இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கலைமலி அகலல்குல்

கலைமலி அகலல்குல்

பதிக எண்: 1.125 திரு சிவபுரம் வியாழக்குறிஞ்சி

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக சிவபுரம் தலம் சென்ற திருஞானசம்பந்தர், இந்த தலத்தின் மீது அருளிய மூன்று பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன. புவம் வளி கனல் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்களில், பதிகத்தின் முதல் பத்து பாடல்களில், இந்த தலத்தை தியானித்து வழிபடும் அடியார்கள் பெறவிருக்கும் பலன்களை மிகவும் விரிவாக, ஞானசம்பந்தர் எடுத்து உரைக்கின்றார். இந்த காரணம் பற்றி, அந்த பதிகத்தின் பாடல்களில் இயற்கை காட்சிகள் அதிகமாக இடம் பெறவில்லை. பொதுவாக தனது பதிகங்களில் இயற்கை காட்சிகளை திறம் பட படம் பிடித்தது போன்று காட்டுபவர் திருஞானசம்பந்தர் என்பதால், இந்த பதிகம் சற்று வித்தியாசமான பதிகமாக உள்ளது. அந்த குறை நமக்கு வேண்டாம் என்ற எண்ணத்தினால் தானோ,இன்குரல் இசை கெழும் என்று தொடங்கும் இந்த பதிகத்தின் பாடல்களில் இயற்கை காட்சிகள் இடம் பெறும் வண்ணம் அந்த பதிகத்தினை திருஞானசம்பந்தர் அருளியுள்ளார் என்பதையும் நாம் சென்ற பாடலின் விளக்கத்தில் சிந்தித்தோம். இந்த தலத்தின் மீது அருளிய மூன்றாவது பதிகமாகிய இந்த பதிகத்திலும் இயற்கை காட்சிகள் அதிகமாக இடம் பெறவில்லை. மற்ற இரண்டு பதிகங்கள் போலவே பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும், சிவபுர நகர் என்று குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தர் காலத்தில் இந்த தலம், தனி நகரமாக இருந்தது என்பது நமக்கு திட்டவட்டமாக புலனாகின்றது.

பாடல் 1:

கலைமலி அகல் அல்குல் அரிவை தன் உருவினன்

முலைமலி தரு திருவுருவம் அது உடையவன்

சிலைமலி மதில் பொதி சிவபுர நகர் தொழ

இலை நலிவினை இருமையும் இடர் கெடுமே

விளக்கம்:

கலை=மேகலை எனப்படும் ஆபரணம்; அரிவை=அரிவை பிராயத்து பெண் போன்று என்றும் இளமையாக இருக்கும் பார்வதி தேவி; மாதொரு பாகனின் திருக்கோலம் இந்த பாடலில் விளக்கப் படுகின்றது. மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையை குறிப்பிடும் திருமுறைப் பாடல்கள் எண்ணற்றவை. இந்த பாடலில் மாதொருபாகனாகிய பெருமானின் இடது மார்பில், பெண்ணின் முலை பொருந்தி அமர்ந்துள்ளதாக குறிப்பிடும் திருஞானசம்பந்தர், தோணிபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலிலும் (3.100.1) இந்த செய்தியை குறிப்பிடுகின்றார். இரதி தேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் உயிர்த்தெழச் செய்ததை, திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். கரும்பமர் வில்லி=கரும்பினைத் தனது வில்லாகக் கொண்ட மன்மதன்; காய்ந்து=கோபித்து; காதல் காரிகை=மன்மதனின் காதலுக்கு உரிய மங்கை இரதி தேவி; இந்த பாடல் தலைவியின் கூற்றாக அமைந்துள்ள அகத்துறை பாடல். அரும்பு=தாமரை அரும்பு; மேலும் தனது உடலின் ஒரு பாகம் பெண்மையின் அம்சங்களுடன் திகழ்வதை பெருமான் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் இந்த பாடலில் திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். பெருமான் மகிழ்ந்து ஏற்றுக் கொண்ட கோலம் தானே மாதொருபாகன் திருக்கோலம்.

கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதல் காரிகை மாட்டருளி

அரும்பமர் கொங்கை ஓர் பால் மகிழ்ந்த அற்புதம் செப்பரிதால்

பெரும்பகலே வந்தென் பெண்மை கொண்டு பேர்த்தவர் சேர்ந்த இடம்

சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே

மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் கோலத்தை மிகவும் அழகாக நமது கண் முன்னே கொண்டுவரும் அப்பர் பிரான் (4.08.10), பெருமானின் திருவாயின் வலது பகுதி வேதத்தை சொல்வதாகவும், இடது பகுதி அந்த வேதத்தை கேட்டு ரசித்தபடியே புன்முறுவல் செய்வதாகவும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் கூறுகின்றார். ஓலை=தோடு: சங்கு=வெண் சங்கால் செய்யப்பட்ட குழை ஆபரணம். மாதொரு பாகனாக இறைவனைக் காணும் அப்பர் பிரான் வேறெந்த பாடலிலும் காணப்படாத காட்சியினை இங்கே வழங்குகின்றார். மாதொருபாகனின் உருவத்தை சற்று விவரமாக சொல்லும் திருமுறைப் பாடல்களில் இந்த தேவாரப் பாடல் ஒன்று. புதிய சுருள் பொன்னால் செய்யப்பட்ட தோட்டினை ஒரு காதிலும், மற்றோர் காதினில் வளைந்த குழை ஆபரணம் தனது தோளில் புரளும் படியாக அணிந்துள்ள பெருமானின், திருவாயின் ஒரு பகுதி வேத கீதங்களைப் பாட, திருவாயின் மற்றொரு பகுதி பெருமான் பாடும் வேத கீதத்தை ரசித்தபடியே புன்முறுவல் பூக்கின்றது. சடையாக காணப்படும் வலது பகுதில், தேன் சொட்டும் கொன்றை மலர் விரிந்த படியே இருக்க, இடது பகுதியில் உள்ள கூந்தல் பின்னப்பட்டு அழகாக காணப்படுகின்றது, இவ்வாறு பெருமானின் தன்மையும் இயல்புகளும் ஒரு புறத்திலும் மற்றோர் புறத்தில் உமை அம்மையின் தன்மையும் இயல்புகளும் காணப்பட்டன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை..

புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஓர் காது சுரி சங்கு நின்று புரள

விதி விதி வேத கீதம் ஒருபாடும் ஓதம் ஒருபாடும் மெல்ல நகுமால்

மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்

இது இவர் வண்ணம் வண்ணம் இவள் வண்ணம் வண்ணம் எழில் வண்ணம் வண்ணம் இயல்பே

மாதொரு பாகன் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது, திருவாசகம் கோத்தும்பீ பதிகத்தின் பதினெட்டாவது பாடல் தான். மிகவும் தொன்மையான கோலம் என்று இதனை குறிப்பிடும் மணிவாசகர், தோல், குழை, பால் வெள்ளை நீறு, சூலம், முதலியன உடைத்த சிவனின் தோற்றமும், துகில், சுருள் தோடு, பசும் சாந்து, பைங்கிளி, வளையல், முதலியன கொண்ட அம்மையின் தோற்றமும் இணைந்து உள்ளதாக இந்த பாடலில் கூறுகின்றார்.

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும்

பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைங்கிளியும்

சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மை

கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய் கோத்தும்பீ

தொன்மை கோலம் என்று மணிவாசகர் குறிப்பிட்ட இந்த அழகிய மாதொரு பாகனின் திருக்கோலத்தை திருஞானசம்பந்தர் ஈரெழில் கோலம் உடனாய கோலம் என்று சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.58.9) குறிப்பிடுகின்றார். பெருமானோ காண்போரை சொக்கவைக்கும் அழகு என்பதால் சொக்கன் என்றும் அழகன் என்றும் அழைக்கப்படுகின்றார். பிராட்டி போன்று அழகான மங்கையை வேறு எங்கும் காண இயலாது என்பதால் தான் அவளது திருநாமம் திரிபுரசுந்தரி என்று விளங்குகின்றது. இந்த இரண்டு எழிற்கோலங்கள் இணைந்த வடிவம், மிகுந்த அழகுடன் விளங்குவதில் வியப்பு ஏதும் இல்லையே. மங்கை என்று பாடலில் கடை அடியில் உள்ள சொல், சாத்தமங்கை என்ற தலத்தின் பெயரை குறிக்கும்.

பேரெழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண்ணோர் பாகம்

ஈரெழில் கோலமாகி உடனாவதும் ஏற்பதொன்றே

காரெழில் வண்ணனோடு கனகம் அனையானும் காணா

ஆரழல் வண்ணம் மங்கை அயவந்தி அமர்ந்தவனே

இந்த கோலத்தைக் கண்டு மணிவாசகர் மனம் குளிர்ந்தது போன்று, நம்பியாண்டார் நம்பி மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் தங்களது மனம் குளிர, இந்த பழமையான கோலத்தை எவ்வாறு தாங்கள் கண்டனர் என்பதை கீழ்க்கண்ட பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த பாடல்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்ற பதிகத்தின் இருபத்தோராவது பாடலில் நம்பியாண்டார் நம்பி, இறைவனை,வலது காதில் குழையும் இடது காதில் தோடும் அணிந்தவனாக காண்கின்றார். கோஷன் என்ற சொல்லின் திரிபு கோடன்: விசயனுடன் போர் செய்வதற்காக ஆரவாரத்துடன் வந்த சிவபெருமான் கோஷன் என்று அழைக்கப் படுகின்றார். பாசுபத ஆயுதம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் கடுமையாக தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஆரவாரம் தேவை தானே. சிவபிரான் பேரில் காதல் கொண்டு, அதன் காரணமாக உடல் மெலிந்து தனது கை வளையல்களை இழந்த தலைவியின் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தோடு அணிந்த காது, இடது காது என்று குறிப்பிட்டு அம்மைக்கு உரிய பகுதியில் தோடு அணிந்து இருப்பதை இங்கே சுட்டிக் காட்டுகின்றார். பெருமான் தனது மற்றொரு காதினில் குழை ஆபரணம் அணிந்து காட்சி தருவதும் இங்கே குறிப்பிடப் படுகின்றது.

வேடன் என்றாள் வில் விசயற்கு வெங்கணை அன்று அளித்த

கோடன் என்றாள் குழைக் காதன் என்றாள் இடக் காதில் இட்ட

தோடன் என்றாள் தொகு சீர் தில்லையம்பலத்து ஆடுகின்ற

சேடன் என்றாள் மங்கை அங்கை சரி வளை சிந்தினவே

மேற்கண்ட பாடலில் தோடும் குழையும் அணிந்தவனாக குறிப்பிட்டு, மாதொரு பாகனின் நிலையை உணர்த்தியதுடன் நம்பியார் திருப்தி அடையவில்லை போலும். இதே பதிகத்தின் ஐம்பதாவது பாடலில் மிகவும் விவரமாக, இறைவனின் வலது பாகத்தில் உள்ள பொருட்களையும் இடது பாகத்தில் உள்ள பொருட்களையும் பட்டியல் இடுகின்றார். இடம் என்ற சொல், இடது பாகம் மற்றும் இருக்கும் இடம் என்ற இரண்டு பொருட்களில் இந்த பாடலில் கையாளப் பட்டுள்ளது. வீ= பூச்செண்டு: பாந்தள்=பாம்பு; சங்கம்=வெண் சங்கால் அமைந்த வளையல்: அக்கு=எலும்பு மாலை: அங்கம்சரி=அங்கு+அம்+சரி: அங்கு,பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்: அம் சரி=அழகாக சரிந்த இடுப்பு. கங்கை, குண்டலம், மழு ஆயுதம், பாம்பு, தோலாடை, அக்கு மாலை, ஆகியவை அம்பலவனை உணர்த்தும் பொருட்களாகவும் தோடு, பூச்செண்டு, சங்கு வளையல், சேலை ஆடை, அழகாக சரிந்த இடுப்பு ஆகியவை அணங்கினை உணர்த்தும் பொருட்களாகவும் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளன.

கங்கை இடம் வலம் பூ வலம் குண்டலம் தோடு இடப்பால்

தங்கும் கரம் வலம் வெம்மழு வீயிடம் பாந்தள் வலம்

சங்கம் இடம் வலம் தோல் இடம் வலம் அக்கு இடம்

அங்கம் சரி அம்பலவன் வலம் காண் இடம் அணங்கே

சேரமான் பெருமான் நாயனாரும் தான் அருளிய பொன் வண்ணத் திருவந்தாதி என்ற பதிகத்தின் அறுபத்து ஐந்தாவது பாடலில் மாதொரு பாகனின் கோலத்தை விவரிக்கின்றார். வீரக்கழல், பாம்பு, திருநீறு, கனல் எதிய கை, எலும்பு மாலை, மூவிலை வேல் நீரினைத் தாங்கிய சடை முதலியன பெருமானது வலது பக்கத்திலும், பாடகம். மேகலை, சாந்து, பந்து, மலர் மாலை, மோதிரம், முதலியன மாதொருபாகனாகிய பெருமானது இடது பக்கத்திலும் இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது.

வலம் தான் கழல் இடம் பாடகம் பாம்பு வலம் இடம்

மேகலம் தான் வலம் நீறு இடம் சாந்து எரி வலம் பந்து இடம் என்பு

அலர்ந்தார் வலம் இடம் ஆடகம் வேல் வலம் ஆழி இடம்

சலம் தாழ் சடை வலம் தண் அம் குழல் இடம் சங்கரற்கே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் (1.40) பெருமான் தேவியுடன் இணைந்துள்ள கோலம் குறிப்பிடப்படுகின்றது. வடிவுடை வாள் நெடுங்கண்ணுமை பாகம் ஆயவன் என்றும், வரைகெழு மங்கையது ஆகம் ஓர் பாகம் ஆயவன் என்றும், வாள் நெடுங்கண் உமை மங்கையொர் பாகம் ஆயவன் என்றும், வாரிடு மென்முலை மாதொரு பாகம் ஆயவன் என்றும், வனமுலை மாமலை மங்கையொர் பாகம் ஆயவன் என்றும், வளையொலி முன்கை மடந்தையொர் பாகம் ஆயவன் என்றும், மடனெடு மாமலர்க் கண்ணியொர் பாகம் ஆயவன் என்றும், வயல்விரி நீல நெடுங்கணி பாகமாயவன் என்றும் வரியரவல்குல் மடந்தையொர் பாகம் ஆயவன் என்றும், வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம் ஆயவன் என்றும் இந்த பதிகத்தின் பாடல்களில் மாதொருபாகனாக பெருமான் இருக்கும் நிலையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

வெந்த வெண்ணீறு அணிந்து என்று தொடங்கும் (1.107) திருப்பதிகம் கொடிமாடச் செங்குன்றூர் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளியது. இந்த தலத்தினில் மூலவராக எழுந்தருளி இருப்பவரே மாதொருபாகன் தான். இந்த நிலைக்கு பொருத்தமாக, திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் முதல் ஐந்து பாடல்களில் பிராட்டி பெருமானுடன் இணைந்திருக்கும் கோலத்தினை குறிப்பிடுகின்றார். திரு மார்பின் நல்ல பந்தணவு விரலாள் ஒரு பாகம் அமர்ந்து என்றும், ஆகம் மலைமகள் கூறுடையான் என்றும், திருமார்பில் பல்வளைக்கை நல்ல ஏலமலர்க் குழலாள் ஒரு பாகம் அமர்ந்து என்றும், வாருறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பு என்றும் மார்பில் பணைத்தோளியோர் பாகமாக என்றும் மாதொரு பாகனாக பெருமான் திகழும் நிலை குறிப்பிடப் படுகின்றது.பூந்தராய் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.13) பாடல்களில் அன்னமன்ன நடை அரிவை பங்கர், பாகமார் மொழியுமை பங்கர், அங்கயல் அன கணி அரிவை பங்கர், எழில் பெரும் அரிவை கூறர், கொத்தணி குழலுமை கூறர், குழலுமை நங்கை பங்கர் என்று மாதொருபாகனாக உள்ள நிலை ஆறு பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. எஞ்சிய ஐந்து பாடல்களில் குழலுமை கணவர், குழலுமை தலைவர், குழலி தன் மணாளர், என்று பிராட்டி பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (3.58) இருமலர்க் கண்ணி தன்னோடும் உடனாவது என்றும், கொடியன சாயலாளோடு கூடுவது என்றும், மானன நோக்கி தன்னோடு உடனாவது என்றும் புற்றரவு அல்குலாளோடு உடனாவது என்றும் பந்தணவு விரலாளோடு உடனாவதும் என்றும் மங்கை பாகம் நிலை என்றும் உமையையொர் பாகம் வைத்த நிலை என்றும் விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும் வேண்டினை என்றும், பெண்ணொர் பாகம் ஈரெழில் கோலமாகி உடனாவது என்றும் மங்கையோடு ஒன்றி நின்று என்றும் மாதொரு பாகனாக பெருமான் உள்ள நிலை குறிப்பிடப் படுகின்றது.

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.94.4) திருஞானசம்பந்தர் பெருமானை, மகளிர் போன்று நுண்ணிய இடை உடையவர் என்று குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனின் உருவச் சிலையையோ சித்திரத்தையோ பார்க்கும் நாம், மாதொரு பாகனின் இடது பக்கத்து இடை சற்று அதிகமாக வளைந்திருப்பதை உணரலாம். இந்த தன்மை தான் வஞ்சி நுண்ணிடை உடையார் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. இதே தன்மையை அழகாக சரிந்து வளைந்த அங்கம் என்று நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டதையும் நாம் முன்னர் சிந்தித்தோம். கொந்து=கோபம்; கொந்து என்ற சொல்லுக்கு பூங்கொத்து என்று பொருள் கொண்டு பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வேல் என்ற விளக்கமும் பொருத்தமே. அஞ்சு=ஐந்து புலன்கள்;குஞ்சி=சடைமுடி; குஞ்சி மேகலை=சைவத் துறவிகள் சிலர் தங்களது சடைமுடியை மறைக்கும் வண்ணம் துவராடை அணிவார்கள்; அத்தகைய ஆடையினை பெருமான் அணிந்துள்ளதாக இங்கே குறிப்பிடுகின்றார். குஞ்சிமேகலை என்ற தொடருக்கு பதிலாக குஞ்சி மேற்கலை என்று இருந்ததோ என்று வித்துவான் மாணிக்கவாசக முதலியார் அவர்கள் தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட விளக்கத்தில் கூறுகின்றார். இந்த கருத்து ஆய்வுக்கு உரியதாகும்.அணியார்=மிகவும் அருகினில் இருப்பவர்;

பஞ்சின் நுண்துகில் அன்ன பைங்கழல் சேவடி உடையார்

குஞ்சி மேகலை உடையார் கொந்தணி வேல் வலன் உடையர்

அஞ்சும் வென்றவர்க்கு அணியார் ஆனையின் ஈருரி உடையார்

வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.8.6) அப்பர் பிரான் மாதொரு பாகனாக விளங்கும் பெருமானின் திருமேனி ஒரு புறம் கருமை நிறத்துடனும் (கார் அன்னத்தின் நிறம்) மற்றொரு புறம் செந்நிறமாகவும் (அழல் வண்ணம்) இருப்பதாக கூறுகின்றார். இதனை அணிகிளர் அன்ன வண்ணம் அவள் வண்ணம் என்று திருவுருவத்தின் இடது புறத்தின் நிறத்தையும் அவர் வண்ணம் வண்ணம் அழலே என்று மாதொரு பாகனின் வலது புறத்து திருமேனியின் உருவத்தையும் குறிப்பிடுகின்றார். கணித்தல்=குறிப்பிடுதல்: வேப்ப மரம் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் பூக்கும் தன்மை உடையது. வேப்ப மரம் பூக்கும் காலமும் திருமணங்கள் நடைபெறும் காலமும் ஒன்றாக இருப்பதால், திருமண காலத்தை வேப்ப மரங்கள் பூத்து கணிப்பதாக குறிப்பிட்டு, கணிவளர் வேங்கை என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் சிலம்பும் கழலும் அணிந்து மாதொரு பாகனாக இருக்கும் தன்மையும் குறிப்பிடப் படுகின்றது.

கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகார்

அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ண இயலார் ஒருவர் இருவர்

மணி கிளர் மஞ்ஞை ஆல மழையாடு சோலை மலையான் மகட்கும் இறைவர்

அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ணவண்ணம் அவர் வண்ணம் வண்ணம் அழலே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் (4.8.5) மாதொரு பாகன் கோலத்தில் ஈசரின் தன்மை ஒரு பக்கத்தில் மட்டுமே உள்ளது என்றும் மறு பக்கத்தில் பிறைச் சந்திரன் போல் வளைந்த நெற்றியினை உடைய உமை அன்னை பாடியவாறு இந்த கோலத்தில் பிணைந்து நிற்கின்றாள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.சிவபெருமான் வசிப்பது காட்டில்: அவர் உடுப்பது புலியின் தோல்: வாகனமாகக் கொண்டு ஊர்வது காளை: அவர் கையில் வைத்திருக்கும் உண்கலம் மண்டையோடு; இது தான் தலைவராகிய சிவபெருமான் வாழும் தன்மை. இவ்வாறு ஈசன் இருந்த போதிலும், இவருக்கு உரியது இவரது உடலின் வலது பகுதியே. இவரது உடலின் இடது பகுதியில், பிறைச் சந்திரனைப் போன்று வளைந்த நெற்றியினை உடைய உமை நங்கை இருக்கின்றாள். உமை நங்கை,சிவபெருமான் ஆடும் போது அவரது ஆடலுக்கு ஏற்ப பாடிக் கொண்டு இருக்கின்றாள். இவ்வாறு வீரக்கழல்களின் ஒலியும், பாதங்களில் காணப்படும் மலர்களைச் சூழ்ந்திருக்கும் வண்டுகளின் ரீங்காரமும் இணைந்து காணப்படும் இறைவனின் திருவடிகள் நிழலாகிய ஆணைகளை மீறி தேவர் உலகம் செயல்படாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. .

உறைவது காடு போலும் உரிதோல் உடுப்பர் விடை ஊர்வதோடு கலனா

இறை இவர் வாழும் வண்ணம் இதுபோலும் ஈசர் ஒருபால் இசைந்ததொரு பால்

பிறை நுதல் பேதை மாதர் உமை என்னு நங்கை பிறழ் பாட நின்று பிணைவான்

அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமர் உலகே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.03.07) இரண்டு வேறு வேறு வடிவங்களும் இரண்டு வேறு வேறு வண்ணங்களும் இணைந்த திருவுருவமாக, மாதொரு பாகனின் திருக்கோலத்தைத் தான் கண்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார். காரிகை=இளம் பெண்; இங்கே உமையம்மையை குறிக்கும். பெருமானின் வடிவம் மற்றும் வண்ணம் ஆகிய இரண்டு பண்புகளை அப்பர் பிரான் கண்டதாக குறிப்பிடுகின்றார் என்ற விளக்கமும் அளிக்கப்பட்டாலும், முதல் விளக்கம் பொருத்தமாக இருப்பதாக தோன்றுகின்றது.

கடிமதிக் கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி

வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்

அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது

இடி குரல் அன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டனே

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.4) திருஞானசம்பந்தர் பெருமானின் திருமுடி ஒரு புறம் சடையாகவும் மற்றொரு புறத்தில் தாழ்ந்த குழலாகவும் இருப்பதாக குறிப்பிடுகின்றார். மேலும் ஒரு கால் பெருமை உடைய நடை நடப்பதாகவும் மற்றொரு கால் சிலம்பினை அணிந்துள்ள நிலையில் இருப்பதாகவும் கூறுகின்றார். இவ்வாறு பெண்மையின் அம்சம் திருமுடியின் ஒரு பகுதியிலும் ஒரு காலிலும் இருப்பதாக குறிப்பிட்டு, மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் நிலையை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். கங்கை நங்கை மற்றும் உமையன்னை ஆகிய இருவரும் குறிப்பிடப்படும் அரிய பாடல்களில் இந்த பாடல் ஒன்று. இந்த பாடலில் இடபம், கங்கை, சடைமுடி, உமாதேவி, உயிர்களுக்கு முக்தி நிலை அளித்து அருள் புரியும் திருவடி,சிலம்பு, வலஞ்சுழி ஆகிய ஏழு அம்சங்களின் மேன்மை உணர்த்தப் படுகின்றது. இவை அனைத்தும் பெருமானையே சார்ந்து நின்றமையும், வேறு எவரையும் சாராது இருக்கும் நிலையையும் நாம் உணரவேண்டும். இதன் மூலம் பெருமானின் தனிச்சிறப்பு உணர்த்தப் படுகின்றது.

விடை யொருபால் ஒரு பால் விரும்பு மெல்லியல் புல்கியதோர்

சடை ஒருபாலொடு பால் இடம் கொள் தாழ்குழல் போற்றிசைப்ப

நடை ஒரு பாலொரு பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர்

அடை ஒரு பாலடையாத செய்யும் செய்கை அறியோமே

பெருமானை, தனது ஒரு காலில் வீரக்கழலும் மற்றொரு காலில் சிலம்பும் அணிந்தவராக சித்தரித்து, மாதொரு பாகனின் தோற்றத்தை பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்க காண்போம். குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (2.58.2)சம்பந்தர், தனது திருவடிகளில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் பெருமான் உலகம் முழுதும் திரிந்து பலி ஏற்பதாக கூறுகின்றார்.பைங்கழல்=பசும் பொன்னால் செய்யப்பட்ட கழல்; ஆர்ப்ப=ஒலிக்க; ஆர்ந்த=இணைந்த; அங்கை= அழகிய கை; செடி=குணம் இல்லாத, துர்நாற்றம் வீசும்;தேர்தல்=தேடிச் செல்லுதல்; குடி ஆர்ந்த= சிறந்த குடியில் பொருந்திய; குலாவி=கொண்டாடி; படி ஆர்ந்த=படிகள் நிறைந்த; குடவாயில் திருக்கோயில் யானைகள் ஏற முடியாத வண்ணம் படிகள் அமைக்கப்பட்ட மாடக் கோயில்களுள் ஒன்று. இந்த தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

அடியார்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில்

செடி ஆர்ந்த வெண்தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர்

குடி ஆர்ந்த மாமறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்

படி ஆர்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே

பெருமானின் திருவடிகளின் சிறப்பினை எடுத்து உரைக்கும் திருவடித் தாண்டகப் பாடலில் (6.6.5) அப்பர் பிரான் கழலும் சிலம்பு ஒலிக்கும் திருவடி என்று குறிப்பிடுகின்றார். ஒரு காலத்து ஒன்றாக நின்ற அடி=ஏக பாத திரிமூர்த்தியாக இறைவன் இருக்கும் நிலை. முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில், மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை,இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் பிரிவது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம். பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் உள்ளது.

ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி ஊழி தோறூழி உயர்ந்த அடி

பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி

இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி

திருவதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம் செல்வன் அடி

மேற்கண்ட பதிகத்தின் ஆறாவது பாடலில் (6.6.6) பெருமானின் இரண்டு திருவடிகளும் ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாத திருவடிகளாக அமைந்துள்ளன என்று கூறுகின்றார். இறைவன் தனது இடது பாகத்தில் உமையம்மையை ஏந்தி இருப்பதால், பெருமானின் இடது திருவடி, அம்மையின் திருவடியாக கருதப்பட்டு,வலது திருவடியும் இடது திருவடியும் ஒன்றுக்கொன்று ஒவ்வாமால், வேறுபாடு உடையவையாக இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது. இவ்வாறு இந்த பாடலிலும் இறைவன் மங்கைபங்கனாக இருக்கும் நிலை உணர்த்தப்படுகின்றது. செந்தாமரை மலர் திருமகளின் உறைவிடமாக கருதப்படுகின்றது.பெருமானின் திருவடிகள் செந்தாமரை போன்று சிவந்தும் மென்மையாகவும் காணப்படுவதால் செந்தாமரை என்று கருதி திருமகள் உறைவதாக,கவிகளுக்கு உரித்தான உரிமையை பயன்படுத்தி அபப்ர் பிரான் நயம்பட கூறுகின்றார், பொருளவர்=சைவ சித்தாந்தத்தின் அடிப்படைப் பொருளை உணர்ந்தவர்கள்:

திருமகட்கு செந்தாமரையாம் அடி சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் அடி

பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி

உருவிரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உருவென்று உணரப்படாத அடி

திருவதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம் செல்வன் அடி

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.42.6) அப்பர் பிரான், தனது கால்களில் ஒலிக்கும் சிலம்பினையும் கழலினையும் அணிந்து உலகம் அதிரும் வண்ணம் நடமாடும் பெருமான் என்று கூறுகின்றார். மிறை=துன்பம்; பழைய வினைகளின் பயனால் நாம் துன்பங்கள் மட்டுமன்றி இன்பங்களையும் நுகர்கின்றோம்; ஆனால் அத்தகைய இன்பங்களில் ஆழ்ந்து மகிழும் நாம் நம்மை மிகவும் உயர்வாக நினைத்துக் கொள்கின்றோம். அத்தகைய தருணங்கள்,நாம் அகந்தை கொண்டு இறைவனை மறக்கும் தருணங்களாக மாறுகின்றன. எனவே தான். இன்பம் நுகரும், நேரங்களிலும் நம்மை உயர்வாக எண்ணிக் கொள்ளமால், அடக்கத்துடன் தாழ்மையாக நினைத்து இறைவனை வணங்க வேண்டும். அவ்வாறு இருப்பவரின் நெஞ்சத்தில் இறைவன் உறைவான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். வியவேல்=மகிழாமல் இருத்தல்; நிறைவுடையான் என்ற தொடரினை அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற என்ற தொடருடன் இணைத்து, ஊழிக்காலத்தில் மன நிறைவுடன் நடனம் ஆடும் இறைவன் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். ஊழிக்காலம் முடிந்த பின்னர்,உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, உலகத்தை தோற்றுவிக்க எண்ணம் கொள்ளும் பெருமான், அந்த எண்ணத்தினால் மனநிறைவு அடைகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றாரோ என்று தோன்றுகின்றது

மிறைபடும் இவ்வுடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி

வியவேல் நெஞ்சே

குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை கூத்தாடும் குணம் உடையான் கொலை வேல் கையான்

அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற

நிறைவுடையான் இடமாம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பாடலில் (7.41.2) பசியால் வாடிய தனக்கு உணவு அளிக்கும் பொருட்டு, பெருமான் பிச்சை ஏற்ற அதிசயத்தைக் குறிப்பிடும் சுந்தரர், கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் உச்சிப் போதினில் பல இல்லங்கள் சென்று பிச்சை எடுத்த பெருமானே என்று குறிப்பிட்டு உருகுவதை நாம் உணரலாம். பெருமான் அந்த தலத்தில் வாழும் அந்தணர் போன்று பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்றார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். பெருமானே சென்றார் என்பதை வலியுறுத்தும் வண்ணம் சுந்தரர் தனது பாடலில், பாம்பு அணிந்தவராகவும் கழலும் சிலம்பும் அணிந்தவராகவும் பெருமான் பிச்சை ஏற்கச் சென்றார் என்று குறிப்பிட்டார் போலும். கலிக்க=ஒலிக்க; பெருமானின் செய்யும் செயல்களின் பின்னணியை எவரும் அறிய முடியாது என்பதை இச்சை அறியோம் என்ற தொடர் மூலம் சுந்தரர் குறிப்பிடுகின்றார். எளியவனாகிய அடியேன் பொருட்டு பிச்சை எடுத்த செயல் கண்டால் மற்ற அடியார்கள் மனம் பதைபதைத்து உருகுவார்கள் என்று சுந்தரர் கூறுகின்றார்.

கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் சிலம்பும் கலிக்கக்

உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே

இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனை ஆள்வாய்

அச்சமில்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே

பெருமானின் திருமுடி ஒரு புறத்தில் சடைமுடியாகவும் மற்றொரு புறத்தில் குழல் போன்ற கூந்தலாகவும் உள்ளது என்று குறிப்பிட்டு பல திருமுறைப் பாடல்கள் மாதொரு பாகன் கோலத்தை உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். இராமனதீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.115.5) திருஞானசம்பந்தர், தாழ்ந்த சடையையும் கூந்தலையும் உடைய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஏய்ந்தவன்=பொருந்தியவன்;

தாழ்ந்த குழல் சடை முடியதன் மேல்

தோய்ந்த இளம்பிறை துலங்கு சென்னிப்

பாய்ந்த கங்கையொடு படவரவம்

ஏந்தவன் இராமனதீச்சரமே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.105.6) திருஞானசம்பந்தர் பெருமானை கொத்துலாவிய குழல் திகழ் சடையன் என்று குறிப்பிடுகின்றார். கொத்து=பூங்கொத்து; ஒரு புறம் பூங்கொத்துகள் பொருந்திய கூந்தலையும் மற்றொரு புறத்தில் சடையையும் உடைய பெருமான் என்று குறிப்பிட்டு, மாதொரு பாகனின் தோற்றத்தை உணர்த்துகின்றார். பித்து=திருவடி மீது பற்று; அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு மூல காரணமாக இறைவன் இருக்கும் நிலை, வித்து என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

கொத்துலாவிய குழல் திகழ் சடையனைக் கூத்தனை மகிழ்ந்து உள்கித்

தொத்துலாவிய நூல் அணி மார்பினர் தொழுதெழு கீழ்வேளூர்

பித்துலாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக்கோயில் மன்னு

முத்துலாவிய வித்தினை ஏத்துமின் முடுகிய இடர் போமே

பெருமான் இடது காதினில் தோடும் வலது காதினில் குழையும் அணிந்தவராக மாதொரு பாகனின் திருக்கோலத்தை உணர்த்துவதாக மிகவும் அதிகமான திருமுறை பாடல்கள் உள்ளன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். குரங்கணில்முட்டம் என்ற தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.31.4) சம்பந்தர் இறைவனை தோடார் குழையான் என்று அழைக்கின்றார். இதன் மூலம் இடது காதினில் தோடும் வலது காதினில் குழையும் அணிந்த பெருமான் என்பது உணர்த்தப் படுகின்றது. பாலனம்=காப்பாற்றுதல்; தனது அடியார்களை நன்கு காப்பாற்றும் பெருமான் என்றும் காக்கும் தொழிலைப் புரிபவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் பொருத்தமாக உள்ளன. கூடாதன செய்த என்ற தொடர் மூலம் மற்றவர்கள் செய்ய முடியாத பல அரிய செயல்கள் செய்த பெருமான் என்று நமக்கு திருஞான சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

வாடா விரி கொன்றை வலத்து ஒரு காதில்

தோடார் குழையான் நல்ல பாலன நோக்கி

கூடாதன செய்த குரங்கணின்முட்டம்

ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே

கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.103.1) ஒரு காதினில் தோடும் மற்றொரு காதினில் தூய குழையும் அணிந்தவன் என்றும் குழை ஆபரணம் தாழ்ந்து தொங்குகின்றது என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம். ஏடு உடையான்=தாமரை மலரினை தனது இருப்பிடமாக கொண்டுள்ள பிரமன்; பல நாடுகளும் சென்று பெருமான் பலி ஏற்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம் இரந்து உண்ணும் நாடுடையான் என்று கூறுகின்றார். ஏமம்=ஜாமம்;

தோடுடையான் ஒரு காதில் தூய குழை தாழ

ஏடுடையான் தலை கலனாக இரந்துண்ணும்

நாடுடையான் நள்ளிருள் ஏமம் நடமாடும்

காடுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே

வாய்மூர் தலத்திற்கு அப்பர் பிரான் சென்றபோது அவருக்கு, சிவபெருமான் தனது நடனக்காட்சியை காட்டி அருளினார். அந்த நடனக் காட்சியை, பாடஅடியார் பரவக் கண்டேன் என்று தொடங்கும் திருத்தாண்டகத்தில் (6.77) அப்பர் பிரான் நமக்காக வடித்து இருக்கின்றார். இந்த பதிகத்தின் ஏழாவதுபாடலில், சிவபெருமானின் காதினில் தோடும் குழையும் கண்டதாக அப்பர் பிரான் சொல்கின்றார்.

குழையார் திருத்தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்

இழையார் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ் வீணை முரலக் கண்டேன்

தழையார் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்

மழையார் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

பாண்டி நாட்டில் பூவணம் திருத்தலம் அப்பர் பிரான் சென்றபோது, பெருமான் அவருக்குத் தனது திருக்கோலத்தைக் காட்டினார். அதனைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான் தான் கண்ட காட்சியை பதிகமாக வடித்தார். அந்த பதிகத்தின் (6.18) முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு காதினில் வெண் குழையையும், மற்றொரு காதினில் தோட்டினையும் அணிந்து பெருமான் அளித்த காட்சியை காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றியதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்

கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும்

இடியேறு களிற்று உரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்

பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

வெஞ்சமாக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.42.5) சுந்தரர் வெண் தோடும் குழையும் தனது காதுகளில் அணிந்த பெருமான் என்று குறிப்பிட்டு அவரது காதில் இருந்த குழையணி அசைந்தது என்று கூறுகின்றார். பெண்கள் தங்களது காதில் அணியும் தோடு அசையாமல் ஓரிடத்தில் பொருந்தி இருக்கும். குழை ஆபரணமோ காதிலிருந்து தொங்குவதால் ஆடிக்கொண்டு இருக்கும். இந்த வேறுபாடு இங்கே நயமாக உணர்த்தப் படுகின்றது.மேலும் குழைக்கும் தோட்டினுக்கும் உள்ள அமைப்பு வேறுபாட்டினை உணர்த்தும் வண்ணம், துளை உடைய குழை என்று இங்கே கூறுகின்றார்.பெருமானின் காதுகள் நீண்டு, அவரது தோள்களைத் தொட்ட நிலையினை தூங்கும் காது என்று உணர்த்துகின்றார். கள்ளையே, பிள்ளை, வெள்ளை என்ற சொற்கள் எதுகை கருதி களையே, பிளை, வெளை என்று இடையெழுத்து குறைந்து காணப் படுகின்றன. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், இறைவன், தனது சீரிய அடியார்களுள் ஒருவனாக தன்னையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தினை வைக்கின்றார்.

துளை வெண் குழையும் சுருள் தோடும் தூங்கும் காதில் துளங்கும் படியாய்

களையே கமழும் மலர்க் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே

பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுதற்கு அரியாய்

வெளை மால்விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே

கானப்பேர் (தற்போதைய பெயர் காளையார் கோயில்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.84) ஒன்பதாவது பாடலில் சுந்தரர், இறைவனை, மகரக்குழையும் தோடும் அணிந்த காதுகளை உடையவனாக காண்கின்றார். இறைவன் தனக்காக பரவை நாச்சியார் பால் தூது சென்றதையும், திருமணம் புரிந்து கொள்ளவிருந்த தன்னை அந்த திருமணத்தை தடுத்து ஆட்கொண்டதையும், தான் இறைவனைத் தலைவனாக ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிட்டு தனதுவாழ்க்கையை மிகவும் சுருக்கமாக சுந்தரர் கூறும் நேர்த்தியை நாம் இங்கே காணலாம். மாதினை ஒரு பாகம் கொண்டுள்ள சிவபிரானை மாதன் என்றுஅழைக்கின்றார். மிகவும் அழகிய சொல்லாட்சி. இறைவனின் கையில் இருக்கும் உடுக்கையில் இருந்து தான், நாதமும் பின்னர் ஓசையும் பிறந்த செய்தியைஇங்கே நாதனும் நாதம் மிகுத்து ஓசையது ஆனவன் என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகின்றார். அடியார்கள் உள்ளத்தின் மீது தான் வைத்துள்ள பற்றினைசிறிது நேரம் கூட நீக்காத இறைவன் என்று குறிப்பிட்டு, சிறந்த அடியார்கள் பெரும் பேற்றினையும் நமக்கு உணர்த்துகின்றார்.

நாதனை நாதம் மிகுத்து ஓசை அது ஆனானை ஞான விளக்கொளியாம் ஊனுயிரைப் பயிரை

மாதனை மேதகு பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்

தூதனை என்றனை ஆள் தோழனை நாயகனைத் தாழ் மகரக்குழையும் தோடும்அணிந்த திருக்

காதனை நாயடியேன் எய்துவதென்றுகொலோ கார்வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே

பெருமான் பலிக்குச் செல்லும் போதும் மாதொருபாகன் கோலத்தில் செல்கின்றார் என்பதை பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. கச்சு அணிந்த மார்பகங்களைக் கொண்ட உமை அன்னையை பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் ஏதும் இல்லாத காரணத்தால், பெருமானே நீர் பிராட்டியையும் உமது உடலில் ஏற்றுக்கொண்டு பலிக்கு செல்கின்றீரோ என்று நகைச்சுவை ததும்ப மாதொரு பாகனின் திருக்கோலத்தை உணர்த்தும் பாடல் தெளிச்சேரி தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடல் (2.3.4). ஏர் என்றால் எழுச்சி என்று பொருள்; அழகு என்ற பொருளும் பொருந்தும். பெருமான் பலிக்கு செல்வது, பக்குவபட்ட ஆன்மாக்கள் தங்களது மலங்களை, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் என்பதால், அத்தகைய ஆன்மாக்கள் எழுச்சி பெற்று நிலையான ஆனந்தத்தில் ஆழ்த்தப்படுவதால், ஏருலாம் பலி என்று கூறினார் போலும்.ஏகிட=செல்ல;

காருலாம் கடல் இப்பி கண் முத்தம் கரைப்பெயும்

தேருலா நெடு வீதியதார் தெளிச்செரியீர்

ஏருலாம் பலிக்கு ஏகிட வைப்பிடம் இன்றியே

வாருலா முலையாளை ஒர் பாகத்து வைத்ததே

பொழிப்புரை:

சற்று அகன்று காணப்படும் இடுப்பினை ஒட்டிய இடத்தில் மேகலை எனப்படும் ஆபரணத்தை அணிந்தவளாக அழகும் இளமையும் பொருந்திய பார்வதி தேவியைத் தனது உருவத்தின் ஒரு பகுதியாக வைத்துக் கொண்டுள்ள இறைவன், தனது உடலின் இடது பகுதியில் பருத்த மார்பகத்தை உடையவனாக இருக்கின்றான். கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட மதில் சுவர்களை உடைய சிவபுர நகரத்தினை தியானித்து தொழும் அடியார்களுக்கு, அவர்களை வருத்தும் வினைகளுக்கு இடம் இல்லை. இவ்வாறு வினைகளின் தாக்கத்தால் தங்களது துன்பங்களைத் தீர்த்துக் கொள்ளும் அடியார்களுக்கு மறுமையிலும் துன்பங்கள் ஏதும் இல்லாத இன்பங்களே நிறைந்த முக்தி நிலை ஏற்படும்.

பாடல் 2:

படரொளி சடையினன் விடையினன் மதிலவை

சுடரெரி கொளுவிய சிவன் அவன் உறை பதி

திடலிடு புனல் வயல் சிவபுரம் அடைய நம்

இடர் கெடும் உயர் கதி பெறுவது திடனே

விளக்கம்:

திடல்=மேடு; சிவபுரம் தலத்தினை தியானித்து செய்யப்படும் வழிபாடு அடியார்களின் இடரினை நீக்கும் என்று முதல் பாடலில் கூறிய திருஞானசம்பந்தர்,இந்த பாடலில் சிவபுர நகரம் சென்றடைந்து தொழும் அடியார்கள் உயர் கதியை அடைவார்கள் என்று கூறுகின்றார். அதாவது மிகுந்த புகழுடன் விளங்குவார்கள் என்று கூறுகின்றார். உயர்கதி என்பதற்கு உயர்ந்த முக்தி நிலை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மூன்று பறக்கும் கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் வரும் தருணத்தில் தான் அந்த கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்ற வரத்தின் வலிமையால் ஒவ்வொரு கோட்டையும் மற்ற இரண்டு கோட்டைகளுடன் நேர் கோட்டினில் பொருந்தாமல், அடுத்த இரண்டு கோட்டைகளுக்கும் பாதுகாப்பாக இருந்த மதில் போன்று செயல்பட்டமையால், திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை மதில் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

ஒளிவீசுவதும் படர்ந்ததும் ஆகிய சடையினை உடையவனும், இடபத்தைத் தனது ஊர்தியாகக் கொண்டவனும், மற்ற இரண்டு பறக்கும் கோட்டைகளுடன் நேர்கோட்டினில் இணையாத வண்ணம் ஒவ்வொரு கோட்டையும் பறந்து கொண்டு பாதுகாப்பான அரணாக திகழ்ந்த போதிலும் அந்த மூன்று கோட்டைகளையும் ஒரே நேர்க்கோட்டினில் வரவழைத்து தீமூட்டி எரித்து அழித்தவனும் ஆகிய சிவபெருமான் உறைகின்ற தலம் சிவபுரமாகும். நீரின் இடையே திடலாக அமைந்துள்ள வயல்களைக் கொண்டு செழிப்பாகத் திகழும் சிவபுரம் தலத்தைச் சென்றடைந்து தொழ, நமது இடர்கள் கெட்டு உயர்கதி அடைவது திண்ணம்.

பாடல் 3:

வரைதிரி தரவர வகடழ லெழ வரு

நுரைதரு கடல் விடம் நுகர்பவன் எழில் திகழ்

திரைபொரு புனல் அரிசிலது அடை சிவபுரம்

உரைதரும் அடியவர் உயர் கதியினரே

விளக்கம்:

வரைதிரி தரவர வகடழ லெழு வரு என்ற தொடரினை, வரை திரிதர அரவு அகடு அழல் எழவர என்று பிரித்து பொருள் கொள்ளவேண்டும். வரை=மலை,இங்கே மந்தர மலை; திரிதர=சுழல், மத்தாக சுழல்தல்; அகடு=வயிறு, அகம், உள்ளே, நடுவே என்று பல பொருள் கொண்ட சொல்; ;

பொழிப்புரை:

மந்திர மலையினை மத்தாக நாட்டி வாசுகி பாம்பினை கயிறாக சுற்றி பாற்கடலைக் கடைந்த போது, தான் அடைந்த துன்பத்தினை பொறுக்க முடியாமல் வாசுகி பாம்பு தனது உடலிலிருந்து வெளியிட்ட நெருப்பு போன்று வெம்மை மிகுந்த விடம் மற்றும் கடலலையில் நுரைகளுடன் வெளிப்பட்ட விடம் இரண்டையும், நுகர்ந்து உட்கொண்டவன் சிவபெருமான். அவன் அழகுடன் விளங்குவதும் நீரலைகள் மோதும் அரிசில் ஆற்றங்கரையினில் உள்ளதும் ஆகிய சிவபுரம் நகரில் உறைகின்றான். இத்தகைய பெருமை வாய்ந்த சிவபுர நகரினைப் புகழ்ந்து பேசும் அடியார்கள் உயர் கதியினை அடைவார்கள்.

பாடல் 4:

துணி உடையவர் சுடுபொடியினர் உடலடு

பிணி அடைவிலர் பிறவியும் அற விசிறுவர்

தணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய

மணி மிடறனது அடியிணை தொழும் அவரே

விளக்கம்:

பதிகத்தின் முதல் மூன்று பாடல்களில் சிவபுரம் தலத்தினை தியானிக்கும் அடியார்கள் இம்மையில் இடர்கள் நீங்கி மறுமையில் உயர்கதி பெறுவார்கள் என்றும், சிவபுரம் சென்றடைந்து தொழும் அடியார்கள் உயர்கதி அடைவார்கள் என்றும் சிவபுர நகரத்தின் புகழினை எடுத்துரைக்கும் அடியார்கள் உயர்கதி அடைவார்கள் என்றும் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில், இந்த தலத்து இறைவனைத் தொழுகின்ற அடியார்கள் அடையவிருக்கும் நன்மையை கூறுகின்றார். அடுதல் என்றால் கொல்லுதல் என்று பொருள். அடுபிணி=ஆட்கொல்லி நோய்கள்; தணிவு=அடக்கம்

பொழிப்புரை:

அடக்கம் உடைய மக்கள் வாழும் சிவபுரம் நகரினில் பொருந்தியவனும் கருநிறம் உடைய மாணிக்கம் பதித்தது போன்ற கழுத்தினை உடையவனும் ஆகிய சிவபெருமானின் இணையான திருவடிகளைத் தொடர்ந்து தொழும் அடியார்கள், தாங்கள் எடுத்த காரியத்தினை நிறைவாக முடிக்கும் துணிவு உடையவர்களாகவும், திருநீறு பூசும் அடியார்களாகவும், உடலை மிகுதியாக வருத்தும் ஆட்கொல்லி நோய்கள் ஏதும் சென்றடையாத தன்மை உடையவர்களாகவும், மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் தன்மையை வீசியெறிந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெரும் ஆற்றல் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

பாடல் 5:

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்

நிறையவன் உமையவள் மகிழ் நட நவில்பவன்

இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்

உறைவு என உடையவன் எமை உடையவனே

விளக்கம்:

மதி என்ற சொல்லுக்கு அறிவு என்றும் சந்திரன் என்ற இரண்டு பொருள் உள்ளதை நாம் அறிவோம். மதி உடையவன் என்று குறிப்பிடும்போது பிறைச் சந்திரனைத் தனது சடையினில் சூட்டிக் கொண்டவன் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. மதியாக உள்ளவன் என்று குறிப்பிடும்போது,அறிவாக ஞானமாக உள்ளவன் என்று பொருள் கொள்வதே மிகவும் பொருத்தமாக உள்ளது. உறைவு=உறையும் இடம்; இறை=தலைவன்; சிவபுர நகரத்தின் பெருமையையும் ஆங்கே வாழ்கின்ற மக்களின் சிறப்பையும் கண்டுணர்ந்த திருஞானசம்பந்தர், அவர்களைப் போன்று தானும் பெருமானுக்கு அடிமையாக உள்ள தன்மையை இங்கே, இறைவன் தன்னை உடையவன் என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார்.

இந்த பாடலில் உமையம்மை மகிழ பெருமான் நடனம் ஆடுகின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமான் நடனத்தை எப்போதும் அருகில் இருந்து கண்டு களிப்பவள் உமை அன்னை. எனவே உமையன்னை பெருமானின் நடனத்தைக் காண்பதாகவும், அந்த நடனத்திற்கு தாளம் இடுவதாகவும்,நடனத்திற்கு ஏற்ப படுவதாகவும், நடனத்தைக் கண்டு மகிழ்வதாகவும் பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. பெருமான் ஆடுகின்ற நடனத்தைக் கண்டு உமை அன்னை மகிழ்வதை குறிப்பிடும் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.39.7), திருஞானசம்பந்தர் மாமலை வேந்தன் மகள் மகிழ நின்றாடினார் என்று கூறுகின்றார். மண்ணும் பொடியாகும் வண்ணம் செய்யும் பெருமான் என்று சம்பந்தர் கூறுகின்றார். மண் என்பதற்கு உலகம் என்று பொருள் கொள்ளவேண்டும். பிரளய காலத்தில் உலகில் அனைத்துப் பொருட்களும் அழிந்து எரியும் போது உலகமே சுடுகாடாக காட்சி அளிக்கின்றது. இந்த பிரளய காலத்தை தான் சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உலகமும் உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் அழிந்த பின்னர், அனைத்து உயிர்களும் தத்தம் உடல்களிலிருந்து பிரிந்து பெருமானிடம் ஒடுங்குகின்றன. பல்லாயிரக் கணக்கான பிறவிகள் எடுத்து எண்ணற்ற துயர்களுக்கு ஆட்பட்ட உயிர்களுக்கு இளைப்பாறுதல் மிகவும் அவசியமாக தேவைப்படும் தருணத்தில், பெருமான் அந்த உயிர்கள் இளைப்பாறுவதற்கு ஒரு வாய்ப்பினை அளித்து, ஒடுக்குகின்றார். இவ்வாறு உயிர்களுக்கு உதவியதை நினைத்து பெருமான் கொண்ட மகிழ்ச்சி பிராட்டியிடமும் பிரதிபலிக்கின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மா என்ற சொல்லினை அன்னைக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக கொள்ளவேண்டும். உலகப் பொருட்கள், மற்றும் உடல்கள் அனைத்தும் அழிந்த பின்னரும். அன்னை பெருமானைப் போன்று அழியாமல் இருப்பதால், அந்த சிறப்பினை உணர்த்தும் வண்ணம், மா மகள் என்று கூறுகின்றார். நொய்யன=நுட்பமான செயல்; கண்பொடி=கண் பொடிந்து விழுந்த,வெண்பொடி என்ற சொல்லுக்கு உகந்தார் என்பதை அடைமொழியாக கொண்டு, திருநீற்றின் சிறப்பினை உணர்த்துவதாக ஒரு விளக்கமும் அளிக்கப் படுகின்றது. உகந்து ஆர்=விருப்பம் பொருந்திய; விருப்பம் பொருந்திய மனதுடன் நாம் திருநீற்றினை ஏற்றுக்கொண்டு நெற்றியில் அணிந்து கொள்ள வேண்டும்.

மண் பொடிக் கொண்டு எரித்து ஓர் சுடலை மாமலை வேந்தன் மகள் மகிழ

நுண்பொடிச் சேர நின்றாடி நொய்யன செய்யல் உகந்தார்

கண்பொடி வெண் தலையோடு கையேந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்

வெண்பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன்னகராரே

கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.73.1) திருஞானசம்பந்தர், ஒரு மாலை நேரத்தில் பெருமான் நடனம் ஆடுவதைக் காணும் பிராட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் என்று கூறுகின்றார். வானார்=வானில் பொருந்திய; மன்னு=நிலையாக பொருந்திய; போது=மலர்; புனம்=காடு; மான் போன்ற மருண்ட பார்வை உடைய பிராட்டி கண்டு உவக்கும் வண்ணம் மாலை ஆடுவார் என்று மாலை நேரத்தில் பெருமான் நடனம் ஆடியதை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினை உண்டு தங்கள் அனைவரையும் காப்பாற்றிய பெருமானுக்கு நன்றி சொல்வதற்கு ஒரு நாள் மாலை நேரத்தில் தேவர்களும் அனைவரும் சென்று அவரை வணங்கினார்கள். அதனால் மகிழ்ச்சி அடைந்த பெருமான், நந்திதேவரின் இரு கொம்புகளின் இடையே நின்ற வண்ணம் நடனம் ஆடினார். உமையன்னை முதலாக அனைவரும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். தேவியின் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருந்தது; ஆலகால விடம் உட்கொண்ட பின்னரும் பெருமானின் உடலுக்கு எந்த விதமான கேடும் நேராமல் இருந்தது மற்றும் மிகவும் அழகான நடனத்தினை தான் காணும் வாய்ப்பினை பெற்றது. ஆகிய இரண்டுமே தேவியின் உவப்பிற்கு காரணங்கள்.தினமும் மாலை வேலை பிரதோஷ காலமாக கருதப்பட்டு திருவாரூரில் சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. இந்த நடனமே இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது.

வானார் சோதி மன்னு சென்னி வன்னி புனங் கொன்றை

தேனார் போது தானார் கங்கை திங்களொடு சூடி

மானேர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார்

கானூர் மேய கண்ணார் நெற்றி ஆனூர் செல்வரே

பிராட்டியின் உடல் மகிழ்ச்சியினால் பூரிக்கும் வண்ணம், பெருமான் நடனம் ஆடினார் என்று புகலி (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று)தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.54.6) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். முழவ ஒலியின் பின்னணியில் தீப்பிழம்பைத் தனது கையில் ஏந்திய வண்ணம் நடனமாடிய பெருமான், பிராட்டியின் உடலும் உள்ளமும் மகிழ்ச்சியால் பூரித்ததை உணர்ந்து மேலும் ஊக்கமடைந்து நடனமாடினார் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

மண்ணார்ந்த மண் முழவம் ததும்ப மலையான் மகள் என்னும்

பெண்ணார்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர்

விண்ணார்ந்த மதியம் இடை மாடத்தாரும் வியன் புகலிக்

கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே

திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பாடலில் (3.92.4) பிராட்டி முறுவல் செய்ய பெருமான் புறங்காட்டு அரங்கில் நடனம் ஆடுகின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நிலவின் கதிர்கள் போன்று ஒளிவீசும் பற்கள் தெரியும் வண்ணம் செய்த புன்முறுவல் என்று கூறுகின்றார்.

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல் செய்து அருளவேயும்

பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடமாடல் பேணி

ஈண்டு மாமாடங்கள் மாளிகை மீதெழு கொடி மதியம்

தீண்டி வந்து உலவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே

மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் கோலத்தை மிகவும் அழகாக நமது கண் முன்னே கொண்டுவரும் அப்பர் பிரான் (4.08.10), பெருமானின் திருவாயின் வலது பகுதி வேதத்தை சொல்வதாகவும், இடது பகுதி அந்த வேதத்தை கேட்டு ரசித்தபடியே புன்முறுவல் செய்வதாகவும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் கூறுகின்றார். ஓலை=தோடு: சங்கு=வெண் சங்கால் செய்யப்பட்ட குழை ஆபரணம். மாதொரு பாகனாக இறைவனைக் காணும் அப்பர் பிரான் வேறெந்த பாடலிலும் காணப்படாத காட்சியினை இங்கே வழங்குகின்றார். மாதொருபாகனின் உருவத்தை சற்று விவரமாக சொல்லும் திருமுறைப் பாடல்களில் இந்த தேவாரப் பாடல் ஒன்று. புதிய சுருள் பொன்னால் செய்யப்பட்ட தோட்டினை ஒரு காதிலும், மற்றோர் காதினில் வளைந்த குழை ஆபரணம் தனது தோளில் புரளும் படியாக அணிந்துள்ள பெருமானின், திருவாயின் ஒரு பகுதி வேத கீதங்களைப் பாட, திருவாயின் மற்றொரு பகுதி பெருமான் பாடும் வேத கீதத்தை ரசித்தபடியே புன்முறுவல் பூக்கின்றது. சடையாக காணப்படும் வலது பகுதில், தேன் சொட்டும் கொன்றை மலர் விரிந்த படியே இருக்க, இடது பகுதியில் உள்ள கூந்தல் பின்னப்பட்டு அழகாக காணப்படுகின்றது, இவ்வாறு பெருமானின் தன்மையும் இயல்புகளும் ஒரு புறத்திலும் மற்றோர் புறத்தில் உமை அம்மையின் தன்மையும் இயல்புகளும் காணப்பட்டன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை..

புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஓர் காது சுரி சங்கு நின்று புரள

விதி விதி வேத கீதம் ஒருபாடும் ஓதம் ஒருபாடும் மெல்ல நகுமால்

மதுவிரி கொன்றை துன்று சடைபாக மாதர் குழல்பாகமாக வருவர்

இது இவர் வண்ணம் வண்ணம் இவள் வண்ணம் வண்ணம் எழில் வண்ணம் வண்ணம் இயல்பே

தில்லைத் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.80.5) பிராட்டி, தனது நடனத்தைக் கண்டு மகிழ்ந்து நிற்கும் வண்ணம் பெருமான் தில்லை சிற்றம்பலத்தில் நடனம் ஆடுகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இத்தகைய அழகிய ஆடலைக் கண்ட கண்கள், வேறு எந்த காட்சியையும் கண்டு மகிழாது என்று கூறுகின்றார். நின்ற என்ற சொல் ஞின்ற என்று மருவியுள்ளது. நகர ஞகரப் போலி என்று நன்னூல் இலக்கண நூலில் குறிப்பிடப்படும் விதிக்கு, உதாரணமாக இந்த பாடல் நன்னூல் உரையாசிரியர்களால் கருதப்படுகின்றது. செய்=வயல்: நீலம்=நீலோற்பல மலர்:

செய்ஞ்ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்

மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க

நெய்ஞ்ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணிமிடற்றன்

கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்பதென்னே

அப்பர் பெருமான் தில்லைக் கூத்தனை நேரில் காண்பதற்கு எத்தனை ஆர்வத்துடன் இருந்தாரோ, அதற்கும் மேல் நடராஜப் பெருமான் அப்பர் பிரானைக் காண்பதற்கு ஆர்வத்துடன் இருந்தார் போலும். அப்பர் பெருமான் சிற்றம்பலத்தின் எதிரே பலமுறை தொழுது எழுந்த போது, நீ எப்போது வந்தாய் என்ற குறிப்பு தோன்ற இறைவனது சிரிப்பு காணப்பட்டதாக அப்பர் பெருமான் உணர்ந்தார். இதனை கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் அப்பர் பிரான் பதிவு செய்கின்றார். கை நின்ற ஆடல் என்று, சிவபிரானின் திருக்கையில் குறிப்பு நின்றதாக அப்பர் பிரான் இங்கே பதிவு செய்கின்றார் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. கருநட்டக் கண்டனை என்று தொடங்கும் பதிகத்தில் பெருமானின் திருக்குறிப்பினைத் தான் உணர்ந்ததை குறிப்பிடும் அப்பர் பிரானின் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, தில்லைச் சிற்றம்பலத்து கூத்தனை முதல் முறையாக பார்த்த போது அவரது புன்சிரிப்பு வெளிப்படுத்திய திருக்குறிப்பு, இந்த பதிகம் பாடிய போது, சிவபிரானின் கைகளில் வெளிப்படுகின்றது போலும்.

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் (6.53.11) பெருமான் தனது நடனத்தை, பிராட்டி மனம் மகிழ்ந்து மனம் குளிர்ந்து காணும் வண்ணம், நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். வெயிலாய=சூரியனின் ஒளி; சூரியனின் ஒளி மற்ற அனைத்து ஒளிகளையும் தன்னுள் அடக்கி பிரகாசிக்கும். அது போன்று மற்ற ஒளிகளை அடக்கி அவற்றை மிஞ்சும் வண்ணம் ஒளி வீசும் திருமேனியை உடைய பரமன் என்று உணர்த்தப்படுகின்றது.அயில்=கூர்மை; தான் உறையும் இருப்பிடமாகிய கயிலாய மலையினை பேர்க்கத் துணிந்த அரக்கனை பெருமான் மன்னித்த செய்கை, ஏனையோரிலிருந்து மாறுபட்ட செய்கையாக கருதப் படுகின்றது. தான் வாழ்கின்ற இல்லத்தையே பேர்த்து எடுக்க முயற்சி செய்பவரை, வேறு எவரும் மன்னிக்கமாட்டர்கள் அல்லவா. அதனால் தான், பெருமானை மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவர் என்று கூறுகின்றார் போலும். குயில் போன்று இனிய மொழிகளை உடைய பிராட்டி என்றும், பெருமானின் திருமேனி ஒளி, மற்ற அனைத்து ஒளிகளையும் மிஞ்சும் வண்ணம் மிளிர்கின்றது என்றும் கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமான் தன்னை ஆட்கொண்ட செய்தியை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

கயிலாயமலை எடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்து அருளிச் செய்தார் போலும்

குயில் ஆரும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்தாட வல்ல குழகர் போலும்

வெயிலாய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்

அயிலாரும் மூவிலை வேற்படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

மங்கையவள் மகிழ சுடுகாட்டின் இடையே பெருமான் நடனம் ஆடினார் என்று சுந்தரர் கச்சி அனேகதங்காவதம் பதிகத்தின் பாடலொன்றினில் (7.10.9)கூறுகின்றார். சங்கையவர்=பெருமானின் தன்மையில் ஐயப்பாடு கொண்டவர்; புணர்தல்=சேர்தல்; தளவம்=முல்லை அரும்பு; விரா மிகு=என்றும் பிரியாமல் இருக்கும்; அங்கை அவன்=உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குபவன்;

சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவே நகையால் விரா மிகு சீர்

மங்கையவள் மகிழச் சுடுகாட்டிடை நட்ட நின்றாடிய சங்கரன் எம்

அங்கையவன் அனல் ஏந்துபவன் கனல் சேர் ஒளியன்னதோர் பேர் அகலத்து

அங்கையவன் உறைகின்ற இடம் கலிச்கச்சி அனேகதங்காவதமே

திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.55.8) சுந்தரர் மான் போன்ற மருண்ட பார்வை உடைய பார்வதி தேவி மகிழும் வண்ணம் பெருமை வாய்ந்த நடனம் புரிந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். இந்த நடனத்தின் போது, திரிபுரத்தில் வாழ்ந்த வந்த அடியார்களில் ஒருவர் முழவு வாத்தியத்தை இயக்கும் பேற்றினைப் பெற்றார் என்று கூறுகின்றார். மற்ற இருவர் பெருமானின் வாயில் காவலராக பணிபுரியும் வாய்ப்பினை அடைந்த தன்மையும் இங்கே குறிப்பிடப் படுகின்றது.

மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்

காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்காக

மானை நோக்கியோர் மாநடம் மகிழ மணிமுழா முழக்க அருள் செய்த

தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும்பொழில் திருப்புன்கூர் உளானே

பொழிப்புரை:

வேதங்களை அருளியவனும், வேதங்களில் பொதிந்துள்ள ஞானமாக இருப்பவனும், கயிலாய மலையாக இருப்பவனும், என்றும் அழியாமல் நிலையாக இருப்பவனும், உலகங்கள் எங்கும் நிறைந்து நிற்பவனும் எல்லோர்க்கும் தலைவனாக இருப்பவனும் ஆகிய இறைவன் உமை அன்னை மகிழும் வண்ணம் நடனம் புரிகின்றான். ,இமையவர்கள் செய்யும் பணிவிடைகளை ஏற்றுக் கொள்ளும் இறைவன் சிவபுரம் நகரத்தினைத் தனது உறைவிடமாக ஏற்றுக் கொண்டுள்ளான். அவன் என்னை அடிமையாக உடையவனும் ஆவான்.

பாடல் 6:

முதிர்சடை இளமதி நதிபுனல் பதிவு செய்து

அதிர் கழல் ஒலி செயவரு நட நவில்பவன்

எதிர்பவர் புரம் எய்த இணையிலி அணை பதி

சதிர் பெரும் உளம் உடையவர் சிவபுரமே

விளக்கம்:

இந்த பாடலில் சதிர் பெறும் உள்ளம் உடைய அடியார்கள் வாழ்கின்றனர் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இறைவன் நமக்கு கருவி கரணங்களை அளித்ததன் நோக்கமே, அந்த கருவி கரணங்களை தகுந்த முறையில் பயன்படுத்தி, நமது மெய்ஞானத்தை பெருக்கிக் கொண்டு இறைவனின் தன்மைகளை சரியாக அறிந்து கொண்டு, நமது வினைகளை படிப்படியாக கழித்துக் கொண்டு, முக்தி உலகம் சென்று அடையும் வழியில் நாம் முன்னேற வேண்டும் என்பதே ஆகும். இதுவே உயிர்களின் விருப்பமாகவும் உள்ளது. இதற்கான முதல் படி, நமது புலன்களின் வழியே நாம் செல்லாமல், நமது விருப்பம் ஈடேறும் வகையில் புலன்களை செயல்படச் செய்யவேண்டும். இவ்வாறு புலன்களின் சேட்டைகளை முற்றிலும் அடக்கி, புலன்களை தங்களது வசம் வைத்துக் கொள்ள நமக்கு இறைவனின் அருள் மிகவும் அவசியம். அத்தகைய அருள் பெற்று புலன்களை அடக்கியாளும் அடியார்களை, சதுரப்பாடு உடைய மனம் உடைய அடியார்கள் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

இந்த பாடலில் இணையிலி என்று பெருமானை திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். பெருமானின் எந்த தன்மையை எடுத்துக் கொண்டாலும், எந்த செயலை எடுத்துக் கொண்டாலும், அதற்கு ஒப்பாகவோ மிக்காகவோ வேறு எவரது செயலையும் நாம் குறிப்பிட முடியாது. இவ்வாறு ஒப்பற்றவராக இருக்கும் பெருமானை இணையிலி என்றும் துணையிலி என்றும் குறிப்பிட்டு அருளாளர்கள் மகிழ்கின்றனர். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகம் ஒன்றினில், சம்பந்தர் (1.105) ஒப்பில்லாதபடி உயர்ந்த அழகினை உடைய திருமேனி கொண்டவன் சிவபெருமான் என்ற பொருள்பட, படிபட்ட கோலத்தன் என்று குறிப்பிடுகின்றார். காண்போரை சொக்க வைக்கும் சொக்கனாகவும், சுந்தரனாகவும் திகழ்வது பெருமானின் அழகு, அதற்கு ஒப்பு ஒன்றும் இல்லாத நிலையில் உயர்ந்த அழகுடன் விளங்குவதில் வியப்பு என்ன இருக்கமுடியும். முத்து விதானம் என்று தொடங்கும் பதிகம் மூலம் (4.21), ஆதிரை நாள் விழாவின் சிறப்பினை அப்பர் பிரான் வாயிலாக அறிந்த திருஞானசம்பந்தர், பெருமானை ஆதிரையன் என்று அழைப்பதை நாம் இந்த பாடலில் காணலாம். கூடலர்= வேதநெறியுடன், சிவநெறியுடன் கூடாத திரிபுரத்து அரக்கார்கள்;

பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்

சூடலன் மூவிலைய சூலம் வலன் ஏந்திக்

கூடலர் மூவெயிலும் எரி உண்ண கூர் எரி கொண்டு எல்லி

ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.110.4) திருஞானசம்பந்தர் பெருமானை இணையிலி என்று அழைக்கின்றார்.பணைமுலை=பருத்த மார்பகங்கள்: ஒன்னார்= பகைவர்; துணை மதில்=ஒன்றுக்கொன்று துணையாக இருந்த மூன்று பறக்கும் கோட்டைகள்; திரிபுரத்து அரக்கர்களின் தீய செயல்களுக்கு துணையாக இருந்த கோட்டைகள் என்றும் பொருள் கொள்ளலாம். கணை=அம்பு; அடுதிறல்=கொள்ளும் தன்மை;காலனின் வலிமையை அடக்கி அவனை கொன்றவர்கள் வேறு எவரும் இல்லை என்பதால், இணையிலி என்று கூறினார் போலும். திரிபுரத்து அரக்கர்களை அழித்த செயலும், வேறு எவரும் செய்ய முடியாத செயலாக விளங்கியதை நாம் அறிவோம்.

பணைமுலை உமை ஒரு பங்கன் ஒன்னார்

துணை மதிள் மூன்றையும் சுடரின் மூழ்கக்

கணை துறந்து அடு திறல் காலர் செற்ற

இணையிலி வளநகர் இடைமருதே

இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.10.6) திருஞானசம்பந்தர் இறைவனை, இராமபிரானின் பழி போக்கிய இணையிலி என்று குறிப்பிடுகின்றார். அலைகள் சூழ்ந்த கடலில் அணை கட்டி, இலங்கை செல்வதற்கு இராமர் வழி வகுத்த தன்மை பாடலின் முதலடியில் குறிப்பிடப் படுகின்றது. பணையிலங்கும்=பருத்து விளங்கும்; இறுத்த=அறுத்து வீழ்த்திய: இணையிலியாக இருக்கும் காரணத்தால், தனக்கு தக்க துணை இல்லாதவனாக பெருமான் இருக்கும் தன்மையும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. எல்லா விதமான ஆற்றலும் உடையவனாக விளங்கும் பெருமானுக்கு துணை தேவையில்லை அல்லவா.

அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன்

பணையிலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய

இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்

துணையிலி தூமலர்ப் பாதம் ஏத்தத் துயர் நீங்குமே

பாவநாசத் திருப்பதிகத்தின் பாடல் ஒன்றினில் (பற்றற்றார் சேர் பழம்பதி என்று தொடங்கும் பதிகம் 4.15.5) அப்பர் பிரான் பெருமானை துணையிலி என்று குறிப்பிடுகின்றார். தனக்கு நிகராகவோ தன்னை விடவும் உயர்ந்தவராகவோ எவரேனும் இருந்தால் தானே அவர்களை தனக்குத் துணையாக வைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு பெருமானுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருமான், தனக்கு துணையாக எவரைக் கொள்ள முடியும். எனவே தான் துணையிலி என்று பொருத்தமாக இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். குருமணி=நல்ல நிறமுடைய மாணிக்கம்: குடமூக்கு=கும்பகோணத்தில் உள்ள கும்பேசர் கோயில். உள்ளம் மகிழ்ச்சியுடன் இருந்ததால், உடலும் குளிர்ந்ததாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். குருமணி என்பதற்கு குருநாதன் என்றும் பொருள் கொள்ளலாம். விடமுணி=விடம் உண்ணி, விடம் உண்டவன்;

கோலக்காவில் குருமணியைக் குடமூக்கு உறையும் விடமுணியை
ஆலங்காட்டில் அந்தேனை அமரர் சென்னியாய் மலரைப்
பாலில் திகழும் பைங்கனியைப் பராய்த்துறையெம் பசும்பொன்னைச்
சூலத்தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.42.2) இறைவனை ஒப்பார் இல்லாதவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.மின்னானை=மின்னலாக இருந்து ஒளி தருபவன்; உருமு=இடி; ஒளியின் வேகத்தை விடவும் ஒலியின் வேகம் குறைவு என்பதால் நாம் மின்னலை முன்னர் காண்கின்றோம், அதன் பின்னரே இடியின் ஓசையைக் கேட்கின்றோம். எனவே இந்த வரிசை முறையை பின்பற்றி மின்னலை முன்னமும் இடியை பின்னரும் வைத்து அப்பர் பிரான் பாடியுள்ளார். வெண்முகிலாய் மழை பொழிவான் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு சற்றே வியப்பினைத் தரலாம்.நீர்த்திவலைகளை அதிகமாக உள்ளடக்கியதால் மேகங்கள் கருத்து காணப் படுவதையும், அத்தகைய மேகங்கள் ஒன்றோடு ஒன்று இடித்து மழை பொழிவதையும் நாம் அறிவோம். அப்படி இருக்கையில் வெண்முகில் என்று சொல்வதேன். நம்மைச் சற்று சிந்திக்க வைக்கும் தொடர் இது. கரு மேகங்களாக இருப்பினும், ஒன்றுடன் ஒன்று இடிப்பதால் ஏற்படும் மின்னல் ஒளியின் பின்னணியில், மேகங்கள் வெண்மை நிறத்துடன் காணப்படுவதை இங்கே குறிப்பிடும் வண்ணம் மழை பொழியும் வெண்முகில் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

மின்னானை மின்னிடைச் சேரும் உருமினானை வெண்முகிலாய் எழுந்து மழை பொழிவான் தன்னைத்

தன்னானைத் தன் ஒப்பார் இல்லாதானைத் தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தையாகி

என்னானை எந்தை பெருமான் தன்னை இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே

அன்னானை ஆவடு தண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்துய்ந்தேனே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.64.3) அப்பர் பிரான், பெருமானை துணையிலி என்று குறிப்பிடுகின்றார். துணை என்ற சொல்லுக்கு ஒப்பு என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தனது திருமேனியில் திருநீறு பூசியவனும், நீராகவும் தீயாகவும் மற்றுள்ள பூதங்களாகவும் இருப்பவனும், வெம்மை நிறைந்த மழுப்படையும் உடுக்கையையும் கையில் ஏந்தியவனும், தனது உள்ளங்கையில் தீயினை ஏந்தியவாறு நடனம் ஆடுபவனும்,உலகிலுள்ள அனைத்து உயிர்களின் பிறப்புக்கும் காரணமாக இருப்பவனும், இவ்வாறு மற்றவர்களின் பிறப்புக்கு காரணமாக இருந்தாலும் பிறப்பு எனப்படும் குறையில்லாமல் இருப்பவனும், தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவனும், தன்னைத் துணை என்று நினைத்துத் தொழும் அடியார்களின் உள்ளத்தில் இருந்து அவர்களை காப்பவனும், பலவிதமான புகழ்கள் உடையவனும், புள்ளிகள் உடலில் உடைய பாம்பினையும் கங்கை நதியையும் தனது விரிந்த சடை மேல் ஏற்றவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை..

நீற்றவன் காண் நீராகித் தீயானான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில்

தோற்றவன் காண் தோற்றக் கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணையென்று தொழுவார் உள்ளம்

போற்றவன் காண் புகழ்கள் தமை படைத்தான் தான் காண் பொறியரவும் விரிசடை மேல் புனலும் கங்கை

ஏற்றவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

பள்ளியின் முக்கூடல் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் அப்பர் பிரான் (6.69.5) இறைவனை தன்னொப்பார் இலாதான் என்று குறிப்பிடுகின்றார். கார் முகில்=கரிய நிறத்து மேகம்; படிந்தான்=வெளிப்பட நிறைந்தான். நிலத்தில் ஒரு வட்டம் கிழித்து, அந்த வட்டமான நிலத் துண்டினையே சக்கரமாக மாற்றி சலந்தரனை அழித்தவன் சிவபெருமான். இவ்வாறு கையில் எந்த படையுமின்றி சென்றபோது, எதிரே வந்த பலம் வாய்ந்த அரக்கனை வென்ற செய்கை செயற்கரிய செயல் என்பதால் தன்னொப்பார் இல்லாதான் என்று இறைவனை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

அடைந்தார் தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம்

கடிந்தானைக் கார் முகில் போல் கண்டத்தானைக் கடும் சினத்தோன் தன்னுடலை நேமியாலே

தடிந்தானை தன்னொப்பார் இல்லாதனைத் தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில்

படிந்தானைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழே நான் உழன்றவாறே

படி என்றால் ஒப்பான பொருள் என்று அர்த்தம். அப்பர் பிரான் சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.82.7), இறைவனை படி ஒருவர் இல்லாப் படியார் என்று அழிக்கின்றார். காரோணத்து என்றும் இருப்பார் என்று அப்பர் பிரான் காரோணம் தலத்தினை குறிப்பிடுகின்றார். காரோணம் என்ற பெயருடன் தமிழ்நாட்டில் மூன்று கோயில்கள் உள்ளன, நாகைக் காரோணம், குடந்தைக் காரோணம் மற்றும் கச்சிக் காரோணம் என்பன அவை.நாகைக் காரோணம் மற்றும் குடந்தைக் காரோணம் பாடல் பெற்ற தலங்கள். காய ஆரோகணம் என்ற வடமொழிச் சொல் காரோணம் என்று திரிந்ததாக கூறுவார்கள். காயம் என்றால் உடல். ஆரோஹணம் என்றால் தழுவிக் கொள்ளுதல் என்று பொருள். பல தலங்களை இந்த பதிகத்தின் பாடல்களில் குறிப்பிட்டு வரும் அப்பர் பிரான், காரோணம் என்று இந்த மூன்று தலங்களையும் குறிப்பிடுகின்றார் போலும். காரோணர் என்று குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, இறைவன் தேவியைத் தழுவிக் கொண்ட நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது போலும். கச்சி ஏகம்பம் தலத்தில், தழுவக் குழைந்த நாதராக இறைவன் இருப்பதை நமக்கு நினைவூட்டும் வகையில் ஏகம்பம் மேவி இருந்தார் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

கடுவெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும் காரோணத்து என்றும் இருப்பார் போலும்

இடிகுரல் வாய்ப் பூதப் படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும்

படி ஒருவர் இல்லாப் படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம்மூர் போலும்

செடிபடு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும் திருச்சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே

சங்கிலியாரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர், அவருக்கு கொடுத்த சத்தியத்தின் காரணமாக திருவொற்றியூரை விட்டு அகல முடியாத சூழ்நிலையில் இருந்த சுந்தரருக்கு ஆரூர் பெருமானைக் காண வேண்டும் என்று தீராத ஆசை, ஒரு நாள் ஏற்பட்டது. ஆரூர்ப் பெருமானின் மீது மிகவும் அதிகமான பற்று வைத்திருந்த தான், எந்த தன்மையால் ஆரூர் இறைவனை விட்டு இவ்வாறு பிரிந்து இருக்கின்றேன் என்று தனது ஆற்றாமையை வெளிபடுத்திய வண்ணம், திருவொற்றியூரில் இருந்த வண்ணம் ஆரூர்ப் பெருமானை நினைத்து பாடிய திருப்பதிகம். இந்த பதிகத்தின் பாடலில் (7.51.5)ஒப்பரிய குணம் உடைய இறைவனை, தனக்கு இணையாக வேறு எவரும் இல்லாத இறைவனை எவ்வாறு பிரிந்திருக்க முடியும் என்ற ஏக்கத்தினை வெளிப்படுத்துகின்றார். ஒப்பரிய குணம் என்று பெருமானின் அரிய எட்டு குணங்கள் உணர்த்தப் படுகின்றன என்று சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.எட்டு குணங்களாவன, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் ஆகிய இந்த எட்டு குணங்களே சைவ சித்தாந்தத்தில் சிவபிரானது குணங்களாக கூறப்படுகின்றன. இந்த ஒப்பரிய எட்டு குணங்களை உடைய இறைவன் என்று உணர்த்தும் முகமாக,இறைவனை எண்குணத்தான் என்று அருளாளர்கள் அழைக்கின்றனர். அணைவின்றி=சென்றடைந்து சார்ந்து வாழாமல்; இந்த பதிகம் பாடியபோதே எவ்வாறேனும் திருவாரூர் சென்று தியாகேசனைக் காண்பது என்ற முடிவுக்கு சுந்தரர் வந்த நிலையினை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது. பரிசு=தன்மை;நிலவுலகத்தில் வாழும் மனிதர்களை விடவும், தேவர்களை விடவும் பல விதங்களில் உயர்ந்தவராகிய திருமாலை, செப்பரிய திருமால் என்று குறிப்பிடுகின்றார். செப்பரிய திருமாலும் எளிதில் பெருமானின் தன்மையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் இந்த பாடலில் சுந்தரர் கூறுகின்றார்.

செப்பரிய அயனோடு மால் சிந்தித்து தெரிவரிய

அப்பெரிய திருவினையே அறியாதே அருவினையேன்

ஒப்பரிய குணத்தானை இணையிலியை அணைவின்றி

எப்பரிசு பிரிந்து இருக்கேன் என் ஆரூர் இறைவனையே

திருவாசகம் ஆசைப்பத்து பதிகத்தின் பாடல் ஒன்றினில், மணிவாசகர் ஒப்புமை இல்லாத பரம்பரன் என்று குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.கடி=மிகுந்த: செடி ஆர்=கேடுகள் நிறைந்த, குற்றங்கள் நிறைந்த; யாக்கை=உடல்; கூறுபாடு அற வீசி=முற்றிலும் கழித்து; திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் குருவாக வந்து பாத தீட்சை அளித்து தன்னை ஆட்கொண்ட, இறைவன் சிறிது நேரம் கழித்து மறைந்து விட்டதை நினைத்துப் பார்க்கும் மணிவாசகர், இறைவனுடன் நிலையாக கலந்திருக்கும் நிலையை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். இறைவன் மட்டும் மறையவில்லை.அவருடன் இருந்த அடியார்களும் மறைந்து விடுகின்றார்கள். தனது உடல் தான், இறைவனுடன் தான் சேர்ந்து இருப்பதற்கு தடையாக இருந்தது என்பதை அடிகளார் உணர்கின்றார் போலும். குற்றங்கள் நிறைந்த அந்த உடலினை உதறி விட்டு, தனது ஆன்மா சிவபுர நகர் சென்று அடைந்து இறைவனின் ஒளி வீசும் திருமேனியை கண்ணாரக் காணவேண்டும் என்றும் அவனுடன் காட்சி அளித்த பழ அடியார்களுடன் இணைந்து இருக்க வேண்டும் என்று மணிவாசகர் விரும்புகின்றார். அந்த விருப்பத்தை உணர்த்தும் பாடல் இது. இங்கே சிவபுரம் என்று முக்தி உலகினை மணிவாசகர் குறிப்பிடுகின்றார்.

செடி ஆர் யாக்கை திறம் அற வீசிச் சிவபுரநகர் புக்குக்

கடி ஆர் சோதி கண்டு கொண்டு என் கண் இணை களி கூர

படி தான் இல்லாப் பரம்பரனே உன் பழ அடியார் கூட்டம்

அடியேன் காண ஆசைப் பட்டேன் கண்டாய் அம்மானே

திருவாசகம் கண்ட பத்து திருப்பதிகத்தின் பாடலில் மணிவாசகர், தன்னை ஆட்கொண்ட பெருமான், தன்னை பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுவித்த இணையிலி என்று கூறுகின்றார். பெருமானைத் தவிர்த்து வேறு எவரும் பிறப்பிறப்புச் சங்கிலியை அறுக்க முடியாது என்பதால், அவரை இணையிலி என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாகவே உள்ளது. நாம் பிறக்கும் போதே, இந்த பிறவியில் நுகர்ந்து கழிக்கவேண்டும் என்று இறைவனால் நிர்ணயிக்கப் படும் வினைகளின் தொகுதியும் நம்முடன் சேர்ந்து கொள்கின்றன. அந்த வினைகளின் தன்மையால் நமக்கு வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் ஏற்படுகின்றன.அவ்வாறு நாம் அனுபவிக்கும் இன்பங்களில் ஆழும் நாம் இறைவனை மறந்து விடுவது இயற்கை. துன்பங்களில் ஆழும் போது, ஒரு சிலர் தங்களது துன்பங்கள் தீர வேண்டும் என்று வேண்டுவதற்காக இறைவனை நினைக்கின்றார்களே தவிர வேறு எதற்காகவும் இறைவனை நினைப்பதில்லை. பலரும் தனக்கு ஏன் இந்த துன்பங்கள் ஏற்படுகின்றன என்ற கவலையில், துன்பங்கள் இழைப்பவரை கடிந்து கொள்வதும் ஏன் இறைவனையே சினந்து கொள்வதும் நடைபெறுவதும் நாம் அடிக்கடி காண்கின்ற நிகழ்ச்சிகள். இந்த நிலையில் தான் இருப்பதாக மணிவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த இன்ப துன்பங்களில் விளைவால் மனநிலை மாறாமல், மகிழ்ச்சியோ வேதனையோ ஏதும் கொள்ளாமல், தங்களது மனதினில் ஏற்படும் சஞ்சலங்களை தவிர்த்து,இன்ப துன்பங்களை சரிசமமாக பாவித்து, எப்போதும் சிவ சிந்தையுடன் வாழும் அடியார்களை, இந்த இன்ப துன்பங்கள் ஏதும் செய்வதில்லை. அந்த நிலையை அடையாமல் வினைகளால் தான் தளர்ந்து கிடப்பதை குறிப்பிடும் மணிவாசகர், தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்கொண்ட பெருமானை,தான் தில்லை அம்பலத்தில் கண்டதாக கூறுகின்றார்.

வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்

தனைச் சிறிதும் நினையாதே தளர்வு எய்திக் கிடப்பேனை

எனைப் பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பறுத்த இணையிலியை

அனைத்துலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே

இந்த உலகத்தில் நாம், மற்றவர்களின் பெருமையை உணர்ந்து மதித்து அவர்கள் நம்மை விட பெருமையிலும், குணத்திலும், ஆற்றலிலும் பெரியவர்களாக இருந்தால் அவர்களை நாம் தலைவராக ஏற்றுக் கொள்கின்றோம். சிவபிரானை விட ஆற்றலில் மிக்கவர்களும், பெருமையில் சிறந்தவர்களும்,குணவான்களும் எவரும் இல்லாத காரணத்தால், சிவபிரான் எவரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படவில்லை. அதனால் தனக்குத் தலைவர் என்று ஒருவர் இல்லாத ஒப்பற்ற தலைவராக சிவபிரான் விளங்குகின்றார். இந்தக் கருத்து தான் தலைவர் அல்லாமை என்ற தொடரால் பல பதிகங்களில் விளக்கப் பட்டுள்ளது. தனக்குத் தலைவராக எவரும் இல்லாத காரணத்தால், சிவபிரான் எவரையும் வணங்க வேண்டிய அவசியமும் இல்லை. எனவே அவரது கைகளுக்கு, சேர்ந்து இருப்பது என்ன என்பதே தெரியாது. அதனால் தான் மணிவாசகப் பெருமான் இவரை, சேர்ந்தறியாக் கையன் என்று நயமாக உரைக்கின்றார்.

கையார் வளை சிலம்ப காதார் குழையாட

மையார் குழல் புரளத் தேன் பாய வண்டொலிப்பச்

செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக்

கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியானை

ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானாய்

இதே கருத்து திருமூலரின் பாடலிலும் காணப்படுகின்றது. பிறங்க=விளங்க

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை என்னப்

பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி

என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன்

தன்னால் தொழப்படுவார் இல்லை தானே

பொழிப்புரை:

முதிர்ந்த தனது சடையின் மீது இளமையான ஒற்றைப் பிறைச் சந்திரனையும் கங்கை நதியையும் பதியவைத்து பொருத்தமாக அணிந்து கொண்டுள்ள இறைவன், தனது காலில் அணிந்து கொண்டுள்ள கழல்கள் அதிர்ந்து ஒலிக்குமாறு நடனம் புரிகின்றான். அவன் தன்னை எதிர்த்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே அம்பினை எய்து, எரித்து அழித்தவன் ஆவான். இத்தகைய ஆற்றலின் காரணமாக,இணையிலியாகத் திகழ்கின்ற பெருமான், சென்றடைந்து உறையும் தலம் சிவபுரமாகும். இந்த சிவபுரம் தலத்தினில், பெருமானின் அருள் பெற்று, தங்களது புலன்களை அடக்கும் திறமை உடைய மனம் கொண்ட அடியவர்கள் வாழ்கின்றனர்.

பாடல் 7:

வடிவுடை மலைமகள் சலமகள் உடன் அமர்

பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன்

செடிபடு பலி திரி சிவன் உறை சிவபுரம்

அடைதரும் அடியவர் அருவினை இலரே

விளக்கம்:

சென்ற பாடலில் சிவபுரம் தலத்தினில் வாழும் அடியார்கள் இறைவனின் அருளினால், ஐந்து புலன்களையும் அடக்கி உயிருக்கு உதவி புரியும் வண்ணம் அந்த புலன்களை செயல்படுத்தும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில், சிவபுரம் சென்றடைந்து அந்த தலத்து இறைவனை வணங்கும் அடியார்கள், பொதுவாக நீங்குவதற்கு அரியதாக திகழும் வினைகளும் நீங்கப் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று கூறுகின்றார். சலமகள்=கங்கை நதி; உழை=மான்; அதள்=தோல்; செடிபடு=முடை நாற்றம் வீசும் பிரம கபாலம்; அருவினை=நீக்கிக் கொள்வதற்கு மிகவும் அரியதாக திகழும் வலிமை வாய்ந்த வினைகள். பொடிபடு=புள்ளிகள் பொருந்திய;

பொழிப்புரை:

அழகிய வடிவினைக் கொண்ட மலைமகள் சலமகள் என்று அழைக்கப்படும் கங்கை நதி ஆகிய இருவருடன் புள்ளிகள் பொருந்திய மான் தோலினைத் தனது உடையாக கொண்டுள்ள பெருமான் மிகுந்த அழகுடன் காணப்படும் உருவம் உடையவன் ஆவான்; முடை நாற்றம் வீசும் பிரம கபாலத்தில் பலி ஏற்பவனாக உலகெங்கும் திரியும் பெருமான் உறைகின்ற நகரம் சிவபுரம் ஆகும். இந்த நகரத்தினை சென்றடைந்து இறைவனை பணிந்து வணங்கும் அடியார்கள்,நீக்கிக் கொள்வதற்கு அரிய வினைகளுடன் பிணைக்கப்பட்டு இருந்தாலும், அந்த வினைகளை நீக்கிக் கொண்டு, வினைகள் அற்றவர்களாக திகழ்வார்கள்.

பாடல் 8:

கரம் இருபது முடி ஒரு பதும் உடையவன்

உரம் நெரி தர வரை அடர்வு செய்தவன் உறை

பரன் என அடியவர் பணி தரு சிவபுர

நகரத்து புகுதல் நம் உயர் கதி அதுவே

விளக்கம்:

உரம்=மார்பு; அடர்வு=நெருக்குதல்; நீக்குவதற்கு அரிய வினைகளை நீக்கிக் கொள்வதற்கு இந்த தலத்தினில் செய்யப்படும் வழிபாடு உதவும் என்று சென்ற பாடலில் கூறிய ஞானசம்பந்தர் அதன் விளைவாக அடுத்து நமக்கு என்ன நேரிடும் என்பதை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வினைகள் நீங்கி மலம் அற்றவர்களாக நாம் திகழ்ந்தால், நம்மை எதிர்கொள்வது முக்தி நிலை தானே. அந்த நிலையை விடவும் உயர்ந்த கதி வேறு ஏதும் இல்லை அல்லவா. எனவே அந்த உயர்கதி நாம் அடையலாம் என்று உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

இருபது கரங்களும் பத்து தலைகளும் கொண்டவனாகிய அரக்கன் இராவணனின் மார்பு நெரியும் வண்ணம், அரக்கன் இராவணன் பேர்த்து எடுக்க முயற்சி செய்த கயிலாய மலையின் மீது தனது கால் பெருவிரலை ஊன்றி அழுத்திய சிவபெருமான் உறைகின்ற தலம் சிவபுர நகரமாகும். மேலான பரம்பொருள் பெருமான் தான் என்று அடியவர்கள் வழிபடுகின்ற சிவபுரம் நகரம் சென்றடைவது நமக்கு இம்மையிலும் மறுமையிலும் உயர்கதியை அளிக்கும்.

பாடல் 9:

அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனும் அவர்

சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்

என்று இரு பொழுது முன் வழிபடும் அவர் துயர்

ஒன்றிலர் புகழோடு உடையர் இவ்வுலகே

விளக்கம்:

இயல் உரு=மாறுபட்ட உருவம்; அன்று=பண்டைய நாளில்; பெருமானை வணங்கும் போது, அவனது புகழ் மிகுந்த குணங்கள் அவனது கருணைச் செயல்கள், அவனது ஆற்றல் ஆகியவற்றை குறிப்பிட்டு வணங்க வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நமக்கு உதவி புரியும் நோக்கத்துடன் நால்வர் பெருமானார்கள் இந்த செய்திகளை உள்ளடக்கி தேவார திருவாசக பாடல்களாக அருளியுள்ளனர். எனவே அத்தகைய பாடல்களை நாம் பெருமானின் சன்னதியில் பாடுவது நன்று.

பொழிப்புரை:

தங்களது இயல்பினுக்கு மாறுபட்ட உருவங்களின் உதவியால், தங்களின் முன்னே எழுந்த அனல் பிழம்பின் அடியையும் முடியையும் கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையில், பன்றியாகவும் அன்னமாகவும் உருவெடுத்து முறையே திருமாலும் பிரமனும் தேடிய போதிலும், அவர்கள் இருவராலும் அளந்து அறியமுடியாத வண்ணம் நீண்ட தழற்பிழம்பாக நின்ற பெருமான் உறைகின்ற சிவபுர நகரம் என்று காலை மாலை ஆகிய இரு பொழுதுகளிலும் இறைவனின் சன்னதி முன் நின்று வழிபடும் அடியவர்கள் துயரம் ஏதும் இல்லாதவர்களாக இருப்பார்கள். மேலும் இந்த உலகினில் நீண்ட புகழுடன் வாழ்வார்கள்.

பாடல் 10:

புத்தரொடு அமணர்கள் அறவுரை புறவுரை

வித்தகம் மொழிகில விடையுடை அடிகள் தம்

இத்தவம் முயல்வுறில் இறைவன் சிவபுரம்

மெய்த்தக வழிபட விழுமிய குணமே

விளக்கம்:

புறவுரை=அறத்திற்கு புறம்பான உரைகள்; வித்தகம்=சிறந்த; மெய்த்தக=உண்மையாக; சமணர்கள் புரிகின்ற தவம் பொய்த்தவம் என்பதை உணர்த்த,பெருமானின் அடியார்கள் செய்வது மெய்த்தக வழிபாடு என்று இங்கே திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார்.

கழுமலம் (சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.79.10) சமணர்கள் செய்யும் தவத்திற்கும் முனிவர்கள் செய்யும் தவத்திற்கும் உள்ள வேறுபாட்டினை திருஞானசம்பந்தர் விளக்குகின்றார். ஆம்பல தவம் என்று சமணர்கள் செய்து வந்த தவத்தினை குறிப்பிடுகின்றார். அதாவது தங்களால் இயன்ற வரையில் உடலை வருத்திக் கொள்ளும் தவம்; தங்களது உணவுத் தேவையைக் குறைத்துக் கொள்ளாமல்,ஐந்து புலன்களை அடக்காமல் செய்யப்படும் தவம். ஆனால் முனிவர்கள் செய்து வந்த தவமோ, உணவையும் வெறுத்து தங்களது உடலினை பல வகையிலும் வருத்திக் கொண்டு, இறைவனைப் பற்றிய நினைப்பைத் தவிர்த்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் செய்யப்படும் தவமாக விளங்கியதை நாம் புராணங்கள் மூலம் அறிகின்றோம். கணிசேர்=எண்ணத்தகுந்த; நோம் பல தவம்=துன்பங்களைத் தரும் தவம்;

ஆம்பல தவம் முயன்று அறவுரை சொல்லும் அறிவிலாச் சமணரும் தேரரும் கணிசேர்

நோம்பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனிச்

சாம்பலும் பூசி வெண்டலை கலனாகத் தையலார் இடும் பலி வையகத்து ஏற்றுக் காம்பன தோளியொடு இனிதுறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசறுமே

கழுமலம் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (1.129.10) திருஞானசம்பந்தர் தாங்கள் செய்கின்ற பொய்யான தன்மை வாய்ந்த தவத்தினை மெய்த்தவமாக கருதும் சமணர்கள் என்று குறிப்பிடுகின்றார். உணல் மருவும்=உணவு உட்கொண்டு வாழும்; பூசுரர் என்ற வடமொழிச் சொல்லினை மண்மேல் தேவர் என்று தமிழ்ப் படுத்தியமை ரசிக்கத் தக்கது. சுரர் என்றால் தேவர்கள் என்று பொருள். வேதம் ஓதும் அந்தணர்கள் சிறப்பாக மதிக்கப்பட்ட தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. திருவிழா மற்றும் மணவிழா ஆரவாரங்கள் நிறைந்த தலம் சீர்காழி என்று கூறப்படுகின்றது.

குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்று கையில்

உணல் மருவும் சமணர்களும் அறியாத வகை நின்றான் உறையும் கோயில்

மணம் மருவும் வதுவையொலி விழவினொலி இவை இசைய மண் மேல் தேவர்

கணமருவும் மறையினொலி கீழ்படுக்க மேற்படுக்கும் கழுமலமே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பாடலில் (2.23.10) திருஞானசம்பந்தர் சமணர்கள் மற்றும் புத்தர்களை பொய்த்தவத்தர் என்று குறிப்பிடுகின்றார்,இந்த பாடலில் புத்தர் பலர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். புறச்சமயங்கள் ஆறு என்று சைவ சித்தாந்தம் பாகுபாடு செய்கின்றது. சமண சமயங்களில் இரண்டு பிரிவுகளையும் புக்த சமயங்களின் நான்கு பிரிவுகளையும் சேர்த்து ஆறு புறச்சமயங்கள் என்று கூறுவர். ஆசீவகம் நிகண்டவாதம் என்ற இரு பிரிவுகள் சமண சமயத்தைச் சார்ந்தவை. ஆசீவகப் பிரிவு வெண்மை நிறத்து ஆடையை உடுத்துவதை ஏற்கும். இரண்டாவது பிரிவு, ஆடையே உடுத்தலாகாது என்று கூறும். இரண்டாவது வகையே தென்னாட்டினில் பரவி அமணம் என்று பெயர் பெற்றது. புத்த சமயத்தின் நான்கு பிரிவுகள்,மாத்தியமிகம், யோகாசாரம், வைபாடிகம், சௌராந்திரகம் என்பன. இந்த பிரிவுகளின் கொள்கை வேறுபாடுகள் சிவஞானசித்தியார் பரபக்கம் பகுதியில் சொல்லப் பட்டுள்ளன. இந்த பிரிவுகளையே புத்தர் பலர் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வழிபாட்டு முறையின் வகையில் ஈனயானம் மகாயானம் என்று இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. ஓர்தல்=ஆராய்ந்து உணர்தல்;

புத்தர் பலரோடு அமண் பொய்த் தவர்கள்

ஒத்தவ் வுரை சொல்லி இவை ஓரகிலார்

மெய்த்தேவர் வணங்கும் வெண் நாவலுளாய்

அத்தா அருளாய் எனும் ஆயிழையே

திருப்பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.69.10) திருஞானசம்பந்தரர், புத்தர்கள் மற்றும் சமணர்கள் ஆகிய இருவரும் பொய்யான மொழிகளையே பேசுவார்கள் என்றும் உண்மையான தவம் குறித்து பேச மாட்டார்கள் என்றும் கூறுகின்றார். சிவபெருமானை வழிபடுவதே உண்மையான தவம் என்று பல திருமுறை பாடல்கள் எடுத்துரைக்கின்றன. எனவே சிவபெருமானை நிந்தனை செய்து வாழ்ந்த சமணர்கள் மற்றும் புத்தர்கள் செய்த தவத்தினை மெய்த்தவம் அல்ல என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகிறார்.

புத்தரும் புந்தியிலாத சமணரும் பொய்ம்மொழி அல்லால்

மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபலவற்றால்

சித்தரும் தேவரும் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு

பத்தர்கள் தாம் பணிந்து ஏத்தும் பாண்டிக் கொடிமுடியாரே

தவம் செய்வதாக தவத்திற்கு எதிர்மறையான பாவச் செயல்கள் புரியும் சமணர்கள் என்று சமணர்களையும் புத்தர்களையும் திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் வலஞ்சுழி தலத்து பதிகத்தின் பாடலாகும் (2.106.10). அவம்=தவத்திற்கு எதிர்மறையான பாவச்செயல்கள்; பெருமானை குறித்தும் இந்து சமயம் குறித்தும் பொய்யான கதைகளை இட்டுக்கட்டி, தவறான தகவல்களை மக்களிடையே பரப்பி வந்த பாவச் செயல்கள்; தேறன்மின்=பொருட்படுத்தாது நீக்குவீர்; மாறா நீர்=அதற்கு மாறாக; மறி உலாம்=மடிந்து மடிந்து வரும்; மருவிய=அணைந்த; பிறிவிலாதவர்= இடைவிடாமல் வழிபடும் அடியவர்;அளவறுப்பு=அளந்து அறிதல். அவர்கள் செய்து வரும் தவத்தின் இயல்பு கருதியும் தவறான தகவல்கள் அடங்கிய பொய்யான கட்டுரைகள் என்பதை உணர்ந்தும், அவர்களின் மொழிகளை பொருட்படுத்தாது நீக்குவீர் என்று உலகத்தவர்க்கு திருஞான சம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். ,

அறிவிலாதவன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார்

நெறி அலாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறா நீர்

மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்

பிறிவிலாதவர் பெறு கதி பேசிடில் அளவறுப்பு ஒண்ணாதே

திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.121.10) திருஞானசம்பந்தர் ஆடையின்றி தெருவினில் திரிந்துண்ணும் சிறுமையான தன்மை வாய்ந்த தவத்தினை மேற்கொள்ளும் சமணர்கள் என்று குறிப்பிடுகின்றார். கூறை=ஆடை; எரிந்து சொன்ன=கோபம் கொண்டு, பொறாமை கொண்டு;

உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்திடைத்

தெரிந்து தின்னும் சிறு நோன்பரும் பெருந் தேரரும்

எரிந்து சொன்னவ்வுரை கொள்ளாதே எடுத்து ஏத்துமின்

புரிந்த வெண்ணீற்று அண்ணல் பாதிரிப் புலியூரையே

புகலி தலத்தின் மீது பதிகத்தின் பாடலில் (3.3.10) தவம் அல்லாதவற்றை செய்யும் குற்றம் நிறைந்த அறிவினை உடையவர்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கணிகை=போலித் தனம்; கணிகையரின் சொற்களும் செயல்களும் அடுத்தவரை மயக்கும் நோக்கத்துடன் போலித் தன்மை உடையதாக இருக்கும். அது போன்றே சமணர்கள் மற்றும் புத்தர்கள் அந்நாளில் செய்த நோன்புகளும் போலித் தன்மை உடையதாக இருந்தது என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். செதுமதி=குற்றமுடைய அறிவு;

கையினில் உண்பர் கணிகை நோன்பர்

செய்வன தவமலாச் செதுமதியார்

பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத

மெய்யவர் அடி தொழ விரும்பினனே

வியந்தாய் வெள்ளேற்றினை விண்ணவர் தொழு புகலி

உயர்ந்தார் பெரும் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே

ஆலவாய்த் தலத்து அரசவையில், சமணர்கள் ஒரு கூட்டமாக சிறுவனாகிய திருஞான சம்பந்தரை நெருங்கியபோது, அரசி மங்கையரக்கரசியார் மிகுந்த கவலை கொண்டார். அப்போது, ஆலவாய் அரன் துணையாக இருக்கையில் சமணர்களுக்கு தான் எளியவன் அல்லேன் என்றும் தனக்கு எந்த கெடும் விளையாது என்றும் அரசியார்க்கு தெளிவு படுத்தும் வண்ணம் மானின் நேர்விழி என்று தொடங்கும் பதிகத்தினை பாடி, அரசியார் கவலை ஏதும் கொள்ள வேண்டாம் என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இந்த பதிகத்து பாடல்களில் சமணர்கள் செய்து வந்த பல தவறுகளை திருஞானசம்பந்தர் சுட்டிக் காட்டுகின்றார். அத்தகைய பாடல் ஒன்றினில் (3.39.10) சமணர்களை பொய்த்தவம் புரிபவர்கள் என்று குறிப்பிடுகின்றார். தரித்தல்=சென்றடைதல்,தாங்குதல்; சமணர்களும் புத்தர்களும் நெருங்க முடியாத திருப்பாதங்கள் உடையவன் பெருமான் என்று கூறுகின்றார். இடுக்கே மடுத்து=இடுக்கண் புரிவதையே தொழிலாகக் கொண்டு; பொங்கு நூல்=நல்ல செய்திகளை குறிப்படும் நூல்கள்; அங்கதர்=வீண்பழி சொல்பவர், பொல்லாத பழிச்சொற்கள்;

தங்களுக்கும் அச் சாக்கியர்க்கும் தரிப்பொணாத நற்சேவடி

எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய்த்தவம்

பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களைப் பழிக்கும் பொலா

அங்கதர்க்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (3.39.6) திருஞானசம்பந்தர், சமணர்கள் அவமாகிய தவத்தினை புரிவோம் செயல்படுகின்றனர் என்று அவர்களின் தவத்தின் தன்மையை கூருகின்றார். சினகர்=ஜினகர் என்ற சொல் சினகர் என்று மாறியுள்ளது. அவர்களது கடவுள் ஜினன் என்று அழைக்கப் படுவதால் இந்த பெயர் வந்தது.

கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமணமா

சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி கொளா

அனகநந்தியார் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்

சினகருக்கு எளியேன் அலேன் திருவாலவாய் அரன் நிற்கவே

விளமர் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.88.10) திருஞானசம்பந்தர், தவம் என்றால் என்ன என்பதை அறியாதவர்களாக சமணர்களும் புத்தர்களும் இருந்த நிலையை உணர்த்துகின்றார். ஒள்ளியர்=அறிவில் சிறந்தவர்கள்; கொள்ளிய=கொள்ளி போன்ற; கொள்ளிய களவினர்=நீறு பூத்த நெருப்பு போன்று,தவவேடம் பூண்ட வஞ்சகர்கள்; புத்தப் பள்ளி சமணப் பள்ளிகள் நடத்தும் குருமார்கள் சொல்லும் சொற்களை மெய்யான சொற்கள் என்று கருதாதீர் என்று எச்சரிக்கை விடுக்கும் பாடல்.

ஒள்ளியர் தொழுதெழ உலகினில் உரை செயும் மொழி பல

கொள்ளிய களவினர் குண்டிகை அவர் தவம் அறிகிலார்

பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவோடு பேணுவீர்

வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.3.11) அப்பர் பிரான், தவம் செய்வதாக சொல்லிக் கொண்டு பாவங்களை புரியும் சமணர்கள் என்று கூறுகின்றார். உடை உடுத்தாமல் இருத்தல் மற்றும் நீராடாமை சமணத் துறவிகளுக்கு உரிய நெறியாக கருதப் பட்டாலும், சமணப் பெண் துறவிகள் உடை அணிந்து வாழ்ந்தனர் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து அறிகின்றோம். சமணப் பெண் துறவிகள், ஆண் துறவிகளுக்கு சேவை செய்து வந்தனர். அத்தகைய சேவைகளில் ஒன்று தான் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. சமணசமய நூல்களைக் கற்றுத் தேர்ச்சி அடைவதால் மட்டுமே எவருமே சமண குருவாக மாற முடியாது. அவர்கள் பொறுமையின் எல்லையை சோதனை செய்து பார்த்த பின்னரே, அவர்கள் குருவாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். முடி பறித்தல் என்பது அத்தைகைய ஒரு சோதனை. தலையில் உள்ள முடிகள் ஒவ்வொன்றாக, அடுத்தவரால் பிடுங்கப்படும் போது ஏற்படும் வலியினைப் பொறுத்துக் கொண்டு கண்களில் நீர் வெளிவராமல் இருக்கும் பக்குவத்தை அடைந்தவர்களே பொறுமையில் சிறந்தவர்களாக கருதப் படுவார்கள். கொன்றை மலர்கள் மலரும் பருவத்தில், அவை கொத்தாக மலர்ந்து மரத்தில் உள்ள இலைகளை மறைக்கும் அளவுக்கு, மிகவும் அதிக அளவினில் பூக்கும் என்ற செய்தியை, அப்பர் பிரான் இங்கே இலைகளை மறைக்கும் கொன்றை மலர்கள் என்று கூறுகின்றார்.

முலை மறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டித்

தலை பறிக்கும் தன்மையர்களாகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார்

மலை மறிக்கச் சென்ற இலங்கைக் கோனை மதனழியச் செற்ற சேவடியினானை

இலை மறித்த கொன்றை அந்தாரான் தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே

பொழிப்புரை:

புத்தர்களும் சமணர்களும் கூறும் மொழிகள் அறத்திற்கு புறம்பானவை. எனவே அவர்களது மொழிகள் அறிவுடைமைக்கு பொருந்தாத மொழிகள்; எனவே அத்தைகைய மொழிகளை உலகத்தவரே புறக்கணிப்பீர்களாக. இடபத்தை தனது ஊர்தியாக உடைய சிவபெருமான் நோக்கி செய்யப்படும் முயற்சியை,தவம் என்று அழைக்கப்படும் செயலை செய்வதற்கு விருப்பம் கொள்ளும் அடியவர்களே, நீங்கள் அனைவரும் சிவபுரம் நகரம் சென்று ஆங்குள்ள இறைவனை வழிபடுவீர்களாக. அந்த வழிபாடு உங்களுக்கு நல்ல குணங்களைப் பெற்றுத் தரும்.

பாடல் 11:

புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்

பந்தன தமிழ் கொடு சிவபுர நகர் உறை

எந்தையை உரை செய்த இசை மொழிபவர் வினை

சிந்தி முன் உற உயர் கதி பெறுவர்களே

விளக்கம்:

புந்தியர்=அறிவினில் சிறந்தவர்கள்; வினை சிந்தி=பிணைந்துள்ள வினைகள் கழன்று விலக;

பொழிப்புரை:

அறிவுடையவர்கள் ஓதும் நான்மறைகளையும் முறையாக ஓதி உணர்ந்தவனும், புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தின் தலைவனும் ஆகிய ஞானசம்பந்தன், சிறந்த தமிழ் கொண்டு சிவபுர நகரினில் உறையும் பெருமானை குறித்து, நம் அனைவர்க்கும் தந்தையாக திகழ்பவனை குறித்து, உரைத்த இந்த பத்து பாடல்களையும் முறையான பண்ணுடன் பொருத்தி இசைக்கும் அடியார்கள், தங்களுடன் பிணைந்துள்ள வினைகள் கழன்று சிந்தப்பெற்று,இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்த கதியை அடைவார்கள்.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் மாதொரு பாகனாகத் திகழும் பெருமான் உறைகின்ற சிவபுர நகரத்தினை தியானித்து தொழுகின்ற அடியார்கள், இம்மையிலும் மறுமையிலும் இடர்கள் நீங்கப் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இரண்டாவது பாடலில் மேலும் ஒருபடி சென்று, இந்த தலம் சென்றடையும் அடியார்கள் உயர்கதி அடைவார்கள் என்று கூறுகின்றார். அவ்வாறு இந்த தலம் சென்றடையும் அடியார்கள், இந்த தலத்தின் புகழினை எடுத்து உரைத்தால், உயர்கதி அடைவது திண்ணம் என்று கூறுகின்றார். இவ்வாறு முதல் மூன்று பாடல்களில் தலத்தின் பெருமையையும், அதனால் நாம் அடையவிருக்கும் பலன்களையும் உணர்த்திய திருஞானசம்பந்தர், நான்காவது பாடலில் இந்த தலம் சென்றடைந்து இறைவனை தொழுகின்ற அடியார்கள்,தாங்கள் செய்ய நினைக்கும் செயல்களை செய்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்களாக விளங்குவார்கள் என்று கூறுகின்றார். ஐந்தாவது பாடலில், பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டுள்ள தன்மையை உணர்த்தி, நாமும் அவ்வாறு பெருமானின் அடிமைகளாக மாற விருப்பம் கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். ஆறாவது பாடல், இந்த தலத்து இறைவனைத் தொழும் அடியார்கள், தங்களது புலன்களை முற்றிலும் அடக்கி,தாங்கள் விரும்பும் வழியில் செயல்படுத்தும் ஆற்றலினை, இறைவனின் அருளால் பெறுவார்கள் என்று கூறுகின்றார். ஏழாவது பாடல், அத்தகைய அடியார்கள், எளிதில் நீக்க முடியாமல் பிணைந்திருக்கும் வலிமையான வினைகளையும் பெருமானின் அருளை துணையாகக் கொண்டு நீக்கிக் கொள்வார்கள் என்று கூறுகின்றார். எட்டாவது பாடலில் இந்த நகர் செல்லும் அடியார்கள் அடையும் உயர்கதி குறிப்பிடப்பட்டு, நகரின் பெருமை வலியுறுத்தப் படுகின்றது. ஒன்பதாவது பாடலில், இறைவனின் சன்னதி சென்றடையும் நாம் அவனது புகழ் மிகுந்த செயல்களையும் பண்பினையும் உணர்த்தும் பாடல்களை பாடவேண்டும் என்று உணர்த்துகின்றது. பத்தாவது பாடல், பெருமானின் திருவடிகளே சரணம் என்ற முடிவுக்கு வந்து, அவனது திருவடிகளை வணங்குவதே சிறந்த தவம் என்று உணர்த்துகின்றது. கடைப்பாடல் இந்த பதிகத்தை முறையாக ஓதி நாம் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்றும் மறுமையில் முக்திநிலை பெறலாம் என்றும் உணர்த்துகின்றது. திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் பாடல்கள் மூலம் நமக்கு உணர்த்திய அறிவுரைகளை மனதினில் தாங்கியவர்களாக, நாமும் இந்த தலம் சென்றடைந்து இறைவனை வணங்கி, முறையாக பதிகங்கள் பாடி,இம்மையிலும் மறுமையிலும் உயர்கதி அடைவோமாக.



Share



Was this helpful?