1.132. ஏரிசையும் வடவாலும் திருவீழிமிழலை மேகராகக்குறிஞ்சி
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக. திருவீழிமிழலை தலம் சென்ற திருஞான சம்பந்தர் அந்த தலத்தில் மிகவும் அதிகமான நாட்கள் தங்கியதை நாம் பெரிய புராணத்திலிருந்து உணர்கின்றோம். அப்போது திருஞானசம்பந்தர் அருளிய பல பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்று. இந்த பதிகம் மழைவேட்டல் பதிகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. முதல் திருமுறையில் மேகராகக்குறிஞ்சி பண்ணில் இசைத்துப் பாடும் வண்ணம் திருஞானசம்பந்தர் அருளிய எட்டு பதிகங்களும் (1.129 முதல் 1.136 வரை) மழை வேட்டல் பதிகங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இந்த பதிகங்களை பக்தி உணர்வுடன் மனம் ஒன்றி முறையாக பாடினால் மழை பொழியும் என்று நம்பப்படுகின்றது.
பாடல் 1
ஏரிசையும் வடவாலின் கீழ் இருந்தங்கு ஈருவர்க்கு இரங்கி நின்று
நேரிய நான்மறைப் பொருளை உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற கோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு
வேரிமலி பொழிற் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலையாமே
விளக்கம்:
இந்த பதிகத்தில் கிளிகள் வேதங்களுக்கு பொருள் சொல்கின்றன என்று திருஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு சங்கரவிஜயம் நூலில் வரும் மண்டனமிச்ரரை நினைவுபடுத்தும். மாஹிஷ்மதி நகரில் உள்ள மண்டனமிச்ரரை பார்க்கச் சென்ற ஆதி சங்கரர், அந்த நகரை அடைந்த பின்னர், வீதிகளில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்களிடம் மண்டனமிச்ரரின் வீடு எது எனக் கேட்டார். அதற்கு அந்த சிறுவர்கள், ஒரு வீட்டினை சுட்டிக் காட்டி அடையாளம் கூறி வழி காட்டினர். அவர்கள் காட்டிய அடையாளம் என்னவென்றால், எந்த வீட்டின் வாசலில் கிளிகள் வேதம் சொல்கின்றனவோ அந்த வீடு தான் மண்டனமிச்ரரின் வீடாகும் என்பது தான். மேலும் அங்கு வேதம் கற்றுகொண்டிருந்த ஒரு சிறுவன் வேதத்தின் ஒரு சொல்லை தவறாக உச்சரித்தபோது ஒரு கிளி அந்த தவறினை திருத்தியதாகவும் அந்த நூல் கூறுகின்றது. இத்தகைய குறிப்புகள் பல தேவாரப் பாடல்களில் காணப்படுகின்றன. அத்தகைய தேவாரப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.33.2) திருஞானசம்பந்தர், வேதங்கள் பயிலும் சிறுவர்கள் சொல்லும் மந்திரங்களை கேட்டு இசையும் மொழியும் கற்றுக்கொள்ளும் கிளிகள் சென்றடையும் சோலைகள் நிறைந்த தலம் அன்பில் ஆலந்துறை என்று கூறுகின்றார்.முதிரா=வளராத; முதிரா மதி என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முதிர்ந்த மதியாக, முழு நிலவாகத் திகழ்ந்த சந்திரன் தக்கன், இட்ட சாபத்தினால் நாளொரு கலையாக தேய்ந்து அழியும் நிலைக்கு வந்த போது பெருமானிடம் சரணடைந்தான். அஞ்சேல் என்று அவனுக்கு அபயம் அளித்த பெருமான், அழியும் நிலையினைத் தவிர்த்து நாளொரு கலையாக வளரும் வண்ணம் அவனுக்கு அருள் புரிந்தார். வளரும் மதியாக மாறியபடியால், பெருமான் அணிந்துள்ள பிறைச் சந்திரன் வளராத மதி என்றும், பிள்ளை மதி என்றும், முதிரா மதி என்றும் திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. தக்கன் இட்ட சாபத்தினை மாற்றுவது வேறு எவர்க்கும் இயலாத காரியமாக திகழ்ந்த படியால், பெருமானை சதுரன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.விடை=இடபம்; கிடை=கூட்டம்; கிள்ளை=கிளி; வேதம் பயிலும் சிறுவர்கள் கூட்டமாக இருந்து வேதமந்திரங்களை சொல்லி பழக்கப்படுத்திக் கொள்வதையும், அந்த ஒலிகளை கேட்கும் கிளிகள் இசையுடன் வேத மந்திரங்களைச் சொல்லும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.அரவம்=ஒலி;
சடையார் சதுரன் முதிரா மதி சூடி
விடையார் கொடி ஒன்றுடை எந்தை விமலன்
கிடையார் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடையார் பொழில் அன்பில் ஆலந்துறையாரே
பருப்பதம் (தற்போது ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலம்) தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.118.5), திருஞானசம்பந்தர் வானவர்கள் வேத மந்திரங்களை சொல்லி இறைவனைப் பணிவதை கேட்ட கிளிகள், வேதத்தின் சொற்களைக் கேட்டு சொற்கள் பயில்வதாக கூறுகின்றார்.இந்த பாடலில் கிளிகள் சிறகுகள் ஒலிக்க, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, அந்த சொற்களைக் கற்றுக் கொள்வதாக கூறுகின்றார்.தேனினம்=வண்டுகள்;
துறை பல சுனை மூழ்கித் தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்து ஏத்த
சிறையொலி கிளி பயிலும் தேனினம் ஒலி ஒவாப்
பறை படு விளங்கு அருவி பருப்பதம் பரவுதுமே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பாடல் (2.61.2) ஒன்றினில் திருஞானசம்பந்தர், இந்த தலத்தில் உள்ள கிளிகள் இடைவிடாது ஓதப்படும் வேத மந்திரங்களை கேட்டு கேட்டு வேதத்தில் உள்ள சொற்களைக் கொண்டு பேச கற்றுக் கொள்கின்றன என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் வேள்விப் புகையால் வானம் இருண்டு காணப்படும் வெண்காடு என்று சம்பந்தர் சொல்கின்றார்.
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்திப்
பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கள் மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும்
வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.64.3) திருஞானசம்பந்தர், குயில்கள் பாட அருகே இருக்கும் கிளிகள் தொடர்ந்து இறைவனைப் புகழ்ந்து போற்றுகின்றன என்று கூறுகின்றார். முனிவர்களும் அந்தணர்களும் வழிபடுவதை இந்த பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் எப்போதும் இறைவனின் பண்புகளையும் தன்மைகளையும் அறிந்து கொள்வதற்காக தேடிக் கொண்டிருக்கும் அடியார்களை குறிப்பிடுகின்றார். தேடுதல் என்ற சொல் ஆராய்தல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. நிரந்தரம்=எப்போதும்; நீடு=மிகுதியான;புனல்=நீர்; இரண்டாவது பாடலில் தலத்தின் உள்ள குரங்குகள் எவ்வாறு இறைவனை வழிபடுகின்றன என்று கூறிய சம்பந்தர், இந்த பாடலில் கிளிகள் இறைவனின் திருநாமங்களை சொல்ல பழகிக்கொண்டு அவனை புகழ்கின்றன என்று கூறுகின்றார்.
நீடு மலரும் புனலும் கொண்டு நிரந்தரம்
தேடும் அடியார் சிந்தையுள்ளே திகழ்வானைப்
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த
மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே
கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.109.4) கிளிகள் சொல் பயில்கின்ற சோலைகள் நிறைந்த தலம் கோட்டூர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கிள்ளை=கிளி; பலவு=பல விதமான மரங்கள்; பயில்வாய=உண்கின்ற; கலவம்=தோகை; மஞ்ஞை=மயில்கள்; உகளும்=புரண்டு விளையாடும்;நிலவு சொற் கிள்ளைகள்=உலகத்தவர் பொதுவாக நிலவுகின்ற சொற்களை பேசும் சிளிகள்; காலையில் துயிலிலிருந்து எழுகின்ற சமயத்திலிருந்து பெருமானின் திருநாமங்களையும் பெருமான் குறித்த புகழ்ச் சொற்களையும் பேசும் தொண்டர்கள் அழியாத செல்வம் உடையவர்களாக நீண்ட புகழுடன் வாழ்வார்கள் என்று கூறுகின்றார்.
பலவு நீள் பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய
கல்வ மஞ்ஞைகள் நிலவு சொற்கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகாய
குலவும் நீள்வயல் கயலுகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள்
நிலவு செல்வத்தராகி நீள்நிலத்திடை நீடிய புகழாரே
இந்த குறிப்பு நமக்கு சீர்காழி தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் (2.113.5) பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. வேதங்களை அடிக்கடி அந்தணர்கள் ஓதக் கேட்ட இந்த கிளிகள் இளைய சிறுவர்கள் வேதம் ஓதும் போது செய்யும் தவறுகளை திருத்தும் வல்லமை படைத்தவை என திருஞானசம்பந்தர் சிறப்பித்து கூறுகிறார். இதிலிருந்து அந்த நாளில் அந்தணர்கள் தங்களது தொழில்களில் இரண்டான வேதம் ஒதுதல், வேதம் ஓதுவித்தல் இவற்றை முறையாக செய்து கொண்டு இருந்தனர் என்று தெளிவாகின்றது. மற்ற நான்கு கடமைகளை அந்தணர்கள் செய்து வந்தமையும் (வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், தானம் வாங்குதல், தானம் கொடுத்தல்) பல தேவாரப் பாடல்களிலும் பெரியபுராணத்திலும் குறிப்பிடப் படுகின்றன.சரிதை=ஒழுக்கம்; விருது இலங்கும்=பெருமானின் வெற்றியை பறை சாற்றும்; சரிதை=சரித்திரம்; வெற்றியை பறை சாற்றும் பல புராண நிகழ்ச்சிகளை உடையவர் பெருமான்.
விருது இலங்கும் சரிதைத் தொழிலார் விரி சடையினார்
எருது இலங்கப் பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது
பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓதப் பிழை கேட்டலாற்
கருது கிள்ளைக் குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே
விடை அது ஏறி எனத் தொடங்கும் பதிகத்திலும் (2.122.2) இந்த தலத்தில் வாழும் கிளிகள் பேசக் கற்றுக்கொள்வதே மறையோர்கள் ஓதும் வேதத்தில் இருந்து என்று கூறி சீர்காழி நகரினில் வேதம் ஓதப்பட்ட சிறப்பினை சம்பந்தர் கூறுகிறார்.
வேலை தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார்
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது
சால நல்லார் பயிலும் மறை கேட்டுப் பதங்களை
சோலை மேவும் கிளி தான் சொற் பயிலும் புகலியே
மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.28.1) திருஞானசம்பந்தர், அடியார்கள் பெருமானை புகழ்ந்து சொல்லும் சொற்கள் மற்றும் வேத மந்திரங்கள் ஆகியவற்றை கேட்கும் கிளிகள், பல சொற்களைக் கற்றுக் கொள்கின்றன என்று குறிப்பிட்டு இயற்றமிழால் இறைவனை எவ்வாறு அடியார்கள் போற்றினார்கள் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஆர்=ஆர்க்கின்ற, இசைக்கின்ற; காலை=காலை நேரத்தில் பாடவேண்டிய மருதப் பண்;கிண்டிய=தமது கால் விரல்களால்; பொழுது புலரும் சமயத்தில் அன்று அலர்ந்த மலர்களில் உள்ள தேனைப் பருகும் எண்ணத்துடன் வரும் வண்டுகள், காலை வேளைக்கு பொருந்தும் மருதப் பண்ணினை பாடுவதாக கூறுகின்றார். கார்=மேகம்; கார் உறும்=மேகங்களைத் தழுவும் வண்ணம் உயர்ந்த; வேலை=கடல்,பாற்கடல்; வேதியன்=வேதங்களின் பொருளாக உள்ளவன், வேதங்களை அருளியவன், எப்போதும் வேதம் ஓதிக்கொண்டு இருப்பவன் என்று பல விதமாக விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
காலையார் வண்டினம் கிண்டிய கார் உறும்
சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
வேலையார் விடம் அணி வேதியன் விரும்பிடம்
மாலையார் மதி தவழ் மாமழபாடியே
சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.9) திருஞானசம்பந்தர், சோலைகளில் உள்ள கிளிகள் சொல் பயில்கின்றன என்று கூறுகின்றார். வரை=மலை; நீலமலை போன்று நெடிய உருவம் கொண்ட திருமால்; இனம்=சிறந்த; நேர்=நேராக உயர்ந்த நெடிய உருவம்; நீள்=நீண்ட இறகுகளை உடைய அன்னப் பறவை; பரமன்=அனைவரிலும் உயர்ந்தவன்; பிரமன் மற்றும் திருமால் காண முடியாமல் திகைத்து நின்ற தன்மை அவர்கள் இருவரையும் விடவும் பெருமான் உயர்ந்தவன் என்று உணர்த்துவதால், பரமன் என்ற திருப்பெயரால் பெருமானை அழைக்கின்றார். சூழ் புறவு=தலத்தை சூழ்ந்த இடங்கள்; பயில்= தொடர்ந்து செய்யப்படும் ஒரு செயல்.
நீலவரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவமாம்
மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவமான வரதன்
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம்
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே
இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (3.75.4) கற்றவர்கள் சொல்கின்ற மொழிகளைப் பயிலும் கிளிகள் வளர்கின்ற சோலைகள் நிறைந்த நகரம் சண்பை நகரம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தத்தை=கிளி; எட்டு மருவெட்டு=எட்டெட்டு கலைகள், அறுபத்து நான்கு கலைகள்; முழவு கொட்ட=முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க; இட்ட=வைத்த; வட்டணைகள்=வட்ட வடிவத்தில் அடிகளை எடுத்து வைத்து ஆடும் நடனம்; பட்ட நுதல்=நெற்றியில் பட்டம் அணிந்த பெருமான்; மட்டு=நறுமணம்; பாவை=பார்வதி தேவி; மலி=மிகுந்த; வட்டமதி தட்டு பொழில்=வட்ட வடிவத்தில் விளங்கும் சந்திரனின் ஒளிக்கதிர்களை உள்ளே நுழைய விடாமல் தடுக்கும் அடர்ந்த சோலைகள்; சண்பை தலத்தில் வாழும் சான்றோர்கள் அறுபத்து நான்கு கலைகளை கற்றவர்களாகவும் தவறாது உண்மை பேசுவோர்களாகவும் உள்ளனர் என்று கூறுகின்றார்.
கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடமாடி குலவும்
பட்ட நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதி தான்
வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார்
சட்ட கலை எட்டு மருவெட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே
வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.119.8) திருஞானசம்பந்தர், கிளிகள் வேதத்தின் சொற்களை ஓதுவதைக் கேட்கும் அந்தணச் சிறுவர்கள் தங்களது காதுகளைத் தீட்டிக் கொண்டு அந்த சொற்களை தாங்களும் கேட்டு இன்பம் அடைவதாக கூறுகின்றார். வேதங்களை எவரேனும் தவறாக ஓதினால், அந்த தவறுகளை திருத்தும் வல்லமை பெற்ற கிளிகள் என்பதால், அந்த கிளிகள் சொல்வதை உன்னிப்பாக சிறுவர்கள் கவனித்தனர் போலும். விடைக்குலம் என்ற சொல்லுக்கு பசுவின் கூட்டம் என்று பொருள் கொண்டு, கிளிகள் சொல்வதைக் கேட்ட பசுக்கள் தங்களது காதுகளை நீட்டி பழக்கிக் கொள்கின்றன என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பாடு=அருகே; படித்த=கற்றுக் கொண்ட, அந்நாளில் திருவெண்காடு தலத்தில் வேதபாடசாலைகள் இருந்தன போலும். இன்றும் அந்த தலத்தினில் ஒரு வேத பாடசாலை இருப்பதை நாம் காணலாம்.
கடுத்த வாளரக்கன் கைலை அன்று எடுத்த கரமும் சிரம் நெரிந்து அலற
அடுத்ததோர் விரலால் அஞ்செழுத்து உரைக்க அருளினான் தடமிகு நெடுவாள்
படித்த நான்மறை கேட்டிருந்த பைங்கிளி பதங்களை ஓதப் பாடு இருந்த
விடைக்குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே.
பல தேவாரப் பாடல்கள், அடியார்கள் பெருமானின் திருநாமங்களை சொல்வதைக் கேட்டு, தாமும் பெருமானின் திருநாமங்களை சொல்வதற்கு பழகுகின்றன என்று குறிப்பிடுகின்றன. இத்தகைய குறிப்புகள் எண்ணற்ற அடியார்கள் மீண்டும் மீண்டும் பெருமானின் திருநாமங்களை சொல்லிக் கொண்டும் அவனது புகழினை பேசிக்கொண்டும் இருந்தனர் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. அந்த கலயநல்லூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (7.16.8) சுந்தரர், கலயநல்லூர் தலத்தில் உள்ள கிளிகள், ஆங்குள்ள அடியார்கள் சொல்வதைக் கேட்டு, பெருமானின் திருநாமங்களை சொல்லித் துதிக்கின்றன என்று கூறுகின்றார்.
மாலயனும் காண்பரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்தெழுந்த
வேலை விடம் உண்ட மணிகண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில்
சோலை மலி குயில் கூவக் கோலமயில் ஆலச் சுரும்பொடு வண்டிசை முரலப் பசுங்கிளி சொல் துதிக்க
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே
ஈங்கோய்மலையில் வாழும் கிளிகள், சுடர்விட்டு ஒளி வீசும் குழை ஆபரணத்தினை அணிந்த பெருமானின் புகழினை உணர்த்தும் பாடல்களை அடியார்கள் பாடக் கேட்டு, தாமும் அந்த பாடல்களைக் கற்றுக்கொண்டு இசையுடன் பாடுகின்றன என்று நக்கீரர் (பதினோராம் திருமுறை) பாடிய ஈங்கோய் எழுபது பதிகத்தின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஆண் யானையின் மதநீரினை விரும்பிச் சுவைக்கும் வண்டுகள் என்று இங்கே கூறுகின்றார்.சுடர்க்குழையார்=ஒளி வீசும் குழை ஆபரணத்தை அணிந்த பெருமான்; பாட்டு எழவு=பெருமானின் புகழ் பாட்டாக எழும் நிலை;
கடக்களிறு கண்வளரக் கார் நிற வண்டு ஆர்ப்ப
சுடர்க் குழையார் பாட்டு எழவு கேட்டு மடக் கிளிகள்
கீதம் தெரிந்து உரைக்கும் ஈங்கோயே ஆல் கீழ் நால்
வேதம் தெரிந்து உரைப்பான் வெற்பு
புகலி நகரத்து மகளிர் கிளிகளுக்கு சொற்பயிற்சி தருகின்றனர் என்று திருஞானசம்பந்தர், புகலி மற்றும் வீழிமிழலை தலங்களை இணைத்துப் பாடிய பதிகத்தின் பாடலில் (1.4.2) கூறுகின்றார். கழல் பந்து அம்மானை முற்றில் ஆகியவை சிறுமியர்கள் ஆடும் விளையாட்டுகள்; பல சங்க இலக்கியங்களில் இந்த விளையாட்டுகள் பற்றிய குறிப்பு காணப்படுகின்றன. கழல் என்பது கழங்கு என்றும் அழைக்கப்படுகின்றது. கழற்சிக்காய் என்று அழைக்கப்படும் வழுவழுப்பான பளிங்கு உருண்டைகள் கொண்டு ஆடப்படும் விளையாட்டு; மூன்று அல்லது ஐந்து சிறுமியர் சேர்ந்து விளையாடும் விளையாட்டு; முற்றில் என்பது தற்காலத்தில் பாண்டி என்று அழைக்கப்படும் விளையாட்டு போன்றது. கட்டங்கள் கட்டி ஒற்றைக்காலுடன் நொண்டி போன்று ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு தாவி விளையாடப்படும் விளையாட்டு. பெருமான் நம்மைப் போன்று பசி தாகம் உறக்கம் தளர்ச்சி களைப்பு ஆகிய உணர்ச்சிகளால் தாக்கப்படுபவர் இல்லை. எனினும் அவர் பல இல்லங்களுக்கு பிச்சைப் பெருமானாக சென்று பலியேற்பதை குறிப்பிடும் வண்ணம் உபசார வார்த்தையாக உண்டு என்ற சொல் இங்கே கையாளப் பட்டுள்ளது. பெருமான் பலியேற்பது அவனது உணவுத் தேவைக்காக அல்ல; பக்குவப்பட்ட அடியார்களின் மலங்களைக் கழித்து அவர்களுக்கு முக்தி உலகினை பரிசாக அளிக்கும் பொருட்டே அவன் பலியேற்கின்றான்.
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழில் மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே
எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்புறு செல்வம் இதென்கொல் சொல்லாய்
மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த விண்ணிழி கோயில் விரும்பியதே
பெருமானுடன் சேர வேண்டும் என்ற தீராத ஏக்கத்துடன் இருக்கும் தலைவி பெருமானுக்கு தூதுவர்கள் பலரை அனுப்பி தூது விடுத்தும் பெருமான் வாராத நிலையில், அரனின் நாமத்தினை எவராவது சொல்லக் கேட்டால் தனது வருத்தம் சிறிதாவது குறையும் என்ற நம்பிக்கையில் தான் வளர்த்த கிளியை அரனது நாமம் கூறுமாறு சம்பந்த நாயகி வேண்டுகிறாள். இறைவனின் திருநாமம் சொன்னால் கிளிக்கு தேனும் பாலும் தருவதாக ஆசை காட்டுகின்றாள்.இறைவனின் பேரில் தலைவி கொண்டிருந்த காதலின் சக்தி தான் என்னே. தலைவியாக தன்னை உருவகித்து, இறைவனுடன் தான் சென்று சேர வேண்டும் என்ற விருப்பத்தை திருஞான சம்பந்தர் வெளிப்படுத்தும் பாடல் (1.60.10). இந்த குறிப்பு, பெருமானின் திருநாமங்கள் பலராலும் இடைவிடாது சொல்லப்பட்ட தலம் சீர்காழி என்பதையும், அந்த திருநாமங்களை கேட்ட கிளிகளும் அந்த நாமங்களை சொல்லும் திறமை வாய்ந்தவையாக இருந்தன என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளலாம்.
சிறை ஆரும் மடக் கிளியே இங்கே வா தேனொடு பால்
முறையாலே உணத் தருவன் மொய் பவளத்தொடு தரளம்
துறை ஆரும் கடல் தோணிபுரத்து ஈசன் துளங்கும் இளம்
பிறை ஆளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே
சிறையாரும் மடக்கிளியை வேண்டி, பெருமானின் திருநாமத்தை ஒரு முறையேனும் யான் கேட்க சொல்லுவாய் என்று கூறும் சம்பந்த நாயகி போன்று,நக்கீரரின் நாயகியும் வேண்டுவதை நாம் கீழ்கண்ட பாடலில் காணலாம். காளத்திப் பெருமான் பால் காதல் கொண்ட இந்த நாயகி, ஈசன் நேரே வந்து தனது துயரினைத் தீர்க்காவிடினும், அவனது தன்மையை பிறர் சொல்லக் கேட்பதால் ஆற்றாமை ஏற்படும் என்ற எண்ணத்துடன், தான் தனியாக இருக்கும் இடத்திற்கு வந்து பெருமானின் திறத்தினை கூறுவாய் என்று, தான் வளர்க்கும் கிளியிடம் வேண்டுகின்றாள். பல முறை பெருமானின் தன்மையை வியந்து நாயகி சொல்லிய விவரங்களை கேட்ட கிளி போலும். வேறாக=தனியாக; நீறாவும்=நீல்+தாவும்=நீல நிறம் பொருந்திய; மனசு=மேகம்; குடுமி=உச்சி, சிகரம்;வாள்=ஒளி; திறம்=குணம், தன்மை; பெருமானின் தன்மையை தான் கேட்டறிந்து கொள்வதை வேறு எவரும் தெரிந்து கொள்ளலாகாது என்று எச்சரிக்கையுடன் கிளியினை தனியிடத்திற்கு வருமாறு வேண்டும் காதலியின் தன்மையும் இங்கே வெளிப்படுகின்றது.
கூறாய் நின் பொன் வாயால் கோலச் சிறுகிளியே
வேறாக வந்திருந்து மெல்லெனவே நீறாவும்
மஞ்சு அடையும் நீள்குடுமி வாளருவிக் காளத்திச்
செஞ்சடை எம் ஈசன் திறம்
இந்த குறிப்பு, கிளிகள் இறைவனின் திருநாமத்தை சொல்லும் ஆற்றல் பெற்று இருந்தமை, நமக்கு கண்காட்டும் நுதலானும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல் ஒன்றினை (2.48.6) நினைவூட்டுகின்றது சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் அதிகமாக இருந்த ஊரான வெண்காட்டில், அரன் நாமம் ஆங்கு உள்ளோர் சொல்லக் கேட்டு கிளிகளும் அவனது நாமத்தை கூறும் திறமை படைத்தன என்று திருஞானசம்பந்தர் பிரான் இந்த பாடலில் குறிப்பிட்டு மகிழ்கின்றார்.
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையின் உடன்
ஒண்மதிய நுதல் இமையோர் கூறு உகந்தான் உறை கோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசும் கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே.
பெரியபுராணத்தில் திருவாரூர் தலத்தின் சிறப்பினை குறிப்பிடும் சேக்கிழார், திருவாரூரின் அருகே உள்ள வயல்களில் உள்ள கிளிகள் தேவாரத் திருப்பதிகங்களை பாடுவதை கேட்டு மகிழும் பூவைகள் (நாகணவாய்ப் பறவைகள்) என்று கூறுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. தெள்ளும் ஓசை=இனிய ஓசை; வள்ளலார்=வேண்டுவார் வேண்டுவன எல்லாம் அருளும் பெருமான்; தெள்ளுதல் என்ற சொல்லுக்கு அகழ்ந்து என்று பொருள் கொண்டு நமது வினைகளைத் தோண்டி வெளியே எடுத்து அறுக்கும் தேவாரப் பதிகங்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பறவைகளும் தேவாரப் பதிகங்களை கேட்டு மகிழும் தலத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் தேவாரப் பதிகங்களை ஓதியும் கேட்டும் உருகி நிற்பார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம், உள்ளம் ஆர் உருகாதார் என்று பாடலின் முதல் அடியில் சேக்கிழார் கேட்கின்றார்.
உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை
வள்ளலார் திருவாரூர் மருங்கெலாம்
தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்
இந்த பாடலில் திருஞானசம்பந்தர் தென்முகக்கடவுளாக பெருமான் சனகாதி முனிவர்களுக்கு அறம் உரைத்ததை குறிப்பிடுகின்றார். திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் சுந்தரர் (7.65.6) சனகாதி முனிவர்களுக்கு எந்த சூழ்நிலையில் அறம் உபதேசம் செய்தார் என்று கூறுகின்றார். காது பொத்தர்=சிவபெருமானின் தன்மைகள் பற்றி மட்டுமே கேட்ட காதுகள், வேறெதையும் கேளாமல் பொத்திக்கொண்ட காதுகள் என்ற விளக்கமும் அளிக்கப்படுகின்றது. பன்னகம்=பாம்பு; சீயம்=சிங்கம்; உழுவை=புலி; பிடிப்பரும்=பிடிப்பதற்கு அரிதாக சிறந்த வீரத்துடன் விளங்கும்; கொடிய விலங்குகள் சூழ்ந்த காட்டினில் பெருமான் நால்வர்க்கு அறம் உபதேசம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இந்த சூழ்நிலை நமக்கு இரண்டு செய்திக்ளை உணர்த்துகின்றது. சனகாதி முனிவர்கள் காட்டினில் இருந்த இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் பெருமானிடம் உபதேசம் கேட்டனர் என்பதையும்,பெருமானின் சன்னதியில் கொடிய விலங்குகளும் தீங்கு செய்யாமல் நல்லவையாக மாறிவிடுகின்றன என்பதையும், இந்த பாடல் மூலம் சுந்தரர் நமக்கு உணர்த்துகின்றார். பெருமானின் உபதேசத்தால் தங்களுக்கு இருந்த ஐயப்பட்டுகளை நீக்கிக் கொண்ட சனகாதி முனிவர்கள் வேதங்களுக்கு உரை எழுதி இன்பம் கண்டனர் என்றும் சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும், பெருமான் புரிந்த கருணைச் செயல்களை குறிப்பிடும் சுந்தரர், அந்த கருணைச் செயல்களின் தன்மையை கேட்டறிந்த தான் பெருமானின் திருவடிகளை சரண் அடைந்ததாக ஒவ்வொரு பாடலிலும் கூறுகின்றார்.
காது பொத்தரைக் கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பரும் சீயம்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல் நிழற்கீழ் அறம் பகர
வேதம் செய்தார் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணையடி அடைந்தேன்
நீதி வேதியர் நிறைபுகழ் உலகில் நிலவு தென் திருநின்றியூரானே
சேய்ஞலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.48.1) திருஞானசம்பந்தர் சனகாதி முனிவர்கள், வேதங்கள் ஆகமங்கள் ஆகிய பல நூல்களைக் கற்ற பின்னரும், பெருமானின் திருவடியை கூறும் மார்க்கம் தெளிவாக புரியாமல், தங்களது அஞ்ஞானம் நீங்காததால், உண்மை யாது என்று புரிந்து கொள்ள முடியாமல் மயக்க நிலையில் இருந்த சனகர் சனாதனர் சனந்தனர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களும் தங்களது ஐயப்பாட்டினை விளக்க வேண்டும் என்று பெருமானிடம் வேண்ட, அதற்கு இசைந்த பெருமானும் ஆலமரத்தின் நிழலில் பொருந்தி அமர்ந்தவாறு அரிய மறைகளின் பொருளை விளக்கமாக உணர்த்தினார் என்று கூறுகின்றார். நூல்=வேதம் மற்றும் சிவ ஆகமங்கள்; மால்=ஐயப்பாடு; மால் என்ற சொல்லுக்கு காதல் மயக்கம் என்று ஒரு பொருளும் உள்ளது. என்னே, வியப்புக் குறிச்சொல். பெருமானின் கருணைத் திறத்தினை வியந்து சொல்லியது.நல்லறம்=சிவதன்மம்; நால்வர்=சனந்தனர், சனத்குமாரர், சனாதனர், சனகர் ஆகியோர்; பிரமனின் மனதிலிருந்து தோன்றியவர்கள் என்பதால் மானச புத்திரர்கள் என்று கூறுவார்கள்.
நூல் அடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேயவனே
ஏர்=அழகு; ஏரிசை=அழ்கு இணைந்த; ஈரிருவர்=சனகாதி முன்வர்கள் நால்வர், பெருமானின் இரண்டு பக்கங்களிலும் இரண்டிரண்டு பேராக அமர்ந்த நிலை உணர்த்தும் பொருட்டு ஈரிருவர் என்று கூறினார் போலும். நேரிய=உண்மை நெறியாகிய; ஒளிசேர் நெறி=அறியாமையை நீக்கி உண்மையான மெய்ஞானம் அளிக்கும் சிவநெறி; இசையும்=பொருந்திய; பாரிசையும்=நிலவுலகில் பொருந்திய; வேரி=தேன்:
பொழிப்புரை:
அழகுடன் இணைந்த வடவால மரத்தின் கீழே அமர்ந்த வண்ணம் கருணையுடன், சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும், நான்மறைகளின் உண்மையான பொருளை உரைத்து, அறியாமையை ஒழித்து மெய்ஞானம் அளிக்கும் சிவநெறியை உணர்த்திய பெருமான் உறைகின்ற திருக்கோயில் வீழிமிழலையாகும்.நிலவுலகில் உள்ள பண்டிதர்கள், தொடர்ந்து பல நாட்களாக, தம்மிடம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வேதங்கள் பயில்விப்பதை கேட்டு வந்த கிளிகள்,வீழிமிழலை தலத்து சோலைகளில் உலவும் கிளிகள், வேத மந்திரங்களுக்கு பொருள் சொல்லும் அளவுக்கு திறமை வாய்ந்தன என்று சொல்லும் வண்ணம் சிறப்பு படைத்த தலம் திருவிழிமிழலையாகும்.
பாடல் 2:
பொறி அரவம் அது சுற்றிப் பொருப்பே மத்தாகப் புத்தேளிர் கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும் கோயில்
செறி இதழ்த் தாமரைத் தவிசில் திகழ்ந்தோங்கும் இலைக்குடைக் கீழ் செய்யார் செந்நெல்
வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே
விளக்கம்:
பொறி அரவம்=தனது உடலில் புள்ளிகள் கொண்ட பாம்பு; இங்கே வாசுகி பாம்பு என்று பொருள் கொள்ள வேண்டும்; பொருப்பு=மலை, இங்கே மந்திர மலை; புத்தேளிர்=தேவர்கள்; மறி கடல்=மடிந்து ஒன்றன் பின் ஒன்றாக அரும் அலைகள் கொண்ட கடல்: கண்டம்=கழுத்து; மன்னும்=நிலையாக உறையும்:செறி=அடர்ந்த; தவிசு=இருக்கை; செய்=வயல்; வெறி=நறுமணம்; சாமரை=சாமரம்; இரட்ட= வீச; நெல்வயலின் அருகே உள்ள தாமரைக் குளத்தில் அன்னம் வீற்றிருக்கும் காட்சியை, தாமரை இலை குடை போன்று கவிந்து நிற்க, நெல்வயலில் உள்ள நெற்கதிர்கள் கவரி விசுவது போன்று அசைந்தாட,அன்னங்கள் கம்பீரமாக வீற்றிருக்கின்றன என்று கூறுகின்றார், கூடி என்ற சொல், தேவர்கள் அசுரர்களுடன் ஒன்று சேர்ந்து பாற்கடலைக் கடையும் முயற்சியில் ஈடுபட்ட தன்மையை உணர்த்துகின்றது.
பொழிப்புரை:
தனது உடலில் புள்ளிகள் கொண்ட வாசுகி பாம்பினை கயிறாக, மத்து போன்று பயன்படுத்தப்பட்ட மந்தர மலையினைச் சுற்றிக் கட்டி, தேவர்கள் அசுரர்களுடன் ஒன்று கூடி, மடிந்து ஒன்றன் பின் ஒன்றாக வரும் அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த போது, அந்த கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தை உண்டு தேக்கிய கழுத்தினை உடைய பெருமான் நிலையாக பொருந்தியுள்ள திருக்கோயில் வீழிமிழலையாகும். செழிப்புடன் அடர்ந்து காணப்படும் இதழ்களைக் கொண்ட தாமரை மலரினைத் தனது இருக்கையாகக் கொண்டு அமர்ந்திருக்கும் இளமை வாய்ந்த அன்னத்திற்கு, அந்த தாமரை இலைகள் குடை போன்று கவிந்து நிற்க, அருகிலுள்ள நெல் வயல்களில் விளைந்த முற்றிய நெற்கதிர்கள் காற்றில் அசைந்து ஆடுவது அன்னத்திற்கு சாமரம் வீசுவது போன்ற தோற்றம் கொண்ட காட்சி உடையது வீழிமிழலை தலமாகும்.
பாடல் 3
எழுந்துலகம் நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும் எழில் கணாடி
உழுந்து உருளும் அளவையின் ஒள்ளெரி கொள வெஞ்சிலை வளைத்தோன் உறையும் கோயில்
கொழுந்தரளம் நகை காட்டக் கோகநகம் முகம் காட்டக் குதித்து நீர் மேல்
விழுந்த கயல் விழி காட்ட விற்பளம் வாய் காட்டும் மிழலையாமே
விளக்கம்:
கொழுந்தரளம்=செழுமையாக வளர்ந்த முத்துக்கள்; கோகநகம்=தாமரை; திரிபுரத்து கோட்டைகளை பெருமான் மிகவும் குறைந்த நேரத்தில் எரித்து அழித்தார் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். கண்ணாடிப் பரப்பினில் வைக்கப்படும் உளுந்து உருளும் நேரத்திலும் மிகவும் குறைவான நேரத்தில், பெருமான் வேறுவேறு திசையில் எப்போதும் பறந்து கொண்டிருக்கும் கோட்டைகளை எரித்தார் என்று கூறுகின்றார். கண்ணாடி வழுவழுப்பான பரப்பினை உடையது என்பதால் அதனில் வைக்கப்படும் எந்த பொருளும் வழுக்கி கீழே உழுவது என்பது இயல்பே. உளுந்து உருண்டையான தானியம் என்பதால், எந்த பரப்பிலும் உருண்டு ஓடக்கூடிய தன்மை உடையது. கண்ணாடிப் பரப்பின் மீது உளுந்து தானியம் வைக்கப்பட்டால் எவ்வளவு வேகமாக உருண்டோடும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அதனினும் குறைந்த நேரத்தில் கோட்டைகள் எரித்து அழிக்கப்பட்டன என்பதை இந்த உவமானம் மூலம் திருஞான சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார்.
அத்தகைய வேகம் இருந்தால் தான் திரிபுரத்து கோட்டைகளை அழிக்க முடியும் என்பதை உணர்ந்தவர் பெருமான். வேறுவேறு திசையில் பறந்து கொண்டிருந்த கோட்டைகள் என்பதை நாம் அறிவோம். மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் தருணத்தில் மட்டுமே., ஒரே அம்பினைக் கொண்டு அந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்பது திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரம் என்பதால், ஒரே நேர்கோட்டினில் வருவதை தவிர்க்கும் வண்ணம் பறந்து செல்வதே அவர்கள் நோக்கமாக இருந்தது. ஒருகால் அவ்வாறு ஒரே நேர்கோட்டினில் வந்தாலும், அந்த நிலையிலிருந்து உடனடியாக மாறி விடுவதே அவர்களின் நோக்கமாக இருக்கும் அல்லவா. அதனால் தான் அத்தகைய நிலையில் தாம் இருப்பதை புரிந்து கொண்டு அதனை மாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபடும் முன்னரே அந்த கோட்டைகளை எரித்து அழிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திலும்,உடனேயும் பெருமான் இந்த கோட்டைகளை அழித்தார் என்று உணர்த்தும் தேவாரப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
எப்போதும் பறந்து கொண்டே இருந்த திரிபுரத்து கோட்டைகளை ஓடும் திரிபுரங்கள் என்று குறிப்பிட்டு, மிகவும் குறைந்த நேரமே அவை ஒரு நேர்க்கோட்டினில் இருந்த தனமையை உணர்த்தி, அத்தகைய கோட்டைகளை பெருமான் உடனே உலந்து அவிய அழித்தார் என்று ஆப்பனூர் தலத்தின் மீது அருளிய பதிக்கத்தின் பாடலில் (1.88.3) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உலந்து=வற்றி; இரவில் ஆடும் பெருமான் என்பதற்கு பிரளய காலத்து இருளில் நடனம் ஆடும் பெருமான் என்று பொருள் கொள்ளவேண்டும்.
ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவியக்
காடது இடமாகக் கனல் கொண்டு நின்று இரவில்
ஆடும் தொழிலானை அணி ஆப்பனூரானைப்
பாடும் மனம் உடையர் வினை பற்று அறுப்பாரே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.124.6) பகைவர்களுக்கு சிங்கம் போன்று திகழும் பெருமான், ஒரே நேர்க் கோட்டினில் சேர்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், ஒரு நொடியினில் எரிந்து அழியும் வண்ணம் சிரித்தவர் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். அரி=சிங்கம்; பெருமானை நினைக்கும் அடியார்கள் வலிமை பெற்று விளங்குவார்கள் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அன்றினர்=பகைவர்; அன்றி=மாறுபட்டு;உலகத்தவர் அனைவரும் சிவநெறியில் ஒழுகிய போது அவர்களுடன் மாறுபட்டு சிவநெறியை புறக்கணித்த திரிபுரத்து அரக்கர்கள்; வானில் திரிந்து கொண்டிருக்கும் கோட்டைகள் ஒரே நேர்க்கொட்டினில் வருவது எப்போதோ ஒரு முறை நிகழக் கூடிய அரிய செயல் என்பதை உணர்த்தும் வண்ணம்,அரிதினில் ஒன்றிய திரிபுரம் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
அன்றினர் அரி என வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒரு நொடியினில் எரி
சென்று கொள் வகை சிறுமுறுவல் கொடு ஒளிபெற
நின்றவன் மிழலையை நினைய வலவரே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.131.4) மும்மதிலும் நொடி அளவில் பொடி செய்த முதல்வன் என்று பெருமானை,திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மாசுணம்=பாம்பு; வாணர் என்ற சொல் வாழுநர் என்ற சொல்லின் திரிபு. புரவாணர்=திரிபுரத்தில் வாழ்ந்து வந்த அரக்கர்கள்; விறல்=வலிமை; மைமருவு=மேகங்கள் தவழும் உயர்ந்த மலை; திரிபுரத்து அரக்கர்களுடன் சிவபெருமான் போருக்குச் சென்றபோது அவருக்கு உதவும் பொருட்டு, பல தேவர்கள் முன்வந்தனர், எட்டு திசைகள் தூண்களாகவும், பூமி தேர்த் தட்டாகவும், ஆகாயம் தேரின் கூரையாகவும், சூரியன் சந்திரன் தேரின் சக்கரங்களாகவும் கொண்ட தேரினை தேவத் தச்சன் விசுவகர்மா உருவாக்கினார். வேதங்கள் குதிரைகளாக நிற்க, பிரமன் சாரதியாக மாறினான்.மேருமலை வில்லாகவும், வாசுகி பாம்பு நாணாகவும், திருமால் அம்பின் தண்டாகவும், அக்னி அம்பின் முனையாகவும், வாயு அம்பின் இறக்கைகளாகவும்,பங்கு கொள்ள, பல தேவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த போரினால் பங்கு கொண்டனர். இவ்வாறு தேவர்களும் மற்றவர்களும் பங்கு கொண்டமை இங்கே தேவர்களே தேரதாக என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. இந்த செய்தி பல திருமுறைப் பாடல்களில் கூறப் படுகின்றது. அந்நாள் வரை திரிபுரத்து அரக்கர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டு இருந்த தேவர்கள், சிவபிரானுக்குத் தாங்கள் உதவுவதைக் குறித்து சற்று கர்வம் கொண்டார்கள் போலும். இதனை உணர்ந்த சிவபிரான், எவருடைய உதவியும் இல்லாமல் தான் ஒருவனாகவே திரிபுரத்து அரக்கர்களை அழிக்கத் திருவுள்ளம் கொண்டார்.அவர் தனது திருவடிகளை எடுத்து தேரின் மீது வைத்தவுடன், தேரின் அச்சு முறிந்தது. தேரின் அச்சு முறிந்த தருணத்தில், அங்கே இருந்த திருமால் இடபமாக மாறி பெருமானைத் தாங்கினார் என்றும் புராணம் கூறுகின்றது.
வெம்மை மிகு புர வாணர் மிகை செய்ய விறல் அழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன் மால் சென்று இரப்பத் தேவர்களே தேரதாக
மைம்மருவு மேரு விலும் மாசுணம் நாண் அரி எரி கால் வாளியாக
மும்மதிலும் நொடி அளவில் பொடி செய்த முதல்வன் இடம் முதுகுன்றே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.133.2) அவுணர் மாநகர் மூன்றுடன் மாய்ந்தவிய சரம் துரந்து எரி செய்தவன் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். துரந்து=செலுத்தி மரவம்=வெண் கடம்பு; சரம்=அம்பு; சங்கரன்=இன்பம் அளிப்பவன்; திரிபுரத்து அரக்கர்கள் இழைத்து வந்த கொடுமைகளிலிருந்து தேவர்களையும் மனிதர்களையும் மீட்டு அனைவரையும் இன்பம் அடையச் செய்த பெருமானை சங்கரன் என்று அழைப்பது தானே பொருத்தம். மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டில் வரும் தருணத்தில் மட்டுமே ஒரே அம்பினால் மட்டுமே தங்களது கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்ற வரம் பெற்றதன் காரணமாக அனைவரையும் வெற்றி கொள்ளும் தன்மையுடன் திரிபுரத்து அரக்கர்கள் திகழ்ந்த தன்மை, வரம் திகழும் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது.
வரம் திகழும் அவுணர் மாநகர் மூன்றுடன் மாய்ந்து அவியச்
சரம் துரந்து எரி செய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
குருந்த மல்லிகை கோங்கு மாதவி நல்ல குராமரவம்
திருந்து பைம்பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே
சிக்கல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.8.7) திருஞானசம்பந்தர் மதில் மூன்றும் உடனே எரியாய் விழ வெங்கணை செலுத்தியவன் பெருமான் என்று கூறுகின்றார். உன்னி= தியானித்து; நீட=நீண்ட நாள் வாழ; முன்னு=முற்பட்டு; மாடம்=உயர்ந்த வானவெளீயில் செல்லும்;துன்னுவார்வெங்கணை=துன்னு கணை, வார்கணை, வெங்கணை; துன்னு கணை=விரைந்து செல்லும் வல்லமை வாய்ந்தது; ஒரே நேர்க்கோட்டினில் இருந்த கோட்டைகள் அந்த நிலையிலிருந்து மாறும் முன்னமே அடைய; வார் கணை=நீண்ட கணை; ஒன்றினை ஊடுருவிச் சென்று அழித்த பின்னர்,இரண்டாவதையும் ஊடுருவிச் சென்று அழித்து மூன்றாவது மதிலையும் அடைந்து தீ மூட்டி அழித்த கணை என்பதால் நீண்ட கணை என்று கூறுகின்றார்;வெங்கணை= முனையில் அக்னிதேவன் அமர்ந்ததால் கொடிய வெப்பத்தினை வெளிப்படுத்தும் தீச்சுடரைக் கொண்ட கணை;
முன்னு மாடம் மதில் மூன்றுடனே எரியாய் விழத்
துன்னுவார் வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான்
செந்நெலாரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி
உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே
திருமழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.09.6) திருஞானசம்பந்தர், முப்புரத்து அரக்கர்களின் கோட்டைகளை உடனே தீயில் மாட்டி எரித்த சேவகன் என்று கூறுகின்றார். தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி என்ற திருவாசகத்தொடர் நமது நினைவுக்கு வருகின்றது.வன்புரம்=வலிமையான கோட்டைகள்; சேவகன்=வீரன்; தெரிந்த=முற்றும் உணர்ந்த; முற்றும் உணர்தல் பெருமானின் எட்டு குணங்களில் ஒன்றாகும்.இறைவன் எண்குணத்தான் என்று ஒரு திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு உரை கண்ட பரிமேலழகர் எட்டு குணங்களாவன,தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். இந்த எட்டு குணங்களே சைவ சித்தாந்தத்தில் சிவபிரானது குணங்களாக கூறப்படுகின்றன. வன் என்ற சொல்லினை தெரிந்த மற்றும் புரம் ஆகிய இரண்டு சொற்களுடன் கூட்டி பொருள் கொள்ளலாம்.
தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழுவார் அவர் தம் மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான் மழபாடியைப்
புரிந்து கைதொழுமின் வினையாயின போகுமே
கோழம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.13.6) திருஞானசம்பந்தர், பெருமானை விண்டவர்கள் புரம் மூன்றும் உடனே வேவக்கண்டவன் என்று கூறுகின்றார். பரஞ்சோதி=உயர்ந்த ஒளி; விண்டவர்கள்=வேத நெறியையும் சிவநெறியையும் விட்டு விலகி அனைவர்க்கும் பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்கள்;
பண்டாலின் நீழலானைப் பரஞ்சோதியை
விண்டார்கள் தம் புரம் மூன்றுடனே வேவக்
கண்டானைக் கடிகமழ் கோழ்ம்பம் கோயிலாக்
கொண்டானைக் கூறுமின் உள்ளம் குளிரவே
கைச்சினம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.45.4) திருஞானசம்பந்தர், திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றும் உடனே வெந்தவியும் வண்ணம் கண்ட பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பண்டு=பண்டைய காலத்தில்; படுகடல்=ஆழ்கடல்; விண்டவர்கள்=வேத நெறியையும் சிவநெறியையும் விட்டு விலகி அனைவர்க்கும் பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்கள்;
பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல் நஞ்சு
உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த
விண்டவர்கள் தொன்னகரம் மூன்று உடனே வெந்தவியக்
கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே
அகத்தியான்பள்ளி என்று அழைக்கப்படும் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.76.6) திருஞானசம்பந்தர் முப்புரம் சென்றுடன் எரித்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். தெரிந்தது=ஆராய்ந்து தேர்வு செய்தது; அக்னி வாயு திருமால் ஆகிய மூவரையும் அம்பின் பாகங்களாக ஏற்று, அந்த அம்பு வலிமையுடன் விளங்கி மிகவும் வேகமாக மூன்று கோட்டைகளையும் ஊடுருவிக் கொண்டு அந்த கோட்டைகள் தீப்பற்றி எரியும் வண்ணம் தொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆராய்ந்து செய்த செயல் என்று உணர்த்தப் படுகின்றது. புரிந்தது=விருப்பத்துடன் செயல் புரிந்த்து;புனைதல்=அழகு படுத்துதல்; அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக பெருமான் ஏற்றுக் கொண்டமையால் உலகமும் உயிர்களும் அழகுடன் மிளிர்கின்றன என்று சான்றோர் கூறுவர்.
தெரிந்ததுவும் கணை ஒன்று முப்புரம் சென்றுடன்
எரிந்ததுவும் முன் எழிலார் மலர் உறைவான் தலை
அரிந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே
கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.83.6) நினைத்த மாத்திரத்தில் முப்புரங்களையும் எரி செய்த இறைவர் என்று குறிப்பிடுகின்றார். புலியதள்=புலித்தோல்; நலிதரு=வருத்தி வந்த; கலை=வேதம் முதலிய கலைகள்; கலி புருடனின் ஆதிக்கத்தால் ஏற்படும் கொடுமைகளின் தாக்கத்தை குறைக்கவும் முற்றிலும் அகற்றவும், வேத வேள்விகள் செய்யவேண்டும் என்றும் இறைவனின் திருநாமங்களை ஓதவேண்டும் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
புலியதள் கோவணங்கள் உடை ஆடையாக உடையான் நினைக்கும் அளவில்
நலிதரு முப்புரங்கள் எரி செய்த நாதன் நலமாக இருந்த நகர் தான்
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை உடையார் நிறைந்து வளரப்
பொலிதரு மண்டபங்கள் உயர் மாட நீடு வரைமேவு கொச்சைவயமே
திருச்சி நகரின் ஒரு பகுதியாக அமைந்துள்ள மூக்கீச்சரம் என்ற தலத்தின் மீது (இந்நாளில் உறையூர் என்று அழைக்கப்படும் தலம்) அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.7) விரவலார் தம் மதில் மூன்றுடன் வெவ்வழல் ஆக்கியவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கலை=அழகிய நூலாடை;இடுப்பினில் கோவணம் மற்றும் புலித்தோல் மட்டுமே அணிந்திருக்கும் பெருமானை நூலாடை இல்லாதவன் என்று கூறுகின்றார். ஆணோடு பெண்ணுமாய் உரையிலார் என்று கூட்டி பொருள் கொள்ளவேண்டும். முழுவதும் ஆண் என்று சொல்ல முடியாத வண்ணமும் முழுவதும் பெண் என்று சொல்ல முடியாத வண்ணமும் ஆணும் பெண்ணும் கலந்த தோற்றமாக உள்ள நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது; ஒன்றலர்=பல வடிவம் உடையவர் என்பதால் ஒரே வடிவம் இல்லாதவர் என்று கூறுகின்றார். விரவுதல்=கலத்தல்; விரவலார்= கலவாமல் நிற்றல், சைவநெறியுடன் கலக்காமல் பிரிந்து சென்ற திரிபுரத்து அரக்கர்கள்;அரையன்=அரசன்; ஒன்றலர் என்ற சொல்லுக்கு, எந்தப் பொருளின் மீது பற்று கொள்ளாத இறைவன், பற்றற்ற நிலையில் இருப்பதை உணர்த்துகின்றது என்ற விளக்கமும் பொருத்தமே. உரையிலார் என்ற சொல்லுக்கு, தனது தன்மையை பெருமையை முழுவதும் விளக்குவதற்கு போதுமான சொற்கள் இல்லாத நிலையில் பெருமான் இருப்பதாக விளக்கம் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. சொற்களுக்கும் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்ட பெருமையை உடையவன் அல்லவா. எளிமையும் பற்றற்ற தன்மையும் அனைவர்க்கும் அவசியம் என்பதை உணர்த்தும் பெருமானின் எளிமையான தோற்றம் மற்றும் செயல்கள் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றன. ஆணும் பெண்ணுமாக இருத்தல், நெருப்பினில் நடனம் ஆடுதல் ஆகிய செயல்களுக்கான காரணம் இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில் தரப்பட்டுள்ளது.
அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணோடு பெண்ணுமாய்
உரையிலார் அவ்வழல் ஆடுவர் ஒன்றலர் காண்மினோ
விரவலார் தம் மதில் மூன்றுடன் வெவ்வழல் ஆக்கினான்
அரையன் மூக்கீீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் அச்சமே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.45.3) திருஞானசம்பந்தர், இறையின் மாத்திரையில் முப்புரங்களை தீ மூட்டினான் என்று கூறுகின்றார். மாத்திரை=நொடிப்பொழுது; இறை=சிறிய நேரம், மிகவும் குறைந்த நேரம்; சிறந்த முறையில் இறைவனை விடவும் தவம் செய்வோர் எவரும் இல்லை என்பதால் இறைவனை மாமுனிவன் என்று கூறுகின்றார். மருவார்= வேத நெறியை, சைவ நெறியை விட்டு விலகிச் சென்று பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்கள்; அன்பே சிவம் என்று உணர்த்துவது சைவம். மற்ற உயிர்கள் மீது அன்பு பாராட்டாத எவரும் சைவத்தை விட்டு விலகியவர்களாகவே கருதப் படுவார்கள். திருவாரூர் எல்லையில் தலத்து அடியார்கள் திருஞானசம்பந்தரை ஊர் எல்லையில் எதிர்கொண்டு அழைத்த போது, அனுதினமும் ஆரூர்ப் பெருமானை வழிபட்டு வந்ததால் பெருமானால் தனது அடியானாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அடியார்களிடம், பெருமான் தன்னையும் அடியானாக ஏற்றுக்கொள்வானோ என்று திருஞானசம்பந்தர் கேள்வி கேட்பதாக அமைந்த பாடல்.
மறையன் மாமுனிவன் மருவார் புரம்
இறையின் மாத்திரையில் எரி ஊட்டினான்
சிறை வண்டார் பொழில் சூழ் திருவாரூர் எம்
இறைவன் தான் எனை ஏன்றுகொளும் கொலோ
பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.64.6) திருஞானசம்பந்தர், பெருமான் இமைப்பளவில் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தார் என்று கூறுகின்றார். பெருத்தார்= பெருகியவர், எட்டு திசைகளே ஆடையாக இருக்கும் வண்ணம் விசுவரூபம் எடுத்தவர்; அட்ட திகாம்பரன் என்பது பெருமானின் திருநாமங்களில் ஒன்றாகும். அம்பரம்=ஆடை; திகை=திசை; விறல்=வலிமை;
விரித்தார் நான்மறைப் பொருளை உமை அஞ்ச விறல் வேழம்
உரித்தாராம் உரி போர்த்து மதில் மூன்றுமொரு கணையால்
எரித்தாராம் இமைப்பளவில் இமையொர்கள் தொழுது இறைஞ்ச
பெருத்தார் எம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
கச்சிநெறிக்கரைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.65.6) திருஞானசம்பந்தர் ஒரு நொடியினில் பெருமானை அந்த கோட்டைகளை அழித்தார் என்று கூறுகின்றார். அவுணர்= அரக்கர்; வல்லவுணர்=வலிமை வய்ந்த அரக்கர்கள்; வில்மலை=வில்லாக அமைந்த மேரு மலை;கொளுவி=பொருத்தி; கணை=அம்பு; வெங்கணை=அக்னி அம்பின் முனையில் அமர்ந்ததால் தாங்க முடியாத வெப்பம் கொண்ட அம்பு;நின்மலன்=இயற்கையாகவே மலங்களின் சேர்க்கை இல்லாத பெருமான்;
பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச
நன்மையிலா வல்லவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில்
வில் மலையில் நாண் கொளுவி வெங்கணையால் எய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சிநெறிக்காரைக் காட்டாரே
பெருமானின் வீரச்செயல்களில் தலைசிறந்த வீரச்செயல் திரிபுரத்து கோட்டைகளை எரித்தது அல்லவா. வானில் எப்போதும் பறக்கும் கோட்டைகளை, ஒரே அம்பினால் வீழ்த்தினால் தான் தாங்கள் அழிய முடியும் என்ற பெற்றிருந்த வரத்தின் மமதையால் அனைவரையும் திரிபுரத்து அரக்கர்கள் துன்புறுத்தி வந்தனர்.ஒரு நொடிக்கும் சற்றே குறைவான நேரத்தில் அந்த மூன்று கோட்டைகளையும் எரியூட்டி அழித்த பெருமானை சதுரர் என்று திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் (3.69.2) குறிப்பிடுகின்றார். முதுசினம்=மிகுந்த கோபம்; வரை=மேரு மலை; மிகுந்த கோபத்துடன் மேருமலையினை வளைத்து. பாடலின் கடை இரண்டு அடிகளில் மலையின் வளமை உணர்த்தப் படுகின்றது. எதிரெதிராக உள்ள மூங்கில்கள் ஒன்றுக்கொன்று உராய்வதால் ஏற்படும் நெருப்புப் பொறிகள் மற்றும் காட்டுப் பன்றிகள் நிலத்தினை தோண்டியபோது வெளிப்படும் மணிகள் ஆகியவை ஒளி வீசுவதால் காளத்தி மலையின் இருள் அகல்கின்றது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
முது சின வில் அவுணர் புறம் மூன்று ஓர் நொடி வரையின் மூள எரி செய்
சதுரர் பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை தன்னை வினவில்
எதிர் எதிரே வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே
திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.86.5) திருஞானசம்பந்தர், பெருமான் ஒரு நொடியளவினில் திரிபுரத்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்தார் என்று கூறுகின்றார். அரவரி=அரவு+அரி; நாணாகிய வாசுகிப் பாம்புடன் சேர்க்கப்பட்ட, திருமாலை தண்டாகக் கொண்டுள்ள அம்பு; வாளி=அம்பு: அந்தரம்=ஆகாயம்; உழிதரு=திரிந்து கொண்டிருந்த; விடலை=வீரம் மிகுந்த இளைஞர்;
அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில்
மந்தர வரிசிலை அதனிடை அரவரி வாளியால்
வெந்தழிதர எய்திய விடலையர் விடமணி மிடறினர்
செந்தழல் நிறம் உடை அடிகள்தம் வளநகர் சேறையே
திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.73.7) அப்பர் பிரான், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவன் பெருமான் கூறுகின்றார். மன்னுவான் புரங்கள்=ஆகாயத்தில் நிலையாக பறந்து கொண்டிருந்த கோட்டைகள்; எதிர்த்து நின்று அழிப்பவர் இல்லாமையால், நிலையாகத் தோன்றியவை என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஒரு காலத்தில் தம்மைச் சுற்றி தேவர்கள் நின்று, தூய்மையான மலர்கள் தூவி தொழுது, இறைவனே நீங்கள் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்ட, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய சிவபெருமான்,எதிர்த்து நின்று அழிப்பவர் எவரும் இல்லாமல் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த மூன்று வலிமையான கோட்டைகளையும், உற்று நோக்கி ஒரே நொடியில்,அந்த கோட்டைகள் தீக்கு இரையாகுமாறு அழித்து தேவர்களுக்கு சிவபெருமான் அருள் செய்தார். அத்தைகைய வல்லமையும் கருணை உள்ளமும் கொண்டவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சுற்று முன் இமையோர் நின்று தொழுது தூமலர்கள் தூவி
மற்று எமை உயக்கொள் என்ன வான்புரங்கள் மூன்றும்
உற்று ஒரு நொடியில் முன்னம் ஒள்ளழல் வாயின் வீழச்
செற்று அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.89.8) அப்பர் பிரான், மதில் மூன்றும் உடனே எரித்த பெருமான் என்று கூறுகின்றார்.ஒன்னார்=பகைவர்; தரித்த=தாங்கிய; ஈடு=பெருமை; தனது பெருமைக்கு பங்கமேதும் விளையாத வண்ணம் பெருமான் தன்னை ஆட்கொண்டதாக அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிறுவயதில் தான் சார்ந்திருந்த சைவ சமயத்தை விடுத்து சமண சமயத்தைச் சார்ந்து வாழ்ந்ததற்கு, தண்டனையாக சூலை நோயினை அளித்ததையும், தனது தமக்கையார் மூலம் நன்னெறி காட்டியதையும், தன்னை இறைவன் தூய்மைப் படுத்தவே என்று அப்பர் பிரான் கருதியது இந்த பாடலிலிருந்து புலனாகின்றது.
விரித்த சடையினன் விண்ணவர் கோன் விடமுண்ட கண்டன்
உரித்த கரி உரிமூடி ஒன்னார் மதில் மூன்றும் உடனே
எரித்த சிலையினன் ஈடழியாது என்னை ஆண்டு கொண்ட
தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே
ச்த்திமுற்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.96.7) அப்பர் பிரான் மூன்று பறக்கும் கோட்டைகளும் ஒரு நொடியில் வெந்து அழியும் வண்ணம் அம்பு எய்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சிட்டன்=சிறந்தவன்; ச்ரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். மட்டார்=தேன் பொருந்திய;விட்டார்=சிவநெறியை கைவிட்டவர்கள்;
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால்
சுட்டாய் என் பாசத் தொடர்பு அறுத்து ஆண்டு கொள் தும்பி பம்பும்
மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும்
சிட்டா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே
மிகவும் குறைந்த நேரத்தில் இந்த மூன்று கோட்டைகளும் எரித்து அழிக்கப்பட்டன என்ற குறிப்பு நமக்கு அப்பர் பிரானின் பாடல் ஒன்றினை (4.113.3)நினைவூட்டுகின்றது. திரிபுரத்து அரக்கர்களின் தொல்லை தாளமுடியாமல் அமரர்கள் சென்று சிவபெருமானிடம் முறையிட்ட செய்தியும், மிகவும் விரைவாக செயல்பட்டு சிவபெருமான் அவர்களது இடர்களை நீக்கியதும் இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. அபயக் குரல் எழுப்பிய தேவர்கள் சிவபெருமானின் இருப்பிடத்தில் இருந்த மணிகளை ஒலிக்கச் செய்து சிவபெருமானின் கவனத்தை ஈர்த்தார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மூன்று வேறு வேறு கோணங்களில் பறந்து கொண்டிருந்த கோட்டைகள் ஒரே நேர்கோட்டில் வருவது என்பது மிகவும் அரிதான செயல். நகர்ந்து கொண்டிருக்கும் மூன்று புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டில் வருவதன் சாத்தியக் கூறு மிக மிக குறைவு என்பதை கணித வல்லுனர்கள் அறிவார்கள். அவ்வாறு வந்தாலும், அதே நிலையில் பறந்து கொண்டிருக்கும் கோட்டைகள் இருப்பது என்பது மிகவும் அரிது. எனவே அந்த குறுகிய நேரத்தில் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு குறுகிய நேரத்தில் மிகவும் விரைந்து வெற்றிகரமாக செயல்பட்ட இறைவனின் திறம் இங்கே கூறப்படுகின்றது. மிக்கூர்=மிகவும் அதிகமாக பெருகிய: இடும்பை=துன்பம்: கடை தூங்கு மணி=நுழை வாயிலில் அசைந்து தொங்கும் மணி; மணிகளை அசைத்து எழுப்பப்பட்ட ஒலி அடங்குதற்கு எத்துணை குறைந்த நேரம் தேவைப்படும் என்பதை நாம் அறிவோம்.
மூவா உருவத்து முக்கண் முதல்வ மீக்கூர் இடும்பை
காவாய் எனக் கடை தூங்கு மணியைக் கையால் அமரர்
நாவாய் அசைத்த ஒலி ஒலி மாறியதில்லை அப்பால்
தீவாய் எரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே
குடமூக்கு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.22.7) அப்பர் பிரான், ஒரு மாத்திரைப் பொழுதினில் மூன்று புரங்களையும் எரித்தவன் பெருமான் என்று கூறுகின்றார். மாத்திரை=நொடிப் பொழுது; விண்டவர்=பகைவர்; உலக மக்களை நோக்கி அறிவுரை கூறும் முகமாக அமைந்த பாடல். உலகப் பற்றினை துறந்த அடியார்களுக்கு முந்தைய பாடலில் அறிவுரை கூறிய அப்பர் பிரான், உலகப் பற்றினை அறுத்துக் கொள்ள விரும்பும் மனிதர்களுக்கு இந்த பாடல் அறிவுரை கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஆறு பாடல்கள் மூலம் குடமூக்கு சென்று இறைவனை வணங்குமாறு நம்மைத் தூண்டிய அப்பர் பிரான், அந்த வழிபாடு நமது வினைகள் அகற்றும் என்று, வழிபாட்டின் பயனை இங்கே உணர்த்துகின்றார்.
தொண்டராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரைக்
கொண்டவன் உறையும் குடமூக்கிலே
பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.43.7) அப்பர் பிரான், பெருமானை புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடியாக எரித்தான் என்று குறிப்பிடுகின்றார். வேத நெறியினை நினைத்து பின்பற்றாத பகைவர்கள் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரு நொடியினில் சாம்பல் பொடியாக மாறும் வண்ணம் எரித்தவனும், அழகான தனது கைகள் கொண்டு தன்னை எதிர்த்து வந்த மதயானையினை உறுதியாகப் பற்றிக் கொண்டு அதனை தோலினை உரித்தவனும், யானையின் பசுந்தோல் தனது கணவனின் திருமேனிக்கு கேடு விளைவிக்குமோ என்ற அச்சம் கொண்டு நடுங்கிய உமை அன்னையின் பேதைமை கண்டு சிரித்தவனும், எப்போதும் இறைவனுடன் இருக்கும் பேற்றினைப் பெற்றதால் சிறப்பினை அடைந்த பூத கணங்களால் சூழப்பட்டவனும், தனது திருச்சடையின் மேல் பிறைச் சந்திரனையும் பாம்பினையும் கங்கை நதியினையும் பொருத்தியவனும், தூய்மையே வடிவமாக உள்ளவனும், இயல்பாகவே பொய்யான பாசங்களிலிருந்து நீங்கப் பெற்றவனும் ஆகிய இறைவனை பூந்துருத்தி தலத்தினில் உறைபவனும் ஆகிய இறைவனை அடியேன் கண்டேன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மத கரியை உற்றுப் பற்றி உமை அதனைக் கண்டு அஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீர் ஆர்ந்த பூதம் சூழத் திருச்சடை மேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.44.4) அப்பர் பிரான், கண்கள் இமைப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தினிலும் குறைந்த நேரத்தில், மூன்று பறக்கும் கோட்டைகளையும் சினந்து நோக்கி சிரித்தே பெருமான் எரித்தார் என்று கூறுகின்றார்.
கண்ணவனாய் உலகெங்கும் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள் செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே
எண்ணவனாய் எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே சிவனே உன் அபயம் நானே
திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.8) அப்பர் பிரான், புரம் மூன்றும் இமைக்கும் போதில் அம்பெய்தி அழித்தவன் பெருமான் என்று கூறுகின்றார். குறைந்த நேரத்தில் மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் வீழ்த்திய தன்மை இங்கே இமைக்கும் போதில் புரம் மூன்றும் எய்தான் என்று குறிப்பிடப்படுகின்றது. குறியிலாக் கொடியேன் என்று தன்னை அப்பர் பிரான் இங்கே கூறிக் கொள்கின்றார். நமது வாழ்க்கையின் குறிக்கோள்,உயிரின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். உயிரின் உண்மையான தாகம், இறைவனின் திருவடிகளைச் சென்று அடைந்து நிலையான இன்பத்தில் ஆழ்ந்திருப்பது தான். ஆனால் உயிரின் விருப்பத்தை உணர்ந்து கொண்டு, அதனை நிறைவேற்றும் வழியில் நாம் ஈடுபடாதவாறு, நமது புலன்கள் நம்மைத் தடுத்து, தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கின்றன. அதனால் நாம் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறவிக்கடலில் சுழன்று அல்லல் படுகின்றோம். சமணர்களுடன் இணைந்து வாழ்ந்த போது, உயிரின் உண்மையான விருப்பத்தை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த தன்னை சூலை நோய் கொடுத்து ஆட்கொண்ட இறைவனின் கருணைச் செய்கையை இங்கே நினைந்து அப்பர் பிரான் உள்ளம் நெகிழ்கின்றார். தனது சொந்த அனுபவம் மூலம் இறைவன் ஆட்கொள்ளும் தன்மையை உணர்ந்த அப்பர் பிரான் பல பாடல்களில், உலகத்துப் பொருட்களின் மீதும். உலகத்தில் உள்ள உயிர்கள் மீதும் நாம் வைத்துள்ள பாசத்தை விடுத்து, ஐம்பொறிகளின் ஆட்சியிலிருந்து விடுபட்டு இறைவனை தியானித்து உய்வினை அடையுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். மற்றவர்களிடம் தான் கண்ட குறைகளை, தன்னிடம் அத்தகைய குறைகள் இல்லாத போதும், தன்னிடம் அத்தகைய குறைகள் இருப்பதாக சுட்டிக் காட்டி உணர்த்துவது அப்பர் பிரானின் பாணி
எய்தானைப் புரம் மூன்றும் இமைக்கும் போதில் இரு விசும்பில் வரும் புனலைத் திருவார் சென்னி
பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப்பிரமன் தன சிரம் ஒன்றைக் கரம் ஒன்றினால்
கொய்தானைக் கூத்தாட வல்லான் தன்னைக் குறியிலாக் கொடியேனை அடியேனாகச்
செய்தானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே
தலையாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.79.2) அப்பர் பிரான் பெருமானை, அவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தவன் என்று குறிப்பிடுகின்றார். அக்கு=சங்குமணி; மகுடம்=பெருமான் தனியாக மகுடம் ஏதும் அணிவதில்லை. எனவே அவரது சடையே மகுடமாக கருதப் படுகின்றது.கொக்கு என்பது இங்கே கொக்கின் இறகினை குறிக்கும். குழைவார்=உள்ளம் குழைந்து உருகி வழிபடும் அடியார்கள்; சீர்ப் போகம்=செல்வத்தால் வரும் இன்ப போகங்கள்; தக்கிருந்த=வாய்த்து இருக்கும்; தலத்து இறைவனின் திருநாமம், ஆடவல்லநாதர், நடநேஸ்வரர் என்பதாகும். இதனை உணர்த்தும் வண்ணம் கூத்தன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை அவுணர்புரம் ஒரு நொடியில் எரிசெய்தானைக்
கொக்கிருந்த மகுடத்தெம் கூத்தன் தன்னைக் குண்டலம் சேர்காதானைக் குழைவார்சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப் புண்ணியனை எண்ணரும் சீர்ப் போகம் எல்லாம்
தக்கிருந்த தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே
திருவஞ்சைக்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.4.9) நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரியச் செய்தவன் பெருமான் என்று சுந்தரர் கூறுகின்றார். பிடி=பெண் யானை; களிறு= ஆண் யானை; உயிர்கள் அனைத்தையும் பெண் யானையாக பெருமானை ஆண்யானையாக உருவகித்து உயிர்களுக்கும் இன்பம் அளிக்கும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்கள் என்ற தொடர் பிரமன் திருமால் உள்ளிட்ட தேவர்கள் அனைவரையும் குறிக்கும் என்று உணர்த்தும் பொருட்டு, பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான் என்று கூறுகின்றார். மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து இன்ப துன்பங்களில் ஆழ்ந்து வருந்து உயிர்களுக்கு இன்பம் எப்போது நேரிடும். இந்த பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு நிலையான இன்பம் தருகின்ற முக்தி உலகம் சென்றடைந்தால் தானே ஏற்படும். அந்த முக்தி உலகம் சென்றடைய உயிர்கள் தமது மல்ங்களை முற்றிலும் களைந்து கொள்ள வேண்டும் அல்லவா. உயிர்கள் தாமே அதனை செய்து கொள்ள் முடியாது. வினைகளையும் மலங்களையும் முற்றிலும் நீக்கிக் கொள்வதற்கு உயிர்களுக்கு உதவியாக இருப்பவன் சிவபெருமான் ஒருவன் தான் என்பதை, உணர்த்தும் விதத்தில் திரிபுரத்து அரக்கர்களை அழித்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார்.முப்புரம் எரித்தது மும்மல காரியம் என்று திருமூலர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. நொடிக்கும் அளவு என்று விரல் சொடுக்கும் நேரத்திற்கும் குறைவான நேரம் என்று உணர்த்தபப்டுகின்றது.
பிடிக்கும் களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான்
நொடிக்கும் அளவில் புரம் மூன்றெரியச் சிலை தொட்டவனே உனை நான் மறவேன்
வடிக்கின்றன போல் சில வன்றிரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அடிக்கும் கடல் அங்கரை மேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.9.4) சுந்தரர், இமைக்கும் அளவில் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்த பெருமானுக்கு எதிராக எவரும் இல்லை என்று கூறுகின்றார். திரிபுரத்தை எரித்து அரியதொரு வீரச்செயலை செய்த பெருமானுக்கு, எந்த துணையும் இல்லாமல் தனியாக வந்து மாட்டிக்கொண்ட மன்மதனை அழிப்பது பெரிய செயல் இல்லையே, அதனை வெற்றியாக கருதுவது முறையா என்று பெருமானை நோக்கி கேள்வி கேட்பது போன்று அமைந்த பாடல்.
கொடியுடை மும்மதில் வெந்தழியக் குன்றம் வில்லா நாணியில் கோல் ஒன்றினால்
இடபட எய்து எரித்தீர் இமைக்கும் அளவில் உமக்கு ஆர் எதிர் எம்பெருமான்
கடிபடு பூங்கணையான் கருப்புச் சிலைக் காமனை வேவ கடைக்கண்ணினால்
பொடிபட நோக்கியது என்னை கொல்லோ பொழிலார் திருப்புத்தூர் புனிதனீரே
ஒரு பொது பதிகத்தின் பாடலில் (7.44.1) சுந்தரர் பெருமான், ஒரு மாத்திரை நேரத்தில் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவன் என்று குறிப்பிடுகின்றார். நூறுதல்= அழித்தல்; நொடிப்பது=விரல்களை சொடுக்குதல், சிட்டிகை போடும் நேரத்திலும் குறைவான் நேரத்தில் திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகள் அழிக்கப்பட்டன என்று கூறுகின்றார்.
முடிப்பது கங்கையும் திங்களும் செற்றது மூவெயில்
நொடிப்பது மாத்திரை நீறெழ்க் கணை நூறினார்
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன் திருக்கைகளால்
பிடப்பது பாம்பன்றி இல்லையோ எம்பிரானுக்கே
அதிசயப்பத்து பதிகத்தின் கடைப்பாடலில் (8.26.10) மணிவாசக அடிகளார், பெருமானை திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகள் ஒரு நொடியினில் அழியும் வண்ணம் கோபம் கொண்ட பெருமான், என்று குறிப்பிடுகின்றார். உடலையே மெய்யென நம்பி நரகத்தில் விழுவதற்கு மிகவும் விரைவாக சென்ற தன்னை,ஒரு நொடியில் திரிபுரத்தை அழித்தவனாகிய பெருமான், தனது மும்மலங்களையும் எரித்து, பொய்ந்நெறியிலிருந்து விலக்கி, செந்நெறியில் செலுத்திய அதிசயத்தை கண்டதாக அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். பொய்யான இந்த உடலுக்கு மெய் என்ற பெயரிட்டு அழைப்பதால், இதனை உண்மையான மெய்ப்பொருள் என்றும் நிலையான இன்பம் அளிக்கும் பொருள் என்று தவறாக புரிந்து கொண்டு தான் களித்து இருப்பதன் விளைவு, நரகத்தில் புகுவதற்கு தகுதியாக தான் மாறியது ஒன்று தான் என்று குறிப்பிடும் அடிகளார், இந்த கருத்து மூலம் நம் அனைவர்க்கும் சிறந்த அறிவுரையை கூறுகின்றார். நிலையான இன்பம் தரும் உடல் என்று நம்பி, அந்த உடலின் பொறிகளின் வழியே சென்று சிற்றின்பத்தை துய்ப்பதால், நாம் மேன்மேலும் வினைகளை சேர்த்துக் கொள்வோம்; எனவே உணமையான மெய்ப்பொருளை நாம் பற்றிக்கொள்வதற்கு முயற்சி செய்யவேண்டும் என்பதே அந்த அறிவுரை. இருள் திணிந்த குடில் என்று கூறுவதை நாம் சிந்திக்க வேண்டும். இருள் என்று ஆணவ மலத்தை குறிப்பிடுவது பெரியோர்களின் வழக்கம். உயிரினை என்றென்றும் நிலையாக பற்றி இருக்கும் ஆணவ மலத்தினை, நாம் அழித்தொழிக்க முடியாது; அதனை அடக்கி செயலற செய்யத் தான் முடியும். நிலையாக உயிரை பற்றியிருப்பதால்,உயிருடன் தொடர்பு கொண்ட உடலையும் ஆணவ மலம் ஆக்ரமித்துக்கொண்டு, உடற் பொறிகளை தன்வயப்படுத்தி, உடலினை தனது விருப்பம் போன்று ஆட்டுவிக்கின்றது. இந்த தன்மையையே இருள் திணிந்து எழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றாது.
இருள் திணிந்து எழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடில் இது இத்தைப்
பொருள் எனக் களித்து அருநரகத்திடை விழப் புகுகின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை இடதரச் சினப்பதத்தொடு செந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே
வாழாப்பத்து பதிகத்தின் பாடலில் (8.28.4) மணிவாசக அடிகளார் வல்லை வாளரக்கர் புரம் எரித்தானே என்று பெருமானை அழைக்கின்றார்.வல்லை=மிகவும் விரைவாக; நமது வாழ்நாள் எப்போது முடிவுக்கு வரும் என்பதை நாம் எவரும் அறியமாட்டோம். இறைவனால் முன்னமே குறிக்கப்பட்ட அந்த நாளின் முன்னர், நமது வாழ்வினை முடித்துக் கொள்ள நாம் விரும்பினாலும், நம்மால் அவ்வாறு செய்யமுடியாது என்பதை நாம் அறிவோம். எனவே தான் அடிகளார் இறைவனிடம் வேண்டுகின்றார். இந்த வேண்டுகோள் மூலம் இரண்டு உதவிகளை அடிகளார் எதிர்பார்க்கின்றார். முதலாவது, இந்த உலகில் தொடர்ந்து வாழ விருப்பம் இல்லாத தனது வாழ்நாளை முடிப்பது; இந்த பிறவியை முடித்துக் கொள்வதுடன் இனியும் எந்த பிறவியும் எடுக்காத நிலை தனக்கு ஏற்படவேண்டும் பெருமானின் திருவடிகளைச் சென்றடந்தால் தானே பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது என்பது,முக்தி நிலை அடைந்தால் தானே முடியும். எனவே தான் இரண்டாவது கோரிக்கையாக, பெருமான் வருக என்று சொல்லி, தான் இருக்கும் முக்தி உலகத்திற்கு தன்னையும் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பம் வைக்கின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானைத் தவிர்த்து,தனக்கு பற்றுக்கோடு வேறேதும் இல்லை என்று இறைவனுக்கு அடிகளார் உணர்த்துவதையும் நாம் இந்த பாடலில் காணலாம். வல்லை=மிகவும் விரைவாக;வாளரக்கர்=வாளேந்தி சண்டையிடும் அரக்கர்கள்; வல்லையாய்=வலிமை உடையவனாக, திருமாலும் பிரமனும் தனது அடியையும் முடியையும் காண முடியாத வண்ணம், நெடிதுயர்ந்த வல்லமை இங்கே குறிப்பிடப்படுகின்றது.
வல்லை வாளரக்கர் புரம் எரித்தானே மற்று நான் பற்றிலேன் கண்டாய்
தில்லை வாழ்க்கூத்தா சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
எல்லை மூவுலகும் உருவி அன்றி இருவர் காணும் நாள் ஆதி ஈறு இன்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே
பொழிப்புரை:
வானில் பறந்து எங்கும் திரிந்து, உலக மக்களை வருத்தி வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், அழகிய கண்ணாடியில் வைக்கப்படும் உளுந்து உருண்டு ஓடக் கூடிய கால அளவையினும் மிகவும் குறைந்த காலத்தில், ஒளி பொருந்திய தீப்பற்றி எரியும் வண்ணம், கொடுமையான அம்பு பொருத்தப்பட்ட வில்லினை வளைத்த பெருமான் உறைகின்ற திருக்கோயில் திருவீழிமிழலை ஆகும். தலத்து மகளிரின் அழகிய பற்களை காட்டும் வண்ணம் செம்மையான வெண்முத்துக்கள், மகளிரின் முகத்தை உணர்த்தும் தாமரை மலர்கள், மகளிரின் கண்களை ஒத்த நீரில் துள்ளிக்குதித்து விளையாடும் மீன்கள், மகளிரின் வாய் பொன்ற பவளங்கள் நிறைந்த தலம் திருவீழிமிழலையாகும்.
பாடல் 4
உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான் கோயில்
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடமாட வண்டு பாட
விரை சேர் பொன்னிதழி தர மென்காந்தள் கையேற்கும் மிழலையாமே
விளக்கம்:
எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்கள் இருப்பதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உலகினில் உலவும் எண்ணற்ற உயிர்கள் தம்முடன் பிணைந்து இருக்கும் வினைகளை, நுகர்ந்து கழித்துக் கொள்வதற்காக எண்பது நான்கு நூறாயிரம் என்று சொல்லப்படும் வேறுபாடுகளை உடைய பிறவிகள் பலவும் உடல்களாக உருவெடுத்து வளர்ந்து நிற்கும் என்று திருமூலர் திருமந்திரப் பாடல் ஒன்றினில் கூறுகின்றார். இவற்றைப் படைத்து,இவற்றுடன் பல உயிர்களையும், அந்தந்த உயிர்களுடன் பிணைந்துள்ள வினைகளின் தன்மையின் அடிப்படையில் இறைவன் ஒன்று சேர்க்கின்றான்.இதனை அறியாத மூடர்கள், என்றும் அத்தகைய அறியாமையில் மூழ்கி இருக்கும் வண்ணம் செய்பவன் இறைவன் என்று இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார்.
அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்
மெய்ப்பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும்
பொய்ப் பரிசு எய்திப் புகலும் மனிதர்கட்கு
இப்பரிசே இருள் மூடி நின்றானே
பெரியபுராணம் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தின் ஒரு பாடலில் சேக்கிழார் பேதங்கள் உடைய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிகளைப் படைத்தும் காத்தும் வருபவன் இறைவன் என்று கூறுகின்றார். உயிர்களின் பால் உள்ள மலக்குற்றம் நீங்குதற்கென அந்த உயிர்களுக்கு வெவ்வேறாக கொடுக்கப் பெற்ற எண்பத்துநான்கு நூறாயிரம் உயிர்வகைகளையும் பாதுகாத்து அருள் புரியும் சிவபெருமான் மொழிந்த ஆகம முறைப்படி, அப்பெருமானை வழிபடச் செல்லும் நோக்கத்துடன், இறைவனை வழிபட்ட பின்னர், தேவி கச்சிமாநகரம் சென்றார் என்று சேக்கிழார் இந்த பாடலில் கூறுகின்றார்.பரிசனம்=ஏவல் மகளிர்; தவம் புரியும் தேவிக்கு உதவி புரிய ஏவல் மகளிரையும், உரிய பொருட்களையும் மலையரசன் அனுப்பியதாகவும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. வேதங்களிலும் ஆகமநூல்களிலும் புராணங்களிலும் இந்த யோனி வேறுபாட்டின் தன்மையும் உயிர்கள் வினைகளுக்கு ஏற்ப தகுந்த உடலுடன் பொருத்தப் படுவதும் சொல்லப் படுகின்றது.
ஏதமில் பல யோனி எண்பத்துநான்கு நூறாயிரம் தனுள் வைத்த
பேதமும் புரந்தருளும் அக்கருணைப்பிரான் மொழிந்த ஆகம வழி பேணிப்
போது நீர்மையில் தொழுதனள் போதப் பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்தெய்தி
மாதவம் புரிந்து அருளுவதற்கு அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான்
எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிகள் என்பது ஜீவராசிகளின் வகைகளின் எண்ணிக்கை. ஓவ்வொரு யோனி வகையிலும் எண்ணற்ற உயிர்கள் உள்ளன என்பதை கருத்தில் கொண்டால் உலகினில் உள்ள உயிர்கள், எவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அத்தனை உயிர்களுடனும் இறைவன் இணைந்து நின்று அவற்றை இயக்குகின்றான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வரை=மலை; வரை சேரும் முகில்= உயர்ந்து நிற்கும் மலைகளையும் தாண்டி வானில் உலவும் மேகங்கள்; விரை=நறுமணம்; இதழி=கொன்றை மலர்; வானில் தோன்றும் இடி மின்னல் ஆகியவை மழை வருவதன் அறிகுறி. எனவே அதனை உணரும் மயில்கள் நடமாடுவது இயல்பு. நறுமணம் மிகுந்த மலர்களை நாடும் வண்டுகள் ரீங்காரம் இட்ட வண்ணம் மலர்களை சுற்றிச் சுற்றி வருவதும் இயற்கையாக நடை பெறுகின்ற செயல். இதனைக் காணும் திருஞானசம்பந்தர், தனது கற்பனையை பயன்படுத்தி, முழவு போன்று இடி இடிக்கும் பின்னணி இசையில் வண்டுகள் பாட, அத்தகைய பாடல்களுக்கு ஏற்ப மயில்கள் நடமாடுகின்றன என்று கூறுகின்றார். கொன்றை மலர்கள் மஞ்சள் நிறத்தில் பொன் போன்று மின்னுவதும், காந்தள் மலர்களின் இதழ்கள் விரித்த கையில் உள்ள் விரல்கள் போல் தோற்றமளிப்பதும் இயற்கை. இவை அனைதையும் இணைத்து அழகிய கற்பனை செய்யப் படுகின்றது. இந்த ஆடலையும் பாடலையும் ரசிக்கும் கொன்றை மரங்கள், பொற்காசுகளை உதிர்ப்பது போன்று மலர்களை உதிர்க்க, அவற்றை மயில்கள் மற்றும் வண்டுகள் சார்பில் காந்தள் மலர்கள் கை நீட்டி ஏற்றுக்கொள்கின்றன என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த கற்பனை அகநானூறு மற்றும் முல்லைப்பாட்டு இலக்கியங்களில் காணப்படுகின்றன.
அப்பர் பெருமானும் இத்தகைய கற்பனை செய்வதை நாம் அவர் அருளிய திருப்புத்தூர் தலத்து பதிகத்தின் பாடலில் (6.76.3) காணலாம். வலி=வலிமை மிகுந்த; மருங்கே=அருகில்; புனம்=நிலம்; தென்=இசை; புறவு=முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் மயங்கிய தன்மை; இந்த பாடலில் திருவிளையாடல் புராண நிகழ்ச்சி, தருமிக்கு பொற்கிழி அளித்தது குறிப்பிடப்படுகின்றது. பரஞ்சோதி முனிவர் தாம் அருளிய திருவிளையாடல் புராணத்தில், இந்தநிகழ்ச்சியை, தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் மற்றும் கீரனை கரையேற்றிய படலம் ஆகிய இரண்டு படலங்களில் கூறுகின்றார். பெருமான் தருமிக்குஎழுதிக் கொடுத்த பாடல் குறுந்தொகை எனப்படும் சங்க இலக்கியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. புலவர் தருமிக்கு அருளிய நிகழ்ச்சியை குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு வண்டினை நோக்கி கேள்வி கேட்பதாக இறைவன் எழுதிக் கொடுத்த பாடல் நினைவுக்கு வந்தது போலும், பெருமான் வண்டினை குறிப்பிட்டு பாடல் எழுதியதைப் போன்று தானும் ஒரு வண்டினை வைத்து ஒரு கற்பனை செய்கின்றார். அந்த கற்பனையே இந்த பாடலில் கடை இரண்டு அடிகளாக மிளிர்கின்றது. பொதுவாக அப்பர் பிரானின் பாடல்களில் அதிகமாக இயற்கைக் காட்சிகள் இடம் பெறுவதில்லை. கொன்றை மலர்கள் பொன்னின் நிறத்தில் இருப்பதும், காந்தள் மலர்கள் பூத்து இருக்கும் நிலை நீட்டிய விரல்களுடன் இருப்பதும் வண்டுகள் இன்னிசை பாடுவதும் இயற்கை. ஆனால் இந்த இயற்கை நிகழ்ச்சியின் மீது கற்பனை ஏற்றிச் சொல்லும் நயத்தை இந்த பாடலில் நாம் காணலாம். இவ்வாறு கூறும் நயத்தை தற்குறிப்பேற்ற அணி என்று இலக்கணம் கூறுவார்கள். வண்டுகள் இன்னிசை பாட, அந்த இன்னிசைக்கு பரிசு அளிப்பது போன்று கொன்றை மரங்கள் பொன்னினை உதிர்ப்பதாகவும், காந்தள் மரங்கள் தங்களது கைகளை நீட்டி, வண்டுகளின் சார்பாக அந்த பொன்னினைப் பெற்றுக் கொள்வதாகவும் இந்த கற்பனை அமைந்துள்ளது.
மின் காட்டும் கொடி மருங்கில் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலிச் சிலைக் கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினான் காண்
பொன் காட்டக் கடிக் கொன்றை மருங்கே நின்ற புனக்காந்தள் கைக் காட்டக்கண்டு வண்டு
தென்காட்டும் செழும்புறவின் திருப்புத்தூரில் திருத்தளியான் காணவனென்சிந்தையானே
நக்கீரர் அருளிய ஈங்கோய் எழுபது பதிகத்தின் பாடலிலும் (11.10.31) இத்தகைய கற்பனை காணப் படுகின்றது. அங்கை=உள்ளங்கை; மஞ்ஞை=மயில்;கூந்தல்=தோகை; ஏர்க்கொன்றை=அழகிய கொன்றை மலர்கள்; கார்கொன்றை=கார் காலத்தில் அதிகமாக பூக்கும் கொன்றை மலர்கள்; கடறு என்ற சொல் பொதுவாக காட்டினை குறிக்கும் என்றாலும், இங்கே காடு உடைய ஈங்கோய் மலையை உணர்த்துகின்றது. பொற்காசு போன்ற மலர்களை உதிர்க்கும் கொன்றை சாய்ந்து நிற்பதாக நக்கீரர் இந்த பாடலில் கூறுகின்றார். வள்ளல்கள் புரவலர்க்கு பரிசு அளிக்கும் போது, தங்களது உடலையும் தலையையும் சாய்த்துக் கொண்டு மிகவும் பணிவாக கொடுப்பது போன்று கொன்றை மரமும் சாய்த்து கொடுப்பதாக நயமாக கூறுகின்றார்.
காந்தள் அங்கைத் தலங்கள் காட்டக் களி மஞ்ஞை
கூந்தல் விரித்து உடனே கூத்தாடச் சாய்ந்து இரங்கி
ஏர்க்கொன்றை பொன் கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடை மேல்
கார்க்கொன்றை ஏன்றான் கடறு
பொழிப்புரை:
தலை சிறந்த புராணங்கள், ஆகமங்கள் மற்றும் வேதங்கள் குறிப்பிடும் வேறுபட்ட எண்பத்து நான்கு லட்சம் வகை உயிர் வகைகளையும், அத்தகைய உயிர்வகையில் அடங்கிய எண்ணற்ற உயிர்களையும் தகுந்த உடல்களுடன் சேர்த்துப் படைத்து, அந்த உயிர்களுக்கு உயிராக அவற்றுடன் கலந்து நின்று அவற்றை இயக்கியும் பாதுகாத்தும் அருள் புரிகின்ற இறைவன் உறைகின்ற திருக்கோயில் திருவீழிமிழலை ஆகும். மலைகளின் உச்சிகளை முட்டும் வண்ணம் மிகுந்த உயரத்தில் உலாவும் மேகங்கள் ஒன்றுக்கொன்று இடித்துக்கொண்டு எழுப்பும் இடியோசை பின்னணியாக ஒலிக்க, அந்த இடியோசை கேட்ட மயில்கள் மழை வரப்போவதை நினைத்து களிப்புடன் நடனமாட, அந்த நடனத்திற்கு ஏற்ப வண்டுகள் பாடுகின்றன. இந்த ஆடலையும் பாடலையும் கேட்டு ரசிக்கும் கொன்றை மரங்கள், பரிசாக பொற்காசுகள் போன்ற கொன்றை மலர்களை உதிர்க்க, வண்டுகள் மற்றும் மயில்கள் சார்பினில் அந்த பரிசினை கை நீட்டி ஏற்றுக் கொள்ளும் மெல்லிய விரல்கள் உடைய கைகள் போன்று காந்தள் மலர்கள் நிறைந்த தலம் திருவீழிமிழலை ஆகும்.
பாடல் 5
காணுமாறு அரிய பெருமானாகிக் காலமாய்க் குணங்கள் மூன்றாய்ப்
பேணும் மூன்று உருவாகி பேருலகம் படைத்தளிக்கும் பெருமான் கோயில்
தாணுவாய் நின்ற பர தத்துவனை உத்தமனை இரைஞ்சீர் என்று
வேணு வார் கொடி விண்ணோர் தமை விளிப்ப போலோங்கு மிழலையாமே
விளக்கம்:
பேணும் மூன்று உருவாகி என்று பெருமான், மூவராகவும் உள்ள நிலை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. பேணும் மூன்று உருவம் என்றமையால்,பலராலும் போற்றப்படும் பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மூன்று உருவங்கள் என்று பொருள் கொள்வதே பொருத்தம். படைத்து அளிக்கும் என்ற தொடர் படைத்தல் மற்றும் காத்தல் தொழிலகளை குறிக்கும். இந்த இரண்டு தொழில்கள் சொல்லப்படுவதால், மூன்றாவதாகிய அழித்தல் தொழிக்லும் உணர்த்தப் படுவதாக பொருள் கொள்வது சிறப்பு. பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மூவரைப் படைத்து, அந்த மூவர்க்கும் முத்தொழில்களையும் புரியும் ஆற்றலையும் அளித்து, மூவர்களுடன் கலந்திருந்து அவர்களை இயக்குபவன் பெருமான், என்று எண்ணற்ற திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன.மும்மூர்த்திகளாக பெருமான் செயல்படும் தன்மை, பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகள் ஆயினை என்ற திருவெழு கூற்றிருக்கை பதிகத்தின் வரி (1.128) நமது நினைவுக்கு வருகின்றது. அவ்வாறு மூவராக இருப்பவன் பெருமான் என்பதை உணர்த்தும் ஒரு சில பாடல்களை நாம் இங்கே காண்போம். மூன்று தொழில்களையும் புரிபவன் பெருமான் தான் என்பது மிகவும் விளக்கமாக சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.21) முதல் மூன்று பாடல்களில் திருஞானசம்பந்தரால் உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடலில், சிவபெருமானின் உதவியால் பிரமனால் எவ்வாறு படைப்புத் தொழில் செய்யப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. புவம்=வானம்: வளி=காற்று; புனல்=தண்ணீர்; கனல்=தீ;கலை=அறுபத்து நான்கு கலைகள்; திரிகுணம்=சாத்துவீகம், ராஜசம் மற்றும் தாமசம் ஆகிய மூன்று குணங்கள்; அமர் நெறி=விரும்பத்தக்க வழிமுறைகள்;திவம்=தேவலோகம்; மருவி=கூடி பொருந்தி, தாவரங்கள் முதலாக தேவர்கள் வரை ஏழு வகையான உடல்களில் அந்தந்த உயிரின் வினைத் தொகுதிக்குஏற்ப உயிர்கள் பொருத்தப் படுகின்றன. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனது மனதினில் சிவபெருமான் பொருந்தி இருப்பதால், பிரமனால் படைப்புத்தொழிலை ஒழுங்காக செய்ய முடிகின்றது. பிரமன் தனது தொழிலை ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற கருத்தினை மனதில் கொண்டு, இறைவனைவணங்கி செயல்படுவதால், சிவபெருமான் பிரமனது மனதினில் அமர்ந்து அருள் புரிகின்றார் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
புவம் வளி கனல் புனல் புவிகலை உரை மறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலை பெறுவரே
பதிகத்தின் இரண்டாவது பாடலில் திருமால் காத்தல் தொழிலைப் புரியும் நிலை விளக்கப் படுகின்றது. மனிதர்கள், தேவர்கள் உட்பட அனைத்து உயிர்களும் உலகில் நிலை பெற்று வாழும் பொருட்டு அவர்களை காத்தருள வேண்டும் என்ற எண்ணத்தில் பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள திருமாலின் மனதினில் நிலை பெற்று இருக்கும் சிவபெருமான் என்று இங்கே திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மேற்கண்ட பாடலில் பிரமன் தனது தொழிலினைச் சரிவரச் செய்வதற்காக சிவபெருமானை வேண்டுவது போன்று, திருமாலும் தனது தொழிலினை சரிவரச் செய்யும் வண்ணம் பெருமானை வேண்டுகின்றார் என்று உணர்த்தப் படுகின்றது. திருமால் புரியும் யோக நித்திரை அறிதுயில் என்று சொல்லப் படுகின்றது தூங்குவது போன்று காட்சி அளித்தாலும் உலகில் நடப்பது அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர் திருமால் என்பதால் அவர் கொண்டுள்ள நித்திரை யோக நித்திரை என்று அழைக்கப்படுகின்றது.
மலை பல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும்
அலைகடல் நடு அறிதுயில் அமர் அரி உரு இயல் பரன் உறை பதி
சிலை மலி மதிள் சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே
பதிகத்தின் மூன்றாவது பாடலில் அழித்தல் தொழில் நடைபெறும் முறை விளக்கப் படுகின்றது. கடலால் சூழப் பட்ட உலகங்களில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கும் வண்ணம், அழிக்கும் தொழிலினைச் செய்யும் உருத்திரனின் உருவில் எழுந்தருளும் சிவபிரான் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
பழுதில கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி
குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலமலி தரும் உயிரவை அவை
முழுவதும் அழிவகை நினைவொடு முதல் உருவியல் பரன் உறை பதி
செழுமணி அணி சிவபுரநகர் தொழும் அவர் புகழ் மிகு மூவுலகிலே
வேணுபுரத்தின் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளப்பட்ட பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.9.2) சம்பந்தர், படைப்பவனாகவும்,காப்பவனாகவும், அழிப்பவனாகவும் விளங்குவதுடன், இந்த தொழில்களின் முடிந்த பயனாகிய முக்தி நிலையாகவும் சிவபெருமான் விளங்குகின்றார் என்றுகூறுகின்றார். கிடை=வேதம் ஓதும் கூட்டம்
படைப்புந் நிலை இறுதிப் பயன் பருமையொடு நேர்மை
கிடைப் பல்கணம் உடையான் கிறி பூதப்படை உடையான் ஊர்
புடைப் பாளையின் கமுகின்னொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே
திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.27.2) திருஞானசம்பந்தர் பெருமானை மூவராய முதல்வர் என்று குறிப்பிடுகின்றார். ஏ=அம்பு;அல்லார்=வேதநெறியில் சாராது வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள்; மூன்றாவது அடியில் உள்ள சொற்களை அடிகள் ஆவர் என்னும் என்று மாற்றி அமைத்து பொருள் காண வேண்டும். எயில்=மதில்;
மூவராய முதல்வர் முறையாலே
தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர்
ஆவர் என்னும் அடிகள் அவர் போலும்
ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.53.1) திருஞானசம்பந்தர் பெருமானை, மூவராய முதல் ஒருவன் என்று குறிப்பிடுகின்றார்.நாவர்=நாக்கினை உடையவர்; செழு மறை சேர் நாவர்=செழுமையான மறைகளை ஓதும் நாவினை உடைய அந்தணர்கள்; நண்ணு=நெருங்கி வாழும்;கால்=காற்று; இந்த பாடலில் மூவராகவும் (பிரமன், திருமால், உருத்திரன்) அவர்களுக்கு முதல்வனாகவும் இருப்பது சிவபெருமான் என்று கூறப்படுகின்றது.மேவராய=விரும்பியவராக; இவ்வாறு மூவராக பெருமான் இருக்கும் நிலை, அவனது விருப்பமாக இருப்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவராய விரை மலரோன் செங்கண் மால் ஈசன் என்னும்
மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே
கருவூர் ஆனிலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.28.6) திருஞானசம்பந்தர், பெருமானை மூவராகிய மொய்ம்பர் என்று கூறுகின்றார்.தேவர்=தலைவர்; மொய்ம்பு=வலிமை; மொய்ம்பர்=வலிமை உடையவர்; இந்த பாடலில் பெருமானின் நெற்றியின் சிறப்பு உணர்த்தப் படுகின்றது.மேவர்=விரும்பி பொருந்துதல்; பிறரை வருத்துவதில் இன்பம் அடைந்த முப்புரத்து அரக்கர்கள், பறக்கும் கோட்டைகளில் அமர்ந்த வண்ணம் பல இடங்களுக்கும் சென்று கீழே இறங்கி, அந்த கோட்டைகளின் அடியில் சிக்கிய அனைத்து உயிர்களையும் கொன்று வந்தனர். இந்த தன்மையே இங்கே மும்மதில் மேவர் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது.
தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியின்
மேவர் மும்மதில் எய்த வில்லியர்
காவலர் கருவூருள் ஆனிலை
மூவராகிய மொய்ம்பர் அல்லரே
செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.29) ஒரு பாடலில் வெள்ளியர் (உடல் முழுவதும் திருநீறு பூசியதால் வெண்மை நிறத்துடன்காணப்படும் சிவபெருமான்), கரியர் (திருமால்) மற்றும் செய்யர் (பொன் நிறத்தில் உள்ள பிரமன்) ஆகிய மூவராக இருப்பவர் என்று அப்பர் பிரான்கூறுகின்றார். தெள்ளியார்=தெளிந்த உள்ளம் கொண்ட ஞானியர்கள்: பள்ளியார்= பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால்: ஒள்ளியர்=ஒளி தருபவர்
வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர் ஊழி ஊழி உலகமது ஏத்த நின்ற
பள்ளியர் நெஞ்சத்துள்ளார் பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியார் கள்ளம் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளியாரே
செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.36.5) அப்பர் பிரான் பெருமானை மூவராய் முதலாக நின்றவன் என்று குறிப்பிடுகின்றார்.இந்த பதிகத்தினில், அம்பு ஏதும் இன்றி மூன்று கோட்டைகளையும் எரித்தவன் இறைவன் என்று சொல்லப்பட்டுள்ளது.
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்
ஏ அலால் எயில் மூன்றும் எரித்தவன்
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே
மூன்று தொழில்களைச் செய்யும் மூவிலைச் சூலம் என்று அப்பர் பிரானும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.89.3) கூறுகின்றார். தொழில் மூன்றும் ஆயின என்ற தொடரினை மூவிலைச் சூலம் என்ற தொடருடன் கூட்டி, பெரியபுராண விளக்கம் நூலின் ஆசிரியர் சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் கூறுகின்றார். வடமொழி ஆகமத்தில் ஜனனி ரோதயித்திரி ஆரணி ஆகிய மூன்று சக்திகளை உடையது பெருமானின் மூவிலைச் சூலம் என்று கூறப்படுகின்றது. பிரணவ மந்திரமே மூவிலைச் சூலத்தின் தண்டாக விளங்குகின்றது என்று கூறுவார்கள்,
மூன்று மூர்த்தியுள் நின்றியலும் தொழில்
மூன்றும் ஆயின மூவிலைச் சூலத்தன்
மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்
மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே
ஏழைத்திருத்தாண்டகம் என்று அழைக்கப்படும் திருவதிகைப் பதிகத்தின் முதல் பாடலில் (6.3.1) திருமாலாகவும் பிரமனாகவும் பெருமான் செயல்படுவதை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வெறி=நறுமணம், வாசனை: விரவு=கலந்த: கூவிளம்=வில்வம்: தொங்கல்=மாலை: பொறி அரவு= தனது படத்தினில் புள்ளிகளை உடைய பாம்பு: ஏறு=எருது, இங்கே இடபம்; பொன் நிறத்தான்= பிரமன்; புள்ளூர்த்தியான்=பறவையை, அதாவது கருடனை வாகனமாகக் கொண்ட திருமால்:
வெறிவிரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டத்தானை வெள்ளேற்றினானைப்
பொறி அரவினானைப் புள்ளூர்தியானைப் பொன் நிறத்தினானைப் புகழ் தக்கானை
அறிதற்கரிய சீர் அம்மான் தன்னை அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை
எறிகெடிலத்தானை இறைவன் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே
பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.10.7) அப்பர் பிரான், பெருமானை மூவரானார் என்று குறிப்பிட்டு மூன்று மூர்த்திகளாக விளங்கும் தன்மையை உணர்த்துகின்றார். தலத்து இறைவியின் திருநாமம் காம்பன தோளி அம்மை என்பதாகும். இந்த பெயரினை சற்றே மாற்றி காம்பேய்த் தோளி என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். காம்பு=மூங்கில். அம்பிகையின் திருநாமம் வேணுபுஜாம்பிகை என்று வடமொழியில் அழைக்கப் படுவதை,காம்பேய்த் தோளி என்று மிகவும் அழகாக அப்பர் பிரான் தமிழாக்கம் செய்துள்ளார். முற்றா மதி=பிள்ளை மதி என்றும் இளமதியம் என்றும் பல இடங்களில் குறிப்பிடப்படும் பிறைச் சந்திரனை, பிறை தேய்ந்து இருந்த நிலையினை முற்றா மதி, அதாவது முழுவதாக இருந்த நிலையிலிருந்து தேய்ந்த மதி என்ற பொருள் பட முற்றா மதி என்று கூறுகின்றார்.
முற்றா மதிச் சடையார் மூவரானார் மூவுலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பேய்த் தோளி
பற்றாகும் பாகத்தார் பால் வெண்ணீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார்
பற்றார் மதில் எரித்தார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (6.34.1) சிவபெருமான் ஒருவனே மூவுருவமாக நிற்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.கருவன்=சம்ஹார மூர்த்தி; கறுவன் என்ற சொல்லின் திரிபாக, சினம் கொண்டவன் என்னும் பொருள் பட, கருவன் என்ற சொல் கையாளப்பட்டு உள்ளதாகவும் விளக்கம் கூறுவார்கள். பாடலின் எதுகை நோக்கி கருவன் எனத் திரிந்தது என்று கூறுவார்கள். தெரித்த=படைத்த: திருவினாள்=அழகு பொருந்தியவள்; மருவன்=பொருந்துபவன்;
ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவமான நாளோ
கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் எரித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ மான்மறி கை ஏந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளோ
புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் (6.54) ஒன்பதாவது பாடலில் நாரணனாகவும், பிரமனாகவும் பெருமான் விளங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. பண்ணியான்=ஆக்கியவன்; படிறன்=வஞ்சகன், மறைப்பது வஞ்சகர் செய்யும் தொழில் என்பதால் கங்கையைச் சடையில் மறைத்த இறைவனை படிறன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நண்ணியவன்=நெருங்கி நின்று துணையாக இருந்தவன். நளிர்=குளிர்ச்சி
பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப் படர்சடை மேல் புனல் கரந்த படிறன் தன்னை
நண்ணியனை என்னாக்கித் தன்னானானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண்திங்கள்
கண்ணியனைக் கடியநடை விடை ஒன்றேறும் காரணனை நாரணனைக் கமலத்தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் (6.58) நான்காவது பாடலில் அப்பர் பெருமான் மூவர் உருவாய முதல்வர் என்று குறிப்பிடுகின்றார்.இந்த பாடல் அகத்துறை அமைப்பில் அமைந்த பாடல். சிவபெருமான் மீது ஆராத காதல் கொண்ட அப்பர் நாயகி, பெருமானை தன்னை வாவா என்றுஅழைத்ததாக கற்பனை செய்கின்றாள். அவ்வாறு அழைத்த பெருமான், தன்னை விட்டுவிட்டுச் சென்றதை குறிப்பிட்டு தனது வருத்தத்தை தெரிவிக்கும்பாடல்.
மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உருவாய முதல்வர் இந்நாள்
கோவாத எரிகணையைச் சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே
போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்லப் புறக்கணித்துத் தம்முடைய பூதம் சூழ
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே
சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் அப்பர் பிரான் (6.82.6) பெருமான் திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். உருத்திரன் பெருமானின் அம்சம் என்பதால், உருத்திரனாக விளங்குவது பெருமான் தான் என்பது சொல்லாமலே அனைவராலும் அறியப்படும். மா=குதிரை குதிரை வடிவம் எடுத்துத் தன்னை அழிக்கவந்த கேசி என்ற அரக்கனைக் கொன்ற கண்ணன், அதனால் கேசவன் என்ற பெயரினைப் பெற்றான் என்று பாகவத புராணம் கூறுகின்றது.
மாவாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்றம் உடையார் போலும்
கோவாய முனி தன் மேல் வந்த கூற்றைக் குரைகழலால் அன்று குமைத்தார் போலும்
தேவாதி தேவர்க்கு அரியார் போலும் திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே
சிவபெருமான் ஒருவனே மூன்று உருவமாக, பிரமன், திருமால், மற்றும் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளாக இருக்கும் தன்மை அப்பர் பிரான், முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் (6.85) பாடல் ஒன்றிலும் குறிப்பிடப்படுகின்றது. கருத்தன்=கர்த்தா என்ற வடமொழிச் சொல்லின் திரிபு;தலைவன் என்று பொருள். காய்தல்=கோபித்தல்: பிரமன் மீது கோபம் கொண்டு அவனது தலையினைக் கொய்த நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது.விருத்தன்=அனைவர்க்கும் மூத்தவன், பழையவன், ஆதி;
கருத்தன்காண் கமலத்தோன் தலையில் ஒன்றைக் காய்ந்தான்காண் பாய்ந்த நீர்
பரந்த சென்னி
ஒருத்தன்காண் உமையவளோர் பாகத்தான் காண் ஓருருவின் மூவுருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன்காண் விண்ணவர்க்கும் மேலானான்காண் மெய்யடியார் உள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே
மூவுருவமாகவும் அந்த மூவுருவத்தின் முதல்வனாகவும் பெருமான் இருக்கும் தன்மையை ஒரு பொது பதிகத்தின் பாடலில் (6.98.6) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இருநான்கான மூர்த்தி=அட்ட மூர்த்தி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா.அனைத்து வகையான உயிர்களிலும் சிவபெருமான் கலந்து இருப்பதால், அனைத்து உயிர்களும் இறைவனின் இருப்பிடமாக கருதப் படுகின்றன. இவ்வாறு இங்கே கூறப்பட்டுள்ள எட்டு பொருட்களிலும், சிவபெருமான் கலந்து இருப்பதால் அவரை அட்டமூர்த்தி என்று அருளாளர்கள் அழைக்கின்றார்கள்.திருமுறையின் பல பாடல்களில் சிவபெருமான் அட்டமூர்த்தியாக உள்ள நிலை குறிப்பிடப்படுகின்றது. நாவல் மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் தென்னிந்தியாவிற்கு நாவலந்தீவு என்ற பெயர் உண்டு. பல்லவ மன்னன் என்ன, பல்லவ நாட்டினை உள்ளடக்கிய நாவலந்தீவின் அரசன் எவரேனும் இருந்தால் அவரது ஆணைக்கும் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் எமக்கில்லை. மேலும் திருடர்களும் கொடுமையான செய்கைகளில் ஈடுபடுவோர் தாம் மன்னனுக்கு அஞ்சுவது இயற்கை. தான் அவ்வாறு இல்லாமையால் மன்னனிடம் தனக்கு ஏதும் அச்சம் இல்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
மூவுருவின் முதலுருவாய் இருநான்கான மூர்த்தியே என்று முப்பத்து மூவர்
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவளத் திருமேனிச் சிவனே என்னும்
நாவுடையார் நமையாள உடையார் அன்றே நாவலம் தீவகத்தினுக்கு நாதரான
காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவமலோம் கடுமையொடு களவற்றோமே
வாழ்கொளிபுத்துர்ர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.7.4) சுந்தரர் மூவராக இருப்பவர் பெருமான் என்று கூறுகின்றார். தேவர்=அனைவரிலும் உயர்ந்த முழுமுதற்கடவுள்; மூவராயும் என்ற தொடர் மும்மூர்த்திகளாக இறைவன் இருக்கும் தன்மையை உணர்த்துகின்றது. இருவராயும் என்ற தொடர்,பிரமன் மற்றும் திருமாலாகவும் இருந்து அவர்கள் இருவரையும் பெருமான் இயக்குவதை குறிப்பிடுகின்றது என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.உருத்திரன் சிவபெருமானின் அம்சம் என்பதால், அவனை தனியாக பெருமான் இயக்கவேண்டிய அவசியம் இல்லை என்று கருதி, இருவரையும் இயக்குபவர் என்று சுந்தரர் குறிப்பிட்டார் போலும். பெருமானைச் சிந்தியாது, உலகியல் இன்பங்களில் ஆழ்ந்து வாழும் மனத்தர்களை வஞ்ச மனத்தர் என்று குறிப்பிடும் சுந்தரர், அவர்கள் ஐந்து புலன்களுக்கும் அடிமையாக வாழ்ந்து, ஐந்து புலன்களின் இச்சைகளை தீர்ப்பதே தமது வாழ்நாளின் குறிக்கோளாக வாழ்வதால்,அத்தகைய மனிதர்களின் ஐந்து பொறிகளும் இன்பமாக வாழ்வதால், வாழ்வர் என்று அந்த புலன்களை குறிப்பிடுகின்றார். புலன்களை அடக்கி, புலன்களை நமது விருப்பம் போன்று செயல்படச் செய்து வாழும் மனிதர்களின் புலன்கள், தமது விருப்பம் போன்று செயல்படமுடியாத தன்மையால் அந்த புலன்கள் இன்பமாக வாழவில்லை என்று கருதினார் போலும். இவ்வாறு புலன்களில் கட்டுப் பாட்டில் வாழும் மனிதர்கள் பலரது இகழ்ச்சிக்கும் ஆளாவது இயற்கை தானே.
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே
யாவராலும் இகழப் பட்டிங்கு அல்லலில் வீழாதே
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே யாம்
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.80.9) சுந்தரர், இறைவனை மூவராகவும் இருவராகவும் ஒருவனாகவும் இருப்பவன் என்று கூறுகின்றார். தங்களது பாவத்தையும் வினைகளையும் அறுத்துக் கொள்ள விரும்பும் அடியார்கள், மாதோட்ட நகரில் அமைந்துள்ள கேத்தீச்சரத்து இறைவனை தொடர்ந்து வழிபடுகின்றனர் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
மூவரென இருவரென முக்கண் உடை மூர்த்தி
மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்னகரில்
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல்
தேவன் எனை ஆள்வான் திருகேதீச்சரத்தானே
பெருமான் மூவராகவும் நிற்கும் நிலையை உணராமல், தேவரில் ஒருவன் பெருமான் என்று பலரும் நினைக்கின்றார்களே என்று திருமூலர் வருந்தும் பாடலை இங்கே காண்பதும் பொருத்தமே. ஓர்தல்=ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதல். அனைவர்க்கும் ஆதியாகிய பெருமானின் உருவத்திலிருந்து பிரமனும் மாலும் கிளைத்தெழுந்த உருவங்கள் என்று, ஏகபாத திரிமூர்த்தியாக பெருமான் இருக்கும் நிலையை உணர்த்துகின்றார். சிவம் வேறு சக்தி வேறு அல்லாமல்,இருவரும் ஒருவரே என்பதை உணர்த்தும் விதமாக பாதி மாதராக பெருமான் இருக்கும் நிலையும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.
தேவரில் ஒருவன் என்பத் திருவுருச் சிவனைத் தேவர்
மூவராய் நின்றது ஓரார் முதலுருப் பாதி மாதர்
ஆவதும் உணரார் ஆதி அரி அயற்கு அரிய ஒண்ணார்
மேவுரு நிலையும் ஓரார் அவன் உரு விளைவும் ஓரார்
பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவருடன் இணைந்திருந்து அவர்கள் தந்தம் தொழில்களைச் செய்வதற்கு துணையாக இருப்பவன் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் மூவராய முதல்வன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதைப் போன்று ஒரே தண்டினில் மூன்று கிளைகளாக பிரிந்துள்ள மூவிலைச் சூலத்தினை பெருமான் ஏந்துதல், நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் தானே என்பதையும் மூன்று தொழில்களும் செய்பவன் தானே என்பதையும் உணர்த்தும் பொருட்டு என்று ஓற்றியூர் ஒருபா ஒருபது பதிகத்தின் ஆறாவது பாடலில் பட்டினத்து அடிகள் (பதினோராம் திருமுறை)கூறுகின்றார்.
மூவிலை ஒரு தாள் சூலம் ஏந்துதல்
மூவரும் யான் என மொழிந்தவாறே
பொதுவாக மும்மூர்த்திகள் என்றால் மூவரும் சமமான நிலையில் உள்ளவர்கள் என்று பலரும் நினைத்து வருகின்றனர். மும்மூர்த்திகள் என்று சொல்லும்போது, பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மூவரையே குறிப்பிடுகின்றது என்று பொருள் கொள்ளவேண்டும். சிவபெருமான் வேறு உருத்திரன் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அழிக்கும் தொழிலைச் செய்வதற்காக தனது அம்சமாக உருத்திரனை சிவபெருமான் தோற்றுவிக்கின்றார் . மேலும் மும்மூர்த்திகளுக்கு பெருமை கிடைப்பதன் காரணமே, பெருமான் அவர்களுடன் இணைந்து இருந்து அவர்கள் தங்கள் தொழிலினைச் செய்யும் வண்ணம் இயக்குவதே ஆகும். எனவே பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரிடமிருந்து சிவபெருமான் வேறுபட்டவர் என்பதை உணர்த்தும் பொருட்டும், பெருமான் தான் அவர்கள் இருவரையும் இயக்குகின்றான் என்பதையும் உணர்த்தும் பொருட்டும் இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை என்று திருவெழுகூற்றிருக்கை பதிகத்தில் (1.128) திருஞானசம்பந்தர் கூறுகின்றார் இவ்வாறு மும்மூர்த்திகளிலும் தனியாக விளங்குபவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு திருவாசகப் பாடல் (திருச்சதகம்) ஒன்றினை நினைவூட்டுகின்றது. தகர்=ஆடு; அவிதா=அச்சக் குறிப்பு சொல்; நம்மவர்=நம்மைப் போன்று அழியும் நிலையில் உள்ள பிரமனும் திருமாலும்;
சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா விடும் நம்மவர் அவரே
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண் மேல்
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே
தக்கனுக்கு அஞ்சி அவன் செய்த வேள்வியில் பங்கு கொண்டு அவிர்ப்பாகம் எடுத்துக் கொண்டவர்களும் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சின் தாக்கத்தினை தாங்க முடியாமல், எந்தை பெருமானே காப்பாற்று என்று அலறியவர்களும் எவ்வாறு சிவபெருமானுக்கு சமமாக மூவர்களில் ஒருவன் என்று தங்களை எண்ணிக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் இருவரும், மண்ணுலகில் பலரும் தங்களை வழிபடுதலை நினைத்து மூவரில் தாங்களும் ஒருவர் என்றே இறுமாப்புடன் இருப்பது எத்தனை பெரிய பாவம் என்பதை அறியாமல் இருக்கின்றார்களே என்று அவர்கள் இருவரது நிலையை நினைத்து அடிகளார் இரக்கம் கொள்கின்றார். மூவரில் ஒருவனாகிய உருத்திரன், குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்யும் பொருட்டு இயங்கும் இறைவனின் ஒரு அம்சமாகும். எனவே உருத்திரனை சிவன் என்று கொள்வதும் தவறு என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. சாவ முன்னாள் தக்கன் என்று குறிப்பிட்டு, வீரபத்திரனின் வலிமையின் முன்னே தக்கன் செயலற்று நின்ற தன்மையை குறிப்பிட்டு, அத்தகைய தக்கனுக்கு அஞ்சி வேள்வியில் பங்கேற்ற இருவர் என்று இழிவாக கூறுவதையும் நாம் உணரலாம்.
காலமாய் என்பதற்கு காலதத்துவமாக இருப்பவன் என்றும், இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களாக இருப்பவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். குணம் மூன்றாய் என்பதற்கு மூன்று குணங்களாக, இராஜசம் தாமசம் மற்றும் சாத்துவீகம் ஆகிய மூன்று குணங்களாக இருப்பவன் என்று பொருள். தாணு=ஸ்தாணு என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். நிலையானவன் என்று பொருள்; தத்துவம்=உயர்ந்த பொருள்; பர தத்துவம்=உயர்ந்த பொருட்கள் அனைத்தினும் மேலான பொருள்; உத்தமன்=குற்றம் ஏதும் இல்லாதவன்; வேணு=மூங்கில்; வேணுவார் கொடி=மூங்கில் கொம்புகளில் கோர்க்கப்பெற்ற நீண்ட கொடிகள்; கொடிகள் அசைவதை, கொடிகள் விண்ணோரை அழைத்து பெருமானை வழிபட வேண்டிய அவசியத்தை நினைவூட்டுவதாக, திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். விண்ணோர்களுக்கும் மண்ணோர்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, மண்ணோர்கள் இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் அனுபவிப்பவர்கள்; எனவே துன்பத்தில் ஆழ்கின்ற பலருக்கும் அந்த துன்பத்தை தீர்த்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் இறைவ்னைப் பணிய வேண்டும் எனும் நினைவு தோன்றுதல் இயல்பாக நடைபெறுகின்ற செயல்;விண்ணோர் எப்போதும் போகத்தில் ஆழ்ந்திருந்து இன்பத்தை துய்ப்பதால், அந்த போகத்தில் ஆழ்ந்திருந்து இறைவனை மறந்துவிடுகின்றனர். அந்த போகத்தை அனுபவிப்பதற்கு இடையூறு ஏற்படும் தருணங்களில் மட்டுமே, அந்த இடையூற்றினை நீக்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் இறைவனை நினைக்கின்றனர். எனவே பெரும்பாலான சமயத்தில் போகத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களுக்கு, இறைவனை வழிபடவேண்டும் என்பதை அடுத்தவர் நினைவூட்ட வேண்டியது அவசியமாக உள்ளது. அந்த பணியினை, வீழிமிழ்லைத் தலத்தின் கொடிகள் செய்வதாக திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். விளிப்ப=அழைக்க;
பொழிப்புரை:
காண்பதற்கு அரிய கடவுளாகவும், கால தத்துவனாக காலத்தைக் கடந்தவனுமாக, அனைத்து உயிர்களுக்கும் இறந்தகாலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலமாக இருப்பவனும், அனைத்து உயிர்களிலும் காணப்படும் இராஜசம் தாமசம் மற்றும் சாத்துவீகம் ஆகிய மூன்று குணங்களாகவும், பலராலும் போற்றப்படும் பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளாகவும், அந்த மூன்று மூர்த்திகள் செய்யும் மூன்று தொழில்களாகவும் (உலக உயிர்கள் தங்களது மலங்களைக் கழித்துக் கொள்ள தேவைப்படும் மூன்று முக்கிய தொழில்களாக உள்ள பேருலகினை படைத்தல் அந்த உலகத்திலுள்ள உயிர்களைக் காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்று தொழில்களாகவும்), இருக்கும் பெருமான் உறைகின்ற இடம் திருவீழிமிழலை ஆகும். என்றும் நிலையாக இருப்பவனும் உயர்ந்த பொருட்கள் அனைத்திற்கும் மேலான மிகவும் உயர்ந்த பொருளாக இருப்பவனும், குற்றம் குறைகள் ஏதுமின்றி உத்தமனாக இருப்பவனும் ஆகிய பெருமானை வழிபட்டு நன்மை பெறுவீர்களாக என்று தேவர்களை அழைப்பது போன்று, இந்த தலத்தினில் உயர்ந்த மூங்கில் கொம்புகளில் கட்டப்பட்ட நீண்ட கொடிகள் அசைகின்றன.
பாடல் 6
அகன் அமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானம்
புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில்
தகவுடை நீர் மணித்தலத்துச் சங்கு உள வர்க்கத்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்கு மலர்ப் பொரியட்ட மணம் செய்யும் மிழலையாமே
விளக்கம்:
அறுபகை=உயிர்களுக்கு உட்பகைகளாக விளங்கும் காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய ஆறு குற்றங்கள்; அகன்=அகம்,உள்ளம்; புகல்=அடைக்கலம், பற்றுக்கோடாக கருதுதல்; மெய்ஞானத்தின் தன்மையை புரிந்து கொண்டு மெய்ஞானத்தின் வழி நடப்போர், உலகியல் இன்பங்களில் ஆழ்வதைத் தவிர்த்து, இறை சிந்தனையில் எப்போதும் ஆழ்ந்திருக்கும் தன்மையராக இருப்பதால், இறைவன் அத்தகைய அடியார்களின் உள்ளத் தாமரையில் உறைபவன் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. செற்று=அடக்கி வெற்றி கொண்டு; தகவு-தகுதி; மணித்தலம்= இரத்தினங்கள் கிடைக்கும் இடம்; வர்க்கம்=சுற்றம்; சங்குள வர்க்கம்=சங்குகளுடன் தொடர்பு கொண்ட மற்ற பொருட்கள்; சலசத்தீ=தாமரையாகிய தீ, மலர்ந்த தாமரை மலர் செக்கச் செவேலென்று இருப்பதால் தீப்பிழம்புக்கு ஒப்பிடப்படுகின்றது. அருகிலுள்ள புங்க மரங்களிலிருந்து மலர்கள் மலர்ந்து விரிந்த தாமரை மலரின் மேல் விழுவது, திருமண நிகழ்ச்சிகளில் பொரி இடுகின்ற சடங்கினைப் போன்று அமைந்துள்ளது என்று கூறுகின்றார். இந்த தலம் திருமணத் தலமாக கருதப்படுகின்றாது. கல்யாணபுரம் என்பது இந்த தலத்தின் பெயர்களில் ஒன்று. கருவரையில் பின்சுவற்றில் பெருமானின் திருமணக் கோலம் புடைச் சிற்பமாக உள்ளது. கருவரையில் தான் கண்ட பெருமானின் திருக்கோலத்தை, இயற்கைக் காட்சி திருஞான சம்பந்தருக்கு நினைவூட்டியது போலும். எங்கும் எதிலும் சிவத்தையே கண்டு மகிழ்ந்தவர் அல்லவா.
இந்த தலத்தில் வாழ்ந்து வ்ந்த முனிவர் காத்யாயனரும் அவரது மனைவி சுமங்கலையும் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பார்வதி தேவியே மகளாக அவர்களுக்கு அவதரித்தாள். காத்யாயனி என்ற பெயரல் வளர்ந்த அந்த குழந்தை திருமணப் பருவம் அடைந்த போது சிவபிரானே தனது மகளுக்கு மணமகனாக வரவேண்டும் என்று அந்த குழந்தையும் அதன் பெற்றோர்களூம் விரும்பினார்கள். ஒரு நாள் சிவபிரான் முனிவரின் வீட்டிற்கு வந்து அவரது மகளை தனக்கு மணமுடித்து தருமாறு கேட்டார். இல்லத்திற்கு வந்தவரை வரவேற்ற முனிவர், தான் யார் என்று அடையாளம் காட்டச் சொல்ல, அவரும் திருமால் தனக்கு படைத்த கண்ணினையும், மிழலைக் குறும்பர் எனும் பக்தர் படைத்த விளங்கனியையும் காட்ட, வந்தவர் சிவபிரான் தான் என்பதை புரிந்து கொண்ட முனிவர் மகிழ்வுடன் அவர்களின் திருமணத்திற்கு இசைந்தார். மகா மண்டபத்தில் இருக்கும் கல்யாண சுந்தரர் சன்னதியில் சிவபிரான் மணக்கோலத்தில் கையில் ஒரு பூவினை வைத்துக் கொண்டு இருப்பதை காணலாம்.முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி கருவறையிலும் இறைவன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் இருப்பதை காணலாம். ஒரு சித்திரை மாதம் மக நட்சத்திரம் அன்று இவர்கள் திருமணம் நடந்தேறியது.
புராணர்=முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாகவும் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியராக இருக்கும் தன்மை; புராணம் என்ற சொல் புரா மற்றும் நவம் ஆகிய இரண்டு சொற்களின் கலவை. புரா என்றால் பழமை; நவம் என்றால் புதுமை; பெருமான் பழமைக்கும் பழையவனாகவும் புதுமைக்கும் புதியவனாகவும் இருக்கும் தன்மை இந்த சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. புதுமையாக எந்த பொருள் வந்தாலும், புதுமை என்ற அடைமொழி அந்த பொருளிலிருந்து பேர்ந்து விலகும் வண்ணம் புதுமையாக காட்சி அளிப்பவன் பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பெருமானை புராணர் என்று அழைத்து அருளாளர்கள் மகிழும் சில பாடல்களை நாம் இங்கே காண்போம். பல பாடல்களில் ஆதி புராணர் என்று குறிப்பிடப்ப்ட்டு,அனைத்து உயிர்களுக்கும் மிகவும் பழமையானவர் பெருமான் என்றும் சொல்லப்படுகின்றது.
வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.39.6) திருஞானசம்பந்தர், பெருமானை புராணர் என்று அழைக்கின்றார். கறி=மிளகு; மிளகு மலைச்சாரலில் வளரும் கொடிகள்; இங்கே மலை என்பது கோவர்தன மலையினை குறிப்பிடுகின்றது. ஐங்கணையோன்=ஐந்து விதமான அம்புகளை உடைய மன்மதன்; தாமரை, முல்லை, மா, அசோகம் மற்றும் நீலோற்பலம் என்பன மன்மதனின் ஐந்து அம்புகள் என்று சொல்லப்படுகின்றன. உயிர்களின் காதல் உணர்ச்சியை தூண்டுவதற்கு மன்மதன் இந்த ஐந்து அம்புகளையும் பயன்படுத்துவதாக கூறுவார்கள். சிவபெருமானின் தவத்தை கலைக்க முயன்ற மன்மதன், பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிவந்த தீப்பொறிகளால் எரிந்து மனைவி இரதி தேவிக்கு மட்டும் தெரியும் வண்ணம் வாழ்ந்ததையும் நாம் அனைவரும் அறிவோம். மீண்டும் மீண்டும் இரதி தேவி, தனது கணவன் அனைவரின் கண்களுக்கும் தெரியும் வண்ணம் வாழவேண்டும் என்று வேண்டவே,பெருமான் இரதி தேவிக்கு ஒரு வரத்தினை அளிக்கின்றார். திருமால் கண்ணனாக அவதாரம் எடுக்கும் போது, மன்மதனின் அம்சமாக அநிருத்தன் என்று ஒரு மைந்தன் ருக்மிணி தேவிக்கு மகனாக பிறப்பான் என்றும், உஷை என்ற பெயருடன் பாணாசுரனின் மகளாக பிறக்கும் இரதிதேவியை அவன் மணந்து கொள்வான் என்றும் வரம் அளித்தார். பின்னர் அவ்வாறே நடந்தது. இதனைக் குறிப்பிடும் வண்ணம், மன்மதனை கண்ணனின் மகன் என்று இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பூத புராணர்=பூதங்களுக்கு ஆதியாக இருப்பவர், ஆதி என்றார் சொல் இங்கே தலைவர் என்ற பொருளில் வந்துள்ளது. மறி=மான் கன்று;மைஞ்ஞிற=கருமை நிறம் உடைய; மைஞ்ஞிற மான்=கருமான், கருமை நிறமுடைய விலங்கு, கருமையான உடலினை உடைய யானை; வெறி வளர்=நறுமணம் மிகுந்த;
கறிவளர் குன்றம் எடுத்தவன் காதல் கண்கவர் ஐங்கணையோன் உடலம்
பொறிவளர் ஆரழல் உண்ணப் பொங்கிய பூத புராணர்
மறிவளர் அங்கையர் மங்கையொர் பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோலுடை ஆடை
வெறிவளர் கொன்றை அந்தாரார் வேட்கள நன்னகராரே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.131.2) திருஞானசம்பந்தர் புராணர் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். வேரி=தேன்,அம்பிகை தனது கூந்தலில் சூடியிருந்த மலர்களில் உள்ள தேன்; கயம்= நீர்நிலை; மூரி=பெருமை; முயங்கி=தடவிக்கொண்டு; காற்றுக்கு இயற்கையில் மணம் இல்லை. ஆனால் முதுகுன்றத்து தலத்தில் வீசும் காற்று, சோலைகளில் உள்ள மலர்களில் படிந்தும் அவைகளை உதிர்த்தும் வருவதாலும், தலத்தின் நீர்நிலைகளில் உள்ள நீரின் மீது தவழ்ந்து வருவதாலும் குளிர்ச்சியும் நறுமணமும் கொண்டதாக விளங்குகின்றது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.கார்=மழை; அர்ஜுனன் போர் புரியும் ஆற்றலை நேரில் காண அம்பிகை விரும்பியதால், தேவியையும் உடன் அழைத்துக் கொண்டு அர்ஜுனன் தவம் புரிந்த இடத்திற்கு பெருமான் சென்றதாக புராணம் கூறுகின்றது. பொறை=வலிமை
வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன் மேவு
போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில்
காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலரும் உதிர்த்துக் கயம் முயங்கி
மூரி வளம் கிளர் தென்றல் திரு முன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே
திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.07.01) திருஞானசம்பந்தர் பெருமானை புராணர் என்று அழைக்கின்றார்.பொன்னியன்ற=பொன்+இயன்ற, பொன் போன்ற; கூவிளம்=வில்வம்; தென்ன=இசைக்குறிப்பு; தன்னை அடிமையாக ஆட்கொண்ட பெருமான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
வன்னிக் கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னியன்ற சடையில் பொலிவித்த புராணனார்
தென்ன என்று வரிவண்டிசை செய் திருவாஞ்சியம்
என்னை ஆளுடையன் இடமாக உகந்ததே
திருமங்கலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.10.1) திருஞானசம்பந்தர், பெருமானை புராணனே என்று அழைக்கின்றார். சீர்=புகழ்;சந்து=சந்தனம்; வரை=மலை; செறி= மிகுந்து நெருக்கமாக கிடக்கும்; வாரி=வெள்ளம்; பூரித்து=மனம் மகிழ்ந்து; ஆட்டி=நீராட்டி; தீர்க்கபாகு என்ற முனிவர்,பெருமானின் சன்னதியில் அமர்ந்தவாறு தனது கைகளை நீட்டி காவிரி ஆற்றிலிருந்து நீரினை எடுத்து பெருமானை நீராட்டி அர்ச்சனை செய்ததாக தலபுராணம் கூறுகின்றது. அந்த தகவல் இந்த பாடலில் கொடுக்கப் பட்டுள்ளது. .
சீரினார் மணியும் அகில் சந்தும் செறி வரை
வாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடி
நீரின் மாமுனி வன் நெடும் கைகொடு நீர் தனை
பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே
பெரும்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.67.6) திருஞானசம்பந்தர் பெருமனை வேதபுராணர் என்று குறிப்பிடுகின்றார். கற்றது உற=கல்வி கற்றதன் பயனை அடையும் வண்ணம்; பெருமானின் அரிய பெருமைகளை நூல்கள் வாயிலாகக் கற்று, அந்த நூல்களில் உணர்த்திய வண்ணம் பெருமானை முறையாக வழிபட்டு வாழ்வதே கல்வி கற்றதன் பயனாகும். கல்வி கற்றதன் பயனே இறைவனைத் தொழுதல் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு திருவள்ளுவரின் திருக்குறள் (கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்) ஒன்றினை நினைவூட்டுகின்றது.வாலறிவன்=தூய அறிவின் வடிவமாக இருக்கும் இறைவன்; நல்லனவற்றை பெரிதும் விரும்பும் பெருமான் என்று இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் தொண்டர்களையும் தொண்டர்கள் செய்யும் திருப்பணிகளையும் மிகவும் விரும்பும் பெருமான் என்று குறிப்பிட்டு, அத்தகைய அடியார்களுக்கு பெருமான் எவ்வாறு உதவி செய்கின்றார் என்பதை குறிப்பிடுகின்றார். கற்றது உறப் பணி செய்து காண்டும் என்பார் அவர் தம் கண்
முற்றிது அறிதும் என்பார் கண் முதலியர் வேத புராணர்
மற்றிது அறிதும் என்பார் கண் மனத்திடையார் பணி செய்ய
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே
கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (3.67.6) திருஞானசம்பந்தர் பெருமானை புராதனன் என்றும் புராணன் என்றும் குறிப்பிடுகின்றார். புராதனன்=அனைத்து உயிர்களுக்கும் பழமையானவன்; நிராமயன்=நோயற்றவன்; பராபரன்= மேலோர்க்கும் மேலானவன்; பராவுசிவ=பலராலும் புகழப்படும் சிவபெருமான்; ராக=விரும்பத் தக்கவன்; இராவும்=இரவிலும்; எதிராயது=இரவுக்கு எதிராக உள்ள பகலிலும்;பரா=பரவி, புகழப்படும்; புராணன்=பழமையானவன்; அமராதி=தேவர்களுக்கு தலைவனாக உள்ளவன்; அதிபதி= தலைவன்; அரா மிசை=பாம்பின் மேல்;எழில்=அழகாக உள்ள பூமியினை; தரு=கொம்பு; ஆய= பொருத்திய; அர பராயண=அரனை பாராயணம் செய்யும்; வாதராயன்=திருமால்; விராய=கலந்த;எரி=பழி; இயல்பாகவே நோய்கள் அற்றவனும், மேலோர்களாக கருதப்படும் பல தெய்வங்களுக்கும் மேலாக விளங்குபவனும், அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக உள்ளவனும், பலராலும் புகழ்ந்து போற்றப்படுபவனும், அனைவராலும் விரும்பப்படுபவனும் ஆகிய பெருமானே நீ அருள் புரிவாய் என்று இரவும் அதற்கு எதிராக அமைந்துள்ள பகலிலும் அனைத்து உயிர்களாலும் தியானிக்கப் படும் பழையவன் சிவபெருமான். தான் கிடக்கும் பாம்பணையிலிருந்து எழுந்த திருமால் வராக உருவத்துடன் சென்று, அரக்கன் இரண்யாட்சனால் ஒளித்து வைக்கப்பட்ட எழில் மிகுந்த பூமியை மீட்டுத் தனது இரண்டு கொம்புகளின் இடையே பொருத்திக் கொணர்ந்த பின்னர், அந்த அரக்கனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பழி தீரும் பொருட்டு, பெருமானின் திருநாமத்தை பாராயணம் செய்து வழிபட்டதால் வந்த பெயர் தராய் என்பது இந்த தலத்துடன் இணைந்தது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நிராமய பராபர புராதன பராவுசி வராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழி றராயர பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.80.5) புராண முனி என்று பெருமானை திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். பூதபதி=ஐந்து பூதங்களுக்கும் அதிபதியாகிய பெருமான்; புராண முனி=பழமையான தவக்கோலம் பூண்டவன்; மருவி=கலந்து; தேவியை புண்ணியமே உருவாக இருப்பவள் என்று குறிப்பிடுகின்றார். தான் வேறு தேவி வேறு என்று நினைக்காமல் பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மாதினை மதித்து அங்கோர் பால் கொண்ட மணி என்று சுந்த்ரர் கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் கூறுவது (7.59.1)நமது நினைவுக்கு வருகின்றது. முனிவர்கள் உலகநலன் கருதி தவம் செய்வது போன்று உலக நலன் கருதி அந்தணர்கள் வேள்வி வளர்ப்பதால், அவர்களை மாதவர்கள் அன்ன மறையாளர் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அந்தணர்கள் செய்கின்ற வேள்வியின் பயனாக, உலகம் குற்றம் இல்லாத வகையில் விளங்க, உலகத்தவர் இன்பம் அடைகின்றனர் என்று கூறுகின்றார். பசி, பிணி, வறுமை, பருவமழை பொய்த்தல் முதலிய தீங்குகள் நேராமலும், குறைவிலாத வகையில் உணவு, நோயற்ற வாழ்வு, உரிய காலத்தில் அளவான மழை முதலிய நிகழ்ந்து, உலக மக்கள் இன்பமுடன் வாழ வேள்விகள் வழிவகுக்கின்றன என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
பூதபதியாகிய புராணமுனி புண்ணிய நன்மாதை மருவிப்
பேதம் இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடமாம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால்
ஏதமிலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே
பற்றற்றார் சேர் என்று தொடங்கும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (4.14.10) அப்பர் பிரான் பெருமானை, பொதியின் மேய புராணன் என்று குறிப்பிடுகின்றார். புத்தூர் என்பது அரிசிற்கரைப் புத்தூரை குறிக்கும் என்று சிலரும் இது ஒரு வைப்புத் தலத்தைக் குறிப்பது என்று சிலரும் கருதுகின்றனர்.மாத்தூர் என்பது வைப்புத் தலம் என்றும் வேறு சிலரால் ஆமாத்தூர் என்றும் கருதப்படுகின்றது. வித்தாய் மிழலை முளைத்தான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவது, சிவபிரான் உயிர்களுக்கு உயிராக இருக்கும் நிலையை குறிப்பிடுவதாகும்.
புத்தூர் உறையும் புனிதனைப் பூவணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன்று எரித்தானைப் பொதியின் மேய புராணனை
வைத்தேன் எந்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே
பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.88.1) அப்பர் பிரான், பெருமானை ஆதி புராணன் என்று குறிப்பிடுகின்றார். ஆதி புராணன் என்பது இந்த தலத்து பெருமானின் திருநாமம். இந்த பதிகத்தின் முதல் மூன்று பாடல்களில் இந்த திருநாமம் குறிப்பிடப்படுகின்றது. மாலினை=மயக்கத்தை; மால் உற=திருமால் அடையும் வண்ணம்; பண்பு= அடுத்தவருக்கு தீங்கு செய்யாத பண்பு; ஆலன்=ஆல மரத்தின் நிழலில் அமர்ந்தவன்; புகலன் என்ற சொல் போலன் என்று எதுகை கருதி திரிந்தது. புகலன்=வெற்றி கொண்டவன்; ஆலன் அருமையான சொல்லாட்சி.
மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடைய
பாலனைப் பால்மதி சூடியைப் பண்பு உணரார் மதில் மேல்
போலனைப் போர்விடை ஏறியைப் பூந்துருத்தி மகிழும்
ஆலனை ஆதி புராணனை நாம் அடி போற்றுவதே
திருக்கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.93.1) அப்பர் பிரான் பெருமானை ஆதிபுராணன் என்று அழைக்கின்றார். தானவர்(முதலடி)=வித்தியாதரர்கள்: தகைமை=தன்மை; வாழ்நர் என்ற சொல்லின் திரிபே வாணர் என்பதாகும்; அண்டவாணர்=அனைத்து அண்டங்களிலும் வாழ்பவர்; இரண்டாவது அடியில் உள்ள தானவர் என்ற சொல்லுக்கு இரண்டு விதமாக உரையாசிரியர்கள் பொருள் கொள்கின்றார்கள். தானம் என்ற சொல்லுக்கு இருப்பிடம் என்று பொருள் கொண்டு, சத்திய லோகத்தையும் வைகுந்தத்தையும் இருப்பிடமாகக் கொண்ட பிரமன் திருமால் என்பது ஒரு பொருள். தான் அவர் என்று தானவர் சொல்லினைப் பிரித்து, தான் பிரமன் மால் அவர் அறியாத தகைமையினான் என்று சொற்களை மாற்றியமைத்து சிலர் பொருள் விளக்கம் அளித்துள்ளனர். வானத்தை இடமாகக் கொண்ட தேவர்கள் என்று உணர்த்தும் விதமாக வானவர் என்று முதல் அடியில் கூறியிருப்பதால்,இரண்டாவது அடியில் வரும் சொல்லும், இருப்பிடங்களை குறிப்பிடுவதாக கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. ஆதிபுராணன் என்பது அருகிலுள்ள பூந்துருத்தி தலத்தில் உறையும் பெருமானின் திருநாமம்.
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித்
தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான்
ஆனவன் ஆதி புராணன் அன்று ஓடிய பன்றி எய்த
கானவனைக் கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே
திருக்கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.38.8) அப்பர் பிரான் பெருமானை ஆதி புராணர் என்று குறிப்பிடுகின்றார்.மரவு=மராமரம்; பெருமான்=தலைவன்; பரவுதல்=புகழ்ந்து பேசுதல்; பாம்பினைத் தனது கையில் கங்கணமாக உடைய பெருமான், அனைத்து உயிர்களுக்கும் பழமையானவர்; மராமரங்கள் நிறைந்த திருக்கடவூர் மயானம் தலத்தில் உறையும் இறைவனாகிய அவர், தன்னைப் புகழ்ந்து பேசும் அடியார்கள் மற்றும் புகழ்ந்து பாடல்கள் பாடும் அடியார்களின் துன்பங்களைத் தீர்ப்பார்; அத்தகைய அடியார்களை ஆட்கொண்டு, அவர்கள் செய்யும் திருப்பணிகளை உவந்து ஏற்றுக்கொள்வார். அவர் பிரமன் திருமால் ஆகியோருக்கும் பெரியவராக, அவர்களின் தலைவனாக விளங்குகின்றார். அவரது திருநாமம் பெருமான் அடிகள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அரவு கையினர் ஆதி புராணனார்
மரவு சேர் கடவூரின் மயானத்தார்
பரவுவார் இடர் தீர்ப்பார் பணி கொள்வர்
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே
குரக்குக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.75.8) அப்பர் பிரான் பெருமானை ஆதி புராணனார் என்று குறிப்பிடுகின்றார். நக்கன்=கோவண ஆடை மட்டும் அணிந்தவன்; செக்கர்= செவ்வானம்; அக்கு அரையர்=அக்கு மணியை இடுப்பினில் அணிந்தவர்; அக்கு என்பது எலும்பு மாலை மற்றும் உருத்திராக்கம் ஆகிய இரண்டையும் குறிக்கும். பெருமான் இரண்டையும் அணிகின்றார் என்று திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன.
செக்கர் அங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்
அக்கு அரையர் எம் ஆதி புராணனார்
கொக்கினம் வயல் சேரும் குரக்குக்கா
நக்கனைத் தொழ நம்வினை நாசமே
நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.83.6) அப்பர் பிரான் பெருமானை ஆதிபுராணன் என்று குறிப்பிடுகின்றார்.கலங்கள்=கப்பல்கள்; திருமறைக்காடு தலத்தின் பாடல்களிலும் அப்பர் பிரான் கலங்கள் சூழ்ந்த கடற்கரை என்று குறிப்பிடுகின்றார். நாகை மற்றும் மறைக்காடு தலங்கள் கடல் வாணிகத்தால் சிறப்பு வாய்ந்த தலங்களாக தேவார முதலிகள் காலத்தில் இருந்தமை இத்தகைய குறிப்புகள் மூலம் நமக்கு தெரிய வருகின்றது. விலங்கல்=மலை; விலங்கல் மெல்லியல் என்ற தொடர் மூலம் மலைமகளாக வளர்ந்த தேவி, பெண்மைக்குரிய மென்மையான உணர்வுகளை உடையவராக இருந்தார் என்று அப்பர் பிரான் நயமாக கூறுகின்றார். அலங்கல்=மாலை; ஆதிபுராணர் என்பதும் தலத்து பெருமானின் திருநாமங்களில் ஒன்றாகும்.
அலங்கல் சேர் சடை ஆதி புராணனை
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக்
கலங்கள் சேர் கடல் நாகைக் காரோணனை
வலம் கொள்வார் வினையாயின மாயுமே
காசனைக் கனலை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (5.93.2) அப்பர் பிரான், பெருமானை புராணன் என்று குறிப்பிடுகின்றார். புந்தி=அறிவு;சந்தி என்பது இங்கே முன்னிரவும் பின்னிரவும் சந்திக்கின்ற நள்ளிரவை குறிப்பிடுகின்றது. நள்ளிரவு என்பது இங்கே இருளில் மூழ்கிக் கிடக்கும் ஊழிக் காலத்தை குறிக்கின்றது. முற்றிலும் இருள் சூழ்ந்த நிலையில் நடனமாடுவதற்கு தனி திறமை வேண்டும் என்பதால், அத்தகைய திறமை உடைய பெருமானை சதுரன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இறைவன் தானே வந்து தனது உள்ளத்தில் புகுந்து ஆட்கொண்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார். தனது இளைய வயதினில் பெற்றோர்களை பறிகொடுத்த நிலையில் மிகவும் திகைப்பு அடைந்திருந்த மருள் நீக்கியார் (அப்பர் பிரானின் இயற்பெயர்) என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தானே சமண மதத்தினைச் சார்ந்தார். மீண்டும் அவர் சைவ சமயம் திரும்பியது, திலகவதியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபிரானின் திருவருளால் தானே. திலகவதியாரின் வேண்டுகோளுக்கி இணங்கிய பெருமான், அவரது கனவில் தோன்றி, முன்னமே அவன் நம்மை அடைய விரும்பினான், ஆதலின் இப்போது சூலை கொடுத்து ஆட்கொள்வோம் என்று சொல்லிய வண்ணம் செய்த பெருமான் அல்லவா. இவ்வாறு பெருமான் தானே முன் வந்து, தன்னை ஆட்கொண்ட நிகழ்ச்சியை அப்பர் பிரான் நெகிழ்ந்த மனத்துடன் நினவு கூர்ந்து குறிப்பிடுகின்றார்
புந்திக்கு விளக்காய புராணனைச்
சந்திக் கண் நடமாடும் சதுரனை
அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை
வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே
சித்தக்குறுந்தொகை என்று அழைக்கப்படும் பதிகத்தின் பாடலில் (5.97.14) அப்பர் பிரான் பெருமானை புராணன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் மற்றும் கடைப்பாடல் தவிர்த்த மற்றைய பாடல்கள், பதின்மூன்று உயிரெழுத்துக்கள் மற்றும் பதினெட்டு மெய்யெழுத்துகளைச் சார்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் அகர வரிசையில் முதல் எழுத்தாக வரும் வண்ணம் அமைந்துள்ளன. அக்கு=சங்குமணி; எலும்பு என்ற பொருளும் பொருந்தும்; நீர்கள் என்று இழிவுக் குறிப்பு தோன்ற கள் விகுதி சேர்க்கப் பட்டுள்ளது. இரண்டாவது பாடலிலிருந்து பதின்மூன்றாம் பாடல் வரை, அ முதல் ஔ வரை உள்ள உயிரெழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்ட பாடல்களை இயற்றிய அப்பர் பிரான், ஆயுத எழுத்தாகிய ஃ என்பதை முதல் எழுத்தாக கொள்ள முடியாது என்பதால், அந்த எழுத்தினை உணர்த்தும் சொல்லினை நயமாக அப்பர் பிரான் இங்கே பயன்படுத்தியுள்ளார். ஆத்திச்சூடியிலும் அஃகம் சுருக்கேல் என்று கூறப்படுகின்றது. அஃகம் என்றால் எடை மற்றும் அளவு என்று பொருள். வணிகர்களுக்கு ஔவை கூறும் அறிவுரை, (எடையையும் அளவினையும் குறைக்காமல் வாணிபம் செய்ய வேண்டும்) இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது.. இந்த பதிகத்தின் பல பாடல்களில் (நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில்) பெருமானின் பண்புகளையோ தன்மையையோ செயல்களையோ ஏளனம் செய்யாது தேவர்கள் பெருமானை போற்றுவதை அப்பர் பிரான் குறிப்பிட்டார். தேவர்கள் பெருமானின் தன்மையை சரியாக புரிந்து கொண்டது போன்று நாமும் புரிந்து கொண்டு, அவனை ஏளனம் செய்யாமல் வணங்க வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அதற்கு மாறாக ஏளனம் செய்தால், நாம் நரகத்தில் தள்ளப்படுவோம் என்ற எச்சரிக்கையும் இங்கே விடுக்கப் படுகின்றது.
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல்
புக்கு பல் பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவரால் தொழுவானையே
திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.8.3) அப்பர் பிரான், பெருமானை புராணன் என்று அழைக்கின்றார். நாவாய்=தோணி, கப்பல்;கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு என்று பெரியோர்கள் சொல்லிய வண்ணம், ஞானம் என்பது பெரிய கடல். அதனை முற்றும் உணர்ந்து கரையினை அடைவது என்பது மிகவும் அரிது. ஆனால் இறைவனின் அருளினால் ஞானத்தை அடையமுடியும் என்பதை பல அருளாளர்களின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகின்றது. முற்றிலும் உணர்ந்த இறைவன், அந்த ஞானப் பெருங்கடலைக் கடந்த தோணியாக விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. சாரணன்=எங்கும் இயங்குபவன்; தக்கோர்=மெய்யுணர்வு உடையவர்கள்; மெய்யுணர்வு உடையவர்களே இறைவன் முழுமுதற் பொருள் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்பதால், இவ்வாறு அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இதன் மூலம் மெய்யுணர்வு இன்றி மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மாந்தர்களால், பெருமானின் முழுமுதல் தன்மையை புரிந்து கொள்ள முடியாது என்பதயும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.
நாரணன்காண் நான்முகன்காண் நால்வேதன்காண் ஞானப் பெருங்கடற்கோர் நாவாயன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரிசடை மேல் புனலேற்ற புனிதன் தான் காண்
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மைக் கண் தானே காண்
தக்கோர்கெல்லாம்
காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண்ணுளானே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.16.3) அப்பர் பிரான் பெருமானை புராணர் என்று குறிப்பிடுகின்றார்.ஏதங்கள்=துன்பங்கள். தங்களது துன்பங்கள் இறைவனால் நீக்கப் படுவதால் அடியார்கள் இன்பம் அடைவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.அடியார்கள், பெருமானின் திருவடிகளைத் தொழுது ஏத்தும் சிறப்பு பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்
பூதங்களாய புராணர் போலும் புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப் படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும்
ஏதங்களான கடிவார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.30.9) அப்பர் பிரான் பெருமானை புராணன் என்று அழைக்கின்றார். விண்டவர்=நீங்கியவர்;வேலை=கடல்; புத்தேள்=தேவர்; சிறந்த வேத நெறியினை விட்டு நீங்கிய திரிபுரத்து அரக்கர்கள் மூவரின் பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினால் எரித்தவனும், கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறத்தினை அடைந்த கழுத்தினை உடையவனும்., சூரிய சந்திர மண்டலங்களில் ஒளி திகழ்வதற்கு காரணமானவனும், வாய்மூர் மறைக்காடு ஆகிய தலங்களில் பொருந்தி உறைபவனும், தாமரை மலரை ஒத்த கண்களை உடைய திருமாலும் தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள தேவனாகிய பிரமனும் காண்பதற்கு அரியவனாக விளங்கியவனும், அனைத்து உயிர்களுக்கும் பழமையானவனும் ஆகிய பெருமானே, தெளிந்த நீரலைகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருவாரூர் நகரத்து திருமூலட்டானத்தில் வீற்றிருக்கும் எமது செல்வன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை
விண்டவர் தம்புரம் மூன்றும் எரி செய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தான் காண்
மண்டலத்தில் ஒளிவளர விளங்கினான்காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான்காண்
புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப் புத்தேளும் காண்பரிய புராணன் தான் காண்
தெண்டிரை நீர் வயல் புடைசூழ் திருவாரூரில் திருமூலட்டானத்து எம் செல்வன் தானே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.37.2) அப்பர் பிரான் பெருமானை புராணனே என்று தான் அழைத்ததாக கூறுகின்றார். தீவாயின் நீறா என்று மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும்; ஏ=அம்பு; ஏவார்=அம்பு பூட்டிய; அம்பு பூட்டப்படினும் அதனை பயன்படுத்தாமையால் அம்பு பூட்டிய நிலையில் வில்லினை ஏந்தியவன் என்று உணர்த்துகின்றார். சிவபெருமானின் வில்லுக்கு பினாகம் என்று பெயர். சிவபெருமானை பினாகபாணி என்றும் அழைப்பார்கள். இடும்பைக் கடல் என்பதற்கு, அப்பர் பிரான் மேற்கொண்ட கயிலை பயணத்தை தொடரமுடியாமல் தவித்த நிலை என்று பொருள் கொண்டு சிவக்கவிமணி அவர்கள் விளக்கம் அளிக்கின்றார். தன் பால் கருணை கொண்டு முனிவராக வந்து உண்மை நிலையினை உணர்த்தி மேற்கொண்டு உடல் பழுதுபடாத வண்ணம் காத்தவரும், கண்ணினால் தான் காயிலைக் காட்சி காணவேண்டும் என்று விண்ணப்பம் வைத்த போது, அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு கயிலைக் காட்சியைக் காட்டியவரும் ஆகிய பெருமானின் கருணையை நினைத்து மனம் நெகிழ்ந்து பாடிய பாடல் இது. உடல் முழுவதும் தசைகள் தேய்ந்து சிதற, ஒன்றுக்கொன்று வரிந்து கட்டப்பட்ட எலும்புகளின் கட்டு முரிந்த நிலையிலும், கயிலை மலை சென்றடையும் தனது குறிக்கோளில் மனம் தளராதவராக அப்பர் பிரான், நிலத்தில் உருண்டும் புரண்டும் சென்றார். ஆயினும் ஒரு நிலையில் நிலத்தில் உந்திப் புரண்டு செல்வதும் முடியாத நிலையில் ஏதும் செய்ய இயலாது அப்பர் பிரான் ஓய்வு மேற்கொண்டார். அத்தகைய தருணத்தில் ஒரு முனிவரின் வடிவத்தில் தோன்றிய பெருமான்,பயணத்தைத் தொடராது மீண்டு நீர் வந்த வழியினில் திரும்பிச் செல்வீராக என்று அப்பர் பிரானிடம் கூறினார். அந்த முனிவருக்கு, ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என்று அப்பர் பிரான் பதிலளித்தார். அப்பர் பிரானின் மன உறுதியைக் கண்ட பெருமான், நாவுக்கரசனே எழுந்திரீர் என்று ஆகாயத்திலிருந்து குரல் கொடுக்க, தனது உடல் முழுவதும் பழுதுகள் நீங்கி பொலிவுற்ற நிலையில் அப்பர் பிரான் எழுந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.
தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே
மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே
ஏவார் சிலையானே என்றேன் நானே இடும்பைக் கடல் நின்றும் ஏற வாங்கி
ஆவா என்று அருள் புரியும் ஐயாறு அன்னே என்றென்றே நான் அரற்றி நைகின்றேனே
கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.3) அப்பர் பிரான் பெருமானை புராணன் என்று குறிப்பிடுகின்றார். தாக்குதல்=எதிர்ப்படுதல்;பல உருவங்களை எடுக்க வல்ல பெருமான் விரும்பினால் தான் நாம் அவரது உருவத்தை காண முடியும்; பெருமான் விரும்பாவிடில் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவரது உருவத்தை காண முடியாது., இந்த செய்தியைத் தான் அப்பர் பிரான் இங்கே தன்னுருவம் யாவருக்கும் தாக்காதான் என்று குரிப்ப்பிடுகின்றார். தன்னுருவம் யாவர்க்கும் தாக்காதான் என்ற தொடருக்கு ஊனக்கண்ணினால் காண முடியாதவன் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர்.தக்கார்=தகுதி வாய்ந்த அடியார்கள்; தான் விரும்பாதவர்கள் தனது உருவம் காண முடியாத நிலையில் உள்ள பெருமான் என்று கூறும் அப்பர் பிரான், தான் விரும்பும் அடியார்களுக்கு எவ்வகையில் பெருமான் காட்சி அளிப்பார் என்பதையும் இந்த பாடலில் கூறுகின்றார். பொன்னார் மேனியனாக பெருமான் தனது அடியார்களுக்கு பெருமான் காட்சியளிக்கும் நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.
தன்னுருவம் யாவர்க்கும் தாக்காதான்காண் தாழ்சடை எம்பெருமான்காண் தக்கார்க்குள்ள
பொன்னுருவச் சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான்காண்
மின்னுருவ நுண்ணிடையாள் பாகத்தான்காண் வேழத்தின் உரி வெருவப் போர்த்தான் தான்காண்
மன்னுருவாய் மாமறைகள் ஓதினான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.55.8) அப்பர் பிரான் பெருமானை ஆதிபுராணன் என்று அழைக்கின்றார். உயிர்த்தல்=மூச்சு விடுதல்; கமை=பொறுமை; உயிர் உடலுடன் கூடி இருக்கும் வரை, கண்ணிமைத்தலும், மூச்சு விடுதலும் நிகழும். உயிர் நீத்தபின்னர் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறாது. சிவபெருமானின் உடலில் உயிர் வந்து சேர்வதும் இல்லை; அவரது உடலை விட்டு உயிர் பிரிவதும் இல்லை; எனவே இமைத்தலும் மூச்சு விடுதலும் அவர் உடலில் நடப்பதில்லை. ஊழி என்ற சொல் ஊழிக் காலத்திற்கு பின்னர் புதியதாக பெருமானால் தோற்றுவிக்கப்படும் உலகங்களைக் குறிக்கும்.
இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழான ஒருவா போற்றி
அமையா வரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
திருக்கயிலாயம் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (6.56.7) அப்பர் பிரான் பெருமானை ஆதி புராணன் என்று அழைக்கின்றார்.தொழில்=செய்கை; தன்னை வணங்கும் அடியார்களின் தன்மையை உணர்ந்து, அந்த தன்மைக்கு ஏற்ப அவர்களை ஆட்கொள்ளும் வல்லமை படைத்த இறைவனின் தன்மை தொழில் நோக்கி ஆளும் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. வஞ்சனை உடைய மனத்துடன் தன்னைத் தொழும் அடியார்களை இனம் கண்டுகொண்டு நாணி நிற்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் கூறுகின்றார்.
அண்டம் ஏழு அன்று கடந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப் படுவாய் போற்றி
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி
கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
வெண்ணியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.59.1) அப்பர் பிரான், பெருமானை புராணன் என்று குறிப்பிடுகின்றார். பொருப்பு=மலை,அரையன்=தலைவன், மன்னன்; மருப்பு= யானைத் தந்தம் போன்று வெண்மை நிறத்தில் காணப்படும் பிறைச் சந்திரன், தக்கனது சாபத்தால் தனது கலைகள் அழிந்து தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் இருந்த தருணத்தில், சந்திரன் பிரமனை அணுகி சாபத்தால் தனக்கு ஏற்பட்ட நிலைக்கு மாற்றத்தை அருளுமாறு வேண்டினான். அப்போது பிரமதேவர், உனது நிலையினை மாற்றி, உன்னை முன்போல் வளரச்செய்யும் வல்லமை சிவபெருமான் ஒருவருக்கே உண்டு என்பதால் நீ அவரை சரணடைந்து பயன் பெறுவாயாக என்று அறிவுரை கூற, சந்திரனும் பெருமானை சரணடைந்து, தக்கனின் சாபத்திலிருந்து விடுதலை அடைந்தான். இவ்வாறு, எவராலும் மாற்று அளிக்க முடியாத சாபத்தை நீக்கியவரும், நெற்றியில் ஒற்றைக் கண்ணினை உடையவராகவும், திருநீறு அணிந்தவராகவும் காட்சி தரும் இறைவனின் மாறுபட்ட தன்மை இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. வளைகுளம், தொண்டை நாட்டில் உள்ள ஒரு வைப்புத் தலம். இந்த பதிகத்தின் முதல் பாடலிலும் அப்பர் பிரான் பெருமானை புராணனார் என்று குறிப்பிடுகின்றார்.
நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற்றாரும் நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி மேய புராணனாரும்
மருப்பனைய வெண் மதியக் கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும்
விருப்புடைய அடியவர் தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.6) அப்பர் பிரான் பெருமானை புராணன் என்று அழைக்கின்றார்.விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன்: கடை= கடை வாயில், வாயிற்படி; இந்த பாடலில் ஆகாயத்தின் பண்பு ஒலி என்பதை குறிப்பிடும் வண்ணம் விண்ணொலி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆகாயத்தின் பண்பு ஒலி எனப்படும் குணம் ஒன்று தான். காற்று ஒலி மற்றும் ஊரு ஆகிய இரண்டு பண்புகளையும், தீ ஒலி, ஊரு மற்றும் உருவம் ஆகிய மூன்று பண்புகளையும், தண்ணீர் ஒலி ஊரு உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளையும் நிலம் ஒலி ஊரு உருவம் சுவை மற்றும் வாசனை ஆகிய ஐந்து பண்புகளையும் உடைத்ததாக விளங்குகின்றன.
புகழொளியை புரம் எரித்த புனிதன் தன்னைப் பொன்பொதிந்த மேனியானைப் புராணன் தன்னை
விழவொலியும் விண்ணொலியும் ஆனான்தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்தன்னைக்
கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக் கடைதோறும் இடுபிச்சைக்கு என்றுசெல்லும்
திகழொளியைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
குடந்தைக் கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.75.9)அப்பர் பிரான் பெருமானை, புராணர் என்று குறிப்பிடுகின்றார்.பொங்கரவு=சினம் பொங்கும் பாம்பு; பெருமானின் திருவடிக்கு தொண்டு செய்வதற்கு தவறியவர் என்று சண்டீசரின் தந்தையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பசுக்கள் தாமே சொரிந்த பாலினைக் கொண்டு தனது மகன் பெருமானை நீராட்டுவதைக் கண்ட எச்சத்தன் தானும் அந்த இறை வழிபாட்டினால் கலந்து கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியது அவர் செய்த தவறு என்று குறிப்பிடுகின்றார்.
பொங்கரவர் புலித் தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூணூல் புனிதர் போலும்
சங்கு அரவு கடல் முகடு தட்ட விட்டுச் சதுர நடம் ஆட்டுகந்த சைவர் போலும்
அங்கு அரவத்திருவடிக்கு ஆட்பிழைப்பத் தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருளப்போதே
கொங்கு அரவச் சடைக் கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே
இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.89.6) அப்பர் பிரான் பெருமானை புராணர் என்று அழைக்கின்றார். பார் ஊர் விடை=உலகெங்கும் திரியும் இடபம்; வேடம் பரவித் திரியும் தொண்டர் என்று சிவவேடத்தைக் கண்டவுடன் பெருமானையே கண்டது போல் வணங்கி, சிவபெருமானை புகழ்ந்து பாடும் தொண்டர்கள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். திருநீறும் உருத்திராக்கமும் அணிந்தவர்களை கண்டால் உள்ளம் உருகும் அடியார்களின் உள்ளத்தில் இறைவன் உறைகின்றான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும்
பூதப் படையாள் புனிதர் போலும் பூம்புகலூர் மேய புராணர் போலும்
வேதப் பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவித் திரியும் தொண்டர்
ஏதப் படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே
நின்ற திருத்தாண்டகம் பதிகத்தின் பாடலில் (6.94.10) அப்பர் பிரான் பெருமானை புராணன் என்று குறிப்பிடுகின்றார். ஏலாதன=இயலாதன, பொருந்தாதன:அருக்கம்=சுருங்கிய நிலை; பூலோக புவலோக சுவலோகம்=மண்ணுலகின் மேல் அடுக்காக அமைந்த மற்ற உலகங்கள்; புவலோகம், சுவலோகம்,ஜனலோகம், தவலோகம், மகலோகம், சத்யலோகம் மருக்கம்=பெருக்கம்; அருக்கம்=சுருக்கம்; மாபூதம்=பஞ்ச பூதங்கள் மற்றும் அவற்றின் கலவையால் ஆன மற்ற தத்துவங்கள்.
மாலாகி நான்முகனாய் மாபூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வுமாகிப்
பாலாகி எண்திசைக்கும் எல்லையாகிப் பரப்பாகிப் பரலோகம் தானேயாகிப்
பூலோக புவலோக சுவலோகமாய்ப் பூதங்களாய்ப் புராணன் தானேயாகி
ஏலாதன எல்லாம் ஏல்விப்பானாய் எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே
திருவாசகம் குழைத்தபத்து பதிகத்தின் கடைப்பாடலில் மணிவாசக அடிகளார் பெருமானை புராண என்று அழைக்கின்றார். பெரிய பதம் என்று பெருமான் தனக்கு திருவடி தீட்சை அருளியதை குறிப்பிடும் மணிவாசக அடிகளார், திருவடி தீட்சையின் விளைவாக அடியார்கள் பெறுகின்ற பயனை தனக்கு அளிக்காமல் விட்டு விட்டாரே என்று வருந்துகின்றார். புகழே என்று புகழுடன் கூடிய பெரிய பதவியாகிய சிவலோகம் உணர்த்தப்படுகின்றது. அதனை தனக்கு அருளாமல் பெருமான், தான் தொடர்ந்து நிலவுலகில் வருந்தும் வண்ணம் செய்வது முறையோ என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகின்றது. பெருமான் தனக்கு அருள் புரிந்த தன்மையை குறிப்பிட்டு, மானுட வடிவில் குருநாதராக எழுந்தருளி, உபதேசம் செய்து, திருவடி தீட்சை தந்தமையை உணர்த்தும் அடிகளார், அத்தகைய அருளினைப் பெற்ற பின்னரும், தான் திருந்தாமல், அழகற்ற செயல்களைச் செய்து கொண்டு திரிந்ததால், குருநாதரை இழந்ததாக நினைத்து மனம் கலங்குகின்றார். குழைத்தாய் என்ற் சொல் இங்கே துன்பத்தால் வாடச் செய்தமையை உணர்த்துகின்றது. பெருமான் தன்னை உடனடியாக அழைத்துக் கொண்டு, அவரது திருப்பாத நிழலில் என்றென்றும் தான் தங்கியிருக்க அருள் புரிவதே தனது வாட்டத்தை போக்கும் என்பதை அடிகளார் உணர்த்தும் பாடல்.
அழகே புரிந்திட்டு அடிநாயேன் அரற்றுகின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி என்னைப் பணி கொண்டாய்
புகழே பெரிய பதம் எனக்குப் புராண நீ தந்து அருளாதே
குழகா கோல மறையோனே கோனே என்னைக் குழைத்தாயே
திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பாடலில் (9.6.2) கருவூர்த்தேவர், பெருமான் மீது காதல் கொண்ட தலைவியின் தாயின் வாய்மொழியாக கூறும் பாடலில், பெருமானை ஆதி அமரர் புராணன் என்று கூறுகின்றார். மாது=அழகு; மாதி=மாது உடையவள், அழகினை உடையவள்;மெய்ச் சுருதி=உண்மைப் பொருளை உணர்த்தும் வேதங்கள்; சுருதி விதி வழியோர்=வேதங்களில் சொல்லப் பட்டுள்ள வாழ்க்கை நெறியை கடைப்பிடிக்கும் சான்றோர்கள்; நீதி=பெருமை; பெருமானின் தன்மையை முற்றிலும் அறிந்து கொள்ளாத தனது மகள் பெருமானை அடைந்து அவனை தழுவி இன்பம் அடையலாம் என்று நினைக்கின்றாள் என்று தனது மகள் கொண்டுள்ள தகாத ஆசையை குறிப்பிட்டு தலைவியின் தாய் வருந்துகின்றாள். அளவற்ற பெருமை உடைய பெருமானின் தனமையை புரிந்து கொள்ளாததால், பெருமானை அடைவது மிகவும் எளிது என்று தனது மகள் நினைப்பதாகவும், பெருமானை புரிந்து கொள்வதோ, அடைவதோ அத்துணை எளிதான காரியம் அல்ல என்பதையும் நமக்கு விளக்கும் முகமாக இந்த செய்தி அமைந்துள்ளது என்று பொருள் கொள்வதும் சிறப்பே.
மாதி மணம் கமழும் பொழில் மணிமாட மாளிகை வீதிசூழ்
சோதி மதிலணி சாந்தை மெய்ச் சுருதி விதிவழியோர் தொழும்
ஆதி அமரர் புராணனாம் அணி ஆவடுதுறை நம்பி நின்ற
நீதி அறிகிலேன் பொன் நெடுந் திண்டோள் புணர நினைக்குமே
பொழிப்புரை:
பெருமான் பால் மிகுந்த அன்பினை தமது உள்ளத்தில் பொருத்தியவராக, காமம் குரொதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய உயிரின் ஆறு உட்பகைகளையும் களைவதில் வெற்றி கொண்டவர்களாக, தமது ஐந்து புலன்களையும் தம்வசப்படுத்தி தாம் நினைக்கும் வழியில் செலுத்துபவராக,உணமையான மெய்ஞானம் படைத்தவர்களாக விளங்கி அந்த ஞானத்தின் வழியே தமது வாழ்க்கையை நடத்துபவராக விளங்கும் சான்றோர்களின் இதயத்தாமரையைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள இறைவன் உறைகின்ற இடம் திருவீழிமிழலை தலமாகும். சங்கு இனங்களும் முத்துக்களும் மணிகளும் விளங்கும் தூய நீர்நிலைகளில் விரிந்து மலர்ந்த தாமரை மலர்களின் மீது அருகிலுள்ள புங்க மரங்களின் பூக்கள் உதிர்ந்து தூவப்படும் காட்சி,திருமண விழாவில் ஹோம குண்டத்தில் பொரி இடுகின்ற சடங்கினை போல அமைந்துள்ளது. இத்தகைய இயற்கை காட்சிகள் கொண்ட தலம் திருவீழிமிழலயாகும்.
பாடல் 7
ஆறாடு சடைமுடியன் அனலாடு மலர்க் கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடும் குணமுடையோன் குளிரும் கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு
வேறாய உருவாகிச் செவ்வழி நற்பண் பாடும் மிழலையாமே
விளக்கம்:
தேவாரப் பாடல்களில் தமிழ்ப் பண்கள் பல இடம் பெற்றுள்ளன. இளி, காந்தாரம், காமரம், செந்து, செவ்வழி, தாரம், துத்தம், நேரிசை, பஞ்சுரம், பாலையாழ்,மருள், வாய்மூரி ஆகிய பண்கள் திருஞானசம்பந்தரின் பாட்ல்களில் இடம் பெறுகின்றன. கொல்லி, செவ்வழி, பாலையாழ் ஆகிய பண்கள் அப்பர் பிரானின் பாடல்களில் இடம் பெறுகின்றன. இந்த பாடலில் வண்டுகள் செவ்வழி பண் பாடுவதாக திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பாலை, குறிஞ்சி, மருதம் மற்றும் செவ்வழி என்பன நாற்பெரும் பண்கள் என்று பிங்கல நிகண்டு குறிப்பிடுகின்றது. இந்த நான்கு உள்ளிட்டு பதினாறு பெரும்பண்களும், பாலையாழ் திறத்தில் இருபது பண்களூம் குறிஞ்சியாழ் திறத்தில் முப்பத்திரண்டு பண்களும் மருதயாழ் திறத்தில் ப்தினாறு பண்களும் செவ்வழியாழ் திறத்தில் பதினாறு பண்களும் இவையன்றி மூன்று திறங்களும் சேர்ந்து மொத்தம் 103 பண்கள் இருப்பதாக பிங்கல நிகண்டு உண்ர்த்துகின்றது. இந்த பண்களை தேவார் முதலிகள் குறிப்பிடுவதிலிருந்து அவர்களுக்கு இருந்த இசைஞானம் புலப்படுகின்றது. செவ்வழிப்பண் குறிப்பிடப்படும் தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.
குற்றாலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.99.10) திருஞானசம்பந்தர் வண்டுகள் செவ்வழிப் பண்ணில் இசைப்பதாக கூறுகின்றார். செவ்வழிப் பண் சிலப்பதிகாரம் காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றது. செவ்வழிப்பண் யதுகுல காம்போதி இராகத்திற்கு ஒப்பானது என்று கூறுவார்கள். செவ்வழியாழ்ப் பண் தோடி இராகத்திற்கு இணையானது என்று கூறுவார்கள். இந்த பாடலில் உணவு உட்கொள்ளும் விதத்தில் சமணர்களுக்கும் புத்தர்களுக்கு இருந்த வேறுபாடு உணர்த்தப் படுகின்றது. நின்ற வண்ணம் உணவு உட்கொள்ளும் சமணர்கள் என்றும் அமர்ந்த வண்ணம் உணவு உட்கொள்ளும் புத்தர்கள் என்றும் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தேரர்=புத்தர்; குருந்தம்=குருந்த மரம்; அருந்தண்=மிகுந்த குளிர்ச்சி வாய்ந்த; தண் சாரல்=குளிர்ந்த மலைச் சாரல்; ஆண் வண்டு தனது துணையுடன் கூடி இருப்பதால் மகிழ்ச்சி அடைந்து செவ்வழிப்பண்ணில் இசைக்கின்றன என்று கூறுகின்றார்.
பெருந்தண் சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கிக்
குருந்தம் ஏறிச் செவ்வழி பாடும் குற்றாலம்
இருந்துண் தேரரும் நின்றுண் சமணும் எடுத்தார்ப்ப
அருந்தண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்
பாலையாழ் மற்றும் செவ்வழி ஆகிய இரண்டு பண்களும் திருவீழிமிழலை தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் பாடலில் (5.12.10)குறிப்பிடப்ப்டுகின்றன. பாலையாழ் என்பது ஒரு வகைப் பண்ணின் பெயர். இந்த பண் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றது. இந்த பண்ணில் அமைந்த இசைப் பாடல்கள் மாலை நேரத்தில் பாடப்பட வேண்டும் என்று கூறுவார்கள். செவ்வழிப் பண்ணில் அமைந்த பாடல்களும் மாலை நேரத்தில் இசைக்க வேண்டியவை. பாலையாழ் பண்ணில் எந்த தேவாரப்பாடலும் இசைக்கப் படவில்லை; எனினும் இந்த பண்ணில் அமைந்த மற்ற இசைப்பாடல்கள் பாடுவது, அப்பர் பிரானின் காலத்தில் பழக்கத்தில் இருந்தது போலும். எந்தெந்த பண்களில் அமைந்த பாடல்களை பகற்பொழுதில் பாடலாம், எந்தெந்த பண்களில் அமைந்த பாடல்களை இரவுப் பொழுதினில் பாடலாம் என்பதை பண்டைய நாட்களில் வரையறுத்து வைத்ததாக தெரிகின்றது. புறநீர்மை,காந்தாரம், பியந்தை காந்தாரம், இந்தளம், தக்கேசி, நட்டராகம், நட்டபாடை, பழம்பஞ்சுரம், காந்தாரபஞ்சமம், பஞ்சமம் ஆகிய பண்களில் அமைந்த பாடல்கள் பகற்பொழுதினில் பாட வேண்டிய பாடல்கள். தக்கராகம், பழந்தக்கராகம், சீகாமரம், கொல்லி, கொல்லிக்கௌவாணம், வியாழக்குறிஞ்சி,மேகராகக்குறிஞ்சி, குறிஞ்சி, அந்தாளிக்குறிஞ்சி ஆகிய பண்களில் அமைந்த பாடல்கள் இரவு நேரங்களில் பாட வேண்டியவை. செவ்வழி மற்றும் செந்துருத்தி ஆகிய பண்களில் அமைந்துள்ள பாடல்கள் பகல் நேரம் மற்றும் இரவு நேரம் ஆகிய இரண்டு தருணங்களிலும் பாடக் கூடிய பொதுப் பாடல்கள்.குறுந்தொகை திருவிருத்தம், நேரிசை மற்றும் திருத்தாண்டகப் பாடல்களுக்கு இவ்வாறான வரைமுறை ஏதுமில்லை, நேரத்திற்கு ஏற்ப பண்களில் அமைந்த பாடல்களை பாடுவது அப்பர் பிரானின் காலத்தில் நடைமுறையில் இருந்தமை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. வேலை=செயல், தொழில்;ஆலை=வேள்விச்சாலை;
பாலை யாழொடு செவ்வழி பண் கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலையார் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும் வீழிமிழலையே
இளி எனப்படும் பண் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்றது. இந்த பண் பற்றிய குறிப்பு இடம் பெறும் பாடல் கடம்பூர் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் பாட்லாகும் (2.68.3) . இளி=ஏழிசைகளில் ஒன்று, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு இசைகள்;ஒண்ணுதல்=ஒளிவீசும் நெற்றி; தீத்தொழிலார்=வேள்வி புரியும் அந்தணர்கள்’; வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல், வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல்,தானம் பெற்றுக் கொள்ளுதல், தானம் வழங்குதல் ஆகிய ஆறும் அந்தணர்களின் தொழில்களாக பண்டைய நாட்களில் கருதப்பட்டன. காலப்போக்கில் இவை அனைத்தும் மாறி, அனைவரும் பொருள் ஈட்ட பலவிதமான அலுவல்களில் ஈடுபடுவதும் நமது கல்விமுறையும் அதற்கேற்ப மாறுபட்ட நிலையில் உள்ளதும் இன்றைய நிலை. எனவே இன்றைய நிலையின் பின்னணியில் அந்தணர்களுக்கு பண்டைய நாட்களில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நெறிகளை ஆராய்வது சற்று கடினமே. இந்த பாடலில் மகளிர் கூந்தலில் வேள்விப்புகை சென்று படிவதாக சம்பந்தர் கூறுகின்றார். இன்றும் நவகிரக வேள்விகள் செய்யும்போது இருபத்தேழு நட்சத்திரங்களின் பெயரைச் சொல்லி நெய்யும் சமிதும் இட்டு ஆகுதிகள் வழங்குவது பழக்கத்தில் உள்ளது. இருபத்தேழு நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவியராக கருதப்படுவதை நாம் அறிவோம். எனவே இந்த நட்சத்திரங்களை குறித்து வேள்விகள் செய்யப்பட்டதை குறிக்கின்றார் என்று பொருள் கொள்ளலாம். சாமவேதத்தைச் சார்ந்த அந்தணர்களுக்கு ஔபாசனம் என்று சொல்லப்படும் சடங்கினைச் செய்யும் தகுதி,அவர்களின் மனைவி அவர்கள் அருகே இருந்தால் தான் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களும், மனைவியை இழந்தவர்களும் இதனைச் செய்யக் கூடாது.மேலும் திருமணம் ஆனவர்களும் அவர்களது மனைவி அவரது அருகில் இருந்து, இருவரும் மணையில் அமர்ந்தால் தான் இதனைச் செய்ய இயலும். பல சுப அசுப காரியங்களுக்கு முன்னர் புண்யாவாசனம் மற்றும் ஔபாசனம் செய்த பின்னரே, அந்தந்த சடங்குகளை தொடங்க இயலும். இன்றும் இந்த வழிமுறை பின்பற்றப் படுகின்றது. தினமும் ஔபாசானம் செய்பவர்கள் ஒரு சிலர் இன்றும் உள்ளனர். இந்த வழிமுறை வேதங்களில் சொல்லப்பட்டு வருவதால்,சம்பந்தரின் காலத்திலும் பழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. இந்த வழக்கத்தையே சம்பந்தர் கூறுகின்றார் என்று சிலர் கருதுகின்றனர். இந்த விளக்கமும் மிகவும் பொருத்தமாக உள்ளது. தெளிபடு கொள்கை=தெளிவான கோட்பாடு. புனைதல்=அணிதல்; இருங்குழல் மேல் இசைந்து ஏற என்ற தொடருக்கு, மகளிரின் நீண்ட கூந்தல் போன்று வளைந்து வேள்வித் தீயின் புகை மேலெழுந்து எங்கும் பரவி விளங்கும் தலம் என்று சிலர் பொருள் கூறுகின்றனர்.
இளிபடும் இன் சொலினார்கள் இருங்குழல் மேல் இசைந்து ஏறத்
தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழிலார் கடம்பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி ஒண்ணுதலோடு உடனாகிப்
புலி அதள் ஆடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே
காந்தரம் பண்ணும் சிலப்பதிகாரத்தில் உணர்த்தப் படுகின்றது. காந்தாரம் பண் பற்றிய குறிப்பு திருவையாறு தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடலில் (1.130.6) காணப் படுகின்றது. தேந்தாம்=இசையுடன் இணைந்து ஒலிக்கும் முழவினை உணர்த்தும் குறிப்புச் சொல்;நன்னெறி=உயிர்கள் வினைகளின் பிணைப்பிலிருந்தும் விடுதலை அளித்து, என்றும் அழியாத பேரின்பத்தில் ஆழ்த்தும் முக்தி நெறி. .சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரும் முக்தி நிலை அளிக்க முடியாது என்பதால், சிவபெருமானை ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தாமம்=மாலை; மக்களை ஆட்சி செய்யும் வேந்தனுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம், மக்களை காப்பதும் அவர்களுக்கு நல்ல வழி கட்டுவதும் தானே.
வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறி காட்டும் விகிர்தனாகி
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்
காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாடக் கவினார் வீதித்
தேந்தாம் என்று அரங்கு ஏறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே
திரைலோக்கிய சுந்தரம் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பாடலில் (9.12.11) கருவூர்தேவர், காந்தாரம் பண்ணினை குறிப்பிடுகின்றார், இந்த பாடல் காந்தாரம் பண்ணில் இசைத்துப் பாடும் வண்ணம் இயற்றப்பட்டது. அந்த பண்ணுடன் இணைத்து இந்த பதிகத்தின் பாடல்களை பாடும் அடியார்கள் வாழ்வினில் நிறைவை அடைவார்கள் என்று கூறுகின்றார்.
ஆரணத்தேன் பருகி அருந்தமிழ் மாலை கமழவரும்
காரணத்தின் நிலை பெற்ற கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தார் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழில் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
காமரம் பண் சிறுபாணாற்றுப்படை இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்றது. சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.47.3) திருஞானசம்பந்தர், நீர்வளத்தினால் செழித்து வளர்ந்த சோலைகளில் பூக்கும் மலர்களை சூழ்ந்து கொள்ளும் வண்டுகள் காமரம் பண் இசைத்த வண்ணம் தேன் பருகுவதாக கூறுகின்றார். சீரடைந்த செல்வம்= சிறப்பான வழியில், அறநெறியில், ஈட்டிய செல்வம்; கார் என்றால் பொதுவாக மேகம் என்று பொருள்; இங்கே மேகத்தால் விளையும் மழை நீர் என்று பொருள் கொள்ளவேண்டும். சீகாமரம் பண்ணினை காமரம் என்று தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
நீரடைந்த சடையின் மேலோர் நிகழ்மதி அன்றியும் போய்
ஊரடைந்த ஏறது ஏறி உண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலை சூழ்ந்த காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே
ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (4.78.9) அப்பர் பிரான் காமரம் போன்ற பண்ணுடன் இணைத்து இசைப் பாடல்கள் பாடத் தெரியாதவன் என்று தன்னை குறிப்பிட்டுக் கொள்கின்றார். களைகண்= பற்றுக் கோடு: காமரம்=பண் சீகாமரம். இறைவனின் புகழ் நிறைந்த பாடல்களை, சீகாமரம் போன்ற இனிய பண்களுக்கு பொருந்துமாறு பாடுவதை அறியாதவன் என்று தன்னை அப்பர் பிரான் கூறிக்கொள்கின்றார். அப்பர் பிரான் அருளிய பதிகங்களில் இரண்டு பாடல்கள் (4.19 மற்றும் 4.20) சீகாமரம் பண்ணில் அமைந்தவை. எனவே இசைப் பாடல்கள் பாடத் தெரியாதவன் என்று அப்பர் பிரான் இங்கே சொல்வது தன்னைக் குறித்து அல்ல என்பதை நாம் உணரவேண்டும். தன்னை சுட்டிக் காட்டி அடுத்தவருக்கு அறிவுரை வாங்குவது அப்பர் பிரானின் பாணி என்பதால்,இசைப்பாடல்கள் பாடி இறைவனை நாம் அனைவரும் பணிந்து வணங்க வேண்டும் என்பதை இங்கே உணர்த்துகின்றார் என்றே பொருள் கொள்ளவேண்டும். தளை அவிழ் கோதை=அவிழ்ந்து விரிந்து காணப்படும் கூந்தல்: மகளிர்க்கு இன்பம் அளிக்க வல்லேன் அல்லேன் என்று அப்பர் பிரான் கூறியதை, நாம் பெண்களுடன் கூடுவதை அப்பர் பிரான் விரும்பினார் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அத்தகைய விருப்பம் ஏதேனும் இருந்திருந்தால் துறவியாக (சமண மதத்திலும், சைவ மதத்திலும்) அத்தனை வருடங்களை கழித்திருக்க மாட்டார். அவரது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த இரம்பை முதலான அரம்பையர்களை, வெகுண்டு விரட்டி அடித்தது, அப்பர் பிரான் துறவு நிலையிலிருந்து பிறழாமல் வாழ்ந்தார் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
விளைவு அறிவிலாமையாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து
களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றும் இல்லேன்
தளை அவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பம் எய்த
இளையனும் அல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினே
மற்றொரு பொதுப் பதிகத்தின் பாடலிலும் (4.79.5) அப்பர் பிரான், தான் இசைப்பாடல்கள் தெரிந்து கொண்டு இறைவனைப் புகழ்ந்து பாடல்கள் பாட முடியாமல் இருந்த நிலைக்கு வருந்துவதாக குறிப்பிடுகின்றார். பிறை நுதல் என்று மாதர்களின் நெற்றி பிறைச் சந்திரன் போன்று ஒழுங்கான வட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது அழகு என்று குறிப்பிடுகின்றார். பல தலங்கள் சென்று ஆயிரக் கணக்கான பாடல்கள் பாடி இறைவனின் புகழினை பலருக்கும் எளிய தமிழில் உணர்த்திய அப்பர் பிரான், தான் சிறிதும் இறைவனைப் பணிந்து போற்றாமல் இருந்ததாக குறிப்பிட்டு, தனது பிறப்பே வீண் என்று சொல்லிக் கொள்கின்றார். அப்பர் பிரானின் வாழ்க்கையை பெரிய புராணம் மூலமாக அறிந்து கொள்ளும் நாம், அவர் அருளிய தேவாரப் பாடல்கள் மூலம் அவர் இறைவன் பால் வைத்திருந்த அன்பினை அறிந்து கொள்ளும் நாம், அவர் பெருமானைப் போற்றி பாடல்கள் பாடுவதையே தனது வாழ்க்கை நெறியாக கொண்டிருந்தார் என்பதை நாம் அறிவோம். எனவே அப்பர் பிரான் தன்னை சுட்டிக்காட்டி சொன்ன சொற்களை, அவர் நமக்கு அளிக்கும் அறிவுரைகள் என்றே நாம் கொள்ள வேண்டும். நாளும் இறைவனைப் போற்றி பாடாத மனிதர்கள் தாம் பிறந்த பயனை அடையாத மனிதர்கள் என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதே இந்த பாடலில் சொல்லப்படும் அறிவுரை. மனிதர்கள் முறையான இல்லற வாழ்க்கை நடத்தி, வினைகளுடன் பிணைந்துள்ள உயிர்கள் சேர்வதற்கு தகுந்த உடல்களை படைக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பொருட்டுத் தானே, இறைவன் போகத்தில் ஆழ்ந்திருப்பது போன்று நடிக்கின்றான். நாமும் முறையான இல்லற வாழ்க்கை வாழ்ந்து, தத்தம் துணையை போகத்தில் ஆழ்த்தி, இனப் பெருக்கம் ஏற்பட வழிவகுக்க வேண்டும் என்றும் இந்த பாடலில் சொல்லப் படுகின்ற்து. திருக்கோயிலில் அலகிட்டு, மெழுக்கிட்டு பணி செய்யும் மகளிருக்கு உதவும் நிலையில் தான் இல்லாததை,குறிப்பிட்டு, அப்பர் பிரான் வருந்துவதாக பொருள் கொள்வதும் சிறப்பே.
கறையணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்
பிறை நுதற் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன்
மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும்
இறையேயும் எத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினானே
நள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.68.3) பாடலில், சுந்தரர் சிவபெருமானை புகழ்ந்து காமரத்து இசை பாட, தனது நாவில் அமுதம் ஊறுகின்றது என்று கூறி மகிழ்கின்றார். நினைத்தாலே தேன் போன்று இனிக்கும் சிவபெருமானைப் புகழ்ந்து பாடினால் அமுதம் போன்று இனிப்பதால், அவனை மறந்து நாம் வேறு நினைவுகளில் ஆழ்ந்துவிடக் கூடாது என்று இங்கே சுந்தரர் உணர்த்துகின்றார்.
பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப் புவியைக் காற்றினைப் புனல் அனல் வெளியைச்
சேவின் மேல் வரும் செல்வனைச் சிவனை தேவதேவனைத் தித்திக்கும் தேனைக்
காவியங்கண்ணி பங்கனைக் கங்கை சடையனைக் காமரத்து இசை பாட
நாவில் ஊறு நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
கலயநல்லூர் தலத்து பதிகத்தின் (7.16) கடைப்பாடலில், சுந்தரர், பெருமான் காமரம் பண்ணில் பொருந்துமாறு பாடல்கள் பாடியவாறு பலிக்கு உழல்கின்றார் என்று கூறுகின்றார். நண்புடைய என்ற சொல்லினை சிறுவன் நாவலர்கோன் என்ற தொடருடன் இணைத்து, பெருமான் தன்னை நண்பனாக கருதியதை சுந்தரர் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வது சிறப்பு.
தண்புனலும் வெண்மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலைக் கலனாக் காமரம் முன் பாடி
உண்பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன் சடையன் இசைஞானி சிறுவன் நாவலர் கோன் ஆரூரன் நாவின் நயந்து உரை செய்
பண் பயிலும் பத்தும் இவை பத்தி செய்து பாட வல்லவர்கள் அல்லலொடு பாவம் இலர் தாமே
சேரமான் பெருமாள் நாயனார் பொன் வண்ணத் திருவந்தாதி பதிகத்தின் பாடலில் காமரம் பண்ணில் பொருந்துமாறு பாடல்களை வீணையில் இசைத்துக் கொண்டு, அனைத்து பொருட்களுக்கும் காரண கர்த்தாவாகிய பெருமான் வீதியில் வரும் போது, சிவபிரான் பால் காதல் கொண்ட தலைவிக்கு ஏற்பட்ட மாற்றத்தை விளக்குகின்றார். மன்மதனின் அம்பு தனது மார்பினில் தைத்ததால், பெருமானுடன் சேர வேண்டுமே என்ற ஏக்கத்தில் அவளது கண்கள் நீரினைச் சொரிய, அவளது கண்ணீர் கண்களை துணி மூடுவது போன்று மூடியது என்றும் காதல் ஏக்கத்தால் நிறம் மாறிய அவளது மார்பகங்களை நகைகள் மூடின என்றும் கூறும் நாயனார், இவ்வாறு வருத்தப்படும் நகையைத் தாங்குபவர் யார் என்ற கேள்வியை இந்த பாடலில் எழுப்புகின்றார்.
காரணன் காமரம் பாடவோர் காமர் அம்பு ஊடுறத் தன்
தார் அணங்காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவார் யார்
போரணி வேற்கண் புனல் படம் போர்த்தன பூச்சுணங்கார்
ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.28.4) அப்பர் பிரான், பெருமான் காமரம் இசையுடன் இணைத்து பாடல்கள் பாடுவதாக குறிப்பிடுகின்றார். ஊண்=உணவு; நடை பலவும்=நடைபயில வேண்டிய நெறிகள்; காமரம்=சீகாமரம்; நாட்டகத்தே நடை பலவும் பயின்றார் என்பதற்கு, ஆறு வேறுவேறு சமயங்களை, அவரவர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப படைத்தவர் சிவபெருமான் என்று கூறுவதாக விளக்கம் அளிப்பதும் பொருத்தமே.இன்னம்பர் தலத்து திருப்பதிகத்தின் ஒரு பாடலில் (4.100.4) ஆறு வேறு வேறு சமயங்களின் மாறுபட்ட வழிமுறைகள் மூலம் தன்னை வணங்கும் அடியார்களுக்கு அவரவர்களின் சமய நெறிகளுக்கு ஏற்ற பொருளாக இருந்து அருள் புரிபவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஆறு ஒன்றிய சமயங்கள்=சிவபெருமான் ஒருவரையே பரம்பொருள் என்று வழிபடுவதில் ஒத்திருந்தாலும் தங்களுக்குள்ளே சிறிய வேறுபாடுகள் பல கொண்ட ஆறு அகச் சமயங்கள், பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமனம், பைரவம் மற்றும் சைவம். பெருமானின் திருவடிகளுக்கு ஒப்பான பொருளும், அதனை விடவும் உயர்ந்த பொருளும் இல்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும் ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்
நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும்
காட்டகத்தே ஆடல் உடையார் போலும் காமரங்கள் பாடித் திரிவார் போலும்
ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணியாரூர் திருமூலட்டனானாரே
செந்து என்பது குறிஞ்சி திறத்தின் ஒரு வகை பண், இந்த பண்ணும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்றது. செந்துப்பண் சக்கரவாகம் இராகத்திற்கு இணையானது. இந்த பண்ணை குறிப்பிடும் தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம். கண்ணார்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.101.2) திருஞானசம்பந்தர் செந்திசை பாடும் வண்டுகள் என்று குறிப்பிடுகின்றார். மண்ணி=காவிரி நதியின் கிளையாறுகளில் ஒன்று:கோகிலம்=குயில்; செந்து= தமிழ்ப் பண்களில் ஒன்று; செவ்வழி என்றும் கூறுவார்கள்; கந்து=கந்தம், நறுமணம்; சாந்து= சந்தனக் கட்டைகள்; கார்=கரிய,வயிரம் பாய்ந்து உறுதியான; கதிர்=ஒளிவீசும்; வந்தமர்=வந்து சேரும்; கொந்து=கொத்து கொத்தாக மலர்கள் மலரும் வளமான சோலைகள்; பொதுவாக குயில்கள் பாடுவதாக பாடல்களில் குறிப்பிடும் சம்பந்தர் இந்த பாடலில் குயில்கள் நடமாடின என்று இந்த பாடலில் கூறுகின்றார். பாடும் இயல்பினை உடைய குயில்கள் நடமாடியது இந்த தலத்தின் தனிச் சிறப்பு போலும். இந்த குறிப்பு பெருமானின் அருள் இருந்தால் இயல்பு நிலை மாறி சிறப்பான நிலையினை எவரும் அடையலாம் என்பதை உணர்த்துகின்றது போல அமைந்துள்ளது. வண்டு பாடும் என்ற தொடரினை வண்டும் பாடும் என்று மாற்றி அடியார்கள் செவ்வழிப் பண்ணில் பதிகங்கள் பாடியது போன்று தலத்து வண்டுகளும் பாடின என்று சிவக்கவியார் தனது பெரியபுராண விளக்கத்தில் கூறுகின்றார். வண்டுகள் கற்றுக் கொண்டு பாடும் அளவுக்கு தேர்ச்சி பெற்றன என்ற குறிப்பு அடியார்கள் இந்த தலத்தில் அடியார்கள் இடைவிடாது சிறந்த இன்னிசைப் பாடல்கள் பாடினர் என்பதை உணர்த்துகின்றது. கண்ணார்கோயில் சென்று தொழுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை இந்த பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர் அடுத்த இரண்டு பாடல்களில் தலத்தின் இயற்கை வளத்தினை குறிப்பிடுகின்றார்.
கந்து அமர் சந்தும் கார் அகிலும் தண் கதிர் முத்தும்
வந்து அமர் தெண்ணீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டிக்
கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆடக் குளிர் வண்டு
செந்திசை பாடும் சீர் திகழ் கண்ணார் கோயிலே
தெளிச்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.3.10) தலத்து மகளிரின் மொழி இனிமையை செந்துப் பண்ணுக்கு திருஞானசம்பந்த்ர் ஒப்பிடுகின்றார். மதுரை நகரில் அனல் வாதம் புனல் வாதங்களில் சமணரை வென்று சைவமதத்தின் பெருமையை நிலைநாட்டி, சமணர்கள் பாண்டிய நாட்டு மக்கள் மீதும் மன்னன் மீதும் கொண்டிருந்த ஆதிக்கத்தை ஒழித்த பின்னர் திருஞானசம்பந்தர் தெளிச்சேரி தலத்திற்கு வருகின்றார். பெருமானின் அருளால் தான் சமணர்களை வெற்றி கொள்ள முடிந்தது என்பதை உணர்த்தும் முகமாக, பெருமானின் அருள் வெற்றி அடைந்தது, பெருமான் வெற்றி அடைந்தார் என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். அனல் வாதம் மற்றும் புனல் வாதம் ஆகிய இரண்டிலும் தேவாரப் பாடல்கள் அடங்கிய ஏடு அழியாமல் இருந்த தன்மைக்கு மூல காரணமாக இருந்த பெருமானை சதிரர் (சாமர்த்தியம் மிகுந்தவர்) என்று கூறுகின்றார்.
மந்திரம் தரு மாமறையோர்க்ள் தவத்தவர்
செந்திலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர்
வெந்தலாகிய சாக்க்யரோடு சமணர்கள்
தம் திறத்தன நீக்குவித்தோர் சதிரரே
சிக்கல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.8.4) திருஞானசம்பந்தர் வண்டுகள் செந்துப் பண்ணில் இன்னிசைப் பாடல்கள் பாடுகின்றன என்று கூறுகின்றார். கைதை=தாழை; அண்ணல்= தலைவன்; பிரளய காலத்தில் அழிந்துபடும் அனைத்து உயிர்களும், வடவாக்னியால் எரிக்கப்பட, ஏற்படும் சாம்பலைத் தனது உடலில் பூசிக்கொண்டு தான் ஒருவனே என்றும் நிலையானவன் என்று பெருமான் உணர்த்துகின்றார் என்ற செய்தியை வெந்த வெண்ணீற்று அண்ணல் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார்.
கந்தம் உந்து கைதை புத்துக் கமழ்ந்து சேரும் பொழில்
செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்
வெந்த வெண்ணீற்று அண்ணல் வெண்ணெய்ப்பிரான் விரையார் கழல்
சிந்தை செய்வார் வினையாயின தேய்வது திண்ணமே
திருக்களர் தலத்து மகளிரை திருஞானசம்பந்தர் செந்து நேர் மொழியார் என்று குறிப்பிடுகின்றார். களர் எனப்படும் தலத்தின் மீது அருளிய பாடல்களை முறையாக ஓதும் அடியார்கள் தவம் செய்தவர்களாக கருதப் படுவார்கள் என்று அந்த பதிகத்தின் கடைப் பாடலில் (2.51.11) திருஞான சம்பந்தர் கூறுகின்றார். அந்த பண் போன்று இனிய மொழியினை உடைய மகளிர் திருக்களர் தலத்தில் வாழ்ந்து வந்ததாக திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அந்தி வானம் போன்று சிவந்த மேனி உடையவனும் தேவர்களின் தலைவனாக விளங்குபவனும் ஆகிய பெருமானை ஞானசம்பந்தன் அருளிய பத்து பாடல்களையும் முறையாக பாடுதல் தவத்திற்கு ஒப்பான செயலாகும் என்றும் கூறுகின்றார்.
இந்து வந்தெழு மாட வீதி எழில் கொள் காழிந் நகர்க் கவுணியன்
செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக்களருள்
அந்தி அன்னதோர் மேனியானை அமரர் தம் பெருமானை ஞானசம்
பந்தன் சொல்லிவை பத்தும் பாடத் தவமாமே
தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் செந்தினம் என்று இந்த பண்ணை குறிப்பிடுகின்றார். எந்தை என்று குறிப்பிட்டு பெருமானின் ஆற்றலை உணர்த்தும் திருஞான சம்பந்தர், அந்த பெருமானை சரணடைந்தால் நமது வாழ்வினில் துன்பங்கள் ஏதும் இருக்காது என்று உறுதியாக கூறும் பாடல் தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (2.82.9). திண்=மிகவும் அதிகமான; திறல்=வலிமை; இரும்=பெரிய; களிறு=ஆண் யானை;செந்தினம்=ஒரு வகை பண், செந்து என்று குறிப்பிடப்படுகின்றது.; அறுபதம்=ஆறு கால்களைக் கொண்ட வண்டு;
முந்திக் கண்ணனும் நான்முகனும் அவர் காணா
எந்தை திண் திறல் இருங் களிறு உரித்த எம் பெருமான்
செந்தினத்து இசை அறுபதம் முரல் திருத்தேவூர்
அந்தி வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்றிலமே
திருவாலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (3.47.11) தலத்து வண்டுகள் முரல்வது, செந்தின் இசையை ஒத்திருப்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வலிமை வாய்ந்த சமணர்கள் செய்த தீங்குகளால் விளைந்த துன்பங்கள் நீங்குவதற்காக பாடிய பதிகம் என்று இந்த பதிகத்தை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மேலும் இந்த பதிகத்தை முறையாக ஓதும் அடியார்களுக்கு வீண்பழி வாராது என்றும் கூறுகின்றார்.திருஞானசம்பந்தரை அச்சுறுத்தி அவரை மதுரை நகரை விட்டு வெளியே ஓடச்செய்து விடலாம் என்ற நோக்கத்துடன், வஞ்சனையாக அவரும் அவரது அடியார்களும் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் நள்ளிரவில் தீ வைக்கின்றனர். மடம் தீப்பற்றி எரிந்ததைக் கண்ட, திருஞானசம்பந்தர், செய்யனே திருவாலவாய் என்று தொடங்கும் பதிகம் பாடி, அடியார்களை அஞ்சேல் என்று சொல்லி பெருமான் காப்பாற்ற வேண்டும் என்றும், இந்த வஞ்சக செயலை அனுமதித்த பாண்டிய மன்னனைச் சென்று தீ பற்ற வேண்டும் (பையவே சென்று பாண்டியர்க்காகவே) என்றும் வேண்டி பதிகம் பாடவே, மடத்தில் பற்றிய தீ அணைந்தது, அந்த தீ வெப்பு நோயாக மன்னனைச் சென்று பற்றியது. மன்னனுக்கு உண்மை நிலையை உணர்த்த வேண்டி செய்த செயல் என்பதால், இந்த நிகழ்ச்சியால் திருஞான் சம்பந்தருக்கு பழி ஏதும் வாராமல் காப்பாற்றிய பெருமான் இந்த பதிகம் ஓதும் அனைவரையும் அவ்வாறு வீண்பழி சாராத வண்ணம் காப்பாற்றுவார் என்று கூறுகின்றார். மன்னனைப் பற்றிய வெப்பு நோயினை, எவ்வளவு முயற்சி செய்தும் சமணர்களால் தீர்க்க முடியவில்லை என்பதால்,திருஞானசம்பந்தர் அரண்மனைக்கு வரவழைக்கப் படுகின்றார். அரண்மனை செல்லும் முன்னர், திருவாலவாய் திருக்கோயில் சென்று பரமனைப் பணிந்து,பெருமானின் திருவுள்ளக் கருத்தினை அறியும் பொருட்டு, காட்டுமாவது என்று தொடங்கும் பதிகத்தினை பாடுகின்றார். பின்னர் வேத வேள்வியை என்று தொடங்கும் பதிகத்தினையும் பாடுகின்றார். இந்த இரண்டு பதிகங்களிலும் முறையே, வாது செய்யத் திருவுள்ளமே என்றும் வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே என்றும் பெருமானின் திருக்கருத்தினை நாடுகின்றார். இவ்வாறு பெருமானின் திருவுள்ளக் கருத்தினைக் கேட்டறிந்த தன்மை சந்தமார் தமிழ் கேட்ட என்ற தொடர் மூலம் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. மைந்தன் என்றால் வல்லமை வாய்ந்தவன் என்று பொருள். சமணர்களால் வேதநெறி மற்றும் சைவ சமயத்திற்கு ஏற்பட்ட தீங்குகளை நீக்கும் வல்லமை வாய்ந்தவன் சிவபெருமான் ஒருவன் தான் என்பதை உணர்த்தும் பொருட்டு, திருவாலவாய் மைந்தனே என்று இந்த பாடலில் பெருமானை அழைக்கின்றார்.
செந்தெனா முரலும் திருவாலவாய்
மைந்தனே என்று வல்லமண் ஆசறச்
சந்தமார் தமிழ் கேட்ட மெய் ஞானசம்
பந்தன் சொற்பகரும் பழி நீங்கவே
தாரம் துத்தம் ஆகிய இரண்டு பண்களும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்ப்படுகின்றன. திருவிழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.116.3)ஊழி முடிவினில் பெருமான் தாரம் எனப்படும் பண்ணையும் உள்ளிட்டு ஏழு பண்களிலும் இசைத்துப் பாடுகின்றர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.பண்டாரம்=அளவு கடந்த நிதி; அடியார்கள் பெருமானை பெரிய நிதியாக, பண்டாரமாக, ஞானக்கருவூலமாக கருதுகின்றனர் என்றும் கூறுகின்றார்.எத்துணை மதிப்பு வாய்ந்த நிதியாயினும் அது அழியக்கூடியதே. பெருமானைப் பற்றிய ஞானம் அழியாது இருப்பது மட்டுமன்றி என்றும் அழியாத பேரின்பத்தை பெறுவதற்கும் வழி வகுப்பதால், அத்தகைய ஞானமே சிறந்த செல்வமாக அடியார்களால் மதிக்கபப்டுகின்றது.
பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே
சூடுகின்றது மத்தமே தொழுத என்னை உன்மத்தமே
நீடு செய்வதும் தக்கதே நின்னரைத் திகழ்ந்து அக்கதே
நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே
துருத்தி தலத்தின் மீது அருளிய பாடலில் (2.98.10) துத்தம் முதலிய இசைக்குறிப்புகள் (சுருதி) இணைந்த பண்கள் பாடும் வண்டுகள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தத்துவம்= உயர்ந்த கொள்கைகள்; உயர்ந்த கொள்கைகள் ஏதுமற்ற சமணமதம் என்று இங்கே கூறுகின்றார்.மறுபிறப்பு, பிறப்பிறப்புச் சுழற்சி, முக்தி நிலை ஆகிய கொள்கைகளில் நம்பிக்கை அற்ற சமண மதம் என்பதால், தத்துவங்கள் இல்லாத சமண மதம் என்று கூறுகின்றார். பெற்றி=தன்மை; பித்தர் பித்தனாகிய பெருமானைத் தொழுகின்ற அடியார்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற தன்மை உடையவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார்.
புத்தர் தத்துவம் இலாச் சமண் உரைத்த பொய் தனை
உத்தமம் எனக் கொளாது உகந்து எழுந்து வண்டினம்
துத்த நின்று பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம்
பித்தர் பித்தனைத் தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே
அரதைப் பெரும்பாழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.30.7), பெருமான் தனது காதினில் அணிந்துள்ள குழை ஆபரணம் ஒப்பற்ற சங்கினால் செய்யப்பட்டது என்று கூறும் திருஞானசம்பந்தர், அந்த சங்கு துத்தம் முதலிய ஏழு இசைகளை வெளிப்படுத்தும் தன்மை வாய்ந்தது என்று கூறுகின்றார்.துணையிருத் தஞ்சுரி என்ற தொடரினை துணையில் துத்தம் சுரி என்று பிரித்து இணையற்ற துத்தம் முதலான இசையொலிகளை எழுப்பும் சங்குகள் என்று சிவக்கவிமணி சுப்ரமணிய முதலியார் அவர்கள் விளக்கம் அளிக்கின்றார். பலரும், துணையில் இறுத்து அம் சுரிசங்கு என்று பிரித்து ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும் வண்ணம் அறுக்கப்பட்ட சங்கினால் செய்யப்பட்ட குழை அணிகலன்கள் என்று பொருள் கொள்கின்றனர். ஆனால் பெருமான் ஒரு காதினில் குழையும் மற்றொரு காதினில் தோடும் அணிந்தவராக சித்தரிக்கப் படுவதால், இந்த விளக்கம் அவ்வளவு பொருத்தம் உடையதாக தோன்றவில்லை.இணையற்ற வண்ணம் அறுக்கப்பட்ட சங்கினால் செய்யப்பட்ட குழை ஆபரணம் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. சரிகமபதநி என்று சொல்லப்படும் இசையொலிகளை தமிழில் குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்று அழைக்கின்றனர். எனவே துத்தம் முதலிய ஏழு இசையொலிகள் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. எரிகணை=தீயாகிய அம்பு; பிணை=மான்;
துணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடி
இணையில் ஏற்றை உகந்து ஏறுவரும் எரி
கணையினான் முப்புரம் செற்றவர் கையினில்
பிணையர் கோயில் அரதைப் பெரும்பாழியே
துத்த நல்லிசை பாடும் வண்டுகள் நிறைந்த தலம் தோணிபுரம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் தோணிபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (3.100.3). சித்தம் தெளீய நின்று ஆடி என்ற தொடருக்கு, முதலில் பயந்தது போன்றும் பின்னர் சித்தம் தெளிந்ததும் போன்று நின்று நாடகம் ஆடி என்று பொருள் கொண்டு, உமையன்னை அஞ்சியதைக் கண்டு தானும் அச்சம் அடைந்தது போன்று பாசாங்கு செய்து நாடகமாடி, சிறிது நேரம் கழித்த பின்னர், தனது பற்கள் தோன்ற சிரித்ததை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. இந்த நிகழ்ச்சி, பயற்றூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.36.1) குறிப்பிடப்படுகின்றது. சித்தம் தெளிய என்ற தொடரை உமையன்னையின் செயலுடன் இணைத்து, உமை அன்னையின் அச்சம் நீங்கும் வண்ணம் பெருமான் நடனம் ஆடினார் என்றும் பொருள் கொள்ளலாம்.
மத்தக் களிற்றுறிப் போர்க்ககண்டு மாதுமை பேதுறலும்
சித்தம் தெளிய நின்றாடி ஏறு ஊர் தீவண்ணர் சில்பலிக்கென்று
ஒத்தபடி வந்தென் உள்ளம் கொண்ட ஒருவர்க்கு இடம் போலும்
துத்த நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம் தானே
நேரிசைப் பண் வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.3) திருஞானசம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது.காரிகை=பார்வ்தி தேவி; பொதுவாக உருவம் அற்றவன் பெருமான். எனினும் தனது அடியர்களுக்கு அருள் புரிவதற்காக பலவித வேடங்கள் எடுப்பது, அவன் அடியார்கள் பால் வைத்துள்ள கருணையின் பயனாக விளைகின்றது. அத்தகைய கருணைச் செயலில் ஒன்று தான் பாசுபதமூர்த்தியாக அர்ஜுனனுக்கு அருள் புரியச் சென்ற வரலாறு. அவ்வாறு சென்ற பெருமான் முதலில் அர்ஜுனன் பால் கோபம் கொண்டு அவனுடன் சண்டையிட்ட போதிலும், இறுதியில் தான் யார் என்பதை அவனுக்கு உணர்த்தி அருள் புரிகின்றார். அறுபதம்=ஆறு கால்களைக் கொண்ட வண்டுகள்; பூக்களில் உள்ள தேனைப் பருகும் ஆர்வத்தில்,வண்டுகள் தங்களது கண்களை, மகரத்தத் தாது ஒட்டிக்கொண்டு மறைப்பதையும் அறியாமல் இருக்கின்றன என்றும், வண்டுகள் பருகிய தேன் போக எஞ்சிய தேன் துளிகள் மலர்கள் விரிவதால் நிலமெங்கும் பரந்து கிடக்கின்றன் என்றும் கூறுகின்றார். இந்த உவமை எண்ணற்ற அடியார்கள் சிவானந்தத்தேனை பருகிய போதிலும், ஏனையோரும் பருகி களிக்கும் வண்ணம் கருணைத் தேன் மிகவும் அதிகமாக உடையவன் பெருமான் என்பதை உணர்த்துகின்றது.ஓரியல்பில்லா உருவம் என்பதற்கு, எந்த விதமான சிறப்புகளும் அற்ற வேடுவக் கோலம் என்றும் விளக்கம் அளிக்கபப்டுகின்றது.
ஓரியல்பில்லா உருவமதாகி ஓண் திறல் வேடனது உருவது கொண்டு
காரிகைகாணத் தனஞ்சயன் தன்னைக் கறுத்தவர்க்கு அளித்துடன் காதல்செய் பெருமான்
நேரிசையாக அறுபதம் முரன்று நிரைமலர்த் தாது கண் மூச விண்டுதிர்ந்து
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
புறவார் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.53.10) திருஞானசம்பந்தர், நேரிசைப் பண்ணில் யாழ் மீட்டுவது போன்ற ஒலியினுடன் வண்டுகள் முரல்கின்றன என்று கூறுகின்றார். நீணமார்=நீளுதல்; முருகு=தேன்; வண்டுகள் நேரிசைப் பண்ணில் முரல்வது, யாழிலிருந்து எழும் இனிய இசை போல் உள்ளது என்று கூறுகின்றார். உடலில் உடையின்றி திரியும் சமணர்கள் நாணம் ஏதும் இல்லாதவர்களாக அவ்வாறு திரிகின்றார்கள் என்று கூறுகின்றார். பெருமான் எதற்காக பலியேற்கின்றார் என்பதை அறியாதவர்களாக இருப்பதால், சமணர்களும் புத்தர்களும் பரிகாசமாக பேசி ஏளனமாக சிரிக்கின்றனர் என்று குறிப்பிடும் சுந்தரர், மற்றைய மதத்தினர் சிவபெருமானை ஏளனமாக பேசுவதை பொருட் படுத்தாமல், பெருமானின் செயல்களின் உண்மையான பின்னணியை புரிந்து கொண்டு நாம் பெருமானை நேசிக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.
நீணமார் முருகு உண்டு வண்டினம் நீல மாமலர் கவ்வி நேரிசை
பாணில் யாழ் முரலும் புறவார் பனங்காட்டூர்
நாண் அழிந்து வார் சமணரும் நண்பில் சாக்கியரும் நகத் தலை
ஊண் உரியவனே உகப்பார்க்கு அருளாயே
பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் பஞ்சுரம் பண், திருஞானசம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது. சுரும்பு=ஆண்வண்டு;அணிமலர்=வரிசை வரிசையாக; பயிற்று= பயிற்றுவித்து, கற்றுக் கொடுத்து; வெஞ்சுரம்=வெம்மை மிகுந்த காடு; மாந்தி=குடித்து; தேனைக் குடித்த களிப்பில் மிதக்கும் ஆண் வண்டுகள், தங்களுடன் உடன் பாடுவதற்கு பெண் வண்டுகளுக்கு பஞ்சுரம் பண்ணினை கற்றுக் கொடுக்கின்றன என்று இந்த பாடலில் ஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த நிகழ்ச்சி, தலத்தினில் நடைபெறும் வேறொரு நிகழ்ச்சியை குறிப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இறைவனை வழிபாட்டு ஆனந்தத்தில் திளைக்கும் ஆண் அடியார்கள், தங்களது துணைவிகளுக்கு இறைவழிபாட்டினை பயில்விக்கின்றனர் என்ற செய்தி மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி மூலம் உணர்த்தப் படுகின்றது என்று விளக்கம் அளிக்கின்றனர். குஞ்சரம்= யானை, தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மத யானையை அடக்கிய பெருமான், பின்னர் அதன் தோலை உரித்த செய்தியும் அப்போது உமை அம்மை அஞ்சியதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. உமையன்னை அஞ்சியதையும் பொருட்படுத்தாது இறைவன் அந்த இரத்தப்பசை மிகுந்த யானைத் தோலைத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டதன் காரணம் என்னே என்று ஞானசம்பந்தர் கேள்வி கேட்பதை நாம் இங்கே உணரலாம். பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சு அனைவரையும் அச்சுறுத்திய போதும்,பெருமான் அந்த நஞ்சினை உட்கொண்டபோது பெருமானுக்கு ஏதும் தீங்கு விளைவிக்காமல், அவரது கழுத்தினில் தங்கியது போன்று, யானையின் ஈரப்பசை மிகுந்த தோலும் அடுத்தவரின் உடலுக்கு கேடு விளைவித்தாலும், பெருமானுக்கு எந்த விதத்திலும் தீங்கினை தராது என்பதனை உலகுக்கு உணர்த்தவே பெருமான் இவ்வாறு செய்தார் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும். .
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தித் தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்
வெஞ்சுரம் தனில் உமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் பட உரி போர்த்த கொள்கையே
பரிதிநியமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.104.4) திருஞானசம்பந்தர் பஞ்சுரம் பண்ணை குறிப்பிடுகின்றார். வெஞ்சுரம்=கொடிய பாலைவனம் போன்ற சுடுகாடு; பெருமான் நடனமாடுவதை விளையாடல் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். நடனம் ஆடிக்கொண்டே ஐந்து தொழில்களையும் விளையாட்டு போன்று மிகவும் எளிதாக பெருமான் செய்வதால் விளையாடல் என்று கூறுவது பொருத்தமே. இந்த விளையாட்டினை மிகவும் விருப்பத்துடன் பெருமான் செய்வதாகவும் கூறுகின்றார். விளையாட்டில் ஈடுபடும் எவரும் விருப்பத்துடன் தானே ஈடுபடுகின்றனர். பேணுதல்=மிகுந்த விருப்பத்துடன் செய்தல்; சுரும்பு= வண்டுகள்; அம்=அழகிய; ஆர்=ஒலிக்கும்; சம்பந்த நாயகி தனது கூந்தலில் நறுமணம் மிகுந்த அழகிய மலர்களை சூடிக் கொண்டுள்ள தன்மையால், வண்டுகள் அந்த கூந்தலை வட்டம் இடுகின்றன என்று கூறுகின்றார். தனது அவிழ்ந்த கூந்தலை முடியும் எண்ணமும் இன்றி,பெருமானின் நினைவுகளில் தலைவி ஆழ்ந்திருக்கும் தன்மை இங்கே குறிப்படப் பட்டுள்ளது.
வெஞ்சுரம் சேர் விளையாடல் பேணி விரிபுன்சடை தாழத்
துஞ்சிருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து
அஞ்சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும்
பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிந் நியமமே
பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.108.10) திருஞானசம்பந்தர், வண்டுகள் பாலையாழ் பண்ணில் முரல்வதை பெருமான் மிகுந்த விருப்பத்துடன் கேட்கின்றான் என்று கூறுகின்றார். கையர்=கீழ்மைத் தன்மை உடையவர்: சமணர்கள் மற்றும் புத்தர்கள் பொய்யான கருத்துகளை மெய் போன்று இட்டுக்கட்டி கூறும் கட்டுரைகளை பெருமான் பொருட் படுத்தாமல் புறக்கணிக்கின்றான் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
காலையில் உண்பவரும் சமண் கையரும் கட்டுரை விட்டன்று
ஆல விடம் நுகர்ந்தான் அவன் தன்னடியே பரவி
மாலையில் வண்டினங்கள் மது உண்டு இசை முரல வாய்த்த
பாலையாழ் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே
வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.81.5) திருஞானசம்பந்தர் பாலையாழ் பண்ணினை குறிப்பிடுகின்றார். இனிய மொழி பேசும் தலத்து மகளிரால் தினமும் காலையில் தொழப்படும் இறைவன் என்று பாடலின் இரண்டாவது அடியில் குறிப்பிடபப்டுவதால், தலத்து மகளிர் பாலையாழ் பண்ணில் பாடல்கள் இசைத்து பாடுவதாக பொருள் கொள்வது பொருத்தமே. நறவு=தேன்: மெய்=உடல்;மெய் மாதினொடும்=தனது உடலில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்ட பிராட்டியுடன்;
ஆலை சேர் தண் கழனி அழகாக நறவுண்டு
சோலை சேர் வண்டினங்கள் இசை பாடத் தூமொழியார்
காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ மெய் மாதினொடும்
பாலை யாழ வேணுபுரம் பதியாகக் கொண்டீரே
திருவீழிமிழலை தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் பாடலில் (5.12.10) வானவர் பாலையாழ் மற்றும் செவ்வழி பண்களில் பாடல்களை இசைத்து பாடி பெருமானை வழிபடுகின்றனர் என்று கூறியதை நாம் ஏற்கனவே சிந்தித்தோம். தோணிபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.45.4) அப்பர் பிரான், கங்கை நங்கையை பாலையாழ் மொழியாள் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் அகத்துறை வகையைச் சார்ந்தவை. பாலையாழ் என்பது ஒரு வகையான பண் என்றும் யாழில் ஒரு வகை என்றும் சொல்லப் படுகின்றது. யாழ் என்ற இசைக்கருவியே மிகவும் அரிதாக போய்விட்ட இந்நாளில் பண்டைய தமிழர்கள், பாலை யாழ், சகோட யாழ், மகர யாழ் என்று பல விதமான யாழ்க் கருவிகள் வைத்திருந்தது நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கின்றது. பார்வதி தேவியை, சிவபெருமான் தனது உடலில் வைத்திருக்கும் காட்சி, அந்த தாய்க்கு, கங்கையை சடையில் தரித்துள்ள காட்சியை நினைவூட்டுகின்றது. ஒருத்தியை உடலில் மறைத்தும், மற்றொருத்தியை தனது சடையில் மறைத்தும் சிவபெருமான் இருக்கும் நிலையினை, ஒருத்தியை மற்றொருத்தி அறியாத வண்ணம் மறைத்து வாழும் நிலையாக இந்த தாய் கருதுகின்றாள். எனவே இரு மனைவியர் இருந்தும் ஒருத்திக்கும் நல்லவனாக இல்லாத சிவபெருமான் மீது காதல் கொண்டுள்ள தனது பெண் மிகவும் நல்லவளாக இருக்கின்றாளே என்ற வருத்தம் தாய்க்கு ஏற்படுவதை அப்பர் பிரான் மிகவும் நயமாக இங்கே உரைக்கின்றார்.
பாலை யாழ்மொழி ஆனவள் தாழ்சடை
மேலள் ஆவது கண்டனள் விண்ணுறச்
சோலை ஆர் தரு தோணிபுரவர்க்குச்
சால நல்லள் ஆகின்றனள் தையலே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.46.1) திருஞானசம்பந்தர் வண்டுகள் மருள் எனப்படும் பண்ணில் ரீங்காரம் இடுவதாக குறிப்பிடுகின்றார். கெடில நதியின் வடக்கே இந்த தலம் இருக்கும் செய்தி இங்கே குறிப்பிடப்படுகின்றது. குண்டை=பருமானான; குறள்=குள்ளமான;பிறழ்ந்து=புரண்டு விளையாடும்; மருள் என்பது மருளிந்தளம் என்ற பண்ணை குறிக்கும் என்று தருமபுரம் ஆதீனக்குறிப்பு விளக்கம் அளிக்கின்றது.விண்ட=மலர்ந்த; தொடை= மாலை; தொடையலான்=மாலையை அணிந்தவன்: பெருமான் அணிந்துள்ள கொன்றை மலர் மாலை, அன்றலர்ந்த மலர்கள் கொண்ட மாலை என்பதால், அதனில் உள்ள தேனைப் பருக வரும் வண்டுகள் ரீங்காரம் இடுவது இன்னிசை பாடுவதாக குறிப்பிடப் படுகின்றது. பெருமான் அணிந்துள்ள கொன்றை மலரைச் சுற்றி வண்டுகள் இன்னிசை பாடிக்கொண்டிருக்கும் காட்சி, பெருமானைச் சார்ந்துள்ள அடியார்கள் பெருமானின் புகழினை இன்னிசைப் பாடல்களாக பாடுவதை நினைவூட்டுகின்றது என்ற விளக்கமும் அறிஞர்களால் அளிக்கப் படுகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அதிகை வீரட்டானம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அதிகை என்பது தலத்தின் பெயர். வீரட்டானம் என்பது திருக்கோயிலின் பெயர். மருள் என்பதற்கு மயக்கம் என்று பொருள் கொண்டு, தேனுண்ட மயக்கத்தில் வண்டுகள் பாடுவதாக சொல்கின்றார் என்றும் பொருள் கொள்ளலாம்.
குண்டைக் குறட் பூதம் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ் தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள் பாட வளர் பொன் விரிகொன்றை
̀ விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே
சண்பை நகர் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.66.8) திருஞானசம்பந்தர், சுரும்பு எனப்படும் ஒருவகை வண்டுகள் மருள் பண்ணை இசைத்துப் பாடுவதாக குறிப்பிடுகின்றார். அளக்கர்=கடல்; ஏரார்=அழகிய; அந்தண்=அழகும் குளிர்ச்சியும் பொருந்திய;ஈடு=பெருமை; கந்தம்=நறுமணம்; வரை ஆர் திரை=மலை போன்று உயரே எழும்பும் அலை; தரளம்=முத்து;
இருளைப் புரையும் நிறத்தில் அரக்கன் தனை ஈடழிவித்து
அருளைச் செய்யும் அம்மான் ஏரார் அந்தண் கந்தத்தின்
மருளைச் சுரும்பு பாடி அளக்கர் வரையார் திரைக் கையால்
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே
மருள் எனப்படும் பண்ணில் இசைத்து வண்டுகள் முரல்வதாக தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.74.5) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கானமுறு=காட்டில் வளர்கின்ற; தாருக வனத்து முனிவர்கள் தாங்கள் செய்த அபிசார ஹோமத்திலிருந்து காட்டு மானை எழுப்பி பெருமான் மீது ஏவினார்கள். அதனை குறிப்பிடும் முகமாக கானமுறு மான் என்று கூறுகின்றார். மான்மறி=மான் கன்று: மறியன்=மறியை கையில் ஏந்தியவன்;சூதம்=மா மரங்கள்; க்னல்=நெருப்பு; ஏன எயிறு=பன்றிக்கொம்பு, பன்றியின் பல்; நிலவி=தழைத்து; வார் தேன்=சொறிகின்ற தேன்;
கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன்
ஏன எயிறு ஆமை இளநாகம் வளர் மார்பின் இமையோர் தலைவனூர்
வாண் அணவு சூதம் இளவாழை மகிழ் மாதவி பலா நிலவி வார்
தேனமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே
பாச்சிலாசிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.44.5) திருஞானசம்பந்தர், இறைவன் வாய்மூரி பண்ணில் கீதம் பாடுவதாக கூறுகின்றார்.வாய்மூரி=ஒரு வகை பா; கங்கை நதியினைத் தனது தலையில் வைத்துள்ள பெருமான், பெண்ணாகிய மழவன் மகள் பால் இரக்கம் கொள்ளாது இருப்பது தவறு அல்லவா என்று கேட்பது மிகவும் நயமாக உள்ளது. சதுர்=சதுரப்பாடு, சாமர்த்தியம்;
மாந்தர் தம் பால் நறு நெய் மகிழ்ந்தாடி வளர்சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழாக் குழல் தாளமொர் வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச் சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வோ
ஆறாடு சடை முடியன் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். ஆடுதல் என்றால் பொதுவாக நீராடுதல் மற்றும் நடனம் ஆடுதல் என்ற பொருளில் கையாளப்பட்டு, பெருமான் நீராடும் தன்மையும் நடனமாடும் தன்மையும் குறிப்பிடப்படுகின்றன. இங்கே சடைமுடியன் என்ற சொல்லுடன் இணைக்கப் பட்டு இருப்பதால் நடனமாடுவது என்பது இங்கே பொருந்தாது. பெருமான் கங்கை நீரில் நீராடுவதாக எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. ஏனெனில் பெருமானின் சடையில் கங்கை நீர் தேக்கப்படுகின்றது. எனவே ஆடு என்ற சொல்லினை கங்கை நதியுடன் இணைத்து பொருள் காண்பது பொருத்தமாக தோன்றுகின்றது. மிகுந்த வேகத்துடன் வானிலிருந்து கீழே இறங்கி வந்த கங்கை நதி, அலைகளுடன் பெருமானின் சடையில் சிறை வைக்கப்பட்டதாக பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. பெருமான் நடனம் ஆடும் போது, அவரது உடல் அசைவுக்கு ஏற்ப அவரது சடை தாழ்ந்து தொங்க, அவரது சடையில் உள்ள சந்திரன், பாம்பு, தலைமாலை அவற்றுடன் கங்கை நதியும் அசைந்து ஆடுகின்றன என்று பொருள் கொள்வது ;பொருத்தமாக உள்ளது.கங்கை நதி ஆடுகின்றது என்ற செய்தி நமக்கு சுந்தரரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது.
காஞ்சி மாநகரில் தம்து இடது கண்ணில் பார்வை வரப்பெற்று, கச்சி ஏகம்பனை காண்பதற்கு கண் அடியேன் பெற்றவாறே என்று உள்ளம் குளிர்ந்து பதிகம் பாடிய சுந்தரர், திருவாரூர் தலம் வந்தடைந்து பெருமானின் அருளால் வலது கண் பார்வையும் வரப்பெறுகின்றார். இதனிடையில் திருவொற்றியூரில் சுந்தரர் சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்து கொண்டதை கேள்வியுற்ற, பரவையார் சுந்தரர் மீது கோபம் கொள்கின்றார். பரவையாரின் சினத்தைத் தவிர்க்க பலர் முயன்ற போதிலும், அவர் சினம் தணியாதவராக இருந்தார். இந்த நிலையில் பெருமானின் உதவியை சுந்தரர் நாட, பெருமானும் பரவையார் பால் தூது செல்ல இசைந்தார். ஒரு சிவ வேதியராக பெருமான், பரவையார் பால் தூது சென்று, சுந்தரர் பரவையாரின் மாளிகைக்கு வரப் பெறுதல் வேண்டும் என்று கூறினார். அதற்கு பரவையார், திருவொற்றியூரில் சங்கிலியாருடன் திருமணம் முடித்துக் கொண்ட சுந்தரர், இந்த மாளிகை சார்தல் தகாது என்று பதில் அளித்தார். திரும்பி வந்த பெருமான் சுந்தரரிடம் பரவையார், சுந்தரர் தமது மாளிகைக்கு வருவதற்கு இசையவில்லை என்று மறுமொழி கூறியதாக சொன்னார். அதனைக் கேட்ட சுந்தரர் பெருமானை நோக்கி, நீர் எம்மை உமது அடிமையாக ஏற்றுக்கொண்டது உண்மையென்றால், நீர் பரவையரின் கோபத்தை தணித்து, யாம் இருவரும் ஒன்று கூடுவதற்கு வழி கண்டிருப்பீர்; அளவற்ற ஆற்றல் உடைய நீர், எமது குறையினைத் தீர்க்காத காரணம், எம்மை நீர் ஒரு சுமையாக கருதியதால் போலும் என்று வருத்தத்துடன் கூறினார். மேலும் தான் இனிமேல் உயிர் வாழ்வதில் ஒரு பயனும் இல்லை என்றும் சொன்னார். இரண்டாவது முறையாக பெருமான் தூது சென்ற போது, தனது உணமையான வடிவத்துடன் சென்று, பரவையாரிடம் சுந்தரர் இந்த மாளிகைக்கும் வருவதற்கு நீ இசைய வேண்டும் என்று தெரிவித்தார். பரவையார், பெருமானே, உமது அடியாருக்காக நீரே ஒரு இரவில் இங்கும் அங்குமாக திரிந்து தூதாக வந்தால் அடியேன் உமது கட்டளைக்கு இசையாமல் இருப்பது எவ்வாறு என்று பதிலளித்தார். இதனால் மிகவும் மகிழ்ந்த பெருமான்,சுந்தரரிடம் இந்த நற்சேதியை சொல்ல மிகவும் விரைந்து வந்தார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தனது சடையில் தங்கியிருக்கும் கங்கை நதி ததும்பும் வண்ணம் பெருமான் மிகவும் விரைந்து வந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். இந்த பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்படுகின்றது.
அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவெய்த
மின்னிடையர் பால் அன்பரை உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடும் கங்கை ததும்பத் திருவாரூர்
மன்னவனார் அம்மறையவனர் பால் வந்துற்றார்.
பொழிப்புரை:
கங்கை நதி அசைந்தாடும் சடையை உடையவனும், மலர் போன்ற திருக்கரத்தினில் தீப்பிழம்பை ஏந்திய வண்ணம் நடனமாடுபவனும், இமயமலைச் சாரலில் வளர்ந்தவளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு கூறாகக் கொண்டவனும், கூத்தாடும் குணம் உடையவனும் ஆகிய பெருமான் உள்ளம் குளிர்ந்து உறைகின்ற திருக்கோயில் திருவீழிமிழலையாகும். சேற்றில் மலரும் செங்கழுநீர் மலர்களில் உள்ள தேனைப் பருகுங்கால் ஆங்குள்ள மகரந்தப் பொடிகள் படிந்ததால் தனது நிறம் மாறி சிவந்த நிறத்தில் காட்சி அளிக்கும் வண்டுகள் செவ்வழிப் பண்ணில் இசைத்து ரீங்காரமிடும் தன்மை உடைய தலம் திருவீழிமிழலையாகும்.
பாடல் 8
கருப்பமிகு உடல் அடர்த்துக் காலூன்றிக் கை மறித்துக் கயிலை என்னும்
பொருப்பு எடுக்கலுறும் அரக்கன் பொன்முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில்
தருப்ப மிகு சலந்தரன் தன்னுடல் தடிந்த சக்கரத்தை வேண்டி ஈண்டு
விருப்பினொடு மால் வழிபாடு செய இழி விமானம் சேர் மிழலையாமே
விளக்கம்:
கருப்பம்=கர்வம்; மறித்து=வளைத்து; பொருப்பு=மலை, இங்கே கயிலாய மலை; தருப்பம்=செருக்கு; தனக்கு எதிராக போரிட எவரும் முன்வாராத காரணத்தால், தனது தினவெடுத்த தோள்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் சிவபெருமானுடன் போரிடலாம் என்ற செருக்குடன் கயிலாய மலை நோக்கிச் சென்ற அரக்கன் சலந்தரன்; தடிந்த=இரு கூறாக கிழித்த; இழி=கீழே இறங்கிய; விண்ணிழி விமானம் என்று இந்த தலத்து விமானம் பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. இந்த தலத்தின் தலபுராண நிகழ்ச்சி இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.அடர்த்து=வருத்திக்கொண்டு;
பொழிப்புரை:
கர்வம் மிகுந்த தனது உடலை வருத்திக் கொண்டு, தனது கால்களை நிலத்தினில் உறுதியாக ஊன்றிகொண்டு கைகளை வளைத்து கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனது பொற்கிரீடங்களை அணிந்த தலைகளும் தோள்களும் நெரியும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றியவர், தூய்மையே வடிவமாகக் கொண்ட பெருமான் ஆவார். அவர் உறைகின்ற திருக்கோயில் திருவீழிமிழலையாகும்.தன்னுடன் போரிட எவரும் தயாராக இல்லை என்பதால் மிகுந்த செருக்குடன் திரிந்த அரக்கன் சலந்தரனின் உடலை இரு கூறாகக் கிழித்த வலிமை வாய்ந்த சக்கரப்படையை விரும்பி வேண்டி பெருமானை வழிபட்ட திருமாலுக்கு சக்கரம் அளித்தவர் சிவபெருமான். இதனால் மகிழ்ச்சி அடைந்த திருமால்,விண்ணிலிருந்து சிறந்த விமானத்தை இறக்கி திருவீழிமிழலை திருக்கோயில் கருவறை மீது நிறுவினார். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் திருவீழிமிழலையாகும்.
பாடல் 9
செந்தளிர் மாமலரோனும் திருமாலும் ஏனமோடு அன்னமாகி
அந்தம் அடி காணாதே அவரேத்த வெளிப்பட்டோன் அமரும் கோயில்
புந்தியில் நான்மறை வழியே புல் பரப்பி நெய் சமிதை கையில் கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலையாமே
விளக்கம்:
செந்தளிர் மாமலர்=சிகப்பு நிறத்தில் இதழ்கள் உடைய சிறந்த தாமரை மலர்; ஏனம்=பன்றி; அந்தம்= முடிவு, இங்கே முடி என்று பொருள் கொள்வதே பொருத்தம். ஏத்த=புகழ்ந்து வணங்க; தங்கள் இருவரில் எவர் பெரியவர் என்று தொடர்ந்து வாதம் செய்து கொண்டிருந்த திருமால் மற்றும் பிரமனின் எதிரே நீண்ட தீப்பிழம்பாக தோன்றியவர் சிவபெருமான். அந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காணும் முயற்சியில் ஈடுபட்ட பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும், அந்த முயற்சியில் தோல்வியடைந்த பின்னர், பெருமானை வழிபட, அவர் தனது வடிவத்துடன் வெளிப்பட்டார் என்பது புராணம். அந்த செய்தியே இங்கே வெளிப்பட்ட என்ற சொல் மூலம் குறிப்பிடப்படுகின்றது. புந்தி=அறிவு; மிக அளிப்போர்=மிகுந்த நன்மைகளை பெற்றுத் தரும் அந்தணர்கள்;அந்தணர்கள் செய்யும் வேள்வியினால் உலகம் மிகுந்த பலன்களை பெறுகின்றது என்பதை இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.வேட்டு=வேள்வி செய்து; சமித்து= அரசு மற்றும் பலாச மரங்களின் உலர்ந்த குச்சிகள் கொண்டு, அவற்றை நெய்யில் தோய்த்து, வேள்விக் குண்டத்தில் வளர்க்கப்பட்ட தீயினில் இட்டு, வேள்வி செய்யும் பழக்கம் இங்கே குறிப்பிடப் படுகின்றது.
பொழிப்புரை:
சிகப்பு நிறத்தில் இதழ்கள் உடைய சிறந்த மலராகிய தாமரை மலரில் உறைகின்ற பிரமனும் திருமாலும், முறையே அன்னம் மற்றும் பன்றியின் உருவம் கொண்டு, தங்களின் முன்னே தோன்றிய நெடிதுயர்ந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண முடியாமல் தவித்து வருந்திய பின்னர், தங்களது செருக்கு அழிந்தவர்களாக பெருமானைப் புகழ்ந்து வழிபட, அவர்களின் முன்னே வெளிப்பட்டு தோன்றியவன் சிவபெருமான். நான்மறைகளைக் கற்றுத் தேர்ந்து தாங்கள் பெற்ற அறிவினைக் கொண்டு, நான்மறைகளில் சொல்லப்பட்டுள்ள விதிகளின் வழியே, தருப்பைப் புற்கள் பரப்பி, நெய் மற்றும் சமித்து கொண்டு தங்கள்து கைகளால் தீயினில் இட்டு கொழுந்து விட்டெரியும் அழல் வளர்த்து வேள்விகள் செய்து, அதனால் உலகினுக்கு பல நன்மைகள் பெற்றுத் தரும் அந்தணர்கள் வாழும் தலம் திருவீழிமிழலையாகும்.
பாடல் 10
எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை
நண்ணரிய வகை மயக்கித் தன்னடியார்க்கு அருள் புரியும் நாதன் கோயில்
பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஓசை கேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோடும் இழியும் மிழலையாமே
விளக்கம்:
சமணர்களும் புத்தர்களும் தன்னை அறிந்து கொள்ள முடியாத வகையில் அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். என்ன புண்ணியம் செய்தனை என்ற திருஞானசம்பந்தர் வாய்மொழி உணர்த்துவது போன்று முந்தைய பிறவிகளில் புண்ணியச் செயல்கள் செய்திருந்தால் தான், இந்த பிறவியில் இறைவனை வழிபடும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். நாம் சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைகளின் பயனாகத் தான், இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. அதற்கு ஏற்றாற்போல் நமது செய்கைகளும் அமைகின்றன. இந்த வாழ்க்கை நியதி இறைவனால் நிர்ணயிக்கப் படுகின்றது. எனவே தான் சமணர்களும் புத்தர்களும் சென்ற பிறவிகளில் நற்செயல்கள் புரிந்து நல்வினைகளை ஈட்டாத காரணத்தால், அவர்கள் இந்த பிறவியில் மயக்கத்தில் ஆழ்ந்து இறைவனை வழிபடாமல் இருப்பது இறைவனின் செயல் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். குழந்தைகளை பாரட்டியும் சீராட்டியும் தாலட்டு பாடுவது பண்டைய நாட்களில் வழக்கமாக இருந்து வந்ததை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
எண்ணற்ற சமணர்களும் மற்றும் பெருமானை குறித்து வீண் பழிச் சொற்கள் பேசுவதால் இழிந்த செயல்கள் செய்பவர்களாக கருதப்படும் சாக்கியர்களும்,என்றும் த்ன்னை புரிந்து கொண்டு வழிபடாத வண்ணம், அவர்களை அறியாமையில் ஆழ்த்தி வைப்பவன் இறைவன். அதே சமயத்தில் சென்ற பிறவிகளில் செய்த நற்செயல்களின் பயனாக இந்த பிறவியில் இறைவனை வழிபடும் அடியார்களுக்கு அவன் அருள் புரிகின்றான். பண் சென்று அமர்ந்தது போன்று இனிமையான மொழி பேசும் தலத்து மகளிர், தமது குழந்தைகைளை பாராட்டியும் சீராட்டியும் தாலாட்டு பாடுவதைக் கேட்டு வியப்படையும் தேவர்கள்,தாங்கள் பறந்து செல்கின்ற விமானஙகளிலிருந்து கீழே இறங்கி அந்த பாடல்களை கேட்டு ரசிக்கின்ற தன்மை கொண்டது வீழிமிழலை தலமாகும்.
பாடல் 11
மின்னியலும் மணிமாடம் இடை வீழிமிழலையான் விரையார் பாதம்
சென்னி மிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக்கோன் செழுமறைகள் பயிலும் நாவன்
பன்னிய சீர்மிகு ஞானசம்பந்தன் பரிந்துரைத்த பத்தும் ஏத்தி
இன்னிசையால் பாட வல்லார் இருநிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே
விளக்கம்:
சென்னி=தலை; மிடை=பொருந்திய; விரையார்=நறுமணம் வாய்ந்த; சிரபுரம்=சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. பன்னிய=மீண்டும் மீண்டும்;பரிந்து=அன்பு கொண்டு; ஈசன்= தலைவன்
பொழிப்புரை:
மின்னல் போன்று ஒளிவீசும் மணிகளால் இழைக்கப்பட்ட மாட வீடுகள் நிறைந்த வீழிமிழலை தலத்துப் பெருமானின் நறுமணம் வீசும் திருப்பாதங்களைத் தனது தலையின் மீது வைத்துக் கொண்டாடும் இயல்பினை உடையவனும் சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் தலைவனும், செழிப்பான கருத்துகள் கொண்ட நான்மறைகளை பயின்றவனும் பலராலும் மிகவும் சிறப்பாக போற்றப்படுபவனும் ஆகிய ஞானசம்பந்தன் பெருமான் பால் அன்பு கொண்டு பாடிய இந்த பத்து பாடல்களையும் முறையாக பாடும் வல்லமை வாய்ந்த அடியார்கள் இந்த உலகத்தில் உள்ள மக்களால் தலவனாக கருதப்பட்டு போற்றப்படும் இயல்பினை உடையவர்கள் ஆவார்கள்.