இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


என்ன புண்ணியம் செய்தனை

என்ன புண்ணியம் செய்தனை

பதிக எண்: 2.106 - திருவலஞ்சுழி - நட்டராகம்

பின்னணி:

திருவலஞ்சுழி தலம் வந்தடைந்த திருஞானசம்பந்தரை, தலத்து அடியார்கள் வரவேற்க, திருஞான சம்பந்தரும் அடியார்களை எதிர் வணங்க, அனைவரும் அந்த தலத்தினில் உள்ள திருக்கோயில் சென்றனர். இறைவன் உறையும் கருவறையை வலம் வந்த ஞானசம்பந்தர் இறைவனை முன்னிலைப்படுத்தி, பாடல் தோறும் பலியேற்கச் செல்வதன் காரணம் யாது என்று வினவியராக விண்டெலாம் மலர என்று தொடங்கும் பதிகத்தை பாடி இறைவனை வாழ்த்துகின்றார். திருஞானசம்பந்தர் பல நாட்கள் இந்த தலத்தில் தங்கியிருந்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். அந்த நாட்களில் அவர் அருளிய இரண்டு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. இந்த இரண்டு பதிகங்களையும் தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறும் முகமாக நமக்கு அறிவுரை கூறும் பாடல்களுடன் பதிகத்தினை தொடங்குகின்றார். இந்த தன்மையை உணர்த்தும் முகமாக நன்மக்கள் தங்களது உள்ளத்தில் கொள்ளும் அறிவுரை அடங்கிய இன்தமிழ் பதிகங்கள் ஞானசம்பந்தர் பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்.

புலன் கொள் இன்தமிழ் போற்றினார் புறத்தினில் அணைந்தே

இலங்கு நீர்ப் பொன்னி சூழ் திருப்பதியினிலிருந்து

நலங்கொள் காதலின் நாதர் தாள் நாள்தொறும் பரவி

வலஞ்சுழிப் பெருமான் தொண்டர் தம்முடன் மகிழ்ந்தார்

இறைவனின் திருநாமம், கற்பகநாதர், கபர்தீஸ்வரர், ஜடாமகுட ஈஸ்வரர், சடைமுடி நாதர், வலஞ்சுழி நாதர், பெரிய நாயகி, ப்ருஹன்னாயகி, வண்டுவாழ் குழல் மங்கை என்பன அம்மையின் திருநாமங்கள்; குடந்தையைச் சுற்றி உள்ள சப்தஸ்தானங்கள் என்று சொல்லப்படும் ஏழு தலங்களில் இந்த தலம் ஒன்று. அந்த ஏழு தலங்களாவன, குடந்தை, கலயநல்லூர், வலஞ்சுழி, சுவாமிமலை, தாராசுரம் மற்றும் மேலக்காவிரி. சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப் படுகின்றது. பிரமன், திருமால், இந்திரன், முருகப்பெருமான், குபேரன், சாஸ்தா, செவ்வாய் கிரகம், மன்மதன், அக்னி தேவன், சுக்கிரன், சித்ரகுப்தன், தேவர்கள், பிருகு முனிவர், வேத வியாசர், அர்ஜுனன், ஹேரண்ட முனிவர், தூர்வாச முனிவர், பார்வதி தேவி, ஆதிசேஷன், அஷ்ட நாகங்கள், வழிபட்ட தலம்.

இன்றும் ஆதிசேஷன் சிவராத்திரி தினத்தன்று வலஞ்சுழி, நாகேச்சுரம், பாம்புரம் மற்றும் நாகைக் காரோணம் தலங்கள் சென்று வழிபடுவதாக நம்பப்படுகின்றது. ஆதி கல்பத்தில் ஆதிசேஷன் ஐந்து தலைகளைக் கொண்டு, சிவபிரானுக்கு ஆபரணமாக விளங்கிய போது, தேவர்கள் சிவபிரானை வணங்கும்போது தன்னையும் சேர்த்து வணங்குவதாக நினைத்துக் கொண்டு, தேவர்களை அனைவரையும் விட தான் உயர்ந்தவன் என்ற கர்வம் கொண்டான். இதனை அறிந்த சிவபிரான், ஆதிசேஷனை கையால் பிடித்து ஒரு மலை மீது அடிக்க, அவனது தலைகள் ஆயிரம் பாகங்களாக. சிதறியது. வலஞ்சுழி தலம் வந்தடைந்து சடைமுடிநாதரையும், சுவேத விநாயகரையும் வழிபட்டு அவர்களின் அருளால் சிதறிய பாகங்கள் ஆயிரம் தலைகளாக மாற, ஆதிசேஷனுக்கு ஆயிரம் தலைகள் ஏற்பட்டன. ஆதிசேஷன் பெருமானை வழிபட்ட செய்தி அப்பர் பிரானால் சொல்லப்படும் பாடலை (6.93.6) இங்கே காண்போம்.

கலம் சுழிக்கும் கருங்கடல் சூழ் வையம் தன்னில் கள்ளக் கடலில்

அழுந்தி வாளா

நலம் சுழியா எழுநெஞ்சே இன்பம்வேண்டில் நம்பன்தன்

அடியிணைக்கே நவில்வாயாகில்

அலம்சுழிக்கும் அந்நாகத்து அன்னான் மேய அருமறையோடு

ஆறங்கம் ஆனார் கோயில்

வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து

வான் ஆளலாமே

கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முகப்பில் ஐந்து நிலை இராஜகோபுரம். அதன் உட்புறத்தில் வடதிசையில் ஜடாபுஷ்கரணி எனப்படும் தீர்த்தமும் தென்புறத்தில் பைரவர் சன்னதியும் உள்ளன. வடபகுதியில் தெப்போற்சவ மண்டபமும் உள்ளது. கிழக்கு மேற்கு பகுதிகளில் நந்தவனங்கள் உள்ளன. கோயிலுக்குள் நுழையும் திருவாயிலுக்கு பஞ்சமூர்த்தி திருவாயில் என்று பெயர். திருவாயிலின் மேற்புறத்தில் பஞ்சமூர்த்திகள் தங்களுக்கு உரிய வாகனத்துடன் திருவுலா செல்லும் காட்சி சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சன்னதியை அடுத்துள்ள சுவாமி சன்னதியின் நுழைவாயில் சங்கரநாராயணன் திருவாயில் என்று அழைக்கப்படுகின்றது. வாயிலின் மேற்பகுதியில் சுதை வடிவத்தில் சங்கர நாராயணர் காட்சி அளிக்கின்றார். இதனை அடுத்து உள்ளது நூற்றுக்கால் நிறைபணி மண்டபம். இங்கே தூண்களின் உருவத்தில், அறுபது வருடங்கள், இரண்டு அயனங்கள், ஆறு பருவங்கள், பன்னிரண்டு மாதங்கள், எட்டு வசுக்கள், ஏழு மருத்துக்கள் (சப்த சஞ்சீவி), பஞ்சபிரம்மர்கள் தினமும் கபர்தீச பெருமானை வழிபடுவதாக ஐதீகம். நூற்றுக்கால் மண்டபத்தை அடுத்துள்ள பதினாறு தூண் மண்டபத்தின் இரு பகுதியிலும் (தெற்கு வடக்கு) இலக்குமி, சரசுவதி உருவங்களை காணலாம். இதனை அடுத்துள்ள சபா மண்டபத்தில் நடராஜப் பெருமானை காணலாம். இவரது திருவாசியில் ஐம்பத்தொரு சுடர் விளக்குகள், ஐம்பத்தொரு எழுத்துக்களை குறிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தை அடுத்து ஸ்நபன மண்டபமும் அர்த்த மண்டபமும் உள்ளன. சுவாமி சன்னதியின் வடகிழக்கு பகுதியில் வலஞ்சுழி நாதர், ஹேரண்ட முனிவர், சண்டீசர் சன்னதிகள் உள்ளன. சுவாமி சன்னதியின் தெற்கு பிராகாரத்தில் எட்டுகைகளை கொண்ட துர்கையையும் சப்த மாதர்களையும் காணலாம். சோமாஸ்கந்த பெருமானுக்கு தனி சன்னதி, அர்த்த மண்டபத்துடன் காணப்படுகின்றது. சன்னதியின் வாயிலில் தண்டி முண்டி என்று அழைக்கப்படும் இரண்டு துவாரபாலார்களையும் நாம் காணலாம்.

மேற்கு பிராகாரத்தில் வள்ளி தேவசேனையுடன், ஆறுமுகர் காட்சி தருகின்றார். இந்தச் சிற்பம் சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய இடங்களில் உள்ளது போல், நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டதாக விளங்குகின்றது. இந்த சன்னதியில் உள்ள மயிலின் முகம் முருகப்பெருமானின் இடது புறம் உள்ளதால் அசுர மயில் என்று அழைக்கப்படுகின்றது. சூரபத்மனை வெல்வதற்கு முன்னர் இருந்த மயில் வாகனம் தேவ மயிலாகவும், சூரபத்மனை வென்ற பின்னர் அவனது உடல் இரு கூறுகளாக பிரிந்து சேவலாகவும் மயிலாகவும் மாறிய பின்னர், வாகனமாக ஏற்றுக் கொண்ட மயில் அசுர மயிலாகவும் கருதப்படுகின்றது. அசுர மயில் மிகவும் அபூர்வமாகவே காணப்படும். அசுர மயில் என்பதால், இந்த சன்னதியில் மயிலின் கொண்டையை தனது இடது கையால் அழுத்தியபடி முருகப் பெருமான் இருப்பதை நாம் இங்கே காணலாம். இந்த சன்னதிக்கு அருகில் கஜலக்ஷ்மி சன்னதி உள்ளது. இதனை அடுத்து யாகசாலை உள்ளது. வடகிழக்கு மூலையில் தவம் புரியும் நாச்சியார் சன்னதியும் பள்ளியறையும் உள்ளன. பார்வதி தேவியின் அம்சமான ப்ருஹன்நாயகி சிவபிரானை திருமணம் புரிய வேண்டி இங்கே தவம் இருந்ததை நினைவூட்டும் வண்ணம் இந்த சன்னதி அமைந்துள்ளது. வடகிழக்கு மூலையில் எட்டு நாகங்களைக் காணலாம். அஷ்ட நாகங்களான அனந்தன், வாசுகி தட்சகன், கார்க்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கபாலன், குளிகன் என்ற இந்த நாகங்கள், சிவராத்திரி அன்று கபர்தீசப் பெருமானை வழிபட்டு, மனிதர்களுக்கு நாகதோஷத்தால் ஏற்படும் உபாதைகளை போக்கும் வல்லமையை பெற்றன. வெளி பிராகாரத்தில் தெற்கு பகுதியில் பைரவர் சன்னதி சிறு கோயிலாக உள்ளது. பைரவர் மிகவும் உக்கிரம் வாய்ந்தவராக இருந்ததால், உக்கிரத்தை தணிப்பதற்காக சிறிது பின்னப்படுத்தியதாக கூறுவர். தெற்கு வடக்கு பிராகாரங்களில் காணப்படும் இலிங்கங்கள், தூர்வாச முனிவர் செய்த யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களும் முனிவர்களும் தாபித்து வழிபட்ட இலிங்கங்களாகும். நவகிரக சன்னதிகள் இல்லாத கோயில். ஆனால் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. சனீஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது. சிவபிரானை பார்த்த நிலையில் இருக்கும் சூரியனை பார்த்த நிலையில் சனி பகவான் அமர்ந்திருப்பது இந்த தலத்தின் தனி சிறப்பு. பொதுவாக நவக்ரக சன்னதியில் எந்த ஒரு கிரகமும் மற்றொரு கிரகத்தை பார்த்தவாறு இருப்பதில்லை. அதிலும் சனிபகவான் சூரியனுக்கு பகையாக இருப்பதால், இவ்வாறு ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருப்பது மிகவும் அபூர்வம்.

மூலவர் சன்னதிக்கு வலது பக்கத்தில் அம்பாள் சன்னதி இருப்பதால் திருமணக்கோலம் கொண்ட கோயிலாக கருதப்படுகின்றது. அழகிய சிறிய இராஜகோபுரத்துடன், அம்பாள் சன்னதி தனிக் கோயிலாக விளங்குகின்றது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் ஆறு தூண்களைக் கொண்ட மண்டபம் காணப்படுகின்றது. உடலில் உள்ள ஆறு ஆதாரங்களான, மூலாதாரம். சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா சக்கரம் ஆகியவற்றை குறிக்கும் தூண்கள் என்பர். பெயருக்கு ஏற்ப கம்பீரத்துடன், ஒரு கையினை தொடையில் வைத்தபடி, மற்றொரு கையால் நமக்கு அபயம் அளித்தபடி காட்சி தரும் அம்பாள் மிகவும் அழகு. அம்பாள் சன்னதியில், இரட்டை விநாயகர், அட்டபுஜ காளியம்மை, சண்டீச்வரி, ஆடிப்பூர மனோன்மணி சன்னதிகள் உள்ளன. மேலும் மராட்டிய காலத்து வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன.

பாடல் 1

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து

முன்ன நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்

மன்னு காவிரி சூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்

பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே

விளக்கம்:

முன்னைப் பிறவியின் பயன் தான் தான் வலஞ்சுழி பெருமானை வழிபடச் செய்தது என்று திருஞானசம்பந்தர் கூறும் கருத்து, சூலை நோய் தந்து அப்பர் பெருமானை ஆட்கொள்வதாக சிவபிரான் திலகவதியாரிடம் கூறியதை நினைவூட்டுகின்றது. சிவபிரான் அப்போது, முன்னமே முனியாகி என்னை அடைய தவம் செய்தவன் என்று அப்பர் பிரான் வாகீச முனிவனாக சென்ற பிறவியில் இருந்ததையும் அந்த பிறவியில் தவம் செய்ததையும் குறிப்பிடுகிறார். இதனை விளக்கும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னு தபோதனியார்க்குத் கனவின் கண் மழ விடையார்

உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன்பிறந்தான்

முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான்

அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வோம் என அருளி

சென்ற பிறவிகளில் நல்வினைகள் செய்தவர்களே இந்த பிறவியில் பெருமானை தொழுதெழும் சிந்தை உடையவர்களாக இருப்பார்கள் என்பதை ஞானசம்பந்தர் உணர்த்தும் சீர்காழி தலத்தின் பாடலை (3.03.11) இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். நடலை=துன்பம்; பிறவி எடுத்தால் உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்கள்; புண்ணியர்=சென்ற பிறவிகளில் நல்வினைகள் புரிந்தவர்கள்;

புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்

விண்ணவர் அடி தொழ விளங்கினானை

நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை

பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார்

நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர் சிவனுலகம்

இடராயின இன்றித் தாம் எய்துவர் தவநெறியே

இந்த கருத்து நமக்கு அப்பர் பிரான் திருவாரூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் (5.07.2) ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. தனது நெஞ்சத்தினை நோக்கி அப்பர் பிரான், நெஞ்சமே ஆரூர் அரநெறி அப்பன், உனது சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்க நீ என்ன தவம் செய்தாய், என்று வினவுகின்றார்.

என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே

பந்தம் வீடு அவை ஆய பராபரன்

அந்தமில் புகழ் ஆரூர் அரநெறி

சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே

சென்ற பிறவியில் நாம் செய்த நல்வினைகள் தாம், இந்த பிறவியில் நாம் சிவபெருமானை வழிபடத் தூண்டும், இது சிவபெருமானின் அருளால் நிகழ்வது. இதனையே மணிவாசகர் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். இதே கருத்தினை மயிலாடுதுறை மீது அருளிய குறுந்தொகைப் பதிகம் (5.39) ஒன்றினில் அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். சிவபெருமான் மீது கொண்ட காதலால். அவனது பெருமைகளை அறிந்த தலைவி சிவபெருமானின் நினைவுகளை தனது நெஞ்சினுள்ளே வைத்தும், தலையில் தாங்கியும் பெருமை கொள்கின்றாள். அதற்கு தான் செய்த தவம் என்ன என்று தனது நெஞ்சினை நோக்கி வினவும் பாடல்.

நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்

கலைகள் ஆய வல்லான் கயிலாய நன்

மலையன் மா மயிலாடுதுறையான் நம்

தலையின் மேலும் மனத்துளும் நிற்கவே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றிலும் (5.77.2) அப்பர் பிரான் நெஞ்சமே செந்நெறி மன்னு சோதி இறைவனார் உன்னுள் வந்து தங்குவதற்கு நீ என்ன தவம் செய்தாய், என்று வினவுகின்றார். விழுப்பொருள்=கருப்பொருள்; மன்னு சோதி=நிலை பெற்ற சோதி; வைகுதல்=வெளிப் படுதல்:

என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே

மின்னு வார் சடை வேத விழுப் பொருள்

செந்நெலார் வயல் சேறையுள் செந்நெறி

மன்னு சோதி நம்பால் வந்து வைகவே

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.98) ஒரு பாடலில் சம்பந்தர், தான் சென்ற பிறவியில் இறைவனை ஒரு பொழுதும் மறக்காமல் இருந்ததாகவும், அவ்வாறு இருந்த தனக்கு முக்தி அளிக்காமல் மறுபடியும் மண்ணுலகில் பிறக்கச் செய்தது ஏன் என்றும் வினவுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். பிறப்பிறப்பினைத் தவிர்க்கும் வழியை நீ எனக்கு உணர்த்தாமல், பிறவிப் பிணியினை எனக்குத் தந்து சென்ற பிறவியில் இறக்குமாறும் இந்த பிறவியில் மறுபடியும் இந்த மண்ணுலகில் பிறக்குமாறும் செய்தது நியாயமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. துறத்தல் என்பதை ஒரு துறவி தான் அடுத்தவருக்கு கற்றுத் தரமுடியும் என்பதால், பகலில் துறவிக் கோலம் பூண்டு வேதங்களை உபதேசம் செய்தவனாகிய துருத்திப் பெருமானை நோக்கி இந்த கேள்வி கேட்கப்படுகின்றது. இவ்வாறு மறுபடியும் நான் பிறப்பு எடுப்பதற்கு நான் செய்த தவறு தான் என்னே என்றும் கேட்கின்றார்.

துறக்குமாறு சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி

மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின் மேல்

பிறக்குமாறு காட்டினாய் பிணிப் படும் உடம்பு விட்டு

இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே

கயிலாயத்தில் இறைவனுக்கு அணுக்கத் தொண்டராய் சுந்தரர் வாழ்ந்து வந்ததையும், நம்பி ஆரூரராக தமிழகத்தில் வாழ்ந்த வாழ்க்கை முடிந்தபின்னர் அவர் மீண்டும் கயிலாயம் சென்று இறைவனுடன் இணைந்ததையும் நாம் அறிவோம். திருஞானசம்பந்தர், அப்பர் பிரான், ஆகிய இருவரும் இறைவனுடன் கலந்ததை பெரியபுராணம் எடுத்துச் சொல்கின்றது. தில்லைச் சிற்றம்பலத்தில், திருவாசகத்தின் பொருள் யாது என்று கேட்ட அன்பர்களுக்கு பெருமானை சுட்டிக் காட்டி பெருமானுடன் மணிவாசகர் கலந்தார்; இவ்வாறு நால்வரும் தவநெறியையும் அதன் பயனாக முக்தி நிலையையும் அடைந்தனர்.

வழிவழியாக, பாண்டிய மன்னனுக்கு அமைச்சர் தொழில் செய்து வந்த, ஆமாத்தியர் குடியில் பிறந்தவர் மணிவாசகர். எனவே சிறு வயதில் அவர் தன்னை, அமைச்சுத் தொழிலுக்கு தகுந்தவனாக உருவாக்கிக் கொள்வதிலும், அமைச்சரான பின்னர், அரசுப் பணிகளில் முழு கவனம் செலுத்துவதிலும் அவர் காலத்தை கழித்திருக்க வேண்டும். அதுவும் முதல் அமைச்சராக பதவி வகுத்த, மணிவாசகருக்கு அரசுப் பணிகள் செய்வதைத் தவிர வேறு எதிலும் நாட்டமும் நேரமும் இருந்திருக்காது, அதனால் தான், திருஏசறவு பதிகத்தில் நானேயோ தவம் செய்தேன், பெருமானின் திருநாமத்தைச் சொல்வதற்கு என்று மிகவும் வியந்து பாடுகின்றார். சிவபெருமான் இவரைத் தடுத்து ஆட்கொண்ட சமயத்திலும், அரசுப் பணியினை மேற்கொண்டு குதிரைகள் வாங்குவதற்காக தொண்டித் துறைமுகம் நோக்கி மணிவாசகர் சென்று கொண்டிருந்தார். எனவே சிவபெருமான் அவரை ஆட்கொண்டதற்கு காரணம், அவர் சென்ற பிறப்பில் செய்த தவமாகத் தான் இருக்க வேண்டும். இவ்வாறு நால்வருமே, சென்ற பிறப்பில் செய்த தவப் பயனால் எத்தைகைய பேற்றினைப் பெற்றார்கள் என்பதை நாம் உணரலாம். நால்வர் பெருமானார்கள், தாங்கள் பெற்ற பேற்றினை, தங்களது அனுபவத்தினை பாடல்களாக வடித்து, அந்த பாடல்களை பாடுவதன் மூலம் நாமும் இறைவனைப் புகழ்ந்து பாடி மகிழுமாறு செய்துள்ளார்கள்.

நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்

தேனாய் இன்னமுதமுமாய் தித்திக்கும் சிவபெருமான்

தானே வந்தெனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்

ஊனாரும் உயிர் வாழ்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே

நாம் செய்த தவத்தினால் இந்த நிலவுலகில் பிறக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ள நாம், இந்த தவத்தின் முழுப் பயனை அடைய விரும்பினால் செய்ய வேண்டியது என்ன என்று அப்பர் பிரான் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடலையும் இங்கே காண்போம். இந்த பாடல் தில்லையின் மீது அருளப்பட்டுள்ள பதிகத்தின் பாடல் (4.81.5). எனவே நாம் பெற்றுள்ள மனிதப் பிறவியை இறைவன் நமக்கு அளித்த வரமாக கருதி, பெருமான் நிலவுலகில் பல தலங்களில் எழுந்தருளி அருள் புரியும் நிலையை பயன்படுத்திக் கொண்டு, அவனை வணங்கி வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தின் பாடல் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். கூழைமை=கடமை;

வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்

பார்த்தற்கு பாசுபதம் அருள் செய்தவன் பத்தருள்ளீர்

கோத்தன்று முப்புரம் தீ வளைத்தான் தில்லை அம்பலத்துக்

கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நந்தம் கூழைமையே

இருங்கடல்=பெரிய கடல்; கடல் வையம்=கடலால் சூழப்பட்ட உலகம்; முன்ன=சென்ற பல பிறவிகள்; பாடுதல்=வாயின் தொழில்; ஆதரித்தல்=மனத்தின் தொழில்; வழிபடுதல்=உடலின் செயல்; மூன்று விதமான கரணங்களாலும் இறைவனை வழிபடும் முறை இங்கே உணர்த்தப் படுகின்றது. நிலையான காவிரி நதி என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பண்டைய நாளில் வற்றான ஜீவநதியாக காவிரி இருந்த நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. பன்னி= மீண்டும் மீண்டும்

பொழிப்புரை:

நெஞ்சமே நீ எத்தகைய புண்ணியத்தை செய்துள்ளாய்; நீ சென்ற பிறவிகளில் செய்த சிறப்பான புண்ணியத்தின் விளைவாக, பெரிய கடல்களால் சூழப்பட்டுள்ள இந்த நிலத்தினில் நிலையாக பாயும் காவிரி நதியால், முழுமையான மணிகளையும் முத்துக்களையும் அடித்துக் கொண்டு வரும் காவிரி நதியால், சூழப்பட்டுள்ள வலஞ்சுழி தலத்தினில் உறையும் வாணனை, வாயார மீண்டும் மீண்டும் பாடியும் மனதினால் அவனை உயர்வாக நினைத்து ஆதரித்தும் வழிபட்டும் இருக்கும் தன்மையினை பெற்றுள்ளாய்.

பாடல் 2;

விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வரு நஞ்சம்

உண்டு இறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை உலகத்தில்

வண்டு வாழ் குழல் மங்கை ஓர் பங்கனை வலஞ்சுழி இடமாகக்

கொண்ட நாதன் மெய்த் தொழில் புரி தொண்டரோடு இனிது

இருந்தமையாலே

விளக்கம்:

பெருமானை வழிபடும் தன்மையினை உயிர்கள் பெற்றதை சென்ற பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், பெருமானைத் தொழுது வாழும் அடியார்களுடன் கூடி இருந்ததால் தான் அடைந்த பயனை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு தான், இந்த தலத்தினில் ஞானசம்பந்தர் பல நாட்கள் அடியார்களுடன் இணைந்து இருந்ததாக கூறுவதற்கு ஆதாரமாக இருந்தது போலும். சேக்கிழார் போன்று தேவாரப் பாடல்களில் காணப்படும் பல செய்திகளை ரசித்து ஊன்றி படித்தவர் வேறு எவரும் இல்லை என்றே சொல்லலாம். அடியார்களுடன் இணைந்து இருந்ததால் தன்னுடன் பிணைந்துள்ள வினைகளை முற்றிலும் அறுத்து ஒழிக்கப்பட்டது என்று கூறுகின்றார். பாற்கடல் நுரையினால் செய்யப்பட்ட விநாயகரைக் கண்ட ஞானசம்பந்தருக்கு, பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டு தேவர்களை இறைவன் காத்த நிகழ்ச்சியை குறிப்பிடவேண்டும் என்று தோன்றியது போலும்.. இறைவனைத் தொழுவது மட்டுமன்றி, இறைவனது அடியார்களுடன் கூடியிருக்கும் பேறும் தனக்கு வாய்த்தது என்று ஞானசம்பந்தர் பெருமையுடன் கூறுகின்றார். சென்ற பாடலின் தொடர்ச்சியாக இந்த பாடல் இருப்பதால், முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பயனாகத் தான், அடியார்களுடன் கலந்திருக்கும் பேறு கிடைத்ததாக ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. வண்டார் குழலி என்று தலத்து இறைவியின் திருநாமத்தை, வண்டுவாழ் குழலம்மை என்ற திருநாமத்தை சற்று மாற்றி குறிப்பிடுகின்றார். வண்டார்குழலி என்ற திருநாமம், கோட்டாறு கோளிலி, பிரமபுரம், மருகல் ஆகிய தலங்களில் உறையும் தேவியின் திருநாமமாக உள்ளது. .

பொழிப்புரை:

என்னைப் பற்றியிருந்த வலிமை வாய்ந்த வினைகள் முழுமையாக விண்டு அறுந்து ஒழிந்தன. இதற்கு காரணம் யாது என்று வினவுவீராயின் சொல்கின்றேன் கேட்பீர்களாக. பண்டைய நாளில் விரிந்த பாற்கடலிலிருந்து தோன்றிய நஞ்சினை உட்கொண்டு, அந்த நஞ்சின் தாக்கத்திலிருந்து, தன்னைப் பணிந்து வேண்டிய தேவர்களை காப்பாற்றிய பெருமானை, வண்டுகள் சூழும் வண்ணம் நறுமணம் உடைய கூந்தல் கொண்டுள்ள உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள இறைவனை, வலஞ்சுழி தலத்தினை உறைவிடமாக கொண்டுள்ள இறைவனைத் தொழுது உண்மையான தொண்டு புரியும் தொண்டர்களுடன் கூடியிருந்த தன்மை தான், நான் அடைந்த இந்த பேற்றுக்கு காரணமாகும். இவ்வாறு தொண்டர்களுடன் இணைந்து இருந்த அனுபவம் மிகவும் இனிமையாக இருந்தது.

பாடல் 3;

திருந்தலார் புரம் தீயெழச் செறுவன விறலின் கண் அடியாரைப்

பரிந்து காப்பான பத்தியில் வருவன மத்தமாம் பிணி நோய்க்கு

மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடமாக

இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடித் தலம் தானே

விளக்கம்:

திருந்தலார்=தங்களது தவறான வழியிலிருந்து திருந்தாத திரிபுரத்து அரக்கர்கள்; திரிபுரத்து அரக்கர்கள் தொடர்ந்து தவறுகள் செய்த காரணத்தால் தான் பெருமான் அவர்களுடன் போரிடச் சென்றார். விறல்=பெருமை; மத்தம்=மயக்கம்; மத்தமாம் பிணிநோய் என்ற தொடருக்கு, உன்மத்தம் முதலான உடலுடன் தொடர்பு கொண்டுள்ள நோய்கள் என்றும் பொருள் கொள்கின்றனர். எனினும் மத்தமாம் பிணி நோய் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மனதினை அறியாமையில் ஆழ்த்தி, இறைவனை நாம் சிந்தியாது இருக்கும் வகையினில் நம்மை மயக்கும் மலங்களின் தொடர்பால் ஏற்படும் நோய் என்று பொருள் கொள்வது சிறப்பாக உள்ளது.. மத்தமாம் பிணி நோய் தானே நம்மை பிறப்புச் சுழற்சியிலிருந்து வெளியே வாராத வண்ணம் தடுக்கின்றது. எனவே இந்த மத்தமாம் பிணை நோய்க்கு மருந்துமாகி மந்திரமாகி பெருமான் இருக்கும் நிலை, நமது பிறவிப் பிணியைத் தீர்ப்பவராக பெருமான் விளங்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு பெருமானின் திருநாமமும் பெருமானின் திருவடிவும், பிறவிப்பிணிக்கு மருந்தாக இருக்கும் தன்மை பல தேவாரப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். பெருமானின் திருவேடங்கள் மருந்தாகவும் மந்திரமாகவும் செயல்படும் தன்மையை திருஞானசம்பந்தர் திருந்துதேவன்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.25.1) குறிப்பிடுகின்றார்.

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை

புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை

திருந்துதேவன்குடித் தேவர் தேவு எய்திய

அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே

திருந்துதேவன்குடி தலத்து பெருமானது அடையாளங்களாகிய திருநீறு உருத்திராக்கம் மற்றும் சடைமுடி ஆகியவற்ற கண்ணால் கண்டாலும் அல்லது மனதினால் நினைத்தாலும் ஏற்படும் பயன் யாதென்பதை இங்கே கூறுகின்றேன்; இந்த அடையாளங்கள், தங்களது நோய்களை தீர்த்துக் கொள்ள விரும்பும் அடியார்களுக்கு மருந்தாகவும், ஐந்தெழுத்து மந்திரம், வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாடல்கள் ஆகியவற்றை சொல்ல விரும்பும் அடியார்களுக்கு அத்தகைய மந்திரங்களாகவும், சிவ புண்ணியங்கள் செய்ய விரும்பும் அடியார்களுக்கு, அத்தகைய புண்ணியங்கள் அளிக்கும் பயன்களாகவும் விளங்குகின்றன, இத்தகைய வேடங்களை தனது அடையாளமாகக் கொண்டுள்ள இறைவன், தேவதேவன் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் தலம் திருந்துதேவன்குடி என்பதாகும். இந்த பெருமானின் திருவேடங்களை, அரிய தவம் புரியும் முனிவர்கள் தியானித்து தொழுகின்றனர், என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.110) முதல் பாடலில் பிறவிப் பிணிக்கு மருந்தாக உள்ளவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நாம் கொண்டுள்ள வினைகளின் தன்மைக்கு ஏற்ப, பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக உள்ள இறைவன் தானே, அந்த பிறப்பையும் இறப்பையும் தடுக்க வல்லவன். எனவே தான் இந்த பாடலில் உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக உள்ளவன் பெருமான் என்று கூறுகின்றார். இறவு=இறப்பு;

மருந்தவன் வானவன் தானவர்க்கும்

பெருந்தகை பிறவினொடு இறவும் ஆனான்.

அருந்தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ்

இருந்தவன் வளநகர் இடைமருதே

நல்வினைகளையும் தீவினைகளையும் நுகர்ந்து கழிக்க வேண்டிய நிலையில் அனைத்து உயிர்களும் உள்ளன. நல்வினைகளால் இன்பங்களும் தீவினைகளால் துன்பங்களும் துயரங்களும் உயிர்களுக்கு உண்டாகின்றன. இந்த பிறப்பினில் நமது தீவினைகளால் ஏற்படும் துயரங்களைத் தீர்த்துக் கொண்டு, மறுமையில் பிறப்பையே அடியோடு தவிர்க்க எண்ணினால், அதற்கு மருந்தாக பயன்படுபவன் பெருமான் ஒருவன் தான் என்று புள்ளிருக்குவேளூர் தலத்து பதிகத்தின் கடைப் பாடலில் (2.43.11) திருஞான சம்பந்தர் கூறுகின்றார். செடியாய=குணம் இல்லாத; கடி=நறுமணம்; கடியார்ந்த=நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த; சோம்பியிராமல் தேவாரப் பாடல்களை சொல்லும் வல்லமை உடைய அடியார்களுக்கு மறுபிறவி கிடையாத வண்ணம் பெருமான் அருள் புரிவான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பொடியாடி=திருநீற்றினை உடல் முழுதும் பூசிக் கொண்டவன், திருநீற்றில் நீராடியது போன்று உடல் முழுதும் திருநீற்றின் வண்ணமும் துகள்களும் உடைய பெருமானின் திருக்கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது.

செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கொர் மருந்தாவான்

பொடியாடிக்கு அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்

கடியார்ந்த பொழில் காழி கவுணியன் சம்பந்தன் சொல்

மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே

இம்மையில் நோய் தீர்க்கும் மந்திரமாகவும் மருந்தாகவும் செயல்படும் பெருமானின் திருநாமம், மறுமையில் நமது உயிர் நன்னெறி அடைவதற்கும் உதவும் என்று திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் திருஞானசம்பந்தர் (3.92.1) கூறுகின்றார். மேலும் மழபாடி மேய மருந்து என்றும் வலஞ்சுழி மருந்து என்றும், மாத்தூர் மேய மருந்து என்றும், தேவர்கள் தேடும் மருந்து என்றும், மணஞ்சேரி மருந்து என்றும், பல பாடல்களில் தேவார ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். புறவு=தோட்டம்;

மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறி அவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே

பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்

செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே

ஆணவ மலத்தின் தாக்கத்தால் நமது மனம் அறியாமையில் மூழ்கி கிடக்கின்றது, அதனால் உண்மையான மெய்பொருளை அறிந்து கொள்ளாமல் நிலையில்லாத பொருட்களை நிலையான பொருட்களாக நினைக்கும் மயக்க நிலை நமக்கு ஏற்படுகின்றது. இந்த மயக்கம் தீர்க்கும் மருந்தாக செயல்படுபவன் இறைவன் என்று பாவநாசத் திருப்பதிகத்தின் பாடல் (4.15.3) ஒன்றினில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நெதி=செல்வம்; சூரியனின் கதிர்கள் சந்திரனை விடவும் அதிகமாக வெளிச்சம் அளிப்பன, ஆனால் வெளிச்சத்துடன் வெப்பத்தையும் சேர்ந்து சூரியனின் கதிர்கள் அளிக்கின்றன. சந்திரனின் கதிர்கள் குளிர்ச்சியை அளிப்பன, இறைவன் சந்திரன் குளிர்ச்சியும் சூரியனின் வெளிச்சமும் கொண்ட கதிர்களாக இருப்பதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

மதியம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை ஐயாறமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய ஒரு பாடலில் (4.62.3) பாடலின் நான்கு அடிகளிலும் மருந்தாக பெருமான் செயல்படும் தன்மையை அப்பர் பிரான் விளக்குகின்றார். ஒரு மருந்து=ஒப்பற்ற தனி மருந்து; மருந்தாக செயல்படுவதில் ஒப்பற்றவன் பெருமான் என்று பாடலை அப்பர் பிரான் துவக்குகின்றார். பெருமருந்து=ஏனைய மருந்துகளுக்கு தலையான மருந்து; கருமருந்து=பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்து; அருமருந்து=கிடைத்தற்கு அரிய மருந்து;

ஒரு மருந்தாகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம்

பெரு மருந்தாகி நின்றாய் பேரமுதின் சுவையாய்

கரு மருந்தாகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும்

அருமருந்து ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

தனது அடியார்களை பீடித்துள்ள வலிமையான வினைகளையும் தீர்க்கும் மருந்தாக செயல்படும் வல்லமை உடைய பெருமான், பற்கள் இல்லாமலும் உலர்ந்தும் காணப்படும் பிரமனின் கபாலத்தைக் கையில் ஏந்தியவாறு எங்கும் திரிகின்றார் என்றும், பலருக்கும் நன்மை பயப்பவராக விளங்கும் பெருமான், விடத்தை உடையதாக இருந்தாலும் பெருமானுடன் இணைந்த பின்னர் நல்ல குணம் உடையதாக மாறிய பாம்பினைத் தனது இடையில் பூண்டுள்ள பெருமான், தனது விருப்பம் போல் அந்த பாம்பினை ஆட்டுகின்றார் என்றும், பிச்சை ஏற்றாலும் உண்மையில் முக்திச் செல்வம் எனப்படும் சிறந்த செல்வத்தை உடையவராக இருக்கும் பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார் என்றும் அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் நாகேச்சரத்து தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் (5.52.1) முதல் பாடலாகும். விடம் கொண்டுள்ள தன்மையால் அனைவரையும் அச்சுறுத்தும் பாம்பு நல்ல குணமுடைய நாகம் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. இறைவனின் சன்னதியில் நல்லன அல்லாத பொருட்களுக்கு இடம் ஏது. கொலை வெறியுடன் தாக்க வந்த மான்கன்று, தனது கொலை வெறியை விடுத்து, துள்ளி விளையாடும் மான்குட்டியாக பெருமானின் கைகளில் திகழ்வது போல் பாம்பும் தனது கொடிய குணத்தை விட்டுவிட்டு நல்ல குணமுடைய பாம்பாக அடங்கி விடுகின்றது. சந்திரனிடம் தான் கொண்டுள்ள பகையையும் மறந்து, சந்திரனுடன் பெருமானின் சடையில் தாங்கும் பாம்பு பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது. நல்லான் ஆகிய பெருமானுடன் இணைந்த பாம்பு, தனது கொடிய குணத்தினை விட்டு விட்டு நல்ல குணத்துடன் திகழ்கின்றது

நல்லர் நல்லதோர் நாகம் கொண்டு ஆட்டுவர்

வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்

பல் இல் ஓடு கை ஏந்திப் பலிதிரி

செல்வர் போல் திரு நாகேச்சரவரே.

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.60.4) இறைவனை, நோய்கள் தீர்க்கும் மருந்து என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். மந்திரமாக உள்ள அஞ்செழுத்து மருந்தாகவும் பயன்படும் நிலை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்து=சிந்தித்து இருந்து; ஏழைகாள்=அறிவில் ஏழையாக இருப்பவர்களே; அருந்தவம் தரும்=மிகவும் அறிய தவங்களைச் செய்வதால் கிடைக்கும் பலன்கள்; பொருந்து=உடலில் பொருந்திய; துரப்பது=நீக்குவது; மன்னும்=நிலை பெற்ற;

இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்

அருந்தவம் தரும் அஞ்செழுத்து ஓதினால்

பொருந்து நோய் பிணி போகத் துரப்பதோர்

மருந்தும் ஆவர் மன்னு மாற்பேறரே

மேலும் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப்படும் தலத்தில் (தற்போதைய பெயர் வைத்தீசுவரன் கோயில்) இறைவன் மருத்துவனாக காயங்களுக்கு சிகிச்சை (முருகப் பெருமானின் படைவீரர்களுக்கு) செய்த நிலை இந்த திருக்கோயிலின் தலபுராணத்தில் கூறப்படுகின்றது. தாரகாசுரனுடன் நடந்த போரில் காயம் அடைந்த தனது படை வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யுமாறு இறைவனை முருகக் கடவுள் வேண்டுகிறார். இறைவனுடன் இறைவியும், எண்ணெய் கிண்ணத்துடன், சிவபிரான் கொடுக்கும் மருந்துகளை குழைத்து காயங்களில் தடவுதற்கு வசதியாக வருகிறார். இதனால் அம்மைக்கு தைல நாயகி என்ற பெயர் வந்தது. தைல நாயகி நாளைடைவில் தையல்நாயகி என்று மருவிவிட்டது. இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர் வந்த காரணம் இது தான். இந்த தலத்தில் உள்ள வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து தான் சிவபிரான் வைத்தியம் பார்த்ததாக நம்பப் படுகின்றது. வைத்தியநாதனாக சிவபிரான் அருள் புரிந்தமை குறித்து அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது இயற்றிய தனது தேவாரப் பதிகத்தில் (ஆண்டானை அடியேனை ஆளாக கொண்டு எனத் தொடங்கும் பதிகம்) எட்டாவது பாடலில் பாடியுள்ளார். வாராத செல்வம் என்று குறிப்பிடுவதை எளிதில் கிடைக்காத வீடு பேறு செல்வம் என்றும், மறுபடியும் இந்த உலகில் வந்து பிறவாத நிலையை உடைய செல்வம் என்றும் கொள்ளலாம். எப்போதும் இறைவனை பிரியாது வழிபடும் அடியவர்க்கு இந்த நிலை அருளப்படும் என்பதும் இந்தப் பாடலில் உணர்த்தப்படுகின்றது.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிரிவு இலா

அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும்

மருந்தும் ஆகி

தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீ எழ

திண்சிலை கைக் கொண்ட

போரானை புள்ளிருக்கு வேளூரானை போற்றாதே ஆற்ற

நாள் போக்கினேனே

நமது தீவினைகளையும் அந்த தீவினைகளால் ஏற்படும் மயக்கத்தினையும் போக்கும் மருந்தாக செயல்படுபவனும் ஆகிய இறைவன், திருமறைக்காடு தலத்தில் மணாளனாக திகழ்கின்றார் என்று திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (6.23.8) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அம்மை=வீடுபேறு; என்றும் அழியாத நிலையான பேரின்பத்தை வீடுபேறு உயிருக்கு தருவதால், அதனை அமிர்தம் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பொதுவாக உலகினில் அனைவரும் தன்னை விடவும் தனக்கு நெருங்கிய, தன்னை விடவும் இனிய பொருளாக வேறு எதையும் கருதுவதில்லை. மம்மர்=மயக்கம்;

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அந்தேன் தெளி கண்டாய்

ஆக்கம் செய்திட்டு

இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில்

இனியான் கண்டாய்

மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய் வெண்காடன் கண்டாய்

வினைகள் போக

மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும்

மணாளன் தானே

ஆணவ மலம் ஏற்படுத்தும் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் சிந்தனை உடையவர்களுக்கு அவர்களது மயக்கத்தை போக்கும் மருந்தாக செயல்படுபவன் சிவபெருமான் என்று ஆரூர் அரநெறி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.33.7) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

பொருளியல் நற்சொல் பதங்கள் ஆயினானைப் புகலூரும்

புறம்பயமும் மேயான் தன்னை

மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து தன்னை மறைக்காடும்

சாய்க்காடும் மன்னினானை

இருளியல் நற்பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிதமரும் பெருமானை

இமையோரேத்த

அருளியனை அரநெறியில் அப்பன் தன்னை அடைந்தடியேன் அருவினை

நோய் அறுத்தவாறே ,

மாமுனிவர் தம்முடைய மருந்து என்று அப்பர் பிரான் வலஞ்சுழி மற்றும் கொட்டையூர் தலங்களை இணைத்து பாடிய பதிகத்தின் பாடலில் (6.73.6) குறிப்பிடுகின்றார். நமது பிறவிப் பிணிக்கு இறைவன் சிறந்த மருந்து என்பதை நாம் அறிந்தாலும், நமது பிறவிப் பிணியினை தீர்த்துக் கொள்வதற்கு நாம் முயற்சிகள் ஏதும் எடுப்பதில்லை. ஆனால் இதனை உணர்ந்துள்ள முனிவர்கள், உலகப் பொருட்கள் மீதும் உலகத்து உயிர்கள் மீது தாங்கள் கொண்டிருந்த பாசத்தினை நீக்கி, துறவறம் மேற்கொண்டு இறைவனை தியானம் செய்து அதன் பயனாக தங்களது பிறவிப் பிணியினை அறுத்துக் கொள்வதை உணர்த்தும் பொருட்டு, மாமுனிவர் தம்முடைய மருந்து என்று இங்கே குறிப்பிடுகின்றார். சண்டன்=சண்டீசன்; தேவர்களும் தொழும் நிலைக்கு சண்டீசனை உயர்த்திய செய்தி இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது.

சண்டனை நல்லண்டர் தொழச் செய்தான் கண்டாய் சதாசிவன்

கண்டாய் சங்கரன் தான் கண்டாய்

தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடரொளியாய்த்

தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய்

மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாமுனிவர்

தம்முடைய மருந்து கண்டாய்

கொண்டல் தவழ் கொடிமாடக் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும்

கோமான் தானே

கோடிகா தலத்தின் மீது அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகத்தின் முதல் பாடலில் (6.81.1) மீண்டும் மீண்டும் பிறப்புக்கு வழிவகுக்கும் மயக்க நிலைக்கு மருந்தாக இருப்பவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். கண்டலம்=கண் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள: மண்டலம்=பல வகை உலகங்கள்; விண்டலம்=தேவர் உலகம்; கொண்டலம்=கொண்டல்+அம்=அழகிய மேகம், அழகிய மேகம் கொண்டுள்ள கருமை நிறம்;

கண்டலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய் கல்மதில் சூழ்

கந்தமாதனத்தான் கண்டாய்

மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம்

மேயான் கண்டாய்

விண்டலம் சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத

விகிர்தன் கண்டாய்

கொண்டலம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையும்

குழகன் தானே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.7) அப்பர் பிரான், தொண்டர்களை பிணித்துள்ள வலிமையான வினைகளை வேரறுக்கும் மருந்தாக இறைவன் திகழ்கின்றான் என்று கூறுகின்றார். ஐம்புலனும் காத்தான்=ஐந்து புலன்களும் சேட்டைகள் செய்து அடியார்களின் சிந்தனையை திசை திருப்பாத வண்ணம் காப்பவன்; பொங்க=செழிக்க, சிறந்து விளங்க; மாத்து=பெருமை; மகத் என்ற வடமொழி சொல்லின் திரிபு; மாத்தாடி=பெருமை உடைய நடனம்; யானையின் தோலை உரித்தபோது சிவபெருமானின் திருமேனி மிகுந்த ஒளியுடன் விளங்கியது என்றும், அந்த ஒளியினைக் காண முடியாமல் தேவர்களின் கண்கள் கூசியது என்றும், தேவர்களின் துயரத்தைத் தீர்ப்பதற்காக இறைவன், யானையின் தோலைத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டான் என்றும் புராணம் கூறுகின்றது. இவ்வாறு ஒளி மிகுந்து இறைவனின் திருமேனி விளங்கிய செய்தியை அப்பர் பிரான் இங்கே பொங்கப் பொங்க என்று கூறுகின்றார்.

போர்த்து ஆனையின் உரிதோல் பொங்கப் பொங்கப் புலி அதளே

உடையாகத் திரிவான் தன்னை

காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால்

காய்ந்தான் தன்னை

மாத்தாடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேரறும் வண்ணம்

மருந்துமாகித்

தீர்த்தானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே

திகைத்தவாறே

சென்னையில் உள்ள திருவான்மியூர் தலத்திற்கு அகத்திய முனிவர் வந்த போது அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது என்றும் அவருக்கு சிவபெருமான், பல அபூர்வமான மூலிகைகளை சுட்டிக் காட்டி அவற்றால் பல விதமான நோய்களை தீர்க்கும் கலையை கற்றுக் கொடுத்தார் என்றும், அதனால் தான் இந்த தலத்து இறைவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். திருக்கச்சூர் மலைக்கோயில் இறைவனின் திருநாமம் மருந்தீசுவரர் என்பதாகும். இந்திரன் ஒரு முறை கடுமையான நோயால் வருந்திய போது, அச்வினி தேவர்கள் இந்த தலத்து இறைவனை அணுகி, இந்திரனின் நோயினை தீர்க்கும் வழியினை வேண்டினர். அப்போது சிவபெருமான் இந்த தலத்தில் உள்ள பலா, அதிபலா என்ற மூலிகைகளைச் சுட்டிக் காட்டினார். அதனால் அவருக்கு மருந்தீசர் என்றும் ஔஷதேசர் என்றும் பெயர் ஏற்பட்டது. இந்த மூலிகைகள் மூலம் இந்திரனின் நோய் தீர்ந்தது. அச்வினி தேவர்கள் அந்த மூலிகைகளை தேடிய போது, அவர்களுக்கு உதவியாக, மூலிகைகள் இருந்த இடத்தில் ஒளி ஏற்படுத்தி, சுட்டிக் காட்டியதால் அம்பாளுக்கு இருள் நீக்கி அம்மை என்ற பெயர் வந்தது. வடமொழியில் அந்தகார நிவாரணி என்று அழைக்கின்றனர். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (7.41.5) சுந்தரர் மலை மேல் மருந்தே என்று இறைவனை அழைக்கின்றார். மேலை விதி=மேம்பட்ட அறநெறி; விரவார்=சிவநெறியில் கலக்காது நின்ற திரிபுரத்து அரக்கர்கள்; ஆலை=கரும்பாலைகள்; பழனம்=வயல்கள்;

மேலை விதியே விதியின் பயனே விரவார் புரம் மூன்று எரி

செய்தாய்

காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய்

கறைக்கண்டா

மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல்

சூழ்ந்த

ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே

தன்னை வலம் வரும் அடியார்களின் வலிய வினைகளைத் தீர்க்கும் மருந்தாக ஆனைக்கா ஆதி செயல்படுகின்றார் என்று சுந்தரர் கூறும் பாடல் (7.75.9) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் ஆனைக்கா அண்ணலின் திருவடிகளை நாளும் வணங்கும் அடியார்களை, தன்னை அடிமையாக ஆட்கொள்வதற்கு தகுதி படைத்தவர்கள் என்று சுந்தரர் கூறுகின்றார்.

வலம் கொள்வார் அவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து

கலங்கக் காலனைக் காலால் காமனைக் கண் சிவப்பானை

அலங்கல் நீர் பொரும் ஆனைக்காவுடை ஆதியை நாளும்

இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே

பிறவிப்பிணியில் முடங்கி வருந்தும் மனிதர்களுக்கு மருந்தாக செயல்படுவது இறைவனே என்று நீத்தல் விண்ணப்பத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். தன்னை அடிமையாக ஆட்கொண்ட சிவபெருமானுக்குத் தன்னை விற்பதற்கும், அடமானம் வைப்பதற்கும் உரிமை உள்ளது என்று கூறுவதை இந்த பாடலில் உணரலாம். ஒற்றி=அடமானம். விருந்தினன் என்றால் புதிதாக வந்தவர் என்று பொருள். சமீபமாக, அதாவது சில நாட்களுக்கு முன்னர் தான், சிவபிரானுக்கு அடிமையாக வந்தவர் என்பதை உணர்த்தும் பொருட்டு, பழைய அடியார்களிலிருந்து தான் மாறுபட்டவன் என்பதை உணர்த்தும் பொருட்டு, விருந்தினன் என்று மணிவாசகர் தன்னை குறிப்பிடுகின்றார். தான் சிவபெருமானுக்கு அடிமையாக இருப்பதற்கு உடன்படுவதாகவும், தனது தகுதியை ஆராய்ந்து, சிவபெருமான் தன்னை ஆட்கொள்ளவேண்டும் என்றும், தான் அத்தகைய பக்குவம் இன்னும் அடையவில்லை என்றால் சிறிது காலம் கழித்து ஆட்கொள்ளக் கருதி எவரிடமேனும் அடமானம் வைக்கலாம் என்றும், சிறிதும் தகுதி இல்லை என்றால் விற்றுவிடலாம் என்றும் பெருமானுக்கு அனுமதி வழங்குவது போன்று அமைந்த பாடல். விற்றுவிடலாம் என்றும் கூறினாலும், நஞ்சையே அமுதமாக மாற்றும் ஆற்றல் படைத்த பெருமானுக்கு, தனது தகுதியையும் மாற்றும் ஆற்றல் உடையது என்பதால் தன்னை விட்டு விடக் கூடாது என்று இறைஞ்சுவதையும் நாம் இந்த பாடலில் காணலாம்.

இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை

என்னின் அல்லால்

விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா

அருந்தினனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே

மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே

திருமூலரும் தனது பாடல் ஒன்றினில் மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆக இறைவனின் திருவடிகள் இருக்கும் நிலையினை குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்

தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்

சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்

எந்தை பிரான் தன் இணை அடி தானே

பொழிப்புரை:

திருந்தாமல் தொடர்ந்து தவறான வழியில் சென்ற திரிபுரத்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் தீப்பற்றி எரியும் வண்ணம் போரிட்ட சிவபெருமான், பெருமை உடைய அடியார்களை பரிந்து பாதுகாக்கின்றான்; பக்தியுடன் தன்னை வழிபடும் அடியார்களுக்கு காட்சி அளிக்கின்றான்; உடல் அடைகின்ற பல விதமான நோய்களுக்கு மருந்தாக விளங்கும் பெருமான், பிறவிப்பிணியை தீர்க்கும் மருந்தாகவும் செயல்படுகின்றான்; அவனது திருநாமம் உயர்ந்த மந்திரமாகவும் விளங்குகின்றது; வலஞ்சுழி தலத்தினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள இறைவனது திருவடிகள் இமையவர்கள் புகழ்ந்து ஏத்தும் தன்மையில் உள்ளன.

பாடல் 4;

கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கு அன்று

இறைவர் ஆலிடை நீழலிலிருந்து உகந்து இனிது அருள் பெருமானார்

மறைகள் ஓதுவர் வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து

அறை கழல் சிலம்பார்க்க நின்றாடிய அற்புதம் அறியோமே

விளக்கம்:

கதிர்=சூரியன்; அறத்திறம்=தருமத்தின் பல வகைகள் மற்றும் வேதங்கள் ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ள நுண்ணிய கருத்துக்கள்; மருந்துமாக நின்று உயிர்களை காக்கும் தன்மையன் என்று பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நெஞ்சின் தாக்கத்தினால் உலகம் அழியாத வண்ணம், அந்த விடத்தினை உட்கொண்ட செய்தி, கறைகொள் கண்டத்தர் என்ற தொடரினால் உணர்த்தப் படுகின்றது. காலை மாலை நேரங்களில் சிவந்த வண்ணத்துடன் காணப்படும் சூரியன், பகல் பொழுதினில் வெண்மை நிறத்துடன் காணப் படுகின்றான். சிவந்த திருமேனியை உடைய இறைவன், தனது உடலின் மீது திருநீற்றினை பூசியவண்ணம் வெண்மை நிறத்துடனும் காணப்படுகின்றான். இதனை மிகவும் அழகாக பொன்மலையில் வெள்ளிக்குன்றது போல் இலங்கும் பெருமான் என்று அப்பர் பிரான் (4.81.3) பொருத்தமாக குறிப்பிடுகின்றார்.

கல் மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பதென்னே

நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

பொன்மலையில் வெள்ளிக்குன்றது போல பொலிந்திலங்கி

என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடில்லையே

உயிரின் வேட்கை இறைவனைச் சென்று அடைவது. இதனை புரிந்து கொள்ளாத நாம், உயிரின் விருப்பத்தை விட்டு விட்டு, இந்த உடலின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் நமது விருப்பங்களை இறைவனிடம் தெரிவிக்கின்றோம். இந்த உடலின் தேவைகள் அனைத்தும் நிலையற்றவை, ஒரு நாள் அழியக்கூடியவை. ஆனால் உயிர் விரும்பும் முக்தி நிலை, என்றும் அழிவற்றது, சற்றும் குறையாத பேரின்பத்தை கொடுக்க வல்லது. எனவே அந்த முக்தி நிலையை வேண்டிப் பெறாது, அழியும் இன்பங்களை வேண்டுவோரை கல்மனவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தில்லையுள் உள்ள அடியார்கள் இறைவனிடம் முக்தி நிலை வேண்டுவதால், அவர்களை நல்மனவர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பேரின்பத்தைத் தரவல்ல சிவபெருமானிடம் சென்று சிற்றின்பத்தை யாசிப்பது, ஒரு பெரிய பணக்காரரிடம் சென்று பத்து காசுகள் யாசித்துப் பெறுவது போன்று நகைக்கு உரியதல்லவா. அதனால் நமக்கு ஏற்படும் பயன் என்ன? ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியான் என்று மணிவாசகப் பெருமான் பாடியது போல், எப்போதும் சிவபிரானை நினைந்து உருகும் அப்பர் பிரானின் உள்ளத்தில் சிவபெருமான் புகுந்ததில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால் அப்பர் பிரானும் அறியாத வகையில் அவரது மனத்தினுள்ளே புகுந்ததும் புகுந்த சுவடு காணப்படாததும், அப்பர் பிரானுக்கே வியப்பைத் தருகின்றது. அந்த வியப்பினை இந்த பாடலில் அப்பர் பிரான் தெரிவிக்கின்றார். கழலும் சிலம்பும் அணிந்தவர் என்று மாதொருபாகனாக பெருமான் உள்ள தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக காட்டினில் இருந்த வண்ணம் நடமாடும் பெருமான், உலகத்து உயிர்களுக்கு உய்வினை அளிக்கும் பொருட்டு பல தலங்களில் உறையும் தன்மை, இந்த பாடலில் அருங்கானம் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் நள்ளிருளில், அதாவது ஊழிக்காலத்தில் நட்டம் ஆடுவதை நாம் அறிவோம். அந்த சமயத்தில், அனைத்து உயிர்களும் தாங்கள் அந்நாள் வரை தங்கியிருந்த உடல்களிலிருந்து விடுபட, உலகமே உயிரற்ற உடல்களுடன் சுடுகாடாக காட்சி அளிக்கின்றது. உடல்கள் அனைத்தும் உயிரற்ற நிலையில் இருக்கும் இந்த காட்சியை நாம் எவரும் காணமுடியாது என்பதை உணர்த்தும் வண்ணம், காண்பதற்கு அரிய கானகம் என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். அந்த நேரத்தில் இறைவன் நடனமாடுவதாக நாம், வேதங்கள் மற்றும் புராணங்களிலிருந்து அறிகின்றோம். பல பிறவிகள் எடுத்து வருந்தி இளைத்த உயிர்கள் இளைப்பாற்றிக் கொள்ள தன்னிடம் ஒடுக்கும் பெருமான், மலங்களின் பிடியிலிருந்து விடுபடாத அந்த உயிர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, உலகினை தோற்றுவிக்க எண்ணம் கொள்ளும் தருணமும் அதே. எனவே தான், அந்த தருணத்தில் ஆடப்படும் நடனம் அற்புதம் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

பாற்கடலிலிருந்து பொங்கியெழுந்த விடத்தின் தாக்கத்திலிருந்து அனைவரையும் காக்கும் பொருட்டு ஆலகால விடத்தினை உட்கொண்ட பெருமான், அந்த விடம் தனது வயிற்றின் உள்ளே சென்றால், ஊழிக்காலத்தில் தனது வயிற்றினில் ஒடுங்கும் உயிர்களுக்கு கேடு விளையக் கூடாது என்ற நோக்கத்துடன் தனது கழுத்தினில் தேக்கியதால், அவரது கழுத்து கருமை நிறம் படர்ந்து காணப் படுகின்றது. அவரது திருமேனி செம்மை நிறத்திலும், திருநீறு பூசப்பட்டதால் வெண்மை நிறத்திலும், சூரியனின் கதிர்களின் நிறம் போன்று காணப்படுகின்றது. பண்டைய நாளில், தருமங்களின் பல வகைகளையும் வேதங்கள் மற்றும் ஆகமங்களில் உள்ள நுண்ணிய கருத்துக்களையும் அறிந்த சனகாதி முனிவர்கள், இறைவனிடம் தங்களது சந்தேகங்களை தெரிவித்து விளக்கம் கேட்ட போது, அவர்களுக்கு கல்லால மரத்தின் கீழமர்ந்து மிகுந்த விருப்பத்துடன் தகுந்த விளக்கம் அளித்தவர் சிவபெருமான்; அவரே உலகினுக்கு வேதங்களை அருளியவர் ஆவார். வலஞ்சுழி தலத்தினில் மகிழ்ச்சியுடன் உறையும் பெருமான், அனைத்து உடல்களும் உயிரற்ற நிலையில் உலகமே சுடுகாடாக காட்சி தரும் நிலையில், அந்த காண்பதற்கு அறிய அந்த காட்டினில், உலகத்தை மீண்டும் தோற்றுவித்து உயிர்களுக்கு தங்களது மலங்களைக் கழித்துக் கொள்ள ஒரு வாய்ப்பினை அளிக்கும் எண்ணத்தினால் மிகவும் மகிழ்ச்சி அடையும் பெருமான், தான் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஆரவாரம் செய்யும் வண்ணம் நடனமாடும் அற்புதத்தை நாம் அறியோம்.

பாடல் 5:

மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றலாம் எரி ஒரு பாகம்

பெண்ணர் ஆணெனத் தெரிவரும் வடிவினர் பெருங்கடல் பவளம்போல்

வண்ணராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க

எண்ணராகிலும் எனைப்பல இயம்புவர் இணையடி தொழுவாரே

விளக்கம்:

இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில், இந்த தலத்தினில் பல நாட்கள் தங்கிய ஞானசம்பந்தர் தலத்து அடியார்களுடன் பழகியதாக கூறுகின்றார். அத்தகைய நாட்களில், தலத்து அடியார்கள் எவ்வாறு பெருமானைப் போற்றினார்கள் என்று தான் உணர்ந்தவற்றை இந்த பாடலில் அவர் உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

மண், நீர், ஆகாயம், காற்று மற்றும் ஆற்றல் மிகுந்த தீ ஆகிய பஞ்ச பூதங்களின் உருவமாக இருப்பவரும், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ள மாதொரு பாகராகவும், கடலில் கிடைக்கும் பெரிய செம்பவள நிறத்தில் திருமேனி உடையவரும், வலஞ்சுழி தலத்தினை விட்டு என்றும் பிரியாமல் இருப்பவரும், தன்னைப் பிரிந்து வணங்கும் அடியார்களின் மனதினில் புகுந்து அவர்களின் எண்ணமாக விளங்குபவரும் ஆகிய பெருமான் என்று அவரது பல விதமான பெருமைகளை பேசியவண்ணம், இந்த தலத்து அடியார்கள் பெருமானின் இணையான திருவடிகளை தொழுகின்றனர்.

பாடல் 6:

ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர் மட மாதர்

இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம்

அருவராததோர் வெண்தலை கைபிடித்து அகம்தோறும் பலிக்கென்று

வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரிவளை கவர்ந்தாரே

விளக்கம்:

இந்த பாடல் அகத்துறை கூற்றாக அமைந்துள்ளது. ஞானசம்பந்தர், தன்னை பெருமாள் பால் காதல் கொண்டுள்ள தலைவியாக உருவகித்து, தனது கவனத்தை ஈர்த்து தன்பால் காதல் கொள்ளச் செய்த பெருமான், தனது வளையும் கவர்ந்த கள்வராகத் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். பெருமான் பால் தீராத காதல் கொண்டுள்ள தலைவி, பெருமானுடன் தான் சேர முடியாத ஏக்கத்தினால் மனம் வருந்தி, உடல் தனது கை வளையல்கள் கழன்று விழும் வண்ணம் உடல் இளைத்து இருப்பதாக கூறுகின்றாள். இவ்வாறு தான் உடல் மெலிந்ததற்கு காரணம் பெருமான் பால் தான் கொண்டுள்ள காதல் நிறைவேறாத ஏக்கம் என்று உணர்த்தும் தலைவி, தனது வளையல்கள் கழலும் வண்ணம் செய்த பெருமானை கள்வர் என்று குற்றம் சாட்டுகின்றாள். இருவர் ஆதரிப்பார் என்று கங்கை நதியினைத் தனது சடையில் வைத்தும், உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தும் பெருமான் ஆதரிக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

இறைவனின் திருமேனிக்கு ஒப்பாக கூறுவதற்கு எந்த உயிரும் எந்த பொருளும் இல்லை என்பதால், எவராலும் ஒப்பிட முடியாத திருமேனியை உடையவர் சிவபெருமான். இளமையும் அழகும் சேர்ந்த மாதர்கள் இருவரை, கங்கை நங்கையையும் உமை அன்னையையும், முறையே தனது சடையிலும் உடலிலும் வைத்து ஆதரிப்பவர் சிவபெருமான்; பல பூதங்களும் பேய்களும் எப்போதும் அவரைச் சூழ்ந்து கண்டு தாமே அவரது அடையாளம் என்பது போன்று அவரை விட்டு என்றும் பிரியாமல் இருக்கின்றனர். விருப்பு வெறுப்பு ஆகிய குணங்களைக் கடந்த பெருமான் அருவருப்பு ஏதும் இன்றி, உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பல இல்லங்களுக்கும் சென்று பலியேற்கும் பெருமான் திருவலஞ்சுழி தலத்தினில் உறைகின்றார். அவரே, என்னை தீராத காதலில் ஆழ்த்தி, பிரிவாற்றாமையால் நான் உடல் மெலிந்து வருந்தும் வண்ணம் செய்து, எனது கைவளையல்கள் நழுவும் வண்ணம் உடல் மெலிய, எனது வளையல்களை கவர்ந்த கள்வர் ஆவார்.

பாடல் 7:

குன்றியூர் குடமூக்கிடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம்

என்றிவ்வூர்களில் இலோம் என்றியம்புவர் இமையவர் பணி கேட்பார்

அன்றியூர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார் பால்

சென்ற ஊர் தனில் தலைப்படலாம் என்று சேயிழை தளர்வாமே

விளக்கம்:

இந்த பாடலும் அகத்துறை வகையைச் சார்ந்தது. தலைவியின் கூற்றாக அமைந்துள்ள பாடல். தலைவனுடன் சேர முடியாத வருத்தத்தால் உடல் மெலிந்து தனது கை வளையல்கள் கழன்று விழும் நிலைக்கு தள்ளப்பட்ட தலைவி, தலைவனை காண்பதற்காக ஏங்குகின்றாள். தானே தலைவனைச் சென்று காணாலாம் என்று தலைப்படுகின்றாள். தான் அறிந்த தலைவனின் உறைவிடங்கள் பலவற்றை குறிப்பிடும் தலைவி, ஆங்கே தான் அவனை காணமுடியாமல் வலஞ்சுழி சென்றால் அவனை காண முடியுமா என்று எண்ணியவாறு தளர்வடைகின்றாள். எவ்வாறேனும் தலைவனைக் கண்டுவிட வேண்டும் என்ற தலைவியின் துடிப்பு இங்கே வெளிப் படுகின்றது. இங்கே குறிப்பிடப்படும் குன்றியோர் தலம் எங்குள்ளது என்பது தெரியவில்லை. தலைப்படல்=சேர்தல்; சேயிழை=நெருக்கமாக நகைகளை அணிந்தவள்; இறைவனைக் காண முடியாத ஆன்மாவின் தவிப்பு இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

குன்றியோர், குடமூக்கு, வலம்புரம், விருப்பமுடன் உறையும் நெய்த்தானம் முதலான பல ஊர்களில், தலைவனின் இருப்பிடம் குறித்து தகவல் கேட்டறிந்த போது, ஆங்கே அவர் இல்லை என்ற தகவலே தலைவிக்கு கிடைத்தது; தேவர்களும் அவர்க்கு குற்றேவல் செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையினை அறியும்போது, அவரது சிறப்பு புலனாகின்றது; மேலும் அவர் உறையும் தலங்களின் விவரங்களை தான் அறியாமையால், வேறெங்கு சென்றால் அவரைக் காணலாம் என்று தவிக்கும் தலைவி, பல தலங்களுக்கும் உரிய தனது தலைவனை, வலஞ்சுழி சென்றால் அவனுடன் சேரலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தாலும், தனது தலைவனைக் காணாத ஏக்கத்தினால் தலைவி மிகவும் தளர்ந்து காணப்படுகின்றாள்.

பாடல் 8:

குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய

கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர்முடி தோள் இருபதும் ஊன்றி

மயிலின் நேர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானைப்

பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே

விளக்கம்:

ஆன்மாவினை, தனது தலைவனுடன் சேரத் துடிக்கும் தலைவியாக உருவகித்து, இறைவனைத் தலைவனாக உருவகித்து, ஆன்மா எவ்வாறு இறைவனுடன் சேர்ந்து என்றும் அவனிடமிருந்து பிரியாமல் இருப்பதற்கு தலைப்படவேண்டும் என்றும், தனது ஆசை நிறைவேறாத ஆன்மா எவ்வாறு வருந்தி, தனது விருப்பத்தை இறைவனிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இத்தகைய அகத்துறைப் பாடல்கள் மூலம் அருளாளர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். எதற்காக தணியாத இந்த வேட்கை ஆன்மாவிடம் ஏற்படவேண்டும் என்று கேள்வி கேட்போர்க்கு விடையளிக்கும் முகமாக, இந்த பாடல் அமைந்துள்ளது. பரகதி=உயர்ந்த நிலை, முக்தி நிலை; தொடர்ந்து இறைவனின் புகழினைப் பாடும் அடியார்கள் பரகதி அடைவார்கள் என்றும், அவ்வாறு இறைவனின் புகழினை நினைக்காதவர்கள் பரகதி அடைய மாட்டார்கள் என்றும் கூறுகின்றார். இறைவனின் புகழினைப், பெருமையினைப் புரிந்து கொண்டு அவனது மேன்மையை உணர்வதே இறை வழிபாட்டினால் முதல்படி என்பதால், அந்த முதல் படி, படிப்படியாக நம்மை உயர்த்தி, பக்குவம் அடையச் செய்து உய்வினை அளிக்கும் என்பதால், இறைவனின் புகழினை நாம் உணரத் தலைப்பட வேண்டும் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

குயில் போன்று இனிய மொழியினை உடையவளும், கொடி போன்று மெல்லிய இடையினை உடையவளும் ஆகிய உமையன்னை, கலக்கம் அடையும் வண்ணம், சிறந்த கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறொரு இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தைத் தொடரலாம் என்று முயற்சி செய்த அரக்கன் இராவணன் செயல் இருந்தமையால், அன்னையின் அச்சத்தை நீக்கும் பொருட்டு, அரக்கனின் ஒளிவீசும் கிரீடங்களை அணிந்த பத்து தலைகள் மற்றும் இருபது தோள்களும் கயிலை மலையின் அடியில் அகப்பட்டு நசுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றிய சிவபெருமான். மயிலினைப் போன்று சாயல் உடைய உமை அன்னையுடன் வலஞ்சுழித் தலத்தினில் அமர்ந்துள்ளான். இத்தகைய தன்மை உடைய பெருமானின் புகழினைத் தொடர்ந்து பயிலும் அடியார்கள், பெருமானின் அருளினால் மறுமையில் உயர்ந்த கதி பெறுவார்கள்; அவ்வாறு இறைவனைப் புகழாத மாந்தர்கள் உயர்ந்த நிலையை காண முடியாது.

பாடல் 9:

அழலது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவணைத் துயின்றானும்

கழலும் சென்னியும் காண்பரிதாயவர் மாண்பு அமர் தடக்கையில்

மழலை வீணையர் மகிழ் திருவலஞ்சுழி வலம் கொடு பாதத்தால்

சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே

விளக்கம்:

இந்த பதிகத்தில் இன்னொரு பாடலில் சம்பந்தர் இந்நாளில் கிரிவலம் வருவது போல் அந்நாளில் நகர்வலம் வந்தனர் என்றும் இவ்வாறு வலம் வரும் அடியார்களின் துன்பங்கள் களையப்படும் என்றும் குறிப்பிடுகிறார். அப்பர் பிரானும் இந்த தலத்தின் மீது தான் அருளிய பதிகத்தில் இந்த பழக்கத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த பதிகத்தின் கடைப் பாடலில் (5.66.10) அப்பர் பிரான் இந்த தலத்தை வலம் செய்பவர்களை உயர்வாக மதித்து அவர்களது அடியினை தனது தலையின் மேல் வைத்துக் கொள்வேன் என்று கூறுகிறார். சிவபிரான் தனது கால் விரலை ஊன்றி இராவணனது செருக்கை அடக்கியது அனைவரும் அறிந்த உண்மை. இராவணன் தனது தவற்றினை உணர்ந்து சிவபிரானை துதித்த பின்னர் சிவபிரான், இராவணனை அழிக்காமல் அவனுக்கு இரங்கி, அருள் செய்த காரணத்தால், நலம் கொள் பாதம் என்று நயமாக இங்கே குறிப்பிடுகின்றார்.

இலங்கை வேந்தன் இருபது தோள் இற

நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான்

மலங்கு பால் வயல் சூழ்ந்த வலஞ்சுழி

வலம் கொள்வார் அடி என் தலை மேல் அதே

தலத்தினை வலம் கொள்வது, பண்டைய நாட்களில் மிகவும் புனிதமாக கருதப்பட்டது இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. மூவர் பெருமானார்கள் தலத்தின் புனிதம் கருதி வலம் வந்த செய்தியை நாம் பெரியபுராணத்தில் காண்கின்றோம். முதுகுன்றம் சென்ற ஞானசம்பந்தர் குன்றினை வலம் வந்த செய்தியும், தில்லைச் சிதம்பரத்து நான்கு வீதிகளையும் பூமியில் உருண்டு அப்பர் பிரான் வலம் வந்த செய்தியும், சீர்காழி தலத்தின் புனிதம் கருதி அதனை மிதிக்காமல் நகரினை சுந்தரர் வலம் வந்த செய்தியும் இங்கே குறிப்பிடத் தக்கன. மேலும் பல தேவாரப் பாடல்கள் திருக்கோயிலை வலம் வருவதால், தலத்தினை வலம் வருவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை குறிப்பிடுகின்றன. அத்தகைய பதிகங்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பாடலில் (3.44.8), கழிப்பாலை தலத்தினை வலம் வருவதால், நமது வினைகளை மாய்த்துக் கொள்ளலாம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். கழிப்பாலை என்ற சொல்லுக்கு கழிப்பாலை இறைவன் என்றும் கழிப்பாலை தலம் என்று இரண்டு விதமாக பொருள் கொள்வதும் பொருத்தமே. ஈரைந்து இரட்டி=இருபது; துலங்க=துளங்க என்ற சொல்லின் திரிபு, நடுங்க; கலங்கள்= கப்பல்கள்; கப்பல்கள் வந்துலவும் தலம் என்று கூறுவதால், சம்பந்தரின் காலத்தில் கழிப்பாலை சிறந்த துறைமுகமாக இருந்திருக்க வேண்டும்.

இலங்கை மன்னனை ஈரைந்து இரட்டி தோள்

துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்

கலங்கள் வந்து உலவும் கழிப்பாலையை

வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே

பெருமானை வலம் வரும் அடியார்கள் அவனை வாழ்த்தியும் புகழ்ந்தும் இசைப் பாடல்கள் பாடி வலம் கொள்ளும் மறைக்காட்டு மணாளன் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடும் பதிகம் (2.37.8) இது. அலங்கல்=அசைதல், வருத்துதல்; அரக்கன் இராவணனை முதலில் வருத்தி பின்னர் அவனுக்கு அருள் புரிந்தது யாது காரணம் பற்றியோ என்று இறைவனை நோக்கி சம்பந்தர் வினவும் பாடல்.

கலம் கொள் கடல் ஓதம் உலாவு கரை மேல்

வலம் கொள்பவர் வாழ்த்தி இசைக்கும் மறைக்காடா

இலங்கை உடையான் அடர்பட்டு இடர் எய்த

அலங்கல் விரல் ஊன்றி அருள் செய்தவாறே

பெருமானின் திருப்பாதங்களின் மேல் மலர்கள் தூவி வணங்கிய பின்னர் பெருமானை வலம் வரவேண்டும் என்றும் அவ்வாறு வலம் வருவாரின் வினைகள் மாய்ந்துவிடும் என்றும் திருஞானசம்பந்தர் திருவாடானை பதிகத்தில் உணர்த்தும் பாடல் (2.112.7) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. துலங்கு=அழகுடன் பொலிந்து விளங்கும்;

துலங்கு வெண்மழு ஏந்திச் சூழ் சடை

அலங்கலான் உறை ஆடானை

நலம் கொள் மாமலர் தூவி நாடொறும்

வலம் கொள்வார் வினை மாயுமே

நாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.119.8) நாகேச்சரம் திருக்கோயிலை வலம் வரும் சிந்தனை உடைய அடியார்களின் இடர்கள் கெடும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

இலங்கை வேந்தன் சிரம் பத்திரட்டி எழில் தோள்களும்

மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய

நலங்கொள் சிந்தையவர் நாள்தொறும் நண்ணும் நாகேச்சரம்

வலங்கொள் சிந்தை உடையார் இடராயின மாயுமே

நள்ளாற்றுப் பெருமானை நாள்தோறும் வலம் வரும் அடியார்களின் வினைகள் மாய்ந்துவிடும் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடலை (5.68) நாம் இங்கே காண்போம்.

இலங்கை மன்னன் இருபது தோள் இற

மலங்க மால்வரை மேல் விரல் வைத்தவர்

நலம் கொள் நீற்றர் நள்ளாறரை நாடொறும்

வலம் கொள்வார் வினையாயின மாயுமே

அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலில் (5.80.10), இந்த தலத்தை வலம் வரும் அடியார்கள் வானோர்கள் வலம் வந்து வணங்கும் தகுதி படைத்தவர்களாக விளங்குவார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இற்று=நெரிந்து; மலங்க=வருந்த; அலங்கல்=மலர் மாலை; சிவபெருமான் உறைவதால் இந்த தலத்திற்கு இத்தகைய சிறப்பு உள்ளது என்பதை உணர்த்தும் வண்ணம், எம்பிரான் அன்பில் ஆலந்துறை என்று குறிப்பிடுகின்றார்.

இலங்கை வேந்தன் இருபது தோள் இற்று

மலங்க மாமலை மேல் விரல் வைத்தவன்

அலங்கல் எம் பிரான் அன்பில் ஆலந்துறை

வலம் கொள்வாரை வானோர் வலம் கொள்வரே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (5.83.6) நாகைக் காரோணத்து இறைவனை வலம் வரும் அடியார்களின் வினைகள் மாய்ந்துவிடும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கலங்கள்=கப்பல்கள்; திருமறைக்காடு தலத்தின் பாடல்களிலும் அப்பர் பிரான் கலங்கள் சூழ்ந்த கடற்கரை என்று குறிப்பிடுகின்றார். நாகை மற்றும் மறைக்காடு தலங்கள் கடல் வாணிகத்தால் சிறப்பு வாய்ந்த தலங்களாக தேவார முதலிகள் காலத்தில் இருந்தமை இத்தகைய குறிப்புகள் மூலம் நமக்கு புரிகின்றது. விலங்கல்=மலை; விலங்கல் மெல்லியல் என்ற தொடர் மூலம் மலைமகளாக வளர்ந்த தேவி, பெண்மைக்குரிய மென்மையான உணர்வுகளை உடையவராக இருந்தார் என்று அப்பர் பிரான் நயமாக கூறுகின்றார். அலங்கல்=மாலை; ஆதிபுராணர் என்பதும் தலத்து பெருமானின் திருநாமங்களில் ஒன்றாகும்.

அலங்கல் சேர் சடை ஆதி புராணனை

விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்

கலங்கள் சேர் கடல் நாகைக் காரோணனை

வலம் கொள்வார் வினையாயின மாயுமே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் (7.75.9) சுந்தரர், இறைவனை வலம் வரும் அடியார்களின் வலிய வினைகளைத் தீர்க்கும் மருந்தாக இறைவன் செயல்படுவார் என்று கூறுகின்றார். பெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்கும் அடியார்கள், தன்னை அடிமை கொண்டு ஆளும் தகுதி படைத்தவர்கள் என்று சுந்தரர் கூறுவதையும் நாம் உணரலாம். அலங்கல்=அசையும், மோதும்;

வலம் கொள்வார் அவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து

கலங்கக் காலனைக் காலால் காமனைக் கண் சிவப்பானை

அலங்கல் நீர் பொரும் ஆனைக்காவுடை ஆதியை நாளும்

இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே

அரவணை=பாம்பாகிய படுக்கை; துயின்றான்=தூங்கிய திருமால்; காண்பரிதாயவர்=காண்பதற்கு அரியவராக விளங்கிய சிவபெருமான்; தடக்கை=அகன்ற கை; பாதத்தால் சுழலும் மாந்தர்கள்= தங்களது பாதங்களால் வலம் வரும் அடியார்கள்; தொல்வினை=தொன்று தொட்டு பல பிறவிகளில் சேர்த்து வைக்கப்பட்ட வினைகள்; மழலை வீணை=மழலைச் சொல் போன்று இனிய இசையினை எழுப்பும் வீணை; ஓம்பிய=வளர்த்த; அண்ணல்=தலைவன்;

பொழிப்புரை:

தீ வளர்த்து வேள்விகள் செய்பவனும், தாமரை மலர் மீது அமர்ந்த தலைவனும் ஆகிய பிரமனும் பாம்புப் படுக்கையில் துயில் கொள்ளும் திருமாலும், முறையே பெருமானது திருமுடியையும் திருப்பாதங்களையும் காண்பதற்கு முயற்சி செய்த போது, அவர்கள் இருவரும் தங்களது முயற்சியில் தோல்வி அடையும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்றவன் சிவபெருமான்; அவர் தனது அகன்றதும் பெருமை மிகுந்ததும் ஆகிய கையினில், மழலைச் சொல் போன்று இனிய இசையினை எழுப்பும் வீணையை ஏந்தியுள்ளார்; அவர் திருவலஞ்சுழி தலத்தினில் உறைகின்றார். அத்தகைய பெருமை வாய்ந்த இறைவனை, வலம் வந்து வணங்கும் அடியார்கள், சென்ற பல பிறவிகளாக சேர்த்து வந்த கொடிய வலிமை வாய்ந்த வினைகள் நீங்கப் பெற்று, அத்தகைய வினைகள் ஏற்படும் துன்பங்கள் அற்றவர்களாக விளங்குவார்கள். .

பாடல் 10:

அறிவிலாதவன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார்

நெறி அலாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறா நீர்

மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்

பிறிவிலாதவர் பெறு கதி பேசிடில் அளவறுப்பு ஒண்ணாதே

விளக்கம்:

அவம்=தவத்திற்கு எதிர்மறையான பாவச்செயல்கள்; சிவபெருமானை குறித்தும் இந்து சமயம் குறித்தும் பொய்யான கதைகளை இட்டுக்கட்டி, தவறான தகவல்களை மக்களிடையே பரப்பி வந்த பாவச் செயல்கள்; தேறன்மின்=பொருட்படுத்தாது நீக்குவீர்; மாறா நீர்=அதற்கு மாறாக; மறி உலாம்=மடிந்து மடிந்து வரும்; மருவிய=அணைந்த; பிறிவிலாதவர்=இடைவிடாமல் வழிபடும் அடியவர்; அளவறுப்பு=அளந்து அறிதல்;

பொழிப்புரை:

அறிவற்ற சமணர்களும் சாக்கியர்களும் தவம் புரிந்து கொண்டே, தவத்திற்கு புறம்பாக பொய் கலந்த செய்திகளை பேசி சிவபெருமானை தாழ்த்தி பேசி, பாவம் செய்தவர்களாக உள்ளனர். நெறியற்று அவர்கள் கூறும் சொற்களை, தெளிந்த உரையாக கருதி ஏமாறாமல், உலகத்தவரே, அவற்றை பொருட்படுத்தாது நீக்குவீர்களாக; அதற்கு மாறாக நீர், மடங்கி வரும் அலைகளைக் கொண்டு பாயும் காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள வலஞ்சுழி தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானை, பிரியாமல் வணங்கும் அடியார்கள் பெறுகின்ற பயன்களை பேசி அளந்து அறிவது என்பது மிகவும் அரிய செயலாகும்.

பாடல் 11:

மாது ஓர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி

நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை

ஆதரித்து இசை கற்று வல்லார் சொலக் கேட்டு உகந்தவர் தம்மை

வாதியா வினை மறுமைக்கும்இம்மைக்கும் வருத்தம் வந்தடையாவே

விளக்கம்:

இந்த பதிகத்தின் கடைப் பாடலில் இந்த பதிகத்தை இசையுடன் பாடுபவரும் அதனை கேட்பவரும் இம்மையிலும் மறுமையிலும் வருத்தம் நீங்கப் பெறுவார் என்று சம்பந்தர் குறிப்பிடுகிறார். கேட்பவர்கள் அடையும் பலன் சொல்லப்படும் பதிகங்கள் மிகவும் அரிதானவை. மருந்து என்பது பிறவிப்பிணிக்கு மருந்தாக இறைவன் செயல்படும் இறைவன், மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே என்ற தொடரால் புலனாகின்றது. நவிற்றிய=சொன்ன; பதிகத்தின் மூன்றாவது பாடலில் மருந்துமாகி மந்திரமாகி அடியார்க்கு அருள் செய்பவன் சிவபெருமான் என்ற செய்தி இங்கே மீண்டும் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு கூறாக ஏற்றுக் கொண்டவனும், வலஞ்சுழி தலத்தினில் அமர்ந்த வண்ணம் அடியார்களின் பிறவிப் பிணிக்கு மருந்தாக செயல்படுபவனும், ஆகிய இறைவனை, செழிப்பான வயல்கள் நிறைந்த காழி நகரத்தைத் சார்ந்த வேதியனும் தலைவனும் ஆகிய ஞானசம்பந்தன், தனது வாயினால் பாடிய தமிழ் மாலையாகிய இந்த பாடல்களை முறையாக கற்று, குறிப்பிடப்பட்ட இசையுடன் பொருத்தி வல்லவர்கள் பாட, அத்தகைய அடியார்களுக்கும் அதனை கேட்டு மகிழும் அடியார்களுக்கும், அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் வருத்தம் அடையாத வண்ணம், அவர்களை வருத்தும் தன்மை வாய்ந்த வினைகளை அவர்களை விட்டு நீங்கிவிடும்.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில், சென்ற பிறவிகளில் செய்த நற்செயல்களின் பயனாக வலஞ்சுழி வாணனை வாயாரப் பாடியும் மனதினால் ஆதரித்து புகழ்ந்தும் கைகளால் வணங்கியும் வழிபடும் வாய்ப்பு கிடைத்தது என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இரண்டாவது பாடலில் அந்த புண்ணியங்கள், வலஞ்சுழி பெருமானின் தொண்டர்களுடன் பழகும் வாய்ப்பினையும் அருளியது என்று கூறுகின்றார். பூர்வ புண்ணியத்தால் வலஞ்சுழி இறைவனின் திருப்பாதங்களை பணிந்து வணங்கும் அடியார்களை, இறைவனின் திருப்பாதங்கள் பரிந்து பாதுகாக்கும் என்றும் மருந்தாகவும் மந்திரமாகவும் விளங்கும் என்றும் மூன்றாவது பாடலில் கூறுகின்றார். இத்தகைய பாதங்கள் ஊழிக்காலத்து நள்ளிருளில் அதிசய நடனத்தை ஆடுகின்றன என்று நான்காவது பாடலில் கூறுகின்றார். பஞ்ச பூதங்களாக எங்கும் விரிந்து பரந்து நிற்கும் பெருமான், அடியார்களின் மனதிலும் நிலையாக நிற்கின்றார் என்று ஐந்தாவது பாடலில் கூறுகின்றார். ஆறாவது பாடலில், பிச்சைப் பெருமானாக அவர் வந்த அழகிய கோலம் பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது என்று கூறும் நாயனார், அந்த பெருமானுடன் சேரமுடியாத ஏக்கத்தினால் தனது ஆன்மா தளர்ச்சி அடைகின்றது என்று ஏழாவது பாடலில் கூறுகின்றார். தனது ஆன்மா இவ்வாறு அவரைக் காண்பதற்கும் அவருடன் சேர்வதற்கும் தணியாத தாகம் கொள்வதற்கு காரணம், தனது அடியார்களுக்கு பரகதி கொடுத்தருளும் சிவபெருமானின் செய்கை என்று எட்டாவது பாடலில் உணர்த்துகின்றார். வலஞ்சுழி தலத்தினை வலம் வரும் அடியார்கள் தங்களது துயரங்கள் மற்றும் துன்பங்கள் தீர்க்கப் பெறுவார்கள் என்று ஒன்பதாவது பாடலில் கூறுகின்றார். பத்தாவது பாடலில், பெருமானை இடைவிடாது வணங்கும் அடியார்கள் அடியும் பேற்றினை சொற்களால் அளக்க முடியாது என்று குறிப்பிடும் சம்பந்தர், இந்த பதிகத்தை பாடும் அடியார்களும் கேட்கும் அடியார்களும் இம்மையிலும் மறுமையிலும் வருத்தம் ஏதும் அடையாமல் இன்பமாக வாழ்வார்கள் என்று கூறுகின்றார். நாமும் வலஞ்சுழி வாணனைப் போற்றி பதிகங்கள் பாடி, இம்மையில் துன்பமில்லாத வாழ்க்கை வாழ்ந்து மறுமையில் உய்வினை அடைவோமாக.



Share



Was this helpful?