பதிக எண்: 1.53 - முதுகுன்றம் - பழந்தக்கராகம்
பின்னணி:
தனது நான்காவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக எருக்கத்தம்புலியூர் சென்ற ஞானசம்பந்தர், அங்கிருந்து முதுகுன்றம் (இந்நாளில் விருத்தாசலம் என்று அழைக்கப்படும் தலம்) செல்ல முடிவு செய்தார். பழம்பெரும் பெருமை வாய்ந்த இந்த தலம் செல்வதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த சம்பந்தர், தான் அந்த தலத்திற்கு செல்லும் வழியில், பரமனின் புகழினைப் பாடியவாறு மத்தா வரை என்று தொடங்கும் பதிகத்தினைப்(1.12) பாடிக் கொண்டே சென்றார். அந்த தலம் சென்றடைந்த பின்னர் நின்று மலர் தூவி என்று தொடங்கும் பதிகத்தை (1.93) பாடியவாறு தலத்தை வலம் வந்தார். பின்னர் திருக்கோயிலின் உள்ளே நுழைந்த சம்பந்தர், பெருமானின் சன்னதி முன்னர் விழுந்து வணங்கியவாறு முரசதிர்ந்து என்று தொடங்கும் பதிகத்தினைப் (3.99) பாடுகின்றார். பல நாட்கள் இந்த தலத்தில் தங்கிய ஞானசம்பந்தர், தலத்தில் பாயும் மணிமுத்தாறு நதியினையும் குறிப்பிட்டு பல பதிகங்கள் இறைவனைப் புகழ்ந்து பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். அந்நாட்களில் அருளிய பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்று. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானின் சிறப்புகளைக் குறிப்பிட்டு, அத்தகைய பெருமான் உறையும் இடம் முதுகுன்றம் என்று கூறுகின்றார்.
பாடல் 1:
தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவராய விரை மலரோன் செங்கண் மால் ஈசன் என்னும்
மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே
விளக்கம்:
நாவர்=நாக்கினை உடையவர்; செழு மறை சர நாவர்=செழுமையான மறைகளை ஓதும் நாவினை உடைய அந்தணர்கள்; நண்ணு=நெருங்கி வாழும்; கால்=காற்று; இந்த பாடலில் மூவராகவும் (பிரமன், திருமால், உருத்திரன்) அவர்களுக்கு முதல்வனாகவும் இருப்பது சிவபெருமான் என்று கூறப்படுகின்றது. சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பதும், பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும், அவனால் படைத்தல் காத்தல் அழித்தல் தொழிலைச் செய்வதற்காக படைக்கப் பட்டவர்கள் என்றும் சைவ சித்தாந்தம் கூறுகின்றது. மூவாராகவும் மூவர்க்கும் பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.
திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.27.2) திருஞானசம்பந்தர் மூவராகவும் மூவரில் முதல்வராகவும் இருக்கும் பெருமானை தேவர்கள் முறையாக வணங்குகின்றனர் என்று கூறுகின்றார்.
மூவராய முதல்வர் முறையாலே
தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர்
ஆவர் என்னும் அடிகள் அவர் போலும்
ஏவின் நல்லார் எயில் மூன்று எரித்தாரே
செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.36.5) திருஞானசம்பந்தர் பெருமானை மூவராய் முதலாக நின்றவன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தினில், அம்பு ஏதும் இன்றி மூன்று கோட்டைகளையும் எரித்தவன் இறைவன் என்று சொல்லப்பட்டுள்ளது.
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்
ஏ அலால் எயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே
ஏழைத்திருத்தாண்டகம் என்று அழைக்கப்படும் திருவதிகைப் பதிகத்தின் முதல் பாடலில் (6.3.1) திருமாலாகவும் பிரமனாகவும் பெருமான் செயல்படுவதை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வெறி=நறுமணம், வாசனை: விரவு=கலந்த: கூவிளம்=வில்வம்: தொங்கல்=மாலை: பொறி அரவு=தனது படத்தினில் புள்ளிகளை உடைய பாம்பு: ஏறு=எருது, இங்கே இடபம்; பொன் நிறத்தான்=பிரமன்; புள்ளூர்த்தியான்=பறவையை, அதாவது கருடனை வாகனமாகக் கொண்ட திருமால்: சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் மூன்று பாடல்களில் (1.21), ஞான சம்பந்தர், பெருமான் பிரமனாகவும், திருமாலாகவும் உருத்திரனாகவும் நின்று மூன்று தொழில்களையும் செய்யும் தன்மையை குறிப்பிடுகின்றார்.
வெறிவிரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டத்தானை வெள்ளேற்றினானைப்
பொறி அரவினானைப் புள்ளூர்தியானைப் பொன் நிறத்தினானைப் புகழ் தக்கானை
அறிதற்கரிய சீர் அம்மான் தன்னை அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை
எறிகெடிலத்தானை இறைவன் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
சிவபெருமான் ஒருவனே மூன்று உருவமாக, பிரமன், திருமால், மற்றும் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாக இருக்கும் தன்மை அப்பர் பிரான், முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய தாண்டகப் பதிகத்தின் (6.85) பாடல் ஒன்றிலும் குறிப்பிடப்படுகின்றது. கருத்தன்=கர்த்தா என்ற வடமொழிச் சொல்லின் திரிபு; தலைவன் என்று பொருள். காய்தல்=கோபித்தல்: பிரமன் மீது கோபம் கொண்டு அவனது தலையினைக் கொய்த நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது. விருத்தன்=அனைவர்க்கும் மூத்தவன், பழையவன், ஆதி;
கருத்தன் காண் கமலத்தோன்: தலையில் ஒன்றைக் காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி
ஒருத்தன் காண் உமையவளோர் பாகத்தான் காண் ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேலானான் காண் மெய்யடியார் உள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே
தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.1.1) அப்பர் பிரான், திருமால், நான்முகன், தீ, காற்று, ஒலிக்கும் கடல், உயர்ந்த மலைகள் ஆகிய அனைத்திலும் உடனாய் கலந்து நின்று செயல்படுபவன் சிவபெருமான் என்று கூறுகின்றார்.
அரியானை அந்தணர் தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள் தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே
பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.10.7) அப்பர் பிரான், பெருமானை மூவரானார் என்று குறிப்பிட்டு மூன்று மூர்த்திகளாக விளங்கும் தன்மையை உணர்த்துகின்றார். தலத்து இறைவியின் திருநாமம் காம்பன தோளி அம்மை என்பதாகும். இந்த பெயரினை சற்றே மாற்றி காம்பேய்த் தோளி என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். காம்பு=மூங்கில். அம்பிகையின் திருநாமம் வேணுபுஜாம்பிகை என்று வடமொழியில் அழைக்கப் படுவதை, காம்பேய்த் தோளி என்று மிகவும் அழகாக அப்பர் பிரான் தமிழாக்கம் செய்துள்ளார். முற்றா மதி=பிள்ளை மதி என்றும் இளமதியம் என்றும் பல இடங்களில் குறிப்பிடப்படும் பிறைச் சந்திரனை, பிறை தேய்ந்து இருந்த நிலையினை முற்றா மதி, அதாவது முழுவதாக இருந்த நிலையிலிருந்து தேய்ந்த மதி என்ற பொருள் பட முற்றா மதி என்று கூறுகின்றார்.
முற்றா மதிச் சடையார் மூவரானார் மூவுலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பேய்த் தோளி
பற்றாகும் பாகத்தார் பால் வெண்ணீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார்
பற்றார் மதில் எரித்தார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.34.1) சிவபெருமான் ஒருவனே மூவுருவமாக நிற்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கருவன்=சம்ஹார மூர்த்தி; கறுவன் என்ற சொல்லின் திரிபாக, சினம் கொண்டவன் என்னும் பொருள் பட, கருவன் என்ற சொல் கையாளப்பட்டு உள்ளதாகவும் விளக்கம் கூறுவார்கள். பாடலின் எதுகை நோக்கி கருவன் எனத் திரிந்தது என்று கூறுவார்கள். தெரித்த=படைத்த: திருவினாள்=அழகு பொருந்தியவள்; மருவன்=பொருந்துபவன்;
ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவமான நாளோ
கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் எரித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ மான்மறி கை ஏந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளோ
செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.29) ஒரு பாடலில் வெள்ளியர் (உடல் முழுவதும் திருநீறு பூசியதால் வெண்மை நிறத்துடன் காணப்படும் சிவபெருமான்), கரியர் (திருமால்) மற்றும் செய்யர் (பொன் நிறத்தில் உள்ள பிரமன்) ஆகிய மூவராக இருப்பவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தெள்ளியார்=தெளிந்த உள்ளம் கொண்ட ஞானியர்கள்: பள்ளியார்=பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால்: ஒள்ளியர்=ஒளி தருபவர்
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழி ஊழி உலகமது ஏத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத்துள்ளார் பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியார் கள்ளம் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளியாரே
வேணுபுரத்தின் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளப்பட்ட பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.9.2) சம்பந்தர், படைப்பவனாகவும், காப்பவனாகவும், அழிப்பவனாகவும் விளங்குவதுடன், இந்த தொழில்களின் முடிந்த பயனாகிய முக்தி நிலையாகவும் சிவபெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். கிடை=வேதம் ஓதும் கூட்டம்
படைப்புந் நிலை இறுதிப் பயன் பருமையொடு நேர்மை
கிடைப் பல்கணம் உடையான் கிறி பூதப்படை உடையான் ஊர்
புடைப் பாளையின் கமுகின்னொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே
சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் அப்பர் பிரான் (6.82.6) பெருமான் திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். உருத்திரன் பெருமானின் அம்சம் என்பதால், உருத்திரனாக விளங்குவது பெருமான் தான் என்பது சொல்லாமலே அனைவராலும் அறியப்படும். மா=குதிரை குதிரை வடிவம் எடுத்துத் தன்னை அழிக்கவந்த கேசி என்ற அரக்கனைக் கொன்ற கண்ணன், அதனால் கேசவன் என்ற பெயரினைப் பெற்றான் என்று பாகவத புராணம் கூறுகின்றது.
மாவாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்றம் உடையார் போலும்
கோவாய முனி தன் மேல் வந்த கூற்றைக் குரைகழலால் அன்று குமைத்தார் போலும்
தேவாதி தேவர்க்கு அரியார் போலும் திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.58) நான்காவது பாடலில் அப்பர் பெருமான் மூவர் உருவாய முதல்வர் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடல் அகத்துறை அமைப்பில் அமைந்த பாடல். சிவபெருமான் மீது ஆராத காதல் கொண்ட அப்பர் நாயகி, பெருமானை தன்னை வாவா என்று அழைத்ததாக கற்பனை செய்கின்றாள். அவ்வாறு அழைத்த பெருமான், தன்னை விட்டுவிட்டு சென்றதை குறிப்பிட்டு தனது வருத்தத்தை தெரிவிக்கும் பாடல்.
மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உருவாய முதல்வர் இந்நாள்
கோவாத எரிகணையைச் சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே
போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்லப் புறக்கணித்துத் தம்முடைய பூதம் சூழ
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே
பொழிப்புரை:
தேவர், அசுரர், சித்தர்கள், செழுமையான வேதங்கள் ஓதும் நாவினை உடைய மறையவர்கள் முதலாக பல வகையான கணங்களாகவும், நாம் அனைவரும் தங்கி வாழும் பூமி ஆகாயம் நெருப்பு காற்று மற்றும் நீராகிய ஐந்து பூதங்களாகவும் நறுமணம் மிகுந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமன் மற்றும் சிவந்த கண்களை உடைய திருமாலாகவும் இருக்கும் பெருமான் அவர்கள் அனைவர்க்கும் தலைவனாகவும் இருக்கின்றான். மூவராகவும் அந்த மூவர்களின் தலைவனாகவும் உள்ள பெருமான் பொருந்தி உறைவது முதுகுன்றம் தலமாகும்.
பாடல் 2:
தேவராயும் அசுரராயும் (1.053) பாடல்கள் 2, 3, 4, 5 (திதே 0100)
பற்றுமாகி வானுளோர்க்குப் பல் கதிரோன் மதி பார்
எற்று நீர் தீக் காலும் மேலை விண் இயமானனோடு
மற்றும் மாதோர் பல்லுயிருமாய் மால் அயனும் மறைகள்
முற்றுமாகி வேறும் ஆனான் மேயது முதுகுன்றே
விளக்கம்:
பற்று=பற்றுக்கோடு; இயமானன்–ஆன்மா; அனைத்துப் பொருட்களிலும் மற்றும் அனைத்து உயிர்களிலும் கலந்து நிற்கும் பெருமான் என்று முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் அந்த பொருட்களினும் அந்த உயிர்களினும் வேறாகவும் விளங்குகின்றான் என்று கூறுகின்றார். அதாவது அந்தந்த பொருட்களை உயிர்களை இயக்கும் நோக்கத்துடன் அனைத்திலும் கலந்து நிற்கும் பெருமான், அவற்றுடன் முற்றிலும் கலந்து நிற்காமல் தனது தனித் தன்மையுடன் இருக்கின்றான் என்பதே இந்த பாடல் மூலம் விளக்கப் படுகின்றது. இவ்வாறு பல உயிர்களுடனும் கலந்து நின்றாலும், அந்த உயிர்களின் தன்மையால் தான் எந்த விதமான மாற்றமும் கொள்ளாமல், தான் தானாகவே இருக்கும் தன்மை பெருமனது சிறப்புத் தன்மையாகும். அதே சமயத்தில் உயிர்களுடன் இணைந்து அவற்றை இயக்கினாலும், அந்த உயிர்களின் தன்மையை எந்தவிதத்திலும் மாற்றாமல், உயிர்கள் தங்களது விருப்பத்தின் வழியே இயங்கும் வண்ணம் பூரண சுதந்திரம் அளித்துள்ளவன் இறைவன். இவ்வாறு உயிர்களின் தன்மையை மாற்றாமலும், தான் எந்தவிதமான மாற்றமும் அடையாமல் இருக்கும் தன்மையை, அப்பர் பிரான் ஒரு பாடலில் ஒன்பது ஒத்து இறைவன் இருப்பதாக கூறுகின்றார். ஒன்பது ஒத்து இறைவன் இருக்கும் தன்மைக்கு சிவக்கவிமணியார் அவர்கள் மிகவும் சிறப்பான விளக்கத்தை அளிக்கின்றார். இந்த விளக்கத்தினை புரிந்து கொண்டால், எவ்வாறு இறைவன் உயிர்களின் தன்மையை மாற்றாமலும் தானும் எந்தவிதமான மாற்றமும் அடையாமல் உயிர்களுடன் கலந்து நிற்கின்றான் என்பது மிகவும் எளிதாக புரிந்துவிடும்.
ஒன்பது என்ற எண் மற்ற எண்களுடன் சேர்க்கப்படும் போது (கூட்டல்), அந்தந்த எண்களின் தன்மையை மாற்றாமலும் இருக்கும் தன்மை கீழே விளக்கப்பட்டுள்ளது. இந்த தன்மை இறைவன் உயிர்களுடன் இருந்து இயக்கினாலும், அந்தந்த உயிர்களின் தன்மையை மாற்றாமல் இருப்பது போன்று உள்ளது.
9 + 1 = 10 கூட்டுத்தொகை 1
9 + 2 = 11 2
9 + 3 = 12 3
9 + 4 = 13 4
9 + 5 = 14 5
9 + 6 = 15 6
9 + 7 = 16 7
9 + 8 = 17 8
9 + 10 =19 1
9 + 11 =20 2
9+12=21 3
எந்த எண்ணை ஒன்பதால் பெருக்கினாலும், வரும் எண்களின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கும் தன்மை, எந்த எண்ணுடன் சேர்ந்தாலும் இறைவன் தனது தன்மையில் மாறாமல் இருக்கும் நிலையை உணர்த்துகின்றது. இந்த நிலை உயிர்களின் தன்மைக்கு எதிர்மறையாக இருப்பதை நாம் உணரலாம்.உயிர்களை சார்ந்ததன் வண்ணமாக இருப்பவை என்று சித்தாந்தத்தில் குறிப்பிடுகின்றனர். உலக மாயைகள் மற்றும் அந்த மாயங்கள் தரும் பலவகையான சிற்றின்பங்களை அனுபவிக்கும் உயிர்கள், அந்த மாயையில் ஆழ்ந்து இறைவனை நினைப்பதில்லை. மனம் ஒன்றி இறைவனை நினைக்கும் உயிர்களின் சிந்தனை, உலக மாயைகளின் தாக்கத்தால் மாறுபடாமல் இறைவனையே நினைக்கின்றது. இவ்வாறு இருக்கும் உயிர்களின் தன்மையே சார்ந்ததன் வண்ணமாக இருத்தல் என்று குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இறைவனோ தான் சாரும் பொருட்களின் தன்மையால் எந்த விதமான மாறுதலும் அடைவதில்லை.
மேற்கண்ட பாடலில் குறிப்பிட்ட வண்ணம் உயிர்களுடன் கலந்து நின்று அவற்றை இயக்கும் பெருமான், அந்த உயிர்களின் தன்மையுடன் தான் கலக்காமல் வேறாகவும் நிற்கின்றான் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் திருவீழிமிழலை பதிகத்தின் (1.11.02) இரண்டாவது பாடலாகும் இந்த பாடல் ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்களை வரிசைப் படுத்தி, ஓவ்வொரு எண்ணுக்கும் பொருந்தும் வண்ணம் பெருமானின் குணங்களை குறிப்பிடுவதால், எண்ணலங்கார பாடல் என்று அழைக்கப் படுகின்றது. ஈறாய் என்று உலகமும் உலகத்துப் பொருட்களும் அனைத்து உயிர்களும் ஓடுங்கும் இடமாக இறைவன் இருக்கும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. என்றும் மாறுபடாமல் நிலைத்து நிற்கும் கருத்துகளை சொல்லும் வேதங்கள் என்று உணர்த்த, மாறா மறை நான்கு என்று குறிப்பிடுகின்றார்.
ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய்
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறார் சுவை ஏழ் ஒசையொடு எட்டுத்திசை தானாய்
வேறாய் உடன் ஆனான் இடம் வீழிமிழலையே.
பொழிப்புரை:
வானுலகில் வாழும் தேவர்களுக்கு பற்றுக்கோடாக உள்ள இறைவன்; பல கதிர்களை உடைய சூரியன், சந்திரன், நிலம், அந்த நிலத்தின் கரையினில் மோதும் நீர், நெருப்பு, காற்று, அனைத்திற்கும் மேலாக இருக்கும் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள்; மற்றும் அனைத்து உயிர்கள் ஆகியவற்றில் அட்டமூர்த்தமாக கலந்து நின்று அவை அனைத்தையும் இயக்குகின்றான். மேலும் மாதொருபாகனாக விளங்கும் அவன், பிரமனாகவும் திருமாலாகவும் மறைகள் முதலான அனைத்துமாகி விளங்கினாலும், அனைத்தினும் வேறுபட்ட தனித்துவத்தோடும் விளங்குகின்றான். அத்தகைய இறைவன் பொருந்தி உறைவது முதுகுன்றம் தலமாகும்.
பாடல் 3:
தேவராயும் அசுரராயும் (1.053) பாடல்கள் 2, 3, 4, 5 (திதே 0100)
வாரி மாகம் வைகு திங்கள் வாளரவம் சூடி
நாரி பாகம் நயந்து பூ மேல் நான்முகன் தன் தலையில்
சீரிதாகப் பலி கொள் செல்வன் செற்றலும் தோன்றியதோர்
மூரி நாகத்து உரிவை போர்த்தான் மேயது முதுகுன்றே
விளக்கம்:
வாரி=கடல், கடல் போன்று பெருகி வந்த கங்கை நதி; மாகம்=ஆகாயம்; வைகு=பொருந்தும்; பெருமான் பலி கொள்வது வறுமை காரணமாக அல்ல என்பதை உணர்த்தும் பொருட்டு, செல்வன் என்று பெருமானை, சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்ததும் வேறு எவரிடமும் இல்லாத முக்திநிலையினை உள்ளவனை பெருஞ்செல்வன் என்று தானே அழைக்க வேண்டும். முதல் இரண்டு பாடல்களில் சர்வ வியாபியாக எங்கும் நிறைந்து இருக்கும் பெருமானை தன்மையை உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் அவனது பல வீரச் செயல்களையும் கருணைச் செயல்களையும் உணர்த்துகின்றார். கடல் போன்று பெருகி வந்த கங்கை ஆற்றினைத் தனது சடையில் அடக்கியதும், விடமுடைய பாம்பின் தன்மையை மாற்றி கச்சையாக அணிந்து கொண்டதும், பிரமனின் தலையை நகத்தால் கிள்ளியதும், வலிமை வாய்ந்த யானையின் தோலை உரித்து போர்வையாக போர்த்துக் கொண்டதும் வீரச் செயல்கள். அழியும் நிலையில் இருந்த திங்களை சடையில் அணிந்து கொண்டு காப்பாற்றியதும், பிராட்டியைத் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்றுக் கொண்டதும், உயிர்களை உய்விக்கும் நோக்கத்துடன் உயிர்களின் மலங்களை ஏற்றுக்கொள்ள பலி ஏற்பதும் கருணைச் செயல்கள். மூரி=வலிமை வாய்ந்த; நாகம்=யானை; சீரிதாக=சிறப்பாக; செற்றலும்=கோபம் கொண்ட குணத்துடன்;
பலிகொள் செல்வர் என்ற தொடருக்கு, பலி ஏற்பதை செல்வமாக கருதி மகிழும் பெருமான் என்று பொருள் கொண்டு பலியேற்பதில் பெருமானுக்கு இருக்கும் ஆர்வத்தை குறிப்பிடுவதாக பொருள் கொள்வதும் சிறப்பே. வாழ்நாள் தோறும் செல்வத்தை தேடி வாழ்வதே வாழ்க்கை எனக் கொண்டு வாழும் அனைத்து மனிதர்களும் தமக்கு கிடைக்கும் செல்வத்தை மிகவும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்வதை நாம் அன்றாட வாழ்க்கையில் காண்கின்றோம். மிகவும் அதிகமான உயிர்கள் முக்தி உலகம் வந்தடைவதை விரும்பும் பெருமான், அவ்வாறு முக்தி உலகம் செல்வதற்கு தடையாக உள்ளவை மலங்கள் என்பதை புரிந்து கொள்ளும் பக்குவப்பட்ட உயிர்கள் தங்களது மலத்தினை பிச்சையாக பெருமானின் உண்கலத்தினில் இடுவதை பெருமான் சிறந்த செல்வமாக ஏற்றுக்கொண்டு மகிழ்கின்றான். ஏனெனில் உயிர்களால் கழித்து விலக்கப்படும் மலங்கள், அந்த உயிர்கள் முக்தி உலகம் சென்றடையும் தகுதியை பெறுவதற்கு உதவுவதால், அவற்றை சிறந்த செல்வமாக பெருமான் கருதுகின்றான்.
பொழிப்புரை:
கடல் போன்று பெருகி வந்த கங்கை நதியைத் தனது சடையில் ஏற்று அடக்கியவனும், அழியும் நிலையில் ஒற்றைப் பிறையுடன் இருந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு சந்திரனை அழியாமல் காத்தவனும், தனது இடுப்பினில் ஒளி பொருந்திய பாம்பினை கச்சாக இறுகக் கட்டியவனும், தனது மனைவி பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக விரும்பி ஏற்றவனும், தாமரை மலர் மேல் உறையும் நான்முகனின் தலையில் சிறப்பான நோக்கத்துடன் பக்குவமடைந்த உயிர்களை உய்விப்பவனும், மிகவும் பெரிய செல்வத்தை உடையவனும், தாருகவனத்து முனிவர்களால் மிகுந்த கோபத்துடன் தோற்றுவிக்கப்பட்ட வலிமை உடைய யானையை அடக்கி அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவனும் ஆகிய பெருமான் பொருந்தி உறைவது முதுகுன்றம் தலமாகும்.
பாடல் 4:
தேவராயும் அசுரராயும் (1.053) பாடல்கள் 2, 3, 4, 5 (திதே 0100)
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முது பௌவ முந்நீர்
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலை கெடலும்
நாடு தானும் ஊடும் ஓடி ஞாலமும் நான்முகனும்
ஊடு காண மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே
விளக்கம்:
பெருமானின் வீரச் செயல்களையும் கருணைச் செயல்களையும் முந்தைய பாடலில் உணர்த்திய சம்பந்தருக்கு அத்தகைய செயல்களை அனைவரும் பாடலாக பாட வேண்டும் என்ற ஆசை எழுந்தது போலும். அருளும் எந்தை என்று இந்த பாடலில் குறிப்பிட்டு இனிமையான இசையுடன் இணைத்து பெருமானின் புகழினை பாடும் அடியார்களுக்கு இறைவன் அருள் புரிவார் என்று கூறுகின்றார். பெருமானின் தன்மையை, புகழினை பாடுதலும் ஒரு வகையான திருப்பணியே. அதனால் தான் அருணகிரியாரும் பாடும் பணியே பணியா அருள்வாய் என்று கந்தர் அனுபூதியில் பாடுகின்றார். அப்பர் பிரானும், பெருமானின் புகழினைப் பாடுவதை ஒரு திருப்பணியாக கருதி, அந்த செயலுக்கு பெருமான் அருள் புரியும் தன்மையை தன்னால் எடுத்துரைக்க முடியாது என்று ஒரு பாடலில் (4.77.3) உணர்த்துகின்றார். விளக்கினார்=துடைப்பம் கொண்டு கோயிலை சுத்தம் செய்தல்; மெழுக்குதல்=பசுஞ்சாணி கொண்டு கோயில் தரையை பூசுதல்: அப்பர் பெருமானின் காலத்தில் பெரும்பாலான கோயில்கள் மண் தரையுடன் இருந்தன. பிற்காலச் சோழர்களின் காலத்தில் தான், பழைய கோயில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டன. எனவே மண் தரையினைப் பேணி பாதுகாக்க தொடர்ந்து மெழுகுதல் அவசியம்.
விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்று ஆகும்
துளக்கி நன்மலர் தொடுத்தால் தூய விண் ஏறலாகும்
விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானமாகும்
அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே
திருக்கோயிலை அலகு (துடைப்பம்) கொண்டு பெருக்குவதாலும், கோயில் தரையை பசுஞ்சாணி கொண்டு மெழுக்குவதாலும், பூத் தொடுத்து இறைவனுக்கு சாற்றுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கிடைக்கும் பலன்களைச் சொல்லும் அப்பர் பிரான், இறைவனுக்கு பிடித்த தேவாரப் பாடல்களையும் சாம வேதத்தையும் பாடுவதால் ஏற்படும் பலனை தன்னால் சொல்ல இயலாது என்று கூறுகின்றார். நாவன்மை பெற்றதால், இறைவனால் நாவுக்கரசர் என்று பெயர் சூட்டப்பட்ட அப்பர் பிரானே, சொல்ல இயலவில்லை என்று கூறினால், இறைவனை புகழ்ந்து பாடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் எல்லை இலாதன என்பதை நாம் உணரலாம்.
கோயிலில் விளக்கு ஏற்றுபவருக்கு உண்மை ஞானம் வாய்க்கும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த கூற்று நமக்கு திருமறைக்காடு தலத்தில் நடந்த நிகழ்ச்சியினை நினைவூட்டுகின்றது. திருமறைக்காடு தலத்தில் அணையும் தருவாயில் இருந்த ஒரு விளக்கினை, விளக்கில் இருந்த நெய்யினை குடிப்பதற்காக சென்ற எலி, தனது மூக்கினை விளக்கின் சுடர் சுடவே மூக்கினை பின்னுக்கு இழுத்தது; அப்போது திரியும் இழுக்கப்படவே, திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமாக எரிந்தது. இந்த நிகழ்ச்சி நடந்தது ஒரு சிவராத்திரி தினத்தில் என்று கூறுவார்கள். எலியின் அந்த செய்கைக்கு மகிழ்ந்த, சிவபிரான், அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி என்ற சக்ரவர்த்தியாக பிறக்குமாறு அருளினார். அரக்கர் குலத்து அரசனாக இருந்தாலும், தரும நெறியில் நேர்மையாக மூவுலகையும் அரசாண்டவர் மகாபலி. அதனால் தான் அவருடன் சண்டையிடுவதற்கு தேவர்களுக்கும் திருமாலுக்கும் எந்த காரணமும் இல்லாமல் இருந்தது. இவ்வாறு ஞானம் மிகுந்தவராக மகாபலி திகழ்ந்தது, அவர் முந்தைய பிறவியில் திருக்கோயிலில் விளக்கு ஏற்றிய செயல் தான்.
பெரிய புராணத்தில் இடம் பெறும் பல தொண்டர்கள் இந்த பாடலில் குறிப்பிடப்படும் தொண்டுகள் செய்து சிவபிரானின் திருவடிகளில் சென்று சேர்ந்தவர்கள். அவர்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. கோயிலையும் அதன் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்தவர்கள்: திருநாவுக்கரசர், தண்டியடிகள் (குளம்) இறைவனுக்கு மலர்மாலைகள் சூட்டி தொண்டு செய்தவர்கள்: கணநாதர், முருக நாயனார், கோயிலில் திருவிளக்கு ஏற்றி தொண்டு புரிந்தவர்கள்: கணம்புல்லர், கலியர், காரைக்கால் அம்மையார், நமிநந்தி அடிகள், இறைவனைப் புகழ்ந்து பாடல் பாடியவர்கள்: ஐயடிகள் காடவர்கோன், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், சேரமான் பெருமாள், திருமூலர்.
மூடும் வெள்ளம்=ஊழிக்காலத்து வெள்ளம்; பனிமுது=குளிர்ச்சியும் பழமையும் பொருந்திய; பௌவம்=கடல்; முந்நீர்=கடலில் உள்ள நீர், ஆற்றுநீர், ஊற்றுநீர் மற்றும் மழைநீர் ஆகிய மூன்றின் கலவை என்பதால், கடல்நீரினை முந்நீர் என்று அழைப்பார்கள்; நீடு=நீண்ட; ஊடு காண=உயிர் பிழைக்க வழி தேடும் வண்ணம்;
பொழிப்புரை:
தனது புகழினை பாடலாக பாடும் அடியார்களுக்கு அருளுபவர் எமது தந்தையாகிய சிவபெருமான். குளிர்ந்து பழமையாக உள்ள கடலின் நீர் பொங்கி எழுந்து நிலவுலகின் அனைத்து இடங்களையும் மூடி, பின்னர் தேவலோகத்திலும் பரவி அவர்களின் இருப்பிடத்தை அழித்து, பல உலகங்களின் நடுவிலும் ஓடி, நான்முகன் முதலாய தேவர்களும் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஓடவைக்கும் பிரளய வெள்ளம் பொங்கி எழுந்த தருணத்திலும், அந்த வெள்ளத்தினும் உயர்ந்து மூழ்காமல் நின்ற பெருமைக்கு உரிய தலம் முதுகுன்றமாகும்.
பாடல் 5:
தேவராயும் அசுரராயும் (1.053) பாடல்கள் 2, 3, 4, 5 (திதே 0100)
வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீசணவி
செழுங்கல் வேந்தன் செல்வி காணத் தேவர் திசை வணங்க
தழங்கு மொந்தை தக்கை மிக்க பேய்க்கணம் பூதம் சூழ
முழங்கு செந்தீ ஏந்தியாடி மேயது முதுகுன்றே
விளக்கம்:
கல் வேந்தன்=மலையரசன் இமவான்;மொந்தை தக்கை, வாத்தியங்கள்; ஆடி=ஆடுபவன்; வழங்கு= ஊர்ந்து செல்லும். மீசு=மேலே; அணவி=பொருத்தி; தழங்கு=ஒலிக்கின்ற; மாசுணம்=பாம்பு;
பொழிப்புரை:
வானில் ஊர்ந்து செல்லும் பிறைச் சந்திரனையும், வன்னி மத்தம் முதலான மலர்களையும் பாம்பினையும் தனது சடை மேல் ஒன்றோடொன்று நெருக்கமாக பொருத்தி வைத்துக் கொண்டுள்ள பெருமானை, பல திசைகளிலும் உள்ள தேவர்கள் வணங்குகின்றனர். இந்த காட்சியை எப்போதும் இறைவனுடன் கூடி இருப்பவளும், செழிப்பான இமயமலைக்கு அரசனாகிய இமவானின் மகளும் ஆகிய பார்வதி தேவி கண்டு மகிழ்கின்றாள். மொந்தை தக்கை முதலான வாத்தியங்கள் ஒலிக்க, மிகவும் அதிகமான பேய்க் கணங்கள் சூழ்ந்து இருக்கும் நிலையில், கொழுந்து விட்டெரியும் தீச்சுடரினைத் தனது கையில் தாங்கியவாறு நடனம் ஆடும் பெருமான் பொருந்தி உறைவது முதுகுன்றம்.
பாடல் 6:
தேவராயும் அசுரராயும் (1.053) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 0101)
சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்லரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவ வேடம் தான் நினைந்து ஐம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கண் ஆதி மேயது முதுகுன்றே
விளக்கம்:
ஐம்புலனும் அழிந்த சிந்தை=புலனைந்தின் வழி அடக்கி; அந்தணாளர்=துறவோர்; தொல்லரா= தொல்+அரா, பழமையான பாம்பு; இதழி=கொன்றை மலர்; சழிந்த=நெருங்கி கிடக்கும்; தான் நினைந்து என்ற தொடருக்கு பதிலாக தாள் இணைந்து என்ற பாடபேதம் சில பதிப்புகளில் காணப் படுகின்றது. தாள் இணைந்து என்பதற்கு தங்களது இரு கால்களையும் இணைத்து பல விதமான யோகாசனங்கள் செய்யும் முனிவர்கள் என்று விளக்கம் அளிக்கப்படுகிர்னது. ஆனால் சைவ வேடம் தான் நினைந்து என்ற தொடர் அளிக்கும் ஆழமான கருத்து மிகவும் பொருத்தமாக இருப்பதால் அதனை ஏற்றுக் கொள்வதே சிறப்பாக உள்ளது, தான் நினைந்து என்பதற்கு பதிலாக தாள் நினைத்து என்று வைத்து, பெருமானின் திருவேடத்தையும் அவரது திருவடிகளையும் நினைத்த முனிவர்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. தோய்ந்த என்றார் சொல்லினை தொய்ந்த என்ற சொல்லின் திரிபாக கருதி, தக்கனது சாபத்தினால் தனது கலைகள் அழிந்து தளர்வடைந்த நிலையில் இருந்த சந்திரன் என்றும் பொருள் கூறுகின்றனர்.
பொழிப்புரை:
மிகுதியான நீர்ப்பெருக்கினால் சுழித்து வரும் வெள்ளத்தை உடைய கங்கை நதி, அந்த கங்கை நதியின் நீரினில் தோய்ந்த பிறைச் சந்திரன், பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர்கள் முதலியன நெருங்கிக் கிடக்கும் சடையினை உடையவனும் ஆகிய பெருமானின் சைவ வேடத்தினை விருப்பத்துடன் எப்போதும் நினைப்பவர்களாக, தங்களது ஐம்புலன்கள் மற்றும் மனத்தின் செயல்கள் முற்றிலும் அடக்கப்பட்டு செயலிழக்கச் செய்யும் சனகாதி முனிவர்களுக்கு அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவை குறித்து விளக்கம் அளித்தவனும் மூன்று கண்களை உடையவனும் அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக உள்ளவனும் ஆகிய இறைவன் பொருந்தி உறைவது முதுகுன்றம் தலமாகும்.
பதிகத்தின் ஏழாவது பாடல் சிதைந்தது
பாடல் 8:
தேவராயும் அசுரராயும் (1.053) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 0101)
தேவராயும் அசுரராயும் (1.053) பாடல்கள் 8, 9, 10, 11 (திதே 0101)
மயங்கு மாயம் வல்லராகி வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவனாய இராவணன் தோள் நெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர் முலை மாதுமையாள்
முயங்கு மார்பன் முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே
விளக்கம்:
மயங்கு மாயம் வல்லார்=அறிவினை மயங்கச் செய்யும் மாயங்கள் புரிவதில் வல்லவராகிய அரக்கர்கள்; மாயங்கள் புரியும் அரக்கர்களின் தலைவன் இராவணன் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இராவணனைச் சார்ந்த ஆட்கள் பல மாயங்கள் புரிந்ததை நாம் இராமாயணத்தில் காண்கின்றோம். சீதா தேவியின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாரீசன் மாயமானாக வந்தது முதல் பல மாய வித்தைகளை அரக்கர்கள் கையாண்டதை நாம் உணர்கின்றோம். இராமபிரானுடன் போர் தொடங்குவதற்கு முந்திய நாள், வித்யுத்ஜிஹ்வன் என்ற மாயாவி செய்து கொடுத்த ஒரு தலையினை இராமபிரானின் வெட்டப்பட்ட தலை என்று சீதா பிராட்டியிடம் காட்டி அவளை ஏமாற்ற இராவணன் நினைக்கின்றான். அதனைப் பார்த்து திகைத்த சீதை அழுது கொண்டிருந்த சமயத்தில், ஏதோ அவசர வேலையாக இராவணன் அசோகவனத்தை விட்டு விலக, மாயையால் உருவான தலையும் மறைந்து விடுகின்றது. இந்திரசித்தின் நாக பாசங்களால் மயங்கி கீழே விழுந்து கிடந்த இராமன் மற்றும் இலக்குவனின் உடல்களை சீதைக்கு காட்டி, போரில் தான் வெற்றி கொண்டதால் தனக்கு உடன்படுவதைத் தவிர்த்து சீதைக்கு வேறு வழி இல்லை என்று உணர்த்துவதற்கு இராவணன் முயற்சி செய்கின்றான். வருத்தத்துடன் சீதை யுத்த பூமியிலிருந்து அகன்றவுடன், இராமன் மற்றும் இலக்குவன் ஆகிய இருவருக்கும் நினைவு திரும்புகின்றது. தான் நிகும்பிலா யாகம் செய்வதற்காக திட்டமிட்டிருந்த இந்திரசித்து, இராமன் மற்றும் இலக்குவனின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்துடன், தனது மாயையால் சீதையைப் போன்ற உருவம் படைத்து, அந்த உருவத்தின் தலையை, இராம பிரானின் கண் முன்னே வெட்டி ஒரு மாய நாடகத்தை அரங்கேற்றுகின்றான். இராமர் திகைத்து நின்ற சமயத்தில், போர்க் களத்திலிருந்து விலகிய இந்திரஜித் தனது யாகத்தை தொடங்குகின்றான். விபீஷணர் உண்மை நிலையினை இராமனுக்கு தெளிவு படுத்த, இலக்குவனும் அனுமனும் இந்திரசித்து யாகம் புரிந்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று அவனுடன் போரிட்டு வெற்றி காண்கின்றனர்.
இறைவன் புயங்க நடனம் ஆடிவதில் வல்லவர் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பாம்பினைத் தனது கையினில் கங்கணமாக ஏற்றவாறு ஆடிய நடனம் என்று கூறுவார்கள். முயங்கு=தழுவிய; புணர் முலை=ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்; .
பொழிப்புரை:
அறிவினை மயங்கச் செய்யும் மாயங்கள் புரிவதில் வல்லவர்களாகவும், ஆகாயம் மற்றும் நீரினில் தங்களது விருப்பம் போன்று சஞ்சரிக்கும் இயல்பினராகவும் இருந்த அரக்கர்களின் தலைவனாகிய இராவணனின் தோள்களை நெரித்த வல்லமை உடைய பெருமான், பாம்பினைத் தனது கங்கணமாக அணிந்து கொண்டு புஜங்க நடனம் எனப்படும் நடனத்தை ஆடுவதில் வல்லவராக உள்ளார். அவர் ஒன்றுக்கொன்று இணையாக திகழ்ந்து அழகாக விளங்கும் மார்பகங்களை உடைய பார்வதி தேவியை தழுவிய மார்பினை உடையவராகவும் முனிவர்களால் தொழுது ஏத்தப் படுபவராகவும் விளங்குகின்றார். அவர் முதுகுன்றம் தலத்தினில் பொருந்தி உறைகின்றார்.
பாடல் 9:
தேவராயும் அசுரராயும் (1.053) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 0101)
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும் அறியாக்
கோலம் அண்டர் சிந்தை கொள்ளார் ஆயினும் கொய் மலரால்
ஏல இண்டை கட்டி நாமம் இசைய எப்போதும் ஏத்தும்
மூலம் உண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே
விளக்கம்:
நீற்றர்=திருநீற்றினை அணிந்து கொண்ட அடியார்கள்; வாயான்=வாக்கில் விளங்குபவர்; உலகத்தினை உண்ட திருமால் என்று கண்ணாக அவதாரம் எடுத்த போது நடந்த நிகழ்ச்சி ஒன்றினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். எதற்காக மண்ணினை உண்டாய் என்று அன்னை யசோதை கண்ணனை மிரட்டிய போது, கண்ணன் தான் மண்ணினை உண்ணவில்லை என்று தனது வாயினைத் திறந்து காட்டியபோது, அவனது வயிற்றினில் பல உலகங்கள் இருப்பதை யசோதை காண்கின்றாள். இந்த நிகழ்ச்சியை இங்கே ஞாலம் உண்ட மால் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். அண்டர்=தேவர்கள்; கொய் மலர்=அன்று பறித்த மலர்கள்; ஏல=பொருந்த; மூலம்=மூல மலமாகிய ஆணவ மலம்; இசைய=பொருந்த;
பொழிப்புரை:
உலகத்தினை தனது வயிற்றினில் அடக்கிக் கொள்ளும் வல்லமை படைத்த திருமாலும் நான்முகனும், தனது திருவடியையும் திருமுடியையும் காண முடியாத வண்ணம் நீண்ட தழலாக நின்றவன் பெருமான்; தாங்கள் அனுபவித்து வந்த போக வாழ்க்கையில் தங்களையும் மறந்து வாழ்ந்து வந்த தேவர்கள், பெருமானை தங்களது சிந்தைனையில் கொள்ளாமல் வாழ்கின்றனர். ஆனால் நிலவுலகினில் வாழும் பல அடியார்கள் அன்று பறித்த இண்டை முதலான மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகளை அவனது திருவடியில் சார்த்தி, இறைவனது திருநாமங்கள் தங்களது நாவினில் பொருந்தும் வண்ணம் எப்போதும் அவனை புகழ்ந்து வணங்குகின்றனர். இவ்வாறு இறைவனை வழிபடும் அடியார்களின், மூலமலம் என்று அழைக்கப்படும் ஆணவ மலத்தினை அழிக்கும் ஆற்றல் வாய்ந்த திருநீற்றினை அணிந்த அடியார்களின், நாக்கினில் நாம மந்திரமாக உறையும் இறைவன் பொருந்தி உறைவது முதுகுன்றம் தலமாகும்.
பாடல் 10:
தேவராயும் அசுரராயும் (1.053) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 0101)
உறிகொள் கையர் சீவரத்தர் உண்டு உழல் மிண்டர் சொல்லை
நெறிகள் என்ன நினைவுறாதே நித்தலும் கை தொழுமின்
மறி கொள் கையன் வங்க முந்நீர்ப் பொங்கு விடத்தை உண்ட
முறி கொள் மேனி மங்கை பங்கன் மேயது முதுகுன்றே
விளக்கம்:
உறி கொள் கையர்=சமணர்கள் குண்டிகைகளில் நீர் எடுத்துச் செல்லும் பழக்கம் உடையவர்கள்; அவர்கள் அந்த குண்டிகையைத் தூக்கிச் செல்ல வசதியாக, அதை உறியினில் கட்டிச் செல்வதை உறிகொள்கையர் என்று சம்பந்தர் கூறுகின்றார். வங்கம்=கப்பல்; முறி=இளம் தளிர்கள்;
பொழிப்புரை:
நீர் நிறைந்த குண்டிகை கொண்டுள்ள உறியினைத் தங்களது கையினில் தூக்கிச் செல்பவராகிய, சீவர ஆடை உடுத்தவர்களாகிய, மற்றவர் தரும் உணவினை உட்கொண்டு திரியும் குண்டர்களும் ஆகிய, சமணர்கள் மற்றும் புத்தர்கள் கூறும் சொற்களை ஒழுக்கமான நெறிகள் என்று கருதாது புறக்கணித்து, பெருமானை நாள்தோறும் கை தொழுது வணங்குவீர்களாக. துள்ளும் மான் கன்றினைத் தனது கையில் ஏந்தியவனும், கப்பல்கள் ஓடும் கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உண்டவனும், இளம் தளிர்கள் போன்று பசுமையான திருமேனி உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பகுதியாகக் கொண்டவனும் ஆகிய பெருமான் பொருந்தி உறையும் இடம் முதுகுன்றம் ஆகும்.
பாடல் 11:
தேவராயும் அசுரராயும் (1.053) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 0101)
மொய்த்து வானோர் பல் கணங்கள் வணங்கு முதுகுன்றைப்
பித்தர் வேடம் பெருமை என்னும் பிரமபுரத் தலைவன்
———–
பாடலின் பின்னிரண்டு அடிகள் சிதைந்தன
விளக்கம்:
மொய்த்து=கூட்டமாக நெருங்கி; பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் பெருமானை வணங்கும் அடியார்களின் தன்மையை உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் பித்தர் வேடம் பெருமை என்று கூறுகின்றார். பித்தர் என்று, பெருமானையே எப்போதும் சிந்தை செய்து, தன்னிலை மறந்து தன்வயமிழந்து திரியும் அடியார்களை குறிப்பிடுவதாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். அத்தகைய வேடத்தினை பெருமை மிகுந்த வேடம் என்று சம்பந்தர் கருதுகின்றார்.
பொழிப்புரை:
கூட்டமாக நெருங்கி தேவர்கள் முதலான பல கணங்கள் வணங்கும் முதுகுன்றத்து மூத்தோனை, பெருமானின் நினைவினில் மூழ்கி தன்னை மறந்து தன்வயமிழந்து திரியும் அடியார்களின் பித்தர் போன்ற வேடத்தினை பெருமையாக கருதுபவனும், பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தின் தலைவனுமாகிய ஞானசம்பந்தன்
பின்னணி;
இந்த பதிகத்தின் பாடல்களில் இறைவன் அங்கிங்கு எனாதபடி எங்கும் பரவி சர்வ வியாபியாக இருக்கும் தன்மை உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில், மனிதரிலிருந்து தேவர்கள் வரை பலவகையாக இருக்கும் இறைவன் ஐந்து பூதங்களாகவும் இருந்து அனைவர்க்கும் தலைவனாக இருக்கின்றான் என்று கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் முதல் பாடலில் கூறிய வண்ணம் அனைத்திலும் கலந்து நின்று இயக்கினாலும், தனது தனித் தன்மையை இழந்து விடாமல் அந்த உயிர்கள் மற்றும் பொருட்களிலிருந்தும் வேறாகவும் இருக்கின்றான் என்று உணர்த்தப் படுகின்றது. மூன்றாவது பாடலில் பெருமான் புரிந்த பல வீரச் செயல்களும் கருணைச் செயல்களும் உணர்த்திய ஞானசம்பந்தர், அந்த பெருமைகளை பாடலாக பாடி இறைவனின் அருளினைப் பெறுமாறு நம்மை ஊக்குவிப்பதை பதிகத்தின் நான்காவது பாடலில் நாம் உணரலாம். மேலும் இந்த பாடலில் முதுகுன்றம் தலத்தின் பெருமையும் சொல்லப்பட்டுள்ளதால், நம்மை முதுகுன்றம் தலம் சென்றடைந்து ஆங்குள்ள பெருமானை தரிசித்து தேவார திருவாசக பாடல்கள் பாடும் வண்ணம் நம்மை சம்பந்தர் வழிப்படுத்துகின்றார். நான்காவது பாடலில் பெருமானை வணங்கிப் பாடுமாறு நம்மை பணிக்கும் சம்பந்தர், பல திசைகளிலும் உள்ள தேவர்கள் பெருமானைப் பணிந்து வணங்குகின்றார் என்று ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். ஞானமே உருவமாக பெருமான் இருக்கும் நிலை, ஆறாவது பாடலில், பெருமான் சனகாதி முனிவர்களுக்கு வேதங்களுக்கு விளக்கம் அளித்த நிகழ்ச்சி மூலம் உணர்த்தப் படுகின்றது. எட்டாவது பாடலில் இராவணனின் வலிமையை அடக்கிய பெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், இறைவன் நளினமான நடனக் கலையிலும் வல்லவன் என்று உணர்த்துகின்றார். பிரமனும் திருமாலும் காண முடியாத இறைவன், தேவர்களும் சிந்தனை செய்ய முடியாத இறைவன், தன்னை வழிபடும் அடியார்களின் நாவினில் தனது திருநாமமாக உறைகின்றான் என்று உணர்த்தி, அவனது திருநாமத்தை தியானம் செய்யும் அடியார்களின் சிறப்பினை ஒன்பதாவது பாடலில் உணர்த்துகின்றார். நெறிகளற்ற சொற்களை எவர் சொன்னாலும் பொருட்படுத்தாமல் இறைவனைத் தொடந்து வழிபடுமாறு நமக்கு அறிவுரை கூறும் பாடல் பதிகத்தின் பத்தாவது பாடல். பெருமானின் பெருமையையும், தலத்தின் பெருமையையும், பெருமானை வழிபடும் அடியார்களின் தன்மை மற்றும் பெருமைகளையும் சம்பந்தரின் பதிகம் மூலம் அறிந்து கொண்ட நாம், முதுகுன்றம் தலம் சென்று, முதுகுன்றத்து முதியவனை முழுமனதுடன் வணங்கி அவனது புகழ்களை உணர்த்தும் பாடல்களை பாடி வாழ்வினில் உய்வினை அடைவோமாக.
தேவராயும் அசுரராயும் (Devarāyum Asurarāyum) is a Tamil phrase that translates to "both gods and demons" or "the divine and the demonic." Here’s a breakdown of each component:
தேவர் (Devar): Means "god" or "deity." It refers to divine beings or celestial entities.
ஆயும் (āyum): This suffix means "and" or "also." It connects two entities or concepts.
அசுரர் (Asurar): Means "demon" or "evil being." It refers to malevolent supernatural entities in various mythologies.
"தேவராயும் அசுரராயும்" translates to "both gods and demons" or "the divine and the demonic." It encompasses the duality of divine and evil forces.
Mythological and Religious: In Tamil literature, mythology, and religious contexts, this phrase is often used to describe the presence or influence of both benevolent and malevolent forces. It reflects the dual nature of existence where both good and evil play significant roles.
Literary Usage: This phrase might be employed in poetry or literature to highlight the contrast between divine and demonic forces, illustrating the complex dynamics between good and evil in a narrative or thematic context.
Philosophical Significance: The phrase can also represent the balance or interplay between positive and negative aspects of life, reflecting the philosophical idea that both divine and demonic forces contribute to the larger cosmic order.
In a classical Tamil poem or a religious text, "தேவராயும் அசுரராயும்" might be used to describe a cosmic or spiritual situation where both divine and demonic influences are present. For instance, a text might describe a scene where gods and demons interact, emphasizing the drama and complexity of their relationships.
"தேவராயும் அசுரராயும்" captures the concept of both divine and demonic forces coexisting or interacting. It is used to highlight the presence of both good and evil in various contexts, reflecting the duality and balance of these opposing forces in Tamil literature, mythology, and philosophy.