இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


பிரமபுரத்துறை பெம்மான்

பிரமபுரத்துறை பெம்மான்

பதிக எண்: 1.127 - திரு பிரமபுரம் (சீர்காழி) - வியாழக்குறிஞ்சி

முன்னுரை:

தனது நான்காவது தல யாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து, வித்தியாசமான பல பதிகங்கள் பாடினார். அப்போது அவர் பாடிய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன. அத்தகைய பதிகங்களில் ஒன்று தான் ஏகபாதம் என்று அழைக்கப்படும் இந்த பதிகம். மொழிமாற்றுப் பதிகம் (1.117) மாலைமாற்றுப் பதிகம் (3.117) வழிமொழி விராகப் பதிகம் (3.67) ஆகியவற்றை சிந்தித்த நாம் இப்போது ஏகபாத திருப்பதிகத்தை சிந்திப்போம்.

இந்த பதிகமும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதிகங்கள் போன்று பன்னிரண்டு பாடல்களை உடைய பதிகமாகும். ஒவ்வொரு பாடலிலும் சீர்காழியின் வேறுவேறு பெயர்கள் உணர்த்தப் படுகின்றன. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் நான்கு அடிகளும் ஒரே சொற்றொடரைக் கொண்டிருப்பதை நாம் காணலாம். ஓரடியே பொருள் வேறுபட நான்கு முறை மடித்து வந்து பாடலாக அமைந்தமையால் ஏகபாதம் என்று பெயர் வந்தது. ஏகம்=ஒன்று; பாதம்=அடி. இந்த பாடலையும் சித்திரக் கவியின் ஒரு வகையாக கருதுவார்கள். சொற்களை வேறு வேறு முறையில் பிரித்து பொருள் கொள்ள வேண்டுமென்பதால் இதனையும் மிறைக் கவி என்று அழைப்பார்கள். மிறை என்றால் வருத்தச் செய்வது என்று பொருள். மூளையை வருத்தி, கசக்கிப் பிழிந்து பொருள் காண வேண்டும் என்பது இதனால் உணர்த்தப் படுகின்றது.. திருஞான சம்பந்தப் பெருமானே மீண்டும் எழுந்தருளி பொருள் உரைத்தால் அல்லது, இந்த பாடலின் பொருள் இன்னது என்று திட்டவட்டமாக கூற முடியாது என்று சொல்லுவார்கள். எனினும் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீர்காழி கண்ணுடைய வள்ளலார் என்பவர், இந்த பாடலுக்கு உரை எழுதியுள்ளார். இவர், திருஞான சம்பந்தரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர், திருஞானசம்பந்தரை தனது மானசீக குருவாக கருதி அனுதினமும் அவரை தியானித்து வந்தமையால், திருஞான சம்பந்தரே, இந்த பதிகத்தின் பாடல்களின் பொருளை இவர் புரிந்து கொள்வதற்கு அருள் புரிந்தார் என்று சொல்லப் படுகின்றது. இவர் எழுதிய ஒழிவில் ஒடுக்கம் என்ற சைவ சித்தாந்த நூல் மிகவும் பிரபலமானது. இந்த ஒழிவில் ஒடுக்கம் என்ற நூலுக்கு திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள் உரை கண்டுள்ளார். இராமலிங்க சுவாமிகள் மற்றும் பகவான் ரமணர் ஆகியோர் இந்த நூலை மிகவும் சிறந்த தத்துவ நூலாக கருதினார்கள். இவர் இந்த பதிகத்திற்கு எழுதிய உரையே பல தேவாரப் பதிப்புகளிலும் காணப் படுகின்றன. இவரது உரையினையே ஆதாரமாகக் கொண்டு, சிவக்கவிமணியார் தனது பெரிய புராண விளக்கம் நூலில், இந்த பாடலுக்கு குறிப்பு அளித்துள்ளார். அந்த குறிப்பின் வழியே இந்த பாடலுக்கு இங்கே விளக்கமும் பொழிப்புரையும் அளிக்கப் பட்டுள்ளது.. மற்ற பதிகங்களுக்கு மாறுபட்ட முறையில் அமைந்துள்ள பதிகம் எனினும் இந்த பதிகத்தின் இறுதி நான்கு பாடல்களில், இராவணின் கயிலை சம்பவம், அண்ணாமலை நிகழ்ச்சி, சமணர்கள் பற்றிய குறிப்பு மற்றும் பதிகம் ஓதுவதால் விளையும் பயன் முதலியன காணப் படுகின்றன. இந்த பதிகத்தின் அமைப்பு திருஞான சம்பந்தரின் வியத்தகு புலமைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றது.

பாடல் 1:

பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்

பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்

பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்

பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

பிரமம் புரத்துறை பெம்மான் எம்மான்

பிரமபுரத்து உறை பெம் மான் எம் ஆன்

பிரமம் புரத்து உறை பெம் ஆன் எம்மான்

பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்

முதல் அடி; பிரமம் புரத்துறை பெம்மான் எம்மான்; பிரமம்=ஞானமே உருவமாக இருக்கும் பராசக்தி; புரத்து உறை=பரிபூரணமான ஞானத்தை வியந்து நிற்கும்; ஞானம் உடையவர்கள் தாமே, அடுத்தவரின் ஞானத்தின் பெருமையை உணரமுடியும். எல்லையற்ற ஞானம் உடையவனாகிய பெருமான், பராசக்தியின் ஞானத்தின் தன்மையை உணர்ந்து போற்றும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமைக்குரிய மகன் என்ற பொருளை உணர்த்தும் பெருமகன் என்று சொல் பெம்மான் என்று திரிந்ததாக கூறுவார்கள்; எம்மான்= அனைவரிலும் பெரியோனாக இருப்பவன்; வேறெவரிடமும் இல்லாத எட்டு அரிய குணங்களைக் கொண்டுள்ள பெருமானைத் தவிர்த்து, பெருமைக்கு உரியவராக கருதப் படுவதற்கு தகுதி படைத்தவர் வேறெவர் உளர். பெருமானின் பல பெருமைகளில், முற்றும் உணர்ந்தவனாக இருப்பதும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருப்பதுமன்றி உயிர்களுடன் கலந்து அவைகளின் நடுவே இருந்து இயக்கும் தன்மையும் மிகவும் முக்கியமானவை அல்லவா. இந்த இரண்டு தன்மைகளும் இந்த அடியில் உணர்த்தப் படுகின்றன. எம்மான்=அனைத்து உயிர்களுக்கும் மேலானவனாக இருக்கும் எமது தலைவன். இரண்டாவது அடி; பிரமபுரத்து உறை பெம் மான் எம் ஆன்; பிரமபுரம்= மேலே உள்ள மேலுலகம்; உறை=இருந்த தண்ணீர், கங்கை நதி; தேவலோகத்தில் இருந்த கங்கை நதி தானே பகீரதனின் முயற்சியால் நிலவுலகத்திற்கு கொண்டு வரப் பட்டது. பெம்=விருப்பம்; மான்=மான் போன்ற சாயலை உடைய கங்கை நங்கை; எம்=எமது; ஆன்=ஆன்மா; எமது ஆன்மா என்று சொல்வதன் மூலம் அனைத்து உயிர்களுடனும் உயிராகக் கலந்து இருப்பவன் பெருமான் என்பது உணர்த்தப் படுகின்றது. மூன்றாவது அடி: பிரமம் புரத்து உறை பெம் ஆன் எம்மான்; பிரமம்=பிரமத்துவம்; புரம்=சரீரம்; உறை=எண்ணுதல்; பெம்=விருப்பம், ஆசை; ஆன்=அமையாது இருத்தல்; எம்மான்=என்னைப் போன்று ஒத்திருப்பவன்; நான்காவது அடி: பிரமபுரத்துறை பெம்மான் எம்மான்; எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் மிகவும் வெளிப்படையான பொருள். பிரமபுரம் என்று அழைக்கப் படும் பெருமைக்குரிய சீர்காழி தலத்தில் உறையும் பெருமான் எனது தலைவன் ஆவான்.

மான் போன்ற சாயலை உடைய கங்கை நங்கை பெருமானின் சடையினில் மிகுந்த விருப்பத்துடன் பொருந்தி இருப்பதாக இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. நிலவுலகம் வருவதற்கு சிறிதும் விருப்பம் இல்லாதவளாக, பூமியையே புரட்டிப் போட்டுவிடும் நோக்கத்துடன் மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி, பெருமானின் சடையில் சிறைப் படுத்தப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். அவ்வாறு இருக்கையில் பெருமானின் சடையில் இருப்பதை எவ்வாறு அவள் விரும்புவாள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுவது இயற்கையே. பெருமானின் சடையில் கங்கை நங்கை பொருந்திய பின்னர், கங்கை நதியின் தன்மையில் ஏற்பட்ட மாற்றத்தை நாம் சற்று சிந்திக்க வேண்டும். பெருமானின் சடையில் ஏற்றுக் கொள்ளப் படாமல் இருந்திருந்தால், கங்கை நதி, தனது திட்டத்தின் வழியே வேகமாகப் பாய்ந்து பூமியையும் புரட்டிக் கொண்டு பாதாளம் சென்று சேர்ந்திருக்கும். அவ்வாறின்றி, பெருமானின் சடையில் தேக்கி வைக்கப்பட்டு சிறிது சிறிதாக வெளியிடப் பட்டதால், இன்றளவும் ஓடிக் கொண்டிருக்கின்றது; மேலும் தன்னில் நீராடுவோரின் பாவங்களைக் களையும் புண்ணிய தீர்த்தமாகவும் விளங்குகின்றது. இந்த தன்மையை கங்கை நதி பெறுவதற்கு பெருமான் தானே காரணம். இவ்வாறு தனக்கு அழியாத புகழினை அளித்து உயர்த்திய பெருமானின் சடையில் இருப்பதற்கு விருப்பம் கொள்வது இயற்கை தானே. சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், அப்பர் பிரான், கங்கை நதியை தீர்த்தமாக போத விட்டவர் சிவபெருமான் என்று சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது. இந்த பாடல் சோற்றுத்துறை தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் ஆறாவது (4.41.6) பாடலாகும்

பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்

பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் தன் திறமே

ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்

தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத்துறையனாரே

பந்தமும் வீடுமாய் இருப்பவன் சிவபிரான் தான் என்பதை நமக்கு இதே பதிகத்தின் முந்தைய பாடல் மூலம் உணர்த்திய அப்பர் பிரான், பந்தத்திலிருந்து நாம் விடுபட்டு வீடுபேறு அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே கூறுகின்றார். பேர்த்து இனிப் பிறவா வண்ணம்=மறுபடியும் பிறப்பு எடுத்து இந்த உலகத்திற்கு வருவதைத் தவிர்த்து, இங்கிருந்து பெயர்ந்து வீடுபேறு என்ற இடத்திற்கு செல்வது: பிதற்றுதல்=தனது நிலையை மறந்து பேசுதல்; நமது நிலையை மறந்து நாம் பேசுகின்றோம் என்று மற்றவர்கள் கருதும் வண்ணம், மறுபடியும் மறுபடியும் சிவபிரானது நாமத்தை உச்சரித்தல்; இங்கே கங்கையை ஏற்று தீர்த்தமாய் போத விட்டார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வானுலகத்தில் இருந்த கங்கை நதி. தனது மூதாதையர் முக்தி அடைவதற்காக, அவர்களது உடல் எரிந்த சாம்பல் குவியலின் மீது பட வேண்டும் என்று பகீரத மன்னன் விரும்பினான். இதற்கு விருப்பம் இல்லாத கங்கை நதி, வானுலகத்திலிருந்து கீழே இறங்கும் போது, மண்ணுலகத்தையே கரைத்து பாதாளத்தில் ஆழ்த்தி விடுவது போல, மிகுந்த வேகத்துடன் இறங்கியது. அவ்வாறு நடந்திருந்தால், பகீரதனின் முன்னோர்களான சகர புத்திரர்களுக்கு அவர்கள் செய்த பாவத்திலிருந்து விமோசனம் கிடைத்திருக்காது; பாவத்தைத் தீர்க்கும் புனித நீராக கங்கையும் கருதப்பட மாட்டாது; சிவபிரான் தனது சடையில் கங்கையைத் தாங்கி, கங்கையின் வேகத்தைக் குறைத்ததால் தான், கங்கை மண்ணுலகத்திற்கு எந்த கெடுதலையும் விளைவிக்காமல், பாதாளம் சென்றது; சகர புத்திரர்கள் விமோசனம் அடைந்தார்கள்; இன்றளவும் கணக்கற்ற மக்கள் கங்கையில் தினமும் நீராடி தங்களது பாவங்களைக் போக்கிக் கொள்கின்றார்கள்; கங்கையும் தீர்த்தமாக கருதப்படுகின்றது. இந்த செய்தியைத் தான் ஆரவாரத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை, சிவபிரான் தனது சடையில் ஏற்றதால், தீர்த்தமாக மாறியது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் இறைவனிடம் நாம் என்ன கேட்கவேண்டும் என்று நமக்கு உணர்த்தப் படுகின்றது. இனிப் பிறவாத தன்மையை நமக்கு அருளுமாறு இறைவனிடம் வேண்டுங்கள் என்று அப்பர் பிரான் அறிவுரை கூறுகின்றார்.

பிரமரூபத்தில் உள்ளதாக பலராலும் கருதப்படும் தன்னை, முக்தி நிலையில் அமர்த்தாமல் என்னுடன் ஒத்து என்னைப் போன்று இருப்பவன் என்று திருஞானசம்பந்தர் சொல்வதாக, இந்த பாடலின் மூன்றாவது அடிக்கு விளக்கம் பெரியோர்கள் கூறுகின்றனர். இந்த கருத்து சற்று ஆராயப் பட வேண்டியது. பெருமான் தன்னை பிறப்பிறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்காமல், தன்னை மீண்டும் பிறக்க வைத்ததற்கு தான் என்ன குற்றம் செய்தேன் என்று திருஞானசம்பந்தர் துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் கேள்வி கேட்பது நமது நினைவுக்கு வருகின்றது. துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.98) ஒரு பாடலில் திருஞானசம்பந்தர், தான் சென்ற பிறவியில் இறைவனை ஒரு பொழுதும் மறக்காமல் இருந்ததாகவும், அவ்வாறு இருந்த தனக்கு முக்தி அளிக்காமல் மறுபடியும் மண்ணுலகில் பிறக்கச் செய்தது ஏன் என்றும் வினவுவதை நாம் உணரலாம். பிறப்பிறப்பினைத் தவிர்க்கும் வழியை நீ எனக்கு உணர்த்தாமல், பிறவிப் பிணியினை எனக்குத் தந்து சென்ற பிறவியில் இறக்குமாறும் இந்த பிறவியில் மறுபடியும் இந்த மண்ணுலகில் பிறக்குமாறும் செய்தது நியாயமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. துறத்தல் என்பதை ஒரு துறவி தான் அடுத்தவருக்கு கற்றுத் தரமுடியும் என்பதால், பகலில் துறவிக் கோலம் பூண்டு வேதங்களை உபதேசம் செய்தவனாகிய துருத்திப் பெருமானை நோக்கி இந்த கேள்வி கேட்கப்படுகின்றது. இவ்வாறு மறுபடியும் நான் பிறப்பு எடுப்பதற்கு நான் செய்த தவறு தான் என்னே என்றும் கேட்கின்றார். இந்த செய்தியைத் தான் திருஞான சம்பந்தர் முக்தி நெறி அமையாமல் செய்தது ஏன் என்று கேள்வி கேட்கும் முகமாக துறக்குமாறு சொலப்படாய் என்று இந்த பாடலின் முதல் பகுதியாக குறிப்பிடுகின்றார் போலும்.

துறக்குமாறு சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி

மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின் மேல்

பிறக்குமாறு காட்டினாய் பிணிப் படும் உடம்பு விட்டு

இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே

அடுத்து இந்த தொடரின் இரண்டாவது பகுதியை நாம் இங்கே காண்போம். முற்பிறவியில் தவறேதும் செய்யாதவரை ஏன் மீண்டும் பிறப்பில் ஆழ்த்தினார் என்பதற்கு, சேக்கிழார் திருஞான சம்பந்தரின் புராணத்தில் முதல் பாடல் வாயிலாக நமக்கு விடையளிக்கின்றார். வேதநெறி தழைத்து ஓங்கவும் சைவத்துறை சிறப்புடன் விளங்கவும் சிவனடியார்களின் கூட்டம் பெருகவும் ஞானசம்பந்தரின் திருவவதாரம் தானே காரணமாக இருந்தது. ஞான சம்பந்தரை ஒரு கருவியாக கொண்டு, அமணர்கள் மற்றும் புத்தர்களின் கொட்டத்தை அடக்கி, தமிழகத்தில் முன்பு போன்று சைவநெறி சிறந்து விளங்க பெருமான் திருவுள்ளம் கொண்டதால் தானே ஞானசம்பந்தரின் அவதாரம் நிகழ்ந்தது; அம்மையே அப்பா என்று கோபுரத்தை பார்த்து அழுத குழந்தைக்கு ஞானப்பால் ஊட்டப்பட்டது. மேலும் பெருமானே அவரது உள்ளத்தில் அமர்ந்து தனது கருத்துகளை ஞானசம்பந்தர் வாயிலாக வெளிப்படுத்தினார் அல்லவா. இதனை சம்பந்தரே, இலம்பையங்கோட்டூர் பதிகத்தில் எனதுரை தனதுரையாக என்று உணர்த்துகின்றார் அல்லவா. இந்த செய்தியையே, தனது உடலில் அமர்ந்து கொண்டு இருப்பதால், பெருமானுக்கும் தனக்கு ஏதும் வேறுபாடு இல்லை என்று கூறுகின்றார். கருத்தளவில் இருவரும் ஒத்து இருப்பதால் தானே, பெருமான் வேதங்களின் மூலமாக அருளிய கருத்துகள் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களிலும் வெளிப்படுகின்றன பிரமமாகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் தனது சரீரத்தில் உறைவதாக கூறுகின்றார்.. பெருமான் தன்னைப் போன்று ஒத்து இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார் போலும்.

பொழிப்புரை:

முற்றும் உணர்ந்தவன் என்ற குணத்தையும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருப்பதும் அன்றி அனைத்து உயிர்களிலும் கலந்து அவற்றின் நடுவே இருந்து அவற்றை இயக்கும் தன்மையையும், மேலும் இது போன்று பல பெருமைகளை உடையவனும் ஆகிய சிவபெருமான், ஞானமே உருவமாக உள்ள பராசக்தியைக் கண்டு, பராசக்தியின் பரிபூரண ஞானத்தை மிகவும் வியந்து பெருமை அடையும் பெருமான், அனைத்து உயிர்களுக்கும் பெரியோனாக இருக்கும் பெருமான், எமது தலைவன் ஆவான். மேல் நிலமாகிய தேவர் உலகத்தில் இருந்த கங்கை நதியை, மான் போன்ற சாயல் உடைய கங்கை நங்கையை மிகுந்த விருப்பத்துடன் தனது சடையில் வைத்துள்ள பெருமான், அனைத்து உயிர்களுடனும் உயிராக கலந்து இருப்பதால், உயிர் போன்று எங்களுக்கு அருமையான பொருளாகத் திகழ்கின்றான். பிரமத்தின் வடிவமாக பலராலும் கருதபட்ட என்னை நான் விரும்பிய முக்தி நிலையில் ஆழ்த்தாமல் மிகுந்த விருப்பத்துடன் இந்த நிலவுலகில் என்னை பிறப்பித்து என்னுடன் என்னை ஒத்தவனாக ஒன்றி நின்றவன் சிவபெருமான் ஆவான். பிரமமாகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் எனது உடலில் பொருந்தி இருப்பதால், அவன் வேதங்களில் வெளிப்படுத்திய கருத்துகள், எனது தேவாரப் பாடல்களில் உள்ள கருத்தினை ஒத்து உள்ளன. பிரமபுரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய சீர்காழி நகரினில் உறையும் பெருமான் எனது தலைவன் ஆவான்.

பாடல் 2:

பிரமபுரத்துறை பெம்மான் (1.127) பாடல்கள் 2, 3 (திதே 0251)

விண்டலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்

விண்டலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்

விண்டலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்

விண்டலர் பொழில் அணி வேணுபுரத்து அரன்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

விண்டு அலர் பொழில் அணிவு ஏண் நுபுரம் தரன்

விண்டு அலர் பொழில் அணி வேணு புரத்து அரன்

விண்தலர் பொழில் அணிவு ஏணு புரத்தரன்

விண்டு அலர் பொழில் அணி வேணுபுரத்தரன்

முதல் அடி; விண்டு அலர் பொழில் அணிவு ஏண் நுபுரம் தரன்; விண்டு=மலை; அலர்=ஒலி: பொழில்=அழகிய சோலைகள் நிறைந்த உலகம்; அணிவு=அகப்படுத்துதல்; ஏண்=பெருமை வாய்ந்த: நுபுரம்=சிலம்பு: நூபுரம் என்ற சொல் நுபுரம் என்று குறுகியுள்ளது. தரன்= அணிந்தவன்; சிவபெருமான் அணிந்துள்ள சிலம்பின் பெருமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. சிவபெருமான் அணிந்துள்ள சிலம்பு எழுப்பும் ஒலி, உலகினில் உள்ள எட்டு சிறந்த மலைகள் மற்றும் சிறந்த பொழில்கள் ஆகியவை எழுப்பும் ஆரவாரத்தை விடவும் மிகவும் அதிகமாக இருப்பதாக திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இரண்டாவது அடி; விண்டு அலர் பொழில் அணி வேணு புரத்து அரன்; விண்டு=விஷ்ணு, திருமால்; அலர்=பழிச்சொல், உண்மை அல்லாத சொற்கள்; பொழில்=சோலை மரநிழல்; அணி= பொருந்தி, அணுகி நின்று; அண்ணி என்ற சொல் அணி என்று குறுகியது; வேணு= விரும்பிய; புரத்து=திரிபுரத்து அரக்கர்களின் நகரத்தை எரித்த; அரன்=சிவபெருமான்; திரிபுரத்து அரக்கர்கள் வைதீக முறையில் வாழ்க்கை நடத்தி வந்ததால் பெருமான் முதலில் அவர்களுடன் போரிட ஒப்பவில்லை. ஒரு அரச மரத்தின் நிழலில் அமர்ந்த வண்ணம் திருமால் திரிபுரத்து அரக்கர்களுக்கு நாத்திக வாதத்தை உபதேசம் செய்ததாக சொல்லப் படுகின்றது. அரச மரத்தை போதி மரம் என்று கூறுவார்கள். எனவே இவ்வாறு அரச மரத்தின் அடியில் அமர்ந்த வண்ணம் உபதேசம் செய்த திருமாலை புத்தன் என்று பக்தி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறு திருமாலின் போதனையால் திரிபுரத்து அரக்கர்கள் மனம் மாறி வைதீக நெறியை கைவிட்டு சிவனை நிந்தித்தும் வாழ்ந்த நிலையே பெருமான் அவர்களுடன் போருக்கு செல்ல காரணமாக அமைந்தது என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. மூன்றாவது அடி: விண்தலர் பொழில் அணிவு ஏணு புரத்தரன்; விண்தலர்=மேல் உலகில் வாழும் தேவர்கள்; பொழில்=கற்பகச் சோலை; அணிவு=சூடிக் கொள்ளும்; ஏணும்=எணும், என்ற சொல் ஏணும் என்று நீண்டது; பெருமையாக எண்ணும்; எணும் என்ற சொல் எண்ணும் என்ற சொல்லின் இடைக்குறை, புரந்தரன் என்ற சொல் புரத்தரன் என்று திரிந்து தேவர் தலைவன் இந்திரனை குறிப்பிடுகின்றது; நான்காவது அடி; விண்டு அலர் பொழில் அணி வேணுபுரத்தரன் விண்டு=இதழ்கள் விரிந்து; அலர்=மலர்கின்ற; பொழில்-=சோலைகள் அணி=அழகு செய்யும்; வேணுபுரத்து அரன்=வேணுபுரம் என்ற பெயர் கொண்டுள்ள நகரில் உறையும் சிவபெருமான்.

திரிபுரத்து அரக்கர்களின் மனம் மாறியதற்கு காரணமாக திருமால் இருந்த தன்மை, நம்மாழ்வாரால் ஒரு பாசுரத்தில் உணர்த்தப் படுகின்றது. திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் முதலில் வேதநெறியை கடைப்பிடித்து சிவபிரானை தொழுது வாழ்ந்ததாகவும், அதனால் அவர்களுடன் போர் செய்ய சிவபிரான் உடன்படாத நிலையும், திருமால் வேதியர் உருவம் கொண்டு திரிபுரங்கள் சென்று அரக்கர்களின் மனதில் மயக்கத்தை தோற்றுவித்து அவர்களின் சிந்தனையைக் கெடுத்து வேதநெறியிலிருந்து வழுவி சிவ நிந்தனை செய்யும் அளவுக்கு அவர்களை கெடுத்ததுவும், பின்னர் சிவபிரான் அவர்களை அழித்த வரலாறும் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வரலாற்றில் திருமாலின் பங்கு, நம்மாழ்வாரால் திருவாய்மொழி பாசுரத்தில் (5.10.4) கூறப்பட்டுள்ளது. இந்த பாசுரத்தில், திரிபுரத்து அரக்கர்களை அழிக்கின்ற நோக்கத்தினில் சிவனும் திருமாலும் வேறு அல்லாமல் ஒன்றாக விளங்கி செயல்பட்டனர் என்று நம்மாழ்வார் கூறுவதையும் காணலாம்

கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்கவாறும் கலந்து அசுரரை

உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்

வெள்ள நீர்ச் சடையானும் நின்னுடை வேறு அலாமை விளங்க நின்றதும்

உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே

திருமால் செய்த மாயத்தால் திரிபுரத்தில் வாழ்ந்த அரக்கர்கள் நீசர்களாக மாறினார் என்று நீலக்குடி பதிகத்தின் பாடலில் (5.72.5) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முதலில் சிவபெருமானை வணங்கி, வேத நெறிக்கு மதிப்பு அளித்து வாழ்ந்து வந்த காரணத்தால் சிவபெருமான் அவர்களுடன் சண்டை செய்ய விரும்பவில்லை. திருமாலும் நாரதரும் சேர்ந்து செய்த சூழ்ச்சியால், அவர்கள் மனம் பேதலித்து, புத்த சமயத்தைச் சார்ந்து சிவபிரானை நிந்திக்க தொடங்கினர். இதனால் சிவபிரான் அவர்களை அழிக்க முற்படுகின்றார். இங்கே புத்த சமயம் என்பது திருமால் அவர்களுக்கு உணர்த்திய கொள்கை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நேச நீலக்குடி அரனே எனா

நீசராய் நெடுமால் செய்த மாயத்தால்

ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய்

நாசமானார் திரிபுர நாதரே

வேதநெறியினைக் கருதாதவர்களின் கோட்டைகளை எரித்தவர் சிவபெருமான், என்பதை திருஞானசம்பந்தர், திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.95.2) கூறுகின்றார். இதே பதிகத்தின் முதல் பாடலில், பெருமானின் அடையாளங்களையும், பெருமான் இருக்கும் இடமாகிய திருவிடைமருதூர் தலத்தையும் உணர்த்திய, திருஞானசம்பந்தர் அந்த தலம் சென்று இறைவனை வழிபடும் அடியார்களின் வினைகள் நீங்கிவிடும் என்று, பெருமானை வழிபடுவதால் நாம் அடைகின்ற பலனை உணர்த்துகின்றார். விருது-பெருமை; தீர்ப்பாம்=தீர்தலை உடைய தன்மை; கருதார்= சிவநெறியை கருத்தில் கொள்ளாத திரிபுரத்து அரக்கர்கள்; அன்பின் வழியாகிய சிவநெறியின் உயர்ந்த தன்மையை கருதாமல், சிவநெறியை பின்பற்றாமல் அனைவர்க்கும் பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்த சிவபெருமான், எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் உலவுகின்றார். இடைமருது தலத்தினைத் தான் உறைகின்ற இடமாகக் கொண்டுள்ள பெருமானைத் தொழுது வணங்கும் அடியார்களின் வினைகள் முற்றிலும் தேய்ந்துவிடும், மேலும் அத்தகைய அடியார்கள் சிறந்த புகழினையும் அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. பல திருமுறைப் பாடல்கள், திரிபுரத்து அரக்கர்களை, வேத நெறியிலிருந்து விலகிச் சென்றவர்கள் என்று குறிப்பிடுகின்றன.

கருதார் புரம் எய்வர்

எருதே இனிதூர்வர்

மருதே இடமாகும்

விருதாம் வினை தீர்ப்பே

பொழிப்புரை:

உலகத்தில் உள்ள சிறந்த எட்டு மலைகளை உள்ளடக்கியது போன்று பெரியதாகவும் ஆரவாரம் மிகுந்த சோலைகள் சூழ்ந்த உலங்கங்கள் அனைத்தையும் உள்ளே அடக்கியது போன்ற ஒலியினை எழுப்புவதாகவும் அமைந்துள்ள பெருமை வாய்ந்த சிலம்பினைத் தனது காலில் அணிந்தவன் சிவபெருமான். புத்தனாக வந்த திருமால் கூறிய பழிச்சொற்களை (பெருமானை குறித்த) அரசமரத்தின் நிழலில் திருமாலுடன் அமர்ந்து விரும்பி கேட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவன் சிவபெருமான். மேல் உலகில் உள்ள தேவர்களால் கற்பக மலர் தூவி வழிபட அந்த மலர்களைத் தனது தலையில் பெருமையுடன் சூட்டிக் கொள்ளும் தேவேந்திரன் தங்கிய தலம் சீர்காழி; இதழ்கள் விரிந்து நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த சோலைகள் அழகு செய்யும் தலமாகிய வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் பெருமான் உறைகின்றார்.

பாடல் 3:

பிரமபுரத்துறை பெம்மான் (1.127) பாடல்கள் 2, 3 (திதே 0251)

புண்டரீகத்தவன் மேவிய புகலியே

புண்டரீகத்தவன் மேவிய புகலியே

புண்டரீகத்தவன் மேவிய புகலியே

புண்டரீகத்தவன் மேவிய புகலியே

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

புண்டரீகத்தவன் மேவிய புகலியே

புண்டரீகம் தவன் மேவிய புகலி ஏ

புண்டரீகம் தவன் மே வியம் பு கலி ஏ

புண்டரீகத்தவன் மேவிய புகலியே

முதல் அடி; புண்டரீகத்தவன் மேவிய புகலியே; புண்டரீகம்=இதய கமலம்; புண்டரீகத்தவன்= எனது இதய கமலத்தில் உள்ளவன்; மேவிய=மீண்டு பிறப்பெடுத்து நிலவுலகம் வாராமல் பொருந்திய; தனக்கு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்தமையால், பெருமான், தனக்கு இன்பம் தருபவனாக இருக்கின்றான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். புகலி=புகலிடம்; தனது அனுபவத்தை குறிப்பிடுவதன் மூலம், எப்போதும் இறைவனை தியானித்து நமது மனதினில் நிறுத்திக் கொண்டால், அவன் நமக்கு சிறந்த புகலிடமாக விளங்கி மீண்டும் பிறப்பெடுத்து இந்த நிலவுலத்திற்கு வாராத வண்ணம் முக்தி உலகுக்கு நம்மை அழைத்துச் செல்வான் என்று இங்கே உணர்த்துகின்றார். புகலியே என்ற சொல்லில் உள்ள ஏகாரம் புகலிடமாக விளங்கும் பெருமானின் சிறப்புத் தன்மையை உணர்த்தும் வண்ணம் கையாளப்பட்டுள்ளது. இரண்டாவது அடி; புண்டரீகம் தவன் மேவிய புகலி ஏ; புண்டரீகம்=மூன்று கோடுகளாக திருநீற்றை அணிந்தவன்; தவன்=மிகுந்த பெருமை உடையவன்; மேவிய=சொல்லப்பட்ட; புகலுதல்=சொல்லுதல்; புகல்=சொல், இங்கே பாடல் என்று பொருள் கொள்ளவேண்டும்; ஏ=பொருள் ஏதும் இல்லாத அசைச்சொல்; திரிபுண்டரீகமாக திருநீற்றினை அணிந்துள்ள பெருமானே, யான் இங்கே சொல்லியுள்ள பாடலில் உள்ள சொற்கள் உணர்த்தும் பெருமைக்கு உரியவன் ஆவான் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மந்திரமாவது நீறு என்று சொல்லிய வண்ணம், மூன்று கோடுகளாக திருநீறு அணிந்து கொள்வது நமக்கு பாதுகாப்பாக, ரட்சையாக, செயல்படுகின்றது. பெருமான் அணிந்து கொள்ளும் திருநீறும் நமக்கு ரட்சையாக செயல்படுகின்றது என்று திருஞானசம்பந்தர் சொல்வதாக அறிஞர்களால் விளக்கம் அளிக்கப் படுகின்றது. பெருமான் திருநீறு அணிந்து கொள்வதே, உயிர்களுக்கு உலகப் பொருட்கள் தரும் சுகம் நிலையற்றது, அழியக் கூடியது என்பதை உணர்த்தும் பொருட்டு தானே. இந்த மெய்யுணர்வு ஏற்பட்டால், உயிர்கள் உலகப் பொருட்கள் மீது தாம் கொண்டுள்ள ஆசையை விட்டுவிட்டு, நிலையான ஆனந்தமாகிய முக்திநிலையினை அளிக்கும் பெருமானை நாடத் தொடங்கும் என்பதால், இதனை விடவும் சிறந்த உதவியை உயிருக்கு எவரும் அளிக்க முடியாது அல்லவா. எனவே தான் நமக்கு மெய்ப்பொருளை நினைவூட்டும் பெருமானின் திருநீறு அணிந்த தோற்றம், சிறந்த ரட்சையாக செயல் படுகின்றது என்று திருஞான சம்பந்தர், மிகவும் பொருத்தமாக, கூறுகின்றார். மூன்றாவது அடி: புண்டரீகம் தவன் மே வியம் பு கலி ஏ; புண்டரீகம்=புலி; தவம்=முனிவன்; புண்டரீகம் தவம்=புலிக்கால் முனிவர்; மே=கூத்து; வியன்=பொன்; வியம் என்ற சொல் விய என்று கடைக்குறையாக இந்த பாடலில் உள்ளது; மேவிய=பொன்னம்பலத்தில் நடனம் ஆடுபவன்: பு=பொது, அரங்கு; கலி=கற்றவன்; நான்காவது அடி: புண்டரீகத்தவன் மேவிய புகலியே; புண்டரீகத்தவன்=தாமரை மலரைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமதேவன்; மேவிய=பொருந்தி வழிபட்ட

பொழிப்புரை:

எப்போதும் இறைவனை தியானித்த வண்ணம் இருக்கும் அடியேனின் இதய கமலத்தில் பொருந்தி உறைகின்ற பெருமான், இந்த நிலவுலகினுக்கு மீண்டும் வாராத வண்ணம் முக்தி உலகினை பக்குவம் அடைந்த உயிர்களுக்கு அளிக்கும் வல்லமை உடையவனாகவும், மற்ற உயிர்களுக்கு புகலிடமாகவும் திகழ்கின்றான். திரிபுண்டரீகமாக திருநீற்றினை அணிந்துள்ள பெருமான் தான், யான் இங்கே சொல்லியுள்ள பாடலில் உள்ள சொற்கள் உணர்த்தும் பெருமைக்கு உரியவன் ஆவான் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட வியாக்ரபாதர் காணும் வண்ணம் பொன்னம்பலத்தில், தில்லைச் சிற்றம்பலத்து பொதுவினில் நடனம் ஆடியவன் சிவபெருமான். தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்டுள்ள பிரமதேவன், புகலி நகரில் பொருந்தி, மேற்கண்ட சிறப்புகள் வாய்ந்த பெருமானை வழிபட்டான்.

பாடல் 4:

பிரமபுரத்துறை பெம்மான் (1.127) பாடல் 4 (திதே 0252)

விளங்கொளி திகழ் தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ் தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ் தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ் தரு வெங்குரு மேவினன்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

விளம் கொளி தி கழ்தரு எங்கு உரு மேவினன்

விளங்கு ஒளி தி கழ்தரு எங்கு உருமு ஏவினன்

விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன்

விளங்கு ஒளி திகழ்தரு வெங்குரு மேவினன்

முதல் அடி; விளம் கொளி தி கழ்தரு எங்கு உரு மேவினன்; விளம்=விளாம்பழம்; கொளி= கொள்பவன், கொண்டவன், கவண் கல்லால் அடித்து விளாம்பழம் கொண்டவன்: கன்றுக்குட்டியை கவண்கல்லாகக் கொண்டு விளாமரத்தை நோக்கி எறிந்து அழித்த கண்ணனாகிய திருமால்; கண்ணன் கோகுலத்தில் வளர்ந்து வந்த காலத்தில் கண்ணனை அழிப்பதற்காக வத்சாசுரன் என்ற அரக்கனும் கபிச்தாசுரன் என்ற அரக்கனும் கம்சனால் அனுப்பப்பட்டனர். இருவரும் கண்ணனைக் கொல்வதற்கு தகுந்த தருணம் எதிர்பார்த்து காத்திருந்தனர். வத்சாசுரன் ஒரு கன்றுக்குட்டியாக உருவம் எடுத்து அங்கிருந்த கன்றுகளுடன் கலந்திருக்க, கபிச்தாசுரன் அருகில் இருந்த ஒரு விளாமரத்தில் ஒளிந்து கொண்டான். இதனை அறிந்த கண்ணன், அசுரன் ஒளிந்து கொண்டிருந்த கன்றின் பின்னங்கால்களை தூக்கிப் பிடித்து விளாமரத்தின் மீது எறிந்து மரத்தினை ஒடித்து அதில் மறைந்திருந்த அரக்கனையும் கண்ணன் கொன்றான் என்று பாகவதம் உணர்த்துகின்றது. இந்த செய்தியை கன்றால் விளவு எறிந்தவன் என்று பல திவ்யபிரபந்த பாடல்களும் சில தேவார பாடல்களும் குறிப்பிடுகின்றன. தி=விளங்கிய; தீ என்ற சொல் தி என்று குறுகியதாக பெரியோர்கள் கூறுவார்கள். கழுதரு என்ற சொல் கழ்தரு என்று திரிந்தது. கழுதரு=நின்மல; எங்கு=எந்த இடத்தில்; உரு மேவினன்=தனது உருவத்தில் வைத்துக் கொண்டான், இடது புறம் என்பது எந்த இடத்தில் என்ற கேள்விக்கு ஏற்ற விடை என்பதால், திருமாலைத் தனது உடலின் இடது புறத்தில் வைத்துக் கொண்ட பெருமான் என்பது இந்த அடியின் பொருள். திருமாலை பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் வைத்துக் கொண்டதாக பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. திருமாலின் உடலினில் வலது பாகத்தில் பெருமான் இருப்பதாக திவ்ய பிரபந்த பாசுரமும் குறிப்பிடுகின்றது.

இரண்டாவது அடி; விளங்கு ஒளி தி கழ்தரு எங்கு உருமு ஏவினன்; விலங்கு என்ற சொல் விளங்கு என்று திரிந்தது என்பர். விலங்கு=தொடர்ந்து இருக்கும் நிலையிலிருந்து மாறுபட்டு; இடையிடையே, விட்டுவிட்டு; தி=தீ; இந்த அடிக்கு மாறுபாடாக விளங்கி முழக்கம் செய்து திருஞான சம்பந்தரின் அடியார்களை தடுத்த புத்தநந்தியின் தலையின் மீது இடி விழச் செய்த பெருமான் என்று பொருள் சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சி, பாண்டிய நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு திருஞானசம்பந்தர் சீர்காழி திரும்பிய போது நடந்தது. அந்த நிகழ்ச்சி இந்த பதிகத்தை பாடிய பின்னர் நடந்த நிகழ்ச்சி என்பதால், இந்த விளக்கம் ஏற்புடையது அல்ல என்று பலரும் கருதுகின்றனர். கழ்தரு=அச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் கீழே விழும்; எங்கு=எங்கும் ஒலிக்கும் வண்ணம்; உருமு=இடி; ஏவினன்=ஏவியவன்; இடியாக இடித்து மின்னலாக மின்னி மழையாக பொழிபவன் பெருமான் என்பதால், இடி இடிப்பதை அவனது செயலாக இந்த அடியில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். ஏங்குதல்=ஒலித்தல்; ஏங்கு என்ற சொல் எங்கு என்று திரிந்தது,

மின்னலாக இடியாக மழையாக இருப்பவன் சிவபெருமான் என்று குறிப்பிடும் அப்பர் பிரானின் திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடல் (6.46.2) நமது நினைவுக்கு வருகின்றது. மின்னானை=மின்னலாக இருந்து ஒளி தருபவன்; உருமு=இடி; ஒளியின் வேகத்தை விடவும் ஒலியின் வேகம் குறைவு என்பதால் நாம் மின்னலை முன்னர் காண்கின்றோம், அதன் பின்னரே இடியின் ஓசையைக் கேட்கின்றோம். எனவே இந்த வரிசை முறையை பின்பற்றி மின்னலை முன்னமும் இடியை பின்னரும் வைத்து அப்பர் பிரான் பாடியுள்ளார். வெண்முகிலாய் மழை பொழிவான் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு சற்றே வியப்பினைத் தரலாம். நீர்த்திவலைகளை அதிகமாக உள்ளடக்கியதால் மேகங்கள் கருத்து காணப் படுவதையும், அத்தகைய மேகங்கள் ஒன்றோடு ஒன்று இடித்து மழை பொழிவதையும் நாம் அறிவோம். அப்படி இருக்கையில் வெண்முகில் என்று சொல்வதேன். நம்மைச் சற்று சிந்திக்க வைக்கும் தொடர் இது. கரு மேகங்களாக இருப்பினும், ஒன்றுடன் ஒன்று இடிப்பதால் ஏற்படும் மின்னல் ஒளியின் பின்னணியில், மேகங்கள் வெண்மை நிறத்துடன் காணப்படுவதை இங்கே குறிப்பிடும் வண்ணம் மழை பொழியும் வெண்முகில் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இறைவனின் கருணையை மழைக்கு ஒப்பிடுவது அருளாளர்கள் வழக்கம். என்னானை= எனக்கு உரியவனை

மின்னானை மின்னிடைச் சேரும் உருமினானை வெண்முகிலாய் எழுந்து மழை பொழிவான் தன்னைத்

தன்னானைத் தன் ஒப்பார் இல்லாதானைத் தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தையாகி

என்னானை எந்தை பெருமான் தன்னை இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர்வானே

அன்னானை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (6.64.8) அப்பர் பிரான், பெருமான் இடியாகவும் மின்னலாகவும் இருப்பதாக கூறுகின்றார். வன்கூற்று=கொடிய கூற்றுவன்; பிணையல்=சடையுடன் பிணைந்த; உரு=இடி; வன்கூற்றை என்ற சொல்லை முடித்தவன் என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்ள வேண்டும். சாபம்=வில்; வில்லை பிடித்தவன் என்று கூறுவதன் மூலம், வில்லினை பயன்படுத்தாமல் மூன்று கோட்டைகளையும் பெருமான் அழித்தார் என்ற செய்தி உணர்த்தப் படுகின்றது. கொடிய கூற்றுவனை, சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர் முயற்சி செய்தமைக்கு கோபம் கொண்டு உதைத்து அவனின் வாழ்நாளினை முடித்தவனும், வலிமை வாய்ந்த பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் சினம் கொண்டு தீயினில் வெந்து அழியுமாறு வில்லை ஏந்தியவனும், அழகிய தலைக் கோலத்தை உடையவனும், நறுமணம் கலந்து கமழும் கொன்றை மாலையுடன் பிணைந்த தனது சடையினில் பாம்பினை வைத்தவனும், மூன்று இலைகளை உடைய சூலத்தினை தனது கையில் ஏந்தியவனும், பேரொலியுடன் முழங்கும் மேகங்களாக தோன்றி இடி மின்னலுடன் மழையை பொழியச் செய்து அருளுபவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

முடித்தவன் காண் வன்கூற்றைச் சீற்றத் தீயால் வலியார் தம் புரம் மூன்றும் வேவச் சாபம்

பிடித்தவன் காண் பிஞ்ஞகனாம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி

முடித்தவன் காண் மூவிலை நல்வேலினான் காண் முழங்கி உருமெனத் தோன்றும் மழையாய் மின்னி

இடித்தவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

மூன்றாவது அடி: விள் அங்கு ஒளிது இகழ்தரு எம் குரு மேவினன்; விள்=நீங்குதல்; அங்கு= அந்த இடத்தில்; ஒளிது=ஒள்ளியது, சிறந்தது சிறந்ததாகிய சிவஞானம்; இகழ் தரு= இகழப்படும், மாயையின் மயக்கத்தில் சிக்கி இகழும் தன்மையில் வாழும் மனிதனாகப் பிறந்த என்னிடமும்; மேவுதல்=கலத்தல்; அம்மையே அப்பா என்று தோணிபுரத்து கோபுரத்தை நோக்கி மூன்று வயது குழந்தை அழுத போதே, அந்த குழந்தைக்கு சிவஞானமும் பாலுடன் கலந்து குழைத்து கொடுக்க வேண்டும் என்று பெருமான் திருவுள்ளம் கொண்டார். பெருமானின் எண்ணமே தனது செயலாக செயல்படும் அன்னையும். பாலுடன் சிவஞானத்தை குழைத்து கொடுத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்.

திருக்கோயில் சிகரத்தை பார்த்து, அம்மையே அப்பா என்று அழைத்தவாறு குழந்தை அழுதது. காலம் கனிந்து வந்தமை கண்டு பெருமான் குழந்தைக்கு அருள் செய்ய திருவுள்ளம் கொண்டவராய், தேவியுடன் தாமும் விடையின் மீது அமர்ந்தவராக குழந்தை இருந்த இடத்திற்கு அருகே வந்தார். அருகே வந்தவர், தேவியை நோக்கி, உனது திருமுலைப்பாலை ஒரு பொற்கிண்ணத்தில் பொழிந்து குழந்தைக்கு ஊட்டுவாய் என்று கூறினார். தேவியும் உடனே, பொற்கிண்ணத்தில் பாலை வைத்துக் கொண்டு, குழந்தையின் அருகே சென்று குழந்தையின் கண்களில் பெருகிய நீரினை துடைத்து, அடிசிலை உண்ணுவாய் என்று கூறினார். எண்ணரிய சிவஞானம் குழைத்து கொடுக்கப்பட்ட பால் என்று சேக்கிழார் கூறுகின்றார். வள்ளம்=கிண்ணம்

அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருட்கருணை

எழுகின்ற திருவுள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும்

தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள்

பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டென்ன

எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி

உண் அடிசில் என ஊட்ட உமையம்மை எதிர் நோக்கும்

கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொற்கிண்ணம் அளித்து

அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள் புரிந்தார்

குழந்தைக்கு பிராட்டி ஊட்டிய பாலமுதம் வெறும் பசியினை போக்குவதை மட்டுமாக இல்லாமல், சிவஞானமும் கலந்து குழைத்து ஊட்டப்பட்டது என்று சேக்கிழார் மேற்கண்ட பெரிய புராணத்துப் பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அம்மை ஊட்டிய பாலடிசிலை உண்ட குழந்தை, சிவபெருமானின் திருவடிகளை சிந்திக்கும் தன்மையையும் சிவபெருமானே மேலான பரம்பொருள் என்ற கலை ஞானம் மற்றும் பிறவிப்பிணியினை தீர்க்கவல்ல மெய்ஞானம் ஆகியவற்றை உணர்ந்தது என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். பாலுடன் சிவஞானமும் கலந்து கொடுக்கப்பட்டாதால், அதற்கு காரணமாக இருந்த பெருமானை தனது குருவாக திருஞானசம்பந்தர் கருதியது இயற்கை தானே. உலகினுக்கே குருவாக இருக்கும் பெருமானின் திருவருள் பெற்றவுடன் பாடப்பட்ட பதிகம் என்பதால் தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகம், அப்பர் பிரானும் சுந்தரரும் பாடிய முதல் பதிகங்களுடன் குருவருள் என்ற தலைப்பின் கீழ் மிகவும் பொருத்தமாக அகத்தியர் தேவாரத் திரட்டில் வைக்கப் பட்டுள்ளது. குருவாக பெருமானை தான் கருதிய செய்தியை திருஞானசம்பந்தர் இந்த பாடலிலும் சுட்டிக் காட்டுகின்றார். தனது குருவாகிய சிவபெருமான், பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கி இழிந்த நிலையில் இருந்த தனக்கு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து சிறந்த முக்தி நிலையினை அளித்து தன்னுடன் பெருமான் கலந்தான் என்று சம்பந்தர் கூறுகின்றார். அந்நாள் வரை பெருமான் திருஞானசம்பந்தருக்கு அருளிய செயல்கள் (சிவஞானம் கலந்த பாலினை ஊட்டியது, பொற்றாளம் கொடுத்தது, முத்துச் சிவிகை, முத்துக் குடை மற்றும் ஊது கொம்பு அளித்தது) பெருமானின் திருவருள் தனக்கு இருந்தமையை உணர்ந்த திருஞானசம்பந்தர், இந்த பிறவி முடிந்தவுடன் தனக்கு முக்தி நிலை நிச்சயமாக கிடைக்கும் என்பதையும் உணர்ந்தார் போலும். அதனால் தான் முக்தி நிலை கிடைத்து விட்டது போன்று இறந்த காலத்தில் (மேவினன்) என்று கூறுகின்றார் போலும்.

நான்காவது அடி; இந்த அடிக்கு விளக்கம் கூறிய கண்ணுடைய வள்ளலார், தருமராசனுக்கு அருள் புரிந்த சிவபெருமான் என்று கூறுகின்றார். தேவகுருவாகிய பிரகச்பதிக்கு அருள் புரிந்ததால் வெங்குரு என்ற பெயர் வந்தது என்பதை நாம் சுரருலகு நரர்கள் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலிலிருந்து அறிந்துகொண்டோம்.. பிரமபுரத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.63.4) திருஞானசம்பந்தர் தருமராசனுக்கு அருளியதால் வெங்குரு என்ற பெயர் வந்ததாக கூறுகின்றார். இந்த பாடலில், செங்கோல் பிடித்து ஆட்சி நடத்தும் தருமராசனாகிய இயமன், பல உயிர்களுக்கும் அந்தந்த உயிர்கள் ஈட்டிய வினைகளுக்குத் தக்கவாறு தண்டனை அளிப்பது எவ்வாறு என்பதை சீர்காழி நகரம் வந்து தங்கி பெருமானிடம் கற்றுக் கொண்டமையால் வெங்குரு என்ற பெயர் வந்ததாக கூறுகின்றார். தருமம் தவறாமல் இயமன் உயிர்களுக்கு தண்டனை வழங்குகின்றார் என்ற செய்தியை உணர்த்தும் வண்ணம், தில்லைப் பதிகத்தின் பாடல்களில் தருமராசனார் என்று சுந்தரர் இயமனை குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது.

இயமனுக்கு நீதிகளை கற்றுத் தந்த பெருமான் தான் நீதியுடன் நடந்து கொண்டாரா என்ற கேள்வியையும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் எழுப்புகின்றார். தாருகவனத்து மகளிரிடம் பிச்சை ஏற்கச் சென்ற போது, அவர்களைத் தன் மீது மையல் கொள்ளச் செய்தது நியாயமான செயலா என்று கேட்கின்றார். பெருமான் மீது தீராத கொண்ட தாருகவனத்து மகளிர், பெருமானை அடைய முடியாத ஏக்கத்தினால் அவர்களது உடல்கள் இளைக்க, அவர்களது கைகளில் இருந்த வளையல்கள் நழுவி விழுந்தன என்பதை உணர்த்தும் திருஞான சம்பந்தர், இவ்வாறு வளையல்கள் கழன்று விழுந்ததற்கு பெருமான் தான் காரணம் என்று முடிவு செய்து பெருமானை குறை கூறுகின்றார். தங்களது கணவர் அல்லாது வேறு ஒரு ஆடவரை மனதினில் நினைத்தாலே கற்பு தவறியதாக பண்டைய நாளில் கருதப் பட்டது. எனவே தான், அவர்களை மயக்கிய பெருமானை, அவர்களது கற்பினை கவர்ந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். ஆநலம்=அவர்களது அழகு, கற்பு என்பது பெண்களுக்கு அழகு தரும் சிறந்த அணிகலனாக கருதப்படுகின்றது.

சங்கோடு இலங்கத் தோடு பெய்து காதில் ஓர் தாழ் குழையன்

அங்கோல் வளையார் ஐயம் வவ்வாய் ஆநலம் வவ்வுதியே

செங்கோல் நடாவிப் பல்லுயிர்க்கும் செய்வினை மெய் தெரிய

வெங்கோத் தருமன் பேணி ஆண்ட வெங்குரு மேயவனே

பொழிப்புரை:

கன்றினைக் கொண்டு விளாமரத்தின் மீது எறிந்து, கன்றிலும் விளாமரத்திலும் மறைந்திருந்த அரக்கர்களை கொன்ற கண்ணனாகிய திருமாலை, நின்மலனாகிய பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார். மற்ற ஒலிகளிலிருந்து மாறுபட்டுத் திகழ்வதும் அனைவர்க்கும் அச்சம் ஊட்டும் வண்ணம் குமுறுவதும் ஆகிய இடியாக ஒலிப்பவன் சிவபெருமான். சிறந்ததாகிய சிவஞானத்தை அளித்து எனக்கு குருவாக விளங்கிய பெருமான், பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கி மிகவும் இழிந்த நிலையில் இருந்த என்னை, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நீக்கி, முக்தி நிலையை எனக்கு அருளி என்னுடன் கலந்தவன் சிவபெருமான். நீதிநெறி வழுவாது உயிர்களுக்கு தண்டனை அளிப்பதால் மிகுந்த சிறப்பினுடன் திகழும் இயமன், வெங்குரு எனப்படும் தலத்தில் பொருந்தி உறையும் பெருமானை வணங்கி அந்த சிறப்பினை பெற்றான்.

பாடல் 5:

பிரமபுரத்துறை பெம்மான் (1.127) பாடல்கள் 5, 6 (திதே 0253)

சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணிபுரத்தவன்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

சுடர் மண் இம் ஆளி கைத்தோணி புரத்து அவன்

சுடர்மணி மாலி கைத்தோள் நிபுரத்தவன்

சுடர்மணி மாளி கைத்தோணி புரத்தவன்

சுடர் மணி மாளிகை தோணிபுரத்தவன்

முதல் அடி; சுடர் மண் இம் ஆளி கைத்தோணி புரத்து அவன்: சூடார் என்ற சொல் சுடர் என்று திரிந்தது. சூடார்=வெம்மை பொருந்திய; சுடர் மண்=வெம்மைத் தன்மை நிறைந்த நிலம்; இம்=ஈமம் என்பதன் திரிபு, சுடுகாடு என்று பொருள்; ஆளி=ஆள்பவன்; புரத்து அவன்= திரிபுரங்களை எரித்து நாசம் செய்தவன்; கைத்தோணி=வெற்றியின் அடையாளமாக விளங்கும் தும்பைப் பூவை அணிந்தவன்; துரோணம் என்ற வடமொழிச் சொல் தும்பைப் பூவை குறிக்கும்; தும்பைப் பூ வெற்றியின் அடையாளமாக கருதப்படுகின்றது. துரோணம் என்ற சொல் தோணி என்று திரிந்தது என்று கூறுவார்கள். திரிபுரத்து அரக்கர்களை அழித்து வெற்றி கண்டவன் என்று உணர்த்தப் படுகின்றது. இரண்டாவது அடி; சுடர்மணி மாலி கைத்தோள் நிபுரத்தவன்; சுடர்மணி=சுடர் விட்டு விளங்கும் சுடர்மணி, சூடாமணி; தனது தலையின் உச்சியில் வைத்துக் கொண்டு கொண்டாடும் அளவுக்கு உயர்ந்த சூடாமணியாக இருப்பவன்; மாளி என்ற சொல்லினை மாலி என்ற சொல்லின் திரிபாக கருதி பொருள் கொள்ள வேண்டும். மால் என்றால் மயக்கம் என்று பொருள். மாலினை, அதாவது மயக்கத்தை உடையவன் என்ற பொருள் பட மாலி என்ற சொல்லினை இங்கே ஞானசம்பந்தர் கையாண்டுள்ளார். மாலி (ஆன்மாக்களை ஈடேற்றுவதில் பித்தனைப் போன்று பெரும் விருப்பம் கொண்டவன் என்று பொருள்) என்ற சொல் மாளி என்று திரிந்தது; கை=கையினை உடைய விலங்கு, யானை; தோல் என்ற சொல் தோள் என்று திரிந்தது; தோள்=துதிக்கையை உடைய யானையின் தோலை உரித்து அதன் வடிவத்தை எவரும் புரிந்து கொள்ள முடியாத வண்ணம் அழித்தவன்; நிபுரத்தவன்=வடிவம் இல்லாமல் அழித்தவன்; மூன்றாவது அடி: சுடர்மணி மாளி கைத்தோணி புரத்தவன்; சுடர்=சூரியன்; மணி என்ற சொல்லுக்கு கழுவிய, என்ற பொருளும் மாளி என்ற சொல்லுக்கு கெட்டவன் என்ற பொருளும் சிவக்கவிமணி அவர்களால் பெரியபுராணம் விளக்கம் நூலில் கொடுக்கப் படுகின்றது. சூரியன் மேலைக் கடலில் விழுந்து மறைவதை, சூரியனின் களங்கத்தைக் கழுவும் கடல் என்று குறிப்பிடுகின்றார். சூரியன் மறைவதை மேலைக் கடலில் விழுகின்றான் என்று பண்டைய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கெட்டவன் என்று பொதுவாக உயிர்களை குறிப்பிடுகின்றார். சூரியன் சென்றடையும் கடல் போன்று விரிந்து எல்லையற்றதாக காணப்படும் பிறவிக்கடலில் விழுந்து வெளியே வரும் வழி தெரியாமல் தவித்து கெட்டலையும் ஆன்மாக்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். கைத்தோணி=தெப்பம் போன்று செயல்பட்டு கைகொடுத்து கரையேற்றும் பெருமான்; புரந்தவன் (காப்பாற்றுவான் என்று பொருள்) என்ற சொல் புரத்தவன் என்று திரிந்ததாக கூறுவார்கள். நான்காவது அடி: சுடர் மணி மாளிகை தோணிபுரத்தவன்; சுடர்மணி=சுடர் விட்டு ஒளிரும் மணிகள் பதிக்கப் பெற்ற; வெளிப் படையான பொருள்; ஒளிவீசும் மணிகள் பதிக்கப்பெற்ற மாளிகைகள் நிறைந்த தோணிபுரம் தலத்தின் தலைவன்;

பொழிப்புரை:

வெம்மை பொருந்திய சுடுகாட்டினைத் தான் ஆளும் இடமாகக் கொண்டுள்ள பெருமான், திரிபுரத்தவர்களின் மூன்று கோட்டைகளை அழித்து வெற்றிவாகை சூடியவன். எனது தலையின் உச்சியில் உள்ள சூடாமணி ஆபரணம் போன்று சிறப்பாக கருதப் படுபவன் சிவபெருமான். தன்னை எதிர்த்து வந்த யானையை அடக்கி அதன் தோலை உரித்து வடிவத்தை அழித்த போர்க்குணம் உடையவன் பெருமான். அவன், சூரியன் விழுந்து மறையும் மேலைக்கடல் போன்று விரிந்த பிறவிக்கடலில் ஆழ்ந்து கரையேற முடியாமல் தவிக்கும் ஆன்மாக்களை கை கொடுத்து கறையேற்றுவதில், கடைத்தேற்றுவதில், மிகுந்த விருப்பம் கொண்டு பித்தனைப் போன்று செயல்படுபவன்; தன்னில் விழுகின்ற சூரியனின் களங்கத்தைக் கழுவும் கடல் போன்று, தன்னை நாடும் அடியார்களின் மலங்களை கழுவி நீக்கி அவர்களை தூய்மை உடையவர்களாக மாற்றுபவன் சிவபெருமான். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான், சுடர் விட்டு ஒளிரும் மணிகள் பதிக்கப்பெற்ற மாளிகைகள் நிறைந்த தோணிபுரத்தில் உறைகின்றான்.

பாடல் 6:

பிரமபுரத்துறை பெம்மான் (1.127) பாடல்கள் 5, 6 (திதே 0253)

பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி

பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி

பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி

பூசுரர் சேர் பூந்தராய் அவன் பொன்னடி

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

பூ சுரர் சேர் பூ தராயவன் பொன் அடி

பூசுரர் சேர் பூ தராய் அவன் பொன் நடி

பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி

பூசுரர் சேர் பூந்தராயவன் பொன்னடி

முதல் அடி; பூ சுரர் சேர் பூ தராயவன் பொன் அடி; பூ=பூமியில் உள்ளவர்கள்; சுரர்கள்= தேவர்கள்; சேர்=தோன்றும்; பூ=உந்திக்கமலம்; தராயவன்=தரித்தவன்; பூந்தராயவன் என்று திருமால் குறிப்பிடப் படுகின்றார். பொன்=பொலிவு, விளங்கும்; ஆடி=கண்ணாடி என்ற சொல் அடி என்று குறுகியது; சிவபெருமானை கண்ணாடி என்றும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரையும் அந்த கண்ணாடியில் தோன்றும் பிரதிபிம்பம் என்றும் திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதன் மூலம், சிவபெருமானின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் படைத்தல் மற்றும் காத்தல் தொழில்களை பிரமன் திருமால் ஆகிய இருவரும் செய்கின்றனர் என்று உணர்த்துகின்றார். சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.21), முதல் மூன்று பாடல்களில் திருஞானசம்பந்தர், பெருமான் எவ்வாறு, பிரமனாக, திருமாலாக, உருத்திரனாக செயல் படுகின்றார் என்பதை விளக்குகின்றார். அந்த பாடல்களை இங்கே சிந்திப்பது பொருத்தமாக இருக்கும். இந்த பதிகத்தின் பாடல்களில் சிவபெருமான் தான், படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று செயல்களும், பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளால் செய்யப்படுவதற்கு காரண கர்த்தவாக விளங்குகின்றார் என்றும் சிவபெருமானை சென்று அடைவதற்கான வழிகள் சரியை கிரியை யோகம் ஞானம் என்றும் சொல்லப் பட்டுள்ளது; மேலும் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் சிவபெருமானை நாம் வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களும் சொல்லப் பட்டுள்ளன. பதிகத்தின் கடைப் பாடலிலும் இந்த பதிகம் ஓதுவதால் நாம் பெறுகின்ற நன்மைகள் விளக்குகின்றது.அனைவரையும் சிவபுரம் தலம் சென்று பெருமானை வழிபட்டு பயனடையும் வண்ணம் ஊக்குவிக்கும் பாடல்கள் கொண்ட சிறப்பு வாய்ந்த பதிகம்.

புவம்=ஆகாயம்; வளி=காற்று; கனல்=அக்னி, தீ: புனல்=தண்ணீர்; புவி=பூமி, நிலம்; கலை உரை மறை=அறுபத்துநான்கு கலைகளையும் உணர்த்தும் நான்மறைகள்; திரிகுணம்= மூன்று விதமான குணங்கள், சாத்வீகம் தாமசம், ராஜசம்; அமர் நெறி=பொருந்தி அமரும்; திவம்=தேவலோகம்; மலிதரு=மலிந்து காணப்படும், நிறைந்து காணப்படும்; சுரர்=தேவர்கள்; முதலியர்=தேவர்கள் முதலான ஏழு வகை பிறப்புகளுடன் திகழும் பலவகையான எண்ணற்ற உயிர்கள், தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் பறவைகள் ஊர்வன நீரில் வாழ்வன மற்றும் தாவரங்கள் ஆகிய ஏழு வகைகளில் அடங்கும் அனைத்து உயிர்கள்; பவம்=வினைத்தொகுதிகள்; பவமலி தொழில்=வினைத் தொகுதிக்கு ஈடாக உள்ள உடலுடன் சேர்க்கும் படைக்கும் தொழில்; பதுமநன் மலர்=சிறந்த மலராகிய தாமரை மலர்; மருவிய=பொருந்திய; ஒவ்வொரு உயிர்க்கும் அந்தந்த பிறவிகளில் நுகர்ந்து கழிக்க வேண்டிய வினைகளின் தன்மையை நிர்ணயிப்பது சிவபெருமான் ஒருவர் தான் என்பதால், சிவபெருமான் தான் படைப்புத் தொழிலின் தன்மையை வகுக்கின்றார் என்பது நமக்குத் தெளிவாகின்றது. மேலும் பதுமநன்மலரது மருவிய சிவன் என்று குறிப்பிட்டு இருப்பதால், மருவிய பிரமன் என்று குறிப்பிடாமல், பிரமனுடன் பொருந்தி இருந்து படைப்புத் தொழிலை செய்பவர் சிவபெருமான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக உள்ளது.

இந்த பாடலில் சிவபெருமான், பிரமனாக இருந்து செயல்படுவதை திருஞானசம்பந்தர், நமக்கு உணர்த்துகின்றார். படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்வதற்கு பிரமன் திருமால் உருத்திரன் ஆகியோரை நியமித்து, அவர்கள் மூவருடன் ஒன்றியிருந்து அவர்கள் தத்தம் செயல்களை சரிவர செய்வதற்கு, பெருமான் உதவும் தன்மை, பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. மேலும் சிவபெருமான் அருள் பெற்ற காரணத்தால் தான், பிரமன் தனது படைப்புத் தொழிலினை சரிவர செய்ய முடிகின்றது என்றும் பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. தான் அருளிய முதல் பாடலிலேயே, ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்தேத்த அருள் செய்த பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தருமதேவதை என்றும் அழியாது இருக்கும் நித்தியத் தன்மை வேண்டியதால், அதனை இடபமாக மாற்றி பெருமான் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார் என்று கூறுவார்கள். எனவே இந்த செயல் பெருமானின் படைக்கும் தொழிலை உணர்த்துகின்றது; வெண்மதி சூடி என்று சந்திரனை அழியாமல் காத்த செய்கை, பெருமான் செய்யும் காக்கும் தொழிலை உணர்த்துகின்றது; சுடலைப் பொடி என்ற சாம்பல் பெருமானின் அழித்தல் தொழிலை குறிக்கின்றது. கள்வன், தான் திருடிய பொருளை வைத்திருப்பதை எவரேனும் பார்த்து விட்டதால் தான் அகப்பட்டு விடுவோம் என்று கருதி தான் திருடிய பொருளை முதலில் மறைத்து வைப்பான் என்பதால் உள்ளம் கவர் கள்வன் என்ற குறிப்பு மறைத்தல் தொழிலையும், பிரமனுக்கு அருள் செய்த தன்மை அருளும் தொழிலையும் குறிக்கின்றது என்று உணர்த்தி, பரமன் செய்யும் ஐந்து விதமான தொழில்களையும் திருஞானசம்பந்தர் தனது முதல் பாடலில் குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் கூறுவார்கள். விடையேறி மதிசூடி என்ற தொடர்கள் இறைவன் உருவமாக இருக்கும் நிலையையும், பொடிபூசி என்பது தனது திருமேனியை மறைத்துக் கொள்வது பற்றி அருவுருமாக இருக்கும் தன்மையையும், கள்வன் மறைந்து நிற்பான் என்பதால் கள்வன் என்ற சொல் அருவமாக இருக்கும் தன்மையையும் குறிக்கின்றது என்று விளக்கம் கூறுகின்றனர். இவ்வாறு பல திருமுறைப் பாடல்கள், பெருமான் பிரமனாக இருந்து செயல் படுவதை குறிப்பிடுகின்றன.

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்

காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

ஆகாயம் காற்று அக்னி, தண்ணீர் நிலம் முதலான ஐந்து பூதங்களையும் அறுபத்து நான்கு கலைகளையும் உணர்த்தும் நான்மறைகளையும், சாத்வீகம் தாமசம், ராஜசம் முதலான மூன்று விதமான குணங்களும் பொருந்தி அமர்கின்ற எண்ணற்ற உயிர்களையும், தேவலோகத்தில் வாழும் தேவர்கள் முதலாக ஏழு வகைப் பிறப்புகளில் அடங்குவதும் எண்ணற்று மலிந்து கிடப்பதும் ஆகிய பல தரப்பட்ட உயிர்களையும், அதாவது தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் பறவைகள் ஊர்வன நீரில் வாழ்வன மற்றும் தாவரங்கள் ஆகிய ஏழு வகைகளில் அடங்கும் அனைத்து உயிர்களையும், படைப்பவராக சிவபெருமான் திகழ்கின்றார். அந்தந்த பிறவிகளில் நுகர்ந்து கழிக்கவேண்டிய வினைத் தொகுதிக்கு ஈடாக தகுந்த உடலுடன், மிகுந்த கவனத்துடன் சேர்த்துப் பொருத்தும் தொழிலைச் செய்வோனாக திகழும் பிரமனுடன், சிறந்த மலராக கருதப் படும் தாமரை மலர் மீது உறைபவனாக விளங்கும் பிரமனுடன் இணைந்து செயல்பட்டு, படைப்புத் தொழிலினை நிறைவேற்றும் சிவபெருமான் உறைகின்ற சிவபுரம் தலத்தினை, மனதினால் தியானித்து வணங்கும் அடியார்கள் செழுமை வாய்ந்த இந்த உலகினில் நீண்ட நிலையான புகழுடன் வாழ்வார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுண மமர்நெறி

திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரு முயிரவை யவைதம

பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய

சிவனது சிவபுர நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே

இதே பதிகத்தின் முதல் பாடலில் பிரமனுடன் இணைந்து பிரமனாக எவ்வாறு சிவபெருமான் செயல்படுகின்றார் என்பதை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் எவ்வாறு திருமாலுடன் இணைந்து காத்தல் தொழிலை செவ்வனே செய்கின்றார் என்பதை கூறுகின்றார். திருமாலாக சிவபெருமான் செயல்படும் நிலை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளது. நிலவுலகின் படைப்பினில் முதன் முதலாக தோன்றியது கல் என்று சான்றோர்கள் ஆராய்ந்து துணிந்துள்ளனர். தமிழ்க்குடியின் பழமையை குறிப்பிட கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய குடி என்று சொல்வது தானே வழக்கம். உயிர்களின் பல்வேறு பிறவியை குறிப்பிடும் போது மணிவாசகனார், கல்லாய் என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். மேலும் கல், மலை என்பவை மற்ற பொருட்களை விடவும் நிலையாக உள்ள தன்மை காரணமாக, காத்தல் தொழிலை குறிப்பிடும் பாடலை மலை என்று தொடங்குகின்றார் போலும். வளர்=பொருந்திய, இருக்கும்; மறை தரு வழி=வேதங்கள் மற்றும் ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள வாழ்க்கை நெறியை பின்பற்றும் மனிதர்கள்; நிலை மலி=நிலையாக வாழும்; நீண்ட காலம் வாழும், மனிதர்களின் சராசரி ஆயுளை விடவும் தேவர்களின் சராசரி ஆயுட்காலம் மிகவும் அதிகமாக இருப்பதால் நிலையாக வாழும் தேவர்கள் என்று குறிப்பிடுகின்றார் போலும்; சுரர்=தேவர்கள்; நிலைபெறும் வகை=நிலையாக அழியாமல் இருக்கும் வண்ணம் செயல்படுதல், காத்தல் தொழில்; அறிதுயில்=யோக நித்திரை, பாற்கடலில் படுத்து உறங்குவது போல் தோன்றினாலும், திருமால் உண்மையில் உறங்குவதில்லை; உலகினில் நடக்கும் அனைத்தையும் அறிந்த வண்ணம் கண்களை மூடிக் கொண்டு இருப்பதால், அவரது உறக்கம், துயில், அனைத்தும் அறிகின்ற துயில் என்பதை உணர்த்தும் வண்ணம், அறிதுயில் என்று சொல்லப்படுகின்றது. எப்போதும் உலகத்தில் உள்ள உயிர்களை எவ்வாறு காப்பது என்பதே தனது சிந்தனையாக திருமால் இருக்கின்றார் என்றும், அத்தகைய திருமாலின் வடிவினில் சிவபெருமான் பொருந்தி உறைகின்றார் என்றும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. விண்ணும் மண்ணும் என்று குறிப்பிட்டு, மற்ற உலகங்களும் இணைத்து சொல்லப் படுவதாக பொருள் கொள்ளவேண்டும். அரி உரு இயல்=திருமாலின் உருவத்தில்; பரன்=அனைவர்க்கும் மேலான சிவபெருமான்; இந்த பாடலில் சிவபெருமான் உறைகின்ற சிவபுரம் நகரத்தினை நினைக்கும் அடியார்கள், திருமகளின் அருள் பெற்று செல்வத்துடன் திகழ்வார்கள் என்று சொல்லப் படுகின்றது.

மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்

நிலைமலி சுரர்முத லுலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும்

அலைகட நடுவரி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி

சிலைமலி மதிள்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே

மலைகள் பல பொருந்தியுள்ள நிலவுலகத்தினில் வாழ்பவர்களும் நான்மறைகளில் சொல்லப் பட்டுள்ள வழிகளில் நடந்து அக ஒழுக்கத்தையும் புற ஒழுக்கத்தையும் பேணி வளர்ப்போரும் ஆகிய மனிதர்கள் மற்றும் விண்ணினில் நிலையாக நீண்ட காலம் வாழ்கின்ற தேவர்கள் முதலாக பல வகையான உயிர்களும் அழியாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், மிதந்து வரும் அலைகளை உடைய பாற்கடலின் நடுவே பாம்புப் படுக்கையில் பொருந்திய வண்ணம் அறிதுயில் கொள்கின்ற திருமால், உறங்குவது போன்று தோன்றினாலும் அனைத்து உலகங்களிலும் நடக்கின்ற நிகழ்ச்சிகளை அறிந்தவராக காணப்படுகின்றார். அந்த திருமாலின் உடலின் பொருந்தி உறைந்து, அவரை செயல்படுத்தும் சிவபெருமான், எழுந்தருளி உள்ள தலமாவது, கற்களால் வலிமையாக கட்டப்பட்ட மதில் சுவர்கள் கொண்ட சிவபுரம் தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபுரம் தலத்தினை தியானித்து தொழும் அடியார்கள் இம்மையில் சிறந்த செல்வம் உடையவர்களாக திகழ்வார்கள் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

இரண்டாவது அடி; பூசுரர் சேர் பூ தராய் அவன் பொன் நடி; பூசுரர்=பூமியில் வாழ்ந்த போதிலும், தங்களது மலங்கள் நீங்கிய தன்மையால் சிறப்புடன் வாழும் தேவர்களாக கருதப்படும் சிவஞானிகள்; சேர்=திரட்சி, கூட்டம்; பூ=பொலிவு; தராய்=பெறப்பட்ட, பெருமானின் நடனத்தைக் காண்பதால் அடியார்கள் பெற்ற இன்பம் விளைவித்த பொலிவு; அவன்=இங்கே கடவுளை குறிக்கும் சொல்லாக கையாளப் பட்டுள்ளது; பொன்=பொன் போன்று வனப்பு மிகுந்த; நடி=நடனம் ஆடுபவன்; சிவஞானிகள் பெருமானின் நடனத்தைக் காண்பதன் மூலம், மகிழ்ச்சி அடைந்து பொலிவுடன் விளங்குகின்றனர் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

சிவபெருமானது நடனத்தைக் காண்போர், மகிழ்ச்சி அடைந்து பொலிவுடன் இருப்பதாக திருஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு அப்பர் பிரானின் தில்லைத் தலத்து விருத்தப் பாடல் ஒன்றினை (4.81.9) நினைவூட்டுகின்றது. விடங்க வேடம்=உளியால் செதுக்கப் படாத வேடம், இயல்பான வேடம்; பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு என்றும் பொன் மலையில் வெள்ளிக் குன்று என்றும் இறைவனின் திருமேனி வண்ணத்தை இதே பதிகத்தின் முந்தைய பாடல்களில் விவரித்த அப்பர் பிரானின் மனதினை இந்தக் கோலம் கொள்ளை கொண்டு விட்டது போலும். தன் மனதினை விட்டு அகலாத அந்த கோலத்தை மறுபடியும் நம் கண் முன்னர் இங்கே கொண்டு வருகின்றார். சிவபெருமானின் நடனத்தைக் கண்டு இன்புற்ற அப்பர் பிரான், இந்த நடனத்தால் ஈர்க்கப்பட்டவர் வேறு யார்யார் என்று யோசிக்கின்றார். உலகம் அனைத்தும் இந்த நடனத்தின் அழகால் கவரப்பட்டு இன்புற்று இருக்கும் நிலையினை உணர்கின்றார். அந்த தகவலை இங்கே பதிவு செய்கின்றார். உலகம் என்பதற்கு உலகினில் பல இடங்களிலும் உள்ள ஞானிகள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். ஞானிகளால் மட்டும் தானே சிவபெருமானின் நடனம் உணர்த்தும் செய்தியை புரிந்து கொண்டு, பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு எவ்வாறு இறைவன் உதவி செய்து முக்தி நிலையினை பரிசாக அளிக்கின்றார் என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்ப தங்களது வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள முடியும். இந்த காரணம் பற்றியே, பெருமானது நடனத்தை ஞான நடனம் என்று மனவாசகம் கடந்தார் தனது உண்மை விளக்கம் நூலில் கூறுகின்றார்.

பொன் ஒத்த மேனிமேல் வெண்ணீறு அணிந்து புரிசடைகள்

மின் ஒத்து இலங்கப் பலி தேர்ந்து உழலும் விடங்க வேடச்

சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என் அத்தன் ஆடக் கண்டு இன்புற்றதால் இவ்விருநிலமே

மூன்றாவது அடி: பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி; பூசு=பூசப்படும் திருநீறு; உரர்=மார்பினை உடையவர்; சேர்பு=அரிந்து, முற்றிலும் நீக்கி; ஊந்தராய்=உந்தித் தள்ளும், முக்தி உலகினுக்கு உந்தித் தள்ளும் பெருமான் என்று பொருள் கொள்வது பொருத்தம்; யவன்=யௌவனம் உடைய யுவன் என்ற சொல் யவன் என்று திரிந்தது; பொன்=அழகு என்ற பொருளை தருவதால், அழகன் என்று பெருமானை குறிப்பிடுவதாக பொருள் கொள்வது பொருத்தம். என்றும் அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவனாக பெருமான் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. அடி=மூலமாக, ஆதாரமாக உள்ள தன்மை; மலங்கள் நீங்கிய சிவஞானிகள் பெருமானின் நடனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக இந்த பாடலின் இரண்டாவது அடியில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அத்தகைய ஞானிகள் முக்தி உலகம் சென்றடைய ஆதாரமாக சிவபெருமான் இருப்பதாக கூறுகின்றார். நான்காவது அடி; பூசுரர் சேர் பூந்தராயவன் பொன்னடி; நிலவுலகில் வாழும் அந்தணர்கள் ஒழுக்கமாக வாழும் நெறியை பின்பற்றுவதால், அவர்களை சிறப்பாக மதித்து நிலவுலகில் வாழும் தேவர்கள் என்று சொல்வது வழக்கம். சேர்=திரண்டு சென்று சேர்ந்து; பூந்தராயவன்=பூந்தராய் நகரத்தில் உறையும் பெருமான்; ஒழுக்கம் வாய்ந்த அந்தணர்கள், சென்று அடைந்து பெருமானைப் பணிந்து போற்றும் தலம் பூந்தராய் எனப்படும் சீர்காழி தலமாகும்.

பொழிப்புரை:

பூமியில் வாழும் மனிதர்களையும், மேலுலகில் வாழும் தேவர்களையும் தோற்றுவிக்கும் பிரமனையும், பிரமனைத் தனது உந்திக்கமலத்தில் தோற்றுவித்த திருமாலையும் தனது பிரதிபிம்பமாக தோன்றும் வண்ணம் கண்ணாடியாக நிற்பவன் சிவபெருமான்; மலங்கள் நீங்கிய தன்மையால் சிறப்பாக கருதப்படும் சிவஞானிகள் கூட்டம், மிகுந்த மகிழ்ச்சியுடன் பொலிவுடன் இருக்கும் வண்ணம், பொன் போன்று வனப்பு மிகுந்த சிறந்த நடனத்தை ஆடுபவன் சிவபெருமான்; தங்களது மார்பினில் திருநீற்றைப் பூசியவர்களும் தங்களைப் பிணைத்திருந்த பாவம் புண்ணியம் என்ற கட்டினை அறுத்து எறிந்தவர்களும் ஆகிய சிவஞானிகள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பூலோக வாழ்க்கையை உதறித் தள்ளும் தன்மையினை அடைவதற்கு ஆதாரமாக விளங்குபவன், என்றும் அழகும் இளமையும் பொருந்தி விளங்கும் சிவபெருமான் ஆவார்; குற்றமில்லாத மறையவர்கள் திரண்டு சென்று சேர்ந்து வழிபடும் பூந்தராய் தலத்து இறைவனின் பொன்னடிகள் என்னை ஆட்கொள்ள வேண்டும் என்று அடியேன் விரும்புகின்றேன்.

பாடல் 7:

பிரமபுரத்துறை பெம்மான் (1.127) பாடல்கள் 7, 8, 9 (திதே 0254)

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்

செர் உக்கு வாய்ப் புடையான் சிர் அபுரம் என்னில்

செருக்கு வாய்ப் புடையான் சிரம் புரம் என்னில்

செருக்கு ஆயப்பு உள் தையான் சிரபுரம் என்னில்

முதல் அடி; செருக்கு வாய்ப்பு உடையான் சிரபுரம் என்னில்; செருக்கு=மலங்களால் ஏற்படும் மயக்கம்; வாய்ப்பு=மேலீடு, மிகுந்த வலிமை உடையதாக விளங்கும் மலங்கள் தங்களது விருப்பம் போன்று உயிர்களை ஆட்டுவிக்கும் தன்மை; உடைத்தல்=கேடு செய்தல்; உடையான்=உடைத்து அழிக்காமல், கேடு செய்யாமல் இருப்பவன்; சிரபுரம்=மேன்மை உடைய இருப்பிடம்; என்னில்=எனது அறிவினில்; பெருமானிடமிருந்து நேரிடையாக சிவஞானம் பெற்றமையால், பசுபோதம் நீங்கி பதிபோதத்துடன் தான் விளங்கிய நிலையை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உயிர்கள் மலங்களுடன் பிணைந்து இருக்கும் தன்மையை உணர்த்து கொண்டு, தன்னுடன் பிணைந்து கொண்டுள்ள மலங்களை நீக்கிக் கொள்ள விருப்பம் கொண்டு, அத்தகைய முயற்சியில் ஈடுபட்டால் தான், இறைவன் அத்தகைய உயிர்களுக்கு உதவி புரிந்து மலங்களின் ஆளுமையிலிருந்து அந்த உயிர்களை விடுவிப்பதற்கு வழி வகுப்பான் என்ற கருத்து இங்கே குறிப்பிடப் படுகின்றது. மெய்ப்பொருளின் தன்மையை அறிந்து கொண்டு, மெய்ப்பொருளை தியானித்தால் மட்டுமே இறைவனது அருள் நமக்கு உதவி புரியும் என்பதை நாம் மறக்கலாகாது.

இரண்டாவது அடி; செர் உக்கு வாய்ப் புடையான் சிர் அபுரம் என்னில்; சேர் என்ற சொல் செர் என்றும் சீர் என்ற சொல் சிர் என்றும் இங்கே குறைந்துள்ளன. சேர்=ஆகாயம், காற்று, நெருப்பு மற்றும் நீர் ஆகிய நான்கு பூதங்களின் கலவையாக விளங்கும் ஐந்தாவது பூதமாகிய பூமி; உக்கு=அந்த பூமி; புடையான்=இருப்பிடமாகக் கொண்டவன்; சீர்=சிறப்பு வாய்ந்த; அபுரம்=உயிரற்ற உடல்; என்னில்=மேலே வைத்துக் கொள்ளப்பட்டது என்றவாறு; பூமிக்கு இருப்பிடமாக தனது வாயிலிருந்து வெளிப்பட்ட இரண்டு கோரைப் பற்களை அளித்து பூமியை மீட்ட (பன்றி வடிவம் எடுத்து பூமியினை மீட்ட திருமால் தனது பற்களின் இடையே வைத்துக் கொண்டு வந்த செய்கை குறிப்பிடப் படுகின்றது) சிறப்பினை உடைய திருமாலும் ஒரு நாள் இறந்துபட அவனது உயிரற்ற உடலினைத் தனது தோள் மேல் தாங்கிய பெருமான் என்று சிவபெருமானின் சிறப்பு விளக்கப் படுகின்றது. மூன்றாவது அடி: செருக்கு வாய்ப் புடையான் சிரம் புரம் என்னில்; செருக்கு=கர்வம்; வாய்=வாய் உள்ளிட்ட ஐந்து பொறிகளையும் குறிக்கின்றது; புடையான்=இடத்தான்; சிரம்=மேல்; புரம்=உடல், சரீரம்; இம்மையில் தங்களது பொறிகளுக்கு இன்பம் அளிக்கும் செயல்களைப் புரிந்த உயிர், மறுமையிலும் அந்த இன்பம் தொடர வேண்டும் என்று விரும்புவது இயற்கை தானே. உயிர்கள் செய்த நற்செயல்களுக்கு தக்கவாறு, அந்த இன்பத்தினை சொர்கத்தில் அளிப்பவனும் சிவபெருமான் தான் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. நான்காவது அடி: செருக்கு ஆய்ப்பு உள் தையான் சிரபுரம் என்னில்; சிரபுரம் என்று இந்த தலத்தின் பெயரைச் சொன்னால் விளையும் பயனை இந்த அடியில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். செரு= யுத்தம்; இந்திரியங்கள் உயிருடன் செய்யும் யுத்தம் என்று பொருள் கொள்ள வேண்டும். ஆய்ப்பு=இளைத்து; உள் தையான்=இந்திரியங்கள் எய்யும் பாணங்களால் தைக்கப்பட்டு காயம் அடையாமல் இருத்தல்; என்னில்=என்று சொன்னால்

பொழிப்புரை:

மலங்களால் ஏற்படும் மயக்கத்தில் ஆழ்ந்து தன்னை நினைக்காத மனிதர்களின் மலங்களின் தன்மையை கெடுக்காமல் இருக்கும் சிவபெருமான், தனது மேலான இருப்பிடமாக அடியேனின் ஞான அறிவினைக் கொண்டுள்ளான். மற்ற நான்கு பூதங்களின் கலவையாக விளங்கும் பூமிக்கு இருப்பிடமாகத் தனது வாயிலிருந்து வெளிப்பட்ட இரண்டு கோரைப் பற்களைக் கொடுத்து இரண்யாக்கனால் ஒளித்து வைக்கப் பட்ட பூமியினை மீட்ட சிறப்பினை உடைய திருமாலின் உயிரற்ற உடலைத் தனது தோள் மேல் தாங்கிய பெருமையை உடையவன் சிவபெருமான். ஆன்மாவின் ஒரு குற்றமாகிய கர்வத்தினால், வாய் முதலான ஐந்து பொறிகளுக்கும் இன்பம் அளிக்கும் செயல்களைப் புரியும் உயிர்கள், உடலை விட்டு பிரிந்த பின்னரும் அந்த இன்பத்தினை சூக்கும உடலுக்கு அளிக்கும் வண்ணம், அந்தந்த உயிர்கள் ஈட்டிய நற்செயல்களுக்கு ஏற்ப சொர்க்க போகம் அனுபவிக்க ஏற்பாடு செய்பவன் சிவபெருமானே. இத்தகைய பெருமை வாய்ந்த சிவபெருமான் வீற்றிருக்கும் தலத்தின் பெயரினை சிரபுரம் என்று ஒரு முறை சொல்பவர்கள், தங்களுடன் தங்களது பொறிகள் தொடுக்கும் சண்டையில், பொறிகளால் எய்யப்படும் அம்புகளால் காயம் அடைய மாட்டார்கள்.

பாடல் 8:

பிரமபுரத்துறை பெம்மான் (1.127) பாடல்கள் 7, 8, 9 (திதே 0254)

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன்

பொன் அடி மாதவர் சேர் புறவம் தவன்

பொன் அடி மாது அவர் சேர்புற அவத்தவன்

பொன் அடி மாதவர் சேர் புறவத்தவன்

முதல் அடி; பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன்; பொன்=பொன் போன்று பொலிவினை உடைய; நடி=கூத்தினை உடைய; மாது=காளி; அவர்=பூதகணங்கள்; சேர்=சென்று அடைந்து தங்கும்; புறவம்=ஊருக்கு புறத்தே உள்ளே சுடுகாடு; புறவத்தவன்=சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாக உடையவன்; சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான் என்று உணர்த்துகின்றார். இரண்டாவது அடி; பொன் அடி மாதவர் சேர் புறவம் தவன்; பொன்=தூய்மையான; அடி=வழி, முறையில்; மாதவர்=சிறந்த தவத்தினை புரியும் முனிவர்கள்; சேர்=திரண்டு சேரும்; புறவம்=முல்லை நிலம்; தவன்=தவத்தினை புரியும் சிவபெருமான்; தவம் புரியும் முனிவர்களிலும் சிறந்தவனாக சிவபெருமான் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தவம் செய்யும் அனைவரும் சடையினை உடையவர்களாக இருந்தாலும் சிவபெருமான் ஒருவனைத் தானே சடையான் என்று தேவாரப் பதிகங்கள் குறிப்பிடுகின்றன. அனைவரிலும் சிறந்த தவம் புரிபவன் சிவபெருமான் என்பதைத் தானே சடையான் என்ற இந்த சொல் நமக்கு உணர்த்துகின்றது.

மூன்றாவது அடி: பொன் அடி மாது அவர் சேர்புற அவத்தவன்; பொன் என்ற சொல் செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படும் இலக்குமி தேவியை குறிக்கும். அடி=அழகிய ஆபரணங்கள்; மாது அவர்=தாருக வனத்து முனிவர்களின் மனைவிகள்; சேர்பு உறு=வந்து அணைந்த, பிச்சை இடுவதற்காக பெருமானை நாடிச் சென்ற; அவம்=பாவம்’ அவத்தவன்=பாவச் செயல் புரிந்தவன்; அந்நாள் வரை கற்பு குலையாமல் இருந்த தாருகவனத்து இல்லத்தரசிகள், பிச்சை ஏற்று வந்த பெருமானின் அழகினில் மயங்கி தாங்கள் செய்வது இன்னதென்று உணராமல், பெருமானின் பின்னே பின் தொடர்ந்ததை, கற்பு குலைந்த செயலாக புராணங்கள் கருதுகின்றன. இவ்வாறு அவர்கள் மாறுவதற்கு பெருமானின் அழகு காராணமாக இருந்தமையால் அவர்களது கற்பு நிலை குலைவதற்கு காரணமாக இருந்தவன் பெருமான் என்று குறிப்பிட்டு, அத்தகைய பாவம் புரிந்தவன் பெருமான் என்று தாருகவனத்து முனிவர்கள் கருதியதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தங்களது மனைவியர்களின் நிலையை மாற்றிய பெருமானை, தங்களது பகைவனாக நினைத்து அவனை அழிப்பதற்கு பலவாறும் முயற்சி செய்தமையும், இறுதியில் பெருமானின் பெருமைகளை உணர்ந்து அவனது அடியார்களாக தாருகவனத்து முனிவர்கள் மாறியதும் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள். தாருகவனத்து முனிவர்களின் நிலையினை மாற்றி அவர்களையும் தனது அடியார்களாக மாற்றுவதற்கு பெருமான் செய்த திருவிளையாடலின் ஓர் அங்கம் தான், பிச்சைப் பெருமானாக சென்று, தனது அழகினால் முனிவர்களின் மனைவிகள் மயங்கும் வண்ணம் நடந்தது. இந்த செயல் முனிவர்களின் கண்ணோட்டத்தில் பாவமாக கருதப் பட்டதால், பாவம் புரிந்தவன் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

நான்காவது அடி: பொன் அடி மாதவர் சேர் புறவத்தவன்; பொன்னடி=பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்கள்; அடி=பாதம்; மாதவர்=கன்னியர்; சேர்=சேர்ந்து ஒரு இனமாக இருத்தல்; புறவத்தவன்=புறவம் என்று அழைக்கப்படும் பதியில் உறைபவன். இந்த அடியில் உள்ள சொற்களை சற்று மாற்றி அமைத்து, மாதவர் சேர் பொன்னடி புறவத்தவன் என்று கூட்டி, சிறந்த தவ முனிவர்கள் சேரும் பொன் போன்று பொலியும் திருவடிகளை உடைய பெருமான், புறவம் திருத்தலத்தில் உறைபவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

பொன் போன்று பொலிவினை உடைய கூத்தினை ஆடும் மாதாகிய காளிதேவியும், பூத கணங்களும் சென்று அடைந்து தங்கும் சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான்; தூய்மையான முறையில் சிறந்த தவம் செய்யும் முனிவர்கள் திரண்டு சேரும் முல்லை நிலத்தில் தானும் தவம் செய்பவனாக விளங்கி அவர்கள் அனைவராலும் சிறந்த தவசியாக மதிக்கப் படுபவன் சிவபெருமான்; அழகிய ஆபரணங்கள் அணிந்து இலக்குமி தேவியைப் போன்று அழகுடன் விளங்கிய தாருகவனத்து இல்லத்தரசிகள், தனது அழகில் மயங்கி தாங்கள் (தாருகவனத்துப் பெண்கள்) செய்வது இன்னதென்று அறியாமல் தன்னைப் பின்தொடர்ந்து செல்லும் வண்ணம், அவர்களின் முன்னே பிச்சைப் பெருமானாக தோன்றி, அவர்களது கற்பு நிலை குலையச் செய்தவன் பெருமான். பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்த பாதங்களை உடைய மகளிர், கூட்டமாக சேர்ந்து வணங்கும் இறைவன், புறவம் தலத்தில் உறைபவன் ஆவான்.

பாடல் 9:

பிரமபுரத்துறை பெம்மான் (1.127) பாடல்கள் 7, 8, 9 (திதே 0254)

தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

தசமுகன் எரி தர ஊன்று சண் பையான்

த சமுகம் நெரி தர ஊன் துசு அண்பையான்

தசம் உக நெரி தரம் ஊன் து சண் பையான்

தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்

முதல் அடி; தசமுகன் எரி தர ஊன்று சண் பையான்; தசமுகன்=உயிர்கள் பால் கருணையை உடையவன்; எரி=நெருப்பு, இங்கே நெருப்பு போன்று கொடிய நஞ்சம் என்று பொருள் கொள்ளவேண்டும். தர=வீசும்; ஊன்று=அழுத்தி; சண்=வேகமாக; பை=படம். படம் உடைய பாம்பு; பையான்=படம் உடைய பாம்பினை உடையவன்; அனைத்து உயிர்கள் பால் பெரும் கருணை கொண்டுள்ள சிவபெருமான் பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் ஆபரணமாக தரித்துள்ளான்; இரண்டாவது அடி; த சமுகம் நெரி தர ஊன் துசு அண்பையான்; த=அது, ஓம் தத்சத் என்று மந்திரத்தை தோத்திரங்களை சொல்லி முடித்ததும் சொல்வது வழக்கம். தத் என்றால் அதுவாகிய சத்: சத் என்றால் உண்மையான மெய்ப்பொருள். உண்மையான அந்த மெய்ப்பொருளாகிய சிவபெருமானை புரிந்து கொள்வீர்களாக என்று இதன் பொருள். பெருமானை முறையாக மனம் ஒன்றி வழிபடும் அடியார்கள் தானே பெருமானின் உண்மையான தன்மையை அறிந்து கொள்கின்றனர். சமூகம்=கூட்டம்; இங்கே சிவஞானிகளை குறிப்பதாக பொருள் கொள்வது பொருத்தம்; நெரி=நேரி; நேரி=நேரானவன் சிவஞானிகளுக்கு உண்மையான மெய்ப்பொருளாக நேரிடையாக காட்சி தருபவன்; நேரி என்ற சொல் நெரி என்றும், தரக்கு என்ற சொல் தர என்றும் தூசு என்ற சொல் துசு என்றும் குறுக பாயான் என்ற சொல் பையான் என்று மாறியது. தரக்கு=புலி; ஊன்=மாமிசம், இங்கே தோல் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம்; தூசு=ஆடை; அண்பையான்=விரித்து உடுத்தான்; உண்மையான மெய்ப் பொருளாக இருக்கும் சிவபெருமான், புலித்தோலை ஆடையாக உடுத்தியவன் என்பது இந்த அடி உணர்த்தும் பொருள்; மூன்றாவது அடி: தசம் உக நெரி தரம் ஊன் து சண் பையான்; தசம்=தைசதம் என்ற சொல்லின் திரிபு; அகங்காரம்: உக=கெட; நேரி என்ற சொல் இங்கும் நெரி என்று குறுகியது; தரம்=மலை; ஊன்=உள்ளம்; து=சிறப்பான ஞானம் உடையவன்; சண்=ஷட்சமயம், ஆறு விதமான சமயங்கள்; பையான்=பயனாக உள்ளவன்; உயிர்களுக்கு அகங்காரம் விளைவிப்பதாகிய யான் எனது என்ற பற்றுகளை கெட்டொழித்து வாழும் அடியார்களுக்கு நேரிடையாகத் தோன்றி காட்சி தருபவனும், கயிலாய மலையில் இருப்பவனும் ஆகிய பெருமான் அடியார்களின் உள்ளத்தில் உறைகின்றான். அவன் ஆறு சமயங்களைச் சார்ந்தவரும் இறுதியில் அடையக் கூடிய உண்மையான பயனாக உள்ளான் என்பதே இந்த அடியின் பொருள். ஆறு வைதீக சமயங்கள் என்பவை சைவம், வைணவம், காணாபத்யம், சாக்தம், ஸ்காந்தம் மற்றும் சௌரம் என்பன. சைவ சமயத்தின்ஆறு உட்பிரிவுகளாக, சித்தாந்த சைவம், காளாமுகம், பாசுபதம் காபாலிகம், மாவிரதம் மற்றும் காச்மீர சைவம் என்பன கருதப் படுகின்றன. இந்த பாடலில் காணப்படும் அறுவகைச் சமயம் என்ற தொடர், இந்த இரண்டு தொகுப்புகளிலும் உள்ள சமயங்களை குறிப்பதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. நான்காவது அடி: தசமுகன் நெரிதர ஊன்று சண்பையான்; தசமுகன்=பத்து தலைகளை உடைய அரக்கன் இராவணன்; நெரிதர= தோள்களும் தலைகளும் முறியும் வண்ணம்: ஊன்று=தனது கால் பெருவிரலை ஊன்றிய; சண்பையான்=சண்பை எனப்படும் தலத்தில் உறைபவன்

பொழிப்புரை:

உயிர்கள் பால் கருணை கொண்டுள்ள பெருமான், படம் எடுத்து ஆடுவதும் நெருப்பு போன்று கொடுமையான நஞ்சினை வீசும் தன்மையை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக இறுகக் கட்டியுள்ளான்; மேலும் தனது உடலில் பல இடங்களிலும் பாம்பினை ஆபரணமாக அணிந்துள்ளான்.சிவஞானிகளின் கூட்டத்திற்கு, நேரடியாக மெய்ப் பொருளாக தோன்றும் இறைவன், தாருகவனத்து முனிவர்களால் தன்னை நோக்கி அனுப்பப்பட்ட புலியினை கொன்று, அதன் ஊனினை நீக்கி அதன் தோலை ஆடையாக விரித்துத் தனது இடுப்பினில் அணிந்துள்ளான். உயிர்களுக்கு அகங்காரம் விளைவிப்பதாகிய யான் எனது என்ற பற்றுகளை கெட்டொழித்து வாழும் அடியார்களுக்கு நேரிடையாகத் தோன்றி காட்சி தருபவனும், கயிலாய மலையில் இருப்பவனும் ஆகிய பெருமான் அடியார்களின் உள்ளத்தில் உறைகின்றான். அவன் ஆறு சமயங்களைச் சார்ந்தவரும் இறுதியில் அடையக் கூடிய உண்மையான பயனாக உள்ளான். பத்து தலைகளை உடைய அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, அவனது தலைகளும் தோள்களும் மலையின் கீழே அழுந்தி நொறுங்கி முறியும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றிய இறைவன், சண்பை என்று அழைப்படும் சீர்காழி நகரினில் பொருந்தி அமைந்துள்ளான்.

பாடல் 10:

பிரமபுரத்துறை பெம்மான் (1.127) பாடல்கள் 10, 11, 12 (திதே 0255)

காழியான் அயன் உள்ளவா காண்பரே

காழியான் அயன் உள்ளவா காண்பரே

காழியான் அயன் உள்ளவா காண்பரே

காழியான் அயன் உள்ளவா காண்பரே

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை

காழியான யன் உள்ளவா காண்பரே

காழியான் நயன் உள்ளவா காண்பரே

காழியான் அயன் உள்ள ஆ காண் பரே

காழியான் அயன் உள் அவா காண்பரே

முதல் அடி; காழியான யன் உள்ளவா காண்பரே; காழியான்=காழி நகரைப் போன்ற; சீர்காழி நகரம் ஊழிக் காலத்திலும் எந்த விதமான மாற்றமும் அடையாமல் நிலையாக இருப்பது போன்று, மலங்களினால் கெடாத சிந்தனை உடைய என்று பொருள் கொள்ளவேண்டும்; யன்=பக்தர்கள்/அடியார்கள்; உள்ளவா=மெய்ப்பொருளின் தன்மை உணரும் வண்ணம்; காண்பரே=தனது அருட்கண்ணால் பெருமான் நோக்குவார். மலங்களின் தன்மையால் விளைகின்ற குழப்பங்களை நீக்கி தெளிவான சிந்தனையுடன் விளங்கும் அடியார்களை தனது அருட்கண்ணால் நோக்குபவன் சிவபெருமான் என்பது இந்த அடியின் பொருள்; இரண்டாவது அடி; காழியான் நயன் உள்ளவா காண்பரே; காழியான்=களங்கம் உள்ளவன்; பெருமானின் கழுத்தினில் விடத்தினால் உண்டான நீலநிறத்து கறை இங்கே களங்கம் என்று சொல்லப் படுகின்றது; நயன்=நயனம் என்பதன் சுருக்கம், இங்கே ஞானக் கண்ணினை குறிப்பிடுகின்றது; ஞானம் உடைய சிவனடியார்களே பெருமானின் உண்மைத் தன்மையை புரிந்து கொள்வார்கள்; மூன்றாவது அடி: காழியான் அயன் உள்ள ஆ காண் பரே; காளிமம் என்பது கருமை நிறத்தினை குறிக்கும்; காளியன்=கருமை நிறம் உடைய திருமால்; காளியன் என்ற சொல் காழியன் என்று திரிந்துள்ளது; அயன்=பிரமன்; உள்குதல்=நினைத்தல்; உள்ள=நினைக்க; ஆ என்ற சொல் அதிசயக் குறிப்பினை உணர்த்தும்; கண் என்ற சொல் இங்கே காண் என்று நீண்டது; கண்-கருதுதல்; பரே=அன்னியம்; பெருமானைப் பணிந்து வணங்கி அவரை தியானிக்காத பிரமனும் திருமாலும், பெருமானின் உண்மையான வடிவத்தைக் காண முடியாமல், அன்னியத்தை, வேறு காட்சியைத் தான் கண்டனர் என்பதே இந்த அடி உணர்த்தும் பொருள். நான்காவது அடி: காழியான் அயன் உள் அவா காண்பரே; காழியான்= சீர்காழி நகரத்தின் தலைவனாகிய இறைவன்; ஐயன் (தலைவன் என்று பொருள்) என்ற சொல்லின் திரிபு அயன் என்பதாகும். உள்=அறிவினில் உள்ளே; அவா=ஆசை; காண்பரே=காண முடியுமா, காண முடியாது; திருமாலும் பிரமனும் இறைவனது திருமுடியையும் திருவடியையும் காணமுடியாமல் இருந்த நிலைக்கு காரணம், பெருமானை அன்பு கொண்டு அவர்கள் அணுகாததே என்று இலிங்கபுராண குறுந்தொகை பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் அப்பர் பிரான் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. இறைவனை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை இந்த பாடல்களில் குறிப்பிடும் அப்பர் பிரான், அவ்வாறு செய்யாமல் பிரமனும் திருமாலும் இருந்தனர் என்று கூறுகின்றார். பதிகத்தின் முதல் பாடலில் இறைவன் உறையும் இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றும் அவனது பெருமைகளை புரிந்து கொண்டு அவன் இருக்கும் இடம் செல்ல வேண்டும் என்றும், அவனது திருவடிகளில் தூவுவதற்காக மலர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அன்றலர்ந்த தூய்மையான மலர்களை நாமே பறித்தல் வேண்டும் என்றும். மகிழ்ந்த மனத்துடன் அவனை நெருங்கிக் காண வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் இறைவனை நீராட்டி, திலகமிட்டு அழகு செய்து, அவனை வலம் வந்து வழிபடல் வேண்டும் என்று கூறுகின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடலில், திருக்கோயிலின் தரையினை சுத்தம் செய்து, பசுஞ்சாணத்தால் மெழுக வேண்டும் என்றும் கூடை நிறைய அன்றலர்ந்த பூக்களை திருக்கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறுகின்றார். நான்காவது பாடலில் நெய் பால் ஆகியவை கொண்டு இறைவனை நீராட்ட வேண்டும் என்றும் இறைவனைத் தொழும் போது பொய்யான மற்றும் வஞ்சகமான சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானுக்கு எருக்க மாலையும் இண்டை மாலையும் சூட்டி வழிபட வேண்டும் என்றும் எளிமையான தோற்றம் தரும் உடைகளை உடுத்துக் கொண்டு இறைவனை வணங்க வேண்டும் என்றும் கூறுகின்றார். பெருமானுக்கு மிகவும் அதிகமான பூக்கள் சமர்ப்பித்து வழிபட, நமது உடலை வருத்திக் கொண்டு பூக்கள் பறிக்க வேண்டும் என்றும், பெரிய குடங்களில் நீர் சுமந்து கொண்டு சென்று பெருமானை நீராட்ட வேண்டும் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். ஏழாவது பாடலில் திருக்கோயிலில் அடியார்கள் அட்டாங்க வணக்கம் செய்யவேண்டும் என்று உணர்த்தப் படுகின்றது. எட்டாவது பாடலில், திருநீறு அணிந்தவாறு, அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஒன்பதாவது பாடலில் கருங்குவளை மலர் மாலைகளை இறைவனது திருவடியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகின்றார். உருத்திராக்கம் அணிந்தவாறு பெருமானின் சன்னதியில் சங்கு ஊதவேண்டும் என்று பத்தாவது பாடலில் கூறுகின்றார். இவ்வாறெல்லாம் சிவபெருமானை வழிபட வேண்டும் என்று உணர்த்தும் அப்பர் பிரான், அவ்வாறு வழிபடாமல் தங்களது ஆற்றலின் மீது அதிகமான நம்பிக்கை வைத்தவர்களாக இருந்த திருமாலும் பிரமனும் இறைவனின் திருவடியையும் திருமுடியையும் காண முடியாமல் தவித்தனர் என்றும், பின்னர் அவர்கள் தங்களது தவறினை உணர்ந்து, பெருமானிடம் இறைஞ்சிய போது, பெருமான் அவர்கள் இருவருக்கும் இலிங்க வடிவினனாக காட்சி அளித்தான் என்றும் இந்த பதிகத்தின் கடைப் பாடலில் உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

ஐந்து பொறிகள் விளைவிக்கும் சேட்டைகளால் எந்தவிதமான மாற்றமும் அடையாமல் நின்மலமான சிந்தையை உடைய அடியார்கள், மெய்ப் பொருளின் தன்மையை உணரும் வண்ணம், தனது அருட்கண்ணினால் அவர்களை நோக்கி அருள் புரிபவர் சிவபெருமான். பெருமானின் அருளினால் ஞானக்கண் பெற்ற அடியார்கள், அந்த ஞானக் கண் கொண்டு பெருமானின் கழுத்தினில் உள்ள நீலநிறத்து கறையினையும், பெருமானை உணர்த்தும் மற்ற அடையாளங்களையும் உள்ள வண்ணம் காண்பார்கள்; திருமாலும் பிரமனும் சிவபெருமானை மனதில் தியானம் செய்து அவனது அடியையும் முடியையும் காண்பதற்கு முயற்சி செய்யாததால், அவர்கள் இருவரும் எவ்வளவு தூரம் அகழ்ந்தும் பறந்தும் சென்ற போதும் அவர்களால் பெருமானின் அடியையோ முடியையோ காண முடியவில்லை. அவர்கள் இருவரும் பெருமானின் தோற்றத்திற்கு முற்றிலும் பொருந்தாத, அன்னியமான தோற்றத்தையே கண்டு சலிப்படைந்த பின்னர், தமது முயற்சியை கைவிட்டனர். இது அதிசயம் அல்லவா. சீர்காழி தலத்தின் உறைபவனும் எனது தலைவனாகவும் உள்ள பெருமானின் அடியையோ முடியையோ காண வேண்டும் என்ற ஆசை திருமால் மற்றும் பிரமனின் உள்ளத்தில் இருந்தாலும், அவர்களால் காண முடியுமா, காண முடியாது அல்லவா.

பாடல் 11:

பிரமபுரத்துறை பெம்மான் (1.127) பாடல்கள் 10, 11, 12 (திதே 0255)

கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே

கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே

கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே

கொச்சை அண்ணலை கூடகிலார் உடன்மூடரே

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே

கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே

கொச்சையன் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரே

கொச்சை அண்ணலை கூட கிலார் உள்தல் மூடரே

முதல் அடி; கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே: கொச்சை=அறியாமையை விளைவிக்கும் ஆணவ மலம்; அண்ணுதல்=அணுகுதல், கூடகிலார்=அனைத்து உயிர்களுடன் பிணைந்திருக்கும் ஆணவ மலமே உயிர்கள் செய்யும் குற்றங்களுக்கு மூல காரணம் என்பதை புரிந்து கொண்டு ஆணவ மலத்தின் மயக்கத்திற்கு ஆட்படாமல், நிலையற்ற உலகப் பொருட்கள் மீது பற்று கொள்ளாமல், உண்மையான மெய்ப்பொருளின் தன்மையை உணர்ந்து அந்த மெய்ப் பொருளின் மீது பற்று கொண்டு வாழும் சான்றோர்கள்; உடன்=உடல்; மூடாரே என்ற சொல் மூடரே என்று குறுகியது; மீண்டும் பிறப்பெடுத்து ஒரு உடலினுள்ளே புகுந்து அந்த உடலால் மூடப்படும் தன்மைக்கு அத்தகைய சான்றோர்கள் ஆளாகமாட்டர்கள்; அத்தகைய பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவார்கள் என்பதே சுருக்கமான பொருள். இரண்டாவது அடி; கொச்சை அண்ணலை கூடகிலார் உடல் மூடரே; கொச்சை=புலால் நாற்றம் வீசும் உடல்; அண்ணுதல்=அணுகுதல், இங்கே பொருந்திய என்ற பொருளுடன் வருகின்றது; கூடகிலார்= நிலையற்றது உடல் என்ற கொள்கையுடன் பொருந்தாது வாழும் புத்தர்கள் என்றும் சிவநெறியில் கூடி வாழாத புத்தர்கள் மற்றும் சமணர்கள் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டுமே பொருத்தமாக உள்ளன; மூடரே=துவராடையால் மூடுவார்கள்; புத்தர்களை குறிப்பிடும் திருஞானசம்பந்தர் தங்களது உடலினை மூடாது திரியும் சமணர்களையும் குறிப்பிட்டதாக நாம் பொருள் கொள்ளவேண்டும். மூன்றாவது அடி: கொச்சையன் நலை கூடு அகில் ஆர் உடன் மூடரேகொச்சையன்=அருவருக்கத் தகுந்த மீன்வாடை தனது உடலில் வீசுபவளாக திகழ்ந்த மீனவப்பெண் மச்சகந்தி; மீனவப் பெண்ணாகிய மச்சகந்தியை கண்டு மனம் மயங்கிய அத்தினாபுரத்து அரசன் சந்தனு, அவளது உடலிலிருந்து வீசிய நறுமணத்தால் மனம் கவரப் பட்டான் என்று மகாபாரதம் கூறுகின்றது. அந்த நறுமணம் மீனவப் பெண்ணுக்கு முனிவர் பராசரரால் கிடைத்தது என்பதை இந்த பாடல் உணர்த்துகின்றது; நலை=நலன் கருதி; கூடு=கூடி பொருந்தும் வண்ணம்; அகில் ஆர்=அகிற்புகை வாசனையுடன்; உடன்=உடனே, மச்சகந்தி வேண்டிய உடனே சிறிதும் தாமதம் செய்யாமல் அவளது உடலினை நறுமணம் வீசும் உடலாக மாற்றியவர்; மூடரே=பொருத்திய பராசர முனிவர்; நான்காவது அடி: கொச்சை அண்ணலை கூட கிலார் உள்தல் மூடரே கொச்சை அண்ணல்=கொச்சை வயம் என்று அழைக்கப் படும் சீர்காழி தலத்தின் தலைவன்; கூடகிலார்=நேரில் கண்டு வணங்காத மனிதர்கள்; மூடரே=அறியாமை நிறைந்த மனதினை உடையவர்களே. உள்தல் கூடகிலார் என்று சொற்களை மாற்றி வைத்து பொருள் கொள்ளவேண்டும்.

பொழிப்புரை:

அறியாமையை விளைவிக்கும் ஆணவ மலமே உயிர்கள் செய்யும் குற்றங்களுக்கு மூல காரணம் என்பதை புரிந்து கொண்டு ஆணவ மலத்தின் மயக்கத்திற்கு ஆட்படாமல், நிலையற்ற உலகப் பொருட்கள் மீது பற்று கொள்ளாமல், உண்மையான மெய்ப்பொருளின் தன்மையை உணர்ந்து அந்த மெய்ப்பொருளின் மீது பற்று கொண்டு வாழும் சான்றோர்கள், மீண்டும் பிறப்பெடுத்து ஒரு உடலினுள்ளே புகுந்து அந்த உடலால் மூடப்படும் தன்மைக்கு ஆளாகமாட்டர்கள்; புலால் நாற்றம் வீசும் உடல் நிலையற்ற தன்மை உடையது என்ற கொள்கையுடன் பொருந்தாத புத்தர்கள், சிவநெறியில் பொருந்தி வாழாத புத்தர்கள்,தங்களது உடலினை துவராடையால் மூடுவார்கள்; அதே கொள்கையைக் கொண்டுள்ள சமணர்கள் தங்களது உடலினை மூடாமல் திரிவார்கள். மிகுந்த விருப்பத்துடன் தான் புணர்ந்த மீனவப் பெண்ணின் உடலில் வீசிய துர்நாற்றம் மிகுந்த மீன் வாடையை நீக்கி, அவளது உடலில் அகிற்புகையின் நறுமணம் பொருந்தும் வண்ணம் செய்து நலம் புரிந்தவர் பராசர முனிவர்; அத்தகைய பராசர முனிவரால் வணங்கப் பட்டவரும் கொச்சைவயம் என்று அழைக்கப் படும் சீர்காழி நகரத்தில் உறைபவரும் ஆகிய அண்ணல் சிவபெருமானை மனதினில் தியானித்து அவரை நேரே தரிசனம் செய்து வணங்காத மனிதர்கள் எப்போதும் அறியாமையில் மூழ்கி இருப்பார்கள்.

பாடல் 12:

பிரமபுரத்துறை பெம்மான் (1.127) பாடல்கள் 10, 11, 12 (திதே 0255)

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

விளக்கம்:

பொருள் அறிந்து கொள்ளும் பொருட்டு சொற்களை பிரிக்க வேண்டிய முறை:

கழுமல் அமுது பதிக்க உள் நீ கட்டு உரை

கழு மலமது பதி கவுணி அன் கண் துரை

கழும் அலம் அமுது பதி க உணியன் கட்டு உரை

கழுமலமுதுபதி கவுணியன் கட்டு உரை

முதல் அடி; கழுமல் அமுது பதிக்க உள் நீ கட்டு உரை; கழுமல்=மிகுதிப் பட்ட குற்றம்; அமுது=சலம், நீர், சுக்கில சுரோணிதம் ஆகிய விந்து நீர்; பதிக்க=விளைவிக்க; உள் நீ=உள்ள ஆன்மாவாகிய நீ; கட்டு=வடிவமாகக் கட்டுண்டு பின்னர் வினைகளால் கட்டுண்டு; உரை=தேய்தல், பல வகையான துன்பங்களில் ஆழ்ந்து அழிதல்; தேய்ந்து=அழிதல்; பிறவியின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது; பிறவி, உயிர் எதிர்கொள்ளும் அனைத்து துன்பங்களுக்கும் காரணமாக இருப்பதால், பிறவிக்கு காரணமாகிய விந்து நீர்களும் குற்றத்தின் விளைவாக கருதப்படுகின்றன. இரண்டாவது அடி; கழு மலமது பதி கவுணி அன் கண் துரை; கழு=கழுவப்படும்; அது=ஆணவ மலமும் அதனுடன் கூடிய கன்ம மற்றும் மாயா மலங்களால் ஏற்படும் விளைவுகள்; பாதி என்ற சொல் பதி என்று குறுகியது; பாதி என்பது இங்கே பெருமானின் உடலில் பாதியாக உள்ள பிராட்டியின் அருளும் தன்மையை குறிப்பிடுகின்றது. பெருமானின் அருள் வடிவமாகத் தானே பிராட்டி கருதப் படுகின்றாள். கவுணி=தன்னுள்ளே அகப்படுத்திக் கொள்ளும் தன்மை; அன்கண்= ஆன்மாவிடத்து; துரை=இறைவர்; தன்னில் பாதியாகிய பிராட்டியின் மூலம் அருள் புரிந்து, பெருமான் தனக்கு அருள் புரிந்ததாக திருஞானசம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்; பக்குவப்பட்ட உயிர்களை தன்னுடன் பொருத்திக் கொள்கின்றார் என்பதே இந்த அடியின் பொருள்; மூன்றாவது அடி: கழும் அலம் அமுது பதி க உணியன் கட்டு உரை; கழும்=மயக்கம்; அலம்=துன்பப்படுதல்; அமுது=வினையால் கட்டுண்டு துன்பப்படும் ஆன்மாவினை வினைக்கட்டிலிருந்து விடுவிப்பதால் அமுதமாக கருதப்படும் இறைவன்; க=தலை, பிரமகபாலம்; உணியன்=பலி ஏற்று உண்பவர்; கட்டு=விளக்கம்; உரை=உரைப்பொன் போன்று தூய்மையானவர்; நான்காவது அடி, கழுமலமுதுபதி கவுணியன் கட்டு உரை; முதுபதி=தொன்மையான தலம்; கவுணியன்=திருஞான சம்பந்தரின் ஒரு பெயர்; கவுணிய கோத்திரத்தைச் சார்ந்தவர் என்பதால் வந்த பெயர்; காட்டு=கட்டு என்று குறுகியது; காட்டு= ஆன்மாக்களுக்கு உபதேசமாக காட்டிய பாடல்; உரை=உரைத்து பயன் அடைவீர்களாக; காட்டிய என்பதற்கு பெருமானுக்கு நிவேதனமாக திருஞானசம்பந்தர் காட்டிய பாடல் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர்.

பொழிப்புரை:

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உடலில் மிகுதிப் பட்ட குற்றங்களால் விளையும் சுக்கிலம் மற்றும் சுரோணிதம் ஆகிய விந்து நீர்களின் சேர்க்கையால் உண்டாகும் உடலுடன் கட்டுண்டு இருக்கும் உயிர்கள், தங்களது வினைகளால் தேய்ந்து முடிவில் ஒரு நாள் உடலினை இழக்கின்றன. இவ்வாறு பிறவி தோன்றி மறைகின்றது. கழுமலத்தின் தலைவராகிய இறைவர், தன்னில் பாதியாக உள்ள அருளின் வடிவமாக உள்ள பராசக்தியின் மூலம், ஆணவமலம் கன்மமலம் மற்றும் மாயாமலம் ஆகிய மலங்களின் சேர்க்கையால் ஏற்படும் விளைவுகளை தானே உள்வாங்கிக் கொண்டு அடியேனை ஆட்கொண்டுள்ளார். இவ்வாறு அனைத்துப் பக்குவமடைந்த உயிர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு பெருமான் அருள் புரிகின்றார். மாயாமலத்தின் கண் அகப்பட்டு பிறவியின் நோக்கத்தை அறிய முடியாமல் துன்பமடையும் உயிர்களுக்கு அமுதம் போன்று அழியாத இன்பம் விளைவிப்பவனாக உள்ளவனும், விளக்கமாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பவனும், பிரமனின் கபாலத்தில் பலி ஏற்பதற்காக உலகெங்கும் திரிபவனும் ஆகிய இறைவன், உயிர்களின் மீது மிகுந்த கருணை கொண்டுள்ளான். பண்டைய நாளிலிருந்து தொடர்ந்து இருந்து வரும் நகரமாகிய கழுமலம் நகரத்தின் தலைவனாக உள்ள பெருமானின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வழியிலும் ஆன்மாக்களுக்கு உபதேசமாக அமைந்த முறையிலும் சம்பந்தன் இயற்றிய பாடலை பலமுறை படித்து பெருமானின் அருள் பெற்று, உங்களது மலங்களை நீக்கிக் கொண்டு உய்வினை அடைவீர்களாக.

முடிவுரை:

பொருளாழம் மிகுந்த பாடலாயினும், ஓதுவதற்கு மிகவும் எளிமையான பாடல். நான்கு அடிகளும் ஒன்றே போல இருப்பதால் மனனம் செய்வதற்கும் மிகவும் எளிதான பாடல். இந்த பாடலுக்கு பொருத்தமாக கூறப்பட்டுள்ள வியாழக்குறிஞ்சி பண்ணும் மிகவும் எளிமையானது. மேலும் சிறப்பு வாய்ந்த சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களையும், முறையாக சொல்வதே புண்ணியம் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த பதிகம் அந்த பன்னிரண்டு பெயர்களையும் நான்கு முறை நாம் ஓதும் வண்ணம் அமைந்துள்ளமையால், ஒதுவோர்க்கு பல மடங்கு பயன்கள் விளையும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. இந்த பாடலை அடிக்கடி ஓதி, நமது பழைய வினைகளை முற்றிலும் தீர்த்துக் கொண்டு நிலையான பேரின்பம் அடைவதற்கு தகுதி உள்ளவர்களாக நம்மை மாற்றிக் கொள்வோமாக.



Share



Was this helpful?