பதிக எண்: 2.102 - சிரபுரம் (சீர்காழி) - நட்டராகம்
பின்னணி:
நனிபள்ளி தலத்தில் தனது இரண்டாவது தலயாத்திரையினைத் தொடங்கிய ஞானசம்பந்தர் திருமுல்லைவாயில் தலத்தில் முடித்துக்கொண்டு சீர்காழி திரும்புகின்றார். அவ்வாறு சீர்காழி திரும்பிய பின்னர் அவர், வழக்கம் போன்று சீர்காழி பெருமான் உறையும் திருக்கோயில் சென்று பெருமானை வணங்கிய பின்னர் தனது இல்லத்திற்கு செல்கின்றார். அப்போது தூய ஆணியாம் பதிகம் பாடினார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் பதிகம் யாது என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளன. தருமபுர ஆதீனத்தாரின் வலைத்தளத்தில், ஆணியாம் பதிகம் என்ற தொடர் அன்னமென்னடை அரிவை என்று தொடங்கும் பதிகத்தை குறிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிரபுரம் என்பது சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும். இந்த பதிகத்தின் நான்காவது பாடலில், தேருக்கு அச்சாணி இன்றியமையாதது போன்று உலகத்தவரின் வாழ்வுக்கு சிவபெருமான் தூய்மையான அச்சாணியாக இருப்பதாக சம்பந்தர் குறிப்பிடுகின்றார். தூய ஆணி என்று சேக்கிழார் குறிப்பிடுவதால் உயர்ந்த தரமான பொன் என்று பொருள் கொண்டு, ஆணி என்பதற்கு கொல்லர்கள் வைத்திருக்கும் மாற்றுக் குறையாத பொன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. எனவே ஆணியாம் திருப்பதிகம் என்று குறிப்பிடப்படும் பதிகம் இதுவே என்று கூறப்பட்டுள்ளது பொருத்தமாக இருப்பது போல் தோன்றுகின்றது. வேணி=சடை; செய்ய வேணி=சிவந்த சடை; போற்றிய விருப்பின் மிக்கார்=இறைவனைப் போற்றி பாடப் பாட, சலிப்பு ஏதுமின்றி, மேலும் அவரை தொடர்ந்து போற்றிப் பாட வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவராய்; இந்த நிலை சிவானந்த அனுபவத்தினால் வருவது; கூர்தல்=சிறத்தல்; சேணுயர் மாடம்=விண்ணினை நெருங்கும் வண்ணம் உயர்ந்து ஓங்கிய மாட வீடுகள்; திருஞான சம்பந்தர் இவ்வாறு தலங்கள் தோறும் சென்றும் பதிகங்கள் பாடியது, உயிர்கள் அந்த பதிகங்களை முறையாக பாடி, இறைவனது அருள் பெற்று தங்களது வாழ்வினில் உய்வினை அடையும் நோக்கத்துடன் தான், என்பதை உணர்த்தும் பொருட்டு, அருட்பெரு வாழ்வு பெற்ற என்று இந்த பாடலில் சேக்கிழார் உணர்த்துகின்றார்.
தோணி வீற்றிருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி அருட்பெருவாழ்வு கூரச்
சேணுயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்ய
வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்
பாடல் 1:
அன்ன மென்னடை அரிவையோடு இனிதுறை அமரர் தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக்கம் மலர் வைத்தவர் வேதம் தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதில் சிரபுரத்தார் சீரார்
பொன்னின் மாமலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே
விளக்கம்:
அமரர் தம் பெருமான் என்ற தொடர், தேவதேவன், மகாதேவன் ஆகிய திருநாமங்களை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. சில பதிப்புகளில் வேதந்தான் என்ற தொடருக்கு பதிலாக வேதாந்தம் என்ற தொடர் பாடபேதமாக காணப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான பதிப்புகளில் வேதந்தாம் என்ற தொடரே காணப்படுகின்றது. எனவே நாமும் அந்த தொடரையே பின்பற்றுவோம். பயத்தல்=கொடுத்தல்; பெருமான் வேதங்களுக்கு பொருள் அருளியதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலத்தில் (திருவிளையாடல் புராணம்) பரஞ்சோதி முனிவர், கண்வர் முதலான முனிவர்களுக்கு வேதத்தின் பொருள் சொன்ன நிகழ்ச்சி சொல்லப் பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்ற வேதியன் ஒருவன், நைமிசாரண்யத்தில் கண்வர் முதலான முனிவர்கள், முகம் வாட்டமடைந்து இருந்ததைக் கண்டு, அதன் காரணத்தை வினவினார். வேதங்களின் பொருளினை அறியமுடியாமல் வருந்துவதாக அவர்கள் கூற, மதுரை வேதியன், மதுரை மாநகரம் சென்று சொக்கநாதப் பெருமானிடம் வேண்டுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறினார். அவ்வண்ணமே கண்வரும் மற்ற முனிவர்களும் மதுரை சென்றடைந்து சொக்கநாதப் பெருமானிடம் வேண்டினார்கள். பின்னர் அவர்கள் ஆங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் வழிபட்ட போது, வேதியச் சிறுவனாக பெருமான் வெளிப்பட்டு, முனிவர்களை நோக்கி அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது முனிவர்கள் வேதங்களின் பொருளை அறிந்து கொள்ளவேண்டும் என்பதே தங்கள் அவா என்று கூறவே, வேதியச் சிறுவனாக வந்த பெருமானும் வேதங்களின் பொருளை எடுத்துரைத்தார் என்று திருவிளையாடல் புராணம் உணர்த்துகின்றது. சனகாதி முனிவர்களுக்கு தனது மோன முத்திரையால் வேதத்தின் பொருளை உணர்த்தியவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
பிராட்டியின் நடையினை அன்னத்தின் நடைக்கு சம்பந்தர் இங்கே ஒப்பிடுகின்றார். பல திருமுறைப் பாடல்களில் பிராட்டியின் அங்கங்கள் குறிப்பிடப்பட்டு அவற்றின் நேர்த்தி திருமுறை ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றன. பிராட்டியின் நடையழகு அன்னத்தின் நடைக்கும் பெண் யானையின் நடைக்கும் ஒப்பிடப்படுகின்றன. அத்தகைய பாடல்களில் அன்னநடை என்று குறிப்பிடும் ஒரு சில பாடல்களை நாம் இங்கே காண்போம். சோபுரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.51.6) அன்னத்தைப் போன்று மிருதுவான நடையினை உடைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவன் பெருமான் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். பொற்பு=அழகு; இடையினில் துன்ன ஆடையினாய் வண்ண ஆடையினாய் என்று ஆடையினாய் என்ற சொல்லினை இரண்டு இடங்களில் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். துன்ன ஆடை=பெரிய ஆடையிலிருந்து துண்டிக்கப்பட்ட ஆடை, கோவணம். துன்ன என்ற சொல்லுக்கு தைக்கப்பட்ட என்ற பொருளும் பொருந்தும். கோவண ஆடை வெண்மை நிறத்தில் உள்ளதாக பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. எனவே வண்ண ஆடை என்று குறிப்பிடப் பட்டுள்ளது பிராட்டி அணிந்துள்ள ஆடையை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாதொரு பாகனாக பெருமான் உள்ள நிலை, இங்கே இருவேறு ஆடைகளை குறிப்பிட்டு மிகவும் நயமாக உணர்த்தப் படுகின்றது.
கொல் நவின்ற மூவிலை வேல் கூர்மழுவாட் படையன்
பொன்னை வென்ற கொன்றை மாலை சூடும் பொற்பு என்னை கொலாம்
அன்னம் அன்ன மென்னடையாள் பாகம் அமர்ந்து அரை சேர்
துன்ன வண்ண ஆடையினாய் சோபுரம் மேயவனே
பாதளீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.108.1) ஞானசம்பந்தர் அன்னம் போன்ற நடையினை உடையவள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். பொற்பு=அழகு; பன்னிய=மீண்டும் மீண்டும்;
மின்னியல் செஞ்சடை மேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல் சூடி பொற்பு அமரும்
அன்னம் அன நடையாளொரு பாகத்து அமர்ந்து அருளி நாளும்
பன்னிய பாடலினான் உறை கோயில் பாதாளே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.9.3) அப்பர் பிரான், அன்ன மென்னடையாள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். ஞாழல்=சுரபுன்னை; சின்ன வேடம்= உருத்திராக்கம் திருநீறு சடைமுடி முதலியன சிவச் சின்னங்களாக கருதப் படுகின்றன. இத்தைகைய சின்னங்களை பெரிய செல்வமாக மதித்து இறைவன் அணிகின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இறைவனே சிவச் சின்னங்களை மேலான செல்வமாக மதிக்கின்றான் என்று குறிப்பிடுவதன் மூலம், நாமும் அந்த சின்னங்களை சிறப்பாக மதிக்கவேண்டும் என்பதை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். புறணி= உப்பங்கழிக்கரை; மன்னினார்=நிலையான புகழினை உடையவர்கள்;
புன்னை ஞாழல் புறணி அருகெலாம்
மன்னினார் வலம் கொள் மறைக்காடரோ
அன்ன மென் நடையாளை ஒர் பாகமாச்
சின்ன வேடம் உகப்பது செல்வமே
புகலூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.99.9) பாடலில் அன்னநடை மடவாள் பாகத்தான் என்று அப்பர் பிரான் இறைவனை குறிப்பிடுகின்றார். துன்னம்=தையல்; அக்காரம்=எலும்பு மாலை; சங்கு மணிகளால் கோர்க்கப்பட்ட உருத்திராக்க மாலை என்றும் கூறுவார்கள். சிவபெருமான் கையில் இருக்கும் மழு ஆயுதத்தை அவர் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாத காரணத்தால், இரத்தக் கறை படியாத ஆயுதமாக விளங்குகின்றது.
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி
தன் அணையும் தண்மதியும் பாம்பும் நீரும் சடைமுடி மேல் வைத்து உகந்த தன்மையானே
அன்ன நடை மடவாள் பாகத்தானே அக்காரம் பூண்டானே ஆதியானே
பொன்னம் கழலடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே
பொழிப்புரை:
அன்னப்பறவை போன்று மென்மையான நடையை உடைய உமை நங்கையுடன் இனிதாக உறைபவரும், தேவர்களின் தலைவராக திகழ்பவரும், மின்னல் போன்று ஒளி வீசும் சிவந்த சடையினில் வெள்ளெருக்கு மலரினைத் சூட்டிக் கொண்டவரும், வேதங்களின் வழியாக வாழ்க்கைக்கு பயன்படும் அரிய கருத்துகளை உலகினுக்கு அளித்தவரும், வேதங்களின் பொருளினை உணர்த்தியவரும், பெரிய மதில்கள் சூழ்ந்த சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் உறைபவரும் ஆகிய பெருமானின் பொன் போன்று அழகிய திருவடிகளைத் தொழும் அடியார்கள் வினைகளுடன் பொருந்த மாட்டார்கள்; அதாவது அவர்களைப் பற்றியுள்ள வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும்.
பாடல் 2:
கோல மாகரி உரித்தவர் அரவொடும் ஏனக்கொம்பு இள ஆமை
சாலப் பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார் தம்மைப்
போலத் தம் அடியார்க்கும் இன்பளிப்பவர் பொருகடல் விடம் உண்ட
நீலத்தார் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே
விளக்கம்:
கோல=அழகிய; மா=பெரிய; ஏனம்=பன்றி; சால=அழகாக அமையும் வண்ணம்; சங்கரன்= அழியாத இன்பத்தைத் தனது உயிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவன், இன்ப வடிவினன்; பொருகடல்=தனது அலைகளால் கரையினை மோதி பேரிறைச்சல் எழுப்பும் கடல்; இன்பமே வடிவமாக இருப்பவன் இறைவன்; தனது அடியார்களையும் தன்னைப் போன்று இன்ப வடிவு உடையவர்களாக மாற்றி அருள் புரிபவன் இறைவன் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுவது, நமக்கு அப்பர் பிரானின் நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல் ஒன்றினை (6.98.10) நினைவூட்டுகின்றது. சிறந்த எட்டு குணங்களை உடைய பெருமான் போன்று தானும் அத்தகைய எட்டு குணங்களைக் கொண்டவனாகத் திகழ்வதால் எவரிடமும் அச்சம் கொள்வதில்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தென்திசைக் கோன்=இயமன். நாணற்றார்=நாணம் இல்லாத சமணர்கள். உடை இல்லாமல் எங்கும் திரிந்தாலும் அதற்காக வெட்கப்படாத சமணர்கள். கோ ஆடி=தலைமைத் தன்மையை உரைத்து. நள்ளாமே விள்ளப் பெறுதல்=விரும்பாது விலகும் நிலை. பொறுக்க முடியாத வயிற்று வலியால் திருவதிகை வந்தடைந்த நிலைக்கும், வயிற்று வலி தீர்க்கப்பட்டு சிவபிரானால் ஆட்கொள்ளப் பட்ட நிலைக்கும் உள்ள மாற்றத்தினை இந்த பாடலில் நாம் காணலாம். பல்லவ மன்னன் என்ன, அவனையும் விட பெரிய நாவலந் தீவினுக்கு அரசன் என்ன, தென் திசைக்கு அதிபதியாகிய இயமன் என்ன, எவரது கட்டளைக்குமே தான் பணிய வேண்டிய அவசியம் இல்லை என்று முழங்குவதை நாம் உணரலாம்.
நாவார நம்பனையே பாடப் பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம்
ஆவா என்று எமை ஆள்வான் அமரர் நாதன் அயனொடு மாற்கு அறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம் எண் குணத்துளோமே
பொழிப்புரை:
அழகிய பெரிய யானையை உரித்தவரும், பாம்பு பன்றியின் கொம்பு, இளமையான ஆமையின் ஓடு ஆகிய பொருட்களை மிகவும் அழகாக தனது திருமேனியில் பூண்டவரும், குளிர்ந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவரும், இன்ப வடிவினனாக இருப்பவரும் ஆகிய சிவபெருமான், தான் அனுபவிக்கும் இன்பத்தினைத் தனது அடியார்களுக்கும் அளிக்கின்றார். தனது அலைக் கரங்களால் மீண்டும் மீண்டும் கரைகளில் மோதி பேரிறைச்சல் ஏற்படுத்தும் கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உட்கொண்டு தேக்கியதால் தனது கழுத்தினில் நீலநிறத்து கரையினை உடைய தலைவராகிய சிவபெருமான் சிரபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தினில் உறைகின்றார். அந்த இறைவனைத் தொழும் அடியார்களின் வினைகள் முற்றிலும் நாசமாகி, அத்தகிய அடியார்களுடன் பிணைந்து நில்லாமல் விலகிவிடும்.
பாடல் 3:
மானத் திண் புய வரிசிலைப் பார்த்தனைத் தவம் கெட மதித்து அன்று
கானத்தே திரி வேடனாய் அமர் செயக் கண்டு அருள் புரிந்தார் பூந்
தேனைத் தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள்
கோனைக் கும்பிடும் அடியாரைக் கொடுவினை குற்றங்கள் குறுகாவே
விளக்கம்:
மானம்=பெருமை; திண்புயம்=வலிமை மிகுந்த தோள்கள்; வரிசிலை=நாணால் வரிந்து இழுத்துக் கட்டப்பட்ட வில்; பார்த்தன்=அருச்சனின் பெயர்களில் ஒன்று; பிருதை என்பது குந்தியின் மறுபெயர். பிருதையின் புதல்வன் என்பதைக் குறிப்பிடும் வண்ணம், பார்த்தன் என்ற பெயர் அமைந்துள்ளது. அமர்=போர்; தேனைத் தேடும் வண்டுகள் பூஞ்சோலைகளைச் சுற்றித் திரிந்த வண்ணம் இருப்பது போன்று, தெவிட்டாத தேனாக இனிக்கும் பெருமானைச் சுற்றி சிரபுரத்து மக்கள் சூழ்ந்திருப்பார்கள் என்ற பொருள் பட நயமாக அமைந்துள்ளது.
பொழிப்புரை:
பெருமை மிகுந்த வலிமையான தோள்களும், நாணினால் வரிந்து இழுத்துக் கட்டப்பட்ட வில்லினையும் உடைய பார்த்தன் தவம் செய்து கொண்டிருந்த காட்டிற்கு, வேடனாக உருவம் தரித்துச் சென்று அவனது தவத்தினை கெடுத்த சிவபெருமான், பார்த்தனது வலிமையை மதித்து அவனுடன் சண்டை செய்து அவனது ஆற்றல் கண்டு மகிழ்ந்து அவனுக்கு பாசுபத அத்திரம் அளித்து அருள் புரிந்தார். இவ்வாறு அருள் புரியும் தன்மையராய், எங்களது தலைவனாக விளங்கும் பெருமான், பூக்களில் உள்ள தேனினைத் தேர்ந்தெடுத்து சேரும் வண்டுகள் திரியும் சோலைகள் கொண்டுள்ள சிரபுரம் தலத்தில் உறைகின்றார். அவரை கும்பிட்டு வணங்கும் அடியார்களை கொடிய வினைகளும் அத்தகைய வினைகளால் ஏற்படும் குற்றங்களும் சென்று அடையா.
பாடல் 4:
மாணி தன்னுயிர் மதித்து உண வந்த அக்காலனை உதை செய்தார்
பேணி உள்கு மெய்யடியவர் பெருந்துயர்ப் பிணக்கு அறுத்து அருள் செய்வார்
வேணி வெண்பிறை உடையவர் வியன் புகழ்ச் சிரபுரத்து அமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே
விளக்கம்:
மாணி=பிரும்மச்சாரி சிறுவன் மார்க்கண்டேயர்; இயமன் மார்க்கண்டேயரின் உயிரினை மதித்ததாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சிறுவயதிலிருந்தே சிவபெருமானை தவறாது வழிபாடு செய்து வந்த சிறுவன் என்பதால், அவனது உயிரினைக் கவர்வதற்கு தனது தூதர்களை அனுப்பாமல், இயமன் தானே நேராக சென்றான் என்று இங்கே உணர்த்துகின்றார் போலும். உயிரினைக் கவர்வதை உயிரினை உண்பது என்று நயமாக கூறுகின்றார். பேணி=போற்றி, விரும்பி; வேணி=சடைமுடி; வியன்=அகன்ற, இங்கே விரிந்த புகழ் என்று பொருள் கொள்ள வேண்டும். பெருமானை ஆணிப்பொன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஆணிப்பொன் என்றால் மாற்று குறையாத பொன் என்று பொருள். மற்ற பொன்னின் தன்மையை அறிந்து கொள்ள பொற்கொல்லர்கள் தாங்கள் வைத்திருக்கும் ஆணிப் பொன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அதன் தரத்தினை அளப்பார்கள். தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமான், அனைவரிலும் உயர்ந்தவன் என்பதை குறிப்பிடும் வண்ணம் பெருமானை ஆணிப்பொன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் மற்ற தெய்வங்களின் தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கும் வண்ணம் குறையேதும் இல்லாத தெய்வமாக சிவபெருமானை ஞானசம்பந்தர் காண்கின்றார். தன்னை தியானித்து வழிபடும் அடியார்களின் பெருந்துயரங்களையும் களையும் வல்லமை பெற்றவர் சிவபெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், அதற்கு இரண்டு உதாரணங்களை கூறுகின்றார். சிறுவன் மார்க்கண்டேயன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரே அந்த உதாரணங்கள். இருவரையுமே அழிவு நிச்சயம் என்ற நிலையிலிருந்து காப்பாற்றிய இறைவனின் கருணை, அவர்கள் இருவரும் இன்றும் வாழ வகை செய்துள்ளது.
பொழிப்புரை:
மார்க்கண்டேயர் பெருமான் பால் கொண்டிருந்த அன்பினால், அவரை மிகவும் உயர்வாக மதித்த இயமன், முன்னமே குறிப்பிட்டிருந்த நாளில் அவரது உயிரினைக் கவர்ந்து உண்ணும் பொருட்டு தானே நேரில் சென்ற போதிலும், தனது அடியான் செய்து கொண்டிருந்த வழிபாட்டிற்கு இடையூறாக வந்த காலன் என்று அவன் மீது மிகுந்த கோபம் கொண்டு அவனை உதைத்து வீழ்த்தியவர் சிவபெருமான். தன்னை தியானித்து போற்றி வழிபடும் அடியார்களின் கொடிய துன்பங்களையும் விலக்கி அருள் புரியும் தன்மை உடைய சிவபெருமான், தனது சடைமுடியில் பிறைச் சந்திரனை அணிந்துள்ளார். ஆணிப் பொன் போன்று சிறந்த குணங்களை உடையவராக, புகழ் மிகுந்த சிரபுரம் தலத்தில் அமர்ந்துறையும் பெருமானின் திருவடிகளைத் தொழும் அடியார்களை கொடிய துன்பங்கள் தரும் வினைகள் சென்று சாரா.
பாடல் 5:
பாரு நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்திழி செழும்புனல் கோட்டாறு
வாரும் தண்புனல் சூழ்ச் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே
விளக்கம்:
பார்=மண், உலகம்; இரவி=சூரியன்; பனி மதி=குளிர்ந்த சந்திரன்; ஓர்தல்=உணர்தல்; ஓரும் வாயு=தோடு உணர்வினால் அறியப்படும் காற்று; ஒண்கனல்=ஒளி வீசும் நெருப்பு; கோட்டாறு=வளைந்து செல்லும் நதி;
பொழிப்புரை:
நிலம், நீர், ஒளி வீசும் பல கதிர்களை உடைய சூரியன், குளிர்ந்த சந்திரன், ஆகாயம், தொடு உணர்வினால் அறியப்படும் காற்று, பிழம்பாக ஒளிவீசும் நெருப்பு, வேள்வித்தலைவன் என்றும் இயமானன் என்றும் அழைக்கப்படும் ஆன்மா, ஆகிய எட்டு உருவங்களாக விளங்கும் பெருமான், சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் உறைகின்றார். சந்தனம் மற்றும் அகில் மரங்களின் துண்டுகளுடன் வந்து வேகமாக பாய்ந்து வருவதும் செழித்த நீர்வளம் உடையதும் வளைந்து பாயும் தன்மை உடையதும் ஆகிய காவிரியின் குளிர்ந்த நீரினால் சூழப்பட்ட சிறப்புற நகரத்தில் உறையும் பெருமானைத் தொழும் அடியார்கள், வருத்தம் தரும் வினைகள் நீங்கப்பெற்று வருத்தம் ஏதுமின்றி வாழ்வார்கள்.
பாடல் 6:
ஊழி அந்தத்தின் ஒலி கடல் ஓட்டந்து இவ்வுலகங்கள் அவை மூட
ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார் தாம்
யாழின் நேர் மொழி ஏழையோடு இனிதுறை இன்பன் எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரம் தொழுதெழ வல்வினை அடையாவே
விளக்கம்:
ஓட்டந்து=ஓட்டம் தந்து; ஆழி=கடல், இங்கே அருட்கடலாக பெருமான் விளங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. அந்தம்=முடிவு; பிரளய வெள்ளத்தில் பூமி முழுவதும் மூழ்கிய போதிலும் சீர்காழி நகரம் மிதந்தது என்றும், பெருமான் உமையன்னையுடன், ஓம் எனப்படும் பிரணவ மந்திரத்தை தோணியாக மாற்றி, இந்த தலம் வந்தடைந்து தங்கி, மீண்டும் உலகினை படைத்தார் என்று சீர்காழி தலபுராணம் குறிப்பிடுகின்றது. அப்போது சில தேவர்கள் பறவைகளாக மாறி அந்த தோணியை சுமந்தனர் என்றும் கூறுவார்கள். இந்த செய்தி அப்பர் பெருமானின் சீர்காழி பதிகத்தில் (4.82.1) குறிப்பிடப் படுகின்றது. வண்மை=வள்ளல் தன்மை; கால்=நீர், இங்கே கங்கை நதி; கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றுக்கொண்ட பண்பினை வள்ளல் தன்மை என்று அப்பர் பிரான் வியந்து பாடுகின்றார். பகீரதனின் தவத்திற்கு இறங்கி, தனது எல்லையற்ற அருளினை கொடையாக வழங்கி, கங்கை நதியைத் தாங்கினார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானுக்கு ஆளாகி, அவனுக்கு திருத்தொண்டு புரிவதைத் தவிர்த்து உலகத்து உயிர்கள் செய்யக் கூடிய காரியம் வேறு யாது உள்ளது என்று பாடலை அப்பர் பிரான் முடிக்கின்றார்.
பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் நளிர் மதியம்
கால் கொண்ட வண்கைச் சடை விரித்தாடும் கழுமலவர்க்கு
ஆள் அன்றி மற்றும் உண்டோ அந்தண் ஆழி அகலிடமே
இதே தகவல், பறவைகள் தோணியை சுமக்க, அந்த தோணி வந்தைடையும் வண்ணம் உயர்ந்து நின்ற தலம் தோணிபுரம் என்று ஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றினில் (3.100.9) சொல்லப் படுகின்றது. வெல்பறவை=வெற்றி கொள்ளும் தன்மை உடைய கருடன்; திருமாலின் கொடியினில் கருடனின் உருவம் பொறிக்கப் பட்டுள்ளது என்ற தகவல் இங்கே சொல்லப் பட்டுள்ளது. பல் பறவைக் படியாய்=பல பறவைகள் சேர்ந்து ஓருருவம் கொண்டது போன்று விரைந்து மேலே பறந்து சென்ற அன்னம்; பிரமனும் திருமாலும் அன்னமாகவும் பன்றியாகவும் மாறி பெருமானின் முடியையும் அடியையும் தேடிக் கொண்டு வெகு தூரம் சென்ற பின்னரும் தங்களால் காண முடியாததால் வருந்தி, தங்களது பயணத்தை விட்டொழிந்தார்கள் என்று கூறும் சம்பந்தர், அவ்வாறு நீண்ட பெருமான் தனது சிந்தையிலும் தோணிபுரத்திலும் இடம் பெற்றுள்ளார் என்று கூறுகின்றார்.
வெல் பறவைக் கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும்
பல் பறவைப் படியாய் உயர்ந்தும் பன்றியதாய்ப் பணிந்தும்
செல்வற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும்
தொல்பறவை சுமந்து ஓங்கு செம்மைத் தோணிபுரம் தானே
பொழிப்புரை:
ஊழி முடிவினில் பேரொலியுடன் பொங்கி வந்த கடல் அலைகள் உலகத்தினை மூடிய போது, அச்சம் கொண்டு ஓடி வந்த தேவர்கள், எந்தை பெருமானே, கருணைக் கடலே நீர் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று பெருமானிடம் சரண் அடைந்தனர். அப்போது பெருமான், அந்த ஊழி வெள்ளத்திலும் உயர்ந்து நிற்கும் வண்ணம், சீர்காழி நகரத்தினை உயரச் செய்தவர் பெருமான். அந்த தலத்தினை பிரணவ மந்திரமாகிய தோணியில் பெருமானும் பிராட்டியும் அமர்ந்து சென்றடைந்த போது தேவர்கள் பறவைகள் வடிவில், அந்த தோணியுடன் சீர்காழி புகுந்தனர். யாழைப் போன்று இனிய மொழியினை உடைய பிராட்டியுடன் இனிதாக அமர்ந்துள்ள பெருமான், இன்பமே வடிவமாக உள்ளார். அத்தகைய பெருமானார் வாழும் சிரபுரம் நகர் சென்றடைந்து பெருமானைத் தொழுதெழும் அடியார்களை கொடிய வினைகள் அணுகா.
பாடல் 7:
பேய்கள் பாடப் பல் பூதங்கள் துதி செயப் பிணம் இடுகாட்டில்
வேய் கொள் தோளி தான் வெள்கிட நடமாடும் வித்தகனார் ஒண்
சாய்கள் தான் மிக உடையான் தண் மறையவர் தகு சிரபுரத்தார் தாம்
தாய்கள் ஆயினார் பல்லுயிர்க்கும் தமைத் தொழும் அவர் தளராரே
விளக்கம்:
சாய்கள்=புகழ்; வேய் கொள் தோளி=மூங்கில் போன்று அழகிய தோளினை உடைய காளி; வெள்கிட=நாணம் அடைய; காளி நாணமடையும் வண்ணம் நடனமாடிய பெருமான் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். காளியுடன் போட்டியிட்டு நடனமாடி, காளியை பெருமான் வென்றதை நாம் அனைவரும் அறிவோம். திருவாலங்காடு தலத்தில் உள்ள காளிதேவியின் உற்சவச் சிலை நமது நினைவுக்கு வருகின்றது. நடனப் போட்டியில் தோல்வியுற்ற காளிதேவியின் முகம் தலைகவிழ்ந்த நிலையில் நாணம் பொங்க இருப்பதை நாம் இந்த தலத்தில் காணலாம்.
பொழிப்புரை:
பேய்கள் பாடவும், பூதங்கள் புகழ்ந்து போற்றவும், பிணங்கள் இடப்படும் சுடுகாட்டினில், மூங்கில் போன்று அழகிய தோளினை உடைய காளிதேவி நாணமடையும் வண்ணம் நடனப் போட்டியில் காளியை வென்ற திறமையாளர் சிவபெருமான். சிறந்த புகழினை உடைய மறையவர்கள் வாழும் தகுந்த இடமாகிய சிரபுரம் நகரினில் உறையும் இறைவன், உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் தாயாக உள்ளார். இந்த பெருமானைத் தொழும் அடியார்கள், தங்களது வாழ்வினில் துயரங்கள் நீகப்பெற்று தளர்ச்சி ஏதும் அடையாமல் இன்பத்துடன் வாழ்வார்கள்.
பாடல் 8:
இலங்கு பூண் வரை மார்புடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று
கலங்கச் செய்தலும் கண்டு தம் கழலடி நெரிய வைத்து அருள் செய்தார்
புலங்கள் செங்கழுநீர் மலர்த் தென்றல் மன்று அதனிடைப் புகுந்து ஆரும்
குலம் கொள் மாமறையவர் சிரபுரம் தொழுதெழ வினை குறுகாவே
விளக்கம்:
இலங்கு=விளங்கும்; வரி=மலை; பூண்=அணிகலன்கள்; புலங்கள்=வயல்கள்; நிலபுலம் என்ற சொல் இன்றும் வழக்கில் இருப்பதை நாம் உணரலாம். குலம்=கூட்டம்; மா=பெருமை;
பொழிப்புரை:
மலை போன்று அகன்றும் திண்மையாகவும் காணப்படும் தனது மார்பினில் பல அணிகலன்களை அணிந்துள்ள அரக்கன் இராவணன், அழகிய கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, மலையின் அசைவினால் பார்வதி தேவி அச்சம் அடைந்ததைக் கண்ட பெருமான், தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றி, அரக்கன் மலையின் கீழே அகப்பட்டு நெரியுமாறு செய்தார். பின்னர் அரக்கன் தனது பிழைக்கு வருந்தி, சாமகானம் பாடி இறைஞ்சவே, அவனுக்கு சந்திரகாசம் வாளினை அளித்து அருள் புரிந்தார். வயல்களில் விளையும் செங்கழுநீர் மலர்களின் நறுமணத்தை தென்றல் காற்று சுமந்து கொண்டு வீசும் அரங்குகளை உடையதும் சிறப்பு வாய்ந்த அந்தணர்கள் வாழ்வதும் ஆகிய சிரபுரம் நகரினில் உறையும் இறைவனைத் தொழுதெழும் அடியார்களை வினைகள் சென்று அடையா.
பாடல் 9:
வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று
கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய்க் கிளறியும் பறந்தும் தாம்
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுதெழ வினை அவை கூடாவே
விளக்கம்:
சென்று அணை=சூழ்ந்து கொண்டு மொய்க்கும்; மாயன்=திருமால்; பலவிதமான மாயங்கள் செய்து அரக்கர்களை வெற்றி கொள்ளும் ஆற்றல் உடையவர் என்பதால், மாயன் என்று திருமால் அழைக்கப் படுகின்றார். பண்டு கண்டது காண்டல்=புதிதாக ஒன்றையும் காணாமல், தாங்கள் முன்பு கண்டதையே காணுதல்; தங்கள் முன்னே தோன்றிய தீப்பிழம்பின், அடியையோ முடியையோ காண்பதற்கு பிரமனும் பெருமுயற்சி செய்த போதிலும், அவர்களால் புதியதாக ஏதும் காணமுடியவில்லை என்று சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். பரமேட்டி=தனக்கு மேலாக வேறு எவரும் இல்லாதவன்; பசு=உயிர்கள்; பதி=தலைவன்; தங்களது முயற்சியால் பெருமானின் அடியையோ அல்லது முடியையோ கண்டு விடலாம் என்று அவர்கள் கொண்டிருந்த அகந்தை பின்னரும் தொடர்ந்தது என்பதை குறிப்பிடும் வண்ணம் பண்டு கண்டது காணவே என்ற தொடரினை சம்பந்தர் கையாண்டுள்ளார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். தங்களது முயற்சியில் தோல்வி அடைந்த பின்னர் இருவரும் பெருமானைத் தொழுதனர் என்பதால், இந்த விளக்கம் பொருத்தமாக தோன்றவில்லை. பரமேட்டி என்ற சொல்லுக்கு, உயிர்கள் கொள்ள வேண்டிய மேலான விருப்பமாக உள்ளவன் என்றும் பொருள் கூறப்படுகின்றது.
பொழிப்புரை:
வண்டுகள் சென்று சேரும் சிறப்பினை உடைய தாமரை மலரில் உறையும் பிரமனும் மாயன் என்று அழைக்கப்படும் திருமாலும், தங்கள் இருவரில் யார் பெரியவன் என்று தங்களுள் வாதம் செய்து கொண்டிருந்த போது, தங்களின் முன்னே எழுந்த நீண்ட நெருப்புப் பிழம்பின் அடியையோ முடியையோ காண்பவர் எவரோ அவரே தங்களில் பெரியவர் என்ற முடிவுடன், முறையே அன்னமாக பறந்தும் பன்றியாக கீழே தோண்டிச் சென்ற போதிலும், முடியையும் அடியையும் காண பெருமுயற்சி செய்த போதிலும், அவர்களால் புதியதாக ஏதும் காண முடியாத வண்ணம், நீண்ட தீப்பிழம்பாக நின்றவன் சிவபெருமான். அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக உள்ள எமது பெருமான், தனக்கு மேலாக வேறு எவரும் இல்லாத தன்மையை உடையவன்; அத்தகைய இறைவன் செல்வவளம் நிறைந்த சிரபுரம் நகரத்தில் உறைகின்றான்; அவனைத் தொழுதெழும் அடியார்களை வினைகள் சென்று கூடா.
பாடல் 10:
பறித்த புன் தலைக் குண்டிகைச் சமணரும் பார் மிசைத் துவர் தோய்ந்த
செறித்த சீவரும் தேரரும் தேர்கிலாத் தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியின் மூழ்கிட இள வாளை
வெறித்துப் பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிகத்தானே
விளக்கம்:
மேதி=எருமை மாடு; ஆவி=குளம்; வெறித்து=கலங்கி; குண்டிகை=கமண்டலம்; தங்களது தலையில் உள்ள முடிகளை, பறித்துப் பிடுங்கிக் கொள்ளும் வழக்கத்தை அந்நாளைய சமணர்கள் கொண்டிருந்தனர் என்பது பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அப்பர் பிரான் திருவதிகை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடல் இதனை மிகவும் விரிவாக உணர்த்துகின்றது.
முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டித்
தலை பறிக்கும் தன்மையர்களாகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார்
மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதனழியச் செற்ற சேவடியினானை
இலை மறித்த கொன்றை அந்தாரான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
சமணப் பெண் துறவிகள், ஆண் துறவிகளுக்கு சேவை செய்து வந்தனர். அத்தைகைய சேவைகளில் ஒன்று தான் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. சமணசமய நூல்களைக் கற்றுத் தேர்ச்சி அடைவதால் மட்டுமே எவருமே சமண குருவாக மாற முடியாது. அவர்கள் பொறுமையின் எல்லையை சோதனை செய்து பார்த்த பின்னரே, அவர்கள் குருவாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். முடி பறித்தல் என்பது அத்தகைய ஒரு சோதனை. தலையில் உள்ள முடிகள் ஒவ்வொன்றாக, அடுத்தவரால் பிடுங்கப்படும் போது ஏற்படும் வலியினைப் பொறுத்துக் கொண்டு கண்களில் நீர் வாராமல் இருக்கும் பக்குவத்தை அடைந்தவர்களே பொறுமையில் சிறந்தவர்களாக கருதப் படுவார்கள். உடை உடுத்தாமல் இருத்தல் மற்றும் நீராடாமை சமணத் துறவிகளுக்கு உரிய நெறியாக கருதப் பட்டாலும், சமணப் பெண் துறவிகள் உடை அணிந்து வாழ்ந்தனர் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து அறிகின்றோம். மேலும் பெண் சமணத் துறவிகள், மேல் குறிப்பிட்ட சேவையினை செய்த போது ஆண் துறவிகளை தெய்வத்திற்கு சமமாக கருதினர் என்பதும் நமக்கு புலனாகின்றது. இவ்வாறு தங்களது தலையில் உள்ள முடிகள் பலவந்தமாக நீக்கப்பட்டதால் தலை முழுதும் புண்கள் உடையவர்களாக, மற்றவர் அருவருக்கும் தன்மையில் இருந்தமை இங்கே புன்தலை என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது போலும். தேரர்=புத்தர்;
பொழிப்புரை:
பலவந்தமாக மயிர் பறிக்கப் பட்டமையால் புண்கள் மிகுந்து அருவருக்கத்தக்க நிலையில் காணப்படும் தலை மற்றும் குண்டிகையுடன் உலகத்தவர்க்கு காட்சி தரும் சமணர்களும், துவர்ச் சாயம் தோய்க்கப்பட்ட சீவரம் என்று அழைக்கப்படும் ஆடையினை அணிந்த புத்தர்களும் அறிய முடியாத பெருமான் தேவர்களின் தலைவனாக விளங்குகின்றான். கரும்புகளை முறித்துத் தின்ற எருமைகள் குளங்களில் மூழ்க, அதனால் அச்சம் அடைந்த வாளை மீன்கள் கலக்கம் கொண்டு பாயும் வயல்கள் நிறைந்த சிரபுரம் தலத்தினில் உறையும் இறைவனைத் தொழும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு முழுவதுமாக நீங்கிவிடும்.
பாடல் 11:
பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப் பையரவோடு அக்கு
நிரை செய் பூண் திரு மார்புடை நிமலனை நித்திலப் பெரும் தொத்தை
விரை செய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே
விளக்கம்:
பாணி=கை; அத்தன்=தந்தை, தலைவன்; பையரவு=படம் எடுக்கும் பாம்பு; அக்கு=எலும்பு, சங்கு என்று இரு பொருள் கொண்ட சொல்; உருத்திராக்கம் என்ற பொருள் பல பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. விரை=நறுமணம்; பரசு=மழு ஆயுதம்;
பொழிப்புரை:
மழுப்படை ஏந்திய கையினை உடையவனும், அடியார்களுக்கு தந்தையாகவும் தலைவனாகவும் இருக்கும் பெருமானை, விடம் கொண்ட பாம்புடன், எலும்பு மாலையையும் தனது மார்பினில் நிறைந்திருக்கும் வண்ணம் பூண்டுள்ள அழகிய மார்பினை உடையவனும், இயல்பாகவே மலங்களிளிருந்து நீங்கியவனும், முத்துக் குவியல்கள் குன்றாக இருக்கும் வண்ணம் காட்சி அளிப்பவனும், நறுமணம் வீசும் பூஞ்சோலைகள் நிறைந்த சிரபுரம் தலத்தின் தலைவனை, தேவர்களின் பெருமானைப், புகழ்ந்து ஞானசம்பந்தர் பாடிய செந்தமிழ் பாடல்களை முறையாக பாடும் அடியார்கள் பரமனைப் பணிந்து வணங்கும் அடியார்களாக விளங்குவார்கள்.
முடிவுரை:
இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், சிரபுரத்து இறைவனைத் தொழுதெழும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்று சம்பந்தர் கூறுகின்றார். தொழுதெழும் என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து பெருமானைப் பணிந்து பின்னர் எழும் அடியார்கள் என்று உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில், பெருமானைப் பணியும் அடியார்கள் வினைகளுடன் பொருந்தாமல், வினைகள் நீங்கப் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றும், இரண்டாவது பாடலில் வினைகள் அத்தகைய அடியார்களுடன் பிணைந்து நில்லாமல் விலகும் என்றும், மூன்றாவது மற்றும் எட்டாவது ஒன்பதாவது பாடல்களில் தலைவனைக் கும்பிடும் அடியார்களை வினைகளும் வினைகளால் ஏற்படும் குற்றங்களும் சென்று அடையா என்றும், நான்காவது பாடலில் ஆணிப் பொன்னாகிய இறைவனைத் தொழும் அடியார்களை கொடிய வினைகள் சென்று அடையா என்றும், ஐந்தாவது பாடலில் சிரபுரத்து இறைவனைத் தொழும் அடியார்கள் தங்களது செயல்களால் உயிர்க்கு வருத்தும் விளைவிக்கும் வினைகளிலிருந்து விடுதலை பெற்று வருத்தம் அடையாமல் இருப்பார்கள் என்றும், ஆறாவது பாடலில் இறைவனைத் தொழும் அடியார்களை கொடிய வினைகள் சென்று அடையா என்றும், ஏழாவது மற்றும் பத்தாவது பாடல்களில் அத்தகைய அடியார்கள் தொல்லை தரும் வினைகள் நீங்கப்பெற்று தளர்வு ஏதும் இன்றி வாழ்வார்கள் என்றும் ஞானசம்பந்தர் கூறுகின்றார். நாமும் இந்த பதிகத்தை பக்தியுடன் முறையாக பாராயணம் செய்தும், சிரபுரத்து இறைவனை தொழுதெழுந்தும் நமது வினைகளை முற்றிலும் தீர்த்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, முக்தி உலகம் சென்றடைந்து, என்றும் அழியாத பேரானந்தம் பெறுவோமாக.