பதிக எண்: 2.58 - திரு குடவாயில் - காந்தாரம்
பின்னணி:
தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக குடவாயில் தலத்திற்கு சென்ற திருஞான சம்பந்தர், தலத்தில் இருந்த பெருங்கோயிலில் பொருந்தி உறையும் பெருமானே என்று குறிப்பிட்டு, திகழும் திருமாலோடு என்று தொடங்கும் (2.22) பதிகத்தை பாடிய பின்னர், கலை வாழும் அங்கையீர் என்று தொடங்கும் இந்த பதிகத்தை அருளினார். பெருங்கோயில் என்று சிறப்பித்து திருக்கோயிலை பாடல் தோறும் குறிப்பிட்ட, ஞானசம்பந்தரின் மனதினை அந்த கோயிலின் அழகு வெகுவாக கவர்ந்தது போலும். கோ என்றால் இறைவன், தலைவன் என்று பொருள். அனைத்து உயிர்களுக்கும் தலைவனாகிய பெருமான் உறைகின்ற இல்லம் என்று பொருள் பட கோயில் என்ற சொல் அமைந்துள்ளது. இந்த தலத்தில் உள்ள திருக்கோயிலை, இறைவன் தான் உறையும் இடமாக தேர்ந்தெடுத்துள்ளான் என்று இந்த பதிகத்தின் கடைப்பாடல் தவிர்த்த மற்ற பாடல்கள் அனைத்திலும் குறிப்பிட்டு ஞானசம்பந்தர் மகிழ்கின்றார்.
பாடல் 1:
கலை வாழும் அங்கையீர் கொங்கை ஆரும் கருங்கூந்தல்
அலை வாழும் செஞ்சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர்
குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில்
நிலை வாழும் கோயிலே கோயிலாக நின்றீரே
விளக்கம்:
கலை=ஆண் மான்; அங்கை=அம்+கை, அழகிய கை; கலை என்பதற்கு பொதுவாக மான் என்று பொருள் கொண்டு, பெண் மான் போன்று அழகு வாய்ந்த உமையன்னையை தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டு, எப்போதும் தன்னுடன் இணைந்து வாழும் தன்மையை அன்னைக்கு அளித்த பெருமான், தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மான் கன்றினைத் தனது கையில் நிலையாக ஏந்தியுள்ளார் என்று சிறப்பான விளக்கமும் அறிஞர்களால் அளிக்கப்படுகின்றது. கொங்கு=பூந்தாதுகள், பூந்தாதுகள் வீசும் நறுமணம்; ஆரும்=நிறைந்த; அலை=வெள்ளப் பெருக்கு கொண்ட நீரலைகள் நிறைந்த கங்கை நதி; அமர்வித்தல்=பொருத்துதல்; சிவபெருமான் என்றாலே, அவரது வலது கையில் ஏந்தியுள்ள மான் கன்றும் சடையில் தாங்கியுள்ள கங்கை நதியும், சடையிலும் உடலின் பல இடங்களிலும் காணப்படும் பாம்புகளும், சடையில் தரித்துள்ள பிறைச் சந்திரனும் நமது நினைவுக்கு வரும் வண்ணம், இவை அனைத்தும் பெருமானுடன் நிலையாக இணைந்துள்ளன. எனவே தான், அத்தகைய பொருட்கள் பெருமானை விட்டு என்றும் பிரியாது இருக்கும் நிலையினை உணர்த்த வாழும் என்ற சொல்லினை திருஞானசம்பந்தர் இங்கே பயன்படுத்தியுள்ளார். பூக்கள் அடித்துக் கொண்டு வரப்படுவதால் நறுமணம் வீசும் நீர் நிறைந்த கங்கை நதி என்று குறிப்பிடுகின்றார். கங்கை நதி பெண்ணாக கருதப்படுவதாலும், பூக்களைத் தங்களது கூந்தலில் பழக்கம் உடையவர்கள் பெண்கள் என்பதாலும், பூந்தாதுகளின் நறுமணம் வீசும் கூந்தல் கொண்ட கங்கை நதி என்று குறிப்பிட்டார் போலும். கமுகம்=பாக்கு; பெருமானுக்கு சிறப்பாக பூஜைகள் செய்து, நிவேதனமாக வாழைப்பழம், பாக்கு, மற்று பொன்னும் பவளமும் அடியார்களால் அளிக்கப் பட்டன என்பதை உணர்த்தும் வண்ணம், மேற்கண்ட பொருட்கள் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றன போலும். கமுகும் பொன் பவளம் பழுக்கும் என்ற தொடருக்கு, பொன் போன்றும் பவளம் போன்றும் பழுத்துத் தொங்கும் கமுகு என்றும் வேறு வகையாக விளக்கம் அளிக்கப் படுகின்றது.
பொழிப்புரை:
மான் கன்றினைத் தனது வலது கையினில் நிலையாக ஏந்தியவரும், பூந்தாதுகளால் விளையும் நறுமணம் கொண்ட கருங்கூந்தலை உடைய கங்கை நங்கை நிலையாக தங்கியிருக்கும் சடையினை உடையவரும், பாம்பினையும் பிறைச்சந்திரனையும் தனது சடையில் நிலையாக பொருத்தியவரும் ஆகிய இறைவன் குடவாயில் தலத்தில் நிலைத்து விளங்கும் திருக்கோயிலை, அனைத்து உயிர்களுக்கும் தலைவனாகிய இறைவன், தனது இல்லமாக விரும்பி ஏற்றுக்கொண்டு உறைகின்றார். குலைகள் தொங்கும் வாழை மரங்களும், பொன் போன்றும் பவளம் போன்று பழுத்துத் தொங்கும் பாக்குக் காய்களை உடைய பாக்கு மரங்களும் உடையதுமாக வளம் பொருந்திய தலமாக இந்த குடவாயில் தலம் விளங்குகின்றது.
பாடல் 2:
அடியார்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில்
செடியார்ந்த வெண்டலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவி ஏத்தும் குடவாயில்
படியார்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே
விளக்கம்:
செடியார்ந்த=முடை நாற்றம் கொண்ட; குடியார்ந்த=குடியாக உள்ள; குலாவி=கொண்டாடி; படியார்ந்த=படிகள் நிறைந்த; பெருமான் சன்னதிக்கு செல்வதற்கு படிகள் ஏறிச் செல்ல வேண்டிய நிலையை உணர்த்துகின்றார். படியார்ந்த கோயில் என்று குறிப்பிட்டு, ஈசன் உலகநாதனாக விளங்கி அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் தன்மையை, படியார்ந்த என்ற சொல் நமக்கு நினைவூட்டுகின்றது. படி என்ற சொல்லுக்கு உலகம் என்று பொருள் கொண்டு, உலகம் சிறப்புடன் போற்றும் வண்ணம் திகழ்ந்த கோயில் என்ற விளக்கமும் பொருத்தமானதே. பைங்கழல்=பசும் பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல்; சிலம்பு என்பது பெண்கள் அணியும் அணிகலன். சிலம்பும் கழலும் அணிந்தவர் என்று குறிப்பிடுவதன் மூலம் மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக பெருமானை சித்தரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைபவர் திருஞானசம்பந்தர். தோடும் குழையும் அணிந்தவனாகவும், சிலம்பும் கழலும் அணிந்தவனகவும், சடையும் கூந்தலும் உடையவனாகவும், பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவனாகவும், எண்ணற்ற பாடல்களில் அவர் குறிப்பிடுகின்றார். சிலம்பும் கழலும் அணிந்தவராக பெருமானை குறிப்பிடும் சில பாடல்களை நாம் இங்கே காண்போம். குடியார்ந்த மாமறையோர் என்று தங்களது குலம் தழைக்க, இந்த தலத்து அந்தணர்கள் செயல்பட்டனர் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. முறையாக நான்கு வேதங்களையும் கற்று, அந்த வேதங்களில் வல்லவர்களாக திகழ்ந்த தலத்து மறையோர்கள், அடுத்த தலைமுறையினர் சிறப்புடன் வாழ வழிகாட்டும் பொருட்டு, சிறந்த ஒழுக்கத்துடனும் மறைகள் காட்டிய வழியிலும் வாழ்ந்தனர் என்று சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்
நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.71.7) கால்களில் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஒலிக்க இறைவன் வருவார் என்று சம்பந்தர் கூறுகின்றார். புலம்ப=ஒலிக்க, குழல்=கூந்தல்; கோலம்=அழகு; தவளம்=வெண்மை; கீள்=கிழிக்கப்பட்ட ஆடை; தழலார் மேனி=தழல் போன்று சிவந்த மேனி; சரி=சரிந்து தொங்கும்;
குழலார் சடையர் கொக்கின் இறகர் கோல நிற மத்தம்
தழலார் மேனித் தவள நீற்றர் சரி கோவணக் கீளர்
எழிலார் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடையேறிக்
கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே
பெருமான் தனது கால்களில் கழலும் சிலம்பும் அணிந்திருப்பதாக சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.117.7) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சொற்களை இடம் மாற்றி வைத்து அருளிய பதிகம் என்பதால் மொழிமாற்றுப் பதிகம் என்று அழைக்கப்படுகின்றது. காலது கழல் சிலம்பு, கங்கை கற்றைச் சடை உள்ளால், மாலது பாகம், மழுவது ஏந்தல், வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், அடல் ஏறு ஊர்வர், என மொழிகளை மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். கொழுங்கோடு=செழிப்பாக உள்ள மரக்கிளை; ஏறு=எருது; ஊர்தல்= வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கு செல்லுதல்; சேல்=மீன்; கண்ணி=கண்ணினை உடைய உமையன்னை; மீன் போன்று அழகிய கண்களை உடையவள் என்று பொருள்படும்படி, மதுரை தேவியை அங்கயற்கண்ணி என்று அழைப்பார்கள்.
காலது கங்கை கற்றைச் சடையுள்ளால் கழல் சிலம்பு
மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர் கொழுங்கோட்டு
ஆலது ஊர்வது ஆடல் ஏற்று இருப்பர் அணிமணி நீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே
கோட்டாறு தலத்தின் மீது அருளிய பாடலில் (2.52.5) சம்பந்தர், பேய்க் கணங்கள் புகழும் வண்ணம் கானகத்தில், வளமான சிலம்பும் கழலும் ஒலிக்க நடனமாடும் அழகிய பெருமான் என்று கூறுகின்றார். எழுவார்=பஞ்சாக்கர மந்திரத்தை சிந்திந்து எழும் சித்தர்கள்;
பழைய தம் அடியார் துதிசெயப் பாருளோர்களும் விண்ணுளோர்தொழக்
குழலும் மொந்தை விழாவொலி செய்யும் கோட்டாற்றில்
கழலும் வண் சிலம்பும் ஒலி செயக் கானிடைக் கணம் ஏத்த ஆடிய
அழகனென்று எழுவார் அணியார் வானவர்க்கே
வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.4) திருஞானசம்பந்தர், ஒலிக்கும் வீரக்கழலும் சிலம்பும் ஆர்பரிக்கும் வண்ணம் பெருமான் நின்று ஆடும் அற்புதம் அதிசயம் என்று கூறுகின்றார். கதிர்=சூரியன்; அறத்திறம்=தருமத்தின் பல வகைகள் மற்றும் வேதங்கள் ஆகமங்களில் சொல்லப் பட்டுள்ள நுண்ணிய கருத்துக்கள்; மருந்துமாக நின்று உயிர்களை காக்கும் தன்மையன் என்று பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிட்ட ஞானசம்பந்தர், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நெஞ்சின் தாக்கத்தினால் உலகம் அழியாத வண்ணம், அந்த விடத்தினை உட்கொண்ட செய்தி, கறைகொள் கண்டத்தர் என்ற தொடரினால் உணர்த்தப் படுகின்றது. காலை மாலை நேரங்களில் சிவந்த வண்ணத்துடன் காணப்படும் சூரியன், பகல் பொழுதினில் வெண்மை நிறத்துடன் காணப் படுகின்றான். சிவந்த திருமேனியை உடைய இறைவன், தனது உடலின் மீது திருநீற்றினை பூசியவண்ணம் வெண்மை நிறத்துடனும் காணப்படுகின்றான். வலஞ்சுழி தலத்தினில் மகிழ்ச்சியுடன் உறையும் பெருமான், அனைத்து உடல்களும் உயிரிலிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் உலகமே சுடுகாடாக காட்சி தரும் நிலையில், அந்த காண்பதற்கு அரிய அந்த காட்டினில், உலகத்தை மீண்டும் தோற்றுவித்து உயிர்களுக்கு தங்களது மலங்களைக் கழித்துக் கொள்ள ஒரு வாய்ப்பினை அளிக்கும் எண்ணம் கொண்டு இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடையும் பெருமான், தான் அணிந்துள்ள கழலும் சிலம்பும் ஆரவாரம் செய்யும் வண்ணம் நடனமாடும் அற்புதத்தை நாம் அறியோம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். .
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற
முனிவர்க்கு அன்று
இறைவர் ஆலிடை நீழலிலிருந்து உகந்து இனிது அருள்
பெருமானார்
மறைகள் ஓதுவர் வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து
அரும் கானத்து
அறை கழல் சிலம்பார்க்க நின்றாடிய அற்புதம் அறியோமே
புகலி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.3.4) திருஞானசம்பந்தர், தனது திருப்பாதங்களில் திகழும் கழலும் சிலம்பும் ஆரவாரத்துடன் ஒலிக்க, முழவத்தின் பின்னணியில் மிகவும் அரிதான நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். நிழல்=ஒளி; முருகு=நறுமணம்; அலம்ப=ஆரவாரத்துடன் ஒலிக்க;
நிழல் திகழ் மழுவினை யானையின் தோல்
அழல் திகழ் மேனியில் அணிந்தவனே
கழல் திகழ் சிலம்பொலி அலம்ப நல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே
முடிமேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி
அடியார் அவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே
சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (4.08.06) கழலையும் சிலம்பினையும் அழகுற அணிந்தவர் சிவபெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கணித்தல்=குறிப்பிடுதல்: வேப்ப மரம் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் பூக்கும் தன்மை உடையது. வேப்ப மரம் பூக்கும் காலமும் திருமணங்கள் நடைபெறும் காலமும் ஒன்றாக இருப்பதால், திருமண காலத்தை வேப்ப மரங்கள் பூத்து கணிப்பதாக குறிப்பிட்டு, கணிவளர் வேங்கை என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. அவள் வண்ணம் வண்ணம் அவர் வண்ணம் வண்ணம் அழலே என்ற தொடர் மூலம் பெருமான் மாதொரு பாகனாக திகழும் தன்மையை நேரிடையாக குறிப்பிடுவதையும் நாம் உணரலாம்.
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால்
சிலம்ப அழகார்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ண இயலார்
ஒருவர் இருவர்
மணி கிளர் மஞ்ஞை ஆல மழையாடு சோலை மலையான்
மகட்கும் இறைவர்
அணிகிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர்
வண்ணம் வண்ணம் அழலே
பெருமானின் திருவடிகளின் சிறப்பினை உணர்த்தும், இன்னம்பர் தலத்து பதிகப் பாடல் ஒன்றினில் (4.100.6) சிலம்பும் கழலும் முறையாக பொருந்திய திருவடிகள் பெருமானின் திருவடிகள் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கீண்டும்=கிழித்தும்: கிளர்ந்தும்=நிலத்தை கிளறித் தோண்டியும்: ஆரணங்கள்=வேதங்கள்; ஈண்டும்=பொருந்திய, வந்தடைந்த;
கீண்டும் கிளர்ந்தும் பொற்கேழல் முன் தேடின கேடுபடா
ஆண்டும் பல பல ஊழியும் ஆயின ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு
ஈண்டும் கழலின இன்னம்பரான் தன் இணை அடியே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.101.1) அப்பர் பிரான், பெருமானை சிலம்பு அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். இதன் மூலம் மற்றொரு காலில் கழல் அணிந்தவன் என்பது சொல்லமாலே உணர்த்தப்படுகின்றது. குலம்=கூட்டம்; பாவரு= பெருகிய, குண்டர்=மூர்க்கர்; அலம்புதல்=ஆர்ப்பரித்தல், ஆரவாரம் செய்தல், பெருத்த ஓசையுடன் ஒலித்தல்; அம்பு=நீர், புலம்பு அலம்பு=பெருமானை நினைத்து உருகுவதால் கண்களில் பெருகும் கண்ணீர். பெருமானிடம் வைத்துள்ள அன்பு ஒரு நிலையினைக் கடக்கும் போதும் அழுகையாக மாறுகின்றது என்று பல திருமுறை பாடல்களில் கூறும் அருளாளர்கள் அத்தகைய அழுகையால் ஏற்படும் பயனையும் நமக்கு உணர்த்துகின்றனர். அழுதால் அவனைப் பெறலாமே என்று தானே நமக்கு திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. பலவிதங்களிலும் தன்னைக் கொல்வதற்கு சூழ்ச்சிகள் செய்த சமணர்களின் கூட்டத்தின் முன்னே, பெருமானின் திருவருளால் காப்பாற்றப் பட்ட தான், சிவபெருமானின் அடியார்களுக்கு அடியவனாக இருக்கும் தன்மை சமணர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும் என்ற தனது ஆசையினை இந்த பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமானின் சன்னதியாகிய திருமூலட்டானைத்தில் அவனது பேரருளினை தங்களது கண்களில் கண்ணீர் வழிய எண்ணி உருகி வழிபடும் அடியார்களுக்கு அடியேனாக இருக்கும் நல்வினைப் பேற்றினை அடியேன், உடல் வலிமை உள்ளவர்களாகவும் கூட்டமாக திரிபவர்களாகவும் உள்ள சமணர்கள் காணும் வகையில் பெறுவேனோ. பெருமானே, அவ்வாறு பெறுவதற்கு நீரே அருள் புரிய வேண்டும் என்று அப்பர் பிரான் பெருமானிடம் விண்ணப்பம் வைக்கின்றார். .
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு கொலோ
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்
சிலம்பு அலம்பா வரு சேவடியான் திரு மூலட்டானம்
புலம்பு அலம்பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
பெருமானின் திருவடிகளின் சிறப்பினை உணர்த்தும், திருவதிகை வீரட்டானம் பதிகத்தின் பாடலில், பெருமானின் திருவடிகள் கழலும் சிலம்பும் அணிந்துள்ள தன்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொருகழல், அனைவரையும் வெற்றி கொள்ளும் வீரம் உடைய பெருமான் அணிந்துள்ள வீரக்கழல் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். ஒரு காலத்து ஒன்றாக நின்ற அடி=ஏகபாத திரிமூர்த்தியாக இறைவன் இருக்கும் நிலை. முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில், மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் பிரிவது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம். பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் குடவாயில் திருக்கோயிலிலும் உள்ளது. பிரமனாகவும் திருமாலாகவும் உள்ள நிலையைக் குறிப்பிடும் பாடலில், மாதொரு பாகனின் நிலை உணர்த்தப்படுவது பாடலின் நயம்.
ஒரு காலத்து ஒன்றாகி நின்ற அடி ஊழி தோறூழி உயர்ந்த அடி
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய
வல்ல அடி
இருநிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ
ஏறும் அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி திருவீரட்டானத்து எம்
செல்வன் அடி
நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (6.42.6) அப்பர் பிரான், தனது கால்களில் ஒலிக்கும் சிலம்பினையும் கழலினையும் அணிந்து உலகம் அதிரும் வண்ணம் நடமாடும் பெருமான் என்று கூறுகின்றார். மிறை=துன்பம்; பழைய வினைகளின் பயனால் நாம் துன்பங்கள் மட்டுமன்றி இன்பங்களையும் நுகர்கின்றோம்; ஆனால் அத்தகைய இன்பங்களில் ஆழ்ந்து மகிழும் நாம் நம்மை மிகவும் உயர்வாக நினைத்துக் கொள்கின்றோம். அத்தகைய தருணங்கள் தான், நாம் அகந்தை கொண்டு இறைவனை மறக்கும் தருணங்களாக மாறுகின்றன. எனவே தான். இன்பம் நுகரும், நேரங்களிலும் நம்மை உயர்வாக எண்ணிக் கொள்ளமால், அடக்கத்துடன் தாழ்மையாக நினைத்து இறைவனை வணங்க வேண்டும். அவ்வாறு இருப்பவரின் நெஞ்சத்தில் இறைவன் உறைவான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். வியவேல்=மகிழாமல் இருத்தல்; நிறைவுடையான் என்ற தொடரினை அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற என்ற தொடருடன் இணைத்து, ஊழிக்காலத்தில் மன நிறைவுடன் நடனம் ஆடும் இறைவன் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். ஊழிக்காலம் முடிந்த பின்னர், உயிர்கள் தங்களுடன் பிணைந்துள்ள வினைகளை நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, உலகத்தை தோற்றுவிக்க எண்ணம் கொள்ளும் பெருமான், அந்த எண்ணத்தினால் மனநிறைவு அடைகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றாரோ என்று தோன்றுகின்றது
மிறைபடும் இவ்வுடல் வாழ்வை மெய் என்று எண்ணி
வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை கூத்தாடும்
குணம் உடையான் கொலை வேல் கையான்
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம்
பெயர வரு நட்டம் நின்ற
நிறைவுடையான் இடமாம் நெய்த்தானம் என்று நினையுமா
நினைந்தக்கால் உய்யலாமே
ஆமயம் தீர்த்து என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.96.3) சிலம்பும் கழலும் ஆர்ப்ப முயலகனை அழுத்தியவாறு இறைவன் காணப்படுகின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடலில் கூத்தபிரான் தனது காலின் கீழே வைத்து அடக்கிய முயலகனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முயலகனை பற்றிய குறிப்புகள் காணப்படும் திருமுறை பாடல்கள் மிகவும் அரியதாக காணப்படுகின்றன. முடி=சடைமுடி; முளை=முளைத்த; அலம்பு= ஒலிக்கின்ற; ஆர்க்க=ஒலி செய்ய; மூசு=மொய்க்க, தனது படத்தினால் மறைக்க; வடி=கூர்மை. மாதொருபாகனாக விளங்கும் பெருமான் சங்கரநாராயணராகவும் விளங்குகின்றார் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் சொல்வதை நாம் உணரலாம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்ட தன்மையை அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இளநாகம்
உடனாக் கொண்டார்
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை
அடிக்கீழ் கொண்டார்
வடி கொண்டு ஆர்ந்து இலங்கு மழு வலங்கை கொண்டார் மாலை
இடப்பாகத்தே மருவக் கொண்டார்
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து
அடியேனை ஆட்கொண்டாரே
கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது சுந்தரர் அருளிய பாடலில் (7.41.2) பசியால் வாடிய தனக்கு உணவு அளிக்கும் பொருட்டு, பெருமான் பிச்சை ஏற்ற அதிசயத்தைக் குறிப்பிடும் சுந்தரர், கழலும் சிலம்பும் ஒலிக்கும் வண்ணம் உச்சிப் போதினில் பல இல்லங்கள் சென்று பிச்சை எடுத்த பெருமானே என்று குறிப்பிட்டு உருகுவதை நாம் உணரலாம். பெருமான் அந்த தலத்தில் வாழும் அந்தணர் போன்று பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்றார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். எனினும் பெருமானே சென்றார் என்பதை வலியுறுத்தும் வண்ணம் சுந்தரர் தனது பாடலில், பாம்பு அணிந்தவராகவும் கழலும் சிலம்பும் அணிந்தவராகவும் பெருமான் பிச்சை ஏற்கச் சென்றார் என்று குறிப்பிட்டார் போலும். கலிக்க=ஒலிக்க; பெருமானின் செய்யும் செயல்களின் பின்னணியை எவரும் அறிய முடியாது என்பதை இச்சை அறியோம் என்ற தொடர் கொண்டு சுந்தரர் குறிப்பிடுகின்றார். எளியவனாகிய அடியேன் பொருட்டு பிச்சை எடுத்த செயல் கண்டால் மற்ற அடியார்கள் மனம் பதைபதைத்து உருகுவார்கள் என்று சுந்தரர் கூறுகின்றார்.
கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் சிலம்பும்
கலிக்கக்
உச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனை
ஆள்வாய்
அச்சமில்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே
பொழிப்புரை:
திருவடிகளில் பொருந்திய பசும்பொன் கழலும் சிலம்பும் ஒலித்து ஆரவாரம் செய்ய, தனது அழகிய கையினில் முடை நாற்றம் கொண்டதும் உலர்ந்து வெண்மையாக காணப்படுவதும் ஆகிய பிரமகபாலத்தை ஏந்திய வண்ணம் பலியேற்பதற்காக உலகம் எல்லாம் திரிபவரும் ஆகிய பெருமான், சிறந்த மறையோர்கள் குடிகளாக வாழ்ந்து பெருமானைப் புகழ்ந்து கொண்டாடும் குடவாயில் தலத்தினில் யானை ஏறிச் செல்ல முடியாத வண்ணம் படிகள் நிறைந்த மாடக்கோயிலினை, இறைவனாகிய தான் உறையும் கோயிலாக பாவித்து தொடர்ந்து உறைகின்றார்.
பாடல் 3:
கழலார் பூம்பாதத்தீர் ஓதக் கடலில் விடம் உண்டு அன்று
அழலாரும் கண்டத்தீர் அண்டர் போற்றும் அளவினீர்
குழலார வண்டினங்கள் கீதத்தொலி செய் குடவாயில்
நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே
விளக்கம்:
ஓதம்=அலைகள்; அழல்=வெம்மைத் தன்மை; பாற்கடலிலிருந்து தோன்றிய ஆலகால விடம் மிகுந்த வெப்பத்தை உண்டாக்கும் வண்ணம், எங்கும் பரவியதால், அந்த வெப்பத்தை தாங்க முடியாத தேவர்களும் அசுரர்களும் திசைக்கு ஒருவராக ஓடினார்கள் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அண்டர்=தேவர்கள்; குழல்=மகளிரின் கூந்தல்; நிழல்=அருள் ஒளி;
பொழிப்புரை:
வீரக்கழல் பொருந்தியதும் மலர் போன்று மென்மையானது ஆகிய திருவடியை உடைய பெருமான், அலைகள் வீசும் பாற்கடலிலிருந்து பண்டைய நாளில் மிகுந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் வண்ணம் பொங்கி எழுந்த ஆலகால விடத்தின் வெம்மைத் தன்மையையும் பொருட்படுத்தாமல் தனது கழுத்தினில் தேக்கிக் கொண்டு, அனைவரையும் விடத்தின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிய செய்கை கண்டு தேவர்கள் பெருமானை போற்றினார்கள். இவ்வாறு அவர்கள் போற்றிய தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு அருள் புரிந்த பெருமான், தலத்து மகளிர் தங்களது கூந்தல்களில் அணிந்துள்ள புதிய மலர்களின் நறுமணத்தால் கவரப்பட்டு ரீங்காரம் இட்டவாறு கீதங்கள் பாடும் தன்மை உடையதும், அருளொளி வீசுவதும் ஆகிய திருக்கோயிலை, இறைவனாகிய தான் உறைகின்ற இடமாக கொண்டுள்ளார்.
பாடல் 4:
மறியாரும் கைத்தலத்தீர் மங்கை பாகமாகச் சேர்ந்து
எறியாரும் மாமழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர்
குறியார வண்டினங்கள் தேன் மிழற்றும் குடவாயில்
நெறியாரும் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே
விளக்கம்:
மறி=மான் கன்று;
பொழிப்புரை:
மான் கன்று தங்கும் இடமாகத் தனது கையினை உடையவரும், மங்கை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவரும், நெருப்புப் பொறிகளை வீசி எறியும் மழு ஆயுதத்தையும் நெருப்பினையும் கையில் ஏந்தியவண்ணம் நடமாடும் இயல்பு உடையவரும் ஆகிய பெருமான், சற்றே விரிந்த அரும்புகளை மேலும் மலரச் செய்யும் நோக்கத்துடன் அவற்றை விரித்து, அந்த மலர்களில் உள்ள தேனை உட்கொள்ளும் நோக்கத்துடன், சுற்றி சுற்றி வந்து ரீங்காரம் இடும் வண்டினங்கள் நிறைந்த குடவாயில் தலத்தில் உள்ள திருக்கோயிலை, முறையாக அமைந்துள்ள திருக்கோயிலை, இறைவனாகிய தான் உறைகின்ற இல்லமாக ஏற்றுக்கொண்டு வாழ்கின்றார்.
பாடல் 5:
இழையார்ந்த கோவணமும் கீளும் எழிலார் உடையாகப்
பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர்
குழையாரும் பைம்பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில்
விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே
விளக்கம்:
பிழையாத=தனது தொழிலைத் தவறாது செய்யும்; பெய்தல்=பொருத்துதல்; குழை=இளந்தளிர்கள்; பைம்பொழில்=பசுமையான சோலைகள்; விழவார்ந்த=திருவிழாக்கள் நிறைந்த; கோவணமும் கீளும், பெருமானுக்கு எழில் மிகுந்த ஆடைகளாக திகழும் தன்மையை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
கோலக்கா தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.23.1) கீளுடை என்று கோவணத்தை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மடை=வாய்க்கால்களில் நீரைத் தேக்கி வைத்து, அந்த வாய்க்கால்களில் மடைகள் கட்டி தேவையான வயல்களுக்கு ஆற்றுநீரினை பாய்ச்சுவது வழக்கம்; இவ்வாறு மடைகளால் இயக்கப்படும் வாய்க்கால்களையும் மடை என்று அழைப்பது வழக்கம். சடை பிறை சாம்பல் பூச்சு மற்றும் கீளுடை என்பன பெருமானின் அடையாளங்கள்; குடையும்=குடைந்து நீராடும்; நீர்வளமும் நிலவளமும் நிறைந்த தலத்தினில் உறையும் இறைவன் ஏன் கோவணம் அணிந்து எளிமையாக இருக்கவேண்டும் என்ற கேள்வி இந்த பாடலில் கேட்கப் படுகின்றது. உலகனைத்தையும் தோற்றுவித்த இறைவன் விரும்பினால் அவனுக்கு கிடைக்காத பொருள் உள்ளதோ. எல்லாம் உடையவனாக இருந்தாலும் எதிலும் பற்று கொள்ளமால் இருக்கும் நிலையை உணர்த்தும் முகமாக, கோவணம் அணிந்து சாம்பல் பூச்சுடன் இறைவன் காணப்படுகின்றான் என்று விளக்கம் கூறுவார்கள். எதனையும் அநுபவிக்காமல் பற்றற்ற யோகியாக தான் இருப்பதை உலகுக்கு உணர்த்தி, உலகப் பொருட்கள் மீதுள்ள பற்றினை விடுத்து வாழும் மனிதர்களுக்கு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கப்பட்டு வீடுபேறு வழங்கப்படும் என்பதை உணர்த்தும் முகமாக பெருமான் இந்த கோலத்தில் இருக்கின்றார் என்று கூறுவார்கள்.
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்
உடையும் கொண்ட உருவம் என் கொலோ
நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.71.7) பெருமானை சரி கோவணக் கீளர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அரைஞாண் கயிற்றிலிருந்து தொங்கும் கோவண ஆடை என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
குழலார் சடையர் கொக்கின் இறகர் கோல நிறமத்தம்
தழலார் மேனித் தவள நீற்றர் சரி கோவணக்கீளர்
எழிலார் நாகம் புலியின் உடை மேல் இசைத்து விடையேறிக்
கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே
வேதிகுடி என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.77.4), திருஞானசம்பந்தர், கீளர் சரி கோவணவர் என்று குறிப்பிடுகின்றார். இசை=புகழ்; காடு=சுடுகாடு; காடர்=சுடுகாட்டினில் உறைபவர்; கரி=ஆண் யானை; கரிகாலர்=கரிக்கு, மதம் கொண்ட ஆண் யானைக்கு காலனாக விளங்கியவர்; அனல் மெய்யர்=சோதி வடிவமாக உள்ளவர்; செய்யர்=சிவந்த திருமேனியை உடையவர்; கீளர்=அரைஞாண் கயிறு உடையவர்; சரி=தொங்கும்; தொல்லை நகர்=தொன்மை வாய்ந்த நகர்; ஆவணவர் என்ற சொல்லுக்கு இரண்டு விதமாக பொருள் சொல்லப் படுகின்றது. சிவக்கவிமணியார், உயிர்களை ஆவணம் கொண்டு தனக்கு அடிமையாக கொண்டுள்ள பெருமான் என்று விளக்கம் அளிக்கின்றார். தருமபுர ஆதீனத்து குறிப்பு, ஆ வண்ணம் அவர் என்று பிரித்து, பசுவினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள பெருமான் என்று விளக்கத்தை உணர்த்துகின்றது. எருது என்பதற்கு பதிலாக, பெருமானின் வாகனம் பசு என்று திணை மயக்கத்துடன் கையாளப் பட்டுள்ளது,
காடர் கரிகாலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர்
செவியில்
தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்
தான்
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு
பணிவார்
வேடம் ஒளியான பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே
தெரி கீளர் என்று தேர்ந்தெடுத்து கீளாக அணிந்து கொண்டுள்ளார் என்று சொல்வது, எதனை பெருமான் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வியை எழுப்புகின்றது. இதற்கு விடை காண நாம் திருவாசகம் திருச்சாழல் பதிகத்திற்கு செல்லவேண்டும்; கிழிக்கப்பட்ட துணியினைத் தைத்து கோவணமாக இறைவன் கட்டிக் கொள்வது ஏன் என்று ஒரு பெண்மணி கேள்வி கேட்க, அதற்கு விடையாக அவளது தோழி, நான்கு மறைகள் இறைவனது கோவணமாக இருப்பதாக குறிப்பிட்டு, இறைவனது கோவணத்தின் பெருமையை உணர்த்துகின்றாள். மேலும் கலைகள் அனைத்தும் அந்த கோவணத்தை தாங்கி நிற்கும் கீளாக இருப்பதாகவும் உணர்த்துகின்றாள். வேதங்களே உலகத்தில் எழுந்த முதல் நூல்கள் என்றும், அந்த வேதங்களின் கருத்துகள் பல நூல்களிலும் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள். இந்த செய்தியைத் தான், நான்கு மறைகளின் பொருள், பல நூல்களில் காணப்படும் பொருளாக தொடர்ந்து நிற்கும் சரடு போல் இருக்கின்றது என்ற உண்மையை, பொருள் மறை நான்கே வான் சரடா என்ற தொடர் மூலம் மணிவாசகர் இங்கே உணர்த்துகின்றார்,
என்னப்பன் எம்பிரான் எல்லார்க்கும் தான் ஈசன்
துன்னம் பெய் கோவணமாக் கொள்ளும் அது என்னேடி
மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன் காண் சாழலோ
சமணர்களின் சூழ்ச்சியால், பல்லவ மன்னனின் பட்டத்து யானை, கழுத்து வரை நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த அப்பர் பிரானின் தலையை இடறித் தள்ளுவதற்காக ஏவப்படுகின்றது. அந்த சமயத்திலும் நிலை கலங்காமல், பெருமானின் அடியார்கள் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் அஞ்சும் வண்ணம் ஏதும் நிகழாது என்றும், தனது மனக்கண்ணில் தான் கண்ட பெருமானது தோற்றத்தினை உணர்த்தும் வண்ணம் ஒரு பதிகம், அப்பர் பிரான், பாடுகின்றார். அந்த பதிகத்தின் பாடல் ஒன்றனில் (4.2.9) ஒரு பெரிய துணியிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட கோவண ஆடையையும் கீளினையும் உடையவர் பெருமான் என்று கூறுகின்றார். கீள்=அரை ஞாண் கயிறு. துணியிலிருந்து கிழிக்கப்படுவதால் கீழ் என்று அழைக்கப்படுவது. இங்கே கீள் என்று மருவிவிட்டது. இந்தப் பாடலில் சிவபிரான் தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையை உரித்த செயல் குறிப்பிடப்பட்டுள்ளது. மலை போன்ற யானை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தனது அடியார்களுக்காக எதனையும் செய்யவல்ல சிவபிரானின் வல்லமை இந்த தொடர் மூலம் குறிப்பிடப்பட்டு, இந்த குறிப்பு தன்னைத் தாக்க வரும் யானைக்கு, அப்பர் பிரான் ஓர் எச்சரிக்கை விடுப்பதை நாம் உணரலாம்.
சூழும் அரவத் துகிலும் துகில் கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அருவரை போன்ற
வேழம் உரித்த நிலையம் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்த
தாழும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை
பெருமான் கீளும் கோவணமும் அணிந்த நிலையில் காட்சி அளிப்பதை கருத்தினில் கொண்டு அப்பர் பிரான் நகைச்சுவை ததும்ப, பெருமானிடம் ஒரு கேள்வி கேட்கின்றார். இந்த பாடல் ஒரு பொதுப் பதிகத்தின் (4.77.1) பாடலாகும். பெருமானே, நீர் பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட போதும், இத்தகைய கோலத்துடன் தான் திருமணப் பந்தலில் காட்சி அளித்தீரோ என்ற கேள்வி தான் அந்த கேள்வி. யோகியாக இருந்த சிவபெருமான் கோவண ஆடை அணிந்து காணப்படுவது யோகியின் இயல்பே. ஆனால் மணவாழ்க்கை வாழும் ஒருவர் கோவணாண்டியாக இருக்கும் கோலம் நகைப்புக்கு உரியது அல்லவா. அதனால் தான் அப்பர் பிரான், உமை அன்னையை மனைவியாக ஏற்ற அன்றும் கோவண ஆடை அணிந்து இருந்தீரோ என்று நகைச்சுவை உணர்வுடன் இறைவனைக் கேட்கும் பாடல். கடும்பகல் நட்டம் என்று தாருக வனத்து மகளிர் இல்லங்களுக்கு, பகலில் பலி கேட்டுச் சென்றதை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நகைச்சுவை உணர்வுடன் இந்த கேள்வி கேட்கப்பட்டாலும், தனது திருமண நாளன்று சிவபெருமான் கோவண ஆடையின்றி திருமணக்கோலத்துடன் நல்ல ஆடைகள் அணிந்திருக்க வேண்டுமே என்ற கவலையும் இந்த பாடலில் தொனிப்பதை நாம் உணரலாம். அந்த கவலை தான் இங்கே கேள்வியாக ஒலிக்கின்றது.
கடும்பகல் நட்டம் ஆடிக் கையிலோர் கபாலம் ஏந்தி
இடும் பலிக்கு இல்லம் தோறும் உழிதரும் இறைவனீரே
நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென்கூந்தல்
கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ
செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.36.3) கோவண ஆடையை சிறந்த ஆடை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஐ=சிறந்த; துகில்=ஆடை: தேறல் ஆவது=தெளிந்து அறிவது; ஒன்றன்று=உலக மாயைகளில் சிக்குண்ட உயிர்களால் அறியமுடியாத ஒன்று.
வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர்
கீறு கோவண ஐ துகில் ஆடையர்
தேறல் ஆவது ஒன்றன்று செம்பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே
பாண்டி நாட்டுத் தலமாகிய திருப்பூவணம் சென்ற அப்பர் பிரானுக்கு இறைவன் தனது காட்சியை நல்குகின்றார். அந்த காட்சியின் விவரங்களை அவர் ஒரு பதிகமாக பதிவு செய்கின்றார். அந்த பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.18.4) கோவணமும் கீளும் அணிந்தவராக பெருமான் காட்சி தந்ததை பதிவு செய்கின்றார். படை மலிந்த=படைகளில் சிறந்த; நடை மலிந்த=விரைந்து செல்லக் கூடிய; பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும் என்று அப்பர் பிரான், சிவபிரான் தனக்கு அளித்த காட்சியில் முருகப் பெருமானையும் கண்டதாக கூறுகின்றார். சிவபிரானின் மகேச்வர மூர்த்தங்களில் சோமாஸ்கந்த மூர்த்தமும் ஒன்று. இந்த மூர்த்தத்தில் சிவபிரான், பார்வதி மற்றும் முருகப் பெருமானுடன் இணைந்திருப்பார். (சோ+உமா+ஸ்கந்தர்: சோ என்ற எழுத்து சிவபிரானை குறிக்கும். ஸ்கந்தன் என்பது முருகப்பெருமானின் பெயர்களில் ஒன்று); நயனம்=கண். நெற்றியில் கண் கொண்டு மற்றவர்களின் கண்ணினின்று வேறுபட்டு காணப்படுவதால், நயனம் என்று சிறப்பாக உணர்த்தப்பட்டுள்ளது. மூரல்=நகைப்பு; உலர்ந்த வெண்தலையில் காணப்படும் பற்கள், சிரிக்கும் நிலையினை உணர்த்துவதால் மூரல் வெண் சிரமாலை என்று கூறப்பட்டுள்ளது. சிவபெருமானின் அருகில் இருப்பதால் பூதகணங்கள் மிகவும் மகிழ்ச்சியாக பொலிந்து காணப்படுவதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.
படைமலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டுகையுடைய
பிள்ளை தோன்றும்
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி
தோன்றும் நயனம் தோன்றும்
உடைமலிந்த கோவணமும்கீளும் தோன்றும் மூரல்வெண் சிரமாலை
உலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவுதோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம்
புனிதனார்க்கே
கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.67.1) தனது இடுப்பினில் கீள் அணிந்த பெருமானை கீளான் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். ஆளான அடியார்=பெருமானுக்கு அடிமையாக மாறி திருத்தொண்டு செய்யும் அடியார்கள்; ஆளான அடியார்கட்கு அன்பனாக பெருமான் இருந்த தன்மை, நாயன்மார்களின் சரித்திரத்திலிருந்து நாம் அறிகின்றோம். சண்டீசருக்கு பதவி அளித்தது. திருஞான சம்பந்தருக்கு பொற்றாளம் அளித்தது, முத்துப் பல்லக்கு அளித்தது, முத்துப் பந்தர் அருளியது, உலவாப் பொற்கிழி அருளியது, திருநாவுக்கரசு நாயனாருக்கு பொதிசோறு அளித்தது, அவரது தோள்களில் இடப இலச்சினைகள் பொறித்தது, தனது திருவடியை அவரது தலையினில் வைத்தது, சுந்தரருக்கு வேண்டிய போதெல்லாம் பொருள் அளித்தது முதலான நிகழ்ச்சிகள் அடியார்களுக்கு அன்பனாக விளங்கும் பெருமான் செய்யும் உதவிகள். பெரிய புராணத்தில் உணர்த்தப்படும் கருணைச் செயல்கள் அனைத்தும் இறைவன் அடியார்களுக்கு அன்பனாக இருந்த தன்மையால் எழுந்தது தானே. இவ்வாறு அடியார்களுக்கு உதவும் அன்பனாக விளங்கும் தன்மை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. துளையில்லாத முத்து என்று அப்பர் பிரான் இறைவனை குறிப்பிடுகின்றார். துளையிடப்பட்ட முத்தினை விடவும் துளையிடப்படாத முத்து சிறந்ததாக கருதப்படும். கீள்=கிழிக்கப்பட்ட துணியால் முறுக்கிய கயிறு, கோவணத்தை தாங்குவதற்காக இடுப்பினில் கட்டப்படுவது.
ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை ஆனஞ்சும் ஆடியை
நான் அபயம் புக்க
தாளானை தன்னொப்பார் இல்லாதானைச் சந்தனமும் குங்குமமும்
சாந்தும் தோய்ந்த
தோளானை தோளாத முத்து ஒப்பானைத் தூ வெளுத்த கோவணத்தை
அரையில் ஆர்த்த
கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவைக் கேடிலியை நாடுமவர்
கேடிலாரே
திருவாய்மூர் தலத்தில், பெருமான், திருஞானசம்பந்தருக்கும் அப்பர் பிரானுக்கும் தனது நடனக் காட்சியை காட்டுகின்றார். அப்போது அப்பர் பிரான் தான் கண்ட கோலத்தை ஒரு பதிகமாக வடிக்கின்றார். அந்த பதிகத்தின் ஒரு பாடலில் (6.77.6) கோவணத்தையும் கீளையும் பெருமான் மிகுந்த விருப்பத்துடன் அணிந்து கொண்டதாக குறிப்பிடுகின்றார். அவ்வவர்க்கு ஈந்த கருணை என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்றவாறு பெருமான் கருணை புரியும் நிலையும் வேறுபடுகின்றது. இவ்வாறு கருணை வேறுபடும் நிலை இங்கே கூறப்படுகின்றது. மூரி=பெருமை;
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்பக் கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த
கருணை கண்டேன்
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரிப் பிறை போல் மறையக்
கண்டேன்
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும்
குலாவக் கண்டேன்
வடி ஆரும் மூவிலைவேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை
நான் கண்டவாறே
மழபாடி தலத்தின் மீது அருளிய பாடலில் (7.24.2) கீளார் கோவணத்தைத் தனது உடையகக் கொண்டுள்ளா பெருமான், தனது உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டுள்ள தன்மையை குறிப்பிடுகின்றார். கேள்=உறவு;
கீளார் கோவணமும் திருநீறும் பூசி உன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ
வாளார் கண்ணி பங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடல் ஒன்றினில் (7.27.6), சுந்தரர் கீளோடு கோவணமும் அரவும் அசைத்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மன்னி=நிலையாக பொருந்தி நின்ற; இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் சரி கோவண ஆடையனே என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார்.
அரையார் கீளொடு கோவணமும் அரவும் அசைத்து
விரையார் கொன்றையுடன் விளங்கும் பிறை மேலுடையாய்
கரையாரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே
பெருமான் அணிந்திருக்கும் அரைஞாண்கயிறு துணியால் செய்யப்பட்டது என்று சுந்தரர் உணர்த்தும் பாடல் கடவூர் மயானம் தலத்தின் மீது (7..53.6) அருளப்பட்டது. பணி=பாம்பு: பஞ்சவடி என்பது கயிறு கொண்டு முறுக்கப்பட்ட பூணூல். மகாசங்கார காலத்தில் இறக்கும் தேவர்களின் தலையையும் மாலையாகவும் தலைக்கண்ணியாகவும் அணிந்து கொள்ளும் பெருமான், அத்தகைய தேவர்களின் முடியையும் பஞ்சவடியாக அணிந்து கொள்கின்றான் போலும் என்று தருமபுர ஆதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. பெருமானடிகள் என்பது கடவூர் மயானத்தில் உள்ள பெருமானின் திருநாமம். எனவே இந்த பாடலில் உள்ள கடவூர் என்பது கடவூர் மயானத்தைக் குறிக்கின்றது என்று பொருள் கொள்ளவேண்டும். திணிவார் குழை=அடர்ந்தும் நீண்டும் காணப்படும் குழை ஆபரணம்; பிணிவார் சடை=கட்டப்பட்டு நீண்ட சடை;
துணிவார் கீளும் கோவணமும் துதைந்து சுடலைப் பொடி அணிந்து
பணி மேலிட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர்த்
திணிவார் குழையர் புரம் மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே
பொழிப்புரை:
நூலிழைகளால் நெய்யப்பட்ட கோவணமும், நூலிழைகளை சேர்த்து திரிக்கப்பட்ட கீளும், அழகான ஆடைகள் என்று கருதும் வண்ணம் அணிந்து கொண்டுள்ள பெருமான், தனது செயலினைத் தவறாது செய்யும் சூலத்தைத் தனது கையில் ஏந்தியவராக காணப்படுகின்றார். அவர் அடியார்கள் தன்னைக் குறிப்பிட்டு ஆடுவதையும் பாடுவதையும் பெரிதும் விரும்புகின்றார். இளந்தளிர்கள் நிறைந்த பசுமையான சோலைகளால் சூழப்பட்ட குடவாயில் தலத்தில் உள்ள திருக்கோயிலை, திருவிழாக்கள் நிறைவாக கொண்டாடப்படும் திருக்கோயிலை, அனைத்து உயிர்களுக்கும் தலைவனாகிய பெருமான், தான் உறையும் இடமாகக் கொண்டுள்ளான்.
பாடல் 6:
அரவார்ந்த திருமேனி ஆன வெண்ணீறு ஆடினீர்
இரவார்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர்
குரவார்ந்த பூஞ்சோலை வாசம் வீசும் குடவாயில்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே
விளக்கம்:
ஆன வெண்ணீறு என்ற தொடருக்கு பசுவிலிருந்து கிடைக்கும் பொருள் கொண்டு செய்யப்படும் திருநீறு என்றும், பெருமானின் திருமேனியின் மீது அழகுடன் அமையப்பெற்ற திருநீறு என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டுமே பொருத்தமாக உள்ளது. ஆன என்ற சொல் உண்டாக்கும் என்ற பொருளைத் தருவதாக விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, பலவிதமான செல்வங்களைப் பெற்றுத் தரும் திருநீறு என்று பொருள் கொள்வதும் சிறப்பே. பெருமானது திருமேனியில் பூசப்பட்ட திருநீறு தானே, அனைத்துச் செல்வங்களிலும் சிறந்த செல்வமாக மெய்யடியார்களால் கருதப் படுகின்றது, இரவார்ந்த=இரத்தல், தொழிலைச் செய்யும்; பெய் என்றால் வந்து சேர்ந்த, பொருந்திய என்று பொருள்; பெருமான் தனது பிச்சைப் பாத்திரத்தை ஏந்தியவண்ணம் சென்றாலே போதும், அதனைப் புரிந்து கொள்ளும் பக்குவப்பட்ட உயிர்கள் தங்களது மலங்களை, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் இடுகின்றனர் என்ற குறிப்பு உணர்த்தப் படும் வண்ணம் பெய்பலி என்று குறிப்பிட்டார் போலும். குரவார்ந்த=குரவ மரங்கள் நிறைந்த தலம்; திரு=செல்வம் என்று பொருள் கொள்ளாமல் அழகு என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. இமையோர் ஏத்த என்ற தொடரினை பெருமானின் இரண்டு செய்கைகளுக்கும், பலியேற்பது மற்றும் நஞ்சு உண்டு தேவர்களைக் காத்தது, பொருத்தி பொருள் காண்பது சிறப்பு.
பொழிப்புரை:
பாம்புகள் தனது திருமேனியின் மீது பல இடங்களிலும் பொருந்தும் வண்ணம் அணிந்துள்ள பெருமான், தனது திருமேனி வெண்ணீறில் முழுகும் வண்ணம் திருநீற்றை பூசிக்கொண்டு காட்சி தருகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கிய ஆலகால நஞ்சினை உட்கொண்டு தேவர்களை காப்பாற்றிய பெருமான், வேறு எவரும் அருள முடியாத முக்தி நிலையினை, தானே முன்வந்து அருளும் நோக்கத்துடன் பலி ஏற்கச் சென்று, பக்குவப்பட்ட உயிர்கள் தங்களது மலங்களை பிச்சையாக இட, அவர்களுக்கு அருள் புரியும் பெருமானை தேவர்கள் புகழ்ந்து போற்றுகின்றனர். நெருங்கிய குரா மரங்களும், நறுமணம் வீசும் பூஞ்சோலைகளும் கொண்ட குடவாயில் தலத்தில் உள்ள அழகு பொருந்திய திருக்கோயிலை, அனைவர்க்கும் தலைவனாகிய இறைவன், தான் உறையும் இல்லமாக பாவித்து ஆங்கே குடி கொண்டுள்ளான்.
பாடல் 7:
பாடலார் வாய்மொழியீர் பைங்கண் வெள்ளேறு ஊர்தியீர்
ஆடலார் மாநடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர்
கோடலார் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில்
நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே
விளக்கம்:
வாய்மொழி என்ற சொல்லுக்கு, திருவாயிலில் இருந்து வெளிப்பட்ட மொழிகள் (வேதங்கள்) என்றும் வேதங்களில் உள்ள சத்தியமான வார்த்தைகளாக விளங்கும் பெருமான் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். ஏறு=இடபம்; பைங்கண்=பசுமையான கண்கள்; அரிவை என்ற சொல் இங்கே உமையன்னையை குறிப்பிடுகின்றது. உமையன்னை போற்றிப் புகழும் வண்ணம், பெருமான் நடனமாடுகின்றார் என்று உணர்த்தப் படுகின்றது. கோடல்=வெண்காந்தள் மலர்; நீடலர்= நெடிது உயர்ந்த;
பொழிப்புரை:
வேதங்களில் உள்ள சத்தியமான வார்த்தைகளின் பொருளாக உள்ளவரும், வேத கீதங்கள் வெளிப்படும் திருவாயினை உடையவரும், பசிய கண்களும் வெண்மை நிறமும் கொண்டுள்ள இடபத்தினைத் தனது ஊர்தியாகக் கொண்டுள்ளவரும், அனைவராலும் போற்றப்படும் வண்ணம் சிறந்த ஆடலாக விளங்கும் நடனத்தை புரிபவரும், உமையன்னைப் புகழ்ந்து போற்றும் வண்ணம் பல அரிய செயல்களை புரியும் ஆற்றல் உடையவரும் ஆகிய பெருமான், வெண்காந்தள் மலர்களில் பொருந்தி தேனெடுக்கும் வண்டுகள் ரீங்காரம் இட்டவண்ணம் இனிமையான் இசை எழுப்பும் சோலைகள் நிறைந்த குடவாயில் தலத்தில் உள்ள நெடிதுயர்ந்த திருக்கோயிலை, தலைவனாக விளங்கும் தான் உறைகின்ற இல்லமாகக் கொண்டு விளங்குகின்றார்.
பாடல் 8:
கொங்கார்ந்த பைங்கமலத்து அயனும் குறளாய் நிமிர்ந்தானும்
அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர் இலங்கைக் கோன்
தங்காதல் மாமுடியும் தாளும் அடர்த்தீர் குடவாயில்
பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே
விளக்கம்:
கொங்கு=தேன், நறுமணம்; அங்காந்து=வாய் திறந்த நிலையில் தளர்ச்சி அடைந்து; மூச்சிரைக்க ஓடும் நாம் அந்த ஓட்டத்தின் முடிவில் நம்மையும் அறியாமல் வாய் திறந்து அதிகமான காற்றினை உட்கொள்வது இயற்கையாக ஏற்படும் உடலின் மற்றம் அல்லவா. தங்களது முழு ஆற்றலையும் பயன்படுத்தி, அகழ்ந்தும் பறந்தும் முறையே பெருமானின் திருவடியையும் திருமுடியையும் தேடிச் சென்ற திருமாலும் பிரமனும், தங்களது தீவிரமான முயற்சி காரணமாக, மிகவும் தளர்ந்து காணப்பட்டனர் என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தம் காதல் மாமுடி என்று குறிப்பிட்டு, நீண்டு உயர்ந்த கிரீடங்களை அணிந்து ஆடம்பரமாக காட்சி தருவதில், இராவணனுக்கு இருந்த விருப்பத்தை, ஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இந்த பாடலில் வழக்கமாக ஞானசம்பந்தரின் பதிகத்தின் எட்டாவது பாடலில் குறிப்பிடப்படும் அரக்கன் இராவணன் நிகழ்ச்சியும், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவர்க்கும் அரியவனாக பெருமான் விளங்கிய தன்மையும் குறிப்பிடப் படுகின்றன. இந்த இரண்டு செய்திகளும் எட்டாவது பாடலில் உணர்த்தப்படும் (இந்த பதிகம் உள்ளிட்டு) மூன்று பதிகங்கள் உள்ளன. நல்லானை நான்மறை என்று தொடங்கும் சீர்காழி தலத்துத் திருப்பதிகம் (2.11) கரமுனம் மலரால் என்று தொடங்கும் பிரமாபுரத்து திருப்பதிகம் என்பவை மற்ற இரண்டு பதிகங்கள். சீர்காழி தலத்து பதிகத்தினில், பத்தாவது பாடல் சிதைந்துள்ளது. ஒன்பதாவது பாடல் சமணர்கள் பற்றியும் குறிப்பும் எட்டாவது பாடல் மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளையும் குறிப்பிடும் வண்ணம் அமைந்துள்ளது. பிரமாபுரம் தலத்து திருப்பதிகத்தில் பத்து பாடல்களே காணப்படுகின்றன. இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளும், ஒன்பதாவது பாடலில் சமணர்கள் பற்றிய குறிப்பும், பத்தாவது பாடலில் பதிகத்தை ஓதுவதால் நாம் பெறவிருக்கும் பயனும் காணப்படுகின்றன. அந்தமும் ஆதியும் என்று தொடங்கும் வேட்களம் பதிகம் (1.39.9) வானமர் திங்களும் என்று தொடங்கும் கடம்பூர் திருப்பதிகம் (2.68.9) திருமலர்க் கொன்றை என்று தொடங்கும் சாத்தமங்கை (3.58.9) ஆகிய மூன்று பதிகங்களில், ஒன்பதாவது பாடல்களில் மேற்கண்ட இரண்டு நிகழ்சிகளும் குறிப்பிடப் படுகின்றன. திருவேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகம் மற்றும் கடம்பூர் தலத்துப் பதிகம் சாத்தமங்கை தலத்துப் பதிகம் ஆகிய மூன்று பதிகங்களிலும் எந்த பாடலும் சிதையவில்லை. ஆனால் எட்டாவது பாடலில் இராவணன் பற்றிய நிகழ்ச்சி விடுபட்டுள்ளதை உணர்ந்த ஞானசம்பந்தர் ஒன்பதாவது பாடலில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டார் போலும். .
பொழிப்புரை:
தேனும் நறுமணமும் பொருந்திய பசுமையான தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும், வாமனனாக சென்று திருவிக்ரமனாக நிமிர்ந்த ஆற்றல் உடைய திருமாலும், பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண்பதற்கு முயற்சித்த போது, தங்களது முயற்சியில் தோல்வி அடைந்து மிகவும் களைத்தும் தளர்ந்தும் இருந்த நிலையில், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் தங்களது வாயினைத் திறந்து காற்றினை உள்ளிழுக்கும் வண்ணம், நீண்ட தழற்பிழம்பாக பெருமான் அவர்கள் இருவரின் எதிரே நிமர்ந்து நின்றார். ஆடம்பரமாக திகழும் பொருட்டு நீண்ட கிரீடங்களை மிகுந்த விருப்பத்துடன் அணிந்த அரக்கன் இராவணனின் தலைகளும் கால்களும் கயிலை மலையின் அடியே நசுங்கி நொறுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலை மலை மீது ஊன்றியவர் சிவபெருமான். அவர், குடவாயில் நகரத்தின் ஒரு பாகமாக விளங்கும் திருக்கோயிலை, தலைவனாகிய தான் உறையும் இல்லமாக கருதி உறைகின்றார்.
பாடல் 9:
பாடல் சிதைந்தது
பாடல் 10:
தூசார்ந்த சாக்கியரும் தூய்மை இல்லாச் சமணரும்
ஏசார்ந்த புன்மொழி நீத்து எழில் கொள் மாடக் குடவாயில்
ஆசாரம் செய் மறையோர் அளவில் குன்றாது அடி போற்றத்
தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே
விளக்கம்:
தூசு=அழுக்கு: பதிகத்தின் இரண்டாவது பாடலில், இந்த தலத்து மறையோர்கள் ஒழுக்கத்துடன் வாழ்ந்ததை குறிப்பிட்ட, ஞானசம்பந்தர், இந்த பாடலில் குன்றாத ஒழுக்கம் உடையவர்களாக தலத்து மறையோர்கள் திகழ்ந்தனர் என்று கூறுகின்றார். அளவில் குன்றா என்ற தொடரினை, தலத்து அந்தணர்களுக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக கருதி, குறையற்ற நல்லொழுக்கம் உடைய அந்தணர்கள் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது.
பொழிப்புரை:
அழுக்கேறிய உடையினை அணிந்த புத்தர்களும் நீராடாமல் இருப்பதால் தூய்மையற்ற உடலினை கொண்ட சமணர்களும், பெருமானைக் குறித்து இழிவாக ஏசிப் பேசும் சொற்களை, இழிந்த சொற்களை, ஒதுக்கித் தள்ளும் அந்தணர்கள், ஒழுக்கங்களும் ஆசாரமும் நிறைந்தவர்களாக, அழகிய மாடவீடுகள் நிறைந்த குடவாயில் தலத்தில் உறைகின்றனர். அவர்கள் குறைவற்ற வகையில் எல்லையற்ற புகழ்ச் சொற்கள் கொண்டு இறைவனின் திருவடிகளைப் போற்றுகின்றனர். இவ்வாறு அவர்களால் போற்றப்படும் இறைவன், ஒளியுடன் திகழும் குடவாயில் தலத்து திருக்கோயிலை, தலைவனாகிய தான் உறைகின்ற இல்லமாக ஏற்றுக் கொண்டு அடைந்துள்ளான்.
பாடல் 11:
நளிர் பூந்திரை மல்கு காழி ஞானசம்பந்தன்
குளிர் பூங்குடவாயில் கோயில் மேய கோமானை
ஒளிர் பூந்தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார்
தளர்வான தான் ஒழிய தகுசீர் வானத்து இருப்பரே
விளக்கம்:
நளிர்=குளிர்ந்த; கோமான்=குடிகளின் தலைவன், அரசன்; வானம் என்பது உயர்ந்த இடத்தை குறிக்கும். அனைத்து இடங்களிலும் உயர்வான் இடமாக சிவபுரம் கருதப் படுவதால், சிவபுரம் என்று பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். தகுசீர்=தகுந்த புகழினை உடைய;
பொழிப்புரை:
குளிர்ந்ததும் பூக்களை அடித்துக் கொண்டு வருவதும் ஆகிய நீரினால் சூழப்பட்டுள்ள சீர்காழி நகரத்தைச் சார்ந்த ஞானசம்பந்தன், குளிர்ந்தும் அழகுடனும் காணப்படுவதும் ஆகிய குடவாயில் தலத்தில் உள்ள திருக்கோயிலில் பொருந்தி உறைவனும் அனைத்து உலகங்களுக்கும் அரசனாக விளங்குபவனும் ஆகிய பெருமானை குறிப்பிட்டு, புகழுடன் ஒளிரும் அழகிய தமிழ் பாமாலையாக உரைத்த இந்த பாடல்களை பாடும் வல்லமை வாய்ந்த அடியார்கள், மறுமையில் உடல் தளர்ச்சியும் மனத் தளர்ச்சியும் நீக்கும் தன்மை வாய்ந்ததும் தகுந்த புகழினை உடையதும் ஆகிய மேலான சிவபுரம் சென்று அடைவார்கள்.
முடிவுரை:
ஒரு பெண்மானைத் தனது உடலிலும் மற்றொரு பெண்மானைத் தனது சடையிலும் ஏற்றுக் கொண்டுள்ள இறைவன், வெறி ஊட்டப்பட்ட மான் கன்றினை அதனியல்பு நிலைக்கு மாற்றி, தனது கையில் ஏற்றுக்கொண்டுள்ள பெருமான் என்று முதல் பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இதன் மூலம், பெருமானை அணுகும் எந்த உயிரும் தனது செயற்கை தன்மை நீங்கப்பெற்று, இயல்பான தன்மையுடன் விளங்கும் என்று உணர்த்துகின்றார். பலியேற்க செல்லும் அந்த நேரத்திலும் உமையன்னையை பிரியாது இருக்கும் தன்மை இரண்டாவது பாடலில் சொல்லப் படுகின்றது. உயிர்களுக்கு அருள் புரிய விரும்பும் பெருமான், தனது அருள் சக்தியுடன் செல்வது தானே பொருத்தம். இவ்வாறு பெருமான் உயிர்களுக்கு அருள் புரிந்து முக்தி அடையச் செய்வதை தேவர்கள் புகழ்ந்து ஏத்துகின்றனர் என்று மூன்றாவது பாடலில் குறிப்பிடுகின்றார். மழு ஏந்திய பெருமான் என்று குறிப்பிட்டு, தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மழுவை செயலறச் செய்து ஏந்திய செய்கை, பெருமானின் சன்னதியில் தீங்கு தரும் சக்திகளுக்கு இடமில்லை என்பதை உணர்த்துகின்றது. இத்தகைய சிறப்புகள் பெற்றிருப்பினும், பெருமான் மிகவும் எளியவராக கோவண ஆடை அணிந்து இருக்கும் தன்மை ஐந்தாவது பாடலில் குறிப்பிடப்பட்டு, எளிமையின் அழகை நமக்கு உணர்த்தும் நிலை சொல்லப் படுகின்றது. என்றும் அழியாத நிலை உடையவன் இறைவன் ஒருவனே என்ற உண்மையை உணர்த்தும் விதமாக, பெருமான் தனது திருமேனி மீது திருநீறு பூசப்பட்ட தன்மையில் காட்சி தரும் தன்மை ஆறாவது பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது. பெருமானின் பலவிதமான ஆற்றலை, பெருமானின் அருகில் இருந்து காணும் பிராட்டி, பெருமானைப் போற்றிப் புகழ்கின்றாள் என்று ஏழாவது பாடல் கூறுகின்றது. ஒன்பதாவது பாடல் சிதைந்த நிலையில், அந்த குறையை நீக்கும் பொருட்டு இராவணனின் கயிலை மலை நிகழ்ச்சி மற்றும் பிரமன் திருமால் ஆகிய இருவருக்கும் அரியராக பெருமான் திகழ்ந்த நிலை ஆகிய இரண்டு செய்திகளும் எட்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றன. பத்தாவது பாடலில், மாற்று மதத்தவரின் சொற்களில் மயங்காது தலத்து அந்தணர்கள் அவற்றை ஒதுக்கித் தள்ளிய தன்மையை குறிப்பிட்ட ஞானசம்பந்தர் நாம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று வழிநடத்துகின்றார். பதிகத்தின் கடைப்பாடல், இந்த பதிகம் ஓதுவதால், நாம் மறுமையில் சிவலோகம் சென்றடைந்து இன்பமாக வாழலாம் என்று உணர்த்துகின்றது. பெருமானின் தன்மைகளை இந்த பதிகம் மூலம் புரிந்து கொண்ட நாம், இன்பமாக தான் வாழும் இடமாக நமது தலைவன் ஏற்றுக்கொண்ட குடவாயில் திருக்கோயில் சென்று இறைவனை வழிபட்டும், அவனது புகழினை உணர்த்தும் தேவாரப் பாடல்கள் பாடியும் பயனடைவோமாக.