பதிக எண்: 2.64 - திருமுதுகுன்றம் - காந்தாரம்
பின்னணி:
முதுகுன்றம் தலத்தில் பல நாட்கள் தங்கி பல பதிகங்கள் பாடி பெருமானை வழிபட்ட சம்பந்தர், இந்த தலம் வந்தடைந்து இறைவனை வழிபட்ட அடியார்களின் தன்மையை கூறும் வண்ணம் அமைந்துள்ள பாடல்கள் ண்ட பதிகம்.
எழுபத்திரண்டு நடனத் தோற்றங்கள் வடிக்கப்பட்ட அற்புதமான சிற்பங்கள் கிழக்கு கோபுரத்தின் நுழைவாயிலில் இரண்டு பக்கங்களிலும் காணப்படுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வந்த காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கன் என்பவனால் கட்டப்பட்டவை. உட்பிராகாரமும் அர்த்த மண்டபமும், செம்பியன்மாதேவியாரால் கட்டப்பட்டது. இந்த அரசியாரின் நினைவாக நந்தி மண்டபம் கட்டப்பட்டது. பல சோழ மன்னார்களும் நாயக்க மன்னர்களும் இந்த திருக்கோயிலுக்கு பல விதமான நன்கொடைகள் அளித்து பராமரித்துள்ளனர். இந்த தலத்தின் மலையே பெருமானின் அம்சமாகவும் நதி மணிமுத்தாறு பிராட்டியின் அம்சமாகவும் கருதப்படுகின்றது. பல ஊழிகளைக் கடந்த தலம் என்று திருஞானசம்பந்தரால் குறிப்பிடப் படுகின்றது. மூவர் பெருமானர்கள் பாடல் பெற்ற தலம். அகத்திய முனிவர், சூரியன், சந்திரன், பிரமன், திருமால், முருகப்பெருமான், குரு நமச்சிவாயம், விபசித்து முனிவர், குபேரனின் தங்கை ஆகியோர் இந்த தலத்து இறைவனை வழிபட்டு பயன் அடைந்தவர்கள். பாஞ்சால நாட்டைச் சார்ந்த விதர்க்கணர் என்ற வணிகரை சந்தித்த முனிவர், அவரிடம் பழமலை நாதரின் பெருமைகளை எடுத்துரைக்க, அதனைக் கேட்ட வணிகரும் இந்த தலம் வந்தடைந்து இறைவனை வணங்கி பயனடைகின்றார். பெருமான் தனது விசுவரூப நடனக்காட்சியை தேவர்களுக்கு அளித்தார் என்றும் சொல்லப்படுகின்றது. பெருமான் தனது புஜங்கராக நடனத்தை தேவர்களுக்கு காட்டி அருள் புரிந்தார் என்றும் சொல்லப்படுகின்றது. திருஞானசம்பந்தர், புயங்கராக மாநடனத்தை பெருமான் ஆடிய இடம் என்று இந்த தலத்தை குறிப்பிடுகின்றார்.
மூன்றாவது பிராகாரம் அறுபத்து மூவர் பிராகாரம் என்று அழைக்கபப்டுகின்றது. நாயன்மார்களைத் தவிர்த்து, யோக தக்ஷிணாமூர்த்தி, பிந்து மாதவப்பெருமாள், மாற்று உரைத்த பிள்ளையார், சுப்ரமணியர், சின்ன பழமலை நாதர், மற்றும் பாலாம்பிகை சன்னதிகளை காணலாம். சின்ன பழமலை நாதர் சோமாஸ்கந்தர் வடிவத்தில் அமைந்துள்ளார். பன்னிரு திருமுறைகளுக்காக தனியாக ஒரு சன்னதி உள்ளது. இங்கே வடகிழக்கு மூலையில் உள்ள காலபைரவர் மூர்த்தம் காசியில் உள்ளது போன்ற வடிவமைப்பினைக் கொண்டது. மகான் குருநமச்சிவாயம் (பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்) ஒரு முறை இந்த தலம் வந்த போது நடைபெற்ற அற்புதத்தை உணர்த்தும் வகையில் அம்பிகை பாலாம்பிகை என்று அழைக்கப் படுகின்றாள். இந்த மகான் தினமும் அம்பிகையை வேண்டி பாட, அம்பிகை அவருக்கு உணவு அளித்து வந்தாள் என்று சொல்வார்கள். இந்த தலம் வந்த இவர், முதுகுன்றத்து நாயகி என்ற பொருள் பட, அம்பிகையை கிழத்தி என்று அழைத்துப் பாட, இவர் முன்னே தோன்றிய அம்பிகை கிழத்தியாக உள்ள தான் எவ்வாறு சோறு கொண்டு வருவது என்று கேட்க, மகானும் முற்றா இளமுலையாள் என்று குறிப்பிட்டு வேறொரு பாடல் பாட, அம்பிகை இளமையான வடிவத்துடன் சோறு கொண்டு வந்து கொடுத்தாள் என்று கூறப்படுகின்றது.
வடக்கு கோபுரக் கோயிலின் அருகே கிழக்கு நோக்கிய வண்ணம் தனிக் கோயிலாக அம்பாள் விருத்தாம்பிகையின் சன்னதி அமைந்துள்ளது. நிறைய சிற்பங்களுடன் காட்சி தரும் தூண்களை உடைய முன்மண்டபத்தைத் தாண்டி பெரிய பிராகாரம். நான்கு திருக்கரங்களுடன், பாசம் அங்குசம் தாங்கி, அபயமும் வரதமும் காட்டியபடி நின்ற கோலத்தில் அழகாக அம்பிகை காட்சி தருகின்றாள். கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, பைரவர் மற்றும் அஷ்டபுஜ துர்க்கை உருவங்கள் உள்ளன. அம்பிகை சன்னதியில் பைரவரை பார்ப்பது மிகவும் அரிது. பிரகாரத்தின் சுற்றுச் சுவர்களில் அம்பிகையின் பல திருவுருவங்கள் சித்திரமாக தீட்டப்பட்டுள்ளன. முன் மண்டபத்தில் முருகப் பெருமான் சன்னதியும் நாதசர்மா என்ற மகான் வழிபட்ட இலிங்க மூர்த்தமும் உள்ளன. அம்மன் சன்னதிக்கு முன்னர் மேற்கு பார்த்தபடி சிறிய சன்னதி ஒன்றினில் உள்ள சிவலிங்கம், அனவர்த்தனி என்ற மகான் வழிபட்ட இலிங்கமாகும். கொடிமரமும் நந்தியும் இருக்கும் நூற்றுக்கால் மண்டபத்தில் சிறந்த சிற்பங்கள் உள்ளன. தேர்த்தட்டு, சக்கரங்கள், குதிரைகள் பூட்டப்பட்ட அழகிய தேர் மண்டபம்.
பிராகாரத்தின் தெற்கு பகுதியில் மதில்சுவரும் கோபுரமும் கொண்ட தனிக்கோயில் ஒன்றினை காணலாம். இங்கே தான் தலத்திற்கு உரியவரான ஆழத்துப் பிள்ளையார் கொலு வீற்றிருக்கின்றார். இவரது சன்னதி தரையிலிருந்து பதினெட்டு அடி ஆழத்தில் உள்ளது. இறங்கி விநாயகரை தரிசனம் செய்வதற்கு வசதியாக படிகள் உள்ளன. வெளி பிராகாரங்களைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் இருக்கும் கருவறை. பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர், முதுகுன்றீசர் என்று அழைக்கப்படும் பெருமான், வட்டவடிவமான ஆவுடையாரில் கம்பீரமாக காட்சி கொடுக்கின்றார். சுயம்பு மூர்த்தம். கோஷ்டத்தில் மூன்று விநாயகர் மூர்த்தங்கள், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், கங்காதரேஸ்வரர், ஆகியோரும் தனி மண்டபத்தில் சண்டீசரும் உள்ளனர்.
பாடல் 1:
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்று ஏத்தி
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே
விளக்கம்:
மூவா=மூப்பு அடையாத; நீண்ட வாழ்நாள் கொண்ட; திருமூலர் முனிவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தமைக்கு ஒரு எடுத்துக் காட்டு. வசிட்டர் முதலான ஏழு முனிவர்கள் (சப்த ரிஷிகள் என்று ஒரு தொகுப்பாக அழைக்கப்படும் முனிவர்கள்) நீண்ட நாட்கள் வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆ ஆ என்று இரக்கத்தை குறிப்படும் சொல் ஆவா என்று இணைந்துள்ளது.
சிறியோமாகிய தாங்கள் செய்த பிழைகளை பெருமான் பொறுக்க வேண்டுமென்று முனிவர் விண்ணப்பம் வைப்பதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் பூஜை முடிந்த பின்னர் பெருமானிடம் தாங்கள் செய்த பிழையை பொறுத்தருளுமாறு நால்வர் பெருமானர்கள் பாடிய பாடல்களை தினமும் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள அடியார்கள், முதல் பாடலாக இந்த பாடலையே பாடுவார்கள். பிழை செய்வது மனித இயல்பு. ஆனால் தாம் பிழை செய்ததை உணர்ந்து கொண்டு, அந்த பிழையினை மன்னித்து பெருமான் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டும் செய்கை தான், நமக்கும் பெரியோர்களுக்கும் உள்ள வேறுபாடு. அருளாளர்கள் பல திருமுறை பாடல்களில் தாங்கள் செய்த பிழையினை பெருமான் பொறுக்க வேண்டும் என்று வேண்டுவதை நாம் கீழ்க்கண்ட பாடல்களில் காணலாம்.
குழைத்த பத்து பாடலில், மணிவாசகர் தான் செய்த பிழைகளை பெருமான் பொறுக்காமல் இருத்தல் சிவபெருமானின் தகுதிக்கு அழகோ என்ற கேள்வியை கேட்பதை நாம் உணரலாம். சந்திரன் செய்த பிழையை பொறுத்து அவனுக்கு மறுவாழ்வு அளித்த பெருமானே, எனது பிழையினை நீ பொறுக்காமல் இருப்பது முறையோ என்று கேட்கின்றார். உடையாய் என்ற சொல்லின் மூலம், தான் இறைவனது அடிமை என்பதையும் இறைவன் தனக்குத் தலைவன் என்பதையும் உணர்த்தி, தனது பிழையினை பொறுக்க வேண்டிய கடமை இறைவனுக்கு உள்ளது என்பதையும் அடிகளார் இங்கே குறிப்பிடுவதை நாம் உணரலாம். கல்மனத்தவனாக இருந்த தான், இறைவன் தன்னை பெருந்துறையில் ஆட்கொண்ட பின்னர், தனது மனதினைக் குழைத்துக் கொண்டு இறைவன் பால் அன்பு உடையவனாக தான் மாறினேன் என்று குறிப்பிடும் அடிகளார், அவ்வாறு இறைவனின் அன்பனாக மாறிய தன்னை பண்டை வினைகளின் பிடியிலிருந்து இறைவன் காப்பாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் வைக்கின்றார். தான் தொடர்ந்து இறைவனுக்கு அன்பனாக இருப்பேன் என்று உறுதியாக கூறும் அடிகளார், அந்த உழைப்பினுக்கு பரிசாக தனது வினைகள் களையப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறுகின்றார். தான் இறைஞ்சி இறைவனை அழைத்த பின்னரும், தனது பிழைகளை பொறுக்குமாறு வேண்டிய பின்னரும் அருள் புரியாது இருத்தல் தான் இறைவனின் வழக்கமோ என்ற கேள்வியையும் அடிகளார் எழுப்பி, இறைவனை நோக்கி நீ அவ்வாறு இருக்கலாமா என்று கேட்கும் நயத்தினை நாம் இந்த பாடலில் உணரலாம்.
குழைத்தால் பண்டைக் கொடுவினை நோய் காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தால் உறுதி உண்டோ தான் உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய் முறையோ என்று
அழைத்தால் அருளாது ஒழிவதே அம்மானே உன் அடியேற்கே
ஆடினாய் என்று தொடங்கும் (3.1) பதிகத்தின் முதல் பாடலில் சம்பந்தர் பிறைச் சந்திரனை முடியில் சூடிய பெருமானே, எமது வினைகளை சுருக்கி அழிப்பாயாக என்று கூறுவதற்கு சுவையான விளக்கத்தை திருமுறை மலர்கள் நூலில் கி.வா. ஜா அவர்கள் அளிக்கின்றார். பெருமான் தனது திருமுடியில் சந்திரனை ஏற்றுக் கொண்டதால் சந்திரனின் பாவங்களும் பழியும் மறைந்தது மட்டுமன்றி, சந்திரன் உயர்ந்த இடத்திலும் வைக்கப்பட்டு சிறப்பினை அடைகின்றான் என்று கூறுகின்றார். நெய்யும் பாலும் தயிரும் கொண்டு இறைவன் நீராட்டப்படும் போது, சந்திரனும் தில்லை வாழ் அந்தணர்களால் நீராட்டப்படும் சிறப்பினை பெறுகின்றான் என்று கூறுகின்றார். ஆனால் இத்தகைய சிறப்பினுக்கு தகுதியானவனா என்ற கேள்வியை நகைச்சுவையுடன் எழுப்பி அதற்கான காரணத்தையும் கூறுகின்றார். தனது மனைவியர் அனைவரையும் சமமாக நடத்தாமல் ஒரு மனைவி மீது மட்டும் அதிகமான ஆசை வைத்தவன் என்றும், தலைவனாகிய இறைவனை புறக்கணித்து நடத்தப்படும் வேள்வியில் தனக்கு அளிக்கவிருந்த அவிர்ப்பாகத்தின் மீது ஆசை கொண்டு தக்கன் நடத்திய யாகத்தில் பங்கேற்றவன் என்றும், தனது குருவின் மனைவி என்பதையும் கருதாமல் பிருகஸ்பதியின் மனைவி தாரை மீது மோகம் கொண்டவன் என்றும் சந்திரன் செய்த பல தவறுகளை சுட்டிக் காட்டும் கி.வா.ஜா. அவர்கள், அததகைய சந்திரனுக்கு வாழ்வு அளித்த பெருமானின் கருணையை உணர்த்துகின்றார். பனி கால்=குளிர்ச்ச்சியை வெளிப்படுத்தும்; நயத்தல்=விரும்புதல்;
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங் கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடைப் பனி கால் கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே
நீத்தல் விண்ணப்பத்து பாடல் ஒன்றினில் (ஆறாவது பாடல்) தனது இழிந்த தன்மை கருதி தன்னை நாயாக பாவித்துக் கொண்டு, சிறுநாய்கள் செய்யும் பிழைகளை பொறுப்பது பெரியவர்களின் கடமை அல்லவா என்று பெருமானை நோக்கி அடிகளார் கேள்வி கேட்கின்றார். ஒறுத்து=அடக்கி; பெருமானே அடியேன் உனது திருவருளின் பெருமையை அறியாது இருந்தமையால் உனது அருளினை ஏற்றுக்கொள்ள முன்னர் மறுத்தேன் என்று கூறும் அடிகளார், அருளினை ஏற்றுக் கொள்ள மறுத்தேன் என்று உலகப் பொருட்களின் மீது தான் கொண்டிருந்த பாசத்தை அறவே நீக்கிவிட்டு பற்றுகளை முற்றும் நீக்கிய நிலையை அடைய முயற்சி ஏதும் மேற்கொள்ளாமல் இருந்த நிலையினை குறிப்பிடுகிறார் போலும். பெருமானே, அடியேன் செய்த பிழைக்காக என்னை வெறுத்து, எனக்கு உதவி செய்யாமல் நீர் விட்டு விடலாமா என்று கேட்கின்றார். மேலும் தான் செய்த தவறுகளுக்கு தனது வினைகளே காரணம் என்றும் அந்த வினைகளை அடக்கி இறைவன் தன்னை ஆட்கொள்ளவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அடிகளார் வெளிப்படுத்துகின்றார். பொய் என்ற சொல் இங்கே வஞ்சனை, பிழை என்ற பொருளி வருகின்றது.
மறுத்தனன் யான் உன் அருள் அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டு இடுதி கண்டாய் வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே
பொறுப்பர் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம் பொய்யினையே
அடைக்கலப்பத்து என்ற பதிகத்தின் பாடலில் மணிவாசகர், தீமைகள் செய்யும் தனது பிழைகளின் பொருட்டு தன்னை வெறுத்து ஒதுக்காமல் தனது பிழைகளை பொறுத்து அருள் புரியும் பெருமை மிகுந்த குணத்தை உடையவனே என்று பெருமானை அழைக்கின்றார். தனது பிழைகளை பொறுத்ததும் அன்றி தனது வினைகளையும் முற்றிலும் நீக்கி பிறப்பிறப்புச் சுழலில் தான் மாட்டியுள்ள நிலையினை வேரோடும் அறுத்து எறிந்த்தவன் என்று பெருமானை குறிப்பிட்டு, தான் பெருமானுக்கு அடைக்கலப் பொருளாக உள்ள நிலையினை உணர்த்துகின்றார். செறுப்பவன்=தடுத்து நிறுத்துபவன்;
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால்
பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்கு கங்கைச் சடைச்
செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியை வேர்
அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே
கோத்தும்பீ பதிகத்தின் பாடல் ஒன்றினில் மணிவாசகர் பேயேன் என்று தன்னை குறிப்பிட்டு, தான் செய்த பிழைகளை பொறுக்கும் பெருமையை உடையவன் இறைவன் என்று கூறுகின்றார்.
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனைச்
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ
வேணாட்டடிகள் தனது பதிகத்தில் (ஒன்பதாம் திருமுறை) தனது அடிமை இழிவான செயலைச் செய்தாலும் அதனை பொருட்படுத்தாது விரும்பும் உரிமையாளர் போன்று, தனது தலைவனாகிய பெருமான் அடிமையாகிய தான் செய்த இழிவான செயல்களைப் பொறுத்துக் கொள்கின்றார் என்று கூறுகின்றார். அடிகளார் இந்த செயலுக்கு ஒரு உதாரணத்தை தருகின்றார். கச்சல் வாழைக்காயையும் வேப்பங் கொழுந்தினையும் கறி சமைத்து உண்பது போல் தனது தவறுகளை பொறுத்துக் கொள்ளும் பெருமான் என்று கூறுகின்றார். தனக்கு வேறு எந்த பற்றுக்கோடும் இல்லை என்பதை உணர்ந்த பின்னரும் தனது தொண்டினை பெருமான் விரும்பி ஏற்றுக் கொள்ளாதது ஏன் என்று பெருமானை நோக்கி கேள்வி கேட்கும் பாடல் இது.
துச்சானது செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார்
கைச்சாலும் சிறு கதலி இலை வேம்பும் கறி கொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணி
நச்சாய் காண் திருத்தில்லை நடம் பயிலும் நம்பானே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.99.1) அப்பர் பிரான், தான் ஏதேனும் பிழை செய்தால் தன்னை புளியம் வளாரால் அடித்து தண்டிக்கும் உரிமையை பெருமானுக்கு அளிக்கின்றார். காதுவித்தல்=கொலை செய்ய முயற்சி செய்தல்; பல வருடங்கள் சமணர்களுடன் சேர்ந்து வாழ்ந்த தவற்றுக்கு தண்டனையாக, தனக்கு வந்த சூலை நோயினையும் சமணர்கள் தன்னைக் கொல்வதற்கு முயன்று செய்த பல சூழ்ச்சிகளையும் அப்பர் பிரான் கருதுவது அவரது மனப் பக்குவத்தை உணர்த்துகின்றது. பொதுவாக நமக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், அத்தகைய தீங்குகளுக்கு நமது பண்டைய வினைகள் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளாமல் தீங்கு விளைவிப்பவரை கோபித்துக் கொள்ளும் தன்மையே நம்மில் காணப்படுகின்றது. ஆனால் அப்பர் பிரானோ எவரையும் குற்றம் சாட்டாமல், தனது செயல்களுக்கு இறைவன் அளித்த தண்டனையாக அவற்றை ஏற்றுக் கொள்ளுதல், அவரின் தனிச் சிறப்பான குணம். முனிதல்=கோபித்தல்.
ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரொடே
காதுவித்தாய் கட்ட நோய் பிணி தீர்த்தாய் கலந்து அருளிப்
போதுவித்தாய் நின் பணி பிழைக்கில் புளியம் வளாரால்
மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் பாடலில் ஒன்றினில் (6.31.5) பிறவிப் பெருங்கடலை நாம் தாண்டுவதற்கு நாம் செய்யவேண்டியதை உணர்த்தும் பாடலில், அப்பர் பிரான் நாம் பலவாறும் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும் என்றும் நாம் செய்த பிழைகளை பொறுத்து அருள் புரியாய் என்று இறைவனிடம் வேண்ட வேண்டும் என்றும் கூறுகின்றார். இழைத்த நாள்=ஒருவனுக்கு விதியால் முன்னமே தீர்மானிக்கப்பட்ட வாழ்நாள். அந்த நாள் என்னவென்று நமக்குத் தெரியாது; எனினும் அத்தகைய நாள் ஒன்று உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். அரணம்=பாதுகாப்பு. அடியேன் உன் அரணம் கண்டாய் என்ற தொடரை. இறுதி அடியில் குற்றமில்லை என்ற சொல்லின் முன்னர் சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறும் பாடலாக அமைந்திருப்பினும், உலகத்தவர்க்கு கூறும் அறிவுரையாகவே நாம் இந்த பாடலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இழைத்த நாள் எல்லை கடப்பதென்றால் இரவினோடு நண்பகலும் ஏத்தி வாழ்த்திப்
பிழைத்தது எல்லாம் பொறுத்தருள் செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா
என்றும்
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம் கொண்டஅழகா என்றும்
குழற்சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றமில்லை என் மேல் நான் கூறினேனே
ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.47.7) அப்பர் பிரான் அடியார்கள் செய்யும் பிழைகளை பொறுத்து அருள்வது பெரியோனாகிய இறைவனின் கடன் என்று கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். கழை=மூங்கில்: கழை இறுத்த= மூங்கில்களை உடைத்த பல ஆறுகள் வந்தடைந்த கடல்; உழை=மான்; அழை=அகவுதல் செய்து; உறுவித்து=பலரும் கேட்கச் செய்தல்
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள் தம் பெருமானே இமையோர் ஏறே
கழை இறுத்த கருங்கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்பால் அன்பர்
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் கடன் அன்றே பேரருள் உன் பாலது அன்றே
அழை உறுத்து மாமயில்கள் ஆலும் சோலை ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே
திருவாரூர்ப் பதிகத்தின் ஒரு பாடலில் (4.20.2) அப்பர் பிரான் தான் செய்யும் அனைத்துப் பிழைகளையும் இறைவன் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகின்றார். அடியார்களுக்கு பற்றுக் கோடாக விளங்கும் இறைவன் மீது மிகுந்த காதல் கொண்டு, தான் உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பற்றுகள் நீங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவனது திருவடிகளைச் சென்று அடைந்ததாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். கடம் பட=பஞ்சமுக வாத்தியம் முழங்க;
கடம் பட நடம் ஆடினாய் களைகண் எனக்கு ஒரு காதல் செய்து அடி
ஒடுங்கி வந்தடைந்தேன் ஒழிப்பாய் பிழைப்ப எல்லாம்
முடங்கு இறால் முதுநீர் மலங்கு இளவாளை செங்கயல் சேல்வரால் களிறு
அடைந்த தண்கழனி அணி ஆரூர் அம்மானே
தான் செய்த பிழையினை மட்டும் இறைவன் பொறுப்பதில்லை, பழைய அடியார்கள் செய்யும் பாவத்தையும் பிழையையும் பொறுத்துக் கொள்பவர் இறைவன் என்று கடவூர் மயானத்தின் மீது அருளிய பதிகத்தின் (5.38) முதல் பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். பழைய அடியார்=வாழையடி வாழையாக இறைவனிடத்தில் அன்பு பாராட்டும் அடியார்கள்; உழையர்=மான் கன்றினைக் கையில் உடையவர்: சம்பந்தரும் தனது பதிகத்தில் பெருமான் அடிகள் என்று குறிப்பிடுவதால், பெருமான் அடிகள் என்பது தலத்து இறைவனின் பெயராக பண்டைய நாளில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.
குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாம் கடவூரின் மயானத்தார்
பழைய தம் அடியார் செய்த பாவமும்
பிழையும் தீர்ப்பார் பெருமான் அடிகளே
இதே கருத்தைத் தான் பின்னை என் பிழையைப் பொறுப்பான் என்றும் பிழை எலாம் தவிரப் பணிப்பான் என்றும் சுந்தரர் ஒரு பாடலில் (7.59.1) கூறுகின்றார். இன்ன தன்மையன் என்று வரையறுத்துச் சொல்ல முடியாதவன் சிவபிரான் என்று கூறுவதால் அணுக முடியாதவன் என்று நினைத்து நாம் ஒதுங்கிவிடக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் சிவபிரான் மிகவும் எளிமையாக அடியவர்களுக்கு உள்ளான் என்று கூறும் பாங்கு ரசிக்கத்தக்கது.
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப் பிழை எலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே
உரிமையாக பரமனிடம் பழகும் சுந்தரர் திருவாவடுதுறை மீது அருளிய ஒரு பதிகத்தின் பாடலில் (7.70.6), எனது பிழையினை பொறுத்தால் உனக்கு இழிவு ஏற்படுமா, நீ ஏன் எனது பிழையினை பொறுக்கக் கூடாது என்று உணர்ச்சி பொங்க கேட்பதை நாம் இந்த பாடலில் காணலாம். இந்த பாடலில் சுந்தரர் இறைவனை, குறைவிலா நிறைவு என்றும் குணக்குன்று என்றும் அழைக்கின்றார். தர்மமே வடிவாக விளங்குபவன் என்று சிவபெருமானை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். அறம் என்பதற்கு நீதி என்ற பொருளும் உண்டு. திருவள்ளுவர் அறவாழி அந்தணன் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே நினைவு கொள்ளலாம்.
குறைவிலா நிறைவே குணக் குன்றே கூத்தனே குழைக் காதுடையானே
உறவிலேன் உனையன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே
சிறை வண்டார் பொழில் சூழ்த் திருவாரூர்ச் செம்பொனே திருவாவடுதுறையுள்
அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமர்கள் ஏறே
அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் பதிகத்தின் எட்டாவது பாடலில் (6.95.8) அப்பர் பிரான் பலவாறும் தனக்கு அருள் புரிந்த இறைவனின் கருணைத் திறத்தினை நினைத்து வியக்கின்றார். இத்தனை கருணைச் செயல்களையும் என் பொருட்டு செய்தாயோ, ஐயோ இறைவனே என்று வியப்புடன் கூறுவதை நாம் உணரலாம். தான் செய்த பிழைகள் அத்தனையும் பொறுத்து அருள் புரிந்த இறைவனே என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுவதை நம் உணரலாம். அத்தா=தந்தையே; ஆர்த்தல்=கட்டுதல்; சமண சமயம் சார்ந்து, சிவபெருமானை நினைக்காமல் இருந்த தன்னை, தனது தமக்கையாரின் வேண்டுகோளுக்கு இணங்கி சூலை நோய் கொடுத்து பின்னர் அதனைத் தீர்த்தருளி, அன்பினால் கட்டி, வேறு எங்கும் செல்ல முடியாதபடி பிணைத்த தன்மையை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தீர்த்த நீராட்டி=தூய்மை செய்து. சிவபிரானின் கருணை வெள்ளம், அப்பர் பிரானின் விருப்பத்திற்கு இசைந்து, சூலம், இடபம் முதலிய குறிகளைத் அவரது உடலில் பொறித்து, உடலினைத் தூய்மை செய்தது இங்கே, தீர்த்த நீராட்டி என்று குறிப்பிடப்படுகின்றது. நீரின் குணம் உடலைத் தூய்மை செய்வது போல், சிவபிரானின் கருணை வெள்ளம் தன்னை, தூய்மை செய்ததை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். ஏன்று கொண்டாய்=ஏற்றுக் கொண்டாய்; பரமோ=பொருட்டோ.
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே
கயிலாய மலையினில் அணுக்கத் தொண்டராக இருந்த போது தான் செய்த ஒரு பிழைக்காக தன்னை வெறுத்து தண்டனை அளித்த பெருமான், நம்பி ஆரூரனாக தான் செய்த அனைத்துப் பிழைகளையும் பொறுத்துக் கொண்டார் என்று சுந்தரர் கழிப்பாலை தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தில் (7.23.3) குறிப்பிடுகின்றார்.
ஒறுத்தாய் நின் அருளில் அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும் நாயேனைப் பொருட்படுத்தி
செறுத்தாய் வேலை விடம் மறியாமல் உண்டு கண்டம்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே
நாம் செய்யும் பிழைகளை பொறுக்கும் பண்பினைன் இறைவன் என்பதால், நமது பிழைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று நாம் விரும்பினால் அதற்குரிய வழி நாம் பெருமானை வழிபடுவது தான் என்று கழுக்குன்றத்துப் பதிகத்து பாடலில் (7.89.9) சுந்தரர் கூறுகின்றார்.
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் தான் உறையும் இடம்
மழைகள் சாலக் கழித்து நீடுயர் வேயவை
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே
சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்டபோது திருவொற்றியூரை விட்டு பிரியேன் என்று சத்தியம் இட்டதை மீறி, திருவாரூர் செல்ல முயன்றதை தான் செய்த பிழை என்பதை உணரும் சுந்தரர், அடியார்கள் செய்யும் பிழைகளை பெருமான் பொறுத்துக் கொண்டு அருள் புரிவார் என்பதால் தனது இந்த பிழையினையும் பெருமான் பொறுத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் துணிந்து செய்ததாகவும், அந்த எண்ணத்தினை மெய்ப்பிக்காமல் இருந்ததால் இறைவனுக்கு பழி ஏற்பட்டது என்றும் வெண்பாக்கம் தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தினில் (7.89.1) சுந்தரர் கூறுகின்றார். உழை=மான்
பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன்பிழைத்தக்கால்
பழி அதனைப் பாராதே படலம் என் கண் மறைப்பித்தாய்
குழை விரவு வடிகாதா கோயில் உளாயோ என்ன
உழை உடையான் உள்ளிருந்து உளோம் போகீர் என்றானே.
பொழிப்புரை:
தேவனே, அடியார்கள் துன்புற நேரிடில் அவர்கள் பால் இரக்கம் கொண்டு, ஆவா என்று சொல்லி அவர்களது துன்பத்தினை நீக்கி அருள் புரிபவனே, பிரளய காலத்தில் கடல் பெருகி எந்த இடத்தினையும் தவிர்க்காமல் அனைத்து இடங்களையும் மூழ்குவிக்கும் சமயத்திலும் அந்த கடல் வெள்ளத்தினும் உயர்ந்து நின்று அழியாமல் இருப்பவனே, சிறியோர்களாகிய நாங்கள் செய்த பிழைகளை நீர் தான் பொறுத்து அருளவேண்டும் என்று வேண்டி நீண்ட வாழ்நாட்கள் கொண்ட முனிவர்கள் வணங்கும் திருக்கோயில் முதுகுன்றம்.
பாடல் 2:
தேவா சிறியோம் (2.064) பாடல் 1 தொடர்ச்சி, 2 (திதே 0106)
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வானை
மந்தி ஏறி இன மா மலர்கள் பல கொண்டு
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே
விளக்கம்:
முதல் பாடலில் முனிவர்கள் முதுகுன்றத்து இறைவனை வழிபடுவதை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் அந்தணர்கள் இறைவனை வழிபடுவதை குறிப்பிடுகின்றார். இரவி=சூரியன்; இரவி முதலா இறைஞ்சுவார் என்ற தொடருக்கு இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. அந்தணர்கள் மூன்று வேளையும் சூரியனை வழிபட்டு அர்க்கியம் கொடுப்பது வழக்கும். சந்தியாவந்தனம் என்று அழைக்கப்படும் இந்த சடங்கினில், சூரியனை இறைவனின் ஒரு அங்கமாக கருதி, சூரியனை வழிபடுவதன் மூலம் இறைவனை வழிபடுவதாக நம்புகின்றனர். காலையில் விழித்ததும் முதலாக செய்யப்படும் இந்த செயலுக்கு பிறகு காலைக் கடன்களை கழித்துவிட்டு, நீராடி சிவபெருமானுக்கு பூஜை செய்வது வழக்கம். இந்த தன்மையை குறிப்பிடும் வண்ணம், சூரியனை முதலாக வழிபடும் கொள்கையினை உடைய அந்தணர்கள் என்று கூறுவது ஒரு வகையான விளக்கம். இரவி முதலா என்ற தொடருக்கு சூரியன் முதலான அனைத்து தேவர்கள் என்று பொருள் கொண்டு, தேவர்கள் அனைவரும் பெருமானை வழிபட்டு இறைஞ்சுகின்றனர் என்று சொல்வது இரண்டாவது விளக்கம். முதுகுன்றத்து திருக்கோயில் வந்து வணங்கும் அடியார்களை குறிப்பிடும் பதிகமாக உள்ளதால், முதலாவது விளக்கம் மிகவும் பொருத்தமாக தோன்றுகின்றது.
குரங்கின் கையில் மலரோ மலர் மாலையோ கிடைத்தால், முதலில் குரங்கு அந்த மலரினையும் மாலையையும் பிய்த்து எரிவதை தான் நாம் காண்கின்றோம். இது இயற்கை. அதனால் தான் குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்ற பழமொழியும் எழுந்தது. ஆனால் சம்பந்தர் கண்ட முதுகுன்றத்து குரங்குகள் சற்று வித்தியாசமானவை. அந்த குரங்குகள் தினமும் அடியார்கள் பூக்களை சுமந்து கொண்டு இறைவனின் திரு முன் சென்றடைந்து இவை, இறைவனின் திருமேனியின் மீது பூக்கள் தூவி வழிபடுவதை கண்ட குரங்குகள். மனிதன் செய்யும் பல செயல்களை உற்று கவனிக்கும் குரங்குகள், தாங்களும் அந்த செயல்களை செய்ய முயற்சி செய்வதை நாம் கண்டிருக்கின்றோம். அத்தகைய இயல்பு கொண்ட குரங்குகள், முதுகுன்றத்து அடியார்கள் மலர்கள் கொண்டு இறைவனை வழிபடும் மனிதர்களைக் கண்டு, தாங்களும் மலர்கள் கொணர்ந்து இறைவனின் திருமேனி மேல் தூவியதை தான் கண்டதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முந்திச் சென்று குரங்குகள் தொழுது வணங்கியதாக சம்பந்தர் கூறுவது, அடியார்கள் செல்வதற்கு முன்னமே தினமும் குரங்குகள் திருக்கோயிலுக்கு சென்றதை உணர்த்துகின்றது போலும். இந்த குறிப்பு நமக்கு குரக்குக்கா தலத்தில் இன்றும் நடைபெறும் நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. சித்திரை வைகாசி மாதங்களில் இன்றும் குரங்குகள் கூட்டம் கூட்டமாக மலர்களுடன் வந்து குரக்குக்கா தலத்து இறைவனை வழிபடுவதை நாம் காணலாம். . .
பொழிப்புரை:
எங்களது தந்தை என்று, தினமும் காலையில் எழுந்ததும் சூரியனை வழிபடும் வழக்கம் கொண்டுள்ள அந்தணர்கள் முதுகுன்றத்து இறைவனை வணங்க, அவர்களது சிந்தையையை திருக்கோயிலாக கொண்டு உறைபவன் முதுகுன்றத்து இறைவன். அடியார்கள் மலர்கள் தூவி வழிபடுவதைக் காணும் குரங்குகள், கூட்டம் கூட்டமாக மரங்களின் மீதேறி, சிறந்த மலர்களை பறித்து வந்து, அடியார்கள் திருக்கோயிலுக்கு வருவதன் முன்னமே கோயில் வந்தடைந்து பெருமானின் திருமேனி மேல் பூக்கள் தூவி வழிபடும் திருக்கோயில் முதுகுன்றம் ஆகும்.
பாடல் 3:
தேவா சிறியோம் (2.064) பாடல்கள் 3, 4, 5 (திதே 0107)
நீடு மலரும் புனலும் கொண்டு நிரந்தரம்
தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானைப்
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே
விளக்கம்:
முனிவர்களும் அந்தணர்களும் வழிபடுவதை முந்தைய இரண்டு பாடல்களில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் எப்போதும் இறைவனின் பண்புகளையும் தன்மைகளையும் அறிந்து கொள்வதற்காக தேடிக் கொண்டிருக்கும் அடியார்களை குறிப்பிடுகின்றார். தேடுதல் என்ற சொல் ஆராய்தல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. நிரந்தரம்=எப்போதும்; நீடு=மிகுதியான; புனல்=நீர்; இரண்டாவது பாடலில் தலத்தின் உள்ள குரங்குகள் எவ்வாறு இறைவனை வழிபடுகின்றன என்று கூறிய சம்பந்தர், இந்த பாடலில் கிளிகள் இறைவனின் திருநாமங்களை சொல்ல பழகிக்கொண்டு அவனை புகழ்கின்றன என்று கூறுகின்றார்.
தேடும் அடியார் என்று கூறுவது, நமக்கு அப்பர் பிரானின் அங்கமாலை பதிகத்து கடைப் பாடலை (4.9.12) நினைவூட்டுகின்றது. பிரமனும், திருமாலும் தேடிக் காணமுடியாத சிவபிரானைத் தனது உள்ளத்தின் உள்ளே இருப்பதைத் தான் கண்டுகொண்டதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். எப்போதும் இறைவனைப் பற்றிய சிந்தைனையில் ஆழ்ந்திருந்த அப்பர் பிரானின் நெஞ்சத்தில் இறைவன் இருந்ததில் வியப்பேதும் இல்லை..
தேடிக் கண்டு கொண்டேன் — திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்
மேற்கண்ட பாடலில் அப்பர் பிரான் கூறுவது போல் மணிவாசகர் கூறும் பாடலொன்று அன்னைப்பத்து பதிகத்தில் காணப்படுகின்றது. சிவபிரானின் மீது தீராத காதல் கொண்ட தலைவியின் எண்ணங்களை, அவளது தோழி, தலைவியின் தாய்க்கு வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல்களைக் கொண்ட பதிகம். அருளாளர்கள், தங்களை இறைவன் மீது காதல் கொண்ட பெண்ணாக உருவகித்துக் கொண்டு, தங்களது எண்ணங்களை, தனது வாய்மொழியாகவோ அல்லது மற்றவர்கள் மூலமாகவோ வெளிப்படுத்துவது, பக்தி இலக்கியங்களின் மரபு. இந்த பாடலில் மாணிக்க வாசகர், திருமாலும் பிரமனும் காணமுடியாத சிவபிரான், தனது நெஞ்சத்தில் இருப்பதகாவும், இது ஒரு அதிசயம் என்றும் கூறுகின்றார். உன்னுதல்=நினைத்தல். உத்தரகோச மங்கை என்ற தலம், இங்கே உத்தர மங்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உன்னற்கு அரிய சீர் உத்தர மங்கையர்
மன்னுவது என் நெஞ்சில் அன்னே என்னும்
மன்னுவது என் நெஞ்சில் மால் அயன் காண்கிலார்
என்ன அதிசயம் அன்னே என்னும்
எந்த ஒரு பொருளையும் அந்த பொருள் இருக்கும் இடத்தில் தேடினால் தான் கிடைக்கும். அடியார்கள் மனதினில் உறையும் இறைவனை அங்கே தேடினால் தானே அவன் அகப்படுவான். அப்பர் பிரான் தான் தேடியது எங்கே என்பதையும், இந்த பாடலில் தேடிக் கண்டு கொண்டேன் என்று குறிப்பிடுகின்றார். காண்டலே கருத்தாய் என்று தொடங்கும் திருவாரூர் பதிகத்தின் (பதிக எண்: 4.20) கடைப் பாடலில் பக்தர்களின் சித்தத்துள் இருக்கும் சிவபிரான் என்று குறிப்பிடுகின்றார்.
நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன்
நாடிக் காணமாட்டாத் தழலாய நம்பானைப்
பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்குத்
தேடிக் கண்டு கொண்டேன் திருவாரூர் அம்மானே
கன்றாப்பூர் (தற்போதைய பெயர் கண்ணாப்பூர்) தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் அனைத்துப் பாடல்களிலும், அப்பர் பிரான் அடியார்களின் நெஞ்சத்தினுள்ளே சிவபிரானைக் காணலாமே என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் ஏழாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் நாம் இறக்கும் தருவாயில் தொண்டையில் கோழை அடைக்கும் என்பதை கூறும் அப்பர் பிரான், இறந்த உடலினை உறவினர் என்ன செய்வார்கள் என்றும் கூறுகின்றார். நடுதறி என்பது கன்றாப்பூர் தலத்தின் இறைவனின் திருநாமம். ஐ=கோழை. மிடறு=குரல்வளை. உடலினை விட்டு உயிர் பிரியும் நாள் வரை காத்திராமல், அதற்கு முன்னரே தலைவனாகிய பெருமானுக்கு அடிமையாக மாறி, அவன் பால் மிகுந்த அன்பு கொண்டு மனம் கசிந்து மயிர்ப்புளகம் அடையும் வண்ணம் உணர்ச்சி பெருக்குடன் பெருமானின் திருவடிகளை தொழும் அடியார்களின் நெஞ்சினுள்ளே இறைவனைக் காணலாம் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினால் கண்ணெழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆளாகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம்
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே
பொழிப்புரை:
அதிகமான மலர்களும் நீரும் கொண்டு சென்று வழிபட்டு, எப்போதும் அவனது பண்புகளையும் தன்மைகளையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் அடியார்களின் சிந்தனையில் திகழும் இறைவன் உறையும் தலம் முதுகுன்றம் ஆகும். இந்த தலத்தில் உள்ள சோலைகள் மேகங்கள் தோயும் வண்ணம் உயர்ந்து காணப்படுகின்றன. அத்தகைய சோலைகளில் உள்ள குயில்கள் பாட, அந்த குயில்களின் அருகே உள்ள கிளிகள், அடியார்கள் சொல்லிக் கேட்ட பெருமானது திருநாமங்களை நினைவு கூர்ந்து, மீண்டும் மீண்டும் சொல்லி பழகிக் கொண்டு இறைவனை வாழ்த்துகின்றன. . ,
பாடல் 4:
தேவா சிறியோம் (2.064) பாடல்கள் 3, 4, 5 (திதே 0107)
தெரிந்த அடியார் சிவனே என்று திசை தோறும்
குருந்தம் மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி
இருந்து நின்று இரவும் பகலும் ஏத்தும் சீர்
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே
விளக்கம்:
தெரிந்த=சிவபெருமான் ஒருவனே வழிபாட்டுக்கு உரியவனாகவும், வீடுபேறு அளிக்கும் வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்த அடியார்கள்; முரிந்து= வளைந்து; முனிவர்கள் அந்தணர்கள் மற்றும் எப்போதும் பெருமானது பண்பினை ஆராயும் அடியார்கள் பெருமானை வழிபடுகின்றார் என்று முந்தைய மூன்று பாடல்களில் உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் அவனது பண்பினை குணங்களை அறிந்த அடியார்கள் பெருமானை வழிபடுவதை குறிப்பிடுகின்றார். பிரமன் திருமால் உட்பட அனைத்து தேவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியவர்களாக இருப்பதால், தாங்கள் அடைய முடியாத வீடுபேற்றினை அவர்களால் எவ்வாறு மற்றவர்களுக்கு அளிக்க இயலும். எனவே பிறப்பிறப்பினைக் கடந்த பெருமான் ஒருவனே வீடுபேற்றினை அளிக்க முடியும் என்பதை உணர்ந்து தெரிந்து கொண்ட அடியார்கள் பெருமானை வழிபடுவது இங்கே குறிப்பிடப் படுகின்றது. அனைத்து திசைகளிலும் நின்றவாறு அடியார்கள் உள்ளனர் என்று குறிப்பிடுவதன் மூலம், மிகவும் அதிகமான அடியார்கள் இந்த தலம் வந்தடைந்து இறைவனை வழிபடுகின்றனர் என்று சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
பெருமான் ஒருவனே வீடுபேற்றினை அளிக்கும் வல்லமை வாய்ந்தவன் என்பதை தெரிந்து கொண்ட அடியார்கள் சிவனே சிவனே அனைத்து திசைகளிலும் நின்றவாறு குருந்த மலரையும் குரவ மலரையும் பெருமானின் திருவடிகளில் தூவி பெருமானை, இரவும் பகலும் புகழ்ந்து அடியார்கள் பாடும் சிறப்பினை உடைய முதுகுன்றத்து உயர்ந்த கோயில். வானில் நிலவும் மேகங்கள் தாழ்ந்து வளைந்து முதுகுன்றத்து கோயில் மீது தோய்கின்றன.
பாடல் 5:
தேவா சிறியோம் (2.064) பாடல்கள் 3, 4, 5 (திதே 0107)
வைத்த நிதியே மணியே என்று வருந்தித் தம்
சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார்
கொத்தார் சந்தும் குரவும் வாரி கொணர்ந்து உந்து
முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே
விளக்கம்:
மணியும் முத்தும் கலந்து ஓடியதால் மணிமுத்தாறு என்று பெயர் வந்தது என்பார்கள். வைத்த நிதி=சேமிப்பாக உள்ள செல்வம்; சேமித்து வைக்கப் படும் பொருள், பின்னாளில் தேவைக்கு உதவுவது போன்று, நாம் செல்வம் ஈட்ட முடியாத காலத்தில் பயன்படுவது போன்று சிவபெருமான் நமக்கு துன்பம் வந்த காலத்தில் இடர்களைக் களைந்து உதவும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு பெருமான் உதவும் நிலை பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது.
இன்றைய சேமிப்பு பின்னாளில் நமக்கு உதவுகின்றது என்பதை புரிந்து கொள்ளும் நாம் நாளைய தேவைகளுக்காக இன்றும் நாம் ஈட்டும் செல்வத்தின் ஒரு பகுதியை சேமித்து வைக்கின்றோம். நாளை நமது வாழ்வினில் நடக்கவிருப்பது என்ன என்பதை நாம் அறிய முடியாது. வரும் நாட்களில் நமது வினைப்பயனால் நாம் பல துன்பங்களை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கும் தருணத்தில், இறைவனின் கருணை நமக்கு தேவையாக இருக்கும் அந்த நேரத்தில், நமது உடலும் மனமும் நம்முடன் ஒத்துழைத்து இறைவனின் திருநாமங்களை சொல்வதற்கோ அல்லது அவனை வழிபடுவதற்கோ வழி வகுக்குமா என்பது நிச்சயமில்லை. எனவே தான் அந்நாளில் நமக்கு உதவும் பொருட்டு இன்றே பெருமானை வழிபாட்டு, அவனது கருணையை பெற்று, சேமிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எனவே பெருமான் இன்று நமக்கு அருள் புரிந்து நமது துன்பங்களை தவிர்ப்பதுடன், வரும் நாட்களில் நமக்கு உறுதுணையாக இருப்பார் என்ற செய்தி, வைத்த நிதி என்ற தொடர் மூலம் மிகவும் அழகாக உணர்த்தப் படுகின்றது.
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச்
சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்று இருக்கின் அல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே
மேலே குறிப்பிடப்பட்ட பாடல் அப்பர் பிரான் கரையேறிய பின்னர் அருளிய பதிகத்தின் (1.94.5) பாடலாகும். சமணர்களின் சூழ்ச்சியால் கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் தள்ளிவிடப் பட்ட அப்பர் பிரான் சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தினை (4.11) ஓதி, கல்லே தெப்பமாக மிதக்க கரை ஏறியதை நாம் அறிவோம். நமச்சிவாய என்ற இறைவனின் திருநாமத்தை ஒவ்வொரு பாடலிலும் உள்ளடக்கிய பதிகம் தனது உயிரினை காத்த தன்மையை நன்கு உணர்ந்த அப்பர் பிரான், பின்னாளில் இறைவன் நமக்கு உதவுவார் என்பதை மனதினில் கொண்டு இன்றே அவனை மனம் ஒன்றி வழிபடவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். சந்திரனின் அடர்ந்த கலைகள் போன்று பல கலைகளையும் கற்ற அந்தணர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூர் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மொய்த்த கதிர் போல்வார் அவர் பாதிரிப்புலியூர் அத்தன் என்பதற்கு, நிறைந்த ஒளியினை உடைய சந்திரனின் கிரணங்கள் போன்று குளிர்ந்த தன்மை கொண்ட (உயிர்கள் பால் கொண்ட கருணையால்) பாதிரிப்புலியூர் தலைவன் சிவபிரான் என்றும் பொருள் கொள்ளலாம்.
உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் நிலையற்றவை. என்றேனும் ஒரு நாள் அழிந்து விடக் கூடியவை. உயிர் பிரியும் போது எடுத்துச் செல்ல முடியாதவை. ஆனால் சிவபிரானை எப்போதும் நினைத்து அந்த நினைவினால் நாம் பெறுகின்ற புண்ணியம் வீடுபேற்றினை பெறுவதற்கு வழி வகுப்பதால், அது தான் அழியாத சேமிப்பாக கருதப் படுகின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
தில்லை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.80.4) இவ்வாறு பின்னாளில் நமக்கு உதவும் பெருமான் என்பதால் வருகின்ற காலத்தை நினைத்து தான் கொண்டிருந்த அச்சத்தினை ஒழித்ததாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். நமது வாழ்வில் தேவையான சமயத்தில் பயன்படக்கூடிய செல்வம் நமச்சிவாய என்னும் சொல் என்பதை தான் உணர்ந்ததால், தனது எதிர்காலம் பற்றிய அச்சம் ஏதும் இல்லாமல் தான் இருப்பதாக கூறும் அப்பர் பிரான் அவ்வாறே நாமும் பயப்படாமல் இருப்பதற்கு நமக்கு அந்த மந்திரத்தை கற்றுக்கொடுப்பதை இங்கே உணரலாம். வைச்ச பொருள்=வயது முதிர்ந்த காலத்திலும் உடல் வலிமை குன்றிய காலத்திலும் பயன்படுவதற்காக சேமிப்பாக நாம் வைத்துள்ள பொருள். அருளாளர்கள் பொதுவாக பயப்படுவது அடுத்த பிறவி ஒன்று எடுக்க நேரிடுமோ என்பது தான். பஞ்சாக்கர திருநாமத்தை தான் உச்சரித்து வந்ததால், தனக்கு அந்த பயம் நீங்கியது என்பதையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பித்தன் என்ற சொல் எதுகை கருதி பிச்சன் என்று மாறியது.
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்றெண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே
திருவாசகம் போற்றித் திருவகவலில் மணிவாசகர், வாழ்வே போற்றி வைப்பே போற்றி என்று, பெருமான் நமது வாழ்வாகவும், சேமிப்பு போன்று நாம் துயருறும்போது இடர்களைக் களைபவனாகவும் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் பாடல் ஒன்றினில் வாழ்முதலே என்றும் வைப்பே என்றும் இறைவனை குறிப்பிடுகின்றார். நமது வாழ்வினுக்கு மூலாதாரமாக இருக்கும் இறைவன், சேமிப்பு போன்று நமது உடலும் மனமும் துன்பத்தினால் நலிவுற்ற நிலையிலும் இடர்களை களைந்து உதவுகின்றான் என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். எய்ப்பு=இளைத்து வருந்தும் நிலை; தருக்கி= செருக்குற்று; வினைத் துணையேன்=வினையினைத் துணையாக கொண்டவன், வினைகளுடன் பிணைந்துள்ளவன், வினைகளைத் தவிர்த்து வேறு துணை இல்லாதவன்;
தனித்துணை நீ நிற்க யான் தருக்கித் தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடைய
மனத் துணையே என் தன் வாழ்முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே
தினைத் துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண் வலையே
தனது ஆற்றலில் செருக்கு கொண்டு கர்வம் மிகுந்து திரியும் எவரையும் தலையால் நடக்கின்றான் என்று கூறுவது உலக வழக்கு. இறைவன் இருக்கும் இடத்தில் வினைகள் அடங்கிச் செயலற்று கிடக்கின்றன. இறைவன் இல்லாத நேரத்தில் அவை தலை விரித்து ஆடுகின்றன. குருந்த மரத்தின் அடியில் இறைவன் முன்னிலையில் இருந்த அடிகளார், இறைவன் தனக்கு ஒப்பற்ற துணையாக இருந்த நிலையில் வினைகள் தம்மை விட்டு நீங்கியதையும், வினைகளின் பிடியிலிருந்து தான் விடுபட்டு இருந்த நிலையினையும் உணர்ந்தார் போலும். இறைவன் தன்னைத் தனியாக விட்டுவிட்டு, தன் கண் முன்னே முன்னர் தோன்றிய சீடர்களுடன் மறைந்த நிலையில், வினைகள் தன்னை மீண்டும் ஆட்கொண்டதாக நினைத்து வருந்துகின்றார். தனது மனதின் துணையாகவும் வாழ்க்கையின் அடித்தளமாகவும் சேமிப்பு போன்று தான் துயருற்று வருந்தி இளைக்கும் தருணங்களில் உதவும் சேமநிதியாகவும் உள்ள இறைவனே என்று அழைத்து இறைஞ்சுகின்றார். அவர் விடுக்கும் விண்ணப்பம் தான் என்னே. தனது உடலினை வலிமையான வலையாக உருவகித்து, அந்த உடலாகிய வலையில் அகப்பட்டுள்ள உயிர் தனது சுதந்திரம் இழந்து ஐந்து பொறிகளின் ஆளுமைக்கு உட்பட்டு அடிமையாக கிடப்பதாகவும் உணர்த்தி, இத்தகைய தன்மையை தினையளவு நேரம் கூட பொறுக்க முடியாமல் உயிர் வருந்துவதாகவும் குறிப்பிட்டு, உயிரினை வினைகளின் பிடியிலிருந்து, ஐந்து பொறிகளின் ஆளுமையிலிருந்து விடுவிக்குமாறு இங்கே வேண்டுகின்றார்.
பொழிப்புரை:
சேமிப்பாக வைக்கப்பட்டுள்ள நிதி போன்று பின்னாளில் அருள் புரிபவனே, ஒளி வீசும் மணி போன்று மிகவும் அரிதானவனே, என்று பெருமானை அழைத்து, தமது பிறவிப்பிணி இன்னும் தீரவில்லையே என்ற வருத்தத்துடன், நைந்த சிந்தையராய் சிவபெருமானை தியானிக்கும் அடியார்களின் மனதினில் உறைபவர் சிவபெருமான். கொத்து கொத்தாக சந்தன மரத்தின் பூக்களையும் குரவ மலர்களையும் வாரிக் கொணர்ந்து கரை சேர்க்கும் மணிமுத்தாறு நதியின் கரையில் அமைந்துள்ள முதுகுன்றமே, மேலே குறிப்பிட்டவாறு அடியார்கள் சிந்தனை செய்யும் பெருமான் உறையும் இடமாகும்.
பாடல் 6:
தேவா சிறியோம் (2.064) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 0108)
வம்பார் கொன்றை வன்னி மத்த மலர் தூவி
நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில்
கம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்
மொய்ம்பார் சோலை வண்டு பாடு முதுகுன்றே
விளக்கம்:
வம்பு=நறுமணம்; மொய்ம்பு=நெருக்கம்;
பொழிப்புரை:
நறுமணம் நிறைந்த கொன்றை வன்னி ஊமத்தை முதலிய மலர்களை தனது திருமேனியின் மீது தூவி, நம்பா என்று தன்னை அழைத்து தொழும் அடியார்களுக்கு தனது அருளினை நல்கும் பெருமானாகிய இறைவன் உறையும் திருக்கோயில் உடைய தலம், கிளைகளை உடைய குரா மரமும் கொகுடி முல்லை கொடிகளும் எங்கும் பரந்து வளர்வதால் நெருக்கமாக உள்ளதும் வண்டுகள் இடைவிடாது பாடுவதும் ஆகிய சோலைகள் உடையதும் ஆகிய முதுகுன்றம் ஆகும்.
பாடல் 7:
பதிகத்தின் ஏழாவது பாடல் சிதைந்தது
பாடல் 8:
தேவா சிறியோம் (2.064) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 0108)
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை
நாசம் செய்த நங்கள் பெருமான் அமர் கோயில்
பூசை செய்து அடியார் நின்று புகழ்ந்து ஏத்த
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே
விளக்கம்:
மூசி=ஒலி, மூசி வண்டு=மலர்களை மொய்க்கும் போது ரீங்காரமிட்டு ஒழி எழுப்பும் வண்டுகள்;
பொழிப்புரை:
நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த இலங்கைக்கு அரசனாகிய இராவணன், மலையின் கீழே அமுக்குண்டு அல்லலுறும் வண்ணம் நாசம் செய்த எங்களது பெருமானாகிய இறைவன் உறையும் திருக்கோயில், பூஜைகள் செய்து பெருமானின் அடியார்கள் அவனது புகழினை போற்ற விளங்குவதும், ரீங்காரமிட்டு ஒலி எழுப்பிய வண்ணம் வண்டுகள் பூக்களை மொய்க்கும் சோலைகள் உடையதும் ஆகிய முதுகுன்றம் தலமாகும்.
பாடல் 9:
தேவா சிறியோம் (2.064) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 0108)
அல்லி மலர் மேல் அயனும் அரவின் அணையானும்
சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதி ஊர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே
விளக்கம்:
கொல்லை=முல்லை நிலம்; முல்லை நிலத்தில் முல்லை பூக்கள் மலர்வது சம்பந்தர்க்கு மலர்கள் சிரிப்பது போன்று தோன்றியது போலும். மலர்கள் சிரிக்கும் காரணத்தை அறிய சம்பந்தர் தலைப்படுகின்றார். வேடர்கள் வணங்கும் எளியவனாக இருக்கும் பெருமானின் பெருமைகளை உணராமல் அவனைத் தொழாமல் நின்ற அயன் மற்றும் திருமாலின் நிலையினை எண்ணி, முல்லை பூக்கள சிரித்தன என்று கற்பனை செய்கின்றார். அல்லி= தாமரை மலர்
பொழிப்புரை:
தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும் பாம்பினைத் தனது படுக்கை மற்றும் தலையணையாகக் கொண்டுள்ள திருமாலும் பெருமானைப் புகழ்ந்து பணிந்து வணங்காமையால், பெருமானின் அடியையும் முடியையும் கண்டறியும் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு தங்களின் முயற்சியில் அவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. எனவே தான், தங்கள் முன்னே நெடிய சோதியாக நின்ற இறைவனைக் கண்டு ஏதும் செய்வதறியாது அவர்கள் இருவரும் திகைத்தனர். ஆனால் முல்லை நிலத்து வேடர்கள் ஒன்று கூடி நின்று தயக்கம் ஏதுமின்றி பெருமானைத் தொழுகின்றனர். பிரமனும் திருமாலும் செய்யாத செயலை, பெருமானைத் தொழுது வணங்கும் செயலினை பணிவுடன் செய்து முடிக்கும் வேடர்களின் தன்மையையும் திருமால் மற்றும் பிரமன் ஆகியோரின் பரிதாப நிலையையும் நினைத்துப் பார்த்து, ஏளனமாக சிரிக்கும் வண்ணம் முல்லை மலைகளின் மலர்ந்த நிலை அமைந்துள்ள தலம் முதுகுன்றமாகும்.
பாடல் 10:
தேவா சிறியோம் (2.064) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 0108)
கருகும் உடலார் கஞ்சி உண்டு கடுவே தின்று
உருகு சிந்தை இல்லார்க்கு அயலான் உறை கோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
முருகின் பணை மேல் இருந்து நடம் செய் முதுகுன்றே
விளக்கம்:
பண்டைய நாளில் பெருமானை வணங்காததால், திருமாலும் பிரமனும் பெருமானின் அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்து நின்ற செய்தியை முந்தைய பாடலில் குறிப்பிட்ட சம்பந்தருக்கு, தான் வாழ்ந்த காலத்தில் இருந்த சமணர்களும் புத்தர்களும் பணியாமல் நின்று, பெருமானை தங்களது சிந்தையில் வைத்துக் கொள்ளும் வாய்ப்பை இழந்த பரிதாப நிலை நினைவுக்கு வந்தது போலும். அந்த நிலையினை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் இந்த பாடலில் குரங்குகள் நடமாடும் தன்மையை குறிப்பிடும் சம்பந்தர், அந்த நடனம் சமணர்களின் நிலை குறித்து ஏளனம் செய்யும் நடனம் என்பதாக குறிப்பிடுகின்றாரோ என்றும் தோன்றுகின்றது. கருகும் உடல்=வெய்யிலில் ஆடையின்றி திரிவதால் கருமை நிறம் கொண்ட உடல்; உருகும்=இரக்கம் கொள்ளும்; முருகு-அகில் மரம்; பணை=கிளை; சம்பந்தர் காலத்தில் காஞ்சிபுரத்தில் அப்பர் பிரானுக்கு சமணர்கள் இழைத்த பல கொடுமைகளும், மதுரை நகரில் சைவ சமயத்தை அவர்கள் ஒடுக்கிய தன்மையும், சமணர்கள் எவ்வாறு சிறிதும் இரக்கமின்றி அடுத்த மதத்தினரை நடத்தினார்கள் என்பதை உணர்த்துகின்றது.
பொழிப்புரை:
வெய்யிலில் உடையின்றி திரிவதால் கரிய உடலினை உடையவர்களும், கஞ்சி உணவு உட்கொள்ளும் போது இடையே கடுக்காய் தின்னும் பழக்கம் உடையவர்களும் மற்ற மதத்தவர் மீது இரக்கம் கொள்ளாமல் இருப்பவர்களும் ஆகிய சமணர்கள், தங்களது மனதினில் இறைவனை சிந்தனை செய்யாமல் இருந்தமையால் அவர்களுக்கு அயலானாக விளங்கிய பெருமான் உறையும் தலமாகிய முதுகுன்றில், சற்று வளைந்த நிலையில் உள்ள மூங்கில்கள் மேலும் சிறிது வளையும் வண்ணம் அருகில் உள்ள அகில் மரத்தின் கிளையில் உள்ள குட்டி குரங்குகள், குதித்து நடமாடுகின்றன.
பாடல் 11:
தேவா சிறியோம் (2.064) பாடல்கள் 6, 7, 8, 9, 10, 11 (திதே 0108)
அறையார் கடல் சூழ் அந்தண் காழிச் சம்பந்தன்
முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்
பிறையார் சடை எம் பெருமான் கழல்கள் பிரியாரே
விளக்கம்:
அறை=ஒலி முழக்கம்; குறையாப் பனுவல்=குறையேதும் இன்றி நிறைந்த தன்மையில் உள்ள பதிகம். அந்தண்=அழகும் குளிர்ச்சியும் உடைய; அகத்தியரும் பிரமனும் இந்த தலத்தில் பெருமானை வழிபட்டதாக தலபுராணம் கூறுவதால். முனிவர் என்ற சொல் அவர்கள் இருவரையும் குறிக்கும் என்று கூறுவார்கள்.
பொழிப்புரை:
அலைகள் வீசுவதால் எப்போதும் ஒலி எழுப்பிய வண்ணம் உள்ள கடலால் சூழப்பட்டு அழகும் குளிர்ச்சியும் உடையதாக விளங்கும் சீர்காழி நகரத்து ஞானசம்பந்தன், முறையாக முனிவர்கள் வணங்கும் முதுகுன்றத்து இறைவனை குறித்து, குறையேதும் இல்லாத தன்மையால் நிறைந்த தன்மை உடைய பதிகத்து பாடல்களை, பலருடன் இணைந்து பாடும் வல்லமை உடைய அடியார்கள் பிறைச்சந்திரனைத் தனது சடையில் சூடிய பெருமானின் திருவடி நிழலிலிருந்து என்றும் பிரியாமல் நின்று பேரின்பம் பெறுவார்கள்.
முடிவுரை:
பெருமானை வந்து வழிபடும் அடியார்களின் தன்மையை சம்பந்தர் உணர்த்துவது, அத்தகைய அடியார்களை பின்பற்றி நாமும் பெருமானை வழிபட்டு பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் என்பதை நாம் உணரவேண்டும். பல திருமுறை பாடல்களில் அடியார்களின் தன்மை உணர்த்தப் படுகின்றது. சில பதிகங்களில் அனைத்துப் பாடல்களில் அடையார்களின் தன்மை உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பதிகங்களில் கூறப்படும் அடியார்களின் தன்மையை நாம் சுருக்கமாக காண்போம்.
கன்றாப்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.61) பாடல்களில் எத்தகைய அடியார்களின் நெஞ்சினில் கன்றாப்பூர் பெருமானை காணலாம் என்று அப்பர் பிரான் பட்டியல் இடுகின்றார். பெருமானைப் பலவாறு புகழ்ந்து பெருமான் பால் உண்மையான அன்பு கொண்டு மூன்று வேளைகளிலும் நீரும் மலரும் கொண்டு வழிபடும் அடியார்கள் என்றும், நறுமணம் மிகுந்த மலர்களை பெருமானது திருமேனியில் தூவி வழிபடும் அடியார்கள் என்றும், பெருமானின் அடியார்களையும் பெருமான் என்று கருதி வழிபடும் அடியார்கள் என்றும், பெருமானின் அடியார்களை சிறப்பித்து வழிபட தம்மிடம் போதுமான செல்வம் இல்லையே என்று வருந்தி ஒதுங்காமல் எப்பாடு பட்டாவது அடியார்களின் தேவைகளை நிறைவேற்றும் அடியார்கள் என்றும், புலன்களை அடக்கி பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் பற்றாக கருதாமல் பெருமானை மட்டும் வழிபடும் அடியார்கள் என்றும், மனம் கசிந்து திருவைந்தெழுத்தினை சொல்லி வணங்கும் அடியார்கள் என்றும், மெய்யரும்பி விதிர்விதிர்த்து அகம் குழைந்து பெருமானின் திருப்பாதங்களைத் தொழும் அடியார்கள் என்றும், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று பெருமானுடன் இணைந்திருப்பதே தங்களது நோக்கம் என்று கருதி பெருமானை வழிபடும் அடியார்கள் என்றும், பெருமானின் பல வீரச் செயல்களையும் பல கருணைச் செயல்களையும் நினைத்து உள்ளம் நைந்து தொழும் அடியார்கள் என்றும் அடியார்களின் தன்மைகளை அப்பர் பிரான் இந்த பதிகத்து பாடல்களில் கூறுகின்றார்.
இடர் களையும் பதிகத்தினில் (1.52) சம்பந்தர், கொள்கையினால் உயர்ந்த அடியார்கள் என்றும், பெருமானின் சிறப்பினை விளக்கும் பாடல்களை தங்களது மனதினில் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இரவும் பகலும் அவனது நினைவாகவே இருக்கும் அடியார்கள் என்றும், பெருமானை வழிபடும் பொருட்டு பூவினையும் நீரினையும் சுமந்து செல்லும் அடியார்கள் என்றும், பெருமானது திருவடி நிழலில் நிலையாக நிற்கும் அடியார்கள் என்றும் பெருமானின் திருவடிகளிலிருந்து நீங்காமல் வாழும் அடியார்கள் என்றும், பெருமானின் சிறப்புகளை ஆடியும் பாடியும் உணர்த்தும் அடியார்கள் என்றும், பெருமானின் திருமேனி மீது படர்ந்த திருநீற்றினை சந்தனமாக கருதி மகிழ்ந்து தங்களது உடலினில் பூசிக் கொள்ளும் அடியார்கள் என்றும், பெருமானின் வீரச் செயல்களை குறிப்பிட்டு இரவும் பகலும் நைந்த உள்ளத்துடன் பாடும் அடியார்கள் என்றும், பெருமானின் பொன்னடியின் நிழலில் வாழும் அடியார்கள் என்றும், பெருமான் குறித்த தோத்திரங்களை தங்களது நெஞ்சினில் வைக்கும் அடியார்கள் என்றும் குறிப்பிட்டு, இத்தகைய அடியார்களின் இடர்களை நெடுங்களத்து ஈசன் களையவேண்டும் என்று சம்பந்தர் இறைவனிடம் வேண்டும் பதிகம்.
முதல் பாடலில் மனிதர்களில் உயர்ந்த நிலையில் விளங்கும் முனிவர்களையும், அடுத்த பாடலில் அந்தணர்களையும், மூன்றாவது பாடலில் பெருமானது தன்மையை எப்போதும் ஆராய்ந்தவாறு இருக்கும் அடியார்களையும், நான்காவது பாடலில் மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சியின் விளைவாக பெருமான் ஒருவனே வீடுபேறு அளிக்கும் வல்லமை பெற்றவன் என்பதை அறிந்து கொண்ட அடியார்களையும், வரவிருக்கும் நாட்களில் ஏற்படும் துயரினை நீக்கும் சேமிப்பு நிதி போன்றவனே என்று வணங்கும் அடியார்களையும், நம்பனே என்று பெருமானையே பற்றுக்கோடாக நினைக்கும் அடியார்களையும், இடைவிடாது என்றும் பூஜை செய்யும் அடியார்களையும், முல்லை நிலத்து வேடர்களையும், இந்த பதிகத்தில் குறிப்பிடும் ஞானசம்பந்தர், அவர்கள் எவ்வாறு இறைவனை வணங்கினார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பல விதமான அடியார்கள் வணங்கிப் புகழும் முதுகுன்றத்து முதியோனை நாமும் வழிபட்டு வணங்கி பயன் அடைவோமாக.