பதிக எண்: 2.40 திரு பிரமபுரம் சீகாமரம்
பின்னணி:
இந்த பதிகம் எந்த சூழ்நிலையில் பாடப்பட்டது என்று அறிந்து கொள்வதற்கு நேரிடையான குறிப்புகள் பெரிய புராணத்தில் எங்கும் காணப்படவில்லை. சிவக்கவிமணி திரு சி.கே. சுப்ரமணியம் அவர்கள் தனது பெரியபுராண விளக்கம் என்ற நூலில், தூய ஆணியாம் திருப்பதிகம் என்று குறிப்பிடும் பதிகம் இந்த பதிகமாக இருக்கலாம் என்று கூறுவதால், நாமும் தூய ஆணியாம் பதிக வரிசையில் இந்த பதிகத்தை சிந்திக்கலாம். அனைத்து உயிர்களுக்கும் பெருமான் தலைவனாக உள்ள தன்மையும், தன்னைச் சரணடைந்த உயிர்களுக்கு பெருமான் இன்பங்கள் அளிக்கும் தன்மையும், உயிர்கள் பிறந்த இடம் மற்றும் அவைகளின் தன்மை கருதி எந்த பேதமும் பார்க்காமல் அனைத்து உயிர்களுக்கும் அருள் புரியும் கருணையாளன் என்ற தன்மையும் விளக்கப்பட்டு, பெருமானை வணங்கிப் பயன் பெறுமாறு உயிர்களுக்கு அறிவுரை கூறும் பதிகம் என்பதால், சிறப்புடைய பதிகமாக இதனைக் கருதி ஆணியாம் திருப்பதிகம் என்று சிவகவிமணியார் கருதினார் போலும்.
இந்த பதிகத்தின் முதல் பாடல், பெருமான் எவ்வாறு அனைவர்க்கும் இனியவனாக விளங்குகின்றான் என்பதை உணர்த்துகின்றது. பதிகத்தின் கடைப் பாடலிலும் ஞானசம்பந்தர் தன்னைச் சரணடைந்த அடியார்களுக்கு இன்பங்கள் தருபவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பதிகத்தின் பல பாடல்களில் பெருமானைப் பணியும் அடியார்கள் பெறவிருக்கும் நன்மைகளையும் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தினை ஓதும் அடியார்கள் பொன்டைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே என்று ஞானசம்பந்தர் பதிகத்தின் கடைப்பாடலில் குறிப்பிடுகின்றார். பொன் என்பது பொருளையும் போகம் என்பது பொருளால் துய்க்கப்படும் இன்பத்தையும் குறிப்பிடுகின்றது. புண்ணியம் என்பது அறத்தை உணர்த்துகின்றது. அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றும் குறிப்பிடப் பட்டமையால், அந்த வரிசையைச் சார்ந்த வீட்டினையும் குறிப்பதாக பொருள் கொள்ள வேண்டும். அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கினையும், பதிகம் ஓதுபவர்கள் அடையலாம் என்று சம்பந்தரே கூறுவதால், இந்த பதிகத்தினை மற்ற பதிகங்களின் தரத்தினை அறிவதற்கு அளவுகோல் போன்று உயர்ந்த பதிகம் என்று கருதுவது பொருத்தமாக உள்ளது. வேறு எந்த பதிகத்திலும் பதிகத்தினை ஓதுவோர் அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பேற்றினையும் அடையலாம் என்று கூறப்படவில்லை.
பாடல் 1:
எம்பிரான் எனக்கு அமுதம் ஆவானும் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானும் தழல் ஏந்து கையானும்
கம்பமா கரி உரித்த காபாலி கறைக் கண்டன்
வம்புலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே
விளக்கம்:
பிரான் என்ற சொல்லுக்கு பிரியமானவன் என்று பொருள் கொண்டு, அனைத்து உயிர்கட்கும் இனியவனாக விளங்கும் தலைவன் என்று பொருள் கொள்ளலாம். தம்=தாம், ஆன்மாக்கள்; அமுதம்=மிகவும் உயர்ந்த பொருள்; அமுதத்தினை மிகவும் உயர்ந்த பொருளாக கருதி தேவர்களும் அசுரர்களும் தமக்குள் சண்டையிட்டமையால், மிகவும் உயர்ந்த பொருளை அமுதம் என்று குறிப்பிடுவார்கள். கம்பம்=அசைதல்; பெருமானை அனைத்து உயிர்களுக்கும் இனியவன் என்று குறிப்பிடும் சம்பந்தர், பெருமானை, காபாலி என்று குறிப்பிட்டு, பெருமான் பலி ஏற்கும் காரணத்தை மறைமுகமாக உணர்த்தி, பெருமான் எவ்வாறு உயிர்களுக்கு இனியவனாக உள்ளான் என்பதை உணர்த்துகின்றார். தழலைத் தனது கையில் ஏந்திய தன்மை, வினைகளை சுட்டெரிக்கும் பெருமானின் ஆற்றலை உணர்த்துகின்றது. கறைக் கண்டனாகத் திகழும் தன்மை பெருமான் ஆலகால விடத்தினை உட்கொண்டு, தேவர்களையும் அசுரர்களையும் அழியாமல் காத்த செய்தியை உணர்த்துகின்றது. பண்டைய நாளில் விடத்தினை உட்கொண்டு உயிர்களை காத்த செயலும் இந்நாளில் உயிர்களை உய்விக்கும் நோக்கத்துடன் பலியேற்கும் செய்கையும், எப்போதும் தீப்பிழம்பை கையில் ஏந்தி வினைகளைச் சுட்டெரித்து அருளும் தன்மையும் குறிப்பிடப்பட்டு, நேற்றும் இன்றும் என்றும் பெருமான் உயிர்களுக்கு இனியவனாக பெருமான் இருக்கும் தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. வம்பு=நறுமணம்; உலாம்=உலாவும்; வானவன்=உயர்ந்தவன்;
பொழிப்புரை:
எனக்கு தலைவனாக இருப்பவனும், எனக்கு அமுதம் போன்று மிகவும் உயர்ந்த பொருளாக இருப்பவனும் ஆகிய இறைவன், தன்னைச் சரணடையும் அனைத்து உயிர்களுக்கும் இனிய தலைவனாக விளங்குகின்றான். தீப்பிழம்பைத் தனது கையில் ஏந்திய பெருமான், அசையும் இயல்பினை உடைய பெரிய மதயானை தன்னை எதிர்த்து வந்த போது அதனை அடக்கி அதன் தோலினை உரித்துத் தனது உடல் மீது போர்வையாக போர்த்துக் கொண்டவன் ஆவான். அவன் தனது கையினில் கபாலம் ஏந்தியவாறு உலகெங்கும் திரிந்து, பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தங்களது மலங்களை அவனது பிச்சைப் பாத்திரத்தில் பலியாக இட, அதனை ஏற்றுக்கொண்டு அந்த உயிர்களுக்கு முக்திநிலை அளிக்கின்றான். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினைத் தான் உட்கொண்டு தேவர்களையும் அசுரர்களையும் பண்டைய நாளில் காத்த அவன், அனைவரிலும் உயர்ந்தவனாக, நறுமணம் மிகுந்த சோலைகளை உடைய பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறைகின்றான்.
பாடல் 2:
தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய் உலகத்துக்கு
ஆமென்று சரண் புகுந்தார் தமைக் காக்கும் கருணையினான்
ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற
காமன் தன் உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே
விளக்கம்:
பெருமானிடம் ஏன் சரணடைய வேண்டும் என்று சம்பந்தர் இந்த பாடலில் விளக்குகின்றார். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு, மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும், துன்பத்தில் ஆழ்கின்றன. அத்தகைய உயிர்களை, அந்த சுழற்சியிலிருந்து விடுவித்து நிலையான பேரின்பம் தரும் முக்திப் பேற்றினை அருளும் ஆற்றல் சிவபெருமான ஒருவனுக்கே உள்ளது என்பதால் அவனைத் தவிர்த்து வேறு எவரும் பிறவித் துன்பத்திலிருந்து உயிர்களை காக்க முடியாது என்பதை இங்கே சம்பந்தர் உணர்த்துகின்றார். தன்னிடம் சரணடையும் உலகத்தவரை காத்து அருள் புரியும் கருணையாளன் என்பதால், பெருமானிடம் நாம் சரணடைய வேண்டும் என்பதை உணர்த்தும் சம்பந்தர், உயிர்களின் உட்பகையாக விளங்கும் ஆறு குற்றங்களையும், காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் ஆகிய தீய குணங்களையும், நீக்க வல்லவர் பெருமான் என்பதையும் உணர்த்துகின்றார். மன்மதனை எரித்த நிகழ்ச்சியை குறிப்பிடுவதன் மூலம், காமம் முதலான ஆறு குற்றங்களை களையும் வல்லமை வாய்ந்தவர் பெருமான் என்பது உணர்த்தப் படுகின்றது, ஆமென்று=இவர் தாமென்று; மறையோதும் அந்தணர்கள், தொடக்கத்திலும் முடிவிலும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பது வழக்கம். இந்த வழக்கத்தை உணர்த்தும் வண்ணம், ஓமென்று மறை பயில்வார் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். அனைவரிலும் உயர்ந்தவன் என்று பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்திய சம்பந்தர், எதனால் பெருமான் மிகவும் உயர்ந்தவனாக கருதப் படுகின்றான் என்பதை இங்கே உணர்த்துகின்றார். வேறு எவராலும் அழைத்துச் செல்ல முடியாத முக்தி உலகினிக்கு உயிர்களை அழைத்துச் செல்லும் ஆற்றல் உடையவன் அவன் தானே. என்றும்=வாழ்க்கையில் தாழ்வு அடைந்த காலத்திலும்; துன்பங்களால் வருந்தி வாழ்க்கையில் தாழ்வு அடைந்த நிலையில், பலரும் இறைவனை மறப்பதையும், தங்களது நிலைக்கு இறைவனை பழிப்பதையும் நாம் இன்றும் காண்கின்றோம். இறைவனின் தன்மையை நன்கு உணர்ந்த அடியார்கள், வாழ்வினில் தாழ்வுற்ற போதும், சற்றும் மனம் தளராமல் தொடர்ந்து இறைவனைப் போற்றி வணங்குவார்கள் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
உலகத்து உயிர்களுக்கு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து, பிறவிகளால் வரும் துன்பங்களிலிருந்து உயிர்களைக் காக்கும் ஆற்றல் படைத்தவன் சிவபெருமான் ஒருவனே என்ற கொள்கையினை, கடைப்பிடித்து, தாம் தாழ்வுற்ற காலத்திலும் தளர்ச்சி அடையாமல தொடர்ந்து இறவனைப் பணிந்து வணநகும் அடியார்களை காக்கும் கருணையாளனாகிய இறைவன், தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதனைத் தனது நெற்றிக் கண்ணினால் சுட்டெரித்தவன் ஆவான். அத்தகைய இறைவன், ஓம் எனப்படும் பிரணவ மந்திரத்தை வேதம் ஓதும் போது தொடக்கத்திலும் முடிவிலும் சொல்லும் மறையவர்கள் வாழும் பிரமபுரம் தலத்தில் உறைகின்றான். அவனைத் சரணடைந்து உய்வினை அடைவீர்களாக.
பாடல் 3:
நன்னெஞ்சே உன்னை இரந்தேன் நம் பெருமான் திருவடியே
உன்னம் செய்து இரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை எப்போதும்
பன்னம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே
விளக்கம்:
பெருமானைச் சரணடைந்தால் தான் வாழ்வினில் உய்வினை அடையலாம் என்று முந்தைய பாடலில் உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில், சரணடைந்த பின்னர் உயிர்கள் செய்யவேண்டிய செயல்கள் யாது என்பதை உணர்த்துகின்றார். தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று உலகத்தவர்க்கு அறிவுரை கூறும் பாடல். இரத்தல்=இறைஞ்சு வேண்டுதல்; உன்னுதல்=நினைத்தல்; பெருமானை மனதினால் நினைத்து, அவனது புகழினை வாயாரப் பாடி, கண்களால் அவனது திருவுருவத்தினைக் கண்டு வழிபட வேண்டும் என்று மனம் மொழி மெய்களை இறைவனது வழிபாட்டினில் ஈடுபடுத்துவதை நாம் உணரலாம். பரிந்திட=பரிந்து அருள் புரிய;
பொழிப்புரை:
நல்ல நெஞ்சமே, நீ உய்வடைய வேண்டும் என்று விரும்பினால், என்ன செய்யவேண்டும் என்பதை இறைஞ்சி கூறுகின்றேன், தயவு செய்து அதனைக் கேட்டு பின்பற்றுவாயாக. அன்னங்கள் வாழும் பிரமபுரம் தலத்தில் உறைபவனும் தெவிட்டாத அமுதமாக உயிர்களுக்கு இன்பம் தருபவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை எப்போதும் நினைத்தும், அவனது புகழினை மீண்டும் மீண்டும் பாடியும், அவனது திருவுருவத்தை கண்ணாரக் கண்டும், அவனைப் போற்றி வணங்குவாயாக. அவ்வாறு செய்தால், பெருமான் உன் மீது பரிவு கொண்டு அருள் புரிவான்.
பாடல் 4:
சாநாள் இன்றி இம் மனமே சங்கை தனைத் தவிர்ப்பிக்கும்
கோன் நாளும் திருவடிக்கே கொழு மலர் தூ எத்தனையும்
தேன் நாளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீவணனை
நாநாளும் நல் நியமம் செய்து அவன் சீர் நவின்று ஏத்தே
விளக்கம்:
நாம் என்ன செய்தால் பெருமான் நம் மீது பரிவு கொண்டு அருள் புரிவான் என்பதை முந்தைய பாடலில் உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் பெருமானின் பரிவினை நாம் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை கூறுகின்றார், சங்கை= சந்தேகம்; நியமம்=விதிமுறைகள்; கொழு=செழுமையான; நவிலுதல்=தொடர்ந்து செய்தல்; ஏத்துதல்=புகழுதல்; நமது வாழ்வினில் இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. பிறந்த அனைவரும் ஒரு நாள் இறப்பது நிச்சயம். இவ்வாறு இருக்கையில் சாநாள் இன்றி இருப்பது பற்றி சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நமக்கு வியப்பினை அளிக்கலாம். பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியுள்ள அடையும் இறப்பு, பிறப்புடன் தொடர்பு கொண்டது. ஆனால் பக்குவம் அடைந்த உயிர்கள் அடையும் இறப்பு, முக்தி நிலைக்கு அந்த உயிர்களை அழைத்துச் செல்வதால், பிறப்புடன் தொடர்பு கொண்டதன்று. மீண்டும் பிறப்பதற்காக இறக்கும் நிலையினையே சாநாள் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். போலும் அத்தகைய சாநாள் இல்லாத வாழ்க்கையினை அளிக்கும் தன்மை படைத்தவன் இறைவன் என்பதை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். தேனாளும்=தேன் நிறைந்த; நாநாளும்=தினந்தோறும், நாள் நாள் என்பது இணைந்து நாநாள் என்று மாறியது. சாநாள் இன்றி என்ற தொடருக்கு, இறக்கும் நாளினைப் பற்றிய கவலை ஏதும் இன்றி என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இறப்பினை நினைத்து நாம் கொள்ளும் அச்சத்தை தவிர்ப்பவன் இறைவன் என்பது இந்த தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
மீண்டும் மீண்டும் பிறப்பினுக்கு அடிகோலும் இறப்பு நமக்கு தவிர்க்கப்படுமா, இல்லையா என்ற ஐயம் ஏதும் கொள்ள வேண்டிய அவசியமின்றி, உயிர்களுக்கு முக்திநிலை அளித்து உய்விக்கும் ஆற்றல் கொண்ட தலைவனின் திருவடிகளில், முடிந்த அளவு செழுமையான மலர்களைத் தூவி வழிபடுவீர்களாக. தேன் ஆட்சி புரிவது போன்று நிறைந்து காணப்படும் மலர்கள் நிறைந்த சோலைகள் உள்ள பிரமபுரம் தலத்தில் உறைபவனும், கொழுந்து விட்டெரியும் தீயின் நிறத்தில் திருமேனி உடையவனும் ஆகிய பெருமானை, நல்ல நியமங்களைக் கடைப் பிடித்து, அவனது புகழினை இடைவிடாது பாடி, தொடர்ந்து வழிபடுவீர்களாக. இத்தகைய வழிபாட்டின் மூலம் அவனது அருளினை நீங்கள் தக்கவைத்துக் கொள்ளலாம்.
பாடல் 5:
கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ் சடையான் விடையேறி
பெண் இதமாம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான்
விண் நுதலாத் தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி
எண்ணுதலாம் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே
விளக்கம்:
கமழ்=நறுமணம் கமழ்கின்ற; இதம்=நன்மை; நுதலுதல்=கருதுதல்; செல்வத்தை இயல்பாக அறிந்தோமே என்ற தொடர் மூலம், வீடுபேறு அழியாத பேரின்பத்தைத் தரும் வல்லமை உடையது என்ற இயல்பினை உடையது என்று அறிந்து கொண்டவர் பெருமானின் அடியார்கள் என்று சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். செல்வம் என்பதற்கு பெருமானை வணங்குவதே சிறந்த செல்வம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நமக்கு ஞானசம்பந்தர் அருளிய தில்லைப் பதிகத்தின் பாடல் (1.80.5) நினைவுக்கு வருகின்றது. பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடுதலே சிறந்த செல்வம் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்.
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே
சேண்=ஆகாயம் வேறு எவரிடமும் இல்லாததும் அழிவிலாததும் ஆகிய முக்தி செல்வத்தை உடைய பெருமானே சிறந்த செல்வனாக கருதப் படுகின்றான். செல்வ வளம் நிறைந்த மாடங்கள் கொண்ட வீடுகள் ஆகாயத்தை அளாவும் வண்ணம் உயர்ந்த நிலையில் இருக்க, வானில் உலவும் அழகிய சந்திரன் அந்த வீட்டு மாடங்களில் தோய்கின்றது. இத்தகைய செல்வவளம் நிறைந்த வீடுகள் கொண்ட தில்லை நகரில் வாழும் மனிதர்கள் ஞானத்தில் சிறந்து விளங்குகின்றனர். இந்த ஞானச் செல்வர்கள், வேறு எவரிடமும் இல்லாததும் அழிவில்லாததும் ஆகிய முக்திச் செல்வத்தை உடைய சிறந்த செல்வனாகிய பெருமானின் திருப்பாதங்களை புகழ்ந்து பாடுவதால் ஏற்படும் ஒப்பிலாத அருள் செல்வத்தை உடையவர்களாக விளங்குகின்றார்கள், என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை..
பிராட்டியைத் தனது உடலில் பெருமான் ஏற்றுக்கொண்டுள்ள தன்மை பிராட்டிக்கு நன்மை பயக்கின்றது என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். சிவபிரானின் தீவிர அடியாராக விளங்கிய பிருங்கி முனிவர், பிராட்டியை வணங்காமல் பெருமானை மற்றும் பணிந்து வணங்கியதைக் கண்ட பிராட்டி, வருத்தம் அடைந்து, இனிவரும் நாட்களில் தன்னை எவரும் புறக்கணிக்கலாகாது என்று விருப்பம் கொண்டார். அந்த விருப்பம் ஈடேறும் வண்ணம் பெருமான், தனது உடலில் தன்னை (பிராட்டியை) ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினார். பெருமானும் பிராட்டி பால் தான் கொண்டிருந்த அன்பினையும் மதிப்பினையும் உலககுக்கு உணர்த்த எண்ணி, பிராட்டியைத் தனது உடலில் ஏற்றுக்கொண்டுள்ள தன்மை, தேவிக்கு இறைவன் செய்த நன்மையாக சம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு அனைவரும் தேவியை வணங்கும் வண்ணம், தனது உடலின் ஒரு பாகத்தில் பெருமான் வைத்துள்ள தன்மை, அப்பர் பிரானால் கழிப்பாலை பதிகத்தில் (4.30) குறிப்பிடப் படுகின்றது. வாமம் என்பதற்கு இடது பாகம் என்று பொருள். இடது பாகத்தில் சக்தியை வைத்தவன் என்ற பொருளும், இறைவனின் இடது பாகத்தில் அமைந்துள்ள சக்தி என்றும் இரண்டு விதமாகவும் பொருள் கொள்வார்கள். எனவே வாமனை வணங்க வைத்தார் என்பதற்கு, தனது இடது பாகத்தில் உள்ள உமையம்மையை, அனைவரும் வணங்கச் செய்பவர் சிவபெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. மேலும் நமச்சிவாய என்ற மந்திரத்தில் உள்ள நகாரம் சிவத்தை உணர்த்துவது போன்று, வகாரம் சக்தியை உணர்த்துவதும் நாம் இங்கே நோக்கத் தக்கது. எனவே வகாரத்தால் உணர்த்தப்படும் சக்தி என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனை சடைமேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார்
ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
வாமனை வணங்க வைத்தார் என்று கூறுவது நமக்கு பிருங்கி முனிவரின் வரலாற்றினை நினைவூட்டுகின்றது. பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து வந்த அவர் அம்மையும் அப்பனும் அருகருகே வீற்றிருந்த போதும், அம்மையை வலம் வந்து வழிபடுவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன், ஒரு வண்டாக மாறி, அவர்களிடையே புகுந்து சிவபெருமானை மட்டும் வலம் வந்து வணங்கினார். சக்தி தான், அனைத்து உயிர்களிலும் சக்தியாக இருந்து, அந்த உயிர்களை இயக்குகின்றாள் என்பதையும் ஏற்றுக் கொள்ள மறுத்த பிருங்கி முனிவருக்கு உண்மை நிலையை உணர்த்த, அம்மை அவரது உடல் சக்தியிழக்குமாறு செய்கின்றாள். அந்த நிலையிலும் அவர் மனம் மாறாதிருப்பதைக் கண்ட அம்மை, அவரது பக்தியை மெச்சினாள். மற்றும் பெருமானிடம் சிவம் வேறு சக்தி வேறல்ல என்பதை அனைவர்க்கும் உணர்த்தும் வண்ணம், பெருமான் தன்னை அவரது உடலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டியதை ஏற்றுக்கொண்டு, பெருமான் மாதொருபாகனாக விளங்கினார். அவ்வாறு விளங்கியதன் மூலம் பிருங்கி முனிவர் உட்பட அனைவரும் அம்மையையும் வணங்குமாறு செய்தார். மாதொரு பாகனின் தோற்றத்தை உணர்த்தும் வண்ணமாக வாமனை வணங்க வைத்தார் என்ற தொடர் விளங்குகின்றது.
பொழிப்புரை:
நெற்றியில் கண் கொண்டுள்ளவனும், திருநீற்றினை உடலெங்கும் பூசியவனும், நறுமணம் மிகுந்த மலர்கள் சூடிக் கொள்வதால் நறுமணம் கமழும் சடையினை உடையவனும், விடையினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ளவனும், பிராட்டிக்கு நன்மை பயக்கும் வண்ணம் அனைவரும் தேவியை வணங்கும் வகையில் தனது உடலின் ஒரு பக்கத்தை பிராட்டிக்கு அளித்தவனும், அழகாக பின்னப்பட்ட சடையினை உடையவனும், எண்ணற்ற திருநாமங்கள் உடையவனும், தேவர்களால் பெருமையாக கருதப்படும் வண்ணம் பிரளய வெள்ளத்திலும் அழியாது மிதந்த சிறப்பினை உடைய பிரமாபுரம் என்ற தலத்தில் உறையும் இறைவனை வணங்கும் புண்ணியத்தை நமது இயல்பாக பெற்றுள்ளோம். இந்த பேறு மிகவும் உயர்ந்த செல்வம் என்பதை நாம் அறிந்து கொண்டோம்.
பாடல் 6:
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கே என்று அருள் புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச் சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும்
சங்கே ஒத்து ஒளிர் மேனி சங்கரன் தன் தன்மைகளே
விளக்கம்:
எந்த இடத்தில் பிறந்தாலும் எந்த விதமாக பிறந்தாலும், இறைவனின் அடியாராக இருந்தால் அவர்கள் இருக்கும் இடம் சென்று அவர்களுக்கு அருள் புரியும் கருணை உள்ளம் கொண்டவன் இறைவன் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். அதனால் தான் அருளாளர்கள் தாங்கள் எந்த பிறவி எடுத்தாலும் இறைவன் பற்றிய நினைவு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். நமக்கு அப்பர் பிரானின் பாதிரிப்புலியூர் பதிகத்து பாடல் (4.94.8) நமது நினைவுக்கு வருகின்றது. அடுத்த பிறவி நமக்கு என்ன பிறவியாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது என்பதால் புழுவாய்ப் பிறக்கினும் என்று கூறுகின்றார். எந்த பிறவியாக இருந்தாலும் இறைவனின் நினைவு இருக்க வேண்டும் என்பதே அப்பர் பிரானின் அவா.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தர வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனல் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீ வண்ணனே
காரைக்கால் அம்மையார் கயிலாயம் சென்று சிவபிரானைக் காண்கின்றார். அப்போது சிவபெருமான் வேண்டும் வரம் யாது என்று அம்மையாரை கேட்கின்றான். அதற்கு அம்மையார் பிறவாமை என்ற வரத்தை முதலில் கேட்கின்றார். ஒருக்கால் பிறவி என்று ஒன்று நேர்ந்துவிட்டால், அந்தப் பிறவியிலும் சிவபிரானை மறவாமல் இருக்க வேண்டும் என்ற வரத்தையே நாடுகின்றார். இந்தச் செய்தியை கூறும் பெரியபுராணப் பாடலை நாம் இங்கே காணலாம்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்
புழுவாகப் பிறந்தாலும் உனது திருவடிகளின் நினைவு எனது மனத்தினில் வழுவாது இருக்கவேண்டும் என்ற அப்பர் பிரானின் வேண்டுகோள் நமக்கு பொன்வண்ணத் திருவந்தாதியில் சேரமான் பெருமாள் நாயனார் விடுக்கும் வேண்டுகோளை நினைவூட்டும்.
பொய்யா நரகம் புகினும் துறக்கம் புகினும் புக்கிங்கு
உய்யா உடம்பினோடு ஊர்வ நடப்ப பறப்ப என்று
நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறை சேர்
மையார் மிடற்றான் அடி மறவா வரம் வேண்டுவனே
பொய்யா நரகம்=பாவம் செய்தவர்களுக்கு தப்பாமல் கிடைக்கும் நரகம். துறக்கம்=சொர்க்கம்; உய்யா உடம்பு=உய்யப் பெறாமல் அதாவது முக்தி அடையாமல் மீண்டும் பிறவி எடுப்பதால் நமது உயிருடன் பொருத்தப்படும் உடம்பு. நையா விளிதல்=வருத்தமுற்று இறத்தல். நிலத்தினில் ஊர்ந்து செல்லும் புழுவாகப் பிறந்தாலும், நடந்து செல்லும் விலங்காகவோ அல்லது மனிதனாகப் பிறந்தாலும், பறந்து செல்லும் பறவையாகப் பிறந்தாலும், எந்த பிறவியாக இருந்தாலும் இறைவனின் திருவடியை மறவாமல் இருக்கும் வரம் வேண்டும் என்று இந்த பாடலில் சேரமான் பெருமாள் நாயனார் கூறுகின்றார்.
எந்த மொழியாக இருந்தாலும் அருளாளர்கள் வேண்டுவது ஒன்றுபோல் இருப்பதை நாம் காணலாம். ஆதி சங்கரரும் தனது சிவானந்த லஹரீயின் பத்தாவது பாடலில், தான் தனது அடுத்த பிறவியில் மனிதனாக இருந்தாலும், தேவனாக இருந்தாலும், காட்டு மிருகமாக இருந்தாலும், கொசுவாக இருந்தாலும், பசுவாக இருந்தாலும், புழுவாக இருந்தாலும், பறவையாக இருந்தாலும், இறைவன் மீது பக்தி இருக்குமாகில் அந்த உடலுக்கு எந்த விதத்திலும் குறை இல்லை என்று பாடுகிறார்.
நரத்வம் தேவத்வம் நக வன ம்ருகத்வம் மசகதா
பசுத்வம் கீடத்வம் பவது விஹகத்வாதி ஜனனம்
சதா த்வத் பாதாப்ஜ ஸ்மரண பரமானந்த லஹரீ
விஹாரா சக்தஞ் சேத் த்ருதயமிஹ கிம் தேன வபுஷா
மணிவாசகப் பெருமானும் திருச்சதகம் ஆனந்தத்து அழுந்தல் பதிகத்தில் தான் எத்தனை பிறவி எடுத்தாலும் அந்தப் பிறவிகளில் சிவபிரானை மறவாது வணங்க அவனது அருள் வேண்டும் என்று வேண்டுகின்றார்.
வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்ம்மை தீர்த்து மெய்ம்மையே
ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ
பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே
தனது அடியார்களுக்கு அருள் புரிவதற்காக எருதின் மீதேறிச் செல்பவன் பெருமான் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பெரிய புராணத்தில் உமையன்னையுடன் எருதின் மீது அமர்ந்தவனாக பெருமான் பல அடியார்களுக்கு காட்சி கொடுத்தமை உணர்த்தப் படுகின்றது. தனது அடியார்கள் எந்த தன்மையில் பிறந்திருந்தாலும் அருள் புரிபவன் பெருமான் என்று சம்பந்தர் கூறுவதை நாம் திருவிளையாடல் புராணம் மற்றும் உள்ள புராணங்களில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் உணரலாம். எலி, யானை, மான், சிலந்தி, பன்றி, குரங்கு, உடும்பு முதலான பல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அருள் புரிந்த தன்மை பல புராணங்களில் கூறப் பட்டுள்ளன. சங்கே ஒத்து ஒளிர்மேனி=சங்கு போன்று வெண்மை நிறத்தில் ஒளிரும் திருமேனி; உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டுள்ளமையால் பெருமானின் திருமேனியின் நிறம் வெண்மையாக உள்ளது. சங்கரன் என்ற சொல்லுக்கு இன்பம் தருபவன் என்று பொருள். இறைவன் அருள் புரிவதால் அடியார்கள் இன்பம் அடைகின்றார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம், சங்கரன் என்ற பெயர் இங்கே நயமாக கையாளப் பட்டுள்ளது. கொங்கு= நறுமணம்;
பொழிப்புரை:
தனது அடியார் எந்த பிறவி எடுத்திருந்தாலும், எந்த இடத்தில் பிறந்தாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு எருதின் மீது அமர்ந்தவாறு சென்று அருள் புரிபவன் சிவபெருமான். இவ்வாறு அடியார்கள் இன்பமுறும் வண்ணம் அருள் புரிவது சங்கரன் என்று அழைக்கப் படும் பெருமானின் தன்மையாகும். இத்தகைய தன்மையை உடைய பெருமான், உடலெங்கும் திருநீறு பூசப்பட்டதால் சங்கினைப் போன்று வெண்மை நிறத்தில் திருமேனியை உடையவனாக, நறுமணம் மிகுந்த சோலைகள் உடையதும் குளிர்ந்து காணப்படுவதும் ஆகிய பிரமபுரம் என்று அழைக்கப்படும் தலத்தில் உறைகின்றான்.
பாடல் 7:
சிலையது வெம் சிலையாகத் திரிபுரம் மூன்று எரி செய்த
இலை நுனை வேல் தடக்கையன் ஏந்திழையாள் ஒரு கூறன்
அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால்
நிலையுடைய பெரும் செல்வம் நீடுலகில் பெறலாமே
விளக்கம்:
சிலை=மேருமலை; வெஞ்சிலை=அனல் கக்கும் அம்பினை விடுக்கும் வில்; நிலையுடைய பெரும் செல்வம்=என்றும் அழியாத பேரின்பத்தை அளிக்கும் வீடுபேறு; ஏந்திழை=அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்மணி, இங்கே உமையன்னை;
பொழிப்புரை:
மேரு மலையினை வளைத்து, அனல் கக்கும் கொடிய அம்பினை விடுக்கும் வில்லாக மாற்றி, பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் எரித்தவனும், இலையின் நுனி போன்று கூர்மையான முனையை உடைய மூவிலைச் சூலத்தை ஏந்திய அகன்ற கையினை உடையவனும், அழகிய நகைகளை அணிந்த உமையனையைத் தனது உடலில் ஒரு பகுதியில் ஏற்றவனும், அலைவீசும் கடலால் சூழப்பட்ட பிரமபுரம் தலத்தில் கிடைத்தற்கு அரிய மணி போன்று பொலிந்து விளங்குபவனும் ஆகிய பெருமானின் திருவடிகளைப் பணிந்தால், என்றும் அழியாத பேரின்பத்தை அளிக்கும் வீடுபேறு செல்வத்தை, வானுலகத்தினை விடவும் உயர்ந்த செல்வத்தை பெறலாம்.
பாடல் 8:
எரித்த மயிர் வாளரக்கன் வெற்பு எடுக்கத் தோளோடு தாள்
நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான்
உரித்த வரித் தோலுடையான் உறை பிரமபுரம் தன்னைத்
தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே
விளக்கம்:
தக்கார்=உயர்ந்த பண்புகளை உடையவர்; பெருமானின் திருவடிகளைச் சென்று சேர்த்தல் தக்காரின் இலக்கணம் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. எரித்த மயிர்=எரித்தது போன்று கருமையான முடி;
பொழிப்புரை:
நெருப்பினில் எரிந்தது போன்று கருமையான முடியினை உடையவனும், வாள் ஏந்திய அரக்கனாகிய இராவணன், தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்று கருதி கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, அவனது தோள்களையும் கால்களையும் தனது கால்விரலை கயிலை மலை மீது அழுத்தி, நெரித்தவர் சிவபெருமான்; பின்னர் தனது தவறினை உணர்ந்த அரக்கன் சாமகானம் இசைத்து இறைஞ்ச, அவனுக்கு பல வகையிலும் அருள் புரிந்தவரும் பெருமான் தான். திருநீறு அணிந்த மேனியராய் காணப்படும் சிவமூர்த்தி நீறணிந்த மேனியராய் விளங்கும் பெருமான், தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலினை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவர் ஆவார். அத்தகைய பெருமான் உறைகின்ற பிரமபுரம் தலத்தினை தங்களது மனதினில் எப்போதும் நிலை நிறுத்தும் அடியார்கள், சிறந்த பண்புகளை உடைய தக்காராக விளங்குவார்கள்.
பாடல் 9:
கரியானும் நான்முகனும் காணாமைக் கனல் உருவாய்
அரியானாம் பரமேட்டி அரவம் சேர் அகலத்தான்
தெரியாதான் இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர
உரியார் தாம் ஏழுலகும் உடன் ஆள உரியாரே
விளக்கம்:
அகலத்தான்=அகன்ற மார்பினை உடையவன்; பரமேட்டி=தனக்கு மேலான நிலையில் எவரும் இல்லாதவன்;
பொழிப்புரை:
கரிய மேனியை உடைய திருமாலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் காண முடியாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்றவனும், தனக்கு மேலாக வேறொருவர் இல்லாதவனும், பாம்புகள் அழகு செய்யும் அகன்ற மார்பினை உடையவனும், சொற்களையும் எண்ணங்களையும் கடந்து, அவற்றால் அரிய முடியாத வண்ணம் இருப்பவனும் ஆகிய பெருமான் உறையும் பிரமபுரம் தலத்தினைத் சென்றடைந்து பெருமானைப் பணிந்து வணங்கும் அடியார்கள், ஏழு உலகங்களையும் ஆட்சி புரியும் உரிமையை உடையவர்கள் ஆவார்கள்.
பாடல் 10:
உடையிலார் சீவரத்தார் தன் பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்தலைக் கை மூர்த்தியாம் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழில் பிரமபுரத்து உறையும்
சடையிலார் வெண்பிறையான் தாள் பணிவார் தக்காரே
விளக்கம்:
ஆர்=பொருந்திய; முதல் அடியினில் உள்ள சொல்லினை உடை இலார் என்றும் மற்ற அடிகளில் உள்ள சொற்களை முடையில் ஆர், பெடையில் ஆர், சடையில் ஆர் என்றும் பிரித்து பொருள் கொள்ளவேண்டும். முடை=நாற்றம்; பெடை=பெண் வண்டு;
பொழிப்புரை:
உடைகள் ஏதும் இல்லாத சமணர்களும், சீவர ஆடையினை அணிந்த புத்தர்களும் அரிய முடியாத பெருமையை உடைய சிவபெருமான், முடை நாற்றம் வீசும் பிரம கபாலத்தைத் தனது கையினில் ஏந்தியவனாக உள்ளான்; மூர்த்தி என்று அனைவராலும் கொண்டாடப்படும் திருவுருவத்தை உடைய பெருமான், பெண் வண்டுகளுடன் கூடி ஆண் வண்டுகள் விளையாடும் சோலைகள் நிறைந்த பிரமபுரம் தலத்தினில் உறைகின்றான். தனது சடையினில் வெண்மை நிறத்துப் பிறைச் சந்திரனைப் பொருத்தியுள்ள பெருமானின் திருவடிகளை வணங்கும் அடியார்கள் சிறந்த பண்புகளை உடையவர்களாய், புகழுக்கு தகுந்தவர்களாக இருப்பார்கள்.
பாடல் 11:
தன்னடைந்தார்க்கு இன்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை
முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார்
பொன் அடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே
விளக்கம்:
தத்துவன்=மேலானவன்; கன்னடைந்த=கல்+அடைந்த; உலகத்து உயிர்கள் அனைத்தையும் காப்பவன் பெருமான் என்பதனை உணர்த்தும் வண்ணம் காவலன் என்று பெருமானை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். முன்னடைந்தான்=மிகவும் இளைய வயதில் பெருமானின் அருளினைப் பெற்ற;
பொழிப்புரை:
தனது திருவடிகளைச் சரணடைந்த அடியார்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பங்கள் தருபவனும், அனைவர்க்கும் மேலானவனும், கல்லால் கட்டப்பட வலிமையான மதில்கள் உடைய பிரமபுரம் தலத்தில் உறைபவனும், உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் காப்பவனும் ஆகிய பெருமானை, மிகவும் இளைய வயதினில் அவனது அருளினைப் பெற்ற ஞானசம்பந்தன் பாடிய பத்து பாடல்களையும் ஓதும் திறமை வாய்ந்த அடியார்கள், பொன்னையும், பொன்னை அனுபவிக்கும் போகத்தையும் அடைவதுடன், மறுமையில் நிலையான் இன்பத்தை நல்கும் வீடுபேற்றினை அடையும் தகுதி பெற்ற புன்னியர்களாகவும் விளங்குவார்கள்.
முடிவுரை:
காபாலியாகவும், பலியேற்பவனாகவும், தழலேந்திய கையனாகவும், அன்றும் இன்றும் என்றும் தனது அடியார்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் இன்பம் தருபவனாக இறைவன் உள்ள தன்மையை பதிகத்தின் முதல் பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார். இரண்டாவது பாடலில் உலகத்தவர்க்கு அடைக்கலம் தரும் ஆற்றல் உடையவன் சிவபெருமான் ஒருவன் தான் என்ற உணர்வுடன் அவனது திருப்பாதங்களில் சரணடையும் அடியார்களை காக்கும் கருணையாளன் என்று கூறுகின்றார். சரணடைய வேண்டிய அவசியத்தை இரண்டாவது பாடலில் உணர்த்திய சம்பந்தர், மூன்றாவது பாடலில் மனம் மெய் மொழிகளால் இறைவனை வழிபடும் முறையை விளக்குகின்றார். நான்காவது பாடலில், நியமத்துடன் முறையாக இறைவனை வழிபடவேண்டும் என்று உணர்த்துகின்றார். ஐந்தாவது பாடலில், பெருமானை வணங்கி வழிபடும் குணத்தினை விடவும் உயர்ந்த செல்வம் வேறொன்றும் இல்லை என்று கூறுகின்றார். தனது அடியார்கள் எந்த இடத்தில் எந்த பிறவி எடுத்திருந்தாலும் அவர்களுக்கு அருள் புரிபவன் என்று ஆறாவது பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார். பெருமானின் திருவடிகளைப் பணிந்தால், நிலையான செல்வமாகிய வீடுபேற்றினை பெறலாம் என்பது ஏழாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. எட்டாவது மற்றும் பத்தாவது பாடல்களில், பிரமபுரத்து பெருமானை எப்போதும் தங்களது மனதினில் தரித்த அடியார்கள் உயர்ந்த பண்புகளை உடையவர்களாக விளங்குவார்கள் என்று கூறுகின்றார். ஒன்பதாவது பாடலில் பிரமபுரத்து பெருமானை வழிபடும் அடியார்கள் ஏழுலகினையும் ஆளும் உரிமை உடையவர்கள் என்று கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், தன்னைச் சரணடையும் அடியார்கள் என்றும் இன்பத்தில் ஆழ்ந்திருக்கும் வண்ணம் அருள் புரிபவன் பெருமான் என்று கூறுகின்றார். இவ்வாறு இந்த பதிகத்தின் பாடல்கள் மூலம், பெருமான் அருள் புரியும் தன்மையினை ஞானசம்பந்தர் மூலம் அறிந்து கொண்ட நாம், அந்த பயன்களை அடையும் வண்ணம், பெருமானைப் பணிந்து பல நலன்களும் இம்மையிலும் மறுமையிலும் பெற்று உய்வினை அடைவோமாக.