பதிக எண்: 1.39.- திருவேட்களம் - தக்கராகம்
பின்னணி:
தனது நான்காவது தல யாத்திரையை தில்லைச் சிதம்பரத்தில் தொடங்கிய திருஞானசம்பந்தர், கற்றாங்கு எரியோம்பி என்று தொடங்கும் பதிகத்தை கூத்தபிரானின் சன்னதியின் முன்னே நின்று பாடிய பின்னர், வெட்டவெளியின் தத்துவத்தை புரிந்து கொண்டவராக இன்பத்தில் திளைத்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். வெட்ட வெளியில் எங்கும் பரவி நின்று, ஐந்து விதமான செயல்களையும் புரிந்து நடனமாடும் இறைவனின் தன்மையை உணர்ந்தவராக அந்த மகிழ்ச்சியில் ஞானசம்பந்தர் திளைத்தார் என்று விளக்கம் கூறுகின்றனர். பின்னர் இறைவன் உறையும் தில்லைச் சிற்றம்பலத்து பொன் மாளிகையை வலம் வந்து, திருக்கோயிலுக்கு வெளியே வருகின்றார். பெருமானைக் கண்டு தொழுவதற்காக நந்தி தேவரின் அனுமதி பெறவேண்டி தேவர்கள் அனைவரும் காத்திருக்கும் திருக்கோயிலின் வாயிலுக்கு சம்பந்தர் வந்தார். பின்னர், பெருமானை மீண்டும் வணங்கி, நான்கு மாடவீதிகளையும் சம்பந்தர் வலம் வந்தார். நான்கு மாட வீதிகளின் புனிதத்தையும், தலத்தின் புனிதத்தையும் உணர்ந்த சம்பந்தர், இந்த தலத்தில் இரவில் தங்கி உறங்குவது தவறு என்று கருதியவராக, அந்த தவற்றினைச் செய்வதற்கு பயந்தவராக, அருகில் இருக்கும் திருவேட்களம் சென்றார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். வேட்களம் தலத்தில் உறையும் பெருமானைக் குறித்து பதிகம் பாடி, ஆங்கே தங்கியவாறு, அருகில் உள்ள தில்லைச் சிதம்பரம் நாள்தோறும் சென்று வணங்கி வந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.
இந்த திருத்தலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வளாகத்தை ஒட்டிய சாலையில், கிழக்கே உள்ளது. இறைவனின் திருநாமம் பாசுபதேசுவரர்;தேவியின் திருநாமம் நல்ல நாயகி; நாரத முனிவர் வழிபட்ட தலம். அர்ஜுனன், சிவபெருமானை வழிபட்டு பாசுபத அத்திரம் மற்றும் பினாகம் என்ற அம்பறாத்தூணி (எடுக்க எடுக்கக் குறையாமல் அம்புகள் வருவது) பெற்ற இடமாக கருதப்படுகின்றது. அர்ஜுனன் பெருமானிடம் பாசுபதம் பெற்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில் திருவிழாவாக கொண்டாடப் படுகின்றது. இலிங்கத்தின் உச்சியில் ஒரு வடு காணப்படுகின்றது. இந்த வடு அர்ஜுனன் தனது வில்லினால் பெருமானின் தலையில் அடித்ததை நினைவூட்டும் வண்ணம் அமைந்துள்ளது என்று கூறுகின்றனர். உற்சவ மூர்த்தி சிலைகளில் ஒன்றான அர்ஜுனனின் கையில் பாசுபத ஆயுதம் வைத்திருப்பதை நாம் இன்றும் காணலாம். பாசுபதம் ஏந்திய சிவபெருமான் சிலையும் அர்ஜுனன் சிலையும்,பஞ்சலோகச் சிலைகள், இந்த தலத்தில் உள்ள ஒரு குட்டையில் கிடைத்ததாக கூறுவார்கள். அருகில் உள்ள இடங்களும் மகாபாரத நிகழ்ச்சிகளுடன் தொடர்பு கொண்ட இடமாக கருதப்படுகின்றது. உசுப்போர் என்ற இடம் தான் அர்ஜுனன் தவத்தில் ஆழ்ந்திருந்த போது, அவனது தவத்தைக் குலைக்க வந்த காட்டுப் பன்றியினை அர்ஜுனன் துரத்திச் சென்ற இடம், ஈசன்போர்வேலி என்பது வேடுவராக வந்த சிவபெருமானுடன் அர்ஜுனன் சண்டை செய்த இடம்;வில்லறுத்தான் குட்டை என்பது பெருமான் அர்ஜுனனின் வில்லினை முறித்த இடம்; நக்கத்தான்குடி என்பது அர்ஜுனன் தவம் செய்த ஐடம் என்று கூறுவார்கள்.பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அச்சுதப்ப நாயக்கர், வேட்களம் கிராமத்தை சிதம்பரம் திருக்கோயிலுக்கு கொடையாக அளித்தார் என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகமும், அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் ஒன்றும் இதுவரை கிடைத்துள்ளன.
மூன்றடுக்கு இராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய இந்த திருக்கோயிலின் பிராகாரத்தில் சித்தி விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர், நால்வர், சொக்கநாதர் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டீசர், பைரவர், நவகிரகங்கள், சந்திரன் சூரியன் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தை வலம் வந்த பின்னர், முன்மண்டபம் சென்றால் வலது புறத்தில் அம்பாள் சன்னதி நின்ற திருக்கோலம். முன்னிரண்டு கைகளில் நீலோற்பலம் மற்றும் தாமரை மலர்கள் ஏந்திய அம்பிகை. அம்பாள் சன்னதியின் நான்கு தூண்களிலும் அர்ஜுனனுடன் தொடர்பு கொண்ட நிகழ்ச்சிகள் சிற்பங்களாக உள்ளன. கிழக்கு நோக்கிய மூலவர் சன்னதி. சுயம்பு மூர்த்தம். கோஷ்ட மூர்த்தங்களாக உச்சி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன் ஆகியோர் உள்ளனர்.தட்சிணாமூர்த்தி சன்னதியில் இருக்கும் முயலகன் இடது பக்கத்தில் தலை வைத்துள்ள நிலையில் இருப்பதை நாம் காணலாம். நடராஜர் மணிமுடி அணிந்த கோலத்தில் இருப்பதையும் காணலாம். அருகே பாசுபதம் ஏந்திய மூர்த்தி, அர்ஜுனன் நால்வர் மற்றும் பல உற்சவ மூர்த்தங்கள் உள்ளன. சன்னதியின் முன் மண்டபத்தில், நாய்கள் சூழ, உமையன்னை பின் தொடர பெருமான் வேடுவனாக வந்த காட்சியும், அர்ஜுனனின் தவம், பன்றி வடிவில் மூகாசுரன் அர்ஜுனனை நோக்கி வருவது ஆகிய சிற்பங்கள் உள்ளன. தலமரம் மூங்கில். தீர்த்தக்குளம் திருக்கோயிலின் எதிரில் உள்ளது. பல்லவ மன்னர்கள் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட திருக்கோயில். நகரத்தார் பாராமரிக்கப்பட்டு வரும் திருக்கோயில். பேச்சில் குறைபாடு உடையவர்கள் வழிபடவேண்டிய கோயில்.
பாடல் 1:
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்து இலங்க
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்றாடிச்
சந்தம் இலங்கு நகுதலை கங்கை தண்மதியம் அயலே ததும்ப
வெந்த வெண்ணீறு மெய் பூசும் வேட்கள நன்னகராரே
விளக்கம்:
அந்தம்=முடிவு; சங்கார காரணனாக இறைவன் இருக்கும் நிலை; ஆதி=தொடக்கம், சங்கார காரணனாக இருக்கும் இறைவன், மீண்டும் உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. நமது கண்ணெதிரே விரிந்து பரந்து காணப்படும் உலகும், உலகிலுள்ள பலவகையான பொருட்களும் நிலையானவை என்ற மாயத் தோற்றத்தை அளிப்பதால், அந்த நிலை உண்மை நிலையல்ல என்பதை தெளிவுபடுத்தும் சம்பந்தர், இறைவன் ஒருவனே நிலையானவன் என்றும், அவனே உலகம் மற்றும் உலகப் பொருட்கள் அழிவதற்கு காரணமாக இருப்பவன் என்பதையும் இங்கே உணர்த்துகின்றார். மேலும் இந்த உலகமும் உலகப் பொருட்களும் மீண்டும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவனும் சிவபெருமான் தான் என்பதை உணர்த்தும் வண்ணம் ஆதியும் ஆகிய அண்ணல் என்றும் கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம் ஒவ்வொரு ஊழியின் முடிவிலும், உலகத்தை அழிப்பதும் மீண்டும் உலகத்தை படைப்பதும் செய்பவன் இறைவன் என்பதனை சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.
உலகத்தின் தோற்றத்திற்கும் அழிவுக்கும் இடைப்பட்ட காலத்தில், உலகத்தில் உள்ள உயிர்களையும் உலகப் பொருட்களையும் பாதுகாப்பதும் இறைவன் தான் என்பதை சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்ததை குறிப்பட்டு சம்பந்தர் உணர்த்துகின்றார். கங்கை நதியை பெருமான் தனது சடையில் மறைத்த செய்தியை குறிப்பிட்டு, பெருமான் கரத்தல் தொழிலை புரிவதை நமக்கு உணர்த்துகின்றார். உலகினை மீண்டும் மீண்டும் படைப்பதே, உயிர்கள் தங்களது எஞ்சிய வினைகளை அனுபவித்து கழித்துக் கொண்டு, தன்னை வந்தடையவேண்டும் என்று நோக்கத்துடன் என்பதால், உயிர்களுக்கு இறைவன் தொடர்ந்து அருள் புரிந்து கொண்டிருப்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. இறைவன் தனது கூத்து மூலம், ஐந்து தொழில்களை தொடர்ந்து செய்யும் தன்மையை உணர்த்துவதை, தில்லைச் சிதம்பரத்தில் உணர்ந்த ஞானசம்பந்தர், அந்த நினைவிலே மகிழ்ந்து திளைத்தார் போலும். அதனால் தான் திருவேட்களம் பதிகத்தின் முதல் பாடலிலும் பெருமான் ஐந்து தொழில்களையும் புரியும் தன்மையை குறிப்பிடுகின்றார்.
ஆரழல்=வேறு எவராலும் பொறுக்கமுடியாத தீப்பிழம்பு; மந்த முழவம்=குறைந்த ஸ்தாயியில் அடிக்கப்படும் மத்தளம்; சந்தம்=அழகிய மலர்கள்; நகுதலை=வாய் பிளந்த நிலையில் சிறப்பது போன்று காணப்படும் மண்டையோடு; வெந்த வெண்ணீறு=உலகத்தின் அனைத்து உடல்களும் பொருட்களும் பிரளய நெருப்பினில் எரிந்து அழிந்த பின்னர் காணப்படும் சூடான சாம்பல்;
பொழிப்புரை:
உலகமும் உலகத்திலுள்ள அனைத்துப் பொருட்கள் மற்றும் உடல்கள் அழிவதற்கு காரணமாக இருப்பவனும், இவ்வாறு அழிந்த உலகும், உலகப்பொருட்களும், உடல்களும் மீண்டும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவரும், சிவபெருமான் தான். அவர், வேறு எவராலும் பொறுக்க முடியாத தீச்சுடரின் நடுவே இருந்தவாறு, பின்னணியில் மந்த கதியில் மத்தளம் முழங்க, உமையன்னை காணும் வண்ணம் நடனம் ஆடுகின்றார். கொன்றை முதலான அழகிய மலர்களையும், வாய் பிளந்து இருப்பதால் சிரிப்பது போன்று தோற்றம் தரும் தலைமாலையினையும், கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும் அருகருகே தனது சடையில் சூட்டிக் கொண்டவராக விளங்கும் பெருமான், தனது உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய வண்ணம் காணப் படுகின்றார். இத்தகைய இறைவனார் உறையும் இடம் வேட்கள நன்னகரமாகும்.
பாடல் 2:
சடைதனை தாழ்தலும் ஏற முடித்துச் சங்க வெண் தோடு சரிந்து இலங்கப்
புடை தனில் பாரிடம் சூழப் போதருமாறு இவர் போல்வார்
உடை தனில் நால் விரல் கோவண ஆடை உண்பது ஊரிடு பிச்சை வெள்ளை
விடைதனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்னகராரே
விளக்கம்:
ஏற முடித்து=எடுத்திக் கட்டி, மேலே பொருந்த; சரிந்து=கீழே தாழ்ந்து; பாரிடம்=பூதம்; போதருமாறு= நிலை; பதிகத்தின் முதல் பாடலில், இறைவன் புரியும் ஐந்து தொழில்களை குறிப்பிடும் சம்பந்தர், இறைவன் உயிர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, உயிர்கள் தங்களது வினைகளை கழித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, மீண்டும் மீண்டும் உலகத்தையும் உலகப் பொருட்களையும் படைப்பதை நமக்கு உணர்த்தினார். இந்த பாடலில் உலகத்தவர் இடும் பிச்சையை ஏற்பதற்காக செல்கின்றார் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இதுவும் இறைவன் உயிர்களுக்கு செய்யும் கருணைச் செயலே ஆகும். மேலும் சங்க வெண்தோடு இலங்க என்று குறிப்பிட்டு மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலையும் உணர்த்தப் படுகின்றது.
பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர், திருமந்திரம் பாடல் ஒன்றினில் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்தவாறு இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது தாங்கள் கொண்டிருந்த பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான். இந்த நிலையினை அடைந்த பக்குவப்பட்ட ஆன்மாக்களின் மலங்களைத் தான் வாங்கிக் கொள்வதற்காகவே இறைவன் பிச்சைப் பெருமானாக எங்கும் திரிகின்றார். இதனை உணர்த்தும் திருமூலரின் திருமந்திரப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
பரந்து உலகேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்
நிரந்தரமாக நினையும் அடியார்
இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே
இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் முதல் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது நமக்கு அருள் புரிவதற்காக என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுவது, திருமூலரின் கருத்தினை பின்பற்றியே.
ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்
ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்
பெருமான் பலி ஏற்பது, உயிருடன் இணைந்துள்ள, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று பொருட்களை பெறுவதற்காக என்று கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.12.5) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கடை=வாயில்; உடையான் என்று உயிர்களைத் தனது உடைமையாக கொண்டுள்ள பெருமானை சம்பந்தர் இங்கே குரிப்பிடுகின்றார்.
சடையானைத் தலை கையேந்திப் பலி தருவார் தம்
கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்
புடையே பொன் மலரும் கம்பைக் கரை ஏகம்பம்
உடையானை அல்லாது உள்காது என் உள்ளமே
பொழிப்புரை:
தாழ்ந்து தொங்கும் தனது சடைமுடியினை எடுத்துக் கட்டி, சங்கினால் செய்யப்பட்ட குழை ஆபரணத்தையும் வெண்மை நிறத்துடன் மிளிரும் தோட்டினையும் தனது காதினில் தொங்கும் வண்ணம், பூத கணங்கள் தன்னைச் சூழ்ந்து வரவும், பல இடங்களுக்கும் செல்பவர் சிவபெருமான். தனது உடலில் நான்கு விரல்கள் அளவு அகலமுடைய கோவண ஆடையினை அணிந்தவராக, ஊரார் இடும் பிச்சையை தான் உண்ணும் உணவாக ஏற்றுக் கொள்பவராக, வெள்ளை எருதினை விருப்பத்துடன் தனது வாகனமாக ஏற்றுக்கொண்டவராக, மிகவும் எளிய கோலத்தில் காணப்படும் பெருமான், வேட்கள நன்னகரில் உறைகின்றார்.
பாடல் 3:
பூதமும் பலகணமும் புடை சூழப் பூமியும் விண்ணும் உடன் பொருந்தச்
சீதமும் வெம்மையும் சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ் தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன்னகராரே
விளக்கம்:
எளிவந்த பிரானாக பெருமான் இருக்கும் கோலத்தினை நமக்கு இரண்டாவது பாடல் மூலம் உணர்த்திய சம்பந்தர், விண்ணும் மண்ணும் எங்கும் பரந்து நிற்கும் பெருமானின் நிலையினை இந்த பாடலில் உணர்த்துகின்றார். சீதம்=குளிர்ச்சி; வெம்மை=வெப்பம்; பெருமான் சீதமும் வெம்மையுமாக நிற்கின்றார் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். உயிர்கள் செழிப்புடன் வாழ வெப்பமும் குளிர்ச்சியும் தேவைப்படுகின்றது. அவ்வாறு இருந்து, உயிர்களின் தேவையை பெருமான் நிறைவேற்றுகின்றார் என்று ஒரு விதமாக பொருள் கொள்ளலாம். வெப்பம் சுட்டெரிப்பது போன்று, தீயசெயல்களை, பாவத்தை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பவராகவும், நல்ல செயல்களையும் புண்ணியங்களையும் செய்யும் உயிர்களுக்கு இன்பம் தரும் வாழ்வையும் அளிப்பவர் என்றும் மற்றொரு விதமாக பொருள் கொள்ளலாம். பாவங்கள் செய்பவர்களுக்கு நரக தண்டனையையும் புண்ணியம் செய்பவர்களுக்கு சொர்க்க போகமும் கிடைக்கும் வண்ணம் வழி வகுத்தவன் இறைவன் அல்லவா. இவ்வாறு உயிர்களுக்கு தண்டனையும் போகத்தையும் அளித்து, உயிர்கள் தங்களின் வினைத் தொகுதியின் ஒரு பகுதியை கழித்துக் கொள்ளுமாறு இறைவன் அருள் புரிகின்றார். ஓதம்=இரைச்சலை எழுப்பும் அலைகள் கொண்ட கடல்; பக்குவப்பட்ட உயிர்களை தன்னிடம் அழைத்துக் கொள்ளும் முயற்சியில் பெருமான் ஊரெங்கும் பலியேற்பவர் போன்று திரிகின்றார் என்று முந்தைய பாடலில் கூறிய சம்பந்தர், இந்த பாடலில் பக்குவம் அடையாத உயிர்களுக்கு எவ்வாறு அருள் புரிகின்றார் என்பதை உணர்த்துகின்றார். இவ்வாறு அருள் புரிந்து அத்தகைய உயிர்களும் மெல்ல மெல்ல பக்குவம் பெறுவதற்கு இறைவன் உதவுகின்றார் என்பதையும் நாம் உணரலாம்.
பொழிப்புரை:
பூத கணங்களும் சிவகணங்களும் புடை சூழ விளங்கும் பெருமான், தனது திருமேனி விண்ணும் மண்ணும் பொருந்தும் வண்ணம் சர்வவியாபியாக விளங்குகின்றார். உயிர்களுக்கு அவைகள் செய்துள்ள செயல்களின் தன்மைக்கு ஏற்ப நரக தண்டனையும் சொர்க்க போகமும் கிடைக்கும் வண்ணம் வழி வகுத்து, உயிர்கள் தங்களது வினைகளின் ஒரு பகுதியை கழித்துக் கொள்ள வகை செய்து சிறப்பான வகையில், சிவபெருமான் செயல்படுகின்றார். அவர் வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்ட, பக்குவமடைந்த உயிர்களுக்கு உயர்ந்த செல்வமாகிய முக்தி நிலையினை அளிக்கும் செல்வராகவும் உள்ளார்; இரைச்சல் ஏற்படுத்தும் அலைகள் நிறைந்த கடலின் அருகே உள்ள சோலைகளால் சூழப்பட்டதும், தங்களது உள்ளம் ஒன்றி அந்தணர்கள் இசையுடன் பாடும் வேத ஒலிகள் நிறைந்ததும், வேள்விகள் இடைவிடாது நடைபெறுவதும் ஆகிய சிறப்பினை உடைய வேட்கள நன்னகரில், மேலே குறிப்பிடப்பட்ட தன்மைகள் கொண்ட இறைவன் உறைகின்றார்.
பாடல் 4:
அரை புல்கு ஐந்தலை ஆடலரவம் அமைய வெண்கோவணத்தோடு அசைத்து
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்
திரை புல்கு தெண்கடல் தண் கழி ஓதம் தேன் நலம் கானலில் வண்டு பண் செய்ய
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்னகராரே
விளக்கம்:
அரை=இடுப்பு; புல்கும்=தழுவிய; அசைத்தல்=இறுகக் கட்டுதல்; வரை புல்கு–மலையினை ஒத்த; தேன் நலம் கானல்=தேன் பொருந்திய மலர்கள் உடைய சோலை; விரை=நறுமணம்; விரை புல்கு=நறுமணம் பொருந்திய; பைம்பொழில்=பசுமையான சோலைகள்; ஆமை என்ற சொல் இங்கே ஆமை ஓட்டினை குறிக்கும். இங்கே ஆமை வாங்கி என்று சம்பந்தர் குறிப்பிட்டுள்ளது உணரத் தக்கது. அடுத்தவர் கொடுத்தால் தானே, எவரும் எதையும் வாங்கிக் கொள்ள முடியும். எனவே ஆமை ஓட்டினை ஒருவர் கொடுக்கவே பெருமான் வாங்கிக் கொண்டார் என்பது இங்கே புலனாகின்றது. பாற்கடலில் அமுதம் பொங்கியெழுந்த பின்னர், எவரால் அமுதம் கடைந்தெடுக்கப் பட்டது என்ற சர்ச்சை எழுந்தது. அசுரர்களும் தேவர்களும், தத்தம் முயற்சியால் தான் அமுதம் கிடைத்தது என்று வாதம் செய்யத் தொடங்கினார்கள். அப்போது, ஆமை வடிவம் எடுத்து மந்திர மலையைத் தான் தாங்கியதால் தான் கடலைக் கடைய முடிந்தது என்று உணர்த்திய திருமால், அமுதம் வெளிவந்ததற்கு தானே காரணம் என்று கூறினார். ஆமையாக திருமால், மந்திர மலையினை தாங்குவதற்கு முன்னர், மந்திர மலை நீரினில் முழுகியதால் எவரும் பாற்டலைக் கடைய முடியாமல் இருந்த நிலையினை உணர்ந்த தேவர்களும் அசுரர்களும் திருமால் தான் காரணம் என்று ஒப்புக்கொண்டனர். திருமாலும், தனது பெருமையை நினைத்து செருக்கு ஏறிய நிலையில் வெறி பிடித்தவர் போன்று பாற்கடலை கலக்கினார். அந்த நிலையில், எவரும் திருமாலை அடக்க முடியாமல் இருந்த நிலையில், தேவர்கள் சிவபெருமானை அணுகி தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். சிவபெருமான் ஆமையை அடக்கி, திருமாலின் செருக்கினை ஒடுக்கினார். வெறி அடங்கிய திருமால், தான் செய்த தவற்றினை உணர்ந்து சாந்த நிலையினை அடைந்தார். தனது வலிமை அடக்கப்பட்டதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், ஆமை ஓட்டினை சிவபெருமான் அணிகலனாக அணிந்து கொள்ள வேண்டும் என்று திருமால் விண்ணப்பிக்க, சிவபெருமானும் அதற்கு இசைந்து ஆமை ஓட்டினை ஆபரணமாக தனது மார்பினில் அணிந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி கந்தபுராணத்தில் சொல்லப் படுகின்றது. இதன் மூலம், திருமால் ஆமை ஓட்டினை கொடுக்க பெருமான் அணிந்து கொண்டார் என்பது புலனாகின்றது.
பொழிப்புரை:
ஐந்து தலைகளை உடையதும் படம் எடுத்து ஆடும் இயல்பினை உடையதும் ஆகிய, பாம்பு தனது இடுப்பினில் பொருந்தும் வண்ணம், தனது கோவண ஆடையின் மீது, பாம்பினை கச்சையாக இறுகக் கட்டியவர் சிவபெருமான்; தன்னால் அடக்கப்பட்ட ஆமையாக உருவம் எடுத்த திருமால் கொடுத்த ஆமைவோட்டினை வாங்கிக்கொண்டு, தனது மலை போன்று அகன்ற மார்பினில் அணிகலனாக அணிந்து கொண்டவர் சிவபெருமான்; அத்தகைய ஆற்றல் கொண்ட சிவபெருமான், அலைகள் உடையதும் தெளிந்த நீரினை உடையதும் ஆகிய கடல்நீர் பெருகியதால் ஏற்பட்ட குளிர்ச்சியான உப்பங்கழிகளும், தங்களது நறுமணத்தால் வண்டுகளைக் கவர்ந்து அழைத்து இசை பாட வைக்கும் நறுமணம் நிறைந்த மலர்கள் கொண்ட பசுமையான சோலைகளும் சூழ்ந்த வேட்கள நன்னகரில் உறைகின்றார்.
பாடல் 5:
பண்ணுறு வண்டறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண்ணூல் கிடந்த
பெண்ணுறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண்ணிற மால் விடை அண்ணல் வேட்கள நன்னகராரே
விளக்கம்:
பண்ணுறு வண்டு=பண்களுடன் கூடிய இசையை எழுப்பும் வண்டுகள்; அறை=ஒலிக்கும், புரை= போன்ற; பெண்ணுறு=பெண் பொருந்திய; அலங்கல்=மாலை; பேணார்=போற்றாதவர்கள், வேத நெறியையும் சைவ நெறியையும் போற்றாமல் பகைவர்களாய் திகழ்ந்த முப்புரத்து அரக்கர்கள்; கண்ணுறு நெற்றி=நெற்றியில் பொருந்த கண்; மால் விடை=பெருமைக்கு உரிய இடபம்; கண்ணி= தலைமாலை;
பொழிப்புரை:
பண்ணுடன் இசைத்து ரீங்காரம் செய்யும் வண்டுகளால் சூழப்பட்ட கொன்றை மாலையினை அணிந்தவரும், பால் போன்று வெண்மையான நிறத்தில் திருநீறும் முப்புரிநூலும் திகழும் மார்பினில் உமையம்மையை பொருத்தியவரும், வேதநெறியைப் போற்றாது அதனின்று வழுவி அனைவர்க்கும் பகைவர்களாக திகழ்ந்த முப்புரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை ஒரே அம்பினை எய்தி வீழ்த்தியவரும், கண் பொருந்திய நெற்றியை உடையவரும், சடையுடன் தலைமாலையாக கலந்த பிறைச் சந்திரனைக் கொண்டவரும், விண்ணவர்கள் கை தொழுது புகழும் பெருமையினை உடையவரும், பெருமை வாய்ந்த வெள்ளை இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டவரும் ஆகிய பெருமான், வேட்கள நன்னகரில் உறைகின்றார்.
பாடல் 6:
கறிவளர் குன்றம் எடுத்தவன் காதல் கண்கவர் ஐங்கணையோன் உடலம்
பொறிவளர் ஆரழல் உண்ணப் பொங்கிய பூத புராணர்
மறிவளர் அங்கையர் மங்கையொர் பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோலுடை ஆடை
வெறிவளர் கொன்றை அந்தாரார் வேட்கள நன்னகராரே
விளக்கம்:
கறி=மிளகு; மிளகு மலைச்சாரலில் வளரும் கொடிகள்; இங்கே மலை என்பது கோவர்தன மலையினை குறிப்பிடுகின்றது. ஐங்கணையோன்=ஐந்து விதமான அம்புகளை உடைய மன்மதன்; தாமரை, முல்லை, மா, அசோகம் மற்றும் நீலோற்பலம் என்பன மன்மதனின் ஐந்து அம்புகள் என்று சொல்லப்படுகின்றன. உயிர்களின் காதல் உணர்ச்சியை தூண்டுவதற்கு மன்மதன் இந்த ஐந்து அம்புகளையும் பயன்படுத்துவதாக கூறுவார்கள். சிவபெருமானின் தவத்தை கலைக்க முயன்ற மன்மதன், பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிவந்த தீப்பொறிகளால் எரிந்து அழிந்ததையும், பின்னர் உயிர் பெற்று அவனது கணவன் இரதி தேவிக்கு மட்டும் தெரியும் வண்ணம் வாழ்ந்ததையும் நாம் அனைவரும் அறிவோம். மீண்டும் மீண்டும் இரதி தேவி, தனது கணவன் அனைவரின் கண்களுக்கும் தெரியும் வண்ணம் வாழவேண்டும் என்று வேண்டவே, பெருமான் இரதி தேவிக்கு ஒரு வரத்தினை அளிக்கின்றார். திருமால் கண்ணனாக அவதாரம் எடுக்கும் போது, மன்மதனின் அம்சமாக அநிருத்தன் என்று ஒரு மைந்தன் ருக்மிணி தேவிக்கு மகனாக பிறப்பான் என்றும், உஷை என்ற பெயருடன் பாணாசுரனின் மகளாக பிறக்கும் இரத்திதேவியை அவன் மணந்து கொள்வான் என்றும் வரம் அளித்தார். பின்னர் அவ்வாறே நடந்தது. இதனைக் குறிப்பிடும் வண்ணம், மன்மதனை கண்ணனின் மகன் என்று இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பூத புராணர்=பூதங்களுக்கு ஆதியாக இருப்பவர், ஆதி என்றார் சொல் இங்கே தலைவர் என்ற பொருளில் வந்துள்ளது. மறி=மான் கன்று; மைஞ்ஞிற=கருமை நிறம் உடைய; மைஞ்ஞிற மான்=கருமான், கருமை நிறமுடைய விலங்கு, கருமையான் உடலினை உடைய யானை; வெறி வளர்=நறுமணம் மிகுந்த;
பூதங்கள் என்று பஞ்ச பூதங்களை குறிப்பிடுகின்றார். பஞ்ச பூதங்களின் கலவையாகத் தான் உலகினில் உள்ள அனைத்துப் பொருட்களும் உடலும் தோன்றுகின்றன. பஞ்ச பூதங்களுக்கு முன்னமே தோன்றியவன் என்ற குறிப்பு மூலம் அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவன் பெருமான் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது
இந்த பாடலில் கரிய மான் என்று யானையை சம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு தில்லைத் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் (6.1.3) ஒன்றினை நினைவூட்டுகின்றது. கருமானின் தோலை அணிந்தவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான், தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை பெருமான் போர்வையாக போர்த்துக் கொண்ட செய்தி குறிப்பிடப் படுகின்றது. கருமான்=யானை; அதள்=தோல்; வீக்கி=கட்டி; கனைகழல்=ஒலி எழுப்பும் கழல்கள்; கழல்கள் காலில் அணியும் ஒரு ஆபரணம் ஆகும். மானம்=பெருமை; மடித்து என்ற சொல் மட்டித்து என்று மருவியது; மானேர் நோக்கி=மானைப் போன்ற மருண்ட பார்வையினை உடைய பார்வதி தேவி; இந்த பாடல் சிவபெருமானது ஆடல் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றது. வாண்முகம்=வாள்முகம்=வாள் போன்று ஒளியினை வீசும் முகம்.
கருமானின் உரி அதளே உடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி
வருமானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர்மதியம் சடைக்கு அணிந்துமானேர் நோக்கி
அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
பொழிப்புரை:
மிளகுக் கொடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்த கோவர்த்தன மலையினை, தனது கைவிரல் ஒன்றினால் தாங்கிய கண்ணனின் அன்பு மகன் அநிருத்தனாக வளர்ந்தவனும் ஐந்து அம்புகளின் மூலம் உயிர்களில் காதல் உணர்ச்சியை பெருக்குபவனும் ஆகிய மன்மதனின் உடலினை நெற்றிக் கண்ணிலிருந்து வெளிவந்த தீப்பொறிகள் எரித்து உண்ணும் வண்ணம் கோபத்தால் பொங்கியவரும், பூதகணங்களின் தலைவரும், மான்கன்றினைத் தனது கையினில் ஏந்தியவரும், மங்கை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருப்பவரும், கருமை நிறம் உடைய தோலினை கொண்ட யானையை அடக்கி அதன் தோலினை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டவரும், நறுமணம் மிகுந்த கொன்றை மலர் மாலையினை அணிந்தவரும் ஆகிய பெருமான் வேட்கள நகரின் தலைவராக விளங்குகின்றார்.
பாடல் 7:
மண் பொடிக் கொண்டு எரித்து ஓர் சுடலை மாமலை வேந்தன் மகள் மகிழ
நுண்பொடிச் சேர நின்றாடி நொய்யன செய்யல் உகந்தார்
கண்பொடி வெண் தலையோடு கையேந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்
வெண்பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்னகராரே
விளக்கம்:
மண்ணும் பொடியாகும் வண்ணம் செய்யும் பெருமான் என்று சம்பந்தர் கூறுகின்றார். மண் என்பதற்கு உலகம் என்று பொருள் கொள்ளவேண்டும். பிரளய காலத்தில் உலகில் அனைத்துப் பொருட்களும் அழிந்து எரியும் போது உலகமே சுடுகாடாக காட்சி அளிக்கின்றது. இந்த பிரளய காலத்தை தான் சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மா என்ற சொல்லினை அன்னைக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக கொள்ளவேண்டும். உலகப் பொருட்கள், மற்றும் உடல்கள் அனைத்தும் அழிந்த பின்னரும். அன்னை பெருமானைப் போன்று அழியாமல் இருப்பதால், அந்த சிறப்பினை உணர்த்தும் வண்ணம், மா மகள் என்று கூறுகின்றார். நொய்யன=நுட்பமான செயல்; கண்பொடி=கண் பொடிந்து விழுந்த, வெண்பொடி என்ற சொல்லுக்கு உகந்தார் என்பதை அடைமொழியாக கொண்டு, திருநீற்றின் சிறப்பினை உணர்த்துவதாக ஒரு விளக்கமும் அளிக்கப் படுகின்றது. உகந்து ஆர்=விருப்பம் பொருந்திய; விருப்பம் பொருந்திய மனதுடன் நாம் திருநீற்றினை ஏற்றுக்கொண்டு நெற்றியில் அணிந்து கொள்ள வேண்டும்.
பொழிப்புரை:
பிரளய காலத்தில் உலகமும் உலகில் உள்ள பொருட்களும் அழிய, உலகமே ஒரு சுடுகாடாக காட்சி அளிக்கும் தருணத்தில், என்றும் அழியாதவள் என்ற சிறப்பு வாய்ந்தவளும் மலையரசன் இமவானின் மகளும் ஆகிய பார்வதி தேவி கண்டு மகிழும் வண்ணம், நுண்ணிய சுடுகாட்டுப் பொடியினை தனது உடலெங்கும் பூசியவராக விளங்கும் பெருமான் நடமாடுகின்றார். அந்த பிரளய காலத்தின் பின்னர், மீண்டும் உலகத்தைத் தோற்றுவித்து உயிர்களுக்கு தங்களது வினைகளைக் கழித்துக் கொள்ளும் வாய்ப்பினை அளிக்க விரும்பும் பெருமான், தனது உடலில் ஒடுங்கியுள்ள உயிர்கள் அனைத்தையும் விடுவிக்கும் பெருமான், தொடர்ந்து படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்கள் நடைபெறும் வண்ணம், பிரமன் திருமால் உருத்திரன் ஆகியோருக்கு அந்த பணிகளை செய்யுமாறு பணித்து, மகிழ்கின்றார். இவ்வாறு விடுவிக்கப்பட்ட உயிர்களில் ஏதேனும் பக்குவம் அடைந்திருந்தால், அந்த உயிர்களுக்கு உய்வினை அளிக்கும் பொருட்டு, கண்ணற்ற மண்டையோட்டினைத் தனது கையில் ஏந்தியவாறு பலியேற்று பல இடங்களிலும் திரிகின்றார். அவர் தனது அடியான் சிறுவன் மார்க்கண்டேயனை காக்கும் பொருட்டு, காலனை காலால் உதைத்து மகிழ்ந்தவர் ஆவார். திருநீற்றினைத் தனது அழகிய மார்பினில் அணிந்துள்ள பெருமான், வேட்கள நன்னகரினில் உறைகின்றார்.
பாடல் 8:
ஆழ்தரு மால்கடல் நஞ்சினை உண்டார் அமுதம் அமரர்க்கு அருளிச்
சூழ் தரு பாம்பு அரை ஆர்த்துச் சூலமோடு ஒண்மழு ஏந்தித்
தாழ்தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்னகராரே
விளக்கம்:
புன்சடை=மென்மையான சடை; சூழ்தரு–சுற்றிக் கொள்ளும் இயல்பினை உடைய; ஆர்த்து=இறுகக் கட்டிக் கொள்ளுதல்; ஒண்மழு=ஒளிவீசும் மழு ஆயுதம்; சடையில் என்று குறிப்பிடாமல் சடை ஒன்றினில் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிட்டுள்ளமையால் பெருமானுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சடைகள் உள்ளன என்று சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். அப்பர் பிரான், விடம் தீர்த்த பதிகத்தின் (4.18) ஒன்பதாவது பாடலில் பெருமானுக்கு ஒன்பது சடைகள் உள்ளன என்று குறிப்பிடுகின்றார். சடை ஒன்றினை வாங்கி என்று பெருமான் தனது ஒன்பது சடைகளில் ஒன்றினில் கங்கை நதியினை மறைத்தமை இங்கே குறிப்பிடப் படுகின்றது.
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன
ஒன்பது போல் அவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை
ஒன்பது போல் அவர் பாரிடம் தானே
ஒன்றுக்கும் மேற்பட்ட சடைகள் உடையவராக பெருமான் இருக்கின்றார் என்பது அப்பர் பிரான் மீயச்சூர் இளங்கோயில் பதிகத்தின் பாடலிலும் (5.11.4) உணர்த்தப் படுகின்றது. கூவிளம்=வில்வம். நறுமணம் வீசும் மல்லிகை, வில்வ இலைகள், செண்பக மலர்கள் ஆகியவற்றை தனது வெவ்வேறு சடையில் கொண்டுள்ள பெருமான், மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது விரித்த சடையினில் கங்கை நதியை அடக்கியுள்ளார். திருமீயச்சூர் தலத்தில் உள்ள இளங்கோயிலில் உறையும் பெருமான் இடபத்தைத் தனது வாகனமாக மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டவராக உள்ளார் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறு வேறு விரித்த சடையிடை
ஆறு கொண்டு உகந்தான் திரு மீயச்சூர்
ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே
பொழிப்புரை:
ஆழம் மிகுந்ததும் பெரியதும் ஆகிய கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உட்கொண்டவரும், அந்த நஞ்சினை உட்கொண்டதன் மூலம் தேவர்கள் அமுதம் அருந்துவதற்கு வழி வகுத்தவனும், தனது இடுப்பினில், சுற்றிக் கொள்ளும் இயல்பினை உடைய பாம்பினை இறுகக் கட்டியவனும், சூலம் மற்றும் ஒளி பொருந்திய மழு ஆகியவற்றை ஏந்தியவனும், தாழ்ந்து தொங்கும் சடையினை மேலே தூக்கிக் கட்டியவராக ஒரு சடையினில் கங்கை நதியைத் தேக்கி மறைத்தவரும், அந்த சடையின் அருகே குளிர்ந்த பிறைச் சந்திரன் தவழுமாறு ஏற்றுக் கொண்டுள்ளவரும் ஆகிய இறைவன் வேட்கள நன்னகரத்தில் உறைகின்றார்.
பாடல் 9:
திருவொளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த
கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால்
அருவரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடெழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெருவுற ஊன்றிய பெம்மான் வேட்கள நன்னகராரே
விளக்கம்:
திருவொளி=ஒளிவீசும் திருமேனி; திசைமுகன்=நான்கு திசைகளில் நடக்கும் செயல்களை நோக்கும் வண்ணம் திசைக்கொரு முகம் கொண்டுள்ள பிரமன்; பேதுறுகின்ற=பேதமையால் உருகின்ற, அறியாமையால் ஏற்படும்; வரை=மலை; கருவரை=கரிய கோவர்தன மலை; அருவரை= அரிய கயிலாய மலை; ஒல்க=நெகிழ, தளர; ஆடெழில் தோள்கள்=வெற்றியும் அழகும் மிகுந்த தோள்கள்;
பொழிப்புரை:
தங்களது அறியாமையால் இறைவனைக் காணும் வழியினை உணராதவர்களாக தங்களது ஆற்றலினால் அவனது அடியையும் முடியையும் கண்டு விடலாம் என்று மேற்கொண்ட முயற்சி பயன் அளிக்காததால், திசைக்கொரு முகமாக நான்கு முகங்களை உடைய பிரமனும் கோவர்தன மலையினைத் தனது கைநுனி விரலால் தூக்கி ஏந்திய திருமாலும், திகைத்து நின்றனர்; பின்னர் சிவபெருமானின் தன்மையை, அனைவரிலும் மேம்பட்டவராக அவர் இருக்கும் தன்மையை உணர்ந்தவர்களாய், பெருமானை கைகூப்பித் தொழுதனர்; மேலும், அரிய கயிலாய மலை நெகிழ்ந்து தளரும் வண்ணம் அந்த மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அரக்கன் இராவணனின் தோள்கள், அந்நாள் வரை வெற்றியையே கண்டு எழுச்சி மிகுந்து அழகுடன் விளங்கிய தோள்கள் மலையின் அடியில் அகப்பட்டு ஆழத்தில் அழுந்தும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றி அரக்கனின் ஆற்றலை அடக்கியவர் சிவபெருமான். இத்தகைய வல்லமை உடைய பெருமான் வேட்கள நன்னகரில் உறைகின்றார்.
பாடல் 10:
அத்தமண் தோய் துவரார் அமண் குண்டர் யாதும் அல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவது அல்லால் புறனுரை யாதொன்றும் கொள்ளேல்
முத்தன வெண்முறுவல் உமை அஞ்ச மூரி வல்லானையின் ஈருரி போர்த்த
வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன்னகராரே
விளக்கம்:
அத்தமண்=அத்தம்+மண், செந்நிற காவி மண்; யாதும் அல்லா உரை=பொருள் ஏதுமில்லாத உரை; மூரி=வலிமை;
பொழிப்புரை:
செந்நிற காவி மண் தோய்ந்த ஆடைகளை அணிந்த புத்தர்கள் மற்றும் சமண் குண்டர்கள் ஆகியோர், பொருளற்ற சொற்களையே பேசி, பொய்யான தவத்தினை அனுசரித்து, பெருமானின் தன்மைகளை பண்புகளை திரித்து பேசுகின்றனர். உலகத்தவரே அத்தகைய வார்த்தைகளை பொருட்படுத்தாமல் புறக்கணிப்பீர்களாக. வெண்முத்து போன்ற புன்னகையை உடைய உமையன்னை அஞ்சும் வண்ணம், தன்னை எதிர்த்து வந்த மதயானையின் வலிமையை அடக்கி அதன் இரத்தப்பசை உடைய தோலினைத் தனது உடல் மீது போர்வையாக போர்த்த திறமையாளரும் வேதமுதல்வரும் ஆகிய பெருமான் வேட்கள நன்னகரில் உறைகின்றார்.
பாடல் 11:
விண்ணியல் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க
நண்ணிய சீர்வளர் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒரு பாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே
விளக்கம்:
விண்ணியல்=விண்ணுற ஓங்கிய; புகழுக்கு அடையாளமாக வெண்கொடி எடுத்தல் பண்டைய நாளில் மரபாக இருந்தது.
பொழிப்புரை:
விண்ணுற ஓங்கிய மாட வீடுகளையும் புகழினை உணர்த்தும் வெண்கொடிகள் எங்கும் விரிந்து விளங்கும் வீதிகளையும் உடையதும், சிறப்பு என்றும் வளர்கின்ற காழி நகருக்கு உரியவனும், நற்றமிழில் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன், பெண்ணின் நல்லாள் என்ற திருநாமத்தினை உடைய பிராட்டியை தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுப் போற்றும் பெருமான், வேட்களத்தில் உறையும் பெருமானின் மேல் பாடிய இந்த பாடல்களை பண்ணுடன் இசைத்துப் பாடும் வல்லமை பெற்ற அடியார்கள் பழி பாவம் இன்றி வாழ்வார்கள்.
முடிவுரை:
அர்ஜுனனின் பலத்தினை பரீட்சை செய்வதற்காக பெருமான் வேடுவக் கோலம் தாங்கி, அன்னை பார்வதி தேவி உடன்வர சென்றதாக பல திருமுறைப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. போர்க் கலையில் சிறந்து விளங்கிய அர்ஜுனனுக்கு முதுகினில் மச்சம் இருந்ததாகவும், அர்ஜுனன் எவரிடமும் தோற்று ஓடாததால் அந்த மச்சத்தினை பார்க்கும் வாய்ப்பு எவருக்கும் கிடைக்கவில்லை என்றும் கூறுவார்கள். அன்னை பார்வதி தேவிக்கு இந்த மச்சத்தினைக் காண ஆவல் உண்டானதாகவும், அதனால் தான், தன்னை நோக்கி தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் வழங்கச் சென்ற இறைவன்,தன்னுடன் அன்னையையும் அழைத்துக் கொண்டு சென்றதாகவும், அர்ஜுனனை போரில் தோற்கடித்து அவனது முதுகு மச்சத்தை பார்வதி தேவி காண வைத்ததாகவும் கூறுவார்கள். சிதம்பரத்தை அடுத்த வேட்களம் தலத்தில் தான் அர்ஜுனன் பாசுபதம் பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த தலத்து இறைவனின் பெயர் பாசுபத நாதர் என்பதாகும். இங்கு உள்ள அர்ஜுனன் உருவச் சிலையில் முதுகில் ஒரு வடு இருப்பதையும் நாம் காணலாம். அர்ஜுனன் உருவச்சிலையில் முதுகினில் மச்சம் இருப்பதை, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்த நண்பர் ஒருவர் இந்த செய்தியை அடியேனுக்கு தெரிவித்தார். பண்டைய காலத்து சிற்பிகள் எந்த அளவுக்கு புராணங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகின்றது.
தில்லைச் சிதம்பரத்தில் பெருமானின் நடனக் காட்சியைக் கண்டு மனம் நெகிழ்ந்த திருஞான சம்பந்தர், திருவேட்களம் தலம் வந்த பின்னரும், அந்த காட்சியினை மறக்க முடியாதவராக, அந்த காட்சியின் தன்மையை, ஐந்து தொழில்களையும் பெருமான் செய்யும் தன்மையை, இந்த பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் மாதொருபாகனாக இறைவன் இருக்கும் நிலை உணர்த்தப்பட்டு, பலி ஏற்பதற்காக பல இடங்களிலும் திரியும் பெருமான் என்று குறிப்பிட்டு, பக்குவப்பட்ட உயிர்கள் தன்னை வந்தடைய வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டவராக பெருமான் இருக்கும் நிலையும் உணர்த்தப் படுகின்றது. பக்குவம் அடையாத உயிர்கள், பக்குவம் அடையும் பொருட்டு தங்களது வினைகளின் ஒரு பகுதியை, சூக்கும உடல் சொர்கத்திலும் நரகத்திலும் கழித்து கொள்ளும் வண்ணம் சீதமும் வெம்மையுமாக பெருமான் விளங்குகின்றார் என்று மூன்றாவது பாடலில் கூறுகின்றார். நான்காவது பாடலில், பன்றியாக அவதாரம் எடுத்த திருமாலின் செருக்கினை அடக்கிய ஆற்றலும் ஐந்தாவது பாடலில் திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளை எரித்து அழித்த ஆற்றலும் குறிப்பிடப் படுகின்றன. ஆறாவது பாடலில், தவம் செய்வோரின் தவத்திற்கு இடைஞ்சல் விளைவிக்கும் செயல் தவறு என்பதை உலகினுக்கு உணர்த்தும் வண்ணம், மன்மதனின் உடலினை பெருமான் விழித்து எரித்த சம்பவம் உணர்த்தப் படுகின்றது. ஏழாவது பாடலில், உயிர்கள் பால் கருணை கொண்டுள்ள பெருமான், பிரளயத்தில் உலகமும் உலகப் பொருட்களும் முற்றிலும் அழிந்த பின்னரும், உயிர்கள் தங்களது வினைகளை கழித்துக் கொள்ள மீண்டும் வாய்ப்பினை அளிக்கும் வண்ணம், படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய நுட்பமான செய்ல்களை புரிகின்றார் என்று சம்பந்தர் கூறுகின்றார். எட்டாவது பாடலில், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சினை உட்கொண்டு அமரர்கள் அமுதம் உண்பதற்கு வழி வகுத்த பெருமானின் கருணைச் செயல் உணர்த்தப் படுகின்றது. ஒன்பதாவது பாடலில் அண்ணாமலை சம்பவமும் இராவணனின் கயிலை சம்பவமும் குறிப்பிடப்பட்டு, பெருமானை நாம் அணுக வேண்டிய முறை நமக்கு உணர்த்தப் படுகின்றது. பத்தாவது பாடலில், சமணர்களும் புத்தர்களும் கூறும் பொருளற்ற சொற்களை நாம் புறக்கணிப்பதாக வேண்டும் என்ற அறிவுரை கூறப்படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடலில் பதிகத்தினை ஓதுவோர் அடையும் பலன் குறிப்பிடப் படுகின்றது. இந்த பதிகத்து பாடல்கள் மூலம், பெருமானின் பெருமையையும் கருணைத் தன்மையையும் நாம் உணர்ந்து கொண்டு, பெருமானின் திருவடிகளைப் பணிந்து போற்றி வாழ்வினில் உய்வினை அடைவோமாக.
அந்தமும் ஆதியும் (Andhamum Aadhiyum) is a Tamil phrase that conveys profound philosophical and poetic meanings. Here’s a detailed breakdown:
அந்தம் (Andham): Means "end" or "limit". It refers to the concept of something coming to a conclusion or having a boundary.
ஆதி (Aadhi): Means "beginning" or "origin". It signifies the start or source of something.
"அந்தமும் ஆதியும்" translates to "both the end and the beginning" or "the ultimate limit and the primordial origin." The phrase often represents the concepts of completeness and totality, encompassing both the inception and conclusion of a cycle or process.
Philosophical Significance: In philosophical or spiritual contexts, this phrase reflects the idea of the infinite nature of existence, where the beginning and end are interconnected and cyclical. It can symbolize the eternal cycle of creation, preservation, and dissolution.
Literary Usage: In Tamil literature and poetry, "அந்தமும் ஆதியும்" may be used to explore themes of continuity, eternity, and the unity of opposites. It can represent the idea that the end is inherently connected to the beginning and that time and existence are part of a continuous cycle.
Spiritual Context: In religious or spiritual texts, this phrase might be used to describe deities or cosmic principles that embody both the creation and dissolution of the universe. For instance, deities like Shiva in Hinduism are often described as being both the origin (Aadhi) and the end (Andham) of everything.
In a philosophical discourse or a devotional hymn, "அந்தமும் ஆதியும்" might be used to express the concept that divine or cosmic principles are beyond the confines of linear time and embody both the starting point and the ultimate conclusion of existence. It emphasizes the unity and continuity of all that exists.
"அந்தமும் ஆதியும்" is a phrase rich in meaning, reflecting the interconnectedness of beginnings and endings. It captures the essence of continuity and unity, highlighting the cyclical nature of existence and the eternal nature of divine or cosmic principles. This phrase is used to convey deep philosophical and spiritual ideas about the nature of time, existence, and the universe.