இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


களையும் வல்வினை

களையும் வல்வினை

பதிக எண்: 2.09 - திரு மழபாடி- இந்தளம்

பின்னணி:

மழபாடி தலம் சென்றடைந்த திருஞானசம்பந்தர், அங்கையார் அழலன் என்று தொடங்கும் பதிகத்தினை (3.48) பாடியவாறே திருக்கோயிலுக்கு செல்கின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில் மழபாடி தலத்தின் சிறப்பையும், மழபாடி தலத்தினை தொழும் அடியார்கள் பெறுகின்ற பயனையும் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், திருக்கோயிலின் உள்ளே சென்ற பின்னர், அருளிய திருப்பதிகம் களையும் வல்வினை என்று தொடங்கும் இந்த பதிகம். இந்த தலத்தினில் பல நாட்கள் தங்கியிருந்த திருஞானசம்பந்தர் இறைவனுக்கு சொல்மாலைத் தொடை அணிவித்து, இறைவனை துதித்து பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். சில நாட்கள் இந்த தலத்தில் திருஞானசம்பந்தர் தங்கினார் என்று சேக்கிழார் குறிப்பிட்டாலும், நமக்கு மழபாடி தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய மூன்று பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன, ஒழியாத நேசம்=இடையூறு இல்லாத அன்பு; உடையவர்=தம்மை அடிமையாக உடையவர்;

மழபாடி வயிரமாந் தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம் கொண்டு எய்தி

செழு வாச மலர்க் கமலச் சேவடிக் கீழ் சென்று தாழ்ந்து எழுந்து நின்று

தொழுது ஆடிப்பாடி நறும் சொல் மாலைத் தொடை அணிந்து துதித்துப் போந்தே

ஒழியாத நேசமுடன் உடையவரைக் கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள்

தேவாரத் தலங்களில் பனைமரத்துடன் இணைந்த தலங்கள் ஆறு. அவை, பனந்தாள், பனையூர், வன்பார்த்தான் பனங்காட்டூர், புறவார் பனங்காட்டூர், திருவோத்தூர் மற்றும் மழபாடி ஆகும். இந்த தலத்தில் வஜ்ரேஸ்வரர் என்ற கழுகு, கோயில் கோபுரத்தில் வசித்து வந்ததாகவும், ஒரு நாள் பலி பீடத்தில் இடப்பட்ட பிரசாதத்தை சாப்பிடுவதற்காக கீழே இறங்கிய கழுகினை ஒரு வேடன் அம்பெய்தி கொன்று விடவே, கழுகு அலறியவாறு கண்ணை மூடிக் கொண்டு கீழே விழுந்து இறந்தது என்றும், கழுகின் மீது கருணை கொண்ட இறைவன் கழுகுக்கு முக்தி அளித்ததாகவும் தலபுராணச் செய்திகள் கூறுகின்றன. இந்த கழுகின் சந்ததியார் இன்றும் இந்த கோயிலில் இருப்பதாக சொல்கின்றனர். முனிவர் ஒருவரின் சாபத்தால், திருமகளுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டது என்றும், இந்த தலம் வந்தடைந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப் பெற்றாள் என்றும் கூறுவார்கள். இந்த குளம் அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ளது. இலட்சுமி தீர்த்தம் என்று அழைக்கப் படுகின்றது.

கிழக்கு நோக்கிய ஏழு நிலைகளை உடைய கோபுரம். முதன் முதலில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு பின்னாளில் பலராலும் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில். இரண்டாவது கோபுரத்தைக் கடந்ததும் மிகப் பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கே இரண்டு நந்திகளை காணலாம். பிரமனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக உள்ளன என்று கூறுவார்கள். நவகிரக சன்னதி இல்லாத கோயில். மூலவர் பெருமான் சுயம்பு மூர்த்தம், புருஷா மிருகத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. இந்திரன், திருமால், இலக்குமி தேவி, சந்திரன், சிபிச் சக்ரவர்த்தி, மார்க்கண்டேய முனிவர் ஆகியோரால் வழிபடப்பட்டது. கருவரையும் சோமாஸ்கந்தர் சன்னதியும் இணைந்து பெரிய கோயிலாக காட்சியளிக்கின்றன. பெருமானின் சன்னதியில் மூன்று குழிகள் உள்ளன. இதனை நவகிரகமாக நினைத்து வழிபடுகின்றனர். இந்த தலத்தில் இருந்த நவகிரகங்களை பெருமான் தனது நெற்றிக் கண்ணால் அழித்து விட்டார் என்று கூறுகின்றனர். காத்யாயினி அம்பிகை தனி சன்னதியில்,மயில் மீது அமர்ந்த வண்ணம் காட்சி தருவது இந்த கோயிலின் தனிச் சிறப்பு. வேறெங்கும் இல்லாத வண்ணம் விநாயகர் தெற்கு திசை நோக்கி அமர்ந்துள்ளார். அம்பிகை சன்னதி தனிக் கோயிலாக உள்ளது. பாலாம்பிகை, சுந்தராம்பிகை என்று இரண்டு அம்பிகை சன்னதிகள் உள்ளன. பிராகாரத்தில் அகோர வீரபத்திரர், விநாயகர், முருகர் சன்னதிகள் உள்ளன. நந்தி தேவரை நாம் இங்கே மனித உருவில் காணலாம். நெற்றிக் கண்ணுடன் சிவபெருமானின் சாயலில், நான்கு கரங்களுடன் மானும் மழுவும் ஏந்திய வண்ணம் நந்தியம் பெருமானை நாம் காணலாம். இரண்டு தட்சிணாமூர்த்தி உருவங்கள் உள்ளன. மழுவுடன் பெருமான் நடனமாடும் கோலம் கொண்ட பெரிய சிலை இந்த கோயிலில் உள்ளது. கற்சிலையாக சோமாஸ்கந்தரை நாம் காண்பது மிகவும் அரிது. அழகு வாய்ந்த கற்சிலையாகவும் செப்புச் சிலையாகவும் நாம் சோமாஸ்கந்தரை இங்கே காணலாம். இந்த கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர விழாவுக்கு, திருவையாற்றிலிருந்து ஐயாரப்பன், அறம்வளர்த்த நாயகி,நந்தி தேவர், உற்சவச் சிலைகள் கொண்டு வரப்படும். எண்ணற்ற கல்வெட்டுகள் கொண்ட திருக்கோயில். பாலாம்பிகை கோயில் இராஜராஜன் காலத்திலும், ஜ்வரஹரேச்வர் கோயில் இராஜேந்திரன் காலத்திலும் சோமாஸ்கந்த சன்னதி பதின்மூன்றாம் நூற்றாண்டிலும் நடுச்சுற்றில் உள்ள கோபுரம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் கட்டப்பட்டன. பல பாண்டிய, விஜயநகர, ஹொய்சால மன்னர்கள் இந்த கோயிலுக்கு திருப்பணி செய்து விரிவுபடுத்தியுள்ளனர்.

பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி அவர்கள் இந்த தலத்தையும், இந்த தலத்து பெருமான், சுந்தரரை அழைத்துப் பாடல் பெற்ற வரலாற்றையும் கூறுகின்றார். சோற்றுத்துறை சென்ற சுந்தரர், இந்த தலத்தை தாண்டி ஆலம்பொழில் என்ற தலத்திற்கு செல்கின்றார். சுந்தரரின் பாடலைக் கேட்பதற்கு விருப்பம் கொண்டிருந்த பெருமான், அவரது கனவில் தோன்றி, சுந்தரா மழபாடி வருவதற்கு நினைக்க மறந்தாயோ என்று வினவ, பொழுது புலர்ந்த பின்னர் சுந்தரர் மழபாடி சென்று ஈசனை வணங்கி பதிகம் பாடினார். பொன்னார் மேனியனே என்று தொடங்கும் பதிகம் தான் அந்தப் பதிகம். மழபாடி மாணிக்கமே என்று பெருமானை அழைக்கும் சுந்தரர், உன்னை அல்லால் இனி வேறு யாரையும் நினைக்க மாட்டேன் என்று இறைவனைப் பார்த்து கூறுகின்றார். இந்த பதிகத்தினை சேக்கிழார் தன்னேர் இல்லாப் பதிகம் என்று சிறப்பிக்கின்றார்.

பாடல் 1:

களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே கருதார் புரம்

உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா

வளைய வெஞ்சிரம் வாங்கி எய்தான் மதுத்தும்பி வண்டு

அளையும் கொன்றை அந்தார் மழபாடியுள் அண்ணலே

விளக்கம்:

உளைதல்=அழிதல்; அளைதல்=சேர்தல், அன்பு கொண்டு நெருங்குதல்; பகைவர்கள் எவரும் நினைத்துப் பார்க்கவும் முடியாத மிகவும் அரிதான, வலிமையான வரத்தினைப் பெற்றிருந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை அழித்த ஆற்றல் உடைய பெருமானுக்கு, உயிர்களுடன் இணைந்துள்ள வினைகளைக் கழிப்பது எளிய செயல் அல்லவா. அதனால் தான் தனது நெஞ்சினை நோக்கி பெருமான் இருக்கையில் அஞ்ச வேண்டாம் என்று ஆறுதல் சொல்லும் திருஞானசம்பந்தர், பெருமானின் ஆற்றல் எத்தகையது என்பதை குறிப்பிடும் வண்ணம், திரிபுரத்து கோட்டைகளை அழித்த செய்தியினை இங்கே குறிப்பிடுகின்றார். தனது நெஞ்சினைக் குறிப்பிட்டு, நமக்கு அறிவுரை சொல்லும் பாடல். கருதார்=வேதநெறியை பொருட்டாக மதித்து அதன் வழி ஒழுகாத திரிபுரத்து அரக்கர்கள். பூசல்=போர்; வரை=மேரு மலையாகிய வில்; வெஞ்சரம்=கொடுமையை விளைவிக்கும் ஆற்றல் வாய்ந்த அம்பு; மது= கள், தேன்; தும்பி=வண்டு; தார்=மாலை; அண்ணல்=தலைவன்; அந்தார்=அம்+தார்=அழகிய மாலை;

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.130.1) திருஞானசம்பந்தர், உடலிலிருந்து உயிர் பிரியும் தருணத்திலும் அஞ்சேல் என்று சொல்லி அபயம் அளிப்பவன் சிவபெருமான் ஒருவன் தான் என்று உணர்த்துகின்றார். அலமந்த போது=வருந்தி இறக்கும் தருவாயில்; தன்மை நவிற்சியணி; குரங்குகள் இயல்பாக மரம் ஏறி வேடிக்கை பார்ப்பதை, மேகங்கள் தென்படுகின்றனவா என்று பார்ப்பதாக தனது கருத்தினை ஏற்றிச் சொல்லும் பாங்கு, சங்க காலத்துக் கவிதைகளின் நயம் தேவாரப் பாடல்களில் உள்ளன என்பதை நமக்கு உணர்த்துகின்றது. பொறி=செயல்பாடுகள்; நெறி=செல்ல வேண்டிய வழி; ஐ=கோழை; முழவு= மத்தளம் போன்ற வாத்தியம்; முகில்=மேகம்; அலமந்து (நான்காவது அடி)=சுழன்று; ஐந்து புலன்களும் தங்களது இயல்பான செயல்பாடுகளில் வலிமை குன்றி, தாம் செல்ல வேண்டிய வழியில் நின்று செயல்படாமல், என்ன செய்வது என்று அறியாமல் இயலாமையால், மயக்கத்தில் ஆழ்ந்து, அறிவு செயல்படுவதை நிறுத்தி உயிருடன் ஒத்துழைக்காத நிலையில் இருந்த போதும், உடலில் பெருகிய கோழை மேலெழுந்து வந்து தொண்டையை அடைத்துக் கொண்டு வாயில் செலுத்தப்படும் உணவு உட்செல்வதை தடுத்தும் பேச்சினை தடை செய்த போதிலும், உயிர் இறைவனை நினைத்தால், அந்த இறைவன், அந்த உயிரினுக்கு அஞ்சேல் என்று சொல்லி அபயம் அளிப்பான். அத்தகைய ஆற்றல் கொண்ட இறைவன் அமரும் தலம் திருவையாறு ஆகும். இந்த இறைவன் வீற்றிருக்கும் திருக்கோயிலை வலம் வரும் இளம் பெண்கள் நடனத்திற்கு ஏற்ப, முழவுகள் பின்னணியில் அதிர்ந்து ஒலிக்கின்றன. இவ்வாறு முழவுகள் எழுப்பும் ஓசையைக் கேட்ட குரங்குகள், அந்த ஓசையினை இடியின் ஓசை என்று தவறாகக் கருதி தடுமாற்றம் அச்சத்துடன் மரங்களின் மீதேறி, மேகங்கள் எங்குள்ளன என்று நான்கு திசைகளிலும் சுழன்றுசுழன்று பார்க்கின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி

அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்

வலம் வந்த மடவார்கள் நடமாட முழவு அதிர மழை என்று அஞ்சிச்

சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திருவையாறே

உயிர் உடலை விட்டு பிரியும் சமயத்தில் உயிர் படும் துன்ப வேதனைகளை திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஐந்து புலன்களும் தங்களது செயல்பாட்டின் வலிமை குறைந்து உயிருடன் ஒத்துழைக்கத் தவறுதலும், தாங்கள் செல்ல வேண்டிய பாதையிலிருந்து விலகி வேறு வழியில் செல்லுதலும், கோழை தொண்டையை அடைத்துக் கொண்டு உணவு உட்செல்வதை தடுத்தும் பேசும் பேச்சினை தெளிவற்றதாக செய்தும் உயிரினை வருத்துதல் உயிர் உடலை விட்டு பிரியும் நேரம் மிகவும் நெருங்கி விட்டது என்பதை உணர்த்தும் செயல்களாகும். அந்த தருணத்தில் உயிர், தான் உடலை விட்டு பிரிந்த பின்னர் அடைய இருக்கும் நரக வேதனைகள், மீண்டும்மீண்டும் எடுக்க வேண்டிய பிறப்புகள் ஆகியவற்றை நினைத்து கவலை கொள்ளும். அந்த நிலையில் சுற்றத்தார், அவரது செல்வம் ஏதும் அவருக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இறைவன் ஒருவன் தான் அவருக்கு அபயம் அளிக்கும் நிலையில் இருப்பார் என்பதை இந்த பாடலில் திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். கோயிலின் இரண்டாவது பிரகாரத்தில் சோமாஸ்கந்தர் சன்னதிக்கு அடுத்து சட்டநாதர் சன்னதியும் பிரணதார்த்திஹரர் சன்னதியும் உள்ளன. ப்ரணதார்த்திஹரன் என்பது இந்த தலத்து இறைவனின் நாமங்களில் ஒன்று. உயிர் அடையும் வேதனைகளை முற்றிலும் அழித்து நீக்குபவன் என்பது இந்த வடமொழி திருநாமத்தின் பொருள். இறைவனின் இந்த தன்மையையே இந்த பாடலில் திருஞான சம்பந்தர், கோழை தொண்டையை அடைக்கும் தருணத்திலும் நமக்கு தகுந்த வழியினை காட்டுபவன் இறைவன என்று குறிப்பிடுகின்றார். ஐ (கோழை) தொண்டையை அடைக்கும் தருணத்திலும் நமக்கு வழியை (ஆற்றினை) காட்டுபவன் என்பதால் ஐயாறன் என்று பெயர் வந்ததாக சில அறிஞர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் பொருத்தமாக இருப்பதுடன், பிரணதார்த்திஹரன் என்ற வடமொழிச் சொல்லுக்கு நேர் மொழி பெயர்ப்பாக ஐயாரப்பன் என்ற திருநாமம் இருப்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.

இறக்கும் சமயத்தில் சிவனது திருப்பாதங்களை நினையாதவர் பேதைகள் என்று ஆரூர்ப் பதிகம் ஒன்றின் (2.79) முதல் பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தில் அத்தகையோர் எவ்வாறு துன்பப்படுவார்கள் என்பதை நமக்கு படம் காட்டுவது போல் விவரிக்கும் நேர்த்தியை நாம் காணலாம். பவனம்=காற்று: இறக்கும் சமயத்தில், உடலினை விட்டு நீங்கும் பொருட்டு பிராணவாயு பெருகும். இதனை மேல் மூச்சு வாங்குதல் என்று கூறுவார்கள். இந்த நிலையை, உடலில் காற்று அதிகமாக உள்ளது என்பதை குறிக்கும் வகையில், உடல் காற்றாய் மாறியது என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். சோடை என்றால் வறட்சி என்று பொருள். நாக்கு உலர்ந்து போய் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த சமயத்தில், வாயில் ஊட்டப்படும் உணவை உள்ளே செலுத்த முடியாமல் நாக்கு திண்டாடும். அப்போது மெல்லிய துணியை அல்லது பஞ்சினை முழுவதும் பாலினில் நனைத்து, அருகில் இருப்போர் ஊட்டுவார்கள்; இந்த நிலையைத் தான் நாவெழாப் பஞ்சு தோய் சட்ட உண்டு என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடல் மூலம் சிவனது திருப்பாதங்களை இறக்கும் சமயத்தில் நினைப்போர் மேற்கொண்ட துன்பங்களிலிருந்து விடுபடுவார்கள் என்று நமக்கு உணர்த்துகின்றார். திருஞான சம்பந்தர் இந்த பாடலில் விவரித்தவாறு, இறக்கும் தருணத்தில் உடல் படும் வேதனையில், இறைவனைப் பற்றிய நினைப்பு தோன்றாமல் இருப்பது இயற்கையே. எனவே அந்த நிலையில் இறைவன் பற்றிய சிந்தனை ஏற்பட வேண்டும் என்றால் இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே ஏற்படும். எனவே அத்தகைய அருள் புரிய வேண்டும் என்று நாம் தொடர்ந்து, நமது உடல், உயிருடன் ஒத்துழைக்கும் நேரங்களில்,. இறைவனைப் பணிந்து வேண்டவேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பவனமாய் சோடையாய் நாவெழாப் பஞ்சு தோய் சட்ட உண்டு

சிவன தாள் சிந்தியாமே பேதைமார் போல நீ வெள்கினாயே

கவனமாய் பாய்வதோர் ஏறு உகந்து ஏறிய காளகண்டன்

அவனது ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.45.2) திருஞான சம்பந்தர், அருத்தனாகிய பெருமான் தன்னை அஞ்சேல் என்று சொல்லாததன் காரணம் யாது என்று திருவாரூர் தலத்து அடியார்களிடம் வினவுகின்றார். திருத்தன்=தூயவன்; தீர்த்தம் என்ற சொல்லிலிருந்து பிறந்தது; திருவாரூரின் தலத்து சிறப்பினையும், அந்த தலத்து அடியார்களின் சிறப்பினையும், அப்பர் பிரானின் திருவாய் மொழியால் கேட்டுகந்த திருஞான சம்பந்தர், திருவாரூர் நகரம் சென்ற போது, தலத்து அடியார்கள் ஊரின் எல்லையில் ஒன்று கூடி திருஞானசம்பந்தரை வரவேற்கின்றனர். அப்போது, நாள்தோறும் திருவாரூர் தியாகராஜப் பெருமானைத் தொழும் வாய்ப்பினைப் பெற்ற அந்த அடியார்களிடம், பெருமான் தன்னை ஏற்றுக் கொள்வானோ என்று கேட்டு சொல்லுமாறு, இந்த பதிகத்தின் முதல் பாடலில், விண்ணப்பம் வைக்கின்றார். பெருமானிடமிருந்து மறுமொழி ஏதும் கிடைக்காததால், தான் அச்சம் அடைந்திருப்பதாக உணர்த்தும் திருஞானசம்பந்தர், பெருமான் தன்னை அஞ்சேல் என்று சொல்லி ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றார். பெருமானைத் தனது கருத்தினில் எப்போதும் நிறுத்து வழிபடுவதாக குறிப்பிடும் திருஞானசம்பந்தர், பெருமானால் ஆட்கொள்ளப் படுவதற்கு தகுதி உடையவனாக தான் திகழ்வதையும் உணர்த்துகின்றார். பெருமானைத் தங்களது கருத்தினில் கொள்ளாத திரிபுரத்து அரக்கர்கள், பெருமானுக்கு கருணைக்கு தகுதியற்றவர்கள் என்பதால், அவர்களது கோட்டைகள் பெருமானால் எரிக்கப் பட்டன. தான் அவர்களிடமிருந்து மாறுபட்டவன் என்பதை உணர்த்தும் திருஞான சம்பந்தர், தனக்கு பெருமான் கருணை புரிய வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகின்றார்.

கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த

ஒருத்தனே உமையாள் ஒரு கூறனே

நிருத்தனே திருவாரூர் எம் தீ வண்ண

அருத்த என் எனை அஞ்சல் என்னாததே

இதே பதிகத்தின் நான்காவது பாடலில் (3.45.4) திருஞானசம்பந்தர், திருவாரூர் அடியார்களை நோக்கி, பெருமான் தன்னை அஞ்சல் என்று சொல்லி அபயம் அளித்து காப்பாற்றுவாரா என்ற கேள்வியை திருஞான சம்பந்தர் கேட்கின்றார். ஆரூர்ப் பெருமானை தினமும் தவறாது வழிபடும் அடியார்கள் என்பதால், அவரது திருக்குறிப்பினை அறியும் ஆற்றல் அந்த அடியார்களுக்கு இருப்பதை இந்த பதிகத்தின் பாடல்கள் தோறும் உணர்த்துகின்றார். பல்லில் ஓடு=பற்கள் அற்ற பிரம கபாலம்; எல்லி=இரவு, இங்கே பிரளய காலத்து இருள் என்று பொருள் கொள்ள வேண்டும். அல்லல் என்று இங்கே பிறவிப்பிணி உணர்த்தப்படுகின்றது. திருவாரூர் முக்தித் தலங்களில் ஒன்று என்பதை நாம் அறிவோம்.

பல்லில் ஓடு கையேந்தி பலி திரிந்து

எல்லி வந்து இடுகாட்டெரி யாடுவான்

செல்வம் மல்கிய தென் திருவாரூரான்

அல்லல் தீர்த்தெனை அஞ்சல் எனும் கொலோ

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.45.6) உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டுள்ள கோலத்துடன் பெருமான், பல ஊர்களுக்கும் சென்று பிச்சை ஏற்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆர்கணாக என்ற சொல் ஆர்கணா எனக் குறைந்துள்ளது. கொள் என்ற சொல் முதலாவது மற்றும் மூன்றாவது அடிகளில் கொண் என புணர்ச்சி விதியின் படி மாறியுள்ளது. தான் மற்ற தெய்வங்களை விலக்கி பெருமான் ஒருவனைத் தானே பற்றுக் கோடாக கொண்டுள்ளேன், அவ்வாறு இருக்கையில் பெருமான் இன்னும் தனக்கு அஞ்சேல் என்று சொல்லி ஆறுதல் கூறாதது ஏன் என்ற கேள்வியை திருஞானசம்பந்தர் திருவாரூர் தலத்து அடியார்களை நோக்கி கேள்வி கேட்கும் பாடல். இங்கே பிச்சை கொள் உத்தமன் என்று கூறுகின்றார். பலரும் தன்னைப் பழிப்பதையும் பொருட் படுத்தாமல், பக்குவம் அடைந்த உயிர்களுக்கு வீடுபேறு அளித்து உய்விக்கும் வண்ணம் தொடர்ந்து பிச்சை ஏற்கும் பெருமானை மிகவும் பொருத்தமாக உத்தமன் என்று அழைக்கின்றார். இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் அடிகள் தான் எனை அஞ்சல் எனும் கொலோ என்றும் திருஞானசம்பந்தர் வினவுகின்றார்.

வார்கொண் மென் முலையாள் ஒரு பாகமா

ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்

சீர்கொண் மாடங்கள் சூழ் திருவாரூரான்

ஆர்கணா எனை அஞ்சல் எனாததே

இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் (3.45.8) திருஞானசம்பந்தர், திருவாரூரன் அலங்கல் தந்து எனை அஞ்சல் எனும் கொலோ என்று வினவுகின்றார். தோளிறுதல்=அறுந்து விழுதல்; கடை= முடிவு, இங்கே வலிமையின் முடிவு என்று பொருள் கொள்ள வேண்டும். வலம் கொள்= வலிமை உடைய; அலங்கல்=மாலை; தனது தந்தையை இழந்த சண்டீசருக்கு கொன்றை மாலை அணிவித்து, கண நாயகனாக விளங்கும் உயர்ந்த பதவியை பெருமான் அளித்தது திருஞான சம்பந்தரது நினைவுக்கு வந்தது போலும். தனக்கும் அவ்வாறு மாலை அணிவித்து பெருமான் அபயம் அளிப்பாரோ என்று வினவுகின்றார்.

இலங்கை மன்னன் இருபது தோளிறக்

கலங்கக் கால் விரலால் கடைக் கண்டவன்

வலம் கொள் மாமதில் சூழ் திருவாரூரான்

அலங்கல் தந்தெனை அஞ்சல் எனும் கொலோ

பாண்டிய அரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையார் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கிய திருஞானசம்பந்தர், மதுரை மாநகரம் செல்கின்றார். சிறிய குழந்தையாகிய இவருக்கு அச்சமூட்டி, இவரை மதுரை நகரை விட்டு விரட்டி விடலாம் என்ற நோக்கத்துடன் சமண குருமார்கள், திருஞான சம்பந்தரும் அவரது அடியார்களும் தங்கியிருந்த மடத்திற்கு வஞ்சகமாக இரவில் தீ வைக்கின்றனர். நள்ளிரவில் பரவிய தீயினைக் கண்டு அச்சம் கொண்ட அடியார்கள் திருஞான சம்பந்தரிடம் சொல்ல, அவர் அப்போது செய்யனே என்று தொடங்கும் பதிகத்தினை (3.51) பாடுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானை நோக்கி, பெருமானே எங்களை அஞ்சல் என்று சொல்லி காக்க வேண்டும் என்று வேண்டுகின்றார். பெருமானின் திருவருளால் சமணர்களால் மடத்திற்கு வைக்கப்பட்ட தீ முற்றிலும் அணைந்து விடுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. செய்யன்=எரி போல் சிவந்த மேனியினன்; நெருப்பு போன்ற மேனியன் என்பதால் தீயிலிருந்து காக்கும் வல்லமை படைத்தவன் என்பது உணர்த்தப் படுகின்றது. பையவே என்ற தொடர் மூலம் தீயின் உருவமாக செல்லாமல், வெப்பு நோயாக படரவேண்டும் என்பது குறிப்பு. பாண்டி மாதேவியின் மங்கல நாண் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும், அரசன் சிவாபராதம் செய்திருப்பினும் அவன் சிவநெறிக்கு திரும்புதல் என்பது முன்னரே விதிக்கப் பட்டதாலும், பையவே சென்று பற்றுக என்று கூறியதாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்ற திருமேனி உடைய இறைவனே, ஆலவாய் தலத்தில் உறையும் தலைவனே, அஞ்சேல் என்று சொல்லி எம்மைக் காப்பீராக; பொய் பேசும் பழக்கம் உடைய சமணர்கள் இந்த மடத்திற்கு வைத்த தீ மெல்லச் சென்று பாண்டிய மன்னனை பற்றுவதாக என்பதே இந்த பாடல் மூலம் திருஞான சம்பந்தர் விடுத்த வேண்டுகோள். திருஞானசம்பந்தர் வேண்டுகோள் நிறைவேறியதும், மன்னனைப் பற்றிய வெப்பு நோய் மந்திரமாவது நீறு என்ற தேவாரப் பதிகத்தால் தீர்க்கப்பட்டதும், அனல் வாதம் மற்றும் புனல் வாதம் ஆகிய இரண்டிலும் சமணர்கள் முறியடிக்கப் பட்டதும், பாண்டிய நாட்டில் மீண்டும் சைவம் தழைத்து வளர்ந்ததும் சரித்திரம்.

செய்யனே திருவாலவாய் மேவிய
ஐயனே. அஞ்சல் என்றருள் செய்யெனைப்
பொய்யராம் அமணர் கொளுவுஞ் சுடர்
பையவே சென்று பாண்டியற்காகவே

கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.89.2) திருஞானசம்பந்தர், பெருமானை நீலமார் கண்டன் என்று குறிப்பிடுகின்றார். நுந்தி=தள்ளிக் கொண்டு; கோலமாம்=அழகிய; ஆலியா=ஆலித்து, ஆரவாரித்து; நச்சி=விரும்பி; பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்து திருமால் பிரமன் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும் அச்சுறுத்திய ஆலகால விடத்தின் தாக்கத்திலிருந்து அனைவரையும் காப்பாற்றிய பெருமான் இருக்கையில் நாம் எதற்காக அஞ்ச வேண்டும் என்று அறிவுரை கூறும் பதிகம். இதன் மூலம் பெருமானை வணங்கித் தொழுது நமது துன்பங்கள் எத்துணை கொடியதாக இருந்தாலும் தீர்த்துக் கொள்ளலாம் என்று திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று உலகத்தவர்க்கு திருஞான சம்பந்தர் அறிவுரை கூறுவதாக அமைந்துள்ளன. பதிகத்தின் முதல் பாடலில், தனது நெஞ்சினை நோக்கி, பெருமானது திருவடிகளே நமக்கு சிறந்த புகலிடம் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், பதிகத்தின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஏழாவது மற்றும் பத்தாவது பாடல்களில் பெருமானின் திருவடிகளில் நாம் சரணடைவதால், நாம் பிறவிப்பிணி, இம்மை மற்றும் மறுமையில் எதிர்கொள்ள இருக்கும் துன்பங்கள் ஆகியவை குறித்து அச்சம் கொள்ளாமல் இருக்கலாம் என்று கூறுகின்றார். பதிகத்தின் ஆறாவது பாடலில் பெருமான் பால் நம்பிக்கை வைத்து நாளும் அவனை வழிபட வேண்டும் என்றும் எட்டாவது பாடலில் பெருமான் உறைகின்ற திருக்கோயில்களை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும், ஒன்பதாவது பாடலில் பெருமான் உறைகின்ற தலங்களை மனதினில் நினைக்க வேண்டும் என்றும், நமக்கு அறிவுரை வழங்குகின்றார்.

ஏலமார் இலவமோடு இனமலர்த் தொகுதியாய் எங்கும் நுந்திக்

கோலமாம் மிளகொடு கொழுங்கனி கொன்றையும் கொண்டு கோட்டாறு

ஆலியா வயல்புகு மணிதரு கொச்சையே நச்சி மேவும்

நீலமார் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே

சூலை நோயினால் வருந்திய அப்பர் பிரான், துயரம் தாங்கமுடியாமல் சிவபெருமானிடம் அஞ்சேல் என்று சொல்லுமாறு வேண்டினார். சிவபெருமானும்அவரது சூலை நோயினைத் தீர்த்து அச்சத்தை போக்கினார். அப்பர் பிரான், தான் சிவபெருமானைக் குறித்து முதல் பதிகம் பாடியபோதே, சிவபெருமான் அவரது அச்சத்தை நீக்கியதால், அஞ்சேலும் என்னீர் என்று இறைவனிடம் மிகுந்த நம்பிக்கையுடன் வேண்டுவதை நாம் இந்த பதிகத்தில் காணலாம். முதல் பதிகத்தின் இரண்டாவது பாடல் (4.1.2.) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. சூலை நோய் தன்னை எவ்வாறு வருத்தியது என்பதை நமது கண் முன்னே கொண்டு வரும் பாடல். துரந்துதல்=நீக்குதல்; கரத்தல்=மறைத்தல். ஏதேனும் செய்து தனது நோயினை நீக்க வேண்டும் என்று நோயாளி துடிப்பதைப் போல் எப்படியாவது, நீக்கியோ அல்லது மறைத்தோ தனது சூலை நோயினைத் இறைவன் தீர்க்க வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே விரும்புகின்றார். சிவபெருமான் தன்னை ஏற்றுக் கொண்டதாக உணர்ந்த அப்பர் பிரான், ஏற்றாய் அடிக்கே என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் பாடிய அப்பர் பிரான், இந்தப் பாடலில் தனது நெஞ்சத்தை சிவபெருமான் இருப்பதற்காக ஒதுக்கியுள்ளதாக கூறுகின்றார். தனது தமக்கையின் கையால் திருநீறு பெற்ற போதே பெருவாழ்வு வந்தது என்று உணர்ந்து கூறிய அப்பர் பிரானின் மனம் அப்போதே சிவபெருமானை இறைவனாக ஏற்றுக் கொள்வதற்கு பண்பட்டுவிட்டது. அதனால் தான் தன்னை அடிமையாக சிவபெருமான் ஏற்றுக் கொண்டுள்ளதாக முதல் பாடலில் கூறியுள்ளார். வஞ்சம் என்று தனக்கு வந்துள்ள சூலை நோயினை இங்கே அப்பர் பிரான் குறிக்கின்றார். எப்படி வந்தது என்று எவராலும் உணரமுடியாமல் இருப்பதாலும், வெளியே தோன்றாமல் இருப்பதாலும் வஞ்சனையாக வந்துள்ள நோய் என்று குறிப்பிடுகின்றார். இத்தகைய சூலை நோயினை இதுவரை எவரும் கண்டதாக தான் அறிந்ததில்லை என்று கூறி, எவராலும் தீர்க்க முடியாத நோய் என்பதையும் இங்கே சிவபெருமானுக்கு உணர்த்துவதை நாம் அறியலாம். முதல் பாடலில் கூற்று போல் தன்னை சூலை நோய் வருத்துவதாக கூறிய அப்பர் பிரான் இங்கே நஞ்சாகி வருத்துவதாக கூறுகின்றார். நஞ்சினையும் அமுதமாக மாற்றியவர் (ஆலகால விடத்தைஉட்கொண்ட பின்னரும் அந்த கொடிய விடத்தின் தன்மையை அமுதமாக மாற்றிய) சிவபெருமான் தான், சூலை நோயின் தன்மையை மாற்ற முடியும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ள பாடல். இந்த பதிகத்தின் முதல் பாடலில் ஆரம்பித்த உரையாடல் இங்கும் தொடர்கின்றது. கடுமையான நோயால் வழிபடும் நோயாளி மருத்துவரிடம், முதலில் அவரிடம் வேண்டுவது, எனது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று சொல்லுங்களேன் என்பது தானே. அது போல் அப்பர் பெருமானும், அஞ்சேல் என்ற சொல்லை சிவபெருமானது வாயிலிருந்து கேட்க ஆசைப்படுகின்றார்.

நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்தறியேன்

வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட

நஞ்சாகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்

அஞ்சேலும் என்னீர் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே

கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, எனது நெஞ்சத்தை உமக்கு உறைவிடமாக ஒதுக்கியுள்ளேன். இனிமேல் உம்மை ஒரு பொழுதும் நினையாமல் இருக்கமாட்டேன். நோயின் மூல காரணத்தை எவராலும் அறியமுடியாததாகவும், இத்தகைய கொடிய நோயினை இதுவரை எவரும் அனுபவித்ததாக தான் கேட்டறியாததாகவும் உள்ள இந்த சூலை நோய் மிகவும் வஞ்சனையான முறையில் என்னை வந்தடைந்துள்ளது. இந்த சூலைநோய் எனது குடரினை சுருட்டி, மற்ற உள்ளுறுப்புக்களை செயல்படவிடாமல் கொடிய விடம் போல் என்னை வருத்தி நலிவடையச் செய்துள்ளது. இந்த சூலை நோய் என்னை வருத்தாமல் அதனைத் துரத்தியோ, மறைத்தோ எனக்கு அருள் செய்ய வேண்டும். அஞ்சேல் என்று நீர் அடியேனுக்கு ஆறுதல் கூறவேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.57.1) அப்பர் பிரான், பெருமான் தன்னிடம் அஞ்சேல் என்று சொல்லி அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகின்றார். மஞ்சன்=மைந்தன் என்ற சொல்லின் திரிபு; மைந்தன் என்பதற்கு மகன் என்ற பொருளும் வலிமை மிக்கவன் என்ற பொருளும் உண்டு. நமது இறுதிக் காலத்தில் இறைவனது அருள் இருக்கவேண்டும் என்று கோரும் இந்த பாடல் நாம் தினமும் சொல்ல வேண்டிய திருப்பாடல்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. நமது உடலுக்கு வெளியே இருப்பவர் எவராலும் நமது உள்ளத்துள் புகுந்து மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. உயிருக்கு உயிராக நம்முடன் கலந்து இருப்பவன் இறைவன் என்பதால், அவன் ஒருவனால் தான், நமது நெஞ்சத்தில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே இறைவன் பால் நமது சிந்தனைகள் செல்லாமல் இருக்கும் சமயத்திலும், இறைவன் அருள் பாலித்தால், நமது நெஞ்சத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, இறைவனைப் பற்றிய சிந்தனையில் நாம் ஈடுபடமுடியும். அதனால் தான் மணிவாசகர் அவன் அருளாலே அவன் தாள் பணிந்து என்று சிவபுராணத்தில் கூறுகின்றார். இதே கருத்து தான் அப்பர் பிரானால் இங்கே கூறப்படுகின்றது. துஞ்சுதல் என்றால் பொதுவாக உறங்கும் நிலையை குறித்தாலும், இலக்கியங்களில் மங்கல வழக்காக, துஞ்சுதல் என்ற சொல், மீளா தூக்க நிலையாகிய, இறப்பினை குறிக்கும். உறக்கத்தினை, இறப்பிலிருந்து வேறுபடுத்தி காட்டவே, உறக்கத்தினை துஞ்சுதல் என்று கூறாமல், கண் வளர்தல் என்று இலக்கியங்களில் கூறுவார்கள். தாலாட்டுப் பாடல்களில் கண் வளராய் என்று பாடுவதை நாம் அறிவோம். இறக்கும் தருவாயில், நமது புலன்கள் ஒவ்வொன்றாக செயலிழிக்கும் நேரத்தில், சிவபிரானைப் பற்றிய நினைவு நமது நெஞ்சினில் தோன்ற வேண்டும் என்றால் இறைவனின் அருள் இருத்தல் மிகவும் அவசியம். எனவே தான் பல பாடல்களில் இறக்கும் சமயத்தில் இறைவனின் நினைவு தனக்கு வரவேண்டும் என்றும், அந்த சமயத்தில் இறைவன் தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் அப்பர் பிரான் வேண்டுகோள் விடுக்கின்றார். நாமும் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதால் தான், அங்கமாலை பதிகத்தில், இறக்கும் சமயத்தில் நமது உற்றவராக இறைவன் ஒருவன் தான் இருக்க முடியும் என்பதனை அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். ஆவடுதுறைப் பெருமானே, மிகுந்த வலிமை உடையவனே, மாணிக்கம் போன்று ஒளி வீசுபவனே, மரகத மணிக் குவியல் போன்று பிரகாசிப்பவனே, அடியேன் உன்னை நினைக்குமாறு, எனது உள்ளத்தினுள் புகுந்து அருள் புரிபவனே, நான் இறக்கும் தருவாயில் நீ எனக்குத் துணையாக இருந்து, அஞ்சேல் என்ற உறுதிமொழி அளித்து அருள் புரிய வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மஞ்சனே மணியும் ஆனாய் மரகதத் திரளும் ஆனாய்

நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே

துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று

அஞ்சல் என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.76.5) அப்பர் பிரான், தன்னை அஞ்சல் என்று சொல்லி ஆண்டு கொண்ட பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வழியற=வேறு ஏதும் வழி இல்லாதபடி: கொடிய சூலை நோயால் வருந்திய போது, சமணத் துறவிகள் தங்களுக்கு தெரிந்த மந்திரங்கள் தந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்திய பின்னரும் சூலை நோய் தீராத காரணத்தால், வேறு ஏதும் வழி புலப்படாமல், தனது தமக்கையாரை அணுகிய நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. சைவ சமயத்தை அழிப்பதற்கு பல சூழ்ச்சிகள் செய்து வந்த சமணர்களுடன் இருந்தமையால், தன்னையும் வஞ்சகப் புலையனேன் என்று அப்பர் பிரான் கூறிக் கொள்கின்றார். பல்லவ மன்னன், தன்னை அரசவைக்கு அழைத்து வர, மந்திரிகளை அனுப்பிய போது, முதலில் நாமார்க்கும் குடியல்லோம் என்று மறுத்த அப்பர் பிரான், பின்னர் தன்னை எதிர்நோக்கும் வினைகளுக்கு எம்பிரான் தனக்கு துணையாக உள்ளான் என்ற நினைப்பில், பல்லவ மன்னனை சந்திக்கச் செல்கின்றார். பின்னர் நீற்றறையில் இடுமாறு மன்னன் ஆணையிட்ட போதும், சிவபெருமானின் அடியார்களுக்குத் துன்பங்கள் வருதலும் உண்டோ, என்று சொல்லியவாறே நீற்றறையுள் புகுந்தார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். நீற்றறையில் ஏழு நாட்கள் இருந்த போதும், அப்பர் பிரானின் உடலுக்கு தீங்கு ஏதும் நேராமல் இருந்ததைக் கண்ட சமணர்கள் அவருக்கு விடம் கலந்த பால் சோற்றினை ஊட்ட திட்டம் இட்டார்கள். அப்போது அப்பர் பிரான், நாதனின் அடியார்க்கு நஞ்சும் அமுதாகும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். பின்னர் மதயானையை கட்டவிழ்த்து அப்பர் பிரானின் பேரில் ஏவிய போதும், அப்பர் பிரான் சிவபிரானின் திருவடிகளை நினைத்தவாறே, தன்னை நோக்கி வந்த யானையை எதிர்கொண்டார். கல்லுடன் கட்டப்பட்டு கடலில் தள்ளப்பட்டபோதும், எந்த தன்மையில் இருந்தாலும் சிவபிரானை ஏத்துவேன் என்ற முடிவுடன் இருந்ததை சேக்கிழார் நமக்கு பெரிய புராணத்தில் தெரிவிக்கின்றார்.

வஞ்சகப் புலையனேனை வழியறத் தொண்டில் பூட்டி

அஞ்சல் என்று ஆண்டு கொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே

நெஞ்சகம் கனிய மாட்டேன் நின்னை உள் வைக்க மாட்டேன்

நஞ்சு இடம் கொண்ட கண்டா என்னென நன்மை தானே

அப்பர் பிரான், பெருமானுக்குத் தொண்டு செய்யும் வண்ணம் தன்னை மாற்றி ஆட்கொண்டதும், தன்னை அஞ்சேல் என்று சொல்லி பலவித துன்பங்களிலிருந்து தன்னை காத்ததும் சிவபெருமானுக்கு பெருமை விளைவிக்கும் செயல்கள் என்று குறிப்பிடுகின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமானை, சமணர்களுடன் கலந்து தான் வாழ்ந்து வந்த நாட்களில் நெஞ்சம் கனிந்து தான் நினையாமல் இருந்தது தனது பெருந்தவறு என்று கூறுகின்றார். நெஞ்சம் கனிந்து நினையாமல் இருந்த நிலை என்று அப்பர் பெருமான் சொல்வதை நாம் சற்று சிந்திக்க வேண்டும், சமணத் துறவிகள் சிவபெருமானை குறித்து சிந்தனை செய்தவர்களாக இருந்தனர். எதற்காக அந்த சிந்தனை, சிவபெருமானை எவ்வாறு இழிவாகப் பேசி சைவர்களை திசை திருப்பி, சமணர்களாக அவர்களை மாற்ற முயற்சி செய்யலாம் என்று ஆலோசனை செய்தவர்களாக அவர்கள் இருந்தனர்; அந்த நிலைக்கு மாறுபட்டு, பெருமான் பால் அன்பு கொண்டு கனிந்த மனத்துடன் தான் சிந்தனை செய்யாமல் இருந்ததை குறித்து வருத்தம் தெரிவிக்கும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. வஞ்சகம் பல புரிந்து சைவ சமயத்தை அழிக்கத் தலைப்பட்ட சமணர்களுடன் சேர்ந்து வஞ்சகப் புலையனாக வாழ்ந்து வந்த எனக்கு, சூலை நோயினைத் தீர்த்துக் கொள்வதற்கான வழி, சிவபிரானுக்குச் செய்யும் தொண்டுகளில் ஈடுபடுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை என்று எனக்கு உணர்த்திய இறைவனே, அவ்வாறு உணர்த்திய பின்னர் நான் உமக்குத் தொண்டுகள் செய்யத் தொடங்கியபோது, நான் அவ்வாறு தொண்டுகள் செய்வதிலிருந்து வழுவாமல் இருக்குமாறு அத்தகைய தொண்டுகளுடன் என்னை பூட்டியவனே, இவ்வாறு சிவத்தொண்டினில் ஈடுபடுத்தப்பட்ட எனக்கு அஞ்சேல் என்று சொல்லி, சமணர்கள் புரிந்த பல கொலை முயற்சிகளிலிருந்து காப்பாற்றி என்னை அஞ்சேல் என்று ஆண்டுகொண்டது உன் பெருமையினை வெளிப்படுத்தும் செயல் அல்லவா. இவ்வாறு எனக்கு பல நன்மைகள் செய்த உன்னை, உள்ளம் உருகி நினைக்காமல், எனது உள்ளத்தில் உன்னை நிறுத்தாமல் இருக்கின்றேன். நஞ்சினை கழுத்தில் உடைய சிவபெருமானே, உன்னிடம் பெற்ற நன்மைகளை நான் நன்மைகளாக கருதாமல் இருக்கின்றேன் போலும், அதனால் தான் நான் உன்னை நினையாமலும், உனது நினைவால் கசிந்து உருகாமலும் இருக்கின்றேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

கொண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.67.1) ஐந்து புலன்களின் சேட்டைகளுக்கு தான் மிகவும் அஞ்சுவதாக குறிப்பிடும் அப்பர் பிரான், பெருமான் தான் தனக்கு அஞ்சல் என்று சொல்லி ஆதரிக்க வேண்டும் என்று கோருகின்றார். கொடிய விடம் கொண்ட ஐந்து தலை நாகத்தைத் தனது இடுப்பில் கட்டி, அடக்கி வைத்திருக்கும் இறைவனுக்கு ஐந்து புலன்களை அடக்குவது பெரிய காரியம் இல்லை அல்லவா, அதனால் தான் ஐந்து தலை நாகத்தை அடக்கியதைக் குறிப்பிடும் அப்பர் பிரான், ஐந்து பொறிகளை அடக்குவதற்கு வழி சொல்லிக் கொடுத்து, தன்னை அஞ்சேல் என்று சொல்லவேண்டும் என்று இங்கே வேண்டுகின்றார். வரைதல்=கட்டுபடுத்துதல்: வரைகிலேன்=கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றேன்: வரைகிலா பிறவி=தடுக்க முடியாத பிறவி, நீக்க முடியாத பிறவிப்பிணி: புரை=ஓட்டை: அரை=இடுப்பு:: திரை=அலைகள்: உலாம்=உலாவும்: பழனம்=வயல்; அலைகள் பாயும் நதியால் சூழப்பட்ட வயல்கள் கொண்ட கொண்டீச்சரத்துப் பெருமானே, இடுப்பிலே ஐந்து தலை நாகத்தை அணிந்து நிற்கும் அண்ணலே, ஐந்து புலன்களின் ஆதிக்கத்தைத் தடுக்க முடியாமல், புலன்களின் வழியே சென்று அவைகளால் செயல்படுத்தப் பட்டு, வினைகளை மேலும்மேலும் சேர்த்துக் கொண்டு, பிறவிப் பிணியினை நீக்க முடியாமல் நான் தவிக்கின்றேன். ஐம்புலன்களால் செயல்படுத்தப்படும் ஒன்பது ஓட்டைகள் அடங்கிய உடலிலிருந்து விடுதலை பெற்று கரையேறும் வழியினை அறியாதவனாக அடியேன் உள்ளேன்: அஞ்சேல் என்று சொல்லி எனக்கு அபயம் அளித்து நீ தான் ஐம்புலன்களின் ஆதிக்கத்திலிருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் பெருமானிடம் விடுக்கும் வேண்டுகோள்.

வரைகிலேன் புலன்கள் ஐந்தும் வரைகிலாப் பிறவி மாயப்

புரையிலே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்

அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே அஞ்சல் என்னாய்

திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சரத்து உளானே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலிலும் (4.67.2) அப்பர் பிரான் பெருமானிடம் அஞ்சல் என்னாய் என்று வேண்டுகின்றார். தொண்டன்=அடியேன்: வாளா=பயனுள்ள செயல்கள் ஏதும் செய்யாமல் வீணாக: பிண்டம்=சதையால் உருவான இந்த உடல்: பேர்வது=தப்பித்துச் செல்வது: அண்டன்=உலகு எங்கும் பரந்து கலந்து வாழும் இறைவன்: அண்டவாணன்= உலகங்கள் அனைத்திற்கும் தலைவன்; அறிவன்=முக்காலமும் உணர்ந்தவன்: தெண்திரைப் பழனம்=தெளிந்த அலைகள் கொண்ட நீர் நிறைந்த வயல்கள்; தெளிந்த நீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரம் தலத்தில் உறையும் சிவபெருமானே மனிதப் பிறவி எடுத்த அடியேன் பயனுள்ள செயல்கள் ஏதும் செய்யாமல் வீணான செயல்களை செய்து கொண்டு இருக்கின்றேன்: மேலும் ஐம்புலன்களில் ஆதிக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் நான், பழைய வினைகளில் சிக்குண்டு, தசைப் பிண்டமாகிய உடலை சுமந்து கொண்டு திரிகின்றேன்: இந்த குழியிலிருந்து பெயர்ந்து வெளியே வருவதற்கான வழி ஏதும் தெரியாமல் திகைத்து நிற்கின்றேன்: எல்லா உலகங்களிலும் கலந்து நிற்கும் இறைவனே, எல்லா உலகங்களுக்கும் தலைவனே, முக்காலமும் உணர்ந்தவனே, நீ தான் அஞ்சேல் என்று சொல்லி என்னைத் தேற்ற வேண்டும்: இந்த பிறப்பு இறப்புக் குழியிலிருந்து நான் வெளியே வருவதற்கு நீ தான் உதவ வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து

பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியும் காணேன்

அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய்

தெண் திரைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்து உளானே

நமது மனதினில் வஞ்சகம் ஏதும் இன்றி பெருமானை நாம் வணங்கினால், அஞ்சல் என்று சொல்லி நம்மை பெருமான் காப்பாற்றுவார் என்று திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். வைகலும்=நாள் தோறும்; வெஞ்சொல்= கடுமையான சொற்கள்; நைஞ்சு=நைந்து; இதே பதிகத்தின் நான்காவது பாடலில், அடியார்களின் வருத்தத்தை உணர்ந்து பெருமான் இரக்கம் கொள்வார் என்று உணர்த்திய அப்பர் பிரான், இந்த பாடலில் (5.31.5) அடியார்களுக்கு அஞ்சேல் என்று அபயக் கரம் காட்டுபவர் பெருமான் என்று கூறுகின்றார். உலகத்தவரே, உங்களது மனதினில் வஞ்சனை ஏதும் இன்றி, நீங்கள் தினமும் பெருமானை வணங்குவீர். கொடிய சொற்களை விட்டொழித்து, வீடுபேறு அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், உள்ளம் நைந்து, குளிர்ந்த மனத்தராய் வழிபடும் அடியார்களுக்கு அஞ்சேல் என்று சொல்லி அபயம் அளிப்பவர் ஆனைக்கா அண்ணலாகிய பெருமான். எனவே நீங்கள் அவரை வழிபட்டு உய்வினை அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வஞ்சம் இன்றி வணங்குமின் வைகலும்

வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடு உற

நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம்

அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே

திருமறைக்காட்டில் சிவபெருமானின் திருக்குறிப்பினை அறியாமல் வெகு நாட்களாக மூடப்பட்டு இருந்த திருக்கோயில் கதவினைத் திறக்க தான் பதிகம் பாடியதைக் குறித்து வருந்திய வண்ணம் அப்பர் பிரான் உறங்கினார். திருஞான சம்பந்தப் பெருமான் இறைவனின் திருக்குறிப்பினை நன்றாக அறிந்திருந்த காரணத்தால், அவர் பாடிய முதல் பாடலுக்கே கோயிலின் திருக்கதவுகள் மூடின என்றும் தான் அவ்வாறு இல்லை என்றும் வருந்திய அப்பர் பிரானின் கனவில் தோன்றிய சிவபெருமான், அப்பர் பிரானை நோக்கி, நீ அஞ்ச வேண்டாம், நான் உன்னை திருவாய்மூருக்கு அழைத்துச் செல்லவே வந்தேன் என்று சொன்னதாக கீழ்க்கண்ட பாடலில் (5.50.3) அப்பர் பிரான் பதிவு செய்கின்றார். தஞ்சே கண்டேன் என்ற தொடர் மூலம் எளிமையான கோலத்தில், ஒரு அந்தணர் வடிவத்தில் சிவபெருமான் வந்ததை அப்பர் பிரான் இங்கே குறிக்கின்றார். கனவில் தான் கண்ட அந்தணரை சிறிதும் தாமதிக்காது (தரிக்கிலாது) யார் என்று வினவிய போது, அஞ்சேல் நான் உன்னை அழைக்க வந்தேன் என்று கூறியதும், சிவபெருமான் கருணையால் தான் உய்ந்ததாக கருதி ஓட்டமும் நடையுமாக அவரை பின் தொடர்ந்ததாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தன்னை வா என்று அழைத்து விட்டு பின்னர் மறைந்தமையால், வஞ்சனை செய்தவர் என்று சிவபெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமானே, உனது திருவுள்ளக் குறிப்பினை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே என்று வருந்தி, நீயே சரண் என்று இருந்த எனக்கு, சிறிதும் தாமதம் செய்யாமல், எனது முன்னே வந்து தோன்றினாய்; வந்தவர் யார் என்பதை புரிந்து கொள்ளாமல் யார் என்று வினவிய என்னை, அஞ்சவேண்டாம், உன்னை வாய்மூருக்கு அழைக்கவே வந்தேன் என்று கூறினாய் என்று சிவபெருமானை நோக்கி குறிப்பிட்ட அப்பர் பிரான், அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, தான் உய்ந்தேன் என்று கருதி, உடனே எழுந்து மிகவும் விரைவாக ஓட்டமும் நடையுமாக அவர் பின்னே சென்றேன்; ஆனால் வஞ்சித்தலில் வல்லவரான சிவபெருமான், சில நேரங்களில் தோன்றியும், சில நேரங்களில் மறைந்தும், சில நேரங்களில் தனக்கு மிகவும் அருகில் தோன்றியும், சில நேரங்களில் தனக்கு மிகவும் தூரத்தில் தோன்றியும் போக்கு காட்டினார். அவரது திருவுள்ளக் குறிப்பினை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று இந்த பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார்.

தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன்

அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார்

உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்

வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே

தமது இறுதிக் காலம் நெருங்கி விட்டது என்பதை உணரும் எவர்க்கும், நாம் நரகத்தில் எதிர்கொள்ள இருக்கும் நிலையினை நினைக்கும் போது நடுக்கம் ஏற்படுவது இயற்கை. அந்த நடுக்கத்தினைப் போக்குவதற்கு உள்ள ஒரே வழி, நரகத்திற்கு செல்லாமல் நாம் சிவலோகம் செல்லக் கூடிய வழியினை பின்பற்றுவது தானே. எனவே தான் இயமனின் செய்கைகள் பற்றி சிறிதும் கவலைப் படாமல் இருப்பதற்கு வழி காட்டும் பாடலாக கீழ்க்கண்ட பாடலை (5.75.5) அப்பர் பிரான் அமைத்துள்ளார். செந்நெறிச் செல்வனார் என்பது திருச்சேறை பெருமானின் திருநாமம். அதற்கு ஏற்ப நாம் அஞ்சாமல் இருக்க அவர் உதவி புரிவர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். எரி அயில்=நெருப்பு போன்று கூர்மையை உடைய வேல். எண்ணி நாளும்=நாள்தோறும் உயிர்களின் வாழ்நாட்களை எண்ணி கணக்கிட்டு, வாழ்நாள் முடிவடையும் தருணத்தில் உயிர்களை உடலிலிருந்து பிரிப்பதை நாட்களை எண்ணும் கூற்றுவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். நமது வாழ்நாள் எப்போது முடியும் என்பதை நாம் அறிய முடியாதவர்களாக இருப்பதால், அந்த தருணத்தில் இயமன் வருவதை உணரும் நாம், திடீரென்று அவன் வந்ததாக கருதுகின்றோம். துண்ணென் தோன்றில்=நடுக்கம் உண்டாகும் வகையில் முன்னே தோன்றினால்; துரக்கும் வழி=ஓட்டும் வழி; இயமன் நம்மை அழைத்துச் சென்றால், நாம் நமது வினைத் தொகையின் ஒரு பகுதியை கழிக்கும் தன்மையில் நமது உயிர் நரகத்தில் ஆழ்த்தப்பட்டும் சொர்க்கத்தில் இருத்தப்பட்டும், அதன் பின்னர் அடுத்த பிறவியை எதிர்கொள்ளும் நிலையினை அடைகின்றது. இயமன் நம்மை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, சிவபெருமான் நம்மை சிவலோகம் அழைத்துக் கொண்டு சென்ற பின்னர் நம்மை இயமனின் தூதுவர்கள் என்ன செய்ய முடியும். நம்மை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்லும் பெருமான், நமது வினைகள் அனைத்தையும் கழித்து விடுவதால், நாம் பிறவிச் சுழலிலிருந்து விடுதலையும் அடைகின்றோம். இதே கருத்து சுந்தரர் அருளிய தில்லைப் பதிகத்தின் (7.90) அனைத்துப் பாடல்களிலும் கொடுக்கப் பட்டுள்ளது.

எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்

துண்ணென் தோன்றில் துரக்கும் வழி கண்டேன்

திண்ணன் சேறை திருச்செந்நெறி உறை

அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.42.4) அப்பர் பிரான், தனது நெஞ்சத்தினை நோக்கி, நெஞ்சமே நீ அஞ்சாமல் இருக்க செய்ய வேண்டியது யாது என்பதை அறிவுறுத்துகின்றார். இந்த அறிவுரை, தனது நெஞ்சினை சுட்டிக் காட்டி, நமக்கு அப்பர் பிராண சொல்லும் அறிவுரை ஆகும். அலை ஆர்=கடலைலைகள் போன்று; ஒன்றன் பின்னொன்று விடாது வரும் கடலலைகள் போன்று வினைகள் உயிரினை அலைக்கழித்து துன்பம் அளிப்பதால், அலையார் வினை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். கடையாகும் வாழ்வு=கீழான வாழ்க்கை; பாசம்=பாசக் கயிறு; எறிநீர்=அலைகள் வீசும் கங்கை நதி; இடைவிடாது கரையை வந்து சேரும் கடலலைகள் போன்று ஓயாது உயிரினை வந்தடையும் வினைகள் உயிரினை அலைக்கழிக்கின்றன. மேலும் ஆசை எனப்படும் பாசக் கயிற்றினால் சுருக்கிடப்பட்டு உயிர் கீழான வாழ்க்கை நடத்துகின்றது. இந்த இழிவான தன்மையால் மனம் தளரும் உலகத்தவரே, நீங்கள் அஞ்சாமல் இருப்பதற்கு அடியேன் ஒரு வழிமுறை சொல்கின்றேன் கேட்பீர்களாக; இலைகளுடன் நிறைந்து காணப்படும் கொன்றை மலர், அலைகள் வீசும் கங்கை நதி, பிறைச் சந்திரன் ஆகியவற்றை தனது பெரிய சடையில் மகிழ்ச்சியுடன் வைத்துள்ளவனும், தேவர்களால் போற்றப் படுவானும், அழியாமல் என்றும் நிலையாக இருப்பவனும் ஆகிய பெருமான் உறைகின்ற நெய்த்தானம் நன்னகரத்தில் அமைந்துள்ள திருக்கோயிலை, மனதில் நினைத்து வணங்கினால் நீர், வாழ்வினில் உய்வினை அடையலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை..

அலையார் வினைத்திறம் சேர் ஆக்கை உள்ளே அகப்பட்டுள் ஆசை எனும் பாசம் தன்னுள்

தலையாய் கடையாரும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்ச வேண்டா

இலையார் புனக்கொன்றை எறி நீர்த் திங்கள் இரும் சடை மேல் வைத்துகந்தான் இமையோர் ஏத்தும்

நிலையான் உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.28.10) அப்பர் பிரான், தன்னருகே வந்த பெருமான், தன்னை அஞ்சேல் என்று சொல்லி தேற்றினார் என்று கூறுகின்றார். இடும்பை=துன்பம்; சாக்காடு=இறப்பு; ஒரு காலம் என்பது கால அளவைக்கு அப்பாற்பட்ட நிலை; நாம் நினைக்கக் கூடிய கால அளவைக்கு அப்பாற்பட்டவராக இருப்பவராகவும், எண்ணற்ற ஊழிக் காலங்களைக் கடந்தவராகவும், வானிலிருந்து மிகுந்த வேகத்துடன் இறங்கிய கங்கை நதி உலகினை அடித்துக் கொண்டு பாதாளம் சேரா வண்ணம் கங்கை வெள்ளத்தைத் தவிர்த்துத் தனது சடையில் கங்கை நதியை ஏற்றுக்கொண்டு சிறிது சிறிதாக வெளியே விட்டவராகவும், மனம் உருகி தன்னை வழிபடாத மனிதர்களின் உள்ளத்தில் பொருந்தி தங்காதவராகவும், மன மகிழ்ச்சியுடன் தன்னை வணங்கும் அடியார்களின் மனதினை விட்டு என்றும் நீங்காமல் குடிகொண்டு இருப்பவராகவும், எனது அருகிலே வந்து என்னை அஞ்சேல் என்று சொல்லி தேற்றியவராகவும் அழகிய திருவாரூர் தலத்தின் மூலட்டானத்து பெருமான் எனது மனக் கண்ணுக்கு காட்சி அளிக்கின்றார் என்று அப்பர் பிரான் பெருமிதத்துடன் சொல்வதாக அமைந்த பாடல்.

ஒருகாலத்து ஒன்றாகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும்

பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும் பிறப்பு இடும்பை சாக்காடு ஒன்று இல்லார் போலும்

உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார் மனத்து என்றும் நீங்கார் போலும்

அருகாக வந்து என்னை அஞ்சேல் என்பார் அணியாரூர் திருமூலட்டனானாரே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.47.3) இறக்கும் தருவாயில் பெருமானின் திருநாமங்களைச் சொல்லும் வல்லமை தனக்கு இருக்குமாயின், எத்துணை வலிய நோயும் தனக்கு எந்த கெடுதலையும் செய்யாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். போகின்றது என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவது, பழைய பிறவிகள் முதலாக அந்த பிறவி வரை ஈட்டிய வினைத் தொகைகளையே நோயாக, உயிரினைப் பற்றும் நோயாக குறிப்பிடுகின்றார். அந்த வினைக் குவியல்கள் தானே, இறந்த பின்னர் அந்த உயிருக்கு அடுத்த பிறவி உள்ளதா, இருந்தால் அந்த பிறவி எத்தகையதாக இருக்கும் என்பதை தீர்மானிக்கின்றது. இந்த கருத்தினை உள்ளடக்கியே, தான் இறக்கும் சமயத்தில் இறைவன் அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் என்றும், இறக்கும் சமயத்தில் அவனது திருநாமங்களைச் சொல்லும் வண்ணம் தான் இருக்க வேண்டும் என்றும் அப்பர் பிரான் பல பாடல்களில் வேண்டுகின்றார். வரை=மலை, இங்கே இமயமலை; கழல்=கழலை அணிந்த பெருமானின் திருவடிகள்; அரையன்=அரசன்; மலைமகளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனே, கங்கை நதியைத் தனது சடையில் தரித்த மணவாளனே, உனது திருநாமங்களை நான் சொல்லிக் கொண்டு இருக்கையில் எனது உயிர் போகும் என்றால், எத்துணை வலிமை மிக்கதாக இருப்பினும் அந்த நோய் என்னை எவ்வாறு தீண்ட முடியும். உள்ளம் கசிந்துருகி கரையுமாறு, கண்களில் நீர் பெருகி, மிகுந்த அன்புடன், உனது திருவடிகளை எப்போதும் நினைத்து வழிபடும் அடியார்களுக்கு அரசனாக விளங்கும் பெருமானே, நீர்வளம் மிகுந்து குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் அமரர்கள் தலைவனே, அஞ்ச வேண்டாம் என்று அடியேனுக்கு ஆறுதல் சொல்வாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வரையார் மடமங்கை பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்றன் நாமம்

உரையா உயிர்போகப் பெறுவேனாகில் உறுநோய்வந்து எத்தனையும் உற்றாலென்னே

கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு

அரையா அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய ஒரு திருத் தாண்டகத்தின் எட்டு பாடல்களில் அப்பர் பிரான், ஆவடுதுறையில் உறையும் அமரர் பெருமானே அடியேனை அஞ்சேல் என்னாய் என்று வேண்டுகின்றார். இந்த பதிகத்தின் இரண்டாவது பாடல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. மறவாமல் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதும் நாவினை உடையவனாய், சிவபெருமான் தனக்கு புரிந்த கருணைச் செயல்களை மறவாதவனாய், மற்ற தெய்வங்களை நினைக்காதவனாய், சிவபெருமானதுதிருவடிகளையே எப்போதும் நினைப்பவனாய் இருக்கும் தனக்கு வேதனைகள் அளிக்கும் செயல்களை புரியலாமா என்றும் தன்னை அஞ்சேல் என்று சொல்லக் கூடாதா என்றும் இறைவனிடம் அப்பர் பிரான் கெஞ்சுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும் அப்பர் பிரான், பெருமானிடம் அஞ்சேல் என்னாய் என்று சொல்லுமாறு வேண்டுகின்றார்.

மாற்றேன் எழுத்து அஞ்சும் என்றன் நாவின் மறவேன் திருவருள்கள் வஞ்ச நெஞ்சின்

ஏற்றேன் பிறதெய்வம் எண்ணாநாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணினல்லால்

மேல்தான் செய்வனகள் செய்யக்கண்டு வேதனைக்கே இடம்கொடுத்து நாளு நாளும்

ஆற்றேன் அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரரேறே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர் பெருமானிடம், அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே என்று வேண்டுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் (7.27.1) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. விரையார்=நறுமணம் பொருந்திய; பரம்பரன்=மேலோர்க்கும் மேலானவன்; அருளாளர்கள் அனைவரும் அஞ்சுவது, மீண்டும் பிறப்பெடுக்க நேரிடுமோ என்பதற்கு தான். எனவே பிறவிப் பிணிக்கு அஞ்சேல் என்று இறைவன் சொல்ல வேண்டும் என்பதே அவர்களது வேண்டுகோளாக இருக்கின்றது. இந்த பின்னணியில், சுந்தரர் வேண்டுவதும், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

விடையாருங் கொடியாய் வெறியார் மலர்க் கொன்றையினாய்

படையார் வெண்மழுவா பரமாய பரம்பரனே

கடியார் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற

அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சலென்னே

திருத்தினை நகர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.64.2) சுந்தரர், தனது நெஞ்சம் அச்சம் கொள்ளாமல் இருப்பதற்கு வழி யாது என்பதை சொல்லிக் கொடுக்கின்றார். அனைத்து உயிர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியில் ஈடுபட்டு இருந்தாலும், பெரும்பாலானவை அந்த தன்மையை உணராமல், மீண்டும்மீண்டும் பிறப்பெடுத்து துன்பத்தில் சிக்கித் தவிக்கின்றன. இவ்வாறு பிறவிக் கடலில் தான் ஆழ்ந்து இருப்பதை உயிர்கள் முதலில் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்த பின்னர், அந்த பிறவிக் கடலிலிருந்து வெளியேற வேண்டும் என்று விருப்பம் கொண்டு, அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். பிறவிக் கடலிலிருந்து வெளியேற வேண்டும் என்று துணிந்து விரும்பும் உயிர்களுக்கு சுந்தரர் சொல்லும் அறிவுரையாக இந்த பாடல் அமைந்துள்ளது. பெருமானின் திருவடிகளைச் சென்றடைந்தால், நாம் பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுதலை பெறலாம் என்று கூறுகின்றார். உக=அழியும் வண்ணம்; அணி கொள் வெஞ்சிலை=அக்னி வாயு மற்றும் திருமால் ஆகிய மூவரையும் தன்னில் பொருத்திக் கொண்ட அம்பு; திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை அழிப்பது என்பது எவராலும் முடியாத செயலாக கருதப் பட்டது. அதனையே செய்து முடித்த, பெருமானுக்கு உயிர்களுடன் பிணைந்துள்ள பிறப்பிறப்புச் சங்கிலியை தகர்த்து எறிவது என்பது மிகவும் எளிதான காரியம் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. .

பிணி கொள் யாக்கை பிறப்பிறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள்

துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று

அணி கொள் வெஞ்சிலையால் உகச் சீறும் ஐயன் வையகம் பரவி நின்றேத்தும்

திணியும் வார் பொழில் திருத்தினை நகருள் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே

குறைவிலா நிறைவே என்று பெருமானை தனது ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (7.70.6) அழைக்கும் சுந்தரர், தனக்குத் துணையாக வேறு எவரும் இல்லாததால் பெருமான் தான், அஞ்சல் என்று சொல்லி தனக்கு அருளவேண்டும் என்று கூறுகின்றார். நம் அனைவருக்கும் கூட, இறைவன் ஒருவன் தான் துணை. என்பதை உணர்த்தும் பாடல். சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் தான் உறவாகக் கருதாததால், தனது பிழை ஒன்றினை பொறுத்து அருளினால் இறைவனுக்கு தாழ்வு ஏதும் ஏற்படாது என்று இறைவனுக்கே உணர்த்தி, தனது பிழைகளை பொறுக்குமாறு இறைவனை பணியும் பாடல். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் தனக்கு வேறெவரும் உறவில்லை என்றும் பெருமான் தான் அஞ்சல் என்று சொல்லித் தனக்கு அருள் புரிய வேண்டும் என்றும் சுந்தரர் வேண்டுகின்றார்.

குறைவிலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழைக்காது உடையானே

உறவிலேன் உனையன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே

சிறை வண்டார் பொழில் சூழ் திருவாரூர்ச் செம்பொனே திருவாவடுதுறையுள்

அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

நெஞ்சார தன்னை நினைக்கும் அடியார்களுக்கு சிவபெருமான் அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் என்று சுந்தரர் வேண்டும் பாடலை (7.96.5) நாம் இங்கே காணலாம். ஏர்தல்=அழுந்தி நினைத்தல், மறவாது நினைத்தல்

பஞ்சேரும் மெல்லடியாளை ஓர் பாகமாய்

நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே

நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை

அஞ்சேல் என் பரவையுண்மண்டளி அம்மானே

திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் பதிகத்தின் பாடலில் (8.06.16) மணிவாசக அடிகளார் தன்னை அஞ்சல் என்று தேற்றுவார் எவரும் இல்லை என்று புலம்புவதை நாம் காணலாம். இந்த பாடலில், மணிவாசகர், சிவபிரானுக்கு ஒப்பு அவர் ஒருவர் தான் என்று கூறுகின்றார். ஒப்புமை கூறுவதற்கு வேறு எவரும் இல்லாத காரணத்தால், சிவபெருமானுக்கு ஒப்பு சிவபெருமான் தான் என்ற கருத்தில், மெய்யே உன்னை ஒப்பாய் என்று, நீத்தல் விண்ணப்பம் பாடலில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். தனக்கு உவமை இல்லாத தன்மையனாக சிவபெருமான் உள்ள தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

என்னை அப்பா அஞ்சல் என்பவர் இன்றி நின்று எய்த்து அலைந்தேன்

மின்னை ஒப்பாய் விட்டுடுதி கண்டாய் உவமிக்கின் மெய்யே

உன்னை ஒப்பாய் மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே

அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என் அரும்பொருளே

சிவபெருமானைத் தவிர தன்னை அஞ்சேல் என்று சொல்லித் தேற்றுவார் வேறு எவரும் இல்லை என்று மணிவாசகர் கூறும் பாடல், கோயில் மூத்த திருப்பதிகத்தின் எட்டாவது பாடல் ஆகும். சிவபெருமானை விட்டு விலகித் தான் சென்றதால், வருந்துவதாக மணிவாசகர் கூறுகின்றார். தெளிவுடைய மனம் கொண்ட அடியார்களின் கூட்டத்தை காட்டி, தன்னை அங்கே சேர்க்காவிடில், தான் உய்வினை அடைய முடியாது என்ற உறுதியில் இருக்கும் மணிவாசகர், இறைவனை நோக்கி, இறைவனே நீ அவ்வாறு செய்யாவிடில், நான் இறந்த பின்னர் எனது நிலையை கண்டு உலகம் சிரிக்காதா என்ற கேள்வியை இங்கே எழுப்புகின்றார். அடியார்களின் கூட்டத்தின் நடுவே தன்னை வைத்த இறைவனின் கருணையை பல பாடல்களில் வியந்து மணிவாசகர் பாடியிருக்கின்றார். எனவே இந்த பாடலில் சொல்லப்படும் கருத்து நமக்கு பொருந்துவதாக நாம் கொள்ள வேண்டும். அடியார்கள் கூட்டத்தில் இணைந்து, பெருமானை வழிபட வேண்டும் என்ற ஆவலை நாம் வளர்த்துக் கொண்டு, அத்தகைய வாய்ப்பினை பெருமான் நமக்கு நல்க வேண்டும் என்று பெருமானிடம் கோர வேண்டும் என்று கூறுகின்றார்.

அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆர் இங்குப்

பொருளா என்னைப் புகுந்து ஆண்ட பொன்னே பொன்னம்பலக் கூத்தா

மருளார் மனத்தோடு உனைப் பிரிந்து வருந்துவேனை வா என்றுன்

தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ

இறைவன் அஞ்சேல் என்று சொல்லவேண்டும் என்று அப்பர் பிரான் பல பாடல்களில் வேண்டுவது நமக்கு திருவாசகம் ஆசைப் பத்து பதிகத்தின் கடைப் பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களில் மணிவாசகர் தனது ஆசைகளை வெளிப்படுத்துகின்றார். இறைவன் தன்னை இங்கே வா என்று அழைக்க வேண்டும் என்றும், ஆரமுதாகிய இறைவனைக் காண வேண்டும் என்றும், இறைவன் தன்னைப் பார்த்து இரக்கம் கொள்ள வேண்டும் என்றும், இறைவனின் மலரடிகளை அடைய வேண்டும் என்றும், இறைவனால் காக்கப்படுவதற்கு உரிய எளியவன் என்று தன்னை மற்றவர் கருத வேண்டும் என்றும், இறைவனின் முக ஒளியையும் புன்முறுவலையும் காண வேண்டும் என்றும், இறைவனின் திருநாமங்கள் அனைத்தையும் சொல்லி இறைவனைப் புகழ்ந்து ஏத்த வேண்டும் என்றும், தான் அழல் சேர் மெழுகாக உருகி ஐயாற்று அரசே என்று இறைவனை அழைக்க வேண்டும் என்றும், பழ அடியார்கள் கூட்டத்தினைக் காண வேண்டும் என்றும் தனது ஆசைகளை வெளிப்படுத்தும் மணிவாசகரின் முக்கியமான ஆசை இந்த பதிகத்தின் கடைப் பாடலில் வெளிப்படுகின்றது, உமையம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டிருக்கும் பெருமான், தனது பவளத் திருவாயால் அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் என்ற ஆசையை முத்தாய்ப்பாக இந்த பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர் வைக்கின்றார். வாழ்க்கையில் வழிகாட்டும் துணைவன் இல்லாமல் தவிக்கும் தன்னை அஞ்சேல் என்று சொல்லி துணைவனாக பெருமான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கே கூறுகின்றார்.

வெஞ்சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில் அகப்பட்டு

நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நான் ஓர் துணை காணேன்

பஞ்சேர் அடியாள் பாகத்து ஒருவா பவளத் திருவாயால்

அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

திருவாசகம் அச்சப்பத்து பதிகத்தின் பாடலில் (8.35.1) மணிவாசக அடிகளார், அண்ணலாகிய பெருமானின் திருப்பாதங்களின் தன்மையை புரிந்து கொண்ட பின்னரும், வேறோர் தெய்வம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, சிவபெருமானை போற்றாத மனிதர்களைக் கண்டு தான் அச்சம் கொள்வதாக கூறுகின்றார். அத்தகைய மனிதர்களைக் கண்டு அவர்களுடன் பழகினால், அவர்களது தீய குணம் தன்னையும் பாதித்து தனது தன்மையை மாற்றிவிடுமோ என்ற சந்தேகம் இருப்பதால், அடிகளார் அச்சம் கொள்கின்றார் என்பதை நாம் உணரலாம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பொதுவாக மனிதர்கள் அச்சம் கொள்ளும் பல பொருட்களை குறிப்பிடும் மணிவாசக அடிகளார், பெருமானைப் போற்றாத மனிதர்களைக் கண்டால் மட்டுமே தான் அஞ்சுவதாக கூறுகின்றார்.

புற்றில் வாளரவும் அஞ்சேன் பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்

கற்றை வார் சடையெம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி

மற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினைந்து எம்பெம்மாற்கு

அற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே

இல்வாழ்க்கை தரும் சிற்றின்பத்தில் ஈடுபட்டு நைந்து வருந்தும் உயிரினுக்கு துணை வேண்டும் என்றும், இறைவன் அஞ்சேல் என்று சொல்லித் தன்னை காக்க வேண்டும் என்று தனது ஆசையினை வெளிப்படுத்திய மணிவாசகரின் ஆசை நிறைவேறியதை நாம் அவரது திருவேசறவு பதிகத்தின் ஆறாவது பாடலிலிருந்து (8.38.6) உணரலாம்.

பஞ்சாய அடிமடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு

நஞ்சாய துயர் கூர நடுங்குவேன் நின்னருளால்

உய்ஞ்சேன் எம் பெருமானே உடையானே அடியேனை

அஞ்சேல் என்று ஆண்டவாறு அன்றே அம்பலத்து அமுதே

ஆனந்த மாலை பதிகத்தின் ஒரு பாடலில் பெருமான் அருள் புரியாவிடில் அஞ்சேல் என்று சொல்லி தம்மைத் தேற்றும் தகுதி வேறு எவர்க்கும் இல்லை என்று மணிவாசக அடிகளார் கூறுகின்றார். பெருமானே நீ எனக்கு அருளாவிடில் வினைகளால் சூழப்பட்டும் புலன்களால் தவறான வழியில் அழைத்துச் செல்லப் பட்டும் கொடியவனாக இருக்கும் தான் வீணாக கெட்டு போய் விடுவேன் என்று அரற்றும் அடிகளார், பெருமான் தன்னை அஞ்சேல் என்று சொல்லித் தேற்றாவிடில் வேறு எவர் தனக்கு ஆறுதல் சொல்வார் என்று கூறுகின்றார். மேலும் தனது நிலை கருதி இரக்கம் கொண்டு ஆவா என்று சொல்ல வேண்டிய பெருமான் அவ்வாறு சொல்லாது இருத்தல் தவறு என்று அவருக்கு எடுத்துச் சொல்வார் எவரும் அவரது அருகில் இல்லையா என்றும் புலம்புகின்றார். இதிலிருந்து பெருமான் தன்னை நோக்கி அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் என்பதற்கு எந்த அளவுக்கு மணிவாசகர் ஏங்குகின்றார் என்பது நமக்கு புரிகின்றது. அத்தகைய ஏக்கத்தை நாமும் வளர்த்துக் கொண்டு, இறைவன் மீது அன்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த பாடலின் மையக் கருத்து. இறைவனைச் சென்று அடைவதே நமது பிறவிப்பயன் ஆகும். இறைவனும் அதனையே விரும்புகின்றான். அந்த பயனைப் பெறுவதற்கு உதவும் வண்ணம் நமக்கு கருவி கரணங்களை கொடுத்துள்ள பெருமான், அவற்றை பயன்படுத்தி நாம் மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டு, வினைப் பயன்களை முற்றிலும் கழித்துக் கொண்டு தன்னை வந்தடைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றான். ஆனால் நம்மில் பெரும்பாலோர், அவ்வாறு செய்யாமல், வினைகளை பெருக்கிக் கொண்டு மறுபடியும் பிறப்பதற்காக இறக்கின்றோம். அவ்வாறே தானும் இருப்பதாக இறைவன் எண்ணி விட்டாரோ என்ற ஐயம் அடிகளாருக்கு பிறக்கின்றது. அதனால் தான், தனது தகுதியை, அவனது திருவடிகளில் கலந்து நிற்கும் நிலைக்கு பாத்திரமாக தான் உள்ளதை, இறைவனுக்கு உணர்த்த எவரும் அருகில் இல்லையோ என்று அங்கலாய்க்கின்றார்.

கோவே அருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே

ஆவா என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோ தான்

சாவார் எல்லாம் என்னளவோ தக்கவாறு என்று என்னாரோ

தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயோ

திருவாசகம் அச்சோப் பதிகத்தின் பாடலில் (8.51.5) மணிவாசக அடிகளார் முக்தி உலகினுக்கு வருக என்று சொல்லி தன்னை அழைத்த பெருமான், இனியும் பிறவி எடுக்க வேண்டி இருக்குமோ என்று தான் கொண்டிருந்த அச்சத்தை நீக்கி அருள் புரிந்தார் என்று குறிப்பிட்டு மனம் நெகிழ்கின்றார். இத்தகைய பேறு பெறுதற்கு மிகவும் அரியது என்பதால், ஆர் பெறுவார் என்று குறிப்பிட்டு, தனது வியப்பை வெளிப்படுத்துகின்றார். அச்சோ வியப்பினை உணர்த்தும் சொல்.

பஞ்சாய அடிமடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு

நெஞ்சாய துயர் கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன்

உய்ஞ்சேன் நான் உடையானே அடியேனை வருக என்று

அஞ்சேல் என்று அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே

உயிருடன் தோன்றிய ஐந்து பொறிகளே உயிருக்கு பகையாக விளங்கி செயல்பட்டால் தனக்கு துணையாக இறைவனைத் தவிர்த்து வேறெவர் துணையாக இருப்பார் என்று கருவூர்த் தேவர் அங்கலாய்க்கும் பாடல், தில்லைச் சிற்றம்பலம் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலாகும் (9.8.2). பிறவிக் கடலை தான் நீந்திக் கடக்கும் முயற்சியில் தனக்கு எதிராக ஐந்து புலன்களும் செயல்படுவதாக கருவூர்த் தேவர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பௌவம்=கடல்; தனது உடன் பிறந்தாராக விளங்கும் ஐந்து புலன்களும் பகையாக நிற்க, யார் நமக்கு உதவியாக இருப்பார் என்று வருந்தி நாம் இறைவனை நினைத்தால், தான் துணையாக இருப்பேன் என்று சொல்லி அஞ்சேல் என்று அபயக் கரம் காட்டும் இறைவன் திருச்சிற்றம்பலம் கோயிலில் உறைகின்றான் என்று இந்த பாடலில் கருவூர்த் தேவர் கூறுகின்றார். செஞ்சாலி வயல்களின் நடுவே, நீலமலர் களையாக முளைத்த வயல்களைக் கொண்ட ஊர் சிதம்பரம் என்று கூறுகின்றார்.

இவ்வரும் பிறவி பௌவ நீர் நீந்தும் ஏழையேற்கு என்னுடன் பிறந்த

ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள் செய்வான் கோயில்

கைவரும் பழனம் குழைத்த செஞ்சாலிக் கடைசியர் களை தரு நீலம்

செய்வரம்பு அரும்பு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே

கீழ்க்கோட்டூர் மணியம்பலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.10.6) கருவூர்த் தேவர், பெருமான் தனக்கு அஞ்சல் என்று சொல்லாத தன்மையை குறிப்பிட்டு வருத்தம் தெரிவிப்பதை உணரலாம். இது ஒரு அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். பெருமான் பால் தீவிர காதல் கொண்ட கருவூர்த் தேவர் நாயகி, தனது தோழியிடம் தனது குறையை வெளிப்படுத்துகிறாள். ஆழி=கடல்; திரை=அலை; அலமருதல்=துயரம் அடைதல், அயர்தல்= சோர்வு அடைதல்; மாலை வேளையில் பெருமான் நேரில் வந்து தன்னைச் சந்தித்து ஆறுதல் செய்வான் என்று ஏங்கி காத்திருக்கும் தலைவி, தான் கடலையும் அதன் அலைகளையும் காண்பதைத் தவிர்த்து வேறு எவரையும் காணாமல் தவிப்பதாக கூறுகின்றாள். தனது வருத்தத்தைக் காணும் கடலும், தனக்கு ஆதரவாக, தனது உணர்ச்சியை புரிந்து கொண்டு வருத்தத்தை தெரிவிக்கின்றது. ஆனால் எனது உள்ளம் கவர்ந்த கள்வனாகிய பெருமான், ஏனோ நேரில் வாராமல் இருக்கின்றான். அவன் எனது வருத்தத்தை உணரவில்லை போலும். அவனுக்குக் காத்திருந்து, வெறும் கடலையை கண்டவாறு இருக்கும் நான் சோர்வு அடைந்து விடுகின்றேன். ஆனால் எனது தலைவன், இன்னும் நேரில் வந்து அஞ்சல் என்று சொல்லி என்னைத் தேற்றாமல் இருப்பது ஏனோ என்று தலைவி புலம்புகின்றாள். கிஞ்சுகம்= முருங்கைப் பூ போன்று சிவந்த வாய்; கம்பலை=ஆரவாரம்;

என் செய்கோம் தோழி தோழிநீ இரவு போம் பகல் வருமாகில்

அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமருமாறு கண்டு அயர்வன்

கிஞ்சுக மணி வாய் அரிவை தெருவில் கெழுவு கம்பலை செய் கீழ் கோட்டூர்

மஞ்சணி மணி அம்பலவவோ என்று மயங்குவான் மாலையம் பொழுதே

கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதியின் 66ஆவது பாடலில் நக்கீரத்தேவர், சிவபெருமான் தன்னை நினைக்கும் அடியார்களை அஞ்சேல் என்று சொல்லி ஆட்கொள்வார் என்று கூறுவதை நாம் இங்கே காணலாம்.

நெஞ்சே அவர் கண்டாய் நேரே நினைவாரை

அஞ்சேல் என்று ஆட்கொண்டு அருள் செய்வார் நஞ்சேயும்

கண்டத்தார் காளத்தி ஆள்வார் கழல் கண்டீர்

அண்டத்தார் சூடும் அலர்

பொழிப்புரை:

நெஞ்சமே, உன்னுடன் பிணைந்துள்ள வலிமையான வினைகளால் ஏற்படும் துன்பங்களைக் கண்டு, நீ அச்சமடையத் தேவையில்லை; அந்த வினைகளை எவ்வாறு நீக்கிக் கொள்வது என்பது குறித்து நீ திகைத்து நிற்கத் தேவையில்லை; சிவநெறியை மதித்து அதன் வழியே வாழ்க்கையை நடத்தி வாழாமல், அனைவர்க்கும் பகைவர்களாகத் திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று வலிமையான பறக்கும் கோட்டைகளையும் போரிட்டு அழித்தவர் சிவபெருமான்; அந்த கோட்டைகளை அழிப்பதற்காக, உயர்ந்த மேரு மலையினை உலகத்தவர்க்கு நன்மை புரியும் வில்லாக வளைத்தும், அந்த வில்லினில் அம்பினை, தீப்பொறிகள் கக்கும் அம்பினை பொருத்தி, அந்த அம்பினை மூன்று கோட்டைகள் மீது எய்து அழித்தவர் சிவபெருமான். வண்டினங்கள் தேன் பருகுவதற்காக துழாவும் அழகிய கொன்றை மலர் மாலைகள் அணிந்த பெருமான், மழபாடி தலத்தினில் தலைவராக உறைகின்றார். அவர் உன்னுடன் பிணைந்துள்ள வலிமையான வினைகளையும் நீக்கி, அந்த வினைகளிலிருந்து உனக்கு விடுதலை அளிப்பார். எனவே மழபாடி சென்றடைந்து அவரைப் பணிந்து பயனடைவாயாக.

பாடல் 2

களையும் வல்வினை (2.009) பாடல் 2 (திதே 709)

களையும் வல்வினை (2.009) பாடல் 2 தொடர்ச்சி (திதே 710)

காச்சு இலாத பொன் நோக்கும் கன வயிரத்திரள்

ஆச்சு இலாத பளிங்கினன் அஞ்சு முன் ஆடினான்

பேச்சினால் உமக்கு ஆவதென் பேதைகாள் பேணுமின்

வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே

விளக்கம்:

காச்சு=காய்ச்சு என்ற சொல்லின் இடைக்குறை, மேலும் காய்ச்சி உருக்கப்பட வேண்டிய நிலை; ஆசு=குற்றம், ஆசு என்ற சொல் ஆச்சு என்று எதுகை கருதி திரிந்தது; பேச்சு=பெருமானின் புகழினைத் தவிர்த்த வேறு பேச்சுகள்; வாய்ச்ச என்ற சொல் வாச்ச என்று எதுகை கருதி திரிந்தது; வாய்த்தல்=பலவகையிலும் பொருத்தமாக இருக்கும் நிலை; வாச்சம் என்ற சொல்லுக்கு வாசனை என்று பொருள் கொண்டு நறுமணம் வீசும் மாளிகைகள் என்றும் பொருள் கூறுகின்றனர். பொன்=பொன் போன்று ஒளிவீசும் திருமேனியை உடைய உமை அம்மை; வயிரத்திரள் என்று பெருமானின் திருநாமம் குறிப்பிடப் படுகின்றது. மழபாடி என்பதையும் மழுவாடு பெருமான் என்ற இறைவனின் திருநாமத்தைக் குறிப்பதாக பொருள் கொண்டு, இறைவனை குறிப்பிடுவதாக கூறுவதும் பொருத்தமே. மழுவாடி என்ற பெயர் தானே மழபாடி என்று நாளடைவில் திரிந்தது.

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.131.1) திருஞானசம்பந்தர் பெருமானின் திருமேனி பளிங்கு போன்றது என்று குறிப்பிடுகின்றார். மெய்த்த ஆறு என்பது மெய்த்தாறு என்று சேர்ந்தது; உடலினால் அறியப்படும் ஆறு சுவைகள், உப்பு புளிப்பு இனிப்பு கசப்பு காரம் மற்றும் துவர்ப்பு; ஏழிசைகள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். தமிழ் மொழியில் இவ்வாறு அழைக்கப்படும் இந்த ஏழு இசைகள், வடமொழியில் சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாரம் என்று அழைக்கப் படுகின்றன. சுருக்கமாக சரிகமபதநி என்று கூறுவார்கள்; சுவை, இசை, குணம் ஆகியவை மாயையின் காரியங்கள் என்பதால், அவற்றின் உதவியுடன் நாம் பெருமானை அறிய முடியாது. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பொருட்களையும் கடந்தவன் இறைவன் என்பதால் வேதங்களாலும் இறைவனை அறியமுடியாது. நடை=நன்னடை. ஒழுக்கமான வாழ்க்கை; ஒத்த ஆறு சமயங்கள்=சைவத்தின் பிரிவான ஆறு அகச்சமயங்கள்; பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வாமனம் பைரவம் மற்றும் சைவம் என்பன சைவ சமயத்தின் ஆறு உட்பிரிவுகள்; இந்த ஆறு சமயங்களும் மாறுபாடு ஏதுமின்றி சிவபெருமானை தலைவனாக ஏற்றுக் கொள்வதால் ஒத்த ஆறு சமயங்கள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. வெதிர்=மூங்கில்; நித்திலம்=முத்து; மூங்கில்கள் வெடித்து அதன் உள்ளே இருக்கும் முத்துக்கள் சிதற அவற்றை அடித்துக் கொண்டு வரும் ஆறு என்பதால் முத்தாறு என்ற பெயர் வந்தது போலும். இந்த பாடலில் மூங்கிலில் முத்து தோன்றும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். யானையின் தந்தம், பன்றியின் கொம்பு. மூங்கில், தாமரை, கரும்பு, பெண்களின் கழுத்து, சிப்பி, உடும்பு ஆகியவற்றில் முத்து கிடைப்பதாக இலக்கியங்கள் கூறுகின்றன. பல சங்க இலக்கியங்கள் யானை மற்றும் மூங்கில் முத்தின் பிறப்பிடம் என்று கூறுகின்றன. ஆனால் சங்கினைத் தவிர்த்த வேறு எந்த பொருளிலும் முத்துகள் இருப்பதாக நிரூபணம் ஆனதில்லை. காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரம் இலக்கியம் இருபது இடங்களில் முத்து தோன்றுவதாக குறிப்பிடுகின்றது.

மெய்த்தாறு சுவையும் ஏழ் இசையும் எண் குணங்களும் விரும்பு நால் வே

தத்தாலும் அறிவொண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம்

ஒத்தாறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்ணீர்

முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முதுகுன்றமே

உடல் உணரும் ஆறு சுவைகளாலும், உடல் கேட்கும் ஏழு இசைகளாலும், எட்டு குணங்களாலும் அறிய முடியாத இறைவன், அனைவரும் விரும்பும் நான்கு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பொருட்களையும் கடந்து நிற்பதால் நான்கு வேதங்களாலும் அறிய முடியாதவனாக உள்ளான். மேலே குறிப்பிட்டவாறு எளிதில் அறியப்படாமல் இருப்பவனும், ஒழுக்கமான வாழ்வு கொண்டு அன்புடன் அணுகினால் மட்டுமே தெளிவாக அறியப் படுபவனும், பளிங்கு போன்ற திருமேனியில் உமை அன்னையை ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளவனும், தங்களுக்குளே மாறுபாடு ஏதுமின்றி ஒத்த கருத்துடன், பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வாமனம் பைரவம் மற்றும் சைவம் ஆகிய சமயங்களால் தலைவனாக ஏற்றுக் கொள்ளப் படுபவனும்; ஆகிய சிவபெருமான் விருப்பமுடன் உறையும் ஊர் முதுகுன்றமாகும். தெளிந்த நீரினை உடைய மணிமுத்தாறு நதி மலையின் கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக் கொணர்ந்து சேர்க்கும் கரைகளை உடைய ஊர் முதுகுன்றமாகும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடல்களில் (3.120) திருஞானசம்பந்தர், பாண்டிய அரசி மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையார் ஆகிய இருவரின் தன்மைகளையும் விவரிக்கின்றார். இந்த பதிகத்தின் ஏழாவது பாடலில், அரசியார், முத்தின் தாழ் வடமும் சந்தனக் குழம்பு நீறும் தனது மார்பினில் அணிந்தவராக விளங்கியதாக குறிப்பிடுகின்றார். வடமும் மற்றும் நீறும் என்று குறிப்பிட்டிருப்பதால், சந்தனக் குழம்பு என்பதை, நாம் திருநீற்றுக்கு கொடுக்கப்பட்ட அடைமொழியாக எடுத்துக் கொள்வதே பொருத்தம். திருநீற்றினை, சந்தனக் குழம்பாக பாவித்து அரசியார் அணிந்து கொண்டார் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து உணரலாம். சமண மதத்தைச் சார்ந்த தனது கணவனாரின் மனம் புண்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அரசியார் தனது நெற்றியில் திருநீறு இடாமல், மார்பினில் திருநீறு பூசிக்கொண்டு இருந்த தன்மை இங்கே விளக்கப் படுகின்றது என்று சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். பின்னர் திருஞான சம்பந்தர், சமணர்களை வாதத்தில் வென்று, மன்னனையும் திருநீறு இடச் செய்தமை சைவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டமை ஆகியவை, சைவ சமய வரலாற்றினில் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வுகள். அதன் பின்னர் அரசியாரும், மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது நெற்றியில் அனைவரும் காண திருநீற்றினை இட்டிருப்பார் என்பதை நாம் எவரும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம். திருநீறு அணிந்ததால் பளிங்கு திருமேனியுடன் காட்சி தந்த பெருமான், ஒளிவீசும் பச்சை மரகத நிறத்தில் திருமேனி உடைய உமையன்னை தனது அருகில் இருக்கும் வண்ணம் ஆலவாய் தலத்தினில் வீற்றிருக்கின்றார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

முத்தின் தாழ் வடமும் சந்தனக் குழம்பு நீறும் தன் மார்பினில் முயங்கப்

பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணி செய நின்ற

சுத்தமார் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தாற் போல்

அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.99.2) முத்துக் குவியலில் பளிங்கின் ஒளி சேர்ந்தது போன்று, சிவந்த மேனியில் வெண்ணீறு அணிந்த பெருமான் என்று அப்பர் பிரான், பெருமானின் திருமேனி அழகினை குறிப்பிடுகின்றார். கொத்தை=குருடன்: மூங்கர்=ஊமை: கோகு=கபடம்: ஏய்த்தல்=தீர்க்கும்: படி=வண்ணம், கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுதல் என்பது பழமொழி. பழமொழிகளை பயன்படுத்தி, சொல்ல வந்த பொருளை விளக்குதல் அப்பர் பிரானின் பாணி. பதிகத்தின் முதல் பாடலில் சமணர்களுடன் சேர்ந்து தான் பல நூல்கள் பயின்றதையும், பின்னர் தான் சைவ சமயத்தைச் சார்ந்த பின்னர் அவர்கள் தனக்கு இழைத்த கொடுமைகளையும் நினைத்துப் பார்க்கும் அப்பர் பிரான், தனது வாழ்க்கையில் அத்தகைய நிகழ்ச்சிகள் ஏன் நடந்தது என்று தன்னையே கேட்டுக் கொள்கின்றார். அந்த கேள்விக்கு உரிய பதில் ஏதும் தோன்றாததால், இரண்டாவது பாடலில் அந்த கேள்வியை சிவபிரானிடமே எழுப்புகின்றார். முத்துக் குவியலில் பளிங்கின் ஒளி சேர்ந்தது போன்று, சிவந்த மேனியில் வெண்ணீறு அணிந்து காட்சி தரும் இறையவனே, சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரில் உறைபவனே, என்ன காரணத்தினால், இறைநெறியில் ஏழைகளாகத் திகழ்ந்த சமணர்களுடன் என்னைக் கூட்டி வைத்தாய்? அவ்வாறு நீ செய்ததால், ஊமைகளால் வழிகாட்டப்படும் குருடன் போன்று இழிந்த நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். எதனால் எனக்கு இந்த இழிநிலை ஏற்பட்டது, நீ தான் கூறவேண்டும் என்று பெருமானிடம் அப்பர் பிரான் கேள்வி கேட்கும் பாடல்.

எத்தைக் கொண்டு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து எனைக்

கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித்து என்னக் கோகு செய்தாய்

முத்தில் திரளும் பளிங்கினில் சோதியும் மொய்ப் பவளத்

தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.28.2) அப்பர் பிரான், பெருமானை, பளிங்கின் வண்ணத்தில் நெடிய திருமேனி உடையவர் என்று குறிப்பிடுகின்றார். மூலம்=அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கும் அனைத்து உயிர்களும் உடல்களுடன் இணைவதற்கும் மூல காரணனாக நிற்கும் தன்மை; கோல வண்ணத்தர்=தம்மிடம் ஒடுங்கிய உலகத்தை மீண்டும் தோற்றுவிப்பவர்; நீல வண்ணத்தர்=திருமாலை ஒரு பாகமாக உடையவர்; தேவியை ஒரு பாகமாக உடையவர் எனினும் பொருத்தமே. மாசு ஏதும் இல்லாத நிலையில் எரியும் தீப்பிழம்பில் வெளிப்பகுதி நீல நிறத்தில் இருப்பதை நாம் காணலாம். எனவே தான் நீல நிறத்தை கொழுஞ்சுடர் நீல வண்ணம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார் போலும். அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கும் அனைத்து உயிர்களும் தங்களின் வினைத் தொகுதிகளுக்கு பொருத்தமான உடல்களுடன் சேர்வதற்கும் மூல காரணமாக இருப்பது இறைவனின் தன்மை. மேலும் தன்னிடம் ஒடுங்கியிருந்த உலகத்தை விடுவித்து உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு முதல் காரணமாக இருப்பதும் அவரது தன்மையே; திருமாலைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்ததால் கொழுந்து விட்டெரியும் சுடரின் ஓரத்தில் தோன்றும் நீல நிறத்தில் தனது உடலின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது போன்று தோன்றுவதும் அவரது தன்மையே. மேலும் திருநீறு பூசப்பட்டதால் பளிங்கு போன்று தோன்றும் அவரது திருமேனியின் ஒரு பகுதியில், கழுத்தினில் ஆலகால விடத்தைத் தேக்கியதால் கருமை நிறமும், இவரது உடலில் வண்ணங்களில் ஒன்றாக உள்ளது. இவ்வாறு பல தன்மைகளையும் பண்புகளையும் தனது உடலில் பல நிறங்களையும் உடையவரே திருவையாறு தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மூல வண்ணத்தராய் முதலாகிய

கோல வண்ணத்தராகிக் கொழுஞ்சுடர்

நீல வண்ணத்தராய் நெடும் பளிங்கு

ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே

திருக்கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.37.4) அப்பர் பிரான், பெருமானின் திருமேனியை நெடும் பளிங்குத் திருமேனி என்று குறிப்பிடுகின்றார். நீலமேனி=திருமாலின் மேனி மற்றும் அன்னை பார்வதி தேவியின் மேனி நீல நிறத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. திருமாலையும் அன்னை பார்வதி தேவியையும் பெருமான் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றதை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். திருநீறு பூசப்பட்டதால் பெருமானின் திருமேனி பளிங்கு நிறத்துடன் காணப்படுகின்றது. காலவானை= காலனுக்கு ஆனை போல் விளங்கி அவனை வீழ்த்தியவர். திருக்கடவூர் வீரட்டத்தின் தலவரலாறு இங்கே குறிப்பிடப் படுகின்றது. நஞ்சு உண்ட பின்னரும் அழகு சிறிதும் குறையாமல் அழகான யானை போன்று காட்சி அளிப்பவர் சிவபெருமான்; திருமாலையும் பார்வதி அன்னையையும் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டமையால், உடலின் ஒரு பாகம் நீல நிறத்திலும் மற்றொரு பாகம் பளிங்கு நிறமாகவும் காட்சி தருபவர் சிவபெருமான்; அழகாக கொழுந்து விட்டெரியும் சுடர் போன்ற திருமேனியை உடையவர் பெருமான்; தன்னை வழிபட்டுக் கொண்டிருந்த சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனுக்கு யானை போல் விளங்கி அவனை கீழே வீழச் செய்தவர் சிவபெருமான். இத்தகைய வல்லமை படைத்த பெருமான் திருக்கடவூர் தலத்தில் உறைகின்றார். அவரை நீங்கள் சென்று காண்பீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஆலம் உண்டு அழகாயதொர் ஆனையார்

நீலமேனி நெடும் பளிங்கு ஆனையார்

கோலமாய கொழுஞ்சுடர் ஆனையார்

காலவானை கண்டீர் கடவூரரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.26.4) அப்பர் பிரான், பெருமானை, வெண் பளிங்கின் உட்பதித்த சோதியான் என்று அழைக்கின்றார். வைப்பான்=படைப்பான்; களைதல்=அழித்தல்; ஊழிக் காலத்தில் அழிந்த உலகத்தை மீண்டும் பெருமான் தோற்றுவிக்கும் செயல் இங்கே குறிப்பிடப் படுகின்றது. நித்திலம்=முத்து. அப்பாலைக்கு அப்பால் என்று நிலையற்ற உலக பொருட்கள் ஏற்படுத்தும் மாயையும் அந்த மாயையைக் கடந்த உயிர்களையும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தனது திருமேனியின் மேல் திருநீறு அணிந்தவனும், வெண்மை நிறத்து பளிங்கினில் சோதி பதித்தது போன்று வெண்மை நிறத்து திருநீற்றின் கீழே சிவந்து ஒளிவிடும் திருமேனியை உடையவனும், தனக்கு ஒப்பாக குறிப்பிட்டு சொல்வதற்கு எவரும் இல்லாதவனும், பிழை ஏதும் செய்யாத உத்தமனாக இருப்பவனும், முத்து போன்று இயற்கையாக ஒளிவீசும் திருமேனியை உடையவனும், அனைத்து உலகங்களையும் காப்பவனும், ஊழிக் காலத்தில் அந்த உலகங்கள் அனைத்தும் அழிவதற்கு காரணமாக இருப்பவனும், ஊழிக் காலம் முடிந்த பின்னர் ஒடுங்கிய உலகினை மீண்டும் தோற்றுவிப்பவனும், தீவினைகளால் பிணிக்கப்பட்ட அடியேனின் மனதினில் நிலையாக இருப்பவனும், மாயையைக் கடந்த உயிர்களையும் கடந்தவனாக இருப்பவனும், எனது தலைவனுமாகிய திருவாரூர்ப் பெருமானைக் கண்ட களிப்பினில் அடியேன் அனைத்தையும் மறந்து பெருமானையே நினைத்து மகிழ்ந்திருந்தேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

மெய்ப்பால் வெண்ணீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உள் பதித்த சோதியானை

ஒப்பானை ஒப்பிலா ஒருவன் தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம்

வைப்பானைக் களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்து அகத்தே மன்னினானை

அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்தவாறே

குடந்தை கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.75.5) அப்பர் பிரான், பெருமானின் திருமேனியை நெடும் பளிங்கு என்று குறிப்பிடுகின்றார். இன்ன வண்ணத்தவர் என்று சொல்லுதற்கு அரிய நிறத்தவர் என்று பெருமானின் மேனியின் வண்ணத்தை அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். அவரது கழுத்து விடத்தினை தேக்கியதால் கருநீல நிறத்துடனும், செம்பொன் நிறத்தில் உள்ள மேனியில் பூசப்பட்ட திருநீறு வைரத்தைப் போன்று வெண்மை நிறத்துடனும், அன்னையை உடலின் ஒரு கூறாக ஏற்றுக் கொண்ட இடது பாகத்து மேனி பச்சை நிறத்துடனும் நெடிதுயர்ந்த பளிங்கின் உருவமாக காணப்படும் பெருமானின் திருவுருவ நிறத்தினை என்னவென்று சொல்ல முடியும் என்ற கேள்வியை நம்மிடம் அப்பர் பிரான் கேட்கின்றார். கோலமணி=அழகிய மணிகள்; கொழித்து=அடித்துக் கொண்டு வரப்படும், மேடான மேற்கு பகுதியிலிருந்து தாழ்வான கிழக்கு சமவெளிக்கு பாயும் காவிரி நதியை கீழே இறங்கின நதி என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தனது காலால் உதைத்து காலனின் வலிமையை தொலைத்தவர் சிவபெருமான்; அவர் தனது நெற்றிக் கண்ணை திறந்து பார்த்த அளவில், மன்மதனின் எழில் மேனியினை பெருமானது நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பிழம்பு எரித்து அழித்தது; அவர் ஆல மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் வேதத்தின் பொருளை விளக்கினார், அவர் ஆண் என்றும் பெண் என்றும் அலி என்றும் சொல்ல முடியாத தன்மையில் உள்ளார்; அவரது உருவம் மட்டுமல்ல அவரது திருமேனியின் வண்ணமும் இன்னதென்று சொல்ல முடியாத வண்ணத்தில், கருநீல வண்ணத்தில் கழுத்தினையும், செம்பொன் மேனியையும், மேனியின் மீது வெண்ணிறத்தில் திருநீற்றுப் பூச்சும், இடது புறத்தில் அம்மையை ஏற்றமையால் பச்சை வண்ணத்திலும், நெடிது உயர்ந்த பளிங்காக காட்சி அளித்து, அவரது திருமேனி இன்ன வண்ணம் என்று உரைக்க முடியாத தன்மையில் உள்ளது. அழகிய மணிகள் அடித்துக் கொண்டு கீழே இறங்கி வரும் பொன்னி நதியின் கரையில் அமைந்துள்ள குடந்தை நகரின் கீழ்க் கோட்டம் திருக்கோயிலில் கூத்தனாக பெருமான் உறைகின்றார்

காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்கக் கண்டார் போலும்

ஆலதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும்

நீல உரு வயிர நிரை பச்சைச் செம்பொன் நெடும் பளிங்கு ஒன்று அறிவரிய நிறத்தார் போலும்

கோலமணி கொழித்து இழியும் பொன்னி நன்னீர்க் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.87.5) பளிங்கு அனைய சோதியான் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தீயவன்=தீ+அவன்; ஆய்=தாய்; சேயவன்=தொலைவில் இருப்பவன்; சேமநெறி என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். துன்பங்களிலிருந்து நம்மை காக்கும் சேமிப்பு நிதி போன்று, பழைய வினையின் காரணமாக நாம் துன்பம் அடையும் தருணங்களில் நம்மை காப்பது சிவபெருமானை குறித்து நாம் முன்னர் செய்த வழிபாடுகள் என்பதை உணர்த்தும் வண்ணம் சேமநெறி என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். முக்தி அளிப்பதன் மூலம், உயிருக்கு பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்து காப்பவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. தூயவனாக விளங்குபவனும், திருநீறு துதைந்த மேனியை உடையவனும், ஒளி வீசும் பளிங்கு போன்று மேனி உடையவனும், தீயாக விளங்குபவனும், தீயவர்களாக உலகத்தவரை வருத்திய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து வென்றவனும், வெறியூட்டப் பட்டு தன் மேல் ஏவப்பட்ட மான்கன்றின் தன்மையை மாற்றி துள்ளி விளையாடும் மான் கன்றாக தனது செம்மையான கையில் ஏந்தியவனும், உலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் தாயாக விளங்குபவனும், திருவாரூர் தலத்தில் அம்மானாக குடியிருப்பவனும், அடியார்களுக்கு தெவிட்டாத அமுதமாக இருப்பவனும், அடியார் அல்லாதவருக்கு தொலைவாக இருப்பவனும், நாம் இதற்கு முன்னர் செய்த வழிபாடுகளை கருத்தில் கொண்டு நாம் துன்பமடையும் தருணத்தில் துன்பங்களைத் தீர்ப்பவனாக செயல்படும் சேமநெறியாக விளங்குபவனும், உயிர்க்கு முக்தி அளித்து உயிர் இனிப் பிறவா வண்ணம் காத்து இடர்களைத் தீர்ப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் இன்பத்தை அளிப்பவனாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமான். சிவபுரம் என்று அழைக்கப்படும் தலத்தின் செல்வனாக விளங்குகின்றான்.

தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண்

தீயவன் காண் தீய அவுணர் புரம் செற்றான் காண் சிறுமான் கொள் செங்கை எம் பெருமான் தான் காண்

ஆயவன் காண் ஆரூரில் அம்மான் தான் காண் அடியார்கட்கு ஆரமுதம் ஆயினான் காண்

சேயவன் காண் சேமநெறி ஆயினான் காண் சிவனவன் காண் சிவபுரத்து எம்செல்வன் தானே

திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.91.2) அப்பர் பிரான், பளிங்கின் உள்ளே பதிக்கப்பட்ட சோதி போன்று பெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் அருளால் அவனை அறியும் திறமை தான் கைவரப் பெற்றதாக கூறும் அப்பர் பிரான், அதனால் தனது உள்ளத்தில் இருந்த கலக்கங்கள் தீர்ந்து தெளிவு பெற்றதாக இந்த பாடலில் கூறுகின்றார். விளித்து என்ற சொல் எதுகை கருதி விளிந்து என்று மாறியது. விளித்து=அறைகூவல் விடுத்து; சலந்தரனின் வலிமை முன்னே எதிர் நிற்க மாட்டாமல் திருமால் பிரமன் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் ஒளிந்து கொண்டதால், தன்னுடன் போரிடுவதற்கு எவரும் இல்லாத நிலையில், சிவபெருமானுடன் போருக்கு செல்வது என்று சலந்தரன் தீர்மானித்தான். மிகுந்த ஆரவாரத்துடன் அவன் கயிலை நோக்கி, அறைகூவல் விடுத்தவாறு சென்றதை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வீட்டினான்=அழித்தான்; திருமாலாகவும் பிரமனாகவும் பெருமான் உள்ள தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பளிங்கு=ஸ்படிகம்; ஸ்படிகத்தின் உள்ளே இருக்கும் சோதி மிகுந்த ஒளி விட்டு பிரகாசிப்பது போன்று, மிகுந்த ஒளியுடன் விளங்குபவன் பெருமானென்று கூறுகின்றார். பளிங்கின் உள்ளே பதிக்கப்பட்ட சோதியினைப் போன்று மிகவும் அதிகமான ஒளியுடன் பிரகாசிக்கும் சோதி வடிவமாக உள்ளவனும். அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவனும், அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிப்பதற்காக வேடுவக் கோலம் தாங்கியவனும், ஆரவாரத்துடன் பெருமானுக்கு அறைகூவல் விடுத்தவாறு கயிலை நோக்கி விரைந்த சலந்தரனை தடுத்து அவனை அழித்தவனும், வேதத்தின் பொருளினை அனைவரும் உணருமாறு அருள் செய்த வேதியனும், விண் முதலான பஞ்ச பூதங்களில் பொருந்தி இருப்பவனும், இரண்டு அடிகளால் மண்ணையும் விண்ணையும் அளந்த திருமாலாக இருப்பவனும், பிரமனாக இருந்து உலகினை படைப்பவனும், உயிர்களின் துன்பங்களைத் தீர்க்கும் அரிய மருந்தாக செயல்படுபவனும் ஆகிய பெருமானின் திறத்தினை அடியேன் உள்ளவாறு அறிந்து கொண்டேன். அதனால் எனது உள்ளத்தில் தெளிவு ஏற்பட்டு அத்தகைய பெருமானைச் சென்று அடையும் பேற்றினை அடியேன் பெற்று வாழ்வினில் உய்வினை அடைந்தேன். இந்த பெருமான் திருவெறும்பியூர் மலையின் மீது ஒளிவீசும் மாணிக்கமாகத் திகழ்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானைப் பசுபதியைப் பாசுபத வேடத்தானை

விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம்

அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அருமருந்தை ஆமாறு அறிந்தென் உள்ளம்

தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்று அடையப் பெற்றேன் நானே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (6.96.6) அப்பர் பிரான், பெருமானின் திருமேனி நிறம் பளிங்கு என்று கூறுகின்றார். பளிங்கு=ஈசான முகத்தின் நிறம் என்றும் திருநீற்றின் வெண்மை என்றும் கூறலாம். ஈசனின் ஐந்து முகங்களும் ஐந்து நிறத்தில் அமைந்திருப்பதாக சொல்வார்கள்; கிழக்கு நோக்கி உள்ள முகமாகிய தத்புருஷம் பொன்னின் நிறத்திலும், தெற்கு முகமாக உள்ள அகோரம் கருமை நிறத்திலும் மேற்கு நோக்கிய சத்யோஜாதம் வெண்மை நிறத்திலும் வடக்கு நோக்கி உள்ள வாமதேவம் சிகப்பு நிறத்திலும் மேல்நோக்கி காணப்படும் ஈசான முகம் பளிங்கு நிறத்திலும் இருப்பதாக கூறுகின்றனர். இதனையே நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் என்று மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தில் கூறுகின்றார். பாரிடங்கள்=பூத கணங்கள்; கருவி=இசைக்கருவி; ஒற்றியூர்=அடமானம் வைக்கப்பட்ட ஊர். தன்னைச் சூழ்ந்துள்ள பூத கணங்கள் பல வகையான இசைக்கருவிகளை தொடர்ந்து இசைக்க, செம்பவள திருமேனியில் பளிங்கு நிறத்தில் உள்ள திருநீற்றினை பூசிய பெருமான், கங்கை நங்கை அடங்கியுள்ள சடைமுடியில் பிறைச் சந்திரனைக் கொண்டுள்ளார். தனது அழகான மிடற்றினில், நீல நிறம் மிளிருமாறு நஞ்சினைத் தேக்கியுள்ள பெருமானார், தனக்கு பிச்சையிட்ட தாருகவனத்து இல்லத்தரசிகள், கச்சையால் இழுத்து கட்டப்பட்ட மார்பகங்களை உடையவர்களாய் பலி கொண்டு வந்து இட்ட போது, தனது அழகினால் அவர்களது மனதினைக் கவர்ந்ததுமன்றி, தன் மீது அவர்கள் கொண்டிருந்த காதலால் உடல் இளைத்து அவர்களது வளையல்கள் கழன்று விழுமாறு செய்தார்; பல தலங்களைத் தனது ஊராக கொண்டுள்ள பெருமான், அடமானம் வைக்கப்பட்ட ஊர் என்ற பொருளில் அமைந்த திருவொற்றியூரையும் தனது ஊராகக் கொண்டு ஆட்சி செய்கின்றார். அவர் தாம் எனது உடலுக்கு உற்ற சூலை நோயினைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவராவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார்

நீரடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீலநிறம் கோல் நிறை மிடற்றில்கொண்டார்

வாரடங்கு வன முலையார் மையலாகி வந்திட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார்

ஊரடங்க வொற்றி நகர் பற்றிக் கொண்டார் உடலுறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே

குற்றம் இல்லாத பளிங்கு மேனியை உடைய பெருமான் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுவது திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா பாடலை (9.1.1) நினைவூட்டுகின்றது. தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே என்று பெருமானை அழைக்கும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. எண்ணெய் அல்லது நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்கு, அந்த எண்ணெய்/நெய் குறையக் குறைய ஒளி மங்குவதையும், அவை முழுதும் தீர்ந்த பின்னர் அணைந்து விடுவதையும் நாம் காண்கின்றோம். மின்சாரம் போன்ற சக்திகளால் ஒளிவிடும் விளக்குகளும், அந்த சக்தியின் தொடர்பு அறுந்த பின்னர் அணைந்து போவதையும் நாம் காண்கின்றோம். ஆனால் சோதி வடிவாக இருக்கும் இறைவன் எந்த விதமான சக்தியின் தொடர்புமின்றி ஒளிர்கின்றான்; மேலும் அந்த ஒளி என்றும் குறையாது வளர்கின்ற ஒளியாகவும், எந்த விதமான தூண்டுதலும் தேவைப்படாமல் மிளிர்கின்ற ஒளியாகவும், என்றும் அழியாத ஒளியாகவும் விளங்குகின்றது என்பதை குறிப்பிட ஒளிவளர் விளக்கு என்று திருமாளிகைத் தேவர் குறிப்பிடுகின்றார். இரத்தினம், மாணிக்கம், வயிரம் போன்றவை, இயற்கையாகவே ஒளியுடன் திகழ்கின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒரு நாள் அழியக்கூடிய பொருட்களாக விளங்குகின்றன. உலப்பு என்றால் அழிவு என்று பொருள். என்றும் அழியாத இறைவன், இயற்கையாக ஒளிவீசும் இரத்தினம் மாணிக்கம் வயிரம் ஆகியவற்றினும் மிகவும் உயர்ந்தவனாக உள்ள நிலை,உலப்பிலா ஒன்றே என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. அறியாமையை நீக்கும் ஞானத்தையும் ஒளி என்று கூறுவார்கள். ஆனால் இறைவனோ ஞானம் எனப்படும் உணர்வினையும் கடந்தவன். எனவே தான் உணர்வு சூழ் கடந்த உணர்வு என்று குறிப்பிடுகின்றார். ஆச்சு இலாத பளிங்கு, ஆசு (குற்றம்) ஏதும் இல்லாத பளிங்கு போன்று திருமேனியை உடையவன் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுவது போன்று, திருமாளிகைத் தேவரும் தெளிந்த பளிங்கு ஒன்று திரண்டது போன்று முழுமையான மணிக் குன்றாக இறைவன் இருப்பதையும் உணர்த்துகின்றார். இவ்வாறு உயர்ந்த தன்மைகள் உடையவனாக திகழும் இறைவனை, அன்பினால் தியானித்தால், அவன் தேன் போன்று நமது சித்தத்தில் இனிய உணர்வினைத் தருபவனாகவும், நமது உள்ளத்தில் இனிய சுவை தரும் கனியாகவும் திகழ்கின்றான். அவனை நாம் உணர்ந்து அனுபவிக்கவே முடியும், அவனை நேரில் காணுதல் அரிது என்றாலும், தில்லைச் சிற்றம்பலத்தில் தெய்வீகக் கூத்தினை பெருமான் மிகவும் விரும்பி ஆடுகின்றான். அவனது புகழினை அடியேன் எடுத்துரைக்கும் வண்ணம் அடியேனுக்கு உதவி புரிவதற்கு பெருமான் திருவுளம் கொள்ள வேண்டும் என்று இந்த பாடலில் தேவர், விண்ணப்பம் செய்கின்றார்

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே

தெளிவளர் பளிங்கின் திரள் மணிக்குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே

அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே அம்பலம் ஆடரங்காக

வெளிவளர் தெய்வக் கூத்து உகந்தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.5.4) சேந்தனார் பெருமானை வெண் பளிங்கு என்று அழைக்கின்றார். தகைத்த=தடுத்து ஆட்கொண்ட; மூன்று கமலங்கள்= அனாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய மூன்று மேல் ஆதாரங்கள்; மவுலி=முடியை உடையவன்; சசி=சந்திரன்; குலா=குலாவுகின்ற, விளங்கும்; சசிகுலா மவுலி=சந்திரன் விளங்கும் சடை உடைய பெருமான்; பெருமான் தானே உகந்து, தனது மேல் மூன்று ஆதாரங்களில் பொருந்தி இருப்பதாக சேந்தனார் கூறுகின்றார். வெள்ளம் என்று சிவானந்த வெள்ளம் சொல்லப் படுகின்றது. பெருமானின் திருவடிகளுக்கு அடிமையாக திருத்தொண்டு செய்யும் தான், அந்த திருவடிகள் தனது உள்ளத்தை விட்டு நீங்க விடமாட்டேன் என்று கூறுகின்றார்.

தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த சசிகுலா மவுலியைத் தானே

என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர்

மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின்

பொன்னடிக்கு அடிமை புக்கு இனிப் போக விடுவனோ பூண்டு கொண்டேனே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.8.7) கருவூர்த் தேவர், பெருமானை, தூய பளிங்கின் குவியலிலிருந்து எழுகின்ற தோற்றத்தை உடையவன் என்று கூறுகின்றார். செங்கதிர் விரிய என்று பின்னர் வருவதால், பூத்திரள் என்ற சொல் சிவந்த வண்ணம் கொண்ட பூக்களை உணர்த்துவதாக பொருள் கொள்வது பொருத்தம். புந்தி=புத்தி; தனது சிந்தையில், சிவந்த வண்ணம் உடைய பூக்களின் குவியலாக செங்கதிர் ஒளியினை உடைய திருமேனியுடன், திருமாலைத் தனது வாகனமாக ஏற்ற கோலத்தில் பெருமான் குடியிருப்பதாக கருவூர்த்தேவர் கூறுகின்றார். தனது சிவந்த திருமேனியில் திருநீறு பூசிக் கொண்டு பெருமான் காணப்படும் தோற்றம் பளிங்குக் குவியலை ஒத்துள்ளது நாத்திரள் மறையவர்=கூட்டமாக மறை ஓதும் வேதியர்கள்;.

பூத்திரள் உருவம் செங்கதிர் விரிய புந்தியில் வந்த மால் விடையோன்

தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில்

நாத்திரள் மறை ஊர்ந்து ஓமகுண்டத்து நறு நெய்யால் மறையவர் வளர்த்த

தீத்திரள் அரும்பு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே

பளிங்கினுள் பதித்த சோதியான் என்ற தொடர் நமக்கு திருமூலரின் கீழக்கண்ட திருமந்திரப் பாடலை நினைவூட்டுகின்றது. செம்பினில் களிம்பு உடன் தோன்றி இருப்பது போன்று ஆன்மாவுடன் ஆணவ மலம் எப்போதும் கலந்து காணப்படுகின்றது என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது. எனவே தான் களிம்பு என்று இங்கே மலத்தினை திருமூலர் குறிப்பிடுகின்றார் என்று நாம் பொருள் கொள்ள வேண்டும். மலங்கள் அணுகாத தூயவனாகிய பெருமான் தனது அருட்பார்வையால் எனது மனதினுள் தான் இருப்பதை உணர்த்தினான் என்று திருமூலர் இந்த பாடலில் கூறுகின்றார். இயல்பிலேயே தன்னை (பெருமானை) மலங்கள் அணுகாத வண்ணம் நிறுத்தியவன் பெருமான் என்று முதல் அடியில் கூறும் திருமூலர், தனது உயிருடன் ஒட்டியிருந்த மலங்களைத் தனது அருட்பார்வையால் சுட்டெரித்து விட்டான் என்று இரண்டாவது அடியில் கூறுகின்றார். மேலும் மலங்கள் ஏதும் அணுக முடியாத சோதியாகிய பெருமான், தனது மனதினில் இருப்பதையும் உணர்த்திய அவன், பளிங்கு போன்ற தனது ஆன்மாவின் உள்ளே, பவளம் போன்ற சிவந்த திருவடிகளை பதித்தான் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். திருமூலர் கூறுவது போன்று அப்பர் பிரானும் உயிரின் உள்ளே பவளமாகிய பெருமான் கலந்து உறைகின்றான் என்று உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. தான் சார்ந்துள்ள பொருளின் வண்ணத்துடன் விளங்குவது பளிங்கு (ஸ்படிகம்). மலங்களுடன் பொருந்தி இருக்கையில் மலங்களின் வழியே செல்வதும், சிவத்துடன் இருக்கையில் சிவத்தின் வழியே செல்வதும் உயிரின் இயல்பு. இதனை உணர்த்தும் வண்ணம் உயிரினை பளிங்கிற்கு திருமூலர் இந்த பாடலில் ஒப்பிடுகின்றார். பெருமானை சோதி வடிவினனாகவும், சோதியின் நிறத்தில் திருமேனி உடையவனாகவும் அருளாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

களிம்பு அறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி

களிம்பு அறுத்தான் அருட்கண் விழிப்பித்துக்

களிம்பு அணுகாத கதிரொளி காட்டிப்

பளிங்கில் பவளம் பதித்தான் பதியே

இறைவன், ஆன்மாவாகிய பளிங்கின் உள்ளே பதிக்கப்பட்ட சோதியாக விளங்குவதால் இறைவன் இருக்கும் இடத்தில் மலங்கள் ஒடுங்கி இருக்கும் நிலையும் திருமூலரால் விளக்கப் படுகின்றது. பொதுவாக பாசம் என்று சொல் மலங்களை குறிக்கும் சொல்லாக திருமூலரால் கையாளப் படுகின்றது. உயிர்கள் தோன்றிய நாளில் தோன்றிய பாசமும், பதியினைப் போன்றும் உயிரினைப் போன்றும் அனாதி என்று கூறும் திருமூலர், பதியாகிய இறைவன் பசுவாகிய ஆன்மாவை அணுகினால், பாசமாகிய மலங்கள் தங்களது சேட்டைகளை நிறுத்திக் கொண்டு அடங்கி விடும் என்று கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இறைவனைச் சென்று அடைவதற்கும் இறைவனின் அருள் வேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக பதியினைச் சென்று பசு அணுகாது என்று திருமூலர் கூறுகின்றார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது தான் திருவாசக சிவபுராணம் நமக்கு உணர்த்தும் உண்மை. இயல்பாகவே பாசங்களைக் கடந்தவன் இறைவன் என்பதால் பாசமும் பதியினைச் சென்று அணுகாது என்றும் இங்கே கூறப்படுகின்றது. இறைவன் அருள் கூர்ந்து ஆன்மாவை அணுகும் போது, அந்நாள் வரை ஆன்மாவை தனது விருப்பம் போன்று அலைக்கழித்த பாசம் அடங்கி ஒடுங்கி விடுவதால், பசுவினைப் பதி அணுகினால் பாசம் அங்கே நிற்காது என்று பாடலின் கடைவரியில் உணர்த்துகின்றார்.

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு பாசம் அனாதி

பதியினைச் சென்று அணுகா பசு பாசம்

பதி அணுகில் பசு பாசம் நில்லாவே

இந்த பதிகத்தின் முதல் பாடலில் பெருமானது ஆற்றலை உணர்த்தி, அவன் நமக்கு உதவி செய்ய தயாராக இருக்கையில் நாம் நமது வினைகளை எளிதில் நீக்கிக் கொள்ளலாம் என்று அறிவுரை கூறிய திருஞானசம்பந்தர், அத்தகைய அறிவுரைகளின் வழியே நடந்து கொள்ளாது வீண் பேச்சுகளை பேசி பொழுதினைக் கழிக்கும் வீணர்களை அறிவிலிகள் என்று குறிப்பிட்டு சாடுகின்றார். பொன்னினை உருக்க, அதனில் உள்ள மாசுகள் திரண்டு மேலே எழுந்து வரும். அந்த மாசினை பொற்கொல்லர் நீக்க, பொன் மேலும் ஒளியுடன் பிரகாசிக்கும். மேலும் காய்ச்ச வேண்டிய அவசியம் இல்லாத வண்ணம் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்கும் பொன் போன்று ஒளிவீசும் திருமேனி உடைய பார்வதி தேவி என்று இந்த பாடலில் கூறுகின்றார். முன்னுரையில் குறிப்பிட்ட வண்ணம், அங்கையார் அழலன் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்களில், மழபாடி நகரினைப் போற்றி புகழ்ந்து வணங்குவதால் விளையும் நன்மைகளை எடுத்து கூறியமை நாம் நினைவுகூர்தல் வேண்டும். மழுவாடி என்ற பெருமானின் பெயர் மழபாடி என்று திரிந்ததாக பொருள் கொண்டு, பெருமானைப் பணிந்து வணங்குமாறு திருஞானசம்பந்தர் சொல்கின்றார் என்று சொல்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

மேலும் காய்ச்சி ஒளி சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாத பொன் போன்று மிகுந்த ஒளியுடன் திகழும் திருமேனியினை உடைய அன்னை பார்வதி தேவியால் நோக்கப்படுவதும், வைரம் போன்று வலிமை வாய்ந்ததும் ஆகிய திரண்ட தோள்களை உடையவனும், குறை ஒன்று இல்லாது தன்பால் பட்ட பொருட்களை அப்படியே காட்டும் பளிங்கு நிறத்தில் திருமேனியை உடையவனும் பசுவிலிருந்து எடுக்கப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு பண்டைய நாளிலிருந்தே நீராடி மகிழ்பவனும் ஆகிய பெருமானைப் பேணிப் போற்றுவீர்களாக. அவ்வாறு செய்யாமல் வீண் பேச்சுக்களைப் பேசி காலத்தை கழிக்கும் அறிவிலிகளே, அத்தகைய பேச்சுகளால் நீங்கள் பெறுகின்ற பயன் தான் யாது, ஏதுமில்லை. நீங்கள் போற்றிப் புகழ வேண்டிய பெருமான் உறையும் மழபாடி நகரம் பலவிதங்களிலும் அழகாக திகழும் மாளிகைகள் கொண்டது. அந்த நகரத்தினை வாழ்த்தியும் பெருமானைப் போற்றியும் பயனடைவீர்களாக.

பாடல் 3

களையும் வல்வினை (2.009) பாடல் 3 (திதே 0711)

களையும் வல்வினை (2.009) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0712)

களையும் வல்வினை (2.009) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் 4 (திதே 0713)

உரம் கெடுப்பவன் உம்பர்கள் ஆயவர் தங்களைப்

பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன் தனை

முரண் கெடுப்பவன் முப்புரம் தீயெழச் செற்று முன்

வரம் கொடுப்பவன் மாமழபாடியுள் வள்ளலே

விளக்கம்:

உரம்=வலிமை; உம்பர்கள் என்ற சொல்லினை உரம் கெடுப்பவன் மற்றும் பரம் கெடுப்பவன் ஆகிய இரண்டு சொற்றொடர்களுக்கும் பொதுவாக கொள்ள வேண்டும். உம்பர்=தேவர்; பரம்=தெய்வத் தன்மை, மேலான தன்மை; பகலோன்=சூரியன்; தக்கன் செய்த வேள்வியில் பங்கேற்கச் சென்ற தேவர்கள், வேதநெறிக்கு மாறுபட்ட வேள்விக்கு துணையாக சென்றமையால், அவர்கள் தங்களது தெய்வத் தன்மையை இழந்தனர் என்று இங்கே கூறப்படுகின்றது. தக்கன் செய்த செயல் தவறு என்று தெரிந்த போதும், அவனிடம் இருந்த பயத்தினால் அவனைக் கண்டிக்க எவரும் தைரியம் இல்லாத நிலையில், சிவபெருமான் வேதநெறிக்கு மாறாக வேள்வி செய்து முடிக்க முயற்சி செய்த தக்கனையும், அந்த யாகத்தில் பங்கேற்ற தேவர்களையும் தண்டித்தார். தவறான காரியம் செய்து தண்டனை பெற்றதால், அந்நாள் வரை உயர்ந்தவர்களாக கருதப்பட்ட தேவர்கள், அந்த நிலையிலிருந்து, கீழே இறங்கியமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. முரண்=வேத நெறியிலிருந்து மாறுபட்ட நிலை. பெருமானுடன் பகைமை கொண்டு, அவனை இகழ்ச்சியாக பேசி, பெருமானை விலக்கி வைத்து வேள்வி செய்வதன் மூலம், பெருமானை அவமதிக்கத் திட்டம் தீட்டியவன் தக்கன். வேதநெறிக்கு மாறான இந்த செயலை செய்யவேண்டாம் என்று அத்ரி முதலான முனிவர்கள் சுட்டிக் காட்டிய பின்னரும் தனது திட்டத்தை கைவிடுவதற்கு தக்கன் தயாராக இல்லை. பெருமானிடம் பகைமை பாராட்டிய அவனுடன் நட்பு கொண்டு, அவனது யாகத்தில் பங்கேற்றதால் தேவர்கள் மீதும் பெருமான் கோபம் கொண்டார். தேவர்களாயினும், அவர்கள் பெருமானுடன் பகைமை கொண்டால், தண்டனை அடைவார்கள் என்பது இந்த நிகழ்ச்சி மூலம் உணர்த்தப் படுகின்றது. தக்கன் தனது மாமனாக, தனது மனைவியின் தந்தையாக இருந்த போதிலும், செய்த தவறுக்காக தக்கனும் தண்டனை பெறுகின்றான். இந்த குறிப்பு நமக்கு பழுவூர் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பாடல் (2.34.7) ஒன்றினை நினைவூட்டுகின்றது. தனது மாமனார் செய்த வேள்வியை அழித்தவன் பெருமான் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மந்தணம்=இரகசியம்; சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமலும், தனது மகளாகிய தாட்சாயணிக்கும் தெரிவிக்காமல் நடத்த திட்டமிடப்பட்ட வேள்வி என்பதால் இரகசியமாக செய்யப்பட்ட வேள்வி என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தான் இருந்த இடத்திலே இருந்து கொண்டு அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த பெருமான், எங்கும் நடப்பதையும் நடக்கவிருப்பதையும் அறியும் ஆற்றல் படைத்த பெருமான், அறியாத இரகசியம் ஏதேனும் உண்டோ. அந்த வேள்வி நடக்கும் இடத்திற்கு சென்றால், தனது மகள் என்றும் பாராமல், தக்கன் தாட்சாயணியை இழிவாக நடத்துவான் என்பதையும் முன்கூட்டியே அறிந்திருந்த காரணத்தால் அல்லவா, இறைவன் தனது மனைவி அங்கே செல்ல வேண்டாம் என்று கூறுகின்றார். மாமடி=மாமனார், தக்கன்; சிந்த=அழியுமாறு; வேத நெறிகளுக்கு மாறாக செய்யும் வேள்வி இனிதாக முடிவடைந்தால், அது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் என்ற காரணத்தினால் அந்த வேள்வி அழியும் வண்ணம் பெருமான் செயல்படுகின்றார். சுவடு ஒற்று=அடையாளம் பட ஒற்றிக் கொள்ளுதல்; அணிகலன்கள் அணிந்த அழகிய மாதர்களின் காலடிச் சுவடுகள் உடைய தலம் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மங்கையர்கள் ஆடியும் பாடியும் பெருமானைத் தொழுததை உணர்த்தும் திருஞான சம்பந்தரின் குறிப்புகளின் பின்னணியில், சுவடொற்று என்று திருஞான சம்பந்தர் குறிப்பது மாதர்கள் நடனமாடுவதால் ஏற்படும் சுவடுகளை தான் என்று நாம் புரிந்து கொள்ளலாம். மட்டு=நறுமணம் மட்டார்=நறுமணம் நிறைந்த; பைந்தொடி=பசும்பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்கள்;

மந்தணம் இருந்து புரி மாமடி தன் வேள்வி

சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர்

அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டார்

பைந்தொடி நன்மாதர் சுவடு ஒற்று பழுவூரே

பெருமான் அறிந்து கொள்ள முடியாத வண்ணம், இரகசியமாக திட்டமிட்டு பெருமானின் மாமன் தக்கன், வேள்வி செய்யத் தொடங்கிய போதிலும், அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த பெருமான், தனது அம்சமாகிய வீரபத்திரரை தக்கனது வேள்வி நடக்கும் இடத்திற்கு ஏவுகின்றார். அங்கு சென்ற வீரபத்திரர் விளையாடுவது போன்று, வேள்வியில் பங்கேற்ற பலருக்கும் தண்டனை அளித்து, வேள்வி நடக்காமல் அழிக்கின்றார். இவ்வாறு திருவிளையாடல் புரிந்த பெருமானது உறைவிடம் பழுவூர் என்று கூறுவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தலத்தினில், அந்தணர்கள் வேள்விகளில் ஆகுதியாக இடும் அகில் கட்டைகளின் புகைகள் எங்கும் நறுமணத்தை பரப்பும் இந்த தலத்தினில், பெருமானைப் பணிந்து நடமாடும் மங்கையர்களின் காலடிச் சுவடுகள் எங்கும் காணப்படுகின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெருமான் பகையும் நட்பும் இல்லாத பரஞ்சுடர். வேண்டுதல் வேண்டாமை இலானாக விளங்கும் பெருமான், தன்னுடைய மாமனார் என்பதற்காக தக்கன் செய்த தவறுகளுக்கு தண்டனை அளிக்காமல் விட்டுவிடவில்லை. தனது உறவினைரையும் அயலாரைப் பார்ப்பது போன்று பாவித்து தக்கனுக்கு தண்டனை வழங்கிய பெருமான் என்று திருஞானசம்பந்தர் உசாத்தானம் பதிகத்துப் பாடல் ஒன்றினில் (3.33.3) குறிப்பிடுகின்றார். தாமலார் போலவே=தாம் சுற்றம் அல்லாது அயலார் போன்று இருத்தல்; இந்த பாடலில் ஊமை கண்ட கனவு போல் தக்கனது வேள்வியை இறைவன் மாற்றினார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஊமை, தனக்கு பேசும் சக்தி இல்லாத காரணத்தால், தான் கண்ட கனவின் விவரங்களை அடுத்தவருக்கு சொல்ல முடியாமல் வருந்துவான். சிவபெருமானை புறக்கணித்து வேள்வி செய்து, உலகுக்கு ஒரு எடுத்துக் காட்டாக நின்று, மற்றவரும் பெருமானை புறக்கணித்து வேள்வி செய்வதற்கு, வழி வகுப்பேன் என்று வீராப்பு பேசி, தடபுடலாக வேள்வியைத் தொடங்கிய தக்கன், வேள்வி முற்றுப் பெறாத காரணத்தாலும், தானும் தன்னைச் சார்ந்தவர்களும் தண்டிக்கப்பட்டு அவமானம் அடைந்ததாலும், உயிர் தப்பிக்க பெருமானிடம் இறைஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டதாலும், தான் செய்த வேள்வி குறித்து எவரிடமும் பேசுவதைத் தவிர்த்த தக்கனின் நிலையினை, தான் கண்ட கனவினை எவரிடமும் சொல்ல முடியாத ஊமையின் இகழ்வான நிலைக்கு திருஞானசம்பந்தர் இங்கே ஒப்பிடுகின்றார். க்ஷேமம் என்ற வடமொழிச் சொல் சேமம் என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தாமலார் போலவே தக்கனார் வேள்வியை

ஊமனார் தம் கனா ஆக்கினான் ஒரு நொடிக்

காமனார் உடல் கெடக் காய்ந்த எம் கண்ணுதல்

சேமமா உறைவிடம் திருவுசாத்தானமே

தன்னை இகழ்வாக பேசிய தக்கனை தண்டித்தது போன்று, தன்னைப் போற்றாது வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்களை அழித்த பெருமான், திரிபுரத்தில் வாழ்ந்தாலும் தன்னை மறவாது போற்றிய மூன்று அடியார்களுக்கு அருள் புரிந்தமையும் இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. இந்த பாடலில் திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அரக்கர்களுக்கு சிவபெருமான் அருள் புரிந்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. இந்த நிகழ்ச்சி பல திருமுறைப் பாடல்களில் கூறப் படுகின்றது. சுதன்மன், சுசீலன், சுபுத்தி என்ற மூன்று அரக்கர்கள் திரிபுரத்து நகரங்களில் வாழ்ந்து வந்தவர்கள். திருமாலும் நாரதரும் சேர்ந்து செய்த சூழ்ச்சியால். தங்களது மனம் பேதலித்து, திரிபுரத்து அரக்கர்கள் அனைவரும் வேத நெறியையும், சிவ நெறியையும் கைவிட்ட பின்னரும், சுதன்மன் முதலான மூவரும், சிவபெருமானையே தொடர்ந்து வழிபட்டு வந்தார்கள். அதனால் அவர்கள் மூவரின் மீது கருணை கொண்ட சிவபெருமான், மூன்று கோட்டைகளைஅழிந்த போதும் இவர்கள் மூவரும் அழியாமல் காப்பாற்றினார் என்று இலிங்க புராணம் குறிப்பிடுகின்றது. இவர்கள் மூவரையும் அழியாமல் காப்பாற்றிய கருணைச் செயல், மணிவாசகரின் திருவாசகம் திருவுந்தியார் பதிகத்திலும் குறிப்பிடப் படுகின்றது.

உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு

எய்ய வல்லானுக்கே உந்தீ பற

இளமுலை பங்கன் என்று உந்தீ பற

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.11.7) திருஞானசம்பந்தர், தன்னை வழிபட்ட திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் அழியாத வரங்கள் அளித்தான் என்று கூறுகின்றார். முதல் அடியில் உள்ள சொற்களை சிரத்தான் மலி கரத்தான் என்று மாற்றி பொருள் கொள்ள வேண்டும். பிரம கபாலம் பொருந்திய கரத்தினை உடையவன் என்று பொருள். படத்தான்=போர்வையாக போர்த்துக் கொண்டவன்; ஓவா=என்றும் அகலாமல் பெருமானுடன் இணைந்திருக்கும் தன்மை; தன்னடி பணி மூவர்கட்கு= தொடர்ந்து தன்னை வழிபட்டுக் கொண்டிருந்த மூன்று அரக்கர்கள்.

கரத்தான் மலி சிரத்தான் கரி உரித்தயாதொர் படத்தான்

புரத்தார் பொடிபடத் தன்னடி பணி மூவர்கட்கு ஓவா

வரத்தான் மிக அளித்தான் இடம் வளர் புன்னை முத்து அரும்பி

விரைத் தாது பொன் மணி ஈன்று அணி வீழிம்மிழலையே

இந்த செய்தி திருஞானசம்பந்தர் அருளிய திருவண்ணாமலை பதிகத்தின் முதல் பாடலிலும் (1.69.1) காணப் படுகின்றது. தொறு=ஆடுகள்: நிரை=மந்தை; ஆமாம் பிணை= காட்டுப் பசுக்கள்; தன்னைத் தொழும் அடியார்களுக்கு அருள் புரியும் சிவபெருமானை, அவனது அடியார்கள் பூக்களைக் கொண்டு தொழுவதாகவும், தேவர்கள் அவனைப் புகழ்வதாகவும் இங்கே கூறுகின்றார். மழைக்கு, மலையின் அடிவாரத்தில் பதுங்கும் ஆட்டு மந்தைகள் மற்றும் பசுக்கூட்டங்கள் என்று அண்ணாமலையின் நீர்வளம், நிலவளம் இங்கே கூறப்படுகின்றது. அரும்புகளும் விரிந்து மலர்ந்த மலர்களும் கொண்டு நிலவுலகத்தில் உள்ள அடியார்கள் பெருமானைத் தொழுகின்றனர்; வானோர்கள் தோத்திரங்கள் சொல்லி இறைவனது புகழினை எடுத்துரைக்கின்றனர். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமான், பண்டைய நாளில், திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்து அழித்த போதிலும், அந்த கோட்டைகளில் வாழ்ந்து வந்த தனது அடியார்கள் மூவரும் அழியாமல் அவர்களை பாதுகாத்த பெருமான், அண்ணாமலை தலத்தினில் உறைகின்றார். மழைத்துளிகள் பொழியும் மேகங்கள் ஒன்றோடொன்று மோதி செய்யும் இடிமுழக்கத்தின் ஓசை கேட்டு அச்சமடைந்த மந்தை ஆடுகளும் காட்டுப் பசுக்களின் கூட்டமும், ஒருங்கிணையும் அடிவாரத்தை உடையது திருவண்ணாமலை தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பூவார் மலர் கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்

மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்

தூமா மழை நின்று அதிர வெருவி தொறுவின் நிரையோடும்

ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.84.3) திரிபுரத்தில் வாழ்ந்து வந்த தனது அடியார்களுக்கு சிவபெருமான் அருள் புரிந்தார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நாகைக் காரோணம் தலத்தில் ஆரவாரமாக தேர்த் திருவிழா நடைபெறுவதை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இவ்வாறு இடைவிடாது தொடர்ந்து நடத்தப்படும் அத்தகைய விழாக்களைத் தனது செல்வமாகக் கொண்டவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

பாரோர் தொழ விண்ணோர் பணியம் மதின் மூன்றும்

ஆரார் அழல் ஊட்டி அடியார்க்கு அருள் செய்தான்

தேரார் விழவு ஓவாச் செல்வன் திரை சூழ்ந்த

காரார் கடல் நாகைக் காரோணத்தானே

நெல்லிக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.19.1) திருஞானசம்பந்தர், அறத்தால் உயிர் காவல் அமர்ந்தருளினார் என்று பெருமான், திரிபுரத்து அரக்கர்கள் மூவரையும் காவல் செய்து மற்றவர் அனைவரும் எரிந்து அழியுமாறு பெருமான் செயல் புரிந்தார் என்று கூறுகின்றார். இந்த மூவரும் மூன்று வேறுவேறு கோட்டைகளில் வாழ்ந்து வந்தனர். ஒரு நகரத்தில் உள்ள அனைவரும் எரிந்து அழிந்த போதிலும், ஒருவரை மட்டும் அழியாமல் பெருமான் காத்தார் என்ற செய்தியிலிருந்து பெருமான், தனது அடியார்கள் பால் எத்துணை கருணை கொண்டவராக இருக்கின்றார் என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். அறத்தால்=தருமத்தை நிலை நாட்ட வேண்டி, தனது அடியார்களைக் காப்பது இறைவனின் கடமை என்ற அறம். உயிர்க்காவல்=உயிர்களை பாதுகாத்து, கோட்டை முற்றிலும் எரிந்து அழிந்த போதிலும் தனது அடியார்கள் மூவரும் எரியாமல் பாதுகாத்த திறமை; உயிர்க்காவல் என்ற தொடருக்கு பொதுவாக உயிர்களை பாதுகாத்து காத்தல் தொழிலை புரியும் பெருமான் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். எனினும் திரிபுரத்து அரக்கர்களின் குறிப்பு பாடலின் அடுத்த அடியில் காணப்படுவதால், சுதன்மன் சுசீலன் சுபுத்தி ஆகிய மூவரின் உயிரைக் காத்த மாண்பு உணர்த்தப் படுகின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. மாண்பு=பெருமை, எவராலும் அழிக்க முடியாத பெருமை; நிறத்தான் என்ற சொல்லினை தீ மற்றும் வெண்திங்கள் ஆகிய இரண்டு சொற்களுக்கும் பொதுவாக கருதி பொருள் கொள்ள வேண்டும். தீயின் நிறத்தன் மற்றும் வெண்திங்கள் நிறத்தான் என்று குறிப்பிட்டு, பொன் மலையில் வெள்ளிக் குன்றது போலிலங்கும் பெருமானின் தன்மை உணர்த்தப் படுகின்றது.

அறத்தால் உயிர்க் காவல் அமர்ந்து அருளி

மறத்தால் மதில் மூன்றுடன் மாண்பழித்த

திறத்தால் தெரிவெய்திய தீ வெண் திங்கள்

நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே

தனது சிரிப்பினால் மும்மதில்களும் வெந்து அழியுமாறு செய்த சிவபெருமான், தன்னை வணங்கிப் போற்றி வந்த திரிபுரத்தவர் மூவரும் மகிழுமாறு, அவர்கள் தன் பக்கத்தில் இருக்குமாறு அருள் செய்தான் என்ற தகவல் திருஞான சம்பந்தர் அருளிய வேதிகுடி பதிகத்தின் (3.78) ஐந்தாவது பாடலில் காணப்படுகின்றது. சொக்கர்=காண்போரை சொக்க வைக்கும் அழகு உடையவர்; உக்கு=பொடியாகி; அற=வீழ; கொக்கு பொழில்=மாமரச் சோலைகள்: வேதிகுடி தலத்தில் இருந்த மகளிர்களின் மேனி ஒளி, மாந்தளிர்களின் ஒளியினை விடவும் மிகுந்து இருந்ததாக திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அரவம் உற்ற=விளையாடும் மகளிரின் ஆரவாரம் பொருந்திய; கொக்கு=மாமரச் சோலைகள்; நிழல் என்ற சொல் இங்கே ஒளி என்ற பொருளில் வந்துள்ளது. மிக்க அமரர்=ஒளி பொருந்திய உடலை உடைய தேவர்கள்; துணை மிக்க என்று திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளும் ஒன்றுக்கொன்று துணையாக இருந்த நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க் கோட்டினில் இருக்கும் நேரத்தில் தான், ஒரே அம்பினைக் கொண்டு அந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்பது அந்த அரக்கர்கள் பெற்றிருந்த வரம். எனவே மற்ற இரண்டு கோட்டைகளை இணைக்கும் கோட்டிலிருந்து விலகி இருப்பதன் மூலம் மூன்றாவது கோட்டை அனைவரையும் பாதுகாப்பது அவர்கள் பெற்றிருந்த வரத்தின் மகிமை. எனவே தான் முதலில் விலகியிருந்த மூன்று கோட்டைகளையும் ஒன்றாக இணைத்த பெருமான், அதன் பின்னர் அம்பினை எய்தார் என்று பல திருமுறைப் பாடல்கள் கூறுகின்றன.

சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழு மூவர் மகிழத்

தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார் இனிது தங்கு நகர் தான்

கொக்கரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலாம்

மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடம் போக நல்கு வேதிகுடியே

காண்போரை சொக்க வைக்கும் அழகினை உடைய சிவபெருமான், அருகில் இல்லாது விலகி இருந்த போதிலும் மற்ற இரண்டு கோட்டைகளுக்கும் வலிமையான துணையாக இருந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றினையும் சாம்பல் பொடியாக மாற்றி எரித்து அழிக்கும் வண்ணம், அந்த அரக்கர்கள் பால் கோபம் கொண்டவன் சிவபெருமான். எனினும் அந்த கோட்டைகளில் வாழ்ந்து வந்த தனது அடியார்கள் மூவர் மேல், கோபம் கொள்ளாமல் காத்தது மட்டுமன்றி அவர்கள் மூவரும் மகிழும் வண்ணம், தனது வாயில் காப்பாளராகவும் முழவம் இசைப்போராகவும் ஏற்றுக் கொண்டு அருள் புரிந்து, அவர்கள் மூவரையும் எப்போதும் தனது அருகிலே வைத்துக் கொண்டவன் சிவபெருமான், இவ்வாறு கொடியவரை அழித்தும் அடியவரைப் போற்றியும் அருள் புரியும் பெருமான், மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கும் நகரம் வேதிகுடி. மாமரச் சோலைகளில் ஆரவாரம் செய்த வண்ணம், விளையாடும் மகளிரின் மேனி ஒளியானது, மாந்தளிர்களின் ஒளியை விடவும் அதிகமாக காணப்பட்டு வெற்றி கொண்ட தன்மையை சோலைகளில் திரியும் வண்டுகள் இசைப் பாடல்களாக பாடுகின்றன. மேலும் வலிமை மிக்க தேவர்கள் பெருமானைப் புகழ்ந்து பாடும் ஒலிகளும் கலந்து காணப்படும் வேதிகுடி தலத்தில் உறையும் பெருமானைத் தொழும் அடியார்களின் அச்சம் தீங்கு இடர்கள் ஆகியவற்றை நீக்கி நன்மை அளித்து அருள் புரியும் பெருமான் உறையும் இடம் வேதிகுடி தலமாகும் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.81.6) திருஞானசம்பந்தர் மூவர்க்கு பெருமான் அருள் புரிந்த கருணைச் செய்கையை குறிப்பிடுகின்றார். பற்றலர்=வேத நெறியின் மீது சைவ நெறியின் மீது பற்று வைக்காத திரிபுரத்து அரக்கர்கள்; வெள்ளில்=பாடைகள்; இறந்தவர்களின் உடல் வைக்கப்படும் படுக்கை; முது கானம்=முதுகாடு, சுடுகாடு; பற்று=விருப்பம்; பாரிடம்=பூத கணங்கள்; துற்ற=நெருங்கி அடர்ந்த; கிளவி=வெளிப்படும் ஓசை; பூதங்கள் பாடும் பாடல், காதுக்கு இனிமையாக இருக்காது என்பதால் ஓசை என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தாயாக விளங்கும் பெருமான் என்று இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், தந்தையாகவும் பெருமான் அருள் புரிகின்றார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அன்பு காட்டி தனது மக்களை வளர்ப்பவள் தாய்; அறிவினை ஊட்டி தங்களது குழந்தைகளை உருவாக்குபவர் தந்தை; நம் பால் அன்பு வைத்து, நமது அறியாமையை நீக்கி ஞானம் உணர்த்துபவர் இறைவன் என்பதால், தாய் மற்றும் தந்தை ஆகிய இருவர் போலும் இறைவன் செயல்பட்டு உயிர்களுக்கு அருள் புரிவதை நாம் உணரலாம். வேதநெறியின் மீதும் சைவ நெறியின் மீது பற்று வைக்காது வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து திரிபுரத்து அரக்கர்கள் அனைவரையும் அழித்தவன் சிவபெருமான்; தனது திருவடிகளைப் பணிந்த அடியார்களின் மேல் படர்ந்துள்ள குற்றங்கள் அனைத்தையும் ஒழித்து திருவருள் புரிவதையே தனது கொள்கையாகக் கொண்டவன் சிவபெருமான்; அவர், பாடைகள் மலிந்து எங்கும் சிதறிக் காணப்படும் சுடுகாட்டின் மீது விருப்பம் வைத்து, பூத கணங்கள் தன்னைப் புகழ்ந்து பாடும் பாடல்கள் எழுப்பும் ஓசையின் பின்னணியில் ஆங்கே நடமாடும் தன்மையினர்; அடர்ந்து நெருங்கி வளர்ந்துள்ள சடையினை உடைய அவர், அனைத்து உயிர்களுக்கும் தந்தையாக வீற்றிருந்து ஞானத்தை உணர்த்தி, அருள் புரியும் இடம் தோணிபுரமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பற்றலர் தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர் கண் மேலைக்

குற்றமது ஒழித்து அருளு கொள்கையினன் வெள்ளின் முது கானில்

பற்றவன் இசைக் கிளவி பாரிடமது ஏத்த நடமாடும்

துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரமாமே

பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.121.7) திருஞானசம்பந்தர் திரிபுரத்து அடியார்கள் மூவரையும் முற்றிய தவம் செய்தவர் என்று குறிப்பிடுகின்றார். எற்றுதல்=மோதுதல், எதிர்த்தல்; இடை கொள்வார்=துன்பம் செய்பவர் தேற்றினார்=அழித்தல் தொழிலைச் செய்யும் பகைவர்கள்; முற்றினார்=முற்றிய தவம் செய்தவர்கள்; தமக்கு பகைவர்களாக விளங்கி, தாங்கள் சென்ற வழியில் இடைமறித்து போருக்கு அழைப்பவர் எவருமில்லாத நிலையிலும், நிலவுலகம் மற்றும் வானுலகத்தில் இருந்தவர்களை துன்புறுத்தியும் அழித்தும் போர் செய்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் நடுவே பெருமானின் திருவடிகளை சென்று அடையும் நோக்கத்துடன் முற்றிய தவத்துடன் வாழ்ந்து வந்த சுதன்மன் சுசீலன் சுபுத்தி ஆகிய மூவரைத் தவிர்த்து திரிபுரத்தில் வாழ்ந்து வந்த ஏனையோரை தீயினில் வேகவைத்து அழித்த பெருமான், மூவிலைச் சூலமும் மழு ஆயுதமும் தனது கையில் ஏந்தியவர் ஆவார். அவரே பந்தணைநல்லூர் தலத்தில் பசுபதி என்ற திருநாமத்துடன் விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இருநிலம் வானுலகு எல்லை

தெற்றினார் தங்கள் காரணமாகச் செரு மலைந்து அடியிணை சேர்வான்

முற்றினார் வாழும் மும்மதில் வேவ மூவிலைச் சூலமும் மழுவும்

பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே

விடைவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பத்தாவது பாடலிலும் (3.126.10) இந்த செய்தி குறிப்பிடப் படுகின்றது. சிவநெறியை அடையாதார் புரங்கள் மூன்றும் வேவ மூவர்க்கு அருள் செய்த பெருமான் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

உடை ஏதும் இலார் துவராடை உடுப்போர்

கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர்

அடையார் புரம் வேவ மூவர்க்கு அருள் செய்த

விடையார் கொடியான் அழகார் விடைவாயே

திருத்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.42.2) அப்பர் பிரான், திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் அருள் புரிந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். சவை=பயனற்றது, மனைவி, மக்கள் மற்றுள்ள உறவினர்கள் கூட்டம்; சலம்=சஞ்சலம், துன்பம்; ஐம்புலன்கள் தரும் சிற்றின்பத்தை பெரிதாக மதித்து வாழும் வாழ்க்கையினை இதே பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலில் உடலின்பத்தை பெரிதாக கருதி குடும்பத்தை விரிவு படுத்திக் கொண்டு வாழும் வாழ்க்கையினை குறிப்பிடுகின்றார். அவைபுரம் என்ற சொல்லினை புரமவை என்று மாற்றி படிக்க வேண்டும். அருளிச் செய்த சுவை என்று குறிப்பிட்டு, திரிபுரத்து அடியார்கள் மூவரும் அடைந்த இன்பச்சுவையினை குறிப்பிடுகின்றார். இல்லற வாழ்வில் ஈடுபட்டு, குடும்பத்தைப் பெருக்குவதே நோக்கமாகக் கொண்டு, பலவிதமான துன்பங்களில் ஆழ்ந்து வாழும் மாந்தர்களே, இந்த வாழ்க்கை நிலையான வாழ்க்கை அல்ல; நம்மைச் சுற்றியிருக்கும், மனைவி, மக்கள் சுற்றத்தார் ஆகிய கூட்டமும் எப்போதும் நம்முடன் இருக்கப் போவதுமில்லை. எனவே நிலையான பொருளாகிய இறைவனை நீங்கள் புகழ்ந்து பாடுவீர்களாக. வானில் பறந்து கொண்டு அனைவர்க்கும் இடர்கள் செய்து வந்த மூன்று கோட்டைகளையும் எரித்து, தனது அடியவர்களின் துயர் தீர்த்தருளிய பெருமானை, அடியார்களுக்கு இனியவனாகத் திகழ்பவனை, துருத்தி தலத்தில் உறைபவனை, அவனது தொண்டனாகிய நான் கண்டேன். நீங்களும் அவனை எப்போதும் நினைத்து அவனது திருக்கோலத்தைக் காண்பீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற

இவை ஒரு பொருளுமல்ல இறைவனை ஏத்துமின்னோ

அவை புரம் மூன்றும் எய்து அடியவர்க்கு அருளிச் செய்த

சுவையினைத் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.58.3) அப்பர் பிரான், மருவலார் புரங்கள் மூன்றையும் எரியில் மாட்டி அழித்த போதிலும், பெருமான் ஆங்கே வாழ்ந்து வந்த தனது அடியார்களுக்கு அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். கரவு=உள்ளதை மறைத்தல்; மருவலார்=பகைவர்; மாட்டிய=நெருப்பால் கொளுத்திய; பரவுதல்=வாழ்த்துதல்; அல்லும் பகலும் எப்போதும் நடனமாடியவராக இருப்பவர் சிவபெருமான். ஊழிக்காலத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருக்கும் நிலையிலும் விடாது பெருமான் நடனம் ஆடுவதை, நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். அதே போன்று அப்பர் பிரானும் இந்த பாடலில் இரவு நின்று எரியதாடி என்று குறிப்பிடுகின்றார். பரவுவார்க்கு அருள் செய்தார் என்ற குறிப்பின் மூலம், தொடர்ந்து தன்னை தொழுது கொண்டிருந்த திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் பெருமான் அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். தங்களது மனதினில் வஞ்சனை ஏதும் இல்லாதவர்களாக, தாங்கள் நினைப்பதை ஒளிக்காதவர்களாக, இறைவனை என்றும் தங்கள் கைகளால் தொழுது வழிபடும் அடியார்களுக்கு இனிய அருள்கள் புரிபவர் இறைவன்; அவர் ஊழிக்காலத்தின் இருளில் நெருப்பின் இடையில் நின்ற வண்ணம் நடனமாடுகின்றார். பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து முற்றிலும் அழித்த பெருமான், தன்னைப் புகழ்ந்து பாடும் அடியார்களுக்கு மிகவும் அருள் புரிகின்றார். அத்தகைய இறைவனார் பருப்பதத்தை நோக்கி அதனை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கரவிலா மனத்தராகிக் கைதொழுவார்கட்கு என்றும்

இரவு நின்று எரியதாடி இன்னருள் செய்யும் எந்தை

மருவலார் புரங்கள் மூன்று மாட்டிய வகையராகிப்

பரவுவார்க்கு அருள்கள் செய்து பருப்பதம் நோக்கினாரே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.9) திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த தலையான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கோளரி=வெற்றி கொண்ட சிங்கம், நரசிங்கமாக திருமால் தோன்றியதை குறிப்பிடுகின்றார். நரசிம்மராக வந்த திருமால் என்று குறிப்பிட்டு அம்பின் வலிமையை அப்பர் பிரான் நயமாக உணர்த்துகின்றார். கலை=மான்; கொள்கையான்=செய்கையான், செயலைச் செய்தவன்; தத்துவம்=மேலான, உண்மையான பொருள்; திரிபுரத்து அசுரர்கள் புத்தனும் நாரதனும் கூறிய மயக்க மொழிகளால் கவரப்பட்டு வேத நெறியை கைவிட்டு, சிவ வழிபாட்டை நிறுத்தி, சிவ நிந்தனை செய்த போதிலும், அந்த நிலையிலும் மனம் மயங்காமல் சிவனை தொடர்ந்து ஆராதித்து வந்த மூவர்க்கு (சுதன்மன், சுசீலன், சுநீதன்) அருள் புரிந்த தன்மை இந்த பாடலில் திரிபுரத்து ஓர் மூவர்க்கு செம்மை செய்த தலையான் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. திரிபுரத்தின் மேல் படையெடுத்து சென்ற போது, திருமால் அம்பின் கூரிய முனையாக நின்ற தன்மையும் இந்தப் பாடலில், கோளரியை கூர் அம்பா வரை மேல் கோத்த சிலையான் என்று கூறப் பட்டுள்ளது. கொலை வெறியுடன் தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட செய்கையினை உடையவனும், நரசிம்மமாக அவதாரம் எடுத்த திருமால் அம்பின் தண்டாக பங்கேற்க, அந்த அம்பினை மேரு மலையினை வில்லாக வளைத்து அதனில் பொருத்தி திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்றவனும், அனைவர்க்கும் நன்மை தரும் செய்கைகளை செய்பவனும், திரிபுரத்தில் வாழ்ந்து வந்த சுதன்மன் சுசீலன் சுநீதன் (சில புராணங்களில் சுமாலி என்று கூறப்படுகின்றது) ஆகிய மூவரையும் கொல்லாமல் விடுத்து நன்மை செய்தவனும், அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக உள்ளவனும், உண்மையான மெய்ப்பொருளாக உள்ளவனும், பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், தனது கையினில் மான் கன்றினை ஏந்தியவனும், அனைவர்க்கும் மேலானவனும் ஆகிய இறைவன் கற்குடி தலத்தில் கற்பகமாக எழுந்தருளி இருப்பதை அடியேன் எனது கண்களால் கண்டு உய்ந்தேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

கொலை யானை உரி போர்த்த கொள்கையானைக் கோளரியைக் கூரம்பா வரை மேல் கோத்த

சிலையானைச் செம்மை தரு பொருளான் தன்னைத் திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த

தலையானைத் தத்துவங்கள் ஆனான் தன்னைத் தையலோர் பங்கினனை தன் கை ஏந்து

கலையானைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

நாரையூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.74.8) திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அடியார்களுக்கு பெருமான் அருள் புரிந்ததை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இயமனுக்கு அந்தகன் என்ற பெயரும் உண்டு. தான் பறிக்க வேண்டிய உயிரின் தன்மையை, எந்த நிலையில் உள்ளார், எப்படிப்பட்டவர் என்பதை நோக்காமல், குருடனைப் போன்று உயிர் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் அந்தகன் என்று இயமன் அழைக்கப் படுகின்றான். அந்த இயமனுக்கும் இயமனாக செயல்பட்டு பெருமான் இயமனுக்கே முடிவைத் தேடித் தந்தமை, இங்கே அந்தகனுக்கு அந்தகன் என்ற தொடரால் குறிக்கப் படுகின்றது என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. திருமாலும் பிரமனும் தங்களுக்குத் தந்தை என்று தொழுது ஏத்தும் பெருமான் சிவபெருமான்; திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் காண முடியாது நின்ற நிலை போன்று சிவபெருமானின் பெருமைகள் பலவற்றைக் குறிப்பிடும் இலிங்க புராணத்து நாயகன் சிவபெருமான்; எவராலும் வெல்ல முடியாத அந்தகாசுரனுக்கு முடிவினைத் தேடித் தந்தவன் சிவபெருமான், எண்ணாகவும், எழுத்தாகவும், பண்ணாகவும் உள்ளவன் சிவபெருமான்; திரிபுரத்து கோட்டைகளை அழித்த போது, தன்னை எப்போதும் மறவாமல் அங்கே வாழ்ந்து வந்த மூன்று அரக்கர்களுக்கு அருளியவன் சிவபெருமான்; ஆனைக்கா தலத்தில், நாவல் மரத்தின் இலைகள் சருகுகள் இலிங்க மூர்த்தத்தின் மேல் வீழாமல் தடுக்க, பந்தர் அமைத்த சிலந்தி அடுத்த பிறவியில் சோழ மன்னனாக பிறக்குமாறு அருள் புரிந்தவன் சிவபெருமான்; நரிகளுடன் மற்ற விலங்குகளும் கலந்து திரியும் சுடுகாட்டில் நடனம் புரிபவன் சிவபெருமான்; இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

அரிபிரமர் தொழுது ஏதும் அத்தன் தன்னை அந்தகனுக்கு அந்தகனை அளக்கலாகா

எரிபுரியும் இலிங்க புராணத்துளானை எண்ணாகிப் பண்ணார் எழுத்துளானை

திரிபுரம் செற்று ஒரு மூவர்க்கு அருள் செய்தானைச் சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை

நரிவிரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.6.1) சுந்தரர், திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் பெருமான் அருள் புரிந்ததை குறிப்பிடுகின்றார். விடங்கர்=எவராலும் தோற்றுவிக்கப் படாமல் தானே தோன்றியவர்; அடங்கலார்=எவருக்கும் அடங்காது அனைவரையும் துன்புறுத்தி வந்த திரிபுரத்து அரக்கர்கள், பகைவர்கள்; திரிபுரத்து அரக்கர்கள் பால் கோபம் கொண்டு ஒரு நொடிக்கும் குறைந்த நேரத்தில் அவர்களது மூன்று கோட்டைகளையும் அழித்த போதிலும், பெருமான் தனது அடியார்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட்ட விதம், தனது அடியார்கள் பால் அவர் கொண்டுள்ள அன்பின் தன்மையை நமக்கு உணர்த்துகின்றது. மடங்கலான்=ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களையும் தனது வயிற்றினில் அடக்கிக் கொள்ளும் பெருமான்; வேலை=கடலலைகள்

படங்கொள் நாகம் சென்னி சேர்த்திப் பாய்புலித் தோல் அரையில் வீக்கி

அடங்கலார் ஊர் எரியச் சீறி அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்

மடங்கலானைச் செற்று உகந்தீர் மனைகள் தோறும் தலை கையேந்தி

விடங்கராகித் திரிவதென்னே வேலை சூழ் வெண்காடனீரே

திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் அருள் புரிந்த செய்தி சுந்தரரின் திருப்புன்கூர் பதிகத்தின் ஒரு பாடலில் (7.55.8) சொல்லப் படுகின்றது. அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்த திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த நகரில், சுதன்மன், சுசீலன், சுபுத்தி எனப்படும் மூன்று அரக்கர்கள், தங்களது மன்னர்களாகிய வித்யுன்மாலி, தாருகாட்சன் மற்றும் கமலாட்சன் ஆகிய மூவர்களிடம் கொண்டிருந்த அச்சத்தால், அங்கே வாழ்ந்து வந்த ஏனையோர் சிவ வழிபாட்டினை நிறுத்தி விட்ட போதும், தொடர்ந்து சிவபிரானை வழிபட்டு வந்தார்கள். இவர்கள் மூவரும் பெருமானிடம் கொண்டிருந்த அன்பு காரணமாக, திரிபுரங்கள் மூன்றும் அழிக்கப்பட்ட போதும், இவர்கள் மூவரும் இறவாது இருந்தார்கள். மேலும் சுதன்மன் சுசீலன் என்ற இருவரும் பெருமானின் வாயில் காப்பாளராகவும், சுபுத்தி பெருமானின் எதிரே மத்தளம் வாசிப்பராகவும் இருக்கும் தகுதியை அடைந்தார்கள். பெருமானிடம் அன்பு கொண்டு, அச்சம் நடுக்கம் ஏதுமின்றி, பெருமானை வழிபட்ட மூவர்கள் எய்திய பெருமை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இந்த மூன்று அடியார்களும் எப்போதும் பெருமானின் அருகில் இருக்கும் வாய்ப்பு பெற்றனர்.

மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயில் வாய்தல்

காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரி காடு அரங்காக

மானை நோக்கியோர் மாநடம் மகிழ மணிமுழா முழக்க அருள் செய்த

தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.66.5) திரிபுரத்து அடியார்கள் மூவருக்கு அருள் செய்த தன்மையை சுந்தரர் குறிப்பிடுகின்றார். ஒக்க=ஒரு சேர; எப்போதும் வானில் பறந்து கொண்டிருந்த கோட்டைகள் என்பதால், நொடிக்கும் குறைவான நேரமே இந்த கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டினில் இருக்கும்; அந்த சிறிய நேரத்தை பயன்படுத்தி, மூன்று கோட்டைகளையும் ஒரே சமயத்தில் பெருமான் எரித்த செயல், ஒக்க என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. அம்பினை எய்தி தீ மூட்டிய செய்கை தூவ என்ற சொல் மூலம் சொல்லப் படுகின்றது. உன்னிய=தியானம் செய்த; பொன்னுலகு என்று திருக்கயிலாயத்தை குறிப்பிட்டு அவர்கள் மூவரும் உயர்ந்த கதியை அடைந்தமை சொல்லப் படுகின்றது. மற்ற கணங்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த பதவி பெற்றவர்களாக இருப்பதால், (வாயில் காப்பாளர் மற்றும் முழவு வாசிப்போர்) பொன்னுலகு ஆள என்று குறிப்பிட்டார் போலும். அரை=இடுப்பு; அக்கு=எலும்பு மாலை;

ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம்

புக்கு மற்றவர் பொன்னுலகு ஆளப் புகழினால் அருள் ஏந்தமை அறிந்து

மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில்

அக்கணிந்த எம்மான் உனை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய மற்றொர் பதிகத்தின் பாடலில் (7.70.3) திரிபுரத்து அடியார்கள் மூவருக்கும் செய்து அவர்களது உயிரை காத்த பெருமான் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், பெருமானே நீர் என்னை அஞ்சல் என்று சொல்லி அருள் புரியவேண்டும் என்றும் பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறெவரும் உறவு இல்லை என்றும் கூறுகின்றார். இந்த தலத்து அம்பிகையின் திருநாமம் ஒப்பிலா முலையம்மை. அந்த திருநாமமே இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது.

ஒப்பிலா முலையாள் ஒரு பாகா உத்தமா மத்தமார் தரு சடையாய்

முப்புரங்களை தீ வளைந்தாங்கே மூவருக்கு அருள் செய்ய வல்லானே

செப்ப ஆல் நிழல் கீழிருந்தருளும் செல்வனே திருவாவடுதுறையுள்

அப்பனே எனை அஞ்சல் என்றருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவாசகம் தோணோக்கம் பதிகத்தில் மணிவாசகரும், திரிபுரத்தில் வாழ்ந்து வந்த அடியார்கள் மூவர் தீயினில் எரியாமல் பிழைத்து, பெருமானின் அருகே இருந்து பணிவிடை செய்யும் வாய்ப்பினை பெற்றார்கள் என்று கூறுகின்றார். இந்த நிகழ்ச்சி நடந்தது பண்டைய நாளில் என்பதை உணர்த்தும் பொருட்டு, இந்த நிகழ்ச்சி நடந்தேறிய பின்னர் எண்ணற்ற இந்திரர்களும் பிரமர்களும் திருமாலும் மாண்டனர் என்று கூறுகின்றார்

எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்துப்

கண்ணுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதற்பின்

எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்

மண்மிசை மால் பலர் மாண்டனர் காண் தோணோக்கம்

கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.13.7) கருவூர்த் தேவர், திரிபுரத்து அடியார்கள் மூவருக்கு பெருமான் அருளிய தன்மையை குறிப்பிடுகின்றார். நிசிசரர்=இரவில் நடமாடும் தன்மை உடைய இராக்கதர்கள், என்னை முன் ஈன்ற என்ற தொடர் மூலம் இறைவனே தனக்கு தாயும் தந்தையும் என்று கூறுகின்றார். மோதலைப்பட்ட= ஒன்றுடன் ஒன்று மோதும் தன்மை உடைய கடலலைகள்; கடலில் தோன்றிய அமுதம், உருகி கடலுடன் ஒன்றாகி கலந்திருப்பது போன்று, இறைவன் தனக்கு காட்சி அளித்தால், தானும் இறைவனுடன் ஒன்றாகக் கலந்து விடுவேன் என்று கருவூர்த்தேவர் கூறுகின்றார். திரிபுரத்து அடியார்கள் மூவரும் இறைவன் பால் வைத்த அன்பின் காரணமாக, அவர்களுக்கு கருணை புரிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

மோதலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழுமணித் திரள் அமுது ஆங்கே

தாய் தலைப்பட்டங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற

நீ தலைப்பட்டால் யானும் அவ்வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர்

காதலிற் பட்ட கருணையாய் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே

முதலில் வேதநெறியை கடைப்பிடித்து திரிபுரத்து அரக்கர்கள் சிவபெருமானை தொழுது வாழ்ந்ததாகவும், அதனால் அவர்கள் தேவர்களுக்கு கொடுமை செய்த போதிலும் அவர்களுடன் போர் செய்ய சிவபெருமான் உடன்படாத நிலையும், திருமால் ஒரு வேதியர் உருவம் கொண்டு திரிபுரங்கள் சென்று அரக்கர்களின் மனதில் மயக்கத்தை தோற்றுவித்து அவர்களின் சிந்தனையைக் கெடுத்து அவர்களை வேதநெறியிலிருந்து வழுவி சிவ நிந்தனை செய்யும் அளவுக்கு அவர்களை கெடுத்ததுவும், பின்னர் சிவபெருமான் அவர்களை அழித்த வரலாறும் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வரலாற்றில் உணர்த்தப்படும் திருமாலின் பங்கு, நம்மாழ்வாரால் திருவாய்மொழி பாசுரத்தில் (5.10.4) கூறப்பட்டுள்ளது. இந்த பாசுரத்தில் சிவனும் திருமாலும் வேறு அல்லாமல் ஒன்றாக விளங்கினர் என்று நம்மாழ்வார் கூறுவதையும் காணலாம்.

கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்கவாறும் கலந்து அசுரரை

உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்

வெள்ள நீர்ச் சடையானும் நின்னுடை வேறு அலாமை விளங்க நின்றதும்

உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே

பொழிப்புரை:

வேதநெறிக்கு முரணாக வேள்வி செய்வதற்கு தக்கன் முயற்சி செய்த போது அந்த வேள்வியில் பங்கேற்ற தேவர்களின் வலிமையை கெடுத்து அந்த வேள்வி முடிவடையாமல் தடுத்தவனும், அத்தகைய தேவர்களின் தெய்வத் தன்மையை குறைத்தவனும், பொங்கி வந்த ஆலகால விடத்திற்கு அஞ்சி பல திசைகளிலும் தேவர்கள் ஓடிய போது அந்த நஞ்சினை உட்கொண்டு அவர்களது அச்சத்தை போக்கியவனும், வேதநெறிக்கு முரணாக செயல்பட்ட சூரியனின் பற்களைத் தகர்த்தும் கண்களை பேர்த்தும் தண்டனை அளித்தவனும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் தீயிட்டு அழித்தவனும், முப்புரத்தில் வாழ்ந்து வந்த தனது அடியார்கள் மூவருக்கும் வரம் கொடுத்து, அவர்களைத் தனது வாயிற் காவலர்களாகவும் தன்னருகில் இருந்து முழவம் வாசிக்கும் கணமாகவும் ஏற்றுக் கொண்டவனும் ஆகிய பெருமான் மழபாடி தலத்தினில் உறையும் வள்ளல் ஆவான்.

பாடல் 4

களையும் வல்வினை (2.009) பாடல் 3 தொடர்ச்சி மற்றும் 4 (திதே 0713)

களையும் வல்வினை (2.009) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0714)

களையும் வல்வினை (2.009) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0715)

களையும் வல்வினை (2.009) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0716)

களையும் வல்வினை (2.009) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0717)

களையும் வல்வினை (2.009) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0718)

களையும் வல்வினை (2.009) பாடல் 4 தொடர்ச்சி (திதே 0719)

களையும் வல்வினை (2.009) பாடல் 4 தொடர்ச்சி, 5, 6, மற்றும் 7(திதே 0720)

பள்ளமார் சடையில் புடையே அடையப் புனல்

வெள்ளம் ஆதரித்தான் விடையேறிய வித்தகன்

வள்ளல் மாமழபாடியுள் மேய மருந்தினை

உள்ளம் ஆதரிமின் வினையாயின ஓயவே

விளக்கம்:

மழபாடி தலத்து இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற திருநாமமும் உள்ளது. வியாச முனிவர் இந்த தலத்து இறைவனை வழிபட்டு தனது பக்கவாத நோயினை தீர்த்துக் கொண்டார் என்றும் சந்திரன் இந்த தலத்தினில் செய்த வழிபாட்டினால் தனது கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து அழியும் நிலையிலிருந்து தப்பித்தான் என்றும், இதனால் இந்த தலத்து இறைவன் மருந்து என்றும் வைத்தியநாதன் என்றும் அழைக்கப் படுகின்றான் என்றும் தலபுராணம் உணர்த்துகின்றது. இந்த செய்தியையே திருஞான சம்பந்தர், இங்கே மழபாடி மேய மருந்து என்று குறிப்பிடுகின்றார். வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதியினை, பெரிய வெள்ளப் பெருக்குடன் ஆவேசமாக இறங்கிய கங்கை நதியினை, தனது சடையில் தாங்கிய பெருமானை ஆற்றல் மிகுந்தவன் என்ற பொருள் பட வித்தகன் என்று அழைக்கின்றார். ஓய்தல்=செயலற்று விடுதல். பக்குவம் அடைந்த உயிர்களுக்கு பிறவிப் பிணியினை தீர்க்கும் மருந்தாக இறைவன் செயல்படுகின்றான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

இந்த பாடலில் பெருமானின் சடையை பள்ளம் என்று கூறுகின்றார். பள்ளத்தில் தண்ணீர் தேங்குவது இயற்கை. மேலும் பள்ளத்திலிருந்து வெளியே வராமல் நீர் தங்கியிருப்பதும் இயற்கை. பெருமானின் சடையினைச் சென்று சேர்ந்த கங்கைநதி, வெளியே வராமல் அங்கே தங்கியிருந்த காரணத்தால், பள்ளத்தில் தங்கியிருந்த நீர் போன்று வெளியே வராமல் இருந்ததால், பெருமானின் சடையினை அந்த ஆற்றலை குறிப்பிடும் வண்ணம் பள்ளம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார் போலும். மேலுலகத்திலிருந்து பூமிக்கு வர விருப்பம் இல்லாமல், தான் கட்டாயப் படுத்தப் பட்டதால், வேறு வழியின்றி கீழே இறங்கிவர வேண்டிய நிலையில் இருந்த கங்கைநதி, மிகுந்த வேகத்துடன் கீழே இறங்க தலைப்பட்ட போது, பகீரதன் மிகுந்த கவலை அடைந்தான். கங்கை நதியினைத் தாங்கும் ஆற்றல் எவருக்கு உள்ளது என்று பிரமனிடம் பகீரதன் வினவிய போது, சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவருக்கும் அந்த ஆற்றல் இல்லை என்று பிரமன் பதிலளித்தார். இந்த தகவலே, மற்ற தெய்வங்களிலிருந்து பெருமான் மாறுபட்டவர் என்பதை நமக்கு உணர்த்துகின்றது. இதனை உணர்த்தும் முகமாக விகிர்தன் என்று இந்த பாடலிலும் பெருமானை, திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

கானப்பேர் என்று அழைக்கப்படும் காளையார் கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.26.6) திருஞான சம்பந்தர் பள்ளம் படர்சடை என்று குறிப்பிடுகின்றார். பெருமான் தனது பரந்த சடையினில் கங்கை நதியினைத் தாங்கினார் என்று புராணங்களும் பல திருமுறைப் பாடல்களும் குறிப்பிடுகின்றன. பரந்து விரிந்த சடையாக இருந்தாலும், கங்கை நதியினை, பள்ளத்தில் தேங்கிய நீர் வெளியே வராது இருப்பது போன்று, சிறை வைத்த சடையாக இருந்தது என்பதை உணர்த்தும் பொருட்டு, பள்ளமே படர் சடை என்று இங்கே சொல்லப் படுகின்றது. கள்ளம் என்பதை அறியாத கானப்பேர் அடியார்கள் பெருமானை தொழுது வணங்க, பெருமான் அவர்களது உள்ளத்தில் உறைகின்றான். எனவே அந்த அடியார்களின் திருவுள்ளத்தை கோயிலாக கருதி, தான் வழிபடுவதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பள்ளமே=பள்ளம் மேவிய, பள்ளம் பொருந்தியது போன்ற சடை என்று பொருள் கொள்ள வேண்டும்.

பள்ளமே படர் சடைப் பாற் படப் பாய்ந்த நீர்

வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்

கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்

உள்ளமே கோயிலா உள்கும் என் உள்ளமே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.106.1) திருஞான சம்பந்தர் பள்ளமதாய படர்சடை என்று கூறுகின்றார். பயிலும்=தொடர்ந்து நடக்கும் செயல்; தொடர்ந்து நடக்கும் எந்த செயலையும் பயிலுதல் என்று சொல்வது வழக்கம். விகிர்தன் என்றால் மாறுபட்டவன் என்று பொருள் என்பதை நாம் அறிவோம். இந்த பாடலில் பெருமானின் இரண்டு செயல்களுக்கு இடையே விகிர்தன் என்ற சொல் வருகின்றது. வெள்ளத்தை விரும்பியவன் என்று பொருள் தரும் வெள்ளமதார விரும்பி நின்ற என்ற தொடர் மற்றும் விடையேறும் வள்ளல் என்ற தொடர் ஆகிய இரண்டு சொற்றொடர்களுக்கு இடையே வரும் விகிர்தன் என்ற சொல், அந்த தொடர்கள் குறிப்பிடும் இரண்டு செயல்களுக்கும் பொருத்தமாக இருப்பதை நாம் காணலாம். பள்ளம் சென்றடைந்த தண்ணீர் அந்த பள்ளத்திலிருந்து வெளியே வரமுடியாமல், நிலையாக இருப்பது போன்று, பெருமானின் சடையை சென்றடைந்த கங்கை நதி, அலைகள் நிறைந்து பெரிய நீர்ப்பரப்புடன் இருந்த போதிலும், அங்கிருந்து வெளியே வரமுடியாமல் தொடர்ந்து பெருமானின் சடையினில் தங்கியுள்ளது. மேலிருந்து வேகமாகப் பாய்ந்த கங்கை நதியினைத் தனது சடையினில் மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், இந்த இரண்டு செய்கைகள் போன்று பல சிறந்த செயல்களை, வேறெவரும் செய்ய முடியாத பல செயல்களை செய்த விகிர்தராக விளங்குகின்றார். தனது அடியார்களுக்கு எல்லையற்று வரங்கள் வழங்கும் குணமுடைய பெருமானை, வலஞ்சுழி தலத்தை விட்டு பிரியாமல் வீற்றிருக்கும் வலஞ்சுழி வாணனை, அந்த தலம் சென்றடைந்து, அவரது பெருமைகளை நினைத்து, உள்ளம் உருகி வழிபடும் அடியார்களை பிறவிப்பிணி உட்பட பல கொடிய நோய்களும் நெருங்காது. எனவே உலகத்தவரே, வலஞ்சுழி பெருமானை வழிபட்டு, பயனடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பள்ளமதாய படர்சடை மேல் பயிலும் திரைக் கங்கை

வெள்ளமது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடையேறும்

வள்ளல் வலஞ்சுழி வாணன் என்று மருவி நினைந்து ஏத்தி

உள்ளம் உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே

உள்ளம் ஆதரிமின் என்று குறிப்பிட்டு உள்ளம் ஒன்றி நாம் இறைவனை வழிபட வேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் தில்லைத் தலத்தின் அருளிய பதிகத்தின் பாடல் (4.80.2) ஒன்றினை நினைவூட்டுகின்றது. கன்றிய=சினந்த; சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்து விட்ட நிலையில், அவனது உயிரினைக் கவரும் பொருட்டு தனது கடமையைச் செய்ய வந்த இயமனுக்கு அந்தச் சிறுவன் தனது கடமையைச் செய்ய விடாமல் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது, கோபத்தை ஏற்படுத்தியது. மனம் ஒன்றி வழிபடுவதால், நமக்கு நட்டம் ஏதும் இல்லை என்று இந்த பாடலின் முதல் அடியில் உணர்த்தும் அப்பர் பிரான், மாறாக நமக்கு நன்மையே ஏற்படும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். தனது விதிக்கப்பட்ட ஆயுட்காலம் பதினாறு வருடங்கள் என்பதை நன்றாக அறிந்தவன் சிறுவன் மார்க்கண்டேயன். எனினும் பதினாறு வருடங்கள் முடிந்த அந்த நாளிலும், எந்த சமயத்தில் வேண்டுமானாலும் இயமன் தனது உயிரினைக் கவர்ந்து செல்வதற்கு வருவான் என்பதை அறிந்திருந்த நிலையிலும், எந்த விதமான தடுமாற்றமும் இல்லாமல், ஒன்றிய மனத்துடன் சிவபெருமானை அந்த சிறுவன் வழிபட்டு வந்தான். இவ்வாறு ஒன்றிய மனத்துடன் அந்த சிறுவன் செய்த வழிபாட்டினுக்கு பரிசாகத் தான் பெருமான், நீண்ட ஆயுளை அந்த சிறுவனுக்கு அளித்தார் என்பதை உணரும் போது, மனம் ஒன்றிய வழிபாடு நமக்கு நன்மையைப் பெற்றுத் தரும் என்பதை நாம் உணர்கின்றோம். அதனால் தான் மனம் ஒன்றி வழிபடுவதால் நமக்கு ஊனம் ஏதும் விளையாது என்பதை இந்த பாடலின் முதல் அடியில் உணர்த்தும் அப்பர் பிரான், அதற்கு மாறாக நமக்கு நன்மையே விளையும் என்பதை உணர்த்த, சிறுவன் மார்கண்டேயனுக்கு இறைவன் அருளிய செயலை இங்கே குறிப்பிடுகின்றார். மனம் ஒரு குரங்கு. ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமும் ஒரே பொருளைப் பற்றி இல்லாமல், பல பொருள்கள் குறித்து அலைபாயும் தன்மை கொண்டது. அதிலும் மரணம் நெருங்கும் தருணத்தில் ஒன்றிய மனத்துடன் இருப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதை நாம் சற்று சிந்தித்து பார்த்தல் உணரலாம்.

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

இந்த பாடலில் பெருமானை மருந்து என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வந்த நோயினைத் தீர்க்கவும் நோய் வாராமல் தடுக்கவும் உடலை வளர்க்கவும் மருந்து உட்கொள்ளப் படுகின்றது. மலங்களால் கட்டுண்ட உயிர் தனது வினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக மீண்டும்மீண்டும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. இதனை பிறவிப்பிணி என்று பெரியோர்கள் கூறுகின்றனர். இவ்வாறு மீண்டும்மீண்டும் பிறந்தும் இறந்தும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கித் தவிக்கும் உயிர்கள், அந்த பிறவிப் பிணியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவது இயற்கை. இந்த பிறவிப் பிணிக்கு மருந்து சிவபெருமானை வழிபடுவதே ஆகும். இந்த செய்தியை உணர்த்தும் வண்ணம், பல திருமுறைப் பாடல்கள், இறைவனை மருந்து என்று குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். இவ்வாறு பெருமானின் திருநாமமும் பெருமானின் திருவடிவும், பிறவிப்பிணிக்கு மருந்தாக இருக்கும் தன்மை பல தேவாரப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளன.

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.110.1) திருஞான சம்பந்தர் மருந்தாக திகழ்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இறவு=இறப்பு; பெருந்தகை= பெருமைக்கு தகுந்த பண்புகள் உடையவன்; உயிரின் நோயாகிய பிறவிப் பிணிக்கும் உடலின் பல நோய்களுக்கும் மருந்தாக விளங்குபவனும் வானவர்கள் அசுரர்கள் உட்பட அனைவர்க்கும் தலைவனாக விளங்குபவனும் ஆகிய பெருமான் உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக விளங்குகின்றான். மிகவும் அரிய தவத்தினை மேற்கொண்ட சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர், என்ற நான்கு முனிவர்களுக்கும் கல்லால மரத்தின் கீழே அமர்ந்த வண்ணம், வேதங்களின் பொருளை அவர்கள் நால்வரும் ஐயம் திரிபின்றி உணரும் வண்ணம், பொருள் உரைத்து அருளிய சிவபெருமான் வீற்றிருக்கும் தலம் வளமை மிகுந்த நகரமாகிய திருவிடைமருதூர் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. நாம் கொண்டுள்ள வினைகளின் தன்மைக்கு ஏற்ப, பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக உள்ள இறைவன் தானே, அந்த பிறப்பையும் இறப்பையும் தடுக்க வல்லவன். எனவே தான் இந்த பாடலில் உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக உள்ளவன் பெருமான் என்று கூறுகின்றார்.

மருந்தவன் வானவர் தானவர்க்கும்

பெருந்தகை பிறவினொடு இறவுமானான்

அருந்தவ முனிவரொடு ஆல் நிழற்கீழ்

இருந்தவன் வளநகர் இடைமருதே

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.114.1) திருஞானசம்பந்தர் பெருமானை, மருந்தவன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெண்ணவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பெருந்தகை=பெருமைக்கு உரியவன்; குருந்து=குருத்து; குருகு=தளிர்; கூர்மையவன்=கூர்மையாக உள்ள மொட்டு; பெருமானை குருந்தாகவும் தளிராகவும் கூர்மையான மொட்டாகவும், விரிந்த மலராகவும், மலரின் நறுமணமாகவும், மலரில் உள்ள மகரந்தமாகவும், காயாகவும் பழமாகவும் பழத்தின் இரதமாகவும் திருஞானசம்பந்தர் காண்கின்றார். சிறிய செடியாகவும், அந்த செடியின் தளிராகவும், கூர்மையான மொட்டாகவும், மலர்ந்த மலராகவும், மேலும் பல தன்மைகளாகவும் தாவரங்களுடன் இணைந்து நிற்கும் பெருமானை, பெருமைக்குரிய பல தகுதிகளை உடைய பெருமானை, உமை அம்மையாகிய பெண்ணினைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனாகவும், வீரம் மிகுந்த ஆண் மகனாகவும் விளங்கும் பெருமானை, கருநீலமலர் போன்று அகன்ற கண்களை உடைய உமையன்னை பெரிதும் விரும்புகின்றாள். இத்தகைய தன்மைகளை உடைய பெருமான், பிறவிப் பிணியினை தீர்க்கும் மருந்தாகவும் இருக்கின்றான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

குருந்தவன் குருகவன் கூர்மையவன்

பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்

கருந்தட மலர்க் கண்ணி காதல் செய்யும்

மருந்தவன் வளநகர் மாற்பேறே

திருப்பறியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.134.2) திருஞானசம்பந்தர் பெருமானை, மருந்தன் அமுதன் என்று அழைக்கின்றார். மருந்தன்=பாச நீக்கம் செய்து உயிர்களின் பிறவிப் பிணிக்கு மருந்தாக செயல்படுபவன்; அமுதன்=பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிர்களுக்கு விடுதலை அளிப்பதால், உயிர்களுக்கு இனியவனாக விளங்கும் தன்மை; மைந்தன்=வல்லமை உடையவன்; உயிர்கள் கொண்டிருக்கும் யான் எனது என்ற பாசப் பிணைப்பினை அறுத்து, உயிர்கள் தங்களது பிறவிப்பிணியை தீர்த்துக் கொள்வதற்கு மருந்தாக செயல்படும் இறைவன், அனைத்து உயிர்களும் தாங்கள் குடிகொண்டிருந்த உடல்களை விட்டு பிரிய, உலகமே சுடுகாடாக காட்சி அளிக்கும் பிரளய காலத்தில், தான் மட்டும் அழியாமல் எஞ்சி இருக்கும் ஆற்றல் உடையவனாக விளங்குகின்றான். உயிர்களின் பிறவிப் பிணியைத் தீர்த்து இன்பம் அளிப்பதால், உயிர்களால் மிகவும் இனியவனாக, அமுதம் போன்றவனாக கருதப்படுகின்றான். ஆயிரம் கிளைகளுடன் மிகவும் பெரிதாக பரந்து வந்த கங்கை நதியினைத் தனது சடையில் வைத்து தேக்கிய ஆற்றல் உடையவன் பெருமான். இத்தகைய இறைவன், திருந்திய நல்லொழுக்கத்துடன் வாழும் அந்தணர்கள் நிறைந்த திருப்பறியலூரில், விரிந்த மலர்ச் சோலைகள் கொண்ட தலத்தினில் உள்ள வீரட்டானம் எனப்படும் திருக்கோயிலில் உறைகின்றான்.

மருந்தன் அமுதன் மயானத்துண் மைந்தன்
பெருந்தண் புனற் சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச் சோலை வீரட்டத்தானே

நல்வினைகளையும் தீவினைகளையும் நுகர்ந்து கழிக்க வேண்டிய நிலையில் அனைத்து உயிர்களும் உள்ளன. நல்வினைகளால் இன்பங்களும் தீவினைகளால் துன்பங்களும் துயரங்களும் உயிர்களுக்கு உண்டாகின்றன. இந்த பிறப்பினில் நமது தீவினைகளால் ஏற்படும் துயரங்களைத் தீர்த்துக் கொண்டு, மறுமையில் பிறப்பையே அடியோடு நாம் தவிர்க்க வேண்டும் என்ற விரும்பினால், அதற்கு மருந்தாக பயன்படுபவன் பெருமான் ஒருவன் தான் என்று புள்ளிருக்குவேளூர் தலத்து பதிகத்தின் கடைப் பாடலில் (2.43.11) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். செடியாய=குணம் இல்லாத; கடி=நறுமணம்; கடியார்ந்த=நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த; சோம்பியிராமல் தேவாரப் பாடல்களை சொல்லும் வல்லமை உடைய அடியார்களுக்கு மறுபிறவி இல்லாத வண்ணம் பெருமான் அருள் புரிவான் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பொடியாடி=திருநீற்றினை உடல் முழுதும் பூசிக் கொண்டவன், திருநீற்றில் நீராடியது போன்று உடல் முழுதும் திருநீற்றின் வண்ணமும் துகள்களும் உடைய பெருமானின் திருக்கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது. பொடியாடிக்கு அடிமை என்று திருஞானசம்பந்தர் தன்னை குறிப்பிடுவதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர். நமது தீவினைகளுக்கு மருந்தாக விளங்கி அவற்றை முற்றிலும் நீக்கி, களங்கம் நிறைந்த உடலுடன் சேர்ந்து மீண்டும்மீண்டும் பிறப்பதைத் தவிர்க்கும் பெருமானுக்கு, தனது உடல் முழுதும் திருநீறு பூசி விளங்கும் பெருமானுக்கு, அடிமையாக திகழ்ந்து வழிபட்ட சடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர். நறுமணம் உடைய மலர்ச் சோலைகள் நிறைந்த சீர்காழி நகரத்தில் தோன்றியவனும், கவுணிய கோத்திரத்தைச் சார்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் சொல்லிய இந்த பத்து பாடல்களையும், சோம்பல் ஏதுமின்றி மீண்டும்மீண்டும் சொல்லும் வல்லமை வாய்ந்த அடியார்களுக்கு மறுபிறப்பு என்பதே இல்லை. அவர்கள் இறைவனின் அருளால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைந்து நிலையான இன்பமுடன் வாழ்வார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சடாயு மாறும் சம்பாதி குறிப்பிடப் படுவதால், பொடியாடிக்கு அடிமை செய்த என்ற தொடர் சடாயு மற்றும் சம்பாதி ஆகியோரை குறிக்கின்றது என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கொர் மருந்தாவான்

பொடியாடிக்கு அடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்

கடியார்ந்த பொழில் காழி கவுணியன் சம்பந்தன் சொல்

மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே

பெருமான் நமது பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தாகவும் மந்திரமாகவும் செயல்படுகின்றார் என்று திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.3) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திருந்தலார்=தங்களது தவறான வழியிலிருந்து திருந்தாத திரிபுரத்து அரக்கர்கள்; திரிபுரத்து அரக்கர்கள் தொடர்ந்து தவறுகள் செய்து அனைவரையும் வருத்திய காரணத்தால் தான் பெருமான் அவர்களுடன் போரிடச் சென்றார். விறல்=பெருமை; மத்தம்=மயக்கம்; மத்தமாம் பிணிநோய் என்ற தொடருக்கு, உன்மத்தம் முதலான உடலுடன் தொடர்பு கொண்டுள்ள நோய்கள் என்றும் பொருள் கொள்கின்றனர். எனினும் மத்தமாம் பிணி நோய் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுவதால் மனதினை அறியாமையில் ஆழ்த்தி, இறைவனை நாம் சிந்தியாது இருக்கும் வகையினில் நம்மை மயக்கும் மலங்களின் தொடர்பால் ஏற்படும் நோய் என்று பொருள் கொள்வது சிறப்பாக உள்ளது. மத்தமாம் பிணி நோய் தானே நம்மை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து வெளியே வாராத வண்ணம் தடுக்கின்றது. இந்த மத்தமாம் பிணி நோய்க்கு மருந்துமாகி மந்திரமாகி பெருமான் இருக்கும் நிலை, நமது பிறவிப் பிணியைத் தீர்ப்பவராக பெருமான் விளங்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. திருந்தாமல் தொடர்ந்து தவறான வழியில் சென்ற திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் தீப்பற்றி எரியும் வண்ணம் போரிட்ட சிவபெருமான், பெருமை உடைய அடியார்களை பரிந்து பாதுகாக்கின்றான்; பக்தியுடன் தன்னை வழிபடும் அடியார்களுக்கு காட்சி அளிக்கின்றான்; உடல் அடைகின்ற பல விதமான நோய்களுக்கு மருந்தாக விளங்கும் பெருமான், பிறவிப்பிணியை தீர்க்கும் மருந்தாகவும் செயல்படுகின்றான்; அவனது திருநாமம் உயர்ந்த மந்திரமாகவும் விளங்குகின்றது; வலஞ்சுழி தலத்தினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள இறைவனது திருவடிகள் இமையவர்கள் புகழ்ந்து ஏத்தும் தன்மையில் உள்ளன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திருந்தலார் புரம் தீயெழச் செறுவன விறலின் கண் அடியாரைப்

பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணி நோய்க்கு

மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடமாக

இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடித் தலம் தானே

இதே பதிகத்தின் கடைப் பாடலில் (2.106.11) திருஞானசம்பந்தர் பெருமான், வலஞ்சுழி மருவிய மருந்து என்று அழைக்கின்றார். இந்த பாடலில் இந்த பதிகத்தை இசையுடன் பாடுபவரும் அதனை கேட்பவரும் இம்மையிலும் மறுமையிலும் வருத்தம் நீங்கப் பெறுவார் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகிறார். கேட்பவர்கள் அடையும் பலன் சொல்லப்படும் பதிகங்கள் மிகவும் அரிதானவை. மருந்து என்பது பிறவிப்பிணிக்கு மருந்தாக இறைவன் செயல்படும் தன்னை, மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே என்ற தொடரால் புலனாகின்றது. நவிற்றிய=சொன்ன; பதிகத்தின் மூன்றாவது பாடலில் மருந்துமாகி மந்திரமாகி அடியார்க்கு அருள் செய்பவன் சிவபெருமான் என்று குறிப்பிட்ட செய்தி இங்கே மீண்டும் உணர்த்தப் படுகின்றது. அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு கூறாக ஏற்றுக் கொண்டவனும், வலஞ்சுழி தலத்தினில் அமர்ந்த வண்ணம் அடியார்களின் பிறவிப் பிணிக்கு மருந்தாக செயல்படுபவனும், ஆகிய இறைவனை, செழிப்பான வயல்கள் நிறைந்த காழி நகரத்தைத் சார்ந்த வேதியனும் தலைவனும் ஆகிய ஞானசம்பந்தன், தனது வாயினால் பாடிய தமிழ் மாலையாகிய இந்த பாடல்களை முறையாக கற்று, குறிப்பிடப்பட்ட இசையுடன் பொருத்தி வல்லவர்கள் பாட, அத்தகைய அடியார்களுக்கும் அதனை கேட்டு மகிழும் அடியார்களுக்கும், அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் வருத்தம் அடையாத வண்ணம், அவர்களை வருத்தும் தன்மை வாய்ந்த வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மாதோர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி

நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை

ஆதரித்து இசை கற்று வல்லார் சொலக் கேட்டு உகந்தவர் தம்மை

வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே

பெருமானின் திருவேடங்கள் மருந்தாகவும் மந்திரமாகவும் செயல்படும் தன்மையை திருஞானசம்பந்தர் திருந்துதேவன்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.25.1) குறிப்பிடுகின்றார். திருந்துதேவன்குடி தலத்து பெருமானது அடையாளங்களாகிய திருநீறு உருத்திராக்கம் மற்றும் சடைமுடி ஆகியவற்றை கண்ணால் கண்டாலும் அல்லது மனதினால் நினைத்தாலும் ஏற்படும் பயன் யாதென்பதை இங்கே கூறுகின்றேன்; உலகத்தவரே கேட்பீர்களாக, பெருமானின் இந்த அடையாளங்கள், தங்களது நோய்களை தீர்த்துக் கொள்ள விரும்பும் அடியார்களுக்கு மருந்தாகவும், ஐந்தெழுத்து மந்திரம், வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாடல்கள் ஆகியவற்றை சொல்ல விரும்பும் அடியார்களுக்கு அத்தகைய மந்திரங்களாகவும், சிவ புண்ணியங்கள் செய்ய விரும்பும் அடியார்களுக்கு, அத்தகைய புண்ணியங்கள் அளிக்கும் பயன்களாகவும் விளங்குகின்றன, இத்தகைய வேடங்களை தனது அடையாளமாகக் கொண்டுள்ள இறைவன், தேவதேவன் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் தலம் திருந்துதேவன்குடி என்பதாகும். இந்த பெருமானின் திருவேடங்களை, அரிய தவம் புரியும் முனிவர்கள் தியானித்து தொழுகின்றனர், என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை

புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை

திருந்து தேவன்குடித் தேவர் தேவு எய்திய

அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே

இதே பதிகத்தின் பத்தாவது பாடலில், திருஞானசம்பந்தர், பெருமானின் திருவேடங்கள் பிறவிப் பிணியைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன என்று கூறுகின்றார். செரு=நெருங்கி வளர்ந்த, மரு=மருத மரம்; மருத மரத்து இலைகள் துவர் நிற சாயத்தை தயாரிக்க பயன்படுவதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தேர்=தேரர் என்ற சொல்லின் சுருக்கம், புத்தர்கள் என்று பொருள்; மருவுதல்=நெருங்குதல்; திரு=அழகு; திரு என்ற சொல்லுக்கு திருமகள் என்று பொருள் கொண்டு திருமகள் வீற்றிருக்கும் தாமரை மலர்கள் நிறைந்த பொய்கை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மற்றவர் அருகே வந்து நெருங்குவதற்கு தயங்கும் வண்ணம் சமணர்களின் உடல் துர்நாற்றம் வீசும் வண்ணம் இருந்தது என்று இங்கே திருஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். அந்நாளைய சமணர்கள், காலையில் எழுந்தவுடன் பற்களை துலக்கி சுத்தம் செய்வதை தவிர்த்தனர்; நீராடுவதையும் தவிர்த்து அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று கூறுவார்கள். எனவே உடலும் வாயும் துர்நாற்றத்துடன் விளங்கும் அவர்களை நெருங்க ஏனையோர் தயங்கியது இயற்கை தானே. தொழும்பர்=அடிமைகள், இழிந்தவர்கள்; இங்கே இழிந்தவர்கள் என்ற பொருள் மிகவும் பொருத்தமானது. இந்த தலத்தில் உள்ள திருக்கோயில் மூன்று புறமும் குளத்தால் சூழப்பட்டுள்ள தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. அருமருந்து=கிடைத்தற்கு அரிய மருந்து; பெருமானின் கருணை மற்றும் அவனது சின்னங்களே பிறவிப் பிணியை தீர்க்கும் வல்லமை வாய்ந்தது என்பதால் அரிய மருந்து என்று குறிப்பிடுகின்றார். இங்கே உள்ள அம்பிகையின் திருநாமம், அருமருந்து நாயகி என்பதையும் குறிப்பால் திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். உலகத்தவரே, நெருங்கி வளர்ந்த மருத மரங்களின் இலைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட குளிர்ந்த சாயத்தின் உதவியுடன் நெய்யப் பெற்ற துவராடையை அணிந்த புத்தர்கள் மற்றும், துலக்கப் படாத வாய் மற்றும் நீராடி மாசு கழிக்கப்படாத உடல் ஆகியவற்றைக் கொண்டதால் வீசும் துர்நாற்றத்தின் விளைவாக ஏனையோர் நெருங்குவதற்கு தயங்கும் சமணர்கள் ஆகியோரின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல், அவற்றை பொருளற்றவை என்று விலக்கி வாழ்வீர்களாக. திருந்து தேவன்குடி தலத்தில் அழகுடன் விளங்கும் பொய்கையால் மூன்று புறமும் சூழப்பட்ட திருக்கோயிலில் உறையும் பெருமானின் அடையாளங்கள் பிறவிப் பிணியை தீர்க்கும் அரிய மருந்தாக உள்ளன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செருமரு தண்டுவர்த் தேர் அமண் ஆதர்கள்

உரு மருவப்படாத் தொழும்பர் தம் உரை கொளேல்

திருமருவும் பொய்கை சூழ்ந்த தேவன் குடி

அருமருந்து ஆவன அடிகள் வேடங்களே

இம்மையில் நோய் தீர்க்கும் மந்திரமாகவும் மருந்தாகவும் செயல்படும் பெருமானின் திருநாமம், மறுமையில் நமது உயிர் நன்னெறி அடைவதற்கும் உதவும் என்று திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் திருஞானசம்பந்தர் (3.92.1) கூறுகின்றார். மேலும் மழபாடி மேய மருந்து என்றும் வலஞ்சுழி மருந்து என்றும், மாத்தூர் மேய மருந்து என்றும், தேவர்கள் தேடும் மருந்து என்றும், மணஞ்சேரி மருந்து என்றும், பல பாடல்களில் தேவார ஆசிரியர்கள் பெருமானின் பிணி தீர்க்கும் தன்மையை குறிப்பிடுகின்றனர். புறவு=தோட்டம்;

மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறி அவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே

பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்

செருந்தி செம்பொன் மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே

மானுடர்களுக்கு மட்டுமன்றி தேவர்களுக்கும் அவர்களது பிறவிப்பிணி தீர்க்கும் மருத்துவனாக செயல்படும் இறைவன் என்று திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (4.13.3) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நணியான்=அருகில் இருப்பவன்: அடியார்களுக்கு) சேயான்=தொலைவில் இருப்பவன் (அடியார் அல்லாதவர்க்கு) நம்பான்=விரும்பத் தக்கவன்: பொன்னால் செய்யப்பட்ட ஆடையினை உடுத்தியது போன்று, பெருமானின் திருமேனி பொன்னிற வண்ணத்துடன் இருக்கும் நிலை, செம்பொன்னின் துணியானே என்ற தொடர் மூலம், இங்கே குறிப்பிடப் படுகின்றது. அன்பு நிறைந்த மனத்துடன் உன்னை வழிபடும் அடியார்க்கு மிகவும் அருகிலும் ஏனையோருக்கு தொலைவிலும் உள்ள பெருமானே, விரும்பத் தக்கவனே, பொன்மயமான ஆடையை அணிந்தவனே, தோலாடை உடையவனே, வெண்மை நிறத்துடன் காணப்படும் திருநீற்றினைப் பொடியாக உடலில் பூசியவனே, மணி போன்று அரியவனே, மானிடர்களுக்கு மட்டுமன்றி தேவர்களுக்கும், அவர்களது பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருத்துவனாய் அவர்களுக்கு நெருங்கி இருப்பவனே, ஐயாற்றுத் தலைவனே, நான் உனக்கு அடிமையாக மாறி உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்

துணியானே தோலானே சுண்ண வெண்ணீற்றானே

மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணி தீர்க்கும்

அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

ஆணவ மலத்தின் தாக்கத்தால் நமது மனம் அறியாமையில் மூழ்கி கிடக்கின்றது, அதனால் உண்மையான மெய்பொருளை அறிந்து கொள்ளாமல் நிலையில்லாத பொருட்களை நிலையான பொருட்களாக நினைக்கும் மயக்க நிலை நமக்கு ஏற்படுகின்றது. இந்த மயக்கம் தீர்க்கும் மருந்தாக செயல்படுபவன் இறைவன் என்று பாவநாசத் திருப்பதிகத்தின் பாடல் (4.15.3) ஒன்றினில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நெதி=செல்வம்; சூரியனின் கதிர்கள் சந்திரனை விடவும் அதிகமாக வெளிச்சம் அளிப்பன, ஆனால் வெளிச்சத்துடன் வெப்பத்தையும் சேர்ந்து சூரியனின் கதிர்கள் அளிக்கின்றன. சந்திரனின் கதிர்கள் குளிர்ச்சியை அளிப்பன, இறைவன் சந்திரனின் குளிர்ச்சியும் சூரியனின் வெளிச்சமும் கொண்ட கதிர்களாக இருப்பதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சந்திரனை தலையில் மாலையாக அணிந்து, சூரியன் போன்று மிகுந்த பிரகாசத்துடன் விளங்குபவனை, அறியாமையால் மயங்கிக் கிடக்கும் உயிர்களின் மயக்கத்தைத் தீர்ப்பவனை, தொன்மை வாய்ந்த அதிகை நகரத்தின் அரசனை, திருவையாற்றில் அமர்ந்து இருக்கும் இறைவனை, பெரும் புகழினை உடையவனை, ஊழ்வினைக்கு ஏற்றவாறு உயிர்களை உடல்களுடன் பொருத்துவதால் ஊழ்வினையாக கருதப் படுவானை, வானோர்கள் வேண்டித் தேடும் சோதியை, அனைத்துச் செல்வங்களிலும் பெரிய செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையானை, ஞானக் கொழுந்தினை, அடியேன் நினைந்த போது எனது உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது என்று அப்பர் பிரான் பெருமையுடன் உணர்த்தும் பாடல்.

மதியம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை
அதிகை மூதூர் அரசினை ஐயாறமர்ந்த ஐயனை
விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே

பாவநாசத் திருப்பதிகத்தின் பாடலில் (4.15.10) அப்பர் பிரான் பெருமானை மாத்தூர் மேய மருந்து என்று அழைக்கின்றார். புத்தூர் என்பது அரிசிற்கரைப் புத்தூரை குறிக்கும் என்று சிலரும் இது ஒரு வைப்புத் தலத்தைக் குறிப்பது என்று சிலரும் கருதுகின்றனர். மாத்தூர் என்பது வைப்புத் தலம் என்றும் வேறு சிலரால் ஆமாத்தூர் என்றும் கருதப்படுகின்றது. புராணன்=மிகவும் பழமையானவன்: வித்தாய் மிழலை முளைத்தான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவது, சிவபிரான் உயிர்களுக்கு உயிராக இருக்கும் நிலையை குறிப்பிடுவதாகும். திருப்புத்தூரில் உறையும் புனிதனை, பூவணத்தில் இருக்கும் போரிடும் காளை போன்றவனை, அனைத்து உயிர்களுக்கும் உயிராக இருக்கும் மிழலைத் தலத்து இறைவனை, வேள்விக்குடி வேதியனை, வைதீக நெறியிலிருந்து வழுவிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்தவனை, பொதிகையில் உறையும் புராணனை, பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருத்துவனாக மாத்தூர் தலத்தில் உறைபவனை, அடியேன் எனது மனதினில் நிலையாக நிறுத்தியுள்ளேன் என்று அப்பர் பிரான் பெருமையுடன் உணர்த்தும் பாடல்.

புத்தூர் உறையும் புனிதனைப் பூவணத்தெம் போரேற்றை
வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடியெம் வேதியனைப்
பொய்த்தார் புரமூன்று எரித்தானைப் பொதியின் மேய புராணனை
வைத்தேன் எந்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே

தன்னை வணங்குவோரின் இடர்கள் தீர்க்கும் மருந்து என்று பெருமானை, திருக்குறுக்கை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.49.9) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அணங்கு=பெண் தெய்வம்: சிவபெருமானுக்குப் திருப்பணி செய்து வாழ்வதே தவமாகக் கொண்டு வாழ்ந்தவர் என்று அப்பர் பிரான், கணம்புல்ல நாயனாரை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள பேளூர் என்ற ஊர் அந்நாளில் இருக்குவேளூர் என்று அழைக்கப் பட்டது. சிவபெருமானின் கோயில்களில் விளக்குகள் ஏற்றி பெருமானை வழிபட்டு வந்த கணம்புல்லர் என்பவர் இங்கே வாழ்ந்து வந்தார். தான் வறுமை அடைந்த நிலையில் அவர் தில்லை நகரம் சென்று சேர்ந்தார். எனினும் தனது திருப்பணியை தொடர்ந்து செய்யவேண்டும் என்று விரும்பி செயல்பட்டு வந்தார். திருப்புலீச்ச்சரம் என்று அழைக்கப்பட்ட திருக்கோயிலில் விளக்கு எரிக்கும் பணி செய்வதற்காக தனது இல்லத்தில் உள்ள எல்லா பொருட்களையும் விற்றார். பின்னர் விற்பதற்கு பொருள் ஏதும் இல்லாத நிலையில், கணம்புற்களை அரித்து வந்து அவற்றை விற்று வந்த பணத்தில் விளக்கு எரித்து வந்தார். புல்லை விலை கொடுத்து எவரும் வாங்காத நிலையில், தான் அரிந்த புற்களைக் கொண்டு விளக்கு எரிக்க முற்பட்டார். ஆனால் புற்கள் போதாமையால், தனது முடியை விளக்கில் இட்டு எரித்தார். இத்தகைய திருத்தொண்டின் பயனாக, ஞானமும், வீடுபேறும் அடைந்து இறுதியில் சிவலோகம் சென்றார். இந்த வரலாறு பெரிய புராணத்தில் சேக்கிழார் அவர்களால் கூறப்படுகின்றது. பொருவில் தொண்டர்=ஒப்பற்ற திருத்தொண்டர். தெய்வமாகிய பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பாகமாக வைத்திருக்கும் சிவபெருமான், அவரை வணங்குபவரின் துயரங்களைக் போக்கும் நல்ல மருந்தாகச் செயல்படுகின்றார். மேன்மையான திருப்பணி எனப்படும் தவத்தைச் செய்த கணம்புல்லர் என்ற அடியார்க்கு அருள் செய்த குறுக்கை வீரட்டத்துப் பிரான், அவரிடத்தில் அன்பு பூண்டு வழிபடும் அன்பர்களுக்கு நல்ல பண்புகளை அருளுவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அணங்கு உமை பாகமாக அடக்கிய ஆதி மூர்த்தி

வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அருந்தவத்த

கணம்புல்லர்க்கு அருள்கள் செய்து காதலாம் அடியார்க்கு என்றும்

குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய ஒரு பாடலில் (4.62.3) பாடலின் நான்கு அடிகளிலும் மருந்தாக பெருமான் செயல்படும் தன்மையை அப்பர் பிரான் விளக்குகின்றார். ஒரு மருந்து=ஒப்பற்ற தனி மருந்து; மருந்தாக செயல்படுவதில் ஒப்பற்றவன் பெருமான் என்று பாடலை அப்பர் பிரான் துவக்குகின்றார். பெருமருந்து=ஏனைய மருந்துகளுக்கு தலையான மருந்து; கருமருந்து=மீண்டும் உயிர்கள் கருவினில் புகாமல் காக்கும் மருந்து, பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்து; அருமருந்து=கிடைத்தற்கு அரிய மருந்து; ஒப்பற்ற தனி மருந்தாக உள்ளவனே, தேவர்கள் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் அவர்களது பிறவிப் பிணியைத் தீர்க்கும் தலையான மருந்தாக உள்ளவனே, அமுதமும் கொடுக்க முடியாத பிறப்பு இறப்பு இல்லாத நிலையினைத் தருவதால், அமுதினை விடவும் இனிமையாக உள்ளவனே, எங்களை ஆட்கொண்டு எங்களது வினைகளைத் தீர்க்கும் அரிய மருந்தாக உள்ளவனே, ஆலவாய் தலத்தில் உறைகின்ற அப்பனே, அடியேன் இனிப் பிறவாத வண்ணம் எனக்கு நீர் தான் வரம் அருள வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

ஒரு மருந்தாகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம்

பெரு மருந்தாகி நின்றாய் பேரமுதின் சுவையாய்

கரு மருந்தாகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும்

அருமருந்து ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.105.4) அப்பர் பிரான், பெருமானை, தேவர்கள் தேடும் மருந்தே என்று அழைக்கின்றார். போக வாழ்க்கை வாழ்கின்றவர்கள் தேவர்கள். எனவே அவர்களுக்கு மருந்து தேவைப்படுவதில்லை. மன்னுள என்ற தொடர் மூலம் தேவர்கள் நிலையான புகழுடன் இருப்பவர்கள் என்று உணர்த்துகின்றார் என்றும் பொருள் கொள்கின்றனர். மன்னும் என்றால் நிலையான என்று பொருள். மனிதர்களுடன் ஒப்பிட்டால், தேவர்கள் மிகவும் அதிகமான வாழ்நாட்கள் கொண்டு திகழ்பவர்கள் என்பதை நாம் அறிவோம். எனினும் அவர்களும் பிறப்பிறப்பு சுழற்சியில் சிக்கியவர்கள் என்பதால், அந்த நோயிலிருந்து விடுபட மருந்தாகிய பெருமானை அவர்கள் நாடுகின்றனர். இதற்கு காரணம் பெருமான் ஒருவரால் தான், அவர்களது பிறவிப் பிணியை நீக்க முடியும் என்பதே. பொன்னார் சடையன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் பெருமானை குறிப்பிடுகின்றார். பொன் போன்று ஒளியுடன் மிளிரும் சடை என்று பொருள் கொள்வது பொருத்தமே. அப்பர் பிரான், உலகப் பற்றுகளை முற்றிலும் அறுத்து வாழ்ந்தமையை நாம் பெரிய புராணத்திலிருந்து உணருகின்றோம். வீடுபேறு அடைந்து என்றும் சிவபெருமானுடன் பொருந்தி இருந்து நிலையான இன்பத்தை அடைய வேண்டும் என்பதில் அவர் மிகுந்த ஆசை கொண்டிருந்தார். பொதுவாக யான் எனது என்ற அகப்பற்று மற்றும் புறப்பற்று ஆகிய இரண்டையும் விட்டொழித்தவர்கள் வீடுபேறு அடைவார்கள் என்று நம்பப் படுகின்றது. ஆனால், தான் உலகப் பற்றினைத் துறந்த பின்னரும், வீடுபேறு அடையாமல் உலக வாழ்க்கையில் உழன்று கிடந்தது அப்பர் பிரானுக்கு வருத்தத்தை அளித்தது போலும். இடைக்கலம்=இரண்டு நிலைகளுக்கும் இடையே உள்ள நிலை, இங்கே பற்றறுத்த நிலை மற்றும் வீடுபேறு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்று பொருள் கொள்ள வேண்டும். தனக்கு வீடுபேறு பேற்றினை பெருமான் இன்னும் அளிக்கவில்லையே என்ற அவரது வருத்தம் கோபமாக மாறுகின்றது. தனக்கு பெருமான் இன்னும் இரங்காத நிலையை சுட்டிக் காட்டி, பெருமானை உத்தமனே என்று அழைக்கின்றார். இங்கே உத்தமனே என்ற சொல் வஞ்சப் புகழ்ச்சி அணியாக கையாளப் பட்டுள்ளது. இவ்வாறு தனது வருத்தத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்திய பின்னரும், சிவபெருமானால் செவி சாய்க்காமல் இருக்க முடியுமா என்ன. உடனே அவரை ஆட்கொண்டு தன்னுடன் இணைத்துக் கொள்கின்றார். அப்பர் பிரானும் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் என்று பாடியவாறே புகலூர்ப் பெருமானுடன் ஒன்றறக் கலந்து விடுகின்றார். புண்ணியா என்று தொடங்கும் இந்த பதிகமே, அப்பர் பிரான் தனது வாழ்க்கையில் அருளிய கடைசிப் பதிகம். இந்த பதிகம் பாடுவதற்கு முன்னம் அருளிய பதிகத்தின் பாடல் தான், கீழ்க்கண்ட பாடல் கொண்டுள்ள, தன்னைச் சரணென்று தொடங்கும் பதிகம். எனவே அப்பர் பிரானின் வருத்தம், பெருமானால் உடனே களையப்பட்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய் புகலூர் அரசே

மன்னுள தேவர்கள் தேடு மருந்தே வலஞ்சுழியாய்

என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்

உன் அளவே எனக்கொன்று இரங்காத உத்தமனே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.47.5) தனக்கு மருந்தாக தன்னுடன் இருந்து உதவுபவர் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சுற்றமும் மக்களும் நாம் இடர்ப்படும் நேரத்தில் நமக்கு உதவுபவர்களாக இருப்பதை நாம் இந்த உலகினில் காண்கின்றோம். அத்தகைய சுற்றத்தாரை நல்ல சுற்றத்தார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுவதை நாம் உணரலாம். கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் தள்ளிவிடப்பட்ட போதும், கடலில் தான் மூழ்காமல் கரையேற்றிய பெருமானை, ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் இருந்தவன் இறைவன் என்று பாடிய அப்பர் பிரான், இந்த பாடலில் தன்னுடன் பொருந்தி நின்று உதவிய நல்ல சுற்றம் என்றும் குறிப்பிடுகின்றார். தனக்குத் தாயாகவும் தந்தையாகவும் விருப்பமுடைய சுற்றத்தாராகவும் பெருமான் இருந்த நிலையினை, அப்பன் நீ அம்மை நீ என்று தொடங்கும் பாடலில் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். தடம்=அகன்ற; மருந்து=பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்து எந்தை=எங்கள் தந்தை; இம்மையிலும் மறுமையிலும் தன்னை காப்பவனாக அப்பர் பிரான் இறைவனை காண்பதை நாம் உணரலாம். கம்பை ஆற்றங்கரையில் பரமனை உமையம்மை தொழுத நிகழ்ச்சி இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. எனது பிறவிப் பிணியினைத் தீர்த்து மறுமையில் எனக்கு உதவி செய்யும் பெருமான், இம்மையிலும், நல்ல சுற்றமும் நன்மக்களும் உதவுவது போன்று என்னுடன் பொருந்தி எனக்கு உதவி செய்யும் புண்ணியனாகத் திகழ்கின்றான். கரியதும் அகன்ற கண்களை உடையவளும் ஆகிய உமை அம்மை கை தொழும் வண்ணம் இருந்த கச்சி ஏகம்பன், எனக்கு தந்தையாகவும் விளங்குகின்றான என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மருந்தினோடு நல் சுற்றமும் மக்களும்

பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன்

கருந்தடங் கண்ணினாள் உமை கை தொழ

இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே

தனது அடியார்களை பீடித்துள்ள வலிமையான வினைகளையும் தீர்க்கும் மருந்தாக செயல்படும் வல்லமை உடைய பெருமான், பற்கள் இல்லாமலும் உலர்ந்தும் காணப்படும் பிரமனின் கபாலத்தைக் கையில் ஏந்தியவாறு எங்கும் திரிகின்றார் என்றும், பலருக்கும் நன்மை பயப்பவராக விளங்கும் பெருமான், விடத்தை உடையதாக இருந்தாலும் பெருமானுடன் இணைந்த பின்னர் நல்ல குணம் உடையதாக மாறிய பாம்பினைத் தனது இடையில் பூண்டுள்ள பெருமான், தனது விருப்பம் போல் அந்த பாம்பினை ஆட்டுகின்றார் என்றும், பிச்சை ஏற்றாலும் உண்மையில் முக்திச் செல்வம் எனப்படும் சிறந்த செல்வத்தை உடையவராக இருக்கும் பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார் என்றும் அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் நாகேச்சரத்து தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் (5.52.1) முதல் பாடலாகும். விடம் கொண்டுள்ள தன்மையால் அனைவரையும் அச்சுறுத்தும் பாம்பு நல்ல குணமுடைய நாகம் என்று இந்த பாடலில் கூறப்படுகின்றது. இறைவனின் சன்னதியில் நல்லன அல்லாத பொருட்களுக்கு இடம் ஏது. எனவே தான், கொலை வெறியுடன் தாக்க வந்த மான்கன்று, தனது கொலை வெறியை விடுத்து, துள்ளி விளையாடும் மான்குட்டியாக பெருமானின் கைகளில் திகழ்வது போல் பாம்பும் தனது கொடிய குணத்தை விட்டுவிட்டு நல்ல குணமுடைய பாம்பாக அடங்கி பெருமானின் சடையிலும் அவரது திருமேனியில் பல இடங்களிலும் தங்கி விடுகின்றது. சந்திரனிடம் தான் கொண்டுள்ள பகையையும் மறந்து, சந்திரனுடன் பெருமானின் சடையில் தங்கும் பாம்பு என்று பல தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப் படுகின்றது. நல்லான் ஆகிய பெருமானுடன் இணைந்த பாம்பு, தனது கொடிய குணத்தினை விட்டுவிட்டு நல்ல குணத்துடன் திகழ்கின்றது என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

நல்லர் நல்லதோர் நாகம் கொண்டு ஆட்டுவர்

வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்

பல் இல் ஓடு கை ஏந்திப் பலிதிரி

செல்வர் போல் திரு நாகேச்சரவரே.

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.57.2) அப்பர் பிரான் பெருமானை, மண்ணுளார் வினை தீர்க்கும் மருந்து என்று குறிப்பிடுகின்றார். விண்ணுளார்=தேவர்கள்; அண்ணல்=தலைவன்; இதே பதிகத்தின் முதல் பாடலில் இது நாள் வரை இறைவனை நினையாத மனிதர்களுக்கு, இறைவனது திருவடிகளைத் தொழாத மனிதர்களுக்கு, இனியாவது அவனைத் தொழுவீர்கள் என்று அறிவுரை கூறிய அப்பர் பிரான், இந்த பாடலில் இறைவனது திருவடிகளை பற்றிக் கொள்ளுமாறு அறிவுரை வழங்குகின்றார். தொழும் அடியார்களின் வினைகள் தீர்க்கப்படும் என்று உணர்த்தும் அப்பர் பிரான், அவனது புகழினை போற்றி இசைப் பாடல்களாக பாடி தொழவேண்டும் என்றும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். விண்ணிலுள்ள தேவர்கள் புகழ்ந்து போற்றி தொழும் ஒளி வடிவான இறைவனை, மண்ணில் உள்ள மனிதர்களின் வினைகளைத் தீர்க்கும் மருந்து போல் செயல்படுபவனை, இசையில் வல்லவர்களால் தொடர்ந்து புகழ்ந்து பாடப்படும் இறைவனை, திருக்கோளிலி தலத்தில் உறையும் தலைவனின் திருவடிகளை தொழுது நீங்கள் உய்வினை அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விண்ணுளார் தொழுது ஏத்தும் விளக்கினை

மண்ணுளார் வினை தீர்க்கும் மருந்தினைப்

பண்ணுளார் பயிலும் திருக்கோளிலி

அண்ணலார் அடியே தொழுது உய்ம்மினே

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.60.4) இறைவனை, நோய்கள் தீர்க்கும் மருந்து என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மந்திரமாக உள்ள அஞ்செழுத்து, மருந்தாகவும் பயன்படும் நிலை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. இருந்து=சிந்தித்து இருந்து; ஏழைகாள்=அறிவில் ஏழையாக இருப்பவர்களே; அருந்தவம் தரும்=மிகவும் அரிய தவங்களைச் செய்வதால் கிடைக்கும் பலன்கள்; பொருந்து=உடலில் பொருந்திய; துரப்பது=நீக்குவது; மன்னும்=நிலை பெற்ற; உடலுறு பிணிகளைத் தீர்த்துக் கொள்வதற்கு நாம் மருத்துவரை நாடுகின்றோம். அவரும் நமக்கு மருந்து அளிக்கின்றார். சில சமயங்களில் உடலுக்கு நோய் வருவதை தடுக்கும் வண்ணம் மருந்து உட்கொள்கின்றோம். மற்றும் வேறு பல சமயங்களில் உடலை வளர்ப்பதற்கும் மருந்து உட்கொள்கின்றோம். உடல் நோயால் வருந்துவது போன்று உயிரும் நோயால் வருந்துகின்றது. உயிரினைச் சென்று அடையும் நோய் பிறவிப்பிணி நோயாகும். உடல் நோய் உறுவதற்கு பல விதமான நோய்க் கிருமிகள் காரணமாக இருப்பது போன்று, உயிர் பிறப்பிறப்பு சுழற்சியில் அகப்படுவதற்கு வினைகள் காரணமாக உள்ளன. ஏற்கனவே நாம் கொண்டுள்ள வினைகளை நீக்கவும், மேலும் வினைகள் சேராமல் இருக்கவும். வினை நீங்கிய உயிர், பழைய வாசனை காரணமாக மீண்டும் வினைகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் தடுக்கவும் வல்லவன் பெருமான் ஒருவன் தான் என்பதால், பிறவிப் பிணிக்கு மருந்தாக பெருமான் செயல்படுகின்றான் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. அறிவற்றவர்களே, நான் பலமுறை சிந்தித்த பின்னர் கூறுகின்றேன்; கேட்பீர்களாக; மிகவும் அரிய தவம் செய்வதால் அடையும் பயன்களை எளிதில் கொடுக்கக்கூடிய அஞ்செழுத்து மந்திரத்தை நீங்கள் ஓதுவீர்களாக. அவ்வாறு ஓதினால், உங்களது உடலில் பொருந்தியுள்ள நோய்களும் அதனால் விளையும் துன்பங்களும் உங்களை விட்டு அறவே நீங்கிவிடும். இவ்வாறு உங்களது நோய்களைத் நீக்கும் மருந்தாக செயல்படும் இறைவன், மாற்பேறு தலத்தில் நிலைபெற்றுள்ளார் என்று அப்பர் பிரான் உலகத்தவர்க்கு அறிவுரை வழங்கும் பாடல்.

இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள்

அருந்தவம் தரும் அஞ்செழுத்து ஓதினால்

பொருந்து நோய் பிணி போகத் துரப்பதோர்

மருந்தும் ஆவர் மன்னு மாற்பேறரே

திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.74.3) அப்பர் பிரான், பெருமானை மருந்து என்று அழைக்கின்றார். பூண்=நகை, அணிகலன்கள்; பொருந்து பூண்முலை நங்கை என்பதை பூண் பொருந்து முலை நங்கை என மாற்றி வைத்து பொருள் கொள்ள வேண்டும். தானவர்=அசுரர்கள்; அசுரர்கள் பெரும்பாலும் சிவபெருமானை போற்றி வாழ்ந்தவர்களாக இருப்பதை நாம் புராணங்களில் காண்கின்றோம். மேலும் அசுரர்கள் பலர் பெருமானை நோக்கி தவமிருந்து வரங்கள் பெற்று இன்பம் அடைந்ததால் பொதுவாக அசுரர்களுக்கு இனிய சுவையாக இருந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். வானவர்கள் துன்பங்களில் ஆழ்ந்த போதெல்லாம், அவர்களது துன்பங்களைக் களைந்து பெருமான் அருள் புரிந்தமையால், கிடைத்தற்கு அரிய அருமருந்தாக செயல்படுபவன் பெருமான் என்று கூறுகின்றார். நோய் நொடி ஏதுமின்றி வாழ்வினை நீட்டிப்பதால், மூவா மருந்து என்று அமுதத்தை குறிப்பிடுவார்கள். எனவே மருந்து என்பதற்கு அமுதம் என்று பொருள் கொண்டு, தேவர்களுக்கு அமுதம் அளித்தவன் சிவபெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமான் ஆலகால விடத்தை உட்கொண்டிராவிடில், அனைத்து தேவர்களும் ஆலகால விடத்தின் பின்னர் தோன்றிய, அமுதம் அருந்தும் வாய்ப்பினையே இழந்திருப்பார்கள் அல்லவா. தேவர்கள் துன்பங்களில் ஆழ்ந்த போதெல்லாம் அதனைக் களைந்து தேவர்களுக்கு கிடைத்தற்கு அரிய அருமருந்தாக திகழ்பவனும், தன்னை வழிபட்டு தவம் புரிந்த தானவர்களுக்கு வரங்கள் அளித்து அவர்களை இன்புறச் செய்பவனும், முறுக்குண்ட மெல்லிய சடையினை உடையவனும், புண்ணியமே உருவாக உள்ளவனும், நெற்றியில் கண்ணினை உடையவனும், சிறந்த அணிகலன்கள் பொருந்திய மார்பகத்தை உடைய மங்கை நல்லாள் ஆகிய பார்வதி தேவியுடன் திரு எறும்பியூர் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எங்களது தலைவன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மருந்து வானவர் தானவர்க்கு இன்சுவை

புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல்

பொருந்து பூண்முலை மங்கை நல்லாளொடும்

எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே

திருமணஞ்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.87.2) அப்பர் பிரான் பெருமானை, மணஞ்சேரி மருந்து என்று அழைக்கின்றார். துன்னு=அடர்ந்த, நெருங்கிய; உன்னுதல்=நினைத்தல்; மன்னு=நிலை பெற்று இருத்தல்; மன்னுவார்=நிலையாக இருத்தல். அடர்ந்தும் நீண்டும் காணப்படும் கூந்தலை உடைய பார்வதி தேவியுடன் கூடியவரும், ஒன்றோடொன்று பின்னி காணப்படும் நீண்ட சடையின் மேல் பிறையை வைத்தவரும், நிலை பெற்ற புகழினை உடைய தலமாகிய மணஞ்சேரி தலத்தில் உறைபவரும், நமது பிறவிப் பிணியினைத் தீர்க்கும் மருத்துவரும் ஆகிய பெருமானை நினைப்பவர்களின் வினைகள் அனைத்தும் ஒழியும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

துன்னு வார்குழலாள் உமையாளொடும்

பின்னு வார்சடை மேல் பிறை வைத்தவர்

மன்னுவார் மணஞ்சேரி மருந்தினை

உன்னுவார் வினை ஆயின ஓயுமே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.1.5) அப்பர் பிரான், பெருமானை, அருமருந்து என்று அழைக்கின்றார். அருந்துணை-ஒப்பற்ற துணை; வான்புலன்கள்=வானத்தைப் போன்று பெரிய புலன்கள்; உண்மையான மெய்ப்பொருளை நாம் நினைக்காத வண்ணம், நம்மைத் திசைதிருப்பும் வல்லமை வாய்ந்த ஐம்புலன்களை, இகழ்ச்சி தோன்ற வான்புலன்கள் என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமான் துணையாக இருந்ததால் அமணர்களின் வஞ்சனையில் இருந்து தப்பித்த அப்பர் பிரான் தனக்கு ஒப்பற்ற பெருந்துணையாக இருந்த சிவபெருமான், யாருக்கெல்லாம் பெருந்துணையாக இருப்பான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உடன் பிறந்தார், சுற்றத்தார், செல்வம் இவைகளின் மீது வைத்த பாசத்தை நீத்து, புலன்களின் மேல் செல்லும் மனத்தை அடக்கி மகளிர் தரும் சிற்றின்பப் பயனை அடியோடு ஒழித்து பொதுவாக பல தெய்வங்களை நினைப்பதை விடுத்து சிவபெருமான் ஒருவனையே போற்றும் வல்லவர்களுக்கு பெருந்துணையாக சிவபெருமான் இருப்பார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பற்றுகளை அறுத்தவரே, இயல்பாகவே பற்றற்ற பரமனைச் சேரலாம் என்ற கருத்து இந்தப் பாடலில் கூறப்படுகின்றது. பற்று அறுவதற்காகத் தானே நமக்கு பல பிறப்பை இறைவன் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். மாயையாகிய உலகப் பொருட்களின் மேல் நாம் வைத்துள்ள பாசத்தை நீக்கி, மெய்ப்பொருளை தியானித்து நமது வினைகளைக் கழிக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரை இங்கே வழங்கப் படுகின்றது. பொது நீக்கி என்று பொதுவான தேவர்களோடு இணைக்காமல், சிவபிரானின் தனித் தன்மைகளை புரிந்து கொண்டு அவரை நினைக்க வேண்டும் என்று இங்கே சொல்லப் படுகின்றது. நமக்கு ஒப்பற்றத் துணைவனாய் விளங்கும் சிவபெருமான், அடியார்களின் அல்லலாகிய பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுபவன். இந்த உலகத்தில், தான் பிறப்பெடுத்த பின்னர் தோன்றிய உடன்பிறப்புக்களை, மற்ற சுற்றத்தார், மற்றும் செல்வம் முதலான உலகப் பொருட்கள் இவற்றின் மீது வைத்த பற்றுக்களை விட்டுவிட்டு, நல்ல வழியில் செல்ல விடாமல் திசை திருப்பும் வல்லமை பெற்ற ஐம்புலன்களை அடக்கி, மகளிரோடு கூடி அனுபவிக்கும் சிற்றின்பத்தை அறவே வெறுத்து, மற்ற தெய்வங்களுடன் சமமாக நினைக்காமல், சிவபெருமானின் தனிப் பெரும் சிறப்புக்களை புரிந்து கொண்டு அவனை வழிபடும் அடியார்களுக்கு பெரிய துணையாக இருப்பவன் சிவபெருமான். இவ்வாறு அனைவருக்கும் துணையாக இருக்கும், பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாட்களை நாம் பிறவாத நாட்களாக கருதவேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அருந்துணையை அடியார் தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி

வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான்புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும்

பொருந்தணை மேல் வரும் பயனைப் போக மாற்றிப் பொது நீக்கித் தனை நினைய வல்லோர்க்கு என்றும்

பெருந்துணையை பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

திருவதிகைத் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தில் அப்பர் பிரான் (6.6.9) பெருமானின் திருவடியை, மருந்தாய் பிணி தீர்க்கவல்ல அடி என்று குறிப்பிடுகின்றார். தணி=இனிய இசை: தகை சார்=பெருமை பொருந்திய: இனிய இசை பாடும் அடியார்களை உடையதும் குளிர்ந்த கெடில நதி பாய்வதும் ஆகிய அதிகை வீரட்டத்தின் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகள் பல பெருமைகளை உடையன. பெருமானது திருவடிகள், அவரது அடியார்களுக்கு மிகவும் அருகில் உள்ளன: அடியார்கள் அல்லாதவர்க்கு தூரத்தில் அமைந்திருப்பவை: கிடைத்தற்கு அரிய அமுதம் போன்று அடியார்களுக்கு இனிமையாக அமைந்துள்ள திருவடிகள்: தன்னைத் தொழும் அடியார்களுக்கு பக்கத் துணையாக இருப்பன அந்த திருவடிகள்: உலகப் பற்றினை அறுத்த சான்றோர்கள் விருப்பத்துடன் பற்றும் திருவடிகள் அவை: விலை உயர்ந்த மணிகள் போலவும் பொன் போலவும், மதிக்க முடியாத பெருமை உடையவை அந்த திருவடிகள்: அடியார்களின் பிறவிப் பிணியை அடியோடு அறுத்துத் தீர்க்கும் வல்லமை பெற்றவை அந்த திருவடிகள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. .

அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி

பணிபவர்க்குப் பாங்காக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி

மணி அடி பொன்னடி மாண்பாம் அடி மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி

தணிபாடு தண்கெடில நாடன் அடி தகை சார் வீரட்டத் தலைவன் அடி

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.20.2) அப்பர் பிரான் பெருமானை அருமருந்து என்று அழைக்கின்றார். பாசுபத வேடத்தான்=அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் அருளும் வண்ணம் கொண்ட வேடுவக் கோலம்; தனது கையில் வில்லினையும் அம்புகளையும் ஏந்தி பெருமான் சென்ற செய்தி படையானை என்ற சொல்லால் குறிக்கப் படுகின்றது. அனங்கன்=மன்மதன், அங்கம் இல்லாதவன். தனது தவத்தினைக் கலைத்த குற்றத்திற்காக, நெற்றிக் கண்ணினை விழித்து மன்மதனை எரித்த பெருமான், பின்னர் இரதி தேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்கின்றார். ஆனால் அடுத்தவர் கண்களுக்கு மன்மதன் தெரிய மாட்டான் என்றும், இரதி தேவியின் கண்களுக்கு மட்டும் தெரிவான் என்றும் பெருமான் கூறுகின்றார். அடுத்தவருக்கு உடல் தெரியாத வண்ணம் மன்மதன் வாழ்ந்ததால், உடல் இல்லாதவன் என்று உணர்த்தும் பொருட்டு, அனங்கன் என்ற பெயர் மன்மதனுக்கு ஏற்பட்டது. பாசுபத வேடம் என்பதற்கு, அகச்சமயங்கள் ஆறில் ஒன்றான பாசுபத நெறிக்கு உரிய திருவேடத்தை பூண்டவன் என்றும் விளக்கம் அளிக்கின்றனர். பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமனம், பைரவம், சைவம் ஆகிய ஆறும் சைவ சமயத்தின் பிரிவுகள்; வில் மற்றும் அம்புகள் ஆகிய படையை ஏந்தியவனாய், வேடுவக் கோலம் பூண்டு, பாசுபதனாக சென்று அர்ஜுனனுக்கு அருள் புரிந்தவனும், பண்டைய நாளில் தனது தவத்தினை கலைக்க முயற்சி செய்த மன்மதனின் உடலை தனது நெற்றிக்கண்ணால் பார்த்து எரித்து அழித்த பின்னர் அவனது மனைவி இரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி மற்றவர்களின் கண்களுக்கு உடல் புலப்படா வண்ணம் மன்மதன் வாழ அருளியவனும், தனது அடியார்களை பாவங்கள் அணுகாத வண்ணம் காப்பவனும், அடியார்களின் பிறவிப் பிணியைத் தீர்க்கும் அரிய மருந்தாக செயல்படுவானும், தனது அடியார்கள் துன்பப்படும்போது அவர்களது நிலை கண்டு ஆஆ என்று இரங்கி அவர்களது துயரினைத் தீர்ப்பவனும், அழகான சடையை உடையவனும், தன்னிடம் சரணடைந்த சந்திரனைக் காக்கும் பொருட்டு பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனும், வெண்சங்கு போன்ற நிறத்தில் காணப்படும் காளையைத் தனது வாகனமாகக் கொண்டு எங்கும் செல்வானை, எனது தலைவனை, திருநள்ளாறு தலத்தில் உறையும் இறைவனை அடியேன் தியானித்து வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

படையானை பாசுபத வேடத்தானைப் பண்டனங்கன் பார்த்தானைப் பாவமெல்லாம்

அடையாமைக் காப்பானை அடியார் தங்கள் அருமருந்தை ஆவா என்று அருள் செய்வானைச்

சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச் சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின்

நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே

நமது தீவினைகளையும் அந்த தீவினைகளால் ஏற்படும் மயக்கத்தினையும் போக்கும் மருந்தாக செயல்படும் இறைவன், திருமறைக்காடு தலத்தில் மணாளனாக திகழ்கின்றார் என்று திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.23.8) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அம்மை=வீடுபேறு; என்றும் அழியாத நிலையான பேரின்பத்தை வீடுபேறு உயிருக்கு தருவதால், வீடுபேற்றினை, அமிர்தம் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பொதுவாக உலகினில் அனைவரும் தன்னை விடவும் தனக்கு நெருங்கிய, தன்னை விடவும் இனிய பொருளாக, வேறு எதையும் கருதுவதில்லை. ஆனால் பெருமான் தனக்கு புரிந்துள்ள நன்மைகளை கருத்தினில் கொண்டு, பெருமானை தன்னிலும் இனியான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். நாமும், இந்நாள் வரையிலும் பெருமான் நமக்குச் செய்த நன்மைகளை கருத்தினில் கொண்டு, நம்மிலும் அவனை இனியவனாக கருதி போற்றி வழிபடவேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் உணர்த்தப்படும் அறிவுரை; மம்மர்= மயக்கம்; என்றும் அழியாத பேரின்பத்தை தருவதால், உயிர்களால் அமுதமாக கருதப்படும் வீடுபேறாக இருப்பவனும், இம்மையில் துன்பங்கள் களைந்து இன்பம் அளிப்பதால் தெளிந்த தேன் போன்று இன்பம் அளிப்பவனாக அடியார்களால் கருதப்படுபவனும் ஆகிய இறைவன், எனது நெஞ்சத்தை விடவும் எனக்கு இனிமையாக உள்ளான். உண்மையான ஞான விளக்காக இருப்பவனும், திருவெண்காடு தலத்தில் உறைபவனும், நமது தீவினைகளையும் அந்த தீவினைகளால் ஏற்படும் மயக்கத்தினையும் போக்கும் மருந்தாக செயல்படுபவனும் ஆகிய இறைவன், திருமறைக்காடு தலத்தில் மணாளனாக திகழ்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அந்தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு

இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்

மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக

மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் தானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.32.1) அப்பர் பிரான் பெருமானை, வானவர்கள் போற்றும் மருந்தே என்று அழைக்கின்றார். கற்றவர்கள்=மெய்ப்பொருளை உண்மையாக உணர்ந்தவர்கள்; உண்ணுதல்=அனுபவித்தல்; கனி=பயன், அற்றவர்கள்= சிவபெருமானைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லாதவர்கள்; கதி=முக்திப்பேறு; உண்மையான மெய்ப்பொருளாக உன்னை உணர்ந்தவர்கள் உன்னை நினைத்து அதன் பயனாக வீடுபேறு நிலையினை அடைய உதவுபவனே, உனது திருவடிகளைச் சார்ந்தவர்கள் அடையும் முக்தி என்னும் நற்பேற்றினை அடையுமாறு செய்யும் பெருமானே, உன்னை அல்லாமல் வேறு அனைத்துப் பற்றுகளையும் துறந்தவர்களுக்கு இனிக்கும் அமுதமே, எனது துயரங்களைத் தீர்த்து ஆட்கொண்ட ஆண்டவனே, வேறு எவரும் உனக்கு ஒப்பாக இல்லாதவனே, வானவர்கள் போற்றும் மருந்தே, பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களின் நகரங்களை எரித்த சிவபெருமானே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி

அற்றவர்கட்கு ஆரமுதமானாய் போற்றி அல்லறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி

மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி

செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி திருமூலட்டானனே போற்றிபோற்றி

ஆணவ மலம் ஏற்படுத்தும் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் சிந்தனை உடையவர்களுக்கு அவர்களது மயக்கத்தை போக்கும் மருந்தாக செயல்படுபவன் சிவபெருமான் என்று ஆரூர் அரநெறி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.33.7) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நாதமாகவும் நாதத்தின் அடிப்படையில் அமைந்த ஓசை பொருந்திய சொற்களாகவும் அந்த சொற்களின் பொருளாகவும் இருப்பவன் இறைவன் என்பது பல திருமுறை பாடல்களில் சொல்லப் படுகின்றது. பொருள் பொருந்திய நல்ல சொற்களாக உள்ளவனும், புகலூர் மற்றும் புறம்பயம் ஆகிய திருத்தலங்களில் பொருந்தி உறைபவனும், ஆணவ மலம் ஏற்படுத்தும் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் சிந்தனை உடையவர்களுக்கு அவர்களது மயக்கத்தை போக்கும் மருந்தாக செயல்படுபவனும், மறைக்காடு சாய்க்காடு ஆகிய தலங்களில் நிலையாக பொருந்தி இருப்பவனும், அடர்ந்த மரங்கள் நிறைந்து காணப்படுவதால் இருளையே தனது இயல்பாகக் கொண்ட நல்ல சோலைகள் நிறைந்த ஆரூர் நகரத்து மூலட்டானத்தில் மகிழ்வுடன் எழுந்தருளியுள்ள இறைவனும், இமையோர் புகழும் வண்ணம் அவர்களுக்கு அருள் புரிந்தவனும், ஆரூர் அரநெறி தலத்தில் அரநெறியப்பன் என்ற பெயருடன் விளங்குபவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை சரண் அடைந்து, அடியேன் தீர்க்க முடியாத எனது வினைகளை நீக்கிக் கொண்டேன் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

பொருளியல் நற்சொற் பதங்கள் ஆயினானைப் புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை

மருளியலும் சிந்தையர்க்கு மருந்து தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை

இருளியல் நற்பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிதமரும் பெருமானை இமையோர் ஏத்த

அருளியனை அரநெறியில் அப்பன் தன்னை அடைந்தடியேன் அருவினை நோய் அறுத்தவாறே

மேலும் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப்படும் தலத்தில் (தற்போதைய பெயர் வைத்தீசுவரன் கோயில்) இறைவன் மருத்துவனாக காயங்களுக்கு சிகிச்சை (முருகப் பெருமானின் படைவீரர்களுக்கு) செய்த நிலை இந்த திருக்கோயிலின் தலபுராணத்தில் கூறப்படுகின்றது. தாரகாசுரனுடன் நடந்த போரில் காயம் அடைந்த தனது படை வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யுமாறு இறைவனை முருகக் கடவுள் வேண்டுகின்றார். இறைவனுடன் இறைவியும், எண்ணெய் கிண்ணத்துடன், சிவபெருமான் கொடுக்கும் மருந்துகளை குழைத்து காயங்களில் தடவுவதற்கு வசதியாக வருகின்றார். இதனால் அம்மைக்கு தைல நாயகி என்ற பெயர் வந்தது. தைல நாயகி என்ற பெயர் நாளடைவில் தையல்நாயகி என்று மருவிவிட்டது. இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர் வந்த காரணம் இது தான். இந்த தலத்தில் உள்ள வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து தான் சிவபெருமான் வைத்தியம் பார்த்ததாக நம்பப் படுகின்றது. வைத்தியநாதனாக சிவபெருமான் அருள் புரிந்தமை குறித்து அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது இயற்றிய தனது தேவாரப் பதிகத்தில் (ஆண்டானை அடியேனை ஆளாக கொண்டு எனத் தொடங்கும் பதிகம்–6,54) எட்டாவது பாடலில் பாடியுள்ளார். வாராத செல்வம் என்று குறிப்பிடுவதை எளிதில் கிடைக்காத வீடு பேறு செல்வம் என்றும், மறுபடியும் இந்த உலகில் வந்து பிறவாத நிலையை உடைய செல்வம் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். எப்போதும் இறைவனை பிரியாது வழிபடும் அடியவர்க்கு இந்த நிலை அருளப்படும் என்பதும் இந்தப் பாடலில் உணர்த்தப் படுகின்றது. மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி என்ற தொடர் மூலம், இறைவன் உடல் நோயினையும் உயிர் நோயாகிய பிறவிப் பிணியினையும் தீர்ப்பவனாக செயல்படும் தன்மை உணர்த்தப் படுகின்றது.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிறிவிலா அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி

தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீயெழ திண்சிலை கைக்கொண்ட

போரானை புள்ளிருக்கு வேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

ஆயிரம் நாமங்கள் கொண்டு வானவர்கள் சிவபெருமானை ஏத்துவதாக இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில், திருமால் சிவபெருமானை புகழ்ந்து அவரது ஆயிரம் திருநாமங்களைக் கொண்டு பாடிய சஹஸ்ரநாமம் ஒரு பகுதியாக உள்ளது. திருமால் அருளிய இந்த தோத்திரத்தை, வானவர்கள் பயன்படுத்திக் கொண்டு சிவபெருமானை வணங்கினார்கள் என்பதை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். பஞ்சாக்கர மந்திரத்தை மந்திரம் என்றும், பஞ்சாக்கர மந்திரத்தால் விளக்கப்படும் ஆகம நூல்களை தந்திரம் என்றும் அந்த நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ள முறையின் வழியே செய்யப்படும் தியானம், பூஜை, ஜெபம் ஆகியவற்றை மருந்து என்றும் அப்பர் பிரான் உணர்த்துவதாகவும் பொருள் கொள்ளலாம். எண்ணிக்கையில் அடங்காத பல்லாயிரம் திருநாமங்கள் சொல்லி வானோர்கள் சிவபெருமானை வாழ்த்தி வணங்குகின்றார்கள். எப்போதும் தங்களது சிந்தனையில் பெருமானை நினைத்து வாழும் அடியார்களுக்கு, எளிதில் எவருக்கும் கிடைக்காத முக்திச் செல்வத்தை அளிப்பவன் சிவபெருமான்; மந்திரமாகவும் அவற்றைச் செயல்படுத்தும் முறைகளாகவும் இருந்து தீராத நோய்களையும் தீர்க்க வல்ல மருந்தாகவும் இருப்பவன் சிவபெருமான். தங்களது விருப்பம் போன்று வானில் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளும் தீப்பற்றி அழியுமாறு, வல்லமை வாய்ந்த வில்லினைக் கையில் ஏந்தி போரில் ஈடுபட்டவன் சிவபெருமான். இத்தகைய பண்புகள் கொண்ட புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும் பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன் என்று அப்பர் பிரான் தனது வருத்தத்தை தெரிவிக்கும் பாடல்.

திருக்கயிலாயம் மீது அருளிய போற்றித் திருத்தாண்டகத்தின் பாடலில் (6.55.4) அப்பர் பிரான், வானத்தார் போற்றும் மருந்தே என்று பெருமானை அழைக்கின்றார். பொதுவாக வானோர்கள் மானிடர்களாகிய நம்மை விடவும் பல மடங்கு ஆற்றல் உடையவர்களாக கருதப் படுகின்றனர். எனினும் அவர்கள் எவரும், பெருமானின் அருளின்றி வீடுபேறு நிலையை அடைய முடியாது. தங்களது பிறவிப் பிணிக்கு மருந்தாக விளங்குபவன், சிவபெருமான் ஒருவனே என்பதை புரிந்து கொண்டவர்களாக, பெருமானை மருந்தே என்று அழைத்து அவர்கள் போற்றுவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். விண்ணில் வாழும் தேவர்கள் போற்றும் மருந்தே, எனது சிந்தையில் வந்து புகுந்த இறைவரே, உயிர்களின் ஊனமாகிய மலங்களை நீக்கும் கருணை உள்ளம் கொண்டவரே, திருமாலும் பிரமனும் உன்னைத் தேடித் திரிந்து உன்னைக் காணாமல் தவித்த போது அவர்கள் முன்னே விண் முட்டும் அளவுக்கு தீப்பிழம்பாக உயர்ந்தவனே, வடிகட்டப்பட்ட தேனைப் போல் தெளிவாக உள்ளவனே, தேவர்களுக்கு எல்லாம் தேவனாகத் திகழ்பவனே, சுடுகாட்டுத் தீயில் கூத்து ஆடுவதை விரும்பவனே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன் என்று அப்பர் பிரான் சொல்லும் பாடல்.

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்து என்றன் சிந்தை புகுந்தாய் போற்றி

ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி

கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.63.2) அப்பர் பிரான், பெருமானை மருந்து என்று அழைக்கின்றார். தன்னை தியானிக்கும் அடியார்களின் மனத்தினுள் இருக்கும் பெருமான் அவர்களது பிறவிப் பிணியைத் தீர்க்கின்றான் என்று கூறுகின்றார். மருந்து=பிறவிப் பிணிக்கு மருந்தாக உள்ளவன்; மந்திரிப்பார்=மனதினில் ஆழமாக பஞ்சாக்கர மந்திரத்தை உச்சரிப்பவர்: பெருமான் தனது சடையில் அணிந்திருப்பது பிறைச் சந்திரன் என்றாலும், தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரன், பெருமான் அணிந்த நொடியிலிருந்து அழியாமல் வளரத் தொடங்கியதால் வளர்மதி என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கருந்தான மத களிறு=கரிய மதநீர் பெருக்கும் யானை; கனம்=பெருமை மிகுந்த; இரத்தத்தின் ஈரப்பசை மிகுந்த யானையின் தோலை உடலின் மீது அணிந்து கொண்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று கூறுவார்கள். எனவே தான், பெருமான் தான் அடக்கி தோல் உரித்த யானையின் தோலை தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட போது உமையன்னை அச்சம் கொண்டாள் என்று இங்கே கூறப்படுகின்றது. மற்றவர்களின் உடலுக்கு கேடு செய்யும் யானையின் பசுந்தோலும் இறைவனின் உடலுக்கு எந்தவிதமான கெடுதியும் செய்யவில்லை என்பதும் இங்கே மறைமுகமாக உணர்த்தப் படுகின்றது. பிறவிப் பிணிக்கு மருந்தாக உள்ளவனை, தனது திருநாமத்தை (பஞ்சாக்கர மந்திரத்தை) மந்திரமாக மனதினில் ஆழமாக உச்சரிக்கும் அடியார்களின் மனதினில் இருப்பவனை. தேய்ந்து அழிந்து கொண்டிருந்த சந்திரனுக்கு அருள் புரிந்து வளர்மதியாக மாற்றியவனை, மிகவும் மகிழ்ச்சியுடன் அடியேனது உள்ளத்தில் இருப்பவனை, இறப்பு இல்லாதவனை, மற்றவர் போன்று பிறவி எடுக்காமல் தானே தோன்றியவனை, வானோர்களின் தலைவனை, உமையவள் அஞ்சும் வண்ணம், தன்னை எதிர்த்து வந்த கருமை நிறத்து மதநீர் ஒழுக்குடன் எதிர்த்து வந்த யானையின் தோலை உரித்து தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவனை, பெருமை மிகுந்த மழுவாள் படையினை உடையவனை, பலி ஏற்பதற்காக ஊரூராக திரிபவனை. திருவானைக்கா தலத்தில் உறைபவனை, செழிப்பான நீர்த்திரளின் வடிவமாக அமைந்த பெருமானை அடியேன் சென்று நாடினேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மருந்தானை மந்திரிப்பார் மனத்துளானை வளர்மதியம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து

இருந்தானை இறப்பிலியைப் பிறப்பிலானை இமையவர்தம் பெருமானை உமையாள் அஞ்சக்

கருந்தான மத களிற்றின் உரி போர்த்தானைக் கனமழுவாட் படையானை பலி கொண்டு ஊரூர்

திரிந்தானைத் திருவானைக்கா உளானைச் செழுநீர் திரளைச் சென்று ஆடினேனே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.64.2) அப்பர் பிரான் பெருமானை, மருந்தவன் என்று குறிப்பிடுகின்றார். தோற்றம் நிலையிறுதிப் பொருளாய் வந்த என்ற தொடர், உயிர் அதன் வினைகளுக்கு ஏற்ப உடலுடன் இணைக்கப் படுவதையும், அந்த உடல் சில வருடங்கள் உயிரைத் தாங்கும் வண்ணம் நிலைநிறுத்தப் படுவதையும், வாழ்நாள் முடிவுறும் தருணத்தில் அழிக்கப் படுவதையும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு உயிர் தங்குவதற்காக உடலைப் படைத்து காத்து பின்னர் அழித்து, இயக்கும் பெருமானின் செயல் இங்கே உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு முத்தொழில் புரிவது, உயிர்கள் தங்களது வினைகளைக் கழித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுவதால், வினைகளைத் தீர்க்கும் மருந்து என்று இறைவனை குறிப்பிடுகின்றார். பொறை=பாரம்; காலையில் எழும் போதே இறைவனைப் பற்றிய சிந்தனையுடன் எழவேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். அடுத்த நாள் காலையில் இறைவனைப் பணிந்தவாறு எழவேண்டும் என்ற சிந்தனையுடன் துயிலில் ஆழ்ந்தால், மறுநாள் காலையில் நாம் விழித்தெழும் தருணத்தில் இறை சிந்தனை நமது மனதினில் இருக்கும். உயிர்கள் எந்த நேரத்தில் எந்தவிதமான ஆபத்தினை, எதிர் கொள்ள நேரிடும் என்பதை எவராலும் உறுதியாக சொல்ல முடியாது. மணிவாசகர் போற்றித் திருவகவலில், பத்து மாதங்கள் தாயின் கருவினில் பலவிதமான இடர்களை எதிர்கொண்ட உயிர், உலகத்தில் பிறந்த பின்னர் எதிர்கொள்ளும் இடர்களை மிகவும் சுருக்கமாக, கூறுவதை நாம் இங்கே நினைவு கூரலாம். காலையில் ஏற்படும் மலச்சிக்கல், பின்னர் கடும் வெய்யிலால் ஏற்படும் துன்பங்கள், பசியின் கொடுமையால் ஏற்படும் இடர்கள், பொருள் ஈட்ட வேண்டி ஈடுபடும் வேலைகள், அத்தகைய வேலைகள் மாட்டும் மற்ற காரணங்களுக்காகவும் மேற்கொள்ளும் யாத்திரைகள், தேவையான தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் உயிர்க்கு ஆபத்து ஏற்படுகின்றது. இத்தகைய இடர்களிலிருந்து நம்மை காக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அவனை போற்ற வேண்டும் என்று இந்த அகவலில் மணிவாசகர் கூறுகின்றார். உலகில் உள்ள அனைத்து உயிர்களுடன் கலந்திருந்து எங்கும் பரந்து இருப்பவனும்; தன்னை வணங்கியெழும் அடியார்களின் பாவங்களையும் வினைகளையும் போக்குபவனும்; தூய்மையான மலர்களைக் கொண்ட மாலைகளை அணிந்தவனும்; உயிர்களை தகுந்த உடலுடன் இணைத்தும், அந்த உடலை பாதுகாத்தும் உரிய நேரத்தில் அழித்தும் உயிர்கள் உடலுடன் கூடியிருக்கும் நேரத்தில் தங்களது வினைகளை கழித்துக் கொள்ள வாய்ப்பு அருளி வினைகளை கழிக்கும் மருந்தாக செயல்படுபவனும், உயிர்களின் தொகை மிகவும் அதிகமாக மாறும் நேரத்தில் உலகத்தின் பாரங்களை தீர்ப்பவனும், மலர்கள் தூவி தன்னை வழிபடும் எண்ணத்துடன் நினைத்து எழுவார்களின் உள்ளத்தில் நீங்காது இருப்பவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் பெருமானை மருந்தவன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

பரந்தவன் காண் பல்லுயிர்களாகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போகத்

துரந்தவன் காண் தூமலரங் கண்ணியான் காண் தோற்றம் நிலையிறுதிப் பொருளாய் வந்த

மருந்தவன் காண் வையங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்துஎழுவார் உள்ளம் நீங்காது

இருந்தவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.65.5) அப்பர் பிரான் பெருமானை, பிணியை தீர்க்கும் மருந்தவன் என்று குறிப்பிடுகின்றார். பிஞ்ஞகன்=அழகிய தலைக் கோலத்தை உடையவன்; வாதை=துன்பம்; பேதை=ஏதும் அறியாத அறிவிலி; காஞ்சி நகரில் அம்பிகை தவம் செய்ததை உணர்த்தும் பொருட்டு அருந்தவம் செய்த ஆயிழையாள் என்று கூறுகின்றார். இன்றும் காஞ்சி காமகோட்டத்தில் அம்பிகை தவம் செய்வதாக கருதப் படுகின்றது. பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும் மருந்தவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் என்ற தொடர், அப்பர் பிரானின் வாழ்க்கையை குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்ளலாம். தருமசேனராக, சமண சமயத்து குருவாக வாழ்ந்து வந்த காலத்தில், அவர் சூலை நோய் வாய்ப்பட்டு துன்பம் அடைந்ததை நாம் அனைவரும் அறிவோம். அப்போது உடனிருந்த சமண குருமார்கள் தங்களுக்கு தெரிந்த மந்திரங்கள் தந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, தருமசேனரது நோயினை தீர்க்க கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால் அந்த சிகிச்சைகள் ஏதும் பயனளிக்காத நிலையில், திருவதிகைப் பெருமானை அப்பர் பிரான் அணுகிய போது அவரது நோய் தீர்ந்தது. எனவே மருந்தாகவும் மந்திரங்களாகவும் செயல்பட்டு, தீர்க்க முடியாதது என்று கருதப்பட்ட சூலை நோயினை நீக்கியவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் நினைவு கூர்கின்றார் என்றும் கூறுவதும் பொருத்தமே. பிறவிப் பிணியையே மிகவும் பெரிய பிணியாக கருதி பல பாடல்களில் அப்பர் பிரான் குறிப்பிடுவதால் பிறவிப் பிணியை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம். சிறந்த தவக்கோலத்தையும் அழகிய தலைக் கோலத்தையும் உடையவனும், பிறைச் சந்திரனைத் தனது தலையில் சூடியவனும், அறிவில்லாத பேதையாகிய அடியேனை துன்புறுத்தும் பிறவிப்பிணியை தீர்க்கும் மருந்தாக செயல்படுபவனும், பலவிதமான பலன்களைத் தரும் மந்திரமாக இருப்பவனும், வானவர்கள் வணங்கும் மாதேவனும், காஞ்சி மாநகரில் அரிய தவம் செய்து தன்னை மகிழ்வித்த பிராட்டியைத் தனது உடலில் ஒரு பாகத்தில் ஏற்றவனும், தேவர்களால் அர்ச்சனை செய்யப்பட்டும் புகழப்பட்டும் இருப்பவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெருந்தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறைசூடி காண் பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்

மருந்தவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண்

அருந்தவன் காண் ஆயிழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த

இருந்தவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.7) அப்பர் பிரான், பெருமானை வலிமை வாய்ந்த வினைகளை வேருடன் அறுத்தெறியும் மருந்து என்று குறிப்பிடுகின்றார். ஐம்புலனும் காத்தான்=ஐந்து புலன்களும் சேட்டைகள் செய்து அடியார்களின் சிந்தனையை திசை திருப்பாத வண்ணம் காப்பவன்; பொங்க=செழிக்க, சிறந்து விளங்க; மாத்து=பெருமை; மகத் என்ற வடமொழி சொல்லின் திரிபு; மாத்தாடி=பெருமை உடைய நடனம்; தாருகவனத்து முனிவர்கள் தன் மீது ஏவிய மதம் கொண்ட யானையின் தோலை உரித்த தருணத்தில் தனது திருமேனி, பார்ப்பவர்களின் கண்களை கூசும் வண்ணம் ஒளி மிகுந்து விளங்க, அந்த கோலத்தைக் கண்ட தேவர்களின் கண்களை பாதுகாக்கும் பொருட்டு யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்த்தவனும், தன்னைக் கொல்ல வந்த புலியின் தோலினை உரித்துத் தனது ஆடையாக அணிந்து எங்கும் திரிபவனும், அடியார்களின் இறைச் சிந்தனையை ஐந்து பொறிகளும் திசை திருப்பாத வண்ணம் பாதுகாப்பவனும், பறக்கும் மூன்று கோட்டைகளையும் வெகுண்டு எரித்தவனும், கழல் அணிந்த தனது காலினால் இயமனை கோபித்து உதைத்தவனும், பெருமை மிகுந்த நடனத்தை ஆடுபவனும், பக்தி கொண்டு தன்னை வணங்கும் அடியார்களின் வலிமையான வினைகளை வேருடன் களைபவனும், அடியார்களை வருத்தும் பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்ந்து அதனை போக்குபவனும் ஆகிய பெருமானை, மிகவும் பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும் கொடியன அல்லவா என்று அப்பர் பிரான் தனது நிலையை எண்ணி. தனது வருத்தத்தை தெரிவிக்கும் பாடல்.

போர்த்து ஆனையின் உரிதோல் பொங்கப்பொங்கப் புலியதளே உடையாகத் திரிவான் தன்னை

காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான் தன்னை

மாத்தாடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேரறும் வண்ணம் மருந்துமாகித்

தீர்த்தானைத் திருமுதுகுன்று உடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே

மாமுனிவர் தம்முடைய மருந்து என்று பெருமானை அப்பர் பிரான் வலஞ்சுழி மற்றும் கொட்டையூர் தலங்களை இணைத்து பாடிய பதிகத்தின் பாடலில் (6.73.6) குறிப்பிடுகின்றார். நமது பிறவிப் பிணிக்கு இறைவன் சிறந்த மருந்து என்பதை நாம் அறிந்தாலும், நமது பிறவிப் பிணியினை தீர்த்துக் கொள்வதற்கு நாம் முயற்சிகள் ஏதும் எடுப்பதில்லை. அவ்வப்போது உடல் அனுபவிக்கும் சிற்றின்பங்களில் மனம் மகிழும் நாம், அத்தகைய சிற்றின்பங்களின் விளைவால் பின்னர் உடல் அனுபவிக்கும் பல துன்பங்களை பொருட் படுத்துவது இல்லை. இந்த உடலும் உடல் பெறுகின்ற சிற்றின்பங்களும் நிலையானவை என்ற மாயையில் ஆழ்ந்து, அத்தகைய சிற்றின்பங்கள் பெறுவதற்கு துடிக்கின்றோம். எனவே பிறவியை உயிர் அடைந்துள்ள பிணியாகவே கருதுவதில்லை. பிறவியை ஒரு பிணியாக கருதினால் தானே, உயிரைப் பீடித்துள்ள பிணிக்கு மருந்து தேடுவதற்கு முயற்சி செய்வோம். ஆனால் இந்த பிறவிப் பிணியால் உயிர் அடைகின்ற துயரங்களை உணர்ந்துள்ள முனிவர்கள், உலகப் பொருட்கள் மீதும் உலகத்து உயிர்கள் மீது தாங்கள் கொண்டிருந்த பாசத்தினை நீக்கி, துறவறம் மேற்கொண்டு இறைவனை தியானம் செய்து அதன் பயனாக தங்களது பிறவிப் பிணியினை அறுத்துக் கொள்வதை உணர்த்தும் பொருட்டு, மாமுனிவர் தம்முடைய மருந்து என்று இங்கே குறிப்பிடுகின்றார். சண்டன்=சண்டீசன்; தேவர்களும் தொழும் நிலைக்கு சண்டீசனை உயர்த்திய செய்தி இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. சிறுவன் விசாரசருமனுக்கு சண்டீசன் என்ற பெயரையும் தொண்டர்களின் தலைவன் என்ற பதவியையும் அளித்து, தேவர்கள் அனைவரும் சண்டீசரை தொழும் நிலைக்கு உயர்த்தியவனும், சதாசிவன் என்ற திருநாமத்தால் அழைக்கப் படுபவனும், அனைவர்க்கும் நலம் அளிப்பதால் சங்கரன் என்று அழைக்கப் படுபவனும், தொண்டர்கள் பலரும் ஒன்று கூடி வணங்குவதும் கழல் அணிந்ததும் ஆகிய திருவடிகளை உடையவனும், நீண்ட நெடிய அனல் பிழம்பாக திருமாலும் பிரமனும் தொடர்ந்து பறந்தும் அகழ்ந்தும் முயற்சி செய்த போதும் காண முடியாமல் நின்றவனும், மிகுந்த நீரினைக் கொண்டு வரும் பொன்னி நதியின் கரையில் அமைந்துள்ள வலஞ்சுழி தலத்தில் உறையும் இறைவனும், மார்க்கண்டேயன் ஹேரண்டர் ஆகிய முனிவர்களின் பிறவிப் பிணியினைத் தீர்க்கும் மருத்துவனும், மேகங்கள் தவழும் கொடிகளை உடைய மாடங்கள் நிறைந்த கொட்டையூர் தலத்தில் கோடீச்சரம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் தலைவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ காண்பாயாக என்று தனது நெஞ்சினுக்கு அறிவுரை சொல்வது போன்று, நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

சண்டனை நல்லண்டர் தொழச் செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன் தான் கண்டாய்

தொண்டர் பலர் தொழுதேத்தும் கழலான் கண்டாய் சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்

மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்

கொண்டல் தவழ் கொடிமாடக் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.74.5) அப்பர் பிரான், பெருமான் வருபிணி தீர்க்கும் மருந்தாக செயல்படுவதாக குறிப்பிடுகின்றார். உமையம்மை தன்னை நோக்கித் தவம் செய்ததால் மகிழ்ந்த சிவபெருமான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி இந்த பாடலில் நமக்கு சொல்லப் படுகின்றது. எனவே சிவபெருமானின் தவத்தைக் கலைப்பதற்கு மன்மதன் செய்த முயற்சிக்கும் உமையன்னையின் திருமணத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பது புலனாகின்றது. புரை=துளை: துதிக்கையில் உள்ள துளையினை இங்கே அப்பர் பிரான் உணர்த்துகின்றார். மனித வாழ்க்கையில் நேரும் இன்பங்களும் துன்பங்களும், இருவினைத் தொடர்பால் உண்டாகின்றன. மனிதர்கள் அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் வினைகளை மேலும் பெருக்குவதால், அவ்வாறு பெருக்கப்படும் வினைகளைத் தீர்ப்பதற்காக மறுபடியும் மறுபடியும், உயிர் மேலும் பல பிறவிகள் எடுக்க நேரிடுகின்றது. இவ்வாறு பிறவி எடுக்கும் தன்மையை நோய் என்று அப்பர் பிரான் கருதுவதால், வருபிணி நோய் என்று இனிமேல் எடுக்கவிருக்கும் பிறவிகளை இங்கே குறிப்பிடுகின்றார். துளை உடைய துதிக்கையைக் கொண்ட யானையின் தோலினை போர்வையாக போர்த்தவன் சிவபெருமான்; முறுக்கப்பட்ட சடையின் உள்ளே கங்கை நதியை அடைத்து வைத்த புனிதன் சிவபெருமான்; நறுமணம் கமழும் வெள்ளெருக்குப் பூக்கள் கொண்ட மாலையினை அணிந்தவன் சிவபெருமான்; அவன் சிவந்த தனது மேனியில் திருநீற்றை பூசியதால், சிவப்பு நிறமும் வெண்மை நிறமும் கலந்த மேனியனாக காணப்படுகின்றான்; இமயமலையின் அரசனாகிய பர்வத மன்னனின் மகளாகிய உமையம்மை செய்த தவத்தினால் மகிழ்ந்து அவளைத் திருமணம் செய்து கொண்டவன் சிவபெருமான்; அனைத்து உயிர்களையும் தொடர்ந்து ஆட்கொள்ளும் பிறவிப் பிணிக்கு மருந்தாக செயல்பட்டு அந்த பிறவிப்பிணி நீங்குமாறு அருள் செய்பவன் சிவபெருமான்; வெண்மை நிறம் கொண்ட இடபத்தினை தனது இலச்சினையாக கொடியில்ஏந்திய நாதன் சிவபெருமான். இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புரை உடைய கரியுரிவைப் போர்வையானைப் புரிசடை மேல் புனலடைத்த புனிதன் தன்னை

விரை உடைய வெள்ளெருக்கம் கண்ணியானை வெண்ணீறு செம்மேனி விரவினானை

வரையுடைய மகள் தவஞ்செய் மணாளன் தன்னை வருபிணி நோய் பிரிவிக்கும் மருந்து தன்னை

நரைவிடை நற்கொடி உடைய நாதன் தன்னை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

திருவாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில், அப்பர் பிரான், தானும் திருஞான சம்பந்தரும் கண்ட பெருமானின் நடனக் காட்சியை விவரிக்கின்றார். இந்த பதிகத்தின் எட்டாவது பாடலில் (6,77.8), பெருமான் அடியார்களின் பிறவிப் பிணிக்கு மருந்தாக செயல்படுவதைத் தான் கண்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார். ஏனைய தேவர்களுக்கும் உலகத்தவர்க்கும் பொருந்தாத செயல்கள் செய்பவர் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மற்றவரிடமிருந்து மாறுபட்டு இருப்பது தானே பெருமானின் தனிச் சிறப்பு. இந்த தன்மை விகிர்தன் என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டு, அதற்கான காரணமும் விளக்கப் பட்டுள்ளது. அமுதம் உண்பதற்காக மற்றவர் காத்திருக்கையில், பொங்கி எழுந்த நஞ்சினை உண்டது; செல்வம் பலவிருந்தும் தான் உண்பதற்காக வீடுகள் தோறும் சென்று பலியேற்பது, பட்டாடை முதலியன தவிர்த்து கீளும் கோவணமும் அணிந்து காட்சி தருவது; தேர் குதிரை யானை முதலியவற்றை வாகனமாக கொள்ளாமல் எருதினை வாகனமாக ஏற்றது, சுடுகாட்டினை தனது இருப்பிடமாகக் கொண்டது, பெண்ணினை தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றது, பூதகணங்கள் சூழ இருப்பது; பூதங்களுடன் நடனம் ஆடுவது, இரவில் நடனம் ஆடுவது, எலும்பு மாலை, சங்கு மாலை, பன்றிக் கொம்பு, கொக்கின் இறகு ஆகியவற்றை அணிகலனாக ஏற்றுக் கொள்வது, உயிரற்ற உடலைத் தோள் மீது சுமப்பது, முதலிய பல செயல்கள் பொருந்தாத செய்கையாக இங்கே குறிப்பிடப் படுகின்றன. விருந்து=புதியதாக வந்தது; ஏனைய தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் பொருந்தாத செய்கைகள் பலவற்றை பெருமான் செய்வதைக் கண்டேன்; போற்றிபோற்றி என்று விண்ணவர்கள் பெருமானை போற்றிப் புகழ்ந்து பாடல்கள் பாடுவதைக் கண்டேன்; பெருமான் மீது அன்பு வைத்து பரிந்து வழிபடும் அடியார்களுக்கு, அவர்களின் தன்மைகளுக்கு ஏற்ப பெருமான் பரிசு அளிப்பதையும் கண்டேன்; நிலமாகவும் நீராகவும் மற்றுமுள்ள பூதங்களாகவும் பெருமான் நிற்பதைக் கண்டேன்; புதியவராக தனது கணங்களில் சேர்ந்த உயிர்களுடன் பெருமான் கலந்து பொலிவதைக் கண்டேன்; மென்மையான இயல்புகளை உடைய பார்வதி தேவியும், விநாயகப் பெருமானும், சிவபெருமானின் அருகில் இருப்பதைக் கண்டேன்; அடியார்களின் பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்தாக பெருமான் செயல் படுவதையும் அடியேன் கண்டேன். மேற்கண்ட காட்சிகளை, அடியேன் திருவாய்மூர் பெருமான் காட்சி அளித்த போது கண்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்

பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பாராய்ப் புலனாகி நிற்கை கண்டேன்

விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்

மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

கோடிகா தலத்தின் மீது அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகத்தின் முதல் பாடலில் (6.81.1) மீண்டும்மீண்டும் பிறப்புக்கு வழிவகுக்கும் மயக்க நிலைக்கு மருந்தாக இருப்பவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். கண்டலம்=கண் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள: மண்டலம்=பல வகை உலகங்கள்; விண்டலம்=தேவர் உலகம்; கொண்டலம்=கொண்டல்+ அம்=அழகிய மேகம், அழகிய மேகம் கொண்டுள்ள கருமை நிறம்;

கண்டலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய் கல்மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய்

மண்டலம்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய் மதிற்கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்

விண்டலம் சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்

கொண்டலம் சேர் கண்டத்தெம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே

திருச்செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.84.2) அப்பர் பிரான், பெருமானை, எரிந்து சாம்பலாக மாறிய மன்மதனுக்கு மருந்தாக மாறி, அவனுக்கு உயிரினை மீண்டும் அளித்து அவனது மனைவி இரதி தேவி மனமகிழ்ந்து நகைக்கும் வண்ணம் அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். துங்க=உயர்ந்த; இரணியனின் உடலைக் கிழித்த நரசிம்மரின் நகத்தை உயர்ந்த நகம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். என்றும் இறவாமல் இருக்கும் வரத்தினை வேண்டிய அரக்கன் இரணியன், அத்தகைய வரம் கிடைக்காது என்பதை உணர்ந்த பின்னர், எந்த விதமான ஆயுதத்தாலும், உயிரற்ற பொருளாலும், உயிருள்ள பொருளாலும், இரவிலும் பகலிலும், தனது வீட்டினில் உள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும், ஆகாயத்திலும் பூமியிலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரத்தினைப் பெற்றான். நமது நகம் மற்றும் முடி வளர்ச்சி அடைகின்றன; ஆனால் அவற்றை வெட்டும்போது நமக்கு வலி ஏற்படுவதில்லை. இவ்வாறு உயிரற்றது என்றும், உயிருள்ளது என்றும் சொல்ல முடியாத நகத்தினைக் கொண்டு, அரக்கனின் உடலைக் கிழித்த நரசிம்மரின் நகத்தை உயர்ந்த நகம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். வீட்டிற்கு உள்ளேயும் அல்லாமல் வெளியேயும் அல்லாமல், வாயிற்படியில் அரக்கனது மரணம் நிகழ்கின்றது. பூமியிலும் அல்லாமல், ஆகாயத்திலும் அல்லாமல், திருமாலின் தொடை மீது அரக்கனது மரணம் நிகழ்கின்றது. இதன் மூலம், பெருமான் ஒருவனைத் தவிர, ஏனையோர் அனைவரும் ஒருநாள் இறப்பினை எதிர்கொள்ள நேரிடும் என்பதும் புலனாகின்றது. ஆகம்=மார்பகம்; அங்கனக=அம்+கல்+ நகு+அத்; அரக்கனது மாளிகையில் இருந்த அழகிய கற்றூணில், மிகுந்த ஆவேசத்துடன் சிரித்தவாறு நரசிம்மர் தோன்றியதை, அங்கனக என்று ஒரே சொல்லில் நயமாக அப்பர் பிரான் கூறுவது அவரது புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மங்க நக=மங்குமாறு கண் மலர, கண் விழித்த; மருந்து=அமுதம்; வண்கயிலை=சிறந்த கயிலை மலை; கயிலை மலைக்கு சென்று காண வேண்டிய பெருமானை, தான் கயிலைமலை செல்லாமல் செங்காட்டங்குடி தலத்தில் கண்டேன் என்று நயமாக அப்பர் பிரான் கூறுவதை நாம் உணரலாம். எத்தகைய ஆயுதத்தாலும் எத்தகைய உயிருள்ள பொருளாலும் தனக்கு மரணம் நேரலாகாது என்ற வரத்தினைப் பெற்று, தனது ஆற்றலினால் பலரையும் வென்ற அரக்கன் இரணியனின் உடலினைக் கிழிக்கும் உயர்ந்த நகங்களை உடையவனாக, மிகுந்த கோபத்துடன் ஆரவாரச் சிரிப்புடன், அழகிய கற்றூணில் தோன்றியவன் திருமால். அத்தகைய ஆற்றல் பெற்ற திருமாலும் பிரமனும் தேடியும் காணாத வண்ணம் நெடிதுயர்ந்த தீப்பிழம்பாகத் தோன்றியவனும், தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதனின் உடல் சாம்பல் பொடியாக மங்குமாறு தனது நெற்றிக் கண்ணினை விழித்தவனும், பின்னர் அவனது மனைவி இரதிதேவி வேண்டியபோது மன்மதனுக்கு உயிர் அளித்து அமுதமாக இரதி தேவி மற்றும் மன்மதனுக்கு இனித்தவனும், சிறந்த கயிலை மலையில் நிலையாக இருப்பவனும், செம்பொன் நிறத்தில் திரண்ட தோள்களை உடையவனும் ஆகிய பெருமானை அடியேன் திருச்செங்காட்டங்குடி தலத்தில் கண்டேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றித் தொகு திறல் அவ்விரணியனை ஆகம் கீண்ட

அங்கனகத் திருமாலும் அயனும் தேடும் ஆரழலை அனங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து

மங்க நகத்தான் வல்ல மருந்து தன்னை வண்கயிலை மாமலை மேல் மன்னி நின்ற

செங்கனகத் திரள்தோளெம் செல்வன்றன்னைச் செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.88.6) அப்பர் பிரான், தனது பிறவிப் பிணிக்கு மருந்தாக விளங்குபவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஆராத= தெவிட்டாத: அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விடம் என்பது பழமொழி. ஆனால் இறைவனைப் பற்றி எத்தனை முறை சிந்தித்தாலும், எத்தனை முறை அவனது புகழினைப் பாடினாலும். எத்தனை முறை கேட்டாலும், அடியார்களுக்கு அலுப்பு என்பது ஏற்படுவதில்லை. இவ்வாறு ஆரா அமுதமாக விளங்கும் பெருமானை ஆராத இன்னமுது என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். அரிய தவத்தினைச் செய்யும் முனிவர்கள் தொழுது வணங்கும் பெருமானாக உள்ளவனும், தெவிட்டாத இனிய அமுதமாக உள்ளவனும், அடியார்கள் அடையவிருக்கும் துன்பங்களைத் தவிர்த்து அவர்களை இன்பமுறச் செய்பவனும், உமையாள் நங்கையின் மணாளனாகத் திகழ்பவனும், எனது பிறவிப் பிணிக்கு மருந்தாகத் திகழ்பவனுமாக விளங்குபவன் சிவபெருமான். பயிர் வளர்ச்சிக்கு பொருத்தமான காற்றினால் தழுவப்படும் வயல்கள் நிறைந்ததும், உயரத்திலிருந்து ஒளிவீசும் நிலவின் ஒளியினால் மிகவும் அழகாக காட்சி தரும் நகரமும் ஆகிய ஓமாம்புலியூர் தலத்தில் நாள்தோறும் சிறப்புடன் வழிபாடு நடைபெறும் வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில், எந்நாளும் அனைவர்க்கும் நன்மை பயப்பதால் இனிதாக அமைந்துள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்

வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து தன்னைப்

பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்கப் பொழில் கெழுவு தரும் ஓமாம்புலியூர் நாளும்

திருந்து திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.91.2) அப்பர் பிரான், பெருமானை அருமருந்து என்று அழைக்கின்றார். இதே பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் அருளால் அவனை அறியும் திறமை தான் கைவரப் பெற்றதாக கூறும் அப்பர் பிரான், அதனால் தனது உள்ளத்தில் இருந்த கலக்கங்கள் தீர்ந்து தெளிவு பெற்றதாக இந்த பாடலில் கூறுகின்றார். விளித்து என்ற சொல் எதுகை கருதி விளிந்து என்று மாறியது. விளித்து=அறைகூவல் விடுத்து; சலந்தரனின் வலிமை முன்னே எதிர் நிற்க மாட்டாமல் திருமால் பிரமன் இந்திரன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் ஒளிந்து கொண்டதால், தன்னுடன் போரிடுவதற்கு எவரும் இல்லாத நிலையில், சிவபெருமானுடன் போருக்கு செல்வது என்று சலந்தரன் தீர்மானித்தான். மிகுந்த ஆரவாரத்துடன் அவன் கயிலை நோக்கி, அறைகூவல் விடுத்தவாறு சென்றதை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வீட்டினான்=அழித்தான்; திருமாலாகவும் பிரமனாகவும் பெருமான் உள்ள தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பளிங்கு=ஸ்படிகம்; ஸ்படிகத்தின் உள்ளே இருக்கும் சோதி மிகுந்த ஒளி விட்டு பிரகாசிப்பது போன்று, மிகுந்த ஒளியுடன் விளங்குபவன் பெருமானென்று கூறுகின்றார். பளிங்கின் உள்ளே பதிக்கப்பட்ட சோதியினைப் போன்று மிகவும் அதிகமான ஒளியுடன் பிரகாசிக்கும் சோதி வடிவமாக உள்ளவனும். அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவனும், அர்ஜுனனுக்கு பாசுபதம் அளிப்பதற்காக வேடுவக் கோலம் தாங்கியவனும், ஆரவாரத்துடன் பெருமானுக்கு அறைகூவல் விடுத்தவாறு கயிலை நோக்கி விரைந்த சலந்தரனை தடுத்து அவனை அழித்தவனும், வேதத்தின் பொருளினை அனைவரும் உணருமாறு அருள் செய்த வேதியனும், விண் முதலான பஞ்ச பூதங்களில் பொருந்தி இருப்பவனும், இரண்டு அடிகளால் மண்ணையும் விண்ணையும் அளந்த திருமாலாக இருப்பவனும், பிரமனாக இருந்து உலகினை படைப்பவனும், உயிர்களின் துன்பங்களைத் தீர்க்கும் அரிய மருந்தாக செயல்படுபவனும் ஆகிய பெருமானின் திறத்தினை அடியேன் உள்ளவாறு அறிந்து கொண்டேன். அதனால் எனது உள்ளத்தில் தெளிவு ஏற்பட்டு அத்தகைய பெருமானைச் சென்று அடையும் பேற்றினை அடியேன் பெற்று வாழ்வினில் உய்வினை அடைந்தேன். இந்த பெருமான் திருவெறும்பியூர் மலையின் மீது ஒளிவீசும் மாணிக்கமாகத் திகழ்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானைப் பசுபதியைப் பாசுபத வேடத்தானை

விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம்

அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அருமருந்தை ஆமாறறிந்து என் உள்ளம்

தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச் சென்று அடையப் பெற்றேன் நானே

புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.99.4) அப்பர் பிரான், மருந்தாய் பிணி தீர்ப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். தெருளாதார்=பெருமையை உணராதார்; மருளாதார்=உலக மயக்கத்தில் உட்படாத உத்தமர்கள்; செங்கணை=அக்னி அம்பின் முனையாக இருக்கும் தன்மை செங்கணை என்ற சொல்லால் குறிப்பிடப் பட்டுள்ளது. அலர் மேலான்=தாமரை மலர் மேலிருக்கும் பிரமன்; நீர்மேலான்=பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால்; பிறப்பு இறப்புச் சுழலில் உயிர்கள் மாட்டிக் கொண்டு, வெளிவர முடியாமல் தவிக்கும் நிலையினை பிறவிப்பிணி என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுழலில் இருந்து நம்மை விடுவிக்கும் சிவபெருமானை, மருந்தாகவும் மந்திரமாகவும் கருதுவது திருமுறை மரபு. அழகிய புகலூர் தலத்தில் உறையும் இறைவனே, உனது பெருமையை உணராத திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றும் தீயினில் எரிந்து சாம்பலாக மாறுமாறு, மேரு மலையை வில்லாக வளைத்து, அக்னியை முனையில் கொண்ட அம்பினைப் பூட்டி, அரக்கர்களை வென்ற தேவனே; உலக மயக்கத்திலிருந்து விடுபட்ட உத்தமர்களின் மனக் கருத்தை அறிந்து அவர்களின் வாட்டத்தைத் தீர்ப்பவனே; அவர்களைப் பிடித்துள்ள பிறவிப்பிணி என்ற நோயினைத் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுபவனே; உன்னைப் போற்றி புகழும் வானோர்களுக்கு என்றும் அருள் புரிபவனே; அனைவர்க்கும் முன்னவனாக உள்ள முதல்வனே; வேதங்களாகவும் வேதங்களின் பொருளாகவும் உள்ளவனே; தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள பிரமனும் அலை கடலில் துயிலும் திருமாலும் முயன்றபோது அவர்களால் காண முடியாத தன்மை படைத்தவனே, நான் உனது திருவடிகளை வந்து மிகவும் விரைவாக அடைகின்றேன்; நீ என்னை ஏற்றுக் கொள்வாயாக என்று இறைவனிடம் அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

தெருளாதார் மூவெயிலும் தீயில் வேவச் சிலை வளைத்து செங்கணையால் செற்ற தேவே

மருளாதார் தம்மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய்ப் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும்

அருளாகி ஆதியாய் வேதமாகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணாப்

பொருளாவாய் உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே

திருக்கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.27.3) சுந்தரர் பெருமானை மலை மேல் மாமருந்தே என்று அழைக்கின்றார். பிறவிப்பிணியை நினைத்து தான் அடைகின்ற அச்சத்தை பெருமான் தீர்க்க வேண்டும் என்று சுந்தரர் இந்த பாடல் மூலம் இறைஞ்சுகின்றார். கலை=மான் கன்று; மடமாது=இளமை வாய்ந்த பார்வதி தேவி; மலை மேல் உள்ள மருந்து கிடைத்தற்கு அரியது என்பது போன்று பெருமானும் உயிர்களுக்கு கிடைத்தற்கு அரியவன் என்பதை உணர்த்துகின்றார்.

சிலையால் முப்புரங்கள் பொடியாக சிதைத்தவனே

மலை மேல் மாமருந்தே மடமாது இடம் கொண்டவனே

கலை சேர் கையினனே திருக்கற்குடி மன்னி நின்ற

அலை சேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சல் என்னே

சென்னையில் உள்ள திருவான்மியூர் தலத்திற்கு அகத்திய முனிவர் வந்த போது அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது என்றும் அவருக்கு சிவபெருமான், பல அபூர்வமான மூலிகைகளை சுட்டிக் காட்டி அவற்றால் பல விதமான நோய்களை தீர்க்கும் கலையை கற்றுக் கொடுத்தார் என்றும், அதனால் தான் இந்த தலத்து இறைவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். திருக்கச்சூர் மலைக்கோயில் இறைவனின் திருநாமம் மருந்தீசுவரர் என்பதாகும். இந்திரன் ஒரு முறை கடுமையான நோயால் வருந்திய போது, அச்வினி தேவர்கள் இந்த தலத்து இறைவனை அணுகி, இந்திரனின் நோயினை தீர்க்கும் வழியினை வேண்டினர். அப்போது சிவபெருமான் இந்த தலத்தில் உள்ள பலா, அதிபலா என்ற மூலிகைகளைச் சுட்டிக் காட்டினார். அதனால் அவருக்கு மருந்தீசர் என்றும் ஔஷதேசர் என்றும் பெயர் ஏற்பட்டது. இந்த மூலிகைகள் மூலம் இந்திரனின் நோய் தீர்ந்தது. அச்வினி தேவர்கள் அந்த மூலிகைகளை தேடிய போது, அவர்களுக்கு உதவியாக, மூலிகைகள் இருந்த இடத்தில் ஒளி ஏற்படுத்தி, சுட்டிக் காட்டியதால் அம்பாளுக்கு இருள் நீக்கி அம்மை என்ற பெயர் வந்தது. வடமொழியில் அந்தகார நிவாரணி என்று அழைக்கின்றனர். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.41.5) சுந்தரர் மலை மேல் மருந்தே என்று இறைவனை அழைக்கின்றார். மேலை விதி=மேம்பட்ட அறநெறி; விரவார்=சிவநெறியில் கலக்காது நின்ற திரிபுரத்து அரக்கர்கள்; ஆலை=கரும்பாலைகள்; பழனம்=வயல்கள்;

மேலை விதியே விதியின் பயனே விரவார் புரம் மூன்று எரி செய்தாய்

காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக் கண்டா

மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த

ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.51.4) சுந்தரர், பெருமானை தன்னை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து மீட்டு ஆட்கொண்ட அருமருந்து என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகம், திருவொற்றியூரில் இருந்த வண்ணம், திருவாரூர்ப் பெருமானை நினைத்துக் கொண்டு, திருவாரூர் பங்குனி உத்திரப் பெருவிழாவில் பங்கேற்க முடியாத நிலைக்கு வருத்தம் தெரிவித்து சுந்தரர் பாடிய பதிகம்.

இங்ஙனம் வந்து இடர்ப் பிறவி பிறந்து அயர்வேன் அயராமே

அங்ஙனம் வந்து எனையாண்ட அருமருந்து என் ஆரமுதை

வெங்கனல் மாமேனியனை மான் மருவும் கையானை

எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.57.10) சுந்தரர், பெருமானை, அனைத்து உயிர்களுக்கும் மருந்து அனான் என்று குறிப்பிடுகின்றார். அனான்=போன்றவன்; இந்த தலத்து பெருமானின் திருநாமம் மாணிக்க வண்ணர். அந்த திருநாமத்தை சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார். மால்=பெருமை, சிறப்பு; பொருந்த மால்=சிறந்த பெருமை உடைய; மால் என்பதற்கு திருமால் என்று பொருள் கொண்டு, திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போரிடச் சென்றபோது. பெருமானுக்கு விடை வாகனமாக பொருந்திய திருமால் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. புத்தர்கள் மற்றும் சமணர்கள் ஏசிய போதிலும், அந்த ஏச்சுகளை பொருட்படுத்தாமல், தொடர்ந்து உயிர்களுக்கு மருந்தாக உள்ளவன் பெருமான் என்று சுந்தரர் கூறுகின்றார்.

திருந்த நான்மறை பாட வல்லானைத் தேவர்க்கும் தெரிதற்கு அரியானைப்

பொருந்த மால் விடை ஏற வல்லானைப் பூதிப்பை புலித் தோல் உடையானை

இருந்துண் தேரரும் நின்றுண் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம்

மருந்து அனான் தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்தென் நினைக்கேனே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.70.9) சுந்தரர், பெருமானை வழித்துணை மருந்தே என்று அழைக்கின்றார். மாசிலாமணி என்பது இந்த தலத்து இறைவனின் திருநாமம். உயிர்கள் செல்ல விரும்பும் முக்தி நிலைக்கு, பக்குவமடைந்த உயிர்களின் பிறவிப் பிணியை நீக்கி, உயிர்களுடன் துணையாக உடனிருந்து அழைத்துச் செல்லும் இயல்பினன் பெருமான் என்பதை உணர்த்த, வழித்துணை மருந்தே என்று அழைக்கின்றார். எயிறு=பல்; இங்கே வராக அவதாரம் எடுத்த பன்றியின் கொம்பினை உணர்த்துகின்றது. ஈடு=இடப்பட்ட; வானம் என்பது உயர்ந்த உலகமாகிய முக்தி உலகத்தினை குறிப்பிடுகின்றது. பெருமானைத் தவிர்த்து, தனக்கு அஞ்சேல் என்று சொல்லித் தேற்றும் தன்மையர் வேறொருவரும் இல்லை என்று சுந்தரர் கூறுகின்றார். நாமும் அத்தகைய பாவனையுடன், பெருமான் ஒருவனே நமக்கு பற்றுக்கோடு என்று கருதி அவனை வேண்ட வேண்டும் என்பதை சுந்தரர் இங்கே நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்.

வான நாடனே வழித்துணை மருந்தே மாசிலாமணியே மறைப் பொருளே

ஏனமா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்புடையானே

தேனெய் பால் தயிர் ஆட்டுகந்தானே தேவனே திருவாவடுதுறையுள்

ஆனையே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

தன்னை வலம் வரும் அடியார்களின் வலிய வினைகளைத் தீர்க்கும் மருந்தாக ஆனைக்கா ஆதி செயல்படுகின்றார் என்று சுந்தரர் கூறும் பாடல் (7.75.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் ஆனைக்கா அண்ணலின் திருவடிகளை நாளும் வணங்கும் அடியார்களை, தன்னை அடிமையாக ஆட்கொள்வதற்கு தகுதி படைத்தவர்கள் என்று சுந்தரர் கூறுகின்றார்.

வலம் கொள்வார் அவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து

கலங்கக் காலனைக் காலால் காமனைக் கண் சிவப்பானை

அலங்கல் நீர் பொரும் ஆனைக்காவுடை ஆதியை நாளும்

இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.76.6) சுந்தரர், பெருமானை மருந்தனார் என்று குறிப்பிடுகின்றார். தனது அடியார்களை, வினைகள் வருத்தாத வண்ணம் காப்பாற்றும் பெருமானை, அடியார்களின் ஊனமாகிய வினைகளை தீர்க்கும் மருந்தாக செயல்படுபவன் என்று உணர்த்துகின்றார். பரிசு=தன்மை; மருந்தனார்=மருந்தைப் போன்றவர் கரந்தை=விபூதிப் பச்சிலை; கூவிளம்=வில்வம்; கடிமலர்=நறுமணம் மிகுந்த; பாரிடம்=பூத கணங்கள்; பரந்த=மிகுதியான; தனது அடியார்களின் வினைகளை தீர்ப்பதே தனது கொள்கையாக பெருமான் கொண்டுள்ளார் என்று கூறுகின்றார்.

கரந்தை கூவிள மாலை கடிமலர்க் கொன்றையும் சூடிக்

பரந்த பாரிடம் சூழ வருவார் நம் பரமர் தம் பரிசால்

திருந்து மாடங்கள் நீடு திகழ்தரு வாஞ்சியத்து உறையும்

மருந்தனார் அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே

நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.97.8) நமது பிணியினைக் களையும் அருமா மருந்து என்று சுந்தரர், இறைவனை குறிப்பிடுகின்றார். பிணி என்று இங்கே பிறவிப் பிணியே உணர்த்தப் படுகின்றது. குறுந்தெரியல்=சிறிய பிறைச் சந்திரன்; கண்ணி=தலையில் சூட்டிக் கொண்டுள்ள மாலை; சடையினில் பிறைச் சந்திரனை உடைய பெருமானை, திங்கட் கண்ணியன் என்று சொல்வது வழக்கம். சிவபெருமானால் மட்டுமே, பிறவிப் பிணியைத் தீர்க்க முடியும் என்பதால், பெருமானை அரியதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகிய பெரிய மருந்து என்று கூறுகின்றார். ஏழ் பிறப்பு=ஏழு வகையான பிறப்புகள்; அடுத்த பிறப்பின் தன்மையை எவரும் அறிந்தாரில்லை. என்பதால் தான் ஏழு வகையான பிறப்புகளில் ஒன்றாகிய பிறப்பு என்று இங்கே சொல்லப் படுகின்றது. தாவரம், நீரில் வாழ்வன, நிலத்தில் ஊர்வன, பறப்பன, நடப்பன, மனிதர்கள், தேவர்கள் என்பனவே ஏழு வகையான பிறப்புகள்;

திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய்

நங்கள் பிணி களைவான் அருமாமருந்தே ஏழ் பிறப்பும்

மங்கத் திருவிரலால் அடர்த்தான் வல் அரக்கனையும்

நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே

பிறவிப் பிணியில் முடங்கி வருந்தும் மனிதர்களுக்கு மருந்தாக செயல்படுவது இறைவனே என்று நீத்தல் விண்ணப்பத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். தன்னை அடிமையாக ஆட்கொண்ட சிவபெருமானுக்குத் தன்னை விற்பதற்கும், அடமானம் வைப்பதற்கும் உரிமை உள்ளது என்று அடிகளார் கூறுவதை இந்த பாடலில் உணரலாம். ஒற்றி=அடமானம். விருந்தினன் என்றால் புதிதாக வந்தவர் என்று பொருள். சமீபமாக, அதாவது சில நாட்களுக்கு முன்னர் தான், சிவபெருமானுக்கு அடிமையாக வந்தவர் என்பதை உணர்த்தும் பொருட்டு, பழைய அடியார்களிலிருந்து தான் மாறுபட்டவன் என்பதை உணர்த்தும் பொருட்டு, விருந்தினன் என்று மணிவாசகர் தன்னை குறிப்பிடுகின்றார். தான் சிவபெருமானுக்கு அடிமையாக இருப்பதற்கு உடன்படுவதாகவும், தனது தகுதியை ஆராய்ந்து, சிவபெருமான் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்றும், தான் அத்தகைய பக்குவம் இன்னும் அடையவில்லை என்றால் சிறிது காலம் கழித்து ஆட்கொள்ளக் கருதி எவரிடமேனும் அடமானம் வைக்கலாம் என்றும், சிறிதும் தகுதி இல்லை என்றால் விற்றுவிடலாம் என்றும் பெருமானுக்கு அனுமதி வழங்குவது போன்று அமைந்த பாடல். விற்றுவிடலாம் என்று கூறினாலும், நஞ்சையே அமுதமாக மாற்றும் ஆற்றல் படைத்த பெருமானுக்கு, தனது தகுதியையும் மாற்றும் ஆற்றல் உடையது என்பதால் தன்னை விட்டு விடக் கூடாது என்று அடிகளார் இறைஞ்சுவதையும் நாம் இந்த பாடலில் காணலாம்.

இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றி வை என்னின் அல்லால்

விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதா

அருந்தினனே மன்னும் உத்தரகோச மங்கைக்கு அரசே

மருந்தினனே பிறவிப் பிணிப் பட்டு மடங்கினர்க்கே

திருவாசகம் திருவெம்பாவை பதிகத்தின் பாடலில் (8.7.4) மணிவாசகர் பெருமானை, விண்ணுக்கு ஒரு மருந்து என்று குறிப்பிடுகின்றார். விண் என்ற சொல்லுக்கு விண்ணவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஒண்ணித்திலம்=ஒள் நித்திலம், ஒளி பொருந்திய முத்து; விண்ணவர்களாக இருப்பினும் அவர்களாலும் தங்களது உடற்பிணியாக இருந்தாலும் சரி, பிறவிப் பிணியாக இருந்தாலும் சரி, அதனைப் போக்கிக் கொள்வதற்கு பெருமானை நாட வேண்டும் என்று கூறுகின்றார். மார்கழி நீராடல் செய்து பாவை நோன்பு நோற்க வேண்டும் என்பதற்காக தங்களது தோழிகளின் இல்லத்திற்கு சென்று அவர்களையும் அழைத்துச் செல்வதை குறிப்பிடும் பாடல்களில் ஒன்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தங்களது தோழி இன்னும் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பதால், தாங்கள் எதிர்பார்த்த வண்ணம் தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்ட தோழிகள், அந்த தோழியின் இல்லத்திற்கு வெளியில் இருந்தவாறு, முத்து போன்று ஒளி வீசும் பற்களை உடையவளே, இன்னும் உனக்கு பொழுது புலரவில்லை போலும் என்று இகழ்ச்சியாக கூறுகின்றனர்.வீட்டினில் உள்ளே இருந்த பெண் அங்கே இருந்தவாறே, வரவேண்டிய பெண்கள், கிளியின் நிறத்தையும் மென்மையான மொழியையும் கொண்ட பெண்கள், அனைவரும், வந்து விட்டார்களா என்று கேட்கின்றாள். அவளது கேள்விக்கு விடை அளிக்கும் முகமாக, சற்றுப் பொறுத்துக் கொள்வாய், நாங்கள் எண்ணிச் சொல்கின்றோம் என்று ஒரு தோழி பதில் அளிக்கின்றாள். சென்ற மூன்று பாடல்களில் தாங்கள் எழுப்பித் தங்களுடன் சேர்த்துக் கொண்ட பெண்கள் எவரும், அனைவரும் வந்தனரா என்ற கேள்வியைக் கேட்கவில்லை. எனவே இந்த பெண்ணின் கேள்விக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற சந்தேகம், வெளியே உள்ள தோழிகளுக்கு எழுகின்றது. ஒருக்கால், வெளியில் இருப்பவர்கள் எண்ணி முடிக்கும் வரையில், தான் மறுபடியும் சிறிய தூக்கம் போடுவதற்காக இந்த கேள்வி எழுப்பட்டதோ என்ற ஐயம் எழவே, தாங்கள் எண்ணுவதை நிறுத்திவிட்டு பின்வருமாறு கூறுகின்றார்கள். தோழியே, மறுபடியும் தூங்க ஆரம்பித்து உனது காலத்தை நீ வீணாக கழிக்காதே: தேவர்கள் அமுதம் அருந்துவதற்காக, தான் நஞ்சை உண்டதால் அவர்களுக்கு அமுதம் போன்றவனும், வேதங்களில் குறிப்பிடப்படும் மேம்பட்ட பொருளாகவும், எங்களது கண்ணுக்கு இனியவனாகவும் உள்ள சிவபெருமானின் புகழினைப் பாடி, உள்ளம் கசிந்து உருகும் நிலையில் உள்ள நாங்கள், எங்களுடன் இருப்பவர்களை எண்ணுவதில் நேரத்தை வீணாக்க மாட்டோம். நீயே வெளியே வந்து எங்களுடன் இருப்பவர்களை எண்ணுவாயாக. எண்ணி முடித்த பின்னர் எவரேனும் வரவில்லை என்பதை உணர்ந்தால், நீ மறுபடியும் சென்று உறங்கலாம் என்று வெளியில் காத்திருக்கும் தோழிகள் சொல்வதாக இந்த பாடலின் கடைப் பகுதி அமைந்துள்ளது.

ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காமே

விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உண்ணெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து

எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்

திருவாசகம் பொற்சுண்ணம் பதிகத்தின் பாடலில் (8.9.12) மணிவாசக அடிகளார் பெருமானை வான நாடர் மருந்தினை என்று குறிப்பிடுகின்றார். மையமர் கண்ட என்ற தொடரினை அடுத்து வான நாடர் என்று குறிப்பிடுவது சற்று சிந்திக்கத் தக்கது. அமுதம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாற்கடலைக் கடைந்த தேவர்கள், முதன்முதலாகக் கண்டது பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால விடத்தினைத் தான். அந்த கொடிய விடத்தின் நொடியையும் தாங்க முடியாமல் திசைக்கு ஒருவராக தேவர்கள் அனைவரும் ஓடினார்கள். அப்படியும் அந்த விடத்தின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல், தவித்த அவர்கள் தாங்கள் இறப்பது நிச்சயம் என்ற நிலையினை அடைந்த போது, பெருமானிடம் சரணடைந்து ஆலகால விடத்திலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினார்கள். அந்த ஆலகால விடத்தினை பெருமான் உட்கொண்டு, தேவர்கள் எதிர்கொள்ள இருந்த இறப்பிலிருந்து அவர்களை காப்பாற்றுகின்றார். பெருமானின் இந்த கருணைச் செயலே வான நாடர் மருந்து என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் அடிகளார் பொய்யர் தம் பொய்யன் என்றும் மெய்யர் மெய் என்றும் இறைவனை குறிப்பிடுவதை நாம் உணரலாம்.

மையமர் கண்டனை வானநாடர் மருந்தினை மாணிக்கக் கூத்தன் தன்னை

ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும்

பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் போதரிக் கண் இணை பொற்றொடித் தோள்

பையரவு அல்குல் மடந்தை நல்லீர் பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே

திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் பாடலில் (8.11.19) மணிவாசக அடிகளார் பெருமானை மண்ணோர் மருந்து என்று குறிப்பிடுகின்றார். வைப்பு=சேம நிதி; பிரமன் திருமால் ஆகியோருக்கு வைப்பு நிதியாக செயல்படுபவன் பெருமான் என்று கூறுகின்றார். உயிர்கள் தங்கள் வினைத்தொகுதியின் காரணமாக, தேவ லோகத்திலும் பாதாளத்திலும் பிறப்பு எடுக்கின்ற தன்மை பெருமானால் நடைபெறுகின்றது என்று இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது.

விண்ணோர் முழு முதல் பாதாளத்து ஆர்வித்து

மண்ணோர் மருந்து அயன் மாலுடைய வைப்பு அடியோம்

கண்ணார வந்து நின்றான் கருணைக் கழல் பாடித்

தென்னா தென்னாவென்று தெள்ளேணம் கொட்டாமோ

கோயில் திருப்பதிகத்து பாடல் ஒன்றினில் (8.22.4) பிறப்பறுக்கும் எம் மருந்தே என்று மணிவாசகர் இறைவனை அழைக்கின்றார். ஒழிந்தார்=தேவர்கள் முனிவர்கள் தவிர்த்த ஏனையோர்; சாத்வீகம் இராஜசம் தாமசம் ஆகிய மூன்று குணங்களையும் கடந்து, அந்த மூன்று குணங்களால் விளையும் அழியும் தன்மை வாய்ந்த இன்பங்களன்றி, என்றும் அழியாத பேரின்பம் உடையவன் இறைவன் என்று குறிப்பிடும் அடிகளார், அந்த குணங்களற்ற இன்பத்தைத் சாரும் தானும், அதே தன்மையை அடைவதால், தனக்கு குறையேதும் இல்லை என்று உணர்த்துகின்றார். இணங்கிலி=நிகர் அற்றவன்; திணிந்ததோர் இருள்=அறியாமையாகிய அடர்ந்த இருள்; அறியாமை எனப்படும் இருளில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களின் இடையே தெளிந்த தூய ஒளியாக உள்ள இறைவனின் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

உணர்ந்த மாமுனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவரும் பொருளே

இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப்பறுக்கும் எம் மருந்தே

திணிந்ததோர் இருளில் தெளிந்த தூவெளியே திருப்பெருந்துறை உறை சிவனே

குணங்கள் தாம் இல்லா இன்பமே உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே

திருவாசகம் செத்திலாப்பத்து பதிகத்தின் பாடலில் (8.23.8) மணிவாசக அடிகளார், இறைவனை மருந்தே என்று அழைக்கின்றார். குரை கழல்=ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருப்பாதம்; கோது மாட்டுதல்=குற்றம் களைந்து ஆட்கொள்ளுதல்; கோது என்ற சொல்லுக்கு கொத்து என்று பொருள் கொண்டு, பாசக்கொத்துகள் என்று பொருள் கொள்வாரும் உள்ளனர். அவ்வாறாயின் பாசப் பிணைப்பினை ஆட்டி அசைத்து முற்றிலும் நீக்கி என்று பொருள் கொள்ளலாம். இரண்டுமே இங்கு பொருத்தமாக உள்ளன. புரந்தராதிகள்=இந்திரன் முதலான தேவர்கள்; போது=மலர், இங்கே தாமரை மலர்; அயன்=பிரமன்; பெருமானின் அருளுக்கு தான் காத்து நிற்பது போன்று, பிரமன் இந்திரன் முதலான பல தேவர்கள் காத்து நிற்பதாக கூறும், அடிகளார், அவர்களை எல்லாம் ஒதுக்கி விட்டு, தனக்கு முன்னுரிமை அளித்து அருள் புரிய வேண்டும் என்று உரிமையுடன் பெருமானிடம் வேண்டுகின்றார் அவர் வேண்டுவது தான் யாது. பெருமான், தனது (மணிவாசகரின்) குற்றங்களை ஒழித்து, வீரக்கழல் ஒலிக்கும் திருப்பாதத்தை காட்டி, அந்த திருப்பாதத்தை பற்றிக் கொள்வாய் என்று பணித்தும், அடியார்களுடன் கூட்டியும் அருள் புரிய வேண்டும் என்று மணிவாசக அடிகளார் எதிர்பார்க்கின்றார். இந்திரன் முதலான தேவர்கள், இதுவரையில் தாங்கள் செய்த நற்செயல்களின் பயனாக போக வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். எனவே அவர்கள் இன்பம் மட்டுமே துய்ப்பவர்களாக உள்ளனர். ஆனால் நிலவுலகில் வாழும் மணிவாசகரோ, உலகியல் வாழ்வினில் ஈடுபட்டு, இன்ப துன்பங்களில் உழன்று கொண்டிருப்பவர். எனவே உலக வாழ்வினில் உழல்வோருக்குத் தானே முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்த உரிமையைத் தான் மணிவாசக அடிகளார் வேண்டுகின்றார் போலும். தான் படும் துன்பத்தை தீர்த்துக் கொள்வதற்கு, யாது செய்வது என்று திகைத்துத் தான் இருந்ததாகவும், பெருமானால் குருந்த மரத்தினடியில் ஆட்கொள்ளப்பட்ட தான் இடரினில் உழல்வது அழகோ என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உலகினில் நாம் காணும் மருந்துகள் அனைத்தும், உடலின் நோயினைத் தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் தன்மை உடையன. ஆனால் அடிகளார் கொண்டுள்ளதோ மனநோய், மனதின் அகப் பகைகளாகிய காமம் குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய குற்றங்கள் விளைவிக்கும் நோய்; இந்த ஆறு உட்பகைகளையும் வெல்வதற்கு வேண்டிய ஆற்றலை, உயிர்க்கு அருளும் வல்லமை பெற்றவன் பெருமான் ஒருவன் தான் என்பதால், தனது மனநோய்க்கு மருந்தாக திகழ்பவன் இறைவன் என்பதை இந்த பாடலில் அடிகளார் குறிப்பிடுகின்றார்.

போது சேர் அயன் பொருகடற் கிடந்தோன் புரந்தராதிகள் நிற்க மற்றென்னைக்

கோது மாட்டி நின் குரை கழல் காட்டிக் குறிக்கொள்கென்று நின் தொண்டரில் கூட்டாய்

யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ

சீதவார் புனல் நிலவிய வயல்சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே

திருவாசகம் புணர்ச்சிப் பத்து பதிகத்தின் பாடலில் (8.27.9) மாணிக்கவாசகர், பெருமானை பிறவிப் பிணிக்கோர் மருந்தே என்று அழைக்கின்றார். பாதப்போது=மலர்கள் போன்று மென்மையான திருப்பாதங்கள்; பேதாய்=ஏதும் அறியாதவன்; நாயினும் கடையனான தன்னை பெருமான் ஆட்கொண்ட கருணைச் செயலை இங்கே அடிகளார் குறிப்பிடுகின்றார். தன்னால் இறைவன் ஏதும் பயனடையாத நிலையில், தன்னை இறைவன் ஆட்கொண்டது பேதையின் செயல் என்று அடிகளார் பழிப்பது போன்று தோன்றினாலும், உண்மையில் இறைவனை பழிப்பது போன்று அடிகளார் இங்கே புகழ்கின்றார். எதற்கும் பயன்படாமல், நாயினும் கடையனாக தான் இருந்த போதிலும், தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து ஆட்கொண்ட இறைவன் என்று குறிப்பிட்டு இறைவனை புகழ்கின்றார். இவ்வாறு இறைவன் நாயேனாகிய தன்னை ஆட்கொண்டதை குறிப்பிட்டு, இறைவனின் எளிவந்த தன்மையை அடிகளார் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருப்பாதத்தை மலர் என்று குறிப்பிடுவதால், திருவடி மலர்களால் பெறுகின்ற இன்பத்தை தேன் என்று நயமாக குறிப்பிடுகின்றார். இரவும் பகலும் எப்போதும் இறைவனின் திருவடிகளின் தன்மையை ஆராய்ந்து, குற்றமற்ற மாணிக்கமாகிய இறைவனுடன் சென்று சேர்வது எந்நாளோ என்று தனது ஏக்கத்தினை தெரிவிக்கும் பாடல் இந்த பாடல்.

தாதாய் மூவேழ் உலகுக்கும் தாயே நாயேன் தனையாண்ட

பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்

ஏதா மணியே என்றென்று ஏத்தி இரவும் பகலும் எழிலார் பாதப்

போது ஆய்ந்து அணைவது என்று கொல்லொ என் பொல்லா மணியைப் புணர்ந்தே

திருவாசகம் உயிருண்ணிப் பத்து பதிகத்தின் பாடலில் (8.34.8) மாணிக்கவாசகர் பெருமானை அருமருந்தே என்று அழைக்கின்றார். அருமையான மருந்தே என்று இறைவனை அழைக்கும் அடிகளார், கொம்புத்தேன் பாற்கடலில் விளைந்த அமுது ஆகிய உயர்ந்த பொருட்களுக்கு இறைவனை ஒப்பிடுகின்றார். குரை கடல்=இடைவிடாது அலைகள் வந்து மோதுவதால், ஒலியெழுப்பும் கடல் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் பெருமானை அருமருந்தே என்று அடிகளார் அழைக்கின்றார்.

கோற்றேன் எனக்கு என்கோ குரைகடல்வாய் அமுது என்கோ

ஆற்றேன் எங்கள் அரனே அருமருந்தே எங்கள் அரசே

சேற்றார் வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும்

நீற்றார் தரு திருமேனி நின்மலனே உனை யானே

திருவாசகம் பிடித்த பத்து பதிகத்தின் பாடலில் (8.37.1) தன்னை வாழ்வித்த மருந்தே என்று பெருமானை அடிகளார் அழைக்கின்றார். ஊற்றை=அழுக்கு; உயிரின் அழுக்காகிய மலங்கள்; யோகம்=கலப்பு. உலகிலுள்ள அனைத்து உயிர்களுடனும் அனைத்துப் பொருட்களுடனும் நீக்கமற நிறைந்து கலந்து நிற்கும் தன்மை; வம்பு=காலமற்ற காலம். உரிய காலத்தில் பழங்கள் பழுப்பது போன்று, உயிர்களும் உரிய பக்குவ நிலை அடைந்த பின்னரே இறைவனால் ஆட்கொள்ளப் படுகின்றன. இருவினையொப்பு நிலை அடைந்து மலபரிபாகம் ஏற்பட்ட பின்னர், மலங்கள் ஏதுமற்ற நிலையில் உயிர்கள் பக்குவ நிலையை அடைகின்றன. ஆனால் அடிகளாரோ, ஊற்றையேன் என்று தன்னைக் குறிப்பிட்டு, மலங்களுடன் தான் பிணைந்திருந்த நிலையினை உணர்த்துகின்றார். எனவே தான், தான் பக்குவமடையாத நிலையில் இறைவன் தன்னை ஆட்கொண்டதாக இங்கே குறிப்பிடுகின்றார். தம்மை இறைவன் ஆட்கொண்டமையால், தனது குடி முழுவதும் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டதாக குறிப்பிடுகின்றார். மணிவாசகர், மூவேழ் சுற்றம் முரணுரு நரகிடை ஆழாமே அருள் அரசே என்று இறைவனை குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. முரண்= வலிமை; தந்தை வழி ஏழு தலைமுறையைச் சார்ந்த உயிர்களும், தாயின் தந்தை வழியில் ஏழு தலைமுறையைச் சார்ந்த உயிர்களும், தனது வழிவரும் ஏழு தலைமுறையைச் சார்ந்த உயிர்களும், உய்யும் வகைக்கு இறைவன் அருள் புரிவார் என்று வேதங்களும் உணர்த்துகின்றன. இவ்வாறு தன்னைச் சார்ந்த மூவேழ் தலைமுறைகள் உய்வினை அடையும் வண்ணம், இறைவன் அருள் புரிந்ததாக கூறுகின்றார். வாழ்வற=வினையுடன் வாழ்கின்ற வாழ்க்கையை துண்டித்த;

உம்பர்கட்கு அரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு

வம்பெனப் பழுத்து என் குடி முழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே

செம்பொருள் துணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே

எம்பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவது இனியே

திருவாசகம் திருவெண்பா பதிகத்தின் பாடலில் (8.47.4) வரும் துயரம் தீர்க்கும் மருந்து என்று பெருமானை மணிவாசகர் குறிப்பிடுகின்றார். வரும் துயரம் என்ற தொடருக்கு இனி எடுக்கவிருக்கும் பிறவிகள் என்று பொருள் கொள்வது பொருத்தம். முன்னை வினை=பழைய பல பிறவிகளில் ஈட்டிய வினைகள்; இரண்டும்=நல்வினை தீவினை ஆகிய இரண்டு; அனைத்து வினைகளும் கழிவதால், வினைகளின் சேர்க்கை காரணமாக பிறப்பு எடுக்க வேண்டிய நிலையிலிருந்து விடுபடும் உயிர், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைகின்றது.

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்

பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் — தென்னன்

பெருந்துறையில் மேய பெருங் கருணையாளன்

வரும் துயரம் தீர்க்கும் மருந்து

திருவாசகம் திருவெண்பா பதிகத்தின் பாடலில் (8.47.6) மணிவாசக அடிகளார் பெருமானை மறவாப் பேரின்பம் மருந்து என்று அழைக்கின்றார். இந்த பாடலில் மணிவாசக அடிகளார், பெருமான் தனது பிறப்பை அறுத்ததால், தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளில் வடிக்க முடியாது என்பதை உணர்த்த, பேச்சரிதாம் என்று கூறுகின்றார். எட்டுவதற்கு மிகவும் அரியவனாக இருக்கும் பெருமான், தனது நிலைக்கு ஏற்றவாறு எளியவனாக இரங்கி வந்து தனது மனதினைக் கோயிலாகக் கொண்டு தங்கி தன்னை ஆட்கொண்டமையால், தான் அவன் பால் எல்லையற்ற அன்பு கொண்டு பித்தனாக மாறியதாகவும் தன்னை பீடித்திருந்த பிறப்பிறப்புச் சங்கிலி கழன்றதாகவும், குறிப்பிடும் அடிகளார், மேற்கூறிய பெருமானின் கருணைச் செயல்களால், தான் அடைந்த மகிழ்ச்சி, சொல்ல ஒண்ணாதது என்று கூறுகின்றார். தனது வினைகளுக்கு மருந்தாக செயல்பட்டு அவற்றை நீக்கிய பெருமான் தனக்கு என்றும் அழிவில்லாத பேரின்பத்தை அளித்தார் என்றும் கூறுகின்றார்.

பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்

மத்தமே ஆக்கும் வந்து என் மனத்தை – அத்தன்

பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்

மருந்து இறவாப் பேரின்பம் வந்து

திருவாசகம் பண்டாய நான்மறை பதிகத்தின் பாடலில் (8.48.7) மணிவாசக அடிகளார் பெருமானை நல்ல மருந்து என்று அழைக்கின்றார். இலக்கிதம்=இலக்கியம்; குறிக்கோள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே, பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் பொருளுக்கு இலக்கியமாக பெருமான் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. உயர்ந்த கருத்துகளை நயத்துடன் சொல்வதே இலக்கியம் என்று அழைக்கப் படுகின்றது. அனைத்துப் பொருட்களிலும் உயர்ந்தவனாக விளங்கும் பெருமானைத் தவிர்த்து இலக்கியம் என்ற சொல்லுக்கு பொருத்தமாக வேறு எவர் உள்ளார். எனவே தான் பெருமானை இலக்கியம் என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். குற்றங்கள் ஏதும் இல்லாத உயர்ந்த மணி போன்ற பெருமானை மாசின் மணி என்று அழைக்கின்றார். மாசற்ற மணியாக விளங்கும் பெருமானின் உபதேசமே சிறந்த உபதேசம் என்பதை உணர்த்த மணிவார்த்தை என்று கூறுகின்றார். மண் முதல் உயிர் குடிகொண்டிருக்கும் உடல் வரை உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும், அவற்றின் தன்மையை குறிப்பிடும் பேச்சுகளைக் கடந்த பெருமான் என்பதை, பேச்சிறந்த என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். அவனது பரந்த புகழினைப் பேசியும், அவனது உபதேசத்தை கடைப்பிடித்து வாழ்ந்தும், தான் தனது பிறப்பினை அறுத்துக் கொண்டதாக அடிகளார் கூறுகின்றார். தனக்கு உபதேசம் அருளிய தலம் திருப்பெருந்துறை என்பதால் பெருமானையே பெருந்துறையான் என்று அழைக்கின்றார். பெருமான் தனக்கு அளித்த உபதேசத்தின் விளைவால், தான் அந்நாள் வரை கொண்டிருந்த யான் எனது என்ற பற்றுகளை அறுத்த தன்மையை, பல திருவாசகப் பாடல்களில் உணர்த்திய அடிகளார், பெருமான் தனக்கு அருளிய உபதேசத்தை திருவாசகப் பாடல்களாக அருளி உள்ளதைப் புரிந்து கொண்டு, அவற்றை பின்பற்றுவதன் மூலம் நாமும் நமது பிறப்பினை அறுத்துக் கொள்ளலாம் என்ற அறிவுரை இங்கே வழங்கப் படுகின்றது. உயிர்களைப் பிணித்துள்ள பிறப்பிறப்பு என்ற நோயினுக்கு சிறந்த தீர்வாக பெருமானின் உபதேசங்கள் அமைந்து இருந்தன என்பதை உணர்த்த நல்ல மருந்து என்று கூறுகின்றார்.

பேசும் பொருளுக்கு இலக்கிதமாம் பேச்சு இறந்த

மாசின் மணியின் மணி வார்த்தை பேசிப்

பெருந்துறையே என்று பிறப்பு அறுத்தே நல்ல

மருந்தின் அடி என் மனத்தே வைத்து

திருவிசைப்பா பாடல் ஒன்றினில் திருமாளிகைத் தேவர் (9.3.4) மகேந்திர மாமலைமேல் இருந்த மருந்தே என்று அடிகளார் குறிப்பிடுகின்றார். இந்த பாடல் அகத்துறை வகையைச் சார்ந்த பாடல். பெருமான் பால் தீவிர காதல் கொண்டுள்ள தனது மகள், எப்போதும் இறைவனின் தன்மைகளையும் அவனது சிறப்பினை உணர்த்தும் திருநாமங்களையும் சொல்வதாக நாயகியின் தாய் கூறுகின்றாள்.

வெறியேறு பன்றிப் பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள் செய்த வேந்தே என்னும்

மறியேறு சாரல் மகேந்திர மாமலை மேல் இருந்த மருந்தே என்னும்

நெறியே என்னும் நெறி நின்றவர்கள் நினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்

குறியே என்னும் குணக்குன்றே என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.5.3) சேந்தனார் பெருமானை மருந்தே என்று அழைக்கின்றார். மண்டலத்து ஒளி=சூரிய மண்டலத்து ஒளி; சூரியனின் ஒளியில் அந்த ஒளி தருகின்ற பயனில் மயங்கி சூரியனை வழிபடுவதைத் தவிர்த்து, அந்த சூரியனின் உட்பொருளாக விளங்கும் சிவபெருமானை தான் வழிபட்ட தன்மையை சேந்தனார் இங்கே குறிப்பிடுகின்றார். மாறிலா மணி=மாற்று இல்லாத மணி, ஒப்பற்ற மாணிக்கமாக திகழும் பெருமான்; மாறு என்பதற்கு கேடு என்று பொருள் கொண்டு, என்றும் அழிவில்லாத ஒளியாக திகழும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பண்டைய நாளில் திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனாகத் திகழ்ந்த பெருமான், என்றும் தனது அடியவர்களுக்கு எளியவனாகத் திகழ்கின்றான் என்று கூறுகின்றார். விண்டலர் மலர்=மலர்ந்த மலர்கள்; வாய்=வாயிலிருந்து வெளிப்படும்; வேரி=நறுமணம்; கொண்டல்=மேகம்; அம்=அழகிய; கண்டம்=கழுத்து; பெருமானை அடி பணிந்து வணங்கும் அடியார்களை வினைகள் சென்று அடையா என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் பெருமானை அருமருந்து என்று சேந்தனார் அழைக்கின்றார்.

மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த மருந்தை என் மாசிலா மணியைப்

பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை

விண்டலர் மலர் வாய் வேரி வார் பொழில் சூழ் திருவீழிமிழலை ஊர் ஆளும்

கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியைக் குறுக வல்வினை குறுகாவே

திருமூலரும் தனது பாடல் ஒன்றினில் மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆக இறைவனின் திருவடிகள் இருக்கும் நிலையினை குறிப்பிடுகின்றார். மந்திரம் அதனை உச்சரிக்கும் அடியார்களை காப்பது; மருந்து உயிர்ப் பிணியையும் உடற் பிணியையும் தீர்க்கும் மருந்து; தந்திரம் இறைவனை வழிபடும் முறை; தானங்கள்=பொருள் உடையவர்கள் பொருள் இல்லாத வறியவர்க்கு கொடுத்து உதவி செய்யும் தன்மையும் அதனால் விளையும் நற்பயனும்; சுந்தரம்=அழகு; தூய்நெறி=குற்றங்கள் ஏதும் இல்லாத தூய்மையான நெறி,

மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்

தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்

சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்

எந்தை பிரான் தன் இணை அடி தானே

திருமூலர் முதல் தந்திரம் கல்வி அதிகாரத்தின் பாடலில் பெருமானை கற்றவர்களுக்கு மருந்தாக இருப்பவன் என்று கூறுகின்றார். திருவருட் கல்வி பயின்றவர்கள் பெறுகின்ற பயன் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. வழித்துணை=மறுமையில் வீடுபேறு செல்லும் வழியில் துணையாக இருப்பவன்; அவர்களது பிறவிப் பிணியை தீர்க்கும் மருந்தாக செயல்படுபவன்; கழித்துணை=ஒதுக்கும் தன்மையர்; தனது பெருமையை கல்லாத மூடர்களுக்கு முக்தி நிலை அடையும் வழியினை காட்டி துணை புரியாதவர் பெருமான் என்று கூறுகின்றார். ஒழித்துணை=பொறிகள் வாயிலாக புலன்களைச் சென்று பற்றி ஆகாமிய வினைகளைப் பெருக்கும் சிந்தனையை ஒழித்து உதவி புரிபவன்; உம்பராய் உலகேழும் வழித்துணை=தேவர்களுக்குத் தலைவனாகவும் அதற்கு அப்பாலும் ஏழுலகங்களையும் கடந்து செல்லும் வழிக்குத் துணையாக இருப்பவன்; பெருந்தன்மை=பெரியன எல்லாவற்றுக்கும் பெரியவனாக இருக்கும் தன்மை;

வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன்

கழித்துணையாம் கற்றிலாதவர் சிந்தை

ஒழித்துணையாம் உம்பராய் உலகேழும்

வழித்துணையாம் பெரும் தன்மை வல்லானே

பொழிப்புரை:

சடையில் ஏற்படுத்திய பள்ளத்தில் கங்கை நதி பொருந்தி மறையுமாறு அடக்கி மறைத்து வைத்து ஆதரித்தவனும், விடையினைத் தனது வாகனமாகக் ஏற்றுக் கொண்டவனும், பல விதமான திறமைகள் உடையவனும், வள்ளலாக பதிலுக்கு ஏதும் எதிர்பாராமல் தனது அடியார்களுக்கு வரங்களை அள்ளிக் கொடுப்பவனும், சிறப்பு வாய்ந்த மழபாடி தலத்தினில் நோய்கள் தீர்க்கும் மருந்தாக உறைபவனும் ஆகிய பெருமானை உள்ளம் ஒன்றி அன்பு வைத்து வழிபடுவீர்களாக. அவ்வாறு செய்தால் உங்களது வினைகள் செயலற்று உங்களை விட்டு நீங்கிவிடும்.

பாடல் 5

களையும் வல்வினை (2.009) பாடல் 4 தொடர்ச்சி, 5, 6, மற்றும் 7(திதே 0720)

தேனுலா மலர் கொண்டு மெய்த் தேவர்கள் சித்தர்கள்

பானெய் அஞ்சு ஆட்ட முன் ஆடிய பால்வணன்

வான நாடர்கள் கைதொழு மாமழபாடி எம்

கோனை நாடொறும் கும்பிடவே குறி கூடுமே

விளக்கம்:

தேனுலா=தேன் பொருந்திய; பானெய்=பால் மற்றும் நெய்; குறி=உயிரின் உறுதியான குறிக்கோள், முக்தி நிலை; சென்ற பாடலில் மழபாடி மேய மருந்து என்று குறிப்பிட்ட திருஞான சம்பந்தருக்கு உடற்பிணியைத் தீர்ப்பதை விடவும் உயர்ந்த செயல் பெருமான் நமது பிறவிப்பிணியை தீர்ப்பது அல்லவா என்று தோன்றியது போலும். மேலும் சிறந்த முனிவர்களும் சித்தர்களும் தேவர்களும் விரும்புவது இதனைத் தானே. இதனைக் குறியாகக் கொண்டு தானே, அவர்கள் தவம் செய்கின்றனர். மெய்த்தேவர் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இவர்கள் சொர்க்கத்தில் வாழும் தேவர்களினும் வேறானவர்கள் என்று சொல்லப் படுகின்றார்கள். பொதுவாக தேவர்கள் அனைவரும், இன்பத்தில் ஆழ்ந்து இறைவனையும் மறந்து வாழும் அவர்கள், தங்களுக்கு துன்பம் நேரிடும் நேரங்களில் இறைவனிடம் தஞ்சம் அடைவதை நாம் பல புராணங்களில் காண்கின்றோம். அவ்வாறு இல்லாமல் தேவர்களாக உயர்ந்த பின்னரும் இறைவனையே நினைத்து, சொர்க்க இன்பத்தினும் உயர்ந்த இன்பமாக விளங்கும் முக்தி உலகத்தினை அடைய முயற்சி செய்யும் தேவர்களை உண்மையான தேவர்கள் என்று குறிப்பிடுகின்றார் போலும்.

பொழிப்புரை:

தேன் பொருந்திய மலர்கள் கொண்டு பெருமானுக்கு அர்ச்சனை செய்தும், பால் நெய் முதலான ஐந்து பொருட்களைக் கொண்டு பெருமானை நீராட்டியும் வழிபடும் உண்மையான தேவர்களும் சித்தர்களும் செய்யும் வழிபாட்டினால் மிகவும் மகிழ்ந்து அதனில் மூழ்கித் திளைக்கும் பெருமானும், மேனி முழுதும் திருநீறு பூசப்பட்டதால் பால் போன்ற வெண்மை நிற வண்ணத்தில் திருமேனி உடையவனும், வானில் உள்ள தேவர்களால் கை தொழுது போற்றப் படுபவனும், சிறப்பு வாய்ந்த மழபாடி தலத்தின் தலைவனாக இருப்பவனும் ஆகிய சிவபெருமானை நாள்தோறும் கும்பிடும் அடியார்கள், சிவபெருமானுடன் கூட வேண்டும் என்ற தங்களது குறிக்கோள் ஈடேறப் பெற்று, முக்தி உலகம் சென்றடைந்து என்றும் பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள்.

பாடல் 6

களையும் வல்வினை (2.009) பாடல் 4 தொடர்ச்சி, 5, 6, மற்றும் 7(திதே 0720)

தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்

பரிந்து கைதொழுவார் அவர் தம் மனம் பாவினான்

வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான் மழபாடியைப்

புரிந்து கைதொழுமின் வினையாயின போகுமே

விளக்கம்:

தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி என்ற திருவாசகத் தொடர் நமது நினைவுக்கு வருகின்றது. வன்புரம்=வலிமையான கோட்டைகள்; சேவகன்=வீரன்; தெரிந்த=முற்றும் உணர்ந்த; முற்றும் உணர்தல் பெருமானின் எட்டு குணங்களில் ஒன்றாகும். இறைவன் எண்குணத்தான் என்று ஒரு திருக்குறளில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த பாடலுக்கு உரை கண்ட பரிமேலழகர் எட்டு குணங்களாவன, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் என்று விளக்கம் அளிக்கின்றார். இந்த எட்டு குணங்களே சைவ சித்தாந்தத்தில் சிவபிரானது குணங்களாக கூறப்படுகின்றன.

கோளில் பொறியின் குணம் இலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

பொழிப்புரை:

முற்றும் அறிந்தவனாக விளங்கும் பெருமான், தாங்கள் பெற்றிருந்த வரத்தின் விளைவாக அளவு கடந்த வலிமை பெற்று விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒரே நேரத்தில், தான் செலுத்திய அம்பினால் வீழ்த்தப்பட்டு எரியும் வண்ணம் அழித்த வீரனும், அன்புடன் தன்னை வாழ்த்தி கை தொழுது வழிபடும் அடியார்களின் மனதினில் பொருந்தி விளங்குபவனும், வாசுகிப் பாம்பினை நாணாகக் கொண்டு வரிந்து கட்டப்பட்ட வில்லினை உடையவனும் ஆகிய பெருமான் உறையும் மழபாடியின் சிறப்பினை புரிந்து கொண்டு இறைவனை வழிபடும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிப் போய் விடும்.

பாடல் 7

களையும் வல்வினை (2.009) பாடல் 4 தொடர்ச்சி, 5, 6, மற்றும் 7(திதே 0720)

களையும் வல்வினை (2.009) பாடல் 7 தொடர்ச்சி (திதே 0721)

களையும் வல்வினை (2.009) பாடல் 7 தொடர்ச்சி மற்றும் பாடல் 8 (திதே 0722)

சந்த வார் குழலாள் உமை தன்னொரு கூறுடை

எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம் பிரான்

மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினைச்

சிந்தியா எழுவார் வினையாயின தேயுமே

விளக்கம்:

சந்தம்=அழகு; வார்=நீண்ட; மைந்தன்=வலிமை வாய்ந்தவன்; வார் பொழில்=நீண்ட சோலைகள்; இந்த பாடலிலும் பெருமானை மருந்து என்று குறிப்பிட்டு, இறைவனை வழிபடுவோரின் வினைகள் தேய்ந்து அழிந்து விடும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வினையிலாத நிலை தானே, உயிர்களை முக்தி உலகுக்கு அழைத்துச் செல்லும் என்பதால், வினைகளைத் தீர்க்கும் மருத்துவனாக பெருமான் செயல்பட்டு உயிர்களுக்கு முக்தி நிலை அளிப்பதை, நான்காவது பாடலில் உணர்த்தியது போன்று திருஞானசம்பந்தர் இந்த பாடலிலும் உணர்த்துகின்றார். இமையாத மூன்று கண்களை உடைய பெருமான் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் இரண்டு கண்கள் எப்போதும் திறந்தே இருப்பதால் சூரிய சந்திரர்கள் ஒளியுடன் பிரகாசிக்க உலகமும் அதனால் நன்மை அடைகின்றது. மூன்றாவது கண் திறந்த போது, அதனின்று எழும் நெருப்புப் பொறிகளின் வெப்பத்தை உலகம் தாங்க முடியாது என்பதால் நெற்றிக்கண் எப்போதும் மூடிய வண்ணம் உள்ளது. இவ்வாறு தங்களது நிலையிலிருந்து மாறாமல் இமைக்காமல் இந்த மூன்று கண்களும் உள்ள நிலை இமையா முக்கண் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. இமையாத கண்கள் இமைத்து நிலை மாறிய போது விபரீதங்கள் ஏற்பட்டதை நாம் புராணங்களிலிருந்து அறிகின்றோம், எப்போதும் மூடியிருக்கும் நெற்றிக் கண் திறந்ததால், மன்மதன் உடல் எரிந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

சிவபெருமானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்கள் என்று சொல்லப்படும். ஒருமுறை விளையாட்டாக, பார்வதி தேவி, சிவபெருமானின் கண்களை மூட, அனைத்து உலகங்களும் இருளில் மூழ்கின, உலகில் மொத்த இயக்கமும் நின்று போனது. தனது தவறினை உணர்ந்த பார்வதி தேவி, உடனே சிவபெருமானின் கண்களை மறைத்த தனது கைகளை எடுத்து விட்டார். பார்வதி தேவி தனது கண்களை மறைத்திருந்த கணப்பொழுதில் ஏற்பட்ட உலகத்தின் இருளைப் போக்குவதற்காக தனது நெற்றிக் கண்ணை, சிவபெருமான் திறந்ததாக அப்பர் பிரான் கூறுகின்றார். உலகினை மூடிய இருளினை ஓடச்செய்ய தனது நெற்றிக் கண்ணினை பெருமான் திறந்தார் என்று நயமாக அப்பர் பிரான் கூறுவதை நாம் உணரலாம். பெருமான் தனது நெற்றிக் கண்ணினை திறந்த போது, அதன் வெப்பத்தினைத் தாங்க முடியாமல் தேவியின் கைவிரல்களிலிருந்து வெளிவந்த வியர்வை கங்கை ஆற்றினைப் போன்று பெருகி ஓடியது என்று மற்றொரு தேவாரப் பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தனது தவறினுக்கு வருந்திய பார்வதி தேவி, திருப்பாம்புரம் தலத்திற்கு வந்து, அங்கே தவம் செய்து ஒரு சிவராத்திரி நாள் அன்று, இறைவனின் தரிசனம் கிடைக்கப் பெற்றார். இந்த தகவல் அப்பர் பிரானால், தசபுராணப் பதிகத்தில் கூறப்படுகின்றது. நலம்=சிவம்; நலம் மலி மங்கை=நலத்தை அருளும் சிவனின் மனைவி உமையம்மை; அலர்தரல்=விரிதல்; அலர்வித்த=ஒளிவிடச் செய்த; (பாடல் எண் 4.14.8). அழகும் பண்பும் நிறைந்த பார்வதி தேவி, விளையாட்டாக சிவபிரானின் இரண்டு கண்களையும் பொத்தினபோது, பெருமானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்களாக விளங்கும் காரணத்தால், உலகெங்கும் இருள் சூழ்ந்தது. உலகினில் இருள் சூழ்ந்து, உலகினில் உள்ள அனைத்து உயிர்களும் வாடின. உயிர்களின் வாட்டத்தை நீக்கவேண்டி, சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணினைத் திறந்து ஒளி பரப்பவே உலகினைச் சூழ்ந்திருந்த இருள் அகன்றது. மூன்றாவது கண்ணிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தைத் தாங்கமுடியாமல், பார்வதி தேவி தனது இரு கைகளையும் எடுத்து, தான் செய்த தவறினை மன்னித்து அருளுமாறு இறைவனை வேண்டினாள். மீண்டும், சந்திரனைப் போலவும், சூரியனைப் போலவும் தனது இரண்டு கண்களையும் ஒளிரச் செய்து உலகினில் ஒளி பரப்பிய முக்கண் மூர்த்தி நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் தருபவராவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா

உலகினை ஏழு முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண்

அலர் தர வஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல்

அலர் தரு சோதி போல் அலர்வித்த முக்கணன் அவனா நமக்கோர் சரணே

இமையாத முக்கண் என்று திருஞான சம்பந்தர் கூறும் பாடல் (1.4.1.) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. சீர்காழியில் வாழும் அந்தணர்கள், திருஞான சம்பந்தர் நெடுநாட்கள் தலயாத்திரையில் இருந்ததால், தங்களது நகருக்கு உடனே திரும்ப வேண்டும் என்று வீழிமிழலையில் இருந்த திருஞான சம்பந்தரை சந்தித்து, வேண்டுகோள் விடுத்தனர். அடுத்த நாள் திருஞான சம்பந்தர் வீழிமிழலைக் கோயிலுக்குச் சென்று சிவபெருமானின் கருத்தை அறிய முற்பட்ட போது, கோயில் விமானத்தில், சீர்காழியில் இருந்த கோலத்தை சிவபெருமான் அவருக்கு காட்டியருளி, இன்னும் சில நாட்கள் மிழலையில் திருஞானசம்பந்தர்இருக்க வேண்டும் என்பதை குறிப்பாக உணர்த்தினார். அப்போது புகலி நிலாவிய புண்ணியன் விண்ணிழி கோயில் விரும்பி இருந்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பியவாறு திருஞான சம்பந்தர் அருளிய பதிகம் இது. ஒளிவீசும் நெற்றியும், மான் போன்று மருண்ட பார்வையும் உடையவளும் ஆகிய பார்வதி மங்கையோடும், எப்போதும் நிலையற்ற உலகப் பொருட்களைப் பேசாது உண்மையான மெய்பொருள் குறித்தே பேசும் மறையோர்கள் புகழ்ந்து போற்றும் வண்ணம் புகலி என்று அழைக்கப்படும் நகரினில் பொருந்தி உறைகின்ற புண்ணியமே வடிவமாக திகழும் பெருமானே, எமது இறைவனே, இமையாது இருக்கும் மூன்று கண்களை உடையவனே, எங்களது தலைவனே, என் பால் அன்பு பாராட்டுபவனே, மெய்ப்பொருளை பேசுவோரும் நான்கு மறைகளையும் ஓதுவோரும் ஆகிய அந்தணர்கள் உறைகின்ற வீழிமிழலை தலத்தில் உள்ளதும் வானிலிருந்து திருமாலால் கொண்டு வரப்பட்ட விமானத்தை உடையதும் ஆகிய திருக்கோயிலை விரும்பி ஆங்கே உறைவதன் காரணம் யாது, எமக்கு சொல்வீராக என்று பெருமானிடம் திருஞானசம்பந்தர் விளக்கம் கேட்கும் வண்ணம் அமைந்த பாடல்.

மைம்மரு பூங்குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான்விழி மங்கையோடும்

பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்தப் புகலி நிலாவிய புண்ணியனே

எம் இறையே இமையாத முக்கண் ஈச என் நேச இது என் கொல் சொல்லாய்

மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே

மைம்மரு=கருமை சேர்ந்த; பொய் மொழியா=பொய் பேசாது உண்மையே பேசும் என்பது பொதுவான பொருள். வாய்மை எனப்படுவது மனிதர்கள் கொள்ள வேண்டிய எட்டு அரிய குணங்களில் ஒன்று. இந்த காரணம் பற்றியே பெருமானுக்கு பிடித்த அக மலர்களில் ஒன்றாக வாய்மை, கருதப் படுகின்றது. கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பன அரிய எட்டு குணங்களாகும். நாம் அனைவரும் இந்த எட்டு குணங்கள் உடையவர்களாகத் திகழ்ந்து, அக மலர்களாகிய இவைகளால் வழிபடுவதையே கடவுள் பெரிதும் விரும்புகின்றார். பொய் என்ற சொல்லுக்கு பொய்யான பொருட்கள், நிலையற்ற பொருட்கள் என்று பொருள் கொண்டு, நிலையற்ற உலகப் பொருட்களைப் பற்றி பேசாமல், நிலையான பரம்பொருள் குறித்தும் அவனது சிறப்பு பற்றியும் பேசும் அந்தணர்கள் என்று பொருள் கொள்வது சிறப்பு. அதே போன்று வீழிமிழலை அந்தணர்கள் குறித்தும், உண்மையான மெய்ப்பொருள் பற்றி சிந்தனை செய்வோர் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. புகலி என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. சூரபதுமனுக்கு அஞ்சிய தேவர்கள் புகலிடமாகக் கொண்டமையின் புகலி என்ற பெயர் வந்தது. புகலியிலிருந்து அந்தணர்கள் திருஞானசம்பந்தரை காண வந்ததை, வீழிமிழலை தலத்து அந்தணர்கள் திருஞான சம்பந்தருக்கு தெரிவித்ததாகவும், திருஞானசம்பந்தரின் அனுமதி பெற்ற பின்னர் அவர்களை திருஞானசம்பந்தர் இருந்த இடத்திற்கு அழைத்து வந்ததாகவும் பெரிய புராணம் உணர்த்துகின்றது. எனவே பதிகத்தின் பல பாடல்களிலும் புகலி மறையோர்களையும், வீழிமிழலை மறையோர்களையும் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மேலும் புகலி தலத்தை விரும்பி நிலையாக, புண்ணியமே வடிவமாக ஆங்கே பொருந்தியிருக்கும் இறைவன், விண்ணிலிருந்து இறங்கிய வீழிமிழலை விமானத்தை விரும்பியவனாக ஆங்கே பொருந்தி காட்சி அளிக்கின்றான் என்றும் கூறுகின்றார். விண்ணிழி= ஆகாயத்திலிருந்து இறங்கிய; பெருமானின் அருளால் வலிமை வாய்ந்த சக்கரப்படை பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த திருமால், பெருமானின் திருக்கோயிலுக்கு, சிறப்பான விமானத்தை ஆகாயத்திலிருந்து திருமால் இறக்கியதாக கூறுவார்கள். அதனை உணர்த்தும் விதமாக பாடல் தோறும் விண்ணிழி விமானம் என்று குறிப்பிடப் படுகின்றது. பதினாறு சிங்கங்கள் இந்த விமானத்தைத் தாங்குவது போன்று அமைக்கப் பட்டுள்ளது. ஆலவாய் தலத்து விமானமும் இந்திரனால் தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகின்றது. ஆலவாய் தலத்து கருவறை விமானத்தை, எட்டு திசை யானைகள் தாங்குவது போன்று எட்டு யானைகளின் முகங்கள் கருவறை வெளிச் சுற்றில், கருவறை விமானத்தைத் தாங்குவது போன்று அமைக்கப் பட்டுள்ளன. பூங்கழல்=அழகிய கூந்தல்; வாணுதல்=வாள்+நுதல்= ஒளிவீசும் நெற்றி; ஈசன்=தலைவன்

கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.05.4) திருஞான சம்பந்தர் இமையாத முக்கண் என்று குறிப்பிடுகின்றார். இமையோர் பெருமான்=இந்திரன்; விருத்திராசுரனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு, இந்திரன் பெருமானை வழிபட்டு பயன் அடைந்த தலபுராண வரலாறு இங்கே உணர்த்தப் படுகின்றது. கால்=திருவடிகள்; நுண்ணறிவு=சிவ ஞானம். தோல்=புலித்தோல், போர்வை=யானைத் தோல்; இமையோர் பெருமான் என்ற தொடர் தேவர்களுக்கு தலைவனாக சிவபெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுவதாகவும் விளக்கம் கூறுகின்றனர். துதைந்து=செறிந்து, இங்கே மிகவும் அதிகமாக பூசிக்கொண்டு என்று பொருள் கொள்ள வேண்டும். இந்த பதிகத்தின் முந்தைய இரண்டு பாடல்களில் காட்டுப்பள்ளிப் பெருமானை நினைத்து உருகி வணங்கும் அடியார்கள் முக்தி நிலையை அடைவார்கள் என்றும், தங்களது துன்பங்களிலிருந்து விடுதலை அடைவார்கள் என்றும் உணர்த்திய திருஞான சம்பந்தர், அவ்வாறு தனது அடியார்களுக்கு உதவும் பொருட்டே, தானாகவே விருப்பம் கொண்டு இந்த தலத்தில் உறைகின்றான் என்று கூறுகின்றார். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, நாமும் இந்த தலத்து இறைவனைப் பணிந்து வணங்கி பயனடைய வேண்டும் என்பது இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. புலித்தோலை ஆடையாக உடுத்தியவனும், யானைத் தோலினை அழகிய போர்வையாக தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், வெண்மை நிறமுடைய திருநீறு மிகவும் அதிகமாக பூசப்பட்ட மார்பினில் பூணூல் பொலிந்து விளங்க தோற்றம் அளிப்பவனும், தேவர்களின் தலைவனாக விளங்குபவனும், பல அடியார்கள் சிவஞானம் கைவரப் பெற்று வணங்கிப் போற்றும் திருவடிகளை உடையவனும், தேவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஆலகால விடத்தைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை நிறமாக மாறிய கழுத்தினை உடையவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் காட்டுப்பள்ளி தலத்தின் மீது அன்பு வைத்துள்ளான். இமையாத மூன்று கண்களை உடையவனாகிய பெருமான், மின்னல் போன்று மெலிந்த இடையினை உடைய பிராட்டியுடன், உறைவதை தானாகவே விரும்புகின்றான். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு நாம் இறைவனைப் பணிந்து வணங்கி, நாம் வாழ்க்கையில் உய்வினை அடைவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தோலுடையான் வண்ணப் போர்வையினான் சுண்ண வெண்ணீறு துதைந்து இலங்கு

நூலுடையான் இமையோர் பெருமான் நுண்ணறிவால் வழிபாடு செய்யும்

காலுடையான் கரிதாய கண்டன் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி

மேலுடையான் இமையாத முக்கண் மின்னிடையாளொடும் வேண்டினானே

திருநீலகண்டப் பதிகத்தின் நான்காவது பாடலில் (1.116.4) பெருமானை, கண் இமையாதன மூன்று உடையீர் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். வித்தியாதரர் என்ற வடமொழிச் சொல் விச்சாதரர் என்று மாறியுள்ளது. திண்ணிய=வலிமை மிகுந்து; உறுதியாக உயிர்களைப் பற்றி இருப்பதால், உயிர்களால் நீக்க முடியாத வினைகள் என்று குறிப்பிடப் படுகின்றது. நெற்றியில் இருக்கும் கண் எப்போதும் மூடியே இருக்கும்; மற்ற இரண்டு கண்கள் எப்போதும் திறந்தே காணப்படும். இமையாத கண்கள் இமைத்து நிலை மாறிய போது விபரீதங்கள் ஏற்பட்டதை நாம் புராணங்களிலிருந்து அறிகின்றோம், எப்போதும் மூடியிருக்கும் நெற்றிக் கண் திறந்ததால், மன்மதன் உடல் எரிந்ததை நாம் அனைவரும் அறிவோம். பல விதமான வித்தைகளில் தேர்ச்சி உடையவராக விண்ணுலகத்தை ஆள்கின்ற தேவர்கள் மற்றும் வேதியர்களால், புண்ணியத்தின் வடிவமாக இருக்கும் இறைவனே என்று காலை மாலை ஆகிய இரு பொழுதுகளிலும் தொழப்பட்டு வருபவரும், உயிர்கள் தாங்கள் செய்த புண்ணியத்தின் பயனாக சென்று சாரக்கூடிய தன்மையில் உயிர்களுக்கு அருள் புரிபவரும் ஆகிய இறைவனே, இமையாத மூன்று கண்களை உடைய உமது சிறப்பு வாய்ந்த திருப்பாதங்களை நாங்கள் சரணடைந்தோம். எனவே வலிமை வாய்ந்த வினைகளும் எம்மை தீண்டா வண்ணம் அருள் புரிந்து காத்தருள்வீராக.. உலகத்தவரை காப்பாற்றும் பொருட்டு தன்னில் விடத்தைத் தேக்கிக் கொண்ட பெருமானின் கழுத்தின் மீது ஆணையிட்டு, நீலகண்டம் என்று அழைக்கப்படும் பெருமானின் மீது ஆணையிட்டு, இதனை நான் சொல்கின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்

புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே

கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம்

திண்ணிய தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்

கள்ளில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.119.3) திருஞானசம்பந்தர் இமையா முக்கண் என்று குறிப்பிடுகின்றார். கண்=அழகு; கண்ணார் நீறு=அழகு தரும் திருநீறு; பிஞ்ஞகன்=அழகிய தலைக்கோலம் உடையவன்;

எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்

பண்ணார் நான்மறை பாடும் பரமயோகி

கண்ணார் நீறணி மார்பன் கள்ளில் மேயான்

பெண் ஆணாம் பெருமான் எம் பிஞ்ஞகனே

ஆருயிர் திருவிருத்தம் எனப்படும் (4.84) பதிகத்தின் மூன்றாவது பாடலில் இமையாத முக்கண் பெரியான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தரியா வெகுளியன் என்று பெருமானை இந்த பாடலில் அப்பர் பிரான் அழைக்கின்றார். பெருமான் கோபம் கொண்டால் எவராலும் தாங்க இயலாது என்பதை இந்த தொடர் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். தக்கன், தன்னை யாகத்திற்கு அழைக்காததையும், அவிர்பாகம் கொடுக்க மறுத்ததையும், இழிவாகப் பேசியதையும் சிவபெருமான் முதலில் பொருட்படுத்தாமல் தான் இருந்தார். யாகத்திற்கு சென்ற தாக்ஷாயணியை (தக்கனின் மகள் என்பதால் அன்னைக்கு ஏற்பட்ட பெயர்), தக்கன் இழிவாகப் பேசியதன் விளைவாக அவள் அவமானம் தாங்க முடியாமல் யாககுண்டத்தில் குதித்து உயிரினை விட்ட பின்னர், சிவபெருமான் தனது கோபத்தை தடுக்க முடியாமல், வீரபத்திரரை, தக்கனின் யாகத்தை அழிக்க அனுப்புகின்றார். பெருமானது திருவடி நிழலில் தனது உயிர் நிலை பெற்று இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். பிறந்த உயிர் தான் பிறந்த விதத்தையும் அன்னையையும் தந்தையையும், தனது அன்னை மூலம் உணர்கின்றது. தந்தையும் தாயும் இல்லாமல், தானே தோன்றிய பெருமான் எவ்வாறு தனது பிறப்பு குறித்து அறிய முடியும். எனவே தான் பெருமானை, தனது பிறப்பு அரியான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தக்கன் செய்த பல தவறுகளையும் பொறுத்த சிவபெருமான், தக்கனது தவறுகள் எல்லை மீறியவுடன், வீரபத்திரரை அனுப்பி அவனது யாகத்தினைத் தகர்த்தார். நெருப்பின் தன்மை பொருந்தி விளங்கும் சூலத்தினை உடையவர் சிவபெருமான்: இமையாத மூன்று கண்களை உடையவனும், மேன்மை வாய்ந்த அடியார்களின் பிறவிப் பிணியினைத் தீர்ப்பவனும் ஆகிய சிவபெருமான் பிறப்பு இறப்பிற்கு அப்பாற்பட்டவன். பிறப்பு என்றால் என்னதென்று அறியாத, அவனது திருவடி நிழலின் கீழே எனது ஆருயிர் நிலை பெற்று நிற்கின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தரியா வெகுளியனாய்த் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த

எரியார் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண்

பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை

அரியான் அடிநிழல் கீழது அன்றோ எனது ஆருயிரே

கடுமையான இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்ட போதும் நாம் கலங்காது இருக்கும் வண்ணம் நமக்கு புகலிடமாக இருப்பவன் பெருமான் என்று உணர்த்தும் பொதுப் பாடல் ஒன்றினில் (4.113.10) இமையாத மூன்று கண்களை உடைய பொன் குன்றம் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நெஞ்சமே, நெடுங்காலம் மழை இல்லாமல் போனால் மலைகள் தங்களது பசுமையை இழந்து வெப்பத்தினால் சூடேறிக் காணப்படும் என்றும், ஆறுகள் மற்றும் கடல்கள் வற்றிய நிலையில், மழை இல்லாததால் கொடிய பஞ்சம் ஏற்படும் என்றும் சூள் உரைக்காதே. அந்த நிலையிலும், இமையாத மூன்று கண்களை உடையவனாய் பொற்குன்றம் போன்று காட்சி அளிக்கும் சிவபெருமானை நாம் புகலடைந்தால், பஞ்சத்தால் நாம் வாடாமல் இருப்பதற்கு அவன் அருள் புரிவான் என்பது இந்த பாடலின் திரண்ட கருத்து. கடுமையான பஞ்சம் ஏற்பட்டு உணவு பற்றாக்குறை இருந்த காலத்திலும், வீழிமிழலை தலத்து இறைவன், அப்பர் பிரானுக்கும் திருஞான சம்பந்தருக்கும் பொற்காசுகள் அளித்து, அவர்களைச் சார்ந்த அடியார்கள் உணவின்றி வாடாமல் காப்பாற்றிய நிகழ்ச்சி அப்பர் பிரானின் நினைவுக்கு வந்தது போலும்.

கல் நெடுங்காலம் வெதும்பிக் கருங்கடல் நீர் சுருங்கிப்

பல் நெடுங்காலம் மழை தான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்றும்

என்னொடும் சூள் அறும் நெஞ்சமே இமையாத முக்கண்

பொன் நெடுங்குன்றம் ஒன்று உண்டு கண்டீர் இப்புகலிடத்தே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றிலும் (5.47.4) அப்பர் பிரான், பெருமானை இமையா முக்கணர் என்று குறிப்பிடுகின்றார். பெருமான் தனது கண்கள் இமைப்பதால் ஏற்படும் விபரீதங்களை தவிர்க்கும் பொருட்டு எப்போதும் இமையாத முக்கண்ணினராக விளங்குகின்றார். இமையாத மூன்று கண்களை உடைய பெருமான் எனது நெஞ்சத்தில் உள்ளார். அவரின் உண்மையான தன்மையையும் பெருமையையும் எவரும் அறிய முடியாது. தேவர்கள் புகழ்ந்து பாராட்டும் வண்ணம் கச்சி ஏகம்பத்தில் உறையும் பெருமானை, நம்மை ஆளும் இறைவனை நீங்கள் தொழுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர்

தமை யாரும் அறிவொண்ணாத் தகைமையர்

இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன்

நமை ஆளும் அவனைத் தொழுமினே

இமையாத முக்கண்ணினர் என்று ஆமாத்தூர் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.09.4) அப்பர் பிரான் இறைவனை அழைப்பதை நாம் இங்கே காணலாம். பெருமான் விரும்பியே பலி ஏற்கின்றார் என்பதை உணர்த்தும் வண்ணம், பிச்சைக்கு என்றங்கு இசைந்ததோர் இயல்பினர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பிஞ்ஞகன்=அழகாக பின்னப்பட்ட தலைக்கோலம் உடையவன்; பசைந்த=விருப்பம் உடைய; பிசைந்த=குழைத்த; படமெடுக்கும் பாம்பினை அணிந்தவராக இருந்தாலும், உடலெங்கும் திருநீறு பூசியவராக இருந்தாலும், உடலின் ஒரு பாகத்தில் பெண்ணுருவை கொண்டிருந்தாலும் பெருமான் அழகியவராக காணப்படுகின்றார் என்று அவரது அழகில் மயங்கிய இளம் பெண்ணின் எண்ணத்தை வெளிப்படுத்தும் பாடல் இது. பாடுதலையும் கூத்தாடுவதையும் விரும்பும் பல பூதங்களை உடைய ஆமாத்தூர் ஐயனார், படம் எடுக்கும் பாம்பினை, தனது இடுப்பில் கச்சையாக உடுத்தியுள்ளார்; அவர் விருப்பத்துடன் பிச்சை ஏற்கும் தன்மையாளர்; தீப்போன்ற சிவந்த மேனியராய், இமைக்காத மூன்று கண்களை உடையவராய், நான்கு வேதங்களையும் ஓதும் அவர், திருநீற்றினை நீரில் குழைத்து உடல் முழுதும் பூசிக் கொண்டவர்; உமையம்மையை தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டு, எப்போதும் பிரியாமல் இருப்பவர், அழகாக பின்னப்பட்ட சடைமுடியைக் கொண்ட அவர், கங்கை நதி அசைந்து ஆடும் விதமாகத் தனது தலையில் ஏற்றுக் கொண்டுள்ளார்; அந்த ஆமாத்தூர் தலைவர் தீ ஏந்திய கையினராய், அழகியராக காணப்படுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பசைந்த பல் பூதத்தர் பாடல் ஆடல் படநாகக் கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு

இசைந்ததோர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால்வேதத்தர்

பிசைந்த திருநீற்றினர் பெண்ணோர் பாகம் பிரிவறியா பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை

அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

கண்கள் இமைத்தலும், உடல் மூச்சு விடுதலும், உயிருடன் கூடிய உடம்பின் செயல்கள். ஆனால் பெருமான் உயிர்களிலிருந்து மாறுபட்டவர்; உயிர் உடலுடன் கூடி இருக்கும் வரை, கண்ணிமைத்தலும், மூச்சு விடுதலும் நிகழும். உயிர் நீத்த பின்னர் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறாது. சிவபெருமானின் உடலில் உயிர் வந்து சேர்வதும் இல்லை; அவரது உடலை விட்டு உயிர் பிரிவதும் இல்லை; எனவே இமைத்தலும் மூச்சு விடுதலும் அவர் உடலில் நடப்பதில்லை. எனவே பெருமான் உயிர்த்தலும் இமைத்தலும் தேவைப்படாது தானே இயங்கும் கடவுள் ஆவார். இந்த செய்தியை குறிப்பிடும் அப்பர் பிரான், இமையாது இருந்தாய் என்று கயிலை திருத் தாண்டகத்தின் பாடல் (6.55.8) ஒன்றினில் கூறுகின்றார். உயிர்த்தல்= மூச்சு விடுதல்; ஊழி என்ற சொல் ஊழிக் காலத்திற்கு பின்னர் தோன்றும் உலகங்களைக் குறிக்கும். மற்றவர்கள் போல் அல்லாமல் கண்கள் இமைக்காமலும், மூச்சு இழுப்பதும் விடாமலும் இருப்பவனே, எனது உள்ளத்திலிருந்து நீங்காமல் இருப்பவனே, உமை அம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்து இருப்பவனே, ஊழிக் காலத்திற்கு பின்னர் தோன்றும் ஏழு உலகங்களாக இருப்பவனே, உடலுக்குப் பொருந்தாத நஞ்சினை அருந்தியும் உயிருடன் இருப்பவனே, அனைவருக்கும் மூத்தவனாய் முழுமுதல் கடவுளாகத் திகழ்பவனே, பொறுமையாக செயல்படும் ஞான ஒளியே, கயிலை மலையில் உறையும் இறையவனே, உன்னை போற்றி, போற்றி என்று பலமுறை போற்றி வணங்குகின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி

உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழான ஒருவா போற்றி

அமையா வரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதி புராணனாய் நின்றாய் போற்றி

கமையாகி நின்ற கனலே போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி

இமையாத நெற்றிக்கண் இமைத்து திறந்த போது, அதனின்று வெளிப்பட்ட தீப்பொறிகளின் தாக்கத்தினால் மன்மதனின் உடல் எரிந்து அழிந்தது என்று கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.3) அப்பர் பிரான் கூறுகின்றார். ஒளிர்கின்ற நெருப்பு என்பதைக் குறிக்க வயங்கு எரி என்று கூறப்பட்டுள்ளது. வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை நம்மால் அறிய முடியாது அல்லவா. அத்தகைய விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமான திருநாமங்களை உடையவன் இறைவன் என்பதை உணர்த்தும் முகமாக தாரகைகள் தம்மின் மிக்க எண் என்று இறைவனை அப்பர் பிரான் இந்த பதிகத்தில் குறிப்பிடுகின்றார். ஐம்பூதங்களின் தன்மை விளக்கப்படும் பாடல். பரந்த வெளியிலிருந்து நாதம் பிறந்தமையால், ஆகாயத்தின் குணம் ஒலி என்று கூறுவார்கள். வீசும் காற்றில் ஒலி மற்றும் தொடு உணர்வு (ஊறு) ஆகிய இரண்டு பண்புகள் இருப்பதை நாம் உணர்கின்றோம். தீ, ஒலி கொண்டு உணரப்படுவதாகவும், தொடு உணர்வினால் அறியப்படுவதாக விளங்குவதுடன், ஒளியுடனும் திகழ்கின்றது. நீருக்கு, ஒலி, ஊறு, ஒளி, மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்கள் உள்ளன. நிலத்திற்கு, நீரின் நான்கு குணங்களுடன் வாசனை ஆகிய ஐந்தாவது குணமும் உள்ளது. மேற்கண்ட குணங்களாக இறைவனே இந்த ஐந்து பூதங்களிலும் பரவி இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

மண்ணதனில் ஐந்தை மாநீரில் நான்கை வயங்கெரியில் மூன்றை மாருதத்து இரண்டை

விண்ணதனில் ஒன்றை விரிகதிரைத் தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க

எண்ணதனில் எழுத்தை ஏழிசையைக் காமன் எழில் அழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.85) மூன்றாவது பாடலில், இமையா முக்கண்ணினான் என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நம்பன்=நம்புதற்கு உரியவன். திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற போது, தேரின் அச்சு முறிந்து விடவே, திருமால் இடபத்தின் வடிவம் எடுத்து பெருமானைத் தாங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த மால்விடையிலிருந்து வேறுபடுத்தி காட்டும் வண்ணம், நந்தியம் பெருமானை நரை விடை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நரை விடை=வெண்மை நிறத்து இடபம்; நவிலுதல்=பாடுதல்; அடியார்களின் நம்பிக்கைக்கு உரியவன் என்பதால் அடியார்களால் மிகவும் விரும்பப் படுபவனும், வெண்மை நிறத்தில் காணப்படும் எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டு அதன் மீது உலவுபவனும், அனைத்து உயிர்களுக்கும் தலைவனும், எப்போதும் வேத கீதங்களை பாடுபவனும், அனைவர்க்கும் இன்பத்தைத் தருபவனும், இமையாத மூன்று கண்களை உடையவனும், தன்னை விரும்பி வழிபடும் அடியார்களுக்கு என்றும் அன்புடையவனாக இருப்பவனும், அனலைக் கையில் ஏந்தி ஆடுபவனும், அவன் என்றும் இவன் என்றும் யாராலும் சுட்டிக் காட்டி அறிய முடியாதவனும், செம்பொன்னின் நிறத்தினை உடைய மேனியானும் ஆகியவன் சிவபெருமான். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான், முண்டீச்சரத்து தலத்தில் சிவலோகநாதன் என்ற பெயரில் உறைகின்றான். அவன் எனது சிந்தையிலும் பரவி இருக்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண் கீதத்தை நவிற்றினான் காண்

இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏசற்று மனம் உருகும் அடியார் தங்கட்கு

அன்பன் காண் ஆரழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா

செம்பொன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

தேவி பெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் ஏற்பட்ட விபரீதத்தை சுந்தரர் கலயநல்லூர் பதிகத்தின் (7.16) நான்காவது பாடலில்குறிப்பிடுகின்றார். பல நூல்களைக் கற்ற அறிவினைக் கொண்டு வேள்விகள் வளர்த்து கலிபுருடனை வெற்றி கொண்ட அந்தணர்கள் என்று சுந்தரர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

மலை மடந்தை விளையாடி வளையாடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா

உலகுடன் தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக் கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில்

அலையடைந்த புனல் பெருகி யானை மருப்பிடறி அகிலொடு சந்துந்தி வரும்அரிசிலின் தென்கரை மேல்

கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓமப்புகையால் கணமுகில் போன்றணி கிளரும் கலயநல்லூர் காணே

பொழிப்புரை:

அழகுடன் நீண்டு காணப்படும் கூந்தலை உடைய உமையம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் வைத்தவனும், எமக்குத் தந்தையாகத் திகழ்பவனும், என்றும் இமையாமல் ஒரே நிலையில் இருக்கும் மூன்று கண்களை உடையவனும், எமது தலைவனும், வலிமை வாய்ந்தவனும், நீண்ட சோலைகள் சூழ்ந்த மழபாடி தலத்தில் உறைபவனும், மருந்தாக செயல்பட்டு உயிர்களின் பிறவிப் பிணியைத் தீர்ப்பவனும் ஆகிய பெருமானை, காலையில் எழுந்தது முதல் சிந்திக்கும் அடியார்களின் வினைகள் தேய்ந்து முற்றிலும் அழிந்துவிடும்.

பாடல் 8

களையும் வல்வினை (2.009) பாடல் 7 தொடர்ச்சி மற்றும் பாடல் 8 (திதே 0722)

களையும் வல்வினை (2.009) பாடல் 8 தொடர்ச்சி (திதே 0723)

களையும் வல்வினை (2.009) பாடல் 8 தொடர்ச்சி மற்றும் பாடல் 9 (0724)

இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மாமலை

உரக் கையால் எடுத்தான் தனது ஒண் முடி பத்து இற

விரல் தலைந் நிறுவி உமையாளோடு மேயவன்

வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே

விளக்கம்:

உரம்=வலிமை; உரக்கை=வலிமை வாய்ந்த கைகள்; ஒண்முடி=ஒளிவீசும் கிரீடங்கள் அணிந்த தலைகள்; விரல் தலை=விரலின் நுனி; மேயவன்=பொருந்தி உறைபவன்; இரக்கம்=பக்தி; இந்த பாடலில் பெருமானை, திருஞானசம்பந்தர் வள்ளல் என்று அழைக்கின்றார். கயிலை மலையின் கீழே நெருக்குண்ட அரக்கன் இராவணனுக்கு, அந்த நிலையிலிருந்து மீள்வதே அவனது நோக்கமாக இருந்தது. எனவே தான் அதனை வேண்டி, பெருமானைப் புகழ்ந்து சாம கீதங்கள் பாடுகின்றான். தான் தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றி கொடுத்த அழுத்தத்தை தளர்த்தியதன் மூலம், பெருமான் அரக்கன் இராவணனின் உடலுக்கு நேர்ந்த துன்பத்தினை களைகின்றார். அப்போது அரக்கன் இராவணன் பெருமானிடம் வரம் ஏதும் கேட்டதாக கம்ப இராமாயணத்தில் சொல்லப்படவில்லை (வரையெடுத்த படலம் உத்தர காண்டம்). அரக்கன் இசைத்து பாடிய சாமகானத்தால் மனம் மகிழ்ந்த பெருமான், தானே முன் வந்து மூன்றரை கோடி வாழ்நாட்கள், சந்திரஹாசம் வாள் ஆகியவற்றை அளித்ததாக சொல்லப் பட்டுள்ளது. எனவே தான் மிகவும் பொருத்தமாக பெருமானை இங்கே வள்ளல் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். பெருமானை வள்ளல் என்று குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

பாம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.41.6) திருஞானசம்பந்தர் பெருமானை வள்ளல் என்று அழைக்கின்றார். மாதினை இடமா வைத்த எம் வள்ளல், என்று தனது உடலின் ஒரு பகுதியையே பிராட்டிக்கு கொடுத்த வள்ளல் என்று குறிப்பிடுகின்றார். இந்த தொடருக்கு வேறோர் சுவையான விளக்கமும் அளிக்கப் படுகின்றது. பெருமானின் அருளாகத் திகழ்பவள் பிராட்டி என்பதை நாம் அனைவரும் அறிவோம். அத்தகைய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டிருப்பதால், தான் விரும்பிய போதெல்லாம், தனது அடியார்களுக்கு பெருமான், பிராட்டி மூலமாக அருள் வழங்குகின்றார் என்பதை உணர்த்தவே, வள்ளல் என்று இங்கே குறிப்பிடுவதாக இந்த விளக்கம் அமைந்துள்ளது. பெருமானைப் பற்றிய கல்வியே உண்மையான கல்வியாக அருளாளர்களால் கருதப் படுகின்றது. உண்மையான கல்வியாகிய சிவஞானத்தை நன்கு கற்றுத் தேர்ந்து உணரும் அடியார்கள் உணர்ந்து மகிழும் வண்ணம் இருப்பவர் பெருமான் என்று கூறுகின்றார். ஒருவர்=ஒப்பற்றவர்; அவர் ஒளி திகழும் திருமேனி உடையவராக இருக்கின்றார். மைந்தர் என்றால் வல்லமை உடையவர் என்று பொருள். தாருகவனத்து முனிவர்கள் கொலை வெறி ஊட்டப்பட்ட மான் கன்றினை பெருமான் மீது ஏவிய போது, அந்த மான் கன்றினை அடக்கி, அதன் இயல்பான குணத்திற்கு அந்த கன்றினை மாற்றி, துள்ளி விளையாடும் கன்றாக மாற்றித் தனது கையில் பெருமான் ஏந்திக் கொண்ட நிகழ்ச்சி இங்கே உணர்த்தப் படுகின்றது. பாற்கடலைக் கடைந்த போது முதலில் ஆலகால விடம் வெளிப்பட்டது. அந்த கொடிய விடத்தின் நெடியையும் தாங்க முடியாமல், திசைக்கு ஒருவராக சிதறி ஓடிய தேவர்கள், பெருமானை, ஆதியே முழுமுதற் கடவுளே என்று அழைத்து வேண்டிய போது, அந்த ஆலகால விடத்தினை உட்கொண்டு பெருமான் தேவர்கள் அனைவரையும் காப்பாற்றினார். அதன் பின்னர், பாற்கடலிலிருந்து இலக்குமி தேவி, சந்திரன், உச்சைசிரவம் என்ற வெண்மை நிறக் குதிரை, நவநிதிகள், ஐராவதம் முதலான எட்டு யானைகள், சிறந்த மணிகள், கற்பகம் முதலான சிறந்த மரங்கள், தன்வந்திரி ஆகியோர் தோன்றினார்கள். பாற்கடலிலிருந்து தோன்றிய சந்திரன் என்பதை உணர்த்த, அலைகடல் கடைய அன்றெழுந்த வெண் பிறை என்று கூறுகின்றார். பரமர்=அனைவர்க்கும் மேலானவர்;

ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வுடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்

மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர்

ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலைகடல் கடைய அன்று எழுந்த

பாதி வெண்பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன்னகராரே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.44.9) திருஞானசம்பந்தர் பெருமானை வள்ளல் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர், ஆமாத்தூர் அடிகளின் திருப்பாதங்களை வணங்காதவர்களின் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையோ என்ற கேள்வியை எழுப்பி, அவர்களது வாழ்க்கை வாழ்க்கையாக மதிக்கப் படாது என்று உணர்த்துகின்றார். கருடனை ஊர்தியாகக் கொண்ட திருமாலும், தாமரையை ஆசனமாகக் கொண்ட பிரமனும் தங்களது மனதினில் தியானிக்கும் பெருமானது தன்மையை அளவிட முடியாது என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். அள்ளல்=சேறு; தலத்தின் நீர்வளமும் நிலவளமும் குறிப்பிடப் படுகின்றன. தனது அடியானுக்கு அருள் புரிவது என்று பெருமான் திருவுள்ளம் கொண்ட பின்னர், வரைமுறை ஏதுமின்றி அருள் புரியும் தன்மை உடையவர் பெருமான் என்பதை உணர்த்த வள்ளல் என்று கூறினார் போலும்.

புள்ளும் கமலமும் கைக் கொண்டார் தாமிருவர்

உள்ளும் அவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே

அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் என்

வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.106.1) திருஞானசம்பந்தர் பெருமானை வள்ளல் என்று அழைக்கின்றார். தனது அடியார்களுக்கு எல்லையற்ற முறையில் வரம் அளிப்பவன் பெருமான் என்பதை குறிப்பிட, வள்ளல் என்று கூறினார் போலும். இந்த பாடலில் பெருமானின் சடையை பள்ளம் என்று கூறுகின்றார். பள்ளத்தில் தண்ணீர் தேங்குவது இயற்கை. மேலும் பள்ளத்திலிருந்து வெளியே வராமல் நீர் தங்கியிருப்பதும் இயற்கை. பெருமானின் சடையினைச் சென்று சேர்ந்த கங்கைநதி, வெளியே வராமல் அங்கே தங்கியிருந்த காரணத்தால், பள்ளத்தில் தங்கியிருந்த நீர் போன்று வெளியே வராமல் இருந்ததால், பெருமானின் சடையின் ஆற்றலை குறிப்பிடும் வண்ணம் பள்ளம் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார் போலும். பயிலும்=தொடர்ந்து நடக்கும் செயல்; தொடர்ந்து நடக்கும் எந்த செயலையும் பயிலுதல் என்று சொல்வது வழக்கம். விகிர்தன் என்றால் மாறுபட்டவன் என்று பொருள் என்பதை நாம் அறிவோம். இந்த பாடலில் பெருமானின் இரண்டு செயல்களுக்கு இடையே விகிர்தன் என்ற சொல் வருகின்றது. வெள்ளத்தை விரும்பியவன் என்று பொருள் தரும் வெள்ளமதார விரும்பி நின்ற என்ற தொடர் மற்றும் விடையேறும் வள்ளல் என்ற தொடர் ஆகிய இரண்டு சொற்றொடர்களுக்கு இடையே வரும் விகிர்தன் என்ற சொல், அந்த தொடர்கள் குறிப்பிடும் இரண்டு செயல்களுக்கும் பொருத்தமாக இருப்பதை நாம் காணலாம்.

பள்ளமதாய படர்சடை மேல் பயிலும் திரைக் கங்கை

வெள்ளமது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடையேறும்

வள்ளல் வலஞ்சுழி வாணன் என்று மருவி நினைந்து ஏத்தி

உள்ளம் உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே

பள்ளம் சென்றடைந்த தண்ணீர் அந்த பள்ளத்திலிருந்து வெளியே வரமுடியாமல், நிலையாக இருப்பது போன்று, பெருமானின் சடையை சென்றடைந்த கங்கை நதி, அலைகள் நிறைந்து பெரிய நீர்ப்பரப்புடன் இருந்த போதிலும், அங்கிருந்து வெளியே வரமுடியாமல் தொடர்ந்து பெருமானின் சடையினில் தங்கியுள்ளது. மேலிருந்து வேகமாகப் பாய்ந்த கங்கை நதியினைத் தனது சடையினில் மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், இந்த இரண்டு செய்கைகள் போன்று பல சிறந்த செயல்களை, வேறெவரும் செய்ய முடியாத பல செயல்களை செய்த விகிர்தராக விளங்குகின்றார். தனது அடியார்களுக்கு எல்லையற்று வரங்கள் வழங்கும் குணமுடைய பெருமானை, வலஞ்சுழி தலத்தை விட்டு பிரியாமல் வீற்றிருக்கும் வலஞ்சுழி வாணனை, அந்த தலம் சென்றடைந்து, அவரது பெருமைகளை நினைத்து, உள்ளம் உருகி வழிபடும் அடியார்களை பிறவிப்பிணி உட்பட பல கொடிய நோய்களும் நெருங்காது. எனவே உலகத்தவரே, வலஞ்சுழி பெருமானை வழிபட்டு, பயனடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.115.7) திருஞானசம்பந்தர் பெருமானை வள்ளல் என்று அழைக்கின்றார். வெய்யவன்=சூரியன், மிகவும் அதிகமாக வெப்பத்தை வெளிப்படுத்துவதால் வெய்யவன் என்ற பெயர் வந்தது; குட்டியே=கையால் குட்டி, தக்க யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பல்லைப் பேர்த்த நிகழ்ச்சி; கையது குட்டியே= கையினில் பாம்புக் குட்டி; மாசுணம்=பாம்பு; வெங்கண்=கொடிய கண்; ஐயன்=தலைவன்; அனலாடிய மெய்யன்=பிரளயத் தீயினில் நீராடும் உடலினை உடையவன்; அருள் மெய்யனே= அருள் புரியும் மெய்ப் பொருள்; தன் பால் அன்பு செலுத்தும் அடியார்களுக்கு உண்மையாக இருப்பவனாகவும், தான் பால் அன்பு செலுத்தாத உயிர்களுக்கு அருள் செய்யாமல் இறைவன் இருப்பதால் இல்லாதவனாக அந்த உயிர்களால் கருதப் படுகின்றான் என்று உணர்த்தப் படுகின்றது. காளம்=ஆலகால விடம்; கங்காளம்=உயிரற்ற உடல், இறந்து பட்ட பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் உடல்கள்; பெருமான் பிச்சை ஏற்பதாக உலகத்தவர் பலரும் பழித்தாலும், பெருமான் தனது கொள்கையிலிருந்து தவறாமல் பலியேற்பார் என்ற பொருள்பட, பெருமான் பிச்சை எடுப்பதாக பலரும் கூறுவது வீண் என்று இங்கே குறிப்பிடுகின்றார். வரையறை இன்றி தனது அடியார்களுக்கு பெருமான் அருள் புரியும் தன்மை, இங்கே வள்ளல் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. இந்த காரணம் பற்றியே பல பாடல்களில் பெருமான் பித்தன் என்றும் அழைக்கப் படுகின்றார். தனது அடியார்களுக்கு எல்லையற்ற முறையில் வரம் அளிப்பவன் பெருமான் என்பதை குறிப்பிட, வள்ளல் என்று கூறினார் போலும்.

வெய்யவன் பல் உகுத்தது குட்டியே வெங்கண் மாசுணம் கையது குட்டியே

ஐயனே அனலாடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே

வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே

ஐயம் ஏற்பது உரைப்பது வீணையே ஆலவாய் அரன் கையது வீணையே

ஆலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.68.2) அப்பர் பிரான், பெருமானை வள்ளல் என்று அழைக்கின்றார். மந்தமாம் பொழில்=மந்த மாருதம் தென்றல் காற்று வீசும் அழகிய சோலைகள், வெந்த வெண்ணீறு என்று தீயினில் பிற பொருட்களுடன் கலந்து இடப்பட்ட பசுஞ்சாணத்தையே பெருமான் விரும்புகின்றார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். சுட்டெரித்தல் ஒரு பொருளை தூய்மை செய்யும் முறைகளில் ஒன்று. தன்னைச் சூழ்ந்திருக்கும் வினைகளை, வினைகளால் ஏற்படும் பாவங்களை, காமம் குரோதம் முதலாகிய ஆறு குற்றங்களை சுட்டெரித்து பக்குவம் அடைந்த உயிர்களையே இறைவன் விரும்புவான் என்பது வெந்த வெண்ணீறு என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. தனது அடியார்களுக்கு எல்லையற்ற முறையில் வரம் அளிப்பவன் பெருமான் என்பதை குறிப்பிட, வள்ளல் என்று கூறினார் போலும். கொழுந்து விட்டெரியும் தீயின் நிறத்தில் அமைந்த திருமேனியை உடையவரும், கோபம் கொள்ளும் காளையைத் தனது வாகனமாக உடையவரும், சுட்ட திருநீற்றினைக் கொண்டு தனது உடல் முழுவதும் பூசிக்கொண்டு உடலுக்கு அழகு சேர்ப்பவரும், தென்றல் வீசும் சோலைகள் நிறைந்த பழையனூர் தலத்தில் பொருந்தி உறைபவரும், வள்ளல் போன்று தனது அருளினை அடியார்களுக்கு அள்ளியள்ளி வழங்குபவரும், முடிவு என்பது இல்லாதவரும் ஆகிய பெருமான் திருவாலங்காடு தலத்தில் உறையும் அடிகளார் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செந்தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும்

வெந்த வெண்ணீறு கொண்டு மெய்க்கு அணிந்திடுவர் போலும்

மந்தமாம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும்

அந்தமில் அடிகள் போலும் ஆலங்காட்டு அடிகளாரே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.75.10) அப்பர் பிரான், பெருமானை, இருவரும் ஒருவனாய் உருவம் அங்குடைய வள்ளல் என்று குறிப்பிடுகின்றார். மாதொரு பாகனாக பிராட்டிக்குத், தனது உடலின் ஒரு பாதியைத் தந்த கருணைச் செயல் இங்கே வள்ளல் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. இறை=சிறிதே; இந்த பாடலில் சிவபெருமான் தனது கால் பெருவிரலை சிறிதே ஊன்ற, அவ்வாறு ஊன்றப்பட்ட கயிலாய மலையின் அழுத்தத்தை தாங்க முடியாமல் அரக்கன் இராவணன் அலறி வீழ்ந்தான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சிவபெருமான் சற்று அழுத்தமாக ஊன்றி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை அப்பர் பிரான், இந்த பதிகத்தில் கூறாமல் நமது கற்பனைக்கு விட்டு விடுகின்றார். சிவபெருமான் தனது கால் பெருவிரலை மெதுவாக ஊன்றியதைத் தாங்க முடியாமல் அலறியவன், மலை போன்ற தோள்களையும் வலிமையையும் பெற்ற அரக்கன் இராவணன். ஆனால் அத்தகைய வலிமை ஏதும் இல்லாத தான், எப்போதும் சிவபெருமானின் உருவத்தை சுமந்து கொண்டு திரிவதாக அப்பர் பிரான் கூறுகின்றார். எதனைச் சுமந்து கொண்டு? அரக்கனை அழுத்திய பெருவிரல் மட்டுமா, இல்லை இரண்டு திருவடிகளை, திருவடிகள் மட்டுமா. இல்லை திருவடிகள் தாங்கும் உருவத்தை, ஓர் உருவம் மட்டுமா, இரண்டு உருவங்களும் சேர்ந்த ஓர் உருவைத் தான் தாங்கியபடியே ஊரெங்கும் திரிவதாக அப்பர் பிரான் பெருமையுடன் கூறுகின்றார். கயிலை மலையை பேர்த்தெடுக்கத் துணிந்த, பிறை போன்று வெண்ணிறம் கொண்ட பெரிய பற்களையும் மலை போன்ற தோள்களையும் கொண்ட அரக்கன் இராவணன், சிவபெருமான் கயிலை மலையின் மேல் தனது கால் பெருவிரலை ஊன்ற, தாங்கமுடியாமல் அலறி வீழ்ந்தான்: ஆனால் அரக்கன் இராவணன் போன்று உடல் வலிமை ஏதும் இல்லாத அடியேன், இரண்டு உருவத்தையும் ஒரே உருவத்தில் தாங்கிய வள்ளல் சிவபெருமானின் திருவடிகளைச் சுமந்து கொண்டு எங்கும் திரிந்து கொண்டு இருக்கின்றேன். இதற்கு சிவபெருமானின் அருளே காரணம் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

பெருவிரல் இறை தான் ஊன்றப் பிறை எயிறு இலங்க ஆங்காம்

தருவரை அனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான்

இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்குடைய வள்ளல்

திருவடி சுமந்து கொண்டு காண்க நான் திரியுமாறே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.7.10) அப்பர் பிரான் பெருமானை வள்ளல் என்று குறிப்பிட்டு, அவனது திருவடிகளை வாழ்த்தி வணங்கி, பெருமானின் எல்லையற்ற கருணைக்கு பாத்திரமாக மாறவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். அள்ளல்=சேறு: சேறு நிறைந்த வயல்கள் என்று ஆரூரின் நிலவளமும் நீர்வளமும் குறிப்பிடப் படுகின்றது. தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறும் முகமாக, அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல். நெஞ்சமே உனக்கு உறுதியாகச் சொல்கின்றேன், வள்ளல் சிவபெருமானை வாழ்த்தி வணங்கு என்று கூறும் அப்பர் பிரான், இறைவனை வணங்கினால் என்ன நேரும் என்பதை இந்த பாடலில் கூறவில்லை. ஆனால் இதே பதிகத்தின் அடுத்த இரண்டு பாடல்களில், ஆரூர்ப் பெருமானின் திருவடியைத் தொழும் அடியார்கள், தங்களை பீடித்திருக்கும் வலிமையான வினைகளிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்றும், துன்பங்களிலிருந்து விடுபட்டு உய்வினை அடையலாம் என்று கூறுகின்றார். உள்ளமே, நான் உனக்கு உறுதியான ஒரு அறிவுரை சொல்லுகின்றேன்; நீ கேட்பாயாக. கங்கை நதியினைத் தனது சடையில் தாங்கியவனும், வேதங்களை நன்கு அறிந்தவனும் ஆகிய சிவபெருமான், நிலவளமும் நீர்வளமும் நிறைந்த வயல்கள் சூழ்ந்த ஆரூர் நகரத்தில் உறைகின்றான். தனது அடியார்கள் கேட்கும் வரங்களை, எந்தவிதமான தயக்கமும் இன்றி வழங்கும் வள்ளலாகிய சிவபெருமானின் திருவடிகளை நீ வாழ்த்தி வணங்குவாயாக என்று தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று, அப்பர் பிரான் நமக்கு அறிவுரை வழங்கும் பதிகம்.

உள்ளமே ஒரு உறுதி உரைப்பன் நான்

வெள்ளம் தாங்கு விரிசடை வேதியன்

அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம்

வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.39.1) அப்பர் பிரான், பெருமானை வள்ளல் என்று அழைக்கின்றார். காதன்மை=காதல் நோய். இந்த திருக்கோயில் பெருமானுக்கு வள்ளல் என்ற பெயரும் உள்ளது. அந்த பெயர் இந்த பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இந்த கோயிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் உள்ள கோயில்களும் வள்ளலார் கோயில்கள் என்று அழைக்கப் படுகின்றன. கிழக்கே துறை காட்டும் வள்ளல் கோயிலும் (விளநகர், பாடல் பெற்ற தலம்), மேற்கில் வழி காட்டும் வள்ளல் கோயிலும் (மூவலூர்), வடக்கே ஞானம் காட்டும் வள்ளல் கோயிலும் (தட்சிணாமூர்த்தி கோயில்) தெற்கே மொழி கட்டும் வள்ளல் கோயிலும் (பெருஞ்சேரி) உள்ளன. அப்பர் பெருமான் பயன்படுத்திய வள்ளல் என்ற சொல் இந்த நான்கு கோயில்களையும் நினைவூட்டுகின்றது. இந்த பாடல். சிவபெருமான் பால் ஆழ்ந்த காதல் கொண்டுள்ள அப்பர் நாயகியின் தாய் கூறுவதாக அமைந்த அகத்துறை பாடல். எப்போதும் பெருமானின் பெயரை உரைத்தவாறு இருக்கும் தனது மகளின் காதல் தன்மையைக் குறித்து தாய் கவலை கொண்டு தனது உணர்வினை வெளிப்படுத்தும் பாடல். பெய்து=உடல் வருத்தமடைந்து, உடல் இளைத்து; உறும் கோல் வளை=கீழே விழும் வளையல்; இந்த பாடல் நமது ஆன்மாவை பெண்ணாக உருவகித்து, எப்போதும் பெருமானின் திருநாமத்தைச் சொல்ல வேண்டும் என்ற ஆன்மாவின் உண்மையான விருப்பத்தை வெளியிடும் பாடலாக கருதப் படுகின்றது. தான் பெருமானின் மீது கொண்ட காதல் கைகூடாத ஏக்கத்தால், தனது உடல் இளைத்து உடல் மெலிந்து கை வளையல்கள் கழன்று காணப்படும் எனது மகள் எப்போதும் தனது உள்ளம் கசிந்துருகி, பெருமானின் திருப்பெயரினை உரைக்கின்றாள். மயிலாடுதுறை தலத்தில் உறையும் வள்ளல், வானத்திலிருந்து இழிந்து வந்த கங்கை நதியைத் தாங்கிய சடையன், தனது காதலினை ஏற்க வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் அவனது நாமங்களை உரைத்தவாறு இருக்கின்றாள். பெருமானே நீர் தான் இவளது கவலையைத் தீர்க்கவேண்டும் என்று அப்பர் நாயகியின் தாய் வேண்டுவதாக அமைந்த பாடல்.

கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை

உள்ளம் உள்கி உரைக்கும் திருப்பெயர்

வள்ளல் மா மயிலாடுதுறை உறை

வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே

புள்ளிருக்கு வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.79.8) அப்பர் பிரான், பெருமானை வள்ளல் என்று அழைக்கின்றார். புள்ளினார் என்று சம்பாதி மற்றும் சடாயு வழிபட்ட செய்தி இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. பரபரப்பு நீங்கிய மனத்துடன் இறைவனைத் தொழவேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த கருத்து பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. மனம் ஒரு பொருளினை நினைக்கும் போதே அடுத்த பொருளுக்கு மிகவும் வேகமாக தாவக்கூடியது. அதனால் தான் மனோவேகம் என்பது காற்றின் வேகத்தை விடவும் அதிகமானது என்று கூறுவார்கள். இந்த வேகத்தைக் கட்டுப்படுத்த, நமக்கு இறைவனைப் பற்றிய நினைவுகள் உதவும். அதனால் தான் வேகம் கெடுத்தாண்ட வேந்தன் என்று மணிவாசகர் திருவாசகம் சிவபுராணத்தில் கூறுகின்றார். மனதினில் மீண்டும்மீண்டும் சிவபெருமானை நினைத்து, அமைதியான மனத்துடன் பரபரப்பினை முற்றிலும் நீக்கி பெருமானை நினைத்து வழிபடும் அடியார்களின் வினைகள் கெடுவது உண்மையாகும் எனவே சடாயு மற்றும் சம்பாதி ஆகிய கழுகுகள் தொழுது வணங்கிய புள்ளிருக்குவேளூர் இறைவனின் திருப்பாதங்களை வணங்கித் தொழுவீர்களாக. வள்ளலாகிய அவர் நீங்கள் வேண்டுவதை உங்களுக்கு அளித்து அருளுவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. வேறு எவராலும் தீர்க்க முடியாத வினைகளை முழுவதுமாகக் களைந்து பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை தருகின்ற ஆற்றல் உடையவர் பெருமான் ஒருவர் தான் என்பதாலும், தனது அடியார்களுக்கு தயக்கம் ஏதும் இல்லாமல் அந்த பரிசினை தருபவர் பெருமான் என்பதாலும், பெருமானை வள்ளல் என்று குறிப்பிட்டார் போலும்.

உள்ளம் உள்கி உகந்து சிவனென்று

மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே

புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்

வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.27.2) அப்பர் பிரான் பெருமானை வள்ளல் என்று அழைக்கின்றார். புகலூர் தலத்தினில் திருமடம் நிறுவி, அப்பர் பிரான் திருத்தொண்டு செய்து வரும் சமயத்தில், அப்பர் பிரானின் பண்பினை உலகறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெருமான் ஒரு திருவிளையாடல் புரிந்தார். வானத்திலிருந்து நடன மங்கையர்கள் புகலூர் வந்தடைந்தனர். அப்பர் பிரான் உழவாரப் பணி செய்து கொண்டு இருந்த இடத்திற்கு வந்து அங்கே, மின்னற் கொடிகள் போன்ற தோற்றம் கொண்ட இந்த மங்கையர்கள், தமது கண்களை அகல விரித்து பாடல்கள் பாடினார்கள். அப்பர் பிரானைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு சில மங்கையர்கள் ஆடத் தொடங்கினார்கள். சில மங்கையர்கள் ஆட, சிலர் மலர்களை மழை போல் பொழிய, சிலர் அப்பர் பிரானின் அருகே சென்று அவரைத் தழுவவும் முயற்சி செய்தனர். ஆடல் பாடல்களில், தங்களை மறந்த நிலையில் இருந்த அந்த மங்கையர்களின் கூந்தல் அவிழ்ந்தன; சிலரின் இடுப்புகள் துவண்டன; சிலரின் உடைகள் நழுவின; மொத்தத்தில் அந்த மங்கையர்கள் நடந்து கொண்ட விதம், காண்போர் எவருக்கும் காம உணர்ச்சி மேம்படுமாறு இருந்தது. தேவமகளிர் இவ்வாறு பலவகையிலும், காம இச்சைகளைத் தூண்டும் செயல்களைச் செய்த போதும், அப்பர் பிரான் தனது நிலையில் இருந்து மாறாதவாறு தான் செய்து வந்த பணியில் சிறிதும் தளர்வு ஏற்படாமல், தொடர்ந்து அந்த பணியினைச் செய்யலானார். மேலும் அந்த மங்கையர்களைப் பார்த்து, நான் திருவாரூர்ப் பெருமானுக்கு அடிமை; உங்களால் எனக்கு ஆக வேண்டிய செயல் ஏதும் எனக்கு இல்லை; நீங்கள் வீணாக என் முன்னர் அலையவேண்டாம் என்ற கருத்து அமைந்த பதிகத்தை பாடினார். அந்த பதிகத்தின் பாடல் தான் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த அரம்பையர்களின் ஆடல், பாடல், அவர்கள் அணிந்திருந்த அழகான உடைகள், ஆபரணங்கள், அவர்கள் பூசியிருந்த வாசனைப் பொடிகள், அப்பர் பிரானின் அருகில் வந்து அவரைத் தழுவ அவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும், தனது ஐம்புலன்களை ஈர்த்தமையால், முதலில் தனது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், பல பாடல்களில் ஐம்புலன்களையும், ஐம்புலன்களைத் தன் வசப்படுத்தும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆக்கிய தன்மாத்திரைகளையும் அழைத்து அப்பர் பிரான் எச்சரிக்கை விடுப்பதை நாம் இந்த பாடல்களில் காணலாம். முதலில் தனது நெஞ்சத்திற்கு அறிவுரை சொல்லிய பின்னரே அடுத்தவர்களின் மீது குற்றம் காணும் அப்பர் பிரானின் பண்பு மிகவும் பாராட்டத் தக்கது மட்டுமல்ல; நாமனைவரும் அவசியம் கடைப் பிடிக்கக் வேண்டியது ஆகும். ஐம்பெரும் பூதங்காள் என்று ஐம்பூதங்கள், இருவிதமான ஐந்து பொறிகள், அந்தக்கரணங்கள் இவற்றால் ஆகிய உடல் குறிப்பிடப் படுகின்றது. பரம்=வசப்படும் தன்மை; தருக்கேன்= தருக்கித் திரிதல் வேண்டாம். ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர்=ஒரு புலன் விரும்புவதை மற்றொரு புலன் விரும்பாமல், உயிரினை தனது வழியில் இழுத்துச் செல்ல விரும்பும் நிலை. இவ்வாறு புலன்கள் ஐந்தும் தங்களது விருப்பத்தில் மாறுபட்டு நின்று, வஞ்சனையாக, உயிரினை, தங்கள் வழிக்கு இழுத்துச் செல்வதை. மணிவாசகர் தனது கோயில் திருப்பதிகம் பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடுகின்றார். இவ்வாறு மாறி நின்று மயக்கிடும் வஞ்சகப் புலன்களின் வழியினை அடைத்து, நமது மனதினில் இறையுணர்வு ஊறச் செய்யும் வல்லமை படைத்தவன் சிவபெருமான் ஒருவன் தான் என்று இங்கே அவர் கூறுகின்றார். ஐம்பெரும் பூதங்கள் மற்றும் ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்களின் கலவையாக உள்ள உடலினை, ஐந்து பொறிகளும் தங்கள் வழியில் இழுத்துச் செல்ல வேண்டும் என்று ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருக்கின்றன. அந்தக் கருவிகள் உலகமனைத்தையும் தங்கள் வசப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை. இவ்வாறு சர்வ வல்லமை படைத்த ஐம்பூதங்களும் அவற்றால் இயக்கப்படும் பொறிகளும், நுகரக் கூடிய இன்பங்கள் ஏதும் எனது உடலில் இல்லை. தேவலோகமாகவும், தேவர்களாகவும், ஏழு உலகங்களாகவும், ஊழியாகவும், ஒளி பொருந்திய திருவாரூரில் குளிர்ந்த அமுதமாகவும் இருப்பவன் சிவபெருமான், அத்தகைய தேவர் தலைவனை, வள்ளலை இடையூறு ஏதும் இன்றி எப்பொழுதும் நான் காண்கின்றேன், எனவே ஐம்பூதங்களே, உங்களது பொறியில் அகப்பட்டுக் கொண்டு தடுமாறுவேன், எனது பெருமானாகிய சிவபெருமானைத் தொழுவதில் இடையூறு ஏற்பட வாய்ப்பு அளிப்பேன் என்று நினைத்து கர்வம் கொள்ளாதீர்கள். உங்களது எண்ணம் நிறைவேறாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஐம்பெரும் பூதங்காள் ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர் ஈண்டு இவ் அவனி எல்லாம்

உம்பரமே உம் வசமே ஆக்கவல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர்

உம்பரும் ஊழியுமாய் உலகு ஏழாகி ஒள் ஆரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்

தம் பெருமானாய் நின்ற அரனைக் காண்பேன் தடைப்படுவேனாக் கருதித் தருக்கேன் மின்னே

தங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் பெருமானை, தேவர்கள் வள்ளல் என்று அழைத்து அனுதினமும் தொழுது வணங்குகின்றனர் என்று சுந்தரர் திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.59.6) குறிப்பிடுகின்றார். பொள்ளல்=ஓட்டைகள்; நாணாளும்=நாள் நாளும்; அள்ளல்=சேறு; பழனம்=வயல்; இந்த பதிகம் கொடுங்கோளூர் தலத்தில் பாடப்பட்டது எனினும் பதிகத்தின் பாடல்கள் தோறும் திருவாரூர் குறிப்பிடப் படுவதால், திருவாரூர் தலத்தினுக்கு உரிய பதிகமாக கருதப் படுகின்றது. சேரமான் பெருமாள் நாயனாரின் விருந்தினராக அவரது அரண்மனையில் சில நாட்கள் தங்கிய சுந்தரர், திருவாரூர்ப் பெருமானை விட்டுப் பிரிந்து பல நாட்கள் ஆகி விட்டனவே என்ற எண்ணத்தில், தான் இவ்வாறு திருவாரூர்ப் பெருமானை மறந்து இருத்தல் தவறு என்பதை தனது நெஞ்சத்திற்கு புலப்படுத்தும் வண்ணம் அருளிய பதிகம். பொள்ளல்=பொத்தைகள், ஓட்டைகள் நிறைந்த உடல், இங்கே நிலையற்ற உடல் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம். நிலையற்ற உடலை ஒரு பொருட்டாக கருதி, செல்வம் சுற்றம் மற்றும் செல்வத்தாலும் சுற்றத்தாலும் அனுபவிக்கும் இன்ப போகங்கள் தரும் மயக்கத்தில் ஆழ்ந்து வாழும் தன்மையை தவிர்த்து மெய்ஞானத்துடன் வாழ வழி வகுப்பவன் இறைவன் என்று சுந்தரர் கூறுகின்றார். விதி= நன்னெறி; இத்தகைய நன்னெறியை, உயிர் கொள்ள வேண்டிய பக்குவத்தை, அளிப்பதால் பெருமானை, வள்ளல் என்று குறிப்பிட்டார் போலும்.

பொள்ளல் இவ்வுடலைப் பொருள் என்று பொருளும் சுற்றமும் போகமுமாகி

மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை

வள்ளல் எந்தமக்கே துணை என்று நாணாளும் அமரர் தொழுது ஏத்தும்

அள்ளல் அம் கழனிப் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே

திருவாசகம் திருச்சதகம் பதிகத்தின் காருண்யத்து இரங்கல் பகுதியின் பாடலில் (8.5.63) மணிவாசகர், வள்ளல் என்றும் கடவுளே என்றும் இறைவனை அழைக்கின்றார். அட்ட மூர்த்தியாக விளங்கும் இறைவன், ஐந்து பூதங்கள் சூரியன் சந்திரன் ஆன்மா ஆகிய எட்டு பொருட்களிலும் கலந்து நின்று அவற்றை இயக்கும் இறைவன், அந்த எட்டு பொருட்களைக் கடந்தவனாகவும் உள்ளான் என்பதை உணர்த்தும் திருவாசகப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. பெருமானின் கருணை வெள்ளத்திற்கு, புதியதாக மலர்ந்த மலர்களில் உள்ள தேன் உவமையாக சொல்லப் பட்டுள்ளது. வள்ளல்=கைம்மாறு கருதாது உதவி செய்பவன்; புதுமது என்ற சொல்லுக்கு இதுவரை நுகர்ந்து அறியாத உணர்வு, கருணை வெள்ளமாகிய அமிர்தம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தனது வாழ்நாளில், அந்நாள் வரை, தான் உணராத ஆனந்த அனுபவம் அல்லவா, மணிவாசகர் திருப்பெருந்துறையில் பெற்றது. பொய்யனாக திகழ்ந்த தன்னை, பெருமான் ஆட்கொண்ட கருணை மிகவும் பெரியது என்பதால் பெருமானை வள்ளல் என்று அழைத்தார் போலும்.

போற்றி என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்

போற்றி நின் பாதம் போற்றி நாதனே போற்றிபோற்றி

போற்றி நின் கருணை வெள்ளப் புதுமதுப் புவனம் நீர் தீக்

காற்று இயமானன் வானம் இருசுடர்க் கடவுளானே

திருச்சதகம் காருண்யத்திரங்கல் பதிகத்தின் பாடலில் (8.5.69) பாடலில் மாணிக்கவாசக அடிகளார், பெருமானை அன்பர்க்கு அவரினும் அன்ப என்று குறிப்பிடுகின்றார். நாம் பெருமான் பால் எவ்வளவு அன்பு செலுத்துகின்றோமோ, அதனினும் அதிகமான அன்பை அவர் நம் பால் பொழிகின்றார் என்று இந்த பாடலில் அடிகளார் குறிப்பிடுகின்றார். ஒருவருக்கு நாம் கொடுப்பதை விடவும் அவர் நமக்கு அதிகமாக திருப்பி தருவதனால், அவரை அன்பர் என்று அழைப்பது தானே பொருத்தம். அடியார்கள் தம் மீது பொழியும் அன்பினை விடவும் அதிகமான அன்பினைப் பொழியும் பெருமான் என்று உணர்த்துகிறார். மேலும் வானவர்கள் பெருமானுக்கு கொடுத்தது ஆலகால விடம்; ஆனால் பெருமான் அவர்களுக்கு பதிலாக கொடுத்தது அமிர்தம் என்பதும் அவரது வள்ளல் தன்மையை நமக்கு உணர்த்துகின்றது. தீர்ந்த=முதிர்ந்த; வார்ந்த=ஒழுகிய; ஆர்ந்த=நிறைந்த, அருட்குணங்கள் நிறைந்த என்றும் இன்பம் நிறைந்த என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம்; பேர்ந்தும்=மீண்டும்; அயின்று= உட்கொண்டு: பேர்ந்த என் பொய்ம்மை என்ற தொடருக்கு, முனைவர் அ.ச.ஞா அவர்கள், இறைவனின் திருவுள்ளக் கருத்தினை புரிந்து கொள்ளாமலே, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று பாண்டிய மன்னனுக்கு பதில் அனுப்பிய செய்கை என்று விளக்கம் அளிக்கின்றார். அடிகளாரின் இந்த பொய்யினையும் மெய்யாக மாற்றியது இறைவனின் கருணை. இவ்வாறு தனது அடியானுக்காக, நடக்க இயலாத செயலையும் நடத்திக் காட்டிய பெருமானை வள்ளல் என்று அழைப்பது மிகவும் பொருத்தம் தானே.

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி

பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிட வேண்டும் போற்றி

வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி

ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு அருளிட வேண்டும் போற்றி

திருவாசகம் கோத்தும்பி பதிகத்தின் பாடலில் (8.10.19) மணிவாசக அடிகளார் பெருமானை, வள்ளல் என்று அழைக்கின்றார். கலதி=கீழ்மை குணம் உடையவன்; கடியன்=கடினமான சித்தம் உடையவன், உருகாத சித்தம் உடையவன்; கள்வன்=வஞ்சக எண்ணம் நிறைந்தவன்; வந்தொழிந்தான்=வந்து அங்கேயே தங்கிவிட்டான்; தனது மனதில் வந்து தங்கிய பெருமான், வேறெந்த இடத்திற்கும் செல்லும் எண்ணத்தை ஒழித்து விட்டு, அங்கேயே நிலையாக தங்கி விட்டான் என்பதை உணர்த்தும் வண்ணம், வந்து ஒழிந்தான் என்று அடிகளார் கூறுகின்றார். தனது மனதினில் இறைவன் தங்கிய போதிலும், தனது துயரங்கள் தீர்க்கப் படவில்லை என்று வருந்தும் மணிவாசக நாயகி, தனது துயரங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று அரச வண்டின் மூலம் தூது அனுப்புவதாக அமைந்த பாடல். தெள்ளுதல்=ஆராய்ந்து களைதல்; தனது சார்பாக எடுத்துச் செல்லும் சேதியை பெருமானின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கோருகின்றார். அருளின் வடிவமாக திகழ்வது பெருமானின் திருப்பாதங்கள் என்பதால் பாதங்களில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப் படுகின்றது.

கள்வன் கடியன் கலதி இவன் என்னாதே

வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே

உள்ளத்து உறு துயர் ஒன்று ஒழியா வண்ணமெல்லாம்

தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ

திருவாசகம் பூவல்லி திருப்பதிகத்தின் பாடலில் (8.13.19) மணிவாசக அடிகளார் பெருமானை, வள்ளல் என்று அழைக்கின்றார். அத்தி=யானை; தன்னை எதிர்த்து வந்த மத யானையின் தோலை உரித்த பெருமான், அந்த தோலினைத் தனது உடல் மீது போர்த்துக் கொண்ட செய்கை பெருமானின் அருட் செயலாக இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. யானையை உரித்த பெருமானின் திருமேனியிலிருந்து வீசிய ஒளி, பெருமானைக் கண்ட தேவர்களின் கண்கள் கூசும் வண்ணம் இருந்ததால், தேவர்களின் கண்களை பாதுகாக்கும் பொருட்டு, பெருமான் யானைத் தோலினால் தனது திருமேனியை யானைத் தோல் கொண்டு போர்த்தார் என்று ஒரு விளக்கம் சொல்லப் படுகின்றது. பொதுவாக யானையின் தோல், உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்று கருதப்படுவதால், அதனை பொருட்படுத்தாது யானைத் தோலினை போர்த்துக் கொண்ட பெருமான் பித்தன் என்றும் குழந்தை என்றும் அழைக்கப் படுகின்றார். அனைத்தையும் கடந்தவனாக விளங்கும் பெருமான், மிகவும் எளியவனாக, தனது புத்தியினில் புகுந்ததை அடிகளார் பெருமானின் சிறந்த கருணைச் செயலாக கருதி அவனை வள்ளல் என்று அழைத்தார் போலும்.

அத்தி உரித்து அது போர்த்து அருளும் பெருந்துறையான்

பித்த வடிவு கொண்டு இவ்வுலகில் பிள்ளையுமாம்

முத்தி முழு முதல் உத்தரகோச மங்கை வள்ளல்

புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ

திருவாசகம் குயிற்பத்து பதிகத்தின் பாடலில் மணிவாசகர், பெருமானை, வள்ளல் என்றும் பொன்னை அழித்த நன்மேனிப் புகழில் திகழும் அழகன் என்றும் குறிப்பிடுகின்றார். பொன்னை விடவும் பெருமானின் திருமேனி அழகாக இருப்பதால், பொன் தனது புகழினை இழந்தது என்றும் பலராலும் பெருமான் புகழப் படுகின்றார் என்றும் அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். தென்னவன் சேரலன் சோழன் என்று தமிழகத்தைத் தனது இடமாகக் கொண்டுள்ள பெருமான் என்று நமக்கு உணர்த்துகின்றார். தென்னாடு உடைய சிவனே போற்றி என்று போற்றித் திருவகவலில் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. புயங்கன்=பாம்புகளை அணிந்தவன் என்றும் பாம்பு போன்று உடலை நெளித்து அழகாக நடனம் ஆடுபவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். தமிழகத்தின் மூன்று நாடுகளில் முதலில் தோன்றியது பாண்டிய நாடு என்றும் அதன் பின்னர் சேர நாடு தோன்றியது என்றும் சோழ நாடு இறுதியில் தோன்றியது என்றும் கருதப் படுகின்றது. அந்த வரிசையின் படி, தென்னவன் சேரலன் சோழன் என்று சொல்லப் படுகின்றது.

உன்னை உகப்பன் குயிலே உன் துணைத் தோழியும் ஆவன்

பொன்னை அழித்த நன்மேனிப் புகழில் திகழும் அழகன்

மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய

தென்னவன் சேரலன் சோழன் சீர்ப் புயங்கன் வரக் கூவாய்

குதிரைகள் வாங்குவதற்காக எடுத்துச் சென்ற பொருளை, மணிவாசகர் கோயில் திருப்பணியில் செலவழித்து விடுகின்றார். தனது ஒற்றர்கள் மூலம் செய்தி அறிந்த பாண்டிய மன்னன், குதிரைகள் எப்போது வரும் என்பதை அறிந்து வருமாறு தனது சேவகர்களை மணிவாசகர் இருந்த இடத்திற்கு அனுப்புகின்றான். தன்னையும் அறியாமல், ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் அன்று மணிவாசகர் சொல்லி அனுப்புகிறார். மணிவாசகரின் வாய்மொழியை உண்மையாக வேண்டும் என்று திருவுள்ளம் கொண்ட பெருமான், காட்டில் உள்ள நரிகளை பரியாக மாற்றிய பின்னர், தானும் ஒரு குதிரைச் சேவகனாக வேடம் தரித்த வண்ணம், மதுரை நகருக்கு குதிரைக் கூட்டத்தை அழைத்துச் செல்கின்றான். இந்த செயல் தான் இங்கே பரிமிசை வந்த வள்ளல் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. மணிவாசகரின் பெருமையை உலகறியச் செய்யும் பொருட்டு பெருமான் புரிந்த பல திருவிளையாடல்களை நாம் அறிவோம். இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும் (8.18.4) அடிகளார் பெருமானை வள்ளல் என்று அழைக்கின்றார். விண்ணுலகத்தை விட்டு நீங்கி பெருமான் இந்த மண்ணுலகம் வந்து பல தலங்களில் இருந்த வண்ணம், உலகத்தவரை ஆட்கொள்ளும் கருணைச் செயல் பற்றி, பெருமானை வள்ளல் என்று அழைக்கின்றார்.

தேன் பழச்சோலை பயிலும் சிறு குயிலே இது கேள் நீ

வான் பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்

ஊன் பழித்து உள்ளம் புகுந்தென் உணர்வது ஆய ஒருத்தன்

மான் பழித்து ஆண்ட மென்னோக்கி மணாளனை நீ வரக் கூவாய்

திருவாசகம் பண்டாய நான்மறை பதிகத்தின் பாடலில் (8.48.2) பெருமானை வள்ளல் என்று அழைக்கும் அடிகளார் பெருமானை வாழ்த்தும் உயிர்களின் பிறவிக் காடு வேரோடு கெட்டு விடும் என்றும் கூறுகின்றார். எண்ணற்ற பிறவிகளால் சூழப்பட்டுள்ள உயிர்களை, பிறவிக் காட்டில் அகப்பட்ட உயிர்கள் என்று குறிப்பிடுகின்றார். உகு=சொரிகின்ற; அனைத்து உயிர்களுடன் தொன்றுதொட்டு பிணைந்து வருகின்ற மூன்று மலங்களும் மாய்ந்து ஒழியும் வண்ணம் சொரிகின்ற, பெருமை வாய்ந்த தேனாகிய வெள்ளத்தை அளிக்கும், வேதக் குதிரையின் மேல் எழுந்தருளி வந்த வள்ளலாகிய பெருமான் உறைகின்ற திருப்பெருந்துறை தலத்தை வாழ்த்தினால், உங்களது பிறவியாகிய காட்டின் கருவே அழிந்து விடும் என்ற அறிவுரையை உள்ளடக்கிய பாடல். பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதல் அளிக்கும் கருணைச் செயலை பெருமான் ஒருவர் மட்டுமே செய்ய முடியும் என்பதால், மிகவும் பொருத்தமாக பெருமானை வள்ளல் என்று அழைக்கின்றார்.

உள்ள மலமூன்றும் மாய உகு பெருந் தேன்

வெள்ளம் தரும் பரியின் மேல் வந்த – வள்ளல்

மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்

கருவும் கெடும் பிறவிக் காடு

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் பாடலில் திருமூலர், பெருமானை வள்ளல் என்று அழைக்கின்றார். கைவளம்=செயலால் வரும் பயன்; சிவம் என்பது சிவத்தின் செயலை குறிக்கும். எல்லாம் அவன் செயல் என்ற மூதுரை நமது நினைவுக்கு வருகின்றது. முழுமுதற் பொருளாகிய பெருமானை நேராக உணர்வதற்கு படிகளாக சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் என்ற நிலைகள் உள்ளன. இந்த நான்கு வழிகளிலும் தன்னை செலுத்திய பெருமான், உலகப் பொருட்களின் மீது தான் வைத்திருந்த பாசக்கட்டிலிருந்து மீட்டுவித்து, தனது திருவடியின் பேரின்பத்தை நுகர வைத்தான் என்று திருமூலர் கூறுகின்றார். இத்தகைய அரிய செயலை புரிந்த பெருமானை மிகவும் பொருத்தமாக வள்ளல் என்று அழைக்கின்றார். பொதுவாக நாம் செய்யும் எந்த செயலுக்கும் பயனாக நல்வினையோ தீவினையோ சேர்கின்றன. அத்தகைய வினைகளின் பயனாக பிறப்புகள் எடுக்க நேரிடுகின்றது. ஆனால், நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் பெருமானின் செயலாக கருதி செயல்பட்டால், அந்த செயல்கள் எந்த விதமான வினையையும் சேர்ப்பதில்லை. இந்த தன்மை தான் கைவளம் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. வினைகள் மேன்மேலும் சேர்வது நிறுத்தப் பட்டால், நாம் வினைகள் அற்றவர்களாக மாறி, முத்தி நிலை பெறுவதற்கு தகுதி படைத்தவர்களாக மாறிவிடுகின்றோம். தான் இந்த நிலையை அடைந்ததை திருமூலர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

உள்ளம் சரியாதி ஒட்டியே மீட்டு என்பால்

வள்ளல் அருத்தியே வைத்த வளம் பாடி

செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்

கைவளம் இன்றி கருக் கடந்தேனே

இதே தந்திரத்தின் மற்றொரு பாடலில் பெருமானை, வள்ளல் தலைவன் என்று திருமூலர் அழைக்கின்றார். உள்குவார் உள்ளத்து ஒளிரும் ஒளியானே என்ற திருவாசகத் தொடர் நமது நினைவுக்கு வருகின்றது. அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்கும் பெருமான், வள்ளலாகவும் விளங்குகின்றான். சிற்றம்பலம் எனப்படும் பரவெளியில் நின்று உயிர்களை வழி நடத்தும் பெருமான், மிகவும் வேகத்துடன் கீழே பாய்ந்த அந்த கங்கை நதியைத் தனது சடையில் தரித்து, உலகினை காப்பாற்றியவன் ஆவான். அவனே வாழ்க்கை நெறியை உணர்த்தும் வேதங்களையும் ஞான நூல்களையும் அருளிச் செய்தவன்; இந்த இயல்பினை உணராது தமக்கு தனி ஆற்றல் இருப்பதாக கருதி வாழும் உயிர்கள், தாமே தமக்குத் தலைவன் என்ற செருக்குடன் வாழ்வதால், அந்த உயிர்கள் கள்ளப் பெருமக்களாக கருதப் படுவார்கள். இகழ்ச்சி குறிப்பு தோன்ற, கள்ளப் பெருமக்கள் என்று, பன்மை விகுதி கொடுத்து கூறுகின்றார். அவர்களால் இறைவனை உணர முடியாது. ஆனால் இத்தகைய உயிர்களின் உள்ளத்திலும் மறைந்து நின்று அந்த உயிர்களை இயக்கும் இறைவன், அந்த உயிர்களையும் ஆட்கொள்ளும் பொருட்டு, அந்த உயிர்கள் பக்குவம் அடைய வேண்டும் என்று காத்து நிற்கின்றான் என்று திருமூலர் கூறுகின்றார்.

வள்ளல் தலைவனை வான நன்னாடனை

வெள்ளப் புனல் சடை வேத முதல்வனைக்

கள்ளப் பெருமக்கள் காண்பார் கொலோ என்று

உள்ளத்தின் உள்ளே ஒளிந்து இருந்து ஆளுமே

பொழிப்புரை:

பக்தியற்றவனாக, சிவபெருமானின் திருமலை என்பதையும் கருதாமல், தனது வலிமையான கைகளால் அரக்கன் இராவணன், கயிலை மலையினை பெயர்த்து எடுக்க முயற்சி செய்த போது, அவனது ஒளிவீசும் கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தும் அறுந்து கீழே விழுந்து விடுமோ என்று அவன் அச்சம் கொள்ளும் வண்ணம், அரக்கனது உடல் கயிலை மலையின் கீழே அகப்பட்டு வருந்தும் வண்ணம், தனது கால் பெருவிரலின் நுனியால் கயிலை மலையினை அழுத்தியவன் சிவபெருமான். உமையம்மையுடன் பொருந்தி உறைபவனாக மழபாடியில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமான், தனது அடியார்களுக்கு வரத்தை அளிக்கும் வள்ளலாக விளங்குகின்றான்.

பாடல் 9

களையும் வல்வினை (2.009) பாடல் 8 தொடர்ச்சி மற்றும் பாடல் 9 (0724)

ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார்

காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார்

சால நல் அடியார் தவத்தார்களும் சார்விட

மால் அயன் வணங்கும் மழபாடி எம் மைந்தனே

விளக்கம்:

கண்டம்=கழுத்து; அண்ணல்=தலைவன்; வழக்கமாக தனது பதிகத்தின் ஒன்பதாவது பாடல்களில் திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிக் காண முடியாமல் திகைத்த நிகழ்ச்சியை குறிப்பிடும் திருஞான சம்பந்தர், இந்த பாடலில் அந்த நிகழ்ச்சியின் விவரத்தை குறிப்பிடவில்லை. ஆனால் மாலும் அயனும் வணங்கிய பெருமான் என்ற குறிப்பு மூலம், அந்த சம்பவத்தை உணர்த்துகின்றார் என்றே நாம் பொருள் கொள்ளலாம். சார்விடம்=புகலிடம்; மைந்தன்= வலிமை வாய்ந்தவன்; இங்கே தவம் என்பது, சரியை, கிரியை, யோகம் ஞானம் ஆகிய நான்கு வழிகளைப் பின்பற்றும் பலவிதமான அடியார்களை குறிப்பிடுகின்றது. சால= மிகுதியான; திருமாலும் பிரமனும் இந்த தலத்து இறைவனை வழிபட்டதாக திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

தான் நஞ்சினை உட்கொண்ட போதிலும் அமரர்களுக்கு அமுதம் ஈந்த தலைவர் சிவபெருமான்; தனது அடியானின் உயிரைக் கவர வந்த இயமனின் உயிரைப் போக்கி தனது அடியானுக்கு நீண்ட ஆயுளை வழங்கியவர் சிவபெருமான்; அவர் தேவர்களைக் காப்பதற்காக பொங்கி வந்த ஆலகால விடத்தினை உட்கொண்டு தனது கழுத்தினில் தேக்கியவர் ஆவார். அவர் தனது கழுத்தினில் தேக்கிய விடம், கருமை நிறம் கொண்ட மணி பதிந்தது போல் அவரது கழுத்தினில் காணப் படுகின்றது. நல்ல குணங்கள் பலவற்றை மிகுதியாக உடைய அடியார்கள், சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு நெறிகளில் ஒன்றினை கடைப்பிடித்து தவம் மேற்கொள்ளும் அடியார்கள் தாங்கள் புகலடையத் தகுந்த இடமாகக் கருதுவது, திருமாலும் பிரமனும் வணங்கும் மழபாடி தலத்து இறைவனே ஆகும்.

பாடல் 10:

களையும் வல்வினை (2.009) பாடல் 10 (திதே 0725)

களையும் வல்வினை (2.009) பாடல் 10 தொடர்ச்சி (திதே 0726)

களையும் வல்வினை (2.009) பாடல் 10 தொடர்ச்சி மற்றும் பாடல் 11 (திதே 0727)

கலியின் வல் அமணும் கரும் சாக்கியப் பேய்களும்

நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ்பதி

பலியும் பாட்டொடு பண் முழவும் பல ஓசையும்

மலியும் மாமழபாடியை வாழ்த்தி வணங்குமே

விளக்கம்:

கலி=கொடுமை; பலி மலிந்து காணப்பட்ட தலம் மழபாடி என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தாமே, தங்களது மலங்களை இறைவன் ஏந்தியுள்ள கலத்தினில் பிச்சையாக இட்டு, மலத்திலிருந்து விடுபட்டவர்களாக விளங்கி முக்தி நிலை பெறுவதற்கு தகுதியானவர்களாக விளங்க முடியும். பலி மலிந்து காணப்படும் தலம் என்று குறிப்பிடுவதன் மூலம், பக்குவம் அடைந்த உயிர்கள் பலர் வாழ்ந்த தலம் மழபாடி என்று, தலத்து மாந்தர்களை சிறப்பித்து திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பலி என்பதற்கு வறியோரின் உணவுத் தேவைகளை நிறைவேற்றும் அடியார்கள் நிறைந்த தலம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வலி=வலிமை; அரசனை அண்டி வாழ்ந்ததால் சமணர்களுக்கு அந்த காலத்தில் இருந்த செல்வாக்கு; தனது அவதார நோக்கத்தை திருஞான சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். மாற்றுச் சமயத்தினர் தங்களது செயல்பாடுகளில், சைவர்களை குழப்பும் கொள்கைகளில் நலிவடைந்து, மக்கள் சைவ நெறியினை குழப்பம் ஏதுமின்றி நன்கு உணர்ந்து கொண்டு பின்பற்றும் வண்ணம், தான் உதவும் பொருட்டு பெருமான் தன்னை ஆட்கொண்டார் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஆறாம் நூற்றாண்டினில் தமிழகத்தில் சமணர் மற்றும் புத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தமையால் சைவ மதக் கொள்கைகள் போற்றப் படாமல் இருந்தன. இந்த நிலை கண்டு வருந்திய சிவபாத இருதயர், மிகவும் வருத்தமடைந்து மாற்றுச் சமயக் கொள்கைகளை நிராகரித்து சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டும் குழந்தை தனக்கு பிறக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் தினமும் வேண்டி வந்தார் என்று சேக்கிழார் உணர்த்தும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. நீறாக்கும்=திருநீற்றின் பெருமையினை உணர்த்தும்; பெருமானின் திருக்கூத்து அவர் செய்யும் ஐந்து தொழில்களையும் உணர்த்துவதாக கருதப் படுகின்றது. அத்தகைய தொழில்களில் முதலாகிய படைப்புத் தொழிலுடன் தொடர்பு கொண்ட மகப்பேற்றினை விரும்பினார் என்று நயமாக பெரியோர்கள் இந்த பாடலுக்கு உரை காண்கின்றார்

மனையறத்தின் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார்

அனைய நிலை தலை நின்றே ஆடிய சேவடிக் கமலம்

நினைவுற முன் பரசமயம் நிராகரித்து நீறாக்கும்

புனை மணிப் பூண் காதலானைப் பெறப் போந்து தவம் புரிந்தார்.

அத்தகைய தவத்தின் பயனாக பிறந்தவர் திருஞானசம்பந்தர் என்பதை சேக்கிழார், திருஞானசம்பந்தர் புராணத்தின் முதல் பாடலில் உணர்த்துகின்றார். வேதநெறி தழைத்து ஓங்குதல்=மாற்றுச் சமய வாதிகளின் பொய்யான விளக்கங்களால் தவறாக வேதங்கள் புரிந்து கொள்ளப்பட்ட நிலை மாறி வேதங்கள் உணர்த்தும் பொருளை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு, அதன் படியே வாழ்க்கை நடத்துதல்; மிகு சைவத்துறை=எந்த குறைபாடும் இன்றி விளங்கிய சைவ மதத்து கொள்கைகள்; பூதம்=உயிர்கள் உடலுடன் பொருத்தப்படும் தன்மை; பூத பரம்பரை=அவ்வாறு பொருத்தப்படும் உயிர்கள் படிப்படியாக பக்குவம் அடைந்து முக்தி நிலையினை நோக்கி முன்னேறிச் செல்லும் வழி; பூத பரம்பரை என்ற தொடருக்கு சிவனடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே

வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்க

பூத பரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்து அழுத

சீத வளர் வயல் புகலித் திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்

பல திருமுறைப் பாடல்கள் சமணர்கள் மற்றும் புத்தர்களின் கொள்கைகள் எடுபடாமல் செய்தவன் பெருமான் என்று உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.20.10) திருஞானசம்பந்தர், சமணர்கள் கெட அருள் புரிந்தவன் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். இகழுரு=பலரும் இகழும் வகையில் ஆடையின்றி திரிந்த தன்மை; பறிதலை=முடி பறிக்கப்பட்ட மொட்டைத் தலை; இழிதொழில்=பெருமானை பலவாறாக பழித்துக் கூறும் செயல் செய்வோர்; விரகினர்=சாமர்த்தியமாக செயல் படுவோர்; பொதிபவர்=உடலில் பொதியும் வண்ணம் போர்த்துக் கொள்ளுதல்; சமணர்களும் புத்தர்களும் கெடுமாறு அருள் புரிந்தவன் பெருமான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகம் அருளிய பல நாட்கள் கழித்தே, திருஞானசம்பந்தர் பாண்டிய நாடு சென்று ஆங்கே அனல்வாதம் மற்றும் புனல்வாதத்தில், சமணர்களை தோற்கடித்து சைவ சமயத்தின் பெருமையை நிலை நாட்டுகின்றார் என்பதால், மதுரை நிகழ்ச்சி இங்கே உணர்த்தப் படவில்லை என்பது தெளிவாகின்றது. எனினும், திருஞான சம்பந்தர், தேவாரப் பாடல்கள் பாடுவதற்கு முன்னமே, அப்பர் பிரானை கொல்வதற்கு சமணர்கள் புரிந்த பல சூழ்ச்சிகளை முறியடித்து, சமணர்களின் ஆதிக்கத்தை முறியடித்து, பல்லவ மன்னன் மகேந்திர வர்மனும் சைவ மதத்திற்கு திரும்பும் வண்ணம் பெருமான், அருளிச் செய்த செயல்களை கருத்தில் கொண்டு, இவ்வாறு திருஞானசம்பந்தர் கூறினார் என்று பொருள் கொள்ள வேண்டும். சுரர்=தேவர்கள்; சுரர்தரு=தேவலோகத்தில் இருக்கும் கற்பக மரம், நினைத்ததை அளிக்க வல்லது என்று சொல்லப் படுகின்றது. பதிகத்தின் மூன்றாவது பாடலில் தலத்து மாந்தர்களின் கொடைத் தன்மையை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அந்த கருத்தை வலியுறுத்தும் முகமாக மீண்டும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த தலத்தில் மிகவும் அதிகமான நாட்கள் தங்கிய திருஞான சம்பந்தருக்கு தலத்து மனிதர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது போலும். பலரும் இகழத்தக்க வகையில் ஆடையின்றித் திரிவோரும் முடி பறித்த தலையோரும், பெருமானைக் குறித்து வீணான பழிச் சொற்கள் அதிகமாக பேசும் இழிதொழில் செய்வோரும், தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்படுவோரும் ஆகிய சமணர்கள் மற்றும் துவராடைத் தங்களது உடல் மீது பதியும் வண்ணம் போர்த்துக் கொண்டு திரியும் புத்தர்களும் கெடும் வண்ணம் தனது அடியார்களுக்கு அருள் புரிவதால் புகழப்படுபவன் சிவபெருமான். அத்தகைய இறைவன் உறைகின்ற இடம் திருவீழிமிழலை ஆகும். நீர் நிறைந்த கடல்களால் சூழப்பட்ட இந்த உலகினில், தனது நிழலில், அமர்வோர் நினைத்ததை அளிக்கும் தேவலோகத்து கற்பக மரம் போன்று தம்மை அண்டி இரப்போர்க்கு அவர்கள் வேண்டுவதை அளிக்கும் தன்மை உடையவர்களாகத் திகழும் கொடையாளர் மிகுந்து விளங்கும் தலம் திருவீழிமிழலையாகும்.

இகழுருவொடு பறிதலை கொடும் இழிதொழில் மலி சமண் விரகினர்

திகழ் துவர் உடையுடல் பொதிபவர் கெட அடியவர் மிக அருளிய

புகழுடை இறை உறைபதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி

திகழ் சுரர் நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திருமிழலையே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.91.10) திருஞானசம்பந்தர், பெருமானை, சமணர்களை அடக்கியவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சீவர்=சீவர ஆடையை உடுத்தும் புத்தர்கள்: துவராடையை சீவர ஆடை என்று சொல்லுவார்கள்; எப்போதும் கடுக்காய் மெல்லும் பழக்கம் உடையவர்கள் சமணர்கள்; கடுக்காய், பல் துலக்காமல் அவர்கள் இருப்பதால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கும் என்பதால். அந்நாளைய சமணர்கள் கடுக்காய் மெல்லும் பழக்கம் உடையவர்களாக இருந்தனர் என்று தெரிய வருகின்றது. எனவே கடுக்கொள் சமணர் என்று அவர்களை பண்டைய நாளில் அழைத்தனர். சமணர்கள் மற்றும் புத்தர்களை அடக்கியவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடல் திருஞானசம்பந்தர் மதுரை செல்வதற்கும் முன்னம் அருளியது. எனவே திருநாவுக்கரசரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை குறிப்பிடுகிறார் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம். வேட்கை=ஆசை; பதிகத்தின் ஆறாவது பாடலில் பாசத்தை அறுக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் திருஞானசம்பந்தர், அந்த பாசத்திற்கு காரணமான ஆசையை விடவேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கடுக்காய் மென்று தின்னும் பழக்கம் உடைய சமணர்கள் மற்றும் துவராடை உடுத்தும் புத்தர்கள் ஆகிய இருவரையும் வென்று அவர்களது கொட்டத்தை அடக்கிய பெருமான், ஆரூர் நகரத்தில் உறைகின்றார். பெருமானின் இந்த தன்மையை புரிந்து கொண்டு அவனை வாழ்த்தும் அடியார்கள், பாசத்திற்கு மூலகாரணமான ஆசையை அறவே விடுத்து, அதன் பயனாக பாசத்தையும் விடுத்து, அதன் விளைவாக தற்போதம் நீங்கிய நிலை அடைந்து முக்தி பெறுவதற்கு தகுதி படைத்தவர்களாக விளங்குவார்கள்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கடுக்கொள் சீவரை

அடக்கி னானாரூர்

எடுத்து வாழ்த்துவார்

விடுப்பர் வேட்கையே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.94.10) திருஞானசம்பந்தர் பெருமானை, தேரமண் செற்ற வீரன் என்று அழைக்கின்றார். இதே பதிகத்தின் முதல் பாடலில் பின்னாளில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி, திருஞானசம்பந்தர், சமணர்களையும் புத்தர்களையும் வெற்றி கொண்டதன் மூலம் சைவ சமயத்தின் முடிசூடா மன்னனாக திகழ்ந்ததை உணர்த்தியது போன்று, எதிர்காலத்தில் சமணர்களையும் புத்தர்களையும் திருஞானசம்பந்தர் வெற்றி கொண்ட செய்கை, இந்த பாடலில் முன்கூட்டியே உணர்த்தப் படுகின்றது. சீர்=சிறப்பு வாய்ந்த; மதுரை மாநகரம் பல சிறப்புகள் பெற்ற திருத்தலம். அத்தகைய சிறப்புகளில் ஒன்று தான், பாம்பினால் சுட்டிக் காட்டப்பட்ட எல்லைகள் கொண்ட தன்மை. இந்த தன்மையை, ஆலவாய் என்ற பெயர் தலத்திற்கு உள்ள தன்மையை பாடல் தோறும் குறிப்பிட்ட திருஞான சம்பந்தருக்கு, பாம்புகள் இறைவனுக்கு அணிகலனாக இருக்கும் தன்மையை நினைவூட்டியது போலும். பாம்பு இறைவனின் கழுத்தினில் மாலையாக இருக்கும் தன்மையை இந்த பாடல் குறிப்பிடுகின்றார். தனது கழுத்தினில் பாம்பினை மாலையாக அணிந்து கொண்ட பெருமான், பல சிறப்புகள் வாய்ந்த ஆலவாய் என்று அழைக்கப் படும் மதுரை தலத்தினை, தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளான். அவனை புத்தர்களையும் சமணர்களையும் வெற்றி கொண்ட வீரன் என்று அடியார்கள் புகழ்கின்றனர்.

ஆர நாகமாம்

சீர னாலவாய்த்

தேர மண்செற்ற

வீர னென்பரே

தெளிச்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.3.10) திருஞானசம்பந்தர், பெருமானை, சமணர்கள் மற்றும் புத்தர்களின் பெருமையை நீக்கியவர் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் தலத்து மகளிரின் மொழி இனிமையை செந்துப் பண்ணுக்கு திருஞானசம்பந்தர் ஒப்பிடுகின்றார். மதுரை நகரில் அனல் வாதம் புனல் வாதங்களில் சமணரை வென்று சைவமதத்தின் பெருமையை நிலைநாட்டி, சமணர்கள் பாண்டிய நாட்டு மக்கள் மீதும் மன்னன் மீதும் கொண்டிருந்த ஆதிக்கத்தை ஒழித்த பின்னர் திருஞானசம்பந்தர் தெளிச்சேரி தலத்திற்கு வருகின்றார். பெருமானின் அருளால் தான் சமணர்களை வெற்றி கொள்ள முடிந்தது என்பதை உணர்த்தும் முகமாக, பெருமானின் அருள் வெற்றி அடைந்தது, பெருமான் வெற்றி அடைந்தார் என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். அனல் வாதம் மற்றும் புனல் வாதம் ஆகிய இரண்டிலும் தேவாரப் பாடல்கள் அடங்கிய ஏடு அழியாமல் இருந்த தன்மைக்கு மூல காரணமாக இருந்த பெருமானை சதிரர் (சாமர்த்தியம் மிகுந்தவர்) என்று கூறுகின்றார்.

மந்திரம் தரு மாமறையோர்கள் தவத்தவர்

செந்திலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர்

வெந்தலாகிய சாக்கியரோடு சமணர்கள்

தம் திறத்தன நீக்குவித்தோர் சதிரரே

திருமணஞ்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.16.10) திருஞானசம்பந்தர், சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்கள் தேய்ந்து அழியும் வண்ணம் செய்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சொற்றேயும்=சொல் தேயும், பயனற்ற அறிவற்ற பொருளற்ற தன்மையால் நாளடைவில், வழக்கொழிந்தும் மறக்கப்பட்டும் தேய்ந்து போதல்; சமணர்கள் மற்றும் புத்தர்களின் பயனற்ற பிதற்றல்கள் காலங்களைக் கடந்து நிற்க முடியாமல் அழிந்துவிடும் என்று கூறுகின்றார். சிறிதும் அறிவில்லாமல் சமணர்களும் புத்தர்களும் சொல்லும் சொற்கள், பொருளின்றி பயனின்றி இருப்பதால் நாளடைவில் மறக்கப்பட்டு அழிந்துவிடும். இவ்வாறு அத்தகைய பயனற்ற பொருளற்ற சொற்கள் அழியும் வண்ணம் செய்வானும், சிறந்த செம்மையான பொருளாக உடைய சிவநெறியினை உடையவனும், வற்றாத நீர்நிலைகள் கொண்ட மணஞ்சேரி தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனது திருப்பாதங்களை பற்றுக்கோடாக பற்றிக் கொள்ளும் அடியார்களின் மேல் வினைகள் பற்றாமல் பிரிந்து விடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சற்றேயும் தாம் அறிவில் சமண் சாக்கியர்

சொற்றேயும் வண்ணம் ஒர் செம்மை உடையானை

வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி

பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே

புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.30.10) திருஞானசம்பந்தர் பெருமானை, சமணர்கள் மற்றும் புத்தர்களின் மொழிகள் தாழ்வடையச் செய்தவர் என்று குறிப்பிடுகின்றார். விடக்கு=ஊன், மாமிச உணவு; படக்கர்கள்=உடை அணிந்தவர்கள்; திருஞான சம்பந்தர் காலத்தில் புத்தர்கள் புலால் உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருந்தமை இந்த பாடல் மூலம் நமக்கு தெரிய வருகின்றது. புத்தர்களின் புனித நூல் திரிபிடகம் என்று அழைக்கப் படுகின்றது. பிடக நூலினை பின்பற்றும் புத்தர்கள் பிடகர் என்று அழைக்கப் பட்டனர். உடலை களைந்தவர்=உடை ஏதும் உடுத்தாமல் இருந்த சமணர்கள்; படுத்து=தாழ்வு அடையச் செய்து; உறவோன்=வலிமை உடையவன்; சமணர்களின் முக்கிய கொள்கைகளின் ஒன்றாக பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாது இருத்தல் கருதப்பட்டது. எனவே அவர்கள் உயிர்க் கொலையையும், மாமிசம் உட்கொள்வதையும் தவிர்த்தனர். சமண மற்றும் புத்த நூல்கள் முக்தி நெறிக்கு வழிகாட்டாமல், மீண்டும்மீண்டும் பிறவி எடுப்பதற்கு வழி வகுப்பதால், பெருமான் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பெரியோர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஊனை உணவாக உட்கொள்ளுதல் நன்று என்று கூறும் புத்தர்களும், ஊனை உட்கொள்ளல் தீயது என்று கூறும் சமணர்களும், உடையினைத் தவிர்த்து திரிந்த சமணர்களும், உடலை மறைக்கும் வண்ணம் துவராடை அணிந்த புத்தர்களும் கூறும் திருபிடகம் முதலான நூல்களின் உரைகளை ஏற்றுக் கொள்ளாது, அந்த உரைகளை தாழ்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றவன் பெருமான். அவன் உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் அடக்கியவனாக புறம்பயம் தலத்தில் அமர்ந்து உள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விடக்கு ஒருவர் நன்றென விடக்கு ஒருவர் தீதென

உடல் குடை களைந்தவர் உடம்பினை மறைக்கும்

படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமையொர் பாகம்

அடக்கினை புறம்பயம் அமர்ந்த உறவோனே

தென் திருமுல்லை வாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.88.10) திருஞான சம்பந்தர், பெருமான், தேரர் அமண் மாய நின்ற அரன் என்று அழைக்கின்றார். பனைமல்கு=பனை மரத்தின் அடிப்பாகம் போன்று உருண்டு திரண்ட துதிக்கையை உடைய யானை; வகுளம்=மகிழமரம்; முகுளம்=மொட்டுக்கள்; கைதை=தாழை மரங்கள்; பனை மரத்தின் அடிப்பாகத்தைப் போன்று உருண்டு திரண்டு உறுதியான வலிமை உடைய துதிக்கையினைக் கொண்ட மத யானைத் தன்னை எதிர்த்து வந்த போது, அதனை அடக்கி அதன் தோலினை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்ட பரமன், சிவபெருமான் ஆவார். அடியார்கள் நம்பிக்கை வைக்கும் வண்ணம் உதவி செய்யும் இறைவனின் திருவடிகளை நினையும் பேற்றினை பெறாத சமணர்களும் புத்தர்களும் அழியும் வண்ணம் திருமுல்லைவாயில் தலத்தில் இறைவன் கோயில் கொண்டுள்ளான். இந்த தலத்தை அடுத்துள்ள காடுகளில் அரும்புகளை அளிக்கும் தாழை மரங்களும் மகிழ மரங்களும் உள்ளன; மேலும் புன்னை மரங்கள் வீசும் நறுமணமும் எங்கும் பரவியுள்ளதுஎன்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பனைமல்கு திண் கை மதமா உரித்த பரமன்ன நம்பன் அடியே

நினைவன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர்

வனமல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரியச்

சினை மல்கு புன்னை திகழ் வாச நாறு திருமுல்லைவாயில் இதுவே

திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.103.10) புத்தர்களும் சமணர்களும் அழிய நின்றவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சாய=அழிய; புத்த மதம் மற்றும் சமண மதம் ஆகிய இரண்டும் இந்தியாவில் தோன்றினாலும், சீனம் ஜப்பான் இலங்கை மியான்மர் மற்றும் பல கிழக்கத்திய நாடுகளிலும் வெகுவாக பரவி பெருவாரியான மக்களால் ஆதரிக்கப் பட்டாலும், இந்தியாவில் வேரூன்றவில்லை என்பதை நாம் அறிவோம். அதற்கு முக்கிய காரணம், இந்து மதத்தில் உள்ள கொள்கைகளே இந்த இரண்டு மதங்களிலும் சொல்லப் படுவதால் இந்த இரண்டு மதங்களும் இந்தியர்களை வெகுவாக கவரவில்லை என்று ரா கணபதி அவர்கள் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதி இருப்பது நினைவுக்கு வருகின்றது. புறச் சமயவாதிகள் காய நின்றான் என்று பொருள் கொள்ள வேண்டும்.

தேய நின்றான் திரிபுரம் கங்கை சடை மேலே

பாய நின்றான் பலர் புகழ்ந்து ஏத்த உலகெல்லாம்

சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர்

காய நின்றான் காதல் செய் கோயில் கழுக்குன்றே

திருவல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.113.10) திருஞானசம்பந்தர், சமணர் மற்றும் புத்தர்களின் சொற்கள் அறவுரை அல்ல, பொய்யுரைகள் என்று உணர்த்தியவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சமணர்களும் புத்தர்களும் சிவபெருமானை இழித்து பேசுவதில் ஒத்த கருத்து உடையவர்களாக இருந்த போதிலும், தங்களது கொள்கைகளில் மாறுபட்டு இருந்தார்கள் என்று கூறுகின்றார். அன்றிய= மாறுபட்ட;

அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்

குன்றிய அறவுரை கூறா வண்ணம்

வென்றவன் புலன் ஐந்தும் விளங்க எங்கும்

சென்றவன் உறைவிடம் திருவல்லமே

திருக்களர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.51.10) திருஞானசம்பந்தர், சமணர் மற்றும் புத்தர்களின் சொற்களை பொய்யுரைகள் என்று உணர்த்தியவன் பெருமான் என்று கூறுகின்றார்.

பாக்கியம் பல செய்த பத்தர்கள் பாட்டொடும் பல பணிகள் மேவிய

தீக்கியல் குணத்தார் சிறந்தாரும் திருக்களருள்

வாக்கின் நான்மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய்

ஆக்கி நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.70.10) திருஞானசம்பந்தர், சமணர்கள் மற்றும் புத்தர்களின் வியப்பு அழித்த விமலன் என்று கூறுகின்றார். மன்னர்களிடம் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கு காரணமாக அவர்களது பெருமை மற்றவர் வியக்கும் வண்ணம் இருந்ததை வியப்பு என்று குறிப்பிடுகின்றார் போலும். எனவே பெருமை என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. சாயாப் பண்பு=அழியாத நற்குணங்கள்; சீர்காழி தலத்தின் வாழ்ந்து வந்த மனிதர்களின் பண்புகளை இங்கே குறிப்பிடுகின்றார்.

சண்பை பிரமபுரம் தண் புகலி வெங்குரு நற்காழி சாயாப்

பண்பார் சிரபுரமும் கொச்சை வயம் தராய் பார் மேல்

நண்பார் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாணிலாத

வெண் பற் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே

கொச்சைவயம் (சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.83.10) திருஞானசம்பந்தர், சமணர்களும் புத்தர்களும் மெய்யுரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். மெய் என்ற சொல் இங்கே மெய்ப்பொருளாகிய பெருமானை குறிக்கும். அவன் அருள் இருந்தால் மட்டுமே, அவனை நினைக்கவோ, சிந்திக்கவோ, வழிபடவோ முடியும். அவனது அருளினைப் பெறாத சமணர்கள் மற்றும் புத்தர்கள் எவ்வாறு அவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும். அவன் பால் அன்பு செலுத்தி பக்தியுடன் அவனை வழிபடுவோர் மட்டுமே உணரும் வண்ணம் பக்தி வலையில் படுவோன் அல்லவா, சிவபெருமான். அவன் மீது வெறுப்பு கொண்டு, அவனைப் பற்றி வீண் பழிச்சொற்களை அள்ளி வீசும் சமணர்கள் மற்றும் புத்தர்களால் அவனை புரிந்து கொள்ள முடியாது. மெய் உரையாத வண்ணம் என்ற தொடருக்கு, சமணர்கள் மற்றும் புத்தர்கள் சொல்லும் சொற்கள் பொய்ச் சொற்கள் என்று உணர்த்தியவன் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர் இடு சீவரத்தின் உடையார்

மெய் உரையாத வண்ணம் விளையாடவல்ல விகிர்தத்து உருக்கொள் விமலன்

பையுடை நாக வாயில் எயிறார மிக்க குரவம் பயின்று மலரச்

செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து மணநாறு கொச்சைவயமே

கோளறு திருப்பதிகத்தின் பாடலில் (2.85.10) திருஞானசம்பந்தர், புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஒன்பது பாடல்களிலும் உயிர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பல ஆபத்துகளை குறிப்பிட்டு, பெருமானின் அருள் துணையாக இருப்பதால் அனைத்து விதமான ஆபத்துகளும் விலகும் என்று உணர்த்திய திருஞானசம்பந்தர் இந்த பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்களை வாதில் வெல்வதற்கும் பெருமானின் அருள் துணையாக இருக்கும் என்று கூறுகின்றார். விசையன்=அர்ஜுனன்; வேட விகிர்தன்=வேடனாக மாறியவன். பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலுடைய உமையன்னையுடன் வேடுவனாக சென்று, அர்ஜுனன் தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு சென்று, அவனுக்கு தனது போரிடும் தன்மையையும் காட்டி, பின்னர் பாசுபத அத்திரம் கொடுத்து அருள் புரிந்தவன் பெருமான்; இவ்வாறு அருள் புரியும் தன்மை உடையவனாகிய பெருமான், ஊமத்தை மலர்கள் ஒற்றைப் பிறைச் சந்திரன் மற்றும் நாகம் ஆகியவற்றைத் தனது சடைமுடி மேல் அணிந்த வண்ணம் எனது உள்ளத்தில் புகுந்து உறைகின்றார். அதனால், பெருமான் அணிந்துள்ள திருநீறு, புத்தர்களையும் சமணர்களையும் உறுதியாக வாதினில் வென்று அழிக்கும் ஆற்றல் உடையதாக விளங்கி எனக்கு உதவியாக இருக்கும். மேலும் இத்தகைய வாதங்களால் எனக்கு வரும் தீமைகளையும் நீக்கும். இவ்வாறே மற்ற அடியார்களுக்கும் இடரைக் களையும் விதமாக திருநீறு செயல்படும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. தனது அடியானாகிய விஜயனுக்குத் துணையாகச் சென்று, அவனை கொல்ல வந்த பன்றியை கொன்ற பெருமான், தனக்கு பகையாக விளங்கும் புத்தர்கள் மற்றும் சமணர்கள் வீழ்வதற்கும் வழி வகுப்பார் என்று தனது நம்பிக்கையை திருஞான சம்பந்தர் இங்கே தெரிவிக்கின்றார்.

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.86.10) திருஞான சம்பந்தர், சமணர்கள் மற்றும் புத்தர்கள் சொல்லும் பெருமான் குறித்த இழிந்த சொற்கள், அழியும் வண்ணம் அருள் புரிந்தவன் பெருமான் என்று கூறுகின்றார். மிடை=இடையே; உன்னி= தியானம் செய்து; ஒலி பாடி ஆடி=வாய்விட்டு கீதங்களை பாடியவாறு ஆடிய பெருமான்; படை=மழுவாட்படை; உன்னி உணரும் என்ற தொடரினை இரண்டாவது அடியில் உள்ள பெருமை என்ற சொல்லுக்கு பின்னர் வைத்து பொருள் உணர வேண்டும். இந்த பாடலில் திருஞான சம்பந்தர் சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்கள் மாயும் வண்ணம் செய்யும் பெருமான் என்று கூறுகின்றார். அப்பர் பிரான் மற்றும் திருஞான சம்பந்தர் வாழ்ந்த காலத்தில், சமணர்களும் புத்தர்களும் பொருளற்ற பல பழிச்சொற்களை பெருமான் பால் சொல்லி மக்களை மயக்கி வந்தனர். அப்பர் பிரானின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்ச்சிகள் மூலம் பெருமானின் பெருமையை உணர்ந்து கொண்ட பல்லவ மன்னன், சமணர்களின் மொழி பொய் மொழி என்பதை உணர்ந்தான் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்; மேலும் தனது அவதார நோக்கத்தினை உணர்ந்திருந்த சம்பந்தர், பின்னாளில் மதுரையில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகளையும் முன்னமே அறியும் வல்லமை பெற்றிருந்தார் போலும். அப்பர் பிரான் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகிய இருவரும், அனைத்தும் இறைவனின் அருளாலே நிகழ்ந்தன என்ற உணர்வோடும் தங்களது வாழ்க்கையை கழித்தவர்கள். எனவே தான் சமணர்கள் மற்றும் புத்தர்களின் உரைகள் பொய் மொழிகள் என்று அனைவரும் உணரும் வண்ணம் இறைவன் செய்தான் என்று கூறுகின்றனர். உமது வாழ்க்கையின் இடையில் அனுபவிக்கும் துன்பங்கள் இன்பங்களாக மாறவேண்டும் என்றும், உமது உள்ளம் இறைவன் நடமாடும் வெளியாக மாற வேண்டும் என்றும், உலகத்தவரே நீங்கள் விரும்புவீராயின், மழுப்படையினை கையில் ஏந்தியவாறு பலி கொள்ளும் நோக்கத்துடன் உரத்த குரலுடன் கீதங்கள் பாடிய வண்ணம் நடனமாடிக் கொண்டு சென்ற பெருமானின் பெருமைகளை மனதினில் நினைத்து உணர்வீர்களாக. மேலும் உடையினை விட்டொழித்த சமணர்களும் துவராடையினை போர்த்துக் கொள்ளும் புத்தர்களும் பேசும் வீணான பழிச் சொற்கள் கெட்டு அழியும் வண்ணம் திருவிளையாடல் புரிந்து மகிழும் பெருமான் உறையும் செல்வச் செழிப்பு வாய்ந்த திருநாரையூர் தலத்தினை கைகளால் தொழுது வணங்குவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மிடைபடு துன்பம் இன்பம் உளதாக்கும் உள்ளம் வெளியாக்கும் உன்னி உணரும்

படை ஒரு கையில் ஏந்திப் பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை

உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணமழியச்

செடிபட வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழவே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.113.10) திருஞானசம்பந்தர் பெருமானை, சமணர்கள் மற்றும் புத்தர்களின் மொழிகளை ஒழித்து உகந்தவன் என்று குறிப்பிடுகின்றார். நவிலுதல்=பொருத்திக் கொள்ளுதல், உடை உடுக்கும் புத்தர்கள்; உழலுதல்= திரிதல்; இருந்தவத்தார்=கடுமையான தவம் செய்வோர்; சிவபெருமானை வசை பாடும் வண்ணம் சமணர்கள் மற்றும் புத்தர்களின் மொழிகள் அமைந்து இருந்தமையால், முடை நாற்றம் வீசும் மொழிகள் என்று கூறுகின்றார் போலும். மலி தாரா=நிறைந்த;

உடை நவின்று உடை விட்டு உழல்வார் இருந்தவத்தார்

முடை நவின்றம் மொழி ஒழித்து உகந்த முதல்வன் இடம்

மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலி தரக்

கடை நவின்றந் நெடு மாடம் ஓங்கும் கடற் காழியே

மூக்கீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.10) திருஞான சம்பந்தர், பெருமானை, சமணர்கள் மற்றும் புத்தர்களின் மொழியை ஊனமாக்கியவன் என்று கூறுகின்றார். புலால் மார்பு=பருத்த உடலினை உடையவர்கள்; உண்பினாலே=உண்ட பின்னர்; உண்ட பின்னர் உரைப்பார் என்று திருஞானசம்பந்தர் கூறுவது சற்று சிந்திக்கத் தக்கதாக உள்ளது. துறவிகள் என்பதால் பல இல்லங்கள் சென்று அவர்கள் தரும் உணவினை ஏற்றுக்கொண்டு உண்டு, சமணத் துறவிகளும் பௌத்தத் துறவிகளும் வாழ்ந்தனர் என்பதை நாம் அறிவோம். உண்பதற்கு முன்னர், சிவபெருமானை இழித்து தாம் கூறி வந்த சொற்களைச் சொன்னால், ஒரு கால் தமக்கு உணவு கிடைக்காதோ என்ற அச்சத்தினால், தாங்கள் உணவினை ஏற்றுக் கொண்ட பின்னர் சிவபெருமானை இழித்துக் கூறினார்கள் என்பதை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. சமணர் மற்றும் புத்தர்களின் சொற்களை ஊனம் உடைய சொற்களாக மாற்றியவன் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு ஐயப்பாட்டினை எழுப்பலாம். திருஞானசம்பந்தர் சமணர்களை வாதினில் வென்றது பின்னர் நடந்த நிகழ்ச்சி என்பதால், மேற்கண்டவாறு திருஞான சம்பந்தர் குறிப்பிடுவது பொருத்தமா என்ற சந்தேகம் நமக்கு எழலாம். ஆனால் அப்பர் பெருமானின் சரித்திரத்தை நோக்குங்கால், நமக்கு இந்த ஐயப்பாட்டிற்கு விடை கிடைக்கின்றது. அப்பர் பெருமான் தனக்கு வாராத சூலை நோய் வந்ததாக சொல்லி ஏமாற்றினார் என்றும் சமணர்களை தூற்றினார் என்றும் பல பொய்யான மொழிகளைப் பேசி, உண்மையை திரித்து பல்லவ மன்னனிடம் புறம் உரைத்து, வஞ்சகமாக அப்பர் பிரானுக்கு பல தண்டனைகள் அளித்து, சமணர்கள் அவரை கொலை செய்ய முயன்றனர். இறைவனின் அருளால் அந்த வஞ்சகச் சூழ்ச்சிகளிலிருந்து அப்பர் பிரான் தப்பியதைக் கண்ட பல்லவ மன்னன், உண்மையை உணர்கின்றான். அப்பர் பிரான் குறித்து சமணர்கள் உரைத்த சொற்கள் அனைத்தும் ஆதாரமற்ற வீண்பழிச் சொற்கள் என்பதை உணர்ந்த பல்லவ மன்னன், தானும் சைவனாக மாறியதுமன்றி சமணப் பள்ளிகளை இடித்து சிவபெருமானுக்கு கோயிலும் கட்டுகின்றான். இந்த மாற்றம் இறைவனின் திருவருளால் நடந்தது அல்லவா. இது தான் இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஒண்=ஒளி வீசும்; கிள்ளி என்பது சோழ மன்னர்களின் பெயருடன் இணைந்த பட்டம். பச்சை=நிலையான செயல், தீயினில் இடப்பட்ட பின்னரும் எரிந்து அழிந்து போகாமல், நிலையாக நின்ற காரணத்தால், போகமார்த்த பூண் முலையாள் என்று தொடங்கும் திருநள்ளாற்றுப் பதிகம் பச்சைப் பதிகம் என்று அழைக்கப் படுகின்றது அல்லவா. சமணர் மற்றும் புத்தர்களின் மொழிகளை ஊனமாக்கியதன் நோக்கம், அத்தகைய சொற்களால் தனது அடியார்கள் திசை மாறிச் செல்லாமல் இருப்பதற்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருஞானசம்பந்தப் பெருமானின் அவதாரமே வேதநெறி தழைத்து ஓங்கச் செய்யவும், சைவத்துறை விளங்கி நிற்பதற்கும் தானே நிகழ்ந்தது. உண்பு என்ற சொல்லுக்கு தத்தம் சமயக் கொள்கைகள் என்று சிவக்கவிமணியார் பொருள் கூறுகின்றார். பருத்த உடலின் மீது வெண்ணிற ஆடையினைப் போர்த்துக் கொண்டு திரியும் புத்தர்களும், இடுப்பினில் ஆடை ஏதும் இல்லாமல் திரியும் சமணர்களும் தத்தம் மதங்களின் கொள்கையின் வழியே, தாங்கள் உணவு ஏற்றுக் கொண்டதன் பின்னர் கூறும் சொற்களை ஊனமுடைய சொற்களாக மாற்றியவன் சிவபெருமான்; ஒளி வீசுவதும், போரினில் எதிரிகளின் மார்பினைத் துளைப்பதால் தசைத் தொடர்பு உடையதும் ஆகிய வேற்படையை, கையாள்வதில் வல்லமை பெற்றவனும், நீண்ட புகழினை உடையவனும் ஆகிய கோச்செங்கட் சோழன் சென்றடைந்து வணங்கும் மூக்கீச்சரம் தலத்தினில் உறையும் சிவபெருமான் செய்யும் நிலைத்த செயல், சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்களை ஊனம் உடையவையாகச் செய்தல் ஆகும்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

வெண் புலால் மார்பு இடு துகிலினர் வெற்றரை உழல்பவர்

உண்பினாலே உரைப்பார் மொழி ஊனமது ஆக்கினான்

ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர்

பண்பின் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் பச்சையே

மதுரையில் அனல்வாதம் மற்றும் புனல்வாதம் ஆகிய இரண்டிலும் சமணர்களை வென்று, சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டி, சைவ சமயத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட திருஞான சம்பந்தர், சோழ நாடு திரும்பும் வழியில் கொள்ளம்புதூர் தலம் செல்கின்றார். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.6.10) திருஞான சம்பந்தர், பெருமானை தேரமண் செற்ற செல்வன் என்று அழைக்கின்றார். சிவபெருமான் தன்னுள் இருக்கவே தன்னால் சமணர்களையும் புத்தர்களையும் வெற்றி கொள்ள முடிந்தது என்பதால் சிவபெருமான் தான், அவர்களை வென்றவர் என்பதை உணர்த்தும். வகையில், இவ்வாறு கூறுகின்றார்.

நீரகக் கழனிக் கொள்ளம்பூதூர்த்

தேரமண் செற்ற செல்வனை உள்கச்

செல்ல உந்துக சிந்தையார் தொழ

நல்குமாறு அருள் நம்பனே

மதுரையில் சமணர்களை அனல் வாதத்திலும் புனல் வாதத்திலும் முறியடித்த பின்னர், பல பாண்டி நாட்டு தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர், பாண்டி நாட்டைக் கடந்து சோழநாட்டின் பகுதியான திருக்களர் பாதாளீச்சரம் தலங்கள் சென்று இறைவனைப் பணிந்த பின்னர், காவிரி நதியின் கிளைநதி, முள்ளிவாய்க்கரை வந்தடைந்தார். இந்த ஆறு இப்போது ஓடம்போக்கி ஆறு என்று அழைக்கப் படுகின்றது. அடுத்த கரையில் இருந்த திருக்கோயில் செல்வதற்கு திருஞான சம்பந்தர் விரும்பிய போதிலும், ஆற்றின் வெள்ளத்தின் காரணமாக அவரால் நதியைக் கடந்து செல்ல முடியவில்லை. மேலும் சுழன்று அடித்த காற்று மற்றும் அடர்ந்த மழை காரணமாக, ஓடம் செலுத்துவோர் அனைவரும், தங்களது ஓடங்களை, துறைகளில் கட்டிவிட்டு சென்று விட்டனர். பலத்த மழை, சுழன்றுசுழன்று அடித்த காற்று, நதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் ஆகிய எதனையும் பொருட்படுத்தாத திருஞானசம்பந்தர், ஒரு ஓடத்தின் கட்டை அவிழ்த்து விட்டு, தானும் தன்னுடன் வந்த அடியார்களும் அந்த ஓடத்தில் ஏறிக்கொண்ட பின்னர், தனது நாவின் வல்லமையால் எழுந்த பதிகத்தையே, துடுப்பாக கொண்டு, கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகத்தை (3.6) பாடவே, எவரும் துடுப்பு போடாமலே, அனைவரையும் ஓடம் அடுத்த கரைக்கு கொண்டு சேர்த்த அதிசயம் நிகழ்ந்தது. எனது நம்பிக்கைக்கும் விருப்பத்திற்கும் உரிய பெருமானே, கொள்ளம்பூதூர் தலத்தினில் நடனமாடும் பெருமானே, உன்னை தியானிக்கும் அடியார்களாகிய நாங்கள், உனது தோற்றத்தைக் கண்டு களிக்கும் வண்ணம், இந்த ஓடத்தினை செலுத்துவாயாக என்று பாட, ஓடம் தானே நகரத் தொடங்கியது. இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், பெருமானை அடியார்கள் உள்க செல்லவுந்துக சிந்தையார் தொழ நல்குமாறு அருள் நம்பனே என்று குறிப்பிடுகின்றார். பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் படுகின்றது. கொட்டம்=நறுமணம், வாசனை; உள்குதல்=தியானித்தல்; அகத்தில் உன்னை தொழும் அடியார்கள், தங்களது புறக்கண்களால் உன்னைக் கண்டு களிக்க, ஓடத்தை செலுத்துவதன் மூலம், அருள் புரிவாயாக என்று பெருமானிடம் திருஞானசம்பந்தர் வேண்டுகின்றார். இந்த நிகழ்ச்சி, நமது விருப்பத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக உள்ள இறைவன், நம்பன் என்ற பெயருக்கு ஏற்ப, தனது அடியார்களுக்கு அருள் புரிகின்றான் என்பதை உணர்த்துகின்றது.

தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், (3.81.10) திருஞானசம்பந்தர், சமணர்கள் மற்றும் புத்தர்களின் மொழிகளால், இந்து மதம் கேடு அடையாத வண்ணம் பாதுகாத்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வேடநிலை= இடுப்பினில் ஆடையின்றி இருக்கும் தமது வேடநிலை; ஆதர்=அறிவற்றவர்கள்; பெருமானைக் குறித்து பூரண அறிவற்ற மூடர்கள்; கேடு=தீமை விளைவிக்கும் சொற்கள்; சிவநெறியிலிருந்து மக்களை திசை திருப்ப பயன்படுத்தப் படும் வீண் பழிச்சொற்கள் என்பதால் தீங்கு விளைவிக்கும் சொற்கள் என்று கூறினார். அடைவு என்ற சொல்லுக்கு முறை என்றும் சரணம் அடையும் இடம் என்று இரண்டு விதமாக பொருள் கூறலாம். இரண்டும் பொருத்தமாக உள்ளன. பெய்தல்=அணிதல்;உறைவு=உறைவிடம். தங்களது உடலினை மூடி மறைக்கும் துவராடையினை அணிந்த புத்தர்களும், தங்களது இடுப்பினில் எந்த ஆடையுமின்றி காட்சி தரும் வேடத்தினை உடைய சமணர்களும், சிவபெருமானைக் குறித்து தெளிந்த அறிவு இல்லாதவர்களாக, அவரை குறித்து பலவிதமான வீண் பழிச்சொற்களை பயன்படுத்தி மக்களுக்கு தீங்கு இழைக்கின்றனர். ஆனால் பெருமான் அந்த சொற்கள் ஏதும் கேடு விளைவிக்காத வண்ணம், அந்த சொற்களை கெடுக்கின்றார். இவ்வாறு மக்களை நன்னெறியில் செலுத்தும் பெருமானை, காட்டினைத் தமது உறைவிடமாகக் கொண்டு நடனம் ஆடி உமையன்னையுடன் கூடி இருப்பவரும், தோடு குழை ஆகிய இரண்டு வேறுவேறு அணிகளைத் தனது காதினில் அணிந்து மாதொரு பாகனின் கோலத்தை நினைவூட்டும் பெருமான், உறையும் இடம் தோணிபுரம் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மூடு துவர் ஆடையினர் வேடநிலை காட்டும் அமண் ஆதர்

கேடு பல சொல்லிடுவர் அம்மொழி கெடுத்து அடைவினானைக்

காடு பதியாக நடம் ஆடி மடமாதொடு இரு காதில்

தோடு குழை பெய்தவர் தமக்கு உறைவு தோணிபுரமாமே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.95.10) திருஞான சம்பந்தர் பெருமானை, சமணம் மற்றும் புத்த மதங்களை சிதைவு செய்தவர் என்று குறிப்பிடுகின்றார். ஏர்=அழகு; தேரமண்=தேரர்கள் எனப்படும் புத்தர்கள் மற்றும் சமணர்கள்; சிதைவு செய்தல்=தாழ்ந்த நிலை அடையச் செய்தல்; திருஞானசம்பந்தர் அவதரித்த நேரத்தில், சமணர்களும் புத்தர்களும் மிகுந்த செல்வாக்கு உடையவர்களாக விளங்கினர். அப்பர்பிரானை கொல்வதற்கு பல வஞ்சகமான முறைகளை சமணர்கள் கையாண்ட போதிலும், இறைவனின் அருளால் அப்பர் பிரான் தப்பிப் பிழைக்கின்றார். இந்த நிகழ்ச்சிகளால் சமண மதத்தின் பெருமை குன்றியது; சைவ சமயம் புத்துணர்ச்சி பெற்றது. சைவசமயத்தின் வரலாற்றில் இந்த நிகழ்ச்சி ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றால் மிகை ஆகாது. இந்த நிகழ்வுக்கு பின்னரே, திருஞானசம்பந்தர் தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தினை பாடுகின்றார். அப்பர் பிரானின் இந்த வரலாற்றினை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார் போலும். வினைகளால் ஏற்படும் துன்பங்கள் நமது கண்களுக்கு புலப்பட்டால் அதனை ஆர் துயர் என்றும், அவ்வாறு புலனாகாமல் இருந்தால் அருவினை என்றும் குறிப்பிடுவார்கள். அழகு நிறைந்த சோலைகள் அணிகலனாக விளங்கும் இன்னம்பர் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, நீர் சமணம் மற்றும் பௌத்த சமயங்கள் தொய்வு அடையும் வண்ணம், சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டினீர். இவ்வாறு சமணம் மற்றும் பௌத்த சமயங்களை தாழ்வடையச் செய்த உம்மை, பற்றுக்கோடாகக் கொண்டு உம்மைச் சார்ந்து வாழும் அடியார்கள், பெரும் துயரங்கள் அளிக்க வல்ல வினைகளின் தொடர்பு இல்லாதவர்களாக இருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய

தேரமண் சிதைவு செய்தீரே

தேரமண் சிதைவு செய்தீர் உமைச் சேர்பவர்

ஆர் துயர் அருவினை இலரே

நெல்வெணெய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.96.10) திருஞான சம்பந்தர், பெருமானை சாக்கிய சுமண் கெடுத்தவர் என்று குறிப்பிடுகின்றார். நீக்கிய=தனது நீர்வளத்தினால் தலத்து மக்களின் வறுமை மற்றும் பிணிகளை நீக்கிய ஆறு; சாக்கியச் சமண் கெடுத்தீர் என்று புத்தம் மற்றும் சமண சமயங்களின் அழிவுக்கு காரணமாக விளங்கிய பெருமான் என்று கூறுகின்றார். சமணம் மற்றும் புத்த மதங்கள் இந்தியாவில் தோன்றிய போதிலும், பல்வேறு அரசர்களின் ஆதரவு பெற்று விளங்கிய போதிலும், இந்த இரண்டு சமயங்களும் இந்தியத் துணைக் கண்டத்தில் வேரூன்றவில்லை. காலத்தால் அழியாது இன்றும் இந்து மதமே சிறந்து விளங்குகின்றது. இதற்கு காரணம் பெருமானின் அருள் என்றே இங்கே திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பதிகம் அருளிய பல ஆண்டுகள் கழித்தே, மதுரை நகரில் அனல்வாதம் புனல்வாதம் முதலியவை நிகழப் பெற்று சமணர்களின் கொட்டம் அடக்கப் படுகின்றது. இந்தப் பதிகம் அருளியதற்கு முன்னமே, காஞ்சி நகரினில் ஓங்கியிருந்த சமண சமயம் பல்லவ மன்னர்களின் ஆதரவையும் இழந்து மக்களாலும் புறக்கணிக்கப்பட்ட நிலை ஏற்படுகின்றது. அப்பர் பிரானை பல சூழ்ச்சிகள் மூலம் கொல்வதற்கு முயற்சி செய்த போதிலும்,பெருமானின் அருளினால் அந்த சூழ்ச்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு, சைவ மதத்தின் உயர்ந்த நிலை அனைவர்க்கும் உணர்த்தப் பட்டமையே இந்த மாற்றத்திற்கு காரணம் அல்லவா. இந்த தன்மையை குறிப்பிடும் வண்ணம் சமண் சாக்கியம் கெடுத்தமை என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்றே தோன்றுகின்றது. தலத்து மக்களின் வறுமை மற்றும் வறுமையால் வரும் பிணிகள் ஆகியவற்றை நீக்கும் நீர்வளம் உடைய நெல்வெணெய் தலத்தினில் பொருந்தி உறையும் இறைவனே, நீர் சமணம் மற்றும் புத்தம் ஆகிய மதங்களின் தேவையற்ற வளர்ச்சியை கெடுத்தீர். சைவத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக திகழ்ந்த சமணம் மற்றும் புத்த மதங்கள் வளர்வதை தடுத்து, சைவ மதத்தினை ஓங்கச் செய்த இறைவனை பற்றுக்கோடாக சார்வது, முந்திய பிறவிகளில் புண்ணியங்களின் காரணமாக நிகழ்கின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய

சாக்கியச் சமண் கெடுத்தீரே

சாக்கியச் சமண் கெடுத்தீர் உமைச் சார்வது

பாக்கியம் உடையவர் பண்பே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.98.10) திருஞான சம்பந்தர், பெருமானை. புத்தரோடு அமண் அழித்தீர் என்று அழைக்கின்றார். நான்மறைகளைக் கற்று தேர்ந்த மறையவர்கள் வித்தக மறையவர் என்று அழைக்கப் படுகின்றனர். சமணர்களும் புத்தர்களும் அரசின் ஆதரவு பெற்றவர்களாக மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தால், அந்த மதங்களின் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என்று சைவர்கள் பலரும் விருப்பம் கொண்டிருந்தாலும், ஏதும் செய்ய முடியாமல் மனம் புழுங்கி வாழ்ந்த நிலை பெரிய புராணத்தில் திருஞான சம்பந்தர் புராணத்தில் சொல்லப் படுகின்றது. இந்த பின்னணியில், சமணர்கள் மற்றும் புத்தர்களின் வீழ்ச்சியை கண்டு மனம் மகிழ்ந்த மக்கள், அதற்கு காரணமாக இருந்த பெருமானை போற்றிய செய்தி இங்கே குறிப்பிடப் படுகின்றது.

வித்தக மறையவர் மிழலையுளீர் அன்று

புத்தரொடு அமண் அழித்தீரே

புத்தரொடு அமண் அழித்தீர் உமைப் போற்றுவார்

பத்தி செய் மனம் உடையவரே

தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.100.10) சமணர்களும் புத்தர்களும் பேசுகின்ற வார்த்தைகள் மடியும் வண்ணம் அருள் புரிந்தவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கோசரம்=மீன்; மனம் கொள்= விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளும்; வாய்=வாயிலிருந்து வெளிவரும் சொற்கள்; பேசும் சொற்கள்; தொண்டிசை=தொண்டர்கள் பாடும் இன்னிசை;

குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும்

மண்டை கையேந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய

இண்டை புனைந்து எருதேறி வந்தென் எழில் கவர்ந்தார் இடமாம்

தொண்டிசை பாடல் அறாத தொன்மைத் தோணிபுரம் தானே

திருமறைக்காடு தலத்தில் திருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசரும் தங்கி இருந்த போது, பாண்டிய நாட்டிலிருந்து திருஞான சம்பந்தருக்கு அழைப்பு வந்தது. திருஞானசம்பந்தர் பாண்டிய நாடு செல்ல முடிவு செய்த போது, திருநாவுக்கரசுப் பெருமான் தானும் அவருடன் வருவதாக கூறினார். ஆனால் திருஞானசம்பந்தர், அவ்வாறு திருநாவுக்கரசர் பாண்டிய நாடு அவருடன் வருவதைத் தவிர்த்து, அவரை சோழ நாட்டில் இருக்குமாறு வேண்டினார். அதற்கு இணங்கிய நாவுக்கரசர், மறைக்காடு தலத்தை விட்டு நீங்கி, நாகைக் காரோணம் வீழிமிழலை, ஆவடுதுறை தலங்கள் வழியாக பழையாறை வந்து சேர்ந்தார். பழையாறை நகரின் வடக்கு பகுதியில் அமைந்திருந்த கோயில் வடதளி என்றும், மேற்கு பகுதியில் அமைந்திருந்த கோயில் மேற்றளி என்றும் அழைக்கப் படுகின்றது. பழையாறை வடதளி என்ற தலத்திற்கு அப்பர் பிரான் சென்றபோது, அந்த பகுதியில் அமைந்திருந்த சிவபெருமானின் கோயிலை மறைத்து, வஞ்சனையாக தங்களது பள்ளியாக சமணர்கள் மாற்றிக் கொண்டதை அங்கிருந்தோர் சொல்ல அப்பர் பிரான் கேட்டறிந்தார். கண்ணுக்குத் தெரிந்த திருக்கோயில் விமானத்தை, சிவபெருமானாகவே நினைத்து வணங்கிய அப்பர் பிரான், சிவபெருமானின் சன்னதியை நேரில் கண்டு வணங்க முடியாத நிலையினைக் கண்டு மனம் புழுங்கினார். திருக்கோயில் விமானத்தின் அருகே சென்று, அப்பர் பிரான், சிவபெருமானை மனதினில் நினைத்து, சமணர்களின் வஞ்சனையை நீக்கி அனைவருக்கு காட்சி தருமாறும், சமணர்களின் வல்லமையை அழிக்குமாறும் இறைவனிடம் வேண்டினார். மேலும் மறைக்கப்பட்டு இருந்த சிவபெருமானை நேரில் கண்டாலன்றி, அந்த இடத்தை விட்டு அகலமாட்டேன் என்ற முடிவுக்கு வந்த அப்பர் பிரான், தனது எண்ணம் ஈடேறும் வரை உணவு ஏதும் உட்கொள்ளமாட்டேன் என்று உண்ணாவிரத நோன்பினையும் கடைப்பிடித்தார். தனது நோக்கம் நிறைவேறுவதற்காக உண்ணாவிரதம் கடைப்பிடித்த மகானாக அப்பர் பிரான் திகழ்ந்ததை நாம் உணரலாம், அன்றிரவில் சிவபெருமான் பல்லவ மன்னனின் கனவில் தோன்றி, சமணர்கள் தனது சன்னதியை மறைத்த நிலையினையும், தனது சன்னதியை நேரில் காண்பதற்காக அப்பர் பிரான் உண்ணாவிரதம் மேற்கொண்ட செய்தியையும், தெரிவித்தார். மேலும் கோயில் இருந்த இடத்தினை அடையாளமும் காட்டி, சமணர்களை அங்கிருந்து அகலுமாறு செய்ய வேண்டும் என்றும் மன்னனைப் பணித்தார். காலையில் எழுந்த மன்னன், தான் கண்ட கனவினை நினைத்து மிகவும் வியப்புற்று, தனது அமைச்சர்களுக்குச் சொல்லி, அவர்களுடன் சிவபெருமான் உரைத்த அடையாளங்களைக் கொண்டு பழையாறை வடதளி கோயிலை அடைந்தான். அங்கிருந்த நாவுக்கரசர் பெருமானை வணங்கிய மன்னன், அங்கிருந்த சமணர்களை அழித்தான் என்று பெரியபுராணச் செய்திகள் கூறுகின்றன. தூரறுத்தல் என்றால் வேரோடு அழித்தல் என்று பொருள்.

இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.58.2) அப்பர் பிரான், சமணர்களை அழித்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மூக்கினால் முரன்று ஓதிய=மூக்கின் வழியாக சொல்லப்படும் சொற்கள் போல், சமணர்களின் மந்திரங்கள், மெல்லெழுத்துக்கள் அதிகமாக கொண்டுள்ளதால் மூக்கினால் சொல்லப் படும் சொற்கள் போல் தோன்றும். அணி=அழகிய; தூர் அறுத்தே=வேருடன் களைந்தே; மூக்கினால் ஒலிப்பது போன்ற தங்களது மந்திரங்களைச் சொல்பவர்களும், எங்கும் குண்டிகை தூக்கிச் செல்லும் வழக்கம் உடையவர்களாகிய சமணர்களின் கூட்டத்தை வேரோடு அறுத்து, அவர்கள் வஞ்சமாகக் கொண்டிருந்த பழையாறை வடதளி என்னும் கோயிலைத் தனது கோயிலாக மாற்றிக் கொண்ட சிவபெருமானை தரிசித்து வணங்கும் அடியார்களுக்கு, கடுமையான நோய்களும் துன்பங்களும் வாரா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பதிகத்தின் ஆறாவது பாடலில் சமணர்களை கெடுத்த சங்கரன் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், ஆயிரம் சமணும் பெருமான் அழிவாக்கினான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

மூக்கினால் முரன்று ஓதிய குண்டிகை

தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு

ஆக்கினான் அணி ஆறை வடதளி

நோக்கினார்க்கு இல்லையாம் அரு நோய்களே

மதுரை நகரம் வந்த திருஞானசம்பந்தருக்கு அச்சம் ஊட்டி, அவரை விரட்டி விடலாம் என்ற நோக்கத்துடன், வஞ்சனையாக திருஞான சம்பந்தரும் மற்ற அடியார்களும் தங்கி இருந்த மடத்திற்கு சமணர்கள் தீ வைத்தனர். நள்ளிரவில் மடத்தின் பரவிய தீயினைக் கண்டு அடியார்கள் முதலில் அச்சம் கொண்ட போதிலும், பின்னர் மடத்தினில் பரவிய தீயினை அணைத்து விடுகின்றனர். நடந்ததை அறிந்து கொண்ட திருஞானசம்பந்தர், சமணர்கள் செய்த இந்த தீய செயல் நடைபெற அனுமதி அளித்த மன்னவன் பால் இந்த தீ சென்று பரவட்டும் என்ற கருத்தினை உள்ளடக்கி, பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே என்ற தொடரினை உள்ளடக்கி, அவர் செய்யனே என்று தொடங்கும் பதிகத்தினை (3.51) பாடுகின்றார். திருஞான சம்பந்தரின் கோரிக்கையை எப்போதும் நிறைவேற்றும் பெருமான், வெப்பு நோயாக பாண்டிய மன்னனை, அந்த தீ பற்றச் செய்கின்றார். தங்களுக்கு தெரிந்த மந்திரம் மற்றும் தந்திரங்களை சமணர்கள் பயன்படுத்தியும் வெப்பு நோய் தீராத நிலையில், அரசியார், திருஞானசம்பந்தர் வந்தால் அரசனின் வெப்பு நோய் தீரலாம் என்று ஆலோசனை சொல்ல, அதனை அரசனும் ஏற்கின்றார். அரசியாரும் மந்திரியாரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் திருஞானசம்பந்தரை அழைத்து வரச் செல்கின்றனர். அவர்களது அழைப்பினை ஏற்ற திருஞான சம்பந்தர், அரண்மனை செல்லும் வழியில், திருவாலவாய் திருக்கோயில் சென்று இறைவனைப் பணிந்து வணங்கி, காட்டுமாவது என்று தொடங்கும் பதிகமும் (3.47), வேத வேள்வியை என்று தொடங்கும் பதிகமும் (3.108) பாடுகின்றார். இந்த இரண்டு பதிகங்களிலும் திருஞானசம்பந்தர் சமணர்களுடன் தான் வாதம் புரிவதற்கு எண்ணுவதை பெருமானுக்கு தெரிவித்து, பெருமானின் திருவுள்ளக் கருத்தினை அறிய முற்படுகின்றார். பெருமான் தனக்குத் துணையாக இருப்பார் என்பதை புரிந்து கொள்ளும் திருஞானசம்பந்தர், அதன் பின்னரே மன்னனைக் காணச் செல்கின்றார். ஆங்கே மந்திரமாவது என்று தொடங்கும் பதிகத்தை பாட மன்னனின் வெப்பு நோய் மறைகின்றது; மேலும் அனல்வாதம் மற்றும் புனல்வாதம் ஆகிய இரண்டிலும் திருஞானசம்பந்தர் வெற்றி அடைய, சைவ மறுமலர்ச்சி ஏற்படுகின்றது. இவை அனைத்தும் சிவபெருமானின் அருளால் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். இவ்வாறு சமண சமயத்தினரை ஒடுக்குவதற்கு பெருமான் அருள் புரிந்தமையை நாம் புரிந்து கொள்கின்றோம்.

மதுரையில் அனல் வாதம் மற்றும் புனல் வாதங்களில் சமணரை வென்று சைவ சமயத்தின் புகழினை நிலை நாட்டிய திருஞானசம்பந்தர் சோழ நாடு திரும்பும் போது தெளிச்சேரி என்ற தலம் வந்தடைந்து இறைவனைப் புகழ்ந்து பதிகம் பாடுகின்றார். இந்த தலத்து இறைவனை வணங்கி திரும்பி செல்லும் வழியில் போதிமங்கை எனும் இடத்தினை கடந்து திருஞானசம்பந்தரும் அவரது தொண்டர்களும் சென்று கொண்டு இருந்தனர். தொண்டர்கள் பலவகையான வாத்தியங்கள் முழங்கியும், பரசமய கோளரி (திருஞானசம்பந்தரின் பல பெயர்களில் ஒன்று) வந்தான் என்று முழங்கிக் கொண்டும் சென்ற நிலை அங்கு இருந்த புத்த குருமார்களுக்கு எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தியது. அவர்கள் தங்களது தலைவன் புத்த நந்தி என்பவரிடம் சொல்ல அவர் திருஞான சம்பந்தரின் தொண்டர்களை அணுகி புத்தர்கள் வாதினில் வெல்லாமல் ஆரவாரம் செய்ய வேண்டாம் என்று கூறி திருஞான சம்பந்தரின் தொண்டர்கள் எடுத்துச் சென்ற சின்னங்கள் ஊதுவதை தவிர்க்க முயன்றான். இதனை தொண்டர்கள் திருஞானசம்பந்தருக்கு அறிவிக்க அவர் புத்தநந்தியின் கொள்கையின் உண்மையான கோலத்தை நாம் காட்டுவோம் என்று கூறினார். இதனிடையில் திருஞான சம்பந்தரின் அருகில் இருந்துகொண்டு அவர் அருளும் பதிகங்களை எழுதும் சம்பந்த சரணாலயர் என்ற தொண்டர், திருஞானசம்பந்தர் ஏற்கனவே அருளிய பதிகம் ஒன்றினை பாட முடிவு செய்தார். கயிறு சாத்துதல் முறையில் ஒரு பதிகம் தேர்ந்தெடுத்த போது, இறைவன் திருவருளால், துஞ்சலும் என்று தொடங்கும் பதிகத்தின் பத்தாவது பாடல் வந்தது என்று கூறுவார்கள். புத்த நந்தி எதிர்த்துப் பேசிய போது சம்பந்த சரணாலயர் பாடிய பாடல், எந்தப் பாடல் என்பது குறித்து ஏதும் குறிப்புகள் பெரிய புராணத்தில் குறிப்பிடப் படவில்லை. ஆனால் செவிவழிச் செய்திகள், மேற்கண்ட பாடலைப் பாடியதாக குறிக்கின்றன. பொறுக்க மாட்டாத சொற்களைப் பேசிய புத்த நந்தி தலையின் மீது இடி விழக்கடவது என்று சம்பந்த சரணாலயர் கூறியதாக பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. சிவ அபராதம் செய்த தக்கனின் வேள்வியில் பங்கேற்றவர்கள் தண்டனை அடைந்ததும் அல்லாமல், தக்கனும் தனது தலை இழந்தான். அதைப் போல் சைவ மதத்தை இழிவாக பேசிய புத்தர்களின் தலைவன் தலையில், அவனை அழிக்கும் அத்திரமாக இடி விழுந்தது. திருநீறு அணிபவர்களுக்குத் தனித் திறமையை தரக் கூடிய மந்திரம் பஞ்சாக்கர மந்திரம் என்று திருஞான சம்பந்தர் கூறியது உண்மையாக மாறியதை நாம் உணரலாம். இந்த நிகழ்ச்சியும் பெருமானின் திருவருளால் நிகழ்ந்த நிகழ்ச்சி தானே.

பொழிப்புரை:

தங்களது வலிமை கொண்டு, அரசனிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கினை தவறாக பயன்படுத்திக் கொண்டு, மாற்று மதத்தவர்க்கு துன்பம் இழைக்கும் சமணர்களும், கரிய சாக்கியப் பேய்களும், தங்களது தவறான விளக்கங்களால் உலகத்தவரின் சிந்தனையை கெடுப்பதை தடுத்தி நிறுத்தி, உலகினை நல்வழியில் செலுத்தும் வண்ணம் தனக்கு ஞானம் வழங்கி ஆட்கொண்ட எமது தலைவனாகிய பெருமான் வாழும் தலம் மழபாடி ஆகும். பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் தங்களது மலங்களை சமர்ப்பித்து வாழ்வினில் உய்வினை அடையும் நிலையில் இருந்த பக்குவப்பட்ட அடியார்கள் மலிந்து வாழ்ந்து வந்த மழபாடி நகரினில், பண்ணுடன் பொருந்திய பாடல்கள் இசைப்பதும், அந்த பாடல்களுக்கு ஏற்ப முழவம் முதலான பல கருவிகள் இயக்குவதும் தொடர்ந்து நடைபெறுவதால் ஆரவாரம் மிகுந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மழபாடி தலத்தினை வாழ்த்தி வணங்குவோமாக.

பாடல் 11:

களையும் வல்வினை (2.009) பாடல் 10 தொடர்ச்சி மற்றும் பாடல் 11 (திதே 0727)

மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்

கலிசெய் மாமதில் சூழ் கடற்காழிக் கவுணியன்

—– (பாடலின் எஞ்சிய பகுதி சிதைந்தது)

விளக்கம்:

கலிசெய்=கலித்தல், சந்தித்தல், சேர்த்தல்;

பொழிப்புரை:

மாளிகைகள் பலவும் மலிந்து விளங்கும் மழபாடி நகரினில் உறையும் வள்ளலை, வலிமையான மதில்களால் சூழப்பட்டதும் கடற்கரையை அடுத்து உள்ளதும் ஆகிய சீர்காழி நகரத்தினைச் சார்ந்தவனும், கவுணிய கோத்திரத்தைச் சார்ந்தவனும்

முடிவுரை:

பெருமானை கருதாதவர்கள் எத்தனை வலிமை உடையவர்களாக விளங்கினாலும், அவர்கள் ஒரு நாள் அழிவார்கள் என்பதும் பெருமானை மகிழ்ந்து வழிபடும் அடியார்கள் இன்பம் பெறுவார்கள் என்பதும் பதிகத்தின் முதல் பாடல் மூலம் விளக்கப் படுகின்றது. முதல் பாடலில் தான் கூறிய அறிவுரையை, பெருமானைப் புகழ்ந்து வணங்க வேண்டும் என்ற அறிவுரையை பின்பற்றாமல், வீணான பேச்சுகளில் காலம் கழிப்போரை சாடும் திருஞானசம்பந்தர், அத்தகைய பேச்சுகளால் எந்த நற்பயனும் விளையாது என்று கூறுகின்றார். மூன்றாவது பாடலில், தவறு செய்தவர்களுக்கு தண்டனை அளித்தும் தனது அடியார்களுக்கு வரங்கள் அளித்தும், நெறியுடன் வாழ்க்கை நடத்துவதற்கு வழி காட்டுபவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். வாரிக் கொடுக்கும் வள்ளலாகிய, மழபாடி மருந்தினை வணங்கி வினைகளை தீர்த்துக் கொள்ளுமாறு நான்காவது பாடலில் அறிவுரை கூறுகின்றார். ஐந்தாவது பாடலில், மழபாடி மன்னன் பால் அன்பு வைத்துத் நாள்தோறும் தொழும் அடியார்களுக்கு பெருமானின் திருவடிப் பேறு கைகூடும் என்று கூறுகின்றார். ஆறாவது பாடலில், வலிமை வாய்ந்த முப்புரங்களை ஒரு நொடியில் மிகவும் எளிதாக அழித்த பெருமானின் தன்மையை புரிந்துகொண்டு அவரைத் தொழுது வணங்கும் அடியார்களின் மூன்று விதமான வினைகளும் அவர்களை விட்டு விலகிவிடும் என்று கூறுகின்றார். ஏழாவது பாடலில், தினமும் காலையில் எழும்போதே மழபாடி மருந்தினை சிந்திக்கும் அடியார்களின் வினைகள் தேய்ந்து அழிந்துவிடும் என்று கூறுகின்றார். பாகுபாடு இன்றி அனைவர்க்கும் வேண்டும் வரத்தினை அருளும் வரதனாக பெருமான் விளங்கும் நிலை எட்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமானின் வல்லமையை புரிந்து கொண்ட திருமாலும் பிரமனும் மழபாடி மைந்தனை வணங்குகின்றனர் என்று ஒன்பதாவது பாடலில் கூறுகின்றார். அடியார்களின் பாடல்களும் திருவிழா ஆரவாரங்களும் என்றும் ஓயாது ஒலிக்கும் மழபாடி தலம் என்று தலத்தின் சிறப்பினை உணர்த்திய திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் கடைப்பாடல் சிதைந்து விட்டது. இந்த பதிகத்தின் மூலம், மருத்துவனாக செயல்பட்டு, நமது உடற்பிணியையும் பிறவிப் பிணியையும் தீர்க்கும் பெருமானை வழிபட்டு, இம்மையிலும் மறுமையிலும் இன்பமுடன் வாழ்வோமாக.



Share



Was this helpful?