Books / மஹா புராணங்கள்


பிரம்மாண்ட புராணம்

(பகுதி-1)


1. தோற்றுவாய்: மஹாபுராணங்கள் எனப்படும் புனித நூல்கள் பதினெட்டு. அவை சாத்விக, ராஜஸிக, தாமஸிக புராணங்கள் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிருஷ்டி பற்றி பெருமளவில் விவரித்து பிரம்மாவை உயர்த்திக் கூறும் புராணங்கள் ராஜஸிக புராணங்கள் எனப்படும். விஷ்ணுவின் அவதாரங்களை விவரித்து விஷ்ணுவின் புகழ்பாடுபவை சாத்விக புராணங்கள். சமயச்சடங்குகளை விவரித்துச் சிவபெருமான் புகழ்பரப்புபவை தாமஸிக புராணங்கள். பிரம்மாண்ட புராணம் ராஜசிக புராணம். பிரம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம், பிரம புராணங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மகாபுராணங்களில் கடைசியானது பிரம்மாண்ட புராணம் ஆகும். இது  12,000 ஸ்லோகங்கள் கொண்ட ஒரு நடுத்தர அளவுள்ளது. ஸ்கந்த புராணம் மிகப்பெரியது, மார்க்கண்டேய புராணம் மிகவும் சிறியது.

பிரம்மாண்ட புராணம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. பூர்வபாகம், மத்யம பாகம், உத்தர பாகம் என்பவை அவை. பூர்வபாகம் பிரக்ரிய பதம், அனுசங்க பதம் என்றும், மத்யம பாகம் உபோத்காத பதம் என்றும், உத்தர பதம் உபசம்ஹார பதம் என்றும் பிரிவுகளாகி மொத்தத்தில் 71 அத்தியாயங்கள் ஆயின. தருமநெறியில் ஒரு மன்னன் வலிமையுடன் ஆண்டு வந்த காலம் அது. அத்துடன் உண்மையான புனித முனிவர்களும் வாழ்ந்து வந்தனர். குரு÷க்ஷத்திரத்தின் வழியாக திரிஷத்வதி என்ற ஆற்றின் கரையில் முனிவர்கள் ஒரு யாகம் செய்தனர். வேதவியாசரின் சீடர் லோமஹர்ஷணர், சூதமுனிவர், சனகாதி முனிவர்கள் என்று பலர் அங்குக் கூடியிருந்தனர். பித்ருக்கு வாசவி என்றொரு புத்திரி இருந்தாள். அவள் மீன் வயிற்றில் தோன்றியவள். வேதவியாசரும் சத்தியவதி என்ற மச்சகந்தியின் மகனே ஆவார். நைமிசாரணியத்தில் வாயு பகவான் மற்ற முனிவர்களுக்கு பிரம்மாண்ட புராணத்தை உபதேசித்தார். மற்ற புராணங்களில் உள்ளவை எல்லாம் இந்த பிரம்மாண்ட புராணத்திலும் உள்ளன.

புரூரவ மன்னன் அரசாட்சி செய்த காலத்தில், தேவர் கலைஞன் விசுவகர்மா, தேவகுரு பிருகஸ்பதிக்காகத் தங்கத்தால் யாகசாலை அலங்கரித்தான். பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து யாகம் நடைபெற்றது. புரூரவ மன்னன் யாகத்திற்கு வந்திருந்தான். பொன்னைக் கண்ட அவன் மனம் அதனைக் கொள்ளையடிக்க நினைக்க, அதற்காக முயற்சி செய்ய, முனிவர்கள் வஜ்ராயுதத்தால் அவனைக் கொன்றுவிட, அவன் மகன் ஆயு அரியணை ஏறினான். கந்தர்வர்கள் பாடிட, அப்சரஸுகள் ஆடிட, துதிப்பாடல்கள் விண்ணை முட்டின. அரக்கர்கள் யாகத்தைத் தடுக்க முயன்று தோற்றனர். யாகம் தொடர்ந்து முடிந்துவிட முனிவர்கள் வாயுபகவானைப் பிரம்மாண்ட புராணத்தைக் கூறுமாறு கேட்க அவரும் கூறலானார்.

2. சிருஷ்டி

சிருஷ்டி (அ) படைத்தல் பற்றி பரப்பிரம்மம், அண்டம், நிர்மயம், சுவயம்பு, பிரம்மா என்று தொடங்கி மற்ற புராணங்களில் கூறியவையே இங்கும் கூறப்படுகின்றன. சிறுசிறு மாறுதல்களுடன்)

பிரம்மனின் சிருஷ்டி பகலில் நடக்கிறது. இரவில் அழிவு ஏற்படுகிறது. அந்த அழிவு பிரளயம் எனப்படுகிறது. இரவு முடிந்து பகல் தோன்ற படைத்தல் தொழில் நடக்கிறது. அதுவே சிருஷ்டியாகும். இதிலும் மும்மூர்த்தி, மூன்று குணங்கள் பற்றி பேசப்படுகிறது. பிரம்மா ராஜஸ குணம், விஷ்ணு சாத்விக குணம், சிவன் தாமஸ குணம். எல்லாமே பிரம்மத்திலிருந்து தோன்றியவையே. கல்பங்கள் பல. அவற்றில் தற்போது நடைபெறுவது வராஹ கல்பம். ஒவ்வொரு கல்பத்திலும் பதினான்கு மன்வந்தரங்கள்; ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மனுவின் ஆட்சி. வராஹ அவதாரத்தின் காரணமாக வராஹ கல்பம். பிரம்மன் நாராயணனே. நர=நீர்; அயன=ஓய்விடம். பிரளய ஜல மயத்தில் ஓய்வு கொண்டதால் நாராயணன். பிரம்மா ஏழு கடல்கள், ஏழு நிலப்பகுதிகள் தோற்றுவித்தார். அடுத்து அவர் உடலிலிருந்தே தேவர், அசுரர், யக்ஷர்கள் ஆகிய பல்வகையினர் தோன்றினர்.

பிரம்மாவின் மனோ சக்தியிலிருந்து பிருகு முதலிய ஒன்பது ரிஷிகளும், சனந்த, சனக, சனாதன, சனக்குமார ரிஷிகளும் தோன்றினர். இவற்றால் மனஅமைதி பெறாத பிரம்மா தன்னிலிருந்தே முதல் ஆண், பெண் இருவரையும் தோற்றுவிக்க, ஆண் மனு என்றும், பெண் சதரூபை என்றும் பெயர் பெற்றனர். இவர்களுடைய புத்திரர்களில் பிரியவிரதனும், உத்தானபாதனும், பிரசுதி, ஆக்ருதி என்ற இரண்டு புத்திரிகளும் முக்கியமானார். பிரசுதி, தக்ஷ பிரஜாபதியை மணந்தான். இப்படி சிருஷ்டி வளர்கிறது. சிருஷ்டியில் மூல சிருஷ்டி (சரிகம்) ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றினர். இப்படி சிருஷ்டியும், பிரளய அழிவும் தொன்று தொட்டு மாறி மாறி ஏற்பட்டு வருகிறது என்று அறிய வேண்டும்.

3. சதுர் (அ) நான்கு யுகங்கள்

சத்தியயுகம், (கிருத) திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இவை நான்கும் சேர்ந்து மஹாயுகம் ஆகும். கட்டை விரல் முதல் சிறு விரல் வரை நீளம் ஒரு விதஸ்தி. இது பன்னிரண்டு அங்குலிக்குச் சமம். இருபது அங்குலிகள் ஒரு ரத்னி. இருபது ரத்னிகள் ஒரு தனு. எண்ணாயிரம் தனுக்கள் ஒரு யோஜனை ஆகும். வருணாசிரம தரும வழியில் நான்கு வருணத்தினர் இருந்தனர். அவர்கள் தொழில்களும் நால்வகைப்பட்டன. உணவுக்காக மக்கள் பிரம்மாவை வேண்ட பூமியிலிருந்து பால், மரம், புதர், மூலிகைகள், தானியங்கள் தோற்றுவித்தார். பிருதி மன்னன் பூமியிலிருந்து பால் கறந்ததால் பூமி பிருதிவி எனப்படுகிறது. வருணாசிரம தர்மத்தின்படி நான்கு வருணத்தினர் ஏற்பட்டதுடன் ஒவ்வொரு வரும் நான்கு நிலைகளைக் கையாள வேண்டும் எனப்பட்டது. பிரம்மச்சரியம், கிரகஸ்தியம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்பவை. இவ்வாறான மாறுதல்களையெல்லாம் உயிர்கள் நன்கு வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவே பிரம்மா ஏற்படுத்தினர்.

4. யோகமும், யோகசாதனையும்

யஜ்ஞ, யாகாதிகள், மதச்சடங்குகளால் பிரம்மனை அறிய முடியாது. யோகசாதனையால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்தச் சாதனையில் வெற்றி பெறுவோர் பிறப்பு, இறப்புகளையும் வெல்வர் எனப்படுகிறது. ஜீவாத்மா, பரமாத்மாவுடன் அதாவது பரப்பிரம்மத்துடன் இணைவதே யோகம் ஆகும். யோகம் செய்கையில் ஐந்து முக்கியமானவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றின் குறிக்கோள் பற்றி அறியலாம்.

பிராணாயாமம் : உடலின் மாசு நீக்கித் தூய்மை செய்கிறது. பிராணாயாமப் பலன்கள் : அ) பாவங்கள் தொலையும். மன அமைதி (அ) சாந்தம் அடைவது. ஆ) அகம்பாவம், அசூயை, பொறாமை போன்ற தீயவற்றை வெற்றி கொள்ளுதல்-அதாவது பிரசாந்தி தெளிதல் ஆகும். இ) ரிஷிகள் போல் அகக்கண் பெறுதல்-தீப்தி (அ) ஒளி எனப்படும். ஈ) மனமும் புலன்களும் அமைதியாதல்-பிரசாதம்-ஆதரவு ஆகும். பிராணாயாமம் நல்ல உடல்நிலையில், அமைதியான சூழ்நிலையில் செய்யப்பட வேண்டும். பிராணாயாமத்தில் மூச்சு அடக்கப்படுகிறது.

பிரத்தியாஹாரம் : உலகப்பொருள்களின் மீதுள்ள பற்றை மனம் நீக்கிவிட இது ஐந்தடக்கும் ஆமைக்கும் ஒக்கும்.
தியானம் : உடற்பகுதி குணங்களிலிருந்து உயர்ந்த நிலைக்கு உயர்த்துவது.
தாரணம் : நினைவில் இருத்தல். ஞானம் அறிதல்.
இவற்றைக் கவனம் செலுத்திப் பழகாவிட்டால் நன்மைக்குப் பதில் தீமையே ஏற்படும். யோகத்தைச் சரியான முறையில் பழகி வெற்றிக்காண்பவர் அஷ்டமாசித்திகளைப் பெறுவர்.

5. கெட்ட சகுனங்கள்

பஞ்சாங்கங்களில் பட்சி சகுனம், பல்லி சகுனம், விழித்தெழுந்தவுடன் காணக்கூடிய பொருள்கள் என்று பல கூறப்பட்டுள்ளன. பிரம்மாண்ட புராணம் தீய சகுனங்கள் பற்றியும் அவற்றின் பலன்களையும் கூறுகிறது. கனவில் துருவன் (அ) அருந்ததி விண்மீன்களைக் காணமுடியாதவன் ஓராண்டிலும், சூரியக் கிரணங்களைக் காணமுடியாதவன் பதினோறு மாதங்களிலும்; பொன் (அ) வெள்ளி வாந்தி எடுப்பதாகக் கனவு வந்தால் பத்து மாதங்களிலும், அழுக்குடைய பாதம் கண்டால் சில மாதங்களிலும், ஒரு காகம் அழுது (அ) புறா ஒருவர் தலைமீது இறங்கினால் ஆறு மாதங்களிலும் மரணம் அடைவர். ஒருவரைக் காக்கைகள் (அ) சாம்பல் சூழ்ந்து கொண்டால் ஐந்து மாதங்களிலும், தெற்கில் வானவில் (அ) மின்னல் தோன்றினால் மூன்று மாதங்களிலும், பிரதிபிம்பம் காணப்படாவிட்டாலும், தலையின்றி காணப்பட்டாலும் ஒரு மாதத்திலும், ஒருவரிடம் பிண வாசனை ஏற்பட்டால் பதினைந்து நாட்களிலும் மரணம் அடைவர்.

குரங்கு (அ) கரடிகளால் இழுக்கப்படும் தேரில் தெற்கே செல்வது போன்ற கனவு வந்தால் விரைவில் மரணம் ஏற்படுவதாகும். ஒருவர் செவிடானது போல் (அ) கருப்பு உடைகளுடன் இருப்பதாகக் கனவு கண்டால் விரைவில் மரணம் ஏற்படுவதாகும். கழுத்தளவு பூமியில் புதைக்கப்பட்டிருப்பதாகக் கண்டால் விரைவில் மரணம். கனவில் பாம்புகள், சாம்பல், நிலக்கரி, முடி, உலர்ந்து போன ஆறு ஆகியவை காணப்படின், பத்து நாட்களில் மரணம். கருப்பு உடை அணிந்தவரால் கல்லால் அடிபடுவதாக ஒருவன் கனவு கண்டால் விரைவில் மரணம் ஏற்படும். விடியற்காலையில் முன்னால் ஓநாய் ஊளையிட்டால் சில நாட்களில் மரணம். விளக்குத் திரி அணையும்போது ஏற்படும் சுடல் நாற்றம் தெரியாதவன் மரணவாயிலில் இருப்பான். கண்களில் தொடர்ந்து கண்ணீர், காது நீளுதல், மூக்கு வளைவாகத் தோன்றுதல் ஆகியவற்றால் விரைவில் மரணம் காட்டும். கருநாக்கு, சாம்பல் முகம், சிவந்த கன்னம் மரணவாயிலுக்கு அறிகுறி. வெளியேற முடியாத பள்ளத்தில் விழுந்திருத்தல், மற்றும் கொலை செய்யப்படுவதாக, தீயில் விழுவது போல் வரும் கனவுகள் மரணம் அருகில் எனச் சுட்டிக்காட்டுபவை. இப்படிக் கனவுகள் வந்தால் எத்தகைய பரிகாரம் உதவும். கிழக்கு (அ) தெற்கு நோக்கி அமர்ந்து சிவனைப் பிரார்த்தித்தல், ஓம் என்ற பிரணவ உச்சாரணம் இவற்றிற்கு நிவாரணம் ஆகும். நூறாண்டுகள் மாதம் ஒருமுறை அசுவமேத யாகம் செய்த பலன் பிரணவ மந்திரம் உச்சரிப்பதால் ஏற்படும். இது நூறாண்டு செய்வதால் ஏற்படும் புண்ணியத்தை விட அதிகம்.

6. கற்பங்கள்

பிரம்மாவின் ஒரு நாள் என்பது ஒரு கற்பம். ஓராயிரம் கற்பங்கள் பிரம்மாவின் ஓர் ஆண்டு. எண்ணாயிரம் கல்பங்கள் பிரம்மாயுகம். ஓராயிரம் யுகங்கள் ஒரு சவனம். இரண்டாயிரம் சவனங்கள் ஒரு திரிவிரதம். பிரம்மாவின் வாழ்க்கை காலம் திரிவிரதா ஆகும். தற்போது நடப்பது வராஹ கல்பம். இதுவரை 34 கல்பங்கள் ஆகி உள்ளன. அவற்றின் பெயர்கள் கீழ்வருமாறு:

1. பால கல்பம், 2) புவ, 3) சுப, 4) பாவ, 5) ரம்பா, 6) ரிது, 7) கிரது, 8) வன்ஹி, 9) ஹவ்யவாஹன, 10) சாவித்ர, 11) புவ, 12) உஷிக, 13) குஷிக, 14) கந்தர, 15) ரிஷப, 16) விடஜ, 17)மார்ஜியால்ய, 18) மத்யம, 19) வைராஜக, 20) நிஷத, 21) பஞ்சம, 22) மேகவாஹன, 23) சிந்தக, 24) ஆகுதி, 25) விஜ்நதி, 26) மன, 27) பவ, 28) விரிஹத், 29) சிவேதலோஹித, 30) ரக்த, 31) பிதவச, 32) சீத, 33) விச்வரூப, 34) வராஹ கல்பம்.

7. வேத வியாசர்

ஒரு கற்பத்தில் பதினான்கு மன்வந்தரங்கள். இப்போதைய மன்வந்தரம் வைவஸ்வத மன்வந்தரம் ஆகும். பிரம்மாவுக்கு சிவபெருமான் வேதவியாசர் பட்டம் பெற்று வாழ்ந்தோர் பட்டியலை எடுத்து இயம்பினார். 1) சுவேத, 2) சத்திய, 3) சதார, 4) அங்கிர, 5) சவிதா, 6) மிருத்யு, 7) சதக்ருது, 8) வசிஷ்த, 9) சரஸ்வத, 10) திரிதாம, 11) திரிவிரத, 12) விததேஜ, 13) தருமநாராயண, 14) சுரரக்ஷண, 15) அருணி, 16) யோஸஞ்ஜ, 17) கிரிதஞ்ஜய, 18) ரிதஞ்ஜய, 19) பரத்துவாஜ, 20) வாசஸ்ரவ, 21) வாசஸ்பதி, 22) ஹுக்லயன, 23) திரிணாவிந்து, 24) ரிக்ஷ, 25) ஷகிரி, 26) பராசரர், 27) ஜாதுகர்மர், 28) கிருஷ்ண துவைபாயனர்.
(விவரங்கள்-விஷ்ணு புராணத்தில் காண்க.)

8. பிரம்மாவின் படைப்பு

(பிரம்மாண்ட புராணம் ராஜஸிக புராணம் என்பதால் பிரம்மாவை உயர்வாகக் கூறி புகழ்பாடுகிறது.) பிரம்மத்திலிருந்து நாராயணன் தோன்றி நீரில் மிதக்க அவர் நாபியிலிருந்து பிரம்மா தோன்றினார். அவர் நாராயணனை யார் என்று கேட்க, அனைத்தையும் தோற்றுவிப்பவன் நான் என்று விஷ்ணு விடையளிக்க, பிரம்மா நானே அண்டத்தைப் படைப்பவன் என்றார். பிரம்மாவின் சொற்களைக் கேட்டு வியப்படைந்த விஷ்ணு பிரம்மாவின் வாய் வழியே அவர் உடலுள் புகுந்து அனைத்து உலகங்களையும் அங்கு கண்டார். பிறகு வெளிவந்த விஷ்ணு பிரம்மாவிடம் ஆதியும், அந்தமும் காணப்படவில்லை என்றார். பிரம்மாவும் விஷ்ணுவின் உடலுள் வாய் வழியே புகுந்து அனைத்தையும் கண்டு, ஆதி அந்தமற்ற நிலையைக் கண்டு வெளிவர முயல்கையில் விஷ்ணு வாயை மூடிக்கொண்டு யோகுதுயில் கொண்டதால் வெளிவர இயலாமல் இறுதியில் தன் உடலைச் சுருக்கிக் கொண்டு நாபி வழியே வெளிவந்தார்.

அப்போது அங்கே சிவனும் தோன்றினார். அந்த வேகத்தில் நீர் தெளிக்க பிரம்மன் வீற்றிருந்த தாமரை அசைய, விஷ்ணு தாமரையில் உள்ள பிரம்மாவிடம் அவர் பூசிக்கத்தக்கவரே என்றும், தாமரை மலரிலிருந்து இறுங்குமாறும் கூறினார். அப்போது பிரம்மா கேட்டுக்கொண்டபடி பிரம்மாவைத் தன் மகனாக ஏற்றார். பத்மா=தாமரை, யோனி=மூலம். எனவே பிரம்மா பத்மயோனி எனப்பட்டார். பிரம்மாவும் விஷ்ணுவும் சமாதானம் அடைந்தனர். திரிசூலத்துடன் காணப்பட்ட சிவனைப் பற்றி அவர் யார்? என்று விஷ்ணுவிடம் கேட்க, விஷ்ணு அவர் அழிக்கும் கடவுள் சிவன் என்று கூற, அவரைத் தங்களுக்குச் சமமாக ஏற்க பிரம்மா யோசிக்க, விஷ்ணு சிவன் பலம் மிக்கவர். இருவரையுமே வெல்லக்கூடியவர் என்றும் கூறி பிரம்மாவைச் சாந்தி அடையச் செய்தார்.

9. உருத்திரன்

பிரம்மா தன்னைப் போன்ற ஒரு மகன் பெற விரும்பினார். அப்போது அவர் மடி மீது ஒரு பாலன் நீலமும், சிவப்பும் கலந்த நீலலோஹிதன் தோன்றி, அழ ஆரம்பித்தது. அப்பாலன் அழுவதன் காரணத்தைக் கேட்க அது தனக்கொரு பெயர் வைக்குமாறு கேட்கிறது எனக்கூற, (ருத்=கத்தி அழுதல்) அப்பாலனுக்கு ருத்திரன் என்று பிரம்மா பெயர் வைத்தார். திரும்பத் திரும்ப அந்தக் குழந்தை மற்றொரு பெயர் வேண்டும் என்று அழ, அந்த நீலலோஹிதனுக்கு பிரம்மா ருத்திரன், பாவன், சிவன், பசுபதி, ஈசன், பீமன், உக்கிரன், மகாதேவன் என்று எட்டு பெயர்கள் கொடுத்தார். (இதுபற்றி விஷ்ணு புராணம், பத்ம புராணங்களிலும் காண்க.) நான் எங்கே வசிப்பது? என்று ருத்திரர் கேட்க பிரம்மா கூறினார் சூரியனில் ருத்திரனாக, நீரில் பாவனாக, பூமியில் சிவனாக, தீயில் பசுபதியாக, காற்றில் ஈசனாக, விண்ணில் பீமனாக, அந்தணர் உடலில் உக்கிரனாக, சந்திரனில் மகாதேவனாக வசிப்பாயாக என்றார்.

10. முனிவர்களின் தோற்றம்

தக்ஷன் மகள் கியாதி, பிருகு முனிவரை மணந்து தாதா, விதாதா என்ற இரண்டு புத்திரர்களையும், ஸ்ரீ என்ற புத்திரியையும் பெற்றாள். புத்திரர்கள் தேவர்களாக, புத்திரி ஸ்ரீவிஷ்ணுவை மணந்து பாலா, உத்சாஹா ஆகிய இரண்டு புத்திரர்களைப் பெற்றாள். தாதாவின் மனைவி நியதியின் மகள் மிருகண்டு. அவள் மகன்கள் புகழ்பெற்ற மார்க்கண்டேய முனிவரும், வேதசிரனும் ஆவர். விதாதா ஆயதியை மணந்து பாண்டுவைப் பெற்றான். இவர்கள் அனைவரும் பிருகு மகரிஷிக் குலத்தில் உதித்தவர்கள் ஆகையால் பார்க்கவர்கள் எனப்பட்டனர். தக்ஷன் மகள் சம்பூதி, மரீசி முனிவரை மணக்க அவர்களுக்குப் பிறந்த மக்கள் அனைவரும் முனிவர்கள் ஆயினர். தக்ஷனின் புத்திரி ஸன்னதி கிரது முனிவரை மணந்தாள். அவர்கள் சந்ததியார் ஆயிரக்கணக்கானவர்கள் சிறந்த முனிவர்கள் ஆயினர். அவர்கள் வாலக்கியர்கள் எனப்பட்டனர்.

தக்ஷன் மகள் ஸ்வாஹா அக்கினியை மணந்ததாகப் பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. அவர்கள் பரம்பரையில் வந்தவர்களையும் பட்டியலிட்டுக் காட்டலாம். ஸ்வாஹாவனின் முதல் மகன் பவகாவின் புத்திரன் சகஸ்ராக்ஷன்; இரண்டாம் மகன் பவமானனின் மகள் காவ்யவாஹனன் மற்றும் மூன்றாவது மகன் சுரூசியின் மகன் ஹவ்யவாஹனன். தேவர்கள் ஹவ்யவாஹனனையும், பித்ருக்கள் காவ்ய வாஹனனையும், அசுரர்கள் சஹஸ்ராக்ஷனனையும் தீக்கடவுளாகப் பூசித்தனர். அடுத்து சிவன், தக்ஷன் புத்திரி தாக்ஷõயணி, தக்ஷனுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு, தக்ஷயஞ்ஜம், தக்ஷன் அழிவு ஆகியவை இப்புராணத்தில் கூறப்படுகின்றது. (பல புராணங்களிலும் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.)

தக்ஷயாகத்தின் காரணமாக தாக்ஷõயினி உயிரை விட்டு அடுத்து பார்வதியாகப் பிறந்து சிவனையே மணக்கிறாள். இந்நிகழ்ச்சிகளால் கோபம் கொண்ட சிவன், தக்ஷணை உலகில் பிராசீன பர்ஹி, மாரீஷர்களுக்கு மகனாகப் பிறக்குமாறு சபித்தார். தக்ஷனும் சிவனுக்கு முனிவர்கள் யாகத்தில் அவிர்ப்பாகம் அளிக்கமாட்டார்கள். சொர்க்கத்தில் இல்லாமல் பூமியில் மட்டுமே உறைவிடம் ஆகும் என்று சபித்தான். அப்போது சிவபெருமான் தக்ஷ சாபத்தினால் அல்ல, பூமியே உறைவதற்கு ஏற்ற இடம்; எனவே அங்கேயே என் உறைவிடம். நான் மற்ற தேவர்களுடன் உணவு கொள்மாட்டேன். ஏனெனில் பிராமணர்கள் எனக்குத் தனியாக உணவு படைப்பர். அதேபோல் நான் தனியாகவே பூசிக்கப்படுவேன், மற்றவர்களுடன் அல்ல என்று கூறினார். மறுபிறவியிலும் தக்ஷன் தக்ஷனாகவே பிறந்து இமயமலையில் கங்கைத் துவாரம் என்ற இடத்தில் சிவன் தவிர மற்றவர்களை அழைத்து ஒரு யாகம் செய்தார். சிவனில்லாத யாகம் வெற்றி தராது என்று கூறி ததீசி முனிவர் அதில் பங்கு கொள்ளவில்லை. மேரு மலை மீதிலிருந்து சிவனும், உமையும் அனைவரும் தக்ஷனின் யாகத்திற்குச் செல்வதைக் கண்டார். அப்போது சிவபெருமான் தன் வாயிலிருந்து வீரபத்திரனைத் தோற்றுவிக்க பரமன் ஆணைப்படி தக்ஷன் யாகத்தையும், அங்கிருந்தோர்களையும் வீரபத்திரன் அழித்தான். தக்ஷன் மறுபடியும் தலையும், உயிரும் பெற்றான். மேலும் பரமன் அவன் ஆயிரம் அசுவமேத யாகங்கள், நூறு வாஜ்பேய யாகங்கள் வெற்றியுடன் நடத்துமாறு ஆசீர்வதித்தார்.

11. நிலப்பரப்பும் அதன் பகுதிகளும்

சுவாயம்புவ மனுவின் மகன் பிரியவிரதனுக்கு பத்து புத்திரர்களும், இரண்டு புத்திரிகளும் பிறந்தனர். பிரியவிரதன் உலகை ஏழு த்வீபங்களாகப் பிரித்து ஏழு புத்திரர்களுக்கும் பங்கிட்டுத் தந்தான். அக்னிதரனுக்குச் சம்பு த்வீபமும், மேதத்திற்கு ப்லக்ஹ த்வீபமும், வாசுவுக்கு ஷால்மலி த்வீபமும், ஜியோதிஷ்மனனுக்கு குசத்வீபமும், துயுதி மனனுக்கு கிரவுஞ்ச த்வீபமும், ஹவ்யனுக்கு க்ஷகத்வீபமும், சவனனுக்கு புஷ்கர த்வீபமும் அளிக்கப்பட்டது. (மற்ற மூவரும் தவம் செய்யச் சென்றதாக விஷ்ணு புராணம் கூறும். மேலும் அக்னி புராணம், பாகவத புராணமும் இப்பகுதியைக் காட்டும்). சவனன் தனது புஷ்கத்வீபத்தை இரண்டு வர்ஷங்களாகப் பிரித்து, திதகண்டன், தாடகிகண்டன் இருவருக்கும் கொடுத்தான். ஹவ்யன் தனது ஏழு குமாரர்களுக்கும் தனது ஷகத்வீபத்தை ஏழு வர்க்ஷங்களாகப் பிரித்து அளித்தான். அந்த ஏழுபேர் ஜலஜன், கவுமாரன், சுகுமாரன், மணிசகன், குசுமோத்தரன், மவுதகன், மஹத்ருமன் எனப்படுவர்.

இவ்வாறே துயுதமனன், ஜோதிஷ்மனன், வாசு (அ) வாபுஷ்மனன் மேததிதி ஆகியோரும் அவரவர் நிலப்பகுதியை, அவரவர் ஏழு பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்தனர். ஜம்புத்வீபம் பெற்ற அக்னிதரன் தன் நிலப்பகுதியைத் தனது ஒன்பது புத்திரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தான். அவை அப்புத்திரர்கள் பெயரிலேயே அறியப்பட்டன. இவ்வாறு பங்கிட்டுக் கொடுத்த பின் அக்னிதரன் தவம் செய்ய கானகம் சென்றான். மேலே கூறிய ஒன்பதின்மர் முறையே நபி, கிம்புருஷன், ஹரி, இளவிரதன், ரம்யன், ஹிரண்வனன், குரு, பத்ரஷ்வன், கேதுமாலன் என்போர். நபியின் மகன் ரிஷபன், அவன் மகன் பரதன். பரதன் பெயராலேயே நபி ஆண்டு வந்த பகுதி பாரத வர்ஷம் எனப்பட்டது.

12. ஜம்புத்வீபம்

இதைச்சுற்றி லவண சமுத்திரம், இமாலயம் முதல் ஆறு பெரும் மலைத்தொடர்கள் உள்ளன. இப்பகுதியின் நடுவில் சமேரு மலை உள்ளது. இப்பகுதியில் நான்வகை வருணத்தவரும் வாழ்ந்து வந்தனர். இமயமலைக்குத் தெற்கில் உள்ள பகுதி பாரத வர்ஷமாகும். சுமேரு பர்வதம் முழுவதையும் பிரம்மா ஒருவராலேயே காணமுடியும். அதன் மீது பிரம்மா இருக்கிறார். தேவர்கள் அவனைத் தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். விமானங்கள் பல காணப்படும். ரிஷிகள் மந்திரங்கள் உச்சரிப்பதும் யஜ்ஞ யாகாதிகள் செய்வதும் எப்போதும் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். அதன் சிகரம் சத்ரவத எனப்படும். அங்கு கால்வைக்க அரக்கர்கள் அஞ்சுவர். அங்கிருந்து சிறிது தூரத்தில் இந்திரனின் அமராவதி நகரம் உள்ளது. அவரது அரசவை சுதர்மா எனப்படும். அது பாரிஜாத மலரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுதர்மாவில் தேவர்களும், கந்தர்வர்ரகளும், அப்சரசுகளும் எப்போதும் காணப்படுவர். பிரம்மாவின் இருப்பிடத்திற்குத் தென்கிழக்கில் அக்னியின் அவை உள்ளது. இன்னும் தெற்கில் சுசும்யாமா என்னும் சூரியனின் அவை உள்ளது. மற்றும் வருணனின் சுபாவதியும், வாயுவின் காந்தவதியும், சிவபிரானின் யோஷவதியும் உள்ளன. முனிவர்கள், கந்தர்வர்கள், அப்சரசுகள், மற்றும் புண்ணியசாலிகளுக்கான இவ்விடம் சொர்க்கம் எனப்படும்.

சுமேரு மலையைச் சுற்றிலும் ஏரிகளும், அழகிய நந்தவனங்களும், பழத்தோட்டங்களும் காடுகளும் உள்ள பள்ளத்தாக்குகளும் உள்ளன. இது இந்திராதி தேவர்களுக்கும், ராக்ஷசர்களுக்கும், கின்னரர்களுக்கும், கருடன் அவன் மகன் சுக்கிரீவன், பல பாம்புகள் மற்றும் சிவனின் பூதகணங்கள், அஷ்டவசுக்கள், சப்தரிஷிகள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், அசுவினிகள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ஆகிய அனைவருக்கும் இருப்பிடமாக உள்ளது. ஹரிகுடம் என்ற சிகரத்தில் விஷ்ணுவும், ஹேமஷிரிங்கா சிகரத்தில் பிரம்மாவும் உள்ளனர். மற்ற சிகரங்களில் மற்ற இனத்தவர் வாழ்கின்றனர்.


© Om Namasivaya. All Rights Reserved.