இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


போகர்


இந்த உலகமக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே. நீ உன் வழியில் செல், என்று மூத்த சித்தர்கள் கூறினர். போகருக்கு மனம் கேட்கவில்லை. கூடாது. இந்த மக்கள் அழியக்கூடாது. உலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்டும்... போகரின் வேட்கை அதிகரித்தது. போகா! நீ தெய்வத்தின் கட்டளைகளுக்கு புறம்பாகச் செல்கிறாய். இது நல்லதல்ல. இறந்தவர்களை எழுப்பும் சஞ்சீவினி மந்திரத்தை தவிர மற்றவற்றை கற்றுக் கொள். அதுதான் உனக்கு நல்லது, என்று சித்தர்கள் சொன்னதை அவர் செவியில் போட்டுக் கொள்ளவில்லை. கடும் தவம் செய்தேனும் அந்த மந்திரத்தைக் கற்றே தீருவேன், அல்லது இறையருளால் அதை பெற்றே தீருவேன் என்ற உறுதி எடுத்துக் கொண்டார். இந்த போகசித்தர் சீனாவில் பிறந்தவர். தமிழகம் இவரது முன்னோரின் பூர்வீகம் என்றாலும், அவர்கள் பிழைப்புக்காக சீனா சென்று விட்டனர். இவரது பெற்றோர் சீனாவில் சலவைத்தொழில் செய்து வந் தனர்.

அந்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப இவருக்கு போ-யாங் என பெற்றவர்கள் பெயர் வைத்தனர். மற்றொரு கருத்தின்படி, போகர் தமிழகத் தில் தான் பிறந் தார் என்றும், இவரது பெற்றோர் இவரது பிறப்புக்கு பிறகே சீனா சென்றனர் என்றும், அங்கே போ-யாங் என்ற சீனரின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. பல்லாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் என்பதால் எதையும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. அகஸ்தியர் பனிரெண்டாயிரம் என்ற நூலில் வரும் பாடலில், சித்தான சித்து முனி போகநாதன் கனமான சீனப்பதிக்கு உகந்த பாலன் என சொல்லப்பட்டுள்ளதில் இருந்து, இவரது சீனத்தொடர்பை தெரிந்து கொள்ள முடிகிறது. சீனாவில் குறிப்பிட்ட காலம் தங்கியிருந்த இவர், இவரது பெற்றோர் மறைவுக்கு பிறகு தாயகம் வந்தார். மேருமலை, இமயமலையில் தங்கியிருந்த சித்தர்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. இவரது முக்கிய நோக்கம் பாரதத்தின் மலைப்பகுதிகளில் மக்களின் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கிடக்கும் செல்வத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிப்பதும், நோய்கள் தாக்கியோரை மீண்டும் அவை தாக்காமல் இருக்க வழி செய்வதுமாகும்.

இமயமலையில் தவம் செய்த முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும் அவர் தங்கம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். பொருள் என்பது தக்கவர்களிடம் இருக்க வேண்டும். முனிவர்களுக்கு அதிகப் பொருள் தேவையில்லை. பொருளை வெறுக்கும் அவர்கள், நிச்சயமாக உலக மக்களின் நன்மைக்கே அதைச் செலவிடுவார்கள் என்பதால் போகர் இந்த ஏற்பாட்டைச் செய்தார்.இமயமலையில் அவர் தங்கியிருந்த போது பல மாணவர்கள் அவரைச் சந்தித்தனர். அவரது திறமையை அறிந்த அந்த மாணவர்கள் போகரின் சீடர்கள் ஆயினர். அவர்களில் புலிப்பாணி, கருவூரார், சட்டைமுனி, இடைக்காடர் உள்ளிட்ட 63 பேர் இருந்தனர். மனிதர்களை ஒரே ஒரு ஆணவ குணம் இன்று வரை வாட்டி வதைக்கிறது. அதாவது, தனக்கு தெரிந்த நல்ல விஷயங்களை பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த போக்கை போகர் அறவே வெறுத்தார். தனக்கு தெரிந்த நல்ல சித்து வேலைகளை தன் சீடர்கள் 63 பேருக்கும் சொல்லிக் கொடுத்து, பாரததேசத்திலுள்ள மக்கள் அனைவரும் அதனால் பயன்படும் ஏற்பாட்டைச் செய்தார். வானில் பறப்பது, நீரில் மிதப்பது, காயகல்பம் எனப்படும் உடலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைத்திருக்கும் மருந்துகளைத் தயாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களை சீடர்களுக்கு கற்றுத் தந்திருந்தார்.

அவர்களுக்கு தேர்வும் வைத்தார். தேர்வில் அனைவரும் வெற்றி பெற்றனர்.பின்னர், அந்த சீடர்கள் தேசத்தின் பல திசைகளுக்கும் சென்றனர். தங்கள் சித்துவேலைகளை மக்களிடம் கற்றுக் கொடுக்க முயன்றனர். அறியாமையில் தவித்த மக்களோ, அவற்றை அவர்களிடம் கற்றுக் கொள்ள முன்வரவில்லை. இதையறிந்த போகர் வருத்தப் பட்டார்.இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம், அவர்கள் சித்து வித்தைகளை கற்று நன்மை பெற வேண்டும் என உறுதியெடுத்தார். இமயமலையில் பல மூத்த சித்தர்களையும் சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்த போது, இந்தக் கதையின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ள உரையாடல் சித்தர்களுக்கும், போகருக்கும் இடையே நிகழ்ந்தது. சஞ்சீவினி மந்திரத்தைக் கற்றுத்தர மூத்த சித்தர்கள் மறுத்துவிட்டதால், உலக மக்களின் சாவுப்பிணியை தீர்க்க முடியாமல் போனது குறித்து போகர் வருந்தினார்.

மக்களைக் காப்பாற்ற முடியாத நான்உலகில் வாழ்ந்து பயனில்லை. நான் சாகப்போகிறேன் எனச் சொல்லி தரையில் புரண்டு அழுதார்.மற்ற சித்தர்கள் அவரைத் தேற்றினர்.போகா, நீ எடுத்த முடிவு சரியல்ல. நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக, உயிரை விட்டால், உலகில் யாருமே மிஞ்சமாட்டார்கள். நினைப்பது எதுவும் நடப்பதில்லை. மரணம் என்பது உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் வகுத்த நியதி. இறைநியதியை மீறுவது நல்லதல்ல. மேலும், நீ அவரது கோபத்திற்கு ஆளாவாய். உன் தற் கொலை எண்ணத்தை மாற்றிக் கொள். நீ காயகல்பம் உள்ளிட்ட மருத்துவ முறைகளைக் கற்றவன். அதைக் கொண்டு, மக்களுக்கு தீர்க்காயுள் தர முயற்சிக்கலாமே தவிர, நிரந்தர வாழ்வு தரும் எண்ணத்தை விட்டு விடு. நடக்காததைப் பற்றி சிந்திக்காதவனே ஞானி, என்று அறிவுரை கூறினர்.போகர் அரை மனதுடன் அங்கிருந்து கிளம்பி மேருமலைக்குச் சென்றார். அங்கே காலங்கிசித்தரின் சமாதி இருந்தது. அதை வணங்கியபோது, அவர் முன்னால் பல சித்தர்கள் தோன்றினர்.போகரே! நாங்கள் காலங்கி சித்தரின் சீடர்கள். ராமன், பாண்டவர்கள், திருதராஷ்டிரன், அரிச்சந்திரன், ராவணன் போன்றவர்களெல்லாம் இப்போது நாங்கள் தங்கியிருக் கும் இடத்திற்கு வந்து, தாங்கள் படித்த வித்தைகளை சோதித்து பார்த்தனர். அந்தக்காலம் முதலே இங்கு தங்கியிருக்கிறோம். உனக்கு என்ன வேண்டும்? என்றனர்.

உலகத்தில் பிறந்த எவரும் இறக்காத சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்வதே தனது நோக்கம் என்பதை போகர் அவர்களிடம் பணிவுடனும், கருணை பொங்கவும் கேட்டார். அந்த சித்தர்கள் போகரிடம், மகனே! இதோ, அங்கே பார் என ஓரிடத்தைச்சுட்டிக்காட்டினர். போகர் வியந்தார். அங்கே ஏராளமான நவரத்தினங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. இன்னொரு இடத்தை அவருக்கு காட்டினர். அங்கே தங்கம் குவிந்து கிடந்தது. எங்கும் பிரகாச மயம்! போகரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்நேரத்திலும் மக்களைப் பற்றிய சிந்தனையே அவர் உள்ளத்தில் எழுந்தது. சாதாரண மனிதனாக இருந்தால் என்ன செய்திருப்பான்? இது அத்தனையையும் வெட்டியெடுத்து, உலகின் முதல் பணக்காரன் என்ற அந்தஸ்தைப் பெற்று, பெருமையடிக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருப்பான். போகரோ, அந்த சித்தர்களிடம், சித்தர்களே! இது இங்கே வீணாகக் கிடக்கிறதே.

உலக மக்கள் அனைவருக்கும் இதை அள்ளிக்கொடுத்தாலும் கூட, மிஞ்சும் போல தெரிகிறதே. எல்லோரும் வளமுடன் வாழ்வார்களே! இது இங்கிருந்தும் மக்களுக்கு கொடுக்காமல் வீணடிக்கிறீர்களே! என்றார். சித்தர்கள் வேதனையுடன் சிரித்தனர். போகா! எதற்காக இந்த மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நம்மைப் போன்ற ஆன்மிக சிந்தனையுள்ளவர்களை அவர்கள் மதிப்பதும் இல்லை; இறையருளை நாடுவதுமில்லை. நிஜமான இன்பத்தை பற்றி நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை. அந்த நன்றிகெட்ட ஜனங்களுக்கு இதெல்லாம் போய் சேர வேண்டும் என எண்ணுகிறாயே! அவர்கள் இந்த செல்வத்தை அனுபவிக்க தகுதியில்லாதவர்கள், என சொல்லிவிட்டு, போகரின் பதிலுக்கு காத்திராமல் மறைந்தனர்.ஐயையோ! இந்த சித்தர்கள் திடீரென மறைந்து விட்டார்களே! இந்த செல்வத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில், அவர்களை நிரந்தரமாக வாழ வழி செய்யும் மந்திரம் பற்றி பேச மறந்து விட்டேனே! இந்த செல்வம் தான் மனங்களை எப்படி மாற்றி விடுகிறது! கொண்ட கடமையையே மறக்கச் செய்து விடுகிறதே, என வருந்திய போகரை நோக்கி ஏதோ ஒரு ஒளி பாய்ந்தது. அது அவரது கண்களை கூசச் செய்தது.

போகர் தன் கைகளை மடக்கி, கண்களை மறைத்தபடியே, ஒளி வந்த திசையை நோக்கினார். ஆள் அளவு உயரமுள்ள ஒரு புற்றில் இருந்து அந்த ஒளி பாய்ந்து வந்தது. அந்த புற்றை நோக்கி நடந்தார் போகர். புற்றுக்குள்ளிருந்து மூச்சு வந்தது. இது பாம்புகளின் மூச்சு போல இல்லையே! யாரோ ஒருவர் புற்றுக்குள் அமர்ந்திருக்கிறார் போல் தெரிகிறதே, என கணித்த அவர், உள்ளிருப்பவர் மகா தபஸ்வியாகத்தான் இருக்க வேண்டும். இவர் மூலமாக சஞ்சீவினி மந்திரத்தை கற்று விடலாம் என்ற ஆர்வத்தில், அவர் வெளியே வரும் வரை காத்திருப்பது என முடிவு செய்து, உள்ளிருக்கும் முனிவரை மனதில் எண்ணி தவம் செய்யத் தொடங்கி விட்டார்.இவரது தவத்தின் வெப்பம் உள்ளிருந்த முனிவரைத் தாக்கியது. அவர் புற்றில் இருந்து வெளியே வந்தார். அந்த முனிவர் கடந்த காலத்தில் நிகழ்ந்ததையும், எதிர்காலத்தில் நிகழப்போவதையும் அறிந்த மகாஞானி. அவர் தவமிருந்த போகரை எழுப்பி, போகரே! என ஆரம்பித்ததும், சுவாமி! என் பெயர் தங்களுக்கு எப்படி தெரியும்? என வியப்புடன் கேட்டார். எல்லாம் அறிந்த அந்த சித்தர் சிரித்துக் கொண்டார். போகரே! தவ சித்தர்கள் அனைவருக்கும் ஒருவரை அடையாளம் கண்டுபிடிப்பது கடினமல்ல, என்ற சித்தரிடம், சித்தரே! தாங்கள் எவ்வளவு காலமாக இங்கே தவம் செய்கிறீர்கள்? என்றார் போகர். இப்போது எந்த ஆண்டு நடக்கிறது? என சித்தர் கேட்கவே, சித்தரே! இது கலியுகம் துவங்கி சில ஆண்டுகள் ஆகிறது, என்றதும், ஆஹா...காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.

நான் துவாபராயுகத்தின் துவக்கத்தில் இருந்து இங்கே தவமிருக்கிறேன். ஒரு யுகமே முடிந்து விட்டதா? என்ற சித்தர், போகனே! உன் குறிக்கோளையும் நான் அறிவேன். முதலில், அதோ தெரிகிறதே! அந்த மரத்திலுள்ள பழத்தை சாப்பிட்டு பசியாறு. பிறகு பேசலாம், என்று சித்தர் சொன்னதும், போகர் அந்த மரத்தை நோக்கி நடந்தார். அதிலுள்ள கனியைப் பறித்து சாப்பிட்டதும், எங்கோ மிதப்பது போல் இருந்தது. தன்னை மறந்த நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து விட்டார். புற்றில் இருந்து வந்த சித்தர், அவரிடம் ஒரு மூலிகை பொம்மையைக் கொடுத்து, போகா! இந்த பதுமை உன் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும், என சொல்லிவிட்டு, மீண்டும் புற்றுக்குள் போய் விட்டார். போகர் அந்த பதுமையிடம், இறப்புக்குப் பின் உயிர் வாழும் வித்தை பற்றி கேட்டார். அந்தப் பொம்மையோ, பிறந்தது முதல் இறக்கும் வரை உள்ள விஷயங் களை பேசியதே அன்றி, அந்த வித்தையும், அதற்குரிய மூலிகைகளும் தனக்குத் தெரிந்தாலும், உலக நியதிப்படி அதைச் சொல்லித் தர முடியாது எனச் சொல்லி மறைந்து விட்டது.எவ்வளவு முயன்றாலும், இந்த ஒரு விஷயம் மட்டும் நடக்க மறுக்கிறதே என கலங்கிய போகசித்தர், தன் முயற்சியை விட்டாரில்லை. முயற்சி உடையவனுக்கு அவன் முயலுவது கிடைக்காமல் போனதில்லை. சித்தருக்கும் அந்த நல்ல நாள் வந்தது.அவர் ஒருமுறை, மேருமலை உச்சியில் ஏறினார். அந்த மலையில் சித்தர்கள் பலர் வசித்து, பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தியதன் விளைவாக தங்கப் பாறைகள் நிறைந்ததாக இருந்தது. ஓரிடத்தில், தங்கத்தின் ஒளி கண்ணைப் பறிக்கவே, அதன் பிரகாசம் தாங்க முடியாமல், போகர் தடுமாறி கீழே விழுந்தார். அவரை சில சித்தர்கள் தாங்கிப் பிடித்தனர்.

போகனே! நாங்கள் நான்கு யுகங்களாக இங்கே வசிப்பவர்கள். உலகை வாழ வைக்க வேண்டுமென்ற உன் விடாமுயற்சியைப் பாராட்டுகிறோம். வா எங்களுடன்!இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மூலிகை இந்த மலையிலுள்ள ஒரு குகைக்குள் இருக்கிறது. அதை உனக்கு காட்டுகிறோம். சஞ்சீவினி மந்திரத்தையும் போதிக்கிறோம், என்றதும், போகரின் கண்கள் மகிழ்ச்சியால் விரிந்தன. குகைக்குள் சென்றதும், பச்சை பசேலென பல மூலிகைச் செடிகள் காணப்பட்டன. அவற்றில் யாரும் கை வைக்காததாலும், தூசு பட வழியே இல்லாததாலும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தெய்வத்தன்மை வாய்ந்ததாலும் பளபளவென மின்னின. போகரை அழைத்துச் சென்ற மற்ற சித்தர்கள் அந்த மூலிகைகளின் தன்மை, அதைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை பற்றி விளக்கமாக எடுத்துச்சொன்னார்கள். பிறந்த பலனை அடைந்த மகிழ்ச்சியில் போகரின் நெஞ்சு ஆனந்தத்தால் விம்மியது. உணர்ச்சிக்கடலாக மாறிப்போன அவர், தனக்கு தகவல் தந்த சித்தர்களின் பாதங்களில் பணிந்து வணங்கி, இனி, இவற்றைக் கொண்டு உலகில் இறப்பில்லாமல் செய்வேன் எனச் சொல்லி அவர்களிடம் விடை பெற்றார். மனிதனுக்கு கிடைக்காத ஒன்று கிடைத்து விட்டால், அவன் ஆனந்தக் கூத்தாடுகிறான்.

ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான். போகரைப் போன்ற சித்தர்கள் கூட, இதற்கு விதிவிலக்கல்ல போலும்! மிதமிஞ்சிய கவலையும் ஆபத்து, மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் ஆபத்தான விஷயம் தான்! எதற்கும் ஒரு அளவு வேண்டும். போகர், தனக்கு கிடைக்காத ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் குகையை விட்டு வெளியே வந்து துள்ளித் துள்ளி குதித்தார். ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்! அவர் ஆடிய ஆட்டத்தில் பூமியே அதிர்ந்தது. அப்போது, அப்பகுதியில் தவமிருந்த கண்ணுக்குத் தெரியாத சித்தர்கள் பலர் அவர் முன்பு தோன்றினர். போகா! என்ன இது! மகிழ்ச்சியின் போது தான் மனிதன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். உன் நடனத்தால், கலையாத எங்கள் தவத்தைக் கலைத்து விட்டாய். பல யுகங்களாக நாங்கள் செய்த தவம் வீணாகிப் போய் விட்டது. இதற்கு கடும் தண்டனையை உனக்கு அளிக்கப் போகிறோம். ஒருவர் செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும். எங்கள் நீண்ட கால தவம் எப்படி பயனற்றுப் போனதோ, அதே போல நீ இங்கே பார்த்த சஞ்சீவினி மூலிகைகளை பயன்படுத்தி உயிர்களைக் காக்க நினைத்த உங்கள் நீண்ட நாள் முயற்சி பயனற்றுப் போவதாக! இந்த மூலிகைகளை நீ பறித்துச் சென்றாலும், நீ அதைப் பயன்படுத்தும் போது அதற்குரிய மந்திரம் உனக்கு மறந்து போகும் என சாபமிட்டனர். போகர் அலறித்துடித்தார்.

சித்தர் பெருமக்களே! செய்தற்கரிய தவறு செய்து உங்களின் சாபத்தை அடைந்தேனே! வேண்டாம்.... வேண்டாம்... இந்த உலகைக் காக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதல்லவா! நமக்குள் நடந்த இந்த விவாகரத்துக்காக உலகத்தை பழி தீர்த்து விடாதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள், என கண்களை மூடிக்கொண்டு கதறினார். அவரது கதறலைக் கேட்க அங்கே சித்தர்கள் இருந்தால் தானே! அவர்கள் காற்றில் கரைந்தது போல மறைந்து விட்டனர். ஐயோ! என் வாழ்க்கை லட்சியம் அழிந்ததே! இனி இந்த மக்கள் மரணத்தின் பிடியில் இருந்து எப்படி மீள முடியும்? இறைவா! என்னை சோதித்து விட்டாயே, என புலம்பியவர், வேறு வழியின்றி அப்படியே மயங்கி சாய்ந்து விட்டார். எதுவும் காரணத்துடனேயே நடக்கிறது. வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த உலகம் தாங்காது. உலகத்திற்கு வருபவர்களெல்லாம் பிழைத்திருக்க வேண்டுமானால், அவர்களை வழி நடத்துவது யார்? இயற்கைக்கு இறைவன் விதித்திருக்கும் கட்டளைகளில் மிக முக்கியமானது மரணம். அதை இயற்கை எப்படி மீறும்? அதனால் தான், இறைவன் இப்படி ஒரு லீலையை சித்தர்கள் மூலமாக நிகழ்த்தியிருக்கிறான்.

அப்படியானால், அவன் ஏன் சஞ்சீவினி போன்ற மூலிகைகளைப் படைத்திருக்க வேண்டும் என்றால், அது தான் தெய்வ ரகசியம். தெய்வத்தின் சூட்சுமங்கள் முழுவதுமாக நமக்கு புரிந்து விட்டால், அதெப்படி தெய்வமாக இருக்க முடியும்? மயங்கிக் கிடந்த போகரை நோக்கி ஒரு பறவை வந்தது. அந்தப் பறவையை கண்டப் பேரண்டம் என்பார்கள். அது, குகைக்குள் சென்று ஒரு மூலிகையைப் பறித்து வந்து போகரின் மூக்கருகே நீட்டியது. போகர் மயக்கம் தீர்ந்து எழுந்தார். போகரே! நடந்ததை நினைத்து வருத்தப்படக்கூடாது. இங்கே லட்சக்கணக்கான சித்தர்கள் தங்களை மறந்த நிலையில் தவமிருந்து வருகின்றனர். உன் நடமாட்டம் அவர்களை விழிக்கச் செய்து விடும். இப்போது கற்ற வித்தைகளே போதும்! இதைக் கொண்டே நீ உலகிலுள்ளோரின் ஆயுளை விருத்தி செய்து, தீர்க்காயுளுடன் வாழ வழி செய்யலாம். இங்கிருக்கும் மற்ற சித்தர்களையும் விழிக்கச் செய்து, இருப்பதையும் இழந்து விடாதே. இருப்பதைக் கொண்டு திருப்தியடைபவனே புத்திமான், என அறிவுரை கூறியது. போகரும் அங்கிருந்து கிளம்பி ஆகாயமார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு அன்னை உமையவள் காட்சி தந்தாள்.போகா! வருந்தாதே! உலகை அழிப்பதும், காப்பதும் எனது பணி. நீ இங்கிருந்து பழநிமலைக்குச் செல். அங்கே என் மகன் முருகனை வழிபடு, என்று கூறி மறைந்தாள். அன்னையின் கட்டளையை ஏற்று போகர் பழநிக்கு வந்தார். கடும் தவமிருந்தார். அவர் முன்னால் முருகப்பெருமான் கோவணத்துடன், தண்டாயுதபாணியாகக் காட்சி தந்தார். போகரே! நீர் நவபாஷாணத்தால் எனக்கு சிலை வடிக்க வேண்டும்.

நான் சொல்லும் வழி முறைகளின் படி வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், எனக்கூறி அதுபற்றி தெளிவாகச் சொன்னார். போகரும் மனம் மகிழ்ந்து நவபாஷாணத்தால் சிலை வடித்தார். முருகப்பெருமான் அருளியபடியே அதை பிரதிஷ்டை செய்து அபிஷேகமும் பூஜையும் செய்து வந்தார். அந்த அபிஷேகப் பிரசாதத்தைப் பெற்றவர்கள், நோய்கள் நீங்கி, சுகவாழ்வு பெற்று, தீர்க் காயுளுடன் வாழ்ந்தனர். இதனால் தான் இன்றைக்கும் பழநிமலைக்கு மக்கள் ஏராளமாக வருகின்றனர். தமிழகத்திலேயே அதிக வருமானம் உள்ள கோயிலாகவும் இது விளங்குகிறது. போகர், நாமக்கல் அருகிலுள்ள திருச்செங்கோடு சென்றார். அங்கிருக்கும் அர்த்தநாரீஸ்வரரையும் நவபாஷாணத்தில் வடித்தாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அவர் சீனாவுக்கும் அடிக்கடி வானமார்க்கமாக சென்றார். ஒரு கட்டத்தில் சீன அழகிகள் சிலருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு, தனது சக்தியை இழந்தார். புலிப்பாணி அங்கு சென்று, அவரை மீட்டு வந்து மீண்டும் சக்தி பெற ஏற்பாடு செய்தார். கொங்கணர், இடைக்காடர், கமலமுனி, மச்சமுனிவர், நந்தீசர் ஆகிய சித்தர்களும் இவரது சீடர்களாக இருந்தவர்களே! சீனாவில் இருந்து திரும்பி, பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

நூல்: அகத்தியர் தமது சவுமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகின்றார்.

போகர் 12,000
சப்த காண்டம் 7000
போகர் நிகண்டு 1700
போகர் வைத்தியம் 1000
போகர் சரக்கு வைப்பு 800
போகர் ஜெனன சாகரம் 550
போகர் கற்பம் 360
போகர் உபதேசம் 150
போகர் இரண விகடம் 100
போகர் ஞானசாராம்சம் 100
போகர் கற்ப சூத்திரம் 54
போகர் வைத்திய சூத்திரம் 77
போகர் மூப்பு சூத்திரம் 51
போகர் ஞான சூத்திரம் 37
போகர் அட்டாங்க யோகம் 24
போகர் பூஜாவதி 20

தியானச் செய்யுள்:

சிவகை ஏந்தி, சிரம் தாழ்த்தும்
சித்தர் பெருமக்களுக்கு
மூலிகை மேனியாய் பேரருள் புரியும்
போகர் பெருமானே
சிவபாலனுக்கு ஜீவன் தந்த
சித்த ஒளியே
நவபாஷாணத்து நாயகனே
உங்கள் நல்லருள் காக்க காக்க....

காலம்: போகர் முனிவர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 18 நாள் ஆகும்.


Bogar Siddhar (போகர் சித்தர்) is one of the renowned Siddhars in Tamil tradition, known for his significant contributions to Siddha medicine, alchemy, and spiritual wisdom. His work is highly regarded for its depth and impact on both the spiritual and practical aspects of life.

Key Aspects of Bogar Siddhar

Name Significance:

Bogar (போகர்) is a name that often translates to "one who has gone beyond" or "one who has transcended." This indicates a high level of spiritual attainment and mastery over various esoteric practices.

Spiritual Teachings:

Advanced Spiritual Knowledge: Bogar Siddhar is celebrated for his advanced spiritual teachings and insights. His works often focus on the nature of the self, the cosmos, and the paths to enlightenment.
Mystical Practices: His spiritual practices include meditation, yoga, and other esoteric methods designed to achieve higher states of consciousness and spiritual realization.

Contributions to Siddha Medicine:

Herbal Remedies: Bogar Siddhar made significant contributions to Siddha medicine, developing numerous herbal remedies and treatments. His knowledge of medicinal plants and their applications is highly respected within the Siddha tradition.
Alchemical Processes: He is well-known for his work in Siddha alchemy. Bogar Siddhar’s alchemical practices include the preparation of medicinal compounds and the transformation of substances aimed at achieving both physical health and spiritual immortality.

Literary Works:

Poetry and Texts: Bogar Siddhar’s teachings are expressed through poetic and philosophical texts. These works convey his deep understanding of spiritual and esoteric knowledge.
Symbolic Language: His writings often use symbolic and allegorical language to communicate complex spiritual truths and practical guidance.

Legacy and Influence:

Veneration: As one of the 18 Siddhars, Bogar Siddhar is venerated for his contributions to Siddha medicine and spirituality. His life and teachings are highly respected by followers of the Siddha tradition.
Cultural Impact: Bogar Siddhar’s influence extends beyond spiritual and medical practices to various aspects of Tamil culture. His legacy continues to inspire those seeking a deeper understanding of health, spirituality, and the nature of existence.

Notable Contributions:

Bogar’s Siddha Medicine: He is credited with developing and prescribing effective treatments for various ailments, utilizing a deep knowledge of herbs and minerals.
Bogar's Alchemy: His work in alchemy is particularly notable, including the creation of the famous “Bogar’s Mercury” (Mercury-based formulations) which are believed to have transformative properties.

Conclusion

Bogar Siddhar is a revered figure in the Siddha tradition, known for his profound contributions to spiritual wisdom, Siddha medicine, and alchemy. His teachings and practices reflect a deep mastery of both the mystical and practical aspects of life, continuing to influence and inspire those on the path of spiritual and physical well-being.



Share



Was this helpful?