொருவர் அளவிடக் கூடாமல்
மேரு போலாகி விண்வளர்ந்து நிற்போனே
எண்ணத் தொலையாத ஏது சொரூபமதும்
கண்ணிமைக்கு முன்னே கனகோடி செய்வோனே
மூவரா லுன்சொரூபம் உள்ளறியக் கூடாது 900

தேவரா லுந்தெரியாத் திருவுருவங் கொள்வோனே
ஆயனே யெங்கள் ஆதிநா ராயணரே
மாயனே கஞ்சன் வலிமைதனை மாற்றுமையா
பாவமாய்க் கஞ்சன் பலநாளா யெங்களையும்
ஏவல்தான் கொண்ட இடுக்கமதை மாற்றுமையா
ஊழியங்கள் செய்து உடலெல்லாம் நோகுதையா
ஆழி யடைத்த அச்சுதரே யென்றுரைத்தார்
வாண னென்றகஞ்சன் மாபாவி யேதுவினால்
நாணமது கெட்டு நாடுவிட்டுப் போறோங்காண்
நரபால னென்ற நன்றிகெட்ட கஞ்சனினால்
வரம்பா னதுகுளறி மானிபங்கள் கெட்டோமே
இத்தனையுங் காத்து இரட்சிக்க வேணுமையா
முத்தியுள்ள தேவர் முறையம் அபயமிட
பூமா தேவி புலம்பி முறையமிட
நாமாது லட்சுமியும் நன்றா யபயமிட
நாரா யணர்பதத்தை நாயகியுந் தெண்டனிட்டுச்
சீரான லட்சுமியும் செப்பினள்கா ணம்மானை
என்னைப்போல் பெண்ணல்லவோ இவள்தா னிடுமுறையம்
வன்னமுள்ள மாலே மனதிரங்கிக் காருமையா
உடனேதா னாதி ஓலமிட்டுத் தேவருக்கும் 920
திடமான பூமா தேவிக்குஞ் சொல்லலுற்றார்

தேவர் வேண்டுதலுக்கு இரங்கல்

வந்து பிறப்போங்காண் மாபாரத முடிக்க
நந்தி குலம்வளர நாம்பிறப்போங் கண்டீரே
சாரமில்லாக் கஞ்சன் தனைவதைத்துப் பூமியுட
பாரமது தீர்ப்போம் பாரத முடித்துவைப்போம்
துவாபர யுகத்தில் துரியோ தனன்முதலாய்த்
தவறாத வம்பன் சராசந் தன்வரையும்
அவ்வுகத் திலுள்ள அநியாயமு மடக்கிச்
செவ்வுகத்த மன்னவர்க்குச் சிநேகமது செய்வதற்கும்
உங்களுக்கும் நல்ல உதவிமிகச் செய்வதற்கும்
அங்குவந்து தோன்றி ஆய ருடன்வளர்வோன்
போங்களென்று பூமா தேவியையுந் தேவரையும்
சங்குவண்ண மாலோன் தானே விடைகொடுத்தார்

கண்ணன் அவதாரம்

விடைவேண்டித் தேவர் மேதினியில் தாம்போகப்
படைவீர ரான பச்சைமால் தானெழுந்து
ஆதி கயிலை அரனிடத்தில் வந்திருந்து
சோதி மணிநாதன் சொல்லுவா ரம்மானை
வாணநர பாலனென்ற மாபாவிக் கஞ்சனினால்
நாணமது கெட்டோமென நாடிமிகத் தேவரெல்லாம்
பூமா தேவிமுதல் பொறுக்கமிகக் கூடாமல் 940

ஆமா அரியே ஆதி முறையமென்றார்
முறையம் பொறுக்காமல் முடுகியிங்கே வந்தேனென்று
மறைவேத மாமணியும் மகிழ்ந்துரைத்தா ரம்மானை
அதுகேட்டு ஈசர் அச்சுதருக் கேதுரைப்பார்
இதுநானுங் கேட்டு இருக்குதுகா ணிம்முறையம்
ஆனதால் கஞ்சன் அவனைமுதல் கொல்வதற்கு
ஏனமது பாருமென்று எடுத்துரைத்தா ரீசுரரும்
பாருமென்று ஈசர் பச்சைமா லோடுரைக்க
ஆருமிக வொவ்வாத அச்சுதரு மேதுரைப்பார்
மேருதனில் முன்னாள் வியாசர் மொழிந்தபடி
பாருபா ரதமுதலாய்ப் பாரதப்போர் தான்வரையும்
நாரா யணராய் நாட்டில் மிகப்பிறந்து
வீரான பார்த்தன் மிகுதேரை ஓட்டுவித்துச்
சத்தபல முள்ள சராசந் தன்வரையும்
மற்றவ னோராறு வலியபலக் காரரையும்
கொல்லவகை கூறி குருநிலையைத் தான்பார்த்து
வெல்லப்பிறப் பாரெனவே வியாசர் மொழிந்தபடி
அல்லாமற் பின்னும் ஆனதெய்வ ரோகணியும்
நல்ல மகவான நாரா யணர்நமக்கு
மகவா யுதிப்பாரென மகாபரனார் சொன்னபடி 960

தவமா யிருந்து தவிக்கிறாள் தேவகியும்
இப்படியே யுள்ள எழுத்தின் படியாலே
அப்படியே யென்னை அனுப்புமென்றா ரம்மானை

முன்னே வியாசர் மொழிந்தபடி முறைநூல் தவறிப் போகாமல்
தன்னை மதலை யெனஎடுக்கத் தவமா யிருந்த தெய்வகிக்குச்
சொன்ன மொழியுந் தவறாமல் துயர மறவே தேவருக்கும்
என்னைப் பிறவி செய்தனுப்பும் இறவா திருக்கும் பெம்மானே

முன்னே வியாசர் மொழிந்தமொழி மாறாமல்
என்னையந்தப் பூமியிலே இப்போ பிறவிசெய்யும்
செந்தமிழ்சேர் மாயன் சிவனாரை யும்பணிந்து
எந்தனக்கு ஏற்ற ஈரஞ்சாயிர மடவை
கன்னியரா யென்றனக்கு கவரியிட நீர்படையும்
பன்னீர்க் குணம்போல் பைம்பொன் னிறத்தவராய்
ஆயர் குலத்தில் அநேக மடவாரை
பாயமுற வாடிருக்கப் படைப்பீர்கா ணீசுரரே
உருப்பிணியாய் இலட்சுமியை உலகிற்பிறவி செய்யும்
கரும்பினிய தெய்வக் கயிலாச மாமணியே
சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும்
மெத்தவரம் பெற்ற மிகுவசுரர் தங்களையும்
எல்லோரையு மிப்பிறவி இதிலே வதைத்திடவே 980

அல்லோரை யும்பிறவி ஆக்கிவைய்யு மென்றுரைத்தார்
என்றனக்கு நல்ல ஏற்ற கிளைபோலே
விந்து வழிக்குலம்போல் மிகுவாய்ப் படையுமென்றார்
இப்படியே மாயன் இசையஅந்த ஈசுரரும்
அப்படியே பிறவி அமைக்கத் துணிந்தனராம்
துணிந்தாரே மாயன் தொகுத்ததெல்லா மாராய்ந்து
வணிந்தார மார்பன் வகைப்படியே செய்யலுற்றார்
தெய்வகியாள் வயிற்றில் திருமால் பிறந்திடவே
ஐவர்க் குறுதியிட அச்சுதருந் தோன்றுவாராம்
கலக்கமுடன் விலங்கில் கவிழ்ந்திருந்த மாதுவுட
மலக்கமது தீர மலரோன் பிறக்கலுற்றார்
ஐவர்க் குபகாரம் அன்பாகச் செய்திடவும்
தெய்வகிக்கும் ரோகணிக்கும் சிவகெதிக ளீவதற்கும்
கஞ்சனுட வலுமை கட்டழித்துக் கொல்வதற்கும்
விஞ்சவரம் பெற்று வீறுசெய்யும் பேர்களையும்
சத்த பெலமுள்ள தத்துவங்க ளுள்ளோரைத்
தத்தியுள்ள விமனையும் தன்னா ளாக்கிவிட்டுக்
கொல்வதற்கும் தேவருட கூர்முறையந் தீர்ப்பதற்கும்
வெல்வதற்கும் பூமியுட விதனமதை மாற்றுதற்கும்
முன்னே வியாசர் மொழிந்த முறைப்படியே 1000

தன்னிக ரில்லாத தையல்தெய்வ கிவயிற்றில்
பிறக்கிறா ரென்று பெரியோர்கள் கொண்டாட
இறக்கிறார் பொல்லாதார் என்றுமிகக் கொண்டாட
முன்பெற்ற பிள்ளை முழுதுமவன் கொன்றதினால்
வன்பற்ற மாது மங்கையந்தத் தெய்வகியும்
மெத்த மயங்கி முன்னம்விதி தன்னைநொந்து
கர்த்தன் செயலோ கரியமால் தன்செயலோ
என்றுஅந்தக் கன்னி இருபேருந் தான்புலம்பி
விண்டு சொல்லாத விதன மிகவடைந்து
அழுது கரைந்து அவளிருக்கும் வேளையிலே
பழுதில்லா தாயன் பாவை வயிற்றிலுற்றார்
பகவதியு மங்கே பாவையசோ தைவயிற்றில்
சுகபதியு மங்கே தோன்றினள்கா ணம்மானை
மாயனந்தத் தெய்வகியாள் வயிற்றிலுற்ற தவ்வளவில்
தேசமெல்லாம் நன்றாய்ச் செழித்ததுகா ணம்மானை
கெற்பமுற்ற தெய்வகியாள் கெஞ்சுகவா யஞ்சுகமும்
நற்பதமாய்த் தேகம் நாட்டமுடன் கோட்டியுமாய்
பத்துமாதந் திகைந்து பாலன் பிறந்திடவே
சுற்றுமதிற் காவல்வைத்த துடியோர் வலுவிழந்து
வசுதேவன் காலிலிட்ட வாய்த்த விலங்குமற்று 1020

விசுவாச மாதருட விலங்கது தானுமற்றுத்
தாள்திறந்து நேரம் தான்விடியு முன்னாகக்
கண்டாளே தெய்வகியும் கனத்த மதலைதனை
கொண்டாடித் தானெடுத்துக் கூறுவா ளம்மானை
கண்ணணோ சீவகனோ கரியமுகில் மாயவனோ
வண்ணனோ தெய்வேந்திரனோ மறையவனோ தூயவனோ
அய்யோமுன் பெற்ற அதிக மதலையெல்லாம்
மெய்யோதா னிம்மதலைக்(கு) ஒவ்வாது மேதினியே
என்று பிரியமுற்று ஏற்ற மதலைதனை
அன்று கொடுத்து அனுப்பினா ளயோதையிடம்
கொண்டு வசுதேவன் அயோதைக் குடிலேகிக்
கண்டு அயோதை கன்னியங்கே பெற்றிருந்த
பெண்மதலை தன்னைப் பூராயமா யெடுத்து
ஆண்மதலை தன்னை அயோதை யிடமிருத்தி
வந்து வசுதேவன் மங்கைகை யில்கொடுத்துப்
புந்திமிக நொந்து போயிருந்தா னம்மானை
அந்த யிராவிடிந்து அலைகதிரோன் தோன்றினபின்
கந்த மனசுள்ள கஞ்ச னவன்தனக்கு
ஒற்றாளாய்த் தூதன் ஒருவன் மிகஓடி
பெற்றா ளுன்தங்கை பிள்ளை யெனவுரைத்தான் 1040

கேட்டானே கஞ்சன் கெருவிதமாய்த் தானெழுந்து
பூட்டான நெஞ்சன் பிள்ளைதனை வந்தெடுத்துத்
தூக்கி நிலத்தில் துண்ணெனவே தானடிக்க
ஆக்கிரமத் தாலே அவன்தூக்க ஏலாமல்
சோர்வுறவே கஞ்சன் துடியிழந்து நிற்கையிலே
பாரளந்தோன் தங்கை பகவதியு மேதுசொல்வாள்
என்னை யெடுத்து ஈடுசெய்யா தேகெடுவாய்
உன்னை வதைக்க உற்றயெங்க ளச்சுதரும்
ஆயர்பா டிதன்னில் அண்ணர் வளருகிறார்
போய்ப்பா ரெனவே போனாள் பகவதியும்
கேட்டந்தக் கஞ்சன் கிலேச மிகவாகி
வீட்டுக்குள் போயிருந்து விசாரமுற்றா னம்மானை

அய்யோ முனிதான் சபித்தபடி ஆயர் பதியில் போகறியேன்
மெய்யோ தளரு துடல்மெலியு மெல்லி மொழிந்த விசளமதால்
கையோ சலித்துக் காலயர்ந்து கால விதியாற் கருத்தயர்ந்து
பையோ ராளைத் தானழைத்துப் பார்க்க விடுத்தான் கஞ்சனுமே

கஞ்சன் பாடு

அய்யோ மறையோன் அன்று சபிபத்தபடி
சையோ இடையர் தம்பதியில் போகறியேன்
தங்கை வயிற்றில் செனித்தபிள்ளை யானதுண்டால்
பங்கம்வரு மென்றனக்குப் பதறுதடா என்னுடம்பு 1060

என்று மனங்கருகி இயலழிந்த கஞ்சனுந்தான்
அன்றுஒரு தூதனையும் அனுப்பினன்கா ணம்மானை
வாராய்நீ தூதா மற்றோ ரறியாமல்
பாராய்நீ தூதா அயோதைப் பதியேகி
என்றுஅந்தத் தூதனையும் ஏகவிட்டான் கஞ்சனுமே
நன்றுநன்று என்று நடந்தானே தூதனுந்தான்
தூதன் மிகநடந்து தோகைஅயோ தைமனையில்
புகுந்தந்தப் பிள்ளை பொன்தொட்டிலி லேகிடக்கக்
கண்டுஅந்தத் தூதன் கஞ்சனுக்கு நஞ்செனவே
விண்டு பறையாமல் விரைவாகப் போயினனே
போயந்தத் தூதன் பொறையுள்ள கஞ்சனுக்கு
வாயயர்ந்து சிந்தை மறுகியே சொல்லலுற்றான்
காமனோ சீவகனோ கண்ணனோ சந்திரனோ
மாமதனோ சூரியனோ மறையவனோ இறையவனோ
நாமத் திறவானோ நாரா யணன்தானோ
சோமத் திருவுளமோ தெய்வேந் திரன்தானோ
ஈசனோ வாசவனோ இந்திரனோ சந்திரனோ
மாயனோ வுன்னை வதைக்கவந்த மாற்றானோ
ஆரோ எனக்கு அளவிடவுங் கூடுதில்லை
பேரோ அயோதைப் புதல்வனெனக் காணுதில்லை 1080

தெய்வகியாள் தேகத் திருச்சுவடு தோணுகொஞ்சம்
மெய்யதிப னான விட்டிணுபோல் முச்சுவடு
என்றந்தக் கஞ்சனுக்கு இத்தூதன் சொல்லிடவே
அன்றவன் கேட்டு அயர்ந்திருந்தா னம்மானை
என்செய்வோ மென்று இருக்குமந்த நாளையிலே
முன்செறியும் பூத மூரிதனை யேவியவன்
கொல்லவென்று விட்டான் குழந்தைதனை யம்மானை
வல்ல பெலமுள்ள மாபூதம் பட்டபின்பு
பின்னுமே தானும் பிலஅரக்கரை யேவிக்
கொன்றுவா வென்றான் குழந்தைதனை யம்மானை
கொல்லவந்த பேரையெல்லாம் கொன்றதுகா ணக்குழந்தை
வெல்லவிட்டப் பேரிழந்து மெலிந்திருந்தான் கஞ்சனுமே
ஆயர் குடியில் அரியோன் மிகவளர்ந்து
மாயன் விளையாடி மடந்தையோடுங் கூடி
வென்றுபால் வெண்ணெய் மிகப்பொசித்துக் காடதிலே
கன்றாவு மேய்த்துக் காளியன் தனைவதைத்துக்
கஞ்சனுட ஏவலினால் காட்டில்வந்த சூரரையும்
துஞ்சிவிடக் கொன்று தொலைத்தனர்கா ணம்மானை
ஆயருக்கு வந்த ஆபத்து அத்தனையும்
போயகற்றி நந்தன் பிள்ளையெனவே வளர்ந்தார் 1100

மதுரைதனில் வாழும் மாபாவிக் கஞ்சனுக்கு
இறுதிவரும் போது ஏதுசெய்தான் கஞ்சனுமே
நந்திடையன் பாலன் நல்லஸ்ரீ கிட்டிணனை
இந்திடத்தில் கொண்டுவர ஏவிவிட்டான் ஓராளை
கஞ்சனுட ஆளும் கண்ணர்ஸ்ரீ கிட்டிணரை
அஞ்சலென்று கண்டு அழைத்தாருமைக் கஞ்சனென்றான்
அந்தவிச ளமறிந்து அரியோ னகமகிழ்ந்து
வந்த விசளம் வாச்சுதென் றெம்பெருமாள்
கூடச் சிலபேரைக் குக்குளிக்கத் தான்கூட்டி
ஈடவி யென்ற எக்காள சத்தமுடன்
குஞ்சரமும் பரியும் குரவைத் தொனியுடனே
கஞ்ச னரசாளும் கனமதுரை சென்றனரே
நாட்டமுட னயோதை நல்லமகன் வந்தானென்று
கேட்ட விசளம் கெட்டியெனக் கஞ்சனுந்தான்
இங்கேநான் சென்று ஏற்றவனைக் கொல்லவென்று
சங்கையற்றக் கோடி தத்திப் படையுடனே
கொல்லவிட்டக் கஞ்சன் குதிரைத் தளம்படையும்
எல்லாந் திருமால் இறக்கவைத்தா ரம்மானை
கஞ்சன் படைகள் கட்டழிந்து போனவுடன்
வஞ்சகனும் வந்து மாயனு டனெதிர்த்தான் 1120

மாயனுட போரும் வஞ்சகக்கஞ் சன்போரும்
தேசமெல்லா மதிரச் சென்றெதிர்த்தா ரம்மானை
மாயனுக்குக் கஞ்சன் மாட்டாமல் கீழ்விழவே
வாயமிட்டுக் கஞ்சன் மார்பிலே தானிருந்து
கஞ்சன் குடலைக் கண்ணியறத் தான்பிடுங்கி
வெஞ்சினத்தால் மாயன் விட்டெறிந்தார் திக்கதிலே
கஞ்சனையுங் கொன்று கர்மமது செய்தவரும்
தஞ்சமிட்டத் தேவருட தன்னிடுக்கமு மாற்றி
மாதாபிதா வுடைய வன்சிறையுந் தான்மாற்றி
சீதான உக்கிர சேனனையு மாளவைத்து
அவரவர்க்கு நல்ல ஆனபுத்தி சொல்லிமிக
எவரெவர்க்கும் நல்லாய் இருமென்று சொல்லியவர்
திரும்பிவரும் வேளையிலே தீரன்சரா சந்தனவன்
எந்தன் மருமகனை இவனோதான் கொன்றதென்று
வந்தனனே மாயனுடன் வாதாடி யுத்தமிட
அப்போது மாயன் ஆராய்ந்து தான்பார்த்து
இப்போ திவனை ஈடுசெய்யக் கூடாது
சத்தபெல மல்லோ சராசந்த வேந்தனுக்குக்
கொற்றவ வீமனல்லோ கொல்லவகை யுண்டுமென்று
இதுவேளை தப்பவென்று எம்பெருமாள் தானடந்து 1140

செதுவோடு கூடிச் செகலதுக்குள் ளேகினரே
கடலதுக்குள் வந்து கனத்தமதி லிட்டவரும்
திடமுடனே மாயன் துவரம் பதியிருந்தார்
பூதனைச் சகட னோடு பின்னுள்ள அரக்கர் தம்மைச்
சூதனை யெல்லாங் கொன்று சுத்தமாய் மதுரை புக்கி
நீதமே யில்லாக் கஞ்சன் நெஞ்சையும் பிளந்து கொன்று
கூதவன் துவா ரகையில் குணமுட னிருந்தா ரன்றே 1147



அகிலத்திரட்டு அம்மானை என்பது ஆய்வழி மதத்தின் முக்கிய நூலாகும். இது மனித இனம், உலகத்தின் வரலாறு, பழைய, புதிய காலங்களை விவரிக்கும் ஒரு தெய்வீக நூல் ஆகும். இந்நூலில், குறிப்பாக, அய்யா வைகுண்டரின் அவதாரத் தொடர்பான செய்திகளை விளக்குகிறது. இதை ஹரி கந்தம் பரண், அய்யா வைகுண்டரின் வழிகாட்டுதலின் கீழ் எழுதினார்.

முக்கிய அம்சங்கள்:

உலகின் வரலாறு:

இந்த நூல் உலகம் உருவானது எப்படி, அதில் நடந்த தீமைகள், அவற்றை சரி செய்ய தெய்வீக சீலர்கள் (விகடர்) போன்றவை எப்படி உதவினார்கள் என்பதையும், அவற்றைத் தொடர்ந்து அய்யா வைகுண்டரின் அவதாரம் பற்றியும் கூறுகிறது.

அய்யா வைகுண்டர்:

இந்த நூல் முழுமையாக அய்யா வைகுண்டரின் தெய்வீக செயல்களையும், அவர் உலகத்துக்கு உண்டாக்கிய மாற்றங்களையும் விவரிக்கிறது.

மத மற்றும் சமூக சீர்திருத்தம்:

அய்யா வைகுண்டர் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக எடுத்த சீர்திருத்தங்களைவும், சமூகத்தில் நீதி, சமத்துவம் மற்றும் தெய்வீக அறிவின் தேவையை வலியுறுத்திய குணாதிசயங்களையும் குறிப்பிடுகிறது.

Akilathirattu Ammanai is the central scripture of the Ayyavazhi faith, which emerged in South India during the 19th century. The text provides a detailed account of the world’s history, describing events from the past, present, and future, focusing on the divine interventions and the life of Ayya Vaikundar, the central figure of Ayyavazhi. The work was written by Hari Gopalan Seedar, based on divine revelations received from Ayya Vaikundar.

Key Themes:

Creation and History of the World:

The scripture narrates how the world was created, the rise of evil forces, and how divine beings (avatars) like Vikrantan were sent to rectify the wrongdoings in the world. It also focuses on Ayya Vaikundar's role in redeeming the world from evil.

Ayya Vaikundar's Divine Role:

Akilathirattu Ammanai emphasizes the divine nature of Ayya Vaikundar, portraying him as the incarnation of Narayana who came to restore righteousness in the world and fight against the forces of Kali Yuga (the age of darkness).

Religious and Social Reformation:

The text highlights the need for equality, justice, and divine knowledge in society, depicting Ayya Vaikundar’s efforts in promoting social and religious reforms, advocating for a casteless and inclusive society.

Structure:

The text is written in a poetic form known as "Ammanai", a traditional Tamil style. It is divided into multiple sections that describe the creation of the world, the rise and fall of various kingdoms, and the divine intervention of Lord Narayana through his avatars, culminating in Ayya Vaikundar’s mission.

Significance:

Akilathirattu Ammanai is regarded as both a religious text and a social manifesto in the Ayyavazhi tradition. It plays a significant role in shaping the beliefs and practices of the followers of Ayyavazhi, guiding them toward a life of righteousness, equality, and devotion to Ayya Vaikundar. The text also emphasizes the concept of Dharma Yukam, an era of peace and prosperity that Ayya Vaikundar is believed to bring about.

Conclusion:

Akilathirattu Ammanai is a profound religious scripture that outlines the spiritual journey of humanity and the divine mission of Ayya Vaikundar. Through its narrative, it promotes values of justice, equality, and devotion, making it a key text in the Ayyavazhi faith and a source of inspiration for its followers.



Share



Was this helpful?