பதிக எண்: 1.112 திரு சிவபுரம் வியாழக்குறிஞ்சி
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக சிவபுரம் தலம் சென்ற திருஞானசம்பந்தர், இந்த தலத்தின் மீது அருளிய மூன்று பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன. புவம் வளி கனல் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்களில், பதிகத்தின் முதல் பத்து பாடல்களில், இந்த தலத்தை தியானித்து வழிபடும் அடியார்கள் பெறவிருக்கும் பலன்களை மிகவும் விரிவாக, ஞானசம்பந்தர் எடுத்து உரைக்கின்றார். இந்த காரணம் பற்றி, அந்த பதிகத்தின் பாடல்களில் இயற்கை காட்சிகள் அதிகமாக இடம் பெறவில்லை. பொதுவாக தனது பதிகங்களில் இயற்கை காட்சிகளை திறம் பட படம் பிடித்தது போன்று காட்டுபவர் திருஞானசம்பந்தர் என்பதால், இந்த பதிகம் சற்று வித்தியாசமான பதிகமாக உள்ளது. அந்த குறை நமக்கு வேண்டாம் என்ற எண்ணத்தினால் தானோ,இன்குரல் இசை கெழும் என்று தொடங்கும் இந்த பதிகத்தின் பாடல்களில் இயற்கை காட்சிகள் இடம் பெறும் வண்ணம் இந்த பதிகத்தினை திருஞானசம்பந்தர் அருளியுள்ளார். மேலும் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும், முந்தைய பதிகம் போன்று, சிவபுர நகர் என்று குறிப்பிடுகின்றார்.திருஞானசம்பந்தர் காலத்தில் இந்த தலம், தனி நகரமாக இருந்தது போலும்.
இந்த தலம் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சாக்கோட்டை என்ற தலத்திற்கு வடகிழக்கில் இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இறைவனின் திருநாமம் சிவகுருநாத சுவாமி; சிவபுரநாதர்,பிரமபுரீஸ்வரர் இறைவியின் திருநாமம் ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி; மூலவர் கம்பீரமான சுயம்பு மூர்த்தம். திருமால் வெள்ளைப் பன்றி வடிவத்தில் இறைவனை வழிபட்டார் என்றும், இராவணன் மற்றும் குபேரன் ஆகியோரால் வழிபடப்பட்ட தலம் என்றும் கருதப் படுகின்றது. குபேரன் வழிபட்ட தலம் என்பதால் குபேரபுரி என்றும் அழைக்கப்படுகின்றது. பட்டினத்தாரின் சகோதரி இந்த தலத்தினில் வாழ்ந்ததாக கூறுவார்கள். பட்டினத்தார் அருணகிரிநாதர் ஆகியோரும் வழிபட்ட தலம். இந்த ஊரில் உள்ள பட்டிடைத்து விநாயகர் திருக்கோயிலில் பட்டினத்தார் சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. இந்த தலத்தினில் நிலத்திற்கு அடியில் சிவலிங்கம் இருப்பதாக நம்பிக்கை நிலவுவதால், திருஞானசம்பந்தர் அங்கப் பிரதட்சிணம் செய்து இறைவனை வழிபட்டார் என்று செவிவழிச் செய்திகள் உணர்த்துகின்றன. மேலும் ஊர் எல்லைக்கு அப்பால் நின்று திருஞானசம்பந்தர் பதிகம் பாடினார் என்றும் சொல்கின்றனர். அவ்வாறு பதிகங்கள் பாடிய இடத்தை சுவாமிகள் துறை என்று அழைக்கின்றனர். ஆனால் பெரிய புராணத்தில் அத்தகைய நிகழ்ச்சி ஏதும் குறிப்படப்படவில்லை. எனினும் பெருமானை அங்கப் பிரதசிணம் செய்து வழிபடுவது இங்கே சிறப்பாக கருதப் படுகின்றது. சிவபெருமானின் திருக்கோயில்களில் அங்கப் பிரதட்சிணம் செய்து வழிபடப்படும் கோயில்கள் மிகவும் அரிதானவை. திருநாகேச்சரம் சென்ற சுந்தரர் அங்கிருந்து கலயநல்லூர் செல்லும் வழியில், இந்த தலம் வந்ததாக பெரிய புராண குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் சுந்தரர் அருளிய பதிகம் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை.
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம் நந்தி காணப் படுகின்றன. கொடிமரம் இல்லை. இந்த சுற்றினில் காலபைரவர் சன்னதி உள்ளது. தெற்கு நோக்கிய சன்னதி. மூன்று நிலை உள்கோபுரத்தை அடுத்த சுற்றினில் அம்மன் சன்னதி உள்ளது.உட்கோபுரத்தின் உட்சுவரில் சூரியன் சந்திரன் உருவங்கள் இறைவனைப் பார்த்த வண்ணம் உள்ளன. மூலவர் கருவறைக்கு முன்னம், வலது புறத்தில் விநாயகர் காணப்படுகின்றார். சன்னதி நுழைவாயிலின் அருகே துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி,இலிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கை சன்னதிக்கு அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு அருகில், திருமால் பன்றி வடிவினில் பெருமானை வழிபாடு செய்யும் நிலையில் சிற்பம் உள்ளது. இந்த வெண்பன்றியின் வாயில் தாமரை மலர் உள்ளது.அருகில், நின்ற நிலையில் திருமால் பெருமானை வழிபடும் சிற்பமும் உள்ளது. உள்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர்,கஜலக்ஷ்மி, தேயுலிங்கம் வாயுலிங்கம், ப்ரிதிவிலிங்கம், அக்னி, இந்திராணி, இந்திரன், குபேரன், பாலமுருகன், பைரவர், சந்திரன், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. முருகப் பெருமான் ஒரு முகத்துடன் நான்கு கரங்கள் கொண்டவராக காட்சி தருகின்றார். வள்ளி மற்றும் தெய்வயானையின் உருவங்கள் காலணிகளுடன் உள்ளன. நடராஜர் திருமேனி மிகவும் அழகானது. இந்த சிலை சுமார் அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு கடத்தப் பட்டு, இந்திய அரசின் பெருமுயற்சியால் பின்னர் மீட்கப்பட்டது. தற்போது பாதுகாப்பு கருதி திருவாரூர் சிவாலயத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப் பட்டுள்ளது. தற்போது நடராஜர் சன்னதியில் உள்ள சிலை அண்மையில் செய்யப்பட்டது. நடராஜர் சன்னதிக்கு எதிரில் நால்வர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் சுந்தரர் பரவை நாச்சியார் உடனாக காட்சி அளிக்கின்றார். கோஷ்டத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில் பாம்பு இருப்பதை காணலாம். இதனை இராகு என்று கூறுகின்றனர். சித்திரை மாதத்தின் 3 4 5 ஆம் தேதிகளில் சூரியனின் கதிர்கள் நேராக இறைவனின் சன்னதி சென்றடைந்து அவரது திருப்பாதங்களில் படர்கின்றன.
ஒருமுறை இராவணன் உடல் தூய்மை அற்றவனாக இந்த தலத்திற்கு வந்தான். அவன் பெருமானை வழிபட விரும்பியபோது, நந்திதேவர் அவனைத் தடுத்தார்.தனது தமையன் என்பதால் இராவணனுக்கு பரிந்து குபேரன் பேசினான். தான் சிவபெருமானின் தோழன் என்பதால் தனது பேச்சுக்கு ஒரு மதிப்பு இருக்கும் என்று குபேரன் நினைத்தான். ஆனால் நந்திதேவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். மேலும் தகுதியற்ற இராவணனுக்கு பரிந்து பேசியதற்காக குபேரனுக்கு சாபம் கொடுத்தார். அதனால் குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்தான். மேலும் அவன் நிலவுலகில் பிறக்க நேர்ந்தது. நிலவுலகில் தனபதி என்ற பெயரில் வாழ்ந்து வந்த அவன், மிகுந்த பேராசைக்காரனாக விளங்கினான். இருப்பினும் அவன் தொடர்ந்து பெருமானை வழிபட்டு வந்தான்.ஒருநாள் அவனுக்கு இந்த தலத்து திருக்கோயிலின் வடக்கு பிராகாரத்தில் ஒரு பட்டயம் கிடைத்தது. பட்டயத்தில் இருந்த செய்தி அவனை பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதில் மாசி மாதம் சிவராத்திரி சோமவாரத்தில் உடலில் வடு ஏதும் இல்லாத ஒரு ஆண் குழந்தையை, அதன் பெற்றோர்கள் பிடித்து நிற்கையில் வாள் கொண்டு வெட்டி அந்த குழந்தையின் இரத்தத்தால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் நிறைந்த செல்வம் கிடைக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. வறுமையில் வாடிய தம்பதிகளுக்கு சிறிது பணம் கொடுத்து அவர்களின் குழந்தை ஒன்றினை இந்த பலிக்கு தனபதி ஏற்பாடு செய்தான்.அந்த குழந்தையை பலி கொடுக்கும் தருணத்தில் குழந்தை அம்பிகையிடம் வேண்டியது. அம்பிகை குழந்தையை காப்பாற்றுமாறு இறைவனிடம் வேண்ட,இறைவன் அந்த பலியினை தடுத்தார். குபேரனின் சாபமும் நீங்கியது. தான் இழந்த செல்வத்தையும் குபேரன் மீண்டும் பெற்றான். குழந்தையாக அக்னியும் குழந்தையின் பெற்றோர்களாக இந்திரன் மற்றும் இந்திராணி வந்தனர் என்று கூறுவார்கள். ஆலயத்தின் கிழக்கு பகுதியில் இவர்கள் சிவலிங்கத் திருமேனி வடிவில் காணப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சியை நினைவூட்டும் வகையில் பெருமானின் முடியில் இரத்ததுளி காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி ஒரு சித்திரமாக கோயில் சுவற்றினில் வடிக்கப் பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி காரணமாக இழந்த செல்வத்தை பெறுவதற்கு இந்த திருக்கோயில் வழிபாடு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. தீபாவளித் திருநாளில் இங்கே நடைபெறும் குபேர பூஜை பிரசித்தி பெற்றது. ஒரு முறை திருமால் இந்த திருக்கோயிலுக்கு வந்த போது, இறைவனின் சன்னதியின் முன்னே இருந்த நந்தியை நகரச் சொன்னதாகவும், அதனால் கோபம் கொண்டு நந்தி திருமாலுக்கு சாபம் அளித்ததாகவும் சொல்லப் படுகின்றது. இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு திருமால் தனது சாபத்தை நீக்கிக் கொண்டார் என்று கூறுவார்கள். இதனால் தான் தட்சிணாமூர்த்தி சன்னதியின் அருகே திருமால், கை கூப்பிய வண்ணம் இறைவனை வழிபடும் சிற்பம் உள்ளது போலும்.
பாடல் 1:
இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்
தன் கரம் மருவிய சதுரன் நகர்
பொன்கரை பொரு பழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே
விளக்கம்:
பெருமான் யாழை மீட்டிப் பாடுவதில் சமர்த்தனாக இருக்கின்றான் என்று திருஞான சம்பந்தர் கூறுவது, யாழ் கருவியுடன் பெருமானை இணைத்துக் குறிப்பிடும் தேவாரப் பாடல்களை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. தனது கையில் யாழ் எனப்படும் இசைக் கருவி உடையவனாக பெருமான் உள்ளான் என்று கழிப்பாலை பதிகத்தின் முதல் பாடலில் (4.30.1) அப்பர் பிரான் கூறுகின்றார். நங்கை=உமையம்மை; நவிலுதல்=நாவால் சொல்லி பயிலுதல்; அங்கை என்பதற்கு உள்ளங்கை என்றும் அழகிய கை என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தங்கை=தம்+கை: தாமரை மலர் அந்தணர்க்கு உரிய அடையாளமாக கருதப் படுகின்றது. தாமரை மலர் என்பது, நமது தலைக்கு மேலே இருக்கும் சகஸ்ரதளம் என்பதை குறிப்பதாக,தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலுக்கு விளக்கம் அளிக்கும் போது முனைவர் ஒருவரால் கூறப்பட்டது. நமது உடலில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி, அதனை ஒவ்வொரு ஆதாரத்தையும் கடக்குமாறு செய்து, புருவ மத்தியில் உள்ள ஆறாவது ஆதாரத்தை அடைந்த பின்னர்,அதனையும் தாண்டி சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் சென்றால் ஆனந்த நிலையினை அடையலாம் என்று சித்தர்கள் கூறுகின்றனர். சகஸ்ரதளம், நமது தலைக்கு ஒரு சாண் உயரத்திற்கு மேலே, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலர் போன்று இருப்பதாக சொல்லப் படுகின்றது. இவ்வாறு அந்த சகஸ்ர தளத்தை வைத்து நாம் அனைவரும் அந்த ஆனந்த நிலையினை அடைய வழி வகுத்த பெருமான், என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது.
நங்கையை பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையில் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.104.7) அப்பர் பிரான், பெருமான் தனது கையில் நன்கு பொருந்திய தாளங்கள்,குழல் மற்றும் யாழ் இசைக் கருவிகள் கொண்டவராக திகழ்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். காளம்=ஆலகால விடம்; கடந்தது=வென்றது; தான் உட்கொண்ட நஞ்சினை வெளியே துப்பாமலும், வயிற்றின் உள்ளே செலுத்தாமலும், தனது கழுத்தினில் தேக்கியும், அந்த நஞ்சின் தன்மையை மாற்றி தனக்கு எந்த கேடும் விளைவிக்காத வண்ணம் செய்தும் வெற்றி கொண்ட பெருமான் என்று கூறப்பட்டுள்ளது. வேளம்=பாம்பு;
காளம் கடந்ததோர் கண்டத்தராகிக் கண்ணார் கெடில
நாளங்கடிக்கொர் நகரமும் மாதிற்கு நன்கு இசைந்த
தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ் கொண்டும் தாமங்ஙனே
வேளங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே
கயிலாயம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.57.7) அப்பர் பிரான், சிறந்த பண்களுக்கு பொருந்தும் வண்ணம் யாழும் வீணையும் இசைக்கும் ஆற்றல் படைத்தவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். எண் என்று கூறியது உயிர்களின் எண்ணங்களை; மேலும்= மேம்பட்ட;ஏறு=கரையேற்றுதல்; உயிர்களின் எண்ணங்களுக்கும் மேம்பட்ட எண்ணங்களை உடையவனே, உயிர்களை கரையேற்றும் நல்ல பண்பினை உடையவனே,பண்களில் பொருந்தி இருப்பவனே, சிறந்த பண்களுக்கு பொருந்தும் வண்ணம் யாழும் வீணையும் பயில்பவனே, விண்ணையும் கடந்து நிற்பவனே,மேலானவர்களுக்கும் மேலானவனாக இருப்பவனே, இரு கண்களுக்கும் மேலாக மூன்றாவதாக நெற்றியில் கண் உடையவனே, கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாக கொண்டவனே, உன்னை நான் பலமுறையும் போற்றி வணங்குகின்றேன் என்று அப்பர் பிரான் போற்றும் பாடல்.
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி
பண் மேலும் பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார் கண் மேலார் கண் மேலாய் போற்றி
கண் மேலும் கண் ஒன்று உடையாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
வாய்மூர் தலத்தினில் பெருமானின் நடனக் காட்சியை காணும் பேற்றினை அப்பர் பிரான் பெறுகின்றார். தான் கண்ட காட்சியை பாடலாக (6.77.7) வடித்த அப்பர் பிரான், பெருமான் யாழ் வீணை ஆகிய இசைக் கருவிகளை இசைப்பதை தான் கண்டதாக கூறுகின்றார். மழை=மழை தரும் மேகம்; தன்மை=மற்றவர் வகுத்த வழியின் கண் செல்லாது, தான் செல்லவேண்டிய பாதையைத் தானே வகுத்துக் கொண்டுள்ள தன்மை; அனைவர்க்கும் பெரியோனாகத் திகழும் பெருமான், எவரையும் முன்மாதிரியாக கொண்டு பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. இந்த குணத்தையே தன்வயத்தன் என்று சைவ சித்தாந்த நூல்கள் குறிப்பிடுகின்றன.
குழை ஆர் திருத்தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்
இழை ஆர் புரிநூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ் வீணை முரலக் கண்டேன்
தழையார் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்
மழை ஆர் திருமிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
திரைலோக்கியசுந்தரம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.12.8) பெருமான் தனது கையில் உள்ள யாழின் நரம்பினை மீட்டி வாசிக்கின்றார் என்று கருவூர்த்தேவர் கூறுகின்றார். இந்த பாடல் செவிலித்தாயின் கூற்றாக அமைந்துள்ள அகத்துறை வகையைச் சார்ந்த பாடல்.ஈர்த்தல்=பிரித்தல்; பெருமான் பால் தீவிர காதல் கொண்டுள்ள தனது மகளின் காதலை பெருமான் ஏற்றுக்கொண்டு, அவளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளாததால், அவள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளாள் என்றும், பெருமானின் ஒளிவீசும் சடையும் அவர் மீட்டும் யாழின் ஒலியும் மீண்டும் மீண்டும் பெருமானின் நினைவுகளை தனது மகளின் மனதினில் கிளறுவதால், பெருமானை விட்டு தான் பிரிந்திருக்கும் நிலையைத் தாங்கமுடியாத தனது மகள் உயிரினை இழக்கும் நிலையில் உள்ளாள் என்றும் இந்த பாடலில் செவிலித்தாய் கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு தனது மகள் உயிரை இழக்கும் நிலைக்கு பெருமானே காரணம் என்பதால், தனது மகளின் உயிரை பிரிப்பது பெருமானின் செயல் என்று கூறுகின்றாள். பாதிரம்போது=பாதிரிப் பூக்கள்;
அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர்சடை மேல்
நிரம்பாத பிறை தூவும் நெருப்பொடு நின் கையிலி யாழ்
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசைக் குளிர் வனம் பா
திரம்போது சொறி கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
இன்குரல்=இனிமையான ஒலி; கெழும்=வெளிப்படுத்தும்; முரல=ஒலிக்க; பொருதல்=மோதுதல்; காவிரி நதியின் தென்கரைத் தலமாக இந்த தலம் திகழும் நிலை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. முரல=ஒலிக்க; பொன்=அழகிய; பெருமான் யாழ் இசைக் கருவியை திறமையாக மீட்டுவதால், சதுரன் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சதுரன் என்றால் திறமை உடையவன், சாமர்த்தியசாலி என்று பொருள். எவர்க்கும் இயலாத பல வீரச் செயல்களை புரிந்த பெருமானை சதுரன் என்று நால்வர் பெருமானர்கள் பல பாடல்களில் அழைத்து மகிழ்கின்றனர். அத்தகைய சில பாடல்களில் சதுரன் என்று பெருமானை தாங்கள் அழைப்பதற்கான காரணத்தையும் குறிப்பிடுகின்றனர். தக்கனது சாபத்தினால் அழியும் நிலையில் இருந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்தது, திருமாலும் பிரமனும் அடிமுடி காணாத வண்ணம் நீண்ட நெடுந்தழலாக நிமிர்ந்தது, வேகமாக ஆவேசத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் தாங்கித் தேக்கியது, இசைக்கருவிகளை திறமையாக வாசிப்பது, அடியார்கள் பிச்சையாக அளிக்கும் மலங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வீடுபேறு அளிப்பது, வலிமை மிகுந்த தக்கன் செய்த யாகத்தினை வேதநெறிகளுக்கு மாறுபட்டது என்பதால் அழித்தது,அரக்கன் இராவணனின் செருக்கினை அடக்கிய பின்னர் அவனுக்கு பல வரங்கள் அளித்தது, திரிபுரத்து பறக்கும் கோட்டைகளை ஒரே அம்பினால் எரித்து அழித்தது, அனைவரையும் நடுங்கச் செய்த சலந்தரனை சக்கரப் படையால் அழித்தது, பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டது.தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து போர்த்துக் கொண்டது, நள்ளிருளில் நட்டம் ஆடுவது, பக்குவமடைந்த உயிர்கள் தங்களது மலங்களை பிச்சையாக அளிப்பதை ஏற்றுக்கொண்டு அவர்களின் வினைகளை முற்றிலும் அறுப்பது, பல ஊழிகளைக் கடந்தும் அழியாமல் நிலைத்து நிற்பது, வேறு எவராலும் நீக்க முடியாத வினைகளை நீக்குவது, பொங்கி வந்த ஆலகால விடத்தை பருகி உலகத்தவரை காப்பாற்றியது, அடியார்களின் பிறவியை வேருடன் அறுப்பது, தீயினில் நடனம் ஆடுவது, தீயினைத் தனது கையில் ஏந்தி நடனம் ஆடுவது என்பது போன்று பல செயல்கள், வேறு எவராலும் புரிய முடியாத பல செயல்கள், புரிந்த பெருமானை சதுரன் என்று அழைப்பது தானே பொருத்தம்.
அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.33.2) ஞானசம்பந்தர் பெருமானை சதுரன் என்று அழைக்கின்றார். முதிரா=வளராத; முதிரா மதி என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முதிர்ந்த மதியாக, முழு நிலவாகத் திகழ்ந்த சந்திரன் தக்கன் இட்ட சாபத்தினால் நாளொரு கலையாக தேய்ந்து அழியும் நிலைக்கு வந்த போது பெருமானிடம் சரணடைந்தான். அஞ்சேல் என்று அவனுக்கு அபயம் அளித்த பெருமான், சந்திரன் அழியும் நிலையினைத் தவிர்த்து நாளொரு கலையாக வளரும் வண்ணம் அவனுக்கு அருள் புரிந்தார். வளரும் மதியாக மாறியபடியால், பெருமான் அணிந்துள்ள பிறைச் சந்திரன் வளராத மதி என்றும், பிள்ளை மதி என்றும், முதிரா மதி என்றும் திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. தக்கன் இட்ட சாபத்தினை மாற்றுவது வேறு எவர்க்கும் இயலாத காரியமாக திகழ்ந்த படியால், பெருமானை சதுரன் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.விடை=இடபம்; கிடை= கூட்டம்; கிள்ளை=கிளி; வேதம் பயிலும் சிறுவர்கள் கூட்டமாக இருந்து வேதமந்திரங்களை சொல்லி பழக்கப்படுத்திக் கொள்வதையும், அந்த ஒலிகளை கேட்கும் கிளிகள் இசையுடன் வேத மந்திரங்களைச் சொல்லும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.அரவம்=ஒலி; இந்த பாடலில் தனது தந்தை என்று இறைவனை சம்பந்தர் அழைப்பதையும் நாம் உணரலாம்.
சடையார் சதுரன் முதிரா மதி சூடி
விடையார் கொடி ஒன்றுடை எந்தை விமலன்
கிடையார் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை
அடையார் பொழில் அன்பில் ஆலந்துறையாரே
கற்குடி தலத்தின் (1.43.1) மீது அருளிய பதிகத்தில், திருஞானசம்பந்தர் பெருமான் கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்றதை, தாழ்சடை வைத்த சதுரர் என்று குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். ஒரு மாதினை உடலிலும் மற்றொரு மாதினை சடையிலும் வைத்திருந்தாலும், இன்ப துன்பங்களைக் கடந்தவராக பெருமான் உள்ளார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். எப்போதும் மனைவியுடன் இருந்தாலும், இன்ப துன்பங்களை கடந்தவராக, எதிலும் பற்று அற்றவராக, ஐந்து புலன்களையும் அடக்கியவராக இருப்பதற்கு தனித் திறமை வேண்டும் அல்லவா. அந்த திறமை பெற்றிருந்த காரணத்தால் இறைவனை சதுரர் என்று அழைக்கின்றார். மேலும் தாழ்ந்து தொங்கும் சடையினில் கங்கை நதியைத் தேக்குவது சதுரப்பாடு உடையவர் மட்டுமே செய்ய இயலும் செயல் அல்லவா.
வடம் திகழ் மென்முலையாளை பாகமாதாக மதித்துத்
தடம் திரை சேர் புனல் மாதை தாழ்சடை வைத்த சதுரர்
இடம் திகழ் முப்புரிநூலர் துன்பமோடு இன்பமது எல்லாம்
கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மாமலையாரே
கடைமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.111.9) திருஞானசம்பந்தர் பெருமானின் ஒப்பற்ற இரண்டு செயல்களை குறிப்பிடுகின்றார். பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் இறைவனின் அடிமுடி காணமுடியாமல் திகைத்த செயல், கங்கையைத் தனது சடையில் பெருமான் தாங்கியது ஆகிய இரண்டு செயல்கள்; புடைபுல்கி=அணுகி அருகில் சென்று; தங்களது செருக்குற்ற நிலையிலிருந்து விலகி அன்பினால் இறைவனை அணுகி அருகில் சென்று; மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப் படும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் திகைத்து நிற்க, நீண்ட நெடுந்தழலாக இறைவன் நின்றதும்,மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த அகன்ற நீர்ப்பரப்பினைக் கொண்ட கங்கை நதியினை சடையில் தேக்கி வைத்ததும், வியத்தகு செயல்கள் அல்லவா. எனவே சதுரன் என்று மிகவும் பொருத்தமாக இறைவனை சம்பந்தர் இங்கே அழைக்கின்றார்.
அடிமுடி காண்கிலர் ஓர் இருவர்
புடை புல்கி அருள் என்று போற்றி இசைப்பச்
சடையிடைப் புனல் வைத்த சதுரன் இடம்
கடை முடி அதன் அயல் காவிரியே.
பிரம கபாலத்தில் பலி ஏற்கும் செயலைப் புரியும் பெருமானை சதுரன் என்று குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.22.6)திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் கங்கை நதியைத் தனது சடையினில் பெருமான் ஏற்ற செயலும்,கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு இடைவிடாது நடனம் ஆடும் செயலும் குறிப்பிடப்படுகின்றன. இந்த இரண்டு செயல்களைப் புரிவதற்கும் தனி சாமர்த்தியம் வேண்டும் அல்லவா. மேலும் பலரின் மலங்களைத் தான் பிச்சையாக ஏற்றுக் கொண்ட போதும், மலங்களிளிருந்து நீங்கி, அமலனாக இருக்கும் தன்மையும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. பலரின் மலங்களை ஏற்றுக் கொண்ட பின்னரும், மலங்களின் சேர்க்கை இல்லாமல் இருப்பது என்பது இறைவன் ஒருவரால் மட்டுமே செய்யமுடியும் செயல். எந்த உயிரும் தனது வினையை, நுகர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும் என்பது பொதுவான விதி. அவ்வாறு வினைகளை நுகர்ந்து கழிக்கும் தருணங்களில், மேலும் பல வினைகளை நாம் சேர்த்துக் கொள்கின்றோம். இவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படும் வினைகளை ஆகாமிய வினைகள் என்று கூறுவார்கள். ஆனால் பக்குவமடைந்த உயிர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் இன்பங்களையும் துன்பங்களையும் சமமாக பாவித்து, அத்தகைய இன்ப துன்பங்களால் சலனம் ஏதும் அடையாமல் இருப்பதால், அவர்கள் மேலும் மேலும் வினைகளால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவிப்பதால் எந்த விதமான மாறுதலும் அவர்களின் போக்கில் இருக்காது என்பதால், இறைவன் அவர்களது வினைகளைத் தானே வாங்கிக்கொண்டு அவர்களை வினைகளிலிருந்து விடுவிக்கின்றான். வினைகளிலிருந்து விடுவிக்கப் பட்ட அவர்கள் வீடுபேறு அடையும் தகுதியைப் பெறுகின்றனர். இவ்வாறு வினைகளை வாங்கிக் கொண்டு வீடுபேறு அளிக்கும் ஆற்றல் பெருமானைத் தவிர்த்து வேறு எவருக்கும் இல்லை என்பதால், அவரை சதுரன் என்று மிகவும் பொருத்தமாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அழைக்கின்றார்.
அலைசேர் புனலன் அனலன் அமலன்
தலை சேர் பலியன் சதுரன் விதிரும்
கொலை சேர் படையன் குடவாயில் தனில்
நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே
தெங்கூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (2.93.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை கயிலைமலையின் கீழே அடர்த்த செய்தியையும் கங்கை நதியைத் தனது சடையில் பெருமானே மறைத்து வைத்த செய்தியையும் குறிப்பிட்டு, சதுரன் என்று அழைக்கின்றார். எண்ணிலா=அளவற்ற;விறல்=வலிமை; மால்=பெருமை வாய்ந்த; வரை=மலை; கருத்தர்=தலைவர்;
எண்ணிலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்கக்
கண் எலாம் பொடிந்து அலறக் கால் விரல் ஊன்றிய கருத்தர்
தண்ணுலாம் புனல் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்
விண்ணுலாம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே
அரக்கன் இராவணனின் ஆற்றலை அழித்த பெருமானை சதுரர் என்று திருஞான சம்பந்தர் அழைக்கும் பாடல் சீர்காழி தலத்தின் மீது அருளிய (2.122.8)பாடலாகும். புகலி என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. தொலைவித்தல்=தோல்வி அடையச் செய்தல்; உரம்= வலிமை;கரப்பு=மறைப்பு; அழகாரும்=அழகு நிறைந்த; அந்நாள் வரை தோல்வி என்பது என்ன என்று கண்டறியாத அரக்கன், கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது அவனது தலைகளும் தோள்களும் நெரியும் வண்ணம், பெருமான் அரக்கனை மலையின் கீழே அழுத்திய செயல் சதுரப்பாடு உடைய(திறமையான) செயலாக இங்கே கருதப் படுகின்றது. சீர்காழி நகரத்தவர்கள், தங்களது செல்வத்தினை மறைக்காமல், இரப்போர்க்கு இல்லை எனாது கொடுத்து உவந்தனர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
தொலைவு இலாத அரக்கன் உரத்தைத் தொலைவித்தவன்
தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடமாவது
கலையின் மேவும் மனத்தோர் இரப்போருக்குக் கரப்பிலார்
பொழியும் அந்தண் பொழில் சூழ்ந்து அழகாரும் புகலியே
பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.14.6) திருஞானசம்பந்தர் பெருமானை சதுரன் என்று அழைக்கின்றார். கங்கை நதியைத் தனது சடையில் பெருமான் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியையும் பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்ட செய்கையையும் தான் சதுரன் என்று அழைப்பதற்கு காரணமாக கூறுகின்றார். விடை=இடபம், ரிஷபம்; விடைக்கொடி ஏந்தியவன் என்ற பொருள் பட, விருஷபத்வஜன் என்று வடமொழியில் பெருமானின் நாமம் சொல்லப்படுகின்றது. த்வஜம் என்றால் கொடி என்று பொருள். கோழிக் கொடியுடைய முருகப் பெருமானை வாரணத்வஜன் என்று அழைப்பார்கள்; இந்த பாடலில் கூறியுள்ளதைப் போன்று பல பாடல்களில் பெருமானை, வெண்மழு ஏந்தியவன் என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெருமானின் கையில் இருந்த வெண்மழு ஆயுதத்தைக் கண்டு பகைவர்கள் அஞ்சி ஓடியதால், மழு ஆயுதத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் என்றும் பரமனுக்கு ஏற்படவில்லை என்பதால், அவன் ஏந்தியிருக்கும் மழு வெண்மை நிறத்தில் இருக்கின்றது என்று சுவையான விளக்கமும் அளிக்கப் படுகின்றது. துடியிடை=உடுக்கையின் நடுப்பகுதி போன்று மெலிந்த இடையினை உடைய பிராட்டி. கலை=அழகான சேலை மற்றும் அழகிய மேகலை ஆபரணம் என்ற இரண்டு பொருளும் இங்கே பொருந்தும்;
விடையுடைக் கொடி வலன் ஏந்தி வெண்மழுப்
படையுடைக் கடவுள் பைஞ்ஞீலி மேவலான்
துடியிடைக் கலை அல்குலாளோர் பாகமாச்
சடையிடைப் புனல் வைத்த சதுரன் அல்லனே
கபில முனிவரின் சாபத்தால் எரிந்து சாம்பலாக மாறிய தனது முன்னோர்களை கடைத் தேற்றும் பொருட்டு, கங்கை நதியினை பாதாள உலகத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட பகீரதன் பிரமனை நோக்கி தவம் செய்ய, பிரமனும் அவனது தவத்தில் மகிழ்ந்து கங்கையை கீழே செல்லுமாறு பணிக்கின்றார். ஆனால் தேவ லோகத்தை விட்டுச் செல்வதில் விருப்பம் இல்லாத கங்கை, பூமியையே தனது வேகத்தால் புரட்டி கடலுடன் சேர்க்கும் எண்ணத்துடன், மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கத் தலைப்பட்டாள். அப்போது பூமிக்கு நேரவிருந்த அழிவிலிருந்து காக்கும் பொருட்டு கங்கை நதியினை தாங்குவார் எவருமின்றி, பெருமானின் உதவியை பகீரதன் நாட, பெருமானும் அதற்கு இசைந்து தனது சடை முடியில் கங்கையைத் தாங்கினார். இந்த நிகழ்ச்சி பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயரத்திலிருந்து கீழே பள்ளத்திற்கு பாயும் இயல்பு கொண்ட தண்ணீரை, தடுத்து நிறுத்தி தாங்கி தேக்கிக் கொள்வவதற்கு தனித் திறமை வேண்டும் அல்லவா. இந்த திறமை பெருமானிடம் இருந்ததை குறிப்பிட்டு சதுரர் என்று திருஞான சம்பந்தர் அழைக்கும் பாடலை (3.15.2) நாம் இங்கே காண்போம். அல்லரே என்று பாடலை முடித்தாலும், எதிர்மறைக் பொருளாக குறிப்பிடுவதாக கொள்ளாமல் சதுரர் என்று சொல்வதாகவே நாம் பொருள் கொள்ள வேண்டும். விரி கோவணம்=நான்கு வேதங்களாக விரிந்த கோவணம்.
படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்
உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்
விடை உடைக் கொடியர் வெண்காடு மேவிய
சடையிடைப் புனல் வைத்த சதுரர் அல்லரே
ஆலவாய் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.52.4) திருஞானசம்பந்தர் பெருமானை நோக்கி சதுரன் நீ என்று அழைக்கின்றார். புயங்கன்=பாம்பை அணிந்தவன்; மதுரன்=இனியவன்; சம்பு=இன்பம் செய்பவன், இன்பம் அளிப்பவன்; முதிருநீர்=ஒலி எழுப்பியவாறு மிகுந்த வேகத்துடன் பாயும் நீர் என்றும் மேகம் போன்று கருமை நிறம் கொண்ட நீர் என்றும் இரண்டு பொருள்கள் கொள்ளலாம். முந்தியது மிகவும் பொருத்தமாக உள்ளது. முழங்கழல்=கொழுந்து விட்டெரியும் தீயிலிருந்து தீப்பொறிகள் சிதறும் போது எழும் ஒலி;
முதிருநீர் சடைமுடி முதல்வன் நீ முழங்கழல்
அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய்
சதுரன் நீ சதுர்முகன் கபாலம் ஏந்தும் சம்புவே
பெருமானின் வீரச்செயல்களில் தலைசிறந்த வீரச்செயல் திரிபுரத்து கோட்டைகளை எரித்தது அல்லவா. வானில் எப்போதும் பறக்கும் கோட்டைகளை, ஒரே அம்பினால் வீழ்த்தினால் தான் தாங்கள் அழிய முடியும் என்ற பெற்றிருந்த வரத்தின் மமதையால் அனைவரையும் திரிபுரத்து அரக்கர்கள் துன்புறுத்தி வந்தனர்.ஒரு நொடிக்கும் சற்றே குறைவான நேரத்தில் அந்த மூன்று கோட்டைகளையும் எரியூட்டி அழித்த பெருமானை சதுரர் என்று திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.69.2) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். முதுசினம்=மிகுந்த கோபம்; வரை=மேரு மலை; மிகுந்த கோபத்துடன் மேருமலையினை வளைத்து என்று பொருள் கொள்ளவேண்டும். பாடலின் கடை இரண்டு அடிகளில் காளத்திமலையின் வளமை உணர்த்தப் படுகின்றது.எதிரெதிராக உள்ள மூங்கில்கள் ஒன்றுக்கொன்று உராய்வதால் ஏற்படும் நெருப்புப் பொறிகள் மற்றும் காட்டுப் பன்றிகள் நிலத்தினை தோண்டியபோது வெளிப்படும் மணிகள் ஆகியவை ஒளி வீசுவதால் காளத்தி மலையின் இருள் அகல்கின்றது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
முது சின வில் அவுணர் புரம் மூன்று ஓர் நொடி வரையின் மூள எரி செய்
சதுரர் பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை தன்னை வினவில்
எதிர் எதிரே வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத
கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே
திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (3.92.7) பெருமானை சதுரனார் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். தக்கனது வேள்வியைத் தகர்த்த நிகழ்ச்சி இதற்கு காரணமாக கூறப்படுகின்றது. சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமல் வேள்வி செய்வது தவறு என்று தக்கனுக்கு சப்த ரிஷிகள் அறிவுரை கூறியதையும் புறக்கணித்து தக்கன் வேள்வி செய்ய முயன்றான். சப்த ரிஷிகள் அந்த யாகத்தினில் பங்கு கொள்ளாமல் தவிர்த்தனர்.ஆனால் பிரமன் திருமால் உள்ளிட்ட பல தேவர்களும் தக்கனுக்கு அஞ்சியவர்களாக அந்த வேள்வியினில் பங்கேற்றனர். இத்தகைய வல்லமை வாய்ந்த தக்கன் செய்த யாகத்தை முறியடித்து, பங்கேற்ற பலருக்கும் தண்டனை அளித்த பெருமானை சதுரனார் என்று அழைத்தது பொருத்தம் தானே. அக்கு=சங்கு மணிமாலை; புரிவினர்=முறுக்கடைந்த சடை; எலும்பு மலை; அரை=இடுப்பு; திரை=அலைகள் உடைய கங்கை நதி; செம்மை புக்கதோர் சடை=செஞ்சடை;
அக்குலாம் அரையினர் திரை உலா முடியினர் அடிகள் அன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டு பண் முரலும் சோலைத்
திக்கெலாம் புகழ் உறு திருநெல்வேலி உறை செல்வர் தாமே
தில்லை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (5.1.11) சிற்றம்பலவனை சதுரன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். பார்வதி தேவியைத் தனது உடலில் ஏற்றுக்கொண்டுள்ள தன்மை, இடைவிடாது நடனம் ஆடும் தன்மை, அரக்கனை மலையின் கீழே அடர்த்த செய்கை முதலியன குறிப்பிடப்படுகின்றன. மதுரம்=இனிமை; அதிர=நடுங்குமாறு; ஆர்த்து=ஆரவாரித்து; கொள் சேவடி=ஏற்றுக்கொள்ளுதல் செய்த, ஏற்றுக்கொண்ட திருவடி;அரக்கன் புகழ்ந்து பாடியதை ஏற்றுக் கொண்ட; கொள்ளுதல் என்பதற்கு அருளுதல் என்ற பொருள் உண்டு. சேவடி என்ற சொல்லினை, மிதி மற்றும் கொள் என்ற இரண்டு சொற்களுக்கும் பொதுவாக எடுத்துக் கொண்டு மிதி சேவடி மற்றும் கொள் சேவடி என்று பொருள் கொள்ள வேண்டும். அரக்கனது கர்வத்தினை அடக்குவதற்காக மிதித்த திருவடி, பின்னர் அவனது வழிபாட்டினை ஏற்றுக்கொண்டு அவனுக்கு பலவிதமாக அருள் (சந்திரகாசம் என்ற வாள் மற்றும் மூன்று கோடி வாழ்நாள்) வழங்கிய சேவடியாக மாறிய நிலை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. திருமலை என்பது கயிலாய மலையினை குறிக்கும்.கோயில் என்பது தில்லைச் சிதம்பரத்தை குறித்தலைப் போல, திருமலை என்ற சொல் கயிலாயத்தை குறிக்கும். சர்வ சங்கார காலத்தில் (முற்றூழிக் காலத்தில்) அழித்தல் தொழிலில் ஈடுபடும் சிவபிரானின் கோபம், முற்றிலும் தணிக்கப்படுவது, இறைவியின் இனிமையான மொழியால் தான். தனது. கோபம் தணிக்கப்பட்ட பின்னர், இறைவன் மீண்டும் படைத்தல் தொழிலில் ஈடுபடுகின்றான். இளைப்பு ஏதும் இன்றி, இடைவிடாது ஐவகைத் தொழில்களிலும் ஈடுபடும் சிவபிரானை சதுரன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். உமை அம்மையின் மொழியினை, இனிமையான மொழி என்று குறிப்பிடும், அப்பர் பெருமானுக்கு, அந்த இனிய மொழியால் விளைந்த விளைவு நினைவுக்கு வந்தது போலும். தான் நினைத்த மாத்திரத்தில், உலகங்களையும், உலகத்தில் உள்ள பொருட்களையும் படைத்து, உயிர்களையும் பல உடல்களுடன் சேர்த்த, சாமர்த்தியமான செயல் சதுரன் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது.
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம்பலவன் திருமலை
அதிர ஆர்த்தெடுத்தான் முடி பத்து இற
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே
திருமால் பிரமன் உள்ளிட்ட பல தேவர்களும் காண முடியாத வண்ணம் தழற்பிழம்பாக நின்ற சதுரன் என்று பெருமானை குறிப்பிடும் பூந்துருத்தி குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.32.8) அப்பர் பிரான், அந்த சதுரனின் சிவந்த திருவடிகளின் கீழிருந்து திருப்பணி செய்யும் வாய்ப்பினை நாம் பெறுவோம் என்று கூறுகின்றார். அதிரர்=அதிர்ந்து பேசும் தேவர்கள்; இயக்கர்=யக்ஷர்; பொருத= அலைகள் வீச ஆரவாரத்துடன் நதியின் இரு கரைகளிலும் மோதவரும் நீர்ப்பெருக்கு; சதுரன்= சாமர்த்தியம் உடையவன்;
அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
கருத நின்றவர் காண்பரிது ஆயினான்
பொருத நீர் வரு பூந்துருத்தி நகர்ச்
சதுரன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே
பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (5.41.1) அப்பர் பிரான் பெருமானை சடையில் கங்கை வைத்த சதுரர் என்று கூறுகின்றார்.உயரமான இடத்திலிருந்து கீழே பாயும் தன்மை கொண்டது தண்ணீர். உயரமான இடத்தில் இருக்கும் தண்ணீர் நுண்ணிய துளை இருந்தாலும் அதன் வழியாக முதலில் கசிந்து, பின்னர் சிறிது சிறிதாக அந்த ஓட்டையை பெரியதாக்கி, பெருக்கெடுத்து ஓடும் தன்மை கொண்டது. விரைந்து ஓடும் அளவுக்கு அதிகமான நீரினைக் கொண்ட கங்கை நதியை தனது சடையில் அடைத்து வைக்க ஒப்பற்ற சாமர்த்தியம் வேண்டும் என்பதால், அவ்வாறு அடக்கி வைத்த சிவபிரானை சதுரன் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.
உடையர் கோவணம் ஒன்றும் குறைவிலர்
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்
சடையில் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லார்க்கு இல்லை அவலமே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பாடலில் (5.68.6) பெருமானை சதுரர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதன் காரணத்தை நாம் இங்கே காண்போம்.தன்னிடம் போரிடுவார் எவரும் இல்லாத நிலையில் சலந்தரன் சிவபெருமானுடன் போர் புரியும் எண்ணத்துடன் கயிலாயம் நோக்கிச் செல்கின்றான். அவன் வருவதை அறிந்த பெருமான், ஓர் முதியவர் வேடத்தில் அவனை எதிர்கொள்கின்றார். தரையில் தனது கால் விரலால் சக்கரம் வரைந்த பெருமான், அரக்கனை நோக்கி அந்த சக்கரத்தினை பேர்த்து எடுக்கும் வல்லமை உள்ளதா என்று அரக்கனிடம் கேட்க, அரக்கனும் அந்த சக்கரத்தினை பேர்த்து எடுக்கின்றான்.எடுத்த பின்னர் தனது தலைக்கு மேலே அரக்கன் தூக்கிய போது அந்த சக்கரம் கூர்மை நிறைந்த ஆயுதமாக மாறி அவனது உடலினை கிழித்துக் கொன்று விடுகின்றது. இத்தகைய வலிமை வாய்ந்த ஆயுதத்தை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல், திருமாலின் பக்திக்கு பரிசாக பெருமான் அளித்து விடுகின்றார். இத்தகைய வல்லமை வாய்ந்த ஆயுதத்தை பரிசாக அடுத்தவர்க்கு அளிப்பதற்கு துணிந்த செய்கை நடந்தேறியது, தேவைப்பட்டால் அந்த ஆயுதம் இல்லாமலும் தான் எவரையும் வென்று விடலாம் என்ற நம்பிக்கை பெருமானுக்கு இருந்ததால் தானே. இந்த நம்பிக்கையை தனித் திறமையாக மதித்து சக்கரம் அருள் செய்த சதுரர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் நாம் நயமான கற்பனை ஒன்றையும் உணரலாம்.அந்தி நேரத்து செவ்வானத்தின் நிறம் பெருமானின் மேனி நிறம் என்று பல திருமுறை பாடல்களில் கூறப்படுகின்றது. அப்பர் பிரான் இந்த பாடலில் ஒரு படி மேலே செல்கின்றார். அந்திச் செவ்வானம் அதே நிறத்தில் எப்போதும் இருப்பதில்லை. மாலையில் படிப்படியாக குறைந்து இருள் பரவுகின்றது; காலையில் படிப்படியாக குறைந்து முழு வெளிச்சம் தோன்றுகின்றது. இந்த காட்சி அன்றாடம் தோன்றும் காட்சி. இந்த காட்சியைக் கண்ட அப்பர் பிரானின் கற்பனை விரிகின்றது. பெருமானின் மேனி நிறத்துடன் போட்டியிடும் அந்திச் செவ்வானம், பெருமானிடம் தோற்று அழிகின்றது என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
செக்கர் அங்கு அழி செஞ்சுடர்ச் சோதியார்
நக்கர் அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார்
வக்கரன் உயிர் வவ்விய மாயற்குச்
சக்கரம் அருள் செய்த சதுரரே
காசனைக் கனலை என்று தொடங்கும் குறுந்தொகைப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (5.93.2) அப்பர் பிரான் இறைவனை சந்திக்கண் நடமாடும் சதுரன் என்று அழைக்கின்றார். சந்தி என்பது இங்கே முன்னிரவும் பின்னிரவும் சந்திக்கின்ற நள்ளிரவை குறிப்பிடுகின்றது. நள்ளிரவு என்பது இங்கே இருளில் மூழ்கிக் கிடக்கும் ஊழிக் காலத்தை குறிக்கின்றது. முற்றிலும் இருள் சூழ்ந்த நிலையில் நடனமாடுவதற்கு தனி திறமை வேண்டும் என்பதால், அத்தகைய திறமை உடைய பெருமானை சதுரன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சிவபுராணத்தில் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மணிவாசகர் குறிப்பிடுவதும் முற்றூழிக் காலத்து இருளையே. புந்தி=அறிவு; புராணன்=மிகவும் பழமையானவன்;
புந்திக்கு விளக்காய புராணனைச்
சந்திக் கண் நடமாடும் சதுரனை
அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை
வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே
திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பாடலில் (6.5.9) அப்பர் பிரான் சந்தியாய் நின்ற சதுரா போற்றி என்று கூறுகின்றார்.சிந்தையாய்=அடியார்களின் சிந்தனையாய்; புந்தி= ஞானம்
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி சீபர்ப்பதம் சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய் புண்டரீகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி
காளத்தி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் (6.08) முதல் பாடலில் அப்பர் பிரான் பெருமானை மாச்சதுரன் என்று அழைக்கின்றார்.பெருமான் அணிந்திருந்தது நாகம், பன்றிக் கொம்பு. எலும்பு மாலை முதலியன. இவற்றை விற்றால் வாங்குவார் யார். எனவே தான், தனது உணவுக்காக விற்கக்கூடிய நிலையில் தன்னிடம் பொருள் ஏதும் இல்லாத வறியவன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். நல்கூர்ந்தான்=வறுமை உடையவன்:பொழில்=சோலைகள் சூழ்ந்த ஏழு உலகங்கள்; பொய்யாது=இடைவிடாது; மாசு ஒன்றில்லா=அழியும் தன்மையாகிய குற்றம் இல்லாத; தாங்குதல்=உலகம் இயங்குமாறு தாங்குதல்; உலகனைத்தையும் தனது உடைமையாகக் கொண்டுள்ள பெருமானை விடவும் பெரிய செல்வந்தர் உலகினில் எவர் உள்ளார்.ஆனால் அத்தகைய செல்வம் உடையவனாக இருந்தும், ஏதும் இல்லாத வறியவன் போல் பிச்சை ஏற்பவன் போன்ற வேடத்துடன் நடிப்பதை பெருமானின் திறமையாக அப்பர் பிரான் கருதுகின்றார் போலும்.
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சிக் கம்பன் காண் பிச்சை அல்லால்
மற்று ஊண் ஒன்று இல்லாத மாச்சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்றில்லா
பொற்றூண் காண் மாமணி நற்குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற
கற்றூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண்ணுளானே
மேலும் வேறு எந்த உணவினையும் ஏற்காமல் இருந்த திறமைசாலி என்று கூறுவதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஏனையோருக்கு பிச்சை இடுவதால் நமக்கு, அவர்களுக்கு உதவிய புண்ணியம் மட்டும் தான் கிடைக்கும். ஆனால் இறைவனுக்கு பிச்சை இடுவதால் நமக்கு கிடைப்பதே வேறு. இறைவன் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை என்பதையும், உயிர்கள் தாங்கள் கொண்டுள்ள ஆணவம் முதலான மலங்களையே இறைவன் ஏற்றுக் கொள்வதையே பிச்சை என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர் என்பதையும் நாம் அறிவோம். மேலும் அத்தகைய பிச்சைகளை அவனிடம் இடவல்ல உயிர்கள் தங்களது வினைகள் முற்றிலும் களையப்பட்டு பிறவாத தன்மை அடைகின்றனர் என்பதை விளக்கும் பல பாடல்களை நாம் திருமுறையில் காண்கின்றோம். பிச்சையாக உயிர்களின் மலங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக முக்திச் செல்வத்தை அளிக்கும் பெருமானை விடவும் திறமைசாலி வேறு எவர் உள்ளனர். மேலும் முக்திச் செல்வத்தை பெருமானைத் தவிர வேறு எவர் அளிக்க வல்லார். பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்படாமல் இருக்கும் ஒருவன் தானே, அத்தகைய நிலைக்கு மற்றவரை அழைத்துச் செல்ல முடியும். எனவே தான் அப்பர் பிரான் இங்கே மாச்சதுரன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.
ஊழிக்காலத்தில் அனைவரும் இறந்த பின்னர், அவர்களது உடல்கள் எரிந்ததால் ஏற்பட்ட சாம்பலைத் தனது உடலில் பூசிக்கொண்டு, தன்னைத் தவிர வேறு எவரும் நிலையில்லை என்பதை உணர்த்தும் வகையில் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு இருக்கும் நிலை, என்றும் அழியாது இருக்கும் நிலை,சிவபெருமானது திறமையை, பெருமையை உணர்த்துகின்றது என்பதால், சதுரன் என்று நீற்றினைப் பூசிய செய்கையுடன் அப்பர் பிரான் இணைத்துச் சொல்லும் பாடல் (6.32.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் பிறவிப் பிணியிலிருந்து தன்னை விடுவித்து இனிமேல் பிறவாமலும் சாகாமலும் காத்த பெருமான் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த செயலும் வேறு எவரும் செய்தற்கு அரிய செயல் என்பதால் இதனையும் சதுரனின் செயலாகவே கொள்ளலாம். புத்தேளிர்=வானவர்கள்; சே=எருது, இடபம்; சதுரன்=திறமை படைத்தவன்; சாவாமே காத்தல்=பிறப்பு மற்றும் இறப்பினைத் தவிர்ப்பதன் மூலம், இறப்பிலிருந்து காப்பாற்றும் தன்மை. வெண்சங்கு போன்ற வெண்மை நிறத்தில் உள்ள திருநீற்றினை பூசியவன் என்று பெருமானை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கொத்த நீற்று எம் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி
வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.53.2) சலந்திரனை பிளப்பித்த சதுரர் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. சமரம்=போர்; குறைத்த=அழித்த; நமன்=இயமன்; தனக்கு இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் பயந்து ஓடியதால் தன்னை எதிர்த்து போரிடுவார் எவரும் இல்லாத நிலையில், தனது தோள் தினவு காரணமாக, சிவபெருமானுடன் போர் செய்ய வேண்டும் என்று திரிந்தவன் அரக்கன் சலந்தரன். இதனை உணர்த்தும் வண்ணம் போர் வேண்டினான் என்று அரக்கனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். குழகர்=இளமையும் அழகும் பொருந்தியவர். ஒருகால்=ஒரு சமயத்தில், பண்டொரு நாளில்; குழகர்=அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவர்;
சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும்
நமனை ஒருகால் குறைத்த நாதர் போலும் நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும்
குமரனையும் மகனாக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும்
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே
கயிலாயம் மீது அருளிய போற்றித் திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.57.2) அப்பர் பிரான் பெருமானை சதுரா என்று அழைக்கின்றார்.அதிர்தல்=நடுங்குதல்; அதிரா=நடுங்காத; இறைவனைத் தவிர வேறு எவராலும் நீக்குதற்கு அரிய வினைகள் என்பதை உணர்த்தும் பொருட்டு நடுங்காத வினைகள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அதிரா என்ற சொல்லினை உடன்பாட்டு சொல்லாக கருதி அதிரா வினைகள் என்பதற்கு உயிர்களை நடுங்க வைக்கும் வினைகள் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். வேறு எவராலும் நீக்க முடியாத வினைகளை நீக்கும் வல்லமை வாய்ந்த ஒருவனை, எவராலும் அளிக்க முடியாத தெளிவான பொருளினை, மௌன மொழியால், சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும், வேதங்களின் உட்பொருளாக இருந்த கருத்தினை விளக்கிய ஒருவனை, சதுரன் என்று அழைப்பது தானே பொருத்தம். மேலும் உலகமும் உலகிலுள்ள அனைத்து உடல்களும் அனைத்து உலகப் பொருட்களும் அழிந்து எரிந்து சாம்பாலாக மாற, அந்த சாம்பலை அணிந்து கொண்டு தான் ஒருவனே என்றும் நிலையானவன் என்று உணர்த்தும் வல்லமை வேறு எவருக்கும் இல்லை அல்லவா. இவ்வாறு முற்றிலும் அழிந்த உலகத்தினை, கருவோ விதையோ தேவைப்படாமல் மீண்டும் தோற்றுவிக்கும் ஆற்றல் படைத்தவன் அவனொருவன் தானே. மேலும் இந்த பாடலில், பக்குவமடைந்து முக்திவுலகம் சென்றடையும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுக்காத வண்ணம்,அந்த உயிர்களுக்கு அருள் புரியும் ஆற்றல் படைத்தவன் இறைவன் என்பதை மீளா அருள் செய்வாய் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். இந்த மூன்று செயல்களையும் செய்யும் ஆற்றல் படைத்தவன் அவனொருவன் தான் என்பதால் சதுரன் என்ற அடைமொழி இந்த பதிகத்தில் குறிப்பிடப்படும் அனைத்துச் செயல்களுக்கும் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளதை நாம் உணரலாம்.
அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆலநிழற் கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசுந் தலைவா போற்றி
எதிரா உலகம் அமைப்பாய் போற்றி என்றும் மீளா அருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
வெண்ணியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.59.4) இறைவனை அப்பர் பிரான் சதுரனார் என்று கூறுகின்றார். கங்கை நதியைத் தனது சடையில் பெருமான் வைத்துள்ள செயலும், தக்கனது வேள்வியினை முற்றுப்பெறாத வண்ணம் தடை செய்ததும், தனது இடுப்பினில் கச்சாக நாகத்தை இறுகக் கட்டியுள்ள தன்மையும், ஊர் ஊரூராக பலிக்குத் திரியும் செயலும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றன. பொதுவாக தண்ணீர்,உயரத்திலிருந்து தாழ்வான பகுதிக்கு ஓடும் இயல்பினை உடையது. அத்தகைய இயல்பினைக் கொண்ட தண்ணீரை சடையில் அடக்கி வைப்பதே கடினம்.மேலும் மிகுந்த வெள்ளப் பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினை, சடையினில் அடக்கி நிறுத்தி வைப்பது மிகவும் கடினமான செயல் என்பதால், சதுரன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த செயல் மிகவும் வித்தியாசமான செயல் தானே. அதனால் தான் பாடலின் முடிவினில் விகிர்தன் என்றும் பெருமானை அப்பர் பிரான் அழைக்கின்றார்.
சடையேறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன் தன் பெருவேள்வி தடை செய்தாரும்
உடையேறு புலி அதள்மேல் நாகம் கட்டி உண்பலிக்கு என்றூரூரின் உழிதர்வாரும்
மடையேறிக் கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும்
விடையேறு வெல்கொடி எம்விமலனாரும் வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே
கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (6.65.10) இறைவனை சதுரன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொன் இசை, மின் இசை ஆகிய சொற்களில் உள்ள இசை என்ற சொல் உவமை உருபு; பொன் போன்று என்றும் மின் போன்றும் என்றும் பொருள் கொள்ள வேண்டும். தனக்கு இடர் செய்ய நினைத்த அரக்கனுக்கும் வரங்கள் அளித்து நன்மை புரிந்த தன்மை இந்த பாடலில் சதுரனின் செய்கையாக கருதப்பட்டு கூறப்பட்டுள்ளது போலும். பகைவனுக்கும் அருள் புரியும் நன்னெஞ்சம் எத்தனை பேருக்கு அமைந்துள்ளது.
பொன் இசையும் புரிசடை எம்புனிதன் தான் காண் பூதகண நாதன் காண் புலித்தோலாடை
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண்குழைக் காதில் சதுரன் காண்
மின்னிசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன் தன் வாயில்
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே
குடந்தை கீழ்க்கோட்டம் திருத்தாண்டகத்து பாடல் ஒன்றினில் (6.75.9) அப்பர் பிரான், பெருமான் ஆடும் நடனத்தை சதுர நடனம் என்று கூறுகின்றார். சங்கு அரவக் கடல் என்ற சொல்லினை சங்கு கடல் மற்றும் அரவக் கடல் என்று பிரித்து பொருள் காணவேண்டும். அரவம் ஓசை என்ற பொருளில் இங்கே வருகின்றது. சங்கக்கடல் என்றால் சங்குகள் காணப்படும் நீர் நிறைந்த கடல். முகடு=உச்சி; முகடு தட்ட=அண்டத்தின் உச்சியைத் தொடும் வண்ணம்.கடலின் நீர்த்துளிகள் அண்டத்தின் உச்சியில் பொருந்தும் வண்ணம் எழுப்பிவிடும் வகையில் நிலம் அதிர பெருத்த ஓசையுடன் கைகளை வீசி ஆடப்படும் நடனம் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. பெருமான் தனிச் சிறப்பு வாய்ந்து இருப்பதைப் போன்று அவர் ஆடும் நடனமும் தனிச் சிறப்புடன் அமைந்துள்ளது. சதுர நடனம் என்பது ஒரு வகையான நடனம். இரண்டு கால்களையும் சதுரம் உருவம் தோன்றும் வண்ணம் இணைத்து ஆடப்படும் நடனம்.
பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூணநூல் புனிதர் போலும்
சங்கு அரவு கடல் முகடு தட்ட விட்டுச் சதுர நடம் ஆட்டுகந்த சைவர் போலும்
அங்கு அரவத் திருவடிக்கு ஆட்பிழைப்பத் தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே
கொங்கு அரவச் சடைக் கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே
திருவாசகம் அடைக்கலப்பத்து பதிகத்தின் மூன்றாவது பாடலில், மணிவாசகர் பெருமானை சதுரப் பெருமான் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானின் நான்கு செயல்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. தனது பிறவியை வேரறுத்தது, தன் (பெருமான்) பால் பிச்சேற்றியது, தனது மனதினில் குடி புகுந்தது,மலரோனும் நெடுமாலும் திருமுடியும் திருவடியும் காணாத வகையில் நின்றது என்பன அந்த நான்கு செயல்கள்; சிவபெருமான் தவிர்த்து வேறு எவராலும் பிறவிச் சங்கிலியை அறுக்க முடியாது என்பதை நாம் அறிவோம். பிரமன் நெடுமால் காண முடியாத வகையில் நின்றதும் வேறு எவரும் செய்யாதது என்பதையும் நாம் அறிவோம். இந்த இரண்டு செயல்களுமே சதுரனின் செயல்களாக பல பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன. அமைச்சராக பணிபுரிந்து வந்த தனது வாழ்க்கையின் போக்கினை மாற்றி, பித்தன் போல் பெருமான் பால் அன்பு வைத்து திரியும் நிலையினை அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். எவ்வளவு முயற்சி செய்தாலும் நம்மால் அடைய முடியாத நிலை அல்லவா. பெருமான் நமது மனதினில் புகுந்து கொள்வதும் நமது முயற்சியால் நடைபெறும் காரியம் அல்ல. எனவே இந்த மாற்றத்தை நிகழ்த்திய பெருமானை சதுரன் என்று அடிகளார் அழைக்கின்றார் போலும்.
பெரும் பெருமான் என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சு
தரும் பெருமான் சதுரப் பெருமான் என் மனத்தினுள்ளே
வரும் பெருமான் மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற
அரும் பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே
திருவாசகம் திருவார்த்தைப் பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருந்துறைப் பெருமானை சதுரன் என்று குறிப்பிடுகின்றார். சாத்து=கூட்டம்;வணிகர் கூட்டத்தோடு பற்பல குதிரைகளுடன் வந்த பெருமான், தனது அழகினால் மதுரை மங்கையரைக் கவர்ந்த பெருமான் சதுரனாக இருந்தான் என்று அடிகளார் கூறுகின்றார். அவன் பால் காதல் கொண்டு, அவனை அடைவோமா என்ற ஏக்கத்தினால் உடல் மெலிய, அவனைக் கண்ட மதுரை மங்கையர்களின் வளையல்கள் கழன்றன. இவ்வாறு வளையல்கள் கழல காரணமாக இருந்தவரின் மீது அந்தச் செய்கையை ஏற்றிச் சொல்லி, வளை கவர்ந்தவன் என்று கூறுவது இலக்கிய மரபு.
அங்கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனி வந்த
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இகபரம் ஆயதோர் இன்பம் எய்தச்
சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளி அன்று
மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த வகை அறிவார் எம் பிரான் ஆவாரே
மேற்கண்ட பாடலுக்கு திருவிளையாடல் புராணத்து வளையல் விற்ற படலத்துடன் இணைத்து சிலர் பொருள் காண்கின்றனர். பிச்சைப் பெருமானாக வந்த சிவபிரானின் அழகில் மயங்கிய தாருகவனத்து பெண்கள், தங்களது வளைகள் கழல்வதும் உடை நெகிழ்வதும் அறியாதவர்களாக, பெருமான் பால் காதல் மயக்கம் கொண்டிருந்தனர் என்பது புராண வரலாறு. நடந்ததை அறிந்த முனிவர்கள், மதுரை நகரில் வணிக குலத்து பெண்களாக பிறக்க வேண்டும் என்று அவர்களுக்கு சாபம் இட்டதாகவும், அவர்களின் சாபத்தை நீக்கும் வண்ணம் பெருமான் வளையல் வியாபாரியாக வந்ததாகவும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் கூறுகின்றார். சங்கம் என்ற சொல் வளையலை குறிப்பதாக பொருள் கொண்டு, தாருகவனத்தில் இருந்தபோது அவர்கள்,பெருமான் பால் தீராத காதல் கொண்டு அந்த காதல் நிறைவேறாத ஏக்கத்தினால் உடல் மெலிந்து கைகள் மெலிந்து கழன்று இழந்த வளையல்களை,மதுரை நகரில் அவர்களுக்கு சேர்த்ததாக அடிகளார் உணர்த்துகின்றார் என்று சுவையான விளக்கம் அளிக்கின்றனர். தங்களது கணவர் அல்லாத வேறு ஆடவரை மனதினால் நினைத்தாலும் கற்பு நிலை தவறியது என்று கருதிய காலத்தில் வாழ்ந்தவர்கள் தாருகவனத்து மகளிர். அந்நாள் வரை கற்புடன் வாழ்ந்து வந்தமையால், அவர்களது கற்பு ஒரு கவசம் போன்று அவர்களது கணவர்களை காத்தது என்று கூறுவார்கள். அவ்வாறு இருந்த மகளிர், பெருமானது அழகால் கவரப்பட்டு தாங்கள் செய்து கொண்டிருந்த செயல்களை நிறுத்திவிட்டு, தங்களது உடை நெகிழ்வதையும், வளைகளும் மேகலையும் கழல்வதையும் உணராத வண்ணம், பெருமானை பின் தொடர்ந்தார்கள் என்றால், பெருமானது அழகும் திறமையும் ஒப்பற்றது தானே.
இறுதியாக பெருமானை விடவும் தான் சதுரன் என்று நகைச்சுவையாக மணிவாசகர் சொல்லும் பாடலை இங்கே சிந்திக்கலாம். இந்த பாடல் கோயில் திருப்பதிகத்தில் வருகின்றது. இந்த பாடலில் அடிகளார் தனக்கும் பெருமானுக்கும் இடையே இருந்த பண்டமாற்று வாணிபத்தை குறிப்பிடுவதை நாம் உணரலாம். தன்னைக் கொடுத்து இறைவனை அடிகளார் பெற்றுக் கொண்ட தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. எப்போதும் பெருமானை நினைத்து உருகிய அடிகளார் பெருமானின் சிந்தையில் புகுகின்றார். அதன் விளைவாக பெருமான் அடிகளாரின் சிந்தையினில் புகுகின்றார். பெருமானின் தன்மை யாது என்பதை சற்று சிந்திப்போம். ஒப்பற்ற எட்டு குணங்களை உடையவர் பெருமான். ஒரே நேரத்தில் உலகில் நடக்கும் அனைத்தையும் உணரும் ஆற்றலும், தான் நினைக்கும் எதையும் செய்யவல்ல ஆற்றலும், இயல்பாகவே பாசநீக்கமும் உடையவராக இருத்தலும், ஐந்து புலன்களின் ஆட்சிக்கு உட்படாமல் இருத்தலும், பெருமானின் குணங்களாக திகழ்கின்றன. இந்த குணங்களுக்கு நேர் எதிர்மாறான குணங்களை உடையது மனித ஆன்மா.எனவே அடிகளார் இழந்ததை விடவும் பெற்றது அதிகமாக இருப்பதால் தான் பெருமானை விடவும் சதுரனாக தான் திகழ்வதை மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டுகின்றார். இவை அனைத்தும் எதனால் நிகழ்ந்தது என்பதை அடிகளாரே இந்த பாடலில் உணர்த்துகின்றார். .தனது சிந்தனையை, பெருமான் தான் உறையும் கோயிலாக ஏற்றுக் கொண்டு புகுந்தமையால் தான் என்று அடிகளாரே இந்த பாடலில் உணர்த்துவதை நாம் காணலாம். அதன் விளைவாக ஏற்பட்ட அந்தமிலா ஆனந்தத்தையும் அடிகளார் குறிப்பிடுகின்றார்.
தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னைச் சங்கரா ஆர் கொலோ சதுரர்
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே
எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே
பொழிப்புரை:
இனிய ஒலியும் இசையும் எழும் வண்ணம், தனது கரத்தினில் பொருந்திய யாழ் இசைக்கருவியை மீட்டும் சதுரனாகிய பெருமான் உறைகின்ற நகரம் சிவபுரம் ஆகும். நிலவளம் மற்றும் நீர்வளம் காரணமாக அழகுடன் திகழும் இரண்டு கரைகளையும், தனது அலைக் கரங்களால் மோதும் பழமையான காவிரி நதியின் தென்கரையில் விளங்கும் தலம் சிவபுரம் ஆகும்.
பாடல் 2:
அன்று அடல் காலனைப் பாலனுக்காய்
பொன்றிட உதை செய்த புனிதன் நகர்
வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே
விளக்கம்:
இந்த பாடலில் தல வரலாறு உணர்த்தப் படுகின்றது. பொதுவாக பன்றி என்றால் கருமை நிறத்தில் இருப்பதை நாம் காண்கின்றோம். ஆனால் திருமால் எடுத்ததோ வெண்மை நிறம் கொண்ட பன்றி அவதாரமே. இந்த செய்தியை மிகவும் தெளிவாக திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. சிவபுரம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.87.6) அப்பர் பிரான் வெள்ளைப் பன்றி பிரியாது நாளும் வழிபட்ட பெருமான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். சிவன்=இன்பம் விளைவிப்பவன்; நிலமாகவும், நிலத்தில் வளரும் பயிராகவும், பயிரினை வளர்க்கும் மழைத் துளியாகவும், அந்த மழைத் துளியில் உள்ள நீராகவும் உள்ளவனும், தனது சடை மேல் நீரினை தேங்கச் செய்து நிறுத்தியவனும், நாடுகளை ஆளும் மன்னர்கள் தங்களது மனதினில் இறைவனை நினைத்து வணங்கும் தன்மையால் அவர்கள் ஓங்கி வளர்வதற்கு அருள் புரிபவனும், சந்திரனின் பிறை போன்று வெண்மையாகவும் வளைந்தும் காணப்பட்ட பற்களை உடைய பன்றியாக அவதாரம் எடுத்த திருமால் நீங்காமலும் பிரியாமலும் வழிபட்ட பெருமையை உடையவனும், சிறப்பான தேவர்களுக்கெல்லாம் இன்பம் அளிக்கும் தன்மை கொண்டுள்ள சிவபெருமான், சிவபுரம் என்று அழைக்கப்படும் தலத்தின் செல்வனாக விளங்குகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பாரவன் காண் பாரதனில் பயிரானான் காண் பயிர் வளர்க்கும் துளியவன் காண்
துளியில் நின்ற
நீரவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நிலவேந்தர் பரிசாக நினைவுற்று ஓங்கும்
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளைப் பன்றிப் பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும்
சீரவன் காண் சீருடைய தேவர்க்கெல்லாம் சிவனவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே
திருஞானசம்பந்தர் சிவபுரம் சென்றதை குறிப்பிடும் பெரியபுராணப் பாடலில் சேக்கிழார் வெள்ளேனம் என்று திருமாலின் அவதாரமாகிய வராகத்தை குறிப்பிடுகின்றார். அடல்=வலிமை வாய்ந்த;
அங்கண் இனிதமரு நாள் அடல் வெள்ளேனத்து உருவாய்ச்
செங்கண் நெடுமால் பணியும் சிவபுரத்துச் சென்றடைந்து
கங்கைச் சடைக் கரந்தவர் தம் கழல் வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம் முன் நின்று போற்றிசைத்தார்
பாலன்=சிறுவன் மார்க்கண்டேயன்; பொன்றிட=அழிய; வென்றி கொள்=அரக்கன் இரண்யாட்சனால் ஒளித்து வைக்கப் பட்ட பூமியை மீட்கவேண்டும் என்ற தனது முயற்சியில் வெற்றி கொண்ட வராகர்; எயிறு=கொம்பு, இங்கே கோரைப் பற்கள் என்று பொருள் கொள்ளவேண்டும்.
பொழிப்புரை:
பண்டைய நாளில், சிறுவன் மார்க்கண்டேயன் செய்து வந்த சிவவழிபாட்டினுக்கு இடையூறாக, சிறுவனது உயிரைப் பறிக்க வந்த காலன் அழியும் வண்ணம் அவனை, தனது காலால் உதைத்து வீழ்த்திய புனிதர் சிவபெருமான், உறையும் நகர் சிவபுரம் ஆகும். அரக்கன் இரண்யாட்சன் ஒளித்து வைத்திருந்த பூமியை மீட்கவேண்டும் என்ற தனது முயற்சியில் வெற்றி கொண்ட வராகர் (திருமால் எடுத்த ஒரு அவதாரம்), வெண்மை நிறத்தினில் கோரைப் பற்களை உடைய வராகர், பண்டைய நாளில் சிவபுரம் தலம் சென்றடைந்து பெருமானின் திருவடிகளை வணங்கினார்.
பாடல் 3:
மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலை மல்க உரி செய்த குழகன் நகர்
அலை மல்கும் அரசிலி அதன் அயலே
சிலை மல்கு மதிள் அணி சிவபுரமே
விளக்கம்:
மறுகிட=அச்சத்தால் கலக்கம் கொள்ள; மதகரி=தாருகவனத்து முனிவர்களால் ஏவிவிடப்பட்ட மதம் கொண்ட ஆண் யானை; குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே பொருந்திய சிவபெருமான்; அலை மல்கு=அலைகள் நிரம்பிய; சிலை மல்கு மதிள்=மலை போன்று உயர்ந்து வலிமையுடன் காணப்படும் மதிள்கள்;உயர்ந்த மதில்களால் பாதுகாக்கப்பட்ட தலம் என்று குறிப்பிடுவதால், திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்தில், இந்த தலம் சிறந்த நகரமாக இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. இதே தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் (புவம்வளி கனல்புனல் என்று தொடங்கும் பதிகம்–1.21) அனைத்துப் பாடல்களிலும் திருஞானசம்பந்தர் சிவபுர நகர் என்று குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது.
இந்த பாடலில், யானையின் தோலை பெருமான் உரித்த போது, உமையன்னை அச்சமடைந்து கலக்கம் கொண்ட செய்தி காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி மிகவும் அதிகமான திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. பெருமான் ஆலகால நஞ்சினை உட்கொண்ட போதும், சுடுகாட்டினில் நடமாடும் போதும், எலும்பு மாலை முதலியன பூண்டுகொண்ட போதும், இராவணன் கயிலாய மலையினை அசைத்த போதும், அன்னை அச்சம் கொண்டதாக தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. சுந்தரர் தனது கச்சி ஏகம்பம் திருப்பதிகத்தின் பாடல் ஒன்றினில், கம்பை ஆற்றின் வெள்ளம் பெருகிய போது, தான் வழிபட்டுக் கொண்டிருந்த இலிங்கத் திருவுருவம் அந்த வெள்ளத்தில் கரைந்து விடுமோ என்று அச்சம் கொண்டு, இலிங்கத்தை பார்வதி தேவி இறுகத் தழுவியதாக குறிப்பிடுகின்றார். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும்.
கண்டியூர் வீரட்டம் தலத்து பதிகத்து பாடலில் (3.38.4) உமையன்னை அச்சம் கொள்ளும் வண்ணம், யானையின் தோலை பெருமான் போர்த்தது ஏன் என்ற கேள்வியை ஞானசம்பந்தர் கேட்கின்றார். பழைய அடியார்கள் என்று பரம்பரை பரம்பரையாக, வாழையடி வாழையாக, பெருமானது அடியார்களாக இருப்பவர்களை குறிப்பிடுகின்றார். கண்டியூர் வீரட்டத்து அடியார்களை பழைய தொண்டர்கள் என்று குறிப்பிட்டமையால், தன்னை புதிய தொண்டன் என்று உணர்த்தி, தனக்கு விளக்கம் அளிக்குமாறு திருஞானசம்பந்தர் வேண்டுகின்றார். தோடுடைய செவியன் என்று தொடங்கும் முதல் பாடலின் விளக்கத்தில் கூறிய வண்ணம், ஞானப்பால் அருந்திய மூன்று வயதுக் குழந்தை அன்றே சிவஞானம் அனைத்தும் அடையப்பெற்றது. எனவே, தான் கேட்கும் கேள்வியின் விடையினை அறியாதவர் அல்ல திருஞானசம்பந்தர்; எனினும் இந்த பதிகத்தின் பல கேள்விகளும் நம்மைப் போன்றவர் பயனடையவேண்டும் என்ற நோக்கத்தில் தொடுக்கப் பட்டவை. கழை=மூங்கில்; குன்றின் மங்கை=பார்வதி தேவி; புழை=துளை, துவாரம்; புழை நெடுங்கை=துளை உடையதும் நீண்டதும் ஆகிய துதிக்கை; பொதுவாக யானை சாதுவான விலங்கு என்பதால் நன்மா என்று கூறினார். கழை என்ற சொல்லுக்கு வரை என்று பொருள் கொண்டு, குடகு மலையிலிருந்து பெருகி வரும் காவரி நதி என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
பழைய தொண்டர்கள் பகருமின் பலவாய வேதியன் பான்மையைக்
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர் வீரட்டன்
குழையொர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுறப்
புழை நெடுங்கை நன்மா உரித்து அது போர்த்து உகந்த பொலிவதே
கண்டியூர் வீரட்டம் பதிகத்து பாடலில் திருஞானசம்பந்தர் எழுப்பிய கேள்விக்கான விடையை அப்பர் பிரான் மிகவும் அழகாக விடை அளிப்பதை கீழ்க்கண்ட பாடலில் காணலாம். யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது பண்டைய நாளில் இருந்த நம்பிக்கை. சீவக சிந்தாமணி நூலும் இதனை குறிப்பிடுகின்றது. எனவே தான் உமையன்னையும், பெருமான் குருதி சொட்டிக் கொண்டிருந்த யானையின் பசுந்தோலை, பெருமான் தனது உடல் மீது போர்த்துக் கொண்ட போது அச்சம் கொண்டு நடுங்கியதாக சொல்லப் படுகின்றது. பெருமானோ, ஈரப்பசை மிகுந்த யானைத்தோலின் தன்மை குறித்து கவலை ஏதும் கொள்ளாமல், ஏனையோரிலிருந்து தான் மாறுபட்டவன் என்று உணர்த்தும் வண்ணம், மற்றவருக்கு கேடு விளைவிக்கும் யானையின் பசுந்தோல் தன்னை ஒன்றும் செய்யாது என்பதை உணர்த்தும் பொருட்டு, யானையின் பசுந்தோலைப் போர்த்துக் கொண்டதாக அப்பர் பிரான் உணர்த்தும் பாடலை நாம் இங்கே காண்போம். பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால விடமே அவரை ஒன்றும் செய்யாத போது, யானையின் தோல் எவ்வாறு அவருக்கு கேட்டினை விளைவிக்கும். அதனால் தான், உமையன்னை அச்சம் கொண்ட போதும், பெருமான் அன்னையின் அச்சத்தை பொருட் படுத்தாதவாறு யானையின் தோலைப் போர்த்துக் கொண்டே நகைத்ததாகவும், பின்னர் அன்னையின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அகற்றியதாகவும் இந்த பாடலில் (4.32.1) அப்பர் பிரான் நயமாக கூறுகின்றார்.
உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கல் நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலராகித் தாமும்
சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே
அலக்கம்=நடுக்கம்; எயிறு=பல்; உதிரம்=இரத்தம்; இந்த பாடலில் யானையின் தோலை உரித்தபோது தேவி நடுங்கியதாக அப்பர் பிரான் கூறுகின்றார்.கருநிறம் கொண்ட யானையை ஆணவ மலத்தினுக்கும் அஞ்ஞானத்திற்கும் ஒப்பிடுவது வழக்கம். அஞ்ஞானம் ஞானத்தை வரவிடாமல் தடுப்பதால் ஞானமே உருவாகிய உமையம்மை அஞ்ஞானத்திற்கு அச்சப்படுவது இயற்கையே. நடுக்கத்தால் பல முறை தனது விரல்களை தேவி உதறியதாக அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உமை அம்மையின் நடுக்கத்தைக் கண்டு சிவபெருமானார் தனது பற்கள் வெளியே புலப்படும் வண்ணம் சிரித்ததாகவும், சிறிது நேரம் கழித்து தனது உடல் மீது போர்த்து இருந்த யானையின் தோலை கழற்றியதாகவும் இங்கே நயமாக கூறப்படுகின்றது.
பெருமான் யானையுடன் போருக்குச் சென்றது பற்றியோ, யானையின் தோலை கிழித்தது பற்றியோ உமையம்மை கவலை கொள்ளவில்லை; தான் கொன்ற யானையின் தோலைத் தனது உடலின் மீது பெருமான் போர்த்துக் கொண்டது பற்றியே உமையம்மை கவலை கொண்டதாக இந்த பாடலில் கூறப்படுகின்றது. யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்த்திக் கொண்ட பெருமானின் உடலுக்கு கேடு ஏதேனும் விளையுமோ என்று அன்னையின் நெஞ்சம் அச்சம் கொள்கின்றது. ஆனால் கொடிய நஞ்சே, பெருமானின் உடலுக்கு எந்த விதமான கேட்டினையும் விளைவிக்காத போது,யானையின் பசுந்தோல் எவ்வாறு பெருமானின் உடலுக்கு கேடு விளைவிக்க முடியும். எனவே தான் இந்த உண்மையினை மறந்து, தான் பெருமான் மீது கொண்டிருந்த அன்பின் மிகுதியால், அன்னை அச்சம் கொண்டது குறித்து பெருமான் ஏளனமாக, தனது பற்கள் தோன்ற சிரித்ததாகவும், அம்மையின் அச்சத்தினைக் கண்டு சிறிது நேரம் கழித்து தான் தரித்திருந்த யானைத் தோல் போர்வையை பெருமான் கழற்றினார் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (2.69.2) திருஞானசம்பந்தர், உமையன்னை அச்சம் கொள்ளும் வண்ணம் பெருமான் யானையின் தோலை உரித்து போர்த்துக் கொண்டார் என்று கூறுகின்றார். தனை=தன்னை; விஞ்சை=வித்தைகள்; விஞ்சையர்=பலவிதமான வித்தைகளின் தலைவராகிய சிவபெருமான். பல விதமான கலைகளையும் தோற்றுவித்த பெருமானைத் தானே, நாம் அந்த கலைகளின் தலைவனாக கருத வேண்டும்;பனைக்கை பகடு=பனைமரத்தின் அடிபாகம் போன்று பருத்து வலிமையுடன் காணப்படும் துதிக்கையை உடைய யானை; கணி=மருத நிலத்தையும் மருத நிலத்தில் விளையும் கொன்றை மலர்களையும் குறிக்கும்.; வினைகளை பகை என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வினைகளை ஏன் பகையாக அவர் கருதுகின்றார் என்பது பற்றி நாம் சற்று சிந்திப்போம். உயிர்களின் உண்மையான விருப்பம், தங்களைப் பிணித்துள்ள வலிமை வாய்ந்த வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, இறைவனைச் சென்றடைந்து அழியாத பேரின்பத்தில் திளைத்து இருப்பதே ஆகும்.ஆனால் உயிர்களுடன் பிணைந்துள்ள வினைகளோ, உயிர் தனது விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ள தடையாக உள்ளன. எனவே தான் வினைகள்,தங்களை விட்டு உயிர் பிரிந்துவிடாமல் இருப்பதற்காக பல விதமான மாயைகள் செய்கின்றன. அந்த வினைகளை உயிர்கள் அனுபவித்துக் கழிக்க முயற்சி செய்யும் தருணங்களில் மேலும் பல ஆகாமிய வினைகளை தோற்றுவித்து, வினைகளற்ற நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. எனவே தான் வினைப்பகை என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இவ்வாறு உயிர்களுக்குப் பகையாக விளங்கும் வினைப்பகையைத் தீர்ப்பவர் இறைவன் ஒருவனே என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மாமலர்=பெருமைக்கு உரிய மலர்; சிறந்த மலர்;
தனைக் கணி மாமலர் கொண்டு தாள் தொழுவார் அவர் தங்கள்
வினைப் பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்கப்
பனைக் கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடியாரே
தன்னை எதிர்த்து வந்த யானையைக் கொன்ற பின்னர் அந்த யானையின் தோலினை, தான் மிகவும் மகிழ்ந்து தனது உடல் மீது போர்த்துக் கொண்ட போதிலும், அந்த செயலால், உமை அன்னைக்கு அச்சத்தை பெருமான் ஊட்டினார் என்று ஆமாத்தூர் தலத்து பதிகத்து பாடல் (2.44.10) உணர்த்துகின்றது.இழிந்த புலால் மணம் வீசிய ஈரப்பசை மிகுந்த தோல் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நித்தல் என்ற சொல் எதுகை கருதி நிச்சல் என்று மருவியுள்ளது. பெய்தல்=இடுதல்; பின் சார்தல்=பின்னே வருதல். கொச்சை=இழிவான; பிச்சைப் பெருமானாக (பிக்ஷாடனர்) வேடம் தரித்து தாருகாவனம் சென்ற சிவபிரானின் பின்னர், முனிவர்களின் மனைவியர் தொடர்ந்து வந்த செய்தி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. புலால் நாற்றம் வீசிய தோல் என்று குறிப்பதன் மூலம் அப்போது தான் உரித்த தோல் என்று உணர்த்தப்பட்டுள்ளது. கோ=தலைமைப் பதவி; தலைமைப் பதவியை பெருமான் எப்போதும் நாடியதில்லை. ஆனால் அவரது தன்மையை உணர்ந்த ஏனையோர், அவரைத் தங்களது தலைவராக ஏற்றுக்கொள்ளவே, தலைமைப் பதவி அவரை நாடி வந்து சேர்ந்தது என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இத்தகைய தன்மை வாய்ந்த பெருமானை தினமும் நினையாதவர்களின் நெஞ்சம் நெஞ்சமாக கருதப்படாது என்றும் இந்த பாடலில் கூறப் படுகின்றது.
பிச்சை பிறர் பெய்யப் பின் சாரக் கோசாரக்
கொச்சை புலால் நாற ஈரிருவை போர்த்து உகந்தான்
அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்
நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.86.01) திருஞானசம்பந்தர், பெருமான் நஞ்சு உட்கொண்டதைக் கண்டு அம்பிகை அச்சம் அடைந்தாள் என்று கூறுகின்றார். அச்சம் கொண்டதன் காரணம் நஞ்சு உட்கொண்டதால் பெருமானுக்கு கேடு ஏதேனும் ஏற்படுமோ என்ற எண்ணத்தால் அல்ல; பெருமான் உட்கொள்ளும் நஞ்சு பின்னாளில் அவரது வயிற்றினில் ஒடுங்க இருக்கும் உயிர்களுக்கு கேடு ஏதும் விளைவிக்க கூடாது என்ற எண்ணத்தினால் தான். பதினோராம் திருமுறையில் கபில தேவர் அருளிய சிவபெருமான் இரட்டை மணிமாலை என்ற பதிகத்தின் பாடலில், பெருமானுக்கு கேடு ஏதும் விளைவிக்க இயலாத நஞ்சம் என்பதால் பார்வதி தேவி விடம் உட்கொள்வதை தடுக்க வில்லை என்று கூறுகின்றார். உரையினில் வந்த பாவம்=பொய்யான சொற்களை பேசுதல், பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் சொற்களை பேசுதல், கடுமையான சொற்களை பேசுதல், பயனற்ற சொற்களை பேசுதல் என்பன நமது மொழியால் வரும் பாவங்களாக கருதப் படுகின்றன. உணர்=உணர்தற்கு உரிய கருவியாகிய மனம்; உணர் நோய்=மனதினில் தோன்றும் தீய எண்ணங்கள்; மனதினில் தோன்றும் எண்ணங்களே நமது செயல்களாக வடிவம் பெறுகின்றன. சில தீய எண்ணங்களை செயலாக மாற்றும் திறன் இல்லாமையால் நாம் அந்த செயல்களை செய்யாத போதிலும் அத்தகைய தீய எண்ணங்கள் பாவமாக கருதப் படுகின்றன. செயல் தீங்கு குற்றம் என்பதை தீங்கு செயல் குற்றம் என்று மாற்றி வைத்து, பொருள் கொள்ள வேண்டும். உம்ம என்ற சொல்லினை இந்த மூன்று வகையான குற்றங்களுக்கும் பொதுவானதாக கருதி பொருள் கொள்ளவேண்டும்.
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம்ம செயல் தீங்கு குற்றம் உலகில்
வரையில் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினைமின்
வரை சிலையாக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவத்
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே
கபில தேவ நாயனார் தான் அருளிய சிவபெருமான் இரட்டை மணிமாலை (பதினோராம் திருமுறை) பதிகத்தில் இறைவனை வெண்காட்டு கரும்பு என்று குறிக்கின்றார். சிவபிரானின் வயிற்றினுள் அண்ட சராசரங்கள் அடங்கியுள்ள காரணத்தால், அவற்றை காப்பாற்றும் பொருட்டு, உமையம்மை தனது மென்மையான கரங்களால், சிவபிரானின் கழுத்தினை, அவர் நஞ்சுண்ட போது பிடித்து நஞ்சு கழுத்திலே தங்குமாறு செய்தார்கள் என்று கூறி உமையம்மையின் கருணை இந்தப் பாடலில் விளக்கப்படுகின்றது.
மிடறு தாழ் கடல் நஞ்சம் வைக்கின்ற ஞான்று மெல்லோதி நல்லாள்
மடல் தாமரைக் கைகள் காத்திலவே மழுவாள் அதனால்
அடல் தாதையை அன்று தாள் எறிந்தார்க்கு அருள் செய்த கொள்கைக்
கடல் தாழ் வயல் செந்நெல் ஏறும் வெண்காட்டு எம் கரும்பினையே
அபிராமி அந்தாதி ஐந்தாவது பாட்டினில் அபிராமி பட்டர் வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை என்று கூறுகின்றார். இந்த பாடலுக்கு விளக்கம் கூறிய கி.வா.ஜ. அவர்களின் உரையின் ஒரு பகுதியை நாம் இங்கே காண்போம். ஆலால சுந்தரர் கொண்டு வந்த நஞ்சினை வாங்கிக் கொண்ட இறைவன், தனது வாயின் அருகே நஞ்சை எடுத்துச் சென்ற போதும் உமையம்மை ஏதும் செய்யவில்லை; இறைவன் பருகிய பின்னர், அந்த நஞ்சு உள்ளே செல்லலாகாது என்ற எண்ணத்துடன், இறைவன் நஞ்சை விழுங்கத் தொடங்கியவுடன், பார்வதி அன்னை இறைவனது கழுத்தினை தனது கைகளால் அணைத்துக் கொள்ள, அந்த கொடிய நஞ்சு கழுத்திலே தங்கிவிட்டது. அம்பிகை தனது திருக்கரத்தினால் தடுத்து நிறுத்திய போது, அவளது கை பரிசத்தினால் (ஸ்பரிசம்) நஞ்சு எந்தவிதமான தீங்கினையும் செய்யாமல், அமுதமாக அங்கே தங்கிவிட்டது என்று கி.வா.ஜ. விளக்கம் அளிக்கின்றார்.அம்புயம்=தாமரை: அந்தரி=பராகாச வடிவினளாகிய அம்பிகை: பொருந்திய முப்புரை=திரிபுர சுந்தரி: மருங்குல்=இடை: திருந்திய= அமர்ந்த:
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே
திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.92.1) ஞானசம்பந்தர் உமை அன்னை அச்சம் கொள்ளும் பொருட்டு, தன்னை எதிர்த்து வந்த மத யானையின் தோலை உரித்து அருளினார் என்று கூறுகின்றார். எதற்காக அருளினார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்ற நம்பிக்கை பொதுவாக பரவியிருந்தாலும், எந்த பொருளின் தன்மையும் தனக்கு எந்த விதமான கேட்டினையும் விளைவிக்காது என்பதை உலகுக்கு உணர்த்துவதற்கு உமை அன்னை கொண்டிருந்த அச்சம் காரணமாக இருந்தது என்பதால் அருளினார் என்று கூறுகின்றார் போலும். அணங்கு=தெய்வம்; திருமால் மற்றும் பிரமன் ஆகிய தங்கள் இருவரில், யார் அதிகமான தெய்வத்தன்மை உடையவர் என்று ஒருவருக்கொருவர் செய்து கொண்டிருந்த வாதத்தினை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன், தங்களின் எதிரே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண்போம் என்று அவர்கள் இருவரும் உடன்பட்டனர். ஆனால் அவர்கள் எவராலும் தங்களது முயற்சியில் வெற்றி பெற இயலாது என்பதை பெருமான் உணர்ந்து இருந்ததால், அவர்களின் கருத்து அழியவிருந்த நிலையினை நினைத்து நகை செய்தார் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடல் கூறுகின்றார். வாரணம்=யானை;
சீரணங்கு உற நின்ற செருவுறு திசைமுகனோடு
நாரணன் கருத்தழிய நகை செய்த சடைமுடி நம்பர்
ஆரணங்கு உறு உமையை அஞ்சுவித்து அருளுதல் பொருட்டால்
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சரத்தாரே
திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.73.6) அப்பர் பிரான், தான் யானையின் ஈரப்பசை மிகுந்த தோலைப் போர்த்துக் கொண்டபோது கொண்ட அச்சம் தேவையற்றது என்பதை உணர்த்தும் வண்ணம் பெருமான் சிரித்தார் என்று கூறுகின்றார். இந்த பாடலில் கால பயிரவரின் திருக்கோலம் கூறப்பட்டுள்ளது. கால பைரவரின் வேடத்தை விவரமாக குறிப்பிடும் தேவாரப் பாடல் இந்த ஒரு பாடல் தான். இந்தப் பாடலை ஓதும் அடியார்கள், தங்கள் அச்சம், இடர், வறுமை, பிணி முதலியன நீங்கப்பெற்று, செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது.
விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.43.7) அப்பர் பிரான், பெருமான் யானையின் பசுந்தோலினை தனது உடலின் மீது போர்த்ததைக் கண்டு உமையம்மை அஞ்சி நடுங்கிய போது, அன்னையின் பேதைமை கண்டு பெருமான் சிரித்ததாக கூறுகின்றார்.
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மத கரியை உற்றுப் பற்றி உமை அதனைக் கண்டு அஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீர் ஆர்ந்த பூதம் சூழத் திருச்சடை மேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
சுந்தரர் திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலிலும் (7.99.1), பெருமான் விடம் உட்கொண்டபோது தேவி அச்சம் கொண்டதாக கூறுகின்றார்.பேழ்க்கணிக்க=அச்சம் கொள்ள; வாள்=ஒளி வீசும்; நுதல்=நெற்றி; பிறையணி=பிறைச் சந்திரன் அணிந்தது போன்று; நிறையணி= உறுதி படைத்த;அனுங்க=கலங்க;
பிறையணி வாள் நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க
நிறையணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே
குறையணி கொல்லை முல்லை அளைந்து குளிர் மாதவி மேல்
சிறையணி வண்டுகள் சேர் திருநாகேச்சரத்தானே
திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் மற்றொரு பாடலில் (7.99.4) சுந்தரர், உமையம்மை அஞ்சுமாறு யானையின் தோலை உரித்துத் தனது உடலின் மீது பெருமான் போர்த்துக் கொண்டதன் காரணம் யாதோ என்று வினவுகின்றார்.
குன்ற மலைக் குமரி கொடியேர் இடையாள் வெருவ
வென்றி மதகரியின் உரி போர்த்ததும் என்னை கொலாம்
முன்றில் இளங்கமுகின் முதுபாளை மது அளைந்து
தென்றல் புகுந்து உலவும் திருநாகேச்சரத்தானே
திருநாவலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.17.10) சுந்தரர், யானையின் தோலை உரித்து பெருமான் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டபோது தேவி அஞ்சியதை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் அரக்கன் இராவணனை பெருமான் நடுங்கச் செய்த நிகழ்ச்சியும் குறிப்பிடப் படுகின்றது. அடிமை ஓலையினை காட்டி தன்னை ஆட்கொண்ட விவரத்தை குறிப்பிடும் சுந்தரர், பெருமான் தான் பதட்டம் கொள்ளுமாறு தனது திருமணத்தை தடுத்து நிறுத்தியதை சொல்லாமல் சொல்லி குறிப்பால் உணர்த்துகின்றார். பதட்டம் அடைந்ததால் தானே, கிழ வேதியராக வந்த பெருமானின் பின்னே சென்று அவர் வைத்திருந்த ஓலையினை சுந்தரர் கிழித்தார். அடக்கம் கொண்டு என்று மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து,நகலினை திருமணத்தில் காட்டிய நிகழ்ச்சியும் உணர்த்தப் படுகின்றது. தடுக்க ஒண்ணாத வலிமை கொண்ட யானை என்று யானையின் வலிமை இங்கே கூறப் படுகின்றது.
மிடுக்கு உண்டு என்று ஓடியோர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார்
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல்வெண்ணையூர் ஆளும் கொண்டார்
தடுக்க ஒண்ணாததோர் வேழத்தினை உரித்திட்டு உமையை
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே
திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் ஒரு பாடலில் மணிவாசகர், யானையின் தோலை உரித்த போது தேவி அஞ்சியதை குறிப்பிடுகின்றார்.விடங்க=சுயம்பு மூர்த்தி; மடங்க=முழுவதுமாக மடக்கி; காடு போன்று அடர்ந்துள்ள வினைத் தொகுதி என்று குறிப்பிடுவதால், அதனை அழிக்க உதவும் பெருமானின் அருளை, தீ என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். மன்னருள் என்று என்றும் நிலையாக இருக்கும் பெருமானின் அருள் என்று உணர்த்தப் படுகின்றது. பிராரத்த வினையை நாம் அனுபவித்துக் கழிக்கும் போது, அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களை நாம் நுகரும் போது, நமது செயல்களால் வினைகள் மேலும் பெருகுகின்றன. எனவே வினைகளை எவராலும் முழுவதுமாக அனுபவித்து கழிக்க முடியாது. இந்த நிலை வேரோடு களையப்படாத மரம் மறுபடியும் துளிர்க்கும் நிலைக்கு ஒப்பிடப்பட்டு, நமது வினைகள் வேரோடு களையப்பட வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகின்றது. இறைவனின் அருள் ஒன்று தான், நமது பிராரத்த வினைகளை வேரோடும் களைவதற்கு உதவும் என்பதால், இறைவனின் அருளினை வேண்டும் பாடல் இது.
மடங்க என் வல்வினைக் காட்டை நின் மன்னருள் தீக் கொளுவும்
விடங்க என் தன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வே
ரொடும் களைந்து ஆண்டு கொள் உத்தரகோச மங்கைக்கு அரசே
கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே
அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தை தொடரலாம் என்ற எண்ணத்துடன்,கயிலாய மலையினை பேர்க்க முயற்சி செய்ததையும், பெருமான் தனது கால் பெருவிரலை ஊன்ற அந்த முயற்சி முறியடிக்கப் பட்டதையும் நாம் அறிவோம்.பெருமான் இராவணனின் செயலால் கோபம் கொண்டு அவனை மலையின் கீழே நெருக்கினார் என்று பொருள் கொள்வது தவறு என்றும் தேவியின் அச்சத்தை தீர்க்கும் பொருட்டே அரக்கனின் வலிமையை குறைத்தார் என்பதையும் உணர்த்தவே, அந்த சமயத்தில் உமையன்னை கொண்ட அச்சம் பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது. கோபதாபங்களைக் கடந்த பெருமான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இருபதுக்கும் மேற்பட்ட திருமுறைப் பாடல்களில் இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி அச்சம் கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது.
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.48.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது மலையினில் ஏற்பட்ட அசைவு காரணமாக பார்வதி தேவி அச்சம் கொண்டாள் என்று கூறுகின்றார். மொழியாள்=சொல்லினை உடையவள்;கண்=மயில் தோகையில் உள்ள கண்கள்; மஞ்ஞை= மயில்; கருமை என்று குறிப்பிட்டாலும் அந்த சொல் நீல நிறத்தினை உணர்த்துவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். உரம்=வலிமை; மொய்த்த=பொருந்திய; பண் மொய்த்த என்று குறிப்பிடுவதன் மூலம், இனிமையான பண்கள் தாமே சென்று தேவியின் சொற்களில் சென்று அமர்ந்தது போன்ற இனிமையான சொற்களை உடையவள் தேவி என்று சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.உன்மத்தன்=பைத்தியக்காரன்; கயிலாய மலையினை பேர்த்து எடுக்க நினைப்பதே பெரிய குற்றம். அரக்கன் இராவணன் அறியாமையால் செய்தான் என்று எண்ணுவது என்பது தவறு என்று உணர்த்தும் முகமாக, இராமாயணம் தேர்ப்பாகன் அறிவுரை செய்ததை உணர்த்துகின்றது. பல தேவாரப் பாடல்களும்,தேர்ப்பாகன் செய்த அறிவுரையை குறிப்பிடுகின்றன. எனவே தான், தேர்ப்பாகன் செய்த எச்சரிக்கையினையும் புறக்கணித்து, கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் எண்ணத்துடன் அந்த மலையை நோக்கி ஓடியவனை பித்துக்குளி என்றும் பைத்தியக்காரன் என்றும் மிகவும் பொருத்தமாக அழைக்கின்றனர். சில பதிப்புகளில் உண்மத்தன் என்று காணப்படுகின்றது. எதுகை கருதி உன்மத்தன் என்ற சொல் உண்மத்தன் என்று திரிந்ததாக கருதினார்கள் போலும்.
பண் மொய்த்த இன் மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே
பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.108.8) திருஞானசம்பந்தர், உமையன்னை இராவணனின் செயலால் அச்சம் கொண்டு நடுங்கியதை குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காண்போம். மறுக=அச்சம் கொள்ள; தொல்லை மலை=மிகவும் பழமையான கயிலாய மலை; கொல்லை விடை=முல்லை நிலத்திற்கு உரிய கடவுளாகிய திருமால், திரிபுர தகனத்தின் போது விடையாக பெருமானை தாங்கிய நிலை; திருமால் விடையாக தன்னைத் தாங்கியதை பெருமான் உகந்து ஏற்றுக் கொண்டான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போர் செய்ய புறப்பட்ட போது, தேவர்கள் பலரும் அந்த போரினில் பெருமானுக்கு உதவும் நோக்கத்துடன் பல விதங்களில் பங்கேற்றனர். அவ்வாறு பங்கேற்றமை குறித்து அவர்களுக்கு கர்வம் ஏற்பட்டது போலும். அந்நாள் வரை திரிபுரத்து அரக்கர்களிடம் அஞ்சி நடுங்கி ஒளிந்து கொண்டிருந்த தங்களால் பெரிதாக என்ன உதவி பெருமானுக்கு செய்து விடமுடியும் என்பதையும் மறந்து தேவர்கள் கர்வம் கொண்டது தவறான செய்கை தானே. எவரின் உதவியும் தேவைப்படாமல் திரிபுரத்து அரக்கர்களை தன்னால் வெல்ல முடியும் என்பதை அனைவர்க்கும் உணர்த்தும் பொருட்டு, தேவர்கள் பங்கேற்ற தேரின் மீது தனது காலினை பெருமான் வைத்த போது, அவரது திருவுள்ளக் கருத்தினால், தேரின் அச்சு முறிந்தது. தேரின் அச்சு முறிந்ததால் தேரின் மீது பெருமான் செல்ல முடியாமை கண்டு, திருமால் விடையாக மாறி தன்னை வாகனமாக ஏற்றுக் கொள்ளுமாறு பெருமானிடம் வேண்டினார், திருமாலின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டு விருப்பத்துடன் பெருமான் விடையின் மீது அமர்ந்தார் என்பதை உணர்த்தும் பொருட்டு கொல்லை விடை உகந்தான் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்
மல்கிய நுண்ணிடையாள் உமை நங்கை மறுக அன்று கையால்
தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான்
கொல்லை உடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறை கோயில் பாதாளே
நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் (2.57.8) தேவி அச்சம் கொண்டதை உணர்த்துகின்றார். மாது=பெருமை, காதல்;கறுத்த=கோபம் கொண்ட, தான் செல்லும் வழியில் இருந்துகொண்டு தனது பயணத்திற்கு தடையாக கயிலை மலை இருந்தது என்று எண்ணியதால் கோபம் கொண்ட அரக்கன் இராவணன். மறுகும் வண்ணம்=கலக்கம் அடையும் வண்ணம்; மாது என்ற சொல்லுக்கு அழகினை உடையவள் என்று பொருள் கொண்டு,தலத்து அம்பிகையின் திருநாமம் கல்யாண சுந்தரி என்பதை உணர்த்துவதாக சிலர் விளக்கம் கூறுவதும் பொருத்தமாக உள்ளது.
காதமரும் வெண்குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப
மாதமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டுகந்தீர்
தீதமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திருநல்லூர்
மாதமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
இவ்வாறு பிராட்டி நடுங்கியதைக் கண்ட பெருமான், தனது கால் பெருவிரலை ஊன்றி அன்னை கொண்டிருந்த அச்சத்தை தவிர்த்ததாக மேற்கண்ட பாடல்கள் அனைத்திலும் கூறப்பட்டுள்ளன. இந்த விளக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு அவ்வாறு பிராட்டி கலங்கிய போது, பெருமான் மகிழ்ச்சி கொண்டதாக இந்த பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுவது, சிந்தனைக்குரியது. இவ்வாறு மகிழ்ந்தது பெருமானின் திருவிளையாடல்களில் ஒன்று என்று சான்றோர்கள் பொருள் கண்டனர். கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்ற செயலுக்கு கோபம் கொண்ட பார்வதி அன்னையின் கோபத்தினை தணிப்பதற்காக, பெருமான் இந்த திருவிளையாடலை புரிந்தாரோ என்று நமக்கு தோன்றுகின்றது. இத்தகைய கற்பனை ஒன்றினை உள்ளடக்கி அப்பர் பிரான் பிரான் பாடிய பாடலை நாம் இங்கே காண்பது பொருத்தமாகும், கயிலை மலையினை அரக்கன் அசைத்த போது, பார்வதி தேவி கொண்டஅச்சத்தினை நீக்கிய பெருமான், அதனை ஒரு வாய்ப்பாக கருதி தேவி தன்னிடம் கொண்டிருந்த ஊடலைத் தீர்த்தான் என்று சுவையாக தனது கற்பனையைஏற்றி அப்பர் பிரான் பாடிய பாடல் மறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.34) கடைப் பாடலாகும். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும்அரக்கன் இராவணனின் கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. கங்கை நங்கையை பெருமான் தனது சடையில் மறைத்ததை காரணமாக கொண்டு தேவிஊடல் செய்ததாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். உருவம் வேறுவேறாக திகழ்ந்தாலும், பெருமானும் பிராட்டியும் இணைந்தே செயல்படுவதாக சைவசித்தாந்தம் சொல்கின்றது. பெருமானின் கருணை தான் தேவி. எனவே அவர்களுக்குள்ளே ஊடல் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனினும் புலவர்களுக்குஉள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி, அப்பர் பிரான், ஒரு கற்பனை நிகழ்ச்சியை புகுத்தி, தேவாரப் பாடலுக்கு நயம் சேர்ப்பதை நாம் இந்த பாடலில்காணலாம்.
கங்கை நங்கையைத் தனது தலையில் மறைத்து வைத்ததால் தேவிக்கு கோபம் ஏற்படுகின்றது. அந்த கோபம் ஊடலாக மாறுகின்றது. அரக்கன் இராவணன்கயிலை மலை அசைத்ததால் ஏற்பட்ட அசைவு, அன்னைக்கு அச்சத்தை ஏற்படுத்த, அந்த அச்சத்தை தீர்க்கும் முகமாக, அன்னையிடம் அஞ்சேல் என்றுசொல்லிய பெருமான், தனது கால் பெருவிரலால் மலையினை அழுத்தி, மலையின் ஆட்டத்தை நிறுத்துகின்றார். தேவியின் அச்சம் மட்டுமா மறைகின்றது.அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஊடலும் மறைந்து விடுகின்றது என்பதை சொல்லாமல் சொல்லி விளக்கும் நயமான பதிகம்.
கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான் மலையை
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட
அங்கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடு தானே
உலகியலில் வாழும் நாம், எத்துணை கருத்தொத்த தம்பதியராக இருப்பினும் அவர்களின் இடையே, சிறுசிறு விஷயங்களில், கருத்து ஒவ்வாதுஇருப்பதையும், அந்த வேறுபாடு காரணமாக ஊடல்கள் ஏற்படுவதையும் காண்கின்றோம். சங்க இலக்கியங்களில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் ஊடல்வெகுவாக விவரிக்கப் படுகின்றது. திருக்குறளிலும் ஊடல் காதலுக்கு மேலும் சுவை ஊட்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு ஊடலுவகை என்று தனிஅதிகாரம் கொடுக்கப்பட்டு பத்து பாடல்கள் உள்ளன. இத்தகைய ஊடல்கள் அதிக நேரம் நீடிப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் உண்மையான பாசமும்நேசமும் கொண்டு தம்பதியர் திகழ்வதால், அவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறிய இடர் நேர்ந்தாலும், அடுத்தவர் அந்த இடரினைக் களையும் போது,அந்நாள் வரை அவர்களின் இடையே இருந்த ஊடல் காணமல் போய்விடுகின்றது. இதனை உலக வாழ்க்கையில் நாம் அடிக்கடி காண்கின்றோம். அத்தகையநிகழ்ச்சியாக, இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி கொண்ட அச்சத்தை பெருமான் களைந்த விதத்தினை அப்பர் பிரான் கற்பனைசெய்கின்றார். இறைவனின் செயல் வடிவமே சக்தி. சக்திக்கும் சிவத்திற்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. சிவபிரானின் எண்ணத்திற்கு ஏற்ப செயல் படும் சக்திக்கும் சிவத்திற்கும் வேறுபாடு இல்லாத போது, அவர்களிடையே ஊடல் வருவதற்கான வாய்ப்பு அறவே இல்லை. எனினும் அவர்களின் இடையே ஊடல் ஏற்பட்டது போன்று அப்பர் பிரான் கற்பனை செய்து அந்த ஊடல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்று, புலவர்களுக்கு உள்ள உரிமையுடன் நயமாக இந்த பாடலில் கூறுகின்றார்.
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.91.8) திருஞானசம்பந்தர், கயிலாய மலை இராவணனால் அசைக்கப் பட்டதால் அன்னை நடுங்கியதைக் கண்ட பெருமான், சிரித்த வண்ணமே தனது கால்பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியதாக கூறுகின்றார். இந்த நகைப்பின் காரணம், இந்த பாடலில் குறிப்பிடப்படவில்லை. தன்னால் முடியாத காரியத்தை அரக்கன் செய்யத் துணிந்ததற்காக, அரக்கன் மீது பரிதாபம் கொண்டதால் விளைந்த நகைப்பா, தேவியின் அச்சம் தேவையற்றது என்ற எண்ணத்தில் எழுந்த நகைப்பா, தேவி தன்னுடன் கொண்டிருந்த ஊடலைத் தீர்ப்பதற்காக தனக்கு கிடைத்த வாய்ப்பு என்று கருதியதால் விளைந்த நகைப்பா என்பது பற்றி திருஞானசம்பந்தர் குறிப்பிடாமல் நமது கற்பனைக்கு விட்டுவிடுகின்றார்.ஓரான்=உணராதவன்;
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்குத் தன் திருவிரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன்
பக்க வாயும் விட்டலறப் பரிந்தவன் பதி மறைக்காடே
அரக்கன் இராவணன் கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, மலையின் அசைவால் தேவி அச்சம் உற்றதைக் கண்ட பெருமான், தேவி கொண்ட அச்சம் தேவையற்றது என்பதை உணர்த்தும் வண்ணம் சிரித்தார் என்று கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பாடலில் (4.30.10) அப்பர் பிரான் உணர்த்துகின்றார். மாலினாள்=பெருமானிடம் அதிகமான விருப்பம் உடையவள்; வேலினான்=வேல் ஏந்திய வீரன்; நூலினான்=வேத நூல்களை அருளிய பெருமான்;
மாலினாள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோர் அளவில் வீழக்
காலினால் ஊன்றி இட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
குடமூக்கு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.22.10) அப்பர் பிரான், கயிலாய மலையை அரக்கன் இராவணன் பேர்த்தெடுக்க செய்த முயற்சி வீண் முயற்சி என்பதை உணர்த்தும் முகமாக பெருமான் ஏளனச் சிரிப்பு செய்தார் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில், அந்த தருணத்தில் உமையன்னை அஞ்சிய செய்தியும் உணர்த்தப் படுகின்றது. கொன்று=வருத்தி;
அன்று தான் அரக்கன் கயிலாயத்தைச்
சென்று தான் எடுக்க உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு நல்விரல் ஊன்றிப்பின்
கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே
பெருமானின் திருவேடத்தைக் கண்டு, புலித்தோல் பூண்டும் எலும்பு மாலை பாம்பு ஆமையோடு பன்றியின் கொம்பு ஆகியவற்றை ஆபரணமாக அணிந்தும் காணப்பட்ட திருவேடத்தைக் கண்டு, பார்வதி தேவி அஞ்சியதாக குடமூக்கு தலத்து பதிகத்தின் பாடலில் (3.59.4) திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.மிக்கரை தாழ என்ற தொடரில் உள்ள சொற்களை அரை மிக்கு தாழ என்று மாற்றி அமைத்து பொருள் கொள்ள வேண்டும். அரை=இடுப்பு; மிகவும் தாழ்ந்து தொங்குமாறு புலித்தோலை, தனது இடுப்பினில் பெருமான் அணிந்துள்ளதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆர்த்து=கட்டி; ஏனம்=பன்றி;மறுப்பு=கொம்பு;கரை=தீவு; அனைத்து தீவுகளிலும் அனைத்து தேசங்களிலும் உள்ள மக்களால் புகழ்ந்து பாடப்படும் இறைவன்; கொக்கரை=இசை வாத்தியம்;
மிக்கரை தாழ வேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ
அக்கு அரவு ஆமை ஏனமருப்போடு அவை பூண்டு அழகார்
கொக்கரையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே
தன்னை எதிர்த்து வந்த வேங்கையைக் கொன்று, அந்த வேங்கையின் தோலை பெருமான் அணிந்தகொண்ட போது உமையன்னை அச்சம் கொண்டாள் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் ஒரு பொதுப் பதிகத்தின் பாடலாகும் (4.84.9). நல்லாள்=பார்வதி தேவி: மிகவும் பெரிய வேங்கையைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்தியவன் சிவபெருமான்: அவனது வீரச் செயலைக் கண்டு அவனது அருகில் இருந்த பார்வதி தேவி உள்ளத்தில் அச்சம் கொண்டு நடுக்கம் உற்றாள். பொன் போன்று பொலிவு கொண்ட கங்கை நதியை, தனது சடை குளிருமாறு ஏற்றவன் சிவபெருமான்: தனது அடியான் பகீரதனுக்கு உதவி செய்ததால் உள்ளம் குளிர்ந்த பெருமான், மிகவும் மகிழ்வு எய்தி என்னை அடிமையாக ஏற்றுக்கொள்ள இசைந்தான். அவனது திருவடியின் கீழ் எனது ஆருயிர் நிலை பெற்று நிற்கின்றது அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல். .
மிகத்தான் பெரியதோர் வேங்கை அதள் கொண்டு மெய்ம்மருவி
அகத்தான் வெருவ நல்லாளை நடுக்குறுப்பான் வரும் பொன்
முகத்தால் குளிர்ந்து இருந்து உள்ளத்தினால் உகப்பான் இசைந்த
அகத்தான் அடிநிழல் கீழது அன்றோ எனது ஆருயிரே
கருக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.21.3) சுடுகாட்டில் பெருமான் ஆடுவதைக் காணும் பார்வதி தேவி அச்சம் கொண்டதாக,திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வெஞ்சுரம்=கொடிய காடு; ஊழி முடிவினில் உலகம் வெந்தழிந்து சாம்பல் காடாக இருந்த தன்மை குறித்து வெஞ்சுரம் என்று குறிப்பிடுகின்றார். அஞ்சுரும்பார் குழல் அரிவை=அழகிய வண்டுகள் ஒலிக்கும் கூந்தலை உடைய அம்பிகை; எண்ணற்ற பிறவிகள் எடுத்து வருந்திக் களைத்த உயிர்கள், தத்தம் உடல்களிலிருந்து ஊழி முடிவில் பிரிக்கப்பட்டு, பெருமானின் உடலில் சென்று ஒடுங்குகின்றன. இந்த ஒடுக்கம், ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வருத்திய உயிர்களுக்கு தேவையான இளைப்பாற்றலை அளிக்கின்றன. இவ்வாறு உயிர்களுக்கு உதவியது குறித்து மகிழ்ச்சி அடையும் பெருமான், தனது மகிழ்ச்சியை நடனம் ஆடுவதன் மூலம் வெளிப்படுத்துகின்றார்
மஞ்சுறு பொழில் வளமலி கருக்குடி.
நஞ்சுறு திருமிடறு உடைய நாதனார்
அஞ்சுரும்பார் குழல் அரிவை அஞ்சவே
வெஞ்சுரம் தனில் விளையாடல் என்கொலோ
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.61.10) சுந்தரர், காமாட்சி அன்னை காஞ்சிபுரத்தில், மாமரத்தின் கீழே சுயம்புவாக தோன்றிய ஏகாம்பர நாதனை வழிபட்ட செய்தியை கூறுகின்றார். தேவி, தன் மீது வைத்திருந்த பக்தியின் தன்மையை உலகுக்கு எடுத்துக் காட்ட பெருமான் புரிந்த திருவிளையாடல் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமான் கம்பையாற்றில் பெருவெள்ளம் தோன்றச் செய்ய, அந்த வெள்ளத்தினால் தான் வழிபட்டுக் கொண்டிருந்த பெருமானின் உருவத்திற்கு ஏதேனும் கேடு நேருமோ என்ற அச்சம் கொண்ட தேவி, அந்த லிங்கத் திருவுருவத்தை தனது மார்புடன் சேர்த்துத் தழுவிக் கொண்டாள் என்று, தேவியின் அந்த செயலைக் கண்ணுற்ற பெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்றும் இந்த பாடலில் கூறப்படுகின்றது. பெருமானும் பிராட்டியும் பிரிக்க முடியாதவர்கள் என்பதையும் பிராட்டி பெருமானின் ஒரு கூறு என்பதையும் நாம் அறிவோம். அவ்வாறு இருக்கையில் பெருமானை தான் எதற்காக வழிபடவேண்டும் என்று இகழ்ச்சியோ தயக்கமோ கொள்ளாமல், பிராட்டி பெருமானை வழிபட்டாள் என்பதை எள்கல் இன்றி என்ற தொடர் மூலம் சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார். ஆகம நூல்களின் கருத்துகளை, பெருமான் பிராட்டிக்கு விவரமாக சொல்லிய போது, அதனைக் கேட்ட பிராட்டிக்கு ஆகம நூல்களில் சொல்லப் பட்டுள்ள விதிகளின் வண்ணம் பெருமானை வழிபடவேண்டும் என்ற ஆசை வந்தது. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தான் காஞ்சி மாநகரம். பிராட்டி பெருமானை நோக்கி செய்த வழிபாட்டினை மிகவும் விவரமாக, சேக்கிழார் பெரிய புராணம், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சரித்திரத்தில் கூறுகின்றார்.
எள்கல் இன்றி இமையவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளம்காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே
பொழிப்புரை:
மலைமகளாகிய பார்வதி தேவி அச்சம் கொண்டு கலக்கம் அடையும் வண்ணம், தன்னை எதிர்த்து வந்த மதயானையை, தாருகவனத்து முனிவர்கள் ஏவிவிட்ட மத யானையைக் கொன்ற சிவபெருமான், ஈரப்பசை மிகுந்த அந்த யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்வையாக போர்த்துக் கொள்கின்றார்.ஆனால் அந்த யானைத் தோல், பெருமானின் உடலுக்கு எந்தவிதமான கேட்டினையும் விளைவிக்கவில்லை. இத்தகைய ஆற்றலும், அழகும் இளமையும் ஒருங்கே கொண்டுள்ள இறைவன் உறைகின்ற நகரம் சிவபுரம் ஆகும். நிறைந்த அலைகளுடன் மிகுந்த நீர்ப்பெருக்கு கொண்டுள்ள அரிசில் ஆற்றின் அருகே உள்ள சிவபுரம் நகரம், வலிமை வாய்ந்த பாதுகாப்பான மதில்களை கொண்ட நகரமாகும்.
பாடல் 4:
மண் புனல் அனலொடு மாருதமும்
விண் புனை மருவிய விகிர்தன் நகர்
பண்புனை குரல் வழி வண்டு கிண்டிச்
செண்பக மலர் பொழில் சிவபுரமே
விளக்கம்:
மாருதம்=காற்று; மருவிய=பொருந்தி உறையும்; விகிர்தன்=மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்ட தன்மை உடையவன்; பண்புனை=இனிய இசைகளுடன் பொருந்திய குரல்; வண்டுகள் செண்பக மலர்ச் சோலைகளைத் தேடிக் கொண்டு வருவது போன்று, புகழ் மிகுந்த இந்த சிவபுர நகரத்தை நாடி பல இடங்களிலிருந்தும் அடியார்கள் வருகின்றனர் என்று குறிப்பு தோன்ற வண்டுகள் வருகின்ற செய்தி அமைந்துள்ளது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த கோயிலின் தலமரம் சண்பகம். பண்டைய நாளில் சண்பகவனம் என்று அழைக்கப்பட்ட தலம். திருஞானசம்பந்தரின் காலத்தில் இங்கே சண்பக மரங்கள் மிகவும் அதிகமாக இருந்தன போலும். ஐந்து பூதங்களின் தன்மையையும் அவற்றுடன் இறைவன் இணைந்து நின்று இயக்கும் தன்மையையும் திருமுறைப் பாடல்கள் விளக்குகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.
கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.3) அப்பர் பிரான், நிலத்தினில் ஐந்து பண்புகளாகவும் நீரினில் நான்கு குணங்களாகவும் தீயினில் மூன்று தன்மைகளாகவும் காற்றின் இரண்டு பண்புகளாகவும் ஆகாயத்தின் ஒரு குணமாகவும் இறைவன் விளங்கும் செய்தியை குறிப்பிடுகின்றார். பரந்த வெளியிலிருந்து நாதம் பிறந்தமையால், ஆகாயத்தின் குணம் ஒலி என்று கூறுவார்கள். வீசும் காற்றில் ஒலி மற்றும் தொடு உணர்வு (ஊறு) ஆகிய இரண்டு பண்புகள் இருப்பதை நாம் உணர்கின்றோம். தீ, ஒலி கொண்டு உணரப்படுவதாகவும், தொடு உணர்வினால் அறியப்படுவதாகவும் விளங்குவதுடன்,ஒளியுடனும் திகழ்கின்றது. நீருக்கு, ஒலி, ஊறு, ஒளி, மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்கள் உள்ளன. நிலத்திற்கு, நீரின் நான்கு குணங்களுடன் வாசனை ஆகிய ஐந்தாவது குணமும் உள்ளது. மேற்கண்ட குணங்களாக இறைவனே இந்த ஐந்து பூதங்களிலும் பரவி இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். ஒளிர்கின்ற நெருப்பு என்பதைக் குறிக்க வயங்கு எரி என்று கூறப்பட்டுள்ளது வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை நம்மால் அறிய முடியாது அல்லவா. அத்தகைய விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமான திருநாமங்களை உடையவன் பெருமான் என்பதை உணர்த்தும் முகமாக தாரகைகள் தம்மின் மிக்க எண் என்று இறைவனை அப்பர் பிரான் இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார்
மண்ணதனில் ஐந்தை மாநீரில் நான்கை வயங்கெரியில் மூன்றை மாருதத்து இரண்டை
விண்ணதனில் ஒன்றை விரிகதிரைத் தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தை ஏழிசையைக் காமன் எழில் அழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே
இதே கருத்து உணர்த்தப்படும் புள்ளிருக்குவேளூர் திருப்பதிகத்தின் (6.54) ஐந்தாவது பாடலை நாம் இங்கே காணலாம். கால்=காற்று: தாழ் புனல்=பள்ளம் நோக்கி பாய்ந்து ஓடும் தன்மை உடைய நீர்; எஞ்சா=அழியாத; தஞ்சம்=புகலிடமாக விளங்கும் தன்மை; வான்பவளம்=சிறந்த பவளம்; மின்னல் வீசி பிரகாசிக்கும் ஆகாயத்தில் ஒலி எனப்படும் ஒற்றைப் பண்புடனும், வீசும் காற்றினில் ஒலி மற்றும் ஊறு ஆகிய இரண்டு பண்புகளாகவும். சிவந்த நிறத்துடன் மிளிரும் தீயினில் ஒலி, ஊறு மற்றும் ஒளி ஆகிய மூன்று பண்புகளாகவும், பள்ளத்தினை நோக்கி ஓடும் இயல்பினைக் கொண்ட நீரினில், ஒலி ஊறு ஒளி மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளாகவும், பூமியில் ஒலி ஊறு ஒளி சுவை மற்றும் வாசனை ஆகிய ஐந்து பண்புகளாகவும் விளங்குபவன் சிவபெருமான்.என்றும் அழியாத பொருளாக அனைவர்க்கும் தஞ்சம் அளிக்கும் நிலையான பொருளாக விளங்குபவனும், சிறந்த பவளக் கொழுந்தாக விளங்குபவனும், அரிய முத்தாகவும், வளரும் ஒளியாகவும், வயிரமாகவும், குற்றம் ஒன்றும் இல்லாது பொன்னிறத்துடன் விளங்கும் மேனியை உடையவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும் பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன், என்று சமண சமயத்தவருடன் கலந்திருந்து வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாக கழித்தமைக்கு அப்பர் பிரான் வருத்தம் தெரிவிக்கும் பாடல்.
மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும் கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்த் தரணிதலத்து அஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான் பவளக் கொழுந்தை முத்தை வளரொளியை வயிரத்தை மாசு ஒன்றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
அயிலுறு படையினர் எனத் தொடங்கும் கழுமல வளநகரின் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது இயற்றிய பதிகத்தின் பாடலில் (1.79.3)எண் அலங்காரமாக ஒன்று முதல் பத்து எண்களை கையாண்டுள்ள பாடலில், திருஞானசம்பந்தர் இதே கருத்தை தெரிவிப்பதை காணலாம். இந்த பாடலில் வரும் முதல் ஏழு எண்களுக்கான விளக்கம் பல பாடல்களில் கூறப்பட்டுள்ளன. எட்டிரும் கலை என்பதற்கு எட்டு அரிய கலைகள் என்று விளக்கம் அளித்து அந்த எட்டு கலைகளில் ஒன்றாகிய இசை என்று சிலர் கூறுகின்றனர். பண்ணிடை ஒன்பது என்று பண்களுக்கு உரிய அடிப்படை குணங்கள் ஒன்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.
எண்ணிடை ஒன்றினர் இரண்டினர் உருவம் எரியிடை மூன்றினர் நான்மறையாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம் வகுத்தனர் ஏழிசை எட்டிரும் கலை சேர்
பண்ணிடை ஒன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடி நின்று அடி தொழ மதனனை வெகுண்ட
கண்ணிடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே
ஐந்து பூதங்களுடன் இறைவன் கலந்து இருக்கும் தன்மை மணிவாசகர் அருளிய, போற்றித் திருவகவலில் காணப்படுகின்றது. .
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்தின் ஒரு பாடலில் (4.64.6) அப்பர் பிரான் ஐந்து பூதங்களிலும் அவ்வவற்றின் பண்பாக இறைவன் கலந்திருக்கும் நிலையினை குறிப்பிடுகின்றார். இவ்வாறு ஐந்து குணங்களாக மேற்கண்ட பூதங்களில் விளங்குபவன் இறைவன் தான் என்பதை, பரந்தாய்,நிகழ்ந்தாய், திகழ்ந்தாய், மகிழ்ந்தாய், விளைந்தாய் என்று சொற்கள் மூலம் மணிவாசகர் போற்றித் திருவகவலில் விளக்கும் செய்தியை அப்பர் பெருமான் இந்த பாடலில் கூறுகின்றார். இறைவனே அந்த பண்புகளாக இருக்கும் காரணத்தால், இருவர், ஐவர், நால்வர், மூவர், ஒருவர் என்று பன்மை விகுதிகள் கொடுத்துள்ளார். இவ்வாறு எங்கும் பரந்திருக்கும் பெருமான் வீழிமிழலை தலத்தில் உறைகின்றார் என்று உணர்த்தி, அவரை நாம் வழிபடவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தும் பாடல். அரையர்=பாதியாக கொண்டுள்ளவர்; இறைவன் நமது எண்ணங்களுடன் இணைந்து இருக்கும் நிலையும் அதே சமயத்தில் நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு சொற்களுக்கும் எண்ணங்களுக்கும் எட்டாதவராக இருக்கும் நிலையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. நாம் இங்கே சிந்திக்கின்ற பாடலில் திருஞானசம்பந்தர் இவ்வாறு ஐந்து பூதங்களுடன் இணைந்து நின்று அவற்றை இயக்கும் இறைவனை, அவரின் தனித்தன்மை குறித்து விகிர்தன் என்று குறிப்பிடுவது போன்ற குறிப்பு, இந்த வீழிமிழலை பதிகத்தின் பாடலிலும் காணப்படுகின்றது.
எண்ணகத்தில்லை அல்லர் உளரல்லர் இமவான் பெற்ற
பெண்ணகத்து அரையர் காற்றில் பெருவலி இருவராகி
மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீயதனில் மூவர்
விண்ணகத்து ஒருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே
பொழிப்புரை:
நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களுடன் பொருந்தி அந்த ஐந்து பூதங்களையும் இயக்கும் பெருமான், மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர் என்பதால் விகிர்தன் என்று குறிப்பிடப் படுகின்றார். இத்தகைய தனித் தன்மை வாய்ந்த பெருமான் உறைகின்ற நகரம் சிவபுரமாகும்.கேட்பதற்கு இனிய பண்களுடன் பொருந்தி ரீங்காரம் இடுகின்ற வண்டுகள், அமர்ந்து தேனை உறிஞ்ச, அதனால் மலர்கின்ற செண்பக மலர்கள் நிறைந்த சோலைகள் கொண்ட நகரம் சிவபுரமாகும்.
பாடல் 5:
வீறு நன்குடையவள் மேனி பாகம்
கூறு நன்குடையவன் குளிர் நகர் தான்
நாறு நன்கு விரி வண்டு கிண்டித்
தேறல் உண்டு எழுதரு சிவபுரமே
விளக்கம்:
வீறு=தனிப்பெருமை; சிவபெருமானின் உடலில் ஒரு கூறாக விளங்குவதும் அன்றி அவனது செயல்கள் அனைத்திலும் ஒன்றி நிற்கும் பெருமை படைத்தவள் பிராட்டி என்பதால் தனித் தன்மை படைத்தவள் என்று தேவியை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமானின் எண்ணங்களை,விருப்பத்தினை நிறைவேற்றும் கிரியா சக்தியாக பிராட்டி விளங்குகின்றாள் என்று கூறுவார்கள். குரவிரி=விரிந்த குரா மலர்; தேறல்=தேன்;நன்குடையவள்=அழகு உடையவள்; பல திசைகளிலிருந்தும் வரும் வண்டுகள் தேனைக் குடிப்பதற்கு முயற்சி செய்யும் செயல் பற்றி குறிப்பு, பல திசைகளிலிருந்தும் அடியார்கள் இந்த தலத்திற்கு வருகை தந்து, தலத்து பெருமானை வழிபட்டு சிவானந்தத் தேனை பருகும் நோக்கத்துடன் வருகின்றனர் என்று பொருள் கொள்வது சிறப்பு. கருணையே வடிவமாக உள்ள பெருமான் அருள் பொருந்தி உரைவந்தால், நகரமும் குளிர்ந்து நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் மனம் குளிர்ந்து காணப்படுவதாக திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
தனது அழகாலும் செயல்களாலும் தனிப்பெருமை கொண்டு விளங்கும் பிராட்டியைத் தனது உடலின் ஒரு கூறாக நல்ல தன்மையுடன் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் உறைகின்ற குளிர்ந்த நகரம் சிவபுரம். நறுமணம் வீசுவதும் நன்கு விரிந்து மலர்ந்ததும் ஆகிய குரா மலர்களின் மீது அமரும் வண்டுகள், அந்த மலர்களைக் கிண்டி தேனை உண்டு மகிழும் அழகிய சோலைகள் நிரந்த தலம் சிவபுரம் ஆகும்.
பாடல் 6:
மாறெதிர் வரு திரிபுரம் எரித்து
நீறது ஆக்கிய நிமலன் நகர்
நாறுடை நடுபவர் உழவரொடும்
சேறுடை வயலணி சிவபுரமே
விளக்கம்:
மாறு=பகை, மாறுபட்டு என்றும் பொருள் கொள்ளலாம். சிவநெறிக்கும் வேதநெறிக்கும் மாறுபட்டு வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள் என்பது பொருத்தமான விளக்கம்; நிமலன்-இயற்கையாகவே மலங்களிலிருந்து நீங்கியவன் இறைவன்; நாறு=நாற்று; அணி=அழகு; சிவபெருமான் தங்களுடன் போருக்கு வருவதை அறிந்த திரிபுரத்து அரக்கர்கள், தங்களது தவற்றினை திருத்திக் கொள்ளாமல், தாங்கள் பெற்றிருந்த வரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக பெருமானை எதிர்க்கத் துணிந்த செய்கை இங்கே மாறெதிர் வரு திருபுரம் என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
சிவநெறிக்கும் வேதநெறிக்கும் மாறுபட்டு வாழ்ந்து, அனைவர்க்கும் பகைவர்களாக திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து சாம்பல் பொடியாக மாற்றிய சிவபெருமான், இயற்கையாகவே மலங்களின் தன்மையிலிருந்து நீங்கியவர் ஆவார். நாற்று நாடுகின்ற மகளிரும் உழவர்களும் கலந்து பணி செய்கின்ற, நீர்வளம் மிகுந்ததால் சேறாகத் திகழும் அழகிய நிலங்களை கொண்ட நகரம் சிவபுரம் ஆகும்.
பாடல் 7:
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு
மேவி நன்கு இருந்ததோர் வியன் நகர் தான்
பூவில் வண்டமர்தரு பொய்கை அன்னச்
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே
விளக்கம்:
அமர்ந்தவன்=விரும்புபவன்; வியன் நகர்=அகன்ற பெரிய நகரம்; இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் மதில்களால் சூழப்பட்ட நகரம் என்று குறிப்பிட்ட திருஞனசம்பந்தர், இந்த பாடலில் வியன் நகர் என்று குறிப்பிட்டு, அந்நாளில் சிறந்த நகரமாக இருந்த தன்மையை மீண்டும் குறிப்பிட்டு வலியுறுத்துகின்றார்.அரிவை=இளமையான பெண், இங்கே பார்வதி. தேவியை குறிக்கும். பெண்களை அவர்களின் வயதின் அடிப்படையில் ஏழு பிரிவினராக பிரிப்பார்கள்; பேதை(எட்டு வயது வரை) பெதும்பை (ஒன்பது மற்றும் பத்து வயது) மங்கை (பதினொன்று முதல் பதினான்கு வயது வரை) மடந்தை (பதினான்கு முதல் பதினெட்டு வயது வரை) அரிவை (பத்தொன்பது முதல் இருபத்துநான்கு வரை) தெரிவை (இருபத்து நான்கு முதல் இருபத்தொன்பது வரை) பேரிளம் பெண் (முப்பது வயதிற்கு மேல்). நான்காவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் குறிப்பிட்ட வண்ணம் இந்த தலத்தில் உள்ள சோலைகள் வந்தைடையும் வண்டுகள், தேனை பருகும் செயலில் ஈடுபட்டு தம்மை மறந்து பூவில் அமர்ந்த வண்ணம் இருக்கின்றன என்ற குறிப்பு, கணவன் மனைவியராக இந்த தலத்து அடியார்கள் இறை வழிபாட்டினால் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைந்து மெய்ம்மறந்து நிற்கின்றனர் என்று உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. .
பொழிப்புரை:
பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் கொண்டு நீராட்டப் படுவதில் மிகுந்த விருப்பம் உடைய சிவபெருமான், எப்போதும் அரிவை பிராயத்து பெண் போன்று இளமையாக இருக்கும் பார்வதி தேவி உடனாக பெருமான் பொருந்தி உறைகின்ற நகரம், அகன்ற நகரமாகிய சிவபுரம் ஆகும். பூவில் உள்ள தேனை எடுக்கும் முயற்சியில் தன்னை மறந்து பூவில் அமரும் வண்டுகள் போன்று, இந்த தலத்தில் காணப்படும் நீர்நிலைகளில் உள்ள ஆண் அன்னங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது துணையாகிய பெண் அன்னங்களை தழுவி வாழ்கின்றன.
பாடல் 8:
எழில்மலை எடுத்த வல் இராவணன் தன்
முழு வலி அடக்கிய முதல்வன் நகர்
விழவினில் எடுத்த வெண்கொடி மிடைந்து
செழு முகில் அடுக்கும் வண் சிவபுரமே
விளக்கம்:
வண்=செழுமை வாய்ந்த; திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட தலம் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வல் இராவணன்=வலிமை வாய்ந்த அரக்கன் இராவணன்.
பொழிப்புரை:
அழகிய கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த வலிமை வாய்ந்த அரக்கன் இராவணனின், முழு வலிமையையும் அடக்கிய முதல்வனாகிய பெருமான் உறையும் நகரம் சிவபுரம் ஆகும். இந்த நகரினில் நடைபெறும் திருவிழாக்களில் எடுக்கப்படும் வெண்கொடிகள் கரிய மேகங்களைத் தீண்டும் வண்ணம் செழுமையான நகரம் சிவபுரம் ஆகும்.
பாடல் 9:
சங்களவிய கையன் சதுர்முகனும்
அங்கு அளவறி அரியவன் நகர் தான்
கங்குலும் பறவைகள் கமுகு தொறும்
செங்கனி நுகர் தரு சிவபுரமே
விளக்கம்:
அளவிய=கலந்த; திருமால் எப்போதும் பாஞ்சசன்யம் என்ற சங்கினை ஏந்தியவனாக காட்சி அளிப்பதால், அந்த சங்கு திருமாலுடன் கலந்ததாக கருதப்படுகின்றது. சதுர்முகன்=நான்முகன்; அளவு=உயரமும் ஆழமும் ஆகிய புற அளவு; கங்குல்=இரவு; கங்குலும் என்று உம்மைத் தொகையுடன் சேர்த்து சொல்லியிருப்பதால் பகலும் என்பதையும் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். இரவிலும் பறவைகள் மரத்தினில் உள்ள பழங்களை உண்கின்றன என்று சொல்வது, இந்த நகரம் இரவிலும் மிகுந்த ஒளியுடன் விளங்கிய தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. அங்கு என்பதற்கு பண்டைய காலம் என்று பொருள் கொள்வது பொருத்தம். இரவிலும் பறவைகள் கனிகளை உண்டு மகிழ்ந்து காணப்படுகின்றன என்ற குறிப்பு, பகல் இரவு ஆகிய இரு நேரங்களிலும் உலகத்தின் உயிர்கள் இன்புற்று இருக்கும் வண்ணம் இறைவன் அருள் புரிகின்றான் என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.
பொழிப்புரை:
பாஞ்சஜன்யம் என்ற சங்கினை எப்போதும் ஏந்தியவனாக காட்சி தரும் திருமாலும், நான்கு முகங்களை உடைய பிரமனும், பண்டைய நாளில் தங்களின் முன்னே தோன்றிய தீப்பிழம்பின் அடியையும் முடியையும் கண்டு அளக்க முடியாத வண்ணம் நீண்ட நெடிய தீப்பிழம்பாக நின்றவன் சிவபெருமான். பறவைகள் இரவிலும் பழங்களைத் தேடி உண்ணும் வண்ணம் இரவினில் ஒலியுடன் மிளிரும் சிவபுரம் தலத்தில், இரவு பகல் ஆகிய இரண்டு பொழுதிலும் பறவைகள் கமுக மரங்களில் தங்கி செங்கனிகளை நுகர்ந்து உண்ணும் வண்ணம், வளமை படைத்த நகரம் சிவபுரம் ஆகும்.
பாடல் 10:
மண்டையில் குண்டிகை மாசு தரும்
மிண்டரை விலக்கிய விமலன் நகர்
பண்டமர் தரு பழங் காவிரியின்
தெண்டிரை பொருது எழு சிவபுரமே
விளக்கம்:
புத்தர்களின் உண்கலன் மண்டை என்று அழைக்கப் பட்டது. விலக்கிய=வெறுத்து விலக்கிய; தெண்டிரை=தெண்+திரை=தெளிந்த நீரினை உடைய அலைகள்; முந்திய பாடலில் தலத்து மக்கள் எப்போதும் இன்புற்று இருப்பதற்கு காரணம் இறைவனின் அருள் என்று குறிப்பாக உணர்த்திய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் அந்த அருளின் செயல்பாட்டினை விளக்குகின்றார். நீர்வளமும் நிலவளமும் பொருந்தி இந்த தலம் இருப்பதே உயிர்களின் இன்பத்திற்கு காரணம்.
பொழிப்புரை:
மண்டை எனப்படும் உண்கலனை ஏந்திய புத்தர்களும், குண்டிகை ஏந்தித் திரியும் சமணர்களும், மாசேறிய உடலுடன் செருக்குடன் திரிந்ததால், அவர்களை வெறுத்து விலக்கும் சிவபெருமான், இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து விடுபட்ட சிவபெருமான், உறைகின்ற நகரம் சிவபுரம் ஆகும்.பண்டைய நாளிலிருந்தே தமிழகத்திற்கு வளம் சேர்க்கும் காவிரியின் தெளிந்த நீரலைகள் இரு கரைகளிலும் மோதும் தன்மையுடைய நகரம் சிவபுரமாகும்.
பாடல் 11:
சிவனுறை தரு சிவபுர நகரைக்
கவுணியர் குலபதி காழியர் கோன்
தவமல்கு தமிழ் இவை சொல்ல வல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே
விளக்கம்:
நவம்=புதுமை; இந்த பதிகத்தை முறையாக பாடும் அடியார்கள் சிவகதி பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அத்தகைய பலன்களைப் பெற்றுத் தருகின்ற வேறு சில பதிகங்களையும் செயல்களையும் நினைவூட்டுகின்றது. அத்தகைய பதிகங்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் வேணுபுரம் என்பது ஒன்றாகும். வேணுபுரம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில்,திருஞானசம்பந்தர், அந்த பதிகத்தினை முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், இம்மையில் தங்களது துயர்கள் நீங்கப் பெற்று மறுமையில் சிவகதியை பெறுவார்கள் என்று கூறுகின்றார். ஏதம்=குற்றம், கேதம்=துயரம்;
வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம் தன்னைப்
பாதத்தினில் மனம் வைத்து எழு பந்தன் தன பாடல்
ஏதத்தினை இல்லா இவை பத்தும் இசை வல்லார்
கேதத்தினை இல்லார் சிவகெதியைப் பெறுவாரே
நெய்த்தானம் தலத்தின் மீது தான் அருளிய பதிகம் (1.15), சிவகதியைப் பெற்றுத் தரும் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். நில மல்கிய=நிலவளம் பொருந்திய; நில மல்கிய என்ற தொடருக்கு சிறந்த புகழினை உடைய நெய்த்தானம் தலம் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். சில மல்கிய என்ற தொடரில் உள்ள சில என்ற சொல்லினை, சில் (நுண்ணிய பொருள்) என்பதன் திரிபாக கருதி, நுண்ணிய பொருட்களிலும் நிறைந்து நிற்பவன் பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது. தல மல்கிய=தலங்களில் சிறந்த தன்மை உடைய; ஒப்பற்ற பலனை தரும் பாடல்கள் என்று இந்த பதிகத்து பாடல்களை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவடிகளைச் சென்றடைந்து சிவகதி பெறலாம் என்று பதிகத்தின் பலனை குறிப்பிடுகின்றார். சிவகதி என்றால் சிவஞானமாகிய நெறி என்று பொருள். சிவபெருமானுடன் ஆன்மா சேர்வதற்கு வழி வகுக்கும் நெறியே சிவஞானம் என்றும் சிவகதி என்றும் அழைக்கப்படுகின்றது.
தல மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நில மல்கிய புகழான் மிகு நெய்த்தானனை நிகரில்
பல மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவகதியே
சண்பை நகர் (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது தான் அருளிய பதிகத்தின் (1.66.11) பாடல்களை சிந்தனை செய்து பாடும் வல்லமை பெற்ற அடியார்கள் சிவகதி சேர்வார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வந்தி=வந்தனை; மறை=இரகசியம்; பூஜை நேரம் அல்லாத மற்ற நேரங்களில் பெருமான், பிராட்டியுடன் இரகசியம் பேசுகின்றார் என்றும் காலை மற்றும் மாலை வேளைகளில் (சந்தி வேலைகள்) தியானம் செய்கின்றார் என்றும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். மறை என்ற சொல்லுக்கு மற்றவரிடமிருந்து மறைக்கப்பட்ட செய்திகள் (இரகசியமாக உள்ள செய்திகள்) என்றும் நான்மறை என்று குறிப்பிடப்படும் வேதங்கள் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமே.
வந்தியோடு பூசை அல்லாப் போழ்தின் மறை பேசிச்
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய
அந்தி வண்ணன் தன்னை அழகார் ஞானசம்பந்தன் சொல்
சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே
கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.105) கடைப் பாடலில் தான் அருளிய பதிகத்தின் பாடல்களை கற்று வல்லவராக திகழும் அடியார்கள் சிவகதி பெறுவது நிச்சயம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். தெருண்ட=தெளிந்த; இருண்ட மேதி=கருமை நிறம் உடைய எருமை மாடுகள்; குருண்ட வார்குழல்=சுருண்டு நீண்டு காணப்படும் சடை;
குருண்ட வார்குழல் சடை உடைக் குழகனை அழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறையவர் தொழும் பெரும் திருக்கோயில் எம் பெருமானை
இருண்ட மேதி இன மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன்
தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடமாமே
பூந்தராய் நகரத்தின் மீது (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களின் ஒன்று) அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (3.13.11), அந்த பதிகத்தின் பாடல்களை பாடுவதில் வல்லவராக விளங்கும் அடியார்கள், அனைத்துப் பேறுகளிலும் தலை சிறந்ததாக கருதப்படும் சிவகதியை அடைவது திண்ணம் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். பரம்=பாரம் என்ற சொல் பரம் என திரிந்தது; பரமலி குழல்=அடர்த்தியான கூந்தல்;
புரம் எரி செய்தவர் பூந்தராய் நகர்ப்
பரமலி குழல் உமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன் மெய்ப்பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்த்தல் திண்ணமே
விசயமங்கை பதிகத்தை (3.17.11) ஓதினால் சிவகதி புகுதல் திண்ணம் என்று திருஞானசம்பந்தர் மிகவும் உறுதியாக கூறுகின்றார். நண்ணிய=நெருங்கிய,இங்கே அவதரித்த என்று பொருள் கொள்ளுதல் பொருத்தம். இந்த பதிகத்தினை முறையாக ஓதும் வல்லமை வாய்ந்த அடியார்கள் புண்ணியம் செய்தவர்களாக விளங்குவார்கள் என்றும் அத்தகைய அடியார்கள் சிவகதி அடையப் பெற்று சிவானந்த பெருவாழ்வு வாழ்தல் திண்ணம். என்றும் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
விண்ணவர் தொழுதெழு விசயமங்கையை
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே
சிவபெருமானை தங்கள் சித்தத்தில் வைத்து வழிபடும் அடியவர் சிவகதி பெறுதல் திண்ணம் என்று, வடகுரங்காடுதுறை மீது அருளிய பதிகம் ஒன்றில் (3.91.3)சம்பந்தர் கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முழை=குகை, ஆரம்=சந்தன மரம்: முகந்து நுந்தி=தள்ளிக் கொண்டு வரும்: காவிரி நதி தனது அலைகளால் வாரிக் கொண்டு வரும் பொருட்களின் செல்வச் செழிப்பு இங்கே கூறப்படுகின்றது.
முத்து மாமணியொடு முழை வளர் ஆரம் முகந்து நுந்தி
எத்து மா காவிரி வடகரை குரங்காடுதுறை
மத்தமா மலரொடு மணி மதிபொதி சடைமுடி அடிகள் மேல்
சித்தமா அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே
சிவகதி பெறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுக்கும் அப்பர் பிரானின் பாடலை (4.72.6) நாம் இங்கே சிந்திப்பது பொருத்தமாகும். தகவு=தகுதி: திருநீறு, உருத்திராக்கம் முதலான சிவவேடங்கள்: பொறை=பொறுமை; செம்மையுள் நிற்றல்=சிந்தனையில் சிவத்தைத் தவிர வேறு ஏதும் இல்லாத நிலை: தம்மையும் நோக்கிக் கண்டு என்று அப்பர் பிரான் ஆன்ம தரிசனத்தையும் சிவதரிசனத்தையும் இங்கே குறிப்பிடுகின்றார்.உயிர், தானே எதையும் அறிந்துகொள்ளும் ஆற்றலற்றது. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கருவி கரணங்கள் (இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்கள், ஐந்து பூதங்கள், கண், காது, மூக்கு, வாய் மற்றும் உடல் ஆகிய ஞானேந்திரியங்கள், வாய், கை, கால், எருவாய், கருவாய் ஆகிய ஐந்து கன்மேந்திரியங்கள், ஒலி,ஒளி, ஓசை, நாற்றம், தொடும் உணர்வு ஆகிய ஐந்து தன்மாத்திரைகள், மற்றும் மனம், புத்தி, சித்தம் அகங்காரம் ஆகிய நான்கு உட்கருவிகள்) மூலம் உயிர்,மற்ற பொருட்களை அறிய முயற்சி செய்கின்றது. அந்த முயற்சியில் ஈடுபடும் உயிர், தான் வேறு, கருவி கரணங்கள் வேறு என்பதை மறந்து, கருவி கரணங்களும் தானும் ஒன்றே என்ற நினைப்புடன் செயல்படுகின்றது. அந்த நிலையில், உண்மையில் தான் வேறு, கருவி கரணங்கள் வேறு என்பதை உணர்த்து செயல்பட, பக்குவ முதிர்ச்சி அவசியம். அந்த முதிர்ச்சி இருந்தால், தன்னை நடத்துவது இறைவனின் திருவருளே என்ற உணர்வு மேலோங்கும்:உயிர் தன்முனைப்பின்றி, இறைவனின் திருவருளில் அடங்கி நிற்க, இறைவன் ஆன்மாவின் உண்மை இயல்பினை உயிருக்கு உணர்த்துவான். இந்த நிலை தான் ஆன்ம தரிசனம் எனப்படும். இவ்வாறு, நடக்கும் எதுவும் தன் செயலோ அல்லது மற்றவர்கள் செயலோ அல்ல என்பதை உணர்ந்து அனைத்தும் இறைவனின் செயல் என்பதை உணர்ந்து, நமக்கு ஏற்படும் நன்மை தீமை இரண்டையும் ஒன்றாக நினைத்து செயல்படுவது ஆன்மசுத்தியாகும். இவ்வாறு எங்கும், எதிலும் சிவத்தைக் காண்பது சிவதரிசனமாகும். நமக்கு கிடைத்த சிவதரிசனத்தை, வேலி பயிரினைக் காப்பது போல் காப்பதற்கு சிவவேடங்கள் அவசியம் என்பது பல தேவாரப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. மேலும், சிவபிரானை புகழ்ந்து பாடுவதன் மூலம் சிவகதி விளையும் என்றும் உணர்த்தப் படுகின்றது.
மெய்ம்மையாம் உழுவைச் செய்து விருப்பு எனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறை எனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு தகவு எனும் வேலி இட்டுச்
செம்மையுள் நிற்பர் ஆகில் சிவகதி விளையும் அன்றே
சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய உண்மை வழிகளால், மனத்தினை நன்றாக உழுது பதப்படுத்திய பின்னர், இறைவன் பால் கொண்டுள்ள அன்பு எனும் விதையை விதைக்க வேண்டும். இவ்வாறு விதைத்த பின்னர் ஐந்து புலன்களையும் அடக்குவதன் மூலம், பொய்ம்மை எனப்படும் களையை நீக்கி,பொறுமை எனப்படும் நீரினைப் பாய்ச்சவேண்டும்: வளரும் பயிரினைப் பார்த்துக்கொண்டே இருத்தல், பயிரின் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம்.இறையுணர்வு என்ற பயிர் வளர வளர, உயிரின் உண்மை இலக்கணம் நமக்கு புலப்படும். உயிரின் உண்மை இலக்கணத்தை புரிந்து கொண்டு, கருவிகள் வேறு ஆன்மா வேறு என்பதை உணர்ந்து, எங்கும் எதிலும் சிவத்தைக் கண்டு நாம் வாழத் தலைபட்டால், நமக்கு சிவதரிசனம் ஏற்படும். அவ்வாறு விளைந்த சிவதரிசனத்தை, நாம் சிவவேடங்கள் தரித்து, வேலி பயிரினைக் காப்பது போல் பாதுகாத்து தொடர்ந்து சிவநெறியில் நின்றால், நமக்கு சிவகதி விளையும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.
ஒரு பொது பதிகத்தின் பாடலிலும் (4.77.7) அப்பர் பிரான் சிவகதி பெறுவது எப்படி என்று நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார். அளறு=சேறு: பாறுதல்=நீங்கி ஓடுதல்: பன்றி சேற்றினில் ஆழ்ந்து கிடப்பது போல், மனிதன் மூன்று மலங்களில் சிக்குண்டு, தனது உடலினை பெரிதாகக் கருதி உலக இன்பங்களில் மூழ்கி இருக்கும் நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது. தீவினைகளை உடைய நெஞ்சமே, பன்றி சேற்றில் புரண்டு இன்பம் அடைவது போல, உலக வாழ்வின் இன்பங்களில் சிக்குண்டு, உனது உடலினை பெரிதாக கருதி, அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் வாழ்க்கையை வாழ்கின்றாய். உவர்ப்புச் சுவை கலந்த உமிழ் நீர் ஊறுவதால் நாற்றமெடுத்து, இரத்தம் ஒழுகும் பல ஓட்டைகள் ஒரு போர்வையால் மூடப்பட்டு காணப்படும் இந்த உடலின் இழிவான தன்மையை அறிந்து கொள்ளாமல், உடலை அழகுடைய உடல் என்று நீ கருதுகின்றாய். இந்த நிலையிலிருந்து நீ தேறி, வெளியே வந்து, சிவபிரானை நினைப்பாயாகில்,உனக்கு சிவகதி திண்ணமாகும். எனவே இறைவனை விருப்பத்துடன் நினைந்து உய்வாயாக என்பதே அப்பர் பிரான் நமக்கு கூறும் அறிவுரை ஆகும்
பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டுத்
தேறி நீ நினைதியாயில் சிவகதி திண்ணமாகும்
ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே.
கல்லுடன் கட்டப்பட்டு கடலில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், நமச்சிவாயப் பதிகம் பாடிய வண்ணம் இறைவனின் திருநாமமாகிய நமச்சிவாய மந்திரத்தின் தன்மைகளை உணர்த்துகின்றார். இறைவனின் அருளால், கல்லே தெப்பமாக மாற திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் அருகே கரை ஏறுகின்றார். உடனே அருகிலிருக்கும் திருக்கோயிலுக்கு சென்று ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தினை பாடுகின்றார். அந்த பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.94.6)பெருமானை நோக்கி தருவாய் சிவகதி என்று வேண்டுகின்றார். அப்பர் பிரானே சிவகதி வேண்டும் என்று ஆசைப் படுகின்றார் என்றால் சிவகதியின் பெருமையை சொல்லவும் வேண்டுமோ. மனம், மொழி, மெய்களால் (உடலினால்) இறைவனை வழிபடவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த பாடலில் மூன்று வகையான வழிபாடுகளும் சொல்லப்பட்டுள்ளன. மனத்தால் நினைந்து, வாயினால் அவனது நாமத்தை சொல்லி, உடலில் திருநீறு அணிந்து சிவபிரானை வழிபடுதல் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. தெரிதல் என்பதற்கு ஆராய்தல் என்ற பொருள் கொண்டு, சிவபிரானால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் சிவபிரானது தன்மைகளை ஆராய்ந்து தெரிந்து கொண்டு அவனது திருநாமங்களை இடைவிடாது பல பதிகங்கள் மூலம் எடுத்துரைத்த செய்கையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவதாக விளக்கம் கூறுவார்கள்., சிவகதியை வேண்டும் அப்பர் பிரான், இந்த பாடலில் தனது தகுதியை குறிப்பிட்டு பெருமானிடம் வேண்டுவதை நாம் உணரலாம். அவர் குறிப்பிடும் தகுதிகள் தான் என்ன. கருவாய்க் கிடந்த நாளிலிருந்தே பெருமானின் திருப்பாதங்களின் தன்மையை நினைத்தல், உலகினில் பிறப்பெடுத்த பின்னர் அவனது திருநாமங்களை அறிந்து கொண்டு இடைவிடாது சொல்லுதல், வாயார சிவாயநம என்று சொல்லியவாறு திருநீறு பூசிக் கொள்ளுதல் என்பனவே அந்த தகுதிகள். நாமும் இந்த தகுதிகளை அடைந்து இறைவனிடம் சிவகதியை வேண்டுப் பெறுவோமாக. இந்த தகுதிகளுடன் தேவாரப் பாடல்களை, முறையாக ஓதும் செய்கையையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்
உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனது அருளால்
திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே
பெருமானின் திருவடிகள் மீது மலர்கள் தூவித் தொழுதால் சிறந்த பரிசாகிய சிவகதியினைப் பெறலாம் என்று அப்பர் பிரான் நல்லம் (தற்போது கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படும் தலம்) தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (5.43.8) கூறுகின்றார். வெம்மையான=தீயினும் கொடியதாக நம்மை வருத்துவதால் வெம்மை வினை என்று கூறுகின்றார். கடலின் அலைகள் போன்று ஒன்றன் பின் பின் ஒன்றாக வினைகள் நம்மை வந்து வருத்துவதால் வினைக் கடல் என்று குறிப்பிடுகின்றார். சும்மை=ஆரவாரம்; ரீங்காரம் இட்டு ஆரவாரம் செய்தவாறு புதுமலர்களை சூழும் வண்டுகளை இங்கே குறிப்பிடுகின்றார். சும்மை என்பதை சுமை என்ற சொல்லின் திரிபாக கருதி, சுமந்து செல்லும் பூக்களை குறிப்பிடுகின்றார் என்றும் சிலர் விளக்கம் கூறுகின்றனர். தலை மீது சுமந்து செல்லும் அளவுக்கு மிகவும் அதிகமாக பூக்களை எடுத்துச் சென்று இறைவனை அனைவரும் வணங்கி வேண்டும் என்பது அப்பர் பிரானின் ஆசை போலும்.
வெம்மையான வினைக்கடல் நீங்கி நீர்
செம்மையாய சிவகதி சேரலாம்
சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ
நம்மை ஆளுடையான் இடம் நல்லமே
கோளிலி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றிலும் (5.56.9) கோளிலி ஈசனை இரவும் பகலும் பாடி சிவகதி பெறலாம் என்று கூறுகின்றார். கேடு மூடி=துன்பமே மிகுதியாக பரவி; உண்ணும்=நுகரும்; வினைகளில் ஆழ்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து உலக வாழ்க்கை என்ற சுழற்சியில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு கூறும் அறிவுரையாக இந்த பாடல் அமைந்துள்ளது. சென்ற பல பிறவிகளில் சேர்த்துவைத்த வினைகளைக் கழிப்பதற்காக எடுத்துள்ள இந்த பிறவியிலும் மேலும் மேலும் வினைகளை பெருக்கிக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நீங்காமல், மீண்டும் பிறப்பதற்கே வழியினைத் தேடிக் கொள்ளமால், இறைவனைப் புகழ்ந்து பாடி பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுமாறு நமக்கு அறிவுரை கூறும் பாடல்.
கேடு மூடி கிடந்து உண்ணு நாடது
தேடி நீர் திரியாதே சிவகதி
கூடலாம் திருக்கோளிலி ஈசனைப்
பாடுமின் இரவோடு பகலுமே
நீலக்குடி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலிலும் (5.72.1) சிவபிரானை நினைத்தால், அவனது திருநாமத்தைச் சொன்னால் சிவகதி திண்ணமாகும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மாடு=செல்வம்
வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர்
செத்தபோது செறியார் பிரிவதே
நித்த நீலக்குடி அரனை நினை
சித்தமாகில் சிவகதி சேர்வரே
நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் பாடலில் (8.6.41) சிவகதியாக இருப்பவன் சிவபெருமான் என்று மணிவாசகர் கூறுகின்றார். பெண்களின் வாயிலிருந்து வெளிவரும் மொழிகள், காமத்தில் ஆழ்த்தி நாம் வெளிவராத வண்ணம் நம்மை மயக்கும் என்பதால், அவர்களது வாயினை முதலைக்கு அடிகளார் ஒப்பிடுகின்றார். வெந்நீர்=வெம்+நீர், கொடிய நீர்; பெண்கள் பால் கொள்ளும் வேட்கை, சுழல்கள் உடைய கொடிய நீர்நிலைக்கு ஒப்பிடப்படுகின்றது.சுழலில் சிக்கியவர்கள் மீள்வதே கடினம். மிகுந்த முயற்சியுடன் அந்த சுழலைக் கடந்து வர நினைத்தாலும், அந்த நீர்நிலையில் முதலை இருந்தால், அதன் பிடியில் அகப்படாமல் வருவது என்பது மிகவும் கடினம் அல்லவா. பெண்களின் காம மொழிகள், சுழல் நிறைந்த நீர்நிலையில் முதலை இருப்பதற்கு ஒப்பிடப்பட்டு, அந்த நிலையிலிருந்து மீள்வது எவ்வளவு கடினம் என்பது உணர்த்தப் படுகின்றது. விதலை= நடுங்குதல்; விடக்கு ஊன்=புலால் நாற்றம் மிகுந்த உடல்; மிடைந்த=பொருந்திய; சிதலை=நோய்; திதலை=தேமல்; இந்த உடலுடன் தொடர்ந்து வாழ முடியாமல் தவிக்கும் தன்னை, சிவகதியாக,அதாவது முக்தி உலகமாக விளங்கும் பெருமான் ஆட்கொள்ளவேண்டும் என்று அடிகளார் வேண்டுகின்றார்.
முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி
விதலைச் செய்வேனை விடுதி கண்டாய் விடக்கு ஊன் மிடைந்த
சீத்தலைச் செய் காயம் போறேன் சிவனே முறையோ முறையோ
திதலைச் செய் பூண்முலை மங்கை பங்கா என் சிவகதியே
திருநின்றியூர் தலத்து பதிகத்தின் கடைப் பாடலில் (7.19.11) சுந்தரர் சிவகதியாய் விளங்கும் பெருமான் என்று கூறுகின்றார். சிவகதியாக இருகின்ற பெருமான், தேவாரப் பதிகங்களை முறையாக பாடி தொழுகின்ற அடியார்களுக்கு சிவகதியைத் தருகின்றான் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.
சேரும் புகழ்த்தொண்டர் செய்கை அறாத் திருநின்றியூரில்
சீரும் சிவகதியே இருந்தானைத் திருநாவல்
ஆரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய்ப்
பாரும் விசும்பும் தொழப் பரமன் அடி கூடுவரே
நமது தீவினைகள் நம்மை சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்ல விடாது தடுக்கும் என்றும், நாம் அந்த தீவினைகளின் தாக்கத்தையும் மீறி அவனது திருநாமத்தைச் சொன்னால் தீவினைகள் அழிந்துவிடும் என்றும் இந்த பாடலில் திருமூலர் கூறுகின்றார். ஆன்மாவைப் பிணித்துள்ள தத்துவங்களிலிருந்து விடுதலை பெற்று, சிவபெருமானுடன் ஆன்மா சேர்வதாக வழி வகுக்கும் நெறி சிவகதி எனப்படுகின்றது.
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்ன சிவகதி தானே
பொழிப்புரை:
சிவபெருமான் உறைகின்ற நகரமாகிய சிவபுரத்தை குறித்து, சிவபுரத்தில் உறையும் பெருமானை குறித்து, கவுணிய கோத்திரத்தைச் சார்ந்த குலத்திற்கு தலைவனாகவும் சீர்காழி நகரத்திற்கு தலைவனாக விளங்கும் ஞானசம்பந்தன், பாடியதும் சிறந்த தவத்தின் பயனைப் பெற்றுத் தருவதும் ஆகிய சிறந்த தமிழ்ப் பாடல்களை பாடும் வல்லமை உடைய அன்பர்கள், பல புதுமையான நலன்களை இம்மையில் பெற்று மறுமையில் சிவகதி அடைந்தும் இன்பமாக வாழ்வார்கள்.
முடிவுரை:
இந்த பதிகத்தின் பாடல்களில் சிவபுர நகரத்தின் காட்சிகள் விளக்கமாக சொல்லப் பட்டுள்ளன என்ற செய்தியை நாம் பதிகத்தின் பின்னணியில் சிந்தித்தோம். பதிகத்தின் முதல் பாடலில், நகரின் அருகே ஓடும் காவிரி நதியின் தன்மையும், இரண்டாவது பாடலில் தலபுராண செய்தியும், மூன்றாவது பாடலில் உயர்ந்த மதில்களுடன் இந்த நகரம் விளங்கியதையும், நான்காவது பாடலில் செண்பக மலர்கள் நிறைந்த சோலைகள் இருக்கும் தன்மையும்,ஐந்தாவது பாடலில் தேன் நிறைந்த பல மலர்கள் கொண்ட சோலைகளும் அந்த மலர்களை நாடி வரும் வண்டுகள் ரீங்காரம் இட்டவண்ணம் அந்த மலர்களைச் சுற்றி வரும் வண்டுகள் மலர்களில் உள்ள தேனில் மயங்கி கிடக்கும் நிலையும், ஆறாவது பாடலில் வயல்களில் மகளிர் நாற்று நடுகின்ற காட்சியும் அவர்களின் அருகே உழவர்கள் உழவுத் தொழிலில் ஈடுபடும் காட்சியும், ஏழாவது பாடலில் வண்டுகள் தன்னை மறந்து தேனில் மயங்கிக் கிடப்பது போன்று அன்னங்கள் தங்களது துணையின் அணைப்பினில் மயங்கிக் கிடக்கும் நிலையும், எட்டாவது பாடலில் திருவிழாக் காலங்களில் நகரினை அலங்கரிக்கும் வெண்கொடிகள் விண்ணை முட்டும் வண்ணம் உயர்ந்து காணப்பட்ட காட்சியும், ஒன்பதாவது பாடலில் இரவிலும் இந்த நகரம் ஒளியுடன் திகழ்வதால் பறவைகள் இரவிலும் கமுகு மரங்களில் உள்ள பழங்களை உண்கின்ற காட்சியும், மொத்தத்தில் நீர்வளமும் நிலவளமும் பொருந்திய நகரமாக இந்த நகரம் திகழ்ந்த தன்மையும் உணர்த்தப் படுகின்றன. கடைப் பாடல், தேவாரப் பதிகங்களை ஓதும் அடியார்கள் சிவகதி பெறுவார்கள் என்பதை உணர்த்துகின்றது. நாமும் சிவபுரம் சென்று பெருமானை வணங்கியும் பதிகங்கள் பாடியும் அவனது அருளுடன் சிவகதியை பெறுவதற்கு முயற்சி செய்வோமாக.