இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கண்காட்டும் நுதலானும்

கண்காட்டும் நுதலானும்

பதிக எண்: 2.48 - திருவெண்காடு - சீகாமரம்

பின்னணி:

இரண்டாவது தல யாத்திரையாக நனிபள்ளி சென்ற திருஞான சம்பந்தர், நனிபள்ளி நிலத்தின் தன்மையை தனது தேவாரப் பாடலால் மாற்றிய பின்னர், அங்கிருந்து தலைச்சங்காடு, வலம்புரம், சாய்க்காடு மற்றும் பல்லவனீச்சசரம் ஆகிய தலங்கள் செல்கின்றார், அதன் பின்னர் திருவெண்காடு தலம் சென்று அடைகின்றார். திருஞானசம்பந்தர் தங்களது ஊருக்கு வருவதை அறிந்த, அந்த தலத்தில் இருந்த அடியார்கள், சொல்ல ஒண்ணாத மகிழ்ச்சி அடைந்தவர்களாக, அவரின் எதிரே சென்று அவரை வரவேற்று பின்னர் அவரை அழைத்துக் கொண்டு வெண்காடு நகரத்திற்குள்ளே புகுந்தனர். பெருமான் வீற்றிருக்கும் திருக்கோயில் கோபுரத்தைக் கண்ட பிள்ளையார், மிகுந்த மகிழ்ச்சியுடன் கோபுரத்தின் முன்னர் தாழ்ந்து வணங்கி, அடியார்கள் புடை சூழ திருக்கோயிலை வலம் வந்த பின்னர், பெருமானின் சன்னதி முன்னர், நிலத்தில் விழுந்து தொழுதார். திருவெண்காடு தலத்தில் குடி கொண்டிருக்கும் மெய்ப்பொருள் ஆகிய இறைவனைப் புகழ்ந்து கண்காட்டும் நுதலானும் என்று தொடங்கும் சீகாமரம் பண்ணில் அமைந்த தேவார திருப்பதிகம் பாடினர் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

மெய்ப்பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச்

செப்பரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி

முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி

ஒப்பரும் ஞானம் உண்டார் உள மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார்

மேற்கண்ட பாடலில் முக்குளம் என்று சேக்கிழார் குறிப்பிடுவது இந்த தலத்திலுள்ள, சோம குண்டம், சூரிய குண்டம் மற்றும் அக்கினி குண்டம் ஆகிய மூன்று குளங்களாகும். இந்த குளங்களின் சிறப்பினை பட்டினப்பாலை மற்றும் சிலப்பதிகாரம் ஆகிய சங்க நூல்கள் உணர்த்துகின்றன. பட்டினப்பாலை நூல், முதல் இரண்டு குளங்களை, இரு காமத்து இணை ஏரி என்று குறிப்பிடுகின்றது. சிலப்பதிகாரம் கனாத் திறம் உரைத்த காதையில், தீய கனவு கண்ட கண்ணகி தனது தோழியிடம் தான் கண்ட கனவை கூறி தன் பயத்தை உரைக்கிறாள். கண்ணகியைத் தேற்றும் முகமாக கண்ணகியின் தோழி தேவந்தி கண்ணகிக்கு இந்த கோயிலில் உள்ள சோமகுண்டம் மற்றும் சூரியகுண்டம் எனும் குளத்தில் குளித்து பின்னர் மன்மதனை வழிபாடு செய்தால், தனது கணவரை இந்த பிறவி மட்டும் அல்லாமல் அடுத்த பிறவியிலும் கூட பிரியாமல் சேர்ந்து இருக்கலாம் என்று அறிவுரை கூறுகிறாள்; சோமகுண்டம் சூரியகுண்டம் துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடும் தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார் போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர், என்பதே சிலப்பதிகாரத்து வரிகள் ஆகும். காமவேள் கோட்டம் என்பது பூம்புகார் நகரத்தின் ஒரு பகுதியாகும். திருவெண்காடு தலம் சீர்காழி தலத்திற்கு தென்மேற்கில் சுமார் பதினேழு கி.மீ. தொலைவில் பூம்புகார் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

மேற்கண்ட பெரிய புராணத்து பாடலில் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் என்பதன் மூலம், சிவபிரானை வாழ்த்தி வழிபடுவதே, தனது வாழ்க்கை முறையாக திருஞானசம்பந்தர் கொண்டிருந்தார் என்று சேக்கிழார் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். சிவபிரானை ஏத்தி வாழ்தலே வாழ்க்கை ஆகும் என்று மணிவாசகப் பெருமான், ‘பண்டாய நான்மறை’ என்று தொடங்கும் பதிகத்தில் பாடுகின்றார்.

வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாரும்

தாழ்ந்து உலகம் ஏத்தத் தகுவாரும் – சூழ்ந்து அமரர்

சென்று இறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை

நன்று இறைஞ்சி ஏத்தும் நமர்

பாடல் 1:

கண்காட்டும் நுதலானும் (2.48) பாடல்கள் 1, 2 (திதே 0044)

கண் காட்டு நுதலானும் கனல் காட்டும் கையானும்

பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும்

பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்

வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே

விளக்கம்:

இந்த பாடலில் பரமனின் கோலம் நமக்கு காட்டும் பொருட்களை மிகவும் நயமாக சம்பந்தர் கூறுகின்றார். பரமனின் நெற்றி, மூன்றாவது கண்ணையும், அவனது கை தீப்பிழம்பினையும், உருவம் ஓர் கூறு உவந்து பெற்றுக் கொண்ட மாதினையும், சடை தஞ்சம் பெற்ற பிறையையும், அவன் பாடும் இசை பண்ணையும், காட்டும் நேர்த்தி சம்பந்தரை நெகிழ வைக்கின்றது. புயல் என்பது இங்கு நீரை குறிக்கும். பரமன், பயிரை வளம்படுத்தும் நீரை போல மன்னுயிர்களுக்கு வளமாக உள்ளான் என கூறும் இவர் அவனது கொடி விடையை (விடை என்றால் நந்தி என்று பொருள்) காட்டுகின்றது என கூறி பாடலை நிறைவு செய்கிறார். நெற்றிக் கண் கோபத்தையும் அருளையும் காட்டும் என்று சிவக்கவிமணி தனது பெரிய புராண விளக்கத்தில் கூறுகின்றார். மன்மதனை சினந்து நோக்கிய போது கோபத்தை காட்டிய நெற்றிக்கண், முருகப் பெருமான் பிறப்பதற்கு காரணமாக இருந்து ஆறு சுடர்களை வெளிப்படுத்தி தேவர்களுக்கு அருளியது அல்லவா.

கனல் காட்டும் கையான் என்று, பெருமான் தனது உள்ளங்கையினில் அனல் ஏந்தி ஆடுவதை திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி (பதினோராம் திருமுறை) பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. இயல்பாகவே பெருமானின் திருமேனி சிவந்த நிறம் கொண்டது என்று பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. எனவே அவரது கையும் இயல்பாகவே சிவந்து காணப் படுகின்றது. மேலும் தீயே வடிவமாக இருப்பவன் சிவபெருமான். பெருந்தீயாகிய அவனுக்கு, அவனது உள்ளங் கையினில் இருக்கும் சிறிய செந்தழல் எம்மாத்திரம். மேலும் தீயினில் இருந்தவாறு நடம் புரியும் வல்லமை படைத்த அவனை தீ எவ்வாறு பாதிக்கும். எனவே அவனோடு இணைந்ததால் தான் தீ செம்மை நிறம் பெற்று திகழ்கின்றது என்று பாடலின் இரண்டாவது அடியில் விளக்குகின்றார்; ஆடுதல் என்ற சொல் பொதுவாக நீராடுவதை குறிக்கும். செந்தழலும் தண்ணீர் போன்று பெருமானுக்கு குளிர்ந்து இருப்பதால் தான், தீயாடும் பெருமான் என்று அருளாளர்கள் குறிப்பிடுகின்றார்களோ. பிறங்க=விளங்க .

அழல் ஆட அங்கை சிவந்ததோ அங்கை

அழகால் அழல் சிவந்ததோ — கழல் ஆட

பேயோடு கானில் பிறங்க அனலேந்தித்

தீ ஆடுவாய் இதனை செப்பு

இந்த பாடல் நமக்கு இதே தலத்தின் மீது அப்பர் பிரான் வெண்காடு தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் முதல் பாடலையும் (5.49.1) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில், அப்பர் பிரான் பண் காட்டிய பெருமான் என்றும் அடியார்க்கு கண் காட்டி கண்ணில் நின்ற மணியாக இருப்பதையும், தனது உருவத்தில் பெண் வடிவம் இருப்பதையும், சென்னியில் பிறைச் சந்திரன் இருப்பதையும் காட்டுகின்றான் என்று உணர்த்தி, அத்தகைய வெண்காட்டினை சென்றடைந்து உய்வீர்கள் என்று நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

பண் காட்டிப் படியாய தன் பத்தர்க்குக்

கண் காட்டிக் கண்ணில் நின்ற மணி ஒக்கும்

பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு

வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே

நுதல்=நெற்றி; கொடியான்=கொடியினை உடையவன்; இசை வடிவமாக இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடுவது, ஏழிசையாய் இசைப் பயனாய் என்று சுந்தரர் கூறும் பாடலை (7.51.10) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. துரிசு=தவறுகள்; திருவொற்றியூரில் வாழ்ந்து வந்த சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்து கொண்டதால் தானே, திருவாரூர் செல்ல முடியாமல் ஒற்றியூ]ரில் தங்கும் படி நேர்ந்ததை நினைத்து மனம் வருந்தி சுந்தரர் பாடிய பாடல். திருமணம் செய்து கொண்டமையால் இல்லற பந்தத்தில் தான் மாட்டிக் கொண்டதை நினைத்த சுந்தரர், தான் செய்த தவறுகள் என்று இரண்டு திருமணங்களையும் கருதுகின்றார். சங்கிலியார் மற்றும் பரவையார் மீது தான் கொண்டிருந்த காதல் ஈடேற பெருமான் உதவியதால், தான் செய்த அந்த தவறுகளுக்கு உடனாக இருந்தவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். ஏழிசையாகவும் அந்த இசையின் பயனாகிய பண்களாகவும் இறைவன் உள்ள நிலை இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. மாழை=மாவடு போன்று நீண்ட அழகிய கண்கள்; ஒண்கண்=ஒளி மிகுந்த கண்கள்;

ஏழிசையாய் இசைப் பயனாய் இன்னமுதாய் என்னுடைய

தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி

மாழை ஒண்கண் பரவையைத் தந்து ஆண்டானை மதியில்லா

ஏழையேன் பிரிந்து இருக்கேன் என் ஆரூர் இறைவனையே

திருநாரையூர் தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய பாடலில் (3.107.7) ஏழிசையின் பொருளாக இருப்பவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார். புணர்ப்பு=சேர்பித்தல்; உயிர்கள் செய்கின்ற செய்கைகளின் பயன்களை வினைகளின் வடிவத்தில் அந்தந்த உயிர்களுடன் சேர்ப்பிப்பது இறைவன் செய்யும் திருவிளையாடல் என்று சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

ஊழியும் இன்பமும் காலமாகி உயரும் தவமாகி

ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி

நாழிகையும் பல ஞாயிறாகி நளிர் நாரையூர் தன்னில்

வாழியர் மேதகு மைந்த செய்யும் வகையின் விளைவாமே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.3) அப்பர் பிரான் இறைவனை ஏழிசையாக இருப்பவன் என்று அழைக்கின்றார். ஐம்பூதங்களின் தன்மை விளக்கப்படும் பாடல். பரந்த வெளியிலிருந்து நாதம் பிறந்தமையால், ஆகாயத்தின் குணம் ஒலி என்று கூறுவார்கள். வீசும் காற்றில் ஒலி மற்றும் தொடு உணர்வு (ஊறு) ஆகிய இரண்டு பண்புகள் இருப்பதை நாம் உணர்கின்றோம். தீ, ஒலி கொண்டு உணரப்படுவதாகவும், தொடு உணர்வினால் அறியப்படுவதாகவும் விளங்குவதுடன், ஒளியுடனும் திகழ்கின்றது. நீருக்கு, ஒலி, ஊறு, ஒளி, மற்றும் சுவை ஆகிய நான்கு குணங்கள் உள்ளன. நிலத்திற்கு, நீரின் நான்கு குணங்களுடன் வாசனை ஆகிய ஐந்தாவது குணமும் உள்ளது. மேற்கண்ட குணங்களாக இறைவனே இந்த ஐந்து பூதங்களிலும் பரவி இருப்பதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். ஒளிர்கின்ற நெருப்பு என்பதைக் குறிக்க வயங்கு எரி என்று கூறப்பட்டுள்ளது வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை நம்மால் அறிய முடியாது அல்லவா. அத்தகைய விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமான திருநாமங்களை உடையவன் என்பதை உணர்த்தும் முகமாக தாரகைகள் தம்மின் மிக்க எண் என்று இறைவனை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்

மண்ணதனில் ஐந்தை மாநீரில் நான்கை வயங்கெரியில் மூன்றை மாருதத்து இரண்டை

விண்ணதனில் ஒன்றை விரிகதிரைத் தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க

எண்ணதனில் எழுத்தை ஏழிசையைக் காமன் எழில் அழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்

கண்ணவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

பொழிப்புரை:

தனது மூன்றாவது கண்ணினைக் காட்டும் நெற்றியை உடையவனும், தீப்பிழம்பினைக் காட்டும் கையினை உடையவனும், தனது உடலின் ஒரு பகுதி பெண்ணின் உருவம் என்று காட்டுவானும், தன்னிடம் சரணடைந்த பிறைச் சந்திரனைக் காட்டும் சடையினை உடையவனும், பண்ணினை காட்டும் ஏழிசையாக இருப்பவனும், பயிரினை வளர்க்கும் மழையாக இருப்பவனும் ஆகிய இறைவன் திருவெண்காடு தலத்தில் உறைகின்றான். அவன் தனது கொடியினில் எருதினை சித்திரமாக வைத்துள்ளான்.

பாடல் 2:

கண்காட்டும் நுதலானும் (2.48) பாடல்கள் 1 (திதே 0044)

பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு

ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்

வேயன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குள நீர்

தோய்வினையார் அவர் தம்மை தோயாவாம் தீவினையே

விளக்கம்:

பெண்ணாகடத்தில் வாழ்ந்து வந்த அச்சுதக் களப்பாளர் எனும் சைவ வேளாளர்க்கும் அவரது மனைவியர்க்கும் நீண்ட காலமாக குழந்தை இல்லை என்ற குறை இருந்து வந்தது. அவர்கள் தங்கள் குருவாகிய அருணந்தி சிவாச்சாரியாரிடம் விண்ணப்பித்தனர். திருமுறையில் நம்பிக்கை உடைய அவர், திருமுறை ஏட்டை எடுத்து அதற்கு பூசை செய்து அதில் கயிறு சாத்தினார். கயிறு சாத்துதல் என்றால், ஏட்டினை இணைத்துள்ள கயிற்றினை அவிழ்த்து இறைவனை நினைத்து ஏட்டின் கயிற்றை ஏதாவது ஒரு பக்கம் வரும்படி இழுப்பது; பின்னர் அப்படி இழுத்த பக்கத்தில் இருக்கும் பாடலை எடுத்து படிப்பது; எதனை வேண்டி ஏடு சாத்துகிறோமோ அந்த வேண்டுகோளுக்கு ஊன்றுகோலாக ஏதேனும் பொருள் இருக்கும் பதிகம் அந்த பக்கத்தில் இருந்து, அந்த பதிகத்தை படித்தால் வேண்டுகோள் நிறைவேறும் என்ற நம்பிக்கை பண்டைய நாளிலும் இருந்த வந்தமை இந்த நிகழ்ச்சி மூலம் நமக்கு தெரியவருகின்றது. இப்போதும் தென் மாவட்டங்களில் ஏடு சாத்தி பார்க்கும் முறை வழக்கத்தில் உள்ளது. மேலும் திருஞான சம்பந்தர் வாழ்க்கையில் மதுரையில் புனல் வாதம் மேற்கொண்ட போது, ஏடு சாத்தி பார்த்த நிகழ்ச்சியை இங்கே நினவு கூர்வது பொருத்தமே.

மேலே கூறிய முறையில் ஏடு சாத்திப் பார்த்ததில் வெண்காடு மீது சம்பந்தப் பெருமான் பாடிய இந்த பதிகத்தின் இரண்டாவது பாடல் வந்தது. இந்த பாடலில் பிள்ளை நினைவு இருந்தால் வரம் பெறுவார்; இதில் ஐயம் ஏதும் இல்லை எனும் பொருள் படும் சொற்கள் உள்ளன. இதனைக் கண்ட களப்பாளர், இறைவன் தனக்கு பிள்ளைப் பேற்றினை அளிக்கும் திருக்குறிப்பினை இந்த பாடல் மூலம் உணர்த்தியுள்ளான் என்று பேரின்பம் கொண்டார்; மிகவும் மகிழ்ச்சி அடைந்த அச்சுதக் களப்பாளர், தனது மனைவியுடன் வெண்காடு சென்று அடைந்து அங்கு இருந்த மூன்று குளங்களிலும் நீராடி, இந்த பாடலையும் படித்து பெருமானை வழிபடுகின்றார். ஒரு மண்டலம் இவ்வாறு நோன்பு இருந்து வழிபட்ட பின் ஒரு நாள் அவரது கனவில் இறைவன் தோன்றி, பழவினை காரணமாக இந்தப் பிறவியில் மகப்பேறு அடையும் பேறு அவருக்கு இல்லை என கூறுகிறார். அதனைக் கேட்ட களப்பாளர் தனது பழவினையை நினைத்து தன்னை தேற்றிக் கொள்கிறார். இந்தப் பாடலில் பிள்ளை வரம் உண்டு என்று உறுதிப் படுத்துவதுடன் பழவினையின் தீய தன்மைகள் அணுகாது என்றும் கூறப்பட்டுள்ளது. முக்குள நீரின் சிறப்பும் இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. பேய் போன்ற தீய சக்திகள் அணுகாது என்றும் ஒரு சமயம் அத்தகைய சக்திகள் உடலைப் பிடித்து இருந்தாலும் விலகி விடும் என்றும் சம்பந்தர் இந்தப் பாடலில் கூறுகிறார்.

அவ்வாறு தன்னைத் தேற்றிக் கொண்டாலும் அவருக்கு ஒரு சிறிய வருத்தம் இருந்தது. தனக்கு மகப்பேறு இந்தப் பிறவியில் இல்லை என்பதனை கூட பெரிய வருத்தமாக அவர் எடுத்துக் கொள்ளவில்லை. அம்மையின் ஞானப் பாலை உண்டு அருள் ஞானம் பெற்ற சம்பந்தரின் வாக்கு பொய்த்துப் போவதற்கு தனது பழவினை காரணமாகி விட்டதை நினைத்து மிகவும் வருந்துகிறார். இவ்வாறு அவர் கருதியதில் இருந்து நாம் சம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்களின் பலன்களை குறித்து அந்த காலத்தில் இருந்த நம்பிக்கையையும், சம்பந்தர் மீது களப்பாளருக்கு இருந்த மதிப்பையும் நாம் அறிந்து கொள்ளலாம். தனது வருத்தத்தின் காரணத்தை சொல்லி இறைவனிடம் முறையிட, சம்பந்தரின் வாக்கு மகிமையை காப்பற்ற இறைவன், களப்பாளரின் பழவினையை களைகின்றார். இதன் விளைவாக அந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மகன் பிறக்கிறான். அந்த மகன் தான் பின்னாளில் மெய்கண்டார் என்ற பெயருடன் விளங்கியவரும் சிவஞான போதம் எனும் சைவ சித்தாந்தத்தின் தலையான நூலை எழுதியவரும் ஆவார். சோம குண்டத்திற்கு அருகில் மெய்கண்டார் சன்னதி உள்ளது. இந்த நிகழ்ச்சி, பெருமான் தனது அடியாரின் புகழுக்கு பங்கம் வருவதை பொறுக்க முடியாதவராக இருப்பதை நாம் உணர்கின்றோம்.

இந்த தலத்தில் உள்ள மூன்று குளங்களிலும் நீராடி இறைவனைத் தொழும் அடியார்களின் தொல்வினைகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் கூறுவது, அவர் வெண்காடு தலத்தின் மீது அருளிய வேறொரு பதிகத்தின் கடைக் காப்பு பாடலில் (3.15.11) கூறுவதை நமக்கு நினைவூட்டுகின்றது. கடைக்காப்பில் ஐயனை தொழுபவர்களின் அல்லலும் அருவினையும் அறுதல் திண்ணம் என உறுதி கூறுகிறார். சம்பந்தரின் இந்த உறுதி தான் சிவபிரானின் மனத்தை மாற்றி அச்சுதக் களப்பாளரின் பழவினையின் தீப்பயனை கருகச் செய்ததோ? அருவினையை, வெண்காட்டனை நோக்கி செய்யும் தொழுகை அறுத்துவிடும் என ஆணையிடும் சம்பந்தரின் வாக்கு எந்நாளும் பொய்க்காது என்பதனை மெய்கண்டாரின் பிறப்பு நிரூபித்துவிட்டது. மேலும் தேவாரப் பாடல்கள், அவை பாடப்பெற்ற காலத்தில் அதிசயங்கள் நிகழ்த்தியது மட்டுமன்றி என்றும் அதிசயங்கள் நிகழ்த்த வல்லவை என்பதையும் நமக்கு, இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது என்று சொன்னால் மிகையாகாது.

நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்

செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்

சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர்

அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே.

வேய்=மூங்கில்; தோய்வினையார்=மூழ்கி குளிக்கும் செயலை செய்யும் அடியார்கள்; ஒன்றும்=சிறிதும்; தோய்தல்=பீடித்தல். வெண்காட்டு பெருமானை தியானம் செய்து இந்த பாடலை பாடும் அடியார்கள், பிள்ளை வரம் மட்டுமன்றி, தாங்கள் நினைக்கும் வேறு பல கோரிக்கைகளும் நிறைவேற்றப் பெறுவார்கள் என்பதை உள்ள நினவு என்ற தொடர் மூலம் சம்பந்தர் உணர்த்துகின்றார். அத்தகைய அடியார்களை தீய சக்திகள் அணுகாது என்றும் ஒருகால் ஏற்கனவே அணுகியிருந்தால் அவை விலகிவிடும் என்பதும் இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

திருவெண்காடு தலத்தில் உள்ள மூன்று குளங்களிலும் நீராடி வெண்காட்டு பெருமானை தியானிக்கும் அடியார்களை பேய்கள் அணுகாது; ஒருகால் ஏற்கனவே அணுகியிருந்தால் அவை அந்த அடியார்களை விட்டு நீங்கி விடும்; மேலும் அத்தகைய அடியார்கள் பிள்ளை வரம் பெறுவது மட்டுமன்றி, தங்களது விருப்பங்கள் ஈடேறப் பெறுவார்கள். இதற்கு எந்த விதமான ஐயமும் எவரும் கொள்ள வேண்டாம்; மூங்கில் போன்று அழகான தோள்களை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள இறைவன் உறையும் திருவெண்காடு தலத்தில் உள்ள மூன்று குளங்களிலும் தோய்ந்து நீராடும் அடியார்களை தீவினைகள் பீடிக்காமல் விட்டு விலகும்.

பாடல் 3:

கண்காட்டும் நுதலானும் (2.48) பாடல்கள்3, 4. 5, 6 (திதே 0045)

மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி

எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும்

பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்

விண்ணவர் கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே

விளக்கம்:

கால்=காற்று; இரவி=சூரியன்: எண்ணில்=எண்ணிக்கையில் அடங்காத உயிர்கள், அனைத்து உயிர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்; இகம்=இம்மை; பரம்=மறுமை; மேற்கண்ட பாடலில் எஜமானன் என்ற வடமொழிச் சொல் இயமானன் என்று தமிழ்ப்படுத்தப் பட்டுள்ளது. இங்கே ஆன்மா, உயிர் என்ற பொருளில் வருகின்றது. மாணிக்கவாசகரும் இதே பொருளில் இயமானன் என்ற சொல்லை, சிவபுராணத்தில் பயன்படுத்தி இருப்பதை நாம் காணலாம்.

வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா

இங்கே உயிரினை எஜமான் என்ற பொருளில் இயமானான் என்று குறிப்பிடுவது சற்று சிந்திக்கத் தக்கது. உயிருடன் எப்போதும் ஆணவம் முதலான மலங்கள் பிணைந்துள்ளன. மேலும் உயிர் தன்னுடன் பிணைந்துள்ள வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு இறைவனுடன் சென்று சேர்ந்து என்றும் அழியாத பேரின்பத்தில் திளைக்கவேண்டும் என்பதே விருப்பத்துடன் உள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு உயிருக்கு உதவியாக இருப்பதற்கு, இறைவன் ஐந்து அறிவு கருவிகள் (ஞானேந்திரியங்கள்) மற்றும் செயல் கருவிகள் (கன்மேந்திரியங்கள்) கொடுத்துள்ளான். அந்த கருவிகளை தகுந்த முறையில் பயன்படுத்தி தனது நோக்கினை உயிர் அடைய வேண்டும்; அதற்கு அந்த கருவிகளை அடக்கி ஆட்கொண்டால் தான் முடியும் என்பதை உணர்த்தவே தான் உயிரினை எஜமான் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் நமது வாழ்க்கையில் நடப்பது என்ன என்பதை நாம் சற்று பார்க்கலாம். உயிருக்கு உதவியாக இருக்க வேண்டிய ஐந்து புலன்களும், உயிரினைத் தமது வழியில் இழுத்துச் சென்று தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கின்றன. உயிர், தான் எஜமானனாக இருந்து புலன்களை கட்டுப்படுத்தி புலன்களை பயன்படுத்திக் கொண்டு தனது மெய்ஞானத்தை வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக, புலன்கள் உயிர்க்கு எஜமானன் போன்று நடந்து கொண்டு உயிரினை தங்களது விருப்பத்திற்கு இழுத்துச் செல்லும் அவல நிலையினை நாம் காண்கின்றோம். இந்த நிலையினை நாம் மாற்ற வேண்டிய அவசியத்தை இயமானன் என்ற சொல் நமக்கு உணர்த்துகின்றது.

இந்த பாடலில் இறைவன் அட்ட மூர்த்தியாக இருக்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. அப்பர் பெருமானும் சிவபிரான் அட்டமூர்த்தியாகி நிற்கும் தன்மையை, நின்ற திருத்தாண்டகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும்போது இயமானன் என்ற சொல்லை ஆன்மாவைக் குறிக்க பயன்படுத்துவதை நாம் உணரலாம்.

இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி

அரு நிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகிக்

பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம்முருவும் தாமேயாகி

நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன் சடை அடிகள் நின்றவாறே

அட்ட மூர்த்தங்கள் என்று சொல்லப்படும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எட்டுப் பொருட்களிலும் இறைவன் சிவபிரான் கலந்து நிற்கின்றான் என்பதை கீழ்க்கண்ட திருவாசகம் தோள்நோக்கம் பதிகம் பாடல் உணர்த்துகின்றது. எட்டுத் திசைகளோடு, கீழ், மேல் என்ற இரண்டையும் இணைத்து பத்து திசை என்று மணிவாசகர் இங்கே கூறுகின்றார்.

நிலம் நீர் நெருப்பு உயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன்

புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றான்

உலகு ஏழ் எனத் திசை பத்து எனத் தான் ஒருவனுமே

பல ஆகி நின்றவா தோள்நோக்கம் ஆடாமோ

பொழிப்புரை:

நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள், சூரியன் சந்திரன் மற்றும் அனைத்து உயிர்களிலும் எட்டு மூர்த்தங்களாக இறைவன் நிறைந்து உள்ளான்; உயிரால் இம்மையில் அடையும் பயன்களாகவும் மறுமையில் அடையவிருக்கும் பலன்களாகவும் உள்ள இறைவன், உலகின் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளான்; தனது உடலின் ஒரு பாகத்தில் தேவியையும் ஏற்றுக் கொண்டு இருப்பதால், ஆண் உருவத்தில் பெண் உருவமும் கலந்தவனாக உள்ளவன் இறைவன். அவன் பெரிய பொருட்களையும் விடவும் பெரியவனாகவும் சிறிய நுண்ணிய பொருட்களையும் விடவும் நுண்ணியவனாகவும் உள்ள இறைவன், பெரும் புகழினை உடையவன் ஆவான். அத்தகைய பெருமான், இந்திரன் தன்னை வழிபடும் வண்ணமாக திருவெண்காடு தலத்தில் உறைகின்றான்.

பாடல் 4:

கண்காட்டும் நுதலானும் (2.48) பாடல்கள்3, 4. 5, 6 (திதே 0045)

விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண் புறவின்

மடல் விண்ட முடத்தாழை மலர் நிழலை குருகு என்று

தடம் மண்டு துறைக் கெண்டை தாமரையின் பூ மறையக்

கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே

விளக்கம்:

தாமரை மலரின் கீழே சென்று இருக்கும் கெண்டை மீனையும் அருகில் இருக்கும் முத்தினையும் காணும் சம்பந்தர், இந்த இயற்கைக் காட்சியின் மீது தனது கற்பனையை கலந்து மிகவும் அழகாக கூறுவதை நாம் மேற்கண்ட பாடலில் காணலாம். தாழை மலரின் நிழலை தன்னை கொத்த வந்த பறவை குருகு என நினைத்து பயந்து தாமரை மலரின் கீழ் ஒதுங்கும் கெண்டை மீனைப் பார்த்து முத்துக்களாகிய பற்களைக் காட்டி கடல் நகைக்கின்றது என்று நயம்பட இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு இயற்கையாக நடக்கும் செயலின் மீது தனது கற்பனையை ஏற்றி நயமாக உரைப்பதை தற்குறிப்பேற்ற அணி என்று தமிழ் இலக்கணத்தில் கூறுவார்கள். கெண்டை மீனின் அறியாமையைக் கண்டு கடல் சிரிப்பது பிள்ளையாரின் கற்பனை. மிடற்று அண்ணல்= நீலகண்டராகிய சிவபெருமான்; சிவபெருமானைத் தவிர்த்து வேறு எந்த தெய்வத்தின், கழுத்தும் விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்டதாக இல்லாத காரணத்தினால், சிவபெருமான் ஒருவருக்கே நீலகண்டர், மணிகண்டர், மிடற்று அண்ணல் ஆகிய பெயர்கள் பொருத்தம் ஆனவை. தண்புறவு=குளிர்ந்த முல்லை நிலம்; முடத்தாழை= வளைந்து தொங்கும் தாழை மடல்; தடம்=குளம்; விண்ட=வெளிப்படுத்திய; கதிர் முத்தம்= ஒளி வீசும் முத்து

இல்லாத பறவையை நினைத்து கெண்டை மீன்கள் அச்சம் கொள்வது போன்று, நாமும் நமது வாழ்க்கையில் இல்லாத தீங்கினை நினைத்து சில சமயங்களில் தடுமாறுகின்றோம். அதற்கு காரணம் மனம் ஒரு தெளிவான நிலையில் இல்லாமல் இருப்பது தான். மனதில் ஏற்படும் சஞ்சலத்தை தீர்த்து தெளிவினை அருளும் தன்மை கொண்டவன் சிவபெருமான் ஒருவன் தான், அவனை வழிபட்டு மனத்தெளிவுடன் நம்மை எதிர்நோக்கும் சூழ்நிலையை நாம் அணுக வேண்டும் என்ற அறிவுரை இந்த பாடல் மூலம் வழங்கப்படுகின்றது என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

பொழிப்புரை:

விடத்தினை உட்கொண்டு தனது கழுத்தினில் தேக்கியதால் கருமையான மணி பதித்தது போன்ற கழுத்தினை உடைய பெருமான் சிவனார் உறையும் இடமாகிய திருவெண்காடு தலத்தில் உள்ள குளிர்ந்த முல்லை நிலத்தில் காணப்படும் வளைத்து தொங்கும் தாழை மடலின் நிழலைக் கண்ட, குளிர்ந்த நீர்நிலையில் வாழும் கெண்டை மீன், அதனை தன்னைக் கொத்த வந்த பறவை என்று தவறாக புரிந்து கொண்டு அருகில் உள்ள குளத்தில் காணப்படும் தாமரை மலரின் அடியில் சென்று மறைந்து கொள்கின்றது. தலத்தின் அருகில் உள்ள கடல், கரையில் கொண்டு வந்த சேர்த்த ஒளிவீசும் வெண்மை நிறம் உடைய முத்து ஒளிவீசும் கதிர்களைக் கொண்டுள்ள நிலை, இந்த காட்சியைக் கண்டு கடல் சிரிப்பது போன்ற தோற்றத்தை தருகின்றது. இவ்வாறு தாழை மலர்களும், பறவைகளும் மீன்களும் நிறைந்து நீர்வளமும் நிலவளமும் பொருந்திய திருவெண்காடு தலத்தின் கரையில் வெண்முத்துகளும் காணப்படுகின்றன.

பாடல் 5:

கண்காட்டும் நுதலானும் (2.48) பாடல்கள்3, 4. 5, 6 (திதே 0045)

வேலைமலி தண் கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்

மாலை மலி வண் சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்

மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர்

ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே

விளக்கம்:

சுவேதகேது என்ற சிறுவனின் ஆயுள் எட்டு வருடங்கள் தான் என்று விதிக்கப் பட்டிருந்தது. இறைவனிடம் அளவிலா பக்தி கொண்டு இருந்த அந்த சிறுவனின் உயிரைப் பறிப்பதற்காக வந்த யமனை, தனது பக்தனை அவமரியாதை செய்ததற்காக சிவபிரான் தண்டித்து, சிறுவனுக்கு நீண்ட ஆயுள் கொடுத்தார். சுவேதகேதுவின் பக்தியை மெச்சி அவனுக்கு தனது ஏழு நடனக் கோலங்களின் காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து ஆல மிடற்றான் அடியாரை அணுக நமன் தூதர் அஞ்சுவர் என்று, இந்த பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சுவேதகேது என்று பெயரைக் குறிப்பிடாமல், மறையவன் என்று பொதுவாக சொல்லியிருப்பதால், இந்த குறிப்பு மார்க்கண்டேயரை குறிப்பிடுகின்றது என்றும் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். வெண்காட்டான் திருவடிக்கீழ் வழிபட்ட மறையவன் என்று குறிப்பிடுவதால், தலபுராணம் குறிப்பிடும் சுவேதகேதுவை குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. குறிப்பிடப் படுபவர் எவராக இருந்தாலும், சிவனது அடியார்களை அணுகுவதற்கு இயமனின் தூதர்கள் அஞ்சுகின்றனர் என்ற செய்தியில் எவருக்கும் ஐயம் இல்லை. வேலை=கடல்; கானல்=கடற்கரை சோலை; .தண்= குளிர்ந்த; மலி=நிறைந்த; விள்ளுதல்= உடைத்தல்; அடர்த்தல்=கொல்லுதல், உயிரைக் கவர்தல்; வெம் காலன்=கொடிய காலன்; காலன் உயிரினை பறிக்க வரும்போது, பாலன் என்றோ இளையவன் என்றோ நோய்வாய்ப்பட்டவன் என்றோ பாராது இரக்கம் ஏதுமின்றி, தனது கடமையை செய்வதால் கொடிய காலன் என்று சம்பந்தர் அவனை அழைக்கின்றார்.

பெருமானின் அடியார்களை நீலகண்டரின் அடியார்கள் என்று சம்பந்தர் கூறுவதில் ஒரு நயம் இருப்பதை நாம் உணரலாம். பிரமன் திருமால் உட்பட தேவர்கள் அனைவரையும் அச்சுறுத்தி பல திசைகளிலும் நிலை குலைந்து ஓடச் செய்த நஞ்சு, பெருமான் உட்கொண்ட பின்னர் தனது வலிமையை, உட்கொண்டவரின் உயிரினை மாய்க்கும் தன்மையை இழந்தது போன்று, பெருமானின் அடியார்களை நெருங்கும் இயமனின் தூதுவர்கள் தங்களது வலிமை இழந்து விடுவதால் அச்சம் கொள்கின்றனர் என்ற செய்தி மிகவும் அழகாக இங்கே உணர்த்தப் படுகின்றது.

இந்த செய்தியையே ஒரு எச்சரிக்கையாக மாற்றி, அப்பர் பிரான் கண்டு கொள்ளரியானை (5.92) என்று தொடங்கும் பதிகத்தின் மூலம் பெருமானது அடியார்களின் அருகில் நீங்கள் செல்ல வேண்டா என்று இயமனின் தூதுவர்களுக்கு கூறுகின்றார். இந்த பதிகத்தின் பாடல்களில், பெருமானின் அடியார்களை இயமனது தூதர்களுக்கு அடையாளம் காட்டும் பொருட்டு அவர்களது தன்மைகளை அப்பர் பிரான் சுட்டிக் காட்டுகின்றார். அடியார்களின் உருவத்தையும் செய்கைகளையும் இந்த பதிகத்தில் பட்டியல் இட்டு உணர்த்தும் அப்பர் பிரான். சிவபிரானின் பெருமைகளை பாடலாக பாடுவது, அவ்வாறு பாடப்படும் பாடல்களுக்கு ஏற்ப கொடுகொட்டி, கைத்தாளம் முதலிய கருவிகளை இசைப்பது, சிவபிரானின் திருநாமத்தை பிதற்றுவது, சிவபிரானின் திருவடிகளைப் போற்றி வழிபாடு செய்வது, திருநீற்றினை அணிந்து இருப்பது, சிவபெருமானை வழிபடுவதற்காக, தூபம், தீபம், மலர் மாலைகள் ஏந்திச் செல்லுதல், முதலிய தன்மைகளை அடியார்களின் அடையாளங்களாக கூறுகின்றார். அடியார்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது மட்டுமன்றி, அவர்களைப் போற்றியும், பேணியும் பாதுகாப்பது அவர்களின் கடமை என்று இயமனின் தூதர்களுக்கு உணர்த்தும் அப்பர் பிரான், பதிகத்தின் கடைப் பாடலில், அடியார்களுக்கு இன்னல் விளைவித்தால் என்ன நடக்கும் என்பதையும் எச்சரிக்கையாக விடுப்பதையும் நாம் உணரலாம். இந்த எச்சரிக்கையை பொருட் படுத்தாது, இயமனின் தூதர்கள் அவர்களது பாசக் கயிற்றினை சுருக்காக அடியார்களின் திருமேனியின் மீது வீசி அவர்களது உயிரினைக் கவர முயற்சி செய்தால், பெருமானது திருவடிகள் அவர்களை சுட்டுவிடும் என்று கூறுகின்றார். எனவே பெருமானது அடியார்கள் உங்களின் எதிரே வந்தாலும், இயமனின் தூதர்களே நீங்கள் விலகிச் செல்வது உங்களுக்கு நல்லது என்ற அறிவுரை இந்த பாடல் மூலம், அப்பர் பிரானால் அவர்களுக்கு வழங்கப் படுகின்றது.

அரக்கன் ஈரைந்தலையுமோர் தாளினால்

நெருக்கி ஊன்றி இட்டான் தமர் நிற்கிலும்

சுருக்கெனாது அங்குப் பேர்மின்கண் மற்று நீர்

சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே

இயமனையோ அவனது தூதர்களையோ, அடியார்கள் பால் நெருங்க இயலாத வண்ணம் பெருமான் காப்பதால், பெருமானின் அடியார்களுக்கு மரணம் ஏற்படாது என்று தவறாக பொருள் கொள்ளக் கூடாது. அவர்களது உயிர் உடலிலிருந்து பிரியும் தருணத்தில், பெருமானின் கணங்கள், அந்த அடியார்களை அழைத்துச் சென்று பெருமானின் திருவடிக்கீழ் சேர்ப்பார்கள். அத்தகைய அடியார்கள், இயமனால் அழைத்து செல்லப்பட்டு நரகம் சொர்க்கம் ஆகியவற்றில் ஆழ்ந்து துன்பம் அடையார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

பொழிப்புரை:

நிறைந்த கடல் நீர் இருப்பதால் குளிர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருவெண்காடு தலத்தில் உள்ள இறைவனின் திருவடிகளில், நறுமணம் நிறைந்த மாலைகளும் நிறைந்த சந்தனமும் தூவி வழிபட்ட நன் மறையவனாகிய சுவேதகேதுவின் மீது தனது பாசத்தை வீசி அவனது உயிரினைக் கவர முயற்சி செய்த இயமனை இறைவன் காலால் உதைத்து அழித்த பின்னர், திருநீலகண்டரின் அடியார்கள் என்று இயமனின் தூதுவர்கள் அவரிடமிருந்து அஞ்சி விலகுவார்கள்.

பாடல் 6:

கண்காட்டும் நுதலானும் (2.48) பாடல்கள்3, 4. 5, 6 (திதே 0045)

தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையின் உடன்

ஒண்மதிய நுதல் இமையோர் கூறு உகந்தான் உறை கோயில்

பண் மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசும் கிள்ளை

வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே

விளக்கம்:

சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் அதிகமாக இருந்த ஊரான வெண்காட்டில், அரன் நாமம் ஆங்கு உள்ளோர் சொல்லக் கேட்டு கிளிகளும் அவனது நாமத்தை கூறும் திறமை படைத்தன என்று சம்பந்தர் பிரான் இந்த பதிகத்தில் கூறி மகிழ்கிறார். அவரது காலத்தில் வாழ்ந்த திருமங்கை மன்னனோ, ஒரு பெண் தான் வளர்த்த கிளி அரியின் நாமம் சொல்லக் கேட்டு அந்த கிளியை கை கூப்பி மகிழ்ந்தாள் என்று கூறுகிறார். இறைவனின் நாமத்தை கிளிகளோ அல்லது வேறு எவரோ சொல்லக் கேட்பது அருளாளர்களுக்கு எத்துணை மகிழ்ச்சியை தருகின்றது என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த பாசுரத்தை திரு நெடும் தாண்டகத்தில் நாம் காணலாம்.

முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூ உலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற

அளப்பு அறிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை

விளக்கொளியை மரகதத்தை திருத் தண்காவில் வெக்காவில் திருமாலை பாடக் கேட்டு

வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியை கை கூப்பி வணங்கினாளே

வெய்யரவு=வெப்பத்தை உள்ளடக்கிய கொடிய விடத்தினை உடைய பாம்பு; ஒண்=ஒளி பொருந்திய; மதிய=பிறைச் சந்திரன் போன்று அழகாக வளைந்த; கரும்பெணை=கரிய நிறம் கொண்ட பனை மரம்;

பொழிப்புரை:

குளிர்ந்த பிறைச் சந்திரனையும், வெப்பத்தை உள்ளடக்கிய கொடிய விடத்தினை உடைய பாம்பினையும் தனது சடையில் வைத்துள்ள இறைவன், பிறைச் சந்திரன் போன்று அழகாக வளைந்ததும் ஒளி வீசுவதும் ஆகிய நெற்றியை உடைய உமையம்மையைத் தனது உடலின் ஒரு கூறாக மகிழ்ந்து ஏற்றவன் ஆவான். அத்தகைய பெருமான் வீற்றிருக்கும் தலமாகிய திருவெண்காட்டினில்,, பசுமை நிறத்துடன் இளமையாக காணப்படும் கிளிகள் தங்களது அழகிய குரலால் பெருமானின் திருநாமங்களை ஓதியவாறு, வெண்மேகங்களைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள கரிய பனை மரங்களின் மீது அமர்ந்துள்ளன,

பாடல் 7:

கண்காட்டும் நுதலானும் (2.48) பாடல்கள் 7. 8. 9. 10, 11 (திதே0046)

சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்

அக்கு அரை மேல் அசைத்தானும் அடைந்த அயிராவதம் பணிய

மிக்க அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும்

முக்குள நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே

விளக்கம்:

யானை சிவபிரானை பூசித்த ஒன்பது தலங்களில் இது ஒன்றாகும். அந்த ஒன்பது தலங்களாவன, இன்னம்பர், எதிர்கொள்பாடி, கானப்பேர், கோட்டாறு, திருவானைக்கா, திருக்காளத்தி, திருவெண்காடு, பெண்ணாடகம் மற்றும் ஆலவாய் ஆகும். அப்பர் பிரானும் தவங்கள் செய்த வெள்ளானைக்கு வேண்டிய வரம் கொடுத்தவர் என்று தமது பதிகத்தில் (தூண்டு சுடர் மேனி எனத் தொடங்கும் பதிகம்) ஒன்பதாவது பாடலில் கூறுகிறார்,

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார் பொறி அழலாய் நின்றான் தன்னை

உள்ளானை ஒன்று அலா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான் தன்னை

கள் ஏந்து கொன்றை தூய்க் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த

வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே

மாற்கு=திருமாலுக்கு; அக்கு=எலும்பு மற்றும் சங்குமணி ஆகிய இரண்டு பொருட்களும் இங்கே பொருத்தமாக உள்ளன. அரை=இடுப்பு; ஒருமுறை இந்திரன் அயிராவதம் யானையின் மீது சென்று கொண்டிருந்த போது அவனது எதிரில் துர்வாச முனிவர் வந்தார். இந்திரனைக் கண்டவுடன் முனிவர், தனது கையிலிருந்த, சிவபெருமானின் பிரசாதமாகிய மாலையினை இந்திரனுக்கு அளித்தார். அதனைப் பெற்றுக்கொண்ட இந்திரன், சற்று அசிரத்தையாக தான் அமர்ந்திருந்த யானையின் மத்தகத்தின் மேலே மாலையை வைத்தான். மாலையின் இருந்த நாறு விளைவித்த குறுகுறுப்பை தாங்க முடியாத யானை, மாலையை கீழே எறிந்தது; சிவ அபராதம் செய்த, இந்திரனுக்கு பதவி பறிபோகும் என்றும் அயிராவதம் யானை கருமை நிறத்துடன் காட்டு யானையாக திரியும் என்றும் முனிவர் சாபம் அளித்தார். யானையும் இந்திரனும் வெண்காட்டு இறைவனை வழிபட்டு விமோசனம் பெற்றன என்று தலபுராணம் கூறுகின்றது. இந்திரன் செய்த வழிபாடு இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பொழிப்புரை:

மிகவும் அரியதாகிய சக்கராயுதத்தை திருமாலுக்கு அளித்தவனும், அரக்கன் சலந்தரனின் உடல் இரண்டு கூறாக பிளக்கும் வண்ணம் செய்தவனும், எலும்பு மாலையை தனது இடுப்பினில் கட்டிக் கொண்டு அசைத்தவனும், தன்னை சரணடைந்த அயிராவதம் யானை பணிந்த போது அந்த யானைக்கு அருள் புரிந்தவனும், வினைகளை நீக்கவல்ல மூன்று குளங்களை உடைய திருவெண்காடு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் ஆகிய பெருமான், மூன்று கண்களை உடைய பெருமான் ஆவான்.

பாடல் 8:

கண்காட்டும் நுதலானும் (2.48) பாடல்கள் 7. 8. 9. 10, 11 (திதே0046)

பண் மொய்த்த இன் மொழியாள் பயம் எய்த மலை எடுத்த

உண்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்

கண் மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்க

விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே

விளக்கம்:

மொழியாள்=சொல்லினை உடையவள்; கண்=மயில் தோகையில் உள்ள கண்கள்; மஞ்ஞை= மயில்; கருமை என்று குறிப்பிட்டாலும் அந்த சொல் நீல நிறத்தினை உணர்த்துவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். உரம்=வலிமை; மொய்த்த=பொருந்திய; பண் மொய்த்த என்று குறிப்பிடுவதன் மூலம், இனிமையான பண்கள் தாமே சென்று தேவியின் சொற்களில் சென்று அமர்ந்தது போன்ற இனிமையான சொற்களை உடையவள் தேவி என்று சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். உன்மத்தன்=பைத்தியக்காரன்; கயிலாய மலையினை பேர்த்து எடுக்க நினைப்பதே பெரிய குற்றம். அரக்கன் இராவணன் அறியாமையால் செய்தான் என்று எண்ணுவது என்பது தவறு என்று உணர்த்தும் முகமாக, இராமாயணம் தேர்ப்பாகன் அறிவுரை செய்ததை உணர்த்துகின்றது. பல தேவாரப் பாடல்களும், தேர்ப்பாகன் செய்த அறிவுரையை குறிப்பிடுகின்றன. எனவே தான், தேர்ப்பாகன் செய்த எச்சரிக்கையினையும் புறக்கணித்து, கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் எண்ணத்துடன் அந்த மலையை நோக்கி ஓடியவனை பித்துக்குளி என்றும் பைத்தியக்காரன் என்று அழைப்பது மிகவும் பொருத்தம் தானே. சில பதிப்புகளில் உண்மத்தன் என்று காணப்படுகின்றது. எதுகை கருது உன்மத்தன் என்ற சொல் உண்மத்தன் என்று திரிந்ததாக கருதினார்கள் போலும்.

பொழிப்புரை:

பண்கள் தாமே சென்று தேவியின் வாயிலிருந்து வரும் சொற்களில் சென்று அமர்ந்தது என்று கருதும் வண்ணம் மிகவும் இனிமையான மொழியினைக் கொண்டுள்ள பார்வதி அன்னை, அச்சம் கொள்ளுமாறு கயிலை மலையினை அசைத்து பேர்த்து எடுக்க முயற்சி செய்த பைத்தியக்கார அரக்கன் இராவணனின் வலிமை குன்றுமாறு அவனை மலையின் கீழே அழுத்தி நெரித்தவனாகிய சிவபெருமான் உறையும் கோயில் திருவெண்காடு ஆகும். அழகிய கண்கள் சென்று பொருந்தியது போன்று காணப்படும் தோகைகளை உடைய நீலமயில்கள் நடமாட, அந்த நடனத்திற்கு ஏற்ப கடல் தனது அலைகளால் ஆரவாரம் செய்யும் காட்சியினையும் வானளாவ உயர்ந்த சோலைகளையும் உடையதும், அந்த சோலைகளில் உடலில் வரிகளை உடைய வண்டுகள் இசை முரல்வதும் ஆகிய தலம் வெண்காடு ஆகும்.

பாடல் 9:

கண்காட்டும் நுதலானும் (2.48) பாடல்கள் 7. 8. 9. 10, 11 (திதே0046)

கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்

ஒள்ளாண்மை கொளல் கோடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான்

வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று

உள்ளாடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே

விளக்கம்:

கள்=தேன்; கிடந்தான்=படுத்து கிடப்பவன்; ஒள்ளாண்மை=சிறந்த ஆண்மைத் தன்மை; ஒரு முறை, மேரு மலைக்கு வெளியே பிரமனும் திருமாலும் தீவிரமாக ஒரு வாதத்தில் ஈடுபட்டு இருந்தனர்; தங்களுக்குளே எவர் பெரியவர் என்பதே அந்த வாதம். தேவர்களும் முனிவர்களும், தேவையற்ற வாதம் என்று சொல்லி, வாதத்தினை கைவிடுமாறு இறைஞ்சிய போதும் அவர்கள் தங்களது வாதத்தை நிறுத்தாமல் இருந்தனர். அப்போது அவர்களின் எதிரே, விண்ணையும் மண்ணையும் தாண்டிய வண்ணம் ஒரு தீப்பிழம்பு எழுந்தது. அதைக் கண்ட இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்த தழற்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பவரே தங்களில் உயர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்தனர். அந்த முடிவின் தொடர்ச்சியாக, பிரமன் அன்னத்தின் வடிவம் கொண்டு நெடிது உயர்ந்து நின்ற தழலின் முடியையும், பன்றியின் வடிவம் எடுத்த திருமால் பிழம்பின் அடியையும் காண்பதற்கு முயற்சி செய்தனர். இவ்வாறு தங்களில் உயர்ந்தவன் யார் என்பதை முடிவு செய்யும் நோக்கத்துடன் இருவரும் உயர்ந்தும் தாழ்ந்தும் முயற்சி செய்தமை இங்கே ஒள்ளாண்மை கொளல் கோடி செய்யப்பட்ட முயற்சி என்று சம்பந்தரால் இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த நிகழ்ச்சி மூலம் இறைவனின் அருள் இல்லையேல், கல்வி மற்றும் செல்வத்தால் ஏதும் பயனில்லை என்பதும் உணர்த்தப் படுகின்றது.

இந்த பாடலில் இறைவனை நினைத்து உருகாத மாந்தர்களின் ஞானத்தை மதிக்க மாட்டோம் என்று சம்பந்தர கூறுவது, அவர் அருளிய ஆமாத்தூர் பதிகத்தின் பாடலை (2.44.10) நமக்கு நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் சம்பந்தர், ஈசனைத் தினமும் நினையாதார்களின் நெஞ்சம் நெஞ்சமாக கருதப்படாது என்று கூறுகின்றார். நித்தல் என்ற சொல் எதுகை கருதி நிச்சல் என்று மருவியுள்ளது. பெய்தல்=இடுதல்; பின் சார்தல்=பின்னே வருதல். கொச்சை=இழிவான; பிச்சைப் பெருமானாக (பிக்ஷாடனர்) வேடம் தரித்து தாருகாவனம் சென்ற சிவபிரானின் பின்னர், முனிவர்களின் மனைவியர் தொடர்ந்து வந்த செய்தி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. புலால் நாற்றம் வீசிய தோல் என்று குறிப்பதன் மூலம் அப்போது தான் உரித்த தோல் என்று உணர்த்தப்பட்டுள்ளது. யானையின் பச்சைத் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப்படுகின்றது. ஆனால் சர்வ வல்லமை படைத்த ஈசனை எந்த கேடும் அணுகமுடியாது. மதயானையின் தோல் உரிக்கப்படுவதை நேரில் கண்ட உமாதேவி அச்சம் அடைந்த நிகழ்ச்சியும் இங்கே கூறப்பட்டுள்ளது.

பிச்சை பிறர் பெய்யப் பின் சாரக் கோசாரக்

கொச்சை புலால் நாற ஈரிருவை போர்த்து உகந்தான்

அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்

நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே

நீறு அலைத்ததோர் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.98.6) அப்பர் பிரான் பெருமானை நினையாதவர்களின் நெஞ்சம் நெஞ்சமே அல்ல என்று கூறுகின்றார். முன்னுதல்=நினைத்தல்; முன் நெஞ்சம்=இறைவனை நினைக்கும் நெஞ்சம்; மூர்க்கர்= கொடியவர்; வன்=கொடிய; பெருமானை நினைக்காமல் தங்களது வாழ்க்கையை கழிப்பவர்கள், வீணான வாழ்க்கையை கழிக்கின்றார்கள் என்று இங்கே கூறுகின்றார். தம் நெஞ்சம் தமக்குத் தாமிலாதவர் என்று தங்களது நெஞ்சத்தை சரியாக பயன்படுத்துக் கொண்டு பலன் அடையாமல் இருக்கும் வீணர்களை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மனிதப் பிறவி எடுத்துள்ள நாம் பெறற்கரிய பாக்கியம் செய்தவர்கள். இறைவன் நமக்கு அளித்துள்ள கருவி கரணங்களை நன்கு உபயோகித்து, மெய்ப் பொருளின் தன்மையை உண்மையாக உணர்ந்து, பழைய பிறவிகளிலிருந்து நாம் கொண்டு வந்துள்ள வினைகளை முற்றிலும் கழித்து, பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டு முக்தி நிலையினை அடைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்திருப்பது தான், நாம் உயிருக்கு செய்யும் கைம்மாறு ஆகும். கண்ணிருந்தும் குருடனாக பொருட்களை பார்த்து அறியாமல் இருக்கும் மனிதனை மூடன் என்பது போல், நெஞ்சம் இருந்தும் அதனை சரிவர பயன்படுத்தாமல் இருப்பவர் மூடர் தானே.

முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்

தன் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்

வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லீரே

என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே

பொழிப்புரை:

தேன் நிறைந்த செந்தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும், பாற்கடலில் படுத்து இருப்பவனும் ஆகிய திருமாலும் ஆகிய இவர்கள், தங்களில் யார் உயர்ந்தவர் என்பதை அறியும் பொருட்டு, அன்னமாக உயர்ந்தும் பன்றியாக தாழ்ந்தும் சென்ற போதும் முடியையும் அடியையும் உணர முடியாமல் திகைத்தனர்; இவ்வாறு அரியும் பிரமனும் உணர்வதற்கு அரியவனாக நின்ற பெருமானை, ஐராவதம் எனப்படும் வெள்ளானை தவம் செய்து வழிபட்டு உய்வினை அடைந்தது. இவ்வாறு அருள் புரியும் மேன்மை வாய்ந்த திருவெண்காட்டு பெருமான் என்று தங்களது உள்ளத்தில் கசியும் அன்பினால் பெருமானை நீராட்டி உருகி உருகாத மாந்தர்களின் ஞானத்தை நாம் மதியோம்.

பாடல் 10:

கண்காட்டும் நுதலானும் (2.48) பாடல்கள் 7. 8. 9. 10, 11 (திதே0046)

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்னும்

பேதையர்கள் அவர் பிறிமின் அறிவுடையீர் இது கேண்மின்

வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று

ஓதியவர் யாதும் ஒரு தீதிலர் என்று உணருமினே

விளக்கம்:

போதியர்=போதி மரத்தை வழிபடும் புத்தர்கள்; பிண்டி=அசோகா மரம்; பிண்டியர்கள்=அசோக மரத்தை வழிபடும் சமணர்கள்; மிண்டு மொழி=முரட்டுத் தனமான சொற்கள், உண்மையை திரித்து பழித்துக் கூறும் சொற்கள்; கல் போன்று கடினமான சொற்கள்; பேதையர்=அறிவில் முதிர்ச்சி அற்றவர்கள்; சீர்=மிகுந்த புகழ்;

மிண்டு மொழி என்று திருஞானசம்பந்தர் கூறுவது, நமக்கு மிண்டு மனத்தவர் என்று சேந்தனார் திருபல்லாண்டு பதிகத்தில் கூறுவதை நினைவூட்டுகின்றது; கல் போன்று கடிய மனம் கொண்டு பெருமானை நினைத்து உருகாத மனிதர்களே நீங்கள் அனைவரும் எங்களை விட்டு நீங்குங்கள் என்று விரட்டும் சேந்தனார், உண்மையான அடியார்களே நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள் என்று அழைத்து, அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். சாதி வேறுபாடின்றி அவர்கள் அனைவரும் கொள்ளவேண்டியது யாது என்பதையும் கொடுக்கவேண்டியது யாது என்பதையும் உணர்த்துகின்றார். ஈசனது திருவருளை பெற்றுக் கொண்டு அவனது திருவடிகளில் நமது உடல் பொருள் ஆவி அனைத்தயும் சமர்ப்பித்து அவனுக்கு அடிமையாக வேண்டும் என்று உணர்த்தும் சேந்தனார், நாம் அனைவரும் கூட்டம் கூட்டமாக தில்லைச் சிற்றம்பலம் சென்று, உலகத்தைக் கடந்த பொருள் என்றும், எல்லையற்ற ஆனந்த வெள்ளப்பொருள் என்றும், காலத்தினைக் கடந்து பண்டைய நாளிலும் இன்றும் என்றும் இருக்கும் பொருள் என்றும் இறைவனைப் புகழ்ந்து அவன் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்த வேண்டும் என்று கூறுகின்றார். .

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்

கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு ஆட்செய்மின் குழாம் புகுந்து

அண்டம் கடந்த பொருள் அளவித்ததோர் ஆனந்த வெள்ளப் பொருள்

பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே

பொழிப்புரை:

போதி மரத்தினை வணங்கும் பௌத்தர்களும் அசோக மரத்தினை வணங்கும் சமணர்களும், உண்மையை திரித்து கடுமையான வார்த்தைகள் மூலம் பெருமானை இழித்து பேசுகின்றனர். உலகத்தவரே, அவர்கள் அறிவில் முதிர்ச்சி அற்றவர்கள்;.அவர்களை விட்டு நீங்கள் பிரிந்து விடுவீர்களாக; அறிவுடைய நீங்கள் நான் சொல்வதை கேட்பீர்களாக. அந்தணர்கள் விரும்புவதும் மிகுந்த புகழினை உடையதும், பெரியதும் ஆகிய திருவெண்காடு தலத்தில் உறையும் பெருமானின் திருநாமங்களை ஓதும் அடியார்கள் எந்த விதமான தீங்கும் சென்று அடையாதவர்களாக இருப்பார்கள் என்பதை உணர்வீர்களாக.

பாடல் 11:

கண்காட்டும் நுதலானும் (2.48) பாடல்கள் 7. 8. 9. 10, 11 (திதே0046)

தண் பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ் ஞான சம்பந்தன்

விண் பொலி வெண் பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்

பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்

மண் பொலிய வாழ்ந்து அவர் போய் வான் பொலியப் புகுவாரே

விளக்கம்:

தண்பொழில்=குளிர்ந்த சோலைகள்; சண்பை என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. விகிர்தன்=ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன்; பண்பொலி= பண்ணுடன் இசைந்து பாடுவதால் பொலிவு பெற்று விளங்கும்; பொலிவு=அழகு, சிறப்பு; இந்த பாடலில் சண்பையர் கோன் என்று தன்னை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சீர்காழி நகரில் இருந்த தொண்டர்களும், மற்ற தலங்களில் இருந்த தொண்டர்களும் திருஞான சம்பந்தரை, சைவ சமயத்தின் தலைவனாக ஏற்றுக் கொண்ட தன்மை, இங்கே சண்பையர் கோன் என்ற தொடரால் உணர்த்த படுகின்றது.

பொழிப்புரை:

குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தின் தலைவனாகிய தமிழ் ஞானசம்பந்தன், விண்ணில் பொலிவுடன் உலவும் வெண்மை நிறத்து பிறைச் சந்திரனைத் தனது தலையில் வைத்துள்ளவனும், பல தன்மைகளால் ஏனையோரிலிருந்து வேறுபட்டுள்ளவனும் ஆகிய இறைவன் உறையும் திருவெண்காடு தலத்தினை, பண்ணுடன் இசைத்துப் பாடுவதால் மேலும் அழகாக இனிமையாக விளங்கும் வண்ணம் இயற்றிய இந்த பத்து பாடல்களை பாடும் வல்லமை பெற்றவர், நிலவுலகில் மிகவும் சிறப்புடன் வாழ்ந்து, மறுமையில் சிவலோகத்திலும் சிறப்புடன் வாழ்வார்கள்.

முடிவுரை:

நல்ல மக்கட் செல்வம் பெறவும், கல்வியில் தேர்ச்சி அடையவும், ஞானம் பெறவும், பேச்சாற்றல் பெருகவும், எழுத்தாற்றல் மேம்படவும், தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ளவும் ஓத வேண்டிய பதிகமாக இந்த பதிகம் பெரியோர்களால் கருதப் படுகின்றது. செந்தமிழ் மாலை என்று திருஞான சம்பந்தர் பதிகத்தின் கடைப் பாடலில் குறிப்பிடுகின்றார். மலர்களும் இலைகளும் நாறும் சேர்ந்து தொடுக்கப்பட்ட மாலை போன்று, புராணத்தில் உள்ள செய்திகளும், சாத்திரத்தில் உள்ள செய்திகளும், இயற்கை வருணனையும் கலந்து மிகவும் அழகாக தொடுக்கப்பட்ட மாலை என்றால் மிகையாகாது. பதிகத்தின் முதல் பாடல், வேதங்கள் மற்றும் புராணங்கள் உணர்த்தும் பெருமானின் உருவத் தன்மையை உணர்த்துகின்றன. பெருமானை வணங்கும் அடியார்கள் வினை நீக்கம் பெறுவார்கள் என்று சாத்திரத்தின் செய்தி இரண்டாவது பாடலில் கூறப்படுகின்றது. விண்ணவர் கோன் வழிபட்ட தல புராண செய்தியும், இறைவன் அனைத்து பொருளாக இருக்கும் சாத்திர உண்மையும் மூன்றாவது பாடலில் கூறப்படுகின்றது. நான்காவது பாடல் இயற்கை காட்சியை படம் பிடித்து காட்டுகின்றது. ஆறாவது பாடல் கிளிகள் இறைவனது திருநாமங்களை ஓதும் தன்மையை குறிப்பிட்டு, மிகவும் அதிகமான அடியார்கள் இங்கே வழிபட்ட செய்தியை உணர்த்துகின்றது. ஐந்தாவது, எட்டாவது, ஒன்பதாவது மற்றும் ஏழாவது பாடல்கள் தல புராணச் செய்தியையும் எட்டாவது பாடல் தலத்தின் செழிப்பினையும் உணர்த்துகின்றது. பதிகத்தின் கடைப் பாடல், இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள் இம்மையில் சிறப்பாக வாழ்ந்து மறுமையில் முக்தி நிலையை அடைவார்கள் என்று உணர்த்துகின்றது. பதிகத்தின் சிறப்பினை உணர்ந்த நாம், பதிகத்தினை ஒன்றிய மனத்துடன் ஓதி, பயன்கள் அடைவோமாக.



Share



Was this helpful?