இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கணை நீடெரிமால்

கணை நீடெரிமால்

பதிக எண்: 1.33. - திரு அன்பில் ஆலந்துறை - தக்கராகம்

பின்னணி:

தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு தலம் சென்ற திருஞான சம்பந்தர் அதன் பின்னர் அருகிலுள்ள பெரும்புலியூர், நெய்த்தானம், மழபாடி, கானூர், அன்பில் ஆலந்துறை ஆகிய தலங்கள் சென்றார் என்று பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. அதன் மருங்கு என்று மழபாடி தலம் குறிக்கப் படுகின்றது. இறைவனின் அருளினால் திருக்கானூர் பணிந்து ஏத்தி என்று சேக்கிழார் குறிப்பிடுவதை நாம் உணரலாம். இறைவன் உறையும் திருத்தலங்கள் சென்று அவனைக் கண்டு களிப்பதும், அவனது அருள் இருந்தால் தான் நடைபெறும். ஆனால் அடிப்படையாக உயிர்கள் அவ்வாறு பல தலங்கள் செல்ல வேண்டும் என்று விரும்பவேண்டும். ஆன்ற=பல நற்குணங்கள் பொருந்திய; முதல் சைவர்=ஆதி சைவர்; கரடம்=அருவி; மதநீர் அருவி போன்று பெருகிப் பாயும் மதயானை; பல பதிகள் என்று சேக்கிழார் குறிப்பிடும் தலங்கள் யாது என்று அறிய முடியவில்லை; அந்த தலங்களுக்கு உரிய தேவாரப் பதிகங்களும் கிடைக்கவில்லை. அன்பில் என்பது தலத்தின் பெயர். ஆலந்துறை என்பது தலத்திலுள்ள திருக்கோயிலின் பெயர். பல திருக்கோயில்கள் தலத்தின் பெயருடன் இணைக்கப்பட்டு தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய ஒரு பதிகமும் அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் ஒன்றும் கிடைத்துள்ளன.

அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ

முதல் மறையோர் அன்பில் ஆலந்துறையின் முன்னவனைத் தொழுது போற்றிப்

பத நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பல பதிகள் பணிந்து பாடி

மத கரட வரை உரித்தார் வடகரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர்

லால்குடி தலத்திற்கு ஆறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள இந்த தலம் செல்ல, திருச்சியிலிருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. அன்பில் நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில். இந்த தலம் வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் கருதப் படுகின்றது. இறைவனின் திருநாமம், சத்தியவாகீஸ்வரர், பிரமபுரீசுவரர்; அம்பிகையின் திருநாமம் சௌந்தர நாயகி. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம். பிரமன் மற்றும் வாகீச முனிவர் வழிபட்டதை குறிப்பிடும் வகையில் இறைவனின் திருநாமங்கள் அமைந்ததாக கூறுவார்கள். மூலவர் சதுரபீட ஆவுடையாரில் அமைந்துள்ள சுயம்பு மூர்த்தம். மேலும் அன்னை பார்வதி, ஐயனார், நவகிரகங்கள் வழிபட்ட திருக்கோயில் என்று கருதப்படுகின்றது. கோயில் முதலில் மாடக் கோயிலாக இருந்து பின்னாளில், பராந்தகச் சோழனின் காலத்தில், கற்றளியாக மாற்றப்பட்டது என்று கூறுவார்கள். துவாரபாலகர் அருகே பிரமன், பெருமானை வழிபடும் சிற்பம் உள்ளது. சப்தமாதர், பிக்ஷாடனர், பைரவர், பிரமன், விசாலாட்சி உடனாய விசுவநாதர், முருகப் பெருமான் சன்னதிகள் உள்ளன. சூரியனைத் தவிர்த்து அனைத்து கோள்களும், சூரியனைப் பார்த்த வண்ணம் நவகிரக சன்னதி அமைந்துள்ளது. கருவறைச் சுவர்களில், அன்னை பார்வதி தேவி, திருமால், சூரியன், செவ்வாய், பிரமன், ஆதிசேஷன் ஆகியோர் பெருமானை வணங்கும் நிலையில் சிற்பங்களாக உள்ளனர்.

திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் அருகருகே இரண்டு விநாயகர் உருவங்களை நாம் காணலாம். வெளியே உள்ள விநாயகர் சற்று மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகின்றார். தனது தலையை ஒரு புறமாக சாய்த்துக் கொண்டு, வலது காதினை நீட்டிக் கொண்டு, எங்கோ தொலை தூரத்தில் இருந்து வரும் ஓசையை கேட்பது போன்ற தோற்றத்தில் இருக்கும் விநாயகரின் முகத்தினில் புன்முறுவலையும் காணலாம். இந்த விநாயகருக்கு செவி சாய்த்த விநாயகர் என்று பெயர். இவ்வாறு பெயர் வந்ததற்கான காரணம் இரண்டு நிகழ்ச்சிகள் செவி வழக்காக சொல்லப் படுகின்றன. பராந்தகச் சோழர் காலத்தில் சாமவேதத்தின் ஜைமினி பிரிவைச் சார்ந்த நூற்றெட்டு அந்தணர்கள், தினமும் அக்னிஹோத்ரம் செய்யும் அந்தணர்கள், இந்த ஊருக்கு குடியேறினார்கள் என்றும் அவர்கள் இசைத்த சாமகானத்தை, உன்னிப்பாக செவி மடுத்து கேட்ட விநாயகர் என்பதால் செவி சாய்த்த விநாயகர் என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள். இந்த விநாயகர் திருஞான சம்பந்தருடன் இணைத்து சொல்லப்படும் ஒரு கர்ணபரம்பரைச் செய்தியும் உள்ளது. திருஞானசம்பந்தர் இந்த தலம் வந்த போது கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடியபடியால், அவரால் இந்த தலம் வர முடியவில்லை என்றும், அடுத்த கரையிலிருந்தே அவர் பாடிய தேவாரப் பதிகத்தினை விநாயகர் ரசித்து உற்று கேட்டார் என்றும், அன்றிலிருந்து இந்த மூர்த்தம் அதே நிலையில் உள்ளது என்றும் கூறுவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சி குறித்து பெரிய புராணத்தில் குறிப்புகள் ஏதும் இல்லை. .

பாடல் 1:


கணை நீடு எரி மால் அரவம் வரை வில்லா

இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்

பிணை மாமயிலும் குயில் சேர் மட அன்னம்

அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

பிணை=தங்களது துணையோடு சேர்ந்து இருக்கும்; மட=இளமை வாய்ந்த: கணை=அம்பு; நீடு எரி=நீண்டு எரியும்; மால்=திருமால்; வரை=மலை; இணையா=வேறுவேறு திசைகளில் எப்போதும் சென்று கொண்டிருப்பதால், திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் வருவது என்பது மிகவும் அரிதான செயல். மேலும் ஒரே நேர்க் கோட்டினில் வரும் தருணத்தில் தான் அந்த கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்ற வரத்தை திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்ததால், அந்த அரக்கர்கள் தங்களது கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டினில் வாராத வண்ணம், வேறுவேறு திசையில் பறந்து கொண்டிருந்தனர். பெருமான் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் அழித்தார் என்று பல திருமுறைப் பாடல்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன. ஒரே கோட்டினில் வரும் தருணத்தில் தாங்கள் அழிவதற்கு வாய்ப்பு இருப்பதை நன்கு அறிந்த திரிபுரத்து அரக்கர்கள் அவ்வாறு ஒரே கோட்டினில் வருவதை தவிர்ப்பார்கள் அல்லவா. எனவே பெருமான் திரிபுரத்து கோட்டைகளை அழித்த போது அந்த கோட்டைகள் மூன்றும் ஒரே நேர்க்கோட்டினில் வந்த நிலை அரக்கர்களின் செயலால் அல்ல என்பது தெளிவாகின்றது. எனவே திரிபுரத்து அரக்கர்களை அழிக்கத் திருவுள்ளம் கொண்ட இறைவன், அந்த மூன்று கோட்டைகளையும் ஒரே நேர் கோட்டினில் வரும் வண்ணம் செய்த பின்னர், அந்த கோட்டைகளை ஒரே அம்பினால் எரியூட்டி அழித்தார் என்பது புலனாகின்றது. இந்த செய்தியையே திருஞானசம்பந்தர், இணையாது இருந்த கோட்டைகள் இணைக்கப் பட்டன என்பதை இங்கே உணர்த்துகின்றார். இதே செய்தியை உணர்த்தும் வேறு சில தேவாரப் பாடல்களையும் நாம் இங்கே காண்போம்.

திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.64.02) திருஞான சம்பந்தர், மூன்று கோட்டைகளையும் ஒன்ற வைத்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மருவார்=பகைவர்கள்; உம்பர் பிரான்=தேவர்கள் தலைவன்; சாலி= ஒருவகை நெல்; ஆலை=கரும்பு; பாண்டிய மன்னன், அரசியார் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் ஆகியோருடன் பாண்டிநாட்டுத் தலங்கள் அனைத்தும் சென்ற, திருஞானசம்பந்தர், பாண்டிய மன்னர் குடிமக்களை பாதுகாத்த செய்தியை இங்கே குறிப்பிடுகின்றார் போலும்.

மருவார் மதில் மூன்று ஒன்ற எய்து மாமலையான் மடந்தை

ஒருபால் பாகமாகச் செய்த உம்பர் பிரான் அவன் ஊர்

கருவார் சாலி ஆலை மல்கிக் கழல் மன்னர் காத்தளித்த

‘ திருவால் மலிந்த சேடர் வாழும் தென் திருப் பூவணமே

சக்கரப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.27.6) திருஞானசம்பந்தர், பாங்கினால் மூன்று பறக்கும் கோட்டைகளையும் பாழ் செய்தவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். பாங்கினால்=உரிய முறையில்; எவ்வகையில் தாங்கள் அழிக்கப்படலாம் என்று அவர்கள் பெற்றிருந்த வரத்தின் தன்மையின் வழியாகவே; கடுந்தவம் புரியும் அரக்கர்கள் அனைவரும் முதலில் வரமாகக் கேட்பது தாங்கள் இறவாமல் இருக்க வேண்டும் என்பதே. பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தே தீரவேண்டும் என்று உணர்த்தப்பட்ட பின்னர், அவர்கள் தங்களது இறப்பு எந்த சூழ்நிலையில் ஏற்பட வேண்டும் என்பதை வேண்டுமானால் வரமாக பெற்றுக் கொள்ளலாம் என்ற உணர்த்தப்பட்ட பின்னர், அவர்கள் அனைவரும் தங்களது அறிவினுக்கு எட்டிய வகையில் நடக்கமுடியாத நிகழ்ச்சி ஒன்றினை கற்பனை செய்து, அந்த வகையில் தங்களது மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கோருகின்றனர். ஹிரண்யன், சூரபதுமன், இராவணன், பண்டாசுரன், நரகாசுரன் போன்ற அரக்கர்கள் அவ்வாறே வரம் பெற்று இருந்ததால் தங்களை மரணம் அணுகாது என்று இறுமாந்திருந்த போதிலும் அவர்களும் ஒரு நாள் மரணத்தை சந்திக்க வேண்டியிருந்ததை நாம் புராணங்கள் மூலம் அறிகின்றோம். திரிபுரத்து அரக்கர்களும். எப்போதும் தாங்கள் பறந்து கொண்டிருக்கும் கோட்டைகள் ஒரே நேர்க் கோட்டினில் வரும் தருணத்தில் ஒரே அம்பினைக் கொண்டு தங்களது கோட்டைகளையும் தங்களையும் அழிக்கலாம் என்றும் மற்ற எந்த விதத்திலும் தங்களது மரணம் நிகழலாகாது என்று வரம் வேண்டிப் பெற்றனர். எவருமே செய்ய முடியாதது என்று கற்பனை செய்து தங்களது மரணம் நேரும் முறையினை அவர்கள் நிர்ணயித்த போதிலும், அனைத்தையும் செய்து முடிக்க வல்ல இறைவன் ஒருவன் இருப்பதை அவர்கள் மறந்து விடுகின்றார்கள். திரிபுரத்து அரக்கர்களின் நிலையும் அதே தான். எப்போதும் பறந்து கொண்டிருப்பதால் ஒரே நேர்க்கோட்டினில் வருவதை தாங்கள் தவிர்த்து விடலாம் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் பெருமானோ அந்த மூன்று கோட்டைகளையும் ஒன்றாக, ஒரே நேர்கோட்டினில் வரும் வண்ணம் சேர்க்கின்றார் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. பின்னர் கோட்டையை ஊடுருவிக் கொண்டு செல்லும் ஆற்றல் மிகுந்த அம்பினை தேர்ந்தெடுக்கின்றார். அக்னியை முனையாக கொண்டுள்ள அம்பு கோட்டைகளை ஊடுருவும் தன்மை உடையதாக விளங்குகின்றது. அந்த அம்பு மிகவும் வேகமாக முதல் கோட்டையை நோக்கிச் சென்று துளைத்த பின்னர், அந்த அம்பு அந்த இடத்திலிருந்து விலகி மிகுந்த வேகத்துடன் அடுத்த கோட்டையை சென்றடைய வேண்டி, வாயு அந்த அம்பின் சிறகுகளாக அமைந்துள்ளன. இரண்டாவது கோட்டையைத் துளைத்துக் கொண்டு மூன்றாவது கோட்டைக்கும் செல்லும் வண்ணம் சக்தி வாய்ந்த அம்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, அம்பின் தண்டு மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்க வண்டும் என்பதற்காக திருமால் அம்பின் தண்டாக அமைந்துள்ளார். .இவ்வாறு வலிமை வாய்ந்த அம்பினை எய்து, எந்த நிகழ்ச்சி நடைபெறாது என்று திரிபுரத்து அரக்கர்கள் நம்பிக்கை கொண்டு வரம் பெற்றார்களோ, அந்த வரத்தின் வலிமையை பெருமான் முறியடித்த தன்மையையே, இங்கே திருஞானசம்பந்தர் பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை வாங்கினார் என்று கூறுகின்றார். வாங்குதல்=வளைத்தல்; வெஞ்சிலை=கடினமான மேரு மலை; நடைபெறாத செயல் என்று திரிபுரத்து அரக்கர்கள் மட்டும் நம்பவில்லை; தேவர்களும் மற்ற அசுரர்களும் அவ்வாறே நம்பினார்கள். அதனால் தான் அத்தகைய நிகழ்ச்சி நடந்தேறி திரிபுரத்தவர்கள் அழிக்கப்பட்ட பின்னர், பெருமானின் பெருமையை உணர்ந்த அவர்கள் பெருமானை வணங்கினார்கள் என்பதும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஒலிபுனல்=மிகுந்த ஆரவாரத்தோடு வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி;

பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை

வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட

ஓங்கினார் உமை ஒரு கூறொடும் ஒலி புனல்

தாங்கினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே

நெடுங்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.52.07) திருஞானசம்பந்தர் மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய இறைவன் என்று குறிப்பிடுகின்றார். மூன்றையும் என்ற சொல், திருமால் அக்னி வாயு ஆகிய மூவரை குறிப்பிடுகின்றது என்று பலரும் பொருள் கொண்டாலும், மூன்று என்ற சொல்லுக்கு மூன்று திரிபுரத்து கோட்டைகள் என்று பொருள் சொல்வதும் பொருத்தமாக உள்ளது. அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பெருமான் ஏற்றுக் கொண்டதை கூறு கொண்டாய் என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அனைவரும் சைவ நெறியினை, வேத நெறியினை பின்பற்றிய தருணத்தில், மாறுபட்டு விளங்கிய திரிபுரத்து அரக்கர்களை மாறு கொண்டார் என்று உணர்த்துகின்றார். பெருமானுக்கு அபிடேகம் செய்த திருநீற்றினை அடியார்கள் மிகுந்த விருப்பத்துடன் அணிந்து கொள்வதும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. சாந்தம்= சந்தனம்; உமை அன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் பொருத்தி, தனது உடலின் ஒரு கூறாகக் கொண்டவனே, வேறுவேறு திசைகளில் பறந்து கொண்டு ஒன்று சேராமல் இருப்பதன் மூலம், தங்களை எவரும் அழிக்க முடியாத வண்ணம் வானில் திரிந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஒன்றாக இணைத்து, கொடிய வெம்மை மிகுந்த அம்பினை எய்தி, வேதநெறிக்கு மாறாக வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தவனே, அனைத்து உயிர்களுக்கும் அரசனாகத் திகழ்பவனே, தனது கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, நீ அணிந்த திருநீற்றினை சந்தனம் போன்று உயர்ந்த வாசனைப் பொருளாக கருதி மகிழ்ச்சியுடன் தங்களது உடலில் பூசிக் கொள்ளும் அடியார்களின் இடர்களைக் களைந்து அவர்கள் உன்னை தொடர்ந்து வழிபடும் வண்ணம், நெடுங்களம் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, அருள் புரிவாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றா கூட்டி ஓர் வெங்கணையால்

மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடி மேல்

ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த

நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

பட்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.73.1) திருஞானசம்பந்தர், மூன்று கோட்டைகளையும் ஒன்றாகக் கூட்டி எரித்தவர் சிவபெருமான் என்று குறிப்பிடுகின்றார். பாடல் மறை=பாடுவது வேதங்கள்; சூடன்மதி=சூடுவது பிறைச் சந்திரன்; பல்வளை=பல வளையல்களை அணிந்த உமையன்னை; எழில்=அழகு, இங்கே வீரத்தின் அழகு; நிழல் கூட்டு பொழில்=நிழலைத் தரும் சோலைகள்; பழசை=பழையாறு; பழையாறு நகரம் சில வருடங்கள் சோழ நாட்டின் தலைநகராகவே இருந்து வந்தது. பழையாறை நகரின் ஒரு பகுதியாக பட்டீச்சரம் தலம் இருந்தது. மழபாடி=படைவீரர்கள் தங்கும் இடம்; பழையாறை பட்டீச்சரம் என்று குறிப்பிடுவதிலிருந்து, பட்டீச்சரம் என்ற பெயரில் வேறோர் ஊரும் அந்நாளில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது. அரவினார்=பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டிய பெருமான்; வேடநிலை=வேடத்திற்கு ஏற்ப தன்மைகளை கொண்ட நிலை; வேடநிலை கொண்டவர் என்று சிவவேடம் பூண்ட அடியார்களை குறிப்பிடுகின்றார். சைவ வேடம் பூண்டு, முத்தநாதன் மற்றும் அதிசூரன் ஆகிய இருவரும், மெய்ப்பொருள் நாயானாரையும் ஏனாதி நாயனாரையும் கொன்ற வஞ்சகச் செயல்களை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். பெருமானின் அருள் பெறுவதற்கு சிவவேடம் தாங்கினால் மட்டும் போதாது; அந்த வேடத்திற்கு பொருத்தமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்ற செய்தியை இந்த பாடல் உணர்த்துகின்றது. வேதகீதங்களை பாடியவராகவும், பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவராகவும், பல வளையல்களைத் தனது கைகளில் அணிந்தவளாக விளங்கும் பார்வதி தேவியை, பல்வளைநாயகி என்ற திருநாமத்துடன் இந்த தலத்தினில் உறையும் பிராட்டியை, தனது உடலில் ஒரு பாதியாக ஏற்றுக் கொண்டவராகவும் விளங்கும் பெருமான், மூன்று மதில்களாக விளங்கிய பறக்கும் கோட்டைகளையும் ஒன்றாக கூட்டிய பின்னர், ஒரே அம்பினால் எரித்து அழித்து, தனது வீரத்தின் அழகினை காட்டினார். நிழல் தரும் சோலைகள் நிறைந்த பழையாறை நகரின் ஒரு பகுதியாக திகழ்ந்ததும், மாடங்கள் உடையதும், படைவீரர்கள் தங்கும் இடமாக விளங்கியதும் ஆகிய பட்டீச்சரம் நகரினில், கொடிய பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டிய பெருமான் பொருந்தி உறைகின்றார். அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் உடைய பெருமான், போலியாக சிவவேடம் பூண்டு வஞ்சனையாக செயல்படுவோரை அடையாளம் கண்டு கொண்டு அவர்களைத் தவிர்த்து விட்டு, தாங்கள் பூண்டுள்ள சைவ வேடத்திற்கு தகுந்தவர்களாக விளங்கும் அடியார்களின் வினைகளை முற்றிலும் களைந்து முக்தி நிலை காட்டி அவர்களுக்கு அருள் புரிகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாடல் மறை சூடல் மதி பல்வளையொர் பாகம் மதில் மூன்றோர் கணையால்

கூட எரி ஊட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்

மாட மழபாடி உறை பட்டிசரம் மேய கடி கட்டரவினார்

வேட நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி வினை வீடுமவரே

ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் துளைத்து எரித்தால் தான் கோட்டைகளை அழிக்க முடியும் என்பது திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரம்; முதலில் தென்படும் கோட்டையை எரித்த அம்பு அங்கேயே தங்கி விட்டால், அடுத்த கோட்டையை அழிக்க முடியாது அல்லவா. எனவே தான் முதல் கோட்டையைத் துளைத்துச் சென்று இரண்டாவது கோட்டையை அடைந்து அந்த கோட்டையையும் துளைத்து எரித்து மூன்றாவது கோட்டையை அம்பு சென்று அடையும் வண்ணம் வல்லமை படைத்த அம்பினை எய்து மூன்று கோட்டைகளையும் எரிக்க வேண்டிய நிலை பெருமானுக்கு ஏற்பட்டது. எனவே தான் மூன்று கோட்டைகளையும் ஊடுருவிச் சென்று அழிக்கும் வல்லமை படைத்த அம்பினை தேர்ந்தெடுத்து பெருமான் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார் என்பதை திருஞானசம்பந்தர் வலம்புரம் தலத்து பதிகத்தின் முதல் பாடலில் (3.103.1) உணர்த்துகின்றார். சிலை=வில்; குனி=வளைத்த, மேரு மலை வில்லாக வளைக்கப்பட்ட நிலையினை குறிப்பிடுகின்றது. வெஞ்சிலை=கொடியவில்; துடி=உடுக்கை; மேதி=எருமைகள்; நீர்வளம் மிகுந்ததால் செழிப்பாக வளர்ந்து எருமைகளும் அழகாக காணப்பட்டன என்று கூறுகின்றார். மதில் என்றால் நகரத்திற்கு அரணாக விளங்கும் மதிற்சுவர் என்று பொருள். ஆனால் மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கோட்டினில் வரும் தருணத்தில் தான் இந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்பதால், ஒவ்வொரு கோட்டையும் மற்ற இரண்டு கோட்டைகளுக்கு வலிமை வாய்ந்த அரணாக திகழ்ந்த தன்மை, மற்ற இரண்டு கோட்டைகளுடன் இணையாமல் தனியே நின்று துணையாக இருந்த தன்மை, இங்கே உணர்த்தப் படுகின்றது. இசைந்து=மனமொன்றி, கூடி; துதைந்து= பிரியாமல் எப்போதும் கூடியே இருத்தல்; வடிவு=அழகு; இடிபட=பேரொலி எழும் வண்ணம்; ஊடுருவ=கோட்டைகளை துளைத்துக் கொண்டு; ஊடுருவிச் சென்ற; கொடிகள் உடைய அழகான மூன்று கோட்டைகளையும், ஒன்றுக்கொன்று அரணாகத் திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும், ஊடுருவிச் சென்று அழிக்கும் வண்ணம் ஆற்றல் கொண்ட அம்பினை விடுக்க வல்ல கொடிய வில்லினை, மேரு மலையினை வளைத்து செய்யப்பட வில்லினை ஏந்தி பேரொலியுடன் அம்பினை எய்து மூன்று கோட்டைகளையும் எரித்தவர் தேவர்களின் தலைவராகிய சிவபெருமான். அவரை அடியார்கள் மனம் ஒன்றி இசைப் பாடல்கள் பாடி புகழ்கின்றனர். உடுக்கை எனப்படும் இசைக்கருவி போன்று குறுகிய இடையினை உடைய உமை அம்மையை தனது உடலினொரு பாகத்தில் ஏற்றுக்கொண்டு என்றும் பிரியாது இணைந்திருக்கும் பெருமானின் இடம் யாதெனில், அழகான எருமை மாடுகள் படியும் நிலங்கள் கொண்ட வலம்புரம் நன்னகரமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கொடியுடை மும்மதில் ஊடுருவக் குனி வெஞ்சிலை தாங்கி

இடி பட எய்த அமரர் பிரான் அடியார் இசைந்து ஏத்தத்

துடி இடையாளை ஒர் பாகமாகத் துதைந்தார் இடம் போலும்

வடிவுடை மேதி வயல் படியும் வலம்புர நன்னகரே

திரிபுரத்து பிறக்கும் கோட்டைகள் மூன்றையும் எரிப்பதற்கு பயன்படுத்தப் பட்ட அம்பினில், திருமால் காற்றுக் கடவுள் மற்றும் தீக்கடவுள் ஆகிய மூவரும் பங்கேற்றமை பல தேவாரப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.11.6) திருஞான சம்பந்தர், அக்னி, வாயு, திருமால் ஆகிய மூவரும் பங்கேற்ற அம்பினைக் கொண்டு பெருமான் திரிபுரத்து கோட்டைகளை எரித்தார் என்று கூறுகின்றார். கல்லால் மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர் நால்வர்க்கும் அறம் உரைத்தவனே என்று பெருமானை அழைத்து எம்மை, திரிபுரத்து அரக்கர்களின் துன்பத்திலிருந்து காக்க வேண்டும் என்று வானோர்கள் வேண்டியதற்கு இணங்கி, பெருமான் திரிபுரத்தவர்களுடன் போருக்கு சென்றார் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், போருக்கு பெருமான் சென்ற திருக்கோலத்தை இந்த பாடலில் உணர்த்துகின்றார். வானோர் எல்லாம் ஒரு தேராய் என்று, சூரிய சந்திரர்கள் சக்கரமாகவும், பூமி தேரின் தட்டாகவும், ஆகாயம் கூரையாகவும், எட்டு திசைகள் தூண்களாகவும் நான்கு வேதங்கள் குதிரையாகவும், பிரமன் சாரதியாகவும், பிரணவ மந்திரம் தேர்த் தட்டாகவும். பங்கேற்ற செய்தி எல்லாம் ஒரு தேராய் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. நெருப்பு அம்பின் முனையாகவும் காற்று அம்பின் சிறகுகளாகவும் திருமால் அம்பின் தண்டாகவும் இருந்த தன்மை, வாசுகி பாம்பு வில்லின் நாணாகவும், மேரு மலை வில்லாகவும் நின்ற தன்மை, பாடலின் கடை இரண்டு அடிகளில் குறிப்பிடப் படுகின்றது.

கல்லால் நிழற் கீழாய் இடர் காவாயென வானோர்

எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப

வல்வாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்

வில்லால் எயில் எய்தான் இடம் வீழிம்மிழலையே

பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.19.5) திருஞான சம்பந்தர், பெருமானை அழல் கணையினன் என்று அழைக்கின்றார். தலைமதி=பிள்ளை மதி, முதற்பிறைச் சந்திரன்; ஒற்றைப் பிறைச் சந்திரன் என்பதை தலைமதி என்று கூறுகின்றார். தலை என்ற சொல்லினை புனல் அரவு ஆகிய சொற்களுடன் இணைத்து, நீரினில் தலையாய கங்கை என்றும் பாம்பில் தலையாய நல்லபாம்பு என்றும் பொருள் கொள்ளலாம். தலைமையது சடை=பெருமை மிக்க சடை; நிழல் மழு=ஒளிவீசும் மழுப்படை; மனம் மருவுதல்=மனமதில் எண்ணுதல்; புறவு=காடு; மூன்றுபுரங்களை எரித்த நிகழ்ச்சியின் தத்துவம், பெருமான் உயிர்களைப் பிணைத்துள்ள மூன்று மலங்களையும் எரித்து அழிக்கும் வல்லமை வாய்ந்தவன் என்று உணர்த்துகின்றது என விளக்கம் அளிக்கும் திருமூலர் பாடலை நாம் இங்கே நினைவு கூர்வது பொருத்தம். பெருமான் மூன்று கோட்டைகளையும் அழித்த நிகழ்ச்சியினை புராணங்கள் வாயிலாக அறிந்து கொள்ளும் மனிதர்கள், பெருமானின் வீரச் செயலை புகழ்கின்றனர். ஆனால் அவர்கள் அந்த நிகழ்ச்சி உணர்த்தும் முக்கியமான கருத்தினை புரிந்து கொள்வதில்லை. உயிர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களின் வலிமையை அடக்கி, உயிர்களை அந்த மூன்று மலங்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் படைத்தவன் பெருமான் என்பதை நாம் உணர்ந்து, அவனை வேண்டி, அவனது அருளின் உதவியால், அந்த மூன்று மலங்களின் வலிமையையும் அடக்கி, வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு முக்தி நிலையினை அடைய வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்தும் செய்தி என்பதே இந்த திருமந்திரப் பாடலின் பொழிப்புரை ஆகும். ஒற்றைப் பிறைச் சந்திரனையும், நதிகளில் தலையாய கங்கை நதியையும், பாம்புகளில் முதன்மையான விடம் உடைய நல்ல பாம்பினையும் ஒருங்கே, பெருமை வாய்ந்த தனது சடையினில் நிலையாக இருக்கும் வண்ணம் ஏற்றுக் கொண்ட பெருமான், ஒளி வீசும் மழுப்படையை உடையவன்; அவன் தீக்கடவுள் இடம் பெற்ற வெம்மை மிகுந்த அம்பினைக் கொண்டு, மேரு மலையினை வில்லாக வளைத்து அதனில் பொருத்தி, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் நெருப்பினில் வெந்தழிய வேண்டும் என்று முடிவு செய்தவனாக தனது முடிவினை செயல்படுத்தினான்; இத்தகைய வல்லமை உடைய பெருமான், நமது மலங்களின் கட்டினை அழித்து முக்தி நிலைக்கு வழிவகுக்கும் பெருமான், அழகிய கலைமான்கள் அழகு சேர்க்கும் காடுகளை உடைய கழுமலம் என்ற நகரினில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்து உள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன்
நிலை மருவ ஒரிடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன்
மலை மருவிய சிலை தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல
கலை மருவிய புறவு அணி தரு கழுமலம் இனிதமர் தலைவனே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.45.8) திருஞான சம்பந்தர், திரிபுரத்து கோட்டைகளை எரித்து அழிக்க, பெருமான் பயன்படுத்திய அம்பின் தன்மையை குறிப்பிடுகின்றார். கணை=அம்பு: சிலை=மலை, மேரு மலையாகிய வில், வரிசிலை= கட்டமைந்த வில்: எரி=நெருப்பு; இணையில்=ஒப்பற்ற, ஒரு கோட்டை மற்ற இரண்டு கோட்டைகளுக்கு அரணாக வலிமை சேர்ப்பதாக உள்ள தன்மை; மூன்று கோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் இருக்கும் சமயத்தில் மட்டுமே ஒரே அம்பினைக் கொண்டு அந்த மூன்று கோட்டைகளையும் துளைத்து எரிக்க முடியும் என்பதே திரிபுரத்து அரக்கர்கள் பெற்ற வரம். எனவே மற்ற இரண்டு கோட்டைகளுடன் இணையாமல் இருப்பதால் மூன்றாவது கோட்டை, அந்த இரண்டு கோட்டைகளுக்கும் வலிமை சேர்க்கின்றது. இந்த ஒப்பற்ற ஆற்றலை, இணையிலி என்ற சொல் மூலம் குறிப்பிடுகின்றார். கலை=ஆண் மான்; பிணை=பெண் மான்: சிறு மறி=மான் கன்று; கங்குல்=இரவு; தீ ஒரு பாகமாக அமைந்த அம்பினை, மேரு மலையை வளைத்து செய்யப்பட்ட வில்லுடன் பூட்டி, ஒப்பற்ற வலிமையுடன் திகழ்ந்த திரிபுரத்து மூன்று பறக்கும் கோட்டைகளையும், கவர்ந்து உண்ணும் வண்ணம் எரித்து அழித்தவர் எமது இறைவனாகிய சிவபெருமான். ஆண் மான், தனது துணையாகிய பெண் மான் மற்றும் மான் கன்றுகளுடன் இரவினில் வந்து அணைகின்ற பழையனூரைச் சார்ந்த திருவாலங்காடு தலமே எமது தலைவனாகிய பெருமான் உறைகின்ற இடமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கணையும் வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்துண்ண

இணையில் எயில் மூன்றும் எரித்திட்டார் எம் இறைவனார்

பிணையும் சிறு மறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து

அணையும் பழையனூர் ஆலங்காட்டு அடிகளே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.49.8) பெருமான் தீயம்பினால் திரிபுரத்தவர்களின் கோட்டைகளை எரித்து அழித்தார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். சிட்டம்=பெருமை; திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளும் வானில் பறக்கும் தன்மை கொண்டிருந்தமை குறித்து பெருமை படைத்த கோட்டைகள் என்று கூறுகின்றார். ஆர்ந்த=பொருந்திய; சிலை வரை=வில்லாக வளைக்கப்பட்ட மந்தர மலை; தீயம்பு=அக்னிக் கடவுள் முனையாக பொருந்திய அம்பு; திரிபுரத்து அரக்கர்களை அழிக்க பெருமான் பயன்படுத்திய அம்பினில், தண்டாக திருமாலும், இறகுகளாக வாயுவும், கூரிய முனையாக தீக்கடவுளும் பங்கேற்றதாக புராணம் குறிப்பிடுகின்றது. சுட்டு=சுட்டெரித்து; மாட்டி=மாளச்செய்து; பட்டம்=ஆண்கள் நெற்றியில் அணியும் அணிகலன்; தன்னைச் சரண் அடைந்தோரை பெருமான் காக்கும் தன்மை, தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி திரிபுரத்து கோட்டைகளை அழித்தமை மற்றும் சந்திரனை அழியாமல் காத்தமை ஆகிய செயல்கள் மூலம் உணர்த்தப் படுகின்றது. சப்த விடங்கத் தலங்களில் திருநள்ளாறு தலமும் ஒன்று. ஏழு விடங்கத் தலங்களாவன, திருவாரூர் (அஜபா நடனம், வீதி விடங்கர்), நாகை காரோணம் (கடற்கரை நடனம், சுந்தர விடங்கர்), காறாயில் (ஆதி விடங்கர், குக்குட நடனம்), கோளிலி (பிருங்க நடனம், அவனி விடங்கர்), மறைக்காடு (ஹஸ்த பாத நடனம், அன்ன நடனம், புவனி விடங்கர்), வாய்மூர் (கமல நடனம், நில விடங்கர்), நள்ளாறு (உன்மத்த நடனம், நகர விடங்கர்). எதற்கும் அஞ்சாத வீரத்துடன் கருணை உள்ளமும் கொண்டவன் பெருமான் என்பது அவனது இரண்டு கருணைச் செயல்கள் மூலம் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. வானில் பறக்கும் தன்மையால் பெருமை வாய்ந்ததாக கருதப்பட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும், மந்தர மலையை வளைத்து செய்யப்பட்ட வில்லினில் பொருந்திய அம்பு கொண்டு, தீக்கடவுள் அம்பின் நுனியாகவும் திருமால் அம்பின் தண்டாகவும் வாயு அம்பின் சிறகுகளாகவும் பொருந்திய அம்பு கொண்டு, எரித்து அழித்தவன் சிவபெருமான்; அவன் வெண்மை நிறம் பொருந்திய திருநீறு கொண்டு அபிடேகம் செய்யப் படுவதை மிகவும் விரும்புகின்றான். மேலும் பட்டம் எனும் அணிகலனை நெற்றியில் அணிந்த போதிலும், ஒற்றைப் பிறைச் சந்திரனையும் நெற்றியில் சூட்டிக் கொண்டுள்ளான். இத்தகைய பெருமான், நம்பெருமான் என்று பலராலும் அழைக்கப்படும் பெருமான், நகர விடங்கராக, உன்மத்த நடனம் ஆடுபவராக பொருந்தி உறைவது திருநள்ளாறு தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டு மாட்டிச் சுண்ண வெண்ணீறு ஆடுவது அன்றியும் போய்ப்
பட்டமார்ந்த சென்னி மேலோர் பான் மதியஞ் சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே

கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.68.8) திருஞான சம்பந்தர், எரி ஒண் பகழியைத் தொடுத்து திரிபுரத்து பறக்கும் கோட்டைகளை பெருமான் எரித்து அழித்தார் என்று கூறுகின்றார். பகழி=அம்பு; ஒண்=சிறந்த; படை=சந்திரகாசம் வாள்; குறுகி வரும் கூற்று=சிறுவன் மார்கண்டேயனை நெருங்கி வந்து அவனது உயிரினைக் கவர முயற்சி செய்த இயமன்; கடுத்து=சினம் கொண்டு; கழலால்=வீரக் கழல் அணிந்த பெருமானின் திருப்பாதங்கள்;

தொடுத்தார் புரம் மூன்று எரியச் சிலை மேல் எரி ஒண் பகழியார்

எடுத்தான் திறல் தோள் முடிகள் பத்தும் முடிய விரல் வைத்தார்

கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளாக் குறுகி வரும் கூற்றைக்

கடுத்து ஆங்கு அவனைக் கழலால் உதைத்து கயிலை மலையாரே

குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.6) திருஞான சம்பந்தர், பெருமானை, அனல் வாளி கோத்து முப்புரங்களை எரித்தார் என்று கூறுகின்றார். மூப்பூர்=முதுமைப் பருவம் அடையும் நிலை; மூப்பூர்=மூப்பு நிலை ஊர்ந்து வந்து நம்மை அடையும் நிலை; ஊர்தல் என்பது மெதுவாக சென்றடையும் தன்மையை உணர்த்துகின்றது. எவரும் ஒரே நாளில் மூப்பு நிலையை அடைவதில்லை. நாம் உணரமுடியாத நிலையில், சிறிது சிறிதாக மூப்புத் தன்மை ஒவ்வொரு உயிரையும் சென்றடைகின்றது. இந்த தன்மை தான் இங்கே குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு முதுமைக் காலம் நம்மை வந்தடைந்து நமது உடல் நலியும் போது நம்மை காப்பவர் சிவபெருமான் என்று சிலரால் விளக்கம் அளிக்கப் படுகின்றது. ஆனால் சிவபெருமான் நாம் மூப்படையும் போது மட்டும் தானா, நமக்குத் துணையாக இருந்து காப்பாற்றுகின்றான். மணிவாசகர், திருவாசகம் போற்றித் திருவகலில் குறிப்பிட்ட வண்ணம், நாம் கருவில் உருவாகத் தொடங்கும் நாளிலிருந்து, சிறிய குழந்தையாக இருந்த போதும், காளைப் பருவம் அடைந்த போதும், இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் போது, மற்ற பல தருணங்களிலும் நம்மை பலவித ஆபத்துகளிலிருந்தும் காத்துக் கொண்டிருப்பவர் சிவபெருமான் அல்லவா. பெருமான் உள்ளிருந்து இயக்குவதால் தானே அனைத்து உயிர்களும் இயங்குகின்றன. எனவே வயது முதிர்ந்த போது இறைவன் நம்மை காப்பற்றுகின்றான் என்ற விளக்கம் அவ்வளவு பொருத்தமாக இல்லை, மூப்பூர் என்ற சொல்லுக்கு சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் வானில் ஊர்ந்து கொண்டிருந்த மூன்று திரிபுரத்தவர்களின் கோட்டை என்று பொருள் கூறுகின்றார். எப்போது கீழே இறங்கி எந்த ஊரினை நசுக்கி அழிக்கலாம் என்ற எண்ணத்துடன் செயல்படுவதால் இந்த கோட்டைகள் மெதுவாக பறந்து செல்கின்றன என்று கூறினார் போலும். நெதி=நியதி; நெதியார் விதி=நியதியின் வழியின் நடக்கும் செயல்கள்; எந்த முறையில் கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்று அவர்கள் வரம் பெற்றிருந்தார்களோ அதே வழியில்; முன்னே=பண்டைய காலத்தில்; வாளி=காற்று; வளி என்ற சொல் வாளி நீண்டது. பார்த்தன் என்பது அர்ஜுனனின் பத்து பெயர்களில் ஒன்று; தீர்ப்பார் என்ற சொல்லினை அடுநோய் அவலம் என்ற சொல்லின் பின் வைத்து பொருள் கொள்ள வேண்டும். அடுதல்= கொல்லுதல்; அடுநோய்=உடலினை வருத்தி கொல்லும் நோய்; வானில் ஊர்வது போன்று மிகவும் மெதுவாக பறந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், எந்த முறையில் அந்த கோட்டைகள் அழிக்கப்பட முடியும் என்று திரிபுரத்து அரக்கர்கள் வரம் கேட்டுப் பெற்றார்களோ, அதே முறையில், அந்த மூன்று கோட்டைகளையும் ஒரே நேர்கோட்டினில் வரச் செய்த பெருமான், அக்னி காற்று திருமால் ஆகிய மூவரும் பொருத்தப்பட்ட அம்பினை தான் ஏந்தியிருந்த வில்லினில் கோத்து, அந்த அம்பினை விடுத்ததன் மூலம் அந்த கோட்டைகளை எரித்து அழித்தவர் பெருமான். அவர் பாசுபதம் அத்திரம் வேண்டி தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனின் வலிமையை பரிசோதித்த பின்னர் அவனுக்கு பாசுபத அத்திரம் கொடுத்து அருளினார். இவ்வாறு ஆற்றலும் கருணையும் ஒருங்கே உடைய பெருமான், அழகும் இளமையும் பொருந்தியவராக உறைகின்ற குடந்தை நகரினில் உள்ள, குடந்தைக் காரோணம் என்ற தலத்திலும் உறைகின்றார். அவர் தன்னைப் பணிந்து வணங்கும் அடியார்களை வருத்தி கொல்லும் தன்மை வாய்ந்த கொடிய நோய்கள் அணுகாத வண்ணமும் வினைகள் அவர்களை வருத்தி கீழ்மை நிலையில் ஆழ்த்தாத வண்ணமும் காலன் அவர்களைச் சென்றடைந்து துன்பம் இழைக்காத வண்ணமும் காப்பாற்றுகின்றார். அவரே காரோணத்தார் என்று அழைக்கப் படுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மூப்பூர் நலிய நெதியார் விதியாய் முன்னே அனல் வாளி

கோப்பார் பார்த்தன் நிலை கண்டருளும் குழகர் குடமூக்கில்

தீர்ப்பார் உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமைக்

காப்பார் காலன் அடையா வண்ணம் காரோணத்தாரே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.82.1) திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போருக்கு சென்ற போது தீக்கடவுள் அம்பாக பயன்பட்ட நிலையினை திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். இரும்=பெரிய; பொன் மலை=மேரு மலை; எப்போதும் வானில் பறந்து கொண்டிருந்த கோட்டைகள் என்று குறிப்பிட்டு, அந்த கோட்டைகளை ஒரே நேர்க்கோட்டில் பெருமான் வரவழைத்த ஆற்றலும் இங்கே உணர்த்தப் படுகின்றது. உலகின் பல்வேறு திசைகளிலிருந்து வந்த அடியார்கள் அனைவரையும், இந்த தலத்து மக்கள் போற்றி மகிழ்ந்த தன்மை சொல்லப் படுகின்றது. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் இந்த தலத்தில் பல நாட்கள் தங்கியிருந்த போது அவர்களை தலத்து அடியார்கள் மதித்து போற்றியதை இங்கே திருஞான சம்பந்தர் நினைவு கூர்கின்றார் போலும். மேலும் சீர்காழியில் இருந்து தன்னைக் காண வந்த அந்தணர்கள், இந்த தலத்து அந்தணர்களால் போற்றப் பட்டதும் திருஞான சம்பந்தரின் நினைவுக்கு வந்தது போலும்.

இரும் பொன் மலை வில்லா எரி அம்பா நாணில்

திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில்

தெரிந்த அடியார்கள் சென்ற திசை தோறும்

விரும்பி எதிர் கொள்வார் வீழிமிழலையே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.131.4) திருஞானசம்பந்தர், திருமாலும், அக்னியும், வாயுவும், அம்பின் மூன்று பாகங்களாக பங்கேற்றதை, அரி எரி கால் வாளியாக என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். மாசுணம்=பாம்பு; வாணர் என்ற சொல் வாழுநர் என்ற சொல்லின் திரிபு. புரவாணர்=திரிபுரத்தில் வாழ்ந்து வந்த அரக்கர்கள்; விறல்=வலிமை; மைம்மருவு=மேகங்கள் தவழும் உயர்ந்த மலை; எரி=நெருப்பு; கால்= காற்று; அரி=திருமால்; வாளி=அம்பு; கொடுமை மிகுத்து வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்கள் அளவு மிஞ்சி அனைத்து உயிர்களுக்கும் தீங்கினைச் செய்ய, தங்களது வலிமை குறைந்து வாழ்ந்து வந்த தேவர்களும் தாமரை மேல் அமரும் பிரமனும் திருமாலும் இந்திரனும் பெருமானிடம் சென்று தங்களை காப்பாற்றுமாறு வேண்டிய போது அவர்களுக்கு இரங்கிய பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்றார். அப்போது பல தேவர்கள், பெருமான் ஏறிச் சென்ற தேரின் பல பாகங்களாக பங்கேற்றனர். மேகங்கள் தவழும் வண்ணம் உயர்ந்து நின்ற மேரு மலையினைத் தனது வில்லாக வளைத்துக் கொண்ட பெருமான் வாசுகி பாம்பினை அந்த வில்லின் நாணாக ஏற்றி, திருமால் தீக்கடவுள் மற்றும் காற்றுக் கடவுள் மூவரும் பங்கு கொண்ட அம்பினை அந்த வில்லினில் பூட்டி, நொடிப் பொழுதினில் மூன்று கோட்டைகளும் தீப்பற்றச் செய்து சாம்பல் பொடியாக மாறுமாறு அழித்தார். இத்தகைய ஆற்றல் கொண்ட பெருமான் உறையும் இடம் முதுகுன்றமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெம்மை மிகு புர வாணர் மிகை செய்ய விறல் அழிந்து விண்ணுளோர்கள்

செம்மலரோன் இந்திரன் மால் சென்று இரப்பத் தேவர்களே தேரதாக

மைம்மருவு மேரு விலும் மாசுணம் நாண் அரி எரி கால் வாளியாக

மும்மதிலும் நொடி அளவில் பொடி செய்த முதல்வன் இடம் முதுகுன்றே

பறியலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.134.6) திருஞான சம்பந்தர் அரவம் நாணாக பொருந்திய வில்லினில் அழல் அம்பினை பூட்டி, திரிபுரத்து கோட்டைகளை பெருமான் எரித்து அழித்தார் என்று கூறுகின்றார். வெரு=அச்சம்; வெருவுற்றவர்=அச்சம் அடைந்தவர், பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக் கொண்டுள்ள அனைவரும் தாங்கள் அவ்வாறு சிக்கியுள்ள தன்மையையும் அதனால் அந்த உயிர் மீண்டும்மீண்டும் பிறப்பெடுத்து துன்பங்களில் ஆழ்வதையும் உணர்வதில்லை. அவ்வாறு உணர்ந்தால் தானே, அந்த துன்பத்தை நீக்கிக் கொள்ளும் முயற்சியில் அவர்கள் தலைப்படுவார்கள். அவ்வாறு உணர்ந்து தலைப்படும் மனிதர்களில் பெரும்பாலோர், தாங்கள் எத்தகைய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை அறிவதில்லை. ஒரு சிலரே, பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுபடுவதற்கு தாம் தொழ வேண்டியது சிவபெருமானை என்பதை உணர்ந்தவர்களாக, பெருமானை பணிந்தும் தொழுதும் பயனடைகின்றனர். அத்தகையோர்களை வெருவுற்றவர் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அரவுற்ற நாண்=திரிபுரத்தை எரிப்பதற்கு தேர்ந்தெடுத்த வில்லின் நாணாக செயல்பட்ட வாசுகி பாம்பு; அனலம்பு=மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழிக்க பயன்பட்ட அம்பின் நுனியில் அமர்ந்த அக்னிதேவன்; செரு=போர்; வாசுகி பாம்பினை, மேரு மலையை வளைத்துச் செய்த வில்லினில் நாணாகப் பொருத்தியும், அந்த வில்லினில் தீக்கடவுளை தனது நுனியில் கொண்டுள்ள அம்பினைப் பூட்டியும் அனைவருடன் விரோதம் பாராட்டி சண்டை போட்டு துன்பம் இழைத்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்து வெற்றி கண்டவன், சிவபெருமான். கொடிகள் நிறைந்து அழகுடன் பொலியும் வீதிகளை உடைய திருப்பறியலூர் தலத்தினில் வாழ்வோரும், தங்களை ஆழ்த்தி உள்ளடக்கிக் கொண்டிருக்கும் பிறப்பிறப்புச் சுழற்சியின் தன்மைக்கு அச்சம் கொண்டு அதனின்று விடுதலை பெறுகின்ற நோக்கத்துடன் பெருமானை தொழுவோரும் ஆகிய அடியார்களால் பணிந்து வணங்கப்படும் இறைவன், திருப்பறியலூர் தலத்தில் உள்ள வீரட்டம் திருக்கோயிலில் உறைகின்றான்.

அரவுற்ற நாணா அனல் அம்பதாகச்
செரு உற்றவர் புரம் தீயெழச் செற்றான்
தெருவிற் கொடி சூழ் திருப்பறியலூரில்
வெருவுற்றவர் தொழும் வீரட்டத்தானே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.21.8) திருஞான சம்பந்தர், பெருமானை எரியார் கணையால் எயில் எய்தவன் என்று அழைக்கின்றார். எரியார் கணை=தீக்கடவுளை தனது நுனியாக கொண்ட அம்பு; உரிது=உரியது; தீக்கடவுள் கூர்மையான நுனியாக பொருந்திய அம்பினைக் கொண்டு திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவனே: விரிந்து கீழே தாழும் சடையை உடையவனே: பிரளயத்தால் உலகம் அழிந்து எங்கும் இருள் படர்ந்து நிற்கும் நிலையில், உலகமே சுடுகாடாக இருக்கும் நிலையில், நடனம் ஆடுபவனே: கழிப்பாலை தலத்தில் உறையும் இறைவனே, உனது திருவடிகளை அடியேன் வணங்குவதற்கு உரிய திருவடிகளாக கருதி வணங்குவேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

எரியார் கணையால் எயில் எய்தவனே

விரியார் தரு வீழ் சடையாய் இரவில்

கரி காடலினாய் கழிப்பாலை உளாய்

உரிதாகி வணங்குவன் உன்னடியே

கைச்சினம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.45.7) திருஞான சம்பந்தர், எரி கணையால் முப்புரங்கள் எய்துகந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார். வரி=கோடுகள்; மால் வரை=சிறப்பு வாய்ந்த மேரு மலை; பொரி சுடலை=நெற்பொறிகள் தூவப்படும் சுடுகாடு;

வரி அரவே நாணாக மால் வரையே வில்லாக

எரி கணையால் முப்புரங்கள் எய்துகந்த எம் பெருமான்

பொரி சுடலை ஈமப் புறங்காட்டான் போர்ந்ததோர்

கரி உரியான் மேவி உறை கோயில் கைச்சினமே

ஆமாத்தூர் பதிகத்தின் பாடலில் (2.50.1) திருஞானசம்பந்தர், திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்ற பெருமான், பயன்படுத்திய அம்பின் தன்மையை கூறுகின்றார். குன்றம்= மேரு மலை’; வார்=நீண்ட; சிலை=வில்; அரா=பாம்பு, வாசுகி பாம்பு; அரி=திருமால்; வாளி= அம்பு; கூர்=முனை; எரி=அக்னி; திருமால் அம்பாகவும், தீக்கடவுள் அம்பின் நுனியாகவும், காற்று அம்பின் சிறகாகவும் இருந்த நிலை உணர்த்தப் படுகின்றது. சூளிகை=வீட்டின் உச்சி; பெண்ணை=பனை;

குன்றவார் சிலை நாண் அரா வரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில்

வென்றவாறு எங்ஙனே விடையேறும் வேதியனே

தென்றலார் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல்

அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே

மீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.2) திருஞானசம்பந்தர், திரிபுரத்தை எரிக்க பயன்படுத்தப் பட்ட வில் மற்றும் அம்பின் விவரங்களை கூறுகின்றார். நற=நாற்றம்; நற வெண்டலை=துர் நாற்றத்தை உடையதும் உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப் படுவதும் ஆகிய பிரம கபாலம். அனல் கொள்வார்=பெருமான் தனது கையில் அனல் ஏந்தி இருக்கும் நிலை; ஏ=பெருமை; ஏவார் மலை=பெருமை வாய்ந்த மேரு மலை; சிலை=வில், வில்லாக மேரு மலை வளைக்கப் பட்ட தன்மை; கழி=கம்பு; திருமால் அம்பின் தண்டாக உள்ள தன்மை; எரி=தீக்கடவுள்; மேவார்=பகைவர்கள்; மேரு மலையினை வளைத்து செய்யப் பட்ட வில்லினில், திருமால் கம்பாகவும் தீக்கடவுள் அம்பின் நுனியாகவும் பொருத்தப் பட்ட அம்பினை பூட்டிய பெருமான், அந்த அம்பு கொண்டு முப்புரங்களையும் எரித்தார் என்று கூறுகின்றார்.

பூவார் சடையின் முடி மேல் புனலர் அனல் கொள்வர்

நாவார் மறையர் பிறையர் நற வெண்டலை ஏந்தி

ஏவார் மலையே சிலையாக் கழி அம்பு எரி வாங்கி

மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே

அரிசிற்கரைப் புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.63.2) திருஞான சம்பந்தர், மூன்று பறக்கும் கோட்டைகள் மீது பெருமான் வெங்கணையால் எய்தான் என்று கூறுகின்றார். மேவுதல்=பொருந்துதல்; மேவா அசுரர்=பொருந்தாத, சிவநெறியில், வைதீக நெறியில் பொருந்தாது பிரிந்து சென்ற திரிபுரத்து அரக்கர்கள்; மேவெயில்=மேவிய எயில், பொருந்திய கோட்டைகள்; வேவ=தீயினில் வெந்து அழிய; வெங்கணை=வெப்பத்தை வெளிப்படுத்திய அம்பு; அம்பு தீப்பிழம்புகளை வெளிப்படுத்தியது என்று கூறுகின்றார். எரிகணை=அக்னியை தனது நுனியில் கொண்டிருந்த அம்பு; ஏ=அம்பு; எய்தும்=குடி கொண்டிருக்கும்; சுரர் என்றால் உயர்ந்தவர்கள் என்று பொருள். அதனால் தான் தேவர்களை சுரர் என்று குறிப்பிடுவார்கள். பூசுரர் என்றால் நிலவுலகத்தில் உள்ள உயர்ந்தவர்கள்; இங்கே சிவவேதியர்களை குறிப்பிடும் சொல்லாக உள்ளது. இந்த தலத்தினில் வாழ்ந்த தொண்டர்கள் பெருமானின் திருநாமத்தை நாள்தோறும் ஓதி, பூவும் நீரும் கொண்டு வந்து பெருமானுக்கு அளித்து வழிபட்டதாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சைவநெறியில் பொருந்தாது வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் வெந்து அழியும் வண்ணம், தீ மூட்டியவர் சிவபெருமான். மேரு மலையினை வளைத்து வில்லாக மாற்றி, அதனில் அம்பினைப் பூட்டி திரிபுரங்களை நோக்கி எய்தி அழித்தவர் சிவபெருமான். அந்த அம்பு தீப்பிழம்பினைக் கக்கும் அம்பாக, தீக்கடவுளை அம்பின் நுனியில் பொருத்தி எய்த, பெருமான் உறைகின்ற ஊர் அரிசிற்கரை புத்தூர் என்பதாகும். அந்த தலத்தினில் வாழ்கின்ற வேதியர்கள், தங்களது நாவினால் இறைவனின் திருநாமங்களை ஓதி, நீர் கொண்டு நீராட்டியும் மலர்கள் கொண்டு இறைவனின் திருமேனி மீது தூவியும் இறைவனை வழிபடுகின்றனர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மேவா அசுரர் மேவெயில் வேவ மலை வில்லால்

ஏவார் எரி வெங்கணையால் எய்தான் எய்தும் ஊர்

நாவால் தன் நாமம் ஓதி நாள் தோறும்

பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே

கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.107.1) திருஞான சம்பந்தர், மேரு மலையை வில்லாக வளைத்து, அந்த வில்லினில் வாசுகி பாம்பினை நாணாக பூட்டி, தீக்கடவுள் பொருந்திய அம்பினை பொருத்தி, அந்த அம்பினை செலுத்துவதன் மூலம் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தார் என்று கூறுகின்றார். விருது=பட்டம், புகழ்; இங்கே எவராலும் வெல்ல முடியாத திரிபுரத்து அரக்கர்களை வென்றதால் பெருமானுக்கு கிடைத்த புகழ். குன்ற மா மேரு வில்=புகழ் பெற்ற மேரு மலை வில்லாக இருந்த நிலை; அரவு=வாசுகிப் பாம்பு; பொருது=சண்டையிட்டு; மூவெயில்=மூன்று கோட்டைகள்; செற்றவன்=அழித்து வெற்றி கண்டவன்; கனை=ஒலிக்கும்; கனை கடல்=ஓயாது ஒலிக்கும் அலைகள் கொண்ட கடல்; மாதோட்டம் என்பது தலத்தின் பெயர். கேதீச்சரம்=திருக் கோயிலின் பெயர்.

விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பாப்

பொருது மூவெயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும்

கருதுகின்ற ஊர் கனை கடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம்

கருத நின்ற கேதீச்சரம் கை தொழக் கடுவினை அடையாவே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.01.08) திருஞான சம்பந்தர், பெருமானை, தீயினார் கணையால் புரம் எய்தவன் என்று குறிப்பிடுகின்றார். வேயின்=மூங்கில் போல்; ஆர்=பொருந்திய; பணைத் தோளி=திரண்ட தோள்களை உடைய காளிதேவி; காளி தேவி நடனத்தில் மிகவும் சிறந்தவள் என்று கருதப்படுபவள். எவராலும் வெல்ல முடியாத தாருகன் என்ற அரக்கனை கொன்ற பின்னர், காளிதேவிக்கு ஏற்பட்ட ஆவேசத்தைக் கண்டு அனைத்து உலகங்களும் நடுங்கின. அத்தகைய காளியின் கர்வத்தை அடக்கும் பொருட்டு, பெருமான் காளியை நடனப் போட்டிக்கு அழைத்து, அந்த போட்டியில் காளியை வென்று அவளை அடக்கினார். அப்போது ஆடிய நடனமே ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப் படுகின்றது. பல திருக்கோயில்களில் நாம் ஊர்த்துவ தாண்டவச் சிற்பத்தை காணலாம். தில்லைச் சிதம்பரத்தில், கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு அருகே நாம் இந்த சிற்பத்தை காணலாம். இந்த சிற்பம் உள்ள தூணின் பக்கத்தில், இந்த நடனப் போட்டியில் தோல்வி அடைந்த காளிதேவி நாணத்துடன் தலைகுனிந்து நிற்பதையும், திருமால் நடுவராக இந்த போட்டிக்கு இருந்த தன்மையும் அழகிய சிற்பங்களாக உள்ளன. பெருமான் காளி தேவியுடன் நடனம் ஆடி வென்ற தன்மையை விகிர்தா என்ற சொல் மூலம் விளக்குகின்றார். மூங்கில் போன்று பருத்து திரண்டு அழகிய தோள்களை உடைய காளி தேவியுடன் நடனம் ஆடுவதை விரும்பியவனே, ஏனைய தேவர்களிடமிருந்து மாறுபட்டவனே, உயிர்களுக்கு அமுதமாக பல நன்மைகளை செய்பவனே, இடுகாட்டின் தீயினில் உகந்து நடனம் ஆடுபவனே, தீக்கடவுளை கூர்மையான முனையாகவும் திருமாலினைத் தண்டாகவும் காற்றினை சிறகுகளாகவும் கொண்ட அம்பினை எய்தி பறக்கும் மூன்று கோட்டைகளையும் தீ மூட்டி அழித்தவனே, அழகுடன் சிறந்து விளங்கும் சிற்றம்பலத்தினை திருநடனம் ஆடும் அரங்காகக் கொண்டவனே, உனது திருப்பாதங்களைத் தொழும் அடியார்கள் மேலான உலகமாகிய சிவலோகத்தினை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வேயினார் பணைத் தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது

ஆயினாய் இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே

தீயினார் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம்

மேயினாய் கழலே தொழுது எய்துதும் மேல் உலகே

விசயமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.17.7) திருஞான சம்பந்தர், எரி சரத்தினால் மூன்று பறக்கும் கோட்டைகளையும் பொடி செய்த பெருமான் என்று கூறுகின்றார். இரும்=பெரிய; பொனின் மலை=பொன்மலையாக காட்சி அளிக்கும் மேரு மலை. எரி சரம்=தான் சென்றடைந்த இலக்கினை எரித்து அழிக்கும் தன்மை வாய்ந்த அம்பு; திரிபுரத்தவர்களின் கோட்டைகளை எரித்த அம்பு மற்றும் வில்லின் தன்மைகள் இங்கே உணர்த்தப் பட்டுள்ளன. சுரும்பு=வண்டுகள்; தேன் நிறைந்த புது மலர்கள் என்பதால், வண்டுகள் விரும்பி வந்து கொன்றை மலர்களின் மீது அமர்ந்து தேனினை அருந்துகின்றன என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பொதுவாக அனைவராலும் விலக்கப்படும் ஊமத்தை மலரினை பெருமான் விரும்பி அணிவதாக திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். விருப்பு வெறுப்புகளைத் தாண்டிய பெருமான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. அனைவரும் ஒதுக்கும் ஊமத்தை மலரினை விரும்பி அணியும் பெருமான், அனைவரையும் அச்சுறுத்தி பல திசைகளிலும் தேவர்களை விரட்டிய ஆலகால நஞ்சினை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டவர் ஆவார். அனைவரும் நாட்டினில் வாழ்வதையே விரும்பும் பின்னணியில் காட்டினை தனது இருப்பிடமாகக் கொண்டவர் பெருமான்; எவரும் செய்யாத வகையில் பெண்ணினைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவர் பெருமான்; அழகிய பட்டாடையினை அனைவரும் விரும்பி அணிய, இவரோ தோலை ஆடையாகக் கொண்டவராகவும் கோவண ஆடை உடையவராகவும் திகழ்கின்றார். தங்களது உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால், இரத்தம் வடியும் யானைத் தோலை, அனைவரும் தவிர்க்க, பெருமானோ அதனை போர்வையாக அணிந்து மகிழ்கின்றார். ஏற்பது இகழ்ச்சி என்பதால் எவருமே தவிர்க்க விரும்பும் பிச்சையை, உலகத்தவர்கள் தங்களது மூன்று மலங்களையும் இறைவன் ஏந்தியுள்ள பிச்சைப் பாத்திரத்தினில் இட்டு உய்வினை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் உலகெங்கும் திரிபவர் பெருமான்; அருவருப்பு தருகின்ற மண்டை ஓட்டினைத் தனது உண்கலனாகக் கொண்டவர் பெருமான்; பயத்தினால் அனைவரும் தவிர்க்கும் பாம்பினைத் தனது உடலின் பல பாகங்களிலும் அணிந்தவர் பெருமான்; நறுமணம் வீசும் பொருட்களை ஏனையோர் தங்களது உடலில் பூசிக் கொள்ள, இவரோ சுடுகாட்டு சாம்பலை விருப்பத்துடன் தனது உடலெங்கும் பூசிக் கொள்கின்றார். நகரங்களின் நடுவில் உள்ள அரங்கினில் ஆடுவதையோ பாடுவதையோ விரும்பிச் செய்பவர்களின் இடையே, பெருமான் நள்ளிருளில் சுடுகாட்டினில் நடனம் ஆடுகின்றார். இவ்வாறு பல விதங்களிலும் மற்றவர்களினும் பெருமான் மாறுபட்டு இருப்பதால், அவரை விகிர்தன் என்று அருளாளர்கள் தங்களது பாடல்களில் குறிப்பிடுகின்றனர். மைந்தன்=வலிமை உடையவன். அளவில் பெரியதும் பொன் மலையாக திகழ்வதும் ஆகிய மேரு மலையை வில்லாக வளைத்து, அந்த வில்லினில் தீக்கடவுளை நுனியாக கொண்டுள்ள அம்பினை பூட்டி, அந்த அம்பினை எய்வதன் மூலம் தன்னை எதிர்த்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் பெருமான் எரித்து பொடிப்பொடியாக செய்தார். தேன் நிறைந்து காணப்படுவதால் வண்டுகள் விரும்பி அமரும் கொன்றை மலர் மாலையினையும் ஊமத்தை மலர் மாலையினையும் விருப்பத்துடன் தனது சடை மீது அணிந்து கொள்ளும் பெருமான், அனைவர்க்கும் தலைவனாக விளங்குகின்றார். இவர் உறையும் திருத்தலம் விசயமங்கை தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இரும் பொனின் மலை வில்லின் எரி சரத்தினால்

வரும் புரங்களை பொடி செய்த மைந்தன் ஊர்

சுரும்பு அமர் கொன்றையும் தூய மத்தமும்

விரும்பிய சடை அணல் விசயமங்கையே

வைகல் மாடக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.18.7) திருஞான சம்பந்தர் வீரம் நிறைந்த செல்வர் என்று குறிப்பிட்டு, அதற்கு சான்றாக பெருமான் திரிபுரம் எரித்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். சரம்=அம்பு; எரிசரம் என்று அக்னித்தேவன் பெருமான் பயன்படுத்திய அம்பினில் ஒரு பாகமாக அமர்ந்ததையும் வரிசிலை வளைய என்ற தொடர் மூலம் மேருமலை வில்லாக வளைக்கப் பட்டதையும் நினைவூட்டுகின்றார். அணவுதல்=தொடுதல்;

எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்

திரிபுரம் எரி செய்த செல்வர் சேர்விடம்

வரிவளையவர் பயில் வைகல் மேற்றிசை

வருமுகில் அணவிய மாடக் கோயிலே

பனந்தாள் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.62.9) பெருமான் கனல் அம்பால் திரிபுரங்களை எரித்தான் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். புன்மை=தீமை; மிகு=மிகுந்த; தானவர்=அசுரர்; பொன்றுவித்தல்=எரித்து அழித்தல்; மேரு மலையினை வில்லாகவும் வாசுகி பாம்பினை வில்லின் நாணாகவும் மிகுந்த வெப்பம் உடைய அக்னியை நுனியாக உடைய அம்பினை அந்த வில்லினில் பொருத்தி, அம்பினை எய்வதன் மூலம் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து சாம்பலாக மாற்றி அழித்தவன் பெருமான்; நல்ல தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் அவனை நெருங்கி, அவனது திருமுடியையும் திருவடிகளையும் காண்பதற்கு முயற்சி செய்த போதிலும், அவர்கள் இருவரும் காணமுடியாத தன்மையில் விளங்கிய பெருமான் உறையும் இடம் பனந்தாள் தலத்தில் உள்ள தாடகை ஈச்சரம் என்ற திருக்கோயிலாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வில் மலை நாண் அரவம் மிகு வெங்கனல் அம்பு அதனால்

புன்மை செய் தானவர் தம் புரம் பொன்றுவித்தான் புனிதன்

நன்மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியாத்

தன்மையன் ஊர் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே

வைகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.71.2) தீக்கடவுளை பெருமான் தான் கொண்டிருந்த அம்பின் முனையாக பயன்படுத்தி திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்றதை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் முப்புரம் எரித்த விகிர்தன் என்று பெருமானை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். விகிர்தன் என்றால் ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன் என்று பொருள். வானில் எப்போதும் வேறுவேறு திசைகளில் பறந்து கொண்டு இருக்கும், இந்த மூன்று கோட்டைகளும் ஒரே நேர் கோட்டினில் வரும் தருணத்தில் மட்டுமே ஒரே அம்பினால் மட்டுமே எரித்து அழிக்க முடியும் என்ற வரத்தின் விளைவால், ஒன்றுக்கொன்று துணையாக திகழும் இந்த மதில்களை எவராலும் அழிக்க முடியவில்லை. பெருமான் மட்டும் இந்த மதில்களை எரித்த வல்லமை உடையவராய் விளங்கியதால் பெருமானை முப்புரம் எரித்த விகிர்தன் என்று திருஞான சம்பந்தர் இங்கே அழைக்கின்றார். தடம்=பொய்கை, குளம்; புண்டரிக மாமலர்=தாமரை; எழிலார்=அழகு மிகுந்த; பொதுவாக கோட்டைகள் கல் மண் ஆகியவை கொண்டு செய்யப்படும். ஆனால் திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளோ தங்கம் வெள்ளி இரும்பு கொண்டு செய்யப் பட்டவை என்பதால் எழிலார் முப்புரம் என்று குறிப்பிடுகின்றார். விண்டவர்=சிவநெறியை விட்டு பிரிந்து சென்றவர்; அண்டம்=ஆகாயம்; ஆகாயம் வரை உயர்ந்து கிடந்த மேரு மலையினை வில்லாகவும், தீக்கடவுளை அம்பின் முனையாகவும், வாசுகி பாம்பினை வில்லின் நாணாகவும் கொண்டு, சிவநெறியினை விட்டு பிரிந்து சென்ற முப்புரத்து அரக்கர்களின் அழகுடன் விளங்கிய மூன்று கோட்டைகளையும் எரித்தவனும். ஏனைய தேவர்களிலிருந்து மாறுபட்டவனும் ஆகிய பெருமான் விரும்பி அமர்கின்ற இடம் திருவைகா தலமாகும். சிறந்த தாமரை மலர்களில் புகுந்து வண்டுகள் தேனுண்டு விளையாடிய மகிழ்ச்சியில் அருகில் உள்ள வயல்களிலும் அதனைச் சுற்றியுள்ள குளங்களிலும் வண்டுகள் இசை பாடி திரிய, அந்த இன்னிசைக்கு ஏற்றவாறு குயில்கள் கூவுகின்ற சோலைகளை உடைய தலம் திருவைகா ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அண்டம் உறு மேரு வரை அங்கி கணை நாண் அரவதாக எழிலார்

விண்டவர் தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடமாம்

புண்டரிக மாமலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடமெலாம்

வண்டின் இசை பாட அழகார் குயில் மிழற்று பொழில் வைகாவிலே

அவளிவணல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.82.1) திருஞான சம்பந்தர், அம்பெரிய எய்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்த பெருமான் என்று கூறுகின்றார். கொம்பு இரிய=கொம்புகள் தங்களது நிலையிலிருந்து விலகி நிற்க; கொன்றை மலர்கள் மாலைகளாக மாறி பெருமானின் மார்பினில் இருக்கும் நிலை மரங்களில் பூத்திருக்கும் இயல்பான நிலையிலிருந்து மாறி விலகி நிற்பதாக இங்கே குறிப்பிடப் படுகின்றது, பொதுவாக வண்டுகள் காலையில், தேனை பருகுவதற்காக காலையில் மலர்களை நாடி செல்வது வழக்கம். ஆனால் இந்த தலத்தில் உள்ள வண்டுகள் அவ்வாறு மலர்களை நாடி செல்வதில்லை என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். அந்த வண்டுகள் மரத்தின் கொம்புகளில் உள்ள மலர்களை நாடிச் செல்லாமல், இறைவனின் திருமார்பினை நாடிச், செல்வதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த நிலை எதனால் உண்டாகியது என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். இந்த தலத்தினில் உள்ள மக்கள், வண்டுகள் மலர்களில் உள்ள தேனைச் சுவைக்கும் முன்னரே, அந்த மலர்களை, இறைவனுக்கு அணிவதற்காக பறித்து விடுகின்றனர் என்று தானே பொருள். இத்தகைய மலர்களை பெருமானுக்கு சூட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தானே, வியாக்ரபாதர் பெருமானிடம், தனது கால்கள் கூர்மையான நகங்கள் கொண்ட புலியின் கால்கள் போன்று இருக்க வேண்டும் என்றும் இருளிலும் காண்பதற்கு வசதியாக புலியின் கண்கள் போன்று தனது கண்கள் இருக்க வேண்டும் என்றும் வேண்டினார். வண்டுகள் வந்து மொய்ப்பதற்கு முன்னரே அடியார்களால் பறிக்கப்பட்ட கொன்றை மலர்களை மாலையாக, முப்புரி நூலோடு சேர்த்து தனது மார்பினில் அணிந்துள்ள அவளிவணல்லூர் தலத்து இறைவனது மார்பினை அடைந்த வண்டுகள், கொன்றை மரம் சென்று ஆங்கே மலர்கள் ஏதும் காணாது ஏமாற்றம் அடைந்த வண்டுகள், மாலையாக உள்ள கொன்றை மலர்களில் உள்ள தேனினை பருகும் நோக்கத்துடன் சூழ்ந்துள்ளன. தனக்கென தனி இயல்புகள் கொண்டுள்ள பெருமான், சுடுகாட்டினில் இருக்கும் வெம்மை உடைய திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் பூசியவராக, இடபத்தினை வாகனமாகக் கொண்டுள்ளவராக திகழ்கின்றார். அவர் ஆகாயத்தில் எப்போதும் திரிந்து கொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளை, பொன் வெள்ளி மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட மூன்று கோட்டைகளை, நெடிய மாடங்கள் கொண்டுள்ள கோட்டைகளை, வில்லாக வளைக்கப்பட்ட மேரு மலையினில் ஒரு அம்பினைப் பொருத்தி எய்தி, அழித்தவர் ஆவார். அவர் அவளிவணல்லூர் தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கொம்பு இரிய வண்டுலவு கொன்றை புரிநூலொடு குலாவித்

தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து இடபம் ஏறிக்

கம் பரிய செம்பொன் நெடு மாட மதில் கல் வரை விலாக

அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.83.3) திருஞான சம்பந்தர், பெருமான், அழல் அம்பால் திரிபுரங்கள் மூன்றையும் எரித்தார் என்று கூறுகின்றார். நீடு வரை=நீண்ட மேரு மலை; நிகழ்=பொருந்தும்; கூடலர்=வேதநெறி மற்றும் சைவ நெறியுடன் கூடாத திரிபுரத்து அரக்கர்கள்; அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டுவதே அன்பே சிவம் என்று உணர்த்தும் சைவநெறி ஆகும். அந்த நெறியிலிருந்து வழுவி, பல உயிர்களுக்கும் தீங்கு இழைத்தவர்கள் திரிபுரத்து அரக்கர்கள்; சேடு=பெருமை, ஒளி; ஏடு= இதழ்கள்; புனல்=கங்கை நதி; நிமலன்=இயற்கையாகவே பாசங்களிலிருந்து நீங்கிய சிவபெருமான்; பெருமானின் எட்டு உயர்ந்த குணங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. எட்டு குணங்களாவன, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல்; விடை ஏறுதல் என்ற செயல் பெருமான் தோற்றத்திற்கு காரணமாக இருப்பதையும் எரி கையேந்தி ஆடுதல் அவன் சம்ஹாரம் செய்வதையும் உணர்த்துகின்றது. இவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் ஆதியும் அந்தமாகவும் பெருமான் இருக்கும் தன்மை இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. நீண்ட மேரு மலையினை வில்லாக வளைத்து, வாசுகி பாம்பினை நாணாக அந்த வில்லினில் பூட்டி, தீக்கடவுளை நுனியில் கொண்டுள்ள அம்பினைப் பொருத்தி, அன்பே சிவம் எனப்படும் சிவநெறியிலிருந்து வழுவி பல உயிர்களுக்கும் தீங்கிழைத்த திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்து வந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒருங்கே அழித்து எரித்தவர் சிவபெருமான் ஆவார். அவர் தனது சடையினில், இதழ்கள் நிறைந்த கொன்றை மலர்களையும் கங்கை நதியையும் பொருத்தமாக அணிந்து கொண்டவர்; அவர் இயற்கையாக பாசங்களிலிருந்து விடுபட்ட நிமலர் ஆவார். இத்தகைய பெருமைகள் வாய்ந்த பெருமான் இருக்கும் இடம், ஒளி வீசுவதும், பெருமை மிகுந்ததும் ஆகிய தாமரை மலர்கள் விளங்கும் நீண்ட வயல்களை உடைய நல்லூர் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நீடுவரை மேரு வில் அதாக நிகழ் நாகம் அழல் அம்பால்

கூடலர்கள் மூவெயில் எரித்த குழகன் குலவு சடை மேல்

ஏடுலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடமாம்

சேடுலவு தாமரைகள் நீடு வயலார் திரு நலூரே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.86.5) திருஞான சம்பந்தர், திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் செய்த போரினில். திருமால் பெருமான் ஏந்திய வில்லின் அம்பாக இருந்த தன்மையை, குறிப்பிடுகின்றார். திருமாலை குறிப்பிட்டமையால், அக்னி மற்றும் வாயு ஆகியோர் பங்கேற்றதையும் உணர்த்துவதாக பொருள் கொள்ள வேண்டும். அரவரி=அரவு+அரி; நாணாகிய வாசுகிப் பாம்புடன் சேர்க்கப்பட்ட, திருமாலை தண்டாகக் கொண்டுள்ள அம்பு; வாளி=அம்பு: அந்தரம்=ஆகாயம்; உழிதரு=திரிந்து கொண்டிருந்த; விடலை=வீரம் மிகுந்த இளைஞர்; எப்போதும் ஆகாயத்தில் திரிந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் நொடிப் பொழுதினில் அழிக்கும் நோக்கத்துடன், மந்தர மலையை வில்லாக வளைத்தும், அந்த வில்லினில் வாசுகிப் பாம்பினை நாணாக பூட்டியும், திருமால் அக்னி மற்றும் வாயு ஆகியோர் முறையே தண்டாகவும், அம்பின் முனையாகவும் இறகுகளாகவும் பங்கேற்ற அம்பினைக் கோர்த்து, அந்த பறக்கும் கோட்டைகளை முற்றிலும் நெருப்பினில் வெந்து அழியும் வண்ணம் எரித்த, வீரம் மிகுந்த இளைஞர் சிவபெருமான் ஆவார். அவர் தான் உட்கொண்ட ஆலகால விடத்தினை, தனது கழுத்தினில் கருமையான மாணிக்கமணி படர்ந்தது போன்று விளங்கும் வண்ணம் தேக்கியுள்ளார். செந்தழல் போன்ற செம்மையான நிறத்தில் திருமேனி உடையவர் ஆவார். அத்தகைய தலைவர் வளம் மிகுந்த திருச்சேறை நகரினில் உறைகின்றார்.

அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடியளவினில்

மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால்

வெந்தழி தர எய்த விடலையர் விடமணி மிடறினர்

செந்தழல் நிறம் உடைய அடிகள் தம் வளநகர் சேறையே

விடைவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.126.5) திருஞான சம்பந்தர் எரியம்பு எய்து மூன்று பறக்கும் கோட்டைகளுக்கும் நெருப்பு மூட்டி அழித்தவன் பெருமான் என்று கூறுகின்றார். குன்ற வில்லி=மேரு மலையினை வில்லாக வளைத்து பயன்படுத்திய பெருமான்; கிரி=மலை; கிரியும் தரு மாளிகை=மலை போன்று உயர்ந்த மாளிகை; சூளிகை=நிலா முற்றம்; உயர்ந்த மாடத்தில் கட்டப்பட்ட கொடிகள் ஆடுவதை, வானவரை இந்த தலம் வந்தடைந்து பெருமானைப் பணிந்து வணங்குமாறு அழைக்கின்றன என்று கற்பனை செய்கின்றார். விளி செய்தல்=கூவி அழைத்தல்;

திரியும் புரம் மூன்றையும் செந்தழல் உண்ண

எரியம்பு எய்த குன்ற வில்லி இடமென்பர்

கிரியும் தரு மாளிகைச் சூளிகை தன் மேல்

விரியும் கொடி வான் விளி செய் விடைவாயே

தசபுராணத் திருப்பதிகத்தின் பாடலில் (4.14.5) அப்பர் பிரான் திரிபுரத்து கோட்டைகளை பெருமான் எரித்ததை மிகவும் விவரமாக கூறுகின்றார்.நிதனம்=அழிவு: நிலை வலி= எதிர்த்து நிலைத்து நிற்கும் வலிமை: மண்ணுலகையும் விண்ணுலகையும் அழித்துக் கொண்டு பறக்கும் கோட்டைகளில் உலவிக் கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் வல்லமையைக் கண்டு அவர்களுக்கு எதிரே நிலைத்து நின்று சண்டையிடும் ஆற்றல் இல்லாததால், அவர்கள் இழைத்த துன்பங்களுக்கு அஞ்சி, திருமால் முதலான தேவர்கள் சிவபிரானிடத்தில் தஞ்சம் புகுந்தனர்: அவர்கள் மீது கருணை கொண்ட சிவபெருமான், கொலைத் தொழிலில் வல்லவராகிய திருமால் கூர்மை மிகுந்த அம்பாகவும், வாசுகி பாம்பு நாணாகவும், அம்பினில் தீக்கடவுள் இணையவும், மேருமலையை வில்லாக வளைவித்து, மூன்று புரங்களையும் சாம்பலாகச் எரித்தார். இத்தகைய வல்லமை பெற்ற சிவபெருமான் தான் நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம் செய்து ஓடு புரமூன்று

அலை நலி அஞ்சியோடி அரியோடு தேவர் அரணம் புகத் தன் அருளால்

கொலை நலி வாளி மூள அரவம் கை நாணும் அனல் பாய நீறு புரமா

மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவனா நமக்கொர் சரணே

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.57.6) திரிபுரத்தவர்களுடன் போருக்கு சென்ற பெருமான் பயன்படுத்திய அம்பினை, அழல் அம்பு என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். காரழல்=நெருப்பினைப் போன்று கொடிய நஞ்சு: கடிமதில்=காவல் மதில்கள்; உகைத்து=செலுத்தி: மேயாய்=பொருந்தியவன்: அழல் அம்பு=அக்னி கூர்மையான முனையாக அம்பினில் பங்கேற்றமை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. கரிய நெருப்பினைப் போன்று கொடுமையான நஞ்சை கழுத்தில் இருத்தியவனும், காவல் மதில்கள் கொண்ட மூன்று பறக்கும் கோட்டைகளையும், அக்னித் தேவனை முனையாகக் கொண்ட ஓரே அம்பினைச் செலுத்தி தீயினால் எரியுமாறு செய்தவனும், செந்தழல் போன்ற வண்ணம் கொண்ட சடையினுள் கங்கையைத் தாங்கியவனும் ஆகிய சிவபெருமான், தன்னை விரும்பி நினைக்கும் அடியார்களின் வினைகளைத் தீர்க்கின்றார். அவர் தான், பொறுப்பதற்கு அரியதான தீயினைக் கையில் ஏந்தியவாறே நடனமாடும் ஆவடுதுறைப் பெருமான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காரழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும்

ஓர் அழல் அம்பினாலே உகைத்துத் தீ எரிய மூட்டி

நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்

ஆரழல் ஏந்தியாடும் ஆவடுதுறை உளானே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.64.4) அப்பர் பிரான், திரிபுரத்து அரக்கர்களின் மீது போருக்கு சென்ற போது பெருமான், பயன்படுத்திய அம்பின் தன்மையை குறிப்பிடுகின்றார். புராணங்களில் நாம் பல அரக்கர்கள், வரம் பெறுவதற்காக கடுமையான தவம் புரிவதை படிக்கின்றோம். தவத்தின் முடிவில் இறவாமை என்கிற வரத்தைத் தான் முதலில் அவர்கள் வேண்டுகின்றார்கள். அத்தகைய வரம் தர இயலாது என்று உணர்த்தப்பட்ட பின்னர் மிகவும் அரிதான சூழ்நிலையில் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தினைப் பெறுகின்றார்கள். திரிபுரத்து அரக்கர்களும், எப்போதும் பறந்து கொண்டிருக்கும் தங்களது கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயத்தில், ஒரே அம்பினால் மட்டுமே தங்களை அழிக்க முடியும் என்ற வரத்தினைப் பெறுகின்றார்கள். எப்போதும் வானில் பறந்து கொண்டிருக்கும் மூன்று பொருட்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது என்பது மிகவும் அரிதான செயல் என்பதால், நிலையான வாழ்க்கையை தாங்கள் பெற்று விட்டதாக நினைத்து அவர்கள், தங்களது விருப்பம் போல் மற்றவரை துன்புறுத்தத் தொடங்கினார்கள். இறுதியில் அவர்களது கோட்டைகளும் அழிந்தன. இதனை உணர்த்தும் பொருட்டு, அப்பர் பிரான், நிலையிலா ஊர் மூன்று என்று திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை இங்கே குறிப்பிடுகின்றார். எவராலும் வெல்ல முடியாது, எங்கும் திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும், அக்னி, திருமால், வாயு ஆகியோரை உறுப்புகளாகக் கொண்ட அம்பினை, மேரு மலையை வில்லாக வளைத்து வாசுகி பாம்பினை நாணாக பூட்டி, அந்த மூன்று கோட்டைகளும் ஒன்று சேர்ந்த சமயத்தில் விடுத்து, எரித்த இறைவன், என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

நிலையிலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பாகச்

சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர் தங்கள்

தலையினால் தரித்த என்பும் தலைமயிர் வடமும் பூண்ட

விலையிலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.74.4) அப்பர் பிரான் செஞ்சரம் செலுத்தி திரிபுரத்து கோட்டைகளை பெருமான் அழித்தார் என்று கூறுகின்றார். இந்த பாடலில் தேவியின் மீது வைத்துள்ள ஆசை நீங்காதவனாக தனது உடலில் ஏற்றுக் கொண்டவனாக இருக்கும் பெருமான், அந்த ஆசையின் காரணமாக தான் நடனம் ஆடும் போதும் பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவாறு நடனம் ஆடுகின்றான் என்று கூறுகின்றார். அருத்தி=காதல், விருப்பம்; செரு=சண்டை; செருத் தனை=சண்டை தன்னை; அருத்தி செய்தல்=விருப்பம் கொண்டு; திரிபுரத்து அரக்கர்களுடன் மிகுந்த விருப்பத்துடன் போர் செய்த பெருமான், அந்த பறக்கும் கோட்டைகளை அழிப்பதையே தனது கருத்தாக கொண்டிருந்தார் என்று கூறுகின்றார். கனக மேனிக் கடவுள்=பொன்னார் மேனியன்; ஒருத்தன்=ஒப்பற்ற தலைவன்; நிருத்தன்=நடனம் ஆடுபவன்;

செருத்தனை அருத்தி செய்து செஞ்சரம் செலுத்தி ஊர் மேல்

கருத்தனைக் கனக மேனிக் கடவுளைக் கருதும் வானோர்க்கு

ஒருத்தனை ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா

நிருத்தனை நினைத்த நெஞ்சம் நேர்பட நினைத்தவாறே

பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.88.7) அப்பர் பிரான் கனல் அம்பு என்று திரிபுரத்தவர்களுடன் போருக்கு சென்ற போது பெருமான் பயன்படுத்திய அம்பினை குறிப்பிடுகின்றார். மன்றியும்=தண்டிக்கப்பட்ட பின்னரும்; கன்றியும்=சினந்தும்; பொன்றியும்= அழிந்தும்; அன்றியும்=மாறுபட்ட; புரட்டுதல்=மாற்றுதல், தங்களது வலிமையை பயன்படுத்தி அனைவரையும் துன்புறுத்திய அரக்கர்களின் வலிமையை கெடுத்து பெருமான் அழித்ததை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். திரிபுரத்தவர்களை அழித்த செயலை குறிப்பிட்ட அப்பர் பிரான், அந்த செயலுக்கு மாறுபட்ட தோற்றுவிக்கும் செயலையும் செய்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பெருமானால் தண்டிக்கப்பட்ட பின்னரும் திரிபுரத்து அரக்கர்கள், பெருமானின் வீரத்தின் தன்மையை உணராமல் பெருமானை எதிர்க்கத் துணிந்தனர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்கள் சிவபெருமானை வணங்கி துதித்து வாழ்ந்த வரையில், பெருமானின் அருள் அவர்களை காக்கும் படையாக இருந்து வந்தது. அவர்கள் திருமாலின் போதனையில் மயங்கி, வைதீக நெறியினை விட்டு விலகி, நாத்திக வாதத்தினை பின்பற்றத் தொடங்கிய பின்னர், பெருமானின் அருள் அவர்களை விட்டு விலகி விட்டது. இதனையே பெருமான் அவர்களுக்கு அளித்த தண்டனையாக அப்பர் பிரான் கருதினார் போலும். பறக்கும் கோட்டைகளைக் கொண்டு தாங்கள் விரும்பும் இடத்தில் கீழே இறங்கி, ஆங்கிருந்த உயிர்களை அழித்து கெடுதல் செய்து வந்ததை மாயவகை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பெருமானால் ஒதுக்கி வைக்கப்பட்டு தண்டனை அடைந்த பின்னரும் தங்களை திருத்திக் கொள்ளாமல் பெருமானை எதிர்க்கத் துணிந்த, பறக்கும் கோட்டைகளை அரணாகக் கொண்ட திரிபுரத்து அரக்கர்களின் மாயங்களை கெடுக்கும் வண்ணம், அவர்களை கோபித்த பெருமான் கொடிய வில்லினில் தீயினை கக்கும் அம்பினைப் பூட்டி அவர்களது கோட்டைகளும் அவர்களும் அழியும் வண்ணம் செயல்பட்டார். அழிக்கும் தொழிலைப் புரிந்து திரிபுரத்தவர்களை அழித்து தேவர்களை காத்த பெருமான், அழித்தலுக்கு மாறுபட்ட தோற்றுவிக்கும் செயலையும் புரியும் பெருமான் பூந்துருத்தி தலத்தில் மிகவும் மகிழ்ந்து ஆதிபுராணன் என்ற நாமத்துடன் உறைகின்றான். அவனது திருவடிகளை நான் போற்றுகின்றேன் என்று அப்பர் பிரான் பெருமானை போற்றும் பாடல்.

மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்கக்

கன்றியும் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனல் அம்பினால்

பொன்றியும் போகப் புரட்டினன் பூந்துருத்தி உறையும்

அன்றியும் செய்த பிரான் தனை யான் அடி போற்றுவதே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.89.10) அப்பர் பிரான், பெருமான் தீ அம்பினால் மாட்டி நின்றான் என்று கூறுகின்றார். கதம்=விரைவு; பொரு= சண்டை; திரிபுரத்து அரக்கர்களுடன் நடைபெற்ற சண்டை வானில் நிகழ்ந்தது என்பதை குறிப்படும் வண்ணம், பொரு வான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். தனது பெரும்பாலான பதிகங்களில் கடைப் பாடலில் அரக்கன் இராவணன் செய்த தவறினை மன்னித்து அவனுக்கு பெருமான் அருள் புரிந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு அதன் மூலம், நாம் செய்த தவறுகளுக்கு வருந்தி தொழுதால் பெருமான் நமக்கு அருள் புரிவான் என்று உணர்த்துவது அப்பர் பிரானின் பழக்கம். இந்த பதிகத்தின் கடைப்பாடலில் இராவணன் குறித்த கயிலை நிகழ்ச்சி இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக பெருமானின் வல்லமை, இரண்டு நிகழ்ச்சிகள் மூலம் குறிப்பிடப் படுகின்றது. திரிபுரங்களை அழித்ததும், வேகமாக இறங்கி வந்த கங்கை நதியினை தனது சடையில் தாங்கியதும், பெருமான் செய்த ஒப்பற்ற செயல்கள். வேறு எவரும் செய்ய முடியாது என்ற நிலையில் இந்த செயல்களை பெருமான் செய்த நிலை, அவரது வல்லமையை அனைவர்க்கும் உணர்த்தியது, அத்தகைய வல்லமை கொண்ட பெருமான் மிகவும் எளியவனாக இறங்கி வந்து நெய்த்தானம் தலத்தில் வீற்றிருப்பது நமக்கு அருள் புரிவதற்கே என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். திரிபுரத்து அரக்கர்களுடன் வானில் நடைபெற்ற சண்டையில் அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளுக்கும் தீமூட்டும் பொருட்டும், பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்கள் அந்த தீயினில் வெந்து அழியவும், அக்னிதேவன் பங்கேற்ற அம்பினை, தனது கையினில் இருந்த வில்லினில் மாட்டி நின்றவன் சிவபெருமான்; மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி பொருந்தும் வண்ணம் தனது நீண்ட சடையினை விரித்தவாறு நின்றவனும் அவனே. இத்தகைய வல்லமை கொண்ட பெருமான், நமக்கு அருள் புரியும் பொருட்டு மிகவும் எளியனாக நிலவுலகில் உள்ளதும் செல்வம் நிறைந்ததும் ஆகிய நெய்த்தானம் தலத்தில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஊட்டி நின்றான் பொரு வானில் மும்மதில் தீ அம்பினால்

மாட்டி நின்றான் அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்குக்

காட்டி நின்றான் கதமாக் கங்கை பாய ஓர் வார் சடையை

நீட்டி நின்றான் திருநின்ற நெய்த்தானத்து இருந்தவனே

சத்திமுற்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.96.7) வெங்கணையால் மூன்று பறக்கும் கோட்டைகளையும் அழித்தவன் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகிறார். சிட்டன்=சிறந்தவன்; ச்ரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். மட்டார்=தேன் பொருந்திய; விட்டார்=சிவநெறியை கைவிட்டவர்கள்; விஷ்ணு புராணத்தில் கூறப்படும் தகவல்களின் படி, சிவபெருமானை வழிபட்டு வந்த திரிபுரத்து அரக்கர்களின் மனத்தினை, பேதலிக்கச் செய்தவர் திருமால். திருமால் நாரதருடன் ஒரு அந்தணனாக அங்கே சென்று அவர்களுக்கு நாத்திகக் கொள்கைகளை போதிக்கவே மனம் மாறிய அரக்கர்கள் தாங்கள் அந்நாள் வரை செய்து வந்த சிவவழிப்பாட்டினை நிறுத்தியதும் அல்லாமல், சிவபெருமானை நிந்தனைசெய்யவும் தொடங்கினார்கள். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போர் செய்ய முடிவு செய்தார். உமையம்மை இந்த தலத்தில் சிவபிரானை வழிபட்ட வரலாறு இங்கே கூறப்படுகின்றது. தேன் நிறைந்து இருப்பதால் வண்டுகள் மொய்ப்பதும், நறுமணம் உடையதுமாகிய மலர்களைத் தனது கூந்தலில் அணிந்துள்ள உமையம்மை செய்த வழிபாட்டால் மகிழ்ந்து இருப்பவரும், அனைவரிலும் சிறந்தவராகியவரும், சத்திமுற்றம் எனும் தலத்தில் வசிப்பவரும் ஆகிய சிவக்கொழுந்தே, சிவநெறியை கைவிட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று நகரங்களையும் சுடுகின்ற அம்பினால் ஒரு நொடியில் சுட்டெரித்தவரே, நீ எனது பாசத் தொடர்புகளை அறுத்து ஆட்கொள்ள வேண்டும்.

விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால்

சுட்டாய் என் பாசத் தொடர்பு அறுத்து ஆண்டு கொள் தும்பி பம்பும்

மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும்

சிட்டா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.25.11) அப்பர் பிரான் திரிபுரத்து பறக்கும் கோட்டைகளை செங்கணை ஒன்றினால் எரிய பெருமான் எய்தார் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் ஐந்தாவது பாடல் தொடங்கி நான்கு பாடல்களில், தான் பெருமான் பால் வைத்திருந்த அளவு கடந்த அன்பினை, அகத்துறை பாடல்களாக அமைத்த, அந்த உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கியதால் ஒரு பாடல் அதிகமாக அளித்து, பதினோரு பாடல்கள் கொண்ட பதிகமாக அப்பர் பிரான், இதனை செய்தார் போலும். பரியர்=பெரியவர்; திரிபுரத்து அரக்கர்களை அழித்த செய்தியை குறிப்பிடும் அப்பர் பிரான், அரக்கன் இராவணனுக்கு இறைவன் அருள் புரிந்ததை குறிப்பிட்டு, இறைவனின் புகழினை பாடினால் நாம் செய்த குற்றங்கள் மன்னிக்கப்பட்டு அருள் வழங்கப்படும் என்பதை அப்பர் பிரான் உணர்த்துகின்றார். எப்போதும் வானில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும், ஒரே அம்பினால் தீப்பற்றி எரியுமாறு அழித்த இறைவனார், கருணை உள்ளம் கொண்டவராக, கயிலை மலையினை அசைத்த அரக்கன் இராவணனின் வலிமை கெடுமாறு, கால் பெருவிரல் ஒன்றினால் மலையின் கீழே அழுத்திய பின்னர், அவன் மீது கருணை கொண்டு அவனை விடுவித்தார். இத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான், அனைத்துப் பொருட்களை விடவும் அனைத்து உயிர்களை விடவும் பெரியவராகவும், அனைத்து பொருட்களை விடவும் நுண்ணியராகவும் விளங்குகின்றார். இவரே பாசூர் அடிகளாக இந்த தலத்தில் திகழ்கின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திரியும் மூ எயில் செங்கணை ஒன்றினால்

எரிய எய்தனரேனும் இலங்கைக் கோன்

நெரிய ஊன்றி இட்டார் விரல் ஒன்றினால்

பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.36.10) அப்பர் பிரான், செங்கணை ஒன்றினால் மூன்று கோட்டைகளும் அக்னிக்கு இரையாக மாறும் வண்ணம் வீரச் செயல் புரிந்தவர் பெருமான் என்று கூறுகின்றார். செங்கணை=கூர்மையான அம்பு என்றும் தீக்கடவுள் பொருந்தியதால் சிவந்த நிறத்துடன் இருந்த அம்பு என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். வானில் தங்களது விருப்பம் போன்று திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும், கூர்மையான அம்பு ஒன்றினை விடுத்து, மூன்று கோட்டைகளும் அக்னிக்கு இரையாக மாறுமாறு செய்தவர் சிவபெருமான். இலங்கைத் தீவுக்கு அரசனாகிய அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, மலையின் கீழே அரக்கன் நசுங்குமாறு, தனது கால் விரலை கயிலை மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான். இத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் செம்பொன்பள்ளி தலத்தில் உறைகின்றார். அவர் தனது அடியார்களுக்கு, எளிதில் கிடைக்காத வீடுபேற்று இன்பத்தை வழங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திரியும் மும்மதில் செங்கணை ஒன்றினால்

எரிய எய்து அனல் ஓட்டி இலங்கைக் கோன்

நெரிய ஊன்றி இட்டார் செம்பொன்பள்ளியார்

அரிய வானம் அவர் அருள் செய்வரே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.1.7) திருமால் அம்பின் தண்டாகவும் காற்றுக் கடவுள் அம்பின் சிறகாகவும் தீக்கடவுள் அம்பின் முனையாகவும் பங்கேற்ற அம்பினைக் கொண்டு திரிபுரங்களை எரித்த இறைவன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். முயன்ற=பங்கேற்ற; வரும் பயனை என்ற சொற்களை, எழுநரம்பின் ஓசையானை என்ற சொற்களுக்கு அடுத்து வைத்து பொருள் கொள்ள வேண்டும். யாழ், வீணை முதலிய கருவிகளின் நரம்பிலிருந்து எழுவது ஓசை, அந்த ஓசையால் விளைவது பண்; பண்ணால் விளைவது மனத்திற்கு இன்பம்; அரும் பயம் செய்ய=காண்போர் அச்சம் கொள்ளும் வண்ணம், பறக்கும் மூன்று கோட்டைகளும் தீயினில் எரிக்கப் பட்டன என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நரம்பிசைக் கருவிகளிலிருந்து எழும் இனிய ஓசையாகவும், அந்த ஓசைகள் சேர்ந்த இனிய பண்ணாகவும் உள்ளவன் சிவபெருமான். தேவர்களுக்கு கொடிய அச்சத்தை விளைவித்த, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளை எரிப்பதற்காக, திருமால், அக்னி, வாயு ஆகியோர் பங்கேற்ற வல்லமை வாய்ந்த அம்பு கொண்டு, காண்போர் அச்சம் கொள்ளும் வண்ணம் மூன்று கோட்டைகளையும் தீமூட்டி அழித்த வல்லமை கொண்டவன் சிவபெருமான். அலை கடலில் தோன்றிய விடத்தைக் கண்டு அனைவரும் பயந்து ஓடியபோது, தயக்கம் ஏதும் இல்லாமல் அதனை உண்டு, அனைவரையும் காப்பாற்றியவன் சிவபெருமான். வண்டுகள் தங்கும் பூக்களை அணிந்த மங்கையர்களின் ஆசைப் பார்வைகளில் சிக்காமல் உறுதியான உள்ளம் கொண்ட பெரியோர்களின் உள்ளங்கள் அடையும் பெரும்பயனாக விளங்குபவன் சிவபெருமான். இவ்வாறு வல்லமையும் கருணை உள்ளமும் ஒருசேரக் கொண்டுள்ள இறைவனாகிய சிவபெருமான் பெரும்பற்றப் புலியூர் எனப்படும் தலத்தில் உறைகின்றான். அவனது புகழைப் பற்றி பேசாத நாட்கள் வாழ்ந்த நாட்களாகக் கருதப்படுவதில்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வரும் பயனை எழுநரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி

அரும்பயம் செய அவுணர் புரம் எரியக் கோத்த அம்மானை அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னைச்

சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்

பெரும் பயனைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

ஆலவாய் என்று அழைக்கப்பட்ட மதுரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.19.1) அப்பர் பிரான், சுடு சரத்தினால் மூன்று கோட்டைகளையும் எரித்து பெருமான், சாம்பலாக மாற்றினார் என்று கூறுகின்றார். முளைத்தான்=வேறு எவராலும் தோற்றுவிக்கப் படாமல் தானே தோன்றியவன்; சிந்திக்கப் பெற்றேன் என்று தானும் தினமும் இறைவனை வழிபாடு செய்ததை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். மற்ற பொருட்களும் உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியவன் இறைவன் என்று குறிப்பிடுவதன் மூலம், பெருமான் தான் அத்தகைய உயிர்களும் பொருட்களும் தோன்றுவதற்கு நிமித்த காரணனாக உள்ளான் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. முதிரும்=நன்கு வளர்ந்து அடர்த்தியாக அமைந்துள்ள; முகிழ்=பிறை; வளைத்தான்=அணிந்தான்; துவள=மெலிய; உமையம்மையுடன் பெருமான் விளையாடியதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் நிகழ்ந்த தலம் மதுரை. பெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களில், தடாதகை பிராட்டியை மணந்து பாண்டிய நாட்டு அரசனாக திகழ்ந்ததும் ஒரு திருவிளையாடல் தானே. இதனையே, உமையோடு ஆடி என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் போலும். திருவிளையாடல் புராணத்து மூர்த்தி விசேடப் படலம் பாடல் ஒன்றினில் (பாடல் எண்; 292) பரஞ்சோதி முனிவர், மேருமலை, கயிலை மலை, சைலமலை, மந்தரமலை, கேதாரம், காசி முதலாக உள்ள பல தலங்களில் இலிங்க உருவங்கள் தோன்றுவதற்கு முன்னமே, மதுரையில் ஒரு கடம்ப மரத்தின் அடியில் இலிங்கம் தோன்றியது என்று கூறுகின்றார். இந்த கருத்தே இங்கே, அப்பர் பிரானால் முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது என்றும் சிலர் கருதுகின்றனர்.

முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடைமுடி மேல் முகிழ் வெண் திங்கள்

வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணாக் கோத்துத்

துளைத்தானைச் சுடுச்சரத்தால் துவளநீறாத் தூமுத்த வெண்முத்த உமையோடாடித்

திளைத்தானைத் தென்கூடல் திருவாலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே

வேறு எவராலும் தோற்றுவிக்கப் படாமல், அனைத்து உயிர்களும் மற்றும் அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு முன்னமே, தானே தோன்றியவனும், அந்த பொருட்களும் உயிர்களும் தோன்றுவதற்கு நிமித்த காரணமாக அமைந்தவனும்; நன்கு வளர்ந்து அடர்ந்த சடைமுடியின் மேல் வளைந்த பிறைச் சந்திரனை அணிந்தவனும்; வல்லமை வாய்ந்த திரிபுரத்து அசுரர்களின் கோட்டைகள் மூன்றினையும் மேரு மலையினை வில்லாக வளைத்து வாசுகி பாம்பினை நாணாகக் கோத்து, வெம்மை வாய்ந்த அம்பினை எய்தி கோட்டைகள் சாம்பலாக மாறி மெலியும் வண்ணம் அழித்தவனும், தூய்மையான வெண்முத்து போன்ற பற்களை உடைய உமையம்மையுடன் விளையாடி மகிழ்பவனும் ஆகிய இறைவன் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப்படும் தென்மதுரை நகரத்தில் உறைகின்றான், அடியேன் அவனது திருவடிகளை சிந்திக்கும் பேறு பெற்றவனாக உள்ளேன் என்று மிகுந்த பெருமிதத்துடன் அப்பர் பிரான் கூறும் பாடல்.

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.40.1) நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அடுத்த=பொருந்திய; உயிரினை தலைக்கு ஈடாக சொல்லி, உயிர் காத்தலை தலை காத்தல் என்று சொல்வது வழக்கம். அதனை பின்பற்றி ஆலகால விடத்தின் தாக்கத்திலிருந்து தேவர்களை பெருமான் காத்தமையை தலை காத்தது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். ஐயர்=தலைவர்; மேரு மலை தங்க மயமாக இருக்கும் என்று புராணத்தில் கூறப்படுகின்றது. விடியற்காலை ஒளியில் கயிலை மலையின் வடக்கு பகுதி பொன் மயமாக தோன்றுவதை நாம் இன்றும் காண்கின்றோம். மாநாகம்=வாசுகி பாம்பு; குவை=குவியல்; நிலை=இயல்பு; அலைகள் பொருந்திய பெரிய கடலிலிருந்து எழுந்த கொடிய நெஞ்சின் தாக்கத்திலிருந்து தேவர்களின் உயிர்களை காக்கும் பொருட்டு, அந்த நஞ்சினை தயக்கம் ஏதுமின்றி விருப்பமுடன் அமுதம் உண்பது போன்று விழுங்கி. தேவர்களின் உயிரினை காத்த தலைவர் சிவபெருமான். செம்பொன் போன்று ஒளி வீசிய மேரு மலையினை வில்லாக வளைத்து, அந்த வில்லினில் வாசுகி பாம்பினை நாணாக பூட்டி, நெருப்பினை தனது அங்கமாகக் கொண்ட அம்பினை பொருத்தி திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் தீயினால் எரித்து அழித்த செல்வர் சிவபெருமான். தனது இயல்பினில் சிறிதும் மாறாத பசும்பொன் மற்றும் முத்தால் நிறைக்கப் பெற்றும் நீண்ட வயிரங்கள் குவிக்கப் பெற்று செய்யப்பட்ட பலகை போன்றும், மலை போன்று உறுதியானதும் ஆகிய வயிரத்தூணாக மழபாடி தலத்தில் உறையும் இறைவன் என்று எனது வாயினால் உன்னை அழைத்து அரற்றி அடியேன் உள்ளம் நைகின்றேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள் தம் தலை காத்த ஐயர் செம்பொன்

சிலை எடுத்து மாநாகம் நெருப்பு கோத்துத் திரிபுரங்கள் தீயிட்ட செல்வர் போலும்

நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிறை வயிரப் பலகையால் குவை ஆர்த்து உற்ற

மலை அடுத்த மழபாடி வயிரத் தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

கோகரணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.5) அப்பர் பிரான், பெருமானை தீ அம்பன் என்று அழைக்கின்றார். தீக்கடவுளைத் தனது முனையில் கொண்ட அம்பினை உடையவன் பெருமான். மன்றல் மணம்=நறுமணம்; சென்ற=தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி; பூதன்=உயிர்களை ஆட்கொள்பவன்; இந்த பாடலில் நறுமணம் கமழும் சடையினை உடையவன் பெருமான் என்று குறிப்பிட்டு, இயற்கையான நறுமணம் வாய்ந்தது பெருமானின் சடை என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமானின் மற்றொரு பக்கமே அம்மை என்பதால், அம்மையின் கூந்தலும் இயற்கை மணம் வாய்ந்தது என்பதும் இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. அன்று அப்பொழுதே அருள் செய்தான் என்பதற்கு, அப்பர் பிரான் தனது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்த சம்பவத்தை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. தீராத சூலை நோயால் வருந்திய போது, தனது தமக்கையார் சொல்லினைப் பின்பற்றி திருவதிகை பெருமானை வணங்கிய உடனே தனது சூலை நோய் தீர்ந்ததை, காலம் தாழ்த்தாமல் அப்பொழுதே பெருமான் அருள் செய்தான் என்று கூறுகின்றார். அதன் பின்னரும், அப்பர் பிரான் துன்பமுற்ற போதெல்லாம் பெருமான் உடனே உதவியதை நாம் அவரது சரித்திரத்தில் காண்கின்றோம். மதயானை அப்பர் பிரானின் தலையை இடற வந்த போதும், நஞ்சு கலந்த அமுதம் ஊட்டப்பட்ட போதும், கல்லுடன் கட்டப்பட்டு கடலில் தள்ளப்பட்ட போதும், தனது உடலினை தூய்மை செய்யும் வண்ணம் உடலின் மீது இடபக்குறி பொறிக்கப் படவேண்டும் என்று பெண்ணாகடம் தலத்தில் வேண்டிய போதும் அப்பர் பிரானுக்கு உடனே உதவி செய்தவன் சிவபெருமான். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி திரிபுரத்து அரக்கர்களை நோக்கிச் சென்ற இறைவன், மேரு மலையை வில்லாக வளைத்து, அந்த வில்லில் பொருத்தப்பட்ட அம்பினில் தீயினை பொருத்தி, வானத்தில் திரிந்து கொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளும் சாம்பல் பொடியாக மாறி அழியும் வண்ணம், அந்த கோட்டைகளை நோக்கியவன் சிவபெருமான். உயிர்களை ஆட்கொண்டு அருள் புரியும் இறைவன், பூத கணங்களைத் தனது படையாக உடையவன்; காலம் தாழ்த்தாமல் அப்போதைக்கு அப்போதே அடியார்களுக்கு அருள் செய்யும் தன்மை உடைய இறைவன், அந்த தன்மையினால் அடியார்களுக்கு அமுதமாக தித்திக்கின்றான். அவன் ஊழித்தீயினில் நின்று நடமாடுபவன்; நறுமணம் கமழும் நீண்ட சடையினை உடைய பெருமான், பெரிய கடல் சூழ்ந்த கோகர்ணம் தலத்தில் மிகுந்த விருப்பமுடன் எழுந்தருளியுள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சென்றச் சிலை வாங்கிச் சேர்வித்தான் காண் தீ அம்பன் காண் திரிபுரங்கள் மூன்றும்

பொன்றப் பொடியாக நோக்கினான் காண் பூதன் காண் பூதப் படையாளி காண்

அன்றப்பொழுதே அருள் செய்தான் காண் அனலாடி காண் அடியார்க்கு அமுதானான் காண்

மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.50.9) அப்பர் பிரான், திரிபுரத்து கோட்டைகளை எரித்து அழிக்க பயன்படுத்தப் பட்ட அம்பில் பொருந்தி இருந்தவர் எவரெவர் என்று கூறுகின்றார். இப்பக்கம் பல ஆனான் என்று கூறுவதால், பரந்தான் என்ற சொல்லினை அப்பக்கம் பரந்தான் என்று பொருள் கொள்ள வேண்டும். உலக மாயையின் இரு பக்கங்களில் இறைவன் உள்ள நிலை இங்கே கூறப்படுகின்றது. திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற போது சிறப்பு வாய்ந்த அம்பினை எடுத்துச் சென்ற பெருமான், அந்த அம்பினையும் பயன்படுத்தாமல், தனது காலின் கீழே அந்த அம்பினை வைத்து விட்டு, அரக்கர்களை வென்றதாக அப்பர் பிரான் கூறுகின்றார். உலக மாயைக்கு அப்பாற்பட்டவனும், உலகத்தில் உள்ளவர்களுக்கு பலபல வேடங்களில் தோற்றம் அளித்து அருள் புரிபவனும், அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக உள்ளவனும், பக்குவப்பட்ட அடியார்களுக்கு முக்தி நிலையினை வரமாக அளிப்பவனும், தன்னை வணங்கும் அடியார்களின் மனதினில் இருப்பவனும், திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற போது வாயுதேவன் அக்னிதேவன் மற்றும் திருமால் ஆகியோரை அம்பின் சிறகுகள் நுனி மற்றும் தண்டாக கொண்டவனும், அத்தகைய சிறப்பான அம்பினையும் பயன்படுத்தாமல் தனது காலின் கீழே வைத்துவிட்டு தனது புன்முறுவலால் மூன்று கோட்டைகளையும் எரித்து வெற்றி கண்டவனும், தவத்தின் செல்வனாக விளங்குபவனும், ஊழிக்காலத்தில் இறந்த தேவர்களின் தலைகளை மாலையாக தனது சடை மகுடத்தில் அணிந்தவனும் ஆகிய பெருமான் திருவீழிமிழலை தலத்தில் உறைகின்றான். இத்தகைய பண்புகளையும் செயல்களையும் உடைய திருவீழிமிழலைப் பெருமானை அணுகி அவனை வழிபடாமல் நிற்கும் மாந்தர்கள் தங்களை அறியாமலே, தீயநெறிக்கு சென்று கெடுகின்றார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பரந்தானை இப்பக்கம் பல ஆனானைப் பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும்

வரத்தானை வணங்குவார் மனத்துளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்காம்

சரத்தானைச் சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனைச் சடாமகுடத்து அணிந்த பைங்கண்

சிரத்தானைத் திருவீழிமிழலையானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.53.3) அப்பர் பிரான், பெருமான், எரி சரத்தால் புரம் மூன்றையும் எரித்து அழித்தார் என்று கூறுகின்றார். சரம்=அம்பு; நேமி=சக்கரம்; எயில்=கோட்டை; வேறு அணிந்த கோலம்=உலக இயல்புக்கு மாறான கோலம்; கோவண ஆடை, புலித்தோல் மேலாடை, பாம்பு கச்சு, எலும்பு மாலை ஆபரணம், விரித்த சடை ஆகியவை கொண்டுள்ள கோலம் என்பதால் மாறுபட்ட கோலம் என்று கூறுகின்றார். விகிர்தன் என்றால் மற்றவரிடமிருந்து மாறுபட்டவன் என்று பொருள். மாறுபட்ட கோலம் உடைய பெருமானை விகிர்தன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். வியன்=அகன்ற; பரந்த நிமலர்=மலங்களின் சேர்க்கை இல்லாமல் தூய்மையாக காணப்படுபவர்; திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற போது பயன்படுத்திய அம்பின் முனையில் தீக்கடவுள் பங்கேற்றமை குறித்து எரிசரம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். எரிசரம் என்ற சொல்லுக்கு மூன்று கோட்டைகளையும் எரித்த அம்பு என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. திருநீறு அணிந்த மேனியை உடையவரும், மலங்களின் சேர்க்கை இல்லாமல் தூய்மையின் வடிவாக விளங்குபவரும், நெடுமாலுக்கு சக்கரப்படை அருளியவரும், எருதின் உருவம் எழுதப்பட்ட கொடியினை உடையவரும், வானில் பறந்து கொண்டிருந்த கோட்டைகள் மூன்றும் தீயினில் எரியும் வண்ணம் தீப்பிழம்பினை வெளிப்படுத்திய அம்பு கொண்டு திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை எரித்தவரும், மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட கோலத்தை உடையவரும், அகன்று பரந்த வீழிமிழலை நகரத்தில் உள்ள திருக்கோயிலில் உறையும் விகிர்தரும், கங்கை ஆற்றினைத் தனது சடையில் அடக்கி மறைத்து வைத்துள்ள அழகரும் ஆகிய இறைவன் அடியேனை ஆட்கொண்டவராவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நீறு அணிந்த திருமேனி நிமலர் போலும் நேமி நெடுமாற்கு அருளிச் செய்தார் போலும்

ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும்

வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும்

ஆறு அணிந்த சடாமகுடத்து அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.58.4) அப்பர் பிரான் கோவாத எரி கணை என்று குறிப்பிடுகின்றார். எவரும் கோர்க்க முடியாத அம்பினைத் தனது வில்லினில் கோர்த்து திரிபுரத்தவர்களுடன் சண்டைக்கு சென்ற பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் மூவர் உருவாய முதல்வர் என்று குறிப்பிட்டு, பிரமன், திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மூவராக இருப்பது சிவபெருமான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். மூவாத=மூப்பு அடையாத, பல தேவாரப் பாடல்களில் இளநாகம் என்று குறிப்பிடப் படுகின்றது. தனது தோலினை அடிக்கடி உரித்து விடுவதால், பாம்பின் உடலில் சுருக்கங்கள் காணப்படுவதில்லை. மேலும் நரை முடி உடைய பாம்பினையும் நாம் காண்பதில்லை, இவ்வாறு நரை மற்றும் திரை (தோலின் சுருக்கம்) இல்லாத பாம்பினை இள நாகம் என்று பொருத்தமாக மூவர் முதலிகள் அழைக்கின்றார்கள். கோவாத எரிகணை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். வேறு எவரும் கோர்க்காத அம்பு என்று, தீக்கடவுள், காற்றுக் கடவுள் மற்றும் திருமால் ஆகிய மூவரும் மூன்று பாகங்களாக இருந்த அம்பினை, சிவபெருமான் பயன்படுத்தி திரிபுரத்தை எரித்த நிகழ்ச்சியை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். மாயம் பேசி தன்னை வஞ்சித்ததாக இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிட்ட அப்பர் நாயகி இந்த பாடலில் பெருமான் பேசிய மாய வார்த்தை என்ன என்பதை உணர்த்துகின்றாள். தன்னை வாவா என்று அழைத்த பெருமான் தனக்காக காத்திராமலும், தன்னிடம் சொல்லாமலும் வலம்புரம் சென்று புகுந்ததாக, தனது வருத்தத்தை அப்பர் நாயகி வெளிப்படுத்தும் பாடல். தன்னை வாவா என்று அழைத்த பெருமான், தன்னை விடுத்து பூத கணங்களைத் தன்னுடன் அழைத்துச் சென்றது அப்பர் நாயகியின் வருத்தத்தை மேலும் அதிகரித்தது போலும். என்றும் இளமையாக காணப்படும், மூர்க்க குணம் கொண்ட பாம்பினைத் தனது இடுப்பினில் கட்டிய பெருமான், பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் உருவில் இருக்கும் முழுமுதற் கடவுளாவார். வேறு எவரும் கோர்க்க முடியாத அம்பினைத் தனது வில்லினில் கோர்த்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்த பெருமான் என்றும் இளையவனாகவும் அழகாகவும் விளங்குகின்றார். குளிர்ந்த கொன்றைப் பூவினை தலையில் சூடி நின்ற அழகரைக் கண்டு நான் அவர் பின்னே செல்ல, அவர் என்னை புறக்கணித்து விட்டு, தம்முடன் பூத கணங்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். என்னை நேரில் கண்டபோது வாவா என்று அழைத்த பெருமான், எனக்காக காத்திராமலும், என்னை விட்டுவிட்டு வலம்புரம் தலத்தில் புகுந்த பெருமான் அங்கேயே நிலையாக தங்கிவிட்டார் என்று அப்பர் நாயகி தனது குறையினை சொல்வதாக அமைந்த பாடல்.

மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உருவாய முதல்வர் இந்நாள்

கோவாத எரிகணையைச் சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே

போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்லப் புறக்கணித்துத் தம்முடைய பூதம் சூழ

வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.9) அப்பர் பிரான், கோளரியைக் கூரம்பா வரை மேல் கோத்தவன் என்று திரிபுர தகனத்தின் போது நடந்ததை குறிப்பிடுகின்றார். கோளரி=வெற்றி கொண்ட சிங்கம், நரசிங்கமாக திருமால் தோன்றியதை குறிப்பிடுகின்றார். நரசிம்மராக வந்த திருமால் என்று குறிப்பிட்டு அம்பின் வலிமையை அப்பர் பிரான் நயமாக உணர்த்துகின்றார். கலை=மான்; கொள்கையான்=செய்கையான், செயலைச் செய்தவன்; தத்துவம்=உண்மையான பொருள்; திரிபுரத்தின் மேல் படையெடுத்து சென்ற போது, திருமால் அம்பின் தண்டாக நின்ற தன்மையும் இந்தப் பாடலில், கோளரியை கூர் அம்பா வரை மேல் கோத்த சிலையான் என்று கூறப் பட்டுள்ளது. திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அரக்கர்களுக்கு (சுதன்மன், சுசீலன், சுபுத்தி ஆகிய மூவர்) அருள் புரிந்த தன்மையும் இங்கே சொல்லப் பட்டுள்ளது. கொலை வெறியுடன் தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட செய்கையினை உடையவனும், நரசிம்மமாக அவதாரம் எடுத்த திருமால் அம்பின் தண்டாக பங்கேற்க, அந்த அம்பினை மேரு மலையினை வில்லாக வளைத்து அதனில் பொருத்தி திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்றவனும், அனைவர்க்கும் நன்மை தரும் செய்கைகளை செய்பவனும், திரிபுரத்தில் வாழ்ந்து வந்த சுதன்மன் சுசீலன் சுநீதன் (சில புராணங்களில் சுமாலி என்று கூறப்படுகின்றது) ஆகிய மூவரையும் கொல்லாமல் விடுத்து நன்மை செய்தவனும், அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக உள்ளவனும், உண்மையான மெய்ப்பொருளாக உள்ளவனும், பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், தனது கையினில் மான் கன்றினை ஏந்தியவனும், அனைவர்க்கும் மேலானவனும் ஆகிய இறைவன் கற்குடி தலத்தில் கற்பகமாக எழுந்தருளி இருப்பதை அடியேன் எனது கண்களால் கண்டு உய்ந்தேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கொலை யானை உரி போர்த்த கொள்கையானைக் கோளரியைக் கூரம்பா வரை மேல் கோத்த

சிலையானைச் செம்மை தரு பொருளான் தன்னைத் திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த

தலையானைத் தத்துவங்கள் ஆனான் தன்னைத் தையலோர் பங்கினனை தன் கை ஏந்து

கலையானைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

பள்ளியின் முக்கூடல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.69.2) அப்பர் பிரான், மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தவன் பெருமான் என்று கூறுகின்றார். சாமம்=கருமை; எண்ணத்தான்=தியானத்தின் கண் உள்ளவன்; அயில்=கூர்மை. எவராலும் வெற்றி கொள்ள முடியாத வகையில் மூன்று உலகங்களிலும் தங்களது விருப்பம் போல் திரிந்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை எரித்த செயலுக்கு ஒப்பான செயலை வேறு எவரும் செய்யவில்லை என்பதை உணர்த்தும் முகமாக தன்னொப்பார் இல்லாதான் என்று இங்கே கூறுகின்றார். அடையாதார்=பகைவர்கள் தத்துவன்=மேம்பட்ட ஒருவன். காளையை வாகனமாக உடையவனை, தேவர்களால் எப்போதும் தியானிக்கப் படுபவனை, வேதம் ஓதுபவனை, வெண்மை நிறம் வாய்ந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனை, நஞ்சினைத் தேக்கியதால் கருமை நிறத்துடன் காணப்படும் கழுத்தினை உடையவனை, அனைவர்க்கும் மேம்பட்டவனை, தனக்கு ஒப்பாக வேறொருவர் இல்லாதவனை, நிலவுலகிலும் விண்ணுலகிலும் வாழ்ந்து வந்த அனைவர்க்கும் பகைவர்களாக திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றும் தீயினுள் வெந்து அழியுமாறு அம்பினை கோத்து எய்தவனை, கூர்மையான சூலப்படையை உடையவனை, திருப்பள்ளியின் முக்கூடல் தலத்தில் உறையும் பெருமானை பலகாலும் சிந்திக்காமல் அடியேன் பயனில்லாத வாழ்க்கை வாழ்ந்தது என்னே என்று அப்பர் பிரான் தனது வருத்தத்தை தெரிவிக்கும் பாடல்.

விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண்திங்கள் சூடும் சென்னி

சடையானைச் சாமம் போல் கண்டத்தானைத் தத்துவனைத் தன்னொப்பார் இல்லாதனை

அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூலப்

படையானைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழே நான் உழன்றவாறே

ஆலம்பொழில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.86.9) அப்பர் பிரான், திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போருக்கு சென்ற போது பயன்படுத்திய அம்பில், அக்னி வாயு மற்றும் திருமால் பங்கேற்றதை குறிப்பிடுகின்றார். கடுமையாக தவங்கள் செய்து, பறக்கும் தங்களது கோட்டைகள் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் தருணத்தில் மட்டுமே தங்களை அழிக்க முடியும் என்ற வரத்தினை பெற்றவர் திரிபுரத்து அரக்கர்கள் என்பதை குறிக்கும் பொருட்டு, கடுந்தவத்தோர் என்று அப்பர் பிரான் அவர்களை குறிப்பிடுகின்றார். சாக்கியர்=புத்தர்; செய்யினார்=வயல்கள் நிறைந்த; எரி=அக்னித் தேவன்; கால்=வாயு தேவன்; தங்களது கைகளில் உணவினை ஏற்று உண்ணும் சமணர்களுக்கும் புத்தர்களுக்கும் மற்றும் சிவநெறியை கல்லாத மூடர்களுக்கும், நல்லவன் அல்லாதவனாக இருப்பவனும், நெஞ்சினில் பொய் மற்றும் கபட எண்ணங்கள் இல்லாதவர்க்கு வெளிப்படையாக தோன்றி அருள் புரிபவனும், தான் ஆபரணமாக ஏற்று அணிகின்ற பாம்பினை நாணாகவும், மேருமலை வில்லாகவும் தனது கையில் ஏந்தியவனாக, அக்னியை முனையாகவும் வாயுவை சிறகுகளாகவும் அமைந்த அம்பினைப் பொருத்தி, கடுந்தவங்கள் செய்து பெற்று வல்லமை வாய்ந்த மூன்று கோட்டைகளும் நெருப்பினில் வெந்து எரியுமாறு வீழ்த்தியவனும், வயல்கள் நிறைந்த தென்பரம்பைக்குடி எனப்படும் ஊரினில் உள்ள ஆலம்பொழில் என்ற இடத்தில் உள்ள திருக்கோயிலில் உறைபவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ சிந்திப்பாயாக என்று தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று, நமக்கு அப்பர் பிரான் அறிவுரை சொல்லும் பாடல். பரம்பைக்குடி என்பது தலத்தின் பெயர். ஆலம்பொழில் என்பது திருக்கோயிலின் பெயர்.

கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன்மூடர்க்கு அல்லாதானைப்

பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானைப் பூண் நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்

கையினார் அம்பு எரி கால் ஈர்க்குக் கோலாக் கடுந்தவத்தோர் நெடும் புரங்கள் கனல் வாய் வீழ்த்த

செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய திருவாலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.99.4) அப்பர் பிரான், பெருமானை, செங்கணையால் வெற்றி கண்டவர் என்று கூறுகின்றார். தெருளாதார்=பெருமையை உணராதார்; மருளாதார்=உலக மயக்கத்தில் உட்படாத உத்தமர்கள்; செங்கணை=அக்னி அம்பின் முனையாக இருக்கும் தன்மை செங்கணை என்ற சொல்லால் குறிப்பிடப் பட்டுள்ளது. அலர்மேலான்=தாமரை மலர் மேலிருக்கும் பிரமன்; நீர்மேலான்=பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால்; பிறப்பு இறப்புச் சுழலில் உயிர்கள் மாட்டிக்கொண்டு, வெளிவர முடியாமல் தவிக்கும் நிலையினை பிறவிப்பிணி என்று பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அழகிய புகலூர் தலத்தில் உறையும் இறைவனே, உனது பெருமையை உணராத திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றும் தீயினில் எரிந்து சாம்பலாக மாறுமாறு, மேரு மலையை வில்லாக வளைத்து, அக்னியை முனையில் கொண்ட அம்பினைப் பூட்டி, அரக்கர்களை வென்ற தேவனே; உலக மயக்கத்திலிருந்து விடுபட்ட உத்தமர்களின் மனக் கருத்தை அறிந்து அவர்களின் வாட்டத்தைத் தீர்ப்பவனே; அவர்களைப் பிடித்துள்ள பிறவிப்பிணி என்ற நோயினைத் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுபவனே; உன்னைப் போற்றி புகழும் வானோர்களுக்கு என்றும் அருள் புரிபவனே; அனைவர்க்கும் முன்னவனாக உள்ள முதல்வனே; வேதங்களாகவும் வேதங்களின் பொருளாகவும் உள்ளவனே; தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள பிரமனும் அலை கடலில் துயிலும் திருமாலும் முயன்றபோது அவர்களால் காணமுடியாத தன்மை படைத்தவனே, நான் உனது திருவடிகளை வந்து மிகவும் விரைவாக அடைகின்றேன்; நீ என்னை ஏற்றுக் கொள்வாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தெருளாதார் மூ எயிலும் தீயில் வேவச் சிலை வளைத்து செங்கணையால் செற்ற தேவே

மருளாதார் தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய்ப் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும்

அருளாகி ஆதியாய் வேதமாகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணாப்

பொருளாவாய் உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே

கலயநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.16.5) சுந்தரர் பெருமானை புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் என்று குறிப்பிடுகின்றார். நிற்பான் என்று திருமாலை இங்கே குறிப்பிடுகின்றார். திருமாலின் கோலங்கள் பல இருப்பினும், அர்ச்சனைக்கு உரியது நின்ற திருக்கோலம் என்பதால் அந்த கோலம் இங்கே கூறப்படுவதாக சுந்தரர் குறிப்பிடுகின்றார் என்று தருமபுரத்து ஆதீனக் குறிப்பு உணர்த்துகின்றது. தோத்திரங்கள் என்று பெருமானின் புகழினை எடுத்துரைக்கும் தமிழ்ப் பாடல்கள் என்று அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர். வெற்பு=மலை, இங்கே மேரு மலை; விரவுதல்=கலத்தல்; விரவார்=சைவ நெறியில் வேத நெறியில் கலவாமல் இருந்த திரிபுரத்து அரக்கர்கள்; சிறந்த சொற்களும் பொருட்களும் உடைய வேதங்கள் மற்றும் அருளாளர்கள் அருளிய கீதங்கள் என்று விளக்கம் கூறுகின்றார். சுருதி=வேதங்கள்; திறம்=தன்மை;

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய்

வெற்பார் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில்

சொற்பால பொருட்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லித் துதித்து இறை தன் திறத்தே

கற்பாரும் கேட்பாருமா எங்கும் நன்கார் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.76.3) சுந்தரர் சுடு நுனைப் பகழி ஒன்றால் மூன்று புரங்களையும் எய்தவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் அக்னி, அம்பின் முனையாக பங்கேற்றது உணர்த்தப் படுகின்றது. பார்த்தன் மேல் பல நுனிகளைக் கொண்ட அம்பினை பெருமான் விடுத்த செய்தியும் இங்கே சொல்லப் படுகின்றது. ஒரு நுனி கொண்ட அம்பு மூன்று புரங்களையும் எரிக்கின்றது; ஆனால் பல முனைகளை கொண்ட அம்பு, பார்த்தனுக்கு எந்த விதமான கேட்டினையும் உண்டாக்கவில்லை என்பதை உணரும் போது, பெருமானின் ஒரே செயல் அவனது அன்பர்களுக்கு வேறு விதமான பயனையும், சைவ நெறிக்கு பகைவர்களாக விளங்குவோருக்கு வேறு விதமான பயனையும் விளைவிக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். தூர்த்தர்=சைவ நெறியிலிருந்து விலகி மற்று உயிர்கள் பால் பகைமை உணர்ச்சியுடன் விளங்கிய திரிபுரத்து அரக்கர்கள்; மாமணிக் கச்சு=மாணிக்கத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் பாம்பு கச்சாக உடுத்திய நிலை; கச்சின் ஒரு நுனியில் பாம்பின் வால் பகுதியும் மற்றொரு நுனியில் ஐந்து தலைகளும் இருக்கும் தன்மையை ஒரு தலை பல தலை உடைத்தே என்ற தொடர் மூலம் சுந்தரர் குறிப்பிடுகின்றார்.

தூர்த்தர் மூவெயில் எய்து சுடு நுனைப் பகழி அதொன்றால்

பார்த்தனர் திரள் தோள் மேல் பல்நுனைப் பகழிகள் பாய்ச்சித்

தீர்த்த மாமலர்ப் பொய்கைத் திகழ் திரு வாஞ்சியத்து அடிகள்

சாத்து மாமணிக் கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.51.4) அக்னியும் திருமாலும் பங்கேற்ற அம்பு கொண்டு திரிபுரங்களை பெருமான் எரித்து அழித்தார் என்று சுந்தரர் கூறுகின்றார். வன்னாகம்=வலிமை வாய்ந்த பாம்பு, வாசுகி பாம்பு வில்லின் நாணாகவும் மேரு மலை வில்லாகவும் பயன்பட்ட தன்மையும் இங்கே உணர்த்தப் படுகின்றது. வரை= மலை, இங்கே மேரு மலை; தன் ஆகம்=தனது உடல், இங்கே மார்பு என்று பொருள் கொள்ள வேண்டும். வில்லிலிருந்து அம்பினை விடும் போது, இரண்டு தோள்களும் மார்பும் புடைக்கும் வண்ணம், நாணினை இழுத்து விடும் தன்மை சொல்லப் படுகின்றது. அரி=திருமால், பகழி=அம்பு; திருவாரூர் இறைவனை முன்னமே நினையாமல் திருவொற்றியூரில் தொடர்ந்து பல மாதங்கள் தங்கியதை நினைத்து சுந்தரர் வருத்தம் தெரிவிக்கின்றார். சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னமே, ஆரூர் பெருமானை நினைத்து இருந்தால் ஒருகால், திருவொற்றியூரை விட்டு பிரியேன் என்று சத்தியம் செய்து கொடுக்காமல் தான் இருந்து இருப்பேன் என்று சுந்தரர் நினைத்தார் போலும். சங்கிலியாருக்கு செய்து கொடுத்த சத்தியம் தானே, அவரை பல மாதங்கள் திருவாரூர் செல்லாமல், தொடர்ந்து ஒற்றியூரில் இருக்கும் வண்ணம் செய்தது.

வன்னாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி

தன்னாகம் உற வாங்கிப் புரம் எரித்த தன்மையனை

முன்னாக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து

என்னாகப் பிரிந்து இருக்கேன் என் ஆரூர் இறைவனையே

திருக்கோலக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.62.1) சுந்தரர், திரிபுரங்களை எரித்த அம்பின் ஒரு பாகமாக, தண்டாக திருமால் இருந்த தன்மையையும் மேரு மலை வில்லாகவும் இருந்ததையும் குறிப்பிடுகிறார். பூத நாதன்=ஐந்து பூதங்களுக்கும் தலைவன் என்றும் அனைத்து உயிர்களுக்கும் தலைவன் என்றும் பொருள் கொள்ளலாம். சிவபெருமானின் திருப்பாதங்களைத் தொழும் அடியார்கள் தொடர்ந்து பெருமானை பற்றுக் கோடாகக் கொள்வார்கள் என்று கூறுகின்றார். மேவுதல்=சென்று அடைதல்; மேவரியான்= அவனது கருணையால் மட்டுமே அடையத் தக்கவன்; அவனது கருணை இல்லையேல் எவராலும் அடைய முடியாதவன்; முற்றலார்=செருக்கு முதிர்ந்த நிலையில் இருந்த திரிபுரத்து அரக்கர்கள்; பொன்ற=அழியும் வண்ணம்; வென்றி=வெற்றியைத் தரும்;

புற்றில் வாளரவு ஆர்த்த பிரானைப் பூத நாதனைப் பாதமே தொழுவார்

பற்றுவான் துணை எனக்கு எளி வந்த பாவ நாசனை மேவ அரியானை

முற்றலார் திரிபுரம் ஒரு மூன்றும் பொன்ற வென்றி மால் வரை அரி அம்பாக்

கொற்ற வில் அங்கை ஏந்திய கோனைக் கோலக்காவினில் கண்டு கொண்டேனே

பொழிப்புரை:

திருமாலை அம்பின் தண்டாகவும் காற்றுக் கடவுளை (வாயுவை) அம்பின் இறகுகளாகவும் அக்னியை அம்பின் நுனியாகவும் கொண்டு நீண்ட தீயினைக் கக்கும் அந்த அம்பினை, வாசுகி பாம்பு நாணாக பூட்டப்பட்ட வில்லினில், மேருமலையினை வளைத்து செய்யப்பட்ட வில்லினில், பொருத்திய பெருமான்,எப்போதும் இணையாது இருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், ஒன்றாக ஒரே நேர்கோட்டினில் வரச்செய்த பெருமான், அந்த மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் எரித்து அழித்தவர் ஆவார். தங்களது துணையுடன் கூடிய பெரிய மயில்களும் குயில்களும் சேர்ந்து வாழும் இள அன்னங்களும் உறைகின்ற சோலைகள் சூழ்ந்த தலம் அன்பில் ஆலந்துறை தலத்தினை இறைவன் அணைந்து உறைகின்றார். .

பாடல் 2:

கணை நீடெரிமால் (1.033) பாடல் 1 தொடர்ச்சி மற்றும் பாடல் 2(திதே 0789)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0790)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0791)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 2 தொடர்ச்சி (திதே 0792)

சடையார் சதுரன் முதிரா மதி சூடி

விடையார் கொடி ஒன்றுடை எந்தை விமலன்

கிடையார் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை

அடையார் பொழில் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

சதுரன் என்றால் திறமை உடையவன், சாமர்த்தியசாலி என்று பொருள். எவர்க்கும் இயலாத பல வீரச் செயல்களை புரிந்த பெருமானை சதுரன் என்று நால்வர் பெருமானார்கள் பல பாடல்களில் அழைத்து மகிழ்கின்றனர். அத்தகைய சில பாடல்களில் சதுரன் என்று பெருமானை தாங்கள் அழைப்பதற்கான காரணத்தையும் குறிப்பிடுகின்றனர். தக்கனது சாபத்தினால் அழியும் நிலையில் இருந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்தது, திருமாலும் பிரமனும் அடிமுடி காணாத வண்ணம் நீண்ட நெடுந்தழலாக நிமிர்ந்தது, வேகமாக ஆவேசத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் தாங்கித் தேக்கியது, இசைக்கருவிகளை திறமையாக வாசிப்பது, அடியார்கள் பிச்சையாக அளிக்கும் மலங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக அவர்களுக்கு வீடுபேறு அளிப்பது, வலிமை மிகுந்த தக்கன் செய்த யாகத்தினை அழித்தது, அரக்கன் இராவணனின் செருக்கினை அடக்கிய பின்னர் அவனுக்கு பல வரங்கள் அளித்தது, திரிபுரத்து பறக்கும் கோட்டைகளை ஒரே அம்பினால் எரித்து அழித்தது, அனைவரையும் நடுங்கச் செய்த சலந்தரனை சக்கரப் படையால் அழித்தது, பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டது. தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து போர்த்துக் கொண்டது, நள்ளிருளில் நட்டம் ஆடுவது, பக்குவமடைந்த உயிர்கள் தங்களது மலங்களை பிச்சையாக அளிப்பதை ஏற்றுக்கொண்டு அவர்களின் வினைகளை முற்றிலும் அறுப்பது, பல ஊழிகளைக் கடந்தும் அழியாமல் நிலைத்து நிற்பது, வேறு எவராலும் நீக்க முடியாத வினைகளை நீக்குவது, பொங்கி வந்த ஆலகால விடத்தை பருகி உலகத்தவரை காப்பாற்றியது, அடியார்களின் பிறவியை வேருடன் அறுப்பது, தீயினில் நடனம் ஆடுவது, தீயினைத் தனது கையில் ஏந்தி நடனம் ஆடுவது என்பது போன்று பல செயல்கள் புரிந்த பெருமானை சதுரன் என்று அழைப்பது தானே பொருத்தம்.

கற்குடி தலத்தின் (1.43.1) மீது அருளிய பதிகத்தின் பாடலில், தாழ்சடை வைத்த சதுரன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சதுரன் என்றால் சாமர்த்தியம் வாய்ந்தவன் என்று பொருள். உயரத்திலிருந்து கீழ் நோக்கிப் பாயும் இயல்பினை உடைய தண்ணீரைத் தனது தொங்குகின்ற சடையினில் அடைத்து வைப்பதற்கு தனி ஆற்றல் வேண்டும் அல்லவா. அந்த ஆற்றல் உடையவராக திகழ்ந்தவர் பெருமான் என்பதால் தான் அவரை சதுரன் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் அழைக்கின்றார். வரிசையாக முத்து மற்றும் மணிகள் கோர்க்கப்பட்ட மாலையினை அணிந்தவளும், மென்மையான மார்பினை உடையவளும் ஆகிய பார்வதி தேவியின் விருப்பத்தினை மதித்து, அவளைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், அகன்று உயரமான அலைகள் கொண்ட கங்கை நங்கையைத் தனது தாழும் சடையில் சாமர்த்தியமாக மறைத்து வைத்தவரும், தனது மார்பினில் இடமிருந்து வலமாக குறுக்கே வரும் வண்ணம் முப்புரி நூல் அணிந்தவரும், ஆகிய பெருமான், இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாக நினைத்து அதனால் சலனம் அடையாத மனம் உடையவர்களாக விளங்கும் அடியார்களால் காதலிக்கப்பட்டு வாழ்கின்றார். அத்தகைய பெருமான் வாழ்வது கற்குடி என்று அழைக்கப்படும் சிறந்த மலையாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வடம் திகழ் மென்முலையாளை பாகமதாக மதித்துத்

தடம் திரை சேர் புனல் மாதை தாழ்சடை வைத்த சதுரர்

இடம் திகழ் முப்புரி நூலர் துன்பமோடு இன்பமது எல்லாம்

கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மாமலையாரே

கடைமுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.111.9) திருஞானசம்பந்தர் பெருமானின் ஒப்பற்ற இரண்டு செயல்களை குறிப்பிடுகின்றார். பிரமன் மற்றும் திருமால் இறைவனின் அடிமுடி காணமுடியாமல் திகைத்த செயல், கங்கையைத் தனது சடையில் பெருமான் தாங்கியது ஆகிய இரண்டு செயல்கள்; புடைபுல்கி=அணுகி அருகில் சென்று; தங்களது செருக்குற்ற நிலையிலிருந்து விலகி அன்பினால் இறைவனை அணுகி அருகில் சென்று; மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப் படும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் திகைத்து நிற்க, நீண்ட நெடுந்தழலாக இறைவன் நின்றதும், மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த அகன்ற நீர்ப்பரப்பினைக் கொண்ட கங்கை நதியினை சடையில் தேக்கி வைத்ததும், வியத்தகு செயல்கள் அல்லவா. எனவே சதுரன் என்று மிகவும் பொருத்தமாக இறைவனை திருஞான சம்பந்தர் இங்கே அழைக்கின்றார். தங்களது வலிமையின் மீது செருக்கு கொண்டு, நீண்ட தழலாய் நின்ற இறைவனின் திருவடியை திருமுடியை கண்டு விடுவோம் என்று முயற்சி செய்த திருமாலும் பிரமனும், தங்களது முயற்சி வீணான பின்னர் பெருமானின் வலிமையை உணர்ந்து, அன்புடன் அவரை அணுகி அவரது அருகில் சென்று அருள் புரிவாய் என்று இறைஞ்சி அவனைப் போற்றி இசைத்து நின்றனர். இவ்வாறு இருவரினும் உயர்ந்து நிற்பவன் தான், என்று உலகுக்கும் அவர்கள் இருவருக்கும் உணர்த்திய இறைவன், தனது சடையின் இடையே கங்கை நதியைத் தேக்கி வைத்த திறமையாளன் ஆவான். அத்தகைய சதுரன் உறையும் இடமாகிய கடைமுடி தலத்தின் அருகே காவிரியாறு ஓடுகின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அடிமுடி காண்கிலர் ஓர் இருவர்

புடை புல்கி அருள் என்று போற்றி இசைப்பச்

சடையிடைப் புனல் வைத்த சதுரன் இடம்

கடை முடி அதன் அயல் காவிரியே

யாழ் வாசிப்பதற்கு தனித்திறமை வேண்டும் என்பதால் யாழிலிருந்து இனிய இசை எழுப்பும் திறமை படைத்த சிவபெருமானை, சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.112.1) திருஞானசம்பந்தர் சதுரன் என்று அழைக்கின்றார். முரல= ஒலிக்க; இன்குரல்=இனிமையான ஒலி; கெழும்=வெளிப்படுத்தும்; பொருதல்= மோதுதல்; காவிரி நதியின் தென்கரைத் தலமாக இந்த தலம் திகழும் நிலை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. பொன்=அழகிய; இனிய ஒலியும் இசையும் எழும் வண்ணம், தனது கரத்தினில் பொருந்திய யாழ் இசைக்கருவியை மீட்டும் சதுரனாகிய பெருமான் உறைகின்ற நகரம் சிவபுரம் ஆகும். நிலவளம் மற்றும் நீர்வளம் காரணமாக அழகுடன் திகழும் இரண்டு கரைகளையும், தனது அலைக் கரங்களால் மோதும் பழமையான காவிரி நதியின் தென்கரையில் விளங்கும் தலம் சிவபுரம் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்

தன் கரம் மருவிய சதுரன் நகர்

பொன்கரை பொரு பழம் காவிரியின்

தென்கரை மருவிய சிவபுரமே

பிரம கபாலத்தில் பலி ஏற்கும் செயலைப் புரியும் பெருமானை சதுரன் என்று குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.22.6) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் கங்கை நதியைத் தனது சடையினில் பெருமான் ஏற்ற செயலும், கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு இடைவிடாது நடனம் ஆடும் செயலும் குறிப்பிடப் படுகின்றன. இந்த செயல்களைப் புரிவதற்கும் தனி சாமர்த்தியம் வேண்டும் அல்லவா. மேலும் பலரின் மலங்களைத் தான் பிச்சையாக ஏற்றுக் கொண்ட போதும், மலங்களிலிருந்து நீங்கி, அமலனாக இருக்கும் தன்மையும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. எந்த உயிரும் தனது வினையை, நுகர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும் என்பது பொதுவான விதி. அவ்வாறு வினைகளை நுகரும் தருணத்தில் மேலும் பல வினைகளை நாம் சேர்த்துக் கொள்கின்றோம். ஆனால் பக்குவமடைந்த உயிர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் இன்பங்களையும் துன்பங்களையும் சமமாக பாவித்து, அத்தகைய இன்ப துன்பங்களால் சலனம் அடையாமல் இருப்பதால், பழைய வினைகளின் விளைவால் துன்பங்கள் அவர்களது செயல்களில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. இவ்வாறு வினைகளை நுகரும் தருணத்திலும், மற்ற உயிர்களைப் போன்று ஆகாமிய வினைகளை பெருக்கிக் கொள்ளாமல் அவர்கள் இருப்பதால், மேலும்மேலும் எத்தனை வினைகள் அவர்களைப் பற்றினாலும், அவற்றால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவிப்பதால் எந்த விதமான மாறுதலும் அவர்களின் போக்கில் இருக்காது என்பதால், இறைவன் அவர்களது வினைகளைத் தானே வாங்கிக்கொண்டு அவர்களை வினைகளிலிருந்து விடுவிக்கின்றான். வினைகளிலிருந்து விடுவிக்கப் பட்ட அவர்கள் வீடுபேறு அடையும் தகுதியைப் பெறுகின்றனர். இவ்வாறு வினைகளை வாங்கிக் கொண்டு வீடுபேறு அளிக்கும் ஆற்றல் பெருமானைத் தவிர்த்து வேறு எவருக்கும் இல்லை; எனவே அவர் சதுரர். அலைகள் வீசும் வண்ணம் வெள்ளப் பெருக்கு உடைய கங்கை நதியினைத் தனது சடையில் அடக்கிக் கொண்டு மறைத்தவனும், தனது கையில் அனல் ஏந்தி நடனம் புரிபவனும், மலங்களின் சேர்க்கை இல்லாதவனும், பிரம கபாலத்தில் பலி ஏற்பதற்காக பல இடங்களுக்கும் செல்பவனும், இவ்வாறு பல அரிய செயல்களை புரியும் சாமர்த்தியம் வாய்ந்தவனும், அடுத்தவரை நடுங்கவைக்கும் ஆற்றல் கொண்ட மழுப் படையை உடையவனும் ஆகிய பெருமான் குடவாயில் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் நிலையாக வீற்றிருக்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அலை சேர் புனலன் அனலன் அமலன்

தலை சேர் பழியன் சதுரன் விதிரும்

கொலை சேர் படையன் குடவாயில் தனில்

நிலை சேர் பெருங் கோயில் நிலாயவனே

தெங்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.93.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை கயிலை மலையின் கீழே அடர்த்த செய்தியையும் கங்கை நதியைத் தனது சடையில் பெருமானே மறைத்து வைத்த செய்தியையும் குறிப்பிட்டு, பெருமானை சதுரன் என்று அழைக்கின்றார். எண்ணிலா=அளவற்ற; விறல்=வலிமை; மால்= பெருமை வாய்ந்த; வரை=மலை; கருத்தர்=தலைவர்; அளவற்ற ஆற்றல் படைத்த அரக்கன் இராவணன் அழகியதும் சிறப்பாக அனைவராலும் கருதப்படுவதும் ஆகிய கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, அவனது கண்கள் பொடியாக மாறும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றி, அரக்கனை நெரித்த கருத்தினை உடையவர் சிவபெருமான். அவர் குளிர்ச்சி வாய்ந்த கங்கை நதியினைத் தனது தலை மாலையாக சடையில் சூட்டிக் கொண்டவர் ஆவார். அவர் விண்ணை முட்டும் சோலைகள் கொண்ட தெங்கூர் தலத்தின் வெள்ளியங்குன்றினில் அமர்ந்த இறைவன் ஆவார் என்பதே இந்த பாடலில் பொழிப்புரை.

எண்ணிலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்கக்

கண் எலாம் பொடிந்து அலறக் கால் விரல் ஊன்றிய கருத்தர்

தண்ணுலாம் புனல் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்

விண்ணுலாம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே

அரக்கன் இராவணனின் ஆற்றலை அழித்த பெருமானை சதுரர் என்று திருஞான சம்பந்தர் அழைக்கும் பாடல் சீர்காழி தலத்தின் மீது அருளிய (2.122.8) பாடலாகும். புகலி என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. தொலைவு=தோல்வி; உரம்=வலிமை; கரப்பு=மறைப்பு; அழகாரும்=அழகு நிறைந்த; அந்நாள் வரை தோல்வி என்பது என்ன என்று கண்டறியாத அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது அவனது தலைகளும் தோள்களும் நெரியும் வண்ணம், பெருமான் அரக்கனை மலையின் கீழே அழுத்திய செயல் சதுரப்பாடு உடைய (திறமையான) செயலாக இங்கே கருதப் படுகின்றது. சீர்காழி நகரத்தவர்கள், தங்களது செல்வத்தினை மறைக்காமல், இரப்போர்க்கு இல்லை எனாது கொடுத்து உவந்தனர் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

தொலைவு இலாத அரக்கன் உரத்தைத் தொலைவித்தவன்

தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடமாவது

கலையின் மேவும் மனத்தோர் இரப்போருக்குக் கரப்பிலார்

பொழியும் அந்தண் பொழில் சூழ்ந்து அழகாரும் புகலியே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.14.6) திருஞானசம்பந்தர் பெருமானை சதுரன் என்று அழைக்கின்றார். கங்கை நதியைத் தனது சடையில் பெருமான் ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியையும் பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்ட செய்கையையும் தான் சதுரன் என்று அழைப்பதற்கு காரணமாக கூறுகின்றார். விடை=இடபம், ரிஷபம்; விடைக்கொடி ஏந்தியவன் என்ற பொருள் பட, விருஷபத்வஜன் என்று வடமொழியில் பெருமானின் நாமம் சொல்லப் படுகின்றது. த்வஜம் என்றால் கொடி என்று பொருள். கோழிக் கொடியுடைய முருகப் பெருமானை வாரணத்வஜன் என்று அழைப்பார்கள்; இந்த பாடலில் கூறியுள்ளதைப் போன்று பல பாடல்களில் பெருமானை, வெண்மழு ஏந்தியவன் என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர். பெருமானின் கையில் இருந்த வெண்மழு ஆயுதத்தைக் கண்டு பகைவர்கள் அஞ்சி ஓடியதால், மழு ஆயுதத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் என்றும் பரமனுக்கு ஏற்படவில்லை என்பதால், அவன் ஏந்தியிருக்கும் மழு வெண்மை நிறத்தில் இருக்கின்றது என்று சுவையான விளக்கமும் அளிக்கப் படுகின்றது. துடியிடை=உடுக்கையின் நடுப்பகுதி போன்று மெலிந்த இடையினை உடைய பிராட்டி. கலை=அழகான சேலை மற்றும் அழகிய மேகலை ஆபரணம் என்ற இரண்டு பொருளும் இங்கே பொருந்தும்; இடபச்சின்னம் வரையப்பட்ட கொடியினை தனது வலது கையினில் ஏந்தியுள்ள பெருமான், வெண்மையான மழுப்படை உடையவனாக காணப்படுகின்றான். அவன் பைஞ்ஞீலி தலத்தினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளான். உடுக்கை போன்று குறுகிய இடையினை உடையவளும் அழகிய ஆபரணங்கள் மற்றும் ஆடைகளால் மறைக்கப்பட்ட மார்பினை உடையவளும் ஆகிய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுள்ள பெருமான், தனது சடையினில் கங்கை நங்கையையும் மறைத்து வைத்துள்ளான். அவனது சாமர்த்தியம் தான் என்னே என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விடையுடைக் கொடி வலன் ஏந்தி வெண்மழுப்

படையுடைக் கடவுள் பைஞ்ஞீலி மேவலான்

துடியிடைக் கலை அல்குலாளோர் பாகமாச்

சடையிடைப் புனல் வைத்த சதுரன் அல்லனே

கபில முனிவரின் சாபத்தால் எரிந்து சாம்பலாக மாறிய தனது முன்னோர்களை கடைத் தேற்றும் பொருட்டு, கங்கை நதியினை பாதாள உலகத்திற்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட பகீரதன் பிரமனை நோக்கி தவம் செய்ய, பிரமனும் அவனது தவத்தில் மகிழ்ந்து கங்கை நதியினை கீழே செல்லுமாறு பணிக்கின்றார். ஆனால் தேவ லோகத்தை விட்டுச் செல்வதில் விருப்பம் இல்லாத கங்கை, பூமியையே தனது வேகத்தால் புரட்டி கடலுடன் சேர்க்கும் எண்ணத்துடன், மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கத் தலைப்பட்டாள். அப்போது பூமிக்கு நேரவிருந்த அழிவிலிருந்து காக்கும் பொருட்டு கங்கை நதியினை தாங்குவார் எவருமின்றி, பெருமானின் உதவியை பகீரதன் நாட, பெருமானும் அதற்கு இசைந்து தனது சடை முடியில் கங்கையைத் தாங்கினார். இந்த நிகழ்ச்சி பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. உயரத்திலிருந்து கீழே பள்ளத்திற்கு பாயும் இயல்பு கொண்ட தண்ணீரை, தடுத்து நிறுத்தி தாங்குவதற்கு தனித் திறமை வேண்டும் அல்லவா. இந்த திறமை பெருமானிடம் இருந்ததை குறிப்பிட்டு சதுரர் என்று திருஞான சம்பந்தர் அழைக்கும் பாடலை (3.15.2) நாம் இங்கே காண்போம். அல்லரே என்று பாடலை முடித்தாலும், எதிர்மறைக் பொருளாக குறிப்பிடுவதாக கொள்ளாமல் சதுரர் என்று சொல்வதாகவே நாம் பொருள் கொள்ள வேண்டும். விரி கோவணம்=நான்கு வேதங்களாக விரிந்த கோவணம். பெருமான் மழுவினை தனது படையாக உடையவர்; பாயும் குணத்தினை உடைய புலியினைக் கொன்று அதன் தோலினைத் தனது ஆடையாக அணிந்தவர்; விரிந்த பொருளினை உடைய வேதங்களை கோவண ஆடையாக மகிழ்ந்து ஏற்றுக் கொண்டுள்ளார்; இடப வடிவம் பொறிக்கப்பட்ட கொடியினை உடைய அவர் வெண்காடு தலத்தில் உறைகின்றார். தனது விரிந்த சடையின் இடையே கங்கை நதியை தேக்கி வைத்துள்ள அவர் மிகுந்த திறமையாளர் அல்லவா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்

உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்

விடை உடைக் கொடியர் வெண்காடு மேவிய

சடையிடைப் புனல் வைத்த சதுரர் அல்லரே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.52.4) திருஞானசம்பந்தர் பெருமானை நோக்கி சதுரன் நீ என்று அழைக்கின்றார். புயங்கன்=பாம்பை அணிந்தவன்; மதுரன்=இனியவன்; சம்பு=இன்பம் செய்பவன், இன்பம் அளிப்பவன்; முதிருநீர்=ஒலி எழுப்பியவாறு மிகுந்த வேகத்துடன் பாயும் நீர் என்றும் மேகம் போன்று கருமை நிறம் கொண்ட நீர் என்றும் இரண்டு பொருள்கள் கொள்ளலாம். முந்தியது மிகவும் பொருத்தமாக உள்ளது. முழங்கழல்=கொழுந்து விட்டெரியும் தீயிலிருந்து தீப்பொறிகள் சிதறும் போது எழும் ஒலி; முதிரும் நீர் என்று கங்கை நதியை திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பக்குவம் அடையாத நிலையில், தனது விருப்பத்திற்கு மாறாக தன்னை பூமிக்கு அழைத்துச் செல்கின்றனர் என்ற எண்ணத்துடன், மிகுந்த வேகமாக கீழே பாய்ந்து பூமியை புரட்டி பாதாளத்திற்கு இழுத்துச் செல்லும் நோக்கத்துடன் பாய்ந்த கங்கை நதி, பெருமானின் சடையினில் சிறை வைக்கப் படுகின்றது. பின்னர் பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி, சிறு துளியாக விடுவிக்கப்பட்டு பூமியில் அமைதியாக பாய்ந்து, பாதாளமும் சென்று சாம்பல் குவியலாகக் கிடந்த சகர புத்திரர்களுக்கு விமோசனமும் அளிக்கின்றது. மேலும் தொடர்ந்து பாரத நாட்டினுக்கு வளம் சேர்த்தும் தன்னில் நீராடுவோரின் பாவங்களைத் தீர்த்தும் பலருக்கும் உதவி செய்கின்ற பக்குவம் அடைந்ததை முதிர்ச்சி அடைந்த கங்கை நதி என்று குறிப்பிடுகிறார் போலும். புயங்கன்=பாம்பினை ஆபரணமாக அணிந்தவன்; பக்குவம் அடைந்து பலருக்கும் உதவி செய்யும் தன்மைக்கு மாறி முதிர்ச்சி அடைந்த கங்கை நதியினைத் தனது சடை முடியில் சூட்டிக் கொண்டுள்ள தலைவனே, ஒலித்தவாறு கொழுந்து விட்டெரியும் நெருப்பின் இடையே நின்ற வண்ணம், தனது தோள்களை அதிர வீசி நடமாடும் அழகனே, பாம்பினை ஆபரணமாக அணிந்தவனே, வரம்பில்லாமல் இன்பம் வழங்கும் ஆற்றல் உடையவனே, பார்வதி தேவிக்கு மணாளனாக விளங்குபவனே, மதுரை ஆலவாய் தலத்தினில் விருப்பத்துடன் உறைபவனே, சதுர்முகன் என்று அழைக்கப்படும் நான்முகனின் கபாலத்தில் பலியேற்றுத் திரிவதன் மூலம், பலருக்கும் முக்திப்பேறு அளித்து இன்பம் அளிப்பவனே, நீ சதுரனாக திகழ்கின்றாய் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

முதிருநீர் சடைமுடி முதல்வன் நீ முழங்கழல்

அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ

மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய்

சதுரன் நீ சதுர்முகன் கபாலம் ஏந்தும் சம்புவே

பெருமானின் வீரச்செயல்களில் தலைசிறந்த வீரச்செயல் திரிபுரத்து கோட்டைகளை எரித்தது அல்லவா. வானில் எப்போதும் பறக்கும் கோட்டைகளை, ஒரே அம்பினால் வீழ்த்தினால் தான் தாங்கள் அழிய முடியும் என்ற பெற்றிருந்த வரத்தின் மமதையால் அனைவரையும் திரிபுரத்து அரக்கர்கள் துன்புறுத்தி வந்தனர். ஒரு நொடிக்கும் சற்றே குறைவான நேரத்தில் அந்த மூன்று கோட்டைகளையும் எரியூட்டி அழித்த பெருமானை சதுரர் என்று திருக்காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.69.2) திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். முதுசினம்=மிகுந்த கோபம்; வரை=மேரு மலை; மிகுந்த கோபத்துடன் மேருமலையினை வளைத்து. பாடலின் கடை இரண்டு அடிகளில் மலையின் வளமை உணர்த்தப் படுகின்றது. எதிரெதிராக உள்ள மூங்கில்கள் ஒன்றுக்கொன்று உராய்வதால் ஏற்படும் நெருப்புப் பொறிகள் மற்றும் காட்டுப் பன்றிகள் நிலத்தினை தோண்டியபோது வெளிப்படும் மணிகள் ஆகியவை ஒளி வீசுவதால் காளத்தி மலையின் இருள் அகல்கின்றது என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார்.

முது சின வில் அவுணர் புரம் மூன்று ஓர் நொடி வரையின் மூள எரி செய்

சதுரர் பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை தன்னை வினவில்

எதிர் எதிரே வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத

கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே

திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (3.92.7) பெருமானை சதுரனார் என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். தக்கனது வேள்வியைத் தகர்த்த நிகழ்ச்சி இதற்கு காரணமாக கூறப்படுகின்றது. சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமல் வேள்வி செய்வது தவறு என்று தக்கனுக்கு சப்த ரிஷிகள் அறிவுரை கூறியதையும் புறக்கணித்து தக்கன் வேள்வி செய்ய முயன்றான். சப்த ரிஷிகள் அந்த யாகத்தினில் பங்கு கொள்ளாமல் தவிர்த்தனர். ஆனால் பிரமன் திருமால் உள்ளிட்ட பல தேவர்களும் தக்கனுக்கு அஞ்சியவர்களாக அந்த வேள்வியினில் பங்கேற்றனர். இத்தகைய வல்லமை வாய்ந்த தக்கன் செய்த யாகத்தை முறியடித்து, பங்கேற்ற பலருக்கும் தண்டனை அளித்த பெருமானை சதுரனார் என்று அழைத்தது பொருத்தம் தானே. அக்கு=சங்கு மணிமாலை; புரிவினர்=முறுக்கடைந்த சடை; எலும்பு மலை; அரை=இடுப்பு; திரை=அலைகள் உடைய கங்கை நதி; செம்மை புக்கதோர் சடை=சிவந்த நிறம் புகுந்த சடை, செஞ்சடை; சங்கு மணிமாலையை இடுப்பினில் அணிந்தவனே, அலைகள் புரளும் கங்கை நதியினைத் தனது சடையில் தாங்கியவனே, பண்டைய நாளில் வேத நெறிகளுக்கு மாறாக சிவபெருமானை புறக்கணித்து தக்கன் செய்ய முயற்சித்த வேள்வியினை முற்றுப் பெறாத வண்ணம் அழித்த சாமர்த்தியம் உடையவனே, ஒளி வீசுவதும் முறுக்குதலை உடையதும் ஆகிய செம்மை நிறத்து சடையினை உடையவனே, தனது உடலில் வரிகளை உடைய வண்டுகள் பண்ணுடன் முரலும் சோலைகள் கொண்டதும், உலகத்தவர் அனைவராலும் புகழப்படுவதும் ஆகிய திருநெல்வேலி தலத்தினில் உறையும் செல்வராக நீ விளங்குகின்றாய் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அக்குலாம் அரையினர் திரை உலா முடியினர் அடிகள் அன்று

தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை

புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டு பண் முரலும் சோலைத்

திக்கெலாம் புகழ் உறு திருநெல்வேலி உறை செல்வர் தாமே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.68.6) பெருமானை சதுரர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதன் காரணத்தை நாம் இங்கே காண்போம். தன்னிடம் போரிடுவார் எவரும் இல்லாத நிலையில் சலந்தரன் சிவபெருமானுடன் போர் புரியும் எண்ணத்துடன் கயிலாயம் நோக்கிச் செல்கின்றான். அவன் வருவதை அறிந்த பெருமான், ஓர் முதியவர் வேடத்தில் அவனை எதிர்கொள்கின்றார். தரையில் தனது கால் விரலால் சக்கரம் வரைந்த பெருமான், அரக்கனை நோக்கி அந்த சக்கரத்தினை பேர்த்து எடுக்கும் வல்லமை உள்ளதா என்று அரக்கனிடம் கேட்க, அரக்கனும் அந்த சக்கரத்தினை பேர்த்து எடுக்கின்றான். எடுத்த பின்னர் தனது தலைக்கு மேலே, அந்த சக்கரத்தை அரக்கன் தூக்கிய போது அந்த சக்கரம் கூர்மை நிறைந்த ஆயுதமாக மாறி அவனது உடலினை இரண்டு கூறாகக் கிழித்து கொன்று விடுகின்றது. இத்தகைய வலிமை வாய்ந்த ஆயுதத்தை தனக்கென்று வைத்துக் கொள்ளாமல், திருமாலின் பக்திக்கு பரிசாக பெருமான் அளித்து விடுகின்றார். இத்தகைய வல்லமை வாய்ந்த ஆயுதத்தை பரிசாக அடுத்தவர்க்கு அளித்ததன் நோக்கம், தேவைப்பட்டால் அந்த ஆயுதம் இல்லாமலும் தான் எவரையும் வென்று விடலாம் என்ற நம்பிக்கை பெருமானுக்கு இருந்ததால் தானே. இந்த நம்பிக்கையை தனித் திறமையாக மதித்து சக்கரம் அருள் செய்த சதுரர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

செக்கர் அங்கு அழி செஞ்சுடர்ச் சோதியார்

நக்கர் அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார்

வக்கரன் உயிர் வவ்விய மாயற்குச்

சக்கரம் அருள் செய்த சதுரரே

இந்த பாடலில் நாம் நயமான கற்பனை ஒன்றையும் உணரலாம். அந்தி நேரத்து செவ்வானத்தின் நிறம் பெருமானின் மேனி நிறம் என்று பல திருமுறை பாடல்களில் கூறப்படுகின்றது. அப்பர் பிரான் இந்த பாடலில் ஒரு படி மேலே செல்கின்றார். அந்திச் செவ்வானம் அதே நிறத்தில் எப்போதும் இருப்பதில்லை. மாலையில் படிப்படியாக குறைந்து இருள் பரவுகின்றது; காலையில் படிப்படியாக குறைந்து முழு வெளிச்சம் தோன்றுகின்றது. இந்த காட்சி அன்றாடம் தோன்றும் காட்சி. இந்த காட்சியைக் கண்ட அப்பர் பிரானின் கற்பனை விரிகின்றது. பெருமானின் மேனி நிறத்துடன் போட்டியிடும் அந்திச் செவ்வானம், பெருமானிடம் தோற்று அழிகின்றது என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

தில்லை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (5.1.11) சிற்றம்பலவனை சதுரன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். பார்வதி தேவியைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டுள்ள தன்மை, இடைவிடாது நடனம் ஆடும் தன்மை, அரக்கனை மலையின் கீழே அடர்த்த செய்கை முதலியன இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றன. மதுரம்=இனிமை; அதிர=நடுங்குமாறு; ஆர்த்து=ஆரவாரித்து; கொள்சேவடி=கொள்ளுதல் செய்த, கொண்ட திருவடி; அரக்கன் புகழ்ந்து பாடியதை ஏற்றுக் கொண்ட; கொள்ளுதல் என்பதற்கு அருளுதல் என்ற பொருள் உண்டு. சேவடி என்ற சொல்லினை, மிதி மற்றும் கொள் என்ற இரண்டு சொற்களுக்கும் பொதுவாக எடுத்துக் கொண்டு மிதி சேவடி மற்றும் கொள் சேவடி என்று பொருள் கொள்ள வேண்டும். அரக்கனது கர்வத்தினை அடக்குவதற்காக மிதித்த திருவடி, பின்னர் அவனது வழிபாட்டினை ஏற்றுக்கொண்டு அவனுக்கு அருள்கள் (சந்திரகாசம் என்ற வாள் மற்றும் மூன்று கோடி வாழ்நாள்) வழங்கிய சேவடியாக மாறிய நிலை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. திருமலை என்பது கயிலாய மலையினை குறிக்கும். கோயில் என்பது தில்லைச் சிதம்பரத்தை குறித்தலைப் போல, திருமலை என்ற சொல் கயிலாயத்தை குறிக்கும். சர்வ சங்கார காலத்தில் (முற்றூழிக் காலத்தில்) அழித்தல் தொழிலில் ஈடுபடும் சிவபிரானின் கோபம், முற்றிலும் தணிக்கப்படுவது, இறைவியின் இனிமையான மொழியால் தான். தனது. கோபம் தணிக்கப்பட்ட பின்னர், இறைவன் மீண்டும் படைத்தல் தொழிலில் ஈடுபடுகின்றான். இளைப்பு ஏதும் இன்றி, மூவகைத் தொழில்களிலும் ஈடுபடும் சிவபெருமானை சதுரன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். உமை அம்மையின் மொழியினை, இனிமையான மொழி என்று குறிப்பிடும், அப்பர் பெருமானுக்கு, அந்த இனிய மொழியால் விளைந்த விளைவு நினைவுக்கு வந்தது போலும். தான் நினைத்த மாத்திரத்தில், உலகங்களையும், உலகத்தில் உள்ள பொருட்களையும் படைத்து, உயிர்களையும் பல உடல்களுடன் சேர்த்த பெருமானின், சாமர்த்தியமான செயல் சதுரன் என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றது. தில்லைச் சிற்றம்பலத்தில் நடமாடும் இறைவனது கோலத்தில், நம்மை மிகவும் அதிகமாக கவர்வது அவனது தூக்கிய திருவடி தான். இந்த திருவடியை, சிவபிரானின் அருட்செயலை குறிப்பதாக கூறுவார்கள். எனவே, இந்தத் திருப்பாதத்தை கை தொழுது வணங்கி உய்யவேண்டும் என்ற அறிவுரையுடன் பதிகத்தை அப்பர் பிரான் முடிக்கின்றார். இனிமையான மொழியினைப் பேசும் உமையம்மையை, தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ள சிற்றம்பலத்தான், சிறிதும் இளைப்பின்றி முத்தொழில்களையும் செய்யவல்ல ஆற்றல் உடையவன். சிவபெருமானின் ஆற்றலையும் கயிலை மலையின் புனிதத் தன்மையையும் கருத்தில் கொள்ளாது, பெருமான் உறையும் திருக்கயிலாய மலையினை, மிகுந்த செருக்கு கொண்டு, ஆரவாரத்துடன் மலை நடுங்குமாறு எடுக்கத் துணிந்த, அரக்கன் இராவணனது பத்துத் தலைகளும் வருந்துமாறு தனது திருவடியின் விரல் ஒன்றினை ஊன்றிய சிவபெருமான், பின்னர் அரக்கனது பாடலுக்கு இரங்கி வரங்கள் பல தந்து அருளினார். அவரது திருவடிகளைச் சார்ந்து, கை தொழுது வணங்கி, உய்வினை அடைவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்

சதுரன் சிற்றம்பலவன் திருமலை

அதிர ஆர்த்தெடுத்தான் முடி பத்து இற

மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே

பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.32.8) அப்பர் பிரான் சதுரன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே என்று கூறுகின்றார். அதிரர்=உரத்த குரலில் பேசும் தேவர்கள்; தேவர்களும், வித்தியாதரர்களும், இயக்கர்களும் (யக்ஷர்) தங்களது தலைவன் என்று கருதும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் காண்பதற்கு அரியவனாக நின்ற பெருமானின், நெடுந்தழலாய் நின்ற சதுரனின், திருப்பாதங்களின் கீழே நாம் இருக்கப் பெறுவோமாக. அதிர்ந்து பேசும் தேவர்கள் யக்ஷர்கள் கின்னரர்கள் ஆகியோர் தங்கள் தலைவனாக கருதும் பிரமனும் திருமாலும் காண முடியாத வண்ணம் நெருப்புப் பிழம்பாக தோன்றிய பெருமான், அலைகள் வீச ஆரவாரத்துடன் பாயும் காவிரி நதிக் கரையினில் உள்ள பூந்துருத்தி நகரினில் உறைகின்றான். பல விதமான சாமர்த்தியங்கள் கொண்டுள்ள இந்த இறைவனின் சிவந்த திருவடிகளின் கீழே இருந்து திருப்பணி செய்யும் வாய்ப்பினை அடியேன் பெற்றேன்என்று மிகுந்த பெருமையுடன் தான் பெற்ற பேற்றினை அப்பர் பிரான் குறிப்பிடும் பாடல்.

அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்

கருத நின்றவர் காண்ப அரிதாயினான்

பொருத நீர் வரு பூந்துருத்தித் நகரச்

சதுரன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (5.41.1) அப்பர் பிரான் பெருமானை சடையில் கங்கை வைத்த சதுரர் என்று கூறுகின்றார். உயரமான இடத்திலிருந்து கீழே பாயும் தன்மை கொண்டது தண்ணீர். உயரமான இடத்தில் இருக்கும் தண்ணீர் நுண்ணிய துளை இருந்தாலும் அதன் வழியாக முதலில் கசிந்து, பின்னர் சிறிது சிறிதாக அந்த ஓட்டையை பெரியதாக்கி, பெருக்கெடுத்து ஓடும் தன்மை கொண்டது. விரைந்து ஓடும் அளவுக்கு அதிகமான நீரினைக் கொண்ட கங்கை நதியை தனது சடையில் அடைத்து வைக்க ஒப்பற்ற சாமர்த்தியம் வேண்டும் என்பதால், அவ்வாறு அடக்கி வைத்த சிவபெருமானை சதுரன் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். கோவண ஆடையை அணிந்திருந்தாலும் அதனால் குறை ஏதும் இல்லாதவராக இருப்பவரே, படையாக அமைந்த பூத கணங்கள் சூழ இருப்பவரே, பைஞ்ஞீலி தலத்தை உடையவரே. கங்கை நதியினைச் சடையில் தரிக்கும் சாமர்த்தியம் வாய்ந்தவரே, உம்மை அடைய வல்லவர்க்கு அவலம் இல்லை என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

உடையர் கோவணம் ஒன்றும் குறைவிலர்

படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்

சடையில் கங்கை தரித்த சதுரரை

அடைய வல்லார்க்கு இல்லை அவலமே

காசனைக் கனலை என்று தொடங்கும் குறுந்தொகைப் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (5.93.2) அப்பர் பிரான் இறைவனை சந்திக்கண் நடமாடும் சதுரன் என்று அழைக்கின்றார். சந்தி என்பது இங்கே முன்னிரவும் பின்னிரவும் சந்திக்கின்ற நள்ளிரவை குறிப்பிடுகின்றது. நள்ளிரவு என்பது இங்கே இருளில் மூழ்கிக் கிடக்கும் ஊழிக் காலத்தை குறிக்கின்றது. முற்றிலும் இருள் சூழ்ந்த நிலையில் நடனமாடுவதற்கு தனி திறமை வேண்டும் என்பதால், அத்தகைய திறமை உடைய பெருமானை சதுரன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சிவபுராணத்தில் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மணிவாசகர் குறிப்பிடுவதும் முற்றூழிக் காலத்து இருளையே. புந்தி=அறிவு; புராணன்=மிகவும் பழமையானவன்; அடியேனது அறிவுக்கு தூண்டுகோலாக அமையும் விளக்கு போன்றவரும், உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அனைத்து பொருட்களுக்கும் பழமையானவனும், பிரளய காலத்து இருளிலிலும் திறமையாக நடமாட வல்ல திறமையை உடையவனும், அந்திச் செவ்வானத்து நிறத்தினில் சிவந்த திருமேனியை உடையவனும், தீப்பிழம்பினை தனது கையில் ஏந்தி நடமாடும் தலைவனும் ஆகிய இறைவன், தானே முன் வந்து எனது உள்ளத்தில் புகுந்து என்னை ஆட்கொண்டான். அவனை எவ்வாறு இந்நாள் மறக்க இயலும் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

புந்திக்கு விளக்காய புராணனைச்

சந்திக் கண் நடமாடும் சதுரனை

அந்தி வண்ணனை ஆரழல் மூர்த்தியை

வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.5.9) அப்பர் பிரான் சந்தியாய் நின்ற சதுரா போற்றி என்று கூறுகின்றார். சிந்தையாய்=அடியார்களின் சிந்தனையாய்; ஸ்ரீசைலம் என்ற தலம் (ஆந்திர’ மாநிலத்தில் உள்ளது) சீபர்ப்பதம் என்று தேவாரப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. புந்தி=ஞானம்; அடியார்களின் சிந்தனையுள் உறையும் சிவபெருமானே போற்றி, ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் சீபர்ப்பதத்தை உறைவிடமாக கொண்ட சிவபெருமானே போற்றி, உயிர்களின் இதயத்தில் ஞான வடிவாக இருப்பவனே போற்றி, புண்ணியமே வடிவாக உள்ளவனே போற்றி, தூய்மையானவனே போற்றி, காலை நண்பகல் மற்றும் மாலை எனப்படும் மூன்று சந்திகாலங்களாக இருப்பவனே போற்றி, அளவில்லாத சாமர்த்தியம் வாய்த்தவனே போற்றி, உண்மையான மெய்ப்பொருளே போற்றி, எனது தந்தையே போற்றி, அனைத்துப் பொருட்களுக்கும் முடிவாக அமைந்த அரனே போற்றி, அலைகள் நிறைந்த கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி சீபர்ப்பதம் சிந்தை செய்தாய் போற்றி

புந்தியாய் புண்டரீகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி

சந்தியாய் நின்ற சதுரா போற்றி தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி

அந்தியாய் நின்ற அரனே போற்றி அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி

காளத்தி தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் (6.08) முதல் பாடலில் அப்பர் பிரான் பெருமானை மாச்சதுரன் என்று அழைக்கின்றார். சதுரன்=வல்லமை உடையவன், சாமர்த்தியம் உடையவன். சதுரன் என்று இறைவனை குறிப்பிடுவதன் மூலம், இறைவன் உண்மையில் வறியவன் அல்லன், வறியவனாக நடித்தவன் என்று அப்பர் பிரான் உணர்த்துவதையும் நாம் காணலாம் பெருமான் அணிந்திருந்தது நாகம், பன்றிக் கொம்பு. எலும்பு மாலை முதலியன. இவற்றை விற்றால் வாங்குவார் யார். எனவே தான், தனது உணவுக்காக விற்கக்கூடிய நிலையில் தன்னிடம் பொருள் ஏதும் இல்லாத வறியவன் என்று பெருமானை, அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். நல்கூர்ந்தான்=வறுமை உடையவன்: பொழில்=சோலைகள் சூழ்ந்த ஏழு உலகங்கள்; பொய்யாது=இடைவிடாது; மாசு ஒன்றில்லா=அழியும் தன்மையாகிய குற்றம் இல்லாத; தாங்குதல்=உலகம் இயங்குமாறு தாங்குதல்; உலகனைத்தையும் தனது உடைமையாகக் கொண்டுள்ள பெருமானை விடவும் பெரிய செல்வந்தர் உலகினில் எவர் உள்ளார். ஆனால் அத்தகைய செல்வம் உடையவனாக இருந்தும், ஏதும் இல்லாத வறியவன் போல் பிச்சை ஏற்பவன் போன்ற வேடத்துடன் நடிப்பதை பெருமானின் திறமையாக அப்பர் பிரான் கருதுகின்றார் போலும். விற்று அப்பணத்தால் உணவு வாங்க உதவும் பொருள் ஏதும் தன்னிடம் இல்லாத வறியவன் போன்று காட்சி அளிப்பவனும், அகன்ற கச்சி மாநகரத்தில் ஏகம்பனாக உறைபவனும், பிச்சை எடுத்து உண்பதைத் தவிர வேறு வழி இல்லாதது போன்று காட்சி அளிக்கும் திறமைசாலியும், மயானத்தில் காணப்படுபவனும், பிற உயிர்களைப் போன்று அழியும் தன்மையாகிய குற்றம் ஏதும் இல்லாமல் என்றும் நிலையாக இருப்பவனும், பொன்னால் செய்யப்பட்ட தூண் போன்று அரியவனும், தூண் போன்று அனைவரும் பிடிப்பாக பற்றிக் கொள்ள உதவுபவனும், பெரிய .மணிக்குன்று போன்று காட்சி அளிப்பவனும், இடைவிடாது சோலைகள் சூழ்ந்த ஏழு உலகங்களையும் தாங்கி நிற்கும் கற்றூணாகத் திகழ்பவனும், திருக்காளத்தி தலத்தில் காணப்படும் கணநாதனும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சிக் கம்பன் காண் பிச்சை அல்லால்

மற்று ஊண் ஒன்று இல்லாத மாச்சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்றில்லா

பொற்றூண் காண் மாமணி நற்குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற

கற்றூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண்ணுளானே

மேலும் வேறு எந்த உணவினையும் ஏற்காமல் இருந்த திறமைசாலி என்று கூறுவதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஏனையோருக்கு பிச்சை இடுவதால் நமக்கு, அவர்களுக்கு உதவிய புண்ணியம் மட்டும் தான் கிடைக்கும். ஆனால் இறைவனுக்கு பிச்சை இடுவதால் நமக்கு கிடைப்பதே வேறு. இறைவன் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுப்பதில்லை என்பதையும், உயிர்கள் தாங்கள் கொண்டுள்ள ஆணவம் முதலான மலங்களையே இறைவன் பிச்சையாக ஏற்றுக் கொள்கிறான் என்பதையும், அத்தகைய பிச்சைகளை அவனிடம் இடவல்ல உயிர்கள் தங்களது வினைகள் முற்றிலும் களையப்பட்டு பிறவாத தன்மை அடைகின்றனர் என்பதையும் பல திருமுறை பாடல்கள் விளக்குகின்றன. பிச்சையாக உயிர்களின் மலங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக முக்திச் செல்வத்தை அளிக்கும் பெருமானை விடவும் திறமைசாலி வேறு எவர் உள்ளார். மேலும் முக்திச் செல்வத்தை பெருமானைத் தவிர வேறு எவர் அளிக்க வல்லார். பிறப்பிறப்புச் சுழற்சியில் அகப்படாமல் இருக்கும் ஒருவன் தானே, அத்தகைய நிலைக்கு மற்றவரை அழைத்துச் செல்ல முடியும். எனவே தான் அப்பர் பிரான் இங்கே மாச்சதுரன் என்று குறிப்பிடுகின்றார்.

ஊழிக்காலத்தில் அனைவரும் இறந்த பின்னர், அவர்களது உடல்கள் எரிந்ததால் ஏற்பட்ட சாம்பலைத் தனது உடலில் பூசிக்கொண்டு, தன்னைத் தவிர வேறு எவரும் நிலையில்லை என்பதை உணர்த்தும் வகையில் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு இருக்கும் நிலை, என்றும் அழியாது இருக்கும் நிலை, சிவபெருமானது திறமையை, பெருமையை உணர்த்துகின்றது என்பதால், சதுரன் என்று நீற்றினைப் பூசிய செய்கையுடன் அப்பர் பிரான் இணைத்துச் சொல்லும் பாடல் (6.32.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் பிறவிப் பிணியிலிருந்து தன்னை விடுவித்து இனிமேல் பிறவாமலும் சாகாமலும் காத்த பெருமான் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த செயலும் வேறு எவரும் செய்தற்கு அரிய செயல் என்பதால் இதனையும் சதுரனின் செயலாகவே கொள்ளலாம். புத்தேளிர்=வானவர்கள்; சே=எருது, இடபம்; சதுரன்=திறமை படைத்தவன்; சாவாமே காத்தல்= பிறப்பு மற்றும் இறப்பினைத் தவிர்ப்பதன் மூலம், இறப்பிலிருந்து காப்பாற்றும் தன்மை. வெண்சங்கு போன்ற வெண்மை நிறத்தில் உள்ள திருநீற்றினை பூசியவன் என்று பெருமானை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கொன்றை முதலிய பூக்கள் நிறைந்த சடைமுடியை உடைய தூயவனே, தேவர்கள் போற்றும் பரம்பொருளே, தெய்வத்தன்மை பொருந்திய தேவர்களுக்குத் தலைவனாய் விளங்குபவனே, திருமாலுக்குச் சக்கரம் அளித்து அருளியவனே, பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து என்னைக் காத்து நான் இனிப் பிறவாதவாறும் சாவாதவாறும் காத்தவனே, வெண்சங்கு நிறத்தினை ஒத்த திருநீற்றினை அணிந்த திறமையாளனே, இடபத்தினை சித்திரமாக உள்ள கொடியைக் கொண்டவனே, திருவாரூர் திருமூலட்டானனே உன்னை நான் பலமுறையும் போற்றுகின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி

தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி

சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கொத்த நீற்றெம் சதுரா போற்றி

சேவார்ந்த வெல்கொடியாய் போற்றிபோற்றி திருமூலட்டானனே போற்றிபோற்றி

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.53.2) சலந்தரனை பிளப்பித்த சதுரர் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. சமரம்=போர்; குறைத்த=அழித்த; நமன்=இயமன்; தனக்கு இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் பயந்து ஓடியதால் தன்னை எதிர்த்து போரிடுவார் எவரும் இல்லாத நிலையில், தனது தோள் தினவு காரணமாக, சிவபெருமானுடன் போர் செய்ய வேண்டும் என்று திரிந்தவன் அரக்கன் சலந்தரன். இதனை உணர்த்தும் வண்ணம் போர் வேண்டினான் என்று அரக்கனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். குழகர்=இளமையும் அழகும் ஒருங்கே பொருந்தியவர். பல போர்களில் வெற்றி கொண்டவனாய், தன்னை எதிர்த்து போரிடுவார் எவரும் இல்லாத நிலையில், சிவபெருமானுடன் போர் புரியும் எண்ணத்துடன் அவரைத் தேடி அலைந்தவன் அரக்கன் சலந்தரன். அத்தகைய வலிமை வாய்ந்த அரக்கனை எதிர்கொண்டு அவனது உடலை சக்கரத்தால் பிளந்தவர் சிவபெருமான்; சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனை, தனது காலால் உதைத்து அழித்தவர் சிவபெருமான்; திருமாலைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்; குமரனை தனது மகனாக உடையவரும், அடர்ந்த சோலைகள் நிறைந்து குளிர்ச்சியுடன் காணப்படும் திருவீழிமிழலையின் திருக்கோயிலில் அமர்ந்துள்ள குழகரும், பின்னால் தோன்றப் போகும் அமுதத்தை அமரர்கள் உண்ணவேண்டும் என்ற நோக்கத்துடன் அதற்கு முன்னே பொங்கி எழுந்த நஞ்சினை உண்டவரும் ஆகிய இறைவன் அடியேனை ஆட்கொண்டு அருள் புரிந்தவர் ஆவார்.

சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும்

நமனை ஒருகால் குறைத்த நாதர்போலும் நாரணனை இடப்பாகத்தடைத்தார் போலும்

குமரனையும் மகனாக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும்

அமரர்கள் பின் அமுதுண நஞ்சுண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

கயிலாயம் மீது அருளிய திருத்தாண்டகத்தின் பாடல் ஒன்றினில் (6.57.2) அப்பர் பிரான் பெருமானை சதுரா என்று அழைக்கின்றார். அதிர்தல்=நடுங்குதல்; அதிரா=நடுங்காத; இறைவனைத் தவிர வேறு எவராலும் நீக்குதற்கு அரிய வினைகள் என்பதை உணர்த்தும் பொருட்டு நடுங்காத வினைகள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அதிரா என்ற சொல்லினை உடன்பாட்டு சொல்லாக கருதி அதிரா வினைகள் என்பதற்கு உயிர்களை நடுங்க வைக்கும் வினைகள் என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். வேறு எவராலும் நீக்க முடியாத வினைகளை நீக்கும் வல்லமை வாய்ந்த ஒருவனை, எவராலும் அளிக்க முடியாத தெளிவான பொருளினை, மௌன மொழியால், சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும், வேதங்களின் உட்பொருளாக இருந்த கருத்தினை விளக்கிய ஒருவனை, சதுரன் என்று அழைப்பது தானே பொருத்தம். வேறு எவராலும் நீக்க முடியாத வலிமையான வினைகளை நீக்கும் வல்லமை வாய்ந்தவனே, கல்லால மரத்தின் கீழே அமர்ந்து பண்டைய நாளில் சனகாதி முனிவர்க்கு அறம் உரைத்தவனே, சாமர்த்தியம் மிகுந்தவனே, சிறந்த குழை ஆபரணம் அணிந்தவனே, சாம்பலைத் தனது உடலில் பூசிக்கொண்டு, உலகம் அனைத்தும் அழிந்த பின்னரும் அழியாமல் எஞ்சி இருப்பவன் தான் ஒருவன் தான் என்பதை உணர்த்தும் தலைவனே, தனக்கு ஒப்பாக வேறு எந்த உலகும் இல்லையெனும் புகழ் வாய்ந்த முக்தி உலகம் அமைத்தவனே, அந்த முக்தி உலகம் சென்றடையும் அடியார்கள் மீண்டும் மண்ணுலகத்திற்கு வாராத வண்ணம் அருள் புரிபவனே, சூரிய சந்திரர்களுக்கு அவர்கள் ஒளி வீசுவீதற்கு ஆதாரமாக இருப்பவனே, கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாக கொண்டவனே, உன்னை நான் பலமுறையும் போற்றி வணங்குகின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆலநிழற் கீழ் அமர்ந்தாய் போற்றி

சதுரா சதுரக் குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசுந் தலைவா போற்றி

எதிரா உலகம் அமைப்பாய் போற்றி என்றும் மீளா அருள் செய்வாய் போற்றி

கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி

வெண்ணியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (6.59.4) இறைவனை அப்பர் பிரான் சதுரனார் என்று கூறுகின்றார். கங்கை நதியைத் தனது சடையில் பெருமான் வைத்துள்ள செயலும், தக்கனது வேள்வியினை முற்றுப் பெறாத வண்ணம் தடை செய்ததும், தனது இடுப்பினில் கச்சாக நாகத்தை இறுகக் கட்டியுள்ள தன்மையும், ஊர் ஊரூராக பலிக்குத் திரியும் செயலும் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றன. பொதுவாக தண்ணீர், உயரத்திலிருந்து தாழ்வான பகுதிக்கு ஓடும் இயல்பினை உடையது. அத்தகைய இயல்பினைக் கொண்ட தண்ணீரை சடையில் அடக்கி வைப்பதே கடினம். மேலும் மிகுந்த வெள்ளப் பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினை, சடையினில் அடக்கி நிறுத்தி வைப்பது மிகவும் கடினமான செயல் என்பதால், சதுரன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த செயல் மிகவும் வித்தியாசமான செயல் தானே. அதனால் தான் பாடலின் முடிவினில் விகிர்தன் என்றும் பெருமானை அப்பர் பிரான் அழைக்கின்றார். ஒரு முறை, கயிலாயத்தில் அருகில் இருந்த மயிலின் அழகினைக் கண்ட மகிழ்ச்சியில் அன்னை பார்வதி தேவியின் கவனம் சிதறியதால், தேவியால் பெருமான் கூறிய சொற்களை முற்றிலும் கேட்க முடியவில்லை. அதனால் மயிலாக பூமிக்கு வர நேரிட்ட அன்னை, மயிலாடுதுறை தலத்தில் மயில் வடிவத்தில் இறைவனை வழிபட்டு, இறைவனுடன் இணைந்ததாக புராணம் கூறுகின்றது. அன்னையுடன் இணைந்து, மணாளராக பெருமான் மயிலாடுதுறை தலத்தில் இருந்ததை நினைவூட்டும் வண்ணம், இந்த பாடலில் மயிலாடுதுறை மணாளனார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பெரும்பாலான கோயில்களில், கிழக்கு நோக்கி இறைவன் சன்னதி அமைந்திருக்க, அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி அமைந்திருப்பதை நாம் காண்கின்றோம். ஆனால் மயிலாடுதுறை தலத்தில் இரண்டு சன்னதிகளும் ஒரே திக்கினைப் பார்த்தவாறு அமைந்திருப்பதை காணலாம். வெள்ளமாக பெருகி வந்த கங்கை நதியினைத் தனது சடையில் தேக்கி அடக்கிய திறமை உடையவர் சிவபெருமான்; மிகவும் பிரம்மாண்டமான வகையில் வேறு எவரும் செய்திராத வண்ணம் சிவபெருமானை புறக்கணித்து யாகம் செய்யத் துணிந்த தக்கனது வேள்வியை, வேதங்களில் சொல்லப்பட்டுள்ள நெறியினை பாதுகாக்கும் எண்ணத்துடன், அதற்கு புறம்பாக அமைந்த தக்கன் வேள்வியை அழித்தவர் சிவபெருமான்: தான் உடையாக அணிந்துள்ள புலித்தோலின் மேல், படமெடுத்து ஆடும் பாம்பினை இறுகக் கட்டி, தனது விருப்பம் போன்று பாம்பினை ஆட்டுவிப்பவர் சிவபெருமான்; தான் உண்பதற்காக பிச்சை எடுப்பது போன்று ஊர் ஊராக திரிபவர் சிவபெருமான்; ஆற்று நீரினைக் கட்டுப்படுத்தி வயல்களுக்கு பாசனம் செய்யும் வண்ணம் கட்டப்பட்டுள்ள மடைகளைத் தாண்டி மீன்கள் பாயும், நீர்வளம் நிறைந்த மயிலாடுதுறை தலத்தில் மணாளனாக உறைபவர் சிவபெருமான். காளையின் வடிவம் எழுதப்பட்ட கொடியினை உடைய சிவபெருமான், இயற்கையாகவே மலங்களிலிருந்து நீங்கியவராக உள்ளவர் சிவபெருமான். இத்தகைய பெருமைகளை உடையவரும், மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு இருப்பவரும் ஆகிய பெருமான் வெண்ணி என்று அழைக்கப்படும் தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சடையேறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன் தன் பெருவேள்வி தடை செய்தாரும்

உடையேறு புலி அதள்மேல் நாகம் கட்டி உண்பலிக்கு என்றூரூரின் உழிதர்வாரும்

மடையேறிக் கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும்

விடையேறு வெல்கொடி எம்விமலனாரும் வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே

கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (6.65.10) இறைவனை சதுரன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொன் இசை, மின் இசை ஆகிய சொற்களில் உள்ள இசை என்ற சொல் உவமை உருபு; பொன் போன்று என்றும் மின் போன்று என்றும் பொருள் கொள்ள வேண்டும். தனக்கு இடர் செய்ய நினைத்த அரக்கனுக்கும் வரங்கள் அளித்து நன்மை புரிந்த தன்மை இந்த பாடலில் சதுரனின் செய்கையாக கருதப்பட்டு கூறப்பட்டுள்ளது போலும். பகைவனுக்கும் அருள் புரியும் நன்னெஞ்சம் எத்தனை பேருக்கு அமைந்துள்ளது. பொன் போன்று ஒளிவீசும் முறுக்குண்ட சடையினை உடையவனும், தூயவனும், பூத கணங்களின் தலைவனும், புலித்தோல் ஆடையின் மீது பொருந்துமாறு அழகிய பாம்பினை சுற்றியவனும், சங்க வெண்குழையை தனது காதினில் அணிந்தவனும், மிகுந்த திறமை உடையவனும் ஆவான் சிவபெருமான். மின்னல் போன்று வெண்மையான ஒளி வீசும் பற்களைக் கொண்ட அரக்கன் இராவணன் தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்று கருதி மிகுந்த கோபத்துடன் கயிலாய மலையை பேர்த்து எடுக்கும் முயற்சியில் அதனை அசைக்க, பெருமான் தனது திருவடியை மலையின் மீது ஊன்றினார். பெருமானின் கால் விரலின் அழுத்தத்தை தாங்க முடியாமல் மலையில் கீழே அமுக்குண்டு நசுங்கிய அரக்கன், இன்னிசையுடன் சாமகீதம் பாடினான். அரக்கன் வாயிலிருந்து வெளிப்பட்ட இன்னிசையை கேட்டு மகிழ்ந்த பெருமான், அரக்கன் மீது இரக்கம் கொண்டு அவனை விடுவித்ததும் அன்றி, ஒளி வீசும் சந்திரகாசம் என்ற வாளினை ஈந்தார். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொன் இசையும் புரிசடை எம் புனிதன் தான் காண் பூதகண நாதன் காண் புலித் தோலாடை

தன் இசையவைத்த எழிலரவினான் காண் சங்க வெண்குழைக் காதில் சதுரன் காண்

மின்னிசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன் தன் வாயில்

இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

குடந்தை கீழ்க்கோட்டம் திருத்தாண்டகத்து பாடல் ஒன்றினில் (6.75.9) அப்பர் பிரான், பெருமான் ஆடும் நடனத்தை சதுர நடனம் என்று கூறுகின்றார். சங்கு அரவக் கடல் என்ற சொல்லினை சங்கு கடல் மற்றும் அரவக் கடல் என்று பிரித்து பொருள் காணவேண்டும். அரவம் ஓசை என்ற பொருளில் இங்கே வருகின்றது. சங்கக்கடல் என்றால் சங்குகள் காணப்படும் நீர் நிறைந்த கடல். முகடு=உச்சி; முகடு தட்ட=அண்டத்தின் உச்சியைத் தொடும் வண்ணம். கடலின் நீர்த்துளிகள் அண்டத்தின் உச்சியில் பொருந்தும் வண்ணம் எழுப்பிவிடும் வகையில் நிலம் அதிர பெருத்த ஓசையுடன் கைகளை வீசி ஆடப்படும் நடனம் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. பெருமான் தனிச் சிறப்பு வாய்ந்து இருப்பதைப் போன்று அவர் ஆடும் நடனமும் தனிச் சிறப்புடன் அமைந்துள்ளது. சினம் பொங்கும் பாம்பினை அணிகலனாக அணிந்தவரும், புலியின் தோலினை ஆடையாக உடுத்தவரும், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் மிகவும் பழமையானவரும், மார்பினில் வெண்மை ஒளி வீசும் பூணூலை அணிந்தவரும், புனிதராக விளங்குபவரும், சங்குகள் நிறைந்த கடலின் நீர் அண்டங்களின் எல்லையைத் தொடுமாறு தனது கைகளை வீசி சதுர நடனம் என்று அழைக்கப்பட்ட நடனத்தை மிகுந்த திறமையுடன் ஆடுபவரும், சிறந்த சைவரும், கழலும் சிலம்பும் சேர்ந்து ஒலிக்கும் பெருமானின் திருவடிக்கு ஆளாகி தனது மகன் செய்த இறை வழிபாட்டில் கலந்து கொள்ளத் தவறிய எச்சதத்தனின் மீது, அந்தணன் என்பதையும் பொருட்படுத்தாது மழுவாளினை எறிந்த சண்டீசருக்கு அப்போதே, அரவம் தவழ்ந்து கொண்டிருந்த தனது சடையிலிருந்த கொன்றை மலரினை எடுத்து சூட்டியவரும் ஆகிய இறைவன் குடந்தை கீழ்க் கோட்டம் தலத்தில் கூத்தனாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூணநூல் புனிதர் போலும்

சங்கு அரவு கடல் முகடு தட்ட விட்டுச் சதுர நடம் ஆட்டுகந்த சைவர் போலும்

அங்கு அரவத் திருவடிக்கு ஆட்பிழைப்பத் தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே

கொங்கு அரவச் சடைக் கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

திருவாசகம் அடைக்கலப்பத்து பதிகத்தின் மூன்றாவது பாடலில் (8.24.03), மணிவாசகர் பெருமானை சதுரப் பெருமான் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானின் நான்கு செயல்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. தனது பிறவியை வேரறுத்தது, தன் (பெருமான்) பால் பிச்சேற்றியது, தனது மனதினில் குடி புகுந்தது, மலரோனும் நெடுமாலும் திருமுடியும் திருவடியும் காணாத வகையில் நின்றது என்பன அந்த நான்கு செயல்கள்; சிவபெருமான் தவிர்த்து வேறு எவராலும் பிறவிச் சங்கிலியை அறுக்க முடியாது என்பதை நாம் அறிவோம். பிரமன் நெடுமால் காண முடியாத வகையில் நின்றதும் வேறு எவரும் செய்யாதது என்பதையும் நாம் அறிவோம். இந்த இரண்டு செயல்களுமே சதுரனின் செயல்களாக பல பாடல்களில் குறிப்பிடப் படுகின்றன. அமைச்சராக பணிபுரிந்து வந்த தனது வாழ்க்கையின் போக்கினை மாற்றி, பித்தன் போல் பெருமான் பால் அன்பு வைத்து திரியும் நிலையினை அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். எவ்வளவு முயற்சி செய்தாலும் நம்மால் அடைய முடியாத நிலை அல்லவா. பெருமான் நமது மனதினில் புகுந்து கொள்வதும் நமது முயற்சியால் நடைபெறும் காரியம் அல்ல. எனவே இந்த மாற்றத்தை நிகழ்த்திய பெருமானை சதுரன் என்று அடிகளார் அழைக்கின்றார் போலும்.

பெரும் பெருமான் என் பிறவியை வேரறுத்துப் பெரும் பிச்சு

தரும் பெருமான் சதுரப் பெருமான் என் மனத்தினுள்ளே

வரும் பெருமான் மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற

அரும் பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

திருவாசகம் திருவார்த்தைப் பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருந்துறைப் பெருமானை சதுரன் என்று குறிப்பிடுகின்றார். சாத்து=கூட்டம்; வணிகர் கூட்டத்தோடு பற்பல குதிரைகளுடன் வந்த பெருமான், தனது அழகினால் மதுரை மங்கையரைக் கவர்ந்த பெருமான் சதுரனாக இருந்தான் என்று அடிகளார் கூறுகின்றார். அவன் பால் காதல் கொண்டு, அவனை அடைவோமா என்ற ஏக்கத்தினால் உடல் மெலிய, அவனைக் கண்ட மதுரை மங்கையர்களின் வளையல்கள் கழன்றன. இவ்வாறு வளையல்கள் கழல காரணமாக இருந்தவரின் மீது அந்தச் செய்கையை ஏற்றிச் சொல்லி, வளை கவர்ந்தவன் என்று கூறுவது இலக்கிய மரபு.

அங்கணன் எங்கள் அமரர் பெம்மான் அடியார்க்கு அமுதன் அவனி வந்த

எங்கள் பிரான் இரும் பாசம் தீர இகபரம் ஆயதோர் இன்பம் எய்தச்

சங்கம் கவர்ந்து வண் சாத்தினோடும் சதுரன் பெருந்துறை ஆளி அன்று

மங்கையர் மல்கும் மதுரை சேர்ந்த வகை அறிவார் எம் பிரான் ஆவாரே

மேற்கண்ட பாடலுக்கு திருவிளையாடல் புராணத்து வளையல் விற்ற படலத்துடன் இணைத்து சிலர் பொருள் காண்கின்றனர். பிச்சைப் பெருமானாக வந்த சிவபெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து பெண்கள், தங்களது வளைகள் கழல்வதும் உடை நெகிழ்வதும் உணரமுடியாமல் பெருமான் பால் காதல் மயக்கம் கொண்டிருந்தனர் என்பது புராண வரலாறு. நடந்ததை அறிந்த தாருகவனத்து முனிவர்கள், மதுரை நகரில் வணிக குலத்து பெண்களாக, தங்களது மனைவியர்கள் பிறக்க வேண்டும் என்று அவர்களுக்கு சாபம் இட்டதாகவும், அவர்களின் சாபத்தை நீக்கும் வண்ணம் பெருமான் வளையல் வியாபாரியாக வந்ததாகவும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் கூறுகின்றார். சங்கம் என்ற சொல், வெண் சங்கினால் செய்யப்பட்ட வளையலை குறிப்பதாக பொருள் கொண்டு, தாருகவனத்தில் முனிவர்களின் மனைவியர் இழந்த வளையல்களை மதுரை நகரில் பெருமான் அவர்களிடம் சேர்த்ததை அடிகளார் உணர்த்துகின்றார் என்று விளக்கம் அளிக்கின்றனர். தங்களது கணவர் அல்லாத வேறு ஆடவரை மனதினால் நினைப்பதும் கற்பு நிலை தவறியது என்று கருதிய காலத்தில் வாழ்ந்தவர்கள் தாருகவனத்து மகளிர். அந்நாள் வரை கற்புடன் வாழ்ந்து வந்தமையால், அவர்களது கற்பு ஒரு கவசம் போன்று அவர்களது கணவர்களை காத்தது என்று கூறுவார்கள். அவ்வாறு இருந்த மகளிர், பெருமானது அழகால் கவரப்பட்டு தாங்கள் செய்து கொண்டிருந்த செயல்களை அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு, தங்களது உடை நெகிழ்வதையும், வளைகளும் மேகலையும் கழல்வதையும் உணராத வண்ணம், பெருமானை பின் தொடர்ந்தார்கள் என்றால், பெருமானது அழகும் திறமையும் ஒப்பற்றது தானே. அத்தகைய திறமையும் அழகும் வாய்ந்த பெருமானை சதுரன் என்று அழைப்பது தானே பொருத்தம்.

பெருமானை விடவும் தான் சதுரன் என்று நகைச்சுவையாக மணிவாசகர் சொல்லும் பாடலை இங்கே சிந்திக்கலாம். இந்த பாடல் கோயில் திருப்பதிகத்தில் வருகின்றது. இந்த பாடலில் அடிகளார் தனக்கும் பெருமானுக்கும் இடையே இருந்த பண்டமாற்று வாணிபத்தை குறிப்பிடுவதை நாம் உணரலாம். தன்னைக் கொடுத்து இறைவனை அடிகளார் பெற்றுக் கொண்ட தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. எப்போதும் பெருமானை நினைத்து உருகிய அடிகளார் பெருமானின் சிந்தையில் புகுகின்றார். அதன் விளைவாக பெருமான் அடிகளாரின் சிந்தையினில் புகுகின்றார். பெருமானின் தன்மை யாது என்பதை சற்று சிந்திப்போம். ஒப்பற்ற எட்டு குணங்களை உடையவர் பெருமான். ஒரே நேரத்தில் உலகில் நடக்கும் அனைத்தையும் உணரும் ஆற்றலும், தான் நினைக்கும் எதையும் செய்யவல்ல ஆற்றலும், இயல்பாகவே பாச நீக்கமும் உடையவராக இருத்தலும், ஐந்து புலன்களின் ஆட்சிக்கு உட்படாமல் இருத்தலும், பெருமானின் குணங்களாக திகழ்கின்றன. இந்த குணங்களுக்கு நேர் எதிர்மாறான குணங்களை உடையது மனித ஆன்மா. எனவே அடிகளார் இழந்ததை விடவும் பெற்றது அதிகமாக இருப்பதால் தான் பெருமானை விடவும் சதுரனாக தான் திகழ்வதை மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டுகின்றார். இவை அனைத்தும் எதனால் நிகழ்ந்தது என்பதை அடிகளாரே இந்த பாடலில் உணர்த்துகின்றார். .தனது சிந்தனையை, பெருமான் தான் உறையும் கோயிலாக ஏற்றுக் கொண்டு புகுந்தமையால் தான் என்று அடிகளாரே இந்த பாடலில் உணர்த்துவதை நாம் காணலாம். அதன் விளைவாக ஏற்பட்ட அந்தமிலா ஆனந்தத்தையும் அடிகளார் குறிப்பிடுகின்றார்.

தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னைச் சங்கரா ஆர் கொலோ சதுரர்

அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது ஒன்று என்பால்

சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான் திருப்பெருந்துறை உறை சிவனே

எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே

முதிரா=வளராத; முதிரா மதி என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முதிர்ந்த மதியாக, முழு நிலவாகத் திகழ்ந்த சந்திரன் தக்கன் இட்ட சாபத்தினால் நாளொரு கலையாக தேய்ந்து அழியும் நிலைக்கு வந்த போது பெருமானிடம் சரணடைந்தான். அஞ்சேல் என்று அவனுக்கு அபயம் அளித்த பெருமான், அழியும் நிலையினைத் தவிர்த்து நாளொரு கலையாக வளரும் வண்ணம் அவனுக்கு அருள் புரிந்தார். வளரும் மதியாக மாறியபடியால், பெருமான் அணிந்துள்ள பிறைச் சந்திரன் வளராத மதி என்றும், பிள்ளை மதி என்றும், முதிரா மதி என்றும் பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. தக்கன் இட்ட சாபத்தினை மாற்றுவது வேறு எவர்க்கும் இயலாத காரியமாக திகழ்ந்த படியால், பெருமானை சதுரன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். விடை=இடபம்; கிடை=கூட்டம்; கிள்ளை=கிளி; வேதம் பயிலும் சிறுவர்கள் கூட்டமாக இருந்து வேத மந்திரங்களை சொல்லி பழக்கப் படுத்திக் கொள்வதையும், அந்த ஒலிகளை கேட்கும் கிளிகள் இசையுடன் வேத மந்திரங்களைச் சொல்லும் தன்மையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. அரவம்=ஒலி;

இந்த பாடலில் தனது தந்தை என்று இறைவனை திருஞான சம்பந்தர் அழைக்கின்றார். அம்மையே அப்பா என்று தோணிபுரத்து சிகரத்தை நோக்கி அழுத தனக்கு ஞானப்பால் அளித்த தேவியையும் அதற்கு ஏற்பாடு செய்த பெருமானையும், திருஞானசம்பந்தர் தனது தந்தையாகவும் தாயாகவும் கருதினார் என்பது பெரிய புராணத்தில் சேக்கிழாரால் குறிப்பிடப் படுகின்றது. தோடுடைய செவியன் என்றும் நறவ நிறை வண்டு என்றும் தொடங்கும் பதிகங்களை பாடிய தனக்கு ஞானப்பால் அருளிய அன்னையையும், அதற்கு காரணமாக இருந்த தந்தையரையும் நினைத்தவாறே அன்றிரவு உறங்கிய திருஞான சம்பந்தர் அடுத்த நாள் பொழுது விடிந்ததும் திருக்கோயிலுக்கு சென்று தனது தந்தையும் தாயும் ஆகிய பெருமானையும் பிராட்டியையும் வணங்கினார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார்.

காதலுடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்றிருந்த தங்கள்

தாதையாரையும் வெளியே தாங்கரிய மெய்ஞானம் தம் பால் வந்து

போத முலை சுரந்தளித்த புண்ணியத் தாயரையும் முன் வணங்கிப் போற்றி

மேதகைய அருள் பெற்று திருக்கோலக்கா இறைஞ்ச விருப்பில் சென்றார்

இவ்வாறு சீர்காழி தலத்து அண்ணலையும் பிராட்டியையும் திருஞானசம்பந்தர் தந்தையாகவும் தாயாகவும் கருதினார் என்று சேக்கிழார் கூறுவது நமக்கு திருஞான சம்பந்தர் வலிவலம் தலத்தின் மீது அருளிய தேவாரப் பாடலை (1.50.7) நினைவூட்டுகின்றது. சிவஞானிகள் பலராலும் ஆராயப்படும் தன்மையினை உடைய பெருமானை அன்புடன் சிந்திக்க தனது மனம் பெருவிருப்பம் கொள்கின்றது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் இறைவனை சிந்திக்க ஓட்டாமல் ஐந்து பொறிகளும் செய்யும் மாயத்தைக் குறித்து தான் அஞ்சுவதாகவும் இந்த பாடலில் கூறுகின்றார்.

தாயும் நீயே தந்தையும் நீயே சங்கரனே அடியேன்

ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்

ஆயமாய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்

மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே

கூற்றுவனே நேரில் தோன்றி வருத்துவதைப் போன்று தன்னை வருத்திய சூலை நோயினை எவ்வாறு போக்கிக் கொள்வது என்று தெரியாமல் தவித்த தனது சூலை நோயினை போக்கிய பெருமானை, சமணர்களின் சூழ்ச்சியிலிருந்து தன்னை மீட்ட பெருமானை, தனது தாய் என்றும் தந்தை என்றும் அப்பர் பிரான் குறிப்பிட்டு, திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தினை (4.94.01) தொடங்குவது நமது நினைவுக்கு வருகின்றது. தனக்கு நல்ல வழி காட்டிய தமக்கையார் திலகவதியார், தனக்கு மறுபிறவி அளித்தது போல் உதவி செய்தார் என்பதை உணர்ந்ததால், அப்பர் பிரான் தனது தமக்கையாரையும் இங்கே உடன் தோன்றினராய் என்று குறிப்பிடுகின்றார். தாய், தந்தை, தமக்கை இவர்கள் மூவரும் அவருக்கு கண் முன்னே தோன்றி பலவகையிலும் அவரை நன்னெறிப் படுத்தியவர்கள். ஆனால் சிவபெருமான் தானே உண்மையாக அனைவருக்கும் துணையாக இருந்து உதவுகின்றான். எனவே, தனக்கு முன்னே தோன்றாவிடினும், தனக்கு பல வகையிலும் உதவி செய்த துணைவனை தோன்றாத் துணைவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். தோன்றாத் துணை நாதன் என்பது இங்குள்ள இறைவனின் திருநாமம்.

ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்

மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க

ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்

தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே

அற்புதமான பழைய ஆவணம் காட்டி, தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு, தான் கயிலாயத்தில் அணுக்கத் தொண்டனாக ஆலால சுந்தரனாக பணியாற்றிய போது சமர்ப்பித்த விண்ணப்பத்தை நினைவில் வைத்துக்கொண்டு, திருவெண்ணெய் நல்லூரில் நடைபெறவிருந்த தனது திருமணத்தை தடுத்த பெருமானை, தனது தந்தையாக கருதுவதாக காஞ்சி திருமேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (7.21.01) சுந்தரர் குறிப்பிடுகின்றார். நொந்தா ஒண் சுடர்=பிரகாசம் குன்றாத விளக்கு; தனது மனதினில் புகுந்த பெருமான், என்றும் தன்னை விட்டு நீங்காது இருப்பதாகவும், தனது தந்தையாகிய பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தான் புகழமாட்டேன் என்றும் சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்து இருந்தேன்

வந்தாய் போயறியாய் மனமே புகுந்து நின்ற

சிந்தாய் எந்தை பிரான் திருமேற்றளி உறையும்

எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே

தொண்டித் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தன்னை, காந்தம் இரும்பினை இழுப்பது போன்று திருப்பெருந்துறை தலத்திற்கு அழைத்து அருள் புரிந்த பெருமானை எந்தை என்று குறிப்பிட்டு எந்தையடி போற்றி என்று மணிவாசகர் திருவாசகம் சிவபுராணத்தில் குறிப்பிடுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. அற்புதத் திருவந்தாதியில் (பதினோராம் திருமுறை) காரைக்கால் அம்மையார் பெருமானை எந்தை என்று அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். எந்தையா உள்ளம் என்பதை எம் தையா உள்ளம் என்று பிரித்து பொருள் கொள்ள வேண்டும். தையா=புண்படாத; பெருமான் தனது சடையின் மீது வைத்துக் கொண்டுள்ள பொருட்கள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. இந்த பொருட்கள் பெருமானின் சடையில் இடம் பெற்றுள்ள வரலாற்றை ஆராய்ந்தால், அதற்கு அடிப்படையாக பெருமானின் இரக்க உணர்வு இருந்த தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம். அழியும் நிலையிலிருந்த பிறைச் சந்திரன் பால் இரக்கம் கொண்டு தனது சடையில் அணிந்து கொண்டு சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்ததை நாம் அனைவரும் அறிவோம். பெருமான் கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டது, பகீரதன் பால் வைத்திருந்த கருணை காரணமாகத் தான் என்பதை புராணங்களும் திருமுறைப் பாடல்களும் விளக்குகின்றன. தாருகவனத்து முனிவர்கள் பெருமானை கொள்வதற்காக நச்சுப் பாம்புகளை ஏவினார்கள். எய்தவன் இருக்க அம்பினை நோவது பயனற்ற செயல் என்பதால், அந்த பாம்புகளின் மீது கோபம் கொள்ளாத இறைவன், அதற்கு மாறாக பாம்புகளின் நச்சுத் தன்மையை மாற்றி, தனக்கு அணிகலனாக ஏற்றுக் கொள்கின்றான். ஏவியவர்கள் இருக்கையில் அம்புகள் மீது கோபம் கொள்ளாது இரக்கம் காட்டிய பெருமான், தாருகவனத்து முனிவர்களின் மனதினில் இருந்த அடிப்படை கருத்தையும் பின்னர் மாற்றியதை புராணங்கள் உணர்த்துகின்றன. இவ்வாறு பலருக்கும் இரக்கம் காட்டிய பெருமான், தன் பால் இரக்கம் கொள்ளாது இருந்தாலும் தான், அதற்காக வருத்தம் அடைய மாட்டேன் என்று அம்மையார் இங்கே கூறுகின்றார். தனது தந்தையாகிய பெருமானுக்கு அடிமையாக ஆட்பட்டு, அவனுக்கு திருப்பணிகள் செய்யும் நிலையில் இருப்பதற்கு மகிழ்ந்து இருப்பேன் என்று கூறும் அம்மையாரின் பக்குவம் சிறந்த அடியார்களிடம் மட்டுமே காணப்படும் பண்பு அல்லவா.

பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்

இறைவர் எமக்கு இரங்காரேனும் கரை மிடற்ற

எந்தையார்க்கு ஆட்பட்டோம் என்றென்று இருக்குமே

எந்தையா உள்ளம் இது

பொழிப்புரை:

நீண்ட சடைமுடியினை உடையவனும், மிகுந்த சாமர்த்தியம் கொண்டவனும், அழியும் நிலையில் இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரனை வளரும் பிறையாக மாற்றி தனது சடையில் அணிந்து கொண்டவனும், இடபத்தின் உருவத்தை தனது கொடியில் சின்னமாக ஏற்றுக் கொண்டவனும், எமது தந்தையாக இருந்து எம்மைக் காப்பவனும், இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து நீங்கியவனும் ஆகிய இறைவன், உறையும் இடமாவது, வேதங்கள் பயிலும் சிறுவர்கள் சொல்லும் மந்திரங்களைக் கேட்டு இசையும் மொழியும் கற்றுக் கொள்ளும் கிளிகள் சென்றடையும் சோலைகள் நிறைந்த அன்பில் ஆலந்துறை தலமாகும்.

பாடல் 3:

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 (திதே 0793)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0794)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0795)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0796)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0797)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0798)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0799)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0800)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0801)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0802)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0803)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0804)

கணை நீடெரிமால் (1.033) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0805)

ஊரும் அரவம் சடை மேல் உற வைத்துப்

பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர்

நீர் உண் கயலும் வயல் வாளை வராலோடு

ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

சோலைகள் நிறைந்த தலம் என்று தலத்தின் நிலவளத்தை முந்தைய பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர் இந்த பாடலில் தலத்தின் நீர்வளத்தை உணர்த்துகின்றார். புற்றினில் பதுங்கி இருக்கும் காலம் தவிர்த்து எங்கும் ஊர்ந்து திரிந்து கொண்டிருக்கும் பாம்பினை, பெருமான் தனது சடையில் பொருந்தும் வண்ணம் வைத்திருக்கின்றார் என்று சொல்வதன் மூலம், பல இடங்களிலும் திரியும் அடியார்களின் மனதினை ஒரே இடத்தில் நிலையாக இருக்கும் வண்ணம் செய்யும் ஆற்றல் உடையவர் பெருமான் என்பதை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். எனவே நமது மனம் அலைபாயாது ஒரே இடத்தில் இருக்கச் செய்வதும் பெருமானின் கருணையால் தான் என்பது மிகவும் நயமாக உணர்த்தப் படுகின்றது. ஒலி பாடும் என்ற தொடருக்கு சான்றோர்கள் பெருமானின் கையில் இருக்கும் துடிக்கருவி எழுப்பும் ஒலி என்று உணர்த்துகின்றனர். துடியிலிருந்து பிறந்தது நாதம். அவ்வாறு பிறக்கும் நாதம் இருவகையாக செயல்படுவதாக கூறுகின்றனர். இறைவனின் அடியார்களுக்கு அந்த ஒலி நாதமாகவும், அல்லாதாருக்கு அந்த ஒலி நடுக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறுவார்கள். ஒலி என்பதற்கு வேதவொலி என்று பொருள் கொண்டு, பலியேற்கச் செல்லும் போது, பெருமான் வேத கீதங்கள் பாடிக் கொண்டு செல்வதை குறிப்பிடுவதாக பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. ஆர் பொழில்= நெருக்கமாக வளர்ந்து அடர்ந்து காணப்படும் சோலை; பரமர் என்றால் உயர்ந்தவர் என்று பொருள். அனைவரிலும் உயர்ந்த பெருமானை, பரமர் என்றும் பரமன் என்றும் பரமா என்றும் பரம்பரன் என்றும் பரம்பரனே என்றும் திருமுறைப் பாடல்கள் அழைக்கின்றன. பரமர் என்று அழைக்கும் திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.2.11) திருஞானசம்பந்தர், பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். ஆர்த்தல்=இறுகக் கட்டுதல்;பெருமான் அணியும் பாம்பு, புற்றில் பதுங்கும் இயல்பினை உடையதல்ல. எனினும் பாம்புகளின் பொது இயல்பு குறித்து, புற்றில் வாழும் அரவம் என்று சொல்லப் படுகின்றது. தேவாரப் பாடல்களை பாடும் அடியார்கள், பரமனின் திருவடி நீழலைச் சென்றடைந்து குற்றமோ குறையோ அற்ற புகழுடன் பொலிவார்கள் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

புற்றில் வாழும் அரவம் அரை ஆர்த்தவன் மேவும் புகலூரைக்

கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை

பற்றி என்றும் இசை பாடிய மாந்தர் பரமன் அடி சேர்ந்து

குற்றம் இன்றிக் குறைபாடு ஒழியாப் புகழ் ஓங்கிப் பொலிவாரே

புளமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.16.1) திருஞானசம்பந்தர் பெருமானை, பரமன் என்று குறிப்பிடுகின்றார். பால் உந்துறு திரள்=பாலைக் கடைய கிடைக்கும் வெண்ணெய் மற்றும் நெய் போன்று இனிமையானவர். பொதுவாக இறைவனை பால் போன்றும் தேன் போன்றும் இனியவன் என்று சொல்வது வழக்கம். வெண்மை நிறம் தூய்மைக்கு அடையாளமாக கருதப் படுகின்றது. அதனால் தூய்மையே உருவமாக உள்ள இறைவனை பாலுக்கு ஒப்பிடுவது பொருத்தமே. மேலும் அனைத்து பருவத்தினருக்கும் பால் உணவாக பயன்படுவது போன்று, இறைவன் அனைத்துப் பருவத்தினரும் வணங்கி பயன்படும் வண்ணம் அருள் புரிகின்றார். பாலினும் அதன் திரட்சியான வெண்ணெய் உண்பதற்கு மிகவும் இனியது. பாலின் திரட்சியாகிய வெண்ணெய் போன்று நமக்கு இனியவனாக இருக்கும் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இவ்வாறு அனைவர்க்கும் பொதுவாக அருள் புரியும் இறைவன், தனது அடியார்களுக்கு எவ்வாறு உள்ளான் என்பதை இந்த பதிகத்தின் முதல் அடி உணர்த்துகின்றது. பெருமான் பால் அன்பு வைத்துள்ள அடியார்கள், தங்களது உள்ளம் கசிந்து வழிபட, பெருமான் அவர்களுக்காக நெய்யாக மாறுகின்றான். நமக்கு வெளிப்படையாக கண்ணுக்கு தெரிவது பால்;பாலின் உள்ளே நெய் மறைந்து இருந்தாலும் நாம் அதனை உணர முடிவதில்லை. பக்குவப்பட்ட அடியார்கள் ஆகிய புளமங்கை அந்தணர்கள், பாலின் உள்ளே நெய் இருப்பதை உணர்வது போன்று, அனைத்துப் பொருட்களிலும் இறைவன் கலந்திருப்பதை உணர்கின்றனர் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார் என்று பொருள் கொள்வது சிறப்பான விளக்கம். திறல்=தன்மை, திறமை; பொழில்=சோலை; அறச் சாடிய=குன்றும் வண்ணம் உதைத்த; தலத்தின் பெயர் புளமங்கை; திருக்கோயிலின் பெயர் ஆலந்துறை; பிரமன் எப்போதும் வேதங்களை ஓதிக் கொண்டே படைப்புத் தொழில் செய்வதால், வேதங்களில் வல்லவராக கருதப் படுகின்றார். பிரமன் போன்று இந்த தலத்து அந்தணர்களும் வேதங்களில் வல்லவர்களாக இருந்த தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. பரமன்=அனைவரிலும் மேலானவன்;

பக்குவப்பட்ட அடியார்கள் தங்களது தீவிர முயற்சியால், இடைவிடாமல் ஒன்றிய மனத்துடன் இறைவனை தியானம் செய்து, அனைத்துப் பொருட்களிலும் கலந்து நிற்கும் இறைவனை அவர்கள் கண்டு உணரும் வண்ணம் அருள் புரியும் சிவபெருமான் அனைத்து தெய்வங்களிலும் மேம்பட்டவர் ஆவார். பிரமனைப் போன்று வேதங்களில் வல்லவர்களாக விளங்கும் அந்தணர்கள் பலர் வாழும் புளமங்கை தலத்தினில், சோலைகள் சூழ்ந்த புளமங்கை தலத்தினில் உறைபவர் சிவபெருமான். அவர் இயமனின் வலிமையை அடக்கி, அவனை காலால் உதைத்து வீழ்த்தியவர் ஆவார். புளமங்கை தலத்தினில் ஆலந்துறை என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் அவரை நினைத்து, அவரைத் தொழும் அடியார்களை வினைகள் சென்று அடையா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பால் உந்து உறு திரள் ஆயின பரமன் பிரமன் தான்

போலும் திறல் அவர் வாழ்தரு பொழில் சூழ் புளமங்கை

காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்

ஆலந்துறை தொழுவார் தமை அடையா வினை தானே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் அனைத்துப் பாடல்களையும் திருஞான சம்பந்தர், பெருமானை மறைவனம் அமர் தரு பரமனே என்று அழைத்து முடிக்கின்றார். இந்த பதிகத்தின் ஏழாவது பாடல் (1.22.7) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரது உடலினை சுமந்த வண்ணம் திரிந்தவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இருநிலன்=பெரிய பூமி; புனல்=பிரளய வெள்ளம்; எரி=வடவாக்னி; வளி=காற்று; முற்றூழிக் காலத்தில், பெரிய நிலமாகிய பூமி, பிரளய வெள்ளத்தில் ஒடுங்க, அந்த வெள்ளத்தை வடவாக்னி வற்றச் செய்கின்றது. அந்த வடவாக்னி காற்றால் ஒடுக்கப்பட, அந்த காற்று ஆகாயத்தில் ஒடுங்குகின்றது. இத்தகைய முற்றூழிக் காலத்தில், உலகமும் உலகினில் உள்ள அனைத்து பொருட்களும் அழிகின்ற முற்றூழிக் காலத்தில், இறந்து படுகின்ற பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் எலும்புக் கூட்டையும் தானே அணிந்து கொண்டு, தான் ஒருவனே அனைவர்க்கும் தலைவன் என்று திரியும் அழகினை உடைய பெருமான், வண்டுகள் இசை முரலும் மறைவனம் என்று அழைக்கப்படும் திருமறைக்காடு தலத்தினில் உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. வியனிடை முழுவதும் கெட=பரந்த இந்த உலகமும் உலகப் பொருட்களும் உலகத்து உயிர்களும் முழுவதுமாக அழிந்து பட;

இருநிலனது புனலிடை மடி தர எரி புக எரியது மிகு

பெருவெளியினில் அவி தர வளி கெட வியனிடை முழுவது கெட

இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன் இனமலர்

மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர் தரு பரமனே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.22.11) திருஞான சம்பந்தர் பெருமானை மறைவனம் அமர் பரமன் என்று அழைக்கின்றார். வசையறு=குற்றம் அற்ற; திருமறைக்காடு என்ற தலத்தின் பெயர் மறைவனம் என்று மாற்றப் பட்டுள்ளது. இந்த பதிகத்தின் பாடல்கள் குறில் எழுத்துகளைக் கொண்டு அமைக்கப் பட்ட பாடல். ஒவ்வொரு பாடலின் கடை எழுத்து மட்டுமே நெடில் எழுத்தாக உள்ளன. எனவே மறைக்காடு, வேதவனம் என்ற பெயர்கள் தவிர்க்கப் பட்டு, மறைவனம் என்ற பெயர் பயன்படுத்தப் பட்டுள்ளது. பசை=அன்பு; தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்த நகரம் சீர்காழி என்று கூறுகின்றார். குற்றமற்ற திருமகள் என்று இங்கே கூறுவது சிந்திக்கத் தக்கது. செல்வம் ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் பல இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கும் தன்மை வாய்ந்தது என்பதால், இந்த தன்மையை குற்றமாக கருதுகின்றனர். ஆனால் திருமறைக்காடு தலத்தில் உறையும் திருமகள் அத்தகைய குற்றம் அற்றவளாக, இந்த தலத்தில் நிலையாக தங்கி இருக்கின்றாள் என்று கூறுகின்றார்.

வசையறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை

பசையொடு மிகு கலை பல பயில் புலவர்கள் புகழ் வழி வளர் தரு

இசை அமர் கழுமல நகரிறை தமிழ் விரகனது உரை இயல் வல

இசை மலி தமிழ் ஒருபதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.24.1) திருஞான சம்பந்தர் பெருமானை, பரமரே என்று அழைக்கின்றார். மேவார்=பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்கள்; பயிலும் என்ற சொல்லுக்கு தங்கி இருக்கும், பொருந்தி இருக்கும், அமைந்து இருக்கும் என்றும் பொருள் உள்ளது. பாவார்=பாடல்களில் பொருந்திய; பூவார்=பூக்கள் பொருந்திய; பொன்சடை என்ற சொல் புன்சடை என்று மருவியதாக சிலர் பொருள் கூறுகின்றனர். பரமர்=மேலானவர். சொற்களின் பொருளாக இருப்பவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் என்று இந்த பாடலில் கூறுகின்றார். கொன்றை பூக்கள் பொருந்திய சுருண்டு முறுக்கேறிய மிருதுவான சடைகள் உடைய ஈசனே என்று சீர்காழி நகரில் வாழும் அடியார்கள் துதித்து போற்றும் வண்ணம், சீர்காழி நகரினில் உறையும் பெருமான், பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து வீழ்த்தியவர் ஆவார். அவரே பாடல்களில் உள்ள இனிய சொற்களில் பொருளாக கலந்து நிற்கும் மேலான தலைவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும், பெருமானை பரமரே என்று திருஞான சம்பந்தர் அழைக்கின்றார்.

பூவார் கொன்றை புரிபுன்சடை ஈசா

காவாய் என நின்று ஏத்தும் காழியார்

மேவார் புரம் மூன்றும் அட்டார் அவர் போலாம்

பாவார் இன் சொல் பயிலும் பரமரே

இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.32.2) திருஞானசம்பந்தர், பெருமானை, பாம்பரை ஆர்த்த பரமன் என்று குறிப்பிடுகின்றார். தடம்=குளம்; இந்த பாடலில் பெருமான் தனது முடியின் மீது தாமரை மலர் அணிந்துள்ளதாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு பெருமானை தாமரை மலர் அணிந்தவனாக குறிப்பிடும் தேவாரப் பாடல்கள் மிகவும் அரிது. ஆக்கூர் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலில் அப்பர் பிரான் முடித் தாமரை அணிந்த மூர்த்தி என்று குறிப்பிடுகின்றார். தடாகத்திலிருந்து பறிக்கப்பட்ட பெரிய தாமரை மலர் சூட்டப்பட்டதும், பொன்னின் நிறத்தில் மின்னும் சடைக் கற்றைகள் கொண்டதும் ஆகிய சடைமுடியின் மீது, குடங்களில் கொண்டுவரப் பட்ட குளிர்ந்த நீர் கொண்டு அடியார்கள் பெருமானை நீராட்டுகின்றனர். இந்த பெருமான், படம் எடுத்தாடும் பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டியுள்ளான். இத்தகைய பெருமான், தனது இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருளி இருக்கும் இடம் இடைமருது தலம் தானோ என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பாடலில் குடங்கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்தாட்ட என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். சிவபெருமானை அபிஷேக பிரியர் என்று கூறுவார்கள். தேவார காலத்தில் அடியார்கள் திருக்கோயிலுக்குச் சென்றபோது நீரும் மலரும் சுமந்து சென்றதை நாம் தேவாரப் பாடல்களிலிருந்து அறிகின்றோம்

தடங் கொண்டதோர் தாமரைப் பொன்முடி தன்மேல்

குடங் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்தாட்டப்

படங் கொண்டதோர் பாம்பு அரை ஆர்த்த பரமன்

இடங் கொண்டிருந்தான் தன் இடைமருது ஈதோ

பனையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.37.9) திருஞானசம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். உன்னி=நினைத்து; தன்னைப் பணிந்து வணங்கும் அடியார்களுக்கு தவறாமல் வரம் அளிப்பவன் சிவபெருமான். எனவே அவனைப் பணிந்து வணங்கச் செல்லும் அடியார்கள், தாங்கள் பெறவிருக்கும் வரத்தினை நினைத்த வண்ணம், மிகவும் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பெருமானது பெருமையை புரிந்து கொண்டு, அவனை நமது சிரம் தாழ்த்தி வணங்க வேண்டும். அத்தகைய பணிவுடன் பெருமானை, அணுகாததால் தானே, பிரமனும் திருமாலும் அவனது திருவடியையும் திருமுடியையும் காண முடியாமல் தவித்தனர்.

வரம் உன்னி மகிழ்ந்து எழுவீர்காள்

சிரம் முன் அடி தாழ வணங்கும்

பிரமன்னொடு மால் அறியாத

பரமன் உறையும் பனையூரே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.38.2) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். உர=வலிமை வாய்ந்த; தாருகவனத்து முனிவர்கள் பெருமான் மீது ஏவிய யானை, வலிமை மிகுந்ததாகவும் மதம் கொண்டிருந்த காரணத்தால், மிகவும் கோபம் உடையதாகவும் இருந்தது என்று கூறுகின்றார். பெருமான் மிகுந்த விருப்பத்துடன் அணிந்து கொள்ளும் குரவம், சுரபுன்னை, வன்னி மரங்கள் செறிந்த தலம் என்று குறிப்பிட்டு, தலத்தின் பெருமையை உணர்த்துகின்றார். மருவும்=பொருந்தும்;

உர வெங்கரியின் உரி போர்த்த

பரமன் உறையும் பதி என்பர்

குரவம் சுரபுன்னையும் வன்னி

மருவும் மயிலாடு துறையே

பாம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.41.6) திருஞான சம்பந்தர் பெருமானை பரமர் என்று அழைக்கின்றார். பெருமான் குறித்து நன்கு கற்றவர்கள் மட்டுமே பெருமானை உணர முடியும். தனது உடலின் ஒரு பாதியையே பெருமான், பிராட்டிக்கு அளித்த படியால், வள்ளல் என்று அழைக்கின்றார். மைந்தர் என்றால் வலிமை வாய்ந்தவர் என்று பொருள். எப்போதும் துள்ளித் திரிந்து கொண்டிருக்கும் மான் கன்றினை ஒரே இடத்தில் நிற்க வைக்கும் ஆற்றல் படைத்த பெருமானை மிகவும் பொருத்தமாக மைந்தர் என்று அழைக்கின்றார். பெருமானே அருள் புரிந்து காத்தருள்வாய் என்று சரண் அடைந்த தேவர்களை ஆலகால விடத்தின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிய பெருமான், அழியும் நிலையில் சரணடைந்த சந்திரனை, தக்கனது சாபத்திலிருந்து காப்பாற்றிய பெருமான் என்று குறிப்பிட்டு, நாமும் பெருமானைச் சரணடைந்தால் காப்பாற்றப் படுவோம் என்று நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வுடை ஒருவர் ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்

மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர்

ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலைகடல் கடைய அன்று எழுந்த

பாதி வெண்பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன்னகராரே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.46.4) திருஞான சம்பந்தர் பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். எண்ணார்=சிவநெறியை நினைத்து அதன் வழி நடவாத திரிபுரத்து அரக்கர்கள்; எயில்=அரண்; இங்கே திரிபுரத்து அரக்கர்களுக்கு வலிமை வாய்ந்த அரணாக விளங்கிய மூன்று பறக்கும் கோட்டைகள்; மண்=கருமை நிறத்து மண் போன்ற பொடி; மத்தளம் வாசிப்போர் சீரான ஓசை எழுப்புவதற்காக சாந்து போன்று மண் போன்ற ஒரு பொடியை கெட்டியாக குழைத்து இரு பக்கங்களிலும் தடவுவார்கள். அதனை ரவை என்றும் மார்ச்சனை என்றும் தற்காலத்தில் அழைக்கின்றன்ர். அவ்வாறு கருஞ்சாந்து பூசப்பட்ட முழவம் நிலம் அதிரும் வண்ணம் ஒலி எழுப்ப பெருமான் நடமாடுவதாக சொல்லப் படுகின்றது. பொதுவாக நந்தியம் பெருமான் சிவபெருமானின் நடனத்திற்கு மிருதங்கம் வாசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ வேளையில் திருமால் மத்தளம் வாசிப்பதாக சிவானந்த லஹரியில் ஆதி சங்கரர் குறிப்பிடுகின்றார். தேவர்கள் போற்ற நின்று நடனம் ஆடுவதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை எரித்து அவர்களை அழித்த பின்னர், பெருமான் பண்டரங்கம் என்ற நடனம் ஆடியதாக சொல்லப்படுகின்றது. அந்த நடனத்தைக் கண்ட தேவர்கள் பெருமானை போற்றி பாராட்டினர். இந்த தலத்துடன் தொடர்பு கொண்ட நடனம் என்பதால் திருஞானசம்பந்தருக்கு அந்த நடனத்தை தேவர்கள் பாராட்டியது நினைவுக்கு வந்தது போலும். சிவ நெறியையும் வேத நெறியையும் எண்ணாமல் விலகிச் சென்று அனைவர்க்கும் பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் அம்பினால் வீழ்த்தி எரித்து அழித்த இறைவன் தனது கையில் தீப்பிழம்பை ஏந்திய வண்ணம், நடனமாடுகின்றான். கருஞ்சாந்து பூசப்பட்டு நிலம் அதிர ஓசையெழுப்பும் மத்தளம் முழங்கும் பின்னணியில் நடனமாடும் பெருமான், அந்தணர்கள் வேத மந்திரங்களை முறையாக பண்ணில் பொருத்தி பாடும் பின்னணியில், தனது சடையில் வளராத ஒற்றைப் பிறைச் சந்திரனை சூட்டிக் கொண்டு திருவதிகை வீரட்டானத்தில் நடனமாடுகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனலேந்தி

மண்ணார் முழவு அதிர முதிரா மதிசூடிப்

பண்ணார் மறை பாட பரமன் அதிகையுள்

விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.46.7) திருஞான சம்பந்தர், பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். உமையன்னை கீதம் பாட பெருமான் நடமாடுபவராக இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பரமேட்டி=அனைவரிலும் மேலானவன்; தன்னால் தொழப்படும் தகுதி படைத்தவர் எவரும் இல்லாத தன்மையன்; பரமேச்வரன் என்ற சொல்லும் இந்த பொருளையே உணர்த்துகின்றது. உயர்ந்தவர்களாக கருதப்படும் அனைவருக்கும் தலைவனாக உள்ள பெருமான் என்பதே அந்த பொருள். பல திருமுறைப் பாடல்களில் பரமேட்டி என்று இறைவன் அழைக்கப் படுகின்றான். அனைவரிலும் உயர்ந்தவராக இருப்பவரும், தன்னால் தொழப்படுபவர் எவரும் இல்லாத உயர்ந்த நிலையில் இருப்பவரும் ஆகிய பெருமானின் திருப்பாதங்களை பலரும் தொழுகின்றனர். அவர், பூத கணங்கள் புடை சூழ, புலித்தோலை ஆடையாக உடுத்தியவராக, உமை அன்னை பாடுவதற்கு ஏற்ப நடனம் ஆடுகின்றார். கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகை வீரட்டம் தலத்தினில், வேத முதல்வனாகிய பெருமான் நடனம் ஆடுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி

பூதம் புடை சூழப் புலித்தோல் உடையாகக்

கீதம் உமை பாடக் கெடில வடபக்கம்

வேத முதல்வன் நின்றாடும் வீரட்டானத்தே

பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.67.4) திருஞானசம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். நறவம்=குருதி, இரத்தம்; பரமன்=கடந்தவன்; பகவன்=ஆறு இறை குணங்கள் உடையவன்; பகவன் என்ற சொல்லுக்கு ஆறு விதமான குணங்களை உடையவன் என்று சிவக்கவிமணி விளக்கம் அளிக்கின்றார். ஐஸ்வர்யம், வீரம், புகழ், செல்வம், ஞானம், வைராக்கியம் ஆகிய குணங்களின் தொகுப்பு பகம் என்று அழைக்கப் படுகின்றது, இந்த ஆறு குணங்களை உடைய இறைவன் பகவன் என்று அழைக்கப் படுகின்றான் பரமேச்சுவரன்=அனைத்து தேவர்களுக்கும் தலைவன்; உரம்= வலிமை; உலறு கோட்டு=வற்றிய கிளைகள்; சுடுகாட்டில் உள்ள மரம் உலர்ந்து காணப்படும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. நறவம் என்ற சொல் பொதுவாக கள், தேன் ஆகியவற்றை குறிப்பிடும் என்றாலும், இங்கே பெருமான் ஏற்கும் உணவினை, அதாவது பலியை குறிப்பிடும் வண்ணம் கையாளப் பட்டுள்ளது. வலிமை பொருந்தியதும் உயரத்தே உள்ளதும், உலர்ந்ததும் ஆகிய மரக் கிளைகளில் அமர்ந்த வண்ணம் ஆந்தைகள் அலறும் மயானத்தில், நள்ளிருளில் பூதங்கள் பாடியும் ஆடியும் களிப்படையும் வண்ணம், அந்த பூதங்களின் பாடலுக்கு ஏற்ப நடமாடும் சிவபெருமான், அழகிய தாமரை மலர் மேல் அமரும் பிரமனின் மண்டையோட்டினில் பலி ஏற்பவராக பல இடங்களிலும் திரிகின்றார். இத்தகைய பெருமான், எம்மை ஆட்கொண்ட தலைவர் ஆவார்; அவர் ஆறு சிறந்த குணங்களை உடையவர்; அனைத்து தேவர்களுக்கும் மேலானவர்; அவர் பழன நகரத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

உரம் மன்னு உயர் கோட்டு உலறு கூகை அலறும் மயானத்தில்

இரவில் பூதம் பாட ஆடி எழிலார் அவர் மேலைப்

பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எமை ஆளும்

பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.69.7) திருஞான சம்பந்தர் பெருமானை, பரமன் என்று கூறுகின்றார். வந்தித்து=வணங்கி நின்று; வருவினை=ஆகாமிய வினை; இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை நுகர்கையில் நமது மனதினில் ஏற்படும் சலனங்கள் காரணமாக நாம் சேர்த்துக் கொள்ளும் வினைகள்; நமக்கு விளையும் இன்பங்களுக்கு நமது ஆற்றல் தான் காரணம் என்று தவறாக நினைத்து கர்வம் கொண்டு அதன் காரணமாக நிலை பிறழ்ந்து செய்யும் தீய செயல்கள் தீய வினைகளை நமக்கு சேர்க்கின்றன. நாம் துன்பம் அனுபவிக்கையில் அந்த துன்பங்களுக்கு காரணம் நமது பழைய தீவினைகள் என்பதை உணராமல், தீங்கு விளைவிப்பவர் மீதும் சில சமயங்களில் இறைவன் மீதும் கோபம் கொண்டு இகழ்வது, நமக்கு தீங்கு இழைத்தோர் பால் வெறுப்பினை வளர்த்துக் கொண்டு அவர்களை பழி தீர்க்க முயற்சி செய்வது ஆகிய செயல்களால் நாம் மேன்மேலும் வினைகளை சேர்த்துக் கொள்கின்றோம். இவ்வாறு ஆகாமிய வினைகளை மேலும் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டுமானால், நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு நமது பழ வினைகளே காரணம் என்பதை உணர்ந்து, இன்ப துன்பங்களை ஒரு சேர பாவித்து மனதினில் சலனம் ஏதும் அடையாமல் எல்லாம் அவன் செயல் என்ற நினைப்புடன் இன்ப துன்பங்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். மேல்வினை=சஞ்சித வினைகள்; நாம் இனிமேல் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்காக ஒதுக்கப்பட்ட வினைகள்; பொதுவாக இவற்றை நாம் மீண்டும்மீண்டும் பிறவிகள் எடுத்து, அந்தந்த பிறவிகளில் விளையும் இன்ப துன்பங்களை நுகர்ந்து தான் கழித்துக் கொள்ள முடியும். ஆனால் இன்ப துன்பங்களை ஒன்றாக பாவித்து, மனம் எந்த விதமான சலனமும் அடையாமல் அவற்றை எதிர்கொள்ளும் உயிர்களுக்கு, எத்துணை வினைகளைப் பிணித்தாலும், அவை அடைந்துள்ள பக்குவ நிலையில் மாற்றம் ஏதும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்ளும் இறைவன், அந்த உயிர்கள் பால் கருணை கொண்டு, அந்த உயிர்களின் சஞ்சித வினைகளை ஒருசேர ஒதுக்கித் தள்ளி விடுகின்றான். பந்தித்த=அறியாமையில் கட்டுண்டு கிடக்கும்; முந்தி எழுந்த விழவின் ஓசை=திருவிழாக்கள் வருவதை அறிவிக்கும் முழவின் ஓசை; திருவிழாக்கள் மிகவும் அதிகமாக நடக்கும் தலம் என்பதால், இத்தகைய முழவின் ஓசைகள் இடையறாது கேட்கும் தலமாக அண்ணாமலை விளங்குகின்றது. பிரமனும் திருமாலும் காண முடியாத வண்ணம் நெடிதுயர்ந்த நெருப்புப் பிழம்பே மலையாக குளிர்ந்தது என்பதால், மலையே சிவலிங்கமாக கருதி வழிபடப் படுகின்றது. பெருமானின் சடையில் ஒற்றை பிறைச் சந்திரன் இருப்பது போன்று, மலையின் சிகரங்களில் சந்திரன் இருப்பதாக கூறுகின்றார். தன்னை வந்தனை செய்து பணிந்து வணங்கும் அடியார்களுடன் பிணைந்திருந்த ஆகாமிய வினைகள், சஞ்சித வினைகள் மற்றும் அந்த உயிர்களை அறியாமையில் ஆழ்த்தி கட்டியிருந்த பாவங்கள் அனைத்தையும் தீர்ப்பவனும் அனைத்து உயிர்களுக்கும் மேலானவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருக்கோயில் அண்ணாமலையாகும். திருவிழாக்கள் வருவதை முன்னமே உணர்த்தும் வகையில் ஒலிக்கும் முழவின் ஓசை எதிரொலிக்கும் பெரிய மலைப் பாறைகள் மேல், மாலை நேரத்து நிலவு வந்து தோய்கின்ற குன்றுகளை உடைய சாரல் கொண்டது அண்ணாமலையாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வந்தித்து இருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடு

பந்தித்து இருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்

முந்தி எழுந்த முழவின் ஓசை முதுகல் வரைகள் மேல்

அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே

ஈங்கோய்மலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.70.2) திருஞான சம்பந்தர் பெருமானை, பரமனார் என்று அழைக்கின்றார். நள்ளிருளில் நடனம் ஆடும் பெருமான் என்று இதே பதிகத்தின் முந்தைய பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில், அந்த நடனம் எவ்வாறு அமைந்துள்ளது என்று விளக்குகின்றார். கோலச் சடை=அழகான சடை; சென்ற பாடலில் தேன் மொழியாள் என்று பிராட்டியை குறிப்பிட்ட, திருஞான சம்பந்தர், இந்த பாடலில் பால் மொழியாள் என்று குறிப்பிடுகின்றார். பிராட்டி காண பரமன் நடனம் ஆடுவதாக இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. பிரளய காலத்தில் பெருமான் நடனம் ஆடுவதை பார்வதி தேவியைத் தவிர்த்து வேறு எவரும் காண முடியாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, பிராட்டி காண நடனம் ஆடும் பரமனார் என்று இங்கே கூறுகின்றார். மூன்று வேறுவேறு வகையான இசைக் கருவிகளை கொட்ட என்று பொதுவாக குறிப்பிடுகின்றார். குழலை ஊதியும் யாழினை வாசித்தும் மொந்தையை கொட்டியும் என்று பொருள் கொள்ள வேண்டும். இசைக்கருவிகளை இயக்கி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பிராட்டியின் குரல் இனிமைக்கு, தேன், பால், குழல், மழலைச்சொல், கரும்பு, கிளி, குயில் ஆகியவை உவமையாக பல தேவாரப் பாடல்களில் கூறப்படுகின்றன. தனது கையில் மூன்று தலை சூலப்படை ஏந்தியவராக, நள்ளிருளில், அனைத்து உயிர்களும் தங்களது உடல்களிலிருந்து பிரிந்து அனைத்துப் பொருட்களும் அழிந்து உலகமே சுடுகாடாக மாறிய நிலையில், தனது நீண்ட அழகிய சடை தாழ்ந்து தொங்க, பூதகணங்கள் குழல் யாழ் ஆகிய இசைக் கருவிகளை இயக்க, முழவம் அதிர்ந்து முழங்க, பால் போன்று இனிய மொழிகள் உடைய பார்வதி தேவி காணும் வண்ணம் பரமன் நடனம் ஆடுகின்றார். இத்தகைய ஒப்பற்ற நடனம் ஆடும் பரமன் உறையும் இடம், ஏலம் இலவங்கள் ஆகிய பொருட்கள் நிறைந்து நறுமணம் கமழும் ஈங்கோய்மலை ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சூலப்படை ஒன்று ஏந்தி இரவில் சுடுகாடு இடமாகக்

கோலச் சடைகள் தாழக் குழல் யாழ் மொந்தை கொட்டவே

பால் ஒத்து அனைய மொழியாள் காண ஆடும் பரமனார்

ஏலத்தொடு நல் இலவங்கம் கமழும் ஈங்கோய் மலையாரே

வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.2) திருஞான சம்பந்தர் பெருமானை, பரமர் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமான் பண்ணுடன் பொருந்திய பாடல்களை பாடியும் ஆடியும் பலி கொள்வதாக குறிப்பிடுகின்றார். பண்ணுடன் இசைத்துப் பாடப்பட்ட வேத கீதங்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மாதொரு பாகனாக, பிறையும் அரவும் சடையில் அணிந்தவராக பெருமான் பலியேற்கச் செல்கின்றார் என்றும் கூறுகின்றார். மறி திரை=மடிந்து வரும் அலைகள்; முகடு=உச்சி; வான்=உயர்ந்த; பரிசுகள் என்று இந்த பாடலில் மகளிர் இடுகின்ற பிச்சைகள் குறிப்பிடப் படுகின்றது. வானளாவ உயர்ந்து அலைகள் ஊழிக் காலத்தில் பொங்கி உலகினை மூழ்கடித்த போதிலும், அந்த அலைகளின் உச்சியில் மிதந்த தலம் சீர்காழி என்று சொல்லப் படுகின்றது.

பெண்ணினைப் பாகம் அமர்ந்து செஞ்சடை மேல் பிறையொடும் அரவினை அணிந்தழகாகப்

பண்ணினைப் பாடி ஆடி முன் பலி கொள் பரமர் எம் அடிகளார் பரிசுகள் பேணி

மண்ணினை மூடி வான் முகடேறி மறி திரை கடல் முகத்து எடுப்ப மற்று உயர்ந்து

விண்ணளவு ஓங்கி வந்திழி கோயில் வெங்குரு மேவியுள் வீற்று இருந்தாரே

குற்றாலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.99.9) திருஞானசம்பந்தர் பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். பாம்பின் வாயில் அமைந்த முள் போன்று கூரிய முனை கொண்ட பற்களை ஒத்த அரும்புகள் உடைய குரவ மரங்களின் பாவை மலர்களின் நறுமணம் தங்கியுள்ள சோலைகள் நிறைந்த குற்றாலம் தலத்தினில், பிரமன் மால் அறியாத பெரியோனாகிய பெருமான் பொருந்தி உறைகின்றான். அந்த பெருமானை பணிந்து வணங்குவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. குரவ மரத்தின் மலர்கள் பாவை என்று அழைக்கப்படும்.

அரவின் வாயில் முள்ளெயிறு ஏய்ப்ப அரும்பு ஈன்று

குரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்

பிரமன்னொடு மால் அறியாத பெருமை எம்

பரமன் மேய நன்னகர் போலும் பணிவீர்காள்

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.105.4) திருஞானசம்பந்தர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். கறையற்ற வெண் மழு என்று குறிப்பிட்டு, எவர் மீதும் எய்யப்படாத மழு ஆயுதம் என்று குறிப்பிடும் திருஞான சம்பந்தர், வெந்துறு வெண்மழு என்று குறிப்பிடுவது முன்னுக்குப் பின் முரணாக இருப்பது போன்று தோன்றுகின்றது அல்லவா. மழு ஆயுதம் எவர் மீதும் வீசப் படாததால் கறையேதும் இன்றி காணப்பட்டாலும்,அடியார்களுடன் பிணைந்துள்ள வினைகள் அனைத்தும் வெந்து அழியும் வண்ணம், அழிப்பதால், வெந்துறு வெண்மழு என்று அழைக்கப் படுகின்றது. இந்த காரணம் பற்றியே பெருமான் மழுப்படை தாங்கி காணப்படுகின்றார் என்று அறிஞர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஐந்தலை அரவத்தை தனது இடுப்பினில் கட்டி தனது விருப்பம் போன்று பெருமான் அசைக்கும் தன்மை, அடியார்களின் ஐந்து பொறிகளையும் தத்தம் வழிகளில் செல்ல விடாது தடுத்து ஆட்கொள்ளும் தன்மையை உணர்த்துகின்றது என்று பொருள் கொள்வது சிறப்பு.

வெந்துறு வெண் மழுவாள் படையான் மணி மிடற்றான் அரையின்

ஐந்தலை ஆடரவம் அசைத்தான் அணி ஆரூர்ப்

பைந்தளிர் கொன்றை அந்தார்ப் பரமன் அடி பரவப் பாவம்

நைந்துறும் வந்து அணையும் நாள்தொறும் நல்லனவே

கள்ளில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.119.3) திருஞான சம்பந்தர், பெருமானை மறை பாடும் பரம யோகி என்று அழைக்கின்றார். தலை சிறந்த யோகியாக பெருமான் விளங்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. கண்=அழகு; கண்ணார் நீறு=அழகு தரும் திருநீறு; பிஞ்ஞகன்=அழகிய தலைக்கோலம் உடையவன்; எண்ணார்= சைவ நெறியின் மேன்மையை நினையாமல், விலகிச் சென்ற திரிபுரத்து அரக்கர்கள்.

எண்ணார் மும்மதில் எய்த இமையா முக்கண்

பண்ணார் நான்மறை பாடும் பரமயோகி

கண்ணார் நீறணி மார்பன் கள்ளில் மேயான்

பெண் ஆணாம் பெருமான் எம் பிஞ்ஞகனே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.29.2) திருஞானசம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். வண்டிரை=வண்+திரை, வலிமையான பெரிய அலைகள்; மிலைத்த=சூடிய; புனல்=கங்கை நதி; பண்டெரி= பழமையான தீ; ஊழிக்காலத்திற்கு பின்னர் உலகினை தோற்றுவிக்க பெருமான் திருவுள்ளம் கொள்ளும் போது, நாதத்திலிருந்து ஆகாயம் முன்னே தோன்ற, அதன் பின்னர் முறையாக காற்று, தீ, நீர் நிலம் ஆகியவை தோன்றுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த வரிசையில் நாம் பார்த்தால், தீ நீருக்கு முன்னமே தோன்றியதை உணர்த்தும் வண்ணம், பண்டெரி என்று கூறினார் போலும். மேலும் பெருமான் தனது சடையினில் கங்கையை ஏற்றது பகீரதன் தவம் செய்து வேண்டிய பின்னர் நடந்த நிகழ்ச்சி (திரேதா யுகம்) தானே. ஆனால் நடராஜப் பெருமானாக, தான் ஐந்து தொழில்கள் செய்வதை பெருமான் எப்போதும் உணர்த்திக் கொண்டு இருக்கின்றார் அல்லவா. எனவே இந்த அடிப்படையில் பார்த்தாலும் பண்டெரி என்று சொல்வது பொருத்தமாக உள்ளது. புண்டரீகம்=தாமரை மலர்; தாமரை மலரின் நறுமணம் தலத்தின் நீர் வளத்தையும் சோலைகள் தலத்தின் நில வளத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளன. வலிமையான அலைகள் பொருந்திய கங்கை நதியினை, பிறைச் சந்திரன் சூட்டப்பட்ட தனது சடையினில் வைத்தவராக காட்சி அளிக்கும் பெருமான், பழமையான தீயினைத் தனது கையினில் ஏந்திய வண்ணம் நடமாடும் தலம் யாது என்று கேட்கும் மனிதர்களே, தாமரை மலர்கள் வீசும் நறுமணம் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டதும் தெளிந்த நீரினை உடைய கடல் அலைகள் உலகத்தினை மூழ்கடித்த போதும், தான் அந்த வெள்ளத்தில் ஆழ்ந்து விடாமல் தோணியாக வெள்ளத்தில் மிதந்தது என்று சொல்லப்படும் புகலி எனப்படும் நகரமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல் சூடிப்

பண்டு எரி கையாடு பரமன் பதி அது என்பர்

புண்டரிக வாசம் அது வீச மலர்ச் சோலைத்

தெண்டிரை கடல் பொலி திருப்புகலியாமே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.33.10) திருஞானசம்பந்தர், பெருமானை, பரமன் என்று குறிப்பிடுகின்றார். சிந்தை மாறுபட்ட சமணர்கள் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். நேரான சிந்தை இல்லாமல், பெருமானை பழித்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் உண்மைகளை திரித்து சொல்லும் தன்மையராக திகழ்ந்த தன்மை, இங்கே திருகல் சிந்தை என்று உணர்த்தப் படுகின்றது. தேரர்=புத்தர்; பந்தம்=கட்டுப் பாடுகள்; தவம் என்ற பெயரினில், தேவையற்ற பல கட்டுப்பாடுகளுடன் சமணர்கள் வாழ்ந்த தன்மை; பல் துலக்காது இருத்தல், நீராடாமல் இருத்தல்,உடையின்றி திரிதல், இரவில் உணவு உட்கொள்ளாது நோன்பு இருத்தல், தலை முடிகளை கொடுமையான முறையில் நீக்கிக் கொள்ளுதல் என்பன. தனது அடியார்கள் அத்தகைய பழக்கங்களை பின்பற்றாமல் இருக்கும் வண்ணம் அருள் புரிந்தவன் பெருமான் என்று கூறுகின்றார்.

சிந்தை திருகல் சமணர் தேரர் தவமென்னும்

பந்தனை அறுத்தருள நின்ற பரமன் ஊர்

மந்தம் முழவம் தரு விழா ஒலியும் வேதச்

சந்தம் விரவிப் பொழில் முழங்கிய நள்ளாறே

ஆமாத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.50.10) திருஞானசம்பந்தர் பெருமானை பரமாய பான்மையர் என்று அழைக்கின்றார். நூல் என்று பிடகம் முதலான நூல்களை குறிப்பிடுகின்றார். அத்தன்=தலைவன், தந்தை; புத்தர்களும் கீழ்மைத் தன்மை வாய்ந்த சமணர்களும் பொய்மொழிகள் கொண்ட நூலாகிய பிடகம் முதலியவற்றை ஆதாரமாகக் கொண்டு பெருமானை பல வகையிலும் தூற்றிய போதிலும் அத்தகைய வீண்பழிச் சொற்களை பொருட்படுத்தாது அடியார்களால் போற்றப்படும் பெருமான், அனைவர்க்கும் மேலான தன்மை உடையவன் ஆவான். முத்தினை வென்ற முறுவலை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டுள்ள தலைவனே, எங்களது தந்தையே என்று தேவர்கள் போற்றிப் புகழும் பெருமான், தேவர்களாலும் காண்பதற்கு மிகவும் அரியவனாக உள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. பெருமானின் மேலான தன்மைக்கு காரணம் தான் யாது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் வியக்கின்றார்.

புத்தர் புன் சமண் பொய்ம் மொழி நூல் பிடித்தவர் தூற்ற நின்னைப்

பத்தர் பேண நின்ற பரமாய பான்மை அது என்

முத்தை வென்ற முறுவலாள் உமை பங்கன் என்று இமையோர் பரவிடும்

அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே

கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.70.1) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைத்து, சீர்காழி தலத்தினை பரமனூர் என்று அழைக்கின்றார். பெரு நீர்=பிரளய காலத்து வெள்ளம்; பிரளய வெள்ளத்திலும் மூழ்காது இருந்த தோணிபுரம் என்று சொல்லப் படுகின்றது. மன்னு=நிலையான; பொன்னம்=பொன் போன்ற அழகும் செல்வமும் உடைத்த; தண் =குளிர்ந்த; பரவும்=புகழ்ந்து போற்றும்;

பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி

புரம் மன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவம் சண்பை

அரன் மன்னு தண் காழி கொச்சைவயம் உள்ளிட்டு அங்கு ஆதியாய

பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக் கழுமலம் நாம் பரவும் ஊரே

அறையணி நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.77.5) திருஞான சம்பந்தர், பெருமானை பரமனே என்று அழைக்கின்றார். கொன்றை மலரினை மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வது போன்று, தீச்சுடரையும் தனது உள்ளங் கையில் ஏந்தி இருக்கும் பெருமான் என்று கூறுகின்றார்.

தீயினார் திகழ் மேனியாய் தேவர் தாம் தொழும் தேவன் நீ

ஆயினாய் கொன்றையாய் அனல் அங்கையாய் அறையணி நல்லூர்

மேயினார் தம தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனைப்

பாயினாய் அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே

விளமர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.78.9) திருஞான சம்பந்தர் பெருமானை, பரமனார் என்று அழைக்கின்றார். இலங்கினார்=பொருந்தியவர்; கரி= அனைத்துப் பொருட்களும் பிரளயத் தீயினில் வெந்து அழிந்து சாம்பலாக மாறும் நேரம்; காலினார்=நிற்பவர்; நமது உடலின் உறுப்பாகிய கால் நிற்கும் தொழிலைப் புரிவது; இங்கே அழியாமல் எஞ்சி நிற்பவர் என்று பொருளில் கையாளப் பட்டுள்ளது. கரி காலினார்=சர்வ சங்கார காலத்தில் தான் மட்டும் அழியாது எஞ்சி நிற்கும் தன்மை உடையவர்; பை=நச்சுப் பை; பை இலங்கு அரவு=நச்சுப் பை கொண்ட பாம்பின் படம்’ அல்குலாள்=மார்பகத்தை உடையவள்; படமெடுத்தாடும் பாம்பு போன்று புடைத்த மார்பகங்கள் உடைய அன்னை பார்வதி தேவி; அல்குல் என்ற சொல்லுக்கு இடுப்புக்கும் காலுக்கும் இடைப் பட்ட பகுதி என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பொதுவாக மறைக்கப்படும் உடற்பகுதி என்று பொருள் கொள்வது சிறப்பு; மிடறு=கழுத்து; மாசிலாமணி=குற்றமற்ற மாணிக்கக் கல் பதித்த கழுத்தினை உடையவர்;

கையிலங்கிய வேலினார் தோலினார் கரி காலினார்

பையிலங்கு அரவு அல்குலாள் பாகமாகிய பரமனார்

மையிலங்கு ஒளி மல்கிய மாசிலா மணி மிடறினார்

மெய்யிலங்கு வெண்ணீற்றினார் மேயது விளநகரதே

கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.83.3) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். பாம்பினைத் தனது முன் கையில் பெருமான் கங்கணமாக அணிந்து இருக்கும் தன்மை இங்கே சொல்லப் படுகின்றது. இடும்பை=துன்பம்; இந்த பாடலில் இடமுடை வெண் தலை என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது எத்தனை பேர் பலியிட்டாலும் நிரம்பாத பாத்திரம் பெருமான் ஏற்றிருக்கும் பிச்சைப் பாத்திரம் என்பது உணர்த்தப் படுகின்றது. பெருமான் பலி ஏற்பதை மிகவும் விரும்புபவன் என்பதும் இங்கே இன்பன் என்ற சொல் மூலம் சொல்லப் படுகின்றது. பூவை=நாகணவாய்ப் பறவை; மஞ்ஞை=மயில்; ஓதும்=வேதங்கள் ஓதும்; மயில்கள் நடமாட வண்டுகள் மது உண்டு பாடும் குளிர்ந்த சோலைகளும் பொற் கலசங்கள் பொருந்திய கூடங்களில் நாகணவாய்ப் பறவைகள் வேதங்கள் ஓதும் நகரம் சீர்காழி என்று கூறுகின்றார். .

பட அரவாடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்

இடமுடை வெண்தலைக் கை பலி கொள்ளும் இன்பன் இடமாய ஏர்கொள் பதி தான்

நடமிட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடு நளிர் சோலை கோலு கனகக்

குடமிடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறையோதும் கொச்சைவயமே

கோளறு பதிகத்தின் பாடலில் (2.85.4) திருஞானசம்பந்தர் பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். வடபால்=வடக்கில் உள்ள கயிலாய மலை; வடவால் என்பதும் பாடம்; வடவால்=கல்லால மரம்; கல்லால மரத்தின் கீழே இருந்த வண்ணம் பெருமான் சனகாதி முனிவர்களுக்கு, தென்முகக் கடவுளின் வடிவத்தில் உபதேசம் செய்வதையே நாம் பல திருக்கோயில்களிலும் காண்கின்றோம். எனினும் அன்னையை விட்டு இறைவன் எப்போதும் பிரிவதில்லை என்பதாலும், அவனது அருட்சக்தியாக அம்பிகை எப்போதும் அவனுடன் திகழ்கின்றாள் என்பதாலும், அம்பிகை உடனாக இருக்கையில் பெருமான் உபதேசம் செய்தார் என்று பொருள் கொள்வதில் தவறேதும் இல்லை. இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் பொதுவாக மக்களுக்கு நன்மை புரியும் சிறு தெய்வங்களை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் மிகுதியாக கெடுதல் புரியும் சிறு தெய்வங்களை குறிப்பிடுகின்றார். மதி நுதல்=பிறைச் சந்திரன் போன்று வளைந்த நெற்றி; கொதி=கோபம்; மிகுந்த கோபத்துடன் இயமனும் இயமனது தூதர்களும் உயிர்களை அணுகுவது அந்தந்த உயிர்களுக்கு அச்சம் ஊட்டும் பொருட்டே; அங்கி=தீக்கடவுள்; பிறைச்சந்திரன் போன்று அழகாக வளைந்த நெற்றியினை உடைய தேவியுடன், வடக்கு திசையில் உள்ள கயிலாய மலையில் அமர்ந்த வண்ணம் நான்மறைகளையும் ஓதும் எங்கள் பரமன், கங்கை நதி, கொன்றை மாலை ஆகியவற்றைத் தனது சடையில் அணிந்தவனாக எனது உள்ளத்தில் புகுந்துள்ளான். இந்த தன்மையால், சினம் மிகுந்த காலன், தீக்கடவுள், இயமன், இயமனது தூதர்கள், கொடிய நோய்களுக்கு அதிபதியாகிய சிறு தெய்வங்கள் முதலிய அனைத்தும், தங்களது கொடிய குணங்களை விட்டொழித்து மிகுதியான நல்ல குணம் உடையவர்களாக மாறி எனக்கு நல்லனவே செய்வார்கள். இவ்வாறு எனக்கு நல்லனவாக செயல் புரியும் இந்த சிறு தெய்வங்கள் அனைத்தும், மற்ற அடியார்களுக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்குவர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் பெருமானை பரமன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் நான்காவது பாடலில் சில தீய சக்திகளை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் மேலும் சில தீய சக்திகளை குறிப்பிடுகின்றார். அவுணர்=அரக்கர்; அடுத்தவருக்கு துன்பம் செய்வதில் மகிழ்ச்சி அடைவோரை பொதுவாக அரக்கர்கள் என்று குறிப்பிடுவது வழக்கம்; இடி, மின்னல், ஆகியவை நமது கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை; மடவாள்=இளமையும் அழகும் ஒருங்கே பொருந்திய பார்வதி தேவி; துஞ்சிருள்=வன்னி மரத்தின் இலைகள் மிகுந்தும் அடர்த்தும் இருப்பதால் சூரியனின் ஒளிக்கதிர்களை புகவிடாமல் தடுத்து இருளை நிலவும் தன்மை: உரும் இடி=பலமான சத்தத்துடன் இடிப்பது; மிகையான=தங்களது அளவில் நில்லாது கொடிய செயல்களை செய்தல்; பரமன்=மேலானவன்; நஞ்சினைத் தேக்கியதால் மாணிக்க மணி பதித்தது போன்று கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனும், என்றும் இளமையாகவும் அழகொடும் விளங்கும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருப்பவனும், இடபத்தை வாகனமாகக் கொண்டவனும், நம் அனைவராலும் மேலானவன் என்று கொண்டாடப் படுபவனும், ஆகிய பெருமான், அடர்ந்தும் மிகுந்தும் வளர்ந்து இருளைப் பரப்பும் வன்னி இலைகள் மற்றும் கொன்றை மலர்களைத் தனது சடையின் மீது அணிந்தவனாக எனது உள்ளத்தில் புகுந்துள்ளான். அதனால், மிகுந்த சினம் கொண்டு செயல்படும் அவுணரும், பலத்த சத்தத்துடன் தோன்றும் இடி மின்னல் போன்றவையும், செருக்குடன் திரியும் பூதங்கள் ஆகியவை பொதுவாக தத்தம் அளவினில் நில்லாது பலருக்கும் தீங்கு செய்யும் இயல்பினை உடையன; எனினும் அவை அனைத்தும் என்னிடம் அச்சம் கொண்டு எனக்கு நல்லனவே செய்யும்; இவ்வாறு என்னிடம் அச்சம் கொண்டு நல்லனவாக செயல் புரியும் இவை அனைத்தும், மற்ற அடியார்களுக்கும் மிகவும் நன்மை பயப்பனவாகவே விளங்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிக் கொன்றை முடி மேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் திருஞானசம்பந்தர் பெருமானை, பரமன் என்று கூறுகின்றார். அரக்கர்களால் எந்த விதமான தீங்கும் நேராத வண்ணம் தனது அடியார்களை காப்பவன் பெருமான் என்று இதே பதிகத்தின் எட்டாவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் தேவர்களால் எந்த விதமான தீங்கும் நேராமல் இறைவன் பாதுகாப்பான் என்று கூறுகின்றார். பலபல வேடங்களை எடுக்கும் பரமன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தனது அடியார்களை பாதுகாக்கும் பொருட்டும் அருள் புரியும் பொருட்டும், பெருமான் நிலைமைக்கு ஏற்ற வண்ணம் வேறுவேறு வேடங்கள் எடுக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. நாரி பாகன்=மாதொரு பாகன்; எருதினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள தன்மை பசுவேறும் பாகன் என்று திணை மயக்கத்துடன் சொல்லப் பட்டுள்ளது. பசுவேறி என்று சில தேவாரப் பாடல்கள் இறைவனை குறிப்பிடுகின்றன. மாதொரு பாகனாக காட்சி தரும் பெருமான், அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு பல விதமான வேறுவேறு வேடங்களை எடுப்பவன் ஆவான். அவன் உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவன் ஆவான்; எருதினை தனது வாகனமாகக் கொண்டுள்ள பரமன், சலமகள் என்று அழைக்கப்படும் கங்கை நதி மற்றும் எருக்கினைத் தனது சடையில் அணிந்தவனாக எனது உள்ளத்தில் புகுந்துள்ளான். அதனால் தாமரை மலரைத் தனது இருக்கையாகக் கொண்ட பிரமனும், திருமாலும், நான்மறைகளும், மற்றுமுள்ள தேவர்களும், இனி வரவிருக்கின்ற காலங்களும் அலைகடலும் மலைகளும் நமக்கு நல்லனவாகவே அமையும். மேற்குறித்த இவை அனைத்தும் சிவனது அடியார்களுக்கு நல்லனவே செய்யும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

நறையூர் சித்தீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.87.6) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். கணிகை=கங்கை நதி; மன்னு= பொருந்துகின்ற; மது=தேன்; துன்று=நெருக்கமாக; பல விதமான வேடங்களில் பெருமான் தனது அடியார்களின் முன்னே தோன்றுகின்றார் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தனது அடியார்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு, பெருமான் வேறுவேறு வேடங்களில் தோன்றி அருள் புரிந்ததை நாம் பெரிய புராணத்தில், பல நாயன்மார்களின் சரித்திரத்தில் காண்கின்றோம். அந்தந்த அடியார்களின் பக்குவத்திற்கு ஏற்ப, அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறு, வேறுபட்ட பல வேடங்களில் தோன்றும் வல்லமை கொண்டவன் சிவபெருமான். வேதங்கள் அனைத்தும், பெருமானது புகழினையே பாடுவதால், இவ்வாறு பெருமானின் பெருமையை எடுத்துரைத்து பெருமானை நெருங்கியதால், பெருமானை அணுகிய வேதங்கள் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். கங்கை நதி பொருந்தி உறைகின்ற தனது சடையினில், தேன் நிறைந்த வன்னி மலர்கள், கொன்றை மலர்கள் நெருக்கமாக இருக்கும் வண்ணம், சிவபெருமான் தனது செஞ்சடையினில் சூட்டிக் கொண்டுள்ளான். அவன், தனது அடியார்கள் தன்னைப் பணிந்து வணங்கும் முன்னரே, சூழ்நிலைக்கு தக்கவாறு, பலவிதமான வேடங்களை எடுக்கும் ஆற்றல் கொண்டவனாக, தனது அடியார்களுக்கு அருள் புரிகின்றான். தனது புகழினை இனிய மந்திரங்களாக பாடி, தன்னை அணுகும் நான்கு வேதங்கள் மற்றும் அந்த வேதங்களை முறையாக தெரிந்து கொள்ள உதவும் ஆறு அங்கங்களின் பொருளாக இருக்கும் இறைவன், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக இருந்து அருள் புரிகின்றான். இந்த பெருமானின் அருள் வேண்டி, இவனது இருப்பிடம் வந்தடையும் தொண்டர்கள் மலர்கள் தூவி வழிபடுகின்றனர். இவ்வாறு பலராலும் வழிபடப்படும் பெருமான் நறையூர் நகரத்தில் அனைவரும் போற்றும் நம்பனாக உறைகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கணிகையொர் சென்னி மன்னு மது வன்னி கொன்றை மலர் துன்று செஞ் சடையினான்

பணி கையின் முன்னிலங்க வருவேடம் மன்னு பலவாகி நின்ற பரமன்

அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான்

நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்து நறையூரின் நம்பன் அவனே

தென் திருமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.88.2) திருஞான சம்பந்தர், பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். பருவம்=தகுந்த சமயம்; உயிர்கள் இறைவனால் ஆட்கொள்ளப் படுவதற்கு தகுந்த சமயம்; இருவினையொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் நிகழப் பெற்று குருவின் திருவருளால் சிவஞானம் வளர்ந்து, பழமல பற்றுகள் முற்றிலும் அறுக்கப்பட்டு, சிற்றறிவு தீர்ந்து, இறைவனின் திருவடிகளைச் சென்று சாரும் பக்குவம் வரப்பெறும் தருணம். ஒருவன் தான் செய்த நல்வினையின் பயனாக அனுபவிக்கும் இன்பத்திலும் தீவினைப் பயனாகிய துன்பத்திலும் உள்ளம் வேறுபடாது இரண்டையும் சரிசமமாக பாவித்து நுகரும் நிலையே, அதாவது இன்பத்தில் விருப்பும் துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது நோக்கும் நிலையே, இருவினையொப்பு எனப்படும். ஓடும் செம் பொனும் ஒக்கவே நோக்குவார் என்று சேக்கிழார் இந்த தன்மையை குறிப்பிடுகின்றார். அரவத்தொடு அங்கம் அவை கட்டி என்ற தொடர் பாம்பினையும், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரது உடல்களையும் தனது தோளில் கங்காள வேடராய் பெருமான் தாங்கியதை குறிக்கின்றது என்பது ஒரு விளக்கம்.

பெருமானை குறித்த ஞானம் ஒன்றே வீடுபேறு அடைவதற்கு உரிய வழி. எனவே அந்த ஞானத்தை அடைவதற்கு உயிர் விருப்பம் கொள்ள வேண்டும். இவ்வாறு ஞான வேட்கை உடையவர்க்கே ஞானம் பயன் தரும். உயிர் ஞான வேட்கை அடையாத வண்ணம், ஆணவ மலம் தடுக்கின்றது. எனவே என்றும் அழியாது இருக்கும் ஆணவ மலத்தின் வலிமையை குறைத்து, புலன்களின் விருப்பத்தில் நாட்டம் கொள்ளாது, உண்மையான மெய்ப்பொருள் குறித்து அறிய,உயிர்கள் தலைப்பட வேண்டும். ஆணவ மலத்தின் வலிமையை உயிர்கள் குறைப்பதற்கு உதவி செய்யும் பொருட்டு, இறைவன் கன்மம் மாயை ஆகியவற்றை உயிர்களுடன் கூட்டி, இன்ப துன்பங்களை நுகரச் செய்கின்றான். இவ்வாறு நுகரும் தருணத்தில் உயிர்கள் இருவினையொப்பு நிலையினை அடைந்து மேலும் வினைகள் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஆணவ மலத்தின் வலிமையை படிப்படியாக குறைத்து, அதன் வலிமையை மெலியச் செய்வதை மலபரிபாகம் என்று கூறுவார்கள்.

இவ்வாறு மலபரிபாகம் நிகழ்ந்து, இருவினையொப்பு நிலை ஏற்பட்டபின் நிகழ்வது சத்திநிபாதம். சத்தி என்பது இறைவனின் அருள். நிபாதம் என்றால் வீழ்ச்சி என்று பொருள். அந்நாள் வரை திரோதானமாக நின்று மறைப்பைச் செய்து வந்த இறைவனின் சக்தி, மலபரிபாகம் உற்ற நிலையில் அருட்சக்தியாக மாறி ஆன்மாவில் பதியும். இவ்வாறு பக்குவப்பட்ட உயிர்களுக்கு தக்க தருணத்தில் வந்து உதவி செய்து முக்தி நிலை அளிப்பதையே பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பண்பன்=பண்பினை உடையவன். அரவத்தொடு அங்கம்=தனது திருமேனி முழுவதும் பாம்பினை உடையவன்; கையினில் கங்கணமாக, தோளில் ஆபரணமாக, இடையினில் கச்சாக, காலினில் சலங்கையாக, கழுத்தினில் அணியாக,தலைக்கு மாலையாக என்று பல இடங்களிலும் பெருமான் பாம்பினை அணிந்துள்ள கோலத்தினை அருளாளர்கள் தங்களது பாடல்களில் உணர்த்துகின்றனர். அரவிக்க=ஒலிக்க; புகழ்ந்து பேசப்பட; உருவத்தில் மிக்க=பெரிய அளவினில்; தெருவம்=தெருக்கள்; ஓதம்= அலைகள்; பயனுற்ற பண்பன் என்ற தொடருக்கு, பக்குவம் அடைந்த உயிர்களின் பக்குவத்திற்கு பரிசாக, தன்னைப் போன்று எண்குணங்கள் உடையவர்களாக மாற்றும் இறைவன் என்று விளக்கம் அளிக்கப் படுகின்றது. பக்குவம் அடைந்த அடியார்களுக்கு தக்க தருணத்தில் முக்தி உலகினைப் பரிசாகத் தந்து அருளும் பண்பினை உடையவனும், பிரமனைப் படைத்தவனும், பாம்புகளைத் தனது திருமேனியின் பல இடங்களிலும் பொருத்தியவனும், பலராலும் புகழ்ந்து பேசப் படுவானும் ஆகிய இறைவன் உறையும் ஊர் திருமுல்லைவாயிலாகும். உருவத்தில் பெரியதும் ஒளி வீசும் தன்மை படைத்ததும் ஆகிய சங்குகள் மற்றும் சிப்பிகள் கடலின் அலைகளால் மோதப்பட்டு, அச்சமடைந்து தங்களின் உள்ளே இருக்கும் செழுமையான முத்துக்களை வெளிக் கொணர்ந்து தள்ளும் தெருக்களை உடைய தலம் திருமுல்லைவாயில் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்

அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர்

உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவித்

தெருவத்தில் வந்து செழு முத்து அலைக் கொள் திருமுல்லைவாயில் இதுவே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.97.8) திருஞான சம்பந்தர், பெருமானை பரமர் என்று அழைக்கின்றார். கண்டம்=கழுத்து; ஐ-கோழை; அடுத்து இரைத்தல்=கோழை மிகுந்து பேசும் போது மூச்சுடன் கலந்து வரும் ஒலி; மை மிகுத்த மேனி=கருமையான உடல் உடைய அரக்கன் இராவணன்; பை மிகுத்த=நச்சுப்பை பொருந்திய; இந்த பாடலில் பொறாமை கொண்ட மனிதர்களே என்று அழைத்து அவர்களுக்கு திருஞான சம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். சிவனடியார்கள் பெருமானின் அருளால் பெறுகின்ற நலங்கள் கண்டு அடுத்தவர்கள் பொறாமை கொள்கின்றனர் என்று கூறுகின்றார். இந்த உலகத்தில் பலரும், இளமை அளிக்கும் ஊக்கம் உற்சாக மிகுதியினால் இறைவனைப் பற்றி சிந்திக்காமல், பல வகையான சிற்றின்பங்களில் காலத்தைக் கழித்துக் கொண்டு. வாழும் தன்மையையும் வயது முதிர்ந்த நாளில் உடல் நிலை கெட்ட நிலையில் வருந்துவதையும் குறிப்பிடுகிறார் போலும். வயது முதிர உயிர்கள் அனுபவம் பெற்று, இளமையில் தாங்கள் செய்த தவறுகளை திருத்திக் கொள்ளவும், அதற்கு மாறாக நற்செயல்கள் புரிவதையும் விரும்பினாலும், உடல் நிலை காரணமாக இறைவனை வழிபட முடியாமல் போகும் நிலை ஏற்படுகின்றது. கோழை கட்டியாக அடைத்துக் கொண்டு பேச முடியாத நிலையும், பேசும்போது மூச்சிரைக்கும் நிலையும் விளைவதன் முன்னம், சீர்காழி நகரம் சென்றடைந்து பெருமானைப் பணிய வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

பொய் மிகுத்த வாயராய் பொறாமையோடு சொல்லு நீர்

ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம்

மை மிகுந்த மேனி வாளரக்கனை நெரித்தவன்

பை மிகுத்த பாம்பரைப் பரமர் காழி சேர்மினே

சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.102.11) திருஞான சம்பந்தர் பெருமானை பரமர் என்று அழைக்கின்றார். பாணி=கை; அத்தன்=தந்தை, தலைவன்; பையரவு=படம் எடுக்கும் பாம்பு; அக்கு=எலும்பு, சங்கு என்று இரு பொருள் கொண்ட சொல்; உருத்திராக்கம் என்ற பொருள் பல பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. விரை=நறுமணம்; பரசு=மழு ஆயுதம்; மழுப்படை ஏந்திய கையினை உடையவனும், அடியார்களுக்கு தந்தையாகவும் தலைவனாகவும் இருக்கும் பெருமானை, விடம் கொண்ட பாம்புடன், எலும்பு மாலையையும் தனது மார்பினில் நிறைந்திருக்கும் வண்ணம் பூண்டுள்ள அழகிய மார்பினை உடையவனும், இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கியவனும், முத்துக் குவியல்கள் குன்றாக இருக்கும் வண்ணம் காட்சி அளிப்பவனும், நறுமணம் வீசும் பூஞ்சோலைகள் நிறைந்த சிரபுரம் தலத்தின் தலைவனை, தேவர்களின் பெருமானைப், புகழ்ந்து ஞானசம்பந்தர் பாடிய செந்தமிழ் பாடல்களை முறையாக பாடும் அடியார்கள் பரமனைப் பணிந்து வணங்கும் அடியார்களாக விளங்குவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப் பையரவோடு அக்கு

நிரை செய் பூண் திரு மார்புடை நிமலனை நித்திலப் பெரும் தொத்தை

விரை செய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானைப்

பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே

திருநாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.116.6) திருஞான சம்பந்தர், பெருமானை பரமர் என்றும் விடம் கொண்ட பாம்பினை தனது விருப்பம் போல் ஆட்டிய விகிர்தனார் என்றும் அழைக்கின்றார். பல திருமுறைப் பாடல்கள் பெருமான் தனது இடுப்பினில் கச்சாக நாகத்தை இறுகக் கட்டிக்கொண்டு திகழ்கின்றார் என்று குறிப்பிடுகின்றன. கழி=உப்பங்கழி;

விடையதேறி அவ்விட வரவு அசைத்த விகிர்தர் அவர்

படை கொள் பூதம் பல பாட ஆடும் பரமர் அவர்

உடை கொள் வேங்கை உரிதோல் உடையார்க்கு இடமாவது

கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக் காரோணமே

இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.117.6) பாடலில் திருஞான சம்பந்தர் இறைவனை பரமன் என்றும் பகவன் என்றும் அழைக்கின்றார். பிறைமதியைச் சூடிய வண்ணம் கூத்தாடும் பெருமான் வினைகளை அழிக்கும் வல்லமை உடையவர் என்றும், அனைவர்க்கும் மேலானவன் என்றும் தூய்மையான ஆறு குணங்களை உடையவன் என்றும் கூறும் திருஞான சம்பந்தர், இரும்பை மாகாளத்தில் உள்ள மறையவர்கள் இறைவனைத் தொழுது வணங்கியதையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். குறைவதாய=கலைகள் குறைந்த; குனித்தான்=கூத்தாடிய பெருமான்; பறைவது=அழிப்பது;

குறைவதாய குளிர் திங்கள் சூடிக் குனித்தான் வினை

பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை

இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை மாகாளம்

மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.3.6) திருஞான சம்பந்தர், பெருமானை பரமா என்று அழைக்கின்றார். அரிமா=சிங்கம்; தகுவாய்= தகுந்த பயன்களைத் தருவாய்; அடை அரிமா=குகையிலே சென்று அடையும் சிங்கம்; சிங்கத்தின் பொதுத் தன்மையாக குகையில் சென்று அடைவது குறிப்பிடப் பட்டாலும், சிங்கம் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நரசிங்கத்தை என்று உரை ஆசிரியர்கள் கருதுகின்றனர். இரணியனது இரத்தம் குடித்த நரசிம்மர், அதனால் வெறி அதிகமாகி திரிந்த போது, நரசிம்மரது ஆவேசத்தை அடக்கி அவரது தோலை உரித்து சட்டையாக தரித்து அவரின் எலும்பை கதையாக மாற்றிக் கொண்ட வடுகநாதரின் உருவம் தான் சீர்காழி திருக்கோயிலில் உள்ள சட்டநாதர் உருவம் ஆகும். நரசிம்மரும் இலக்குமியும் வணங்கி வழிபட இறைவன் அவர்களுக்கு அருள் புரிந்ததாக கூறுவர். பணிந்த நரசிம்மரின் அகம் அடங்கியது. இந்த நிகழ்ச்சிகள் சித்திரமாக சீர்காழி கோயிலின் இரண்டாம் நிலையின் சுற்றுச் சுவர்களில் வரையப் பட்டுள்ளன. பிரமனின் கர்வமும் பிரளய காலத்தில் பூமி அழிந்துவிட சிவனால் அனைத்தும் தோற்றுவிக்கப் பட்டதால், அழிந்தது. இவ்வாறு அடி பணிந்தவரின் அகங்காரத்தை அடக்கும் மூர்த்தியாக பரமன் இங்கே திகழ்கின்றார். புடைபட=பொருந்தும் வண்ணம்; படையுடை நெடு மதில்=படையாக திகழ்ந்த மதில்கள், மூன்று கோட்டைகள். வேறு எந்த படையும் தேவைப்படா வண்ணம் மூன்று பறக்கும் கோட்டைகளே படையாக திரிபுரத்தவர்களுக்கு அமைந்திருந்த நிலை படையுடை என்ற சொல் மூலம் குறிப்பிடப் படுகின்றது. விகிர்தன்=ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவன்; பரமன்=அனைவர்க்கும் மேலானவன்; பரிசு=தன்மை; குகைகளில் சென்று அடையும் சிங்கத்தின் முகம் கொண்ட வடிவமெடுத்து இரணியனை கொன்ற திருமாலின் தோலையும், வேங்கைப் புலியின் தோலையும் தனது உடலில் பொருந்தும் வண்ணம் அணிந்து கொண்ட பெருமானே, வலிமையான பறக்கும் கோட்டைகளே தங்களுக்கு பெரிய படையாக இருக்கும் வண்ணம் வரம் பெற்றிருந்த திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளின் தன்மை அழியும் வண்ணம் செயல்பட்ட பெருமானே, இடபத்தின் சித்திரத்தை கொடியில் தாங்கிய வேதியனே, மற்ற தெய்வங்களிலிருந்து மாறுபட்டு விளங்கும் தன்மை உடையவனே, ஏனையோரிலும் மேலாக கருதப்படும் தேவர்கள் உனது திருவடிகளைத் தொழ, அவர்களுக்கு அருள் புரியும் வண்ணம் உமையம்மையுடன் நீ இருக்கும் கோலத்தை காட்சியாக அவர்களுக்கு அளிக்கின்றாய் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அடை அரிமாவொடு வேங்கையின் தோல்

புடைபட அரை மிசைப் புனைந்தவனே

படை உடை நெடு மதில் பரிசு அழித்த

விடை உடைக் கொடி மல்கு வேதியனே

விகிர்தா பரமா நினை விண்ணவர் தொழப் புகலித்

தகுவாய் மடமாதொடும் தாள் பணிந்தவர் தமக்கே

பூந்தராய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.5.7) திருஞானசம்பந்தர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். பரமன்=அனைவர்க்கும் மேலானவன். பெருமானின் திருமேனியில் இருக்கும் பாம்புகள், எப்போதும் அவருடனே இருந்தாலும், பாம்பின் பொதுவான தன்மை பற்றி புற்றில் வாழும் நாகம் என்று கூறுகின்றார். பாவம் ஆயின என்று கூறுவதை, மனம் மெய் மொழிகளால் நாம் செய்யும் பாவங்கள் என்று விளக்கம் அளிக்கின்றனர். புற்றினில் மறைந்து வாழும் நாகத்தினைத் தனது உடலில் அணிந்துள்ள பெருமான், அனைவர்க்கும் மேலான கடவுள் ஆவான். அவன் மிகுந்த விருப்பத்துடன் பூந்தராய் நகரத்தில் உறைகின்றான். அவனது பெருமைகளை குறிப்பிட்டு அவனை நாம் புகழ்ந்து பாடினால், எருது ஏறிய செல்வனாகிய பெருமான், நாம் நமது மனம் மொழி மெய்களால் (உடல்) செய்யும் பாவங்கள் அனைத்தும் தீரும் வண்ணம் அருளுகின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்

பற்றி வாழும் பரமனைப் பாடிடப்

பாவம் ஆயின தீரப் பணிந்திடும்

சேவது ஏறிய செல்வன் தானே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.7.7) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். திண் சிலை=உறுதியான மலை; திண்மை வாய்ந்த மலை; இங்கே கயிலாய மலை இறைவனது இருப்பிடமாக உள்ள தன்மையை வில்லாக வளைக்கப் பட்ட செய்தியை உணர்த்துகின்றது. சேர்ப்பது=உறைவிடமாக சேர்ந்தது; மேவுதல்=பொருந்தி உறைதல்; அளவு கடந்த சினத்தினால் இயமனின் உடல் வேர்த்தது என்று கூறுகின்றார். வேள்விப் புகையால் மூடப்படும் வண்ணம் திகழ்ந்த மாட வீடுகள் என்று குறிப்பிட்டு, மிகவும் அதிகமாக வேள்விகள் சீர்காழி நகரில் அந்நாளில் செய்யப்பட தன்மையை குறிப்பிடுகின்றார். அணி மாடம்=அழகிய மாடங்கள்; பார்ப்பதி=பார்வதி;

சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல்

வேர்ப்பது செய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்விப் புகை

போர்ப்பது செய்து அணி மாடம் ஓங்கும் புகலிந் நகர்ப்

பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே

புனவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.11.3) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். வெல்கொடி என்று பெருமானின் இடபக் கொடி என்றும் வெற்றிக் கொடியாக திகழ்ந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. விடை= இடபம்; விறல்=வீரம் மிகுந்த; பாரிடம்=பூத கணங்கள்; புடைபட=புடைசூழ; தொடை= தொடுக்கப்பட்ட மாலை; நவில்=எடுத்துச் செல்லப்படும்; அந்தார்=அம் தார்; அழகிய மாலை;

விடையுடை வெல்கொடி ஏந்தினானும் விறல் பாரிடம்

புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில்

தொடை நவில் கொன்றை அந்தாரினானும் சுடர் வெண் மழு

படை வலன் ஏந்திய பால் நெய்யாடு பரமன் அன்றே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.15.5) திருஞான சம்பந்தர் பெருமானை பரமர் என்று அழைக்கின்றார். ஏதம்=குற்றம்; பரம்=மேலான பொருள்; பரமர்=அனைவர்க்கும் மேலான இறைவர்; வேதம் கண்=வேதங்களில்; பூத கணங்கள் பல உடையவரும், தூய்மையானவரும், புண்ணியமே வடிவமாக இருப்பவரும் ஆகிய இறைவர் தம்மை வழிபடும் அடியார்களின் குற்றங்களை நீக்கி அவர்களது துன்பங்களையும் தீர்த்து அருளும் இயல்பினர் ஆவார், வேதங்களில் பல இடங்களிலும் முதல்வர் என்று கூறப்படும் சிவபெருமான், திருவெண்காடு தலத்தில் வீற்றிருக்கும் இறைவர், தனது திருப்பாதங்கள் அனைவராலும் தொழப்படும் வண்ணம் நிலையில் உள்ள, மேலான தெய்வமாக விளங்குகின்றார் அல்லவா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பூதங்கள் பல உடைப் புனிதர் புண்ணியர்

ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம்மிறை

வேதம் கண் முதல்வர் வெண்காடு மேவிய

பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் (3.15.7) திருஞான சம்பந்தர், பெருமானை, பரமர் என்று அழைக்கின்றார். கயந்திரம்=கயம் இந்திரன் ஆகிய இரண்டு சொற்கள் இணைந்தது. கஜம் என்ற வடமொழிச் சொல் கயம் என்று தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. யானைகளுக்கு இந்திரன் போன்று தலைவனாக இருக்கும் யானை; இந்திரனுக்கு வாகனமாக இருக்கும் யானை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இங்கே ஐராவத யானையினை குறிப்பிடுகின்றது. பாகவதத்தில் வரும் யானை கஜேந்திரன் வேறு. நயத்தல்=விரும்புதல்; நயந்தவர்=விரும்பி வழிபடும் அடியார்கள்; தன்னை விரும்பி வழிபடும் அடியார்களுக்கு பலவிதமான நன்மைகள் செய்பவர் பெருமான். தனது நெற்றியில் கண்ணினை உடைய பெருமானை, இந்திரனும் வெள்ளை யானையும் வழிபட்டு அருள் பெற்றன. இவ்வாறு பெருமான் அருளும் திறத்தினைக் கண்டு வியக்கும் மாந்தர்கள் இறைவனைப் போற்றி புகழ்கின்றனர். அத்தகைய பெருமான் திருவெண்காடு தலத்தில் உறைகின்றார். தனது அடியார்களுக்கு அன்பராக விளங்கும் பெருமான், தன்னுடன் பகை கொள்வோர்க்கு அச்சத்தினை ஊட்டும் மழு ஆயுதத்தை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அன்பருக்கு அன்பராகவும் பகைவர்களுக்கு அச்சமூட்டும் வண்ணமும் திகழும் அவர் மேலான தெய்வம் அல்லவா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நயந்தவர்க்கு அருள் பல நல்கி இந்திரன்

கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்

வியந்தவர் பரவு வெண்காடு மேவிய

பயம் தரு மழு உடைப் பரமர் அல்லரே

கருவூர் ஆனிலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.28.3) திருஞான சம்பந்தர் பெருமானை பரமாய பண்பினர் என்று குறிப்பிடுகின்றார். நல்லார் என்ற திருநாமம் நல்லர் என்று திரிந்ததாக சொல்வார்கள். நல்லார் என்பதும் அடியார்க்கு நல்லார் என்பதும் பெருமானின் திருநாமங்கள். தனது அடியார்களுக்கு பலவிதமாக நன்மை புரிகின்றவர் என்பதால் நல்லார் என்று பெருமானை திருஞானசம்பந்தர் அழைக்கும் பாடல் (3.49.5) நமது நினைவுக்கு வருகின்றது. நமசிவாயப் பதிகத்தின் பாடலில் திருஞான சம்பந்தர் நல்லார் நாமம் நமச்சிவாயவே என்று சொல்கின்றார் அல்லவா. பரம்=மேலானது, வேதங்கள் அனைத்து நூல்களுக்கும் முதன்மையானது. பரம் என்பது பெருமானை குறிக்கும் அடைமொழியாகக் கொள்வதும் பொருத்தமே. அண்ணலார்=தலைவர்; கண்ணுளார் என்ற சொல் கூத்தபிரானை குறிப்பதாக சிலர் விளக்கம் அளிக்கின்றனர். எனினும் அடியார்கள் கண்களில் நிறைந்த கோலத்தை உடைய பெருமான் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. பண்ணுளார் என்ற சொல்லினை வேதத்துடன் என்ற சொல்லுடன் கூட்டி, வேதங்கள் சொல்வதற்கு உரிய பண்ணாக இருப்பவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமான் தானே முதன் முதலில் வேத மந்திரங்களை பண்ணுடன் பொருத்தி பாடி, நான்கு வேறுவேறு முனிவர்களுக்கு உபதேசம் செய்தார். எனவே பண்களாகவும் அவரே இருக்கின்றார் என்று கூறுவது பொருத்தம் தானே. .வானில் உலவும் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் சூடிக் கொண்டுள்ள பெருமான், வேதங்களை பண்ணுடன் பொருத்திப் பாடும் வல்லமை வாய்ந்தவர்; மேலான பல குணங்களை உடைய பெருமான் அடியார்களின் கண்களை விட்டு அகல்வதில்லை; அவர் தாம் கருவூர் ஆனிலை தலத்தினில் பொருந்தி உறைகின்றார். அவர் தன்னைத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள அடியார்கள் அனைவர்க்கும், நன்மைகள் பல செய்வதால், அவர்கள் அனைவராலும் நல்லவராக கருதப் படுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விண்ணுலாம் மதி சூடி வேதமே

பண்ணுளார் பரமாய பண்பினர்

கண்ணுளார் கருவூருள் ஆனிலை

அண்ணலார் அடியார்க்கு நல்லரே

திருவுசாத்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.33.2) திருஞான சம்பந்தர், பல்லையார் படுதலைப் பலி கொளும் பரமனார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். கொல்லை ஏறு=முல்லை நிலத்து விலங்காகிய எருது என்றும் முல்லை நிலத்து கடவுளாகிய திருமாலைத் தனது வாகனமாக, திருபுர தகனத்தின் போது ஏற்றுக் கொண்டவன் என்று இரண்டு விதமாக பொருள் கொள்வதும் பொருத்தமே. நறை கமழ்=தேன் துளிர்க்கும் மலர்கள் கொண்ட சோலை; புறவு=முல்லை நிலம்:

கொல்லை ஏறு உடையவன் கோவண ஆடையன்

பல்லையார் படுதலைப் பலி கொளும் பரமனார்

முல்லையார் புறவணி முதுபதி நறை கமழ்

தில்லையான் உறைவிடம் திருவுசாத்தானமே

முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.34.9) திருஞான சம்பந்தர் பெருமானை, பரமனார் என்று அழைக்கின்றார். கானகம்=காடு, இங்கே சுடுகாடு என்று பொருள் கொள்ளவேண்டும்; ஏடினார்=இதழ்களை உடைய தாமரை மலர்; பரமன்= மேலானவர், அனைத்து உயிர்களுக்கும் மேலானவர்; சுடுகாட்டினில் நடமாடும் சிவபெருமான், புரிந்து கொள்வதற்கு அரிதாக விளங்கும் அரிய வேதங்களின் பொருளை புரிந்து கொண்டவராக பாடுகின்றார். அனைத்து உயிர்களுக்கும் மேலானவரும் பல வகையான புகழினை உடையவரும் ஆகிய பெருமானின் இணையான திருவடிகளையும் முடியினையும் காண்பதற்கு முயற்சி செய்த திருமாலும் இதழ்களை உடைய தாமரை மலரைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமனும் முறையே அகழ்ந்தும் பறந்தும் தேடிய போதும் காணமுடியாமல் திகைத்தனர். அத்தகைய ஆற்றல் உடைய பெருமான் உறையும் இடம் முதுகுன்றமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஆடினார் கானகத்து அருமறையின் பொருள்

பாடினார் பல புகழ்ப் பரமனார் இணையடி

ஏடினார் மலர் மிசை அயனும் மால் இருவரும்

தேடினார் அறிவொணார் திருமுதுகுன்றமே

பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.37.1) திருஞானசம்பந்தர் பெருமானை பரமன் என்றுஅழைக்கின்றார். பரமன்=அனைவர்க்கும் மேலானவன்; மலர் என்றால் பொதுவாக தாமரை மலரையே குறிக்கும். பெருமானின் திருமேனி மீது நீரும் மலரும்தூவி வழிபடும் கைகளை, தாமரை மலர் என்று குறிப்பிட்டு சிறப்பிக்கின்றார். சீர்காழி தலத்திற்கு பல பெயர்கள் இருக்கும் தன்மையை, பரமனூர் பலபேரினால் பொலி என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். பயில்=தொடர்ந்து ஒரு செயலைச் செய்தல்: இங்கே பெருமானை தொடர்ந்து வழிபடுதல் என்றுபொருள் கொள்ளவேண்டும்; உன்னுதல்= நினைத்தல்; தனது அடியார்கள் தங்களது மனதினில் நினைக்கும் வரங்களை அருளும் தன்மை உடையவன்பெருமான் என்று கூறுகின்றார். அடியார்கள் முறையிட வேண்டிய தேவையே இல்லாமல், அவர்களது உள்ளக் கருத்தினையும் தேவைகளையும் புரிந்துகொண்டு அருள் புரியும் வல்லமை உடையவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். ஐயன்=தலைவன்.

கரமுனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்துமின்

பரமனூர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள் தாம் பயில்

வரம் உன்னவ் வருள் செய்ய வல்ல எம் ஐயன் நாடொரும் மேய சீர்

பிரமனூர் பிரமாபுரத்துறை பிஞ்ஞகன் அருள் பேணியே

சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.58.8) திருஞானசம்பந்தர், பரமயோகியாக இருக்கும் பெருமான், பிராட்டியைத் தனதுஉடலின் ஒரு பாகத்தில் வேண்டிப் பெற்றார் என்று கூறுகின்றார். நமக்கு கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில், கருவூர்த்தேவர், மங்கையோடு இருந்து யோகு செய்வான் என்று பெருமானை குறிப்பிடுவது நினைவுக்கு வருகின்றது. சாத்தமங்கை என்பது தலத்தின்பெயர். அயவந்தி என்பது திருக்கோயிலின் பெயர்.

பண்ணுலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி

விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே

தண்ணிலா வெண்மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை

அண்ணலாய் நின்ற எம்மான் அயவந்தி அமர்ந்தவனே

வெண்டுறை தலத்தின் (3.61.1) மீது அருளிய பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் பரமன் என்று இறைவனை அழைக்கின்றார். பரம்=மேலான பொருள்; பரமாபரமன்=மேலான பொருட்களுக்கு எல்லாம் மேலானவன்; மாதிமை=மிகுந்த அன்பு; பெருமான் நிலவுலகத்தில் உள்ள திருக்கோயில்களில் உறைவது மிகுந்த அன்புடன் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். உயிர்கள் உய்வினை அடையச் செய்வது பெருமானுக்கும் மிகவும் பிடித்த செயல் அல்லவா. அதனால் தான், உலகத்தவர்கள் தன்னை வணங்கிப் பயன் அடையும் வண்ணம், பெருமான் நிலவுலகத்தில் உள்ள திருக்கோயில்களில் மிகுந்த விருப்பத்துடன் உறைகின்றான்.

ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆரழகன்

பாதியொர் மாதினொடும் பயிலும் பரமா பரமன்

போதியலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த

வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே

பிரமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.67.1) பெருமானை பரமன் என்று திருஞான சம்பந்தர் அழைக்கின்றார். இந்த பாடலில்காவலாக இருந்த மூன்று கோட்டைகள் என்று குறிப்பிடுகின்றார். திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரத்தின் காரணமாக இந்த மூன்று கோட்டைகளும்ஒரே நேர்க்கோட்டில் வரும் தருணத்தில் தான் இந்த கோட்டைகளை அழிக்க முடியும். எப்போதும் வானில் வேறுவேறு திசைகளில் பறந்து கொண்டிருந்தமூன்று கோட்டைகள் ஒரே நேர்க்கோட்டில் வருவது துர்லபம் என்பதால், ஒன்றுக்கொன்று அருகில் இல்லாமல் இருந்த போதும், எந்த ஒரு கோட்டையும்மற்ற இரண்டு கோட்டைகளுக்கு அரணாகத் திகழ்ந்த தன்மை அரணம் மதில் முப்புரம் என்ற தொடர் மூலம் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. தாங்களே வேண்டிப் பெற்ற வரம் என்பதால், திரிபுரத்து அரக்கர்கள் ஒரே நேர்க்கோட்டில் வாராத வண்ணம் பறந்து கொண்டிருந்தனர். எப்போதோ ஒருசமயத்தில் ஒரே நேர்க்கோட்டில் மூன்று கோட்டைகளும் வந்தாலும், தங்களது பறந்து செல்லும் ஆற்றலினால், அந்த நிலையிலிருந்து நொடிப் பொழுதினில் மாறிவிடும் தன்மை கொண்டவைகளாகவும் இந்த கோட்டைகள் விளங்கின. எனவே, ஒரு நொடிக்கும் குறைந்த நேரமே, அவ்வாறு ஒரே நேர்க்கோட்டினில் இருக்கும் என்பதால், இந்த கோட்டைகளை நோக்கி எய்யப்படும் எந்த ஆயுதமும் மிகுந்த வேகத்துடன் செல்ல வேண்டும். மேலும் மூன்று கோட்டைகளும் ஒரே அம்பினால் அழிக்கப்பட வேண்டும் என்பதால், முதல் இரண்டு கோட்டைகளையும் எரித்து அழிக்கும் அம்பு, அந்த இரண்டு கோட்டைகளையும் துளைத்துக் கொண்டு மூன்றாவது கோட்டைக்கும் செல்லும் வல்லமை பொருந்தியதாகவும் இருக்க வேண்டும். பெருமான் விடுத்த அம்பு, மூன்றுகோட்டைகளும் ஒரே நேர்க்கோட்டினில் இருந்த அந்த நிலையில் இருந்து மாறுபடுவதற்கு முன்னமே, சென்றடைந்து மூன்று கோட்டைகளையும் எரித்ததுஎன்பதை உணர்த்தும் வண்ணம் வேகத்துடன் சென்ற அம்பு என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தான் மேற்கொண்டுள்ள படைத்தல்தொழில் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உபநிடதங்களை முறையாக ஓதி பிரமன் வரம் பெற்றதால் இந்த தலத்திற்கு பிரமபுரம்என்ற பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகின்றது. பிரமன் வழிபட்ட வரலாறு இந்த பாடலில் எடுத்துரைக்கப் படுகின்றது. சுரர்=தேவர்கள்; சுரர்உலகு=தேவர்கள் வாழும் உலகம்; பயில்=வாழ்கின்ற; நரர்கள்=மனிதர்கள்; தரணி தலம்=நிலவுலகம்; முரண்=வலிமை; அரணம்=காவல்; விசை=வேகம்; வரன்முறை= எவ்வாறு ஓதவேண்டும் என்று வரையறுக்கப்பட்ட முறை; சுருதி=வேதங்கள்; சுருதி சிரம்=வேதங்களின் முடிவான கருத்துகள் கொண்டஉபநிடதங்கள்; நிரை=வரிசை; சரண இணை=இணையாக உள்ள திருப்பாதங்கள்; பரவ=புகழ்ந்து பாட; விரவு வகை எரிய= கலந்து பல இடமும் எரியும்வண்ணம்; இசை என்ற சொல்லுக்கு புகழ் என்று பொருள் கொண்டு, திரிபுரங்களை அழித்து புகழ் பெற்ற அம்பினை ஏந்திய கரம் என்று பொருள் கூறுவதும்பொருத்தமே.

சுரர் உலகு நரர்கள் பயில் தரணி தலம் முரண் அழிய அரணம் மதில் முப்

புரம் எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடமாம்

வரம் அருள வரன் முறையின் நிரை நிறை கொள் வரு சுருதி சிரவுரையினால்

பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே

தேவர்கள் வாழ்கின்ற தேவர் உலகமும் மற்றும் மனிதர்கள் வாழ்கின்ற நிலவுலகமும் தங்களது நிலையிலிருந்து மாறுபட்டு, வலிமை அழியும் வண்ணம்துன்புறுத்திய திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை, ஒன்றுக்கொன்று காவலாகத் திகழ்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளை, வலிமையானமதில்களைக் கொண்டிருந்த மூன்று கோட்டைகளை, ஒருங்கே பல இடங்களும் கலந்து எரியும் வண்ணம் விரைவாக செல்லக்கூடிய அம்பினை எய்தஆற்றல் கொண்ட கரத்தினை உடையவர் சிவபெருமான். வேதங்களின் முடிவான பொருளை உணர்த்தும் உபநிடதங்களின் வாக்கியங்களை, எல்லாஸ்வரங்களும் வரிசை முறையில் நிறைவாக அமையும் வண்ணம் முறையாக அவை ஓத வேண்டிய முறையில், தான் மேலும்மேலும் உயர்வடைய வேண்டும்என்ற நோக்கத்துடன் ஓதிய பிரமன், பெருமானின் அழகிய இணையான மலரடிகளை தான் புகழ்ந்து பாடி, தான் வேண்டிய வரங்களை பெற்றான். இவ்வாறுபிரமன் போற்றி வணங்கியமையால் பிரமபுரம் என்று பெயர் பெற்ற இந்த தலம் ஓங்கிய புகழுடன் விளங்குகின்றது என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.70.5) திருஞானசம்பந்தர், பரமராகிய பெருமான், மகளிரின் வீடுகள் தோறும் சென்று பலியேற்றார் என்று குறிப்பிடுகின்றார். கதுப்பு=கூந்தல்; விரிந்து மலர்ந்த பூக்களை கொண்ட கூந்தல் உடைய இளமை வாய்ந்த மங்கையர் என்று தாருகவனத்து மகளிரை குறிப்பிடுகின்றார். மட மங்கையர்=இளம் பெண்கள்; பழமை=பழம்பதி; மது=தேன் கூடுகள்; வெள்ளப் பெருக்குடன் வரும் காவிரி நதி, தனது அலைக் கரங்களால் இரண்டு கரையிலும் மணிகளை வாரி இறைக்க, அந்த ஒளி வீசும் மணிகள் கண்டு அச்சம் கொள்ளும் குரங்குகள் குதித்து பாய்வதால், மாமரங்களில் உள்ள தேன் கூடுகள் கிழிந்து சிந்தும் தேனை, வண்டுகள் கவர்ந்து உண்கின்றன என்று தலத்தின் நீர் வளத்தையும் நில வளத்தையும் இங்கே திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பூவிரி கதுப்பின் மட மங்கையர் அகம் தொறும் நடந்து பலி தேர்

பாவிரி இசைக்குரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனலாம்

காவிரி நுரைத்து இரு கரைக்கு மணி சிந்த வரி வண்டு கவர

மாவிரி மதுக் கிழிய மந்தி குதி கொள்ளும் மயிலாடுதுறையே

தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.74.8) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். ஓதம்=கடல் அலைகள்; மலி புயங்கள்=வலிமை மிகுந்த தோள்கள்; போதம் என்ற சொல் பொதுவாக அறிவினை குறிக்கும்; இங்கே மகிழ்ச்சியினை உணர்த்துகின்றது. மிகுந்த மகிழ்ச்சியுடன் பெருமானைப் புகழ்ந்து தலத்து மகளிர் ஆடியும் பாடியும் பெருமானை போற்றுகின்றனர் என்று கூறுகின்றார். முழவம் என்ற சொல் முரவம் என திரிந்தது. முழவம்=மத்தளம்; சேதம்=சேறு; சேற்றில் இறங்கி வேலை செய்யும் உழவர்களின் உதவி கொண்டு மக்கள் தங்களது பசிப்பிணியை போக்கிக் கொள்கின்றனர் என்று உண்டி கொடுத்து உயிர் காக்கும் உழவர் பெருமக்களை சிறப்பித்துச் சொல்கின்றார்.

ஓதம் மலிகின்ற தென் இலங்கை அரையன் மலி புயங்கள் நெரியப்

பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன் தனதிடம்

போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கு முரவம்

சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே

சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.6) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். அணவுதல்= நெருங்குதல், அணுகுதல்; பாற=அழிய; ஆலும்=நடமாடும்; இயலி=போன்று; அமர்வு எய்தும்= விருப்புடன் இருக்கையாக கொள்வது; கிண்டி=கிளறி; நறவு=தேன்; சாலி=ஒரு வகை நெல்; கோல=அழகு; உகளும்=துள்ளி குதிக்கும்; நீலம்=நீலோற்பலம்; இந்த பதிகத்தின் முந்தைய பாடல்களில் பிராட்டியின் அழகினை பல விதமாக வர்ணித்த திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பிராட்டி மயில் போன்ற சாயலைக் கொண்டுள்ளாள் என்று கூறுகின்றார். சேல்= மீன்கள்; சிறுவன் மார்க்கண்டேயனை நெருங்கி அவனது உயிரினை கவர்வதற்கு முயற்சி செய்த இயமன் அழியும் வண்ணம் உதைத்த பெருமான், நடமாடும் மயில் போன்று சாயலை உடையவளும், தேர்ந்தெடுத்து அழகிய நகைகளை அணிபவளும் ஆகிய உமை அன்னையுடன் மிகுந்த விருப்போடு அமரும் இடம் சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும். இந்த தலத்தில் உள்ள ஏலம் நறுமணம் சோலைகளில் காணப்படும் மலர்களின் மீது வண்டுகள் கூட்டமாக அமர்ந்து அந்த மலர்களைக் கிளறி மலர்களில் நிறைந்துள்ள தேனை உண்ட களிப்பினில் இசை பாடுகின்றன. அருகில் உள்ள சாலி நெல் வயல்களில் அழகான மீன்கள் துள்ளி குதித்தாட, அவற்றின் அசைவால் நீலோற்பல மொட்டுகள் மலர்ந்து அழகாக காணப்படுகின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதை செய்த பரமன்

ஆலும் மயில் போல் இயலி ஆயிழை தனோடு அமர்வு எய்தும் இடமாம்

ஏல மலி சோலை இன வண்டு மலர் கிண்டி நறவு உண்டு இசை செயச்

சாலி வயல் கோல மலி சேல் உகளும் நீலம் வளர் சண்பை நகரே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.83.1) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். இரிய=பறந்து சென்று அமர; விண்ட=விரிந்த, மலர்ந்த; மல்கு=நிறைந்த; பண்டு=பண்டைய நாளில், பண்டைய நாளிலிருந்தே நடராஜப் பெருமான் தனது கையினில் தீச்சுடர் ஏந்தி நடனம் ஆடுவதாக கருதப்படுகின்றது. பரமன்=அனைவர்க்கும் மேலானவர்; அயலே=அருகே; தேர=தேட: தெண்டிரை=தெண்+திரை, தெளிந்த நீரலைகள்; முத்தம்=முத்துகள்; வண்டுகள் அமர்ந்ததால் விரிந்து பூத்த மலர்கள், அப்போது தான் மலர்ந்த புதிய மலர்கள், நிறைந்த சடை நீண்டு தொங்கும் வண்ணம் இடபத்தின் மீது அமர்ந்து பல இடங்களுக்கும் செல்லும் பரமனாகிய சிவபெருமான், பண்டைய நாளிலிருந்தே தனது கையினில் தீச்சுடரை ஏந்திய வண்ணம் நடனமாடுகின்றார். அத்தகைய பரமன் வாழும் பதி நல்லூர் என்று கூறுவார்கள். தனது அருகில் ஓடிய நண்டினைத் தனது உணவாக உட்கொள்வதற்காக நாரை நண்டினைத் தேடும் காட்சியும், மலை அருவிகளிலிருந்து விழும் முத்துக்களை அடித்துக் கொண்டு வரும் காவிரி நதியின் தெளிந்த நீரலைகள் இரண்டு கரைகளிலும் மோதுவதால் அரும்புகள் மலர்ந்து நறுமணம் வீசும் காட்சிகளும் நிறைந்த தலம் நல்லூர் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வண்டிரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடையேறிப்

பண்டெரிகை கொண்ட பரமன் பதியது என்பர் அதன் அயலே

நண்டிரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம்

தெண்டிரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலிலும் (3.83.2) திருஞான சம்பந்தர் பெருமானை, பரமன் என்று குறிப்பிடுகின்றார். பல்வளரும்=நாளுக்கு நாள் நச்சுத்தன்மை வளரும் பற்கள்; அரை=இடுப்பு; வரை=மலை; மல் வளர்=வலிமையில் வளர்ந்து கொண்டிருக்கும்; பெருமானின் தோள் வலிமை அளத்தற்கு அரியது என்பதால், எப்போதும் வளர்ந்து கொண்டு இருப்பது போல் தோன்றும் என்பதை குறிப்பிடும் வண்ணம் மல்வளர் என்று குறிப்பிடுகின்றார். மல்வளர் வினைத்தொகை. கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் முறையே வளர்ந்தது, வளர்ந்து கொண்டிருப்பது மற்றும் வளர்வது என்று பொருள். புயம்=தோள்; சொல்வளர்=கருத்தாழம் மிகுந்த பாடல்கள்; கிளவி= தோத்திரங்கள், பாடல்கள்; பிருங்கி முனிவர் வழிபட்ட தலம். பரமனுடன் நெருங்கி அமர்ந்திருந்த உமையன்னையைத் தவிர்த்து, வண்டாக மாறி இருவரின் இடையே புகுந்து இறைவனை மட்டும் வழிபட்ட செயல் தானே, பெருமானின் திருமேனியின் ஒரு பாகத்தில் தானும் பங்கேற்க வேண்டும் என்று பிராட்டி விரும்புவதற்கு மூல காரணமாக அமைந்தது என்பதால், பிருங்கி முனிவர் வழிபட்ட இந்த தலத்தின் பாடலில் மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் போலும். சிவலிங்கத் திருமேனியில் வண்டுகள் துளைத்தது போன்று துவாரங்கள் காணப்படுகின்றன. நாளுக்கு நாள் நச்சுத்தன்மை வளரும் பற்களை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கட்டியவனும், இமயமலையில் வளர்ந்த மங்கை பார்வதி தேவியைத் தனது உடலின் பாகத்தில் வைத்துக் கொண்டு தனது வலிமை வாய்ந்த தோளால் அணைத்து மகிழும் பரமன் உறையும் இடம் நல்லூர் தலமாகும். கருத்தாழம் மிகுந்த பாடல்களையும் தோத்திரங்களையும் இசையுடன் பொருத்தி பாடியும் ஆடியும் இளம் பெண்கள் இறைவனை மகிழ்விக்க, அறிவுச் செல்வம் மிகுந்த மறையோர்கள் முறையாக வேதங்கள் ஓதி இறைவனை வழிபடுகின்றனர். இந்த செயல்கள் நாளுக்கு நாள் வளரும் தலமாக நல்லூர் திகழ்கின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பல்வளரும் நாகம் அரை ஆர்த்து வரை மங்கை ஒரு பாகம்

மல்வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடமாம்

சொல் வளர் இசைக் கிளவி பாடி மடவார் நடமாதாடிச்

செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திருநலூரே

இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.101.10) திருஞான சம்பந்தர், அனைவரிலும் உயர்ந்தவராகிய பெருமான், சமணர்களும் புத்தர்களும் தான் பலி ஏற்பதைக் குறித்து பழித்து பேசும் புறஞ்சொற்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பலி ஏற்கின்றார் என்று கூறுகின்றார். தட்டை என்பதற்கு தடுக்கை என்று பொருள். தடுக்கை என்பது பனை ஓலையால் வேயப்பட்ட பாய் போன்ற அமைப்பு. வெய்யிலில் திரியும் சமணர்கள், தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தங்களது மார்பிலும் முதுகிலும் இத்தகைய பனை ஓலைப் பாய்களை அணிந்து கொண்ட பழக்கத்தை திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகிறார் போலும். சாத்தி=அணிந்து கொண்டு; பிரட்டே=ஒதுக்கப்பட்ட இடங்கள்; அனைத்து இடங்களிலும் திரியும் சமணர்கள் என்பதை உணர்த்த ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திரியும் சமணர்கள் என்று கூறினார் போலும். சீவரப் போர்வை=துவராடை; பன்னெடு வெண்டலை= பண்டைய நாளிலிருந்தே மண்டை ஓட்டில் பலியேற்கும் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது.

பின்னொடு முன்னிட்டு தட்டைச் சாத்திப் பிரட்டே திரிவாரும்

பொன் நெடுஞ் சீவரப் போர்வையார்கள் புறங் கூறல் கேளாதே

இன்னெடுஞ் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சரம் மேய

பன்னெடு வெண்டலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே

ஆலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.108.1) திருஞான சம்பந்தர் பெருமானை பரமனே என்று அழைக்கின்றார். உழலுதல்=பல இடங்களிலும் திரிதல்; ஆதம்= அறிவுடைமை. ஆதம் இல்லி=அறிவில்லாதவர்கள் தேரர்=புத்தர்; சேக்கிழார் பெருமான், திருஞான சம்பந்தர் புராணத்தின் முதல் பாடலில் ‘வேத நெறி தழைத்து ஓங்க’ என்று தொடங்கி, திருஞானசம்பந்தரின் அவதார நோக்கத்தை உணர்த்துவது இங்கே குறிப்பிடத் தக்கது. சமணர்களும் புத்தர்களும் வைதீக நெறியினை இழித்து பேசி, மக்களிடையே வேதங்கள் பற்றிய தவறான கொள்கைகளை பரப்பி வந்தமை நமக்கு இந்தப் பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. இந்து மதத்திற்கும் சைவ நெறிக்கும் ஆதாரமாக விளங்கிய வேதங்களை, மக்களுக்கு வேண்டிய வாழ்க்கை நெறிகளை உணர்த்திய வேதங்களை பழித்துக் கூறியது சமணர்கள் இந்து மதத்திற்கு செய்த தீங்குகளில் தலையானது ஆகும். எனவே இந்தத் தவறு இந்தப் பதிகத்தின் முதல் பாடலில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இந்தப் பாடலில் புத்தர்களும் குறிப்பிடப் படுகின்றனர். பாண்டிய நாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பும் வழியில் தெளிச்சேரியில் புத்தர்களோடு வாதம் புரிந்து அவர்களை திருஞானசம்பந்தர் வெற்றி கொள்கின்றார். புத்தர்களுடன் பின்னாளில் வாது செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்று எதிர்பார்த்து சிவபெருமானின் உள்ளக் கிடக்கையை அறிய முயல்கின்றாரோ திருஞானசம்பந்தர் என்று எண்ணத் தோன்றுகின்றது. சிவபெருமானின் அருளால் தான், சமணரையும் புத்தரையும் வெல்ல முடியும் என்பதை உணர்ந்த திருஞானசம்பந்தப் பெருமான், அந்த வெற்றிகளால் சிவபெருமானின் புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும் என்ற தனது ஆசையினை இங்கே வெளிப்படுத்துகின்றார். உமா தேவியை தனது உடம்பில் ஒரு பாதியாக வைத்துள்ள பரமனே, தென் ஆலவாயில் தலத்தில் எழுந்தருளி இருக்கும் பரமனே, எமது ஆதிப் பிரானே, உமது புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும். வேதங்களையும் வேள்விகளையும் பழித்துத் திரியும் அறிவில்லாத சமணர்களையும் புத்தர்களையும் வாதத்தில் வென்று அழிக்க நான் நினைக்கின்றேன் உமது திருவுள்ளக் கருத்தினை தெரியப்படுத்தவும். உமது திருவருள் வேண்டி நிற்கின்றேன். நீர் திருவருள் புரிவீராக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லியமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.114.1) திருஞான சம்பந்தர் பெருமானை, எண்ணுதல் பரமர் என்று குறிப்பிடுகின்றார். மால் விடை=பெருமை வாய்ந்த இடபம்; விடைப்பாகன் என்று திருமுறைப் பாடல்கள் பெருமானை அழைக்கின்றன. துவனி=ஒலி; தேவர்களால் போற்றப்படும் வேதத்தின் ஒலியாக விளங்குபவர் பெருமான்; வனி=தீ; வேதத்து வனி=வேதங்கள் சொல்லி எழுப்பப்படும் வேள்வித் தீ; கம்பம் என்ற சொல்லுக்கு நடுக்கம் மற்றும் கச்சி ஏகம்பம் என்ற இரண்டு பொருள்களும் பொருந்தும்.

பாயும் மால் விடை மேலொரு பாகனே பாவை தன்னுரு மேலொரு பாகனே

தூய வானவர் வேதத் துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே

ஆய நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆலநீழல் அரும் பொருள் ஆதியே

காய வில் மதன் பட்டது கம்பமே கண்ணுதல் பரமற்கு இடம் கம்பமே

கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.118.5) திருஞான சம்பந்தர் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் கலைவாணியின் மூக்கு தக்க யாகத்தில் அரியப் பட்ட நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பிரமனும் திருமாலும் தக்க யாகத்தில் பங்கேற்றதற்காக தண்டனை ஏதும் பெறவில்லை என்று அப்பர் பிரானும் மணிவாசகரும் குறிப்பிடுகின்றனர். எனவே சுருதியான் தலை என்று வேள்வித் தலைவனின் தலை அரியப்பட்டது என்று பொருள் கொள்வது பொருத்தம். வேள்வி செய்து வைப்பவர் தகுந்த ஒருவரை வேள்வித் தலைவனாக நியமிப்பார். இவரை பிரமன் என்று கூறுவார்கள். இவரது கடமை, வேள்வி தகுந்த முறையில் நடைபெறுகின்றதா என்பதை கண்காணித்து, தவறு ஏற்பட்டால் திருத்த வேண்டியது. தருமபுத்திரர் நடத்திய இராஜசூய யாகத்தின் வேள்வித் தலைவனாக, கண்ணன் நியமிக்கப் பட்டதை நாம் அறிவோம். தற்காலத்தில் நடைபெறும் வேள்வி மற்றும் ஹோமங்களிலும், நன்கு கற்றுத் தேர்ந்தவரை பிரமனாக நியமிக்கின்றனர். பிரமனாக நியமிக்கப்படும் எவரும், அந்த வேள்வி முடியும் வரையில் தனது இடத்தினை விட்டு நகராமல் வேள்வி நடைபெறுவதை கவனித்து திருத்தங்கள் தேவைப்பட்டால் அவற்றை சுட்டிக் காட்டி, தவறுகளை திருத்த வேண்டும். அவ்வாறு எவரையும் வேள்வித் தலைவனாக நியமிக்க முடியாத போது, ஒரு கூர்ச்சத்தை பிரமனாக பாவித்து வேள்வியை தற்காலத்தில் நடத்துகின்றனர். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள நியதிக்கு மாறாக வேள்வி நடத்தப்படுவதை கண்டித்து நிறுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறியதற்காக, தக்க யாகத்தின் வேள்வித் தலைவனை பெருமான் தண்டிக்கின்றார். வேள்வியை சரியாக நடத்த வேண்டிய கடமையிலிருந்து தவறிய வேள்வித் தலைவனும், தவறான முறையில் வேள்வி நடத்த முயற்சி செய்த தக்கனும் ஒரே தன்மையில் தண்டனை அடைந்தனர் என்பதை நாம் உணரலாம். இந்த நிகழ்ச்சி, வேள்வி செய்வோருக்கும் வேள்வித் தலைவனுக்கும் வேள்வியை சரிவர நடத்துவதில் சமபங்கு உள்ளது என்பதைநமக்கு உணர்த்துகின்றது. நாமகள்=சரசுவதி. சுடரவன்=அக்னித்தேவன்; பரிதியான்=சூரியன்; விருதி=புகழ்; பயின்று=வழிவழியாக பயிலும், குரு சீடன் அவனது சீடன் என்று குரு சீடன் பரம்பரையாக பயிலப்பட்ட வேதம்;

சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரம் முன் இயங்கு

பரிதியான் பல்லுமிறுத்து அவர்க்கு அருளும் பரமனார் பயின்று இனிது இருக்கை

விருதி நான்மறையும் அங்கமோர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம்

கருதினார் உலகில் கருத்துடையார் சேர் கழுமல நகர் எனலாமே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.119.4) திருஞான சம்பந்தர் பெருமானை பரமர் என்று அழைக்கின்றார். தாங்கரும் காலம்=உடல் உயிரினைத் தாங்கி இருப்பதற்கு மிகவும் அரிதான காலம், மகா சங்கார காலம்; பிரளயம் என்று சொல்லப்படும் மகா சங்கார காலத்தில், உலகின் அனைத்து உடல்களிலிருந்தும் உயிர் பிரிக்கப் படுவதால், தாங்கரும் காலம் என்று சொல்லப் பட்டுள்ளது. தவிர=அந்நாள் வரை தாம் செய்து கொண்டிருந்த படைத்தல் மற்றும் காத்தல் தொழிலை தம்மிடமிருந்து நீங்கப் பெற்று; இருவர்=பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவர்; பிரமன் திருமால் உட்பட அனைத்து உயிர்களும் பெருமானிடம், பிரளய காலத்தில் ஒடுங்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. அங்கம்=உடல், எலும்பு என்று பொருள் கொள்வதும் பொருத்தமே; பாங்கு=அழகு; பாங்கினால் தரித்து=அழகுற அணிந்து கொண்டு; பண்டு போல் எல்லாம்= பிரளயத்தில் அழிந்து பட்ட உலகினை, முன்பு போன்று விளங்கும் வண்ணம் தோற்றுவிக்கும் தன்மை; கண்ணுதல்=நெற்றியில் கண் உடைய பெருமான்; பிரளய காலத்தில், தாம் அந்நாள் வரை செய்து கொண்டிருந்த, படைத்தல் மற்றும் காத்தல் தொழில் முடிவுக்கு வர, திருமால் மற்றும் பிரமன் ஆகியோரின் உடல்களிலிருந்தும் உயிர் பிரிந்து பெருமானிடம் ஒடுங்குகின்றது. அப்போது தாம் ஒருவனே என்றும் நிலையானவன் என்பதை உணர்த்தும் விதமாக, பெருமான், இறந்து பட்ட திருமால் மற்றும் பிரமனது உடல் எலும்புகளை, அழகுற தமது உடலில் அணிந்து கொள்கின்றார். அனைத்து உயிர்களும் தேவையான காலம் இளைப்பாறிய பின்னர், மீண்டும் உலகினை தோற்றுவிக்க பெருமான் திருவுள்ளம் கொள்ள, உலகம் பண்டு போல் தோன்றுகின்றது. இத்தகைய ஆற்றல் வாய்ந்த பெருமான், தனது நெற்றியில் கண் உடையவராகவும் அனைவர்க்கும் மேலானவராகவும் விளங்குகின்றார். வீழிமிழலை தலத்தில் வீற்றிருக்கும் பெருமானை, வீழிமிழலையான் என்று அழைத்துப் போற்ற நமது வினைகள் கெட்டுவிடும். தேன் நிறைந்த அழகிய கமுகு, தென்னை, மா, செண்பகம், சிறந்த பலா, இலுப்பை, வேங்கை. மகிழம், ஆல் ஆகிய மரங்கள் செழிப்புடன் வளர்ந்து, அவற்றின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருப்பதால், சூரியனின் கதிர்கள் உள்ளே புக முடியாமல் இருண்டு கிடக்கும் சோலைகள் நிறைந்த தலம் வீழிமிழலையாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தாங்கரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம்

பாங்கினால் தரித்துப் பண்டு போலெல்லாம் பண்ணிய கண்ணுதல் பரமர்

தேங்கொள் பூங் கமுகு தெங்கிளம் கொடி மாச் செண்பகம் வண் பலா இலுப்பை

வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே

அங்கமாலை பதிகத்தின் பாடலில் (4.9.7) அப்பர் பிரான், கைகளைத் தூக்கி பரமனைத் தொழுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார். கடிமாமலர்=நறுமணம் கமழும் மலர்கள்; பை=நச்சுப்பை, படம் என்ற இரண்டு பொருள்களும் பொருந்தும். அரை=இடுப்பு; கைகளே, படம் எடுக்கும் பாம்பினைத் தனது இடுப்பில் கச்சையாக இறுகக் கட்டிய பிரானை. நறுமணம் கமழும் சிறந்த மலர்களைத் தூவி, கைகளைக் கூப்பித் தொழுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கைகாள் கூப்பித் தொழீர் – கடி

மாமலர் தூவி நின்று

பைவாய் பாம்பு அரை ஆர்த்த பரமனைக்

கைகாள் கூப்பித் தொழீர்

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.14.3) அப்பர் பிரான் பெருமானை பரமாய மூர்த்தி என்று குறிப்பிடுகின்றார். ஊழி வெள்ளத்தில் ஆலிலை மேல் பாலனாக திருமால் பள்ளி கொண்ட சிறப்பு கூறப்பட்டு, அந்த திருமாலுக்கும் மேம்பட்ட மூர்த்தியாக சிவபெருமான் விளங்கிய தன்மை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. ஆறு சமயங்கள்=பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமம், பைரவம், சைவம் என்று சைவ சமயத்தின் உட்பிரிவுகள் ஆறாகவும். இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளான சௌரம், காணாபத்தியம், கௌமாரம், வைணவம், சாக்தம் மற்றும் சைவம் என்றும் கொள்ளலாம். அனைவருக்கு மேலான பரம்பொருள் என்பதால், இந்து சமயங்களின் ஆறு பிரிவுகளாக இருப்பதும் சிவபெருமான் என்று கூறுவதும் உண்டு. ஆறு சமயங்களாக நின்ற நிலை, பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. நாள்கள்= அசுவினி முதலாய இருபத்தேழு நட்சத்திரங்கள், சிவபெருமான் ஆதி இல்லாதவன் என்பது, இங்கே காலங்கள் நாட்கள் படைக்கப்பட்ட நாளுக்கும் முன்னமே, ஒரே உருவத்துடன் இருந்தவன் என்று குறிப்பிடப் படுகின்றது. காலங்கள் தோன்றிய நாளும் ஊழிக் காலமும் கடந்த தன்மை என்று சொல்வதன் மூலம் அந்தம் இல்லாதவன் என்பதும் உணர்த்தப் படுகின்றது. இருபத்தேழு நட்சத்திரங்கள் மற்றும் காலங்களால் பகுக்கப்பட்ட நாட்களுக்கும் முன்னமேயும், ஊழிக் காலத்தையும் கடந்தும், ஒரே உருவமாகத் திகழ்பவனும், மூன்று மூர்த்திகளின் உருவாகவும், அவர்களின் உயிராகவும் அமைந்த சிவபெருமான் ஆறு சமயத்தவர்களுக்கும் அவரவர்களின் சமயத்தின் பொருளாக விளங்குகின்றான்: சோதி வடிவாகத் திகழும் இந்த சிவபெருமான், ஊழிக்காலத்தில் அனைத்து உலகங்களையும் தனது வயிற்றில் அடக்கி ஒரு ஆலிலையின் மேல் துயில்பவனும் ஆகிய திருமாலுக்கும் மேம்பட்ட மூர்த்தியாக உள்ளான். இந்த சிவபெருமான் தான் சரண் அடையத்தக்க பரம்பொருள் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உருவாகி மூவர் உருவில்

சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உருவாகி நின்ற தழலோன்

ஞாலமும் மேலைவிண்ணோடு உலகேழுமுண்டு குறளாய் ஓராலின் இலைமேல்

பாலனும் ஆயவற்கொர் பரமாய மூர்த்தி அவனா நமக்கொர் சரணே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.19.5) அப்பர் பிரான், பெருமானை, பரமனார் என்று அழைக்கின்றார். கோலம்=அழகு; ஏறு=இடபம்; பாங்கு=அருகில்; அருகில் உள்ள ஊர்களுக்கு பலியேற்க செல்லும் இறைவன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிட்டாலும் நாம்உலகெங்கும் பலியேற்கத் திரிவதாக கொள்ள வேண்டும். ஏனென்றால் நினைத்த மாத்திரத்தில் எங்கும் செல்லும் வல்லமை உடையவராக விளங்குபவரும், ஓரே சமயத்தில் உலகெங்கும் பரவியிருக்கும் வல்லமை பெற்றவருமாகிய பெருமானுக்கு எந்த இடம் அருகில் உள்ள இடம் எந்த இடம் தொலைவான இடம்என்று நாம் சொல்ல முடியுமா. கால நேர, தேச எல்லைக்கு உட்பட்ட நமக்குத் தானே அருகாமை தொலைவு ஆகியவை பொருந்தும். பூங்கோயில் என்பதுதிருவாரூர் தலத்தின் உள்ள திருக்கோயிலின் பெயர், பரமன்=மேலானவர்; கமலாலயம் என்று வடமொழியில் இந்த திருக்கோயில் அழைக்கப் படுகின்றது. பூ என்று பொதுவாக சொன்னால், பூக்களில் சிறந்த தாமரைப் பூவினை குறிப்பதால், கமலாலயம் என்பதன் நேர் மொழிபெயர்ப்பாக பூங்கோயில் என்றபெயர் விளங்குகின்றது. காவி=குவளை மலர்; தேங்காவி=தேன் நிறைந்துள்ள குவளை மலர்கள்; தொன்னகர் என்று திருவாரூர் தலத்தின் தொன்மையைஅப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். இந்த பாடலில் பூங்கோயில் தனை பிரியாது இருந்தான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். திருவாரூர்தலத்தில் தியாகேசர் மூர்த்தம், முதலில் பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலால், தனது உள்ளத்தின் உள்ளே வைத்து வழிபாடு செய்யப்பட்ட உருவம். பின்னர் இந்திரன் அதனை விரும்பவே திருமால் இந்திரனுக்கு அதனை அளித்தார். தான் அசுரர்களுடன் தொடுத்த போரில் தனக்கு உதவி செய்த முசுகுந்தமன்னனுக்கு, மன்னன் வேண்டிய பொருளை கொடுப்பதாக இந்திரன் கூறிய போது, முசுகுந்த மன்னர் இந்திரன் வழிபட்டு வந்த தியாகேச பெருமான்மூர்த்தத்தை கேட்டார். இந்திரன் வேறு வழியின்றி அந்த மூர்த்தத்தை சோழ மன்னனுக்கு அளிக்கவே அவரும் அதனை திருவாரூர் தலத்தில் நிறுவிவழிபடலானார். முன்னாளில் பாற்கடலிலும் பின்னர் இந்திர லோகத்தில் இருந்தாலும், ஆங்கே செல்லாமல் திருவாரூர் பூங்கோயிலில் நிலையாக இருக்கும்தன்மை இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. வெண்மை நிறத்து எலும்புகளை மாலையாக அணிந்து மிகவும் அழகிய கோலத்துடன், தனது வாகனமாகியஎருதின் மீது ஏறியவராக அனைத்து இடங்களுக்கும் செல்லும் பெருமானார், அனைவர்க்கும் மேலானாவர் ஆவார். அவர் தேன் நிறைந்து நறுமணம் கமழும்குவளை மலர்கள் அதிகமாக காணப்படும், மிகுந்த பழமை வாய்ந்த திருவாரூர் நகரத்தில் உள்ள பூங்கோயில் என்று அழைக்கப்படும் திருக்கோயிலுள்ளேபுகுந்து மிகுந்த மகிழ்ச்சி உடையவராக, அங்கிருந்து நீங்காமல் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தாம் கோல வெள்ளெலும்பு பூண்டு தம் ஏறு ஏறிப்

பாங்கான ஊர்க்கெல்லாம் செல்லும் பரமனார்

தேங்காவி நாறும் திருவாரூர்த் தொன்னகரில்

பூங்கோயில் உள் மகிழ்ந்து போகாது இருந்தாரே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.22.6) அப்பர் பிரான், பெருமானை, பரம மூர்த்தி என்று அழைக்கின்றார். இருவர்=சக்தி, சிவம் ஆகிய இருவர்: பாரிடம்=பூதகணம்; பாணி செய்ய=தாளம் கொட்ட: கார்=மேகங்கள்; பிறங்கு=ஒளி வீசும். ஆணும் பெண்ணுமாய் ஒரே உடம்பினில்இருவராய் கலந்து நிற்கும் எம்பெருமான், சந்திரனின் ஒளி பரவிய சென்னியராய், அருகிலுள்ள பூதகணங்கள் தாளமிட, நடனக் கலையில் தேர்ந்தவராய், மேகங்கள் தங்கும் உயர்ந்த மாடங்களையும் சோலைகளையும் உடைய தில்லைச் சிற்றம்பலத்தில், ஒளிவீசும் தீயினிடை நடமாடுகின்றார். இவ்வாறுசிவபெருமான் நடனமாடும்போது, அவர் நடமாடும் அரங்கு மேலும் விரிகின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஓருடம்பு இருவராகி ஒளிநிலா எறிக்கும் சென்னிச்

பாரிடம் பாணி செய்யப் பயின்ற எம் பரம மூர்த்தி

காரிடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே

பேரிடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடுமாறே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.23.1) அப்பர் பிரான், பெருமானை பரமனே என்று அழைக்கின்றார். முத்தன்=இயல்பாகவே பாசங்களிலிருந்து விடுதலை பெற்றவன். சிவபெருமானின் எட்டு குணங்களில் ஒன்று. மற்றைய குணங்கள், தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் என்பன ஆகும். பாசங்களிலிருந்து விடுதலை பெற்ற ஒருவனால் தான் மற்றவர்களின் பாசக் கட்டுக்களை அறுத்தெறிய முடியும். எனவே இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கிய சிவபெருமான் தான் எவருக்கும் முக்தி அளிக்கும் சக்தி படைத்தவன். முக்தி அளிப்பவன் என்பதால் முத்தன் என்றும் சிவபெருமானை அழைப்பதுண்டு. தான் பக்தன் என்ற நிலையில் இல்லாமல் பாடுவதாக இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பத்து கொலாம் அவர் செய்கை தானே என்று ஒன்று கொலாம் என்று தொடங்கும் பதிகத்தில், அடியார்களின் தன்மை பத்து வகைப் பட்டவை என்று கூறும் அப்பர் பிரான் தனக்கு அந்த தகுதிகள் இல்லை என்று அடக்கமாக கூறிக் கொள்கின்றார். அத்தகைய குணங்கள் தன்னிடம் இல்லாமையால் தான், தான் எவ்வாறு சிவபிரானிடத்தில் பக்தி கொள்வது என்ற கேள்வியை எழுப்பி, அதற்காக தன்னை இகழ்ந்து ஒதுக்கிவிட வேண்டாம் என்று இறைவனிடத்தில் மன்றாடுகின்றார். பெரிய புராணத்தில் அப்பர் வாழ்வினை விவரிக்கும் சேக்கிழார் பல இடங்களில் கூறும் குறிப்புகளிலிருந்து, அப்பர் பெருமான் பக்தர்களுக்கு இருக்க வேண்டிய பத்து அக குணங்களும் பத்து புற குணங்களும் கொண்டவராகத் திகழ்ந்ததை நாம் அறியலாம். பரம்பொருளே, அனைவர்க்கும் மேலான யோக நாயகனே, உன்னிடத்தில் பக்தி கொண்டு உன்னைப் புகழ்ந்து பாடத் தெரியாத இந்த அடியேனை, உன்னிடத்தில் பக்தி கொள்வதற்கான குணங்கள் ஏதும் இல்லாத அடியேனை நீ இகழாமல், எனது பாடலை ஏற்றுக் கொள்ள வேண்டும். உனது அடியார்களுக்கு முக்தி அளிக்கும் வல்லமை பெற்றவனே, முதல்வனே, நீ தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் அழகினைக் காண்பதற்காக அடியேன் வந்து கொண்டிருக்கின்றேன் என்று அப்பர் பிரான் பெருமான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக அமைந்த பாடல்.

பத்தனாய் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ

எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டா

முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற

அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே

இந்த பதிகத்தின் ஏழாவது பாடலிலும் அப்பர் பிரான் (4.23.7) பெருமானை பரம என்று அழைக்கிறார். பொய்=நிலையில்லாத உலகப் பொருட்கள். பைய=மெல்ல; சிவபெருமான் ஒருவரே மெய்யான பரம்பொருள். அவரைத் தவிர்த்து உலகில் காணப்படும், அறியப்படும் அனைத்துப் பொருட்களும் நிலையில்லாதவை, பொய்த் தோற்றம் கொண்டவை. எனவே நிலையில்லாத அத்தகைய பொருட்களின் மேல் தான் கொண்டுள்ள பற்றினை நீக்குவதற்கு சிவபெருமானின் அருள் வேண்டி இங்கே அப்பர் பிரான் பெருமானிடம் முறையிடுகின்றார். உருத்திர தாண்டவம் போன்று வேகமாக ஆடாமல் மெதுவாக ஆடும் நடனம் என்பதை குறிப்பதற்காக பைய நின்னாடல் என்று இங்கே குறிப்பிடுகின்றார். அனைவருக்கும் முதலான ஆதி முதல்வனே, ஆதி மூர்த்தி ஐயனே, இந்த உலகினில் காணப்படும் நிலையில்லாத பொருட்களின் மீது எனக்குள்ள பற்றினை நீக்கி, உன்னை நினைப்பதிலிருந்து நீங்காமல் உனக்கு நான் அடிமைத் தொழில் செய்வதற்கு நீ அருள் புரிய வேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் அதிகமான சிறப்பினை உடைய தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் நீ ஆடும் நடனத்தைக் காண்பதற்காக நான் வந்து கொண்டு இருக்கின்றேன் என்று அப்பர் பிரான் பெருமானுக்கு விடை கூறுவதாக அமைந்த பாடல். இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும் அப்பர் பிரான் பெருமானை பரம என்று அழைக்கின்றார்.

பொய்யினைத் தவிர விட்டுப் புறமலாம் அடிமை செய்ய

ஐய நீ அருளிச் செய்யாய் ஆதியே ஆதி மூர்த்தீ

வையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே

பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்தவாறே

அதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.26.1) அப்பர் பிரான் பெருமானை பரம யோகீ என்று அழைக்கின்றார். காண்பான்=காணும் பொருட்டு: அலந்து போனேன்=வருந்தினேன். எல்லா உயிர்களின் தேவைகளையும் சிவபெருமான் நிறைவேற்றி வைப்பதால், சிவபெருமான் மீது நம்பிக்கை வைத்து அனைத்து உயிர்களும் தங்களது விருப்பங்களை தெரிவிக்கின்றன. இதனை உணர்த்தும் வகையில் நால்வர் பெருமானார்கள் பல பாடல்களில் நம்பன் என்றும் நம்பா என்றும் இறைவனை அழைக்கின்றார்கள். எங்கள் நம்பிக்கைக்கு உரியவனாகவும், அதனால் எங்களால் விரும்பப் படுபவனுமாக விளங்கும் எங்கள் தலைவனே, நாதனே, ஆதி மூர்த்தியே, உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்டவனே, பரம யோகியே, செம்மையான பொன் போன்றவரே, பவளத்தின் குன்று போன்று சிவந்த நிறத்தில் காணப்படுபவரே, என்று உம்மை தினமும் புகழ்ந்து பாடும் அடியேன், தாமரை போன்ற உமது திருப்பாதங்களைக் காண தவிக்கின்றேன். அதிகை வீரட்டம் தலத்தில் உறையும் இறைவனே, நீர் தான் அருள் புரிந்து எனது வருத்தத்தைப் போக்க வேண்டும் என்று அப்பர் பிரான் இறைவனிடம் வேண்டும் பாடல்.

நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதி மூர்த்தி

பங்கனே பரம யோகீ என்றென்றே பரவி நாளும்

செம்பொனே பவளக் குன்றே திகழ் மலர்ப் பாதம் காண்பான்

அன்பனே அலந்து போனேன் அதிகை வீரட்டனீரே

பயற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.32.2) அப்பர் பிரான், பெருமானை, பரமனார் என்று அழைக்கின்றார். பவந்திட்ட=தானே தோன்றிய; பெருமானுக்கு தோற்றமும் அழிவும் இல்லை. எனினும் முற்றூழிக் காலத்திற்கு பின்னர் தோன்றும் உயிர்கள் அனைத்தும் தாம் தோன்றுவதற்கு முன்னமே பெருமான் இருந்ததை உணர்வதால் தங்களுக்கு முன்னமே பெருமான் தோன்றியதாக கருதுகின்றன. இந்த கருத்தினையே ஒவ்வொரு ஊழியிலும் தோன்றும் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சிலை=வில்; மேருமலை வில்லாக வளைக்கப்பட்டு திரிபுரத்தவர்களுடன் போருக்குச் சென்றபோது பெருமானால் பயன்படுத்தப் பட்டது இங்கே உணர்த்தப் படுகின்றது. கவர்ந்திட்ட=பற்றி வருத்திய; மிகுந்த விருப்பத்துடன் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவர் பெருமான்; அவர் ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் அனைத்து உயிர்களுக்கும் முன்னே தானே தோன்றுபவராக அனைத்து ஊழிகளையும் கடந்தவராக உள்ளார்; அவர் மேரு மலையை வில்லாக வளைத்து வாசுகி பாம்பினை அந்த வில்லினில் நாணாக பூட்டி, அக்னித் தேவனை கணையாகக் கொண்டு, கோபத்தால் சிவந்த கண்களை உடையவராய், மூன்று உலகங்களில் உள்ளவர்களையும் பற்றி வருத்தம் அடையச் செய்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் மூன்று கோட்டைகளையும் தீக்கு இரையாகுமாறு செய்தவர் ஆவார். அத்தகைய பெருமான் தான் திருப்பயற்றூரில் உறைகின்றார்.

உவந்திட்டு அங்கு உமையோர் பாகம் வைத்தவர் ஊழிஊழி

பவந்திட்ட பரமனார் தாம் மலை சிலை நாகம் ஏற்றிக்

கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரியாகச் சீறிச்

சிவந்திட்ட கண்ணர் போலும் திருப்பயற்றூரனாரே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் (4.32.7) அப்பர் பிரான் பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். ஆவி=வேள்விகளில் வெளிப்படும் புகை; அவி=வேள்விகளில் தேவர்களுக்கு அளிக்கப்படும் ஆகுதி; வேள்விகள் செய்யப்பட வேண்டிய முறை மற்றும் அப்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் ஆகியவை வேதங்களில் காணப்படுகின்றன. வேள்விகள் செய்யப்பட வேண்டிய முறைகளாகவும், அந்த வேள்வியில் சொல்லப்படும் மந்திரங்களாகவும், வேள்வியில் எழும் புகைகளாகவும், வேள்வியில் அளிக்கப்படும் அவிகளாகவும், வேள்வியின் பயனாகவும் விளங்கும் பெருமானை வேள்வியாக இருப்பவன் என்று தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இந்த தலத்து இறைவியின் திருநாமம் காவியங்கண்ணாள். தேவியின் திருநாமம் இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. அருக்கத்தின் எதிர்மறை பெருக்கம். பிரமன்=உண்மையான மெய்ப்பொருள். பிரமம் என்ற சொல்லுக்கு வேதம், தத்துவம், தவம், அந்தணர், நான்முகன் ஆகிய பல பொருட்கள் உண்டு. இடம் கருதி நாம் தகுந்த பொருளை உணரவேண்டும். அனைவர்க்கும் மேலான உண்மையான மெய்ப்பொருளாக இருக்கும் தன்மை இங்கு உணர்த்தப் படுகின்றது என்று உரை ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். வேள்விகளில் எழுகின்ற புகையாகவும், அந்த வேள்வியில் அளிக்கப்படும் அவியாகவும், நுண்ணியனாகவும் மிகவும் பெரியவனாக அனைத்து இடங்களில் பரவி இருப்பவனும், பாவிகளின் பாவங்களைத் தீர்க்கும் மேலான கடவுளாகவும், உண்மையான மெய்ப் பொருளாகவும் நிற்பவன் இறைவன். அவர் கடல் வண்ணத் திருமேனி கொண்டவளும் காவியங்கண்ணாள் என்ற திருநாமத்துடன் இந்த தலத்தில் உறைபவளும் ஆகிய தேவியைத் தனது உடலில் ஒரு பாகத்தில் வைத்துள்ளார். அத்தகைய பெருமான் தான் திருப்பயற்றூரில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஆவியாய் அவியுமாகி அருக்கமாய்ப் பெருக்கமாகிப்

பாவியர் பாவம் தீர்க்கும் பரமனாய்ப் பிரமனாகிக்

காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணமாகி நின்ற

தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே

இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.35.1) அப்பர் பிரான் பெருமானை பரமனார் என்று அழைக்கின்றார். இதழ்கள் ஒன்றின் மேல் ஒன்று உள்ள தாமரை மலரை ஏடுடைக் கமலம் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தின் பாடலில் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பாடு=பக்கம், அருகில்; பாடுடைத் தையல்=உடலின் ஒரு பாகத்தில் அமர்ந்துள்ள பார்வதி தேவி; கிடங்கு=அகழி; கைதை=தாழை மலர் தோடு= மடல்கள்: இந்த பாடலில் தலத்தில் அகழி இருந்ததாகவும், அகழியில் தாமரைக் கொடிகள் இருந்ததாகவும் அப்பர் பிரான் கூறுகின்றார். தாமரைக் கொடியின் தண்டுகள் ஒன்றுக்கொன்று பின்னிக் கொண்டிருக்கும் நிலையில், கொடிகளில் சிக்கிக் கொள்ளாமல் நீந்திச் செல்வது மிகவும் கடினமான செயல் என்பதால், அகழியில் இருந்த தாமரைக் கொடிகள் வேலியாக அமைந்த நகரம் இடைமருது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பரமன்=அனைவர்க்கும் மேலானவர்; சுடுகாட்டில் உள்ள பிணங்களின் சாம்பலை பூசியவராக, தனது கையில் உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரமனின் கபாலத்தை ஏந்தியவராக, தனது உடலின் ஒரு பாகத்தில் உமையம்மையை ஏற்றவராக, பூதங்கள் சூழ இருக்கும் பெருமான், அனைவர்க்கும் உயர்ந்தவர் ஆவார். மடல்களை உடைய தாழை மலர்கள் நிறைந்ததும் அகழிகளில் குதித்து கரையேற முயலும் பகைவர்களைத் தடுக்கும் வல்லமை கொண்ட கொடிகள் கொண்ட, இதழ்கள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்காக அமைந்த தாமரை மலர்கள் நிறைந்த அகழியினை அரணாகக் கொண்டதும் ஆகிய இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் சிவபெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காடுடைச் சுடலை நீற்றர் கையில் வெண்டலையர் தையல்

பாடுடைப் பூதம் சூழப் பரமனார் மருத வைப்பில்

தோடுடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த

ஏடுடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.36) அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான், பெருமானை, பழனத்து எம் பரமனார் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் இரண்டாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. போவதோர் நெறி=உய்வினை அடைந்த உயிர்கள் சென்று சேரும் வீடுபேறு அடைவதற்கான வழிமுறை; வேவதோர் வினை=உயிர்களை துன்பத்தில் வாட்டும் வினைகள்; வெம்மை=துன்பத்தால் ஏற்படும் கொடிய வருத்தம்; அவர்கள்=ஐந்து புலன்கள்; உயிரின் விருப்பத்தை நிறைவேற்றாமல், உயிரின் கூக்குரலை பொருட்படுத்தாமல் ஐந்து பொறிகளும் தங்களது போக்கின் வழியே செயல்படுவது இங்கே குறிப்பிடப் படுகின்றது. உயிரின் விருப்பம் வீடுபேற்றினை அடைந்து என்றும் இறைவனுடன் இணைந்து அழியாத இன்பத்தில் திளைத்து நிற்பதே ஆகும். இந்த வழியில் செல்வதற்கு நாம் ஐந்து புலன்களையும் அடக்கி மனதின் கட்டுப்பாட்டுக்குள்ளே புலன்களை கொண்டு வந்து பல நற்செயல்களைச் செய்து மனம் ஒன்றுபட்டு, இறைவனை தியானிக்க வேண்டும். ஆனால் ஐந்து புலன்களும் இதற்கு ஒத்துழைக்காமல் தத்தம் வழியே உயிரினை இழுத்துச் சென்று, தீய செயல்களை புரிந்து, மேலும் பாவங்களையும் தீய வினைகளையும் சேர்க்கின்றன. எனவே தான் ஐந்து புலன்களையும் குணமிலா ஐவர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். ஐந்து புலன்களின் வழியே நாம் இயங்கினால் நாம் சேர்ப்பது பாவங்கள்; ஐந்து புலன்களை அடக்கி அவற்றை நமது உயிரின் வழியில் கொண்டு வந்தால் நாம் சேர்ப்பது புண்ணியமாகும். பக்குவம் அடைந்த உயிர்கள் சென்று சேரும் வீடுபேற்று நிலையினை அடைவதற்கு வழி வகுக்கும் சிவநெறியாக உள்ளவர் சிவபெருமான் முறுக்குண்ட சடையினை உடையவராகவும் தூயவராகவும் விளங்குகின்றார். கொடிய வினைகளில் சிக்குண்ட அடியேன், அந்த வினைகளால் ஏற்படும் துன்பங்களின் வெம்மையினால் வருந்துகின்றேன், மனம் புழுங்குகின்றேன். எனினும் அந்த வினைகளால் விளையும் துன்பங்களிலிருந்து விடுபட முடியாமல் நான் வருந்துகின்றேன். எனது உயிர் தனது விருப்பத்தை கூக்குரலிட்டு பல முறை கூறினாலும், உயிரின் குரலினை செவிமடுக்காமல், நற்குணம் ஏதும் இல்லாத ஐந்து புலன்களும் தங்களது செய்கைகளால் எனது உயிருக்கு பாவத்தையே சேமிக்கின்றன. இந்த பாவங்களை, தீர்க்கும் வல்லமை படைத்தவர் பழனம் நகரத்தில் உறையும் பரமனார் தாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

போவதோர் நெறியும் ஆனார் புரிசடைப் புனிதனார் நான்

வேவதோர் வினையில் பட்டு வெம்மை தான் விடவும் கில்லேன்

கூவல் தான் அவர்கள் கேளார் குணமிலா ஐவர் செய்யும்

பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.41.5) திருஞான சம்பந்தர், பெருமானை பரம்பரம் என்று குறிப்பிடுகின்றார். பொந்தை=ஓட்டை, இங்கே ஓட்டைகள் கொண்ட உடல் என்று பொருள் கொள்ள வேண்டும்; பொருக்கென=விரைவாக: தேறல்=தேன்; பந்தம் என்பதுஉலகப் பொருட்களுடன் நம்மை பிணிக்கும் மலங்கள்; வீடு என்பது நம்மைப் பிணிக்கும் மும்மலங்களின் கட்டிலிருந்து நாம் விடுபட்டு உண்மையானமெய்ப்பொருளை உணர்ந்தால் அடையக் கூடியது. எனவே உலகப் பொருட்களுடன் நம்மை பிணைக்கும் பந்தமும், உலகப் பொருட்களிலிருந்து விடுதலைபெற்ற பின்னர் நாம் அடையும் வீடுபேறும் மறுதலைப் பொருட்கள் என்பதை நாம் உணர வேண்டும். பந்தங்களிலிருந்து விடுபட்டால் நாம் அடைவது வீடுபேறு. ஓட்டைகள் உடைய உடலினை நிலையான பொருளாக எண்ணி, நிலையான பொருளாகிய சிவபெருமானை எண்ணாது எனது காலத்தை நான்வீணே கழித்து விட்டேன்; காலமும் வேகமாக கழிந்து விட்டது; எனது தந்தையே, தனிப் பெரும் தெய்வமே என்று உன்னை ஏத்தாது இத்தனை நாட்கள்நான் இருந்து விட்டேன்; தனு, கரண, புவன போகங்களைத் தந்து உலகப் பொருட்களுடன் நம்மை பிணைக்கும் பந்தமாகவும், அந்த பந்தத்திலிருந்துவிடுபட்டால் நாம் அடையும் வீடுபேற்று இன்பமாகவும் விளங்குபவனும் ஆகிய சிவபெருமான் சோற்றுத் துறையில் உறைகின்றான். நாம் அவனைதியானித்தால் நமது சிந்தனையில் தேன் போன்று இனிப்பான். இந்த உண்மையை அறியாது நான் எனது காலத்தை வீணாக காலத்தைக் கழித்து விட்டேன்என்று அப்பர் பிரான் தனது இளமைக் காலத்தை நினைத்து வருந்தும் பாடல்.

பொந்தையைப் பொருளா எண்ணி பொருக்கெனக் காலம் போனேன்

எந்தையே ஏகமூர்த்தி என்று நின்று ஏத்த மாட்டேன்

பந்தமாய் வீடுமாகிப் பரம்பரமாகி நின்று

சிந்தையுள் தேறல் போலும் திருச்சோற்றுத் துறையனாரே

ஆப்பாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.48.10) அப்பர் பிரான், பெருமானை, பரமர் என்று அழைக்கின்றார். திண்திறல்=உறுதியான வலிமை; சீ=ஸ்ரீ என்ற வடமொழிச் சொல் தமிழாக்கப் பட்டுள்ளது., திரு என்ற பொருளில் வந்தது. எண்திறல்=பெருமையை எண்ணி அறியும் திறமை; விண்டுதல்=நீங்குதல்: விண்திறல்=வலிமை விட்டு நீங்கும் வண்ணம்; மிகுந்த வலிமை உடைய அரக்கன் இராவணன், திருக் கயிலாய மலையின் சிறந்த பெருமையினை எண்ணி அறிந்து உணரும் திறன் இல்லாதவனாக, அந்த மலை தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி, அதனை எடுக்க முயற்சி செய்த அளவில், மலையின் மேல் அமர்ந்திருந்த அன்னை பார்வதி தேவி மலை அசைந்ததால் அச்சம் உற்றாள். அதனைக் கண்ணுற்ற பெருமான், அரக்கனது உடல் வலிமை அவனை விட்டு நீங்குமாறு, தனது கால் பெருவிரலை மலையின் மீது அழுத்தி, மலையின் கீழே அரக்கனது உடல் நசுங்கி வருத்தமுறச் செய்தார். இதனால் மிகுந்த சினம் கொண்ட அரக்கன், தான் ஏதும் செய்ய இயலாத நிலையில், தனது உடல் வருத்தத்தைத் தாங்க முடியாமல், செய்வதறியாது கதறினான், தனது நிலை குலைந்து கீழே வீழ்ந்தான். பின்னர் பண்ணுடன் இசைந்த சாம கானத்தைப் பாட, அதனைக் கேட்டு மகிழ்ந்த பரமன், அரக்கனை வருத்தத்திலிருந்து விடுவித்து மேலும் பல வரங்களையும் அரக்கனுக்கு அருளினார். இவ்வாறு பாடல் உகந்த நாதராகத் திகழும் இறைவன் ஆப்பாடி தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திண்திறல் அரக்கன் ஓடிச் சீ கயிலாயம் தன்னை

எண்திறல் இலனுமாகி எடுத்தலும் ஏழை அஞ்ச

விண்திறல் நெரிய ஊன்றி மிகக் கடுத்து அலறி வீழப்

பண்திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே

திருப்புகலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.54.7) அப்பர் பிரான் பெருமானை பரமனே என்று அழைக்கின்றார். இரண்டும் மூன்றும்=ஐம்புலன்கள்: நமது உடலின் புறத் தூய்மையை நாம் நீராடுவதன் மூலம் அடைய முடியும். நமது உள்ளம் தூய்மையாக இருக்கவேண்டும் என்றால், நமது உள்ளம் மாயைகளின் பிடிகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால், அதற்கு இறைவன் தான் உதவி புரிய வேண்டும். நமது உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுபவன் இறைவன் என்பதால் அவனை, தீர்த்தம் என்றும் தீர்த்தன் என்றும் நால்வர் பெருமானார்கள் குறிப்பிடுகின்றார்கள். இரண்டும் மூன்றும் என்பதனை, நல்வினை மற்றும் தீவினைகளையும், ஆணவம் கன்மம் மாயை எனப்படும் மும்மலங்களையும் குறிப்பிடுவதாக பொருள் கொண்டு, இருவினைகளாலும் மூன்று மலங்களாலும் செயல்படுத்தப் படும் ஐந்து பொறிகள் என்றும் விளக்கம் கூறுவதுண்டு. பொய்கைகள் நிறைந்த புகலூர் தலத்தில் உறையும் இறைவனே, எனது உடலில் உள்ள ஐந்து பொறிகளும் தங்கள் விருப்பப்படி செயல்படாமல் கட்டுப்பாட்டில் இருக்குமாறு காக்கும் வல்லமை அடியேனுக்கு இல்லை: அதற்கான கல்வியையும் நான் சான்றோர்களிடம் இருந்து பெறவில்லை. உமக்கு அடிமைத் தொண்டுகள் செய்யும் வாய்ப்பினைப் பெறாதவனாக நான் உள்ளேன்: வாய்மையும் தூய்மையும் இல்லாதவனாக காணப்படுகின்றேன்: பார்த்தனுக்கு பாசுபதம் அளித்து அருள் செய்தவனே, உன்னைப் புகழ்ந்து வழிபடும் அடியார்களைத் தூய்மை செய்பவனே, அடியேனுடைய குறைகளை பொருட்படுத்தாமல், என்னையும் தூய்மை செய்து அருளவேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

காத்திலேன் இரண்டும் மூன்றும் கல்வியேல் இல்லை என்பால்

வாய்த்திலேன் அடிமை தன்னுள் வாய்மையால் தூயேன் அல்லேன்

பார்த்தனுக்கு அருள்கள் செய்த பரமனே பரவுவார்கள்

தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப்புகலூரனீரே

பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.60.2) அப்பர் பிரான் பெருமானை, பரம யோகி என்று அழைக்கின்றார். நாதன்=தலைவன்; உலகில் உள்ள துறவிகளுக்கு எல்லாம் முன்னோடியாக திகழ்பவன் பெருமான் என்பதால் பரமயோகி என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பேதன்=ஒருவனேபல வேடங்களில் தோன்றுதல்; கூற்றாயினவாறு என்று தொடங்கும் (4.1) பதிகத்தினை பாடி, தரையில் விழுந்து புரண்டு எழுந்த மருள்நீக்கியாரை, சொல்வளம் நிறைந்த செந்தமிழ் பாடலை பாடிய உனது நாமம் திருநாவுக்கரசர் என்று ஏழுலகத்திலும் நிலைபெற்று வாழ்வாய் என்று வானில் எழுந்த குரல்மூலம் பெருமான் மிகவும் பொருத்தமாக தனக்கு பெயர் சூட்டியதை அப்பர் பிரான் இங்கே நினைவு கூர்ந்தார் போலும், அனைவர்க்கும் தலைவனாகவும், உலகில் உள்ளவர்கள் அனைவரும் எங்களது பெருமான் என்று போற்றுமாறு நிலை பெற்று நிற்கின்ற திருவடிகளை உடையவனும், ஒன்றுக்கொன்றுஒவ்வாத நிலையில் இருக்கும் பலபல வேடங்களை தரிக்கும் திறமை உடையவனும், பெருவேளூர் தலத்தினை மிகவும் விரும்பி உறைபவனும் ஆகியபெருமானை, புகழ்ந்து பாடிய சான்றோர்களின் பாடல்கள் போன்று சிறந்த பாடல்கள் இயற்றும் நாவினை உடையவனாக அடியேன் உள்ளேன் என்று அப்பர் பிரான் பெருமையுடன் சொல்லும் பாடல்.

நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற

பாதனாம் பரமயோகி பலபல திறத்தினாலும்

பேதனாய்த் தோன்றினானைப் பெருவேளூர் பேணினானை

ஓத நாவுடையனாகி உரைக்குமாறு உரைக்குற்றேனே

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.63.4) அப்பர் பிரான், பெருமானை பரமனே என்று அழைக்கின்றார். அம்பொன்=அழகிய பொன்: கொழித்து=மிகவும் அதிகமாக: பரமன்=அனைவரிலும் மேம்பட்டவன். பசும்பொன் போன்றவனே, செம்மை நிறத்துடன் பவள மலையாக காட்சி அளிப்பவனே, அனைவர்க்கும் மேம்பட்டவனே, பால் போன்ற வெண்ணீற்றினை உடலில் பூசியவனே, செம்பொன்னே, மலர் போன்ற திருவடிகளை உடையவனே, சிறப்பு மிக்க மாணிக்கக் கற்களும் அழகிய பொன்னும் திரட்டிக் கொண்டு வந்து வீழும் அருவிகள் உடைய அழகிய அண்ணாமலையில் உறைபவனே, எனக்கு பொன் போன்று அருமையான பொருளாக உள்ளவனே, அடியேன் உன்னைத் தவிர வேறு எந்த பொருளையும் நினையாமல் இருக்கின்றேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால் வெண்ணீறா

செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க

அம்பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே

என் பொனே உன்னை அல்லால் ஏது நான் நினைவிலேனே

இதே பதிகத்தின் ஏழாவது பாடலில் (4.63.7) அப்பர் பிரான் பெருமானை, பரம என்று அழைக்கின்றார். பாம்புகள் தங்களது கழுத்தில் மாணிக்கக் கற்களை வைத்துள்ளன என்றும், இரவில் இரை தேடும் போது மணியினை உமிழ்ந்து அந்த மணியின் ஒளியில் இரை தேடும் என்றும் தனது தேடல் முடிந்தவுடன் அந்த மணியினை விழுங்கிவிடும் என்று கூறுவார்கள். அத்தகைய பாம்புகள் அதிகமாக காணப்படும் மலை அண்ணாமலை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். திருக்கோயிலில் மூலவர் சன்னதியில் உள்ள நாகாபரணத்தில் ஒளி வீசும் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்டு இருப்பதை நாம் காணலாம். உரகம்=கால்கள் இன்றி மார்பினால் நகரும் பாம்பு: இங்கே அட்ட நாகங்களை குறிக்கின்றது. சூரியன், சந்திரன், ஆகாயம், பூமி, நீர், காற்று, பாதாளத்தில் உறையும் அட்ட நாகங்கள் வைத்துள்ள மணிகள், ஆகிய அனைத்திலும் ஒளி உருவமாக உறையும் இறைவனே, பாம்புகள் இரவில் இரை தேடும் சமயத்தில் வெளிச்சத்திற்காக உமிழும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வீசும் அண்ணாமலையில் உறையும் இறைவனே, உனது திருவடிகளைப் போற்றி வாழ்த்துவது அன்றி அடியேன் வேறு எவரையும் பற்றுக்கோடாக கொள்ள மாட்டேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

இரவியும் மதியும் விண்ணும் இருநிலம் புனலும் காற்றும்

உரகமார் பவளம் எட்டும் திசை ஒளி உருவமானாய்

அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே

பரவு நின் பாதம் அல்லால் பரம நான் பற்றிலேனே

திருக்கோவலூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.69.3) அப்பர் பிரான், பெருமானை, பரம என்று அழைக்கின்றார். வழி=நல்வழி: தலைப்படுதல்=நிற்றல், செல்லுதல், கூடுதல்: வைகல்=நாள்தோறும்: ஐந்து பொறிகளின் ஆளுமையிலிருந்து நாம் விடுபட்டால் மட்டும் போதாது. நமது உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு, உலகப் பொருட்கள் மீது நாம் வைத்துள்ள பாசத்தை அறவே களைந்தால் தான் இறையுணர்வில் நாட்டம் பெருகும் என்பதை உணர்த்தும் பாடல். சான்றோர்கள் குறிப்பிடும் நல்ல வழியில் சென்று, தினமும் உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்து உலகப் பொருட்களின் இழிந்த நிலையை உணர்ந்து அவற்றின் மீது வைத்துள்ள பாசத்தை ஒழித்து, மேம்பட்ட பொருளாகிய உன்னை அடியேன் புகழாமல் இருக்கின்றேன். இந்த பிறவியை இழிவு என்று கருதி, பிறவியுடன் பொருந்திய உடலினை இழிந்த பொருள் என்று கருதி, பொருத்தமான பொருளாகிய உனது நினைவுடன் வாழாமல் இருக்கின்றேன். நதியின் இரு கரைகளிலும் பல பொருட்களை அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ந்த நீரினை உடைய கோவல் வீரட்டத்தில் உறையும் இறைவனே, நீர் தான் எனது இழிவான தன்மையை மாற்றி, நல்வழிப் படுத்த வேண்டும் என்று இறைவனிடம் அப்பர் பிரான் வேண்டும் பாடல்.

வழித் தலைப் படவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்து

பழித்திலேன் பாசம் அற்றுப் பரம நான் பரவ மாட்டேன்

இழித்திலேன் பிறவி தன்னை என் நினைந்து இருக்க மாட்டேன்

கொழித்து வந்து அலைக்கும் தெண்ணீர்க் கோவல் வீரட்டனீரே

நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.70.9) அப்பர் பிரான், பெருமானை, பரமனார் என்று அழைக்கின்றார். பத்துமோர் இரட்டித் தோளான்=பத்தினைப் போன்று இரு மடங்கு தோள்களைக் கொண்டவன், இருபது தோள்களைக் கொண்ட அரக்கன் இராவணன்: பத்து என்ற சொல், பாடலின் நான்கு அடிகளிலும் வருமாறு பாடல் அமைக்கப் பட்டிருப்பதால், இறுதி அடியில் இருக்கும் பத்தர் என்ற சொல்லுக்கு பத்து குணங்களை உடைய அடியார்கள் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புற குணங்கள் என்றும் பிரிக்கின்றனர். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும். பத்து என்ற சொல்லினை பற்று என்ற சொல்லின் திரிபாகக் கருதி, சிவபெருமானிடத்தில் பற்று உடைய அடியார்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. இருபது தோள்களை உடைய அரக்கன் இராவணன், தனது பெருமையை பறை சாற்றியவாறு மிகுந்த ஆரவாரத்துடன், கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, இருபது தோள்களை உடைய அவனது உடல் வருந்துமாறு, தனது கால் விரலினை மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான். தனது தவற்றினை உணர்ந்த அரக்கன் இராவணன், தனது பத்து வாய்களாலும் இசைப் பாடல்களைப் பாட, அவனுக்கு அருள்கள் செய்தவர் சிவபெருமான். நனிபள்ளி தலத்தில் உறையும் சிவபெருமானை, சிறந்த பத்து அக குணங்களையும், பத்து புற குணங்களையும் கொண்ட அடியார்கள், புகழ்ந்து பாடுகின்றார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பத்துமோர் இரட்டித் தோளான் பாரித்து மலை எடுக்கப்

பத்துமோர் இரட்டித் தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றிப்

பத்து வாய் கீதம் பாடப் பரிந்து அவர்க்கு அருள் கொடுத்தார்

பத்தர் தாம் பரவி ஏத்தும் நனிப்பள்ளி பரமனாரே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (4.75.8) அப்பர் பிரான் பெருமானை பரமா என்று அழைக்கின்றார். அப்பர் பிரான் தனது ஆசையை வெளிப்படுத்தும் பாடல். தனது உடலை விட்டு உயிர் பிரியும் நாளில், தனக்கு அடுத்த பிறவி ஏதும் இல்லாத வண்ணம் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்பதால், இறைவன் எங்குள்ளான் என்று தான் தேடும் போது, தான் இருக்கும் இடத்தை இறைவன் தனக்கு காட்டியருள வேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டும் பாடல். நாம் தினமும் சொல்ல வேண்டிய பாடலாக பெரியோர்களால் கருதப்படும் பாடல். பங்கம்=இழிந்த எண்ணம், உலகப் பொருட்கள் மேல் வைத்துள்ள பாசம்: பரமன்=அனைவருக்கும் மேம்பட்டவன்: அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி என்பதற்கு, தரையில் உடலின் எட்டு அங்கங்களும் படுமாறு கீழே விழுந்து வணங்குதல் என்றும் பொருள் கொள்ளலாம். அனைவருக்கும் மேம்பட்ட இறைவனே, உடல் முழுதும் திருநீறு பூசப்பட்டதால் சங்கை ஒத்த வெண்ணிறமான மேனி கொண்டவனே, மண்ணுடன் கலக்கப் போகும் உடலினை புறக்கணித்து, எனது உள்ளத்தில் உன்னை பற்றிய ஆர்வத்தை வளர்த்து, உலகப் பொருட்கள் மீது கொண்டுள்ள பாசம் என்னை விட்டு அகலுமாறு நீக்கி, மனதினில் உன்னை தியானித்து, இறக்கும் தருவாயில், இறைவனே நீ எங்கு உள்ளாய் என்று நான் வினவினால், நான் இங்கே தான் இருக்கின்றேன் என்று உனது இருப்பிடத்தைக் காட்டி எனக்கு நீ அருள் புரியவேண்டும் என்று அப்பர் பிரான் வேண்டுவதாக அமைந்த பாடல்.

அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து

பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்

சங்கொத்த மேனிச் செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை

எங்குற்றாய் என்ற போது இங்குற்றேன் என் கண்டாயே

பரம் என்றால் மேலான பொருள் என்று அர்த்தம். வீடுபேற்றினை விடவும் மேலான இன்பம் தரும் பொருள் வேறேதும் இல்லை என்பதை நாம் அறிவோம். அத்தகைய உயர்ந்த பதவியை அளிக்க வல்லது இன்னம்பரான் திருவடிகள் என்று குறிப்பிடும் பாடலை (4.100.9) நாம் இங்கே காண்போம். வியன்நிலம்=அகன்ற நிலம், இயபரம்=இகபரம் என்பதன் திரிபு, இம்மை மற்றும் மறுமை; இறைவனின் திருவடிகள், பிரமன், திருமால், இந்திரன், சந்திரன், சூரியன்ஆகிய தேவர்கள் அனைவராலும் சயசய என்று மூன்று வேளைகளிலும் போற்றப் படுவன: கடல் சூழ்ந்த மண்ணுலகம், வானுலகம், மற்றும் நாகர்கள் வாழும்பாதாள உலகம் ஆகிய மூன்று உலகங்களில் உள்ளவர்க்கும் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தருவன சிவபெருமானின் திருவடிகள் ஆகும். இத்தகைய சிறப்புகள் பெற்றவை இன்னம்பரில் வீற்றிருக்கும் பெருமானின் இணை அடிகள் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அயனொடு மால் இந்திரன் சந்த்ர ஆதித்தர் அமரர் எலாம்

சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ்

வியனிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியனகர்க்கும்

இயபரம் ஆவன இன்னம்பரான் தன் இணை அடியே

தென்குரங்காடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.63.8) அப்பர் பிரான், பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். தமர்=உறவினர்; பெருமானின் தொண்டர்கள் அனைவரும் தனக்கு உறவினர் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். நாடி=நாடிச் சென்று; பெருமானின் புகழினை, அவனது அருட்செயல்களை பலரும் சொல்லக் கேட்டு, அவனை நாடிச் சென்று அவனுக்கு தொண்டர்களாக மாறி, எமக்கு உறவினராக இருக்கும் அடியார்களே, இந்த நிலையை நினைத்து மகிழ்ந்து கூத்தாடுவீராக; அவன் பால் மிகுதியான அன்பு வைத்து அழுவீராக, அவனைப் பணிந்து பலமுறையும் தொழுவீராக, அவனது திருவடிகளின் புகழினை பாடுவீராக, அவன் தொடர்ந்து உறைகின்ற குரங்காடுதுறை தலம் சென்றடைந்து மற்ற தொண்டர்களுடன் கூடுவீராக என்று பரமனின் பக்தர்கள் செய்ய வேண்டிய செயல்களை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்

நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்

ஆடுமின் அழுமின் தொழுமின் அடி

பாடுமின் பரமன் பயிலும் இடம்

கூடுமின் குரங்காடுதுறையே

கோழம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.64.9) அப்பர் பிரான், பெருமானை, பரமாம் பரஞ்சோதி என்று அழைக்கின்றார். அரவணைப் பயில்=எப்போதும் பாம்பு படுக்கையில் படுத்து கிடக்கும்; பிரமனும் திருமாலும் பரமனது திருவடிகளைப் போற்றிப் புகழ்கின்றனர் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். குரவன்=சிறந்த ஆசிரியன்; உரவன்=சிறந்த அறிவு வடிவமாக இருப்பவன்; ஒருவர் என்ற சொல், இங்கே பெருமானின் திருவடி நிழலை விட்டு நீங்கிய மனிதர்களை குறிப்பிடுகின்றது. பெருமானின் திருவடி நிழலில் ஒதுங்கி இருக்கும் அடியார்கள் பெருமானை தன்மையை புரிந்து கொள்ள முடியும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.

அரவணைப் பயில் மாலயன் வந்தடி

பரவனைப் பரமாம் பரஞ்சோதியைக்

குரவனைக் குரவார் பொழிற் கோழம்பத்து

உரவனை ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே

பெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்கினால் மிகவும் உயர்ந்த ஆனந்தத்தை அடையலாம் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடலை (5.88.1) இங்கே சிந்திப்பது மிகவும் பொருத்தமாகும். இறைவனின் திருவடிகளை வாழ்த்தி வணங்கினால் தவம் பெருகும் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இதன் மூலம் இறைவனின் திருவடிகளை வாழ்த்தி வணங்குவதே தவம் என்று நமக்கு உணர்த்துகின்றார். தவம் என்ற சொல் இங்கே தவத்தால் ஏற்படும் நற்பயன்களைக் குறிக்கும். பேதைமை=அறியாமை; திருகல்=மாறுபட்ட எண்ணம்; மருகல் எனப்படும் தலத்தில் உறையும் இறைவனின் திருவடிகளை வாழ்த்திப் பாடி வணங்கினால், தவம் செய்வதால் ஏற்படும் நல்ல பயன்கள் நமக்கு கிடைக்கும்; மேலும் நமது உயிரைப் பிணைத்துள்ள ஆணவ மலத்தினால் நமக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமை நீங்கும்: உண்மையான மெய்ப்பொருளை நாம் உணர்ந்து உலகப் பொருட்களால் நமக்கு ஏற்படும் மாயையிலிருந்து விடுபடலாம்; வேறு ஏதேனும் மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அந்த சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும்; பரம்பொருளாகிய சிவபெருமானைத் தியானம் செய்து அதன் மூலம் நமக்கு ஏற்படும் பரமானந்தத்தை, சிவானந்தத் தேனை நாம் பருகலாம்.

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்

திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்

பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்

மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (5.96.6) அப்பர் பிரான் பெருமானை, பரமா என்று அழைக்கின்றார். மால் என்ற சொல்லுக்கு ஆர்வம் என்ற பொருளும் உள்ளது. பசு என்பது இங்கே பசுவின் இனத்தைச் சார்ந்த எருதினை குறிக்கும். பெருமானின் மீது தான் வைத்துள்ள அன்பினைத் தவிர வேறெந்த பொருளின் மீதும் தான் அன்பு வைக்கவில்லை என்றும் தனக்கு வேறு எந்த பொருளும் மயக்கத்தை ஏற்படுத்தாது என்றும் உறுதியுடன் அப்பர் பிரான் கூறும் பாடல். விடப்பையினை உடைய பாம்பினை மாலையாக அணிந்தவனும், அனைவரிலும் உயர்ந்தவனும், பசுவின் இனத்தைச் சார்ந்த இடபத்தின் மேல் மை தீட்டிய கண்களை உடைய உமையம்மையோடு ஏறி அமர்பவனும், வல்லமை உடையவனும் ஆகிய பெருமானே, அடியேனுக்கு உன் பால் வைத்துள்ள ஆசையினைத் தவிர வேறு எந்த ஆசையும் இல்லை.

பைம் மாலும் அரவா பரமா பசு

மைம்மால் கண்ணியோடு ஏறு மைந்தா எனும்

அம்மால் அல்லது மற்று அடி நாயினேற்கு

எம்மாலும் இலேன் எந்தை பிரானிரே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.5.7) அப்பர் பிரான் உலகெங்கும் பரந்து நிற்கும் பெருமானை, பார் முழுதுமாய பரமா என்று அழைக்கின்றார். மண் துளங்க, விண் துளங்க=மண்ணுலகம் அசையுமாறு, விண்ணுலகம் அதிருமாறு: கண் துளங்க=கண்ணின் இமைகள் அசைய, மூடிக் கிடந்த நெற்றிக்கண் திறக்க, பண் துளங்க=பண் பொருந்த: விகிர்தன்=மற்றவரிலிருந்து மாறுபட்டவன். பசுமையான யானைத் தோல், உடலுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் அதனை போர்வையாக உடலின் மீது போர்த்துக் கொள்ள எவரும் அஞ்சுவார்கள். ஆனால் ஏனையோரிலிருந்து மாறுபட்ட சிவபெருமான், பசுமையான யானைத் தோலைத் தனது உடல் மீது போர்த்துக் கொள்வதால் அவனை, விகிர்தன் என்று அப்பர் பிரான் இங்கே அழைக்கின்றார். தான் உண்ட உணவு (நஞ்சு), உறைவிடம் (காடு), உடை (தோலாடை) அணிகலன் (பாம்பு, ஏனக் கொம்பு, ஆமையோடு), உடலில் பூசும் பொருள் (திருநீறு), நடமாடும் அரங்கு (காடு), நடனமாடும் நேரம் (இரவு), வாகனம் (எருது) என்று பல அம்சங்களில் மற்றவரிலிருந்து மாறுபட்ட சிவபெருமானை விகிர்தன், விகிர்தா என்று பல பாடல்களில் தேவார ஆசிரியர்கள் அழைத்து மகிழ்கின்றார்கள். மண்ணுலகம் அசையுமாறு கூத்தாடுவதை மகிழ்பவனே போற்றி, பெரிய கடலாகவும் பரந்த ஆகாயமாகவும் இருப்பவனே போற்றி, விண்ணுலகம் நடுங்கும்படி பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவனே போற்றி, யானையின் பசுந்தோலை அச்சம் ஏதுமின்றி உடலில் போர்த்த விகிர்தனே போற்றி, பண்கள் பொருந்துமாறு பாடல்கள் பாடுபவனே போற்றி, உலகம் முழுதும் பரவி இருக்கும் பரமனே போற்றி, நெற்றிக் கண் அசைந்து திறந்த மாத்திரத்தில் காமனை எரித்தவனே போற்றி, நீரின் ஆழத்தால் கருமை நிறம் கொண்ட கெடில நதிக்கரையில் உள்ள அதிகை நகரில் உறையும் பெருமானே, நான் உன்னை வணங்குகின்றேன், நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் விசும்பும் ஆனாய் போற்றி

விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி

பண் துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி

கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய் போற்றி கார்க் கெடிலம் கொண்ட கபாலி போற்றி

இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.16.4) அப்பர் பிரான், பெருமானை பரங்குன்றம் மேய பரமர் என்று குறிப்பிடுகின்றார். திண்குணம்=வலிமைக் குணம்; நூறி=அழித்து: வியன்=அகன்ற: இந்திரன் ஒருமுறை சிவபெருமானை புறக்கணித்து வேள்வி செய்த தருணத்தில் அந்தவேள்வியை சிவபெருமான் அழிப்பதற்காக சென்ற போது, திருமால் மேகத்தின் வடிவினைக் கொண்டு பெருமானைத் தாங்கினார் என்பது புராண வரலாறு. திண்குணத்தார் என்பதற்கு வலிமையான மனம் உடையவர் என்று பொருள் கொண்டு, பெருமானை உணர்த்தும் அடைமொழியாக கொண்டு பொருள்கூறுவதும் பொருத்தமே. சலனம் அடையாமல் உறுதியான நிலையில் நிற்கும் வல்லமை பெற்றவன் சிவபெருமான் என்று இந்த தொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது. பிற உயிர்களை அடக்கி ஆட்கொள்ளும் வல்லமை படைத்த தேவர்கள் அனைவரும், தான் இருக்கும் திசை நோக்கித் தனது திருவடிகளை வணங்கச் செய்பவர் சிவபெருமான் ஆவார். ஒருமுறை இந்திரன் சிவபெருமானை புறக்கணித்து வேள்வி செய்த போது, அகன்ற மேகத்தின் வடிவெடுத்ததிருமாலை வாகனமாகக் கொண்டு, மேகத்தின் மீது ஏறிச் சென்று, இந்திரன் செய்த வேள்வியை முற்றிலும் அழித்தவர் சிவபெருமான் ஆவார். யாழ்க்கருவியை வைத்துக் கொண்டு பண்களுடன் இசைக்கப்படும் பாடல்களும், அந்த பாடல்களுக்கு ஏற்ப ஆடப்படும் நடனங்களும் தொடர்ந்து நடைபெறும்திருப்பரங்குன்றம் என்று அழைக்கப்படும் தலத்தில் உறைபவரும், ஒப்பற்ற எட்டு குணங்களை உடையவரும், தன்னையே தியானிக்கும் எண்ணில்அடங்காத அடியார்களின் மனதினில் உறைபவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திண்குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித் திசை வணங்கச் சேவடியை வைத்தார் போலும்

விண் குணத்தார் வேள்விசிதைய நூறி வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர்போலும்

பண்குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப் பரங்குன்றம் மேய பரமர் போலும்

எண்குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே

நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.22.3) அப்பர் பிரான், பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். சிறையார் வரி வண்டு=சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள், தேனே பாடும்=தேன் போன்று இனிமையாக ரீங்காரம் செய்யும்; மறை ஆன்ற=வேதங்கள் நிறைந்த; மன்னி=நிலையாக நின்று; கறையார்=கருமை நிறம் அடர்ந்து காணப்படும்; சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள் தேன் போன்று இனிமையான குரலில் ரீங்காரம் இசைக்கும் திருமறைக்காடு தலத்தின் தலைவனும், சிவலோகத்தை தனது உலகமாக உடையவனும், வேத ஒலிகள் நிறைந்த திருவாய்மூர், கீழ்வேளூர், வலிவலம், தேவூர் ஆகிய தலங்களில் நிலை பெற்று இருப்பவனும், உத்தமனும், ஒற்றியூர் தலத்தின் மீது பற்று கொண்டு அதனை ஆளும் தலைவனாக உள்ளவனும் ஆகிய இறைவனை, அடர்ந்த கருமை நிறத்துடன் காணப்படும் கடலால் சூழப்பட்ட திருநாகைக் காரோணத்தில் நாம் எப்போதும் காணலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சிறையார் வரிவண்டு தேனே பாடும் திருமறைக்காட்டு எந்தை சிவலோகனை

மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி ஆங்கே

உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன் தன்னைக்

கறையார் கடல் புடை சூழ் அந்தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணலாமே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.39.3) அப்பர் பிரான் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். மற்று என்ற சொல் எதுகைக்காக சேர்க்கப்பட்ட பொருளற்ற அசைச் சொல்லாக இங்கே வருகின்றது. தனி=ஒப்பற்ற; வேறு எவரும் நெற்றியில் கண் கொண்டவராக இல்லாததால், ஒப்பற்ற வகையில் நெற்றியில் கண் கொண்டுள்ளவன் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நேரிழை=சிறந்த நகைகளை அணிந்தவள், இங்கே பார்வதி தேவியை குறிக்கின்றது; படிறன்=வஞ்சகன்; பாம்பு வஞ்சக எண்ணம் உடையது; எதிர்பாராத சமயத்தில் கொத்தும் இயல்பினை உடையது. அத்தகைய வஞ்ச எண்ணம் கொண்ட பாம்பினையும் அடக்கி ஆள்வதால், பாம்பின் வஞ்சத்தையும் மிஞ்சிய வஞ்சம் உடையவன் பெருமான் என்று நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார். ஏற்பது இகழ்ச்சி என்பது சான்றோர் வாக்கு. ஆனால் சிவபெருமான், உலகத்தவர்களின் ஆணவம் முதலான மலங்களை பிச்சையாக ஏற்றுக் கொண்டு அவர்களை உய்விப்பதால், அவர் பிச்சை எடுப்பதை இகழ்ச்சியாக கருதக் கூடாது என்று உணர்த்தும் வண்ணம் பலி தேடும் பரமன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பரமன் என்றால் உயர்ந்தவன் என்று பொருள். தலைவர்களுக்கு எல்லாம் தலைவனாக இருப்பதால் தானே, அவனுக்கு பரமேஸ்வரன் என்று பெயர் வந்தது. ஒப்பற்ற முறையில் வேறு எவருக்கு இல்லாத வகையில் தனது நெற்றியில் கண் உடையவனும், சிறந்த நகைகளை தகுதியான முறையில் அணிந்துள்ள பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், வஞ்சனை நிறைந்த பாம்பினையும் தனது கையினில் பற்றிக் கொண்டு தனது விருப்பம் போன்று பாம்பினை ஆட்டுவிக்கும் ஆற்றல் படைத்தவனும், பல ஊர்களுக்கும் சென்று பலி ஏற்பவனும், பலி ஏற்றாலும் அனைவருக்கும் தலைவனாக இருப்பவனும், அனைவரையும் வெற்றி கொண்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் அழித்து திரிபுரத்து அரக்கர்களை வெற்றி கொண்டவனும், செழிப்புடன் விளங்கும் பிறைச் சந்திரனைத் தனது சடையில் வைத்தவனும், எந்த விதமான குற்றமும் இல்லாதவனும் ஆகிய பெருமான் மழபாடி தலத்தில் நிலையாக குடிகொண்டிருப்பதை அடியேன் கண்டேன். எனது நெஞ்சமே, நீயும் பெருமானின் திருவுருவத்தின் சிறப்புகளையும், சிறப்பான பண்புகளையும் உணர்ந்து கொள்வாயாக என்று தனது நெஞ்சத்திற்கு அறிவுரை கூறுவது போல் அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறும் பாடல்.

நெற்றித் தனிக் கண்ணுடையான் கண்டாய் நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்

பற்றிப் பாம்பாட்டும் படிறன் கண்டாய் பல்லூர் பலி தேர் பரமன் கண்டாய்

செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மாமதி சென்னி வைத்தான் கண்டாய்

மற்றொரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னு மணாளன் தானே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.52.6) அப்பர் பிரான், பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். பள்ளி கொண்டபெருமாளாக விளங்கும் திருமாலை, கண் துஞ்சும் நெடுமால் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். துஞ்சும்=தூக்கம் கொள்ளும்; பரமேட்டி=தனக்குமேலாக வேறு ஒருவரும் இல்லாதவன். பாற்கடலில் பள்ளி கொள்பவனும் கரிய திருமேனியை உடையவனும் நெடிய உருவம் எடுத்து மூன்று உலகங்களைஅளந்தவனும் ஆகிய திருமால், வக்கரனை கொல்வதற்காக வலிமையான ஆயுதம் பெற வேண்டி, குறைந்த மலருக்கு பதிலாக தனது கண்ணினை நோண்டிமலராக தனக்கு அர்ச்சனை மலராக படைத்ததைக் கண்ட பெருமான், திருமால் வெளிப்படுத்திய அன்பினுக்கு பரிசாக தான் வைத்திருந்த சக்கராயுதத்தைஅருளினான். வண்டுகள் உண்ணும் தேனை உடைய கொன்றை மலர்கள், வன்னி. ஊமத்தை மலர்கள் அணியப் பெற்ற தனது சடையினில். வானில் இருந்துமிகவும் வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியை அடக்கி மறைத்தவன் சிவபெருமான். பண் போன்று இனிய சொற்களை உடைய பார்வதிஅன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், அனைவர்க்கும் மேலான தலைவனாக விளங்குபவனும், தனக்கு மேலாக வேறு ஒருவரும்இல்லாதவனும், வெண்மை நிறத்து பிறைச் சந்திரனையும் பாம்பினையும் தனது சடையினில் ஒருங்கே வைத்துள்ளவனும் ஆகிய இறைவன் சிவபெருமான். அடர்ந்த சோலைகள் சூழ்ந்திருப்பதால் குளிர்ந்து காணப்படும் திருவீழிமிழலை தலத்தில், விண்ணுலகத்திலிருந்து திருமாலால் கொண்டுவரப் பெற்றவிமானத்தை உடைய திருக்கோயிலில் இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கண் துஞ்சும் கருநெடுமால் ஆழி வேண்டிக் கண் இடந்து சூட்டக் கண்டு அருளுவான் காண்

வண்டுண்ணும் மதுக்கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடைக் கரந்த மாதேவன் காண்

பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண்

வெண் திங்கள் அரவொடு செஞ்சடை வைத்தான் காண் விண்ணிழி தண்வீழி மிழலையானே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.53.7) அப்பர் பிரான் பெருமானை, பைந்நாகம் அரைக்கு அசைத்த பரமர் என்று குறிப்பிடுகின்றார். அணியார்= நெருக்கத்தில் இருப்பவர்; பஞ்சு அடுத்த=பஞ்சினை ஒத்த; பைந்நாகம்=படம் எடுக்கும் நாகம்; மஞ்சு=மேகம்; விரல்=விரலில் உள்ள நகத்தினை குறிக்கின்றது. பஞ்சு போன்று மென்மையானதும் வெண்மையானதும் ஆகிய நகங்களை உடைய பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவரும், படம் எடுத்தாடும் பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கட்டி தனது விருப்பம் போன்று அந்த நாகத்தை அசைத்தவரும், அனைவர்க்கும் மேலானவரும், விடத்தினை தேக்கியதால் மேகத்தைப் போன்று கருத்த மணியினை கழுத்தில் வைத்திருப்பவர் போன்று தோற்றம் அளிப்பவரும், வடகயிலை மலையைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள மணாளரும், செஞ்சடையில் வெண்பிறையை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான் திருவீழிமிழலை தலத்தில் உள்ள திருக்கோயிலில் உறைகின்றார். தங்களது ஐந்து புலன்களையும் அடக்கி ஆளும் அடியார்களுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள இறைவன் அடியேனை ஆட்கொண்டவராவார் என்று அப்பர் பிரான் மிகுந்த பெருமையுடன் உணர்த்தும் பாடல்.

பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர் போலும் பைந்நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும்

மஞ்சு அடுத்த மணிநீல கண்டர் போலும் வடகயிலை மலை உடைய மணாளர் போலும்

செஞ்சடைக் கண் வெண்பிறை கொண்டு அணிந்தார் போலும் திருவீழிமிழலை அமர் சிவனார் போலும்

அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.70.8) சுந்தரர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். இந்த பாடலிலும் பரமா என்று அழைத்த பின்னர் பரமேட்டி என்று சுந்தரர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பெருமானை கோதிலா அமுதே என்று கூறுகின்றார். அமுதுக்கும் குறை உள்ளது என்பதைத் தானே, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விடம் என்ற முதுமொழி உணர்த்துகின்றது. அந்த குறையும் இல்லாத அமுதமாக இருப்பவன் பெருமான் என்று இங்கே கூறுகின்றார். கோ=அரசன், தலைவன்; இறைவனைத் தவிர்த்து நமக்கு வேறெவரும் நிரந்தரமான உறவில்லை என்பதை சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். இதே கருத்து மணிவாசக அடிகளாரின் வாய்மொழியாக வாழாப்பத்து பதிகத்தின் முதல் பாடலில், ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் என்று வருகின்றது. இதே கருத்து அப்பர் பிரானின் திருவானைக்கா பதிகத்தின் முதல் பாடலிலும் (6.62.1) செத்தால் வந்து உதவுவார் ஒருவரில்லை என்ற தொடர் மூலம் வெளிப்படுகின்றது.

கோதிலா அருள் பெருகு கோலமே இமையோர் தொழு கோவே

பாதி மாதொரு கூறுடையானே பசுபதீ பரமா பரமேட்டி

தீதிலா மலையே திருவருள் சேர் சேவகா திருவாவடுதுறையுள்

ஆதியே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

கொட்டையூர் மற்றும் வலஞ்சுழி தலங்களின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.73.1) அப்பர் பிரான், பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். வருபொன்னி என்று பிலத்துவாரத்திலிருந்து வெளியே சுழித்து வந்த காவிரி நதி என்று தலத்துடன் இணைந்த சம்பவத்தை குறிப்பிடுவதாக சிவக்கவிமணி திருசி.கே. சுப்பிரமணியம் அவர்கள் பெரியபுராண விளக்கம் புத்தகத்தில் கூறுகின்றார். ஈசன், ஈஸ்வரன் என்றால் தலைவன் என்று பொருள், பரமேஸ்வரன்என்று தலைவர்களுக்கும் தலைவனாக பெருமானே விளங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. மாதேவன் என்று இந்த சொல் மிகவும் அழகாகமொழிபெயர்ப்பு செய்யப் பட்டுள்ளது. குருமணி=அழகான நிறம் உடைய மணி; பாடலின் நான்காவது அடியில் உள்ள கோமான் என்ற சொல்லினைஅழகமரும் என்று சொல்லுடனும் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். கோமான்=தலைவன். பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த விடத்தை தேக்கியதால்அழகிய கரிய நீல மணியின் நிறத்திற்கு மாறிய கழுத்தினை உடையவனும், கல்லால மரத்தின் நிழலின் கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும்வேதங்களின் பொருளை விளக்கியவனும், பருத்த மணிகளை உடைய பெரிய நாகங்களை அணிகலனாக பூண்டவனும், பவளங்கள் சேர்த்து வைக்கப்பட்டகுன்று போன்று சிவந்த திருமேனியுடன் பெரிய உருவத்துடன் இருப்பவனும், வலமாக சுழித்து வெளியே வந்த காவிரி நதிக்கரையில் உள்ள வலஞ்சுழிதலத்தின் இறைவனும், தேவர்களுக்குத் தலைவனாக உள்ளவனும், அடியார்களுக்கு வேண்டும் வரம் அளிக்க வல்லவனும், அழகான நிறத்துடன் காணப்படும்மணி போன்று அழகு அமர்ந்த திருவுருவத்தினை உடையவனும், கொட்டையூர் தலத்தில் கோடீச்சரம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும்தலைவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ காண்பாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்

பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய் பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்

வருமணி நீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்

குருமணி போல் அழகமரும் கொட்டையூரில் கோடீச்சரத்து உறையும் கோமான் தானே

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.81.2) அப்பர் பிரான், பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். பண்டாடு=எண்ணற்ற பழைய பிறவிகளாகத் தொடர்ந்து வரும் வினைகள்; பரலோகம்=உயர்ந்த உலகமாகிய முக்தி உலகம்; முக்தி உலகம் செல்வதற்கான வழியை தனது அடியார்களுக்கு காட்டுபவனும், அந்த வழியினை பின்பற்றும் அடியார்கள் முக்தி உலகினுக்கு அழைத்துச் செல்பவனும் ஆகிய இறைவன் என்று குறிப்பிடுகின்றார். அவுணர்=திரிபுரத்து அரக்கர்கள்; எவராலும் வெற்றி கொள்ள முடியாதவர்களாகத் திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களை மிகவும் எளிதாக வீழ்த்திய செயல், விளையாட்டாக செய்த செயலாக கருதப்பட்டு, பூப்பந்து ஆடுவது போன்று பெருமான் மிகவும் எளிதாக செய்தான் என்று சொல்லப் படுகின்றது.

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்

பண்டாடு பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்

செண்டாடி அவுணர் புரம் செற்றான் கண்டாய் திருவாரூர் திருமூலட்டானன் கண்டாய்

கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.82.2) அப்பர் பிரான், பெருமானை, பராய்த்துறை மேய பரமர் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான் வேள்விக்குடி தலத்தையும் துருத்தியுடன் இணைத்துச் சொல்வதை நாம் உணரலாம். பகற்பொழுதில் துருத்தியில் தங்கும் பெருமான், இரவினில் அருகில் உள்ள வேள்விக்குடி என்ற தலம் சென்றாங்கே உறைவதாக நம்பப்படுகின்றது. இதனால் இரண்டு தலங்களையும் இணைத்துச் சொல்வது வழக்கம். தேவர்கள் வேண்டியதால் அவர்களை காக்கும் பொருட்டு, பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்ட சிவபெருமான், அகன்ற காவிரி நதிக்கரையில் உள்ள துருத்தி மற்றும் வேள்விக்குடி தலங்களில் உறைபவர் ஆவார். அண்ணாமலையில் உறையும் அண்ணலாக விளங்கும் பெருமான், அதியரைய மங்கை தலத்திலும் அமர்ந்துள்ளார். மிகவும் அதிகமான தேனை உண்டதால் களிப்பு மிகுந்து காணப்படும் வண்டுகள் ரீங்காரம் இசைத்து பாடியும் ஆடியும் திரியும் பராய்த்துறை தலத்தில் பொருந்தி எழுந்தருளிய பரமர் சிவபெருமான் ஆவார். மணல் நிறைந்து காணப்படுவதும், கடல் தனது அலைக் கரங்களால் முத்துக்களைக் கொண்டு சேர்க்கும் கடற்கரையினை உடையதும், தெளிந்தும் குளிர்ந்தும் காணப்படும் காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள சாய்க்காடு தலத்தில், மிகுந்த விருப்பத்துடன் உறையும் சிவபெருமான், வேறு எவரிடமும் இல்லாத செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் ஆவார் என்பதே இந்த பாடல் பொழிப்புரை.

விண்ணோர் பரவ நஞ்சுண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும்

அண்ணாமலை உறையுமண்ணல் போலும் அதியரையமங்கை அமர்ந்தார்போலும்

பண்ணார் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும்

திண்ணார் புகார் முத்தலைக்கும் தெண்ணீர்த் திருச்சாய்க்காட்டு இனிதுறையும் செல்வர் தாமே

ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.88.5) அப்பர் பிரான், பரமன் என்று பெருமானை அழைக்கின்றார். ஓம்புதல் என்றால் பாதுகாத்தல் என்று பொருள். தினமும் நம்மைப் பாதுகாக்கும் இறைவன் உறையும் இடமாக விளங்குவதாலும் வியாக்ரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) வழிபட்ட திருக்கோயில் என்பதாலும் ஓமாம்புலியூர் என்ற பெயர் வந்தது என்பர். தனது தொண்டர்கள் நரகம் என்பதனை காணாவண்ணம் உதவி செய்பவன் என்று பெருமான், நம்மை பாதுகாக்கும் தன்மையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். பாங்கு=நன்மை. எல்லாவற்றையும் அழிக்கும் திறன் கொண்ட அக்னி, பலராலும் இகழப் பட்டதால் மனம் வருந்திய அக்னி தேவன், இறைவனை வழிபட்டு, அடுத்தவர்கள் தன்னை இகழாத நிலையினைப் பெற்றான் என்று புராணங்கள் கூறுகின்றன. பல தலங்களில் இறைவனின் திருநாமம் அக்னீஸ்வரர் என்று உள்ள நிலை, அக்னி வழிபட்டதையும் அவன் அடைந்த நன்மையையும் நமக்கு உணர்த்துகின்றன. தான் இதற்கு முன்னம் செய்த நற்செயல்களின் பயனாக இறைவனை வணங்கும் பேற்றினை பெற்றதால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்ட, அழகிய வடிவினை உடைய அக்னித் தேவன் மேல் இரக்கம் கொண்ட சிவபெருமான் அவனுக்கு அருள்கள் பல புரிந்தார். மேலும் சிவபெருமான், தன்னைத் தொடர்ந்து வழிபடும் தொண்டர்கள், நரகத்தில் சென்று இடர் படாத வண்ணம், அவர்கள் நரகத்தைக் காண்பதையே தவிர்த்து அருள் புரியும் கருணை உள்ளம் கொண்டவர் ஆவார். அத்தகைய இறைவன், ஓங்கி உயர்ந்த மதில்களால் சூழப்பட்டதும், அழகு மிகுந்து காணப்படுவதும், உயர்ந்த புகழுடைய அந்தணர்கள் புகழ், உலகத்தவர்க்கு நன்மை பயக்கும் வகையில் வழிபாடுகளைச் செய்து வரும் நகரமாகிய ஓமாம்புலியூர் என்ற தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன் என்று தனது கடந்த கால வாழ்க்கையை குறிப்பிட்டு அப்பர் பிரான் வருத்தம் தெரிவிக்கும் பாடல்.

பாங்குடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை

பாங்கிலா நரகு அதனைத் தொண்டரானார் பாராத வகை பண்ண வல்லான் தன்னை

ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும்

தீங்கில் திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

திருப்பரங்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.2.11) சுந்தரர், தேவாரப் பாடல்களை பாடும் அடியார்கள் பரமனின் திருவடி நிழலில் குடியிருப்பார்கள் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் பெருமானின் திருக்கோலத்தை அஞ்சத்தக்க திருக்கோலம் என்று குறிப்பிடும் சுந்தரர், அதன் காரணமாக தான் அவருக்கு ஆட்படுவதற்கு அஞ்சுவோம் என்று சொல்கிறார். பாம்பினை அணிகலனாக அணிந்த தன்மை, கோவணமும் தோலாடையும் தரித்தல், மயானத்தை இழிவாக கருதாமல் சுடுகாட்டினில் உறைதல், கங்காளராக பிணத்தை சுமத்தல், நஞ்சு உட்கொள்ளல், அனைத்து உலகங்களையும் கடந்து தனியே இருத்தல், நல்லன மற்றும் தீயவை என்ன என்பதை அறியாத பூதங்கள் சூழ இருத்தல், மண்டையோட்டுடன் எங்கும் திரிதல், எப்போதும் பெண்ணுடன் திரிதல், எவருக்கும் இல்லாத வகையில் நெற்றியில் கண்கள் உடையவராக இருத்தல், சிங்கத்தின் தோலை போர்த்துக் கொள்ளுதல், எதிரே வந்த காமனை எரித்து அழித்தல் ஆகிய பெருமானின் தன்மைகள் தனக்கு அச்சம் ஊட்டியதாக, இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் சுந்தரர் கூறுகின்றார். சேர நாட்டு மன்னனாகிய சேரமான் பெருமாள் நாயனாருடன் சுந்தரர் மதுரை மாநகரம் சென்ற போது, அவர்கள் இருவரையும் பாண்டிய மன்னன் வரவேற்றான். மேலும் சோழ மன்னனும் அப்போது மதுரை நகரம் சென்றான். இந்த மூன்று மன்னர்களும் ஒன்றாக திருப்பரங்குன்றம் தலம் சென்ற செய்தி இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.

அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி

முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறுமோர் நான்கும் ஓர் ஒன்றினையும்

படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே

குடியாகி வானோர்க்கும் ஓர் கோவுமாகிக் குலவேந்தராய் விண் முழுது ஆள்பவரே

அஞ்சைக்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.4.6) சுந்தரர் பெருமானை, பரமா பரமேட்டி என்று அழைக்கின்றார். இந்த பாடலில் சுந்தரர், பெருமான் இடுகாட்டில் கனலில் நின்று எரியாடுவதை குறிப்பிடுகின்றார். ஊழிக்காலத்து இருள் இரவு என்று குறிப்பிடப் படுகின்றது. ஊழி முடிவினில் இடுகாட்டெரியில் நடனம் ஆடுவது எதற்காக என்றும், இறந்தவர்களின் தலையில் பலி ஏற்பது எதற்காக என்றும், பெருமானை கேள்வி கேட்கும் சுந்தரர், அந்த செயல்களால் உமக்கு பயன் ஏதும் இல்லை என்பதால், நீர் எவ்வாறு அடியார்களுக்கு பல நன்மைகளை செய்ய முடியும் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

இரவத்திடு காட்டெரி ஆடிற்றென்னே இறந்தார் தலையில் பலி கோடலென்னே

பரவித் தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்தருளாய்

உரவத்தொடு சங்கமொடு இப்பிமுத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு

அரவக்கடல் அங்கரை மேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே

பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.14) முதல் பாடலில், கோவணம் அணிந்து கொண்டு திரிவதுமன்றி, நச்சுப்பைகளை உடைய பாம்புகளை உடலின் பல இடங்களிலும் சுற்றியிருக்கும் பெருமான், பித்தரை ஒத்தவராக காணப்படுகின்றார் என்று குறிப்பிடும் சுந்தரர் அவரை பரமர் என்றும் அழைக்கின்றார். தான் வேண்டியதை சிவபெருமான் அருளாவிடினும், பெருமானைத் தவிர தனக்கு வேறு பற்றுக்கோடு ஏதும் இல்லை என்பதை சுந்தரர் உணர்த்தும் பாடல் இது. தனக்கு பெருமான், தலை, நாக்கு, நெஞ்சம் படைத்ததன் காரணம், நெஞ்சத்தில் வஞ்சனை ஏதுமின்றி, தலை சாய்த்து, வாயினால் அவனது புகழினையும் திருநாமங்களையும் சொல்லி, அவனது திருவடியில் பணிந்து வணங்கும் பொருட்டு என்று கூறுகின்றார். உவமம் என்ற சொல் உவமன் என்று திரிந்தது. உவமம் என்றால் பொய் என்று பொருள். தான் பெருமானை வழிபட்ட நிலையை தானே சொல்லிக் கொண்டால் பொய் என்று கருதப்படும். ஆனால் பெருமானே, நான் உன்னை உண்மையாக வழிபட்ட போதிலும், எனக்கு நீ அருள் புரியாமல் இருக்கலாமா என்று பெருமானை நோக்கி சுந்தரர் கேள்வி கேட்கும் பாடல். இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் பெருமானை பரமர் என்று சுந்தரர் அழைக்கின்றார்.

வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்றின்றி

உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை உரைத்தக்கால் உவமனே ஒக்கும்

பைத்த பாம்பு ஆர்த்தோர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்

பித்தரே ஒத்ததோர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார்

பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.14.07) சுந்தரர், வெண் திங்கள் சூடிய விகிர்தர் என்றும் பரமர் என்றும் பெருமானை குறிப்பிடுகின்றார். எப்போதும் உண்மையே பேசுவோர் போல் தோன்றினாலும் அவ்வப்போது அந்த நிலையிலிருந்து பிறழ்கின்ற பெருமான் என்று குறிப்பிடும் சுந்தரர், அவ்வாறு தனது தன்மையிலிருந்து பெருமான் வழுவினாலும் தான் அவரை மட்டுமே தலைவராக ஏற்றுக் கொள்வேன் என்று உணர்த்துகின்றார். தன்னை அடிமையாக ஏற்றுக் கொண்டதன் மூலம், தன்னை எப்போதும் பேணி பாதுகாப்பேன் என்று உணர்த்திய பெருமான், தான் விரும்பிய பொன்னைத் தாராத காரணத்தால் அவரை பொய்யர் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார் போலும். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் இவரலாது இல்லையோ பிரானார் என்று குறிப்பிட்டாலும், பதிகத்தின் கடைப்பாடலில் ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல என்று குறிப்பிட்டு, தான் வாயினால் பெருமானின் புகழினைச் சொல்லியும் மனதினால் நினைத்து பரமனின் திருவடிகளைப் பணிகின்ற அடியான் என்று தன்னை குறிப்பிடுகின்றர். இதே பதிகத்தின் எட்டாவது மற்றும் பத்தாவது பாடல்களிலும் பெருமானை பரமர் என்று குறிப்பிடுகின்றார்.

கையது கபாலம் காடுறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர்

மெய்யது புரிநூல் மிளிரும் புன்சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர்

பையரவல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்

மெய்யரே யொத்தோர் பொய் செய்வதாகில் இவரலாது இல்லையோ பிரானார்

திருநாட்டுத் தொகை என்ற பொது பதிகத்தின் பாடலில் (7.12.4) சுந்தரர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். தேங்கூர் மற்றும் நாங்கூர் வைப்புத் தலங்கள்; பாங்கூர்=அழகு நிறைந்த தலங்கள்; எமது தலைவனும் அனைவர்க்கும் மேலானவனும் அனைத்து ஒளிகளிலும் சிறந்தவனும் ஆகிய பெருமான், தொடர்ந்து நீங்காது உறைகின்ற தலங்கள், தேங்கூர், திருச்சிற்றம்பலம், சிராப்பள்ளி, கடம்பந்துறை, பூங்கூர், நாங்கூர் மற்றும் நறையூர் எனப்படும் அழகிய தலங்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தேங்கூரும் திருச்சிற்றம் பலமும் சிராப்பள்ளி

பாங்கூர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை

பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர்

நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர் நாட்டு நறையூரே

வேள்விக்குடி மற்றும் திருத்துருத்தி தலங்களை இணைத்துப் பாடிய பதிகத்தின் பாடலில் (7.18.10) சுந்தரர் பரமன் என்று பெருமானை குறிப்பிட்டு, பெருமானின் அடியார்களுக்கு தான், வழுவாது அடிமையாக இருப்பேன் என்று கூறுகின்றார். பண்டம் அன்றே=கடினமான காரியம் அல்ல; மிகவும் எளிதானது. கூடலர்=பகைவர்; பகைவர் அடி பணிவதால், கூடலர் மன்னன் என்று கூறுகின்றார் தேவாரப் பாடல்களைப் பாடும் அடியார்களுக்கு தான் ஆட்பட்டு அடிமையாக இருப்பேன் என்று கூறுவதன் மூலம் சுந்தரர், தேவாரப் பாடல்களின் சிறப்பினை உணர்த்துகின்றார்.

கூடலர் மன்னன் குல நாவலூர்க் கோன் நலம் தமிழைப்

பாட வல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா

நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படுமாறு சொல்லிப்

பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.23.8) சுந்தரர் பெருமானை, வேள்வி உடைத்தவன் என்றும் பரமாம் என்று கூறுகின்றார். தேவார பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில், கழிப்பாலை தலம் கடற்கரைக்கு மிகவும் அருகில் இருந்ததாக சொல்லப் படுகின்றது. அதனை உணர்த்தும் வண்ணம்,சுந்தரர் இந்த பாடலில், கடற்சாரும் கழனிக் கழிப்பாலை மேயான் என்று குறிப்பிடுகின்றார். கழி=உப்பங்கழி; அந்த திருக்கோயில் கொள்ளிடத்தின் வெள்ளத்தால் கொள்ளப் பட்ட பின்னர், அந்த திருக்கோயிலில் இருந்த மூர்த்தங்கள் தற்போது இருக்கும் இடத்தில் நிறுவப்பட்டதாக சொல்லப் படுகின்றது. கொள்ளிடத்தின் வடகரையில் இருந்த காரைமேடு என்ற பகுதியில் நாயன்மார்கள் வழிபட்ட பழைய கோயில் இருந்ததாக சொல்லப் படுகின்றது. தற்போது, சிதம்பரம் அருகே சிவபுரி என்ற இடத்தில் உள்ள நெல்வாயில் என்ற திருக்கோயிலுக்கு தெற்கில் ஒரு கோயில் எழுப்பப்பட்டு ஆங்கே இந்த மூர்த்தங்கள் வைக்கப்பட்டு வழிபடப் படுகின்றன.

படைத்தாய் ஞாலமெல்லாம் படர் புன்சடை எம் பரமா

உடைத்தாய் வேள்வி தனை உமையாளை ஓர் கூறுடையாய்

அடர்த்தாய் வல்லரக்கன் தலை பத்தொடு தோள் நெரியக்

கடற்சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே

கோடிக்கரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.32.3) சுந்தரர், பெருமானை, பத்தர் பலர் பாட இருந்த பரமா என்று அழைக்கின்றார். மக்கள் நடமாட்டம் ஏதும் இல்லாத இடத்தினில் பெருமானே, நீ எதற்காக தனியாக இருக்கின்றாய் என்று பெருமானை பார்த்து இந்த பதிகத்தின் பாடல்களில் சுந்தரர் கேள்வி கேட்கின்றார். சுற்றிலும் பத்து வீடுகள் மட்டுமே இப்போதும் இந்த கோயிலைச் சுற்றி இருப்பதை நாம் காணலாம். ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் திருக்கோயில் என்றாலும், பத்தர்கள் பலரும் இந்த தலம் சென்று பெருமானைப் பணிந்து வணங்குகின்றனர் என்று சுந்தரர் கூறுகின்றார்.

மத்தம் மலி சூழ் மறைகாடதன் தென்பால்

பத்தர் பலர் பாட இருந்த பரமா

கொத்தார் பொழில் சூழ் தரு கோடிக்குழகா

எத்தால் தனியே இருந்தாய் எம் பிரானே

ஒரு பொது பதிகத்தின் பாடலில் (7.47.6) சுந்தரர் நல்லூர் பரமா என்று இறைவனை அழைக்கின்றார். திருக்கயிலாயத்தில் பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக பணி புரிந்த போது செய்த சிறிய பிழையின் காரணமாக, நம்பி ஆரூரராக பூவுலகில் பிறக்க நேரிடுகின்றது. அப்போது, சுந்தரர் இறைவனிடம், தான் பூவுலக மாயையில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் இறைவன் ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றார். நிலவுலகில் பிறந்த பின்னர், இவை அனைத்தும் சுந்தரருக்கு மறந்து விடுகின்றது. ஆனால் இறைவன், தனது வாக்கினை நிறைவேற்றும் பொருட்டு, சுந்தரர் பால் கருணை கொண்டு, அவருக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி, அவரை திருவெண்ணெய் நல்லூர் தலத்திற்கு அழைத்துக் கொண்டு சென்று, அடிமை ஓலை காட்டி அவரை ஆட்கொண்டு அருள் புரிந்ததும், சுந்தரருக்கு அனைத்தும் நினைவுக்கு வருகின்றன. இறைவனின் கருணையை நினைத்து மனம் நெகிழ்ந்து பலவாறும் வியந்து அவரைப் புகழ்ந்து பாடுகின்றார். அதன் பின்னர், பல தலங்கள் சென்று பதிகங்கள் பாடியபோது பொன்னும் மணியும் அளித்து இறைவன் அருள் புரிந்ததை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். எனவே சுந்தரர் பெருமானை பெரிதும் விரும்பியதில் வியப்பு ஒன்றுமில்லை. தான் பெருமானை விரும்பியதை நல்லூர் நம்பான் என்ற தொடர் மூலம் சுந்தரர் இந்த பாடலில் தெரிவிக்கின்றார்.

தாங்கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே

வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே

நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே

பாங்கூர் பலி தேர் பரனே பரமா பழனப் பதியானே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.52.10) சுந்தரர், பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். சித்தர்கள் பலரும் சுந்தரர் பெருமான் பால் வைத்துள்ள அன்பின் தன்மையை உணர்ந்தவர்களாக இருந்த தன்மை இங்கே சித்தர் சித்தம் வைத்த புகழ் சிறுவன் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. பெருமிழலைக் குறும்ப நாயனார், நாளும் நம்பி ஆரூரரின் திருநாமத்தை நியமத்துடன் தியானம் செய்து பலனடைந்த தன்மை நமது நினைவுக்கு வருகின்றது. மேலும் பெரிய புராணம் பாயிரத்தில், சுந்தரர் கயிலாய மலைக்கு திரும்புவதை கவனித்த உபமன்யு முனிவர், சுந்தரர் வரும் திசையை நோக்கி தொழுது வணங்கிய செயலும் நமது நினைவுக்கு வருகின்றது. இந்த பதிகத்தின் பல பாடல்களில் பெருமானை பரமா என்று சுந்தரர் அழைக்கின்றார்.

பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய

அத்தன் ஆலங்காடன் தன் அடிமைத் திறமே அன்பாகிச்

சித்தர் சித்தம் வைத்த புகழ் சிறுவன் ஊரன் ஒண்டமிழ்கள்

பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே

திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.76.6) சுந்தரர், கரந்தை கூவிள மாலை (வில்வமாலை) நறுமணம் வீசும் கொன்றை மலர் மாலை ஆகியவற்றை சூட்டிக் கொண்டு காட்சி தருகின்றார் என்றும் பரமர் என்றும் பெருமானை குறிப்பிடுகின்றார். பாரிடம்=பூத கணங்கள்; பரந்த=மிகவும் அதிகமான; பரிசு=இயல்பு; தனது அடியார்களுடன் பிணைந்துள்ள வலிமை வாய்ந்த வினைகளையும் நீக்கி அவர்களை மலமற்றவர்களாக மாற்றி, முக்தி நிலைக்கு தகுதி படைத்தவர்களாக மாற்றுவது இறைவனது இயல்பான செயல் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். இதன் மூலம் முக்தி நிலை வேண்டும் என்று விரும்பும் எவரும் பெருமானின் அடியாராக மாறி அவரை வழிபட்டு துதித்தாலே போதும்; முக்தி நிலை தர வேண்டும் என்று இறைவனிடம் வேண்ட வேண்டிய அவசியமே இல்லாமல் அருள் புரியும் தன்மை உடையவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

கரந்தை கூவிள மாலை கடிமலர்க் கொன்றையும் சூடிப்

பரந்த பாரிடம் சூழ வருவார் நம் பரமர் தம் பரிசால்

திருந்து மாடங்கள் நீடு திகழ்தரு வாஞ்சியத்து உறையும்

மருந்தனார் அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே

வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.86.5) சுந்தரர், பெருமானை, பரமன் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின்பாடல்கள் அனைத்தினும், சுந்தரர், பெருமானை வழிபடாத மனிதர்களை இழித்து கூறுவதை நாம் காணலாம். உள்ளம் உருகித் தொழுதால் உடனாகும்தன்மை உடைய பெருமானை, பரவிப் புகழ்ந்து போற்றாத மனிதர்கள் வேறெதனைப் போற்றி பயனடைவார்கள் என்று இகழ்ச்சியாக கூறுகின்றார்.

உரம் என்னும் பொருளானை உருகில் உள் உறைவானைச்

சிரம் என்னும் கலனானைச் செங்கண் மால் விடையானை

வரம் முன்னம் அருள் செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்

பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவென்னே

திருவாசகம் பூவல்லி பதிகத்தின் பாடலில் (8.13.11) மணிவாசக அடிகளார் பெருமானை பராபரம் என்று குறிப்பிடுகின்றார். பால் உடலுக்கு வளர்ச்சியைத் தருவது; அமுதம் ஆயுளை நீட்டிக்க வல்லது என்று நம்பப் படுகின்றது; தேன் மருந்தாக பயன்பட்டு உடற்பிணியை தீர்க்க வல்லது. பெருமான் உயிருக்கு இந்த மூன்று நன்மைகளையும் செய்யும் வல்லமை வாய்ந்தவர் என்பதை உணர்த்தும் பொருட்டு, பாலும் அமுதமும் தேன் உடனாம் என்று குறிப்பிடுகின்றார். உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் உயிர்களுக்கு செய்யும் நன்மையை விடவும் அதிகமான நன்மையை செய்யும் ஆற்றல் வாய்ந்தவர் பெருமான் என்பதை பராபரமாய் என்ற தொடர் உணர்த்துகின்றது. பெருமானின் திருக்கோலம் நமது உள்ளத்தை குளிர்விக்கும் தன்மை உடையது என்று குறிப்பிடும் அடிகளார், பெருமானின் திருப்பாதங்களை உலகத்தவர் புகழ்ந்து போற்றுகின்றனர் என்று கூறுகின்றார். பெருமானின் திருப்பாதங்கள் அருள் புரியும் தன்மை உடையதாக கருதப்படுவதால், அவரது திருவடிகள் புகழப் படுகின்றன. குரை கழல்=ஒலிக்கும் கழல்கள் கொண்ட திருப்பாதங்கள்; பெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவதே நன்னெறி என்றும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.

பாலும் அமுதமும் தேன் உடனாம் பராபரமாய்க்

கோலம் குளிர்ந்து உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள்

ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே

போலும் புகழ் பாடிப் பூவல்லி கொய்யாமோ

திருவாசகம் தோணோக்கம் பதிகத்தின் பாடலில் (8.15.12) மணிவாசக அடிகளார், தங்கள் இருவரில் எவர் உயர்ந்தவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் மற்றும் திருமாலின் இடையே, உயர்ந்த நெருப்புப் பிழம்பாக தோன்றி, தானே அவர்கள் இருவரிலும் உயர்ந்தவர் என்பதை உணர்த்திய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திருமாலும் பிரமனும் செய்த வாது குறிப்பிடப் படுகின்றது. ஒரு சமயம் மேரு மலையின் வெளியே நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த திருமால் மற்றும் பிரமனின் இடையே, தங்கள் இருவரில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்தது. உலகத்தைப் படைப்பதால் தானே பெரியவன் என்று பிரமன் சொல்ல, பிரமனையும் தான் படைத்த காரணத்தால் தானே பெரியவன் என்று திருமால் சொல்ல, இருவரும் அடுத்தவரின் சொல்லை மறுக்கவே, வாதம் பல நாட்கள் தொடர்ந்தது. வேதங்கள் அவர்கள் இருவரின் முன்னே தோன்றி, சிவபெருமான் அவர்கள் இருவரிலும் பெரியவர் என்பதால்,அவர்கள் இருவரும் மேற்கொண்ட வாதம் பொருளற்றது என்றும் தேவையற்றது என்று கூறிய போதும் அவர்கள் தொடர்ந்து வாதம் செய்தனர். இந்த வாதமே இங்கே குறிப்பிடப் படுகின்றது. அப்போது அவர்களின் எதிரே பெரிய நெருப்புத் தழல் தோன்றியது. அந்த தழலின் அடியையும் முடியையும் காண்பவர் எவரோ அவரே தங்களில் உயர்ந்தவர் என்று இருவரும் ஒப்புக் கொண்டு, தழலின் அடியையும் முடியையும் நெருங்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தது வரலாறு. மாறுபட்டு தங்களுக்குள் வாதம் செய்த தகவல் திருவாசகம் பதிகத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் இங்கே காணலாம்.. இறந்து என்றால் கடந்து என்று பொருள். அளவு கடந்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப் பட்டுள்ளது. அவர்கள் இருவரினும் மேலான ஒருவனாக சிவபெருமான் இருக்கையில், யார் பெரியவன் என்று அவர்கள் செய்த வாதம் அறியாமையால் ஏற்பட்டது என்பதை உணர்த்த, இருவரும் தம் பேதமையால் பரமம் யாம் பரம் என்று பதைபதைத்தனர் என்று அடிகளார் கூறுகின்றார்.

பிரமன் அரி என்று இருவரும் தம் பேதைமையால்

பரமம் யாம் பரம் என்று அவர்கள் பதைப்பொடுங்க

அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

திருவாசகம் புணர்ச்சிப் பத்து பதிகத்தின் பாடலில் (8.27.10) மணிவாசக அடிகளார், பரமா என்று பெருமானை அழைக்கின்றார். கரப்பாய் என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்பவன் பெருமான் என்று உணர்த்துகின்றார். விசும்பு=விண்ணுலகம்; கண்ணார்=பெருமை படைத்த விண்ணுலகம்; அனைத்து தேவர்களுக்கும் மூத்தவனாக இருக்கும் பெருமான், என்றும் அழியாதவனாக, மூப்பு அடையாதவனாக, இளமையுடன் இருக்கின்றார் என்றும் கூறுகின்றார். மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய. மூவர்க்கும் முதல்வனாக பெருமான் இருக்கும் தன்மையும் இங்கே சொல்லப் பட்டுள்ளது. திருப்பெருந்துறையில் அந்தணர் வேடம் தாங்கி பெருமான் மணிவாசகரை ஆட்கொண்ட செயல், பார்ப்பானே என்று பெருமானை அழைப்பதன் மூலம் அடிகளாரால் உணர்த்தப் படுகின்றது. பொல்லா மணி=செதுக்கப் படாத மாணிக்கம்; போது=அன்றலர்ந்த மலர்; பூ=பொலிவு மிகுந்த; பெருமானின் ஒளியுடன் பொலியும் புதிய மலர்கள் போன்ற திருவடிகளை தான் அடைவது எந்நாளோ என்று தான் ஏங்குவதை அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

காப்பாய் படைப்பாய் கரப்பாய்முழுதும் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்

மூப்பாய் மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட

பார்ப்பானே எம் பரமா என்று பாடிப்பாடிப் பணிந்து பாதப்

பூப்போது அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே

திருவாசகம் திருவார்த்தை பதிகத்தின் பாடலில் (8.43.5) மணிவாசக அடிகளார் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். இலங்கை மன்னன் இராவணனின் மனைவி மண்டோதரிக்கு இறைவன் அருள் புரிந்த செய்கை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. இதே செய்தி குயிற்பத்து பதிகத்தின் இரண்டாவது பாடலிலும் சொல்லப் பட்டுள்ளது. மேலும் கருணைக் கடலாக விளங்கும் பெருமான் தனது அடியார்களின் பாசக் கட்டுகளை அறுத்து எறிகின்றான் என்றும் கூறுகின்றார்.

வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த மாகருணைக் கடலாய் அடியார்

பந்தனை விண்டற நல்கும் எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்

உந்து திரைக்கடலைக் கடந்து அன்று ஓங்கு மதில் இலங்கை அதனில்

பந்தணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே

திருவாசகம் திருப்படையாட்சி பதிகத்தின் பாடலில் (8.49.3) மணிவாசக அடிகளார் பெருமானை, பரமா என்று அழைக்கின்றார். இந்த பாடலில் அடிகளார், ஈசன் நம் முன்னே எழுந்தருளினால் நம்மிடம் ஏற்படும் பல மாற்றங்களை உணர்த்தும் அடிகளார், இந்திர ஞாலம் போன்று இன்பத்தை நம்மிடை தோற்றுவித்து உடனே அந்த இன்பங்களை அழித்து, துன்பங்களை மிகுதியாக அளிக்கும் பிறவித் துன்பம் ஒழிந்து போகும் என்று கூறுகின்றார். பொதுவாக நடைபெறாது என்று நாம் கருதும் பல செயல்கள், இறைவன் நம் முன்னே எழுந்தருளினால் நடைபெறுகின்ற அதிசயத்தை அடிகளார் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பறிந்து மறிந்திடும்=வேர் பறிக்கப்பட்டு தலைகீழாக விழுந்து விடும்; பந்த விகார குணங்கள்=ஆணவ மலத்தின் சேர்க்கையால் உயிர்கள் இறைவனை நாடும் தன்மைக்கு இடையூறாக இருக்கும் அறியாமை; பாவனை=தியானம்; மகளிரின் சிவந்த உதடுகள், இதழ் துடிப்புகள், இளமை முதலியன நம்மில் காம உணர்ச்சியைத் தூண்டி, இறை உணர்வினை மங்கச் செய்யும் தன்மை, மடவார் இடரானவை என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது; இறைவன் நம் முன்னே எழுந்தருளினால், தொடரும் பிறவிகளுக்கு காரணமாக விளங்கும் குணங்கள், ஆணவ மலத்தின் சேர்க்கையால் நம்மிடம் ஏற்படும் மாறுதல்கள், நம்மை விட்டு விலகி விடும்; இறைவனைக் குறித்து தியானம் செய்கின்ற மனதினில் சிவானந்தம் பெருகும்; எல்லா அண்டங்களையும் எல்லையற்ற எல்லா உலகப் பொருள்களையும் காணும் ஆற்றல் நம்முள் விளையும்; அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகிய பரஞ்சுடரை நாம் நெருங்க முடியும்; அழகிய மகளிர்களால் நமது கவனம் சிதறாத வண்ணம் நம்மால் தொடர்ந்து இறை உணர்வில் திகழ முடியும்; நமது கண்கள் எப்போதும் அவனது திருமேனியை காணும் வண்ணம் எங்கும் சிவத்தையும் எதிலும் சிவத்தையும் காணும் பக்குவம் நம்மில் உண்டாகும்; இந்திர ஞாலம் போன்று தோன்றி மறையும் இன்பங்களை விளைவித்து பின்னர் துன்பங்களில் ஆழ்த்தும் பிறவிகள் நம்மை விட்டு விலகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே

பாவனையாய கருத்தினில் வந்த பராவமுது ஆகாதே

அந்தமிலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே

ஆதி முதற் பரமாய பரஞ்சுடர் அண்ணுவது ஆகாதே

செந்துவர் வாய் மடவார் இடரானவை சிந்திடும் ஆகாதே

சேலன கண்கள் அவன் திருமேனி திளைப்பன ஆகாதே

இந்திர ஞால இடர்ப் பிறவித் துயர் ஏகுவது ஆகாதே

என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே

தில்லைச் சிற்றம்பலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (9.8.1) கருவூர்த் தேவர், பெருமானை பரமர் என்று குறிப்பிடுகின்றார். கணம்=கூட்டம், குடுமி=தலை உச்சி; கவை நாக்கு=பிளவு பட்ட நாக்கு; கறை=நஞ்சு; அணல்=பொதுவாக தாடியை குறிக்கும், இங்கே வாயினை குறிக்கின்றது. கட்செவி=கண்கள் மேலும் அவற்றுடன் பொருந்தி இருக்கும் காது; பகு வாய்=பிளந்த வாய்; பணம்=படம்; துத்தி=பொறிகள், புள்ளிகள்; எயிறு=பல்; மொழுப்பு= உச்சி; கமுகம்=பாக்கு; பாடலின் கடை இரண்டு அடிகள், தலத்தின் நில வளத்தை குறிப்பிடுகின்றது. கூட்டமாக விரிந்த தலைகளும், அந்த தலைகளின் கண் சிவந்த இரத்தினங்களும் பிளந்த நாக்கும் விடத்தின் கறை பொருந்திய வாயும், கண்ணோடு பொருந்தி இருக்கும் செவியும் பிளந்த வாயும் படத்தின் மீது பரந்து வரிசையாக காணப்படும் புள்ளிகளும் வெள்ளைப் பற்களும் கொண்ட பாம்புகளை அணிகலனாக தனது உடலின் பல இடங்களிலும் அணிந்த பரமரின் கோயில் தில்லைச் சிற்றம்பலம் என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் மூன்றாவது, நான்காவது, ஒன்பதாவது மற்றும் பதினோராவது பாடல்களிலும் பெருமானை பரமர் என்று குறிப்பிடுகின்றார்.

கணம் விரி குடுமி செம்மணிக் கவை நாக்கு கறை அணல் கண்செவிப் பகுவாய்

பணம் விரி துத்திப் பொறி கொள் வெள்ளெயிற்றுப் பாம்பணி பரமர் தம் கோயில்

மணம் விரி தரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளரிளங் கமுகம்

துணர் நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம்பலமே

திருவாலியமுதனார் தான் அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.24.8) பெருமானை பரமன் என்று அழைக்கின்றார். ஆரவாரம் செய்த அரக்கன் இராவணனின் உடல் நொறுங்குமாறு கயிலை மலை மீது தனது கால் விரலினை ஊன்றி வருத்திய இறைவனே என்று அழைத்து வேதியர்கள் வழிபடும் தில்லைச் சிற்றம்பலத்தில், சூரியனின் கதிர்கள் போன்று ஒளி வீசும் சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட அம்பலத்தில் பவளம் போன்ற திருமேனியை உடைய பரமன் நடமாடுகிறான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலிலும் பெருமானை பரமன் என்று அழைக்கின்றார்.

அதித்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருள் என்று

துதித்து மறையோர் வணங்கும் தில்லைச் சிற்றம்பலம் தன்னுள்

உதித்த போழ்தில் இரவிக் கதிர் போல் ஒளிர் மாமணி எங்கும்

பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே

பிரமனும் திருமாலும் தங்களின் முன்னே எழுந்த தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்து நின்றதை குறிப்பிடும் திருமந்திரப் பாடலில், பெருமானை பரமன் என்று திருமூலர் அழைக்கின்றார். இந்த பாடலிலும், தானே பெரியவன் என்று இருவரும் ஒருவருக்கொருவர் வாதம் செய்தது குறிப்பிடப் படுகின்றது. பேதமை என்று திருமால் மற்றும் பிரமனது அறிவற்ற செயல் உணர்த்தப் பட்டுள்ளது.

பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்

பிரமன் மால் தங்கள் தம் பேதமையாலே

பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க

அரனடி தேடி அரற்றி நின்றாரே

திருமந்திரம் இரண்டாம் தந்திரம் அனுக்கிரகம் அதிகாரத்தின் பாடலில், திருமூலர் அனைத்து உலகங்களையும் உலகப் பொருட்களையும் படைத்து, அவற்றைத் தனது உடமையாகக் கொண்டுள்ள பெருமான், அனைத்துப் பொருட்களுக்கும் பரமாக, உயர்ந்தவனாக, தலைவனாக விளங்குகின்றான் என்று கூறுகின்றார். ஊழிக்காலம் முடிந்த பின்னர், பெருமான் உலகங்கள் அனைத்தையும் தோற்றுவித்த தன்மையை, பண்டைய நாளில் தோற்றுவித்தான் என்று கூறுகின்றார். சீவர்கள் என்ற சொல் ஜீவர்கள் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். அனைத்து வகையான உயிர்கள் என்று பொருள். அனைத்து வகையான உயிர்கள் என்று சொல்லுகையில், தேவர்களும் உள்ளடக்கியதாகவே கருதப்படும். எனினும், பொதுவாக தேவர்கள் என்ற சொல், மானிடராகிய நம்மினும் உயர்ந்தவர் என்று உணர்த்துவதால், நம்மில் சிலருக்கு, தேவர்கள் இறைவனால் படைக்கப் பட்டவரோ அன்றி தானே தோன்றியவரோ என்ற ஐயம் எழுவது இயற்கை. அந்த சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு, தேவர்களையும் படைத்தவன் பெருமான் என்று இந்த பாடலில் திருமூலர் உணர்த்துகின்றார்.

படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும்

படைத்து உடையான் பல தேவரை முன்னே

படைத்து உடையான் பல சீவரை முன்னே

படைத்து உடையான் பரமாகி நின்றானே

திருமந்திரம் மூன்றாம் தந்திரம் அட்டமாசித்தி அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். பதி=நிலைத்து வாழும் ஊர்; விதியது செய்து= அடக்கி ஆண்டு கட்டளையிடுதல்; இடது நாசி மற்றும் வலது நாசி வழியாக மூச்சுக் காற்றினை அடக்கி வழி நடத்தி பெருமானை தியானிக்கும் யோகிகளுக்கு, நிலையான இன்பம் தருகின்ற வீடுபேற்றினை காட்டி அருள் புரிபவன் சிவபெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்

துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள்

விதியது செய்கின்ற மெய் அடியார்க்குப்

பதியது காட்டும் பரமன் நின்றானே

திருமந்திரம் நான்காவது தந்திரம் பூரண சத்தி அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். சிவம் இருந்தபடி அசைவற்று இருக்கச் சக்தி ஒளிக்கொடி போல் அசைந்து மின்கொடி போல பிரிந்து தோன்றி, படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்து உலகினை இயக்குகின்றாள். சக்தி பெருமானுடன் இணைந்தும் பிரிந்தும் இயங்கும் செய்கை இங்கே சொல்லப் படுகின்றது.

பைந்தொடியாளும் பரமன் இருந்திடத்

திண்கொடி ஆகித் திகழ்தரு சோதியாம்

விண் கொடியாகி விளங்கி வருதலால்

பெண் கொடியாக நடந்தது உலகே

திருமந்திரம் நான்காவது தந்திரம் நவாக்கரி சக்கரம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பெருமானை பரமாய பரஞ்சுடர் என்று அழைக்கின்றார். நவாக்கரி சக்கரத்தின் தன்மைகளை இதே அதிகாரத்தின் முந்தைய பாடல்களில் குறிப்பிடும் திருமூலர், அந்த நவாக்கரி சக்கரத்தில், ஒப்பற்றவளாகிய தேவியை காணலாம் என்று கூறுகின்றார். அவ்வாறு தேவியைக் கண்டு களிக்கும் மனிதர்களின் முகம் தனிப் பொலிவினை, அடுத்தவர் முகந்து பார்க்கும் வண்ணம் முகப் பொலிவினை தோற்றுவிக்கும் என்றும் கூறுகின்றார். மேலும் இந்த நவாக்கரி சக்கர வழிபாடு, பெருமானையும் பெருமான் பிராட்டியை தன்னுடன் இணைத்துக் கொண்டிருக்கும் காட்சியையும் காண வழிவகுக்கும் என்றும் கூறுகின்றார். நிலைபேறு உடையாள் என்று, பிராட்டியும் பெருமானைப் போன்று அழிவற்ற தன்மை உடையவள் என்று கூறுகின்றார்.

கண்டு கொள்ளும் தனி நாயகி தன்னையும்

மொண்டு கொள்ளும் முக வச்சியமது ஆயிடும்

பண்டு கொளும் பரமாய பரஞ்சுடர்

நின்று கொளும் நிலைபேறு உடையாளையே

திருமந்திரம் ஐந்தாவது தந்திரம் சத்திநிபாதம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பெருமானை பரமன் என்று குறிப்பிடுகின்றார். இரண்டு=இடைகலை மற்றும் பிங்கலை, இடைகலை=இடது நாசி வழியாக வரும் மூச்சு; பிங்கலை=வலது நாசி வழியாக வரும் மூச்சு; குண்டலினி சக்தியை மேற்கூறிய இரண்டு நாடிகளின் வழியே செலுத்தி புருவ மத்திக்கு எடுத்துச் செல்லும் பக்குவம் வாய்ந்தோர் தீபவொளி போன்ற காட்சியை காணலாம். பழமைக்கு பழமையாக இருக்கும் இறைவனிடத்தில் ஆன்மாக்களும் மற்ற பொருட்களும் ஒடுங்குகின்றன என்று கூறுகின்றார். நின்று காண்டல்=மனம் சலியாது தொடர்ந்து தியானித்து சமாதி நிலை கைகூடல்; இருள்=அறியாமை;

கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி

பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர்

வண்டு கொண்டாடும் மலர் வார் சடை அண்ணல்

நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே

திருமந்திரம் ஆறாம் தந்திரம் சிவகுரு தரிசனம் அதிகாரத்தின் பாடலில் பரமாகிய சற்குருவாக பெருமான் இருக்கும் தன்மையும் அந்த சற்குரு உயிர்கள் பால் கருணை கொண்டு விளைவிக்கும் மாற்றத்தையும் திருமூலர் குறிப்பிடுகின்றார். மானுடச் சட்டை அணிந்து ஞானாசிரியனாக வருகின்ற பெருமான், உலகத்தவர் ஒருவர் போல் தோன்றுவார். பாசத்தை காட்டி=பாசத்தின் உண்மையான வடிவத்தை காட்டி; பாசம் என்று உலகப் பொருட்களும் உலகத்து உயிர்களும் குறிப்பிடப் படுகின்றன. பொதுவாக உயிர்கள் பாசத்தை, அதாவது உலகம் மற்றும் உலகத்துப் பொருட்களைச் சார்ந்து இருப்பதால், பாசப் பொருட்களின் உண்மையான தன்மையை முதலில் உயிர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்து கொண்டால் தான், பாசப் பொருட்கள் நம்மை இறைவனிடமிருந்து விலகிச் செல்ல வைக்கின்றது என்பதை உயிர்கள் உணர முடியும். அப்போது தானே, அந்த பாசக் கட்டிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் உயிர்கள் விரும்பும். அவ்வாறு விரும்பும் உயிர்களின் இடையே அத்தகைய விருப்பத்தை உண்டாக்கி, பாசத்தின் கட்டுகளிலிருந்து விடுவிப்பான் ஞானாசிரியன். பாசத்தின் கட்டுகளிலிருந்து விடுபட்ட உயிர், தனது உடலின் மீது கொண்டுள்ள ஆசையையும் விடுத்து, அந்நாள் வரையில் உடல் மற்றும் உடல் உறுப்புகளின் தேவையை பூர்த்தி செய்து வந்த நிலையிலிருந்து விடுபடுகின்றது. அந்த தருணத்தில், உடலின் ஆசையை நிறைவேற்றுவதில் தங்களது காலத்தை கழிக்கும் எண்ணற்ற மனிதர்கள், பக்குவம் அடைந்த உயிரினை எள்ளி நகையாடுகின்றனர். அத்தகைய நகைப்புக்கு நாணம் கொள்ளாமல், உயிர் தொடர்ந்து உடலின் தேவையை விடுத்து ஆன்மாவின் தேவையை நிறைவேற்ற முயற்சி கொள்ளும் வழியில் ஞானாசிரியன் உயிரினை வழிநடத்துவதால், ஞானாசிரியன் மேலான பரம்பொருள் ஆவான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு

நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே

கூசற்ற முத்தியில் கூட்டலால் நாட்டகத்து

ஆசற்ற சற்குரு அப் பரமாமே

திருமந்திரம் ஆறாம் தந்திரம் பக்குவன் அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பக்குவம் அடைந்த உயிர்கள் பரமனை நாடும் என்று கூறுகின்றார். அகைதல்=அறுத்தல்; உதைத்தல் செயல் திருவடியால் செய்யப்படுவது. பெருமான் உயிர்களுக்கு இரண்டு விதமாக அருள் புரிகின்றான். அறக்கருணை மற்றும் மறக்கருணை என்பன அந்த இரண்டு வழிகள். தனது திருவடியை அடியார்களின் தலையின் மீது பதித்து அருள் புரியும் பெருமான், காலனை உடைத்து நல்வழிப் படுத்தியது போன்றும் சில உயிர்களுக்கு அருள் புரிகின்றான். பெருமானின் கருணை வேண்டும் என்பதே அருளாளர்களின் குறிக்கோள். அது மறக்கருணை என்றாலும் பரவாயில்லை என்பதே அவர்களின் நோக்கம். ஏற்று வந்தெதிர் தாமரைத் தாள் உறும் கூற்றம் அன்னதோர் கொள்கை என் கொள்கையே என்ற மணிவாசக அடிகளாரின் திருவாய்மொழி நமது நினைவுக்கு வருகின்றது. எனவே உதைத்து என்ற சொல், பெருமானே மறக்கருணை புரிந்தேனும் என்னை ஆட்கொள்வாயாக என்ற வேண்டுகோளையே உணர்த்துகின்றது. அனைவர்க்கும் மேலான பரமனே, உம்மை அடைய விரும்பி அடியேன் பதைபதைத்து துடிக்கிறேன். உன்னை அடைந்த பின்னர், வேறெவரையும் நினைக்கவும் மாட்டேன் சேரவும் மாட்டேன் ஏனையோருடன் கூடுவதை முற்றிலும் அறுத்து விட்டேன். எனவே, எனது வினைகள் சிதைந்து அழியும் வண்ணம், என்னை ஏற்றுக்கொண்டு, எனது தலையின் மீதும் நெஞ்சினுள் உனது திருவடிகளை பதித்து, என்னை ஆட்கொள்ள வேண்டும் என்று பக்குவம் அடைந்த உயிர் வேண்டுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.

பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி

அகைத்து ஒழிந்தேன் இனி ஆரோடும் கூடேன்

சிதைத்து அடியேன் வினை சிந்தின தீர

உதைத்து உடையாய் உகந்து ஆண்டு அருளாயே

திருமந்திரம் ஏழாம் தந்திரம் பிட்சா விதி அதிகாரத்தின் பாடலில், திருமூலர் பெருமான் பரமாக விளங்குகின்றார் என்று கூறுகின்றார். இந்த பாடலின் பிற்பகுதி தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என்ற விளக்கம் பெரியோர்களால் அளிக்கப் படுகின்றது. பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரையும் விடவும் தானே உயர்ந்த பரம்பொருள் என்பதை உணர்த்தும் பொருட்டு, பிரமனின் மண்டையோட்டினை கையில் ஏந்திய வண்ணம் பெருமான் தாருகவனம் சென்று பிச்சை ஏற்றார் என்று திருமூலர் கூறுகின்றார்.

பிச்சையது ஏற்றான் பிரமன் தலையினில்

பிச்சையது ஏற்றான் பிரியாது அறம் செய்யப்

பிச்சையது ஏற்றான் பிரமன் சிரம் காட்டிப்

பிச்சையது எற்றான் பிரமன் பரமாகவே

திருமந்திரம் ஏழாம் தந்திரம் முப்பரம் அதிகாரத்தின் பாடலில் பரம்பரமாகிய சிவத்தின் தன்மையை திருமூலர் கூறுகின்றார். பரம்=மேலானது; பரம்பரம்=மேலானது என்று கருதப் படும் பொருட்கள் அனைத்துக்கும் மேலானது. அனைத்துப் பொருட்களுக்கும் மேலான பதியாகிய சிவத்தை, பாசம் பற்றாது; பரம்பரமாகிய சிவம் அளிப்பது, அனைத்து விதமான இன்பங்களுக்கும் மேலான சிவானந்தம். உலகத்து மாயா காரியங்களுடன் தொடர்பு கொண்டுள்ள எந்த பொருளிலும் அடைய முடியாத அந்த சிவானந்ததை குறிக்கோளாகக் கொண்டு அடைய உதவும் அறிவே உண்மையான அறிவாக கருதப்படும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பரம்பரமான பதி பாசம் பற்றாப்

பரம்பரமாகும் பரம் சிவம் மேவப்

பரம்பரமான பர சிவானந்தம்

பரம்பரமாக படைப்பது அறிவே

திருமந்திரம் எட்டாம் தந்திரம் பரலக்கணம் அதிகாரத்தின் பாடலில், பக்குவப்பட்ட உயிர்களுக்கு தன்னையே அளித்து அந்த உயிர்களும் தற்பரமாக இருக்கச் செய்பவன் பெருமான் என்று திருமூலர் கூறுகின்றார். தற்பரம்=ஆன்மாவாகிய தன்னிலும் மேலானது. முதலில் ஆன்மா தனது இயல்பினை புரிந்து கொள்ள வேண்டும். உயிருக்கு தன்னை புரிந்து கொள்ளும் ஆற்றல் இறையருளால் தான் ஏற்படும். நந்தி என்பது இங்கே பெருமானை குறிக்கும். நந்துதல் என்றால் குறைத்தல் என்று பொருள். தனது அடியார்களின் வினைகளை குன்றச் செய்து முற்றிலும் அழிக்கும் பெருமானை, திருமூலர் பல பாடல்களில் நந்தி என்று அழைக்கின்றார். அறியாத இடம்=ஜீவ போதத்தை அறியாமல் சிவ போதத்தை மட்டுமே அறியும் இடம். ஜீவபோதம்=உயிரின் தன்மை மற்றும் உலகத்துப் பொருட்களின் தன்மையை அறிய உதவும் அறிவு; சிவபோதம்=சிவத்தைப் பற்றி அறிய உதவும் அறிவு; ஒளி=ஞானம்; சிவபோதத்தால் விளைகின்ற ஞானத்தின் உதவியால், உயிர் சிவத்தை அறிந்து கொள்ள, சிவம், ஜீவனை சிவமாகவே மாற்றி விடுகிறது என்பது இந்த பாடலின் உட்கருத்து.

என்னை அறிய இசைவித்த என் நந்தி

என்னை அறிவித்து அறியாத இடத்து உய்த்து

பின்னை ஒளியில் சொருபம் புலப்பட

தன்னை அளித்தனன் தற்பரமாகவே

திருமந்திரம் எட்டாம் தந்திரம் தத்துவமசி மகா வாக்கியம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர், துரியாதீத நிலையில் உயிர் பரத்தை உணரும் என்று கூறுகின்றார். துரியத்தை அடுத்த நிலை துரியாதீதம் என்பதை துரியத்தை அடக்கிய நிலை என்று கூறுகின்றார். நனவு முதலான ஐந்து நிலைகளில் ஐந்தாவது நிலை துரியாதீதம். நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் என்று தமிழ் மொழியில் ஐந்து நிலைகளும் சொல்லப் படுகின்றன. தியானம் ஆகிய துரிய நிலை முற்றினால் விளைவது துரியாதீதம். மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பு கருத்து அறிவித்தல் என்று விநாயகர் அகவலில் உணர்த்தப் படுவது இந்த நிலை தான். துரியாதீதம் நிலையில், ஒப்பற்ற பரம்பொருளை அனுபவிக்கலாம். இந்த துரியாதீதம் நிலை, சொற்களை சுட்டிக் காட்டி அறிய முடியாத நிலை. எனவே, அதனை உணர முடியாதவர்கள் அதனை பாழ்நிலை என்று கருதுவார்கள் என்றும் திருமூலர் கூறுகின்றார்.

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை

அரிய பரம் என்பர் ஆகார் இதன்று என்னார்

உரிய பரம்பரமாம் ஒன்று உதிக்கும்

அருநிலம் என்பதை யார் அறிவாரே

திருமந்திரம் எட்டாம் தந்திரம் விசுவக்கிராசம் அதிகாரத்தின் பாடலில், ஜீவன் சிவமாக மாறும் போது பரம்பொருளாகிய பெருமான் ஜீவனைத் தன்னுள் ஒடுக்கிக் கொள்கின்றான் என்று திருமூலர் கூறுகின்றார். அது=அஞ்ஞானம்; பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை, தன்னில் ஊற்றப்பட்ட நீர்த்துளியை உள்வாங்கிக் கொள்வது போன்று, பக்குவப் பட்ட உயிரினை பரம்பொருள் தன்னுள் ஒடுக்கிக் கொள்கின்றது என்று கூறுகின்றார். முப்பாழ்= மூன்று மலங்கள்;

இரும்புண்ட நீர் என என்னை உள் வாங்கிப்

பரம்பரமான பரம் அது விட்டே

உரம் பெற முப்பாழ் ஒளியை விழுங்கி

இருந்த நந்தி இதயத்து உளானே

திருமந்திரம் ஒன்பதாவது தந்திரம் அற்புதக் கூத்து அதிகாரத்தின் பாடலில் திருமூலர் பரமன் இருக்கும் இடம் சிற்றம்பலம் என்று கூறுகின்றார். நெற்றிக்கு கீழே இரண்டு புருவங்கட்கு இடையே உள்ள வெற்றிடம், ஞானாகாசம் என்று சொல்லப்படும் இடமே, அனைத்து உயிர்களும் பற்றிக் கொள்வதற்கு மிகுந்த விருப்புடன் இயங்கும் பற்றாக இருக்கும் சிவபெருமான் நடமாடுகின்ற சிற்றம்பலம் என்பதை தான் புரிந்து கொண்டதாக திருமூலர் இங்கே கூறுகின்றார். கன்ம காண்டத்தில் மட்டும் நம்பிக்கை கொண்டவர்களாக விளங்கிய தாருகவனத்து முனிவர்கள், வேதங்களில் சொல்லப் பட்டுள்ள கொள்கையிலிருந்து விலகாமல் தங்களது மலங்களை பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு, அறம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமான் தாருகவனம் சென்றான் என்று கூறுகின்றார். இரப்போர்களுக்கு கொடுப்பதும் ஒரு வகை அறம் என்று உணர்த்தப் படுகின்றது.

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி

உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்

பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்

சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே

திருமந்திரம் ஒன்பதாவது தந்திரம் பொற்றில்லைக் கூத்து அதிகாரத்தின் பாடலில், பரன் என்று பெருமானை குறிப்பிடும் திருமூலர், நடனமாடுகின்ற பெருமானின் திருவடிகளில் பொருந்தியுள்ள கழல்களிலிருந்து எழும் ஓசைகள் நாதமாகவும் விந்துவாகவும் நிற்கின்றன என்று கூறுகின்றார்.

அம்பலம் ஆடரங்காக அதன் மீதே

எம்பரன் ஆடும் இரு தாளின் ஈரொலி

உம்பரமாம் நாதத்து ரேகையுள்

தம் பதமாய் நின்று தான் வந்து அருளுமே

திருமந்திரம் ஒன்பதாவது தந்திரம் அணைந்தோர் தன்மை அதிகாரத்து பாடலில் திருமூலர் பெருமானை பரமாதி பதி என்று கூறுகிறார். பெருமானைத் தனது உள்ளத்தில் இருத்திய படியால், தான் தனது முயற்சியால் செய்யப்படும் செயல்கள் ஒழிந்தவனாக பெருமானை முழுவதும் கண்டவனாக திகழ்கின்றேன் என்று திருமூலர் கூறுகின்றார்.

பணிந்து நின்றேன் பரமாதி பதியைத்

துணிந்து நின்றேன் இனி மற்றொன்றும் வேண்டேன்

அணிந்து நின்றேன் உடல் ஆதிப் பிரானைத்

தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் சர்வ வியாபகம் அதிகாரத்தின் பாடலில், உயிர் பற்றி நிற்கின்ற அனைத்துப் பொருட்களினும் மேலானவன் என்று திருமூலர், பெருமானை குறிப்பிடுகின்றார். மேலும் மூன்று ஒளியாக, சூரியன் சந்திரன் மற்றும் அக்னியாக பெருமான் திகழும் தன்மையும் இங்கே சொல்லப் படுகின்றது. தவ வடிவினனாகிய பெருமான், தியானிக்கப் படும் பொருளாகவும் தியானிப்பவனாகவும் இருக்கின்றான் என்றும் கூறுகின்றார்.

பற்றினுள்ளே பரமாய பரஞ்சுடர்

முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி

நெற்றியும் உள்ளே நினைவாய் நிலை தரும்

மற்று அவனாய் நின்ற மாதவன் தானே

பொழிப்புரை:

ஊர்ந்து பல இடங்களுக்கும் செல்லும் பாம்பினை ஒரே இடத்தில் பொருந்தும் வண்ணம் தனது சடையில் நிலை நிறுத்திய பெருமான், அனைவரிலும் உயர்ந்தவராகிய பரமர், உலகம் முழுதும் சென்று, வேத கீதங்களை ஓதியவாறு பல இடங்களுக்கும் சென்று, உயிர்கள் உய்யும் பொருட்டு, பலி ஏற்கின்றார். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான், நீரில் வாழ்ந்து நீரின் வழியே உணவு உட்கொள்ளும் கயல் மீன்களை, வயலில் உள்ள வாளை வரால் மீன்கள் உண்ணும் வண்ணம் நீர்வளம் நிறைந்த நிலங்களை உடைய அன்பில் ஆலந்துறை தலத்தில் பெருமான் உறைகின்றார்.

பாடல் 4:

கணை நீடெரிமால் (1.033) பாடல்கள் 4, 5, 6 (திதே 0806)

பிறையும் அரவம் உற வைத்த முடிமேல்

நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்

மறையும் பல வேதியர் ஓத ஒலி சென்று

அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

நறை=நறுமணம்; மன்னு=நிலையாக பொருத்தி; அறையும்=ஒலிக்கும்; பாம்பினைத் தனது சடையில் நிலை நிறுத்திய பெருமான் என்று முந்திய பாடலில் குறிப்பிட்ட திருஞான சம்பந்தருக்கு சந்திரனையும் அவ்வாறு நிலை நிறுத்திய தன்மை நினைவுக்கு வந்தது போலும். தனது கலைகள் அனைத்தும் அழிந்து தேய்ந்த நிலையில், புகலிடம் வேறொன்றும் இன்றி பெருமானிடம் சரணடைந்த சந்திரனுக்கு மாற்றிடம் ஏதும் இல்லை. எனினும் பாம்பும் சடையில் இருப்பதால், சந்திரனுக்கு அங்கே பொருந்தி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தும் அல்லவா. அந்த அச்சத்தை தவிர்த்து, தங்களிடையே இருந்த பகையை மறந்து இருவரும் சடையில் பொருந்தி இருக்கும் சூழ்நிலையை உருவாக்கிய பெருமானின் ஆற்றல், இங்கே பிறையும் அரவும் உற வைத்த முடி என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது.

பெருமானின் சன்னதியில் பகை உணர்ச்சிக்கு இடம் இல்லை என்பதால் சந்திரனும் பாம்பும் பெருமானின் சடையில் ஒருங்கே நிலவுகின்ற தன்மையை பல தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன, அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.13.01) திருஞானசம்பந்தர் பெருமான் தனது சடையில் பாம்பு, கங்கை நங்கை, இளம் பிறைச் சந்திரன், மற்றும் சிரிக்கும் கபாலம் ஆகியவற்றை வைத்திருப்பதாக கூறுகின்றார், ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களைக் கொண்ட பொருட்கள் ஒரே இடத்தில் கலந்து இருக்கின்றன என்பதை குறிப்பிடும் வண்ணம் விரவும் சடை என்று கூறுகின்றார். விரவும்=ஒன்றாக கலந்திருத்தல்; குரவம்=குராமலர்; அரிவை=இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட பெண்களைக் குறிக்கும் சொல். அம்பிகை என்றும் மூப்பு அடையாமல், இளமையும் அழகும் ஒரு சேர வாய்க்கப் பெற்று இருப்பதால் தேவியை அரிவை என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொரு=போருக்கு சென்ற; கயாசுரன் என்ற அரக்கன், யானை உடலைக் கொண்டவனாக இருந்தவன், சிவபெருமானுடன் போருக்குச் சென்றான். சிவபெருமானால் அவனுக்கு மரணம் நேரும் என்பதை பிரமதேவன் எடுத்துச் சொல்லியிருந்த போதும், அதனை பொருட்படுத்தாமல், தேவர்களுக்கு அடைக்கலம் தந்த காரணத்திற்காக பெருமான் மீது சினங்கொண்டு, போருக்கு சென்றதையே, பொரு வெங்கரி என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பட=இறந்து பட; உரிவை=தோல்;

குரவம் கமழ் நறுமென் குழல் அரிவை அவள் வெருவப்

பொரு வெங்கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன்

அரவும் அலை புனலும் இளமதியும் நகு தலையும்

விரவும் சடை அடிகட்கு இடம் விரிநீர் வியலூரே

பாம்பு சந்திரன் கங்கை நதி ஆகிய மூன்றும் பெருமானின் சடையில் கலந்து இருப்பது, பெருமானின் சன்னதியில் பகை உணர்ச்சிக்கு இடமேதும் இல்லை என்ற காரணத்தினால் தான். இந்த தன்மையின் மீது அப்பர் பிரான் தனது கற்பனையை ஏற்றி நயமாக கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (4.53.02)காணலாம். நங்கை=பார்வதி தேவி: மஞ்ஞை=மயில்: வேழம்=யானை: ஆகம்=உடல்: நிமிர்தல் செய்யா=நிமிர்ந்து நில்லாமல் வளைந்து காணப்படும் பிறை கொண்ட சந்திரன்: உரிவை=தோலாடை:

நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று

வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து

பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி

ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே

சடையில் சந்திரனைக் கண்ட நாகம், சந்திரனை விழுங்கக் கருதி மிகவும் வேகமாக வருகின்றது அந்த சமயத்தில், மயில் போன்ற சாயலை உடைய கங்கையை கண்டு, தன்னைக் கொத்தித் தின்ன மயில் வந்து விட்டதோ என்ற அச்சத்தில், தனது வேகத்தைத் தவிர்க்கின்றது. இதனிடையே, பாம்பினைக் கண்டு பயந்த, சந்திரன் பெருமான் அணிந்திருக்கும் யானைத் தோலின் அடியில் புகுந்து கொள்வதும், பாம்பு சென்று விட்டதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அடிக்கடி வெளியே எட்டிப் பார்ப்பதுமாக மாறிமாறி செயல்படுகின்றது. அவ்வாறு எட்டிப் பார்க்கும் பொழுது, சந்திரன் முழுமையாகத் தெரியாமல், மேகத்தின் இடையே தோன்றும் மின்னல் கீற்று போன்று காணப்படுவதால், மின்னல் என்று நினைத்து, பாம்பு அடங்கி விடுகின்றது. வானத்தில் மின்னல் தோன்றினால், மயில்கள் மிகவும் மகிழ்ந்து நடமாடும். எனவே மின்னலும் இடியும், மயில்கள் வெளியே வந்து நடமாடும் செய்கைக்கு அறிகுறி என்று கருதி பாம்பு ஒதுங்கியது என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இயல்பாக பாம்பினைக் காணும் எவரும் அச்சம் கொள்வார்கள் அல்லவா. அது போன்று உமையும் கங்கையும் அச்சம் கொண்டதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்டு இருத்தல் தான், இவர்கள் மூவரும் அடங்கிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்று நகைச்சுவையாக அப்பர் பிரான் கூறினாலும், இறைவனின் சன்னதியில் பகைமை உணர்ச்சி நீங்கப் பெற்று, கங்கை எனும் நங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவை பகையின்றி சிவபெருமானின் சடையில் உலாவும் தன்மையை தான், அவர் நமக்கு உணர்த்துகின்றார் .

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றிலும் (4.10.8), பெருமானது சடையில் உள்ள பொருட்களின் மீது தனது கற்பனையை ஏற்றி, அந்த காட்சியைக் காணும் தலைமாலை நகைக்கின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைகின்றது: சடையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள கங்கை அசைகின்றது: அந்த கங்கை நீரினில் தோய்ந்த சந்திரன் ஆடுகின்றது. அவரது தலை மாலையில் உள்ள மண்டையோடு தனது பற்களை இழந்த நிலையில் சிரிப்பது போன்று காட்சி அளிக்கின்றது. இந்த காட்சிகளைக் காணும் அப்பர் பிரானின் கற்பனை விரிகின்றது. அந்த கற்பனைக் காட்சி தான் இந்த பாடலில் விளக்கப் படுகின்றது. இந்த பாடலின் நயத்தில் தனது மனதினை பறி கொடுத்த கி.வா.ஜா. அவர்கள், தனது திருமுறை மலர்கள் புத்தகத்தில், மூன்று பக்கங்களுக்கு மேலாக ஒரு கட்டுரை இந்த பாடலுக்கு வரைந்திருக்கின்றார்.

கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுறக்

கிடந்த பாம்பு அவளையோர் மயில் என்று ஐயுறக்

கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே

கிடந்தது தான் நகு தலை கெடில வாணரே

சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைவதைக் கண்டு, அருகில் இருக்கும் கங்கை நங்கை அச்சம் அடைகின்றாள். அச்சத்தால் அவள் உடல் நெளியவே, அவளது கரிய கூந்தல் ஆடுவதைக் கண்ட பாம்பு, அவளை மயில் என்று தவறாக நினைத்து பயப்படுகின்றது. தங்களது பகைமையை அடக்கி,தன்னையும் பாம்பையும் தனது சடையில் இறைவன் ஏற்றதால் அந்நாள் வரை அச்சமின்றி சடையில் உலாவிய சந்திரன், தனது பகைவனாகிய பாம்பு அசைவதைக் கண்டு, ஒரு கால் பாம்பு தன்னை விழுங்குவதற்காக வருகின்றதோ என்று பயம் கொள்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொள்வதைக் கண்ட, தலை மாலையில் உள்ள மண்டையோடு சிரிக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்ட சூழ்நிலையை உருவாக்கி, அந்த சூழ்நிலையைக் கண்டு நகைக்கும் மண்டையோட்டினை மாலையாக அணிந்துள்ள கெடில வாணரின் தோற்றம் மிகவும் வியப்புக்கு உரியது என்பதே மேற்கண்ட அப்பர் பிரானின் பாடலின் திரண்ட கருத்து.

அப்பர் பெருமானே, பல பாடல்களில், பாம்புக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள பகையைத் தீர்த்து இருவரையும் ஆட்கொண்ட சிவபெருமான் என்று பாடியுள்ளார். அத்தகைய பாடல் (6.05.02) ஒன்று இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில், பாம்பு, சந்திரன், தண்ணீர் ஆகியவைகளுக்கு இடையே இருந்த பகையினைத் தீர்த்து ஒரே இடத்தில் வைத்த பண்பன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். வெம்மையான நஞ்சினை உடைய பாம்புக்கு, குளிர்ந்த நீர் அதன் தன்மையால் பகையாக உள்ளது. சடையில் அடைபட்டிருக்கும் கங்கை தனது அலைகளால் மோதுவதால் சந்திரனுக்கு தண்ணீர் பகையாக உள்ளது. அகலம்=மார்பு

சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி

கூம்பித் தொழுவார்கள் தம் குற்றேவலைக் குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி

பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன் வைத்த பண்பா போற்றி

ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி

வன்னி என்ற சொல்லுக்கு அக்னி என்று பொருள் கொண்டு, சுடர் விட்டெரியும் நெருப்பினை ஒத்த சடைமுடியை உடைய பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நறையுண்டெழு என்ற தொடர் நறுமணம் மிகுந்த நெய் விட்டு வளர்க்கப்படும் வேள்வித்தீ என்ற விளக்கமும் பொருத்தமானதே. மறையோர்கள் குறிப்பிடும் பாடலில் வேள்வி பற்றிய செய்தி வருவது பொருத்தம் தானே.

பொழிப்புரை:

பிறைச் சந்திரனையும் பாம்பினையும், தங்களிடையே இருந்த பகையை மறந்து ஒரே இடத்தில், தனது சடையில் பொருத்திய இறைவன், அந்த சடையின் மீது நறுமணம் கமழும் வன்னி இலைகளையும் நிலையாக பொருத்தியுள்ளார். இந்த இறைவன், வேதியர் பலரும் வேதம் ஓத, அந்த வேதவொலி எங்கும் பரவி நிற்பதும் நீர்வளம் மிகுந்ததும் ஆகிய அன்பில் ஆலந்துறை தலத்தில் உறைகின்றார்.

பாடல் 5:

கணை நீடெரிமால் (1.033) பாடல்கள் 4, 5, 6 (திதே 0806)

நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல்

கூடும் மலையாள் ஒரு பாகம் அமர்ந்தார்

மாடும் முழவம் அதிர மட மாதர்

ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

நீடும் புனல்=நீண்ட ஆறு; மிகவும் அதிகமான நீர்ப் பெருக்கினை உடையது என்பதை உணர்த்தும் பொருட்டு, நீடும் புனல் என்று கங்கை நதியினை திருஞான சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். மாடு=பக்கம்; மடமாதர்=இளம் பெண்கள்;

பொழிப்புரை:

மிகவும் நீண்டு மிகுந்த நீர்ப்பரப்பினை உடைய கங்கை நதி, தனது சடையில் பொருந்தும் வண்ணம் மறைக்கும் ஆற்றல் படைத்த பெருமான், தன்னைத் தழுவிக் கொண்ட மலைமங்கை உமை அன்னையை, தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுள்ள பெருமான், அமர்ந்து உறையும் இடமாகிய அன்பில் ஆலந்துறை, ஒலிக்கும் முழவுகளின் பின்னணியில் அழகிய இளம் பெண்கள் பல இடங்களிலும் நடமாடும் தலமாகும்.

பாடல் 6:

கணை நீடெரிமால் (1.033) பாடல்கள் 4, 5, 6 (திதே 0806)

நீறார் திருமேனியர் ஊனம் இலார் பால்

ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்

வேறார் அகிலும் மிகு சந்தனம் உந்தி

ஆறார் வயல் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

ஆர்=பொருந்திய, நீறார்=திருநீறு பொருந்திய; உம்பர்=மேலுலகில் வாழும் தேவர்கள்; வேறார்=நிலத்திலிருந்து வேறாக கருதப்படும் வண்ணம் பெயர்த்து எடுக்கப்பட்ட; கொள்ளிட ஆற்றின் நீர் வளம் கரையோரங்களில் இருக்கும் அகில் மரங்களை வேரோடு பெயர்த்து அடித்துக் கொண்டு வருகின்றது என்று கூறப்படுகின்றது. வினைகள், உயிர்கள் மீண்டும்மீண்டும் பிறந்து இறப்பதற்கு அடிகோலுவதால், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிர்கள் தப்பிச் செல்வதை தவிர்ப்பதால், வினைகள் உயிர்களின் ஊனமாக கருதப் படுகின்றன. பெருமானை வழிபட்டு, தங்களது வினைகளை முற்றிலும் நீக்கிக் கொண்ட அடியார்களை ஊனமிலார் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

அனைத்து உயிர்களுடன் பெருமான் பொருந்தி உறைவதாக பல திருமுறைப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் அவ்வாறு இறைவன் கலந்து இருப்பதை அனைவராலும் உணர முடிவதில்லை. பக்குவம் அடைந்த உயிர்கள் மட்டுமே இறைவன் தங்களின் மனதில் இருப்பதை உணர்ந்து இன்பம் அடைகின்றனர். அத்தகைய இன்பம் நாமும் அடைய வேண்டும் என்றால் மனதினில் எந்த விதமான குற்றமும் இல்லாதவர்களாக நாம் மாறவேண்டும் என்ற செய்தி இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. உள்ளம் உருகி தன்னை வழிபடும் அடியார்களின் உள்ளத்தில் அமுதமாக ஊறி அடியார்கள் பருகி ஆனந்தம் அடையும் வண்ணம் இறைவன் செயல்படுகின்றான் என்று திருஞானசம்பந்தர் கூறும் பாடல் (3.3.09) நமது நினைவுக்கு வருகின்றது. உருகிட உவகை தந்து=மனம் உருகி தனை வழிபடும் அடியார்களுக்கு, இறைவன் அத்தகைய அடியார்கள் சிவானந்தத்தில் திளைக்கும் வண்ணம் இன்பம் அளித்தல்; வயந்து=விரும்பி; ஆங்குற=திருவடிகளின் கீழே பொருந்தி இருக்கும் வண்ணம்; மன்=தலைவன், அரசன்; பொருதல்=மோதுதல்; பொருகடல்=இடைவிடாது கரையில் மோதும் அலைகள் கொண்ட கடல்; பிறங்கெரி= வெளிப்பட்டு தோன்றும் தீப்பிழம்பு; இந்த பாடலில் பிரமன் மற்றும் திருமாலின் முன்னர் தோன்றிய தீப்பிழம்பு, அளவில் பெருகி நீண்டு உயர்ந்ததை, அவனது அருள் பெருகும் தன்மைக்கு திருஞான சம்பந்தர் ஒப்பிடுகின்றார். ஒண்=சிறந்த ஒளிவீசும்;

உருகிட உவகை தந்து உடலின் உள்ளால்

பருகிடும் அமுதன பண்பினனே

பொருகடல் வண்ணனும் பூவுளானும்

பெருகிடும் அருள் எனப் பிறங்கு எரியாய்

உயர்ந்தாய் இனி நீ எனை ஒண்மலர் அடி இணைக் கீழ்

வயந்து ஆங்குற நல்கிடும் மதில் புகலிமனே

தனது அடியார்கள் பருகும் வண்ணம் இறைவன் சிவானந்தத் தேனை அளிக்கின்றார் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுவது அப்பர் பிரானின் திருமருகல் தலத்து பதிகத்தின் முதல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. பரமாய ஆனந்தம்=மேலான ஆனந்தம். சிவானந்தத்தை விடவும் இனிய ஆனந்தம் வேறேதும் இல்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். மருகல் எனப்படும் தலத்தில் உறையும் இறைவனின் திருவடிகளை வாழ்த்திப் பாடி வணங்கினால், தவம் செய்வதால் ஏற்படும் நல்ல பயன்கள் நமக்கு கிடைக்கும்; மேலும் நமது உயிரைப் பிணைத்துள்ள ஆணவ மலத்தினால் நமக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமை நீங்கும்: உண்மையான மெய்ப்பொருளை நாம் உணர்ந்து உலகப் பொருட்களால் நமக்கு ஏற்படும் மாயையிலிருந்து விடுபடலாம்; வேறு ஏதேனும் மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அந்த சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும்; பரம்பொருளாகிய சிவபெருமானைத் தியானம் செய்து அதன் மூலம் நமக்கு ஏற்படும் பரமானந்தத்தை, சிவானந்தத் தேனை நாம் பருகலாம் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை. .

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்

திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்

பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்

மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

திருவாசகத்தின் பல பாடல்களில் மணிவாசகர் தனது உள்ளத்தில் தேனாக அமுதமாக ஊறியதாக குறிப்பிடுகின்றார். தனது ஊனினை உருக்கிய பெருமான், சிவானந்தத் தேனைத் தான் பருகும் வண்ணம் பெருமான் அருள் புரிந்தார் என்று மணிவாசகர் கூறும் திருச்சதகப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. வான நாடர்கள் அறிந்து கொள்ள முடியாத பெருமானை, மற்ற நாட்டில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள முடியவில்லை என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். ஆனால் இறைவனின் கருணையால், தான் அவனை அறிந்து கொள்ள முடிந்தது என்று இதே பாடலில் உணர்த்தும் அடிகளார், இறைவனை நாம் அறிந்து கொள்ள அவனது கருணை மிகவும் அவசியம் என்பதை இங்கே உணர்த்துகின்றார். ஊன நாடகம் என்று உயிரினை அதற்கு தகுந்த உடலுடன் பொருத்தி உயிர்கள் வினைகளை அனுபவித்து கழிக்க இறைவன் வழி வகுப்பதை குறிப்பிடுகின்றார். ஞான நாடகம் என்று உள்ளத்தின் அறியாமையை ஒழித்து ஒளியை பெருக்கச் செய்தமை குறிப்பிடப் படுகின்றது.

வான நாடரும் அறிவொணாத நீ மறையில் ஈறும் முன் தொடரொணாத நீ

ஏனை நாடரும் தெரிவொணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா

ஊன நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக வைத்தவா

ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்து உடைய விச்சையே

இவ்வாறு இறைவன் விளைவிக்கும் சிவானந்தத் தேன், அழிவில்லாத ஆனந்தத்தை அளிக்கும் என்று விளக்கும் திருவாசகப் பாடலையும் நாம் இங்கே காண்போம். பிடித்த பத்து பதிகத்தின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் அடிகளார், தக்க நேரத்தில் தனது குழந்தைக்கு பாலினை நினைந்து ஊட்டும் தாயினும் பரிந்து உதவி செய்பவன் சங்கரன் என்று கூறுகின்றார். குழந்தையின் உடல் உரம் பெறுவதற்காக தாய், தனது குழந்தைக்கு காலம் தவறாமல் பால் அளித்து வளர்க்கின்றாள். அழியக் கூடிய உடலினை விடவும் அழியாத தன்மை படைத்த உயிர் முக்கியம் வாய்ந்தது அல்லவா. அதனால் தான், உயிருக்குத் தேவையான ஞானத்தைத் தரும் பெருமானை, தாயினும் சாலப் பரிந்து உதவி செய்யும் பெருமான் என்று இங்கே கூறுகின்றார். தனது உயிர் உரம் பெறுவதற்காக இறைவன் தனது உள்ளத்தில் இருந்த இருளினை அகற்றி ஞானத்தை ஏற்படுத்தி ஒளி பெருக்கியதாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். சிவபெருமான் உள்ளொளி மட்டுமா பெருக்கினான், அவரது ஊனினை உருக்கினான், உள்ளத்தில் அழிவில்லாத ஆனந்தம் ஊறி தேன் போன்று தித்திக்குமாறும் செய்தான். இவ்வாறு அருள் புரிந்த பெருமான், தான் செல்லுமிடமெல்லாம் வந்ததாக மணிவாசகர் கூறுகினார். இவ்வாறு பக்குவப் படுத்தப் பட்ட மணிவாசகரின் உள்ளம், அந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றதா என்பதை கண்காணிக்க அவருடனே திரிந்த சிவபெருமானை தான் கண்டு கொண்டு அவரை இறுகப் பிடித்து கட்டியதாக இந்த பாடலில் மணிவாசக அடிகளார் கூறுகின்றார்.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருகி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய

தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே

யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

பொழிப்புரை:

திருநீறு பொருந்திய மேனியராக காணப்படும் சிவபெருமான், உயிருக்கு உட்பகையாக விளங்கும் காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய குற்றங்கள் இல்லாதவர்களின் உள்ளங்களில் இனிய சுவையாக விளங்குகின்றார். இத்தகைய தன்மை கொண்டுள்ள பெருமான், நிலத்திலிருந்து பெயர்த்து அடித்துக் கொண்டு வரப்படும் அகில் மரங்களையும், மிகவும் அதிகமான எண்ணிக்கையில் சந்தன மரங்களையும் உடைய காவிரி நதியின் நீர் பாயும் வயல்களை உடைய அன்பில் ஆலந்துறை தலத்தினில் உறைகின்றார்.

பாடல் 7:

கணை நீடெரிமால் (1.033) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0807)

செடியார் தலையில் பலி கொண்டு இனிதுண்ட

படியார் பரமன் பரமேட்டி தன் சீரைக்

கடியார் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும்

அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

செடி=முடை நாற்றம்; பெருமான் பலியேற்கச் செல்வது, பக்குவமடைந்த ஆன்மாக்கள் தங்களது மலங்களை இறைவன் ஏந்தியிருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் என்பது பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. எனவே எவரேனும் தங்களது மலங்களை அந்த பிச்சைப் பாத்திரத்தில் இட்டால், மிகவும் மகிழ்ச்சி அடைவது சிவபெருமான் தான். இந்த செய்தி தான் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமான் வைத்திருப்பது பிச்சைப் பாத்திரம் என்பதாலும், அவர் பலி ஏற்கச் செல்கின்றார் என்று சொல்வதாலும், அடியார்கள் அந்த பாத்திரத்தில் சமர்ப்பிக்கும் ஆணவம் கன்மம் மாயை முதலான மலங்கள் உணவாக உருவகப் படுத்தப் பட்டு பெருமான் மகிழ்ச்சியுடன் உண்கின்றார் என்று சொல்லப் படுகின்றது. இந்த தன்மை திருமூலரால் ஒரு பாடலில் விளக்கப் படுகின்றது.

பரந்து உலகேழும் படைத்த பிரானை

இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்

நிரந்தரமாக நினையும் அடியார்

இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை,இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். பெருமான் பலி ஏற்பது நமக்கு அருள் புரிவதற்காக என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுவது, திருமூலரின் கருத்தினை பின்பற்றியே.

ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே

பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்

சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்

ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்

பெருமான் பலி ஏற்பது, உயிருடன் இணைந்துள்ள, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று பொருட்களை பெறுவதற்காக என்று கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.12.5) திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கடை=வாயில்; உடையான் என்று உயிர்களைத் தனது உடைமையாக கொண்டுள்ள பெருமானை திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

சடையானைத் தலை கையேந்திப் பலி தருவார் தம்

கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்

புடையே பொன் மலரும் கம்பைக் கரை ஏகம்பம்

உடையானை அல்லாது உள்காது என் உள்ளமே

இறைவனுக்கு நாம் எதனை படைக்க வேண்டும் என்பதை திருவிளையாடல் புராணத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலில் பரஞ்சோதி முனிவர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. விநாயகர் வாழ்த்தாக அமைந்த இந்த பாடலில், ஆணவமலம், கன்மம் மற்றும் உலகப் பொருட்களின் மீதுள்ள பாசம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து (பசுபோதம் எனப்படும்) சோற்றுருண்டையாக அளிக்க வேண்டும் என்று கூறுகின்றார். பதி என்பது இறைவனைக் குறிக்கும். பசு என்பது அனைத்து உயிர்களையும் பாசம் என்பது உயிர்களைப் பற்றியிருக்கும் பந்தங்களையும் குறிக்கும். உயிர் தன்னைப் பிணித்திருக்கும் பற்றுகளை அறவே ஒழித்து, தம்மை பீடித்துள்ள மூன்று மலங்களையும் நீக்கினால் தான், வினைகளை மேலும் பெருக்கிக் கொள்வதை நிறுத்த முடியும். அதனால் தான் மூன்று மலங்களை நாம் வைத்துக் கொள்ளாமல் இறைவனிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுரை கூறுகின்றார். தறுகண்= வலிமை மிக்க: தள்ளரிய=தளர்வு அடையாத அன்பு, தொடர்ந்து நிற்கும் அன்பு; பாசக் கள்ள வினை=வஞ்சகம் நிறைந்த ஆணவம், கன்மம் மாயை எனப்படும் மலங்கள்; இவ்வாறு நாம் இடும் சோற்றுருண்டையை மிகவும் விருப்பத்துடன் கடவுள் ஏற்றுக்கொண்டு நமக்கு கருணை புரிவார் என்று பரஞ்சோதி முனிவர் இந்த பாடலில் கூறுகின்றார்.

உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் என்றும் தறி நிறுவி உறுதியாகத்

தள்ளரிய அன்பென்னும் தொடர் பூட்டி இடைப்படுத்தித் தறுகண் பாசக்

கள்ள வினைப் பசுபோதக் கவளம் இடக் களித்துண்டு கருணை என்னும்

கொள் அமுதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்

பொழிப்புரை:

முடை நாற்றம் உடைய பிரமனின் தலையினைத் தனது கையில் ஏற்றவராக பலிக்கு செல்லும் பெருமான், அந்த பிச்சைப் பாத்திரத்தில் இடப்படும் ஆணவம் முதலான மலங்களை மிகுந்த விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு இன்பம் அடைகின்றான். மேற்கண்ட கருணைச் செயலால் அனைவராலும் விரும்பப் படுபவனும், அனைவரிலும் மேலானவனும் ஆகிய பெருமானின் புகழினை ஏத்தும் அடியார்கள், நறுமணம் கொண்ட மலர்களை அவனது திருப்பாதங்களில் தூவி, தொழுது வழிபடுகின்ற தலம் அன்பில் ஆலந்துறையாகும்.

பாடல் 8:

கணை நீடெரிமால் (1.033) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0807)

விடத்தார் திகழும் மிடறன் நடமாடி

படைத்தார் அரவம் விரவும் சடை ஆதி

கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர

அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

மிடறு=கழுத்து; விடம் என்ற சொல்லுக்கு, ஆலகால விடத்தால் உண்டான கருமை நிறம் கொண்ட கறை என்று பொருள் கொள்ளவேண்டும், ஆர்=பொருந்திய; கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் செயல், தனது தேர் செல்லும் வழியில் குறுக்கே நின்று கயிலை மலை தடை செய்தது என்று தவறாக எண்ணியதால் தான், என்பதை உணர்த்தும் வகையில் தேர் பற்றிய குறிப்பு இந்த பாடலில் கொடுக்கப் பட்டுள்ளது போலும்.

பொழிப்புரை:

ஆலகால விடத்தினை உட்கொண்டதை அனைவர்க்கும் உணர்த்தும் வண்ணம் எப்போதும் கருமை நிறம் கொண்ட கறையுடன் திகழும் கழுத்தினை உடைய பெருமான், என்றும் நடனம் ஆடுபவராகவும், படம் எடுத்து ஆடும் தன்மை கொண்ட பாம்பு பொருந்தி இருக்கும் சடையை உடையவராகவும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியான கடவுளாகவும் இருக்கின்றார். கொடிகள் உலாவும் தேரினைக் கொண்டவனும், இலங்கை அரக்கர் குலத்துத் தலைவனும் ஆகிய இராவணன், கயிலை மலையின் கீழே அமுக்குண்டு வருந்துமாறு, தனது கால் விரலை கயிலை மலையின் மீது அழுத்தி பின்னர் அவனுக்கு அருள் புரிந்த கருணையாளன் ஆகிய சிவபெருமான் உறையும் இடம் அன்பில் ஆலந்துறை ஆகும்.

பாடல் 9:

கணை நீடெரிமால் (1.033) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0807)

வணங்கிம் மலர் மேல் அயனும் நெடுமாலும்

பிணங்கி அறிகின்றிலர் மற்றும் பெருமை

சுணங்கும் முகத்தம் முலையாள் ஒரு பாகம்

அணங்கும் நிகழ் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

அறிகின்றலர் என்ற சொல்லினை வணங்கி மற்றும் பிணங்கி என்ற சொற்களுடன் கூட்டி பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். தங்கள் இருவரில் யார் பெரியவன் என்பதில் கருத்து வேற்றுமை கொண்டு பிணங்கி நின்ற திருமாலும் பிரமனும், நெடிய தீப்பிழம்பாக இறைவன் தங்களின் முன்னே தோன்றிய போது பெருமானை உணர்ந்து வணங்கி அடி பணியாது நின்ற தன்மையும் இங்கே கூறப்படுகின்றது. பிரமனும் திருமாலும் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு தங்களுக்குள் வாதம் செய்த தகவல் திருவாசகம் தோள்நோக்கம் பதிகத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் இங்கே காணலாம்.. இறந்து என்றால் கடந்து என்று பொருள். அளவு கடந்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப் பட்டுள்ளது.

பிரமன் அரி என்று இருவரும் தம் பேதைமையால்

பரமம் யாம் பரம் என்று அவர்கள் பதைப்பொடுங்க

அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் திருமந்திரப் பாடலிலும், தானே பெரியவன் என்று இருவரும் (பிரமன் மற்றும் திருமால்) ஒருவருக்கொருவர் வாதம் செய்தது குறிப்பிடப் படுகின்றது. பேதமை என்று அவர்களது அறிவற்ற செயல் உணர்த்தப் பட்டுள்ளது.

பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்

பிரமன் மால் தங்கள் தம் பேதமையாலே

பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க

அரனடி தேடி அரற்றி நின்றாரே

அணங்கு=தெய்வத்தன்மை பொருந்தியவள்; சுணங்கு=மகளிரின் தோல் அடையும் நிறமாற்றம்; அழகால் ஏற்படும் நிறமாற்றம் மற்றும் பிரிவாற்றாமையால் ஏற்படும் நிற மாற்றம் ஆகிய இரண்டும் சுணங்கு என்றே பொதுவாக குறிப்பிடப் படுவதால், இடத்திற்கு தகுந்தவாறு நாம் பொருள் கொள்ள வேண்டும். வனப்பினால் அழகுடன் விளங்கும் மார்பகங்கள் என்று பொருள் கொள்வது இங்கே பொருத்தமாக இருக்கும். பிரிவாற்றாமையால் பசலை பூக்கும் தன்மை உடைய மார்பகங்கள் என்று பொருள் கொண்டு, பெருமானை விட்டு பிரிந்து இருந்தால் வருந்தும் வண்ணம் பெருமான் பால் மிகுந்த அன்பு வைத்துள்ள அன்னை என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். சுணங்குதல் என்பது பெண்களின் இயற்கையான குணம். தனது தலைவனை விட்டுப் பிரிந்த தலைவி, தலைவனுடன் மீண்டும் சேரும் நாளும் தருணமும் எப்போதோ என்ற ஏக்கத்தில் பசலை பூத்த உடலுடன் இருப்பதாக பல சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பெண்களின் அந்த பொதுத் தன்மையை இறைவியின் பால் ஏற்றிச் சொல்லப்படும் மரபினை பின்பற்றி சுணங்கு முகத்தம் முலையாள் என்று கூறப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. பெருமை என்ற சொல்லினை வணங்கி என்ற சொல்லுடன் இணைத்து, பிரமனும் திருமாலும் வணங்கிய பெருமை உடைய இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும், நெடிய உருவம் கொண்ட திருமாலும், தங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்பதில் கருத்து வேறுபாடு கொண்டு பிணங்கியவர்களாக இருந்த போது, தங்கள் முன்னே சிவபெருமான் நீண்ட தழல் பிழம்பாக எழுந்ததைக் கண்டு அவரை உணராதவர்களாக அவரது பெருமையினை அறியாதவர்களாக இருந்தனர். வனப்புடன் பொலியும் நிறத்துடன் அழகிய மார்பகங்களைக் கொண்டவளும் தெய்வத் தன்மை உடையவளும் ஆகிய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவராக திகழும் பெருமை உடைய இறைவன் உறையும் இடம் அன்பில் ஆலந்துறையாகும்.

பாடல் 10:

கணை நீடெரிமால் (1.033) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0807)

தறியார் துகில் போர்த்து உழல்வார் சமண் கையர்

நெறியா உணரா நிலைக் கேடினர் நித்தல்

வெறியார் மலர் கொண்டு அடி வீழும் அவரை

அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே

விளக்கம்:

தறியார்=தறியால் நெய்யப்பட்ட; கையர்=கீழ்மைக் குணம் உடையவர்கள்; அடியார்களின் தன்மையை புரிந்து கொண்டு அவர்கள் கேளாமலே அவர்களுக்கு அருள் புரியும் கருணை உள்ளம் கொண்டவன் சிவபெருமான் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

தறியால் செய்யப்பட்ட மெல்லிய ஆடையைத் தங்களது உடலில் போர்த்துத் திரியும் புத்தர்களும், கீழ்மைக் குணம் உடையவர்களும் உண்மையான மெய்ப்பொருளை உணர்த்தும் நெறியினை அறியாதவர்களும், எப்போதும் சிவபெருமானைக் குறித்து புறம் பேசுவதால் நிலையான கேட்டிற்கு ஆளானவர்களும் ஆகிய சமணர்கள் ஆகியோர் கூறும் சொற்களைப் புறக்கணித்து, நாள்தோறும் நறுமணம் கொண்ட மலர்களைத் தூவி இறைவனின் திருப்பாதங்களில் சரண் அடையும் அடியார்களை நன்றாக அறிந்து கொண்டு, அவர்களுக்கு நன்மை புரியும் சிவபெருமான் அன்பில் ஆலந்துறை தலத்தில் வீற்றிருக்கின்றார்.

பாடல் 11:

கணை நீடெரிமால் (1.033) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (திதே 0807)

அரவார் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்

கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்

பரவார் தமிழ் பத்திசை பாட வல்லார் போய்

விரவாகுவர் வானிடை வீடு எளிதாமே

விளக்கம்:

கரத்தல்=மறைத்தல்; வஞ்சனையாக தமது எண்ணங்களை மறைத்து வழிபடும் போலிகள் போன்று இல்லாமல் உண்மையாக வழிபடும் அடியார்கள் நிறைந்த சீர்காழி நகரம் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அரவார் புனல்=பாம்பு போன்று நெளிந்தும் விரைந்தும் வரும் நீரினைக் கொண்ட ஆறு; பதிகத்தின் கடைப் பாடலில், அந்த பதிகத்தின் பத்து பாடல்களைப் பக்தியுடன் ஓதும் அடியார்கள் பெறுகின்ற பலன்களை குறிப்பிடுவது திருஞான சம்பந்தரின் பழக்கம். அவ்வாறே இந்த பாடலிலும் அத்தகைய அடியார்களுக்கு வீடுபேறு கிடைப்பது மிகவும் எளிது என்று கூறுகின்றார். பதிகத்து பாடல்கள் என்று சொல்ல வந்த திருஞானசம்பந்தர், தமிழ் பத்திசை என்று சொல்வதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த தேவாரப் பாடல்களை தமிழ் என்றே திருஞானசம்பந்தர் அழைப்பதை நாம் உணரவேண்டும். பல பாடல்களில் தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்று அவர் குறிப்பிடுவதை இங்கே நினைவு கூர்தல் பொருத்தமாகும். இந்த காரணம் பற்றியே ஔவை பிராட்டியார் (பிற்காலத்தில் வாழ்ந்தவர், ஔவையார் என்ற பெயரில் பல புலவர்கள் தமிழ் நாட்டில் இருந்தனர்). மூவர் தமிழ் என்று குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காணலாம்.

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்

மூவர் தமிழும் முனி மொழியும் கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒரு வாசகம் என்று உணர்

பொழிப்புரை:

பாம்பினைப் போன்று நெளிந்தும் வளைந்தும் விரைந்தும் ஓடி வரும் நதியினை உடைய அன்பில் ஆலந்துறை தலத்தில் வீற்றிருக்கும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, வஞ்சனையின்றி பெருமானை வழிபடும் அடியார்கள் நிறைந்த சீர்காழி நகரில் தோன்றிய ஞானசம்பந்தன், தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் பாடிய தமிழ்ப் பாடல்களை, தகுந்த இசையுடன் பொருத்தி பாடும் வல்லமை பெற்ற அடியார்கள் சொர்க்க போகத்திற்கு உரியவர்கள்; மேலும் அவர்கள் வீடுபேற்றினை மிகவும் எளிதாக அடைவார்கள்.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில், எவராலும் வெற்றி கொள்ள முடியாத திரிபுரத்து அரக்கர்களை அழித்து வெற்றி கொண்ட இறைவனின் ஆற்றல் குறிப்பிடப் படுகின்றது. அத்தகைய ஆற்றல் உடைய பெருமான் தன்னைச் சரணடையும் அடியார்களின் இடர்களைக் களைந்து இன்பம் அளிப்பவன் என்ற செய்தி இரண்டாவது பாடலில் கூறப்படுகின்றது. மேலும் இந்த பாடலில் இந்த தலத்தில் இடையறாது வேதங்கள் ஓதப்படுவதால், அந்த வேத ஒலிகளைக் கேட்கும் கிளிகள் இசை பாடுகின்றன என்று தலத்தின் சிறப்பும் உணர்த்தப் படுகின்றது. மூன்றாவது பாடலில் உயிர்கள் உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமான் பலியேற்கும் செயலும், நான்காவது பாடலில் பெருமானின் சன்னதியில் பகை உணர்ச்சிக்கு இடமில்லை என்பதும் உணர்த்தப் படுகின்றது. தலத்து அடியார்கள் வேதம் ஓதி இறைவனைப் போற்றுகின்றனர் என்று நான்காவது பாடலில் குறிப்பிடும் ஞானசம்பந்தர், ஐந்தாவது பாடலில் தலத்து மகளிர் இசையுடன் பொருந்திய நடனங்கள் மூலம் இறைவனைப் போற்றுகின்றனர் என்று உணர்த்துகின்றார். ஆறாவது பாடலில்,இருவினையொப்பு நிலையினை அடைந்து மலபரிபாகம் அடைந்த அடியார்களின் மனதினில் சிவானந்தம் தரும் இனிய சுவையினை குறிப்பிடுகின்றார். ஏழாவது பாடலில், பெருமானின் பெருமையை குறிப்பிட்டு அவனது திருப்பாதங்களை மலர் தூவி வழிபடும் அடியார்களின் தன்மையை குறிப்பிடுகின்றார். எட்டாவது பாடலில், அரக்கன் இராவணனை வருத்தி பின்னர் அவனுக்கு அருள் புரிந்த கருணைச் செயலை உணர்த்துகின்றார். ஒன்பதாவது பாடலில் பிரமனும் திருமாலும், முதலில் இறைவனின் பெருமையை உணராது இருந்தாலும், பின்னர் இறைவனின் பெருமையை உணர்ந்து போற்றிய தன்மை உணர்த்தப் படுகின்றது. பத்தாவது பாடலில், உண்மையாக தன்னை வணங்கும் அடியார்களின் தன்மையை உணர்ந்து கொண்டு, அவர்களுக்கு அருள் புரியும் இறைவனின் கருணைச் செயலை குறிப்பிடுகின்றார். கடைப்பாடலில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் தேவாரப் பாடல்களை இனிய இசையுடன் இணைத்துப் பாடும் அடியவர்கள் வீடுபேறு அடைவது மிகவும் எளிதான செயல் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் மூலம், பெருமான் அருள் புரியும் தன்மையையும் அவனது ஆற்றலையும் அவனை அடியார்கள் வழிபட்டு போற்றும் தன்மையையும் புரிந்து கொண்ட நாம், வஞ்சனை ஏதுமின்றி, மனதாலும் வாக்கினாலும், செயலாலும் இறைவனை வழிபட்டு, அவனது புகழினை உணர்த்தும் தேவார திருவாசகப் பாடல்களை பாடி, இம்மையில் நமது துன்பங்கள் தீர்க்கப் பெற்று மறுமையில் வீடுபேற்றினை அடைந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைவோமாக.

கணை நீடெரிமால் (Kanai Neederimaal) is a phrase that carries a deep poetic and cultural significance in Tamil. Let’s break down the components to understand its meaning:

Breakdown of the Phrase:

கணை (Kanai): This term can mean "arrow" or "spear", but in many poetic contexts, it often symbolizes something pointed or sharp, such as a weapon or tool.

நீடெரி (Neederi): This part of the phrase is derived from "நீடேர் (Needer)", meaning long-lasting or enduring, and "அரி (Ari)", meaning enemy or hostile. Together, "நீடெரி (Neederi)" suggests something that is perpetually lasting or unyielding.

மால் (Maal): This term can mean "decorated", "adorned", or "garland". It often represents something that is revered or honored.

Full Meaning:

"கணை நீடெரிமால்" can be interpreted as "the arrow that endures forever" or "the eternal decorated weapon". The phrase poetically describes something that is not only enduring and unyielding but also revered or honored, like a weapon of great significance.

Context:

Mythological and Literary Context: In Tamil literature and poetry, such a phrase might be used to describe legendary or divine weapons, such as those of gods or heroes, which have lasting significance and are celebrated for their power and honor.

Symbolic Meaning: The phrase can symbolize an enduring power or influence that remains revered and respected over time. It might represent qualities like strength, honor, and permanence.

Cultural Significance: In traditional Tamil culture, weapons like arrows are often symbolic of valor and are used in literature to convey messages about bravery, permanence, and the esteemed qualities of heroic figures.

Example in Context:

In a classical Tamil poem or epic, "கணை நீடெரிமால்" could describe a divine weapon or a legendary hero's weapon that is celebrated for its enduring power and eternal significance. It might be used to highlight the weapon's revered status and its role in the heroic or divine narrative.

Conclusion:

"கணை நீடெரிமால்" is a richly evocative phrase that captures the essence of something enduring and revered. It symbolizes a powerful, honored, and everlasting presence, often used in literary and poetic contexts to convey themes of strength, permanence, and honor. The phrase reflects the deep cultural and symbolic significance of enduring values and revered legacies.



Share



Was this helpful?