இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கள்ளார்ந்த பூங்கொன்றை

கள்ளார்ந்த பூங்கொன்றை

பதிக எண்: - 2.43 திரு புள்ளிருக்குவேளூர் - சீகாமரம்

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் முதல் தலமாக கண்ணார்கோயில் சென்று வழிபட்ட திருஞானசம்பந்தர், அந்த தலத்திலிருந்து புறப்பட்டு, காவிரி நதியின் வடகரை ஓரமாக மேற்கு திசை நோக்கிச் சென்று புள்ளிருக்குவேளூர் சென்றடைந்தார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். பெருமான் பால் தான் வைத்திருந்த அன்பு மேலும்மேலும் பெருகும் வண்ணம், அழகான பதிகம் பாடினார் என்று சேக்கிழார் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். இந்த பதிகத்தினை பாடி சொல்மாலையாக இறைவனுக்கு திருஞான சம்பந்தர் அணிவித்தார் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் திருஞான சம்பந்தர் சடாயுவினை குறிப்பிட்டு சடாயு செய்த வழிபாட்டினை குறிப்பிடுகின்றார். முதல் பாடலில் சடாயு மற்றும் சம்பாதி ஆகிய இருவரும் இறைவனை வழிபட்ட தன்மை குறிப்பிடப் படுவதால், சடாயு என்ற சொல் சம்பாதியையும் குறிப்பதாக பொருள் கொண்டு, பறவைகள் இருவரும் இறைவனை போற்றி வழிபட்டமையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று சேக்கிழார் (இருவர் ஆற்றிய பூசனை) கூறுவதை நாம் உணரலாம். திருஞான சம்பந்தர் இந்த தலத்தின் மீது அருளிய பதிகம் ஒன்றும், அப்பர் பிரான் அருளிய இரண்டு பதிகங்களும் (குறுந்தொகைப் பதிகம் ஒன்று, திருத்தாண்டகப் பதிகம் ஒன்று) நமக்கு கிடைத்துள்ளன.

போற்றிய காதல் பெருகப் புள்ளிருக்கும் திருவேளூர்

நாற்றடம் தோளுடை மூன்று நயனப்பிரான் கோயில்

ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி

ஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொல் பதிகம் அணிந்தார்

பொதுவாக இறைவனை எண்தோள் ஈசன் என்றே திருமுறை பாடல்கள் பலவும் குறிப்பிடுகின்றன. தோள் என்ற சொல் இணையான இரண்டு தோள்களையும் குறிப்பதாக கையாண்டு, சேக்கிழார் நாற்றடம் தோள் என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். புள் (பறவை), இருக்கு (இருக்கு முதலான நான்கு வேதங்கள்), வேள் (முருகப் பெருமான்), ஊர் (சூரியன்) ஆகியோர் வழிபட்டதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். இறைவனின் பெயர்=வைத்தியநாதர்; இறைவியின் பெயர்=தைல நாயகி, தைலாம்பாள், தைல நாயகி என்ற பெயர் நாளடைவில் தையல் நாயகி என்றும் தைலாம்பாள் என்றும் மருவி விட்டது. ஜடாயு வழிபட்டதால் ஜடாயுபுரி என்றும், வேதங்கள் வழிபட்டதால் வேதபுரி என்றும், கந்தன் பூஜை செய்து வழிபட்டதால் கந்தபுரி என்றும் சூரியன் வழிபட்டதால் பரிதிபுரி என்றும், அங்காரகன் வழிபட்டதால் அங்காரகபுரம் என்றும் அழைக்கப் படுகின்ற இந்த தலம், வினைதீர்த்தான் தலம் என்றும் அழைக்கப் படுகின்றது. மருந்தும் ஆகி மந்திரமும் ஆகி இறைவன் எழுந்தருளி, உயிர்களுடன் பிணைந்துள்ள வினையை தீர்ப்பதால், இறைவன் வினை தீர்த்தான் என்று அழைக்கப் படுகின்றார். அம்பிகை இறைவனை வழிபட்டதால் அம்பிகாபுரம் என்ற பெயரும் இந்த தலத்திற்கு உள்ளது. முருகப் பெருமானின் சன்னதியும் பிரசித்தி பெற்றது.

தாரகாசுரனுடன் நடைபெற்ற போரினில் காயம் அடைந்த தனது படைவீரர்களுக்கு மருத்துவ உதவி அளிக்குமாறு முருகப் பெருமான் இறைவனிடம் வேண்ட இறைவன் வைத்தியராக இந்த தலத்தில் ஒரு வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து வைத்தியம் பார்த்ததால் வைத்தியநாதர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். இறைவனுடன் இறைவியும், தனது கையில் ஒரு எண்ணெய் கிண்ணம் ஏந்தியவாறு உதவி செய்ததால் தைல நாயகி என்று அழைக்கப் பட்டதாகவும், நாளடைவில் அந்த பெயர் தையல் நாயகி என்று மாறியது என்றும் கூறுவார்கள். திருக்கோயிலில், கிழக்கு உள்வாயிலில் இடதுபுறம் உள்ள தலமரமாகிய வேப்பமரத்தின் அடியில் உள்ள பெருமானின் சன்னதி ஆதி வைத்தியநாதர் சன்னதி என்று அழைக்கப் படுகின்றது. இந்த சன்னதியை வேம்படிமால் என்று அழைக்கின்றனர். வாயிலின் இரு புறமும் வீரபத்திரரரும் ஆதி விநாயகரும் காணப் படுகின்றனர். தையல் என்ற சொல் பல திருமுறைப் பாடல்களில் அம்பிகையை குறிக்க பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே தையல் நாயகி என்ற பெயரும் பொருத்தமாக காணப் படுகின்றது.

சீர்காழிக்கும் மயிலாடுதுறைக்கும் இடையே உள்ள திருக்கோயில். சிதம்பரத்திலிருந்து 25 கி.மீ. தெற்கே உள்ள தலம். முத்துக்குமரன் சன்னதி மிகவும் பிரசித்தம். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கோயில்களில், அங்காரகனுடன் (செவ்வாய்) கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ள திருக்கோயில். பொன் தகடு மற்றும் வெள்ளித் தகடு வேயப்பட்ட இரண்டு கொடிமரங்கள் உள்ளன. அங்காரகன் தெற்கு நோக்கிய சன்னதி. தேவியை விட்டு பிரிந்திருந்த நேரத்தில் தவம் செய்து கொண்டிருந்த சிவபெருமானின் நெற்றியிலிருந்து கீழே விழுந்த ஒரு வியர்வைத்துளி குழந்தையாக மாற, அந்த குழந்தையை பூமிதேவி எடுத்து வளர்த்ததாகவும் அந்த குழந்தை வளர்ந்த பின்னர் இறைவனை நோக்கி தவம் செய்து கோள் என்று அழைக்கப்படும் நிலைக்கு உயர்ந்ததாகவும் கூறுவார்கள். உக்கிரம் தணிந்த வீரபத்திரர் செவ்வாய் கிரகமாக மாறினார் என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், ஆட்டுக்கடா வாகனத்தில் அமர்ந்த வண்ணம் செவ்வாய் கோயிலின் உள்ளே வலம் வருகின்றார். நான்கு கரங்களுடன் கதை, சக்தி, சூலம், ஆயுதங்களுடன் அபயகரம் காட்டி காட்சி அளிக்கின்றார். செவ்வாய் கிரகம் தொழுநோயால் பீடிக்கப்பட்டு வருந்திய போது, பெருமானை வழிபட்டு பலன் பெற்றார் என்றும் சொல்லப் படுகின்றது. சிவபெருமானே, வைத்தியராக வந்து செவ்வாய் கோளுக்கு வைத்தியம் செய்தார் என்று தலபுராணம் கூறுகின்றது. முருகப் பெருமானை செல்வ முத்துக்குமரன் என்றும் முத்தையா என்றும் அழைக்கின்றனர். முருகர் வழிபட்ட மரகத லிங்கம் முத்து லிங்கம் என்று அழைக்கப் படுகின்றது. முத்து லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற பின்னரே, முத்துக்குமரனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

உள்பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் செல்வ மகாலட்சுமி சன்னதி உள்ளது. வடக்குச் சுற்றில் திருமுறைப் பேழை, நடராஜ சபை, அறுபத்து மூவர் சன்னதி, பஞ்ச லிங்கங்கள், சகஸ்ர லிங்கம், கிழக்குச் சுற்றில் பைரவர் சன்னதி உள்ளன. இராம பிரான், இலக்குவன், சப்த ரிஷிகள், முருகப்பெருமான்,சூரியன், வேதங்கள், ஜடாயு, சூரியன், அங்காரகன், ஆகியோர் வழிபட்ட இலிங்கங்கள் பைரவர் சன்னதியை அடுத்து உள்ளன. மற்றும் திருமால், பிரமன், அம்பிகை, வேதங்கள், சம்பாதி பறவை, தன்வந்தரி, இந்திரன் ஆகியோர் இறைவனை வழிபட்டு பயனடைந்த தலம். வைத்தியநாத சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் தன்வந்தரி சன்னதி உள்ளது. அமுத கலசத்துடன் பாற்கடலில் தோன்றிய தன்வந்தரி, இங்கே கமண்டலமும் கதையும் ஏந்தியவராக காட்சி தருகின்றார். நடராஜ சபையில், சிவகாமி அன்னை, மாணிக்கவாசகர் மற்றும் காரைக்கால் அம்மையார் ஆகியோரையும் காணலாம். தெற்கு சுற்றில் சாம்பல் நிரம்பிய குண்டத்தை ஜடாயுகுண்டம் என்று கூறுகின்றனர். இங்கே ஜடாயுக்கு இராம பிரானால் ஈமக் கிரியைகள் செய்யப் பட்டதாக கருதப் படுகின்றது. மண்டபத்தின் மேல் பகுதியில் இராமர், இலக்குவன், விஸ்வாமித்திரர் மற்றும் வசிட்ட முனிவர் ஆகியோரின் உருவச் சிலைகள் உள்ளன. காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள திருப்புட்குழி தலமும் (நூற்றெட்டு வைணவத் தலங்களில் ஒன்று) திருநெல்வேலிக்கு அருகில் உள்ள அருக்கன்குளம் தலமும், ஜடாயுவின் ஈமக் கிரியைகள் நடந்த இடமாக கருதப் படுகின்றன.

சிவகாமி அம்மை, நடராஜர், சிங்கார வேலர், கங்கா விசர்ஜனர், பிக்ஷாடனர், கங்காளர், திரௌபதி, ஐயனார், பிரதோஷ நாயகர், துர்க்கை, ஜடாயு, செவ்வாய், சுப்பிரமணியர் உற்சவச் சிலைகள் மிகவும் அழகானவை. மூலவர் சன்னதி மேற்கு நோக்கிய சன்னதி. சுயம்பு மூர்த்தம். சிறிய இலிங்கத் திருமேனி. புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் 19, 20, மற்றும் 21 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மாலையில் பெருமானின் திருமேனி மேல் படர்கின்றன. பெரிய துவாரபாலகர்கள். அருகே ஜடாயு உருவம் உள்ளது. மூலவரின் வலது புறத்தில் தையல்நாயகி சன்னதி. தெற்கு பார்த்த சன்னதியில் அம்பிகை தனது கையில் தைலக் கிண்ணத்தை ஏந்திய வண்ணம் காட்சி கொடுக்கின்றாள், இந்த நிலை பிராட்டியின் திருநாமம், தைல நாயகி என்பதை உறுதி செய்கின்றது. முறையே மேற்கு மற்றும் தெற்கு திசையை பார்த்து அருள் பாலிக்கும் பெருமான் மற்றும் பிராட்டி ஆகிய இருவருக்கும் இடையே சோமாஸ்கந்த ரூபத்தில் முருகர் சன்னதி அமைந்துள்ளது. அர்த்தசாமத்தில் முத்துக் குமாரனுக்கு பூஜை நடந்த பின்னரே மூலவருக்கு பூஜை செய்யப் படுகின்றது. இந்த வழிபாட்டு முறையினை புழுக்காப்பு தரிசனம் என்று அழைக்கின்றனர். மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது. பச்சை கற்பூரம் கலந்த சந்தனம் பிடித்து வைத்து அதனுடன் எலுமிச்சை மற்றும் திருநீறு ஆகியவற்றை முருகரின் பாதங்களில் வைத்து வழிபடுகின்றனர். அப்போது முருகருக்கு தாலாட்டு பாடப்படும். தனிச் சன்னதி கொண்டுள்ள சூரியன் மற்றும் அங்காரகன் தவிர்த்த மற்ற கோள்கள் ஒரே வரிசையில் ஒரே திசையை பார்த்த வண்ணம் உள்ளன. இவை பெருமானின் சன்னதிக்கு முன்னர், மற்ற கோயில்களில் உள்ளது போன்று இல்லாமல், மூலவர் சன்னதிக்கு பின்னர் உள்ளன. கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விஸ்வநாதர் சன்னதிகளும் உள்ளன. மூலவர் சன்னதியை வலம் வரும்போது, சாளரத்தின் வழியே சட்டநாதரை காணலாம். தன்வந்தரி சித்தர் முக்தி அடைந்த இடம். அவருக்கு தனியாக சன்னதி உள்ளது. சம்பாதி முக்தி அடைந்த தலம் என்றும் கூறுகின்றனர். குமரகுருபரர் முருகரை வழிபட்டு முத்துக் குமாரன் பிள்ளைத் தமிழ் என்ற நூலை இயற்றியுள்ளார். இராமலிங்க வள்ளலார், அருணகிரிநாதர், படிக்காசு தம்பிரான், காளமேகப் புலவர் ஆகியோரின் பாடல்கள் பெற்ற தலம். இங்கே வழங்கப் படும் சாந்துருண்டை மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகின்றது. நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேச்வர், விஸ்வநாதர் பெயரில் அமைந்துள்ள இலிங்கங்களை பிராகாரத்தில் காணலாம், திருக்கோயிலின் வடகிழக்கு திசையில் உள்ள தீர்த்தம் வைத்தியநாதரின் சூலத்தால் உருவாக்கப்பட்ட தீர்த்தம். இது அங்க சந்தான தீர்த்தம் என்று அழைக்கப் படுகின்றது. தாருகனுடன் நடந்த போரினில் காயம் அடைந்து கீழே விழுந்த தேவர்களின் உடலில் இருந்த காயங்களை, இந்த தீர்த்தம் கொண்டு கழுவி பெருமான் சிகிச்சை செய்ததாக நம்பப் படுகின்றது. தன்வந்தரி சித்தர் முக்தி அடைந்த தலம். அவருக்கு தனியாக சன்னதி உள்ளது. கிருத யுகத்தில் கதம்ப வனம் என்ற பெயர் கொண்ட வனத்தினில் பிரமன் தவம் செய்ய, பெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். திரேதா யுகத்தில் வில்வ மரம் திகழ்ந்த இந்த இடத்தில், ஜடாயு மற்றும் சம்பாதி ஆகியோர் வழிபட்டு இறைவனின் அருள் பெற்றனர். துவாபர யுகத்தில் மகிழ மரத்தின் அடியில் இருந்த இறைவனை வழிபட்டு, திருமால் பயன் அடைந்தார். இந்த மரமே இப்போது கலியுகத்தில் வேம்பாக காட்சி அளிக்கின்றது என்று கூறுவார்கள். குமரகுருபரர், முத்துக்குமாரன் பிள்ளைத் தமிழ் நூலினைப் பாடும் வண்ணம், முருகப் பெருமான் பொன் பூத்த குடுமி என்று அடியெடுத்துக் கொடுத்தார் என்று கூறுவார்கள். தை மாதத்தில் முத்துக் குமார சுவாமிக்கு நடைபெறுகின்ற திருவிழா மிகவும் சிறப்பானது. தருமபுர ஆதீனத்தின் மேற்பார்வையில் கோயிலின் அன்றாட பணிகள் நடைபெற்று வருகின்றன. பிற்காலச் சோழ மன்னர்கள் கோயில் நிர்வாகத்திற்காக ஏற்பாடு செய்த நிபந்தங்களின் விவரங்கள், இந்த கோயிலில் உள்ள பல கல்வெட்டுகள் மூலம் அறியப் படுகின்றன. மேலும் நாயக்க மன்னர்கள் மற்றும் மராட்டிய மன்னர்களின் காலத்தைய கல்வெட்டுகளும் காணப் படுகின்றன. ஔஷனாம்பதி என்று ஶ்ரீருத்ரத்தில் குறிப்பிடப்படும் தலங்களில் இந்த தலமும் ஒன்று என்று தமிழ் தாத்தா உ.வே.சா அவர்கள் கூறுகின்றார்.

பாடல் 1:


கள்ளார்ந்த பூங்கொன்றை மத மத்தம் கதிர் மதியம்

உள்ளார்ந்த சடைமுடி எம் பெருமானார் உறையும் இடம்

தள்ளாய சம்பாதி சடாய் என்பார் தாம் இருவர்

புள்ளானார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

கள்=தேன்; அரையன்=அரசன்; அரையன் என்ற சொல்லே நாளடைவில் அரசன் என்று மருவியதாக சிவக்கவிமணியார் பெரியபுராணம் விளக்கம் புத்தகத்தில் கூறுகின்றார். புள்= பறவை; இங்கே கழுகுப் பறவைகள், சடாயு மற்றும் சம்பாதி ஆகிய இருவரையும் குறிக்கும். தள்ளாய=வலிமை மிகுந்த என்ற பொருளும் கூறப்படுகின்றது.; கதிர்=ஒளிக் கதிர்கள்; ஆர்ந்த=நிறைந்த; மதமத்தம் என்று ஊமத்தை மலர் இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஊமத்தை காயினை உட்கொண்டால் சிந்தனை மயக்குற்று பைத்தியம் பிடிக்கும் என்று நம்பப் படுகின்றது. அனைவரும் வெறுக்கும்/தவிர்க்கும் பொருட்கள் பெருமானால் மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. ஊமத்தை மலர் மற்றும் கொன்றை மலர்களை எவரும் சூடிக் கொள்வதில்லை. யானையின் தோலை, கேடு விளைவிக்கும் என்பதால் எவரும் தமது உடல் மீது போர்த்துக் கொள்வதில்லை. சுடுகாட்டு சாம்பலை உடலில் எவரும் பூசிக் கொள்வதில்லை; மண்டையோட்டினை எவரும் உண்கலனாக வைத்திருப்பதில்லை. பாம்பினை எவரும் ஆபரணமாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் பெருமானோ இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தான் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவன் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.

தள்ளாய=தள்ளத் தகாத; பொதுவாக கழுகுகள் என்றால் சுடுகாட்டினில் உலவும் பறவைகள் என்று தாழ்மையாக கருதுவோம். ஆனால், சடாயு மற்றும் சம்பாதி ஆகிய இரு பறவைகளும் கழகுகளாக இருந்த போதிலும் தொடர்ந்து பெருமானை வழிபட்டு வந்தன. இராம காவியத்தில் இந்த இரண்டு பறவைகளும் இடம் பெறுகின்றன. இராவணனுடன் போரிட்டு, அவன் சீதையை கடத்திச் செல்வதை தடுக்க முயன்ற சடாயு, தனது சிறகுகள் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கீழே விழுந்து இருந்த நிலையிலும். இராமாராமா என்று இராம பிரானின் திருநாமத்தை முனகியவாறு இருந்த பறவையை, இராமனும் இலக்குவனும் சீதையை தேடிக் கொண்டு அலைந்த போது கண்டனர். அவர்கள் இருவரையும் கண்ட ஜடாயு பறவை, சீதை அரக்கன் இராவணனால் கவர்ந்து செல்லப் பட்டதை அவர்களுக்கு உரைத்தது. சீதையைத் தேடிக் கொண்டு, தென் திசையில் சென்ற வானர வீரர்கள், தங்களது நம்பிக்கையை இழந்து பாரத நாட்டின் தென்கோடி கடற்கரையில் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள நினைத்த போது, தங்களது நிலையினைச் சொல்லியவாறு புலம்பிக் கொண்டு இருந்தன. அப்போது அவர்கள், அரக்கன் இராவணனை எதிர்த்து போரிட்டு உயிர் நீத்த ஜடாயு பற்றி சொல்லக் கேட்ட, ஆங்கே இருந்த சம்பாதி, சீதை அசோகவனத்தில் சிறைப்பட்டு இருப்பதை உணர்த்தி இராமனுக்கு சேவை செய்தது. இவ்வாறு இரண்டு பறவைகளும் இராமனுக்கு சேவை செய்து உதவியதாலும், பெருமானை தொடர்ந்து வழிபட்டமையாலும், அந்த பறவைகளின் உயர்வு கருதி, கழுகுகள் என்று தாழ்வாக நினைக்கலாகாது என்ற கருத்து இங்கே உணர்த்தப் படுகின்றது. ஐந்து அறிவுகள் கொண்ட கழுகுகள் பெருமானை வணங்கி உய்வடைந்த நிலையினை பாடல் தோறும் குறிப்பிட்டு மனிதர்களாகிய நாமும் இறைவனை வழிபட்டு உய்வினை அடையவேண்டும் என்ற கருத்து இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

தேன் நிறைந்த கொன்றை மலர்களையும் சிந்தனையை மயக்கும் ஊமத்தை மலர்களையும், ஒளிவீசும் பிறைச் சந்திரனையும், நிறைவாகத் தனது சடையினில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் உறையும் இடமாவது, இழிந்த பிறவி என்று கருதாமல் உயர்ந்தவை என்று மதிக்கப்பட வேண்டிய சடாயு மற்றும் சம்பாதி கழுகு இனத்தினைச் சார்ந்த பறவைகள் தங்களது அரசனாகக் கருதி இறைவனைத் தொழுது வணங்கும் தலம் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப் படும் தலமாகும்.

பாடல் 2:


தையலாள் ஒரு பாகம் சடை மேலாள் அவளோடும்

ஐயம் தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையும் இடம்

மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்துப்

பொய் சொல்லாது உயிர் போனான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

தேர்ந்து=தேர்ந்தெடுத்து; தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாதர். அந்த பெயரினுக்கு ஏற்ப உயிருடன் பிணைந்துள்ள மலமாகிய நோயினைத் தீர்த்து இன்பம் அளிப்பவன் பெருமான். இந்த தன்மையை கருத்தினில் கொண்டு ஐயம் தேர்ந்தெடுத்து என்ற தொடரின் பொருளினை நாம் உணரவேண்டும். பெருமான் பிச்சை ஏற்பதன் நோக்கமே, தங்களது மலத்தினைக் கழித்துக் கொள்ள விரும்பும் உயிர்கள் தங்களது மலத்தினை பெருமானின் பிச்சை பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்பதாகும். அந்தணர்=அம்+தணர்; குளிர்ந்த நெஞ்சம் உடையவர்; உயிர்களின் பால் எல்லையற்ற கருணையும் அன்பினையும் வைத்துள்ள பெருமானின் நெஞ்சம் அவனது கருணை இரக்கம் அன்பு காரணமாக ஈரமாக உள்ளது என்பதை குறிப்பிடும் வண்ணம் பெருமானை அந்தணர் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

ஈடு=பெருமை; தங்களது உயிர்நிலை இருக்கும் இடத்தினை எதிரிக்கு அறிவித்து விட்டு சண்டை செய்வதை அந்நாளில் வீரர்கள் பெருமையாக கருதினர் போலும். வால்மீகி இராமாயணமும் கம்ப இராமாயணமும் ஜடாயு மற்றும் இராவணனின் இடையே நடைபெற்ற சண்டையை மிகவும் விவரமாக கூறுகின்றன. இராவணன் கூரிய அம்புகளைக் கொண்டு ஜடாயுவை வருத்திய போதும், ஜடாயு அந்த தாக்குதலை முறியடித்து தனது மூக்கினால் இராவணன் வைத்திருந்த இரண்டு விற்களை உடைத்து, வாளினைத் தவிர்த்து வேறு ஆயுதங்கள் இல்லாத வகையில் இராவணனை நிலை குலையச் செய்தது என்று வால்மீகி முனிவர் கூறுகின்றார். சீதா தேவியைத் தனது இடது கரங்களால், இறுகப் பிடித்த வண்ணம் இராவணன் ஜடாயு தன்னைத் தாக்குவதை தடுக்க முயல, ஜடாயுவோ, இராவணனின் பத்து இடது கைகளையும் தனது மூக்கினால் குத்திக் கிழித்தது. ஆனால் இராவணன் பெற்றிருந்த வரத்தின் காரணமாக அவனது வெட்டப்பட்ட இடது கைகள் பத்தும் மீண்டும் முளைத்தன. தான் வைத்திருந்த சூலத்தினை ஜடாயு மீது இராவணன் வேகமாக எறிய, அந்த சூலமும் பயனற்று விடுகின்றது. அப்போது இராவணன் தனது பிடியிலிருந்து சீதா தேவியை விடுவித்து தேவியைத் தேரினில் அமர்த்திய வண்ணம் போரினைத் தொடர்ந்தான். பின்னர், ஜடாயுவை வெல்லும் மார்க்கம் ஏதும் அறியாதவனாக, இராவணன் தன்னிடம் இருந்த வாளினைக் கையில் ஏந்திய வண்ணம் ஜடாயுவின் சிறகுகளை அறுத்து எறிந்தான் என்று வால்மீகி முனிவர் கூறுகின்றனர். ஜடாயுவோ மீண்டும்மீண்டும் இராவணின் தலைகளை குறி வைத்து தாக்கியதாகவும், அரக்கனது கிரீடங்களை உடைத்து கீழே தள்ளியதாகவும், சடாயுவால் கிள்ளப்பட்ட தலைகள் மீண்டும் வளர்ந்ததாகவும், கம்பர் கூறுகின்றார். வால்மீகி முனிவரும், அந்த வழியே வந்த இராமபிரானும் இலக்குவனும், தேரின் உடைந்த பாகங்கள், உடைந்த விற்கள், அம்பறாத் தூணியிலிருந்து சிதறிய அம்புகள், நசுங்கிய கிரீடங்கள், ஆகியவை நான்கு புறங்களிலும் சிதறிக் கிடப்பதை கண்டனர் என்று வால்மீகி முனிவர் கூறுகின்றார். எனவே தனது உயிர்நிலை சிறகுகளில் உள்ளது என்ற உண்மையை உணர்த்தி ஜடாயு போரிட்டதாகவும், அரக்கன் இராவணனோ தனது உயிர்நிலை தனது தலைகளில் உள்ளது என்று பொய் சொன்னதாகவும் திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார் போலும். இந்த செய்தி இராமயணத்தில் கூறப்படவில்லை எனினும் தனது ஞானத்தால் திருஞானசம்பந்தர் இதனை அறிந்தார் போலும். நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களிலும் நாம், பாகவதம் மற்றும் இராமாயணம் புராணங்களில் இல்லாத பல சுவையான செய்திகளை விவரங்களுடன் காணலாம்.

தேர்ப்பாகனை கொன்ற பின்னர் தேர்க் குதிரைகளையும் ஜடாயு அழித்தான் என்று கம்பர் கூறுகின்றார். இதனால் வெகுண்ட, அரக்கன் இராவணன் தண்டாயுதத்தை ஜடாயு மேல் வீச, அந்த ஆயுதத்தைத் தவிர்த்த ஜடாயு, அரக்கன் இராவணனின் தோளில் தொங்கிய அம்பறாத் தூணியை அறுத்தது மட்டுமன்றி, அரக்கனின் மார்பிலும் தோளிலும் தனது அலகால் குத்தி, அரக்கனை, சிறிது நேரம் மயக்கம் அடையச் செய்தான். மேலும் அரக்கனின் தேர் மீது பறந்து கொண்டிருந்த வீணைக் கொடியும் பிடுங்கி எறியப்பட்டது. இராவணன் அணிந்திருந்த குண்டலங்களை அறுத்தெரிந்த ஜடாயு, இராவணனின் கவசத்தையும் பிளந்தது என்று கம்பர் குறிப்பிடுகின்றார். இந்த சூழ்நிலையில் தான், இராவணன் சிவபெருமான் தனக்கு அளித்த சந்திரகாசம் என்ற வாள் கொண்டு, ஜடாயுவின் சிறகுகளை வெட்ட, ஜடாயு, தனது வலிமை இழந்து மண்ணில் சாய்கின்றது என்று குறிப்பிடும் கம்பர், ஜடாயுவை வென்றது இராவணன் அல்ல, சந்திரகாசம் வாள் தான் என்று கூறுகின்றார். ஜடாயுவின் சிறகுகள் வெட்டப்பட்டதை குறிப்பிடும் கம்பர், தெய்வத்தன்மை பொருந்திய வாளினால் சிறகுகள் வெட்டப்பட்டு ஜடாயு கீழே விழுந்தது என்று கூறுகின்றார். எனவே சிவபெருமான் அருளிய சந்திரகாசம் என்ற வாளினை அரக்கன் பயன்படுத்தினான் என்பது தெளிவாகின்றது. இராமயணத்தில் வேறு எங்கும் சிவபெருமான் அருளிய இந்த வாளினை இராவணன் கையாண்டதாக குறிப்பு காணப்படவில்லை. தன்னால் ஏதும் செய்யமுடியாத நிலையில் ஜடாயுவுடன் நடைபெற்ற சண்டையில் உடைவாளை வீசிய இராவணன் ஏன் இராமபிரானுடன் நடைபெற்ற யுத்தத்தில் அந்த உடைவாளினை பயன்படுத்தவில்லை என்பதற்கு ஒரேவொரு விளக்கமே இருக்க முடியும். ஒரேவொரு முறையே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் இந்த தெய்வீக ஆயுதம் இருந்தது போலும். மகாபாரதத்தில் கர்ணனுக்கு இந்திரன் வழங்கிய சக்தி ஆயுதத்தின் தன்மை நினைவுக்கு வருகின்றது. ஒரேவொரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்ட இந்த சக்தி ஆயுதத்தை அர்ஜுனனுடன் நடைபெறும் சண்டையில் கையாள வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன் கர்ணன் செயல்பட்டு வந்த போதிலும், அவனது விருப்பத்திற்கு மாறாக கர்ணன் இந்த ஆயுதத்தினை கடோத்கஜன் மீது ஏவ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றான். பதினான்காம் நாள் யுத்தத்தில் துரோணர் இறந்த பின்னரும் இரவிலும் சண்டை தொடர்ந்து நடைபெற்ற போது, இரவு நேரத்தில் அரக்கன் கடோத்கஜனின் ஆற்றல் பல மடங்கு பெருகியதால், கௌரவர் படையில் எவராலும் கடோத்கஜனை எதிர்கொள்ள முடியாத நிலையில் துரியோதனன் கர்ணனை சக்தி ஆயுதத்தினை கடோத்கஜன் மீது வீசுமாறு வற்புறுத்துகின்றான். கடோத்கஜனை கொன்ற பின்னர் அந்த சக்தி ஆயுதம் இந்திரனின் கைகளுக்கு திரும்பி விடுகின்றது என்று வியாசபாரதம் கூறுகின்றது. சில நாட்களுக்கு முன்னர், யூடியூப் காணொலி ஒன்றினில், தனது கையில் ஆயுதம் ஏதுமின்றி போரிட்ட ஜடாயுவின் மீது அரக்கன் இராவணன், இந்த வாளினை பயன்படுத்தியமையால், இந்த வாளினை சிவபெருமான் பறித்துக் கொண்டார் என்ற விளக்கம் அளிக்கப் பட்டதும் அடியேனின் நினைவுக்கு வருகின்றது. இந்த பாடலில் ஜடாயுவின் பண்பு, உண்மை பேசுவதை தனது உயிரினும் மேலாக ஜடாயு கருதியமை உணர்த்தப் படுகின்றது..

பொய் சொல்லாது என்ற தொடருக்கு நடந்த உண்மைகளை இராமனுக்கு எடுத்துரைத்த ஜடாயு என்றும் விளக்கம் கூறுகின்றனர். சீதையைத் தேடிக் கொண்டு இராமனும் இலக்குவனும் வந்த போது, தேரின் உடைந்த பாகங்கள், முறிக்கப்பட்ட வில், அம்புகள் ஆகியவற்றை முதலில் கண்டனர். சீதையின் காரணமாக ஏதோ இருவரின் இடையே சண்டை நடைபெற்றது என்று புரிந்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து ஈனக்குரல் ஒன்று கேட்கவே, அந்த குரல் வந்த திசை நோக்கி சென்று ஆங்கே ஜடாயு உயிர் பிரியும் நிலையில் இருப்பதைக் கண்டனர். அப்போது ஜடாயு நடந்த விவரங்கள் அனைத்தையும் கூறியதாக இராமாயணம் கூறுகின்றது. ஆனால் மெய் சொல்லா இராவணன் என்ற குறிப்பின் பின்னணியில் பார்க்கும் போது, ஜடாயு உண்மை பேசியதாக இங்கே குறிப்பிடப் படும் நிகழ்ச்சி இராவணனுடன் போரிட்ட போது நடந்தது என்று கொள்வதே மிகவும் பொருத்தமாக உள்ளது.

இந்த பாடலில் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான், கங்கை நதியையும் தனது சடையில் மறைத்து வைத்துள்ளார் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பார்வதி தேவி மற்றும் கங்கை மங்கை ஆகிய இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடும் திருமுறைப் பதிகங்கள் சற்று அரிதானவை. அத்தகைய பாடல்களை நாம் இங்கே காண்போம். திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.10.5) திருஞானசம்பந்தர், உமை அம்மை மற்றும் கங்கை நதி ஆகிய இருவரையும் குறிப்பிடுகின்றார். மரவம்=வெண் கடம்ப மரம்; சிலை=ஒரு வகை மரம் என்றும் சிறு கற்கள் என்று இரண்டு வேறுவேறு விதமாக பொருள் கொள்ளலாம். உந்து=அடித்துக் கொண்டு வரும்; அரவம்=ஆரவாரமான ஓசை; முரவம்=பறை; உரவம்=உரகம் என்பதன் திரிபு, பாம்பு என்று பொருள். ஏர்=அழகு; ஏரார்=அழகு பொருந்திய; புல்குதல்=தழுவுதல்; ஓராமல்=ஆராயாமல்; பெருமான் சற்று ஆராய்ந்திருந்தால் அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்திருக்கும் தன்மையைக் கருத்தில் கொண்டு, தனது சடையில் பாம்பினையும் கங்கை நதியினையும் ஏற்றுக் கொள்வதை தவிர்த்திருப்பார் என்று நகைச்சுவை ததும்ப குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அவ்வாறு செய்யாமல் இருந்த தன்மை நன்றோ என்ற கேள்வியை எழுப்புகின்றார். கணவன் மனைவியர் ஒருவருக்கொருவர் தழுவிக் கொள்வது தனிமையில் இருக்கும் போது நடப்பது தான் உலக வழக்கு. ஆனால் பெருமானோ, பார்வதி தேவியை, கங்கை நதி தனது தலையில் இருக்க, பல பாம்புகள் உடலில் இருக்க பிராட்டியைத் தழுவிக் கொள்ளலாமா என்று கேட்பதாகவும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. பெருமான் உலகியல் மாந்தர்களைப் போன்று காமத்தால் உந்தப்பட்டு தனது மனைவியைத் தழுவிக் கொள்ளவில்லை. அவர் காமம் குரோதம் ஆகிய குணங்களை வென்றவர். எனினும், உலகத்து உயிர்கள் போகத்தில் ஈடுபடுவதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் பொருட்டு, அவர் அன்னையைத் தழுவிக் கொள்வது போல் நடிக்கின்றார் என்பதே இந்த பாடலில் சொல்லப்படும் செய்தி. பாம்பு உலாவும் சடையினை உடைய பெருமானே, நீர் உமது உடலின் ஒரு பாகத்தில் அன்னை பார்வதி தேவியை, வைத்துக் கொண்டிருப்பது முறையா, நல்ல குணமாகுமா என்று கேள்வி கேட்பது போல் இந்த பாடல் அமைந்துள்ளது.

மரவம் சிலை தரளம் மிகு மணி உந்து வெள்ளருவி

அரவம் செய முரவம் படும் அண்ணாமலை அண்ணல்

உரவம் சடை உலவும் புனல் உடனாவதும் ஓரார்

குரவம் கமழ் நறுமென் குழல் உமை புல்குதல் குணமே

பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்துள்ள இறைவன், கங்கை நதியைத் தனது சடையில் மறைத்து வைத்துள்ள காரணம் கருதி கள்வன் என்று திருஞானசம்பந்தர் பெருமானை அழைக்கும் பாடல் பல்லவனீச்சரம் தலத்துப் பாடலாகும் (1.65.3). வாள் நிலவு=ஒளி பொருந்திய பிறைச் சந்திரன்; வார் சடை=நீண்ட சடை; இந்த பாடலில் திருஞான சம்பந்தர் இறைவனை கள்வன் என்று கூறுகின்றார். தான் திருடிய பொருளினை மற்றவர் அறியாத வண்ணம் ஒளித்து வைப்பது கள்வனின் செயல் என்பதை நாம் தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தின் விளக்கத்தில் கண்டோம். அந்த பாடலில் தனது உள்ளத்தை கொள்ளை கொண்டதால் கள்வன் என்று கூறிய திருஞானசம்பந்தர், கங்கை நதியினை தனது சடையினில் மறைத்து தேக்கி வைத்ததால் இறைவனை கள்வன் என்று நயமாக கூறுகின்றார். ஒரு பொருளை ஒளித்து வைப்பது கள்வனின் செயல் தானே. அயம்=பள்ளம்; புணரி=கடல்; பங்கயம்=தாமரை மலர்கள்; உயர் பொய்கை= கடலில் நீர் மிகுந்து காணப்படுவதால் நீர்நிலைகளிலும் தண்ணீர் மேல் உயர்ந்து காணப் படுகின்றது என்று கூறுகின்றார். கங்கையை வாழவைத்த கள்வன் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். கங்கை நதியினை பெருமான், அன்று, தனது சடையில் தாங்கியிராவிடில், கங்கை நதி மிகவும் வேகமாக பாதாளத்தில் சென்று சேர்ந்திருக்கும். கங்கை நதி பூமிக்கு வந்த சுவடு கூட இருந்திராது. ஆனால் இன்றளவும், புனித நதி என்று கங்கை போற்றப் படுவதற்கு பெருமான், அந்த நதியினைத் தனது சடையில் தாங்கி, மெதுவாக விடுவித்ததே காரணம் என்பதால், கங்கையை வாழ வைத்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

மங்கை அங்கோர் பாகமாக வாள் நிலவு வார் சடை மேல்

கங்கை அங்கே வாழ வைத்த கள்வன் இருந்த இடம்

பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்

பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே

திருக்கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.73.1) திருஞானசம்பந்தர், மலைமகள் கண்டு மகிழும் வண்ணம் நடனம் ஆடும் பெருமான், கங்கை நதி ஒற்றைப் பிறைச் சந்திரன் மற்றும் தேன் நிறைந்த கொன்றை மலர்கள் வன்னி இலைகள் ஆகியவற்றைத் தனது சடையினில் சூடிக் கொண்டுள்ளார் என்று கூறுகின்றார். வானார்= வானில் பொருந்திய; மன்னு=நிலையாக பொருந்திய; போது=மலர்; புனம்=காடு; மாலை ஆடுவார் என்று மாலை நேரத்தில் பெருமான் நடனம் ஆடியதை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினை உண்டு தங்கள் அனைவரையும் காப்பாற்றிய பெருமானுக்கு நன்றி சொல்வதற்கு ஒரு நாள் மாலை நேரத்தில் தேவர்களும் அனைவரும் சென்று அவரை வணங்கினார்கள். அதனால் மகிழ்ச்சி அடைந்த பெருமான், நந்தி தேவரின் இரு கொம்புகளின் இடையே நின்ற வண்ணம் நடனம் ஆடினார். உமையன்னை முதலாக அனைவரும் இந்த நடனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். தேவியின் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருந்தது; ஆலகால விடம் உட்கொண்ட பின்னரும் பெருமானின் உடலுக்கு எந்த விதமான கேடும் நேராமல் இருந்தது மற்றும் மிகவும் அழகான நடனத்தினை தான் காணும் வாய்ப்பினை பெற்றது. ஆகிய இரண்டுமே தேவியின் உவப்பிற்கு காரணங்கள். தினமும் மாலை வேளை பிரதோஷ காலமாக கருதப்பட்டு திருவாரூரில் சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. இந்த நடனமே இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. வானில் உலவும் சூரியன் சந்திரன் போன்று நிலையான ஒளி வீசும் சென்னியில் வன்னி, காடுகளில் வளர்வதும் தேன் நிறைந்ததுமான கொன்றை மலர்கள், தானே வந்து விழுந்த கங்கை நதி, ஒற்றைப் பிறைச் சந்திரன் ஆகியவற்றை தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ள இறைவன், மான் போன்று மருண்ட பார்வை கொண்ட பார்வதி தேவி கண்டு உவக்கும் வண்ணம் மாலை நேரத்தில் நடனம் ஆடுகின்றார். இத்தகைய பண்புகள் கொண்ட பெருமான், தனது நெற்றியில் கண் உடையவரும், முக்திச் செல்வத்தை உடையவரும், எருதினைத் தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களிலும் திரிபவரும் ஆகிய பெருமான் கானூர் தலத்தினில் பொருந்தி உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரையாகும்.

வானார் சோதி மன்னு சென்னி வன்னி புனங் கொன்றை

தேனார் போது தானார் கங்கை திங்களொடு சூடி

மானேர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார்

கானூர் மேய கண்ணார் நெற்றி ஆனூர் செல்வரே

உமையன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்துள்ள பெருமான், கங்கை நதியைத் தனது சடையில் மறைத்த காரணம் தான் யாது என்று திருமறைக்காடு தலத்து பதிகத்தின் பாடலில் (2.37.2) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வங்கம்=கப்பல்; கப்பல்கள் உலவுவதால், வங்காளப் பெருங்கடல் என்ற பெயர் வந்ததோ என்று தோன்றுகின்றது. எற்றும்=எறியும். சங்குகளையும் முத்துக்களையும், தனது அலைக் கரங்கள் கொண்டு கரையில் வீசி எறிகின்ற கடல் என்று குறிப்பிடுகின்றார்.

சங்கத் தரளம் அவை தான் கரைக்கெற்றும்

வங்கக் கடல் சூழ் மறைக்காட்டுறை மைந்தா

மங்கை உமை பாகமுமாக இதுவென்கொல்

கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.50.7) திருஞானசம்பந்தர், கங்கை நங்கை மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரையும் பெருமான் ஏற்றுக் கொண்ட தன்மையை குறிப்பிடுகின்றார். கங்கை நங்கையைத் தனது சடையினில் வைத்துக் கொண்டு பெருமான் தேக்கியது, கங்கை நங்கையின் மீது பெருமான் விருப்பம் கொண்டதால் அல்ல என்பதை நாம் அறிவோம். பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி பெருமான் தனது சடையினில் கங்கையை ஏற்றதை உமையம்மையும் அறிவாள். எனினும் புலவர்களுக்கு உரிய சுதந்தரத்தை பயன்படுத்திக் கொண்டு, திருஞானசம்பந்தர், பெருமானுக்கு பிராட்டிக்கும் இடையில் ஊடல் நிகழ்ந்ததாகவும், அந்த ஊடலுக்கு காரணம், பெருமான் கங்கையைத் தனது சடையில் அடக்கி மறைத்த செய்கை என்று கற்பனை செய்கின்றார், இந்த பாடலில், தனது நறுமணம் கமழும் சடையில் பெருமான் கங்கை நதியை மறைத்து வைத்ததாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த பாடலில் பிராட்டியை, மங்கை வாள் நுதல் மான் என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். வாள் நுதல் மான்=ஒளி வீசும் நெற்றியையும் மான் போன்று அழகினையும் உடைய பார்வதி தேவி;

மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடியூட மணம் கமழ் சடைக்

கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை கொலாம்

பங்கயம் மது உண்டு வண்டு இசை பாட மாமயில் ஆட விண் முழவு

அங்கையில் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே

புறவார் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.52.3) திருஞான சம்பந்தர், பார்வதி தேவி மற்றும் கங்கை ஆகிய இருவரையும் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அடியார்களுக்கு அருளவேண்டும் என்று பெருமானிடம் திருஞான சம்பந்தர் வேண்டுகின்றார். அடியார்களுக்கு பெருமான் அருளும் திறத்தினுக்கு இரண்டு உதாரணங்களை குறிப்பிட்டு, நாமும் பெருமானைப் பணிந்து அவ்வாறு வேண்ட வேண்டும் என்று ஊக்குவிக்கும் முகமாக உணர்த்தும் நேர்த்தியை நாம் காணலாம். தனது கலைகள் முற்றிலும் அழிந்து தேயும் நிலையில் தன்னை வந்து சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு அவன் அழியாத வண்ணம் காத்தது, தனது அடியான் பகீரதனின் வேண்டுகோளை ஏற்று, வேகமாக கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் தேக்கி வைத்தது ஆகிய இரண்டும் மற்றவர்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செய்கைகள் எனினும், தனது அடியார்களின் நலன் கருதி, பெருமான் மிகவும் எளிமையாக செய்த செயல்கள். கேண்மை=அருகில் இருக்கும் தன்மை; பெருமானின் உடலில் பொருந்தி எப்போதும் பெருமானுக்கு அருகில் இருக்கும் அன்னையை, மிகவும் பொருத்தமாக, கேண்மையாள் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் நறுமணம் கமழும் சடையினை உடையவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

செங்கயல்லொடு சேல் செருச் செய சீறி யாழ் முரல் தேன் இனத்தொடு

பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்

கங்கையும் மதியும் கமழ்சடைக் கேண்மையாளொடும் கூடி மான்மறி

அங்கை ஆடலனே அடியார்க்கு அருளாயே

வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.6) திருஞானசம்பந்தர், பெருமானை, இரண்டு மாதர்களை ஆதரிக்கும் ஈசன் என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் பேரில் காதல் கொண்ட ஒரு பெண்மணியின் கூற்றாக அமைந்த இந்த பாடலில் முடை நாற்றம் வீசும் கபாலத்தினை, அருவருப்பு ஏதும் இன்றி கையில் ஏந்திக் கொண்டு இல்லம் தோறும் திரியும் சிவபெருமான் என்று குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடல் அகத்துறை கூற்றாக அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், தன்னை பெருமான் பால் காதல் கொண்டுள்ள தலைவியாக உருவகித்து, தனது கவனத்தை ஈர்த்து தன்பால் காதல் கொள்ளச் செய்த பெருமான், தனது வளையையும் கவர்ந்த கள்வராகத் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். பெருமான் பால் தீராத காதல் கொண்டுள்ள தலைவி, பெருமானுடன் தான் சேர முடியாத ஏக்கத்தினால் மனம் வருந்தி, தனது கை வளையல்கள் கழன்று விழும் வண்ணம் உடல் இளைத்து இருப்பதாக கூறுகின்றாள். இவ்வாறு தான் உடல் மெலிந்ததற்கு காரணம் பெருமான் பால் தான் கொண்டுள்ள காதல் நிறைவேறாத ஏக்கம் என்று உணர்த்தும் தலைவி, தனது வளையல்கள் கழலும் வண்ணம் செய்த பெருமானை கள்வர் என்று குற்றம் சாட்டுகின்றாள். இறைவனின் திருமேனிக்கு ஒப்பாக கூறுவதற்கு எந்த உயிரும் எந்த பொருளும் இல்லை என்பதால், எவராலும் ஒப்பிட முடியாத திருமேனியை உடையவர் சிவபெருமான். இளமையும் அழகும் சேர்ந்த மாதர்கள் இருவரை, கங்கை நங்கையையும் உமை அன்னையையும், முறையே தனது சடையிலும் உடலிலும் வைத்து ஆதரிப்பவர் சிவபெருமான்; பல பூதங்களும் பேய்களும் எப்போதும் அவரைச் சூழ்ந்து கொண்டு தாமே அவரது அடையாளம் என்பது போன்று அவரை விட்டு என்றும் பிரியாமல் இருக்கின்றனர். விருப்பு வெறுப்பு ஆகிய குணங்களைக் கடந்த பெருமான் அருவருப்பு ஏதும் இன்றி, உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பல இல்லங்களுக்கும் சென்று பலியேற்கும் பெருமான் திருவலஞ்சுழி தலத்தினில் உறைகின்றார். அவரே, என்னை தீராத காதலில் ஆழ்த்தி, பிரிவாற்றாமையால் நான் உடல் மெலிந்து வருந்தும் வண்ணம் செய்து, எனது கைவளையல்கள் நழுவும் வண்ணம் உடல் மெலிய, எனது வளையல்களை கவர்ந்த கள்வர் ஆவார் என்று சம்பந்த நாயகி குறிப்பிடுவதாக அமைந்த பாடல்.

ஒருவராலும் உவமிப்பதை அரியதோர் மேனியர் மடமாதர்

இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம்

அருவராததோர் வெண்தலை கைப்பிடித்து அகம் தொறும் பலிக்கென்று

வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரிவளை கவர்ந்தாரே

மூக்கீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.2) திருஞானசம்பந்தர், உமை அன்னையையும் கங்கையையும் பெருமான் ஏற்றுக் கொண்ட தன்மையை குறிப்பிடுகின்றார். கன்மம்=செயல்; கொண்டல்=மேகம்; பெருமான் தனது தலையினில் தாங்கியது வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி என்பதால், மழை நீரால் நிறைந்த கங்கை நதியை பெருமான் தாங்கினார் என்று சொல்வது பொருத்தமன்று. எனினும் நதிகளின் பொதுத் தன்மையை கருத்தில் கொண்டு, மழை நீரால் நிறைந்த கங்கை நதி என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. இந்த காரணம் கருதியே, கொண்டல் என்ற சொல்லுக்கு மேகம் என்றும் மழைநீர் என்றும் பொருள் கொள்ளலாகாது என்றும் கொள்ளுதல் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று தருமையாதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. விரிசடையைத் தனது இருப்பிடமாகக் கொண்ட கங்கை நதி என்ற விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளது. கூட்டமா=கூடி இருப்பதும்; விண்ட=உடைந்த; சிவநெறியிலிருந்து பிரிந்து சென்ற திரிபுரத்து அரக்கர்கள்; வேனில் வேள்=வசந்த காலத்தின் தலைவனாக விளங்கும் மன்மதன்; தேர்ந்து=தேடிக் கொண்டு; வசந்த காலத்தின் மன்மதனில் ஆற்றல் வலுப்பெறுகின்றது என்று கருதும் இலக்கிய மரபினைப் பின்பற்றி, வேனில் வேள் என்று இங்கே குறிப்பிடுகின்றார். பிரமனின் உடலிலிருந்து பிரிக்கப் பட்டதால் உலர்ந்த கபாலத்தைத் தான் உணவு உட்கொள்ளும் கலனாக ஏற்றுக்கொண்டு ஊரூராக பிச்சை இடுவோரைத் தேடிக் கொண்டு செல்வதும், மழை நீரால் நிறைந்தது போன்று மிகுந்த நீர்ப்பெருக்குடன் வந்த கங்கை நதியினைத் தனது சடையினில் சேர்த்துக் கொண்டதும், உமை அன்னையுடன் கூடி இருந்ததும், சிவநெறியிலிருந்து பிரிந்து சென்று உலகத்தவர்களுக்கு பல தீங்குகளை இழைத்து பகைவர்களாகிய மாறிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை அழித்ததும், வசந்த காலத்தின் அரசனாக கருதப்பட்டு உயிர்களின் இடையே காம இச்சையைத் தூண்டி விடும் மன்மதன் வெந்து அழியும் வண்ணம் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்துப் பார்த்ததும் எமது தலைவராகிய சிவபெருமான் செய்த செயல்கள். இத்தகைய ஆற்றல் மிகுந்த செயல்களைச் செய்த பெருமான், மூக்கீச்சரம் என்று அழைக்கப்படும் உறையூர் தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெண்டலை ஓர் கலனாப் பலி தேர்ந்து விரிசடைக்

கொண்டல் ஆரும் புனல் சேர்த்து உமையாளொடும் கூட்டமா

விண்டவர் தம் மதில் எய்த பின் வேனில் வேள் வெந்தெழக்

கண்டவர் மூக்கீச்சரத்து எம் அடிகள் செய் கன்மமே

இதே பதிகத்தின் (2.120.1) முதல் பாடலிலும், திருஞான சம்பந்தர், கங்கை வெள்ளத்தைத் தனது சடையில் வைத்துள்ள பெருமான், காந்தள் மலர் போன்று மெல்லிய விரல்களைக் கொண்டுள்ள பிராட்டியுடன் நடனமாடும் காரணத்தை, அறிந்து கொண்டவர் எவரும் இல்லை என்று கூறுகின்றார். திருநீற்றினை சந்தனமாக கருதி, தனது உடலின் மீது பூசிக் கொண்டவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். திருநீற்றினை சாந்தமாக கருதி பூசிக் கொண்ட பெருமான் என்று இந்த பாடலை திருஞானசம்பந்தர் தொடங்குகின்றார். பெருமானின் எளிய தன்மை இதன் மூலம் குறிப்பிடப் படுகின்றது. ஏனையோர் அனைவரும் வாசனை தரும் சந்தனத்தைத் தங்களது திருமேனியில் பூசிய வண்ணம் காட்சி தர, பெருமானோ, திருநீற்றினையே சந்தனமாக கருதி தனது திருமேனியில் பூசிக் கொண்டு உள்ளார் என்று விளக்கம் அளிப்பது ஒரு வகை. பெருமானின் திருமேனியின் மீது பூசிய திருநீற்றினை அணிவோர்கள் சாந்தம் பெறுகின்றனர் என்று விளக்கம் கூறுவது மற்றொரு வகை. வெள்ளம்=நீர், கங்கை நதி; காந்தள் ஆரும்=காந்தள் மலர்கள் போன்று மெலிந்தும் மென்மையாகவும் நீண்டும் காணப்படும் விரல்கள்; ஏழை=பார்வதி தேவி; பொதுவாக பெண்கள் ஆண்களை விடவும் உடல் வலிமையில் குறைந்தவர்களாக காணப்படுவதால் அவர்களை ஏழை என்று குறிப்பது இலக்கிய மரபு. வேந்தன் என்ற சொல் இங்கே, சோழ வேந்தன் கோச்செங்கட் சோழனை குறிப்பிடுகின்றது. அவன் கட்டிய மாடக்கோயில் இந்த கோயில். அடிகள்=தலைவர்; பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் செய்கைகளின் தன்மையை எவரும் புரிந்து கொள்ள முடியாது என்று உரைத்த கருத்து அனைத்து பாடல்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. வேந்தன் என்பதற்கு உலகுக்கெல்லாம் அரசனாக விளங்கும் சிவபெருமான் என்று பொருள் கொண்டு, உலகத்து மக்கள் அனைவரையும் பாதுகாத்து, அவரவர்களின் வினைகளுக்கு ஈடாக படியளிக்கும் தலைவனாக, அருள் புரியும் நாதனாக விளங்கும் பெருமான், எல்லா உயிர்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் தலைவனாகவும் அந்த உயிர்களை இயக்குபவனாகவும் இருக்கும் தன்மையை வேந்தன் என்ற சொல் மூலம் உணர்த்துகின்றார் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பெரும்பாலான உரைகளில் வேந்தன் என்ற சொல் கோச்செங்கட் சோழனை குறிப்பதாக உணர்த்தப் படுகின்றது.

சாந்தம் வெண்ணீறு எனப் பூசி வெள்ளம் சடை வைத்தவர்

காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம்

ஆய்ந்து கொண்டு ஆங்கு அறிய நிறைந்தார் அவர் ஆர்

வேந்தன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே

திருச்சி நகரின் ஒரு பகுதியாகிய மூக்கீச்சரம் (உறையூர்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.4) திருஞானசம்பந்தர், கங்கை நதியைத் தனது சடையில் வைத்துள்ள பெருமான், பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்திருப்பதன் காரணத்தை எவரும் அறிய முடியாத மாயம் என்று குறிப்பிடுகின்றார். சாயல்=போன்ற; மாயம்=காரணம் அறிந்து சொல்ல முடியாத செயல்கள்; கோழி=கோழியூர் என்ற பெயர் கொண்டுள்ள உறையூர்; உலகில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ஈசனின் திருவுள்ளக் குறிப்பின் படியே நடைபெறுவதால், அதனை நாம் எவரும் சரியாக புரிந்து கொள்ள முடியாது என்பதையும் உணர்த்தும் வண்ணம், அடிகள் செய்கின்றதோர் மாயம் என்று குறிப்பிடும் விளக்கம், ஈசனே உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முழுமுதற் காரணமாக உள்ள நிலையை எடுத்துரைக்கின்றது. மும்மலங்களில் ஒன்றாக கருதப்படும் மாயை வேறு, இங்கே குறிப்பிடப்படும் மாயம் வேறு, கங்கை நதியையும் உமை அன்னையையும் பெருமான் ஏற்றுக் கொண்ட காரணம் இந்த பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்தப் பட்டுள்ளது.

அன்னம் அன்ன நடைச் சாயலாளோடு அழகு எய்தவே

மின்னை அன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம்

தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்

மன்னன் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றதோர் மாயமே

கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.38.2) திருஞானசம்பந்தர், இந்த தலத்தின் அடியார்களை நோக்கி, தவம் செய்து தன்னையடைந்த பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டுள்ள பெருமான், கங்கை நதியைத் தனது சடையில் தாங்கிய காரணத்தைச் சொல்வீராக என்று கேட்கின்றார். மிகு மங்கையாள்= தவத்தினில் மேம்பட்ட பார்வதி தேவி; உமையன்னைக்கும் கங்கைக்கும் உள்ள வேறுபாடு மிகவும் அழகாக இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமானையே மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தவம் செய்து தனது அன்பினால் பெருமானைக் கவர்ந்து அவனது உடலில் இடம் பெற்றவள் உமையன்னை. கங்கையின் நிலையோ வேறு; அவளது செருக்கினை அடக்கும் பொருட்டு, தனது சடையினில் கங்கை நதியினை சிறை வைக்கின்றார் பெருமான். மேலும் பெருமான் கங்கை நதியைத் தனது சடையில் தாங்கிய செய்கை, உமையன்னை உட்பட அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படையாக செய்யப்பட்ட செயல். மேலும் இந்த பாடலில் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான் கங்கை நதியை ஏற்றதன் காரணம் யாது என்றும் திருஞான சம்பந்தர் கேள்வி கேட்கின்றார். சந்திரன் தனது அழிவிலிருந்து விடுபடும் வண்ணம், பெருமானை சரணடைந்தவன். எனவே அவனது நிலைக்கு இரங்கி அவனுக்கு அருள் புரிந்தமை நம்மால் உணர முடிகின்றது. கங்கையோ செருக்குடன் பெருமானையும் சேர்த்து அடித்துச் சென்று விடும் நோக்கத்துடன் வந்தவள். எனவே கங்கை பெருமானிடம் ஏதும் வேண்டவில்லை. எனினும் பெருமான் தனது சடையினில் கங்கை நதியினை ஏற்றுக் கொண்டதற்கு காரணம் பகீரதன் பால் பெருமான் வைத்த கருணையேஎன்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளை=இளம்

உள்ளவாறு எனக்கு உரை செய்ம்மின் உயர்வாய மாதவம் பேணுவீர்

கள்ளவிழ் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை காதலான்

பிள்ளை வான்பிறை செஞ்சடைம் மிசை வைத்ததும் பெரு நீரொலி

வெள்ளம் தாங்கியது என் கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.52.2) பிராட்டியைத் தனது உடலில் பொருத்திக் கொண்டுள்ள பெருமான், தனது தலை உச்சியில் வேறொருத்தியை வைத்துக் கொண்டு இருக்கும் கருணைத் தன்மையை எம்மால் எடுத்தியம்ப முடியாது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். கொட்டு=பறை எனப்படும் இசை வாத்தியம்; எட்டிசைந்த மூர்த்தி= அட்ட மூர்த்தியாக விளங்கும் நிலை; நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆன்மா, ஆகிய எட்டுடன் இணைந்து அவற்றை இயக்கும் தன்மையும் அதே சமயத்தில் அவைகளால் எந்த விதத்திலும் பாதிக்கப் பட்டு எந்த மாற்றமும் அடையாமல், அவற்றினின்று வேறுபட்டு இருக்கும் தன்மையும் உடையவனாக பெருமான் இருப்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.

பட்டிசைந்த அல்குலாள் பாவையாளோர் பாகமா

ஒட்டிசைந்தது அன்றியும் உச்சியுள் ஒருத்தியாக்

கொட்டிசைந்த ஆடலாய கூடல் ஆலவாயிலாய்

எட்டிசைந்த மூர்த்தியாய் இருந்தவாறு இது என்னையே

சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.58.10) திருஞானசம்பந்தர், கங்கை நங்கை மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரையும் பெருமான் ஏற்றுக் கொண்ட செய்தியை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர், பெருமானை நோக்கி, கங்கை நதியினைத் தலையில் தாங்கிக் கொண்டும் பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்துக் கொண்டும் இருப்பதை அறிவுடையோர்கள் செயல் என்று புகழ்ந்து சொல்ல முடியுமா என்ற கேள்வியை பெருமானிடம் கேட்கின்றார். ஆனால் அத்தகைய ஐயப்பாடு ஏதுமின்றி, சாத்தமங்கை தலத்து அந்தணர்கள் பெருமானைத் தொழுகின்றனர் என்று கூறுகின்றார். பொதுவாக தனது பதிகத்தின் பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்கள் பற்றிய குறிப்பினை உணர்த்தும் திருஞான சம்பந்தர், இந்த பாடலில் அத்தகைய குறிப்பினை கொடுக்கவில்லை. ஐயப்பாடு என்று சொல்லின் மூலம் அந்நாளில் சமணர்கள் மற்றும் புத்தர்கள் பெருமானின் மாதொருபாகனின் கோலத்தை பரிகாசம் செய்து வந்த தன்மையை குறிப்பிடுகின்றாரோ என்று தோன்றுகின்றது. இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் மாதொரு பாகனின் திருக்கோலத்தை ஈரெழிற்கோலம் என்று குறிப்பிட்டு மகிழ்கின்றார். பிச்சைப் பெருமானின் திருக்கோலமும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. சங்கை=ஐயப்பாடு; சென்னி=பிரம கபாலம்; சாத்தமங்கை என்பது தலத்தின் பெயர். அயவந்தி என்பது திருக்கோயிலின் பெயர்.

கங்கையோர் வார்சடை மேல் அடையப் புடையே கமழும்

மங்கையோடு ஒன்றி நின்ற அம்மதி தான் சொல்லல் ஆவதொன்றே

சங்கையில்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை

அங்கையில் சென்னி வைத்தான் அயவந்தி அமர்ந்தவனே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.4), கங்கை நதி மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரையும் பெருமான் ஏற்றுக் கொண்டதை குறிப்பிடும் திருஞான சம்பந்தர், கங்கை நதியினை பெருமான் தனது சடையில் ஏற்றுக் கொண்டதற்காக பிராட்டி கோபம் கொண்டதாக கூறுகின்றார். நிமலர்-இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர், அடியார்களின் மலங்களை நீக்கும் ஆற்றல் உடையவர்; கூற்றினர்=திரிபுரத்து அரக்கர்களுக்கு கூற்றுவனாக விளங்கி அவர்களை அழித்தவர்; முனிவுற=கோபம் கொள்ள, பிணங்க; குலவு கங்கை=மிகுந்த மகிழ்ச்சியுடன் சடையில் சேர்ந்த கங்கை நதி. கங்கை நதி விருப்பம் ஏதுமின்றி பெருமானின் சடையில் சேர்ந்தது என்பதை நாம் அறிவோம். மேலும் பெருமானின் சடையிலிருந்து எளிதில் விடுபட்டு வெளியேறிவிடலாம் எனவும் எண்ணியது. ஆனால் கங்கை நதியின் எண்ணம் பலிக்கவில்லை. எனவே கங்கை நதி மகிழ்ச்சியுடன் பெருமானின் சடையில் சேரவில்லை என்பது புலனாகின்றது. எனினும் புலவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி, கங்கை நதி குலாவி பெருமானின் சடையில் தங்கியதாகவும், அதனால் பிராட்டி கோபம் கொண்டதாகவும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் நயமாக கற்பனை செய்து கூறுகின்றார். பகீரதன் தான் செய்த தவத்தின் பயனை அடைய வேண்டும் என்பதற்காகத் தானே, பெருமான் கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டார் என்பதையும் நன்றாக அறிந்தவள் பிராட்டி. எனவே உண்மையில் பிராட்டி கோபம் அடையவில்லை, பெருமானுடன் ஊடலும் கொள்ளவில்லை. எனினும் பாடலில் நயம் சேர்க்கும் பொருட்டு இத்தகைய கற்பனைகள் மூவர் பெருமானார்களால் செய்யப்படுகின்றன.

நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை

ஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும்

கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவரும் குலவு கங்கை

ஆற்றினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே

இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.101.3) திருஞானசம்பந்தர், உமை அன்னை மற்றும் கங்கை ஆகிய இருவரையும் குறிப்பிடுகின்றார். அலை வளர் கங்கை= அலைகள் பெருகி வரும் கங்கை நதி; தண் புனல்=குளிர்ந்த நீர்; வார் சடை=நீண்டு தொங்கும் சடை; இந்த தலத்தின் பிராட்டியின் திருநாமம் மலைவளர் காதலி என்பதாகும். இந்த பாடலில், பெருமான், தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ள உமை அன்னை பாட, அந்த பாடலில் மயங்கியவாறு பெருமான் நடனம் ஆடுகின்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இத்தகைய பெருமைக்கு உரிய செயலைச் செய்யும் பெருமான், தனது நீண்ட சடையில், கங்கை நதியை அடக்கி வைத்துள்ளார் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இவ்வாறு ஒன்றுக்கொன்று மாறுபட்ட செயலைச் செய்யும் பெருமானின் தன்மையை உண்மையான மெய்ஞ்ஞானிகள் மட்டுமே உணர முடியும் என்று கூறுகின்றார். இராமேச்சரம் தலத்தில் உறைகின்ற பெருமான், பிரளய காலத்தில் இறந்துபடும் திருமால், பிரமன், இந்திரன் மற்றும் எண்ணற்ற தேவர்களின் உடலிலிருந்து பிரிக்கப் பட்ட தலைகளை மாலையாக அணிந்து கொண்டு தான் ஒருவனே என்றும் அழியாமல் இருப்பவன் என்பதை உணர்த்துகின்றார் என்றும் சொல்கின்றார்.

அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒரு பாகம்

மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி

இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார்

தலை வளர் கோல நன் மாலை சூடும் தலைவர் செயும் செயலே

கங்கை நங்கை மற்றும் பார்வதி தேவி உள்ளிட்ட சிறந்த ஏழு பொருட்கள் ஏன் பெருமானை மட்டும் சென்றடைந்து, மற்றவரை சென்றடையாமல் உள்ளன என்பது தனது சிற்றறிவுக்கு எட்டவில்லை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடும் பாடல் திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (3.106.4). கங்கை நங்கை மற்றும் உமையன்னை ஆகிய இருவரும் குறிப்பிடப்படும் அரிய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. இந்த பாடலில் இடபம், கங்கை, சடைமுடி, உமாதேவி, உயிர்களுக்கு முக்தி நிலை அளித்து அருள் புரியும் திருவடி, சிலம்பு, வலஞ்சுழி ஆகிய ஏழு அம்சங்களின் மேன்மை உணர்த்தப் படுகின்றது. இவை அனைத்தும் பெருமானையே சார்ந்து நின்றமையும், வேறு எவரையும் சாராது இருக்கும் நிலையையும் நாம் உணரவேண்டும். இதன் மூலம் பெருமானின் தனிச்சிறப்பு உணர்த்தப் படுகின்றது. சிவபெருமானுக்கு அருகே ஒரு பக்கத்தில் இடப வாகனம் உள்ளது. சடையின் ஒரு பக்கத்தில், பெருமானை விரும்பி வந்தடைந்த மெல்லியலாள் கங்கை ஒரு புறம் உள்ளாள். விரிந்து பரந்த சடை ஒரு புறம் இருக்க, தாழ்ந்த குழலை உடைய பிராட்டி பெருமானின் உடலின் ஒரு பாகத்தில் பொருந்தி இருக்கின்றாள். இத்தகைய கோலம் கொண்டுள்ள பெருமான், பெருமை மிகுந்த நடை நடக்கும் திருவடியும் சிலம்பணிந்த திருவடியும் கொண்டவராக விளங்குகின்றார். இங்கே குறிப்பிடப்பட்ட தன்மைகள் சென்று அடையும் வண்ணம் திருவலஞ்சுழி பெருமான் விளங்குகின்றார். இத்தகைய தன்மைகள் ஏன் பெருமானை மட்டும் சென்றடைந்து மற்றவரை சென்றடையாமல் நிற்கின்றன என்பது எங்களது சிற்றறிவுக்கு எட்டவில்லை என்று திருஞானசம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.

விடை யொருபால் ஒரு பால் விரும்பு மெல்லியல் புல்கியதோர்

சடை ஒரு பாலொடு பால் இடம் கொள் தாழ்குழல் போற்றிசைப்ப

நடை ஒரு பாலொரு பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர்

அடை ஒரு பாலடையாத செய்யும் செய்கை அறியோமே

குருகாவூர் வெள்ளடை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.124.2), திருஞான சம்பந்தர், அலைகள் வீசும் கங்கையைத் தனது சடையில் வைத்த வண்ணம் பெருமான் வரைமகளுடன் நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். வரை=மலை; வரைமகள்= மலைமகள்; திரை=அலைகள்; விரை=நறுமணம்; தண்பொழில்=குளிர்ந்த சோலை; அரை= இடுப்பு; வாளரவு=ஒளி வீசும் பாம்பு;; தேவியுடன் பெருமான் நடனம் ஆடியதாக இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். உமையன்னை அஞ்சும் வண்ணம் நடமாடியதாகவும், அன்னை இசைபாட நடமாடியதாகவும், அன்னை கண்டு மகிழும் வண்ணம் நடனம் ஆடியதாகவும், உமையன்னை தாளமிட நடமாடியதாகவும், உமை அன்னையின் வருத்தம் நீங்கும் வண்ணம் நடமாடியதாகவும் பல குறிப்புகள் தேவாரப் பதிகங்களில் காணப்படுகின்றன. உமையன்னையுடன் இணைந்து நடமாடியதாக மிகவும் அரிதாக குறிப்புகள் காணப்படுகின்றன. அத்தகைய குறிப்புகளில் ஒன்று தான் இங்கே விளக்கப் படும் பாடல். பெருமானின் உடலின் ஒரு பாகமாக எப்போதும் இருக்கும் இறைவியை பெருமானுடன் சேர்ந்து நடனம் ஆடுபவள் என்று தானே நாம் பொருள் கொள்ள வேண்டும். அலைகள் உடைய கங்கை நதியைத் தனது சடையினில் வைத்து, மலைமகளாகிய பார்வதி தேவியுடன் நடனமாடும் பெருமானே, நீர் நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளை உடைய வெள்ளடை தலத்தினில் பொருந்தி அமர்ந்துள்ளீர். நீர் உமது இடுப்பினில் கச்சையாக ஒளிவீசும் உடலினைக் கொண்ட பாம்பினை இறுகக்கட்டி அதனை அசைத்து இன்பம் அடைகின்றீர் என்று பெருமானை நோக்கி திருஞானசம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.

திரை புல்கு செஞ்சடை திகழ் சடை வைத்து

வரை மகளோடு உடன் ஆடுதிர் மல்கு

விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய

அரை மல்கு வாளரவு ஆட்டு உகந்தீரே

சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.8.9) அப்பர் பிரான், உமை அன்னை மற்றும் கங்கை ஆகிய இருவருக்கும் மணவாளராக பெருமான் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். வடநாட்டில் பாயும் கங்கை நதி இங்கே வடகங்கை என்று அழைக்கப் படுகின்றது. விலையிலி சாந்தம் என்று திருநீறு இங்கே குறிப்பிடப் படுகின்றது. சந்தனம் மிகவும் விலை உயர்ந்த பொருள் என்பதை நாம் அறிவோம். சிவபெருமான் மற்றவரால் ஒதுக்கப்பட்டு, மலிந்து கிடக்கும் பொருட்களையே விரும்பி அணிபவர் என்பதால், சுடுகாட்டில் கிடைக்கும் சாம்பலையே திருநீறாக அணியும் தன்மை இங்கே கூறப்பட்டுள்ளது. எருக்கு, கொன்றை, எலும்பு மாலை, பாம்பு, ஆகியவை போன்று மற்றவர்கள் விலக்கும் பொருட்கள் போல், திருநீறும் இறைவனால் விரும்பப்பட்டு உடல் முழுவதும் பூசிக் கொள்ளப் படுவதால் விலையிலி சந்தனம் என்று திருநீற்றினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். வேட விகிர்தர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, வேடுவக் கோலம் தாங்கி அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளியதை குறிக்கும் என்றும் கொள்ளலாம். மலை மங்கையாகிய உமையம்மையுடன், நமது நாட்டின் வடக்கே பாயும் கங்கையையும் தனது மனைவியாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தவர் சிவபெருமான். பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்தி, தனியாகச் சென்று பிச்சை ஏற்கும் பிச்சைப் பெருமான், அடியார்கள் அவரைக் குறித்து செய்யும் தவத்தால் மகிழ்ந்து அவர்களுக்கு அருள் புரிபவர் ஆவார். நறுமணம் கமழும் திருநீற்றினை, சந்தனமாக கருதி தனது உடல் முழுவதும் பூசிக் கொண்டு பல திருவிளையாடல்கள் புரிபவர் சிவபெருமான்: அவர் மற்றவர்களிடம் இருந்து பெரிதும் மாறுபட்டவர். மிகுந்த ஆரவாரத்துடன் பாற்கடல் கடையப்பட்ட சமயத்தில், அதனின்று கரிய நெருப்பு போன்று எழுந்த நஞ்சினை, சிறிதும் அஞ்சாமல் உண்டு அனைவரையும் காப்பாற்றியவர் சிவபெருமான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மலை மட மங்கையோடும் வடகங்கை நங்கை மணவாளராகி மகிழ்வர்

தலை கலனாக உண்டு தனியே திரிந்து தவவாணராகி முயல்வர்

விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்

அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.10.6) அப்பர் பிரான், கங்கை மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடுகின்றார். கங்கை போன்று புனிதமான நதி என்பதால் தென்திசை கங்கை என்று கெடில நதி அழைக்கப்படும் தகவலை அப்பர் பிரான் இந்த பாடலில் நமக்கு தெரிவிக்கின்றார். தனது அழகிய உள்ளங்கையில் அனலினை ஏந்தியவாறு ஆடும் திறமை பெற்றவர் சிவபெருமான். கங்கை ஆறாகிய மங்கையைத் தனது சடையில் அடக்கி, தன்னுடன் சேர்த்துக் கொண்டவர் சிவபெருமான்: புகழ் பெற்ற இமயமலையில் தோன்றிய பார்வதி தேவியை, தனது உடலின் இடது பாகத்தில் விருப்பத்துடன் வைத்து மகிழ்ந்து இருப்பவர் சிவபெருமான். இத்தகைய தன்மை உடைய சிவபெருமான், அதன் புனிதத்தன்மை கருதி தென்திசை கங்கை என்று அழைக்கப்படும் கெடில நதிக்கரையில் வாழ்பவராக காட்சி அளிக்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அங்கையில் அனல் எரி ஏந்தி ஆறு எனும்

மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை

நங்கையைப் பாகமும் நயப்பர் தென் திசைக்

கெங்கை அது எனப்படும் கெடில வாணரே

அதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய ஒரு நேரிசைப் பதிகத்தின் (4.27) இரண்டாவது பாடலில், கங்கை நதி தலையில் சூட்டிக் கொண்டபோது ஏற்பட்ட ஆரவார ஓசையினால், பார்வதி தேவி நடந்ததை அறிந்து ஊடல் கொண்டதாகவும், அந்த ஊடலைத் தீர்ப்பதற்காக சிவபெருமான் சாமவேதம் பாடி, அந்த பாடலின் தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடியதாகவும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். நடக்காத ஊடலை நடந்ததாக கற்பனை செய்து பாடியதால் ஊடல் தீர்க்கப் பட்டதை அப்பர் பிரான் குறிப்பிடவில்லை போலும். ஊடலை ஒழிக்க வேண்டி என்று குறிப்பிட்டிருப்பதால் ஊடல் தீர்ந்தது என்று நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். துழனி=ஆரவாரம்: பாணி=தாளம். பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி கங்கை நதி தேவ லோகத்திலிருந்து கீழே இறங்கி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், தனது நீர்ப் பெருக்கில், வல்லமையில் செருக்கு கொண்டிருந்த கங்கை மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கினாள். பூமியையே கரைத்து, கடலில் சேர்த்து விடுவது போன்று மிகுந்த ஆவேசத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியை பரமசிவன் தனது சடையில் தாங்குகின்றார்.

சூடினார் கங்கையாளைச் சூடிய துழனி கேட்டு அங்கு

ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டிப்

பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே

ஆடினார் கெடில வேலி அதிகை வீரட்டனாரே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.33.7) அப்பர் பிரான், உமை அன்னை மற்றும் கங்கை ஆகிய இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடுகின்றார். ஏது=காரணம்; அனைத்துப் பொருட்களும் அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு மூல காரணனாக பெருமான் இருப்பதால், ஏதுவாக இருப்பதால், ஏதர் என்று அப்பர் பிரான் அவரை அழைக்கின்றார். பல திருமுறைப் பாடல்களில், கங்கை நதியை பார்வதி தேவிக்கு தெரியாத வண்ணம் மறைத்து வைத்ததாவும், அதனால் இருவருக்கும் இடையே ஊடல் ஏற்பட்டது என்று நகைச்சுவை தோன்ற கூறினாலும், தேவி அறியும் வண்ணமே கங்கை நதியைத் தனது சடையில் பெருமான் ஏற்றார். இந்த செய்தி தான் இங்கே கங்கையொரு மாதை ஓர் பாகம் வைத்தார் என்று உணர்த்தப் படுகின்றது. மிகுந்த வேகத்துடன் ஆகாயத்திலிருந்து கங்கை நதி இறங்கிய போது, அதன் வேகத்தை தடுத்த நிறுத்த பெருமான் ஒருவனால் மட்டுமே முடியும் என்பதால் பகீரதன் பெருமானை வேண்ட, அவனது வேண்டுகோளுக்கு இசைந்த பெருமான் அனைவரின் முன்னிலையில் கங்கை நதியைத் தனது சடையில் ஏற்று மறைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. கீதர்=பாடுபவர்; திறமை வாய்ந்த இசைக் கலைஞர்கள், அடுத்தவர் பாடும் பாடல்களையும் மிகுந்த விருப்பமுடன் கேட்பார்கள். இந்த சிறந்த பண்புக்கு முன்னோடியாக இறைவன் இருந்த தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. கின்னரம்=இசை, இங்கே இசை உணர்வினை குறிக்கும்; பாடல்களை இசைத்துப் பாடும் பரமனார், தாம் மகிழும் வண்ணம் சிறந்த பாடல்களை உலகத்தவர் பாட அவர்களுக்கு இசை உணர்வினையும் வைத்தவர் ஆவார்; வேதத்தினை உலகினுக்கு அளித்த பெருமான், அந்த வேதங்களில் கற்று உணர்ந்து ஓதுவதால் ஏற்படும் ஞானத்தையும் வழங்குகின்றார். அனைத்து உலகங்களும், உலகங்களில் உள்ள எல்லாப் பொருட்களும் அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு மூல காரணமாக இருக்கும் கூத்தினை நிகழ்த்துபவராக பெருமான் உள்ளார். விருப்பத்துடன் வானிலிருந்து வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதியைத் தனது சடையில் ஏற்ற பெருமான், பார்வதி தேவியையும் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுள்ளார். இத்தகைய பண்புகளை உடைய பெருமான், சிறப்பு வாய்ந்த மறைக்காடு தலத்தில் உறையும் இறைவனார் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

கீதராய் கீதம் கேட்டுக் கின்னரம் தன்னை வைத்தார்

வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார்

ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய்க் கங்கையோடு

மாதையோர் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (4.33.6) அப்பர் பிரான், கங்கையை சடையில் வைத்த பெருமான், மங்கையை பாகம் வைத்தார் என்று கூறுகின்றார். சைவ சமயத்தின் ஆறு உட்பிரிவுகள் பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றன. சிவபெருமான் ஒருவரையே பரம்பொருள் என்று வழிபடுவதில் ஒத்திருந்தாலும், தங்களுக்குளே சிறிய மாறுபாடுகள் கொண்டதால், வேறுவேறு சமயங்களாக கருதப் படுகின்றன. பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமனம், பைரவம், சைவம் என்பன இந்த ஆறு சமயங்கள். சிவபெருமான் தனது அழகிய கையினில் தீப்பிழம்பை ஏந்தியுள்ளார்; ஆறு வகையான உட்பிரிவுகளை உடைய சைவ சமயத்தினை படைத்து அடியார்கள் தனது திருவடிகளை தன்னை வழிபட வகை வகுத்தவர் சிவபெருமான்; தனது கையினில் இசைப்பதற்காக வீணை உடையவராகவும் விளங்கும் பெருமான், பிறைச் சந்திரனையும் கங்கை நதியையும் தனது சடையில் வைத்தவர் ஆவார். இத்தகைய பண்புகளை உடைய பெருமான், சிறப்பு வாய்ந்த மறைக்காடு தலத்தில் உறையும் இறைவன் பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார்

அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்

தம் கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார்

திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையில் வைத்தார்

மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காடனாரே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (4.34.10) அப்பர் பிரான், கங்கை நங்கையை பெருமான் சடையில் மறைத்து வைத்ததால், உமை அன்னை பெருமானிடம் ஊடல் கொண்டாள் என்று கற்பனை செய்து பாடுகின்றார். அங்கைவாள்= அழகிய கைவாள்; இந்த பாடலில் சிவபெருமானுக்கும் அன்னைக்கும் ஊடல் ஏற்பட்டதாகவும், அந்த ஊடல் தீர்க்கப் பட்டதாகவும் அப்பர் பிரான் கூறுகின்றார். இறைவனின் செயல் வடிவமே சக்தி. சக்திக்கும் சிவத்திற்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. சிவபிரானின் எண்ணத்திற்கு ஏற்ப செயல் படும் சக்திக்கும் சிவத்திற்கும் வேறுபாடு இல்லாத போது, அவர்களிடையே ஊடல் வருவதற்கான வாய்ப்பு அறவே இல்லை. ஆனாலும், அவர்களுக்கு ஊடல் ஏற்பட்டது போன்று அப்பர் பிரான் கற்பனை செய்து அந்த ஊடல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்று இந்த பாடலில் கூறுகின்றார். கயிலாய மலை அரக்கன் இராவணனால் அசைக்கப் பட்ட போது தனக்கு ஏற்பட்ட அச்சத்தினால் பார்வதி தேவி, பெருமானை கட்டிக் கொண்டாள் என்பதை உணர்த்தும் அப்பர் பிரான், அதன் பின்னர் ஊடலும் தீர்ந்தது என்பதை நமது கற்பனைக்கு விதையாக அப்பர் பிரான் விட்டு விடுகின்றார். இந்த ஊடல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதை சுருக்கமாக, இதே பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரான், காரிகை அஞ்சல் என்று பெருமான் சொன்னதாக அந்த பாடலில் கூறுகின்றார். கங்கை நீரினை பெருமான் தனது சடையினில் மறைத்ததால், அன்னை பார்வதி தேவி கொண்ட ஊடல், தென்னிலங்கைக்கு மன்னனாகிய அரக்கன் இராவணன் தனது தேர் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்று கருதி கயிலாய மலையை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு மலையினை அசைக்க, பார்வதி தேவி கொண்ட அச்சத்தினை பெருமான் அஞ்சேல் என்று சொல்லி போக்கியதால் தீர்ந்தது. அவ்வாறு அன்னையை அஞ்சேல் என்று சொன்ன பெருமான், மலையின் கீழே அரக்கன் மாட்டிக்கொண்டு நசுங்குமாறு தனது கால்விரலால் மலையை அழுத்த, அரக்கன் தனது முன்கையிலிருந்து ஒரு நரம்பினை வெட்டி எடுத்து வீணை போன்று இசைத்து சாமகானம் பாடினான். அரக்கன் பாடிய சாம கானத்தினால் மகிழ்வடைந்த பெருமான், அழகிய சந்திரகாசம் எனப்படும் வாளினை அரக்கனுக்கு அருளினார் இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் திருமறைக்காடு தலத்தில் உறைகின்றார். பதிகத்தின் முதல் பாடலில் தேவியை அஞ்சேல் என்று சொல்லியதை குறிப்பிட்ட அப்பர் பிரான், அவ்வாறு சொல்லியதால் தேவியின் ஊடல் தீர்ந்தது என்பதை பதிகத்தின் கடைப் பாடலில் உணர்த்துகின்றார்.

கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்

தென் கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான் மலையை

முன்கை மா நரம்பு வெட்டி முன்னிருக்கைகள் பாட

அங்கைவாள் அருளினான் ஊர் அணி மறைக்காடு தானே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (4.38.1) கங்கையைத் தனது சடையில் வைத்துள்ள பெருமான், தனது உடலின் ஒரு பாகமாக பார்வதி தேவியை ஏற்றுக் கொண்டுள்ளார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கதிர்=ஒளிவீசும் பொறி=புள்ளிகள்; திசைதிசை=வெவ்வேறு திசையில் உள்ள மக்கள், உலகமனைத்திலும் உள்ள மக்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் உலகத்தில் உள்ள அனைவரும் சிவபெருமானை தொழுது வணங்கும் தன்மை, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற திருவாசகத் தொடரால் உணர்த்தப் படுகின்றது. இந்த பாடலில் திங்களைத் திகழ வைத்தார் என்று அப்பர் பெருமான் கூறுகின்றார். தக்கனின் சாபத்தினால் நாளும் ஒவ்வொரு பிறையாகத் தேய்ந்து முற்றிலும் அழிந்து போகும் நிலையினில் சந்திரன் பெருமானிடம் சரண் அடைந்தான். அந்த ஒற்றைப் பிறையைத் தனது சடையில் ஏற்று, சந்திரனை அழியாமல் காத்தவர் பெருமான். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிறையாக வளர்ந்து வானில் ஒளி வீசும் தன்மையையும் சந்திரனுக்கு அளித்தவர் சிவபெருமான். இந்த தகவல் தான் திங்களைத் திகழ வைத்தார் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. மேலும் பாம்புக்கும் சந்திரனுக்கு எப்போதும் பகை உண்டு; அதனால் பாம்பிடம் சந்திரனுக்கு பயம். உள்ளத்தில் பயம் இருக்கும் தருணத்தில் எவ்வாறு ஒளியுடன் திகழ முடியும். ஆனால் இறைவனின் சந்நிதானத்தில் இருப்பதால், பாம்பினிடம் தான் கொண்டுள்ள அச்சத்தை மறந்து பெருமானின் சடையில் சந்திரன் உலாவுகின்றது. இதனையே திங்களைத் திகழ வைத்தார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. கங்கை நதியைத் தனது சடையினில் வைத்து அடக்கியவர் சிவபெருமான். ஒளி வீசும் புள்ளிகள் நிறைந்த உடலினை உடைய பாம்பினைத் தனது சடையில் வைத்துள்ள பெருமான், தக்கனின் சாபத்தால் முற்றிலும் அழியும் நிலையில் தன்னிடம் வந்து சரண் அடைந்த சந்திரன் அழியாமல் காத்து மீண்டும் அவன் வானில் ஒளி வீசிக் கொண்டு வலம் வருமாறு அருள் புரிந்தவர் சிவபெருமான். உலகில் உள்ள அனைவரும் தன்னைத் தொழும் நிலையில் அவர்களுக்குத் தனது பெருமையை உணர்த்தியவர் சிவபெருமான். அவர் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்திலும். மான் கன்று, மழு ஆயுதம் ஆகியவற்றை தனது கைகளில் ஏந்தியவராக, தனது உள்ளங்கையினில் தீப் பிழம்பையும் ஏந்தியுள்ளார். அவரே நமது தலைவனாகிய ஐயாறனார் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி அரவும் வைத்தார்

திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்

மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்

அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.42.1) அப்பர் பிரான், கங்கை மற்றும் உமை அன்னை ஆகிய இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடுகின்றார். குரம்பை=உடல்: பொருந்திய=எலும்பு, தோல், தசை, நரம்பு இவை பொருந்திய; பொருள்= நிலையான பொருள்; இருத்தி=நிலை நிறுத்தி; பொருந்திய குரம்பை என்பதற்கு ஐந்து பொறிகள் பொருந்திய உடல் என்று பொருள் கொண்டு, ஐந்து பொறிகளும் தரும் சிற்றின்பத்தை நிலையானது என்று கருத வேண்டாம் என்று அறிவுரை கூறுவதாக பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. மாந்தர்களே, எலும்பு தோல் தசை நரம்பு ஆகியவை பொருந்திய உடலினை நிலையானது என்றும் உடல் தரும் சிற்றின்பத்தை நிலையானது என்று கருதி உலகியல் வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு வாழும் வாழ்க்கையை தவிர்த்து விடுவீர்களாக. உங்களது நெஞ்சினில் எப்பொழுதும் இறைவனைப் பற்றிய சிந்தனையை வளர்த்து, அவனைப் புகழ்ந்து பாடியவாறு இருப்பீர்களாக. துருத்தி தலத்தில் ஞானச் சுடராக விளங்கும் பெருமானை, நான் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாதியிலும், கங்கை நங்கையைத் தனது சடையிலும் வைத்த கோலத்தில் கண்டேன். நீங்களும், இறைவனை எப்பொழுதும் நினைத்து வாழ்ந்தால், இறைவனின் கோலத்தை காணலாம் என்று அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.

பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா

இருத்தி எப்பொழுதும் நெஞ்சுள் இறைவனை ஏத்துமின்கள்

ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையுள் வைத்த

துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டவாறே

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் (4.42.3) அப்பர் பிரான், கங்கை நதி மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பொன்னியின் நடுவு தன்னுள் என்று அப்பர் பிரான் பாடுவதால், திருக்கோயிலைச் சுற்றி இருமருங்கும் காவிரி நதி பிரிந்து ஓடியிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. துருத்தி என்ற சொல்லுக்கு, விரிந்து பரந்து செல்லும் ஆற்றின் நடுவே காணப்படும் திட்டு என்று பொருள். ஆனால் இப்போது கோயிலுக்கு வடக்கே காவிரி நதி சற்று தள்ளி ஓடுகின்றது. கோயிலில் உள்ள பரந்த மண்டபங்கள், மற்றும் படித்துறைக்கு நம்மை அழைத்துச் செல்லும் படிகள் இவற்றை காணும்போது, அண்மையில், கடந்த நூற்றாண்டு காலத்தில், காவிரி நதி திருக்கோயிலை ஓட்டிச் சென்றிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. எனவே மூவர் பெருமானர்களின் காலத்தில், திருக்கோயில் நதியின் நடுவே இருந்திருக்ககூடும் என்று ஊகிக்கத் தோன்றுகின்றது. எல்லா உயிர்களுக்கும் தாயாக இருந்தாலும், கன்னியாகத் திகழும் பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்து, கங்கை நதியினைத் தனது சடையினில் வைத்து உலவும் பெருமான், அழகிய பொன்னி நதியின் நடுவில் தோன்றும் திட்டில் அமைந்துள்ள, வளம் பொருந்திய துருத்தித் தலத்து திருக்கோயிலில் உறைகின்றான். அந்த இறைவனை நீங்கள் எப்போதும் உங்களது மனதினில் நினைத்தவாறு, அவனைப் புகழ்ந்து வழிபடுவீர்களாக. அவனை இடைவிடாது நினைத்து வழிபட்ட யான், அவனது திருக்கோலத்தைக் (பார்வதி அன்னையுடனும், கங்கை நங்கையுடனும் தோன்றும் கோலம்) அடியேன் கண்டவாறு, நீங்களும் மகிழ்ந்து காண்பீர்களாக என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்துமின்னோ

கன்னியை ஒரு பால் வைத்துக் கங்கையைச் சடையுள் வைத்துப்

பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து தோன்றும்

துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே

கங்கை நதியைத் தனது சடையில் மறைத்து வைத்தும் பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்தும் பெருமான் இருக்கும் தன்மையை, மிகவும் நயமாக, ஒருத்திக்கும் நல்லவனாக பெருமான் இல்லாத நிலையை உணர்த்துகின்றது என்று திருவொற்றியூர் தலத்து பதிகத்தின் பாடலில் (4.45.6) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மற்றொருத்தி (பார்வதி தேவி) அறியாதவாறு, ஒருத்தியை (கங்கையை) தனது சடை முடியில் சிவபிரான் ஒளித்து வைத்துள்ளான். ஆனால் இந்த உண்மையான காரணத்தை உணராமல், உலகம் அவனை கங்கையை சடையில் ஏற்றதற்காக புகழ்கின்றது. மற்றவள் ஆகிய பார்வதி தேவியை, கங்கை அறியாதவாறு தனது உடலின் இடது பாகத்தில் மறைத்து வைத்துள்ளான். இவ்வாறு ஒருவரை மற்றொருவர் அறியாதவாறு மறைத்து வைத்துள்ளதால், இதனை இருவரும் எப்போது அறிந்து கொள்வார்களோ என்ற ஐயத்துடன் உலாவும் சிவபெருமான், இவ்வாறு இருவரில் ஒருத்திக்கும் நல்லவனாக இல்லாத தன்மை வெளிப்படுகின்றது. இவன் தான் ஒற்றியூர் தலத்தில் உறைகின்ற சிவபெருமான் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரையாகும். இந்த பாடலில் பெருமானை ஐயம் உண்ணி என்றும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான் உலகம் ஏத்த

ஒருத்திக்கு நல்லனாகி மறுப்படுத்து ஒளித்து மீண்டே

ஒருத்தியைப் பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி

ஒருத்திக்கு நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே

பவளத் தடவரை போலும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.112.7) அப்பர் பிரான் பெருமானை ஐயம் உண்ணி என்று குறிப்பிடுகின்றார். அடுத்தவரின் பழிச் சொல்லுக்கு சிவபெருமான் ஆளாகும்படி நடக்கலாமா என்ற வருத்தம் தொனிக்கும் வகையில் அப்பர் பிரான் அருளிய சுவையான பாடல். சின்னம்=சிறியது: சின்னஞ் சிறிய பிள்ளை என்று வழக்கிலுள்ள சொல்லில் வருவது போன்று, சிறிய அளவிலான கோவணத் துண்டு என்று பொருள் கொள்ள வேண்டும். வான் இரைக்கும் இரைப்பா என்று விண்ணில் ஒலிக்கும் ஒலியாக உள்ளவன் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். விண்ணில் ஒலிக்கும் ஒலியாகத் தோன்றும் இறைவனே, தசைகள் கழிந்து உலர்ந்து வெண்மை நிறத்தில் காட்சி அளிக்கும் பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவனே, நான்மறைகள் தேடும் அரியவனே, எங்கள் தலைவனே, .இடுப்பிலே கோவணத்தை உடுத்தியவாறு, நீ பிச்சை ஏற்கச் செல்வது, இல்லற வாழ்க்கைக்குப் பொருந்துவதாக இல்லையே: இவ்வாறு வாழும் நீ எதற்காக மலையரசனின் மகளை மணந்து கொண்டாய்? இது தான் நீ குடும்பம் நடத்தும் அழகா? அடுத்தவர் உன்னை பழித்து சொல்லும் சொற்களுக்கு ஏற்ப நீ நடந்து கொள்ளலாமா? இறைவனே நீ உனது வாழ்க்கை முறையை சற்று மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் விண்ணப்பம் வைக்கும் பாடல்.

அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள் ஐயம் உணல்

வரைப் பாவையைக் கொண்டது எக்குடி வாழ்க்கைக்கு வான் இரைக்கும்

இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய்

உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.68.8) அப்பர் பிரான், உமை அன்னை, காளி தேவி மற்றும் கங்கை ஆகிய மூவரையும் ஒரே பாடலில் குறிப்பிடுகின்றார். இவ்வாறு மூவரையும் ஒரே பாடலில் குறிப்பது சற்று அரிதாக உள்ளது. குறிப்புடை வேடம்=குறிப்பினை தெரிவிக்கும் வேடம், காதற்குறிப்பு; பெருமான் பால் பிராட்டி கொண்டிருந்த அதீதமான அன்பினை உணர்ந்த பெருமான், பிராட்டிக்குத் தனது உடலின் ஒரு பாகத்தை அளித்ததை, அப்பர் பிரான் உமை தன்னோடு கூடினார் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சுவறிட்டது=வற்றியது; பெருகிய வெள்ளத்துடன் கீழே இறங்கி வந்த கங்கைநதி, பெருமானின் சடையில் அகப்பட்டு மறைந்ததால், கங்கை நதியை வற்ற வைத்த சடை என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஊர்த்துவ தாண்டகம் இந்த தலத்தில் நடந்ததாகவும் கூறுவார்கள். நடனப்போட்டியில் தோற்ற காளிதேவி, தலத்தில் தனிக்கோயிலில் இருப்பதை நாம் காணலாம். மேலும் கோயிலில் உள்ள உற்சவ சிலைகளில் ஒன்றான காளியம்மையின் சிலையில், காளிதேவி முகத்தில், தோல்வியால் ஏற்பட்ட நாணம் பொங்க, நின்ற நிலையில் இருப்பதையும் நாம் காணலாம். உமையம்மை தன் பால் வைத்திருந்த காதலின் தன்மையை உணர்ந்த பெருமான், தான் அதனைப் புரிந்து கொண்டதை உணர்த்தும் வகையில் பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக்கொண்டவர் ஆவார். மிகவும் அதிகமான வெள்ளப் பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதி வற்றியது போன்ற தோற்றம் அளிக்கும் வண்ணம், அதனைத் தனது சடையினில் அடக்கியவர் சிவபெருமான் ஆவார். சாமவேதம் பாடுபவராகவும், பசுமையான சோலைகள் சூழ்ந்த பழையனூர் தலத்தில் பொருந்தி உறைபவரும் ஆகிய பெருமான் ஆலங்காட்டு அடிகளாக திகழ்கின்றார். பண்டைய நாளில் நடந்த நடனப் போட்டியில் தான் தோற்றுவிட்டதை உணர்ந்த காளிதேவி தனது நடனத்தை நிறுத்திவிட்டு, பெருமானின் நடனத்தினை வியப்புற்று காணும் வண்ணம் சிறப்பாக நடனம் ஆடியவர் சிவபெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கூடினார் உமை தனோடே குறிப்புடை வேடம் கொண்டு

சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர் போலும்

பாடினார் சாம வேதம் பைம்பொழில் பழனை மேயார்

ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.71.9) அப்பர் பிரான், பார்வதி தேவி மற்றும் கங்கை நதி ஆகிய இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடுகின்றார். நாம் உய்ந்தவாறே என்று பன்மையில் கூறுவதன் மூலம், சிவபெருமானைத் தனது உள்ளத்தில் நிறுத்திய அடியார்கள் அனைவரையும் இணைத்து நாம் என்று கூறியதாகவும் பொருள் கொள்ளலாம். அப்பர் பிரான், சிவபெருமானின் திருவடிகளைத் தனது தலை மீது தாங்கியதால் பெருமிதம் கொண்டு, தன்னையே நாம் என்ற பன்மை விகுதியுடன் அழைத்துக் கொண்டார் என்று கூறுவதும் மிகவும் பொருத்தமாக உள்ளது. இந்த பாடலில் அப்பர் பிரான், எவ்வாறு அரக்கன் இராவணனை விட தான் வலிமையில் உயர்ந்தவன் என்பதை மிகவும் நகைச் சுவையாக கூறுகின்றார். கால் பெருவிரல் ஊன்றலின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் அரக்கன் இராவணன் அலறினான். ஆனால், இரண்டு மங்கையரைத் (உமையம்மை மற்றும் கங்கை) தாங்கும் சிவபிரானின் திருவடிகளை தனது மனதினில் தரித்து தான் நிற்கின்றேன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். கருமை நிறம் கொண்ட அலைகள் மிகுந்த கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்து இறைவனின், தாமரை மலர் போன்ற மெல்லிய பாதத்தின் விரல் நுனியின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல், மிகுந்த வலிமை உடையவனாக கருதப்பட்ட அரக்கன் இராவணன் அலறி வீழ்ந்தான். ஆனால், இரண்டு மங்கையர்களைத் தனது உடலில் கொண்டுள்ள சிவபெருமானது செம்பொன் திருவடிகளை எனது உள்ளத்தில் தாங்கி நிற்கின்றேன்: இந்த நிலை, சிவபெருமானின் அருளால் தான் நிகழ்கின்றது: எனவே சிவபெருமானின் அருளினால், துயரங்களிலிருந்து நான் விடுபட்டு விட்டேன் என்பது நிச்சயமாகத் தெரிகின்றது என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

கருமலி கடல் சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்து

ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண்திறல் அரக்கன் உக்கான்

இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம்

திருவடி தரித்து நிற்கத் திண்ணம் நாம் உய்ந்தவாறே

கங்கை நதியினைத் தனது சடையில் மறைத்து வைத்துள்ள பெருமான், உமை அன்னையைத் தழுவுதல் குணமா என்ற கேள்வியினை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் எழுப்புவது, நமக்கு அப்பர் பிரானின் திருநாகைக் காரோணத்தின் பாடலை (4.103.8) நினைவூட்டுகின்றது. வங்கம்=கப்பல்கள்: நாயகன்= மணாளன்: இந்த பாடல், சிவபெருமான் மீது காதல் கொண்ட நாயகியின் கூற்றாக அமைந்த அகத்துறைப் பாடலாகவும் கருதப்படுகின்றது. உமை நங்கை இருக்கையில், கங்கையைத் தனது சடையில் ஏற்ற சிவபெருமான் ஏதேனும் சங்கடத்திற்கு ஆளானாரா அல்லவா என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல், அப்பர் நாயகிக்கும் இருக்கின்றது. எதனால் அத்தகைய ஆவல்? இந்நாள் வரை கங்கை நங்கையை ஏற்றுக் கொண்டதை, உமையம்மை அறியாதவாறு சாமர்த்தியமாக மறைத்து இறைவன் இருந்திருந்தால், தன்னையும் அவ்வாறு ஏற்றுக் கொண்டு இருக்கலாமே என்ற ஏக்கம் அப்பர் நாயகிக்கு ஏற்பட்டது இங்கே வெளிப்படுகின்றது. கப்பல்கள் நிறைந்த கடற்கரை என்று நாகப்பட்டினத்தைக் குறிப்பதன் மூலம். அப்பர் காலத்தில், நாகை கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய நிலை நமக்கு புலனாகின்றது. அதனால் தான் கடலுடன் இணைத்து கடல் நாகை என்றே இந்த பதிகத்தில் குறிப்பிடப் படுகின்றது. கங்கை நதியைத் தனது சடையில் சிவபெருமான் ஏற்றது, வானத்திலிருந்து வேகமாக இறங்கி வந்த கங்கை நதியால், பூமிக்கும் பூமியில் உள்ள உயிரினங்களுக்கும் ஆபத்து ஏதும் ஏற்படாது இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் தனது கற்பனையைக் கலந்து, பெருமானிடம் விளக்கம் கேட்பது போன்று உள்ள அப்பர் பிரானின் பாடல் மிகவும் நயமானது.

வங்கமலி கடல் நாகைக் காரோணத்து எம் வானவனே

எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டது கேட்டு அருளீர்

கங்கை சடையுள் கரந்தாயக் கள்ளத்தை மெள்ள உமை

நங்கை அறியில் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.9.7) அப்பர் பிரான், உமை அன்னை மற்றும் கங்கை ஆகிய இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடுகின்றார். செல்வம் மல்கு என்ற சொல்லினை திருவினார் என்ற சொல்லுடன் இணைத்து விளக்கம் சிலர் காண்கின்றனர். திருவினார்=அருட் செல்வம் உடையவர்கள்; பெருமானின் அருள் செல்வத்தைப் பெற்ற அடியார்கள் சிறந்த செல்வத்துடன் வாழ்வதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். நீரின்றி அமையாது உலகம் என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு. தண்ணீர் தான் உலகின் வளங்களுக்கு ஆதாரமாக இருந்து செல்வம் கொழிப்பதற்கு காரணமாக உள்ளது. திருவருளைத் (உமை அன்னை) உடலில் பாதியாக வைத்துள்ள பெருமான், பொருட் செல்வத்தினை உண்டாக்கும்நீரினை சடையில் ஏந்தியவனாக உள்ளான் என்று நயமாக அப்பர் பிரான் உணர்த்துவதை நாம் இந்த பாடலில் காணலாம். உருவினாள்=அழகிய திருவுருவத்தை உடைய உமையன்னை; பெருமானின் அருள் செல்வத்தைப் பெற்ற அடியார்களின் பொருட் செல்வத்தால் நிறைவாக கொண்டாடப் படும் திருவிழாக்கள் உடையவரும் தங்களது நெஞ்சத்தை இறைவன் பால் வைத்த அடியார்கள் வலம் செய்து வணங்கி வாழ்த்தப்படும் பெருமானாக இருப்பவரும் ஆகிய இறைவன் திருமறைக்காடு தலத்தில், அழகான திருவுருவத்தை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவராகவும், கங்கை நங்கையைத் தனது சடையில் ஏற்றவராகவும் விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திருவினார் செல்வம் மல்கு விழா அணி

மருவினார் வலம் கொள் மறைக்காடரோ

உருவினாள் உமை மங்கையொர் பாகமாய்

மருவினாய் கங்கையைச் சென்னி தன்னிலே

இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.15.6) அப்பர் பிரான், கங்கை மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரையும் குறிப்பிட்டு, அவர்கள் இருவரும் பெருமான் பால் கொண்டுள்ள தீவிரமான அன்பின் காரணமாக, பெருமான் சூடிக்கொண்டுள்ள கொன்றை மலரை, வேறெந்த பெண்ணும் பெறுவதை சகிக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார். இந்த பாடல் தோழிக் கூற்றாக அமைந்துள்ள அகத்துறை பாடலாகும். தோழிகளுடன் சேர்ந்து இறைவனின் திருநாமங்களைச் சொல்லியவாறு தனது மகள் காலம் கழிப்பதைக் கண்ணுற்ற அப்பர் நாயகியின் தாய், அருகில் சென்று தோழிகள் பேசிக் கொள்வதை கவனிக்கின்றாள் போலும். அங்கு சென்றபோது தோழிகள், தனது மகளை ஏளனம் செய்தவாறு இருந்ததை காண்கின்றாள். அவர்களின் பேச்சிலிருந்து அவ்வாறு ஏளனம் செய்வதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்கின்றாள். தோழிகள் செய்த அந்த ஏளனம் பாடலாக இங்கே மிளிர்கின்றது. இதழி=கொன்றை மலர், இங்கே கொன்றை மலர் போன்ற நிறம், அப்பர் நாயகி, பெருமான் மீது கொண்டுள்ள காதல் கைகூடாததால், அந்த ஏக்கத்தில் தனது மேனி பசலை படிந்து காணப்படுகின்றாள். தலைவனின் தீண்டலுக்காக ஏங்கி நிற்கும் தலைவியின் மேனி பிரிவாற்றல் பொறுக்காத நிலையில் சற்று நிறம் மாறி இருப்பதை பசலை பூத்தது என்று இலக்கியத்தில் கூறுவது வழக்கம். அவ்வாறு பசலை பூத்த மேனி இளம் மஞ்சள் நிறத்தில் பொன் போன்று காணப்படுவதால், கொன்றை மலரின் நிறத்தினை ஒத்தது போல் தோன்றும். தலைவியின் மேனி பசலை பூத்து பொன்னிறத்தில் காட்சி அளிப்பதைக் கண்ணுற்ற தோழிகள், அந்த பொன்னிறத்து பசலையை, இறைவன் அளித்த கொன்றை மாலையாக கற்பித்து, தலைவியை கேலி செய்யும் விதமாக தோழிகள் இந்த நிறம் எப்படி வந்தது என்று ஏளனமாக விமர்சிக்கும் பாடல். ஏளனம் செய்வது போல் தோன்றினாலும், தங்களது தலைவியின் மேனியில் பூத்துள்ள பசலை நிறம், தங்களது மேனியில் தோன்றவில்லையே என்ற ஏக்கம் உள்ளூர தொனிப்பதையும் நாம் இந்த பாடலில் உணரலாம். இறைவன் தனது மார்பினில் சூட்டியுள்ள கொன்றை மலர்களால் ஆன மணமாலையை கொடுப்பதற்கு, பார்வதி அன்னை உடன்படாள்; எனவே அவள் காணுமாறு, பெருமானால் கொன்றை மாலையை கொடுத்திருக்க முடியாது. அதே போன்று முடியில் அமைந்துள்ள கங்கை நங்கையின் இசைவு இல்லாமல், தனது முடியில் இருந்த கொன்றை மலரையும் பெருமான் கொடுக்க இயலாது. இவ்வாறு இருக்கையில், தோழிகளே, நமது தலைவியின் உடலில் தோன்றியுள்ள கொன்றை மலரின் பொன் மஞ்சள் நிறம், இடைமருது பெருமானால் எப்படி நமது தலைவிக்கு அளிக்கப்பட்டது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. .

மங்கை காணக் கொடார் மணமாலையை

கங்கை காணக் கொடார் முடிக் கண்ணியை

நங்கைமீர் இடைமருதர் இந்நங்கைக்கே

எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே

பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.32.3) அப்பர் பிரான், பார்வதி தேவி மற்றும் கங்கை ஆகிய இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடுகின்றார். மாது=உமை அன்னை; பெண்மையை மதித்து தேவிக்குத் தனது உடலினொரு பாகத்தை அளித்தவன் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த தலத்து இறைவனின் திருநாமம் ஆதிபுராணர் என்பதாகும். இதனை உணர்த்தும் வண்ணம் ஆதி என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதாக நாம் பொருள் கொள்ளலாம். பூதம் என்பதற்கு பஞ்ச பூதங்கள் என்று பொருள் கொண்டு பஞ்ச பூதங்களின் தலைவன் என்று சிலர் விளக்கம் அளிக்கின்றனர். மாதில் சிறந்தவளாகிய பார்வதி தேவியைத் தனது உடலினில் ஒரு பாகமாக வைத்துள்ள பெருமான், கங்கை நங்கையின் மீது அன்பு கொண்டு அவளைத் தனது சடையில் தாங்குகின்றார். அவர் பூத கணங்களுக்கு தலைவராக திகழ்கின்றார். அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக விளங்கும் பெருமான் பூந்துருத்தி நகரத்தில் உறைகின்றார். அத்தகைய பெருமானின் சிவந்த திருவடிகளின் கீழே இருந்து திருப்பணி செய்யும் வாய்ப்பினை அடியேன் பெற்றேன் என்று குறிப்பிட்டு அப்பர் பிரான் மகிழும் பாடல்.

மாதினை மதித்தான் ஒரு பாகமாக்

காதலால் கரந்தான் சடைக் கங்கையைப்

பூத நாயகன் பூந்துருத்தி நகர்க்கு

ஆதி சேவடிக் கீழ் நாம் இருப்பதே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.40.6) அப்பர் பிரான், கங்கை மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரையும் ஒரே பாடலில் குறிப்பிடுகின்றார். கங்கை மற்றும் உமையம்மை ஆகிய இருவரை மனைவிகளாகக் கொண்டவன் என்பதால், அப்பர் நாயகிக்கு ஒரு விதமான மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு காரணம், தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன் ஒரே மனைவி என்ற கொள்கை உடையவன் அல்லன். எனவே தன்னையும் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு பிறக்கின்றது. தான் சிவபெருமான் பால் வைத்துள்ள அன்பின் தன்மையை அவன் உணர்வான் என்பதால், தனது அன்பின் மிகுதி அவளுக்கு இறுமாப்பினை ஏற்படுத்துகின்றது. இதே பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்டவாறு, இது வரை அவனது வண்ணத்தையும் வடிவினையும் நேரில் கண்டவள் அல்லள் நமது நாயகி. எனவே தனக்கு அடையாளத்தினை உணர்த்துவதற்காக திங்களைச் சடையில் சூடியவாறு சிவபெருமான் வருவான் என்று கற்பனை செய்கின்றாள். கங்கையைத் தனது சடையில் வைத்து, உமை அம்மையையும் தனது உடலில் வைத்து, தனக்கு இரண்டு மனைவியர் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் பரமனார், தான் அவன் பால் வைத்திருக்கும் ஆழமான அன்பின் தன்மையை உணர்த்து நிச்சயம் தன்னைச் தேடி வருவான் என்று இறுமாந்திருக்கும் எனது மகள், தான் யார் என்பதை உணர்த்துவதற்காக, பிறைசூடியாக சிவபெருமான் தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் உள்ளாள் என்று தனது மகளின் நிலையை தாய் குறிப்பிடும் அகத்துறைப் பாடல்.

கங்கையைச் சடை வைத்து மலைமகள்

நங்கையை உடனே வைத்த நாதனார்

திங்கள் சூடித் திருக் கழிப்பாலையான்

இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே

பாண்டி நாட்டுத் தலமாகிய திருப்பூவணம் தலத்திற்கு அப்பர் பிரான் சென்ற போது, பெருமான் தனது நடனக் காட்சியை அவருக்கு காட்டி அருள் புரிகின்றார். தான் கண்ட காட்சியை அப்பர் பிரான் பாடல்களாக வடிக்கும் பதிகத்தின் பாடலில் (6.18.8) அப்பர் பிரான் பெருமானுடன், உமை அன்னை மற்றும் கங்கையை கண்டதாக குறிப்பிடுகின்றார். பொறி அரவு=படத்தில் புள்ளிகள் கொண்ட பாம்பு; செறிகழல்=வீரக்கழல் பொருந்திய கால்; பெற்றம்=எருது; சோலைகள் சூழ்ந்த திருப்பூவணத்துப் புனிதரின் திருவுருவத்தில் வீரக்கழல் பொருந்திய திருவடிகள் தோன்றுகின்றன; திரிபுரத்தை எரித்த வில் தோன்றுகின்றது; சனகாதி முனிவர்கள் நால்வருக்கு அறம் உரைத்த பண்பான செயல் தோன்றுகின்றது; நெற்றியில் உள்ள கண் தெரிகின்றது; அவரது வாகனமாகிய எருது அருகில் நிற்பது தோன்றுகின்றது; அடியார்களுக்கு அவர்களது மறுபிறவியை அறுத்து முக்தி அளிக்கும் கருணைச் செய்கை தோன்றுகின்றது; மலைமகளாகிய உமையம்மையும், சலமகளாகிய கங்கையும் அவரது உடலில் இடம் பெற்றிருப்பது தோன்றுகின்றது; அவரது சடையில் படத்தில் புள்ளிகளை உடைய பாம்பு மற்றும் இளம்பிறைச் சந்திரன் இரண்டும் மிகுந்த அழகுடன் பொலிந்து காணப்படுகின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

செறி கழலும் திருவடியும் தோன்றும்தோன்றும் திரிபுரத்தை எரி செய்த சிலையும் தோன்றும்

நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும்

மறுபிறவி அறுத்தருளும் வகையும் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்

பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம்புனிதனார்க்கே

ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.19.2) அப்பர் பிரான், பெருமானை கங்கையாளைக் கரந்து உமையோடு உடனானான் என்று குறிப்பிடுகின்றார். மேலார்கள்=தேவர்கள்; மேலாடு=மேலே உள்ள ஆகாயத்தில் உலாவும்; பண்ணிலவு=பண்+நிலவு; பண்=வண்டுகளால் இசைக்கப்படும் ரீங்காரம்; நிலவு=நிலையாக பொருந்தி இருக்க; உண்ணிலவு= உள்+நிலவு: உள் நிலவு=சடையின் உள்ளே பொருந்தி அடங்கிய; தெண்ணிலவு=தெள் நிலவு; தெள்=தெளிந்த ஞானம்; பைம்பொழில்=பசுமையான சோலைகள்; தெளிந்த ஞானம் உடைய மதுரை என்பதற்கு இரண்டு விதமாக பொருள் கூறுகின்றனர். மூன்று சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்க்கப்பட்டு தெளிந்த ஞானம் உடைய மதுரை என்றும் திருஞானசம்பந்தரால் பெருமான் தான் உண்மையான மெய்ப்பொருள் என்றும் சிவநெறியே உயர்ந்த நெறி என்றும் தெளிந்த ஞானம் படைத்த மக்கள் நிறைந்த மதுரை நகர் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். அப்பர் பிரான் மதுரைக்கு சென்ற சூழ்நிலையின் பின்னணியில் இரண்டாவது விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளது; திருஞானசம்பந்தர் அனல் வாதம் மற்றும் புனல் வாதங்களில் சமணர்களை வென்று சைவ சமயத்திற்கு புத்துணர்ச்சி அளித்து, பாண்டிய மன்னனும் பெருவாரியான மக்களும் சைவர்களாக மாறிய பின்னர் தானே, அப்பர் பிரான் அந்த தலத்திற்கு செல்கின்றார். எனவே சைவம் தழைத்து விளங்கிய பாண்டிய நாடும் மதுரை மாநகரும் அப்பர் பிரானுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்தது போலும். அந்த மகிழ்ச்சி தான் இங்கே வெளிப்படுகின்றது. வானுலகில் வசிக்கும் தேவர்களுக்கும் மேலானவனும், வானில் உலவிய திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகள் மூன்றினையும் சாம்பல் பொடியாக மாறும் வண்ணம் அழித்தவனும், தொடர்ந்து வண்டுகள் ரீங்காரம் செய்து பண் இசைக்கும் பசுமையான சோலைகள் கொண்ட பழனம் திருத்தலத்தில் உறைபவனும், பசும்பொன்னின் நிறத்தில் திருமேனியை உடையவனும், பால் போன்று வெண்மையான திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் பூசியவனும், தனது கற்றைச் சடையின் உள்ளே பொருந்தும் வண்ணம் கங்கை நதியை அடைத்து வைத்து மறைத்தவனும், உமை அம்மையோடு பொருந்தி இருப்பவனும் ஆகிய இறைவன், திருஞானசம்பந்தரின் வருகையால் உண்மையான மெய்ப்பொருள் சிவபெருமான் என்பதையும் உயர்ந்த சமய நெறி சிவநெறியே என்பதையும் உணர்ந்து தெளிந்த ஞானம் படைத்த மாந்தர்கள் நிறைந்ததும் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப் படுவதும் ஆகிய தென்மதுரை நகரத்தில் உறைகின்றான், அடியேன் அவனது திருவடிகளை சிந்திக்கும் பேறு பெற்றவனாக உள்ளேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை மேலாடு புரம் மூன்றும் பொடி செய்தானைப்

பண்ணிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானைப் பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற்றானை

உண்ணிலவு சடைக் கற்றைக் கங்கையாளைக் கரந்து உமையோடு உடனாகி இருந்தான் தன்னைத்

தெண்ணிலவு தென்கூடல் திருவாலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.25.8) அப்பர் பிரான், மலைமகள் மற்றும் கங்கையாள் ஆகிய இருவரும் பெருமானுடன் நெருக்கமாக இருக்கின்றனர் என்று கூறுகின்றார். அடுதல்=சமைத்தல்; விதிக்கப்பட்ட நெறிமுறைகள் வழுவாமல் இறைவனுக்கு நிவேதனம் படைத்தல் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. இறைவனுக்கு மற்றவர்கள் செய்யும் பணியுடன் தனது பணியினை ஒப்பிட்டு, தான் செய்யும் சிறுபணிகள் இறைவனுக்கு ஏற்குமோ என்ற கேள்வியை இங்கே அப்பர் பிரான் எழுப்புகின்றார். இறைவனுக்குச் செய்யும் திருப்பணிகளுக்கு ஒரு இலக்கணம் வகுத்து, அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த அப்பர் பிரான் தனது பணி, மிகவும் சிறிய தொண்டு என்றும், இறைவன் அதனை ஏற்பாரா என்று சந்தேகம் கொள்ளும்போது நாம் செய்யும் இறைபணிகள் எம்மாத்திரம். எனவே நாம் எவ்வளவு இறைபணி செய்தாலும், இந்த கருத்தினை மனதில் கொண்டு அடக்கமாக இருத்தல் வேண்டும். இது தான், இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப்படும் அறிவுரை. அழகிய நடனம் ஆடித் திருவாரூரில் குடி கொண்டிருக்கும் பெருமானே, உனக்கு குறை ஏதும் இல்லாத வகையில் பலர் உனக்கு திருத்தொண்டு செய்து வருகின்றார்கள். விதித்த நெறிமுறைகள் வழுவாமல், அருமறையோர்கள் உனக்கு தினமும் பூஜை செய்து வழிபடுவதையும், நாரதர் தும்புரு முதலானோர் உன்னைப் புகழ்ந்து பாடி வழிபடுவதையும், தேவர்களும், தேவர்கள் தலைவனாகிய இந்திரனும் உன்னைப் புகழ்ந்து வழிபடுவதையும், உன்னை வழிபடுவதற்காக திருமாலும் பிரமனும் தேடுவதையும், உனது அருகில் உன்னைத் தீண்டியபடியே இருந்து உன்னை விட்டு என்றும் நீங்காமல் உன்னை என்றும் துதித்துக் கொண்டு கங்கையும் மலைமகளும் இருப்பதையும், நான் அறிந்து கொண்டேன். அவர்கள் எல்லாம் உமக்குச் செய்யும் பணிவிடைகள் போன்று பெருமை உடையது அல்ல நான் உனக்குச் செய்யும் தொண்டுகள். எனவே நாயினும் கடையேனாகிய நான் செய்யும் இந்த சிறு தொண்டுகள் உனக்கு ஏற்குமா, நான் இதனை அறியமாட்டேன். இதனையும் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று அப்பர் பிரான் விண்ணப்பம் வைக்கும் பாடல்.

ஆடுவாய் நீ நட்டம் அளவில் குன்றா அவி அடுவார் அருமறையோர் அறிந்தேன் உன்னைப்

பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர் கோனும்

தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும்

கூடுமே நாயடியேன் செய் குற்றேவல் குறையுண்டே திருவாரூர் குடி கொண்டீர்க்கே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய மற்றொரு திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.29.10) அப்பர் பிரான், பெருமானை, பெண்ணிரண்டும் ஆணுமாய் நின்றவன் என்று குறிப்பிடுகின்றார். தேசு=ஒளி, அழகு, புகழ்; தேஜஸ் என்ற வடமொழிச் சொல் தேசு என்று தமிழாக்காம் செய்யப் பட்டுள்ளது. நோக்கி=வருத்தி; பெண்ணிரண்டு=கங்கை மற்றும் உமையம்மை: கயிலை நிகழ்ச்சிக்கு முன்னர், அரக்கன் இராவணன் தசமுகன் என்றே அழைக்கப் பட்டான். கயிலை மலையின் கீழே அகப்பட்டு வருந்தி கதறிய போது, அவனது அழுகுரல் உலகெங்கும் கேட்டது என்பதால் பெருமான், தனது அழுகுரலை உலகெங்கும் கேட்கச் செய்தவன் என்ற பொருள் பட இராவணன் என்று பெயரிட்டதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே தான் பல திருமுறைப் பாடல்களில் அரக்கனுக்கு, பேரும், நாளும், வாளும் கொடுத்து இறைவன் அருள் புரிந்தான் என்று குறிப்பிடப் படுகின்றது. நூறும்=அழித்த; அழகிய பத்து தலைகளை உடைய அரக்கன் இராவணின் அழகும் புகழும் அழியுமாறு, அவனது உடல் கயிலை மலையின் கீழே அகப்பட்டு நசுங்கி வருந்துமாறு, தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவன் சிவபெருமான். பின்னர் அரக்கன் தனது தவறுக்கு வருந்தி, சாம கானம் பாடி இறைவனை துதித்த போது அதனால் மகிழ்வடைந்த பெருமான், அவனது குணத்திற்கு ஏற்ப, இராவணன் என்ற பெயரினையும், அரக்கனுக்கு பெருமை தரும் வகையில் நீண்ட வாழ்நாளும் சந்திரஹாசம் என்று அழைக்கப்பட்ட வாளினையும் அளித்தான். உமையம்மை மற்றும் கங்கை நங்கை ஆகிய இரண்டு பெண்களையும் தனது உடலினில் ஏற்று, தனது ஆண் உருவத்துடன் கலந்து வைத்திருப்பவன் சிவபெருமான்; அனைவருடன் போர் தொடுத்து அவர்களை வென்ற பின்னர், அவர்களை வருத்திய திரிபுரத்து அரக்கர்கள் மூவர்களையும் அவர்களது பறக்கும் கோட்டைகளுடன் அழித்தவனும், புண்ணியத்தின் வடிவமாக இருப்பவனும், திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனும் ஆகிய ஆரூர் பெருமானை அறியாது, அவனை மறந்து நாயினும் கீழான அடியேன் எனது வாழ்நாளில் பெரும்பகுதியை கழித்தது மிகவும் வருந்தத்தக்க செயலாகும் என்று தனது கடந்த கால வாழ்க்கையை நினைத்து அப்பர் பிரான் வருத்தம் தெரிவிக்கும் பாடல்.

சீரார் முடி பத்து உடையான் தன்னைத் தேசு அழியத் திருவிரலால் சிதைய நூக்கிப்

பேரார் பெருமை கொடுத்தான் தன்னைப் பெண்ணிரண்டும் ஆணுமாய் நின்றான் தன்னைப்

போரார் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண்ணீறு அணிந்தான் தன்னை

ஆரூரானை ஆரூரில் அம்மான் தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.47.3) அப்பர் பிரான், மங்கை பங்கா என்றும் கங்கை மணவாளா என்றும் பெருமானை அழைக்கின்றார். வரை=மலை, இங்கே இமயமலை; கழல்=கழலை அணிந்த பெருமானின் திருவடிகள்; அரையன்=அரசன்; தான் இறக்கும் தருவாயில் பெருமானின் திருநாமங்களைச் சொல்லும் வல்லமை தனக்கு இருக்குமாயின், எத்துணை வலிய நோயும் தனக்கு எந்த கெடுதலையும் செய்யாது என்றுஅப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். நோய் என்று உடலுக்கு வரும் நோயினை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடவில்லை. இறக்கும் சமயத்தில் உடலுக்கு எந்த விதமான நோய் வந்தாலும் அதனால் என்ன மாற்றம் நேரிடப் போகின்றது. அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவது, பழைய பிறவிகள் முதலாக அந்த பிறவி வரை ஈட்டிய வினைத் தொகைகளையே நோயாக, உயிரினைப் பற்றும் நோயாக குறிப்பிடுகின்றார். அந்த வினைக் குவியல்கள் தானே, இறந்த பின்னர் அந்த உயிருக்கு அடுத்த பிறவி உள்ளதா, இருந்தால் அந்த பிறவி எத்தகையதாக இருக்கும் என்பதை தீர்மானிக்கின்றது. இந்த கருத்தினை உள்ளடக்கியே, தான் இறக்கும் சமயத்தில் இறைவன் அஞ்சேல் என்று சொல்ல வேண்டும் என்றும், இறக்கும் சமயத்தில் அவனது திருநாமங்களைச் சொல்லும் வண்ணம் தான் இருக்க வேண்டும் என்றும் அப்பர் பிரான் பல பாடல்களில் வேண்டுகின்றார். மலைமகளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனே, கங்கை நதியைத் தனது சடையில் தரித்த மணவாளனே, உனது திருநாமங்களை நான் சொல்லிக் கொண்டு இருக்கையில் எனது உயிர் போகும் என்றால், எத்துணை வலிமை மிக்கதாக இருப்பினும் அந்த நோய் என்னை எவ்வாறு தீண்ட முடியும். உள்ளம் கசிந்துருகி கரையுமாறு, கண்களில் நீர் பெருகி, மிகுந்த அன்புடன், உனது திருவடிகளை எப்போதும் நினைத்து வழிபடும் அடியார்களுக்கு அரசனாக விளங்கும் பெருமானே, நீர்வளம் மிகுந்து குளிர்ந்த ஆவடு துறை தலத்தில் உறையும் அமரர்கள் தலைவனே, அஞ்ச வேண்டாம் என்று அடியேனுக்கு ஆறுதல் சொல்வாயாக என்று அப்பர் பிரான் இறைவனிடம் இறைஞ்சும் பாடல்.

வரையார் மடமங்கை பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்றன் நாமம்

உரையா உயிர் போகப் பெறுவேனாகில் உறுநோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே

கரையா நினைந்துருகிக் கண்ணீர் மல்கிக் காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு

அரையா அடியேனை அஞ்சல் என்னாய் ஆவடு தண்துறை உறையும் அமரர் ஏறே

மலைமகளையும் கங்கையையும் அழைத்துக் கொண்டு வலம்புரம் சென்ற பெருமான், தன்னை விட்டுவிட்டுச் சென்றதாக குறைப்படும் அப்பர் நாயகியின் கூற்றாக அமைந்த பாடல் வலம்புரம் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடலாகும் (6.58.2). இதே பதிகத்தின் முதல் பாடலில் கூறியவாறு, தன்னைப் பின்தொடர்ந்த பெண்கள் அனைவரையும் தவிக்கவிட்டு வலம்புரத்து திருக்கோயிலில் புகுந்த பெருமான், எவரையும் அழைத்துச் செல்லாதிருந்தால், அப்பர் நாயகியின் வருத்தம் குறைவாக இருந்திருக்கும் என்று தோன்றுகின்றது. ஆனால் பெருமான், தங்களை விட்டுவிட்டு, பார்வதி தேவியையும், கங்கை நங்கையையும் உடன் அழைத்துச் சென்றது, அப்பர் நாயகியின் வருத்தத்தை வளரச் செய்தது போலும். அவர்கள் இருவரை மட்டும் அழைத்துக் கொண்டு பெருமான் சென்றார் என்று தனது வருத்தத்தின் காரணத்தை குறிப்பிடும் பாடல். தன்னுடன் பூதகணங்களை அழைத்துச் சென்றவர் தங்களை அழைத்துச் செல்லாதது ஏன் என்ற நியாயமான கேள்வியும் இங்கே வெளிப்படுகின்றது. இங்கே மறையவர்கள் சொல்வதாக அப்பர் நாயகி கூறுவது நமக்கு மற்றொரு செய்தியையும் உணர்த்துகின்றது. எருதின் மீது விரைந்து சென்ற பெருமான், இந்த பெண்மணிகள் இருந்த திக்கினை நோக்கவில்லை போலும். அதனால் தான், பெருமான் சென்றதை இவர்கள் அறியவில்லை; பின்னர் மறையோர்கள் சொல்ல தெரிந்து கொண்டதாக இங்கே உணர்த்தப் படுகின்றது. சிலை=வில்; நவின்ற=பொருந்திய; கொலை நவின்ற=மதம் மிகுத்ததால் கொலைக் குணத்துடன் திரிந்த யானை: களி யானை=மதத்தினால் ஏற்பட்ட மயக்கத்தில் இருந்த யானை; உரிவை=தோல்; திரிதரும்=பல இடங்களிலும் திரிந்தவர்; மேரு மலையை வளைத்து செய்யப்பட்ட வில்லினில் பொருந்திய அம்பினைக் கொண்டு, வானில் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் அழித்த சிவபெருமான் தீவண்ண மேனியராய் விளங்குகின்றார். தாருகவனத்து முனிவர்களால் ஏவிவிடப்பட்ட மதம் கொண்ட யானையை கிழித்து அதன் தோலினைத் தனது உடலில் போர்வையாக போர்த்துக் கொண்டவர் சிவபெருமான். அவரது செயலைப் போற்றி, சிறந்த வானவர்களும் அவரை வணங்குகின்றார்கள். கூத்தாடியவாறு, தாருகவனத்தின் பல இடங்களிலும் திரிந்த பெருமான், விரைந்து செல்லும் இடபத்தின் மேல் ஏறிக் கொண்டு, தன்னுடன் பார்வதி தேவியையும் கங்கை நங்கையையும் அழைத்துக் கொண்டு, பூத கணங்கள் சூழச் சென்றதை கண்டதாக, பல கலைகளிலும் பழகிய அந்தணர்கள் கூறியதை நாங்கள் கேட்டோம். எங்களை இங்கே தவிக்க வைத்து, பார்வதி தேவி மற்றும் கங்கையுடன் அவர் சென்று வலம்புரத்து கோயிலில் புகுந்து நிலையாக நிற்பது எங்களது வருத்தத்தை மேலும் அதிகரிக்கின்றது என்று அப்பர் நாயகி கூறுவதாக அமைந்த பாடல்.

சிலை நவின்றதொரு கணையால் புரம் மூன்று எய்த தீவண்ணர் சிறந்து இமையோர் இறைஞ்சி ஏத்தக்

கொலை நவின்ற களியானை உரிவை போர்த்துக் கூத்தாடித் திரிதரும் அக்கூத்தர் நல்ல

கலை நவின்ற மறையவர்கள் காணக்காணக் கடுவிடை மேல் பாரிடங்கள் சூழக் காதல்

மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

தலையாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.79.3) அப்பர் பிரான், கங்கை நதியைத் தனது சடையில் கரந்திட்ட பெருமான், உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கூறுகின்றார். மெய்த்தவம்=உண்மையான தவம்; உண்மையான தவத்தினை ஏற்றுக் கொள்ளும் இறைவனை மெய்த்தவன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அடியார்கள் செய்யும் திருப்பணிகளை இறைவன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. சந்திரனைத் தனது சடையில் ஏற்ற தன்மையை உடையவன் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், இறைவனை விகிர்தன் என்று அழைக்கின்றார். தக்கனது சாபத்தால் தனது கலைகள் அனைத்தும் தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரனை காப்பாற்றுவார் எவரும் இன்றி சந்திரன் தவித்த போது, பிரமனை சந்திரன் அணுகி அவரது அறிவுரையை நாடினான். சிவபெருமான் ஒருவர் மட்டுமே சந்திரனை காக்க வல்லவர் என்று பிரமன் உணர்த்த சந்திரனும் பெருமானை நாடி அவரிடம் சரண் அடைந்து புது வாழ்வு பெற்றான். இவ்வாறு, வேறு எவரும் செய்ய முடியாத செயலை செய்து சந்திரனுக்கு அருள் புரிந்ததால், விகிர்தர் என்று அழைத்து, பெருமான் ஏனையோரிடமிருந்து மாறுபட்டவர் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். எய்த்து=உடலினை வருத்தி பயன் ஏதும் அடையாத நிலை. பிறவி எடுத்ததன் நோக்கமே, இறைவனின் திருப்பாதங்களை பற்றிக் கொண்டு நிலையான இன்பம் தரும் வீடுபேற்றினை அடைவது தானே. அந்த நெறியினில் தனது உடலினை ஈடுபடுத்தாது, பல வேறு வகைகளில் சமணக் கோட்பாடுகளின் வழியே தனது உடலை வீணாக வருத்திக் கொண்டு திரிந்ததாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தலத்து இறைவனின் திருநாமத்தை சென்ற பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான். உமையன்னை என்று தலத்து பிராட்டியின் திருநாமத்தை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அடியார்கள் செய்யும் திருப்பணிகளை உண்மையான தவமாக ஏற்றுக் கொண்டு மகிழ்பவனும், வேதங்களாகவும் வேதங்களின் மூலமாக இருப்பவனும், ஒளியுடன் விளங்கும் சந்திரனைத் தனது சடையில் அணிந்து அவனுக்கு மறுவாழ்வு அளித்த விகிர்தனும், சமணக் கோட்பாடுகளை பின்பற்றி வீணான தவங்களை மேற்கொண்டு உடலினை வருத்திக் கொண்டு திரிந்து கொண்டு துன்பக் கடலில் விழவிருந்த அடியேனை அவ்வாறு விழாத வண்ணம் ஏற்றுக் கொண்டவனும், பொய்யான தவங்களில் ஈடுபடுவோர் அறிய முடியாத இயல்பினனாக உள்ளவனும், கங்கையைத் தனது சடையில் மறைத்து வைத்துள்ளவனும், உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும், அனைவர்க்கும் உயர்ந்தவனாக விளங்குபவனும் ஆகிய இறைவனை, தலையாலங்காட்டில் உறையும் தலைவனைச் சார்ந்து வாழாமல், எனது வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக கழித்து விட்டேன் என்று தனது வருத்தத்தை அப்பர் பிரான் தெரிவிக்கும் பாடல்.

மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இளமாமதி சூடும் விகிர்தன் தன்னை

எய்த்து அவமே உழி தந்த ஏழையேனை இடர்க்கடலில் வீழாமே ஏற வாங்கிப்

பொய்த்தவத்தார் அறியாத நெறி நின்றானைப் புனல் கரந்திட்டு உமையொடு ஒரு பாகம் நின்ற

தத்துவனைத் தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே

ஓணகாந்தன்தளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.5.2) சுந்தரர், பார்வதி தேவி மற்றும் கங்கை ஆகிய இருவரையும் குறிப்பிடுகின்றார். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரிடமும் தனது தேவைகளைச் சொல்லி உதவி கேட்கும் பழக்கம் இல்லாத சுந்தரர், பெருமான் தனக்கு உதவி செய்வதில் தாமதம் செய்ததால், தனக்கு ஏற்பட்ட வருத்தத்துடன் பாடிய பாடல் இந்த பாடல். தான் பெருமானிடம் வேண்டுவதை, நன்கு அறிந்த, விநாயகர், முருகப் பெருமான், பார்வதி தேவி மற்றும் கங்கை ஆகியோர் பெருமானுடன் இருந்த போதிலும், பெருமானிடம் ஏதும் சொல்லாமல் வாய் மூடி மௌனிகளாக இருக்கும் நிலை கண்டு வருத்தம் அடையும் பாடல். கோற்றட்டி என்ற சொல்லினை இரண்டாக பிரித்து, இரண்டு விதமாக பொருள் கொண்டாலும், இரண்டும் இங்கே பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம். கோல் தட்டி என்று பிரித்து, கோல் என்ற சொல்லுக்கு ஆணை என்று பொருள் கொண்டு, பெருமானின் ஆணையை மீறும் விதமாக தேவி செயல்பட மாட்டாள் என்பது ஒரு வகை பொருள். கோன் தட்டி என்று பிரித்து, கோன் என்பதற்கு தலைவன் என்று பொருள் கொண்டு, தனது தலைவனாகிய பெருமானின் சொல்லை மீறி தேவி ஆட்கொள்ள மாட்டார் என்று பொருள் கொள்வது இரண்டாவது வகை. முருகப் பெருமானை ஏதும் அறியாத சிறு பிள்ளை என்று கூறுகின்றார். அடியார்களின் குறையினை நீக்குவதற்கு பெருமான் ஏதும் செய்யாத நிலையில், பெருமானுடன் இருப்போரும் அந்த தவறினை திருத்த முடியாத நிலையில் இருக்கும் சூழ்நிலையில், தான் பெருமானுக்கு ஆட்பட மாட்டேன் என்று மிகுந்த கோபத்துடன் கூறுகின்றார். இந்த பதிகம் பாடி முடிக்கப் பட்ட பின்னர், பெருமான் சுந்தரருக்கு பொற்கிழி தந்தார் என்று செவிவழிச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

திங்கள் தங்கு சடையின் மேலோர் திரைகள் வந்து புரள வீசும்

கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறு தாரி

அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கோற்றட்டி ஆளார்

உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன்தளி உளீரே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.54.8) சுந்தரர், பார்வதி தேவி மற்றும் கங்கை ஆகிய இருவரையும் குறிப்பிடுகின்றார். பரவையாரை திருவாரூரில் மணந்த பின்னர், சங்கிலியாரை திருவொற்றியூரில் சந்தித்த சுந்தரர் அவரையும் மணந்து கொள்கின்றார். அப்போது, பரவையாரை நினைத்துப் பார்க்காமல், சங்கிலியாரிடம், ஒற்றியூரை விட்டு பிரியேன் என்று சத்தியம் செய்து கொடுக்கின்றார். ஆனால் சில மாதங்கள் ஒற்றியூரில் சங்கிலியாருடன் வாழ்ந்த பின்னர், திருவாரூர் செல்ல வேண்டும் என்று விரும்பவே, ஒற்றியூரை விட்டு அகல்கின்றார். சங்கிலியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறிய குற்றத்திற்காக, சுந்தரர் தனது கண் பார்வையினை இழக்கின்றார். அந்த சமயத்தில் அருளிய பதிகம் இந்த பதிகம். தான் பரவையாரை நினைத்துப் பார்க்காமல், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டது சுந்தரரின் நினைவுக்கு வந்தது போலும், ஒருகால் பரவையாரை அப்போது நினைத்திருந்தால், சங்கிலியாருக்கு, ஒற்றியூரை விட்டு பிரியேன் என்று சத்தியம் செய்து கொடுக்காமல் இருந்திருப்போம் என்று நினைத்தார் போலும். அந்த சத்தியத்தால் தானே, தனது கண்களை இழக்க நேரிட்டது என்று நினைத்தார் போலும். பெருமானுக்கு உமை அன்னை மற்றும் கங்கை ஆகிய இரண்டு மனைவியர் இருப்பதை நினைவு கூர்ந்த சுந்தரர், பெருமான் கங்கையை ஏற்றுக் கொண்ட போது, பார்வதி தேவியை நினைக்காமல் இருந்தார் என்று இந்த பாடலில் கூறுகின்றார். தேவியும் பெருமானும் வேறுவேறல்ல என்பதை நாம் அறிவோம். எனினும் சுந்தரர் தனது கண்களில் பார்வையை இழந்த பின்னணியில் பெருமான் செய்தது தவறு என்று குறிப்பிட்டாலும், பெருமானுக்கு அடிமையாகிய தான், அந்த தவற்றினை சுட்டிக் காட்டும் தகுதி படைத்தவன் அல்லன் என்றும் கூறுகின்றார்.

கூடினாய் மலை மங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம் உடையாளைச்

சூடினாய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்கும் சொல்லுமாமே

வாடி நீ இருந்து என் செய்தி மனமே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி

ஊடினால் இனி யாவது ஒன்று உண்டே ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே

திருக்கோலக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.62.4) சுந்தரர், பார்வதி தேவி மற்றும் கங்கை ஆகிய இருவரையும் குறிப்பிடுகின்றார். ஆத்தம்=நெருக்கம்; தயங்கிய= பொருந்திய; மட மான்=இளம் மான் கன்று போன்று அழகிய உமை அன்னை; மிசை=உள்ள; வான் மிசை=பகீரதனின் தவத்தினால் நிலவுலகினில் பாய்ந்த கங்கை நதி அதற்கு முன்னர், வானுலகில் இருந்த தன்மை உணர்த்தப் படுகின்றது. தீர்த்தன்=தூயவன்; கங்கை நதியைக் கரந்த செயல் பெருமானுக்கு எந்த விதத்திலும் இழிவினை ஏற்படுத்தவில்லை என்பதை குறிப்பிட, தீர்த்தன் என்றார் போலும். புண்ணிய தீர்த்தம் என்று கருதப்படும் தன்மைக்கு கங்கை நதியை உயர்த்திய தன்மை கருதி, தீர்த்தன் என்று குறிப்பிட்டார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

ஆத்தம் என்றெனை ஆள் உகந்தானை அமரர் நாதனைக் குமரனைப் பயந்த

வார்த் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசைக் கங்கையைக் கரந்த

தீர்த்தனைச் சிவனை செழுந்தேனைத் தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும்

கூத்தனைக் குருமாமணி தன்னைத் கோலக்காவினில் கண்டு கொண்டேனே

திருவாசகம் திருச்சாழல் பதிகத்தின் ஏழாவது பாடலில் (8.12.7) மணிவாசக அடிகளார், உமை அன்னை மற்றும் கங்கை ஆகிய இருவரையும் குறிப்பிடுகின்றார். மற்றொருத்தி=-கங்கை நதி; சலமுகம்=வஞ்சனையான எண்ணம்; சலம்=சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். உள்ளொன்று வைத்து அதனை வெளிக்காட்டாமல் செயல்படும் தன்மை; தனது விருப்பத்திற்கு மாறாக நிலவுலகம் செல்லுமாறு பணிக்கப் பட்டதால், கோபம் கொண்ட கங்கை, மிகுந்த வேகத்துடன் பாய்ந்து பூமியையே புரட்டி அடித்துக் கொண்டு பாதாளத்தில் சேர்த்துவிடும் வஞ்சக எண்ணத்துடன், ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து கீழே பாய்ந்தது. ஆனால் பெருமான் தனது விரித்த சடையில் கங்கை நதியைத் தாங்கிக் கொண்டு, தனது சடை ஒன்றினில் கங்கையை மறைத்து வைத்தார். பின்னர் பகீரதனின் வேண்டுகோளுக்கு இரங்கி, மெதுவாக விடுவிக்கவே, கங்கை நதி பாதாளம் சென்று, சகர புத்திரர்களின் சாம்பலைக் கரைத்து அவர்களுக்கு நற்கதியை தந்தது. இந்த நிகழ்ச்சியின் பின்னர், தன்னில் நீராடுவோரின் பாவங்களைக் களையும் புண்ணிய நதியாக கங்கை கருதப்படுகின்றது. அன்று இறைவன் கங்கை நதியைத் தனது சடையில் தாங்கியிராவிட்டால், கங்கை நதி பூமியை புரட்டிக் கொண்டு பாதாளத்தில் சேர்த்திருக்கும் என்பதையே அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பிலமுகம்=பாதாளம்; பெரும் கேடு=பேரழிவு; தரணி=பூமி. மலைமகளாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருக்கும் பெருமான், மற்றொரு பெண்ணாகிய கங்கையைத் தனது சடையில் வஞ்சகமாக மறைத்து வைத்திருப்பது எதற்காக என்பதே தடை. மிகுந்த வெள்ளப் பெருக்குடன் தேவலோகத்திலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி பெருமானின் சடையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேக்கப்படாமல் இருந்திருந்தால், கங்கை நதி பூமியையே புரட்டி அடித்துக் கொண்டு பாதாளத்தில் சேர்த்து, பேரழிவினை ஏற்படுத்தி இருக்கும். எனவே பெருமான் கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றது, பூமிக்கு கங்கை வஞ்சனையாக இழைக்கவிருந்த, பெரும் கேட்டினை தவிர்ப்பதற்காக என்பதை புரிந்து கொண்டு, அந்த தடை முறிக்கப் பட்டது என்று உணர்வாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மலைமகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்றொருத்தி

சலமுகத்தால் அவன் சடையில் பாயும் அது என்னேடீ

சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல் தரணி எல்லாம்

பிலமுகத்தே புகப் பாய்ந்து பெரும் கேடாம் சாழலோ

திருவாசகம் அருட்பத்து பதிகத்தின் பாடலில் (8.29.3) மணிவாசக அடிகளார், ஏலவார் குழலிமார் இருவர் தங்கள் நாயகன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். நாம் துன்பங்களால் வருந்தி துயரடைந்து இருக்கும் நிலையில், நமது துயரத்தை துடைக்காவிடினும் பரவாயில்லை, எவரேனும் ஆதரவாக ஒரு வார்த்தை பேச மாட்டாரா என்று நமது மனம் துடிப்பது இயற்கை. அவ்வாறு தான் மணிவாசகரும் ஏங்குகின்றார். ஆனால் நமக்கும் அவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம். நாம், நமக்கு நெருங்கிய உறவினரோ அல்லது நண்பரோ, நம்மிடை வந்து நமது உடல் நிலை எவ்வாறு உள்ளது, மனநிலை எவ்வாறு உள்ளது என்று கேட்டால், நாம் சற்று ஆறுதல் அடைவோம். ஆனால் மணிவாசகரோ இறைவன் அவ்வாறு கேட்க மாட்டாரா என்று ஏங்குகின்றார். அந்த ஏக்கம் தான் இந்த பதிகத்தின் பாடல்களாக வெளிப்படுகின்றன. ஏன் அவ்வாறு மணிவாசகர் ஆசைப் படுகின்றார். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள், நம்மைத் தேற்றும் முகமாக நம்மை விசாரித்தாலும், பெரும்பாலும் அவர்களுக்கு நமது வருத்தத்தைத் தீர்க்கும் ஆற்றல் இல்லாமல் போகலாம் ஆனால் இறைவனோ நமது துன்பங்கள் அனைத்தையும் களையும் ஆற்றல் படைத்தவர். அத்தகைய ஆற்றல் உடைய ஒருவர் நம் மீது அக்கறை கொண்டு விசாரிக்க முன்வருகின்றார் என்றால், அவர் அத்துடன் நிறுத்த மாட்டார் அல்லவா. அதனால் தான், இறைவன் அவ்வாறு விசாரித்தாலே போதும் என்று திருப்தி அடைந்தவராக, இறைவனே அதெந்துவே என்று கேட்டு அருள் புரிய மாட்டாயா என்று பதிகத்தின் பாடல் தோறும் அடிகளார் இறைஞ்சுகின்றார். அது என்று நமது வருத்தத்திற்கு காரணம். எந்து எப்படி உள்ளது, காரணம் என்ன என்பதாகும். தான் இறைவனை அழைக்கும் போது வாளா இராமல் ஏன் என்றாவது கேள் என்று இறைவனிடம் அடிகளார் வேண்டுகின்றார். ஆதரித்து=விரும்பி, நீ ஒருவனே எனது பற்றுக்கோடு என்ற எண்ணத்துடன் அழைத்து. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானை தான் ஆதரித்து அழைப்பதாக அடிகளார் கூறுகின்றார் காமனை எரிப்பதற்காக நெருப்புப் பொறிகள் வெளிப்பட்ட நெற்றிக் கண் என்பதை குறிப்பிட, செங்கண் என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். நற்காமன்=நல்ல அழகினை உடைய மன்மதன்; அங்கணன்=அழகிய கண்களை உடையவன்; கண்களுக்கு அழகு கருணை பொழிவது என்பதால், கருணையாளன் என்று பொருள் கொள்வது பொருத்தம்.

எங்கள் நாயகனே என்னுயிர்த் தலைவா ஏலவார் குழலிமார் இருவர்

தங்கள் நாயகனே தக்க நற்காமன் தனதுடல் தழலெழ விழித்த

செங்கண் நாயகனே திருப்பெருந்துறையில் செழுமலர் குருந்தம் மேவிய சீர்

அங்கணா அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.13.10), கருவூர்த் தேவர், பெருமான் தனது சடையில் தங்கிய கங்கை நதியினை, சடையில் மறைத்து வைத்ததன் காரணத்தை நயமாக உணர்த்துவதை உணரலாம். மருங்கு=அருகே; கங்கை நதியினைத் தனது சடையில் தரித்திருப்பதை, பார்வதி தேவி கண்டால், கோபம் கொள்வாள் என்பதால், தேவிக்கு தெரியாத வண்ணம், சடையினில் பெருமான் கங்கை நதியினை மறைத்து வைத்தார் என்று கருவூர்த் தேவர் மிகவும் நயம்பட கூறுகின்றார். அலம்ப=ஒலி செய்ய; சிலம்பு ஒலிக்க பெருமான் நடமாடுவதைக் காணும் தேவர்கள் மலர்மாரி பொழிந்து தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்கள் என்று கருவூர்த் தேவர் கூறுகின்றார். மேலும் பெருமான் தனது திருக்கரத்தினை, கருவூர்த்தேவர், தனது தலையின் மீது வைத்து அருள் புரிந்ததாகவும் கூறுகின்றார்.

அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடிச் சிலம்பு அலம்ப வந்து ஒரு நாள்

உங்கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக் கொண்டு அருளினை மருங்கில்

கொங்கை கொண்டு அனுங்கும் கொடியிடை காணில் கொடியன் என்று அவிர்சடை முடி மேல்

கங்கை கொண்டிருந்த கடவுளே கங்கை கொண்ட சோளேச்சரத்தானே

கங்கை நதிக்கும் பிராட்டிக்கும் இடையே இருந்த வேறுபாட்டினை உணர்த்தும் முகமாக, காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி பாடலில், பார்வதி தேவியைத் தனது உடலில் பெருமான் ஏற்றுக் கொண்டது, பார்வதி தேவியின் தகுதிக்கும் பெருமைக்கும் உரிய செயல் என்று கூறுகின்றார். இருவரையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட பெருமானே என்று அழைக்கும், அம்மையார் பெருமானை நோக்கி, உமை நங்கை மற்றும் கங்கை ஆகிய இருவரில் அன்பு மிகுதியால் உன்னுடன் உறவு கொண்டவர் யார் என்று வினவுதல், மிகவும் நயமாக உள்ளது. சலம் என்றால் வஞ்சனை என்று பொருள். எனவே, சலமகள் என்று குறிப்பிட்டு, கங்கை நதி தேவலோகத்திலிருந்து கீழே இறங்குகையில் வஞ்சக எண்ணத்துடன் கீழே இறங்கினாள் என்று கூறுகின்றார். எனவே சலமகள் எவ்வாறு அன்பு மிகுதி உடையவளாக இருக்க முடியும் என்பதை சொல்லாமல் சொல்லும் நேர்த்தி ரசிக்கத்தக்கது.

அவளோர் குலமங்கை பாகத்து அகலாள்

இவளோர் சலமகளும் ஈதே — தவள நீறு

என்பணிவீர் என்றும் பிறந்தறியீர் ஈங்கு இவருள்

அன்பணியார் சொல்லுமின் ஈங்கு ஆர்

இந்த பாடலில் திருஞானசம்பந்தர் பெருமான் பல இடங்களுக்கும் சென்று பலி தேடுவதை, ஐயம் தேர்ந்து உழல்வார் என்று அழைக்கின்றார். தேர்ந்து=ஆராய்ந்து தேடி; பக்குவப்பட்ட உயிர்களைத் தேடிச் செல்லும் பெருமான், அத்தகைய உயிர்கள் பிச்சையாக அளிக்கும் மலங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, அந்த உயிர்களுக்கு முக்தி நிலையினை பரிசாக அளிக்கின்றான். பொதுவாக ஐயம் என்ற சொல்லுக்கு பிச்சை என்று பலரும் பொருள் கொண்டாலும், ஐயம் என்ற சொல்லும் பிச்சை என்ற சொல்லும் பொருளில் சற்றே மாறுபடுகின்றன. ஆண்டாள் நாச்சியார் ஐயமும் பிச்சையும் என்று இரண்டு சொற்களையும் திருப்பாவை பதிகத்தின் பாடலில் குறிப்பிடுகின்றார். நம்மை விடவும் உயர்ந்தவர்களுக்கு, நாம் மிகவும் பணிவுடன் அளிப்பது ஐயம், பலி; தன்னிடம் ஏதும் இல்லாது, தங்களது உயிர் பிழைக்க வேண்டி, உணவு கேட்டு இரப்போர்க்கு இரக்கத்தின் அடிப்படையில் அளிப்பது பிச்சை. ஐயம் என்ற சொல், பிட்‌ஷை என்ற வடமொழிச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல். ஐயம் இட்டுண் என்பது தானே தமிழ் மூதாட்டி ஔவைப் பிராட்டியின் மொழி. மகான்களுக்கு பிட்ஷா வந்தனம் செய்வது சிறப்பாக கருதப் படுகின்றது அல்லவா.

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.40.2) திருஞானசம்பந்தர், தான் எந்தியுள்ள வெண்டலையில் ஐயம் ஏற்பதற்காக பெருமான் செல்கின்றார் என்று கூறுகின்றார். புரை=ஓட்டை; தசைகள் நீக்கப்படுவதால் ஏற்பட்ட ஓட்டை, சேர்த்தல்=மனதினால் சேர்ந்து பிரியாது இருத்தல், இடைவிடாது தியானித்தல்; வரை=மலை, இமயமலை; விரை=மணம்; இடையில் கட்டிய கோவண ஆடையின் மேலோர் அரவத்தினைச் சுற்றி தனது விருப்பம் போன்று அந்த பாம்பினை அசைப்பவனும், ஓட்டை உடைய வெண்தலை ஓட்டினைத் தனது கையில் ஏந்தி பலி ஏற்கச் செல்பவனும், போர்க்குணம் கொண்ட இடபத்தின் மீதேறி எங்கும் திரிபவனும், அனைவரும் புகழும் வண்ணம் மலை மங்கை என்று அழைக்கப்படும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளவனும் ஆகிய பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் நறுமணம் மிகுந்த சிறந்த மலர்களை தூவி, விரிந்த சடையினை உடைய பெருமானது திருவடிகளை பணிந்து வணங்கி இடைவிடாது அவனது திருவடிகளை தியானித்து இருப்போமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அரை கெழு கோவண ஆடையின் மேலோர் ஆடரவம் அசைத்து ஐயம்

புரை கெழு வெண் தலை ஏந்திப் போர்விடை ஏறிப் புகழ

வரை கெழு மங்கையது ஆகம் ஓர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்க்

விரை கமழ் மாமலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம்

பேணுப்பெருந்துறை என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.42.1) திருஞான சம்பந்தர் பெருமானை செல்வர் என்று அழைக்கின்றார். பொதுவாக, அடுத்தவரிடம் பிச்சை ஏற்போர், ஒரு விதமான தயக்கம், வெட்கம் காரணமாக உடலும் உள்ளமும் குறுகிய தன்மை உடையவர்களாக, தமக்கு ஏதும் கிடைக்காதா என்ற நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் இருப்பதை காண்கின்றோம். ஆனால் பிச்சை ஏற்கும் பெருமானோ இறுமாப்புடன் இருப்பதாகவும், பிச்சை இடுவீர்களாக என்று கட்டளை இடுபவராகவும் இருக்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் பெருமான், தான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் தங்களது மலங்களை பிச்சையாக இடும் உயிர்களுக்கு, செல்வத்தை அளிக்கும் செல்வந்தர் என்பதை செய்தொழில் பேணி ஓர் செல்வர் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். முக்திச் செல்வத்தை தனக்கென்று மட்டும் வைத்துக் கொள்ளாமல் தன்னைப் பேணி போற்றும் அடியார்களுக்கு அருளும் செல்வர் அல்லவா பெருமான். பெய்தல்=இடுதல்; செய்தொழில் பேணி=தாங்கள் செய்ய வேண்டிய தொழில்களை போற்றி செய்பவர்கள்; பிறவி எடுத்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை, உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானைப் போற்றிப் புகழ்ந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற முயற்சியில் ஈடுபடுவது தானே. அம்மான்=அழகிய நோக்கி=மான் போன்ற மருண்ட பார்வை உடைய பார்வதி தேவி; தொல்புகழ்=பண்டைய நாளிலிருந்து அழியாமல் நிலைத்து நிற்கும் புகழினை உடையவர்;

பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றி வெண்கொம்பு ஒன்று பூண்டு

செம்மாந்து ஐயம் பெய்கென்று சொல்லிச் செய்தொழில் பேணி ஓர் செல்வர்

அம்மான் நோக்கிய அந்தளிர் மேனி அரிவை ஓர் பாகம் அமர்ந்த

பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணுப் பெருந்துறையாரே

கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.73.5) திருஞானசம்பந்தர், பெருமான் ஊர்கள் தோறும் ஐயம் ஏற்கின்றார் என்று கூறுகின்றார். தார்=மாலை; கார்=மேகம்; கார் கொள்=மேகம் போன்று கருமை நிறம் பொருந்திய; சேடர்=சிறந்த ஒழுக்கம் உடையவர், சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்; வெந்நோய்=கொடிய நோய்; பல ஊர்களுக்கும் சென்று பிச்சை ஏற்ற பெருமான், தனக்கு கொடிய நோய் உண்டாக்கியதாக சம்பந்த நாயகி கூறுவது பற்றி நாம் சற்று சிந்திக்க வேண்டும். பல ஊர்களுக்கும் சென்ற பெருமான் தனது இல்லத்திற்கும் வந்தார் என்பதையும், அவ்வாறு வந்த அவரின் அழகினில் மயங்கிய தனக்கு, அவரது பிரிவு வருத்தத்தையும், வருந்திய உள்ளத்தில் காதல் நோயினையும் ஏற்படுத்தியது என்பதையும் சம்பந்தர் நாயகி உணர்த்துவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். மாலையாக கோர்க்கப்பட்ட கொன்றை மலர்களையும் குளிர்ந்த பிறைச் சந்திரனையும் தனது தலைமாலையாக சூட்டிக் கொண்ட இறைவன், சிறப்பு மிக்க பாடல்களை பாடியவராக அதற்கேற்ப சிறந்த நடனம் ஆடியவராக, ஒழுக்க சீலராக பெருமான் எனது இல்லம் வந்தார். பல ஊர்களும் சென்று பிச்சை ஏற்ற பெருமான் எனது இல்லம் வந்த போது, நான் அவரது அழகினில் நற்பண்புகளில் ஆற்றலில் மயங்கி அவர் பால் தீராத காதல் கொண்டேன். எனது காதல் ஈடேறாத காரணத்தால், எனக்கு காதல் நோய் வாய்த்தது. இந்த நிலைக்கு காரணமாக உள்ள பெருமான், தனது கழுத்தினில் ஆலகாலம் உட்கொண்டதால் கருமை நிறம் பதித்து காணப்படும் பெருமான், அடர்ந்து நெருங்கி வளர்ந்து இருளுடன் காணப்படும் சோலைகள் நிறைந்த கானூர் தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தார்கொள் கொன்றைக் கண்ணியோடும் தண் மதியம் சூடி

சீர்கொள் பாடல் ஆடலோடு சேடராய் வந்து

ஊர்கள் தோறும் ஐயம் ஏற்று என்னுள் வெந்நோய் செய்தார்

கார்கொள் சோலைக் கானூர் மேய கறைக் கண்டத்தாரே

திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.98.6) திருஞானசம்பந்தர், பெருமான் தலையோட்டில் ஐயமும் கொள்வர் என்று குறிப்பிட்டு, அவரது செய்கைகளின் தன்மையை எவரும் அறிய முடியாது என்று கூறுகின்றார். சிராப்பள்ளி மேய செல்வனார் என்ற தொடர் மூலம், செல்வராகிய பெருமான் பிச்சை ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல என்பதையும் உணர்த்துகின்றார். இந்த பாடலில் குறிப்பிட்டுள்ள செயல்கள் மூன்றும், (தையலை தனது உடலில் ஒரு பாகமாக ஏற்றல், நஞ்சு உண்ணுதல், தலை ஓட்டில் பிச்சை எடுத்தல்) சாதாரணமாக எவரும் செய்யாத செயல்கள் என்பதால் சிவபெருமானின் செய்கையை நம்மால் அறியமுடியாது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இங்கே குறிப்பிட்டுள்ள செயல்கள் ஒன்றுக்கொன்று ஒவ்வாத செயல்களாக இருப்பதால் அவரது செய்கையின் தன்மையை எவரும் அறிய முடியாது என்று கூறுகின்றார். எனினும் இந்த செய்கைகளுக்கு விளக்கம் பல தேவாரப் பாடல்களில் அருளப் பட்டுள்ளது. வெய்ய= விரும்பத்தக்க; தண்=குளிர்ந்த; நிறம்=அழகு; போது=மலர்கள்; ஐயம்=பிச்சை; அனைவரும் விரும்பும் குளிர்ச்சியை உடைய சிராப்பள்ளி மலைச் சாரலில், விரிகின்ற அழகினை உடைய வேங்கை மரத்தின் குளிர்ந்த மலர்கள், செம்பொன்னின் நிறத்தினை உடையதாக நிலத்தில் சிந்தி இருக்கும் தன்மை, நிலமெங்கும் பொன் உதிர்ந்தது போன்ற காட்சியை தருகின்றது. இத்தகைய இயற்கை வளம் கொண்ட சிராப்பள்ளி தலத்தினில் பொருந்தி உறையும் செல்வராகிய சிவபெருமான், உமை அன்னையைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டவராக மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார். அவர் பாற்கடலிலிருந்து பொங்கி எழுகின்ற நஞ்சினையும் உட்கொள்வார், மேலும் பிரமனின் தலையோட்டினைத் தனது கையில் ஏந்திக்கொண்டு ஊரூராக திரிந்து பிச்சையும் ஏற்றுக் கொள்வார். அவரது செய்கைகளின் தன்மையை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள இயலாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெய்ய தண் சாரல் விரி நிற வேங்கைத் தண் போது

செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்

தையலோர் பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலையோட்டில்

ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.50.9) திருஞானசம்பந்தர், பார்வதி தேவி உடனாக இருக்கையில் ஐயம் ஏற்பதற்கு மிகுந்த இச்சை கொண்டவராக பெருமான் இருக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். வெற்றிமை=வென்ற தன்மை; பிரமன் திருமால் ஆகிய இருவரும் நீண்ட நெருப்புப் பிழம்பாக நின்ற தனது அடியையும் முடியையும் காண்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை தாண்டிய நிலையில், அவர்கள் இருவரும் காண முடியாமல் இருந்த தன்மை; இச்சை=விருப்பம்; தயங்கு=வெளிப்பட்டு தெரியும் வண்ணம், விளங்குகின்ற; தயங்கு என்ற சொல்லினை தோல் என்ற சொல்லுடன் இணைத்து, அசைகின்ற தோல் என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். அரை=இடுப்பு; ஆர்த்த=இறுகக் கட்டிய; ஐயம்=பிச்சை;

செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மாலடி தேட நீண்முடி

வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என்

தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு

ஐயம் ஏற்று உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே

அறையணி நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.77.9) பெருமானை, ஐயம் ஏற்றுண்ணும் தொழிலார் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர், சைவனாக விளங்கும் பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் சார்ந்து வாழேன் என்று கூறுகின்றார். சிவபெருமானே அனைவர்க்கும் தலைவராக விளங்குவதால், எவரையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாதவராக விளங்குகின்றார் என்று இங்கே கூறுகின்றார். பெருமான் என்ன செய்தாலும், அந்த செய்கைகளால் அவரது தோற்றத்தில் ஏற்படும் மாற்றம், அவரது அழகினை மேலும் கூட்டுகின்றது என்றும் கூறுகின்றார்.

வெய்ய நோயிலர் தீதிலர் வெறியராய்ப் பிறர் பின் செலார்

செய்வதே அலங்காரமா இவையிவை தேறி இன்புறில்

ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர்

சைவனார் அவர் சார்வு அலால் யாதும் சார்விலோம் நாங்களே

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.98.4), தொண்டர்கள் பால் உள்ள அன்பினால் பெருமான் ஐயம் ஏற்பதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பக்குவம் அடைந்த அடியார்கள் தன்னை வந்தடைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தானே பெருமான் பலி ஏற்கின்றார். பயிரிட்டு வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு காணி நிலம் கூட இல்லாததால் தான் பெருமான் ஐயம் ஏற்கின்றார் என்ற முடிவுக்கு உலகத்தவரே, நீங்கள் வரவேண்டாம். அவர் பக்குவம் அடைந்த தொண்டர்கள் பால் தான் கொண்டுள்ள அன்பினால், அத்தகைய அடியார்கள், தங்களது மலங்களை பெருமானின் மண்டை ஓட்டினில் பிச்சையாக இட்டு, முக்தி நிலை அடையவேண்டும் என்பதற்காகவே பலி ஏற்கின்றார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெருமான் பலி ஏற்பது எவ்வாறு நமக்கு வியப்பினை அளிக்கின்றதோ, அவ்வாறே பெருமான், பார்வதி தேவியைத் தனது உடலில் வைத்துள்ள அதே சமயத்தில், பெருமான் யோகியாகவும் இருக்கின்றார் என்பதும் நமக்கு வியப்பினை அளிக்கின்றது என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

கருத்தினால் ஓர் காணியில் விருத்தி இல்லை தொண்டர் தம்

அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும்

ஒருத்தி பால் உடம்பு வைத்து உடம்பு விட்டு யோகியாய்

இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.6) திருஞானசம்பந்தர், பெருமான் ஐயம் இடும் என்று சொல்லியவாறு பல இடங்களிலும் திரிவதாக கூறுகின்றார். இந்த பாடலில் மாதொரு பாகனாக விளங்கும் தோற்றத்துடன், பிச்சை இடுவீராக என்று பல இல்லங்கள் சென்று பெருமான் பலியேற்கின்றார் என்று கூறுகின்றார். கருமான்=கரிய உருவம் கொண்ட விலங்கு, யானை; ஐயம்=பிச்சை; மட மங்கை=இளமை பொருந்திய உமையன்னை; வையம்=உலகத்தில்; விலை மாறிடினும்=பஞ்சத்தின் காரணமாக பண்டங்களின் விலை கூடிய போதிலும்; வெய்ய=கொடிய; தண் புலவர்=இனிய சொற்களை உடைய புலவர்கள்; கடுமையான சொற்களை நெருப்புக்கு ஒப்பிட்டு வெய்ய என்று கூறிய திருஞானசம்பந்தர், இனிய மொழிகளை குளிர்ந்த சொற்கள் என்று குறிப்பிடும் நயத்தை நாம் உணரலாம். தலத்து மாந்தர்களின் கொடைத் தன்மை இந்த பாடலில் எடுத்துரைக்கப் படுகின்றது. பஞ்சத்தின் காரணமாக பொருட்களின் விலை கூடினும், பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படினும், இல்லையெனாது இனிய மொழிகள் கூறி புலவர்களுக்கு உதவி செய்யும் தன்மையர் என்று இந்த தலத்து மக்களை குறிப்பிடுகின்றார். பெருமான் திருநீற்றினைப் பூசிக் கொண்டுள்ள தன்மை, தான் ஒருவனே என்றும் அழியாத உண்மையான மெய்ப்பொருள் என்பதை உயிர்களுக்கு உணர்த்துகின்றது. கருமை நிறம் கொண்ட யானையின் தோலைக் கிழித்த செய்கை, உயிர்களை அறியாமையில் ஆழ்த்தும் அஞ்ஞானத்தை, அறியாமை எனப்படும் ஆணவ மலத்தினைக் கிழிக்கும் பெருமானின் ஆற்றலை உணர்த்துகின்றது. தேவி உடனிருக்கும் தன்மை, உயிர்களுக்கு அருள் வழங்கவும் ஞானம் அளிக்கவும் பெருமான் தயார் நிலையில் இருப்பதை உணர்த்துகின்றது. தேவி ஞான வடிவாகவும் அருள் வடிவாகவும் இருப்பவள் அல்லவா. இந்த வாய்ப்பினை உயிர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, தானே ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று பெருமான் உணர்த்தும் பொருட்டு பலியேற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் அறிவுறுத்தும் பாடல் இது. இந்த செயல் உயிர்கள் பால் இறைவன் வைத்துள்ள கருணையை உணர்த்துகின்றது.

செய்ய திருமேனி மிசை வெண்பொடி அணிந்து கருமான் உரிவை போர்த்து

ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடமாம்

வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவிலாத வகையார்

வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே

சிவனெனும் ஓசை என தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.8.1) அப்பர் பிரான் பெருமானை ஐயம் உண்ணி என்று சொல்கின்றார், பெற்றி=வேடம்: நீர்மை=அருள் தன்மை: அதள்=தோல்: கரிகாடு=சுடுகாடு: கலன்=உண்கலம் அகம்=உள்ளம்: நேர்தல்=அர்ப்பணித்தல்: அறையோ= அறைகூவல் விடுத்தல்: சிவபெருமானின் திருநாமமே, அடியார்களுக்கு முக்திப் பேற்றினை வழங்கும் வல்லமை படைத்தது என்பதால், அதனை விட உயர்ந்த செல்வம் அளிக்கக்கூடிய சொல் வேறு ஏதும் இல்லை என்ற அறைகூவலுடன் அப்பர் பிரான் இந்த பதிகத்தைத் தொடங்குகின்றார். அத்தகைய உயர்ந்த செல்வத்தை உடைய சிவபெருமானை, அணுகமுடியுமா என்ற சந்தேகம் நமக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக சிவபெருமான் மிகவும் எளியவன் என்று அவனது எளிமைத் தன்மையையும் நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். சிவபெருமானின் நாமத்தைத் தவிர நமக்கு நிலையான செல்வம் (முக்திப்பேறு) அளிக்கக் கூடிய சொல் இந்த உலகில் வேறு ஏதும் இல்லை: இத்தகைய செல்வம் வழங்கும் திறன் படைத்த சிவபெருமான், எளிமையாக தோல் ஆடையினை அணிந்து கொண்டு, பிச்சை எடுத்து ஓர் கவளம் அளவு உணவினை உட்கொண்டு, தனது இருப்பிடமாக சுடுகாட்டினைக் கொண்டு, கையில் உணவுக் கலமாக மண்டை ஓட்டினை வைத்துக் கொண்டு எளிமையாக காணப்படுகின்றான். அவன் அணிந்திருக்கும் தோலாடையின் மேல் பாம்பு தவழ்கின்றது. அவனது எளிமையான தன்மையையும், அருள் வழங்கும் திறனையும் கண்டு தேவர்கள் தங்களது உள்ளங்களை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கின்றார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சிவனெனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை உளதே

அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடையாவது அதன் மேல் ஓர் ஆடல் அரவம்

கவண் அளவு உள்ள உண்கு கரி காடு கோயில் கலனாவது ஓடு கருதில்

அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் நேர்வார் தேவர் அவரே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.5.11), அப்ப்ர் பிரான், பெருமான், பக்குவம் அடைந்த உயிர்களிடமிருந்து ஐயம் பெற்றுக் கொள்வதற்காக, உலகெங்கும் திரிவதாக சொல்கின்றார். நெடியான்=நீண்ட திரிவிக்ரமனாக உருவம் எடுத்து மூவுலகையும் தனது இரண்டு அடிகளால் அளந்த திருமால்: நெடிது வளர்ந்த திருமாலாலும் காண முடியாத வகையில், பாதாளத்தையும் ஊடுருவி, விண்ணையும் கடந்து நின்ற சோதியின் தன்மை, நெடியான் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது. புவலோகம்=பூவுலகுக்கு மேல் உள்ள உலகம்: ஒரு உலகத்தை குறிப்பிட்டு அனைத்து உலகங்களையும் அப்பர் பிரான் உணர்த்துவதாக நாம் கொள்ள வேண்டும். பொடி=திருநீறு; நெடியானாக வளரும் திறமை கொண்ட திருமாலும் நான்முகனும், தங்களின் முன்னே எழுந்த சோதியின் அடியையும் முடியையும் காணாத வகையில், நீண்ட நெடும் சோதி வடிவாகத் தோன்றியவன் சிவபெருமான்: தனக்கு ஒப்பாக வேறு எவரும் இல்லாதவன் சிவபெருமான்; எருதினை, தனது கொடியில் சித்திரமாக ஏற்றுள்ளவன் சிவபெருமான்: அழகாக விளங்கும் மணியின் நிறத்தில் அமைந்த கழுத்தினை உடையவன் சிவபெருமான்: கொலைத் தொழிலை உடைய வேங்கையின் தோலைத் தனது கோவண ஆடையின் மேல் அணிந்தவன் சிவபெருமான்: தனது மேனியின் மேல் திருநீற்றினை பூசியவன்: பிச்சைப் பெருமானாக அனைத்து உலகங்களும் திரிபவன் சிவபெருமான். தனக்கு உணவு வேண்டி பிச்சை எடுத்தாலும், தனது அடியார்களை தேவர்களின் உலகங்களை ஆளும் நிலைக்கு உயர்த்துபவன் சிவபெருமான். இத்தகைய தன்மைகளைக் கொண்ட சிவபெருமான் அதிகை வீரட்டானத்தில் உறையும் பெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நெடியானும் நான்முகனும் நேடிக் காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே

கொடியேறு கோல மாமணி கண்டனே கொல்வேங்கை அதளனே கோவணவனே

பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப் புவலோகம் திரியுமே புரி நூலானே

அடியாரை அமருலகம் ஆள்விக்குமே அவனாகில் அதிகை வீரட்டனாமே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.17.5) அப்பர் பிரான், பெருமானை, இடபத்தின் மீது ஏறி பல இடங்களுக்கும் ஐயம் இரக்கும் பொருட்டு செல்பவர் என்று குறிப்பிடுகின்றார். கரப்பர்=கரத்தலை செய்பவர்; கரத்தல் என்பது பெருமான் புரியும் ஐந்து தொழில்களில் ஒன்று. கரப்பர் என்ற சொல்லுக்கு, தன்னையும் மறைத்துக் கொண்டு, தன்னால் அருளப்படும் நன்மைகளையும் மறைத்துக் கொள்பவர் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம். ஓராதார் உள்ளத்து ஒளியான் என்று தானே மணிவாசக அடிகளார் பெருமானை அழைக்கின்றார். கரிய மனக் கள்வர்=அறியாமையால் இருள் படர்ந்த மனம் உடையவர்களாக, பெருமானை நினைக்காத மனிதர்கள்; துரத்தல்=ஓட்டுதல்; உள்ளத்தில் வஞ்சனை இன்றி தன்னை நினைக்கும் அடியார்களின் பாவங்களை துரத்தி அடிப்பவர் பெருமான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தொடுகடல்=தனது அலைக் கரங்களால் ஓயாது நிலவுலகை தொட்டுக் கொண்டிருக்கும் கடலின் பொதுத் தன்மை; நிரப்பர்=வறியவர், அறிவில் ஏழைகள், அறிவில்லாத திரிபுரத்து அரக்கர்கள்; தன்னை ஆட்கொண்ட பெருமான், என்றும் தனது உள்ளத்திலிருந்து நீங்காது இருக்கின்றார் என்று அப்பர் பிரான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகின்ரார்.

கரப்பர் கரிய மனக் கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினைய கிற்பார் பாவம்

துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறை மொழியர் தீயால் ஒட்டி

நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் மால்விடை கொண்டெங்கும் ஐயம்

இரப்பர் எமை ஆள்வர் என்னுள் நீங்கார் இடைமருது மேவி இடம் கொண்டாரே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.35.3) அப்பர் பிரான், அப்பர் நாயகியின் கூற்றாக, ஐயம் கொள்வார் போல் தன்னருகே வந்த பெருமான், ஐயமும் ஏற்றுக் கொள்ளாமலும், உமது ஊர் யாது என்று தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமலும் சென்றதாக கூறுகின்றார். இந்த பாடல் அகத்துறை அமைப்பில் அமைந்த பாடல். பெருமானின் மீது தீராத காதல் கொண்டவளாகத் திகழ்ந்த அப்பர் நாயகி, பெருமான் தனது இல்லத்திற்கு பலி ஏற்க வந்ததாக கற்பனை செய்யும் பாடல். பெருமானுக்கு பலி எடுத்துவரும் பொருட்டு இல்லத்தின் உள்ளே சென்ற அப்பர் நாயகி, பெருமான் தன்னைப் பார்க்கின்றாரா அல்லையா என்பதை கவனித்தவாறே உள்ளே சென்றாள் போலும். அதனால் தான் பெருமான் தன்னை நோக்கியதை அவளால் உணரமுடிகின்றது. இந்த குறிப்பிலிருந்து தன்னால் காதலிக்கப்படும் பெருமானும் தன் மேல் விருப்பம் கொண்டவராக இருக்க வேண்டுமே என்ற அவளது ஏக்கம் இந்த பாடலில் வெளிப்படுவதை நாம் உணரலாம். எனவே தான் பெருமானும், தனது அருகில் வருவதற்கு முயற்சி செய்தததாக கற்பனை செய்து மகிழ்கின்றாள். நென்னல்=நேற்று: ஐயம்=பிச்சை; பெருமான் ஓடேந்தி பல இல்லங்கள் செல்வது, உயிர்களின் பால் அவர் கொண்டுள்ள கருணையால் நிகழும் நிகழ்ச்சி என்று சான்றோர்கள் விளக்கம் கூறுவார்கள். உயிர்கள் தங்களிடம் உள்ள ஆணவம், கன்மம் மாயை ஆகிய மலங்களை பெருமானின் ஓட்டில் இட்டு அவைகளை அறவே விடுத்து, பந்த பாசங்களிலிருந்து விடுபடவேண்டும் என்பதே இறைவன் ஆசை. அப்போது தானே, தங்களது வினைத் தொகைகளைக் முற்றிலும் கழித்துக் கொண்டு, உயிர்கள் சிவபெருமானைச் சென்று சேர முடியும். நேற்று ஓர் ஓட்டினை ஏந்தியவாறு பிச்சை கேட்டு எனது இல்லத்திற்கு பெருமான் வந்த போது, நான் உமக்கு பிச்சை கொண்டு வருகின்றேன் என்று சொல்லியவாறு எனது இல்லத்தின் உள்ளே புகுந்தேன். தான் கொண்டு வந்த பிச்சையினையும் ஏற்காமல், எனது அருகே வருவார் போல் தோன்றிய பெருமானிடம் நான், ஐயனே உமது ஊர் தான் யாது, உமது தன்மை தான் என்னே, என்று அவரிடம் வினவினேன். எனது வினாக்கள் எவற்றுக்கும் விடை கூறாது இருந்த பெருமான், எனது இல்லத்திலிருந்து வெளியேறி, மென்மையான மார்பகங்களை உடைய அழகிய பெண்மணிகள் ஒன்றாக கூடி விருப்பத்துடன் விளையாடும் வெண்காடு தலத்தில் பொருந்தி உறைகின்றார் என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.

நென்னலை ஓர் ஓடேந்திப் பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன் அந்நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் அருகே வருவார் போல் நோக்குகின்றார

நும் நிலைமை ஏதோ நும் ஊர் தான் ஏதோ என்றேனுக்கு ஒன்றாக சொல்லமாட்டார்

மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே

வாய்மூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல்களில் (6.77) அப்பர் பிரான், தான் கண்ட பெருமானின் நடனக் காட்சியை பதிவு செய்கின்றார். இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் பெருமான் ஐயம் வேண்டி, பல ஊர்கள் திரிவதைத் தான் கண்டதாக கூறுகின்றார். அரண்= கோட்டைகள், இங்கே திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை உணர்த்துகின்றது. ஐயம்= பிச்சை; அன்றவன்=பகைவன்; தனது மருமகன் என்பதையும் பாராமல், பெருமானை தக்கன் பகைத்துக் கொண்ட தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. வேதங்களில் சொல்லப் பட்டுள்ள கருத்தினை நிலைநாட்டுவதைத் தனது கடமையாகக் கொண்டுள்ள வேத நாயகனாகிய பெருமான், வேதநெறிக்கு முரண்பட்டு செய்யப்பட்ட வேள்வி அழிக்கப் பட்டதால் மகிழ்ச்சி அடைந்தான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். உண்மையான மெய்யடியார்களுக்கு பெருமான் அருள் புரிவதைக் கண்டேன்; வேடுவக் கோலம் தாங்கி சென்று அர்ஜுனனுக்கு அருள் புரிந்த நிலையையும் கண்டேன்; தான் கையில் ஏற்றிருந்த அம்பு ஒன்றினால் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் பெருமான் அழித்த காட்சியினைக் கண்டேன், தனது கையில் பெருமான் பாம்பினை கங்கணமாக சுற்றி இருப்பதையும், தனது அழகிய கையினில் நெருப்புச் சுடரை ஏந்தி இருப்பதையும் கண்டேன்; பல ஊர்கள் திரிந்து சென்று பெருமான் பிச்சை ஏற்பதைக் கண்ட அடியேன், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறைகளுக்கு மாறாக தக்கன் செய்த வேள்வியினை பெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன் அழித்ததையும் கண்டேன்; வையம் எங்கும் பரவி பெருமான் இருக்கும் நிலையினையும், மேற்கண்ட காட்சிகளுடன், வாய்மூரில், பெருமான் தனது திருக்கோலம் காட்டியபோது அடியேன் கண்டேன் என்று அப்பர் பிரான் தான் கண்ட காட்சியை பதிவு செய்யும் பாடல்.

மெய்யன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்

கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கைக் கனலும் கண்டேன்

ஐயம் பல ஊர் திரியக் கண்டேன் அன்றவன் தன் வேள்வி அழித்து உகந்து

வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே

நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (6.98.2), அப்பர் பிரான், துறவிகளுக்கு ஐயம் இட்டு உண்கின்ற பழக்கம் உடைய மனிதர்கள் வாழ்கின்ற உலகினில் தான் வாழ்வதால், தனது உணவுக்கு என்றும் குறை ஏற்படாது என்று கூறுகின்றார். அகலிடம்=அகன்ற பரப்பினை உடைய பூமி: இகலுடைய விடை=போர்க்குணம் கொண்ட இடபம் (சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தாரை அழைத்துச் செல்லும் இடபம் என்றும் பொருள் கூறுவார்கள்). ஏன்று கொண்டான்=ஏற்றுக் கொண்டான். அம்பலங்கள்=பொது மன்றங்கள். துரிசு=குற்றம். ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் என்று கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் கூறிய அப்பர் பிரான். விடையுடையான் ஏன்று கொண்டான், என்று இறைவன் தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்ட தன்மையை இந்த பாடலிலும் குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான் துறவு நிலை மேற்கொண்டதை விளக்கும் பாடலாகும். இல்லறத்தில் இருப்போர்கள் துறவிகளுக்கு ஐயம் இடுவதை தங்கள் கடமையாக கருதி வந்தமையால் தான் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே தனக்கு உணவு கிடைக்கும் என்பதால் அகன்ற உலகமே தனது ஊர் என்று கூறுகின்றார். மேலும் அந்நாளில் துறவிகளுக்கு அன்னம் அளித்த பின்னரே உணவு உண்பது மக்களின் வழக்கமாக இருந்தது என்பதையும் நாம் உணர்கின்றோம். துறவிகளும் வழிப்போக்கர்களும் தங்குவதற்காக பொது மன்றங்கள் இருந்த காலம். எனவே அத்தகைய பொது மன்றத்தில் தான் இரவு தங்கினால் பூமாதேவி என்னை புரட்டித் தள்ளமாட்டாள் என்று கூறும் அப்பர் பிரான், துறவிகளுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நிலையை இங்கே எடுத்துரைக்கின்றார். நாம் துறவி என்பதால் பரந்த பூமி முழுவதும் எமக்கு இடமாகும்; நாம் எங்கும் செல்லலாம்; அனைத்து ஊர்களிலும் தாங்கள் சமைத்த உணவினை உண்பதற்கு முன்னர் துறவிகளுக்கு படைத்துவிட்டு உணவு உண்பதை பழக்கமாகக் கொண்ட இல்லறத்தோர்கள் இருப்பதால் எமக்கு உணவினை பிச்சையாக இடுவதை எவரும் தவிர்க்க மாட்டார்கள்; எல்லா ஊர்களிலும் உள்ள பொது மன்றங்கள் யாம் தங்கும் இடங்களாகும்; நான் பூமியில் எங்கு படுத்தாலும், பூமிதேவி அதனை ஏற்றுக் கொண்டு என்னை புரட்டி எறியாமல் இருப்பாள்; இந்த வார்த்தை பொய்யல்ல மெய்யாகும். போர்க்குணம் கொண்ட இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டதால், இனி எமக்கு எந்த குறையுமில்லை. எங்களது துன்பங்கள் எல்லாமும் தீர்ந்தன. ஆதலின், சிறந்த உடைகளை உடுத்துப் பொன் ஆபரணங்களைப் பூண்டு ஊர் ஊராகத் திரியும் அரசர்களின் சொற்களை ஏற்று நடக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்று தன்னை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்த பல்லவ மன்னனின் மந்திரியாருக்கு மறுமொழி உணர்த்தும் பாடல்.

அகலிடமே இடமாக ஊர்கள் தோறும் அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்

புகலிடமாம் அம்பலங்கள் பூமிதேவி உடன் கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே

இகலுடைய விடை உடையான் ஏன்று கொண்டான் இனி ஏதும் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்

துகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொற்கேட்கக் கடவோமே துரிசு அற்றோமே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.36.10), தாருகவனத்து மகளிர் கூற்றாக, பெருமான் பலியேற்கச் செல்லும் கோலத்தை குறிப்பிட்டு, இத்தகைய கோலத்தில் எதற்காக பலியேற்கச் செல்கின்றீர் என்று கேட்பதாக அமைந்த பாடல்; பிச்சைக்கு வருவோர் இவ்வாறு உடலெங்கும் பாம்பினை அணிந்து கொண்டு வந்தால், பலரும் அச்சம் கொண்டு பிச்சை இடுவதைத் தவிர்ப்பார் அல்லவா, எனவே தான், தான் கொண்டிருந்த கவலை தொனிக்கும். வண்ணம், பெருமானே நீர் இத்தகைய வேடத்தினை தவிர்க்க வேண்டும் என்று தாருகவனத்து மகளிர் ஒருத்தி சொல்வதாக அமைந்த பாடல்.

கையோர் பாம்பு அரை ஆர்த்ததோர் பாம்பு கழுத்தொர் பாம்பு அவை பின்பு தாழ்

செய்யெலாம் பொடி கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும்

பையவே விடங்காக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்

ஐயம் ஏற்கும் இது என் கொலோ சொலும் ஆரணீய விடங்கரே

அடிகளாகிய நம்பி என்று அழைக்கப்படும் பதிகத்தின் பாடலில் (7.33.7) சுந்தரர், பெருமானை கடை தோறும் சென்று ஐயம் கொள்ளும் அடிகள் என்று குறிப்பிடுகின்றார். கடை=வீட்டின் நுழை வாயில்;

மெய் என் சொல்லுமின் நமரங்காள் உமக்கு இசையுமா நினைந்து ஏத்துமின்

கையில் சூலமது உடையரோ கரி காடரோ கறைக் கண்டரோ

வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை தோறும் சென்று

ஐயம் கொள்ளும் அடிகளோ நமக்கு அடிகளாகிய அடிகளே

கச்சூர் ஆலக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.41̀.9) சுந்தரர், பெருமானை நோக்கி, பெருமானே உனக்குத் திருத்தொண்டு ஆற்றுவதற்கு அடியார்கள் பலரும் இருக்கையில் நீர் ஐயம் ஏற்பதற்காக வீடுகள் தோறும் செல்லலாமா என்று கேட்கின்றார். திருக்கச்சூர் தலத்தினில்,பசியால் வருந்திய சுந்தரருக்காக, ஒரு அந்தணன் வேடமேற்ற பெருமான், அருகிலுள்ள இல்லங்கள் சென்று பிச்சை ஏற்றுப் பெற்ற சோற்றினை கொண்டுவந்து, சுந்தரருக்கு அளிக்க அவர் பசி தீர்ந்து இன்பம் அடைகின்றார். பின்னர் தனக்கு உணவு அளித்த அந்தணன் பெருமான் தான் என்பதை அறிந்த சுந்தரர், மனம் நெகிழ்ந்து, பெருமானை நோக்கி, பெருமானே இவ்வாறு நீர் அலைந்து திரிந்து எனக்காக பிச்சை ஏற்கலாமா, இந்த செயல் உமது தகுதிக்கு பொருந்துமா என்று கேட்கின்றார். ஆதற் கழனி= விளைச்சலைத் தரும் வயல்கள்;

காதல் செய்து களித்துப் பிதற்றிக் கடி மாமலர் இட்டு உனை ஏத்தி

ஆதல் செய்யும் அடியார் இருக்க ஐயம் கொள்ளல் அழகிதே

ஓதக் கண்டேன் உன்னை மறவேன் உமையாள் கணவா எனை ஆள்வாய்

ஆதற் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே

பிச்சை ஏற்பதற்காக தலைவியின் இல்லத்தினுள் புகுந்த பெருமான், பிச்சை மட்டுமா ஏற்றுக்கொண்டு சென்றார்; தலைவியின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டதால் தான், அவர் சென்றதை நினைத்து தலைவி, அவரை மீண்டும் காண்பது எப்போது என்ற ஏக்கத்துடன் உள்ளம் நைந்தவளாக காணப் படுகின்றாள் என்று தலைவியின் தோழி தலைவியின் அன்னைக்கு உணர்த்தும் பாடல், திருவாசகம் அன்னைப்பத்து பதிகத்தின் பாடல் இந்த பாடல் (8.17.9). தாபத வேடம்=தவ வேடம்; இந்த பாடலில் உமை அன்னையுடன் கூடி இருந்து இல்லறம் நடத்தும் பெருமான் தவ வேடத்துடன் இருப்பதாக மணிவாசகர் கூறுகின்றார். இல்லறமும் துறவும் ஒன்றுக்கொன்று எதிரான நெறிகள், முரண்பட்ட நெறிகள் என்று பலரும் சொல்வதால் எவ்வாறு அவ்வாறு, இந்த இரண்டு கோலங்களும் இணைந்தவராக பெருமான் இருக்க முடியும் என்ற சந்தேகம் நமக்கு எழுவது இயற்கையே. இயல்பாகவே ஐந்து புலன்களையும் அடக்கி வென்ற பெருமானுக்கு இல்லறம் துறவறம் இரண்டையும் ஒன்றாக கடைப்பிடிப்பது எளிதான காரியம் தானே. இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்

தையல் ஓர் பங்கினர் தாபத வேடத்தர்

ஐயம் புகுவரால் அன்னே என்னும்

ஐயம் புகுந்து அவர் போதலும் என் உள்ளம்

நையும் இது என்னே அன்னே என்னும்

புருடோத்தம நம்பி அருளீய தில்லைப் பதிகத்தின் பாடலில் (9.27.4) ஐயம் கொள்ள வந்த பெருமான், செய்த செயல்கள் அவரது வேடத்திற்கு பொருத்தமாக இல்லை என்று கூறுகின்றார். பலியேற்க வந்த பெருமான், தனது புருவத்தை நெரித்து காதற் குறிப்பினை உணர்த்தியதாக சொல்லும் தலைவி, தனக்கு காதல் நோய் விளைவித்து, அந்த நோயினை தீர்க்காமலே சென்றுவிட்டார் என்று குற்றம் சாட்டுகின்றாள். இவ்வாறு தீராத நோய் உண்டாக்கும் பெருமானை, நீங்களும் வந்து காண்பீர்களாக என்று பலரையும் அழைக்கின்றாள். ஆரே இவை படுவார் என்ற தொடர் மூலம், நற்குணங்கள் பொருந்திய எவரும் அடுத்தவரை இத்தகைய நோய்க்கு ஆளாக்க மாட்டார் என்று குறிப்பிட்டு, பெருமான் தன்னை ஏற்றுக் கொள்ளாமல் விடுத்துச் சென்றது தவறு என்று உணர்த்துகின்றாள்.

ஆரே இவை படுவார் ஐயம் கொள வந்து

போரேடி என்று புருவம் இடுகின்றார்

தேரார் விழவோவாத் தில்லைச் சிற்றம்பலவர்

தீரா நோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே

பதினோராம் திருமுறை சிவபெருமான் அந்தாதி பதிகத்தின் பாடலில் கபில தேவ நாயனார், தனது இல்லம் புகுந்து ஐயம் இடுவாய் என்று கேட்ட பெருமானின் அழகால் தான் கவரப் பட்ட தன்மையை குறிப்பிடுகின்றாள். பாரிடங்கள்=பூத கணங்கள்; இரண்டாவது அடியில் வருகின்ற பலிக்கு என்ற சொல்லினை பல்லிக்கு என்ற தொடரின் இடைக் குறையாக கருதி, பல்லை காட்டிக் கொண்டிருக்கும் மண்டையோடு என்று பொருள் கொள்ள வேண்டும். கடை அடியில் உள்ள ஐயம் பெய்தான் என்ற தொடரினை ஐயம்பு எய்தான் என்று பிரித்து, பொருள் கொண்டு, பெருமானுக்கு பலியிடச் சென்ற தான், மன்மதனின் காதல் பாணங்களுக்கு இரையாக மாறிய தன்மையை குறிப்பிடுகின்றாள்.

பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப்

பலிக்கு மனை புகுந்து பாவாய் பலிக்கு நீ

ஐயம் பெய் என்றானுக்கு ஐயம் பெய்கின்றேன் மேல்

ஐயம் பெய்தான் அநங்கன் ஆய்ந்து

இதே பதிகத்தின் மற்றொரு பாடலில் பெருமானை ஊர் ஐயம் உண்ணி என்று கபில தேவ நாயனார் குறிப்பிடுகின்றார். ஓடு காடு=உடைந்த மண்டை ஓடுகளைக் கொண்ட சுடுகாடு; சுடுகாட்டினை தான் வசிக்கும் இடமாகவும் தான் நடனமாடும் அரங்கமாகவும் கொண்டுள்ள பெருமான் என்று கூறுகின்றார். சாம்பலை சந்தனமாக கருதி பெருமான் பூசிக் கொள்ளும் தன்மையும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஊமத்தை மலரைத் தனது முடி மேல் அணிந்து கொண்ட பெருமானை, அடியார்கள் தங்களது தலை மேல் வைத்துக் கொண்டு வாழ்வினில் உய்வினை அடைய வேண்டும் என்று கூறுகின்றார். அப்பூதி அடிகளாரின் தலை மேல் பெருமான் இருக்கும் தன்மையை, அப்பர் பிரான், குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் என்று சொல்வது நமது நினைவுக்கு வருகின்றது. குஞ்சி=தலைக் குடுமி.

உடை ஓடு காடாடி ஊர் ஐயம் உண்ணி

உடை ஆடை தோல் பொடி சந்து என்னை உடையானை

உன்மத்தக முடி மேல் உய்த்தானை நன்னெஞ்சே

உன்மத்தக முடி மேல் உய்

திருவிடைமருதூர் மும்மணிக் கோவை பதிகத்தின் பாடலில் பட்டினத்தார், தாருகவனத்து மகளிர் மன்மதன் விளைவிக்கும் காதல் நோய்க்கு ஆளாக வேண்டும் என்பதற்காகவே பெருமான், பலியேற்கச் சென்றார் என்று கூறுகின்றார். உடைமணி=மேகலை; தாருக வனத்து மகளிர் அணிந்துள்ள மேகலை ஆடையில் பொருந்தியுள்ள மணிகளின் ஓசையைக் கேட்கும் நாகங்கள், பெருமானின் உடலில் பல்வேறு இடங்களில் உள்ள நாகங்கள், இடி என்று தவறாக நினைத்து, படம் எடுத்து ஆடுவதைத் தவிர்த்து, ஒடுங்கி கிடக்கின்றன என்று கூறுகின்றார்.

உடை மணியின் ஓசைக்கு ஒதுங்கி அரவம்

படம் ஒடுங்கப் பையவே சென்று அங்கு இடைமருதர்

ஐயம் புகுவது அணி இழையார் மேல் அநங்கன்

கை அம்பு புக வேண்டிக் காண்

பொழிப்புரை:

உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்திலும் கங்கை நங்கையைத் தனது சடையிலும் ஏற்றுள்ள பெருமான், பக்குவம் அடைந்து தனது மலங்களைக் கழித்துக் கொள்வதற்கு தயாராக உள்ள அடியார்களைத் தேடிச் சென்று அவர்களது மலங்களைத் தான் வாங்கிக் கொண்டு என்றும் நிலையாக உள்ள பேரின்ப முக்தியை அவர்களுக்கு அருளும் கருணை உள்ளம் கொண்டவனாக விளங்குகின்றான். தனது உயிர்நிலை தனது சிறகுகளில் உள்ளது என்ற உண்மையை எதிரிக்கு உணர்த்தி, தனது உயிர்நிலை தனது தலைகளில் உள்ளது என்று பொய் சொல்லி போரிட்ட இராவணனின் தலைகள் மீது பல முறை மோதி போரிட்ட ஜடாயு தான் உண்மை சொன்னதால் தனது உயிரினை இழக்கின்றான். அத்தகைய ஜடாயு வழிபட்ட இறைவன் உறையும் தலம் புள்ளிருக்குவேளூர்

பாடல் 3:

கள்ளார்ந்த பூங்கொன்றை (2.043) பாடல்கள் 2, 3, 4 (திதே 413)

வாசநலம் செய்து இமையோர் நாடோறும் மலர் தூவ

ஈசன் எம் பெருமானார் இனிதாக உறையுமிடம்

யோசனை போய் பூக் கொணர்ந்து அங்கு ஒரு நாளும் ஒழியாமே

பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

யோசனை=சுமார் பத்து மைல் தூரம். புள்ளிருக்குவேளூர், பூம்புகார் ஆகிய இடங்களுக்கு இடையே சுமார் பத்து மைல் தூரம் உள்ளது. பூம்புகாரில் சம்பாதி வனம் என்று ஒரு பகுதி இருந்ததாக மணிமேகலை காப்பியம் தெரிவிக்கின்றது. எனவே நாள் தவறாமல் பூம்புகாரிலிருந்து மலர்கள் பறித்து வந்து சகோதரர்களாகிய சம்பாதி மற்றும் ஜடாயு புள்ளிருக்குவேளூர் பெருமானை வழிபட்டமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. வாசம்= சந்தனம் குங்கிலியம் முதலான வாசனைப் பொருட்கள்; இந்த தலத்து இறைவனை, சூரியன், வேதங்கள், முருகப் பெருமான், பிரமன், செவ்வாய், இராமன், இலக்குவன் முதலான தேவர்கள் வழிபட்டமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. வாசம் என்ற சொல்லுக்கு வசிப்பது என்று பொருள் கொண்டு நலம் செய்து என்ற தொடருக்கு நன்மை விளைவிக்கும் செயல்கள் செய்து என்றும் பொருள் கொண்டு ஒரு விளக்கமும் கூறப்படுகின்றது. இந்த திருக்கோயில் குளத்தில் நீராடுவது உடல் நோயினைத் தீர்க்கும் என்று கருதப் படுகின்றது. திருக்குளத்தில் நீராடுவது மற்றும் மூர்த்தியை தரிசனம் செய்து வழிபடுவது ஆகிய செயல்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் விளைவிக்கும் செயல்கள் என்பதால், வாசநலம் செய்து இமையோர் என்ற தொடர், தேவர்கள் இந்த தலத்தில் பல நாட்கள் தங்கியிருந்து, தலத்து தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்ட செயலைக் குறிக்கின்றது என்பது மற்றொரு விளக்கம்.

பொழிப்புரை:

சந்தனம் குங்கிலியம் முதலான நறுமணம் மிகுந்த பொருட்களையும் மலர்களையும் இமையோர்கள் நாள்தோறும் பெருமானின் திருமேனியின் மீது தூவி வழிபட, பெருமான் மிகுந்த விருப்பத்துடன் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் என்பதாகும். ஒரு நாளும் தவறாமல் ஒரு யோசனை தூரம் சென்று பூக்கள் கொணர்ந்து சடாயு மற்றும் சம்பாதி வழிபடும் வண்ணம், இறைவன் மகிழ்ந்து உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும்.

பாடல் 4:

கள்ளார்ந்த பூங்கொன்றை (2.043) பாடல்கள் 2, 3, 4 (திதே 413)

கள்ளார்ந்த பூங்கொன்றை (2.043) பாடல்கள் 4 தொடர்ச்சி, 5, 6 (திதே 414)

மாகாயம் பெரியது ஒரு மான் உரிதோல் உடையாடை

ஏகாயம் இட்டு உகந்த எரியாடி உறையும் இடம்

ஆகாயம் தேரோடு இராவணனை அமரின் கண்

போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

காயம்=உடல்; மா=பெரிய; மாகாயம் என்ற சொல் இறைவனது திருமேனியை குறிக்கும். மான்=யானை; ஏகாயம்=மேலாடை, அங்கவஸ்திரம்; ஈரப்பசை உள்ள யானையின் தோலை உடல் மீது போர்த்துக் கொள்வது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனைவரும் அதனை தவிர்ப்பார்கள்; ஆனால் பெருமானோ அத்தகைய அச்சம் ஏதும் கொள்ளாமல், மிகுந்த மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார் என்பதை உணர்த்தும் வகையில், இட்டு உகந்த எரியாடி என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். எரியாடி=ஊழித் தீயினில் நின்று ஆடும் பெருமான்; புட்பக விமானத்தில் பறந்து கொண்டு சீதையை கவர்ந்து சென்ற இராவணனின் பயணம் தடைப்படும் வண்ணம் அரக்கனைத் தாக்கி ஜடாயு போர் புரிந்த செய்கை இங்கே கூறப்படுகின்றது. மாகாயம் என்ற சொல்லுக்கு பருத்த உடலினை உடைய யானை என்றும் பொருள் சொல்லப் படுகின்றது. அழித்தான்=வலிமையை குறைத்தவன்;

இந்த பாடலில் மான் என்ற சொல் மானினத்தை குறிக்காது யானையை குறிக்கும். மானின் தோலை பெருமான் உரித்ததாக புராணத்தில் எங்கும் கூறப்படவில்லை; தாருகவனத்து முனிவர்களால் தன் மீது ஏவப்பட்ட புலியின் தோலை உரித்ததாகவும், யானையின் தோலை உரித்து போர்த்துக் கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. எனவே இங்கே யானையின் தோலை உரித்த நிகழ்ச்சியே குறிப்பிடப் படுவதாக கொள்ள வேண்டும். மான் என்று யானையைக் குறிப்பிட்டு, கருமான் என்று உணர்த்தி கரிய நிறம் கொண்ட விலங்காகிய யானை என்பதை புரிய வைக்கும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம். புகலூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.2.2) கருமானின் உரியாடை என்று யானையின் தோலை பெருமான் உரித்ததை திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். ஒரு காதினில் குழை அணிந்தவன் என்று மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. இழை=ஒன்பது இழைகளால் ஆன பூணூல்; நசை=தேன்; போது=மலர்கள்;

காதிலங்குக் குழையன் இழை சேர் திருமார்பன் ஒரு பாகம்

மாதிலங்கு திருமேனியினான் கருமானின் உரியாடை

மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை

போது இலங்கு நசையால் வரிவண்டு இசை பாடும் புகலூரே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.80.7), திருஞானசம்பந்தர் யானையை கருமான் என்று அழைக்கின்றார். வரு மாந்தளிர்=புதியதாக மரத்தில் கிளைத்து எழுகின்ற; திருமாம் தில்லை=திருமகள் பொலிந்து விளங்கும் செல்வச் செழிப்பான; கருமான்=கரிய நிறம் கொண்ட யானை; இறைவனது திருப்பாதங்களை தொழுது வணங்குவதே இன்பம் என்றும், அவனது திருப்பாதங்களை ஏத்தும் பண்பே சிறந்த பண்பு என்றும் முந்திய இரண்டு பாடல்களில் கூறிய திருஞான சம்பந்தர், இந்த பாடலில் அவனது திருப்பாதங்களைத் தவிர்த்து, தனது உள்ளம் வேறு எதனையும் விரும்பாது என்று கூறுகின்றார். புதிதாக கிளைத்து வரும் மாந்தளிர் போன்று மென்மையான திருமேனியை உடைய உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக வைத்துள்ள இறைவன், திருமகள் நிறைந்து விளங்கும் செல்வச் செழிப்பான தில்லை நகரில் உள்ள சிற்றம்பலத்தில் பொருந்தி உறைகின்றான்; கரிய நிறம் கொண்ட யானையின் தோலை உரித்து ஆடையாக அணிந்தவனாகவும், தான் உட்கொண்ட நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கறை படிந்த கழுத்தினை உடையவனாகவும் இருக்கும் பெருமானது திருவடிகளை அன்றி எனது உள்ளம் வேறு எதையும் விரும்பாது என்று திருஞான சம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.

வரு மாந்தளிர் மேனி மாதொர் பாகமாம்

திருமாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய

கருமான் உரி ஆடைக் கறை சேர் கண்டத்து எம்

பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே

கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.80.9) திருஞானசம்பந்தர், பெருமானை கருமானுரி தோலுடையார் என்று குறிப்பிடுகின்ரார். இந்த பாடலின் முதல் அடியில் வருமா கரியின் உரியார் என்று குறிப்பிட்டு இருப்பதால், இரண்டாவது அடியில் உள்ள கருமான் என்ற தொடர், கரிய நிறம் கொண்ட மானினை குறிப்பதாகவே பொருள் கொள்ள வேண்டும்.

வருமா கரியின் உரியார் வளர் புன் சடையார் விடையார்

கருமான் உரி தோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்

திருமாலொடு நான்முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணா

பெருமான் எனவும் வருவார் அவர் எம் பெருமான் அடிகளே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.6) திருஞான சம்பந்தர் பெருமானை, கருமான் உரிவை போர்த்தவர் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலை, இதே பதிகத்தின் இரண்டாவது பாடலின் விளக்கத்தில் சிந்தித்தோம். பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.64.2) திருஞானசம்பந்தர் பெருமானை, கருமானின் உரி உடையர் என்று அழைக்கின்றார். கருமான்=யானை; மானில் ஒரு வகையான கருமை நிறத்து மான் என்றும் பொருள் கூறுகின்றனர். கரிகாடர்=ஊழித்தீயின் வெப்பத்தில் கருகி கருமை நிறத்தில் காணப்படும் நிலம்; பொரு மான விடை=போர்க்குணம் உடையதும், பெருமை படைத்ததும் ஆகிய இடபம்;

கருமானின் உரி உடையர் கரிகாடர் இமவானார்

மருமானார் இவரென்று மடவாளோடு உடனாவர்

பொரு மான விடை ஊர்வது உடையார் வெண்பொடி பூசும்

பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே

தில்லைத் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.1.3) அப்பர் பிரான், இறைவனை கருமானின் (யானையின்) தோலினை மேலாடையாக இறுகக் கட்டியுள்ளான் என்று கூறுகின்றார். கருமான்=யானை; அதள்=தோல்; வீக்கி=கட்டி; கனைகழல்=ஒலி எழுப்பும் கழல்கள்; கழல்கள் காலில் அணியும் ஒரு ஆபரணம் ஆகும். மானம்=பெருமை; மடித்து என்ற சொல் மட்டித்து என்று மருவியது; மானேர் நோக்கி=மானைப் போன்ற மருண்ட பார்வையினை உடைய பார்வதி தேவி; இந்த பாடல் சிவபெருமானது ஆடல் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றது. வாண்முகம்=வாள்முகம்=வாள் போன்று ஒளியினை வீசும் முகம்.

கருமானின் உரி அதளே உடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி

வருமானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர்மதியம் சடைக்கு அணிந்து மானேர் நோக்கி

அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற

பெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.38.8) சுந்தரர், பெருமானை கருமான் உரியான் என்று குறிப்பிடுகின்றார். பொன்னானை என்று விநாயகப் பெருமானை குறிப்பிடுகின்றார். நெடுமாறன்=நின்ற சீர் நெடுமாற நாயனார்; பொடியாடு நெடுமாறன் என்று திருஞானசம்பந்தரால் பாண்டிய மன்னன் சைவ மதம் திரும்பிய செய்தி உணர்த்தப் படுகின்றது. தென்னான்=தென்னாடு என்று அழைக்கப்படும் பாண்டிய நாட்டுக்கு உரியவன்; நெல்வேலி வென்ற சீர் நெடுமாறன் என்று சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் குறிப்பிடுகின்றார். இந்த மன்னனை குடபால், வடபால் மற்றும் குணபால் சேராத சிந்தையான் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். குடபால், வடபால் மற்றும் குணபால் என்று கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு திசைகளும் அந்த திசைகளில் உள்ள நாடுகளும் உணர்த்தப் படுகின்றன. இந்த மன்னன் மண்ணாசை அற்றவனாக இருந்த தன்மை இந்த தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. புதுக்கோட்டைக்கு அருகில் இருந்த நெய்வேலி என்ற இடம் தான் நெல்வேலி என்று குறிப்பிடப் படுகின்றது என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இரண்டாம் புலிகேசி இறந்த பல ஆண்டுகள் பின்னர் ஆட்சிக்கு வந்த சளுக்கிய மன்னன், ஶ்ரீவல்லபவிக்ரமாதித்தன், பழி தீர்க்கும் நோக்கத்துடன் காஞ்சி மீது படையெடுத்தான். காஞ்சியின் சிற்பங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் பரமேசுவர பல்லவன் காஞ்சி நகரத்தை விட்டு வெளியேறவே, காஞ்சி நகரினை மிகவும் எளிதாக கைப்பற்றிய சளுக்கிய மன்னன், சோழர்களை வெற்றி கொண்டு உறையூரையும் கைப்பற்றிய பின்னர், பாண்டிய நாட்டின் மீது படையெடுக்க முயற்சி செய்தான்; அந்த படைகளை நெல்வேலியில் எதிர் கொண்ட, பாண்டிய மன்னன் சளுக்கியப் படைகளை வெற்றி கொள்ள, சளுக்கிய மன்னன் விக்ரமாதித்தன், தனது நாடு திரும்ப முயற்சி செய்தான் என்றும் பின்னர் பல்லவப் படைகளால் தோற்கடிக்கப் பட்டான் என்றும், சரித்திரம் உணர்த்துகின்றது. பாண்டிய மன்னன் நெடுமாறன் எங்கும் படையெடுத்துச் சென்றதாக சரித்திரம் உணர்த்தவில்லை. இந்த தன்மையைத் தான் மண்ணாசை அற்றவன் என்று சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். கருமான்=தாருகவனத்து முனிவர்கள் பெருமான் மீது ஏவிய மத யானை; மீண்டும் சைவ மதம் திரும்பிய பாண்டிய மன்னன், எப்போதும் தனது சிந்தையில் சிவபெருமானின் நினைவுகளை சுமந்தவனாக இருந்தமை முடிமேல் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு பாண்டிய மன்னனின் சிறப்பை குறிப்பிடும் சுந்தரர், திருவதிகை சித்தவடம் மடத்தில் தன்னருகே படுத்தவாறு, முதியவராக வந்த பெருமான், தனது திருவடிகளை எனது தலையில் மீது வைத்ததை அறியாது கோபித்துக் கொண்ட பாவி என்று தனது செய்கையை குறித்து வெட்கம் அடைந்தவராக வருந்துவதை நாம் இந்த பாடலில் உணரலாம்.

பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்

தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி

அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமான் உரியானை அதிகை மாநகருள் வாழ்பவனை

என்னானை எறிகெடில வடவீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போலியானே

தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.90.5) சுந்தரர் பெருமானின் மேலாடையை கருமானின் உரியாடை என்று குறிப்பிடுகின்றார். உரும் அன்னக் கூற்று=இடி போல் முழங்கும் கூற்றுவன்;

கருமானின் உரியாடைச் செஞ்சடை மேல் வெண்மதியக் கண்ணியானை

உரும் அன்னக் கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம்

தருவானைத் தருமனார் தமர் செக்கில் இடும் போது தடுத்தாட்கொள்வான்

பெருமானார் புலியூர் சிற்றம்பலத்து எம் பெருமானைப் பெற்றாம் அன்றே

பொழிப்புரை:

தனது பெரிய திருமேனியின் மீது, தன்னை எதிர்நோக்கி மிகுந்த ஆவேசத்துடன் வந்த பெரிய கரிய யானையின் தோலினை உரித்து மேலாடையாக போர்த்துக் கொண்டவனும், ஊழித் தீயின் நடுவே நின்று நடமாடுபவனும் ஆகிய இறைவன் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். சீதாப் பிராட்டியைக் கவர்ந்து கொண்டு பறக்கும் புட்பகத் தேரினில் வானில் சென்று கொண்டிருந்த அரக்கன் இராவணனை சண்டைக்கு அழைத்து அவனை மேலே செல்லவிடாமல் தடுக்க முயற்சி செய்த ஜடாயு பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் என்பதாகும்.

பாடல் 5:

கள்ளார்ந்த பூங்கொன்றை (2.043) பாடல்கள் 4 தொடர்ச்சி, 5, 6 (திதே 0414)

கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடியாகப்

பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம்

வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்

போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

போதம்=ஞானம்; கீதம்=இனிய இசையுடன் கூடிய பாடல்கள்; குடி=புகலிடம்; பரஞ்சோதி= உயர்ந்த சோதி; பெருமான் சூரியன் சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்று சுடர்களுடன் உடன் இருந்து அந்த சுடர்களுக்கு ஒளி கொடுக்கும் ஈசன், தானே ஒளிவிடும் சோதியாகவும் உள்ளான். அவ்வாறு ஒளிவீசும் சோதியாக விளங்கும் ஈசனுக்கு ஒளி கொடுப்பவர் எவரும் இல்லை என்பதால், உயர்ந்த சோதி என்ற பொருளைத் தரும் வண்ணம் பரஞ்சோதி என்று இங்கே குறிப்பிடுகின்றார். பயிலும்=தொடர்ந்து இந்த தலத்தில் உறையும் நிலை; மண்ணி ஆற்றின் கரையில் இருந்த வெண்மணலில் இலிங்கம் செய்து வழிபட்டவர் சண்டீசர். தான் கண்ட அனைத்துப் பொருட்களிலும் சிவத்தை காணும் ஞானம் பெற்றவர் அப்பர் பிரான். அவ்வாறே வெண்மணலில் சிவபெருமானின் உருவத்தைக் கண்ட ஞானம் உடையவர்களாக ஜடாயுவும் சம்பாதியும் திகழ்ந்தனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

பொழிப்புரை:

இனிய இசையுடன் கூடிய பாடல்களை பாடும் அடியார்கள், தங்களது புகலிடம் என்று பெருமானின் திருவடிகளை கருதி, அவற்றைத் தொழுது வணங்கும் வண்ணம், எந்நாளும் உயர்ந்த சோதியாகிய பெருமான் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். தாங்கள் பெற்றிருந்த ஞானத்தின் உதவி கொண்டு வெண் மணலை சிவமாக பாவிக்கும் தன்மை பெற்றிருந்த ஜடாயுவும் சம்பாதியும், வேத மந்திரங்களை சொல்லி பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் ஆகும்.

பாடல் 6:

கள்ளார்ந்த பூங்கொன்றை (2.043) பாடல்கள் 4 தொடர்ச்சி, 5, 6 (திதே 0414)

திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே

அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம்

மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப்

புறம் கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

தீவினை நோய்=தீயினும் கொடிய வினைகளால் ஏற்படும் பிறவிப்பிணி; மறம்=பாவச்செயல்; திறம்=சைவத் திறம், சிவநெறியில் ஒழுகுதல்: திருவாசகம் கீர்த்தித் திருவகவலில் மணிவாசகர், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும், என்று பெருமான் தனது திருவாயால் ஆகமங்கள் தோற்றுவித்ததையும் அந்த ஆகமங்களை அடுத்தவருக்கு உபதேசம் செய்ததையும் குறிப்பிடுகின்றார். திருவிளையாடல் புராணத்தில் எந்தெந்த ஆகமங்கள் எவருக்கு சொல்லப்பட்டன என்ற விவரங்கள் காணப்படுகின்றன. தத்புருட முகத்தின் மூலம் கௌதம முனிவருக்கு, இரௌரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் முகவிம்பம் எனப்படும் ஐந்து ஆகமங்களும், வாமதேவ முகத்தின் மூலம் காசிப முனிவருக்கு தீர்த்தம் சூக்குமம் சகச்சிரம் அஞ்சுமான் அப்பிரபேதம் ஆகிய ஐந்து ஆகமங்களும், சத்தியோஜாதம் முகத்தால் கௌசிக முனிவருக்கு காமிகம் யோகசம் சிந்தியம் காரணம் அசிதம் ஆகிய ஐந்து ஆகமங்களும், அகோர முகத்தால் பாரத்வாஜ முனிவருக்கு விசயம் நிச்சுவாசம் சுவாயம்புவம் ஆக்னேயம் வீரம் ஆகிய ஐந்து ஆகமங்களும், ஈசான முகத்தின் மூலமாக அகத்திய முனிவருக்கு புரோற்கீதம் இலளிதம் சித்தம் சந்தானம் சருவோத்தம் பரமேசுரம் கிரணம் வாதுளம் ஆகிய எட்டு ஆகமங்களும், உணர்த்தப் பட்டன என்று கூறுவார்கள். இந்த பாடலில் அறம் என்ற சொல் கருணை என்று பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மலத்துடன் பிணைந்துள்ள உயிர்கள் பால் கருணை கொண்டு, அந்த உயிர்கள் தங்களது மலத்தினைக் கழித்துக் கொண்டு உய்வினை அடையும் பொருட்டு பல விதமான உடல்களுடன் அந்த உயிர்களை இணைக்கும் பெருமான், அந்த உயிர்கள் உய்வினை அடையும் வழி யாது என்பதை உணர்த்தும் பொருட்டு நான்கு வேதங்களையும் ஆகமங்களையும் பல முனிவர்கள் மூலமாக நமக்கு உணர்த்தியுள்ளான். வடமொழி வேதங்களையும் ஆகமங்களையும் அளித்த பெருமான், அத்துடன் நிற்காமல், நால்வர் பெருமானார்கள் மூலம் தேவார திருவாசக பதிகங்களையும் அருளியது நமது தமிழுலகம் செய்த பெரும் பேறு அல்லவா. இந்த கருணைச் செயல் தான் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த பாடலில் புறம் கண்ட சடாயு என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அந்நாள் வரை எவரிடமும் பெருமான் அளித்த வாளினால் போரிடாத அரக்கன் இராவணன், அந்த தெய்வத்தன்மை வாய்ந்த வாளினை எடுத்து சடாயுவின் சிறகுகளை வெட்டினான் என்பதே நிலைகுலைந்த நிலையினில் அரக்கன் ஒரு தருணத்தில் இருந்தான் என்பதை நமக்கு புலப்படுத்துகின்றது. சுந்தர காண்டம் நிந்தனைப் படலத்தில் வரும் கீழ்க்கண்ட கம்ப இராமாயண வரிகள், ஜடாயுவுக்கும் இராவணனுக்கும் நடந்த சண்டையை நேரில் கண்ட சீதையின் வாய்மொழியாக வந்த சொற்கள், நாம் இங்கே நினைவு கூரத் தக்கன. பெருமான் அருளிய வாளின் உதவி இல்லையேல். அன்றே ஜடாயுவிடம் நீ தோற்று இறந்திருப்பாய் அல்லவா என்று ஏளனமாக சீதா பிராட்டி அரக்கன் இராவணனை நோக்கி கேள்வி கேட்பதை நாம் உணரலாம். எனவே ஜடாயு மற்றும் இராவணன் ஆகிய இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் வெற்றி பெற்றது பெருமான் அளித்த வாள் தான் என்பதையும் இராவணன் அல்ல என்பதையும் நாம் உணரலாம். எனவே புறம் கண்ட ஜடாயு என்ற தொடர் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. துள்ளு நீர் வெள்ளம் சென்னி ஏற்றவன் என்று பெருகி வந்த வெள்ளத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியினை தனது சடையில் ஏற்றுக்கொண்ட சிவபெருமான் என்று குறிப்பிட்டு, அந்த சிவபெருமான் தந்த வாள் தான் ஜடாயுவை வெற்றி கொண்டது என்பதை உணர்த்துகின்றார்.

தோற்றனை பறவைக்கு அன்று துள்ளுநீர் வெள்ளம் சென்னி

ஏற்றவன் வாளினால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே

ஜடாயுவின் வலிமை அரக்கனின் வலிமையை விடவும் குறைந்தது என்பதால் ஜடாயு தோல்வி அடையவில்லை என்பதையும், கம்பர் ஜடாயு வதைப் படலப் பாடல் ஒன்றினில் குறிப்பிடுகின்றார். ஜடாயுவின் ஆற்றலுக்கு முன்னம் தனது வலிமையை இழந்து அரக்கன் வெட்கத்துடன் நின்றான் என்று குறிப்பிடுகின்றார். மேலும் தனது வாழ்நாள் அன்றே முடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் அரக்கன் பெருமான் கொடுத்த வாளினை எடுத்தான் என்று கம்பர் உணர்த்தும் பாடலை நாம் இங்கே காண்போம். எவராலும் தடுக்கவொண்ணாத சிறப்புத் தன்மை வாய்ந்த வாள் என்றும் கம்பர் குறிப்பிடுகின்றார். மாற்றாரும்=தடுக்கும் படை ஏதுமின்றி திகழும்; இராவணின் வலிமை முன்னர் ஜடாயு தோற்கவில்லை என்றும் எவராலும் தடுக்கமுடியாத வாளின் முன்னர் தோற்றான் என்றும் கம்பர் இங்கே கூறுகின்றார். முன்னொரு காலத்தில் மலைகளுக்கு சிறகுகள் இருந்தன என்றும், அந்த மலைகளின் சிறகுகளை இந்திரன் தனது வச்சிராயுதத்தால் வெட்டி வீழ்த்தினான் என்றும் புராணம் கூறுகின்றது. அவ்வாறு சிறகுகள் வெட்டப்பட்ட மலைகள் கீழே விழுந்தது போன்று, தனது சிறகுகள் வெட்டப்பட்டு ஜடாயு கீழே விழுந்தது என்று கம்பர் இங்கே கூறுகின்றார்.

வலியின் தலை தோற்றிலன் மாற்றரும் தெய்வ வாளால்

நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும்

மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன்

குலிசம் எறிய சிறை அற்றதோர் குன்றின் வீழ்ந்தான்

மறம் கொண்ட இராவணன் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுவதை நாம் சற்று ஆராயவேண்டும். அறத்திற்கு மாறானது மறம். அறவழியில் இல்லாத செயல்கள். மாற்றான் மனைவியை கவர்ந்த அரக்கனது செயல் இங்கே மறம் என்று குறிப்பிடப் படுகின்றது. தனது வலிமையின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவனாக விளங்கிய இராவணன், தான் அறத்திற்கு மாறான செயலில் ஈடுபட்டாலும் தன்னைத் தடுப்பவர் எவருமில்லை என்ற அகம்பாவத்தால் சீதையை சிறையெடுக்க முன்வந்தான் என்பதை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

சிவநெறி ஒழுக்கத்தில் ஒழுகும் அடியார்கள் தங்களது பிறவிப் பிணியினைத் தீர்த்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபடும் வழியினை உணர்த்தும் வண்ணம், உயிர்களின் மீது கருணை கொண்டு, வேதங்களையும் ஆகமங்களையும் அருளிய பெருமான் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் ஆகும். மாற்றான் மனைவியைக் கவர்ந்ததால் தருமத்திற்கு புறம்பான வழியில் சென்ற அரக்கன் இராவணன், தனது வலிமையை மிகவும் பெரிதாக கருதி, தான் சீதை பிராட்டியைக் கவர்ந்து செல்வதை தடுப்பவர் எவருமில்லை என்ற செருக்குடன், வந்த அரக்கன் இராவணனுடன் போரிட்டு அவனை புறமுதுகிட்டோடச் செய்த ஜடாயு பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் ஆகும்.

பாடல் 7:

கள்ளார்ந்த பூங்கொன்றை (2.043) பாடல் 7 (திதே 0415)

கள்ளார்ந்த பூங்கொன்றை (2.043) பாடல் 7 தொடர்ச்சி (திதே 0416)

கள்ளார்ந்த பூங்கொன்றை (2.043) பாடல்கள் 7 தொடர்ச்சி, 8, 9, 10, 11 (திதே 0417)

அத்தியின் ஈருரி மூடி அழகாக அனல் ஏந்திப்

பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணுமிடம்

பத்தியினால் வழிபட்டுப் பலகாலம் தவம் செய்து

புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

அத்தி=யானை; பசி, தாகம், தூக்கம் ஆகியவற்றைக் கடந்த பெருமான், தான் உயிர் வாழும் வண்ணம் உதவி புரியும் உணவினுக்காக பிச்சை எடுப்பது போன்ற தோற்றத்தை தருவதால், அவரை பித்தர் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். யானையின் பசுமைத் தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனைவரும் அதனைத் தவிர்ப்பார்கள். ஆனால் பெருமானோ யானையின் தோலை தனது உடல் மீது போர்த்துக் கொண்டதும் அன்றி, எரியும் தீப்பிழம்பினை ஏந்தி நடனமாடுகின்றார். இவ்வாறு அனைவரும் தவிக்கும் மூன்று செயல்களை செய்யும் பெருமானை மிகவும் பொருத்தமாக பித்தர் என்று திருஞானசம்பந்தர் அழைப்பதை நாம் உணரலாம். பத்தி=பக்தி; உகந்தான்=உயர்ந்த நிலையினை அடைந்து மகிழ்ச்சியுடன் இருந்தான்;

திருஞான சம்பந்தரும் தான் அருளிய முதல் பதிகத்தின் கடைப் பாடலில் (1.1.11). ஒன்றிய உணர்வுடன் இறைவனை குறித்து தான் பதிகம் பாடியதை நமக்கு உணர்த்தி, ஒன்றிய மனத்துடன் இறைவனை வணங்க வேண்டும் என்ற வழிமுறைக்கு முன்மாதிரியாக இருப்பதை நாம் காணலாம்.

அரு நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய

பெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை

ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த

திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

திரு வலிதாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.3.5) திருஞானசம்பந்தர், புந்தி ஒன்றி நினைக்கும் அடியார்களின் வினைகளை தீர்ப்பவன் பெருமான் என்று கூறுகின்றார். மந்தி வந்து கடுவன்னொடு வணங்கும் வலிதாயம் என்ற தொடர் மூலம், ஆண் குரங்கு தனது துணையொடு தலத்து இறைவனை வழிபட்டதாக திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வலியன் என்ற கருங்குருவி மற்றும் அனுமன், இந்த தலத்து இறைவனை வழிபட்டதாக தலபுராணம் குறிப்பிடுகின்றது. பரத்வாஜ முனிவர் ஒரு சாபத்தால் கருங்குருவியாக மாறிய பின்னர், இறைவனை வழிபட்டு, தனது சாபத்தை நீக்கிக் கொண்டதாக கூறுவார்கள். தங்களது சாபத்தால் பறவையாகவும் விலங்காகவும் மாறிய தேவர்கள் பல தலங்களில் இறைவனை வழிபட்டதை நாம் அறிவோம். குரங்காகிய வாலியும் அணிலாக மாறிய இந்திரனும் காகமாக மாறிய இயமனும் இறைவனை வழிபட்ட தலம் குரங்கணில்முட்டம் எனப்படும் தலம். ஆதிசேடன் பாம்பு ஒவ்வொரு சிவராத்திரியும் வழிபடும் தலங்கள், குடந்தை கீழ்க்கோட்டம், திருநாகேச்சரம், பாம்புரம், நாகைக்காரோணம் என்பர். பாதாளேச்சரம் தலமும் ஆதிசேடனால் வழிபடப்பட்ட தலம். ஐராவத யானை வழிபட்டு பயன் அடைந்த தலங்கள், மதுரை ஆலவாய், கோட்டூர், வெண்காடு, சாய்க்காடு, ஆமாத்தூர், கானப்பேர், எதிர்கொள்பாடி என்பன. யானை சிவபெருமானை பூசித்த ஒன்பது தலங்களாவன, இன்னம்பர், எதிர்கொள்பாடி, கானப்பேர், கோட்டாறு, திருவானைக்கா, திருக்காளத்தி, திருவெண்காடு, பெண்ணாகடம் மற்றும் ஆலவாய் ஆகும். பாம்பு சிலந்தி மற்றும் யானை ஆகியவை இறைவனை வழிபட்டு பயனடைந்த தலம் திருக்காளத்தி. அகத்திய முனிவர் ஈயின் வடிவமெடுத்து இறைவனை வணங்கிய தலம் ஈங்கோய்மலை. புலி, தேனீக்கள், கழுகுகள், வண்டு, நண்டு, சக்ரவாகப் பறவை, பூனை, தவளை, மீன், பாம்பு, பறவை, கருங்குருவி, குயில் முதலியன இறைவனை வழிபட்ட தலங்கள் முறையே புலிவனம். நன்னிலம், திருக்கழுக்குன்றம், வண்டுறை, திருந்துதேவன்குடி, சக்கரப்பள்ளி, மேலப்பாதி, ஆத்தூர், தேவராயன்பேட்டை, தேப்பெருமா நல்லூர், நறையூர் சித்தீச்சரம், வலிவலம், கோழம்பம் என்பன. அரக்கர்களுக்கு பயந்த தேவர்கள் எறும்பாக மாறி இறைவனை வழிபட்ட தலம் திருவெறும்பியூர். அம்பிகை பசுவாக இறைவனை வழிபட்ட தலங்கள், சங்கரன்கோயில் திருவிடைச்சுரம், கோழம்பம், கொண்டீச்சரம் மற்றும் ஆவடுதுறை என்பன. மயிலாக அம்பிகை இறைவனை வழிபட்ட தலங்கள் மயிலாடுதுறை மற்றும் சென்னை நகரிலுள்ள திருமயிலை என்பன. வண்டாக மாறிய பிருங்கி முனிவர் வழிபட்ட தலங்கள், திருச்செங்கோடு மற்றும் பருப்பதம். சிலந்தியும் யானையும் வழிபட்ட தலம் திருவானைக்கா. ஆமை வடிவம் எடுத்த திருமால் வழிபட்ட தலம் திருக்கச்சூர். பன்றியாக திருமால் வழிபட்ட தலம் சிவபுரம்; நரசிம்மராக திருமால் வழிபட்ட தலம் திருபுவனை; கிளி வடிவத்தில் சுகமுனிவர் வழிபட்ட தலங்கள் சேலம் மற்றும் இடையாறு. கழுகுகள் ஜடாயு மற்றும் சம்பாதி வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர். வாலி மற்றும் சுக்ரீவன் வழிபட்ட தலங்கள் பல உள்ளன. கரடி ஜாம்பவான், அனுமன், சுக்ரீவன் முதலிய குரங்குகள் வழிபட்ட தலம் குரக்குக்கா, சிட்டுக்குருவி வழிபட்ட தலம் வடகுரங்காடுதுறை. எலி வழிபட்டு பயனடைந்த தலம் திருமறைக்காடு. காமதேனு வழிபட்டு சாபம் தீர்த்துக் கொண்ட தலங்கள் சிக்கல், நெய்த்தானம் மற்றும் ஆவூர் பசுபதீச்சரம். காமதேனு வழிபட்ட தலம் தென்குடிதிட்டை; காமதேனுவின் மகள் பட்டி வழிபட்ட தலம் பட்டீச்சரம். கருடன் வழிபட்ட தலங்கள் திருவேடகம் மற்றும் சிறுகுடி. வாசுகி பாம்பு வழிபட்ட தலம் வலம்புரம். புறாவாக மாறிய அக்னியும் பருந்தாக மாறிய இந்திரனும் வழிபட்டு பயனடைந்த தலம் புறவம் எனப்படும் சீர்காழி. பாம்பாகிய இராகு பகவான் வழிபட்டு பயன் அடைந்த தலங்கள் திருநாகேச்சரம் மற்றும் சீர்காழி. புறாவாக மாறி சிபிச் சக்ரவர்த்தியை சோதனை செய்த அக்னி வழிபட்ட தலம் குருகாவூர் வெள்ளடை. இவ்வாறு ஐந்து அறிவே பெற்றுள்ள விலங்குகளும் பறவைகளும் இறைவனை வழிபட்டு பயனடையும் போது, அவற்றினும் உயர்ந்த நிலையில், பகுத்தறிவு பெற்று விளங்கும் மனிதர்கள், பெருமானை வழிபடாமல் இருந்தால் அவர்களது வினை தீராது என்பதை இந்த பாடலில் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். பொருளாய=தியானிக்கும் பொருளாக இறைவன் உள்ள நிலை; அந்தி=மாலை நேரத்தில் சிவந்த வண்ணத்துடன் ஒளிவீசும் வானம்; அயல்=அருகில்; அடும்=தீமூட்டி சமைத்தல்; வெந்துயர்=வெப்பம் விளைவிக்கும் துயரம்; அடுத்தடுத்து உயிர்கள் எடுக்கும் பிறப்புகள், உயிருக்கு தொடர்ந்து இன்ப துன்பங்கள் கொடுத்து, மீண்டும்மீண்டும் பிறக்கச் செய்து துன்பத்தில் ஆழ்த்துவதால், சுட்டெரிக்கும் கொடுமையான துயரத்தை உண்டாக்கும் வினைகள் என்று இங்கே சொல்லப்படுகின்றது. மந்தி=பெண் குரங்கு; கடுவன்=ஆண் குரங்கு; குரங்குகள் தங்களது துணையுடன் திருக்கோயில் சென்றடைந்து பெருமானை வணங்குவதை குறிப்பிட்டு, இல்லறத்தில் ஆழ்ந்துள்ள மனிதர்கள் அனைவரும், தங்களது துணையுடன் ஆலயங்கள் சென்று பெருமானை வழிபட்டு, வாழ்வில் பல நலங்கள் அடைய வேண்டும் என்பதை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார் போலும். மேலும் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு உலகப் பொருட்கள் மீது பற்று கொண்டவர்களாக வாழும் மனிதர்களும் பெருமானை வழிபட்டு நலம் பெறலாம் என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. தங்களது சிந்தையில் நிலையாக நிறுத்தி, மனம் ஒன்றி பெருமானை வழிபடும் அடியார்களின் வினைகளைத் தீர்க்கும் பெருமான், அனைத்து உயிர்களும் நினைத்து தியானம் செய்வதற்கு தகுதி படைத்தவனாக விளங்குகின்றான். மாலை நேரத்தில் சிவந்த நிறத்தில் ஒளிவீசும் வானத்தைப் போன்று திருமேனி கொண்டுள்ள பெருமான், திருவலிதாயம் தலத்தில் உள்ள திருக்கோயிலில் உறைகின்றான். இந்த தலத்திற்கு அருகில் உள்ள ஆண் குரங்குகள் தங்களது துணையுடன் வலிதாயம் தலத்தின் கோயில் சென்றடைந்து பெருமானை வணங்குகின்றன. இவ்வாறு ஐந்து அறிவு படைத்த விலங்குகளும் பெருமானை வழிபட்டு நலமடைவதை கண்ட பின்னரும், பெருமானை சிந்தியாது தங்களது வாழ்வினை வீணாக கழிக்கும் மனிதர்கள், தங்களைத் தாக்கும் கொடிய வினைகளிலிருந்து தப்பித்தல் என்பது எளிதல்ல என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புந்தி ஒன்றி நினைவார் வினையாயின தீரப் பொருளாய

அந்தி அன்னதொரு பேரொளியான் அமர் கோயில் அயல் எங்கும்

மந்தி வந்து கடுவன்னொடு கூடி வணங்கும் வலிதாயம்

சிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிதன்றே

பேணுப்பெருந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.42.11) திருஞானசம்பந்தர், தேவாரப் பாடல்களை பாடும் அடியார்கள், எல்லா நன்மைகளை உடையவராகி, மனம் ஒன்றி இறைவனை வழிபடும் தன்மையராக விளங்குவார்கள் என்று கூறுகின்றார்.

கடையார் மாடம் நன்கெழு வீதிக் கழுமல ஊரன் கலந்து

நடையார் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய

படையார் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்திவை வல்லார்

உடையாராகி உள்ளமும் ஒன்றி உலகினில் மன்னுவர் தாமே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.50.1) பெருமானை எவ்வாறு வழிபடவேண்டும் என்று திருஞானசம்பந்தர் கூறுவதை சித்திப்பது இங்கே பொருத்தமாக இருக்கும். ஒல்லை=வேகம்; ஒல்லையாறி=பரபரப்பு அடங்கிய மனத்துடன், கள்ளம்=வஞ்சனை; வெய்ய சொல்=கடுஞ் சொற்கள்; பரபரப்பு ஏதும் இன்றி அமைதியான ஒன்றிய மனத்துடன், வஞ்சனையான எண்ணங்களையும் கடுமையான சொற்களையும் தவிர்த்து, தூய்மையான சிந்தனையுடன், காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய குற்றங்களையும் அந்த குற்றங்களால் விளையும் வினைகளையும் முழுவதும் அகற்றி, நல்ல முறையில் இறைவனின் திருநாமங்களை மீண்டும்மீண்டும் ஓதி வழிபடும் தனக்கு இறைவன் தக்கவாறு அருள் புரிய வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இறைஞ்சும் பாடல்.

ஒல்லையாறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய

சொல்லையாறித் தூய்மை செய்து காமவினை அகற்றி

நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்றேத்த

வல்லவாறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.71.8), திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் மனம் ஒன்றி சாமகீதம் பாடியதைக் கேட்ட பெருமான், அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். கரை=அலைகள்; வரையார்=மலை போன்று வலிமையான; உலப்பில்= வற்றாத, அழியாத; அலைகள் நிறைந்த கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவுக்கு அரசனாகிய அரக்கன் இராவணன், மலை போன்று வலிமை வாய்ந்த தனது தோள்களைக் கொண்டு கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றி அரக்கனது தலைகள் நொறுங்குமாறு அழுத்தியவர் சிவபெருமான். தனது தவறினை உணர்ந்த அரக்கன், மனமொன்றி, நல்ல உரைகள் கொண்ட சாம வேதத்தினை இசைத்துப் பாடி இறைவனைப் போற்றவே, பெருமான் அரக்கனுக்கு அழியாத வரங்கள் கொடுத்து அருள் புரிந்தார். அவர் தாம், அலைகள் நிறைந்த நீர்நிலைகளால் சூழப்பட்டதும் செல்வம் நிறைந்ததும் ஆகிய நறையூர் தலத்தினில் உள்ள சித்தீச்சரம் திருக்கோயிலில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கரையார் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலை மலை தன்னை

வரையார் தோளால் எடுக்க முடிகள் நெரித்து மனம் ஒன்றி

உரையார் கீதம் பாட நல்ல உலப்பில் அருள் செய்தார்

திரையார் புனல் சூழ் செல்வ நறையூர் சித்தீச்சரத்தாரே

சீர்காழி தலத்தின் மீது அருளிய திருவிருக்குக்குறள் பாடல் ஒன்றில் (1.90.10), திருஞான சம்பந்தர் மனமொன்றி வழிபட்ட திருமாலும் பிரமனும் சிவபெருமானின் அருள் பெற்ற தன்மையை குறிப்பிட்டு, மனம் ஒன்றி வழிபடுவதால் இறைவனின் அருள் எளிதில் கிடைக்கும் என்பதை உணர்த்துகின்றார். பெயல்=அருள் மழை; பெயலவை=அருள் பொழிதல்; இயலல்=உள்ளத்தை பொருத்துதல்; இறைவன் பால் உள்ளத்தை பொருத்தி மனம் ஒன்றி அவனை வழிபட வேண்டும் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

அயனும் மாலுமாய்

முயலும் காழியான்

பெயலவை எய்தி நின்று

இயலும் உள்ளமே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (2.38.1) மனம் ஒன்றி நியமத்துடன் இறைவனை தினமும் தொழவேண்டும் என்று திருஞானசம்பந்தர் நமக்கு அறிவுரை கூறுகின்றார். நித்தலும்=நாள்தோறும்: நியமம்=முறையாக வழிபடும் நிலை; கோடு=கொம்பு, யானையின் கோடு=யானைத் தந்தம்; பீலி=மயிற்பீலி; வண்=வளமையாக விளங்கும்; தத்து=தாவிக் குதிக்கும் நீர். சாகரம்=கடல்; நீர் மலர்த் தூவி என்று புறப் பூஜையும் சித்தம் ஒன்ற என்று அகப் பூஜையும் இங்கே குறிப்பிடப் படுகின்றது; மேவும்=சென்று அடையும், தங்கும்; பொதுவாக நதிகள் கடலில் சென்று கலப்பதை பாய்தல் என்று குறிப்பிடுவது வழக்கம். பாய்தல் என்றால் வேகத்துடன் சென்று கலத்தல் என்று பொருள். மேவுதல் என்றால் சென்று அடைதல் என்று பொருள். திருச்சியின் அருகே மிகவும் விரிந்து காணப்படும் காவிரி நதி, பூம்புகாரின் அருகே கடலில் கலக்கும் இடத்தில் அகலம் மிகவும் குன்றி காணப்படுவதை நாம் காணலாம். இவ்வாறு மிகவும் குறைந்த நீரினை கடலில் சேர்க்கும் காவிரி நதியின் தன்மைக்கு, காவிரி நதி தனது நீர்வளம் முழுவதையும் தமிழ் மண்ணுக்கு தந்துவிட்டு எஞ்சிய நீருடன் கடலில் சென்று கலப்பதே காரணம். நியமம் என்று இங்கே குறிப்பிட்டது அவரவர்கள் குல வழக்கப்படி, தினமும் காலையிலும் மாலையிலும் செய்ய வேண்டிய கடமைகள் ஆகும். குறைந்த பட்சம் நீராடி உடலினை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சிவ வழிபாடு எவ்வாறு செய்வது என்பதை அறிந்து கொண்டு, முறையாக நியமத்துடன் தினமும் பெருமானுக்கு நீரும் மலரும் அளித்து, தங்களது சித்தம் ஒன்றும் வண்ணம் பெருமானை தியானித்து வழிபடும் அடியார்களுக்கு அருளும் சிவபெருமான் உறையும் தலமாக விளங்குவது சாய்க்காடு தலமாகும். இந்த தலம், யானைத் தந்தங்கள் மற்றும் வளமான மயிற்பீலிகளைக் அடித்துக் கொண்டு வந்து கரை சேர்ப்பதும், துள்ளிக் குதித்து பாய்ந்து வருவதும் ஆகிய பொன்னி நதி கடலுடன் பொருந்தும் காவிரிப் பூம்பட்டினத்து நகரில் உள்ளது இந்த சாய்க்காடு தலம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நித்தலும் நியமம் செய்து நீர்மலர் தூவிச்

சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்

மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரித்

தத்து நீர்ப் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே

இந்த நிலைக்கு சேக்கிழார் சுவையாக வேறொரு காரணத்தை கற்பிப்பதை நாம் பெரிய புராணத்து பாடல் ஒன்றினில் காணலாம். இறைவனுக்கு ஆலகால விடம் அளித்ததால், கடலின் மீது கோபம் கொண்ட காவிரி நதி, மிகவும் குறைந்த நீருடன் கடலில் சென்று கலந்தது என்று நயமாக கூறுகின்றார், இந்த பாடல் திருமூல நாயனார் புராணத்தில் உள்ள பாடல். தில்லை நகரில் கூத்தபிரானை தரிசித்த திருமூலர் காவிரி நதிக்கரையினை சென்று அடைந்ததை குறிப்பிடுகின்றது. புலியூர் என்ற சொல், பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரினை உடைய தில்லைச் சிதம்பரத்தினை குறிக்கும். மேற்கண்ட பாடலில் சேக்கிழார், பெருமானிடம் சற்றும் பயம் கொள்ளாமல் கடல் அமுதத்தினை அளிப்பதற்கு பதிலாக, நஞ்சினை அளித்தமையால், கடலின் மீது கோபம் கொண்ட காவிரி நதி, தனது நீர் வளத்தினை உலகத்திற்கு பெரிதும் அளித்துவிட்டு, கடலின் வயிறு நிறையாத வண்ணம் மிகவும் குறைந்த நீரினை கடலுக்கு அளிக்கின்றது என்று நயமாக கூறுகின்றார். பொன்னி என்பது காவிரியின் மற்றொரு பெயர்.

தடநிலைப் மாளிகைப் புலியூர் தனில் உறைந்து இறைஞ்சிப் போய்

அடல் விடையின் மேல் வருவார் அமுது செய அஞ்சாதே

விடம் அளித்தது எனக் கருதி மேதினிக்கு வளம் நிறைத்தே

கடல் வயிறு நிறையாத காவிரியின் கரை அணைந்தார்

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.101.4), ஐந்து புலன்களும் சேட்டைகள் ஏதும் செய்யாமல், மனதுடன் இணைந்து ஒன்றி செயல்பட, காமம் முதலான ஆறு குற்றங்களையும் வீசி எறிந்து, திருநீறு பூசியவர்களாக, தங்களது தலையினைத் தாழ்த்தி வழிபடும் அடியார்களுக்கு அஞ்சேல் என்று அபயம் அளிக்கின்ற பெருமான் உறைகின்ற தலம் திருவாரூர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அஞ்சு=ஐந்து புலன்கள்; ஆறு=காமம் முதலான ஆறு குற்றங்கள்; குஞ்சி=தலைமுடி; வந்தி செய்ய=வந்தனை செய்ய; மன்னும் ஊர்=நிலையாக பொருந்தி உறையும் ஊர்; பணைத்த=பருமையான; அஞ்சொலார்=அழகிய சொற்களை உடைய மகளிர்; அந்தண்=அழகும் குளிர்ச்சியும் பொருந்திய;

அஞ்சும் ஒன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில்

குஞ்சியார வந்தி செய்ய அஞ்சல் என்னி மன்னுமூர்

பஞ்சியாரும் மெல்லடிப் பணைத்த கொங்கை நுண்ணிடை

அஞ்சொலார் அரங்கு எடுக்கும் அந்தண் ஆரூர் என்பதே

கள்ளம் மற்றும் வஞ்சனையற்ற மனத்தினை உடையவர்களாக, வஞ்சனை காரணமாக செய்யப் படும் வஞ்சனைச் செயல்களை அகற்றியவர்களாக, அன்பு மிகுந்த உள்ளத்துடன் மனமொன்றி வழிபடும் அடியார்களின் உள்ளத்தில் இறைவன் விளங்குகின்றார் என்று திருவாரூர் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.101.6) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அருத்தி=அன்பு; உள்குதல்=தியானித்தல், நினைத்தல்; சுரும்புகள்=வண்டுகள்; அள்ளல்=சேறு; வாரும்=கவர்ந்து உண்ணும்; ஆரல்=ஒரு வகை மீன்;

கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோடு

உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்துளான் உகந்த ஊர்

துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய்

அள்ளல் நாரை ஆரல் வாரும் அந்தண் ஆரூர் என்பதே

பிரமாபுரம் என்று அழைக்கப்பட்ட சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.56.10) திருஞானசம்பந்தர், சிந்தை ஒருமைப்படுத்தி இறைவனைத் தொழவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். சமணர்கள் மற்றும் புத்தர்கள், பெருமானைப் பற்றிய உண்மைகளை திரித்து கூறுவதால், மக்களுக்கு பல விதமான ஐயப்பாடுகள் தோன்றின. அத்தகைய ஐயப்பாடுகள் ஏதுமின்றி ஒன்றிய மனத்துடன் பெருமானை வணங்குமாறு திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அறிவுரை கூறுகின்றார். கழி காலம்=சென்ற காலம்; இதுவரை கழிந்த காலங்கள்; நான்காவது அடியில் வருகின்ற இவரவர் என்ற தொடரை அவரிவர் என்று மாற்றி பொருள் கொள்ள வேண்டும்.

துவருறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்கரையர்

அவரவர் தன்மைகள் கண்டு அணுகேன்மின் அருள் பெறுவீர்

கவருறு சிந்தை ஒன்றிக் கழி காலமெல்லாம் படைத்த

இவரவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்துமினே

கோகரணம் தலத்தின் மீது அருளிய பாடலில் (3.79.1) திருஞானசம்பந்தர், ஒன்றிய மனத்து அடியார்களுடன் கூடிய தேவர்கள் புகழ்ந்து வணங்கும் தலம் கோகரணம் என்று கூறுகின்றார். அடியார் அல்லாத மற்றவர்கள் காண்பதற்கு அரியவனாக உள்ள பெருமான், தனது உள்ளத்தில் இயற்றமிழாகவும் இசைத்தமிழாகவும் இருக்கின்றான் என்று உணர்த்துவதன் மூலம், தான் பாடிய பதிகங்கள் அனைத்தும் பெருமானால் பாடப்பட்டவை என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

என்றும் அரியான் அயலவர்க்கு இயலிசைப் பொருள்களாகி எனதுள்

நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன்முடிக் கடவுள் நண்ணும் இடமாம்

ஒன்றிய மனத்து அடியார் கூடி இமையோர் பரவு நீடரவமார்

குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே

திருவதிகை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.26.8) அப்பர் பிரான், மனம் ஒன்றி இறைவனை நினைக்காத வண்ணம், தனது ஐந்து பொறிகளால் தான் அலைக்கழிக்கப் படுவதாக குறிப்பிட்டு வருந்துகின்றார். மன்றம்=ஊர்ப் பொதுமன்றம்; ஊர்ப் பொதுமன்றத்தில் இருக்கும் புன்னை மரம், பலராலும் கல்லெறியப்பட்டு துன்பங்களுக்கு உள்ளாவது போன்று, ஐந்து பொறிகளாலும் எப்போதும் அலைக்கழிக்கப்பட்டு அடியேன் வருந்துகின்றேன். எந்த வகையிலும் உண்மையை உணராமல், இறைவனே உன்னை எனது மனதினில் வைத்து தியானிக்காமல் இருக்கின்றேன். எனது வாழ்நாள் முடியும் காலம் நெருங்குவதால், காலன் என்னை இறக்கச் செய்து மீண்டும் பிறவிக்குழியில் தள்ளுவதற்கு என்னை நெருங்குகின்றான்: இதனை உணரும் எனது வருத்தம் மேலும் அதிகமாகின்றது. அதிகை வீரட்டானத்தில் உறையும் இறைவனே, நீ தான் எனது வருத்தத்தை போக்க வேண்டும்: ஐந்து பொறிகளின் பிடியிலிருந்து என்னை விடுவித்து உன்னை தியானிக்குமாறு என்னை மாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

மன்றத்துப் புன்னை போல மரம்படு துயரம் எய்தி

ஒன்றினால் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன்

கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கே

அன்றினான் அலமந்திட்டேன் அதிகை வீரட்டனீரே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.62.10) அப்பர் பிரான், புந்தி ஒன்றி பெருமானின் தாள்களை பற்றிக்கொண்டு தான் இல்லாத நிலையை உணர்த்தி வருத்தும் தெரிவிக்கின்றார். சிவபெருமானின் நாமத்தைத் தான், மனமொன்றி பிதற்றாமல் இருந்ததாக அப்பர் பிரான் கூறுவது, அவரைக் குறிப்பிட்டு கூறியதாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது தன்னை சுட்டிக் காட்டி அடுத்தவருக்கு கூறும் அறிவுரையாகும். குரம்பை=உடல்: பொடி=திருநீறு: பொல்லா=அழகு இல்லாத: புந்தி-மனம். இறைவன் அமர்ந்திருந்த திருமலையை அசைக்க முயற்சி செய்த அரக்கனுக்கு அருள் செய்தவனே என்று அழைக்கும் அப்பர் பிரான் தனது தவறு என்ன என்பதை பாடலில் முதல் இரண்டு அடிகளில் உணர்த்துகின்றார். அந்த தவறும் தனது இயலாமை காரணமாக ஏற்பட்டது என்று கூறும் அப்பர் பிரான், அரக்கனின் தவற்றுடன் ஒப்பிட்டால் மிகவும் சிறியது என்பதால், தன்னை மன்னித்து, தனக்கு இறைவன் அருள் செய்ய வேண்டும் என்று இங்கே வேண்டுகின்றார். உடலில் திருநீறு பூசாமல் சிவ வழிபாடு செய்யக்கூடாது என்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. அழகற்ற இந்த உடலில் திருநீற்றைப் பூசி, மனம் ஒன்றி, உனது திருவடிகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு, உனது திருநாமங்களை பிதற்றாமல் அடியேன் இருக்கின்றேன். நீ இருக்கும் திருமலையை, தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி பேர்த்து எடுப்பேன் என்ற முடிவுடன், கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் இருபது தோள்களையும், வருத்திய ஆலவாய் அப்பனே, நீ தான் எனக்கு அருள் புரியவேண்டும். மனம் ஒன்றி நான் உன்னை வழிபட்டு, உனது நாமங்களைப் பிதற்றுமாறு என்னை நீ மாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல்.

பொடிக்கொடு பூசிப் பொல்லாக் குரம்பையில் புந்தி ஒன்றிப்

பிடித்து நின் தாள்கள் எனும் பிதற்றி நான் இருக்க மாட்டேன்

எடுப்பன் என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும் இருபது தோள்

அடர்த்தனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.73.3), அப்பர் பிரான் மனமொன்றி தவம் செய்த விஜயன் என்று குறிப்பிட்டு, ஒன்றிய மனத்துடன் தன்னைத் தொழும் அடியார்களுக்கு இறைவன் அருள் புரிகின்றான் என்று நமக்கு உணர்த்துகின்றார். தவத்தினில் மனம் ஒன்றி இருந்ததால் தான், மூகாசுரன் என்ற அரக்கன் பன்றி வடிவம் கொண்டு தன்னைத் தாக்க வந்ததையும் உணராதவனாக முதலில் அர்ஜுனன் இருந்தான். பின்னர் ஆங்கே வந்த வேடன் அம்பு எய்ததைக் கண்ட தானும் அந்த பன்றியின் மீது அம்பு எய்தான். மனம் ஒன்றி இறைவனை நினைப்பவர்களுக்கு ஊனம் ஏதும் இல்லை என்ற அப்பர் பிரானின் வாக்கிற்கு இணங்க, சிவபெருமான் தனது பக்தனைக் கொல்ல வந்த பன்றியை அம்பினால் வீழ்த்தினார். அர்ஜுனனது தவத்திற்கு இடையூறாக வந்த பன்றியை கொன்று வெற்றி கொண்ட வேடன் என்பதை உணர்த்தும் வகையில், வென்றி கொள் வேடன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். தவம் செய்யும் காலத்தும் வில்லினை விட்டுப் பிரியாமல் இருந்த விஜயன் என்பதைக் குறிக்க, நீள்சிலை விசயன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பில் காலம்

நின்று தம் கழல்கள் ஏத்து நீள் சிலை விசயனுக்கு

வென்றி கொள் வேடனாகி விரும்பி வெம் கானகத்துச்

சென்று அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே

மனமொன்றி ஜடாயு வழிபட்டான் என்று திருஞான சம்பந்தர் கூறுவது, நமக்கு அப்பர் பிரான் தில்லைத் தலத்தின் மீது அருளிய பாடலினை (4.81.3). நினைவூட்டுகின்றது. கன்றிய=சினந்த சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்து விட்ட நிலையில், அவனது உயிரினைக் கவரும் பொருட்டு தனது கடமையைச் செய்ய வந்த இயமனுக்கு அந்தச் சிறுவன் தனது கடமையைச் செய்ய விடாமல் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது, கோபத்தை ஏற்படுத்தியது. சிறுவன் மார்க்கண்டேயனின் தந்தை மிருகண்டு முனிவர், பெற்ற வரத்தின் காரணமாக, தனது ஆயுட்காலம் பதினாறு வருடங்கள் தான் என்பதை நன்றாக அறிந்தவன் சிறுவன் மார்க்கண்டேயன். எனினும், பதினாறு வருடங்கள் முடிந்த அந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும், இயமன் தன்னை நெருங்கி தனது உயிரினைக் கவர்ந்து செல்வான் என்பதை நன்கு அறிந்தவனாக அந்த சிறுவன் இருந்தான். ஆனாலும், தன்னை எதிர் நோக்கி இருந்த மரணத்தைக் கண்டு அஞ்சாமலும், அந்த மரணத்தை நினைத்துப் பார்க்காமலும், சிவபூஜையில் மனம் ஒன்றி பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தான்; இந்த பக்குவ நிலையினைத் தான் மனம் ஒன்றி வழிபாடு செய்த சிறுவன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அடியவனான மார்க்கண்டேயனுக்காக கோபத்துடன் வந்த இயமனையும் காலால் உதைத்து, சிறுவன் மார்க்கண்டேயனைப் காப்பாற்றியவன் சிவபெருமான். அத்தகைய கருணைக் கடவுளை மனம் ஒன்றி நினைத்து வழிபடுவதால் உமக்கு எந்த விதமான ஊனமும் ஏற்படாது; மாறாக அவரது கருணை கிடைக்கும். எனவே நீங்கள் தில்லைச் சிதம்பரம் சென்று நடனம் ஆடும் கூத்தபிரானை வழிபட்டு பயன் அடைவீர்களாக. நடராஜப் பெருமானது புன்முறுவல், நீ என்று வந்தாய் என்று என்னை நோக்கி கேட்பதை உணர்த்துகின்றது என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை

கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்

சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்

என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே

ஒரு பொதுப் பதிகத்தின் பாடலில் (5.96.3) அப்பர் பிரான், கங்கை வெள்ளத்தை அடக்கிய சிவபெருமான், தனது உள்ளத்தில் இருந்த ஆணவ மலத்தினையும் அடக்கி, தான் மனம் ஒன்றி அவனை நினைப்பதற்கு வழி வகுத்தவன் என்று கூறுகின்றார். வெள்ளத்தார்=அருள் வெள்ளத்தை உடையவர்; கள்ளம்=ஆணவ மலம்; விஞ்சையர்=வித்தியாதரர், ஆடல் மற்றும் பாடல் கலைகளில் தேர்ந்தவர்கள்; தேவர்களில் ஒரு வகை; விகிர்தன்=ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன். பகீரதன் தனது மூதாதையர்கள், கபில முனிவரின் சாபத்தினால் சாம்பலாக பாதாளத்தில் குவிந்து கிடந்த சகர புத்திரர்களை கடைத்தேற்றும் நோக்கத்துடன், மேல் உலகத்தில் உள்ள கங்கை நதியினை நிலவுலகத்திற்கு கொண்டு வர பிரமனை நோக்கி தவம் செய்ய, பிரமன் கங்கை நதியினை உலகத்திற்கு செல்லுமாறு பணித்தார். ஆனால் மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கும் கங்கை நதியினை தாங்க வல்லவர் யார் என்று பகீரதன் திகைத்துக் கொண்டிருந்த நேரத்தில், பிரமன் சிவபெருமான் ஒருவருக்கே கங்கை நதியின் வேகத்தை அடக்கி தாங்கிக் கொள்ளும் வல்லமை உள்ளது என்று கூறினார். ஏனையோரிடம் இல்லாத ஆற்றல் உடையவனாக திகழும் பெருமானை, விகிர்தன் என்று அழைப்பது தானே பொருத்தம். உலகப் பொருட்களின் மீது உலகத்து உயிர்களின் மீது ஒருவன் வைத்துள்ள விருப்பம் தானே, ஒன்றிய மனத்துடன் இறை வழிபாட்டில் ஈடுபடவொட்டாமல் அவனைத் தடுக்கின்றது. உலகப் பொருட்களின் மீது ஏற்படும் ஆசையைக் கடந்தவராக இருந்ததால் தானே, அப்பர் பிரான் ஒளி மிகுந்த இரத்தினக் கற்களையும் சாதாரண கற்களாக, குப்பை போன்று ஒன்றாக கருதி வீசி எறிந்தார்; அவ்வாறு தனது மனம் சிவபெருமானைத் தவிர்த்து வேறு எந்த சிந்தனையும் இன்றி ஒன்றியதால், தனது உள்ளத்தின் உள்ளே விளங்கும் ஞானவொளியாக பெருமான் இருப்பதை தான் அறிய முடிந்தது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

வெள்ளத்தார் விஞ்சையர்கள் விரும்பவே

வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார்

கள்ளத்தைக் கழியம் மனம் ஒன்றி நின்று

உள்ளத்தில் ஒளியைக் கண்டது உள்ளமே

கயிலாய மலை மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.100.6), சுந்தரர், ஐந்து பொறிகளும் இறைவன் பற்றிய நினைப்பில் ஒன்றி நிற்கும் தன்மையில், பூக்கள் கொண்டு இறைவனை வழிபடுதல் எவ்வாறு என்பதை அறியாதவனாக தான் இருந்த தன்மையை குறிப்பிட்டு வருந்துவதை நாம் உணரலாம். இதன் மூலம் நாம், ஐந்து பொறிகளும் தத்தம் வழியில் செல்வதைத் தடுத்து இறைவனைப் பற்றிய சிந்தைனையில் ஒன்றி இருக்கும் வண்ணம் அடக்கி, பெருமானை வழிபட வேண்டும் என்பதை சுந்தரர் உணர்த்துகின்றார் என்பதை புரிந்து கொள்ளலாம். துஞ்சுதல் என்றால் இறத்தல் என்று பொருள். துஞ்சுதல் மாற்றுவித்து என்ற தொடர் மூலம், தன்னை பெருமான் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவித்ததை சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார். நொடித்தான் மலை என்பது கயிலாய மலையின் மற்றொரு பெயர். நொடித்தல் என்றால் அழித்தல் என்று பொருள். ஊழி முடிவினில் அனைத்து உடல்களையும் பொருட்களையும் அழிக்கும் தொழிலைச் செய்பவன் என்பதால் நொடித்தான் என்று பெருமான் குறிப்பிடப்பட்டு, நொடித்தான் உறைகின்ற மலை என்ற பொருள் பட, நொடித்தான் மலை என்று சுந்தரர் அழைக்கின்றார்.

அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டடி சேர்வறியா

வஞ்சனை என் மனமே வைகி வான நன்னாடர் முன்னே

துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரமல்லது ஒரு

வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான் மலை உத்தமனே

பொழிப்புரை:

தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து, அந்த ஈரப்பசை மிகுந்த தோலினைத் தனது உடல் மீது போர்த்தவனும், மிகுந்த அழகுடன் தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தி நடனம் ஆடுபவனும், தனக்கு உணவு ஏதும் தேவைப்படாத நிலையிலும் பித்தர் போன்று பலியேற்று உலகெங்கும் திரிபவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் பேணி பாதுகாத்து உறையும் இடம் புள்ளிருக்குவேளூர். பல காலம் தவம் செய்து அடைந்த ஞானம் கொண்டு, மிகுந்த பக்தியுடன் தனது மனம் ஒன்றி பெருமானை வழிபட்டதால் உய்வினை அடைந்து மகிழ்ச்சியுடன் இருந்த ஜடாயுவும் சம்பாதியும் பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் என்பதாகும்.

பாடல் 8:

கள்ளார்ந்த பூங்கொன்றை (2.043) பாடல்கள் 7 தொடர்ச்சி, 8, 9, 10, 11 (திதே 0417)

பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடியாக

மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம்

எண்ணின்றி முக்கோடி வாணாள் அது உடையானைப்

புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

பொதுவாக திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் அரக்கன் இராவணனின் வலிமையை சிவபெருமான் அடக்கியதும் பின்னர் அவனுக்கு அருள் புரிந்த நிகழ்ச்சியும் காணப்படும் ஆனால் இந்த பதிகத்தில், சிவபெருமான் இராவணனின் வலிமையை அடக்கிய நிகழ்ச்சி குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக, பெருமானின் அடியான் ஆகிய ஜடாயு, இராவணனின் வலிமையை அடக்கிய நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. பெருமானின் பெருமை போன்று அவனது அடியார்களின் பெருமையையும் சிறப்பாக கருதியமையால், திருஞான சம்பந்தர் ஜடாயு அரக்கனின் வலிமையை அடக்கிய நிகழ்ச்சியை குறிப்பிட்டார் போலும் என்று தோன்றுகின்றது. இத்தகைய குறிப்பு நமக்கு வடகுரங்காடுதுறை தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய பதிகத்து பாடலை (3.91.8) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இலை=மூலிகை பச்சிலைகள்

நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தோடு ஒல்க

வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்

ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி

ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே

இந்த நிகழ்ச்சி இராமயணம் உத்தர காண்டத்தில் காணப் படுகின்றது. தான் சந்தியாவந்தனம் செய்வதற்கு கடற்கரை செல்வது வாலியின் அன்றாட வழக்கம். அவ்வாறு சென்ற வாலியைக் கண்ட அரக்கன் இராவணன், அவனது வலிமையை அடக்கும் பொருட்டு அவனது முதுகின் மீது ஏறி அமர்ந்தான். தனது முதுகின் மீது எவரோ அமர்வதை உணர்ந்த வாலி, தனது வாலினால் அரக்கன் அசையாத வண்ணம் சுற்றிக் கட்டினான் என்று வால்மீகி கூறுகின்றார். ஒல்க=குழைய;

அரக்கனின் வலிமையை பெருமான் அடக்கிய நிகழ்ச்சி குறிப்பிடப்படவில்லை; எனினும் பெருமான் மூன்று கோடி வாழ்நாள் அருளியது இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. பண் ஒன்ற=இசைப்பண் பாடலுடன் பொருந்தும் வண்ணம்; குடியாக=புகலிடமாக; மண்ணின்றி= மீண்டும் உலகினில் பிறக்க வேண்டிய அவசியம் இன்றி; விண்=விண்ணுலகத்தினும் பெருமை வாய்ந்த முக்தி உலகம்; மருவும்=வாழும்; புண்=காயங்களால் ஏற்பட்ட புண்; எண்ணின்றி=கணக்கில் அடங்காத வண்ணம்; வாணாள்=வாழ்நாள்; பொதுவாக திருஞான சம்பந்தரின் பெரும்பாலான பதிகங்களில், எட்டாவது பாடலில் இராவணனுக்கு பெருமான் அருள் செய்தமையும், ஒன்பதாவது பாடலில் அண்ணாமலை நிகழ்ச்சியும், பத்தாவது பாடலில் சமணர்கள் பற்றிய குறிப்பும் காணப் படுவதை நாம் அறிவோம். ஆனால் இந்த பதிகத்தின் பாடல்கள் மற்ற பதிகங்களிலிருந்தும் மாறுபட்டவை. இந்த பதிகத்தின் பாடலில் இராவணன் பற்றிய குறிப்பு காணப்பட்டாலும், மற்ற இரண்டு குறிப்புகள் ஒன்பதாவது பத்தாவது பாடல்களில் காணப்படவில்லை. இவ்வாறு இராவணனுக்கு அருள் புரிந்தமை குறிப்பிடப்பட்டு மற்ற இரண்டு நிகழ்ச்சிகள் குறிப்பிடப் படாத திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகம் இந்த பதிகம் ஒன்று தான் என்பது குறிப்பிடத் தக்கது.

பொழிப்புரை:

இனிய இசை பொருந்தும் வண்ணம் பாடல்கள் பாடி, பெருமானின் திருவடிகளை புகலிடமாக கருதி வழிபடும் அடியார்கள், மீண்டும் நிலவுலகில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லாமல் விண்ணுலகத்தினும் மேலான முக்தி உலகத்தினை அவர்களுக்கு அருளும் பெருமான், தனது கழுத்தினில் மாணிக்கம் பதிக்கப் பட்டது போன்று கறையினை உடைய நீலகண்டன், உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் மூன்று கோடி வாழ்நாளை, பெருமானது அருளால் பெற்ற அரக்கன் இராவணனின் உடலில் காயங்களும் புண்களும் ஏற்படும் வண்ணம் போரிட்டு அவனது வலிமையை அழித்த ஜடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் தலமாகும்.

பாடல் 9:

கள்ளார்ந்த பூங்கொன்றை (2.043) பாடல்கள் 7 தொடர்ச்சி, 8, 9, 10, 11 (திதே 0417)

வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து அவிய

சாதித்த வில்லாளி கண்ணாளன் சாரும் இடம்

ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலத்தவரோடும்

போதித்த சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

வேதித்தார்=பேதம் செய்து வேறுபட்டவர்; வேறு எவராலும் அழிக்க முடியாத மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒருசேர அழித்து சாதனை செய்தவன் சிவபெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் சாதித்த வில்லாளி என்று கூறுகின்றார். கண்ணாளன்=கண் போன்று உலகம் இயங்குவதற்கு இன்றியமையாதவனாக விளங்கும் பெருமான்; ஞாலம்=உலகம்; சூரியனின் மகன்களாகிய ஜடாயு சம்பாதி ஆகிய இருவரும், ஒரு முறை மிகவும் உயரே பறந்து சூரிய மண்டலத்தை நெருங்கியதால், அவர்களது சிறகுகள் எரிந்துபட்டு கீழே இந்த தலத்தில் விழுந்தனர் என்றும் பெருமானை வழிபட்டு அதன் பயனாக சிறகுகள் வளர்ந்தன என்றும் தலபுராணம் கூறுகின்றது. உலகத்தவர் பெருமானை வழிபட்டு, அதன் பயனாக ஞானம் பெற்று, மற்றவருக்கு அறிவுரை கூறியது போன்று இந்த இரண்டு பறவைகளும் மற்றவருக்கு அறிவுரை கூறியதாக திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். .

பொழிப்புரை:

வேதநெறி வழி செல்லாமல் வேறு வழியில் சென்ற திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், தான் கொண்டிருந்த கொடிய அம்பினால் ஒரே சமயத்தில் எரித்து அழித்த சாதனை படைத்த வில்லாளி பெருமான் ஆவான். உலகத்தின் கண் போன்று அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதவனாக இருந்து ஆட்கொள்ளும் பெருமான் சார்ந்து தங்குமிடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். அரக்கன் இராவணனை எதிர்கொண்டு, சூரியனின் மகன் என்ற இயல்பினுக்கு ஏற்ப வலிமை கொண்டவன் தான் என்று உலகுக்கு நிரூபித்த ஜடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் ஆகும்.

பாடல் 10:

கள்ளார்ந்த பூங்கொன்றை (2.043) பாடல்கள் 7 தொடர்ச்சி, 8, 9, 10, 11 (திதே 0417)

கடுத்து வரும் கங்கை தனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே

தடுத்தவர் எம் பெருமானார் தாம் இனிதா உறையும் இடம்

விடைத்து வரும் இலங்கைக் கோன் கலங்கச் சென்று இராமர்காப்

புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

கடுத்து வரும்=மிகுந்த கோபத்துடன்; நீர்நிலைகளில் முங்கி, தலை உட்பட உடல் உறுப்புகள் அனைத்தும் நனையும் வண்ணம் குளித்தலே, நீராடல் என்று சொல்லப்படும். பெருமான் தனது சடையில் கங்கை நதியினை தேக்கி மறைத்த போதிலும் அவரது சடை முழுதும் நனையாமல் இருந்தது என்பதை உணர்த்தும் வண்ணம், சடை ஒன்றும் ஆடாமே என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானுக்கு ஒன்பது சடைகள் என்று தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. அந்த ஒன்பது சடைகளில் ஒரு சடை மட்டுமே, கங்கை நதியைக் கரந்திடப் பயன்பட்டது என்பதையும் திருஞான சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். விடைத்து=சீறி; கமழ் சடை=பரந்து விளங்கிய சடை; மலங்க=கலங்க; கமழ் சடை என்ற தொடருக்கு நறுமணம் கமழும் பூக்களை சடையில் அணிந்தவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சூரிய மண்டலம் வரை பறந்து சென்றதால் சம்பாதியின் சிறகுகள் எரிந்து அழிந்தன என்று மணிமேகலை காப்பியம், சம்பாதி வனத்தை குறிப்பிடுகையில் சொல்கின்றது. அரக்கன் இராவணன் வைத்திருந்த சந்திரகாசம் என்ற வாள் மிகவும் சிறந்த படைக்கலம் என்பதால். அந்த படைக்கலம் மீண்டும் பயன்படாத வகையில் செயல்பட்ட ஜடாயு இராமபிரானுக்கு செய்த உதவி மிகவும் பெரிய உதவியாகும்.

பொழிப்புரை:

தனது விருப்பத்திற்கு மாறாக நிலவுலகம் செல்லுமாறு பணிக்கப் பட்டதால், மிகுந்த கோபத்துடன் வேகமாக கீழே இறங்கிய கங்கை நதியினை, தனது ஒன்பது சடைகளில் ஒரு சடையில் பெருமான் தாங்கிய போதிலும், அந்த ஒரு சடையும் முழுவதும் நனையாத வண்ணம் இருந்தது. அத்தகைய பேருருவும் ஆற்றலும் கொண்டுள்ள பெருமான், மிகுந்த மகிழ்வுடன் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் ஆகும். தான் சீதா பிராட்டியைக் கவர்ந்து சென்றதை கண்டுவிட்ட ஜடாயு என்பதால் மிகுந்த கோபம் கொண்டு சீறிப் பாய்ந்த, இலங்கை மன்னனாகிய அரக்கன் இராவணன் கலங்கும் வண்ணம், இராம பிரானுக்கு உதவி செய்யும் பொருட்டு அரக்கனுடன் கடுமையாக போரிட்டு அவனது வலிமையை அழித்த ஜடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூராகும்.

பாடல் 11:

கள்ளார்ந்த பூங்கொன்றை (2.043) பாடல்கள் 7 தொடர்ச்சி, 8, 9, 10, 11 (திதே 0417)

செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்தாவான்

பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரைக்

கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்

மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே

விளக்கம்:

செடி=குணமின்மை; பாவம் சேர்ந்தது; வினைகளால் விளைந்த உடல் என்பதால் களங்கம் உடையது என்று கூறப்படுகின்றது. வினைகளை தீர்த்துக் கழிப்பதற்கு தானே, உயிர் தகுந்த உடலுடன் சேர்க்கப் படுகின்றது. மீண்டும்மீண்டும் பிறந்து உழல்வது உயிர்களின் குற்றம். அந்த குற்றமாகிய நோயினைத் தீர்க்கும் வல்லமை படைத்த மருத்துவன் என்பதால் தலத்து இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர் ஏற்பட்டது. அவனைத் தொழுது வணங்குவதே மருந்தாக செயல்படுவதால், பெருமானையே மருந்து என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பொடி=திருநீறு; நீரில் நீராடும் ஒருவனின் உடலில் எங்கும் நீர்த்துளிகள் காணப்படுவது போன்று, பெருமானின் உடலெங்கும் திருநீறு காணப்படுவதால், பொடியில் நீராடியவன் என்ற பொருள்பட பொடியாடி என்று நயமாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மடி=சோம்பல்; மடியின்றி=சோம்பல் ஏதுமின்றி மீண்டும்மீண்டும் சொல்லும் தன்மை; கடி=நறுமணம்; பொடியாடிக்கு அடிமை என்று திருஞானசம்பந்தர் தன்னை குறிப்பிடுவதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர்.

மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீராநோய் தீர்த்து அருள வல்லான் என்று அப்பர் பிரான் கூறுவது (6.54.8) நமது நினைவுக்கு வருகின்றது. பஞ்சாக்கர மந்திரத்தை மந்திரம் என்றும், பஞ்சாக்கர மந்திரத்தால் விளக்கப்படும் ஆகம நூல்களை தந்திரம் என்றும் அந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறையின் வழியே செய்யப்படும் தியானம், பூஜை, ஜெபம் ஆகியவற்றை மருந்து என்றும் அப்பர் பிரான் உணர்த்துவதாகவும் பொருள் கொள்ளலாம்.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்

தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீயெழத் திண்சிலை கைக்கொண்ட

போரானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

பொழிப்புரை:

நமது தீவினைகளுக்கு மருந்தாக விளங்கி அவற்றை முற்றிலும் நீக்கி, களங்கம் நிறைந்த உடலுடன் சேர்ந்து மீண்டும்மீண்டும் பிறப்பதைத் தவிர்க்கும் பெருமானுக்கு, தனது உடல் முழுதும் திருநீறு பூசி விளங்கும் பெருமானுக்கு, அடிமையாக திகழ்ந்து வழிபட்ட சடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர். நறுமணம் உடைய மலர்ச் சோலைகள் நிறைந்த சீர்காழி நகரத்தில் தோன்றியவனும், கவுணிய கோத்திரத்தைச் சார்ந்தவனும் ஆகிய ஞான சம்பந்தன் சொல்லிய இந்த பத்து பாடல்களையும், சோம்பல் ஏதுமின்றி மீண்டும்மீண்டும் சொல்லும் வல்லமை வாய்ந்த அடியார்களுக்கு மறுபிறப்பு என்பதே இல்லை. அவர்கள் இறைவனின் அருளால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைந்து நிலையான இன்பமுடன் வாழ்வார்கள்.

முடிவுரை:

இந்த தலத்தில் உள்ள சித்தாமிர்தக் குளத்தில் தவளைகளை காண முடியாது. சதானந்த முனிவர் என்பவர் இங்கே தவம் செய்து கொண்டிருந்த போது, தன்னைத் துரத்திய பாம்பிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்த தவளை ஒன்று முனிவர் மீது குதித்தது. தனது கவனம் சிதறிய முனிவர், இந்த குளத்தில் பாம்பும் தவளையும் இருக்கலாகாது என்று சாபம் கொடுக்க, அன்றிலிருந்து இந்த குளத்தில் தவளைகள் வருவதில்லை. கிருத்திகை போன்ற விழாக் காலங்களில் உலா வரும் முத்துக்குமாரர், முதலில் சிவபெருமான் சன்னதியை வலம் வந்த பின்னர் அம்பிகை சன்னதி சென்று அன்னையை வழிபட்ட பின்னரே, உலா செல்வார். திரும்பிய பின்னர் நேராக அன்னையின் சன்னதி சென்று, ஆங்கே பால் நிவேதனம் பெற்றுக் கொண்ட பின்னரே தனது இருப்பிடத்திற்கு திரும்புவார். தாயிடம் சொல்லிவிட்டு வெளியே செல்லும் மகன், திரும்பி வந்ததும் தாயிடம் முதலில் செல்வது, நமக்கு வாழ்க்கை நெறியை உணர்த்துகின்றது. இந்த திருக்கோயிலின் விளக்கழகு என்று உணர்த்தும் முதுமொழி வினைதீர்த்தான் கோயில் விளக்கழகு. பெருமான் இந்த தலத்தில் முருகப் பெருமானுக்கு பூச்செண்டு அளித்ததாக கருதப் படுகின்றது. இதனை நினைவூட்டும் வகையில், தினமும் காலையில் மூலவர் சன்னதியில் வைக்கப்படும் பூச்செண்டு, பின்னர் முருகரின் கரத்தில் இன்றும் வைக்கப் படுகின்றது. பங்குனிப் பெருவிழாவின் ஐந்தாம் நாள், முருகரை மூலவரின் கருவறைக்கு முன்னர் எழுந்தருளச் செய்து, முருகர் சிவபெருமானை வழிபட்டதை உணர்த்துகின்றனர். அன்று பூஜையின் முடிவில், சிவலிங்கத்தின் மீது வைக்கப்படும் பூச்செண்டு (பொன்னும் நவமணிகளும் கொண்டு இழைக்கப்பட்ட செண்டு) குமரனின் கரத்தில் வைக்கப் படுகின்றது. இந்த திருக்கோயிலில் உள்ள ஐந்து கோபுரங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. ஏழுநிலை இராஜகோபுரம் கொண்ட திருக்கோயில். சித்தாமிர்தக் குளம் தோன்றிய காரணம் இரண்டு விதமாக சொல்லப் படுகின்றது. தேவலோகத்து பசு காமதேனு, பால் சொரிந்து இறைவனை வழிபட்டதாகவும், அந்த பால் வழிந்து ஏற்பட்ட தீர்த்தம் என்றும், சித்தர்கள் இறைவனின் திருமுடியில் அமிர்தம் கொண்டு நீராட்ட, அந்த அமிர்தம் வழிந்ததால் ஏற்பட்ட தீர்த்தம் என்றும் கூறுகின்றனர். மேலும் கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்பனவும் திருக்கோயிலில் உள்ளன. வேளூர்வாயில் என்று இந்த திருக்கோயில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப் படுகின்றது. அகநானூறு இலக்கியத்தில் உள்ள ஒரு பாடலில், புலவர் இடையன் நெடுங்கீரனார் என்பவர், இந்த தலத்திலுள்ள தெய்வம் பொய் சொல்வோரின் உயிரைப் பலியாக கொள்ளும் என்று கூறுகின்றார். தை மாதத்தில் முருகப் பெருமானுக்காக பிரம்மோற்சவமும் பங்குனி மாதத்தில் பெருமானுக்காக பிரம்மோற்சவமும் நடைபெறுகின்றன.

இந்த பதிகத்தினை நாள்தோறும் பாராயணம் செய்யும் அடியார்களுக்கு பிறவிப்பிணி தீரும் என்பது சான்றோர்களின் முடிவு. பெருமானின் தன்மைகளையும் பண்புகளையும் சிறப்பாக கருதுவது போன்று அடியார்களின் தன்மையையும் நாம் சிறப்பாக கருதவேண்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு, திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சடாயு மற்றும் சம்பாதியின் செயல்களை குறிப்பிடுகின்றார். சடாயு மற்றும் சம்பாதியின் செயல்கள் விவரமாக கூறப்பட்டாலும் பெருமானின் பெருமைகளையும் திருஞானசம்பந்தர் இந்த பதிகத்து பாடல்களில் கூறுகின்றார்.

பதிகத்தின் முதல் பாடலில் சந்திரனுக்கு அருளிய கருணைத் தன்மையும், இரண்டாவது பாடலில் பக்குவப்பட்ட அடியார்களின் மலங்களைத் தனது பிச்சைப் பாத்திரத்தில் ஏற்றுக்கொண்டு முக்தி நிலை அளிக்கும் தன்மையும், மூன்றாவது பாடலில் தேவர்களால் வணங்கப்படும் தன்மையும், நான்காவது பாடலில் தீயினை ஏந்தியவாறு நடமாடும் தன்மையும், ஐந்தாவது பாடலில் அடியார்கள் இசையுடன் இணைத்து பாடல்கள் பாடும் வண்ணம் தலத்தில் உறையும் தன்மையும், ஆறாவது பாடலில் நாம் அனைவரும் உய்யும் வண்ணம் ஆகமங்களையும் வேதங்களையும் அருளிய கருணைச் செயலும், ஏழாவது பாடலில் தன்னை எதிர்த்து வந்த மதயானையினை வெற்றி கொண்ட தன்மையும், எட்டாவது பாடலில் இசைப் பாடல்கள் பாடி தன்னை மகிழ்விக்கும் அடியார்கள் மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகுக்கு வாராமே தன்னுடன் இணைந்து இன்பமாக இருக்கும் நிலையினை அருளும் திறமும், ஒன்பதாவது பாடலில் திரிபுரங்களை எரித்த சாதனையும், பத்தாவது பாடலில் பெருமானின் பெரிய உருவத்தையும் பேராற்றலையும் குறிப்பிடும் திருஞானசம்பந்தர் பதிகத்தின் கடைப்பாடலில், மறுபிறப்பினை நாம் தடுப்பதற்கான வழியினை உணர்த்துகின்றார். மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி நமது பிறவிப் பிணியினைத் தீர்க்கும் மருத்துவனாகிய வைத்தியநாதரை, அப்பரும் திருஞானசம்பந்தரும் அருளிய பதிகங்கள் கொண்டு வணங்கி துதித்துப் பாடி, இம்மையில் நோயின்றியும் மறுமையில் பிறவிப் பிணி நீங்கப் பெற்றும் இன்பமுடன் வாழ்வோமாக.



Share



Was this helpful?