இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


அருத்தனை அரவனை

அருத்தனை அரவனை

பதிக எண்: 1.111 - கடைமுடி - வியாழக்குறிஞ்சி

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் முதல் தலமாக கண்ணார்கோயில் திருத்தலத்திற்கு சென்ற திருஞானசம்பந்தர், ஆங்கிருந்து புறப்பட்டு மேற்கு நோக்கி சென்று புள்ளிருக்கு வேளூரை அடைந்தார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். இந்த பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கடற்கரை ஓரமாக மயிலாடு துறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கீழையூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமே அந்நாளில் கடைமுடி என்று அழைக்கப் பட்டு தேவாரப் பதிகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. கடைமுடி தலம் சென்றதாக பெரிய புராணத்தில் குறிப்பு ஏதும் காணப் படாமையால், புள்ளிருக்குவேளூர் செல்லும் வழியில் இங்கும் திருஞானசம்பந்தர் சென்றிருக்கலாம் என்று பெரியோர்களால் கருதப் படுகின்றது. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஒன்று மட்டும் நமக்கு இதுவரை கிடைத்துள்ளது. இந்த தலத்தில் கண்வ மகரிஷி தவம் செய்தார் என்று கூறுவார்கள். இறைவனின் திருநாமம்; கடைமுடிநாதர்; இறைவியின் திருநாமம்; அபிராமி அம்மை. பிஞ்ஞகர்=அழகிய தலைக் கோலம் கொண்டவர். திரு சி.கே. சுப்பிரமணியம் அவர்களும் பிஞ்ஞகர் கோயில் பிறவும் எனும் சொற்றொடர், கடைமுடி, காட்டுப்பள்ளி, நாங்கூர் ஆகிய தலங்களை குறிக்கலாம் என்று கருதுகின்றார்.

திருமறைச் சண்பையராளி சிவனார் திருக்கண்ணார்கோயில்

பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும்

உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்மாலை கொண்டு ஏத்தி

வருபுனல் பொன்னி வடபால் குடதிசை நோக்கி வருவார்

மயிலாடுதுறையிலிருந்து பதினெட்டு கி,மீ. தூரத்திலும் செம்பொனார்கோயில் தலத்திலிருந்து ஐந்து கி.மீ, தூரத்திலும் உள்ள தலம். நனிபள்ளி மற்றும் ஆனந்த தாண்டவபுரம் ஆகிய தலங்களுக்கு அருகில் உள்ளது. தற்போது கீழையூர் என்றும் ஏழூர் என்றும் அழைக்கப் படுகின்றது. பழமையான சிறிய கோயில். மூலவரின் திருநாமம் கடைமுடி ஈஸ்வரர், கடைமுடிநாதர், அம்பிகையின் திருநாமம் அபிராமவல்லி. மூலவர் சுயம்பு மூர்த்தம் மேற்கு திசை பார்த்த மூலவர் சன்னதி. பதினாறு பட்டைகள் கொண்ட லிங்கம். சற்று உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகின்றார். உலகம் அழியும் இறுதிக் காலத்திலும் பெருமான்,உயிர்களை காக்கின்ற தலமாக கருதப் படுவதால், தலத்திற்கு கடைமுடி என்றும் பெருமானுக்கு கடைமுடி நாதர் என்ற பெயரும் வந்தது என்று கூறுகின்றனர். இலிங்கத் திருமேனியின் பதினாறு பட்டைகள், வேண்டும் அடியார்களுக்கு பதினாறு பேறுகளை அளிக்க வல்லது என்றும் கூறுகின்றனர். பெருமானை வடமொழியில் அந்திசம்ரஷேணசுவரர் என்று அழைக்கின்றனர். உயிர்கள் தங்களது வாழ்வினில் கடைசி காலத்தில் பற்றிக் கொள்ள வேண்டிய பெருமானாக கருதப் படுகின்றார். இந்த காரணம் பற்றியே, தங்களது முதுமைக் காலத்தில் காசி சென்று வழிபட முடியாதவர்கள், சென்று வழிபட்டு பயனடையத் தகுந்த தலமாக, காசிக்கு சமமாக, இந்த தலம் கருதப் படுகின்றது. இராஜ கோபுரத்திற்கு பதிலாக அழகிய முகப்பு வளைவு உள்ளது. நுழைவாயிலில் ரிஷபாரூடர். விநாயகர் வேலேந்திய முருகர் சிற்பங்கள் உள்ளன, கொடிக் கம்பமும் இல்லை. கண்வமுனிவர், சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை, வழிபட்டு முக்தி அடைந்த தலம். இவர் காவிரி நதியில் நீராடிய இடம் கண்வ மகான் துறை என்றே அழைக்கப் படுகின்றது. தனது செருக்கின் காரணமாக, ஒரு தலையினை இழந்த பிரமன், இங்கே வழிபட்டு சிவபெருமானின் தரிசனம் கண்டார். மற்றும் இயமன் இந்திரன் ஆகியோரும் வழிபட்ட தலம். தலமரமாகிய கிளுவையின் கீழே ஆதி மூர்த்தி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் கடைமுடி விநாயகர், வள்ளி தெய்வயானையுடன் முருகர், நடராஜர், சூரியன், பைரவர், தேவார மூவர் முதலிகள், நவகிரக சன்னதிகள் மற்றும் சண்டீசர் சன்னதி உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். தட்சிணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இருவரும் ஒரு காதில் வளையம் அணிந்தவராக, இடது காதுகளில் வளையம் அணிந்தும் வலது காதுகளில் வளையும் ஏதும் இல்லாமலும் காணப்படுகின்றனர். இந்த கோயிலுக்கு உரிய மாதொரு பாகர், செம்புச்சிலை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது. தலமரம் கிளுவை; தீர்த்தம் கர்ணா தீர்த்தம்; இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. வடக்கில் இருந்து தெற்காக பாயும் காவிரி நதி இந்த இடத்திலிருந்து மேற்காக ஓடுகின்றது. திருமணத் தடைகளை நீக்கிக் கொள்ள சிறந்த தலமாக கருதப் படுகின்றது. தாம் செய்த தவறினை உணர்ந்து, பெருமானிடம் மன்னிப்பு கோரி வழிபடும் அடியார்களுக்கு, மன நிம்மதி அளிக்கும் தலம். பிரகாரத்தில் உள்ள நவகிரக மண்டபம் எண்கோண வடிவில் உள்ள ஆவுடையார் மீது அமைந்துள்ளது. நவகிரகங்கள் நேர் வரிசையில் இல்லாமல், முன்னும் பின்னுமாக அமைந்துள்ளன. தலமரத்தின் பெயரால், கிளுவையூர் என்று அழைக்கப்பட்ட தலம், நாளடைவில் கீழையூர் என்று மருவி விட்டது என்றும் கூறுகின்றனர். முருகன் சன்னதியும் எண்கோண வடிவில் அமைக்கப் பட்டுள்ளது. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் பற்றிய குறிப்புகள் காணப்படுவதால்,அவரது காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. பராந்தகச் சோழன் மற்றும் விக்ரமச் சோழனால் புதுப்பிக்கப் பட்ட திருக்கோயில். உற்சவ மூர்த்தங்கள் பாதுகாப்பு கருதி, அருகில் உள்ள வெள் நகர் தலத்திலுள்ள திருக்கோயிலில் வைக்கப் பட்டுள்ளன.

பாடல் 1:

அருத்தனை அறவனை அமுதனை நீர்

விருத்தனை பாலனை வினவுதிரேல்

ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும்

கருத்தவன் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

விருத்தன்=அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் முன்னவனாக இருக்கும் நிலை; பாலனாகி=அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் இருக்கும் நிலை: இந்த இரண்டு நிலைகளும், திருஞான சம்பந்தப் பெருமானால் இடர் களையும் பதிகத்தின் (1.52) எட்டாவது பாடலில் குறிக்கப் படுகின்றது. கருத்தன்=முழுமுதற் கடவுள், கர்த்தன் என்ற சொல்லின் திரிபு; அருத்தன்=அனைத்துப் பொருட்களுக்கும் கருவானவன், உட்பொருளானவன்; சிவபெருமானை வழிபடும் அடியார்கள், ஆனந்தத்தினால், ஆடுவதாகவும் பாடுவதாகவும் திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். .

இடும்பாவனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.17.9) திருஞானசம்பந்தர், பெருமானை விருத்தர் என்று அழைத்து, அனைத்து உயிர்களுக்கும் பழமையானவர் பெருமான் என்பதை குறிப்பிடுகின்றார். பொருளார் தரு மறையோர்=நமது வாழ்க்கைக்கு தேவையான பல செய்திகளை அறிவுறுத்தும் வேதங்களில் தேர்ச்சி பெற்ற அந்தணர்கள்; தெருளார் தரு சிந்தை=தெளிந்த சிந்தை; சந்தம் மலர்=பல நிறங்களுடன் காணப்படும் மலர்கள்;மருள்=அறியாமையால் விளைந்த செருக்கு; அறியாமையால் விளந்த செருக்கின் காரணமாக, பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முடியாமல் திகைத்த திருமால் மற்றும் பிரமன்; இருளார் தரு கண்டர்=கரிய நிறம் படர்ந்த கழுத்தினை உடைய பெருமான்;

பொருளார் தரு மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர்த்

தெருளார் தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய்

மருளார் தரு மாயன் அயன் காணார் மயலெய்த

இருளார் தரு கண்டர்க்கிடம் இடும்பாவனம் இதுவே

நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.52.6) பெருமான் விருத்தனாகவும் பாலனாகவும் இருப்பவர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். விருத்தன்= அனைவரிலும் மூத்தவன், அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றிய பெருமான் தோன்றிய காலம் யாது என்பதை இதுவரை எவரும் அறியவில்லை; பாலன்=அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும், தான் அழியாமல் இருப்பதால் பாலன் என்றார். வயது முதிர்ந்தவர் இறந்த பின்னரும் சிறியோர் உயிருடன் இருப்பது பொதுவான உலக நியதி. இந்த தன்மையை உணர்த்தும் வண்ணம், பெருமானை பாலன் என்று குறிப்பிட்டார் போலும்,. பொதுவாக பாலன் விருத்தன் என்று வரிசைப் படுத்தி கூறுவார்கள். உலகினில் தோன்றும் உயிர்கள், இறைவன் என்று ஒருவன் இருப்பதையும் அத்தகைய ஒருவன் தாங்கள் தோன்றுவதற்கு முன்னமே இருந்தான் என்பதையும் உணர்வதால், அவனை விருத்தனாக முதலில் உணர்கின்றனர். பல உயிர்கள் இறந்த பின்னரும் இறைவன் இருப்பதை உணரும் உயிர்கள், தாம் இறந்த பின்னரும் இறைவன் அழியாமல் இருக்கும் தன்மையை ஊகித்து உணர்கின்றன. எனவே, தங்களுக்கும் பின்னரும் இறைவன் இருக்கும் தன்மையை பாலனின் தன்மையாக காண்கின்றனர். எனவே தான் விருத்தன் என்பது முதலில் கூறப்பட்டு, பாலன் என்பது பின்னர் கூறப்படுகின்றது. அனைத்து உயிர்களும் உலகங்களும் இயங்குவதற்கு காரணகர்த்தாவாக இருப்பவன் என்று உணர்த்தும் கர்த்தா என்ற வடமொழிச் சொல் கருத்தன் என்று தமிழ்ப் படுத்தப் பட்டுள்ளது. கமழ் சடை என்று, இயற்கையாகவே நறுமணம் கமழும் பெருமானின் சடையின் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இணையான திருவடிகள் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பொன்னடி என்றும் மலரடி என்றும் பெருமானின் திருவடிகள் போற்றப் படுகின்றன. பொன் போன்று சிறந்ததும் ஒளிவீசுவதும் ஆகிய திருவடிகள் என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும் இத்தகைய ஒப்பு முழுமையான ஒப்பு அல்ல. பொன்னுடன் ஒப்பிடப் படும்போது, திருவடிகளின் மென்மை வெளிப்படுவதில்லை; மலருடன் ஒப்பிடப் படும்போது திருவடிகளின் ஒளிவீசும் தன்மை வெளிப் படுவதில்லை. எனவே திருஞானசம்பந்தர் ஒரு முடிவுக்கு வந்தார் போலும், பெருமானின் திருவடிக்கு எந்த பொருளும் இணையாகாது; எனவே பெருமானின் திருவடிக்கு அவரது திருவடியே இணையானது என்பது தான் அந்த முடிவு. பெருமானின் இடது திருவடிக்கு அவரது வலது திருவடி இணையாகவும், அவரது வலது திருவடிக்கு இடது திருவடி இணையாக உள்ள தன்மை இங்கே அடியிணை என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது

விருத்தனாகி பாலனாகி வேதமோர் நான்கு உணர்ந்து

கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேல் கரந்தாய்

அருத்தனாய ஆதிதேவன் அடி இணையே பரவும்

நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக விருத்தனாக இருப்பவனே, அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் தான் அழியாமல் பாலனாக இருப்பவனே, நான்கு வேதங்களையும் நன்றாக கற்றுணர்ந்து அதன் பொருளாக இருப்பவனே, கங்கை நங்கையை தனது நறுமணம் கமழும் சடையில் வைத்து மறைத்தவனே, முழுமுதற் கடவுளாக இருப்பவனே, உனது இணையான திருவடிகளைப் புகழ்ந்து ஆடியும் பாடியும் போற்றும் அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெருமான், பாலனாகவும் விருத்தனாகவும் இருக்கும் நிலை இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடலை (1.76.3) நினைவூட்டுகின்றது. தன்னை வழிபடும் அடியார்களின் நிலைக்கு ஏற்ப பெருமான் பாலனாகவும் விருத்தனாகவும் வடிவு கொள்கின்றார். விருத்தனாக வடிவம் ஏற்று, தனது அடியார்களின் தன்மையை உலகுக்கு உணர்த்திய பல நிகழ்ச்சிகளை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம், சுந்தரரின் வரலாற்றில் நான்கு இடங்களிலும் மானக்கஞ்சாற நாயனார் புராணத்திலும், பெருமான் முதியவராக வேடம் தரித்து வருவதை நாம் காண்கின்றோம். நடக்கவிருந்த திருமணத்தினை தடுக்கும் பொருட்டு ஓலையுடன் வந்து சுந்தரரை ஆட்கொண்ட போதும், திருவதிகை சித்தமடத்தில் சுந்தரருக்கு திருவடி தீட்சை கொடுத்து பின்னர் மறைந்த போதிலும், கூடலையாற்றூருக்கு வழிநடத்தி கூட்டிச் சென்ற போதும், கருகாவூர் வெள்ளடை செல்லும் வழியில் பொதி சோறு அளித்த போதிலும் பெருமான் முதியவராக வந்ததை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். பாலனாகவும் விருத்தனாகவும், உயிர்களுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் வேடங்கள் தரிக்கும் பெருமான், பண்டைய நாளில் தனது அடியவன் சிறுவன் மார்க்கண்டேயனுக்கு உதவும் பொருட்டு கூற்றுவனை உதைத்து, அந்த கூற்றுவனுக்கே காலனாக விளங்கியவன்; அவனே தனது கருத்துகளை, எனது வாய்மொழியாக வெளிப் படுத்துகின்றான் என்ற குறிப்பின் மூலம், வேதங்களில் சொல்லப் பட்டுள்ள கருத்துகளை தேவாரப் பாடல்களாக வெளிப்படும் வண்ணம் திருவுள்ளம் கொண்டவன் பெருமான் என்று திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களையும் பெருமானே, எனது எழிலைக் கவர்வது உமக்கு முறையான செயலா என்று திருஞானசம்பந்தர் கேட்கின்றார். இந்த பாடல்கள் அகத்துறை வகையைச் சார்ந்தவை. பெருமான், பால் தீராத காதல் கொண்ட நாயகியாக தன்னை உருவகிக்கும் திருஞான சம்பந்தர், பெருமானைச் சென்று அடையாத ஏக்கத்தின் காரணமாக தனது உடல் மெலிந்தும் அழகு குலைந்தும் இருப்பதாக குறிப்பிட்டு, பெருமான் தன்னுடன், தன்னை (திருஞான சம்பந்தரை) சேர்த்துக் கொண்டு பழைய பொலிவுடன் தான் திகழ வழி வகுக்க வேண்டும் என்று வேண்டுவதாக அமைந்த பாடல்.

பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம் பண்டு வெங்கூற்றுதைத்து அடியவர்க்கு அருளும்

காலனாம் எனதுரை தனதுரையாகக் கனலெரி அங்கையில் ஏந்திய கடவுள்

நீல மாமலர்ச் சுனை வண்டு பண் செய்ய நீர்மலர் குவளைகள் தாது விண்டோங்கும் ஏல நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாய்ப் பேணி என் எழில் கொள்வது இயல்பே

திருப்பறியலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.134.1), திருஞான சம்பந்தர் பெருமானை விருத்தன் என்று அழைக்கின்றார். கர்த்தா என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் கருத்தன் என்ற தமிழ்ச்சொல்; அனைத்து உயிர்களுடன் உடனாக இருந்து, அவற்றை செயல் படுத்தும் தன்மை கர்த்தா என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. முழுமுதற் கடவுள் என்று பொருள். கருத்தன் என்பதற்கு, தன் கருத்தின் வழியே செயல்படுபவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமான் தனது திருவுள்ளத்தில் கருதுவதை மட்டுமே செயல்படுத்துகின்றான். பெருமானை, அவனது எண்ணத்திற்கு மாறாக எவரும் செயல்பட வைக்க முடியாது. இவ்வாறு தன்வயத்தனாக பெருமான் இருக்கும் தன்மையே அவனது எட்டு குணங்களில் முதல் குணமாக கருதப்படுகின்றது. எண்குணத்தான் என்று திருமுறை பல பாடல்களில் குறிப்பிடுகின்றன. தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் ஆகியவை பெருமானின் எட்டு குணங்களாக கருதப்படுகின்றன. நமது எண்ணங்கள், சொற்கள், கற்பனை ஆகிய அனைத்தையும் கடந்தவனாக விளங்கும் இறைவன், மிகவும் எளியவனாக அனைத்து உயிர்களின் உள்ளே இருந்த வண்ணம் இயக்கும் தன்மை பற்றியே அவனுக்கு கடவுள் என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள். அனைத்தையும் கடந்தவனாக இருப்பினும் உயிர்களின் உள்ளே உறைபவன் என்று பொருள். நிருத்தன்=நடனம் ஆடுபவன்; திருத்தம் உடையார்=திருந்திய மனம் உடைய அடியார்கள்; புலன்களின் வழியே மனம் செயல்படாமல், உயிரின் விருப்பத்திற்கு இணங்க ஐந்து பொறிகளும் செயல்படும் தன்மை; பறியல் என்பது தலத்தின் பெயர்; வீரட்டம் என்பது திருக்கோயிலின் பெயர்; நிரம்பா மதி=முழுதும் வளர்ச்சி அடையாத ஒற்றைப் பிறைச் சந்திரன்; விருத்தன்=தொன்மையானவன், அனைத்து உயிர்களும் தோன்றும் முன்னே தோன்றியவன். அனைத்து உயிர்களுடன் பிணைந்து நின்று அந்தந்த உயிர்களை இயக்குபவனும், அனைத்துப் பொருட்களையும் கடந்தவனாக இருப்பினும் மிகவும் எளியவனாக அனைத்து உயிர்களுடன் இணைந்து இருப்பவனும் ஆகிய இறைவன், தனது கையினில் அனற்பிழம்பை ஏந்திய வண்ணம் நடனம் ஆடுகின்றான். அனைத்துப் பிறைகளையும் ஒவ்வொன்றாக இழந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் தன்னிடம் சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு சந்திரனை அழியாமல் காத்த பெருமானை, குற்றம் ஏதும் இல்லாமல் திருந்திய மனத்தவர்களாக விளங்கும் திருப்பறியலூர் அடியார்கள், அனைத்து உயிர்களுக்கும் தொன்மையானவனாக இருப்பவன் என்று போற்றிப் புகழ்ந்து வழிபடுகின்றனர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமே னிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்த னெனத்தகும் வீரட்டத் தானே

நெல்வாயில் அரத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.26.5) திருஞான சம்பந்தர் பெருமானை விருத்தன் என்று அழைக்கின்றார். விருத்தன்=முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருள்; நிருத்தம்=நடனம்; ஒருத்தனார்=ஒப்பற்ற தனித் தன்மை உடையவர்; தலைவன் என்ற பொருளை உணர்த்தும் கர்த்தா என்ற வடமொழிச் சொல் கருத்தன் என்று மிகவும் அழகாக தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. கருத்தன் என்பதற்கு கருத்து என்று பொருள் கொண்டு, அனைவராலும் மனதாரத் தொழப்படும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றிய ஆதியாக விளங்குபவர் சிவபெருமான்; தனது உடலெங்கும் திருநீறு பூசியவராக காட்சியளிக்கும் பெருமான் அனைவர்க்கும் தலைவனாக விளங்குகின்றார். கொழுந்து விட்டெரியும் தீயினில் நடனம் ஆடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர் சிவபெருமான். அவர் மிகுந்த விருப்பம் கொண்டவராக நெல்வாயில் தலத்தில் பொருந்தி விளங்குகின்றார். இத்தகைய மாண்பினை உடைய பெருமானை, நான் எனது தலை மீது வைத்து கொண்டாடுகின்றேன் என்று திருஞானசம்பந்தர் பெருமானைப் போற்றும் பாடல்.

விருத்தனாகி வெண்ணீறு பூசிய

கருத்தனார் கனல் ஆட்டு உகந்தவர்

நிருத்தன் ஆர நெல்வாயில் மேவிய

ஒருத்தனார் எமது உச்சியாரே

கருப்பறியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.31.5) திருஞான சம்பந்தர், பெருமானை விருத்தன் என்று குறிப்பிடுகின்றார். நிருத்தன்=நடனம் ஆடுபவன்; நித்தன்= அழியாமல் என்றும் இருப்பவன்; விருத்தன்=முதியவன் என்று பொதுவான பொருள்; இங்கே அனைவர்க்கும் முன்னே தோன்றியவன் என்பதால் அனைவரையும் விடவும் முதியவன் என்று சொல்லப் படுகின்றது; அனைவர்க்கும் மூத்தவன் என்று பொருள் பட விருத்தன் என்று கூறப்பட்டுள்ளது. கருத்தவன் என்பதற்கு வேதங்களின் பொருளை கருத்தில் கொண்டுள்ளவன் என்பது பொருள். வேதங்களின் பொருளை நன்கு ஆராய்ந்து தனது மனதில் கொண்டுள்ள பெருமான் என்பதால் தானே சனகாதி முனிவர்கள் வேதங்களின் பொருளை சரியாக புரிந்து கொள்வதற்கும் தங்களது ஐயப்பாட்டினைத் தீர்த்துக் கொள்வதற்கும் பெருமானை நாடினார்கள். வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் ஆராய்ந்து உணர்ந்தவன் பெருமான். ஒருத்தி=ஒப்பற்றவள், உமையன்னை; ஒருத்தி என்ற சொல்லுக்கு ஒருமித்த கருத்தினை உடையவள் என்று பொருள் கொண்டு, பெருமானுடன் ஒத்த கருத்துக்களை கொண்டவளாக அன்னை செயல்படுகின்றாள் என்றும் சிலர் விளக்கம் கூறுகின்றனர். பெருமானின் எண்ணங்களை செயலாக மாற்றுபவள் சக்தி தானே. தனக்கு நேராக எவருமின்றி ஒப்பற்றவளாக திகழும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், எப்போதும் நடனம் ஆடுபவனும், நித்தம் இருப்பவனாக என்றும் அழியாமல் இருப்பவனும், நன்னெறி காட்டுபவனும், அனைவர்க்கும் முன்னே தோன்றியமையால் முதியோனாக கருதப் படுபவனும், வேதங்கள் ஒதுபவனும், வேதங்கள் மற்றும் ஆறு அங்கங்களின் பொருளை தனது மனதினில் எப்போதும் கொண்டிருப்பவனும் ஆகிய இறைவன் உறையும் இடம் கருப்பறியலூர் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஒருத்தி உமையோடும் ஒரு பாகம் அதுவாய

நிருத்தன் அவன் நீதியவன் நித்த நெறியாய

விருத்தன் அவன் வேதமென அங்கம் அவை ஓதும்

கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே

விருத்தனை பாலனை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சி ஒன்றினை நினைவூட்டுகின்றது. மதுரை நகரில் வாழ்ந்து வந்த விரூபாக்ஷன் என்ற அந்தணன், தனக்கு சந்ததி வேண்டும் என்று இறைவனை வேண்டினான். அவனது வேண்டுகோளுக்கு இணங்க, பெருமான் அந்தணனின் மனைவியின் வயிற்றில் ஒரு பெண் குழந்தை பிறப்பதற்கு அருள் புரிந்தார். இந்த குழந்தைக்கு கௌரி என்று பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர். இந்த குழந்தை எட்டு வயது நிரம்பிய தருணத்தில், வாழ்வில் உய்வினை அடைவதற்கு உதவும் மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டும் என்று தந்தையிடம் வேண்டினாள். தந்தையும் அதற்கு உடன்பட்டு, உமையன்னையை தியானிக்கும் மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த சிறுமியும் அந்த மந்திரத்தை தினமும் தியானித்து வந்தாள். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் அவர்களது இல்லத்திற்கு ஒரு வைணவச் சிறுவன் பிக்ஷை கேட்டு வந்தான், அவனது அழகால், நடத்தையால் கவரப்பட்ட விரூபாக்க்ஷன், தனது பெண்ணினை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தனது மனைவியுடன் வைணவச் சிறுவன் தனது ஊருக்கு சென்றபோது, அவனது தாயார், ஒரு சைவப்பெண் தனக்கு மருமகளாக வந்ததை விரும்பவில்லை. தனது திருமணம் நடைபெற்ற வரை, தினமும் ஒரு சைவ அடியாருக்கு அன்னம் அளிப்பதை தனது பழக்கமாக கொண்டிருந்த கௌரி, திருமணத்திற்கு பின்னர் அவ்வாறு செய்ய முடியாமல் போனதற்கு மிகவும் வருந்தினாள். இவ்வாறு வருத்தத்துடன் கௌரி வாழ்ந்து வருகையில் ஒரு நாள், அவளது மாமியாரும் கணவனும் வெளியூர் செல்ல நேரிட்டது. தாங்கள் ஊரில் இல்லாத சமயத்தில், சிவனடியார் எவருக்கேனும் தனது மருமகள் அன்னம் அளிப்பாளோ என்ற சந்தேகம் கொண்டிருந்த மாமியார், மருமகளை வீட்டில் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றாள். அப்போது அங்கே ஒரு முதியவர் வேடம் தாங்கி, பசியினால் தள்ளாடிய நடையுடன் பெருமான் கௌரி தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். பசியால் வாடிய முதியவருக்கு அன்னமிட வேண்டும் என்று விரும்பினாலும், தனது இயலாமையை குறித்து கௌரி மிகவும் வருந்தினாள். வந்த முதியவர், கெளரியை நோக்கி நீ உனது கையை பூட்டின் மீது வைத்தால் பூட்டு திறந்துவிடும் என்று கூறினார். கௌரியும் அவ்வாறு செய்ய பூட்டு திறக்கவே, முதியவர் வீட்டினுள்ளே நுழைந்தார். வந்த விருந்தினருக்கு சமையல் செய்து கௌரி படைத்தாள், திடீரென்று முதியவர், கட்டிளம் குமரனாக மாறினார். இதனைக் கண்டு திகைத்த கௌரி, வெளியே சென்றிருந்த தனது மாமி வந்தால், ஒரு ஆடவனுடன் தான் தனியே இருந்ததற்கு தன்னை குற்றம் சாட்டுவாளே என்று அச்சமுற்றாள். அவளின் பயத்தினை மேலும் அதிகரிப்பது போன்று, வெளியே சென்றிருந்த அவளது மாமி, அப்போது வீட்டினுள்ளே நுழைந்தார். ஆனால் கட்டிளம் காளையாக இருந்த பெருமான் சிறிய குழந்தையாக மாறி, தனது கால் பெருவிரலை வாயினில் வைத்த வண்ணம் தரையில் கிடந்தார். உள்ளே நுழைந்த மாமி, குழந்தை எவருடையது என்று கேட்க, தாயில்லாத குழந்தை என்று தேவதத்தன் என்ற சைவன் கொடுத்ததாக கௌரி கூறினாள்; மாமி மேலும் கோபம் கொண்டு, ஒரு சைவக் குழந்தையை ஏற்றுக் கொண்டது குற்றம் என்று கூறி, மருமகளையும் குழந்தையையும் வீட்டிலிருந்து வெளியே செல்லுமாறு கட்டளை இட்டாள்; வேறு வழியின்றி வெளியே வந்த கௌரி, தனது தகப்பனார் தனக்கு உபதேசம் செய்த மந்திரத்தை சொல்ல, அவளது கையில் இருந்த குழந்தை திடீரென்று மறைந்து வானில் சென்றது; பெருமான் விடையினில் அமர்ந்தவராக வானில் காட்சி அளித்தார். மேலும் கெளரியின் உருவமும் அன்னை பார்வதி தேவியின் உருவமாக மாறியது. பெருமான், பார்வதி தேவியின் உருவத்திற்கு மாறிய கெளரியை விடையின் மீது ஏற்றுக்கொண்டு மறைந்தார். இது தான் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படும் வரலாறு.

தில்லை நேரிசைப் பதிகத்தின் ஒரு பாடலில் (4.22.9) ஊழித்தீயினில் நின்று நடமாடும் இறைவன் என்று குறிப்பிட்டு அனைத்து உயிர்களும் ஊழியில் அழிந்த பின்னரும் நிலைத்து நிற்கும் இறைவன் அனைவருக்கும் இளையவன் என்றும், ஊழி முடிந்தவுடன் மீண்டும் உலகம் தோன்றுவதற்கு முன்னமே இறைவன் இருப்பதால் அனைத்து உயிர்களுக்கும் மூத்தவன் என்று உணர்த்தும் பொருட்டு விருத்தனாய் பாலனாய் இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கருத்தன்=முழுமுதற் கடவுள், கர்த்தன் என்ற சொல்லின் திரிபு; அருத்தன்=அனைத்துப் பொருட்களுக்கும் கருவானவன், உட்பொருளானவன்;காலத்தால் அனைவருக்கும் மூத்தவராக இருக்கும் எம்பெருமான், அனைவரும் இறந்த பின்னரும் இருப்பதால் அனைவருக்கும் இளையவராகவும் கருதப் படுகின்றார். தனது தலையில் சூடியுள்ள நிலவின் ஒளி, சடையில் பரவ, தனது சடைகள் தாழுமாறு, கூத்தில் வல்லவரான சிவபெருமான் நடனம் ஆடுகின்றார். தனது கூத்தின் அழகால், அடியார்களின் உள்ளத்தைக் கவர்ந்து, அவர்களது கருத்தாகத் திகழும் சிவபெருமான், சிற்றம்பலத்தில், தனது உடலின் ஒரு பாகத்தில் உமையம்மையை உடையவராய், ஊழித்தீயிடை நின்று நடனம் ஆடுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விருத்தனாய்ப் பாலனாகி விரிநிலா எறிக்கும் சென்னிச்

திருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன்சடைகள் தாழ

கருத்தனார் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே

அருத்தமா மேனி தன்னோடு அனல் எரி ஆடுமாறே

இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும் (4.22.10) அப்பர் பிரான், பாலனாகவும் விருத்தனாகவும் இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பனிநிலா=குளிர்ச்சியைத் தரும் நிலவு: ஞாலமாம் தில்லை=உலகத்தின் முக்கிய இடமாகிய தில்லை: புராணத் தகவல்களின் படி, பாரத நாட்டினை விராட் புருஷனின் வடிவமாகக் கொண்டால், அவனது இருதயத் தானத்திற்கு சிதம்பரமும், மூலாதாரத் தானத்திற்கு திருவாரூரும், சுவாதிட்டானத் தானத்திற்கு திருவானைக்காவும், மணிபூரகத் தானத்திற்கு அண்ணாமலையும், விசுத்தி சக்கரத் தானத்திற்கு காளத்தியும், ஆக்ஞாசக்கரத் தானத்திற்கு காசியும், சஹச்ரதளத் தானத்திற்கு கயிலையும் பொருந்துவதாக கூறுவார்கள். இதனை உணர்த்தும் திருவிளையாடல் புராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. தானம்=இடம். உடலின் முக்கிய பாகமாக இருதயம் கருதப்படுவதால், தில்லையை ஞாலம் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களும் இறந்த பின்னரும் இருக்கும் பாலனாகவும், அனைத்து உயிர்களுக்கு முன்னே தோன்றியைமையால் அனைவர்க்கும் மூத்தவனாகவும் இருக்கும் இறைவன், குளிர்ச்சி பொருந்திய பிறைச் சந்திரனைத் தனது நெற்றியில் வைத்துள்ளான். அந்த சந்திரனின் ஒளி இவரது சடையில் தெரிகின்றது. காளையை வாகனமாகக் கொண்ட பெருமான், மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க வந்த காலன் மீது கோபம் கொண்டு, காலால் அவனை உதைத்தவர். உலத்தவரைக் காக்கும் பொருட்டு விடம் உண்ட காரணத்தால், நீல நிறத்துடன் திகழும் கழுத்தினை உடையவர். இவர் தான், உலகத்தின் இருதயமாக கருதப்படும் தில்லைச் சிற்றம்பலத்தில், நீண்ட தீயின் இடையே நின்று கூத்தாடுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

பாலனாய் விருத்தனாகிப் பனிநிலா எறிக்கும் சென்னிக்

காலனைக் காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்றேரி

ஞாலமாம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே

நீலம் சேர் கண்டனார் தாம் நீண்டு எரி ஆடுமாறே

விருத்தன் என்பதற்கு அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியதால், அனைவரிலும் மூத்தவன் என்றும், பாலன் என்பதற்கு அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் தான் அழியாது இருப்பவன் என்றும் பொருள் கொண்டு, ஆதி அந்தமற்ற நிலையில் இருக்கும் இறைவனை விடவும் மூத்தவர் எவரும் இல்லை என்றும், அழியாமல் நிலைத்து நிற்கும் அவனை விடவும் இளையவர் எவரும் இல்லை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.43.2) அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இருக்கும் பெருமான் விருத்தனாகவும் பாலனாகவும் திகழ்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மால்=மேகம்; மாலன=மேகத்தின் கருமை நிறத்தினை ஒத்த; மாயன்=திருமால்; ஏலம்=நறுமணம் மிகுந்த;

மாலன மாயன் தன்னை மகிழ்ந்தனர் விருத்தராகும்

பாலனார் பசுபதியார் பால்வெள்ளை நீறு பூசிக்

காலனைக் காலால் செற்றார் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்

ஏலநல் கடம்பன் தந்தை இலங்கு மேற்றளியனாரே

தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றினில், அப்பர் பிரான், விருத்தனாகவும் பாலனாகவும் இருக்கும் பெருமான், தனது அடியார்களின் தன்மையை நன்கு அறிவார் என்று கூறுகின்றார். திருத்தன்=உயிர்களைத் திருத்தி ஆட்கொள்பவன், அருத்தன்= மெய்ப்பொருளாக உள்ளவன். விருத்தனார் இளையனார் என்ற தொடர் திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சி ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது

ஒருத்தனர் உலகங்கட்கு ஒரு சுடர்

திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார்

விருத்தனார் இளையார் விடம் உண்ட எம்

அருத்தனார் அடியாரை அறிவரே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.10.4) அப்பர் பிரான், பெருமானை விருத்தர் என்று குறிப்பிடுகின்றார். அரிய=பொருள் உணர்தற்கு அரிய; வான் புரம்=வானில் திரிந்த முப்புரங்கள்; விரி கொள்=விரியும் தன்மை கொண்ட; வான் கதவம்=சிறந்த கதவுகள், புகழ் பெற்ற கதவுகள்; விருத்தர்=மிகவும் பழையவர். ஆதி இல்லாத சிவபெருமான் விருத்தர் என்று இங்கே அழைக்கப் படுகின்றார். நான்மறைகள் சிவபெருமானின் கோவணமாகத் திகழ்கின்றன என்று கூறுவார்கள். மிகவும் அரியதான நான்கு மறைகளையும் அருளிய நாவினை உடையவரே, வானில் திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் எரித்தவரே, விரியக் கூடிய பொருட்கள் அடங்கிய நான்கு மறைகளையும் கோவண ஆடையாக உடைய ஆதி மூர்த்தியே, வேதங்கள் காப்பிட்டு அடைத்தமையால் புகழ் பெற்ற இந்த கதவுகளைப் பிரித்து திறக்கச் செய்ய வேண்டும்

அரிய நான்மறை ஓதிய நாவரோ

பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ

விரி கொள் கோவண ஆடை விருத்தரோ

பெரிய வான் கதவம் பிரிவிக்கவே

விசயமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.71.4) அப்பர் பிரான், விசயமங்கை விருத்தன் என்று பெருமானை அழைக்கின்றார். குலுங்க=நடுங்க; ஆர் அழல்=அணைப்பதற்கு மிகவும் அரிதான நெருப்பு; அசைய=தளர; விருத்தன்=மிகவும் முதியவன்: ஆதி நாதன் என்று முன்னைப் பழமைக்கும் பழமையாய் இறைவன் இருக்கும் நிலையினை பதிகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில் அவ்வாறு ஆதியாய் இருப்பதால் அனைவர்க்கும் எப்போதும் முதியவனாக பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். புறத்தடி=புறக் கால்; எட்டு திசைகளிலும் உள்ள எல்லா உலகங்களும் குலுங்குமாறு, திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற பெருமான், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் தளருமாறு, எவராலும் அணைப்பதற்கு அரிதாகிய நெருப்பினை மூட்டும் வண்ணம் அம்பினை எய்து அழித்தான். விசயமங்கை தலத்தில் உறைபவனும், அனைவர்க்கும் முன்னே தோன்றி முதியவனாக இருப்பவனும் ஆகிய இறைவனின் காலால் உதைபட்ட காலன், அந்த உதையின் வேகத்தை தாங்க முடியாமல் மயங்கி வீழ்ந்தான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திசை எங்கும் குலுங்கத் திரிபுரம்

அசைய அங்கு எய்திட்டு ஆரழல் ஊட்டினான்

விசைய மங்கை விருத்தன் புறத்து அடி

விசையின் மங்கி விழுந்தனன் காலனே

மறைக்காடு தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் பாடலில் (6.23.9) பால விருத்தனும் ஆனான் கண்டாய் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மூல நோய்=கன்மம் மாயை ஆகிய மற்ற மலங்கள் நம்மை பிடிப்பதற்கு காரணமாக இருப்பதும், உயிர் தோன்றிய காலந்தொட்டே உயிருடன் கலந்திருந்து உயிர்கள் அடையும் அனைத்து துயரங்களுக்கும் மூலமாக இருப்பததால், ஆணவ மலம் மூலமலம் என்று அழைக்கப் படுகின்றது. எவராலும் அடக்க மூடியாத ஆணவ மலத்தினை அடக்குவதற்கு உதவும் பரமன் என்பதால், சிவபெருமானை முதல்வன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். கன்மம் மற்றும் மாயை ஆகிய மலங்களுக்கு மூல காரணமாக விளங்கும் ஆணவ மலத்தினை அடக்கி வைப்பதற்கு நமக்கு உதவுபவனும், இயல் இசை நாடகம் ஆகிய மூன்று தமிழ்களாக இருப்பவனும், நான்கு வேதங்களாக இருப்பவனும், ஆலமரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் சொன்னவனும், அனைத்து உயிர்கள் தோன்றுவதற்கு ஆதியாகவும் அனைத்து உடல்கள் முடிவதற்கு காரணமாக இருப்பவனும், அனைத்து உயிர்கள் இறந்த பின்னரும் இருப்பதால் என்றும் இளையவன் பாலன் என்றும் கருதப் படுபவனும், அனைத்து உயிர்கள் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியதால் உயிர்களுக்கு மூத்தவன், விருத்தன் என்று கருதப் படுபவனும், செம்பவளக் குன்று போன்று திருமேனியை உடையவனும், கொன்றை மலர் மாலைகளை சூடிக் கொள்வானும் ஆகிய இறைவன், திருமறைக்காடு தலத்தில் மணாளனாக திகழ்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்

ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்

பால விருத்தனும் ஆனான் கண்டாய் பவளத் தட வரையே போல்வான் கண்டாய்

மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.36.7) அப்பர் பிரான், பெருமானை, பால விருத்தனும் ஆனார் என்று குறிப்பிடுகின்றார். வௌவ்வுதல்=கவர்தல்; அனைவரின் உயிரினைக் கவரும் காலனின் உயிரினை மாய்ப்பது மிகவும் கடினம் என்பதால், அத்தகைய ஆற்றல் உடையவர் பெருமான் என்று கூறுகின்றார். கடிதோடும்=விரைந்து ஓடும்; தனது அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு, பற்பல வேடங்களை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்பவர் பெருமான் என்று கூறுகின்றார். அந்தந்த அடியார்களின் பக்குவத்திற்கு ஏற்பவும், அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்பவும், வேறுவேறு வேடங்கள் தரிக்கும் பெருமானின் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. நீள்வரை=கயிலாய மலை; நீலம்=ஆலகால விடத்தினைத் தேக்கியதால் ஏற்பட்ட கறை; .மிடறு=கழுத்து;

காலனுயிர் வௌவ வல்லார் தாமே கடிதோடும் வெள்ளை விடையார் தாமே

கோலம் பலவும் உகப்பார் தாமே கோணாகம் நாணாகப் பூண்டார் தாமே

நீலம் பொலிந்த மிடற்றார் தாமே நீள்வரையின் உச்சி இருப்பார் தாமே

பால விருத்தரும் ஆனார் தாமே பழன நகரெம் பிரானார் தாமே

கன்றாப்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.61.5) அப்பர் பிரான் பெருமானை, விருத்தனே என்று அழைக்கின்றார். வேலை=கடல்; விருத்தன்=முதியவன், இங்கே அனைத்து உயிர்களுக்கும் முந்தியவன்; நுந்தாத=தூண்ட வேண்டிய அவசியம் இல்லாத; பொருத்தன்= உறவினன்; அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியதால், அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக இருப்பவனே, பாற்கடலிலிருந்து எழுந்த விடத்தை உண்டு அதனை கழுத்தினில் தேக்கியவனே, விரிந்த சடை மேல் ஒற்றைப் பிறையுடன் தேய்ந்து அழிந்த நிலையில் வந்த சந்திரனைச் சூடிக்கொண்டு அபயம் அளித்து சந்திரனை வாழவைத்த ஒப்பற்ற ஒருவனே, உமையம்மையின் கணவனே, உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவனே, தூண்ட வேண்டிய அவசியம் இல்லாமல் எப்போதும் பிரகாசமாக ஒளிவீசும் சுடரே, அனைத்து உயிர்களுக்கும் உறவினனாக இணைந்து இருப்பவனே, என்று பலவாறு இறைவனைக் கூப்பிட்டு தங்களது ஐந்து புலன்களையும் உள்ளே அடக்கி, வேறு எந்த விதமான பற்றும் இல்லாமல் இறைவனையே தியானித்த வண்ணம், அவனையே நினைத்து உள்ளம் கசிந்து தொழும் அடியார்களின் மனதினில், கன்றாப்பூர் தலத்தில் கன்றுக்குட்டி கட்டும் முளையில் தோன்றிய சிவபெருமான் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விருத்தனே வேலைவிடம் உண்ட கண்டா விரிசடைமேல் வெண் திங்கள் விளங்கச்சூடும்

ஒருத்தனே உமை கணவா உலக மூர்த்தீ நுந்தாத ஒண்சுடரே அடியார் தங்கள்

பொருத்தனே என்றென்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்தடிக்கிப் புலம்பி நோக்கிக்

கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே

முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.85.2) அப்பர் பிரான், பெருமானை விருத்தன் என்று அழைக்கின்றார். கருத்தன்=கர்த்தா என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம், தலைவன் என்று பொருள். அடியார்களின் கருத்தாக இருப்பவன் என்றும், அனைத்துப் பொருட்களுக்கும் கருத்தாக, மூலப் பொருளாக இருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். கமலத்தோன்=பிரமன்; காய்ந்தான்=கோபம் கொண்டு அறுத்தவன்; ஒருத்தன்= ஒப்பற்றவன்; விருத்தன்=மிகவும் பழமையானவன்; திருத்தன்=தூயவன், தீர்த்தன் என்ற வடமொழித் சொல்லின் திரிபு. இந்த பாடலில் மூவுருவாய் ஒன்றாய் நின்ற பெருமான், என்று இறைவனின் தன்மையை அப்பர் பிரான் விளக்குகின்றார். உலகத்தைத் தோற்றுவிக்கும் பொருட்டும், தோன்றிய உலகத்தினை காக்கும் பொருட்டும், பிரமனாகவும் திருமாலாகவும் நிற்கும் பெருமானின், உண்மையான தோற்றம், ஓருருவாய் நிற்றல் என்பதால், மூவுருவாய் ஒன்றாய் நின்ற என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். விருத்தன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு மணிவாசகரின் திருவாசகத்தின் முன்னைப் பழமைக்கும் பழம்பொருளே என்ற தொடரை நினைவூட்டுகின்றது.

கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றைக் காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி

ஒருத்தன் காண் உமையவளோர் பாகத்தான் காண் ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற

விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேலானான் காண் மெய்யடியார் உள்ளத்தே விரும்பி நின்ற

திருத்தன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

அனைவர்க்கும் தலைவனாக விளங்கும் சிவபெருமான், தாமரை மலரைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றினை, கோபம் கொண்டு அறுத்தான். மிகவும் வேகமாக பாய்ந்து வந்த கங்கை நதியின் வேகத்தை, தனது பரந்த சடையில் அந்த நதியினைத் தாங்கியதன் மூலம், தடுத்த ஒப்பற்ற ஆற்றல் கொண்ட சிவபெருமான் உமையம்மையைத் தனது உடலினொரு பாகத்தில் ஏற்றவன் ஆவான். அரி. அயன். அரன் ஆகிய மூன்று உருவமாக இருந்து, அனைத்து உயிர்களையும் இயக்கும் பெருமான், அனைத்துப் பொருட்களுக்கும் பழமையானவனாக, ஆதியாக விளங்குகின்றான். தேவர்கள் அனைவருக்கும் தலைவனாக விளங்கும் அவன், தனது மெய்யடியார்களின் மனதினில் மிகவும் விருப்பத்துடன் உறையும் தூயவனாகவும் விளங்குகின்றான். இத்தகைய பெருமைகளைக் கொண்ட சிவபெருமான், முண்டீச்சரத்து தலத்தில் விளங்கும் சிவலோகனாய் இருக்கும் பெருமான், எனது சிந்தனையாகத் திகழ்கின்றான் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.6.8) சுந்தரர், பெருமானை, விருத்தர் என்று குறிப்பிடுகின்றார். கங்கை நதியும் பாம்பும் தமது ஆற்றலை அடக்கிக் கொண்டு, குரா மலர், கொன்றை மலர்கள், ஊமத்தை மலர் போன்று சடையில் கலந்து இருக்கும் தன்மையை குறிப்பிடும் சுந்தரர், இத்தகைய ஆற்றல் படைத்த பெருமானே, உமக்கு அடியேனது பாவங்களையும் பழிகளையும் போக்கும் ஆற்றல் இருந்த போதிலும், எப்போதும் உம்மையே கருத்தில் கொண்டு பதிகங்கள் பாடும் அடியேனின் பழிகளைத் தீர்க்காமல் இருப்பது தகுமா என்ற கேள்வியை கேட்கின்றார். தனது அடியார்கள் துயரம் கொள்ளும் வண்ணம் பெருமான் அனுமதிக்கலாமா என்று கேட்கும் சுந்தரர், தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்துத் தனது உடலின் போர்த்துக் கொண்டதன் மூலம், பார்வதி தேவி அச்சம் கொள்ளும் வண்ணம் நடந்து கொண்டது முறையா என்ற கேள்வியையும் இங்கே கேட்கின்றார். இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும் சுந்தரர் பெருமானை விருத்தனாய வேதன் என்று அழைக்கின்றார்.

குரவு கொன்றை மதியம் மத்தம் கொங்கை மாதர் கங்கை நாகம்

விரவுகின்ற சடை உடையீர் விருத்தரானீர் கருத்தில் உம்மைப்

பரவும் என்மேல் பழிகள் போக்கீர் பாகமாய மங்கை அஞ்சி

வெருவ வேழம் செற்றதென்னே வேலை சூழ் வெண்காடனீரே

கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.58.3) சுந்தரர், பெருமானை விருத்தன் என்றும் பாலன் என்றும் அழைப்பதை நாம் காணலாம், முந்திய பிறவிகளில் ஈட்டிய வினைகள் தாமே இந்த பிறவியில் இன்பங்களையும் துன்பங்களையும் நமக்கு விளைவிக்கின்றது. இவ்வாறு இன்பத்தையும் துன்பத்தையும் செய்யும் வினைகளை செய்வினை என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். விருத்தனாக திருவதிகை சித்தமடத்தில் காட்சி அருளிய பெருமான், கயிலை மலையில் வீற்றிருந்த வண்ணம் காட்சி கொடுத்தார் அல்லவா. முதுமை அடையாத தோற்றத்துடன் சீர்காழி தலத்தினில் இறைவன் காட்சி கொடுத்ததை பாலன் என்று சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். பெருமானின் திருவுருவத்தினை பல நாட்கள் கனவினில் கண்டிருந்த சுந்தரர், இந்த தலத்தில் நேரில் கண்டு கொண்டதாக மகிழ்ச்சியுடன் கூறுவதை நாம் உணரலாம். பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நினையாத தன்மை தனக்கு இருந்ததால் தான், தான் உய்வினை அடைந்ததாக சுந்தரர் இங்கே கூறுகின்றார்.

திருத்தினை நகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை உறுத்திடும் செம்பொனை அம்பொன்

ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன் உய்யும் காரணம் தன்னால்

விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டிருந்தேன்

கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலைக் கழுமல வளநகர் கண்டு கொண்டேனே

திருவாசகம் திருச்சதகத்தில் உள்ள காருண்யத்து இரங்கல் பதிகத்தின் முதல் பாடலில் (8.5.61), மணிவாசக அடிகளார் விருத்தன் என்றும் ஒப்பில் ஒருவன் என்றும் இறைவனை குறிப்பிடுகின்றார். விடலை=இளையவன்; அனைத்து உயிர்களும் தாங்கள் தங்கியிருந்த உடல்களை விட்டுப் பிரிந்த பின்னரும், எஞ்சி இருக்கும் தன்மை உடைய இறைவனை, இளையோன் என்று கூறுகின்றார். மெய்ப்பொருளாகிய இறைவனின் தன்மையை உணர்ந்து கொண்ட பின்னர், தனது நெஞ்சத்திற்கு அதனை அறிவுறுத்தி, தனது அகப்பற்று மற்றும் புறப்பற்று ஆகிய இரண்டையும் சுட்டெரித்து, தனது மனதினை சுத்தம் செய்து கொண்ட அடிகளார், தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றார். இவ்வாறு தனது நெஞ்சத்தை மாற்றிய பின்னர், தான் இறைவனை தியானித்து அவனது நினைவில் ஆழ்ந்திருக்கும் தன்மையை அடைந்த அடிகளார், இறைவன் தன்பால் இரக்கம் கொண்டு அருள் புரியும் காலம் வருவதை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றார். தனக்கு காட்சி கொடுக்கும் இறைவனிடம், தனது உலக வாழ்க்கையினை முடித்து, தன்னுடன் இறைவன் தன்னை (அடிகளாரை) உடனழைத்துச் செல்ல வேண்டும் என்ற அவாவினை இந்த பதிகத்தின் பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகின்றார்.

தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான

விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில்

ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை

நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றிபோற்றி

அருத்தன்=பொருளாக விளங்குபவன்; வேதத்தின் என்று நாம் சேர்த்துக் கொள்ளவேண்டும். அறவன்=அறத்தின் வடிவமாக உள்ளவன்; அமுதன்=அமுதம் போன்று இனியவன்; பெருமான் ஒப்பற்ற ஒருவன் என்பதை உலகத்தவர் அனைவரும் உணர்ந்து கொண்டு அவனைப் புகழ்ந்து கொண்டாடுகின்றனர் என்று திருஞானசம்பந்தர், அருத்தனை அறவனை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் கூறுகின்றார். கருத்தவன்=உலகத்தவரின் கருத்தாக இருப்பவன்; அருத்தன் என்று சிவபெருமானை குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும்.

மேலை திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.29.2) திருஞான சம்பந்தர் பெருமானை அருத்தன் என்று அழைக்கின்றார்அருத்தனார்=பொருளாக உள்ளவர்; அறிவால் உணர்ந்து காணப்படும் பொருளாக உள்ள இறைவன் கண்ணால் காணப்படும் பொருளாகவும் இந்த தலத்தினில் வீற்றிருக்கின்றான் என்று தருமை ஆதீனக் குறிப்பு விளக்கம் அளிக்கின்றது. அழகம்மை என்ற தலத்து இறைவியின் திருநாமம், அழகமர் மங்கை என்று குறிப்பிடப் படுகின்றது. கழல்=வீரக் கழல்; இங்கே வீரக்கழல்களை அணிந்த பெருமான்; இணைகழல் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பொன்னடி என்றும் மலரடி என்றும் பெருமானின் திருவடிகள் போற்றப் படுகின்றன. பொன் போன்று சிறந்ததும் ஒளிவீசுவதும் ஆகிய திருவடிகள் என்றும் மலர்கள் போன்று மென்மையானவை என்றும் அருளாளர்கள் இந்த உவமைகள் மூலம் உணர்த்துகின்றனர். எனினும் இத்தகைய ஒப்பு முழுமையான ஒப்பு அல்ல. பொன்னுடன் ஒப்பிடப் படும்போது, திருவடிகளின் மென்மை வெளிப்படுவதில்லை; மலருடன் ஒப்பிடப் படும்போது திருவடிகளின் ஒளிவீசும் தன்மை வெளிப் படுவதில்லை. எனவே திருஞானசம்பந்தர் ஒரு முடிவுக்கு வந்தார் போலும், பெருமானின் திருவடிக்கு எந்த பொருளும் இணையாகாது; எனவே பெருமானின் திருவடிக்கு அவரது திருவடியே இணையானது என்பது தான் அந்த முடிவு. பெருமானின் இடது திருவடிக்கு அவரது வலது திருவடி இணையாகவும், அவரது வலது திருவடிக்கு இடது திருவடி இணையாக உள்ள தன்மை, இணைகழல் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. பொருள்=பொருள் உடைய செயல்; பிறந்ததன் நோக்கம் பெருமானை வழிபட்டு முக்தி நிலை அடைவது என்பதால், பெருமானின் திருவடிகளைப் போற்றுதல் அர்த்தம் உடைய செயலாகவும் மற்ற செயல்கள் அர்த்தமற்ற செயல்களாகவும் கருதப் படுகின்றன. நாம் ஏன் பெருமானைப் போற்ற வேண்டும் என்பதற்கு, நிருத்தர் என்ற சொல்லின் மூலம் திருஞானசம்பந்தர் விளக்கம் அளிக்கின்றார். நிருத்தம் என்றால் நடனம் என்று பொருள். தான் தில்லைச் சிதம்பரத்தில் நடனம் ஆடுவதன் மூலம், ஐந்து தொழில்களையும் நடத்துபவன் தான் ஒருவனே என்று பெருமான் சுட்டிக் காட்டுவதால், நாம் அவனை வணங்க வேண்டும் என்று கூறுகின்றார். கடி=நறுமணம்; கடிகமழ்=நறுமணம் கமழும்; பொருந்துதலை உடையவன் பொருத்தன்; தான் இடைவிடாது நடனம் ஆடுவதன் மூலம் உலகிலுள்ள அனைத்துப் பொருட்களையும் இயக்கும் பெருமான், தனது நீண்ட சடையினில் பாம்பையும் பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளார். அறிவினால் உணர்ந்து அறியப்படும் பொருளாக உள்ள இறைவன், நறுமணம் வீசும் சோலைகள் சூழ்ந்த காட்டுப்பள்ளி தலத்தினில் நாம் நமது கண்களால் காணப்படும் பொருளாகவும் உள்ளார். அழகம்மை என்று அழைக்கப்படும் பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பகுதியில் பொருத்திக் கொண்டுள்ள பெருமானின், வீரக்கழல்கள் அணிந்த இணையான பாதங்களை வணங்கிப் போற்றுதலே பொருளுடைய செயலாகும். அதுவே நமது வாழ்வின் நோக்கமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நிருத்தனார் நீள்சடை மதியொடு பாம்பணி

கருத்தனார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி

அருத்தனார் அழகமர் மங்கையோர் பாகமாப்

பொருத்தனார் கழலிணை போற்றுதல் பொருளதே

கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.38.11) திருஞானசம்பந்தர் பெருமானை அருத்தன் என்று குறிப்பிடுகின்றார். கருத்தன்=அடியார்களின் மனதில் உள்ள எண்ணங்களாக உள்ளவன்; கள்வன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களுடன் இறைவன் கலந்திருந்தாலும் தன்னை நினைக்கும் அடியார்கள் உணரும் வண்ணம் செய்யும் பெருமான், தன்னை நினைக்காத அடியார்கள் உணராத வண்ணம் ஒளிந்து கொள்கின்றான். இந்த தன்மையை மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில், ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியான் என்று குறிப்பிடுகின்றார். (ஓர்தல்=உணர்ந்து ஆழ்ந்து பார்த்தல்) ஒளிந்து கொள்வது கள்வனின் இயல்பு என்பதால் பெருமானை கள்வனென்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அருத்தன்=சொற்களின் பொருளாக உள்ளவன்; சொற்கள் என்றால் பொதுவாக வேதத்தில் உள்ள புனிதமான சொற்கள் என்று குறிப்பிடுவது மரபு. சொற்றுணை வேதியன் என்று தானே, அப்பர் பிரானும் தனது நமச்சிவாயப் பதிகத்தினை தொடங்குகின்றார். வேதங்கள் உணர்த்தும் சொற்களின் பொருளாக இருப்பவர் சிவபெருமான் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. இந்த பதிகத்தினை ஓதும் அடியார்கள் உயர்ந்தார்கள் என்று இறந்த காலத்தை திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதிலிருந்து, எத்துணை விரைவாக, பதிகம் ஓதிய மாத்திரத்திலே அவர்களது தன்மை உயர்ந்து விடுகின்றது என்பதை உணர்த்துகின்றார். இந்த பாடலில் அடியார் பால் கேட்டுகந்த வினாவுரை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதிலிருந்து, தலத்து அடியார்கள் திருஞான சம்பந்தர் கேட்ட கேள்விகளுக்கு உரிய விடையினை அளித்தார்கள் என்பதையும், அந்த விடைகளைக் கேட்ட திருஞானசம்பந்தர் பெரிதும் மகிழ்ந்தார் என்பதும் நமக்கு புலனாகின்றது. இதனை சேக்கிழார் அவர்களும் பெரிய புராணத்து பாடலில் பதிவு செய்கின்றார். அடியார்களின் மனதினில் கருத்தாக விளங்குபவனும், கண்டியூர் வீரட்டம் தலத்தினில் உறைபவனும், தன்னை நினைக்காத மாந்தர்கள் உணர முடியாத வண்ணம் தன்னை ஒளித்துக் கொள்ளும் கள்வனும் ஆகிய பெருமானின் தன்மைகளை, தான் கேட்ட வினாக்களுக்கு விடைகளாக கண்டியூர் தலத்து அடியார்கள் சொன்னதைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்த ஞானசம்பந்தன், சீர்காழி நகரினைச் சார்ந்த ஞானசம்பந்தன், சொன்ன திருத்தம் உடைய செந்தமிழ் மாலையாகிய இந்த பதிகத்தினை தனி ஒருவராகவோ, பலருடன் சேர்ந்து கூட்டாகவோ ஓதும் அடியார்கள் உயர்ந்தவர்களாக விளங்குவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கருத்தனைப் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்துறைக் கள்வனை

அருத்தனைத் திறம் அடியர் பால் மிகக் கேட்டு உகந்த வினாவுரை

திருத்தமாம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்

ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரை செய்வார் உயர்ந்தார்களே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.45.2) திருஞான சம்பந்தர், அருத்தனாகிய பெருமான் தன்னை அஞ்சேல் என்று சொல்லாததன் காரணம் யாது என்று திருவாரூர் தலத்து அடியார்களிடம் வினவுகின்றார். திருத்தன்=தூயவன்; தீர்த்தம் என்ற சொல்லிலிருந்து பிறந்தது; திருவாரூரின் தலத்து சிறப்பினையும், அந்த தலத்து அடியார்களின் சிறப்பினையும், அப்பர் பிரானின் திருவாய் மொழியால் கேட்டுகந்த திருஞான சம்பந்தர், திருவாரூர் நகரம் சென்ற போது, தலத்து அடியார்கள் ஊரின் எல்லையில் ஒன்று கூடி திருஞானசம்பந்தரை வரவேற்கின்றனர். அப்போது, நாள்தோறும் திருவாரூர் தியாகராஜப் பெருமானைத் தொழும் வாய்ப்பினைப் பெற்ற அந்த அடியார்களிடம், பெருமான் தன்னை ஏற்றுக் கொள்வானோ என்று கேட்டு சொல்லுமாறு, இந்த பதிகத்தின் முதல் பாடலில், விண்ணப்பம் வைக்கின்றார். பெருமானிடமிருந்து மறுமொழி ஏதும் கிடைக்காததால், தான் அச்சம் அடைந்திருப்பதாக உணர்த்தும் திருஞானசம்பந்தர், பெருமான் தன்னை அஞ்சேல் என்று சொல்லி ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றார். பெருமானைத் தனது கருத்தினில் எப்போதும் நிறுத்து வழிபடுவதாக குறிப்பிடும் திருஞானசம்பந்தர், பெருமானால் ஆட்கொள்ளப் படுவதற்கு தகுதி உடையவனாக தான் திகழ்வதையும் உணர்த்துகின்றார். பெருமானைத் தங்களது கருத்தினில் கொள்ளாத திரிபுரத்து அரக்கர்கள், பெருமானுக்கு கருணைக்கு தகுதியற்றவர்கள் என்பதால், அவர்களது கோட்டைகள் பெருமானால் எரிக்கப் பட்டன. தான் அவர்களிடமிருந்து மாறுபட்டவன் என்பதை உணர்த்தும் திருஞான சம்பந்தர், தனக்கு பெருமான் கருணை புரிய வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகின்றார்.

கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த

ஒருத்தனே உமையாள் ஒரு கூறனே

நிருத்தனே திருவாரூர் எம் தீ வண்ண

அருத்த என் எனை அஞ்சல் என்னாததே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.90.10) அப்பர் பிரான், பெருமானை அருத்தன் என்றும் ஆராவமுதன் என்றும் அழைக்கின்றார். அருத்தன்-அர்த்தம் உடையவன், மெய்ப்பொருளாக இருப்பவன்; வருத்தன்=வருத்தியவன்; வாளை ஏந்திய அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, அவனது பத்து மணிமுடிகள், இருபது தோள்கள் ஆகியவை மலையின் கீழே அமுக்குண்டு வருந்துமாறு செய்த வலிமை உடையவன் பெருமான். பின்னர் அரக்கன் சாமகானம் பாடியபோது, அவன் மீது இரக்கம் கொண்டு, அவனது தலைகளும் தோள்களும் முன் போல் பொலியுமாறு பொருத்தியவன் சிவபெருமான். என்றும் பொய்யாமல் அடியார்களுக்கு கருணையுடன் அருள் புரியும் பெருமான், பூதப் படைகளை உடையவன், மற்றும் தூய்மையானவன் ஆவான். தேவர்களுக்குத் தலைவனாக விளங்குபவனை, வேதிகுடி தலத்தில் உறையும் பெருமானை, மெய்ப்பொருளாக இருக்கும் நமது தலைவனை நாம் சென்று அடைந்து பணிந்து அவனது அருள் வெள்ளத்தில் மூழ்கி நீராடுவோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மருந்தனை வாளரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த

பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப் படை உடைய

திருத்தனைத் தேவர் பிரான் திருவேதிகுடி உடைய

அருத்தனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.4.9) அப்பர் பிரான் பெருமானை, அருத்தன் என்று குறிப்பிடுகின்றார். அருத்தன் என்பதற்கு வேதத்தின் பொருளாக இருப்பவன் என்றும் மெய்ப்பொருளாக இருப்பவன் என்றும் பொருள். திருத்தன்=திருத்தியவன், ஐந்து தலை நாகத்தின் கொடிய குணத்தினை மாற்றி, ஆபரணமாக அணிந்து கொண்டவன். கடிதல்=கோபித்துக் கொள்ளுதல்; நம்மிடம் இருக்கும் தீய குணங்கள் எவையெவை என்று உணர்ந்து, அவற்றைக் கடிந்து நீக்க வேண்டியது நாம் செய்ய வேண்டிய செயலாகும். அவ்வாறு தீய குணங்களைக் கடிந்து நீக்காமல், தொடர்ந்து தீய செயல்களைச் செய்து ஏனைய உயிர்களை வருத்திய திரிபுரத்து அரக்கர்களை கடியார் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம் தீய செயல்களைப் புரியும் மனிதர்களுக்கு அருள் புரியாமல் இறைவன் அந்த தீயவர்களை அழிப்பார் என்பதையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். அருத்தன் (நான்காவது அடி)=நுகர்விப்பவன். உண்மைப் பொருளாகவும், மெய்ப்பொருளாகவும், வேதங்களில் காணப்படும் சொற்களின் பொருளாகவும் உள்ள பெருமான், ஐந்து தலை நாகத்தின் கொடிய குணத்தினை மாற்றி திருத்தி அந்த நாகத்தினை அணிகலனாக பூண்டவன் சிவபெருமான். திருவண்ணாமலையாக திகழும் பெருமான், உயிர்களின் கருத்தாகவும் திகழ்கின்றான். தீய குணங்களைக் கடிந்து நீக்காமல், அந்த தீய குணங்களின் வழியே சென்று ஏனைய உயிர்களை வருத்திய திரிபுரத்து அரக்கர்களை ஒரே அம்பினால் எரித்து அழித்தவனும், அனைத்து உயிர்களும் தங்களது வினைப் பயனை தவறாது நுகர்ந்து கழிப்பதற்கு வழி வகுப்பவனும் ஆகிய பெருமானை மறந்தால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது. எனவே அடியேன் எப்போதும் அவரை மறவாமல் நினைத்து, வாழ்வினில் உய்வினை அடைவேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல். இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தையும் அப்பர் பிரான், பெருமானை அடியேன் மறந்து உய்வனோ என்ற கேள்வியுடன் முடிக்கின்றார். இத்தகைய குறிப்பு மூலம், பெருமானை நினைத்து, அவனைப் பணிந்து தொழுதால் தான், எவரும் வாழ்க்கையில் உய்வினை அடைய முடியும் என்பதை உணர்த்துகின்றார்.

அருத்தனை அரவு ஐந்தலை நாகத்தைத்

திருத்தனைத் திருவண்ணா மலையனை

கருத்தனைக் கடியார் புரம் மூன்று எய்த

அருத்தனை அடியேன் மறந்து உய்வனோ

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.13.10) அப்பர் பிரான், பெருமானை அருத்தன் என்று அழைக்கின்றார். ஓங்கல்=ஓங்கி உயர்ந்த கயிலாய மலை; அடக்கத்தின் காரணமாக, தனது குறையை மறைத்து வாழும் வஞ்சகன் என்று அப்பர் பிரான் தன்னைக் கூறிக் கொள்கின்றார். உரம்=வலிமை அருத்தன்=உட்பொருளாய் விளங்குபவன்; வலிமையில் உயர்ந்தவன் தான் என்ற செருக்குடன், ஓங்கி உயர்ந்த கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அரக்கன் இராவணனின் வலிமை குன்றுமாறு அவனை மலையின் கீழே அழுத்தியவனே, குறைகளை பிறர் அறியாவண்ணம் மறைத்து வஞ்சனையாக வாழ்ந்த எனது மனதினை திருத்தி ஆங்கே நிலை பெற்று உறையும் இறைவனே, அனைத்து உயிர்களிலும் பொருட்களிலும் உட்பொருளாய் விளங்குபவனே, திருவீழிமிழலை தலத்தில் வீற்றிருக்கும் இறைவனே, அடியேனை, நீர் குறியாக் கொண்டு காத்தருள வேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் இறைஞ்சும் பாடல்.

ஒருத்தன் ஓங்கலைத் தாங்கல் உற்றான் உரம்

வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய

திருத்தனே திருவீழிமிழலையுள்

அருத்தனே அடியேனை குறிக்கொளே

பழையாறை வடதளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.58.10) அப்பர் பிரான், பெருமானை, அருத்தன் என்று அழைக்கின்றார். செரு=போர்; செருத்தனை=போரினை; சேண்=புகழால் நீண்ட; எருத்து=பிடரி; இற=நொறுங்க; இறை=சிறிதே; அருத்தன்=பொருள் வடிவானவன்; திருத்தன்= அழகியவன். தனது போர் செய்யும் வலிமையால் நீண்ட புகழினைக் கொண்ட இராவணன், கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தபோது, அவனது பிடரியும், உடலும் நொறுங்குமாறு, தனது திருவிரலை ஊன்றிய சிவபெருமானை, சொற்களுக்கு பொருள் வடிவாகத் திகழும் சிவபெருமானை, பழையாறை வடதளியில் உறையும் இறைவனைத் தொழுபவர்களின் வினை தேய்ந்து விடும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

செருத் தனைச் செயும் சேணரக்கன் உடல்

எருத்து இற விரலால் இறை ஊன்றிய

அருத்தனைப் பழையாறை வடதளித்

திருத்தனைத் தொழுவார் வினை தேயுமே

கடுவாய்க்கரைபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.62.1) அப்பர் பிரான், பெருமானை அருத்தன் என்று குறிப்பிடுகின்றார். ஒருத்தன்=ஒப்பற்றவன்; இந்த பாடலிலிருந்து கடுவாய் என்று அழைக்கப்பட்ட ஆற்றின் கரையில் தலம் அமைந்துள்ளதாக தெரிகின்றது. கடுவாய் என்பது குடமுருட்டி ஆற்றின் மற்றொரு பெயர். அரிசில் ஆற்றங் கரையில் அமைந்துள்ள தலம் அரிசிற்கரைப் புத்தூர் என்று அழைக்கப்பட்டது போன்று, இந்த தலம் கடுவாய்க்கரை புத்தூர் என்று பண்டைய நாட்களில் அழைக்கப்பட்டது போலும். கடுவாய் ஆற்றின் தென் கரையில் அமைந்திருப்பதால் தென் புத்தூர் என்று குறிப்பிடப் படுகின்றது. திருத்தன்=எந்த திருத்தமும் தேவைப் படாமல் பரிபூரணனாக விளங்கும் பெருமான். திருத்தன் என்ற சொல்லுக்கு உயிர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு செல்பவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஒப்பற்ற தனி ஒருவனாக விளங்கும் பெருமானை, மூன்று உலகத்தில் உள்ளவர்களும் தேவர்களும் பெரிதும் விரும்புகின்றார்கள். இவ்வாறு அனைவராலும் விரும்பப்படும் பெருமானை நானும் விரும்ப, அவன் எனது மனதினுள்ளே பொருந்தியுள்ளான். கடுவாய் நதியின் நீரில் நீராடுபவனும், எந்த விதமான திருத்தமும் தேவைப்படாமல் செம்மையுடன் விளங்குபவனும் ஆகிய பெருமானை புத்தூர் என்று அழைக்கப்படும் தலம் சென்று கண்ட அடியேன் வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

ஒருத்தனை மூவுலகொடு தேவர்க்கும்

அருத்தனை அடியேன் மனத்துள் அமர்

கருத்தனைக் கடுவாய்ப் புனல் ஆடிய

திருத்தனைப் புத்தூர்ச் சென்று கண்டு உய்ந்தெனே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.24.5) சுந்தரர், அருத்தமாக இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஏழுலகு என்பதற்கு ஏழு உலகங்களிலும் உள்ள உயிர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். கண்=உயிர்களின் அறிவு; கருத்தாய=விருப்பத்துடன் கருத்தில் கொள்ளும்; அருத்தம்=மெய்ப் பொருள்; அனைத்து உயிர்களாலும் விரும்பப்படும் உண்மையான மெய்ப்பொருள் பெருமான் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். அடிப்படையில் அனைத்து உயிர்களும், தங்களது மலங்களைக் களைந்து கொண்டு, இறைவனுடன் இணைய வேண்டும் என்று விரும்பினாலும், உயிருடன் பிணைந்திருக்கும் ஆணவமலம், உயிர் அவ்வாறு செயல்படாத வண்ணம் தடுக்கின்றது. ஏன் அவ்வாறு உயிர் விரும்புகின்றது. தான் எண்ணற்ற பிறவிகள் எடுத்து, அந்தந்த பிறவிகளில் எதிர்கொண்ட துன்பங்களால் வருந்தி இளைத்ததன் காரணத்தால், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்று உயிர் விரும்புகின்றது. மேலும் இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டி இருக்குமோ என்ற கவலையினால், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்ற அந்த ஏக்கம் மேலும் அதிகரிக்கின்றது. எனினும், உயிருடன் பிணைந்துள்ள ஆணவ மலமோ, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடும் முயற்சியில் ஈடுபடுகின்ற உயிர் தன்னை அடக்கி ஒடுங்கச் செய்து விடுமோ என்று கலங்குகின்றது. எனவே தான், அத்தகைய நிலையைத் தடுக்கும் பொருட்டு, பல வகையிலும் கடுமையாக, ஆணவ மலம் முயற்சி செய்கின்றது. இந்த தன்மையை நாம் புரிந்து கொண்டு நாம், ஆணவ மலத்தின் தாக்கத்தினால், வழி தவறிச் சென்று விடாமல், தொடர்ந்து உயிரின் விருப்பத்தை நிறைவேற்ற முயல வேண்டும்; பெருமான் ஒருவனே, உயிரின் இந்த முயற்சியை ஊக்குவித்து உதவி செய்பவனாக விளங்குவதால், நாம் பெருமானை பற்றிக் கொண்டு, உயிரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே நமது வாழ்வின் குறிக்கோள் என்று செயல்பட வேண்டும். இந்த அறிவுரை தான் அருளாளர்கள் அனைவராலும் நமக்கு அளிக்கப் படுகின்றது.

கண்ணாய் ஏழுலகும் கருத்தாய அருத்தமுதமுமாய்ப்

பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே

மண்ணார் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே

அண்ணா நினை அல்லால் இனி யாரை நினைக்கேனே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.73.6) சுந்தரர் பெருமானை அருத்தன் என்று அழைக்கின்றார். தில்லைச் சிற்றம்பலத்தில் நடராஜப் பெருமானின் திருக்கோலத்தைக் கண்டு களித்த சுந்தரரை, ஆரூரில் நம் பால் வருக என்று பணித்த வகையில் சுந்தரர், திருவாரூர் நோக்கி செல்கின்றார். சுந்தரரை ஊர் எல்லையில் ஆரூர் நகரத்து அடியார்கள் எதிர்கொள்கின்றனர். அப்போது அந்த அடியார்களிடம், சுந்தரர், ஆரூர்ப் பெருமான், தம்மை ஆட்கொள்வாரோ என்பதை பெருமானிடம் வினவி, அதற்கு பெருமான் அளிக்கும் மறுமொழியை தனக்கு சொல்ல வேண்டும் என்று தலத்து அடியார்களிடம் வேண்டுகின்றார். இந்த பாடலில் தனது குறைகளை குறிப்பிடும் சுந்தரர், அத்தகைய குறைகளை பொருட்படுத்தாமல், இறைவன் தன்னை ஏற்றுக் கொள்வாரா என்றும் கேட்கின்றார். பொருட் செல்வத்தை பெரிதும் விரும்புதல், அந்த செல்வம் அடையும் முயற்சியில் பல இடங்களிலும் திரிதல், துன்பம் அடைந்தோர்க்கு உதவி புரியாமல் இருத்தல், தனது உறவினர்களுக்கும் துணையாக இருந்து உதவி புரியாது இருத்தல், அடியார்களுக்கு பொருத்தமான பண்பு ஏதும் இல்லாமல் இருத்தல், ஆகியவற்றை தனது குறைகளாக சுந்தரர் இந்த பாடலில் பட்டியல் இடுகின்றார். உண்மையில் அத்தகைய குறைகள் ஏதும் இல்லாதவராக சுந்தரர் இருந்தாலும், நம்மைப் போன்றவரை கருத்தில் கொண்டு, இத்தகைய குணங்கள் பெரும் குறைகளாக கருதப் படும் என்று உணர்த்துகின்றார். உண்மையில் இந்த குற்றங்கள் உடையவராக சுந்தரர் திகழவில்லை; பெருமானின் திருவுள்ளக் கருத்தினை புரிந்து கொண்டு, அதன் வழியே வாழ்ந்தவர் சுந்தரர்; எனினும் இத்தகைய குற்றங்கள் உடையவர்களாக விளங்கும் நம்மைப் போன்ற மனிதர்களுக்கு, நமது குற்றங்களை சுட்டிக் காட்டி, இந்த குற்றங்கள் இருந்தால், பெருமான் நம்மை ஆட்கொள்ள மாட்டார் என்பதை உணர்த்தி, அந்த குற்றங்களை நாம் களைந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக, இந்த குற்றங்கள் குறிப்பிடப் படுகின்றன. முதலடியில் வரும் அருத்தம் என்ற சொல்லுக்கு பொருட் செல்வம் என்று பொருள் கொள்ள வேண்டும். திருவாரூர் தலத்து மூலட்டானத்து இறைவர் புற்றிடம் கொண்டார் என்று அழைக்கப் படுகின்றார். அருத்தம்=மெய்ப் பொருளாக உள்ள தன்மை.

அருத்தம் பெரிதும் உகப்பன் அலவலையேன் அலந்தார்கள்

ஒருத்தர்க்கு உதவியேன் அல்லேன் உற்றவர்க்கும் துணை அல்லேன்

பொருத்தம் மேல் ஒன்று இலாதேன் புற்றெடுத்து இட்டிடம் கொண்ட

அருத்தம் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்

திருவாசகம் அருட்பத்து பதிகத்தின் பாடலில் (8.29.2) மணிவாச்க அடிகளார் பெருமானை அருத்தனே என்று அழைக்கின்றார். நாம் துன்பங்களால் வருந்தி துயரடைந்து இருக்கும் நிலையில், நமது துயரத்தை துடைக்காவிடினும் பரவாயில்லை, எவரேனும் ஆதரவாக ஒரு வார்த்தை பேச மாட்டாரா என்று நமது மனம் துடிப்பது இயற்கை. அவ்வாறு தான் மணிவாசகரும் ஏங்குகின்றார். ஆனால் நமக்கும் அவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம். நாம், நமக்கு நெருங்கிய உறவினரோ அல்லது நண்பரோ, நம்மிடை வந்து நமது உடல் நிலை எவ்வாறு உள்ளது, மனநிலை எவ்வாறு உள்ளது என்று கேட்டால், நாம் சற்று ஆறுதல் அடைவோம். ஆனால் மணிவாசகரோ இறைவன் அவ்வாறு கேட்க மாட்டாரா என்று ஏங்குகின்றார். அந்த ஏக்கம் தான் இந்த பதிகத்தின் பாடல்களாக வெளிப்படுகின்றன. ஏன் அவ்வாறு மணிவாசகர் ஆசைப் படுகின்றார். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள், நம்மைத் தேற்றும் முகமாக நம்மை விசாரித்தாலும், பெரும்பாலும் அவர்களுக்கு நமது வருத்தத்தைத் தீர்க்கும் ஆற்றல் இல்லாமல் போகலாம் ஆனால் இறைவனோ நமது துன்பங்கள் அனைத்தையும் களையும் ஆற்றல் படைத்தவர். அத்தகைய ஆற்றல் உடைய ஒருவர் நம் மீது அக்கறை கொண்டு விசாரிக்க முன்வருகின்றார் என்றால், அவர் அத்துடன் நிறுத்த மாட்டார் அல்லவா. அதனால் தான், இறைவன் அவ்வாறு விசாரித்தாலே போதும் என்று திருப்தி அடைந்தவராக, இறைவனே அதெந்துவே என்று கேட்டு அருள் புரிய மாட்டாயா என்று பதிகத்தின் பாடல் தோறும் அடிகளார் இறைஞ்சுகின்றார். அது என்று நமது வருத்தத்திற்கு காரணம். எந்து எப்படி உள்ளது, காரணம் என்ன என்பதாகும். தான் இறைவனை அழைக்கும் போது வாளா இராமல் ஏன் என்றாவது கேள் என்று இறைவனிடம் அடிகளார் வேண்டுகின்றார். ஆதரித்து=விரும்பி, நீ ஒருவனே எனது பற்றுக்கோடு என்ற எண்ணத்துடன் அழைத்து. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானை தான் ஆதரித்து அழைப்பதாக அடிகளார் கூறுகின்றார். பெருமான் ஒருவன் தான் தனது கவலையை போக்கும் ஆற்றல் உடையவர் என்பதால், அவரைத் தேடித் தான் உலகெங்கும் திரிந்ததாக குறிப்பிடும் மணிவாசக அடிகளார், பெருமான் தனது கூக்குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று வேண்டுகின்றார்.

நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே

ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி உலகெலாம் தேடியும் காணேன்

திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தம் மேவிய சீர்

அருத்தனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

பொழிப்புரை:

வேதங்களின் பொருளாக விளங்குபவனும், அறத்தின் வடிவமாக உள்ளவனும், அமுதம் போன்று தெவிட்டாத இனிமையினை உள்ளத்திற்கு அளிப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றியமையால் அனைவர்க்கும் பழமையானவனும். அனைத்து உயிர்கள் அழிந்த பின்னரும் தான் அழியாமல் நிலையாக இருப்பதால் அனைவரினும் இளையவனாக கருதப் படுவானும் ஆகிய இறைவன் யார் என்று நீங்கள் வினவுவீராயின், உமது கேள்விக்கு நான் அளிக்கும் விடையினை கேட்பீர்களாக; ஒப்பற்ற ஒருவனாக விளங்கும் சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரும் நமக்கு உண்மையான துணை இல்லை என்பதை கருத்தினில் கொண்டு, உலகத்தவர், தொழுது புகழ்ந்து வணங்கும் இறைவன் கடைமுடி எனப்படும் வளமான நகரத்தில் உறைகின்றான். எனவே அந்த தலம் சென்று இறைவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீராக.

பாடல் 2:

அருத்தனை அறவனை (1.111) பாடல் 2 (திதே 391)

அருத்தனை அறவனை (1.111) பாடல் 2 தொடர்ச்சி (திதே 392)

அருத்தனை அறவனை (1.111) பாடல் 2 தொடர்ச்சி (திதே 393)

அருத்தனை அறவனை (1.111) பாடல் 2 தொடர்ச்சி (திதே 394)

அருத்தனை அறவனை (1.111) பாடல் 2 தொடர்ச்சி (திதே 395)

அருத்தனை அறவனை (1.111) பாடல் 2 தொடர்ச்சி (திதே 396)

அருத்தனை அறவனை (1.111) பாடல் 2 தொடர்ச்சி (திதே 397)

அருத்தனை அறவனை (1.111) பாடல் 2 தொடர்ச்சி (திதே 398)

திரை பொரு திருமுடி திங்கள் விம்மும்

அரை பொரு புலியதள் அடிகள் இடம்

திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்

கரை பொரு வளநகர் கடைமுடியே

விளக்கம்:

திரை=அலைகள்; பொருதல்=மோதுதல், பொருந்துதல்; விம்மும்=பெருகுதல்; இந்த திருக்கோயிலுக்கு தெற்கே சுமார் அரை கி.மீ. தொலைவில் காவிரிநதி ஓடுகின்றது. இந்த பாடலில், தனது இடுப்பினில், புலியாடை அணிந்தவனாக, திருஞானசம்பந்தர், பெருமானை சித்தரிக்கின்றார். தாருக வனத்து முனிவர்கள், சிவபெருமானின் மீது கோபம் கொண்டவர்களாக அவரை அழிப்பதற்காக அபிசார ஹோமத்திலிருந்து ஒரு புலியை எழுப்பி, சிவபெருமான் மீது புலியை ஏவுகின்றனர். தன்னைத் தாக்க வந்த புலியை அடக்கிய சிவபெருமான், அதன் தோலினை உரித்து தனது இடுப்பினில் ஆடையாக அணிந்து கொள்கின்றார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த நிகழ்ச்சி பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை, நாம் இங்கே காண்போம்.

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.10.8) திருஞானசம்பந்தர், பெருமானை, ஒளி வீசும் புலித்தோலினை ஆடையாக உடுத்தியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஒளிறூ என்றால் ஒளி வீசும் என்று பொருள். பிளிறூகுரல் என்றால் யானை பிளிறும் ஒலி என்று பொருள். வெளிறு என்ற சொல் எதுகை கருதி வெளிறூ என்று நீட்டப்பட்டுள்ளது. வெளிறு என்றால் எளிமை என்று பொருள். பலம் வாய்ந்த யானையை எந்த விதமான முயற்சியும் இன்றி எளிதாக தோல் உரித்த செய்கையின் குறிப்பு தோன்ற வெளிறூ பட விளையாடி என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மனதில் அச்சமோ அல்லது கள்ளமோ இல்லாமல் விளையாட்டாக யானையின் தோலை உரித்த செய்கை இங்கே இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது. அளறு என்றால் சேறு என்று பொருள். சேறு போல் கூழாக மாறும் நிலைக்கு இராவணன் மலையின் கீழ் நசுக்குண்டதால் தள்ளப்பட்டான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். சிவபெருமான் செய்த வீரச் செயல்களில், யானையின் தோலை உரித்தது தான் வீரமும் வேகமும் நிறைந்த செயலாக கருதப்படும். ஆனால் அந்தச் செயலையும் சிறுபிள்ளை விளையாட்டாகச் செய்த திறமை உடையவன் இறைவன் என்று அவனது திறம் இங்கே சுட்டிக் காட்டப் படுகின்றது. அதள்=தோல்; யானை குரல் கொடுப்பதை பிளிறுதல் என்று குறிப்பிடுவார்கள்; வாரணம்=ஆண் யானை; வதனம்=முகம் இங்கே யானையின் மத்தகம் என்று பொருள் கொள்வது பொருத்தம். விகிர்தன்=வேறு எவரிடமும் இல்லாத திறமை உடையவன். புலித்தோல் மற்றும் மான்தோல் ஆகியவற்றை பயன்படுத்தும் மனிதர்கள் எவரும் யானையின் தோலை பயன்படுத்துவதில்லை. மற்ற விலங்குகளின் தோலை விடவும் சற்று தடிமனாக இருப்பதால், யானையின் தோலை எவரும் பயன்படுத்துவதில்லை போலும். மேலும் இரத்தப் பசையுடன் இருந்த யானையின் தோலை தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவர் பெருமான். யானையின் தோல் உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்று சீவக சிந்தாமணி குறிப்பிடுகின்றது. இந்த காரணம் பொருட்டே உமையன்னை அச்சம் கொள்கின்றாள். எந்த பொருளும் பெருமானின் உடலுக்கு எந்த விதமான தீங்கினையும் ஏற்படுத்த முடியாது என்பதால், பெருமான் யானையின் தோலையும் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவனாக, மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்ட விகிர்தனாக, விளங்கும் தன்மை இந்த பாடலில் சொல்லப்படுகின்றது. அளறு=சேறு, கூழ் என்று பொருள் கொள்வது பொருத்தம். அரக்கன் இராவணன் இசைத்த சாமகானத்தைக் கேட்டு மகிழ்ந்த பெருமான், கயிலாய மலையின் மீது ஊன்றிய தனது கால் பெருவிரலின் அழுத்தத்தை தளர்த்தியிராவிட்டால், அரக்கனது உடல் தசையும் இரத்தமும் கலந்து கூழாக மாறி, சேறு போன்று காட்சியளித்திருக்கும் என்று உணர்த்துகின்றார்.

ஒளிறூ புலி அதள் ஆடையன் உமை அஞ்சுதல் பொருட்டால்

பிளிறூ குரல் மதவாரண வதனம் பிடித்து உரித்து

வெளிறூ பட விளையாடிய விகிர்தன் இராவணனை

அளறூ பட அடர்த்தான் இடம் அண்ணாமலை அதுவே

ஒளிவீசும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும். உமையன்னை அஞ்சும் வண்ணம் உரத்த குரல் கொடுத்து பிளிறும் தன்மை உடையதும் மதம் கொண்டதும் ஆகிய ஆண் யானை தன்னை எதிர்த்து வந்த போது, அதன் மத்தகத்தை பிடித்து கிழித்து அதன் தோலையும் உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவனும் ஆகியவன் பெருமான். அந்த யானையின் தோலை, விளையாடுவது போன்று மிகவும் எளிதாக உரித்தவன் சிவபெருமான். அவன் மற்ற தெய்வங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டு, விகிர்தனாக விளங்குகின்றான். தனது இருப்பிடமாகிய கயிலாய மலையினைப் பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடல் நசுங்கி, அரக்கனது உடலின் சதையும் இரத்தமும் கலந்து கூழாக மாறும் தன்மைக்கு கயிலாய மலையின் கீழே அரக்கனை அழுத்திய சிவபெருமானின் உறைவிடமாகிய அண்ணாமலை எனப்படுவது அந்த மலையே என்பதே அந்த பாடலின் பொழிப்புரை.

கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.19.3) திருஞானசம்பந்தர், பெருமானை புலித்தோலை ஆடையாக அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் முதல் பாடலில், நன்மை விளைவிக்கும் கழல்கள் என்றும் இரண்டாவது பாடலில் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிரினை விடுவிக்கும் கழல்கள் என்றும் பெருமானின் திருப்பாதங்களை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் நமது நினைவுகள் எப்போதும் இறைவனைச் சுற்றியே இருக்க வேண்டும் என்று விரும்பினால், நாள்தோறும் இரவும் பகலும் அவனைப் புகழ்ந்து பாட வேண்டுமென்று கூறுகின்றார். எரியுறு நிற=அழல் வண்ணன்; ஒளி கிளர்=ஒளி திகழும்; நனி=மிகவும் அதிகமாக, எப்போதும்; வரிவரியாக கோடுகள் உடைய புலித்தோலினை ஆடையாகக் கொண்டவனும், ஒளியுடன் திகழ்வதும் வளரும் நிலையினை அடைந்ததும் ஆகிய பிறைச் சந்திரனின் கதிர்கள் பொதிந்த சடையினை உடையவனும், நறுமணம் நிறைந்த சோலைகள் உள்ளதும் திருவிழாக்களின் ஆரவாரங்கள் நிறைந்ததும் ஆகிய கழுமலம் என்று அழைக்கப்படும் தலத்தில் விரும்பி எழுந்து அருள் புரிபவனும் ஆகிய இறைவனின், அழல் வண்ணனாக திகழும் இறைவனின், திருவடிகளை இரவும் பகலும் புகழ்ந்து வணங்கும் அடியார்களை வருத்தும் வினைகள் சூரியனின் ஒளி பொருந்திய கதிர்கள் முன்னே இருள் அழிந்து விடுவதைப் போன்று அழிந்துவிடும்; மேலும் அத்தகைய அடியார்கள் எப்போதும் இறை நினைவுடன் இருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில், பெருமானை புலித்தோல் ஆடை அணிந்தவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

வரியுறு புலி அதள் உடையினன் வளர்பிறை ஒளி கிளர் கதிர் பொதி

விரியுறு சடை விரை புரை பொழில் விழவொலி மலி கழுமலம் அமர்

எரியுறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தம

தெரியுறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்து மதே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.22.2) திருஞானசம்பந்தர், கொலைத் தொழிலில் வல்லமை பெற்றுத் திகழ்ந்த புலியினைக் கொன்று அதன் தோலினை ஆடையாக, பெருமான், அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். ஆடையாக புலித்தோலை அணிந்துள்ள பெருமான், தனது உடலில் கைகள் தொடங்கி பல அவயவங்களில் ஆபரணமாக பல இடங்களில் பாம்பினை அணிந்துள்ளார் என்றும் இந்த பாடல் குறிப்பிடுகின்றது. பண்டைய இலக்கியங்கள் ஆண்கள் அணியும் ஆபரணங்களை பட்டியல் இடுகின்றன. காப்பு கடகம் வளையல் வங்கி என்பன ஆண்கள் தங்களது கைகளில் அணியும் நகைகள்; வீரக்கழல் மற்றும் தண்டை என்பன ஆண்கள் தங்களது காலில் அணியும் நகைகள்; கணையாழி என்பது அரச குடும்பத்தினரும் உயர் பதவிகளில் இருப்போரும் விரலில் அணியும் நகை; இப்போது மோதிரமாக மாறி விட்டது. அரைஞாண் அரையணி பவளவடம் என்பன இடுப்பில் அணிவன; கடுக்கன், குண்டலம், என்பன காதில் அணிவன; நெற்றிப் பட்டம் நெற்றியில் அணிவது; வாகுவலயம் பதக்கம் என்பன கழுத்தில் அணிவன. இத்தகைய அணிகலன்களாக தனது உடலெங்கும் வரன்முறையாக அணிந்து கொள்வதற்கு பதிலாக, பெருமான் பாம்பினை தனது உடல் உறுப்புகள் பலவற்றில் அணிந்துள்ளார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அடல் வலி=கொல்லும் தன்மை கொண்ட வலிமை; இமையவர் புரம் எழில் பெற வளர் மரம் என்று கற்பக மரம் உணர்த்தப் படுகின்றது. தனது நிழலில் அமர்வோர் நினைக்கும் பொருளினை அளிக்கும் கற்பக மரம் போன்று, தங்களை நாடிவரும் இரவலர்கள் வேண்டுகின்ற பொருளினை அளித்த கொடையாளர்கள் வாழ்ந்த நகரம் திருமறைக்காடு என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும், கடை வரியில் உள்ள கடைச் சொல் தவிர்த்து வேறெங்கும் நெடில் எழுத்து வாராத வண்ணம் இயற்றப் பட்ட பாடல்களாக அமைந்துள்ளன. இதற்கு ஒப்ப, மறைக்காடு, வேதவனம் என்ற பெயர்கள் தவிர்க்கப்பட்டு. தலம் மறைவனம் என்று அழைக்கப் படுவது, திருஞானசம்பந்தரின் தமிழ் ஆளுமைக்கு சிறந்த எடுத்துக் காட்டு.

கரமுத லியவவ யவமவை கடுவிட வரவது கொடுவரு

வரன்முறை அணிதரும் அவனடல் வலிமிகு புலியத ளுடையினன்

இரவலர் துயர்கெடு வகைநினை யிமையவர் புரமெழில் பெறவளர்

மரநிகர் கொடைமனி தர்கள்பயில் மறைவன மமர்தரு பரமனே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.30.3) திருஞானசம்பந்தர், பெருமானை, புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன் என்று குறிப்பிடுகின்றார்.

வலியின் மதி செஞ்சடை வைத்த மணாளன்

புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன்

மலியும் பதி மாமறையோர் நிறைந்து ஈண்டிப்

பொலியும் புனற்பூம் புகலி நகர் தானே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.46.7), திருஞான சம்பந்தர் பெருமானை, புலித்தோல் உடையாகக் கொண்டவர் என்று கூறுகின்றார். உமையன்னை கீதம் பாட பெருமான் நடமாடுபவராக இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பரமேட்டி=அனைவரிலும் மேலானவன்; தன்னால் தொழப்படும் தகுதி படைத்தவர் எவரும் இல்லாத தன்மையன்; பரமேச்வரன் என்ற சொல்லும் இந்த பொருளையே உணர்த்துகின்றது. உயர்ந்தவர்கள் அனைவருக்கும் தலைவனாக உள்ள பெருமான் என்பதே அந்த பொருள். பல திருமுறைப் பாடல்களில் பரமேட்டி என்று இறைவன் அழைக்கப் படுகின்றான். அனைவரிலும் உயர்ந்தவராக இருப்பவரும், தன்னால் தொழப்படுபவர் எவரும் இல்லாத உயர்ந்த நிலையில் இருப்பவரும் ஆகிய பெருமானின் திருப்பாதங்களை பலரும் தொழுகின்றனர். அவர், பூத கணங்கள் புடை சூழ, புலித்தோலை ஆடையாக உடுத்தியவராக, உமை அன்னை பாடுவதற்கு ஏற்ப நடனம் ஆடுகின்றார். கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகை வீரட்டம் தலத்தினில், வேத முதல்வனாகிய பெருமான் நடனம் ஆடுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி

பூதம் புடை சூழப் புலித்தோல் உடையாகக்

கீதம் உமை பாடக் கெடில வடபக்கம்

வேத முதல்வன் நின்றாடும் வீரட்டானத்தே

சோபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.51.3) திருஞானசம்பந்தர், பெருமானை,

புலித்தோல் உடுத்தவன் என்று குறிப்பிடுகின்றார். திரிபுரத்து அரக்கர்களை மாய்வித்து வானவரை வாழ்வித்ததன் காரணம் யாது என்ற கேள்வி இந்த பாடலில் எழுப்பப் பட்டாலும், அந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக தீயவர் என்று திரிபுரத்து அரக்கர்களை இந்த பாடலின் முதல் அடியில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தீயவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்கள், தேவர்களை வருத்தியதே, பெருமான் அவர்களுடன் போருக்கு சென்றதன் காரணம் என்று உணர்த்தப் படுகின்றது.

தீயராய வல்லரக்கர் செந்தழலுள் அழுந்தச்

சாய எய்து வானவரைத் தாங்கியது என்னை கொலாம்

பாயும் வெள்ளை ஏற்றை ஏறிப் பாய்புலித் தோல் உடுத்த

தூய வெள்ளை நீற்றினானே சோபுரம் மேயவனே

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.67.1) திருஞானசம்பந்தர் பெருமானை புலியின் உரி தோலார் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திருஞான சம்பந்தர் நம்பன் என்று இறைவனை அழைக்கின்றார். நம்பன் என்றால் விரும்புவதற்கு உரிய தகுதி படைத்தவன் என்று பொருள். இறைவன் நமக்கு பல விதங்களிலும் நன்மை செய்தும், நமது பல வேண்டுகோளை நிறைவேற்றியும் அருள் புரிவதால், நாம் விருப்பம் கொள்வதற்கு அவனை விடவும் அதிகமான தகுதி படைத்தவர் வேறு எவரும் இல்லை அல்லவா. இந்த பாடலில் நாதா என்றும் நம்பா என்றும் நக்கா என்றும் தன்னை அழைத்து, தனது திருவடிகளைத் தொழுது நிற்கும் அடியார்களின் பாவங்களை முற்றிலும் தீர்த்து நன்மை புரிபவர் பழன நகரத்தின் இறைவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வேதங்களை ஓதிக் கொண்டும் மார்பினில் வெண்ணூல் அணிந்து கொண்டும் வெள்ளை எருதினைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் செல்லும் பெருமான், பூதங்கள் தன்னைச் சூழ்ந்து வரும் வண்ணம் பொலிவுடன் செல்கின்றார். அவர், தாருகவனத்து முனிவர்களால் தன் மீது ஏவப்பட்ட புலியினைக் கொன்று, அதன் தோலினைத் தனது ஆடையாக உடுத்தியுள்ளார். எங்களது தலைவனே என்றும், குறைந்த உடையணிந்து எளிமையுடன் திகழும் நக்கா என்றும், நாங்கள் விரும்பும் பெருமானே என்றும் மனம் ஒன்றி அழைத்து, தனது திருவடிகளைத் தொழும் அடியார்களின் பாவங்களை தீர்க்கும் பெருமான் பழன நகரினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்

பூதம் சூழப் பொலிய வருவார் புலியின் உரி தோலார்

நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று

பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே

கயிலாய மலையின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.68.1) திருஞானசம்பந்தர் பெருமானை, புலியின் அதளர் என்று அழைக்கின்றார். மடங்கல்-சிங்கம்;இடிய குரல்=இடியின் ஓசை; இரியும்=நிலை கெட்டு ஓடும்; கடிய விடை=வேகமாக நடக்கும் இடபம்; கொன்றை மலர் மாலைகளைத் தனது மார்பில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். கடி கொள்=நறுமணம் மிகுந்த;

பொடிகொள் உருவர் புலியின் அதளர் புரிநூல் திகழ் மார்பில்

கடி கொள் கொன்றை கலந்த நீற்றர் கறைசேர் கண்டத்தர்

இடிய குரலால் விரியும் மடங்கல் தொடங்கும் முனைச் சாரல்

கடிய விடை மேற்கொடி ஒன்றுடையார் கயிலை மலையாரே

ஈங்கோய்மலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.70.9) திருஞான சம்பந்தர் பெருமானை, வரியார் புலியின் உரிதோல் உடையான் என்று குறிப்பிடுகின்றார். வரி=கோடு; பெம்மான்=பெருமான் என்பதன் திரிபு; பெருமைக்குரிய மகன் என்று பொருள்; நடனம் ஆடும் போதும் மாதொரு பாகனாக உள்ள தன்மை, இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. பெருமான் நடனம் ஆடும் போதும் வேதங்கள் ஓதும் போதும், பெருமானுக்கு மிகவும் அருகில் இருந்து கொண்டு அவனது செயல்களை ரசிக்கும் அன்னை, மாதொரு பாகனாக அவன் உள்ள நிலையிலும் பெருமானின் செயல்களை ரசிப்பதாக குறிப்பிடும் அப்பர் பிரானின் பதிகம் (4.8.10) நமது நினைவுக்கு வருகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், மாதொரு பாகனின் திருவாயின் ஒரு பகுதி வேதங்களை பாடுவதாகவும் மற்றொரு பகுதி, அந்த பாடல்களை கேட்டு ரசித்த வண்ணம் புன்முறுவல் பூப்பதாகவும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வரிவரியாக கோடுகள் நிறைந்த புலித் தோலை ஆடையாக உடைய பெருமான், இமவானின் மகளாகிய உமை அன்னையுடன் பிரியாது, மாதொருபாகனாக அவளுடன் சேர்ந்து நடனம் ஆடுவதை விரும்பும் தலைவராவார். இந்த பெருமான், திருமாலும் பிரமனும் முறையே திருவடியையும் திருமுடியையும் கண்டு அறியாத வண்ணம், தனது திருமேனி நீண்ட தீப்பிழம்பாக ஓங்கி நிமிர்ந்து நிற்கும் வண்ணம், அளவில்லாத பெருமைக்கு உரிய கோலத்துடன் காட்சி தந்த பெருமான், எங்களது தலைவன் உறையும் இடம் ஈங்கோய் மலையாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

வரியார் புலியின் உரி தோல் உடையான் மலையான் மகளோடும்

பிரியாது உடனாய் ஆடல் பேணும் பெம்மான் திருமேனி

அரியோடு அயனும் அறியா வண்ணம் அளவில் பெருமையோடு

எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய்மலையாரே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.71.1) திருஞான சம்பந்தர், பெருமானை, புலியின் உரியர் என்று அழைக்கின்றார். சேடு=பெருமை; சேடர்=பெருமை உடையவர்; சேடர் என்ற சொல்லினை சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு என்று கொண்டால், சிறந்த ஒழுக்கமும் புகழும் உடையவர்கள் என்று பொருள். பேழ் வாய்=பிளந்த வாய்; பாம்பின் நாக்கு இரண்டாக பிளந்திருக்கும்; எனவே பேழ்வாய் நாகம் என்று கூறுகின்றார். வேதங்கள், பெருமானின் பல தன்மைகளையும் சிறப்புகளையும் உணர்த்துகின்றன. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் அனைத்து விஷயங்களையும் அனைவராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. எனவே தான் அருளாளர்கள், பல மொழிகளிலும், வேதங்களில் சொல்லப் பட்டுள்ள விவரங்களை, தங்களது பாடல்களில், மிகவும் எளிமையான முறையில், அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உணர்த்துகின்றனர். இந்த தன்மையையே, திருஞானசம்பந்தர் மறை கொள் கீதம் என்று இங்கே குறிப்பிடுகின்றார். வேதங்களில் சொல்லப்படும் செய்திகளை அடிப்படையாக கொண்ட கருத்துகளை உடைய கீதம் என்ற பொருள் பட கையாளப் பட்டுள்ளது. வேதங்கள் ஓதுவதை விரும்பி கேட்பது போன்று, சிவபெருமான் இத்தகைய பாடல்களையும் விரும்பி கேட்கின்றார். எனவே தான் நாமும் இத்தகைய கீதங்களை பாடி பெருமானின் அருள் பெற வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். தேவாரப் பாடல்கள் பாடுவதால், நாம் அடையவிருக்கும் பலன்களையும் பல தேவாரப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. சிறை=சிறகுகள்; தேனார்= தேனை விரும்பி உட்கொள்ளும்; ஒற்றைப் பிறைச்சந்திரனை ஏற்றுக்கொண்ட சடையினை உடையவரும், புலியின் தோலை ஆடையாக உடையவரும், இரண்டாக பிளந்த நாக்கினை உடைய பாம்பினைத் தனது உடலின் பல பாகங்களிலும் ஆபரணமாக அணிந்தவரும், ஆலகால விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்ட கறை படர்ந்த கழுத்தினை உடையவரும், தனது கையினில் பிரம கபாலத்தை ஏந்திய வண்ணம் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்பவரும், பிரளய காலத்தினில், பிரமன் திருமால் இந்திரன் ஆகியோரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளினில் ஏற்ற வண்ணம் கங்காளராக காட்சி தருபவரும் ஆகிய பெருமான், வேதங்களின் பொருளை உணர்த்தும் பாடல்களை ஒழுக்கத்தில் சிறந்த அடியார்கள் பாட, அந்த பாடல்களின் இன்னிசையாலும் தேனுண்ட களிப்பினாலும் தங்களது சிறகுகள் படபடக்க வண்டுகள் முரலும் காட்சி உடைய நறையூர் சித்தீச்சரம் தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பிறைகொள் சடையர் புலியின் உரியர் பேழ் வாய் நாகத்தர்

கறைகொள் கண்டர் கபாலம் ஏந்தும் கையர் கங்காளர்

மறைகொள் கீதம் பாடச் சேடர் மனையின் மகிழ்வெய்தி

சிறைகொள் வண்டு தேனார் நறையூர் சித்தீச்சரத்தாரே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (1.71.3) திருஞானசம்பந்தர் பெருமானை, புலியின் அதளர் என்று குறிப்பிடுகின்றார். முளை வெண்மதி=முளைத்தெழுந்த வெண்மதி; மூவா=மூப்பு அடையாத; பெருமான் எளிமையாக இருப்பதையே விரும்புவர்; ஆகையால் தான், மற்ற தேவர்களைப் போன்று கிரீடம் ஏதும் அணியாமல், தனது சடை முடியையே கிரீடமாகக் கொண்டுள்ளார். அந்த தன்மை தான் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. மிகவும் எளிமையாக பெருமான் இருக்கும் தன்மை பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. எளிமையான கோவண ஆடை, எளிய எருது வாகனம், உண்ணும் கலனாக பிரம கபாலம், அணிகலனாக பன்றிக்கொம்பும் கொக்கிறகும் கொண்டுள்ள தன்மை, சந்தனமாக திருநீறு, ஆகிய தன்மைகள் பெருமானின் எளிய தன்மையை நமக்கு உணர்த்துகின்றன. தனியாக கிரீடம் ஏதும் அணியாமல், தனது சடையையே முடியாக அணிந்து கொண்டுள்ள பெருமான், அன்று முளைத்தெழுந்த ஒற்றைப் பிறைச் சந்திரனையும் தனது சடைமுடியில் அணிந்து கொண்டுள்ளார். மூப்படையாமல் என்றும் இளமையான தோற்றத்துடன் காணப்படும் தனது திருமேனியின் மீது திருநீறும் முப்புரி நூலும் அணிந்து கொண்டு, புலியின் தோலுடை அணிந்தவராக, முறுக்கப் பட்டும் தாழ்ந்தும் காணப்படும் சடையினை உடைய பெருமான், நறுமணம் கமழும் சோலைகளும் வயல்களும் சூழ்ந்த நீர்நிலைகளில் பாய்ந்து விளையாடும் கயல் மீன்கள் உள்ள சித்தீச்சரம் தலத்தினில் உறைகின்றார். கொடிகள் உயர்ந்து பறக்கும் மாட வீடுகள் நிறைந்த வீதிகள் கொண்டதாக இந்த தலம் செழிப்புடன் காணப்படுகின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பதிகத்தின் ஏழாவது பாடலிலும், திருஞான சம்பந்தர் பெருமானை, புலியின் தோலை உடையாக அணிந்தவர் என்று கூறுகின்றார்.

முடிகொள் சடையர் முளை வெண்மதியர் மூவா மேனி மேல்

பொடிகொள் நூலர் புலியின் அதளர் புரிபுன்சடை தாழக்

கடிகொள் சோலை வயல் சூழ் மடுவில் கயலார் இனம் பாயக்

கொடிகொள் மாடக் குழாமார் நறையூர் சித்தீச்சரத்தாரே

குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.7), திருஞான சம்பந்தர், பெருமானை புலியின் உடையர் என்று கூறுகின்றார். தேனார் மொழியாள் என்பது இந்த தலத்து இறைவியின் திருநாமம். ஊனார் தலை=நன்கு உலர்ந்த தசைத் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருக்கும் பிரமகபாலம்; குடமூக்கு என்பது தலத்தின் பெயராகவும் கும்பேசம் என்பது திருக்கோயிலின் பெயராகவும் பண்டைய நாளில் இருந்தது என்பதை நாம் இந்த பதிகத்திலிருந்து அறிகின்றோம். பல இல்லங்களுக்கும் சென்று பலி ஏற்கும் கோலத்திற்கு ஏற்ப விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து கொள்ளாமல், மான் தோல் மற்றும் புலித்தோலை உடுத்தியவராக, யானைத் தோலினை உடலில் போர்த்தவராக பெருமான் உள்ள நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. உடலுக்கு கேடு விளைவிப்பதால் அனைவராலும் அச்சம் கொண்டு ஒதுக்கப் படும் யானைத் தோலினை, போர்த்தவராக உள்ள நிலையும், பெருமான் பிச்சை ஏற்கும் கோலத்திற்கு பொருத்தமாகவே உள்ளது. தான் ஏற்றுக் கொண்டுள்ள வேடத்திற்கு ஏற்ப எளிய கோலத்துடன் பெருமான் இருந்தாலும், அவர் மிகப் பெரிய செல்வர் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திளைத்து=கூடி; நன்கு உலர்ந்த தசைத் துண்டங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம் உலகெங்கும் திரிந்து பல இல்லங்களுக்கு சென்று பலியேற்று வாழும் வாழ்க்கை வாழும் பெருமான், தனது உடலில் மான் தோல் மற்றும் புலித்தோலினை ஆடையாக அணிந்துள்ளார். மேலும் யானையின் தோலையும் தனது உடலின் மீது போர்த்தவராகவும் காணப் படுகின்றார். இங்கே குறிப்பிடப்படும் கோலம், பகட்டான ஆடைகள் ஏதுமின்றி, தோல் ஆடையும் தோல் போர்வையும் கொண்டுள்ள நிலை, அவரது பிச்சை ஏற்கும் செயலுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. அவர், தேனார் மொழியாள் என்று அழைக்கப்படும் பிராட்டியுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கும் பெருமான், குடமூக்கு என்று அழைக்கப்படும் கும்பகோணம் தலத்தில் நடமாடிய வண்ணம் உறைகின்றார். சுடுகாட்டினில் நடனம் ஆடும் தன்மையாக இருப்பினும், பெருமான் அனைவரிலும் மிகப் பெரிய செல்வந்தர் ஆவார். இத்தகைய பண்புகளை உடைய பெருமான், குடந்தைக் காரோணம் தலத்தினில் உறைகின்றார். என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

ஊனார் தலை கையேந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை

மானார் தோலார் புலியின் உடையர் கரியின் உரி போர்வை

தேனார் மொழியார் திளைத்தங்கு ஆடித் திகழும் குடமூக்கில்

கானார் நட்டம் உடையார் செல்வக் காரோணத்தாரே

புறவம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.74.2) திருஞானசம்பந்தர், பெருமானது உடை, புலியின் உரிதோலாடை என்று கூறுகின்றார். உரவன்=வலிமை உடையவன்; விகிர்தன் என்பதற்கு எவராலும் தோற்றுவிக்கப் படாமல் தானே தோன்றியவன் என்றும் ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன் என்றும் இரண்டு பொருள்கள் கூறப்படுகின்றன. இரண்டுமே இறைவனுக்கு பொருந்தி இருப்பதை நாம் உணரலாம்.

உரவன் புலியின் உரி தோலாடை உடை மேல் பட நாகம்

விரவி விரி பூங் கச்சா அசைத்த விகிர்தன் உகிர் தன்னால்

பொரு வெங் களிறு பிளிற உரித்துப் புறவம் பதியாக

இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

எருக்கத்தம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.89.6) பெருமானை, புலித்தோல் பியற்கிட்டுத் தகைவான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அயம்=ஐயம், பிச்சை; அயம் பெய்ய=பெண்கள் பிச்சை இடும் பொருட்டு; ஐயம் என்ற சொல் திரிந்து அயம் என வந்தது; தகைந்து=பொருந்தி; தொகுவன்=கூர்ந்து வெளிப்பட நிற்பவர்; வாய் பிளந்த நிலையில் இருக்கும் பிரமகபாலத்தை, நகு வெண்தலை என்று நகைச்சுவை தோன்ற திருஞான சம்பந்தர் கூறுகின்றார். வாய் பிளந்த நிலையில் சிரிப்பது போல் தோன்றும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம், பல விதமான பாடல்களை பாடியவாறு, மகளிர் இடும் பிச்சையை ஏற்பதற்காக செல்லும் இறைவன், புலித்தோலை தனது தோள்கள் மீது அணிந்துள்ளான். அவன் தகுதி வாய்ந்த எருக்கத்தம்புலியூர் தலத்தில் பொருத்தி உறைகின்றான். இவ்வாறு இந்த தலத்தில் நிலையாக அனைவரும் காணும் வண்ணம் உறையும் பெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருப்பாதங்களைப் புகழ்ந்து பாடும் அடியார்களை வினைகள் பின்பற்றி செல்லாது விலகி நிற்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடிப்

புகுவான் அயம் பெய்யப் புலித்தோல் பியற்கு இட்டுத்

தகுவான் எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே

தொகுவான் கழல் ஏத்த தொடரா வினை தானே

இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.110.2) திருஞானசம்பந்தர், பெருமானை. கொல் புலித்தோல் அசைத்தவன் என்று குறிப்பிடுகின்றார். தோற்றவன்= தோற்றுவிப்பவன்; கேடவன்=அழியும் வண்ணம் கெடுப்பவன்; உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக இருப்பவன் பெருமான் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், உலகில் உள்ள பொருட்கள் தோன்றுவதற்கும் ஒடுங்கி அழிவதற்கும் காரணமாக உள்ளவன் பெருமான் என்று இங்கே குறிப்பிடுகின்றார். தோற்றவன் கேடவன் என்ற தொடருக்கு உயிர்களின் தோற்றத்திற்கும் அழிவிற்கும் காரணமானவன் இறைவன் என்று பொருள்

தோற்றவன் கேடவன் துணை முலையாள்

கூற்றவன் கொல்புலித் தோல் அசைத்த

நீற்றவன் நிறை புனல் நீள் சடை மேல்

ஏற்றவன் வளநகர் இடைமருதே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.118.2) திருஞானசம்பந்தர், பெருமானை, பாய்புலித் தோலுடையான் என்று அழைக்கின்றார். புல்கு=தழுவிய; திரைய= சுருங்க; மூப்பு மற்றும் நோய்கள் காரணமாக தோல் சுருங்குதலும் முடி நரைத்தலும் உடலில் இயற்கையாக ஏற்படும் மாறுதல்கள்; மூப்பின் காரணமாக உயிர் விரும்பும் செயல்களை உடல் செய்ய முடியாத நிலை தோன்றும் முன்னமே, உடல் உயிரின் விருப்பத்தினை முழுவதுமாக நிறைவேற்றும் ஆற்றல் கொண்டிருக்கும் நாட்களிலே, பெருமானை நினைத்து வழிபட்டு வணங்க வேண்டும் என்று அறியாமையில் ஆழ்ந்திருக்கும் மனதினுக்கு திருஞானசம்பந்தர் அறிவுரை கூறும் பாடல். நுகருடம்பு என்று குறிப்பிட்டு, உடல் இன்ப துன்பங்களை நுகரும் தருணத்திலும், இளமை நிலையானதன்று என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கூறுகின்றார். இளமைக் காலத்தில், உடல் பலவிதமான, சிற்றின்பங்களை அனுபவிக்கும் நேரத்தில், இளமை நிலையானது என்றும், இந்த இன்பங்களை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்றும் நினைப்பதால், இறை வழிபாட்டினில் நாட்டம் செலுத்தத் தவறுகின்றோம். அந்த தவறு இங்கே சுட்டிக் காட்டப் படுகின்றது.

நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகருடம்பில்

நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை உள்கு மட நெஞ்சே

வாய் புல்கு தோத்திரத்தால் வலம் செய்து தலை வணங்கிப்

பாய் புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.120.2) திருஞானசம்பந்தர், பெருமானை, புலித்தோலுடன் பாம்பினையும் இடுப்பினில் இறுகக் கட்டியவன் என்று குறிப்பிடுகின்றார். அடுதல்=சுட்டெரித்தல்; இந்த பாடலில், பெருமான் தனது நெற்றிக் கண்ணால் விழித்துப் பார்த்து திரிபுரங்களை எரித்தார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த கருத்து நமக்கு, திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தின் இரண்டாவது பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில், ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில் ஒரம்பே முப்புரம் உந்தீப் பற ஒன்றும் பெருமிகை என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். அந்தண்=அழகும் குளிர்ச்சியும் இணைந்த நகரம்; ஆர்த்தவன்=கட்டியவன்;

கீர்த்தி மிக்கவன் நகர் கிளரொளி உடன் அடப்

பார்த்தவன் பனி மதி படர் சடை வைத்துப்

போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை

ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.122.1) திருஞானசம்பந்தர் பெருமானை, புலித்தோல் அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் பெருமான் புலித்தோல் அணிந்தவராக காட்சி தரும் நிலை உணர்த்தப் படுகின்றது. புலித்தோல் என்பது பல பாடல்களில் புலியதள் என்று குறிப்பிடப் படுகின்றது. அரை=இடுப்பு: திரிதரும் எயில்=வானில் எப்போதும் திரிந்து கொண்டிருந்த பறக்கும் கோட்டைகள்; புனை= பொருத்தப்பட்ட; கணை=அம்பு; புரிதரும்=எண்ணம் கொள்ளும்; அடைவு=சென்றடைய; அடைவுனல்=அடையவேண்டும் என்று நினைத்தல்; நினைக்க முக்தி என்று அண்ணாமலை தலத்தினை பெரியோர்கள் குறிப்பிடுவார்கள்; அத்தகைய பெருமையை உடையது இடைமருது தலம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் இடைமருது ஈசனைத் தொழும் அடியார்களின் தன்மையை, இறைவனின் அருளால் அடியார்கள் பெறுகின்ற நன்மைகளை குறிப்பிட்டு, நாமும் இடைமருது ஈசனைத் தொழுது அத்தகைய நன்மைகளை அடையுமாறு திருஞானசம்பந்தர் நம்மை வழிநடத்துகின்றார். விரிந்த புலித்தோலை தனது இடுப்பினில் ஆடையாக உடுத்தியவரும், எப்போதும் வானில் திரிந்து கொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், மேரு மலையினை வில்லாக வளைத்து அதனில் பொருத்தப்பட்ட அம்பினால் எரித்து அழித்தவரும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நிறத்தினில் சிவந்த சடையினை உடையவரும் ஆகிய பெருமான் உறைகின்ற இடைமருது தலத்தினைச் சென்றடைந்து பெருமானைத் தொழுது வணங்க வேண்டும் என்று எண்ணுகின்ற நல்ல மனம் உடைய அடியார்கள், நாளும் பெருகும் புகழ் உடையவர்களாக திகழ்வார்கள்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விரிதரு புலியுரி விரவிய வரையினர்

திரிதரும் எயிலவை புனை கணையினில் எய்த

எரிதரு சடையினர் இடைமருது அடைவு நல்

புரிதரு மனனவர் புகழ் மிக உளதே

திருப்பறியலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.134.10) பெருமானை, புலியின் உரிதோல் உடையன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமைக்கு உரிய மகன் என்ற பொருளை உணர்த்தும் பெருமகன் என்ற சொல்லின் திரிபு தான் பெருமான், பெம்மான் என்ற சொற்கள்; சமணர் மற்றும் புத்தர் ஆகியோருக்கு அருள் புரிவதற்கு மனமற்றவன் என்பதால் அவர்கள் பால் அன்பு இலாதவன் சிவபெருமான் என்று கூறுகின்றார்.

சடையன் பிறையன் சமண் சாக்கியரோடு

அடை அன்பிலாதான் அடியார் பெருமான்

உடையன் புலியின் உரி தோலரை மேல்

விடையன் திருப்பறியல் வீரட்டத்தானே

திருமங்கலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.10.8) திருஞான சம்பந்தர் பெருமானை, புலியின் ஆடையினான் என்று அழைக்கின்றார். பொலியும்=அழகுடன் விளங்கும்; மால்=பெரிய; வரை=மலை; புக்கு=சென்றடைந்து; வலி=வலிமை; பெருமானின் திருவடியை வணங்கும் புண்ணியர்கள் வானுலகம் செல்வது திண்ணம் என்று உணர்த்தும் பொருட்டு காண்மினே என்று கூறுகின்றார். தனது தேர் செல்லும் வழியில் இருந்து தனது பயணத்தை கயிலை மலை தடுத்தது என்று தவறாக நினைத்து, தேரிலிருந்து இறங்கி கயிலை மலை இருக்குமிடம் நோக்கிச் சென்று மலையினைப் பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது அந்த முயற்சி, தடைப்பட்ட பின்னர் தனது தவறினை உணர்ந்த அரக்கன் இராவணன், பெருமானைப் புகழ்ந்து போற்றி வணங்க, அவன் பால் இரக்கம் கொண்ட பெருமான், அவனுக்கு வாட்படையும் நீண்ட ஆயுளையும் அளித்தான். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமானை, திருமங்கலக்குடி தலத்தில் உறையும், புலித் தோலினை ஆடையாக உடுத்தியவனை, பணிந்து வணங்கி அவனது திருவடிகளை போற்றும் அடியார்கள், நல்ல செயல்களைப் புரியும் உயிர்கள் பொருந்தி விளங்கும் வானுலகம் சென்றடையும் தகுதி படைத்தவர்களாக விளங்குவதை, உலகத்தவரே நீங்கள் காண்பீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட

வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி

புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர்

மலியும் வானுலகம் புகவல்லவர் காண்மினே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.23.6) திருஞான சம்பந்தர், பெருமானை, புலியின் தன் தோலுடையாய் என்று அழைக்கின்றார். குன்று=கயிலாய மலை; கொலையார்=கொலைக் குணம் கொண்ட; கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவனே என்றும்,தன் மீது தாருகவனத்து முனிவர்களால் ஏவிவிடப் பட்டதும் எதிர்ப்பட்டவரை கொல்லும் குணம் கொண்டதும் ஆகிய புலியினை வென்று அதன் தோலினைத் தனது உடையாக அணிந்தவனே என்றும், நீண்ட சடையை உடையவனே என்றும், ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனே என்றும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் அழித்து அவர்களை வெற்றி கொண்டவனே என்றும், திருவானைக்கா தலத்தினில் உள்ள வெண்ணாவல் மரத்தின் நிழலை தனது இருக்கையாக ஏற்றுள்ள பெருமானே என்றும் உன்னை அழைத்து அருள் புரிவாயாக என்று நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த நகைகளை அணிந்த எனது மகள் வேண்டுகின்றாள். அவளது ஏக்கத்தினை தீர்க்கும் வண்ணம், எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு, உன்னுடன் அவளை சேர்த்துக் கொண்டு நீ, அருள் புரிய வேண்டும் என்று சம்பந்த நாயகியின் தாயார் வேண்டுவதாக அமைந்த பாடல்.

குன்றே அமர்வாய் கொலையார் புலியின்

தன் தோலுடையாய் சடையாய் பிறையாய்

வென்றாய் புரம் மூன்றை வெண் நாவலுளே

நின்றாய் அருளாய் எனும் நேரிழையே

பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.40.8) திருஞானசம்பந்தர், உரித்த வரித் தோலுடையான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். தக்கார்=உயர்ந்த பண்புகளை உடையவர்; பெருமானின் திருவடிகளைச் சென்று சேர்தல் தக்காரின் இலக்கணம் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. எரித்த மயிர்=எரித்தது போன்று கருமையான முடி; தனது உடலில் வரிகள் (கோடுகள்) கொண்ட விலங்கு புலி.

எரித்த மயிர் வாளரக்கன் வெற்பு எடுக்கத் தோளோடு தாள்

நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான்

உரித்த வரித் தோலுடையான் உறை பிரமபுரம் தன்னைத்

தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே

நெருப்பினில் எரிந்தது போன்று கருமையான முடியினை உடையவனும், வாள் ஏந்திய அரக்கனாகிய இராவணன், தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்று கருதி கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, அவனது தோள்களையும் கால்களையும் தனது கால் விரலை கயிலை மலை மீது அழுத்தி, நெரித்தவர் சிவபெருமான்; பின்னர் தனது தவறினை உணர்ந்த அரக்கன் சாமகானம் இசைத்து இறைஞ்ச, அவனுக்கு பல வகையிலும் அருள் புரிந்தவரும் பெருமான் தான். திருநீறு அணிந்த மேனியராய் காணப்படும் சிவமூர்த்தி, தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலினை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவர் ஆவார். அத்தகைய பெருமான் உறைகின்ற பிரமபுரம் தலத்தினை தங்களது மனதினில் எப்போதும் நிலை நிறுத்தும் அடியார்கள், சிறந்த பண்புகளை உடைய தக்காராக விளங்குவார்கள் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

நாலூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.46.4) திருஞானசம்பந்தர் கொல்புலித் தோலாடையான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். கோலம்=அழகு; நீலத்தார்=நீல நிறம் பொருந்திய; தொல்வினை=எண்ணற்ற பழைய பிறவிகளாக தொன்று தொட்டு தொடர்ந்து வரும் சஞ்சித வினைகள்; இந்த பாடலில் மிகவும் பொருத்தமாக, சூலத்தான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பெருமான் மூவிலைச் சூலம் வைத்திருப்பதே, தனது அடியார்களின் தொல்வினைகளை முற்றிலும் அறுத்து எரிப்பதற்காக என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அழகுடன் விளங்கும் கொன்றை மாலை அணிந்தவனும், எதிர்பட்ட விலங்குகளை கொல்லும் தன்மை உடைய புலியினை அடக்கி, அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்தவனும், ஆலகால விடத்தை தேக்கியதால் நீல நிறம் பொருந்திய கழுத்தினை உடையவனும், நெற்றியில் கண் உடையவனும், உலகத்தவர் பலரும் சென்று புகழ்ந்து தொழும் தன்மை உடையவனாக நாலூர் மயானம் தலத்தினில் உறைபவனும் ஆகிய பெருமானின் திருநாமத்தை, சூலத்தான் என்று அழைக்கும் அடியார்களின் தொல்வினைகள் முற்றிலும் அறுக்கப்பட்டு, அத்தகைய வினைகள் அந்த உயிர்களை சூழாத வண்ணம் பெருமான் அருள் புரிவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கோலத்தார் கொன்றையான் கொல்புலித் தோலாடையான்

நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்

ஞாலத்தார் சென்றேத்தும் நாலூர் மயானத்தில்

சூலத்தான் என்பார் பால் சூழாவாம் தொல்வினையே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.56.7) திருஞான சம்பந்தர் பெருமானை புலியின் அதளீர் என்று குறிப்பிடுகின்றார். புனம்=காடு, கொல்லை; செய்யீர்= சிவந்த திருமேனி உடையவர்; இனம்=கூட்டம்; கனம்=மேகம்; மேகங்கள் தவழும் வண்ணம் உயர்ந்த கோபுரத்தை உடைய திருக்கோயில் என்று திருஞான சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். சீர்=சிறப்பு; அதள்=தோல்; மல்கு=மல்கிய, நிறைந்த; காடுகளில் மிகுதியாக வளரும் கொன்றை மலர்களைச் சூட்டிக் கொள்பவரும், புலித்தோலை ஆடையாக உடுத்துபவரும், அழகியதும் பெருமை வாய்ந்ததும் சினம் மிகுந்ததும் ஆகிய எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவரும், சிவந்த திருமேனி உடையவரும், ஆலகால விடத்தைத் தேக்கியதால் கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவரும் ஆகிய பெருமானே, நீர், நான்மறைகள் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள் கூட்டமாக ஒன்று கூடி உமது சிறப்பினைப் பாடும் வண்ணம், சிறப்பு வாய்ந்த இடைமருது தலத்தினில், மேகம் தவழும் வண்ணம் உயர்ந்த கோபுரம் உடைய திருக்கோயிலை, தலைவனாகிய நீர் உறைகின்ற இருப்பிடமாகக் கொண்டு, அதனுடன் கலந்து வாழ்கின்றீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புனமல்கு கொன்றையீர் புலியின் அதளீர் பொலிவார்ந்த

சினமல்கு மால் விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர்

இனமல்கு நான்மறையோர் ஏத்தும் சீர்கொள் இடைமருதில்

கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே

மீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.8), திருஞானசம்பந்தர், பெருமானின் ஆடை புலியின் உரிதோல் என்று கூறுகின்றார். உமையன்னைக்கு அச்சம் விளைவித்த, திரண்ட தோள்களையும் வலிமையையும் உடைய அரக்கனின் வலிமை நலியுமாறு, மலையின் கீழே, சிவபெருமான் அடக்கினார் என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஒலி கொள் புனல் என்று மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி என்று கூறுகின்றார்.

புலியின் உரிதோல் ஆடை பூசும் பொடி நீற்றர்

ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச

வலிய திரள் தோள் வன்கண் அரக்கர் கோன் தன்னை

மெலிய வரைக் கீழ் அடர்த்தார் மீயச்சூராரே

பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.65.8), திருஞானசம்பந்தர், பெருமானை படுதலை பூண்டவர் என்றும் புலியின் அதளர் என்றும் கூறுகின்றார். இந்த பாடலில் இலர் என்று எதிர்மறைச் சொல்லினை பயன்படுத்தி இருந்தாலும், நாம் எதிர்மறையாக பொருள் கொள்ளாமல், உடன்பாட்டு முறையில் பொருள் கொள்ளவேண்டும். புரை=பரண்; புனம்=வயல்கள்; வயற்புரங்களில் பரண் அமைத்து, பரணின் மீது அமர்ந்த வண்ணம், காட்டு மிருகங்கள் வருவதைக் கண்காணித்து வேட்டையாடுவது பண்டைய நாளில் பழக்கமாக இருந்தது.

பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும்

அரசன் இலங்கையர் கோனை அன்று அடர்த்திலர் போலும்

புரை செய் புனத்து இளமானும் புலியின் அதள் இலர் போலும்

பிரசமலர்ப் பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே

கடம்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.68.2) பாம்பு மற்றும் ஆமையோட்டினை அணிகலனாகப் பூண்டுகொண்டுள்ள பெருமான் அழகிய புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானின் திருப்பாதங்களைத் தொழுவது மறுமையில் நிரந்தரமாகிய இன்பம் அளிக்கும் வீடுபெற்றினை மிகவும் எளிதாக பெற்றுத் தரும் என்று இந்த பதிகத்தின் முந்தைய பாடலில் கூறிய திருஞானசம்பந்தர் இந்த பாடலில், பெருமானைத் தொழுதால் இம்மையிலும் இன்பம் பயக்கும் என்று கூறுகின்றார். அம் துகில்=அழகிய துகில்; துகில்=புடவை; வேங்கை=புலி; விரவும்=கலந்து; பெருமானின் சடையுடன் கலந்து நிற்பவை எவையெவை என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறவில்லை எனினும், பல பாடல்களில் குறிப்பிடப்படும் கங்கை கொன்றை மலர்கள் தலைமாலை பாம்பு என்பதையும் பிறைச் சந்திரனுடன் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறே பரவும் என்ற சொல்லுக்கு முன்னர் அடியார்கள் என்று இணைத்துப் பொருள் கொள்ளவேண்டும். புடவையும் புலித்தோலும் பூண்டவன் என்று குறிப்பிட்டு, மாதோர் பாகனாக இறைவன் விளங்கும் தன்மையை திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அந்துகில் வேங்கை அதள் என்ற தொடருக்கு அழகிய புலித்தோலாடை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஆண்கள் அணிந்து கொள்ளும் வேட்டி என்ற ஆடையும் பண்டைய நாளில் புடவை என்றே அழைக்கப்பட்டது என்பதை நாம் சேக்கிழார் வாயிலாக அறிந்து கொள்கின்றோம். பாடலிபுத்திரம் சமணப் பள்ளியிலிருந்து இரவோடு இரவாக எவரும் அறியாத வண்ணம் வெளியேறிய அப்பர் பிரான், வெண்புடைவை மெய் சூழ அணிந்து சென்றார் என்று பெரிய புராணப் பாடலில் கூறுகின்றார். புடை என்றால் முற்றிலும் சூழ்ந்து என்று பொருள். உடல் முழுவதும் மறைக்கப்படும் வண்ணம் அணியப்படும் ஆடை என்பதால் ஆண்கள் அணியும் ஆடையும் புடைவை என்று அழைக்கப்பட்டது போலும். அண்மைக் காலத்தில் வாழ்ந்த இராமலிங்க அடிகளார், தனது உடல் முழுவதையும் வெண்ணிற ஆடை கொண்டு மறைத்து அணிந்ததை நாம் அறிகின்றோம். இதே பதிகத்தின் மூன்றாவது பாடல் மற்றும் ஏழாவது பாடல்களில் திருஞானசம்பந்தர், புலியதள் ஆடையினான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும்

விரவும் திருமுடி தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பிப்

பரவும் தனிக் கடம்பூரில் பைங்கண் வெள்ளேற்று அண்ணல் பாதம்

இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அதுவாமே

குற்றாலம் தலத்தில் உள்ள குறும்பலா மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2,71.3) திருஞான சம்பந்தர் பெருமானை, புலித்தோல் வலித்து வீக்கியவர் என்று குறிப்பிடுகின்றார். வாடல் தலை=உடலிலிருந்து உயிர் பிரிந்ததால் வாடிய தலைகள்; பிரளய காலத்தில் அழிந்து பட்ட திருமால் பிரமன் இந்திரன் ஆகியோரின் உடல்களின் தலைகள் என்று பொருள் கொள்ள வேண்டும். வலித்து வீக்கி=இறுகக் கட்டி; இடுப்பினில் கட்டிய புலித்தோல் ஆடையின் மேலே பாம்பினை இறுகக் கட்டிய தன்மை உணர்த்தப் படுகின்றது. ஆடல் அரவு=படம் எடுத்து ஆடும் இயல்பினைக் கொண்ட பாம்பு; கோடல்=காந்தள் மலர்கள்;ரீங்காரம் இட்டுக் கொண்டு தேனினை சேகரிப்பதற்காக செல்லும் வண்டுகள் அமர்வதால் விரிந்த அரும்புகளிலிருந்து விழுகின்ற மகரந்தப் பொடிகள் படியும் காந்தள் மலர்கள் நிறைந்த சோலைகள் உள்ள இடம் குற்றாலம் என்று கூறுகின்றார்.

வாடல் தலை மாலை சூடிப் புலித்தோல் வலித்து வீக்கி

ஆடல் அரவசைத்த அம்மான் இடம் போலும் அந்தண் சாரல்

பாடல் பெடை வண்டு போதலர்த்தத் தாதவிழ்ந்து பசும் பொன் உந்திக்

கோடல் மணம் கமழும் குன்றிடம் சூழ் தண்சாரல் குறும்பலாவே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.75.03) தனது இடுப்பினைச் சுற்றி புலித்தோலை ஆடையாக இறுகக் கட்டிக் கொண்டவன் பெருமான் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மேலும் இந்த பாடலில் பிரமகபாலத்தில் உணவு உட்கொள்வதை தனது கொள்கையாகக் கொண்டவன் சிவபெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மற்றயங்கு=மல்+தயங்கு; மல்=வலிமை; வலிமை தாங்கும் தோள்கள், வலிமையான திரண்ட தோள்கள்; மைந்தன்=வல்லமை உடையவன்; துற்றல்=உணவு உட்கொள்ளுதல்;

சுற்றுலா நற்புலித் தோல் அசைத்து அயன் வெண் தலைத்

துற்றலாயதொரு கொள்கையான் சுடு நீற்றினான்

கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலிக் காழியுள்

மற்றயங்கு திரள் தோள் மைந்தன் அவன் நல்லனே

அகத்தியான்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.76.3) திருஞானசம்பந்தர், பெருமான் உடுத்தது புலித்தோல் என்று கூறுகின்றார். கடுத்த வந்த=மிகுந்த கோபத்துடன் வந்த இயமன்; அடுத்தல்=கொல்லுதல், இங்கே காலனை கீழே வீழ்த்தியது என்று பொருள். பெருமான் உடுப்பதோ புலித்தோல்;உண்பதோ உலகெங்கும் திரிந்து ஏற்கும் பலியினை, காலால் உதைத்து கொன்றதோ மிகுந்த சினத்துடன் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை, பெருமான் விடுத்த அம்போ மூன்று பறக்கும் கோட்டைகளும் தூள் தூளாக மாறுவதற்கு என்று பெருமானின் எளிமைத் தன்மையையும் வீரத்தையும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில், பெருமான் தனது உடல் மீது போர்த்துக் கொண்டது யானையின் தோல் மற்றும் புலித்தோல் என்றும் கூறுகின்றார்.

உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந்து உண்பதும்

கடுத்து வந்த கழற்காலன் தன்னையும் காலினால்

அடுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்

தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகளாகவே

கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.83.6), திருஞான சம்பந்தர், புலியதளும் கோவணமும் உடையாகக் கொண்டவன் பெருமான் என்று கூறுகின்றார். மேலும் நினைத்த மாத்திரத்தில் முப்புரங்களையும் எரி செய்த இறைவர் என்றும் குறிப்பிடுகின்றார். புலியதள்=புலித்தோல்; நலிதரு=வருத்தி வந்த; கலை=வேதம் முதலிய கலைகள்; கலி புருடனின் ஆதிக்கத்தால் ஏற்படும் கொடுமைகளின் தாக்கத்தை குறைக்கவும் முற்றிலும் அகற்றவும், வேத வேள்விகள் செய்யவேண்டும் என்றும் இறைவனின் திருநாமங்களை ஓதவேண்டும் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.

புலியதள் கோவணங்கள் உடை ஆடையாக உடையான் நினைக்கும் அளவில்

நலிதரு முப்புரங்கள் எரி செய்த நாதன் நலமாக இருந்த நகர் தான்

கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளரப்

பொலிதரு மண்டபங்கள் உயர் மாட நீடு வரை மேவு கொச்சைவயமே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.91.2) வரித்தோலுடை ஆடை என்று புலித்தோலாடையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கூன்=வளைந்த; இளம்பிறை=வளராத ஒற்றைப் பிறைச் சந்திரன்; பஞ்ச கவ்யத்தில் கலக்கப்பட்டு இறைவனுக்கு நீராட்ட பயன்படுத்தப் படுவதால், பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களும், பால் தயிர் நெய் கோமியம் கோசலம் ஆகிய ஐந்து பொருட்களூம் சிறந்தவையாக கருதப்படும் தன்மை, அம் கிளர் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. ஆடுதல்=நீராடுதல்; கொடுவரி=வளைந்த கோடுகள்; புலியின் உடலிலுள்ள கோடுகள் குறிப்பிடப் படுகின்றன.

கூனிளம் பிறை சூடிக் கொடுவரித் தோலுடையாடை

ஆனில் ஐங்கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பது அரவம்

கானலங் கமழ் கழியோதம் கரையொடு கதிர்மணி ததும்பத்

தேனலங் கமழ் சோலைத் திருமறைக்காடு அமர்ந்தாரே

தெங்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.93.3) திருஞானசம்பந்தர் பெருமானை, பாய்புலித் தோலர் என்று குறிப்பிடுகின்றார். பக்குவப்பட்ட உயிர்களின் மூன்று மலங்களையும் அறுத்து ஒதுக்கும் படையாக மழுவாட்படை திகழ்கின்றது என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துவது நமது நினைவுக்கு வருகின்றது. அனலுடை மழுவாட் படையர் உயிர்களுடன் பிணைந்துள்ள மூன்று மலங்களும் அகலும் வண்ணம் அருள் புரிபவர் பெருமான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தார் மணி=மணி மாலை; விவசாயத்திற்கு பயன்படும் எருதுகளின் கழுத்தினில் மணிமாலை சூட்டி அழகு பார்ப்பதை நாம் இன்றும் கிராமப் புரங்களில் காணலாம். தறு கண்=வேகம் என்று பொருள் கொள்வது இங்கே பொருத்தம். வேகத்துடன் பாயும் இடபம்; இந்த பாடலில், அடியார்களுடன் பிணைந்துள்ள வலிமை வாய்ந்த வினைகளை அறுத்தெறியும் பொருட்டே பெருமான் அனல் வீசும் மழுவாட் படையை, பெருமான், வைத்துக் கொண்டுள்ளார் என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.

அடையும் வல்வினை அகல அருள்பவர் அனலுடை மழுவாள்

படையர் பால்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்

சடையில் வெண்பிறை சூடித் தார் மணி அணி தரு தறு கண்

விடையர் வீங்கெழில் தெங்கூர் வெள்ளியங் குன்று அமர்ந்தாரே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.103.2) திருஞானசம்பந்தர், பாம்பினைத் தனது விருப்பம் போல் பிடித்தாட்டும் பெருமான், தனது அழகிய ஆடையாக புலித்தோலினைக் கொண்டுள்ளார் என்று கூறுகின்றார். பூத கணங்கள் அவரது சரித்திரத்தின் பல நிகழ்ச்சிகளை இசைப் பாடல்களாக பாடுகின்றன என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். மரவம்=வெண்கடம்ப மரம்; பயன்றலை=தலையாய பலன்; சிறந்த பலன்;

அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள் அங்கையில் அனலேந்தி

இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைகள் இசைவன பலபூதம்

மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்

பரவியும் பணிந்து ஏத்த வல்லாரவர் பயன்றலைப் படுவாரே

கடிக்குளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.104.1) பெருமானின் ஆடை, புலியுரி அதளாடை என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கிணின்=ஒலிக் குறிப்பு; பெருமான் இடபத்தினைத் தனது கொடியில் சித்திரமாக வைத்துக் கொண்டுள்ள தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஆர்க்க=ஆரவாரத்துடன் ஒலி எழுப்ப; இந்த தலத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானின் திருநாமம் கற்பக நாதர். தமது தலைகளை தாழ்த்தி பெருமானை வணங்கும் அடியார்களை பழ வினைகள் தொடராது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அடி=பெருமானின் திருவடிகளில்; இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் பெருமான் உடுத்துவது, புலியதள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

பொடிகொள் மேனி வெண்ணூலினர் தோலினர் புலியுரி அதளாடை

கொடிகொள் ஏற்றினர் மணி கிணின் என வரு குரை கழல் சிலம்பு ஆர்க்கக்

கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தைத் தம்

முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன் வினை மூடாவே

கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.107.4) திருஞான சம்பந்தர், பெருமானை புலியதள் அரையினர் என்று குறிப்பிடுகின்றனர். அதள்=தோல்; அரை=இடுப்பு; வடிகொள்=கூர்மையான நுனியை உடைய மூவிலைச் சூலம்; நூலினர்=பூணூல் அணிந்தவர்; மறி கடல்=மடித்து வரும் அலைகள் நிறைந்த கடல்; கேதீச்சரம் பண்டைய நாளில் மாதோட்டம் என்று அழைக்கப் பட்டது. பரிந்த=அன்பு கொண்ட: மொய்த்தல்=கூட்டமாக திரண்டு வந்து பிணைந்து இருத்தல்;

பொடிகொள் மேனியர் புலியதள் அரையினர் விரிதரு கரத்து ஏந்தும்

வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் மறிகடல் மாதோட்டத்து

அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சரம் பரிந்த சிந்தையராகி

முடிகள் சாய்த்து அடி பேண வல்லார் தம் மேல் மொய்த்தெழும் வினை போமே

விற்குடி வீரட்டம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.108.1) திருஞானசம்பந்தர், பெருமானின் உடை புலியதள் என்று குறிப்பிடுகின்றார். கொடியினர்= அழகிய பூங்கொடி போன்ற உமையன்னையை உடையவர்; மது=தேன்; அருவினை=விலக்கிக் கொள்வதற்கு அரிய வினைகள்; பொதுவாக நமது உயிருடன் பிணைந்துள்ள வினைகளை, நாம் நுகர்ந்து தான், அத்தகைய வினைகளால் விளையும் இன்ப துன்பங்களை அனுபவித்துத் தான் கழிக்க முடியும். ஆனால் இறைவனின் அருளினை உதவியாக கொண்டு, நாம் மலபரிபாக நிலையினை அடைந்தால், இறைவன் நமது உயிருடன் பிணைந்துள்ள அரிய வினைகளையும் நீக்கி விடுவார் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த

கடிகொள் கொன்றையம் சடையினர் கொடியினர் உடைபுலி அதள் ஆர்ப்பர்

விடையதேறும் எம்மான் அமர்ந்து இனிதுறை விற்குடி வீரட்டம்

அடியாராகி நின்று ஏத்த வல்லார் தமை அருவினை அடையாவே

கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.109.6) திருஞானசம்பந்தர் பெருமானை, புலியுரியை ஆடையாக அணிபவர் என்று கூறுகின்றார். இந்த பாடலில் திருஞான சம்பந்தர், பெருமானின் சடையினில் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வைக்கப் பட்டுள்ள மலர்களுடன் வன்னி இலைகளும் கலந்து இருப்பதாக கூறுகின்றார். இந்த பாடலில் பெருமானை வழிபடும் அடியார்களை வழிபடுவோர், தங்களது வாழ்வினில் இடர்களும் கேடும் இன்றி நலமாக வாழ்வார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பொன்றினார்=ஊழிக் காலத்தில் இறந்து பட்ட திருமால் பிரமன் இந்திரன் முதலான தேவர்கள்; மிகவும் அடர்ந்தும் நீண்டும் வளர்ந்துள்ள சடைமுடியில், ஒற்றைப் பிறைச் சந்திரன், ஊமத்தை, வெள்ளெருக்கு மலர்கள், வன்னி இலைகள் ஆகியவற்றை சூட்டிக் கொண்டும், தனது திருமேனியில் தலைமாலைகள் அணிந்தும், தனது கையில் பிரமகபாலத்தை ஏந்தியும், புலித்தோலைத் தனது இடையினில் ஆடையாக உடுத்தியும் காட்சி தரும் பெருமானே என்று பெருமானின் தன்மைகளை சொல்லி, தினமும் உறக்கத்திலிருந்து விழித்தெழும் அடியார்கள் கொண்ட தலம் கோட்டூர் என்று கூறுகின்றார். ஏதம்=துன்பம்;

துன்று வார்சடை தூமதி மத்தமும் துன்னெருக்கார் வன்னி

பொன்றினார் தலைக் கலனொடு பரிகலம் புலியுரி உடை ஆடை

கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை

என்றும் ஏத்துவார்க்கு இடரிலை கேடிலை ஏதம் வந்து அடையாவே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.113.1) திருஞானசம்பந்தர், பெருமானை, புலியதளினர் என்று அழைக்கின்றார். இலங்கும்=விளங்கும்; ஓதம்=அலைகள்; மல்க=நிறைந்த; வெறிவார் திரை=உப்பின் மணம் கமழும் நீரலைகள்; திரை=அலைகள்;

பொடி இலங்கும் திருமேனியாளர் புலியதளினர்

அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள் இடம்

இடி இலங்கும் குரல் ஓதம் மல்கவ் வெறியார் திரைக்

கடி இலங்கும் புனல் முத்தலைக்கும் கடற் காழியே

நாகைக்காரோணம் தலத்து பதிகத்தின் பாடலில் (2.116.6) திருஞானசம்பந்தர், பெருமானை வேங்கை விரிதோல் உடையார் என்று குறிப்பிடுகின்றார். பாம்பினைத் தனது உடலின் பல இடங்களிலும் அணிந்துள்ள பெருமான், ஏனைய தெய்வங்களினின்றும் வித்தியாசமானவர் என்பதை உணர்த்த, பெருமானை விகிர்தர் என்று திருஞானசம்பந்தர் இங்கே அழைக்கின்றார்.

விடையதேறிவ் விடவர வசைத்த விகிர்தரவர்

படைகொள் பூதம் பல பாட ஆடும் பரமரவர்

உடைகொள் வேங்கை உரிதோல் உடையார்க்கு இடமாவது

கடைகொள் செல்வம் கழிசூழ் கடல் நாகைக் காரோணமே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.3.6), வேங்கையின் தோலினை ஆடையாக அணிந்தவர் பெருமான் என்று, திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அரிமா=சிங்கம்; தகுவாய்=தகுந்த பயன்களைத் தருவாய்; அடை அரிமா= குகையிலே சென்று அடையும் சிங்கம்; சிங்கத்தின் பொதுத் தன்மையாக குகையில் சென்று அடைவது குறிப்பிடப் பட்டாலும், சிங்கம் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நரசிங்கத்தை என்று உரை ஆசிரியர்கள் கருதுகின்றனர். இரணியனது இரத்தம் குடித்த நரசிம்மர், அதனால் வெறி அதிகமாகி திரிந்த போது, நரசிம்மரது ஆவேசத்தை அடக்கி அவரது தோலை சட்டையாக தரித்து அவரின் எலும்பை கதையாக மாற்றிகொண்ட வடுகநாதரின் உருவம் தான் சீர்காழி திருக்கோயிலில் உள்ள சட்டநாதர் உருவம். புடைபட=பொருந்தும் வண்ணம்; படையுடை நெடு மதில்=படையாக திகழ்ந்த மதில்கள், மூன்று கோட்டைகள். வேறு எந்த படையும் தேவைப்படாத வண்ணம் மூன்று பறக்கும் கோட்டைகளே படையாகவும் அரணாகவும் திரிபுரத்தவர்களுக்கு அமைந்திருந்த நிலை படையுடை என்ற சொல் மூலம் குறிப்பிடப் படுகின்றது. விகிர்தன்=ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவன்; பரமன்=அனைவர்க்கும் மேலானவன்; பரிசு=தன்மை;

அடை அரிமாவொடு வேங்கையின் தோல்

புடைபட அரை மிசைப் புனைந்தவனே

படை உடை நெடு மதில் பரிசு அழித்த

விடை உடைக் கொடி மல்கு வேதியனே

விகிர்தா பரமா நினை விண்ணவர் தொழப் புகலித்

தகுவாய் மடமாதொடும் தாள் பணிந்தவர் தமக்கே

திருக்கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.8.3) திருஞான சம்பந்தர் பெருமானை, பாய்புலித் தோலினான் என்று கூறுகின்றார். நள்ளிருள்=உலகெங்கும் இருள் சூழ்ந்து காணப்படும் ஊழிக் காலம்; நளிர் போது=குளிர்ந்த அடியார்களின் இதயக் கமலம், மலர் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. அடியார்களின் இதயக் கமலத்தில் இறைவன் நிற்பான் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். காதலர்=அன்பர்கள், பெருமான் பால் அன்பு வைத்து வழிபடும் அடியார்கள்;

நாதனும் நள்ளிருள் ஆடினானும் நளிர் போதின் கண்

பாதனும் பாய்புலித் தோலினானும் பசு ஏறியும்

காதலர் தண் கடவூரினானும் கலந்து ஏத்தவே

வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே

புனவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.11.4) திருஞானசம்பந்தர், பெருமானை, புலியதள் மற்றும் பாம்பினைத் தனது இடுப்பினில் சுற்றியவன் பெருமான் என்று கூறுகின்றார். விடையூர்தி=இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டு ஊர்பவன், பெருமான்; மெலி தரு=நாளும் ஒவ்வொரு கலையாக இழந்து அழியும் நிலையில் பெருமானிடம் சரண் அடைந்த ஒற்றைப் பிறைச் சந்திரன்; அரை=இடுப்பு; கலி=ஆரவாரம்; கலி படு=இரைச்சலுடன் வரும் கடலலைகள்;

கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறைக் கண்டனும்

புலியதள் பாம்பரைச் சுற்றினானும் புனவாயிலில்

ஒலி தரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும்

மெலி தரு வெண்பிறை சூடி நின்ற விடையூர்தியே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.15.2) திருஞானசம்பந்தர், பெருமானை பாய்புலித் தோலினை உடையாக அணிந்தவர் என்று குறிப்பிடுகின்றார். விரி கோவணம்=நான்கு வேதங்களாக விரிந்த கோவணம். படையுடை மழு=மழு ஆயுதத்தை படையாக உடைய பெருமானார்; இந்த பாடலில் விரி கோவணம் என்று பெருமான் அணிந்துள்ள கோவண ஆடையினை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமான் மழுவினை தனது படையாக உடையவர்; பாயும் குணத்தினை உடைய புலியினைக் கொன்று அதன் தோலினைத் தனது ஆடையாக அணிந்தவர்; விரிந்த பொருளினை உடைய வேதங்களை கோவண ஆடையாக மகிழ்ந்து ஏற்றுக் கொண்டுள்ளார்; இடப வடிவம் பொறிக்கப்பட்ட கொடியினை உடைய அவர் வெண்காடு தலத்தில் உறைகின்றார். தனது விரிந்த சடையின் இடையே கங்கை நதியை தேக்கி வைத்துள்ள அவர் மிகுந்த திறமையாளர் அல்லவா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்

உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்

விடை உடை கொடியர் வெண்காடு மேவிய

சடையிடைப் புனல் வைத்த சதுரர் அல்லரே

சக்கரப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.27.1) திருஞான சம்பந்தர், பெருமானை, பாய்புலித் தோலரை உடையினர் என்று அழைக்கின்றார். அரை=இடுப்பு; இந்த பாடலில் கூறியுள்ளதைப் போன்று பல பாடல்களில் பெருமானை, வெண்மழு ஏந்தியவன் என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெருமானின் கையில் இருந்த வெண்மழு ஆயுதத்தைக் கண்டு பகைவர்கள் அஞ்சி ஓடியதால், மழு ஆயுதத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் என்றும் பரமனுக்கு ஏற்படவில்லை என்பதால், அவன் ஏந்தியிருக்கும் மழு வெண்மை நிறத்தில் இருக்கின்றது என்று சுவையான விளக்கமும் அளிக்கப் படுகின்றது. சிவபெருமானின் பல வீரச் செயல்களை நாம் ஆராய்ந்தால், மழு ஆயுதம் எவரையும் அழிக்கவோ கொல்லவோ பயன்படுத்தப் படவில்லை என்பதை நாம் உணரலாம். எனவே தான் இரத்தக்கறை ஏதும் படியாத, பெருமானின் மழுப்படை வெண்மழு என்று பல பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. வெண்ணிற மழுவைத் தனது படையாகக் கொண்டவனும்; மற்ற உயிர்களை பாய்ந்து கொல்லும் தன்மை உடைய புலியின் தோலை உரித்துத் தனது இடுப்பினில் உடையாக அணிந்து கொண்டவனும், உமையன்னையைத் தனது உடலின் ஒரு கூறாக ஏற்றுக் கொண்டவனும், பல இடங்களுக்கும் செல்லக்கூடிய எருதினைத் தனது ஊர்தியாக ஏற்றுக் கொண்டவனும், உடல் முழுவதும் திருநீற்றைப் பூசிக் கொண்டவனும், விரிந்து மிகவும் அதிகமான நீரினைக் கொண்டு வானிலிருந்து கீழே பாய்ந்த கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்றுக்கொண்டு அடக்கியவனும் ஆகிய பெருமான் வீற்றிருக்கும் இடம் சக்கரப்பள்ளி தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை

உடையினார் உமை ஒரு கூறனார் ஊர்வதோர்

விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்

சடையினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே

அரதைப் பெரும்பாழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.30.1) திருஞானசம்பந்தர், புலித்தோலும் கோவணமும் ஆடையாக அணிந்தவர் பெருமான் என்று கூறுகின்றார். பைத்த= நச்சுப் பையினை உடைய; பைத்த என்ற சொல்லுக்கு படமெடுத்து ஆடும் தன்மை கொண்ட பாம்பு என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது புலி=புலித்தோல்; நித்தமாக=இடையூறு ஏதுமின்றி, இடைவிடாது என்றும் தொடர்ந்து புரியும் நடனம்; இறைவனது ஐந்தொழில் நடனம் இடைவிடாமல் நடைபெறுகின்ற தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் பெருமானை பித்தர் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். பல திருமுறைப் பாடல்களில் பெருமானைப் பித்தர் என்று குறிப்பிடும் அருளாளர்கள், பித்தர் என்று தாங்கள் பெருமானை கருதுவதன் காரணத்தையும் கூறுகின்றனர். பொதுவாக நடனக் கலைஞர்கள், நகரத்தின் மையத்தில் இருக்கும் அரங்கத்தில், பலரும் காணும் வண்ணம் நடனமாடுவதையே விரும்புவார்கள்; மேலும் பலவிதமான நகைகளை அணிந்து கொண்டு, பகட்டான ஆடைகளை அணிந்து கொண்டு நடனம் ஆடுவார்கள்; ஆனால் பெருமானோ, பாம்பினை ஆபரணமாகக் கொண்டு கோவணமும் புலித்தோலும் அணிந்தவராக பேய்கள் சூழ்ந்து நிற்க, பேய்களின் முழக்கமே பின்னணியாக இருக்க, சுடுகாட்டுச் சாம்பலைத் தனது திருமேனியில் பூசியவராக நடனம் ஆடுகின்றார். ஒரு நாளல்ல, பல நாட்கள் தொடர்ந்து இவ்வாறு நடனம் ஆடுபவரை பித்தர் என்று தானே சொல்ல வேண்டும். இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும், தனது இடுப்பினில் புலித்தோலை ஆடையாக சுற்றிக் கொண்டவர் பெருமான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பைத்த பாம்போடு அரைக் கோவணம் பாய்புலி

மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டிடை

நித்தமாகந் நடமாடி வெண்ணீறு அணி

பித்தர் கோயில் அரதைப் பெரும்பாழியே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.34.3) திருஞானசம்பந்தர் பெருமானை, கொல்புலித் தோலினார் என்று குறிப்பிடுகின்றார். தேறல்=தேன்; மிசை=மேல்; இடப வாகனத்தில் ஏறும் பெருமானார், தேவர்கள் தொழுது போற்றும் வண்ணம் உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ளார். அவர், கொல்லும் தன்மை உடைய புலியின் தோலினைத் தனது ஆடையாக அணிந்துள்ளார். தனது உடல் முழுவதும் திருநீற்றினை அணிந்துள்ள பெருமான், நிறைந்த நீரினை உடைய கங்கை நதியைத் தனது சடையினில் மறைத்து வைத்துள்ளார். இத்தகைய தன்மையை உடைய பெருமான் உறையும் இடம் தேன் நிறைந்த மலர்கள் கொண்ட சோலைகள் சூழ்ந்து அழகு செய்யும் திருமுதுகுன்றம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஏறினார் விடை மிசை இமையவர் தொழ உமை

கூறனார் கொல் புலித்தோலினார் மேனி மேல்

நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம்

தேறலார் பொழில் அணி திருமுதுகுன்றமே

பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.56.2) திருஞானசம்பந்தர், பெருமானை, பாய் புலித்தோல் உடையான் என்று கூறுகின்றார். சரி= தொங்கும்; வேதங்களும் பல கலை நூல்களும் பெருமானை தலைவன் என்று கொண்டாடும் தன்மையை மறை பல்கலை நூல் உடையவன் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். எந்த வகையான குற்றமும் இல்லாதவன் என்று பெருமானை, இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

சடையினன் சாம வேதன் சரி கோவணவன் மழுவாட்

படையினன் பாய்புலித் தோல் உடையான் மறை பல்கலை நூல்

உடையவன் ஊனமில்லி உடனாய் உமை நங்கை என்னும்

பெடையொடும் பேணுமிடம் பிரமாபுரம் பேணுமினே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.1) திருஞான சம்பந்தர், பெருமானை, பாய் புலித்தோல் உடையவன் என்று குறிப்பிடுகின்றார். மேலும் இந்த பாடலில்

சசி தங்கிய சங்க வெண் தோடு உடையவன் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிட்டு மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் தன்மையை உணர்த்துகின்றார். சசி=சந்திரன்; சந்திரன் போன்று வெண்மை நிறத்தினில் உடைய தோடு என்று கூறுகின்றார். வெண்மழு என்று பெருமானின் கையில் இருக்கும் மழு ஆயுதத்தை குறிப்பிடுகின்றார். பெருமானுக்கு பகைவர்கள் எவரும் இல்லாததால், பெருமான் தனது கையில் இருக்கும் மழு ஆயுதத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. எனவே அவரது மழு ஆயுதம், இரத்தக்கறை படியாமல் வெண்மை நிறத்துடன் காணப்படுகின்றது என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். கரந்தை என்றால் விபூதிப் பச்சிலை என்று பொருள். எந்த விதமான குற்றமும் இல்லாமல் நிறைவாக இறைவன் இருக்கும் நிலை ஊனமில்லி என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண்மழுவாள்

படையவன் பாய்புலித் தோல் உடை கோவணம் பல்கரந்தை

சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்க வெண்தோடு

உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே

வெண்டுறை தலத்து பதிகத்தின் பாடலில் (3.61.3) திருஞானசம்பந்தர், பெருமானை உடை நவிலும் புலித்தோல் உடை ஆடையினான் என்று அழைக்கின்றார். நவிலும்=கொண்டுள்ள; கடிய=விரைந்து செல்லும்; கடை=பாவம்; தகுந்த காரணமேதும் இன்றி, பல உயிர்களையும் தங்களது பறக்கும் கோட்டைகளின் கீழ் சிக்க வைத்து கொன்ற திரிபுரத்து அரக்கர்களின் செயல் பெரிய பாவமாக கருதப்படுகின்றது.

படைநவில் வெண்மழுவான் பல பூதப் படையுடையான்

கடைநவில் மும்மதிலும் எரி ஊட்டிய கண்ணுதலான்

உடை நவிலும் புலித்தோல் உடையாடையினான் கடிய

விடை நவிலும் கொடியான் விரும்பும் இடம் வெண்டுறையே

திருப்பனந்தாள் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.62.8), திருஞானசம்பந்தர், பெருமானை, புலியின் உரி தோலோடு கோவணம் அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். மும்மையினான்=இம்மை, அம்மை வீடுபேறு ஆகிய மூன்று நிலைகளுக்கும் காரணமாக இருக்கும் இறைவன்; மும்மையினான் என்ற சொல்லுக்கு, அருவம், உருவம் அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் உள்ளவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தற்றவன்=தரித்தவன்; செற்று=அழித்து; அருவன் என்றால் உருவம் ஏதும் இல்லாதவன் என்று பொருள். தனது மெல்லிய கால் விரலை கயிலை மலையின் மீது ஊன்றுவதன் மூலம், அரக்கன் இராவணனை கயிலை மலையின் கீழே அடர்த்து அவனது வலிமையை அடக்கி வெற்றி கொண்டவன் பெருமான்; அவன் முற்றிலும் திருநீறு அணிந்த மேனியனாக காணப்படுகின்றான். அவன் அருவமாகவும் உருவமாகவும் அருவுருவமாகவும் மூன்று நிலைகளில் காட்சி அளிக்கின்றான். புற்றில் வாழ்கின்ற பாம்பினையும், புலியின் தோலினையும், கோவணத்தையும் உடுத்துள்ள பெருமான் உறையும் இடம் பனந்தாள் தலத்தில் உள்ள தாடகை ஈச்சரம் என்ற திருக்கோயிலாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செற்றரக்கன் வலியைத் திரு மெல்விரலால் அடர்த்து

முற்றும் வெண்ணீறு அணிந்த திருமேனியன் மும்மையினான்

புற்றரவம் புலியின் உரி தோலொடு கோவணமும்

தற்றவன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே

திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.68.1) திருஞானசம்பந்தர், புலியின் உடலிலிருந்து கிழிக்கப்பட்ட தோலினை ஆடையாக உடுத்திய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கீளது=கிழிக்கப்பட்ட; கீளதுரி=கிழிக்கப்பட்ட தோல்; வாளவரி=ஒளி பொருந்திய கோடுகள் உடைய உடல்: கோள=கொலைத் தொழில் புரியும்; தாள்=திருப்பாதம்; பாதம் வரை தொங்கும் வண்ணம் புலித்தோலாடையை பெருமான் அணிந்திருப்பதாக சொல்லப்படுகின்றது. வேளநகர்=வேள்+அநகர்; வேள்=காண்போர் வியக்கும் வண்ணம் அழகு உடையவர்; தன்னைக் காண்போர் மயங்கும் வண்ணம் அழகு உடையதால் தான் மன்மதனுக்கு வேள் என்ற பெயர் வந்தது. அழகே வடிவமாக உள்ள முருகப் பெருமானையும் முருகவேள் என்று அழைப்பார்கள். முருகு என்றால் அழகு என்று பொருள். அநகர்=தூயவன்; போள=கிழிக்கும் வண்ணம்; அயில=கூர்மையான; எதிர்ப்படும் விலங்குகளை கிழிக்கும் கூர்மையான பற்கள்; கரும்பு போன்ற கடினமான பொருட்களையும் கடித்து பொடியாக மாற்றும் வல்லமை கொண்ட பற்கள்; களிறாளி=களிற்றினை, மதம் கொண்ட ஆண் யானையை அடக்கி ஆண்டவர்; வில் தோள்=மேரு மலையினை வில்லாக வளைத்து ஏந்திய தோள்; அமரர் என்ற சொல்லுக்கு அமரர் தலைவர் என்று பொருள் கொள்ளவேண்டும். கூளி-பூத கணங்கள்; மதர்=செருக்கு; தாளமதர்=சிவபெருமான் நடனமாட அந்த நடனத்திற்கு ஏற்ப தாளமிடும் வாய்ப்பு கிடைத்தமையால், பெருமிதம் கலந்த செருக்கு உடையதாக விளங்கிய பூதகணங்கள்; மீளி=நடனமாடும் வல்லமை படைத்தவர்; மிளிர்=பிரகாசிக்கும்; தூளி=திருநீறு; கீள=துரத்தும், ஓட்டும்; கயிலாய மலையின் பொன்னொளி கருத்த மேகங்கள் சூழ்ந்து ஏற்படுத்திய இருளினை துரத்துகின்றது என்று இந்த பாடலில் கூறுகின்றார். இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் புலித் தோலை உடையாக அணிந்தவன் பெருமான் என்று சொல்கின்றார்.

வாளவரி கோள புலி கீளதுரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்

ஆளுமவர் வேளநகர் போளயில கோள களிறாளி வரவில்

தோளமரர் தாளமதர் கூளியெழ மீளிமிளிர் தூளிவளர் பொன்

காளமுகில் மூளுமிருள் கீளவரி தாள கயிலாய மலையே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.70.1) திருஞானசம்பந்தர், உழுவை அதள் ஆடையான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஏன எயிறு=பன்றிக் கொம்பு; என்பு=எலும்பு; வரி ஆமை=வரிகள் உடைய ஆமை; கான வரி நீடு உழுவை=காட்டில் வாழ்வதும் நீண்ட கோடுகளை உடையதும் ஆகிய புலி; காணி=உரிமையான இடம்; இந்த தலத்து அந்தணர்கள் செய்கின்ற வேள்வியிலிருந்து எழுகின்ற ஆகுதிப் புகைகள் மேலே எழுந்து சென்று தேவ லோகத்தில் உள்ள கற்பகச் சோலைகளில் படர்ந்து மாசு விளைவிக்கின்றன என்றும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

ஏனவெயிறு ஆடரவோடு என்புவரி ஆமை இவை பூண்டு இளைஞராய்

கானவரி நீடுழுவை அதளுடைய படர்சடையர் காணியெனலாம்

ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகியழகார்

வானமுறு சோலை மிசை மாசுபட மூசு மயிலாடுதுறையே

தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.74.1) திருஞானசம்பந்தர், பெருமானின் ஆடை புலித்தோல் என்று கூறுகின்றார். மூடை ஓடு=முடை நாற்றம் வீசும் மண்டையோடு; ஊண்=உணவு; வேதியர்=வேதங்களை இசைத்தவாறு பலிக்கு செல்லும் இயல்பினர்; பலி ஏற்கச் செல்லும் பெருமானின் கோலம் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. புலித்தோலை அணிந்தவராக, பிரம கபாலத்தைத் தனத கையினில் ஏந்திக்கொண்டு வேதங்களை இசைத்தவாறு செல்லும் கோலம் சொல்லப் படுகின்றது. திருந்து பதி=திருத்தமான தலம்; அரி=வண்டு; அரி குலம் என்று வண்டுகளை பொதுவாக சொல்லுதல் இலக்கிய வழக்கு; வண்டு பாட மயில் ஆட, தங்களது காந்தள் போன்ற மெல்லிய விரல்களால் தாளமிட்டு, அன்னம் போன்ற இள மங்கையர்கள் மயில்களின் ஆடலையும் வண்டுகளின் பாடலையும் ரசிக்கும் தலம் என்று கூறுகின்ரார். இந்த பாடலின் கடை அடியில் ஊடி மகிழ் மங்கையர் என்று குறிப்பிடுகின்றார். ஊடல் காமத்திற்கு அழகு என்று வள்ளுவர் சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது. முன்னர் ஊடி, அந்த ஊடல் நீங்கிய பின்னர் மகிழ்ச்சியில் ஆழ்ந்து, நமது காதலருடன் மாடங்களில் மகிழ்கின்ற பெண்களின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

காடு பயில் வீடுமுடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலித்தோல்

தேடு பலி ஊணதுடை வேடமிகு வேதியர் திருந்து பதி தான்

நாடகமதாட மஞ்ஞை பாட அரி கோடல் கைம்மறிப்ப நலமார்

சேடுமிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே

புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.84.7) திருஞானசம்பந்தர், பெருமானை புலியதள் உடையினர் என்று குறிப்பிடுகின்றார். வரி தரு=வரிசை வரிசையாக கோடுகள் உடைய; அதள்=தோல்; பிரிதரு=பிரிந்து வந்த, வடம்=மாலை; மிசை=மேலே; பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் தத்தமது உடலிலிருந்து பிரிந்த பின்னர், உயிரற்ற உடல்களிலிருந்த பிரிந்த தலைகளை மாலையாக அணிந்து கொள்ளும் பெருமை சிவபெருமான் ஒருவருக்கு மட்டும் தானே கிடைக்கும். பிரளயத்திற்கு பின்னர், திருமால் பிரமன் வேறு எவரும் உயிருடன் இருப்பதில்லை அல்லவா. எனவே தான் பிளந்த வாயுடன் சிரிப்பது போன்று காணப்படும் தலைகளை மாலையாக அணிந்த பெருமையை உடையவர் என்று சிவபெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பிரிதரு குழல்=பின்னப்பட்ட கூந்தல்; பிறவிப் பிணியினை நீக்கும் வல்லமை வாய்ந்தவர் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் சுட்டிக் காட்டி, இரண்டாவது மற்றும் மூன்றாவது பாடல்களில் அவரது அடையாளங்களை நமக்கு உணர்த்தி, நான்காவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் அவரது ஆற்றலையும் குறிப்பிட்டு, நாம் நமது வினைகளை மேன்மேலும் பெருக்கிக் கொள்வதற்கு காரணமாக விளங்கும் ஆணவ மலத்தினை அடக்கும் ஆற்றல் வாய்ந்தவர் சிவபெருமான் ஒருவர் தான் என்று பதிகத்தின் ஆறாவது பாடலில் குறிப்பிடும் திருஞானசம்பந்தர், பிறப்பிறப்பினைக் கடந்த நிலையில் சிவபெருமான் இருக்கும் தன்மையை இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். வரிசை வரிசையாக கோடுகள் உடைய புலித்தோலினை ஆடையாக அணிந்தவரும், பகைவர் மேல் வீசப்படும் மழு ஆயுதத்தை உடையவரும், பிரளய காலத்தில் இறந்த உடல்களிலிருந்து பிரிக்கப் பட்டதும் வாய் பிளந்து சிரிப்பது போன்று தோற்றம் உடைய தலைகளை மாலையாக தனது கழுத்தினில் மேல் அணிந்த பெருமையை உடையவரும், கொழுந்து விட்டெரியும் நெருப்பினைப் போன்ற நிறத்தில் திருமேனி உடையவரும், தேவர்களால் தொழப்படும் இயல்பினை உடையவரும் ஆகிய சிவபெருமான் அழகாக பின்னப்பட்ட கூந்தலை உடைய உமை அன்னையுடன் இனிதாக உறையும் தலம் புறவம் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

வரி தரு புலியதள் உடையினர் மழு எறி படையினர்

பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர்

எரிதரும் உருவினர் இமையவர் தொழுவதொர் இயல்பினர்

புரிதரு குழல் உமையொடும் இனிதுறை பதி புறவமே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.86.3) திருஞானசம்பந்தர், புலியதள் அரையினர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். வளையினர் மனை தோறும் திருதரு என்று சொற்களை வரிசைப் படுத்தி பொருள் காணவேண்டும். புரிசடை=முருக்குண்ட சடை; அரை=இடுப்பு; பொடி=நீறு, சாம்பல்; பொடி புல்கும் எரி=நீறு பூத்த நெருப்பு; ஈடுலா= முன்கையில் சரிந்து விழும் வளையல்கள்; இந்த பாடலில் தாருகவனத்து மகளிரின் நிலை குறிப்பிடப் படுகின்றது. வரிதரு=கோடுகள் உடைய; பெருமான் தாருகவனம் சென்றபோது, ஆங்கிருந்த முனிவர்கள் முதலில், பெருமானின் வரவினை விரும்பவில்லை; தாங்கள் செய்து கொண்டிருந்த கடமைகளுக்கு இடையூறாக பெருமான் வந்ததாக அவர்கள் கருதியதே இதற்கு காரணம். ஆனால் பெருமான் தாருக வனத்து இல்லங்களுக்கு பிச்சை ஏற்கச் சென்ற போது, தாருகவனத்து முனிவர்களின் மனைவியர், அழகிய தோற்றத்துடன் தங்களது இல்லங்கள் தேடி வந்த பிச்சைப் பெருமானுக்கு பிச்சையிடுவது தங்களது பாக்கியம் என்று கருதி மகிழ்ந்தனர் என்று, முனிவர்களுக்கும் அவர்களது மனைவியருக்கும் இடையே இருந்த வேறுபாட்டினை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார் போலும். சரிதை=இயல்பு; நெருப்பு போன்று பவளம் போன்று சிவந்த திருமேனியின் மீது திருநீற்றினை பூசிய கோலத்துடன் பெருமான் காணப்படுகின்றார். நீறு பூத்த நெருப்பினை, நாம் ஊதினால் அல்லது விசிறி கொண்டு வீசினால், சாம்பலின் அடியே மறைந்திருந்த நெருப்பு சிகப்பு நிறத்தில் ஒளிவிட்டு சுடர்வதை நாம் காணலாம். அது போன்று பெருமான் தனது திருமேனியின் மீது பூசிக் கொண்டுள்ள திருநீறு, அவரது திருமேனியின் நிறமாகிய சிவப்பு நிறத்தினை மறைத்துள்ளது.

புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடி புல்கும்

எரிதரும் உருவினர் இடபமது ஏறுவர் ஈடுலா

வரிதரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை தொறும்

திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே

முறுக்குண்ட சடைமுடியை உடைய பெருமான், தனது இடுப்பினில் புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளார். செம்பவளத்தின் நிறத்தில் அமைந்துள்ள அவரது திருமேனி மீது திருநீறு பூசப்பட்டுள்ள தன்மை நீறு பூத்த நெருப்பு போன்று உள்ளது. அவர் இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவர்; தங்களது முன்கைகளில் சரிந்த, கோடுகள் கொண்டுள்ள வளையல்களை அணிந்த தாருகவனத்து இல்லத்தரசிகள் மனம் மகிழும் வண்ணம், அவர்களின் இல்லங்கள் தோறும் சென்று பிச்சையேற்று திரியும் இயல்பினை உடையவராக திகழ்ந்தவர் சிவபெருமான். அத்தகைய பெருமான் உறைகின்ற இடம், வளம் மிகுந்த திருச்சேறை தலமாகும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை ஆகும். இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும் பெருமானை, புலியுரி பொலிதரும் அரையினர் என்று கூறுகின்றார்.

திருத்துருத்தி மற்றும் வேள்விக்குடி தலங்களின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.90.6) திருஞானசம்பந்தர் பெருமானை, அடு புலி உரிவையர் என்று குறிப்பிடுகின்றார். அடு புலி= கொல்லும் குணம் கொண்ட புலி; பொறியுலாம்=உடலில் பொறிகள், கோடுகள் கொண்ட; வரியரா-வரிகளை உடைய பாம்பு;பூண்டு=அணிகலனாக பல இடங்களில் ஏற்றுக்கொண்டு; இலங்கும்=விளங்கும்; நெறி=கொள்கை; நெறியுலாம்=கொள்கையாக உடையவர்; பலி ஏற்பதைத் தனது கொள்கையாகக் கொண்டு தொடர்ந்து பலி ஏற்பவர்; நீர்மை=எளிமை; சீர்மை= சிறப்பு; மறி=மான் கன்று; வெறியுலாம்=நறுமணம் திகழும்; பகற் பொழுதினில் துருத்தி தலத்திலும் இரவுப் பொழுதினில் வேள்விக்குடி தலத்திலும் பெருமான் உறைவதாக ஐதீகம்.

பொறியுலாம் அடு புலி உரிவையர் வரையராப் பூண்டு இலங்கும்

நெறியுலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பரியார்

மறியுலாம் கையினர் மங்கையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்

வெறியுலாம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே

திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.92.5) திருஞானசம்பந்தர் பெருமானை, கொல்புலித் தோலுடையார் என்று குறிப்பிடுகின்றார். பெருமானை பஞ்சகவ்யம் கொண்டு நீராட்டப்படுவதற்கு பயன்படுவதால், பசு அளிக்கும் பால் தயிர் நெய் கோமியம் கோசலம் ஆகிய ஐந்தும் நன்மை பயக்கும் பொருட்களாக கருதப்பட்டு, ஆனின் நல் ஐந்து என்று சிறப்பிக்கப் படுகின்றன. இதே பதிகத்தின் ஆறாவது பாடலில், புலியதள் ஆடையர் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார்.

ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இளவரவும்

கூனல் வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோல் உடையார்

ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அருமறைகள்

தேனில் வண்டமர் பொழில் திருநெல்வேலி உறை செல்வர் தாமே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.01) திருஞானசம்பந்தர், பெருமானை பாய்புலித் தோலினர் என்று குறிப்பிடுகின்றார். பாய்புலி=பாயும் தன்மை கொண்ட புலி; படியுள்=பூமியில்; ஆர்=பொருந்திய; பூமியில் பொருந்திய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவர்; பூண நூலர்=முப்புரி நூலை அணிந்தவர்; கடி கொள்=நறுமணம் நிறைந்த; தனது திருப்பாதங்களில், அடியார்களால் நறுமணம் மிகுந்த மலர்கள் தூவப்பட்டு புகழ்ந்து போற்றப்படும் தன்மையர் பிடி=பெண் யானை;

படியுளார் விடையினர் பாய்புலித் தோலினர் பாவநாசர்

பொடிகொள் மாமேனியர் பூதமார் படையினர் பூணநூலர்

கடிகொள் மாமலரிடும் அடியினர் பிடிநடை மங்கையோடும்

அடிகளார் அருள் புரிந்து இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே

வெங்குரு (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.94.10) திருஞானசம்பந்தர் அரை மல்கு புலியதளீர் என்று பெருமானை அழைக்கின்றார். விரை=நறுமணம்; மல்கு=பொருந்திய; நறுமணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த வெங்குரு தலத்தில் நிலையாக பொருந்தி உறையும் பெருமானே, இடுப்பினில் புலித்தோலாடை பொருந்தும் வண்ணம் உடுத்தியவரே, இடுப்பினில் புலித்தோலாடையை உடுத்திய உமது இணையான திருவடிகளைப் புகழ்ந்து உரைக்கும் அடியார்கள் வாழ்வினில் உயர்வினை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய

அரை மல்கு புலி அதளீரே

அரை மல்கு புலி அதளீர் உமது அடியிணை

உரை மல்கு புகழவர் உயர்வே

இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3,101.8) திருஞானசம்பந்தர், பெருமானை, புலித்தோல் உடையாகத் திகழ்பவர் என்று கூறுகின்றார். பொன் போன்று வெள்ளியும் சிறப்பாக மதிக்கப் படுவதை நாம் காண்கின்றோம். இந்த தன்மையைத் தான் பொன் திகழ் சுண்ண வெண்ணீறு என்று குறிப்பிட்டு, வெள்ளி போன்று ஒளி வீசும் திருநீறு என்று கூறுகின்றார். மின் திகழ்=மின்னல் போன்று ஒளியுடன் திகழும் திருமேனி உடையவர்; மின்னல் போன்று திகழும் மேனி என்பதால், வெண்மை நிறத்து திருமேனி என்று தவறாக புரிந்து கொள்வதை தவிர்க்கும் வகையில், சோதியார் என்று குறிப்பிடுகின்றார். மாட்சி= பெருமை; ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் பெருமான் வருவதன் பெருமையை உணரும் அடியார்கள் சிவஞானிகள் என்று கூறுகின்றார்.

பொன் திகழ் சுண்ண வெண்ணீறு பூசிப் புலித்தோல் உடையாக

மின் திகழ் சோதியர் பாடலாடல் மிக்கார் வரு மாட்சி

என்று நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார்

குன்றினால் அரக்கன் தன் தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.102.1) புலியின் உரி தோல் மேல் பாம்பினை வீக்கிய பண்டரங்கன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நலந்தாங்கு என்ற சொல்லினை நாரையூர் என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்ள வேண்டும். பண்டரங்கன்=பெருமான் ஆடிய ஒருவகை கூத்து. காம்பு=மூங்கில்; அடுத்தடுத்து உள்ள இரண்டு கணுக்களுக்கு இடையே இருக்கும் மூங்கில் வழவழுப்பு, பளபளப்பு கொண்டு மிகவும் அழகாக இருக்கும். எனினும் பிராட்டியின் தோள்கள் அழகிலும் ஒளியிலும் மூங்கிலை விடவும் விஞ்சியதாக இருப்பதால்,மூங்கிலை வென்ற தோள் என்று பிராட்டியின் தோள்கள் சிறப்பித்து சொல்லப் படுகின்றது. மேலும் மூங்கிலில் காணப்படாத மென்மை உடையதாகவும் பிராட்டியின் தோள்கள் இருப்பதாக திருஞானசம்பந்தர் இங்கே மென்தோளி என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். தேம்=இனிய புனல்=நீர்; மடு=நீர்நிலைகள்; பூம்= அழகிய; வீக்கிய=கச்சினில் இறுகக் கட்டிய; மூங்கிலை விடவும் அழகாகவும் மென்மையாகவும் இருப்பதால், மூங்கிலை வென்றதாக கருதப்படும் தோள்களை உடைய பார்வதி தேவியினைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டு கலந்தவரும், நலம் தரும் இனிய நீரினை உடையதாக, ஆழமுடைய பெரிய நீர்நிலைகள் கொண்ட திருநாரையூர் தலத்தில் பொருந்தி உறைபவரும் ஆகிய இறைவன், அழகிய கங்கை நதி சேர்ந்துள்ள முறுக்குண்ட சிவந்த சடையை உடையவராக உள்ளார்; அவர் தான் அணிந்திருக்கும் புலித்தோலின் மேல் கச்சையாக பாம்பினை இறுகக் கட்டியவர் ஆவார். மேலே குறிப்பிட்ட தன்மைகள் உடையவரும், பண்டைய நாளில் பண்டரங்கம் என்று அழைக்கப்படும் கூத்தினை ஆடியவரும் ஆகிய இறைவனின் திருப்பாதங்களை பணிந்து வணங்குவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான் நலந்தாங்கு

தேம் புனல் சூழ் திகழ் மாமடுவில் திருநாரையூர் மேய

பூம்புனல் சேர் புரி புன்சடையான் புலியின் உரி தோல் மேல்

பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே

பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.122.8) திருஞானசம்பந்தர், பெருமானை, புலியின் உரி கொள்வர் என்று குறிப்பிடுகின்றார். பூதரம் என்ற சொல் பூதம் என்று மருவியதாக அறிஞர்கள் கூறுவர். பூதரம் என்ற சொல் பொன்மலையை குறிக்கும் என்று அபிதான சிந்தாமணி நிகண்டு கூறுகின்றது. இங்கே கயிலாய மலையினை குறிக்கும். கலி என்ற சொல்லை களி என்ற சொல்லின், எதுகை நோக்கிய திரிபாகக் கொண்டு குழலின் ஓசை மற்றும் முழவின் ஓசை பொருந்திய நடனம் நடைபெறுவதால் களிப்பு மிகுந்து காணப்பட்ட மலை என்று பொருள் கொள்வார் பலர். ஒரு சிலர் கலி என்பதற்கு வலிமை என்று பொருள் கொண்டு வலிமை மிகுந்த கயிலாய மலை என்றும் கூறுகின்றனர். முதலிலே கூறப்பட்ட பொருள் மிகவும் பொருத்தமாக தோன்றுகின்றது. குழலின் ஒலியும் முழவின் ஓசையும் கலந்து நின்ற பின்னணியில் இடைவிடாது பூதங்கள் நடனம் ஆட, களிப்பின் மிகுதியில் இருந்த கயிலாய மலையினை, தனது கைகளை அதன் கீழே செலுத்தி பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனை தனது கால் பெருவிரலினை மலையின் மீது அழுத்தி, அவனது வலிமையை அழித்தவர் சிவபெருமான். அவர் புலியின் தோலை ஆடையாக உடுத்தியுள்ளார். ஏதும் குறைவின்றி நல்ல வாழ்வு அமைந்து இருப்பினும் பெருமான், உலகத்தவர் தங்களது மும்மலங்களையும் தான் பிச்சைப் பாத்திரமாக வைத்துள்ள பிரம கபாலத்தில் இட்டு உய்யும் வண்ணம், பிச்சை ஏற்றுத் திரிகின்றார். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் பந்தணைநல்லூர் தலத்தில் பசுபதியாக உறைகின்றார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஒலி செய்த குழலின் முழவமது இயம்ப ஓசையால் ஆடல் அறாத

கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன்

வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில்

பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

நல்லூர்ப் பெருமணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.125.7) திருஞானசம்பந்தர், பெருமானை பாய்புலி தோல் உடுத்தவன் என்று குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரின் திருமணம் நடைபெற்ற தலம்; திருமணத்திற்கு வந்திருந்த அனைவர்க்கும், உமையன்னை வெண்ணீறு அளித்ததாக கூறுவார்கள். அதனால் தான் தலத்து அம்பிகை வெண்ணீற்றுமை நங்கை என்று அழைக்கப் படுகின்றாள் என்றும் கூறுவார்கள். இந்த பாடலில் இறைவன் போகத்தவனாகவும் அதே சமயத்தில் யோகத்தைப் புரிபவனாகவும் இருக்கும் நிலையும் உணர்த்தப் படுகின்றது. எப்போதும் உமை அன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்திருப்பதால் இறைவன் போகத்தனாக காட்சி தரும் நிலை இங்கே கூறப்பட்டுள்ளது. பந்தித்த=கச்சாக கட்டிய; நாகத்தன்=பாம்பினை உடையவன்.

மேகத்த கண்டன் எண்தோளன் வெண்ணீற்று உமை

பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த

நாகத்த நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல

போகத்தான் யோகத்தையே புரிந்தானே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.10.9) அப்பர் பிரான், பெருமானை, புலியுரி அரையதாக உடுத்தவர் என்று கூறுகின்றார். வெறியுறு=நறுமணம் வீசும்: பொறியுறு=புள்ளிகளை உடைய: நெறியுறு=சுருள்களை உடைய: கிறிபட=தந்திரமாக உழிதரல்=ஆடுதல்: தந்திரமாக நடனம் ஆடினார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதால், இந்த பாடல் தாருகவனத்து மகளிர் காண ஆடிய நடனக் காட்சியோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை அவிழ்ந்து தரையில் புரளுமாறும், இடுப்பினில் புள்ளிகள் உடைய புலித்தோல் ஆடையாகவும், சுருண்ட கூந்தலை உடைய உமையம்மை தனது உடலின் ஒரு பாகமாகவும் இருக்கும் கோலத்தில் கெடில வாணர் மாயக் கூத்து ஆடுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெறியுறு விரிசடை புரள வீசியோர்

பொறியுறு புலியுரி அரையது ஆகவும்

நெறியுறு குழல் உமை பாகமாகவும்

கிறிபட உழி தர்வர் கெடில வாணரே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.22.5) அப்பர் பிரான், புலியுரி அதளனார் என்று பெருமானை அழைக்கின்றார். பூதனார்=ஐந்து பூதங்களாய் இருப்பவர்; நவின்ற=பல காலம் பழகிய; அதள்=தோல்; ஐம்பூதங்களாகத் திகழும் சிவபெருமான், தமது வாயால் வேதம் ஓதியவராய், சந்திரனின் ஒளி படிந்த சென்னியராய், பூதகணங்கள் சூழ நின்று, புலித் தோலை ஆடையாக அணிந்தவராய், தான் பலகாலும் பழகிய தில்லைச் சிற்றம்பலத்துள் தீயின் இடையே நடம் ஆடுகின்றார். எல்லோர்க்கும் தலைவரான சிவபெருமான் அத்தகைய நடனம் ஆடும்போது அவர் காதில் அணிந்துள்ள வெண் குழைகள் தாழுமாறு நடனம் ஆடுகின்றார். நெல் விளையும் நன்செய் நிலங்களைக் கொண்ட தில்லை சிற்றம்பலத்தில், அனல் ஏந்திய தனது கையினை வீசி ஆடும் சிவபெருமான், ஊழித்தீயின் நடுவே நின்று நடனம் ஆடுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னிச்

பூதனார் பூதம் சூழப் புலியுரி அதளனார் தாம்

நாதனார் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே

காதில் வெண் குழைகள் தாழக் கனல் எரி ஆடுமாறே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.38.3) அப்பர் பிரான் பெருமானை, பாய்புலித் தோலும் வைத்தார் என்று குறிப்பிடுகின்றார். கீள் என்பது துணியைக் கிழித்து, கயிறு போல் சுருட்டி இடுப்பில், கோவணம் அணிந்து கொள்வதற்கு வசதியாக கட்டிக் கொள்வது. கீள் என்றால் கிழிக்கப்பட்டது என்று பொருள். கிழிக்கப்பட்ட துணியினை கீளாக இடுப்பினில் கட்டி, அதனில் கோவண ஆடையை பொருத்தி உடையாக அணிந்தவர் சிவபெருமான். ஊழிக்காலம் வரை, பல உலகங்கள் நிலையாக நிற்கும் வண்ணம் உலகங்களை படைத்து பாதுகாப்பவரும் அவரே. படையாக மழு ஆயுதத்தை தனது கையில் ஏந்தியுள்ள பெருமான், பாயும் குணமுடைய புலியின் தோலையும் ஆடையாக ஏற்றுள்ளார். தனது கொடியினில் இடபத்தின் உருவத்தினை ஏற்றுள்ள பெருமான், வெண்மையான முப்புரி நூலையும் அணிந்துள்ளார். அடியார்கள் தன்னுடன் வந்து இணைந்து முக்தி நிலை பெறுவதற்கு அருள் புரியும் பெருமான் நமது தலைவனாகிய ஐயாறனார் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும், கொல்புலித் தோலும் வைத்தார் என்று பெருமானை, அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

உடைதரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார்

படைதரு மழுவும் வைத்தார் பாய்புலித் தோலும் வைத்தார்

விடைதரு கொடியும் வைத்தார் வெண்புரி நூலும் வைத்தார்

அடை தர அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.51.5) அப்பர் பிரான் பெருமானை, புலியுரி அரையினான் என்று அழைக்கின்றார். பூணுதல்=அணிகலனாக அணிதல்; ஆரம்= மாலை; அரை=இடுப்பு; கோணல்=வளைந்த; வெண்மை என்பதற்கு தூய்மை என்று பொருள் கொண்டு, காணில் வெண் கோவணம் என்ற தொடருக்கு, உற்று நோக்கில் இறைவன் அணிந்திருப்பது நான்கு மறைகளைக் கொண்ட கோவணம் என்பது புலப்படும் என்பதாக விளக்கம் கூறுவார்கள். பாம்பினை அணிகலன் போன்று மாலையாகத் தனது கழுத்தில் அணிந்தவனே, புலியின் தோலை உரித்துத் தனது இடுப்பினில் ஆடையாக உடுத்தவனே, காண்பவர்க்கு வெண்மை நிறமுடைய கோவணம் அணிந்தும், கையினில் ஒரு கபாலம் ஏந்தி உணவு உண்பதற்காக பிச்சை எடுப்பவனாகவும் காட்சி தருபவனே, உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனே, தேய்ந்து வளைந்த பிறையாக அழியும் நிலையில் இருந்த பிறைச் சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்து, பிறைச் சந்திரனை தனது சடையில் அணிந்தவனே, நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய் என்று பெருமானை நோக்கி அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

பூண் அரவு ஆரத்தானே புலியுரி அரையினானே

காணில் வெண் கோவணமும் கையிலோர் கபாலம் ஏந்தி

ஊணும் ஓர் பிச்சையானே உமை ஒரு பாகத்தானே

கோணல் வெண் பிறையினானே கோடிகா உடைய கோவே

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.57.7) அப்பர் பிரான், பெருமானை, பாய்புலித் தோலர் என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் கொடியில் நந்தி உருவம் இருக்கும். இந்த செய்தியும் பல தேவாரப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. நந்தி வடிவம் எழுதப் பெற்ற கொடியை உடையவனாய், வெண்ணிற பூணூலை அணிந்தவனாய், மழுப்படையை கையில் ஏந்தியவனாய், பாயும் இயல்பினைக் கொண்ட புலியின் தோலை உடுத்தவனாய், கீளினையும் கோவணத்தையும் உடையாக அணிந்தவனாய், எல்லா உலகங்களாக இருப்பவனும் ஆகிய சிவபெருமான், தன்னைச் சரண் அடையும் அடியார்களின் இடர்களைத் தீர்க்கின்றான். அவர் தான் ஆவடுதுறை தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விடைதரு கொடியர் போலும் வெண்புரி நூலர் போலும்

படைதரு மழுவர் போலும் பாய்புலித் தோலர் போலும்

உடைதரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும்

அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.66.3) அப்பர் பிரான், புலியதள் உடையார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். துணை வில்=போருக்கு உதவி புரியும் வில்லாயுதமாக; கல்=மேரு மலை; கடி அரண்= பலத்த காவல் வாய்ந்த கோட்டைகள். எப்போதும் வானில் திரிந்து கொண்டிருக்கும் மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் சமயத்தில் ஒரே அம்பினால் மட்டுமே அழிக்கப் பட முடியும் என்ற வரத்தினைப் பெற்றவர்கள் திரிபுரத்து அரக்கர்கள். அத்தகைய நிலை நடைபெறுவதற்கு மிகவும் அரிதான நிகழ்ச்சி என்பதால், இந்த வரமே பெரிய அரணாக இருந்த நிலை, கடி அரண் என்ற தொடர் மூலம் அப்பர் பிரானால் இங்கே உணர்த்தப் படுகின்றது. சொல்=வேதங்களில் காணப்படும் சொற்கள்; சொற்றுணை; வேதத்தில் உள்ள சொற்களுக்கு இணையாக சொல்லப்படும் தமிழ் பாமாலைகள்; நற்றுணை=சிறப்பான துணை; பெரிய மலையாகிய மேருவினை வில்லாக வளைத்து, அந்த வில்லினில் பொருத்தப்பட்ட அம்பினை துணையாகக் கொண்டு, தாங்கள் பெற்றிருந்த வரங்கள் வலிமையான காவலாக இருந்ததால் எவராலும் அழிக்க முடியாததாக விளங்கிய, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், எரித்தவர் சிவபெருமான். பொன் போன்ற சிறப்பான திருப்பாதங்களை உடைய அவர், புலியின் தோலை ஆடையாக அணிந்துள்ளார். வேதங்களில் காணப்படும் சொற்களுக்கு இணையான சிறப்பு வாய்ந்த தேவாரப் பாடல்களை, பாமாலைகளை பாடி இறைவனைத் தொழுது எழுகின்ற அடியார்களுக்கு மிகவும் சிறந்த துணையாக விளங்குபவர், நாகேச்சரம் நகரினில் வீற்றிருக்கும் இறைவன் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

கற்றுணை வில்லதாக கடி அரண் செற்றார் போலும்

பொற்றுணைப் பாதர் போலும் புலியதள் உடையார் போலும்

சொற்றுணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம்

நற்றுணை ஆவர் போலும் நாக ஈச்சரவனாரே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.72.4) அப்பர் பிரான், பெருமானை, பாய்புலித் தோலர் என்று குறிப்பிடுகின்றார். கடவு=செலுத்தும்; இடர்=பந்த பாசங்கள்; விடம் தங்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவர் சிவபெருமான்; அவர் வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறைக்கு மாறாக தக்கன் செய்த வேள்வியினை அழித்தவர்; விரைந்து செல்லக்கூடிய அழகிய எருதினை வாகனமாக உடைய அவர், ஒரு சமயம் கூற்றுவனை கோபித்து உதைத்தவர் ஆவார்; படம் எடுத்தாடும் ஐந்தலை நாகத்தினை அணிகலனாக பூண்டுள்ள அவர், பாயும் இயல்பினை உடைய புலியைக் கொன்று அதன் தோலை உடையாக அணிந்துள்ளார்; அடியார்கள் கொண்டுள்ள பந்த பாசங்களை அறவே களைந்து, அவர்கள் முக்தி நிலையினை அடைவதற்கு வழி வகுக்கும் பெருமான் இன்னம்பர் தலத்தில் தலைவனாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விடமலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும்

கடவு நல் விடையர் போலும் காலனைக் காய்வர் போலும்

பட மலி அரவர் போலும் பாய்புலித் தோலர் போலும்

இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே

கடும்பகல் நட்டம் ஆடி என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.77.2) அப்பர் பிரான், பெருமானை புலியுரி அரையனார் என்று குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவுருவத்தைத் தங்கள் கண்ணால் கண்ட அருளாளர்கள் ஒரு சிலரே. அவர்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டு தான் நாம் இறைவன் இப்படியிருப்பான் என்று நமது நினைவில் நிறுத்தி வழிபடுகின்றோம். அவ்வாறு இறைவனைக் கண்ட அருளாளர்களும் தாங்கள் கண்ட தோற்றத்தை முழுவதும் வார்த்தைகளில் வடிக்கவோ அல்லது சிற்பமாக செதுக்கவோ அல்லது ஓவியமாக வரையவோ திறன் படைத்தவர்களா என்றால் அதுவும் இல்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். கோவணத்தை இடுப்பில் உடுத்து, கொடிய பாம்பினை இடுப்பினில் இறுகக் கட்டி அதனை ஆட்டுவித்து, தீயினைப் போன்று சிவந்த மேனியில் சாம்பலைப் பூசியும், செந்தாமரைக் காடு என்று தோன்றும் வண்ணம் செந்தாமரை நிறத்தில் மேனியை உடையவராகவும், புலியின் தோலினை ஆடையை உடுத்தவராகவும், மேரு மலையினை வளைத்து அழகாக செய்யப்பட்ட வில்லினை உடையவரும் ஆகிய சிவபெருமானின் உருவத்தை யாரால் முழுமையாக சித்திரத்தில் வரைய முடியும்? எவராலும் முடியாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும்

தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்

பூவணக் கிழவனாரை புலியுரி அரையனாரை

ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.80.2) அப்பர் பிரான், பெருமானை, புலி அதளன் என்று குறிப்பிடுகின்ரார். இந்த பதிகத்தின் பாடல்களில் பாதாதி கேசமாக பெருமானின் அங்கங்கள் குறிப்பிடப் பட்டு, அவற்றின் அழகைக் கண்ட கண்கள் அவற்றை விடவும் உயர்ந்த காட்சியை காண முடியாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பொருவிடை=போரிடும் காளை: அதள்=தோலாடை: காண முக்தி என்பது தில்லைத் தலத்துடன் இணைத்துச் சொல்லப்படும் முதுமொழி. பேரின்பம் அளிக்கும் முக்தி தானே அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த செல்வமாக கருதப்படுகின்றது. அதனால் தான் உலகுக்கெல்லாம் சிறந்த செல்வத்தை அளிக்கக்கூடிய தில்லை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சிவபெருமான் போர் விடையை வாகனமாக உடையவன்: புண்ணியமே வடிவானவன்: புலித்தோலை ஆடையாக உடுத்தவன், அழகான மலைமங்கையாகிய பார்வதி தேவியின் மணாளன். உலகத்தவர்க்கெல்லாம் சிறந்த செல்வமாகிய முக்திச் செல்வத்தை தர வல்லதும், அந்தணர்கள் வாழ்வதுமான தில்லைத் தலத்தில் உறையும் சிற்றம்பலவனின் திருவடியைக் கண்ட கண்களுக்கு, அந்த காட்சியினை விட உயர்ந்த காட்சியினை காணக்கூடிய வாய்ப்பு இல்லை: சிவபெருமானின் திருவடிக் காட்சி தான் மிகவும் உயர்ந்த காட்சி என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலி அதளன்

உருவுடை அம் மலை மங்கை மணாளன் உலகுக்கு எல்லாம்

திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்

திருவடியைக் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்பதென்னே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (4.81.5) அப்பர் பிரான், புலித்தோல் அணிந்த பெருமானின் திருவுருவம் தனது மனதினில் நிலையாகப் பதிந்துள்ளதாக கூறுகின்றார். இதே பதிகத்தின் நான்காவது பாடலில் நடராஜப் பெருமானின் திருவுருவத்தை, குனித்த புருவமும் என்று தொடங்கும் பாடல் மூலம், நமது கண் முன்பு நிறுத்துவது போல் விவரித்து மகிழ்ந்த அப்பர் பிரான் தனது மனதினில் இறைவனின் திருவுருவம் எவ்வாறு பதிந்துள்ளது என்பதை இங்கே கூறுகின்றார். இத்தகைய அழகுடைய சிவபெருமானை, கருணை கொண்டு தனது உள்ளத்தில் புகுந்துள்ள சிவபெருமானை நினையாமல் சமண சமயத்தில் பல வருடங்கள் கழித்ததற்கு வருந்தி, தன்னை பாவியேன் என்று அப்பர் பிரான் அழைப்பதையும் நாம் இங்கே உணரலாம். பாவியாகிய தனது நெஞ்சினில் இவ்வாறு சிவபெருமானது திருவுருவம் பதிந்தது ஒரு அதிசயமாக அப்பர் பிரானால் கருதப் படுகின்றது. பாவியாகிய எனது நெஞ்சினில், சிவபெருமானின் தலையில் அணிந்துள்ள ஊமத்தைப் பூவும், மூன்று கண்களின் பார்வையும், கண்களில் தென்படும் புன்சிரிப்பும், ஒலிக்கும் உடுக்கையை ஏந்திய திருக்கரமும், மேனியில் முழுதும் பூசிய வெண்ணீறும், சுருண்ட கூந்தலைக் கொண்ட பார்வதி தேவியை தனது உடலில் கொண்டுள்ள பாங்கும், இடையில் உடுத்திய புலித் தோலும், ஒலிக்கும் கழல்களை அணிந்த திருவடிகளும் நிலையாக இடம் பெற்றுள்ளன.

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்க முறுவலிப்பும்

துடி கொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள்

படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில்

குடி கொண்டவா தில்லை அம்பலக்கூத்தன் குரைகழலே

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.87.10) அப்பர் பிரான், பெருமானை, புலியின் உரிதோல் உடுத்து இருந்தாய் என்று கூறுகின்றார். அடுத்து=நெருங்கி: கிளை=குலம்; படுத்தல்=அழித்தல்; வலிமையான பல செயல்கள் புரிந்த இறைவன், தன்னையும் கருத்தில் கொண்டு அருள் புரிய வேண்டும் என்று விண்ணப்பம் இடும் பாடல். அடுத்து இருந்தாய் என்று கூறுவதன் மூலம், மிகுந்த ஆரவாரத்துடன் அரக்கன் இராவணன் கயிலை மலையினை அசைத்த போது, பெருமான் நடுக்கம் ஏதும் உறாது நிலையாக இருந்தான் என்பது அப்பர் பிரானால் இங்கே உணர்த்தப் படுகின்றது. இருந்தாய் என்ற சொல் மூன்று வீரச் செயல்களுடன் இணைக்கப் பட்டு, வீரச் செயல்கள் புரிந்த தருணங்களில் பெருமான் எந்தவிதமான மாற்றமும் அடையாமல் இருந்த நிலை உணர்த்தப் படுகின்றது என்று பொருள் கொள்வதும் சிறப்பே. உணர்ச்சிகளைக் கடந்தவன் பெருமான்; திசைகளும் நடுங்குமாறு கயிலாய மலையினை அரக்கன் இராவணன் அசைத்த போதும், அவனருகே மலையின் மீது நிலையாக அசையாமல் அமர்ந்திருந்து, அரக்கனின் தலைமுடிகள், வாய், தோள்கள் நெரியுமாறு கால் விரலை மலையின் மீது அழுத்தியவனே, தங்களது வலிமையின் மீது செருக்கு கொண்டு திரிந்த திரிபுரத்து அரக்கர்களை, அவர்களது குலம் முழுதும் அழியுமாறு வென்றவனே, எதிர்த்து வந்த புலியினைக் கொன்று அதன் தோலினை ஆடையாக உடுத்திய இறைவனே, பழனத்து அரசே, எனது வேண்டுகோளினை உனது கருத்தினில் கொண்டு என்னை நீ தான் ஆட்கொண்டு அருளவேண்டும் என அப்பர் பிரான் இறைவனை வேண்டும் பாடல்.

அடுத்து இருந்தாய் அரக்கன் முடி வாயொடு தோள் நெரியக்

கெடுத்து இருந்தாய் கிளந்தார் வலியைக் கிளையோடு உடனே

படுத்து இருந்தாய் பழனத்து அரசே புலியின் உரிதோல்

உடுத்து இருந்தாய் அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.89.7) அப்பர் பிரான், பெருமானை,

புலியுரித் தோலுடையான் என்று குறிப்பிடுகின்றார். படுத்த புலி=கொன்றதால் கீழே விழுந்து படுத்த புலி; முற்றிய=வாழ்நாள் முற்றியதால் அழியும் நிலையில் இருந்த திருபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகள்; சுற்றிய=தன்னைச் சூழ்ந்து இருந்த; செற்று= அழித்து, கொன்று; பாம்பினைத் தனது கையினால் பற்றியவனாய், தன்னால் கொல்லப்பட்டு கீழே விழுந்த புலியை உரித்து அதன் தோலினை ஆடையாக உடுத்தியவனாய் விளங்கும் சிவபெருமான், தாங்கள் செய்த அளவு கடந்த தீமைகளினால் வாழ்நாள் முடியும் நிலைக்கு தள்ளப்பட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் நெருப்பு மூட்டி எரித்து அறுத்து எறிந்தான்; தன்னைச் சுற்றி பூதப்படையினை உடைய பெருமான், சூலம் மான் கன்று மற்றும் மழு ஆயுதம் ஆகியவற்றைத் தனது கையில் ஏந்தியுள்ளான் அவன் நமது தீயவினைகளை அழித்து ஓழிப்பவனாக நெய்த்தானம் தலத்தில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன்

முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான்

சுற்றிய பூதப் படையினன் சூல மழு ஒரு மான்

செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே

சரக்கறை திருவிருத்தம் என்ற பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் தனது நெஞ்சம் தனி நெஞ்சமே என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தனி என்றால் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட, ஒப்பற்ற தன்மை உடைய என்று பொருள். தனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு சிவபெருமான் தன்னுடைய நெஞ்சினில் அமர்ந்திருந்தால், ஒப்பற்ற நெஞ்சமாக தனது நெஞ்சம் மாறிவிடும் என்ற எண்ணத்தில், தனி நெஞ்சம் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பரந்த உலகத்தினையும் பல்வேறு அண்டங்களையும் படைத்த சிவபெருமானுக்குத் தனது உடைமைகளை வைப்பதற்கு இடமா இல்லை. சிவபெருமான் பால் அப்பர் பிரான் கொண்ட அன்பு, தனது நெஞ்சத்தை சிவபெருமானும் சிவபெருமானைச் சார்ந்த பொருட்களையும் ஏற்றுக் கொள்ளும் சரக்கறையாக மாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியது போலும். இந்த பதிகத்தின் இரண்டாவது மற்றும் பத்தாவது பாடல்களில் பாய்புலித் தோல் என்றும்,மூன்றாவது பாடலில் உழை மான் அதள் புலித்தோல் என்றும், பதினோராவது பாடலில் தாழ் புலித்தோல் என்றும் குறிப்பிட்டு, சிவபெருமான் அணிகின்ற புலித்தோலாடை வைக்கப்படும் சரக்கறையாகத் தனது நெஞ்சம் மாற்றப்பட வேண்டும் என்று வேண்டுகின்றார். இந்த கடைப் பாடலை (4.111.11) நாம் இங்கே காண்போம்.

விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு

தவம் தான் எடுக்கத் தலை பத்து இறுத்தனை தாழ் புலித்தோல்

சிவந்து ஆடிய பொடி நீறும் சிரமாலை சூடி நின்று

தவம் தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

விவந்து=மாறுபாடு உற்று: காளிதேவியின் நடனத்தை விடவும் தனது நடனம் சிறந்து விளங்கும் என்று மாறுபாடு கொண்டு ஆடிய நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது தனது ஒரு காதினில் இருந்த குழை ஆபரணத்தை கீழே விழச் செய்து, பின்னர் அதனை கால் விரல்களால் பற்றி, காலைத் தூக்கிய நிலையில் வலது கைக்கு மாற்றி, பின்னர் குழையினை காதினில் பொருத்தி, இந்த மூன்று செயல்களும் நடனத்தின் ஒரு அம்சமாக பொருந்துமாறு ஆடிய கூத்து, வேறு எவரும் அதுவரை ஆடாத கூத்து அல்லவா. எனவே மாறுபட்டு ஆடிய கழல்கள் என்று கூறுவது பொருத்தமாக உள்ளது. விவந்து என்பதற்கு வெளிப்பட்டு என்று சிவக்கவிமணி பொருள் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில் சிவபெருமானது பல்வேறு அங்கங்களையும், சிவபெருமானைச் சார்ந்த பல்வேறு பொருட்களையும் குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில் சிவபெருமானின் கழல்களை குறிப்பிடுகின்றார். சிவபிரானின் கழல்களைத் தவிர நமக்கு வேறு ஒரு பற்றுக்கோடு இல்லை என்பதை சுட்டிக் காட்டும் வண்ணமாக இந்த குறிப்பு உள்ளது போன்று நமக்குத் தோன்றுகின்றது. தன்னை நடனத்தில் வெல்லுவார் எவரும் இல்லை என்று மிகுந்த கர்வத்துடன் இருந்த காளியை வெற்றி கொள்வதற்காக, மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான நடனம் ஆடிய திருப்பாதங்களை உடைய எமது தலைவனே, அடியேன் உன்னிடம் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கின்றேன். கடுமையான தவங்கள் செய்து, அத்தகைய தவத்தின் மூலம் வல்லமை உடையவனாக விளங்கிய அரக்கன் இராவணன், கயிலை மலையை பேர்த்தெடுக்க முயற்சி செய்தபோது, அவனது பத்து தலைகளையும் உனது கால் விரலால் நெரித்தவனே, முழங்கால் வரை தாழ்ந்து தொங்கிய புலித்தோல் ஆடையினையும், சிவந்த மேனியின் மேல் பூசப்பட்ட திருநீற்றினையும், தலைமாலையையும் சூடிக்கொண்டு தவக்கோலத்தில் நீ வீற்றிருக்கும் கருவறையாக எனது நெஞ்சம் திகழ வேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் விடுக்கும் வேண்டுகோள்.

திருவாசகம் திருவண்டப்பகுதி அகவலில், மணிவாசக அடிகளார், கானப்புலியுரி அரையோன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். திருவாசகம் திருச்சாழல் பதிகத்தின் மூன்றாவது பாடலில், மணிவாசக அடிகளார், பெருமானின் நல்லாடை புலித்தோல் என்று கூறுகின்றார். தாய் தந்தை இல்லாதவனாக,சுடுகாட்டினைத் தான் வாழும் இடமாகக் கொண்டு புலித்தோலை ஆடையாகக் கொண்டுள்ள பெருமான் தனியனாக ஆற்றல் இல்லாதவனாக இருக்கின்றானே ஏன் என்று முதல் பெண்மணி கேள்வி கேட்க, அதற்கு பதிலாக அடுத்தவள், தனியனாக இருந்தாலும் பெருமான் கோபம் கொண்டால், அவனது கோபத்தைத் தாங்க முடியாமல் அனைத்து உலகங்களும் பொடியாக மாறிவிடும் என்று கூறுவதாக இந்த திருவாசகப் பாடல் அமைந்துள்ளது. ஒரு அரசனாக, தலைவனாக இருப்பவன் சிறந்த அரண்மனையை கொண்டவனாக, விலை உயர்ந்த பகட்டான அழகுடன் திகழும் ஆடைகளை உடையவனாக, இருப்பதை பொதுவாக உலகினில் காண்கின்றோம். ஆனால் பெருமானோ, சுடுகாட்டினைத் தனது உறைவிடமாகவும் புலித்தோலைத் தனது ஆடையாகவும் கொண்டுள்ளான். அத்தகைய ஒருவன் எவ்வாறு தலைவனாக இருக்க முடியும் என்பதே தடை. அரச பதவி என்பது பரம்பரை பரம்பரையாக வருவது; தாயும் தந்தையும் அற்ற ஒருவன், எவ்வாறு அரச பதவியை பரம்பரையாக பெறமுடியும் என்பது மற்றொரு தடை. ஒருவன் தலைவனாக விளங்க, சிறந்த வீடோ, ஆடையோ, பரம்பரையாக செல்வம் ஆட்சி ஆகியவற்றை பெறுகின்ற தன்மையோ தேவையில்லை; மிகவும் முக்கியமாக அனைவரையும் வெல்லும் ஆற்றலே தேவை; தாயும் தந்தையும் அற்ற பெருமான், தனக்கு துணையாக எவரையும் உறவாகக் கொள்ளாதவன்; எனினும் எல்லையற்ற ஆற்றல் உடையவன் பெருமான். அவன் கோபம் கொண்டால் அனைத்து உலகங்களும் பொடியாக மாறிவிடும் என்பதை உணரவேண்டும். இத்தகைய ஆற்றல் மேலே குறிப்பிட்ட தடையைத் தகர்த்தெறியும் விடையாக அமைந்துள்ளது இந்த பாடலின் பொழிப்புரை.

கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை

தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடி

தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயிடினும்

காயில் உலகனைத்தும் கற்பொடி காண் சாழலோ

இதே பதிகத்தின் பன்னிரண்டாவது பாடலிலும், மணிவாசக அடிகளார், பெருமானை புலித்தோலை ஆடையாக அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். வழி அடியார்=வழி வழியாக அடியாராக உள்ள தன்மை; அப்பர் பிரான் ஒரு குறுந்தொகைப் பதிகத்து பாடலில் குறிப்பிடுவது போன்று, கங்கை நதியின் இரு கரைகளிலும் உள்ள மண் துகள்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமான எண்ணிக்கை கொண்ட இந்திரர்கள் தோன்றி அழிந்த போதிலும், நூறு கோடி பிரமர்கள் ஆறு கோடி நாராயணர்கள் தோன்றி அழிந்த போதிலும், என்றும் அழியாது இருப்பவன் ஈசன். மேலும் இவ்வாறு எண்ணற்ற இந்திரர்கள், பிரமர்கள், நாராயணர்கள் தோன்றி அழிந் போதிலும். அவர்கள் அனைவரும், வாழையடி வாழையாக பெருமானின் தொண்டர்களாக விளங்குகின்றனர் என்று அடிகளார் இந்த பாடலில் உணர்த்துகின்றார். எனவே இதனை அறியாமல் மண்ணுலகில் வாழ்வோர் எவரேனும் பெருமானுக்கு ஆட்படாவிட்டால், அவர்களுக்கு தான் நட்டமே தவிர, பெருமானுக்கு எந்த விதத்திலும் குறைவில்லை என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. வான் நாடர் கோ=வானில் வாழும் தேவர்களின் தலைவனாகிய இந்திரன்; காட்டில் வாழும் புலித்தோலை உடையாக அணிந்தவனும், பிரமனின் மண்டையோட்டினைத் தனது உண்கலனாக வைத்திருப்பவனும், காட்டினைத் தான் உறைவிடமாகவும் கொண்டுள்ள பெருமானைக் கண்டு அஞ்சி ஒதுங்குவரே அன்றி, அவரைத் தமது தலைவராக ஏற்றுக் கொண்டு அவருக்கு தொண்டராக இருப்பவர் யார் என்பதே தடை. இவ்வாறு எவர் பெருமானுக்கு தொண்டராக இருக்க முன்வருவார்கள் என்ற கேள்விக்கு, அடுத்தவள் கூறும் விடையை நாம் இப்போது காண்போம். பெருமான் எத்தன்மையராக இருந்தால் என்ன, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக, தேவர்களின் தலைவனாகிய இந்திரனும், பிரமனும், திருமாலும் பெருமானுக்கு அடித் தொண்டர்களாக இருக்கின்றனர் என்பதே மேற்கூறிய தடைக்கு விடை. எனவே இந்த உண்மையை அறியாமல் எவரேனும் பெருமானுக்கு ஆட்படாமல் இருந்தால், அவர்களுக்குத் தான் குறையே தவிர பெருமானுக்கு எந்த விதத்திலும் குறைவு ஏற்படுவதில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கானார் புலித்தோல் உடை தலை ஊண் காடு பதி

ஆனால் அவருக்கு இங்கே ஆட்படுவார் ஆரேடீ

ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்

வான் நாடர் கோவும் வழியடியார் சாழலோ

முதல் நான்கு திருமுறைகள் மற்றும் திருவாசகத்தில், பெருமானை, புலித்தோல் அணிந்தவனாக குறிப்பிடும் சில பாடல்களை நாம் இங்கே சிந்தித்து உள்ளோம். இத்தகைய குறிப்புகள் காணப்படும் ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாம் திருமுறை மற்றும் திருவிசைப்பா பாடல்களை நாம் வேறொரு தருணத்தில் சிந்திக்கலாம்.

பொழிப்புரை:

கங்கை நதியின் நீரலைகள் மோதும் சடைமுடியினில், நாளும் ஒளி பெருகும் பிறைச் சந்திரனை உடையவரும், தனது இடுப்பினில் புலித்தோல் ஆடை பொருந்தியவரும் ஆகிய இறைவன் உறையும் இடமாவது, வளமான கடைமுடி தலமாகும், நுரைகள் பெருகியும் தெளிந்த நீரினைக் கொண்டுள்ள நீரலைகள் கரையினில் மோதும் தன்மையால் இந்த தலம் நீர்வளத்துடன் காணப்படுகின்றது.

பாடல் 3:

அருத்தனை அறவனை (1.111) பாடல் 3 (திதே 0399)

அருத்தனை அறவ்னை (1.111) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0400)

ஆல் இள மதியினொடு அரவு கங்கை

கோல வெண்ணீற்றனைத் தொழுது இறைஞ்சி

ஏல நன் மலரொடு விரை கமழும்

காலன வளநகர் கடைமுடியே

விளக்கம்:

காலன்=காலை உடையவன்; பெருமானின் திருவடிகள், நறுமணம் மிகுந்த மலர்கள் சாத்தப்பட்டு மணத்துடன் கமழும் நிலை இங்கே குறிக்கப்பட்டுள்ளது. ஏலம்=நறுமணம் விரை=வாசனை; பெருமானை வணங்கும் அடியார்கள் மலர்கள் தூவியும் தூபதீபம் காட்டியும் பெருமானை இந்த தலத்தில் வழிபட்டனர் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. ஆல்=கல்லால மரத்தின் நீழல்; கோல=அழகிய; பெருமானின் வெண்ணீறு பூசிய திருக்கோலம் மிகவும் அழகானது என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். திருநீற்றுப் பதிகத்தின் பாடலில், திருஞான சம்பந்தர், திருநீற்றினை, சுந்தரமாவது நீறு, காண இனியது நீறு, கவினைத் தருவது நீறு என்று திருநீற்றின் தன்மையை புகழ்ந்து கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. பல திருமுறைப் பாடல்களில், பெருமான் பூசிக் கொண்டுள்ள திருநீறு அழகுடன் விளங்குகின்றது என்று அருளாளர்கள் கூறியுள்ளனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.28.1) திருஞானசம்பந்தர், பெருமானை ஒளி வெண்ணீற்று அப்பர் என்று குறிப்பிடுகின்றார். நெறிகொள்=முறையான வழியில் உணரும்; சென்ற பிறவிகளில் நாம் சேர்த்து வைத்துள்ள வினைகளின் தன்மையால் இந்த பிறவியில் இன்பதுன்பங்களை அனுபவிக்கின்றோம். அந்த இன்பங்களை அனுபவிக்கும் போது, நமது சாமர்த்தியத்தால் அந்த இன்பங்கள் நமக்கு நேரிடுகின்றன என்று செருக்கு கொள்ளாது இறைவனின் துணையோடு அனுபவிக்கின்றோம் என்ற உணர்வு கொள்ள வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இங்கே நமக்கு அறிவுரை கூறுகின்றார். யான் எனது என்ற செருக்குடன் இன்பங்களை எதிர்கொள்ளும் போது, நம்மை அறியாமலே அந்த செருக்கு காரணமாக பல தவறுகள் செய்து மேலும் வினைகளை தேடிக் கொள்கின்றோம். துன்பங்களை எதிர்கொள்ளும் போது, நமது பழைய தீவினைகளின் காரணமாக இந்த துன்பங்கள் நேரிடுகின்றன என்றும், இந்த துன்பங்களுக்கு நாமே முற்றும் காரணம் என்பதை உணர்ந்து, இந்த துன்பங்கள் உண்மையில் நமது வினைகளை கழிப்பதற்கே என்ற உணர்வுடன் எதிர்கொண்டால் மேலும் பல வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் நாம் இருக்கலாம். எனவே நாம் துன்பங்கள் அடைந்து அனுபவிப்பது, நமது வினையின் ஒரு பகுதியை கழித்துக் கொள்ள உதவி செய்வதால், துன்பங்களையும் இறைவனின் அருள் என்று கூறவேண்டும். இவ்வாறு இருப்பதையே, இன்ப துன்பங்களை சமமாக பாவித்து, இவை இரண்டும் இறைவனின் அருளால் நிகழ்கின்றன என்ற எண்ணத்துடன் வாழ்க்கையினை கழிப்பதையே இறைவன் விரும்புகின்றான். ஒப்பர்=சரியான அணுகுமுறை என்று ஒப்புக் கொண்டு பக்குவம் அடைந்த மனிதர்கள் இறைவனை ஏற்பார்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒப்பர் ஒப்பர் என்று இரண்டு முறை கூறப்பட்டுள்ளது. ஒப்பர் ஒப்பர் என்ற தொடருக்கு, தனக்குத் தானே ஒப்பாக சொல்லும் வண்ணம் திகழ்பவர் என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது. தன்னேர் இல்லாத் தலைவன் என்று தானே மணிவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகின்றார். துப்பன் என்ற சொல் துய்ப்பன் என்ற சொல்லின் இடைக்குறை; அப்பர்=தலைவர்; திருஞானசம்பந்தர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாததால், தனது நெஞ்சினுக்கு திருஞானசம்பந்தர் அறிவுரை கூறும் விதத்தில் இந்த பாடல் அமைந்து இருப்பினும் நாம் அவ்வாறு எடுத்துக் கொள்ளாமல், திருஞானசம்பந்தர் நமக்கு உணர்த்தும் அறிவுரையாக இந்த பாடலின் பொருளை நாம் கொள்ளவேண்டும். அப்பர் என்ற சொல்லுக்கு அப்பிக் கொண்டவர் என்ற பொருள் கொண்டு திருநீற்றினைத் தனது திருமேனியில் பூசிக் கொண்டவர் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஒப்பர் என்ற சொல்லுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் ஒப்பாக, சமமாக நினைக்கும் தன்மையை, பக்குவத்தைக் கொண்ட அடியார்கள் என்று பொருள் கொண்டு, அத்தகைய தற்போத நிலையுடன் வாழும் அடியார்களின் வாழ்க்கையை, முறையான வாழ்க்கை என்று பெருமான் ஒப்பி, ஏற்றுக் கொள்வார் என்று விளக்கம் கொள்வதும் பொருத்தமே. நெஞ்சமே நீ வாழ்வினில் அடையும் பலவிதமான சிற்றின்பங்களை, உனது சாமர்த்தியத்தால் அடைகின்றாய் என்று கருதி, யான் எனது என்ற செருக்குடன் இருக்காதே. நீ அனுபவிக்கும் அத்தனை இன்பங்களும் சிவபெருமானின் அருள் உனக்கு துணையாக இருப்பதால் நிகழ்கின்றன என்று நினைத்த வண்ணம், எதிர் கொள்வாயாக. இந்த அணுகு முறையே சரியானது என்று விதித்து இருப்பதால், அவர், சிவபெருமான் இதனை ஏற்றுக் கொள்வார். இதற்கு எந்த ஐயப்பாடும் நீ கொள்ள வேண்டா. இவ்வாறு நமக்கு உதவி புரியும் பெருமானார், ஒளி பொருந்திய திருநீற்றினைத் தனது உடலில் பூசிக் கொண்டுள்ள பெருமானார், அனைத்து உயிர்களுக்கும் தலைவராக விளங்கும் பெருமானார், உறைகின்ற சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்

துப்பன் என்னாது அருளே துணையாக

ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண்ணீற்று

அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே

வெங்குரு (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.9) திருஞானசம்பந்தர் பெருமானை, எமை ஆள விரும்பிய விகிர்தர் என்றும் எழிலுடைத் திகழ் வெண் நீறுடைக் கோல மேனியர் என்றும் குறிப்பிடுகின்றார். புக்கும் என்ற சொல்லை சேற்றிடைப் புக்கும் என்றும் திகழ் வானத்திடை புக்கும் என்றும் இரண்டு இடங்களிலும் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும். நிலத்தைத் தோண்டிச் சென்ற பன்றியாகவும் வானில் பறந்து சென்ற அன்னமாகவும் முறையே திருமாலும் பிரமனும் தங்களின் முன்னே தோன்றிய தீப்பிழம்பின் அடிமுடி தேடிய நிகழ்ச்சி உணர்த்தப் படுகின்றது. பிரமனும் திருமாலும் தங்களது முயற்சியில் தோல்வி அடையும் வண்ணம் நெடுந்தழலாக நின்ற பெருமை சிவபெருமான் ஒருவருக்கே உரியது என்பதால் அவரை விகிர்தர் என்று அழைக்கின்றார். தேவர்கள் போக லோகத்தில் வாழ்பவர்கள். எனவே அவர்கள் தங்களது போகத்திற்கு இடையூறு வரும் தருணங்களில் மட்டும் இறைவனை வணங்குகின்றனர். அவர்களிலிருந்து மாறுபட்டு எப்போதும் வழிபடும் தன்னை, சிறப்பான முறையில் ஆட்கொண்டு பெருமான் அருள் புரிகின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

ஆறுடைச் சடை எம் அடிகளைக் காண அரியொடு பிரமனும் அளப்பதற்காகிச்

சேறிடைத் திகழ் வானத்திடை புக்கும் செலவு அறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ் வெண்

நீறுடைக் கோல மேனியர் நெற்றிக் கண்ணினர் விண்ணவர் கை தொழுதேத்த

வேறெமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே

கழுமலம் என்று அழைக்கப்படும் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.129.2) திருஞான சம்பந்தர், அருந்தகைய சுண்ண வெண்ணீறு என்று குறிப்பிடுகின்றார். பிரமனும் சரசுவதி தேவியும் வழிபட்ட திருக்கோயில் என்று இதே பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் பெருமானை தேவர்கள் வழிபட்ட செய்தியை குறிப்பிடுகின்றார். தடங்கண்=அகன்ற கண்; செந்துவர்=பவளம் போன்று சிவந்த வாய்; பீடு= பெருமை; அருந்தகைய=அருமையானது, பெறுதற்கு அரியது என்று கொண்டாடப்படும் திருநீறு; பூதி என்றால் செல்வம் என்று பொருள்; விபூதி என்றால் சிறந்த செல்வம் என்று பொருள். அனைத்துச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாக திருநீறு பண்டைய நாளில் மதிக்கப்பட்டமை இந்த பாடல் மூலம் புலனாகின்றது. இந்த காரணம் பற்றியே திருக்கோயிலில் நாம் பெறுகின்ற திருநீற்றினை அங்கேயே தூணில் சிந்திவிட்டு வாராமல், நமது இல்லத்திற்கு கொண்டு வந்து, நமது இல்லத்தில் வைத்திருக்கும் திருநீற்றுப் பேழையில் சேர்க்க வேண்டும். விபூதியை தரையில் சிந்துவது பெரிய பாவம். தரும் தடக்கை=பல வகையான தானங்கள் அளிக்கும் அந்தணர்களின் கை; மிகவும் அதிகமாக தானங்கள் வழங்கும் கை என்று உணர்த்தும் வண்ணம் அகன்ற கை என்ற பொருளில் தடக்கை என்று கூறினார் போலும். தானம் அளித்தல், தானம் வாங்குதல், வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேள்வி வளர்த்தல், வேள்வி செய்வித்தல் என்பன அந்தணர்களின் ஆறு கடமைகளாக பண்டைய நாட்களில் கருதப்பட்டன. இந்த பாடலில், திருஞான சம்பந்தர் இறைவனது தன்மைகளைப் புகழ்ந்து பாடிய வண்ணம் அந்தண மகளிர் கழற்சிக்காய் அம்மானை முதலிய ஆட்டங்கள் ஆடுவதாக கூறுகின்றார். இந்த குறிப்பு நமக்கு மணிவாசக அடிகளார் அருளிய திருவம்மானை பதிகத்தை நினைவூட்டுகின்றது. பெரியதும் அகன்றதும் ஆகிய கண்களை உடையவளும், பவளம் போன்ற சிவந்த வாயினை உடையவளும் மிகுந்த பெருமை படைத்தவளும் மலைச் செல்வியும் ஆகிய பார்வதி தேவியை விட்டுப் பிரியாத மேனியை உடைய பெருமான், மிகவும் அருமையானதாகிய திருநீறு கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்ளும் பெருமான், வானோர்கள் தொழ அமரும் திருக்கோயில் கழுமலம் தலத்தில் உள்ள திருக்கோயிலாகும். தமது அகன்ற கைகள் கொண்டு கை நிறைய தானம் வழங்குவோரும் மூன்று வகையான வேள்விகளைச் செய்வோரும் ஆகிய அந்தணர்களின் வீடுகள் தோறும் இறைவனது புகழத்தக்க பெருமைகளை பாடியவாறு, கருமையான அகன்ற கண்களை உடைய மகளிர், கழற்சிக்காய் மற்றும் அம்மானை ஆடுகின்ற காட்சிகள் நிறைந்த தலம் கழுமலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெருந் தடங்கண் செந்துவர் வாய்ப் பீடுடைய மலைச் செல்வி பிரியா மேனி

அருந்தகைய சுண்ண வெண்ணீறு அலங்கரித்தான் அமரர் தொழ அமரும் கோயில்

தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும் இறைவனது தன்மை பாடிக்

கரும் தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப் பாட்டலரும் கழுமலமே

கோளறு திருப்பதிகத்தின் மூன்றாவது பாடலில், திருஞானசம்பந்தர், ஒளி நீறு என்று குறிப்பிடுகின்றார். திருமகள்=இலக்குமி தேவி; கலையதூர்தி=துர்க்கை, செயமாது=செயமகள்; திசை தெய்வம்=எண் திசைக் காவலர்கள் நெதி=நியதி என்ற சொல்லின் மருவு; முருகு=அழகு; பூக்களுக்கு அழகு நறுமணம் என்பதால் நறுமணம் நிறைந்த என்று பொருள் கொள்ள வேண்டும்; அலர்=மலர்; நாளுக்கு நாள் அழகு கூடும் பவளம் போன்ற திருமேனியில், ஒளி வீசும் திருநீற்றினை அணிந்தவனாக, உமையன்னை உடனாக, வெண்மை நிறம் கொண்ட இடபத்தின் மேல் ஏறியவனாக, நறுமணம் மிகுந்த கொன்றை மலர்கள் மற்றும் ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனாக, பெருமான் எனது உள்ளத்தின் உள்ளே புகுந்துள்ளான்; இதனால், திருமகள், துர்க்கை, செயமகள், பூமகள், திசைச் தெய்வங்கள் முதலிய பல தெய்வங்களும் எனக்கு நல்ல முறையில் செயல்பட்டு, தீமை கலவாத நல்ல பலன்களையே நல்கும். இவ்வாறு எனக்கு நல்லன புரியும் இந்த சிறு தெய்வங்கள் அனைத்தும், மற்ற அடியார்களுக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.38.3) திருஞானசம்பந்தர், அழகாயதோர் பொடியதார் திருமேனி என்று குறிப்பிடுகின்றார். படி=உலகம்; பொற்பு=தன்மை; தனது உடல் முழுவதும் திருநீற்றினை பூசிக்கொண்டு காட்சி அளிக்கும் பெருமானின் தன்மையின் காரணம் யாது என்று கேட்கின்றார். உலகம் முழுதும் அழிந்து, ;உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் தாங்கள் குடி கொண்டிருந்த உடலினை விட்டுப் பிரிந்த பின்னரும், அந்த உடல்கள் எரிந்த சாம்பலை பூசிக் கொண்டு, தான் ஒருவனே என்றும் அழியாமல் நிலைத்து நிற்பவன் என்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் பெருமான் சாம்பலை தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டு இருக்கின்றார் என்பதை அருளாளர்கள் மூலம் நாம் அறிந்து கொண்டுள்ளோம். அந்தணர் வேடத்தினை பெருமான் தாங்கும் காரணம் யாது என்ற வினாவும் இங்கே எழுப்பப் படுகின்றது. வேதம் ஓதுதலும் வேதம் ஓதுவித்தலும் அந்தணர்களின் கடமை என்று வகுத்த பெருமானே அந்த விதியை மீறலாகாது அல்லவா. எனவே வேதத்தை முதன்முதலில் உலகுக்கு உரைத்தவனும், வேதங்களின் பொருளை உமையன்னை, சனகாதி முனிவர்கள், கணவர் முதலான முனிவர்கள் ஆகியோருக்கு விளக்கியவனும் ஆகிய பெருமான், அந்தணர் கோலத்தில் இருப்பதே தானே முறைமை. பெருமானின் அடியார்களாக உள்ளவர்களே, பெருமானின் செய்கைகளின் தன்மையை அடியேன், எனது சிற்றறிவின் காரணமாக, முழுமையாக அறிகிலேன், எனவே நீங்கள் சொல்வீர்களாக. உலகத்தவர் அனைவராலும் தொழுது போற்றப்படும் பெருமான், கண்டியூர் வீரட்டம் தலத்தில் பொருந்தி உறையும் தன்மை படைத்த பெருமான், இவ்வுலகத்திற்கு முடிவாகவும் முதலாகவும் உள்ள பெருமான், இந்த வையகம் முழுவதும் பரந்து நிற்கும் பெருமான், திருநீறு பூசப்பட்டுள்ள தனது அழகிய மார்பினில் முப்புரி நூலும் பூண்டு காணப் படுவதன் தன்மை தான் என்னே என்று இந்த தலத்து அடியார்களை பார்த்து திருஞான சம்பந்தர் கேள்வி கேட்பதாக அமைந்த பாடல்.

அடியர் ஆயினீர் சொல்லுமின் அறிகின்றிலேன் அரன் செய்கையைப்

படி எலாம் தொழுதேத்து கண்டியூர் வீரட்டத்து உறை பான்மையான்

முடிவுமாய் முதலாய் இவ்வையம் முழுதுமாய் அழகாயதோர்

பொடியதார் திருமார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பதே

மாகறல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.72.8) திருஞானசம்பந்தர், அழகார் பூசு பொடி ஈசன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். மாசுபடும் செய்கை=குற்றம் நீக்கும் செய்கை; படுதல்=அழிதல்; தூசுதுகில்=வெள்ளை ஆடைகள்; சிறந்த தவம் புரிகின்ற மாகறல் தலத்து மக்கள் என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தருக்கு, பாசுபத அத்திரம் பெறுவதற்காக சிறந்த தவம் செய்த அர்ஜுனனும், அவனது தவத்திற்கு இறங்கி பாசுபத வேடம் தாங்கி வந்து அருள் புரிந்த பெருமானும் நினைவுக்கு வந்தனர் போலும். இந்த பாடலில் பாசுபதம் வேடம் தாங்கிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப்பட்டுள்ள வெள்ளை ஆடையிலான கொடிகள் கருநிற மேகங்களை தொடுவன போல் உயர்ந்து காணப்படுகின்றன. இத்தகைய உயர்ந்த மாட வீடுகள் காணப்படும் மாகறல் தலத்தில் உள்ள அடியார்கள், குற்றங்கள் நீக்கப்பட்ட செய்கைகள் மிகுதியாக உடையவர்களாக, சிவபெருமானை வழிபடுவதால் சிறந்த தவம் புரிபவர்களாக விளங்கும் இந்த தலத்தினில் சிவபெருமான் வீற்றிருந்து அருள் புரிகின்றான். அவன், பாசுபத வேடத்தை மிகவும் விரும்பியவனாக, உடலில் வரிகளும் பற்களில் விடமும் கொண்ட பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக இறுகக் கட்டியவனாக, திருமேனி பொலிவுடன் விளங்கும் வன்ணம் மேனி எங்கும் வெண்ணீறு பூசியவனாக காட்சி தருகின்றான். அவனைப் போற்றி வழிபடும் அடியார்களின் உடலில் வினைகள் நில்லாது விலகி ஓடிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்க ளோதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென வேத்தவினை நிற்றலில போகுமுடனே

திருமாணிகுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.77.2) திருஞானசம்பந்தர், பெருமானை, சோதி மிகு நீறது மேனி மிசை பூசியவர் என்று குறிப்பிடுகின்றார். வசி=வசியப் படுத்தும் பேச்சுகள்; தாது=மகரந்தப் பொடிகள்; தண் பழனம்=நீர் வளம் மிகுந்து குளிர்ச்சியுடன் காணப்படும் வயல்கள்; ஓதம் மலி=ஓசை மிகுந்த அலைகள்; வேலை=கடல்;

சோதி மிகு நீறது மேனி மிசை பூசி ஒரு தோலுடை புனைந்து தெருவே

மாதர் மனை தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம்

தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழன மிக்கு

ஓத மலி வேலை புடை சூழுலகில் நீடுதவி மாணிகுழியே

விளமர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.88.2) திருஞானசம்பந்தர், அழகிய பொடியினர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பெருமான், மரப் பாதுகைகளை அணிந்தவர் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் சொல்கின்றார். பட்டிலகிய=பட்டாடை மூடிய மார்பகங்கள்; அரிவை=இளமை வாய்ந்த தாருகவனத்து மகளிர்; ஒட்டிலகு=தாருக வனத்து மகளிர் இடுகின்ற பிச்சையை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு; தாருக வனத்தில் பலிக்கு செல்லும் போதும், உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு பெருமான் சென்றார் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிட்டிலகிய பொடி=ஞானத்தை வழங்கும் திருநீறு; வெண்ணீறு அணிந்த பெருமானின் திருக்கோலத்தைக், காணும் போது, அந்த தோற்றம், நமக்கு பெருமான் ஒருவனே என்றும் நிலையானவன்; பெருமானைத் தவிர்த்த அனைத்து பொருட்களும் உயிர்களும் ஒரு நாள் அழியக் கூடியவை என்ற ஞானத்தை நமக்கு உணர்த்துகின்றது. எனவே தான் சிட்டிலகிய பொடி என்று கூறுகின்றார். விட்டிலகிய=விவரிக்க முடியாத; அழகொளி=தோற்றப் பொலிவு;

பட்டிலகிய முலை அரிவையர் உலகினில் இடுபலி

ஒட்டிலகிய இணை மர அடியினர் உமை உறு வடிவினர்

சிட்டிலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வதோர்

விட்டு இலகு அழகொளி பெயர் அவர் உறைவது விளமரே

ஆலவாய் (மதுரை)பதிகத்தின் முதல் பாடலில் (3.115.1) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில், திருஞானசம்பந்தர் கோல நீறு என்று குறிப்பிட்டு திருநீற்றின் அழகினை உணர்த்துகின்றார். நேர்=ஒத்த; இந்த பதிகத்தின் பாடல்களில் ஒரே சொல் இரண்டு பொருள் தரும் வண்ணம் ஒவ்வொரு அடியிலும் பயன்படுத்தி இருக்கும் நிலை, திருஞானசம்பந்தரின் புலமையை நமக்கு உணர்த்துகின்றது. இருக்கை=இருப்பிடம், இருக்கு வேதம். ஆல மரத்தின் நிழலைத் தனது இருப்பிடமாகக் கொண்டு நான்கு முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை விளக்கிய பெருமான், இருக்கு முதலான நான்கு வேதத்து பாடல்களைக் கேட்பதை மிகவும் விரும்புகின்றார். பங்கன்=பாகமாக உடையவன், பங்கம் (கேடு) விளைவித்தவன்; பாலினைப் போன்று இனிய மொழி பேசும் உமை அன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், தனது திருவடிகளைப் போற்றாத திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து கேடு விளைவித்தவன் ஆவான். பூதம்=பூத கணங்கள், உயிருக்கு உயிராக இருக்கும் தன்மை; அழகிய திருநீற்றினை அணிந்து மேன்மையுடன் விளங்கும் பூதகணங்களைத் தன்னருகே கொண்டுள்ள பெருமான், குற்றமற்ற அடியார்களின் மனதினைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவர்களின் உயிருக்கு உயிராக விளங்குகின்றான். களம்=கழுத்து; அண்டர்களத்தன்=அண்டர்கள் அத்தன்; ஆலகால நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கி வைத்த பெருமான், ஆலவாய் என்று அழைக்கப்படும் தலத்தில் உறைகின்ற பெருமான், தேவர்களின் தலைவனாக விளங்குகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே

பாலின் நேர் மொழியாள் ஒரு பங்கனே பாதம் ஓதலர் புர பங்கனே

கோல நீறு அணி மேதகு பூதனே கோதிலார் மனம் மேவிய பூதனே

ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர் களத்தனே

சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (4.8.6) அப்பர் பிரான், பெருமானை, அணி கிளர் வெள்ளை தவழ் சுண்ண வண்ண இயலார் என்று குறிப்பிடுகின்றார். கணித்தல்=குறிப்பிடுதல்: வேப்ப மரம் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் பூக்கும் தன்மை உடையது. வேப்ப மரம் பூக்கும் காலமும் திருமணங்கள் நடைபெறும் காலமும் ஒன்றாக இருப்பதால், திருமண காலத்தை வேப்ப மரங்கள் பூத்து கணிப்பதாக குறிப்பிட்டு, கணிவளர் வேங்கை என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. சோதிடரைப் போன்று திருமண காலத்தை உணர்த்தும் வேங்கையின் மலர்களையும், சந்திரனையும் தனது முடியில் மாலையாக சூடியவர் சிவபெருமான்: அவர் ஒலிக்கும் சிலம்பினையும் கழலையும் தனது கால்களில் அழகுற அணிந்தவர்: அவர், நவமணிகள் மலிந்து காணப்படுவதும் அழகான மேகம் தவழும் சோலைகளில் ஆடும் மயில்களை உடையதும் ஆகிய இமயமலையின் மன்னனாகிய மலைமகளுக்கு இறைவரும் ஆவார்: ஒப்பற்ற ஒருவராக இருக்கும் சிவபெருமான் ஒரே உருவத்தில் இருவராகவும், கருமை நிறம் கொண்ட கார் அன்னத்தை ஒத்த அம்மையாகவும், தீயின் நிறத்தை ஒத்த ஐயனாகவும் காணப்படுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகார்

அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ண இயலார் ஒருவர் இருவர்

மணி கிளர் மஞ்ஞை ஆல மழையாடு சோலை மலையான் மகட்கும் இறைவர்

அணி கிளர் அன்னவண்ணம் அவள் வண்ணவண்ணம் அவர் வண்ணம்வண்ணம் அழலே

சித்தக் குறுந்தொகை பதிகத்தின் பாடலில் (5.97.10) அப்பர் பிரான், மேன்மை பொருந்திய திருநீறு என்று குறிப்பிடுகின்றார். ஐயன்=அழகியன்; அந்தணன்=அம்+தணன், உள்ளத்தில் குளிர்ச்சியினை உடையவன்; பரமன்=அனைவர்க்கும் மேலானவன் மேதகு=மேன்மை பொருந்திய மைகொள்=கருமை நிறம் உடைய மை; அழகிய திருமேனியை உடையவனும், உள்ளத்தில் குளிர்ந்த தன்மை உடையவனும், ஆணாகவும் பெண்ணாகவும் உள்ள தனது வடிவத்தை உணர்த்தும் உடலினைக் கொண்டவனும், மேன்மை தரும் திருநீற்றினைத் தனது உடலில் பூசியவனும், கருமையான மையின் நிறத்தினை ஒத்த கழுத்தினை உடையவனும், துள்ளி ஓடும் மான் கன்றினைத் தனது கையினில் ஏந்தி தனது கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்திருப்பவனும், படம் எடுத்து ஆடும் பாம்பினைத் தனது உடலினில் கச்சாக கட்டியவனும் ஆகிய பெருமான் அனைவரிலும் உயர்ந்தவன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை;

ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்

மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய

மை கொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்

பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.17.6) அப்பர் பிரான், பெருமானை, கோலமார்த்த பொடியாரும் மேனியர் என்று குறிப்பிடுகின்றார். இடியார் களிறு=இடி முழக்கத்தின் ஓசை போன்று மிகுந்த ஆரவாரத்துடன் பெருமானை நோக்கி வந்த மதயானை; தனது அடியார்களுக்கு மிகவும் நெருங்கியவராக பெருமான் இருப்பார் என்பதை, அடியார் குடியாவர் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொங்கரவு=சினம் கொண்டு, படம் எடுத்தாடும் இயல்பினை உடைய பாம்பு; இந்த பாடலில், அந்தணர்கள் வேள்விகளில் ஆகுதியிடும் போது சொல்லப்படும் மந்திரமாக இருப்பவர் சிவபெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

கொடியார் இடபத்தர் கூத்தும் ஆடிக் குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலமார்ந்த

பொடியாரும் மேனியர் பூதிப் பையர் புலித் தோலர் பொங்கரவர் பூண நூலர்

அடியார் குடியாவார் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற

இடியார் களிற்றுரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம் கொண்டாரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.28.8) அப்பர் பிரான், பெருமான் பூசிக் கொள்ளும் திருநீற்றினை சுந்தரத்த பொடி என்று குறிப்பிடுகின்றார். சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இந்திரம்=தலைமைப் பதவி; தோன்றல்=தலைவர்; தேவர்களுக்குத் தலைவனாக இருக்கும் இந்திர பதவியை தக்கவருக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் அளித்தவராகவும், திருமால் பிரமன் இந்திரன் உட்பட தேவர்கள் அனைவரும் வழிபடும் தலைவராக விளங்குபவராகவும், அழகிய திருநீற்றினைத் தனது மேனியில் பூசியவராகவும், மிகவும் தூய்மையான திருமேனியை உடைய தலைவராகவும். அடியார்களின் மனதினில் திருவைந்தெழுத்து மந்திரத்தை வைத்தவராகவும், சிறப்பு வாய்ந்த பெரிய பாம்பாகிய வாசுகியை தான் திரிபுரத்தவர்களுடன் போர் தொடுத்த தருணத்தில் பயன்படுத்திய வில்லினுக்கு ஏற்ற நாணாக வளைத்தவராகவும், தான் உட்கொண்ட நஞ்சினைத் தனது கழுத்தினில் அழகிய அணிகலனாக இருக்குமாறு ஏற்றவராகவும் அழகிய திருவாரூர் தலத்தின் மூலட்டானத்து பெருமான் எனது மனக்கண்ணுக்கு காட்சி அளிக்கின்றார் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.

இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும்

சுந்தரத்த பொடி தன்னைத் துதைந்தார் போலும் தூத்தூய திருமேனித் தோன்றல் போலும்

மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மாநாகம் நாணாக வளைத்தார் போலும்

அந்திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணியாரூர் திருமூலட்டனானாரே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.48.5) அப்பர் பிரான், கோலமாய நீற்றவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். எப்போதும் மூடிய நிலையில் இருக்கும் நெற்றிக்கண் திறந்த கணத்தில் மன்மதனின் உடல் எரிந்து சாம்பலாக மாறிய தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இமைப் பொழுது என்பது ஒரு முறை கண்ணை மூடித் திறக்கும் நேரம். மூடியிருந்த நெற்றிக்கண் திறக்கப்பட்டு மூடப்படுவதன் முன்னமே மன்மதன் அழிந்த நிலை இமைப்பளவு என்று குறிப்பிடப் படுகின்றது. கூற்று=சொல்; குணம் குறி ஆகிய சொற்களை, சொல்லுடன் தொடர்பு கொண்ட சொற்களாக கருதி பொருள் கொள்ள வேண்டும். குணம் குறி என்று சொற்களின் பொதுத் தன்மையும் சிறப்புத் தன்மையும் உணர்த்தப் படுகின்றன. சொற்களாகவும், சொற்களின் பொதுத் தன்மையாகவும் சிறப்புத் தன்மையாகவும் உள்ளவனும், சொற்கள் குறிப்பிடும் அனைத்துப் பொருளாக உள்ளவனும், தனது உடலில் திருநீறு அணிந்த கோலத்துடன் இருப்பவனும், நிழலாகவும் வெப்பமாகவும் இருப்பவனும், மேல்நோக்கி நிமிர்ந்த சடையில் கங்கை வெள்ளத்தை ஏற்றவனும், ஏழுலகங்களாக இருப்பவனும், இமைக்கும் நேரத்திற்கும் குறைந்த நேரத்தில் மன்மதனின் உடல் எரிந்து சாம்பலாக மாறும் வண்ணம் நெற்றிக் கண்ணை விழித்தவனும், வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும், வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது மனதினில் நிலையாக உள்ளான்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கூற்றவன் காண் குணமவன் காண் குறியானான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலமாய

நீற்றவன் காண் நிழலவன் காண் நெருப்பானான் காண் நிமிர் புன்சடை மேல் நீரார் கங்கை

ஏற்றவன் காண் ஏழுலகும் ஆயினான் காண் இமைப்பளவில் காமனை முன் பொடியாய் வீழ

மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.89.4) அப்பர் பிரான், பெருமானை, ஒளி நீறு பூசும் ஒருவர் என்று குறிப்பிடுகின்றார். கண்ணி=தலையில் அணியப்படும் மாலை; ஒத்த=பொருந்திய; வேல் என்பது இங்கே பெருமான் வைத்துள்ள சூலத்தை குறிக்கும். தானம்=கொடை, கொடுக்கப் படுவது; அந்தணர்கள் தினமும் மூன்று வேளைகளும், (காலை மாலை மற்றும் நண்பகல்) சூரியனுக்கு கொடுக்கப்படும் அர்க்கியத்தை இங்கே தானம் என்று குறிப்பிடுகின்றார். சந்திரன் சூரியன் ஆகியோருடன் இருந்து, அவர்களை இயக்குபவன் இறைவன் என்பதால், சூரியனுக்கு கொடுக்கப்படும் அர்க்கியம் இறைவனையே சென்று அடைகின்றது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். வானத்தில் உலவும் பிறைச் சந்திரனை, எப்போதும் வளர்ந்து கொண்டிருக்கும் தனது சடையில் தலையில் அணியப்படும் மாலையாக அணிந்தவர் சிவபெருமான்; ஊன் பொருந்திய சூலத்தினைத் தனது கையில் ஏந்தியவராக, ஒளிவீசும் திருநீற்றினை தனது திருமேனியில் பூசிய ஒப்பற்ற தலைவராக விளங்குபவர் சிவபெருமான்; அந்தணர்கள் நாள்தோறும் வழங்கும் அர்க்கியத்தை ஏற்றுக் கொள்பவராக திகழும் பெருமான், தன்னை விடவும் பெரியவராக வேறு எவரும் இல்லாத தன்மையினர் ஆவார். அவர் பன்றியின் வெள்ளைக் கொம்பு தனது மார்பினில் பொலிந்து விளங்குமாறு அணிந்துள்ளார். அவர் தான் இன்னம்பர் திருத்தலத்தில் தான்தோன்றி ஈசனாக எழுந்தருளி உள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வானத்து இளம் திங்கள் கண்ணி தன்னை வளர்சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும்

ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும் ஒளி நீறு பூசும் ஒருவர் போலும்

தானத்தின் முப்பொழுதும் தாமே போலும் தம்மில் பிறர் பெரியார் இல்லார் போலும்

ஏனத்து எயிறு இலங்கப் பூண்டார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

திரு நாட்டுத் தொகை என்று அழைக்கப்படும் பதிகத்தின் பாடலில் (7.12.3) சுந்தரர், பெருமானை, கோல நீற்றன் என்று குறிப்பிட்டு, திருநீறு அழகினைத் தரும் என்று உணர்த்துகின்றார். மூலனூர், தாராபுரத்திற்கு அருகில் உள்ள கொங்கு நாட்டு வைப்புத் தலம்; வெற்றியூர் என்பது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைப்புத் தலம்; வெண்ணி, நாலனூர் என்பனவும் வைப்புத் தலங்கள்;

மூலனூர் முதலாய முக்கண்ணன் முதல்வன் ஊர்

நாலனூர் நரை ஏறு உகந்தேறிய நம்பன் ஊர்

கோல நீற்றன் குற்றாலம் குரங்கணின் முட்டமும்

வேலனூர் வெற்றியூர் வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே

பொழிப்புரை:

கல்லால மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் அறம் உரைத்தவரும், ஒற்றைப் பிறைச் சந்திரனுடன் பாம்பு மற்றும் கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டவரும், அழகிய வெண்ணீற்றை உடலெங்கும் பூசியவரும் ஆகிய இறைவனை அடியார்கள் நறுமணம் மிகுந்த மலர்களை அவரது திருவடிகளில் தூவியும், வாசனை வீசும் தூபங்கள் காட்டியும் தொழுதும் வணங்குகின்றனர். இவ்வாறு அடியார்கள் தொழுவதால் நறுமணம் கமழும் திருவடிகளைக் கொண்டுள்ள இறைவன் உறைவது கடைமுடி எனப்படும் தலமாகும்.

பாடல் 4:

அருத்தனை அறவனை (1.111) பாடல்கள் 4, 5 (திதே 0401)

கொய்யணி நறுமலர்க் கொன்றை அந்தார்

மையணி மிடறு உடை மறையவன் ஊர்

பை அணி அரவொடு மான் மழுவாள்

கை அணிபவன் இடம் கடைமுடியே

விளக்கம்:

மை=மை போன்று கரிய நிறம் கொண்ட ஆலகால விடம்; பை=பாம்பின் படம்; கொய்யணி= அப்போது தான் கொய்யப்பட்ட; கொய்தல்=பறித்தல்;

பொழிப்புரை:

அப்போது தான் பறிக்கப்பட்ட, நறுமணம் வீசும் கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், மை போன்று கரிய நிறம் கொண்டிருந்த ஆலகால விடத்தினை அருந்திய பின்னர் அதனைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்டு விளங்கும் கழுத்தினை உடையவனும், வேதத்தின் பொருளாக உள்ளவனும், ஆகிய இறைவன் உறையும் ஊர் யாது என்று நீர் அறிந்து கொள்ள விரும்பினால் கேட்பீராக; படம் எடுத்து ஆடுவதும் கொடிய விடத்தினை உடையதும் ஆகிய பாம்பினை கங்கணமாக அணிந்து கொண்டுள்ள கையினில் மானினையும் மழுவினையும் ஏற்றுக் கொண்டுள்ள இறைவன் உறையும் இடம் கடைமுடி தலமாகும்.

பாடல் 5

அருத்தனை அறவனை (1.111) பாடல்கள் 4, 5 (திதே 0401)

மறையவன் உலகவன் மாயமவன்

பிறையவன் புனலவன் அனலுமவன்

இறையவன் என உலகம் ஏத்தும் கண்டம்

கறையவன் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

புனலாகவும் அனலாகவும் உலகமாகவும் உள்ள பெருமான் என்று மூன்று பஞ்ச பூதங்களை இந்த பாடலில் குறிப்பிட்டமையால் மற்ற இரண்டு பூதங்களாகவும் இருப்பவன் பெருமான் என்று உணர்த்தியதாக பொருள் கொள்ள வேண்டும்; அதே போன்று சந்திரனையும் அனல் என்று அக்னியையும் குறிப்பிட்டமையால் சூரியனாகவும் இறைவன் உள்ள நிலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். மறையவன்= வேதங்கள் உண்மைப் பொருள் என்று உணர்த்தும் பெருமான்; மாயம்=மாயை, உலகப் பொருட்கள் மற்றும் உலகினில் உள்ள அனைத்து உயிர்கள்; மறையவன், உலகவன், மாயமவன் என்பதற்கு வேறு விதமாகவும் அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர். மறை என்பது வேதங்கள் முதலான சொற் ப்ரபஞ்சத்தையும் உலகு என்பது பொருட் ப்ரபஞ்சத்தையும், மாயை என்பது மேற்குறிப்பிட்ட இரண்டு பிரபஞ்சங்கள் தோன்றுவதற்கு காரணமாக உள்ள சுத்த மாயை மற்றும் அசுத்தமாயையை குறிப்பதாகவும் ;பொருள் கொண்டு, இறைவன் சொல்லாகவும், பொருளாகவும், சொல்லும் பொருளும் தோன்றுவதற்கு காரணமாகிய மாயையாகவும் இருக்கும் நிலையை உணர்த்துவதாக பொருள் கூறுகின்றனர்.

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.15.2) அப்பர் பிரான் பெருமானை, மனத்துள் மாயன் என்று அழைக்கின்றார். அனைத்து உயிர்களுடன் கலந்து இருக்கும் பெருமானை நாம் காண முடியாது. இவ்வாறு நாம் வெளிப்படையாக காண முடியாத பெருமானை, மாயன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். புனிறு/புளிறு=மிகுந்த இளமை; ஒற்றைப் பிறையுடன் இருந்த நிலையினை, மிகவும் இளமையாக இருந்த சந்திரன் என்று கூறுகின்றார். பிள்ளை மதி என்று சந்திரன், தனது அளவில் குறைந்த நிலையில் இருந்த தன்மை பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. மிகவும் குறைந்த தன்மை என்பதை உணர்த்தும் வண்ணம் புளிற்றுப் பிள்ளை என்று கூறுவது மிகவும் அரிதான சொல்லாட்சி. உயிர்கள் காண முடியாதபடி, உயிர்களின் மனதினில் மறைந்து இருக்கும் மாயவனும், குற்றமற்ற ஒளி வடிவாக இருப்பவனும், பிறந்த குழந்தையைப் போன்று அளவில் மிகவும் சிறுத்து இருந்த நிலையில், அடைக்கலம் புகுந்த வெண்பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனும், எனக்குத் தாயாக இருந்து என்னை காப்பவனும், எனது தலைவனும் ஆகிய இடைமருது ஈசனை நினைத்து நினைத்து எனது உள்ளம் நிறைந்துள்ளது என்று குறிப்பிட்டு அப்பர் பிரான் மகிழும் பாடல்.

மனத்துள் மாயனை மாசறு சோதியை

புனிற்றுப் பிள்ளை வெள்ளை மதி சூடியை

எனக்குத் தாயை எம்மான் இடை மருதினை

நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே

கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.7) அப்பர் பிரான் பெருமானை, மாயத்தான் என்று கூறுகின்றார். மூவருக்கும் மேலானவன் என்று அப்பர் பிரான் கூறுவதால், பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரிலும் வேறானவன் என்றும் அந்த மூவர்க்கும் தலைவனாக திகழ்பவன் பெருமான் என்பது தெளிவாகின்றது. முகடு=உச்சி; ஏவலன்=அம்பு எய்வதில் வல்லவன். ஒரு நொடிக்கும் குறைவான நேரமே ஒரேயிடத்தில் இருந்த மூன்று பறக்கும் கோட்டைகளும் அழியும் வண்ணம் அம்பு எய்த திறமையும், விரைந்து ஓடிக் கொண்டிருந்த பன்றியின் மீது அம்பினை எய்து அர்ஜுனனை காப்பாற்றிய தன்மையும் நமது நினைவுக்கு வருகின்றன. மின்னளந்த=ஒளி வீசும்; ஒளி வீசும் அண்டத்தின் உச்சியையும் கடந்து நிற்பவனும், தேவர்களுக்கு தலைவனாக விளங்குபவனும், உலகத்தின் அனைத்து இடங்களிலும் தங்களது தொழிலைச் செயல்படுத்தும் பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் தோன்றுவதற்கு முதற் காரணமாக இருப்பவனும், மூவிலை வேல் சூலத்தை ஏந்திய அழகனும், எனது எண்ணத்தினை உணர்ந்து எனது சிந்தையில் கலந்து இருப்பவனும், அம்பினை விரைவாக செலுத்துவதில் தேர்ச்சி பெற்றவனும், தேவர்கள் புகழும் வண்ணம் மூன்று உலகங்களையும் அளந்த திருமாலும் காண முடியாத வண்ணம் நெடிய தீப்பிழம்பாக உயர்ந்து நின்றவனும் ஆகிய பெருமான், பெரிய கடல் சூழ்ந்த கோகர்ணம் தலத்தில் மிகுந்த விருப்பமுடன் எழுந்தருளியுள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மின்னளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர் தம் பெருமான் காண் மேவில் எங்கும்

முன்னளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூவிலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண்

எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏவலன் காண் இமையோர்கள் ஏத்தநின்று

மண்ணளந்த மால் அறியா மாயத்தான் காண் மாகடல் சூழ் கோகரணம்மன்னினானே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.68.7) சுந்தரர், பெருமானை மாயன் என்று அழைக்கின்றார். மறவன்=வேடன்; மறவனாக திரிந்த பெருமான், அறவனாக ஆலின் கீழ் அறம் உரைப்பவனாக இருக்கும் தன்மையை மாயன் என்று குறிப்பிட்டார் போலும். மிகவும் எளியவராக, அர்ஜுனனுக்கும் சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் காட்சி கொடுத்த பெருமான், தேவர்களுக்கு மிகவும் அரியவனாக நின்ற தன்மை குறித்து, மாயன் என்று சொல்கின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

மறவனை அன்று பன்றிப் பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த

அறவனை அமரர்க்கு அரியானை அமரர் சேனைக்கு நாயகனான

குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும்

நறை விரியும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே

திருவாசகம் செத்திலாப் பத்து பதிகத்தின் பாடலில் (8.23.7) சிவபெருமானை மாயனே என்று அழைக்கும் மணிவாசக அடிகளார், சிவபெருமானின் திருவடிகளை எப்படிப் பணிய வேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார். நமச்சிவாய என்று அவனது பஞ்சாக்கரத் திருநாமத்தை சொல்லியவாறே அவனைப் பணிய வேண்டும் என்று கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. தங்களை பேயன் என்றும் நாயேன் என்றும் தாழ்த்திக் கூறிக் கொள்வது அருளாளர்களின் இலக்கணம். அந்த வகையில் தான் மணிவாசகர் தன்னை பேயன் என்று குறிப்பிடுகின்றார். ஆனால் உண்மையில் பேயன் யார் என்பதும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. சிவபெருமானை மனத்தால் நினைத்து, நமது வாயால் நமச்சிவாய என்று அவனது திருநாமத்தைச் சொல்லி, உடலால் அவனை பணிந்து வணங்க வேண்டும். இவ்வாறு மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபடாதவர்கள் தான் பேயர்கள். திருபெருந்துறையில், தன்னை ஆட்கொண்டு, உபதேசமளித்து பின்னர் மறைந்து விட்டமையால் மாயன் என்று இறைவனை குறிப்பிடும் மணிவாசகர், திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கு பின்னர், எவ்வாறு இறைபணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதை நாம் அறிவோம். அவ்வாறு இருந்ததால் தான், பெருநெறி (முக்திநெறி) காட்டவேண்டும் என்று உரிமையுடன் சிவபிரானைக் கேட்கின்றார். இறைவன் தன்னை அவரது அருகில் அழைத்துக் கொள்ளாததால், தான் அவரிடமிருந்து தொலைவில் நின்று அவரது அருளினை வேண்டி அலறுவதாக கூறுகின்றார்,

மாயனே மறிகடல் விடம் உண்ட வானவா மனிகண்டத்து எம் அமுதே

நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன்னடி பணியாப்

பேயனாகிலும் பெருநெறி காட்டாய் பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனேயோ

சேயனாகி நின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே

திருமந்திரம் முதல் தந்திரம் யாக்கை நிலையாமை அதிகாரத்தின் பாடலில் திருமூலர், பெருமானை மாயன் என்று குறிப்பிடுகின்றார். நரகம் ஏழ்புக நாடினர் என்ற நமச்சிவாயப் பதிகத்தின் தொடர் நமது நினைவுக்கு வருகின்றது. இறைவன் தன்னையும் மறைத்துக் கொண்டு, பல விஷயங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியாமல் மறைப்பதால் கள்வன் என்ற பொருள் பட மாயன் என்று கூறினார் போலும். உருவம்=இறைவனின் திருமேனி; திருஞானசம்பந்தர், தனது முதல் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (1.1) இறைவனை கள்வன் என்று தானே அழைக்கின்றார். தன்னுடன் பிணைந்துள்ள வினைகளை உயிர் நீக்கிக் கொள்வதற்கு உதவி புரியும் வகையில், இறைவன் உயிரினை, தகுந்த உடலுடன் இணைக்கின்றான். அத்தகைய உடலுடன் கூடி இருக்கும் தருணத்தில் உயிர், இறைவனின் திருவுள்ளக் கருத்தினை புரிந்து கொண்டு, அவனது திருமேனியை வழிபட்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற வழியினை நாடிச் செல்லாமல், வேறு பல செயல்களில் ஈடுபடுகின்றது. இதன் விளைவாக, உடலை விட்டு உயிர் பிரியும் காலம் நெருங்கும் தருணத்தில் ஏதும் செய்ய முடியாமல், இயமனின் தூதர்களால் இழுத்துச் செல்லப்பட்டு ஏழு வகையான நரகத்தில் ஆழ்ந்து இடர் படுகின்ற தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இரௌரவம் என்ற நரகத்தின் ஏழு பகுதிகளாக, துவாந்தம், சீதம், வெப்பம், சந்தாபம், பதுமம், மகா பதுமம், கால சூத்திரம் என்பன கருதப் படுகின்றன. எனவே, நமது உயிர் உடலுடன் ஒட்டி இருக்கும் போதே, உடல் உயிரின் விருப்பத்தை நிறைவேற்றும் ஆற்றல் கொண்ட போதே, இறைவனை, பணிந்து வாழ்வினில் உய்வினை அடையும் வழியில் செல்ல வேண்டும் என்று திருமூலர் அறிவுரை கூறுகின்றார்.

மடல் விரி கொன்றையன் மாயன் படைத்த

உடலும் உயிரும் உருவம் தொழாமல்

இடர் படர்ந்து ஏழாம் நரகிற் கிடப்பர்

குடர் பட வெந்தமர் கூப்பிடுமாறே

திருமந்திரம் ஐந்தாம் தந்திரம் புறச்சமய தூடணம் அதிகாரத்தின் பாடலில், திருமூலர், இறைவனை, மனதினை ஒருமுகப்படுத்தி தன்னை நினைக்காத மனிதர்களுக்கு மாயனாக விளங்குகின்றார் என்று கூறுகின்றார். நந்தி என்ற சொல் சிவபெருமானை குறிக்கும். இறைவன் நமக்கு உடலைத் தந்து உதவியது,வினைகளை நுகர்ந்து கழித்து பாசங்களை நீக்கிக் கொண்டு அவனது திருவடிகளைச் சென்ற அடைய வேண்டும் என்பதற்காகத் தான். இதனை உணரும் மனிதர்கள், அடியார்களுக்கு மிகவும் அருகில் இருக்கும் இறைவன், அடியார் அல்லாத மனிதர்களுக்கு மிகவும் தொலைவில் உள்ளான் என்பதையும்,இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கிய அவன், தனது அடியார்களின் வினைகளைக் குறைப்பதால் நந்தி என்று அழைக்கப் படுகின்றான் என்பதையும் புரிந்து கொள்கின்றனர். எனவே, அத்தகைய அடியார்கள், சலனம் ஏதுமற்ற உள்ளத்துடன் இறைவனை தியானிக்க, அந்த இறைவன் அவர்களுக்கு தூய்மையான பொருளாக தான் இருப்பதை உணர்த்துகின்றான். அவ்வாறு அவனை நினைக்காமல், உலக மாயைகளில் ஆழ்ந்து கிடக்கும் மனிதர்களுக்கு அவன் மாயனாகத் தோன்றுகின்றான். அத்தகைய மனிதர்கள், பெருமான் தங்களுக்கு தகுந்த உடலை அளித்து உரிய கருவி கரணங்களையும் அளித்ததன் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் வாழ்க்கையை வீணாக கழிக்கின்றனர் என்று இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார்.

சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி

தூயன் துளக்கற நோக்க வல்லார்கட்கு

மாயன் மயக்கிய மானுடராம் அவர்

காயம் விளைக்கும் கருத்து அறியார்களே

திருமந்திரம் ஒன்பதாவது தந்திரம் தோத்திரம் அதிகாரத்தின் பாடலில், திருமூலர் பெருமானை, மாயன் என்று குறிப்பிடுகின்றார். மின்=ஒளி வீசும்;ஞானியரின் உடல் ஒளி வீசும் தன்மை படைத்தது என்று திருமூலர் இங்கே குறிப்பிடுகின்றார். அனைவரின் உடலிலும் இறைவன் உறைகின்றான். இதனை உணர்த்து அறிந்து இறைவனை தியானித்து போற்றும் மனிதர்கள் ஞானியாக மாறுகின்றனர். இதனை அறியாத மனிதர்கள், எத்தனை இடங்களில் தேடினாலும், அவர்களுக்கு இறைவன் அகப்படுவதில்லை. இந்த தன்மை பற்றியே பெருமான் மாயன் என்று திருமூலர் இங்கே கூறுகின்றார். எத்துணையோ பேர் எத்துணையோ வகையில் காண முயன்றும், அவர்கள் அனைவர்க்கும் காணப்படாது ஓளிந்து நிற்கும் கள்வனாகிய சிவனை, எப்படியும் கண்டுவிட வேண்டும் என்று பலரும் அவன் ஒளிந்திருக்கும் இடத்தினை அறியாமல், மனமாகிய தேர் மீது ஏறிக்கொண்டு நெடுந்தூரம் சென்றும், காண முடியாமல் வருந்துகின்றார்கள். தானும் அவர்களைப் போன்று எங்கெங்கோ இறைவனைத் தேடியும் அவனை காண முடியாமல் வருந்தியதாக குறிப்பிடும் திருமூலர், அவன் ஓளிந்து கொண்டிருக்கும் இடம் தனது உடல் தான் என்பதை புரிந்து கொண்டு, அங்கே சென்று அவனைத் தேடிக் கண்டு கொண்டேன் என்று கூறுகின்றார்.

மாயனை நாடி மன நெடுந்தேர் ஏறிப்

போயின நாடு அறியாதே புலம்புவர்

நேயமும் நாடும் திரிந்து எங்கள் நாதனைக்

காய மின் நாட்டிடைக் கண்டு கொண்டேனே

இந்த கருத்தினைத் தான் அப்பர் பிரான், தனது அங்கமாலை பதிகத்தின் கடைப் பாடலில் (4.9.12) கூறுகின்றார். திருமாலும் நான்முகனும் தேடியும் காணமுடியாத தேவனைத் தேடி, அவன் என் நெஞ்சத்தினுள்ளே இருக்கின்றான் என்ற செய்தியை அறிந்து கொண்டேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

தேடிக் கண்டு கொண்டேன் — திரு

மாலும் நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை என்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்

மூத்த திருப்பதிகத்தின் பாடலில் (11.2.19) காரைக்கால் அம்மையார் பெருமானை மாயன் என்றே குறிப்பிடுகின்றார். வேய்கள்=மூங்கில் மரங்கள்; நன்கு முற்றிய மூங்கில் மரத்தின் உள்ளே முத்துகள் இருப்பதாக பண்டைய நாட்களில் நம்பப் பட்டது. ஓயும்=வருந்தி இளைத்தல்; பகுவாய்=பிளந்த வாய்;மருட்சி=வியப்பு; முற்றிய மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்கள் நான்கு புறங்களிலும் சிதறிக் கிடக்கவும், சுடலையுள் ஓய்ந்த நிலையில் வெளிறிக் கிடக்கும் கூந்தல் உடையதும் அலறுகின்ற பிளந்த வாயினை உடையதும் ஆகிய பேய்கள் ஒன்று கூடி பிணங்களைத் தின்று அணங்கு ஆடுகின்ற இடுகாட்டினில் சிவபெருமான் நடனம் ஆட, உமையம்மையார் மருண்டு நோக்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வேய்கள் ஓங்கி வெண் முத்து உதிர வெடிகொள் சுடலையுள்

ஓயும் உருவில் உலறு கூந்தல் அலறு பகுவாய்

பேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டில்

மாயன் ஆட மலையான் மகளும் மருண்டு நோக்குமே

பொன்வண்ணத் திருவந்தாதி பதிகத்தின் கடைப் பாடலில் (11.6.100) சேரமான் பெருமாள் நாயனார், சிவபெருமானை மாயன் என்று அழைக்கின்றார். துறக்கம்=வீடு பேறு; மாயங்களில் வல்லவனும் நீலகண்டன் என்று அழைக்கப் படுபவனும், நீண்டு வளர்கின்ற சடையை உடையவனும் ஆகிய பெருமானுக்கு அடிமையாக உள்ளோர், வீடுபேறு அடைவார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை; மிகுந்த சீற்றம் கொண்டு உலவும் யானைகள் நிறைந்ததும் பொன் மயமானதும் ஆகிய கயிலாய மலையின் அருகே செல்லும் காக்கைகளும் பொன்னின் நிறத்தில் மின்னுவது போன்று, பெருமானைச் சார்ந்திருக்கும் அடியார்களும் முக்தி நிலை அடையப் பெற்று, என்றும் அழியாத மகிழ்ச்சியில் ஆழ்ந்து, சிவபெருமானுடன் கூடி இருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மாயன் நன் மாமணி கண்டன் வளர் சடையாற்கு அடிமை

ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே

காய்சின ஆனை வளரும் கனக மலை அருகே

போயின காக்கையும் அன்றே படைத்தது பொன் வண்ணமே

பொழிப்புரை:

வேதங்கள் உணர்த்தும் உண்மையான மெய்ப்பொருளாகவும், உலகமாகவும், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களாகவும், உலகினில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருக்கும் பெருமான், சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று சுடர்களாகவும், நீர் தீ முதலான பஞ்ச பூதங்களாகவும் இருக்கின்றான். இவனே அனைவரிலும் முதலானவன், தலையானவன் என்று உலகத்தவர் புகழ்ந்து ஏத்த, வளமான கடைமுடி தலத்தில் உறையும் இறைவன் ஆவான்.,

பாடல் 6:

அருத்தனை அறவனை (1.111) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 402)

பட அரவு ஏர் அல்குல் பல் வளைக்கை

மடவரலாளை ஒர் பாகம் வைத்துக்

குடதிசை மதியது சூடு சென்னிக்

கடவுள் தன் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

குடதிசை=மேற்கு; வளர்பிறை பிறைச் சந்திரன் மேற்கு திசையில் தோன்றுவதால் குடதிசை மதி என்று குறிப்பிட்டதாக அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர். சந்திரன் எப்போதும் ஒரே திசையில் தோன்றுவதில்லை. மாதத்தில் பாதி நாட்கள் ஒரு திசையிலும் மிகுதியான நாட்களில் வேறொரு திசையிலும் தோன்றுவதை நாம் காண்கின்றோம். குறைந்த கலைகளைக் கொண்ட சந்திரன் மேற்கே உதிப்பதை பெரும்பாலும் காண்கின்றோம். மேற்கு திசையில் உதிக்கும் வளர் பிறைச் சந்திரன் என்று குறிப்பிட்டு, ஒற்றைப் பிறைச் சந்திரனாக அழிந்த நிலையில் பெருமானிடம் சரண் அடைந்த பிறைச் சந்திரன், வளரத் தொடங்கிய நிலையினை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். பட அரவு=புடைத்த படத்தினை உடைய பாம்பு;

பொழிப்புரை:

பாம்பின் புடைத்த படம் போன்று புடைத்து அழகாக விளங்கும் மார்பகங்களைக் கொண்டவளும், பல வகையான வளையல்களைக் கொண்ட கைகளை உடையவளும் இளமையும் அழகும் சேர்ந்து பொருந்தியவளும் ஆகிய உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், மேற்கு திசையினில் உதிக்கும் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ளவனும் ஆகிய இறைவன் உறைவது வளம் மிகுந்த கடைமுடியாகும்.

பாடல் 7:

அருத்தனை அறவனை (1.111) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 402)

பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல்

அடி புல்கு பைங்கழல் அடிகள் இடம்

கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்

கடி புல்கு வளநகர் கடைமுடியே

விளக்கம்:

பொடி=திருநீறு; புல்குதல்=பொருந்துதல்; கடி=நறுமணம்; புரிபுல்கு=முறுக்கேற்றப்பட்ட; பஞ்சினைத் திரித்து நூல் நூற்று முறுக்கேற்றி பூணூல் செய்யப்படுவதை இங்கே திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

திருநீறு பூசப்பட்ட மார்பினில் ஒன்பது புரிகள் கொண்ட பூணூல் பொருந்த இருப்பவனும், தனது திருவடிகளில் வீரக்கழல் பொருந்தியவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாவது, கொடிகளில் பூத்த மலர்களுடன் குளிர்ந்த சுனைகளில் ஊறுகின்ற நீரின் மணமும் கலந்து கமழும் வளமை உடைய கடைமுடி தலமாகும்.

பாடல் 8:

அருத்தனை அறவனை (1.111) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 402)

நோதல் செய்து அரக்கனை நோக்கழியச்

சாதல் செய்து அவன் அடி சரண் எனலும்

ஆதரவு அருள் செய்த அடிகளவர்

காதல் செய் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

ஆதரவு=அன்புடன் செய்யப்படும் உதவி; நோதல் செய்து=வருத்தி; நோக்கு=அருட்பார்வை: அழிய= இல்லாத நிலை ஏற்பட; அன்பே உருவான பெருமான் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்பவன். பெருமானை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை தனது செருக்கினால் மறந்த அரக்கன், பெருமான் உறையும் மலை என்ற சிறந்த தன்மையையும் புரிந்து கொள்ளாமல், அந்த மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்து அந்த முயற்சியால் உமையன்னை அச்சம் கொள்ளுமாறு மலையினை அசைத்தான். அத்தகைய செய்கையால் பெருமானின் அருட்பார்வையினை அரக்கன் இழந்ததுமன்றி, பெருமானின் கால் விரல் அழுத்தத்தால் கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நெருக்குண்டான். இந்த நிலையினை நோக்கழிய அரக்கனை நோதல் செய்து என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சாதல்-வலிமை அழிந்தவன்;

பொழிப்புரை:

செருக்கு மிகுந்த தனது செயலால், இறைவனது அருட்பார்வையை இழந்த அரக்கன் இராவணன், தான் கயிலை மலையினை பேர்த்து எடுக்க செய்த முயற்சியின் விளைவாக, கயிலை மலையின் கீழே அகப்பட்டு நெருக்குண்டு தனது வலிமை முழுவதும் அழிந்த நிலையில், பெருமானே உனது திருவடிகளே சரணம் என்று இறைஞ்சி சாம கானம் பாடலும், அரக்கன் செய்த தவறினை பொருட்படுத்தாது அன்புடன் அரக்கனுக்கு பல வகையிலும் உதவி செய்த பெருமான், மிகுந்த விருப்பத்துடன் உறைவது வளம் மிகுந்த கடைமுடி தலமாகும்.

பாடல் 9:

அருத்தனை அறவனை (1.111) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 402)

அடிமுடி காண்கிலர் ஓர் இருவர்

புடை புல்கி அருள் என்று போற்றி இசைப்பச்

சடையிடைப் புனல் வைத்த சதுரன் இடம்

கடை முடி அதன் அயல் காவிரியே

விளக்கம்:

சதுரன்=சாமர்த்தியம் மிகுந்தவன்; வியத்தகு திறமை உடையவன்; புடைபுல்கி=அணுகி அருகில் சென்று; தங்களது செருக்குற்ற நிலையிலிருந்து விலகி அன்பினால் இறைவனை அணுகி அருகில் சென்று; மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப் படும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் திகைத்து நிற்க, நீண்ட நெடுந்தழலாக இறைவன் நின்றதும், மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த அகன்ற நீர்ப்பரப்பினைக் கொண்ட கங்கை நதியினை சடையில் தேக்கி வைத்ததும், வியத்தகு செயல்கள் அல்லவா. எனவே சதுரன் என்று மிகவும் பொருத்தமாக இறைவனை திருஞான சம்பந்தர் இங்கே அழைக்கின்றார்.

பொழிப்புரை:

தங்களது வலிமையின் மீது செருக்கு கொண்டு, நீண்ட தழலாய் நின்ற இறைவனின் திருவடியை திருமுடியை கண்டு விடுவோம் என்று முயற்சி செய்த திருமாலும் பிரமனும், தங்களது முயற்சி வீணான பின்னர் பெருமானின் வலிமையை உணர்ந்து, அன்புடன் அவரை அணுகி அவரது அருகில் சென்று அருள் புரிவாய் என்று இறைஞ்சி அவனைப் போற்றி இசைத்து நின்றனர். இவ்வாறு இருவரினும் உயர்ந்து நிற்பவன் தான், என்று உலகுக்கும் அவர்கள் இருவருக்கும் உணர்த்திய இறைவன், தனது சடையின் இடையே கங்கை நதியைத் தேக்கி வைத்த திறமையாளன் ஆவான். அத்தகைய சதுரன் உறையும் இடமாகிய கடைமுடி தலத்தின் அருகே காவிரியாறு ஓடுகின்றது.

பாடல் 10:

அருத்தனை அறவனை (1.111) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 402)

மண்ணுதல் பறித்தலும் மாயமிவை

எண்ணிய கால் அவை இன்பம் அல்ல

ஒண்ணுதல் உமையை ஒர் பாகம் வைத்த

கண்ணுதல் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

மண்ணுதல்=நீக்குதல், கழுவுதல், தலைமுடியினை மழித்தல் என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது. பறித்தல்=பிடித்து இழுத்தல்; தங்களது தலைமுடிகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொள்ளுதல் சமணர்களின் செயலாகும். அடிக்கடித் தங்களது தலையில் உள்ள முடியினை மழித்துக் கொள்ளுதல் புத்தர்களின் செயலாகும். இந்த இரண்டு செயல்களும் ஒரு மாயத் தோற்றத்தை அவர்களும் இருவரும் ஒழுக்க நெறியுடன் இருப்பது போன்ற தோற்றத்தை அளித்தாலும், திருஞான சம்பந்தரது காலத்தில் வாழ்ந்து வந்த சமண மற்றும் புத்தத் துறவிகள், அரசன் தங்களின் மீது வைத்திருந்த மதிப்பினை தவறாக பயன்படுத்தி வந்தமையால், அவர்களது புறத் தோற்றத்தைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இங்கே அறிவுரை கூறுகின்றார்.

பொழிப்புரை:

தங்களது தலைமுடியினை முற்றிலும் மழித்துக் கொண்டுள்ள புத்தர்கள், தங்களது தலை முடியினை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டுள்ள சமணர்கள் ஆகிய இவர்களது புறத் தோற்றத்தை கண்டு. ஒழுக்க நெறியினை உடையவர்கள் என்று அவர்களை நினைத்து, உலகத்தவரே நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். அவர்களது உண்மையான தோற்றம் மெய்யான துறவல்ல. ஆராய்ந்து பார்த்தால் அவர்களது நெறிகள் உண்மையான அழியாத இன்பத்தை விளைவிக்கும் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லாது என்பதை உணரலாம். எனவே அவர்கள் காட்டும் நெறியினைத் தவிர்த்து பெருமானை உணர்த்தும் சைவ நெறியினைச் சார்ந்து உய்வினை அடைவீர்களாக. ஒளிவீசும் நெற்றியினை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான், தனது நெற்றியினில் கண் உடைய பெருமான், உறையும் தலம் வளம் நிறைந்த கடைமுடி தலமாகும்.

பாடல் 11:

அருத்தனை அறவனை (1.111) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 402)

பொன் திகழ் காவிரிப் பொருபுனல் சீர்

சென்றடை கடைமுடிச் சிவனடியை

நன்றுணர் ஞானசம்பந்தன் சொன்ன

இன் தமிழ் இவை சொல இன்பமாமே

விளக்கம்:

பொன் திகழ்=அழகுடன் விளங்கும்; பொரு புனல்=கரையில் மோதுகின்ற அலைகள்;

பொழிப்புரை:

அழகுடன் திகழ்ந்து அலைகள் இரு கரைகளிலும் மோதும் வண்ணம் ஓடிவரும் சிறந்த காவரியாற்றின் கரையில் அமைந்துள்ள கடைமுடி தலத்தினை சென்றடைந்து ஆங்கே உறையும் பெருமானின் திருவடிகளின் சிறப்பினை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிமையான தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினையும் ஓதும் அடியார்களுக்கும் இன்பம் உண்டாகும்.

முடிவுரை:

வினவுதிரேல் என்று குறிப்பிட்டு உலகத்தவரின் கேள்விக்கு விடை அளிக்கும் முகமாக இந்த பதிகத்தின் முதல் பாடல் அமைந்துள்ளது. அதே போன்று மற்ற பாடல்களும் இறைவன் அமரும் இடம் கடைமுடித் தலம் என்று உலகத்தவர்க்கு தலத்தின் இறைவனின் தன்மையையும் எடுத்துச் சொல்வதாக கொள்ளவேண்டும். உண்மையான மெய்ப்பொருளை அணுக வேண்டும் என்று விரும்பும் மனிதர்களுக்கு, சிவபெருமானே உண்மையான ஒப்பற்ற மெய்ப்பொருள் என்று பதிகத்தின் முதல் பாடலில் திருஞான சம்பந்தர் அடையாளம் காட்டுகின்றார். அவ்வாறு அடையாளம் காட்டப்பட்ட பெருமான் எல்லையற்ற கருணையும் ஆற்றலும் உடையவன் என்பதை, சந்திரன் மறுவாழ்வு பெற்றதை குறிப்பிட்டு நமக்கு உணர்த்துகின்றார். இத்தகைய பெருமானை பலரும் வணங்கிப் பயன் அடைவதை மூன்றாவது பாடலில் உணர்த்தி, நான்காவது பாடலில் பண்டைய நாளில் தேவர்கள் உட்பட அனைவரும் அழியும் வண்ணம் பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினைத் தான் உட்கொண்டு உலகினை காத்த கருணையாளன் என்று உணர்த்துகின்றார். அங்கிங்கெனாதபடி உலகெங்கும் அனைத்துப் பொருட்களிலும் கலந்துள்ள பெருமான் என்று அவனது சர்வ வியாபகத் தன்மை ஐந்தாவது பாடலில் விளக்கப் படுகின்றது. தனது திருவருளின் அம்சமாக விளங்கும் அன்னையுடன், உலகத்தவர்க்கு அருள் புரியும் நோக்கத்துடன் கடைமுடித் தலத்தினில் பெருமான் உறைகின்றார் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். பெருமானின் அழகிய தோற்றம் ஏழாவது பாடலில் கூறப்படுகின்றது. பகைவனுக்கும் அருளும் கருணை நெஞ்சத்தை உடையவன் என்று எட்டாவது பாடலில் உணர்த்தும் திருஞான சம்பந்தர் ஒன்பதாவது பாடலில் வியத்தகு ஆற்றலை உடையவன் பெருமான் என்று எடுத்துக் காட்டுகளுடன் கூறுகின்றார். பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்களின் புறத் தோற்றத்தைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று அறிவுரை கூறுகின்றார். இந்த அறிவுரை இன்றும் பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம். மாற்று மதத்தவர்களின் போதனைகள் மற்றும் செயல்பாடுகள், இந்து மதத்தினை அழிக்கும் நோக்கத்துடன் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டு அவர்களது வலையினில் வீழாமல் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் இந்த பாடல் அமைந்துள்ளது. அவர்களது புறத் தோற்றத்தைக் கண்டு நாம் ஏமாறாமல் இருக்கும் வண்ணம் அறிவுரை கூறப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடல், பதிகத்தின் பத்து பாடல்களையும் முறையாக ஓதும் அடியார்கள் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்துடன் வாழ்வார்கள் என்று கூறுகின்றது. உண்மையான ஒப்பற்ற பொருள் சிவபெருமான் ஒருவன் தான் என்பதை உணர்ந்து, அவனை முழு மனதுடன் வழிபட்டு, மாற்று மதத்தவரின் போதனைகளில் மயங்காது தொடர்ந்து பெருமானை வழிபட்டு, பதிகங்கள் ஓதி இம்மையிலும் மறுமையிலும் இன்பமுடன் வாழ்வோமாக.



Share



Was this helpful?