இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


காரைகள் கூகைமுல்லை

காரைகள் கூகைமுல்லை


பதிக எண்: 2.84 - திருநனிபள்ளி - பியந்தை காந்தாரம்

பின்னணி:


செம்பனார் கோயில் எனப்படும் செம்பொன்பள்ளி தலத்திலிருந்து வெண்காடு செல்லும் வழியில் ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள தலம். புஞ்சை என்று மக்கள் வழக்கில் இன்று வழங்கப்படுகின்றது. திருஞானசம்பந்தர் இந்த தலத்தின் மீது அருளிய தேவாரப் பாடல்களின் விளைவாக, பாலை நிலம் நெய்தலாக மாற்றப்பட்டு, பின்னர் மருத நிலமாக மாறி பொன் விளையும் பூமியாக, பொன் செய்யும் நிலங்களைக் கொண்டதால், பொன்செய் என்று அழைக்கப்பட்ட தலத்தின் பெயர் நாளடைவில் புஞ்சை என்று மருவிவிட்டது போலும். கிடாரம் கொண்டான் என்றும் மக்களால் அழைக்கப்படுகின்றது. ஆனந்த தாண்டவபுரம் எனும் தலத்திற்கு அருகில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது (12 கி.மீ. தூரத்தில் செம்பொனார் கோயில் செல்லும் வழியில் உள்ள தலம். இந்த தலம் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ளது. இராஜேந்திரச் சோழன் வடநாடுகளை வெற்றி கொண்டதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கியது போன்று, கடாரத்தை வெற்றி கொண்டதை நினைவூட்டும் வகையில் இந்த நகரம் உருவாக்கப்பட்டதால், கிடாரம்கொண்டான் என்ற பெயர் வந்தது.

இந்நாள் வரை சீர்காழி கோலக்கா ஆகிய தலங்களையே தரிசித்த திருஞானசம்பந்தர் சென்ற முதல் தென் காவிரித் தலம் இது தான். ஞான சம்பந்தரின் தாய் பிறந்த தலம். சீர்காழியில் ஞானப்பால் உண்டு பதிகங்கள் பாடிய அதிசயத்தை கேள்விப்பட்டிருந்த நனிபள்ளி தலத்து அந்தணர்கள், வேத ஒலிகளின் பின்னணியில் மங்கல வாத்தியங்கள் முழங்க, சீர்காழி வந்தடைந்து திருஞானசம்பந்தரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார்கள்; மேலும் அருகிலிருந்த ஊர்களிலிருந்தும் சிவத்தொண்டர்கள் வந்து சூழவே சீர்காழி நிலவுலகில் உள்ள கயிலாயம் போன்று தோற்றம் அளித்ததாக சேக்கிழார் கூறுகின்றார். அவ்வாறு திரண்டு வந்த தொண்டர்களுக்கு, சீர்காழி நகரத்தவர்கள் திருவமுது அளித்து சிறப்பித்தனர் என்றும் சேக்கிழார் கூறுகின்றார். சண்பை என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும். தங்களது ஊருக்கு வருகை புரியும் மனிதர்களுக்கு உணவு வழங்குதல் ஊரிலுள்ளோரின் கடமை என்பதை பெரியபுராணம் இங்கே உணர்த்துகின்றது.

வந்த திருத் தொண்டர்கட்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்றுள்ளோர்க்கும்

சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதலான சிறப்பின் செய்கை

தந்தம் அளவினில் விரும்பும் தன்மையினால் கடனாற்றும் சண்பை மூதூர்

எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எவ்வுலகும்ஏத்து நாளில்

நனிபள்ளி தலத்தில் இருந்த வந்த மறையவர்கள், தங்கள் பதிக்கு சம்பந்தர் எழுந்தருளி ஆங்கே வீற்றிருக்கும் பெருமானை கும்பிடவேண்டும் என்ற தங்களது விருப்பத்தை பிள்ளையார் அவர்களிடம் தெரிவித்தார்கள் அவர்களது விருப்பத்தினை ஏற்றுக் கொண்ட சம்பந்தர், தோணிபுரத்து இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு, நனிபள்ளி மற்றும் அருகில் உள்ள தலங்கள் செல்ல விருப்பம் கொண்டார். இதுவே அவரது வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட இரண்டாவது தலயாத்திரை ஆகும். நனிபள்ளி தலம், திருஞான சம்பந்தரின் தாயாரின் பிறந்த ஊர் என்பதால், ஆங்கே வாழ்ந்து வந்த அவரது உறவினர்கள், சம்பந்தரின் திறமையை, இறைவன் அவருக்கு அருளிய தன்மையை தங்களது ஊரில் உள்ள மற்றவரும் அறிந்து கொண்டு சிவபெருமானை போற்ற வேண்டும் என்று விரும்பியதால், தங்களது தலத்திற்கு திருஞான சம்பந்தர் விஜயம் செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டார்கள் போலும்.
தாமரை மலரின் உள்ளே இருக்கும் இதழ்கள் போன்று சிறியதும் மேன்மை வாய்ந்ததும் ஆகிய திருவடிகளை நிலத்தின் மீது பொருந்தும் வண்ணம் தனது மகன் நடப்பதையும், தனது மகனை தானலாது வேறொருவர் தாங்கிச் செல்வதையும் பொறுக்காத சிவபாத இருதயர், உமையம்மையால் பாலுடன் கலந்து ஞானம் ஊட்டப்பட்ட குழந்தையைத் தனது தோளின் மீது ஏற்றிக் கொண்டு செல்லலானார். அவ்வாறு செல்லும் போது, நனிபள்ளி தலத்தினை நெருங்கவே, மலர் சோலைகள் சூழ்ந்த இந்த பதி யாது என்று குழந்தை வினவ, தந்தையார் மிகழ்ச்சியுடன் குவளை மலர்கள் நிறைந்த வயல்களை உடைய நனிபள்ளி என்று கூறியவுடன், காரைகள் கூகை என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடினார். சிவபெருமான் உறையும் நகர் என்பதால், நனிபள்ளி நகரமே தொழுவதற்கு உரியது என்பதை உணர்த்தும் வகையில், சம்பந்தர் நகரத்தினைத் தொழுத செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது

தேனலரும் கொன்றையினார் திருநனிபள்ளியினைச் சார செல்வார்

வான் அணையும் மலர்ச் சோலை தோன்றுவது எப்பதி என்ன மகிழ்ச்சி எய்திப்

பானல் வயல் திருநனிபள்ளி எனத் தாதையார் பணிப்பக் கேட்டு

ஞான போனகர் நகர் தொழுது நற்றமிழ்ச்சொல் தொடைமாலை நவிலல் உற்றார்

தலம் வந்தடைந்த சம்பந்தர் பாலை நிலமாக இருந்ததை கண்டு மனம் வருந்தினார். பாலை நிலத்தை கண்டவுடன் அந்த காட்சி பரமன் நடமாடும் காட்டினை சம்பந்தருக்கு நினைவூட்டியது போலும். இடுகாடு அமர்ந்த பிரான் என்று சிவபிரானை குறிப்பிடாமல், இடுகாட்டின் தன்மைகளை விளக்கி அத்தகைய இடுகாடு அமர்ந்த பிரான் என்று கூறுவது இங்கே நோக்கத்தக்கது. பாலை நிலத்தின் காட்சிகள் இந்த பதிகத்தின் முதல் பாடலில் முதல் இரண்டு வரிகளில் விவரிக்கப் பட்டுள்ளன.
இறைவனின் திருநாமம் நற்றுணையப்பர்; இறைவியின் திருநாமம்; மலையான் மடந்தை, பர்வதபுத்ரி; இராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயிலின் மேலே, சிவபெருமான், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோர் சுதைச் சிற்பங்களாக தங்களது வாகனங்களின் மீது அமர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்ற சுயம்பு லிங்கம். பெரிய கருவறை. அகத்தியர்,விநாயகர், தென்முகக்கடவுள், லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை முதலானவை சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள கோஷ்ட மூர்த்தங்கள். அகத்தியர் மற்றும் விநாயகருக்கு பெருமான் திருமணக் கோலம் காட்டியதாக சொல்லப்படுகின்றது. உட்பிராகாரத்தில் நால்வர் மற்றும் சூரியன் விநாயகர் சன்னதிகளும் மகாமண்டபத்தில் நடராஜர் சன்னதியும் உள்ளன. சித்திரை மாதத்தில் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை, சூரியனின் கதிர்கள் பெருமானின் திருமேனி மீது படர்கின்றன. விநாயகர், பலிபீடம், நந்திமண்டபம் ஆகியவற்றைக் கடந்து உள்ளே செல்லும்போது, நமக்கு வலதுபுறத்தில் மேற்கு நோக்கிய சன்னதியில் மலையான்மடந்தை சன்னதி உள்ளது. மூலவர் சன்னதிக்கு முன்பாக இடது புறத்தில் பர்வதராசபுத்திரி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதி உள்ளது. கருவறையைச் சுற்றிலும் சிறிய அளவில் அழகிய சிற்பங்கள் உள்ளன. கோயிலின் சுற்றுப்புற சுவற்றினில் கோயிலைக் கட்டிய பராந்தகச் சோழனின் சிலை பதிக்கப்பட்டுள்ளது. சண்டிகேஸ்வரர் தந்து மனைவியுடன் காட்சி தருகின்றார். பொதுவாக மகிடனை வென்ற கோலத்தில் காட்சி தருகின்ற துர்க்கை, இங்கே சும்ப நிசும்பர்களை வதம் செய்த கோலத்தில் காணப்படுகின்றாள்.
பாடல் 1:


காரைகள் கூகை முல்லை களவாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினிச்

சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர் தான்

தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள

நாரைகள் ஆரல் வாரி வயன் மீதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

காரைகள் கூகை என்ற சொற்கள் தொடங்கி சுடுகாடு வரை உள்ள இடைப்பட்ட சொற்கள் பாலை நிலத்திற்கு உரிய பொருட்களை குறிப்பதை நாம் உணரலாம். இவை அனைத்தும் பாலை நிலத்தில் மிகவும் அதிகமாக காணப்படும் தாவரங்கள்; நமர்காள் என்று பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், தன்னுடன் சூழ வந்த அடியார்களை குறிப்பிட்டு அழைத்து சொல்லிய சொற்களாக இந்த பதிகத்தின் பாடல்கள் அமைந்துள்ளன. ஈகை=இண்டைச்செடி, ஒரு வகை முட்செடி; தொடரி=முட்செடி; கூகை என்பதற்கு கோட்டான் என்றும் ஒருவகை முட்செடி என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள்; கவின்=அழகு; பம்மி=அடர்ந்து படர்ந்தும்; தந்தையாரின் தோளில் இருந்தவாறு நனிபள்ளி தலத்தை நோக்கிய திருஞான சம்பந்தப் பெருமானுக்கு, வளம் குறைந்து பாலையாக இருந்த தன்மை, பெருமான் வாழும் சுடுகாட்டினை நினைவூட்டியது போலும். சுடுகாட்டில் வளரும் செடிகள் மற்றும் கொடிகளை குறிப்பிட்டு இந்த பதிகத்தினை தொடங்குகின்றார். சுடுகாட்டின் சூழ்நிலையை உணர்த்திய வண்ணம் பதிகத்தின் தொடக்கப்பாடல் உள்ளது மிகவும் அரிதாகும்.

பொழிப்புரை:

காரை வகைச் சார்ந்த முட்செடிகள், கூகை என்று அழைக்கப்படும் முட்செடிகள், முல்லை, களவாகை, இண்டைச்செடி, இண்டையைப் பற்றி படரும் முட்செடி, கள்ளிச்செடி, அழகினைத் தரும் சூரை செடிகள், முதலிய முட்செடிகள் அடர்ந்து படர்ந்தும் முற்றியும் வளர்ந்து காணப்படும் சுடுகாட்டில் உறையும் சிவபெருமான் உறையும் இடம் சோலைகள் சூழ்ந்த நனிபள்ளி ஆகும். நீர்நிலைகளில் காணப்படும் ஆரைச் செடிகளை, தேரைப் பூச்சிகள் மிதித்து தள்ள ஆங்கே காணப்படும் வாளை மீன்கள் துள்ளுகின்றன. அதனால் அருகில் உள்ள சேற்றில் படர்ந்த வள்ளைக் கொடிகள் துவண்டு ஒதுங்க, அதனடியில் இருந்த ஆரல் மீன்கள் வெளிப்பட அவற்றை நாரைகள் கொத்தித் தின்னுமாறு அமைந்துள்ள வயல்களில் எருமை மாடுகள் மகிழ்ந்து படிகின்றன. அத்தகைய தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக

பாடல் 2:


சடையிடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம் வளர் திங்கள் கண்ணி அயலே

இடையிடை வைத்தது ஒக்கு மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதி தான்

மடையிடை வாளை பாய முகிழ்வாய் நெரிந்து மணம் நாறு நீலம் மலரும்

நடையுடை அன்னம் வைகு புனலம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

வெள்ளம்=கங்கை; படப்பை=தோட்டம்; பெருமான் தனது சடையினில் ஒற்றைப் பிறையுடன் சரணம் அடைந்த சத்திரனை சூட்டிக் கொண்ட நாள் முதல், சந்திரன் வளரத் தொடங்கியதால் வளர் திங்கள் என்று கூறுகின்றார். முகிழ்=முழுவதும் மலர்ந்து வாய் திறந்தது போன்று காட்சியளிக்கும்; அன்னத்தின் நடையழகு பொதுவாக மகளிரின் அழகு நடைக்கு உவமையாக சொல்லப்படுவதால் அன்னத்தின் நடையை அழகு என்று குறிப்பிட்டு அழகு நடையுடை அன்னம் என்று இங்கே குறிப்பிடுகின்றார்,

பொழிப்புரை:

சடையின் இடையே ஒடுங்கி உள்ளே தங்கிய வெள்ளநீர் கங்கை நதியையும், அதன் அருகே பொருந்தியுள்ள வளரும் பிறைச் சந்திரனையும், கொத்து கொத்தாக பூத்த மலர்கள் கலந்து இடையிடையே வைத்து தைக்கப்பட்ட மலர் மாலைகளையும், தனது சடையில் கொண்டுள்ள இறைவன் உறையும் பதி தான் நனிபள்ளி தலமாகும். வயல்களுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்களில் வாளை மீன்கள் துள்ளி குதித்து பாய, அந்த ஓடைகளில் உள்ள கருநீல மலர்கள் தங்களது வாய் முழுவதும் திறந்த நிலையில் மலர, அந்த மலர்கள் வீசும் நறுமணம் கமழ, அருகில் உள்ள தோட்டத்தில் அழகிய நடை பயிலும் அன்னங்கள் காணப்படும் நீர்நிலைகள் உள்ள தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக

பாடல் 3:


பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான்

கறு மலர் கண்டமாக விடம் உண்ட காளை இடமாய காதல் நகர் தான்

வெறுமலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடுபோது அலர்த்த விரை சூழ்

நறுமலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

பெறுமலர்=தங்களுக்கு கிடைத்த மலர்கள்; ஒழியாது=இடைவிடாது; காளை=தலைவன்; வெறுமலர்=தேன் இல்லாமல் வெறுமையாக இருக்கும் மலர்கள்; கீழே இழுக்கப்பட்டு விடப்பட்ட கிளைகள் வேகமாக மேலெழும்புவதால் ஏற்படும் விளைவினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது, அவர் அருளிய கழுமலம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்து பாடல் ஒன்றினை (1.129.7) பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில், மலர் பறிப்பதற்காக கீழே இழுக்கபட்ட கிளைகள் விடுபட்டவுடன் வேகமாக மேலே சென்று, அருகிலிருந்து மாமரத்தின் கிளைகளை தாக்க, அந்த கிளைகளிருந்து மாங்காய்கள் கவண் காய்கள் போன்று கீழே சுனையில் விழ, சுனையில் இருந்த பறவைகள் பயந்து கரை சேர்கின்றன என்று சம்பந்தர் கூறுகின்றார். புதைப்ப=சென்று பொருந்த; கொக்கு=மாமரம்; புவி முதல் ஐந்து=நிலம் நீர் காற்று தீ ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள்; புலன் ஐந்து=சுவை, ஒளி, நாற்றம், ஒலி மற்றும் தொடு உணர்வு ஆகிய ஐந்து தன்மாத்திரைகள்; நிலன் ஐந்து= இந்த ஐந்து தன்மாத்திரைகள் அமர்வதற்கு இடமாக உள்ள மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து ஞானேந்திரியங்கள்; கரணம் நான்கு=மனம் புத்தி சித்தம் மற்றும் அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்கள்; மேற்கண்ட தத்துவங்களோடு தொடர்பு கொண்டுள்ள ஐந்து கன்மேந்திரியங்களையும் நாம் இங்கே குறிப்பிடுவதாக கருதி பொருள் கொள்ள வேண்டும். இந்த இருபத்து நான்கு தத்துவங்களாகவும், அவற்றின் பயனாகவும், அவற்றின் உருவமாகவும் உள்ள இறைவன், அருவமாகவும் இருக்கின்றான் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

புவி முதல் ஐம்பூதமாய்ப் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய்க் கரணம் நான்காய்

அவை அவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய் நின்றான் அமரும் கோயில்

தவ முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு கொம்பு புதைப்பக் கொக்கின் காய்கள்

கவண் எறி கல் போல் சுனையில் கரை சேரப் புள் இரியும் கழுமலமே

பொழிப்புரை:

தங்களுக்கு கிடைத்த மலர்களைக் கொண்டு இடைவிடாது தொண்டர்கள் வழிபாடு செய்ய, அதனை ஏற்றுக்கொண்ட பெருமான், விடத்தை தேக்கியதால், கருங்குவளை மலர் படிந்தது போன்று கழுத்தினில் கருமை நிறம் படைத்தவராக உள்ளார். விடத்தினை உண்டு தனது ஆண்மையை உலகுக்கு உணர்த்திய பெருமான், அனைவர்க்கும் தலைவனாகவும் விளங்குகின்றார். அத்தகைய பெருமான் மிகுந்த விருப்பத்துடன் தனது உறைவிடமாக ஏற்றுக் கொண்டுள்ள இடம் நனிபள்ளி தலமாகும். எண்ணற்ற வண்டுகள் தேன் நுகர்ந்ததால் தேன் இல்லாமல் வேற்று மலர்கள் நிறைந்த கொம்புகள் உடைய மரங்கள், அந்த வண்டுகள் அமர்ந்ததால், வண்டுகளின் பாரம் தாங்காமல் கீழே தாழ்ந்து இருந்தன. வண்டுகள் பறந்து சென்றதும் அந்த கிளைகள் மேலேழுந்து செல்ல, அவ்வாறு மேலெழுந்து செல்வதால் ஏற்படும் அதிர்வினில் அரும்பாக இருந்த பல மலர்கள் மலர்வதால், அவ்வாறு புதியதாக மலர்ந்த பூக்களின் நறுமணம் எங்கும் பரவ, அந்த நறுமணத்தால் கவரப்பட்ட வண்டுகள் வந்து அவ்வாறு மலர்ந்த பூக்களில் பொருந்தி தேன் உண்ட களைப்பில் உறங்கும் இதழ்களைக் கொண்ட மலர்கள் கொண்ட சோலைகள் நிறைந்துள்ள தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக ,

பாடல் 4:


குளிர்தரு கங்கை தங்கு சடை மாடு இலங்கு தலைமாலையோடு குலவி

ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகமாக உடையானுகந்த நகர் தான்

குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல

நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகு நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

மாடு=அருகே; நாரை என்பது நரை என்று குறுகியது. குலவி=விருப்பத்துடன் கூடி மகிழ்தல்; கொம்மல்=கொம்பு என்று அழைக்கப்படும் இசைக்கருவி; சிலர் கொம்மல் என்ற சொல்லுக்கு கும்மிப் பாட்டு என்று பொருள் கூறுகின்றனர். குருகுகள்=நீர்க்குருவிகள்; மாலை=அழகாக கோர்க்கப்பட்ட மாலையில் பூக்கள் வரிசையாக உள்ளது போன்று பறவைகள் சோலைகளில் அமர்ந்துள்ள நிலை;

பொழிப்புரை:

தனது சடையில் தங்கும் குளிர்ந்த நீரினை உடைய கங்கை நதியின் அருகினில் தலைமாலையினை மிகுந்த விருப்பமுடன் சூடியவராக காணப்படும் இறைவன், ஒளி வீசும் பிறைச் சந்திரனையும் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ளார். இத்தகைய பெருமான், உமை அன்னையைத் தனது உடலில் ஒரு பாகமாக வைத்துள்ள பெருமான். விருப்பமுடன் எழுந்தருளியுள்ள நகரம் தான் நனிபள்ளி நகரம். குளிர்ந்ததும் கொம்பு என்று அழைக்கப் படுவதும் ஆகிய இசைக் கருவியில் இருந்து எழும் நாதத்திற்கு ஏற்ப குயில்கள் பாடுவதைக் கேட்கும் பெடை வண்டுகளும் இசை முரலும் அழகிய சோலைகளில் வரிசை வரிசையாக நாரைகளும் குருகுகளும் வாழ்கின்றன. அத்தகைய தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக;

பாடல் 5:


தோடொரு காதனாகி ஓர் காது இலங்கு சுரி சங்கு நின்று புரளக்

காடு இடமாக நின்று கனலாடும் எந்தை இடமாய காதல் நகர் தான்

வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால்

நாடு உடனாடு செம்மை ஒலி வெள்ளம் ஆகும் நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

கனல்=நெருப்பு; வீடு உடன் எய்துவார்கள்=பேரின்பம் தரும் முக்தி வீட்டினை இந்த பிறவி முடிந்தவுடனே அடையும் தகுதி படைத்தவர்கள்; வெறிநீர்=நறுமணம் உடைய நீர்; விதி=முறை; தினமும் பெருமானை நோக்கி செய்யப்படும் பூஜை முதலிய வழிபாடுகள் முடிந்த பின்னர், மலர்கள் தோய்ந்து இருக்கும் நீருடன் சிறிது பாலையும் சேர்த்து, பூமியில் தெளித்து இதமர்க்யம் என்று மூன்று முறை சொல்லி முடிப்பார்கள். இந்த பழக்கத்தையே, விதி என்று வெறிநீர் என்று விரலால் தெளிப்ப என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். அந்தணர் குலத்தில் அவதரித்த மூன்று வயதுக் குழந்தை, தனது தந்தையார் பூஜை செய்யும் முறையினை உற்று கவனித்து தான் உணர்ந்த செய்திகளை பதிகத்தில் கூறும் நயத்தை நாம் உணரலாம்.

தெளிந்த நீர்நிலைகளில் அந்தணர்கள் காலை, நண்பகல் மற்றும் மாலை நேரங்களில் சந்தியா வந்தனம் செய்வது வழக்கம். அத்தகைய நீர்நிலைகளில் மலர்ந்துள்ள மலர்களின் நறுமணம் நீருடன் கலந்து இருப்பதை வெறிநீர் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றாரோ என்றும் தோன்றுகின்றது. மேலும் இந்த சந்தியாவனத்தின் ஒரு பகுதியாக சூரியனுக்கு அர்க்கியம் வழங்கி சூரியன் மூலமாக அனைத்து தேவர்களுக்கும் தினமும் அர்க்கியம் வழங்கும் முறையில். இரண்டு கைகளையும் இணைத்து நீரினை முகந்து, விரல்களின் நுனியால் அந்த நீரினை தெளிப்பது வழக்கம். எனவே இவ்வாறு செய்யப்படும் சந்தியாவந்தனம் இங்கே குறிப்பிடப்படுகின்றது என்ற விளக்கமும் பொருத்தம் ஆனதே.

தோடுடைய செவியன் என்று ஒரு காதினில் தோட்டினை அணிந்த பெருமான் என்று தனது முதல் பதிகத்தினை தொடங்கிய திருஞானசம்பந்தர் இந்த பாடலில் மற்றொரு காதினில் வெண் சங்குக் குழையினை அணிந்துள்ளார் என்று உணர்த்துகின்றார். சுரிசங்கு=வெண் சங்கினால் செய்யப்பட்ட வளைந்த குழை; தோடும் குழையும் அணிந்த பெருமான் என்று, தேவியை தனது உடலில் ஏற்றுல் பெருமானின் மாதொரு பாகன் கோலத்தை பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் திருஞான சம்பந்தரின் பதிகங்களில் மிகவும் அதிகமாக உள்ளன.

தோட்டினையும் குழையினையும் அணிந்த பெருமான் என்று செங்காட்டங்குடி தலத்து பதிகத்து பாடல் ஒன்றினில் (1.61.8) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பீடு=பெருமை; அடர்த்த=அடக்கிய, வலிமையை குறைத்த; சேடு=பெருமை; கணபதீச்சரம் என்பது திருக்கோயிலின் பெயர். செங்காட்டங்குடி என்பது தலத்தின் பெயர் இவை இரண்டையும் இணைத்து சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுவதை நாம் உணரலாம். சேர்ந்தாடும் காடு உடையான் என்று பூத கணங்களுடன் இணைந்து பெருமான் நடனம் ஆடும் செயலை குறிக்கின்றார். காட்டில் உறைவதால் காட்டினை மட்டும் தனது இருப்பிடமாக உடையவன் என்று நினைத்து விடாதீர்கள் என்று உணர்த்தும் முகமாக, நாடு உடையான் என்று பல தலங்களிலும் நமக்கு அருள் புரியும் நோக்கத்துடன் இறைவன் உறைவதையும் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். .

தோடுடையான் குழையுடையான் அரக்கன் தன் தோள் அடர்த்த

பீடுடையான் போர் விடையான் பெண்பாகம் மிகப் பெரியான்

சேடுடையான் செங்காட்டங்குடி உடையான் சேர்ந்தாடும்

காடுடையான் நாடு உடையான் கணபதீச்சரத்தானே

புகலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (1.30.5) பொற்குழையும் தோடும் அணிந்த பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நாதன் என்ற சொல் எதுகை கருதி நாதான் என்று நீண்டது. தாதார் மலர்=மகரந்தப் பொடிகள் பொருந்திய மலர்; ஏற முடித்து=உயர தூக்கிக் கட்டி; கன பொற்குழை=கனமாக, எடை மிகுந்து உள்ளதும் பொன்னால் செய்யப்பட்டதும் ஆகிய குழை அணிகலன்; தண்சடை என்று கங்கை நதியை அடக்கிய தன்மையை குறிப்பிடுகின்றார்.

காதார் கன பொற்குழை தோடு அது இலங்கத்

தாதார் மலர் தண் சடையேற முடித்து

நாதான் உறையும் இடமாவது நாளும்

போதார் பொழில் பூம்புகலி நகர் தானே

தனது இடது காதினில் தோட்டினையும் வலது காதினில் குழையையும் அணிந்துள்ள பெருமான் என்று குரங்கணின்முட்டம் தலத்து பதிகத்தில் (1.31.4) குறிப்பிடும் திருஞான சம்பந்தர், மற்றவர்களுக்கு கை கூடாத செயல்களை மிகவும் எளிதாக செய்யும் வல்லமை வாய்ந்தவர் பெருமான் என்று கூறுகின்றார். வலத்தொரு காதில் என்ற தொடரை குழை என்ற சொல்லுடன் இணைத்து பொருள் கொள்ளவேண்டும். வாடாததும் விரிந்து மலர்ந்ததும் ஆகிய கொன்றை மலர்களை அணிந்துள்ளவனும், தோட்டினை இடது காதினில் உடையவனும் ஆகிய பெருமான் தனது வலது காதினில் குழை ஆபரணத்தை அணிந்துள்ளான்; அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படும் பெருமான், ஏனோர் செய்ய முடியாத செயல்களையும் எளிதில் செய்யும் வல்லமை வாய்ந்தவன். அத்தகைய பெருமான் எப்போதும் நடனம் ஆடுபவராகவும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு உடையவராகவும் உள்ளார்.

வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில்

தோடார் குழையான் நல பாலன நோக்கி

கூடாதன செய்த குரங்கணின் முட்டம்

ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே

சமணர்களின் சூழ்ச்சியினால், மத யானையைக் கொண்டு தனது தலையை இடற பல்லவ மன்னன் கட்டளையை ஏற்று தன்னை நோக்கி வந்த மதயானையைக் கண்டு சிறிதும் அச்சம் கொள்ளாமல், அருளிய பதிகத்தின் (4.2) ஏழாவது பாடலில், பெருமானின் தோற்றத்தை விவரிக்கும் அப்பர் பிரான் தோடு மற்றும் குழை அணிந்தவனாக பெருமானைக் கண்டதை நமக்கு உணர்த்தும் பாடல் இது. குவவு=தோளின் திரட்சியை குறிப்பிடுகின்றது, குலவு என்ற சொல் குவவு என்று திரிந்தது; திரண்ட தோள்களை உடையவன் பெருமான். விலைபெறு சங்கக் குழை=சங்கினால் செய்யப்பட்டதும் விலை உயர்ந்ததும் ஆகிய குழை ஆபரணம். விலை உயர்ந்த குழையினை குறிப்பிடும் பாடலில் விலையே இல்லாத கபாலம் என்று நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார். விலை மதிக்க முடியாத கபாலம் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும்.

கொலை வரி வேங்கை அதளும் குவவோடு இலங்கு பொற்றோடும்

விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக்கலனும்

மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்த்து இலங்கும் மிடறும்

உலவு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

பாண்டி நாட்டில் பூவணம் திருத்தலம் அப்பர் பிரான் சென்றபோது, பெருமான் அவருக்குத் தனது திருக்கோலத்தைக் காட்டினார். அதனைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான் தான் கண்ட காட்சியை பதிகமாக வடித்தார். அந்த பதிகத்தின் (6.18) முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு காதினில் வெண் குழையையும், மற்றொரு காதினில் தோட்டினையும் அணிந்து பெருமான் அளித்த காட்சியை காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றியதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்

கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும்

இடியேறு களிற்று உரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்

பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

திருவாய்மூர் தலத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.77.7) அப்பர் பிரான், தனக்கு பெருமான் காட்டியருளிய கோலத்தில், ஒரு காதில் தோடும் மற்றொரு காதினில் குழையும் இருப்பதாக தான் கண்டேன் என்று கூறுகின்றார். மழை=மழை தரும் மேகம்; பெருமான் தனது மார்பினில் பூணூலை வலத்தே அணிந்துள்ளதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். மங்கல நாட்களில் பூணூல் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வரை வருமாறு, மார்பின் குறுக்கே அணியவேண்டும். பெருமானுக்கு அனைத்து நாட்களும் மங்கல நாட்கள் என்பதால், என்றுமே ஒரே விதமாக பெருமான் பூணூல் அணிந்துள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தன்மை=மற்றவர் வகுத்த வழியின் கண் செல்லாது, தான் செல்லவேண்டிய பாதையைத் தானே வகுத்துக் கொண்டுள்ள தன்மை; அனைவர்க்கும் பெரியோனாகத் திகழும் பெருமான், எவரையும் முன்மாதிரியாக கொண்டு பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. இந்த குணத்தையே தன்வயத்தன் என்று சைவ சித்தாந்த நூல்கள் குறிப்பிடுகின்றன.

குழை ஆர் திருத்தோடு காதில் கண்டேன் கொக்கரையும்சச்சரியும் கொள்கை கண்டேன்

இழை ஆர் புரிநூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ் வீணை முரலக் கண்டேன்

தழையார் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்

மழை ஆர் திருமிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

வெஞ்சமாக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.42.5) சுந்தரர் வெண் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு அவரது காதில் இருந்த குழையணி அசைந்தது என்று கூறுகின்றார். குழைக்கும் தோட்டினுக்கும் உள்ள அமைப்பு வேறுபாட்டினை உணர்த்தும் வண்ணம், துளை உடைய குழை என்று இங்கே கூறுகின்றார். பெருமானின் காதுகள் நீண்டு, அவரது தோள்களைத் தொட்ட நிலையினை தூங்கும் காது என்று உணர்த்துகின்றார். கள்ளையே, பிள்ளை, வெள்ளை என்ற சொற்கள் எதுகை கருதி களையே, பிளை, வெளை என்று இடையெழுத்து குறைந்து காணப் படுகின்றன. இங்கே கள் என்ற சொல் பூவினில் இருக்கும் தேனை குறிக்கின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், இறைவன் தனது சீரிய அடியார்களுள் ஒருவனாக தன்னையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தினை வைக்கின்றார். மால்விடை=சிறப்பு வாய்ந்த இடபம்;

துளை வெண் குழையும் சுருள் தோடும் தூங்கும் காதில் துளங்கும் படியாய்

களையே கமழும் மலர்க் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே

பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுதற்கு அரியாய்

வெளை மால்விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே

கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.84) ஒன்பதாவது பாடலில் சுந்தரர், இறைவனை, மகரக் குழையும் தோடும் அணிந்த காதுகளை உடையவனாக காண்கின்றார். இறைவன் தூது சென்றதையும், தன்னை ஆட்கொண்டதையும், தான் இறைவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்டு தனது வாழ்க்கையை மிகவும் சுருக்கமாக சுந்தரர் கூறும் நேர்த்தியை நாம் இங்கே காணலாம். மாதினை ஒரு பாகம் கொண்டுள்ள சிவபிரானை மாதன் என்று அழைக்கின்றார். மிகவும் அரிதான சொல்லாட்சி; இறைவனின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து தான், நாதமும் பின்னர் ஓசையும் பிறந்த செய்தியை இங்கே நாதனும் நாதம் மிகுத்து ஓசையது ஆனவன் என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகின்றார். அடியார்கள் உள்ளத்தின் மீது தான் வைத்துள்ள பற்றினை சிறிது நேரம் கூட நீக்காத இறைவன் என்று குறிப்பிட்டு, சிறந்த அடியார்கள் பெரும் பேற்றினையும் நமக்கு உணர்த்துகின்றார்..

நாதனை நாதம் மிகுத்து ஓசை அது ஆனானை ஞான விளக்கொளியாம் ஊனுயிரைப் பயிரை

மாதனை மேதகு பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்

தூதனை என்றனை ஆள் தோழனை நாயகனைத் தாழ் மகரக் குழையும் தோடும் அணிந்த திருக்

காதனை நாயடியேன் எய்துவது என்று கொலோ கார்வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே

மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல் தான். மிகவும் தொன்மையான கோலம் என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல் ஆடை, குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும் சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைந்து குறிப்பிடப்படும் இனிமையான பாடல்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்

பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்

சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை

கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

இந்த கோலத்தைக் கண்டு மணிவாசகர் மனம் குளிர்ந்தது போன்று, நம்பியாண்டார் நம்பி இந்த பழமையான கோலத்தை எவ்வாறு தான் கண்டார் என்பதை கீழ்க்கண்ட பாடல் நமக்கு உணர்த்துகின்றது. இந்த பாடல் பதினோராம் திருமுறையில் உள்ளது. கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்ற பதிகத்தின் இருபத்தோராவது பாடலில் நம்பியாண்டார் நம்பி, இறைவனை, வலது காதில் குழையும் இடது காதில் தோடும் அணிந்தவனாக காண்கின்றார். கோஷன் என்ற சொல்லின் திரிபு கோடன்: விசயனுடன் போர் செய்வதற்காக ஆரவாரத்துடன் வந்த சிவபெருமான் கோஷன் என்று அழைக்கப் படுகின்றார். சிவபிரான் பேரில் காதல் கொண்டு, அதன் காரணமாக உடல் மெலிந்து தனது கை வளையல்களை இழந்த தலைவியின் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தோடு அணிந்த காது, இடது காது என்று குறிப்பிட்ட அம்மைக்கு உரிய பகுதியில் தோடு அணிந்து இருப்பதை இங்கே சுட்டிக் காட்டுகின்றார். பெருமானை அடைய முடியவில்லையே என்று ஏந்தி வருந்தும் நிலையிலும் பெருமானின் திருநாமங்களை பலவாறாக பிதற்றும் தன்மை, இந்த பாடலின் தலைவி பெருமான் மீது கொண்டுள்ள காதலின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகின்றது

வேடன் என்றாள் வில் விசயற்கு வெங்கணை அன்று அளித்த

கோடன் என்றாள் குழைக் காதன் என்றாள் இடக் காதில் இட்ட

தோடன் என்றாள் தொகு சீர் தில்லையம்பலத்து ஆடுகின்ற

சேடன் என்றாள் மங்கை அங்கை சரி வளை சிந்தினவே

மேற்கண்ட பாடலில் தோடும் குழையும் அணிந்தவனாக குறிப்பிட்டு, மாதொரு பாகனின் நிலையை உணர்த்தியதுடன் நம்பியார் திருப்தி அடையவில்லை போலும். இதே பதிகத்தின் ஐம்பதாவது பாடலில் மிகவும் விவரமாக, இறைவனின் வலது பாகத்தில் உள்ள பொருட்களையும் இடது பாகத்தில் உள்ள பொருட்களையும் பட்டியல் இடுகின்றார். இடம் என்ற சொல், இடது பாகம் மற்றும் இருக்கும் இடம் என்ற இரண்டு பொருட்களில் கையாளப் பட்டுள்ளது. வீ=பூச்செண்டு: பாந்தள்=பாம்பு; சங்கம்=வெண் சங்கால் அமைந்த வளையல்: அக்கு=எலும்பு மாலை: அங்கம்சரி=அங்கு+அம்+சரி: அங்கு, பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்: அம் சரி=அழகாக சரிந்த இடுப்பு. கங்கை, குண்டலம், மழு ஆயுதம், பாம்பு, தோலாடை, அக்கு மாலை, ஆகியவை அம்பலவனை உணர்த்தும் பொருட்களாகவும் தோடு, பூச்செண்டு, சங்கு வளையல், சேலை ஆடை, அழகாக சரிந்த இடுப்பு ஆகியவை அணங்கினை உணர்த்தும் பொருட்களாகவும் இன்கே குறிப்பிடப் பட்டுள்ளன.

கங்கை இடம் வலம் பூ வலம் குண்டலம் தோடு இடப்பால்

தங்கும் கரம் வலம் வெம்மழு வீயிடம் பாந்தள் வலம்

சங்கம் இடம் வலம் தோல் இடம் வலம் அக்கு இடம்

அங்கம் சரி அம்பலவன் வலம் காண் இடம் அணங்கே

இரண்டு செவிகளில் ஒன்றினில் குழை அணிந்தவன் என்று குறிப்பிடுவதன் மூலம், மற்றோர் காதினில் தோட்டினை அணிந்தவன் சிவபெருமான் என்று உணர்த்தும் பாடல், கருவூர்த் தேவர் களந்தை ஆதித்தேச்சரம் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் ஒன்பதாவது பாடலாக உள்ளது. களம்=கழுத்து: நீர்=நீர்மை என்பதன் இடைக்குறை, தன்மை; குமுத மலர் போன்று சிவந்த வாயினையும், கருங்குவளை போன்று கரிய கழுத்தினையும், ஒரு செவியினில் குழை ஆபரணத்தையும், சடையில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டு நெளிகின்ற பாம்பினையும், இடது பகுதியில் தூய்மையான மேகலையையும், தாமரை மலர் போன்ற முகத்தினையும் கண்களையும். பொன் மயமான பாதுகைகளையும், களங்கமற்ற தன்மையையும் கொண்டவராக பெருமான் விளங்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இருசெவி ஒரு பால்

விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறிவரி நாகம்

கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர்

அமலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே

பொழிப்புரை:

ஒரு காதினில் தோட்டினை அணிந்துள்ள பெருமான் மற்றொரு காதினில், வெண்சங்கு கொண்டு செய்யப்பட்டதும் வளைந்ததும் ஆகிய குழை ஆபரணத்தை அணிந்துள்ளார். அந்த குழை ஆபரணம், அவரது தோளில் புரளும் வண்ணம் நீண்டு தொங்குகின்றது. இத்தகைய பெருமான், காட்டினைத் தனது இடமாகக் கொண்டு, நெருப்புப் பிழம்பினைத் தனது உள்ளங் கையினில் ஏந்தியவாறு நடமாடும் பெருமான், நாளும் குறையாமல் வளரும் விருப்பம் கொண்டு உறையும் நகரம் தான் நனிபள்ளி. இடைவிடாது தொடர்ந்து பெருமானை வழிபடுவதால், மேலும் பல பிறவிகள் எடுக்காமல் விரைவில் இந்த பிறவியின் முடிவினில் வீடுபேறு பெறுகின்ற தகுதியை அடைந்துள்ள அந்தணர்கள், இதுவே முறை என்று நறுமணம் கலந்த நீரினை தினமும் மூன்று வேளைகளிலும் தங்களது விரல்களால் நீரினை தெளித்து இறைவனுக்கு அர்க்கியம் கொடுக்கின்றார்கள். அத்தகைய அந்தணர்கள் அதிகமாக காணப்படும் அந்தணர்கள் வாழும் நனிபள்ளி நகரினில், பேரொலி எழுப்பியவாறு வெள்ளப் பெருக்குடன் காவிரி நதி ஓடுகின்றது. அத்தகைய பெருமைகள் உடைய தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக ,

பாடல் 6:

மேகமொடு ஆடு திங்கள் மலரா அணிந்து மலையான் மடந்தை மணி பொன்

ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர் தான்

ஊகமொடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி

நாகமொடு ஆரம் வாரும் புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

ஊகம்=கருங்குரங்கு; மந்தி=பெண் குரங்கு; உகளும்=பாயும், குதிக்கும்; நாகம் என்ற சொல் இங்கே நாகத்தின் கழுத்தில் இருக்கும் இரத்தினத்தை குறிக்கின்றது. ஆரம்=முத்து;

பொழிப்புரை:

மேகத்துடன் உறவாடி வானில் உலவும் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் மலராக அணிந்து கொண்டு, தனது பொன்மேனியில் மலையரசன் இமவானின் மகளாகிய பார்வதி தேவியை ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டு, நெருப்புப் பிழம்பினைத் தனது உள்ளங் கையினில் ஏந்தி நடமாடும் எங்களது பெருமான் அமர்ந்துள்ள நகரம் தான் நனிபள்ளி. பெண் குரங்குகளும் கருங்குரங்குகளும் பாய்ந்து விளையாடும் மலையில் கிடைக்கும் அகில், சந்தனம், பொன், நாக இரத்தினங்கள், முத்து ஆகியவற்றை புரட்டி வாரிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காவிரி நதி பாயும் தலத்தில் இறைவன் உறைகின்றான். அத்தகைய தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக ,

பாடல் 7:


தகைமலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடுகொட்டி வீணை முரல

வகைமலி வன்னிக் கொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர் தான்

புகைமலி கந்த மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி

நகைமலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

தகை=பெருமை; தகைமலி=பெருமைகள் மலிந்த, நிறைந்த பெருமைகள் உடைய; நகை= வெண்மை; கொடுகொட்டி=திரிபுரங்களை எரித்த பின்னர் ஆடிய கூத்து; கந்தம்=நறுமணம்; கொடுகொட்டி என்பதற்கு இசைக் கருவி என்று பொருள் கொண்டு, வீணையுடன் கொடுகொட்டி கருவியினை இசைக்கும் பெருமான் என்று பொருள் கூறுவதும் பொருத்தமே. பூசல்=ஆரவாரம் மிகுந்த ஓசை; புகை மலி கந்த மாலை=வேள்வியிலிருந்து எழும்பும் புகை காற்றினில் ஒன்றற கலப்பது போன்று, தமது நறுமணத்தை காற்றினில் கலக்கும் பூக்கள்; படப்பை=தோட்டம்;

இறைவனுக்கு சூட்டப்படும் மாலைகளை, அடியார்கள் தாங்களே கட்டும் பழக்கம் பண்டைய நாளில் இருந்தது போலும்; அவர்கள் அவ்வாறு மாலைகளை தொடுக்கும் போதும், மாலைகளுக்கு தேவையான மலர்களை பறிக்கும் போதும், இறைவனின் புகழினை பாடிக் கொண்டு இருந்தமை, திருவாசகம் பூவல்லி பதிகத்திலிருந்து அறியப்படுகின்றது. அந்த பதிகத்தின் ஒரு பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பொந்து=இறைவன் உறையும் கோயில்; பரவி=புகழ்ந்து; தன்னுடைய தந்தை தாய் சுற்றம் மற்றுமுள்ள நண்பர்கள் நமது பொருட்கள் ஆகிய அனைத்தின் மீது தான் கொண்டிருந்த பாசத்தினை ஒரு சேர அறுத்து தன்னை ஆண்டு கொண்ட பிரான் இறைவனின் அருட்செயலைக் குறிப்பிடும் மணிவாசகர், இடைமருது தலத்தில் உள்ள இறைவனின் புகழினைப் போற்றியவாறு பூக்களை பறிக்க வேண்டும் என்று கூறுகின்றார். இந்த பாடலிலிருந்து தாங்கள் தினசரி செய்யும் செயல்களுடன் இறைவனைப் புகழ்ந்து பாடுவதையும் கலந்து செய்வது அந்நாளைய பழக்கம் என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம்.

எந்தை எந்தாய் சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய

பந்தம் அறுத்து என்னை ஆண்டு கொண்ட பாண்டிப் பிரான்

அந்த இடைமருதில் ஆனந்தத் தேன் இருந்த

பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ

பொழிப்புரை:

பெருமை மிக்க தண்டு சூலம் ஆகிய ஆயுதங்களை ஏந்தியவனும், தீயினைப் போன்று கொடிய விடத்தினை உமிழும் நாகத்தினை அடக்கி ஆபரணமாக ஏற்றுக் கொண்டவனும், வீணையின் இசைக்கு ஏற்ப கொடுகொட்டி எனப்படும் நடனத்தை திரிபுரங்களை எரித்த பின்னர் ஆடியவனும், பல வகையான வன்னி கொன்றை ஊமத்தை ஆகிய மலர் மாலைகளை அணிந்தவனுமாகிய இறைவன் உகந்து உறையும் நகர் நனிபள்ளி ஆகும். வேள்விகளில் எழுப்பப்படும் புகை காற்றினில் கலப்பது போன்று தங்களின் நறுமணத்தை காற்றினில் கலக்கும் சிறந்த பூக்களை மாலையாக புனையும் அடியார்கள் பாடும் ஆரவாரம் மிகுந்த பாடல்களும் பெருமானை பணிந்து வணங்கும் அடியார்கள் பாடும் பாடல்களின் ஓசையும் கலந்து ஒலிப்பதும், புன்னகை பூக்கும் போது தெரியும் வெண்மை நிறத்துடன் ஒளிவீசும் முத்துக்கள் மண்ணில் விழுந்து கிடக்கும் தோட்டங்களும் நிறைந்த நனிபள்ளி நகரமே, இறைவன் மிகுந்த விருப்பம் கொண்டுள்ள தலமே, நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக

பாடல் 8:


வலமிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு

உலமிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர் தான்

நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை

நலமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

வாளன்=வாளினை உடையவன்; உலம்=கற்றூண்; நலமிகு கீழுமேலும்=நலமுடைய கீழ் ஏழ் மற்றும் மேலேழ் உலகங்கள்; வலமிகு வாளன் வேலன் என்ற தொடரினை அரக்கன் என்பதுடன் கூட்டி. வலிமை மிகுந்த வாள் வேல் ஆகிய ஆயுதங்களை உடைய அரக்கன் இராவணன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

வலிமை மிகுந்தவனும், சிறந்த வாள் வேல் ஆகிய ஆயுதங்களை உடையவனும் ஆகிய பெருமான், வளைந்த வாள் போன்று நீண்ட பற்களை உடைய அரக்கன் இராவணன், கயிலை மலையை மதியாது அதனைப் பேர்த்து எடுக்கத் துணிந்த போது, அரக்கனது கற்றூண் போன்று வலிமையான தோள்களும் வலிமை இழக்கும் வண்ணம் தனது விரலை மலையின் மீது ஊன்றி அரக்கனை மலையின் கீழே அழுத்தினான். அத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் மிகுந்த விருப்பத்துடன் உறையும் நகரம் தான் நனிபள்ளி. நலங்கள் பல உடைய கீழேழ் மற்றும் மேலேழ் உலகங்களிலும் தனக்கு நிகராக எவரும் இல்லாதவனாக திகழும் சிவபெருமானை, நீதியின் வடிவமாக திகழும் பெருமானை வணங்கி அவனது திருவடிகளைப் போற்றி புகழும் அடியார்கள் நிறைந்த தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக ,

பாடல் 9:


நிறவுரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்ற தொகுநீர்மை சீர்மை நினையார்

அறவுறு வேத நாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர் தான்

புறவிரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி

நறவிரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

நீர்மை=இயல்பு, குணம், தன்மை; சீர்மை=சிறப்பு; அறவுறு வேதம்=அறம் பொருந்திய வேதங்கள்; புற=புறவம், தோட்டம்; துன்று=அடர்ந்து; பொதுளி=நெருங்கி;

பொழிப்புரை:

செம்மை நிறமும் நெருப்பும் ஒன்று சேர்ந்து உயர்ந்து தங்களிடையே நின்ற உருவத்தின் தன்மையையும் பெருமையையும் உணர முடியாத வண்ணம், அறங்களை உணர்த்தும் வேதங்களை ஓதும் பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் எதிரே நின்ற சிவபெருமான் உறையும் நகரம் நனிபள்ளி; முல்லை, மௌவல், குளிர்ந்த அசோக மலர்கள், புன்னை, பெருமான் புனையும் கொன்றை ஆகிய மலர் கொடிகளும் செடிகளும் அடர்ந்தும் நெருங்கியும் வளர்வதால் அந்த மலர்கள் விரிந்து மகரந்தங்களை உதிர்த்து புதிய நறுமணங்களை பரப்பும் சோலைகள் நிறைந்த தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக ,

பாடல் 10:


அனமிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டுபட்ட அமணும்

மனமிகு கஞ்சி மண்டை அதிலுண்டு தொண்டர் குணமின்றி நின்ற வடிவும்

வினைமிகு வேத நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர் தான்

நனமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

அனமிகு=அன்னமாக; செல்கு=வயிற்றின் உள்ளே செல்லும்; மண்டை=பனை ஓலையால் செய்யப்பட்ட உண்கலம்; மனமிகு=மனம் மகிழ்ந்து; வினை=செயல்முறைகள்; இறைவனை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய செயல்கள்; நன மிகு=தெளிந்த ஞானம் உடைய;

பொழிப்புரை:

பல இல்லங்களின் வாயிலில் சென்று நின்று, தங்களது உடலின் உள்ளே சென்று வயிறு நிறைக்கும் வண்ணம் அன்னம் கொணர்க என்று கேட்டு, அவ்வாறு கொண்டுவரப்பட்ட சோறு தங்களது கையினில் இடப்பட அதனை உண்டு திரியும் சமணர்களும், மனம் மிகவும் மகிழ்ந்து தங்களுக்கு அளிக்கப்படும் கஞ்சியை தங்கலாது மண்டைப் பாத்திரத்தில் ஏற்று உண்ணும் புத்தர்களும் சொல்லும் சொற்களை பொருட்படுத்தாது நிற்கும் வடிவினன் சிவபெருமான்; இறைவனை வழிபடும் போது நாம் செய்ய வேண்டிய செயல்முறைகளை விவரிக்கும் நான்கு வேதங்களையும் விரித்து சொன்ன நாவினை உடையவன் பெருமான்; அவன் விடையினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளான்; அவன் மிகுந்த விருப்பமுடன் உறையும் தலமே நனிபள்ளி ஆகும். தெளிந்த ஞானம் உடையவர்களாய் பெருமானின் திருவடிகளை புகழ்ந்து போற்றும் அடியார்கள் நிறைந்த நகரமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக

பாடல் 11:


கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருதப்

படுபொருள் ஆறும் நாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்

இடுபறை ஒன்ற அத்தர் பியன் மேல் இருந்தி இன் இசையால் உரைத்த பனுவல்

நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே

விளக்கம்:

சம்பந்தர் தனது தந்தையின் தோள் மீது அமர்ந்து இருந்த போது இந்த பதிகம் அருளினார் என்பது அவரது கடைக்காப்பு பதிகத்திலிருந்து புலனாகின்றது. அத்தர் என்றால் தந்தை என்று பொருள். பியன் என்றால் தோள் என்று பொருள். கடல்வரை=கடற்கரை; ஓதம்=அலைகள், இங்கே மிகுதியான நீர்; நனிபள்ளி இறைவனை தியானிக்கும் மாந்தர்களின் வினைகள் தீரும் என்று சம்பந்தர் ஆணையிட்டதற்கு ஏற்ப, அந்த தலத்து மக்களின் தீவினைப் பயனால் பாலையாகி மாறியிருந்த நிலம் நெய்தல் நிலமாக மாறி பின்னர் மறுத்த நிலத்தின் தன்மை அடைந்தது, தேவாரப் பதிகங்கள் அதிசயங்கள் நிகழ்த்தும் வல்லமை படைத்தமை என்பதற்கு மற்றோர் சான்றாகும்.

பொழிப்புரை:

கடற்கரையின் அருகே உள்ள நீர் நிறைந்த உப்பங்கழிகளும் சோலைகளும் நிறைந்து காணப்படும் சீர்காழி நகரின் கண் வாழ்பவனும், நாம் உணர்ந்து அறிந்து கொள்ளவேண்டிய பொருட்களை உடைய நான்கு வேதங்களும் அவைகளுக்கு துணையாக உள்ள ஆறு அங்கங்களும் சொல்லும் கருத்துக்களை அறிந்தவனாக திகழும் ஞானசம்பந்தன், தனது தந்தையார் தோளின் மீது அமர்ந்து ஏழிசையுடன் இணைத்து பறை சாற்றிய பதிகத்தின் பாடல்களை பாடி, நள்ளிருளில் சுடுகாட்டில் நடமாடும் பெருமானும் எனது தந்தையும் ஆகிய பெருமானின் புகழினை நினைத்தால், அவர்களது வினை கெட்டுபோகும் என்பது அடியேன் இடும் ஆணையாகும்.

முடிவுரை:

கடைக்காப்பில் ஆணை என முடியும் சம்பந்தரின் பதிகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பதிகத்தின் தொடக்க சொற்கள் & பதி முடிவு

காரைகள் கூகை (நனிபள்ளி) வினை கெடுதல் ஆணை நமதே

வேயுறுதோளி பங்கன்(பொது பதிகம்) அரசு ஆள்வர் ஆணை நமதே

மடல் மலி கொன்றை (கழுமலம்) பிறவார்– இதற்கு ஆணை நமதே

நீறு வரி ஆடு அரவோடு(வேதிகுடி) அரசாளும்– சரதம் ஆணை நமதே

சம்பந்தரது ஆணைகளை விருப்புடன் நிறைவேற்றுவதே தன் கடன் என்பது போல் காத்திருக்கும் இறைவன், இந்த நனிபள்ளி பதிகத்தை கேட்டவுடன் அந்த தலத்தின் வினைகளை முற்றிலும் தீர்த்து, பாலை நிலமாக இருந்த தலத்தை நெய்தல் நிலமாக மாற்றி அருளினார்; வேயுறு தோளி பங்கன் பதிகத்தை கேட்ட அம்மையப்பன், சம்பந்தர் அவரை எதிர்கொண்ட சைவ சமயத்தின் எதிரிகளாய் அப்போது திகழ்ந்த சமணர்களை வெற்றிகொள்ள வைத்து, சைவ சமயத்தின் முடிசூடா மன்னாராக்கினார். மடல் மலி கொன்றை என்று தொடங்கும் சீர்காழி (கழுமலம் என்பது சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும்) பதிகத்து கடைக்காப்பினில், தனது பதிகங்களை பாடும் அடியார்கள், நிலவுலகினில் வாழ்வதை ஒழித்து வீடுபேறு முக்தி உலகில் வாழ்வார்கள் என்று கூறுகின்றார். வேதிகுடி பதிகத்தின் கடைப் பாடலிலும் இந்த செய்தியை சொல்லும் சம்பந்தர் இது தமது ஆணை என்று கூறுகின்றார். சம்பந்தர் ஆணையிட்டு சொல்லும் சொற்களாய் உண்மையாக இறைவன் மாற்றுவதை அறிந்த நாமும், அவரது பதிகங்களை ஓதி அந்தற்குரிய பலன்களை பெற்று மகிழ்வோமாக.

இங்கே குறிப்பிடப்படும் பதிகம், நனிபள்ளி தலத்தின் எல்லையில் இருந்த போது, தனது தந்தையாரின் தோளில் அமர்ந்த வண்ணம் பாடிய பதிகமாகும். ஊர் எல்லையில் திருஞான சம்பந்தர் வருவதைக் கண்ட தலத்து அந்தணர்கள், அவரை வரவேற்று திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். திருக்கோயில் சென்றடைந்த சம்பந்தர், முறையாக பெருமானை பணிந்து போற்றினார் என்று சேக்கிழார் கூறுவதால், திருக்கோயில் சன்னதியிலும் திருஞான சம்பந்தர் பதிகம் பாடியிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. ஆனால் அத்தகைய பதிகம் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. கவுணிய கோத்திரத்தில் பிறந்த திருஞான சம்பந்தரை கவுணியர் தலைவன் என்று சேக்கிழார் இந்த பாடலில் அழைக்கின்றார்.

ஆதியார் கோயில் வாயில் அணைந்து அன்பு கூர

நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப்

போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும்

காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம்.

இந்த தலத்தில் திருஞானசம்பந்தர் தங்கியிருந்ததை அறிந்த, அருகில் உள்ள தலைச்சங்காடு தலத்தைச் சார்ந்த அந்தணர்கள் மிகுந்த விருப்பத்துடன் சம்பந்தரை அணுகி, தங்களது தலத்திற்கு வருமாறு அழைத்தனர் என்றும், தங்கள் தலத்திற்கு சம்பந்தர் வந்த போது எங்கும் பந்தல் இட்டு, வாழை கமுகு மரங்களை நிறுத்தியும் மலர் மலைகளை தொங்கவிட்டும் நிறைகுடங்கள் வைத்தும் தெருக்களை பல வகையாக அலங்கரித்தும் பூரண கும்பத்துடன் அவரை வரவேற்றனர் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். தலைச்சங்கை சென்ற திருஞானசம்பந்தர் ஆங்கிருந்து புறப்பட்டு, சாய்க்காடு, பூம்புகார் வழியாக திருவெண்காடு சென்றடைந்தார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். பின்னர் அங்கிருந்து திருமுல்லைவாயில் வழியாக சீர்காழி நகர் வந்தடைந்தார். இதுவே திருஞானசம்பந்தர் மேற்கொண்ட இரண்டாவது தலயாத்திரை ஆகும்.

அப்பர் பிரான் பொருப்பள்ளி என்று தொடங்கும் பதிகத்தில், செழு நனிபள்ளி என்று குறிப்பிட்டு, இந்த தலம் செழுமையாக திகழ்ந்ததை உணர்த்தி, நமக்கு திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் நிகழ்த்திய அதிசயத்தை நினைவூட்டுகின்றார். நனிபள்ளி செல்லும் எவர்க்கும் சம்பந்தப் பெருமான் செய்த அதிசயம் நினைவுக்கு வராமல் போகாது. சம்பந்தப் பெருமான் தனது பதிகங்கள் மூலம் இவ்வாறு அதிசயங்கள் செய்வதற்கு மூல காரணமாக ஞானத்தை சம்பந்தர் குழந்தையாக இருந்த போது சீர்காழி குளக் கரையில் அழுத அன்று புகட்டியவர் சிவபிரான் அல்லவா. எனவே சிவபிரானின் அந்த அருட்செயலும் இந்த பதிகத்தில் சுந்தரரால் குறிக்கப்படுகின்றது.

ஏன மருப்பினோடும் எழில் ஆமையும் பூண்டு உகந்து

வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான்

ஊனம் இல் காழி தன்னுள் உயர் ஞான சம்பந்தர்க்கு அன்று

ஞானம் அருள் புரிந்தான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே

பாலை நிலத்தின் தன்மை மாற்றப்பட்ட அதிசயம் நிகழ்ந்தது இந்த தலத்தில். நிலத்தின் தன்மையால் தனது தொண்டர்களுக்கு, திருச்செங்கோடு தலத்தில் குளிர் ஜுரம் வந்தபோது பதிகம் பாடி குளிர் ஜுரத்தை போக்கி நிலத்தின் தன்மையை அந்த தலத்திலும் சம்பந்தர் வெற்றி கொண்டார். சமணர்களுடன் அனல் வாதம் புனல் வாதம் இரண்டிலும் பங்கேற்றபோது நீரினையும் தீயினையும் சம்பந்தரின் பதிகங்கள் எழுதப்பட்ட ஏடுகள் வெற்றிகொண்டு அழியாமல் இருந்தன. மேலும் சமணர்கள் சம்பந்தர் தங்கியிருந்த மாளிகைக்கு தீ வைத்த போது, அந்த தீ சம்பந்தருக்கு தீங்கு ஏதும் செய்யாமல் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு பாண்டியனை வெப்பு நோயாக பற்றிக்கொண்டது. கொள்ளம்புதூரில் கடும் காற்றும் மழையும் கலந்து இருந்த சமயத்தில் ஓடம் செலுத்தவதற்கு எவரும் தயாராக இல்லாத நிலையில் சம்பந்தர் தனது தொண்டர்களுடன் ஓடத்தில் அமர்ந்து பதிகம் பாடிய போது, ஓடம் தானாக நகர்ந்து அடுத்த கரைக்கு அனைவரையும் பத்திரமாக கொண்ட சேர்த்தது, சம்பந்தர் வானத்தையும் காற்றையும் வெற்றி கொண்ட செய்தியை குறிக்கும் நிகழ்ச்சியாகும். இவ்வாறு பஞ்ச பூதங்களையும் தனது பதிகங்கள் மூலம் வெற்றி கொண்டவராக சம்பந்தர் திகழ்கிறார்.

பதிகத்தின் முதல் பாடலில் பெருமான் உறையும் சுடுகாடு என்று சுடுகாட்டின் தன்மை விவரிக்கப் படுகின்றதே தவிர, பெருமானைப் பற்றிய எந்த குறிப்பும் காணப்படவில்லை. வளமற்று காணப்பட்ட நிலத்தின் தன்மையால் ஞானசம்பந்தரின் மனம் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தது போலும். இரண்டாவது பாடலில் பெருமான் தனது சடையினில் கங்கை நதியையும் ஒற்றைப் பிறைச் சந்திரனையும் ஏற்றுக்கொண்டு அருள் புரிந்த தன்மையும், மூன்றாவது பாடலில் நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கி வானவருக்கு அருள் புரிந்த செய்கையும், நான்காவது பாடல் மற்றும் ஆறாவது பாடல்களில் உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்று அருள் புரிந்த செய்கையும் குறிப்பிடப்படுகின்றன. ஐந்தாவது பாடலில் ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் வெண்சங்குக் குழையும் அணிந்த வண்ணம் நடமாடும் தன்மையும் நனிபள்ளி தலத்து அந்தணர்கள் தினமும் சந்தியாவந்தனம் முதலான தங்களது கடமைகளைச் செய்து இறைவனுக்கு அர்க்கியம் அளித்ததும் ஒன்பதாவது பாடலில் அயனும் அரியும் காணமுடியாத தன்மையனாக இருந்த பெருமானின் ஆற்றலும் பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்களின் முறையற்ற பேச்சுக்களை பெருமான் பொருட்படுத்தாது நின்ற தன்மையும் குறிப்பிடப்படுகின்றன. ஏழாவது பாடலில் தலத்து அடியார்கள், தாங்களே சோலைகளில் இருந்த மலர்களைப் பறித்து மாலையாக கட்டி இறைவனுக்கு சாத்தியதும் அவ்வாறு மலர்களைப் பறிக்கும் போதும் மாலையாக தொடுக்கும் போதும் இறைவனது புகழினைப் பாடல்களாக பாடி வழிபட்டதும் உணர்த்தப் படுகின்றது. எட்டாவது பாடலில் அரக்கன் இராவணனுக்கு அருள் செய்த தன்மையை குறிப்பிட்டு தலத்து அடியார்கள் இறைவனைப் புகழ்கின்றனர் என்று குறிப்பிடும் ஞானசம்பந்தர் பதிகத்தின் கடைப் பாடலில் நனிபள்ளி இறைவனை குறிப்பிட்டு பாடிய இந்த பதிகத்தை முறையாக ஓதும் அடியார்கள் தங்களது வினைகள் நீங்கப் பெறுவார்கள் என்று கூறுகின்றார். பெருமான் தனது அடியார்களுக்கு அருள் புரியும் தன்மையை இந்த பதிகம் மூலம் அறிந்து கொண்ட நாமும், நனிபள்ளி தலம் சென்று, மூவர் பெருமானார்கள் வணங்கி பெருமானின் புகழினை குறிப்பிடும் பதிகங்கள் பாடி, நமது வினைகளைத் தீர்த்துக் கொண்டு, இம்மையில் இன்பமாக வாழ்ந்து மறுமையில் வீடுபேறு இன்பம் பெற்று மகிழ்வோமாக.



Share



Was this helpful?