இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கற்றாங்கு எரியோம்பி

கற்றாங்கு எரியோம்பி

பதிக எண்: 1.80 திரு தில்லைச்சிதம்பரம் குறிஞ்சி

பின்னணி:

மூன்று தல யாத்திரைகள் மேற்கொண்டு பல சோழ நாட்டுத் தலங்களுக்கு சென்று அங்குள்ள இறைவனைப் பணிந்து வணங்கி பதிகங்கள் பாடிய திருஞான சம்பந்தர், தில்லைச் சிதம்பரம் முதலாய பல தலங்கள் காண்பதற்கு மிகுந்த ஆவல் கொண்டார். ஒவ்வொரு முறையும் தலயாத்திரை மேற்கொள்வதற்கு முன்னரும் சீர்காழியில் உறையும் திருத்தோணியப்பரை வணங்கி அவரது திருக்குறிப்பினை அறிந்து கொண்ட பின்னரே யாத்திரை புரிவதை வழக்கமாகக் கொண்டிருந்த சம்பந்தர், சீர்காழி திருக்கோயிலுக்கு சென்றார். ஆங்குள்ள இறைவனை பணிந்து வணங்கிய பின்னர், தில்லையில் நடம் புரியும் பெருமானை காண்பதற்கு தான் கொண்டிருந்த ஆவலை இறைவனுக்கு அறிவித்தார். இறைவன் தனது இசைவினை வெளிப்படுத்தியதை குறிப்பினால் உணர்ந்த சம்பந்தர் தனது தந்தையாருக்கு அதனை தெரிவித்தார். பின்னர் தனது தந்தையார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் மற்றும் பல அடியார்கள் புடை சூழ தனது நான்காவது தலயாத்திரையைத் தில்லைச் சிற்றம்பலம் நோக்கி. சம்பந்தர் தொடங்கினார்; இந்த செய்தி பெரிய புராணத்தில் சேக்கிழாரால் குறிப்பிடப் படுகின்றது; தவமுனிவர்=தவமிருந்தது சம்பந்தரைத் தனது மகனாக பெற்ற சிவபாத இருதயர். சிரபுரம்=சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று.

சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞானசம்பந்தர்

பரவு திருத்தில்லை நடம் பயில்வாரைப் பணிந்து ஏத்த

விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில்

தர இசையும் குறிப்பு அறியத் தவமுனிவர்க்கு

அருள் செய்தார்

தில்லையின் எல்லையை அடைந்தவுடன், திருஞானசம்பந்தர் நிலத்தில் விழுந்து வணங்கினார். இதனிடையில் சம்பந்தர் வருவதை அறிந்த தில்லை வாழ் அந்தணர்கள், சிதம்பர நகரத்து வீதிகளை குளிர்ச்சியும் மணமும் நிறைந்த நீர்க் குடங்களையும் விளக்குகளையும் வைத்து அலங்கரித்தனர்; மேலும் மங்கல வாத்தியங்கள் முழக்கி சம்பந்தரை வரவேற்றனர். பின்னர் அனைவரும் நகரத்தின் மதிலில் உள்ள தென்வாயில் வழியாக நகரத்தினுள்ளே புகுந்து. தில்லை திருக்கோயிலின் தென்வாயில் வழியாக ஞானசம்பந்தரும் அவருடன் சென்ற அடியார்களும் அவரை வரவேற்ற தில்லை வாழ் அந்தணர்களும் திருக்கோயிலின் உள்ளே நுழைந்தார்.

தில்லை என்றவுடனே நமது நினைவுக்கு வருவது தில்லை வாழ் அந்தணர்கள் தாமே. அவர்களின் சிறப்பினை உணர்த்தும் பொருட்டு இறைவனே, தில்லை வாழ் அந்தணர் என்று சுந்தரருக்கு அடியெடுத்துக் கொடுத்து, திருத்தொண்டத்தொகை பாட வைத்ததை நாம் அனைவரும் அறிவோம். திருஞான சம்பந்தரும், தில்லையில் தான் பாடிய பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் தில்லை வாழ் அந்தணர்களின் சிறப்பினை உணர்த்தும் பொருட்டு அவர்களை குறிப்பிடுகின்றார்.

சிதம்பரத்தின் பெருமையை அறியாதவர்கள் உளரோ. சைவர்களுக்கு கோயில் என்றால் சிதம்பரம் திருக்கோயிலையே குறிக்கும். வைணவர்கள் திருவரங்கத்தை சிறப்பாக கொண்டாடுவது போன்று சைவர்கள் தில்லைச் சிதம்பரத்தை கொண்டாடுகின்றனர். இந்த இரண்டு தலங்களின் முதன்மைத் தன்மை கருதி, சைவர்களின் பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் சிதம்பரம் முதல் தலமாக கருதப்படுவது போன்று, திருவரங்கம் வைணவர்களின் திவ்யதேசங்களின் வரிசையில் திருவரங்கம் முதல் தலமாக கருதப் படுகின்றது. சித் என்றால் ஞானம் என்று பொருள். அம்பரம் என்றால் பெருவெளி என்று பொருள். ஞானப்பெருவேளியாக விளங்கும் இந்த திருக்கோயிலை, தில்லை என்ற தலத்தின் பெயருடன் இணைத்து, தில்லைச் சிதம்பரம் என்று அழைத்தனர். காலப் போக்கில் சிதம்பரம் என்பதே ஊரின் பெயராகவும் திருக்கோயிலின் பெயராகவும் மாறிவிட்டது. அருவமாக (உருவமற்ற வெட்டவெளியாக) உருவமாக (நடராஜர்) அருவுருவமாக (இலிங்க மூர்த்தம்) மூன்று வடிவினராக பெருமான் காட்சி தரும் தலம். இந்த அமைப்பு திருவெண்காடு தலத்தில் இருப்பதையும் நாம் காணலாம்.

தில்லை என்ற பெயர் அதிகமாக மக்கள் வழக்கில் இல்லை. தில்லை என்ற ஒருவகை மரங்கள் அடர்ந்து காடாக காணப்பட்ட இடம் என்பதால் தில்லைவனம் என்று அழைக்கப்பட்டது. இந்த மரங்கள் இப்போது சிதம்பரத்தில் காணப்படவில்லை. அருகிலுள்ள பிச்சாவரம் உப்பங்கழிகளின் கரைகளில் இந்த மரங்கள் கானபப்டுகின்றன. இந்த தில்லை வனத்தில் தான், சுயம்புவாக இருந்த இலிங்கத்தை, புலிக்கால் முனிவரும் பதஞ்சலி முனிவரும் கண்டு வழிபட்டனர். இந்த இலிங்கமே இப்போது திருமூலட்டானர் சன்னதியில் உள்ள இலிங்கமாகும். பெருமான் பால் மிகுந்த அன்பு கொண்டு, பற்றுடன் அவரை புலிக்கால் முனிவர் வழிபட்டதால், பெரும்பற்றப் புலியூர் என்றும் அழைக்கப்படுகின்றது. வியாக்ரம் என்றால் புலி என்று பொருள். புலிக்கால் முனிவர் வழிபட்டதை குறிப்பிடும் வகையில், இந்த தலத்தினை வடமொழியில் வியாக்ரபுரம் என்று அழைத்தனர். பரந்தகச் சோழன் சிதம்பரத்தின் மேற்கூரையினை பொன் கொண்டு வேய்ந்ததால் பொன்னம்பலம் என்றும் அழைக்கப்படுகின்றது.

புராணத் தகவல்களின் படி உலகினை விராட்புருஷனின் வடிவமாக உருவகித்தால், அவரது இதயம் உள்ள இடத்திற்கும் சிதம்பரம் பொருந்தும் வண்ணம் அமைந்திருப்பதால், இதயத் தானம் என்றும் இதயக் கமலம் என்றும் அழைப்பார்கள். புண்டரீகம் என்றால் தாமரை என்று பொருள். எனவே வடமொழியில் புண்டரீகபுரம் என்று அழைக்கப்படுகின்றது. தலத்தின் தொன்மை கருதி இந்த நகரத்தை தில்லை மூதூர் என்று சங்க இலக்கியங்கள் அழைத்தன.தொன்மை, இறை வழிபாட்டில் பெற்றுள்ள புகழ், விழாக்களின் கோலாகலம், சிற்பங்களின் நேர்த்தி, பண்டைய கலாசாரத்தின் பிரதிபலிப்பு, ஆடல் பாடலுடன் கொண்டுள்ள தொடர்பு என்று பல அம்சங்களில் தில்லைக்கு நிகர் தில்லை ஒன்று தான் என்று சொல்லவேண்டும். இந்தியப் பண்பாட்டினை சரிவர சித்தரிக்கும் அருங்காட்சியகம் என்றே கூறலாம். பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் தலங்களில் ஒன்றாகவும், பஞ்ச நடனத் தலங்களில் ஒன்றாகவும் கருதப்படும் தலம். மூலவர் நடராஜர். அம்பிகை சிவகாமியம்மை. சிவபெருமானை விரும்பிய அழகிய பெண் என்பதே இந்த பெயரின் பொருள்.மூலவரே உற்சவராக இருக்கும் பெருமை இந்த ஒரு தலத்திற்கே உள்ளது. பொதுவாக கோயில் கோபுரங்களில் நாம் நடராஜரின் உருவத்தை காணலாம்.எண்ணற்ற சிற்பங்களை கொண்டுள்ள, சிதம்பரத்தின் நான்கு கோயில்களில் எங்கும் நாம் நடராஜர் சிற்பத்தை காணமுடியாது. கோயிலின் உள்ளே குடிகொண்டிருக்கும் பெருமானின் அழகினை சிற்பமாக வடிக்க இயலாது என்பதால் சிற்பிகள் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை போலும். அர்த்த யாமத்தில் அனைத்துக் கோயில்களில் உள்ள மூர்த்தங்களின் சிவகலைகளும், இங்கே உள்ள மூலத்தானத்தில் ஒடுங்குவதாக நம்பப் படுகின்றது. இந்த அடிப்படையில் தான், இங்கே அர்த்தஜாமப் பூஜை, சற்று காலந்தாழ்த்தி, இரவு பத்து மணிக்கு மேல், மற்ற திருக்கோயில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்த பின்னர், இங்கே தொடங்கப்படுகின்றது. இந்த தன்மையை உள்ளடக்கி அப்பர் பிரான் ஒரு பதிகமே பாடியுள்ளார். பல திருக்கோயில்களை இந்த பதிகத்து பாடல்களில் குறிப்பிடும் அப்பர் பிரான், பதிகத்தின் ஒவ்வொரு பாடலையும் புலியூர் சிறம்பலமே புக்கார் தாமே என்று முடிக்கின்றார்.

நால்வர் பெருமானர்களின் பாடல் பெற்ற இந்த தலத்தில் ஐந்து சபைகள் உள்ளன. இடது காலைத் தூக்கிக் கொண்டு, வலது காலால் முயலகனை அழித்தியவாறு ஆனந்த தாண்டவ நடனம் ஆடும் கோலம் கொண்டது சிற்சபை; சிற்சபைக்கு அருகில் உள்ளது கனகசபை. இங்கே தான், தினமும் உச்சி வேளையில் அபிஷேகம் நடைபெறும் ச்படிகலிங்கம் உள்ளது. கொடிக்கம்பத்தின் தெற்கே உள்ளது நிருத்தசபை. இங்கே ஊர்த்துவதாண்டவர் மற்றும் சரபேஸ்வரர் சிற்பங்களை காணலாம். சிற்சபைக்கு அருகே, உத்சவமூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ள பேரம்பலம் உள்ளது. இதனை தேவசபை என்றும் அழைப்பார்கள். ஆயிரத்தெட்டு தூண்களை கொண்ட பெரிய மண்டபமே இராசசபை. இந்த மண்டபத்தின் ஒரு கோடியில் கோவிந்தராஜ பெருமான் சன்னதி உள்ளது. பெரிய அரங்கேற்றம் செய்யப்பட்ட இடம் இதுவே. மூன்றாம், ஐந்தாம், ஆறாம், ஒன்பதாம் திருமுறையின் முதல் பாடல்கள் இந்த தலத்தினில் அருளப்பட்டவை. இவை முறையே ஆடினாய் நறுநெய்யுடன், அன்னம் பாலிக்கும், அரியானை அந்தணர் தம் சிந்தையானை, ஒளிவளர் விளக்கே என்ற தொடர்களுடன் தொடங்குகின்றன. இந்த தொடர்களின் முதல் எழுத்து உயிரெழுத்தாக இருப்பதை நாம் உணரலாம். சைவர்களின் உயிர்மூச்சு இந்த தலம் தான் என்பதை உணர்த்தும் வண்ணம், பெருமான் இவ்வாறு பாடல்கள் அமையும் வண்ணம் அருள் புரிந்தாரோ என்று நினைத்து, வியப்பினை அடைகின்றோம்.

ஆதிசங்கரர் இந்த திருக்கோயில் வந்திருந்த போது, அன்ன ஆகர்ஷண எந்திரத்தை பொருத்தியதாக கூறுவார்கள். இன்றும் நண்பகலில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பெருமானின் காலத்திலும் இவ்வாறு நடைபெற்றதை அவர் ஒரு பாடலில் குறிப்பிடுகின்றார்.

வேறொரு செயலை செய்து கொண்டே நடனம் ஆடினால் அதற்கு தாண்டவம் என்று பொருள். இங்கே பெருமான், ஒரு செயலல்ல ஐந்து செயல்களை செய்து கொண்டே நடனம் ஆடுகின்றார். அந்த நடனம் அனைவர்க்கும் ஆனந்தத்தை அளிக்கின்றது. எனவே ஆனந்ததாண்டவம் என்று பொருத்தமாக அழைக்கப்படுகின்றது. இந்த தாண்டவக் கோலம் கொண்டுள்ள சித்சபைக்கு பக்கவாட்டில் படிகள் உள்ளன. இங்கே உள்ள ஐந்து படிகள் நமச்சிவாய மந்திரத்தின் ஐந்து எழுத்துக்களை குறிப்பிடுவதால் நமச்சிவாயப் படிகள் என்றே அழைப்பார்கள். நாதத்திலிருந்தே உலகம் தோன்றியது என்று கூறுவார்கள்.நாதம் எழுப்பும் உடுக்கை இசைக்கருவி படைப்புத் தொழிலையும், அபயமுத்திரை காட்டும் வலது கரம் காக்கும் தொழிலையும், கையில் ஏந்திய தீச்சுடர் அழிக்கும் தொழிலையும், முயலகன் மேல் ஊன்றிய திருவடி மறைக்கும் தொழிலையும் (திரோதானம்) தூக்கிய திருவடி அருளும் தொழிலையும் குறிப்பதாக பெரியோர்கள் உணர்த்துகின்றனர். இந்த ஐந்து தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருக்கும் இறைவன், இடைவிடாது நடனம் ஆடிக் கொண்டே இருக்கின்றான். அந்த நடனத்தின் ஒரு வினாடிக்கும் மிகவும் குறைவான தோற்றமே இங்கே சிற்பமாக வடிக்கப் பட்டுள்ளது. இந்த தலத்தின் சிறப்பு மிகவும் நீண்டு விரியும் என்பதால், எஞ்சிய விவரங்களை நாம், இந்த தலத்தின் மீது அருளிய மற்ற பதிகங்களுடன் சிந்திக்கலாம்.

பாடல் 1

கற்று ஆங்கு எரி ஓம்பி கலியை வாராமே

செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

விளக்கம்:

இந்த பாடலில் அந்தணர்கள் செய்யும் வேள்விகள் கலி புருடனின் வல்லமையை குறைக்கும் என்று குறிப்பிட்டு அத்தகைய வேள்விகள் செய்யும் அந்தணர்களை கலியை வெல்லும் திறமை கொண்டவர்கள் என்று சம்பந்தர் கூறுகின்றார். பண்டைய நாளில் இந்த நம்பிக்கை இருந்தமை, பல தேவாரப் பாடல்களில் உள்ள குறிப்பு மூலம் தெரிய வருகின்றது. அத்தகைய குறிப்புகள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

காழிப் பதியில் அந்தணர் குலத்தில் தோன்றியவன் என்று தன்னைக் குறிப்பிடும் சம்பந்தர், கலியின் ஆற்றலை குறைத்து கலியினை வெற்றி கொள்ளும் தனது குலத்தின் தன்மையை உணர்த்தும் பொருட்டு, கலி கடிந்த கையான் என்று குறிப்பிடும் இந்த பாடல் திருவையாறு பதிகத்தின் (2.6.12) கடைப் பாடலாகும். பெருமான் பாண்டரங்கக் கூத்து ஆடியதை நினைவூட்டும் வண்ணம் பெருமானை பண்டங்கன் என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினைக்

கலி கடிந்த கையான் கடற்காழியர் காவலன்

ஒலி கொள் சம்பந்தன் ஒண்தமிழ் பத்தும் வல்லார்கள்

போய்

மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (3.43.5) சம்பந்தர், கலிபுருடனை வருத்தும் வேள்விகள் செய்யும் கையினை உடைய அந்தணர்கள் வாழ்கின்ற தலம் சீர்காழி என்று கூறுகின்றார். நமது மனதினை வருத்தும் குற்றங்களும் தீவினைகளால் ஏற்படும் உடலை வருத்தும் நோய்களும் நம்மை விட்டு விலக வேண்டும் என்று விரும்பினால் நாம் செய்ய வேண்டிய செயல் செஞ்சடையினை உடைய பெருமானை போற்றுவது தான் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

நலியும் குற்றமும் நம்முடல் நோய் வினை

மெலியுமாறது வேண்டுதிரேல் வெய்ய

கலி கடிந்த கையார் கடற்காழியுள்

அலைகொள் செஞ்சடையார் அடி போற்றுமே

தில்லைச் சிதம்பரத்தில் வாழும் அந்தணர்களை சிறப்பித்தது போன்று திருவீழிமிழலை தலத்தில் வாழும் அந்தணர்களை சிறப்பிக்கும் சம்பந்தர், உலகில் மேல் வரும் கலியை வென்ற வேதியர்கள் என்று கீழ்க்கண்ட பாடலில் அவர்களை (3.119.7) குறிப்பிடுகின்றார்.

தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த

சக்கரம் எனக்கு அருள் என்று

அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன்

பிறையணி சடையன்

நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண்

மேல் வரு கலியை

வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான்

என வினை கெடுமே

திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.12.10) அப்பூதியடிகளின் தன்மை பற்றி கூற வந்த அப்பர் பிரான், பயத்தினால் கலி புருடன் மெலியும் வண்ணம் வேள்விகள் செய்யும் வல்லமை வாய்ந்தவர் என்று குறிப்பிடுகின்றார். குஞ்சி என்றால் தலைமுடி என்று பொருள். அப்பூதி அடிகளாரின் குடுமியில், இறைவனது திருப்பாதங்கள் பதிந்துள்ளன என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்

பஞ்சிக்கால் சிறகன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்

அஞ்சிப் போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி

குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடியையே

கோடு இயைதல் என்பது, தலைவனை விட்டு பிரிந்திருக்கும் தலைவி, தலைவனுடன் கூடுவது எந்நாளோ என்ற கவலையில், செய்யும் ஒரு செயல். தனது கண்களை மூடிக்கொண்டு, கால் கட்டை விரலால் தரையில் கோடுகள் இடுவது, அல்லது சிறு சிறு வட்டங்கள் போடுவது வழக்கம். இவ்வாறு போடப்படும் கோடுகள் இணைந்தால், தலைவன் தன்னுடன் கூடுவான் என்றும், வரைந்த சிறு வட்டங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் வந்தால் தலைவன் தன்னுடன் கூடுவான் என்றும் நம்புவதுண்டு. எனவே இவ்வாறு கோடுகள் இடும்போதும், வட்டங்கள் வரையும் போதும், அந்த கோடுகள் இயைய வேண்டும், அதாவது இணைய வேண்டும் என்றும் வட்டங்கள் இரட்டைப்படையாக கூட வேண்டும் என்று விரும்புவதும், அந்த விருப்பம் ஈடேற வேண்டும் என்று வேண்டுவதும் இயற்கை. எனவே தான், அப்பர் நாயகி தான் வரையும் கோடுகள் இணைய வேண்டும் என்று தனது விருப்பத்தை வேண்டுகோளாக, கோடு இயையே என்று இங்கே இறைவனை வேண்டுகின்றாள்.

எனது வளையல்களைக் கவர்ந்து என்னை வஞ்சித்து, என்னை பிரிந்துவிட்ட எனது தலைவன் சிவபிரான், செம்பஞ்சு போன்ற சிவந்த கால்களையும் வெண்பஞ்சு போன்ற சிறகுகளையும் உடைய அன்னங்கள் கூட்டமாக ஆரவாரம் செய்யும் பழனத்துப் பெருமான், வாராமல் போனாலும் போகலாம். எனவே, பயத்தினால் கலி வருந்தி மெலியுமாறு வேள்விகள் செய்யும் அப்பூதி அடிகளின் தலைமுடியில் பூவாகத் தனது சேவடிகளை வைத்த சிவபெருமானே, நான் வரையும் கோடுகள் இணையுமாறு அருளவேண்டும். அவ்வாறு கோடுகள் இணைந்தால், எனது தலைவன் சிவபிரான் என்னுடன் வந்து கூடுவான் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படும் என்று அப்பர் நாயகி கூறுவதாக அமைந்த அகத்துறை பாடல் இது.

கோடு இயைதலை கூடல் இழைத்தல் என்றும் கூறுவார்கள். திருமருகல் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் ஒன்றினில் (5.88.8) கூடல் இழைத்தல் பற்றிய குறிப்பு காணப் படுகின்றது. திவ்ய பிரபந்தம் நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் நாச்சியார் அருளிய பாடல்களிலும் கூடல் இழைத்தல் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த பாடல், இறைவனுடன் தான் கூட வேண்டுமே என்ற ஆன்மாவின் ஏக்கத்தை வெளிப் படுத்துகின்றது. நீடு நெஞ்சு=நெஞ்சத்தில் ஆழமான இடம்: மால்=மயக்கம்: தனது எண்ணம், அதாவது தனது மனத்தைக் கவர்ந்த தலைவனாகிய சிவபெருமானுடன் இணைவது, நடக்குமா என்ற கவலையில், தான் இழைக்கும் கூடல் ஒருகால் கூடாமல் போனால், தனது விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலையில், இழைக்கும் கூடல் கூட வேண்டுமே என்று தலைவி ஏங்கும் ஏக்கம் இங்கே வெளிபடுத்தப்படுகின்றது.

நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும்

ஓடு மாலினோடு ஒண்கொடி மாதராள்

மாடம் நீள் மருகல் பெருமான் வரில்

கூடு நீ என்று கூடல் இழைக்குமே

மணிவாசகரும், தனது திருக்கோவையார் தொகுப்பில், கூடல் இழைத்தலை (பாடல் எண் 186) குறிப்பிடுகின்றார். சுழிகளின் எண்ணிக்கை, அதாவது கூடல் கணக்கு, இரட்டைப் படையில் அமைந்து சரியாக கூட வேண்டும் என்று இறைவனை வேண்டும் தலைவி, கூடல் ஐயன் என்று அவனை அழைப்பதை நாம் இங்கே காணலாம். பதி ஞானம் (சிவபிரானைப் பற்றிய தெளிந்த அறிவு) ஆன்மாவுக்கு ஏற்படுமாயின், ஆன்மா சிவத்தை அடையும் என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது. ஆழி=ஆணைச் சக்கரம், கடல்: ஆழி திருத்தி=கூடல் இழைத்து; தனது ஆணைச் சக்கரத்தால் உலகினை நடத்தும் புலியூர் பெருமானின் அருள் போன்று இனிமையான இன்பத்தை, நான் எனது தலைவனுடன் கூடினால் பெறலாம். ஆனால் கடலின் அருகே உள்ள மணல் குன்றில், இறுதியாக சந்தித்த எனது தலைவன் என்னை விட்டு பிரிந்து சென்றான்; அவனது பிரிவால் வருந்திய நான் கூடல் இழைக்கின்றேன்; கூடல் தெய்வமே, எனது தலைவன் மீண்டும் வருவான் என்று எனக்கு நம்பிக்கை ஊட்டும் வண்ணம், எனக்கு வருத்தம் ஏதும் ஏற்படா வண்ணம், சுழிகளின் கணக்கினைத் திருத்தி கூடலைக் கூட்டவேண்டும்.

ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின்

அளித்து

ஆழி திருத்தும் மணல் குன்றின் நீத்து அகன்றார்

வருகென்று

ஆழி திருத்திச் சுழிக் கணக்கு ஓதி நையாமல் ஐய

வாழி திருத்தித் தரக் கிற்றியோ உள்ளம் வள்ளலையே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.67.11) சுந்தரர் அந்தணர்கள் வேள்வி வளர்ப்பதன் நோக்கமே கலி புருடனின் வலிமையை கெடுப்பதற்காக என்று கூறுகின்றார்.

கலி வலம் கெட ஆரழல் ஓம்பும் கற்ற நான்மறை

முற்றனல் ஓம்பும்

வலிவலம் தனில் வந்து கண்டு அடியேன் மன்னு நாவல்

ஆரூரன் வன்றொண்டன்

ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும் உள்ளத்தால்

உகந்து ஏத்த வல்லார் போய்

மெலிவில் வானுகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு

எய்துவர் தாமே

கலி வாராமல் காக்கும் அந்தணர்கள் பெருமானை போற்றுகின்றார்கள் என்று வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பாடலில் (7.88.2) சுந்தரர் குறிப்பிடுகின்றார். நஞ்சினை உண்டதால் கரிய கண்டத்தினை உடையவரே என்றும் வெண்மையான சங்கக்குழை ஒன்றினை ஒரு காதினில் தொங்க விட்டவரே என்றும் அந்தணர்கள் இறைவனை போற்றுவதாக சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார்.

விடம் கொள் மாமிடற்றீர் வெள்ளைச் சுருள் ஒன்றிட்டு

விட்ட காதினீர் என்று

திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திருமிழலை

மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை வந்து இழிச்சிய

வான நாட்டையும்

அடங்கல் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளிதிரே

கற்று=வேதங்களை கற்று; வேள்விகள் வளர்க்கும் முறை வேதங்களில் சொல்லைப் படுகின்றது. அத்தகைய வேதங்களை முறையாக கற்ற தில்லை வாழ் அந்தணர்கள், தாங்கள் கற்றதை வாழ்வினில் கடைப்பிடித்து வேள்விகள் வளர்த்தமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. செற்றார்=வென்றவர்கள்; பற்றா=பற்றுக்கோடாகக் கொண்டு; இறைவன் தனது தலையில் சூட்டிக் கொண்டுள்ள பிறைச் சந்திரனை முற்ற வெண் திங்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பிறைகள் தேய்ந்து அழிந்த நிலையில் ஒற்றைப் பிறையுடன் சரண் அடைந்த சந்திரன், பெருமானிடம் தஞ்சம் புகுந்த பின்னர் வளரத் தொடங்கியதால், பிறைச் சந்திரன் இளைமையாக இருக்கும் நிலையை, முற்றா வெண்திங்கள், வளராத வெண்திங்கள் என்று குறிப்பிடுகின்றார். .

கலி என்ற சொல்லுக்கு வறுமை என்ற பொருள் கொண்டு, தாங்கள் செய்யும் வேள்வியின் பயனாக மழை பொழிந்து உலகம் வளம் பெற்றுத் திகழ்வதற்கு அந்தணர்கள் உதவி புரிகின்றனர் என்று திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இந்த செய்தி வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலிலும், (3.54.1) குறிப்பிடப் படுகின்றது. வேள்விகளை வளர்க்கும் அந்தணர்கள் வாழ வேண்டும் என்றும், வேள்விகள் செய்வதற்கு உரிய பொருட்களைத் தந்து உதவும் பசுவினங்கள் வாழ வேண்டும் என்றும், வேள்வியில் வழங்கப்படும் ஆகுதிகளை பெறுகின்ற தேவர்கள் வாழ வேண்டும் என்றும், நாட்டில் மழை பொழிய வேண்டும் என்றும், நாட்டில் நீர்வளம் பெருகி நாடும் நாட்டின் மக்களும், நாட்டின் வேந்தனும் ஓங்கி வளர வேண்டும் என்றும் பாடும் பாடலில். நாட்டில் தீய சக்திகள் அனைத்தும் அழிந்து, எங்கும் சிவன் நாமமே ஒலிக்கப்பட வேண்டும் என்று தனது விருப்பத்தையும் தெரிவிக்கின்றார்.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயது எலாம் அரன் நாமமே

சூழ்க வையகமும் துயர் தீர்கவே

பொழிப்புரை:

வேதம் முதலிய நூல்களைக் கற்று, அந்த நூல்களில் உணர்த்தப்படும் வாழ்க்கை முறையினை கடைப்பிடித்து, வேள்விகளை வளர்த்து கலிபுருடனின் வலிமையைக் குறைத்து அவனை வெற்றி கொள்ளும் அந்தணர்கள் வாழும் சிதம்பர தலத்தில் உள்ள சிற்றம்பலத்தில் நடமாடும் பெருமானின், இளமையான வெண் திங்கட் பிறையினைச் சூடியவனின், முதல்வனின் திருப்பாதங்களை, பற்றுக்கோடாகக் கொண்டு வாழும் அடியார்களை பாவங்கள் பற்றாமல் விலகிவிடும்.

பாடல் 2:

கற்றாங்கு எரியோம்பி (1.080) பாடல் 1 தொடர்ச்சி, 2,. 3, 4, 5, 6 (தித்திக்கும் தேவாரம் 0073)

பறப்பைப் படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும்

சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

பிறப்பில் பெருமானைப் பின் தாழ் சடையானை

மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே

விளக்கம்:

பறப்பை=வேள்விச் சாலை; பசு என்ற சொல் பொதுவாக ஆன்மாவை குறிக்கும். வேட்டு= வேட்டையாடி கொல்லும்; பசு வேட்டு=ஆன்ம போதத்தை அறவே ஒழித்து; உலகில் உள்ள உயிர்களைப் பற்றிய அறிவு, எந்த விதத்திலும் இறையுணர்வினை வளர்க்க உதவாது என்பதால், உலகத்தில் உள்ள பொருட்கள மற்றும் உயிர்கள் மீதான பற்றினை விலக்கிக் கொண்டு இறைவனை தியானிப்பது தில்லை வாழ் அந்தணர்கள் செய்த செயலாக இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஆன்ம போதத்தை ஒழிப்பதற்கு முதலில் நம் ஆன்மபோதம் கொண்டுள்ள தன்மையுடன் வாழ்வதை உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்த பின்னர் அதனை ஒழிக்க முயற்சி செய்யத் தலைப்பட வேண்டும். எனவே தான் வேட்டையாடி விலங்குகளை கொல்வது போன்று, நாம் உலகப் பொருட்கள் மீது வைத்துள்ள பாசத்தினை முற்றிலும் விலக்க வேண்டும் என்று இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. மையல்= மயக்க உணர்வு; மாயா மலத்தின் செய்கையால் உலகம் மற்றும் உலகப் பொருட்களின் மீது ஏற்படும் மோகம்; தில்லை வாழ் அந்தணர்கள் செய்யும் வேள்விகளால் உலகினுக்கு கிடைக்கும் நன்மையை பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் அத்தகைய வேள்விகள், வேள்வி செய்வோருக்கு விளைவிக்கும் பயனை கூறுகின்றார்.

பொழிப்புரை:

பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, தாங்கள் கொண்டிருந்த ஆன்ம போதத்தை அறவே நீக்கி இறைவனைப் பற்றிய சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, வேள்வித்தீ வளர்க்கும் சிறப்பான செயலைச் செய்யும் தில்லை வாழ் அந்தணர்கள் உறையும் தலத்தில் உள்ள சிற்றம்பலத்தில் நடமாடும் பெருமான், தாயின் வயிற்றில் தங்கி பிறத்தல் இல்லாதவன் என்ற பெருமையை உடையவன்; பின் புறம் தாழ்ந்த சடையை உடையவன். அந்த பெருமானை மறவாது தொழும் அடியார்கள், அதன் முன்னம் தாங்கள் உலகப் பொருட்கள் மற்றும் உயிர்கள் மீது கொண்டிருந்த மயக்க உணர்வு நீங்கப் பெறுவார்கள்.

பாடல் 3:

கற்றாங்கு எரியோம்பி (1.080) பாடல் 1 தொடர்ச்சி, 2,. 3, 4, 5, 6 (தித்திக்கும் தேவாரம் 0073)

மையார் ஒண்கண்ணார் மாட நெடுவீதிக்

கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள்

பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்தச்

செய்யான் உறை கோயில் சிற்றம்பலத்தானே

விளக்கம்:

தில்லையில் வாழும் அந்தணர்களை முதல் இரண்டு பாடல்களில் குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில், தில்லையில் வாழும் பெண்களை குறிப்பிடுகின்றார். ஒண்கண்=ஒளி பொருந்திய கண்களை உடையவர்கள்; வேதங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் எல்லா நாட்களுக்கும் பொருந்தும் என்பதை உணர்த்த பொய்யா மறை என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வேதங்களை ஓதி வேள்விகள் செய்யப்பட்ட அந்தணர்களைப் பற்றிய குறிப்பின் தொடர்ச்சியாக வேதங்களின் சிறப்பு இங்கே உணர்த்தப் படுகின்றது. புரிந்தான்= விரும்பினான்; செய்யான்=சிவந்த திருமேனியை உடையவன்;

பொழிப்புரை:

மை தீட்டப் பெற்று ஒளியுடன் மிளிரும் நீண்ட கண்களை உடைய பெண்கள், நெடிய மாடங்கள் நிறைந்த நீண்ட வீதிகளில் தமது கைகளால் பந்தினை எறிந்து விளையாடும் அழகிய காட்சியினை உடைய தில்லை நகரத்தில், உப்பங்கழிகள் சூழ்ந்த தில்லை நகரத்தில், உள்ள சிற்றம்பலத்தில் நடனம் ஆடும் பெருமான் பொய்க்காது என்றும் பொருந்தும் செய்திகளை உடைய வேதங்களின் கீதங்களை விருப்பத்துடன் பாடியவாறு நடனம் ஆடுகின்றான். சிவந்த திருமேனியை உடைய பெருமான் உலகத்தவர் ஏத்தும் வண்ணம் உறையும் திருக்கோயில் தில்லைச் சிற்றம்பலம் ஆகும்.

பாடல் 4:

கற்றாங்கு எரியோம்பி (1.080) பாடல் 1 தொடர்ச்சி, 2,. 3, 4, 5, 6 (தித்திக்கும் தேவாரம் 0073)

நிறை வெண் கொடி மாட நெற்றி நேர் தீண்டப்

பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை

சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய

இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே

விளக்கம்:

மாட வீதிகள் என்று தில்லைச் சிதம்பரத்தின் வீதிகளில் பெண்கள் ஆடிய பந்தாட்டத்தை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில், அந்த வீதிகளில் இருந்த நெடிதுயர்ந்த வீடுகளை குறிப்பிடுகின்றார்.; அறை=ஒலி தொடர்ந்து வண்டுகள் ரீங்காரம் செய்யும் வண்ணம் மலர் சோலைகள் நிறைந்த ஊர் என்று உணர்த்தப் படுகின்றது. நெற்றி=உச்சி, இங்கே ஆகாயம் என்ற பொருளில் வருகின்றது.

பொன்னம்பலம் என்பது ஆடல்வல்லான் அபிஷேகம் செய்யப்படும் இடம். கொடிமரத்திற்கு அருகில் உள்ள நிருத்த சபை ஊர்த்துவ தாண்டவம் ஆடிய இடம்; ஆயிரம் கால் மண்டபம் இராஜ சபை என்று அழைக்கப் படுகின்றது; சிற்றம்பலத்திற்கு அருகில் உள்ள தேவசபையினை பேரம்பலம் என்று அழைப்பார்கள். இங்கே தான் உற்சவ மூர்த்திகளின் உருவச் சிலைகள் வைத்து பாதுகாக்கப் படுகின்றது. சிற்றம்பலம் என்பது பெருமான் நடனம் ஆடும் இடம்.

பொழிப்புரை:

தில்லைச் சிதம்பரத்தின் உயர்ந்த வீட்டு மாடங்களில் நிறைந்துள்ள உயர்ந்த வெண் கொடிகள், ஆகாயத்தினை நேராக தீண்ட, வானில் உலவும் பிறைச் சந்திரனும் அந்த கொடிகளை தொட்டு தாக்குகின்றது. இந்த நகரத்தில், வண்டுகள் தொடர்ந்து ரீங்காரம் வண்ணம் சோலைகள் நிறைந்த நகரத்தில் உள்ள பேரம்பலத்தின் அருகே அமைந்துள்ள சிற்றம்பலத்தில் பொருந்தி நடமாடும் பெருமானின் திருப்பாதங்களின் சிறப்பினை பாடுவதே நிறைந்த இன்பமாகும்

பாடல் 5:

கற்றாங்கு எரியோம்பி (1.080) பாடல் 1 தொடர்ச்சி, 2,. 3, 4, 5, 6 (தித்திக்கும் தேவாரம் 0073)

செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்

செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற

செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே

விளக்கம்:

பெருமானின் புகழினைப் பாடுவதால் நாம் பெறுகின்ற இன்பமே சிறந்த இன்பம் என்று முந்திய பாடலில் கூறிய சம்பந்தர், அவ்வாறு பெருமானின் சிறப்பினை பாடுவது சிறந்த செல்வம் என்று குறிப்பிடுகின்றார். சேண்=ஆகாயம் வேறு எவரிடமும் இல்லாததும் அழிவிலாததும் ஆகிய முக்தி செல்வத்தை உடைய பெருமானே சிறந்த செல்வனாக கருதப் படுகின்றான்.

பொழிப்புரை:

செல்வ வளம் நிறைந்த மாடங்கள் கொண்ட வீடுகள் ஆகாயத்தை அளாவும் வண்ணம் உயர்ந்த நிலையில் இருக்க, வானில் உலவும் அழகிய சந்திரன் அந்த வீட்டு மாடங்களில் தோய்கின்றது. இத்தகைய செல்வவளம் நிறைந்த வீடுகள் கொண்ட தில்லை நகரில் வாழும் மனிதர்கள் ஞானத்தில் சிறந்து விளங்குகின்றனர். இந்த ஞானச் செல்வர்கள், வேறு எவரிடமும் இல்லாததும் அழிவில்லாததும் ஆகிய முக்திச் செல்வத்தை உடைய சிறந்த செல்வனாகிய பெருமானின் திருப்பாதங்களை புகழ்ந்து பாடுவதால் ஏற்படும் ஒப்பிலாத அருள் செல்வத்தை உடையவர்களாக விளங்குகின்றார்கள்.

பாடல் 6:

கற்றாங்கு எரியோம்பி (1.080) பாடல் 1 தொடர்ச்சி, 2,. 3, 4, 5, 6 (தித்திக்கும் தேவாரம் 0073)

வரு மாந்தளிர் மேனி மாதொர் பாகமாம்

திருமாம் தில்லையுள் சிற்றம்பலம் மேய

கருமான் உரி ஆடைக் கறை சேர் கண்டத்து எம்

பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே

விளக்கம்:

வரு மாந்தளிர்=புதியதாக மரத்தில் கிளைத்து எழுகின்ற; திருமாம் தில்லை=திருமகள் பொலிந்து விளங்கும் செல்வச் செழிப்பான; கருமான்=கரிய நிறம் கொண்ட யானை; இறைவனது திருப்பாதங்களை தொழுது வணங்குவதே இன்பம் என்றும், அவனது திருப்பாதங்களை ஏத்தும் பண்பே சிறந்த பண்பு என்று முந்திய இரண்டு பாடல்களில் கூறிய திருஞான சம்பந்தர், இந்த பாடலில் அவனது திருப்பாதங்களைத் தவிர்த்து, தனது உள்ளம் வேறு எதனையும் விரும்பாது என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

புதிதாக கிளைத்து வரும் மாந்தளிர் போன்று மென்மையான திருமேனியை உடைய உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக வைத்துள்ள இறைவன், திருமகள் நிறைந்து விளங்கும் செல்வச் செழிப்பான தில்லை நகரில் உள்ள சிற்றம்பலத்தில் பொருந்தி உறைகின்றான்; கரிய நிறம் கொண்ட யானையின் தோலை உரித்து ஆடையாக அணிந்தவனாகவும், தான் உட்கொண்ட நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கறை படிந்த கழுத்தினை உடையவனாகவும் இருக்கும் பெருமானது திருவடிகளை அன்றி எனது உள்ளம் வேறு எதையும் விரும்பாது.

பாடல் 7:

கற்றாங்கு எரியோம்பி (1.080) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0074)

அலையார் புனல் சூடி ஆகத்து ஒரு பாகம்

மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகு ஏத்தச்

சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைச்

தலையால் வணங்குவார் தலை ஆனார்களே

விளக்கம்:

சிலை=மேரு மலையாகிய வில்; முந்திய மூன்று பாடல்களில் பெருமானின் பாதங்களைத் தொழுது வணங்குவதன் சிறப்பினை கூறிய திருஞானசம்பந்தர், அத்தகைய அடியார்களின் சிறப்பினை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

அலைகள் வீசும் கங்கை நதியைத் தனது சடையில் சூடியுள்ள இறைவன், தனது உடலின் ஒரு பாகத்தில் மலையான் மகளாகிய பார்வதி தேவியை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளான். தாங்கள் பெற்றிருந்த வரத்தின் வலிமையால் எவராலும் வெற்றி கொள்ள முடியாமல் இருந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றையும், உலகம் புகழும் வண்ணம். மேரு மலையினை வில்லாக வளைத்து அந்த வில்லினில் அம்பினை பூட்டி, தீ மூட்டி அழித்தான். அத்தகைய வல்லமை பெற்ற பெருமானை, தில்லை சிற்றம்பலத்தில் உறைபவனை, தங்களது தலை தாழ்த்தி வணங்கும் அடியார்கள், சிறந்த முறையில் பலருக்கும் தலைவர்களாக விளங்குவார்கள்.

பாடல் 8:

கற்றாங்கு எரியோம்பி (1.080) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0074)

கூர் வாளரக்கன் தன் வலியைக் குறைவித்துச்

சீராலே மல்கு சிற்றம்பலம் மேய

நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே

விளக்கம்:

பெருமானை தலை தாழ்த்தி வணங்கும் அடியார்கள் தலைமைத் தன்மையுடன் திகழ்வார்கள் என்று முந்தைய பாடலில் கூறிய சம்பந்தர், இந்த பாடலில் பெருமானின் அடியார்கள், தங்களது தீராத நோய்களும் நீங்கப் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்று கூறுகின்றார்.

பொழிப்புரை:

கூரிய வாளினை உடைய அரக்கன் இராவணனின் உடலும் தலையும் தோள்களும் நொறுங்கும் வண்ணம் கயிலாய மலையின் கீழே அழுத்தி, அரக்கனது உடல் வலிமையைக் குறைத்த பெருமான், சிறப்புடன் விளங்கும் தில்லைச் சிற்றம்பலத்தில் உறைகின்றார். தனது சடையினில் கங்கை நதியை அடக்கி வைத்திருக்கும் பெருமானை தினமும் போற்றிப் புகழ்ந்து வணங்கும் அடியார்கள், தங்களது தீராத நோய்களும் தீர்க்கப் பெற்று நலமாக வாழ்வது உறுதி.

பாடல் 9:

கற்றாங்கு எரியோம்பி (1.080) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0074)

கோண் நாகணையானும் குளிர் தாமரையானும்

காணார் கழல் ஏத்தக் கனலா ஓங்கினான்

சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த

மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே

விளக்கம்:

கோண்=வளைந்த; அணை=படுக்கை; மாணா=மாட்சிமை தராத, மனிதர்கள் செய்யும் தவறுகளால் சில நோய்கள் ஏற்படுகின்றன. அத்தகைய நோய்கள் உள்ள மனிதர்களை நாம் இழிவாகத் தானே பார்க்கின்றோம். அத்தகைய நோய்கள் உள்ளவர்களும் பெருமானை புகழ்ந்து போற்றி வணங்கினால், அவர்களை அந்த நோய்கள் எந்த விதத்திலும் பாதிக்காது அவர்களிடமிருந்து விலகி விடும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். சேணார்= உயர்ந்த சான்றோர்கள்; சேணார் என்பதற்கு தேவர்கள் என்ற பொருளும் பொருந்தும். அந்தணர்களும் தேவர்களும் வணங்கும் தில்லையைத் தான் கண்டதாக மணிவாசகர் கண்டப்பத்து பதிகத்தில் கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இறைவன் தனது நோய் மூப்பு என்ற இரண்டையும் ஒழித்ததுடன் நில்லாமல், தன்னைச் சுற்றியுள்ள உலகத்து உயிர்கள் மற்றும் உலகப் பொருட்களின் மீது தான் கொண்டிருந்த பற்றினையும் நீக்கியதன் விளைவாக, தனது பிறவியின் தன்மையையே, மீண்டும் பிறப்பு எடுக்கா வண்ணம் மாற்றியவன் பெருமான் என்று அடிகளார் இங்கே குறிப்பிடுகின்றார். .

பிறவி தனை அற மாற்றிப் பிணி மூப்பு என்று இவை

இரண்டும்

உறவினொடும் ஒழியச் சென்று உலகுடைய ஒரு

முதலைச்

செறி பொழில்சூழ் தில்லை நகர்த் திருச்சிற்றம்பலம்

மன்னி

மறையவரும் வானவரும் வணங்கிடநான்

கண்டேனே

வளைந்த உடலினை உடைய பாம்பினைத் தனது படுக்கையாக கொண்டுள்ள திருமாலும், குளிர்ந்த தாமரை மலரை தான் அமரும் இடமாக கொண்டுள்ள பிரமனும் தங்கள் முன்னர் தோன்றிய தீத்தூணின் அடியையும் முடியையும் கானா முடியாத நிலையில், பெருமானின் பெருமையை உணர்ந்தவர்களாய் பெருமானின் திருவடிகளை போற்றி வணங்கினார்கள். உயர்ந்த சான்றோர்கள் பலரும் வாழும் தில்லைச் சிற்றம்பத்தில் உறையும் போற்றிப் புகழ்ந்து வணங்கும் அடியார்களை, ஒருவனுக்கு இழிவினை ஏற்படுத்தும் நோய்கள் பிடித்திருந்தாலும், அந்த நோய்கள் அத்தகைய அடியார்களை எந்த விதத்திலும் பாதிக்காது அவர்களை விட்டு விலகி விடும்.

பாடல் 10:

கற்றாங்கு எரியோம்பி (1.080) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0074)

பட்டைத் துவராடை படிமம் கொண்டாடும்

முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே

சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே

விளக்கம்:

பெருமானைத் தொழுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை முந்தைய ஆறு பாடல்களை விளக்கிய சம்பந்தர், நாம் அனைவரும் இறைவனை தினமும் தொழுது அந்த பயன்களை பெற்று மகிழ்வோம் என்று ஊக்குவிக்கும் பாடல். பட்டைத் துவர் ஆடை=மரப் படைகளில் துவர் நிறம் ஏற்றப்பட்ட ஆடை; படிமம்=நோன்பு; முட்டைக் கட்டுரை=சாரம் ஏதும் இல்லாமல் பொய்களைக் கொண்டு புனையப் பட்ட சொற்கள்; வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படுவன நார்ப்பட்டு ஆடைகள்;

பொழிப்புரை:

மரப் பட்டைகளில் துவர் வண்ணம் ஏற்றப்பட்ட ஆடைகளை அணிந்துள்ள புத்தர்களும், நோன்புகள் பலவற்றை மேற்கொள்ளும் சமணர்களும் கூறும் சாரம் ஏதுமற்று பொய்களைக் கொண்டு புனையப்பட்ட சொற்களை, தில்லைச் சிதம்பரத்தில் வாழும் மேன்மை வாய்ந்த மனிதர்கள் பொருட்படுத்தாமல் புறக்கணித்து விடுவார்கள். அத்தகைய மேன்மை வாய்ந்த நகரத்தில் உள்ள சிற்றம்பலத்தில் நடனம் ஆடும் பெருமானை நாம் அனைவரும் தினமும் தொழுவோமாக.

பாடல் 11:

கற்றாங்கு எரியோம்பி (1.080) பாடல்கள் 7, 8, 9, 10, 11 (தித்திக்கும் தேவாரம் 0074)

ஞாலத்து உயர் காழி ஞான சம்பந்தன்

சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய

சூலப் படையானைச் சொன்ன தமிழ் மாலை

கோலத்தார் பாட வல்லார் நல்லாரே

விளக்கம்:

கோலம்=அழகு; சீலம்=நல்லொழுக்கம்;

பொழிப்புரை:

நல்லொழுக்கம் வாய்ந்து நல்ல கொள்கைகளுடன் சான்றோர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்தில் பொருத்தி நடமாடும் இறைவனை, தனது கையினில் சூலம் ஏந்திய பெருமானை, உலகினில் உயர்ந்த புகழுடன் விளங்கும் சீர்காழி நகரினில் தோன்றிய ஞானசம்பந்தன் புகழ்ந்து சொன்ன தமிழ் மாலையினை, அதற்குரிய பண்ணுடன் இசைத்து அழகாக பாடும் வல்லமை வாய்த்தவர்கள் நல்ல குணங்கள் பொருந்தியவராக இருப்பார்கள்.

முடிவுரை:

சொல்மாலையால் காலம் எல்லாம் துதித்து என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுவதால் திருஞானசம்பந்தர் பல பதிகங்கள் தில்லைப் பதியின் மீது பாடியிருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. ஆனால் நமக்கு இரண்டு பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. பின்னர் திருக்கோயிலின் வெளியே வந்த சம்பந்தர் திருக்கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளையும் வணங்கினார் என்று பெரிய புராணத்திலிருந்து நாம் அறிகின்றோம். இந்த செய்கை நமக்கு அப்பர் பிரான் தில்லை திருவீதிகளின் புனிதம் கருதி, நான்கு வீதிகளையும் தரையில் புரண்டு வலம் வந்ததை நினைவூட்டுகின்றது.

மேலும் தில்லை தலத்தின் புனிதம் கருதி, தில்லையில் தங்கி இரவு துயில்வது தவறு என்ற எண்ணத்துடன் தில்லையில் இரவுப் பொழுதினில் தங்குவதைத் தவிர்த்து, அருகில் உள்ள திருவேட்களம் என்ற தலத்திற்கு சம்பந்தர் சென்றார் என்பதையும் சேக்கிழார் நமக்கு உணர்த்துகின்றார். இதிலிருந்து தில்லைத் தலத்தினை எத்துணை புனிதமாக தேவார ஆசிரியர்கள் கருதினார்கள் என்பது நமக்கு புலனாகின்றது. அல்குதல்=தங்குதல்;

செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம்

மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி மாதவங்கள்

நல்கும் திருவீதி நான்கும் தொழுது அங்கண்

அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண் தகையார்

பின்னர் திருவேட்களம், கழிப்பாலை, சிவபுரி தலங்களுக்கு சென்று பதிகங்கள் அருளிய சம்பந்தர் மீண்டும் ஒரு முறை தில்லை வந்து ஆடினாய் நறுநெய்யுடன் என்று தொடங்கும் பதிகத்தினை பாடுகின்றார். திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய கற்றாங்கு என்றும் தொடங்கும் இந்த பதிகத்தினை ஓதி, பலவிதமான நலங்களும் பெற்று, நமது இடர்கள் தீர்க்கபெற்று, மறுமையில் நாம் பெருமானது சிவந்த திருவடிகளை சென்று சேர்வதற்கு வழி வகுத்துக் கொள்வோமாக,



Share



Was this helpful?