இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


அரனை உள்குவீர்

அரனை உள்குவீர்

பதிக எண்: 1.90 சீர்காழி குறிஞ்சி

பின்னணி:


சீர்காழி நகரில் அப்பர் பிரான் திருஞானசம்பந்தரை சந்தித்த பின்னர், இருவரும் ஒன்றாக சீர்காழி நகரத்து திருக்கோயிலின் உள்ளே சென்று பெருமானைத் தொழுதனர்; அதன் பின்னர் இருவருமாக அருகிலுள்ள திருக்கோலக்கா தலம் சென்றனர். இருவருமாக சீர்காழி திரும்பிய போது அப்பர் பிரான் காவிரிக் கரையினில் இருக்கும் பல தலங்கள் செல்வதற்கு விருப்பம் கொண்டவராக சீர்காழி நகரிலிருந்து புறப்பட்டார். தன்னிடம் விடைப் பெற்றுக் கொண்டு அப்பர் பிரான் சென்ற பின்னர் பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கியிருந்த திருஞான சம்பந்தர் பல பதிகங்களை சீர்காழி தலத்து இறைவன் மீது பாடினார். அத்தகைய பதிகங்களில் சில தமிழ் இலக்கியத்திற்கு முன்மாதிரியாக விளங்கின. இந்த தகவலை சேக்கிழார் அளிக்கும் பெரிய புராணத்து பாடலை நாம் இங்கே காண்போம். விகற்பம்=மாறுபட்ட

செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழி மாற்றும்

வந்த சீர் மாலைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்

சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக்குறள் சாத்தி

எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு

நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்

சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக

மூல இலக்கியமாக எல்லாப் பொருட்களும் உற்ற

ஞாலத்து உயர் காழியாரைப் பாடினர் ஞானசம்பந்தர்

மேலே குறிப்பிட்ட பெரியபுராணப் புராணப் பாடலில் சேக்கிழார் உணர்த்தும் பதிகங்களில் மொழிமாற்று, மாலைமாற்று, வழிமொழி மற்றும் ஏகபாதம் ஆகிய வகையினில் அமைந்த பதிகங்களை நாம் சிந்திந்தோம். தற்போது தமிழ் இருக்குக் குறள் என்று அழைக்கப்படும் சீர்காழி பதிகத்தினை காண்போம். மற்ற சித்திரக் கவிகளைப் போன்று இந்த பதிகமும் பன்னிரண்டு பாடல்களைக் கொண்டதாகவும், சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களும் பதிகத்தின் பன்னிரண்டு வேறுவேறு பாடல்களில் வரும் வண்ணமும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பதிகம் குறிஞ்சி பண்ணில் அமைக்கப் பட்டுள்ளது. குறிஞ்சிப் பண்ணில் அமைக்கப்பட்டுள்ள ஏழு பதிகங்கள் (1.90 முதல் 1.96 வரை) இருக்குக் குறள் என்றே அழைக்கப்படுகின்றன. மேலும் கொல்லிப் பண்ணில் அமைக்கப்பட்ட இரண்டு பதிகங்களும் (3.41 & 3.42) இருக்குக் குறள் என்றே அழைக்கப் படுகின்றன.

இந்த பதிகத்தினை இருக்குக்குறள் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். குறள் என்றால் சிறியது என்று பொருள். சிறிய அடிகளைக் கொண்ட பாடல் என்பதை உணர்த்தும் வண்ணம் குறள் என்று அழைக்கப் படுகின்றது. ஒவ்வொரு அடியிலும் இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல். மந்திரம் என்ற சொல், சொல் சுருக்கம் உள்ளது என்ற பொருளினைத் தரும். இருக்கு வேதத்தில் உள்ள மந்திரங்கள் அளவில் சிறியதாக இருக்கும் நிலை பற்றி இந்த பாடலையும் இருக்குக்குறள் என்று பெயரிட்டு சேக்கிழார் அழைத்தார் போலும். மந்திரங்கள் தன்னை எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றும் வல்லமை கொண்டது போன்று இந்த பதிகமும் அமைந்துள்ளது என்று தண்டபாணி தேசிகர் அவர்கள் கூறுவார்கள். திருஞானசம்பந்தர் பதிகங்கள் அனைத்துமே இருக்கு வேதத்தின் சாரமாக கருதப் படுவதாக சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் கூறுகின்றார். முதுகுன்றத்து இருக்குக் குறள் பதிகத்தை குறிப்பிடும் பாடலில் சேக்கிழார் இருக்குக் குறள் துணை மலர் என்று குறிப்பிடுகின்றார். ஒன்றுக்கொன்று துணையாக உள்ள இரண்டு சீர்கள் கொண்ட அடிகள் என்பதை உணர்த்தும் வண்ணம் சேக்கிழார் இவ்வாறு கூறுகின்றார். எனவே இந்த பதிகங்கள் நான்கு அடிகள் கொண்ட பாடல்களே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் பல பதிப்புகளில் இரண்டு அடிகள் கொண்ட பாடலாக இந்த பதிகங்கள் அச்சிடப் பட்டுள்ளன. சில பதிப்புகளில் இரண்டு அடிகளாக இருந்தாலும், இடையில் கமா எனப்படும் நிறுத்தக் குறியுடன் அச்சிட்டு நான்கு அடிகள் கொண்ட பாடல்கள் என்று உணர்த்துவதையும் நாம் காணலாம்.

பாடல் 1:

அரனை உள்குவீர்

பிரமனூருள் எம்

பரனையே மனம்

பரவி உய்ம்மினே

விளக்கம்:

உள்குதல்=நினைத்தல்; இந்த பாடலில் பெருமானை நினைப்பீர்களாக என்று உலகத்தவரை நோக்கி திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானை மனதினால் நினைப்பது, பெருமானை குறித்து செய்யப்படும் வழிபாட்டின் முதற்படி என்பதால், இந்த பதிகத்தின் முதற்பாடலில், மிகவும் பொருத்தமாக பெருமானை நினைத்தல் சொல்லப்படுகின்றது. உய்தல்=பிழைத்தல், உயிர் வாழ்தல்; இங்கே நல்ல கதியைப் பெறுதல் என்ற பொருளில் வருகின்றது. நல்ல நெறி என்பது யாது என்பதை அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் (4.11.9) நமது நினைவுக்கு வருகின்றது. முதல்வனாகிய முக்கண்ணனே அனைவருக்கும் முன்னே தோன்றிய நெறியாவான். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபெருமானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான, வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும் என்பதே இந்த பாடலின் கருத்தாகும்.

முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்

தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே

அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்

நன்னெறியாவது நமச்சிவாயவே

பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.69.11) தேவாரப் பாடல்களைப் பாடி தவமல்கு சிந்தையராகி நன்னெறி அடையலாம் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். ஏந்தி=ஏந்தியவராகிய பெருமான்; நன்னெறி=வீடுபேறு; நலமல்கு= நலம் பயக்கும் சிந்தனைகள்; கலம்=மரக்கலம்; தண்=குளிர்ச்சி பொருந்திய; பலமல்கு வெண்டலை என்று பெருமான் தனது கையினில் ஏந்தியுள்ள பிரமகபாலத்தின் சிறப்பினை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பிரமனின் ஆணவத்தினை அடக்கியதன் அடையாளமாக உள்ள தலை; அடியார்கள் இடும் ஆணவம் கன்மம் மாயை ஆகிய இழிவான பொருட்களையும் ஏற்றுக் கொள்ளும் தலை; எத்தனை மனிதர்கள் தங்களது மலங்களை சமர்ப்பித்தாலும், நிறையாமல் நின்று, அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் படைத்த தலை; வேறு எவராலும் தீண்ட முடியாத தலை; என்று பலவிதமான சிறப்புகளைக் கொண்டது. மரக்கலங்கள் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய கடலால் சூழப்பட்ட சீர்காழி நகரினைச் சார்ந்த திருஞானசம்பந்தன், பல சிறப்பான தன்மைகள் பொருந்திய தலையினை, உலர்ந்து வெண்மையாக காணப்படும் பிரம கபாலத்தைத் தனது கையினில் ஏந்தியவராக. திருப்பாண்டிக் கொடுமுடி தலத்தினில் உறையும் பெருமானைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் பத்தினையும் முறையாக சொல்லும் வல்லமை வாய்ந்த அடியார்கள் தங்களது துயரங்கள் தீர்ந்து, நலம் தரும் சிந்தனை உடையவர்களாகி, அதன் பயனாக மறுமையில் முக்திநெறியினை அடைந்து என்றும் அழியாத பேரின்பத்தில் திளைப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கலமல்கு தண் கடல் சூழ்ந்த காழியுண் ஞானசம்பந்தன்

பல மல்கு வெண்டலை ஏந்தி பாண்டிக் கொடுமுடி தன்னைச்

சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து

நலமல்கு சிந்தையராகி நன்னெறி எய்துவர் தாமே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.94.11) தேவாரப் பாடல்களைப் பாடி நலங்கொள் சிந்தையராகி நன்னெறி அடையலாம் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். வலம் கொள்; மற்றவர்கள் வலமாக வந்து வணங்கப்படும் தன்மை உடைய; பண்டைய நாளில் தங்களில் உயர்ந்தவராக கருதப்படுவோரை வலம் வந்து வணங்குதல் பழக்கமாக இருந்தது போலும். போரினில் வென்றவர்களை தோற்றவர்கள் வலம் வந்து வணங்குதலும் பழக்கத்தில் இருந்து வந்தது. எனவே தான் மழுவாளினைத் தனது கையினில் கொண்டுள்ள பெருமான், அனைவராலும் வலம் வந்து வணங்கப் பட்டார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வலம் கொள் வெண்மழுவாளன் என்ற தொடருக்கு தனது வலது கையினில் மழு ஆயுதத்தை உடையவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நறுமணம் நிறைந்த பூக்களை, இறைவனின் திருமேனியின் மீது தூவி வழிபடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதால், அத்தகைய மலர்களை அளிக்கும் சோலைகளை நலம் தரும் பூஞ்சோலைகள் என்று அழைக்கின்றார். நலம் தரும் பூஞ்சோலைகள் நிறைந்த காழி நகரத்தைச் சார்ந்தவனும், நன்றாக தமிழ் மொழியில் தேர்ச்சி அடைந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன், அனைவராலும் வலம் வந்து வணங்கப் படுபவனும் வெண்மழுவினைத் தனது வலது கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவனை, வாழ்கொளிபுத்தூர் தலத்தில் உறையும் இறைவனை, தனது சடையில் விளங்கித் தோன்றும் வண்ணம் பிறைச் சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை, புகழ்ந்து பாடிய இந்த பத்து தமிழ் பாடல்களையும் பாடும் வல்லமை பெற்றவர், அனைவர்க்கும் நன்மை பயக்கும் சிந்தையர்களாக மாறி, நன்னெறியில் ஈடுபடுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நலம் கொள் பூம்பொழில் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்

வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை

இலங்கு வெண் பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்

நலம் கொள் சிந்தையராகி நன்னெறி எய்துவர் தாமே

நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் (3.49.1) திருஞானசம்பந்தர், ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது நமசிவாய மந்திரம் என்று கூறுகின்றார். திருவைந்தெழுத்தை ஓதி பயன் பெற விரும்புவோர் மனம் மொழி மெய் என்ற மூன்றாலும் பெருமானுடன் ஒன்றி நிற்கும் நிலை இங்கே சொல்லப் பட்டுள்ளது. மல்கி=மிகுந்து; நமச்சிவாய மந்திரம் மனம் கசிந்துருகி, கண்ணீர் மல்கி, வாயினால் ஓத வேண்டும் என்று குறிப்பிடப் படுகின்றது. நன்னெறி=சிவநெறி; சிவநெறியாவது சரியை, கிரியை யோகம் மற்றும் ஞானம் எனப்படும் நான்கு வழிபாட்டு முறைகள்; உய்த்தல்=துணையாக நின்று செலுத்துதல்; நான்கினும் மெய்ப்பொருள் என்று வேதங்களின் இருதயமாக நமச்சிவாய மந்திரம் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

பெருமானின் திருநாமத்தை உரைப்பதே நன்னெறி என்று திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.92.1) திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இந்த பாடலில் இம்மையில் நோய் தீர்க்கும் மந்திரமாகவும் மருந்தாகவும் செயல்படும் பெருமானின் திருநாமம், மறுமையில் நமது உயிர் நன்னெறி அடைவதற்கும் உதவும் என்று கூறுகின்றார். மேலும் மழபாடி மேய மருந்து என்றும் வலஞ்சுழி மருந்து என்றும், மாத்தூர் மேய மருந்து என்றும், தேவர்கள் தேடும் மருந்து என்றும், மணஞ்சேரி மருந்து என்றும், பல பாடல்களில் தேவார ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். புறவு=தோட்டம்;

மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறி அவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே

பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்

செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே

இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.61.9) அப்பர் பிரான், இராமேச்சுரத்து இறைவனை நாடி வாழ்வதே நன்னெறியாகும் என்று கூறுகின்றார். தேடி=வேறொரு திருவுருவத்தை தேடி; இலிங்கம் கொண்டு வருவதற்காக நர்மதை நதிக்கரைக்கு சென்ற அனுமன் வருவதற்கு தாமதம் ஆனதால், வேறு ஒரு உருவத்தை தேடிய செய்கை இங்கே குறிப்பிடப் படுகின்றது என்று சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். சீதா பிராட்டி மணலால் செய்த இலிங்கம் தாபிக்கப்பட்டு வழிபடப்பட்டது என்று தலபுராணம் கூறுகின்றது. அதன் பின்னர் அனுமன் கொண்டு வந்த இலிங்கத்தை புறக்கணிக்காமல், அதனையும் திருக்கோயிலில் இராமர் தாபித்து வழிபட்டார் என்று தலபுராணம் கூறுகின்றது. அனுமன் ஏமாற்றம் அடையாமல் இருக்கும் பொருட்டு, அடியார்கள் அனைவரும் அனுமன் கொணர்ந்த இலிங்கத்தை வழிபட்ட பின்னரே ராமநாதரை வழிபடுவார்கள் என்று இராமன் ஆறுதல் கூறியதாக தலபுராணம் உணர்த்துகின்றது. குன்றினார்=ஒழுக்கத்தில் குன்றியவர்கள்; தவம் செய்வது தொடர்ந்து நல்லொழுக்கத்துடன் வாழ்வதற்கும் நல்ல செயல்களை செய்வதற்கும் தான். ஆனால் அரக்கர்களோ, தவம் செய்து தங்களுக்கு வல்லமை தரும் வரங்களைப் பெறுகின்றனர். பின்னர் அந்த வல்லமை தரும் செருக்கினால் கொடிய செயல்கள் பல செய்து தவத்தின் பயனையும் அழித்துக் கொள்கின்றனர். எனவே தான், தவம் செய்து நற்பண்புகள் கொண்டு மேன்மேலும் உயராமல், பல தீய செயல்கள் செய்து தாழ்ந்த அரக்கர்கள் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கோடி மாதவங்கள் என்று எண்ணற்ற வருடங்கள் தவத்தில் ஈடுபட்டமை இங்கே உணர்த்தப் படுகின்றது. சக்கரத்தால் அழித்தார் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். திருமால் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சக்கரம் தானே. அதனால் தான் சக்கரம் என்று குறிப்பிட்டு, அந்த சொல் மூலமாக மற்ற படைகளையும் இங்கே உணர்த்துகின்றார். திருமால் இராமனாக அவதாரம் செய்த போது சக்கரப் படையினை பயன்படுத்தியதாக இராமயணத்தில் எங்கும் கூறப்படவில்லை. எண்ணற்ற தவங்கள் செய்வதை விடவும் பெருமானை வழிபடுவதே நன்னெறிக்கு வழிகாட்டும் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. எண்ணற்ற ஆண்டுகள் சிறந்த தவங்கள் செய்த பின்னரும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளாமல் கொடிய செயல்கள் செய்து குணம் குன்றி வாழ்ந்த அரக்கர்கள் அனைவரையும் பல படைகளால் அழித்து வீழ்த்திய திருமாலாகிய இராமன், மிகுந்த அன்பு கொண்டு, அனுமன் இலிங்கத் திருவுருவத்தினை கொண்டு வருவதற்கு தாமதம் ஆகியதால் வேறொரு இலிங்கத் திருவுருவத்தினைத் (மணலால் சீதா பிராட்டி பிடித்து வைத்த இலிங்கம்) தேடித் தாபித்து வழிபட்ட திருக்கோயில் இராமேச்சுரம் ஆகும். நெஞ்சமே இந்தத் திருக்கோயிலை நாடிச் சென்று வழிபடுவாயாக. அத்தகைய வழிபாடே உனக்கு நல்ல நெறியாக அமைந்து வீடுபேறு பெறுவதற்கு வழி காட்டும் வகையாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கோடி மாதவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம்

வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்பு கொண்டு

தேடி மால் செய்த கோயில் திருவிராமேச்சுரத்தை

நாடி வாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகும் அன்றே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.76.6) அப்பர் பிரான், நாயினும் கடைப்பட்ட தனக்கு, பெருமான் நன்னெறி காட்டி ஆண்டதாக குறிப்பிட்டு மகிழ்கின்றார்.ஆயிரம் என்ற சொல், எண்ணற்ற என்ற பொருளில் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. நோய்=மல வாசனைகள். தவங்கள் பல செய்து தனது ஐம்பொறிகளும் அடக்கிய, முனிவர்களும், ஒரு நிமிட நேரத்தில் தங்களது புத்தி பேதலித்து காமம், கோபம் முதலான குணங்களால் பாதிக்கப்பட்டு, தங்களது தவத்தின் வலிமையை இழந்த நிகழ்ச்சிகளை நாம் பல புராணங்கள் மூலம் அறிந்துள்ளோம். அவ்வாறான நிலை தனக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று இங்கே அப்பர் பிரான் வேண்டுகின்றார். நாயினும் கீழான தன்மை உடைய அடியேனை, சூலை நோய் கொடுத்து, நல்ல நெறியாகிய சிவநெறியினை எனக்குக் காட்டி, என்னை ஆட்கொண்ட இறைவனே, பல பாம்புகளை உடலில் அணிந்திருந்தாலும் அமுதமாக எனக்குத் தோன்றும் இறைவனே, நீ எனது உள்ளத்தில், அமுதம் போன்று எனக்கு இனியவனாக, வந்து தங்கிவிட்டாய்: எனது உள்ளத்தில் இவ்வாறு வந்து தங்கியதால் என்னை எந்த மலமும் அணுகாது. ஒருகால் பழைய தொடர்பு காரணமாக ஏதாவது மலம் என்னை வந்து சார்ந்தால், இறைவனே நீ தான் அருள் புரிந்து, அந்த நோயினை நீக்கவேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

நாயினும் கடைப்பட்டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்

ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து

நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க

நோயவை சாருமாகில் நோக்கி நீ அருள் செய்வாயே

வன்னியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.26.3) அப்பர் பிரான், வன்னியூர் பெருமான், தனது திருவடிகளில் சரணடைந்த அடியார்களுக்கு நன்னெறி காட்டுவர் என்று கூறுகின்றார். உயிரின் உண்மையான விருப்பம் பெருமானின் நிழலைச் சென்று அடைந்து என்றும் அழியாத பேரின்பமோடு இருப்பது தானே. அந்த உயிரின் உண்மையான ஏக்கத்தைத் தான், அப்பர் பிரான் உயிரினை தலைவியாக உருவகித்து இந்த பதிகத்தின் முதல் பாடலில் கூறுகின்றார். அந்த உயிரினுக்கு எவ்வாறு இறைவன் அருள் புரிகின்றார் என்பது இந்த பாடலில் விளக்கப் படுகின்றது. தானம் என்ற சொல்லுக்கு பெருமான் உறையும் திருத் தலங்கள் என்றும், அவர் நிலையாக இருக்கும் சிவலோகம் என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். உயிர்கள் தன்னை வந்து சேர வேண்டும் என்ற விருப்பம் கொண்டுள்ள பெருமான், உயிர்களுக்கு மெய்ஞானத்தை உணர்த்துகின்றார். வேதங்களிலும் பல தோத்திரங்களிலும் உணர்த்தப்படும் மெய்ஞானத்தை உணர்ந்த உயிர்கள், தாங்கள் அனுபவித்து உணரும் வழியாக சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நன்னெறிகளையும் பெருமான் உயிர்களுக்கு காட்டுகின்றார். அடியார்களின் பக்குவத்திற்கு ஏற்றவாறு இந்த நெறிகளை அவர்களுடன் கூட்டுவிக்கும் இறைவன், இந்த நன்னெறிகளை கடைப்பிடித்து, தன்னைச் சார்ந்து வாழும் அடியார்களுக்கு தான் உறையும் திருத்தலங்களை காட்டி தன்னை அவர்கள் வழிபடச் செய்கின்றார். இவ்வாறு தனது திருவடிகளை வணங்கும் அடியார்களுக்கு சாமீப சாலோக பதவிகளை வழங்குகின்றார்; மேலும் அவர்களுக்கு முக்தி நிலையும் அளித்து ஆனந்தத்தில் ஆழ்த்தும் பெருமான் வன்னியூர் தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஞானம் காட்டுவர் நன்னெறி காட்டுவர்

தானம் காட்டுவர் தம் அடைந்தார்க்கு எலாம்

தானம் காட்டித் தன் தாள் அடைந்தார்கட்கு

வானம் காட்டுவர் போல் வன்னியூரரே

விசயமங்கை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.71.10) அப்பர் பிரான், விசயமங்கைத் தலத்து இறைவனை வலம் வருவோரும் வாழ்த்திப் பாடுவோரும் நன்னெறி நாடி நலம் செய்வார்கள் என்று கூறுகின்றார். விலங்கல்=மலை, இங்கே கயிலை மலை; பதிகத்தின் ஐந்தாவது பாடலில் உடல் உறுப்புகள் உயிருக்கு உதவாமல் இருக்கும் நிலையினை குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த பாடலில், அந்த உறுப்புகள் உயிர்க்கு எவ்வாறு நன்மை புரிய முடியும் என்பதை விளக்குகின்றார். காலால் கோவிலை வலம் வருதலும், வாயினால் அவனது புகழினை எடுத்துரைக்கும் பாடல்களை இன்னிசையாக பாடுவதும் நமது உயிரினுக்கு உய்வினை அளிக்கும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இலங்கைக்கு அரசனாகிய இராவணனின் இருபது தோள்களும் அறுந்து விழுமாறு, அரக்கன் எடுக்கத் துணிந்த கயிலை மலையின் மீது தனது கால் பெருவிரலை ஊன்றி அரக்கனை வருத்திய விசயமங்கை இறைவனை, வலம் வந்து வணங்கும் அடியார்களும், அவனை வாழ்த்தி இன்னிசை பாடும் அடியார்களும், நன்னெறியை நாடிச் செல்வதால் தங்களது உயிருக்கு நன்மை செய்தவர்களாக திகழ்கின்றனர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இலங்கை மன்னன் இருபது தோள் இற

விலங்கல் சேர் விரலான் விசயமங்கை

வலம் செய்வார்களும் வாழ்த்தி இசைப்பார்களும்

நலம் செய்வார் அவர் நன்னெறி நாடியே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.90.2) அப்பர் பிரான், நமசிவாய மந்திரமே நன்னெறி காட்டும் என்று கூறுகின்றார். விச்சை=மந்திரம். ஞானம்=கல்வியால் விளையும் அறிவு. திருநாவுக்கரசர் தமிழ் மொழியில் நல்ல புலமை பெற்றிருந்தது மட்டுமல்லாமல், வடமொழி, பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். அத்தகைய புலமை பெற்றிருந்த காரணத்தால் தான் சமண கொள்கைகளை, ஐயம் திரிபறக் கற்று, சமணர்களின் சார்பில் புத்தர்களுடன் வாது செய்து அவர்களை வெல்லும் திறம் கொண்டிருந்தார். அப்படி இருந்தும், நமச்சிவாய மந்திரம் தான் கற்ற கல்வி என்று கூறுவதிலிருந்து நமச்சிவாய மந்திரத்தினை எவ்வளவு உயர்வாக அவர் மதித்தார் என்பது நமக்கு இங்கே புலனாகின்றது. நமச்சிவாய மந்திரமே நான் அறிந்த கல்வியாகும். நமச்சிவாய மந்திரமே அந்த கல்வியால் நான் பெற்ற ஞானமுமாகும். நமச்சிவாய மந்திரம் தான் நான் அறிந்த வித்தையாகும். நமச்சிவாய மந்திரத்தை எனது நா இடைவிடாது சொல்லும். இந்த நமச்சிவாய மந்திரம் தான் வீடுபேற்றை அடையும் வழியாகும்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

நமச்சிவாயவே நானறி விச்சையும்

நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

பெருமானைப் புகழ்ந்து வணங்குவதே புண்ணியம் மற்றும் நன்னெறி என்று திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். நுந்தாத=தூண்டல் வேண்டாத, தூண்டுதல் தேவைப்படாத. சிவபிரான், எப்போதும் ஒளி குன்றாத சுடர் விளக்கு என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. இறைவனின் பெருமை கூறும் திருநாமங்கள் சொல்வதே புண்ணியம் மற்றும் நன்னெறி என்று இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். நெஞ்சமே, புண்ணியம் நன்னெறி ஆகியவை என்ன என்று கேட்டாய் அல்லவா, அதற்கு விடை கூறுகின்றேன், கூர்ந்து கேட்பாயாக. நுண்ணிய வெண்ணூல் அணிந்த மார்பினனே, தூண்டுதல் தேவைப்படாத விளக்கே, வானத்தில் உலவும் தேவர்கள், நான்மறைகள், தாமரை மலர் மேல் உறையும் பிரமன், மற்றும் திருமால் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும், அவர்களால் கணக்கிட முடியாத திருநாமங்கள் உடைய இறைவனே, அழகிய ஆரூர் நகரில் உறையும் இறைவனே என்றும் பலகாலும் நீ இறைவனைத் துதிப்பாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போல், நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

புண்ணியமும் நன்னெறியும் ஆவதெல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்தக் கேள் நீ

நுண்ணிய வெண்ணூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண்சுடரே என்றும் நாளும்

விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரைமலர் மேல் நான்முகனும் மாலும் கூடி

எண்ணரிய திருநாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தா நில்லே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், நாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நாகேச்சரத்து இறைவனைச் சார்ந்து இருந்தால் தான் நாம் நன்னெறி அடைய முடியும் என்பதை இதன் மூலம் வலியுறுத்துகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடலை (6.66.1) நாம் இங்கே காண்போம். தீயவன் என்பதை தீ+அவன் என்று பிரித்து பொருள் கொள்ளவேண்டும். அணியான்=அருகில் இருப்பவன்; சேயவன்=தொலைவில் உள்ளவன். நிழல் என்ற சொல்லுக்கு ஒளி என்ற பொருளும் உள்ளது. மாயவன் என்பதற்கு திருமால் என்று பொருள் கொண்டு, மாயவனை மறையவனை என்ற தொடருக்கு திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. இந்த பாடலில் அப்பர் பிரான் இறைவனை, மறையோர்களின் மந்திரன் தந்திரன் என்று கூறுகின்றார். தந்திரம் என்ற சொல்லுக்கு, வழிமுறைகள் என்றும் ஆகமங்கள் என்று இரண்டு பொருள்கள் கூறப்படுகின்றன. மறையோர்கள் தங்கள் மந்திரன் தந்திரன் என்று கூறுவதால், வேள்வி போன்ற சடங்குகளில் மந்திரங்களைச் சொல்லுகையில் பின்பற்ற வேண்டிய செயல் முறைகளை குறிப்பதாக பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. பல தேவாரப் பாடல்களில் மந்திரமும் தந்திரமுமாக இருக்கும் இறைவன் என்று கூறப்பட்டுள்ளது. உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் தாயாக விளங்குபவனும், உயிர்த் தொகுதிகளில் உயர்ந்ததாக கருதப்படும் தேவர்களுக்கும், தேவர்கள் அல்லாத ஏனைய உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவனும், கயிலை மலையில் உறைபவனும், எல்லா உலகங்களாக இருப்பவனும், தனது அடியார் அல்லாதவருக்குத் தொலைவாக இருப்பவனும், தனது அடியார்களுக்கு மிகவும் அருகில் இருப்பவனும், தீப்பிழம்பு போன்று பிரகாசமாக இருப்பவனும், பிறரால் அறியப்படாத வண்ணம் மாயவனாக இருப்பவனும், வேதங்களின் உட்பொருளாக இருப்பவனும், அந்தணர்கள் தியானிக்கும் மந்திரமாகவும், அந்த மந்திரங்களைச் சொல்லும் போது பின்பற்றக் கூடிய வழிமுறையாக இருப்பவனும், வேள்விகளில் வளர்க்கப்படும் தீயாக இருப்பவனும், நாகேச்சரத்து நகரினில் உறைபவனும் ஆகிய இறைவனைச் சேராதார்கள், நல்ல நெறியில் செல்லாதவர்கள் ஆவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தாயவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம்

ஆயவனைச் சேயவனை அணியான் தன்னை அழலவனை நிழலவனை அறியவொண்ணா

மாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை வளராநின்ற

தீயவனைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.67.2), தன்னை நன்னெறிக்கு செல்லும் வண்ணம் அருள் புரிந்தவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடலில் தூங்காதார் மனத்து இருளை வாங்காதவன் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தூங்குதல் என்றால் புலன்களை செயலற்று இருக்குமாறு அடக்கி பெருமானை தியானித்து இருத்தல் என்று பொருள். நாம் ஆழ்ந்து தூங்கும் நிலையில் புலன்கள் செயலற்று அடங்கி இருப்பது போன்று, நாம் ஒருமித்த தியானத்தில் இருக்கும் போதும் புலன்கள் அவ்வாறு செயலற்று இருக்கவேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. அருளாளர்கள் அவ்விதம் இருந்து பெருமானை தியானித்து அனுபவித்த படியால் நாமும் அவ்வாறு இருக்கவேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார்கள். அருளாளர்களின் பாடல்கள் சொற்களின் குவியல் அல்ல. தங்களது அனுபவத்தை அவர்கள் பாடல்களாக வடித்து அளித்துள்ளனர். எனவே அந்த பாடல்களில் உள்ள சொற்களின் பொருளை மட்டும் நாம் அறிந்தால் போதாது. அந்த பொருள் உணர்த்தும் உணர்ச்சிகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பாடலின் பொருளையும் அந்த பொருள் உணர்த்தும் உணர்ச்சிப் பெருக்கையும் அறியும் ஒருவன் அந்த பாடலின் பொருளில், அவை உணர்த்தும் உணர்ச்சியில் தன்னை மறந்து ஒன்றி விடுகின்றான். அப்போது அவனது மனம் வேறு எதையும் நினைப்பதில்லை; அவனது புலன்கள் அனைத்தும் அந்த பாடலில் ஒன்றிவிட அவன் தியான நிலைக்கு, தூங்கும் நிலைக்குச் செல்கின்றான், இதனையே அப்பர் பிரான் இங்கே எதிர்மறையாக குறிப்பிடுகின்றார் என்று வாகீச கலாநிதி திரு கி.வா.ஜா. அவர்கள் தனது திருமுறை மலர்கள் புத்தகத்தில் கூறுகின்றார். பாடும் பாடலின் பொருளை உணர்ந்து அந்த பொருளில் ஒன்றி தன்னை மறந்து அனுபவிக்கும் அடியாரின் மனதினில் உள்ள இருளைப் போக்கும் இறைவன் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

அப்பர் பிரான் நல்ல புலமை வாய்ந்தவராக இருந்தமையால் தான், சமணசமய நூல்களைக் கற்று தேர்ந்து, சமய வாதம் புரிவதில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார் என்பதை நாம் அவரது சரித்திரத்திலிருந்து அறிகின்றோம். அவ்வாறு சமண சமயத்தைச் சார்ந்து இருந்த நாட்களில், பல சுவையான பாடல்களை அவர் படித்திருக்க வேண்டும். ஆனால் பெருமானை குறித்த பாடல்களாக அவை இல்லாததால், பெருமான் அத்தகைய பாடல்களை தான் குடியிருக்கும் கோயிலாக கொள்ளவில்லை. எனவே அப்பர் பிரானுக்கு, பெருமானின் கருணையால் தனது மனத்திருளை நீக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படவில்லை.; அதன் விளைவாக அத்தகைய பாடல்கள் ஏதும் அவரது மனத்தின் இருளை நீக்கவில்லை போலும். இந்த செய்தியைத் தான் நற்பான்மை அறியாத நாயினேன் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். பல பாடல்களை வாயார பாடிய தனது பாவங்களையும் துன்பங்களையும் நீக்கிய இறைவனின் கருணைச் செயலும் இந்த பாடலில் அவரால் குறிப்பிடப் படுகின்றது. பற்பா=பல வகைப் பாடல்கள்; பற்பா என்பதற்கு வரிசையாக அமைந்த பற்களை உடைய வாயினால் பாடப்படும் பாடல்கள் என்றும் விளக்கம் அளிப்பதுண்டு. சொற்களின் உச்சரிப்பு சரியாக வருவதற்கு பற்கள் ஒழுங்காக அமைந்திருக்க வேண்டும். இதனை ஒட்டியே பல் போனால் சொல் போச்சு என்ற முதுமொழி எழுந்தது போலும். போக்க கிற்பான்=போக்கும் வல்லமை படைத்தவன். கில் என்பது ஆற்றலைக் குறிக்கும் சொல். பான்மை=குணம்; மற்றவர் ஒதுக்கிய பொருளின் மீது நாட்டம் கொள்வது நாயின் இயற்கை. சான்றோர்கள் தீயவை என்று ஒதுக்கியவற்றில் நாட்டம் கொள்ளும் மனதினை உடையவனாக இருந்தமையை நாயேன் என்று இழித்துக் குறிப்பிடுகின்றார். பாட்டின் பொருளை உணர்ந்து, அந்த பொருள் வெளிப்படுத்தும் உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து புலன்களை அடக்கி தியானத்தில் அமர்ந்து பாடலை இரசிப்பது ஒரு வகை. பாடலின் பொருளில் மெய்மறந்து ஆடிப் பாடி இரசிப்பது மற்றோர் வகை. இவ்வாறு அருளாளர்களின் பாடலை அனுபவிக்கும் இரண்டு முறைகளும் இங்கே கூறப்படுகின்றன. இந்த பாடலில் மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றினாலும் இறைவனை வழிபடும் முறை குறிப்பிடப் படுகின்றது. மனதினால் தியானித்து வாயார பாடி, தரையில் விழுந்து எழுந்தும் தலை தாழ்த்தி வணங்கியும் பாடும்போது மெய்மறந்து ஆடியும் இறைவனை வழிபடும் முறைகள் இங்கே உணர்த்தப் படுகின்றன

சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்து இருளை வாங்காதனை

நற்பான்மை அறியாத நாயினேனை நன்னெறிக்கே செலும் வண்ணம் நல்கினானைப்

பற்பாவும் வாயாரப் பாடி ஆடிப் பணிந்தெழுந்து குறைந்து அடைந்தார் பாவம்போக்க

கிற்பானை கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.61.11) சுந்தரர் கச்சி ஏகம்பம் தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தை முறையாக பாடும் அடியார்கள் நன்னெறி உலகு எய்துவர் என்று கூறுகின்றார். பெற்றம்=ஏறு, இடபம்; இடபத்தின் மீது அமர்ந்தவனாக பல இடங்களுக்கும் செல்பவனும், பெரிய எம்பெருமான் என்று எப்போதும் கற்றவர்களால் புகழப் படுபவனும் ஆகிய பெருமானை, நேரில் கண்டு களிப்பதற்கு பாக்கியம் கிடைத்தது என்று, அனைத்து உயிர்களுக்கும் அரசனும், கம்பன் என்ற திருநாமத்துடன் கச்சி ஏகம்பம் தலத்தினில் உறைபவனும், கூத்த பிரானாக பல தலங்களில் நடனமாடுபவனும், எமது தலைவனும் ஆகிய பெருமானை, குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட திருநாவலூர் தலத்தைத் சார்ந்தவனும் ஆரூரன் என்ற பெயரினை உடையவனும் ஆகிய அடியேன் நல்ல தமிழ்ப் பாடல்கள் கொண்டு பாடிய இந்த பத்து பாடல்களையும் பாடும் வல்லமை பெற்ற அடியார்கள் நன்னெறியால் பெறுகின்ற முக்தி உலகத்தினை திண்ணமாக அடைவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானைப் பெரிய எம்பெருமான் என்று எப்போதும்

கற்றவர் பரவப் படுவானைக் காணக் கண் அடியேன் பெற்றதென்று

கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக் குளிர் பொழில் திருநாவலாரூரன்

நற்றமிழ் இவை ஈரந்தைந்தும் வல்லார் நன்னெறி உலகு எய்துவர் தாமே

திருவாசகம் திருச்சதகம் ஆத்துமசுத்தி பதிகத்தின் பாடலில் (8.5.39) மணிவாசகர் நாயினும் கடைப்பட்ட தனக்கு பெருமான், நன்னெறி காட்டியதாக கூறுகின்றார். ஓயுதல் என்பதற்கு மெலிந்து அழிதல் என்று பொருள். பெருமான் அழிவற்றவன் என்பதால் பெருமானின் திருவடிகளும் அழிவற்றவை. ஓய்வு என்பதற்கு தளர்ச்சியால் உயிர்கள் எடுக்கின்ற ஓய்வு என்று பொருள் கொண்டு, தனது செயல்களால் தளர்ச்சி அடையாத இறைவன், ஓய்வு தேவைப் படாதவன் என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே. ஒவ்வொரு நொடியும் அனைத்து உயிர்களுடன் பிணைந்து இருந்து, உயிர்களை இயக்கும் பெருமானுக்கு ஓய்வு என்பதேது. இறந்தன=கடந்தன; பெருமானின் திருவடித் தாமரைகளுக்கு முழுவதும் பொருந்தும் வண்ணம் உவமை ஏதும் சொல்ல முடியாது என்பதால்,உவமனில் இறந்த திருவடிகள் என்று குறிப்பிடுகின்றார். ஓண்மலர்=சிறந்த மலர் போன்ற திருவடிகள்; தாள்= திருவடிகள்; சிறு குழந்தைக்கு வேளை தவறாமல் பாலூட்டியும் பின்னர் அந்த குழந்தை வளர்ந்த பின்னர் சோறூட்டியும் குழந்தையின் உடலை வளர்ப்பவள் தாய். அந்த உடல் பொருந்தியுள்ள உயிரின் ஞானத்தை வளர்ப்பவன் இறைவன் என்பதால், தாயிலும் சிறந்தவனாக இறைவன் கருதப்படும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. அத்தகைய இறைவனின் கருணையை நினைத்து, தீயில் வீழ்வதற்கும், மலையிலிருந்து கீழே உருண்டு விழுவதற்கும் ஆழ்கடலில் குதிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டிய தான், அவ்வாறு செய்யாத கல் நெஞ்சனாக இருப்பதாக அடிகளார் வருத்தப் படுகின்றார்.

ஓய்விலாதன உவமனின் இறந்தன ஒண்மலர்த் தாள் தந்து

நாயிலாகிய குலத்தினும் கடைப்படும் என்னை நன்னெறி காட்டித்

தாயிலாகிய இன்னருள் புரிந்த என் தலைவனை நனி காணேன்

தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே

நம்மைப் போன்ற அடியார்கள் தன்னைப் பணிந்து வாழ்வினில் உய்வினை அடைவதற்காக நிலவுலகத்தில் பல தலங்களில் பொருந்தி உறைகின்ற பெருமான், அத்தகைய தலங்கள் வந்தடைந்து, பணிந்து வணங்கும் தேவர்களுக்கும் நன்னெறி காட்டி அருள் புரிகின்றான் என்று திருவாசகம் திருவார்த்தை பதிகத்தின் பாடலில் (8.43.2) மணிவாசக அடிகளார் கூறுகின்றார். இடவை=இடைமருதூர்;

மாலயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கருள் செய்த ஈசன்

ஞாலமதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலம் திகழும்

கோல மணியணி மாட நீடு குலாவும் இடவை மட நல்லாட்குச்

சீல மிகக் கருணை அளிக்கும் திறம் அறிவார் எம் பிரான் ஆவாரே

உள்குவீர் என்ற சொல்லுக்கு பரமனை நினைக்கும் அடியார்கள் என்று பொருள் கொண்டு, அவர்களை அழைத்து சொல்லப்படும் அறிவுரையாக இந்த பாடல் சிலரால் கருதப் படுகின்றது. பரன்=மேலானவன்; பரவுதல்=துதித்தல், புகழினைச் சொல்லுதல்;

பொழிப்புரை:

உலகத்தவரே, அரன் என்று அழைக்கப்படும் சிவபெருமானை உங்களது மனதினால் நினைமின்கள்; பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் வீற்றிருப்பவரும் உலகில் உள்ள அனைத்து உயிர்களினும் உயர்ந்த தன்மை உடையவனும் ஆகிய பெருமானை, உங்களது மனதினால் துதித்து வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.

பாடல் 2:

அரனை உள்குவீர் (1.090) பாடல் 2 (திதே 0258)

காண உள்குவீர்

வேணு நற்புரத்

தாணுவின் கழல்

பேணி உய்ம்மினே

விளக்கம்:

ஸ்தாணு என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் தாணு. நிலையாக நிற்பவர் என்று பொருள். பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் பெருமான் ஒருவன் தானே அழியாமல் நிலைத்து நிற்கின்றார். பிறவியின் நோக்கம், நமது வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு வீடுபேறு நிலை அடைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்து இருப்பது தானே. உயிரும் அதனையே விரும்புகின்றது அல்லவா. பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியுள்ள பிரமன் திருமால் மற்றுமுள்ள தேவர்கள் எவ்வாறு தாங்கள் மீள முடியாத சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற வழியினை அடுத்தவருக்கு அளிக்க முடியும். எனவே தான் பிறப்பிறப்புச் சுழற்சிக்கு அப்பாற்பட்ட சிவபெருமானை வழிபட வேண்டும் என்று தேவார முதலிகள் உணர்த்துகின்றனர். மேலும் பிரமன் மற்றும் திருமாலின் நிலையற்ற தன்மையும் பல தேவாரப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அப்பர் பிரான் அருளிய பாடலை (5.100.3) இங்கே நினைவு கூர்வது பொருத்தம்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்

ஆறு கோடி நாராயணர் அங்ஙனே

ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்

ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே

நொந்தினார் என்றும் நுங்கினார் எனும் இருவகையான பாட பேதங்கள் உள்ளன. நொந்தினார்=அழிந்தார்கள்: பிரளய காலத்தில் பிரமன், திருமால், குபேரன், யமன் போன்றவர்கள் அழிய, கூட்டம் கூட்டமாக இந்திரர்களும் உடன் அழிந்தாலும், சிவபிரான் அழியாமல் இருப்பதுடன், தனது மனைவியாகிய பார்வதியுடன் விளையாடுவதாக ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியின் இருபத்தாறாவது பாடலில் கூறுகின்றார். விரிஞ்சி=பிரமன்; பஞ்சத்வம்=உடலில் உள்ள ஐந்து பூதங்களும் தனித்தனியாக பிரிந்து போகும் நிலை, அதாவது மரணம்: வ்ரஜதி=அடைதல்; விரதிம்=முடிவு: ஆப்னோதி=அடைதல்; கீனாச=இயமன்; பஜதி=அடைதல்; தனத=செல்வங்களை உடைய குபேரன்; நிதனம்=மரணம்; யாதி=அடைதல்; மாஹேந்த்ரீ விததி அபி=கூட்டம் கூட்டமாக இந்திரர்கள்; ஸம்மீலித=கண்கள் மூடும் பெருந்தூக்கம்; த்ருசா=அழிதல்; ஸம்ஹாரே=பிரளய காலத்தில்; சதி=பார்வதியின் ஒரு பெயர்; விஹரதி=விளையாடுதல்;

விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்

விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்

விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருசா

மஹா ஸம்ஹாரேஸ்மின் விஹரதி சதி த்வத்பதி ரஸௌ

மனித வாழ்க்கையை ஒப்பிடுகையில் தேவர்கள் நீண்ட ஆயுள் பெற்றவர்கள். ஆனாலும் அவர்களுக்கும் முடிவு என்பதுண்டு, அவர்களின் தலைவனாக விளங்கும் இந்திரன், பிரமன், திருமால் ஆகியோரும் பிறப்பு இறப்புச் சுழற்சியில் உழல்பவர்கள் தாம். ஒவ்வொருவரின் வாழ்நாள் தான் வேறுபடும். ஆனால் நிலையாமை என்ற தகுதியின் அடிப்படையில் அனைவரும் சமமே. இதனை விளக்கும் பாடல் தான் அப்பர் பிரான் அருளிய இந்த பாடல்.

இந்த பாடல் கால நியதியை கணக்கிட்டு, அந்த நியதியைக் கடந்து நிற்கும் ஈசனின் மேலான தன்மையை உணர்த்துகின்றது. மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஓர் நாள். தேவர்களின் வாழ்நாளை விட, அவர்களுக்குத் தலைவனாக விளங்கும் இந்திரனின் வாழ்நாளை விடவும், மிகவும் அதிகமானது பிரமனின் வாழ்நாள். நான்கு யுகங்களின் மொத்த ஆண்டுகள் 43,20,000 மனித ஆண்டுகள் (கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள்: திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகள்: துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள்: கலியுகம் 4,32,000 ஆண்டுகள்). இந்த நான்கு யுகங்களை சதுர்யுகம் என்று அழைப்பார்கள். இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்தது பிரமனுக்கு ஒரு பகல். அதாவது இரண்டாயிரம் சதுர் யுகங்கள் பிரமனுக்கு ஒரு நாள். இந்த கணக்கினில் பிரமனின் ஆயுள் நூறு வருடங்கள். பிரமனின் ஒரு நாள் பதினான்கு இந்திரர்களின் மொத்த வாழ்நாள் ஆகும். திருமாலின் வாழ்நாள் பிரமனின் வாழ்நாளை விட நூறு மடங்கு அதிகம் என்பார்கள். அதாவது ஒரு திருமாலின் வாழ்நாளின் முடிவினில் நூறாவது பிரமனின் வாழ்நாளும், 14000வது இந்திரனின் வாழ்நாளும் முடிவடையும். எனவே பிரமனும் திருமாலும் இறந்த நாள் என்றால் அனைத்து உயிர்களும் இறந்த நாள் என்று கொள்ளலாம். அதனால் தான் ஆறு கோடி, நூறு கோடி என்று திருமாலையும் பிரமனையும் குறிப்பிடும் அப்பர் பிரான் கங்கைக் கரையின் மணல்களின் எண்ணிக்கையை விட அதிகமான இந்திரர்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கோடி என்ற சொல் கணக்கிலாத எண்ணிக்கையை குறிப்பிடும் விதத்தில் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. நூறு கோடி பிரமர்கள் பிறந்து அழிந்த பின்னரும், ஆறு கோடி நாராயணர்கள் பிறந்து அழிந்த பின்னரும், கங்கையாற்றின் இரு கரைகளிலும் உள்ள மணல்களை விடவும் எண்ணிக்கையில் அதிகமான இந்திரர்கள் பிறந்து அழிந்த பின்னரும், முடிவற்றவனாகத் திகழ்பவன் சிவபெருமான ஒருவனே என்பது தான் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அப்பர் பிரானின் பாடலின் திரண்ட கருத்தாகும்.

அரனை உள்குவீர் என்று பதிகத்தின் முதல் பாடலில் பெருமானை நினைக்கத் தூண்டும் திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பெருமானின் திருவுருவத்தை கண்டு களிக்குமாறு நம்மை தூண்டுகின்றார். பெருமானை நினைத்த பின்னர் அவனை நேரில் சென்று காண்பது தானே அடுத்த படி. வேணு நற்புரம் என்ற தொடரை, நல் வேணுபுரம் என்று மாற்றி அமைத்து பொருள் காண வேண்டும். நன்மைகளைத் தரும் வேணுபுரம் தலம் என்று பொருள். பேணுதல்=பெருமான் விரும்பும் செயல்களை செய்து பெருமானை இடைவிடாது வழிபடுதல்; பெருமானின் புகழினை பாடுவதும் அவனே நிலையான மெய்ப்பொருள் என்பதை உணர்ந்து அவனை வழிபடுவதும் பெருமானுக்கு உகந்த செயல்களாகும். பெருமானைப் புகழ்ந்து சாமகானம் பாடியதால் தானே, கயிலாய மலையின் கீழே அமுக்குண்டு கதறிய இராவணன், அந்த இடரிலிருந்து விடுபட்டதும் அன்றி பல நன்மைகளும் பெற்றான். பெருமானை பேணுவதால் நாம் அடையும் நன்மை யாது என்பதை பெருமானின் வாய்மொழியாக பெரிய புராணத்தில் வரும் இரண்டு பாடல்களை நாம் இங்கே காண்போம்.

திருவாரூர் திருக்கோயில் தேவாசிரிய மண்டபத்தில் குழுமியிருந்த அடியார்களை கண்ட சுந்தரர் அந்த அடியார்களுக்கு அடியானாக தான் மாறும் நாள் எந்நாளோ என்ற கவலையுடன் திருக்கோயிலின் உள்ளே நுழைந்தார். அப்போது அவரின் எதிரே தோன்றிய தியாகேசர், அடியார்களின் பெருமையினை சுந்தரருக்கு எடுத்துரைத்து அவர்களைச் சென்று அடைவாயாக என்று சுந்தரரை பணித்தார். இறைவனின் வாய்மொழியாக கூறப்பட்ட கருத்து அடங்கிய பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அடியார்களின் பெருமைக்கு அவர்களது பெருமையே ஒப்பாகும் என்றும் இடைவிடாது இறைவனை நினைத்து போற்றுவதால் இறைவனைப் பெற்றவர்கள் என்றும், இறைவனோடு ஒன்றுபட்டு நிற்கும் நிலையினால் உலகையும் வெல்லும் தன்மை உடையவர்கள் என்றும் எத்தகைய துன்பங்களும் இல்லாதவர்களாய் இறைவனிடத்தில் கொண்டுள்ள அன்பினால் இன்பமே உடையவர்களாய், இம்மை மற்றும் மறுமையைக் கடந்தவர்கள் என்றும் அடியார்களின் தன்மையை இறைவன் சுந்தரருக்கு உணர்த்தியதை குறிப்பிடும் பாடல் இது. இறைவனைப் பேணுவதால் நாம் அவரைச் சென்று அடையலாம் என்று நமக்கு உணர்த்தும் பாடல் இது.

பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப் பெற்றார்

ஒருமையால் உலகை வெல்வார் ஊனம் மேல் ஒன்று இல்லார்

அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார்

இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய் என்று

பெருமான் வீற்றிருந்து அருளும் திருக்கயிலாய மலையின் மீது காலால் நடப்பது தகாது என்று கருதிய காரைக்கால் அம்மையார் தலையினால் நடந்து வந்ததைக் கண்ட உமையன்னை இவ்வாறு தலையினால் நடந்து வரும் அம்மை இறைவன் பால் வைத்திருக்கும் அன்பின் தன்மை மிகவும் வியக்கத்தக்கது என்று, இறைவனிடம் கூறினார். அம்மையின் சொற்களைச் செவியுற்ற இறைவன், அவ்வாறு எலும்புக்கூடாக மலையேறி வரும் பெண்மணி தன்னை (இறைவனை) பேணும் பெண்மணி என்று இறைவன், காரைக்கால் அம்மையாரை பார்வதி தேவியிடம் அறிமுகம் செய்கின்றார். காரைக்கால் அம்மையார் பெற்றிருந்த பேய் வடிவத்தினை பெருமை சேர் வடிவம் என்று இறைவன் குறிப்பிடுவது நாம் சிந்திக்கத் தக்கது.

வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்

பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை

அருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை

ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்

இவ்வாறு பெருமானைப் பேணி போற்றும் அடியார்கள் பெருமானை முழுதும் உணர்ந்து வாழ்வார்கள். அத்தகையோருடன் பெருமான் ஒட்டி வாழ்வான் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பதிகப்பாடல் (6.25.1) நமது நினைவுக்கு வருகின்றது. உயிராவணம்=உயிராத வண்ணம்; உயிர்தல் என்ற சொல் மூச்சு விடுதல் என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது. உற்று நோக்கி=தியானத்தில் ஆழ்ந்து மனதினில் உருவகப்படுத்திய இறைவனின் உருவத்தினை நினைந்து; கிழி=திரைச்சீலை, துணி; உயிர் ஆவணம் செய்தல்=உயிரினை ஒப்படைத்தல் ஆவணம்=சாசனம்;. ஆவணம் என்பதற்கு ஓலை என்ற பொருள் கொண்டு அடிமை ஓலை எழுதி, தன்னை அடிமையாக இறைவனுக்கு ஒப்படைத்தல் என்றும் கூறுவார்கள். அயிராவணம்=கயிலை மலையில் உள்ள யானை, இரண்டாயிரம் தந்தங்களை உடையது. அயிராவணம் (நான்காவது அடியில் உள்ள சொல்)=ஐ இரா வண்ணம், ஐயம் ஏதும் இல்லாத வண்ணம் உள்ள உண்மையான மெய்ப்பொருள்.

உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியின் உரு எழுதி

உயிர் ஆவணம் செய்திட்டு உன் கைத் தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி

அயிராவணம் ஏறாதே ஆனேறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட

அயிராவணமே என் அம்மானே நின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே

ஒட்டி வாழ்தல்=உடனாகி இருத்தல்; இந்தப் பாடலில், இறைவன் யாரோடு ஒட்டி வாழ்வான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மனதினை ஒருமுகப்படுத்தி இறைவனை தியானித்து, அவனது உருவத்தை நமது மனதிலிருந்து நீங்காத வண்ணம் எழுதி வைத்து, நாம் அவனுக்கு பூரண அடிமை என்ற நிலையை அவனுக்கு உணர்த்தினால், அவன் அத்தகைய அடியார்களுடன் இணைந்து வாழ்வான் என்று இங்கே விளக்குகின்றார். அடியார்கள் மண்ணில் வாழ்ந்த போதே அவர்களுடன் ஒட்டி வாழும் சிவபெருமான், அத்தகைய அடியார்கள் தங்களது உடலைத் துறந்த பின்னர், அவர்களுக்கு முக்தி அளித்து அவர்களை விட்டுப் பிரியாது இணைந்து வாழ்வான் என்பதும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு ஒட்டிட்ட பண்பினாராய் வாழ்பவர்களை சிவ கணத்தவர்களாக திருஞானசம்பந்தர் தனது மயிலைப் பதிகத்தின் முதல் பாடலில் கருதுகின்றார்.

மட்டிட்ட புன்னை அம் கானல் மட மயிலைக்

கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு

அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

எவரோடு இறைவன் ஒட்டி வாழ்வான் என்று முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், கடைசி அடியில், இறைவனை உணராதவர்கள், அவனது இன்பத்தைப் பெறுவதற்கு உரியவர்கள் அல்லர் என்று கூறுகின்றார். அருட்கண் என்று சிவபெருமான் நமக்கு அருளிய கண் என்று இங்கே கூறப்படுகின்றது. அயிராவணம் என்று இரண்டாயிரம் தந்தங்களைக் கொண்ட பெருமை வாய்ந்த யானை கயிலையில் இருந்தாலும், அதனை வாகனமாகக் கொள்ளாமல், எளிமையான எருதினை வாகனமாகக் கொண்டு, தேவர்கள் உலகத்தினை ஆளும் திறமையும் வல்லமையும் கொண்டிருந்தாலும், தேவலோகத்தை ஆளாமல், அடியார்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரூர் நகரினை ஆளும் இறைவனே; தங்களது உயிர் மூச்சினை அடக்கி, உன்னை தியானித்து, உனது உருவத்தைத் தங்களது உள்ளத்தில் என்றும் அழியாத வண்ணம் பதித்து, உனக்கு அடிமையாகத் தங்களைக் கருதி, அந்த அடிமை சாசனத்தை உனது கையில் ஒப்படைக்கும் அடியார்களுடன், நீ இணைந்து வாழ்கின்றாய். எவருக்கும் எந்த ஐயமும் ஏற்படாமல் உண்மையான மெய்ப்பொருளாக இருப்பவனே, உன்னால் வழங்கப்பட்ட கண்கள் கொண்டு உன்னைக் காணாதவர்கள், உனது அருளைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் அல்லர் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை. இந்த பாடலின் மூலம் பெருமானின் திருவுருவத்தை நேரில் கண்டு வழிபடுவதன் சிறப்பு உணர்த்தப் படுகின்றது.

.பொழிப்புரை:

பெருமானின் திருவுருவத்தினை நேரில் காண வேண்டும் என்று விரும்பும் உலகத்தவரே, நீங்கள் பல நன்மைகளை அடியார்களுக்கு புரியும் வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரம் சென்று, ஆங்குள்ள இறைவனை, என்றும் அழியாமல் நிலையாக இருக்கும் இறைவனின் திருவடிகளை போற்றி, இறைவனுக்கு விருப்பமான செயல்களை செய்து வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.

பாடல் 3:

அரனை உள்குவீர் (1.090) பாடல் 3 (திதே 0259)

நாதன் என்பீர்காள்

காதல் ஒண் புகல்

ஆதி பாதமே

ஓதி உய்ம்மினே

விளக்கம்:

பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் பெருமானை நினைத்தும் அவனைக் கண்டும் மகிழுமாறு நம்மைத் தூண்டிய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் அவனை நமது தலைவனாக ஏற்றுக்கொண்டு நாதா என்று அழைக்குமாறு ஆலோசனை கூறுகின்றார். புகல்=புகலி; புகலி என்ற சொல் புகல் என்று குறுகியது; நாதா என்று இறைவனை அழைத்து பலன் அடைவீர்களாக என்று திருஞான சம்பந்தர் கூறும் பாடல் நமக்கு பழனம் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடலை (1.67.1) நினைவூட்டுகின்றது. பெருமானை நமது தலைவனாக ஏற்றுக்கொண்டு நாதா என்றும் நக்கா என்றும் நம்பா என்றும் அவனை அழைத்து அவனது திருவடிகளை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருது ஏறிப்

பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரி தோலார்

நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று

பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே

திருவோத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.54.7) திருஞானசம்பந்தர், நாதா என்று அழைத்து பெருமானின் நலன்களை புகழ்ந்து சொல்லாத அடியார்கள் உலகினில் உள்ளாரோ என்ற கேள்வியை கேட்டு, அத்தகைய அடியவர்கள் எவரும் இல்லை என்று பதில் கூறுகின்றார். தாது=மகரந்தப்பொடி; தயங்கு=பொருந்திய: ஆதீர்=முழுமுதற் பொருளாக உள்ளவர்; ஏத்தாதார் இல்லை என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட கருத்தே, இந்த பாடலிலும் பெருமானின் சிறப்பினை புகழாத மாந்தர்கள் இல்லை என்று சொல்லப் படுகின்றது. மகரந்தப் பொடிகள் பொருந்திய கொன்றை மலர்கள் தங்கும் திருமுடியை உடைய தலைவரே என்று உமது பல விதமான சிறப்புகளை உணர்த்திப் புகழ்ந்து, பெருமானே உமது திருநாமங்களை ஓதாத மக்களும் உளரோ, எவரும் இல்லை. திருவோத்தூர் தலத்தினில் முழுமுதற் கடவுளாக பொருந்தி உறையும் பெருமானே, எமக்கு அருள் புரிவீராக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தாதார் கொங்கை தயங்கு முடியுடை

நாதா என்று நலம் புகழ்ந்து

ஓதாதார் உளரோ திருவோத்தூர்

ஆதீரே அருள் நல்குமே

எல்லாம் சிவனென நின்றாய் என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (6.5.8) அப்பர் பிரான் பெருமானை, நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா என்று அழைத்துப் போற்றுகின்றார். இந்த பாடலில் தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி என்று திருவாசகம் போற்றித் திருவகவலில் வரும் தொடரை நினைவூட்டுகின்றது. வெஞ்சினம்=மிகுந்த சினம்: துஞ்சாப் பலி=என்றும் இடைவிடாது பலி ஏற்கும் நிலை; என்றும் இடைவிடாது பெருமான் பலி ஏற்பதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இறைவன் இவ்வாறு பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் பிரமகபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான். இந்த உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் சிவபெருமான் என்று குறிப்பிட்டு உணர்த்துகின்றார். மிகுந்த கோபத்தினை உடைய எருதினை வாகனமாக ஏற்றவனே போற்றி, விரிந்து கிடக்கும் சடையினில் கங்கை நதியைத் தாங்கியவனே போற்றி, என்றும் இடைவிடாது பலி ஏற்பவனே போற்றி. தங்களது கைகளால் உன்னைத் தொழும் அடியார்களின் துன்பங்களைத் துடைப்பவனே போற்றி, நஞ்சினை ஒடுக்கிய கழுத்தினை உடையவனே போற்றி, நான்மறைகளாகவும் மறைகளின் ஆறு அங்கங்களாகவும் திகழ்பவனே போற்றி, அழகிய சொற்களை உடைய உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றவனே போற்றி. அலைகள் நிறைந்த கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்றவேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல்.

வெஞ்சின வெள் ஏறூர்தி உடையாய் போற்றி விரிசடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி

துஞ்சாப் பலி தேரும் தோன்றால் போற்றி தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி நான்மறையோடு ஆறங்கம் ஆனாய் போற்றி

அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி அலைகெடில வீரட்டத்து ஆள்வாய்போற்றி

கயிலாயத் திருத்தாண்டகத்தின் பாடல் ஒன்றினில் (6.57.9) அப்பர் பிரான், பெருமானை நாற்றிசைக்கும் விளக்காய நாதா என்று அழைக்கின்றார். ஏறு என்ற சொல் (இடி என்று பொருள்) ஏற்று என எதுகை கருதி திரிந்தது. அடியார்கள் உனது திருவடிகளைப் போற்றி இசைப் பாடல்கள் பாட அதனை மகிழ்ந்து ஏற்றுக் கொள்பவனே, தருமமே வடிவமாக உள்ளவனே, தங்களது முயற்சியால் எவரும் அடைய முடியாத வண்ணம் இருப்பவனே, இடி முழங்கும் வானத்தையும் கடந்து நிற்பவனே, எண்ணற்ற திருநாமங்களை உடையவனே, நான்கு திசைகளுக்கும் ஒளி வழங்கும் தலைவனே, நான்முகனும் திருமாலும் அடியும் முடியும் காண முடியாத வண்ணம் நெடிதுயர்ந்து நின்றவனே, பல திசைகளிலும் காற்று வீசுவதற்கும் மூல காரணனாக இருப்பவனே, கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாக கொண்டவனே, உன்னை நான் பலமுறையும் போற்றி வணங்குகின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

போற்றி இசைத்து நின்னடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி

ஏற்றிசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிர நூறு பெயராய் போற்றி

நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி

காற்றிசைக்கும் திசைக்கெல்லாம் வித்தே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

துறையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.13.7) சுந்தரர், பெருமானை நாதா என்று அழைத்து, தவநெறி தனக்கு தந்தருள வேண்டும் என்று கோருகின்றார். போது= புதியதாக பூத்த மலர்கள்; எற்றி=கரைக்கு ஏற்றும்; தாது=மகரந்தப் பொடிகள்; தாதார=மகரந்தப் பொடிகளை நிறைய அடித்துக் கொண்டு வந்து; மாது=அழகு; மாதார்=அழகு நிறைந்த; இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானிடம் தனக்கு தவநெறி தந்தருள வேண்டும் என்று சுந்தரர் வேண்டுகின்றார்.

மாதார் மயிற்பீலியும் வெண்ணுரை உந்தித்

தாதாரக் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வடபால்

போதார்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்

நாதா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.70.1) சுந்தரர், நாதா என்று பெருமானை அழைக்கும் சுந்தரர், தன்னிடம் அஞ்சேல் என்று சொல்லி பெருமான் தேற்ற வேண்டும் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், அமரர்களின் தலைவனாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரும் தனக்கு உறவு அல்ல என்று தெளிவு படுத்துகின்றார். தனது அருட்கண்ணால் நோக்கி அடியார்களுக்கு அருள் புரியும் இறைவனை மிகவும் பொருத்தமாக அங்கணா என்று அழைக்கின்றார். அங்கணன்=அழகிய கண்களை உடையவன்;

கங்கை வார் சடையா கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே

பொங்கு மாகடல் விட மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா

செங்கண் மால் விடையாய் தெளிதேனே தீர்த்தனே திருவாவடுதுறையாய்

அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவாசகம் பொன்னூசல் பதிகத்தின் பாடலில் (8.16.4) மணிவாசக அடிகளார், பெருமானை அண்டத்தவர் நாதன் என்று அழைக்கின்றார். புஞ்சம்=தொகுதி, கூட்டம், மிகவும் அதிகமாக; துஞ்சல்=இறத்தல்; அண்டத்தவர்=தேவர்கள்; மஞ்சு=மேகம்; அஞ்சொலாள்=அம்+சொலாள்; அழகிய சொல்லினை உடைய உமையன்னை; தேவர்களை காக்கும் பொருட்டு, ஆலகால விடத்தை உட்கொண்டு தனது கழுத்தினில் தேக்கிக் கொண்டவனும், தேவர்களின் தலைவனும்,மேகங்கள் படியும் வண்ணம் உயர்ந்த மாடங்களைக் கொண்ட உத்தரகோச மங்கை தலத்தினில் உறைபவளும் அழகிய சொல்லினை உடையவளும் ஆகிய உமை அன்னையுடன் கூடி இருப்பவனும், அடியார்களின் நெஞ்சினில் நிலைத்து நின்று அவர்களின் உள்ளத்தில் சிவானந்தத் தேனை சொரிபவனும், அடியார்கள் பால் கருணை கொண்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து அவர்களை விடுவிப்பவனும் ஆகிய பெருமானின் தூய்மையான புகழினை, நெருக்கமாக வெண்மை நிறத்து சங்கு வளையல்களை தங்களது கைகளில் அணிந்து கொண்டுள்ள பெண்மணிகளே, நீங்கள், பாடியவாறு பொன்னூசல் ஆடுவீர்களாக என்று சொல்லி, ஊஞ்சல் விளையாடும் போதிலும் இறை சிந்தனையுடன் இருக்கும் வண்ணம், மணிவாசக அடிகளார் பெண்களை, ஈடுபடுத்தும் பாடல்.

நஞ்சமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்

மஞ்சு தோய் மாடமணி உத்தரகோச மங்கை

அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்

நெஞ்சுளே நின்றமுதம் ஊறி கருணை செய்து

துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ் பாடி

புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ

திருவாசகம் எண்ணப்பத்து பதிகத்தின் பாடலில் (8.44.3) மணிவாசக அடிகளார், நாதா என்று பெருமானை அழைக்கும் அடிகளார், பெருமான் தனக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார். நாணாமே=கூசாது; பெருமான் கூச்சம் ஏதும் இல்லாமல், தனக்கு அருள் புரிய வேண்டும் என்று அடிகளார் கோருவது சற்று சிந்திக்கத் தக்கது. இந்த பாடலின் முதல் இரண்டு அடிகளில், அடிகளார் பெருமான் தன்னை திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட தன்மையை குறிப்பிடுகின்றார். வலிமை வாய்ந்த தனது எலும்பும் உருகும் வண்ணம் தனக்கு பெருமான் அருள் புரிந்தான் என்றும் தனது சேவடிகளைக் காட்டி அருள் புரிந்தான் என்றும் குறிப்பிடும் அடிகளார், இத்தகைய அருளினைப் பெறுவதற்கு, தகுதியற்றவன் என்று பல பாடல்களில் குறிப்பிடுவதை நாம் அறிவோம். மேலும் இத்தகைய அருள் புரிந்த பெருமான், தன்னிடம் எதிர்பார்த்த மாற்றத்தைத் தான் அடையவில்லை போலும் என்ற சந்தேகமும் அடிகளாரின் மனதினில் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. எனவே, தனது எதிர்பார்ப்பினை நிறைவேற்றாத மணிவாசகருக்கு இனியும் அருள் புரிவதால் என்ன பயன் என்று முடிவு செய்து பெருமான் தன்னை ஒதுக்கி விடாமலும், தனது அருளினை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத மணிவாசகருக்கு தொடர்ந்து அருள் புரியும் நிலை ஏற்பட்டுள்ளதே என்று கூச்சம் கொள்ளாமலும், பெருமான் தொடர்ந்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார்.

என்பே உருக நின் அருள் அளித்துன் இணைமலர் அடி காட்டி

முன்பே என்னை ஆண்டுகொண்ட முனிவா முனிவர் முழு முதலே

இன்பே அருளி எனை உருக்கி உயிர் உண்கின்ற எம்மானே

நண்பே அருளாய் என்னுயிர் நாதா நின்னருள் நாணாமே

திருமந்திரம் பாடல் ஒன்றினில், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவருக்கும் சிவபெருமான் தான் நாதன் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். சிவபெருமான், முழுமுதற் கடவுளாக நின்று, பிரமனையும் திருமாலையும் இயக்கி முறையே படைக்கும் தொழிலையும் காக்கும் தொழிலையும் செய்கின்றார் என்று திருமூலர் உணர்த்துகின்றார். நாதன் ஒருவன்=சிவபெருமான்; நல்ல இருவர்=ஞானசக்தி மற்றும் கிரியாசக்தி ஆகிய இருவர்; கோது=இராசதம் மற்றும் தாமசம் எனப்படும் குணங்கள்; குலம்=சாத்வீகம் எனப்படும் குணம்; இந்த மூன்று குணங்களும் ஒன்று சேர்த்து குழைத்து பிரமனையும் திருமாலையும் தோற்றுவிக்க, அவர்கள் இருவரும், சிவபெருமானிடம் தங்களுக்கு இடும் பணி யாது என்று வினவ, அவரவர்களுக்கு உரிய செயலை பெருமான் அருளிச் செய்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நாதன் ஒருவனும் நல்ல இருவரும்

கோது குலத்தொடும் கூட்டிக் குழைத்தனர்

ஏது பணியென்று இசையும் இருவருக்கு

ஆதி இவனே அருளுகின்றானே

புகலி என்ற சொல் புகழ் என்று குறுகியுள்ளது. ஒள் என்ற சொல் புகல் என்ற சொல்லுடன் சேரும் போது ஒண்புகல் என்று மாறுபடுகின்றது ஒள் என்ற சொல்லுக்கு, ஒளி அழகு நல்ல மேன்மை என்று பல பொருட்கள் உள்ளன. ஒள் என்ற சொல்லினை புகலி என்ற சொல்லுடன் சேர்த்தும் ஆதி என்ற சொல்லுடன் சேர்த்தும் பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமே. புகல் ஆதி=புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் உள்ள ஆதி முதல்வன். .காதல் என்ற சொல்லினை ஓதி என்ற சொல்லுடன் இணைத்து, மிகுந்த அன்புடன் ஓதி என்று பொருள் கொள்ள வேண்டும்; ஓதி=துதித்து, புகழ்ந்து பாடி;

பொழிப்புரை:

சிவபெருமானை உங்களது தலைவனாக ஏற்றுக்கொண்டு அவனை நாதன் என்று அழைக்கும் அடியார்களே, புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் உறைபவனும், ஒளியுடன் பிரகாசிப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக திகழ்பவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை புகழ்ந்து பாடி, வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.

பாடல் 4:

அரனை உள்குவீர் (1.090) பாடல்கள் 4, 5 (திதே 0260)

அங்கம் மாது சேர்

பங்கம் ஆயவன்

வெங்குரு மன்னும்

எங்கள் ஈசனே

விளக்கம்:

பங்கம்=பாதி; மன்னும்=நிலையாக இருக்கும் பெருமானின் அருள் வடிவமாக இருப்பவள் சக்தி; எனவே பெருமான் மாதொரு பாகனாக இருக்கும் நிலை அவன் அடியார்களுக்கு அருள் வழங்க தயார் நிலையில் இருப்பதாக கருதப் படுகின்றது. சென்ற பாடலில் பெருமானை நமது தலைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கிய திருஞானசம்பந்தர் இந்த பாடலில், அந்த தலைவன் உறையும் இடம் சீர்காழி என்று உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாதியாக ஏற்றுக்கொண்டுள்ள பெருமான், அடியார்களுக்கு அருள் வழங்கும் குறிப்பினை மாதொருபாகன் கோலத்தில் மூலம் உணர்த்துகின்றான். அத்தகைய பெருமான் வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தினில் நிலையாக, எங்களது தலைவனாக உறைகின்றான்.

பாடல் 5:

அரனை உள்குவீர் (1.090) பாடல்கள் 4, 5 (திதே 0260)

வாணிலாச் சடைத்

தோணி வண்புரத்து

ஆணி நற்பொனைக்

காணுமின்களே

விளக்கம்:

ஆணி=பொன்னின் மாற்றினைக் கண்டறிய கொல்லர்கள் வைத்திருக்கும் சிறிய பொன் கட்டி; மாற்றுப் பொன் கட்டி, மற்ற பொன்னின் தரத்தை அறிந்து கொள்வதற்கு உதவுவது போன்று, இறைவன் பல்வேறு உயிர்களின் பக்குவ நிலையினை எளிதில் உணர்த்து கொள்ளும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. மேலும் உயிர்களின் பக்குவ நிலையினை அறிந்து அதற்கேற்ப அருள் புரியும் பெருமானின் தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. மாற்றுப் பொன் கட்டி மற்ற பொன்னை விடவும் மிகவும் உயர்ந்த தரத்தில் இருப்பது போன்று ஏனையோரை விடவும் உயர்ந்தவனாக இருப்பவன் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வாள்+நிலா=வாணிலா; வாள்=ஒளி வீசும்; தோணி வண்புரத்து என்ற தொடரினை வண் தோணிபுரத்து என்று மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும். வண்=வளமை;

ஆணிப் பொன் என்றதும் நமது நினைவுக்கு வருவது, சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடல் (2.102.4) தான். இந்த பாடலில் திருஞானசம்பந்தர் ஆணிப் பொன்னினை அடி தொழும் அடியார்க்கு அருவினை அடையாவே என்று கூறுகின்றார்.மாணி=பிரும்மச்சாரி சிறுவன் மார்க்கண்டேயர்; இயமன் மார்க்கண்டேயரின் உயிரினை மதித்ததாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சிறுவயதிலிருந்தே சிவபெருமானை தவறாது வழிபாடு செய்து வந்த சிறுவன் என்பதால், அவனது உயிரினைக் கவர்வதற்கு தனது தூதர்களை அனுப்பாமல்,இயமன் தானே நேராக சென்றான் என்று இங்கே உணர்த்துகின்றார் போலும். உயிரினைக் கவர்வதை உயிரினை உண்பது என்று நயமாக கூறுகின்றார். பேணி=போற்றி, விரும்பி; வேணி=சடைமுடி; வியன்=அகன்ற, இங்கே விரிந்த புகழ் என்று பொருள் கொள்ள வேண்டும். பெருமானை ஆணிப்பொன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஆணிப்பொன் என்றால் மாற்று குறையாத பொன் என்று பொருள். மற்ற பொன்னின் தன்மையை அறிந்து கொள்ள பொற் கொல்லர்கள் தாங்கள் வைத்திருக்கும் ஆணிப் பொன்னுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அதன் தரத்தினை அளப்பார்கள். தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமான், அனைவரிலும் உயர்ந்தவன் என்பதை குறிப்பிடும் வண்ணம் பெருமானை ஆணிப்பொன் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் மற்ற தெய்வங்களின் தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கும் வண்ணம் குறையேதும் இல்லாத தெய்வமாக சிவபெருமானை திருஞானசம்பந்தர் காண்கின்றார். தன்னை தியானித்து வழிபடும் அடியார்களின் பெருந்துயரங்களையும் களையும் வல்லமை பெற்றவர் சிவபெருமான் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அதற்கு இரண்டு உதாரணங்களையும் இந்த பாடலில் கூறுகின்றார். சிறுவன் மார்க்கண்டேயன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரே அந்த உதாரணங்கள். இருவரையுமே அழிவு நிச்சயம் என்ற நிலையிலிருந்து காப்பாற்றிய இறைவனின் கருணை, அவர்கள் இருவரும் இன்றும் வாழ வகை செய்துள்ளது. மார்க்கண்டேயர் பெருமான் பால் கொண்டிருந்த அன்பினால், அவரை மிகவும் உயர்வாக மதித்த இயமன், முன்னமே குறிப்பிட்டிருந்த நாளில் அவரது உயிரினைக் கவர்ந்து உண்ணும் பொருட்டு தானே நேரில் சென்ற போதிலும், தனது அடியான் செய்து கொண்டிருந்த வழிபாட்டிற்கு இடையூறாக வந்த காலன் என்று அவன் மீது மிகுந்த கோபம் கொண்டு அவனை உதைத்து வீழ்த்தியவர் சிவபெருமான். தன்னை தியானித்து போற்றி வழிபடும் அடியார்களின் கொடிய துன்பங்களையும் விலக்கி அருள் புரியும் தன்மை உடைய சிவபெருமான், தனது சடைமுடியில் பிறைச் சந்திரனை அணிந்துள்ளார். ஆணிப் பொன் போன்று சிறந்த குணங்களை உடையவராக, புகழ் மிகுந்த சிரபுரம் தலத்தில் அமர்ந்துறையும் பெருமானின் திருவடிகளைத் தொழும் அடியார்களை கொடிய துன்பங்கள் தரும் வினைகள் சென்று சாரா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மாணி தன்னுயிர் மதித்து உண வந்த அக்காலனை உதை செய்தார்

பேணி உள்கு மெய்யடியவர் பெருந்துயர்ப் பிணக்கு அறுத்து அருள் செய்வார்

வேணி வெண்பிறை உடையவர் வியன் புகழ்ச் சிரபுரத்து அமர்கின்ற

ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.92.16) அப்பர் பிரான், பெருமானின் திருவடியை ஆணிக்கனகம் ஒக்கும் திருவடி என்று குறிப்பிடுகின்றார். ஏணிப்படி நெறி=உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப முக்தி அடையக் கூடிய நிலைகள், வழிகள்: பிறங்குதல்=ஒளியுடன் விளங்குதல்: பொன்னுலகம்=சுவர்க்கம்; ஐயாறனின் திருவடிகள் வானவர்களின் முடியில் விளங்கும் மாணிக்கம், மரகதம், வைரம் போன்ற அழகான கற்கள் போலவும் தரமான பொன் போலவும் ஒளி வீசுகின்றன. மேலும், அவைகளை விரும்பித் தொழும் அடியார்கள் விண்ணுலகம் ஆள்வதற்கு வழி வகுக்கின்றன. அந்த திருவடிகள், அடியார்களின் பக்குவ நெறிக்கேற்ப, வீட்டுலகம் சென்றடைய வழி வகுக்கின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பேணித் தொழும் அவர் பொன்னுலகு ஆளப் பிறங்கு அருளால்

ஏணிப் படி நெறியிட்டுக் கொடுத்து இமையோர் முடி மேல்

மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி

ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.2.4) அப்பர் பிரான், பெருமானை ஆணி என்றே குறிப்பிடுகின்றார். மாணி=பிரம்மச்சாரி, இங்கே சண்டீசரைக் குறிக்கும்: தாணு=நிலையாக இருப்பவன், ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்கிய பின்னரும், சிவபெருமான் இருப்பதால் தாணு என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது, தமியேன்=தனியாக இருப்பவன்: நாம் இன்பங்கள் அனுபவிக்கும் போது நம்முடன் அந்த இன்பங்களை பகிர்ந்து கொள்வதற்கு பலரும் தயாராக இருப்பார்கள். ஆனால் துன்பங்கள் நம்மை வருத்தும் போது. எவரும் நம்முடன் இருப்பதில்லை. எனவே தான் துன்பத்தில் தனித்து வாடுபவன் என்று அப்பர் பிரான் தன்னைக் குறிப்பிடுகின்றார். பிரம்மச்சாரி சிறுவனாகிய சண்டீசர், பசுக்கள் விருப்பத்துடன் தாமே பொழிந்த பாலினைக் கொண்டு நீராட்டி வழிபட்ட தன்மைக்கு, உலகங்களை ஆளும் பதவி கொடுத்தவன் சிவபெருமான்: அவன், பொற்கொல்லர்கள் பொன்னின் தரத்தை அளப்பதற்கு தங்களிடம் வைத்திருக்கும் மாற்றுக் குறையாத செம்பொன் போன்றவன்: தில்லைப் பொன்னம்பலத்துள்ளே நின்று ஆடும் அந்த சிவபெருமான், முற்றூழிக் காலத்திலும் அழியாமல் நிலைத்து நிற்பவன். இத்தகைய பெருமைகள் வாய்ந்த சிவபெருமானை மறந்தால் நான் வாழ்வில் உய்வினை அடையமுடியாது. எனவே எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன் என்று மிகவும் உறுதிபட அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

மாணி பால் கறந்து ஆட்டி வழிபட

நீணுலகெலாம் ஆளக் கொடுத்த என்

ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற

தாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.5.7) அப்பர் பிரான், பெருமானை ஆணிப்பொன் என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். கோணிக் கொண்டை=தலையின் முன்புறத்தில் ஒரு பக்கம் கோணலாக இருக்குமாறு முடித்த கொண்டை: சிதம்பரம் தீட்சதர்கள் தங்களது குடுமியை ஒரு பக்கமாக இருக்கும் வண்ணம் முடிந்து கொள்வதை நாம் இன்றும் காண்கின்றோம். பாணி நட்டங்கள்=தாளத்துடன் இணைந்த நடன வேறுபாடுகள்: பேணி நின்ற=நம்மைத் தேடி வந்த: முற்பிறவியில் நாம் செய்த செயல்களின் பயனாக விளைந்த வினைகள், நம்மை விட்டு அகலாமல், மிகவும் பத்திரமாக, நாம் பேணிக் காக்கும் செல்வம் போன்று நம்முடனே ஒட்டி நிற்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தாருகவனத்து மகளிரிடம் பிச்சை ஏற்கச் சென்ற சிவபெருமான், தன்னுடன் மோகினி வேடத்திலிருந்த திருமாலையும் அழைத்துக் கொண்டு, பாடல்கள் பாடியும் ஆடியும் சென்ற வரலாறு இங்கே குறிக்கப் படுகின்றது. ஒரு புறம் வளைந்து காணப்பட்ட கொண்டையை உடையவளாக காட்சி அளித்து மோகினி உடன் வர, பிச்சாடனர் வேடம் கொண்டு, தாளத்திற்கு ஏற்ப பல விதமான நடனங்கள் ஆடியவாறே தாருகவனம் சென்றவர் சிவபெருமான். அவ்வாறு வேடம் அணிந்து சென்றாலும், ஆணிப் பொன் போன்று சுத்தமாக மதிக்கப்படும் தலைவராக வீலங்கியவர் சிவபெருமான்: அத்தகைய பெருமை வாய்ந்த பெருமான் உறையும் அண்ணாமலையைக் கையால் தொழுதால், நாம் பல பிறவிகளில் சேர்த்து வைத்து, இந்த பிறவிக்கு உடன் அழைத்து வந்திருக்கும் நமது வினைகள் நம்மை விட்டு விலகிச் சென்றுவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர்

பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்

ஆணிப் பொன் அண்ணாமலை கை தொழப்

பேணி நின்ற பெருவினை போகுமே

சோற்றுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.33.7) அப்பர் பிரான் பெருமானை ஆணி என்று குறிப்பிடுகின்றார். ஆணி போல=இரும்பு ஆணியினைப் போன்று வலிமை உடைய நிலை; நாம் எத்துணை வலிமை படைத்தவர்களாக இருப்பினும் நம்மால் நமது வினைகளை கழித்துக் கொள்ள இயலாது. நமது வினைகளை கழித்துக் கொள்ள இயலாத நாம், அந்த வினைகளின் பயனாக, இறந்து மறுபடியும் பிறந்து, இறந்து மீண்டும் பிறந்து, என்றும் பிறவிக் கடலில் சுழன்று கொண்டே இருக்கின்றோம். தான் இருந்த இடத்திலே இருக்கும் ஏணிக்கு இந்த நிலை ஒப்பிடப் படுகின்றது. வலி என்ற சொல் வலிமையான வினை என்று பொருள் கொண்டு, உடலுடன் உயிரினை வினைகள் பிணைக்கின்றன என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. இரண்டு வேறுவேறு பொருட்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கு வலிமையான இரும்பு ஆணிகள் பயன்படுத்தப் படுகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். பிணைப்பாக செயல்படும் ஆணியை அகற்றினால் தான் நம்மால் அந்த இரண்டு பொருட்களையும் வேறுவேறாக பிரிக்க முடியும். அது போன்று, மாறிமாறி வரும் பல உடல்களுடன் நமது உயிரினைப் பிணைக்கும் வலிமையான ஆணியாகிய வினைகளை நாம் அகற்றினால் தான், உயிர் உடலுடன் இணையும் தன்மையிலிருந்து விடுதலை பெற முடியும். பெருமான் ஒருவன் தான், வலிமையான ஆணி போன்று செயல்படும் வினைகளை அறுத்து, உயிருக்கு விடுதலை கொடுத்து, பிறவிப் பெருங் கடலிலிருந்து உயிரினை கரையேற்ற முடியும் என்ற செய்தி இந்த பாடலில் கூறப்படுகின்றது. ஆணி என்பதற்கு ஆணிப் பொன் என்று பொருள் கொண்டு, ஆணிப் பொன் போன்ற சிறப்பினை உடையவன் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாகவே உள்ளது. நெஞ்சமே நீ இரும்பு ஆணியினைப் போன்று எத்துணை வலிமை படைத்தவனாக இருப்பினும், உன்னால் நீ இருக்கும் இடத்திலிருந்து மீண்டு வெளியேற முடியாது. எத்தனை மனிதர்கள் ஏறி இறங்கினாலும், ஒரே இடத்தில் இருக்கும் ஏணி போன்று, எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நீ இந்த பிறவிப் பெருங்கடலிலிருந்து வெளியேற முடியாது. பிறப்பு இறப்புச் சுழற்சியில் அகப்பட்டு, அந்த சுழலின் வழியே பலமுறை ஏறி இறங்கினாலும், சுழலிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் நீ, பிறவிக் கடலை கடக்க உதவும் தோணியாகிய சோற்றுத்துறை இறைவன் மீது அன்பு கொண்டு அவனுக்கு நீ பணி செய்வாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல் இந்த பாடல்.

ஆணி போல நீ ஆற்ற வலியை காண்

ஏணி போல் இழிந்து ஏறியும் ஏங்கியும்

தோணியாகிய சோற்றுத் துறையர்க்கே

பூணியாய்ப் பணி செய் மட நெஞ்சமே

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.46.4) அப்பர் பிரான், சுடர் பொற்காசின் ஆணி என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பேணுதல்=காப்பாற்றுதல். முற்றிலும் அழிந்த நிலையில் ஒற்றைப் பிறையுடன் அடைக்கலம் புகுந்த சந்திரனை காப்பாற்றிய செயல் இங்கே உணர்த்தப் படுகின்றது. ஏணி=தான் இருந்த நிலையில் மாறாமல், தன்னை வணங்கும் அடியார்கள் துன்பக்கடலில் மூழ்காமல் மேலே ஏற உதவும் தன்மை. தோணியும் தான் எப்போதும் நீரினில் இருந்தாலும், தன்னில் ஏறுபவர் நீரினில் மூழ்காமல் அடுத்த கரை செல்வதற்கு உதவும். அக்கரை=துன்பங்கள் ஏதும் கலவாது, நிலையான பேரின்ப நிலையை உடைய முக்தி நிலை; ஆணி=தங்கத்தின் தரத்தினை அறிவதற்காக ஒப்பிடுவதற்காக கொல்லர்கள் வைத்திருக்கும் உயர்ந்த ரகத்து தங்கத் துண்டு; சுலாவுதல்=அசைதல்; சுலா வெண் குழை=வெண்மை நிறம் கொண்டு அசையும் குழை ஆபரணம்; பித்தராம் அடியார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இறைவன் மீது கொண்டுள்ள அளவற்ற பக்தியின் காரணமாக, தாம் செய்வது இன்னதென்று அறியாமல், பிறர் தம்மை பித்தர் என்று ஏளனம் செய்யும் வகையில், பெருமானின் திருநாமங்களைச் சொல்லியவாறு ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருக்கும் நிலையினில் உள்ள அடியார்களை பித்தராம் அடியார் என்று கூறுகின்றார். வேறு எந்தப் பொருளையும் விரும்பாமல் ஒரே பொருளை விரும்பும் தன்மை, பித்தினை ஒத்து இருப்பதால், வேறு எந்த தெய்வத்தையும் விரும்பாமல் சிவபிரானை விரும்புவர்களை பித்தர் என்று அப்பர் பிரான் அழைக்கிறார். ஏறக்குறைய முற்றிலும் அழிந்த நிலையில் ஒற்றைப் பிறையுடன் தன்னைச் சரணடைந்த சந்திரனை, அழியாமல் காப்பாற்றும் வண்ணம் தனது செஞ்சடையில் அணிந்தவனும், தன்னிடம் கொண்டுள்ள அளவில்லாத அன்பின் வயப்பட்டு பித்தர்கள் போன்று மற்றவர்களுக்குத் தோன்றும் அடியார்களுக்கு வீடுபேற்று நிலையை காட்டி, ஏணியாக இருந்து அந்த உயர்ந்த நிலையை அடைய உதவுபவனும், வாழ்க்கைத் துன்பங்கள் எனப்படும் கடலின் சுழிகளின் இடையே அகப்பட்டு வருந்திய அடியேனை, துன்பங்கள் ஏதும் இல்லாத அடுத்த கரைக்கு (நிலையான பேரானந்த நிலைக்கு) அழைத்துச் செல்லும் படகு போன்றவனும், தூய்மையான சோதியாக இருப்பவனும், அசைந்து ஆடும் தன்மை கொண்ட வெள்ளி குழை ஆபரணத்தை அணிந்தவனும், சுடர் விட்டு ஒளிவீசும் பொற்காசுகளின் மாற்றினை அளக்க பயன்படுத்தும், மாற்று குறையாத பொன் போன்று குற்றங்கள் ஏதும் இல்லாமல் விளங்குபவனும் ஆகிய பெருமானை, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தன்மை உடைய தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை அடியார்களுள் கடை நாயாக விளங்கும் அடியேன் அடைந்து, வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.

பேணிய நற்பிறை தவழ் செஞ்சடையினானைப் பித்தாராம் அடியார்க்கு முத்தி காட்டும்

ஏணியை இடர்க்கடலுள் சுழிக்கப் பட்டு இங்கு இளைக்கின்றேர்க்கு அக்கரைக்கே ஏற வாங்கும்

தோணியைத் தொண்டனேன் தூய சோதிச் சுலா வெண்குழையானைச் சுடர் பொற்காசின்

ஆணியை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

எறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.91.7) அப்பர் பிரான் பெருமானை, செம்பொன் ஆணி என்று குறிப்பிடுகின்றார். நீள்நிலவு=ஒளி வீசும் சந்திரன்; அந்தீ= அம்+தீ=அழகிய நெருப்பு; கால்=காற்று; நெறி=தன்மை; இரு=இரண்டு தன்மைகள் கொண்ட காற்று, மென்மையாகவும் வலிமையாகவும் வீசும் தன்மைகள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. வாணிலவு=வானில், தொலைதூரத்தில் இருந்தவாறு ஒளி வீசும் நட்சத்திரங்கள்; அஞ்சனம்=நீல நிறம்; நீலநிறம் கொண்டுள்ள தேவியை ஒரு பாகத்தில் உடைய பெருமான் என்று உணர்த்தும் வகையில் அஞ்சனம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பொன்மலை என்று பெருமானை குறிப்பிடுவதால் நீலமலை என்று தேவியை குறிப்பிடுகின்றார். சேண்=உயர்ந்த; ஒளி வீசும் சந்திரனாகவும், அழகிய தீயாகவும், நீராகவும், மற்றும் மென்மையான தென்றலாகவும் வலிமையான சூறைக் காற்றாகவும் இரண்டு தன்மைகளில் வீசும் காற்றாகவும், வானமாகவும், வானில் ஒளி வீசும் நட்சத்திரங்களாகவும். பூவுலகாகவும் விண்ணுலகாகவும் உலகில் உள்ள பல உயிர்களாகவும் விளங்கும் பெருமான் எனது உயிராகவும் விளங்குகின்றான். அவனது தன்மையை அறிந்தோர்கள், அவனை உரையாணி போன்று தூய்மையான பொன் மலை என்றும், நீலநிறத்தில் உள்ள தேவியைத் தனது உடலில் கொண்டுள்ள பெருமான் என்றும், அழகிய பவளம் திரண்டது போன்ற திருமேனியை உடையவன் என்றும் அழைத்துப் போற்றுகின்றார்கள். அவன் உயர்ந்த எறும்பியூர் மலையில் மாணிக்கமாகத் திகழ்ந்து ஒளிவீசுகின்றான். அத்தகைய பெருமானைச் சென்று அடையும் பேற்றினை அடியேன் பெற்று வாழ்வினில் உய்வினை அடைந்தேன்.

நீள் நிலவும் அந்தீயும் நீரும் மற்றை நெறி இலங்கு இரு காலும் ஆகாசம்மும்

வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன்னுயிரும் என்னுயிரும் தானாய் செம்பொன்

ஆணி என்றும் அஞ்சன மலையே என்றும் அம்பவளத் திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும்

சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்று அடையப் பெற்றேன் நானே

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் பொற்பதிக்கூத்து அதிகாரத்தில், திருமூலர் பெருமானை ஆணிப் பொற்கூத்தன் என்று குறிப்பிடுகின்றார். ஏனையோரின் தன்மையை அளந்து அறிந்து கொள்வதற்கு, ஒப்பிட்டு அறிந்து கொள்வதற்கு பயன்படும் ஆணிப்பொன்னாகத் திகழ்பவன் சிவபெருமான் என்றும் அவனது தன்மையை அளப்பதற்கு வேறோர் கருவியோ அல்லது வேறொருவரோ இல்லை என்று கூறுகின்றார். கூத்தபிரான் மாணிக்கம் போன்று சிறந்தவன்; செழிப்பு மிகுந்த தில்லையம்பதியில் இருப்பவன்; ஆகாயத்தில் அறிவு வடிவாக நின்று அனைத்து உயிர்களுக்கு பேரின்பம் விளைவிப்பவன்; ஆணிப்பொன் போன்று மற்றையோரைத் தன் அளவுட்படுத்தித் தான் அளவுபடாமல் இருப்பவன்; அவனது பேருண்மையை முழுவதுமாக அறிந்து கொண்டு உரைப்பார் யாரும் இல்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனை

பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைப்

சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை

ஆணிப் பொற்கூத்தனை யாரறிவாரே

பொழிப்புரை:

ஒளி வீசும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியுள்ள பெருமான், வளமை வாய்ந்த தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் உறைகின்றான். ஆணிப் பொன் போன்று அனைவரிலும் உயர்ந்தவனாக இருக்கும் பெருமானைக் கண்டு தொழுது வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக. அவன், உயிர்களின் பக்குவ நிலையினை அறிந்து உணர்ந்து அதற்கேற்ப அருள் வழங்கும் திறமை உடையவன் ஆவான்.

பாடல் 6:

அரனை உள்குவீர் (1.090) பாடல்கள் 6, 7 (திதே 0261)

பாந்தளார்ச் சடைப்

பூந்தராய் மன்னும்

ஏந்து கொங்கையாள்

வேந்தன் என்பரே

விளக்கம்:

பாந்தள்=பாம்பு; ஏந்து=ஏந்தியவளாக இருக்கும்; பிராட்டியின் மார்பகங்கள் மிகவும் அழகு வாய்ந்தவை என்பதை உணர்த்தும் பொருட்டு, பல தலங்களில் பிராட்டியின் திருநாமம் அமைந்துள்ளதை நாம் காணலாம். குன்றமுலை நாயகி (திருநாகேச்சரம்), நன்முலை நாயகி (திருவிடைமருதூர்), ஒப்பிலா முலையம்மை (திருவாவடுதுறை), போகமார்த்த பூண்முலையாள் (திருநள்ளாறு), அழகுமுலை அம்மை (வீழிமிழலை), உண்ணாமுலை அம்மை (திருவண்ணாமலை), இளமுலை நாயகி (திருவோத்தூர்) என்பன சில தலங்களில் வீற்றிருக்கும் அம்மையின் திருநாமங்கள்; வேந்தன்=தலைவன், அரசன்; இங்கே உமை அம்மையின் கணவன் என்ற பொருளில் வந்துள்ளது.

பொழிப்புரை:

பாம்பு பொருந்திய சடை முடியினை உடைய இறைவன் பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் நிலையாக உறைகின்றான். அவன் அழகிய மார்பகங்களை உடைய உமை அம்மையின் கணவன் என்று பலரும் அவனை புகழ்ந்து கூறுவார்கள்.

பாடல் 7:

அரனை உள்குவீர் (1.090) பாடல்கள் 6, 7 (திதே 0261)

கரிய கண்டனைச்

சிரபுரத்துள் எம்

அரசை நாடொறும்

பரவி உய்ம்மினே

விளக்கம்:

இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப இறைவன் உயிர்களுக்கு வழங்கும் அருள் இருக்கும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் இறைவனின் அருளினை முழுமையாக பெறுவதற்கு பக்குவம் அடையவேண்டும் அல்லவா. அந்த பக்குவத்தினை அடையும் பொருட்டு, நாம் இறைவனை தினமும் தொழ வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். மனம் இறை சிந்தனையில் ஆழ ஆழ, உண்மையான மெய்ப்பொருளாகிய இறைவனைப் பற்றிய நமது அறிவு விரிவடைகின்றது. அறிவு விரிவடைவதால் மெய்ப்பொருளை சென்று அடைந்து நிலையான இன்பம் பெற மனம் நாட, அதன் முதற்படியாக உயிர் பக்குவம் அடைகின்றது. எனவே தான் இறைவனைப் புகழ்ந்து பாடி உய்வினை அடையுமாறு திருஞானசம்பந்தர் இந்த பாடல் மூலம் நம்மை ஊக்குவிக்கின்றார். கரிய கண்டன் என்ற தொடர் மூலம், உலகின் நலன் கருதி விடத்தையே உட்கொண்ட பெருமானின் கருணை உள்ளம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. பெருமானின் கழுத்தினில் இருக்கும் விடத்தின் கறை, பெருமான் பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினை உட்கொண்டதையும் அந்த செயல் வானவர்கள் மற்றும் அனைத்து உலகத்தவர்களின் நலன் கருதி செய்யப்பட்டது என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது அல்லவா.

நீலகண்டன் என்ற பொருள் பட, கரிய கண்டன் என்றும் கண்டம் கரியவன் கரிய மிடற்றான் என்றும் பெருமானை குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம். கரவீரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் கண்டம் கரியவன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வரிகள் உடைய சிறந்த நீலமணி போன்ற கழுத்தினை உடையவனாக விளங்கும் பெருமானை, கரவீரம் தலத்தினில் எழுந்தருளி அருள் புரியும் பெருமானை, அனைவரிலும் உயர்ந்தவனாக திகழும் பெருமானை, பணிந்து போற்றி, அவனது திருவடிகளைத் துதித்தால் நம்மைப் பிணித்துள்ள வினைகள் நம்மை விட்டுவிட்டு நீங்க, நாம் குற்றமற்றவர்களாகத் திகழலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அரியும் நம்வினை உள்ளன ஆசற

வரி கொள் மாமணி போல் கண்டம்

கரியவன் திகழும் கரவீரத்தெம்

பெரியவன் கழல் பேணவே

சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.66.4) திருஞானசம்பந்தர், பெருமானை கரிய மிடற்றர் என்று அழைக்கின்றார். சுத்தி=சிப்பியின் வடிவத்தில் இருக்கும் திருநீற்றுப் பேழை; எடுத்துக் கொடுப்பதற்கு வசதியாக செய்யப் பட்டது; அனைத்துப் பொருட்களையும் சுத்திகரிக்கும் திருநீறு; கட்டங்கம்=மழு ஆயுதம்; வலிமை வாய்ந்த அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விடத்தினை, சிறிதும் மிச்சம் வைக்காமல் முழுவதுமாக உட்கொண்டு அனைவரையும் காத்த தெய்வமாகிய பெருமான், சிவந்த திருமேனியையும் கறுத்த கழுத்தினையும் உடையவர் ஆவார்; அவர் தனது கைகளில், சிப்பியின் வடிவத்தில் உள்ள திருநீற்றுப் பெட்டகத்தையும் மழு ஆயுதத்தையும் ஏந்தியவர் ஆவார்; தன்னை எதிர்த்து வந்த மத யானையை அடக்கி, அதன் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்ட வல்லமை உடைய பெருமானை,மிகுந்த அன்பு கொண்டு சைவர் மற்றும் பாசுபதர்கள் வணங்குகின்றனர். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான், சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தினில் உறைகின்றார், என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மொய் வல்லசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அமுதுண்ட

தெய்வர் செய்ய உருவர் கரிய கண்டர் திகழ் சுத்திக்

கையர் கட்டங்கத்தர் கரியின் உரியர் காதலால்

சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே

திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.68.2) திருஞானசம்பந்தர், பெருமானை கரிய மிடற்றர் என்று குறிப்பிடுகின்றார். தெரிய=விளங்க; புரிகொள்=வளைத்துக் கட்டிய சடை; வளைத்துக் கட்டிய சடையினை உடைய பெருமான், தனது அடியவர்களுக்கு மிகவும் எளியவராக விளங்கி அருள் புரிகின்றார்; அவர் கிளியைப் போன்று இனிய மெல்லிய மொழியினை பேசும் உமை அன்னையைத் தனது உடலில் பொருந்தி விளங்கும் வண்ணம் ஏற்றுக்கொண்டவர் ஆவார். அவர் தேவர்கள் அனைவர்க்கும் தலைவனாக விளங்குகின்றார். பருத்த யானையினை விழுங்கும் பாம்புகள் மறைந்து இருக்கும் வண்ணம் இருள் அடர்ந்த அடிவாரத்தை உடைய கயிலாய மலையினில் பெருமான் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

புரிகொள் சடையர் அடியர்க்கு எளியார் கிளி சேர் மொழி மங்கை

தெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்

பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள் கூர்ந்த

கரிய மிடற்றர் செய்ய மேனிக் கயிலை மலையாரே

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.67.7) திருஞானசம்பந்தர், பெருமானை கரிய மிடற்றார் என்று குறிப்பிடுகின்றார். பொய்யாமொழி=வேதங்கள்; கை ஆடலினார்=கை வீசு ஆடுபவர்; துடி அசைக்கும் கை என்றும் அனல் ஏந்திய கை என்றும் பொருள் கொள்வதும் பொருத்தமே; உடனே=ஒருங்கே; மிடற்றார்=கழுத்தினை உடையவர்; பை=படம்; இயற்கையாக பகை கொண்டுள்ள சந்திரனையும் பாம்பினையும் ஒருங்கே வைப்பதன் மூலம் தனது சன்னதியில் பகை உணர்வுக்கு இடமில்லை என்று சிவபெருமான் உணர்த்துகின்றார். எப்போதும் உண்மையே பேசும் அடியார்களால் முறையாக பாடல்கள் பாடி புகழப்படும் இறைவன், சிவந்த திருமேனியை உடையவர்; அவர் தான் உட்கொண்ட விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவர்; தனது அகலமான மார்பினில் வெண்ணூல் அணிந்தவர்; அவர் தனது கைகளை வீசி நடனம் ஆடுகின்றார்; கங்கை நதியினை அடக்கியுள்ள சடையினில், பிறைச் சந்திரனையும் படம் எடுத்தாடும் பாம்பினையும் ஒருங்கே வைத்தவர் ஆவார்; இத்தகைய தன்மைகள் உடைய பெருமான் பழன நகரத்தில் உறைபவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார் திருமேனி

செய்யார் கரிய மிடற்றார் வெண்ணூல் சேர்ந்த அகலத்தார்

கையாடலினார் புனலால் மல்கு சடை மேல் பிறையோடும்

பையாடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.7.5) திருஞானசம்பந்தர், பெருமானை கரிய மிடற்றர் என்று அழைக்கின்றார். மறி=மான் கன்று; காந்தள் பூ கைவிரலுக்கு உவமை; காந்தளம்=காந்தள்+அம், காந்தள் மலர் போன்று அழகிய; தையல் என்றால் அலங்கரித்தல் என்று பொருள்; பொதுவாக, தங்களை அலங்கரித்துக் கொள்வதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாக பெண்கள் இருப்பதால் தையல் என்று பெண்களை குறிப்பிடுவது வழக்கம்; இங்கே உமை அன்னையை உணர்த்துவதாக பொருள் கொள்ள வேண்டும். அடையார்=வேத நெறியை, சிவநெறியை அடையாத திரிபுரத்து அரக்கர்கள்; தனது கையினில் மான்கன்றினை ஏந்தியவரும், காந்தள் மலர் போன்று அழகியதும் மெலிந்தும் காணப்படும் விரல்கள் உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவரும், சிவநெறியில் ஒழுகாது அனைவர்க்கும் பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை அழித்து வெற்றி கண்டவரும், சிவந்த மேனி மற்றும் கருமையான கறை படிந்த கழுத்தினை உடையவரும், திருவாஞ்சியம் தலத்தின் தலைவரும் ஆகிய பெருமானின் திருவடிகளை சரண் அடையும் அடியார்களை கொடுமையான நோய்கள் சென்றடையா, என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கையிலங்கு மறி ஏந்துவர் காந்தளம் மெல்விரல்

தையல் பாகமுடையார் அடையார் புரம் செற்றவர்

செய்ய மேனிக் கரிய மிடற்றார் திரு வாஞ்சியத்து

ஐயர் பாதம் அடைவார்க்கு அடையா அரு நோய்களே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.56.7) திருஞானசம்பந்தர் பெருமானை, கரிய கண்டத்தீர் என்று குறிப்பிடுகின்றார். புனம்=காடு; அதள்=தோல்; பொலிவார்ந்த=பொலிவு உடைய; கண்டம்=கழுத்து; இனம்=கூட்டம்; கன மல்கு=மேகம் தவழும்; காடுகளில் வளரும் கொன்றை மலரினை மிகுந்த விருப்பமுடன் சூட்டிக் கொள்பவரும், புலியின் தோலைத் தனது ஆடையாக கொண்டுள்ளவரும், பொலிவுடன் விளங்குவதும் சினம் கொள்ளும் தன்மை உடையதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகிய எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவரும், சிவந்த திருமேனியை உடையவரும், கருமை நிறத்தில் கறை படிந்த கழுத்தினை உடையவரும் ஆகிய பெருமான், மறையோர்கள் கூட்டமாக ஒன்று சேர்ந்துத் தொழுகின்ற பெருமையினை உடைய இடைமருது தலத்தினில் உள்ள, மேகம் தவழும் வண்ணம் உயர்ந்த திருக்கோயிலைத் தனது இருப்பிடமாகக் கொண்டு கலந்து உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

புன மல்கு கொன்றையீர் புலியின் அதளீர் பொலிவார்ந்த

சின மல்கு மால் விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர்

இன மல்கு நான்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில்

கன மல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே

திருமீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.63.9) திருஞானசம்பந்தர் பெருமானை கரிய கண்டத்தார் என்று குறிப்பிடுகின்றார். மிளிரும்=ஒளியுடன் திகழும்; போது=மலர், இங்கே தாமரை மலர்; பொங்கெரி=பொங்கி எழுந்த உயர்ந்த தீப்பிழம்பு; மேதி= எருமை மாடு; ஒரு காதினில் குழை ஆபரணம் ஒளியுடன் மிளிர அணிந்துள்ள பெருமான், தனது கழுத்தினில் கருமை நிறம் உடைய கறை உடையவராக காணப் படுகின்றார். பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காணும் முயற்சியில் திருமாலும் பிரமனும் தோல்வி அடையும் வண்ணம் பொங்கெரியாக உயர்ந்து நிமிர்ந்த பெருமான், திருமால் மற்றும் பிரமனால் தொழப்பட்டவர் ஆவார். அத்தகைய பெருமை வாய்ந்த பெருமானார், வண்டுகள் குற்றமற்ற வகையில் ரீங்காரம் இடும் நீர்நிலைகளில், எருமை மாடுகள் மூழ்கிய பின்னர், சென்று படுக்கும் வயல்கள் நிறைந்த திருமீயச்சூர் தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

காதின் மிளிரும் குழையர் கரிய கண்டத்தார்

போதில் அவனும் மாலும் தொழப் பொங்கெரியானார்

கோதில் வரி வண்டறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி

மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே

கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.80.1) திருஞானசம்பந்தர், பெருமானை கரிய மிடறும் உடையார் என்று குறிப்பிடுகின்றார். வரிய=இசையினை உடைய; சிலை=வில் மற்றும் மலை என்ற இரண்டு பொருளை உடைய சொல்; வணக்கி=வளைத்து; முசலம்=தண்டு; தலத்து இறைவனின் பெயர் பெருமானடிகள்; மிடறு= கழுத்து; இசைப் பாடல்களை வரி என்று அழைப்பது இலக்கிய மரபு; கானல் வரி, வேட்டுவ வரி, என்பவை பாடல் தொகுப்புகளின் பெயராக சிலப்பதிகாரம் இலக்கியத்தில் வருகின்றன. இசைப் பாடல்களாக அமைந்துள்ள வேதங்களை அருளியவரும், ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவரும், மேருமலையினை வில்லாக வளைத்து திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை ஒரு அம்பினை எய்தி வீழ்த்தி எரித்தவரும், பகைவரை அழிக்க பயன்படும் தண்டாயுதத்தை உடையவரும், ஆலகால நஞ்சினை தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவரும், பெரிய புகழினை உடைய விடை மீது அமர்ந்து வருபவரும் ஆகிய பெருமான், பெருமான் அடிகள் என்ற திருநாமத்துடன் கடவூர் மயானம் தலத்தினில் அமர்ந்துள்ளார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

வரியமறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரியமதில்கள் எய்தார் எறியுமுசலம் உடையார்
கரியமிடறு முடையார் கடவூர்மயான மமர்ந்தார்
பெரியவிடைமேல் வருவார் அவரெம்பெருமா னடிகளே

விற்குடி வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.108.3) திருஞானசம்பந்தர், பெருமானை கரிய கண்டத்தர் என்று அழைக்கின்றார். விற்குடி வீரட்டம் தலத்தை விட்டு பிரியாத அடியார்களை பெரும் தவத்தோர் என்று உலகத்தவர் போற்றுவார்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். மனத்தாலும் வாக்காலும் உடலாலும் பிரியாத அடியார்கள் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. வெளிய=வெண்மை நிறத்து; வெண்பொடி=திருநீறு;

கரிய கண்டத்தர் வெளிய வெண்பொடி அணி மார்பினர் வலங்கையில்

எரியர் புன்சடை இடம் பெறக் காட்டத்து ஆடிய வேடத்தர்

விரியும் மாமலர்ப் பொய்கை சூழ் மதுமலி விற்குடி வீரட்டம்

பிரிவிலாதவர் பெரும் தவத்தோர் எனப் பேணுவர் உலகத்தே

பொழிப்புரை:

கரிய கண்டத்தை உடையவனாக தனது கருணைத் திறத்தினை உணர்த்தும் பெருமானை, சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் தலைவனை, எமது அரசினை தினமும் புகழ்ந்துப் பாடி, உலகத்தவரே வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.

பாடல் 8:

அரனை உள்குவீர் (1.090) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0262)

நறவம் ஆர் பொழில்

புறவ நற்பதி

இறைவன் நாமமே

மறவல் நெஞ்சமே

விளக்கம்:

தினமும் இறைவனின் புகழினைப் பாடி வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று சென்ற பாடலில் நமக்கு அறிவுரை கூறிய திருஞானசம்பந்தர், அதனை மீண்டும் வலியுறுத்தும் வண்ணம், இறைவனின் திருநாமத்தை மறவாது நமது நெஞ்சம் இருக்க வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். நறவம்=தேன்;

பொழிப்புரை:

தேன் நிறைந்த பூக்கள் உடைய பூஞ்சோலைகள் நிறைந்ததும், அடியார்களுக்கு பல நன்மைகளை விளைவிப்பதும், புறவம் என்று அழைக்கப் படுவதும் ஆகிய சீர்காழி தலத்தில் உறையும் இறைவனின் திருநாமங்களை, உலகத்தவரே, மறவாது உங்களது நெஞ்சத்தில் வைப்பீர்களாக

பாடல் 9:

அரனை உள்குவீர் (1.090) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0262)

தென்றில் அரக்கனைக்

குன்றில் சண்பையான்

அன்று நெரித்தவா

நின்று நினைமினே

விளக்கம்:

தென்றில்=பகை; தென்றில் என்ற சொல் தெற்கு திசையினை உணர்த்துவதாக பொருள் கொண்டு தமிழகத்தின் தெற்கே உள்ள இலங்கைத் தீவின் மன்னன் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. குன்றில்=கயிலை மலையில்; சீர்காழி தலத்தில் கட்டு மலையில் மேல் அமைந்துள்ள கயிலாயக் காட்சி சன்னதி திருஞானசம்பந்தர்க்கு அரக்கன் இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை நிகழ்ச்சியை நினைவூட்டியது போலும். அரக்கன் இராவணனது கயிலை நிகழ்ச்சி, சிவபெருமானின் வலிமையையும் அவரது கருணைத் திறத்தையும் ஒரு சேர உணர்த்தும் நிகழ்ச்சி. எவராலும் வெற்றி கொள்ள முடியாமல் அகந்தையுடன் திரிந்த அரக்கனது வலிமை குறைக்கப்பட்டு, அவனது அகந்தை அழிக்கப்பட்டது. தான் தங்கியிருந்த கயிலை மலையினை பேர்க்கத் துணிந்தவன் என்பதையும் பொருட்படுத்தாது, அரக்கன் சாம கானம் பாடி இறைஞ்சிய போது, அரக்கன் கொண்டிருந்த இடரிலிருந்து அரக்கனை விடுவித்ததும் அன்றி, அவனுக்கு பல வரங்களும் அருளிய பெருமான், எல்லையில்லா கருணை உள்ளவன் கொண்டவன் என்பதையும் நாம் இந்த பாடலிலிருந்து உணர்கின்றோம்.

கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (4.43.10) அப்பர் பிரான் இலங்கை மன்னனை தென்னவன் என்று குறிப்பிடுகின்றார். தென்னவன்=தென்னிலங்கை மன்னவனாகிய இராவணன்; கன்னல்=கரும்பு; இன்=இன்னருள்; சேயிழை=அணிகலன்கள் பூண்ட இளம் பெண், இங்கே பார்வதி தேவி

தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு

மன்னவன் விரலால் ஊன்ற மணிமுடி நெரிய வாயால்

கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்

இன் அவற்கு அருளிச் செய்தார் இலங்கு மேற்றளியானாரே

பொழிப்புரை:

தென் திசையில் இருந்த இலங்கை தீவுக்கு அரசனாகிய அரக்கன் இராவணனை கயிலை மலையின் கீழே பண்டைய நாளில் நெரித்து அவனது வலிமையை அடக்கிய இறைவன் சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறைகின்றான். உலகத்தவரே, இறைவனின் எல்லையற்ற ஆற்றலையும் அளவு கடந்த கருணையையும் உணர்த்தும் இந்த செயலை நினைவு கூர்ந்து அவனை போற்றி புகழ்வீர்களாக.

பாடல் 10:

அரனை உள்குவீர் (1.090) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0262)

அயனும் மாலுமாய்

முயலும் காழியான்

பெயலவை எய்தி நின்று

இயலும் உள்ளமே

விளக்கம்:

பெயல்=அருள் மழை; பெயலவை=அருள் பொழிதல்; இயலல்=உள்ளத்தை பொருத்துதல்; இறைவன் பால் உள்ளத்தை பொருத்தி மனம் ஒன்றி அவனை வழிபட வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வேறு சிந்தனைகளில் மனம் அலை பாயாமல், மனம் ஒன்றி இறைவனை வழிபடவேண்டும் என்று பல திருமுறை பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. மனம் ஒன்றி இறைவனை வழிபடுவதால் நமக்கு நட்டம் ஏதும் இல்லை என்று உணர்த்தி மனம் ஒன்றி இறைவனை வழிபடவேண்டும் என்று அறிவுரை கூறும் அப்பர் பிரானின் பாடல் (4.81.3) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கன்றிய=சினந்த; சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்து விட்ட நிலையில், அவனது உயிர்னைக் கவரும் பொருட்டு தனது கடமையைச் செய்ய வந்த இயமனுக்கு அந்தச் சிறுவன் தனது கடமையைச் செய்ய விடாமல் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது, கோபத்தை ஏற்படுத்தியது.

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

பிறக்க முக்தி என்று திருவாரூரையும், இருக்க முக்தி என்று காஞ்சியையும், இறக்க முக்தி என்று காசியினையும், காண முக்தி என்று சிதம்பரத்தையும், நினைக்க முக்தி என்று திருவண்ணாமலையையும் குறிப்பிடுவார்கள். அந்தக் கருத்தினை வலியுறுத்தும் முகமாக சென்று தொழுமின்கள் தில்லையை என்று நமக்கு இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். என்று வந்தாய் என்று கேட்ட சிவபிரானுக்கு, அப்பர் இந்த பதிகத்தில் விடை அளிக்கவில்லை. அத்தா உன் ஆடல் காண அடியனேன் வந்தவாறே என்று பத்தனாய் பாட மாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தில் அப்பர் பிரான் விடை கூறுகின்றார். இறைவனே இப்பொழுது தான் வந்தேன் என்று உணர்த்தும் வகையில் வந்தவாறே என்று கூறுவதையும். தனது வருகைக்கும் காரணம் உனது ஆடலைக் காண்பது தான் என்று சொல்லும் அழகையும் நாம் ரசிக்கலாம்.

திருஞான சம்பந்தரும் தான் அருளிய முதல் பதிகத்தின் கடைப் பாடலில் (1.1.11). ஒன்றிய உணர்வுடன் இறைவனை குறித்து தான் பதிகம் பாடியதை நமக்கு உணர்த்தி, ஒன்றிய மனத்துடன் இறைவனை வணங்க வேண்டும் என்ற வழிமுறைக்கு முன்மாதிரியாக இருப்பதை நாம் காணலாம்.

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய

பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

பிரமனும் திருமாலும் தங்களுக்குள்ளே யார் பெரியவர் என்று வாதம் செய்த போது, பல முனிவர்கள் அவர்களது வாதத்தை தடுக்கும் நோக்கத்துடன், அவர்கள் இருவரை விடவும் சிவபெருமான் மிகவும் உயர்ந்தவர் என்று சொல்லி வாதத்தை தவிர்க்குமாறு வேண்டினார்கள். ஆனால் அவர்கள் இருவரும் வாதத்தினை நிறுத்தாமல், சிவபெருமானை விடவும் தாங்கள் பெரியவர்கள் என்று பேசினார்கள். தங்களின் முன்னே நெடிய தழல் பிழம்பாக பெருமான் தோன்றிய போதும், பிழம்பின் அடியையும் முடியையும் தங்களது முயற்சியால் காண்போம் என்று இறுமாப்புடன் பேசினர். இறுதியில் தங்களது முயற்சியில் தோல்வி அடைந்து பெருமானின் எல்லையற்ற ஆற்றலை நினைத்து இறைஞ்சிய போது, அவர்கள் அதற்கு முன்னம் செய்த தவறுகள் அனைத்தையும் மன்னித்த பெருமான், இலிங்க வடிவில் அவர்களுக்கு காட்சி தந்து அருளினார். இந்த கருணைச் செயல் இங்கே அருள் மழை என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது.

பொழிப்புரை:

பிரமனும் திருமாலும் தங்களின் முன்னே எழுந்த நெடிய தழல் பிழம்பின் அடியையும் முடியையும் காண முயன்று அந்த முயற்சியில் தோல்வி அடைந்த பின்னர், சீர்காழி தலத்தில் விளங்கும் ஈசனிடம் இறைஞ்ச பெருமான் அவர்கள் பால் இரக்கம் கொண்டு இலிங்க உருவத்தில் காட்சி கொடுத்த கருணைச் செயலை அடியேனது மனம் நினைத்து, அவரது நினைவில் பொருந்துகின்றது.

பாடல் 11:

அரனை உள்குவீர் (1.090) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0262)

தேரர் அமணரைச்

சேர்வில் கொச்சை மன்

நேரில் கழல் நினைத்து

ஓரும் உள்ளமே

விளக்கம்:

மன்=மன்னன்; நேரில்=ஒப்பு அற்ற; ஓரும்=தியானிக்கும்; சேர்வில்=சேராத; ஓர்தல் என்ற சொல்லுக்கு ஆராய்தல் என்றும் பொருள். பெருமானே முழுமுதற்கடவுள் என்றும் சிவநெறியே முக்திக்கு அழைத்துச் செல்லும் நெறி என்றும் மற்ற நெறிகள் பிறவிக்கு காரணமாக இருப்பன என்றும் உள்ள உண்மை நிலையினை ஆராய்ந்து தெரிந்து கொண்டு பெருமானை எப்போதும் தியானித்தல் என்று பொருத்தமாக பொருள் கூறுவார்கள். முதலில் பெருமானை இகழ்ந்து பேசினும் தங்களது தவறுகளை உணர்ந்து வருந்திய பிரமன் மற்று திருமாலுக்கு அருள் புரிந்ததை குறிப்பிடும் சம்பந்தர் இந்த பாடலில். புத்தர்களையும் சமணர்களையும் பெருமான் சென்று சேரார் என்று கூறுகின்றார். இவர்கள் இருவரும் எப்போதும் பெருமானை பழிப்பதும், தாங்கள் செய்வது தவறு என்பதை உணராத நிலையில் இருப்பதுமே, பெருமான் அவர்களைச் சென்று சேராததன் காரணம் என்பதை மறைமுகமாக சம்பந்தர் உணர்த்துவது ரசிக்கத் தக்கது.

பொழிப்புரை:

புத்தர்கள் மற்றும் சமணர்களை சென்று அணுகாதவனும், கொச்சைவயம் என்று அழைக்கப் படும் சீர்காழி தலத்தின் அரசனும் ஆகிய ஒப்பற்ற இறைவனின் திருவடிகளை நினைத்து அடியேனின் உள்ளம் தியானம் செய்கின்றது.

பாடல் 12:

அரனை உள்குவீர் (1.090) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0262)

தொழு மனத்தவர்

கழுமலத்துறை

பழுதில் சம்பந்தன்

மொழிகள் பத்துமே

விளக்கம்:

பத்து=பற்றுக்கோடு; பழுதில்=குற்றமற்ற

பொழிப்புரை:

பெருமானைத் தொழுது உய்வினை அடையும் அடியார்கள் நிறைந்த கழுமலம் என்று அழைக்கப்படும் நகரில் உறைபவனும், குற்றமற்ற பாடல்களை பாடுவோனும் ஆகிய சம்பந்தனது பாடல்கள் உயிருக்கு பற்றுக்கோடாக விளங்குகின்றன.

முடிவுரை:

முதல் பாடலில் பெருமானை துதித்து பாடுமாறு உலகத்தவரைத் தூண்டும் திருஞான சம்பந்தர், இரண்டாவது பாடலில் பெருமானது திருவுருவத்தை நேரில் கண்டு பேணுமாறும், மூன்றாவது பாடலில் அவனே நமது தலைவன் என்று புரிந்து கொண்டு பணிந்து வணங்குமாறும், நான்காவது பாடலில் அவன் ஒருவனே என்றும் அழியாமல் நிலையாக இருப்பவன் என்று அறிந்து கொள்ளுமாறும் ஏழாவது பாடலில் இறைவனை தினமும் நினைத்து பணிந்து வணங்குமாறும், எட்டாவது பாடலில் அவனது திருநாமங்களை என்றும் மறவாது நினைக்குமாறும், பதினோராவது பாடலில் இறைவனின் ஒப்பற்ற திருவடிகளை நினைக்குமாறும் நமக்கு அறிவுரை கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் மாற்று உரைக்கும் பொன் போன்று ஒப்பற்றவன் பெருமான் என்றும் ஆறாவது பாடலில் உமை அன்னையின் கணவன் என்றும், ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் இராவணன், பிரமன் மற்றும் திருமால் செய்த தவறுகளை மன்னித்து அவர்களுக்கு அருள் மழை பொழிந்ததை நினைவூட்டும் திருஞானசம்பந்தர், பதினோராவது பாடலில் பெருமான் தன்னை இகழ்ந்து பேசுவோரைச் சென்று சாரார் என்று கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்து பாடல்கள் நமக்கு பற்றுக்கோடாக இருந்து, சிவபெருமானின் தன்மைகளை புரிந்து கொண்டு அவனை வணங்கி வாழ்வினில் உய்வினை அடைய உதவும் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். திருஞானசம்பந்தர் காட்டிய வழியில் சென்று பெருமானை வணங்கி சிவநெறியில் நின்று வாழ்வினில் உய்வினை அடைவோமாக.



Share



Was this helpful?