இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


இன்று நன்று நாளை

இன்று நன்று நாளை


பதிக எண்: 2.99- கோடிகாவு - நட்டராகம்

பின்னணி:


பரத முனிவரின் மகளாக வளர்ந்த பார்வதி தேவியை பெருமான் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சியுடன் தொடர்பு கொண்ட திருத்துருத்தி, திருமணஞ்சேரி, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி ஆகிய நான்கு தலங்கள் சென்று பெருமானை வணங்கி தேவாரப் பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், அதன் பின்னர் கோடிகாவு தலம் சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. சிகாமணி=தலையின் மீது சூடிக் கொள்ளும் மணி; தங்களது தலையின் மீது சூடிக் கொள்ளும் மணியினைப் போன்று உயர்ந்தவனாக தேவர்களால் இறைவன் கருதப் படுகின்றான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. பருக்கோடு=பருத்த கொம்பு; கருக்கோடி=பிறவியின் எல்லை; கஞ்சனூர் இறைவனைத் தொழும் அடியார்கள் பிறவிக்கடலின் எல்லையினைக் கடந்து வீடுபேறு அடைவார்கள் என்று இங்கே கூறப்படுகின்றது. திருஞானசம்பந்தர் கஞ்சனூர் இறைவனைக் குறிப்பிட்டு அருளிய பதிகம் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.

திருக்கோடிக்காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னை

எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்து வெள்ளேனப்

பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல்மாலைகள் பாடிக்

கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கைதொழச் சென்றார்

இந்த தலம் தற்போது கோடிகாவல் என்று அழைக்கப் படுகின்றது. மூன்று கோடி முனிவர்கள் இந்த தலத்து இறைவனை வழிபட்டு பயன் அடைந்தமையால் கோடிகா என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகின்றது. கோடிக் கணக்கான முனிவர்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்து காத்தமையால் கோடிகாவு என்று அழைக்கப்பட்டது போலும். இந்த தலம், கும்பகோணம் கதிராமங்கலம் சாலையில், கும்பகோணம் தலத்திற்கு கிழக்கே 19 கி.மீ தொலைவிலும் மயிலாடுதுறை தலத்திற்கு மேற்கே 17 கி.மீ. தொலைவிலும் உள்ளது. கும்பகோணம் நகரத்திலிருந்து நகர பேருந்து வசதி உள்ளது. கஞ்சனூர் தலத்திற்கு கிழக்கே மூன்று கி.மீ தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறை கும்பகோணம் இரயில் பாதையில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் இந்த தலம் உள்ளது. இறைவனின் திருநாமம், கோடிகா ஈச்வரர், த்ரிகோடீசுவரர், கோடிகா நாதர், இறைவியின் திருநாமம்=வடிவம்மை, திரிபுரசுந்தரி; கா என்ற சொல்லுடன் முடியும் ஐந்து தேவாரத் தலங்களில் ஒன்று. அவையாவன, கோடிகா, நெல்லிக்கா, ஆனைக்கா, கோலக்கா மற்றும் குரக்குக்கா. அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது அருளிய மூன்று பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. தூர்வாச முனிவர் தன்னைப் பின்பற்றிய முனிவர்களுக்கு பஞ்சாக்கர மந்திரம் உபதேசம் செய்த இடம். உபதேசம் பெற்ற முனிவர்கள் பெருமானை இந்த தலத்தினில் வழிபட்ட போது, பெருமான் அவர்கள் அனைவர்க்கும் காட்சி கொடுத்தார் என்றும், அப்போது துர்வாசர் குளத்து தீர்த்தத்தை அவர்கள் மேல் தெளிக்க, பெரிய ஜோதி தோன்றியது என்றும், அந்த ஜோதியில் கலந்த முனிவர்கள் முக்தி அடைந்தனர் என்றும் கூறுவார்கள். பரசுராமர், இராமபிரான், பலராமர், காளி, வீரபத்திரர் ஆகியோர் தாங்கள் பலரை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை, இந்த தலத்தினில் செய்த வழிபாடு மூலம் நீக்கிக் கொண்டனர் என்று தலபுராணம் குறிப்பிடுகின்றது. தனது தாயைக் கொன்றதால் பரசுராமருக்கு ஏற்பட்ட தோஷம், அந்தணன் இராவணனைக் கொன்றதால் இராமபிரானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம், பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமருக்கு ஏற்பட்ட தோஷம், வீரபத்திரருக்கு தக்க யாகத்தில் பங்கேற்ற பலரைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் ஆகியவை, இந்த தலத்து வழிபாட்டால் தீர்ந்தது என்று கூறுவார்கள். மூன்று கோடி மந்திரங்களும் சிவபெருமானின் சன்னதியில் அமர்ந்து, சரியாக மந்திரங்களை உச்சரித்து, சாப விமோசனம் பெற்றதாகவும் சொல்லப் படுகின்றது. கயிலாயத்தை விடவும் சிறந்த தலமாக கருதப் படுகின்றது. இந்த தலத்தினில் செய்யும் தியானம் ஹோமம் ஜபம் அனைத்தும் மூன்று மடங்கு பலனை அளிக்கும் என்றும் நம்பப் படுகின்றது.

ஐந்து நிலை இராஜகோபுரம். இங்குள்ள விநாயகர் அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப் பட்டவர். முன் மண்டபத்தின் வலது புறத்தில் அம்பிகை சன்னதி உள்ளது. மூலவர் சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காணப்படுகின்றார். மூலவர் சுயம்பு மூர்த்தி. மூலவர் சன்னதி செல்லும் வழியில் இருபுறமும் சித்திரகுப்தர் மற்றும் யமதர்மன் ஆகிய இருவரையும் காணலாம். கோஷ்ட மூர்த்தங்களாக, அகத்தியர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர்,துர்க்கை, பிக்ஷாடனர், நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோரை காணலாம். கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவருக்கு அருகே திருமாலையும், வசிட்ட முனிவர் மற்றும் குத்ச முனிவரையும் காணலாம். பிட்ஷாடணருக்கு அருகே மோகினி காட்சி தருவது இந்த தலத்தின் தனிச் சிறப்பு. தனியாக நவகிரக சன்னதி இல்லை. ஆனால் சூரியன் சந்திரன் மற்றும் சனி பகவானுக்கு தனியாக சன்னதிகள் உள்ளன. சனி பகவானின் மனைவி ஜேஷ்டா, மகன் மாந்தி, மகள் மாந்தா, ஆகியோரின் உருவச் சிலைகளையும் காணலாம். இந்த மூன்று உருவங்களும் ஒரே கல்லில் செதுக்கப் பட்டுள்ளன. மாந்தாவின் கையில் தாமரை மலரும்,மாந்தியின் முகம் ரிஷபத்தின் வடிவத்திலும் காணப் படுகின்றன. சனி பகவான் பாலசனி என்று அழைக்கப் படுகின்றார். உள் பிராகாரத்தில், விநாயகர்,சுப்பிரமணியர், சிவலிங்கங்கள் (நாகலிங்கம், காசி விஸ்வநாதர், நான்கு வேத லிங்கங்கள்), கஜலக்ஷ்மி, காலபைரவர், தூர்வாச முனிவர் சித்ரகுப்தர், எமதருமன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர் சன்னதியில் விசாலாட்சி அம்பிகை மற்றும் மனோன்மணி அம்பிகை ஆகிய இருவரையும் காணலாம். சனிபகவான் சிவலிங்கத்தைத் தனது தலையில் தாங்கிய வண்ணம் நிற்கின்றார். காகத்திற்கு பதிலாக கருடன் அவரது வாகனமாக உள்ளது. கஜலட்சுமி, தனது இரண்டு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்ட நிலையில் அருள் பாலிக்கின்றார். அடியார்களுக்கு அருள் பாலிக்க வேண்டி, விரைவில் வருவதற்காக தயார் நிலையில் இருப்பது போல் தோன்றுகின்றது. வடக்கு கருவறைச் சுற்றில் கௌதம முனிவர், பிரமன், காச்யப முனிவர், அஷ்ட புஜ துர்க்கை மற்றும் அர்த்த நாரீசுவரர் ஆகியோரை காணலாம். செங்கல் கட்டிடமாக இருந்த திருக்கோயில், செம்பியன் மாதேவியரால் கருங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. சிவபெருமானின் பல லீலைகள் நுணுக்கமான சிற்பங்களாக பல இடங்களில் காணப்படுகின்றன. சிவகாமி அம்பிகை உடனாய நடராஜரின் சிலைக்கு வலது புறத்தில் காரைக்கால் அம்மையார் திருவுருவத்தை காணலாம். நடராஜரின் திருவடியின் கீழே, மூன்று கணங்கள் பாடும் நிலையிலும் தாளமிடும் நிலையிலும், மத்தளம் வாசிக்கும் நிலையிலும் இருப்பதை காணலாம். பிக்ஷாடனரின் அருகே மோகினி உருவத்தையும் காணலாம். விமானத்தில் எட்டு கரங்களை ஏந்திய அகோர தாண்டவமூர்த்தி மற்றும் பிட்சாடனர் உருவத்தையும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணலாம். லிங்கோத்பவருக்கு அருகே, திருமால், குத்ச முனிவர், வசிட்ட முனிவர் உள்ளனர். இராஜ கோபுரத்தின் வாயிலில் காமதேனு, கற்பக மரம், குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க் காட்சிகள், மனுநீதி சோழனின் வரலாறு, கண்ணனின் கோகுல லீலைகள் ஆகிய மிகவும் அழகிய சிற்பங்கள்; இருபத்திரண்டு வேறுவேறு விதமான வாத்தியங்களை வாசிக்கும் நிலையில் பெண்களின் உருவச் சிலைகள் நுண்ணிய வேலைப் பாடுகள் கொண்டவை. மூலவர் கருவறை வெளிச் சுவர்களிலும் சிற்பங்கள் காணப்படுகின்றன. விமானத்தில் திருமால் அமர்ந்த நிலையில் காட்சி தருகின்றார். கிழக்கு புற விமானத்தில் சுவாமி மற்றும் அம்பாளையும் காணலாம். இந்த திருக்கோயில் சென்ற அடியார்களுக்கு யமதண்டனையிலிருந்து விடுதலை கிடக்கும் என்று நம்பப்படுகின்றது. காசியைப் போன்று இந்த தலத்தில் வாழும் மனிதர்களுக்கு இயமபயம் இல்லை. இதனை உறுதி செய்வது போன்று, இந்த தலத்தினில் சுடுகாடு இல்லை; காவிரி நதியின் அடுத்த கரை சென்று ஆங்குள்ள சுடுகாட்டில் தான் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப் படுகின்றன.

ஹரதத்தர் என்ற வைணவர் தினமும் கஞ்சனூரிலிருந்து புறப்பட்டு, திருமாந்துறை, திருமங்கலக்குடி, குரங்காடுதுறை, ஆவடுதுறை, தென் திருவாலங்காடு, கோடிக்கா ஆகிய தலங்களில் உள்ள பெருமானை வணங்கிவிட்டு அர்த்தஜாம பூஜைக்கு தனது சொந்த ஊரான கஞ்சனூருக்கு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் பேய்மழையின் காரணமாக, கோடிக்காவிலிருந்து அவரால் புறப்பட முடியவில்லை. கடுங்குளிரில் கோபுர வாசலில், மழை எப்போது தணியும் என்று, காத்துக் கிடந்த அவரை, ஒரு ஹரிஜன் அவரது கையில் ஒரு கொம்பினை பற்றிக் கொள்ளுமாறு கொடுத்து கோடிக்கா அழைத்துச் சென்றார். கோடிக்கா சென்றடைந்து ஆங்கே அர்த்தஜாம பூஜையை கண்டு களித்த ஹரதத்தர், தனக்கு பிரசாதமாக கிடைத்த அன்னத்தையும் சுண்டலையும் தன்னை அழைத்து வந்தவருக்கு கொடுத்தார். அடுத்த நாள் காலையில், அனைத்து சன்னதிகளிலும் அன்னமும் சுண்டலும் சிதறிக் கிடந்ததன் மூலம், ஹரதத்தரை அழைத்து வந்தவர் சிவபெருமான் என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். திருப்பதி சென்றும் வேங்கடவனை காண முடியமால் திகைத்த வைணவ அன்பர்களுக்கு, அசரீரி குரல் கோடிக்கா சென்று தலத்து அம்பிகையை தரிசனம் செய்யவேண்டும் என்று உணர்த்தியது. கோடிக்கா நெருங்கிய பின்னரும், காவிரியில் புரண்டோடிய வெள்ளத்தின் காரணமாக அவர்களால் திருக்கோயில் செல்ல முடியவில்லை. அப்போது அங்கே தோன்றிய அகத்திய முனிவரின் ஆலோசனைப் படியே, அவர்கள் விநாயகப் பெருமானை வேண்ட, விநாயகர் அருளால் வெள்ளம் வற்றவே அவர்கள் திருக்கோயில் சென்றனர். இதனால் இந்த விநாயகருக்கு கரையேற்றிய விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. அவர்கள் அம்பிகை சன்னதி சென்று வழிபட்டபோது, அம்பிகை வேங்கடவனாக அவர்கள் அனைவருக்கும் காட்சி கொடுத்தாள் என்று கூறுகின்றனர். நமது நினைவுக்கு அரி அலால் தேவி இல்லை என்று அப்பர் பிரான் பாடியது நினைவுக்கு வருகின்றது.

மகா மண்டபத்தில், கோடிகா நாதர் சன்னதிக்கும் துர்வாச முனிவரின் சிலைக்கும் நடுவில், காட்சி கொடுத்த அம்பாள் சிலை உள்ளது. ஒரு சமயம், திருக்களர் தலத்து இறைவனை தரிசனம் செய்த துர்வாசர், இந்த தலம் வந்தடைந்தார். அப்போது மிகவும் அவசரமாக, சுவாமி சன்னதி சென்றார். கோயில் நுழைவாயிலின் அருகே வலது புறத்தில் இருந்த அம்பிகை சன்னதி செல்லாமல், மிகவும் அவசரமாக சுவாமி சன்னதிக்கும் சென்ற துர்வாச முனிவர், எங்கே பிருங்கி முனிவர் போன்று தன்னை வணங்காமல் சென்று விடுவாரோ என்ற எண்ணத்தில், அம்பிகை, சுவாமி சன்னதி சென்று கொண்டிருந்த துர்வாசருக்கு காட்சி கொடுத்ததாகவும், துர்வாச முனிவர் அம்பிகையை வழிபட்ட பின்னர் சுவாமியை வழிபட்டார் என்றும் சொல்லப் படுகின்றது.

செங்கல் கட்டிடமாக இருந்த பழைய கோயில், செம்பியன் மாதேவியரால் கற்றளியாக மாற்றப் பட்டது. அவ்வாறு மாற்றம் செய்யும் போது, அதற்கு முன்னம் திருக்கோயிலில் இருந்த கல்வெட்டுகள் அனைத்தையும் பாதுகாப்பாக எடுத்து வைத்து, புதியதாக கட்டிய போது பல இடங்களிலும் பதித்த செயல் பாராட்டுக்கு உரியது. கோயில் பிராகாரம் விக்ரம சோழனால் கட்டப்பட்டது. விக்ரம சோழன் திருச்சுற்று மாளிகை ஒரு கல்வெட்டில் குறிக்கப் பட்டுள்ளது. முற்கால பல்லவ மன்னர்கள், பிற்கால பல்லவ மன்னன் கோப்பெருஞ் சிங்கன், முத்தரையர்கள், சடையவர்ம பாண்டியன், இராஜராஜச் சோழன், முதல் குலோத்துங்கச் சோழன், விக்ரம சோழன், மூன்றாம் குலோத்துங்கச் சோழன் முதலிய பல மன்னர்களின் ஐம்பது கல்வெட்டுகள் காணப் படுகின்றன. தீர்த்தம் அகத்திய தீர்த்தம், காவிரி நதி; தலமரம் கொடி பிரம்பு. இந்த கோயிலுக்கு அரை கி.மீ தூரத்தில் பாஸ்கர ராயருக்கு நினைவு மண்டபம் உள்ளது. இந்த தலத்து இறைவியை வழிபட்டு, லலிதா சகஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் எழுதி, அரங்கேற்றம் செய்ததாக சொல்லப் படுகின்றது.

. பாடல் 1:

இன்று நன்று நாளை (2.99) பின்னணி மற்றும் பாடல் 1 (திதே 0497)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 1 தொடர்ச்சி (திதே 0498)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 1 தொடர்ச்சி (திதே 0499)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 1 தொடர்ச்சி (திதே 0500)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 1 தொடர்ச்சி மற்றும் பாடல் 2 (திதே 0501)

இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால்

பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்

மின் தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்

கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே

விளக்கம்:

பொன்றுகின்ற=உறுதியாக அழிந்துபடும்; விரிபுனல்=விரிந்த பரப்பினை உடைய நீர்ப்பெருக்கு, கங்கை நதி; போகவிட்டு=மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகில் வாழும் தன்மையை ஒழித்துவிட்டு; போதுமின்=செல்வீர்களாக, அழியாத ஆனந்தத்தைத் தரும் முக்தி உலகுக்கு செல்வதை; தயங்கு=விளங்கும்; மின் தயங்கு=மின்னலை போன்று மிகுந்த ஒளிவீசும்; இன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது என்றும் வரப்போகும் நாட்களும் மிகவும் இன்பம் பயப்பதாக இருக்கும் என்று உலகியல் இன்பங்களில் ஆழ்ந்து இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது.

இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும், திருஞானசம்பந்தர், நாம் பெருமான் பால் அன்பு செலுத்தி உய்வினை அடைய வேண்டும் என்று, அதற்கான காரணங்களையும் சொல்லி, அறிவுரை கூறுகின்றார். இந்த பதிகத்தை தவிர்த்து அத்தகைய திருஞானசம்பந்தர் பதிகங்கள் ஆறு உள்ளன. அதைத் தவிர்த்தும் பல்வேறு பாடல்களிலும் நமக்கு அறிவுரை சொல்லப் படுகின்றது. திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருவிருக்குக் குறள் பதிகத்தின் (1.91) அனைத்துப் பாடல்களும், நமக்கு அறிவுரை சொல்லும் பாடல்களாக அமைந்துள்ளன. இந்த பதிகத்தின் பெரும்பாலான பாடல்களில் பெருமான் பால் அன்பு வைத்து அவனது திருமேனி மீது மலர் தூவி வழிபட்டு பலன் அடையுமாறு திருஞானசம்பந்தர் பணிக்கின்றார். அவ்வாறு அவனது திருமேனி மீது மலர் தூவி வழிபடுவதால், நாம் அடையவிருக்கும் பலன்களையும் குறிப்பிடுகின்றார். பதிகத்தின் முதல் பாடலில், மறுமையில் முக்தி நிலை அடையலாம் என்றும். மூன்றாவது பாடலில் மீண்டும்மீண்டும் பிறப்பெடுப்பதால் வருகின்ற துன்பங்களை துடைத்துக் கொண்டு முக்தியுலகம் சென்றடைந்து நிலையான இன்பம் அடையலாம் என்றும், ஐந்தாவது பாடலில் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறலாம் என்றும், ஆறாவது பாடலில் உலகத்து பொருட்கள் மற்றும் உயிர்கள் மீது கொண்டுள்ள பாசத்தை அறுத்துக் கொள்ளலாம் என்றும், ஏழாவது பாடலில் உலகம் வசப்படும் என்றும், பெருமானின் திருமேனி மலர் தூவி வழிபடுவதால் அடையவிருக்கும் பயன்களை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், பல வழிகளில் பெருமானை வழிபடுவதால் உயிர்கள் அடையவிருக்கும் பலன்கள் சொல்லப் படுகின்றன. இந்த பதிகத்து பாடல்களில் சரியை மற்றும் கிரியை வழிபாட்டினால் உயிர்கள் அடைகின்ற நன்மைகள் உணர்த்தப் படுகின்றன. பெருமானை வாழ்த்தி பாடி வழிபடும் தன்மையும் அதன் பயனும் இரண்டாவது மற்றும் பத்தாவது பாடலில் சொல்லப்படுகின்றது. இரண்டாவது பாடலில் பாசத்தைத் துறந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறலாம் என்றும், பத்தாவது பாடலில் நாம் உலகப் பொருட்கள் மீது ஆசை கொள்வதற்கு மூல காரணமாக விளங்கும் ஆசையை விலக்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லப் படுகின்றது. பெருமானை கை தொழுது வணங்குவதால் அடையவிருக்கும் பலன்கள் நான்காவது மற்றும் எட்டாவது பாடல்களில் சொல்லப் படுகின்றது. நான்காவது பாடலில் வினைகளை நலிவடையச் செய்யலாம் என்றும், எட்டாவது பாடலில் தெளிவான சிந்தை அடையலாம் என்றும் சொல்லப் படுகின்றது. பெருமானை நினைப்பதால் நாம் வினைகளிலிருந்து விடுபடலாம் என்று ஒன்பதாவது பாடலில் உணர்த்துகின்றார். இவ்வாறு மனம் (நினைப்பது) மொழி (புகழினைப் பாடுவது) மெய் (மலர் தூவுதல், கைகள் கூப்பித் தொழுதல்) ஆகியவற்றை இறை வழிபாட்டினில் எவ்வாறு ஈடுபடுத்துவது என்பதை திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல்கள் கொண்ட பதிகம். நாம் முக்தி நிலை அடைந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதும் (முதல், இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் பாடல்கள்), அந்த நிலைக்கு செல்லும் படிகளாகிய சித்தம் தெளிவடைதல் (முதல் மற்றும் எட்டாம் பாடல்கள்) ஆசையை அறுத்துக் கொள்ளுதல் (இரண்டாவது மற்றும் பத்தாவது பாடல்கள்), பாசத்தை நீக்குதல் (ஆறாவது பாடல்), வினைகளை நீக்கிக் கொள்ளுதல் (நான்காம் ஐந்தாம் ஏழாம் மற்றும் ஒன்பதாவது பாடல்கள்), எவ்வாறு என்பதும் இந்த பதிகத்தின் பாடல்களில் உணர்த்தப் படுகின்றன.

இந்த திருவாரூர் பதிகத்தின் பத்தாவது பாடலில், பெருமான் பால் அன்பு, பெருமானின் அருளினால், உலகப் பொருட்கள் மீது நாம் கொண்டுள்ள ஆசையினை விடுவித்துக் கொண்டு பயன் அடையுமாறு திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். சீவர்=சீவர ஆடையை உடுத்தும் புத்தர்கள்: துவராடையை சீவர ஆடை என்று சொல்லுவார்கள்; எப்போதும் கடுக்காய் மெல்லும் பழக்கம் உடையவர்கள் சமணர்கள்; கடுக்காய், பல் துலக்காமல் அவர்கள் இருப்பதால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கும் என்பதால். அந்நாளைய சமணர்கள் கடுக்காய் மெல்லும் பழக்கம் உடையவர்களாக இருந்தனர் என்று தெரிய வருகின்றது. எனவே கடுக்கொள் சமணர் என்று அவர்களை பண்டைய நாளில் அழைத்தனர். சமணர்கள் மற்றும் புத்தர்களை அடக்கியவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திருஞானசம்பந்தர் மதுரை சென்று, இறைவன் அருளால், சமணர்களை வெற்றி கொண்டதற்கு முன்னரே திருவாரூர் சென்று இந்த பதிகம் பாடுகின்றார். எனவே தன்னை ஒரு கருவியாகக் கொண்டு, சமணர்கள் மற்றும் புத்தர்களின் கொட்டத்தை பெருமானை அடக்கிய நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படவில்லை என்பது தெளிவாகின்றது. திருஞானசம்பந்தர், தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தை பாடுவதற்கு முன்னமே, அப்பர் பிரானை கருவியாக கொண்டு, சமணர்களின் சூழ்ச்சிகளை பெருமான் முறியடித்தது, திருஞான சம்பந்தரின் நினைவுக்கு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியை தான் இங்கே குறிப்பிடுகின்றார். வேட்கை=ஆசை; பதிகத்தின் ஆறாவது பாடலில் பாசத்தை அறுக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் திருஞானசம்பந்தர், அந்த பாசத்திற்கு காரணமான ஆசையை விட வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கடுக்காய் மென்று தின்னும் பழக்கம் உடைய சமணர்கள் மற்றும் துவராடை உடுத்தும் புத்தர்கள் ஆகிய இருவரையும் வென்று அவர்களது கொட்ட்த்தை அடக்கிய பெருமான், ஆரூர் நகரத்தில் உறைகின்றார். பெருமானின் இந்த தன்மையை புரிந்து கொண்டு அவனை வாழ்த்தும் அடியார்கள், பாசத்திற்கு மூல காரணமான ஆசையை அறவே விடுத்து, அதன் பயனாக பாசத்தையும் விடுத்து, அதன் விளைவாக தற்போதம் நீங்கிய நிலை அடைந்து முக்தி பெறுவதற்கு தகுதி படைத்தவர்களாக விளங்குவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கடுக்கொள் சீவரை

அடக்கி னானாரூர்

எடுத்து வாழ்த்துவார்

விடுப்பர் வேட்கையே

சோற்றுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.28.1), நமது வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள், நாம் இதற்கு முன்னர் எடுத்த பிறவிகளில் சேர்த்துள்ள வினைகளின் பயனாக விளைகின்றது என்பதை புரிந்து கொண்டவர்களாக, இன்ப துன்பங்களை அனுபவிக்கும் போது சலனம் அடையாமல் நின்று இறைவனைப் பணிந்து வணங்கினால், பெருமானின் அருள் நமக்குத் துணையாக இருக்கும் என்று கூறுகின்றார். நெறிகொள்=முறையான வழியில் உணரும்; சென்ற பிறவிகளில் நாம் சேர்த்து வைத்துள்ள வினைகளின் தன்மையால் இந்த பிறவியில் இன்பதுன்பங்களை அனுபவிக்கின்றோம். அந்த இன்பங்களை அனுபவிக்கும் போது, நமது சாமர்த்தியத்தால் அந்த இன்பங்கள் நமக்கு நேரிடுகின்றன என்று செருக்கு கொள்ளாது இறைவனின் துணையோடு அனுபவிக்கின்றோம் என்ற உணர்வு கொள்ள வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இங்கே நமக்கு அறிவுரை கூறுகின்றார். யான் எனது என்ற செருக்குடன் இன்பங்களை எதிர்கொள்ளும் போது, நம்மை அறியாமலே அந்த செருக்கு காரணமாக பல தவறுகள் செய்து மேலும் வினைகளை தேடிக் கொள்கின்றோம். துன்பங்களை எதிர்கொள்ளும் போது, நமது பழைய தீவினைகளின் காரணமாக இந்த துன்பங்கள் நேரிடுகின்றன என்றும், இந்த துன்பங்களுக்கு நாமே முற்றும் காரணம் என்பதை உணர்ந்து, இந்த துன்பங்கள் உண்மையில் நமது வினைகளை கழிப்பதற்கே என்ற உணர்வுடன் எதிர்கொண்டால் மேலும் பல வினைகளை சேர்த்துக் கொள்ளாமல் நாம் இருக்கலாம். எனவே நாம் துன்பங்கள் அடைந்து அனுபவிப்பது, நமது வினையின் ஒரு பகுதியை கழித்துக் கொள்ள உதவி செய்வதால், துன்பங்களையும் இறைவனின் அருள் என்று கூறவேண்டும். இவ்வாறு இருப்பதையே, இன்ப துன்பங்களை சமமாக பாவித்து, இவை இரண்டும் இறைவனின் அருளால் நிகழ்கின்றன என்ற எண்ணத்துடன் வாழ்க்கையினை கழிப்பதையே இறைவன் விரும்புகின்றான். ஒப்பர்=சரியான அணுகுமுறை என்று ஒப்புக்கொண்டு இறைவன் ஏற்பார். வலியுறுத்தும் விதமாக ஒப்பர் ஒப்பர் என்று இரண்டு முறை கூறப்பட்டுள்ளது. ஒப்பர் ஒப்பர் என்ற தொடருக்கு, தனக்குத் தானே ஒப்பாக சொல்லும் வண்ணம் திகழ்பவர் என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது. தன்னேர் இல்லாத் தலைவன் என்று தானே மணிவாசகர் திருவாசகத்தில் குறிப்பிடுகின்றார். துப்பன் என்ற சொல் துய்ப்பன் என்ற சொல்லின் இடைக்குறை; அப்பர்=தலைவர்; திருஞானசம்பந்தர் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாததால், தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறும் விதத்தில் இந்த பாடல் அமைந்திருப்பினும் நாம் அவ்வாறு எடுத்துக் கொள்ளாமல், நமக்கு உணர்த்தும் அறிவுரையாக கொள்ளவேண்டும். அப்பர் என்ற சொல்லுக்கு அப்பிக் கொண்டவர் என்ற பொருள் கொண்டு திருநீற்றினைத் தனது திருமேனியில் பூசிக் கொண்டவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நெஞ்சமே நீ வாழ்வினில் அடையும் பலவிதமான சிற்றின்பங்களை, உனது சாமர்த்தியத்தால் அடைகின்றாய் என்று கருதி, யான் எனது என்ற செருக்குடன் இருக்காதே. நீ அனுபவிக்கும் அத்தனை இன்பங்களும் சிவபெருமானின் அருள் உனக்கு துணையாக இருப்பதால் நிகழ்கின்றன என்று நினைத்த வண்ணம், எதிர்கொள்வாயாக. இந்த அணுகு முறையே சரியானது என்று விதித்து இருப்பதால், அவர் இதனை ஏற்றுக் கொள்வார். இதற்கு எந்த ஐயப்பாடும் நீ கொள்ள வேண்டா. இவ்வாறு நமக்கு உதவி புரியும் பெருமானார், ஒளி பொருந்திய திருநீற்றினைத் தனது உடலில் பூசிக் கொண்டுள்ள பெருமானார், அனைத்து உயிர்களுக்கும் தலைவராக விளங்கும் பெருமானார், உறைகின்ற சோற்றுத்துறை தலத்தினை நாம் சென்றடைந்து, அவரைப் பணிந்து பயன் அடைவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்

துப்பன் என்னாது அருளே துணையாக

ஒப்பர் ஒப்பர் பெருமான் ஒளி வெண்ணீற்று

அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே

தூங்கானைமாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.59.7) திருஞானசம்பந்தர், மீண்டும்மீண்டும் பிறப்பெடுத்து வாழும் இழிவான வாழ்க்கையை ஒழித்துக் கொள்ள வேண்டும் என்றும் விரும்பினால், தூங்கானை மாடம் தலத்து இறைவனை வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். அலங்கல்=மாலை; பிணையும்=விரும்பும்; இறை=சிறிது; துகள்=தூள், சிறிய அளவு; இளமை நிலையாமை தத்துவத்தை இதே பதிகத்தின் முதல் பாடலில்உணர்த்திய திருஞானசம்பந்தர் இந்த பாடலில் செல்வம் நிலையாமையை உணர்த்துகின்றார். ஒருவரது செல்வம் குறைந்த பின்னர் அவரது அன்றாடத்தேவைகளின் தரங்களும் குறைகின்றன. ஊட்டச்சத்து மிகுந்து செழிப்பான உணவினை அந்நாள் வரை உண்டு வாழ்ந்தவர்கள், எளிமையான உணவினைஉண்ணத் தலைப்படுகின்றனர். மேலும் செல்வத்தின் துணை கொண்டு வசதி மிகுந்து வாழ்ந்து வந்த வாழ்க்கையும், தரத்தில் தாழ்கின்றது. இவ்வாறுவாழ்வதையே இழிப்பாய வாழ்க்கை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் மறுமையில் பேரின்ப வாழ்வினை அளிக்கும் பெருமான் இம்மையிலும்உதவி செய்வான் என்பதும் இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. உயிருக்கு ஊட்டத்தை, வலிமையை அளிக்கும் தவ வாழ்க்கையினை நிறை ஊண்நெறி வாழ்க்கை என்று கூறுகின்றார். எளியனாக அனைத்து உயிர்களுக்கும் இரங்கி, அருள் புரியும் திருப்பாதங்கள் என்பதால் நீள்கழல்கள் என்று இங்கேகூறுகின்றார். இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பாய வாழ்க்கை என்ற தொடருக்கு, சிறிதளவே உணவினை உட்கொண்டு உடலை வருத்திக்கொண்டு புரியும் தவம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஒழுக்கத்துடன் புரியும் தவம், மனதினுக்கு நிறைவு தரும் நிலையை குறிப்பிடும்திருஞானசம்பந்தர், மிகவும் அழகாக உடலுக்கு சிறிதளவே உணவு சென்றாலும் மனம் நிறையும் வண்ணம் செய்யப்படும் தவம் என்று நயமாக கூறுகின்றார். மிகவும் சிறிய அளவினில் உணவினை உட்கொண்டு பல துன்பங்களை அனுபவித்து இழிந்த வாழ்க்கை வாழ்வதால் அத்தகைய இழிந்த வாழ்க்கையினைநீக்கி, உயிரினுக்கு வலிமையையும் வளமும் சேர்க்கும் ஒழுக்க நெறி நிறைந்த தவ வாழ்க்கையை எவ்வாறு அடைவது என்று திகைத்து நிற்கும் மனிதர்களே, நீங்கள் அனைவரும் பெருமானின் நீண்ட திருப்பாதங்களை தினமும் நினைப்பீர்களாக. தனது சடைமுடியில் பிறைச் சந்திரனை சூட்டிக் கொண்டு அருள்புரிந்தவரும், அழகுடன் பொலிந்து விளங்கும் கொன்றை மாலையினை விருப்பத்துடன் அணிந்தவரும் ஆகிய பெருமான், நீர்வளம் குன்றாத நிவாநதியினால் சூழப்பட்ட கடந்தை தலத்தில் உள்ள தூங்கானை மாடம் திருக்கோயிலில் உறைகின்றார். நீங்கள் அங்கே சென்று இறைவனைத் தொழுதுவணங்கி நீங்கள் விரும்பும் பயனை இம்மையிலும் மறுமையிலும் அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பாய வாழ்க்கை ஒழியத் தவம்

நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம் நீள்கழலே நாளும் நினைமின் சென்னிப்

பிறை சூழ் அலங்கல் இலங்கு கொன்றை பிணையும் பெருமான் பிரியாத நீர்த்

துறை சூழ் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே

திருநீலகண்டப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.116.2) திருஞானசம்பந்தர், இறைவனுக்கு திருத்தொண்டுகள் செய்வதன் மூலம் நமது தீயவினைகளை போக்கிக் கொள்ளலாம் என்று கூறுகின்றார். பெருமானின் அடியவர்களாக இருக்கும் நாம், பெருமானின் திருவடிகளைப் போற்றுவோம் என்று இதே பதிகத்தின் முதல் பாடலில் கூறிய திருஞானசம்பந்தர், இந்த பாடலில் நாம் எவ்வாறு, நமது மனம் மொழி மெய்களால் இறைவனைப் போற்றுவது என்று சொல்கின்றார். மனதினால் பெருமான் திரிபுரத்து மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்ததை நினைவு கூர்ந்து, கைகளால் பூக்களைக் கொய்தும் அவரது திருவடிகளின் புகழினை வாயால் உரைத்தும் பெருமான் வழிபடவேண்டும் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் சொல்கின்றார். மேலும் மலர்ச் சோலைகளை வளர்த்தும் குளங்களை வெட்டியும் பெருமானுக்கு திருத்தொண்டுகள் செய்ய வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். ஏ=அம்பு; வினை=செய்கை; கனி மனம்=பெருமான் பால் அன்பு வைத்து கனிந்த மனம்; பெருமான் எரித்து அழித்த மூன்று கோட்டைகள், ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்கள் என்று திருமூலர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. மலங்களே முற்றிலும் அழிந்த பின்னர், மலத்தின் விளைவுகளுக்கும் நோய்களுக்கும் இடமேது. பெருமானின் திருமேனியின் மீது தூவி வழிபட மலர்ச் சோலைகளை வளர்ப்பதும் குளங்கள் பல வெட்டுவதும் போன்ற பல நல்லறங்களைச் செய்து பெருமானுக்கு திருத்தொண்டு செய்வீர்களாக. பெருமான் பால் அன்பினை வளர்த்து கனிந்த மனதினால், ஒரே அம்பினை எய்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் வீழ்த்தியது போன்ற பெருமானின் பல வீரச் செயல்களை நினைவு கூர்ந்து, காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு பொழுதுகளிலும் புதிதாக மலர்ந்த பூக்களைக் கொய்தும், அவ்வாறு பறித்த மலர்களை பெருமானின் திருவடிகளில் தூவி அவனது திருவடிகளை போற்றி வழிபடுவீர்களாக. அவ்வாறு அடியார்களாகிய நாம் பெருமானை வழிபட்டால் தீவினைகள் ஏதும் நம்மை வந்து தீண்டாது.. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு, நீலகண்டம் என்று அழைக்கப்படும் பெருமானின் மீது, இதனை நான் சொல்கின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காவினை இட்டும் குளம் பல தொட்டும் கனி மனத்தால்

ஏவினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இரு பொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்

தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.79.8) திருஞானசம்பந்தர், தனது நெஞ்சினைத் தேற்றுவது போன்று, மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நம் அனைவர்க்கும் ஆறுதல் கூறி தேற்றும் பாடல். அறியாமை என்ற இருளில் மூழ்கி, என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்கும் மனிதர்களே, ஆரூர் பெருமானைத் தொழுது வாழ்வினில் உய்வினை அடையலாம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். கழி=கொம்பு; நிரைத்து=நெடுக கட்டி; முகடு=மேலே மூடி; எலும்புகளாகிய கழிகளை எங்கும் நிறுவியும் கட்டியும், இறைச்சி ஆகிய சுவரினை எழுப்பி, கட்டப்பட்டுள்ள இந்த உடலாகிய வீட்டின் உள்ளே இருக்கும் சீழ், சளி, இரத்தம் மற்றும் மலம் ஆகிய அறுவறுப்பு தரும் பொருட்கள் வெளியே தெரியாத வண்ணம், பொல்லாமை ஆகிய புலால் மணம் கமழும் தோல் கொண்டு இறைவன் மூடியுள்ளான். பண்டைய காலம் தொட்டே இந்த உடல் ஒன்பது வாயில்களை உடையதாக இருக்கும் இந்த உடலினைப் பேணி பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு மூழ்கி விடாமல், நம் பால் அன்பு செலுத்தும் ஆரூர் பெருமானை போற்றி வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவோம் என்று கூறுகின்றார்.

என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண்சுவர் எறிந்து இது நம் இல்லம்

புன்புலால் நாறு தோல் போர்த்துப் பொல்லாமையான் முகடு கொண்டு

முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பியின் மூழ்கிடாதே

அன்பன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.97.6) திருஞானசம்பந்தர், துன்பம் தருகின்ற வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்று விரும்பினால், காழி நகரம் சென்றடைந்து பெருமானை வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். தவறு, பொய் என்ற பொருள் தரும் அபத்தம் என்ற வடமொழிச் சொல் அவத்தம் என்று தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது, இயங்கு-நடத்தல்; பிணக்கு=மாறுபாடு; துன்பமயமான வாழ்க்கையை நடத்தி, பெறுவதற்கு அரிய மனித வாழ்க்கையை வீணாக நடத்தி, உலக மாயைகளில் முரண்பாடுகளில் ஆழ்ந்து கிடக்கும் உலகத்தவர்களே, நீங்கள் எழுந்து புறப்பட்டு சீர்காழி தலத்தினை அடைந்து இறைவனை வழிபட்டு உய்வினை அடைவீர்களாக. நமக்கு அருள் புரியும் நோக்கத்துடன், நாம் அவனுக்கு பிச்சையாக இடும் மும்மலங்களையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, பலி கேட்டு திரியும் இறைவனிடம் நமது மலங்களை சமர்ப்பித்து விட்டு உய்வினை அடைய வேண்டும் என்று இந்த பாடல் மூலம் திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். பல் இல் வெண்தலை என்று பறிக்கப்பட்ட பிரமனின் தலையை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர்

எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழுமினோ

பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான்

கொல்லை ஏறது ஏறுவான் கோலக் காழி சேர்மினே

திருக்கோவலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.100.3) திருஞானசம்பந்தர், பிறவிச் சேற்றில் அழுந்தி அவலத்துள் ஆழாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால், கோவலூர் வீரட்டம் சென்றடைந்து பெருமானைத் தொழ வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். உயிருக்கு உறுதியான நிலையான இன்பம் தருவது, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கும் முக்தி தான். உள்ளத்தீர் என்று நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்த பாடல். அள்ளல் சேறு என்று உலகத்தில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் என்றும், உயிர் உடலை விட்டு பிரிந்த பின்னர் சூக்கும உடலுடன் கூடி நரகத்தில் அனுபவிக்க இருக்கும் துன்பங்கள் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். அடியார்கள் தன்னைப் புகழ்ந்து பாடுகின்ற பாடல்களை மிகவும் விருப்பத்துடன் கேட்கும் இறைவன் என்பதை உணர்த்தும் முகமாக,கொள்ளப் பாடு கீதத்தான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். வெள்ளம்=கங்கை நதி.

உள்ளத்தீரே போதுமின் உறுதியாவது அறிதிரேல்

அள்ளல் சேற்றில் காலிட்டு இங்கு அவலத்துள் அழுந்தாதே

கொள்ளப் பாடு கீதத்தான் குழகன் கோவலூர் தனுள்

வெள்ளம் தாங்கு சடையினான் விரட்டானம் சேர்துமே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (4.33.3) அப்பர் பிரான், வீணான வாழ்க்கை வாழ்ந்து வினைகளைச் சேர்த்துக் கொள்ளாமல்,பெருமானைப் பணிந்து வணங்கி, இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடையுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். அறுமை= அறும் இயல்பு உடைய, நிலையற்ற; யாம்=ஆம், நிலையானது ஆம்; நலிவுறுதல்=நிலையற்ற உலகத்தினை நிலை என்று கருதி, உயிர்க்கு பயன்படாத வகையில் வீணான இல்லற வாழ்க்கை நடத்தி, அத்தகைய வாழ்க்கையால் ஈட்டப்படும் வினைகளின் விளைவாக துன்பங்கள் அடைந்து வருத்தம் அடையாமல், பிறைச் சந்திரன் பாம்பு மற்றும் கொன்றை மலர்களை தனது சடையில் வைத்துள்ள பெருமானை வணங்கி வாழ்க்கை நடத்தினால் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் ஏற்படும். இவ்வாறு நமக்கு இன்பம் அளிக்கும் பெருமான், சிறப்பு வாய்ந்த மறைக்காடு தலத்தில் உறையும் இறைவனார் ஆவார்=துன்பம் அடைதல்; வெறுமை=வீணாக; மனைகள் வாழ்ந்து=மனை வாழ்க்கை; சிறுமதி= சிறிய அளவில் உள்ள சந்திரன், பிறைச் சந்திரன்;

அறுமை இவ்வுலகு தன்னை ஆமெனக் கருதி நின்று

வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே

சிறுமதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து

மறுமையும் இம்மை ஆவார் மாமறைக் காடனாரே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.41.2) அப்பர் பிரான், பந்த பாசங்களில் கட்டுண்டு வீணாக காலத்தைக் கழித்து அல்லலில் ஆழாமல், இறைவனைத் தொழுது அவனது அருள் பெற்று உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுகின்றார். கட்டர்=துன்பத்தில் அழுந்தியவர்கள்; பந்தம் பாசம் என்பவற்றால் கட்டுண்டவர்கள், ஆணவம், கன்மம். மாயை ஆகிய மூன்று மலங்களால் கட்டுண்டவர்கள்: எல்லி=இரவு; ஊழி முடிவு என்றும் பொருள் கூறுவார்கள்; கா=சோலை: சிட்டர்-ச்ரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு; மேலானவர் என்று பொருள். அனைவரிலும், முதல்வரான, மேலானவரான சிவபெருமானை பல திருமுறைப் பதிகங்களில் சிட்டர் என்றும் சிட்டன் என்றும் குறிப்பிடுகின்றார்கள். அட்ட மலர்கள்=இறைவனுக்கு பிடித்த எட்டு மலர்கள். சிவபெருமான் விரும்பி அணிகின்ற எட்டு மலர்கள், புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை, பாதிரி, அலரி, செந்தாமரை. அக மலர்கள் என்று நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய எட்டு குணங்கள் குறிப்பிடப் படுகின்றன. அவை, கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாகும். நாம் அனைவரும் இந்த குணங்களைக் கொண்டு, அக மலர்களாகிய இவைகளால் வழிபடுவதையே கடவுள் விரும்புகின்றார். எட்டு மலர்களை இறைவன் விரும்புகின்றான் என்பதை உணர்த்தும் முகமாக, தினமும் சிவவழிபாடு செய்யும் வேதியர்கள் எட்டு மந்திரத்தைச் சொல்லி இறைவனுக்கு அர்ச்சனை செய்கின்றார்கள். ஓம் பவாய தேவாய நம (மிகச் சிறந்த செல்வமாகிய வீடுபேறு என்னும் செல்வம் உடையவன், பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிப்பவன்), ஓம் சர்வாய தேவாய நம (அனைத்து தேவர்களுக்கும் தலைவன்), ஓம் ஈசானாய தேவாய நம (அனைத்து தேவர்களையும் ஆள்பவன்), ஓம் பசுபதே தேவாய நம (அனைத்து உயிர்களுக்கும் தலைவன்), ஓம் ருத்ராய தேவாய நம (எவராலும் வெல்ல முடியாதவன்), ஓம் உக்ராய தேவாய நம (அனைவரும் நடுங்கக் கூடிய தோற்றமும் வல்லமையும் கொண்டவன்), ஓம் பீமாய தேவாய நம (மிகவும் அதிகமான வல்லமை படைத்தவன்), ஓம் மஹதே தேவாய நம (அனைத்துத் தேவர்களிலும் உயர்ந்தவன்) என்பவையே அந்த எட்டு வடமொழி மந்திரங்களின் பொருள். அட்டமூர்த்தியாகத் திகழும் சிவபெருமானுக்கு எட்டு மலர்களால் வழிபாடு செய்வதும், எட்டு நாமங்கள் சொல்லி அர்ச்சனை செய்வதும் பொருத்தம் தானே. நிலையில்லாத உடலை நிலையாக எண்ணி, ஐம்புலன்களின் ஆளுகைக்கு ஆட்பட்டு வருந்திய தனது நிலையினை முந்தைய பாடலில் கூறும் அப்பர் பிரான், அவ்வாறு நாம் அல்லல் படலாகாது என்ற எண்ணத்துடன் நமக்கு அறிவுரை கூறும் பாடல் இது. உலகில் எதுவும் நிலையன்று, சிவபெருமான் ஒருவரே நிலையானவர் என்பதை உணர்த்தும் முகமாக ஊழிக்காலத்தில் பெருமான் நடமாடுவதை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஊழிக் காலத்தையும் தாண்டி நிலையாக நிற்பவர் என்பதை நமக்கு உணர்த்தவே, ஊழிக் காலத்து நடனம் இங்கே குறிப்பிடப்படுகின்றது. மும்மலங்களின் சேர்க்கையால் மதி மயங்கி, நிலையில்லாத உடலினை நிலையாகக் கருதி அதனைப் பேணி பாதுகாப்பதில் நீங்கள் உங்களின் நேரத்தை செலவழிக்காதீர்: தனது எட்டு கைகளையும் வீசி, ஊழிக்காலத்தில் நின்று நடமாடும் சிவபிரானை, அவருக்கு மிகவும் விருப்பமான எட்டு மலர்களை, அவரது திருப்பாதத்தில் தூவி, பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அவரை நீராட்டி வழிபட்டால், அனைவரிலும் மேலானவராக உள்ளவரும், சோற்றுத்துறையில் உறைபவரும் ஆகிய சிவபெருமான், உங்களுக்கு அருள்கள் செய்வார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா

எட்டவாம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை

அட்ட கா மலர்கள் கொண்டே ஆனஞ்சும் ஆட்ட ஆடி

சிட்டராய் அருள்கள் செய்வார் திருச்சோற்றுத்துறையனாரே

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.42.5) அப்பர் பிரான், தனது இடரினை கழிக்க விரும்பும் உயிர், பெருமானைப் புகழ்ந்து பாட வேண்டும் என்று கூறுகின்றார். உடல் தனைக் கழிக்கலுற்ற=ஒரு நாள் உடலை விட்டு விலகும் தன்மை கொண்ட உயிர். முந்தைய பிறவிகளில் ஈட்டிய வினைகளின் பயனாக பல வகையான துன்பத்திலும் ஆழும் உடலை விடுத்து விடுதலை அடைய விரும்பவது தான் ஆன்மாவின் உண்மையான விருப்பம். ஆன்மாவின் இந்த உண்மையான விருப்பத்தை புரிந்து கொண்டவர்களுக்கு அறிவுரை கூறும் முறையில் அமைந்த பாடல் இது. இதே பதிகத்தின் முந்தைய பாடலில்இந்த பிறவியில் நாம் அடையும் துயரங்களிலிருந்து விடுதலை பெற இறைவனை வழிபடுவீர்கள் என்று அறிவுரை கூறிய அப்பர் பிரான், இனிமேல் பிறவியே எடுக்காமல் இருப்பதற்கான வழிமுறையை இங்கே கூறுகின்றார். காண்பரிதாகி நின்ற சோதி என்று இறைவனை, அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அவனது அருள் இல்லையேல் அவனை நாம் காண முடியாது என்ற கருத்தினை உணர்த்தும் வண்ணம், எவரும் தங்களது சொந்த முயற்சியால் காண முடியாதவன் இறைவன் என்று இங்கே கூறப்படுகின்றது. தங்களுக்குள்ளே யார் பெரியவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமனும் திருமாலும், தனது முடியையும் அடியையும் காண முடியாத, நெடுஞ்சுடராக நின்ற தன்மையை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. உடலுடன் தொடர்பு கொண்டுள்ள தன்மையை, நிலையாக நீக்க விரும்பும் உலகத்து உயிர்களே உங்களுக்கு நான் கூறும் அறிவுரையை கேட்பீர்களாக. உங்களது பிறவிப் பிணியினை அடியோடு நீக்க உங்களுக்கு விருப்பம் உண்டென்றால், பெருமானைப் புகழ்ந்து நீங்கள் அனைவரும் வணங்குவீர்களாக. கருமையான நிறத்தில் திரண்டெழுந்த கடல் நஞ்சினை உண்ட பின்னரும், அந்த நஞ்சின் தன்மையால் எந்த கேடும் அடையாமல் இருந்தவரும், தங்களதுமுயற்சியால் மட்டுமே இறைவனை கண்டுவிடலாம் என்று எண்ணும் காண்பதற்கு அரியவனாக இருப்பவனும் ஆகிய சிவபெருமானை, ஞானச் சுடராக விளங்குபவனை அடியேன் துருத்தித் தலத்தில் கண்டேன். நீங்களும் அவனைப் பணிந்து வழிபட்டு அவனைக் காண்பீர்களாக.

உடல் தனைக் கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கெல்லாம்

இடர் தனைக் கழிய வேண்டில் இறைவனை ஏத்துமின்னோ

கடல் நிறம் நஞ்சம் உண்டு காண்பரிதாகி நின்ற

சுடர்தனைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.45.10) அப்பர் பிரான், நமது புலன்கள், உயிர் பிரிந்து உடல் அழியும் வரையில், ஏதேனும் வேண்டிக் கொண்டே நிற்கும்; அந்த புலன்கள் வேண்டுவதை நாம் செய்யத் தொடங்கினால், நம்மை தமது வழியே இழுத்துச் செல்லும் புலன்கள், நாம் பலவிதமான குற்றங்கள் செய்து, தீய வினைகளைத் தேடிக் கொள்வதற்கு வழி வகுக்கும். எனவே புலன்கள் வழியே செல்லாமல், நாம் இறைவனை நாட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். உக (முதல் அடி) =அழிதல்: உக நெஞ்சமே, புலன்கள் ஐந்தும் தாம் இதற்கு முன் வேண்டியவற்றையே மறுபடியும்மறுபடியும் வேண்டியபடி நிற்கும்: உயிர் பிரிந்த உடல் அழிந்து போகும் வரையில் அந்த புலன்கள் அவ்வாறு வேண்டுவதை நிறுத்தாது. அதனை புரிந்து கொண்டு, அவைகளின் வேண்டுதலை மறுத்து, விருப்பு, வெறுப்பு, காமம், உலோபம், மதம் மாற்சரியம் ஆகிய ஆறு தீய குணங்களும் அழியுமாறு, மற்றவர்கள் செய்யும் தீங்குகளையும் பொறுத்துக் கொண்டு சிவநாமத்தை சொல்லியவாறு நீ இருப்பாயாக. அவ்வாறு நீ இருந்தால், புட்பகத் தேருடைய அரக்கன் இராவணன் செய்த தவற்றிற்காக அவனை மலையின் கீழ் அடர்த்துப் பின்னர் அவன் செய்த தவற்றினை மன்னித்து அருள்கள் புரிந்த ஒற்றியூர் தலைவனாகிய சிவபெருமான், நெஞ்சமே நீ மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வழி வகுப்பான் (இரண்டாம் மற்றும் மூன்றாம் அடி)=உகத்தல் என்ற சொல்லின் பகுதியாக விரும்புதல் என்று பொருள். புலன்கள் நம்மை ஆட்கொள்வதால், நாம் ஆறு வகையான, காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆகிய குணங்களுடன் தொடர்பு கொண்ட குற்றங்களைச் செய்கின்றோம்.

வெறுத்து உகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டு நெஞ்சே

மறுத்து உக ஆர்வச் செற்றக் குரோதங்களான மாயப்

பொறுத்து உக புட்பகத்தேர் உடையானை அடர ஊன்றி

ஒறுத்து உகந்து அருள்கள் செய்தார் ஒற்றியூர் உடைய கோவே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.58.9) அப்பர் பிரான், ஐந்து புலன்களால் ஏற்படும் மயக்கத்தைத் தீர்க்க விரும்புவோர், பெருமானை மனதினில் தியானம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். அங்கண்=அவ்விடத்தில்; உயிர் குடி கொண்டிருக்கும் உடலில் என்று பொருள். மாலுடையர்= ஏற்படுத்தும் திறன் உடைய; சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். உலகத்து மாந்தர்களே, உங்களது உடலில் இருந்து கொண்டு உங்களை மயக்கி, தங்களது விருப்பம் போல் ஆட்டுவிக்கும் ஐந்து புலன்களால் ஏற்படும் மயக்க நிலை முற்றிலும் தீர் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்களது மனதினில் நீங்கள் இறைவனை தியானித்து அவனைப் புகழ்ந்து வணங்குவீர்களாக. சிவந்த கண்களை உடைய திருமால், வாழ்வினில் அனைத்து விதமான மங்கலங்களையும் (இன்பங்களையும்) அளிக்கும் பெருமானே என்று புகழ்ந்து வணங்கும் வண்ணம் நின்ற பெருமான் பசுமையான கண்களை உடைய இடபத்தின் மீது ஏறி தான் விரும்பும் இடங்களுக்கு செல்கின்றார். அத்தகைய இறைவனார் பருப்பதத்தை நோக்கி அதனை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அங்கண் மாலுடையராய ஐவரால் ஆட்டுணாதே

உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்

செங்கண் மால் பரவியேத்தச் சிவன் என நின்ற செல்வர்

பைங்கண் வெள்ளேறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே

கடும்பகல் நட்டமாடி என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (4.77.7) அப்பர் பிரான், தோலால் மூடப்பட்டு அழகாக காட்சி தரும் உடல் உண்மையில் அருவருக்கத் தக்கது என்று குறிப்படும் அப்பர் பிரான், அத்தகைய நினைப்பிலிருந்து விடுபட்டு பெருமானை தியானித்து வாழ்வில் உய்வினை அடையவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். அளறு=சேறு: பாறுதல்=நீங்கி ஓடுதல்: பன்றி சேற்றினில் ஆழ்ந்து கிடப்பது போல், மனிதன் மூன்று மலங்களில் சிக்குண்டு, உடலினை பெரிதாகக் கருதி உலக இன்பங்களில் மூழ்கி இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தீவினைகளை உடைய நெஞ்சமே, பன்றி சேற்றில் புரண்டு இன்பம் அடைவது போல, உலக வாழ்வின் இன்பங்களில் சிக்குண்டு, உனது உடலினை பெரிதாக கருதி, அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் வாழ்க்கையை வாழ்கின்றாய். உவர்ப்புச் சுவை கலந்த உமிழ் நீர் ஊறுவதால் நாற்றமெடுத்து, இரத்தம் ஒழுகும் பல ஓட்டைகள் ஒரு போர்வையால் மூடப்பட்டு காணப்படும் இந்த உடலின் இழிவான தன்மையை அறிந்து கொள்ளாமல், உடலை அழகுடைய உடல் என்று நீ கருதுகின்றாய். இந்த நிலையிலிருந்து நீ தேறி, வெளியே வந்து, சிவபிரானை நினைப்பாயாகில், உனக்கு சிவகதி திண்ணமாகும். எனவே இறைவனை விருப்பத்துடன் நினைந்து உய்வாயாக என்று அப்பர் பிரான் உயிர்களுக்கு அறிவுரை கூறும் பாடல்.

பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டுத்

தேறி நீ நினைதியாயில் சிவகதி திண்ணமாகும்

ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல்

கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே

பெருமானுக்கு அடியானாக மாறி, அவனது அடிமையாக நம்மை கருதிக் கொண்டு பெருமானுக்கு பலவகையிலும் திருப்பணி செய்து கொண்டு வாழ்ந்தால், விலக்குவதற்கு மிகவும் அரிதாக உள்ள வலிமையான வினைகள் நம்மை ஒன்றும் செய்யாமல் விட்டு விடும் என்று அப்பர் பிரான் தில்லைப் பதிகத்தின் பாடல் (5.1.4) ஒன்றினில் கூறுகின்றார். அல்லல்=ஆகாமிய வினை, பழைய வினைகளை அனுபவிக்கும் போது நாம் செய்யும் செயல்களால் நாம் பெருக்கிக் கொள்ளும் வினைகள்; அருவினை=அனுபவித்தால் அல்லது தீராத வினை; வேறு எவராலும் தீர்க்க முடியாது என்பதால் அருவினை என்று குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்லை வல்வினை=பழமையான சஞ்சித வினை; நம்மை மாயத் தோற்றத்தில் ஆழ்த்தும் வலிமை கொண்டமையால் வல்வினை என்று கூறப்பட்டுள்ளது.

அல்லல் என் செயும் அருவினை என் செயும்

தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்

தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு

எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே

சிவபிரானுக்கு அடிமையாக நாம் மாறிவிட்டால், நம்மை வினைகள் எவ்வாறு தொல்லை செய்யமுடியும் என்று அப்பர் பிரான் இங்கே கேள்வி கேட்பதைப் போல் காரைக்கால் அம்மையாரும், தனது அற்புதத் திருவந்தாதியின் 87ஆவது பாடலில் ஒரு கேள்வியினை எழுப்புகின்றார். வேறு எவரது பேச்சையும் கேளாமல், நமது அறிவினைப் பின்பற்றி, சிவபிரானுக்கு பாமாலை சூடியும் அவரது திருவடிகளுக்கு பூமாலைகள் சூடியும் வழிபட்டால், இருளாகிய கொடிய வினைகள் நம்மை எவ்வாறு பற்றும் என்பதே அந்த கேள்வி. எற்று=எப்படி, எவ்வாறு; அடுதல்=வருத்துதல்.

நாமாலை சூடியும் நம் ஈசன் பொன்னடிக்கே

பூமாலை கொண்டு புனைந்து அன்பாய் — நாமோர்

அறிவினையே பற்றினால் எற்று ஏது அடுமே

எறிவினையே என்னும் இருள்

எப்போதும் இறைவனை மறவாது புகழ்ந்து வணங்கினால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (5.6.1). அப்பர் பிரான் கூறுகின்றார். இறையும்=சிறிது நேரமும்; அப்போதும்=உடலினை விட்டு உயிர் பிரியும் அந்த நேரத்திலும்; ஏன் இறைவனை எப்போதும் மறவாது இருக்க வேண்டும் என்பதற்கு அப்பர் பிரான் இந்த பாடலில் காரணம் கூறுகின்றார். மனித மனம் பழக்கத்திற்கு அடிமைப் பட்டது. எனவே தான் எப்போதும் நாம் மறவாமல் இறைவனை நினைத்துக் கொண்டு இருந்தால் தான், இறக்கும் தருவாயிலும் நாம் அவனை நினைக்க முடியும். நாம் இறக்கும் தருவாயில், நமது உயிரினை தொடர்ந்து வரும் துன்பங்களிலிருந்து காக்க வல்லவன் இறைவனின் ஒருவன் தான் என்பதால், நாம் அவனது துணை நாட வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே தான் எப்போதும் இறைவனை நினைத்துக் கொண்டு இருக்குமாறு அப்பர் பிரான் இங்கே அறிவுரை கூறுகின்றார். சிகப்பு என்ற சொல் செப்பு என எதுகை கருதி மருவியது. நாம் இறக்கும் தருணத்தில், அஞ்சேல் என்று அபயம் கொடுக்கும் பெருமான் என்று கூறுகின்றார். அதாவது, நரக வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றி, சிவலோகம் அழைத்துச் சென்று அருள் புரிவார் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

எப்போதும் இறையும் மறவாது நீர்

முப்போதும் பிரமன் தொழ நின்றவன்

செப்போதும் பொனின் மேனிச் சிவனவன்

அப்போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே

நின்றியூர் பெருமானை நினைத்தால் நாம் இன்பமாக வாழலாம் என்று அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல் திருநின்றியூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் பாடலாகும் (5.23.9). அச்சம் மற்றும் அன்பு இவை இரண்டுமே ஒருவரிடத்தில் அன்பு கொள்வதற்கு காரணமாக அமைவன. இஞ்சி=மதில்; குஞ்சி=தலை முடி; தனது நெஞ்சத்திற்கு அறிவுரை சொல்வது போன்று நமக்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி. பெருமான், அடுத்தவர் அச்சம் கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்று இருப்பதை திரிபுரத்து நிகழ்ச்சி மூலமும், கருணையாளனாக உள்ள நிலை, சந்திரனுக்கு அடைக்கலம் அளித்த நிகழ்ச்சி மூலமும் நமக்கு உணர்த்தப் படுகின்றது. உறுதியான கோட்டைகளாக விளங்கிய, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், அம்பினை எய்து அழித்தவனும், தேவர்களால் தொழப் படுபவனும், தனது சடையில் வானில் உலவும் பிறைச் சந்திரனைச் சூடியவனும் ஆகிய நின்றியூர் இறைவனை, நெஞ்சமே, நீ அவனிடத்தில் அச்சம் கொண்டேனும் அல்லது அன்பு கொண்டேனும் நினைப்பாயாக. நீ அவனை எந்தவிதமாக நினைத்தாலும் வாழ்வினில் உய்வினை அடைவாய் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

எளியனா மொழியா இலங்கைக்கு இறை

களியினால் கயிலாயம் எடுத்தவன்

நெளிய ஊன்ற வல்லான் அமர் நின்றியூர்

அளியினால் தொழுவார் வினை அல்குமே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.31.3) அப்பர் பிரான், துன்பமும் துயரமும் இன்றி என்றும் இன்பமாக வாழவேண்டும் என்றால் நாம் இறைவனை தியானிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். பொன் போன்றவன் என்று ஈசனை தான் உயர்வாக மதிப்பதை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். துன்பம் என்பது உடல் அனுபவிக்கும் துன்பம்; துயர் என்பது மனத்தால் உணரப்படும் வருத்தம்; உங்களது உடல் துன்பம் ஏதும் உறாமலும், உங்களது மனம் துயரம் ஏதும் கொள்ளாமல் எப்போதும் இன்பத்துடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இரவும் பகலும் இறைவனை புகழ்வீராக. பொன் போன்று உயர்ந்தவராக அடியேன் கருதும் ஆனைக்கா அண்ணலாகிய பெருமான், இறைவன் என்று தன்னை நினைப்பவர்களுக்கு அன்பனாக இருந்து அருள் புரிவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

துன்பமின்றித் துயர் இன்றி என்று நீர்

இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்

என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு

அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.48.3) அப்பர் பிரான், இல்லற வாழ்க்கை தரும் சிற்றின்ப மயக்கத்திலிருந்து விழித்து எழுந்து,பெருமானை வணங்கி பயனடையுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். ஆலும்=நடனமாடும்; கோலம்=அழகாய; மால்=மயக்கம்; இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் வெளிப்பகையை (மாற்று மதத்தவரின் தவறான பிரசாரங்கள்) குறிப்பிட்ட அப்பர் பிரான் உயிரின் ஆறு உட்பகைகளில் ஒன்றான காமத்தை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இல்லற சுகத்தில் ஆழ்ந்து இறைவனை மறந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற அறிவுரை இந்த பாடலில் வழங்கப் படுகின்றது. இந்த பாடலில் தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று இருந்தாலும், இந்த அறிவுரை உலகத்தவர்க்கு வழங்கப் பட்ட அறிவுரையாகவே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் அப்பர் பிரான் தனது சிறு வயதில் சமண சமயத்தைச் சார்ந்த நாளிலிருந்தே துறவியாக வாழ்ந்தவர். இந்த பதிகத்தின் முதல் மூன்று பாடல்களில் நாம் வெளிப் பகை மற்றும் உட்பகைகளை வென்று இறைவனை வழிபட வேண்டிய அவசியம் உணர்த்தப் படுகின்றது. நெஞ்சமே, ஆடும் பெரிய மயில் போன்ற சாயலை உடைய பெண்களிடம் மயக்கம் உற்று அவர்கள் தரும் சிற்றின்ப சுகத்தில் ஆழ்ந்து மற்ற அனைத்தையும் மறந்து கிடக்கும் நிலையினை தவிர்ப்பாயாக. கழுத்தினில் நீல மணி பதித்தது போன்ற தோற்றத்தை உடைய அண்ணல் கச்சி ஏகம்பனாரின் அழகிய திருப்பாதங்களை கும்பிட்டு, நிலையான பேரின்பத்தை பெறுவதற்கு வழி வகுத்துக் கொள்வாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஆலும் மாமயில் சாயல் நல்லாரொடும்

சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே

நீல மாமிடற்று அண்ணல் ஏகம்பனார்

கோல மாமலர்ப் பாதமே கும்பிடே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.49.3) ஊன் நோக்கும் இன்பம் வேண்டித் திரியாமல், உயர்ந்த உலகமாகிய முக்தி உலகம் சென்றடையும் வழியில் நமது வாழ்க்கையை செலுத்துவதற்கு பெருமானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறுகின்றார். ஊன் நோக்கும் இன்பங்கள்=உடலில் உள்ள ஐம்பொறிகள் பெறுகின்ற இன்பங்கள்: வான் நோக்கும் வழி=பேரின்பம் தரும் முக்தி வீட்டினை அருளும் வழி: உழலுதல்=வருந்துதல்; நின்மின்=நில்லுங்கள்: தேன்=அடியார்க்கு தேனாக இனிக்கும் பெருமான். இந்த பதிகத்தின் முதல் பாடலில், பண்ணுடன் இசைந்த பாடல்கள் பாடி வழிபடும் அடியார்களுக்கு கண்ணின் மணியாக இருப்பவன் பெருமான் என்று கூறும் அப்பர் பிரான், எப்போதும் தன்னை நோக்கும் அடியார்களுக்கு நாவிற்கு இனிய தேன் போன்று இறைவன் இருப்பான் என்று கூறுகின்றார். திருவைந்தெழுத்தை ஓதுதலும், இறைவனை தியானம் செய்து நிட்டையில் இருத்தலும், பரமனையே நோக்கி இருக்கும் செயல்களாக கருதப்படுகின்றன. அறியாமையில் மூழ்கி இருக்கும் நெஞ்சமே, உடலின் ஐம்பொறிகள் விரும்பும் நிலையற்ற சிற்றின்பங்களைத் தேடி அலையாது, நிலையான இன்பத்தினைத் தரும் வீடுபேற்றினை அடையும் வழியைத் தேடிச் சென்று அந்த வழியில் நிற்பாயாக. தன்னை நோக்கி வழிபடும் அடியார்களின் நாவிலும் உள்ளத்திலும் தேன் போன்று இனிக்கும் தன்மையான், சிவபெருமான் உறையும் திருவெண்காடு தலம் சென்றடைந்து அவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவாயாக என்று தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே

வான் நோக்கும் வழியாவது நின்மினோ

தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்

தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே

தமது துன்பங்களை தீர்த்துக் கொள்ள விரும்புவோர் செய்ய வேண்டியது யாது என்பதை திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் (6.31.1) குறிப்பிடுகின்றார். இடர்=பிறவித் துன்பம்: கெடுமாறு=கெடும்+ஆறு=துன்பம் ஒழியும் வகை; ஈண்டு=மிகுந்த; சாதாரண வயிற்று வலியோ அல்லது சுரமோ ஏற்பட்டால் நாம், அந்த வலியினை உணர்ந்து, அம்மா, அப்பா, ஐயோ என்று அலறுகின்றோம். ஆனால் அனைத்து நோய்களுக்கும் பெரியதான பிறவிப் பிணியைக் கொண்டுள்ள நாம், அதனை உணர்வதில்லை. முதலில் அதனை உணர்ந்தால் தானே நாம் நமது வேதனையை வெளிப்படுத்தும் முகமாக அலறுவோம்; அதனை உணருவதுமில்லை, எனவே அலறுவதுமில்லை; அதனைப் போக்கிக் கொள்ளும். வழியினை ஆராய்வதுமில்லை. அதனால் தான் முதலில் பாடலின் தொடக்கத்தில் இடர் என்று பிறவிப்பிணியை உணர்த்தி, அதனைப் போக்கிக் கொள்ள விருப்பம் உள்ளதா என்று நம்மைப் பார்த்து அப்பர் பிரான் கேட்கின்றார். ஏன் நாம் பிறவித் துன்பத்தை நீக்கிக்கொள்ள, சிவபெருமானை நாட வேண்டும். நிலையில்லாத உலகத்தில் நிலையான ஒருவன் அவன் தான் என்பதை அவனது திருநீறு அணிந்த கோலம் நமக்கு நினைவூட்டுகின்றது. மேலும் மற்ற அனைவரும், பிரமன் திருமால் உட்பட்ட அனைத்துத் தேவர்களும், பிறவிப் பிணிக்கு ஆட்பட்டவர்கள் தானே; தான் கொண்டுள்ள நோயினைத் தீர்த்துக் கொள்ளும் வழி அறியாமல், அந்த நோயுடன் வாழும் அவர்களால் எவ்வாறு அந்தப் பிணியைப் போக்க முடியும். ஒவ்வொரு ஊழி முடிவிலும் செத்து செத்துப் பிழைக்கும் தேவர்கள் எவ்வாறு நம்மை காப்பாற்ற முடியும்? சிவபெருமான் ஒருவன் தான், நமது பிறவிப் பிணியைத் தீர்க்கவல்ல மருத்துவன் என்பதை திருநீறு அணிந்தவன் என்று குறிப்பிடுவதன் மூலம் நமக்கு அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். பிரமன், திருமால் உட்பட்ட அனைத்துத் தேவர்களும், பாற்கடலில் இருந்து எழுந்த நஞ்சம் தாளாமல் தவித்த போது, அவர்களைக் காப்பதற்காக நஞ்சினை உண்டவன் சிவபெருமான். நம்மிலும் பெரியோர் திருமால், பிரமன், மற்றுமுள்ள தேவர்கள்; அவர்களுக்கு துன்பம் வந்தபோது, அவர்களையே காத்து அருளியவன், நம்மையும் காக்கும் வல்லமை படைத்தவன் அல்லவா. ஓரிடத்தில் நில்லாமல் துள்ளித் திரியும் இயல்பு உடையது மான்கன்று. அந்த மான் கன்றினை அடக்கி, தனது கையில் நிலையாக ஓரிடத்தில் வைத்து இருப்பவன் சிவபெருமான். மான் துள்ளுவது போல், பல இடங்களுக்கும் சென்று திரியும் இயல்பு உடைய மனத்தினை கட்டுப்படுத்தும் வல்லமையைத் தர வல்லவன் சிவபெருமான் ஒருவனே என்பது மறி ஏந்து கையன் என்ற தொடர் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. உயிர்கள் அனைத்தும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மிகப் பெரிய துன்பம் பிறவித் துன்பம் தான். இந்த பிறவித் துன்பம் நீங்கப் பெற்றால், நாம் இறைவனடி சேர்ந்து என்றும் அழியாத பேரானந்தத்தில் திளைக்கலாம். பிறவித் துன்பத்தை நீக்க வல்லவன் சிவபெருமான் ஒருவனே என்பதால், முதலில் அவனது நாமத்தைச் சொல்லுமாறு, அப்பர் பிரான் நமது நெஞ்சத்திற்கு கட்டளை இடுகின்றார். நெஞ்சமே, நீ அனைத்துத் துன்பங்களிலும் பெரிய துன்பமான பிறவித் துன்பத்தை நீக்கிக் கொள்ள, ஆசைப் படுவாயாகில், என்னிடம் வா; நான் உனக்கு அதற்குரிய வழியினைக் காட்டுகின்றேன்; மிகுந்த ஒளிவீசும் செஞ்சடையில் கங்கையை அணிந்தவனே என்றும், ஞான ஒளியாய் அனைவரது உள்ளத்திலும் மிளிரும் சோதீ என்றும், திருநீறு அணிந்து ஒளிரும் தோள்களை உடையவனே என்றும், பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டதால் கரிய நிறமடைந்த கழுத்தினை உடையவனே என்றும், மான்கன்றினை ஏந்திய கையனே என்றும், ஆற்றல் மிக்க காளையினை வாகனமாக உடைய இறைவனே என்றும், கிடைத்தற்கு அரிய அமுதமே என்றும், அனைவருக்கும் மூத்தவனே என்றும் ஆரூரனே என்றும் அவனது புகழினையும் ஆற்றலையும் உணர்த்தும் திருநாமங்களை உரத்த குரலில் சொல்லி அவனை பலகாலும் அழைப்பாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

இடர் கெடுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளிசேர் கங்கைச் சடையா என்றும்

சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூநீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும்

கடல் விடம் அது உண்டு இருண்ட கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும்

அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.42.4) அப்பர் பிரான், ஆசா பாசங்களில் ஆழ்ந்து வாழ்வினில் கடைத்தேற முடியாமல் வருந்தும் உயிர்கள் எவ்வாறு உய்வினை அடைவது என்பதை சொல்லிக் கொடுக்கின்றார். அலை ஆர்=கடலைலைகள் போன்று; ஒன்றன் பின்னொன்று விடாது வரும் கடலலைகள் போன்று வினைகள் உயிரினை அலைக்கழித்து துன்பம் அளிப்பதால், அலையார் வினை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். கடையாகும் வாழ்வு=கீழான வாழ்க்கை; பாசம்=பாசக் கயிறு; எறிநீர்=அலைகள் வீசும் கங்கை நதி; இடைவிடாது கரையை வந்து சேரும் கடலலைகள் போன்று ஓயாது உயிரினை வந்தடையும் வினைகள் உயிரினை அலைக்கழிக்கின்றன. மேலும் ஆசை எனப்படும் பாசக் கயிற்றினால் சுருக்கிடப்பட்டு உயிர் கீழான வாழ்க்கை நடத்துகின்றது. இந்த இழிவான தன்மையால் மனம் தளரும் உலகத்தவரே, நீங்கள் அஞ்சாமல் இருப்பதற்கு அடியேன் ஒரு வழிமுறை சொல்கின்றேன் கேட்பீர்களாக; இலைகளுடன் நிறைந்து காணப்படும் கொன்றை மலர், அலைகள் வீசும் கங்கை நதி, பிறைச் சந்திரன் ஆகியவற்றை தனது பெரிய சடையில் மகிழ்ச்சியுடன் வைத்துள்ளவனும், தேவர்களால் போற்றப் படுபவனும், அழியாமல் என்றும் நிலையாக இருப்பவனும் ஆகிய பெருமான் உறைகின்ற நெய்த்தானம் நன்னகரத்தில் அமைந்துள்ள திருக்கோயிலை, மனதில் நினைத்து வணங்கினால் நீர், வாழ்வினில் உய்வினை அடையலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அலையார் வினைத்திறம் சேர் ஆக்கை உள்ளே அகப்பட்டு ஆசை எனும் பாசம் தன்னுள்

தலையாய் கடையாரும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்ச வேண்டா

இலையார் புனக்கொன்றை எறி நீர்த் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும்

நிலையான் உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் (6.42.5), நமது மதியால் உலகினை ஆளலாம் என்று அகங்காரமாக பேசுவதைத் தவிர்த்து இறைவனைப் பணிந்து வணங்குமாறு அப்பர் பிரான் ஆலோசனை கூறுகின்றார். தினைத்தனை=மிகவும் சிறிய; பொறை=பொறுமை என்ற பொருளில் பல இடங்களிலும் கையாளப் பட்டாலும், பொறையிலி என்ற தொடருக்கு தாமதம் செய்யாமல் என்ற பொருள் பொருத்தமாக உள்ளது; ஆங்காரம்=முனைப்பு; முனைத்து=முற்பட்டு; எவரும் சண்டைக்கு அழைக்கும் முன்னரே தாங்கள் பறக்கும் கோட்டைகளுடன் சென்று பல இடங்களையும் அழித்த திரிபுரத்து அரக்கர்கள் என்பதால் முனைத்து வரு மதில்கள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முடுகிய=விரைந்து; உடலிலிருந்து உயிர் பிரிக்கப்படும் நேரத்தில் சிறிதும் தாமதம் செய்யாமல் உயிர் பிரிக்கப்படும் கூடாகிய உடலினை மிகவும் சிறந்த பொருளாக கருதி, இந்த உடல் மற்றும் புத்தியின் உதவியுடன் உலகங்கள் அனைத்தையும் வெல்லலாம் என்ற முனைப்புடன் பேசுவதை. உலகத்தவரே தவிர்ப்பீராக; தாமே முனைந்து சண்டைக்கு செல்லும் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் தீப்பற்றி அழியும் வண்ணம் விரைந்து அம்பினை செலுத்தும் பொருட்டு மேருமலையினை வில்லாக வளைக்க நினைத்து தேவர்களின் துயரத்தினை தீர்த்த பெருங் கருணையாளன் ஆகிய பெருமான் உறைகின்ற நெய்த்தானம் நன்னகரத்தில் அமைந்துள்ள திருக்கோயிலை, மனதில் நினைத்து வணங்கினால் நீர், வாழ்வினில் உய்வினை அடையலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தினைத்தனையோர் பொறை இலா உயிர் போம் கூட்டைப் பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த

அனைத்துலகும் ஆளலாம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்காக

முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெஞ்சிலை வளைத்துத் செந்தீ மூழ்க

நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

நிலையற்ற உடலினை நிலையாகக் கருதி, உடல் உறுப்புகளிடம் தஞ்சம் அடைந்து, அவற்றின் வழியே சென்று அல்லலுறும் மனிதர்களுக்கு அறிவுரை கூறும் பாடலாக சோற்றுதுறை தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் பாடல் (6.42.8) அமைந்துள்ளது. அஞ்சப்புலன்=அஞ்சு+அ+ புலன்; ஐந்து புலன்களும் தங்களது ஆற்றலை பயன்படுத்தி, தாங்கள் நினைத்த வண்ணம் உடலினையும் உயிரினையும் செயல்படுத்தி, உடலுக்கு பல கொடிய நோய்களை தேடித் தருகின்றது; இவ்வாறு நோய்களுக்கு இருப்பிடமாகவும் நிலையற்ற தன்மை கொண்டதாகவும் உள்ள உடலினை நிலையானதாக கருதி தஞ்சம் அடையும் உலகத்தவரே, இவ்வாறு தாழ்ந்த நிலையினை அடைந்து புலன்கள் தரும் இன்பத்தில் ஆழ்ந்து இருப்பதை தவிர்ப்பீர்களாக; தன்னைப் பற்றுக்கோடாக கருதாமல், தன்னை அடையாத வஞ்சக மனத்தினை உடைய மனிதர்களால் காண முடியாதவனும், நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கரிய மணி போன்ற கறையினை உடையவனும், வானவர்களால் தங்கள் தலைவன் என்று புகழப் படுபவனும், அடியார்களின் நெஞ்சத்திற்கு மிகவும் இனிமையாக இருப்பவனும் ஆகிய பெருமான் உறைகின்ற நெய்த்தானம் நன்னகரத்தில் அமைந்துள்ள திருக்கோயிலை, மனதில் நினைத்து வணங்கினால் நீர், வாழ்வினில் உய்வினை அடையலாம் என்பதே இந்த பாடலில் சொல்லப்படும் அறிவுரை.

அஞ்சப் புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அருநோய்க்கு இடமாகிய உடலின் தன்மை

தஞ்சம் எனக் கருதித் தாழேல் நெஞ்சே தாழக் கருதுதியே தன்னைச் சேரா

வஞ்ச மனத்தர்கள் காணவொண்ணா மணிகண்டன் வானவர் தம் பிரான் என்று ஏத்தும்

நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

எதிர்கொள்பாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.1.1) சுந்தரர், மன்னாதி மன்னராக இருந்து பலராலும் மதிக்கப்பட்டு சிறப்பாக வாழ்ந்தாலும், அவர் இறந்த பின்னர், அவருக்கு துணையாக, அவரது சூக்கும உடலுடன் நரகத்திற்கும் சொர்கத்திற்கும் உடன் செல்பவர் எவரும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று உணர்த்துகின்றார். எனவே, இறைவன் பால் நாம் வைத்துள்ள சிந்தனையை, தொடர்ந்து அந்த வழியில் நிலைநிறுத்தி, வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். நாம் செத்த பின்னரும், இறைவன் ஒருவனே நமக்குத் துணையாக இருப்பவன் என்பதை நினைவில் கொண்டு, அந்த துணையினை நாம் உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். வம்மின்=வாரும்

மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள்

செத்த போதில் ஆருமில்லை சிந்தையுள் வைம்மின்கள்

வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே

அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (7.7.4) சுந்தரர், உலகியல் இன்பங்களில் ஆழ்ந்து, பெருமானை சிந்தியாது வாழும் மனிதர்களை வஞ்ச மனத்தீர் என்று அழைக்கின்றார். அவர்கள் ஐந்து புலன்களுக்கும் அடிமையாக வாழ்ந்து, ஐந்து புலன்களின் இச்சைகளை தீர்ப்பதே தமது வாழ்நாளின் குறிக்கோளாக வாழ்வதால், அத்தகைய மனிதர்களின் ஐந்து பொறிகளும் இன்பமாக வாழ்வதால், வாழ்வர் என்று அந்த புலன்களை குறிப்பிடுகின்றார். புலன்களை அடக்கி, புலன்களை நமது விருப்பம் போன்று செயல்படச் செய்து வாழும் மனிதர்களின் புலன்கள், தமது விருப்பம் போன்று செயல்பட முடியாத தன்மையால் அந்த புலன்கள் இன்பமாக வாழவில்லை என்று சுந்தரர் கருதினார் போலும். இவ்வாறு புலன்களில் கட்டுப் பாட்டில் வாழும் மனிதர்கள் பலரது இகழ்ச்சிக்கும் ஆளாவது இயற்கை தானே. இவ்வாறு பலராலும் இகழப்படும் நிலைக்கு தள்ளப் படாமல், பெருமானை நினைத்து வாழவேண்டும் என்று சுந்தரர் இந்த பாடலில் அறிவுரை கூறுகின்றார். தேவர்=அனைவரிலும் உயர்ந்த முழுமுதற் கடவுள்; மூவராயும் என்ற தொடர் மும்மூர்த்திகளாக இறைவன் இருக்கும் தன்மையை உணர்த்துகின்றது. இருவராயும் என்ற தொடர், பிரமன் மற்றும் திருமாலாகவும் இருந்து அவர்கள் இருவரையும் பெருமான் இயக்குவதை குறிப்பிடுகின்றது என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். உருத்திரன் சிவபெருமானின் அம்சம் என்பதால், அவனை தனியாக பெருமான் இயக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதி, இருவரையும் இயக்குபவர் என்று சுந்தரர் குறிப்பிட்டார் போலும். உயிரின் நோக்கத்திற்கு பகைவராக விளங்குவோர் வேறெங்கும் இல்லை, நம்முள்ளே இருக்கும் ஐந்து புலன்கள் தாம் என்று சுட்டிக் காட்டும் சுந்தரர் அந்த புலன்களை அடக்க வேண்டிய அவசியத்தை இங்கே உணர்த்துகின்றார். பெருமானைப் பற்றி சிந்திப்பதற்காகத் தானே, உயிர்களுக்கு ஐந்து பொறிகளும் அந்தக்கரணங்களும் உடலுடன் இணைக்கப் பட்டுள்ளன. எனவே அவற்றை சரிவர பயன்படுத்தாமல், புலன்களின் வழியே இயங்குதல், உயிர்களுக்கு இழைக்கப் படும் வஞ்சனையாக கருதப் படுகின்றது.

வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே

யாவராலும் இகழப் பட்டிங்கு அல்லலில் வீழாதே

மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே யாம்

தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே

பழமண்ணிப் படிக்கரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.22.3) சுந்தரர், பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட அடியார்களின் பாத தூளியை, தொண்டர்களாகிய நீவிர், உமது தலையில் சூடிக் கொள்வீர்களாக என்று அறிவுரை கூறுகின்றார். உமர்=உம்மவர்; எமர்=எம்மவர்; உமர் என்பதற்கு சுற்றத்தார் என்றும் எமர் என்பதற்கு அயலவர் என்றும் பொருள் கொள்வது சிறப்பு. ஆத்தமானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி என்ற மணிவாசகரின் தொடர் நமது நினைவுக்கு வருகின்றது. ஒரு உயிர், இறை வழியில் சென்று உய்வினை அடைய தலைப்படும் போது, பலரும் அந்த உயிரினை அவ்வாறு செல்லவிடாமல் தடுப்பதை சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். இதனை உணர்கின்ற உயிர் உண்மையில் வருத்தம் அடைந்தாலும், ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கின்றது. இந்த தன்மை தான் இங்கே உணர்த்தப் படுகின்றது. ஏன் இவ்வாறு பலரும் முயற்சி செய்கின்றனர். இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருவன், தம்மிலும் அதிகமாக இறை உணர்வில் ஈடுபட்டிருந்தால், அவனது உறவினர்களுக்கு, ஒரு விதமான அச்சம் உண்டாகின்றது. இந்நாள் வரையிலும் நம்மை ஆதரித்து வந்த இவன், இவ்வாறு மேன்மேலும் இறை நாட்டம் கொண்டு, இல்லற வாழ்க்கையை துறந்து விட்டால், நாளை நம்மை காப்பற்றுவார் எவர் என்ற அச்சம் கொள்ளும் உறவினர், அந்த ஒருவனின் இறை நாட்டத்தை குறைப்பதற்கு முயற்சி செய்வது இயல்பே. அதற்கு துணையாக வேறு பலரையும் அவர்கள் சேர்த்துக் கொள்கின்றனர். அந்த ஒருவனின், இறை உணர்வினை அழிப்பதற்கும், குறைப்பதற்கும் முயற்சி செய்யும் மனிதர்களை, உமர் என்றும் எமர் என்றும் குறிப்பிடுகின்றார். அத்தகைய மனிதர்களை, உயிர் அடையாளம் கண்டு கொண்டு, எச்சரிக்கையுடன் இருந்து அவர்களது வலையில் விழாமல் இருக்க வேண்டும் என்பதே இந்த பாடலில் சொல்லப் படும் உபதேசம். மேலும் எச்சரிக்கை அடையும் உயிர், தான் தொடர்ந்து திருத்தமான வழியில் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் இங்கே சுந்தரர் கூறுகின்றார். பெருமானின் அடியார்களை மதித்து, அவர்களுடன் ஒன்று கூடி, பெருமானின் புகழினை ஆனந்தக் கூத்தாக ஆடியும் பாடியும் இருப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.

ஆடுமின் அன்புடையீர் அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு

சூடுமின் தொண்டருள்ளீர் உமரோடு எமர் சூழ வந்து

வாடும் இவ்வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச் சென்று

பாடுமின் பத்தருள்ளீர் பழமண்ணிப் படிக்கரையே

கேதாரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.78.1) பசி நோய் ஆகிய துன்பங்களுக்கு இடமாக இருப்பதும், என்றோ ஒரு நாள் அழியக் கூடியதும் ஆகிய இந்த உடல் நிலையற்றது என்பதை புரிந்து கொண்டு, இத்தகைய உடலுடன் உயிர் பிணைந்து இருப்பதற்கு காரணமாக விளங்கும் பிறப்பிறப்புச் சுழற்சியை ஒழிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்று சுந்தரர் அறிவுரை கூறுகின்றார். எனவே, இனியும் தாமதம் செய்யாமல், புண்ணியம் பெற்றுத் தரும் செயல்களை செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். பறி=பை, இங்கே பை போன்ற உடல்; கேதாரம் என்ற தலத்தின் பெயரைச் சொன்னாலே நமக்கு புண்ணியம் வாய்க்கும் என்று உணர்த்துகின்றார்.

வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்

பாழ் போவது பிறவிக்கடல் பசி நோய் செய்த பறி தான்

தாழாது அறம் செய்ம்மின் தடம் கண்ணான் மலரோனும்

கீழ் மேலுற நின்றான் திருக்கேதாரம் எனீரே

பொழிப்புரை:

என்றோ ஒரு நாள் அழியக்கூடிய இந்த உடலினை நிலை என்று எண்ணி, உடல் தரும் பல் விதமான இன்பங்களில் ஆழ்ந்து, இன்றைய நாள் மிகவும் இனிமையாக கழிந்தது என்றும் இனி வரப்போகும் நாட்களும் இன்பம் பயப்பவையாக இருக்கும் என்றும் நினைத்து உடல் தரும் சிற்றின்பங்களை இரசித்து வாழும் வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து விடுபட்டு இறைவனுடன் இணைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழும் முக்திநிலையினை பெறுவதற்கு, உலகத்தவரே நீங்கள் விரும்பி வருவீர்களாக. மின்னல் போன்று மிகுந்த ஒளியுடன் திகழும் சோதி வடிவினனும், வெண்மையான பிறைச் சந்திரன் விரிந்து பரந்து மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி மற்றும் கொன்றை மலர்கள் ஆகியவற்றை நெருக்கமாக தனது சடைமுடியில் வைத்துள்ளவனும் ஆகிய பெருமான் உறையும் கோடிகா தலம் சென்றடைந்து இறைவனை வணங்கி வழிபடுவீர்களாக.

பாடல் 2:

இன்று நன்று நாளை (2.99) பாடல் 1 தொடர்ச்சி மற்றும் பாடல் 2 (திதே 0501)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0502)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0503)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 2 தொடர்ச்சி மற்றும் பாடல் 3 (திதே 0504)

அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர்

நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ

வில்லை அன்ன வாள் நுதல் வெள்வளை ஓர் பாகமாம்

கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடிகாவு சேர்மினே

விளக்கம்:

ஆதரித்து=விருப்பம் கொண்டு; நல்லதோர் நெறி=துன்பங்கள் அற்ற வாழ்க்கை முறை; வெள்வளை= வெண்மையான சங்கு வளையல்களை அணிந்த உமையம்மை; இதே பதிகத்தின் முதல் பாடலில் உலக சிற்றின்பங்களில் மயங்கி கிடக்கும் வாழ்க்கையை விட்டுவிட வேண்டும் என்று அறிவுரை கூறிய திருஞானசம்பந்தர், தான் அவ்வாறு கருதியதன் காரணத்தை இந்த பாடலில் உணர்த்துகின்றார். உலகியல் வாழ்க்கை இன்பமயமானதாக பலபல சமயங்களில் தோன்றினாலும், முடிவில் மீண்டும் அடுத்த பிறவிக்கு வழிவகுத்து உயிர்க்கு துன்பம் அளிப்பதால் அல்லல் மிக்க வாழ்க்கை என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இன்பமயமாக தோன்றும் வாழ்க்கையை ஏன் அல்லல் வாழ்க்கை என்று கூறினார் என்பதை சற்று சிந்திப்போம். உலகப் பொருட்களும் உலகத்தில் உள்ள உயிர்களும் நமக்கு அளிக்கும் இன்பங்கள், அந்த பொருட்களையும் உயிர்களையும் நாம் மேலும்மேலும் விரும்பும் வண்ணம் தூண்டுகின்றன. இந்த தூண்டுதலுக்கு அடிமைப் படும் நாம், அந்த பொருட்கள் மற்றும் உயிர்கள் மீது வைத்துள்ள பாசத்தை மேலும்மேலும் அதிகரித்து அந்த பாச மயக்கத்தினால் மேலும் பல தவறுகளைச் செய்து நமது வினைகளை பெருக்கிக் கொண்டு, வினைகளின் சுமையிலிருந்து மீளாமல் இருப்பதால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடாமல் உலக இன்ப துன்பங்களில் ஆழ்ந்து விடுகின்றோம். இவ்வாறு இறுதியில் துன்பம் பயப்பதால், முதலில் நமக்கு இன்பமாக தோன்றினாலும் இறுதியில் துன்பம் விளைவதால் அல்லல் வாழ்க்கை என்று இங்கே கூறப்படுகின்றது. எனவே தான் இந்த அல்லல் தரும் வாழ்க்கையின் மீது விருப்பம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று திருஞான சம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். கொல்லை=முல்லை நிலம்.

திருநீலகண்டப் பதிகம் என்று அழைக்கப்படும் பதிகத்தின் பாடல்கள் (1.116) அனைத்திலும் திருஞான சம்பந்தர் நமக்கு அறிவுரை கூறுவதை நாம் உணரலாம். இந்த பதிகத்தின் பாடல்களில் அடியார்களாகிய தாங்கள் எவ்வாறு பெருமானைப் போற்றுகின்றனர் என்பதை உணர்த்தி, நாம் எவ்வாறு சிவபெருமானை போற்றி வணங்க வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதை நாம் உணரலாம், சிவபெருமானுக்கு பலவிதமான திருத்தொண்டுகள் செய்து அவனது திருப்பாதங்களைப் போற்றுவோம் என்று முதல் பாடலிலும், சோலைகள் வளர்த்து குளங்கள் வெட்டி திருப்பணிகள் செய்தும், அன்றலர்ந்த மலர்களைத் தூவியும் பெருமானை வழிபடுவோம் என்று இரண்டாவது பாடலிலும், உலகச் சிற்றின்பங்களைத் துறந்து உமது திருவடிகளில் பற்று வைத்து வழிபடும் வண்ணம் எமக்கு அருள் புரிந்தவரே என்று அவரை வாழ்த்தி வழிபடுவோம் என்று மூன்றாவது பாடலிலும், புண்ணியத்தின் பயனாக நாங்கள் உம்மை வழிபடும் வண்ணம் ஆட்கொண்ட பெருமானே என்று வழிபடுவோம் என்று நான்காவது பாடலிலும், யான் எனது என்ற இரண்டு பற்றுக்களையும் துறந்து பெருமானை வழிபடுவோம் என்று ஐந்தாவது பாடலிலும், பெருமானின் திருவடிகளுக்கு அபச்சாரம் ஏதும் நேராத வண்ணம் வழிபடுவோம் என்று ஆறாவது பாடலிலும், பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு வருந்திடும் வாழ்க்கையைக் கடிந்து அதனின்று விடுபடும் நோக்கத்துடன் உருக்கத்துடன் பெருமானை வழிபடுவோம் என்று எட்டாவது பாடலிலும், இனி வரும் பிறவிகளிலும் பெருமானை வழிபடுவோம் என்ற உறுதியுடன் வாழ்வோம் என்று ஒன்பதாவது பாடலிலும் புறச் சமயத்தாரின் பேச்சுகளை புறக்கணித்து தொடர்ந்து பெருமானின் திருவடிகளை வழிபடுவோம் என்று பத்தாவது பாடலிலும் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அவர் குறிப்பிட்ட வழியினில் நாமும் பெருமானை வணங்கி, நமது வாழ்வினில் உய்வினை தேடிக் கொள்ளும் மார்க்கம் சிவபெருமானை வழிபடுவது ஒன்று தான் என்பதை முற்றிலும் உணர்ந்து, அவர் அருளிய திருநீலகண்டத் திருப்பதிகத்தினை முறையாக ஓதி, பலன் பெறுவோமாக.

பெருமானை வழிபட்டு நமது வினைகளை தீர்த்துக் கொள்ளும் வழி இருக்கையில், அவ்வழியே செல்லாமல், நமது வினையின் பயன் என்று நொந்து கொள்வதில் பயனேதும் இல்லை என்று திருஞான சம்பந்தர் இந்த பதிகத்தின் முதற் பாடலில் (1.116.1) நமக்கு அறிவுரை கூறுகின்றார். அவ்வினை=சென்ற பல பிறப்புகளில் செய்த தீவினைகள்; இவ்வினை=பழைய வினைகளின் பயனாக இந்த பிறவியில் அனுபவிக்கும் துன்பங்கள்; பொதுவாக சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைகளின் பயனை, இன்பமாகவும் துன்பமாகவும் உயிர்கள் இந்த பிறவியில் நுகர்ந்து கழிக்க வேண்டும் என்பதே விதி. இந்த விதியினை மாற்றுவதற்கோ வினைகளை முற்றிலும் அகற்றவோ குறைக்கவோ, பெருமானைத் தவிர்த்து வேறு எவருக்கும் அதிகாரம் கிடையாது. எனவே இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டு பெருமானை வணங்கித் தொழுது உயிர்கள் தங்களது வினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்பதே அருளாளர்கள் மீண்டும்மீண்டும் நமக்கு வழங்கும் அறிவுரை ஆகும். இவ்வாறு நமது வினைகளைத் தீர்த்துக் கொள்ளும் உபாயம் இருக்கையில், அதனை விட்டுவிட்டு, வினைகளைக் கழித்துக் கொண்டு உய்யும் வழியினை நாடாமல் இருப்பது நமது தவறு தானே. இந்த குற்றத்தையே நமது ஊனம் என்று இங்கே திருஞானசம்பந்தர் சுட்டிக் காட்டுகின்றார். பெருமானை நாடுவதற்கு நமக்கு உள்ள சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு வழிகளை கைவினை என்று குறிப்பிடுகின்றார். பெருமானை வழிபடாமல் வாழ்வது ஊனம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். துன்பம் வந்தால் துவண்டு விடுவது மனித இயற்கை. அவ்வாறு துவண்டு நிற்கும் நிலையில், நமது மனம் தளர்ந்துள்ள நிலையில் நாம் நமது கவலைகளில் ஆழ்ந்து இறைவனை நினைப்பதை சில சமயங்களில் மறந்து விடுகின்றோம். எனவே தான், நாம் பெருமானின் அடியார்கள் என்ற நினைப்பு எப்போதும் நமக்கு இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம், நாம் அடியோம் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அடியோம் என்று குறிப்பிட்டு, அவர்கள் துன்பத்திலும் இறைவனை சிந்திக்க வேண்டும். வழிபடவேண்டும் என்பதையே திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். முற்பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாக இந்த பிறவியில் துன்பங்கள் நேரிடுகின்றன என்று பெரியோர்கள் சொல்வதை நீங்கள் அறிவீர்கள். ஆனாலும் இவ்வாறு சொல்வது சான்றோர்களின் மொழியில் ஒரு பகுதியே ஆகும். இந்த ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக் கொண்டு, மற்றோர் பகுதியை (பெருமானை வழிபடுதல் என்ற மற்றோர் பகுதியை) மறந்து விட்டு வாழ்வினில் உய்வினை நாடாமல் இருக்கின்றீர்களே, இது உமது குறை என்பதை உணர்வீர்களாக. நாமெல்லாம் பெருமானின் அடியார்கள் என்பதை எபபோதும் மறவாதீர்கள்; இறைவன் நமக்கு அளித்த கைகளை பயன்படுத்திக் கொண்டு, பெருமானுக்கு பல வகையான திருத்தொண்டுகள் செய்து, சரியை கிரியை முதலான திருப்பணிகள் செய்து, பெருமானின் திருப்பாதங்களை போற்றுவீர்களாக. அவ்வாறு செய்தால், பழைய பல பிறவிகளில் நாம் செய்த வினைகள் நம்மை வந்து தாக்காமல் நின்று விடும். உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது, நீலகண்டம் என்று அழைக்கப்படும் பெருமானின் மீது, ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃது அறிவீர்

உய்வினை நாடாது இருப்பது உம் தமக்கு ஊனம் அன்றே

கைவினை செய்து எம் பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் (1.29) திருஞான சம்பந்தர், தனது நெஞ்சுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் தலத்தின் சிறப்பு உணர்த்தப் பட்டு, அத்தகைய தலம் சென்றடைந்து உய்வினை அடைவாயாக என்று தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று, நம்மை அந்த தலம் செல்லுமாறு அறிவுரை கூறுகின்றார். சிறப்பு வாய்ந்த அந்தணர்கள் வாழும் தலம் என்று பதிகத்தின் முதல் பாடலிலும், வீடுபேற்றினைத் தவிர்த்து வேறெதையும் விரும்பாத மறையோர் வாழும் தலம் என்று இரண்டாவது பாடலிலும், கல்வியாளர்களாக விளங்கும் சிவநெறிச் செல்வர்கள் வாழும் தலம் என்று மூன்றாவது பாடலிலும், சிறந்த பண்புகள் உடைய மக்கள் நிறைந்த தலம் என்று நான்காவது பாடலிலும், நட்புத் தன்மையில் மேம்பட்ட மறையோர்கள் வாழும் தலம் என்று ஐந்தாவது பாடலிலும், பல சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான் நிலையாக உறைகின்ற தலம் என்று ஆறாவது பாடலிலும், நறுமணம் கமழும் அரங்குகள் நிறைந்த தலம் என்று ஏழாவது பாடலிலும், மேன்மேலும் பரவுகின்ற புகழினை உடைய மக்கள் வாழும் தலம் என்று எட்டாவது பாடலிலும், திருமாலும் பிரமனும் காணமுடியாத சிறப்பு வாய்ந்த பெருமான் உறைகின்ற தலம் என்று ஒன்பதாவது பாடலிலும், குறிப்பிடும் திருஞான சம்பந்தர், இந்த பதிகத்தின் பத்தாவது பாடலில், அத்தகைய சிறப்புகள் வாய்ந்த நறையூர் சித்தீச்சரம் தலத்தில் வாழும் சிவபெருமானை குறித்து தவம் செய்து உய்வினை அடைவீர்களாக என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

இந்த பதிகத்தின் பத்தாவது பாடலை நாம் இங்கே காண்போம். தவமாக கருதப் படுவதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தவம் செய்வது எதற்காக, உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்திப் பேற்றினை அடைவதற்காகத் தானே. அத்தகைய முக்திப் பேறு எளிதாக கிடைக்கும் வேறு வழி இருப்பின் நாம் நமது உடலினை வருத்திக் கொண்டு தவம் செய்வதைத் தவிர்க்கலாம் அல்லவா. நீராடுவதை தவிர்ப்பதாலும் நுண்ணிய ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பதாலும் உடலில் மாசு உடையவர்களாக விளங்கும் சமணர்களின் பேச்சினை பொருட்படுத்தாமல் இருக்குமாறு நமக்கு அறிவுரை கூறும் திருஞான சம்பந்தர், வாழ்க்கையில் உய்வினை அடைய வேண்டும் என விரும்புவோர் நறையூர் சித்தீச்சரம் சென்று வழிபடவேண்டும் என்று கூறுகின்றார். அத்தகைய வழிபாடே, சிறந்த தவமாக பெருமானால் கருதப்பட்டு முக்தி நெறி வாய்க்கும் என்று கூறுகின்றார். பெருமானை வழிபடுதலும், தேவாரப் பாடல்களை பாடுதலும் தவத்திற்கு இணையாக கருதப்படுவதாக மூவர் முதலிகள் உணர்த்துகின்றனர். நீராடுவதைத் தவிர்ப்பதால் அழுக்கு சேர்ந்த உடலினை உடையவராக, விரித்து கட்டும் நுண்ணிய ஆடைகள் இல்லாதவர்களாக, மற்றவர் இடும் பிச்சையை கைகளில் ஏற்றுக்கொண்டு உண்ணும் தன்மை உடையவராக பல இடங்களிலும் திரியும் சமணர்கள், பெருமானைப் பழித்து கூறும் சொற்களை, உலகத்தவரே நீங்கள் பொருட்படுத்தாது விலக்குங்கள். நீங்கள் வாழ்வினில் உண்மையாகவே உய்வினை அடையவேண்டும் என்று விரும்பினால், நறையூரில் உறைகின்ற சித்தீச்சரம் திருக்கோயில் சென்று பெருமானை வழிபடுவீர்களாக. இந்த செயல் சிறப்பான தவமாக கருதப்பட்டு, தவத்தின் பயனை உங்களுக்கு பெற்றுத் தரும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மெய்யின் மாசர் விரிநுண் துகிலார்

கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல்

உய்ய வேண்டில் இறைவன் நறையூரில்

செய்யும் சித்தீச்சரமே தவமாமே

திருக்கோவலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.100) அனைத்துப் பாடல்களிலும் வீரட்டானம் சேர்துமே என்று தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை கூறும் திருஞானசம்பந்தர், எதற்காக நாம் கோவலூர் வீரட்டம் தலம் சென்றடைந்து பெருமானைப் பணிய வேண்டும் என்பதையும் அந்த பாடல்களில் உணர்த்துகின்றார். நமது உடலில் குடி கொண்டுள்ள உயிரினைப் பிரிப்பதற்காக கூற்றுவனின் தூதர்கள் பாசக் கயிற்றினை வீசும் போது, இடையிலே புகுந்து அதனை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தவர் பெருமானைத் தவிர்த்து வேறெவரும் இல்லை என்று பதிகத்தின் முதல் பாடலிலும், உயிருக்கு வேண்டியவற்றைத் தந்து இனிமையாக இருப்பவன் சிவபெருமான் ஒருவன் தான் என்று இரண்டாவது பாடலிலும், உயிர் விரும்பும் நிலையான ஆனந்தத்தை, முக்தி உலகத்தை அளிக்கும் வல்லமை வாய்ந்தவன் பெருமான் ஒருவன் தான் என்று மூன்றாவது பாடலிலும், உடல் மூப்படைந்து கை கால் நடுங்குதல், இருமல், சூலை நோய் ஆகிய நோய்களால் வருத்தமடைந்து உள்ளம் இறைவனைத் தொழ வேண்டும் என்று விரும்பினாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காத காலம் வரும் முன்னரே வீர்ட்டானம் சென்றடைய வேண்டும் என்று நான்காவது பாடலிலும், உடலை இழந்த ஆன்மா உடலற்ற நிலையில், தான் செய்ய முடியாமல் போன இறைவழிபாட்டினை நினைத்து ஏங்கித் தவிப்பதை, தவிர்க்கும் பொருட்டு உயிருடன் உடல் ஒத்துழைக்கும் தருணத்தில், வீரட்டானம் செல்வீராக என்று ஐந்தாவது பாடலிலும், நரை திரை மூப்பு ஆகியவை வரப்பெற்று உடல் தளர்வதன் முன்னர் வீரட்டானம் செல்வீர் என்று ஆறாவது பாடலிலும், மூப்பினால் தளர்ச்சி அடையும் உடல் தெளிவாக பேசவும் பாடவும் இயலாத தன்மை வந்தைடைந்து உறவினர்கள் பலரும் கேலி செய்யும் நிலை வருவதன் முன்னர் வீரட்டானம் செல்வீர் என்று ஏழாவது பாடலிலும், மூப்பின் காரணமாக இருமல் முதலான நோய்கள் வந்தடைந்து உடல் தளர்ச்சி அடையும் முன்னர் வீரட்டானம் செல்வீர் என்று எட்டாவது பாடலிலும், திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

கடலலைகள் போன்று எண்ணற்று தொடர்ந்து வரும் பிறவிகளைத் தவிர்க்க வேண்டும் என்று விரும்புவோர், கழுமலத்து இறைவனின் இணையடிகளைத் தொழ வேண்டும் என்ற அறிவுரையை திருஞானசம்பந்தர் வழங்கும் பாடல் பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (1.19.2). இந்த பதிகத்தின் முதல் பாடலில் நன்மைகள் விளைவிக்கும் திருவடிகள் பெருமானின் திருவடிகள் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த பாடலில் அந்த நன்மை யாது என்பதை உணர்த்துகின்றார். கடலால் சூழப்பட்டுள்ள சீர்காழி நகரத்தின் தன்மை, பிறவிக் கடலில் மூழ்கி தத்தளிக்கும் உயிரின் நிலையை திருஞானசம்பந்தருக்கு நினைவூட்டியது போலும். பிறப்பெடுக்கும் தன்மைக்கு கடலினை உதாரணமாக சொல்வது வழக்கம். பிறவிக்கடல் என்றே சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர், அலைகள் ஒன்றன் பின் ஒன்று தொடர்ச்சியாக வருவது போன்று, வாழ்க்கையில் வினைகளின் விளைவால் இன்பமும் துன்பமும் மாறிமாறி வந்து உயிர்களை அலைக்கழிக்கின்றன. இந்த இன்பங்களையும் துன்பங்களையும் நுகரும் உயிர்கள் மேலும் வினைகளை சேர்த்துக் கொண்டு, தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றன. எனவே தான் பல வகையான பிணிகளுடன் (துன்பங்களுடன்) தொடர்பு கொண்டுள்ள பிறவிக்கு, தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வரும் அலைகள் கொண்டுள்ள கடலினை உவமையாக குறிப்பிடுவார்கள். விரிந்து பரந்துள்ள கடலினைப் போன்று நமது உயிரும் எண்ணற்ற பிறவிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. தன்னிடம் அகப்பட்டுக் கொண்ட பொருட்களை விடாமல் பற்றிக் கொண்டு அந்த பொருட்கள் வெளியே செல்லாத வண்ணம் தடுக்கும் அலைகள் போன்று வினைகளும் தன்னிடம் பிடிபட்டுள்ள உயிர்களை விடாமல் வருத்துவதோடன்றி, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து வெளியே செல்லாத வண்ணம் தடுக்கின்றன. பிணி என்று பிறவிகளுடன் இணைந்துள்ள வினைகளை குறிப்பிடுகின்றார். எனவே தான் இந்த பிறவிகளை பிணிபடு பிறவிகள் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். இந்த பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வெளியே வருவது மிகவும் கடினமாக தோன்றினாலும், அவ்வாறு வெளியே விடுபட்டு வருவது மிகவும் எளிதான செயல் என்று திருஞானசம்பந்தர் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் இது. அவிர்சடை=விரிந்த சடை; ஒற்றைப் பிறையுடன் சந்திரன் சரண் அடைந்ததை இளமதி என்றும், பெருமானிடம் சரண் அடைந்த பின்னர் தக்கனது சாபத்தால் ஏற்பட்ட அழிவினின்று மீண்டு வளரத் தொடங்கிய நிலையினை வளர்மதி என்றும் இங்கே குறிப்பிடுகின்றார். தண்படு கதிர்=குளிர்ச்சி பொருந்திய கதிர்கள்; மலி=மலிந்த, மிகுதியாக உடைய; நலமலி=நன்மைகள் புரியும் குணத்தினை மிகுதியாக உடைய; நலம்=வீடுபேறு. தக்கனது சாபத்தால் அழியும் நிலையிலிருந்து மீட்டு சந்திரனுக்கு அருளியது போன்று வினைக் கடலில் அகப்பட்டு தவிக்கும் உயிர்களை மீட்கும் வல்லமை வாய்ந்தவன் இறைவன் என்பது இங்கே குறிப்பாக உணர்த்தப் படுகின்றது. கடலின் அலைகள் போன்று பல பிறவிகளை தொடர்ந்து அளித்து உயிரினுக்கு துன்பங்களை விளைவிக்கும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு நிலையான இன்பம் அடைவது மிகவும் எளிதான செயலாகும். அது யாதெனின் சொல்லுகின்றேன் கேட்பீர்களாக. பெரிய அலைகள் நிறைந்த கடலினை அணிகலனாகக் கொண்டுள்ள சீர்காழி நகரத்தினில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்துள்ளவனும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்ற நிறத்தினை உடைய திருமேனியை உடையவனும், விரிந்த சடையின் இடையே நாளும் வளர்ந்து கொண்டிருப்பதும் குளிர்ந்த கதிர்களை உடையதும் ஆகிய பிறைச் சந்திரனை அணிந்தவனும், கழுத்தினில் நீலமணி அணிந்தது போன்று தோன்றும் வண்ணம் விடத்தை அடக்கியதால் ஏற்பட்ட கறையினை உடையவனும் ஆகிய பெருமானின், நலன்கள் விளைவிக்கும் இணையான இரண்டு திருப்பாதங்களையும் சார்ந்து தொழுது, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைவதை மிகவும் எளிதான செயலாக மாற்றிக் கொள்வீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை

அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை

தணி படு கதிர் வளர் இள மதி புனைவனை உமை தலைவனை நிற

மணி படு கறை மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவமே

உயிரினை உறுதியாகப் பற்றிக் கொண்டுள்ள பாவங்கள் தமது பிடிப்பினில் தளர்ந்து, நம்மை விட்டு பிரிய வேண்டும் என்றால், நாள்தோறும் தவறாமல் கோலக்கா கோமானைப் புகழ்ந்து வணங்க வேண்டும் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். தழுக்கொள் பாவம்=உயிரினை உறுதியாக பற்றிக் கொண்டிருக்கும் தீய வினைகளும் அவைகளால் ஏற்படும் தீமைகளும்; மறி=மான் கன்று; இழுக்கா வண்ணம்=தவறாத வண்ணம்; மனிதர்களே, உங்களை இறுகப் பற்றியுள்ள தீய வினைகளும் அந்த வினைகளால் ஏற்படும் துன்பங்களும், தங்களது பிடிப்பினில் தளர்ந்து உங்களை விட்டு விலக வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களாயின், மழுப்படையினைத் தாங்கிய செல்வனும், மான் கன்றினைத் தனது சிவந்த கையினில் ஏந்தியவனும், கூட்டமாக உள்ள பூதப் படையினால் சூழப் பட்டவனும், கோலக்கா தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனை தவறாமல் வழிபட்டு வணங்கி வாழ்த்துவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர்

மழுக்கொள் செல்வன் மறி சேர் அங்கையான்

குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே

அடியார்களாக இருப்பவர்கள் எந்த நிலையிலும் இறைவனை சிந்திக்க வேண்டும் என்பதே சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.28.11) திருஞான சம்பந்தரால் குறிப்பிடப் படுகின்றது. அடியார்களாக மாறியவர்கள் முதலில் செய்ய வேண்டியது இறைவனை சிந்தித்தல், மற்றும் தேவார திருப்பதிகங்களை தமக்கு தெரிந்த அளவில் பாடுதல் என்ற கருத்து தெளிவாக இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது

அந்தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்

சிந்தை செய்ம்மின் அடியார் ஆயினீர்

சந்தம் பரவு ஞானசம்பந்தன்

வந்தவாறே புனைதல் வழிபாடே

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.62.1) வாழ்நாளை வீணாகக் கழிக்காமல், கோளிலிப் பெருமானைப் பணிந்து நலம் பெறுவீர் என்று திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறுகின்றார். நாள்=வாழ்நாள்; போகாமே=வீணாகக் கழியாத வண்ணம்; பெருமானைப் பற்றி பேசாத நாளெல்லாம் பிறவாத நாள் என்று அப்பர் பிரான் கூறுவதும் (6.01) மறந்திட்ட நாள் கெட்ட நாள் என்று சுந்தரர் கூறுவதும் (7.48.2) நமது நினைவுக்கு வருகின்றன. கண்டன்=கழுத்தினை உடையவன்; ஆளாய=அடிமையாக மாறி: மட நெஞ்சே=அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் மனமே; கிளை=சுற்றத்தினர்; சுற்றத்தினர் என்ற சொல் நம்மையும் உட்படுத்துவதாக பொருள் கொள்வது சிறப்பு; கிளைத்தல்=செழிப்புடன் வளர்தல்; இங்கே நலமாக வாழ்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்; கேடு=துன்பங்கள்: கோள்=மாறுபாடு; மாறுபாடு என்று நமது மனதினில் தோன்றும் விகாரங்களை, உயிரின் ஆறு உட்பகைகளாக விளங்கும் காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் எனப்படும் குணங்களை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாம் பிறப்பெடுத்தன் நோக்கமே இறைவனின் தன்மையை உணர்ந்து, அவன் பால் அன்பு கொண்டு அவனது திருவடிகளைச் சென்றடையும் வழியை நாடிச் சென்று, அவனது அருளால் நம்மைப் பிணித்திருக்கும் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, எல்லையில்லா ஆனந்தம் தரும் முக்தி உலகத்தில் ஆழ்ந்து இருப்பது தான். ஆனால் இந்த முயற்சியில் உயிர்கள் வெற்றி பெறாத வண்ணம், தொன்று தொட்டு அந்த உயிர்களைப் பற்றி வரும் வினைகள், உயிர் தங்களது முயற்சியில் வெற்றி கொண்டால், தாங்கள் வலிவிழந்து விடுவோம் என்ற அச்சத்தினால் அந்த வினைகள் செயல்படுகின்றன. தனது நெஞ்சினை அழைத்து நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை வழங்கும் பாடல். கேடு என்ற சொல்லினை நம் கிளை கிளைக்கும் என்ற தொடருடன் கூட்டி, சிவக்கவிமணியார் ஒரு அருமையான விளக்கம் அளிக்கின்றார். எண்ணற்ற பழைய பிறவிகளில் சேர்த்துக் கொண்டுள்ள வினைகளின் பயனால், ஒவ்வொரு உயிரும் இனியும் கணக்கற்ற பிறவிகள் எடுக்கும் நிலையில் உள்ளன. அவ்வாறு எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும், புதிய உயிர்கள் நமக்கு தாயாகவும், தந்தையாகவும், சுற்றத்தாராகவும் வருகின்றனர். உயிரின் குற்றம், கேட்டின் காரணமாக மேலும் பல பிறவிகள் எடுத்து ஒவ்வொரு பிறவியிலும் வேறுவேறு சுற்றத்தாரை ஏற்றுக் கொள்ளும் தன்மையை கிளை கிளைக்கும் கேடு என்று குறிப்பிடுகின்றார் என்று பெரியொர்கள் விளக்கம் அளிக்கின்றார். இந்த கேட்டினை நாம் நீக்கிக்கொள்ள வேண்டுமென்றால், நாம் பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபடவேண்டும். இந்த விடுதலையை அளிப்பவன் கோளிலி இறைவன் என்று இந்த பாடலில் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் சிறப்பு. ஆயம் என்றால் கூட்டம், குழு என்று பொருள். கோளாயம் என்பதற்கு குற்றங்களின் தொகுதி என்று பொருள் கொண்டு, நமது குற்றங்கள் அனைத்தையும் ஒரு சேர நீக்கும் தன்மை படைத்தவன் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஆளாய அன்பு செய்வோம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுவது நமக்கு ஆளலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே என்ற மணிவாசகரின் மணிமொழியை (அச்சப்பத்து பதிகம் ஆறாவது பாடல்) நினைவூட்டுகின்றது. உலகம் மற்றும் உலகப் பொருட்களில் நாட்டம் கொண்டு, இறைவனைப் பற்றிய அறிவு ஏதுமின்றி அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் நெஞ்சமே, உனது வாழ்நாளை வீணாக கழிக்காமல், ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கி உலகினை பாதுகாத்த நீலகண்டராக விளங்கும் பெருமான் பால் மிகுந்த அன்பு வைத்து, அவனுக்கு அடிமையாக மாறி, அவனது திருநாமங்களை பலமுறை கேட்பாயாக. அவ்வாறு கேட்பதால், நாமும் நமது சற்றத்தினரும், செழித்து வாழ்ந்து இன்பம் துய்க்கலாம். மேலும் நம் அனைவரையும் துன்பங்கள் தாக்காத வண்ணமும், நமது மனதினில் எழுகின்ற தீய குணங்களையும் அந்த குணங்களால் ஏற்படும் எண்ணங்களையும் முற்றிலும் தவிர்த்து நம்மை பாதுகாக்கும் தலைவனாகிய பெருமான் கோளிலி எனப்படும் தலத்தினில் உறைகின்றான். இந்த இறைவனின் துணை கொண்டு, நாம் பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுதலை பெற்று, மேன்மேலும் பிறவியெடுத்து புதிய சுற்றத்தாரைத் தேடிக் கொள்ளும் கேவலமான நிலையிலிருந்து தப்பிக்கலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய வன்புசெய்வோ மடநெஞ்சே யரனாமம்
கேளாய்நங் கிளை கிளைக்கும் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.80.8), திருஞானசம்பந்தர், நீரார் சடையானை நித்தல் ஏத்துவார் தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே என்று குறிப்பிட்டு, தினமும் பெருமானை நாம் தொழ வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். இந்த பாடலில் பெருமானின் அடியார்கள், தங்களது தீராத நோய்களும் நீங்கப் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தீராத நோய் என்பதற்கு ஆணவ மலம் மற்றும் பழ வினைகள் என்று சிவக்கவிமணியார் விளக்கம் கூறுகின்றார். ஆணவ மலமும் அழிக்க முடியாதது. அதனை அடக்கி ஒடுக்கத்தான் இயலும். அதனைப் போன்றே பழ மலமும் முற்றிலும் அழிக்க முடியாதது. ஏனெனில் பழமலத்தின் ஒரு பகுதியையே, உயிர்கள் பால் கருணை வைத்துள்ள இறைவன் இந்த பிறவியில் நாம் அனுபவித்து கழிக்கும் வண்ணம் ஒதுக்குகின்றான். நமது பழமலம் அனைத்தையும் நாம் ஒரே பிறவியில் நுகர்ந்து கழிக்க வேண்டும் என்றால், அந்த அனுபவத்தைத் தாங்கும் ஆற்றல் உயிருக்கு இல்லை. எனவே தான் இறைவன் நம் பால் கருணை கொண்டு ஒரு பகுதியை மட்டுமே ஒதுக்குகின்றான் என்று அருளாளர்கள் கூறுகின்றனர். கூரிய வாளினை உடைய அரக்கன் இராவணனின் உடலும் தலையும் தோள்களும் நொறுங்கும் வண்ணம் கயிலாய மலையின் கீழே அழுத்தி, அரக்கனது உடல் வலிமையைக் குறைத்த பெருமான், சிறப்புடன் விளங்கும் தில்லைச் சிற்றம்பலத்தில் உறைகின்றார். தனது சடையினில் கங்கை நதியை அடக்கி வைத்திருக்கும் பெருமானை தினமும் போற்றிப் புகழ்ந்து வணங்கும் அடியார்கள், தங்களது தீராத நோய்களும் தீர்க்கப் பெற்று நலமாக வாழ்வது உறுதி என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கூர் வாளரக்கன் தன் வலியைக் குறைவித்துச்

சீராலே மல்கு சிற்றம்பலம் மேய

நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.41.3) திருஞானசம்பந்தர், நாளும் பெருமானை நினைப்பதன் மூலம் நல்வினைகள் நம்மை வந்தடையும் என்று அறிவுரை கூறுகின்றார். பெருமானின் கருணைத் தன்மையினை புரிந்து கொண்ட சான்றோர்கள், அவனது திருப்பாதங்களைச் சார்ந்தும் அவனைத் தங்களது தலைவனாக ஏற்றுக் கொண்டும் அவனைப் பணிந்து வணங்குகின்றனர் என்று இதே பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் உணர்த்திய திருஞான சம்பந்தர், இந்த பாடலில் நாமும் அவ்வாறு செய்யவேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். சா நாள்=இறக்கும் நாள்; உலகில் ஒருவர் எவ்வளவு நாட்கள் இருப்பர், என்று இறப்பர் என்பதை எவரும் அறிய முடியாது என்பதால் ஒருவன் தாமதம் ஏதும் செய்யாமல், இப்போதிலிருந்தே பெருமானை நாள்தோறும் வழிபடத் தொடங்க வேண்டும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. நவின்று=விருப்பத்துடன்; புகழ் நாமம்=பெருமானது புகழினை குறிப்பிடும் திருநாமங்கள்; கங்காதரர், காலகாலர், நடராஜர், திரிபுராந்தகர், கஜசம்ஹாரர், மாதொருபாகர், பிக்ஷாடனர், சந்திரசேகரர், பாசுபதர், போன்ற திருநாமங்கள் அவரது கருணையையும் ஆற்றலையும் உணர்த்தும் வண்ணமாக அமைந்துள்ளன. இந்த பாடலில் நமது தலை பெருமானுக்கு அர்ச்சனை செய்ய பயன்படும் பூக்களை சுமந்து செல்லவேண்டும் என்றும் காதுகள் அவனது புகழினை உணர்த்தும் திருநாமங்களை கேட்க வேண்டும் என்றும் நமது நா விருப்பத்துடன் அவனது பெயரினை சொல்ல வேண்டும் என்றும் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். நன்னெஞ்சே, தாம் என்று இறப்போம் என்பதையும் தாம் இந்த உலகில் இனியும் வாழும் நாட்கள் எத்தனை என்பதையும் அறிந்தவர் எவரும் இல்லை; எனவே நீ சாய்க்காடு தலத்தினை சென்றடைந்து, பெருமானுக்கு தேவையான பூக்களை உனது தலையில் சுமந்து கொண்டு சென்று தொண்டு புரிவாயாக. மேலும் அவனது புகழினை உணர்த்தும் அவனது திருநாமங்களைக் கேட்டு, அவனது திருநாமங்களை உனது நாவினால் விருப்பத்துடன் நாள்தோறும் சொல்லிப் புகழ்ந்தால், நீ நல்வினைப் பயன்களைப் பெறலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நீ நாளும் நெஞ்சே நினை கண்டாய் யார் அறிவார்

சா நாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம் பெருமாற்கே

பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப

நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.61.5) திருஞானசம்பந்தர், தீரா நோயும் தள்ளிப் போக அருள் புரியும் தலைவன் என்று பெருமானை குறிப்பிட்டு, அவனைப் பணிந்து பயனடையுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். பிள்ளைப் பிறை=இளம் பிறையுடன் காணப்படும் சந்திரன்,ஒற்றைப் பிறைச் சந்திரன்; ஒவ்வொரு பிறையாக தேய்ந்து அழியும் நிலையில், ஒற்றைப் பிறையுடன் இருந்த சந்திரன், பெருமானை சரணடைந்த பின்னர், தேயும் நிலையிலிருந்து வளரும் நிலைக்கு மாறியதால், முற்றிலும் அழியவிருந்த ஒற்றைப்பிறை வளரும் இளம் பிறையாக மாறியதை குறிப்பிடும் வண்ணம், பிள்ளைப் பிறை என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பெம்மான்=பெருமான்; உள்ளுதல்=தியானித்து, நினைத்து; பெருமானைச் சரணடைந்த பின்னர், அழியும் நிலையிலிருந்து வளரும் நிலைக்கு மாறிய ஒற்றைப் பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும், தனது சடையில் சூடிக் கொண்ட பெருமானே என்று போற்றித் தொழும் அடியார்களை, அனைத்து நோய்களும் அணுகாத வண்ணம், தள்ளிப் போகும் வண்ணம் காத்து அருள் புரிபவன் நமது தலைவனாகிய சிவபெருமான். இந்த பெருமான், வெண்ணிறமும் கோடுகளும் கொண்ட சங்குகளை கடலைகள் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவெண்காடு தலத்தினை தனது ஊராக கருதி உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று

உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறு நோய்கள்

தள்ளிப் போக அருளும் தலைவன் ஊர் போலும்

வெள்ளைச் சுரி சங்கு உலவித் திரியும் வெண்காடே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.79.9) திருஞானசம்பந்தர், நமது உறவினர்கள் எவரும் நமக்கு நிலையான உறவு அல்ல என்றும் இறைவன் ஒருவனே நமக்கு நிலையான உறவு என்றும் குறிப்பிட்டு நமக்கு அறிவுரை வழங்குகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர், இந்த பிறவியில் நமக்கு தாய் தந்தையாக விளங்குவோர், நம்முடன் உடன் பிறந்தோர், மனைவி, நமது மகன் மகள் ஆகியோர், நாம் அவர்கள் மீது வைத்துள்ள பற்று/பாசம்/அன்பு மேன்மேலும் பெருகும் வண்ணம் செயல்படுகின்றனரே தவிர, நமது உயிர் உய்வினை அடையும் தன்மைக்கு எந்த விதத்திலும் உதவி செய்வதில்லை. மேலும் இத்தகையோருடன் நாம் கொண்டுள்ள இந்த உறவுப் பிணைப்பு, இந்த பிறவிக்கு மட்டுமே உரித்தானது. நாம் இதுவரை எடுத்துள்ள பல பிறவிகளில் இந்த உறவு இருந்ததில்லை, மேலும் இனியும் நாம் எடுக்க இருக்கும் பிறவிகளுக்கும் இந்த உறவு தொடரப் போவதில்லை. இந்த பிறவியிலும் இந்த உறவுகள் நமது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து இருப்பதில்லை. எனவே இந்த உறவுகள் நிலையற்றவை. ஆனால் நமது தந்தையாக அனைத்துப் பிறவிகளிலும் இருந்து நம்மை காப்பாற்றும் பெருமான், நமக்கு நிலையான உறவினராக உள்ளார் என்பதை உணர்த்தி, திருஞான சம்பந்தர், நம்முடன் நிலையான உறவு கொண்டுள்ள அந்த இறைவனைத் தொழுது, நாம் ஆழ்ந்துள்ள பந்தம் பாசம் எனும் மயக்கத்தைத் தீர்த்துக் கொண்டு, வாழ்வினில் உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுகின்றார். மேலும் அச்சம் ஏதுமின்றி வாழ்க்கையை நாம் எதிர் கொள்வதற்கும் பெருமானை வழிபடுவது நமக்கு உதவும் என்றும் கூறுகின்றார்.

தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும்

பந்த நீங்காதவர்க்கு உய்ந்து போக்கில்லை எனப் பற்றினாயே

வெந்த நீறாடி ஆதியார் சோதியார் வேத கீதர்

எந்தை ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.97.9) திருஞானசம்பந்தர் பெருமானை நீல மேவு கண்டனார் என்று குறிப்பிடுகின்றார். ஏலம்=நறுமணம் உடைய கூந்தல் தைலம்; வயது முதிர்ந்து கால்கை தளர்ந்த நிலையில் இறைவனைப் புகழ்ந்து பாடியும் போற்றியும் வணங்க வேண்டும் என்று மனம் விரும்பினாலும், உடல் அதற்கு ஒத்துழைக்க முடியாத நிலையினை அடைவதற்கு முன்னமே, உடல் நலமாக இருக்கும் போதே, இறைவனைப் பணிந்து வணங்கி பயன் அடையுமாறு அறிவுரை கூறுகின்ற பதிகம்.

காலினோடு கைகளும் தளர்ந்து காம நோய்தனால்

ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்பதன் முனம்

மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா

நீலமேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே

அடியர்களின் அடியார்களைத் தொழுவதால், அவர்களது திருவடிகளைப் பணிந்து வணங்குவதால், தூய்மையான சிவநெறி நமக்கு எளிதில் கிட்டும் என்று திருஞானசம்பந்தர் (2.104.10) அறிவுரை கூறுகின்றார். மிண்டர்=முரட்டுத் தன்மை உடையவர்; தங்களது மதத்தின் கொள்கைகளை பரப்புவதில் மிகவும் முரட்டுத் தனத்துடன் செயல்படுபவர்; மிண்டுரை=ஆதாரமற்ற பொய்ச் சொற்கள்; முண்ட நன் மேனியர்=திரிபுண்டரம் என்று அழைக்கப்படும் வகையில் மூன்று கோடுகளாக திருநீற்றினைத் தனது நெற்றியில் அணிந்த பெருமான்;

குண்டர் தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறி நில்லா

மிண்டர் மிண்டுரை கேட்டு அவை மெய்யெனக் கொள்ளன்மின் விடமுண்ட

கண்டர் முண்ட நன் மேனியர் கடிக்குளத்து உறை தரும் எம் ஈசர்

தொண்டர் தொண்டரைத் தொழுது அடி பணிமின்கள் தூநெறி எளிதாமே

நோய்வாய்ப்பட்டபோது உடலும் உள்ளமும் நோயின் தன்மையால் வருந்த எவருக்கும் பொதுவாக இறையுணர்வு தோன்றுவதில்லை. நோயினால் களைத்த உடல் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கவும் ஒத்துழையாது போகலாம். ஆனால் அந்த தருணத்திலும் உறுதியாக நின்று பெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை நாம் உச்சரித்தால் ஏற்படும் விளைவினை, திருஞான சம்பந்தர் திருவைந்தெழுத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.22.6) கூறுவதையும் நாம் இங்கே காண்போம். அம்மை என்பதற்கு மறுமை என்று பொருள். பல உரை ஆசிரியர்கள் அடுத்த பிறவியிலும் பஞ்சாக்கர மந்திரம் உயிரினுக்கு துணையாக இருக்கும் என்று பொருள் கூறியுள்ளனர். சிவக்கவிமணியார் அம்மை என்பதற்கு அன்னை என்று பொருள் கொண்டு, பெற்ற தாயினும் பரிந்து நன்மை புரியும் தன்மை கொண்டது பஞ்சாக்கர மந்திரம் என்று பொருள் கூறுகின்றார். பஞ்சாக்கர மந்திரம், வினைகளை அறுத்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கும் என்ற திருஞான சம்பந்தரின் வாக்கினை அறிந்த நாம், பஞ்சாக்கர மந்திரத்தை ஓதும் அன்பர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்பதையும் நன்கு அறிவோம். மறுபிறப்பு ஒன்று இருந்தால் தானே, அந்த பிறவியில் பஞ்சாக்கர மந்திரம் உதவி செய்வதற்கு. எனவே அம்மை என்பதற்கு அன்னையினும் பரிந்து என்று பொருள் கொள்வது சிறப்பு. பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து உயிர்களுக்கு அருள் செய்பவன் பெருமான் அல்லவா.

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்

அம்மையிலும் துணை அஞ்செழுத்துமே

மனமொன்றி இறைவனை வழிபட்டால் நமக்கு ஊனம் ஏதுமில்லை, மாறாக இலாபம் தான் என்று அப்பர் பிரான் தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் குறிப்பிடுகின்றார். இறை வழிபாட்டால் நமக்கு நன்மையே விளையும் என்பதை நமக்கு உணர்த்தும் வகையில், இறக்கும் தருவாயிலும் சற்றும் மனம் கலங்காது பெருமானை வழிபட்ட சிறுவன் மார்க்கண்டேயன் அடைந்த பேற்றினை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கன்றிய=சினந்த சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்து விட்ட நிலையில், அவனது உயிரினைக் கவரும் பொருட்டு தனது கடமையைச் செய்ய வந்த இயமனுக்கு, அந்தச் சிறுவன் தனது கடமையைச் செய்ய விடாமல் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது, கோபத்தை ஏற்படுத்தியது. பிறக்க முக்தி என்று திருவாரூரையும், இருக்க முக்தி என்று காஞ்சியையும், இறக்க முக்தி என்று காசியினையும், காண முக்தி என்று சிதம்பரத்தையும், நினைக்க முக்தி என்று அண்ணாமலையையும் குறிப்பிடுவார்கள். அந்தக் கருத்தினை வலியுறுத்தும் முகமாக சென்று தொழுமின்கள் தில்லையை என்று நமக்கு இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

கடுமையான இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்ட போதும் நாம் கலங்காது இருக்கும் வண்ணம் நமக்கு புகலிடமாக இருப்பவன் பெருமான் என்று உணர்த்தும் பொதுப் பாடல் ஒன்றினில் (4.113.10) இமையாத மூன்று கண்களை உடைய பொன் குன்றம் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நெஞ்சமே, நெடுங்காலம் மழை இல்லாமல் போனால் மலைகள் தங்களது பசுமையை இழந்து வெப்பத்தினால் சூடேறிக் காணப்படும் என்றும், ஆறுகள் மற்றும் கடல்கள் வற்றிய நிலையில், மழை இல்லாததால் கொடிய பஞ்சம் ஏற்படும் என்றும் சூள் உரைக்காதே. அந்த நிலையிலும், இமையாத மூன்று கண்களை உடையவனாய் பொற்குன்றம் போன்று காட்சி அளிக்கும் சிவபெருமானை நாம் புகலடைந்தால், பஞ்சத்தால் நாம் வாடாமல் இருப்பதற்கு அவன் அருள் புரிவான் என்பது இந்த பாடலின் திரண்ட கருத்து. கடுமையான பஞ்சம் ஏற்பட்டு உணவு பற்றாக்குறை இருந்த காலத்திலும், வீழிமிழலை தலத்து இறைவன், அப்பர் பிரானுக்கும் திருஞான சம்பந்தருக்கும் பொற்காசுகள் அளித்து, அவர்களைச் சார்ந்த அடியார்கள் உணவின்றி வாடாமல் காப்பாற்றிய நிகழ்ச்சி அப்பர் பிரானின் நினைவுக்கு வந்தது போலும்

கல் நெடுங்காலம் வெதும்பிக் கருங்கடல் நீர் சுருங்கிப்

பல் நெடுங்காலம் மழை தான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்றும்

என்னொடும் சூள் அறும் நெஞ்சமே இமையாத முக்கண்

பொன் நெடுங்குன்றம் ஒன்று உண்டு கண்டீர் இப்புகலிடத்தே

திருவானைக்கா தலத்தின் மீது அருளீய பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (5.31.9) இந்நாள் வரையில் அறியாமையில் ஆழ்ந்து, இறைவனை நினைக்காது இருந்தாலும், இனியாவது திருந்தி, இறை வழிபாட்டில் ஈடுபடவேண்டும் என்று அப்பர் பிரான் அறிவுரை கூறுகின்றார். அறியாமையில் ஆழ்ந்து இறைவனை இது வரை அறியாமல் இருந்த மனதினை மட நெஞ்சம் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். தன்னைச் சுட்டிக் காட்டி அடுத்தவர்க்கு அப்பர் பிரான் அறிவுரை சொல்லும் பதிகம். நமது உறவுகளால் ஏற்படும் பந்த பாசங்கள், இறைவனை மறக்கச் செய்து, நம்மை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதால் நாசமாய குல நலம் சுற்றங்கள் என்று இங்கே கூறுகின்றார். நமது குலத்தவர்கள், சுற்றத்தார் ஆகியோரின் பால் நாம் வைத்திருக்கும் பாசம் நம்மை அறியாமையில் ஆழ்த்தி, இறைவனை நினைக்க விடாமல் நம்மை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும்; எனவே சுற்றத்தார் பால் வைத்துள்ள அன்பினை இறைவன் பால் வைத்து அவனை நினைப்பாயாக. அத்தகைய நினைவுகள், உன்னை பாசத்திலிருந்து விடுவித்து, உயர்ந்த சிவானந்தத்தின் பால் உன்னை ஈடுபடுத்தும். அத்தகைய ஆசையை உனது மனதினில் ஏற்படுத்தி, உன்னை உய்யச் செய்பவர் ஆனைக்கா அண்ணல் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நேசமாகி நினை மட நெஞ்சமே

நாசமாய குல நலம் சுற்றங்கள்

பாசம் அற்றுப் பாராபர ஆனந்த

ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலில் (5.66.3) அப்பர் பிரான், சிவபெருமானின் புகழினைக் கேளாத மனிதர்களை துளையிலாச் செவித் தொண்டர்கள் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் புகழினைக் கேளாத மனிதர்களை, பெருமானின் திருநாமத்தைக் கேளாத மனிதர்களை அப்பர் பிரான் துளையிலாச் செவித் தொண்டர்கள் என்று கூறுகின்றார். செவிகளின் பயன் கேட்கும் ஒலிகளை உணர்வது. ஒலிகளை உணரும் பொருட்டு, நமது காதுகளில் துளைகள் உள்ளன. துளைகள் வழியே ஒலிகள் சென்று செவிப்பறையில் ஏற்படுத்தும் அதிர்வுகள் மூலம் ஒலிகளை நாம் அடையாளம் கண்டு கொள்கின்றோம். பெருமானின் நாமத்தைக் கேளாத காதுகளை, பெருமானின் திருநாமங்கள் ஏற்படுத்தும் அதிர்வினை உணராத நிலையை, அப்பர் பிரான் துளையிலாச் செவிகள் என்று கூறுகின்றார். இந்த பாடலில் தங்களது இளமைக் காலத்தில் இறைவனைத் தொழாது இருந்த மனிதர்களை தொண்டர்கள் என்று அப்பர் பிரான் அழைப்பது நமக்கு வியப்பினைத் தரலாம். இந்நாள் வரை பெருமானின் நாமத்தை கேளாது இருந்தாலும் பரவாயில்லை, இனியாவது அவனது திருநாமங்களை, புகழினை கேட்டு உய்வினை அடைவீர்களாக என்று அறிவுரை கூறும் அப்பர் பிரான், தனது அறிவுரையை செவி மடுத்து இறைவனை தொழுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தொண்டர்கள் என்று சிறப்பாக அழைக்கின்றார். அப்பர் பெருமானுக்கு தான், பெருமானின் திருநாமங்களை கேட்டு அனைவரும் உய்வினை அடைய வேண்டும் என்பதில் எத்துணை ஆசை. கருவி கரணங்கள் துடிப்புடன் இருக்கும் இளைய பருவத்தில் எமது பெருமானை அடைந்து வழிபடாத, துளையற்ற செவிகளை உடைய தொண்டர்களே, நீங்கள் உங்களது முதுகு வளைந்து உடல் அல்லலுறும் முதுமைக் காலத்திலாவது, வலஞ்சுழியில் உள்ள பெருமானும் நமக்குத் தலைவனாக உள்ளவனும் ஆகிய ஈசனை, பற்றுக்கோடாக கருதி வழிபட்டு வாழ்க்கையில் உய்வினை அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இளைய காலம் எம்மானை அடைகிலாத்

துளையிலாச் செவித் தொண்டர்காள் நும்முடல்

வளையும் காலம் வலஞ்சுழி ஈசனைக்

களைகணாகக் கருதி நீர் உய்ம்மினே

தினமும் பெருமானை நினைத்து வணங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் எந்த விதமான நெகிழ்வோ தளர்ச்சியோ இல்லாமல் விருப்பத்துடன் பெருமானை வணங்க வேண்டும் என்பதை இங்கே உணர்த்தும் அப்பர் பிரான் அருளிய கழிப்பாலைத் தலத்து பாடலை (6.12.3) நாம் காண்போம். நெளிவு=நெகிழ்வு, தளர்ச்சி: வளி=மூச்சுக் காற்று; உணவு இல்லாமலும் தண்ணீர் இல்லாமலும் சில நாட்கள் சிலர் வாழலாம், ஆனால் காற்றின்றி எவரும் வாழ முடியாது. எனவே அனைவரையும், தவத்தினில் ஈடுபட்டு உணவின்றி, தண்ணீரின்றி வாழும் முனிவர்களையும் உள்ளடக்கி, வளியுண்டார் என்று, அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நேரிழையாள்=சிறந்த ஆபரணங்களை அணிந்தவள், இங்கே உமையம்மை: கண்டல்=தாழை: இயல்பாகவே மலங்களிளிருந்து நீங்கிய பெருமானை தினமும் நினைக்கவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் எந்தவிதமான நெகிழ்வும் இல்லாமல், அவனை விருப்பத்துடன் நீங்கள் நினைப்பீர்களாக. அழகிய ஆபரணங்களை அணிந்தவளும் ஒளியுடன் திகழும் வண்டுகள் மொய்க்கும் அடர்ந்த கூந்தலை உடையவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனாக விளங்கும் பெருமானை அவனது அடியார்கள் தங்கள் உள்ளத்தினில் தியானம் செய்து வணங்கி வழிபடுகின்றார்கள். அதிகமான தேனைக் குடித்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரியும் வண்டுகள் நிறைந்த அடர்ந்த சோலைகளுக்கு, தாழை மடல்கள் வேலியாக விளங்கும் கழிப்பாலை தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய சிவபெருமான், காற்றை உட்கொள்வதால் நிலைத்து நிற்கும் தன்மை படைத்த இந்த உடலினை நிலையாக நீத்து, இனி மற்றொரு பிறவி எடுக்காத வண்ணம் இருக்கும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக என்பதே இந்த பாடலில் சொல்லப்படும் அறிவுரை.

நெளிவு உண்டாக் கருதாதே நிமலன் தன்னை நினைமின்கள் நித்தலும் நேரிழையாள் ஆய

ஒளி வண்டார் கருங்குழலி உமையாள் தன்னை ஒரு பாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த

களி வண்டார் கரும் பொழில் சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபாலப்பனார்

வளி உண்டார் மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே

எதிர்கொள்பாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.7.9) சுந்தரர், பெருமானை எந்தை என்று குறிப்பிட்டு, அவர் உறைகின்ற எதிர்கொள்பாடி தலம் சென்றடைந்து பெருமானை பணிந்து வழிபடுவோம் என்று கூறுகின்றார். தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று சுந்தரர் நமக்கு அறிவுரை கூறுகின்றார். தவ்வை=தமக்கை; நமக்கு எவ்வளவு நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், அவர்கள் நமக்கு உண்மையான துணையாக இருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார். நமது உடலுக்குத் துணையாகத் தானே, நமது பிறப்பின் காரணமாக நமக்கு உறவினர்கள் இருக்கின்றார்கள், அவர்களால் உயிருக்கு உற்ற துணையாக இருந்து, உயிர்களை வருத்தும் வினைகளிலிருந்தும் மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மையிலிருந்தும் உயிர்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டவன் பெருமான் ஒருவன் தானே. உயிருக்கு பெருமான் செய்யும் உயர்ந்த உதவியை, வானநெறி காட்டுதல் என்று சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார். எனவே தான் உறவினர்களை எள்ளளவும் அவர்கள் நமக்கு துணையாக இருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார். அளாவி=அளவளாவி,

தந்தையாரும் தவ்வையாரும் எட்டனைச் சார்வாகார்

வந்து நம்மோடு உள்ளளாவி வான் நெறி காட்டும்

சிந்தையீரே நெஞ்சினீரே திகழ் மதியம் சூடும்

எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே

ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலினை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் போது, அவரை பற்றி பலரும் பலவிதமாக பேசுவதை நாம் உலக வழக்கினில் இன்றும் காண்கின்றோம். அவர் செய்த பல நற்செயல்கள் பேசப்படும் அதே சமயத்தில், அவர் செய்யத் தவறிய செயல்களும் பேசப் படுவதையும் நாம் உணர்கின்றோம். தனது வாழ்நாளில் பெருமானை நினைக்கத் தவறிய மனிதர்களை பலரும் இகழ்ந்து பேசுவார்கள் என்று குறிப்பிடும் சுந்தரர் (7.59.4), அத்தகைய இகழ்ச்சிக்கு ஆளாகாமல் நாம் வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.59.4) சுந்தரர், இவ்வாறு குறிப்பிடுகின்றார். இந்த திருப்பதிகம் கொடுங்கோளூர் தலத்தில் அருளியது என்றாலும் திருவாரூர் தலத்திற்கு உரிய பதிகமாகவே கருதப்படுகின்றது. முதல் முறையாக சேரமான் பெருமாள் நாயனாரின் விருந்தினராக கொடுங்கோளூர் சென்றிருந்த சுந்தரருக்கு சில நாட்கள் கழிந்த பின்னர், திருவாரூர்ப் பெருமானின் நினைவு வந்தது. தான் இத்தனை நாட்களாக திருவாரூர்ப் பெருமானை மறந்திருந்த தன்மைக்கு வருத்தம் தெரிவித்து, ஆரூரானை மறக்கலும் ஆமே என்று பாடல் தோறும் குறிப்பிட்டு பாடிய பதிகம். பின்னர் இந்த கருத்தினை தனது நண்பராகிய சேரமான் பெருமாள் நாயனாருக்கும் தெரிவித்து, அவரது அனுமதியுடன், அவரிடம் விடை பெற்று செல்கின்றார். வாழும் காலத்தில், பெருமானை எப்போதும் பணிந்து வணங்கி வழிபடும் அடியார்கள், பெருமானின் திருவருளால், பிறப்பிறப்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டு முக்தி உலகம் சென்றடைந்து என்றும் அழியாத பேரானந்தத்தில் ஆழ்கின்றனர். கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கிடைத்தும், அதனைப் பயன்படுத்திக் கொண்டு உய்வினை அடையாத மனிதர்கள் இறந்தால், அந்த மனிதனின் பிணத்தைக் காணும் உறவினரும் நண்பர்களும், முக்தி அடையும் வழியை நாடாமல் மீண்டும்மீண்டும் பிறவி எடுப்பதற்காக இறந்து விட்டானே என்று ஏளனமாக சிரிப்பார்கள். அவ்வாறு பலர் சிரிக்கும் நிலைக்கு ஆளாகாமல், வாழ்நாளில் பெருமானை வழிபட்டு உய்வினை அடையவேண்டும் என்று சுந்தரர் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

செத்த போதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்

வைத்த சிந்தையுண்டே மனமுண்டே மதியுண்டே விதியின் பயனுண்டே

முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறுடையானை

அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலுமாமே

திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.81.3) சுந்தரர், நஞ்சணிந்த கண்டனாகிய பெருமானை தினமும் வணங்கி நமது வினைகளை முற்றிலும் போக்கிக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றார். மாமணிச் சோதியான்=மாணிக்கம் போன்று ஒளிவீசுபவன்; காளகண்டன்=ஆலகால விடத்தினை கழுத்தினில் தேக்கியவன்.

நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்

ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்

தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்

காளகண்டன் உறையும் தண் கழுக்குன்றமே

பொழிப்புரை:

நம்மை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து மீளவொட்டாமல், பல சிற்றின்பங்களை நமது உடலுக்கு அளித்து, உயிருக்கு துன்பம் விளைவிக்கும் வாழ்க்கையினை நீர் விரும்பாமல், உயிரினுக்கு நன்மை பயந்து உயிரினை நற்கதிக்கு அழைத்துச் செல்லும் நன்னெறியினை நாடி புறப்படுவீர்களாக. வில்லினைப் போன்று அழகாகவும் ஒளி பொருந்தியதாகவும் விளங்கும் நெற்றியினையும் வெண்சங்கு வளையல்கள் அணிந்த கையினையும் உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவனும், முல்லை நிலத்தில் காணப்படும் வெண்மையான எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவனும் ஆகிய பெருமானை, கோடிகா தலம் சென்றடைந்து கண்டு வணங்கி வழிபட்டு துன்பம் அளிக்கும் இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறுவீர்களாக,

பாடல் 3:

இன்று நன்று நாளை (2.99) பாடல் 2 தொடர்ச்சி மற்றும் பாடல் 3 (திதே 0504)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0505)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0506)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0507)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் பாடல் 4 (திதே 0508)

துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர்

தக்கதோர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்

அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல்

கொக்கிறகு அணிந்தவன் கோடிகாவு சேர்மினே

விளக்கம்:

சோர்வு=இளைப்பு; மீண்டும்மீண்டும் பிறப்பெடுத்து அல்லற் படுவதால் உயிர் வருந்தி இளைப்பதை சோர்வு என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சிவபுராணத்தில் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் என்று மணிவாசகர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. இவ்வாறு உயிர் வருத்தம் அடைவதை நாம் உணர்வதில்லை. எனவே தான் அருளாளர்கள், பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்பட்டு உயிர் தவிப்பதை நமக்கு உணர்த்தி, அந்த உயிரினுக்கு விடுதலை வாங்கித் தரவேண்டிய கடமை நமக்கு உள்ளதை நினைவூட்டுகின்றனர்.

இந்த பாடலில் கொக்கிறகு அணிந்தவன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். குரண்டாசுரன் என்ற அரக்கன், கொக்கின் உருவம் கொண்டு மனிதர்களை துன்புறுத்தி வந்தான் என்றும், பெருமான் அந்த கொக்கினை அழித்து மனிதர்களின் இடரினை தீர்த்ததும் அன்றி, கொக்கை அழித்ததன் அடையாளமாக கொக்கிறகினை தனது தலையில் அணிந்து கொண்டார் என்று புராணம் கூறுகின்றது. கந்த புராணத்திலும் இந்த செய்தி சொல்லப்படுகின்றது (பாடல் எண். 8–9–64) இந்த செய்தி பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

பாம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.41.2), திருஞானசம்பந்தர், பெருமான் தனது சடையில் வில்வம் மற்றும் ஊமத்தை கொன்றை எருக்கு ஆகிய மலர்களுடன் கொக்கின் இறகையும் சூட்டிக் கொண்டுள்ளதாக கூறுகின்றார்.

கொக்கிறகோடு கூவிள மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர்

அக்கினோடு ஆமை பூண்டு அழகாக அனலது ஆடும் எம் அடிகள்

மிக்க நால்வேத வேள்வி எங்கும் விண்ணவர் விரைமலர் தூவப்

பக்கம்பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னகராரே

நல்லம் (தற்போது கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படும் தலம்) தலத்தின் மீது (1.85.2) அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் திருஞான சம்பந்தர், பெருமான் ஒளி வீசுவதும் தாழ்ந்தும் காணப்படும் தனது சடையினில் கொக்கின் இறகுடன் குளிர்ந்த பிறைச் சந்திரனையும் சூட்டிக் கொண்டு திகழ்கின்றான் என்று கூறுகின்றார்.

தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்

துக்கம் பல செய்து சுடர் பொற்சடை தாழக்

கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்

நக்கன் நமை ஆள்வான் நல்ல நகரானே

காடது அணிகலம் என்று தொடங்கும் மொழிமாற்றுப் பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் (1.117.6) இறைவன் கொக்கின் இறகினை சூடிக் கொண்டுள்ளார் என்று கூறுகின்றார். இந்த பதிகத்து பாடல்களில் பல சொற்கள் இடம் மாற்றி வைக்கப் பட்டுள்ளன. சாத்துவர் கோவணம், பாசம் தடக்கையில் ஏந்துவர், தம் கூத்தவர், கச்சுக் குலவி நின்று ஆடுவர், கொக்கிறகும் சூடுவர், பேர்த்தவர் பல்படை பேயவை என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். பேர்த்தவர்=காலினை பெயர்த்து நின்று நடனமாடியவர்; இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கச்சு குலவி நின்று ஆடுவர் என்று கூறுகின்றார். குலவி=விளங்கித் தோன்றும் வண்ணம்; நடராஜப் பெருமானின் நடனத் தோற்றத்தை காணும் நாம் அவரது இடுப்பினில் அணிந்துள்ள கச்சின் ஒரு முனை வெளிவட்டத்தை தொடும் நிலையில் அமைந்துள்ளதை காணலாம். பொதுவாக நிலையாக நிற்கும் ஒருவரின் இடுப்புக் கச்சு தரையை நோக்கியே சரிந்து காணப்படும். ஆனால் இடைவிடாது நடனம் ஆடும் பெருமானின் கச்சும், அவரது நடனச் சுழற்சிக்கு ஏற்றவாறு ஆடுவதால், கீழ்நோக்கி சரிந்து நில்லாமல் பறக்கும் நிலையில் காணப்படுகின்றது. இதனையே விளங்கித் தோன்றும் கச்சு என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். தம் கூத்தவர் என்று ஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமான் ஆடும் கூத்து அவருக்கு மட்டுமே உரியது; வேறு எவராலும் ஆடமுடியாத கூத்து என்று இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது.

சாத்துவர் பாசம் தடக்கையில் ஏந்துவர் கோவணம் தம்

கூத்தவர் கச்சுக் குலவி நின்று ஆடுவர் கொக்கிறகும்

பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்

பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே

பிரமபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.65.2) கொக்கின் இறகினை அணிந்தவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் எதிர்மறையாக கூறிய அனைத்தையும் மாற்றி பொருள் கொள்ளவேண்டும் என்று பதிகத்தின் கடைப் பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.

கூரம்பது இலர் போலும் கொக்கின் இறகிலர் போலும்

ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும்

தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு அருளிலர் போலும்

பேரும் பல இலர் போலும் பிரமபுரத்து அமர்ந்தாரே

திருநாரையூர் தலத்தில் கொக்கு பெருமானை நோக்கி செய்த வழிபாட்டினை நினைவு கூர்ந்த திருஞானசம்பந்தருக்கு கொக்கின் இறகினை பெருமான் சூடிக் கொண்ட வரலாறு நினைவுக்கு வந்தது போலும். பெருமானை திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.107.6) திருஞானசம்பந்தர் இறைவன் கொக்கிறகு அணிந்திருப்பதை குறிப்பிடுகின்றார். குழகாக= இளமையுடன்: குலாய=செழுமை மிகுந்த; புகல்=திருவருள் சக்தி பதிதல்; நாரையூர்ப் பெருமானை விருப்பத்துடன் வழிபடும் அடியார்களின் மனதினில் திருவருளின் சக்தி பதியும் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.

கொக்கிறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி

அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகாக

நக்கமரும் திருமேனியாளன் திருநாரையூர் மேவிப்

புக்கமரும் மனத்தோர்கள் தம்மை புணரும் புகல் தானே

திருவாரூர் தலத்தில் தான், மனக்கண்ணில் கண்ட பெருமானின் உருவத்தை விவரிக்கும் பாடல் ஒன்றினில் (4.19.2) பெருமான் அணிந்திருக்கும் கொக்கிறகு மிகவும் பொலிவுடன் காணப்படுகின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பூதகணங்கள் சூழ பல ஊர்கள் சென்று பிச்சை ஏற்கும் பெருமான், நிறைந்த கோவணமும் சங்குமணி மாலையும் இடுப்பினில் அணிந்தவராக காணப்படுகின்றார் என்றும் இங்கே கூறுகின்றார்.

பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்

புக்க ஊர் பிச்சை ஏற்றுண்டு பொலிவு உடைத்தாய்க்

கொக்கிறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு

அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.72.8) கொக்கின் இறகு இறைவனின் சடையில் மலர்ந்து இருப்பதாக கூறுகின்றார். கடிகுரல்=கடுமையான குரல்; விளியர்=ஆரவாரம் செய்பவர்; மகா சங்கார காலத்தில் மிகவும் கடுமையான குரலில் ஆரவாரம் செய்பவராக இறைவன் கருதப் படுகின்றார். கோடு=கொம்பு;, கிளை;

காடு இடம் உடையர் போலும் கடிகுரல் விளியர் போலும்

வேடுரு உடையர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலும்

கோடலர் வன்னித் தும்பை கொக்கிறகு அலர்ந்த கொன்றை

ஏடமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே

நாரை என்றால் கொக்கு என்று பொருள். கொக்கு வழிபாட்டு உய்வினை அடைந்த தலம் திருநாரையூர். அந்த தலத்திற்கு சென்ற அப்பர் பிரானுக்கு இறைவன் கொக்கிறகினை அணிந்திருப்பது நினைவுக்கு வந்தது போலும். தூவல்=இறகு; கொக்கின் இறகு பூண்டு இறைவன் இருப்பது மிகவும் அழகாக உள்ளது என்று இந்த பதிகத்தின் பாடலில் (5.55.4) குறிப்பிடுகின்றார். கொக்கின் இறகு, வில்வ இலைகள், மண்டையோட்டு மாலை, விரிந்த சடை, குறைந்த ஆடை, எலும்பு மாலை ஆகியவை அணிந்த பெருமானாக தான் கண்டதை அப்பர் பிரான் இங்கே எடுத்துரைக்கின்றார். மேலே குறிப்பிட்ட பொருட்களில் எதுவும் எவருக்கும் அழகினை சேர்க்காது என்பதை நாம் உணரலாம். ஆனாலும் இவை அனைத்தும் அணிந்த பெருமான் அழகுடன் திகழ்வதால், தான் வியப்புக்கு உள்ளாகியதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.

கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும்

மிக்க வெண்டலை மாலை விரிசடை

நக்கன் ஆகிலும் நாரையூர் நம்பனுக்கு

அக்கின் ஆரமும் அம்ம அழகிதே

அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலை (5.80.5) கொக்கிறகர் என்றே அப்பர் பிரான் தொடங்குகின்றார். கொக்கின் இறகை சூடியும், எலும்பு மாலைகளையும் அணிந்தும், மிகவும் குறைந்த ஆடைகளுடன் காண்போர் நகைக்கும் தோற்றத்துடன் இருக்கும் சிவபெருமானை எளியவர் என்று எண்ணிவிட வேண்டாம் என்று உணர்த்தும் வண்ணம் அவர், செருக்கு மிகுந்த மூன்று அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்தவர் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமானது வீரம் மிகுந்த செயலைக் கேட்ட நாம், அவரிடம் அச்சம் கொண்டு அவரை அணுக தயக்கம் காட்டுவோம் என்ற சந்தேகம் அப்பர் பிரானுக்கு வந்தது போலும். அந்த சந்தேகத்தை தெளிவு படுத்தும் வண்ணம், சிவபெருமான் கருணை மிகுந்தவர் என்று, சந்திரனுக்கு அடைக்கலம் அளித்ததை நினைவூட்டி, பெருமான் நம்மை நன்றாக அறிந்தவர் என்று இங்கே உணர்த்தும் நயத்தையும் இந்த பாடலில் நாம் காணலாம். கொக்கின் உருவத்தில் அனைவர்க்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த அசுரனை அழித்ததன் அடையாளமாக கொக்கிறகினைத் தனது சடையில் சூடியவரும், குளிர்ந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவரும், தமக்கு அழிவு ஏற்படாது என்று செருக்குடன் திரிந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவரும், அக்குமணி மாலையைத் தனது இடுப்பினில் கட்டியவரும், குறைந்த ஆடைகளை உடையவரும் ஆகிய பெருமான் நம்மை நன்றாக அறிவார். எனவே அவரை அன்புடன் நினைத்து வணங்கி, அவரது அருளினைப் பெறுவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கொக்கிறகர் குளிர் மதிச் சென்னியர்

மிக்க அரக்கர் புரம் எரி செய்தவர்

அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை

நக்கு உருவரும் நம்மை அறிவரே

சுண்ண வெண்சந்தன என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (4.2.2) காண்டகு புள்ளின் சிறகு என்று பெருமான் கொக்கின் இறகினை அணிந்ததை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் உணர்த்தப்படும் பெருமானின் அடையாளங்கள் அவருக்கே உரியதாக தனித்துவம் பெற்று விளங்குவதை நாம் உணரலாம். இத்தகைய அடையாளங்கள் உடைய பெருமானின் அடியானாக உள்ள தான் எவருக்கும் எதற்கும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

பூண்டதோர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள

நீண்ட திண்தோள் வலம் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்

காண் தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்கக் கொடியும்

ஈண்டு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

மழபாடி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.39.2) அப்பர் பிரான் பெருமானை கொக்கிறகு சென்னி உடையான் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானை கொல்லை விடையேறும் கூத்தன் என்றும் அப்பர் பிரான் அழைக்கின்றார். கொல்லை விடை=முல்லை நிலத்திற்கு உரிய கடவுளாகிய திருமால்; அக்கு=எலும்பு; சங்கு மணி; மற்று என்ற சொல் எதுகைக்காக சேர்க்கப்பட்ட பொருளற்ற அசைச் சொல்லாக இங்கே வருகின்றது. கொக்கின் இறகினைத் தனது சடையில் அணிந்தவனும், திரிபுரத்து அரக்கர்களுடன் தான் போருக்கு சென்ற நேரத்தில் தேரின் அச்சு முறியவே முல்லை நிறத்துக் கடவுளாகிய திருமால் இடபமாக மாறியதை அறிந்து அந்த இடபத்தினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவனும், இடைவிடாது கூத்தாடுபவரும், நடனம் ஆடும் போது தனது இடுப்பினில் சங்குமணி மாலையை அணிந்தவனும், தனது உள்ளங்கையினில் நெருப்புப் பிழம்பினை ஏந்தியவாறு நடமாடுபவனும், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றி ஆதியாக விளங்குபவனும், எலும்பு மாலையையும் பாம்பினையும் அணிகலனாக அணிந்தவனும், தனது அடியார்களுக்கு தெவிட்டாத அமுதமாக இருப்பவனும், மேலும் கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்று அடக்கியவனும் ஆகிய பெருமான் மழபாடி தலத்தில் நிலையாக குடி கொண்டிருப்பதை அடியேன் கண்டேன். எனது நெஞ்சமே, நீயும் பெருமானின் திருவுருவத்தின் சிறப்புகளையும், சிறப்பான பண்புகளையும் உணர்ந்து கொள்வாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடையேறும் கூத்தன் கண்டாய்

அக்கு அரை மேல் ஆடலுடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதிகண்டாய்

அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுது ஆனான் கண்டாய்

மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே

தலையாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.79.2) அப்பர் பிரான் கொக்கிருந்த மகுடத்து எம் கூத்தன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மகுடம்=பெருமான் தனியாக மகுடம் ஏதும் அணிவதில்லை. எனவே அவரது சடையே மகுடமாக கருதப் படுகின்றது. கொக்கு என்பது இங்கே கொக்கின் இறகினை குறிக்கும். குழைவார்=உள்ளம் குழைந்து உருகி வழிபடும் அடியார்கள்; சீர்ப் போகம்=செல்வத்தால் வரும் இன்ப போகங்கள்; தக்கிருந்த=வாய்த்து இருக்கும்;

அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தானைக்

கொக்கிருந்த மகுடத்து எம் கூத்தன் தன்னைக் குண்டலம் சேர் காதானைக் குழைவார் சிந்தை

புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப் புண்ணியனை எண்ணரும் சீர்ப் போகம் எல்லாம்

தக்கிருந்த தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.36.8) சுந்தரர், பெருமான் தனது தலையில் கொக்கின் இறகினை சூடி உள்ள நிலையை குறிப்பிடுகின்றார். இரத்தம் ஒழுகியவாறு இருக்கும் யானையின் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால், யானையின் ஈருரி போர்த்தவாறு வந்து நின்று பிச்சை கேட்பதேன் என்று, தாருகவனத்து மங்கை ஒருத்தி கேட்பதாக அமைந்த பாடல். உமக்கு பிச்சை இடுவதற்கு எங்களுக்கு விருப்பம் இருந்தாலும், யானையின் ஈருரி போர்த்த உமது அருகில் வந்து பிச்சையிட அச்சமாக உள்ளது என்று உணர்த்தும் பாடல். சிவபெருமான் தனது சடையில், கொன்றை மலர், ஊமத்தை மலர், வன்னி இலைகள், கங்கை நதி, சந்திரன், கொக்கின் இறகு, வெள்ளெருக்கு ஆகியவற்றை நெருக்கமாக அணிந்துள்ளார் என்று மங்கை கூறுவதாக அமைந்த பாடல்.

மத்த மாமலர்க் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும்

மொய்த்த வெண்டலை கொக்கு இறகொடு வெள்ளெருக்கமும் சடையதாம்

பத்தர் சித்தர்கள் பாடி ஆடு பைஞ்ஞீயேன் என்று நிற்றிரால்

அத்தி ஈருரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே

கானப்பேர் தலத்தின் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.84.2) பெருமான் குளிர்ந்து இருக்கும் தனது சடையில் கொடிய பாம்பையும் ஊமத்தை மலரையும் கொக்கின் இறகையும் பொருத்தி வைத்துள்ளார் என்று சுந்தரர் கூறுகின்றார். பெருமான் தனது சடையினில் கங்கை நதியினைத் தேக்கியதை, கூதலிடும் (கூதல்=குளிர்) சடை என்று உணர்த்துகின்றார். விரவுதல்=கலத்தல்; விரசும் ஓசை=செறிந்த ஒலி,அடர்த்தியான ஒலி; பெருமானின் பெருமைகளை உணர்ந்து, உள்ளம் நைந்து அவனது பெருமைகளை இசைப் பாடலாக பாடும் அடியார்கள் சிவமாக மாறி விடுவார்கள் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

கூதலிடும் சடையும் கோளரவும் விரவும் கொக்கிறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள்

ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள்ளுருகா விரசும் ஓசையைப் பாடலும் நீ

ஆதலுணர்ந்து அவரோடன்பு பெருத்தடியேன் அங்கையின் மாமலர் கொண்டு என் கணது அல்லல் கெடக்

காதல் உறத் தொழுவது என்றுகொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே

திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் கடைப் பாடலில், பெருமானைச் சிறப்பித்து பாடியவாறே தெள்ளேணம் கொட்டுவோம் என்று மணிவாசகர் கூறுகின்றார். அரிசியில் கலந்துள்ள கல்லினை பிரிப்பதற்கு, அரிசியை முறத்தில் கொட்டி, இடமும் வலமுமாக அசைத்தலை தெள்ளுதல், கொளித்தல் என்று கூறுகின்றனர். பெண்கள் ஒன்றாக கூடி இந்த செயலில் ஈடுபடுவது வழக்கம். அந்த சமயத்தில் அவர்கள் அனைவரும் இறைவனின் புகழினைப் பாடியவாறு தங்களது செயலில் ஈடுபடுமாறு அடிகளார் தூண்டுகின்றார். சிவபெருமானை வணங்கும் தேவர்கள் கூட்டத்தினை, அவர் அணிந்துள்ள கொக்கின் இறகினை, அவரின் மணாட்டியாகிய உமையம்மையின் சிறப்புகளை, அவர் நஞ்சுண்ட திறத்தினை, அவர் நடமாடும் அழகினை, நடமாடும்போது அசையும் அவரது கால் சிலம்பினை, பாடி தெள்ளேணம் கொட்டுவோமாக என்று இந்த பாடல் கூறுகின்றது.

குலம் பாடி கொக்கிறகும் பாடிக் கோல்வளையாள்

நலம் பாடி நஞ்சுண்டவா பாடி நாள்தோறும்

அலம்பார் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற

சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

திருக்கோவையார் பாடல் ஒன்றினில் பெருமான் கொக்கிறகு அணிந்து காணப்படும் காட்சியை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். எட்டு திக்குகளை எட்டுமாறு பரந்த தோள்களை உடைய தில்லைக் கூத்தன், கொக்கின் இறகு அணிந்துள்ளான் என்று இங்கே கூறுகின்றார். தோழியின் கூற்றாக அமைந்த இந்த பாடலில், கூடல் நகரத்து முத்து போன்ற பற்களை உடைய தலைவியை விட்டுவிட்டு, அயல் மாதரிடம் நாட்டம் கொண்டு பிரிந்த தலைவனைப் பழித்து உரைப்பது போன்ற பாடல். தலைவியை சிவபெருமானாக உருவகித்து, அந்த பெருமானைப் பிரிந்து பிற தெய்வத்தை நாடும் ஆன்மாவினை, தகுதி இல்லாத ஆன்மா என்று இழித்துக் கூறுவது இந்த பாடலின் உட்பொருளாகும்.

திக்கின் இலங்கு திண்தோள் இறை தில்லைச் சிற்றம்பலத்துக்

கொக்கின் இறகது அணிந்து நின்றாடி தென் கூடல் அன்ன

அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால்

தக்கின்று இருந்திலன் நின்ற செவ்வேல் என் தனி வள்ளலே

ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா) பாடல் ஒன்றினில் திருமாளிகைத் தேவர் (உயர்கொடி ஆடை என்று தொடங்கும் பதிகத்தின் பத்தாவது பாடல்) கொக்கின் இறகையும் கொன்றை மலரையும் தனது சடையில் அணிந்தவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். அடியார்கள் நினைப்பதைத் தரும் இறைவன் என்பதால் கற்பகம் என்று இங்கே கூறுகின்றார். கொக்கின் இறகையும், கொன்றை மலரையும், கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும், ஊமத்தம் பூவினையும் சடையில் சூடி, நடனமாடும் தில்லைக் கூத்தனின் உருவம் தனது சிந்தையுள் நிறைந்து உலவுகின்றது என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

ஏர்கொள் கற்பகம் ஒத்து இரு சிலைப் புருவம் பெருந்தடம் கண்கள் மூன்றுடை உன்

பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்

சீர்கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்தா

நீர்கொள் செஞ்சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே

கொக்கின் உருவத்தில் இருந்த குரண்டாசுரன் என்ற அரக்கனை அழித்ததன் அடையாளமாக கொக்கின் இறகினை பெருமான் தனது முடியினில் அணிந்துள்ளார் என்பது கந்த புராண வரலாறு (பாடல் எண்: 8–9–64) கொக்கு மந்தாரை எனப்படும் மலர் என்றும் பொருள் கூறுவார்கள்). இரிந்து ஓடுதல்=பயத்தால் நாலாபுறமும் ஓடுதல்; குரண்டம்=கொக்கு சிறை=இறகு;

ஏங்கி அமரர் இரிந்தோடவே துரந்த

ஓங்கு குரண்டத்து உருக் கொண்ட தானவனைத்

தீங்கு பெறத் தடிந்து சின்னமா ஓர் சிறையை

வாங்கி அணிந்த அருள் இங்கு என் பால் வைத்திலையே

உகலி ஆழ் கடல் என்று தொடங்கும் சீர்காழி பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் (2.25) திருஞான சம்பந்தர், புகலித் தலத்து இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வாழ்ந்து, பயனடையுமாறு அறிவுரை கூறுகின்றார், இந்த பதிகத்தின் முதல் பாடலில் பெருமானைப் போற்றிப் புகழ்ந்து வினைகளையும் அந்த வினைகளால் விளைகின்ற துன்பங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்றும் பல நலன்களை அடையலாம் என்று இரண்டாவது பாடலிலும், அவனைப் புகழ்ந்து பேசி பேரின்பம் அடையலாம் என்று மூன்றாவது பாடலிலும், அவன் பால் அன்பு செலுத்துங்கள் என்று நான்காவது பாடலிலும், பெருமானைப் பணிந்து வணங்கும் அடியார்களை துன்பம் அணுகுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், பெருமானை மனம் ஒன்றி நினைத்து வணங்குவதே சிறந்த வழிபாடு என்றும் ஆறாவது பாடலிலும், பெருமானைப் புகழ்ந்து போற்ற நமது பாவங்கள் தொலையும் என்று ஏழாவது பாடலிலும், பெருமானைப் புகழ்ந்தும் பணிந்தும் வணங்குவீர் என்று எட்டாவது பாடலிலும், பெருமான் நமக்கு பல விதத்திலும் நன்மைகள் செய்யும் பண்பினன் என்று ஒன்பதாவது பாடலிலும், பெருமானைத் தொழுவதன் மூலம் நாம் அடையவிருக்கும் பலன்களே சிறந்த செல்வம் என்று பத்தாவது பாடலிலும் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. உகலி=தாவிச் செல்லும் அலைகள் நிறைந்த கடல்; உகளி என்ற சொல் உகலி என்று திரிந்தது. அகலியா வினை=வினைகள் மேலும் பெருகாமல் ஒழியும். அல்லல்=அந்த வினைகளால் விளையும் துன்பங்கள்; இகலி=மாறுபட்டு; இகலியார்=சிவநெறியிலிருந்து மாறுபட்டு அனைவர்க்கும் பகைவர்களாகத் திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள்; வாழ்மின்=இன்பமான வாழ்க்கை வாழ்வீராக.

உகலி ஆழ் கடல் ஓங்கு பாருளீர்

அகலியா வினை அல்லல் போயறும்

இகலியார் புரம் எய்தவன் உறை

புகலியார் நகர் போற்றி வாழ்மினே

திருநீலகண்டப் பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (1.116.5) திருஞானசம்பந்தர், நாம் பெருமானுக்கு அடியானாக இருந்தாலே போதும், நமது துன்பங்களை புரிந்து கொண்டு இறைவன் அருள் புரிவான் என்று சொல்கின்றார். சொற்றுணை வாழ்க்கை என்று இங்கே திருஞான சம்பந்தர் கூறுகின்றார். வாழ்வில் நமக்கு உண்மையான துணையாக இருந்து நம்மை காப்பாற்றுவார் யார் என்று ஆராய்ந்தால், உண்மையான துணையாக இருப்பவர் எவரும் இல்லை என்பதை நாம் உணர்வோம். நெருங்கிய சுற்றமாக இருந்தாலும், உயிர்த் தோழனாக இருந்தாலும், அவர்கள் எவராலும் எப்போதும் எல்லா உதவியும் நமக்கு செய்ய இயலாது. எனவே அவர்களை சொல்லளவில் துணையாக கருதலாமே தவிர எப்போதும் அவர்கள் உதவி செய்வார்கள் என்று நம்புதல் தவறு. நமக்கு உண்மையான துணைவன் பெருமான் ஒருவனே. எனவே தான் சொல்லளவில் துணையாக இருக்கும் சுற்றத்தாரையும் நண்பர்களையும் சொற்றுணை என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கிற்று=ஆற்றலால்; அடியார்கள் ஏதும் வேண்டாமலே, அவர்களின் துன்பங்களை அறிந்து கொண்டு, அந்த துன்பங்களை களைந்து உதவி செய்யும் ஆற்றல் படைத்தவன் இறைவன் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

மற்றிணை இல்லா மலை திரண்டன்ன திண் தோள் உடையீர்

கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை கொல்லோ

சொற்றுணை வாழ்க்கை துறந்தும் திருவடியே அடைந்தோம்

செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

அடியார்கள் கேளாமலே, அவர்களது தேவைகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு அருளும் பெருமான், அடியார்களுக்கு இன்னல் விளைவிக்கும் கொடிமாட செங்குன்றூர் தலத்தின் தன்மையை புரிந்து கொண்டு அவர்களின் துன்பங்களை களையாமல் இருப்பது பெருமானுக்கு அழகா, அவரது பெருமைக்கு உரிய செயலா என்ற கேள்வியை திருஞானசம்பந்தர் இங்கே எழுப்புகின்றார். அவ்வாறு இருப்பது பெருமானின் தன்மை அல்ல என்றும் கூறுகின்றார். சொற்றுணை வாழ்க்கை என்று அகப்பற்று மற்றும் புறப்பற்று ஆகியவற்றுடன் இணைந்த வாழ்க்கை என்று சிவக்கவிமணியார் தனது பெரியபுராண விளக்கம் நூலில் கூறுகின்றார். ஒப்பற்ற மலைகள் போன்று திரண்டு வலிமையாக விளங்கும் தோள்களை உடைய பெருமானே, எங்களது துன்பங்களையும் வேண்டுகோள்களையும் நாங்கள் அறிவிக்காமலே அறிந்து கொண்டு அவற்றை தீர்க்கும் ஆற்றல் உடைய பெருமானே, நாங்கள் எங்களது வருத்தத்தை தெரிவித்த பின்னரும் அதனை செவி மடுத்துக் கேளாமல் இருப்பது தங்களுக்கு பெருமை சேர்க்கும் செயலில்லை. அகப்பற்று மற்றும் புறப்பற்று ஆகிய இரண்டினையும் முற்றிலும் ஒழித்து, பெருமானே, நாங்கள் உமது திருவடிகளை சரணடைந்தோம். எம்மை பிணித்துள்ள தீவினைகளை வெற்றி கொண்டு, அந்த தீவினைகள் எம்மை தீண்டாத வண்ணம் அருள் புரிவீராக. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது, நீலகண்டம் என்று அழைக்கப்படும் பெருமானின் மீது, ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

பந்த பாசங்களைத் துறந்து, துறவற நிலை மேற்கொண்டு, காடு சென்றடைந்து முனிவர்கள் பலரும் தவம் மேற்கொண்டு, வாழ்வினில் உய்வினை அடைந்தார்கள் என்பதை நாம் புராணங்கள் மூலம் தெரிந்து கொள்கின்றோம். அத்தகைய தவம் ஏதும் செய்யாமலே புண்ணியமே உருவமாக திகழும் பெருமானைத் தொழுது, வாழ்வினில் உய்வினை அடைந்து முக்தி உலகம் செல்லலாம் என்று திருஞான சம்பந்தர், திருவாரூர் பதிகத்தின் பாடலில் (2.79.5) கூறுகின்றார். பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டுள்ள தன்மையால் தான், பலவிதமான துன்பங்களை உயிர் அடைகின்றது என்பதை புரிந்து கொள்ளும் சிலர் துறவிகளாக மாறி, உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது கொண்டுள்ள பாசத்தைத் துறந்து தவம் செய்து, முக்தி நிலை அடைகின்றனர். ஆனால் எல்லோரும் துறவிகளாக மாறும் சூழ்நிலையில் இருப்பதில்லை. ஆனால் அவர்களுக்கும் முக்தி நிலை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கவே, எப்படி அடைவது என்ற வழியினை அறியாமல் திகைக்கின்றனர். இறைவனை ஒரு போதும் மறவாமல், பெரியோர்கள் சொல்லிய நல்வழியில் நடந்து, அறவாழி அந்தணனாகிய ஆரூர்ப் பெருமானைத் தொழுது உய்வினை அடையலாம் என்று நமக்கு திருஞான சம்பந்தர் சொல்லிக் கொடுக்கும் பாடல். உயிருக்கு பயனளிக்கும் செயல்கள் ஏதும் செய்யாமல், வீணாக வாழ்க்கையை கழிப்போரை, தூங்குவோர் என்று திருஞானசம்பந்தர் இங்கே சாடுகின்றார். பெருமானின் சடைமுடியில் வந்து தங்கியதால் கங்கை நதி புண்ணிய தீர்த்தமாக கருதப்படும் நிலையினை அடைந்தது என்பதை உணர்த்தும் வண்ணம், தீர்த்த நீர் மல்கு சென்னி என்று குறிப்பிடுகின்றார் போலும்.

பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்பத்

துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே

மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி

அறவன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (4.60.3) அப்பர் பிரான் பிறவியை மாற்றுவான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். முருகப் பெருமான் சிவபெருமானை வணங்கிய தலங்களில் இந்த தலமும் ஒன்று. வேள் என்று அழைக்கப்படும் முருகன் வணங்கியதால் வேளூர் என்று அழைக்கப்பட்ட தலத்தின் பெயர், அருகில் உள்ள கீழ்வேளூர் தலத்திலிருந்து வேறுபடுத்தி காட்டும் வண்ணம் பெருவேளூர் என்று மாறியதாக கூறுவார்கள். முருகப் பெருமான் இந்த தலத்தில் இறைவனை வணங்கியதை நமக்கு நினைவூட்டும் வகையில் முருகப் பெருமானை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. ஆண்டான் அடிமை என்பதே இறைவனுக்கும் அப்பர் பிரானுக்கும் இடையே இருந்த உறவு. பெருமானின் திறத்தினை அறிந்து கொள்வதற்கு அவனது அருள் தேவை. இறைவனுக்கு அடிமையாக மாறி, அந்த உறவினால் கிடைத்த பெருமானது அருள் காரணமாக, தான் இறைவனை உணர முடிந்தது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இறைவனைப் பற்றி ஏதும் தெரியாமல் ஏழை அறிவிலியாக இருந்த தான், பெருமானின் அருளினால் அவனது திறத்தினை மற்றவர்க்கு உணர்த்தும் வல்லமை பெற்றவனாக மாறினேன் என்று கூறுகின்றார். குறத்திப் பெண் வள்ளியம்மையின் தோள்களை மணந்த செல்வனாகிய குமரனின் தந்தையும், என்றும் நறுமணம் வீசுவதும் மென்மையானதும் ஆகிய கூவிளம் பூக்களைத் தனது கூந்தலில் சூடிய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், பிறவிப் பிணியினை நீக்கி இனிமேல் பிறவாத தன்மை அளிக்க வல்லவனும், பெருவேளூர் தலத்தினை மிகவும் விரும்பி உறைபவனும் ஆகிய பெருமானை, அடியேன் அவனுடன் கொண்டுள்ள உறவின் அடிப்படையில் மற்றவருக்கு உணர்த்தும் வல்லமை பெற்றதால், நான் உணர்ந்த வண்ணம் உங்களுக்கு உணர்த்துவேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும்

நறவு இள மென்கூந்தல் நங்கையோர் பாகத்தானைப்

பிறவியை மாற்றுவானைப் பெருவேளூர் பேணினானை

உறவினால் வல்லனாகி உணருமாறு உணர்த்துவேனே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.68.7) அப்பர் பிரான், பெருமானை கோளுடைப் பிறவி தீர்ப்பார் என்று குறிப்பிடுகின்றார். தாள்=தண்டு; தாளுடை செங்கமலம்= தண்டுகளுடைய செந்தாமரை; தடம்=பெருமை; ஒவ்வொரு உயிரும் பிறக்கும் போதே அதன் வாழ்நாளும் நிச்சயிக்கப்படும் என்பது இந்து மதக் கோட்பாடுகளில் ஒன்று. இது பொதுவாக மாறுவதில்லை. சிறுவன் மார்க்கண்டேயன் பிறந்த போதே அவனது வாழ்நாள் பதினாறு வருடம் என்பதும் நிர்ணயிக்கப் பட்டது. ஆனால் சிறுவன் மார்க்கண்டேயன் சிரஞ்சீவியாக வாழும் வண்ணம் அவனது விதியை சிவபெருமான் மாற்றினார். அவனது விதி மட்டுமா அப்போது மாறியது. அவனது உயிரினைக் கவர வந்த இயமனின் வாழ்நாள் முடிவடைய பல வருடங்கள் இருந்த போதிலும், இயமன் பெருமானின் காலால் உதைக்கப்பட்டு கீழே விழுந்தான். பின்னர் பூமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி பெருமான் அவனுக்கு வாழ்வினை அளித்தார் என்பது புராணம் கூறும் செய்தி. இவ்வாறு தனக்கு வாழ்நாள் இருந்த போதிலும், இயமன் இறந்த செய்தியை நாளுடை காலன் என்ற தொடரினால் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். விதியினை மாற்றி, இறக்கவிருந்த சிறுவன் மார்க்கண்டேயன் நீண்ட நாள் வாழுமாறு செய்வதும், வாழ்நாள் இன்னும் இருக்கும் நிலையில் இயமனை உதைத்து வீழ்த்தியதும் இறைவன் ஒருவனே செய்யக் கூடிய செயல் என்பதை நாம் உணரும் வண்ணம் நாளுடைக் காலன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கோள்=பாசக்கட்டு; உலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் மீது நாம் கொண்டுள்ள பாசமே, பல வினைகளுக்கும் காரணமாக உள்ள நிலையும், அதனால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிர்கள் மீள முடியாத நிலையில் இருப்பதும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. தண்டினை உடைய செந்தாமரை மலர் போன்று அழகாக உள்ளதும், பெருமையினை உடையதும் ஆகிய திருவடிகளை உடையவரும், இன்னும் வாழ்நாள் உடையவனாக இருந்த இயமனை, சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சித்த குற்றத்திற்காக உதைத்து வீழ்த்தியவரும், நம்மால் விரும்பப்படும் தலைவராக இருப்பவரும், வினையின் பயனாக பல பிறவிகளை கொள்ளும் தன்மையினை உடைய உயிரினை வருத்தும் பிறவிப் பிணியினை தீர்ப்பவரும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த பழையனூர் தலத்தில் பொருந்தி உறைபவரும், நம்மை அடிமையாக ஏற்றுக்கொண்டு பாதுகாக்கும் தலைவராக இருப்பவரும் ஆகிய பெருமான் திருவாலங்காடு தலத்தில் உறையும் அடிகளார் ஆவார்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தாளுடைச் செங்கமலத் தடம் கொள் சேவடியர் போலும்

நாளுடைக் காலன் வீழ உதை செய்த நம்பர் போலும்

கோளுடைப் பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய

ஆளுடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (4.75.2) அப்பர் பிரான், பெருமானை, பிறப்பு அறுத்து அருள் செய்பவன் என்று குறிப்பிடுகின்றார். பயலை=இளமை: எறிக்கும்=ஒளிவீசும்: சென்னி=தலை: பின்னிலேன்=அந்தம் இல்லாதவன்: முன்னிலேன்=ஆதி இல்லாதவன். உயிரினை ஆதி அந்தம் இல்லாதது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இறைவனைப் போன்று, உயிர்களும், உலகப் பொருட்களும் என்றும் நிலைத்து நிற்பவை என்பது சைவ சித்தாந்தக் கொள்கை. ஊழிக் காலத்தில், இறைவனிடத்தில் அனைத்து உயிர்களும் உலகப் பொருட்களும் ஒடுங்கும்: ஊழிக் காலம் முடிந்த பின்னர், ஒடுங்கிய உயிர்களும் பொருட்களும், இறைவனின் விருப்பப்படி வெளிப்படும். பதி (இறைவன்), பசு (உயிர்கள்), பாசம் (உலகப் பொருட்கள்) ஆகிய மூன்றும் அநாதி (ஆதி அந்தம் அற்றவை) என்று கூறும் திருமந்திரப் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இறைவனை பாசம் எனப்படும் மலங்கள் சென்று அணுகாது. பாசங்கள், உயிரினைச் சென்று பற்றும்; ஆனால் உயிர் இறைவனை அணுகினால், பாசங்கள் உயிரினை விட்டு நீங்கிவிடும் என்றும் திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார். முதலும் முடிவும் இல்லாதவன் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் அப்பர் பிரான் இந்த தொடர் மூலம் தனது உயிர் பிறப்பு-இறப்புச் சுழற்சியில் அகப்பட்டு இருந்ததையும் பின்னர் பெருமானின் அருளால் அந்த பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டதையும் உணர்த்துகின்றார். பின்னிலேன் முன்னிலேன் என்பதற்கு, மறுமைக்குத் தேவையான நற்செயல்களும், இம்மைக்குத் தேவையான நல்வினைகளும் இல்லாதவன் என்று தன்னைச் சொல்வதாகவும் விளக்கம் கூறுவார்கள். திருநீறு பூசிய அகலமான மார்பினை உடைய இறைவனே, சிவபுரத்தில் இருப்பவனே, அமரர்கள் தலைவனே, இளமையான, ஒளிவீசும் சந்திரனை தலையில் அணிந்தவனே, முதலும் முடிவும் இல்லாமல் எப்போதும் பிறவிப் பிணியால் வருந்தும் எனது பிறப்பு இறப்புச் சுழற்சியை அறுத்து அருள் செய்யும் வல்லமை பெற்றவனே, நான் எந்த ஒரு பொருளும் இல்லாதவனாக உள்ளேன், நீ அல்லாமல் எனக்கு வேறு ஒரு பற்றுக்கோடு இல்லை என்று தனது பரிதாபமான நிலையினை அப்பர் பிரான், பெருமானுக்கு உணர்த்தும் பாடல்.

பின்னிலேன் முன்னிலேன் நான் பிறப்பு அறுத்து அருள் செய்வானே

என்னிலேன் ஆயினேன் நான் இளங்கதிர்ப் பயலைத் திங்கள்

சின்னிலா எறிக்கும் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறே

நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே

நாளும் மறவாது பெருமானை வணங்கும் அடியார்களின் பிறவியை அறுப்பவன் பெருமான் என்று வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.90.4) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பக்தன் என்று சொல்லும் போது, இறைவனிடத்தில் பக்தி உடையவன் என்று பொருளை மட்டும் குறிப்பிடுகின்றது. பத்தர் என்று சொல்லும் போது பத்து குணங்களை உடையவர்கள் என்பதையும் குறிக்கும் நேர்த்தியை நாம் உணரலாம். பத்து என்ற சொல்லினை பற்று என்ற சொல்லின் திரிபாகக் கொண்டு, பெருமானின் திருவடிப் பற்று கொண்ட அடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அடியார்களுக்கு இருக்க வேண்டிய குணங்களை பத்து புற குணங்கள் என்றும் பத்து அக குணங்கள் என்றும் சான்றோர்கள் வரைப்படுத்தி உள்ளார்கள். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபெருமானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் என்பன ஆகும். பத்து அக குணங்கள், சிவபெருமானின் புகழைக் கேட்கும் போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்.இறைவனுக்கு செய்யும் பணிவிடைகளும், வழிபாடுகளும் தினமும் தவறாமல் இருக்க வேண்டும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. தன்னை நாள்தோறும் மறக்காமல் நினைக்கும் அடியார்களின் பிறவிப் பிணியினை வேரோடு அறுப்பவன் சிவபெருமான். பாசத்தை அறவே நீத்து ஜீவன் முக்தர்களாக விளங்கும் அடியார்கள், தங்களை இறைப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களது நிலையை மேலும் உயர்த்திக் கொள்வதற்கு வழி வகுத்தவன் இறைவன். கொத்து கொத்தாக பூக்கும் கொன்றை மலர்களின் நறுமணம் பரவியிருக்கும் வேதிகுடி தலத்தில் உறையும் பெருமானை, நமது தலைவனை நாம் சென்று அடைந்து பணிந்து அவனது அருள் வெள்ளத்தில் மூழ்கி நீராடுவோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான்

முத்தர் கண் முன்னம் பணி செய்து பாரிடம் முன் உயர்ந்தான்

கொத்தன கொன்றை மணம் கமழும் திருவேதிகுடி

அத்தனை ஆரா அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.92.19) அப்பர் பிரான், எளிதில் நீக்கிக் கொள்ள முடியாத பிறப்பிறப்புச் சங்கிலியை உடைத்து எறியும் ஆற்றல் படைத்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சுழலார் துயர் வெயில்=கடுமையான வெய்யில் போன்று சுட்டிடும் பிறவிச்சுழலாகிய நோய்:கழலா வினைகள்=எளிதில் கழிக்க முடியாத வினைகள்: காலவனம்=இருள், பிறவிப் பிணிக்கு வெய்யிலை உவமையாக கூறியதால், பிறவிப் பிணியினை நீக்கும் இறைவனின் திருவடிகளை நிழல் என்று கூறும் நேர்த்தியை நாம் உணரலாம். துன்னுதல்=நெருங்கி இருத்தல், பொருந்துதல், காலவனம் என்பதற்கு காலம் என்றும் காடு என்று பொருள் கொண்டு, காலத்தையும் கடந்த இறைவனின் திருவடிகள், காலம் எனும் காட்டினை எரித்து பொசுக்கி விடும் ஒளியாக விளங்கும் என்றும் பொருள் கூறலாம். ஐயாறனின் திருவடிகள் கடும் கோடையில் வெய்யிலில் வருந்துவோருக்கு நிழல் அளிக்கும் சுகம் போன்று, தன்னைத் தொழும் அடியார்களுக்கு, அவர்களைப் பிணைத்து, வெளியேற முடியாமல் அவர்களை வருத்தும் கொடிய பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை அளிக்கும்: எளிதில் நீக்க முடியாத பிறவிப் பிணியினைத் தீர்த்து, இனிப் பிறவாத தன்மையை அளிக்கும்: நீக்க முடியாமல் பிறவிகள் தோறும் தொடர்ந்து வரும் வினைகளை அறவே நீக்கிவிடும். இவ்வாறு அடித் தொண்டர்க்கு அருள் புரியும் திருவடிகள், ஊழிக் காலத்து இருளையும் தாண்டி நிறைந்த ஒளியாக ஒளிரும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சுழலார் துயர் வெயில் சுட்டிடும் போது அடித் தொண்டர் துன்னும்

நிழல் ஆவன என்றும் நீங்காப் பிறவி நிலை கெடுத்துக்

கழலா வினைகள் கழற்றுவ கால வனம் கடந்த

அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே

துயர் வெய்யில் சுட்டிடும் போது அடித்தொண்டர் துன்னும் நிழலாக அருள் புரிவது சிவபெருமானின் திருவடிகள் என்று அப்பர் பிரான் பாடியது, இன்றும் பொய்க்காமல் இருக்கின்றது என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி ஒன்றினை, சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியம் அவர்கள் தனது திருத்தொண்டர் புராண விளக்கத்தில் கூறுகின்றார். ஒரு முறை கடுங்கோடையாகிய வைகாசி மாதத்தில், நல்லூர் பெருமணத்தில் (இன்றைய பெயர் ஆச்சாள்புரம், சீர்காழிக்கு அருகில் உள்ளது) நடைபெற்ற திருஞானசம்பந்தர் விழாவிற்குச் சென்ற அவர், வீதி உலா வந்த திருஞான சம்பந்தப் பெருமானைப் பின் தொடர்ந்து செல்ல முடியாமல் வெய்யிலின் தாக்கத்தால், தொண்டர்கள் தவித்ததைக் கண்டதாகவும். அடிக்கடி சாலை ஓரத்தில் இருந்த வீடுகளின் கூரை நிழலில் தங்கிய பின்னரே அவர்கள் தொடர்ந்து சென்றதாகவும் கூறுகின்றார். அப்போது அவர்களுடன் வலம் வந்த ஓதுவார், மேற்கண்ட பாடலை உருக்கமுடன் பாடினார். அவர் அந்த பாடலைப் பாடிய ஐந்து நிமிடங்களில் வானில் மேகம் சூழ்ந்து சூரியனை மறைத்தது என்றும் அதன் பின்னர் திருவீதி உலா முடியும் வரையிலும், மேகங்களால் சூரியன் மறைக்கப்பட்டு இருந்தமையால் அடியார்கள், இன்பத்துடன் வீதி வலத்தில் பங்கேற்றனர். என்றும், தனது புத்தகத்தில் கூறியுள்ளார். இதே போன்ற நிகழ்ச்சி, அவினாசியிலும் ஒரு முறை நிகழ்ந்தாக அன்பர்கள் சிவக்கவிமணிக்கு தெரிவித்துள்ளனர். எனவே நம்பிக்கை வைத்து தேவாரப் பாடல்கள் ஓதினால் உடனே அடியார்கள் பயன் அடையலாம் என்பது இப்போதும் கைகண்ட உண்மையாகத் திகழ்வதை நாம் உணரலாம்.

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.105.1) அப்பர் பிரான் தனக்கு எவ்வாறெல்லாம் பெருமான் அருள் புரிந்தான் என்று குறிப்பிடுகையில், தனது பிறப்பினை அறுத்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அவனது திருப்பாதமே சிறந்த பற்றுக்கோடு என்ற எண்ணத்துடன் தான் அவனது திருப்பாதங்களை சரணடைந்ததாகவும், அவ்வாறு சரண் அடைந்த தனக்கு பெருமான் அருள் யாது செய்தார் என்பதை சொல்கின்றேன் கேட்பீர்களாக என்று தொடங்கும் அப்பர் பிரான், தன்னுடன் பிணைந்திருந்த வினைக் கட்டுகளை பெருமான் அறுத்தான் என்றும், தன்னைப் பிணைத்திருந்த பிறப்பிறப்புச் சுழற்சியை அறுத்தெரிந்தான் என்றும் தன்னை ஏழு வகையான நரகத்தில் வீழாத வண்ணம் காப்பாற்றினான் என்றும் தன்னைச் சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றான் என்றும் குறிப்பிடுகின்றார்.

தன்னைச் சரணென்று தாளடைந்தேன் தன்னடி அடையப்

புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ

என்னைப் பிறப்பறுத்து என்வினை கட்டறுத்து ஏழ் நரகத்து

என்னைக் கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருத்திடுமே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.14.4) திருஞானசம்பந்தர், பெருமானை பிறவித் துயர் தீர்ப்பவர் என்று குறிப்பிடுகின்றார். இம்மை=இந்த பிறவி, அம்மை=அடுத்த பிறவி; இறைவனைத் தொழும் அடியார்களின் வினைகள் நாசமாகும் என்று இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் கூறிய அப்பர் பிரான், இவ்வாறு வினைகள் நாசமாவதால் ஏற்படும் விளைவினை இந்த பாடலில் உணர்த்துகின்றார். வினைகள் தாமே நாம் மறுபடியும்மறுபடியும் பிறப்பதற்கு காரணமாக உள்ளன. அந்த வினைகள் நீங்கப் பெற்றால், நமக்கு இனிமேல் பிறவி ஏது. ஐந்து பொறிகளின், ஆளுமையில் உள்ள இந்த உயிர், தான் உறைந்துள்ள இந்த உடலைப் பற்றிய கவலை கொள்வதும் மிகவும் இயற்கை. அதனை உணர்ந்த அப்பர் பிரான், இம்மைக்கும் நன்மை பயக்கும் வழிபாடு என்று இந்த பாடலை தொடங்குகின்றார். இடைமருது இறைவனைத் தொழும் அடியார்கள், இந்த பிறவியில் செல்வ வளமும் உடல் வளமும் பெற்று, அந்த வளங்களின் உதவியால், வானவர் தங்களது வாழ்க்கையை இனிமையாக கழிப்பது போன்று, தங்களது வாழ்க்கையில் அனைத்து நலன்களும் பெற்று வாழ்வார்கள். எம்மை ஆள்பவனாகிய இடைமருது இறைவனின் திருப்பாதங்களைத் சிறந்த முறையில் தொழும் அடியார்கள், தங்களது வினைகள் முற்றிலும் நீங்கப் பெற்று, வினைகளால் பிணைக்கப் பட்டுள்ள பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்து, அடுத்த பிறப்பு என்பது அற்ற நிலையினை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்

அம்மையேல் பிறவித் துயர் தீர்த்திடும்

எம்மை ஆளும் இடைமருதன் கழல்

செம்மையே தொழுவார் வினை சிந்துமே

கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (5.38.4) அப்பர் பிரான், அடியார் தங்கள் பிறவி தீர்ப்பார் பெருமான் அடிகள் என்று குறிப்பிடுகின்றார். அறவனார்=அறமே வடிவமாக உள்ளவர்; பைங்கழல்=பசும் பொன்னால் செய்யப்பட்ட கழல்; தேவர்கள் பெருமானது திருவடிகளில் வணங்குவதை, பெருமானின் கழலை வணங்குவதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பைங்கழல் என்பது பைங்கழல் அணிந்த திருவடிகளை குறிக்கும். கடவூர் மயானத்தில் உறையும் பெருமான் அடிகளின் திருவடிகளை, பசும்பொன்னால் செய்யப்பட்ட கழல்களை அணிந்த திருவடிகளை தேவர்கள் வணங்குகின்றார்கள். அவர் அறமே தனது உருவமாக உடையவர், தனது அடியார்களின் பிறவிப் பிணி நோயினை தீர்ப்பவரும் அவரே என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இறைவனார் இமையோர் தொழு பைங்கழல்

மறவனார் கடவூரின் மயானத்தார்

அறவனார் அடியார் அடியார் தங்கள்

பிறவி தீர்ப்பார் பெருமான் அடிகளே

குடமூக்கு (தற்காலத்தில் கும்பகோணம் என்று அழைக்கப் படும் தலம்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.22.6) அப்பர் பிரான், பிறவியை நீக்கிக்கொள்ள விரும்பும் தொண்டர்களே, நீங்கள் பெருமானின் திருநாமங்களை பித்தர்கள் போன்று, இடைவிடாது பிதற்றி, உங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் தான் உணர்த்திய வண்ணம் நாள்தோறும் இறைவனை வணங்கத் தொடங்கும் அடியார்கள், படிப்படியாக உயர்ந்து அவனது திருநாமங்களை, தாங்கள் அறியாமல் பிதற்றும் நிலைக்கு பக்தியில் மேம்பட வேண்டும் என்ற அப்பர் பிரானின் ஆசை இந்த பாடலில் வெளிப்படுகின்றது. துறவி=உலகப் பற்றுக்களை துறந்தவர்கள்; மறவன்=வீரன்; குறவன்=கிராத வேடம் தாங்கி நின்றவன்; உலகப் பற்றுகளை முற்றிலும் அறுத்துக் கொள்வது மட்டும் நமது பிறவிப் பிணியினை தீர்த்துக் கொள்வதற்கு உதவாது. இறைவனை தியானித்து அவனது அருளினைப் பெற்றால் தான், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற முடியும். எனவே தான் இறைவனது திருநாமங்களை மீண்டும்மீண்டும் சொல்லிய வண்ணம் இருக்க வேண்டும். இந்த செய்தியைத் தான் பித்தராய் பிதற்றுமின் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

துறவி நெஞ்சினராகிய தொண்டர்காள்

பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்

மறவனாய்ப் பார்த்தன் மேல் கணை தொட்ட எம்

குறவனார் உறையும் குடமூக்கிலே

கருவிலி கொட்டிட்டை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.69.8) அப்பர் பிரான், உயிர்களுடன் பிணைந்துள்ள பிறவிப்பிணியை தீர்த்துக் கொள்ளும் வழி, பெருமான் உறைகின்ற தலங்கள் சென்றடைந்து பெருமானைப் பணிந்து வணங்குவதே ஆகும் என்று கூறுகின்றார். பை=படம்: அரையான்=இடுப்பிலே கட்டியவன்; கொய்கொள்=கொய்யத்தக்க; உலகத்தவர்களே நீங்கள் உய்வதற்கான வழியினை நான் சொல்கின்றேன் கேட்பீர்களாக; படம் எடுத்து ஆடும் பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டியவனும், மழுப் படையைத் தனது கையில் ஏந்தியவனும் ஆகிய பெருமான், நாம் பறிப்பதற்கு விருப்பம் கொள்ளும் வண்ணம் அழகாக பூத்திருக்கும் பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை தலத்தில் உறைகின்றான். நீங்கள் அந்த தலம் சென்றடைந்து பெருமானை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக என்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

உய்யுமாறு இது கேண்மின் உலகத்தீர்

பை கொள் பாம்பரையான் படையார் மழுக்

கையினான் உறைகின்ற கருவிலிக்

கொய்கொள் பூம்பொழில் கொட்டிட்டை சேர்மினே

இயல்பாகவே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்ட ஒருவன் தானே, அடுத்தவருக்கும் அத்தகைய நிலையை அருளமுடியும். தானே தோன்றிய பெருமான், எண்ணற்ற ஊழிக் காலங்களையும் தாண்டி நிலையாக இருக்கின்றார். இவ்வாறு பிறப்பும் இறப்பும் அற்ற பெருமான் பிறப்பிலி என்று பல தேவாரப் பாடல்களில் அழைக்கப் படுகின்றார். அத்தகைய பாடல் ஒன்றினை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும். திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.24.6) அப்பர் பிரான் பெருமானை பிறப்பிலி என்று அழைக்கின்றார். குறுங்கண்ணி=குறுகிய மாலை; பிறை என்ற சொல்லினை குறுங்கண்ணி என்ற சொல்லுடன் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். தனது கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து மிகவும் குறுகிய நிலையில் ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொண்டு அபயம் அளித்த நிகழ்ச்சி இங்கே அப்பர் பிரானால் குறிப்பிடப் படுகின்றது. இறை=முன்கை; செம்மையான்=சரி பாதியாக உடையவன்; இயற்கையாகவே நறுமணம் வாய்ந்த கூந்தலை உடைய அம்பிகையின் கூந்தலை வண்டுகள் மொய்ப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார், பல தலங்களில் வீற்றிருக்கும் அம்பிகையின் திருநாமம் வண்டார் குழலி என்பது நாம் இங்கே நினைவு கூறத் தக்கது.

பிறையரவக் குறுங்கண்ணிச் சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடாண் ஆயினான் காண்

கறை உருவ மணி மிடற்று வெண்ணீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலி காண்

இறையுருவக் கனவளையாள் இடப்பாகன்காண் இருநிலன்காண் இருநிலத்துக்குஇயல்பானான் காண்

சிறை உருவக் களி வண்டார் செம்மையான் காண் திருவாரூரன் காண் அவன் என் சிந்தையானே

இந்த பாடலில் இருநிலத்தின் இயல்பு ஆனான் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு மணிவாசகர் அருளிய திருவண்டப்பகுதி பாடல் வரிகளை நினைவூட்டுகின்றது. அட்ட மூர்த்தியாக விளங்கும் பெருமான் எவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் கலந்து நிற்கின்றான் என்று இந்த வரிகளில் விளக்கப் படுகின்றது. தினந்தோறும் தோன்றும் சூரியனில் ஒளியாகவும், சந்திரனில் குளிர்ச்சித் தன்மையாகவும், வலிமை பொருந்திய அக்னியில் வெப்பமாகவும், ஆகாயத்தை பஞ்ச பூதங்களில் ஒன்றாக கருதாத, அயல் மதத்தவர்களின் பொய்யுரையை மறுக்கும் வண்ணம் மற்ற நான்கு பூதங்களும் தன்னுடன் கலக்கும் தன்மையாக ஆகாயத்திலும் சிறப்பான காற்றினில் இயக்கத்தையும், நிலத்தினில் திண்மையையும் (உறுதித் தன்மையையும்) வைத்தவன் என்று மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த திண்மை தன்மையையே அப்பர் பிரான், இருநிலத்தின் இயல்பு என்று இங்கே உணர்த்துகின்றார். பிறப்பறுக்கும் காபாலி என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். காபாலியாக ஊரெங்கும் பலியேற்கத் திரிவது, அடியார்களின் பிறப்பிறப்புச் சுழற்சியினை அறுப்பதற்காக என்னும் செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. தான் கையில் கொண்டு செல்லும் பாத்திரத்தில், தங்களது மலங்களை (ஆணவம், கன்மம் மாயை எனப்படும் மும்மலங்களை) இடும் அடியார்களுக்கு முக்தி அளித்து அவர்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிப்பதே, இறைவன் பலியேற்பதன் நோக்கமாகும். தக்கனின் சாபத்தால் கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் தன்னிடம் வந்து சரணடைந்த சந்திரனுக்கு அபயமளித்து மாலையாக, பாம்புடன் தனது சடையில் சூட்டிக் கொண்டவனும். பிறப்பேதும் இல்லாதவனும், பார்வதி தேவியைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டதால் பெண் உருவத்துடன் ஆண் உருவத்தையும் இணைந்த உருவத்தை உடையவனும், கரிய மாணிக்கக்கல் போன்று கருமை நிறத்து கறையுடன் விளங்கும் கழுத்தினை உடையவனும், திருமேனியில் வெண்ணீறு பூசியவனும், தனது பாதங்களைப் பற்றிக் கொள்ளும் அடியார்களை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிப்பவனும், கபாலம் ஏந்தி ஊர் ஊராக பலியேற்கச் செல்பவனும், தனது முன்கைகளில் பெரிய வளையல்கள் அணிந்துள்ள உமையன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றவனும், பெரிய நிலப் பரப்பினை உடைய பூமியாகவும், அந்த பூமியின் தனித் தன்மையாகிய திண்மை குணமாக இருப்பவனும், சிறகுகள் உடைய அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய அம்பிகையைத் தனது உடலின் சரி பாதியில் வைத்திருப்பவனும் ஆகிய திருவாரூர் பெருமான் எனது சிந்தனையில் நிறைந்து உள்ளான் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை ஆகும்.

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.40.7) அப்பர் பிரான் பிறவி வழி துக்கத்தை நீக்குபவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சுழி=நீர்ச்சுழி; தோன்றிய ஒரு சில நொடிகளில் அழிந்து மறைந்து விடுவது நீர்ச்சுழி. அது போன்று நிலையற்ற வாழ்க்கை என்று உணர்த்துகின்றார். மேலும் நீரில் தோன்றும் சுழி உடைந்து நீருடன் கலந்து மறுபடியும் தோன்றி மறுபடியும் அழிந்து, என்றும் நீருடன் கலந்தே இருக்கின்றது, அதே போன்று உடலும் பிறப்பிறப்புச் சுழலில் தோன்றி அழிந்து மறுபடியும்மறுபடியும் பிறப்பிறப்புச் சுழலில் சிக்குகின்றது. இந்த நிலை உயிரினுக்கு வருத்தத்தை தருகின்றது. இந்த நிலையிலிருந்து நீங்கும் வழியினை அருள்பவன் இறைவன் ஒருவனே என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இழித்தல்=போக்குதல்; பரிதி=ஒளிப் பிழம்பு; தன்னில் தோன்றும் நீர்ச்சுழியினை தன்னிடத்தே அழுத்தி, மறுபடியும் தோன்றச் செய்து மறுபடியும் அழிக்கும் நீரினைத் போன்று, பிறப்பிறப்புச் சுழல் தன்னிடத்தே தோன்றும் உடல்களை அழித்து மீண்டும்மீண்டும் அந்த உடல்கள் தோன்றி அழியும் நிலைக்கு ஆளாக்குகின்றது. இந்த நிலை உயிரினுக்கு தீராத வருத்தத்தை தருகின்றது. சுருண்ட சடையினை உடைய பெருமான் ஒருவனே உயிரின் இந்த வருத்தத்தை போக்கும் வழியினை அருளும் வல்லமை படைத்தவன். அத்தகைய வல்லமை பொருந்திய பெருமானே, தூய நீரான கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்ற பெருமானே, நீக்குதற்கு மிகவும் அரியதான பாசத்தை, உலகப் பொருட்களின் மீது உயிர் கொண்டுள்ள பாசத்தை அறவே நீக்கி, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து எனக்கு விடுதலை தரும் பெருமானே, பல குறைகள் நீங்கிய திருமாலும் பிரமனும் காணமுடியாத வண்ணம் நீண்ட நெடும் பிழம்பாய் தோன்றிய ஒளியே, வேதத்தின் முடிவாகத் தோன்றும் முடிவுகளுக்கு அணிகலனாக விளங்குபவனே, உயிர் உன்னை வந்து அடைவதற்கு வழித்துணையாக இருப்பவனே, மலை போன்று உறுதியானதும் ஆகிய வயிரத்தூணாக மழபாடி தலத்தில் உறையும் இறைவனே என்று எனது வாயினால் உன்னை அழைத்து அரற்றி அடியேன் உள்ளம் நைகின்றேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

சுழித்துணையாம் பிறவி வழித் துக்கம் நீக்கும் சுருள்சடை எம்பெருமானே தூய தெண்ணீர்

இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான்

பழிப்பரிய திருமாலும் அயனும் காணாப் பரிதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த

வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

நீக்குதற்கு மிகவும் அரியதாக இருக்கும் பிறவியையும் நாம் பெருமானைப் பணிந்து நீக்கிக் கொள்ளலாம் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை வழங்கும் பாடல் சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (6.42.2). ஈண்ட என்ற சொல் ஈண்டா என்று எதுகை கருதி திரிந்தது; ஈண்ட=நீக்குதற்கு; இரும்=அரிய, கடுமையான, விதி=வழிமுறை; இதே பதிகத்தின் முதல் பாடலில் உய்வு என்று கூறியது யாது என்பதை இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அம்மான்=தாய் போன்றவன்; துறை=இடம்; வினைப் பயன்களால் தொடர்ந்து பிறவி ஏற்படுவதும், வினைகளை முற்றிலும் நுகர்ந்து கழிக்க முடியாத நிலையில் உயிர் இருப்பதையும் கருத்தினில் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுதல் இயலாத காரியம் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டாம் என்று அறிவுரை கூறும் பாடல். உலகத்தவர்களே, நீக்குவதற்கு மிகவும் அரிதாக உள்ள இந்த பிறவியையும், பிறவியினால் ஏற்பட்ட உடலினையும் துறந்து விடுவதற்கு வழி உள்ளது என்பதை யான் கூறாமலே நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கின்றேன்; எனினும் அந்த வழி யாது என்பதை அடியேன் விளக்குகின்றேன்; நான் சொல்வதை நீங்கள் கேட்பீர்களாக; வானுலகத்தவர்களுக்கு தலைவனும், நிலவுலகத்தில் பிறந்த அடியேனை ஆட்கொண்டவனும், சிறப்பு வாய்ந்த மேரு மலையினை வில்லாக வளைத்து வானில் திரிந்து கொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் அம்பு எய்தி எரித்தவனும், நமக்கு தாய் போன்றவனும், திருமாலும் பிரமனும் காண முடியாத வண்ணம் நீண்ட தழலாக நிமிர்ந்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற நெய்த்தானம் நகரத்தில் அமைந்துள்ள திருக்கோயிலை, மனதில் நினைத்து வணங்கினால் நீர், வாழ்வினில் உய்வினை அடையலாம் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கலாம் விதி உண்டென்று சொல்ல

வேண்டாவே நெஞ்சமே விளம்பக்கேள் நீ விண்ணவர் தம் பெருமானார் மண்ணிலென்னை

ஆண்டான் அன்று அருவரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம்

நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.31.10) அப்பர் பிரான், புலன்களால் ஆட்டுண்டு வீணாக காலத்தைக் கழித்து, இறைவனை விட்டு வெகு தூரம் சென்று விடாமல், இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். போது போக்கி=காலத்தை வீணே கழித்து. புறம் புறம்=மிகவும் தொலைவான இடங்கள், இறைவனிடம் இருந்து விலகி இருத்தல் என்று பொருள் கொள்ளுதல் மிகவும் சிறப்பு. கங்கையைத் தனது சடையில் அடக்கியவன், தக்கனது வேள்வியினைத் தகர்த்தவன், இலங்கை மன்னன் இராவணனது வலியினை அடக்கியவன், என்று இறைவனின் வல்லமை இங்கே உணர்த்தப் பட்டுள்ளது. அவ்வளவு வல்லமை படைத்து இருந்தாலும், நம் மீது கருணை கொண்டு ஆரூரில் உறையும் இறைவன் என்றும், என் மீதும் (அப்பர் பிரான் தன்னைச் சொல்லிக் கொள்கின்றார்) கருணை கொண்டு தனது திருவடியை என் தலை மேல் வைத்தவன் என்று கூறி, அடியார்க்கு இரங்கும் அவனது இளகிய மனம் குறிப்பிடப் படுகின்றது. நெஞ்சமே, ஐந்து புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு பல இடங்களிலும் திரிந்து பொழுதினை வீணாக கழிக்காதே; எனது அருகில் வா, நான் சொல்வதைக் கேள். கங்கையை, சடையில் தரித்தவனே என்றும், தக்கனது பெரிய வேள்வியினைத் தகர்த்தவனே என்றும், இலங்கை மன்னன் இராவணனது வலிமையை அடக்கி, அவனது தலைகளை நெருக்கியவனே என்றும், அழகிய ஆரூரில் இடம் கொண்டவனே என்றும், நலன்கள் அருளக் கூடிய உனது திருவடியை, எனது (அப்பர் பிரானது) தலை மீது வைத்தவனே என்றும், எந்தாய் என்றும், நீ தினமும் பலமுறை அவனைப் புகழ்ந்தால் உனக்கு பல நன்மைகள் ஏற்படும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப் புறம்புறமே திரியாதே போது நெஞ்சே

சலம் கொள் சடைமுடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெருவேள்வி தகர்த்தாய் என்றும்

இலங்கையர் கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம் கொண்ட எந்தாய் என்றும்

நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாடோறும் நவின்று ஏத்தாய் நன்மையாமே

பொழிப்புரை:

பிறப்பு எடுத்ததால் ஏற்படும் துன்பங்களால் வருந்தி துக்கம் அடையும் வாழ்க்கைகள் பல வாழ்ந்து அதனால் சோர்ந்திருக்கும் உயிரின் சோர்வினை நீக்கும் பொருட்டு, தகுந்த நெறியினை பின்பற்ற வருவீர்களாக. தனது இடுப்பினில் எலும்பு மாலையை அணிந்தவனும், தனது தலையின் மேல் கங்கை ஆற்றினையும் கொக்கு இறகினையும் அணிந்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கோடிகா தலம் சென்று சேர்ந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்து உயிரின் சோர்வினை நீக்கிக் கொள்வீர்களாக.

பாடல் 4:

இன்று நன்று நாளை (2.99) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் பாடல் 4 (திதே 0508)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0509)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 4 தொடர்ச்சி மற்றும் பாடல் 5 (திதே 0510)

பண்டு செய்த வல்வினை பற்றறக் கெடும் வகை

உண்டு உமக்கு உரைப்பன் ஒல்லை நீர் எழுமினோ

மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாதொர் பாகமாக்

கொண்டு உகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே

விளக்கம்:

அன்ன மென்னடை என்று தொடங்கும் சிரபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்கள் (3.102) அனைத்திலும் திருஞானசம்பந்தர், சிரபுரத்து இறைவனைத் தொழுதெழும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்று கூறுகின்றார். தொழுதெழும் என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து பெருமானைப் பணிந்து பின்னர் எழும் அடியார்கள் என்று உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில், பெருமானைப் பணியும் அடியார்கள் வினைகளுடன் பொருந்தாமல், வினைகள் நீங்கப் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றும், இரண்டாவது பாடலில் வினைகள் அத்தகைய அடியார்களுடன் பிணைந்து நில்லாமல் விலகும் என்றும், மூன்றாவது மற்றும் எட்டாவது ஒன்பதாவது பாடல்களில் தலைவனைக் கும்பிடும் அடியார்களை வினைகளும் வினைகளால் ஏற்படும் குற்றங்களும் சென்று அடையா என்றும், நான்காவது பாடலில் ஆணிப் பொன்னாகிய இறைவனைத் தொழும் அடியார்களை கொடிய வினைகள் சென்று அடையா என்றும், ஐந்தாவது பாடலில் சிரபுரத்து இறைவனைத் தொழும் அடியார்கள் தங்களது செயல்களால் உயிர்க்கு வருத்தம் விளைவிக்கும் வினைகளிலிருந்து விடுதலை பெற்று வருத்தம் அடையாமல் இருப்பார்கள் என்றும், ஆறாவது பாடலில் இறைவனைத் தொழும் அடியார்களை கொடிய வினைகள் சென்று அடையா என்றும், ஏழாவது மற்றும் பத்தாவது பாடல்களில் அத்தகைய அடியார்கள் தொல்லை தரும் வினைகள் நீங்கப்பெற்று தளர்வு ஏதும் இன்றி வாழ்வார்கள் என்றும் ஞானசம்பந்தர் கூறுகின்றார். நாமும் இந்த பதிகத்தை பக்தியுடன் முறையாக பாராயணம் செய்தும், சிரபுரத்து இறைவனை தொழுதெழுந்தும் நமது வினைகளை முற்றிலும் தீர்த்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, முக்தி உலகம் சென்றடைந்து, என்றும் அழியாத பேரானந்தம் பெறுவோமாக. இந்த பதிகத்தின் முதல் பாடலை (2.102.1) நாம் இங்கே காண்போம்.

அன்ன மென்னடை அரிவையோடு இனிதுறை அமரர் தம் பெருமானார்

மின்னு செஞ்சடை வெள்ளெருக்கம் மலர் வைத்தவர் வேதம் தாம்

பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதில் சிரபுரத்தார் சீரார்

பொன்னின் மாமலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே

அமரர் தம் பெருமான் என்ற தொடர், தேவதேவன், மகாதேவன் ஆகிய திருநாமங்களை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. சில பதிப்புகளில் வேதந்தான் என்ற தொடருக்கு பதிலாக வேதாந்தம் என்ற தொடர் பாடபேதமாக காணப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான பதிப்புகளில் வேதந்தாம் என்ற தொடரே காணப்படுகின்றது. எனவே நாமும் அந்த தொடரையே பின்பற்றுவோம். பயத்தல்=கொடுத்தல்; பெருமான் வேதங்களுக்கு பொருள் அருளியதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலத்தில் (திருவிளையாடல் புராணம்) பரஞ்சோதி முனிவர், கண்வர் முதலான முனிவர்களுக்கு வேதத்தின் பொருள் சொன்ன நிகழ்ச்சியை விரிவாக எடுத்துரைக்கின்றார். மதுரையிலிருந்து வடநாடு நோக்கிச் சென்ற வேதியன் ஒருவன், நைமிசாரண்யத்தில் கண்வர் முதலான முனிவர்கள், முகம் வாட்டமடைந்து இருந்ததைக் கண்டு, அதன் காரணத்தை வினவினார். வேதங்களின் பொருளினை அறியமுடியாமல் வருந்துவதாக அவர்கள் கூற, மதுரை வேதியன், மதுரை மாநகரம் சென்று சொக்கநாதப் பெருமானிடம் வேண்டுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறினார். அவ்வண்ணமே கண்வரும் மற்ற முனிவர்களும் மதுரைத் தலம் வந்தடைந்து சொக்கநாதப் பெருமானிடம் வேண்டினார்கள். பின்னர் அவர்கள் ஆங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் பெருமானை வழிபட்ட போது, வேதியச் சிறுவனாக பெருமான் வெளிப்பட்டு, முனிவர்களை நோக்கி அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது முனிவர்கள் வேதங்களின் பொருளை அறிந்து கொள்ளவேண்டும் என்பதே தங்கள் அவா என்று கூறவே, வேதியச் சிறுவனாக வந்த பெருமானும் வேதங்களின் பொருளை எடுத்துரைத்தார் என்று திருவிளையாடல் புராணம் உணர்த்துகின்றது. சனகாதி முனிவர்களுக்கு தனது மோன முத்திரையால் வேதத்தின் பொருளை உணர்த்தியவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அன்னப்பறவை போன்று மென்மையான நடையை உடைய உமை நங்கையுடன் இனிதாக உறைபவரும், தேவர்களின் தலைவராக திகழ்பவரும், மின்னல் போன்று ஒளி வீசும் சிவந்த சடையினில் வெள்ளெருக்கு மலரினைத் சூட்டிக் கொண்டவரும், வேதங்களின் வழியாக வாழ்க்கைக்கு பயன்படும் அரிய பல கருத்துகளை உலகினுக்கு அளித்தவரும், வேதங்களின் பொருளினை உணர்த்தியவரும், பெரிய மதில்கள் சூழ்ந்த சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் உறைபவரும் ஆகிய பெருமானின் பொன் போன்று அழகிய திருவடிகளைத் தொழும் அடியார்கள் வினைகளுடன் பொருந்த மாட்டார்கள்; அதாவது அவர்களைப் பற்றியுள்ள வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.91.4) திருஞானசம்பந்தர், பெருமானின் திருப்பாத நிழலில் சரண் அடைந்த அடியார்கள் வினைகளால் எந்த விதமான துன்பமும் அடையாத வண்ணம், அவர்களை விட்டு வினைகள் நீங்கி விடும் என்று கூறுகின்றார். ஏழை=அறியாமை; தனது அறியாமை காரணமாக குருகு, வெண்மையான தாழை வெண் மடலை, தனது துணைப் பறவை எனக் கருதி தாழை மடல் அருகே சென்று நிற்கின்றது என்று நயமாக இந்த பாடலில் கூறுகின்றார். அமர்ந்தார்=விருப்பத்துடன் உறைபவர்; மாழை=பிளவு பட்ட மாவடு;

ஏழை வெண்குருகு அயலே இளம் பெடை தனது எனக் கருதி

தாழை வெண்மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார் தாம்

மாழை அம் கயல் ஒண் கண் மலைமகள் கணவனது அடியின்

நீழலே சரணாக நினைபவர் வினை நலிவிலரே

ஆடானை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.112.7) பெருமானை வலம் வரும் தொண்டர்களின் வினைகள் மாயமாக மறைந்துவிடும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானின் திருப்பாதங்களின் மேல் மலர்கள் தூவி வணங்கிய பின்னர் பெருமானை வலம் வரவேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். துலங்கு=அழகுடன் பொலிந்து விளங்கும்; அலங்கல்=மாலை; அலங்கலான்=மாலையை உடையவன்; தலை மாலை என்று பொருள் கொள்வது பொருத்தம்.

துலங்கு வெண்மழு ஏந்திச் சூழ் சடை

அலங்கலான் உறை ஆடானை

நலம் கொள் மாமலர் தூவி நாடொறும்

வலம் கொள்வார் வினை மாயுமே

மேற்கண்ட பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானைத் தொழும் அடியார்களின் வினைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திருவாடானை இறைவனை மலர் மாலைகள் கொண்டு அர்ச்சித்தும் மலர் மாலைகள் சூட்டி அழகு படுத்தியும் அவனைத் தொழும் அடியார்களின் வினைகள் மாய்ந்துவிடும் என்று பதிகத்தின் முதல் பாடலிலும். இதழ்கள் நிறைந்த மலர்கள் கொண்டு கை தொழும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிடும் என்று இரண்டாவது பாடலிலும், தமது கையால் தொழும் அடியார்களின் வினைகள் மாய்ந்துவிடும் என்றும் அந்த வினைகளால் அவர்களை பீடிக்கும் நோய் மங்கி விடும் என்றும் மூன்றாவது பாடலிலும், வண்ண மயமான மலர்கள் கொண்டு இறைவனது திருமேனி மீது மலர்கள் தொழுது வழிபடவேண்டும் என்று எண்ணும் அடியார்களின் துன்பங்கள் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிடும் என்று நான்காவது பாடலிலும், ஆடானை இறைவனை மலர்கள் தூவி வணங்கும் அடியார்களுடன் பிணைந்திருக்கும் வலிமையான வினைகளும் அவர்களை விட்டு விலகி விடும் என்று ஐந்தாவது பாடலிலும், தேன் நிறைந்த மலர்கள் கொண்டு இறைவனை வழிபடும் அந்த அடியார்களின் ஊனமாகிய வினைகள் எனப்படும் குற்றங்களும் ஒழிந்து விடும் என்று ஆறாவது பாடலிலும், நறுமணம் கொண்ட மலர்களை இறைவனது திருமேனி மேல் தூவியும் அவனை வலம் வந்து வணங்கும் அடியார்களின் வினைகள் மாய்ந்துவிடும் என்று ஏழாவது பாடலிலும், ஆடானை இறைவனை நறுமணம் நிறைந்த மலர் கொண்டு வழிபடும் சிந்தை உடைய அடியார்களின் வினைகள் முழுவதும் தேய்ந்து அழிந்து விடும் என்று எட்டாவது பாடலிலும், ஆடானை பெருமானைப் புகழ்ந்து வணங்கும் அடியார்களின் தீய வினைகள் ஒழிந்து விடும் என்றும் நல்வினைகள் அந்த அடியார்களைப் பற்றும் என்று ஒன்பதாவது பாடலிலும், ஆடானை தலத்து இறைவன் மீது மலர்கள் தூவித் தொழுது வணங்கும் அடியார்களை பீடித்துள்ள தீய வினைகள் எத்துணை வலிமை வாய்ந்ததாக இருப்பினும் அவை ஒழிந்து விடும் என்றும் கூறுகின்றார்.

நல்லூர்ப் பெருமணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.125.10) திருஞான சம்பந்தர், வேதனாகிய பெருமானின் திருப்பாதங்களை வணங்க, அவர்கள் வீடுபேறு அடைவது மிகவும் எளிதான செயலாக மாறிவிடும் என்று கூறுகின்றார். வேதன்=வேதங்களை உலகுக்கு அருளிய சிவபெருமான்; ஆதர்=அறிவற்றவர்கள்; பேதமை=அறியாமையால் விளைந்த பயனற்ற சொற்கள்; புத்தர் மற்றும் சமணர்கள் சொல்லும் தேவையற்ற பேச்சுகளில் மயங்காமல், மாறுபட்டு நிற்கும் அன்பர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்த பாடல்.

ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும்

பேதைமை கேட்டுப் பிணக்கு உறுவீர் வம்மின்

நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய

வேதன தாள் தொழுவார் வீடு எளிதாமே

ஒல்லை=விரைந்து; பண்டு=பழைய பல் பிறவிகள்; மண்டு=விரைந்து வந்த கங்கை நதி; வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியைத் தடுத்த வல்லமை உடைய பெருமானுக்கு வினைகளின் வலிமையை அடக்குவது மிகவும் எளிதான செயல் என்று உணர்த்தப் படுகின்றது. பண்டு செய்த பழவினை என்று திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய பதிகத்தின் (5.47) முதல் பாடலை நினைவூட்டுகின்றது.

பண்டு செய்த பழவினையின் பயன்

கண்டும்கண்டும் களித்தி காண்க நெஞ்சமே

வண்டுலா மலர்ச் செஞ்சடை ஏகம்பன்

தொண்டனாய்த் திரியாய் துயர் தீரவே

நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளின் தொகுதியில் ஒரு பகுதி நரகத்திலும் சொர்கத்திலும் அனுபவித்து கழிக்கப்பட்டு எஞ்சிய வினைகள் சஞ்சித வினையாக வரவிருக்கும் பிறவிகளுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றது. அனைத்து வினைகளையும் ஒரே பிறப்பில் நுகர்ந்து கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படின், நமது உடல் அத்தகைய சுமையினைத் தாங்காது என்பதால், அதில் ஒரு பகுதி மட்டும் ஒவ்வொரு பிறவிக்கும் இணைக்கப் படுகின்றது. இதனையே பிராரத்த வினை என்று சொல்கின்றோம். ஆனால் இந்த பிராரத்த வினைகளை நுகரும் சமயத்தில் நாம் மேலும் வினைகளை கூட்டிக் கொள்கின்றோம். இந்த வினைகளை ஆகாமிய வினைகள் என்று கூறுவார்கள். இந்த வினைகள், எஞ்சிய சஞ்சித வினைகளுடன் சேர்ந்து வரவிருக்கும் பிறவிகளுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன. எனவே இந்த பிறவியில் நாம் நுகர்ந்து கழிக்கும் வினைகள் எத்தனை பிறவிகளாக தொடர்ந்து வருகின்றன என்பது நமக்கு தெரியாது. அதனால் தான் பழவினைகள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

இந்த பழவினைகளின் பயனால் நாம் சில இன்பங்களை இந்த பிறவியில் அடைந்தாலும், அந்த இன்பங்களை நுகரும் தருணத்தில், அந்த இன்ப சுகங்களில் ஆழ்ந்து இறைவனை மறந்து விடுகின்றோம். அதனால் பல அல்லல்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு பிறவிகள் தோறும் நடந்தாலும், உயிர் அதனை உணராமல் பல சிற்றின்பங்களில் ஆழ்ந்து பின்னர் வருந்தும் செயலை, கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நெஞ்சமே என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போல், உலகத்தவர்க்கு அறிவுரை கூறுவது அப்பர் பிரானின் பாணி.

சமண சமயத்தை குறை கூறினார் என்ற குற்றம் சாட்டப்பட்டு, மகேந்திர வர்ம பல்லவனால் விசாரணைக்கு உட்பட்டு பல தண்டனைகள் அப்பர் பிரான் பெற்றது, பல்லவ நாட்டின் தலைநகர் காஞ்சியில் தான். இறைவனின் அருளால் அத்தகைய தண்டனைகளிலிருந்து அப்பர் பிரான் தப்பியதை காஞ்சி நகரத்து மக்கள் மிகவும் நன்றாகவே அறிவார்கள். மன்னனும் அப்பர் பிரானின் பெருமையை உணர்ந்து, பெருமானின் கருணைத் திறத்தினை உணர்ந்து மீண்டும் சைவ சமயத்திற்கு திரும்பியது சரித்திரம். எனவே இந்த நகரத்து மக்களுக்கு, இறைவனுக்கு திருத்தொண்டு செய்யவேண்டிய அவசியத்தை உணர்த்த அப்பர் பிரான் எண்ணினார் போலும். அதனால் தான், தொண்டராகித் திரிவீர் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அப்பர் பிரானின் திருத்தொண்டின் சிறப்பினை உணர்ந்தவர்களாக காஞ்சி நகரத்து மக்கள் திகழ்ந்ததை நாம் இங்கே காணலாம். அப்பர் பிரான் அமைத்த திருமடம் ஒன்று காஞ்சியில் சிறப்பாக திகழ்ந்ததை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். சிவகாமியின் செல்வன் புதினத்திலும் கல்கி அவர்கள், காஞ்சியில் அப்பர் பிரானின் திருமடம் அமைந்திருந்த செய்தியை உணர்த்துகின்றார்.

அப்பர் பெருமானார், தனது தமக்கை தனக்கு காட்டிய வழியை பின்பற்றி, கோயில் திருப்பணியினைச் செய்யத் தொடங்கிய நாள் முதலாக திருவலகும், உழவாரப் படையும் ஏந்தியவாறே எங்கும் செல்லலானார். இது அவர் மிகவும் விரும்பி ஏற்றுக்கொண்ட வேடமாகும். இந்த வேடத்துடன் பல தலங்களுக்கும் அப்பர் பிரான் சென்றதால், அப்பர் பிரானால் ஏற்றுக் கொள்ளப் பட்ட திருவலகு (துடைப்பம்) பெருமதிப்புக்கு உரிய பொருளாக மக்களால் அந்நாளில் கருதப்பட்டது. அப்பர் பெருமானார் விரும்பி மேற்கொண்ட வேடத்தைத் தாங்கியவாறு அவரை வரவேற்பதே சிறந்தது எனக் கருதிய காஞ்சி நகரத்து மக்கள், அப்பர் பிரான் செய்யும் திருவீதிப் பணியில் தாங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்ற முடிவுடன், திருவலகு தாங்கி வரவேற்றனர் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். திருவலகின் பெருமையை தேவர்களும் அறியாமல் இருந்தனர் என்று சேக்கிழார் இங்கே கூறுகின்றார். எனவே திருவலகு என்பதை மங்கலப் பொருட்களில் ஒன்றாக பண்டைய மரபில் கருதப் பட்டது என்பது இதிலிருந்து புலனாகின்றது.

தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால்

கொண்ட வேட்கைப் பொலிவினொடும் குலவும் வீதிப்பணி செய்யும்

அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதலாம் அவை ஏந்தி

இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர்கொண்டார்

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.33.10) அப்பர் பிரான், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று விரும்பினால், நாம் உழவாரத் திருப்பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். யாக்கை= உடல்; பிணி=துன்பம்; துன்பத்திற்கு இருப்பிடமாக உள்ள உடல் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தோகை=தோகை உடைய மயிலினைப் போன்று அழகிய உமையன்னை. பண்ணின் நேர் மொழியாள் என்று பாடிய பதிகத்தின் கடைப் பாடலில் (5.10.11) இரக்கம் இல்லாதவர் என்று பெருமானை குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலிலும், இறைவன் இரக்கத்துடன் இராவணனுக்கு அருள் புரிந்ததை குறிப்பிடவில்லை. பலவகையான துன்பங்களுக்கு இருப்பிடமாக உள்ள உடலினைத் துறந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருந்தால், மற்ற பொருட்களின் மீது உயிர்களின் மீது வைத்துள்ள பற்றினை அறவே நீக்கி, பெருமானையே ஒரே பற்றுக்கோடாக கருதி, அவனுக்கு அடிமையாக உழவாரத் திருத்தொண்டுகள் புரிவீர்களாக. தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்று கருதி, கயிலை மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்த அரக்கன் இராவணன், தேரிலிருந்து கீழே குதித்து வேகமாக ஓடி, மலையினை பேர்க்க முயற்சி செய்தான். அவ்வாறு அவன் செய்த முயற்சியில் மலை சற்று அசையவே, மலையின் மீது அமர்ந்திருந்த பெண்மயில் போன்று அழகிய உமையன்னை அஞ்சியதைக் கண்ட பெருமான், அரக்கனின் மணிமுடிகள் பத்தும் மலையின் கீழே நசுங்குமாறு கயிலை மலையினைத் தனது கால் பெருவிரலால் அழுத்தினார். இத்தகைய பண்புகளை உடைய பெருமான், சிறப்பு வாய்ந்த மறைக்காடு தலத்தில் உறையும் இறைவனார் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில்

பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே

துணிவுடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச

மணிமுடிப் பத்து இறுத்தார் மாமறைக் காடனாரே

மறுபடியும் பிறவி எடுத்து இந்த உலகத்திற்கு வருவதை தவிர்த்து, இங்கிருந்து இடம் பெயர்ந்து வீடுபேறு நிலையினை அடைவதை பேர்த்து என்று அப்பர் பிரான் குறிப்பிட்டு, பெருமானின் திருநாமங்களைப் பிதற்றி பலனடைய வேண்டும் என்ற அவரது அறிவுரை சோற்றுத்துறை பதிகத்தின் பாடலில் (4.41.4) சொல்லப் படுகின்றது. பிதற்றுதல்=தனது நிலையை மறந்து பேசுதல். நமது நிலையை மறந்து நாம் பேசுகின்றோம் என்று மற்றவர்கள் கருதும் வண்ணம், நாம் பெருமானது நாமங்களை விடாமல் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று இங்கே கூறுகின்றார்

பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன்

பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் தன் திறமே

ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்

தீர்த்தமாய்ப் போத விட்டார் திருச்சோற்றுத்துறையனாரே

பிறவிப் பிணியினை நீக்கிக் கொள்ள நமது முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த உபாயம், பெருமானின் திருநாமங்களை பிதற்றுதல் தான் என்று சோற்றுத்துறை பதிகத்தின் பாடலில் (4.41.10) அப்பர் பிரான் கூறுகின்றார். அடுத்த பிறவி என்பதை அடியோடு நீக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால், அதற்கு ஒரு வழி உள்ளது. மற்றப் பொருட்களின் மேல் உங்களது சிந்தனையை செலுத்தாமல், நமது ஆச்சாரியர்களின் உபதேசத்தால் நாம் பெற்ற சிவபெருமானின் திருநாமத்தை மறுபடியும்மறுபடியும் பிதற்றுங்கள்; நாத்தழும்பு ஏறும் அளவுக்கு அவனது திருநாமங்களைச் சொல்லுங்கள். பல நூல்களைக் கற்றோம் என்றும் வலிமை உடையோம் என்று செருக்கு கொண்ட இராவணன், விரைந்து சென்று கயிலை மலையினை எடுக்க முயற்சி செய்த போது, அவனது வலிமையை அடக்கிய சிவபெருமான், பின்னர் அவன் சாமகானம் பாடித் தொழுத போது அவனுக்கு அருள் செய்தார். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான், சோற்றுத்துறையில் உறைகின்றார்.

மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில்

பெற்றதோர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்றுமின்கள்

கற்று வந்த அரக்கனோடிக் கயிலாய மலை எடுக்கச்

செற்று உகந்து அருளிச் செய்தார் திருச்சோற்றுத்துறையனாரே

திருவாரூர் தலத்தின் மீது அருளீய பதிகத்தின் மூன்றாவது பாடலில் (6.31.3) அப்பர் பிரான், நிலையான இன்பத்தை பெற விரும்பும் மனிதர்கள் செய்ய வேண்டியது யாது என்பதை குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் சிவபெருமானின் திருநாமங்களைச் சொல்லுமாறு, வலியுறுத்தும் அப்பர் பிரான், இந்த பாடலில் நாம் எவ்வாறு நம்மை இறைபணியில் ஈடுபடுத்திக் கொள்வது என்பதை விளக்குகின்றார். நிலை பெறுதல்=தடுமாற்றம் இல்லாத நிலையில் இருத்தல்; பாதிரிப்புலியூரில் இருந்தபோது கொடிய சூலை நோயால் வருந்திய அப்பர் பிரான், எவரும் அறியாமல், திருவதிகையில் தனது தமக்கையார் தங்கியிருந்த திருமடம் வந்தடைகின்றார். அடுத்த நாள் பொழுது விடிவதற்கு முன்னர், தனது தமக்கையார், திருவலகு, தோண்டி, சாணம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு திருக்கோயில் சென்றபோது தானும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார். அப்போது அவர் திருக்கோயிலில் செய்த பணிகளைக் கண்டார். தனது தமக்கையார் செய்த பணிகளைக் கூர்ந்து கவனித்த அவர் தானும் அத்தகைய பணிகளை மேற்கொண்டு திருக்கோயில் சுற்றுப் பாதைகளையும் செப்பனிடத் தொடங்கினார். இந்த பாடலின் இரண்டாவது அடியில், தனது தமக்கையார் செய்த பணிகளைக் குறிப்பிடும் அப்பர் பிரான், அனைவரும் அவ்வாறு செய்யவேண்டும் என்று விரும்புகின்றார். தனது தமக்கையார், உழவாரப் பணியில் தான் ஈடுபடுவதற்கு முன்மாதிரியாக இருந்ததை அப்பர் பிரான் நமக்கு உணர்த்தும் பாடல் இது. நெஞ்சமே, நீ தடுமாற்றம் ஏதும் இன்றி, நிலையான மெய்ப்பொருளை நினைக்க வேண்டும் என்று விரும்பினால் என்னருகில் வா. நான் உனக்கு சொல்வதைக் கேட்டு கடைப்பிடிப்பாயாக. நீ தினமும் பொழுது புலர்வதற்கு முன்னர் எழுந்து நீராடி, உடலில் வெண்ணீறு பூசி, சிவபெருமானது திருக்கோயில் புகுந்து, தரையை சுத்தமாக பெருக்கிய, பின்னர் நன்றாக மெழுகி, பூமாலைகள் கட்டி, இறைவனுக்கு அர்ப்பணித்து, அவரைத் தலையால் முழுதுமாக வணங்கி, புகழ்ந்து பாடி, மகிழ்ச்சியுடன் கூத்தும் ஆடி, சங்கரா நீ வெல்க, வாழ்க என்றும் கங்கையைத் தனது செஞ்சடைமேல் வைத்த ஆதிமூலமே என்றும் ஆரூரா என்றும் பலமுறை கூவி அழைப்பாயாக என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம் பிரானுடைய கோயில் புக்கு

புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் பூமாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடித்

தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சய போற்றிபோற்றி என்றும்

அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்றென்றே அலறா நில்லே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும், பவனமாய் சோடையாய் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும், திருஞானசம்பந்தர், தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். ஆரூர் நகரத்தில் உறைகின்ற பெருமானைத் தொழுது உய்வினை அடையலாம், எனவே அச்சம் கொள்ள வேண்டாம் என்று இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் முடிக்கின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் உயிர் பொதுவாக அச்சம் கொள்ளும் காரணங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. மரணம் அடையும் தருணத்தில், சிவபெருமானை நினைக்க இயலுமா என்ற அச்சம் முதல் பாடலில் சொல்லப் படுகின்றது. இரண்டாவது பாடலில், என்றேனும் ஒரு நாள் இறக்கப் போகும் தருணத்தில், இயமனது தூதுவர்கள் இழுத்துச் சென்று இழைக்கவிருக்கும் துன்பங்கள் குறித்த அச்சமும், மூன்றாவது பாடலில் உடலின் குற்றங்களாகிய நோய் முதலியன உடலை விட்டு நீங்காது இருக்கும் நிலை குறித்த அச்சமும், எப்போதும் சிற்றின்பத்தையே நினைத்து வாழும் நெஞ்சம் தனது நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றதே என்ற ஏக்கம் நான்காவது பாடலிலும், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நீங்க முடியாமல் இன்னும் எத்தனை பிறவி எடுத்து அல்லலுற வேண்டுமோ என்ற அச்சம் ஐந்தாவது பாடலிலும், பாம்பின் வாயில் இருக்கும் தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு அருகிலிருக்கும் மலரிலிருந்து சொட்டும் தேனுக்கு ஆசைப்படுவது போன்று தன்னைச் சுற்றியுள்ள துன்பங்களை உணராமல் கடைசி நேரத்திலும் இன்பம் அனுபவிக்கத் துடிக்கும் மனதின் நிலையை குறித்த வருத்தம் ஆறாவது பாடலிலும், நாளுக்கொரு சட்டை முதலான ஆடையை மாற்றும் உடல் போன்று ஒவ்வொரு பிறவிக்கும் வேறுவேறு உடலை ஏற்கின்ற உயிரின் தன்மை குறித்த வெறுப்பு உணர்ச்சி ஏழாவது பாடலிலும், எலும்பாகிய கம்புகளும் புலால் மணம் கமழும் தசை ஆகிய மண்சுவர்களும் கொண்டு நிலையற்று விளங்கும் உடலினைப் பேணி பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதால் இறைவன் பற்றிய சிந்தைனையில் செல்ல முடியாத அவல நிலையில் இருக்கும் தன்மை குறித்த பரிதாபம் எட்டாவது பாடலிலும், தந்தை தாய் புத்திரர் தாரம் ஆகிய உறவுகள் பால் ஏற்படும் பாசம் மற்றும் அந்த பாசத்தினால் ஏற்படும் பந்தம் ஆகியவற்றை நீக்க முடியாமல் தவிக்கும் தவிப்பு ஒன்பதாவது பாடலிலும் திருமாலும் பிரமனும் முயற்சி செய்த போதும் காண முடியாத திருவுருவத்தினை காண இயலுமா என்ற ஏக்கம் பத்தாவது பாடலிலும் உணர்த்தப் படுகின்றது. இத்தகைய அச்சங்கள், வருத்தங்கள், ஏக்கங்கள் அனைத்தையும் ஆரூர்ப் பெருமானை தொழுவதால் நீக்கிக் கொள்ளலாம் என்று இந்த பாடல்களில் திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

மேற்கண்ட பதிகத்தின் ஆறாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் (2.79.6) திருஞானசம்பந்தர், தேவர்கள் தங்களது முடிகளைத் தாழ்த்தி பெருமானை வணங்குகின்றார்கள் என்று கூறுகின்றார். இந்த பாடலில், மனித உயிர்கள் பின்னால் விளைகின்ற துன்பத்தினை எண்ணிப் பாராது, அந்த நொடிப் பொழுதினில் தாம் விருப்பத்துடன் எதிர்நோக்கும் சிறு இன்பத்தினை அனுபவிக்கத் துடிக்கும் நிலையில் இருப்பதை ஒரு சிறந்த உதாரணத்துடன் விளக்குகின்றார். ஐந்து தலை பாம்பின் வாயில் உள்ள தேரையின் வாயிலிருக்கும் வண்டு பூக்களில் இருந்து ஒழுகும் தேனைச் சுவைத்து இன்புறலாம் என்று விரும்பும் தன்மைக்கு ஒப்பிடுகின்றார். தான் இருப்பதோ தேரையின் வாய்; அதனால் எந்த நிமிடமும் தேரையால் விழுங்கப்படலாம் என்பதை சிறிதும் உணராது தேனைச் சுவைப்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வண்டு போன்று, நிலையாமை என்ற பாம்பினால் எப்போது வேண்டுமானாலும் விழுங்கப் படலாம் என்பதையும் சிந்தியாது பலவகையான சிற்றின்பங்களை நாடுவதையும், அந்த சிற்றின்பங்களின் விளைவால் நாளை நேரவிருக்கும் துன்பத்தையும் எண்ணிப் பார்க்காமல், தனது புலன்களுக்கு இன்பம் தேடுகின்ற தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போன்று, திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறும் பாடல். ஐம்பாம்பின் வாய்த் தேரை என்று ஐந்து புலன்களின் ஆளுமையில் அகப்பட்டு தவிக்கும் உயிரை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஐம்புலன்களின் ஆளுமையில் சிறைப்பட்டு வாழும் நெஞ்சினைக் கொண்ட உயிர் என்று ஐம்பாம்பின் வாய்த் தேரை வாய் வண்டு என்று உயிரின் தன்மையை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த நிலையிலிருந்து மீள வேண்டும் என்று விரும்பும் உயிர், திருவாரூர்ப் பெருமானைப் பணிந்து வணங்கி வாழ்வினில் உய்வினை அடையலாம் என்று அறிவுரை கூறுகின்றார்.

செடிகொள் நோய் யாக்கை ஐம்பாம்பின் வாய்த் தேரை வாய்ச் சிறு பறவை

கடிகொள் பூந்தேன் சுவைத்து இன்புறலாம் என்று கருதினாயே

முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்து முக்கண்

அடிகள் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

திருநீலகண்டப் பதிகத்தின் இரண்டாவது பாடலில், பெருமானுக்கு நாம் எத்தகைய திருப்பணிகள் செய்யலாம் என்று சொல்லிக் கொடுத்த திருஞானசம்பந்தர் அதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (1.116.6), தவறாது அனுதினமும் மலர்கள் கொண்டுவந்து, அவரது திருமேனியின் மீது தூவி வழிபடுவோம் என்று அறிவுரை கூறுகின்றார். பறித்த மலர் கொண்டு உம்மை புகழ்ந்து பாடுவோம் என்று திருஞானசம்பந்தர் கூறுவது சிந்திக்கத் தக்கது. தற்போது பணம் கொடுத்து மலர்களை வாங்கி இறைவனுக்கு அர்ச்சிப்பது என்பது பழக்கமாக மாறிவிட்டது. ஆனால் இன்றும் ஒரு சில வீடுகளில், அவர்களது இல்லத்தில் வளரும் முல்லை, மல்லிகை, பாரிஜாதம், கருங்குவளை முதலிய மலர்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறு நாமே மலர்களை பறித்து இறைவனுக்கு சமர்ப்பிப்பதே சிறந்த வழிபாடாக கருதப்படுகின்றது. இந்த செய்தியே இங்கே சொல்லப் படுகின்றது. திருவடிப் பிழைத்தல் என்று பெருமானுக்கு அபச்சாரம் ஏதும் நடக்காதபடி நடந்து கொள்வதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மனித மனதின் இயல்பினை மறக்கும் மனம் என்று சுட்டிக் காட்டுவதையும் நாம் உணரலாம். பல வகையான இன்ப துன்பங்களுக்கு இடையே வாழ்வினைக் கழிக்கும் மனிதர்கள், அந்த இன்ப துன்பங்களின் தாக்கத்தை பெரிதாக கருதும் போது, அவர்களது மனதிலிருந்து இறை சிந்தனை பின்னுக்கு தள்ளப் படுதலோ, மறத்தலோ இயற்கையாக நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள். அத்தகைய மனம், எப்போதும் இறைவனை மறக்காது இருக்கும் வண்ணம் செய்வது இடைவிடாத பயற்சியால் மட்டுமே நடைபெறும். அத்தகைய பயிற்சி உடையவர்களாக நாம் விளங்க வேண்டும் என்பதே இங்கே திருஞானசம்பந்தர் வலியுறுத்திக் கூறும் அறிவுரை ஆகும். மனதின் இயற்கை தான் பற்றியதை விட்டு வேறொன்றைப் பற்றி, அதன் மயமாக மாறி, தான் அதுகாறும் பற்றியிருந்த பொருளையும் மறந்து விடுதல். அதனால் தான் மனதினை குரங்குடன் ஒப்பிடுகின்றனர். குரங்கு மரத்தின் ஒரு கிளையினைப் பற்றி இருக்கையில், அடுத்து எந்த கிளையைப் பற்றலாம் என்று மேலும் கீழும் பார்த்த வண்ணம் இருப்பது போன்று, மனமும் தான் ஒரு பொருளை பற்றியிருக்கையில் அடுத்து எங்கே தாவலாம் என்று நினைக்கின்றது. எனவே தான் ஒரே நிலையில் மனதினை நிலை நிறுத்துவது மிகவும் கடினம் என்று கூறுகின்றனர். ஈசனாரின் திருவடியை திருந்தடி என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். திருந்தடி என்ற தொடரினை, திரு உந்து அடி என்று பிரித்து, ஒரு சுவையான விளக்கமும் கொடுக்கப் படுகின்றது. திரு என்றால் செல்வம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நால்வர் பெருமானர்கள் செல்வமாக கருதுவது, பெருமானின் அருளையும்,அனைத்துச் செல்வங்களிலும் சிறந்து, என்றும் அழியாது விளங்கும் முக்திச் செல்வம் என்பதால், அந்த பொருளையே நாமும் கொண்டு, அந்த உயர்ந்த செல்வத்தை நாம் பெறுவதற்கு ஊக்கமளிக்கும் திருவடி என்பதே அந்த சுவையான விளக்கம். உலக மாயைகளிலிருந்து விடுபட்டு உயிர்கள் திருந்த திருவருள் புரியும் அடி என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அடியார்களுக்கு இனிமேல் பிறப்பு ஏற்படாவண்ணம் அவர்களை ஆட்கொண்டு அருள் புரியும் பெருமானே, உலகத்து இன்ப துன்பங்களில் ஆழ்ந்து அவற்றின் தாக்கத்தினால் அவ்வப்போது உன்னை மறந்துவிடும் மனதினை, உலக மாயையின் காரணமாக உன்னை அவ்வப்போது மறந்துவிடும் மனதினை, கடுமையான பயிற்சி மூலம் உயிரினை வற்புறுத்தி, உன்னை எப்போதும் மறக்காமல் இருக்கும் வண்ணம் இருக்கும் நாங்கள், உமக்கு திருத்தொண்டுகள் செய்வதில் ஈடுபட்டு, அத்தகைய திருப்பணிகள் செய்யும் போது உமக்கு சிவாபராதம் ஏதும் ஏற்படாத வண்ணம், தவறுகள் ஏதும் செய்யாத வண்ணம் உம்மை வழிபடுகின்றோம். மேலும் அன்று அலர்ந்த மலர்களை பறித்துக் கொண்டு வந்து உமது திருவடிகளில் தூவி, உம்மை புகழ்ந்தும் போற்றியும் வழிபடுகின்றோம். எனவே, உயிர்களின் சிறப்பினை குறைக்கும் தன்மை உடைய தீவினைகள் தீண்டா வண்ணம் அருள் புரிந்து எம்மை காப்பீராக. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது, நீலகண்டம் என்று அழைக்கப்படும் பெருமானின் மீது, ஆணையிட்டு இதனை நான் சொல்கின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்

பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ் பிழையாத வண்ணம்

பறித்த மலர் கொடு வந்து உமை ஏத்தும் பணி அடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பாடலில் (9.8.2) கருவூர்த் தேவர், பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதற்கு நமக்குத் துணையாக இருப்பவன் இறைவன் ஒருவன் தான் குறிப்பிடுகின்றார். நம்முடன் தோன்றிய நமது ஐந்து பொறிகளே, உயிரின் நோக்கத்திற்கு, பிறவிகளை அறுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்கு பகையாக விளங்குவதை புரிந்து கொண்டு, பொறிகளின் வழியே செல்லாமல், பெருமானே உன்னை அல்லால் எனக்கு யார் துணை என்று கதறி அழுதால், அத்தகைய உயிர்களுக்கு அஞ்சேல் என்று சொல்லி அருள் புரிபவன் இறைவன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கடைசியர்=உழவர்; நெல் வயல்களில் களையாக வளர்ந்த நீலமலர்க் கொடிகள் உழவர்களால் களையப் பட்டு, வரப்புகளில் பரந்து கிடக்கின்றன என்று நிலத்தின் வளத்தை குறிப்பிடுகின்றார். பௌவம்=கடல்; பழனம்=வயல்கள்;

இவ்வரும் பிறவிப் பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த

ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள் செய்வான் கோயில்

கைவரும் பழனம் குழைத்த செஞ்சாலிக் கடைசியர் களைதரு நீலம்

செய் வரம்பு அரும்பு பெரும்பற்றப்புலியூர் திருவளர் திருச்சிற்றம்பலமே

திருப்பல்லாண்டு பதிகத்தின் முதல் பாடலில் (9.29.1) சேந்தனார் பின்னைப் பிறவி அறுக்க நெறி தந்த பித்தர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மன்னுக=என்றும் நிலையாக இருத்தல்; தில்லைச் சிதம்பரம் நிலையாக இருந்தால், பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது உணர்த்தப் படுகின்றது. பொன்னம்பலத்தில் பெருமான் நடனம் ஆடுவது உலகம் நிலைபெற்று வாழ்வதற்கே; தனது திருக்கூத்தினைக் காணும் வாய்ப்பினை பெறுகின்ற அடியார்கள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்தி உலகம் செல்லும் வண்ணம் அருள் புரியும் பெருமான், பித்தன் போன்று எல்லையற்ற வகையில் அடியார்களுக்கு அருள் புரியும் பெருமான், பல்லாண்டு வாழ வேண்டும்;

மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போயகல

பொன்னின் செய் மண்டபத்துள்ளெ புகுந்து புவனி எல்லாம் விளங்க

அன்ன நடை மடவாள் உமை கோன் அடியோமுக்கு அருள் புரிந்து

பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே

திருமந்திரம் நான்காம் தந்திரம் திருவம்பலச் சக்கரம் அதிகாரத்தில், அரன் என்ற பெருமானின் திருநாமத்தை அரகர என்று பல முறை சொல்வதன் மூலம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடையலாம் என்று கூறுகின்றார். ஹரஹர என்ற வடமொழித் தொடர் அரகர என்று தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. ஹர என்றால் பாசங்களை ஒழிப்பவன் என்று பொருள்.

அரகர என்ன அரியதொன்றில்லை

அரகர என்ன அறிகிலர் மாந்தர்

அரகர என்ன அமரரும் ஆவர்

அரகர என்ன அறும் பிறப்பு தானே

திருமந்திரம் எட்டாம் தந்திரம் கேவல சகல சுத்தம் அதிகாரத்தின் பாடலில், இறைவன் எவ்வாறு உயிர்களை பக்குவப் படுத்தி பிறப்பினை அறுக்கின்றான் என்று திருமூலர் கூறுகின்றார். உயிர் இருக்கும் மூன்று நிலைகள் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றன. பதி பசு பாசம் ஆகிய மூன்றும் அனாதி என்பதை நாம் அறிவோம். தொன்று தொட்டே அனைத்து உயிர்களையும் ஆணவ மலம் பிணைந்து நிற்கின்றது. உயிர் இருக்கும் நிலைகளை அவத்தை என்று கூறுகின்றனர். அவஸ்தை என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் அவத்தை. கேவலம் என்றால் தனிமை என்று பொருள். எந்த உடலுடன் இணைக்கப் படாமல் உயிர் ஆணவத்துடன் மட்டும் ஒன்றி இருக்கும் நிலை கேவலாவத்தை என்று அழைக்கப்படும். அத்தகைய உயிரினை கேவலன் என்று திருமூலர் அழைக்கின்றார். இந்த நிலையில் உயிருக்கு உடல் இல்லை; இச்சை இல்லை; அறிவும் இல்லை; உடலும் கருவி கரணங்களும் பொருத்தப் படாத இந்த நிலையில், உயிர் வினைகளை அனுபவிப்பதும் இல்லை, ஈட்டுவதும் இல்லை. அறியாமையே வடிவமாக இருக்கும் உயிரின் இந்த நிலையை இருள் நிலை என்றும் கூறுவார்கள். உயிரின் இந்த நிலை கண்டு இரக்கம் கொள்ளும் இறைவன், தகுந்த உடலுடன் பொருத்தி, கருவி கரணங்களை இணைத்து, உலகினில் பிறக்கச் செய்கின்றான். சகல நிலை என்றால் கலைகளுடன் கூடிய நிலை என்று பொருள். கலை என்றால் மாயா காரியம் என்று பொருள். இவ்வாறு இறைவன் உயிர்களை மாயா காரியத்துடன் இணைப்பதே, உயிர் தன்னுடன் இணைந்துள்ள ஆணவ மலத்தினை, நுகர்ந்து சிறிது சிறிதாக கழித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். இதற்காகத் தான் மாயை கன்மம் என்னும் இரண்டினையும் இறைவன் உயிருடன் கூட்டுவிக்கின்றான். இந்த நிலையை மருள் நிலை என்று கூறுவார்கள். இந்த நிலையில் உயிருக்கு அறிவு உண்டு; வினைகளை நுகர்ந்து கழித்தலும் வினைகளை ஈட்டுதலும் இந்த நிலையில் நடைபெறுகின்றன. அறிவு இருப்பினும், பெரிய பொருளாகிய சிவத்தினை உணராது, சிறிய பொருள்கள் குறித்த அறிவினை வளர்த்துக் கொண்டு, அந்த சிறிய பொருள்களையே பெரிய பொருளாக நினைத்து மயங்கி, அந்த சிறிய பொருள்கள் தரும் சிற்றின்பத்தில் மயங்கி, மீண்டும்மீண்டும் அந்த சிற்றின்பத்தை உயிர் அடைய விழைகின்றது. நாளாவட்டத்தில் இந்த சிற்றின்பங்களைத் தாண்டிய அழியாத பேரின்பம் உள்ளது என்பதை அறியும் உயிர், அந்த பேரின்பத்தை அடையத் துடிக்கின்றது. அப்பொழுது இறைவன் குருவாக வந்து, பதி பசு பாசம் ஆகிய முப்பொருள்களின் உண்மை நிலையை உணர்த்த, உயிர் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களிலிருந்து விடுபட்டு நின்மலனாகிய இறைவனை அடைந்து அழியாத பேரின்பத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றது. இந்த விருப்பமும் இறைவனின் அருளால் விளைகின்றது. மலங்களிலிருந்து முற்றிலும் நீங்கி, உயிர் தூய்மை பெற்று இருக்கும் நிலை சுத்தாவத்தை என்று அழைக்கப் படுகின்றது. இதனை அருள்நிலை என்று கூறுவார்கள். இந்த நிலையில் உயிர், மலங்களின் சேர்க்கை அற்று, இறைவனது அருளையே பற்றுக்கோடாக பற்றி நிற்றலால், இறைவன், இத்தகைய உயிர்களை தன்னிடம் அழைத்துக் கொள்கின்றான். இந்த நிலையில் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிர் விடுதலை பெறுகின்றது. இந்த நிலைகளை விளக்கும் திருமந்திரப் பாடலை நாம் இங்கே காண்போம். வியாபி=மற்றவைகளை தன்னுள் அடக்கியது; வியாப்தி=மற்றொன்றில் அடங்கி இருப்பது. உயிர் ஆணவ மலத்துடன் பிணைந்து, கேவல நிலையில் இருக்கும் தன்மை இவ்வாறு சொல்லப் படுகின்றது. அந்த உயிரினை கேவல நிலையில் இருந்து விடுவித்து, தகுந்த உடலுடன் கூட்டி, கன்மம் மற்றும் மாயா மலங்களுடன் இணைக்கும் போது, பிறப்பெடுக்கும் உயிர் ஐந்து மலங்களின் சேர்க்கையால், இன்ப துன்பங்களை நுகர்கின்றது. இந்த தன்மையைத் தான் கேவலனை சகலத்திட்டு என்ற தொடர் மூலம் திருமூலர் உணர்த்துகின்றார். படிப்படியாக பக்குவம் அடையும் உயிரினுக்கு இறைவன் அருள் புரிந்து சுத்தாவத்தை நிலைக்கு எடுத்துச் செல்லுதலை பாடலின் கடை அடியில் குறிப்பிடுகின்றார். பொதுவாக ஆணவம் கன்மம் மாயை என்று மூன்று மலங்களாக சொன்னாலும், மாயா மலத்தினை மாயாமலம், மாயேயம், திரோதானம் என்று மூன்றாக பிரித்து, ஆணவம் மற்றும் கன்ம மலங்களுடன் கூட்டி ஐந்து மலங்களும் என்று சொல்வதும் வழக்கத்தில் உள்ளது.

அனாதி பசு வியாத்தியாகும் இவனை

அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி

அனாதியில் கேவலன் அச்சகலத்திட்டு

அனாதி பிறப்பறச் சுத்தத்துள் ஆக்குமே

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் சூக்கும பஞ்சாக்கரம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர், சிவாயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தை முறையாக தியானித்தால் நாம் நமது பிறப்பினை அறுத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றார். பவம்=பாவம்; அவமதி=அறியாமை; நமது தலைக்கு ஒரு சாண் மேலே உள்ள தகராகாசத்தில் சிவ எனப்படும் நாமத்தினை ஏற்றி வைத்து தியானம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். தகராகாசம் தான், ய என்ற எழுத்தால் உணர்த்தப்படும் ஆன்மாவின் சிந்தையாகும் சிவ என்ற மந்திரத்தை சிந்தையில் நிறுத்தி, நம என்று நாவினில் சொல்லி போற்றுதல், நாம் நமது பிறப்பினை அறுத்துக் கொள்வதற்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றார். .

நமவென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்

சிவவென்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற

பவமது தீரும் பரிசுமது அற்றால்

அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றே

பெருமானைத் தொழுவதால் நாம் கழிக்கவிருக்கும் வினைகள் யாது என்று நமக்கு எழும் ஐயப்பாட்டினைத் தீர்க்கும் பொருட்டு, பண்டு செய்த வல்வினை என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்; அதாவது பிராரத்த வினைகள் மற்றும் சஞ்சித வினைகள் அனைத்தும் பெருமானை குறித்து நாம் செய்யும் வழிபாடுகள் நீக்கும் என்று கூறுகின்றார். பெருமானை வழிபட்டு பக்குவம் அடைந்த அடியார்கள், இன்பம் துன்பம் இரண்டையும் ஒன்றாக கருதி எதிர்கொள்ளும் பக்குவம் உடையவர்களாக இருப்பார்கள் என்பதால், அவர்களுக்கு ஆகாமிய வினைகள் சேர்வதில்லை.

பொழிப்புரை:

பழைய பல பிறவிகளில் செய்த செயல்களால் விளைந்த வினைகள் மிகுந்த வலிமையுடன் உங்களது உயிரினைப் பற்றியுள்ளது. அந்த வினைகளின் பிடியிலிருந்து உங்களது உயிர் விடுதலை பெறுவதற்கு உள்ள வழியினை நான் உரைக்கின்றேன்; விரைந்து எழுவீர்களாக. மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியின் வேகத்தினை தடுத்துத் தனது சடையினில் தேக்கிய வல்லமை உடையவனும், உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து மகிழ்ந்த மனதினை உடையவனும் ஆகிய இறைவனை, கோடிகா தலம் சென்றடைந்து வணங்கித் தொழுவீர்களாக. அவ்வாறு தொழுதால், உம்முடன் உறுதியாக தொடர்பு கொண்டிருக்கும் வினைகள் உம்மை விட்டு விலகிவிடும்.

பாடல் 5:

இன்று நன்று நாளை (2.99) பாடல் 4 தொடர்ச்சி மற்றும் பாடல் 5 (திதே 0510)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0511)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0512)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0513)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 5 தொடர்ச்சி (திதே 0514)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 5 தொடர்ச்சி மற்றும் 6 (திதே 0515)

முன்னம் நீர் செய்த பாவம் தான் மூர்த்தி பாதம் சிந்தியாது

இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ

பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான்

கொல் நவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே

விளக்கம்:

வேல்=சூலம்; எவரேனும் இந்த பிறவியில் சிவபெருமானைத் தொழாமல் வீணாக தங்களது காலத்தினை கழித்தால், அந்த நிலைக்கு காரணம் யாது என்பதை திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். சென்ற பிறவிகளில் அவர்கள் செய்த பாவச் செயல்கள் தாம், அவர்கள் இறைவனைத் தொழாது இருக்கும் வண்ணம் தடுக்கின்றது என்று கூறுகின்றார். அவ்வாறு இறைவனைத் தொழாமல் இருப்பதன் விளைவாக, அவர்களது உயிர் துன்பங்களில் மூழ்கித் தவிக்கின்றது என்றும் கூறுகின்றார்.

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும், நம் பொருள் நம் மக்கள் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும், திருஞானசம்பந்தர், காழி நகரம் சென்று அடைந்து, சிவபெருமானை பணிந்து வணங்கி, நலன்கள் பல அடைவீர் என்று அறிவுரை சொல்கின்றார். நமது பொருள், நமது செல்வம் என்ற பற்றின் காரணமாக பல துன்பங்களில் ஆழ்ந்து மீள முடியாத நிலை வருவதன் முன்னமே காழி பெருமானை பணிந்து வணங்க வேண்டும் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலிலும் பல பாவங்களை செய்தும் காழி பெருமான் பால் பக்தி ஏதுமின்றியும் காலத்தைக் கழித்து இறப்பதன் முன்னர் விழித்துக் கொள்ள வேண்டும் என்று இரண்டாவது பாடலிலும், உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க ஒரு கூறையும் இல்லாத நிலை அடைந்து, நமது சுற்றத்தார் அனைவரும் விலகிச் செல்லும் நிலை வரும் முன்னர் காழி சென்றடைய வேண்டும் என்று மூன்றாவது பாடலிலும், பொருள் உதவி வேண்டி நமது நண்பரை அணுக, அவர் நீவிர் மறுநாள் நண்பகலில் வருக என்று அலக்கழைக்கும் நிலை வருவதன் முன்னமே காழி சென்றடைய வேண்டும் என்று நான்காவது பாடலிலும், கண் பார்வை குறைந்தும் உடலை பல நோய்கள் பற்றி நம்மை வருத்தி சிறிது சிறிதாக உடல் குன்றும் நிலை அடைவதன் முன்னர் காழி சென்றடைய வேண்டும் என்று ஐந்தாவது பாடலிலும், துன்பம் நிறைந்த வாழ்க்கையினால் நாம் எடுத்த பிறவியே வீண் என்று நினைக்கும் நிலை நம்மை வந்தடைவதன் முன்னர் காழி சென்றடைய வேண்டும் என்று ஆறாவது பாடலிலும், மேல் மூச்சு இரைக்க கோழை தொண்டையை அடைப்பதன் முன்னர் காழி செல்ல வேண்டும் என்று எட்டாவது பாடலிலும், எந்நேரமும் சிற்றின்பத்தை நாடி இருந்ததால் காலும் கையும் தளர்ந்து ஏதும் செய்ய முடியாமல் வருந்தும் தன்மை வரும் முன்னர் காழி செல்ல வேண்டும் என்று ஒன்பதாவது பாடலிலும், நீண்ட நாட்களாக நோய்வாய்ப் பட்டு இருத்தலால் மனைவி மற்றும் மக்கள் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதன் முன்னர் காழி செல்லவேண்டும் என்று பத்தாவது பாடலிலும் நமக்கு அறிவுரை கூறுகின்றார். மேலே குறிப்பிடப்படும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர், நமது உடலும் மனமும் இறை வழிபாட்டினில் ஈடுபடுவதற்கு தேவையான ஆற்றல் உடையதாக இருக்காது என்பதால், அந்த பரிதாப நிலை ஏற்படும் முன்னமே இறைவனை வழிபட வேண்டும் என்று பொருள் கொள்வது ஒரு வகை. மனம் ஒன்றி இறைவனை வழிபடுவதால், அத்தகைய நிலைகள் நமக்கு ஏற்படாத வண்ணம் இறைவன் அருள் புரிவார் என்று உணர்த்துவதாக பொருள் கொள்வது சிறப்பு.

மேற்குறித்த பதிகத்தின் ஆறாவது பாடலை (2.97.6) நாம் இங்கே சிந்திக்கலாம். தவறு, பொய் என்ற பொருள் தரும் அபத்தம் என்ற வடமொழிச் சொல் அவத்தம் என்று தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது, இயங்கு-நடத்தல்; பிணக்கு=மாறுபாடு; துன்பமயமான வாழ்க்கையை நடத்தி, பெறுவதற்கு அரிய மனித வாழ்க்கையை வீணாக நடத்தி, உலக மாயைகளில் முரண்பாடுகளில் ஆழ்ந்து கிடக்கும் உலகத்தவர்களே, நீங்கள் எழுந்து புறப்பட்டு சீர்காழி தலத்தினை அடைந்து இறைவனை வழிபட்டு உய்வினை அடைவீர்களாக. நமக்கு அருள் புரியும் நோக்கத்துடன், நாம் அவனுக்கு பிச்சையாக இடும் மும்மலங்களையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, பலி கேட்டு திரியும் இறைவனிடம் நமது மலங்களை சமர்ப்பித்து விட்டு உய்வினை அடைய வேண்டும் என்று இந்த பாடல் மூலம் திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். பல் இல் வெண்தலை என்று பறிக்கப்பட்ட பிரமனின் தலையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர்

எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழுமினோ

பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான்

கொல்லை ஏறது ஏறுவான் கோலக் காழி சேர்மினே

திருநீலகண்டப் பதிகத்தின் எட்டாவது பாடலில் (1.116.8) திருஞானசம்பந்தர், மனம் உருகி பெருமான் பால் அன்பு வைத்தவர்களாக, அவரது திருவடியில் மலர்களைத் தூவி வழிபடும் அடியார்களை தீயவினைகள் தீண்டாத வண்ணம் பெருமான் அருள் புரிவார் என்று அறிவுரை கூறுகின்றார். கருவை=பழைய வினைகளின் தாக்கத்தால் இந்த பிறவியில் எதிர்கொள்ள நேரிடும் இன்ப துன்பங்களை அனுபவிக்கும் போது உயிர்கள் சேர்த்துக் கொள்ளும் ஆகாமிய வினைகள்; இதற்கு வேறொரு விதமாக ஒரு சுவையான விளக்கம் ஆங்கீரச சர்மா அவர்களால் அளிக்கப் படுகின்றது. தாயின் வயிற்றினில் கருவாக உருவெடுத்து வளரும் உயிர், சொல்ல ஒண்ணாத துயரங்களை அனுபவிக்கும் போது, பெருமானே நான் கருவினில் அனுபவித்த துன்பங்களை இனிமேல் ஒரு முறையேனும் அனுபவிக்கலாகாது. எனவே கருவிலிருந்து வெளிப்பட்டு பிறந்த பின்னர், மீண்டும் கருவில் புகாத வண்ணம் இருப்பதற்காக, உன்னை நினைத்து வாழ்ந்து பிறவிச் சுழலிலிருந்து விடுதலை பெறுவேன் என்று உறுதி பூணும்; ஆனால் நிலவுலகில் பிறந்த பின்னர், அனைத்தையும் மறந்து விட்டு உலகப் பொருட்களின் மீது புலன்கள் வைத்துள்ள ஆசையினை நிறைவேற்றுவதையே தனது கடமையாகக் கொண்டு வாழும் என்று பல நூல்கள் சொல்கின்றன என்று கூறுகின்றார். திருவிலி=செல்வம் இல்லாத வினைகள், செல்வத்தை அகற்றும் வினைகள். இங்கே செல்வம் என்று பெருமான் பால் உயிர்கள் வைத்திருக்கும் அன்பினை குறிப்பிடுகின்றார். பெருமான் பால் வைத்துள்ள அன்பின் காரணமாக உயிர்கள் பெறுகின்ற சிறந்த செல்வமாகிய முக்திச் செல்வம் என்று பொருள் கொள்வதும் சிறப்பு. செருவில் என்ற சொல்லினை செரு இல் என்று இரண்டு சொற்களாக பிரித்து, அரக்கன் இராவணனுடன் பகை ஏதும் பெருமானுக்கு இல்லை என்றாலும், முறையற்ற செயலை, கயிலை மலையினை பேர்த்து எடுக்க அவன் முயற்சி செய்ததை கண்டித்து, அவனை வருத்தினார் என்று திருஞானசம்பந்தர் கூறுவதாகவும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. செருவில் அரக்கன் என்பதற்கு, இராவணன் கொண்டிருந்த வலிமை காரணமாக, எவரும் அவனுடன் போர் செய்ய அஞ்சியவர்களாக பயந்து நின்ற நிலையில், அவனுக்கு அனைவரும் பணிந்தார்கள் என்றும், அதனால் தன்னை எதிர்ப்பார்கள் எவரும் இன்மையின் போர் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல், செருக்குடன் திரிந்த அரக்கன் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. அன்னையின் கருவில் இருக்கும் உயிர், அந்த கருவினில் தான் இருக்கும் போது தனக்கு ஏற்படும் பலவிதமான துன்பங்களை நினைத்து, இனிமேல் கருவில் புகாத வண்ணம் தான் வாழவேண்டும் என்று உறுதி பூண்டாலும், கருவிலிருந்து வெளியே வந்த பின்னர், தனது புலன்கள் அழைத்துச் செல்லும் வழியே நடத்தும் வாழ்க்கையைக் கடிந்த அடியார்களாக நாங்கள், உனது திருவடிகளை நினைத்து உருகி,உனது திருப்பாதங்களில் மலர்கள் தூவி உம்மைப் பலவிதமாக புகழ்ந்து வாழ்கின்றோம். தனது வலிமை மீது மிகுந்த செருக்கு கொண்டு, கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தைத் தொடரலாம் என்ற நினைப்புடன், கயிலாய மலையினைப் பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் உடலினை நெருக்கி பின்னர் அவனுக்கு அருள் புரிந்த பெருமையை உடையவரே, உம்மை குறித்து நாங்கள் செய்யும் வழிபாடுகளின் பலனாக, உன்பால் நாங்கள் கொண்டுள்ள அன்பாகிய செல்வத்தை ஒடுக்கும் வண்ணம் செயல்படும் தீயவினைகள் எம்மை தீண்டா. வண்ணம் அருள் புரிந்து எம்மை காப்பாற்றுவீராக. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு, நீலகண்டம் என்று அழைக்கப்படும் பெருமானின் மீது ஆணையிட்டு, இதனை நான் சொல்கின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே

உருகி மலர் கொடு வந்து உமை ஏத்துதும் நாம் அடியோம்

செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே

திருவிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.125.4) திருஞானசம்பந்தர், சிவபுரத்து பெருமானைத் தொழும் அடியார்கள் மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மையை வீசியெறிந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் மூன்று பாடல்களில் சிவபுரம் தலத்தினை தியானிக்கும் அடியார்கள் இம்மையில் இடர்கள் நீங்கி மறுமையில் உயர்கதி பெறுவார்கள் என்றும், சிவபுரம் சென்றடைந்து தொழும் அடியார்கள் உயர்கதி அடைவார்கள் என்றும் சிவபுர நகரத்தின் புகழினை எடுத்துரைக்கும் அடியார்கள் உயர்கதி அடைவார்கள் என்றும் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில், இந்த தலத்து இறைவனைத் தொழுகின்ற அடியார்கள் அடையவிருக்கும் நன்மையை கூறுகின்றார். அடுதல் என்றால் கொல்லுதல் என்று பொருள். அடுபிணி=ஆட்கொல்லி நோய்கள்; தணிவு=அடக்கம்; அடக்கம் உடைய மக்கள் வாழும் சிவபுரம் நகரினில் பொருந்தியவனும் கருநிறம் உடைய மாணிக்கம் பதித்தது போன்ற கழுத்தினை உடையவனும் ஆகிய சிவபெருமானின் இணையான திருவடிகளைத் தொடர்ந்து தொழும் அடியார்கள், தாங்கள் எடுத்த காரியத்தினை நிறைவாக முடிக்கும் துணிவு உடையவர்களாகவும், திருநீறு பூசும் அடியார்களாகவும், உடலை மிகுதியாக வருத்தும் ஆட்கொல்லி நோய்கள் ஏதும் சென்றடையாத தன்மை உடையவர்களாகவும், மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மையை வீசியெறிந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெரும் ஆற்றல் உடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை

துணி உடையவர் சுடுபொடியினர் உடலடு

பிணி அடைவிலர் பிறவியும் அற விசிறுவர்

தணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய

மணி மிடறனது அடியிணை தொழும் அவரே

நல்வினைகளையும் தீவினைகளையும் நுகர்ந்து கழிக்க வேண்டிய நிலையில் அனைத்து உயிர்களும் உள்ளன. நல்வினைகளால் இன்பங்களும் தீவினைகளால் துன்பங்களும் துயரங்களும் உயிர்களுக்கு உண்டாகின்றன. இந்த பிறப்பினில் நமது தீவினைகளால் ஏற்படும் துயரங்களைத் தீர்த்துக் கொண்டு, மறுமையில் பிறப்பையே அடியோடு நாம் தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு மருந்தாக பயன்படுபவன் பெருமான் ஒருவன் தான் என்று புள்ளிருக்குவேளூர் தலத்து பதிகத்தின் கடைப் பாடலில் (2.43.11) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். செடியாய=குணம் இல்லாத; கடி=நறுமணம்; கடியார்ந்த=நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த; சோம்பியிராமல் தேவாரப் பாடல்களை சொல்லும் வல்லமை உடைய அடியார்களுக்கு மறுபிறவி இல்லாத வண்ணம் பெருமான் அருள் புரிவான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பொடியாடி=திருநீற்றினை உடல் முழுதும் பூசிக் கொண்டவன், திருநீற்றில் நீராடியது போன்று உடல் முழுதும் திருநீற்றின் வண்ணமும் துகள்களும் உடைய பெருமானின் திருக்கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது.

செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கொர் மருந்தாவான்

பொடியாடிக்கு அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்

கடியார்ந்த பொழில் காழி கவுணியன் சம்பந்தன் சொல்

மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.98.10) பெருமானைத் தொழும் அடியார்கள், அதற்கு பரிசாக தங்களது பிறவிப்பிணி தீர்க்கப் பெறுவார்கள் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் துத்தம் முதலிய இசைக் குறிப்புகள் (சுருதி) இணைந்த பண்கள் பாடும் வண்டுகள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தத்துவம்=உயர்ந்த கொள்கைகள்; உயர்ந்த கொள்கைகள் ஏதுமற்ற சமண மதம் என்று இங்கே கூறுகின்றார். மறுபிறப்பு, பிறப்பிறப்புச் சுழற்சி, முக்தி நிலை ஆகிய கொள்கைகளில் நம்பிக்கை அற்ற சமண மதம் என்பதால், தத்துவங்கள் இலாத சமண மதம் என்று கூறுகின்றார். பெற்றி=தன்மை; பித்தர் பித்தனாகிய பெருமானைத் தொழுகின்ற அடியார்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற தன்மை உடையவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார். பித்தர் என்று பெருமான் பால் எல்லையற்ற அன்பு உடையவர்களாக, தங்களது வாழ்க்கையில் வேறு எந்த விதமான பற்றும் கொள்ளாமல், பெருமானையே எப்போதும் நினைத்து வாழும் அடியார்களை குறிப்பிடுகின்றார். பித்தர் பித்தன் என்ற தொடர் மூலம்,அத்தகைய அடியார்கள் பால், பெருமானும் எல்லையற்ற அன்பு கொண்டவனாக, பித்தன் போன்று நடந்து கொள்வான் என்று உணர்த்துகின்றார்.

புத்தர் தத்துவம் இலாச் சமண் உரைத்த பொய் தனை

உத்தமம் எனக் கொளாது உகந்து எழுந்து வண்டினம்

துத்த நின்று பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம்

பித்தர் பித்தனைத் தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே

ஊனமுடைய பிறவியை அறுக்க வேண்டும் என்று விரும்பும் அடியார்கள், கருக்குடி தலத்து இறைவனின் திருப்பாதங்களை வாழ்த்தி வணங்க வேண்டும் என்று திருஞான சம்பந்தர் உணர்த்தும் பாடல் (3.21.4) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஊனுடைப் பிறவி=உடலுடன் கூடிய பிறவி; மீண்டும்மீண்டும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு எண்ணற்ற பிறவிகள் எடுக்கும் தன்மை; கான்=காடு; வைகல்=தினமும்; பிறவியின் இழிந்த தன்மை இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. ஆதியாகவும் அந்தமாகவும் இருக்கும் பெருமான் என்பதால், அவரே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விலகியவர் என்பதையும் நாம் புரிந்து கொள்கின்றோம். பிரமன் இந்திரன் திருமால் உட்பட அனைத்துத் தேவர்களும் இறந்தும் மீண்டும் பிறப்பு எடுப்பதாகவும் இருப்பதால், அவர்களால் எவ்வாறு மற்றவரின் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுக்க முடியும். எனவே தான் ஊனுடைப் பிறவியை அறுக்க விரும்பும் உயிர்கள் நாட வேண்டியது சிவபெருமானின் அருளை என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மீண்டும்மீண்டும் ஏதோ ஒரு உடலுடன் கூடி பிறப்பெடுத்து தவிக்கும் மாந்தர்களே, நீங்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால், சுடுகாட்டில் தொடர்ந்து நடமாடுபவனும் கருக்குடித் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருக்கோயிலை வணங்கியும், தினமும் வானவர்களால் தொழப்படும் பெருமானது திருப்பாதங்களையும் வாழ்த்துவீர்களாக. அவ்வாறு வாழ்த்துவதன் மூலம், இம்மையில் சிறப்பாக வாழ்ந்து மறுமையில் முக்தி நிலை அடைந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடையலாம்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்

கானிடை ஆடலான் பயில் கருக்குடிக்

கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்

வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்மினே

இம்மையில் நோய் தீர்க்கும் மந்திரமாகவும் மருந்தாகவும் செயல்படும் பெருமானின் திருநாமம், மறுமையில் நமது உயிர் நன்னெறி அடைவதற்கும் உதவும் என்று திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் திருஞானசம்பந்தர் (3.92.1) கூறுகின்றார். மேலும் மழபாடி மேய மருந்து என்றும் வலஞ்சுழி மருந்து என்றும், மாத்தூர் மேய மருந்து என்றும், தேவர்கள் தேடும் மருந்து என்றும், மணஞ்சேரி மருந்து என்றும், பல பாடல்களில் தேவார ஆசிரியர்கள் பெருமானின் பிணி தீர்க்கும் தன்மையை குறிப்பிடுகின்றனர். புறவு=தோட்டம்;

மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறி அவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே

பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்

செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே

பெருமானின் திருவேடங்கள் மருந்தாகவும் மந்திரமாகவும் செயல்படும் தன்மையை திருஞான சம்பந்தர் திருந்துதேவன்குடி தலத்தின் மீது அருளியபதிகத்தின் பாடலில் (3.25.1) குறிப்பிடுகின்றார். திருந்துதேவன்குடி தலத்து பெருமானது அடையாளங்களாகிய திருநீறு உருத்திராக்கம் மற்றும் சடைமுடிஆகியவற்றை கண்ணால் கண்டாலும் அல்லது மனதினால் நினைத்தாலும் ஏற்படும் பயன் யாதென்பதை இங்கே கூறுகின்றேன்; உலகத்தவரேகேட்பீர்களாக, பெருமானின் இந்த அடையாளங்கள், தங்களது நோய்களை தீர்த்துக் கொள்ள விரும்பும் அடியார்களுக்கு மருந்தாகவும், ஐந்தெழுத்துமந்திரம், வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாடல்கள் ஆகியவற்றை சொல்ல விரும்பும் அடியார்களுக்கு அத்தகைய மந்திரங்களாகவும், சிவபுண்ணியங்கள் செய்ய விரும்பும் அடியார்களுக்கு, அத்தகைய புண்ணியங்கள் அளிக்கும் பயன்களாகவும் விளங்குகின்றன, இத்தகைய வேடங்களை தனதுஅடையாளமாகக் கொண்டுள்ள இறைவன், தேவதேவன் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் தலம் திருந்துதேவன்குடி என்பதாகும். இந்த பெருமானின்திருவேடங்களை, அரிய தவம் புரியும் முனிவர்கள் தியானித்து தொழுகின்றனர், என்பதே பாடலின் பொழிப்புரை.

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை

புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை

திருந்துதேவன்குடித் தேவர் தேவு எய்திய

அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே

இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், திருஞானசம்பந்தர், பெருமானின் திருவேடங்கள் பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன என்று கூறுகின்றார். செரு=நெருங்கி வளர்ந்த, மரு=மருத மரம்; மருத மரத்து இலைகள் துவர் நிற சாயத்தை தயாரிக்க பயன்படுவதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தேர்=தேரர் என்ற சொல்லின் சுருக்கம், புத்தர்கள் என்று பொருள்; மருவுதல்=நெருங்குதல்; திரு=அழகு; திரு என்ற சொல்லுக்கு திருமகள் என்று பொருள் கொண்டு திருமகள் வீற்றிருக்கும் தாமரை மலர்கள் நிறைந்த பொய்கை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மற்றவர் அருகே வந்து நெருங்குவதற்கு தயங்கும் வண்ணம் சமணர்களின் உடல் நாற்றம் வீசும் வண்ணம் இருந்தது என்று இங்கே திருஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். அந்நாளைய சமணர்கள், காலையில் எழுந்தவுடன் பற்களை துலக்கி சுத்தம் செய்வதை தவிர்த்தனர்; நீராடுவதையும் தவிர்த்து அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று கூறுவார்கள். எனவே உடலும் வாயும் துர்நாற்றத்துடன் விளங்கும் அவர்களை நெருங்க ஏனையோர் தயங்கியது இயற்கை தானே. தொழும்பர்=அடிமைகள், இழிந்தவர்கள்; இங்கே இழிந்தவர்கள் என்ற பொருள் மிகவும் பொருத்தமானது. இந்த தலத்தில் உள்ள திருக்கோயில் மூன்று புறமும் குளத்தால் சூழப்பட்டுள்ள தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. அருமருந்து=கிடைத்தற்கு அரிய மருந்து; பெருமானின் கருணை மற்றும் அவனது சின்னங்களே பிறவிப் பிணியை தீர்க்கும் வல்லமை வாய்ந்தது என்பதால் அரிய மருந்து என்று குறிப்பிடுகின்றார். இங்கே உள்ள அம்பிகையின் திருநாமம், அருமருந்து நாயகி என்பதையும் குறிப்பால் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம்.

செருமரு தண்டுவர்த் தேர் அமண் ஆதர்கள்

உரு மருவப்படாத் தொழும்பர் தம் உரை கொளேல்

திருமருவும் பொய்கை சூழ்ந்த தேவன் குடி

அருமருந்து ஆவன அடிகள் வேடங்களே

சிவபெருமானின் புகழினை உணர்த்தும் தேவார, திருவாசகப் பாடல்களை, இனிய இசையுடன் பாடி தொழுகின்ற அடியார்கள், மீண்டும் பிறந்து வருந்தும் அவலத்தைத் தவிர்ப்பார்கள் என்று பரிதிநியமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.104.11) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பையரவம்=படமெடுத்து ஆடும் பாம்பு; விரிந்த காந்தள் மலர்களின் கொத்து படமெடுத்து ஆடும் பாம்பினை ஒத்து இருப்பதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பாம்பின் படம் விரிந்த மலரையும், மலரைத் தாங்கி இருக்கும் தண்டு பாம்பின் உடலையும் ஒக்கும். விம்மு=தழைத்த; பொய்யிலி= பெருமானின் திருநாமங்களில் ஒன்று. பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் அப்பர் பிரான் இந்த திருநாமத்தை குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களும் ஏதோ ஒரு நாள், அந்நாள் வரையில் தாங்கள் தங்கியிருந்த உடலை விட்டு பிரிந்தாலும் அதற்கு மாறாக இறைவன் இருக்கும் நிலை காரணமாக, என்றும் உண்மையாக, என்றுமுள்ள பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம் இந்த திருநாமம் அமைந்துள்ளது. பொய்யிலி மாலை=பொய்யிலியாக இருக்கும் சிவபெருமானைப் போற்றும் பாடல்கள் கொண்ட பதிகம்; பொய்யிலி என்ற சொல்லினை மாலைக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாகக் கொண்டு, என்றும் பொருந்தும் வகையில் இயற்றப் பட்ட பதிகம் என்று பொருள் கொள்வதும் சிறப்பே.

பையரவம் விரி காந்தள் விம்மு பரிதிந் நியமத்துத்

தையலார் பாகம் அமர்ந்தவனைத் தமிழ் ஞான சம்பந்தன்

பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்து ஏத்த

ஐயுறவில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே

உயிர்களின் விருப்பம் பிறவிப் பிணியினை தீர்த்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்று மிகவும் அதிகமாக திருவாசகப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. திருச்சதகம் பாடல் ஒன்றினில் (8.5.16) மணிவாசக அடிகளார், பாழான நிலைக்கு நம்மைத் தள்ளும் பிறப்பிறப்பு தன்மையை அறுத்துக் கொள்வதற்காக தான் பெருமானைப் புகழ்ந்து பாடி வணங்குவதாக குறிப்பிடுகின்றார். மதுகரம்= வண்டினங்கள்; தார்=மாலை தாரோய்=மாலை அணிந்தவன்; பாழ்த்த=பயன் ஏதும் இல்லாத; தேவர்களைப் போன்று, தாங்கள் உயரவேண்டும் என்றும் மற்றவர்கள் தம்மைத் தொழவேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமானைத் தொழாமல், நாம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக இறைவனை வணங்க வேண்டும் என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார்.

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின் பால்

தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டி

சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்

பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே

திருவாசகம் திருச்சதகம் பதிகத்தின் பாடலில் (8.5.51) மணிவாசக அடிகளார் பெருமானை பிறவி நாசன் என்று குறிப்பிடுகின்றார். நன்றி பாராட்டுதல் நாயின் சிறந்த குணமாக கருதப் படுகின்றது. அந்த குணமும் இல்லாதவன் தான் என்பதை உணர்த்தும் வண்ணம் பொல்லா நாயேன் என்று குறிப்பிடுகின்றார். யாதும் ஒன்று அல்லா=எந்தவிதமான நல்ல குணமும் இல்லாத; நீசன்= இழிந்தவன்; பெருமான் தன்னை ஆண்டுகொண்டதை மனதில் நிறுத்தி, அவரை நினைக்காமல் தான் இருந்ததாக அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார்.

ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என் பிறவி

நாசனே நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாயான

நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே

தேசனே அம்பலவனே செய்வது ஒன்றும் அறியேனே

தன்னுடன் பிணைந்திருந்த வலிமை வாய்ந்த வினைகளை சுட்டெரித்த பெருமான் என்று நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் ஒரு பாடலில் குறிப்பிடும் மணிவாசக அடிகளார், பெரிய மரமாக வளர்ந்துள்ள தனது பிறப்பிறப்புச் சுழற்சியை வேரோடும் களைந்து பெருமான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார்.

மடங்க என் வல்வினைக் காட்டை நின் மன்னருள் தீக்கொளுவும்

விடங்க என்றன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வே

ரொடும் களைந்து ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே

கொடுங்கரிக் குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே

பிறவிப் பிணியில் முடங்கி வருந்தும் மனிதர்களுக்கு மருந்தாக செயல்படுவது இறைவனே என்று நீத்தல் விண்ணப்பத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். தன்னை அடிமையாக ஆட்கொண்ட சிவபெருமானுக்குத் தன்னை விற்பதற்கும், அடமானம் வைப்பதற்கும் உரிமை உள்ளது என்று அடிகளார் கூறுவதை இந்த பாடலில் உணரலாம். ஒற்றி=அடமானம். விருந்தினன் என்றால் புதிதாக வந்தவர் என்று பொருள். சமீபமாக, அதாவது சில நாட்களுக்கு முன்னர் தான், சிவபிரானுக்கு அடிமையாக வந்தவர் தான் என்பதை உணர்த்தும் பொருட்டு, பழைய அடியார்களிலிருந்து தான் மாறுபட்டவன் என்பதை உணர்த்தும் பொருட்டு, விருந்தினன் என்று மணிவாசகர் தன்னை குறிப்பிடுகின்றார். தான் சிவபெருமானுக்கு அடிமையாக இருப்பதற்கு உடன்படுவதாகவும், தனது தகுதியை ஆராய்ந்து, சிவபெருமான் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்றும், தான் அத்தகைய பக்குவம் இன்னும் அடையவில்லை என்றால் சிறிது காலம் கழித்து ஆட்கொள்ளக் கருதி எவரிடமேனும் அடமானம் வைக்கலாம் என்றும், சிறிதும் தகுதி இல்லை என்றால் விற்றுவிடலாம் என்றும் பெருமானுக்கு அனுமதி வழங்குவது போன்று அமைந்த பாடல். விற்றுவிடலாம் என்று கூறினாலும், நஞ்சையே அமுதமாக மாற்றும் ஆற்றல் படைத்த பெருமானுக்கு, தனது தகுதியையும் மாற்றும் ஆற்றல் உடையது என்பதால் தன்னை விட்டு விடக் கூடாது என்று இறைஞ்சுவதையும் நாம் இந்த பாடலில் காணலாம்.

இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால்

விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா

அருந்தினனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே

மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே

திருவாசகம் திருவெம்பாவை பதிகத்தின் பாடலில் (8.7.12) மணிவாசக அடிகளார் பெருமானை, ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் என்று குறிப்பிடுகின்றார். ஆர்த்த=கட்டிய; நாம் தப்பிக்க முடியாத வண்ணம் நம்மைப் பிணைத்துள்ள பிறவிகள் என்று அடிகளார் இங்கே பிறவிகளின் தன்மையை குறிப்பிடுகின்றார். மேலும் பிறவிகள் நம்மை மேன்மேலும் துயரத்தில் தான் ஆழ்த்துகின்றன என்பதையும் உணர்த்துகின்றார். புண்ணிய நதிகளில் குளிக்கும் மனிதர்களின் பாவங்கள் களையப் படுவது போன்று, நம்முடன் பிணைந்துள்ள பிறவிகளும், பெருமானின் நினைவு என்ற தீர்த்தத்தில் நாம் முங்கி நீராடும் போது களையப் படுகின்றன என்று இந்த பாடலில் அடிகளார் கூறுகின்றார். ஐந்து தொழில்களையும் மிகவும் விளையாட்டாக செய்யும் பெருமானின் திறமையைப் புகழ்ந்து பேசியவாறு நாம் நீராடுவோம் என்று நீராடச் சென்ற பெண்கள் சொல்லுவதாக அமைந்த பாடல்.

ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார்கலைகள்

ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்

திருவாசகம் திருவம்மானை பதிகத்தின் பாடலில் (8.8.1) மணிவாசக அடிகளார், பெருமானை, எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்ளும் கருணையன் என்று அழைக்கின்றார். இடந்தும்=கீழே தோண்டிக் கொண்டு வெகு தூரம் சென்ற பின்னரும்; பொங்கு=ஒளி வீசும்; எந்தரமும்=எந்த விதமான தகுதியும் இல்லாத மனிதர்களையும்; பாண்டிய நாடடு அமைச்சர் என்ற முறையில் குதிரை வாங்குவதற்காக தொண்டித் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தன்னை, காந்தம் இரும்பினை இழுப்பது போன்று, திருப்பெருந்துறைக்கு மணிவாசக அடிகளாரை வரவழைத்த பெருமானின் கருணைச் செயல் இங்கே குறிப்பிடப் படுகின்றது. பெருமானின் அழைப்பு, அடிகளாரின் மனதில் கேட்டமையால் தான், அவர் தொண்டித் துறைமுகம் செல்லாமல்,திருப்பெருந்துறை செல்கின்றார். இவ்வாறு தான் இறைவனின் அழைப்பினை உணர்ந்த தன்மையை, இறைவன் அறை கூவியதாக குறிப்பிடுகின்றார் மேலும் தன்னை உய்வித்த தன்மையை குறிப்பிடும் அடிகளார், பெருமானின் இந்த கருணைச் செயல் தனக்கு வீடுபேறு அருளுவது உறுதி என்பதையும் புரிந்து கொண்டமையால், வீடருளும் என்று குறிப்பிடுகின்றார். வீடு என்ற சொல்லுக்கு விடுபடும் தன்மை என்று பொருள் கொண்டு, பந்த பாசங்களிலிருந்து விடுபடும் தன்மையை இறைவன் அருளால் தான் பெற்றதை அடிகளார் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இதே பதிகத்தின் பன்னிரண்டாவது பாடலில், பெருமான், தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்ததாக அம்மானை ஆடும் பெண்கள் குறிப்பிட்டு மகிழ்வதாக மணிவாசக அடிகளார் கூறுகின்றார்.

செங்கண் நெடுமாலும் சென்றிடந்தும் காண்பரிய

பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி

எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொண்ட

தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான்

அங்கணன் அந்தணனாய் அறை கூவி வீடருளும்

அங்கருணை வார்கழலே பாடுதும் காண் அம்மானாய்

திருவாசகம் பொற்சுண்ணம் பதிகத்தின் பாடலில் (8.9.15) மணிவாசக அடிகளார் பெருமானை, பிறப்பறுத்து ஆண்டு கொண்ட கூத்தன் என்று குறிப்பிடுகின்றார். பானல்=கருங்குவளை மலர்கள்; பெண்களின் அகன்ற கண்களுக்கு, கருங்குவளை மலர்களை உவமையாக அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சிவம் என்றாலே மங்கலம், நலம் என்று பொருள். அடிப்படையில் அனைத்து உயிர்களும் சிவபெருமானை நாடி, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு நலம் அடையவே விரும்புகின்றன. எனினும் முறையாக நாடும் வழியை அறியாத காரணத்தால், பெரும்பாலான உயிர்கள் அவனைச் சென்று அடைய முடிவதில்லை. அதனால் தான் நாடற்கரிய நலம் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். நாள்பட்ட தேன் தனது இனிய சுவையினை இழந்து கசப்பும் துவர்ப்பும் கலந்த நிலையில் இருப்பதை நந்துதல் என்று கூறுவார்கள்; ஆனால் பெருமான் குறித்த இனிய நினைவுகள் எத்தனை நாட்கள் ஆனாலும், இனியவையாகவே இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. கோன்=தலைவன், அரசன்; நமது நாவினில் வடு ஏற்படும் வண்ணம் தொடர்ந்து அவனது புகழினை குறிப்பிட்டு அவனை வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

ஞானக் கரும்பின் தெளிவைப் பாகை நாடற்கரிய நலத்தை நந்தாத்

தேனைப் பழச்சுவை ஆயினானைச் சித்தம் புகுந்து தித்திக்க வல்ல

கோனைப் பிறப்பறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நாத்தழும்பு ஏற வாழ்த்திப்

பானற் தடங்கண் மடந்தை நல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே

தம்மை பிறப்பறுத்து ஆண்டுகொண்ட பெருமான் என்று பெருமானைப் புகழ்ந்து பாடி பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள், இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் (8.9.10), பொற்சுண்ணம் இடிக்கும் பெண்களின் வாய்மொழியாக, பெருமானைப் பணியாத மனிதர்களுடன் பிறவிகள் இணைந்து கொண்டு ஆட்டம் போடுகின்றன என்று கூறுகின்றார். பெருமானுக்காக பொற்சுண்ணம் இடிக்கும் திருப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள், தங்களது முத்தணிகள் அணிந்த கொங்கைகள் ஆடுவதாகவும், அவர்கள் கூந்தலில் சூட்டிக் கொண்டுள்ள மலர் மாலைகள் ஆடுவதால் நறுமணம் மிகுந்த அந்த மாலைகளின் ஆட்டத்திற்கு ஏற்ப அந்த மலர்களை மொய்க்கும் வண்டுகள் ஆடுவதாகவும், அவர்களது எண்ணங்கள் பெருமானைச் சுற்றியே இருப்பதாகவும், பெருமானைப் பற்றி பேசுவதால் கேட்பதால் அவனது திருப்பணியில் ஈடுபடுவதால் அவர்களது கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்த்து ஆடுவதாகவும் குறிப்பிடும் பெண்கள்,பெருமானின் கருணையும் அவர்கள் அனைவரின் பால் பொழிவதால், பெருமானின் கருணையும் அவர்களுடன் சேர்ந்து ஆடுகின்றது என்று கூறுகின்றனர். பொற்சுண்ணம் என்பது பெருமானை நீராட்ட பயன்படும் வாசனைப் பொடி; இந்த பொடியினை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடும் பெண்கள் பாடுவதாக அமைந்த பாடல். இந்த பொடியினை இடிக்கும் செய்கையில் அந்த பெண்மணிகளின் உடல்கள் அடையும் மாற்றத்தை குறிப்பிடும் பாடல் இந்த பாடல்.

முத்தணி கொங்கைகள் ஆடஆட மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்

சித்தம் சிவனொடும் ஆட ஆடச் செங்கயற் கண்பனி ஆட ஆடப்

பித்தெம் பிரானொடும் ஆட ஆடப் பிறவி பிறரொடும் ஆடஆட

அத்தன் கருணையொடு ஆடஆட ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே

திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் பாடலில் (8.11.16) மணிவாசக அடிகளார் பெருமானை, பிறப்பறுத்த அத்தன் என்று குறிப்பிடுகின்றார். திரிபுரத்து அரக்கர்கள் முதலில் சிவத்தை வழிபடுபவர்களாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் மனதினை மயக்கி, நாத்திகர்களாக அவர்கள் மாறும் வண்ணம், திருமாலும் நாரதரும் திரிபுரங்கள் சென்றனர் என்றும், அவர்களது உபதேசத்தால் திரிபுரத்து அரக்கர்கள் நாத்திகர்களாக மாறினார்கள் என்றும் புராணம் குறிப்பிடுகின்றது. இந்த தகவல் கள்ள வேடத்தைக் கொண்டுபோய் என்று தொடங்கும் பாசுரத்தில் நம்மாழ்வாரால் சொல்லப் படுகின்றது. இவ்வாறு திருமால் சென்றதை புத்தனாக சென்றான் என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு திரிபுரத்து அரக்கர்களுடன் சிவபெருமானை பழித்த பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் முகமாக திருமால் பெருமானை பணிந்து வணங்கினார் என்றும் புராணம் குறிப்பிடுகின்றது. இந்த செய்தி தான், புத்தன் போற்றிச் செய்யும் பித்தன் என்ற தொடர் மூலம் இங்கே உணர்த்தப் படுகின்றது. புரந்தராதியர்=இந்திரன் முதலான பல தேவர்கள்; அயன்=பிரமன்; தெள்ளேணம் என்பதற்கு சிறுபறை என்ற இசைக்கருவி என்று பொருள். பண்டைய நாட்களில் தமது வெற்றியை அறிவிப்பதற்கு இந்த இசைக்கருவி பயன்படுத்தப் பட்டது என்பதை சங்க இலக்கியங்களிலிருந்து அறிகின்றோம். தன்னை ஒரு பெண்ணாக கருதி பெண்களின் கூட்டத்துடன் பெருமானின் சிறப்பினை ஆடியும் பாடியும் கொண்டாடும் அடிகளார், பெருமானின் அருள் பெற்றமையை வெற்றியாக கருதி பெருமானின் திருவடிகள் தங்களது மனதினில் பதிந்தமையை தெள்ளேணம் கொட்டி கொண்டாடுவோம் என்று கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தெள்ளேணம் என்பதற்கு அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றில் கலந்துள்ள மண், தூசி, பொடிக் கற்கள் ஆகியவற்றை பிரிக்கும் செயல் என்று பொருள் கொண்டு, அத்தகைய செயலைச் செய்யும் பெண்கள் ஒன்று கூடி பெருமானின் புகழினைச் சொல்லி ஆடியும் பாடியும், தமது செயலால் ஏற்படும் சோர்வு தெரியாத வண்ணம் இருந்தனர் என்று பொருள் கொள்ளலாம்.

புத்தன் புரந்தராதியர் அயன் மால் போற்றிச் செயும்

பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பறுத்த

அத்தன் அணி தில்லை அம்பலவன் அருட்கழல்கள்

சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் (8.11.2) மணிவாசக அடிகளார், மீண்டும்மீண்டும் பிறப்பு எடுக்கும் தன்மைக்கு மூல காரணமாகிய வேராக விளங்கும் வினைகளை பெருமான் அறுத்து அருள் புரிந்த பின்னர், தான் வேறு எந்த தெய்வத்தையும் நினைத்ததில்லை, கண்டதில்லை என்று கூறுகின்றார். மருவும்=உறைகின்ற;

திருவார் பெருந்துறை மேய பிரான் என் பிறவிக்

கருவேர் அறுத்த பின் யாவரையும் கண்டதில்லை

அருவாய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும்

திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

திருவாசகம் திருப்பூவல்லி பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார் (8.13.3) பெருமானை, மாயப் பிறப்பு அறுத்து ஆண்டான் என்று குறிப்பிடுகின்றார். தயா=தயவு, கருணை; பொடி=மண்; அட்டி=சொரிந்து; தோற்றவர்களின் வாயில் மண் திணிப்பது பண்டைய நாளில் பழக்கமாக இருந்தது போலும்; தனது அடியார்களுடன் பிணைந்திருந்த வினைகளை அறுத்தெரியும் பெருமான், அந்த வினைகளை, உயிர்களை ஆட்கொண்டு தமது வழியில் உயிரினை இழுத்துச் செல்லும் முயற்சியில் தோல்வியடையச் செய்ததை, வினைகளின் வாயில் பொடி அட்டினான் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். உலக மாயையில் ஆழ்த்தும் பிறவியை மாயப்பிறவி என்று கூறுகின்றார்.

நாயிற் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து

தாயிற் பெரிதும் தயாவுடைய தம் பெருமான்

மாயப் பிறப்பு அறுத்து ஆண்டான் என் வல்வினையின்

வாயிற் பொடியட்டி பூவல்லிக் கொய்யாமோ

திருவாசகம் திருவுந்தியார் பதிகத்தின் பாடலிலும் (8.14.10) மணிவாசக அடிகளார், நெடுங் காலமாக நம்மைத் தொடர்ந்து வரும் பிறப்பினை விட்டொழித்து முக்தி நிலை அடைய வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டியது பெருமானின் புகழினை பாட வேண்டியது தான் என்று உணர்த்துகின்றார். வியாத்திரன் என்பதற்கு யாகத் தலைவன் என்றும் மாற்று வழியில் செல்பவன் என்று இரண்டு விளக்கங்கள் அளிக்கப் படுகின்றன. தக்கன் முயற்சி செய்த வேள்வியை வெஞ்சின வேள்வி என்று மணிவாசக அடிகளார் இங்கே கூறுகின்றார். பெருமான் தன்னை அவமதித்ததாக கருதிய தக்கன், பெருமானை தனது எதிரியாக பாவித்து, பெருமானுக்கு அவிர்ப்பாகம் கொடுக்காமல் வேள்வி செய்து உலகினுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று இந்த வேள்வியை தொடங்கினான். இவ்வாறு பெருமான் மீது அவன் கொண்டிருந்த கோபமே இந்த வேள்வியை செய்வதற்கு காரணமாக இருந்தமையால் வெஞ்சின வேள்வி என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணம் செய்வோர், பலரும் சென்ற பாதையினையே தேர்ந்தெடுப்பார்கள்;வேள்விகள் செய்த பலரும் வேதங்களில் சொல்லிய வண்ணம், சிவபெருமானுக்கு அழைப்பு விடுத்து வேள்விகள் செய்வார்கள்; ஆனால் சிவபெருமான் மீது தான் கொண்டிருந்த கோபத்தின் காரணமாக, அவரை அவமதிக்கும் நோக்கத்துடன் அவரை அழையாமல், தக்கன் வேள்வி செய்யத் துணிந்த செயல் வியாத்திரன் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. யாத்திரன் என்றால் பலரும் சென்ற வழியில் செல்பவன்; வியாத்திரன் என்றால் பலரும் சென்ற வழியை புறக்கணித்து, புதிய வழியில் செல்பவன் என்று பொருள். அந்நாள் வரையில் எவரும் செய்யாத முறையில், பெருமானை புறக்கணித்து, வேள்வி செய்வதற்கு முடிவு செய்த தக்கனை, மிகவும் பொருத்தமாக வியாத்திரன் என்று கூறுகின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் சிறப்பு.

வெஞ்சின வேள்வி வியாத்திரனார் தலை

துஞ்சினவா பாடி உந்தீபற

தொடர்ந்த பிறப்பற உந்தீபற

திருவாசகம் தோணோக்கம் பதிகத்தின் பாடலில் (8.15.13) மணிவாசக அடிகளார், தன்னுடன் வலிமையாக பிணைந்திருந்த பிறவியின் பூட்டினை உடைத்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். தாழ்=தாழ்ப்பாள்; தொழும்பனேன்=தொண்டன்: ஏழை=அறிவில் ஏழை; பண்படாத பாழ் நிலத்திற்கு எவ்வளவு நீர் இறைத்தாலும், அதனால் பயன் ஏதும் இல்லாமல் இருப்பது போன்று, தான் செய்து வந்த செயல்கள் அனைத்தும் பாழும் செயல்கள் என்பதால்,தனது பிறவியை அறுத்துக் கொள்வதற்கு எந்த வகையிலும் உதவவில்லை என்று குறிப்பிடும் அடிகளார், இறைவன் தனது பெருங் கருணையால், தன்னை வலிமையாக பிணைத்திருந்த பிறவிப் பூட்டினை உடைத்தெறிந்து அருள் புரிந்தான் என்று கூறுகின்றார். அனைத்து ஊழிகளையும் கடந்து, அழியாமல் நின்ற அவனது தன்மை, பிறப்பிறப்புச் சுழற்சியை கடந்தவன் பெருமான் என்பதை உணர்த்துகின்றது என்றும் கூறுகின்றார்.

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே

ஊழி முதல் சிந்தாத நன்மணி வந்தென் பிறவித்

தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ

பொன்னூசல் பதிகத்தின் பாடலில் (8.16.4) பிறப்பறுப்பான் என்று பெருமானை மணிவாசக அடிகளார் குறிப்பிடுகின்றார். நஞ்சினை பெருமான் தனது கழுத்தினில் அடக்கியுள்ள தன்மை, அனைவரும் வெறுக்கும் பொருட்களையும் தீமைகளையும் ஏற்றுக் கொண்டு அடக்கி ஆளும் ஆற்றல் உடையவன் பெருமான் என்பதை உணர்த்துகின்றது. தேவர்கள் எந்த நஞ்சினைக் கண்டு திசைக்கொரு பக்கம் ஓடினார்களோ அந்த நஞ்சின் திறத்தின் தன்மையை வெற்றி கொண்ட பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் அண்டத்தவர் நாதன் என்று அடிகளார் கூறுகின்றார். அஞ்சொலாள்=அழகிய சொற்களை பேசும் பிராட்டி; தூய புகழ்=ஒருவரின் முகத்திற்கு எதிரே அவரை புகழ்வதற்காக சொல்லப் படும் சொற்கள் போன்று அல்லாமல், உண்மையாகவே பெருமானின் தகுதிக்கு ஏற்ப சொல்லப் படும் புகழ்ச் சொற்கள்; துஞ்சல்=இறத்தல்; பிறப்பு என்பது எப்போதும் இறப்புடன் தொடர்பு உடையது என்பதால் துஞ்சல் பிறப்பு என்று கூறினார் போலும். புஞ்சமார்=திரண்ட;

நஞ்சமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்

மஞ்சு தோய் மாட மணி உத்தர கோசமங்கை

அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்

நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணை பெய்து

துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ் பாடி

புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ

இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் மணிவாசக அடிகளார், பெருமானை, பிறப்பு அறுப்பான் என்று குறிப்பிடுகின்றார். எண்ணற்ற பழைய பிறவிகளில் ஈட்டிய வினைகளால் தான் நாம் அனைவரும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டுள்ளோம். இவ்வாறு எண்ணற்ற பழைய பிறவிகளில் நாம் ஈட்டிய வினைகளை, தொல் பிறவித் தீது என்று அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய வினைகள் தாம் நம்மை எண்ணற்ற பிறவிகளுக்கு வழி வகுத்து, இழுத்துச் செல்லும் தன்மையை, தீதோடும் என்று குறிப்பிடுகின்றார். அடுப்பினில் கொதிக்கின்ற நீர், கீழே உள்ள விறகு பற்றி எரிவதால் தொடர்ந்து கொதித்துக் கொண்டே இருக்கின்றது. கீழே எரியும் கொள்ளிக் கட்டையை இழுத்து விட்டால், நீர் கொதிப்பது நின்று விடுகின்றது. அது போன்று, பிறவிகளுக்கு காரணமாகிய வினைகளை அந்த உயிரிடமிருந்து நீக்கி விட்டால், உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைகின்றன. இந்த செய்தியைத் தான் தீதோடா வண்ணம் உயிர்கள் திகழும் வண்ணம், வினைகளை நீக்கும் பெருமான் என்று குறிப்பிடும் அடிகளார் இவ்வாறு வினைகள் நீக்கப்படுவதால் வினைகளால் ஏற்படுகின்ற எண்ணற்ற பிறவிகளையும் பெருமான் தவிர்க்கின்றான் என்று கூறுகின்றார். போதாடு=அழகாக கொடிகளில், செடிகளில், அசைந்து ஆடும் அரும்புகள் போன்று குவிந்த முலைகள்; இறைவன் பால் காதல் கொண்டு கசிந்த உள்ளத்துடன் அவனது புகழினைப் பாட வேண்டும் என்பதை, கசிந்தன்பால் பாடி என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். தாதாடு கொன்றை=மகரந்தத் தூள்கள் நிறைந்த கொன்றை மலர்கள்; தனது அடியார்களின் குற்றங்களை நீக்கி, அவர்களை பக்குவமடையச் செய்யும் இறைவனின் கருணைச் செயலும் இங்கே சொல்லப் படுகின்றது;கோது=குற்றம்; கோதாட்டி=குற்றங்களை நீக்கி; உயிர்களின் குற்றங்களாக கருதப் படுவன, உயிர்களுடன் பிணைந்துள்ள வினைத் தொகுதிகளே;

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கை

தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்

கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவி

தீதோடா வண்ணம் திகழப் பிறப்பறுப்பான்

காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால்

போதாடு பூண் முலையீர் பொன்னூசல் ஆடாமோ

பொன்னூசல் பதிகத்தின் கடைப் பாடலிலும் (8.16.9) மணிவாசக அடிகளார் பெருமானை, எங்கள் பிறப்பு அறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்பவன் என்று குறிப்பிடுகின்றார். கொங்கு=தேன், நறுமணம்; எந்தரமும்=எந்த தன்மையில் இருந்தாலும்; ஆன்மாக்கள் அனைத்தும் ஒரே பக்குவத்தில் இருப்பதில்லை; எனினும் பெருமான், அந்தந்த ஆன்மாக்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப தனது அணுகு முறையினை மாற்றிக் கொண்டு அந்த உயிர்களை ஆட்கொள்ளும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. கோதை=அழகிய கூந்தலை உடைய பார்வதி தேவி; பணி கொண்ட=தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு தான் செய்யும் பணிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் தன்மை; பங்குலவு=தனது உடலின் ஒரு பாகத்தில் விளங்கும்; திருப்பெருந்துறை தலத்தினில் அந்தணனாக எழுந்தருளி அடிகளாரை ஆட்கொண்ட தன்மை, வேறு எவருக்கும் கிடைக்காத தன்மை என்பதால் தனி உருவம் என்று கூறினார் போலும். பொங்குதல்=கிளர்ந்து எழுதல்; உலவு=அசையும்; பொங்குதல் முலைகளின் தன்மையையும் உலவுதல் அந்த முலைகளின் மீது அணிந்துள்ள நகைகள் அசைந்தாடும் தன்மையையும் குறிப்பிடுகின்றது.

தெங்குலவு சோலை திருவுத்தர கோசமங்கை

தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி

எங்கள் பிறப்பறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்

பங்குலவு கோதையும் தானும் பணி கொண்ட

கொங்குலவு கொன்றைச் சடையான் குணம் பரவிப்

பொங்குலவு பூண் முலையீர் பொன்னூசல் ஆடாமோ

திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடலில் (8.20.6), மணிவாசக அடிகளார், தனது பிறப்பினை அறுத்து பெருமான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார். பப்பு=பரபரப்பு; பரபரப்பு ஏதும் இன்றி அமைதியுடன் இறைவனைப் பணிந்து வணங்கும் அடியார்கள் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். பரபரப்பு நிறைந்து ஆரவாரத்துடன் காணப்படும் இந்த உலகினில் காணப்படும் எண்ணற்ற பொருட்கள் அளிக்கும் சிற்றின்பத்தை உயிர்கள் நாடுவது இயற்கையே. இந்த தன்மையால் தான் உயிர்கள் மனம் ஒன்றி இறைவனை நாடுவதற்கு நேரம் இன்றி தவிக்கின்றது. உயிர்களின் இந்த வேகத்தைத் தவிர்க்கும் ஆற்றல் கொண்டவர் சிவபெருமான் ஒருவர் தான் என்பதை சிவபுராணம் பதிகத்தில், வேகம் களைந்தாண்ட வேந்தன் என்று மணிவாசக அடிகளார் குறிப்பிடுகின்றார். உலகம் மற்றும் உலகத்தில் உள்ள பல பொருட்கள், உயிர்கள் ஆகியவற்றின் மீது தாம் வைத்திருந்த பற்றினை அறுக்கும் அடியார்கள், மனதினில் அமைதி நிலவ இறைவனை வணங்குகின்றனர். இறைவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவதற்கு நாம் தேவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்த்தும் முகமாக, பாசத்தை அறுத்தெறிந்த பெரியோர்களும் பெண்களும், மனிதர்களாக இருக்கும் இயல்பினில் பெருமானை வணங்குகின்றனர் என்று அடிகளார் கூறுகின்றார். எனவே மனிதப் பிறிவியிலிருந்தே வாழ்வினில் உய்வினை அடையலாம் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா

செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

கோயில் திருப்பதிகத்து பாடல் ஒன்றினில் பிறப்பறுக்கும் எம் மருந்தே என்று மணிவாசகர் இறைவனை அழைக்கின்றார். ஒழிந்தார்=தேவர்கள் முனிவர்கள் தவிர்த்த ஏனையோர்; சாத்வீகம் இராஜசம் தாமசம் ஆகிய மூன்று குணங்களையும் கடந்து, அந்த மூன்று குணங்களால் விளையும் அழியும் தன்மை வாய்ந்த இன்பங்களன்றி, என்றும் அழியாத பேரின்பம் உடையவன் இறைவன் என்று குறிப்பிடும் அடிகளார், அந்த குணங்களற்ற இன்பத்தைத் சாரும் தானும், அதே தன்மையை அடைவதால், தனக்கு குறையேதும் இல்லை என்று உணர்த்துகின்றார். இணங்கிலி=நிகர் அற்றவன்; திணிந்ததோர் இருள்=அறியாமையாகிய அடர்ந்த இருள்; அறியாமை எனப்படும் இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களின் இடையே தெளிந்த தூய ஒளியாக உள்ள இறைவனின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

உணர்ந்த மாமுனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவரும் பொருளே

இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப்பறுக்கும் எம் மருந்தே

திணிந்ததோர் இருளில் தெளிந்த தூவெளியே திருப்பெருந்துறை உறை சிவனே

குணங்கள் தாம் இல்லா இன்பமே உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே

திருவாசகம் செத்திலாப்பத்து பதிகத்தின் பாடலில் (8.23.8) மணிவாசக அடிகளார், இறைவனை மருந்தே என்று அழைக்கின்றார். குரை கழல்=ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருப்பாதம்; கோது மாட்டுதல்=குற்றம் களைந்து ஆட்கொள்ளுதல்; கோது என்ற சொல்லுக்கு கொத்து என்று பொருள் கொண்டு, பாசக்கொத்துகள் என்று பொருள் கொள்வாரும் உள்ளனர். அவ்வாறாயின் பாசப் பிணைப்பினை ஆட்டி அசைத்து முற்றிலும் நீக்கி என்று பொருள் கொள்ளலாம். இரண்டுமே இங்கு பொருத்தமாக உள்ளன. புரந்தராதிகள்=இந்திரன் முதலான தேவர்கள்; போது=மலர், இங்கே தாமரை மலர்; அயன்=பிரமன்; பெருமானின் அருளுக்கு தான் காத்து நிற்பது போன்று, பிரமன் இந்திரன் முதலான பல தேவர்கள் காத்து நிற்பதாக கூறும் அடிகளார், அவர்களை எல்லாம் ஒதுக்கி விட்டு, தனக்கு முன்னுரிமை அளித்து அருள் புரிய வேண்டும் என்று உரிமையுடன் பெருமானிடம் வேண்டுகின்றார் அவர் வேண்டுவது தான் யாது. பெருமான், தனது (மணிவாசகரின்) குற்றங்களை ஒழித்து, வீரக்கழல் ஒலிக்கும் திருப்பாதத்தை காட்டி, அந்த திருப்பாதத்தை பற்றிக் கொள்வாய் என்று பணித்தும், அடியார்களுடன் கூட்டியும் அருள் புரிய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். இந்திரன் முதலான தேவர்கள், இதுவரையில் தாங்கள் செய்த நற்செயல்களின் பயனாக போக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எனவே அவர்கள் இன்பம் மட்டுமே துய்ப்பவர்களாக உள்ளனர். ஆனால் நிலவுலகில் வாழும் மணிவாசகரோ, உலகியல் வாழ்வினில் ஈடுபட்டு, இன்ப துன்பங்களில் உழன்று கொண்டிருப்பவர். எனவே உலக வாழ்வினில் உழல்வோருக்குத் தானே முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்த உரிமையைத் தான் மணிவாசக அடிகளார் வேண்டுகின்றார் போலும். தான் படும் துன்பத்தை, யாது செய்வது என்று திகைத்துத் தான் இருந்ததாகவும், பெருமானால் குருந்த மரத்தினடியில் ஆட்கொள்ளப்பட்ட தான் இடரினில் உழல்வது அழகோ என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உலகினில் நாம் காணும் மருந்துகள் அனைத்தும், உடலின் நோயினைத் தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் தன்மை உடையன. ஆனால் அடிகளார் கொண்டுள்ளதோ மனநோய், மனதின் அகப் பகைகளாகிய காமம் குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் விளைவிக்கும் நோய்; இந்த ஆறு உட்பகைகளையும் வெல்வதற்கு வேண்டிய ஆற்றலை, உயிர்க்கு அருளும் வல்லமை பெற்றவன் பெருமான் ஒருவன் தான் என்பதால், தனது மனநோய்க்கு மருந்தாக திகழ்பவன் இறைவன் என்பதை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

போது சேர் அயன் பொருகடற் புரந்தராதிகள் நிற்க மற்றென்னைக்

கோது மாட்டி நின் குரை கழல் காட்டிக் குறிக்கொள்கென்று நின் தொண்டரில் கூட்டாய்

யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ

சீதவார் புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே

திருவாசகம் அடைக்கலப்பத்து பதிகத்தின் பாடலில் (8.24.2) மணிவாசக அடிகளார், பெருமானை என் பிறவியை வேர் அறுப்பவனே என்று அழைக்கின்றார். பாம்பைக் கண்டு அனைவரும் அஞ்சுவதால் அனைவரும் பாம்பினை வெறுப்பார்கள்; ஆனால் இறைவனோ, அந்த பாம்பினையும் வெறுக்காமல், தனது உடலின் பல இடங்களில் ஆபரணமாக அணிந்து கொண்டுள்ள தன்மை, அவன் விருப்பு வெறுப்புகளை கடந்தவன் என்பதை உணர்த்துகின்றது. உலகினுக்கு தீங்கு இழைத்து, உலகினையே பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் நோக்கத்துடன் மிகுந்த வேகமாக கீழே இறங்கிய கங்கை நதியினைத் தடுத்து நிறுத்திய பெருமை உடையவன் பெருமான் என்பதும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. பாம்பினை வெறுக்காமல் தனது உடலில் ஏற்றுக் கொண்டது போன்று, தனது சிறுமையை கருத்தில் கொள்ளாது ஏற்றுக் கொண்டவன் பெருமான் என்று அடிகளார் உணர்த்துகின்றார். அதே போல் குற்றம் உடைய கங்கை நதியை மன்னித்து பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டது போன்று, தன்னையும் ஏற்றுக் கொண்டு அருள் புரிந்தவன் பெருமான் என்றும் அடிகளார் குறிப்பிடுகின்றார். இத்தகைய பண்பினை உடைய பெருமானே தனக்கு அடைக்கலம் அளித்து காக்கும் ஆற்றல் வாய்ந்தவன் என்பதால் அவனைத் தான் சரணடைந்ததாக குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில், தனது பிறவியை வேரறுத்துப் பெரும் பிச்சு தரும் பெருமான் என்று மணிவாசக அடிகளார் குறிப்பிடுகின்றார்.

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால்

பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்கு கங்கை சடைச்

செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியை வேர்

அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

திருவாசகம் புணர்ச்சிப் பத்து பதிகத்தின் பாடலில் (8.27.9) மாணிக்கவாசகர், பெருமானை பிறவிப் பிணிக்கோர் மருந்தே என்று அழைக்கின்றார். பாதப்போது=மலர்கள் போன்று மென்மையான திருப்பாதங்கள்; பேதாய்=ஏதும் அறியாதவன்; நாயினும் கடையனான தன்னை பெருமான் ஆட்கொண்ட கருணைச் செயலை இங்கே அடிகளார் குறிப்பிடுகின்றார். தன்னால் இறைவன் ஏதும் பயனடையாத நிலையில், தன்னை இறைவன் ஆட்கொண்டது பேதையின் செயல் என்று அடிகளார் பழிப்பது போன்று தோன்றினாலும், உண்மையில் இறைவனை பழிப்பது போன்று அடிகளார் இங்கே புகழ்கின்றார். எதற்கும் பயன்படாமல், நாயினும் கடையனாக தான் இருந்த போதிலும், தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்கொண்ட இறைவன் என்று குறிப்பிட்டு இறைவனை புகழ்கின்றார். இவ்வாறு இறைவன் நாயேனாகிய தன்னை ஆட்கொண்டதை குறிப்பிட்டு, இறைவனின் எளிவந்த தன்மையை அடிகளார் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருப்பாதத்தை மலர் என்று குறிப்பிடுவதால், திருவடி மலர்களால் பெறுகின்ற இன்பத்தை தேன் என்று நயமாக குறிப்பிடுகின்றார். இரவும் பகலும் எப்போதும் இறைவனின் திருவடிகளின் தன்மையை ஆராய்ந்து, குற்றமற்ற மாணிக்கமாகிய இறைவனுடன் சென்று சேர்வது எந்நாளோ என்று தனது ஏக்கத்தினை தெரிவிக்கும் பாடல் இந்த பாடல்.

தாதாய் மூவேழ் உலகுக்கும் தாயே நாயேன் தனையாண்ட

பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்

ஏதா மணியே என்றென்று ஏத்தி இரவும் பகலும் எழிலார் பாதப்

போது ஆய்ந்து அணைவது என்று கொல்லொ என் பொல்லா மணியைப் புணர்ந்தே

திருவாசகம் கண்டப்பத்து பதிகத்தின் பாடலில் (8.31.2) மணிவாசக அடிகளார் பெருமானை, பிறப்பறுத்த இணையிலி என்று அழைக்கின்றார். பெருமானைத் தவிர்த்து வேறு எவரும் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுக்க முடியாது என்பதால், அவரை இணையிலி என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகவே உள்ளது. நாம் பிறக்கும் போதே, இந்த பிறவியில் நாம் நுகர்ந்து கழிக்க வேண்டும் என்று இறைவனால் நிர்ணயிக்கப் படும் வினைகளின் தொகுதியும் நம்முடன் சேர்ந்து கொள்கின்றன. அந்த வினைகளின் தன்மையால் தான், நமக்கு வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு நாம் அனுபவிக்கும் இன்பங்களில் ஆழும் நாம் இறைவனை மறந்து விடுவது இயற்கை. துன்பங்களில் ஆழும் போது, ஒரு சிலர் தங்களது துன்பங்கள் தீர வேண்டும் என்று வேண்டுவதற்காக இறைவனை நினைக்கின்றார்களே தவிர வேறு எதற்காகவும் இறைவனை நினைப்பதில்லை. பலரும் தனக்கு ஏன் இந்த துன்பங்கள் ஏற்படுகின்றன என்ற கவலையில், துன்பங்கள் இழைப்பவரை கடிந்து கொள்வதும் ஏன் இறைவனையே சினந்து கொள்வதும் நாம் அடிக்கடி காண்கின்ற நிகழ்ச்சிகளாக உள்ளன. இந்த நிலையில் தான் இருப்பதாக மணிவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த இன்ப துன்பங்களின் விளைவால் மனநிலை மாறாமல், மகிழ்ச்சியோ வேதனையோ ஏதும் கொள்ளாமல், தங்களது மனதினில் ஏற்படும் சஞ்சலங்களை தவிர்த்து, இன்ப துன்பங்களை சரிசமமாக பாவித்து, எப்போதும் சிவ சிந்தையுடன் வாழும் அடியார்களை, இந்த இன்ப துன்பங்கள் ஏதும் செய்வதில்லை. அதனால் அவர்கள் மேன்மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கும் பக்குவத்தை அடைந்து விடுகின்றனர். அந்த நிலையை அடையாமல் வினைகளால் தான் தளர்ந்து கிடப்பதை குறிப்பிடும் மணிவாசகர், தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்கொண்ட பெருமானை, தான் தில்லை அம்பலத்தில் கண்டதாக கூறுகின்றார். இதே பதிகத்தின் ஆறாவது பாடலில், பெருமானை, தனது பிறவியை அற மாற்றியவன் என்று குறிப்பிடுகின்றார்.

வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்

தனைச் சிறிதும் நினையாதே தளர்வு எய்திக் கிடப்பேனை

எனைப் பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பறுத்த இணையிலியை

அனைத்துலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே

திருவாசகம் பிடித்த பத்து பதிகத்தின் பாடலில் (8.37.6) மணிவாசக அடிகளார், பெருமான் தனது பிறவி வேரினை அறுத்ததாக குறிப்பிடுகின்றார். அறவையேன்=ஆதரவு அற்றவன்; தன்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்ததும் அன்றி தனது குடிக்கே அருள் புரிந்தவன் பெருமான் என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். பிஞ்ஞகன்=மிகவும் அழகாக பின்னப் பட்ட கூந்தலை உடையவன்: திறவு=திறப்பு, அறியாமை நீங்கிய நிலை;இறவு=அழிவு நிலை, இங்கே இறுதியான நிலை என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது.

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்தம் அருளிப்

பிறவி வேர் அறுத்து என் குடி முழுதாண்ட பிஞ்ஞகா பெரிய எம் பெருமானே

திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே

இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே

திருவாசகம் திருவேசறவு பதிகத்தின் பாடலில் (8.38.2) மணிவாசக அடிகளார் பெருமானை நோக்கி, மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டு எனை ஆள்வாய் என்று வேண்டுகின்றார். பண் போன்று இனிய மொழிகளை உடைய மங்கை என்று பார்வதி தேவியை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். உண்ணார்ந்த=உண்ணத் தகுந்த; ஆரமுது=எவ்வளவு உட்கொண்டாலும் தெவிட்டாத அமுதம் போன்று இனிமையானவன்; ஆர்ந்த=பொருந்திய;மண்ணார்ந்த=நில உலகினில் பிறப்பெடுத்த; தனு கரண புவன போகம் என்ற தொடருக்கு ஏற்ப, அனைத்து உயிர்களும், தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நுகர்ந்து கழித்துக் கொள்ளும் பொருட்டு, தகுந்த உடலுடன் இணைக்கப் பட்டு பூமியில் பிறக்கின்றன. அத்தகைய உயிர்களில் ஒன்றாகிய தான், பெருமானின் ஆற்றலை புரிந்து கொண்டு பெருமானுக்கு அடிமையாக மாறி, தன்னையே பெருமானுக்கு ஒப்படைத்த தன்மையை அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெருமானுக்கு அடிமையாகத் திகழும் அடியார்களுக்கு மட்டுமே அவன் ஆராத அமுதமாக திகழ்கின்றான் என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். இதன் மூலம், நாமும் பெருமானின் அருள் பெற வேண்டும் என்று விரும்பினால், பெருமானுக்கு அடிமையாக மாறி, நம்மை முழுவதுமாக பெருமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றார். பெருமான் தன்னை அழைத்த குரலை அடையாளம் கண்டு கொண்டு, எங்கோ தொண்டித் துறைமுகம் சென்று கொண்டிருந்த தான், திருப்பெருந்துறை வந்தடைந்து பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு பெருமானின் திருவடிகளைக் காணும் பேற்றினை பெற்ற தன்மையை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமான் தனக்கு திருவடி தீட்சை தந்து அருளியது பசுமையான நினைவாக தனது மனதினில் பதிந்திருக்கும் தன்மையையும் அடிகளார் இந்த பாடலில் உணர்த்துகின்றார். ஏசறவு என்றால் நெடுநாளாக விரும்பிய ஒன்றை அடைய முயன்று வருந்தும் தன்மை என்று பொருள். திருவாரூர் தலத்தின் மீது அருளிய திருவிருத்தப் பாடலில் அப்பர் பிரான், ஈசனையே நினைந்து ஏசறுவேன் என்று தன்னை குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது.

பண்ணார்ந்த மொழி மங்கை பங்கா நின் ஆளானார்க்கு

உண்ணார்ந்த ஆரமுதே உடையானே அடியேனை

மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்ன

கண்ணார உய்ந்தவாறு அன்றே உன் கழல் கண்டே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் மணிவாசக அடிகளார் (8.38.7) தனது பிறப்பினை அறுத்தவன் பெருமான் என்று குறிப்பிட்டு மகிழ்கின்றார். பிறப்பினை பாலைப் பிறப்பு என்று அடிகளார் கூறுவது சிந்திக்கத் தக்கது; பாலைவனத்தில் எங்கும் வெப்பமே நிறைந்து காணப்படும். அது போல் நமது பிறவி,உலகியல் மாயங்களில் சிக்குண்டு மேன்மேலும் துன்பங்களை அனுபவிப்பதற்கு வழி வகுப்பதால் பாலைப் பிறவு என்று சொல்லப் பட்டுள்ளது. இடையிடையே நாம் அனுபவிக்கும் இன்பங்களும் நிலையானவை அல்ல என்பதை உணராத நாம், அத்தகைய இன்பங்களைத் தேடிக் கொண்டு அலைகின்ற தன்மை, பாலைவனத்தில் கானல் நீரினைத் தேடி அலைந்துக் களைப்பதை ஒத்துள்ளதை நாம் உணரலாம். இறைவன் தனது மனதினில் புகுந்தமையால் தான், தனது மனம் அவன் பால் வைத்துள்ள அன்பினால் உருகியது என்று அடிகளார் கூறுகின்றார். எனவே இறைவன் பால் காதல் கொண்டு கசிந்து உருகும் நிலை நமக்கு ஏற்படுவதற்கும், அவனின் அருள் தேவைப் படுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருப்பெருந்துறையில் பெருமான் தன்னை ஆட்கொண்ட போதே, அவரது அருள் கருணை தன் மீது பதிந்துவிட்டதாக அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார்.

என்பாலை பிறப்பறுத்து இங்கு இமையவர்க்கும் அறியவொண்ணா

தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான்

அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது

என்பாலே நோக்கியவாறு அன்றே எம் பெருமானே

திருவாசகம் குலாப்பத்து பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார், பிறவிக்குழியை தூர்த்து அருள் புரிந்தவன் பெருமான் (8.40.5) என்று குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு பிறவியிலும் எடுக்கப்படும் வேறுவேறு உடல்கள் வேறுவேறு பெயரினையும் குணங்களையும் கொண்டதாக விளங்குகின்றன. இவ்வாறு பெயர்களாலும் குணங்களாலும் அறியப் படுகின்ற பிறவிக் குழிகள் தூர்ந்து போகும் வண்ணம், தொண்டர்களின் வினைமாசுகளைப் போக்கும் இறைவன், அந்த உயிர்களை தன்னிடத்தே அழைத்துக் கொண்டு சிவானந்தத் தேன் பருகும் வண்ணம் செய்கின்றான் என்று இந்த பாடலில் அடிகளார் கூறுகின்றார்.

பேரும் குணமும் பிணிப்புறும் இப்பிறவி தனைத்

தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்டரெல்லாம்

சேரும் வகையால் சிவன் கருணைத் தேன் பருகி

ஆரும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே

திருவாசகம் சென்னிப்பத்து பதிகத்தின் பாடலில் (8.42.7) மணிவாசக அடிகளார் பெருமானை பிறவி என்னும் இக்கடலை நீந்தத்தன் பேரருள் தந்து அருளினான் என்று குறிப்பிடுகின்றார். அறவை=ஆதரவற்றவன்; நல்ல துணையேதும் இல்லாமல் இருந்த தன்னை, அடியார்களின் கூட்டத்தில் புகுத்தியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பெருக்கம்=வளர்ச்சி; உண்மைப் பொருளாக இருக்கின்ற பெருமானின் வளர்ச்சி; கல்லையே தெப்பமாக மிதக்கச் செய்து அப்பர் பெருமானை காப்பாற்றிய பெருமான், பிறவிக் கடலில் சிக்குண்ட அடியார்களை காப்பது அவனுக்கு மிகவும் விருப்பமான செயல் அல்லவா. இதனால் தானே கைதர வல்ல கடவுள் என்று மணிவாசக அடிகளார் போற்றித் திருவகவலில் குறிப்பிடுகின்றார். பிறவியாகிய கடலை நீந்திக் கடக்க தனது பேரருளாகிய தெப்பத்தைத் தந்து அருளியவனும், என்னைத் துணையற்றவன் என்று கருதி அடியார்களுடைய திருவருட் கூட்டத்தில் என்னை புகுத்தியவனும், அந்த அடியார்களுடன் நெருங்கிய உறவினை உண்டாக்கி தன்னை உய்வித்தவனும் ஆகிய பெருமானது திருப்பாதங்களில் சேரும் எனது சென்னி, அழகுடன் பொலிந்து மலரும் என்று அடிகளார் கூறுவதாக அமைந்த பாடல்.

பிறவி என்னும் இக்கடலை நீந்தத்தன் பேரருள் தந்து அருளினான்

அறவை என்று அடியார்கள் தங்கள் அருட்குழாம் புக விட்டு நல்

உறவு செய்து எனை உய்யக் கொண்ட பிரான்றன் உண்மைப் பெருக்கமாம்

திறமை காட்டிய சேவடிக் கண் நம் சென்னி மன்னி திகழுமே

திருவாசகம் எண்ணப்பதிகம் பதிகத்தின் முதல் பாடலில் (8.44.1) மணிவாசக அடிகளார் பிறப்பற வேண்டும் என்று பெருமானிடம் வேண்டுகின்றார். சீர்=சிறப்பு, புகழ்; புகழே உருவமாக உள்ளவன் சிவபெருமான்; பாருருவாய பிறப்பு=நிலவுலகத்தில் பிறந்து வினை வயத்தால் இன்ப துன்பங்களை நுகர்ந்து மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்கும் நிலை; பத்திமை=அன்பு; செம்மையான திருமேனியை உடைய பெருமானை, செங்கமல மலர் போல் திருமேனி என்று கூறுகின்றார். தொகை=கூட்டம், குழு; அடியார்கள் குழுவின் இடையே பெருமானின் திருவருள் எப்போதும் பொருந்தி இருக்கும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. ஒப்பற்ற திருவருள் என்பதை உணர்த்தும் பொருட்டு, ஓருருவாய திருவருள் என்று கூறுகின்றார்.

பாருருவாய பிறப்பற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும்

சீருருவாய சிவபெருமானே செங்கமல மலர் போல்

ஆருருவாய என்னாரமுதே உன் அடியவர் தொகை நடுவே

ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டு அருளே

திருவாசகம் திருவெண்பா பதிகத்தின் பாடலில் (8.47.4) வரும் துயரம் தீர்க்கும் மருந்து என்று பெருமானை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். வரும் துயரம் என்ற தொடருக்கு இனி எடுக்கவிருக்கும் பிறவிகள் என்று பொருள் கொள்வது பொருத்தம். முன்னை வினை=பழைய பல பிறவிகளில் ஈட்டிய வினைகள்; இரண்டும்=நல்வினை தீவினை ஆகிய இரண்டு; அனைத்து வினைகளும் கழிவதால், வினைகளின் சேர்க்கை காரணமாக பிறப்பு எடுக்க வேண்டிய நிலையிலிருந்து விடுபடும் உயிர், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைகின்றது.

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்

பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் — தென்னன்

பெருந்துறையில் மேய பெருங் கருணையாளன்

வரும் துயரம் தீர்க்கும் மருந்து

திருவாசகம் திருவெண்பா பதிகத்தின் பாடலில் (8.47,6) மணிவாசக அடிகளார், பெருமான் தனது பிறப்பை அறுத்ததால், தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளில் வடிக்க முடியாது என்பதை உணர்த்த, பேச்சரிதாம் என்று கூறுகின்றார். எட்டுவதற்கு மிகவும் அரியவனாக இருக்கும் பெருமான், தனது நிலைக்கு ஏற்றவாறு எளியவனாக இறங்கி வந்து தனது மனதினைக் கோயிலாகக் கொண்டு தங்கி தன்னை ஆட்கொண்டமையால், தான் அவன் பால் எல்லையற்ற அன்பு கொண்டு பித்தனாக மாறியதாகவும் தன்னை பீடித்திருந்த பிறப்பிறப்புச் சங்கிலி கழன்றதாகவும், குறிப்பிடும் அடிகளார், மேற்கூறிய பெருமானின் கருணைச் செயல்களால், தான் அடைந்த மகிழ்ச்சி, சொல்ல ஒண்ணாதது என்று கூறுகின்றார். தனது வினைகளுக்கு மருந்தாக செயல்பட்டு அவற்றை நீக்கிய பெருமான் தனக்கு என்றும் அழிவில்லாத பேரின்பத்தை அளித்தார் என்றும் கூறுகின்றார்.

பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்

மத்தமே ஆக்கும் வந்து என் மனத்தை – அத்தன்

பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்

மருந்து இறவாப் பேரின்பம் வந்து

திருவாசகம் பண்டாய நான்மறை பதிகத்தின் பாடலில் (8.48.6) அடியார்களின் பிறப்பகல அருள் புரிகின்ற பெருமான் என்று சொல்லும் மணிவாசக அடிகளார், அத்தகைய அடியார்களின் தன்மையை விவரிக்கின்றார். காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் எனப் பேணும் அடியார் என்று கூறுகின்றார். கேடும் ஆக்கமும் கெட்ட திருவினராக விளங்கி, தாம் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை ஒன்றாக பாவித்து, அவற்றால் சலனம் அடையாத மனத்தவராக,எங்கும் சிவத்தையும் எதிலும் சிவத்தையும் காணும் அடியார்களை இங்கே மணிவாசக அடிகளார் குறிப்பிடுகின்றார். தில்லைக் கூத்தனை கண்ட சுந்தரர், ஐந்து பேரறிவும் கண்களே ஆக, அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாக குணமொரு மூன்றும் திருந்து சாத்துவீகமே ஆக, தனிப் பெருங்கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்தில் திளைத்த, நிகழ்ச்சி நமது நினைவுக்கு வருகின்றது. மணிவாசக அடிகளாரும் குழைத்த பத்து பதிகத்தின் பாடலில், கூறும் நாவே முதலாக கூறும் கரணம் எல்லாம் நீ என்று சொல்வதும் நமது நினவுக்கு வருகின்றது. அத்தகைய நிலையினை அடையும் அடியார்களின் பிறப்பினை அறுத்து மகிழ்பவன் பெருமான் என்று கூறுகின்றார். அத்தகைய அடியார்களை விட்டு பெருமான் எப்போதும் பிரியாமல் இருக்கும் நிலையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பெருமானின் சிறப்புகளை நாம் வாயார பேச வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் எனப்

பேணும் அடியார் பிறப்பகலக் – காணும்

பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்

பிரியானை வாயாரப் பேசு

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் (8.48.7) பெருமான் அளித்த மணியான உபதேச வார்த்தைகளைப் பேசியும் பெருந்துறைப் பெருமானை வாழ்த்தியும் தான் பிறப்பினை அறுத்துக் கொண்டதாக அடிகளார் கூறுகின்றார். இலக்கிதம்=உண்மை நிலை; பேசும் பொருள்=அனைத்து உலகியல் பொருட்கள்; உலகியல் பொருட்கள் நிலையற்றவை; அவை அனைத்தும் தருகின்ற இன்பமும் நிலையற்றவை; தான் ஒருவனே என்றும் நிலையானவன், தான் ஒருவனே என்றும் அழியாத நிலையான ஆனந்தத்ததை அருளும் ஆற்றல் வாய்ந்தவன் என்பதே பெருமான் செய்த உபதேசம் என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். எண்ணங்களையும் சொற்களையும் கடந்தவனாக பெருமான் இருக்கும் தன்மை, பேச்சிறந்த மாசில் மணி என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. உயிர்களின் பெரிய பிணியாகிய பிறவிப் பிணியை போக்கும் பெருமானை நல்ல மருந்து என்று குறிப்பிடுகின்றார்.

பேசும் பொருளுக்கு இலக்கிதமாம் பேச்சிறந்த

மாசில் மணியின் மணி வார்த்தை – பேசிப்

பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல

மருந்தின் அடி என் மனத்தே வைத்து

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் பெருமானை வாழ்த்தும் உயிர்களின் பிறவிக்காடு வேரோடு கெட்டு விடும் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். எண்ணற்ற பிறவிகளால் சூழப்பட்டுள்ள உயிர்களை, பிறவிக் காட்டில் அகப்பட்ட உயிர்கள் என்று குறிப்பிடுகின்றார். உகு=சொரிகின்ற; அனைத்து உயிர்களுடன் தொன்றுதொட்டு பிணைந்து வருகின்ற மூன்று மலங்களும் மாய்ந்து ஒழியும் வண்ணம் சொரிகின்ற, பெருமை வாய்ந்த தேனாகிய வெள்ளத்தை அளிக்கும், வேதக் குதிரையின் மேல் எழுந்தருளி வந்த வள்ளலாகிய பெருமான் உறைகின்ற திருப்பெருந்துறை தலத்தை வாழ்த்தினால், உங்களது பிறவியாகிய காட்டின் கருவே அழிந்து விடும் என்ற அறிவுரையை உள்ளடக்கிய பாடல்.

உள்ள மலமூன்றும் மாய உகு பெருந்தேன்

வெள்ளம் தரும் பரியின் மேல் வந்த – வள்ளல்

மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்

கருவும் கெடும் பிறவிக் காடு

திருவாசகம் திருப்படையாட்சி பதிகத்தின் பாடலில் மணிவாசக அடிகளார், ஈசன் நம் முன்னே எழுந்தருளினால் நம்மிடம் ஏற்படும் பல மாற்றங்களை உணர்த்தும் அடிகளார், இந்திர ஞாலம் போன்று இன்பத்தை நம்மிடை தோற்றுவித்து உடனே அந்த இன்பங்களை அழித்து, துன்பங்களை மிகுதியாக அளிக்கும் பிறவித் துன்பம் ஒழிந்து போகும் என்று கூறுகின்றார். பொதுவாக நடைபெறாது என்று நாம் கருதும் பல செயல்கள், இறைவன் நம் முன்னே எழுந்தருளினால் நடைபெறுகின்ற அதிசயத்தை அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பறிந்து மறிந்திடும்=வேர் பறிக்கப்பட்டு தலைகீழாக விழுந்து விடும்; பந்த விகார குணங்கள்=ஆணவ மலத்தின் சேர்க்கையால் உயிர்கள் இறைவனை நாடும் தன்மைக்கு இடையூறாக இருக்கும் அறியாமை; பாவனை=தியானம்; மகளிரின் சிவந்த உதடுகள், இதழ் துடிப்புகள், இளமை முதலியன நம்மில் காம உணர்ச்சியைத் தூண்டி, இறை உணர்வினை மங்கச் செய்யும் தன்மை, மடவார் இடரானவை என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது; இறைவன் நம் முன்னே எழுந்தருளினால், தொடரும் பிறவிகளுக்கு காரணமாக விளங்கும் குணங்கள், ஆணவ மலத்தின் சேர்க்கையால் நம்மிடம் ஏற்படும் மாறுதல்கள், நம்மை விட்டு விலகி விடும்; இறைவனைக் குறித்து தியானம் செய்கின்ற மனதினில் சிவானந்தம் பெருகும்; எல்லா அண்டங்களையும் எல்லையற்ற எல்லா உலகப் பொருள்களையும் காணும் ஆற்றல் நம்முள் விளையும்; அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகிய பரஞ்சுடரை நாம் நெருங்க முடியும்; அழகிய மகளிர்களால் நமது கவனம் சிதறாத வண்ணம் நம்மால் தொடர்ந்து இறை உணர்வில் திகழ முடியும்; நமது கண்கள் எப்போதும் அவனது திருமேனியை காணும் வண்ணம் எங்கும் சிவத்தையும் எதிலும் சிவத்தையும் காணும் பக்குவம் நம்மில் உண்டாகும்; இந்திர ஞாலம் போன்று தோன்றி மறையும் இன்பங்களை விளைவித்து பின்னர் துன்பங்களில் ஆழ்த்தும் பிறவிகள் நம்மை விட்டு விலகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே

பாவனையாய கருத்தினில் வந்த பராவமுது ஆகாதே

அந்தமிலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே

ஆதி முதற் பரமாய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே

செந்துவர் வாய் மடவார் இடரானவை சிந்திடும் ஆகாதே

சேலன கண்கள் அவன் திருமேனி திளைப்பன ஆகாதே

இந்திர ஞால இடர்ப் பிறவித் துயர் ஏகுவது ஆகாதே

என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே

பொழிப்புரை:

முந்திய பல பிறவிகளில் நீர் செய்த பாவங்களே வலிமையான வினைகளாக மாறி, நீங்கள் இறைவனது திருப்பாதங்களை தொழ விடாமல் தடுப்பதால் நீர்,பல விதமான துன்பங்களில் ஆழ்ந்து துயரடைகின்றீர்கள்; இன்னமும் அத்தகைய துன்பங்களில் ஆழ்ந்திராமல் எழுவீர். தனது அழகிய சடையில் பொன்னையும் வெற்றி கொண்ட அழகிய கொன்றை மலர்களை சூடியவனும் பூதங்கள் சூழ்ந்து பாட அதற்கேற்ப நடனம் ஆடும் திறமை கொண்டவனும் கொல்லும் தன்மை வாய்ந்த கூர்மையான சூலத்தை உடையவனும் ஆகிய இறைவன் உறையும் கோடிகா தலம் சென்றடைந்து அவனைத் தொழுது உங்களது வினைகளிலிருந்து விடுதலை பெறுவீர்களாக.

பாடல் 6:

இன்று நன்று நாளை (2.99) பாடல் 5 தொடர்ச்சி மற்றும் 6 (திதே 0515)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 6 தொடர்ச்சி (திதே 0516)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 6 தொடர்ச்சி (திதே 0517)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 6 தொடர்ச்சி (திதே 0518)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 6 தொடர்ச்சி (திதே 0519)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 6 தொடர்ச்சி மற்றும் 7 (திதே 0520)

ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தலாம் எனப்

பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயனிலைக்

காவல் மிக்க மாநகர் காய்ந்து வெங்கனல் படக்

கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே

விளக்கம்:

நமது வினைகள் கெட வேண்டும் என்று விரும்பினால், நாம் பெருமானது திருவடிகளை வணங்க வேண்டும் என்ற அறிவுரையை, திருஞானசம்பந்தர், பிரமாபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.19.4) வழங்குகின்றார். முடிகெனில்=முடிக+எனின்; முடிய வேண்டும் என்று விரும்பினால்; தொழுதெழு என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து இறைவனை வணங்கி பின்னர் எழும் நிலையினை குறிப்பிடுகின்றார். புனை கொடியிடை என்ற தொடரினை, பிறைச் சந்திரனுடன் இணைத்து கொடியிடையாளாகிய கங்கை நதி என்றும் பொருள் கொள்ளலாம். அதே தொடரினை உடலுடன் தொடர்பு கொண்டு, பெருமானின் உடலில் பாதியாக விளங்கும் உமையன்னை என்றும் பொருள் கொள்ளலாம். தாருகவனத்து முனிவர்கள் அபிச்சார ஹோமம் என்று அழைக்கப்படும் ஒரு வகை யாகத்தினை செய்து, பல பொருட்களை தீயினில் இட்டு அந்த தீயிலிருந்து ஓர் காட்டு யானையினை எழுப்பி, பெருமான் மீது ஏவியதை குறிப்பிடும் வண்ணம், பொருள் படுதரு களிறு என்று கூறுகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். பொருள் தரு என்ற தொடரினை கொடியிடை என்ற சொல்லுடன் இணைத்து, அன்னையைத் தனது உடலின் ஓர் அங்கமாக, பொருளாக ஏற்றுக்கொண்ட இறைவன் என்ற விளக்கமும் பொருத்தமே. கதிர்=சூரியன்; உலகத்தவரே, உங்களைப் பிணைந்துள்ள வினைகள் முற்றிலும் கெட்டு அழிந்துவிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது யாது என்பதை நான் கூறுகின்றேன்; கேட்பீர்களாக. தனது களங்கங்கள் நீங்கப் பெற்று உயர்ந்த நிலையினை அடைந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனும், கொடி போன்ற இடையினை உடைய உமை அன்னையைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டவனும், தாருகவனத்து முனிவர்களால் அபிசார ஹோமத்திலிருந்து எழுப்பப்பட்டு தன் மீது ஏவப்பட்ட மதம் கொண்ட ஆண் யானையின் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், நமது இல்லங்களில் பயன்படுத்தப்படும் குடம் போன்று பருத்த வயிற்றினை உடையதும் குள்ளமான உருவத்தினை உடையதும் ஆகிய பூத கணங்களை படையாக உடையவனும், இடைவிடாது ஒலிக்கின்ற அலைகள் உடைய கடலால் சூழப்பட்ட கழுமலம் நகரினில் மிகுந்த விருப்பமுடன் வீற்றிருப்பவனும், சூரியனையும் சந்திரனையும் தனது இரு கண்களாக உடையவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை, ஒலிக்கும் கழல்கள் அணிந்த திருவடிகளை நன்றாக தொழுது எழுவீர்களாக. அவ்வாறு செய்தால் உங்களது வினைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வினை கெட மன நினைவது முடிகெனில் நனி தொழுதெழு குல மதி

புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன்

மனை குடவயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி

கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினனது அதிர் கழல்களே

மேன்மேலும் பரவுகின்ற வினைகளை விட்டொழிக்க வேண்டும் என்று விரும்புவோர், கோலக்கா தலம் சென்று பெருமானின் திருவடிகளை பணிந்து வணங்க வேண்டும் என்று திருஞான சம்பந்தர் அறிவுரை வழங்குகின்றார். வெடிகொள் வினை=ஒரு வினையிலிருந்து மற்றொரு வினை கிளைத்தெழும் நிலை; நாம் பழைய பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள வினைகளின் தன்மையால் இந்த பிறவியில் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றோம். ஆனால் அந்த இன்ப துன்பங்களை அனுபவிக்கும் போது, நமது வினைகள் தாம் இந்த துன்பங்களுக்கு காரணம் என்பதை உணர்வதில்லை; அதற்கு மாறாக வினைகளின் கருவிகளாக துன்பங்களை விளைவிக்கும் மற்றவரை பழித்தும் வெறுத்தும் மேலும் பல வினைகளை தேடிக் கொள்கின்றோம் இதே போன்று இன்பங்களை அனுபவிக்கும் போது, நமது திறமையால் ஏற்பட்ட இன்பங்கள் எனக் கருதி யான் எனது என்ற செருக்கில் ஆழ்ந்து மேலும் பல வினைகளைத் தேடிக் கொள்கின்றோம். இவ்வாறு, முற்றிய தன்மையில் உள்ள வெண்டைக்காய் வெடித்துச் சிதறி பல செடிகளை உருவாக்குதல் போல ஒரு வினை மேலும் பல வினைகளுக்கு முதலாக இருந்து உயிர்களை என்றும் வினைக்குழியில் இருந்து வெளியேறிச் செல்ல முடியாத வண்ணம் ஆழ்த்துகின்றன. இவ்வாறு சேரும் வினைகளை ஆகாமிய வினைகள் என்று கூறுவார்கள். வீட்ட=நீக்கிக்கொள்ள; வெடித்துச் சிதறும் முற்றிய காய்களும் கனிகளும் மேலும் பல புதிய செடிகள் உருவாவதற்கு காரணமாக இருப்பது போன்று, மேன்மேலும் பல வினைகளை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும் வினைகளை முற்றிலும் நீக்க விருப்பம் கொண்டுள்ளவர்களே, உங்களுக்கு, அந்த வினைகளை நீக்கிக் கொள்ளும் வழியினை நான் காட்டுகின்றேன்; நறுமணம் மிகுந்த கொன்றை மலர்கள் கலந்த சென்னியை உடையவனும், கொடிகள் கட்டப்பெற்று பல திருவிழாக்கள் நடைபெறும் திருக்கோலக்கா தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை சென்றடைந்து பணிந்து, உங்களது வினைகள் நீங்கப்பெற்று நலமுடன் வாழ்வீர்களாக.

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்

கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்

கொடிகொள் விழவார் கோலக்காவுள் எம்

அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே

இரவும் பகலும் எந்நேரமும் பெருமானை வணங்க, நமது வினைகள் நம்மிடம் நில்லாமல், நம்மை விட்டு அகன்றுவிடும் என்று செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.25.5) திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். சிலை=வில்; சிலையார்=திரிபுரத்தை எரித்த வில்லினை உடைய சிவபெருமான்; மனம் ஒன்றி, சிவபெருமான் குறித்த சிந்தனைகளில் நிலையாக நின்று பெருமானைத் தொழ வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். எல்லி=இரவு;

மலையான் மகளோடு உடனாய் மதில் எய்த

சிலையார் செம்பொன் பள்ளியானையே

இலையார் மலர் கொண்டு எல்லி நண்பகல்

நிலையா வணங்க நில்லா வினைகளே

தூங்கானை மாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.59.1) பிறவிப் பிணியினை உடைய வாழ்க்கையை போக்கிக் கொள்ளவேண்டும் என்று விரும்பும் அடியார்கள் செய்ய வேண்டியது யாது என்பதை திருஞானசம்பந்தர் விளக்குகின்றார். பிணி=வினைகளும் வினைகளால் வரும் துன்பங்களும்; முந்தைய பிறவிகளில் நாம் தேடி சேர்த்துக் கொண்ட வினைகளின் தன்மைக்கு ஏற்ப, இந்த பிறவியில் நமக்கு உடல் அமைகின்றது. உடலுடன் சேர்ந்த உயிரும் சிறிது சிறிதாக வினைகளின் பயனை, இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவித்து கழிப்பதை நாம் அறிவோம். பிறவி எடுத்த நாளிலிருந்து இந்த பிறவியினில் நாம் அனுபவித்து கழிக்க வேண்டிய வினைகள் என்று இறைவனால் நிர்ணயிக்கப் பட்ட வினைகள் இந்த உயிருடன் பிணைந்து இருக்கின்றன. ஆனால் இந்த வினைகள் அனைத்தும் ஒரே நாளில் அவற்றின் பலனை தருவதில்லை. ஒடுங்கி இருக்கும் வினைகள், அந்த வினைகளால் நாம் அனுபவிக்க ஏற்ற காலம் வரும் வரை வெளிப் படுவதில்லை. தக்க காலம் வரும் வரை காத்திருக்கும் வினைகள், உரிய காலம் வந்ததன் பின் வெளிப்பட்டு நமக்கு இன்பமும் துன்பமும் அளிக்கின்றன. இவ்வாறு உள்ள தன்மையை ஒடுங்கும் பிணி என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். கிடங்கு=அகழி; சுலாவி= சுற்றி; கேடு=கெட்டுப் போவது; பிறவியுடன் இணைத்து சொல்லப் பட்டுள்ளமையால் பிறவிக்கு கெடுதியை உண்டாக்கும் இறப்பு. இந்த சொல் இறப்பினை மட்டும் குறிப்பிடாமல் நாம் இறப்பதற்கு முன்னர் அனுபவிக்க வேண்டிய பல துன்பங்களையும் குறிப்பிடுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். தவம் அடங்குதல்=தவத்தில் அடங்கி நிற்றல்; தவமாகிய சாதனத்தில் அழுந்தியிருத்தல்; இந்த பாடலில் தூங்கானை மாடத்து பெருமானின் திருவடி நிழலின் கீழே ஆளாகி நிற்க வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். கடந்தை=வீரம் நிறைந்த மக்கள்; பண்டைய நாளில் வீரர்கள் வசித்த இடமாக பெண்ணாகடம் இருந்தது போலும். கடந்தை என்ற அடைமொழியுடன் திருஞான சம்பந்தர் இந்த பாடலில் இந்த தலத்தினை குறிப்பிடுகின்றார்.

ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்று இவை உடைத்தாய வாழ்க்கை ஒழியத் தவம்

அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம் அடிகள் அடி நிழற்கீழ் ஆளாம் வண்ணம்

கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழுமனைகள் தோறும் மறையின் ஒலி

தொடங்கும் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே

தில்லைச் சிற்றம்பலம் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.80.2) திருஞானசம்பந்தர், நமது மையலைத் தீர்த்துக் கொள்ளும் வழி, தில்லைக் கூத்தனைப் பணிந்து வணங்குவது தான் என்று அறிவுரை கூறுகின்றார். பறப்பை=வேள்விச் சாலை; பசு என்ற சொல் பொதுவாக ஆன்மாவை குறிக்கும். வேட்டு=வேட்டையாடி கொல்லும்; பசு வேட்டு=ஆன்ம போதத்தை அறவே ஒழித்து; உலகில் உள்ள உயிர்களைப் பற்றிய அறிவு, எந்த விதத்திலும் இறையுணர்வினை வளர்க்க உதவாது என்பதால், உலகத்தில் உள்ள பொருட்கள் மற்றும் உயிர்கள் மீதான பற்றினை விலக்கிக் கொண்டு இறைவனை தியானிப்பது தில்லை வாழ் அந்தணர்கள் செய்த செயலாக இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஆன்ம போதத்தை ஒழிப்பதற்கு முதலில் நாம் ஆன்மபோதம் கொண்டுள்ள தன்மையுடன் வாழ்வதை உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்த பின்னர் அதனை ஒழிக்க முயற்சி செய்யத் தலைப்பட வேண்டும். எனவே தான் வேட்டையாடி விலங்குகளை கொல்வது போன்று, நாம் உலகப் பொருட்கள் மீது வைத்துள்ள பாசத்தினை முற்றிலும் விலக்க வேண்டும் என்று இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. மையல்=மயக்க உணர்வு; மாயா மலத்தின் செய்கையால் உலகம் மற்றும் உலகப் பொருட்களின் மீது ஏற்படும் மோகம்; தில்லை வாழ் அந்தணர்கள் செய்யும் வேள்விகளால் உலகினுக்கு கிடைக்கும் நன்மையை பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தர், இந்த பாடலில் அத்தகைய வேள்விகள், வேள்வி செய்வோருக்கு விளைவிக்கும் பயனை கூறுகின்றார். பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, தாங்கள் கொண்டிருந்த ஆன்ம போதத்தை அறவே நீக்கி இறைவனைப் பற்றிய சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, வேள்வித்தீ வளர்க்கும் சிறப்பான செயலைச் செய்யும் தில்லை வாழ் அந்தணர்கள் உறையும் தலத்தில் உள்ள சிற்றம்பலத்தில் நடமாடும் பெருமான், தாயின் வயிற்றில் தங்கி பிறத்தல் இல்லாதவன் என்ற பெருமையை உடையவன்; பின் புறம் தாழ்ந்த சடையை உடையவன். அந்த பெருமானை மறவாது தொழும் அடியார்கள், அதன் முன்னம் தாங்கள் உலகப் பொருட்கள் மற்றும் உயிர்கள் மீது கொண்டிருந்த மயக்க உணர்வு நீங்கப் பெறுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பறப்பைப் படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும்

சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

பிறப்பில் பெருமானைப் பின் தாழ் சடையானை

மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே

ஏவம்=எவ்வம் என்ற சொல்லின் திரிபு, எதுகை கருதி திரிந்தது. எவ்வம்=இகழ்ச்சி; காய்ந்து=கோபம் கொண்டு; திருநீலகண்டப் பதிகத்தின் பாடலில் (1.116.9) திருஞானசம்பந்தர், வினைகளின் பயனால் மீண்டும் ஒரு பிறவி எடுக்க நேரிடினும், அந்த பிறவியிலும் தொடர்ந்து இறைவனைப் போற்றி வணங்கி பயனடைய வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் புலன்களின் வழியே செல்லும் வாழ்க்கையைக் கடிந்து உன்பால் அன்பு வைத்து வாழ்வோம் என்று தாங்கள் உறுதி பூண்டுள்ளதாக சொன்ன அடியார்கள், ஒரு கால் தாங்கள் மறு பிறவி எடுக்க நேரிடினும் பெருமானைத் தொடர்ந்து வணங்குவோம் என்று கூறுவதாக பாடலின் மூன்றாவது அடி அமைந்துள்ளது. தோற்றினும் தோற்றும்=வினைகளின் பயனால் மீண்டும் உலகினில் தோன்றும் நிலை ஏற்படினும்; திருமாலும் பிரமனும் தங்களது வலிமையின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக உமது அடியையும் முடியையும் தேடிக் களைத்து தங்களது முயற்சியை கைவிட்டனர்; ஆனால் உமது அடியார்களாகிய நாங்கள், உமது கருணையின் மீது நம்பிக்கை வைத்து எங்களது முயற்சியில் ஈடுபடுவதால், எங்களுக்கு ஒரு முறை நிச்சயம் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், பல பிறவிகள் எடுத்தாலும் தொடர்ந்து உமது திருவடியை அடைந்து சார்ந்து இருக்க முயற்சி செய்து வெற்றி பெறுவோம் என்று கூறுவதாக அமைந்த பாடல். நறுமணம் வீசும் தாமரை மலர் மேல் உறைகின்ற பிரமனும் நாராயணனும் தங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட விவாதத்திற்கு, தங்கள் இருவரில் யார் பெரியவர் என்று தர்க்கத்திற்கு, ஒரு முடிவு காணும் பொருட்டு, தங்கள் முன்னே எழுந்த அழல் தூணின் அடியையும் முடியையும் எவர் முதலில் காண்கின்றனரோ அவரே தங்களில் உயர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்து, தழல் தூணாக தோன்றிய உமது அடியையும் முடியையும் காண்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்த போதிலும், அவர்கள் இருவரின் முயற்சி தோல்வியுறும் வண்ணம் நீண்டு நெடிய பிழம்பாக நின்ற இறைவனே, உமது கருணையின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அடியார்களாகிய நாங்கள், இந்த பிறவியில் உம்மை அடைய முடியவில்லையாயினும் உம்மை அடைவதற்காக இனி தொடர்ந்து வரும் பிறவிகளிலும் உம்மைத் தொழுது வணங்குவோம். அதனால், உயிர்கள் மீது சீற்றம் கொண்டு உயிர்களை இன்ப துன்பங்களில் ஆழ்த்தி, மேலும் வினைகளைச் சேர்க்கும் வினைகள், எங்களைத் தீண்டாத வண்ணம் அருள் புரிந்து எம்மை காப்பாற்றுவீராக. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு, நீலகண்டம் என்று அழைக்கப்படும் பெருமானின் மீது ஆணையிட்டு, இதனை நான் சொல்கின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நாற்ற மலர் மிசை நான்முகன் நாரணன் வாது செய்து

தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அறியீர்

தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்

சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

திருவைந்தெழுத்து பதிகம் என்று அழைக்கப்படும் பதிகத்தின் (3.22) அனைத்துப் பாடல்களிலும் திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறுகின்றார். மனதினில் வஞ்சகம் ஏதுமின்றி ஐந்தெழுத்தினை நாளும் போற்றினால் அந்த மந்திரம் நம்மை நெருங்கவரும் காலனையும் அவன் அஞ்சும் வண்ணம் உதைத்து விரட்டும் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலிலும், வேதியர்கள் காலை நண்பகல் மற்றும் மாலை ஆகிய மூன்று பொழுதினும் ஓதவேண்டிய மந்திரம் என்று இரண்டாவது பாடலிலும், பற்று அறுத்து நிட்டை கூடியவர்களுக்கு பழைய வாசனையால் ஏதேனும் சலனம் ஏற்படுமாயின் அதனை போக்கி காக்கும் மந்திரம் என்று மூன்றாவது பாடலிலும், உயிர்களை நரக வேதனையிலிருந்து காக்கும் மந்திரம் என்று நான்காவது பாடலிலும், தொண்டர்களுக்கு முக்தி உலகத்தில் இடம் பெற்றுத்தரும் என்று எட்டாவது பாடலிலும், தொண்டர்களுக்கு சிறந்த அணிகலனாகத் திகழ்வது அஞ்செழுத்து மந்திரம் என்று ஒன்பதாவது பாடலிலும், தொண்டர்களின் வினைகளை ஒழிக்கும் அத்திரமாக திகழும் மந்திரம் என்று பத்தாவது பாடலிலும் குறிப்பிடும் திரஞானசம்பந்தர், உயிர்க்கு இந்த பிறவியில் பல வகையிலும் துணையாக இருக்கும் அஞ்செழுத்து மந்திரம் உயிரினை நரக வேதனையிலிருந்து காப்பாற்றி மறுமையிலும் துணையாக இருக்கும் என்று கூறுகின்றார். நாம் இந்த பதிகத்தை ஓதியும் அஞ்செழுத்து மந்திரத்தை ஓதியும், இம்மை மற்றும் மறுமையில் நமக்கு நல்ல துணையாக அஞ்செழுத்து மந்திரத்தைக் கொள்வோமாக.

திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.27.1) திருஞான சம்பந்தர், முந்தி நின்ற வினைகள் அவை போக திருப்புன்கூர் சிவனாரை சிந்திக்க வேண்டும் என்ற அறிவுரை கூறுகின்றார். தலத்து இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பது சிவனார் என்று சொல்லின் மூலம் உணர்த்தப் படுகின்றது. எந்த உயிரும் தான் கொண்டிருந்த உடலை விட்டு நீங்கிய பின்னர், தன்னுடன் பிணைந்துள்ள எஞ்சிய வினைகளைக் கழித்துக் கொள்ளும் பொருட்டு மீண்டும்மீண்டும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. எஞ்சியுள்ள வினைகளின் தன்மை பற்றியே, அடுத்து எடுக்கவிருக்கும் உடலின் தன்மை இறைவனால் தீர்மானிக்கப் படுகின்றது. இவ்வாறு பிறவி எடுக்கும் முன்னமே, வினைகள் முன்னமே சென்று அந்த பிறவியின் தன்மையை நிர்ணயிப்பதையும் தக்க தருணத்தில், புதிய உடலுடன் பிணைந்துள்ள அந்த உயிர்கள், வினைகளை நுகர்ந்து கழிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் நாம் காண்கின்றோம். இவ்வாறு வினைகள் இருக்கும் நிலையினையே முந்தி நின்ற வினைகள் என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த வினைகளை அனைத்து உயிர்களும் அனுபவித்தே கழிக்க வேண்டிய நிலையில் பொதுவாக இருந்தாலும், சிவபெருமான் கருணையால் பக்குவப்பட்ட உயிர்களின் வினைகள் முற்றிலும் நீக்கப்படுகின்றன. அத்தகைய பக்குவம் பெறுவதற்கான முதற்படி பெருமானை வணங்கி வழிபடுதல். எனவே தான் திருஞானசம்பந்தர் இந்த பாடலில், தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். பதிகத்தின் பத்தாவது பாடலில் காபாலி வேடத்தைக் கண்டு களித்து, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுகின்றார்.

உயிர்கள் இணைந்திருக்கும் உடல் அழிகின்றது: அதனால் எஞ்சிய வினைகளை கழித்துக் கொள்ள உயிர் மீண்டும் பிறப்பு எடுக்க நேரிடுகின்றது. ஆனால் பெருமானோ அழிவின்றி என்றும் நிலையாக இருப்பவன். அவனுக்கு இறப்பு என்பதே இல்லை; மேலும் அவன் மலங்களின் கலப்பற்றவன். எனவே மலங்களைக் கழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. அதனால் இறந்த பின்னர் மற்றவர்களுக்கு ஏற்படும் பிறப்பும் அவனுக்கு ஏற்படுவதில்லை. இவ்வாறு அழிவின்றி, அழிவினால் ஏற்படும் பிறப்பின்றி இருக்கும் பெருமான் ஒருவனே நம்மை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிக்க வல்லவன் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்தமில்லா அடிகள் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இவ்வாறு அந்தமில்லா அடிகளாக இறைவன் இருப்பதால் அவனைத் தொழ வேண்டும் என்றும் நமக்கு அறிவுரை கூறுகின்றார். பிரமன் திருமால் உட்பட அனைத்து தேவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியுடன் பிணைக்கப்பட்டு பிறந்தும் இறந்தும் இறந்த பின்னர் மீண்டும் பிறந்தும் உழல்பவர்கள். இந்த சங்கிலியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு அந்த விடுதலையை மற்றவர்க்கு அளிக்க முடியும். எனவே தான் பெருமான் ஒருவன் மட்டுமே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றல் படைத்தவன் என்று திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. இந்த பாடலில் பெருமானின் சடையினை கந்தம் மல்கு கமழ்சடை என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஒரு உடல் பிறக்கும் முன்னமே, அந்த பிறவியில் அனுபவித்து கழித்துத் தீர்க்க வேண்டிய வினைகள், அந்த உடலையும் உயிரினையும் வருத்த காத்திருக்கின்றன. இவ்வாறு காத்திருக்கும் வினைகளை நீங்கள் முற்றிலுமாக கழித்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் திருப்புன்கூர் தலத்தில் வீற்றிருக்கும் சிவலோகநாதரை சிந்திப்பீர்களாக. அழிவு என்பதே இல்லாமல் என்றும் நிலையாக இருக்கும் சிவபெருமான், நறுமணம் கமழும் செம்பட்டை நிறத்தில் உள்ள சடையை உடையவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

முந்தி நின்ற வினைகள் அவை போக

சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்

அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்

கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே

ஆணவ மலத்தினால் நமக்கு ஏற்படும் அறியாமை எனும் இருளினை நீக்கிக் கொள்ள விரும்புவோர், ஞானப் பொருளாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்க வேண்டும் என்று திருஞான சம்பந்தர் மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.38.3) குறிப்பிடுகின்றார். வானம்= உயர்ந்த தலம்; அமர்தல்=விரும்பி உறைதல்; உயிர்களின் அஞ்ஞானத்தை தீர்க்கும் ஆற்றல் படைத்த இறைவன், தேனினும் இனியவனாக திருஞானசம்பந்தரால் கருதப் படுகின்றான்.

ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்

ஞானப் பொருள் கொண்டு அடி பேணும்

தேன் ஒத்து இனியான் அமரும் சேர்

வானம் மயிலாடுதுறையே

குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.11) திருஞான சம்பந்தர், தேவாரப் பாடல்களை முறையாக பாடுவோர், மீண்டும் ஒரு கருவினில் புகுந்து அல்லற்படும் பிறவி எடுக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார். கருவார்=அடர்ந்து கருமை நிறத்தில் காணப்படும்; அடுத்தடுத்து உள்ள மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டு இருப்பதால், சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக் கதிர்கள் உள்ளே புகமுடியாமல் இருப்பதால், இருண்டு காணப்படும் சோலைகள்; தான் மூன்று வயதுச் சிறுவனாக இருந்த போது, அம்பிகை அளித்த ஞானப்பாலினை தான் உட்கொள்ளும் வண்ணம் கருணை புரிந்து, அந்த பாலுடன் சிவஞானமும் கலந்து ஊட்டப்பட்ட செய்தியை இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கருவார் இடும்பை=கருவினில் புகுந்து இடர்ப்படும் தன்மை; அடுத்தடுத்து உள்ள மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கொண்டு இருப்பதால், சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக் கதிர்கள் உள்ளே புகமுடியாமல் இருப்பதால், இருண்டும் செழிப்புடன் வளர்ந்தும் காணப்படும் சோலைகள் சூழ்ந்து அழகாக விளங்கும் குடந்தை நகரத்தில் உள்ள குடந்தைக் காரோணம் திருக்கோயிலில் உறையும் செல்வராகிய காரோணத்தாரை, இறைவனின் கருணையால் விளைந்த சிவஞானம் ஆகிய கல்விச் செல்வத்தை பெற்றவனும் சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தினைச் சார்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் உருவாக்கிய செம்மையான தமிழ்ச் சொற்கள் அடங்கிய மாலையாகிய இந்த பத்து பாடல்களையும் முறையாக ஓதும் அடியார்கள், மீண்டும் கருவினில் புகந்து இடர்ப்படும் தன்மையை எய்தாது தங்களது கவலைகள் நீங்கப் பெறுவார்கள். அதாவது பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு முக்திநிலை அடைந்து, இறைவனுடன் இணைந்து என்றும் அழியாத பேரின்பத்தில் ஆழ்ந்து இருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை

கருவார் பொழில் சூழ்ந்து அழகார் செல்வக் காரோணத்தாரை

திருவார் செல்வம் மல்கு சண்பைத் திகழும் சம்பந்தன்

உருவார் செஞ்சொல் மாலை இவை பத்தும் உரைப்பார் உலகத்துக்

கருவார் இடும்பைப் பிறப்பு அறுத்துக் கவலை கழிவாரே

ஆப்பனூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.88.4) திருஞானசம்பந்தர், பெருமானை பிணியும் பிறப்பறுப்பான் என்று குறிப்பிடுகின்றார். துணியின் உடை=பெரிய துணியிலிருந்து துண்டிக்கப்பட்ட கோவண ஆடை; இம்மையில் உடலுடன் பொருந்தும் நோய்களையும் மறுமையில் உயிருடன் பொருந்தும் நோயாகிய பிறப்பினையும் அறுக்கும் வல்லமை வாய்ந்தவன் பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். உயிர் தன்னுடன் பிணிந்துள்ள வினைகளை அறுத்துக் கொள்வது முதற்படி; இவ்வாறு வினைகளை அறுத்துக் கொள்வதால், மலங்களிலிருந்து விடுதலை பெறுகின்ற உயிர்கள் பக்குவமடைந்த உயிர்களாக கருதப்பட்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்றன. இந்த தன்மை தான் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது.

பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்

துணியின் உடை தாழச் சுடரேந்தி ஆடுவான்

அணியும் புனலானை அணி ஆப்பனூரானைப்

பரவும் மனமுடையார் வினை பற்று அறுப்பாரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.91.2) பிறவி அறுக்க வேண்டும் என்று விரும்பும் அடியார்கள் செய்ய வேண்டியது யாது என்பதை திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அறவன்=அறங்களுக்கு இருப்பிடமானவர்; திருவள்ளுவர் அறவாழி அந்தணன் என்று கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. துறவி=பாசம் துறத்தல்; இறைவனைத் தொழுதால் முக்திநிலை அடையலாம் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர், முக்தியுலகம் செல்லும் வழியில் எவ்வாறு ஈடுபடுவது என்பதை இந்த பாடலில் சொல்லிக் கொடுக்கின்றார். தமது பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட, முக்தி நிலை அடையவேண்டும் என்று உயிர்கள் விரும்புகின்றன. அதற்கு முதற்படியாக நாம் துறவு நிலை அடையவேண்டும். அதாவது உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது நாம் கொண்டுள்ள பாசத்தை அறவே துறக்க வேண்டும். பாசங்களிலிருந்து விடுபடுவது என்பது எளிதில் நிறைவேறுவதில்லை. இறைவனின் அருளால் தான் நிகழ்கின்றது என்பதால், புண்ணியமே வடிவமான ஆரூர்ப் பெருமானை மறவாமல் வழிபட்டு, பாசத்திலிருந்து விடுதலை பெறுவீர் என்ற அறிவுரையை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் வழங்குகின்றார். நாம் உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாசத்தின் காரணமாகவே, பல தவறுகளைச் செய்து மேலும் வினைகளை சேர்த்துக் கொள்கின்றோம். எனவே வினைகளை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டுமெனில் பாசத்தை அறுக்க வேண்டும்; மேலும் நாம் எதிர்கொள்கின்ற இன்ப துன்பங்களை சரிசமமாக பாவிக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய பக்குவம் அடைவதற்கும் இறையருள் தேவைப் படுகின்றது. பற்றினை அறுத்துக் கொண்டு துறவி நிலையினை அடைவதற்கு உதவும் வழி, பெருமானை நினைத்து வழிபடுவது தான் என்பதை மிகவும் அழகாக திருவள்ளுவர் விளக்கும் குறள் நமது நினைவுக்கு வருகின்றது. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு என்பதே அந்த திருக்குறள்; புண்ணியமே வடிவமாக விளங்கும் ஆரூர் பெருமானை மறவாது புகழ்ந்து வணங்கி, அவனது உதவியுடன், உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது கொண்டுள்ள ஆசையினை துறந்து விடுவீர்களாக. இவ்வாறு பாசத்தைத் துறந்தும், எதிர்கொள்கின்ற இன்ப துன்பங்களை ஒன்றாக கருதி அவற்றால் சலனம் அடையாமல் இருப்பதன் மூலமும், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, முக்தி உலகம் சென்றடையும் தகுதி பெறுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை;

பிறவி அறுப்பீர்காள், அறவன் ஆரூரை

மறவாது ஏத்துமின், துறவி யாகுமே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.48.10) சமணர்கள் மற்றும் புத்தர்களின் உரைகளால் மனம் மயங்காமல், தொடர்ந்து சிவபெருமானை வழிபடும் மனிதர்களை, அறிவுடையீர் என்று அழைக்கும் திருஞானசம்பந்தர், பெருமானை வழிபட்டு, தீங்கு ஏதும் இல்லாத நல்லவர்களாக திகழுமாறு அறிவுரை கூறுகின்றார். போதியர்=போதி மரத்தை வழிபடும் புத்தர்கள்; பிண்டி=அசோகா மரம்; பிண்டியர்கள்=அசோக மரத்தை வழிபடும் சமணர்கள்; மிண்டு மொழி=முரட்டுத் தனமான சொற்கள், உண்மையை திரித்து பழித்துக் கூறும் சொற்கள்; கல் போன்று கடினமான சொற்கள்; பேதையர்=அறிவில் முதிர்ச்சி அற்றவர்கள்; சீர்=மிகுந்த புகழ்; போதி மரத்தினை வணங்கும் பௌத்தர்களும் அசோக மரத்தினை வணங்கும் சமணர்களும், உண்மையை திரித்து கடுமையான வார்த்தைகள் மூலம் பெருமானை இழித்து பேசுகின்றனர். உலகத்தவரே, அவர்கள் அறிவில் முதிர்ச்சி அற்றவர்கள்; அவர்களை விட்டு நீங்கள் பிரிந்து விடுவீர்களாக; அறிவுடைய நீங்கள் நான் சொல்வதை கேட்பீர்களாக. அந்தணர்கள் விரும்புவதும் மிகுந்த புகழினை உடையதும், பெரியதும் ஆகிய திருவெண்காடு தலத்தில் உறையும் பெருமானின் திருநாமங்களை ஓதும் அடியார்கள் எந்த விதமான தீங்கும் சென்று அடையாதவர்களாக இருப்பார்கள் என்பதை உணர்வீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

போதியர்கள் பிண்டியர்கள் விண்டு மொழி பொருள் என்னும்

பேதையர்கள் அவர் பிறிமின் அறிவுடையீர் இது கேண்மின்

வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று

ஓதியவர் யாதும் ஒரு தீதிலர் என்று உணருமினே

மண்ணில் நல்ல வண்ணம் என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (3.24.6) பெருமானைத் தவிர்த்து நமக்கு பற்றுக்கோடு வேறெவரும் இல்லை என்று திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறுகின்றார். திருந்திழை=அழகு பொருந்திய ஆபரணங்கள்; அல்குல்=இடுப்பை ஒட்டிய இடம்; பெற்றெனை ஆளுடை=என்னைப் பெற்று ஆட்கொண்ட தந்தை; சிவபெருமானையே தனது தந்தையாக திருஞான சம்பந்தர் கருதியது இதனின்று புலனாகின்றது. நெஞ்சமே, பெருமானைத் தவிர்த்து பற்றுக்கோடாகக் கொள்வதற்கு வேறொருவரும் இல்லை என்பதை நீ புரிந்து கொள்வாயாக. நான்கு வேதங்களையும் கற்று, கற்றதன் படி ஒழுகுகின்ற வேதியர்கள் வாழ்கின்ற கழுமல வளநகரில், சிறிய இடையினையும் பெரிய அல்குலையும் கொண்டவளும் அழகிய ஆபரணங்கள் அணிந்தவளும் ஆகிய பார்வதி தேவியுடன், ஞானப்பால் அளித்து என்னை தனது மகவாக ஏற்றுக்கொண்டு அருள் புரிந்த பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருள் புரிகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே

கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.58.6) சுந்தரர், பெருமானை பிறவி வேர் அறுக்கும் கரும்பு என்று குறிப்பிடுகின்றார். தன்னுடன் பிணைந்துள்ள எண்ணற்றதும் வலிமையானதும் ஆகிய வினைகளை தீர்த்துக் கொள்ளும் வகை தெரியாமல் மிகவும் திகைத்த தான், பெருமானை என்றும் மறவாத மனம் பெற்றதால், அந்த வினைகளைத் தான் தீர்த்துக் கொண்டதாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். மேலும் பெருமானை, குளிர்ந்த மனத்துடன் முறையாக, அரும்பு, மலர், அமுதம், தேன் மற்றும் கரும்பு போன்று இன்பம் தருபவனும், அனைவர்க்கும் தலைவனும்,புண்ணியமே வடிவமாக இருப்பவனும், எனது பிறவியை வேரொடு களைபவனும் ஆகிய பெருமானை அடையாளம் கண்டு கொண்டு வணங்கிய தனக்கு கழுமல வளநகரில் பெருமான் காட்சி கொடுத்ததாக சுந்தரர் கூறுகின்றார்.

வரும் பெரு வல்வினை என்று இருந்தெண்ணி வருந்தல் உற்றேன் மறவா மனம் பெற்றேன்

விரும்பிய மனத்திடை மெய் குளிர்ப்பெய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே

அரும்பினை அலரினை அமுதினைத் தேனை ஐயனை அறவன் என் பிறவிவேர் அறுக்கும்

கரும்பினைப் பெருஞ் செந்நெல் நெருங்கிய கழனிக் கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.67.7) சுந்தரர், பெருமானை, பிறவிக் கடல் பரப்பு தவிர்ப்பவன் என்று குறிப்பிடுகின்றார். படுகடல்=ஒலிக்கும் கடல்; மிகுந்த ஆரவாரத்துடன் வினைகள் செயல்பட்டு உயிரினை பிறவிக்கடலில் இருந்து வெளியே செல்லாத வண்ணம் தடுக்கும் தன்மை; பக்குவப்பட்ட உயிர்கள், பெருமானின் உண்மையான தன்மையை புரிந்து கொண்டு, பெருமான் ஒருவனே பிறவிக் கடலிலிருந்து தங்களை கரையேற்ற வல்லவன் என்பதை அறிந்தவர்களாக, பெருமானின் உள்ளம் குளிரும் வண்ணம் பல விதமான திருப்பணிகளில் ஈடுபட்டு பயன் அடையும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

பந்தித்த வல்வினைப் பற்று அற பிறவிப் படு கடற்பரப்புத் தவிர்ப்பானைச்

சந்தித்த திறலால் பணி பூட்டித் தவத்தை ஈட்டிய தன்னடியார்க்குச்

சிந்தித்தற்கு எளிதாய்த் திருப்பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை

வந்திப்பார் தம் மனத்துள்ளானை வலிவலம் தன்னில் வந்து கண்டேனே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.70.9) சுந்தரர், பெருமானை வழித்துணை மருந்தே என்று அழைக்கின்றார். மாசிலாமணி என்பது இந்த தலத்து இறைவனின் திருநாமம். உயிர்கள் செல்ல விரும்பும் முக்தி நிலைக்கு, பக்குவமடைந்த உயிர்களின் பிறவிப் பிணியை நீக்கி, உயிர்களுடன் துணையாக உடனிருந்து அழைத்துச் செல்லும் இயல்பினன் என்பதை உணர்த்த, வழித்துணை மருந்தே என்று அழைக்கின்றார். எயிறு=பல்; இங்கே வராக அவதாரம் எடுத்த பன்றியின் கொம்பினை உணர்த்துகின்றது. ஈடு=இடப்பட்ட; வானம் என்பது உயர்ந்த உலகமாகிய முக்தி உலகத்தினை குறிப்பிடுகின்றது. பெருமானைத் தவிர்த்து, தனக்கு அஞ்சேல் என்று சொல்லித் தேற்றும் தன்மையர் வேறொருவரும் இல்லை என்று சுந்தரர் கூறுகின்றார். நாமும் அத்தகைய பாவனையுடன், பெருமான் ஒருவனே நமக்கு பற்றுக்கோடு என்று கருதி அவனை வேண்ட வேண்டும் என்பதை சுந்தரர் இங்கே நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்.

வான நாடனே வழித்துணை மருந்தே மாசிலாமணியே மறைப்பொருளே

ஏனமா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்புடையானே

தேனெய் பால் தயிர் ஆட்டுகந்தானே தேவனே திருவாவடுதுறையுள்

ஆனையே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.75.10) சுந்தரர், தேவாரப் பாடல்களை பாடும் அடியார்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று கூறுகின்றார். ஆழி=சக்கரம்: ஆழியார்=சக்கரப்படை ஏந்திய திருமால்: பெருமானின் திருவடிகளே உயிர்கள் உய்வினை அடைவதற்கு வழி வகுக்கும் சிறந்த பற்றுகோடு என்பதை உணர்ந்தவனாக, தான் வாழ்ந்ததாக சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். சிவனடியார்கள் அனைவருக்கும் தான் அடியவன் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் சுந்தரர் என்பதை நாம் அறிவோம். அந்த கருத்தினைத் தான் இந்த பாடலில், எம்மையும் ஆளுடையாரே என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். இந்த பிறவி முடிந்த பின்னர், நாம் அடுத்து எடுக்கப் போகும் பிறவி யாது என்பதை நாம் எவரும் அறியமாட்டோம். பிறவிகள் ஏழு வகையாக பிரிக்கப் படுகின்றன. தாவரம், நீரில் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, பறவைகள், நாற்கால் விலங்குகள், மனிதர்கள் மற்றும் தேவர்கள் என்பனவே இந்த ஏழு வகையான பிறவிகள். இந்த ஏழு வகையில், எந்த பிறவி நாம் அடுத்து எடுப்போம் என்று அறிய முடியாத காரணத்தால், ஏழுமா பிறப்பு என்று கூறுகின்றார். இந்த ஏழு வகையான பிறவிகளில் ஏதும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல், தேவாரப் பாடல்களைப் பாடும் அடியார்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஆழியாற்கருள் ஆனைக்காவுடை ஆதி பொன்னடியின்

நீழலே சரணாக நின்றருள் கூர நினைந்து

வாழவல்ல வன்றொண்டன் வண்டமிழ் மாலை வல்லார் போய்

ஏழு மா பிறப்பற்று எம்மையும் ஆளுடையாரே

நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.97.8) நமது பிணியினைக் களையும் அருமா மருந்து என்று சுந்தரர், இறைவனை குறிப்பிடுகின்றார். பிணி என்று இங்கே பிறவிப் பிணியே உணர்த்தப் படுகின்றது. குறுந்தெரியல்=சிறிய பிறைச் சந்திரன்; கண்ணி=தலையில் சூட்டிக் கொண்டுள்ள மாலை; சடையினில் பிறைச் சந்திரனை உடைய பெருமானை, திங்கட் கண்ணியன் என்று சொல்வது வழக்கம். சிவபெருமானால் மட்டுமே, பிறவிப் பிணியைத் தீர்க்க முடியும் என்பதால், பெருமானை அரியதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகிய பெரிய மருந்து என்று கூறுகின்றார். ஏழ் பிறப்பு=ஏழு வகையான பிறப்புகள்; அடுத்த பிறப்பின் தன்மையை எவரும் அறிந்தாரில்லை. என்பதால் தான் ஏழு வகையான பிறப்புகளில் ஒன்றாகிய பிறப்பு என்று இங்கே சொல்லப் படுகின்றது. தாவரம், நீரில் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, பறப்பன, நடப்பன, மனிதர்கள், தேவர்கள் என்பனவே ஏழு வகையான பிறப்புகள்;

திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய்

நங்கள் பிணி களைவான் அருமாமருந்தே ஏழ் பிறப்பும்

மங்கத் திருவிரலால் அடர்த்தான் வல் அரக்கனையும்

நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே

திருவாசகம் திருச்சதகம் அறிவுறுத்தல் பதிகத்தின் பாடலில் (8.5.19) மணிவாசக அடிகளார், தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை வழங்கும் பாடலை நாம் இங்கே காண்போம். வேனில் வேள்=வேனிற் காலத்தை, தனது உடைமையாகக் கொண்ட மன்மதன்; இள வேனிற் காலத்தை வசந்த காலம் என்று சொல்வது வழக்கம். பானல்=குவளை மலர்; வெண்மையான சிரிப்பினையும், சிவந்த உதடுகளையும், கருங்குவளை மலர்கள் போன்ற கண்களையும் உடைய பெண்களை இங்கே குறிப்பிடுகின்றார். பசி தூக்கம் களைப்பு போன்ற இயற்கை உணர்ச்சிகளிலிருந்து மாறுபட்டது பாலுணர்ச்சி. பசி முதலான உணர்ச்சிகள் அந்தந்த தேவைகள் நிறைவேற்றப் பட்டவுடன், அந்த நேரத்திற்கு அடங்கி விடுவதை நாம் காண்கின்றோம். ஆனால் பாலுணர்ச்சி எந்த நிலையிலும் அடங்காததாக இருப்பதை மணிவாசக அடிகளார் இங்கே உணர்த்துகின்றார். மகளிர் பால் காம வயப்பட்ட உயிர்கள் பதைத்தலையும் உருகுவதையும் குறிப்பிடும் அடிகளார், அத்தகைய உணர்வினால் நெஞ்சம் இறையுணர்விலிருந்து விலகிப் போய் பாழ்படுவதை இங்கே பாழ் நெஞ்சே என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். காம வயப்பட்டு நெஞ்சம் உருகாமல், பெருமான் பால் காதல் வயப்பட்டு நெஞ்சம் பதைபதைத்து உருக வேண்டும் என்ற அறிவுரை இங்கே தரப்படுகின்றது. சிற்றின்பம் காரணமாக நெஞ்சம் மட்டும் உருகுகின்றது. இறைவன் அளிக்கும் பேரின்பம் காரணமாக, உள்ளம் மட்டுமன்றி ஊனும் சேர்ந்து உருகுகின்றது என்று இந்த இரண்டு வகையான அன்பினுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை மிகவும் அழகாக விளக்குகின்றார். அடிகளாரின் மனதினில் குரு வடிவில் இருந்த இறைவன் புகுந்த போது, ஆங்கே புகுந்தவனும் தனியே இல்லை; அடிகளாரும் தனியே இல்லை; இறை அனுபவம் ஒன்று மட்டுமே எஞ்சி நின்றது. தன்னில் ஏற்பட்ட மாற்றத்தையும் அடிகளார் உணரவில்லை; அந்த அனுபவம் தந்த பேரானந்த வெள்ளம் வடியத் தொடங்கிய பின்னரே, தான் பெற்றிருந்த அனுபவத்தையே அடிகளார் உணர்கின்றார். அந்த அனுபவம் ஏன் வடிந்தது என்பதை ஆராய்ந்த அடிகளாருக்கு, அந்நேரம் வரையில் தனது மனதுடன் கலந்திருந்த இறைவன், அடிகளாரின் மனதினைத் தனியே விட்டுவிட்டு வெளியே சென்றதே காரணம் என்பதை புரிந்து கொள்கின்றார். அவ்வாறு வெளியே சென்ற இறைவன் எட்டாத உயரத்தில் இருப்பதை வானுளான் என்று குறிப்பிடுகின்றார். இறைவன் பால் ஆராத காதல் கொண்டு அவனை ஒன்றிய மனத்துடன் தியானித்தால், உள்ளம் பதைத்து உருகும் நிலையினை அடையலாம் என்ற அறிவுரை இங்கே வழங்கப் படுகின்றது. பெருமான் பால் அன்பு கொண்டு நெஞ்சம் பதைத்து உருகி நின்று பெருமானைத் தொழாமல் வீணான வாழ்க்கை வாழ்கின்றாயே என்ற கேள்வியை, தனது நெஞ்சம் நோக்கி அடிகளார் கேட்கின்றார்.

வேனில் வேள் மலர்க் கணைக்கும் வெண்ணகை செவ்வாய்க்கு அரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே

ஊனெலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்று போய்

வானுளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே

மேற்கண்ட பாடலுக்கு அடுத்த பாடலில், மணிவாசக அடிகளார் பெருமானைப் போற்றித் தொழாது இருந்தால், நெஞ்சினுக்கு என்ன நேரிடும் என்பதை (8.5.20) கூறுகின்றார். வாழாத நெஞ்சம்=வாழ வேண்டிய முறையில் வாழாத நெஞ்சம்; பெருமானைத் தொழுது வாழும் வாழ்க்கை தான் முறையான வாழ்க்கை; நெஞ்சமே, பெருமானைத் தொழுது முறையான வழியில் வாழ்க்கை வாழாமல், வலிய வினைகளின் பிடியில் அகப்பட்டுத் தவிக்கின்றாய். வலிமையான வினைகளின் பிடியில் சிக்கித் தவித்து வீழாமல் காப்பற்றி விடவும் கைதூக்கி விடவல்ல இறைவன் ஒருவன் இருக்கின்றான். எனவே அவனைப் புகழ்ந்து, அவனது அருளின் துணை கொண்டு வாழ்வில் உய்வினை அடையாமல், அவனை மறந்து பலவிதமான கேடுகள் உன்னைச் சூழும் வண்ணம் வாழ்கின்றாய்; இதனால் இம்மையில் பல துன்பங்களுக்கு ஆளாகும் நீ மறுமையில் பிறவி எடுத்து துன்பக் கடலில் ஆழ்வாய் என்பதை புரிந்து கொள்வாயாக என்று நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப் பட்டு

ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே

சூழ்கின்றாய் கேடு உனக்கு சொல்கின்றேன் பல காலும்

வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே

திருவாசகம் திருச்சதகம் ஆத்துமசுத்தி பதிகத்தின் முதல் பாடலில் (8.5.31) மணிவாசக அடிகளார், நாம் செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிட்டு அவற்றை நாம் செய்யாமல் இருக்கும் நிலையை சுட்டிக் காட்டி கண்டிப்பதை உணரலாம். பெருமானின் திருவடி தீட்சை கிடைத்த போது அடிகளார் பேரானந்தத்தில் மூழ்கி, செயலிழந்து சமாதி நிலையில் ஆழ்ந்து விடுகின்றார். அப்போது தன்னை அறியாமல் ஆடியும் பாடியும் பரவசமடைந்த அடிகளார், அந்த சமாதி நிலையிலிருந்து விழித்த பின்னர், அவரது ஆடல்கள் பாடல்கள் நின்று விடுகின்றன. இந்த நிலையை நினைத்து அடிகளார் தனது வருத்தத்தை தெரிவிக்கும் பாடல். சமாதி நிலையில் இருக்கும் போது, கருவி கரணங்கள் உயிரின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை; மேலும் கருவி கரணங்கள் செய்யும் செயல்களை உயிர் உணர்வதே இல்லை. வெள்ளம் வடிவது போன்று சமாதி நிலையிலிருந்து உயிர் விழித்தெழும் போது, கருவி கரணங்கள் சிறிது சிறிதாக தமது இயல்பு நிலையினை அடைகின்றன. அவ்வாறு இயல்பு நிலையினை அடைகின்ற தருணத்தில், தான் அடைந்த அனுபவத்தை நினைவு கூரும் உயிர்,தன்னை மறந்தும் மறவாமலும் ஆடுகின்றது, பாடுகின்றது, கண்ணீர் பெருக்குகின்றது, விழுந்து புரள்கின்றது. பின்னர் இந்த இரண்டாவது நிலையிலிருந்தும் விடுபட்டு, முற்றிலும் இயல்பு நிலை அடையும் போது, கருவி கரணங்களும் தத்தம் இயல்பான செயல்களில் ஈடுபடுகின்றன. இந்த மூன்றாவது நிலையை அடைந்த அடிகளார், தாம் தொடர்ந்து இரண்டாவது நிலையிலேனும் இருந்திருக்க வேண்டும் என்று விரும்பும் அடிகளார், அந்த நிலையில் இல்லாத தன்மையை குறிப்பிட்டு, தனது வருத்தத்தை தெரிவிக்கின்றார். எனவே தான் உயிரின் விருப்பத்திற்கு துணையாக செயல்படாத நெஞ்சத்தினை, பிண நெஞ்சே என்று அழைத்து சாடுகின்றார்.

ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பிலை என்பு உருகி

பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர்

சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணையிலி பிண நெஞ்சே

தேடுகின்றிலை தெருவு தோறு அலறிலை செய்வது ஒன்று அறியேனே

திருவாசகம் திருச்சதகம் ஆத்துமசுத்தி பதிகத்தின் பாடலில் (8.5.32) மணிவாசக அடிகளார், தனது சிந்தனையை திருத்திய பெருமான் என்று குறிப்பிட்டு எந்தை என்று அழைக்கின்றார். மேல் நெறி=உயர்ந்த நெறி, வீடுபேறு அளிக்கும் உயர்ந்த நெறி; புலம்=பண்பட்ட நிலம்; பயிர் நன்றாக விளைந்து வளர வேண்டும் என்றால், நிலத்தை பண்படுத்த வேண்டும்; அது போன்று மெய்ஞ்ஞானம் என்ற அறிவு வளர வேண்டும் என்றால், மனதிலுள்ள மாசுகள் களையப்பட வேண்டும்; அந்த மாசினைக் களைந்து சிந்தையைத் திருத்தி, உலகப் பொருட்கள் மீது தான் கொண்டிருந்த பாசத்தினை அறுத்தெறிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். அன்பினை வளர்ப்பவள் தாய் என்றும் அறிவினை வளர்ப்பவர் தந்தை என்றும் சொல்வது உலக வழக்கு. அதற்கேற்ப தனது சிந்தனையை திருத்தி மெய்ஞானத்தை வளர்த்த பெருமானை, எந்தை என்று மிகவும் பொருத்தமாக கூறுகின்றார். உண்மையான மெய்ஞ்ஞானத்தை அருளிய பெருமான், அந்த மெய்ஞ்ஞானத்தை பயன்படுத்தி மேலே செல்ல வேண்டிய உய்யும் நெறியை பெருமான் உணர்த்திய பின்னரும், அந்த வழியில் செல்லாத தனது நெஞ்சத்தை பிண நெஞ்சம் என்று அழைக்கின்றார்.

அறிவிலாத எனைப் புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளி மேல்

நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையை பந்தனை அறுப்பானைப்

பிறிவு இலாத இன்னருள்கள் பெற்றிருந்தும் மாறாடுதி பிண நெஞ்சே

கிறி எலாம் மிகப் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே

திருவாசகம் திருச்சதகம் பதிகத்தின் மற்றொரு பாடலில் (8.5.36) மணிவாசக அடிகளார் தனது தந்தையும் தலைவனும் ஆகிய பெருமானின் திருப்பாதங்கள் பால் அன்பு செலுத்தி மனம் கசிந்து உருகாத நிலையில் தான் இருப்பதாக குறிப்பிட்டு வருந்துகின்றார். போதரவு=மீட்சி; பொன்னகர்=சிவபுரி; உகுவது=சுழல்வது; நெகுதல்=உருகுதல்; போதரவு அற்ற பொன்னகர் என்று இங்கே கூறுகின்றார். மீண்டு வாரா வழியாகிய முக்தி உலகம் செல்லும் வழி இங்கே குறிப்பிடப் படுகின்றது. முக்தி நிலை அடையும் உயிர்கள் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடுவதால், முக்தி நெறி செல்லும் வழி போதரவு இல்லது என்று சொல்லப் படுகின்றது. பெருமானின் திருவடிகளை அமுதம், தேன், பால் கட்டி என்ற பொருட்களுடன் ஒப்பிட்டு, அவற்றினும் மேலானது என்று கூறுகின்றார். என்றும் அழியாத வீடுபேறு இன்பத்தைப் பெற்றுத் தருவதால், அமுதத்திற்கு ஒப்பிடப் படுகின்றது. தேன், உட்கொள்ளும் போது இனிய சுவை அளிப்பதுடன் பின்னர் மருந்தாகவும் பயன்படுகின்றது. பெருமானின் திருவடிகள் பால் அன்பு வைக்கும் போது இனிய உணர்வுகளைத் தரும் திருவடிகள், பிறவிப் பிணிக்கு மருந்தாகவும் செயல்படுகின்றன. பாலில் நெய் மறைந்திருப்பது போன்று பெருமானின் திருவடிகளில் வீடுபேறு மறைந்துள்ளது. பாலில் படு நெய் போல் என்ற அப்பர் பிரானின் வாய்மொழி நமது நினைவுக்கு வருகின்றது. கரும்பினைச் சாறு பிழிந்து, தீயிலிட்டு காய்ச்ச நமக்கு கட்டி கிடைக்கின்றது. அதைப் போன்று தங்களது உடலை பல விதத்திலும் வருத்திக் கொண்டு வீடுபேறு அடைய பலரும் முயல்கின்றனர். முனிவர்கள் காடு சென்று கடுமையான தவமிருந்து வீடுபேற்றினை அடைகின்றனர்; மற்றும் பலர் விரதம் நோன்பு ஆகிய சடங்குகள் கடைப்பிடித்து வீடுபேறு அடைய முயற்சி செய்கின்றனர். ஆனால் பெருமானின் அடியார்களோ, பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொள்வதால், தங்களை எந்த விதத்திலும் வருத்திக் கொள்ளாமல், வீடுபேறு அடைவதால், கரும்பின் கட்டிக்கு ஒப்பிடுகின்றார். ஆனால் இந்த உவமைகள் அனைத்தும் ஓரளவுக்கே பொருந்தும் என்பதால், மிகுவதாவதும் என்று குறிப்பிட்டு, இவை அனைத்தினும் சிறந்தது பெருமானின் திருவடிகள் என்று குறிப்பிடுகின்றார்.

புகுவதாவதும் போதரவு இல்லதும் பொன்னகர் புகப் போதற்கு

உகுவதாவதும் எந்தை எம்பிரான் என்னை ஆண்டவன் கழற்கு அன்பு

நெகுவதாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால் கட்டி

மிகுவதாவதும் இன்றி எனின் மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே

திருவம்மானை பதிகத்தின் பாடல்களில் (8.8) மணிவாசக அடிகளார், அம்மானை விளையாடும் பெண்கள் வாயிலாக, நமக்கு அறிவுரை வழங்குகின்றார். கருணையே வடிவமாக உள்ள திருவடிகள் கொண்ட பெருமானின் திருப்பாதங்களின் சிறப்பினை பாடுவோம் என்று பதிகத்தின் முதல் பாடலிலும், மேன்மேலும் எண்ணற்ற உயிர்கள் முக்தி உலகம் வந்தடைந்து தன்னருகே இருக்க வேண்டும் என்ற பேராசையுடன் பக்குவமடைந்த உயிர்களைத் தேடிச் செல்பவனும் கடல் போன்று விரிந்த கருணை உடையவனும் ஆகிய பெருமானின் புகழினை பாடுவோம் என்று இரண்டாவது பாடலிலும், எல்லையற்ற ஆனந்தம் தரும் வல்லமை வாய்ந்த பெருமானின் சிறப்பினை பாடுவோம் என்று மூன்றாவது பாடலிலும், உயர்ந்த வழியினை நமக்கு காட்டி அருள் புரியும் பெருமானது திருவடிகளைப் பணிந்து பாடுவோம் என்று நான்காவது பாடலிலும், விரைந்து செல்லும் விடையினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள பெருமானைப் பாடுவோம் என்று ஐந்தாவது பாடலிலும், நமக்கு வீடுபேறு அருள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நம்மை ஆட்கொள்ளும் பெருமானது தன்மையை சிறப்பித்து பாடுவோம் என்று ஆறாவது பாடலிலும், அனைத்து உலகங்களாகவும் இருந்து கொண்டு நம்மை ஆளும் பெருமானைப் பாடுவோம் என்று ஏழாவது பாடலிலும், அடிகளாருக்கு உதவும் பொருட்டு மண் சுமந்து பிரம்படி பட்ட பெருமானின் திருமேனிச் சிறப்பினை பாடுவோம் என்று எட்டாவது பாடலிலும், உலகத்தவர் வியக்கும் வண்ணம் பண்டைய நாளிலிருந்து தனது அடியார்களுக்கு முக்திநிலை அளிக்கும் தன்மையை சிறப்பித்து பாடுவோம் என்று ஒன்பதாவது பாடலிலும், திருமாலும் பிரமனும் அடிமுடி காண்பதற்கு அரியவனாக திகழ்ந்த போதிலும் மிகவும் எளியவனாக அடியார்களை ஆட்கொள்ளும் இறைவனைப் புகழ்ந்து பாடுவோம் என்று பத்தாவது பாடலிலும், அடியார்களின் உள்ளத்தில் இருக்கும் அதே சமயத்தில் அப்பாலைக்கு அப்பாலாய் இருக்கும் தன்மை படைத்த பெருமானை புகழ்ந்து பாடுவோம் என்று பதினோராவது பாடலிலும், அனைத்துப் பொருட்களிலும் கலந்து நின்று அவ்வவற்றின் இயல்பாக இருப்பவனும் அனைத்து உயிர்களுக்கும் வீடுபேறு அளிக்கும் வல்லமை வாய்ந்தவனாக இருப்பவனும் ஆகிய பெருமானைச் சிறப்பித்து பாடுவோம் என்று பன்னிரண்டாவது பாடலிலும், அன்பர்க்கு மெய்யான பொருளாகவும் அன்பர் அல்லாதார்க்கு அல்லாதவனாகவும் விளங்கும் ஐயாறு அமர்ந்தானைப் பாடுவோம் என்று பதின்மூன்றாவது பாடலிலும், அனைத்து உயிர்களிலும் உயர்ந்தவனாக விளங்கும் வானவனின் பூங்கழல்களைப் பாடுவோம் என்று பதினான்காவது பாடலிலும், மந்தார மாலை அணிந்தவனை பாடுவோம் என்று பதினைந்தாவது பாடலிலும், அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இருக்கும் தன்மையை குறிப்பிட்டு பாடுவோம் என்று பதினாறாவது பாடலிலும், தொடர்ந்து ஐந்து தொழில்களை புரியும் பொருட்டு அனலேந்தி ஆடும் பெருமானின் திருவடிகளை பாடுவோம் என்று பதினேழாவது பாடலிலும், குளிர்ந்த உள்ளம் கொண்டு அனைத்து உயிர்களுக்கும் கருணை புரியும் அந்தணனைப் பாடுவோம் என்று பதினெட்டாவது பாடலிலும், தனது அடியார்களுக்கு இனிய அமுதமாக விளங்கும் பெருமானைப் பாடுவோம் என்று பதினொன்பதாவது பாடலிலும், உயிர்கள் பற்றிக் கொள்வதற்கு தகுந்த பேரானந்தமாக திகழும் பெருமானைப் பாடுவோம் என்று இருபதாவது பாடலிலும் நமக்கு அறிவுரை கூறுகின்றார். மேலும் இந்த பாடல்களில் இறைவன் நமக்கு புரியும் உதவிகளை, குறிப்பாக முக்தி உலகம் சென்றடைய நம்மை தகுதிப் படுத்தும் தன்மைகளையும் குறிப்பிடுகின்றார்.

மணிவாசகர் திருவம்மானைப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (8.8.2), சிவபெருமானை வாரா வழி அருளியவன் என்று குறிப்பிடுகின்றார். ஆசை வாரியன்=அன்புக் கடலாக உள்ளவன்; இந்த பாடலிலும் திருவாசகத்தின் வேறு பல பாடல்களிலும், மணிவாசகர் சிவபெருமானை தென்னன் என்று குறிப்பிடுவதை நாம் காணலாம். வேத காலத்திற்கு முன்னமே, தமிழகத்தில் சிவ வழிபாடு இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த கருத்தினை ஒட்டியே, மணிவாசகர் சிவபெருமானை தென்னாட்டிற்கு உரிய கடவுளாக சித்தரிக்கின்றார். மேலும் பாண்டிய மன்னன் மலயத்துவஜனின் மகளாகிய மீனாட்சியை மணந்து கொண்டு சோமசுந்தரராக பாண்டிய நாட்டை ஆண்ட பெருமானை தென்னன் என்று அழைப்பது மிகவும் பொருத்தம் தானே. பித்தனைப் போன்று தான் மீண்டும்மீண்டும் பெருமானின் திருநாமத்தை பிதற்றும் வண்ணம் செய்தவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் மணிவாசகர் கூறுகின்றார். பலரும் காண்பதற்கு அரியவனாக விளங்கும் பெருமான், அடியார்களுக்கு எளியவனாக உள்ளான் என்று குறிப்பிடும் மணிவாசக அடிகளார், தான் பெருமானுக்கு அடியானாக மாறியதே, அவனது இன்னருளால் தான் என்று குறிப்பிடுகின்றார். அலை கடலில் வலை வீசி மிகவும் அதிகமான மீன்களைப் பிடிக்க வேண்டும் என்று ஆசைப் படும் மீனவன் போன்று. பக்குவம் அடைந்த உயிர்களை மேன்மேலும் அடையாளம் கண்டு கொண்டு, அவர்களை முக்தி உலகினுக்கு அழைத்துச் செல்லும் பேராசை கொண்டவனாக பெருமான் விளங்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பிறவிக் கடலில் விழுந்து வெளியே வந்து கரையேற முடியாமல் தவிக்கும் உயிர்களை கரையேற்றும் வல்லமை வாய்ந்தவன் பெருமான் ஒருவனே என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.

பாரார் விசும்புள்ளார் பாதளத்தார் புறத்தார்

ஆராலும் காண்டற்கு அறியான் எமக்கு எளிய

பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி

வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்து

ஆரா அமுதாய் அலைகடல் வாய் மீன் விசிறும்

பேராசை வாரியனைப் பாடுதும் காண் அம்மானாய்

திருவம்மானை பதிகத்தின் மூன்றாவது பாடலில் (8.8.3) மணிவாசக அடிகளார், பெருமான் தனது சிந்தனையை உருக்கியதும் அன்றி, தனது பந்தத்தைப் பறித்ததாகவும் கூறுகின்றார். எந்தரமும் ஆட்கொண்டு என்ற தொடர் மூலம், பூமியில் வாழும் அடியார்கள், எந்த நிலையில் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாது அவர்களை ஆட்கொள்ளும் இறைவன் என்று அடிகளார் கூறுகின்றார். நன்கு அகன்று கிடக்கும் பெருமானின் அழகான தோள்கள், திருநீறு பூசப் பெற்று மேலும் அழகுடன் பொலிவதாக குறிப்பிடுகின்றார். குதிரைச் சேவகனாக வந்த பெருமான், குதிரைகளை மட்டுமா ஓட்டிக் கொண்டு வந்து பாண்டிய மன்னனிடம் அளித்தான்; ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று சொன்ன, தனது வாக்கினை நிறைவேற்றி தனது மானத்தைக் காப்பற்றியதும் அன்றி, தனது கருணைச் செயலால் தனது சிந்தனையையும் உருக்கினான் என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். மேலும் அந்நாள் வரையில் தான்,உலகப் பொருட்கள் மீது கொண்டிருந்த பந்த பாசத்தையும் பறித்து அழித்து விட்டான் என்றும் கூறுகின்றார். அதன் விளைவாக, தனது மனதினில் இறையுணர்வு மேலும் அதிகரித்து எல்லையற்ற சிவானந்தம் பெருகியது என்றும் கூறுகின்றார். இந்த மாற்றங்கள் நிகழ்வதற்கு, அடிகளார் பெருமான் பால் கொண்டிருந்த அன்பே காரணம் என்பதால், அத்தகைய அன்பினை பெருமானை பால் செலுத்தி, நாமும் பயனடைய வேண்டும் என்ற அறிவுரை வழங்குகின்றார்.

இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்

அந்தரமே நிற்கச் சிவன் அவனி வந்தருளி

எந்தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றனாய்

சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான்

பந்தம் பறியப் பரி மேல் கொண்டான் தந்த

அந்தமிலா ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய்

திருவாசகம் திருவம்மானை பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (8.8.5), அடிகளார் தனது வினைகளைக் கடிந்து நீக்கிய வேதியன் என்று அழைக்கின்றார். கல்லா மனம்=கல் போன்ற மனம் என்றும் பெருமானின் பெருமைகளை கல்லாத மனம் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். கல் போன்ற மனம் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. கல்லைப் பிசைவது எத்துணை கடினமான செயல் என்பதை நாம் அறிவோம், கல்லையும் பிசைந்து கனியாக்கும் ஆற்றல் வாய்ந்தவன் பெருமான் என்பதால் அவனை வல்லாளன் என்று அடிகளார் கூறுகின்றார். அதனால் ஏற்பட்ட மாற்றமே, பெருமான் பால் பிச்சேறியவனாக தான் இருக்கும் நிலை என்று உணர்த்துகின்றார். பிச்சனாக்கினாய் நின் கோயில் வாசலில் என்ற திருவாசகத் தொடர் நமது நினைவுக்கு வருகின்றது. பழங்கள் வெகு நாட்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்றால் குளிர் சாதனப் பெட்டியில் வைப்பது இந்நாளைய பழக்கம். தன்னால் பிசையப்பட்டு கனிந்த மனம், என்றும் அதே நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக, பெருமான், குளிர்ந்த சிவானந்தந்தின் இடையே அந்த மனதினை வைத்து, அந்த மனம் கசிந்த தன்மையிலிருந்து மாறாத வண்ணம் பாதுகாக்கும் செயலை குறிப்பிடுகின்றார். மனித மனம் இறையுணர்வில் ஈடுபடாத வண்ணம் செயலாற்றுவது அவனுடன் பிணைந்துள்ள வினைகளே. எனவே பெருமான், அந்த வினைகள் பால் கோபம் கொண்டு, அவற்றைக் கடிந்து நீக்குகின்றான் என்று குறிப்பிடும் அடிகளார், பெருமானை வினை கடிந்த வேதியன் என்று கூறுகின்றார். வேதியியல் மாற்றத்தை நிகழ்த்துபவன் வேதியன். பௌதீக மாற்றம் மற்றும் இராசயன மாற்றம் ஆகிய இரண்டின் இடையே அடிப்படையில் ஒரு வேறுபாடு உள்ளது. பௌதீக மாற்றத்தால் மாற்றம் அடைந்த பொருட்களை பழைய நிலைக்கு கொண்டு வர இயலும். பனிக்கட்டி நீராக மாறுவது, நீர் ஆவியாக மாறுவது என்பன பௌதீக மாற்றங்கள். நீராவி குளிர்ந்து நீராக மாறுவதையும் நீர் மேலும் குளிர்ந்து பனிக்கட்டியாக மாறுவதையும் நாம் அறிவோம். இந்த மாற்றம் பௌதீக மாற்றம். இராசயன மாற்றத்தால் விளைந்த பொருட்களை நாம் மீண்டும் பழைய நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது. அவ்வாறே பெருமானால் கடிந்து நீக்கப்பட்ட வினைகள் மீண்டும் அந்த உயிர்களுடன் சென்று இணைய முடியாது. இதனை உணர்த்தவே, வேதியல் மாற்றம் செய்யும் வேதியன் என்று இறைவனை குறிப்பிட்டார் போலும். ஒல்லை விடையான்=விரைந்து செல்லும் இடபத்தினை உடையவன்;

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை

வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்

கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை

வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனைத்

தில்லை நகர் புக்குச் சிற்றம்பலம் மன்னும்

ஒல்லை விடையானைப் பாடுதும் காண் அம்மானாய்

திருவாசகம் திருவம்மானை பதிகத்தின் ஆறாவது பாடலில் (8.8.6) மணிவாசக அடிகளார் நாம் மேலை வீடெய்த ஆட்கொண்டவன் பெருமான் என்று குறிப்பிட்டு, அவனது புகழினைப் பாடுவோமாக என்று அறிவுரை கூறுகின்றார். கிறி=வஞ்சனை; திருப்பெருந்துறையில் தனக்கு திருவடி தீட்சை அளித்தும் உபதேசம் செய்தும் நன்மை செய்த பெருமான், தன்னை விட்டுவிட்டு ஏனையோரை அழைத்துக் கொண்டு, மறைந்து விட்டதை வஞ்சனை என்று கூறுகின்றார் போலும். காட்டாதன=எங்கும் சிவமாக எதிலும் சிவமாக இறைவன் கலந்து இருக்கும் தன்மை; சிவம் காட்டி என்ற தொடர் மூலம், அந்தணனாக வந்து தனக்கு உபதேசம் செய்தவர் சிவபெருமான் தான் என்பதை தான் உணரும் வண்ணம் செய்த செயல் இங்கே குறிப்பிடப் படுகின்றது. தாட்டாமரை= தாள்=தாமரை, திருப்பாதக் கமலங்கள்; பெருமானின் கருணையால் விளைந்த செயல்கள் தனக்கு மிகவும் இனியவையாக இருந்தமை கருணைத் தேன் என்ற தொடர் மூலம் விளக்கப் படுகின்றது. நாட்டார் நகை செய்ய தான் இருந்த நிலையினை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். பெருமானால் ஆட்கொள்ளப் பட்ட அடியார்கள், அவ்வப்போது சமாதி நிலையில் ஆழ்வதுண்டு. அந்த நிலையில் அவர்களது புலன்கள் ஐந்தும் செயலற்று நிற்க. அவர்களது மனம் சிவத் தியானத்தில் ஆழ்ந்து வேறெந்த சிந்தனையும் அற்றதாக விளங்குகின்றது. அத்தகைய நிலையில் ஆழும் அடியார்கள், சுற்றுப்புறச் சூழ்நிலையை மறந்து பேரானந்தத்தில் திளைக்கின்றனர். தாங்கள் செய்வது யாது என்பதை அறியாதவர்களாக, தங்களை மறந்து ஆடியும் பாடியும் பெருமானைப் புகழ்கின்றனர். அந்த நிலையில் இருக்கும் அவர்கள் பித்தர் போன்று செயல்படுவதால் பலரும் அவரைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். இவ்வாறு பலரும் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடும் நிலைக்குத் தன்னை தள்ளியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

கேட்டாயோ தோழி கிறி செய்தவாறு ஒருவன்

தீட்டார் மதில் புடை சூழ் தென்னன் பெருந்துறையான்

காட்டாதன எல்லாம் காட்டி சிவம் காட்டி

தாட்டாமரை காட்டித் தன் கருணைத் தேன் காட்டி

நாட்டார் நகை செய்ய நாம் மேலை வீடெய்த

ஆட்டான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானாய்

இதே பதிகத்தின் பதினான்காவது பாடலிலும், அடிகளார் பெருமானை, தனது வினையை ஓட்டுகந்த கோன் என்று குறிப்பிடுகின்றார். கீடம்=புழு; எய்த்தல்=வருந்தி இளைத்தல்; எண்ணற்ற பிறவிகள் எடுத்து தனது உயிர் வருந்திய தன்மையை அடிகளார் இங்கே உணர்த்துகின்றார். எத்தனையோ பிறவி பிறந்தெடுத்து இளைத்தேன் என்ற சிவபுராணத் தொடர் நமது நினைவுக்கு வருகின்றது. தனது வினைகளை பெருமான் மிகுந்த விருப்பத்துடன் ஓட்டி ஒழித்தமையால், இனியும் அத்தகைய பிறவிகள் எடுக்காத வண்ணம் பெருமான் தனக்கு அருள் புரிந்துள்ளார் என்று கூறுகின்றார். கன்னல்=கரும்புச்சாறு; தொழும்பு=திருத்தொண்டு: வானவன்=உயர்ந்தவன்: அனைவரிலும் உயர்ந்தவனாகிய பெருமானின் திருப்பாதங்களின் புகழினை பாட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

ஆனையாய் கீடமாய் மானுடராய்த் தேவராய்

ஏனைப் பிறவாய்ப் பிறந்து இறந்து எய்த்தேனை

ஊனையும் நின்று உருக்கி என் வினையை ஓட்டுகந்து

தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்தினிய

கோனவன் போல் வந்தென்னைத் தன் தொழும்பில் கொண்டருளும்

வானவன் பூங்கழலே பாடுதும் காண் அம்மானாய்

குயிற்பத்து பதிகத்தின் பாடலில் (8.18.6) மணிவாசக அடிகளார் அன்பன் அமுதளித்து ஊறும் ஆனந்தன் என்று பெருமானை குறிப்பிட்டு அவன் நமக்கு அருள் புரியும் தனமையை குறிப்பிட்டு, அவனது திருநாமங்களை சொல்ல வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். ஏழுலகத்தையும் ஆளும் வண்ணம் உயர்ந்தவனாக இருப்பினும், அடியார்கள் பால் அன்பு வைத்துள்ள எளியவனாக விளங்கும் பெருமான், அவர்களது உள்ளங்களில் சிவானந்த அமுதத்தை ஊறச் செய்கின்றான் என்று இந்த பாடலில் மணிவாசகர் கூறுகின்றார். கொம்பு=மரக்கிளை; மிழற்றும்=கூவும்; வான் வந்த= உயர்ந்த; தனக்கு உதவும் பொருட்டு குதிரைச் சேவகனாக வந்த பெருமான், மிகவும் உயர்ந்த குதிரையின் மேல் வந்த செய்தியை அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். உயர்ந்த பொன்னில் மாணிக்கம் பதிக்கப் பட்டது போன்று அழகிய குதிரை மேல் பெருமான் வந்தான் என்று கூறுகின்றார். குதிரைச் சேவகனாக வந்த போதிலும், வந்தவன் பெருமான் தான் என்பதை தான் புரிந்து கொண்ட செய்தியை, நன்பொன் மணிச் சுவடு ஒத்த என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். பொன்னார் மேனியின் மேற்புரத்தில் உள்ள கழுத்தினில் மாணிக்கக் கல் பதிக்கப்பட்டது போன்று திகழும் நீலகண்டன் அல்லவா பெருமான்.

இன்பம் தருவன் குயிலே ஏழுலகும் முழுதாளி

அன்பன் அமுதளித்து ஊறும் ஆனந்தன் வான் வந்த தேவன்

நன்பொன் மணிச் சுவடு ஒத்த நற்பரி மேல் வருவானைக்

கொம்பின் மிழற்றும் குயிலே கோகழி நாதனைக் கூவாய்

திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் முதல் பாடலில், பெருமானை ஏற்றுயர் கொடி உடையாய் என்று அழைக்கும் அடிகளார் நமது வாழ்வுக்கு ஆதாரமாக பெருமான் இருக்கும் தன்மையை வாழ்முதல் என்ற சொல் மூலம் குறிப்பிடுகின்றார். அடிகளார் இந்த பாடலில், பெருமான் தன்னை அடிமையாக உடையவர் என்று குறிப்பிடுகின்றார். நால்வர் பெருமானார்கள் அனைவரும், தங்களை பெருமானின் அடிமையாக குறிப்பிடுவதை அவர்களது பல பாடல்கள் உணர்த்துகின்றன. பெருமான் அடியார்களை நோக்கி, கருணையுடன் புன்முறுவல் பூப்பது எழில் நகை என்று இங்கே அழைக்கப் படுகின்றது. நகை என்றவுடன், அடிகளாருக்கு திரிபுரத்து பறக்கும் கோட்டைகளை சிரித்தே அழித்த செய்கை நினைவுக்கு வந்தது போலும். எனவே தான் மாறுபாட்டினை உணர்த்தும் பொருட்டு எழில் நகை என்று கூறினார் போலும்.

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கு இணை துணை மலர் கொண்டு

ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ் கமலங்கள் மலருந் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

ஏற்றுயர் கொடி உடையாய் எனை உடையாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் தேவர்களுக்கு மணிவாசகர் உய்யும் வழியினை உணர்த்தி, உபதேசம் செய்வதை, திருப்பள்ளி எழுச்சி பதிகத்தின் கடைப் பாடலில் (8.20.10) நாம் உணரலாம். சிவபெருமானால் உய்யக் கொள்ளப்பட வேண்டுமானால், இந்த பூவுலகத்தில் போய் பிறப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே மண்ணுலகில் சென்று பிறக்காமல் இங்கே இருந்துகொண்டு தம் வாழ்நாளை வீணாக கழிக்கின்றோமே என்று திருமாலும் பிரமனும் கவலைப் படுவதாக மணிவாசகர் கூறும் பாடலை நாம் இங்கே காண்போம்; பெருமானை முந்திக் கொண்டு அவனது கருணையும் பூமியை வந்தடைகின்றது என்று மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த நிலைக்கு காரணம் பூவுலகத்தில் இருப்போர்கள் செய்த தவம் தானே. தேவருலகம், தேவர்கள் போகத்தை அனுபவிப்பதற்காக ஏற்படுத்திய போக பூமி தானே தவிர, பெருமானின் அருள் பெற்று முக்தி உலகம் சென்றடைய வழி வகுக்காது என்று மிகவும் தெளிவாக அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார்.

புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி

சிவன் உய்யக்கொள்கின்ற ஆறென்று நோக்கித் திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்

அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே

திருவாசகம் கோயில் திருப்பதிகம் பதிகத்தின் பாடலில் (8.22.8), மணிவாசகர் பெருமான் ஒருவனே தனக்கு உறவு என்று குறிப்பிடுகின்றார். இத்தகைய குறிப்பு மூலம், நாமும் இறைவன் ஒருவனே நமக்கு உறவு என்று கருதி அவன் பால் அன்பு செலுத்த வேண்டும் என்ற அறிவுரை வழங்கப் படுகின்றது. பதம்=சொர்க்கம்; பூமியாகவும் சொர்கமாகவும் மற்றுமுள்ள பல அண்டங்களாகவும், அந்த அண்டங்களில் உள்ள அனைத்துப் பொருட்களாகவும் இருப்பவனும் படர்ந்த ஒளிப் பிழம்பாகவும் இருக்கும் பெருமான் என்று முதல் அடியில் அடிகளார் குறிப்பிடுகின்றார். கருணையே வடிவமான சக்தி, குளிர்ந்த நீருக்கும் சுடர் வடிவமான பெருமான் தீக்கும் ஒப்பிடப் படுகின்றனர். கருணையே வடிவமாக உள்ள சக்தியின் உள்ளே இறைவன் நின்று, நமக்கு புலப்படாத வண்ணம் இருப்பதால், நீரின் உள்ளே இருக்கும் தீ என்று அழைக்கப் படுகின்றான். உலகைச் சூழ்ந்திருக்கும் கடலின் அடியில் வடவாக்னி இருப்பதாக புராணம் குறிப்பிடுகின்றது. சாதாரண காலத்தில் கடல் நீரின் அளவினை கட்டுக்குள் நிறுத்த உதவும் இந்த வடவாக்னி, பிரளய காலத்தில் பொங்கி எழுந்து உலகத்தினை முழ்கடிக்கும் நீரினை வற்றச் செய்யும் வடவாக்னியாக பொங்குகின்றது. நீராகவும் நீரின் உள்ளே இருக்கும் வடவாக்னியாகவும் பெருமான் இருக்கும் தன்மை நீருறு தீ என்ற தொடர் மூலம் விளக்கப் படுகின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமானது அருள் வெள்ளத்தில் நனையும் சிந்தை, திருத்தம் அடைவதால், சிவானந்தத் தேன் அந்த சிந்தையில் ஊறுகின்றது. இவ்வாறு ஊறும் சிவானந்தத் தேனாக இருப்பவன் பெருமான் தான் என்று குறிப்பிடும் அடிகளார், பெருமான் ஒருவனே தனக்கு உறவு என்று கூறுகின்றார். உலகினில் உள்ள அனைவரும் தனக்கு உறவும் இல்லை அயலும் இல்லை என்று குறிப்பிடும் அடிகளார், தனக்கு அனைத்தும் பெருமான் ஒருவனே என்று சொல்கின்றார். அத்தகைய நிலையினை நாமும் அடைய வேண்டும் என்பதே இந்த பாடலில் வழங்கப்படும் அறிவுரை.

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே

நீருறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின்னருள் வெள்ளச்

சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே திருப்பெருந்துறை உறை சிவனே

ஆருறவு எனக்கு இங்கு ஆர் அயல் உள்ளார் ஆனந்தம் ஆக்கும் என் சோதீ

வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் (8.28.10) மணிவாசகர், பெருமானை அன்றி வேறு எவரையும் தனக்குத் துணையாக கருத மாட்டேன் என்றும் அவரைத் தவிர்த்து வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் கருணையே உருவமாக உள்ள பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பண்டைய நாளிலிருந்து இடைவிடாது தொடர்ச்சியாக அடியார்களுக்கு அருள் புரிந்து வரும் அன்னையை, குற்றம் ஏதும் இல்லாதவள் என்று அடியார்கள் புகழ்வதாக அடிகளார் கூறுகின்றார், இனியும் தொடர்ந்து வாழ்வதில் தனக்கு விருப்பம் ஏதும் இல்லாமையால், பெருமானே நீ என்னை விரைவில் அழைத்துக் கொள்வாயாக என்று விண்ணப்பம் வைக்கும் பாடல். நாமும் மணிவாசக அடிகளார் போன்று, பெருமானைத் தவிர்த்து வேறெவரையும் துணையாக நினைக்காமல், வேறெவரையும் தொழாமலும் துதிக்காமலும் இருந்தால், பெருமானின் அருளினை உரிமையுடன் கோரலாம் என்ற அறிவுரை இந்த பாடலில் வழங்கப் படுகின்றது.

பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய்

செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய்

மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

மேற்கண்ட பாடலில் பெருமானே உன்னைத் தவிர பற்றுக்கோடு வேறேதும் எனக்கு இல்லை என்று அறிவிக்கும் அடிகளார், தனது நிலையை பெருமானே நீ இன்னும் காணவில்லையா என்று கேட்கும் வகையில், கண்டாய் என்ற சொல்லை கையாண்டுள்ளார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பற்று நான் மற்றிலேன் கண்டாய் என்ற தொடர் வருகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல், இந்த தொடர் உணர்த்தும் செய்தியை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது. பெருமானே உன்னைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் கொள்ளாமல் வாழும் எனக்கு அருள் புரியாமல் இருக்கின்றாயே இது நியாயமா என்று கேட்பது போன்று அமைந்துள்ள பாடல். பெருமான் ஒருவனே தனக்கு பற்றுக்கோடு என்பதால், அவனைத் தவிர வேறு எவரிடமும் சென்று முறையிடேன் என்று புலம்பும் அடிகளார், அவன் அருள் புரியாமல் இருப்பதால் அவன் மீது தான் கோபம் கொண்டாலும் அவனது அருளினை தொடர்ந்து வேண்டுவதையும் நாம் உணரலாம். பெருமானைத் தவிர்த்து வேறெவரையும் பற்றுக் கோடாக கருதாத நிலைக்கு நாம் உயர வேண்டும் என்ற அறிவுரை இங்கே வழங்கப் படுகின்றது.

பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய்

சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறை உறை சிவனே

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால்

வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

பெருமான் உயிர்களுக்கு தரும் கொடையை பெறுவதற்கு நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று மணிவாசகர் அறிவுரை சொல்லும் பாடல், திருப்பாண்டிப் பதிகத்தின் பாடலாகும் (8.36.8). கழிவில் கருணை=என்றும் உயிர்களை விட்டு நீங்காத கருணை; கடிய=நம்மால் அகற்றிக் கொள்ள முடியாத வண்ணம் கடுமையாக நம்முடன் பிணைந்திருக்கும் வினைகள்; பெரும் பதம்=பெரிய பதவி; பாண்டி நாட்டின் அமைச்சராக தான் இருந்த நிலையும் பெருமானின் கருணையால் விளைந்தது என்று அடிகளார் கருதுகின்றார். பாண்டிய நாட்டின் ஆட்சி மட்டுமன்றி முழு உலகத்தின் ஆட்சியையே அளிக்கும் வல்லமை வாய்ந்தது அவனது கொடை என்றும் கூறுகின்றார். இந்த பாடலில் இம்மை மற்றும் மறுமையில் இறைவன் அளிக்கும் கொடைகளை அடிகளார் உணர்த்துகின்றார். அழிவு இன்றி என்றும் நிலையான ஆனந்த வெள்ளத்தில் அழுத்தி தனது கருணையை தொடர்ந்து காட்டிய பெருமான், எவராலும் அகற்ற முடியாத வலிமை வாய்ந்த வினைகளை என்னிடமிருந்து பிரித்து, எண்ணற்ற பிறவிகளாக என்னைத் தொடர்ந்து வந்த ஆணவ மலத்தினையும், உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீதும் கொண்டிருந்த எனது பாசத்தையும் அறுத்து ஆட்கொண்ட பெருமான் என்று அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இவ்வாறு முக்தி உலகம் சென்றடைய முழுத் தகுதி படைத்தவராக விளங்கிய அடிகளாருக்கு, முக்தி நிலையினையும் பெருமான் அருள் புரிந்திருப்பார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ளத்து இடை அழுத்திக்

கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினை அகற்றிப்

பழமலம் பற்று அறுத்து ஆண்டவன் பாண்டிப் பெரும் பதமே

முழுது உலகும் தருவான் கொடையே சென்று முந்துமினே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் (8.36.5) மணிவாசக அடிகளார், பாண்டிப் பிரான் தன் அடியவர்க்கு மூலப் பண்டாரம் தருகின்றான்; எனவே முந்திச் சென்று பெற்றுக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றார். பெருமானிடம் உள்ள செல்வம் அனைத்திலும் மிகவும் உயர்ந்த செல்வம் முக்திச் செல்வம் என்பதால் அதனை உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம். மூலப் பண்டாரம் என்பதற்கு, குதிரைச் சேவகனாக வந்த போது பெருமான் புரிந்த திருவருள் என்று பொருள் கொண்டு, அத்தகைய திருவருளை பெருமான் எப்போதும் வழங்குகின்றான் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. மூலப் பண்டாரம் என்பதற்கு திருநீறு என்று பொருள் கொண்டு, சிவபெருமான் பூசிக் கொண்ட திருநீற்றினை பெற்றுக் கொண்டு பலன் அடையுமாறு அறிவுரை கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. திருநீற்றுப் பதிகத்தின் பாடல்களில் திருநீற்றினால் நமக்கு விளையும் எண்ணற்ற பயன்கள் பட்டியல் இடப் படுகின்றன. பெருமான் பால் அன்பு செலுத்துவதே அவனது அருளினை பெறுவதற்கு வழி வகுக்கும் என்பதால், பெருமான் பால் காதல் கொள்வீர்களாக என்று அறிவுரை கூறுகின்றார். காலம் உண்டாகவே என்ற தொடர் மூலம், இப்போதே விரைந்து செல்லுங்கள் என்று அறிவுரை கூறுகின்றார்.

காலம் உண்டாகவே காதல் செய்து உய்ம்மின் கருதரிய

ஞாலம் உண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய

ஆலமுண்டான் எங்கள் பாண்டிப் பிரான் அடியவர்க்கு

மூலப் பண்டாரம் வழங்குகின்றான் வந்து முந்துமினே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில், பாண்டியனார் என்று பெருமானை குறிப்பிடும் அடிகளார், அவன் தருகின்ற முக்திப் பரிசினை ஏற்றுக் கொள்வதற்காக விரைந்து செல்லுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். மீனவன்=மீன் கொடியினை உடைய பாண்டிய மன்னன்; பழைய பல் பிறவிகளில் ஈட்டிய வினைகள் தொடர்ந்து வருவதை ஈண்டிய என்று சொல் மூலம் குறிப்பிடுகின்றார். வினைகளால் விளைகின்ற அஞ்ஞானம், உயிரைச் சூழ்ந்து நின்று, பல பொருட்களின் உண்மைத் தன்மையை உயிர் அறிய விடாமல் தடுக்கின்றது. எனவே தான் மாய இருள் என்று அஞ்ஞானம் உணர்த்தப் படுகின்றது. ஒளி வர இருள் விலகுவது போன்று, இறைவனின் கருணையால் விளந்த ஞானத்தால், இதற்கு முன்னர் அறிந்திராத பல விஷயங்கள் இப்போது புலனாகின்றன. இந்த தன்மை தான் எப்பொருளும் விளங்க என்ற தொடர் மூலம் விளக்கப் படுகின்றது. இவ்வாறு இறைவனின் கருணையால் விளைகின்ற ஞானம், உயிருடன் தொடர்ந்து இருந்து வந்தாலும் இந்நாள் வரையில் அஞ்ஞானமாகிய இருள் அதனை மறைத்து நின்றது. ஒரு குப்பைக் கூடையின் அடியில் ஒளி வீசும் மாணிக்கக் கல் இருந்தாலும் அதனின் ஒளியை நாம் உணர முடிவதில்லை. மனம் எனும் கூடையில் அடியில், அனைத்துப் பொருட்களின் தன்மையை உண்மையாக உணரும் அறிவு இருந்த போதிலும், அஞ்ஞானம் உள்ளிட்ட மனதின் பல குற்றங்கள் அந்த மெய்யுணர்வினை மறைத்து விடுகின்றன. மாணிக்க கல்லினை மேலுள்ள குப்பைகள் மூடி இருப்பது போன்று, காமம் குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் எனும் அறுவகை உட்பகைகளும் வேறு பல அழுக்குகளும், உள்ளே மறைந்திருக்கும் மெய்யுணர்வினை துலங்க விடாமல் தடுப்பதால், நாம் காணும் பொருட்களின் உண்மையான தன்மையை நாம் அறிய முடிவதில்லை. அடிகளாரின் மனதில் மறைந்து கிடந்த மெய்யுணர்வினை, பெருமான், அதனை மூடிக் கிடந்த அஞ்ஞானத்தை அகற்றி, வெளிக் கொண்டு வந்தான்; பெருந்துறையில் தன்னெதிரே வந்த அடிகளாரை நோக்கியும், திருவடி தீட்சை அளித்தும், உப்தேசம் செய்தும் அடிகளாரின் மெய்யுணர்வினை இறைவன் தூண்டுகின்றான். எனவே அடிகளாரின் கண்ணோக்கம் மேலும் விரிவடைகின்றது. அந்நாள் வரையில் தான் அறிந்திராத பல உண்மைகளை அவர் அறிந்து கொள்கின்றார். பெருமானின் இத்தகைய கருணை பாண்டிய மன்னன் மீது பாயவில்லை; அதனால் தான், தான் காணும் பொருட்களின் உண்மைத் தன்மையை அறிய முடியாமல் பாண்டிய மன்னன் இருந்தான் என்பதை, மீனவனும் சொல்ல வல்லன் அல்லன் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். குதிரைச் சேவகனாக வந்தவன் இறைவன் என்பதை அடிகளார் புரிந்து கொண்டாலும், மன்னனால் புரிந்து கொள்ள முடியவில்லை; மேலும் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்ற அடிகளாரின் வாக்கின் அடிப்படையில், அடிகளார் விலை கொடுத்து வாங்கிய குதிரைகள் என்று மன்னன் கருதினான் போலும்; மேலும் குதிரைகளின் அழகிலும் பொலிவிலும் தனது மனதினை பறி கொடுத்த மன்னன், குதிரைச் சேவகன் மிகவும் பொலிந்து அழகுடன் விளங்கியதை கவனிக்கத் தவறினான் போலும். விலக்கு=தடை; வாய்தல்=வாய்க்கப் பெறுதல்; இறைவன் ஒருவருக்கு அருள் புரிய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், அதனைத் தடுக்கும் சக்தி உலகினில் எதுவும் இல்லை என்று கூறுகின்றார். எனவே நாம் பெருமானின் திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டு, அவற்றின் பால் அன்பு வைத்து பெருமானை வணங்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். இவ்வாறு செய்தால் நாம் பெருமான் அளிக்கும் முக்திப் பரிசினை நாம் பெறலாம் என்று கூறுகின்றார்.

ஈண்டிய மாய இருள் கெட எப்பொருளும் விளங்கத்

தூண்டிய சோதியை மீனவனும் சொல்ல வல்லன் அல்லன்

வேண்டிய போதே விலக்கு இலை வாய்தல் விரும்புமின் தாள்

பாண்டியனார் அருள் செய்கின்ற முத்திப் பரிசு இதுவே

சென்னிப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் (8.42.10), மணிவாசக அடிகளார், பெருமானைப் பணிந்து அவனது அருளின் துணை கொண்டு, நாம் உலகம், உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது கொண்டுள்ள பாசத்தினை முற்றிலும் நீக்கிக் கொள்ளுமாறு அறிவுரை கூறுகின்றார். முத்தன்= இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கப் பெற்றவன்; துறவிகள் உட்பட நாம் அனைவரும் உலகியல் பொருட்களின் மீது கொண்டுள்ள பாசத்தை முயற்சி செய்து நீக்கிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள்; ஆனால் பெருமானோ இயற்கையாகவே அத்தகைய பாசங்களிலிருந்து நீங்கியவன். அத்தகைய ஒருவன் தானே, நாம் பாசங்களிலிருந்து எவ்வாறு விடுதலை பெறுவது என்பதை நமக்குக் கற்றுத் தர முடியும் என்பதால், முத்தன் என்ற தொடருடன் இந்த பாடலை மணிவாசக அடிகளார் தொடங்குகின்றார். அனைத்து சோதிகளுக்கும் தலையாய சோதியாய், மற்ற சோதிகளுக்கு ஆதாரமாக இருக்கும் பெருமானை, முதற் சோதி என்று அழைக்கின்றார். விச்சின்றி நாறு செய்வான் என்று அப்பர் பெருமான் குறிப்பிடுவது போன்று, விச்சதன்றியே விளைவு செய்குவாய் என்று திருச்சதகம் உணர்த்துவது போன்று, மூல விதையாக நின்று, அனைத்துப் பொருட்களையும் உயிர்களையும் தோற்றுவிப்பவன் பெருமான். எனவே தான் அவனை முதல் வித்து என்று குறிப்பிடுகின்றார். மேலும் அவனது உயர்ந்த திருவடிகளைத் தொழுது தியானித்து நமது ஏழாவது ஆதாரமாகிய சகஸ்ர தளத்தில் வைத்துக் கொண்டு கொண்டாடுமாறு அறிவுரை கூறுகின்றார். நமது தகராகாசத்தில் பெருமானின் திருவடிகளை பொருத்தி தியானித்தால், நமது முகம் பொலிவுடன் விளங்கும் என்று கூறுகின்றார்.

முத்தனை முதற் சோதியை முக்கண் அப்பனை முதல் வித்தினைச்

சித்தனைச் சிவலோகனைத் திருநாமம் பாடித் திரிதரும்

பத்தர்காள் இங்கே வம்மின் நீர் உங்கள் பாசம் தீரப் பணிமினோ

சித்தமார் தரும் சேவடிக் கண் நம் சென்னை மன்னித் திகழுமே

யாத்திரைப் பத்து பதிகத்தின் முதல் பாடலில் (8.45.1), சிவலோகத்திற்கு செல்லும் தகுதி பெற்றுள்ள அடியார்களை, இரக்கம் கொண்டு இறைவனால் ஆவா என்று சொல்லப்பட்ட அடியார்கள் என்று கூறுகின்றார். இதிலிருந்து இறைவன் ஆஆ என்று இரக்கம் கொண்டால் அதனால் ஏற்படும் விளைவு யாது, இறைவனின் அருள் எத்தன்மையது என்று நாம் அறிந்து கொள்ளலாம். அதனால் தான், இறைவனே உன்னைத் தவிர என்னை காப்பாற்றுவார் வேறு எவரும் இல்லை என்று சொல்லி அழுது கை தொழும் அடியார்கள் பால் இரக்கம் கொண்டு ஆஆ என்று கூறுவான் என்று அப்பர் பிரான் ஆனைக்கா பதிகத்து பாடலில் கூறுகின்றார். முதிர்ந்த பக்குவம் அடைந்த அடியார்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு தாம் அடுத்து செய்ய வேண்டியது யாது என்பதை மணிவாசக அடிகளார் எடுத்துச் சொல்லும் பாடல். நிலையற்ற இந்த உடலை வைத்துக் கொண்டு தங்களுக்கு இனியும் ஆக வேண்டிய காரியம் ஏதும் இல்லை என்பதால், சிவலோகத்திற்கு செல்லலாம், உடனே புறப்படச் சித்தமாகுங்கள் என்று அடிகளார் வழிகாட்டுகின்றார். மலர்மாலை அணிந்தவனும்,புஜங்க நடனம் ஆடுபவனும் ஆகிய பெருமான், சிறியோமாகிய நம்மை ஒரு பொருட்டாக மதித்து, நம் பால் கருணை கொண்டு நம்முடைய உள்ளத்தைக் கவர்ந்து நாம் வியப்படையும் வண்ணம் நம்மை ஆட்கொண்டுள்ளான். இந்நாள் வரையிலும் இந்த பருவுடலைத் தாங்கிய வண்ணம் அவனால், ஆட்கொள்ளப் பட்டு ஆனந்தம் அடைந்த அடியார்களே, நிலையற்ற இந்த உடலை இங்கே விட்டுவிட்டு, நம்மை உடையவனாகிய அந்த பெருமானின் திருவடிகளைச் சென்றடையும் காலம் கனிந்து விட்டது, எனவே உடனே புறப்படுவதற்கு தயாராக இருப்பீர் என்று சொல்லி, நம்மை சிவலோகம் செல்ல அழைக்கும் பாடல்.

பூவார் சென்னி மன்னன் எம் புயங்கப் பெருமான் சிறியோமை

ஓவாது உள்ளம் கலந்து உணர்வாய் உருகும் வெள்ளக் கருணையினால்

ஆ ஆ என்னப் பட்டு அன்பாய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின்

` போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே

இந்த பதிகத்தின் எஞ்சிய பாடல்களும்,இத்தகைய உபதேசத்தை பக்குவம் அடைந்த அடியார்களுக்கு சொல்வதாக அமைந்துள்ளன. இந்த பாடல்கள் பக்குவம் அடைந்த அடியார்களை நோக்கி சொல்வதாக அமைந்து இருப்பினும், அவர்கள் அந்த பக்குவத்தை எவ்வாறு அடைந்தனர் என்பதை குறிப்பிடுவதன் மூலம், அந்த பக்குவம் அடைவதற்கு நம்மை வழிநடத்தும் பாடல்களாகவும் அமைந்துள்ளன. இந்த உபதேசமே இந்த பதிகத்தின் மையக் கருத்தாக இருப்பதை நாம் உணரலாம். இனியும் ஐம்புலங்களால் இயக்கப்படும் இந்த உடலுடன் வாழும் வாழ்க்கையைத் தவிர்த்தும், உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசத்தை உதறித் தள்ளியும், பெருமானை மிகவும் அதிகமாக நினைத்து சிவலோகம் சென்றடைந்து, அவனைச் சார்ந்து இருந்து, வினைவயத்தால் ஏற்படும் இன்ப துன்பங்களால் தளர்ச்சி அடைவதை தவிர்ப்போம் என்று இரண்டாவது பாடலில் அறிவுரை கூறுகின்றார். தம்மை அன்றி நமக்கு உதவியாக இருக்கும் சுற்றம் வேறெவரும் இல்லை என்று முடிவு செய்து நாம் இனி நடந்து கொள்ள வேண்டிய முறையினை தீர்மானம் செய்து அதன் வழியே நடப்பது என்ற நிலையினை அடைந்து, தற்போதத்தை முழுதும் நீக்கிக் கொண்ட அடியார்களே, சிவலோகத்திற்கு பயணம் மேற்கொள்வீர் என்று மூன்றாவது பாடலில் அறிவுரை கூறுகின்றார். முதல் மூன்று பாடல்களில் சொல்லப் பட்ட செய்தியை, விளையாட்டாக எடுத்துக் கொண்டு, பொழுது போக்காக கடைப்பிடிக்காமல் உண்மையான மெய்யடியார்களாகத் திகழ்ந்து இறைவனின் அருளால், உயிரினுக்கு கேடு விளைவிக்கும் இந்த உடலை நீத்து சிவலோகத்தே நம்மை பெருமான் வைத்து அருள் புரிவான் என்று நான்காவது பாடலில் அறிவுரை கூறுகின்றார். காமம் வெகுளி மயக்கம் ஆகிய மன நோய்களால் பாதிக்கப்பட்டு, இறை வழிபாட்டினில் ஈடுபடாது இருக்கும் மனிதர்களுக்கு சொல்லப்படும் அறிவுரையாக ஐந்தாவது பாடல் அமைந்துள்ளது. நமது வாழ்நாள் இன்னும் எத்தனை நாட்கள் என்பதை அறியாத நிலையில் ஒவ்வொரு உயிரும் இருப்பதால், மிகவே காலம் இனி இல்லை என்று குறிப்பிட்டு, சிவபுரத்தின் கதவுகள் நமக்கு மூடப்படும் முன்னரே நாம் சென்றடைவோம் என்று இந்த பாடலில் அறிவுரை கூறுகின்றார். மனம் மொழி மெய் ஆகிய மூன்றினையும் புயங்கனின் திருப்பாதங்களில் வைத்தும், நம்மை இறை வழிபாட்டினில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தும் பந்த பாசங்களை இகழ்ந்து ஒதுக்கியும், நாம் நமது பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை ஆறாவது பாடலில் சொல்லப் படுகின்றது. ஆறாவது பாடலில் குறிப்பிட்ட வண்ணம் தம்மை ஈடுபடுத்துக் கொள்ளாத மனிதர்களைப் பற்றி கவலை கொள்ளாமல், அவர்கள் தொடர்ந்து பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியவர்களாக மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்கும் நிலையில் இருப்பதால், அவர்களை விட்டுவிட்டு நாம் பயணம் மேற்கொள்வோம் என்று ஏழாவது பாடலில் அறிவுரை கூறுகின்றார். இறை அனுபவத்தில் தோய்ந்து இன்பத்தில் ஆழ்ந்திருக்கும் அடியார்களே, உலகப் பொருட்கள் தரும் மயக்கத்தில் ஆழ்ந்து, இனிய இறை அன்பால் விளைகின்ற ஆனந்தத்தை நழுவ விடாதீர்கள் என்ற அறிவுரை பதிகத்தின் எட்டாவது பாடலில் வழங்கப் படுகின்றது. இறைவனின் திருவடிகளைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பும் அடியார்கள், தங்களது சிந்தனையை ஒருமுகப் படுத்தி பெருமானை தியானித்து, அவனது அருளமுதத்தை பருகலாம் என்று ஒன்பதாவது பாடலில் அறிவுரை கூறுகின்றார். புரண்டும் தொழுதும் புகழ்ந்தும் இறைவனை வழிபடும் அடியார்கள், முழு மனதுடன் ஈடுபட்டால் தான், இறைவன் அருள் புரிவான் என்று எச்சரிக்கும் அடிகளார், அவர்கள் அந்த முதற் படியில் நின்று விடாமல், மேன்மேலும் முன்னேற வேண்டும் என்று பதிகத்தின் கடைப் பாடலில் அறிவுரை கூறுகின்றார்.

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (8.45.4) பெருமானின் அடியார்களாக மாறியவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை மணிவாசக அடிகளார் உணர்த்துகின்றார். இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில், தாமே தமக்குச் சுற்றமுமாக, தாமே தமக்கு விதிவகையாகவும் வகுத்துக் கொண்டு சுற்றத்தார்களால் எந்த விதத்திலும் பாதிக்கப் படாமலும், யான் மற்றும் எனது எனப்படும் அகப்பற்று மற்றும் புறப்பற்றுகளை அறவே விட்டொழித்து, பெருமானின் திருக்குறிப்பினை புரிந்து கொண்டு அதன் வழியே செல்வீர்களாக என்று அடியார்களுக்கு அறிவுரை கூறும் அடிகளார், அத்தகைய அடியார்களின் வழியே, இடையே இடையூறு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார். அந்த தடைகள், தம்மை தடைகள் என்று அறிவிக்காமல், எளிதில் கடந்து செல்லக் கூடியவை போன்று தோன்றும். அத்தகைய தடைகளை மிகவும் விளையாட்டாக கடந்து விடலாம் என்று கருதி, ஏமாறாதீர்கள் என்று எச்சரிக்கை விடுகின்றார். பற்றோ பாசமோ இன்றி இந்த விளையாட்டில் ஈடுபடுகின்றோம், எனவே மிகவும் எளிதில் கடந்து விடலாம் என்று தவறாக நினைத்தால், அந்த தடைகள் வெள்ளச் சுழியாக உம்மை இழுத்து அழுத்திவிடும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பதை உணர்ந்து செயல்பட்டு அந்த தடைகளை வெற்றி கொள்ள வேண்டும் என்றும், அடியார்களாக மாறிய பின்னர், எப்போதும் பெருமானின் திருவடிகளை சிந்தனை செய்தவர்களாக அவனது திருவுள்ளக் குறிப்பினை புரிந்து கொண்டவர்களாக செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்

கடி சேர் அடியே வந்து அடைந்து கடைக் கொண்டு இருமின் திருக்குறிப்பைச்

செடி சேர் உடலைச் செல நீக்கிச் சிவலோகத்தே நமை வைப்பான்

பொடி சேர் மேனிப் புயங்கன் தன் பூவார் கழற்கே புகவிடுமே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (8.45.6) மணிவாசக அடிகளார், அடியார்களை நோக்கி, தொடர்ந்து தங்களது மனம் மொழி மெய்களை இறை வழிபாட்டினில் ஈடுபடுத்தி, தொடர்ந்து பெருமானின் புகழினை பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், புயங்கனாகிய பெருமானின் திருவடிகளை எப்போதும் நினைத்தவாறு, பூக்களை மாலையாக தொடுத்து பெருமானுக்கு சமர்பிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். மேலும் எந்த வகையான இடர்கள் வந்தாலும், அந்த இடர்களால் மனம் நிலை குலையாது நின்று அவற்றை வெற்றி கொள்வோம் என்ற திடமான உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை கூறுகின்றார்.

புகழ்மின் தொழுமின் பூப் புனைமின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு

இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூறு அடையாமே

திகழும் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன் தாள் வணங்கி நாம்

நிகழும் அடியார் முன் சென்று நெஞ்சம் உருகி நிற்போமே

உயிர்கள் முக்தி உலகுக்கு செல்ல முடியாத தடையாக நிற்கும் பொருட்களை நாம் எவ்வாறு வெல்வது என்று மணிவாசக அடிகளார் திருப்படையெழுச்சி பதிகத்தின் முதல் பாடலில் (8.46.1) உணர்த்துகின்றார். விடை=எருது; விடையான்=எருதினை வாகனமாக உடையவன்; உயிர்களின் அறியாமையை அறுத்தெறிந்து அவர்களின் மனதினில் ஞானத்தை தோற்றுவிப்பதே தனது கடமையாக இறைவன் நினைப்பதால் தான், ஒவ்வொரு ஊழி முடிந்த பின்னரும் உலகினையும் உலகப் பொருட்களையும் தோற்றுவித்து உயிர்களை தகுந்த உடல்களுடன் இறைவன் இணைக்கின்றான். அவனைப் பணிந்து வணங்கும் உயிர்களின் அறியாமையாகிய இருள் கிழிக்கப்பட்டு ஞானம் இறைவனால் தோற்றுவிக்கப் படுகின்றது. இதனையே மணிவாசகர் ஞானவாள் ஏந்தும் ஐயர் என்று திருப்படை எழுச்சி பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இறைவனின் புகழினைப் பாடியும் அவனது சிறப்புகளைச் சொல்லி அவனை வாழ்த்தியும் அடியார்கள் இறைவனைக் குறித்து வணங்குவதும் நாதப்பறை அறைதல் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. உலகின் படைப்புக்கே ஆதாரமாக விளங்கும் நாதத்தின் உதவி கொண்டு, நாதத் தலைவனை புகழ்தல் பொருத்தம் தானே. இடபத்தினைத் தவிர்த்து வேறு எந்த விலங்கினையும் இறைவன் தனது வாகனமாகக் கொண்டதில்லை. மணிவாசகப் பெருமானுக்கு அருளும் பொருட்டு குதிரை வியாபாரியாக வந்த பெருமான் குதிரை ஏறி வந்ததை நாம் திருவாசகப் பாடல்கள் மூலம் உணர்கின்றோம். மானம்=பெருமை. மா=விலங்கு, விலங்காகிய குதிரை; அத்தகைய பெருமை வாய்ந்த குதிரையின் மீது ஏறி மதுரை வந்த பெருமானுக்கு, அவனது அருளினால் நமக்கு விளைந்த அறிவு எனப்படும் வெண்குடை ஏந்துவோம், என்றும் அவனது திருநீற்றைக் கவசமாகக் கொண்டு மாயப்படையுடன் நாம் போரிடுவோம் என்றும் கூறுகின்றார். உலகப் பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் நம்மை அவர்களது பாச வலையில் வீழ்த்தி என்றும் அறியாமையில் ஆழ்த்தி முக்தி உலகுக்கு நாம் செல்வதை தடுக்கின்றன. எனவே இந்த படைகளை நாம் போரிட்டு வெல்லவேண்டும். அந்த போருக்கு தேவையான வாள், குடை, பறை, கவசம் ஆகியவை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றன. அந்த கருவிகளை நன்கு பயன்படுத்தி வெற்றி கொண்டு, மாயப் படைகள் நெருங்க முடியாத முக்தி உலகினை அடைவீர் என்று அறிவுரை கூறும் பாடல்.

ஞானவாள் ஏந்தும் ஐயர் நாதப் பறை அறைமின்

மானமா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவிமின்

ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்

வான ஊர் கொள்வோம் நாம் மாயப்படை வாரமே

இதே பதிகத்தின் அடுத்த பாடலில், இந்த படை எவ்வாறு அணிவகுக்கப்பட வேண்டும் என்று மணிவாசகர் அறிவுரை கூறுகின்றார். சிவயாத்திரைக்கு செல்லும் உயிர்களை பத்திரமாக அழைத்துச் செல்வதற்காக ஒரு படையினை எழுப்ப வேண்டும் என்று மணிவாசகர் விரும்புகின்றார். அந்த படையினில் எவரெவர் எந்தெந்த நிலையில் நின்று பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த பாடலில் உணர்த்துகின்றார். பாண்டிய மன்னனின் அவையினில் மந்திரியாக பணியாற்றிய அடிகளாரின் அனுபவம் இந்த பாடலில் வெளிப்படுகின்றது.. பெருமானுக்கு பலவிதமான தொண்டுகள் செய்யும் அடியார்கள் உடல் வலிமை மிகுந்தவர்களாக இருப்பதால், அவர்களை முன்னணிப் படையாக இருக்குமாறு கூறும் அடிகளார், பெருமானின் பக்தர்களாக தன்னலம் அற்றவர்களாக இருக்கும் அடியார்களை, ;பிறருக்கு உதவி செய்வதில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தினை கருத்தினில் கொண்டு அவர்களை, படை வீரர்களுக்கு அவர்கள் வேண்டுவதை தேவையான சமயத்தில் அளிக்கும் பொருட்டு, அவர்களைச் சூழ்ந்து செல்வீர்கள் என்று கூறுகின்றார். முன்னால் செல்லும் படைகள் பின்தங்கிவிடாமல் தொடர்ந்து செல்லும் பொருட்டும், அவர்கள் அச்சம் கொள்ளும் நேரங்களில் தைரியமூட்டி அவர்களை வழிநடத்தவும் திறமை வாய்ந்த யோகிகளை அழைக்கும் அடிகளார், பெருமானின் அருளினால் பல சித்திகள் கைவரப்பெற்ற சித்தர்களை காவற்படையாக இறுதியாக இருக்குமாறு பணிக்கின்றார். கடைக்கூழ்=இறுதி வரிசை. தூசிப்படை=முன்னணிப்படை;

தொண்டர்காள் தூசி செல்லீர் பத்தர்காள் சூழப் போகீர்

ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்

திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்

அண்டர் நாடு ஆள்வோம் நாம் அல்லல் படை வாராமே

பொழிப்புரை:

குற்றம் மிகுந்து இகழத்தக்க சிந்தனைகளுடன் உலக வாழ்க்கையின் சிற்றின்பங்களை எப்போதும் அனுபவித்துக் கொண்டு, உலக வாழ்க்கை மிகவும் இன்பமயமானது என்ற முடிவுடன் இறைவனை நினையாமல் இருந்து பாவமான வாழ்க்கை வாழ்வதால் நீர் அடையக்கூடிய பயன் ஏதும் இல்லை; ஒன்றுக்கொன்று காவலாக திகழ்ந்து வலிமையான அரணைப் பெற்றிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் கோபித்து எரியச் செய்தவனும், கோபத்தால் சிவக்கும் நெற்றிக் கண்ணினை உடையவனும் ஆகிய இறைவன் உறையும் கோடிகா சென்றடைந்து அவனைத் தொழுது பயன் அடைவீர்களாக.

பாடல் 7:

இன்று நன்று நாளை (2.99) பாடல் 6 தொடர்ச்சி மற்றும் 7 (திதே 0520)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 7 தொடர்ச்சி (திதே 0521)

இன்று நன்று நாளை (2.99) பாடல் 7 தொடர்ச்சி மற்றும் 8, 9, 10, 11 (திதே 0522)

ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர்

மாண் அழிந்த மூப்பினால் வருந்தன் முன்னம் வம்மினோ

பூணல் வெள் எலும்பினான் பொன்திகழ் சடைமுடிக்

கோணல் வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே

விளக்கம்:

ஏண்=பெருமை; மாண்=மாண்பு, வலிமை; மீண்டும்மீண்டும் புவனியில் பிறப்பதற்கு வழி வகுப்பதால் பெருமையற்ற வாழ்க்கை என்று கூறப்படுகின்றது. வாழ்க்கையின் பெருமையற்ற நிலையினை உணராமல், வாழ்க்கை தரும் சிற்றின்பத்தில் ஆழ்ந்து மறந்து விடுகின்றோம்.. ஆனால் வயது முதிர்ந்த காலத்தில் சிற்றின்பங்களில் நாட்டம் குறையவே, நாம் கடந்த காலத்தில், இறைவனை நினையாமல் வீணாக கழித்த நாட்களை எண்ணி வருந்துகின்றோம்.

மூப்பினால் உடலில் தோன்றும் பல மாற்றங்களை குறிப்பிட்டு, அதனால் ஏற்படும் விளைவுகளையும் உணர்த்தி, அத்தகைய காலம் வந்து நாம் ஏதும் செய்ய இயலாத நிலை வருமுன்னம் பெருமானைத் தொழுது பயன் அடையுமாறு தூங்கானை மாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.59.6) திருஞான சம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். நீர்மை=தன்மை; பன்னீர்மை=பற்களின் வலிமை; பற்கள் உடைந்தும் விழுந்தும் வலிமையற்று காணப்படும் நிலை என்று சிலர் பொருள் கூறுகின்றனர்.; பன்னீர்மை என்ற சொல்லுக்கு பல வகையான உடலின் வலிமைகள், இன்பத்தை அனுபவிக்க உதவும் புலன்கள் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். பல் வீழ்ந்து நாத்தளர்ந்து என்று இதே பதிகத்தின் மற்றோர் பாடலில் வருவதால், இரண்டாவது பொருள் மிகவும் பொருத்தமாக உள்ளது. கண் பவளந்நிற நன்னீர்மை=செவ்வரி ஓடும் கண்கள்; நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும் மனிதனின் கண்களில், சுத்தமான இரத்த ஓட்டத்தினால் கண்களில் சிவப்பு நிறத்தில் கோடுகள் தெரியும். மருத்துவர்கள் கீழ் இமையினை சற்றுத் தாழ்த்தி கண்களில் சிவப்பு கோடுகள் உள்ளதா என்று பார்ப்பார்கள். இரத்த ஓட்டம் குறைந்தால் கண்கள் வெளுத்து தோன்றுவது இயல்பு. திரை=சுருக்கம்; தோலில் சுருக்கம் காணப் படுவதும், முடிகள் நரைப்பதும் முதுமையின் அடையாளங்கள். முதுமை அடைந்த பின்னர், உடல் நலம் குன்றுவதால் பல தலங்கள் சென்று இறைவனை வணங்க மனம் விரும்பினாலும் உடல் ஒத்துழைக்காது என்பதால், உடலில் வலிமை உள்ள போதே பெண்ணாகடம் சென்று இறைவனை வணங்கி பயன் அடையுமாறு உணர்த்தும் பாடல். மனிதர்களே, உடலில் உள்ள பல்வகை சிறப்புத் தன்மைகள் குறைந்து, காதுகள் தாங்கள் கேட்கும் சக்தியை இழந்து, கண்கள் தங்களது பவளம் போன்ற செம்மை நிறமும் பார்வையும் குன்றி, செழிப்புடன் காணப்பட்ட உடலின் தோல் சுருங்கி, முடிகள் நரைத்து முதுமைப் பருவம் உம்மை வந்து அடைவதன் முன்னம், பொன்னின் நிறம் மேலே தோன்றுமாறு நீர்ப்பெருக்கினை உடைய கங்கை நதியினைத் தனது செம்பட்டை நிறத்து சடையினில் ஏற்ற பெருமான் உறையும் தூங்கானை மாடம் திருக்கோயில் உள்ளதும் தொன்மையான நதியாகிய நிவா பாய்வதும் ஆகிய கடந்தை நகரம் சென்றடைந்து, ஆங்கே உள்ள பெருமானை வணங்கித் தொழுது நீங்கள் விரும்பிய பயனை அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பன்னீர்மை குன்றிச் செவி கேட்பிலா படர் நோக்கில் கண் பவளந்நிற

நன்னீர்மை குன்றித் திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன்

பொன்னீர்மை துன்றப் புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன் சடையினான் உறையும்

தொன்னீர்க் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.53.4) அப்பர் பிரான், தன்னை என்றும் மறவாது அன்புடன் வழிபடும் அடியார்களின் பிறப்பினை அறுக்கும் வல்லமை வாய்ந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். விகிர்தர்=மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர்; இந்த பாடலில் அப்பர் பிரான் இறைவனை விகிர்தர் என்று அழைப்பதை நாம் காணலாம். தேவர்களுக்கு அமுதம் அளிப்பதற்காக தான் நஞ்சினை உண்ட சிவபெருமானின் செய்கை, அப்பர் பிரான் அவரை விகிர்தர் என்று அழைப்பதற்கு காரணமாக இருந்தது போலும். வீரி=காளி; திருமாலால் அறிய முடியாதவரும், அடியார்கள் கேட்கும் வரங்களை அளிக்க கூடிய வள்ளலும், தன்னை மறவாமல் துதிக்கும் அடியார்களுக்கு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்க வல்லவரும், நான்கு மறைகளுக்கும் தலைவராக இருப்பவரும், அஞ்செழுத்தினைத் தனது திருநாமமாக உடையவரும், நம்மால் விரும்பப் படுபவரும், வேல் மற்றும் சூலம் ஆகிய ஆயுதங்களைத் தனது கையில் ஏந்திய காளி தேவியை படைத்தவரும் ஆகிய இறைவன் அகன்று பரந்த திருவீழிமிழலை தலத்தில் அமைந்துள்ள திருக்கோயிலில் உறைகின்றார். தேவர்கள் அமுதம் உட்கொள்ளும் பொருட்டு, அதன் முன்னர் பொங்கி எழுந்த ஆலால விடத்தினைத் தான் உண்டு தனது கழுத்தினில் அடக்கி, தான் ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர் என்பதை உணர்த்திய விகிர்தரும் ஆகிய இறைவன் அடியேனை ஆட்கொண்டவராவார் என்று அப்பர் பிரான் நமக்கு அறிவிக்கும் பாடல் இந்த பாடல்.

மாலாலும் அறிவரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும்

நாலாய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சாய நம்பர் போலும்

வேலார்கை வீரியை முன் படைத்தார்போலும் வியன்வீழிமிழலை விகிர்தர் போலும்

ஆலாலம் மிடற்றடக்கி அளித்தார்போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

மேலும் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப்படும் தலத்தில் (தற்போதைய பெயர் வைத்தீசுவரன் கோயில்) இறைவன் மருத்துவனாக காயங்களுக்கு சிகிச்சை (முருகப் பெருமானின் படைவீரர்களுக்கு) செய்த நிலை இந்த திருக்கோயிலின் தலபுராணத்தில் கூறப்படுகின்றது. தாரகாசுரனுடன் நடந்த போரில் காயம் அடைந்த தனது படை வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யுமாறு இறைவனை முருகக் கடவுள் வேண்டுகின்றார். இறைவனுடன் இறைவியும், எண்ணெய் கிண்ணத்துடன், சிவபிரான் கொடுக்கும் மருந்துகளை குழைத்து காயங்களில் தடவுவதற்கு வசதியாக வருகின்றார். இதனால் அம்மைக்கு தைல நாயகி என்ற பெயர் வந்தது. தைல நாயகி நாளடைவில் தையல்நாயகி என்று மருவிவிட்டது. இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர் வந்த காரணம் இது தான். இந்த தலத்தில் உள்ள வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து தான் சிவபெருமான் வைத்தியம் பார்த்ததாக நம்பப் படுகின்றது. வைத்தியநாதனாக சிவபெருமான் அருள் புரிந்தமை குறித்து அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது இயற்றிய தனது தேவாரப் பதிகத்தில் (ஆண்டானை அடியேனை ஆளாக்கொண்டு எனத் தொடங்கும் பதிகம்–6,54) எட்டாவது பாடலில் பாடியுள்ளார். வாராத செல்வம் என்று குறிப்பிடுவதை எளிதில் கிடைக்காத வீடு பேறு செல்வம் என்றும், மறுபடியும் இந்த உலகில் வந்து பிறவாத நிலையை உடைய செல்வம் என்றும் கொள்ளலாம். எப்போதும் இறைவனை பிரியாது வழிபடும் அடியவர்க்கு இந்த நிலை அருளப்படும் என்பதும் இந்தப் பாடலில் உணர்த்தப் படுகின்றது. மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி என்ற தொடர் மூலம், இறைவன் உடல் நோயினையும் உயிர் நோயாகிய பிறவிப் பிணியினையும் தீர்ப்பவனாக செயல்படும் தன்மை உணர்த்தப் படுகின்றது.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி

தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீயெழ திண்சிலை கைக் கொண்ட

போரானை புள்ளிருக்கு வேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.64.4) அப்பர் பிரான், பிறவி நோயினைத் தீர்ப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஏயவன்=பொருந்தி இருப்பவன்; வாயவன்=வாயின் கண் இருப்பவன்; வாயிலிருந்து வரும் சொல்லாக இருப்பவன் என்று உணர்த்துகின்றார். பெருமானின் திருவடிகளை நினைத்து வாழும் அடியார்களின் வாயில் இருப்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருந்து அரவணைத்து காப்பவனும், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாததால் மேம்பட்ட பொருளாக இருப்பவனும், பார்வதி தேவியைத் தனது உடலில் ஏற்றவனே என்று அன்புடன் அழைக்கும் அடியார்களின் வாய்மொழியாக இருப்பவனும், தனது அடியார்களுக்கு இனிமேல் வரக்கூடிய பிறவிகளை தவிர்க்கும் வல்லமை உடையவனும், தன்னை நினைக்காத வானவர்கள் தானவர்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு மிகவும் தொலைவில் உள்ளவனும், தங்களது சித்தத்தில் நிறைவாக பெருமானின் திருவடிகளை தியானித்து எழும் அடியார்களின் மனதினில் பொருந்தி இருப்பவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல் .

தாயவன் காண் உலகிற்குத் தன்னொப்பில்லாத் தத்துவன் காண் மலை மங்கை பங்கா என்பார்

வாயவன் காண் வரும் பிறவி நோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்

சேயவன் காண் நினைவார்க்குச் சித்தமாரத் திருவடியே உள்கி நினைத்தெழுவார் உள்ளம்

ஏயவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.7) அப்பர் பிரான், தனது பிறவித் துயரினைத் தீர்த்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மால் விடை=சிறந்த காளை வாகனம் என்றும், திருமாலை வாகனமாக ஏற்றவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்வதும் பொருத்தமே. வேதங்கள் உணர்த்தும் உட்பொருளாக இருப்பவனும், சிறப்பு வாய்ந்த இடபத்தை வாகனமாக உடையவனும், பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனும், வானவர்களின் தலைவனாக இருப்பவனும், அடியேனின் பிறவித் துயரினைத் தீர்ப்பவனும், பல ஊழிகளையும் கடந்து நிலையாக நிற்கும் சிறப்பினைப் பெற்ற கச்சி ஏகம்பத்தில் உறையும் இனிய அமுதமாக இருப்பவனும், ஏனையோர் அறியாத வண்ணம் எனது உள்ளத்தில் ஒளித்து வைக்கப் பட்டு சிறைபட்டு இருப்பவனும், நாகேச்சரத்து நகரினில் உறைபவனும் ஆகிய இறைவனைச் சேராதார்கள், நல்ல நெறியில் செல்லாதவர்கள் ஆவார்கள் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

மறையானை மால்விடை ஒன்று ஊர்தியானை மால்கடல் நஞ்சு உண்டானை வானோர் தங்கள்

இறையானை என் பிறவித் துயர் தீர்ப்பானை இன்னமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில்

உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என்னுள்ளத்துள்ளே ஒளித்து வைத்த

சிறையானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.7) அப்பர் பிரான், பெருமானை வலிமை வாய்ந்த வினைகளை வேருடன் அறுத்தெறியும் மருந்து என்று குறிப்பிடுகின்றார். ஐம்புலனும் காத்தான்=ஐந்து புலன்களும் சேட்டைகள் செய்து அடியார்களின் சிந்தனையை திசை திருப்பாத வண்ணம் காப்பவன்; பொங்க=செழிக்க, சிறந்து விளங்க; மாத்து=பெருமை; மகத் என்ற வடமொழி சொல்லின் திரிபு; மாத்தாடி=பெருமை உடைய நடனம்; தாருகவனத்து முனிவர்கள் தன் மீது ஏவிய மதம் கொண்ட யானையின் தோலை உரித்த தருணத்தில் தனது திருமேனி, பார்ப்பவர்களின் கண்களை கூசும் வண்ணம் ஒளி மிகுந்து விளங்க, அந்த கோலத்தைக் கண்ட தேவர்களின் கண்களை பாதுகாக்கும் பொருட்டு யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்த்தவனும், கொல்ல வந்த புலியின் தோலினை உரித்துத் தனது ஆடையாக அணிந்து எங்கும் திரிபவனும், அடியார்களின் இறைச் சிந்தனையை ஐந்து பொறிகளும் திசை திருப்பாத வண்ணம் பாதுகாப்பவனும், பறக்கும் மூன்று கோட்டைகளையும் வெகுண்டு எரித்தவனும், கழல் அணிந்த தனது காலினால் இயமனை கோபித்து உதைத்தவனும், பெருமை மிகுந்த நடனத்தை ஆடுபவனும், பக்தி கொண்டு தன்னை வணங்கும் அடியார்களின் வலிமையான வினைகளை வேருடன் களைபவனும், அடியார்களை வருத்தும் பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்ந்து அதனை போக்குவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா என்று அப்பர் பிரான் தனது நிலையை எண்ணி. தனது வருத்தத்தை தெரிவிக்கும் பாடல்.

போர்த்து ஆனையின் உரிதோல் பொங்கப்பொங்கப் புலியதளே உடையாகத் திரிவான் தன்னை

காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான் தன்னை

மாத்தாடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேரறும் வண்ணம் மருந்துமாகித்

தீர்த்தானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

மாமுனிவர் தம்முடைய மருந்து என்று பெருமானை அப்பர் பிரான் வலஞ்சுழி மற்றும் கொட்டையூர் தலங்களை இணைத்து பாடிய பதிகத்தின் பாடலில் (6.73.6) குறிப்பிடுகின்றார். நமது பிறவிப் பிணிக்கு இறைவன் சிறந்த மருந்து என்பதை நாம் அறிந்தாலும், நமது பிறவிப் பிணியினை தீர்த்துக் கொள்வதற்கு நாம் முயற்சிகள் ஏதும் எடுப்பதில்லை. அவ்வப்போது உடல் அனுபவிக்கும் சிற்றின்பங்களில் மனம் மகிழும் நாம், அத்தகைய சிற்றின்பங்களின் விளைவால் பின்னர் உடல் அனுபவிக்கும் பல துன்பங்களை பொருட் படுத்துவதும் இல்லை. இந்த உடலும் உடல் பெறுகின்ற சிற்றின்பங்களும் நிலையானவை என்ற மாயையில் ஆழ்ந்து, அத்தகைய சிற்றின்பங்கள் பெறுவதற்கு துடிக்கின்றோம். எனவே பிறவியை உயிர் அடைந்துள்ள பிணியாகவே கருதுவதில்லை. பிறவியை ஒரு பிணியாக கருதினால் தானே, உயிரைப் பீடித்துள்ள பிணிக்கு மருந்து தேடுவதற்கு முயற்சி செய்வோம். ஆனால் இந்த பிறவிப் பிணியால் உயிர் அடைகின்ற துயரங்களை உணர்ந்துள்ள முனிவர்கள், உலகப் பொருட்கள் மீதும் உலகத்து உயிர்கள் மீது தாங்கள் கொண்டிருந்த பாசத்தினை நீக்கி, துறவறம் மேற்கொண்டு இறைவனை தியானம் செய்து அதன் பயனாக தங்களது பிறவிப் பிணியினை அறுத்துக் கொள்வதை உணர்த்தும் பொருட்டு, மாமுனிவர் தம்முடைய மருந்து என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சண்டன்=சண்டீசன்; தேவர்களும் தொழும் நிலைக்கு சண்டீசனை உயர்த்திய செய்தி இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது.

சண்டனை நல்லண்டர் தொழச் செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன் தான் கண்டாய்

தொண்டர் பலர் தொழுதேத்தும் கழலான் கண்டாய் சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்

மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்

கொண்டல் தவழ் கொடிமாடக் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.74.5) அப்பர் பிரான், பெருமான் வருபிணி தீர்க்கும் மருந்தாக செயல்படுவதாக குறிப்பிடுகின்றார். உமையம்மை தன்னை நோக்கித் தவம் செய்ததால் மகிழ்ந்த சிவபெருமான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி இந்த பாடலில் நமக்கு சொல்லப்படுகின்றது. எனவே சிவபெருமானின் தவத்தைக் கலைப்பதற்கு மன்மதன் செய்த முயற்சிக்கும் உமையன்னையின் திருமணத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பது புலனாகின்றது. புரை=துளை: துதிக்கையில் உள்ள துளையினை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். மனித வாழ்க்கையில் நேரும் இன்பங்களும் துன்பங்களும், இருவினைத் தொடர்பால் உண்டாகின்றன. மனிதர்கள் அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் வினைகளை மேலும் பெருக்குவதால், அவ்வாறு பெருக்கப்படும் வினைகளைத் தீர்ப்பதற்காக மறுபடியும் மறுபடியும், உயிர் மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றது. இவ்வாறு பிறவி எடுக்கும் தன்மையை நோய் என்று அப்பர் பிரான் கருதுவதால், வருபிணி நோய் என்று இனிமேல் எடுக்கவிருக்கும் பிறவிகளை இங்கே குறிப்பிடுகின்றார்.

புரை உடைய கரியுரிவைப் போர்வையானைப் புரிசடை மேல் புனலடைத்த புனிதன் தன்னை

விரை உடைய வெள்ளெருக்கம் கண்ணியானை வெண்ணீறு செம்மேனி விரவினானை

வரையுடைய மகள் தவஞ்செய் மணாளன் தன்னை வருபிணி நோய் பிரிவிக்கும் மருந்து தன்னை

நரைவிடை நற்கொடி உடைய நாதன் தன்னை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில், அப்பர் பிரான், தானும் திருஞான சம்பந்தரும் கண்ட பெருமானின் நடனக் காட்சியை விவரிக்கின்றார். இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் (6,77.8), பெருமான் அடியார்களின் பிறவிப் பிணிக்கு மருந்தாக செயல்படுவதைத் தான் கண்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார். ஏனைய தேவர்களுக்கும் உலகத்தவர்க்கும் பொருந்தாத செயல்கள் செய்பவர் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மற்றவரிடமிருந்து மாறுபட்டு இருப்பது தானே பெருமானின் தனிச் சிறப்பு. இந்த தன்மை விகிர்தன் என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டு, அதற்கான காரணமும் விளக்கப் பட்டுள்ளது. அமுதம் உண்பதற்காக மற்றவர் காத்திருக்கையில், பொங்கி எழுந்த நஞ்சினை உண்டது; செல்வம் பலவிருந்தும் தான் உண்பதற்காக வீடுகள் தோறும் சென்று பலியேற்பது, பட்டாடை முதலியன தவிர்த்து கீளும் கோவணமும் அணிந்து காட்சி தருவது; தேர் குதிரை யானை முதலியவற்றை வாகனமாக கொள்ளாமல் எருதினை வாகனமாக ஏற்றது, சுடுகாட்டினை தனது இருப்பிடமாகக் கொண்டது, பெண்ணினை தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றது, பூதகணங்கள் சூழ இருப்பது; பூதங்களுடன் நடனம் ஆடுவது, இரவில் நடனம் ஆடுவது, எலும்பு மாலை, சங்கு மாலை, பன்றிக் கொம்பு, கொக்கின் இறகு ஆகியவற்றை அணிகலனாக ஏற்றுக் கொள்வது, உயிரற்ற உடலைத் தோள் மீது சுமப்பது, முதலிய பல செயல்கள் பொருந்தாத செய்கையாக இங்கே குறிப்பிடப் படுகின்றன. விருந்து=புதியதாக வந்தது;

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்

பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பாராய்ப் புலனாகி நிற்கை கண்டேன்

விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்

மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

கோடிகா தலத்தின் மீது அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகத்தின் முதல் பாடலில் (6.81.1) மீண்டும்மீண்டும் பிறப்புக்கு வழிவகுக்கும் மயக்க நிலைக்கு மருந்தாக இருப்பவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். கண்டலம்=கண் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள: மண்டலம்=பல வகை உலகங்கள்; விண்டலம்=தேவர் உலகம்; கொண்டலம்=கொண்டல்+அம்=அழகிய மேகம், அழகிய மேகம் கொண்டுள்ள கருமை நிறம்; படி மலிந்த=உலகினில் நிறைந்த;இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் படி மலிந்த பல் பிறவி அறுப்பான் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

கண்டலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய் கல்மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய்

மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்

விண்டலம் சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்

கொண்டலம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே

ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.88.6) அப்பர் பிரான், தனது பிறவிப் பிணிக்கு மருந்தாக விளங்குபவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஆராத=தெவிட்டாத: அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விடம் என்பது பழமொழி. ஆனால் இறைவனைப் பற்றி எத்தனை முறை சிந்தித்தாலும், எத்தனை முறை அவனது புகழினைப் பாடினாலும். எத்தனை முறை கேட்டாலும், அடியார்களுக்கு அலுப்பு என்பது ஏற்படுவதில்லை. இவ்வாறு ஆரா அமுதமாக விளங்கும் பெருமானை ஆராத இன்னமுது என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். அரிய தவத்தினைச் செய்யும் முனிவர்கள் தொழுது வணங்கும் பெருமானாக உள்ளவனும், தெவிட்டாத இனிய அமுதமாக உள்ளவனும், அடியார்கள் அடையவிருக்கும் துன்பங்களைத் தவிர்த்து அவர்களை இன்பமுறச் செய்பவனும், உமையாள் நங்கையின் மணாளனாகத் திகழ்பவனும், எனது பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்பவனுமாக விளங்குபவன் சிவபெருமான். பயிர் வளர்ச்சிக்கு பொருத்தமான காற்றினால் தழுவப்படும் வயல்கள் நிறைந்ததும், உயரத்திலிருந்து ஒளிவீசும் நிலவின் ஒளியினால் மிகவும் அழகாக காட்சி தரும் நகரமும் ஆகிய ஓமாம்புலியூர் தலத்தில் நாள்தோறும் சிறப்புடன் வழிபாடு நடைபெறும் வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில், எந்நாளும் அனைவர்க்கும் நன்மை பயப்பதால் இனிதாக அமைந்துள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்

வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து தன்னைப்

பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்கப் பொழில் கெழுவு தரும் ஓமாம்புலியூர் நாளும்

திருந்து திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் முறையாக சிவபெருமானைத் தொழாத உயிர்கள் பிறப்பெடுப்பதே, இந்த பிறவியில் இறந்த பின்னர் மீண்டும் பிறப்பெடுத்து அல்லற்படுவதற்கே என்று (6.95.6) அப்பர் பிரான் கூறுகின்றார். அளி=அன்பு, இங்கே சிவபிரானிடத்தில் கொண்டுள்ள அன்பு என்று பொருள் கொள்ளவேண்டும். பெருநோய் என்று மீண்டும்மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. சிவபிரானைத் தொழுது வழிபட்டாலன்றி, பிறவிநோய் தீராது என்று அப்பர் பிரான் இங்கே உரைக்கின்றார். கோயில்கள் இல்லாத ஊரினைச் சாடிய அப்பர் பிரான், கோயில் இருந்தும் அந்த கோயில் சென்று வழிபடாத மனிதர்களை இந்த பாடலில் சாடுகின்றார். தீவண்ணர் திறம் ஒரு கால் பேசாராகில் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே என்று வலியுறுத்தும் தில்லைப் பதிகத்தை (6.01) நமக்கு நினைவூட்டுகின்றது. பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்வது திருநீறு தான் என்ற கருத்தினை, திருநீற்றுப் பதிகத்தில் (2.66.9) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணார் என்று இங்கே கூறுவது, வண்டுகள் மலரினைத் சுவைப்பதற்கு முன்னர் பறித்து என்றும் பொருள் கூறுவார்கள். சிவபெருமானின் திருநாமமாகிய அஞ்செழுத்தினைத் சொல்லாமல் இருப்பவர்களும், செந்தீ வண்ணத்தவராக உள்ள சிவபெருமானின் திறமையை ஒரு முறையேனும் பேசாமல் இருப்பவர்களும்; ஒரு முறையேனும் திருக்கோயில் வலம் வராதவர்களும், தாங்கள் உண்பதன் முன்னர் மலர் பறித்து சிவபெருமானின் திருமேனியில் மலர் தூவி வணங்கி பின்னர் உணவு உட்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்களும்; பிறவிப் பிணியினைத் தீர்க்கும் திருநீற்றினை தங்களின் உடல்கள் மீது பூசாதவர்களும்: சிவபெருமான் மேல் சிறிதும் அன்பு இல்லாதவர்கள். அவர்கள் வாழும் வாழ்க்கையை நான் என்னென்று சொல்லுவேன். பிறவிப் பிணி என்ற பெருநோயால் பாதிக்கப்பட்டு இறந்த பின்னரும் மீண்டும்மீண்டும் பிறப்பதையே தங்கள் செயலாகக் கொண்டு அவர்கள் இறக்கின்றார்கள். அவர்களால் பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து, தப்பி வெளியே வரவே முடியாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்

ஒரு காலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்

அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில் அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்

பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே

பொழிப்புரை:

மீண்டும்மீண்டும் நம்மை பிறவியில் ஆழ்த்துவதால் பெருமையற்ற வாழ்க்கை என்பதை உணராமல் பல விதமான சிற்றின்பங்களில் ஆழ்ந்து கிடப்பதே இன்பம் என்று நினைத்து இறைவனை நினையாமல் வாழ்ந்த நீர், வலிமை குன்றிய காலத்தில் வருந்துவதால் இலாபம் ஏதுமில்லை. அவ்வாறு வருந்துவதன் முன்னம் நீர், வெண்மை நிறத்தில் உள்ள எலும்புகளை மாலையாக பூண்டவனும், பொன் போன்ற சடையின் மீது வளைந்த வெண்மை நிறத்து பிறைச் சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவன் உறையும் கோடிகா தலம் சென்றடைந்து இறைவனை வணங்கி, பயன் அடைவீர்களாக.

பாடல் 8:

இன்று நன்று நாளை (2.99) பாடல் 7 தொடர்ச்சி மற்றும் 8, 9, 10, 11 (திதே 0522)

மற்றி வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத் தவிர்த்து நீர்

பற்றி வாழ்மின் சேவடி பணிந்து வந்து எழுமினோ

வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்ததோர்

குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்மினே

விளக்கம்:

வரை=மலை, இங்கே கயிலை மலை; விறல்=வலிமை; குற்றமில் வரை=தான் செல்லும் வழியில் குறுக்கிட்டு தனது பயணத்திற்கு தடையாக இருந்தது கயிலை மலை என்று தவறாக கருதி, அந்த மலையினை பெயர்த்து வேறோர் இடத்தில் இடுவதற்கு அரக்கன் இராவணன் முயற்சி செய்தான் என்பதை நாம் அறிவோம். தொன்று தொட்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக அதே இடத்தில் இருந்து வரும் கயிலை மலையின் மீது குற்றம் ஏதுமில்லை என்பதை உணர்த்தும் பொருட்டு குற்றமில் மலை என்று கூறினார் போலும். கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட அரக்கன், அதற்கு முன்னர் தனது முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றமையால், வெற்றிகொள் தசமுகன் என்று கூறினார்.

எதிர்கொள்பாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.7) பாடல்களில் சுந்தரர், உயிர்களுக்கு பல அறிவுரைகள் கூறுகின்றார். பதிகத்தின் முதல் பாடலில் எத்தனை செல்வம் படைத்தவராக இருந்தாலும், எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும், செத்த போதில் உயிருக்கு துணையாக பெருமான் ஒருவர் மட்டும் தான் இருப்பார் என்றும், பிறப்பெடுக்கும் அனைவருக்கும் இறப்பு காத்திருக்கின்றது என்றும் அந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே பல துன்பங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று இரண்டாவது பாடலிலும், உலகியல் துன்பங்களில் ஆழ்ந்து மெலியும் உயிர் பெண்கள் தருகின்ற மயக்கத்தில் ஆழாமல் இருக்க வேண்டும் என்று மூன்றாவது பாடலிலும், நம்முடன் வாழ்கின்ற ஐந்து பொறிகளே பகைவர்களாக செயல்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நான்காவது பாடலிலும் குறிப்பிடும் சுந்தரர், அத்தகைய துன்பங்களிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் எதிர்கொள்பாடி தலம் சென்றடைந்து பெருமானைப் பணிய வேண்டும் என்று கூறுகின்றார். ஐந்து பொறிகளும் நம்மை பலவிதத்திலும் அலக்கழித்து துன்பத்தில் ஆழ்த்துவதால், விரைவினில் மூப்பினை அடைந்து இறக்கும் காலம் வருவதன் முன்னர், எதிர்கொள்பாடி இறைவனைத் தொழுது பயனடைய வேண்டும் என்று பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும், இல்லற வாழ்க்கையால் நமக்கு கிடைக்கும் சுற்றத்தார் நம் மீது நிலையற்ற அன்பு கொண்டவர்கள் என்பதால் அவர்கள் நம் மீது காட்டும் அன்பு பொய் என்று பதிகத்தின் ஆறாவது பாடலிலும், அறிவுரை கூறுகின்றார். கூச்சம் ஏதும் இல்லாமலும், காமம் முதலான ஆறு குற்றங்களை ஒழித்தும், அனைத்து உயிர்கள் பால் அன்பு பாராட்டியும் வஞ்சனை நிறைந்த மனை வாழ்க்கையின் பால் கொண்டுள்ள ஆசையைத் துறந்தும், பெருமான் பால் அன்பு வைத்து பெருமானைத் தொழ வேண்டும் என்று ஏழாவது பாடல் அறிவுரை கூறுகின்றது. வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்து இருத்தல் கண்கூடு; இத்தகைய வாழ்வினைத் தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால், பெருமான் பால் அன்பு கொள்ள வேண்டும் என்று எட்டாவது பாடல் மூலமும், இந்த பிறவியில் நமக்கு தந்தையாகவும் தாயாகவும் சுற்றத்தாராகவும் இருப்பவர் எவரும் நாம் வீடுபேறு அடைவதற்கு எள்ளத்தனையும் உதவியாக இருக்க மாட்டார்கள் என்று ஒன்பதாவது பாடலிலும் அறிவுரை கூறுகின்றார். பதிகத்தின் பத்தாவது மற்றும் பதினோராவது பாடல்களில், எதிர்கொள்பாடி தலம் சென்றடைந்து பெருமானைப் பணிந்து வணங்கி பயனடைய வேண்டும் என்று சுந்தரர் வழிநடத்துகின்றார்.

கேதாரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.78) பாடல்களில் சுந்தரர் கேதாரம் தலத்தின் பெயரைச் சொல்லி பயனடையுமாறு அறிவுரை கூறுகின்றார். முதல் பாடலில் வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் என்றும் கூறும் சுந்தரர், கூற்றுவன் உம்மை அழைத்துக் கொள்வதால் நரிகளால் உமது உடல் குதறிக் கிழிக்கப்படும் நிலையை அடைவதன் முன்னர் நற்செயல்களையும் அறத்தினையும் செய்வீர் என்று இரண்டாவது பாடலிலும், நம்பனாகிய பெருமான் தம்மை ஆட்கொண்டு அருள் புரிவான் என்ற நம்பிக்கையுடன் முனிவர்கள் தவம் செய்யும் இடம் கேதாரம் எனச் சொல்வீர் என்று மூன்றாவது பாடலிலும், மிகவும் சிக்கனமாகவும் கருமித் தனமாகவும் வாழும் மனிதர்களுடன் சேர்ந்து வீணாக காலத்தைக் கழிக்காமல் நித்ய அனுஷ்டானங்களை முறையாக செய்யும் மனிதர்கள் வாழும் கேதாரம் என சொல்வீர் என்று நான்காவது பாடலிலும், மகளிரின் வலையில் சிக்காமல், இப்போதே இறைவனுக்கு ஆளாகியும் அவன் உறைகின்ற தலம் கேதாரத்தின் பெயரைச் சொல்லியும் வாழ்வினில் உய்வினை அடைவீர்கள் என்று ஐந்தாவது பாடலிலும், புண்ணிய தீர்த்தங்கள் சென்று நீராடியும் கேதாரம் போன்ற தலங்களின் பெயரைச் சொல்லியும் புண்ணியம் தேடிக் கொள்வீர் என்று ஆறாவது பாடலிலும், ஆரவாரம் நிறைந்த கேதாரம் தலத்தின் பெயரைச் சொல்வீர் என்று ஏழாவது பாடலிலும், யானைகளும் மயில்களும் தங்களது துணையிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ளும் இடம் கேதாரம் எனச் சொல்வீர் என்று எட்டாவது பாடலிலும், உடலைச் சுமந்து திரிவதே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளாமல் நமது மலங்களைக் கழித்து அருள் புரியும் இறைவன் உறைகின்ற இடம் கேதாரம் எனச் சொல்வீர் என்று ஒன்பதாவது பாடலிலும், சுந்தரர் நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

பொழிப்புரை:

இந்நாள் வரை பொய்யான இந்த வாழ்க்கையை மெய் என்று நினைத்து வாழ்ந்த எண்ணங்களைத் தவிர்த்து இனியாகிலும் இறைவனது சேவடிகளை பற்றுக்கோடாக நினைத்து, அவனைப் பணிந்து வாழ்வதற்கு எழுவீர்களாக. அந்நாள் வரை வெற்றியே கொண்டிருந்த அரக்கன் இராவணனின், வலிமை கெடும் வண்ணம், அரக்கன் கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது, அவனை மலையின் கீழே நெருக்கியவனும், குற்றங்கள் ஏதும் இல்லாத கயிலை மலையினை உடையவனும் ஆகிய பெருமான் உறையும் கோடிகா தலம் சென்றடைந்து வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.

பாடல் 9:

இன்று நன்று நாளை (2.99) பாடல் 7 தொடர்ச்சி மற்றும் 8, 9, 10, 11 (திதே 0522)

மங்கு நோயுறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்

செங்கண் மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா

வெங்கண் மால் விடை உடை வேதியன் விரும்பும் ஊர்

கொங்கு உலாம் வளம் பொழில் கோடிகாவு சேர்மினே

விளக்கம்:

நோய்=உடலில் ஏற்படும் நோய்கள்; பிணி=பிறவிப்பிணி; மால்=பெருமை; கொங்கு=நறுமணம்; மால் என்ற சொல்லுக்கு பெரிய என்ற பொருளும் பொருந்தும்.

பொழிப்புரை:

உடலைப் பற்றி உடலின் வலிமையை மங்கச் செய்யும் நோய்களுக்கு காரணமாக உள்ள வினைகளையும், உயிரினைப் பற்றி மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுக்கவைக்கும் வினைகளையும், ஒருங்கே அழித்துக் கொள்வதற்கு உரிய வழியை சொல்கின்றேன் கேட்பீர்களாக; சிவந்த கண்களை உடைய திருமாலும் திசைமுகன் என்று அழைக்கப்படும் பிரமனும், கடிய முயற்சி செய்தும் திருவடியையும் திருமுடியையும் காண முடியாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்றவனும், கோபத்தினால் சிவந்த கண்களை உடையதும் பெருமை உடையதும் ஆகிய எருதினை வாகனமாக உடையவனும், சிறந்த வேதியனும் ஆகிய பெருமான் விரும்பும் ஊரும் நறுமணமும் வளமும் உலவும் சோலைகள் நிறைந்த ஊரும் ஆகிய கோடிகா சென்று அடைந்து பெருமானை வணங்கி வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக.

பாடல் 10:

இன்று நன்று நாளை (2.99) பாடல் 7 தொடர்ச்சி மற்றும் 8, 9, 10, 11 (திதே 0522)

தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும்

பட்டுடை விரி துகிலினார்கள் சொல் பயனிலை

விட்ட புன் சடையினான் மேதகு முழவொடும்

கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே

விளக்கம்:

தட்டு=தடுக்கு, பனை ஓலைகளால் செய்யப்பட்ட தடுக்கு; விட்ட=தொங்கவிட்ட; புத்தர்கள் மற்றும் சமணர்களின் உரைகள் நன்னெறிக்கு அழைத்துச் செல்லாது என்பதால் அவர்களின் சொற்கள் பயனற்றவை என்று இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை:

பனந்தடுக்கினால் செய்யப்பட்ட ஆடையையும் தழைத்த மயிற்பீலியையும் அணியும் சமணர்கள் மற்றும் பட்டினை விரித்து ஆடையாக போர்த்திக் கொள்ளும் புத்தர்களும், சொல்லும் சொற்கள் பயனற்றவை. தொங்கவிட்ட சுருண்ட சடையினை உடையவனும், மேன்மை வாய்ந்த முழவு இசைக் கருவியும் கொட்டும் பறைக்கும் தகுந்த வண்ணம் நடனம் ஆடுபவனும் ஆகிய பெருமான் உறையும் கோடிகா தலம் சென்று அடைந்து வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக,

பாடல் 11:

இன்று நன்று நாளை (2.99) பாடல் 7 தொடர்ச்சி மற்றும் 8, 9, 10, 11 (திதே 0522)

கொந்தணி குளிர் பொழில் கோடிகாவு மேவிய

செந்தழல் உருவனைச் சீர் மிகு திறலுடை

அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்

பந்தன தமிழ் வல்லார் பாவமான பாறுமே

விளக்கம்:

கொந்தணி=கொத்து கொத்தாக பூக்கும் பூக்கள்; கேள்வி=காது வழியாக கேட்டு அறிந்த நான்மறைகள்; பாவங்கள் நீங்கும் என்று பதிகத்தின் பலனை குறிப்பிடுவதன் மூலம் இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள், தாங்கள் பழைய பிறவிகளில் செய்த தீய செயல்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்றும், வினைகள் முற்றிலும் நீங்குவதால் பிறவிப் பிணியையும் நீக்கிக் கொள்வார்கள் என்பதும் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

கொத்து கொத்தாக பூக்கும் குளிர்ந்த மலர்ச் சோலைகள் நிறைந்த சோலைகள் உடைய கோடிகா தலத்தில் பொருந்தி உறைபவனும், செந்தழலின் உருவத்தில் இருப்பவனும் ஆகிய இறைவனை, புகழ் தரும் சிறப்புகள் வாய்ந்த அந்தணர்கள் குலத்தில், புகலி தலத்தில் பிறந்தவனும், காது வழியாக சிறந்த நான்மறைகளை கேட்டு அறிந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் உரைத்த தமிழ் மாலைகளை கற்று வல்லவராக திகழ்வோரின் பாவங்கள் முற்றிலும் அழிந்துவிடும்.

முடிவுரை:

இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களில் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும் உயிர்கள் அனுபவிக்கும் பல துயரங்களையும் குறிப்பிட்டு, இறைவன் பால் நமது சிந்தையை செலுத்துமாறு நமக்கு திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது இதே தலத்தின் மீது மற்ற அருளாளர்கள், வாழ்க்கை நிலையாமை தன்மையை குறிப்பிட்டு அருளிய பாடல்களை னமத் நினைவுக்கு கொண்டுவருகின்றன. கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.78.2) அப்பர் பிரான், இறைவனின் திருநாமத்தை நாம் சொல்லாமல் வாழ்ந்தால், இயமனின் முன்னர் விசாரணைக்கு நிறுத்தப்பட்டு இறைவனின் திருநாமத்தை சொல்லத் தவறிய குற்றத்திற்கு பதில் சொல்ல நேரிடும் என்று கூறுகின்றார்.

வாடி வாழ்வது என்னாவது மாதர் பால்

ஓடி வாழ்வினை உள்கி நீர் நாடொறும்

கோடிகாவனைக் கூறீரேல் கூறினேன்

பாடி காவலிற் பட்டுக் கழிதிரே

பாடி காவல்=நீதியிலிருந்து வழுவியோரை அரசன் முன்னர் விசாரணைக்கு நிறுத்துதல்; இறைவனின் திருநாமத்தைச் சொல்லாது நமது வாழ்நாள் கழியுமாயின், நாம் இறந்த பின்னர், நரகத்தின் அரசனான இயமனின் முன்னர் நிறுத்தப்பட்டு, இறைவனின் திருநாமத்தை சொல்லாத குற்றத்திற்காக விசாரணைக்கு நிறுத்தப் படுவோம் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. இல்வாழ்க்கையில் ஈடுபட்டு, அந்த வாழ்க்கை தரும் சிற்றின்பத்தில் மயங்கி, இறைவனை நாம் மறந்து விடுவதையும், இல்வாழ்க்கையில் ஈடுபடுவதால் பல வகையிலும் வருந்துவதையும் இங்கே உணர்த்தும் அப்பர் பிரான், இல்லறத்தில் இருந்தவாறே நாம் இறைவனையும் நினைக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பாடல். வாழ்வில் அடையும் துன்பம் என்று பிறவித் துன்பம் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

பதினோராம் திருமுறையில் க்ஷேத்திரத் திருவெண்பா தொகுப்பில் காணப்படும் ஐயடிகள் காடவர் கோனின் பல பாடல்கள், வாழ்க்கை நிலையாமை தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. அத்தகைய பாடல்களில் ஒரு பாடல் கோடிகா தலத்தினை குறிப்பிடுகின்றது. அந்த பாடலை நாம் இங்கே காண்போம். பழைய வேட்டியின் ஓரத்தில் உள்ள கரையினைக் கிழித்து இறந்தோரது கால் பெருவிரல்கள் இரண்டையும் இணைத்துக் கட்டியும், மாலை அணிவித்தும், கண்ணுக்கு மை எழுதியும், புதிய புத்தாடையால் மூடியும் பிணத்திற்கு சிங்காரம் செய்யும் பழக்கம் இங்கே உணர்த்தப் படுகின்றது. நீ உயிரிழந்து, உனது இறந்த உடலை பலவிதமாக சிங்காரித்து பலர் கூடி அழுவதன் முன்னம் கோடிகா சென்று உய்வினை நாடுவாய் என்று நமக்கு அறிவுறுத்தும் பாடல்.

காலைக் கரை இழையால் கட்டித் தன் கை ஆர்த்து

மாலை தலைக்கு அணிந்து மை எழுதி மேலோர்

பருக்கோடி மூடி பலர் அழா முன்னம்

திருக் கோடிகா அடை நீ சென்று

வாழ்க்கையின் இழிந்த தன்மை இந்த பதிகத்து பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. நிலையற்றது, மேலும் அழியும் தன்மை கொண்டது என்று முதல் பாடலிலும், துன்பங்கள் மிகுந்த வாழ்க்கை என்று இரணடாவது பாடலிலும், உயிருக்கு துக்கத்தை அளிப்பது என்று மூன்றாவது பாடலிலும், பழைய பிறவிகள் பலவற்றில் செய்த வினைகளின் பயனான வாழ்க்கை என்று நான்காவது பாடலிலும், பழைய வினைகளின் பயனாக இறைவனை நாம் தொழாத வண்ணம் இடையூறு செய்யும் வாழ்க்கை என்று ஐந்தாவது பாடலிலும், குற்றம் மிகுந்த மனத்துடன் இன்பங்கள் அனுபவிக்கச் செய்து பாவங்களை ஏற்றுக் கொள்ளும் வாழ்க்கை என்று ஆறாவது பாடலிலும், இகழ்ச்சி மிகுந்த வாழ்க்கை என்று ஏழாவது பாடலிலும், நிலையற்று பொய்யாக இருப்பினும் மெய் போன்று நம்பச் செய்யும் வாழ்க்கை என்று எட்டாவது பாடலிலும், உடலை மங்கச் செய்யும் நோய்கள் நிறைந்த வாழ்க்கை மற்றும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து மீளா வண்ணம் உயிரினை ஆழ்த்தும் வாழ்க்கை என்று ஒன்பதாவது பாடலிலும் திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தில் கூறுகின்றார். இந்த பதிகம் மூலம் வாழ்க்கையின் உண்மை நிலையினை புரிந்து கொண்ட நாம், நிலையற்ற வாழ்க்கைச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, நிலையான முக்தி நிலை அடையும் வழியினை நாடி, கோடிகா இறைவனைத் தொழுது வணங்கி அவனது புகழ் உணர்த்தும் பாடல்களை பாடி வாழ்வினில் உய்வினை அடைவோமாக.



Share



Was this helpful?