இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


காடது அணிகலம்

காடது அணிகலம்

பதிக எண்: 1.117 - பிரமபுரம் (சீர்காழி) - வியாழக்குறிஞ்சி

பின்னணி:

தன்னைக் காண்பதற்காக சீர்காழி நகரம் வந்த அப்பர் பிரானை, நகர எல்லையில் எதிர் கொண்டழைத்த திருஞானசம்பந்தர், அப்பர் பிரானை அழைத்துக் கொண்டு சீர்காழி திருக்கோயிலின் உள்ளே சென்றார். திருக்கோயில் சன்னதியில் திருஞானசம்பந்தர் அப்பர் பிரானை நோக்கி, உங்களது தம்பிரானை நீர் பதிகம் பாடி மகிழ்வீர் என்று சொல்ல அப்பர் பிரானும் பதிகங்கள் பாடி பெருமானைத் தொழுது வணங்கினார். பின்னர் திருஞானசம்பந்தர் அப்பர் பிரானைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்ல, ஆங்கே இருவரும் சில நாட்கள் பெருமானின் பெருமையை பேசிக் கொண்டும் பல பதிகங்கள் பாடியவாறும் பொழுதினை இனிதாகக் கழித்தனர். சில நாட்களுக்கு பின்னர் இருவரும் சேர்ந்து அருகில் உள்ள திருக்கோலக்கா தலம் சென்று, தாளம் ஈந்த தயாளனை வணங்கிய பின்னர், திருஞானசம்பந்தர் சீர்காழி திரும்ப, அப்பர் பிரான் பல சோழ நாட்டுத் திருத்தலங்களை காண்பதற்கு விருப்பம் கொண்டவராக, திருஞான சம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார்.

அப்பர் பிரான் தன்னிடம் விடைப் பெற்றுக் கொண்டு சென்ற பின்னர் பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கியிருந்த திருஞான சம்பந்தர் பல பதிகங்களை சீர்காழி தலத்து இறைவன் மீது பாடினார். அத்தகைய பதிகங்களில் சில தமிழ் இலக்கியத்திற்கு முன்மாதிரியாக விளங்கின. இந்த தகவலை சேக்கிழார் அளிக்கும் பெரிய புராணத்து பாடலை நாம் இங்கே காண்போம். விகற்பம்=மாறுபட்ட

செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழி மாற்றும்

வந்த சீர் மாலைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்

சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக்குறள் சாத்தி

எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடிவைப்பு

நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம்

சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக

மூல இலக்கியமாக எல்லாப் பொருட்களும் உற்ற

ஞாலத்து உயர் காழியாரைப் பாடினர் ஞானசம்பந்தர்

மேலே குறிப்பிட்ட வகைகளில் மொழிமாற்று என்று சொல்லப்படும் பதிகத்தை முதலில் காண்போம். சொற்களை மாற்றி வைத்து பாடிய பாடல். சிறு குழந்தையாகிய திருஞானசம்பந்தர் சொற்களை மாற்றிமாற்றி வைத்து விளையாடியது போன்று அமைந்த பாடல். நமது இல்லங்களில் நாம் வைத்திருக்கும் பொருட்களை சில சமயம் நமது குழந்தைகள் இடம் மாற்றி வைத்துவிட்டு, பெற்றோர்கள் தேடுவதை ரசித்து வேடிக்கை பார்ப்பதை நாம் நமது அனுபவத்தில் கண்டிருக்கின்றோம். அத்தகைய விளையாட்டினில் திருஞானசம்பந்தர் ஈடுபட்டுள்ள பாடல்கள் கொண்ட திருப்பதிகம். சொற்கள் இடம் மாறினும், பாட்டின் சந்த அமைப்பு கெடாமல் இருப்பது திருஞானசம்பந்தரின் புலமையை வெளிப்படுத்துகின்றது. இந்த விகற்பச் செய்யுட்கள் பலவற்றிலும் சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களையும், ஒவ்வொரு பாடலிலும் ஒரு பெயரினை உள்ளடக்கிப் பாடியதால் இந்த பதிகங்கள் பன்னிரண்டு பாடல்கள் கொண்டவையாக விளங்குகின்றன. இந்த மொழிமாற்றுப் பதிகத்தினை அப்படியே படித்தால் நமக்கு பொருள் ஏதும் விளங்காது. சொற்களை பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக மாற்றிக் கூட்டி பொருள் கொள்ள வைக்கும் மிறைக்கவி என்று அறிஞர்கள் இந்த பதிகத்தை குறிப்பிடுகின்றனர். மிறை என்றால் வருத்தம் என்று நிகண்டு கூறுகின்றது. படிப்போர் தங்களது மூளையினை கசக்கிக் கொண்டு சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும் என்பதால் இந்த பெயர் வந்தது போலும். ஒரு உதாரணத்திற்கு இந்த பதிகத்து முதல் பாடலின் முதல் அடியை காண்போம். காடது அணிகலம் காரரவம் பதி என்று பாடலில் உள்ளது. இதனை காடது பதி கார் அரவம் அணிகலம் என்று மாற்றி அமைத்தால் தான், சரியான பொருளை புரிந்து கொள்ள முடியும். காடு தான் பெருமான் உறையும் இடம் என்றும் கரிய விடமுடைய பாம்பு அவன் அணியும் நகை என்றும் இப்போது புரிந்து கொள்கின்றோம்.

பாடல் 1;


காடது அணிகலம் கார் அரவம் பதி காலதனில்

தோடது அணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர்

வேடது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர்

பீடது அணிமணி மாடப் பிரபுரத்து அரரே

விளக்கம்:

காடது பதி, கார் அரவம் அணிகலம், காலதினில் தூச்சிலம்பர், சுந்தரக் காதினில் தோடது அணிகுவர், வேட உருவமது அணிவர், விசயற்கு வில்லும் கொடுப்பர் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். பீடு=மிகுந்த புகழ்; மாடம்=உயர்ந்த மாட மாளிகை; பதி=வாழும் இடம்; உமையம்மை அணியும் தோடும் சிலம்பும் குறிப்பிடப்பட்டு மாதொரு பாகனாகத் திகழும் இறைவனின் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தோடு அணியும் காது சுந்தரக்காது என்றும் சிலம்பு தூய சிலம்பு என்று அடைமொழி கொடுக்கப்பட்டு சிறப்பிடப் பட்டுள்ளதை உணரலாம். காரரவம் அணிகலம் என்ற சொல் மூலம், கரிய விடம் கொண்ட பாம்பினை, பெருமான் அணிகலனாக தனது உடலில் பல இடங்களிலும் அணிந்து கொண்டுள்ள தன்மை உணர்த்தப் படுகின்றது. இடுப்பினில் கச்சாக, காதினில் குழையாக, காலினில் வீரக்கழலாக, தோளில் தோள் வலயமாக, சடையினில் மாலையாக, மார்பினில் மாலையாக, முன்கையில் கங்கணமாக, பெருமான் பாம்பினை அணிந்துள்ள தன்மை பல தேவாரப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.49.1) திருஞானசம்பந்தர், பெருமானை கோவணா ஆடையின் மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான் என்று அழைக்கின்றார். சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைத் தொகுதிகளின் பயனை, இன்பமாகவும் துன்பமாகவும் அனைத்து உயிர்களும் கழிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. உயிர் பிறப்பெடுக்கும் அந்த தருணத்திலேயே அந்தந்த உயிர்கள் அந்த பிறவியில் கழிக்கப்பட வேண்டிய வினைகள் அந்த உயிர்களுடன் பொருந்துகின்றன. இது இறைவனின் செயல் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தேவி என்றாலும் இறைவன் என்றாலும் ஒருவரைத் தானே குறிக்கின்றது. இந்த தன்மையே, போகமார்த்த பூண்முலையாள் என்ற தொடர் மூலம் உயிர்கள் அனுபவித்துக் கழிக்க வேண்டிய வினைகளின் பயன்களை, இன்ப துன்ப அனுபவங்களாகிய போகத்தை, தனது மார்பகத்திலே தேக்கி, உயிர்களுக்கு தேவி அளிக்கின்றாள் என்ற குறிப்பு தோன்றும் வண்ணம் பயன்படுத்தப் பட்டுள்ளது போலும். ஆர்த்த=நிறைந்த, சேர்ந்துள்ள, பிணைந்து நிற்கும்; அகலம்=மார்பு; ஆகம்=உடல், இங்கே மார்பு என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம்; பெருமானின் திருமேனி பொன் போன்று மிகவும் அழகாகவும் சிவந்த நிறத்தில் இருப்பதை உணர்த்த பொன்னகலம் என்று கூறுகின்றார். பரமேட்டி=அனைவரிலும் மேலானவன், தனக்கு மேலாக ஒருவரும் இல்லாதவன்; போகமார்த்த பூண்முலையாள் என்ற திருநாமம் தாங்கிய தேவியைத் தனது பொன்னுடலின் இடது பாகத்தில் தாங்கியவனும், பசுமை நிறைந்த கண்களும் வெண்மை நிறமும் கொண்ட எருதினைத் தனது வாகனமாகக் கொண்டவனும், அனைவர்க்கும் தலைவனும், தனக்கு மேலாக வேறொருவர் இல்லாத வண்ணத்தினை தனது தன்மையாகக் கொண்டவனும், தனது திருமேனியில் தோலாடைகளை உடையவனும், இடையில் தான் அணிந்துள்ள கோவண ஆடையின் மேல் நாகத்தை இறுகக் கச்சாக கட்டியவனும் எம்பெருமான் என்று அனைவராலும் அழைக்கப் படுபவனும் ஆகிய பெருமான் எழுந்தருளி இருக்கும் இடம் திருநள்ளாறு தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே

வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.9.3) திருஞானசம்பந்தர், தனது காதினில் அரவத்தை குழையாகக் கொண்டவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கடம்=மதநீர்; அவர் என்று தாருகவனத்து முனிவர்களை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தாங்கள் பெருமான் மீது ஏவிய வெறியூட்டப்பட்ட மான் கன்று, புலி, மதயானை, மழுப்படை முதலிய அனைத்தும் செயலற்ற நிலையில், முனிவர்கள் அச்சம் கொண்ட தன்மை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. படத்தோடு கூடிய பாம்பினைத் தனது காதினில் குழையாக பெருமான் அணிந்துள்ள நிலை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பரமேட்டி=தனக்கு மேலாக ஒருவரையும் இல்லாதவன்; பெருமானின் நடையே, சதிகளுடன் கூடிய நடனமாக மிகவும் அழகாக இருப்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானின் நெற்றிக் கண்ணை விடத்தை விடவும் கொடியது என்று கூறுகின்றார். விடம் உட்கொண்டவரை மட்டுமே கொல்லும் தன்மை வாய்ந்தது. பெருமானின் நெற்றிக் கண்ணோ, தான் விழித்துப் பார்க்கும் எவரையும் சுட்டெரித்து சாம்பலாக்கும் தன்மை வாய்ந்தது என்பதால் விடத்தினும் கொடியது என்று கூறுகின்றார்.

கடம் தாங்கிய கரியை அவர் வெருவ உரி போர்த்துப்

படம் தாங்கிய அரவக் குழைப் பரமேட்டி தன் பழவூர்

நடம் தாங்கிய நடையார் நல பவளத்துவர் வாய் மேல்

விடம் தாங்கிய கண்ணார் பயில் வேணுபுரம் அதுவே

பனையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.37.5) திருஞானசம்பந்தர், தனது காலில் அணிந்துள்ள ஒலிக்கும் கழல் மீது பாம்பினையும் பெருமான் அணிந்துள்ளார் என்று கூறுகின்றார். அறையார்=ஒலி எழுப்பும்; இறை=முன்கை, இங்கே முன்கையில் ஏந்தியுள்ள பிரம கபாலம் என்று பொருள் கொள்ள வேண்டும்; பொறை=உலகம்; உலகினில் சிறந்த புகழினை உடைய திருவிழாக்கள் அதிகமாக கொண்டாடப்படும் தலம் பனையூர் என்று உணர்த்துகின்றார். பறை=தோல் வாத்தியம்;

அறையார் கழல் மேல் அரவாட

இறையார் பலி தேர்ந்தவன் ஊராம்

பொறையார் மிகு சீர் விழ மல்கப்

பறையார் ஒலி செய் பனையூரே

திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.5) கையமரும் மழு நாகம் என்ற தொடர் மூலம், பெருமானது கையில் கங்கணமாக நாகம் திகழ்வதை, திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அமரும்=விரும்பி பொருந்தும், பொருந்தும்; மை=கருமை; மையமரும்=மரங்களின் கிளைகள் நெருங்கி வளர்ந்துள்ளதால் இருளடர்ந்து காணப்படும் சோலைகள்; இதே பதிகத்தின் முந்தைய பாடலில் பெருமை மிகுந்த நடை நடக்கும் பாதம் என்றும் சிலம்பணிந்த திருவடி என்றும் மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில், குழையும் தோடும் அணிந்தவர் என்று மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். இந்த தன்மையை மீண்டும் மீண்டும் சொல்வதில் தான், திருஞானசம்பந்தர் எத்துணை மகிழ்ச்சி அடைகின்றார். ஆர் தரு=பொருந்திய

கையமரும் மழு நாகம் வீணை கலைமான் மறியேந்தி

மெய்யமரும் பொடிப் பூசி வீசும் குழையார் தரு தோடும்

பையமரும் அரவாட ஆடும் படர்ச்சடையார்க்கு இடமாம்

மையமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மாநகரே

பெருமானின் சடையில் கங்கை நதியும் பாம்பும் சந்திரனும் கலந்திருக்கும் தன்மை மிகவும் அதிகமான தேவாரப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.33.8) அரவம் விரவும் சடை என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மிடறு=கழுத்து; விரவும்=கலந்த: விடம் என்ற சொல்லுக்கு, ஆலகால விடத்தால் உண்டான கருமை நிறம் கொண்ட கறை என்று பொருள் கொள்ளவேண்டும், ஆர்=பொருந்திய; கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் செயல், தனது தேர் செல்லும் வழியில் குறுக்கே நின்று கயிலை மலை தடை செய்தது என்று தவறாக எண்ணியதால் தான், என்பதை உணர்த்தும் வகையில் தேர் பற்றிய குறிப்பு இந்த பாடலில் கொடுக்கப் பட்டுள்ளது போலும்.

விடத்தார் திகழும் மிடறன் நடமாடி

படைத்தார் அரவம் விரவும் சடை ஆதி

கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர

அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே

அரவாரம் பூண்டான் என்று பாம்பினைத் தனது மார்பினில் ஆரமாக பெருமான் பூண்டுள்ள தன்மை, புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.30.9) சொல்லப் படுகின்றது. ஏந்தல்=தலைவன்; ஈண்டா=தங்கி;

மாண்டார் சுடலைப் பொடி பூசி மயானத்து

ஈண்டா நடமாடிய ஏந்தல் தன் மேனி

நீண்டான் இருவர்க்கு எரியா அரவாரம்

பூண்டான் நகர் பூம்புகலி நகர் தானே

பொழிப்புரை:

காடினைத் தான் வாழும் இடமாகக் கொண்டுள்ள பெருமான், கொடிய விடம் கொண்ட பாம்பினைத் தனது உடலின் பல இடங்களின் மீது அணிகலனாக அணிந்தவராகவும், தனது காலில் தூய சிலம்பினை அணிந்தவராகவும், தனது அழகிய காது ஒன்றினில் தோடு அணிந்தவராகவும் காணப்படுகின்றார். அவர் வேடுவக் கோலம் தாங்கி அர்ஜுனன் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று அவனுக்கு பாசுபதம் என்ற சிறந்த வில்லினை அளித்தவர். இத்தகைய பெருமான் பெருமை வாய்ந்த மணிகள் பதிக்கப் பெற்று அழகுடன் விளங்கும் மாட மாளிகைகள் நிறைந்த பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்து அரனார் ஆவார்.

பாடல் 2;


கற்றைச் சடையது கங்கணம் முன் கையில் திங்கள் கங்கை

பற்றித்து முப்புரம் பார் படைத்தோன் தலை சுட்டது பண்டு

எற்றித்துப் பாம்பை அணிந்தது கூற்றை எழில் விளங்கும்

வெற்றிச் சிலை மதில் வேணுபுரத்து எங்கள் வேதியரே

விளக்கம்:

கற்றைச் சடையது திங்கள் கங்கை, முன்கையில் கங்கணம், பற்றித்து பார் படைத்தோன் தலை, முப்புரம் சுட்டது, பண்டு கூற்றை எற்றித்து, அணிந்தது பாம்பை, என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். பற்றித்து=பற்றியது; எற்றித்து=எற்றி உதைத்தது; பற்றித்து எற்றித்து என்ற சொற்கள் முறையே பற்றிற்று எற்றிற்று என்ற சொற்களின் மரூவு.

பொழிப்புரை:

கற்றையாக உள்ள சடையினில் பிறைச் சந்திரனையும் கங்கை நதியையும் கொண்டுள்ள பெருமான், தனது முன் கையினில் கங்கணம் அணிந்து காணப்படுகின்றார். அவர் தனது கைவிரல் நகத்தினால் பற்றிக் கிள்ளியது உலகினைப் படைத்த பிரமனின் தலையினை; அவர் மூன்று பறக்கும் கோட்டைகளையும் தீயினில் எரித்து சுட்டவர் ஆவார்; அவர் பண்டைய நாளில் கூற்றுவனை உதைத்து வீழ்த்திய பெருமையை உடையவர்; அவர் பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் கச்சாகவும், அணிகலனாகவும், கங்கணமாகவும் அணிந்துள்ளார். அவர் வேதங்களை நன்கு அறிந்துணர்ந்த வேதியர் ஆவார். இத்தகைய பெருமையை உடைய பெருமான், அழகுடன் விளங்குவதும், வெற்றி பெற்ற தன்மை உடையதும், மலை போன்று உறுதியாக உயர்ந்து நிற்கும் மதில் சுவர்களை கொண்டதும் ஆகிய வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் வேதியர் ஆவார்.

பாடல் 3;


கூவிளம் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது

தூவிளங்கும் பொடிப் பூண்டது பூசிற்றுத் துத்தி நாகம்

ஏவிளங்கும் நுதலாளையும் பாகம் உரித்தனரின்

பூ விளங்கும் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே

விளக்கம்:

கூவிளம் சடைமுடி கூட்டத்தது, பேரி கையது, தூவிளங்கும் பொடி பூசிற்று, பூண்டது துத்தி, ஏ விளங்கும் நுதலாளையும் பாகம், நாகம் உரித்தனரின் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். கூவிளம்=வில்வம்; பேரி=உடுக்கை; தூ=தூய்மை, துத்தி=பாம்பின் படம், ஏ=அம்பு, அம்பு போன்று கூர்மையான பார்வையை உடைய; நுதல்=நெற்றி; நாகம்= யானை; இந்த பாடலில் சடைமுடி கூட்டத்தது என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமானுக்கு ஒன்பது சடைகள் என்று கூறுவார்கள். இதனை உணர்த்தும் முகமாகவே சடைமுடிக் கூட்டம் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொடி=திருநீறு;

பொழிப்புரை:

வில்வ இலைகளை தனது சடைமுடிகளில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், தனது கையில் உடுக்கையை ஏந்தியவாறும், தூய்மையாக விளங்கும் திருநீற்றினை உடல் முழுதும் பூசிக் கொண்டவாறும், படத்தினை உடைய பாம்பினைத் தனது உடலில் ஏற்றவாறும், காட்சி அளிக்கும் பெருமான், அம்பு போன்று கூரிய பார்வையை உடையவளும் அழகிய நெற்றியை உடையவளும் ஆகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுள்ளார். அவர் தன்னை நோக்கி ஓடி வந்த மதயானையை அடக்கி அதன் தோலை உரித்து, தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவர் ஆவார். அவர் புண்ணியமே வடிவமாக அமைந்தவர். இத்தகைய பெருமான் அழகுடன் விளங்கும் இனிய சோலைகள் நிறைந்த புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் பொருந்தி நிலையாக அமர்ந்துள்ள புண்ணியர் ஆவார்.

பாடல் 4;


உரித்தது பாம்பை உடல் மிசை இட்டதோர் ஒண்களிற்றை

எரித்தது ஓர் ஆமையைப் இன்புறப் பூண்டது முப்புரத்தைச்

செருத்தது சூலத்தை ஏந்திற்றுத் தக்கனை வேள்வி பன்னூல்

விரித்தவர் வாழ்தரு வெங்குருவில் வீற்றிருந்தவரே

விளக்கம்:

உரித்தது ஒண் களிற்றை உடன் மிசை இட்டதோர் பாம்பை, எரித்தது முப்புரத்தை, ஓர் ஆமையை இன்புறப் பூண்டது, செருத்தது தக்கன் வேள்வியை, சூலத்தை ஏந்திற்று என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். ஒண்=வலிமை வாய்ந்த; களிறு=ஆண் யானை; மிசை=மேலே; செருத்தது=அழித்தது; செரு=போர், போரிட்டு அழித்தது என்று பொருள் கொள்ள வேண்டும்; ஓர்=ஒப்பற்ற ஆமை. கூர்மாவதாரம் எடுத்த திருமாலின் ஆமை ஓடு என்பதால் ஒப்பற்ற என்று இங்கே கூறப்படுகின்றது. ஆமையாக உருவெடுத்து அமுதம் பெறுவதற்காக நிறுவிய மந்தர மலை நீரில் அழுந்தி விடாமல் திருமால் ஏந்தி, பாற்கடலை கடைவதற்கு வழி வகுத்தார். தனது வலிமையால் பாற்கடல் கடைய முடிந்தது என்ற செருக்கு மிகுத்ததால், அவர் கடல்கள் அனைத்திலும் புகுந்து கடலினைக் கலக்க உலகத்தவர்கள் மிகுந்த துன்பம் அடைந்தனர். நடந்ததை அறிந்த பெருமான் ஆமையினை அடக்கி திருமாலின் செருக்கினை அழித்தார். தனது செருக்கு நீங்கிய திருமால், தன்னை அடக்கியதை அனைவர்க்கும் உணர்த்தும் வண்ணம் ஆமையோட்டினை பெருமான் தனது மார்பினில் அணிந்து கொள்ள வேண்டினார். பெருமானும் அவ்வாறே அணிந்து கொள்ள திருமால் மிகவும் இன்பம் அடைந்தார். ஆமை ஓட்டினை பெருமான் அணிந்ததால் திருமால் மகிழ்ச்சி உற்றதை உணர்த்தும் வகையில் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் இன்புறப் பூண்டது என்று குறிப்பிடுகின்றார். பன்னூல் விரித்தவர்=வேதம், இதிகாசம், புராணங்கள் ஆகிய பல நூல்களை நன்றாகக் கற்று, அத்தகைய நூல்கள் உணர்த்தும் உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் என்பதை தெளிவாக உணர்ந்து பலருக்கு விரித்து உணர்த்தும் சீர்காழி நகரத்து சான்றோர்கள்.

பொழிப்புரை:

மிகுந்த வேகத்துடன் தன்னை நோக்கி பாய்ந்து வந்த வலிமையான யானையை அடக்கி அதன் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவரும், தனது உடல் மீது பாம்பினை கச்சையாகவும் ஆபரணமாகவும் அணிந்தவரும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவரும், ஆமையாக அவதாரம் எடுத்த திருமாலை அடக்கி அந்த ஒப்பற்ற ஆமையின் ஓட்டினை தனது மார்பினில் அணிகலனாக, திருமால் மகிழும் வண்ணம், அணிந்து கொண்டவரும், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறைக்கு மாறாக நடைபெற்ற தக்கனது யாகத்தை அழித்தவரும் ஆகிய பெருமான் சூலத்தை தனது கையில் ஏந்தியவனாக காட்சி அளிக்கின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமான், வேதங்கள் இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் ஆகிய பல நூல்களைக் கற்றுத் தேர்ந்து அதன் மூலமாக உண்மையான மெய்பொருள் சிவபெருமான் என்பதை உணர்ந்து, அந்த உண்மையினை விரிவாக பலருக்கும் அறிவுறுத்தும் சான்றோர்கள் வாழ்ந்து வரும் வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் வீற்றிருக்கின்றார்.

பாடல் 5:


கொட்டுவர் அக்கு அரை ஆர்ப்பது தக்கை குறுந்தாளன

விட்டுவர் பூதம் கலப்பிலர் இன்புகழின் என்பு உலவின்

மட்டு வரும் தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர் வான்

தொட்டுவரும் கொடித் தோணிபுரத்து உறை சுந்தரரே

விளக்கம்:

கொட்டுவர் தக்கை, அக்கு அரை ஆர்ப்பது, குறுந்தாளன பூதம், விட்டுவர் என்பு, கலப்பிலர் இன்புகழ், உலகின் மட்டு வருந்தழல் ஏந்துவர், சூடுவர் மத்தமும் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். தக்கை=ஒரு வகை வாத்தியம்; அக்கு=சங்கு மணி; அக்கு என்பதற்கு எலும்பினால் ஆன மாலை என்றும் பொருள். ஆனால் இங்கே சங்குமணி என்பதே பொருத்தமாக உள்ளது. வீட்டுதல்=கொல்லுல்; விட்டுவர் என்ற சொல்லினை வீட்டுவர் என்று நீட்டி பொருள் கொள்ள வேண்டும். என்பு என்ற சொல்லுக்கு புலி என்ற பொருளும் உள்ளது. கலப்பிலர்=தானே சென்று கலக்கும் தன்மை அற்றவர்; பெருமானை புகழ் சென்று அடைகின்றதே தவிர, பெருமான் புகழினை நாடி எந்த ஒரு செயலும் செய்வதில்லை. தாள்=கால்; குறுந்தாள் அன=குட்டையான கால்களை உடைய; மற்றவர் நம்மை புகழ்வது கேட்பதற்கு எப்போதும் இனியவாக இருக்கும் அதனால் தான் இன்புகழ் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உலத்தல்=குறைத்தல், அழித்தல்; உலவின்= உலகினை அழிக்கும் பொருட்டு வரும் பிரளயாக்னி; மட்டு=வளைத்து;

பொழிப்புரை:

தக்கை எனப்படும் வாத்தியத்தை கொட்டி முழக்கும் சிவபெருமான் தனது இடையிலே பூண்பது சங்கு மாலையாகும். அவரைச் சூழ்ந்து நிற்பன குறுகிய கால்களை உடைய பூதங்களாகும். தாருகவனத்து முனிவர்களால் தன் மீது ஏவிவிடப்பட்ட புலியைக் கொன்ற பெருமான், புலியின் தோலை ஆடையாக அணிந்துள்ளார். கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் புகழினை நாடி, எந்த செயலையும் அவர் செய்வதில்லை; உலகினை வளைத்து அழிப்பதற்கு எழுந்து வரும் பிரளயாக்னியைத் தனது கையில் ஏந்தியவர் பெருமான். இத்தகைய தன்மைகளை உடைய பெருமான் ஊமத்தை மலரை சூடியவராக, அழகிய வடிவினராக, வானளாவும் கொடிகளை உடைய மாளிகைகள் கொண்டுள்ள தோணிபுரம் என்று அழைக்கப் படும் சீர்காழி நகரினில் உறைகின்றார்.

பாடல் 6:

சாத்துவர் பாசம் தடக்கையில் ஏந்துவர் கோவணம் தம்

கூத்தவர் கச்சுக் குலவி நின்று ஆடுவர் கொக்கிறகும்

பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்

பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே

விளக்கம்:

சாத்துவர் கோவணம், பாசம் தடக்கையில் ஏந்துவர், தம் கூத்தவர், கச்சுக் குலவி நின்று ஆடுவர், கொக்கிறகும் சூடுவர், பேர்த்தவர் பல்படை பேயவை என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். கொக்கிறகு=கொக்கின் உருவத்தில் மற்றவருக்கு துன்பம் செய்து கொண்டிருந்த குரண்டாசுரன் என்ற அசுரனைக் கொன்றதன் அடையாளமாக பெருமான் தனது தலையில் சூடிக் கொண்ட இறகு; பேர்த்தவர்=காலினை பெயர்த்து நின்று நடனமாடியவர்; சில பதிப்புகளில் போர்த்தவர் என்று காணப்படுகின்றது. பூத கணங்கள் சூழ நின்றவர் என்று பொருள் பட போர்த்தவர் என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கப் படுகின்றது. பேரெழிலார் என்ற சொல்லினை பூந்தராய் என்ற சொல்லுடன் இணைத்து பேரெழில் வாய்ந்த பூந்தராய் என்று ஒரு விளக்கமும், பேரெழிலார் என்ற சொல் பெருமானை குறிக்கும் சொல்லாகக் கொண்டு பேரெழில் படைத்த பெருமான் என்று மற்றொரு விளக்கமும் அளிக்கப் படுகின்றது. தடக்கை=அகன்ற கை; பூத்தவர்=பூ+தவர், பூ= சிறந்த; தவத்தவர்=தவத்தினை உடையவர்கள்; இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கச்சு குலவி நின்று ஆடுவர் என்று கூறுகின்றார். குலவி=விளங்கித் தோன்றும் வண்ணம்; நடராஜப் பெருமானின் நடனத் தோற்றத்தை காணும் நாம் அவரது இடுப்பினில் அணிந்துள்ள கச்சின் ஒரு முனை வெளிவட்டத்தை தொடும் நிலையில் அமைந்துள்ளதை காணலாம். பொதுவாக நிலையாக நிற்கும் ஒருவரின் இடுப்புக் கச்சு தரையை நோக்கியே சரிந்து காணப்படும். ஆனால் இடைவிடாது நடனம் ஆடும் பெருமானின் கச்சும், அவரது நடனச் சுழற்சிக்கு ஏற்றவாறு ஆடுவதால், கீழ்நோக்கி சரிந்து நில்லாமல் பறக்கும் நிலையில் காணப்படுகின்றது. இதனையே விளங்கித் தோன்றும் கச்சு என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

கொக்கின் இறகர் என்று சிவபெருமானை திருஞானசம்பந்தர் அழைப்பதை நாம் இங்கே சிந்தித்தோம். கொக்கிறகர் என்று சிவபெருமானை குறிப்பிடும் திருமுறைப் பாடல்கள் நமது நினைவுக்கு வருகின்றன. பாம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலல் (1.41.2), திருஞானசம்பந்தர், பெருமான் தனது சடையில் வில்வம் மற்றும் ஊமத்தை கொன்றை எருக்கு ஆகிய மலர்களுடன் கொக்கின் இறகையும் சூட்டிக் கொண்டுள்ளதாக கூறுகின்றார்.

கொக்கிறகோடு கூவிள மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர்

அக்கினோடு ஆமை பூண்டு அழகாக அனலது ஆடும் எம் அடிகள்

மிக்க நால்வேத வேள்வி எங்கும் விண்ணவர் விரைமலர் தூவப்

பக்கம்பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னகராரே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.71.7) திருஞான சம்பந்தர் பெருமானை கொக்கிறகர் என்று அழைக்கின்றார். தவளம்=வெண்மை; புலம்பும்= ஒலிக்கும்; கீள்=பெரிய துணியிலிருந்து கிழிக்கப்பட்டு, கயிறு போல் திரிக்கப்பட்டது; குழல்=சுருண்ட சடை; கந்த புராணத்திலும் இந்த செய்தி சொல்லப்படுகின்றது (பாடல் எண். 8-9-64). இந்த பாடலில் திருஞானசம்பந்தர், பெருமானை சரி கோவணக் கீளர் என்று அழைக்கின்றார். கீள் என்பது இடுப்பினில் கட்டப்படும் அரைஞாண் கயிறு. அந்த அரைஞாண் கயிற்றிலிருந்து தொங்கும் தன்மை உடைய கோவணம் சரி கோவணம், அந்த கோவணம் கீளிலிருந்து தொங்குகின்றது

குழலார் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம்

தழலார் மேனித் தவள நீற்றர் சரி கோவணக் கீளர்

எழிலார் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடையேறிக்

கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே

நல்லம் (தற்போது கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படும் தலம்) தலத்தின் மீது (1.85.2) அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் திருஞான சம்பந்தர், பெருமான் ஒளி வீசுவதும் தாழ்ந்தும் காணப்படும் தனது சடையினில் கொக்கின் இறகுடன் குளிர்ந்த பிறைச் சந்திரனையும் சூட்டிக் கொண்டு திகழ்கின்றான் என்று கூறுகின்றார்.

தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்

துக்கம் பல செய்து சுடர் பொற்சடை தாழக்

கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்

நக்கன் நமை ஆள்வான் நல்ல நகரானே

பிரமபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.65.2) கொக்கின் இறகினை அணிந்தவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் எதிர்மறையாக கூறிய அனைத்தையும் மாற்றி பொருள் கொள்ளவேண்டும் என்று பதிகத்தின் கடைப் பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.

கூரம்பது இலர் போலும் கொக்கின் இறகிலர் போலும்

ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும்

தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு அருளிலர் போலும்

பேரும் பல இலர் போலும் பிரமபுரத்து அமர்ந்தாரே

திருநாரையூர் தலத்தில் கொக்கு பெருமானை நோக்கி செய்த வழிபாட்டினை நினைவு கூர்ந்த திருஞானசம்பந்தருக்கு கொக்கின் இறகினை பெருமான் சூட்டிக் கொண்டு வரலாறும் நினைவுக்கு வந்தது போலும். பெருமானை திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.107.6) சம்பந்தர் இறைவன் கொக்கிறகு அணிந்திருப்பதை குறிப்பிடுகின்றார். குழகாக=இளமையுடன்: குலாய=செழுமை மிகுந்த; புகல்=திருவருள் சக்தி பதிதல்; நாரையூர்ப் பெருமானை விருப்பத்துடன் வழிபடும் அடியார்களின் மனதினில் திருவருளின் சக்தி பதியும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

கொக்கிறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி

அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகாக

நக்கமரும் திருமேனியாளன் திருநாரையூர் மேவிப்

புக்கமரும் மனத்தோர்கள் தம்மை புணரும் புகல் தானே

திருவாரூர் தலத்தில் தான், மனக்கண்ணில் கண்ட பெருமானின் உருவத்தை விவரிக்கும் பாடல் ஒன்றினில் (4.19.2) பெருமான் அணிந்திருக்கும் கொக்கிறகு மிகவும் பொலிவுடன் காணப்படுகின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பூதகணங்கள் சூழ பல ஊர்கள் சென்று பிச்சை ஏற்கும் பெருமான், நிறைந்த கோவணமும் சங்குமணி மாலையும் இடுப்பினில் அணிந்தவராக காணப்படுகின்றார் என்றும் இங்கே கூறுகின்றார்.

பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையில்

புக்க ஊர் பிச்சை ஏற்றுண்டு பொலிவு உடைத்தாய்க்

கொக்கிறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு

அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.72.8) கொக்கின் இறகு இறைவனின் சடையில் மலர்ந்து இருப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். கடிகுரல்= கடுமையான குரல்; விளியர்=ஆரவாரம் செய்பவர்; மகா சங்கார காலத்தில் மிகவும் கடுமையான குரலில் ஆரவாரம் செய்பவராக இறைவன் கருதப் படுகின்றார். கோடு=கொம்பு; கிளை;

காடு இடம் உடையர் போலும் கடிகுரல் விளியர் போலும்

வேடுரு உடையர் போலும் வெண்மதிக் கொழுந்தர் போலும்

கோடலர் வன்னித் தும்பை கொக்கிறகு அலர்ந்த கொன்றை

ஏடமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே

நாரை என்றால் கொக்கு என்று பொருள். கொக்கு வழிபட்டு உய்வினை அடைந்த தலம் திருநாரையூர். அந்த தலத்திற்கு சென்ற அப்பர் பிரானுக்கு இறைவன் கொக்கிறகினை அணிந்திருப்பது நினைவுக்கு வந்தது போலும். தூவல்=இறகு; கொக்கின் இறகு பூண்டு இறைவன் இருப்பது மிகவும் அழகாக உள்ளது என்று இந்த பதிகத்தின் பாடலில் (5.55.4) குறிப்பிடுகின்றார். கொக்கின் இறகு, வில்வ இலைகள், மண்டையோட்டு மாலை, விரிந்த சடை, குறைந்த ஆடை, எலும்பு மாலை ஆகியவை அணிந்த பெருமானாக தான் கண்டதை அப்பர் பிரான் இங்கே எடுத்துரைக்கின்றார். மேலே குறிப்பிட்ட பொருட்களில் எதுவும் எவருக்கும் அழகினை சேர்க்காது என்பதை நாம் உணரலாம். ஆனாலும் இவை அனைத்தும் அணிந்த பெருமான் அழகுடன் திகழ்வதால், தான் வியப்புக்கு உள்ளாகியதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.

கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும்

மிக்க வெண்டலை மாலை விரிசடை

நக்கன் ஆகிலும் நாரையூர் நம்பனுக்கு

அக்கின் ஆரமும் அம்ம அழகிதே

அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய ஒரு பாடல் (5.80.5) கொக்கிறகர் என்றே தொடங்குகின்றது. கொக்கின் இறகை சூடியும், எலும்பு மாலைகளையும் அணிந்தும், மிகவும் குறைந்த ஆடைகளுடன் காண்போர் நகைக்கும் தோற்றத்துடன் இருக்கும் சிவபெருமானை எளியவர் என்று எண்ணிவிட வேண்டாம் என்று உணர்த்தும் வண்ணம் அவர், செருக்கு மிகுந்த மூன்று அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்தவர் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். அவ்வாறு குறிப்பிட்ட பின்னர், பெருமானது வீரம் மிகுந்த செயலைக் கேட்கும் நாம், அவரிடம் அச்சம் கொண்டு அவரை அணுக தயக்கம் காட்டுவோம் என்ற சந்தேகம் அப்பர் பிரானுக்கு வந்தது போலும். அந்த சந்தேகத்தை தெளிவு படுத்தும் வண்ணம், சிவபெருமான் கருணை மிகுந்தவர் என்று, சந்திரனுக்கு அடைக்கலம் அளித்ததை நினைவூட்டி, பெருமான் நம்மை நன்றாக அறிந்தவர் என்று இங்கே உணர்த்தும் நயத்தையும் இந்த பாடலில் நாம் காணலாம்.

கொக்கிறகர் குளிர் மதிச் சென்னியர்

மிக்க அரக்கர் புரம் எரி செய்தவர்

அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை

நக்கு உருவரும் நம்மை அறிவரே

சுண்ண வெண்சந்தன என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (4.2.2) காண்டகு புள்ளின் சிறகு என்று பெருமான் கொக்கின் இறகினை அணிந்ததை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் உணர்த்தப்படும் பெருமானின் அடையாளங்கள் அவருக்கே உரியதாக தனித்துவம் பெற்று விளங்குவதை நாம் உணரலாம். இத்தகைய அடையாளங்கள் உடைய பெருமானின் அடியானாக உள்ள தான் எவருக்கும் எதற்கும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

பூண்டதோர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள

நீண்ட திண்தோள் வலம் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்

காண் தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்கக் கொடியும்

ஈண்டு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

மழபாடி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் (6.39.2) அப்பர் பிரான், பெருமானை கொக்கிறகு சென்னி உடையான் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானை கொல்லை விடையேறும் கூத்தன் என்றும் அப்பர் பிரான் அழைக்கின்றார்.

கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடையேறும் கூத்தன் கண்டாய்

அக்கு அரை மேல் ஆடலுடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதிகண்டாய்

அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுது ஆனான் கண்டாய்

மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே

தலையாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.79.2) அப்பர் பிரான் கொக்கிருந்த மகுடத்து எம் கூத்தன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மகுடம்= பெருமான் தனியாக மகுடம் ஏதும் அணிவதில்லை. எனவே அவரது சடையே மகுடமாக கருதப் படுகின்றது. கொக்கு என்பது இங்கே கொக்கின் இறகினை குறிக்கும். குழைவார்= உள்ளம் குழைந்து உருகி வழிபடும் அடியார்கள்; சீர்ப் போகம்=செல்வத்தால் வரும் இன்ப போகங்கள்; தக்கிருந்த=வாய்த்து இருக்கும்;

அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தானைக்

கொக்கிருந்த மகுடத்து எம் கூத்தன் தன்னைக் குண்டலம் சேர் காதானைக் குழைவார் சிந்தை

புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப் புண்ணியனை எண்ணரும் சீர்ப் போகம் எல்லாம்

தக்கிருந்த தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பாடலில் (7.36.8) சுந்தரர், பெருமான் தனது தலையில் கொக்கின் இறகினை சூட்டிக் கொண்டுள்ள நிலையை குறிப்பிடுகின்றார். இரத்தம் ஒழுகியவாறு இருக்கும் யானையின் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால், யானையின் ஈருரி போர்த்தவாறு வந்து நின்று பிச்சை கேட்பதேன் என்று, தாருகவனத்து மங்கை ஒருத்தி கேட்பதாக அமைந்த பாடல். உமக்கு பிச்சை இடுவதற்கு எங்களுக்கு விருப்பம் இருந்தாலும், யானையின் ஈருரி போர்த்த உமது அருகில் வந்து பிச்சையிட அச்சமாக உள்ளது என்று உணர்த்தும் பாடல். சிவபெருமான் தனது சடையில், கொன்றை மலர், ஊமத்தை மலர், வன்னி இலைகள், கங்கை நதி, சந்திரன், கொக்கின் இறகு, வெள்ளெருக்கு ஆகியவற்றை நெருக்கமாக அணிந்துள்ளார் என்று பிச்சை இடுவதற்காக வந்த ஒரு மங்கை கூறுவதாக அமைந்த பாடல்.

மத்த மாமலர்க் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும்

மொய்த்த வெண்டலை கொக்கு இறகொடு வெள்ளெருக்கமும் சடையதாம்

பத்தர் சித்தர்கள் பாடி ஆடு பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்

அத்தி ஈருரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே

கானப்பேர் தலத்தின் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (7.84.2) பெருமான் குளிர்ந்து இருக்கும் தனது சடையில் கொடிய பாம்பையும் ஊமத்தை மலரையும் கொக்கின் இறகையும் பொருத்தி வைத்துள்ளார் என்று சுந்தரர் கூறுகின்றார். பெருமான் தனது சடையினில் கங்கை நதியினைத் தேக்கியதை, கூதலிடும் (கூதல்=குளிர்) சடை என்று உணர்த்துகின்றார். விரவுதல்=கலத்தல்; விரசும் ஓசை=செறிந்த ஒலி, அடர்த்தியான ஒலி; பெருமானின் பெருமைகளை உணர்ந்து, உள்ளம் நைந்து அவனது பெருமைகளை இசைப் பாடலாக பாடும் அடியார்கள் சிவமாக மாறி விடுவார்கள் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

கூதலிடும் சடையும் கோளரவும் விரவும் கொக்கிறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள்

ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள்ளுருகா விரசும் ஓசையைப் பாடலும் நீ

ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையின் மாமலர் கொண்டு என் கணது அல்லல் கெடக்

காதல் உறத் தொழுவது என்றுகொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே

திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் கடைப் பாடலில், பெருமானைச் சிறப்பித்து பாடியவாறே தெள்ளேணம் கொட்டுவோம் என்று மணிவாசகர் கூறுகின்றார். அரிசியில் கலந்துள்ள கல்லினை பிரிப்பதற்கு, அரிசியை முறத்தில் கொட்டி, இடமும் வலமுமாக புடைத்து அசைத்தலை தெள்ளுதல், கொளித்தல் என்று கூறுகின்றனர். பெண்கள் ஒன்றாக கூடி இந்த செயலில் ஈடுபடுவது வழக்கம். அந்த சமயத்தில் அவர்கள் அனைவரும் இறைவனின் புகழினைப் பாடியவாறு தங்களது செயலில் ஈடுபடுமாறு அடிகளார் தூண்டுகின்றார். சிவபெருமானை வணங்கும் தேவர்கள் கூட்டத்தினை, அவர் அணிந்துள்ள கொக்கின் இறகினை, அவரின் மணாட்டியாகிய உமையம்மையின் சிறப்புகளை, அவர் நஞ்சுண்ட திறத்தினை, அவர் நடமாடும் அழகினை, நடமாடும்போது அசையும் அவரது கால் சிலம்பினை, பாடி தெள்ளேணம் கொட்டுவோமாக என்று இந்த பாடல் கூறுகின்றது.

குலம் பாடி கொக்கிறகும் பாடிக் கோல்வளையாள்

நலம் பாடி நஞ்சுண்டவா பாடி நாள்தோறும்

அலம்பார் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற

சிலம்பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

திருக்கோவையார் பாடல் ஒன்றினில் பெருமான் கொக்கிறகு அணிந்து காணப்படும் காட்சியை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். எட்டு திக்குகளை எட்டுமாறு பரந்த தோள்களை உடைய தில்லைக் கூத்தன், கொக்கின் இறகு அணிந்துள்ளான் என்று இங்கே கூறுகின்றார். தோழியின் கூற்றாக அமைந்த இந்த பாடலில், கூடல் நகரத்து முத்து போன்ற பற்களை உடைய தலைவியை விட்டுவிட்டு, அயல் மாதரிடம் நாட்டம் கொண்டு பிரிந்த தலைவனைப் பழித்து உரைப்பது போன்ற பாடல். தலைவியை சிவபெருமானாக உருவகித்து, அந்த அருளினைப் பிரிந்து பிற தெய்வத்தை நாடும் ஆன்மாவினை, தகுதி இல்லாத ஆன்மா என்று இழித்துக் கூறுவது இந்த பாடலின் உட்பொருளாகும். திருநாவுக்கரசர் புராணத்தில், சேக்கிழார், சிறுவயதில் தனது தாய் தந்தையரை இழந்த வருத்தத்தில், சமண சமயத்தைச் சார்ந்ததை குறிப்பிடுகையில். சிவபெருமானின் அருள் இலாமையினால் புறச்சமயம் சார்ந்தார் என்று குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது.

திக்கின் இலங்கு திண்தோள் இறை தில்லைச் சிற்றம்பலத்துக்

கொக்கின் இறகது அணிந்து நின்றாடி தென் கூடல் அன்ன

அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால்

தக்கின்று இருந்திலன் நின்ற செவ்வேல் என் தனி வள்ளலே

ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா) பாடல் ஒன்றினில் திருமாளிகைத் தேவர் (உயர்கொடி ஆடை என்று தொடங்கும் பதிகத்தின் பத்தாவது பாடல்) கொக்கின் இறகையும் கொன்றை மலரையும் தனது சடையில் அணிந்தவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். அடியார்கள் நினைப்பதைத் தரும் இறைவன் என்பதால் கற்பகம் என்று இங்கே கூறுகின்றார். கொக்கின் இறகையும், கொன்றை மலரையும், கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும், ஊமத்தம் பூவினையும் சடையில் சூடி, நடனமாடும் தில்லைக் கூத்தனின் உருவம் தனது சிந்தையுள் நிறைந்து உலவுகின்றது என்று இங்கே கூறுகின்றார்.

ஏர்கொள் கற்பகம் ஒத்து இரு சிலைப் புருவம் பெருந்தடம் கண்கள் மூன்றுடை உன்

பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்

சீர்கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்தா

நீர்கொள் செஞ்சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே

தம் கூத்தவர் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமான் ஆடும் கூத்து அவருக்கே உரியது; வேறு எவராலும் ஆடமுடியாத கூத்து என்று இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் தில்லைப் பதிகத்து பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் (4.81.6) அப்பர் பிரான், நடனத்தில் பெருமானை விடவும் அழகாக நடனம் ஆடுபவர் வேறு எவரேனும் உள்ளரோ என்ற கேள்வியை எழுப்புகின்றார். பொற்சடை=பொல்+சடை. பொலிகின்ற சடை., புரி கணம்= விரும்பும் அடியார் கூட்டம். ஆர்த்தல்=ஆரவாரம் செய்தல். அரித்தல்=வாத்தியங்கள் முழங்குதல். இந்த பாடல் ஒரு தாயின் கூற்றாக அமைந்துள்ளது. நடமாடும் சிவபிரானின் அழகினையும், அவனது நடனத்தின் நேர்த்தியையும் காணும் தாய், நடனத்தில் சிறந்த ஒருவனே தனது மகளுக்கு கணவனாக வரவேண்டும் என்று விரும்பிய தாய், சிவபிரானை விட நடனத்தில் சிறந்தவர் வேறு எவரும் உளரோ என்று வியப்படைகின்றாள்.

பூத்தன பொற்சடை பொன்போல் மிளிரப் புரி கணங்கள்

ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறட் பூத கணம்

தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து

கூத்தனில் கூத்து வல்லார் உளரோ என்றன் கோல் வளைக்கே

பொன் போல் பூத்துக் குலுங்கும் பொலிவுடைய சடையை உடைய சிவபிரானது நடனம் கண்டு அவரை விரும்பும் அடியார் கூட்டம் ஆரவாரம் செய்ய, பூத கணங்கள் பல வகையான வாத்தியங்கள் கொண்டு முழங்க, வண்டுகள் தேந்தேம் என்று இசை பாட குளிர்ந்த சோலைகள் கொண்ட சிற்றம்பலத்தில் நடனமாடும் சிவபிரானை விடவும் நடனத்தில் உயர்ந்தவர் எவரேனும் என் மகளுக்கு கணவராக வர தகுதி படைத்தவராக உள்ளரோ என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.

பேய்களுடன் இணைந்து கூத்து ஆடுபவர் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தமக்கே உரிய கூத்து என்று இரண்டாவது அடியில் கூறியதற்கு ஏற்ப விளக்கமாக பேய்களுடன் ஆடும் கூத்து என்று குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. பேய்களுடன் இணைந்து ஆடப்படும் நடனம் எவ்வளவு கடினமானது என்பதை அப்பர் பிரான் குறிப்பிடும் இன்னம்பர் தலத்து பாடல் (4.100.3) நமது நினைவுக்கு வருகின்றது. நடனக்கலை என்றால் என்ன என்று அறியாதன பேய்கள். எனவே எப்படி ஆடுவது என்பது குறித்து அவைகளின் இடையே ஒத்த கருத்து எழவில்லை. அதனால் ஒருவர் ஆட்டத்திற்கும் மற்றொருவர் ஆட்டத்திற்கும் இடையே ஒற்றுமை ஏதும் இல்லாமல் நெறிமுறை தவறி அந்த பேய்கள் ஆடிய ஆட்டம். இத்தகையவர்களுடன் கூடி ஆடுவதே கடினம்; அதிலும் அவர்களின் நடனத்துடன் இணைந்து ஆடுவது என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனாலும் சிவபிரான் பேய்களுடன் இணைந்து சாமர்த்தியமாக ஆடியதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூமலரால்

வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னு மறைகள் தம்மில்

பிணங்கி நின்று இன்ன என்று அறியாதன பேய் கணத்தோடு

இணங்கி நின்று ஆடின இன்னம்பரான் தன் இணை அடியே

பொழிப்புரை:

கோவணத்தைத் தனது ஆடையாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், தனது அகன்ற திருக்கரத்தில் பாசம் எனப்படும் ஆயுதத்தை ஏந்தியவர்; சிறப்பான கூத்தினை தமக்கே உரியதாக கொண்டுள்ளவர் பெருமான். எப்போதும் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் பெருமானின் இடையில் காணப்படும் கச்சு, பறக்கும் நிலையில் விளங்கித் தோன்றுகின்றது. பல படைகளாக விளங்கும் பூதகணங்களுடன் இணைந்து நின்று அடி பெயர்த்து நடனம் ஆடும் வல்லமை படைத்த பெருமான் பேரெழிலுடன் விளங்குகின்றார். இத்தகைய தன்மைகள் கொண்டுள்ள பெருமான், புண்ணியமே வடிவமாக உள்ள பெருமான், சிறப்பு வாய்ந்த தவத்தினை உடைய முனிவர்கள் தங்களது கைகளால் தொழும் வண்ணம், பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் பொருந்தி உறைகின்றார்.

பாடல் 7:

காடது அணிகலன் (1.117) பாடல்கள் 6 தொடர்ச்சி 7 (திதே 0232)

காலது கங்கை கற்றைச் சடையுள்ளால் கழல் சிலம்பு

மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர் கொழுங்கோட்டு

ஆலது ஊர்வது ஆடல் ஏற்று இருப்பர் அணிமணி நீர்ச்

சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே

விளக்கம்:

காலது கழல் சிலம்பு, கங்கை கற்றைச் சடை உள்ளால், மாலது பாகம், மழுவது ஏந்தல், வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், அடல் ஏறு ஊர்வர், என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். கழல்=ஆடவர்கள் அணியும் வீரக்கழல்; சிலம்பு= பெண்கள் அணியும் அணிகலன்; கொழுங்கோடு=செழிப்பாக உள்ள மரக்கிளை; ஏறு=எருது; ஊர்தல்=வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கு செல்லுதல்; சேல்=மீன்; கண்ணி= கண்ணினை உடைய உமையன்னை; மீன் போன்று அழகிய கண்களை உடையவள் என்று பொருள்படும்படி, மதுரை தேவியை அங்கயற்கண்ணி என்று அழைப்பார்கள். பிராட்டி அங்கயற்கண்ணி என்று அழைக்கப் படுவதற்கு அழகான விளக்கம் ஒன்றினை பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் அளிக்கின்றார். தண்ணீரில் வாழும் மீன் தனது முட்டைகளுக்கு எவ்வாறு வெப்பம் அளித்து பக்குவம் அடையச் செய்ய முடியும். தனது கண்களின் வழியே வெப்பத்தைப் பாய்ச்சி, மீன்கள் முட்டைகளை பொறிப்பது போன்று, அம்பிகையும் தனது அருட்கண்களால் உயிர்களை நோக்கி காப்பதால் இந்த பெயர் வந்தது என்று கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அளி=கருணை; செவ்வி உற=பக்குவம் அடையும் வண்ணம்; ஒளி=ஞானம், அருள்; இமவான் மகளாகப் பிறந்த அன்னை, தனது சிறிய வயதினில் கிளி மயில் அன்னம் போன்ற பறவைகளை வளர்த்த செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது. மீனாட்சியம்மை மக்களை காப்பது போன்று, அரசியாக திகழ்ந்த தடாதகை பிராட்டியார் தனது குடிமக்களை பாதுகாத்தார் என்று பரஞ்சோதி முனிவர் இந்த பாடலில் கூறுகின்றார்.

ஒளியால் உலகு ஈன்று உயிர் அனைத்து மீன் போல் செவ்வி உற நோக்கி

அளியால் வளர்க்கும் அங்கயற்கண் அன்னே கன்னி அன்னமே

அளியால் இமவான் திருமகளாய் ஆவி அன்ன மயில் பூவை

தெளியா மழலைக் கிளி வளர்த்து விளையாட்டு அயரும் செயல் என்னே

கழலும் சிலம்பும் அணிபவர் என்று மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இத்தகைய குறிப்பு பல தேவாரப் பாடல்களில் காணப்படுகின்றது. அத்தகைய சில பதிகங்களை நாம் இங்கே காண்போம். நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.71.7) கால்களில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்க இறைவன் வருவார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். புலம்ப=ஒலிக்க, குழல்=கூந்தல்; கோலம்=அழகு; தவளம்=வெண்மை; கீள்=கிழிக்கப்பட்ட ஆடை; தழலார் மேனி=தழல் போன்று சிவந்த மேனி

குழலார் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம்

தழலார் மேனித் தவள நீற்றர் சரி கோவணக் கீளர்

எழிலார் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடையேறிக்

கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே

கோட்டாறு தலத்தின் மீது அருளிய பாடலில் (2.52.5) திருஞானசம்பந்தர், பேய்க் கணங்கள் புகழும் வண்ணம் கானகத்தில், வளமான சிலம்பும் கழலும் ஒலிக்க நடனமாடும் அழகிய பெருமான் என்று கூறுகின்றார். எழுவார்=பஞ்சாக்கர மந்திரத்தை சிந்திந்து எழும் சித்தர்கள்;

பழைய தம் அடியார் துதி செயப் பாருளோர்களும் விண்ணுளோர் தொழக்

குழலும் மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாற்றில்

கழலும் வண் சிலம்பும் ஒலி செயக் கானிடைக் கணம் ஏத்த ஆடிய

` அழகனென்று எழுவார் அணியார் வானவர்க்கே

குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (2.58.2) திருஞானசம்பந்தர், தனது திருவடிகளில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் பெருமான் உலகம் முழுதும் திரிந்து பலி ஏற்பதாக கூறுகின்றார். பைங்கழல்=பசும் பொன்னால் செய்யப்பட்ட கழல்; ஆர்ப்ப=ஒலிக்க; ஆர்ந்த=இணைந்த; அங்கை=அழகிய கை; செடி=குணம் இல்லாத, துர்நாற்றம் வீசும்; தேர்தல்=தேடிச் செல்லுதல்; குடி ஆர்ந்த=சிறந்த குடியில் பொருந்திய; குலாவி= கொண்டாடி; படி ஆர்ந்த=படிகள் நிறைந்த; குடவாயில் திருக்கோயில் யானைகள் ஏற முடியாத வண்ணம் படிகள் அமைக்கப்பட்ட மாடக் கோயில்களுள் ஒன்று.

அடியார்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில்

செடி ஆர்ந்த வெண்தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர்

குடி ஆர்ந்த மாமறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்

படி ஆர்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே

கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பாடலில் (7.41.2) பசியால் வாடிய தனக்கு உணவு அளிக்கும் பொருட்டு, பெருமான் பிச்சை ஏற்ற அதிசயத்தைக் குறிப்பிடும் சுந்தரர், கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் உச்சிப் போதினில் பல இல்லங்கள் சென்று பிச்சை எடுத்த பெருமானே என்று குறிப்பிட்டு உருகுவதை நாம் உணரலாம். பெருமான் அந்த தலத்தில் வாழும் அந்தணர் போன்று பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்றார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். பெருமானே சென்றார் என்பதை வலியுறுத்தும் வண்ணம் சுந்தரர் தனது பாடலில், பாம்பு அணிந்தவராகவும் கழலும் சிலம்பும் அணிந்தவராகவும் பெருமான் பிச்சை ஏற்கச் சென்றார் என்று குறிப்பிட்டார் போலும். கலிக்க=ஒலிக்க; பெருமான் செய்யும் செயல்களின் பின்னணியை எவரும் அறிய முடியாது என்பதை இச்சை அறியோம் என்ற தொடர் கொண்டு சுந்தரர் குறிப்பிடுகின்றார். எளியவனாகிய அடியேன் பொருட்டு பிச்சை எடுத்த செயல் கண்டால் மற்ற அடியார்கள் மனம் பதைபதைத்து உருகுவார்கள் என்று சுந்தரர் கூறுகின்றார்.

கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் சிலம்பும் கலிக்க

உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே

இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனை ஆள்வாய்

அச்சமில்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே

பெருமானின் திருவடிகளின் சிறப்பினை எடுத்து உரைக்கும் திருவடித் தாண்டகப் பாடலில் (6.6.5) அப்பர் பிரான் கழலும் சிலம்பு ஒலிக்கும் திருவடி என்று குறிப்பிடுகின்றார். ஒரு காலத்து ஒன்றாக நின்ற அடி=ஏக பாத திரிமூர்த்தியாக இறைவன் இருக்கும் நிலை. முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில், மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் பிரிவது போல் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம். பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் உள்ளது.

ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி ஊழி தோறூழி உயர்ந்த அடி

பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி

இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி

திருவதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம் செல்வன் அடி

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.42.6) அப்பர் பிரான், தனது கால்களில் ஒலிக்கும் சிலம்பினையும் கழலினையும் அணிந்து உலகம் அதிரும் வண்ணம் நடமாடும் பெருமான் என்று கூறுகின்றார். மிறை=துன்பம்; பழைய வினைகளின் பயனால் நாம் துன்பங்கள் மட்டுமன்றி இன்பங்களையும் நுகர்கின்றோம்; ஆனால் அத்தகைய இன்பங்களில் ஆழ்ந்து மகிழும் நாம் நம்மை மிகவும் உயர்வாக நினைத்துக் கொள்கின்றோம். அத்தகைய தருணங்கள், நாம் அகந்தை கொண்டு இறைவனை மறக்கும் தருணங்களாக மாறுகின்றன. எனவே தான். இன்பம் நுகரும், நேரங்களிலும் நம்மை உயர்வாக எண்ணிக் கொள்ளமால், அடக்கத்துடன் தாழ்மையாக நினைத்து இறைவனை வணங்க வேண்டும். அவ்வாறு இருப்பவரின் நெஞ்சத்தில் இறைவன் உறைவான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். வியவேல்=மகிழாமல் இருத்தல்; நிறைவுடையான் என்ற தொடரினை அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற என்ற தொடருடன் இணைத்து, ஊழிக்காலத்தில் மன நிறைவுடன் நடனம் ஆடும் இறைவன் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். ஊழிக்காலம் முடிந்த பின்னர், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, உலகத்தை தோற்றுவிக்க எண்ணம் கொள்ளும் பெருமான், அந்த எண்ணத்தினால் மனநிறைவு அடைகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றாரோ என்று தோன்றுகின்றது

மிறைபடும் இவ்வுடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே

குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை கூத்தாடும் குணம் உடையான் கொலை வேல் கையான்

அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற

நிறைவுடையான் இடமாம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

கோடு என்பதற்கு மலையினுச்சி என்று பொருள் கொண்டு, கயிலாய மலையின் உச்சியில் உள்ள கல்லால மரத்தின் நிழலில் இருக்கும் பெருமான் என்று சில அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பொழிப்புரை:

சிவபெருமானின் காலில் உள்ளது வீரக்கழலும் சிலம்பும்; கற்றையாக அடர்ந்து காணப்படும் அவரது சடையின் உள்ளே கங்கை நதி பொதிந்து உள்ளது; திருமால் அவரது உடலின் இடது பாகத்தில் உள்ளார்; அவர் தனது கையினில் ஏந்துவது மழு ஆயுதம்; செழிப்புடன் வளரும் கிளைகளை உடைய ஆலமரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் விளக்கிய பெருமான் வலிமை உடைய இடபத்தினைத் தனது ஊர்தியாகக் கொண்டு தான் விரும்பும் இடங்களுக்கு செல்கின்றார்; அழகிய நீல மணிகளை அடித்துக் கொண்டு வரும் நீரினில் பாயும் மீன்கள் போன்று கண்ணினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ள பெருமான், சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் பொருந்தி உறைகின்றார்.

பாடல் 8:

காடது அணிகலன் (1.117) பாடல்கள் 8, 9, 10 (திதே 0233)

நெருப்பு உறு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின் கண்

மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்

விருப்புறு பாம்புக்கு மெய் தந்தையார் விறல் மாதவர் வாழ்

பொருப்புறு மாளிகைத் தென் புறவத்து அணி புண்ணியரே

விளக்கம்:

நெருப்புறு மேனியர், வெள்விடை ஏறுவர், நெற்றியின் கண் கண்ணர், மருப்பு உருவன் தாதை, மாமுருகன் விருப்புறு தந்தையார், பாம்புக்கு மெய்யைக் காட்டுவர் என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். நெருப்புறு=நெருப்பினைப் போன்ற; வெள்விடை= வெண்மை நிறமுடைய இடபம்; மருப்பு=தந்தம்; மருப்புருவன்=தந்தம் ஒரு உறுப்பாக கொண்டுள்ள யானை முகத்தினை பெற்றுள்ள கணபதி; விறல்=வலிமை பொருப்பு=மலை; தென்=அழகிய. தாதையை என்ற சொல்லில் உள்ள ஐகாரத்தை மெய் என்ற சொல்லுடன் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும்.

இந்த பாடலில் கணபதி மற்றும் முருகப் பெருமான் ஆகிய இருவர் பற்றிய குறிப்புகளும் காணப் படுகின்றன. திருமுறைப் பாடல்களில் கணபதி மற்றும் முருகன் பற்றிய குறிப்பு பல பாடல்களில் காணப்பட்டாலும், இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடும் பதிகங்கள் மிகவும் அரிதானவை. அத்தகைய பாடல்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. பூவனூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.65.10) கணபதி மற்றும் முருகன் ஆகிய இருவராலும் வணங்கப்படும் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வாரணம்=யானை; வாரணன்=யானை முகத்தினைக் கொண்ட கடவுளாகிய விநாயகர்; காரணன்=உலகமும் உயிர்கள் இணைவதற்கான உடல்களும் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு முதற்காரணமாக இருக்கும் இறைவன் சிவபெருமான். காளை=காளை போன்று பலம் வாய்ந்தவன். பூரணன்=அனைத்துப் பொருட்களிலும் நிறைந்து இருப்பவன்;

நாரணன்னொடு நான்முகன் இந்திரன்

வாரணன் குமரன் வணங்கும் கழல்

பூரணன் திருப்பூவனூர் மேவிய

காரணன் என்னை ஆளுடைக் காளையே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.65.9) முருகப் பெருமான் மற்றும் விநாயகருக்கு தந்தையாக விளங்கும் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முந்தை=அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றியவன், சிவன்=இன்ப வடிவினன்; சிந்தாத=இறைவனைப் பற்றிய சிந்தனை தவிர புறப் பொருட்களில் தங்களது கவனத்தை சிதறவிடாத; மால் என்ற சொல்லுக்கு பெருமை என்ற பொருள் கொண்டு, சிவந்த கண்களை உடையதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகிய எருதினை வாகனமாக கொண்டவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தண்=குளிர்ந்த; கடமா=ஆண் யானை; குளிர்ந்த மதநீர் ஒழுகும் ஆண் யானை;

முந்தை காண் மூவரிலும் முதலானான் காண் மூவிலை வேல் மூர்த்தி காண் முருகவேட்குத்

தந்தை காண் தண் கடமா முகத்தினாற்குத் தாதை காண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச்

சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்குச் சிவனவன் காண் செங்கண்மால் விடை ஒன்றேறும்

எந்தை காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.13) பத்தாவது பாடலில், பெருமானைப் போற்றிப் புகழ்வோரின் பட்டியலில், முருகப் பெருமானையும் கணபதியையும் அப்பர் பிரான் சேர்த்திருப்பதை நாம் காணலாம். விநாயகப் பெருமானின் இடர் களையும் தன்மை இங்கே விக்கின விநாயக என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. சிவபிரான் பால் ஆழ்ந்த காதல் கொண்ட தலைவி, பெருமான் தன்னை விட்டுப் பிரிந்து போனதை நினைத்து வருந்தும் பாடல்கள் கொண்ட பதிகம் இது.

கோவாய இந்திரன் உள்ளிட்டாராகக் குமரனும் விக்கின விநாயகன்னும்

பூவாய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றிசைப்பப்

பாவாய இன்னிசைகள் பாடி ஆடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றிப்

பூவார்ந்த கொன்றை வண்டார்க்கப் புறம்பயம் நம்மூர் என்று போயினாரே

நாரையூர் பதிகத்தின் ஒரு பாடலில் (6.74.7) ஆறுமுகனோடு ஆனைமுகனுக்கு அப்பன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தன்னை மதிக்காது தக்கன் செய்த வேள்வி முற்றுப் பெறாதவாறு அதனை அழித்த வல்லமை உடையவன் சிவபெருமான். பிரமனது தலையினைத் தனது உண்கலனாக ஏற்று ஊரெங்கும் திரிந்து பலி ஏற்கும் தலைவன் சிவபெருமான்; கொக்கரை, சச்சரி, வீணை ஆகிய இசைக் கருவிகளை வாசிக்கும் கருத்தினை உடையவன் சிவபெருமான்; உயிரினை கொல்லும் விடத்தினை உடைய நாகத்தினை ஆபரணமாக அணிந்தவன் சிவபெருமான்; உருத்திராக்க மணிகளையும் எலும்பினையும் மாலையாக அணிந்து அழகாக விளங்குபவன் சிவபெருமான்: ஆறுமுகனுக்கும் ஆனைமுகனுக்கும் தந்தையாகத் திகழ்பவன் சிவபெருமான்: குறைந்த ஆடைகளுடன் காணப்படும் அவன், வக்கரை மற்றும் நள்ளாறு தலங்களில் உறைகின்றான். இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன் என்பதாக அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

தக்கனது வேள்வி கெடச் சாடினானைத் தலை கலனாப் பலியேற்ற தலைவன் தன்னை

கொக்கரைச் சச்சரி வீணைப் பாணியானைக் கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை

அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன் தன்னை

நக்கனைக் வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

நாகைக் காரோணம் பதிகத்தின் ஒரு பாடலில் (7.46.9), அன்னை பார்வதி தேவி, விநாயகப் பெருமான் மற்றும் முருகப்பெருமான் ஆகியோரிடத்தில் எதுவும் வேண்ட மாட்டேன் என்று சுந்தரர் கூறுகின்றார். தனது முடிவுக்கு காரணத்தையும் நகைச்சுவை தோன்ற இங்கே கூறுகின்றார். முருகனை சிறுவன் என்றும் கணபதியை உண்பதைத் தவிர வேறு ஒன்றும் அறியான் என்றும் நகைச்சுவை மிளிர கூறுவதை நாம் உணரலாம். மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் ஆட்சி செய்யும் உன்னிடம் தான் எதுவும் வேண்டுவேன் என்று பெருமானை நோக்கி இந்த பாடலில் கூறுகின்றார். நீர் எனக்கு ஏதும் தாராது இருந்தால், நான் உமது திருமேனியை விடாமல், கெட்டியாகப் பற்றிக் கொள்வேன். அதற்காக நீர் என்னை, கொடுமைக்காரன் என்று பழிக்கக் கூடாது என்றும் சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன்

எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்றறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள் செய்யீர்

திண்ணென என்னுடன் விருத்தி தாரீரேயாகில் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்

கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே

நாகைக் காரோணம் பதிகத்தின் மற்றொரு பாடலில், பெருமானின் செல்வத்தின் மூன்றில் ஒரு பங்கு தனக்குத் தரவேண்டும் என்று சுந்தரர் கூறுவது, அவர் பெருந்தன்மையுடன், பெருமானின் குழந்தைகளான கணபதிக்கும் முருகனுக்கு ஆளுக்கு ஒவ்வொரு பங்கினை ஒதுக்கிய பின்னர் மீதம் இருக்கும் ஒரு பங்கினைக் கேட்கும் நயத்தை வெளிப்படுகின்றது. அவ்வாறு ஒரு கூறு தாராவிடில், பெருமான் அடியெடுத்து எங்கும் செல்லாதவாறு அவரது திருவடிகளை கெட்டியாக பிடித்துக் கொள்வேன் என்று பயமுறுத்துவதையும் நாம் உணரலாம். இந்த நிலை சுந்தரர் பெருமானிடம் வைத்திருந்த அளவு கடந்த தோழமையால் ஏற்பட்ட நிலையாகும். தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்ட பெருமான், தனது தேவைகளை நிறைவேற்றுவதை கடமையாகக் கொண்டு தான் கேட்பதை எல்லாம் தந்தருள வேண்டும் என்ற உரிமைக் குரல் இங்கே எழுப்பப் படுவதை நாம் காணலாம்.

மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழியடியேன் உமக்கு

ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணியாரூர் புகப்பெய்த வருநிதியம் அதனில்

தோற்றமிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒரு பொழுதும் அடியெடுக்கல் ஒட்டேன்

காற்றனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே

காஞ்சி மாநகரில் உள்ள ஓணகாந்தன்தளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.5.2) பாடலில் சுந்தரர் பெருமானுடன் தொடர்பு கொண்டுள்ள கங்கை நங்கை, பார்வதி தேவி, கணபதி, முருகன் ஆகியோர், எவ்வாறு தனக்கு உதவாமல் இருக்கின்றார்கள் என்று நகைச்சுவையாக கூறுகின்றார். இந்த பாடலிலும் முருகப் பெருமான் மற்றும் விநாயகர் ஆகிய இருவரும் குறிப்பிடப் படுகின்றனர். கங்கை, உமையம்மைக்கு அஞ்சி ஏதும் வாய் திறவாமல்இருப்பதாலும், கணபதி தனது வயிற்றினையே பிரதானமாக கருதுவதாலும், குமரன் சிறு பிள்ளையாக இருப்பதாலும், உமையம்மை கணவனின் கருத்தினை மீறி அடியார்க்கு அருள் செய்யாமல் இருப்பதாலும், தனக்கு அவர்கள் நால்வரும் உதவுவதில்லை என்று கூறும் சுந்தரர், பெருமானும் தனக்கு உதவவில்லை என்றால், எவ்வாறு அவருக்குத் தான் தொண்டு செய்வது என்ற கேள்வியை இங்கே கேட்கின்றார். கோல் தட்டி=ஆணையை மீறி;

திங்கள் தங்கு சடையின் மேலோர் திரைகள் வந்து புரள வீசும்

கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறு தாரி

அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கோல் தட்டி ஆளார்

உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம் ஓணகாந்தன்தளி உளீரே

பொழிப்புரை:

நெருப்பு போன்று சிவந்த நிறத்தில் திருமேனியை உடைய பெருமான் சிவபெருமான்; அவர் வெண்மை நிறம் கொண்ட இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டவர்; தனது நெற்றியில் கண்ணை உடைய பெருமான், தந்தம் உடைய யானை முகத்தவனகிய கணபதிக்கு தந்தையாக விளங்குகின்றார்; அழகிய முருகப் பெருமான் விரும்பும் தந்தையாக விளங்கும் பெருமான், பாம்புகள் தனது திருமேனியின் மீது படர்ந்து அணிகலனாக விளங்கும் வண்ணம் தனது மேனியை காட்டுகின்றார். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பெருமான் சிறந்த தவங்கள் புரியும் முனிவர்கள் வாழ்வதும் மலை போன்று உயர்ந்த மாட மாளிகைகள் உள்ளதும் ஆகிய அழகிய நகராம் புறவத்திற்கு (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) அணி சேர்ப்பது போன்று உறைகின்றார்.

பாடல் 9:

காடது அணிகலன் (1.117) பாடல்கள் 8, 9, 10 (திதே 0233)

இலங்கைத் தலைவனை ஏந்திற்று இறுத்தது இரலை இல் நாள்

கலங்கிய கூற்று உயிர் பெற்றது மாணி குமை பெற்றது

கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்து

சலங்கிளர் வாழ் வயல் சண்பையுள் மேவிய தத்துவரே

விளக்கம்:

இலங்கைத் தலைவனை இறுத்தது, இரலை ஏந்திற்று, கலங்கிய கூற்று குமை பெற்றது, இல் நாள் மாணி உயிர் பெற்றது, கலங்கிளர் மொந்தை கொட்டுவர், காட்டகத்து ஆடுவர், என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். இறுத்தல்=ஒடித்தல், நெரித்தல்; இரலை=மான்; இல் நாள் மாணி=விதிக்கப்பட்ட பதினாறு ஆண்டுகள் ஏற்கனவே முடிந்தமையால் வாழ்நாள் ஏதும் இல்லாத நிலையில் இருந்த சிறுவன் மார்க்கண்டேயன்; கொட்டுதல்=ஒலி உண்டாக்குதல்; கலங்கிளர் மொந்தை=மண் பாண்டத்தின் வாய்ப்பகுதி தோலால் இறுகக் கட்டப்பட்டு மூடப்பட்ட இசைக்கருவி; கலம் என்பதற்கு யாழ் என்று பொருள் கொண்டு இனிய ஓசை எழுப்பும் மொந்தை இசைக் கருவி என்றும் விளக்கம் சிலரால் அளிக்கப் படுகின்றது. சலம் கிளர்=நீர் நிரம்பிய; குமைத்தல்=அழித்தல், வருத்துதல் என்ற பொருளும் பொருந்தும்.

பொழிப்புரை:

கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த இலங்கைத் தலைவன் இராவணனை மலையின் கீழே அழுத்தி துன்புறுத்தி வலியிழக்கச் செய்து நெருக்கியவர் சிவபெருமான்: அவர், தன்னை நோக்கி ஏவப்பட்ட மான் கன்றின் முரட்டு குணத்தினை மாற்றி துள்ளி விளையாடும் மானாக தனது கரத்தில் ஏந்தியவர் ஆவார்; விதிக்கப்பட்ட பதினாறு ஆண்டுகள் முடிந்தமையால் வாழ்நாள் ஏதும் இல்லாத நிலையில் இருந்த சிறுவன் மார்க்கண்டேயன் என்றும் அழியாத சிரஞ்சீவியாக இருக்கும் வண்ணம் புதுவாழ்வு அளித்து உயிர் வாழச் செய்தவர் சிவபெருமான் ஆவார்; சிவபெருமானின் காலால் பெற்ற உதையினால் வருந்தி கீழே விழுந்து அழிந்தவன் இயமன்;. சிவபெருமான் காட்டினில் நின்று ஆடுபவராகவும், மொந்தை எனப்படும் தோற்கருவியை வாசிப்பவராகவும் உள்ளார்; இத்தகைய வியத்தகு தன்மைகள் உடைய பெருமான், நீர் வளம் நிறைந்த வயல்கள் உடைய சண்பை (சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) நகரினில் பொருந்தி உறையும் மேலான கடவுளர் ஆவார்.

பாடல் 10:

காடது அணிகலன் (1.117) பாடல்கள் 8, 9, 10 (திதே 0233)

அடியிணை கண்டிலன் தாமரையோன் மால் முடி கண்டிலன்

கொடியணியும் புலி ஏறு உகந்து ஏறுவர் தோலுடுப்பர்

பிடியணியும் நடையாள் வெற்பு இருப்பதோர் கூறுடையர்

கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக் கண்டரே

விளக்கம்:

அடியிணை கண்டிலன் மால், முடி கண்டிலன் தாமரையோன், கொடியணியும் ஏறு உகந்து ஏறுவர், புலித்தோல் உடுப்பர், பிடியணியும் நடையாள் ஓர் கூறுடையார், வெற்பு இருப்பது என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். பிடி=பெண் யானை; வெற்பு=மலை, இங்கே இமயமலை; கடி=நறுமணம்;

பொழிப்புரை:

பெருமானது இணையான திருவடிகளை திருமால் காண முடியவில்லை; தாமரை மலரினை தனது ஆசனமாக உடைய பிரமனாலும் பெருமானின் திருமுடியை காண முடியவில்லை; தனது கொடியில் அடையாளமாக உள்ள எருதினைத் தனது வாகனமாக உகந்து ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்; தன்னை எதிர்த்து வந்த புலியினை அடக்கி அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டவர் சிவபெருமான்; பெண் யானை போன்று அழகிய நடையினை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு கூறாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் வாழ்வது இமயமலையினில்; இத்தகைய பெருமைகளை உடைய பெருமான், மணம் வாய்ந்த சோலைகள் நிறைந்த சீர்காழியில் நீலகண்டராக உறைகின்றார்.

பாடல் 11:

காடது அணிகலன் (1.117) பாடல்கள் 11, 12 (திதே 0234)

கையது வெண்குழை காதது சூலம் அமணர் புத்தர்

எய்துவர் தம்மை அடியவர் எய்தார் ஓர் ஏனக்கொம்பு

மெய்திகழ் கோவணம் பூண்பது உடுப்பது மேதகைய

கொய்து அலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே

விளக்கம்:

கையது சூலம், வெண்குழை காதது, அமணர் புத்தர் எய்தார், அடியவர் தம்மை எய்துவர், ஓர் ஏனக்கொம்பு மெய்திகழ் பூண்பது, கோவணம் உடுப்பது என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ள வேண்டும். அடியவர் எய்துவர் என்று திருஞானசம்பந்தர் இங்கே அடியார்களை பெருமான் சென்று அணுகுவதை குறிப்பிடுகின்றார். பெரிய புராணத்தில் வரும் பல நிகழ்ச்சிகள் வாயிலாக, பெருமான் எவ்வாறு மிகவும் எளியவராக சென்று தனது அடியார்களை நெருங்கி அவர்களது பெருமையினை உலகறியச் செய்தார் என்பதை காண்கின்றோம். திருவாசகம் கீர்த்தித் திருவகலிலும், பெருமான் எவ்வாறு தனது அடியார்களுக்கு எளியவராக இருந்து அருள் புரிகின்றார் என்பது பல நிகழ்ச்சிகள் மூலம் விளக்கப் படுகின்றது. மேதகைய=சிறப்பு வாய்ந்த; இந்த பாடலில் கொய்தலர் பூ என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மலரும் நிலையில் உள்ள அரும்புகள் என்று இதற்கு பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். மலர்ந்த பூக்கள் என்றால் அவற்றில் உள்ள தேனைச் சுவைத்த வண்டுகளின் எச்சில் பட்டிருப்பதால், அத்தகைய பூக்களைத் தவிர்த்து மலரும் நிலையில் உள்ள அரும்புகள் பறித்து அவை மலர்ந்த பின்னர் அவற்றை இறைவனுக்கு படைப்பதை வழக்கமாக கொண்டிருந்த அடியார்கள் வாழ்ந்த தலம் சீர்காழி என்று உணர்த்தும் பொருட்டு, கொய்தலர் பூம்பொழில் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கொய்தலர் பூம்பொழில் என்ற தொடருக்கு, பறிக்கப் பறிக்க மேலும் மேலும் மலர்களை அளிக்கும் வளம் வாய்ந்த சோலைகள் என்றும் பொருள் கூறுகின்றனர். கொற்றவன்=அரசன்;

பொழிப்புரை:

தனது கையினில் சூலம் ஏந்தியவராகவும் ஒரு காதினில் வெண்குழை அணிந்தவராகவும் காணப்படும் சிவபெருமான், புறச் சமயவாதிகளாகிய சமணர்களும் புத்தர்களும் அடைய முடியாத நிலையினில் உள்ள பெருமான், தனது அடியார்களை விருப்பத்துடன் சென்று அணுகி அருள் புரிகின்றார். அவர் தனது மார்பினில் பன்றிக் கொம்பினை ஆபரணமாக அணிந்துள்ளார்; அவர் ஆடையாக கொண்டுள்ளது கோவணம் ஆகும். சிறப்பு வாய்ந்ததும், மலரும் நிலையில் உள்ள அரும்புகள் நிறைந்த சோலைகள் உடையதும் ஆகிய கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் அரசனாக பெருமான் வீற்றிருக்கின்றார்.

பாடல் 12:

காடது அணிகலன் (1.117) பாடல்கள் 11, 12 (திதே 0234)

காடது அணிகலன் (1.117) பாடல் 12 தொடர்ச்சி (திதே 0235)

கல்லுயர் கழுமல இஞ்சியுள் மேவிய கடவுள் தன்னை

நல்லுரை ஞானசம்பந்தன் ஞானத் தமிழ் நன்குணரச்

சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லை வானவர் தங்களொடும்

செல்குவர் சீர் அருளால் பெறலாம் சிவலோகம் அதே

விளக்கம்:

மற்ற பாடல்களில் சொற்களை மாற்றி அமைத்து விளையாடிய திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அத்தகைய மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை. பொதுவாக அவரது பதிகங்களின் கடைப் பாடல்கள், அந்த பதிகம் ஓதுவோர் அடைய இருக்கும் பலன்களை குறிப்பிடுவதால், மாற்றி அமைக்கப் பட்டுள்ள சொற்களை சரியாக புரிந்து கொள்ளாமல், தவறாக எவரும் இந்த பதிகம் தரும் பலனை புரிந்து கொள்வதை தவிர்க்கும் வண்ணம், இவ்வாறு இந்த பாடலை அருளினார் போலும். கல்=மலை; இஞ்சி=மதில்; நல்லுரை=நன்மைகளைத் தரும் பாடல்கள்; மொழிமாற்றுப் பதிகம் என்பதால் இதன் பொருளை நன்கு உணர வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அவ்வாறு இந்த பதிகத்தின் பொருளை நன்கு புரிந்து கொண்டவர்கள் அடுத்தவருக்கு சொல்ல வேண்டும் என்பதையும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துவதை நாம் காணலாம். தேவாரப் பதிகங்களை ஞானத்தமிழ் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வடமொழி வேதங்களில் உள்ள கருத்துகள் அடங்கிய பதிகங்கள் என்று உணர்த்தும் வண்ணம் ஞானத்தமிழ் என்று கூறுகின்றார். தமிழ் மறை என்று பல பாடல்களில் குறிப்பிட்டவர் அல்லவா. மனிதர்களுடன் ஒப்பிடும்போது தேவர்களின் வாழ்நாள் அதிகம் என்பதால், தொல்லை வானவர் என்று அவர்களை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பொதுவாக தனது பதிகங்களின் கடைக்காப்பு பாடல்களில், அந்தந்த பதிகத்தின் பாடல்களை முறையாக ஓதும் அடியார்கள் பெறவிருக்கும் பயன்களை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த பாடலில், இந்த பதிகத்தின் பாடல்களை கேட்கும் வாய்ப்பு பெற்ற அடியார்களும் சிவலோகம் செல்லலாம் என்று கூறுகின்றார். அந்த வகையில் ஒரு வித்தியாசமான பதிகம் இந்த பதிகம். இவ்வாறு பதிகத்தின் பாடல்களை அடுத்தவர் சொல்ல கேட்கும் வாய்ப்பினை பெறுகின்ற அடியார்கள் அடைகின்ற பலன்களை குறிப்பிடும் பாடல்களை நாம் இங்கே காண்பது பொருத்தமாக இருக்கும்.

திருவீழிமிழலை பதிகத்தின் கடைப்பாடலில் (1.11.11) திருஞானசம்பந்தர், தமிழ் பத்தும் யாழின் இசை வல்லார் சொலக் கேட்டார் அவர் எல்லாம் உயர் வானடைவாரே என்று கூருகின்றார். ஊழின் மலி என்ற தொடருக்கு, இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தொன்று தொட்டு வரும் வினைகள் என்பதை நாம் பல திருமுறை பாடல்கள் மூலம் அறிகின்றோம். எந்த காலத்திலிருந்து என்பதற்கு பல ஊழிகளையும் கடந்த பண்டைய காலம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் விளக்கம் அளிக்கின்றார். ஊழின் மலி என்ற தொடர், நாம் வினைகளின் பயனை இன்ப துன்பமாக கழித்து நுகர வேண்டிய வரிசை என்ற விளக்கம் இரண்டாவது பொருளாகும். இந்த பிறவியில் நாம் நுகர்ந்து கழிக்க வேண்டிய வினைகளின் அளவினை மட்டுமன்றி, நாம் எந்தெந்த வினையை எந்த வயதில், எந்த தருணத்தில் கழிக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்கின்றவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் விளக்கம் அளிக்கின்றார். மேலும் அந்த வினைகளை, இதே பிறவியில் பின்னாளில் கழிக்க. வேண்டிய வினைகளையும், நீக்கும் ஆற்றல் படைத்தவன் சிவபெருமான் ஒருவன் தான் என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. .

வீழிமிழலைம் மேவிய விகிர்தன் தன்னை விரை சேர்

காழிந்நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்

யாழின்னிசை வல்லார் சொலக் கேட்டார் அவர் எல்லாம்

ஊழின் மலி வினை போயிட உயர் வான் அடைவாரே

பெண்ணாகடம் தூங்கானை மாடம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.59.11) திருஞானசம்பந்தர், தேவாரப் பாடல்களை கற்பவரும் கேட்டாரும் விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதியுடைவர்கள் என்று கூறுகின்றார். கருத்து உணர்ந்து கற்றார் என்று தேவாரப் பதிகங்களை பொருள் உணர்ந்து கற்க வேண்டும் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பல பதிகங்களில் பண் பொருந்த தேவார பாடல்களை பாட வேண்டிய அவசியத்தையும் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இவ்வாறு முறையான பண்ணுடன் பொருத்தி, பாடல்களின் பொருளை புரிந்து கொண்டு, மனம் ஒன்றி பாடும் அடியார்களையே வல்லவர் என்று பெரும்பாலான பாடல்களில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். எனவே நாமும் தேவார பதிகங்களின் பொருளினை உணர்த்து கொள்ள முயற்சி செய்வோமாக. கண்ணார் கழல்=உலகத்தின் கண் போன்று கருதப்படும் திருப்பாதங்கள்

மண்ணார் முழவு அதிர மாட வீதி வயல் காழி ஞான சம்பந்தன் நல்ல

பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான்

கண்ணார் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணரக் கற்றாரும் கேட்டாரும் போய்

விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும் வினை மாயுமே

தேவாரப் பாடல்களை கற்றல் இன்பம், பாடுதல் இன்பம், அவ்வாறு முறையாக பாடப் படுவதை கேட்பதும் இன்பம். திருக்கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.062.11) சம்பந்தன் வண்டமிழ் கொண்டு இன்பமர வல்லார்கள் ஈசனை எய்துவார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மாடு=செல்வம்; நம்பனை=நம்பத் தகுந்தவன்; இதே பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் உணர்த்தப் படும் செய்திகள், பெருமான் மிகவும் நம்பத் தகுந்தவன் என்பதை வலியுறுத்துகின்றன. அதனை மீண்டும் நமக்கு நினைவூட்டும் வண்ணம், நம்பன் என்று இந்த பாடலை திருஞானசம்பந்தர் தொடங்குகின்றார் போலும். எனவே தான் இவ்வாறு பெருமானின் அருளுக்கு பாத்திரமாகி இருக்கும் தன்மையை மிகவும் பெரிய செல்வம் என்று அடியார்கள் கருதிய தன்மையும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. வம்பு=நறுமணம்; கொம்பு=பூங்கொம்பு; தண்=குளிர்ந்த; வண்டமிழ்=சிறந்த, வளம் பொருந்திய; இன்பமர= இன்பத்துடன் விளங்க; தனது அடியார்களுக்கு பலவகையிலும் அருள் புரிவதால் நம்பத் தகுந்தவனாக விளங்கும் பெருமான் என்பதால் நல்ல அடியார்கள் தங்களது உயர்ந்த செல்வம் சிவபெருமானை பற்றிய சிந்தனைகள் என்று கருதி வாழ்கின்றனர்; இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமானை, பூங்கொம்பு போன்று அழகிய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், அழகிய கோளிலி தலத்தினில் உறைபவனும் ஆகிய பெருமானை, நறுமணம் நிறைந்தும் குளிர்ந்தும் காணப்படும் நீர் நிறைந்த காழி நகரைச் சார்ந்த ஞானசம்பந்தன் பாடிய, வளம் பொருந்திய தமிழ் பாடல்களை பாடியும் கேட்டும் இன்பம் அடையும் அடியார்கள், மறுமையில் அந்த ஈசனின் திருவடிகளை அடைந்து, என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்திருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்கும்
கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்
டின்பமர வல்லார்கள் எய்துவர்க ளீசனையே

சிவபெருமானின் திருவடிகளைச் சார்ந்து அவனது புகழினைக் கற்கின்ற மற்றும் கேட்கின்ற அடியார்கள் சிவலோகம் செல்வார்கள் என்று சாய்க்காடு பதிகத்தின் (2.41.1) பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உயிர்கள் தாம் செய்த தீயவினைகளின் பயனை நரகத்தில் அனுபவித்தும் நல்வினைகளின் பயனை சொர்கத்தில் அனுபவித்தும் கழிக்க வேண்டிய நிலையில் உள்ளன. எனவே தூல உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்னர், சூக்கும உடல், தங்களின் வினைகளின் தகுதிக்கு ஏற்ப சொர்கத்திற்கும் நரகத்திற்கும் இழுத்துச் செல்லப்பட்டு இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது. ஆனால் இறைவனின் அருளினால் தங்களது வினைகள் முற்றிலும் கழிக்கப்பட்டு வினைகள் ஏதும் இல்லாத நிலையில், பக்குவமடைந்த அடியார்களின் உயிர் முக்தி உலகம் சென்று அடைவதால், அந்த வினைகள் சொர்கத்திற்கு செல்வதும் தவிர்க்கப் படுகின்றது. இந்த நிலையினைத் தான், விண்ணுலகம் செல்ல மாட்டார் என்று சொல்ல வேண்டாம், அதனினும் உயர்ந்த இடமாகிய சிவலோகம் செல்வார்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மண் புகார்=மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகம் வரமாட்டார்கள். வான்=உயர்ந்த; வானுலகம்= விண்ணுலகினும் உயர்ந்த சிவனுலகம்; மனம் இளைத்தல்=மனம் வருந்துதல்; கண்= இடுக்கண், துன்பங்கள்; தாள்=திருப்பாதங்கள்; சாய்க்காட்டுத் தலைவனின் திருப்பாதங்களைச் சாரும் அடியார்கள் இம்மையில் துன்பங்கள் ஏதும் இன்றி மறுமையில் சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று கூறுகின்றார். இம்மையிலும் மறுமையிலும் பெருமானின் அடியார்கள் அடைய இருக்கும் பலன்கள் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றன. வெண்மை நிறத்து மாடங்களையும் நீண்ட வீதிகளையும் குளிர்ந்த தன்மையையும் கொண்டுள்ள புகார் நகரின் சாய்க்காடு திருக்கோயிலில் உள்ள தலைவனாகிய பெருமானின் திருப்பாதங்களைச் சாரும் அடியார்கள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு மீண்டும் நிலவுலகில் புகவேண்டிய அவசியம் இல்லாதவர்களாக விளங்குவார்கள்; மேலும் அவர்கள் உயர்ந்த சிறப்பினை உடைய பெருமானின் முக்தி உலகம் சென்றடைவார்கள்; அத்தகைய அடியார்கள், இம்மையில் பசி பிணி முதலான துன்பங்களிலிருந்து விடுபட்டு மனவருத்தம் ஏதும் இன்றி வாழ்வார்கள். இவ்வாறு பெருமானது திருப்பாதங்களை பணிந்து வழிபடும் அடியார்கள், பெருமானின் புகழினை கற்றும் கேட்டும் மகிழ்வார்கள். அவர்கள் இந்த நிலவுலக வாழ்க்கையினை முடித்த பின்னர், மீண்டும் பிறப்பினுக்கு வழி வகுக்கும் போகவுலகத்திற்கு, சொர்க்க லோகத்திற்கு செல்ல மாட்டார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ; அதனிலும் உயர்ந்த சிவலோகம் சென்று என்றும் அழியாத பேரானந்தத்தில் திளைத்து வாழ்வார்கள் என்பதை நாம் எவரும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மண் புகார் வான் புகுவர் மனமிளையார் பசியாலும்

கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்

விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி

தண் புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன் தாள் சார்ந்தாரே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.56.11) திருஞானசம்பந்தர், பெருமானின் புகழினை உணர்த்தும் தேவாரப் பாடல்களை பாடும் அடியார்களுக்கும் அவற்றை கேட்கும் அடியார்களுக்கும் வாழ்வில் துயரம் இருக்காது என்று கூறுகின்றார். எல்லி=இரவுப் பொழுது; நற்றமிழ் என்று தேவாரப் பாடல்களை குறிப்பிடுகின்றார். மூவர் தமிழும் என்று தமிழ் மூதாட்டி ஔவையார் சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது. நல்ல அருமறை என்ற அடைமொழி மூலம் இவற்றை ஓதும் அடியார்களுக்கு பலவிதமான நன்மைகள் பயக்கும் அரிய மறைகள் என்று உணர்த்துகின்றார். வடமொழி வேதங்களில் உள்ள கருத்துகள் கொண்டிருப்பதுடன், வடமொழி வேதங்கள் போன்று ஓதுவோர்க்கும் கேட்போருக்கும் நற்பயன்களை அளிக்க வல்லவை தேவாரம் மற்றும் திருவாசகப் பாடல்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். துயரம் என்பதற்கு பிறப்பிறப்பில் சிக்கியுள்ள தன்மை என்ற விளக்கமும் பெரியோர்களால் அளிக்கப் படுகின்றது.

கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்

நல்ல அருமறையான் நற்றமிழ் ஞானசம்பந்தன்

எல்லியிடை மருதில் ஏத்துப் பாடல் இவை பத்தும்

சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே

தேவாரப் பாடல்களை விருப்பத்துடன் கேட்கும் அடியார்களின் தீவினைகள் அவர்களை விட்டுவிட்டு அகன்றுவிடும் என்று திருஞானசம்பந்தர், குற்றாலம் குறும்பலா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.71.11) கூறுகின்றார். கொல்லேறு=கொலைத் தன்மை கொண்ட எருதாகிய இடபம். பெருமானின் வாகனமாகிய இடபம் கோபம் கொண்டால் எவரும் தாங்க முடியாது என்பது இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஒருமுறை கயிலாயத்திற்கு திருமால் வந்த போது அவருடன் வந்த, கருடன் சிவபெருமானின் பெருமையை உணராமல் ஏளனமாக பேச, கோபமுற்ற நந்தி தேவர், பலமாக மூச்சுக்காற்றினை வெளியிட,அதன் வேகத்தைத் தாங்க முடியாமல் கருடன் கீழே விழுந்து இறந்தது என்றும். பின்னர் பெருமானின் அருளால் உயிர் பெற்றது என்றும் தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. இன்பாய=பேரின்ப மயமான;

கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற்று அண்ணல்

நம்பான் அடி பரவு நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன

இன்பாய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார்

தம் பால தீவினைகள் போயகல நல்வினைகள் தளரா அன்றே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.103.11) திருஞான சம்பந்தர், தேவாரப் பாடல்களை கேட்கும் அடியார்களை குற்றங்கள் குறுகாவே என்று கூறுகின்றார். மண்மிசை=மண்ணின் மேல்; அம்பர் மாகாளம் தலத்திற்கு ஒப்பாகவோ உயர்ந்ததாகவோ வேறு தலம் இந்த பூமியில் இல்லை என்பதால், தன்னொடு மாறு இல்லாத தலம் என்று குறிப்பிடுகின்றார்.

மாறு தன்னொடு மண்மிசை இல்லது வருபுனல் மாகாளத்து

ஈறும் ஆதியும் ஆகிய சோதியை ஏறமர் பெருமானை

நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை

கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.106.11) இந்த பதிகத்தை இசையுடன் பாடுபவரும் அதனை கேட்பவரும் இம்மையிலும் மறுமையிலும் வருத்தம் நீங்கப் பெறுவார் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கேட்பவர்கள் அடையும் பலன் சொல்லப்படும் பதிகங்கள் மிகவும் அரிதானவை. மருந்து என்பது பிறவிப் பிணிக்கு மருந்தாக செயல்படும் இறைவன், மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே என்ற தொடரால் புலனாகின்றது. நவிற்றிய=சொன்ன; இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் மருந்துமாகி மந்திரமாகி அடியார்க்கு அருள் செய்பவன் பெருமான் என்ற செய்தி இங்கே மீண்டும் உணர்த்தப் படுகின்றது. அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு கூறாக ஏற்றுக் கொண்டவனும், வலஞ்சுழி தலத்தினில் அமர்ந்த வண்ணம் அடியார்களின் பிறவிப் பிணிக்கு மருந்தாக செயல்படுபவனும், ஆகிய இறைவனை, செழிப்பான வயல்கள் நிறைந்த காழி நகரத்தைத் சார்ந்த வேதியனும் தலைவனும் ஆகிய ஞானசம்பந்தன், தனது வாயினால் பாடிய தமிழ் மாலையாகிய இந்த பாடல்களை முறையாக கற்று, குறிப்பிடப்பட்ட இசையுடன் பொருத்தி வல்லவர்கள் பாட, அத்தகைய அடியார்களுக்கும் அதனை கேட்டு மகிழும் அடியார்களுக்கும், அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் வருத்தம் அடையாத வண்ணம், அவர்களை வருத்தும் தன்மை வாய்ந்த வினைகளை அவர்களை விட்டு நீங்கிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மாதோர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி

நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை

ஆதரித்து இசை கற்று வல்லார் சொலக் கேட்டு உகந்தவர் தம்மை

வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.116.11) திருஞான சம்பந்தர், தேவாரப் பதிகங்களைச் சொல்லுவார்க்கும் கேட்பவர்க்கும் துயர் இல்லையே என்று கூறுகின்றார். வண் தமிழ்=சிறந்த தேவாரப் பாடல்கள்;

மல்கு தண் பூம்பொழில் வாய்ந்தொழுகும் வயல் காழியான்

நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன்

வல்லவாறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண்தமிழ்

சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே

நம்மால் முறையான இசையுடன் தெளிவாக தேவாரப் பாடல்கள் பாட முடியவில்லையே என்ற குறையுடைய அடியார்கள், வேறு எவரேனும் முறையாக பாடும் தேவாரப் பாடல்களை கேட்டாலே, அவர்களது தொல்வினைகள் சுருங்கி செயலற்றவையாக மாறிவிடும் என்று திருமாகறல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (3.72.11) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அடுத்தவர் தேவாரப் பாடல்களை பாடும்போது, அவற்றை உன்னிப்பாக கேட்டு,அந்த பாடல்களில் சொல்லப்படும் கருத்துகளை உணரத் தலைப்பட வேண்டும் என்று இந்த பாடலில் அறிவுரை கூறுகின்றார். அடையும்=அடி கூடும்; கடை=வாயில்: ஒல்கும்=வலி குறைந்து நீங்கும்; நெடு மாடம்=நீண்டு உயர்ந்த மாடங்கள்; கமழு=திகழும், விளங்கும்; இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானைச் சாரும் அடியார்களின் வினைகள் நீங்கும் என்றும் அழியும் என்று குறிப்பிட்டு நாம் அனைவரும் பெருமானைச் சாரும் வண்ணம் வழிநடத்துவதால், பெருமானை அடையும் வகையை உணர்த்தும் பாடல்கள் கொண்ட பதிகம் என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். நெடு என்ற சொல்லினை வாயில் மற்றும் மாடம் ஆகிய இரண்டு சொற்களுடன் இணைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.

கடைகொணெடு மாடமிக வோங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின் மாகறலுளா னடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைக ளொல்குமுடனே

அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.09.11) தேவாரப் பாடல்களைப் பாடும் அடியார்களும் கேட்கும் அடியார்களும், சிறப்பு வாய்ந்த சிவ கணங்களுடன் இணைந்து சிவலோகத்தில் இருப்பார்கள் என்று சுந்தரர் கூறுகின்றார். காரூர்=மேகங்கள்; போரூர் புனல்=இரை கரைகளிலும் மோதி போர் புரியும் ஆறு; அழகால் என்ற சொல் மூலம் மொழிக்குற்றம் மற்றும் இசைக்குற்றம் இன்றி பாடும் அடியார்களின் தன்மையை குறிப்பிடுகின்றார்.

காரூர் மழை பெய்து பொழி அருவிக் கழையோடு உந்திட்டு இரு கரையும்

போரூர் புனல் சேர் அரிசிற்கரைப் பொழிலார் திருப்புத்தூர்ப் புனிதர் தம்மை

ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும்

சீரூர் தரு தேவர் கணங்களொடும் இணங்கிச் சிவலோகம் எய்துவரே

திருநாவலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.17.11) சுந்தரர், தேவாரப் பாடல்களை ஆர்வத்துடன் பாடும் அடியார்களும் கேட்கும் அடியார்களும், தங்களது வினைகளை முற்றிலும் இறைவனது அருளால் நீக்கிக் கொள்வார்கள் என்று கூறுகின்றார். காதலித்து=என்றும் குறையாத அன்பு கொண்டு; ஆதரித்து=விருப்பத்துடன்; நற்றக்கவன்= நல்ல தகுதியை உடையவன்;

நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்க முனையரையன்

ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர் அணி நாவலூர் என்று

ஓத நற்றக்கவன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ்

காதலித்தும் கற்றும் கேட்பவர் தம் வினை கட்டறுமே

பழமண்ணிப்படிக்கரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.22.10), சுந்தரர், தேவாரப் பாடல்களை சொல்லும் அடியார்கள், கேட்கும் அடியார்கள் மற்றும் அவர்களின் சுற்றத்தார் நண்பர்கள் ஆகிய எவர்க்கும் எப்போதும் துன்பம் இருக்காது என்று கூறுகின்றார்.

பல்லுயிர் வாழும் தெண்ணீர்ப் பழமண்ணிப் படிக்கரையை

அல்லியந் தாமரைத் தார் ஆரூரன் உரைத்த தமிழ்

சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும்

எல்லியும் நன்பகலும் இடர் கூருதல் இல்லையன்றே

கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.53.10) சுந்தரர், தேவாரப் பாடல்களை பாடும் அடியார்கள் மற்றும் கேட்கும் அடியார்களின் பாவங்கள் மறைந்து விடும் என்று கூறுகின்றார்.

மாடமல்கு கடவூரின் மறையோர் ஏத்து மயானத்துப்

பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர்

நாடி நாவலாரூரன் நம்பி சொன்ன நற்றமிழ்கள்

பாடும் அடியார் கேட்பார் மேல் பாவமான பறையுமே

திருப்பனையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.87.10) சுந்தரர், தேவாரப் பாடல்களை கேட்டு உகக்கும் அடியார்கள் பண்பினால் சிறந்த அழகியராக கருதப் படுவார்கள் என்று கூறுகின்றார். வஞ்சி என்ற சொல்லுக்கு ஒரு வகையான மலர் என்றும். அண்டை நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கொள்ளும் ஆடவர்கள் வளரும் திருநாவலூர் என்பது மற்றொரு பொருள்.

வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர் மாதவர் வளரும் வளர் பொழில்

பஞ்சின் மெல்லடியார் பயிலும் திருப்பனையூர்

வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகையப்பன் வன்றொண்டன்

செஞ்சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே

பொழிப்புரை:

மலை போன்று நன்கு உயர்ந்தும் வலிமையாகவும் காணப்படும் மதில்களால் சூழப்பெற்ற கழுமலம் (சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தில் பொருந்தி உறைகின்ற கடவுளை போற்றி, ஞானசம்பந்தன் உரைத்த, நன்மை அளிக்கும் பாடல்களை, இறைஞானத்தை உணர்த்தும் தமிழ் பாடல்களை, அதன் பொருளை நன்கு உணர்ந்து வல்லவராக திகழ்ந்து பதிகங்கள் ஓதும் அடியார்களும், அத்தகைய அடியார்கள் வாயிலாக கேட்கும் அடியார்களும், இறைவனது அருளால் மட்டும் செல்லக்கூடிய சிவலோகத்திற்கு பழமையான வானவர்கள் உடன் வர செல்வார்கள்.

முடிவுரை:

சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் வேறுவேறு பாடல்களில் குறிப்பிட்டு, பன்னிரண்டு பாடல்கள் கொண்ட பதிகமாக இந்த பதிகம் திகழ்கின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடலில் அர்ஜுனனுக்கு அருள் புரிந்த தன்மையை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அடுத்த பாடலில் திரிபுரத்து பறக்கும் கோட்டைகள் மூன்றினையும் எரித்து அழித்த வீரச்செயலையும் குறிப்பிடுகின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடல் தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்ட செயலையும், நான்காவது பாடல் வேத நெறிகளுக்கு மாறாக செய்யப்பட்ட தக்கனின் வேள்வி முற்றுப் பெறாமல் அழித்த செய்கையையும் உணர்த்துகின்றன. தாருகவனத்து முனிவர்கள் தன் மீது ஏவிய புலியை கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக் கொண்ட செயலை ஐந்தாவது பாடலிலும், பூத கணங்களுடன் இணைந்து நடனம் பெருமான் ஆடும் அழகினை ஆறாவது பாடலிலிலும் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். ஏழாவது பாடல் மற்றும் பத்தாவது பாடல்களில் மாதொருபாகனாக பெருமான் இருக்கும் தன்மையை உணர்த்தும் திருஞானசம்பந்தர் எட்டாவது பாடலில் கணபதி மற்றும் முருகப் பெருமானுக்கு தந்தையாக இருக்கும் தன்மையை உணர்த்துகின்றார். ஒன்பதாவது பாடலில் மார்க்கண்டேயருக்காக இயமனை வீழ்த்திய வீரச்செயலும், பதினோறாவது பாடலில் வராகமாக செருக்குடன் திரிந்த திருமாலை அடக்கிய செயலும்,குறிப்பிடப் படுகின்றன. இத்தகைய பல அரிய செயல்களைச் செய்த பெருமானின் புகழினை உணர்த்தும் பாடல்களை பாடும் அடியார்களும் கேட்கும் அடியார்களும் பெறவிருக்கும் பலன் கடைப் பாடலில் உணர்த்தப் படுகின்றது. பதிகங்களை ஓதுவோர் அடையக் கூடிய பலன்களே பெரும்பாலான பதிகங்களில் திருஞான சம்பந்தரால் குறிப்பிடப் பட்டுள்ளன. ஆனால் இந்த பதிகத்தினை வல்லவர்கள் ஓத, கேட்கும் அடியார்களும் அதே பலனை பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அந்த வகையில் தனிச் சிறப்பை பெற்றுள்ள இந்த பதிகத்தினை நன்கு உணர்ந்து ஓதியும், வல்லவர்கள் ஓதக்கேட்டும் சிவலோகம் செல்வதற்கான தகுதியை நாம் அடைவோமாக.



Share



Was this helpful?