1.006 அங்கமும் வேதமும்
திருமருகல் மற்றும் திருச்செங்காட்டங்குடி பண்; நட்டபாடை
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருநள்ளாறு தலம் சென்ற திருஞானசம்பந்தர் பின்னர் சாத்தமங்கை, நாகைக்காரோணம், கீழ்வேளூர்,செங்காட்ட்ங்குடி மற்றும் பல தலங்கள் சென்ற பின்னர் திருமருகல் தலம் வந்தடைகின்றார். திருச்செங்காட்டங்குடியில் திருஞான சம்பந்தரை எதிர்கொண்டு வரவேற்ற சிறுத்தொண்டர் அவரை தமது இல்லத்திற்கும் அழைத்துச் சென்றதாக சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார்.திருமருகல் தலத்தினில் பாம்பு கடித்து இறந்த கணவனை சடையாய் எனுமால் என்று தொடங்கும் பதிகம் பாடி, உயிர்ப்பித்து அவனது மனைவியை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திருஞானசம்பந்தர், மேலும் பல நாட்கள், ஆங்கே தங்கி இருந்து பரமனைப் பணிந்து வந்தார். அந்நாளில் செங்காட்டங்குடி தலத்திலிருந்து சிறுத்தொண்டர் திருமருகல் வந்தடைந்து, திருஞானசம்பந்தர் மீண்டும் திருச்செங்காட்டங்குடி தலம் வரவேண்டும் என்று வேண்டினார்.
செங்காட்டங்குடி செல்லும் முன்னர், பெருமானின் திருவுள்ளக் கருது யாது என்பதை அறிந்து கொள்ளும் முகமாக, திருஞானசம்பந்தர் அடியார்கள் புடைசூழ திருமருகல் திருக்கோயிலின் உள்ளே புகுந்தார். அப்போது இறைவன் விளைவித்த அதிசயத்தால், மருகல் பெருமானின் திருக்கோலத்தில்,திருச்செங்காட்டங்குடி திருக்கோலத்தை திருஞானசம்பந்தர் கண்டார். இவ்வாறு இறைவன் காட்சியளித்ததைக் கண்ட திருஞானசம்பந்தர், மேலும் சில நாட்கள் திருமருகல் தலத்தில் தான் தங்கியிருந்து அவரை வழிபடவேண்டும் என்று இறைவன் விரும்புகின்றார் என்பதை புரிந்து கொண்டார். இவ்வாறு இறைவனின் திருவுள்ளக் கருத்தினை அறிந்து கொண்டு செயல்படும் தன்மை நால்வர் பெருமானார்கள் நால்வருக்கும் இருந்ததை நாம் அவர்களது சரித்திரத்திலிருந்து உணர்கின்றோம். இந்த அதிசயத்தைக் கண்ணுற்ற அவர், அஙகமும் வேதமும் என்று தொடங்கும் பதிகத்தை பாடினார் என்று பெரியபுராணம் நமக்கு உணர்த்துகின்றது. இந்த பெரிய புராணப் பாடலை நாம் இங்கே காண்பது பொருத்தம். பெருமானின் திருவருளை நினைத்து கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொழிய இந்த பதிகத்தை அவர் பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.
மருகல் அமர்ந்து நிறைந்த கோலர் மல்கு செங்காட்டங்குடியின் மன்னிப்
பெருகு கணபதீச்சரத்தார் பீடுடைக் கோலமே ஆகித் தோன்ற
உருகிய காதலும் மீது பொங்க உலகார் முன் கொள்ளும் உணர்வு நீட
அருவி கண் வார்வுறப் பாடலுற்றார் அங்கமும் வேதமும் என்றெடுத்து
இந்த பதிகம் பாடிய பின்னரும் சில நாட்கள் திருமருகல் தலத்தில் தங்கியிருந்த திருஞான சம்பந்தர் திருச்செங்காட்டங்குடி சென்று கணபதீச்சரத்து பெருமானை வணங்கிய பின்னர், புகலூர் சென்றடைந்தார் என்று நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். கயாசுரனைக் கொன்ற பழி தீரும் பொருட்டு, விநாயகர் பெருமானை வழிபட்டதால், திருக்கோயிலுக்கு கணபதீச்சரம் என்ற பெயர் வந்தது. செங்காட்டங்குடி என்பது தலத்தின் பெயர்,திருக்கோயிலின் பெயர் கணபதீச்சரம். விநாயகர் கயமுகாசுரனைக் கொன்றபோது அவனது உடற்குருதி படிந்து இந்த பகுதி செங்காடாக மாறியமையின் செங்காட்டங்குடி என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். சிறுத்தொண்டருக்காக பெருமான் பைரவர் வேடம் தாங்கி எழுந்தருளிய தலம். அடியார் பொருட்டு,தனது பாதம் தோய பெருமான் நடந்த திருத்தலங்களில் இந்த தலமும் ஒன்று. தில்லைச் சிதம்பரம், திருவாலவாய், திருவாரூர், திருக்கச்சூர், திருக்குருகாவூர் வெள்ளடை, திருவம்பர் மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பைஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணெய்நல்லூர்,திருநாவலூர், திருச்செங்காட்டங்குடி என்பன அத்தகைய தலங்கள். பெருமான் ஆடிய நவதாண்டவங்களில் ஒன்றான உபயபாத நடனம் ஆடப்பெற்றது இந்த தலம் என்று கூறுவார்கள். இந்த காரணம் பற்றியே, இந்த பதிகத்தின் எட்டு பாடல்களில் பெருமானின் நடனக் கோலத்தை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் போலும். நவதாண்டவ மண்டபம் எனபடும் மண்டபம் பெருமானின் நடனக்கோலங்களை உணர்த்தும் அழகிய சிற்பங்கள் உடையது.புஜங்கலளித மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, காலசம்ஹார மூர்த்தி, கங்காள மூர்த்தி, பிக்ஷாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி,பைரவ மூர்த்தி ஆகிய திருக்கோலங்கள், இங்கே அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
பாடல் 1:
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர்கொள் செங்காட்டங்குடி அதனில்
கங்குல் விளங்கெரி ஏந்தி ஆடும் கணபதீயீச்சரம் காமுறவே
விளக்கம்:
வேதங்களின் ஆறு அங்கங்களாக கருதப்படுவன: சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் என்பன. வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்களைப் பற்றி கூறுவது சிக்ஷை எனப்படும் பகுதி. எழுத்துக்கள் ஒலிக்கப்பட வேண்டிய முறை, மாத்திரை அளவுகள், மற்றும் அந்தந்த எழுத்துக்களுக்கு உரிய தேவதைகள் முதலிய பல விவரங்கள் அடங்கிய பகுதிகள் சிக்ஷை என்று அழைக்கப்படும். வேதத்திற்கு அழகு சேர்ப்பது சிட்சை எனப்படும் அங்கமாகும். ஒரு மனிதனுக்கு அவனது மூக்கு அழகு சேர்ப்பதைப் போன்று சிட்சை அழகு சேர்ப்பதால், இதனை வேத புருடனின் மூக்கு என்றும் கூறுவார்கள். மூக்கும் முழியுமாக இருப்பதைத் தானே அழகாக இருப்பதாக நாம் கருதுகின்றோம். மூக்குக் குழாய் பழுதடைந்தால், நமது சொற்களின் உச்சரிப்பு சரியாக இருப்பதில்லை. ஜலதோஷம் பாதிக்கும் போது நமது குரல் கெட்டுப்போவதை நாம் உணருகின்றோம். ஒவ்வொரு எழுத்தினையும் அதற்கு உரிய முறையில் உச்சரித்தால் தான் வேதம் கேட்பதற்கு அழகாகவும் முறையாகவும் தவறில்லாமலும் இருக்கும்.
பல எழுத்துக்களால் உருவான சொற்களைப் பற்றி கூறுவது வியாகரணம். சிட்சைக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுவது வியாகரணம். வியாகரணம் என்றால் இலக்கணம் என்று பொருள். வழக்கத்தில் உள்ள பல சொற்கள், சற்று மாறுபட்டு பாடல்களில், இலக்கியங்களில் கையாளப்படுவதை நாம் காண்கின்றோம். இலக்கியங்களில் நாம் காணும் பல சொற்கள் காலப்போக்கில் திரிந்து, இன்று நாம் பயன்படுத்தும் நிலையில் உள்ளதைக் காண்கின்றோம். ஆனால் அத்தகைய இலக்கியச் சொற்கள், கவிதைகளின் இலக்கணத்திற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதை, சற்று ஆராய்ந்தால் நாம் உணரலாம். அவ்வாறே வேதத்தில் காணப்படும் பல சொற்கள் இன்றும் நாம் நடைமுறையில் கையாளும் வடமொழிச் சொற்களிலிருந்து மாறுபட்டு இருக்கின்றன. அத்தகைய வேதச் சொற்கள், இன்றைய நடைமுறைச் சொற்களிலிருந்து வேறுபட்டாலும் இலக்கண ரீதியில் சரியாக இருப்பதை,நாம் உணரலாம். இவ்வாறு பல சொற்களின் பயன்பாட்டினை நமக்கு உணர்த்தும் வியாகரணம், வேதத்தில் அமைந்திருக்கும் சொற்களை பாதுகாக்கின்றன.எனவே வியாகரணத்தை வேதத்தின் மெய்க்காப்பாளன் என்றும் வேத புருடனுக்கு வாய் என்றும் கூறுவார்கள். மேலும் ஒரே சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளதை நாம் தமிழ் மொழியில் காண்பது போல், வடமொழியிலும் காணலாம். பலவிதமான அர்த்தங்கள் கொண்ட சொற்களை பயன்படுத்தும் முறையும் வியாகரணத்தில் விளக்கப் படுகின்றது
சந்தஸ் என்பது வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்களின் எழுத்து எண்ணிக்கையை குறிக்கும் பகுதியாகும். வேதங்களில் கூறப்படும் பல மந்திரங்களுக்கு உரிய முனிவர்கள், சந்தம், தேவதை ஆகியவற்றின் பெயர்களை சொன்ன பின்னரே அந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது விதி.சந்தம் என்பது அந்தந்த மந்திரங்களில் அமைந்துள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். மந்திரங்களில் உள்ள எழுத்துக்களில், ஒரு எழுத்தைக் குறைத்தோ அல்லது கூட்டியோ சொல்வதைத் தவிர்ப்பதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. அந்தணர்கள் தினமும் சொல்லவேண்டிய காயத்ரி மந்திரத்தில் இருபத்து நான்கு எழுத்துகள் இருப்பதாக வேதம் கூறுகின்றது. சந்தஸ் என்று வடமொழியில் அழைக்கப்படும் இந்த அங்கம்,மூன்றாவது முக்கிய அங்கமாக கருதப்படுகின்றது. இந்த அங்கம் வேத புருடனின் பாதமாக கருதப் படுகின்றது
அடுத்த அங்கம் நிருக்தம் என்று அழைக்கப்படுகின்றது. நிருக்தம் என்றால் விளக்கிச் சொல்லுதல் என்று பொருள். பல பொருள்களைக் கொண்ட சொற்கள்,வேதங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த விளக்கத்தினைத் தெரிந்து கொண்டால் தான், அந்தந்த இடங்களுக்கு ஏற்ப, வேதத்தின் பல சொற்கள் உணர்த்தும் சரியான பொருளை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இவ்வாறு சரியான விளக்கங்களை அறிந்து கொள்வதற்கு வியாகரணமும் உதவி செய்கின்றது. எனவே சொற்களின் விளக்கம், இலக்கணம் ஆகியவற்றை அறிந்து கொண்டால் தான், சரியான உச்சரிப்புடன் பல வேத மந்திரங்களை நாம் சொல்ல முடியும். இந்த அங்கம் வேத புருடனின் காதுகளாக கருதப் படுகின்றன.
ஜோதிடம் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியான கணிதத்தில், கால தத்துவங்கள், வருடம், அயனம், திதி, வாரம், மாதம், வளர்பிறை/தேய்பிறை விவரங்கள் மற்றும் அந்தந்த காலங்களில் செய்யக்கூடிய காரியங்கள் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியான ஹோரையில், இதுவரை நடந்த சம்பவங்கள், தற்போது நடக்கும் சம்பவங்கள், இனி நடக்க இருக்கும் சம்பவங்கள் என்பவை கோள்களின் பயணத்தின் அடிப்படையில் கணித்து சொல்லப்படுகின்றன.
கல்பம் என்றால் பிரயோகம் என்று பொருள். வேள்வி முதலான பல சடங்குகளை, பல விதமான மந்திரங்களை பயன்படுத்தும் முறை இந்த அங்கத்தில் சொல்லப்படுகின்றது. மேற்கூறிய விளக்கங்கள் எவ்வாறு அங்கங்கள், வேதங்களை ஓதுவதிலும், வேதத்தின் பொருளை புரிந்து கொள்வதிலும், வேத மந்திரங்களை பயன்படுத்துவதிலும் நமக்கு உதவியாக உள்ளன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த அங்கத்தை வேத புருடனின் கைகள் என்று கருதுகின்றனர். எனவே வேதங்களை முற்றும் கற்றால் மட்டும் போதாது, வேதங்களின் அங்கங்களையும் முறையாக கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தினை நாம் உணர்கின்றோம். மேலும் இந்த அங்கங்கள் மூலம், உணர்வதற்கு மிகவும் அரியனவாக காணப்படும் வேதங்களை நாம் அறிந்து கொள்ள அங்கங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். மேலும் இந்த ஆறு அங்கங்களும் வாய்மொழியாக சொல்லிக் கொடுக்கப்பட்ட வேதங்களில் பிழைகள் ஏற்படுவதை தவிர்க்கின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். எனவே தான் வேதங்களை விரித்து சொன்ன பெருமான், இந்த ஆறு அங்கங்கள் பற்றியும் கூறியுள்ளார். பண்டைய நாட்களில் வேதங்கள், வாய்மொழியாக, குருவிடமிருந்து சீடனுக்கு, அந்த சீடனிலிருந்து அவனது சீடனுக்கு, என்று சங்கிலித் தொடர் போன்று, புத்தகங்கள் ஏதுமின்றி சொல்லிக் கொடுக்கப் பட்டமையால், வேத மந்திரங்களை உச்சரிப்பதில் அதன் பொருளை புரிந்து கொள்வதற்கு இந்த ஆறு அங்கங்களும் உதவியாக இருந்தன. வேதங்களை அருளிய பெருமான் ஆறு அங்கங்களையும் அருளினார் என்று பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன.
திருப்பரங்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.100.2) திருஞானசம்பந்தர் அங்கம் ஓராறும் அருமறையும் அருள் செய்தவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். பொங்கு வெண்ணூல்=அழகு பொங்கும் பூணூல்;
அங்கம் ஓராறும் அருமறை நான்கும் அருள் செய்து
பொங்கு வெண்ணூலும் பொடியணி மார்பில் பொலிவெய்துச்
திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்தோர் தேன்மொழி
பங்கினன் மேய நன்னகர் போலும் பரங்குன்றே
பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.108.4) திருஞானசம்பந்தர் பெருமானை அங்கமும் நான்மறையும் அருள் செய்தவன் என்று குறிப்பிடுகின்றார். அஞ்சொல்= அழகிய சொல்; உகளும்=புரளும்; செறு=வயல்; பங்கயம்=தாமரை மலர்; செழிப்புடன் ஒளி வீசும் தாமரை மலர்கள் மலரும் வயல்கள் என்று குறிப்பிட்டு, தலத்தின் நீர்வளமும் நிலவளமும் உணர்த்தப் படுகின்றது. குலம் கோத்திரம் ஏதுமற்ற பெருமான் எனினும், வேதங்களை அருளிய காரணத்தால், பெருமான் சிறந்த அந்தணனாக கருதப்படுகின்றான். பெரிய புராணத்தில் விவரிக்கப் படும் பல அடியார்களில் வாழ்வினில், பெருமான் அந்தணர் வேடம் தாங்கி வந்ததை நாம் காண்கின்றோம். இந்த காரணங்கள் பற்றியே திருஞானசம்பந்தர் பெருமானை மறையோன் என்று குறிப்பிட்டார் போலும். பல திருமுறைப் பாடல்கள் பெருமானை, அந்தணன் என்றும் மறையோன் என்றும் வேதியன் என்றும் குறிப்பிடுகின்றன.
அங்கமும் நான்மறையும் அருள் செய்து அழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறை கோயில்
செங்கயல் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே
சிரபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.109.2) திருஞானசம்பந்தர், பெருமானை அங்கமோடு அருமறை அருள் புரிந்தான் என்று குறிப்பிடுகின்றார். சிரபுரம் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும்.
அங்கமொடு அருமறை அருள் புரிந்தான்
திங்களொடு அரவணி திகழ் முடியன்
மங்கையொடு இனிதுறை வளநகரம்
செங்கயல் மிளிர் வயல் சிரபுரமே
திருவல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.113.9) அருமறையாகவும் அந்த மறைகளுக்கு அரணாகிய அங்கமாகவும் இருப்பவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சிறியவர் சிந்தை செய்ய அரியவன் என்ற குறிப்பு, பாடலின் மூன்றாவது அடியில் குறிப்பிடப்படும் நான்முகன் மற்றும் திருமால் பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முடியாமல் நின்ற நிகழ்ச்சியின் பின்னணியில், நான்முகன் திருமால் உட்பட அனைத்து உயிர்களும் பெருமானை விடவும் மிகவும் சிறியவர்கள் என்பதை உணர்த்துகின்றது.
பெரியவன் சிறியவர் சிந்தை செய்ய
அரியவன் அருமறை அங்கம் ஆனான்
கரியவன் நான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் வளநகர் திருவல்லமே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.120.4) அருமறை ஆறங்கம் ஆய்ந்தவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.அருமறையையும் ஆறங்கத்தையும் ஆராய்ந்து அறிந்தவன் தானே, ஐயம் திரிபற அடுத்தவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியும். வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலத்தில் (திருவிளையாடல் புராணம்) பரஞ்சோதி முனிவர், கண்வர் முதலான முனிவர்களுக்கு வேதத்தின் பொருள் சொன்ன நிகழ்ச்சி சொல்லப் பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்ற வேதியன் ஒருவன், நைமிசாரண்யத்தில் கண்வர் முதலான முனிவர்கள், முகம் வாட்டமடைந்து இருந்ததைக் கண்டு,அதன் காரணத்தை வினவினார். வேதங்களின் பொருளினை அறியமுடியாமல் வருந்துவதாக அவர்கள் கூற, மதுரை வேதியன், மதுரை மாநகரம் சென்று சொக்கநாதப் பெருமானிடம் வேண்டுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறினார். அவ்வண்ணமே கண்வரும் மற்ற முனிவர்களும் மதுரை சென்றடைந்து சொக்கநாதப் பெருமானிடம் வேண்டினார்கள். பின்னர் அவர்கள் ஆங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் வழிபட்ட போது, வேதியச் சிறுவனாக பெருமான் வெளிப்பட்டு, முனிவர்களை நோக்கி அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது முனிவர்கள் வேதங்களின் பொருளை அறிந்து கொள்ளவேண்டும் என்பதே தங்கள் அவா என்று கூறவே, வேதியச் சிறுவனாக வந்த பெருமானும் வேதங்களின் பொருளை எடுத்துரைத்தார் என்று திருவிளையாடல் புராணம் உணர்த்துகின்றது. சனகாதி முனிவர்களுக்கு தனது மோன முத்திரையால் வேதத்தின் பொருளை உணர்த்தியவர் பெருமான் தானே.
வாய்ந்த வல்லவுணர் தம் வளநகர் எரியிடை
மாய்ந்து அற எய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் பெருமானை ஆறு நான்கும் சொன்னவன் என்று குறிப்பிடுகின்றார்.வேதங்களையும் அங்கங்களையும் ஒன்றாக கற்றுக்கொள்வது, பண்டைய நாளில் மிகவும் அவசியமாக கருதப்பட்டது. இந்த ஆறு அங்கங்களில் ஒன்று ஊனமடைந்தாலோ அல்லது ஒன்று இல்லாமல் போனாலோ, ஓதப்படும் வேதம் குறைபாடு உடையதாக மாறுகின்றது. எனவே இந்த ஆறு அங்கங்களும் முறையாக இருக்குமாறு வேதங்கள் ஓதப் படவேண்டும். இந்த ஆறு அங்கங்களும் வேதங்களை முறையாக சொல்ல உதவுகின்றன. எவரும் பண்டமாற்று செய்து கொள்ள விரும்பாத பொருட்களை, கோவணம் வெண்தலை ஆகியவற்றை பெருமான் விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வதாக இந்த பாடலில் திருஞானசபந்தர் குறிப்பிடுகின்றார்.
கூறு பெண் உடை கோவணம் உண்பது வெண்தலை
மாறிலாரும் கொள்வார் இலை மார்பில் அணிகலம்
ஏறும் ஏறித் திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே
ஆறு நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே
சீர்காழி தலத்தின் மீது அருளீய பதிகத்தின் பாடலில் (2.11.1) திருஞானசம்பந்தர் நான்மறையோடு ஆறங்கம் வல்லான் என்று குறிப்பிடுகின்றார்.நல்லான்=ந்ன்மையே வடிவமானவன்; சிவன் என்ற சொல்லுக்கு மங்கலமே வடிவமானவன் என்று பொருள். அனைத்து உயிர்களும் தாங்கள் பெறுகின்ற நன்மையைத் தானே மங்கலமாக கருதுகின்றன. எனவே சிவன் என்ற வடமொழிச் சொல்லுக்கு நல்லான் என்ற பொருள் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. இயலும்=இயல்பாக பொருந்தும்; வேதங்களில் வல்லவனாக பெருமான் இருத்தலின், வேதங்களை நன்கு கற்றுணர்ந்த மறையோர்களை பெரிதும் விரும்பி, அவர்களது வாயில் வருகின்ற சொல்லாக பெருமான் இருக்கின்றான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.இல்லான்=வீடாகக் கொண்டவன்;
நல்லானை நான்மறையோடு இயல் ஆறங்கம்
வல்லானை வல்லவர் பால் மலிந்து ஓங்கிய
சொல்லானைத் தொன்மதில் காழியே கோயிலாம்
இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே
திருமணஞ்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.16.6) திருஞானசம்பந்தர் பெருமானை ஆறங்கம் பகர்வான் என்று குறிப்பிடுகின்றார்.வடமொழியாகவும் தமிழ் மொழியாகவும் பெருமான் இருக்கும் தன்மை மொழியானை என்ற சொல் மூலம் குறிப்பிடப் படுவதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.உலகத்தில் தோன்றிய முதல் இரண்டு மொழிகளாக தமிழும் வடமொழியும் கருதப் படுகின்றன. மேலும் இந்த இரண்டு மொழிகளும் மிகவும் சிறப்பு வாய்ந்த மொழிகளாகவும் உள்ளன. வடமொழியில் வேதங்கள் அருளியவன் சிவபெருமான். மேலும் சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டின் அரசனாக இருந்து, தமிழ் சங்கத்தில் பங்கேற்று தமிழ் மொழியை வளர்த்த பெருமான், அகத்தியருக்கு, இன்னம்பர் தலத்தில் தமிழ் இலக்கணம் கற்பித்ததாக கருதப் படுகின்றது.அகத்தியர் இயற்றிய அகத்தியம் எனப்படும் நூலே தமிழ் இலக்கணத்திற்கான முதல் நூல் என்றும், தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக விளங்கியது அகத்தியம் என்று கூறுவார்கள். பழியாமை=பிழையின்றி சொல்லுதல்; வேதங்களை வகுத்தவன் சிவபெருமான் என்பதால் அந்த வேதங்களை பிழையின்றி அடுத்தவர் சொல்ல வேண்டும் என்பதிலும், வேத மந்திரங்களின் பொருளையும் சரியாக அனைவரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் பெருமானை விடவும் வேறு எவருக்கும் அதிகமான அக்கறை இருக்க முடியாது. அல்லவா. எனவே தான் வேதங்களுக்கு உரிய பண்ணையும் ஆறு அங்கங்களையும் பெருமான் படைத்தான் என்பது புலனாகின்றாது.
மொழியானை முன்னொரு நான்மறை ஆறங்கம்
பழியாமைப் பண்ணிசையான பகர்வனை
வழியானை வானவர் ஏத்து மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே
கேதாரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.114.2) திருஞானசம்பந்தர் பெருமானை, வேதம் நான்கும் பதினெட்டோடு ஆறும் விரித்தார் என்று குறிப்பிடுகின்றார். பதினெட்டு என்பது பதினெண் புராணங்களை குறிக்கும். ஆறு என்ற சொல் ஆறு அங்கங்களை உணர்த்துகின்றது. உகளும்=புரளும்.வண்டுகளின் ரீங்காரம் மிகவும் இனிமையாக இருப்பதால், அதனை கேட்டு மகிழும் மந்திகள் தரையில் புரண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே
வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம்
தாது விண்ட மது உண்டு மிண்டி வரும் வண்டினம்
கீதம் பாடல் மடமந்தி கேட்டுகளும் கேதாரமே
திருப்பூவணம் தலத்தின் மிது அருளிய பதிகத்தின் பாடலில் (3.20.2) திருஞானசம்பந்தர் பெருமானை, அங்கம் ஓதிய ஞானன் என்று கூறுகின்றார்.தென்முகக்கடவுளை ஞானத்தின் வ்டிவமாகத் தானே நாம் காண்கின்றோம்.
வானணி மதி புல்கு சென்னி வண்டொடு
தேனணி பொழில் திருப்பூவணத்து உறைகின்ற
ஆன நல் அருமறை அங்கம் ஓதிய
ஞானனை அடிதொழ நன்மையாகுமே
திருவிற்கோலம் தலத்தின் மீது அருளிய பதிகத்த்தின் பாடலில் (3.23.6) ஆறு அங்கங்களையும் வகுத்தவன் சிவபெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த தலம் தற்போது கூவம் என்று அழைக்கப்படுகின்றது; மிகுத்தவன=தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல், ஆற்றலில் அனைவரையும் மிஞ்சியவன்; மிகுத்தவர்=செருக்கினில் மிகுத்து பல கொடுமைகள் செய்த திரிபுரத்து அரக்கர்கள்; செகுத்தவன்=அழித்தவன், எரித்து அழித்தவன் என்று பொருள் கொள்ள வேண்டும். வேதங்களை பார்வதி தேவிக்கும் பல முனிவர்களுக்கும் உபதேசம் செய்த பெருமான், ஆகமங்களை நந்தியம்பெருமானுக்கு உபதேசம் செய்தார் என்று கூறுவார்கள்.
தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழில் கூகம் மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற்கோலமே
திருந்துதேவன்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.25.6) திருஞானசம்பந்தர், பெருமானை அங்கம் ஆறும் சொன்ன அடிகள் என்று குறிப்பிடுகின்றார். பங்கம்=இழிவு; புங்கம்=உயர்வு; பெருமானின் திருவேடத்தின் பொலிவினை உணர்ந்து, அந்த திருவுருவத்து அடையாளங்களின் பெருமையை உணர்ந்து, பெருமான் பால் அன்பு கொண்டு வழிபடும் அடியார்களின் செயல்கள் எவ்வாறு கருதப்படுகின்றன என்பதை சம்பந்தர் இந்த பாடலில் விளக்குகின்றார். இறைவனின் அடையாளங்களின் பெருமையை உணர்ந்து தகுந்த மதிப்பினை அளித்த அடியார்களின் செய்கை, எத்தகைய தன்மையதாக இருந்தாலும், அந்த செயல்களால் அவர்களுக்கு இழிவு ஏற்படாது என்றும் அத்தகைய செயல்களால் அவர்களுக்கு பழியேதும் ஏற்படாது என்றும் சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அடியார்களின் அத்தகைய செயல்களின் உயர்ந்த தன்மையை உணர்த்த, உயர்வு என்ற சொல் பொருத்தமற்றது என்பதால், உயர்வு என்று சொல்லமாட்டார்கள் என்று சம்பந்தர் மிகவும் நயமாக கூறுகின்றார்.
பங்கம் என்னப் படர் பழிகள் என்னப்படா
புங்கம் என்னப் படர் புகழ்கள் என்னப்படும்
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே
வேட்டக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.66.5) திருஞானசம்பந்தர் நான்மறை மற்றும் ஆறு அங்கங்களையும் சனகாதி முனிவர்களுக்கு உணர்த்திய பெருமான், அற நூல்களை கற்பதால் ஏற்படும் பயனாகிய அனுபவத்தையும் உணர்த்தினார் என்று கூறுகின்றார். அலற= கலக்கப்பட;பருவரை=பெரிய மலை, இங்கே மேரு மலை; அரவு=வாசுகிப் பாம்பு; உழல=திரிய; மேரு மலையை மத்தாக நட்டு வாசுகிப் பாம்பினை கயிறாக அந்த மத்தின் மீது சுற்றி பாற்கடலை கடைந்த நிகழ்ச்சி இங்கே சொல்லப் படுகின்றது.
பங்கமார் கடல் அலறப் பருவரையோடு அரவு சுழலச்
செங்கண் மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி
அங்கம் நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயனளித்த
திங்கள் சேர் சடையாரும் திருவேட்டக்குடியாரே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.07.07) அப்பர் பிரான், பெருமானை நான்மறையோடு ஆறங்கம் வல்லான் என்று குறிப்பிடுகின்றார். துகள்=களங்கம்: நல்லான்=நலம் உடையவன். சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம்(நலன்) என்று பொருள். சிவன் என்ற வடமொழிச் சொல்லுக்கு இணையான பொருள் தரும் வகையில் அப்பர் பிரான் நல்லான் என்ற சொல்லினை கையாண்டு இருக்கின்றார். நிறைந்த மங்கலத்தைத் தரக்கூடியவனும், நலன்களைத் தரக்கூடிய நான்மறைககளிலும் வேதங்களின் ஆறு அங்களிலும் வல்லவனாகத் திகழ்பவனும் ஆகிய சிவபெருமான், தன்னை உணரவல்லும், நினைக்கவல்லும் அடியார்களின் மனத்தினில் உறைகின்றான். மிகுந்த வல்லமை உடைய அவன், சொல்லாகவும், சொற்கள் உணர்த்தும் பொருளாகவும் உள்ளான். களங்கம் ஏதும் இல்லாத அவனை, நான் எனது மனத்தினில் வைத்துள்ளேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
நல்லானை நல்லான நான்மறையோடு ஆறங்கம்
வல்லானை வல்லார் கண் மனத்து உறையும் மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்
இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தேனே
திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்த்தின் பாடலில் (4.10.2) அப்பர் பிரான் வேதமும் அங்கமும் கூறியவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கீறின=கிழிக்கப்பட்ட: மான், புலி, யானை ஆகிய விலங்குகளின் தோல் என்றும், கிழிக்கப்பட்ட கோவண ஆடை என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள். ஏறு=காளை மாடு: ஏழை=பார்வதி தேவி: பொதுவாக ஆண்களை விடவும் பெண்கள் உடல் வலிமையில் குன்றியவர்கள் என்பதால் பெண்களை ஏழைகள் என்று கூறுவது இலக்கிய மரபு.
ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு
கூறினர் கூறினர் வேதம் அங்கமும்
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமும்
கீறின உடையினர் கெடில வாணரே
விடம் தீர்த்த பதிகத்தின் பாடலில் (4.18.6) அப்பர் பிரான் பெருமானை ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன என்ற குறிப்பின் மூலம், பெருமான் ஆறு அங்கங்களை படைத்தார் என்று கூறுகின்றார். பெருமான் படைத்த வேதத்தின் அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகிய ஆறு. அவரது மகனார் முருகனின் முகங்கள் ஆறு. அவர் சூடியிருக்கும் மாலையைச் சூழும் வண்டுகளின் கால்கள் ஆறு. அவரால் ஏற்படுத்தப்பட்ட சுவைகள், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என்னும் ஆறு வகையில் அடங்குவன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. தார்=மாலை;
ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன
ஆறு கொலாம் அவர்தம் மகனார் முகம்
ஆறு கொலாம் அவர் தார் மிசை வண்டின் கால்
ஆறு கொலாம் சுவை ஆக்கினதாமே
இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.35.4) அப்பர் பிரான் பெருமானை, வேதங்கள் நான்கும் அங்கம் பண்ணினார் என்று குறிப்பிடுகின்றார். விண்ணுலகம் என்றும் சொர்க்கம் என்றும் தேவர்கள் வாழும் உலகத்தை சொல்வதுண்டு. சிவபெருமான் உறையும் சிவலோகம்,தேவலோகத்தை விடவும் சிறந்ததாக கருதப் படுவதால், விண்ணின் மிக்கார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பண்ணின் மிக்க பாடல்கள்=மேம்பட்ட பண்களைக் கொண்ட பாடல்கள்; நுதல்=நெற்றி: எண்ணின் மிக்கார்=மேம்பட்ட எண்ணங்களை உடைய அடியார் மனதினில்; கண்=கருத்து;
விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும்
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமற் காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்க இடைமருது இடம் கொண்டாரே
இன்றும் பலர் வேதங்களோடு அங்கமும் ஓதுவதற்கு காரணமாக இருப்பவர் பெருமான் என்ற பொருள் பட அங்கமது ஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே என்று திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.38.6) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வெண்சங்கினை அறுத்து செய்யப்படும் குழைஆபரணத்தை அணிந்தவர் சிவபெருமான்; அவர் தனது திருமேனி முழுவதும் சாம்பலை பூசியவராக காணப்படுகின்றார். உலகில் உள்ள உயிர்கள் வளர்ச்சிஅடையும் பொருட்டு வெய்யிலை வீசும் சூரியனை இயங்கச் செய்பவரும் அவரே; விரிந்த சோலைகள் சூழ்ந்த சோலைகள் அனைத்தையும் படைத்தவர்அவரே; உலகம் பயனடையும் பொருட்டு இரவும் பகலும் மாறி மாறி வரும் வண்ணம் வரையறுத்தவர் சிவபெருமான்; வினைகளை போக்கிக் கொள்ளும்வழிமுறைகளை வகுத்து உலகுக்கு அறிவித்தவரும் அவரே. வேதங்களின் அரணாகத் திகழும் ஆறு அங்கங்களையும் உணர்ந்து வேதங்களை, தவறேதும்இன்றி முறையாக நாம் ஓதுவதற்கு வழி வகுத்த அவரே. நமது தலைவனாகிய ஐயாறனார் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சங்கணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார் விரிபொழில் அனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்
அங்கமது ஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே
கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.93.9) அப்பர் பிரான் பெருமானை அங்கம் ஆறினையும் ஆய்ந்த பிரான் என்று குறிப்பிடுகின்றார். அனங்கை=அனங்கன் என்று அழைக்கப்படும் மன்மதன். தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதனின் உடலை எரித்து அழித்த பின்னர், இரதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி மன்மதனுக்கு மறுபடியும் உயிர் கொடுத்தாலும், இறைவன் அவனுக்கு உடலைக் கொடுக்கவில்லை. தனது மனைவி இரதிதேவியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரியும் வண்ணம் வரம் அளித்ததால், மற்றவர் கண்களுக்கு புலப்படாத அவன், உருவமற்றவன் என்ற பொருள்பட, அனங்கன் என்று அழைக்கப் படலானான். கடுமையான சூலை நோயினால் வருந்திய அப்பர் பிரான், தமக்கை திலகவதியாருடன் திருவதிகை வீரட்டானம் திருக்கோயில் சென்று பெருமானை வழிபட்டவுடன், அவரது சூலை நோய் மிகவும் விரைவாக தீர்க்கப்பட்டது.இவ்வாறு மிகவும் விரைவாக இறைவன் செயல்பட்ட விதம், அப்பர் பிரானுக்கு மன்மதனை எரித்த சம்பவத்தை நினைவூட்டியது போலும். வில்லினில் அம்பினைக் கோத்து, அம்பு எய்த பின்னரே திரிபுரத்து மூன்று கோட்டைகளும் அழிந்தன. ஆனால் இறைவன் தனது நெற்றிக் கண்ணினை திறந்து விழித்த மாத்திரத்தில் மன்மதன் எரிந்து சாம்பலாக மாறினான். எனவே தனது தீவினைகளை பெருமான் விரைவாக அழித்ததை நினைவு கூர்ந்த அப்பர் பிரானுக்கு மன்மதனை எரித்த செய்தி அவரது நினைவுக்கு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியினை இந்த பாடலில் கூறுகின்றார். மேலும் உடலினைப் பற்றியுள்ள அறுவகைக் குற்றங்களில் (காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம்) காமம் முதலாக கூறப்படுகின்றது. காமத்தை வெற்றி கொள்வதே, மற்ற குற்றங்களை வெல்வதை விட, கடினமான செயலாக கருதப் படுகின்றது. எனவே நம்மை வெற்றி கொள்ளும் குற்றமாக கருதப் படும் காமத்தையும் வென்ற பெருமான் என்று, அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான கண்டியூர் குறித்த பதிகத்தில், மற்றொரு அட்ட வீரட்டச் செயலாகிய காமனை எரித்த செயலையும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் ஆய்ந்தது வேதம் ஆறங்கம் என்று பெருமானின் செயலை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
மாய்ந்தன தீவினை மங்கின நோய் கண் மறுகி விழத்
தேய்ந்தன பாவம் செறுக்க கில்லா நம்மைச் செற்ற அநங்கைக்
காய்ந்த பிரான் கண்டியூர் எம் பிரான் அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே
திருப்பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.30.2) நான்மறையோடு ஆறங்கம் பாடியவர் பெருமான் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த பாடலில் தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையைக் கொன்றதும், அந்த வனத்திற்கு பலி ஏற்கச் சென்ற போது வேதங்களை இசைத்துக் கொண்டு சென்றதும் குறிப்பிடப் படுகின்றன. சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல் சேடனார் என்று தமிழ்ப்படுத்தப் பட்டுள்ளது.,முதன்மையானவர் என்று பொருள். களி=மதம் கொண்டதால் வந்த செருக்கு; வினைகளை நீக்கும் வல்லமை படைத்த பெருமான் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் தெரிவித்த அப்பர் பிரான், தனது வினைகளை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அவரைத் தேடிக் கொண்டு செல்வேன் என்று இந்த பாடலில் சொல்கின்றார். இவ்வாறு சொல்வதன் மூலம் நாமும் அவரைத் தேடிச் சென்று வணங்கி. நமது வினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குகின்றார். தன்னை மறைத்துக் கொள்வது இறைவனின் இயல்பு. அவனைச் சென்று அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்பது ஆன்மாவின் விருப்பம். எனவே ஆன்மா இறைவன் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்கின்றது. ஆன்மாவாக தன்னை பாவித்து, ஆன்மாவின் விருப்பத்தை அப்பர் பிரான் உணர்த்தும் பாடலாக இதனை பெரியோர்கள் கருதுகின்றனர். ஆன்மாவின் விருப்பத்தை உணர்ந்து கொள்ளாமல் உடல் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற ஆன்மாவின் விருப்பம் நமக்கு இங்கே கூறப்படுகின்றது. சேடன் என்ற சொல்லுக்கு மூலமாக சேஷம் என்ற வடமொழிச் சொல் விளங்குகின்றது என்று பொருள் கொண்டு, பிரளய காலத்தில் அனைத்து உடல்களும் பொருட்களும் அழிந்த பின்னரும் எஞ்சி இருப்பவன் பெருமான் என்று விளக்கம் கொள்வது சிறப்பு.
மூடினார் களி யானையின் ஈருரி
பாடினார் நான்மறை நான்கினோடு ஆறங்கம்
சேடனார் தென்பராய்த்துறைச் செல்வனார்
தேடிக் கொண்டு அடியேன் சென்று காண்பனே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.49.7) அப்பர் பிரான், பெருமானை, நான்மறையோடு ஆறங்கம் விரித்தவன் என்று குறிப்பிடுகின்றார். புன்சடை=முறுக்குண்ட சடை: பொதுவாக கல்வியும் வீரமும் இணைந்து இருப்பதை நாம் மிகவும் அரிதாக காண்கின்றோம். ஆனால் உலக நியதிகளுக்கு அப்பாற்பட்ட பெருமான், இரண்டையும் ஒருங்கே உடையவனாக இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை.
தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடையான் கயவர் புரம்
எரித்தவன் மறை நான்கினோடு ஆறங்கம்
விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே
ஆக்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.21.2) அப்பர் பிரான், பெருமானை வேதத்தோடு ஆறங்கம் சொன்னார் என்று குறிப்பிடுகின்றார்.அனைத்து உயிர்களுக்கும் ஆதியாய் பெருமான் விளங்குவதால், ஆதி என்ற சொல் உணர்த்தும் பொருளாக, ஆதி என்பதற்கு அளவுகோலாக பெருமான் விளங்குகின்றார் என்று நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார்; ஞானத்தின் வடிவமாக இருக்கும் பெருமான், எந்த நூலினையும் படித்து ஞானம் பெற வேண்டிய தேவையில்லை அல்லவா; முற்றிலும் உணரும் தன்மை பெருமானின் எட்டு குணங்களில் ஒன்றாக கருதப் படுகின்றது. எட்டு குணங்களாவன; தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல்,முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். இந்த எட்டு குணங்களே சைவ சித்தாந்தத்தில் சிவபிரானது குணங்களாக கூறப்படுகின்றன.
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும் உணரப்படாதது ஒன்றில்லை போலும்
காதில் குழை இலங்கப் பெய்தார் போலும் கவலைப் பிறப்பு இடும்பை காப்பார் போலும்
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார்போலும்
ஆதிக்கு அளவாகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே
திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.2) அப்பர் பிரான், பெருமானை ஆறங்கம் நால்வேதம் தெரித்தான் என்று குறிப்பிடுகின்றார். மின்னார் ஒளி முடி=மின்னலைப் போன்று ஒளி வீசும் சடைமுடி; தரியலர்=பகைவர்: தெரித்தல்=விளக்குதல்; அரித்தான்=அறுப்பவன்,அழிப்பவன்; தன்னை எதிர்த்து வந்த மதயானையை அடக்கி அதன் தோலை உரித்தவனும், மின்னல் போன்று ஒளி வீசும் சடைமுடியினை உடையவனும்,உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் தரித்தவனும், பகைவர்களான திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை ஓர் அம்பினை எய்தி எரித்தவனும், தன்னைச் சரணடையும் அடியார்களின் வினைகள் மற்றும் அந்த வினைகளால் வரும் பிறவி நோய், பாவம் அனைத்தையும் போக்குபவனும்,ஆலமரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம், பொருள். இன்பம் வீடு ஆகிய நான்கு பொருட்களின் உண்மை நிலையை உணர்த்துவதும் ஆறு அங்கங்களை உடையதும் ஆகிய வேதங்களின் பொருட்களை விளக்கமாக கூறியவனும், நாகேச்சரத்து நகரினில் உறைபவனும் ஆகிய இறைவனைச் சேராதார்கள், நல்ல நெறியில் செல்லாதவர்கள் ஆவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை,
உரித்தானை மதவேழம் தன்னை மின்னார் ஒளி முடி எம் பெருமானை உமையோர் பாகம்
தரித்தானைத் தரியலர் தம் புரம் எய்தானைத் தன்னடைந்தார் தம் வினை நோய் பாவம் எல்லாம்
அரித்தானை ஆலதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறங்கம் வேதம்
தெரித்தானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே
குடந்தை கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.75.1) அப்பர் பிரான், ஆறு அங்கமாக இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சொல் மலிந்த=சிறப்பான சொற்கள் நிறைந்த; வேதங்களில் உள்ள சொல்லாக இருப்பவனும் அந்த சொற்களுக்குத் துணையாக இருப்பவனும் பெருமான் தான் என்று பல திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. வேதங்களை உலகுக்கு உரைத்தவனும் வேதங்களுக்கு விளக்கம் அளித்தவனும் பெருமான் தானே. அதனால் தான் சொற்றுணை வேதியன் என்று நமச்சிவாய பதிகத்தினை (4.12) அப்பர் பிரான் தொடங்குகின்றார்.புனிதமான சொற்களைக் கொண்டவை வேதங்கள். வேதங்களில் வல்லவனை வேதியன் என்று சொல்வார்கள், வேதங்களுக்கு பொருள் சொன்னவனும்,வேதங்களை விரித்து ஓதியவனும் ஆகிய பெருமானை விடவும் வேதியன் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் வேறு எவர் உள்ளனர். சொற்பொருளை கடந்தவன் பெருமான் என்று இங்கே குறிப்பிடுகின்றார். பெருமானின் அழகையோ, உருவத்தையோ, திறனையோ சொற்களால் வடிக்க முடியாது.வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதவன் பெருமான். எனவே தான் சொற்கள் உணர்த்தும் பொருளையும் கடந்தவன் என்பதை சொற்பொருளும் கடந்தவன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். வாணர்=வாழ்பவர்; வாழ்நர் என்ற சொல் வாணர் என்று காலப் போக்கில் மருவியதாக கூறுவார்கள். மடிப்பு மலைகள் வகையைச் சார்ந்த இமயமலை அடுக்கு மலைகளாக உள்ள தன்மை புவியியல் ஆராயச்சியாளர்களால் கடந்த இருநூறு ஆண்டுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் நமது சைவ சமயம் முன்னமே இந்த செய்தியை கல் மலிந்த மலை என்று உணர்த்தியிருப்பது நமக்கு பெருமை தருகின்றது.மன்=வலிமையாக நிலை பெற்று விளங்கும்;
சொல் மலிந்த மறை நான்கு ஆறங்கமாகிச் சொற்பொருளும் கடந்த சுடர்ச்சோதிபோலும்
கல் மலிந்த கயிலை மலைவாணர்போலும் கடல் நஞ்சம் உண்டிருண்ட கண்டர் போலும்
மன் மலிந்த மணிவரைத் திண் தோளர்போலும் மலையரையன் மடப் பாவை மணாளர் போலும்
கொல் மலிந்த மூவிலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்தெம் கூத்தனாரே
திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (6.78.4) அப்பர் பிரான் நான்மறையோடு ஆறங்கம் சொன்னவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மாறிலா மேனி=மூப்பும் இறப்பும் அடையாத திருமேனி; மாயையின் காரணமாக தோன்றி அழியும் உடலன்றி, இறைவன் தனது இச்சையால் கொள்ளும் திருமேனி; மா=பெருமை; சந்திரனுக்கு அழகு பெருமை முதலியன பெருமான் தனது சடையின் மீது தன்னிடம் சரணடைந்த ஒற்றைப் பிறையை சூட்டிக்கொண்டதால் கிடைத்தது என்பதை உணர்த்தும் வண்ணம் பெருமை படைத்தவன் என்று கூறினார் போலும். பாறினார்=அழிந்தவர்.தேறினார்=பெருமானின் இயல்புகளை முறையாக அறிந்து கொண்டு தேறிய மெய்ஞ்ஞானிகள்;
நாறு பூங்கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறங்கம் சொன்னார் தாமே
மாறிலா மேனி உடையார் தாமே மாமதியம் செஞ்சடை மேல் வைத்தார் தாமே
பாறினார் வெண்தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே
திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.80.10) அப்பர் பிரான், நான்மறையோடு ஆறங்கம் விரித்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சங்கரன்=இன்பம் செய்பவன்; சம்பு=இன்பம் விளைவிப்பவன்; வடமொழிச் சொற்களாகிய சங்கரன், சம்பு மற்றும் உருத்திரன் ஆகிய சொற்களுக்கு காஞ்சி புராணத்தில் விளக்கம் அளிக்கப் படுகின்றது. இன்பம் செய்தலில் சங்கரன் எம்பிரான் இன்பம் ஆக்கலில் சம்பு, இடும்பை நோய் என்பது ஓட்டும் இயல்பினான் உருத்திரன், என்பதே காஞ்சி புராணத்து தொடர். உருத்திரன் என்றால் நோய்களையும் துன்பங்களையும் தீர்ப்பவன் என்று பொருள். அம்மான்=தலைவன் தரியலர்கள்=பகைவர்கள்;
விரித்தானை நான்மறையோடு அங்கமாறும் வெற்பெடுத்த இராவணனை விரலால் ஊன்றி
நெரித்தானை நின்மலனை அம்மான் தன்னை நிலா நிலவு செஞ்சடை மேல் நிறை நீர்க் கங்கை
தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத் தரியலர்கள் புரம் மூன்றும் தழல்வாய் வேவச்
சிரித்தானைத் திகழொளியைத் திருமாற்பேற்று எம் செம்பவளக் குன்றினைச் சென்று அடைந்தேன் நானே
திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.83.2) அப்பர் பிரான் ஆறங்கமாகவும் நால்வேதமாகவும் இருப்பவன் பெருமான் என்று உணர்த்துகின்றார். கொண்டல்=கிழக்கிலிருந்து வீசும் காற்றினை பண்டைய நாட்களில் கொண்டல் என்று அழைத்தனர். இந்த காற்றே மழை பொழியும் மேகங்களை கொணர்ந்து தமிழகத்திற்கு மழை பொழிய காரணமாக உள்ளது என்று கூறுவார்கள். வடக்கிலிருந்து வீசும் காற்றினை வாடைக் காற்று என்றும், மேற்கிலிருந்து வீசும் காற்றினை கோடைக் காற்று என்றும் தெற்கிலிருந்து வீசும் காற்றினை தென்றல் காற்று என்று பெயரிட்டு பண்டைய நாட்களில் அழைத்ததாக தெரிகின்றது. கூதல்=விடாது பொழியும் சிறு தூறல்கள்; மலைப் பகுதிகளில் இத்தகைய தூறல்களை நாம் காணலாம்.குவலயம்=பூமி; பாசு என்றால் மூங்கில் என்று பொருள். மூங்கிலின் அடியே பெருமான் சுயம்புவாக தோன்றி நின்ற நிலையை குறிக்கும் வண்ணம், தலத்தின் பெயர் பாசூர் என்று வந்தது போலும். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் அப்பர் பிரான் பெருமானை, அருமறையோடு ஆறங்கம் ஆய்ந்து பாடினார் என்று குறிப்பிடுகின்றார்.
வேதமோர் நான்காய் ஆறங்கமாகி விரிகின்ற பொருட்கெல்லாம் வித்துமாகிக்
கூதலாய்ப் பொழிகின்ற மாரியாகிக் குவலயங்கள் முழுதுமாய்க் கொண்டலாகிக்
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி நின்ற
பாதியோர் மாதினனைப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.85.6) அப்பர் பிரான், பெருமானை அருமறையோடு அங்கம் ஆறும் ஆய்ந்தவன் என்று குறிப்பிடுகின்றார். அரிய வேதங்களையும் அந்த வேதங்களுக்கு அரணாக விளங்கும் ஆறு அங்கங்களையும் ஆராய்ந்து அறிந்தவனும், படமெடுத்து ஆடும் நாகத்தோடு எலும்பு மாலையும் ஆமை ஓட்டினையும் அணிகலனாக அணிந்தவனும், தனது நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பிழம்பினால் மன்மதனின் உடலை கருக்கியவனும், மிகுந்த கோபத்துடன் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர முயற்சி செய்த இயமனை பாய்ந்து உதைத்து வீழ்த்தியவனும், காய்ந்த சருகுகளை தனது வாயிலிருந்து வரும் நூலினால் இணைத்து பண்டைய நாளில் பந்தல் அமைத்த சிலந்திக்கு நாட்டினை செல்வமாக அளித்தவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.
ஆய்ந்தவன்காண் அருமறையோடு அங்கமாறும் அணிந்தவன்காண் ஆடரவோடு என்புமாமை
காய்ந்தவன்காண் கண்ணழலால் காமனாகம் கனன்று எழுந்த காலனுடல் பொடியாய் வீழப்
பாய்ந்தவன்காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்குப் பார் ஆள் செல்வம்
ஈந்தவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் என்ற தொடர், சிவபெருமானை குறிப்பதாகவும், அந்தணர் என்ற சொல்லுக்கு அடைமொழியாகவும் இரண்டு விதமாகவும் பொருள் கொள்ளலாம். இரண்டுமே பொருந்துகின்றன. மங்குல்=வான மண்டலம்; நிலாவிய=பொருந்தி உறைகின்ற; மைந்த=வலிமை உடையவன்;சீர்=சிறப்பு; கங்குல்=நள்ளிரவு; நள்ளிரவில் ந்ட்டம் ஆடும் பயின்றாடும் நாதன் என்று திருவாசகத் தொடர் உணர்த்துவது போன்று, பிரளய காலத்து இருளினில் நடனம் ஆடும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. காமுறுதல்=விரும்புதல்;
பொழிப்புரை:
ஆறு அங்கங்களும் நான்கு வேதங்களையும் ஓதி உலகுக்கு உணர்த்திய பெருமான், வேதம் மற்றும் அதற்கு துணையாக நிற்கும் அங்கங்களில் தேர்ச்சி பெற்று விளங்கும் அந்தணர்கள் தனது திருவடிகளைப் போற்றிப் புகழும் வண்ணம், வானில் தவழும் சந்திரன் தவழ்ந்து செல்லும் வண்ணம் உயர்ந்த மாடங்கள் உடைய வீதிகள் நிறைந்த மருகல் தலத்தினில் பொருந்தி உறைகின்றவனும் வல்லமை நிறைந்தவனும் ஆகிய பெருமானே, பின்வரும் செயலை நீர் செய்வதற்கு உரிய காரணத்தை எமக்கு சொல்வீராக. செங்கயல்கள் நிறைந்த நீர்நிலைகளால் சூழப்பட்டதும் செல்வ வளம் நிறைந்ததால் புகழினை உடையதும் ஆகிய சிறப்பினை உடைய செங்காட்டங்குடி தலத்தினில் உள்ள கணபதீச்சரம் திருக்கோயிலில் காணப்படும் திருக்கோலத்தை மிகவும் விரும்பியவராக, அந்த திருக்கோலத்துட்ன், நள்ளிரவில் தனது கையினில் பொருந்தி நிற்கும் தீப்பிழம்புடன் நட்டம் ஆடுபவராக, மருகல் தலத்தினில் காட்சி அளிப்பதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக. .
பாடல் 2:
நெய்தவழ் மூவெரி காவல் ஓம்பும் நேர்புரி நூன்மறையாளர் ஏத்த
மைதவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செய்தவ நான்மறையோர்கள் ஏத்தும் சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
கைதவழ் கூரெரி ஏந்தி ஆடும் கணபதீயீச்சரம் காமுறவே
விளக்கம்:
நெய் தவழ்=நெய் கலக்கும்; மை தவழ்=கரிய மேகங்கள் தவழும்: கூரெரி=மிகுதியான நெருப்புப் பிழம்பு; அக்னி காரியம் செய்வது என்பது அந்தணர்களின் அன்றாட கடமையாக வேதங்களால் கருதப் படுகின்றது. உபநயனச் சடங்கு தொடங்கி திருமணம் நடக்கும் வரையில் சம்மிதாதானம் எனப்படும் சடங்கினையும் திருமணம் தொடங்கி மனைவியுடன் சேர்ந்து வாழும் இறுதி நாள் வரையிலும் ஔபாசனம் என்று சொல்லப்படும் சடங்கினையும் தினமும் இரண்டு வேளைகளிலும் தொடர்ந்து செய்யவேண்டும் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. திருமண நாள் தொட்டு செய்ய வேண்டிய ஔபாசனம் என்ற கடமைக்குத் தேவையான நெருப்பினை, முந்தைய நாள் செய்த ஹோம நெருப்பினை இரவினில் பாதுகாத்து வைத்துக் கொண்டு அடுத்த நாள் காலைக்கும்,காலையில் செய்த ஹோம நெருப்பினை பாதுகாத்து மாலையில் செய்ய வேண்டிய ஔபாசனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக அந்த நெருப்பினை எடுத்துச் செல்வதை, ஹோம அக்னியை பாதுகாப்பது என்று கூறுவார்கள். ஹோமாம் செய்து முடித்த பின்னர் ஹோம குண்டத்திலிருந்து கனன்று காணப்படும் ஒரு வறட்டித் துண்டத்தை உமி நிறைந்த ஒரு சட்டியின் அடியில் வைத்தால் சுமார் பதினான்கு மணி நேரத்திற்கும் நெருப்பு அணையாமல் நீறு பூத்த நிலையில் இருக்கும். அதனைக் கொண்டு அடுத்த வேளை ஹொமத்தை தொடர்வார்கள். இந்த செய்கையை மூவெரி காவல் ஓம்பும் அந்தணர் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மூன்று விதமான வேள்விகள், ஆகவனீயம், காருகபத்தியம், தக்ஷிணாக்கினி என்பன.முத்தீயாளர் என்று அந்தணர்களை குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஏழாவது பாடலில் (3.9.7) திருஞானசம்பந்தர் அந்தணர்களை முத்தீயாளர் என்று குறிப்பிடுகின்றார்.சேடர்=தொலைவில் உள்ளவர்; வீடர்= அருகில் இருப்பவராக வீடுபேறு அளிக்கும் இயல்பினர்; மூவிரு தொன்னூலர் என்ற தொடருக்கு முப்புரி நூலர் என்றும் ஆறு சாத்திரங்களை கற்றுத் தேர்ந்தவர் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்வதும் பொருத்தமே. அந்தணர்கள் மூன்று இழைகளை உடைய நூல் இரண்டினை பூணூலாக அணிந்து கொள்வதை பண்டைய நாளிலிருந்தே வழக்கமாக கொண்டிருந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.
சேடர் விண்ணோர்கட்குத் தேவர் நன் மூவிரு தொன்னூலர்
வீடர் முத்தீயர் நால்வேதத்தர் வீழிமிழலையார்
காடு அரங்கா உமை காண அண்டத்து இமையோர் தொழ
நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே
வலம்புர்ம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.103.2) திருஞானசம்பந்தர், தலத்து அந்தணர்களை முத்தீத் தொழில் நான்மறையோர் என்று குறிப்பிடுகின்றார். கோத்த=அணிந்த; கல்லாடை=காவிக்கல்லை பொடி செய்து துணிக்கு வண்ணம் ஏற்றுவது பண்டைய நாளின் பழக்கம். எனவே கல்லாடை என்பது காவி உடையை குறிப்பிடுகின்றது. கொடுகொட்டி=ஒரு இசைக் கருவி; தேய்த்து=உருவம் அழியும் வண்ணம் எரித்த செய்கை. தனது உடல் அழிந்த பின்னரும், இரதி தேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, பெருமான் மன்மதனுக்கு உயிரை அளித்ததால், பெருமான் மன்மதனின் உருவத்தை மட்டும் தேய்த்ததாக குறிப்பிடுகின்றார். தேசு என்ற சொல் தேஜஸ் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். பெருமானின் தவத்தைக் கலைக்கும் தவறினைச் செய்திருந்த போதிலும், இரதி தேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி அவனது தவறினை பொருட்படுத்தாது மீண்டும் மன்மதனுக்கு உயிர் அளித்த கருணைச் செயலை உலகத்தவர் அனைவரும் போற்றினார்கள் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
கோத்த கல்லாடையும் கோவணமும் கொடுகொட்டி கொண்டிருகைத்
தேய்த்து அன்று அநங்கனைத் தேசழித்துத் திசையார் தொழுதேத்தக்
காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும்
வாய்த்த முத்தீத் தொழில் நான்மறையோர் வலம்புர நன்னகரே
ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.88.4) அப்பர் பிரான் இந்த தலத்து அந்தணர்களை ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர்புகழ் நான்மறையோர் என்று குறிப்பிடுகின்றார். அன்றினவர்=பகைவர்கள், திரிபுரத்து அரக்கர்கள் மூவர்; திரிபுரத்து அரக்கர்களை சிவபெருமான் அழித்த விதம், மூன்று விதமாக புராணங்களில் சொல்லப் படுகின்றது. ஒரே அம்பினை எய்து மூன்று கோட்டைகளை எரித்ததாகவும், புன்முறுவல் சிரித்து எரித்ததாகவும், விழித்தே எரித்ததாகவும் சொல்லப் படுகின்றது. தேவார ஆசிரியர்களும் இந்த மூன்று முறைகளையும் தங்களது பதிகத்தில் குறிப்பிடுகின்றார்கள். இந்த பாடலில், அப்பர் பிரான் திரிபுரத்து கோட்டைகளை விழித்தே அழித்ததாக கூறுகின்றார். வென்றி=வெற்றி; சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரச் சென்ற நாள் வரையில் தான் எடுத்த காரியத்தில் வெற்றி கொண்டவனாக விளங்கியவன் இயமன்; பொன்றி வீழ=உயிர் அழிந்து உடல் கீழே விழ; விகிர்தன்=மாறுபட்டவன், இயமனது செயலைச் செய்யவிடாமல் தடுத்தவன் சிவபெருமான் ஒருவனே என்பதால் விகிர்தன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பண்டைய நாட்களில் உபநயனம் முடிந்த பின்னர், சிறுவர்களை குருகுலம் அனுப்பி, அங்கே தங்கியிருந்து வேதங்களை கற்கச் செய்வது வழக்கம். அந்நாள் வரை பெற்றோரிடம் இருந்த வளர்ந்து வந்த சிறுவர்கள், பெற்றோர்களைப் பிரிந்து குருகுலம் சென்றடைந்து, குருகுலத்து ஆசிரியரையும் அவரது மனைவியரையும் தங்களது பெற்றோர்களாக கருதி அவர்களுக்கு பணிவிடைகள் செய்தவாறு,வேதங்கள் கற்றுக் கொள்வதை மறுபிறப்பு என்று அழைப்பார்கள். அவர்கள் அந்நாள் வரையில் வளர்ந்து வந்த சூழ்நிலை முற்றிலும் மாறி வேறு வகையான வாழ்க்கை வாழ்வதால் மறுபிறப்பு என்று அழைத்தனர் போலும். உபநயனம் முடிந்த பின்னர், வேதங்களைக் கற்பதன் மூலம் ஞானம் பெறுவதற்கான தகுதி அடைவதால், வாழ்க்கை முறை மாறுபடுகின்றது என்பதால் இரண்டாவது பிறப்பு என்று அழைப்பதாகவும் விளக்கம் அளிப்பதுண்டு.
அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர் கோனை
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன் தன்னை
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும்
தென்றல் மலி வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே
அந்தணர்கள் செய்கின்ற முத்தீ நான்மறைத் தொழிலால் புகழ் பெற்று தில்லைச் சிதம்பரம் தலம் விளங்குகின்றது என்று திருமாளிகைத் தேவர் ஒரு பாடலில் (9.2.2) குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானின் பாதாதி கேச வர்ணனை குறிப்பிடப்படுகின்றது. முதல் பாடலில் சேவடியையும்,இரண்டாவது பாடலில் காற்சிலம்பையும், குறிப்பிடும் திருமாளிகைத் தேவர், தொடர்ந்து பெருமானின் கணைக்கால், குறங்கு (தொடை), புலியதள் ஆடை,திருவயிற்று உந்தி, வயிறு வரை தொங்கும் உருத்திராக்க மாலை, முறுவல் செய்யும் பவளவாய், குழைக்காது, செங்கமல முகம், கொக்கிறகு கொன்றை அணிந்த சென்னி, ஆகியவற்றை குறிப்பிடுகின்றார். சேவடி குறித்து முதல் பாடலை தொடங்கிய திருமாளிகைத் தேவர், இந்த பதிகத்தின் கடைப்பாடலை பெருமானின் சேவடிக்கீழ் குடியிருக்கும் அடியார்கள் பற்றிய குறிப்புடன் முடிக்கின்றார். கருவளர்=சூல் மிகுந்த; அகடு=வயிறு; கருவளர் மேகத்து அகடு=தனது வயிறு நிறைய நீர்த்துளிகளை சுமந்துள்ள மேகங்கள்; திரு விதி நிதியம்=அழகுடன் முறையாக செய்யப் படும் வழிபாடு;
கருவளர் மேகத்து அகடு தோய் மகுடக் கனக மாளிகை கலந்தெங்கும்
பெருவளர் முத்தீ நான்மறைத் தொழிலால் எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்
திருவளர் தெய்வப் பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பலக் கூத்தா
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும் உன் அடிக் கீழதென் உயிரே
தில்லை வாழ் அந்தணர்களை முத்தீ வேள்வி மூவாயிரவர் என்று தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (9.19.2) பூந்துருத்தி காடனம்பி குறிப்பிடுகின்றார். பொன்னுலகம்= சொர்கலோகம்; தனது திருவடிகளை நினைத்து வாழ்த்தி புகழும் தொண்டர்களுக்கு பொன்னுலகம் ஆளும் வாய்ப்பினை இறைவன் அளிப்பான் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. தனது அடியார்கள் அமருலகம் ஆளுமாறு வைத்த இறைவன், தான் அமருலகம் ஆளாதே, தில்லை நகரத்தில் உறைகின்றான் என்று கூறுகின்றார்.
கடியார் கணம்புல்லர் கண்ணப்பர் என்று உன்
அடியார் அமருலகம் ஆள நீ ஆளாதே
முடியா முத்தீ வேள்வி மூவாயிரவரோடும்
குடிவாழ்க்கை கொண்டு நீ குலாவிக் கூத்து ஆடினாயே.
கண்டராதித்தர் தான் அருளிய பதிகத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாடல்களில் தில்லை வாழ் அந்தணர்களை முத்தீயாளர் என்று குறிப்பிடுகின்றார்.ஓவா முத்தீ என்று அவரது காலத்தில் என்றும் அணையாது வேள்வித்தீ பாதுகாக்கப்பட்டதை குறிப்பிடுகின்றார். பிரம யாகம், தேவயாகம், பித்ருயாகம்,மானுடயாகம், பூதயாகம் என்பன ஐந்து வேள்விகளாக குறிப்பிடப் படுகின்றன. ஆவே படுத்தல்=பசுக்களிலிருந்து கிடைக்கும் பால் தயிர் நெய் ஆகியவற்றை ஆடுதியாக வேள்வியிலிடுதல்.
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர்
ஆவே படுப்பார் அந்தணாளர் ஆகுதி வேட்டுயர்வார்
மூவாயிரவர் தங்களோடு முன்னங்கு ஏறி நின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவது என்று கொலோ
பொழிப்புரை:
ஆகுதியாக அளிக்கப்படும் நெய் கலந்து எரியும் மூன்று விதமான வேள்வித் தீக்களையும் பாதுகாத்து இடையறாது வேள்விகள் செய்வோரும்,நேர்மையாளர்களும், முப்புரி நூல் அணிந்தவர்களும் நான்மறைகளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களும் ஆகிய அந்தணர்கள் புகழ்ந்து போற்றும் வண்ணம்,மேகங்கள் தவழும் வண்ணம் உயர்ந்து காணப்படும் மாடவீடுகள் நிறைந்த மருகல் தலத்தினில் வல்லமை வாய்ந்தவனாக பொருந்தி உறைகின்ற பெருமானே,பின்வரும் செயலை நீர் செய்வதற்கு உரிய காரணத்தை எமக்கு சொல்வீராக; பலவிதமான தவங்கள் செய்கின்றவர்களும் நான்கு மறைகளில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களும் ஆகிய மறையோர்களால் புகழப்படும் சிறப்பு வாய்ந்த செங்காட்டங்குடி தலத்தினில் உள்ள கணபதீச்சரம் திருக்கோயிலில் காணப்படும் திருக்கோலத்தை மிகவும் விரும்பியவராக, அந்த திருக்கோலத்துடன், தனது கையினில் மிகவும் படர்ந்து எரிவதும் கூர்மையான நுனியைக் கொண்டதும் ஆகிய தீப்பிழம்பினை ஏந்திய வண்ணம் நடனம் ஆடுபவராக, மருகல் தலத்தினில் காட்சி அளிப்பதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.
பாடல் 3:
தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர் தொகுமறையோர்கள் வளர்த்த செந்தீ
மால்புகை போய் விம்மு மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலை சூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
கால் புல்கு பைங்கழல் ஆர்க்க ஆடும் ஏந்தி ஆடும் கணபதீயீச்சரம் காமுறவே
விளக்கம்:
தோலொடு=இடுப்பினில் புலித்தோல் ஆடையுடன்; மார்பு என்ற சொல்லுடன் இணைந்த தோல் என்று பொருள் கொண்டு யானைத்தோல் என்று கொள்வதும் பொருத்தமே. நூலிழையுடன் சேர்ந்த தோல் என்று பொருள் கொண்டு மான் தோல் எனவும் பொருள் கொள்ளலாம். சிறிய மான் தோல் துண்டத்தை பூணூலுடன் இணைத்துக் கொள்வது பண்டைய நாளில் பழக்கமாக இருந்தது போலும். மால் புகை=பெருமை வாய்ந்த புகை மற்றும் கரிய புகை என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். அந்தணர்கள் செய்கின்ற வேள்வியிலிருந்து எழுப்பப்படும் ஆகுதி மேக மண்டலத்தைச் சென்றடைந்து மேகங்களை குளிர்வித்து மழை பொழியச் செய்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகின்றது. வேள்வி நற்பயன் வீழ்புனலாவது என்று சேக்கிழார், பெரிய புராணத்தில், வாழ்க அந்தணர் என்ற பதிகத்தினுக்கு விளக்கம் அளிக்கையில் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. எனவே வேள்விப்புகை பெருமை வாய்ந்ததாக கருதப்பட்டது போலும். சேல்= மீன்களில் ஒருவகை. தண்வயல்=நீர்வளம் நிறைந்து குளிர்ந்த வயல்; பைங்கழல்=பசும் பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல்; ஆர்க்க=ஒலிக்க;
இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானை மைந்தன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மைந்தன் என்றால் வல்லமை வாய்ந்தவன் என்று பொருள். பல வீரச் செயல்கள் புரிந்து தனது அடியார்களை பெருமான் அருள் புரிந்ததை நாம் பல்வேறு புராணங்களிலிருந்தும் அருளாளர்கள் அருளிய பாடல்களிலிருந்தும் அறிகின்றோம். பண்டைய நாள் தொட்டு தொடர்ந்து பெருமான் புரிந்து கொண்டிருக்கும் செயல் தனது அடியார்களின் மலங்களை போக்குவது தான். பதி பசு பாசம் அனாதி என்று திருமூலர் உண்ர்த்துவது போன்று பாசம் என்று குறிப்பிடப்படும் ஆணவ மலமும் என்றும் அழியாதது. செம்பினில் களிம்பு போன்று நெல்லுக்கு உமி போன்று உயிர்களுடன் ஒட்டி இருப்பது ஆணவ மலம். தான் இருப்பதையும் வெளிக்காட்டாது உயிர்களுடன் பிணைந்து இருக்கின்றது. ஆணவ மலத்தினை விலக்கிக் கொள்ள முடியாதது போன்று ஆணவ மலத்தால் விளைகின்ற வினைகளையும் உயிர்களால் தாமே நீக்கிக் கொள்ள முடியாது. தன்னுடன் பிணைந்துள்ள வினைகளை, உயிர்கள், அந்த வினைகளால் ஏற்படும் இன்ப துன்பங்களை நுக்ர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும். அத்தகைய வலிமையுடன் வினைகள் உயிர்களுடன் பிணைந்து இருப்பதால் தான், வலிய வினைகள் என்றும் வல்வினைக்ள் என்றும் கூறுகின்றனர். ஆனால் இத்தகைய வலிமை வாய்ந்த வினைகளையும் நீக்கும் வல்லமை வாய்ந்தவன் பெருமான் ஒருவன் தான்,என்பதால் தான் மைந்தன் என்று பாடல் தோறும் உணர்த்துகின்றார். இத்தகைய மைந்தனின் உதவியுடன் நாம் நமது வினைகளை தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் இறைவனை நாம் நாள்தோறும் வணங்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தும் வண்ணம் ஒவ்வொரு பாடலிலும் மைந்தன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் போலும்.
பொழிப்புரை:
மான் தோல் பொருந்தியதும் மூன்று இழைகள் கொண்டதும் ஆகிய முப்புரி நூலை அணிந்த மார்பினை உடையவர்களும், இறைவனால் தொகுக்கப்பட்ட நான்மறைகளில் தேர்ச்சி பெற்றவர்களும் ஆகிய மறையோர்கள் வளர்க்கும் சிறந்த வேள்விகளிலிருந்து வெளிப்படும் சிவந்த தீ எழுப்பும் கரிய புகைகள் சென்றடையும் உயர்ந்த மாட வீடுகள் நிறைந்த மருகல் தலத்தினில் வல்லமை வாய்ந்தவனாக பொருந்தி உறைகின்ற பெருமானே, பின்வரும் செயலை நீர் செய்வதற்கு உரிய காரணத்தை எமக்கு சொல்வீராக; சேல் மீன்கள் நடமாடும் வண்ணம் நீர் நிறைந்து குளிர்ந்து காணப்படும் வயல்களும் சோலைகளும் சூழ்ந்த சிறப்பினை உடைய செங்காட்டங்குடி தலத்தினில் உள்ள கணபதீச்சரம் திருக்கோயிலில் காணப்படும் திருக்கோலத்தை மிகவும் விரும்பியவராக,அந்த திருக்கோலத்துட்ன், தனது கால்களில் பொருந்திய பசும் பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல்கள் ஒலிக்கும் வண்ணம் நடனம் ஆடுபவராக, மருகல் தலத்தினில் காட்சி அளிப்பதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.
பாடல் 4:
நாமரு கேள்வியர் வேள்வி ஓவா நான்மறையோர் வழிபாடு செய்ய
மாமருவும் மணிக்கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
தேமரு பூம்பொழில் சோலை சூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதீயீச்சரம் காமுறவே
விளக்கம்:
நாமரு=நாவில் பொருந்திய; மா=செல்வம், இலக்குமி தேவி; காமரு=அழகிய; தேமரு=தேன் நிறைந்த; வேதங்கள் பண்டைய நாட்களில் வாய்மொழியாக குருவிடமிருந்து சீடர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தது. எனவே சிறந்த கேள்வி ஞானம் உடையவர்களாக அந்நாளைய அந்தணர்கள் வேதங்களை கற்று வந்தனர். இந்த தன்மையை, காதால் கேட்டுக் கொண்டு வேதங்களையும் சாத்திரங்களையும் அறிந்து கொண்ட தன்மையை, குறிப்பிடும் வண்ணம், நாமரு கேள்வியர் என்று அந்தணர்களை குறிப்பிடுகின்றார். ஓவா=இடைவிடாது;
பொழிப்புரை:
கேள்வி ஞானத்தால் வேதங்களை கற்றுத் தேர்ந்தவர்களும், இடைவிடாது வேள்விகள் செய்வோரும், நான்மறைகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றோரும் ஆகிய அந்தணர்கள் வழிபாடு செய்ய, செல்வம் பொருந்திய மணிக்கோயிலில் பொருந்தி உறைபவராக மருகல் தலத்தினில் வல்லமை வாய்ந்தவனாக பொருந்தி உறைகின்ற பெருமானே, பின்வரும் செயலை நீர் செய்வதற்கு உரிய காரணத்தை எமக்கு சொல்வீராக, தேன் நிறைந்த மலர்கள் நிறைந்த தோட்டங்கள் மற்றும் சோலைகளால் சூழப்பட்ட சிறப்பு வாய்ந்த செங்காட்டங்குடி தலத்தினில் உள்ள கணபதீச்சரம் திருக்கோயிலில் காணப்படும் திருக்கோலத்தை மிகவும் விரும்பியவராக, அந்த திருக்கோலத்துட்ன், அழகும் பெருமையும் உடைய செங்காட்டங்குடி தலத்தினில் நள்ளிரவில் நட்டம் ஆடுபவராக, மருகல் தலத்தினில் காட்சி அளிப்பதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.
பாடல் 5:
பாடல் முழவும் விழவும் ஓவாப் பன்மறையோர் அவர் தாம் பரவ
மாட நெடுங்கொடி விண் தடவும் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேடக மாமலர்ச் சோலை சூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
காடகமே இடமாக ஆடும் கணபதீயீச்சரம் காமுறவே
விளக்கம்:
இடையறாது திருவிழாக்கள் மருகல் தலத்தினில் நடைபெற்ற தன்மை விழவும் ஓவா என்ற் தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. ஓவா=இடையறாது; ஓவா என்ற சொல்லினை முழவு மற்றும் விழாக்களுக்கு பொதுவாக கொள்ளவேண்டும். திருவிழாக்கள் மிகவும் ஆரவாரமாக கொண்டாடப்பட்ட தன்மை முழவும் ஓவா என்ற தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. மறையோர்களால் வேதங்கள் ஆர்வத்துடன் ஓதப்படுவது போன்று அடியார்களால் பாடல்களும் ஆர்வத்துடன் திருவிழாக் காலங்களில் பாடப்பட்டது என்று கூறுகின்றார். சேடகம்=வட்டமாக உள்ள மலர்கள்;
பொழிப்புரை:
முழவு வாத்தியங்களின் ஆர்வாரம் நிறைந்த முழக்கங்களின் பின்னணியில் பாடல்கள் இடைவிடாது ஒலிக்க திருவிழாக்கள் நடைபெறுகின்ற போது மறையோர்கள் பலரும் வழிபட, வீடுகளின் மாடங்களில் உள்ள நீண்டுயர்ந்த கொடிகள் ஆகாயத்தைத் தொடும் வண்ணம் அசைகின்ற மருகல் தலத்தினில் வல்லமை வாய்ந்தவனாக பொருந்தி உறைகின்ற பெருமானே, பின்வரும் செயலை நீர் செய்வதற்கு உரிய காரணத்தை எமக்கு சொல்வீராக; வட்டமான அழகிய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த சிறப்பு வாய்ந்த செங்காட்டங்குடி தலத்தினில் உள்ள கணபதீச்சரம் திருக்கோயிலில் காணப்படும் திருக்கோலத்தை மிகவும் விரும்பியவராக, அந்த திருக்கோலத்துட்ன், உலகத்தின் உடல்கள் அனைத்தும் அழிந்த நிலையில் உலகமே சுடுகாடாக காட்சி அளிக்கும் பின்னணியில் நடனம் ஆடுபவராக, மருகல் தலத்தினில் காட்சி அளிப்பதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.
பாடல் 6:
புனையழல் ஓம்பு கை அந்தணாளர் பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சினைகெழு தண் வயல் சோலை சூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
கனைவளர் கூரெரி ஏந்தி ஆடும் கணபதீயீச்சரம் காமுறவே
விளக்கம்:
புனைதல்=அழகு படுத்துதல்; ஹோம குண்டங்களை கோலமிட்டும் மலர்கள் பதித்தும் அழகு செய்வது வழக்கம். சினை=கிளை, முளை; சினை கெழு=மணிகள் நிறைந்த கதிர்கள் கொண்ட; கனை வளர்=மிகுதியாக வளர்ந்த;
பொழிப்புரை:
கோலமிட்டும் மலர்கள் பதிக்கப்பட்டும் அழகு செய்யப்படும் ஹோம குண்டங்களில் வேள்வித் தீயினை மூட்டி பாதுகாக்கும் கைகளை உடைய அந்தணர்கள் பெருமானின் பொன்னடிகளை நாள்தோறும் போற்றி வேத கீதங்கள் பாடுகின்றனர். அத்தகைய அடியார்களும் அந்தணர்களும் வாழ்வதும் உயர்ந்த மாடங்கள் உடையதும் ஆகிய வீடுகள் நிறைந்த வீதிகள் உடைய மருகல் தலத்தினில் வல்லமை வாய்ந்தவனாக பொருந்தி உறைகின்ற பெருமானே,பின்வரும் செயலை நீர் செய்வதற்கு உரிய காரணத்தை எமக்கு சொல்வீராக; மணிகள் நிறைந்த நெற்கதிர்கள் கொண்ட வயல்களும் சோலைகளும் உடைய சிறப்பான செங்காட்டங்குடி தலத்தினில் உள்ள கணபதீச்சரம் திருக்கோயிலில் காணப்படும் திருக்கோலத்தை மிகவும் விரும்பியவராக, அந்த திருக்கோலத்துட்ன், மிகுதியாக படர்ந்து கூரிய நுனியுடன் விளங்கும் தீப்பிழம்பினை கையில் ஏந்திய வண்ணம் நடனம் ஆடுபவராக, மருகல் தலத்தினில் காட்சி அளிப்பதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.
பாடல் 7:
சிதைந்தது.:
பாடல் 8:
பூண்தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடும் தோள் வரையால் அடர்த்து மாண் தங்கு நூன்மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
சேண் தங்கு மாமலர்ச் சோலை சூழ்ந்த சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதீயீச்சரம் காமுறவே
விளக்கம்:
பூண்தங்கு=அணீகலன்கள் பூண்ட; பொன்=அழகிய; பொன்னெடும்=பொன் போன்று அழகியதும் பெரியதும் ஆகிய தோள்கள்; வரை=மலை; மாண்=மாண்பு என்ற சொல்லின் திரிபு; மாண்தங்கு= மாட்சிமை பொருந்திய; சேண்=ஆகாயம்; சேண்தங்கு=வானளாவ உயர்ந்த; காண் தங்கு=அழகு தங்கிய, அழகுடன் விளங்கும் தோள்கள்; எல்லி=நள்ளிரவு;
பொழிப்புரை:
நகைகள் பூண்ட மார்பினை உடைய இலங்கை வேந்தன் அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, அரக்கன் இராவணனின் அழகிய நெடுந் தோள்கள் மலையின் கீழே அகப்பட்டு நொறுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றி அழுத்தியவர் பெருமான். அத்தகைய வலிமை வாய்ந்தவர் என்பதால், மாட்சிமை பொருந்திய நான்மறைகளை கற்றுத் தேர்ந்த அந்தணர்களால் போற்றி வழிபடப்படும் வண்ணம், மருகல் தலத்தினில் வல்லமை வாய்ந்தவனாக பொருந்தி உறைகின்ற பெருமானே, பின்வரும் செயலை நீர் செய்வதற்கு உரிய காரணத்தை எமக்கு சொல்வீராக; சிறந்த நறும்ணம் விசும் மலர்கள் நிறைந்ததும் வானளாவியதும் ஆகிய மலர்ச் சோலைகளால் சூழப்பட்ட சிறப்பினை உடைய செங்காட்டங்குடி தலத்தினில் உள்ள கணபதீச்சரம் திருக்கோயிலில் காணப்படும் திருக்கோலத்தை மிகவும் விரும்பியவராக, அந்த திருக்கோலத்துட்ன், காண்பதற்கு மிகவும் அழகாக விளங்கும் தோள்கள் பெயரும் வண்ணம் நிலம் அதிர பிரளய காலத்து நள்ளிரவில் நடனம் ஆடுபவராக,மருகல் தலத்தினில் காட்சி அளிப்பதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.
பாடல் 9:
அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணையானும் அறிவரிய
மந்திர வேதங்கள் ஓது நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
கந்தம் அகில் புகையே கமழும் கணபதீயீச்சரம் காமுறவே
விளக்கம்:
அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகவும் அனைத்துப் பொருட்களுக்கும் அந்தமாகவும் பெருமான் இருக்கும் தன்மை பல திருமுறைப்பாடல்களில் சொல்லப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.39.1)திருஞானசம்பந்தர் ஆதியும் அந்தமும் ஆகிய அண்ணல் என்று குறிப்பிடுகின்றார்.
அந்தம்=முடிவு; சங்கார காரணனாக இறைவன் இருக்கும் நிலை; ஆதி=தொடக்கம், சங்கார காரணனாக இருக்கும் இறைவன், மீண்டும் உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கும் நிலையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. நமது கண்ணெதிரே விரிந்து பரந்து காணப்படும் உலகும்,உலகிலுள்ள பலவகையான பொருட்களும் நிலையானவை என்ற மாயத் தோற்றத்தை அளிப்பதால், அந்த நிலை உண்மை நிலையல்ல என்பதை தெளிவுபடுத்தும் திருஞானசம்பந்தர், இறைவன் ஒருவனே நிலையானவன் என்றும், அவனே உலகம் மற்றும் உலகப் பொருட்கள் அழிவதற்கு காரணமாக இருப்பவன் என்பதையும் இங்கே உணர்த்துகின்றார். மேலும் இந்த உலகமும் உலகப் பொருட்களும் மீண்டும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவனும் சிவபெருமான் தான் என்பதை உணர்த்தும் வண்ணம் ஆதியும் ஆகிய அண்ணல் என்றும் கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம் ஒவ்வொரு ஊழியின் முடிவிலும், உலகத்தை அழிப்பதும் மீண்டும் உலகத்தை படைப்பதும் செய்பவன் இறைவன் என்பதனை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.உலகத்தின் தோற்றத்திற்கும் அழிவுக்கும் இடைப்பட்ட காலத்தில், உலகத்தில் உள்ள உயிர்களையும் உலகப் பொருட்களையும் பாதுகாப்பதும் இறைவன் தான் என்பதை சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்ததை குறிப்பட்டு சம்பந்தர் உணர்த்துகின்றார். கங்கை நதியை பெருமான் தனது சடையில் மறைத்த செய்தியை குறிப்பிட்டு, பெருமான் கரத்தல் தொழிலை புரிவதை நமக்கு உணர்த்துகின்றார். உலகினை மீண்டும் மீண்டும் படைப்பதே, உயிர்கள் தங்களது எஞ்சிய வினைகளை அனுபவித்து கழித்துக் கொண்டு, தன்னை வந்தடையவேண்டும் என்று நோக்கத்துடன் என்பதால், உயிர்களுக்கு இறைவன் தொடர்ந்து அருள் புரிந்து கொண்டிருப்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. இறைவன் தனது கூத்து மூலம், ஐந்து தொழில்களை தொடர்ந்து செய்யும் தன்மையை உணர்த்துவதை, தில்லைச் சிதம்பரத்தில் உணர்ந்த ஞானசம்பந்தர், அந்த நினைவிலே மகிழ்ந்து திளைத்தார் போலும். அதனால் தான் திருவேட்களம் பதிகத்தின் முதல் பாடலிலும் பெருமான் ஐந்து தொழில்களையும் புரியும் தன்மையை குறிப்பிடுகின்றார். ஆரழல்=வேறு எவராலும் பொறுக்கமுடியாத தீப்பிழம்பு; மந்த முழவம்=குறைந்த ஸ்தாயியில் அடிக்கப்படும் மத்தளம்; சந்தம்=அழகிய மலர்கள்; நகுதலை=வாய் பிளந்த நிலையில் இருப்பது போன்று காணப்படும் மண்டையோடு; வெந்த வெண்ணீறு= உலகத்தின் அனைத்து உடல்களும் பொருட்களும் பிரளய நெருப்பினில் எரிந்து அழிந்த பின்னர் காணப்படும் சூடான சாம்பல்;
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்து இலங்க
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்றாடிச்
சந்தம் இலங்கு நகுதலை கங்கை தண்மதியம் அயலே ததும்ப
வெந்த வெண்ணீறு மெய் பூசும் வேட்கள நன்னகராரே
கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.79.6) அனைத்து உயிர்களுக்கும் தோற்றமாகவும் இறுதியாகவும் இருப்பவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உயிர்களை, அந்தந்த உயிர்களுடன் பிணைந்துள்ள வினைகளீன் தன்மைக்கு ஏற்ப தகுந்த உடலுடன் இணைக்கும் பெருமான், முன்னமே தான் குறிப்பிட்ட காலத்தில் அந்த உடலிலிருந்து பிரிவதற்கும் வகை செய்கின்றான் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.
முன்னுயிர்த் தோற்றமும் இறுதியுமாகி முடியுடை அமரர்கள் அடி பணிந்து ஏத்தப்
பின்னிய சடை மிசைப் பிறை நிறைவித்த் பேரருளாளனார் பேணிய கோயில்
பொன்னியல் நறுமலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினராகிக்
கன்னியர் நாடொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசறுமே
புகலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.29.11) திருஞானசம்பந்தர், அந்தம் முதலாகி நடுவாய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பாடல்களை இசை வடிவினில் பாடத் தொடங்கும் போதே அனைவர்க்கும் இனிமையான இசையுடன் பொருந்தும் வண்ணம் பாட முடிவதில்லை. நாட்கள் செல்லச் செல்ல, அவர்கள் பண்களின் தன்மையை அறிந்துகொண்டு முறையாக பாடுவதை நாம் நமது அனுபவத்தில் காண்கின்றோம். எனவே தான், அத்தகைய மனிதர்களை கருத்தினில் கொண்டு, உம்மால் இயன்ற வண்ணம் பாடுவீர் என்று உலகத்தவர்க்கு அறிவுரையாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஞானசம்பந்தன் என்ற சொல் ஞானசம்பந்தன் அருளிய பாடல்களை குறிக்கும். அடியார்களாக உள்ள அனைவரும் தேவார பாடல்கள் பாட வேண்டும் என்றும் உணர்த்தும் திருஞானசம்பந்தர், அவ்வாறு பாடத் தொடங்கும் போது எடுத்தவுடன் முதலில் சந்தத்துடன் பாட இயலாது என்பதை கருத்தினில் கொண்டு, தமக்கு இயன்ற வரையில் பாடுதல் இறைவனுக்கு நாம் செய்யும் வழிபாடு என்று கூறுகின்றார். வந்தவாறே என்ற சொல்லினை ஞான சம்பந்தன் என்ற சொல்லுடன் இணைத்து ஞானசம்பந்தனுக்கு வந்தவாறே என்று உணர்த்துவதாகவும் பொருள் கூறுகின்றனர். அதாவது இறைவனின் அருளால் ஞானசம்பந்தனுக்கு வாய்க்கப் பெற்ற ஆற்றலின் வடிவமாக வெளிவந்த பாடல்கள் என்று கூறுவதும் பொருத்தமே. ஞானசம்பந்தரின் பாடல்கள் இறைவன் அருளால், இறைவனே அவரது மனதிலிருந்து வெளிப்படுத்திய பாடல்கள் என்பதை இவ்வாறு சிலர் உணர்த்துகின்றனர். ஆனால் இந்த இரண்டு விளக்கங்களை விடவும், முந்திய விளக்கமே மிகவும் பொருத்தமாக உள்ளது.
செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன் மேல்
அந்தம் முதலாகி நடுவாய பெருமானைப்
பந்தன் உரை செய்த தமிழ்கள் பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்தும் அவர் வானம் உடையாரே
அந்தம் முதல் நடுவாய பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே என்ற திருவாசகம் சிவபுராணத் தொடரினை நினைவூட்டுகின்றது. ஆதி, அந்தம் நடுவு என்ற சொற்கள் உயிர்களின் தோற்றம் முடிவு மற்றும் தோற்றம் முடிவு ஆகிய நிலைகளின் இடையே உள்ள நிலை ஆகியவற்றை குறிக்கும். அந்தம்=அழிக்கும் தொழிலைச் செய்யும் உருத்திரன், முதல்=படைப்புத் தொழிலை செய்யும் பிரமன்,நடுவு=இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உயிரினை காக்கும் தொழிலைச் செய்யும் திருமால். சிவபெருமான், பிரமன், திருமால் உருத்திரன் ஆகிய மூவராக இருக்கும் நிலையும், அந்த மூவரினும் வேறுபட்டு இருக்கும் நிலையும் திருவாசகம் சிவபுராணத்தில் குறிப்பிடப்படுகின்றது.
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.15.1) திருஞானசம்பந்தர் பெருமானை அந்தமும் முதல் உடை அடிகள் என்று குறிப்பிடுகின்றார். மந்திரம்=சிறப்பு வாய்ந்த நமச்சிவாய மந்திரம். மந்திர மறை=சிறப்பான நமச்சிவாய மந்திரத்தை தனது நடுவினில் கொண்டுள்ள வேதங்கள். வேதங்கள் மொத்தத்தில் நான்கு என்றாலும், அதர்வண வேதம் மந்திரங்கள், மருத்துவம் பற்றி அதிகமாக கூறுவதால், அதனை விட்டுவிட்டு மூன்று வேதங்கள் என்று கூறுவதுண்டு. இந்த மூன்று வேதங்களின் தொகுப்பினை வேதத்ரயீ என்றும் சொல்வார்கள். இன்றும் வடநாட்டில் சதுர்வேதி,திரிவேதி என்ற பெயர்கள் பழக்கத்தில் உள்ளன. இந்த மூன்று வேதங்களில் நடுவாக கருதப்படுவது யஜூர் வேதமாகும். யஜூர் வேதத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன. நடுவாக உள்ள நான்காவது காண்டத்தில் பதினோரு அனுவாகங்கள் உள்ளன. பதினோரு அனுவாகங்களில் நடுவாக கருதப்படுகின்ற ஆறாவது அனுவாகத்தில் ஸ்ரீ ருத்ரம் உள்ளது. பதினோரு சூக்தங்கள் கொண்டுள்ள ஸ்ரீ ருத்ரத்தின் ஆறாவது சூக்தத்தின் நடுப் பகுதியில் பஞ்சாட்சர மந்திரம் வருகின்றது. இவ்வாறாக வேதத்தின் நடுவில் பஞ்சாட்சர மந்திரம் வருகின்றது என்று நாம் கருதலாம். திருமூலரும் வேதத்தின் நடுவில் உள்ள மந்திரம் பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுகின்றார். மந்திர மறையவை என்ற தொடருக்கு பதிலாக மந்திர மறையவர் என்ற பாடபேதமும் வழக்கில் உள்ளது. வேத மந்திரங்களை நன்கறிந்த மறையவர்கள், இறைவனைத் தொழுகின்றனர் என்ற பொருளும் பொருத்தமாக உள்ளது.
மந்திர மறையவை வானவரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்த வெண்ணீற்றர் வெண்காடு மேவிய
அந்தமும் முதல் உடை அடிகள் அல்லரே
திருவைகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.71.9) திருஞானசம்பந்தர் பெருமானை அந்தம் முதல் ஆதி பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பெருமான்=பெருமையை உடையவன்; அந்தம் முதல் ஆதி என்று குறிப்பிட்டு பெருமானின் முழுமுதற் தன்மையை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பிரமனும் திருமாலும் இந்த தலத்தில் வாயில் காப்பாளராக இறைவனைத் தொழுத வண்ணம் இருப்பதை நாம் காணலாம்.அதனால் தான், வழக்கமாக பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி அலைந்த போதும் அவர்கள் காணாத வண்ணம் நெடுஞ்சுடராய் நின்ற பெருமான் என்று தனது ஒன்பதாவது பாடலில் குறிப்பிடும் திருஞான சம்பந்தர் இங்கே அவர்கள் இருவரும் பெருமானைத் தொழுத வண்ணம் நிற்க பெருமான் அவர்களுக்கு அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். இறைவனைப் போன்று அடியார்களும் தங்களது உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டவர்களாக அன்றைய நாளில் இருந்த நிலையினை நாம் இந்த பாடல் மூலம் அறிகின்றோம்.
அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர் கோனை அயன் மாலும் இவர்கள்
எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள் செய் ஈசன் இடமாம்
சிந்தை செய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள்
வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.92.17) அப்பர் பிரான் ஆதியும் அந்தமுமாக இருப்பன ஐயாறன் அடித்தலமே என்று கூறுகின்றார். அதே போன்று மணிவாசகர் திருவெம்பாவை பதிகத்தின் இறுதிப் பாடலில் இறைவனின் திருப்பாதங்கள் தான் ஆதியும் அந்தமுமாக இருக்கின்றன என்று கூறுகின்றார். இறைவனின் திருவடிகளை, நமச்சிவாய மந்திரம் என்று கூறுவார்கள். எனவே பஞ்சாக்கர மந்திரம் தான், அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் திகழ்கின்றது என்பது இந்த பாடல் மூலம் உணர்த்தப்படுகின்றது. ஐயாறனின் திருவடிகள் அனைத்துப் பொருட்களுக்கும் பழமையானவை, அனைத்துப் பொருட்களையும் கடந்து நிற்பவை: சிவபெருமானால் ஓதப்பட்ட வேதங்களிலும் பல சாத்திரங்களிலும் கூறப்படும் ஞானமாகவும், அந்த ஞானத்தின் உட்பொருளாகவும், பிழையற்ற சிறந்த ஒலியுடன் அந்தணர்கள் ஓதும் வேதமாகவும், அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள வேள்வியாகவும், விண்ணுலகமாகவும், மண்ணுலகாகவும், அக்னியாகவும், சிவந்த ஒளியினை உடைய சூரியனாகவும், தூய ஒளி படைத்த சந்திரனாகவும் திகழ்கின்றான் என்பதே இந்த் பாடலின் பொழிப்புரை.
ஓதிய ஞானமும் ஞானப் பொருளும் ஒலி சிறந்த
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும்
சோதியும் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன தூமதியோடு
ஆதியும் அந்தமும் ஆனவை ஐயாறன் அடித்தலமே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.95.2) அப்பர் பிரான் பெருமானை நோக்கி அந்தமும் ஆதியுமாகி நின்றீர் என்று கூறுகின்றார்.வெந்தழல் ஓம்பும் மிழலை என்று இங்கே வாழ்ந்த அந்தணர்கள் வேள்விகளை இடைவிடாது செய்த தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவரைப் போன்று வீழிமிழலையில் ஐந்நூறு அந்தணர்கள் சிறப்பாக சிவபிரானை வழிபாடு செய்ததாக கூறுவார்கள்.சேந்தனார் தனது திருவீழிமிழலை திருவிசைப்பாவின் ஒன்பதாவது பாடலில் இங்கே வாழ்ந்து வந்த ஐந்நூற்று அந்தணர்களை குறிப்பிடுகின்றார்.தென்திசையில் இயமலோகம் இருப்பதால் தென் திசைக்கு உரிய கடவுளாக இயமன் கருதப்படுகின்றான். இறந்த பின்னர் அனைவரது உயிரும் தென் திசைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவரவர்கள் செய்த வினைகளின் ஒரு பகுதி, சொர்க்க போகத்திலும் நரகத்திலும் புகுத்தப்படுகின்றது. அவ்வாறு தென் திசைக்கு எடுத்துச் செல்லப்படும் போது, நமது உற்றாரோ உறவினரோ நமக்கு உதவி செய்ய முடியாது. அதனால் தான், அப்பர் பிரான், அங்கமாலை பதிகத்தில், உயிர் பிரியும் தருவாயில் குற்றாலத்துக் கூத்தன் ஒருவன் தான் நமக்குத் துணை என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
அந்தமும் ஆதியாகி நின்றீர் அண்டம் எண் திசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்றுகந்தீர்
வெந்தழல் ஓம்பும் மிழலையுள்ளீர் என்னைத் தென் திசைக்கே
உந்திடும் போது மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.23.9) அப்பர் பிரான் பெருமானை ஆதியும் அந்தமும் ஆனான் என்று குறிப்பிடுகின்றார். மூல நோய்=ஆணவ மலம்; பால விருத்தன் என்பதற்கு திருவிளையாடல் புராணத்தில் நடந்த நிகழ்ச்சியை (விருத்தகுமாரபால படலம்) அப்பர் பிரான் குறிப்பிடுவதாக கூறுவார்கள். மதுரை நகரில் வாழ்ந்து வந்த விரூபாக்ஷன் என்ற அந்தணன், தனக்கு சந்ததி வேண்டும் என்று இறைவனை வேண்டினான்.அவனது வேண்டுகோளுக்கு இணங்க, பெருமான் அந்தணனின் மனைவியின் வயிற்றில் ஒரு பெண் குழந்தை பிறப்பதற்கு அருள் புரிந்தார். இந்த குழந்தைக்கு கௌரி என்று பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர். இந்த குழந்தை எட்டு வயது நிரம்பிய தருணத்தில், வாழ்வில் உய்வினை அடைவதற்கு உதவும் மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டும் என்று தந்தையிடம் வேண்டினாள். தந்தையும் அதற்கு உடன்பட்டு, உமையன்னையை தியானிக்கும் மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த சிறுமியும் அந்த மந்திரத்தை தினமும் தியானித்து வந்தாள். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் அவர்களது இல்லத்திற்கு ஒரு வைணவச் சிறுவன் பிக்ஷை கேட்டு வந்தான், அவனது அழகால், நடத்தையால் கவரப்பட்ட விரூபாக்க்ஷன், தனது பெண்ணினை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தனது மனைவியுடன் வைணவச் சிறுவன் தனது ஊருக்கு சென்றபோது, அவனது தாயார், ஒரு சைவப்பெண் தனக்கு மருமகளாக வந்ததை விரும்பவில்லை. தனது திருமணம் நடைபெற்ற வரை, தினமும் ஒரு சைவ அடியாருக்கு அன்னம் அளிப்பதை தனது பழக்கமாக கொண்டிருந்த கௌரி, திருமணத்திற்கு பின்னர் அவ்வாறு செய்ய முடியாமல் போனதற்கு மிகவும் வருந்தினாள். இவ்வாறு வருத்தத்துடன் கௌரி வாழ்ந்து வருகையில் ஒரு நாள், அவளது மாமியாரும் கணவனும் வெளியூர் செல்ல நேரிட்டது. தாங்கள் ஊரில் இல்லாத சமயத்தில், சிவனடியார் எவருக்கேனும் தனது மருமகள் அன்னம் அளிப்பாளோ என்ற சந்தேகம் கொண்டிருந்த மாமியார், மருமகளை வீட்டில் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றாள். அப்போது அங்கே ஒரு முதியவர் வேடம் தாங்கி, பசியினால் தள்ளாடிய நடையுடன் பெருமான் கௌரி தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். பசியினால் வாடும் முதியவருக்கு அன்னமிட வேண்டும் என்று விரும்பினாலும், தனது இயலாமையை குறித்து கௌரி மிகவும் வருந்தினாள். வந்த முதியவர், கெளரியை நோக்கி நீ உனது கையை பூட்டின் மீது வைத்தால் பூட்டு திறந்துவிடும் என்று கூறினார். கௌரியும் அவ்வாறு செய்ய பூட்டு திறக்கவே, முதியவர் வீட்டினுள்ளே நுழைந்தார். வந்த விருந்தினருக்கு சமையல் செய்து கௌரி படைத்தாள், திடீரென்று முதியவர், கட்டிளம் குமாரனாக மாறினார். இதனைக் கண்டு திகைத்த கௌரி, வெளியே சென்றிருந்த தனது மாமி வந்தால், ஒரு ஆடவனுடன் தான் தனியே இருந்ததற்கு தன்னை குற்றம் சாட்டுவாளே என்று அச்சமுற்றாள். அவளின் பயத்தினை மேலும் அதிகரிப்பது போன்று, வெளியே சென்றிருந்த அவளது மாமி, அப்போது வீட்டினுள்ளே நுழைந்தார். ஆனால் கட்டிளம் காளையாக இருந்த பெருமான் சிறிய குழந்தையாக மாறி, தனது கால் பெருவிரலை வாயினில் வைத்தவண்ணம் தரையில் கிடந்தார். உள்ளே நுழைந்த மாமி, குழந்தை எவருடையது என்று கேட்க, தாயில்லாத குழந்தை என்று தேவதத்தன் என்ற சைவன் கொடுத்ததாக கௌரி கூறினாள்; மாமி மேலும் கோபம் கொண்டு, ஒரு சைவக் குழந்தையை ஏற்றுக்கொண்டது குற்றம் என்று கூறி, மருமகளையும் குழந்தையையும் வீட்டிலிருந்து வெளியே செல்லுமாறு கட்டளை இட்டாள்;வேறு வழியின்றி வெளியே வந்த கௌரி, தனது தகப்பனார் தனக்கு உபதேசம் செய்த மந்திரத்தை சொல்ல, அவளது கையில் இருந்த குழந்தை திடீரென்று மறைந்து வானில் சென்றது; பெருமான் விடையினில் அமர்ந்தவராக வானில் காட்சி அளித்தார். மேலும் கெளரியின் உருவமும் அன்னை பார்வதி தேவியின் உருவமாக மாறியது. பெருமான், பார்வதி தேவியின் உருவத்திற்கு மாறிய கெளரியை விடையின் மீது ஏற்றுக்கொண்டு மறைந்தார். இது தான் திருவிளையாடலில் கூறப்படும் வரலாறு.
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்
பால விருத்தனும் ஆனான் கண்டாய் பவளத் தட வரையே போல்வான் கண்டாய்
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.44.9) அப்பர் பிரான், பெருமானை ஆதியும் அந்தமும் ஆகி இருப்பவன் என்று குறிப்பிடுகின்றார். பிறிந்தான்=பிறவாக வேறு ஒரு பொருளாக மாறுபட்டு இருத்தல்; பிரமன் திருமால் ஆகிய இருவருக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருந்து அவர்களிடமிருந்து மாறுபட்டு இருக்கும் நிலை; எறிந்தான்=அழித்தவன்; அழிவிலிருந்து தான் தோற்றம் பிறக்கும் என்பதை உணர்த்தும் வகையில்,அழித்தவன் என்றும் ஏழ் உலகங்களுக்கும் முன்னே தோன்றியவன் என்றும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.
எறிந்தானே எண் திசைக்கும் கண்ணானே ஏழுலகம் எல்லாம் முன்னாய் நின்றானே
அறிந்தார் தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமுமாய் ஆகி அங்கே
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் வந்து நெஞ்சில்
செறிந்தானே திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே சிவனே உன் அபயம் நானே
ஒரு பொது பதிகத்தின் பாடலில் (7.44.7) சுந்தரர் யாராலும் அளவறியப்படாக ஆதியும் அந்தமும் ஆக இருப்பவன் பெருமான் என்று கூறுகின்றார்.தார்=மாலை; கூவிளம்=வில்வ இலை;
தாரும் தண்கொன்றையும் கூவிளம் தனி மத்தமும்
ஆரும் அளவறியாத ஆதியும் அந்தமும்
ஊரும் ஒன்றில்லை உலகெலாம் உகப்பார் தொழப்
பேரும் ஓராயிரம் என்பரால் எம் பிரானுக்கே
புக்கொளியூர் அவினாசி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் ஆதியும் அந்தமும் ஆயினாய் என்று சுந்தரர் பெருமானை நோக்கி கூறுகின்றார். இந்த பாடல் பாடிக் கொண்டிருந்த தருணத்தில், குளத்தில் முதலை தோன்றியது என்றும், அந்த முதலையின் வயிற்றில் நிலத்தில் இருந்து வளர்ந்தது போன்று இடையில் கழிந்த இரண்டாண்டுகளின் வளர்ச்சியும் உடலில் நிரம்ப, முதலையின் வாயில் இறந்த சிறுவனை பெருமான் வரச்செய்தார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். அரைக்காடு=அரையின் கண், இடுப்பினில் ஆடும் பாம்பு; புரைக்காடு= முல்லை நிலத்து காடு;
உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவினாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே
ஆதியும் அந்தமுமாக இருக்கும் பெருமானின் திருவடிகள் வாழ்வின் தோற்றமாகவும், போகமாகவும், இறுதியாகவும் இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது.இதன் மூலம் இறைவனின் திருநாமமே, நமது வாழ்வின் அனைத்தும் என்பதும் இங்கே கூறப்படுகின்றது. அத்தகைய திருவடிகளை நாம் போற்றி வழிபட வேண்டியது நமது கடமை என்று மணிவாசகர், பதிகத்தை முடிக்கின்றார். இந்த பாடலில் பாதம் என்ற பொருள் பட வேறு வேறு சொற்கள் கையாளப்பட்டுள்ளது இந்த பாடலின் மற்றொரு சிறப்பாகும். காணாத புண்டரீகம் என்று பெருமான் புரிகின்ற திரோதான செயலும், உய்ய ஆட்கொண்டருளும் என்ற தொடர் மூலம் அருள் புரிகின்ற செய்கையும் குறிப்பிடப்படுகின்றன. ஆதியாகவும் அந்தமாகவும் விளங்கும் திருவடிகள் ஐந்தொழில் புரியும் தன்மையும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்
பொற்சுண்ணம் பதிகத்தின் கடைப்பாடலில் (8.9.20) மணிவாசக அடிகளார் பெருமானை ஆதியும் அந்தமும் ஆயினார் என்று குறிப்பிடுகின்றார்.ஒன்றுக்கொன்று மாறுபட்ட மறுதலைப் பொருளாக இறைவன் இருக்கும் தன்மை இந்த பாடலில் சொல்லப்பட்டுள்ளது. வேதங்களின் முடிவான பொருளாகிய மெய்ஞானமாக பெருமான் இருக்கும் நிலையை நாம் அறிவோம். வேதங்களின் கன்ம காண்டத்தில் குறிப்பிடப்படும் வேள்விகள் பல பயனை அளிக்கின்றன. ஆனால் அந்த பயனை அளிப்பவன் பெருமான் தான் என்பதால், வேள்வியாக, வேள்வியின் பயனாக பெருமான் இருக்கின்றான் என்று சொல்லப்படுகின்றது. தன்னை நினைத்து முறையாக வழிபடும் அன்பர்களுக்கு உண்மைப் பொருளாக இருக்கும் இறைவன், அல்லாதவர்களுக்கு இல்லாத பொருளாக இருக்கின்றான். சோதி என்பது ஞானத்தையும் இருள் என்பது அஞ்ஞானத்தையும் குறிக்கும். இறைவனைப் பணிந்து வழிபடும் அன்பர்கள் மெய்ஞானம் பெற்றவர்களாக விளங்க, அவனை வழிபடாத மனிதர்கள் அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கின்ற தன்மை இங்கே சோதியுமாய் இருள் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. உயிர்கள், முந்தைய பிறவிகளில் சேர்த்துக் கொண்டுள்ள வினைகளின் தன்மைக்கு ஏற்ப, இந்த பிறவியில் இன்பத்தையும் துன்பத்தையும் நுகர்ந்து கழிக்கும் வண்ணம் செய்பவன் இறைவன் என்பதால், இன்பமாகவும் துன்பமாகவும் அவன் இருக்கின்றான் என்று அடிகளார் கூறுகின்றார். பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் இருக்கும் பெருமான், சக்தியும் சிவமும் ஒன்று தான் இரு வேறு கூறல்ல என்ற தன்மையால் முற்றுமாகவும் இருக்கின்றான். மலங்களை கழித்துக் கொள்ளாத உயிர்களுக்கு பந்தமாக இருக்கும் இறைவன், பக்குவப்பட்ட உயிர்களுக்கு வீடுபேறு பெறுகின்ற தகுதியை அளிக்கும் தன்மை பந்தமுமாய் வீடும் ஆயினான் என்ற தொடர் மூலம் விளக்கப்படுகின்றது.
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதியுமாய் இருள் ஆயினார்க்குத் துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப்
பாதியுமாய் முற்றும் ஆயினார்க்குப் பந்தமுமாய் வீடும் ஆயினாருக்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு ஆடப்பொற்சுண்ணம் இடித்தும் நாமே
அந்தமும் ஆதியும் என்ற தொடரை அறிவரிய என்ற சொல்லுடன் இணைத்து, நான்முகனும் திருமாலும் முறையே அந்தமாகிய திருமுடியையும் ஆதியாகிய திருவடியையும் காண முடியாமல் நின்ற தன்மை உணர்த்தப்படுகின்றது என்ற விளக்கமும் சான்றோர்களால் அளிக்கப் படுகின்றது. வேத மந்திரங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளும் இறைவன் செந்தமிழ்ப் பாக்களையும் விரும்பி ஏற்றுக்கொள்கின்றான் என்று இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. இந்த் குறிப்பு நமக்கு சுந்தரரை, உரிமையுடன் அடிமை என்று குறிப்பிட்டு ஆட்கொண்ட பெருமான், அவரை பாடுமாறு பணித்த போது சொன்னதை நினைவூட்டுகின்றது.அன்பினால் தமக்கு செய்யப்படும் திருமுழுக்காட்டுதல், திருமாலை அணிவித்தல், அலங்காரம் செய்தல், விளக்கிடுதல் ஆகிய வழிபாடுகளினும் மேலான வழிபாடாவது பெருமானை போற்றியுரைக்கும் புகழுரைகள் என்று சொல்லி சொற்றமிழ் பாடுமாறு பணித்ததை நினைவூட்டுகின்றது. இந்த பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
மற்று நீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்
பொழிப்புரை:
அனைத்து உயிர்களுக்கும் அந்தமும் ஆதியாகவும் இருக்கும் பெருமான், பிரமனும் திருமாலும் முறையே தனது திருமுடியையும் திருவடியையும் காணமுடியாத வகையில் நீண்ட தழற் பிழம்பாக நின்றான். அத்தகைய ஆற்றல் உடையவன் என்று வேத மந்திரங்களை ஓதும் நாவினை உடைய அந்தணர்களால் போற்றப்படும் வண்ணம் மருகல் தலத்தினில் வல்லமை வாய்ந்தவனாக பொருந்தி உறைகின்ற பெருமானே, பின்வரும் செயலை நீர் செய்வதற்கு உரிய காரணத்தை எமக்கு சொல்வீராக. செந்தமிழ் வல்லோர்கள் உம்மைப் புகழ்ந்து வணங்கி புகழினைப் பாடுகின்ற சிறப்பினை உடைய செங்காட்டங்குடி தலத்தினில் உள்ள கணபதீச்சரம் திருக்கோயிலில் காணப்படும் திருக்கோலத்தை மிகவும் விரும்பியவராக, அந்த திருக்கோலத்துட்ன், நறுமணம் கமழும் அகிற்புகை தூபம் எங்கும் பரவியிருக்கும் திருக்கோயிலில், மருகல் தலத்தினில் காட்சி அளிப்பதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.
பாடல் 10:
இலை மருதே அழகாக நாளும் இடுதுவர்க் காயொடு சுக்கு தின்னும்
நிலை அமண் தேரரை நீங்கி நின்று நீதர் அல்லார் தொழு மாமருகல்
மலைமகள் தோள் புணர்வாய் அருள்வாய் மாசில் செங்காட்டங்குடி அதனுள்
கலைமல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதீயீச்சரம் காமுறவே
விளக்கம்:
இலைமருது=மருத மரத்து இலைகளின் சாறு ஆடைகளுக்கு காவி வண்ணம் அளிக்க வல்லது. அத்தகைய ஆடைகளை அணியும் பழக்கம் உடையவர்கள் புத்தர் என்று இங்கே சொல்லப் படுகின்றது. துவர்காய் மற்றும் சுக்கு தின்னும் பழக்கம் உடையவர்கள் சமணர்கள். பற்கள் துலக்காததலும் வாய் கொப்பளிக்காததாலும் வீசும் துர்நாற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு துவர்க்காய் மற்றும் சுக்கினை மென்று கொண்டிருப்பது அந்நாளைய சமணர்களின் பழக்கமாக இருந்ததை இங்கே குறிப்பிடுகின்றார். நிலை=தன்மையில் வாழ்ந்து வந்த; நீதர்=நீசர் என்ற் சொல்லின் திரிபு; இழிந்தவர்கள் என்று பொருள்.காவி நிறம் துறவிகளுக்கு தனி அழகினை அளிப்பதால் அழகாக என்று குறிப்பிட்டார் போலும்.
பொழிப்புரை:
மருதமரத்து இலைகளின் சாறு ஏற்றப்பட்டு காவி நிறத்துடன் கூடிய அழகிய ஆடைகளை அணிந்த புத்தர்களும், என்றும் கடுக்காய் மற்றும் சுக்கினை வாயில் இட்டுக்கொண்டு மெல்லும் நிலையில் இருக்கும் சமணர்களும், பெருமானை குறித்து இழிவாக பேசுவதால், இழிவற்ற தன்மையில் வாழும் அடியார்கள்,அவர்களை விட்டு நீங்கிவிடுகின்றனர். அத்தகைய அடியார்களால் தொழப்படும் வண்ணம், பெருமை வாய்ந்த மருகல் தலத்தினில் உறைபவனும் மலைமகளாகிய பார்வதி தேவியின் தோள்களோடு கூடியவனும் ஆகிய பெருமானே, எமக்கு அருள் புரிந்து சொல்வீராக; குற்றமற்ற செங்காட்டங்குடி தலத்தினில் உள்ள கணபதீச்சரம் திருக்கோயிலில் காணப்படும் திருக்கோலத்தை மிகவும் விரும்பியவராக, அந்த கோலத்துட்ன், அழகுடன் திகழும் தோலாடை அணிந்தவனாக பிரளய காலத்து நள்ளிரவில் நடனம் ஆடுபவராக, மருகல் தலத்தினில் காட்சி அளிப்பதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக.
பாடல் 11:
நாலும் குலைக்கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன் நலம் திகழும்
மாலின் மதி தவழ் மாடம் ஓங்கும் மருகலின் மற்றதன் மேல் மொழிந்த
சேலும் வயலும் திளைத்த கண்ணார் சீர்கொள் செங்காட்டங்குடி அதனுள்
சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் சொல்ல வல்லார் வினை இல்லையாமே
விளக்கம்:
நாலும்=தொங்கும்; நான்ற வாயும் நாலிரு புயமும் என்று ஔவை பிராட்டியின் மொழி நம்து நினைவுக்கு வருகின்றது. கமுகு=பாக்கு; மாலின்=திருமால் போன்று கரிய நிறத்துடன் திகழும் மேகம் என்றும் பெருமை வாய்ந்த என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். திளைத்த=உடைய; கழல்=வீரக்கழல் அணிந்த திருப்பாதங்கள்; பெருமானின் கையில் இருக்கும் சூலப்படை மூன்று மலங்களையும் அறுத்தெரிக்கும் படை என்று பல திருமுறைப் பாடல்கள் பகர்கின்றன. பெருமானால் ஏற்றுக் கொள்ளப் பட்ட அடியார்களின் களங்கமற்ற அடியார்களின் நெஞ்சம் உருகும் வண்ணம் அவர்களை பீடித்துள்ள மூன்று மலங்களையும் அறுத்தெரியும் சூலப்படை பகைவர்களை வெல்கின்ற படையாகவும் விளங்குகின்றது என்று திருத்தசாங்கம் பதிகத்தின் பாடலில் (8.19.7)மணிவாசகர் கூறுகின்றார். கழுக்கடை=சூலபடை;
கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன்
மாற்றாரை வெல்லும் படை பகராய் — ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சு உருக மும்மலங்கள் பாயும்
கழுக்கடை காண் கைக்கொள் படை
பொழிப்புரை:
தொங்குகின்ற குலைகளுடன் பாக்கு மரங்கள் உயர்ந்து ஓங்கி வளரும் சீர்காழி தலத்தைச் சார்ந்த ஞானசம்பந்தன், செல்வ நலமுடன் விளங்குவதும் மேகங்களின் இடையே திகழும் சந்திரன் தவழும் வண்ணம் உயர்ந்த மாடவீடுகள் கொண்டதும் ஆகிய திருமருகல் மற்றும் அந்த தலத்தினில் உறையும் பெருமானையும், சேல் மற்றும் கயல் ஆகிய மீன் வகைகள் போன்று அழகிய கண்களை உடைய மகளிர் வாழும் சிறப்பினை உடைய செங்காட்டங்குடி தலத்தினில் உறைகின்ற இறைவனையும் புகழ்ந்து, சூலம் ஏந்திய பெருமானின் வீரக்கழல் அணிந்த திருப்பாதங்களை புகழும் பாடல்களை முறையாக பாடும் வல்லமை வாய்க்கப்பெற்ற அடியார்களுடன் பிணைந்துள்ள வினைகள் அவர்களை விட்டுவிட்டு நீங்கி விடும்.
அங்கமும் வேதமும் (Angamum Vedamum) is a phrase often used in Tamil literature, particularly in devotional contexts, to refer to the integral connection between the Angas (limbs or parts) of the body and the Vedas (sacred scriptures of Hinduism). This phrase emphasizes the deep relationship between the physical form and spiritual knowledge.
அங்கம் (Angam): Refers to the "limbs" or "parts" of the body. In a symbolic sense, it can also refer to the parts of a larger system, such as a spiritual or religious practice.
வேதம் (Vedam): Refers to the Vedas, the ancient sacred scriptures of Hinduism, which are considered the ultimate source of spiritual knowledge and wisdom.
Unity of Body and Sacred Knowledge: The phrase suggests that the body (represented by the limbs, or Angam) and the sacred knowledge (represented by the Vedas) are interconnected. Just as the body is made up of limbs, the spiritual practice is built upon the teachings of the Vedas. It can also imply that one’s actions (performed by the body) should be aligned with Vedic principles.
Angas of the Vedas: In another sense, Angam could refer to the Vedangas—the six auxiliary disciplines traditionally connected with the study and understanding of the Vedas. These Vedangas are:
In this context, அங்கமும் வேதமும் refers to the idea that the study of the Vedas requires a mastery of these auxiliary sciences or limbs (Angas) to fully comprehend the spiritual teachings.
The Divine Connection: In some devotional hymns, this phrase may reflect the idea that the body (Angam) is a vessel for spiritual knowledge (Vedam). It implies that by aligning one's physical actions with spiritual knowledge, one can attain higher wisdom or divine connection.
This phrase beautifully captures the essence of Hindu philosophy, where the physical and the spiritual are deeply intertwined, and one’s actions in the world should be in harmony with eternal wisdom found in the Vedas.