1.134 கருத்தன் கடவுள்
பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக மயிலாடுதுறை தலம் சென்ற திருஞான சம்பந்தர், அந்த தலத்தின் அருகிலிருந்த செம்பொன்பள்ளி,விளமர் மற்றும் பறியலூர் வீரட்டம் ஆகிய தலங்கள் சென்றதாக பெரியபுராணம் உணர்த்துகின்றது. இந்த தலம் சென்ற போது அருளியது இந்த பதிகம்.இந்த பதிகம் மழைவேட்டல் பதிகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. முதல் திருமுறையில் மேகராகக்குறிஞ்சி பண்ணில் பாடும் வண்ணம் திருஞானசம்பந்தர் அருளிய ஏழு பதிகங்களும் (1.129 முதல் 1.135 வரை) மழை வேட்டல் பதிகங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இந்த பதிகங்களை பக்தி உணர்வுடன் மனம் ஒன்றி முறையாக பாடினால் மழை பொழியும் என்று நம்பப்படுகின்றது.
பாடல் 1:
கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமே னிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்த னெனத்தகும் வீரட்டத் தானே
விளக்கம்:
கர்த்தா என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். அனைத்து உயிர்களுடன் உடனாக இருந்து, அவற்றை செயல்படச் செய்யும் தன்மை கர்த்தா என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. முழுமுதற் கடவுள் என்று பொருள். கருத்தன் என்பதற்கு, தன் கருத்தின் வழியே செயல்படுபவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமான் தனது திருவுள்ளத்தில் கருதுவதை மட்டுமே செயல்படுத்துகின்றான். பெருமானை, அவனது எண்ணத்திற்கு மாறாக எவரும் செயல்பட வைக்க முடியாது. இவ்வாறு தன்வயத்தனாக பெருமான் இருக்கும் தன்மையே அவனது எட்டு குணங்களில் முதல் குணமாக கருதப்படுகின்றது.எண்குணத்தான் என்று திருமுறை பல பாடல்களில் குறிப்பிடுகின்றன. தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல்,முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் ஆகியவை பெருமானின் எட்டு குணங்களாக கருதப்படுகின்றன. நமது எண்ணங்கள், சொற்கள், கற்பனை ஆகிய அனைத்தையும் கடந்தவனாக விளங்கும் இறைவன், மிகவும் எளியவனாக அனைத்து உயிர்களின் உள்ளே இருந்த வண்ணம் இயக்கும் தன்மை பற்றியே அவனுக்கு கடவுள் என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள். அனைதையும் கடந்தவனாக இருப்பினும் உயிர்களின் உள்ளே உறைபவன் என்று பொருள். நிருத்தன்=நடனம் ஆடுபவன்; திருத்தம் உடையார்=திருந்திய மனம் உடைய அடியார்கள்; புலன்களின் வழியே மனம் செயல்படாமல், உயிரின் விருப்பத்திற்கு இணங்க ஐந்து பொறிகளும் செயல்படும் தன்மை; பறியல் என்பது தலத்தின் பெயர்; வீரட்டம் என்பது திருக்கோயிலின் பெயர்; நிரம்பா மதி=முழுதும் வளர்ச்சி அடையாத ஒற்றைப் பிறைச் சந்திரன்; விருத்தன்=தொன்மையானவன், அனைத்து உயிர்களும் தோன்றும் முன்னே தோன்றியவன்;
பொழிப்புரை:
அனைத்து உயிர்களுடன் பிணைந்து நின்று அந்தந்த உயிர்களை இயக்குபவனும், அனைத்துப் பொருட்களையும் கடந்தவனாக இருப்பினும் மிகவும் எளியவனாக அனைத்து உயிர்களுடன் இணைந்து இருப்பவனும் ஆகிய இறைவன், தனது கையினில் அனற்பிழம்பை ஏந்திய வண்ணம் நடனம் ஆடுகின்றான். அனைத்துப் பிறைகளையும் ஒவ்வொன்றாக இழந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் தன்னிடம் சரணடைந்த சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு சந்திரனை அழியாமல் காத்த பெருமானை, குற்றம் ஏதும் இல்லாமல் திருந்திய மனத்தவர்களாக விளங்கும் திருப்பறியலூர் அடியார்கள், அனைத்து உயிர்களுக்கும் தொன்மையானவனாக இருப்பவன் என்று போற்றிப் புகழ்ந்து வழிபடுகின்றனர்,
பாடல் 2:
மருந்த னமுதன் மயானத்துண் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே
விளக்கம்:
மருந்தன்=பாச நீக்கம் செய்து உயிர்களின் பிறவிப் பிணிக்கு மருந்தாக செயல்படுபவன்; அமுதன்= பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிர்களுக்கு விடுதலை அளிப்பதால், உயிர்களுக்கு இனியவனாக விளங்கும் தன்மை; மைந்தன்=வல்லமை உடையவன்
பொழிப்புரை:
உயிர்கள் கொண்டிருக்கும் யான் எனது என்ற பாசப்பிணைப்பினை அறுத்து, உயிர்கள் தங்களது பிறவிப்பிணியை தீர்த்துக் கொள்வதற்கு மருந்தாக செயல்படும் இறைவன், அனைத்து உயிர்களும் தாங்கள் குடிகொண்டிருந்த உடல்களை விட்டு பிரிய, உலகமே சுடுகாடாக காட்சி அளிக்கும் பிரளய காலத்தில், தான் மட்டும் அழியாமல் எஞ்சி இருக்கும் ஆற்றல் உடையவனாக விளங்குகின்றான். உயிர்களின் பிறவிப்பிணியைத் தீர்த்து இன்பம் அளிப்பதால்,உயிர்களால் மிகவும் இனியவனாக, அமுதம் போன்றவனாக கருதப்படுகின்றான். ஆயிரம் கிளைகளுடன் மிகவும் பெரிதாக பரந்து வந்த கங்கை நதியினைத் தனது சடையில் வைத்து தேக்கிய ஆற்றல் உடையவன் பெருமான். இத்தகைய இறைவன், திருந்திய நல்லொழுக்கத்துடன் வாழும் அந்தணர்கள் நிறைந்த திருப்பறியலூரில், விரிந்த மலர்ச் சோலைகள் கொண்ட தலத்தினில் உள்ள வீரட்டானம் எனப்படும் திருக்கோயிலில் உறைகின்றான்.
பாடல் 3:
குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தா னடங்க வீந்தெய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே
விளக்கம்:
சிலை=வில்; மன்மதன் வைத்திருப்பது கரும்புவில் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வில்லினை கொடிய வில் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமானின் தவத்தினை கலைக்கும் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட வில் என்பதால் கொடுஞ்செயல் புரிந்த வில் என்று கூறுகின்றார்.பெருமானின் திருவுள்ளக் கருத்துக்கு எதிராக செயல்பட்டு எவரும் வெற்றி கொள்ள முடியாது. எனவே பெருமானின் தவத்தினை கலைக்கும் முயற்சியில் மன்மதன் வெற்றிக் கொள்ள முடியாது என்பதை பெருமான் நன்றாக அறிவார். எனினும் தவத்தில் ஆழ்ந்திருப்பவர் எவராக இருப்பவர், அவரது தவத்தை கலைக்க முயற்சி செய்வது தவறு என்பதை உணர்த்தும் பொருட்டு, பெருமான் மன்மதனுக்கு தண்டனை அளிக்கின்றார். விளிந்தான்=இறந்தான்; பெருமான் தனது நெற்றிக் கண்ணை திறந்து மன்மதனை விழிக்க, மன்மதன் உடல் எரிந்து சாம்பல் குவியலாக மாறிவிடுகின்றான். இந்த செய்தியை, விளிந்தான் அடங்க என்ற தொடர் மூலம் குறிப்பிடுகின்றார். வீந்தெய்த=இறந்தவன் மீண்டும் உயிர் பெற்றெழ; இறந்து பட்ட தனது கணவனின் உயிரை மீட்டுத் தரவேண்டும் என்று இரதிதேவி வேண்டிய போது அந்த வேண்டுகோளுக்கு இணங்கிய பெருமான், மன்மதனை உயிர்ப்பிக்கின்றார். மன்மதன் உயிர் பெற்றது பெருமானின் கருணையால் என்பதால், மனமதன் உயிர் பிழைத்த போதிலும் வெற்றி அடைந்தது பெருமான் தான் என்பது புலனாகின்றது. இதனை உணர்த்தும் பொருட்டு வீந்தெய்தச் செற்றான் என்று குறிப்பிடுகின்றார். தெளிந்தார்=அறிவில் தெளிந்தவர்கள்;
பொழிப்புரை:
கங்கை நதி தேக்கப்பட்டதால் குளிர்ந்த சடையினை உடைய பெருமான், தனது தவத்தைக் கலைக்கும் கொடுஞ்செயலில் ஈடுபட்ட காமனை, தனது நெற்றிக் கண்ணை விழித்து எரித்தான். பின்னர் அவனது மனைவி இரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதன் உயிர்த்தெழும் வண்ணம் அருள் புரிந்தான். எனவே மன்மதன் உயிர் பிழைத்த போதிலும், பெருமானே வெற்றி அடைந்தார். இத்தகைய ஆற்றல் கொண்ட பெருமான், அறிவில் தெளிந்தவர்களாக விளங்கிய மறையோர்கள் வாழ்வதும், மலர்ச்சோலைகள் நிறைந்ததும் ஆகிய திருப்பறியலூர் தலத்தினில் உள்ள வீரட்டம் திருக்கோயிலில் அழகுடன் மிளிர்கின்றார்.
பாடல் 4:
பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே
விளக்கம்:
செறுதல்=அழித்தல்; செறப்பு=இறப்பு; தேசன்=தேசு உடையவன்; தேஜஸ் என்ற் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் தேசு;சிவஞான ஒளி உடையவன்;பிறப்பிலி என்று பெருமானை குறிப்பிடுவதன் மூலம் பெருமான் இறப்பையும் கடந்தவன் என்பதை உணர்த்துகின்றார். அந்தம் செலச் செய்தல்=இறப்புக்கு காரணமாக இருத்தல்; விறல்=வலிமை உடைய; பாரிடம்=பூதகணம். சிறப்பாடு உடையார் என்ற சொல் தலத்தினில் வாழ்ந்த மக்களின் தன்மையை குறிப்பதாக பொருள் கொண்டு, சிறப்பும் புகழும் பெற்ற அடியார்கள் வாழும் திருப்பறியலூர் என்ற விளக்கமும் பொருத்தமானதே.
பொழிப்புரை:
பிறப்பிலியாக அனைத்து உயிர்களுக்கும் முன்னமே ஆதியாக தோன்றிய பெருமான், இறப்பையும் கடந்தவனாகத் திகழ்கின்றான். நிலவுலகில் பிறப்பெடுக்கும் உயிர்களின் பிறப்புக்கு காரணமாக உள்ள பெருமான், அவ்வாறு பிறந்தவர்கள் இறப்பதற்கும் மூல காரணமாக இருக்கின்றான். அவன் ஒளி வடிவினன் என்ற சிறப்பினை பெற்றவன் பெருமான். அத்தகைய ஆற்றல் உடைய பெருமான், பூத கணங்கள் புடை சூழ திருப்பறியலூர் தலத்தினில் உள்ள வீரட்டம் திருக்கோயிலில் உறைகின்றான்.
பாடல் 5:
கரிந்தா ரிடுகாட்டி லாடுங்க பாலி
புரிந்தார் படுதம் புறங்காட்டி லாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறிய லூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே
விளக்கம்:
படுதம்=கூத்தில் ஒரு வகை என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது; படுதம் என்ற சொல்லினை படு மற்றும் தம் என்று பிரித்து, இறந்து படுவோர்கள் தமது என்று பொருள் கொள்வது இங்கே பொருத்தமாக இருப்பதாக தோன்றுகின்றது. புரிந்தார்=வினை புரிந்தவர்கள்; தங்களது வினையின் காரணமாக நிலவுலகில் பிறந்து, மீண்டும் வேறொரு பிறவி எடுப்பதற்காக இறக்கும் மனிதர்கள்; கரிந்தார்=இறந்தவர்கள்; தெரிந்தார்=தெரிந்து+ஆர்=ஆராய்ந்து அறிந்தவர்கள்;
பொழிப்புரை:
இறந்தவர்களின் உடலை எரித்து கரிந்தவர்களாக மாற்றும் சுடுகாட்டினில், நடனம் ஆடுகின்ற கபாலியாக இருப்பவன் பெருமான். அவன் தங்களது வினைகளின் காரணமாக நிலவுலகில் பிறந்து, மீண்டும் வேறொரு பிறவி எடுப்பதற்காக இறந்து படுகின்ற உயிர்களின் உடல்கள் வைத்து எரிக்கப்படும் புறங்காட்டில் நடனமாடும் பெருமான், நான்மறைகளை ஆராய்ந்து உணர்கின்ற அந்தணர்கள் வாழும் திருப்பறியலூர் தலத்தினில், விரிந்து பரந்த மலர்ச்சோலைகள் நிறைந்த தலத்தினில் உள்ள வீரட்டம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறைகின்றான்.
பாடல் 6:
அரவுற்ற நாணா வனலம்ப தாகச்
செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்
தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே
விளக்கம்:
வெரு=அச்சம்; வெருவுற்றவர்=அச்சம் அடைந்தவர், பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ள அனைவரும் தாங்கள் அவ்வாறு சிக்கியுள்ள தன்மையையும் அதனால் அந்த உயிர் மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து துன்பங்களில் ஆழ்வதையும் உணர்வதில்லை. அவ்வாறு உணர்ந்தால் தானே, அந்த துன்பத்தை நீக்கிக்கொள்ளும் முயற்சியில் அவர்கள் தலைப்படுவார்கள். அவ்வாறு உணர்ந்து தலைப்படும் மனிதர்களில் பெரும்பாலோர், தாங்கள் எத்தகைய முயற்சியில் ஈடுபடவேண்டும் என்பதை அறிவதில்லை. ஒரு சிலரே, பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுபடுவதற்கு தாம் தொழ வேண்டியது சிவபெருமானை என்பதை உணர்ந்தவர்களாக, பெருமானை பணிந்தும் தொழுதும் பயனடைகின்றனர். அத்தகையோர்களை வெருவுற்றவர் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அரவுற்ற நாண்=திரிபுரத்தை எரிப்பதற்கு தேர்ந்தெடுத்த வில்லின் நாணாக செயல்பட்ட வாசுகி பாம்பு;அனலம்பு=மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழிக்க பயன்பட்ட அம்பின் நுனியில் அமர்ந்த அக்னிதேவன்; செரு=போர்;
பொழிப்புரை:
வாசுகி பாம்பினை, மேரு மலையை வளைத்துச் செய்த வில்லினில் நாணாகப் பொருத்தியும், அந்த வில்லினில் தீக்கடவுளை தனது நுனியில் கொண்டுள்ள அம்பினைப் பூட்டியும் அனைவருடன் விரோதம் பாராட்டி சண்டை போட்டு துன்பம் இழைத்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்து வெற்றி கண்டவன், சிவபெருமான். கொடிகள் நிறைந்து அழகுடன் பொலியும் வீதிகளை உடைய திருப்பறியலூர் தலத்தினில் வாழ்வோரும், தங்களை ஆழ்த்தி உள்ளடக்கிக் கொண்டிருக்கும் பிறப்பிறப்புச் சுழற்சியின் தன்மைக்கு அச்சம் கொண்டு அதனின்று விடுதலை பெறுகின்ற நோக்கத்துடன் பெருமானை தொழுவோரும் ஆகிய அடியார்களால் பணிந்து வணங்கப்படும் இறைவன், திருப்பறியலூர் தலத்தில் உள்ள வீரட்டம் திருக்கோயிலில் உறைகின்றான்.
பாடல் 7:
நரையார் விடையா னலங்கொள் பெருமான்
அரையா ரரவம் மழகா வசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே
விளக்கம்:
நரை=வெண்மை; அரை=இடுப்பு; விரை=நறுமணம்; நலங்கொள் பெருமான்=பல விதங்களிலும் அனைத்து உயிர்களுக்கு அருள் புரிந்து காப்பாற்றும் இறைவன்; பக்குவப்பட்ட ஆன்மாக்களுடன் பிணைந்துள்ள வினைகளை தான் வாங்கிக்கொண்டு அவர்களை பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுக்கும் பெருமானின் கருணைச்செயல், நலம் கொள் பெருமான் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது.திரை=அலைகள்;
பொழிப்புரை:
வெண்மை நிறத்து இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள பெருமான், அனைத்து உயிர்களுக்கும் பல விதங்களிலும் நலம் புரியும் இறைவன், தனது இடுப்பினில் பாம்பினை கச்சாக இறுகக்கட்டி அந்த பாம்பினை தனது விருப்பம் போன்று அழகாக அசைக்கின்றான். அலைகள் நிறைந்த வாய்க்கால்களால் சூழப்பட்ட திருப்பறியலூர் தலத்தினில், நறுமணம் வீசும் மலர்ச் சோலைகள் நிறைந்த தலத்தினில், வீரட்டம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் அந்த இறைவன் உறைகின்றான்.
பாடல் 8:
வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே
விளக்கம்:
படுகர்=ஆற்றுப்படுகை; திளைக்கும்=ஒன்று கூடி இன்பத்தில் திளைக்கும்; எயிறு=கோரைப்பல், வளைந்த பல்; ஏழை அன்னம்=பெண் அன்னம்;விளைக்கும்=நெல் முதலியன விளையும் வளமான நிலங்கள்;
பொழிப்புரை:
நீண்டு வளைந்த பற்களை உடைய அரக்கன் இராவணன், கயிலாய மலையின் கீழே அமுக்குண்டு உடல் வருந்தி இளைக்கும் வண்ணம், கயிலை மலையினைத் தனது கால் விரலால் அழுத்தி அரக்கனது வலிமையை குறைத்தவன் சிவபெருமான். அத்தகைய ஆற்றல் மிகுந்த பெருமான் பெண் அன்னம் தனது துணையோடும் கூடி இன்பத்தில் திளைக்கும் ஆற்றுப் படுகைகளும், நெல் முதலான பயிர்கள் செழிப்புடன் வளரும் வயல்களும் நிறைந்த திருப்பறியலூர் தலத்தினில் வீரட்டம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறைகின்றான்.
பாடல் 9:
விளங்கொண் மலர்மே லயனோத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளம்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே
விளக்கம்:
இளங்கொம்பனாள் என்பது இந்த தலத்து இறைவியின் திருநாமம். ஒண் மலர்=ஒளியுடன் திகழும் தாமரை மலர்; ஓதம்=கடல் அலைகள்;துளங்கும்=நடுக்கம் அடைந்த; அயன்=பிரமன்;
பொழிப்புரை:
ஒளிவீசும் தாமரை மலர் மேல் உறைகின்ற பிரமனும், கடல் அலைகளின் நிறத்தில் மேனி உடையவனாகிய திருமாலும், தங்களின் முன்னர் எழுந்த நெடிய தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்து அச்சத்தால் நடுங்கி நிற்கும் வண்ணம் தீப்பிழம்பாக நின்றவன் பெருமான். பின்னர் அவர்கள் இருவராலும் தொழப்பட்ட பெருமான், இளைய பூங்கொம்பு போன்ற திருமேனி உடைய அன்னையுடன் இணைந்தும், அன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு பிணைந்தும் விளங்குகின்றான். அத்தகைய ஆற்றல் படைத்த பெருமான், திருப்பறியலூர் என்ற தலத்தினில் உள்ள வீரட்டம் என்று அழைக்கப்படும் திருகோயிலில் உறைகின்றான்.
பாடல் 10:
சடையன் பிறையன் சமண்சாக் கியரோ
டடையன் பிலாதா னடியார் பெருமான்
உடையன் புலியி னுரிதோ லரைமேல்
விடையன் றிருப்பறியல் வீரட்டத் தானே
விளக்கம்:
அடை அன்பிலாதான்=அவர்களைச் சென்றடைந்து அருள் புரியும் வண்ணம் அன்பு கொள்ளாதவன். சமணர்கள் மற்றும் புத்தர்களுக்கு அடை அன்பிலாதவன் என்று குறிப்பிட்டதால், அவர்களைத் தவிர்த்த ஏனையொருக்கு அடை அன்பு உள்ளவனாக பெருமான் திகழ்கின்றான் என்று இங்கே உணர்த்துகின்றார்.சடை என்பது தவம் செய்வோர்களின் அடையாளமாக கருதப்பட்டாலும் எந்த முனிவரும் சடையன் என்ற பெயரால் அழைக்கப்படுவதில்லை. அனைத்து முனிவர்களினும் மேலான தவம் செய்யும் தலைவனாகிய பெருமான் மட்டுமே சடையன் என்று அழைக்கப் படுகின்றான் என்பதிலிருந்து பெருமான், அனைத்து முனிவர்களுக்கும் முன்னோடியாக இருக்கின்ற தன்மை உணர்த்தப்படுகின்றது. மேலும் பெருமானது சடை பல பெருமைகளை உள்ளடக்கியது. தன்னிடம் சரணடைந்த சந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்தது பெருமானின் சடை; மிகுந்த வேகத்துடன் கீழே பாய்ந்து வந்த கங்கை நதியைத் தேக்கி உலகினுக்கு நேரிட இருந்த பேரழிவைத் தடுத்தது பெருமானின் சடை; துளித்துளியாக கங்கை நதி வெளியேறி நிலத்தினில் பாயும் வண்ணம், தன்னை தளர்த்திக்கொண்டு உலகினுக்கு அருள் புரிந்தது பெருமானின் சடை. சந்திரன், பாம்பு மற்றும் கங்கை நதி ஆகியோர் தங்களின் இடையே இருந்த பகையினை மறந்து ஒரே இடத்தில் படரச் செய்தது பெருமானின் சடை.
பொழிப்புரை:
சடையன் என்று அழைக்கப்படுபவனும் ஒற்றைப்பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு தக்கனது சாபத்தால் சந்திரன் அழியாமல் இருக்கும் வண்ணம் காத்தவனும் ஆகிய பெருமான், சமணர்கள் மற்றும் சாக்கியர்கள் பால் அன்பு கொள்ளாதவன்; அதனால் தான், ஏனையோரைச் சென்றடைந்து பல விதமான உதவிகள் புரியும் பெருமான், சமணர்கள் மற்றும் சாக்கியர்களை அணுகுவதில்லை. தனது அடியார்கள் பால் அன்பு கொண்டு அவர்களுக்கு உதவி புரிவதால், அவர்களால் தலைவனாக ஏற்றுக் கொள்ளப்படும் பெருமான் புலியின் தோலைத் தனது உடையாக இடுப்பினில் அணிந்துள்ளான்; இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ள பெருமான் திருப்பறியலூர் என்ற தலத்தினில் உள்ள வீரட்டம் என்று அழைக்கப்படும் திருகோயிலில் உறைகின்றான்.
பாடல் 11:
நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
வெறுநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்
கறுநீ டவல மறும்பிறப் புத்தானே
விளக்கம்:
நறுநீர்=நறுமணம் மிகுந்த நீர்; நீடு அவலம்=ஆணவ மலத்தின் சேட்டையால் தொடரும் பிறப்பு இறப்புகள்; இந்த தலத்தில் தான் தக்கன் சிவபெருமானை புறக்கணித்து யாகம் செய்ததாகவும், வீரபத்திரர் தோன்றி அந்த யாகத்தை அழித்ததாகவும் கருதப் படுகின்றது. இரண்டாவது அடியில் உள்ள முதற்சொல்,வெறுநீர் என்றும் வெறிநீர் என்றும் இரண்டு விதமாக (பாடபேதமாக இருக்கலாம்) வெவ்வேறு பிரதிகளில் காணப் படுகின்றன. சிவக்கவிமணியார் தனது புத்தகத்தில் வெறுநீர் என்று குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தையும் அளிக்கின்றார். வீரட்டம் என்று அனைத்துப் பாடல்களிலும் குறிப்பிடப் பட்டிருப்பதால் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று என்பது புலனாகின்றது. இந்த தலத்திற்கு உரிய பாடல் இந்த ஒன்று தான் இதுவரை கிடைத்திருக்கின்றது. இந்த பாடலிலும் முதல் பத்து பாடல்களிலும் எங்கும் இந்த தலத்திற்குரிய வீரச்செயல் குறிப்பிடப்படவில்லை. மேலும் முதல் அடியில் நறுநீர் என்றும் நான்காவது அடியில் அறுனீடவலம் என்றும் இருப்பதால் எதுகை கருதி வெறுநீர் என்பது பொருத்தமாக உள்ளது. தக்க யாகம் நடைபெற்ற அடையாளம் ஏதுமின்றி விரபத்திரரால் அழிக்கப் பட்டமை உணர்த்தும் வண்ணம் வெறுநீர் என்று சிவக்கவிமணியார் கொள்கின்றார். நீர்மை=தன்மை; வெறுநீர்=அகந்தை கொண்ட தக்கனை அழிக்கும் தன்மை; வெறும்=வெற்றதாக்கும், அடையாளம் ஒன்றும் இல்லாத வணணம் அழித்தல்; வெறீநீர் என்று கொள்வதானால், நறுமணம் நிறைந்த நீர் என்ற விளக்கம் பொருத்தமாக உள்ளது. இந்த பதிகத்தின் பல பாடல்களில் தலத்தின் பாயும் நீரின் தன்மை குறிப்பிடப் பட்டிருப்பதால்,வெறிநீர் என்ற பாடபேதமும் பொருத்தமாக உள்ளது. பொறி=புள்ளிகள்;
பொழிப்புரை:
நறுமணம் நிறைந்த நீர் பாயும் சீர்காழி நகரத்தைத் சார்ந்த ஞானசம்பந்தன், தக்க யாகம் நடந்த இடம் என்பதற்கு அடையாளம் ஏதும் இல்லாத வண்ணம் வெற்றிடமாக மாற்றப்பட்ட திருப்பறியல் தலத்தின் வீரட்டம் எனப்படும் திருக்கோயிலில் உறைகின்ற பெருமானை, புள்ளிகள் கொண்ட நீண்ட உடலினை உடைய பாம்பினைத் தனது உடலில் பல இடங்களில் அணிந்த பெருமானைப் புகழ்ந்து புனைந்த பாடல்களை நன்கு கற்றுத் தேர்ந்த அடியார்கள், தங்களை வாட்டும் பெரிய துன்பங்களையும் பிறவிப்பிணியையும் நீக்கிக் கொள்வார்கள்.