Digital Library
Home Books
Kochchengat Chola Nayanar is one of the celebrated 63 Nayanmars in Tamil Shaivism. Known for his unwavering devotion to Lord Shiva and his significant contributions to the religious practices of Shaivism, his life and devotion continue to inspire followers.
வளம்மிக்கச் சோழநாட்டிலே எழிலோடு காணப்படுவது திருவானைக்காவல் என்னும் தெய்வத்தலம். இங்கே காவிரி நதி வற்றாது ஓடிக்கொண்டிருந்தது. காவிரியாற்றின் கரையிலே சந்தரதீர்த்தம் என்னும் பெயருடைய பொய்கை ஒன்று அமைந்திருந்தது. அப்பொய்கை கரையிலே குளிர்ச்சோலை ஒன்று உண்டு.
அச்சோலையிலுள்ள வெள்ளை நாவல் மரத்தின் தாழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. தவமிக்க ஒரு வெள்ளை யானை நாள்தோறும் தனது துதிக்கையால் நீரும், மலரும் எடுத்துவந்து சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. இக்காரணம் பற்றியே அப்பகுதிக்குத் திருவானைக்காவல் என்ற பெயர் வழங்கலாயிற்று.
அங்குள்ள நாவல் மரத்தின் மீதிருந்த அறிவுடைய சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின் மீது சூரிய வெப்பம் படாமலும், சருகுகள் உதிர்ந்து விழாதவாறும் ஞானத்தோடு நூற்பந்தல் அமைத்தது. வழக்கம்போல் சிவலிங்கத்தை வழிபட வரும் வெள்ளை யானை சிலந்தி வலையைக் கண்டு எம்பெருமானுக்குத் தூய்மையற்ற குற்றமான செயலை சிலந்தி புரிந்துவிட்டதே எனச் சினந்து கொண்டு நூற்பந்தலைச் சிதைத்துப் பின்னர் சிவலிங்கத்தை வழிபட்டுச் சென்றது.
வெள்ளை யானையின் இச்செயலைக் கண்டு வருத்தமுற்ற சிலந்தி, யானை சென்றதும் மீண்டும் முன்போல் நூற்பந்தலிட்டது. இவ்வண்ணம் சிலந்தி வலை பின்னுவதும் யானை அதனைச் சிதைப்பதுமான செயல்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே இருந்தன. ஒருநாள் சிலந்திக்கு கோபம் வந்தது. தான் கட்டும் வலையை அழித்திடும் யானையைக் கொல்ல வேண்டும் என்று முடிவு கட்டியது.
வழக்கம்போல் சிவபெருமானை வழிபட வந்த சிலந்தி யானையின் துதிக்கையால் புகுந்து கடித்தது. சிலந்தியின் செயலால் சினங்கொண்ட யானை துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது. சிலந்தி இறந்தது. அதே சமயத்தில் யானையும் சிலந்தி விடம் தாங்காமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. திருக்கையிலாயமலையில் சிவகணத்தவருள் புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் இருந்தனர். இவர்களுக்குள் சிவத்தொண்டில் தாமே சிறந்தவர் என்று கருதி ஒருவருக்கொருவர் பொறாமையும், கோபமும் கொண்டு கொதித்தெழுந்தனர். புட்பதந்தன் மாலியவானைச் சிலந்தியாகப் பிறக்குமாறு சபித்தனன். மாலியவான் புட்பதந்தனை யானையாகுமாறு சபித்தனன். இவ்வாறு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்த இரு சிவகணத்தவர்களும் எம்பெருமானுக்கு செய்த திருத்தொண்டால் வீடு பேற்றை எய்தினர்.
இறைவன் யானைக்கு சிவபதம் அளித்தார். சிலந்தியைச் சோழர் குலத்தில் உதித்து கோயில்கள் அமைத்துச் சிவத்தொண்டு புரிய அருள் செய்தார். யானையைக் கொல்லச் சிலந்தி முதலில் முயன்றதால் அதற்கு மட்டும் மறுபிறப்பு ஏற்பட்டது. சிலந்தியும், வெள்ளை யானையும் எம்பெருமான் அருளால் வீடுபேறு பெற்று முன்போல் சிவகணத் தலைவர்களாய் எம்பெருமானுக்குத் திருத்தொண்டு புரியலாயினர். சோழ அரசரான சுபவேதர் கமலாவதியாருடன் சோழவளநாட்டை அரசு புரிந்து வந்தான். திருமணமாகி நெடுநாட்களாகியும் மக்கட் பேறு இல்லாமல் மன்னன் மனைவியாருடன் தில்லையை அடைந்து அம்பலவாணரது திருவடியை வழிபட்டு பெருத்தவமிருந்தார்!
கூத்தப்பெருமான் திருவருள் புரிந்ததற்கு ஏற்ப சிலந்தி வந்து கமலவதியின் மணிவயிற்றில் கருவடைந்தது. மணிவயிற்றில் கரு வளர்ந்து குழந்தை அவதரிக்கும் தருணம் நெருங்கியது. அப்பொழுது சோதிட வல்லுனர்கள் இக்குழந்தை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமேயானால் மூவுலகத்தையும் ஆளக் கூடிய ஆற்றலைப் பெறக்கூடிய குழந்தையாக இருக்கும் என்றார்கள். சோதிடர் மொழிந்தது கேட்டு அம்மையார், ஒரு நாழிகை தாமதித்துத் தமக்குக் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம்மைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுமாறு கட்டளையிட்டார். அவ்வண்ணமே அரசியாரைக் கட்டினர். சோதிடர் சொல்லிய நல்லவேளை நெருங்கியதும் அரசியார் ஆணைப்படி கட்டவிழ்த்தார்கள். அரசியாரும் அழகிய ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அரசியார் தலைகீழாக தொங்கியதால் சற்று நேரம் குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. அரசியார் அன்பு மேலிட அக்குழந்தையை உச்சிமோந்து என் செல்வக்கோச் செங்கணான் என்று வாஞ்சையோடு கொஞ்சினாள்.
ஆனால் அரசியார்க்கு, அக்குழந்தையைப் பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் பாக்கியம் இல்லாமற் போனது. குழந்தை பிறந்த சற்று நேரத்திற்கெல்லாம் அரசியார் ஆவி பிரிந்தது. சுபதேவர் தமது மகனை வளர்த்து வில் வித்தையில் வல்லவனாக்கி வேதாகமங்களிலும் மேம்பட்டவனாக்கினார். உரிய பருவத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த அவனை ஆளாக்கினார். சுபதேவர் மகனுக்கு முடிசூட்டிவிட்டு காடு புகுந்து அருந்தவம் புரிந்து எம்பெருமானின் திருவடி நீழலை அடைந்தார். கோச்செங்கட் சோழர் இறைவன் அருளாள் முற்பிறப்பை உணர்ந்து அரனார் மீது ஆராக்காதல் பூண்டு ஆலயம் எழுப்பத் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டார். திருவானைக்காவலில் ஆலயம் ஒன்று கட்டி யானை நுழையாதபடி சிறு வாயில் அமைத்தார். மற்றும் சோழ நாட்டில் ஆங்காங்கே அழகிய அம்பலங்கள் அநேகம் கட்டி முடித்தார். இவர் எம்பெருமானுக்கு எழுபது கோவில்களும், திருமாலுக்கு மூன்று கோவில்களும் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் கோச்செங்கட் சோழர் தில்லையில் தங்கி தியாகேசப் பெருமானை முக்காலமும் முறையோடு வழிபட்டுத் தில்லையம்பலத்து ஆடுகின்ற கூத்தபிரானது பாத கமலங்களில் வைகி இன்பமெய்தினார்.
குருபூஜை: கோச்செங்கட்சோழ நாயனாரின் குருபூஜை மாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
உலகாண்ட செங்கணார்க்கும் அடியேன்.
Was this helpful? |
புராணங்கள் |
மகாபாரதம் |
ராமாயணம் |
பகவத் கீதை |
இலக்கியம் |
பன்னிரு திருமுறைகள் |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
நாயன்மார்கள் |
ஆழ்வார்கள் |
ரிஷிகள் |
மகான்கள் |
சித்தர்கள் |
தமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் |
தித்திக்கும் தேவாரம் |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |