இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


எந்தையீசன் எம்பெருமான்

எந்தையீசன் எம்பெருமான்


பதிக எண்: 2.90 - நெல்வாயில் அரத்துறை - பியந்தை காந்தாரம்

பின்னணி:


பெண்ணாகடத்து சுடர்க்கொழுந்தீசரை பணிந்து வணங்கி, ஒடுங்கும் பிணி என்று தொடங்கும் பதிகத்தினைப் (1.59) பாடிய திருஞானசம்பந்தர் அதற்கு பின்னர் திருவரத்துறை தலம் நோக்கி செல்லலானார். இந்த தலம் பெண்ணாகடம் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கில் ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது. திருக்கோயில் அரத்துறை என்ற பெயரால் அழைக்கப் படுகின்றது. தலத்தின் பெயரையும் திருக்கோயிலின் பெயரையும் இணைத்து தேவார பதிகங்கள் குறிப்பிடுகின்றன. இறைவனின் திருநாமம் அரத்துறை நாதர், தீர்த்த புரீச்வரர், ஆனந்தீஸ்வரர், இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி, அரத்துறை நாயகி, ஆனந்த நாயகி, வண்டார் குழலி. திருஞான சம்பந்தர் தனது பாடல்களில் அரத்துறை அடிகள் என்றே இறைவனை குறிப்பிடுகின்றார். சுந்தரரும் தான் அருளிய பதிகத்தில் நெல்வாயில் அரத்துறை என்றே குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் திருக்கோயிலின் பெயரை மட்டும் அரத்துறை என்று தனது பதிகத்தில் குறிப்பிடுகின்றார். தொழுதூர் விருத்தாசலம் சாலையில் தொழுதூரிலிருந்து இருபது கி.மீ. தொலைவில் உள்ள கொடிகளம் என்ற இடத்திலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் இந்த தலம் அடையலாம். இந்த தலத்தில் உள்ள வடவெள்ளாறு நதி பண்டைய நாளில் நிவா என்று அழைக்கப் பட்டது. ஆதிசேஷன் வழிபட்டதால் அரவத்துறை என்ற அழைக்கப்பட்ட ஊரின் பெயர் நாளடைவில் மருவி அரத்துறை என்று மாறியது என்று கூறுவார்கள். ஆதிசேஷனுக்கும் இடையே, யார் அவர்களில் மிகுந்த பலசாலி, என்ற போட்டி வந்த போது, ஆதிசேஷன் மேரு மலையை கெட்டியாக பிடித்துக்கொள்ள, வாயுதேவன், அந்தப் பிடிப்பினை தகர்த்து மலையை பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். போட்டி மிகவும் கடினமாக இருக்கவே வாயுதேவன், நாரதரின் உதவியை நாடினார். நாரதரும் அதற்கு ஒப்புக்கொண்டு, ஆதிசேஷன் முன் சென்று சில பாடல்கள் பாடினார். பாடல்களை ரசித்த ஆதிசேஷன், அந்த ரசனையில் தன்னை மறந்து சற்றே தனது பிடியை தளர்த்தவே, வாயுதேவன் அந்தத் தருணத்தை பயன்படுத்திக் கொண்டு மேரு மலையின் சில பாகங்களை சிதற அடித்தான். வாயுவின் செய்கையால் கோபம் அடைந்த ஆதிசேஷன், வாயுவின் செய்கை பற்றி சிவபிரானிடம் முறை இடுவதற்காக இந்த தலம் வந்தடைந்து தவம் செய்தான். சிவபிரான் நேரில் தோன்றி ஆதிசேஷனுக்கு ஆசி கூறிய போது, ஆதிசேஷன் சமாதானம் அடைந்தான். ஜராசந்தனுடன் தான் செய்யும் சண்டையில் வெற்றி பெறுவதற்காக கிருஷ்ண பகவான், இந்த தலத்து இறைவனை வணங்கி அருள் பெற்றார். கிருஷ்ணர் குளித்த குளம் நீல மலர்ப் பொய்கை என்று வழங்கப் படுகின்றது. மற்றும் வால்மீகி முனிவர், மகாபாரதத்தில் வரும் அரவான், இந்திரன், சப்தரிஷிகள், கோள்கள் சனி மற்றும் செவ்வாய் வழிபட்ட தலம்.

முகப்பு வாயிலை கடந்து உள்ளே சென்றால் விநாயகர், சமயக் குரவர்கள் நால்வர், வான்மீகி முனிவர், சப்த கன்னியர்கள், பூத/பவிஷ்ய/வர்த்தமான லிங்கங்கள் (இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் என்று மூன்று காலங்களுக்கான இலிங்கங்கள்) ஜோதி லிங்கம், அண்ணாமலை, ஆதிசேஷன், வள்ளி, தெய்வயானை சமேத முருகன், தண்டாயுதபாணி, காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, கஜலட்சுமி, சந்தான குரவர்கள், பைரவர், சூரியன், சந்திரர் சன்னதிகள் உள்ளன. தமிழ் மன்னர்கள் மூவரும் இந்த தலத்து இறைவனை வணங்கி, தங்களது நினைவாக, சேர லிங்கம், சோழ லிங்கம், பாண்டிய லிங்கம் எனப்படும் லிங்கங்களை நிறுவியுள்ளனர். உள் பிராகாரத்தில் நவகிரக சன்னதியும், சனி பகவானுக்கு தனி சன்னதியும் உள்ளன. மூலவர் சுயம்பு. கிழக்கு நோக்கிய சன்னதி. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன் உள்ளனர். உள் பிராகாரத்தில் நடராஜர் சன்னதி, துர்க்கை, சண்டேஸ்வரர், பைரவர் சன்னதிகள் உள்ளன. சுவாமிக்கும், அம்பாளுக்கும் தனித் தனியே கொடி மரமும் பலி பீடமும் உள்ளன.

அந்நாள் வரை தந்தையாரின் தோள்களில் அமர்ந்து பல தலங்கள் சென்ற சம்பந்தர், நாளுக்கு நாள் தந்தையாரின் வயது கூடுவதால் அவரது உடல் நிலையின் தளர்ச்சி கருதி, அவ்வாறு தந்தையாரை வருத்துவதை தவிர்த்து நடந்து சென்றார். இவ்வாறு சென்றதால் அவரது திருப்பாதங்கள் நொந்தன என்றும் அவரது தந்தையார் வருந்தினார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

ஆதியார் தம் அரத்துறை நோக்கியே

காதலால் அணைவார் கடிது ஏகிடத்

தாதையாரும் பரிவுறச் சம்பந்தர்

பாத தாமரை நொந்தன பையப்பைய

சம்பந்தரின் பாத மலர்கள் நொந்தன என்று சேக்கிழார் கூறுவது நமக்கு சம்பந்தரின் வாழ்வில் இதற்கு முன்னே நடந்த இரண்டு நிகழ்ச்சிகளை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றன. மூன்று வயதுக் குழந்தையாக குளக்கரையில் சம்பந்தர் அழுததை குறிப்பிடும் சேக்கிழார், அவர் அழுத நிலையினை குறிப்பிடுகையில் கண்களாகிய மலர்களிலிருந்து நீர் வெளிப்படக் கைம்மலர்களால் கண்களை பிசைந்து அழகிய தாமரை மலரும் சிவந்த கொவ்வைக் கனி போன்றும் அமைந்த திருவாயின் உதடுகள் துடிக்க, எண்ணில்லாத மறைகளின் ஒலி பெருகவும் அனைத்து உயிர்களும் களிப்படையவும், புண்ணியக் கன்றைப் போன்ற பிள்ளையார் பொருமி அழலானார் என்று குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காணலாம். தமிழ் மறைகள் தோன்றும் காலம் மிகவும் அருகில் வந்ததை உணர்த்தும் பொருட்டு மறையொலி எங்கும் பரவியது என்று நயமாக கூறும் சேக்கிழார் பிள்ளையாரின் அழுகை, பிராட்டி ஞானப்பால் ஊட்டுவதற்கும் தோடுடைய செவியன் என்ற பதிகம் வெளிவருவதற்கும் காரணமாக இருந்தமையை உணர்த்தும் வண்ணம் அழுது அருளினார் என்று குறிப்பிடுகின்றார்.

கண்மலர்கள் நீர் ததும்பக் கைம்மலர்களால் பிசைந்து

வண்ண மலர்ச் செங்கனி வாய் மணியதரம் புடை துடிப்ப

எண்ணில் மறை ஒலி பெருக எவ்வுயிரும் குதூகலிப்பப்

புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுது அருளினார்

திருக்கோலக்கா சென்ற சம்பந்தர், தனது கைகளால் தாளமிட்டு பாடியதைக் கண்டு பொறாத பெருமான் பொற்றாளம் வழங்கினார் என்பதை நாம் அறிவோம். தந்தையைக் காணாமல் அழுத போது ஞானப்பால் அருளிய பெருமான், கைகள் வருந்த தாளமிட்டு பாடியதைக் கண்டு பொற்றாளம் அளித்த பெருமான், மாறன்பாடியில் கால்கள் வருந்த நடந்ததைக் கண்டு முத்துச்சிவிகை அருளிய வரலாற்றினை நாம் இங்கே காண்கின்றோம். மெய்யடியார்கள் வருந்துவதை காணப் பொறாதவன் சிவபெருமான் என்று இந்த நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றன.

திருவரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற ஊர் அடைந்த போது, நடந்து வந்த சோர்வினை நீக்கும் பொருட்டும் உடன் வந்த அடியார்கள் இளைப்பாறும் பொருட்டும், ஞானசம்பந்தரும் உடன் வந்த அடியார்களும் அந்த ஊரில் தங்கினார்கள். அப்போது இரவுக் காலமும் வந்தது. இதனிடையில் அரத்துறை இறைவனும், திருஞானசம்பந்தர் ஏறிச் செல்வதற்கு சிவிகையும், அவர் மேலே கவித்துக் கொள்வதற்கு குடையும். அவரது புகழினை குறிப்பிட்டு ஊதுவதற்கு சின்னங்களும் (ஊதுகுழல்) அருளுவதற்கு முடிவு செய்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

ஏறுதற்கு சிவிகை இடக்குடை

கூறி ஊதக் குலவு பொற் சின்னங்கள்

மாறில் முத்தின் படியினால் மன்னிய

நீறு உவந்த நிமலர் அருளுவார்

தனது முடிவினை செயல்படுத்தும் வண்ணம் பெருமான், அரத்துறை தலத்து மறையவர்களின் கனவில், சீர்காழி குழந்தை ஞானசம்பந்தர் தன்னைக் காண்பதற்கு வந்து கொண்டிருக்கும் செய்தியையும், அவரிடத்தில் முத்துச்சிவிகை, முத்துக்குடை மற்றும் குழல்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறுகின்றார். இவ்வாறு கனவினில் இறைவனது கருத்து உணர்த்தப்பட்ட மறையவர்கள் அனைவரும், அடுத்த நாள் விடியற்காலையில் திருக்கோயில் முன்னம் வந்து கூடினார்கள். இறைவன் கனவினில் வந்து நிகழ்த்திய அதிசயத்தை ஒருவருக்கொருவார் சொல்லி வியந்தனர். பள்ளியெழுச்சி பாடி இறைவனைப் போற்றும் காலம் நெருங்கியமையால் திருப்பள்ளியெழுச்சிக்கு உரிய காலத்தில் திருக்கோயில் கதவுகளை திறந்தனர். திறந்த போது செழுமையான முத்துக்கள் பதிக்கப்பெற்ற வெண்குடையும், முத்துச் சிவிகையும், புகழினை எடுத்து ஊதுவதற்கு ஊது கொம்புகளும் கோயிலின் உள்ளே இருந்ததைக் கண்டு பெரு மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்து, தங்களது தலைமேல் கைகளை குவித்து இறைவனை வணங்கினார்கள். மேலும் இந்த சின்னங்கள் எட்டு திசைகளுக்கும் இறைவனின் கருணைத் திறத்தையும் ஞானசம்பந்தரின் சிறப்பினையும் உணர்த்தும் விளக்கு போன்றவை என்று கூறினார்கள். இந்த நிகழ்ச்சி தலத்து மறையவர்களுக்கு சம்பந்தரின் அடிமைத் திறத்தின் தன்மையையும், இறைவன் சம்பந்தர் பால் வைத்திருந்த அன்பையும் உணர்த்தியது. இறைவனின் அருளால் வந்த பொருட்களை எடுத்துக் கொண்டு, சங்கு துந்துபி தாரை பேரி முதலான வாத்தியங்கள் முழங்க, அந்தணர்கள் மாறன்பாடி நோக்கி சென்றனர்.

எப்போதும் இறைவன் பற்றிய சிந்தனையுடன் இருந்த ஞானசம்பந்தர் உறங்கிய போது, அவரது கனவிலும் பெருமான் நெல்வாயில் அரத்துறை அந்தணர்கள் முத்துச் சிவிகை, குடை மற்றும் ஊது கொம்புகள் எடுத்து வருவதை உணர்த்தி, அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்தினார். விடியற்காலையில் எழுந்த ஞானசம்பந்தர், தனது தந்தையார் மற்றும் தன்னுடன் வந்த அடியார்களுக்கு, இறைவன் உணர்த்திய செய்தியை கூறினார். அனைவரும் தங்களது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தங்களது கைகளை தலை மேல் குவித்து ஐந்தெழுத்து ஓதியவர்களாய் இருந்த போது, காலைப் பொழுது புலரவே, சூரியனும் திருஞான சம்பந்தர் முத்துச் சிவிகையில் ஏறும் காட்சியை கண்டு களிக்கும் விருப்பத்துடன் கிழக்கு திசையில் தோன்றினான் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்.

போத ஞானப் புகலிப் புனிதரைச்

சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக்

காதல் செய்பவன் போலக் கருங்கடல்

மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன்

அர அர என்ற ஒலி வானில் எழ, நெல்வாயில் அரத்துறை அடியார்கள் முத்துச்சிவிகை முதலான பொருட்களுடன் ஞானசம்பந்தர் முன்னர் வந்து தோன்றினர். பெருமான் தங்களது கனவில் தோன்றியதையும் அதன் பின்னர் நடந்தவற்றையும் ஒன்று விடாமல் ஞானசம்பந்தரிடம் சொல்லிய வேதியர்கள் அவரைப் போற்றி வணங்கி அனைத்தும் ஈசனது அருளால் விளைந்தன என்று கூறினார்கள். மேலும் தாங்கள் கொண்டுவந்த பொருட்களை ஏற்றுக் கொள்ளுமாறு ஞானசம்பந்தரை வேண்டினார்கள். ஈசன் தான், இடைவிடாது அவரை தான் விருப்பமுடன் நினைக்கும் வண்ணம் அருள் தந்து ஆட்கொண்டவர் என்று குறிப்பிட்ட சம்பந்தர், தனது அடியாராக தன்னை ஆட்கொண்டு அருள் புரிந்தது தான், பெற்ற பேறு என்று வியப்புடன் குறிப்பிட்ட பின்னர் சம்பந்தர் எந்தை ஈசன் என்று தொடங்கும் பதிகத்தை பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். புந்தி=மனம்; புந்தி ஆர=மனம் நிறையும் வண்ணம்; பெருமானின் அருள் கைகூடியதால் முத்துச்சிவிகையும் மற்ற பொருட்களும் பெறுகின்ற பேறு தனக்கு கிடைத்தது என்பதை உணர்ந்த ஞானசம்பந்தர், பெருமானின் அருள் நமக்கு கிடைக்கவேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிகத்து பாடல்களில் கூறுவதை காணலாம்.

எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள்

வந்தவாறு மற்று எவ்வணமோ என்று

சிந்தை செய்யும் திருப்பதிகத்து இசை

புந்தி ஆரப் புகன்று எதிர் போற்றுவார்

பாடல் 1:


எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்று ஏத்திச்

சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்

கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவா மல்கு கரை மேல்

அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

இறைவனின் புகழினை வாயினால் பாடி மனதினால் சிந்திக்கும் அன்பர்களுக்கு இறைவன் அருள் கைகூடும் என்றும் அல்லாதார்க்கு அவனது அருள் கைகூடாது என்பதையும் சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் நிவா நதி குறிப்பிடப்பட்டு, தலத்தின் நீர்வளத்திற்கு இந்த நதி காரணம் என்பதும் உணர்த்தப் படுகின்றது. சென்று கைகூடுவது என்று திருவருள் தானே வந்தடைந்ததை பிள்ளையார் குறிப்பிடுகின்றார். தான் பயணம் செய்வதற்கு சிவிகை வேண்டும் என்று திருஞான சம்பந்தர் இறைவனிடம் வேண்டியதாக பெரிய புராணத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. எனினும் சம்பந்தர் தந்தையாரின் தோளினில் ஏறிக் கொண்டு வாராமல் தானே நடந்து வந்ததைக் கண்ட பெருமான், தானே முன்வந்து அருள் புரிந்தமை இங்கே அருள் சென்று கைகூடியது என்று கூறுகின்றார். நமது தேவைகளை புரிந்து கொண்டு தந்தையார், நாம் கேட்காமல் இருந்த போதும். தாமே வந்து நமது தேவைகளை நிறைவேற்றுவது போன்று, இறைவன் தானே வந்து முத்துச்சிவிகை அளித்ததால் எந்தை என்று பெருமானை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். சம்பந்தருக்கு தந்தையாகவும் இறைவனாகவும் திகழ்ந்தவர் அல்லவா சிவபெருமான். ஏறு=இடபம்; அந்தண்=அழகு மற்றும் குளிர்ச்சி; ஈசன்=தலைவன்; கந்தம்=நறுமணம்;

அடியார்களுக்கு அன்றி மற்றவர்க்கு சிவபெருமான் அருள் புரிய மாட்டான் என்று சம்பந்தர் கூறுவது அப்பர் பிரான் அருளிய நமச்சிவாயப் பத்து பதிகத்தின் பாடலை (4.11.6) நமக்கு நினைவூட்டுகின்றது. சலம்=வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. வேண்டுதல் வேண்டாமை அற்றவன். அனைவருக்கு ஒரே தன்மையாக உள்ளவன். சங்கரன்=இன்பம் அளிப்பவன். அனைவருக்கு ஒரே தன்மையாக காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு எப்போதும் நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்

நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்

குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்

நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே

பொழிப்புரை:

எமது தந்தையே, அனைவர்க்கும் தலைவனே, எமது பெருமானே, இடபத்தின் மீது அமரும் கடவுளே என்று பெருமானைப் புகழ்ந்து பாடி, அவனது தன்மைகளை சிந்தனை செய்யும் அடியார்களுக்கு அல்லாது ஏனையோருக்கு அவனது அருள் தானே சென்று கைகூடாது. நறுமணம் வீசும் சிறந்த மலர்களை அடித்துக் கொண்டு பெருகி வரும் நீரினை உடைய நிவா நதிக்கரையினில் அழகியதும் குளிர்ந்ததும் ஆகிய சோலைகள் கொண்டுள்ள நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் அருள் வேண்டுவீராயின், நீங்கள் அவனைப் புகழ்ந்து வாயினால் பாடி மனதினால் அவனது பெருமைகளை நினைப்பீர்களாக.

பாடல் 2:


ஈர வார்சடை தன் மேல் இளம்பிறை அணிந்த எம் பெருமான்

சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால்

வாரி மாமலர் உந்தி வருபுனல் நிவா மல்கு கரை மேல்

ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

ஈர=குளிர்ந்த வார்சடை=நீண்ட சடை; சிதடர்=கீழ் மக்கள்; செல்வம்=சிறந்த குணங்கள்; சீர்= பெருமை; பெருமானின் கருணைத் தன்மையை, தானே வந்து அருளிய செயலைக், பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், கருணையின் அடையாளமாக பெருமானின் சடையினில் தங்கியுள்ள கங்கை நதியையும் பிறைச் சந்திரனையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பகீரதன் பால் கொண்டுள்ள கருணை தானே, பெருமான் கங்கை நதியைத் தனது தங்குவதற்கு காரணமாக இருந்தது.

பெருமானின் சீரும் சிறப்பும் அறியாமல் அவரை தொழாமல் இருக்கும் மனிதர்களை சிதடர்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுவது மணிவாசகரின் அச்சோப் பதிகத்தின் கடைப் பாடலை நமக்கு நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில், அத்தன் என்றும் கூத்தன் என்றும் ஐயன் என்றும் அண்ணல் என்றும் அந்தம் என்றும் ஆதி என்றும் இறைவனை குறிப்பிட்ட மணிவாசகர் இந்த பாடலில் அம்மை என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். இறைவனின் அருள் வடிவமாக அம்மை கருதப்படுவதை இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது. பெருமானின் கருணை எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை நாய் சிவிகை ஏற்றுவித்த எனும் சொற்றொடர் உணர்த்துகின்றது. நாயின் இழிந்த தன்மை குறித்து எவரும் நாயினை உயர்ந்த இடத்தில் வைப்பதில்லை. அவ்வாறு உயர்ந்த இடத்தில் எவரேனும் வைத்தாலும் அந்த நாயின் பால் கருணை கொண்டு அளவற்ற பாசம் கொண்டிருந்தால் தான் அவ்வாறு செய்வார்கள். இந்த உலகியல் செய்கையின் அடிப்படையில், கீழ்மை குணங்கள் கொண்டிருந்த தன்னை (கீழ்மை குணங்கள் இந்த பதிகத்தின் முதல் எட்டு பாடல்களில் கூறப்பட்டுள்ளன) உயர்ந்த இடத்தில் வைத்த பெருமானின் எல்லையற்ற கருணைச் செயல் இங்கே உணர்த்தப் படுகின்றது. செம்மை என்று செந்நெறியை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். நன்னெறி செந்நெறி முன்னெறி என்று திருமுறைகள் குறிப்பிடுவது பெருமானை வழிபடும் நெறியினைத் தான். அத்தகைய நன்னெறியை அறியாத மனிதர்களை கீழ்மக்கள் என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார்.

செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை

மும்மை நலம் அறுவித்து முதல் ஆய முதல்வன் தான்

நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த

அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே

பொழிப்புரை:

கங்கை நதியினைத் தாங்கி இருப்பதால் எப்போதும் குளிர்ந்து காணப்படுவதும் நீண்டதும் ஆகிய சடையினை உடையவனும், ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் அணிந்தவனும் ஆகிய பெருமானின் சிறப்புகளையும் உயர்ந்த குணங்களாகிய அவரது செல்வங்களையும் அறிந்து கொண்டு புகழ்ந்து தொழுது ஏத்தாத கீழ்மக்களை அவரது அருள் சென்று அடையாது. சிறந்த மலர்களை வாரிக்கொண்டு வருவதும் மிகுந்த நீர்ப்பெருக்கினை உடையதும் ஆகிய நிவா நதிக்கரையின் மீது அமைந்துள்ள சோலைகள் நிறைந்துள்ள நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், அவரது பெருமைகளையும் சிறந்த குணங்களையும் அறிந்து கொண்டு அவர் உறையும் திருக்கோயில்கள் சென்று அவரைப் பணிந்து தொழுவீர்களாக.,

பாடல் 3:


பிணி கலந்த புன்சடை மேல் பிறையணி சிவன் எனப் பேணிப்

பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது அன்றால்

மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல்

அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

பிணி=பிணைப்பு; கலந்து=மனம் மொழி மெய் ஆகிய மூன்றையும் ஈடுபடுத்தி; பிணைப்புத் தன்மை தான் அடர்ந்த தன்மையை சடைக்கு கொடுக்கும் என்பதை உணர்த்த பெருமானின் அடர்ந்த சடையினை பிணி கலந்த புன்சடை என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

பிணைப்புத் தன்மை கொண்டு அடர்ந்து காணப்படும் செம்பட்டை சடையின் மேல் பிறைச் சந்திரனை அணிந்துள்ள பெருமானே, சிவனே என்று போற்றி, தங்களது மனம் மொழி மெய் ஆகிய மூன்றினையும் ஈடுபடுத்தி அவனுக்கு திருப்பணிகள் செய்யாத பாவிகளுக்கு அவனது அருள் கிட்டாது. பொன்னும் மணியும் கலந்து அடித்துக் கொண்டு வரப்படும் நிவா நதியின் கரை மேல் அமைந்துள்ள நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், பெருமானைப் போற்றி வழிபட்டு, உமது மனம் மொழி மற்றும் மெய் ஆகிய மூன்றையும் ஈடுபடுத்தி பெருமானுக்கு திருத்தொண்டுகள் புரிவீர்களாக.

பாடல் 4:


துன்ன ஆடை ஒன்று உடுத்துத் தூய வெண்ணீற்றினர் ஆகி

உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால்

பொன்னு மாமணி உந்திப் பொருபுனல் நிவா மல்கு கரை மேல்

அன்னமாகும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

துன்ன ஆடை=தைத்த ஆடை; பெரிய துணியிலிருந்து கிழக்கப்பட்டு தைக்கப்பட்ட கோவண ஆடையினை இங்கே உணர்த்துகின்றார். கோவண ஆடையினை உடுத்திருக்கும் தன்மை பெருமானின் எளிமையை உணர்த்துகின்றது. உடல் முழுவதும் திருநீறு பூசியுள்ள தன்மை, உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் அனைத்து உயிர்களும் ஒரு நாள் அழியும் தன்மை உடையது என்பதையும் பெருமான் ஒருவனே என்றும் அழியாது நிலைத்து நிற்கும் தன்மை உடையவன் என்பதையும் உணர்த்துகின்றது. வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாததும், பெருமான் ஒருவனுக்கே உரிய குணங்களாக உள்ளவை இந்த இரண்டு ஒப்பற்ற குணங்கள்;

துன்ன ஆடை உடுத்தவர் என்று எளிமையின் வடிவமாக பெருமான் விளங்குவதை பல திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வேணுபுரம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களின் ஒன்று) தலத்தின் மீது (2.81.2) அருளிய பாடலில் தைத்த கோவணத்தோடு புலித்தோல் ஆடையினை உடையாக கொண்டவர் பெருமான் என்று சம்பந்தர் கூறுகின்றார். பெருமானின் கருணையின் வடிவமாக திகழ்பவள் பார்வதி அன்னை என்பதை நாம் அறிவோம். தான் கருணை புரிபவன் என்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம் அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் அடையாளமாக பெருமான் வைத்துள்ளார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

சுடுகாடு மேவினீர் துன்னம் பெய் கோவணம் தோல்

உடை ஆடையது கொண்டீர் உமையாளை ஒரு பாகம்

அடையாளம் அது கொண்டீர் அங்கையினில் பரசு எனும்

படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடல் (2.44.1) துன்னம் பெய் கோவணம் என்ற தொடருடன் தொடங்குகின்றது. பொக்கம்=பொலிவு; பெருமானின் அழகிய திருவடிகளை போற்றி புகழாத மனிதர்கள் அழகு அற்றவர்கள் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பின்னம்=பின்னப்பட்டு அழகுடன் காணப்படும்

துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை

பின்னம் சடை மேலோர் பிள்ளை மதி சூடி

அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான் தன்

பொன்னம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே .

அப்பர் பெருமான் தான் புகலூர் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் துன்னம் சேர் கோவணத்தாய் என்று பெருமானை அழைக்கின்றார். துன்னம்= தையல்; அக்காரம்=எலும்பு மாலை; சங்கு மணிகளால் கோர்க்கப்பட்ட உருத்திராக்க மாலை என்றும் கூறுவார்கள். சிவபெருமான் கையில் இருக்கும் மழு ஆயுதத்தை அவர் பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படாத காரணத்தால், இரத்தக் கறை படியாத ஆயுதமாக விளங்குகின்றது. எனவே அதனை வெண் மழுவாள் என்று கூறுகின்றார்.

துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி

தன் அணையும் தண்மதியும் பாம்பும் நீரும் சடைமுடி மேல் வைத்து உகந்த தன்மையானே

அன்ன நடை மடவாள் பாகத்தானே அக்காரம் பூண்டானே ஆதியானே

பொன்னம் கழலடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.53.5) அப்பர் பிரான் துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் என்று குறிப்பிடுகின்றார். துன்னம்=துண்டிக்கப்பட்ட துணி, பிரமனின் மண்டையோட்டினை பெருமான் கையில் ஏந்தியுள்ள தன்மை இந்த பாடலின் நான்காவது அடியில் குறிப்பிடப்படுகின்றது.

துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும் சுடர் மூன்றும் சோதியுமாய்த் தூயார் போலும்

பொன் ஒத்த திருமேனிப் புனிதர் போலும் பூதகணம்புடை சூழ வருவார் போலும்

மின்னொத்த செஞ்சடை வெண் பிறையார் போலும் வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும்

அன்னத் தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

பொழிப்புரை:

தைக்கப்பட்ட கோவண ஆடையினை உடுத்து எளிமையாக காட்சி அளிப்பவரும் தூய வெண்ணீறு அணிந்து தாம் ஒருவனே என்றும் அழியாது நிலைத்து நிற்பவன் என்று உணர்த்துபவரும் ஆகிய சிவபெருமானை நினைத்து உள்ளம் நைந்து வழிபடாத மனிதர்களுக்கு அவரது அருள் கைகூடுவதில்லை; பொன்னையும் சிறந்த மணிகளையும் தனது நீர்ப்பெருக்குடன் அடித்துக் கொண்டு வரும் நிவா நதியின் கரையில் அமைந்ததும் அன்னப் பறவைகள் தங்கி மகிழ்வதும் ஆகிய நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று விரும்புவீராயின், நீங்கள் அவரது எளிமைத் தன்மை மற்றும் நிலையான தன்மை ஆகியவற்றை நினைத்து உள்ளம் நைந்து வழிபடுவீர்களாக.

பாடல் 5:


வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி

உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால்

முருகு உரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்து இழி நிவா வந்து

அருகு உரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

வெருகு=காட்டுப் பூனை; மரநாய் என்றும் கூறுவார்கள்; உரிஞ்சு=தேய்க்கின்ற; தேய்த்தல் என்ற பொருளில் வரும் இந்த சொல் இங்கே நிறைதல் நெருங்குதல் பொருந்துதல் என்ற பொருளில் வரும் வண்ணம் கையாளப்பட்டுள்ளது. முருகு=அழகு மொய்ம்மலர்=வண்டுகள் இடைவிடாது மொய்க்கும் வண்ணம் தேன் அதிகமாக பொருந்தியுள்ள மலர்கள்;

பொழிப்புரை:

காட்டுப் பூனைகள் திரியும் கொடிய சுடுகாட்டினில் நடமாடும் விமலன் என்று பெருமானின் திறனை மனதினில் நினைத்து உருகி உள்ளம் நைந்து வழிபடாத மனிதர்களுக்கு அவனது அருள் கைகூடுவதில்லை. அழகு பொருந்தியதும் இடைவிடாது வண்டுகள் மொய்க்கும் வண்ணம் மிகவும் அதிகமான தேன் பொருந்தி உள்ளதும் ஆகிய மலர்களைச் சுமந்து கொண்டு வந்து சேர்க்கும் நீரினை உடைய நிவா நதிக்கரையினில் அமைந்துள்ள நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், பெருமானின் திறனை மனதினில் எண்ணி உள்ளம் உருகு நைந்து அவரை வழிபடுவீர்களாக.

பாடல் 6:


உரவு நீர்சடைக் கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்த

பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கை கூடுவது அன்றால்

குரவ நீடுயர் சோலைக் குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்

அரவம் ஆகும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

அரவம்=ஓசை; உரவு நீர்=பரந்த கங்கை நதி; அரவம் என்பதற்கு பாம்பு என்று பொருள் கொண்டு தண்ணீர் பாம்புகள் நிறைந்த நிவா நதி என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர்.

பொழிப்புரை:

பரந்த கங்கை நதியினைத் தனது சடையினில் மறைத்து வைத்த ஒப்பற்ற திறமை உடையவன் என்று உள்ளம் குளிர்ந்து பெருமானை வணங்கி வாழ்த்தாத மனிதர்களை பெருமானின் திருவருள் சென்று அடையாது. நெடிது உயர்ந்த குரா மரங்கள் நிறைந்த சோலைகளில் ஒடும் குளிர்ந்த நீரினை உடைய நிவா நதிக் கரையின் மீது அமைந்துள்ள சந்தடி மிகுந்து ஓசை எழும் நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று விரும்புவீராயின், நீங்கள் பெருமானின் வல்லமைகளை புரிந்து கொண்டு அவரை வணங்கி போற்றி நைவடையும் உள்ளம் கொண்டு அவரை வழிபடுவீர்களாக.

பாடல் 7:


நீல மாமணி மிடற்று நீறணி சிவன் எனப் பேணும்

சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்

கோல மாமலர் உந்திக் குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்

ஆலும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

பேணும்=போற்றும்; சீலம்=நல்லொழுக்கம்; சிவபெருமானை போற்றி வணங்குவதே நல்ல ஒழுக்கம் என்று இங்கே கூறப் படுகின்றது. ஆலுதல்=உரத்த குரல் எழுப்புதல்;

பொழிப்புரை:

நீல மாமணி பதித்தது போன்ற கழுத்தினை உடையவனும், திருநீறு அணிந்தவனும், சிவன் என்னும் திருநாமம் உடையவனும் ஆகிய பெருமானைப் போற்றி வாழும் நல்லொழுக்கம் இல்லாத மாந்தர்களை பெருமானின் திருவருள் சென்று கைகூடாது. அழகிய சிறந்த மலர்களை தள்ளிக் கொண்டு வரும் குளிர்ந்த நீர்ப் பெருக்கினை உடைய நிவா நதிக் கரையினில் அமைந்துள்ளதும் ஆரவாரங்கள் மிகுந்த சோலைகள் உடையதும் ஆகிய நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், அவரது பெருமைகளை உணர்த்தும் பல திருநாமங்களை சொல்லிப் புகழ்ந்து வணங்கும் நல்லொழுக்கம் உடைய மனிதர்களாக மாறுவீர்களாக.

பாடல் 8:


செழுந்தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற

அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான்

கொழுங்கனி சுமந்து உந்திக் குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்

அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

அழுந்தும்=வேரூன்றி செழிக்கும்; கொழுங்கனி=நன்கு கனிந்த கனிகள்

பொழிப்புரை:

செழிப்புடன் விளங்குவதும் குளிர்ச்சி பொருந்தியதும் ஆகிய கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போர் வலி மிக்க அரக்கன் இராவணன் மலையின் கீழே அழுந்தி நலிவடைந்து கதறும் வண்ணம், தனது கால் பெருவிரலை மலையின் மீது அழுத்திய பெருமான் என்று சிவபிரானது வலிமையை புகழ்ந்து போற்றாத மனிதர்களை பெருமானின் திருவருள் சென்று சேராது. நன்கு கனிந்த கனிகளைச் சுமந்து வரும் குளிர்ந்த நீரினைக் கொண்ட நிவா நதிக்கரையில் அமைந்துள்ளதும் வேரூன்றி செழித்த மரம் செடி கொடிகளை உடைய சோலைகள் நிறைந்ததும் ஆகிய நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் திருவருள் வேண்டும் என்று விரும்புவீராயின், பெருமானின் வல்லமையை புகழ்ந்து போற்றி அவனை வணங்கி அவனது அருளினைப் பெறுவீர்களாக.

பாடல் 9:


நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை

வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால்

மணம் கமழ்ந்து பொன் உந்தி வருபுனல் நிவா மல்கு கரை மேல்

அணங்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

நுணங்கு நூல்=நுண்ணிய பொருட்களை உணர்த்தும் நூல்கள்; அணங்கும்=அழகு உடைய;

பொழிப்புரை:

நுண்ணிய பொருட்களை விளக்கும் நுட்பமான வேத நூல்களை அறிந்து உணர்ந்துள்ள பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் முடியையும் அடியையும் காணா வண்ணம் நீண்ட தழற்பிழம்பாய் நெடிதுயர்ந்த சிவபெருமானை வணங்கி உள்ளம் நைந்து வழிபடாத மனிதர்களுக்கு இறைவனின் திருவருள் கைகூடுவதில்லை. பல வகை நறுமணம் கலந்து கமழ்வதும் பொன் போன்ற அரிய பொருட்களை அடித்துக் கொண்டு வரும் நீர்ப்பெருக்கினை உடையதும் ஆகிய நிவா நதிக்கரையின் மேல் அமைந்துள்ளதும் அழகிய சோலைகள் உடையதும் ஆகிய நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், பெருமானை வணங்கி வழிபட வேண்டும் என்பதை உணர்வீர்களாக..

பாடல் 10:


சாக்கியப் படுவாரும் சமண் படுவார்களும் மற்றும்

பாக்கியப் படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால்

பூக்கமழ்ந்து பொன் உந்திப் பொருபுனல் நிவா மல்கு கரை மேல்

ஆர்க்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே

விளக்கம்:

படுவார்=விழுபவர்கள்; சாக்கிய=பௌத்த;

பொழிப்புரை:

சாக்கிய மதம் என்று அழைக்கப்படும் புத்த மதத்தில் விழுவோர்களும் சமண சமயத்தில் விழுவோர்களும், ஏனைய புறப்புறச் சமயங்களில் வீழ்ந்தவர்களும் பெருமானைத் தொழாத காரணத்தால், அவனது திருவருளினைப் பெறுகின்ற பாக்கியம் இல்லாதவர்களாக உள்ளனர். மலர்களின் நறுமணம் உடைத்து, பொன்னை அடித்துக் கொண்டு வரும் அதிகமான நீர்ப் பெருக்கினை உடைய நிவா நதிக்கரையினில் அமைந்துள்ளதும், ஆரவாரங்கள் நிறைந்த சோலைகள் உடையதும் ஆகிய நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், பெருமானைத் தொழுவீர்களாக.

பாடல் 11:


கறையினார் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்

அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள் தம் அருளை

முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர் தம் வினை போய்ப்

பறையும் ஐயுறவில்லைப் பாட்டிவை பத்தும் வல்லார்க்கே

விளக்கம்:

கறை=இருள், நிழல். மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் சூரியனின் கதிர்கள் உள்ளே செல்ல முடியாமல் இருளின் நிறத்தினை உடைய சோலைகள். அறையும்=ஒலிக்கும்; பூம்புனல்=அழகிய நீர்த்துறை; முறைமை=பெருமானின் திருவருள் பெறும் வழிமுறைகள்; பறைதல்=அழிதல்;

பொழிப்புரை:

அடர்ந்த மரங்கள் உள்ளதால் சூரியனின் கதிர்கள் உட்புக முடியாமல் இருண்டு காணப்படும் சோலைகள் நிறைந்த காழி நகரினைச் சார்ந்த ஞானசம்பந்தன், ஒலிக்கின்ற அழகிய பரந்த நீர்த் துறைகள் உடைய நிவா நதிக்கரையின் மீது அமைந்துள்ள நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் அருளினை பெறுகின்ற நெறிமுறைகளை உணர்த்தும் பத்து பாடல்களையும் வல்லவராக மொழியும் அடியார்கள் தங்களது வினைகள் முற்றிலும் தீரப் பெற்று உய்வது திண்ணம்; இதற்கு ஐயம் ஏதும் கொள்ள வேண்டா.

முடிவுரை:

இந்தப் பதிகம் முழுவதும் இறைவனின் திருவருளின் சிறப்பினை உணர்த்தும் வண்ணம் ஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் அடியார்கள் எவ்வாறு பெருமானை வழிபடவேண்டும் என்பதும் உணர்த்தப் படுகின்றது. அனைத்துப் பாடல்களிலும் எத்தகைய மனிதர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்காது என்பதை எதிர்மறையாக குறிப்பிட்டு, இறைவனை முறையாக வழிபடும் அடியார்களுக்கு அவனது அருள் உறுதியாக கிடைக்கும் என்பது இந்த பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில், இறைவனின் புகழினை வாயினால் பாடி மனதினால் சிந்திக்க வேண்டும் என்றும் இரண்டாவது பாடலில் பெருமானின் சிறப்பையும் சிறந்த குணங்களையும் புகழ்ந்து அவரை வணங்கித் தொழவேண்டும் என்றும், மூன்றாவது பாடலில் மனம் மொழி மெய் ஆகிய மூன்றினையும் இறைவனது திருப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும், நான்காவது பாடலில் பெருமானை நினைத்து மகிழ்ந்து மனம் கசிந்து உருகி வழிபடவேண்டும் என்றும், ஐந்தாவது பாடலில் இயல்பாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து நீங்கியவன் இறைவன் என்று போற்றி உள்ளம் நைந்து பணிய வேண்டும் என்றும் ஆறாவது பாடலில் விரிந்த கங்கை நதியை தனது சடையில் மறைக்கும் ஆற்றல் உடையவன் என்று பணிந்து வணங்க வேண்டும் என்றும் ஏழாவது பாடலில் சிவபெருமானை வணங்கிப் போற்றும் நல்லொழுக்கம் உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் இராவணனின் ஆற்றலை அடக்கும் வல்லமை வாய்ந்தவர் என்று போற்ற வேண்டும் என்றும் ஒன்பதாவது பாடலில் பிரமனும் திருமாலும் காண இயலாத பெருமை உடையவன் என்று குறிப்பிட்டு வணங்க வேண்டும் என்றும், பத்தாவது பாடலில் சமணம் பௌத்தம் முதலான மற்ற புறச்சமயங்களின் கவர்ச்சியில் மனம் மயங்காது சைவ நெறியினை பின்பற்ற வேண்டும் என்றும் பெருமானை வணங்கும் நெறிமுறைகளை சம்பந்தர் இந்த பதிகத்தில் எடுத்துச் சொல்கின்றார்.

இந்த பதிகம் பாடி முடித்த பின்னர், திருஞானசம்பந்தர் முத்துச் சிவிகையை வலம் வந்து, பெருமானின் அருளை நினைத்துப் போற்றியவாறு ஐந்தெழுத்தினை ஓதிய வண்ணம் சிவிகையின் மீது ஏறி அமர்ந்தார்.

சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார்

மீது தாழ்ந்து வெண்ணீற்று ஒளி போற்றி நின்று

ஆதியார் அருள் ஆதலின் அஞ்செழுத்து

ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பெரிய புராணப் பாடலின் எண் 2114. மொத்தம் 4274 பாடல்கள் கொண்டுள்ள பெரிய புராணத்தின் நடுப்பகுதி என்று சொல்லும் வண்ணம் இந்த பாடல் அமைந்துள்ளது இறைவனின் கருணையால் விளைந்த செயல் என்றே கூறலாம். முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் என்று மணிவாசகர் இறைவனை குறிப்பிடுவது போன்று, இறைவன் அடியெடுத்துக் கொடுத்த உலகெலாம் என்ற சொல்லும் பெரிய புராணத்தின் முதலிலும், நடுவிலும் கடையிலும் வருவதை நாம் உணரலாம்.

ஞானசம்பந்தப் பெருமான் சிவிகையின் மீது ஏறி அமர்ந்தபோது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர், வேத ஒலிகள் எழுந்தன; தேவர்கள் ஆரவாரம் செய்தனர்; மேகங்கள் முழங்கின; பல வகையான வாத்தியங்கள் முழங்கின, வண்டுகள் நீங்காத புது மலர்கள் வானிலிருந்து மழை போல் பொழிந்தன; சங்குகள் முழங்கின; கூடியிருந்த அடியார்கள் ஆரவார ஒலிகள் எழுப்பினர் என்று கூறும் சேக்கிழார், அந்த சமயத்தில் முத்துக்கள் பதிக்கப்பட்டு ஒளி வீசிய வெண்குடை விரிக்கப்பட்டு பலரும் காண விளங்கித் தோன்றியது என்று கூறுகின்றார். ஞான சம்பந்தரின் பல வகை சிறப்புகளை உணர்த்தும் திருநாமங்களை எடுத்து ஓதிய அடியார்கள், ஞான சம்பந்தர் வந்தார் என்று முழக்கமிட்டு கொம்புகள் ஊதினார்கள்; வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும் உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என்றும். ஞானமே முலை சுரந்து ஊட்டப்பெற்ற பாலறாவாயன் என்றும், மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என்றும் மூன்று சின்னங்களுக்கு ஏற்ப மூன்று அடைமொழிகள் கொடுத்து பிள்ளையாரைப் போற்றியது பொருத்தமாக உள்ளது. ஊதுகொம்பு எக்காளம் என்று சேக்கிழாரால் குறிப்பிடப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் அரத்துறை தலம் வந்தடைந்த ஞான சம்பந்தர், தனது கைகளை தலை மேல் கூப்பியவாறு, இறைவனின் அருளினை நினைத்து ஆனந்தக் கண்ணீர் பெருக, பெருமானை போற்றி பதிகம் பாடினார் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். ஆனால் இந்த தருணத்தில் அவர் அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை. பல நாட்கள் இந்த தலத்தில் தங்கிய பிள்ளையார் பின்னர், நெல்வெண்ணெய் முதலான பல தலங்கள் சென்றார் என்று நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம்.

திருவரத்துறை திருப்புகழில் அருணகிரிநாதர் ஞானசம்பந்தருக்கு முத்துச் சிவிகை அளித்ததை குறிப்பிடும் பகுதி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அருள் கவிகை நித்திலச் சிவிகையைக் கொடுத்து அருள் ஈசன்

செக தலத்தினில் புகழ் படைத்த மெய்த் திருவரத்துறைப் பெருமாளே

திருஞானசம்பந்தர் குறிப்பிடும் நெறிமுறைகளை கடைப்பிடித்து பெருமானை வாழ்த்தியும் வணங்கியும் அவனது அருள் பெறுவதற்கு உரிய தகுதியினை நாம் பெற்று, அவனது திருவருளால் இம்மையிலும் மறுமையிலும் பல நன்மைகள் பெற்று பயன் அடைவோமாக.



Share



Was this helpful?