இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கோடல் கோங்கம்குளிர்

கோடல் கோங்கம்குளிர்

பதிக எண்: 2.06 - திருவையாறு - இந்தளம்

பின்னணி:


தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருவையாறு தலம் சென்ற திருஞானசம்பந்தர், திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் பெருமானின் சிறப்பையும் தலத்தின் சிறப்பையும் உள்ளடக்கி, புலனைந்தும் என்று தொடங்கும் பதிகத்தை அருளிய பின்னர் திருக்கோயிலுக்கு சென்று ஆங்கே கோடல் கோங்கம் என்று தொடங்கும் இந்த பதிகத்தினை பாடுகின்றார். திருக்கோயிலின் உள்ளே சென்ற பின்னர் முதலில் நாம் பிராகாரங்களை வலம் வரவேண்டும். அவ்வாறு வலம் வரும் நேரத்திலும் வீண் பேச்சுகளை தவிர்த்து, பெருமானின் சிந்தனையுடன் வலம் வந்த பின்னர், பெருமானின் எதிரே நின்று (கொடிக்கம்பத்தின் முன்னே) பெருமானைத் தரையில் விழுந்து பணிந்து எழுந்த பின்னரே, பெருமானின் சன்னதியை நாம் அணுகவேண்டும். திருஞானசம்பந்தர் இந்த முறையினை பின்பற்றிய விவரங்கள் இந்த பாடலில் கொடுக்கப் பட்டுள்ளன.

மணிவீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில்

அணிநீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவில் காதல்

தணியாத கருத்தினோடும் தம் பெருமான் கோயில் வலம் கொண்டு தாழ்ந்து

பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார்

இந்த பதிகத்தின் முதல் பதினோரு பாடல்களும் ஐயாறுடை ஐயனே என்று முடிகின்றன. இதனைக் குறிப்பிடும் சேக்கிழார், இந்த பதிகத்தினை பாடிய திருஞானசம்பந்தர், உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தன்னிலை மறந்து ஆடினார் என்றும் கண்களில் நீர் பொழிய பாடினார் என்றும் கூறுகின்றார். குலவு மாலை=சிறந்த சொல் மாலை;

கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை என்னும் திருப்பதிகக் குலவு மாலை

நீடு பெருந் திருக்கூத்து நிறைந்த உள்ளத்து நிலைமை தோன்ற

ஆடுமாறு அது வல்லான் ஐயாற்றெம் ஐயனே என நின்று

பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய

பொதுவாக திருஞானசம்பந்தரின் பதிகங்கள் பதினோரு பாடல்கள் கொண்டவையாக இருப்பதை நாம் காண்கின்றோம். சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களையும் குறிப்பிடும் பதிகங்கள் பன்னிரண்டு பாடல்கள் கொண்டவையாக உள்ளன. சீர்காழி தலத்து பதிகங்களைத் தவிர்த்த பதிகங்களில் பன்னிரண்டு பாடல்களைக் கொண்ட மூன்று பதிகங்கள் திருஞான சம்பந்தரால் அருளப் பட்டுள்ளன. அத்தகைய பதிகங்களில் ஒன்று தான், நாம் இங்கே சிந்திக்கும் திருவையாறு பதிகம். மதுரை நகரில் அருளிய வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகமும், திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய துஞ்ச வருவாரும் என்று தொடங்கும் பதிகமும், இதே போன்று பன்னிரண்டு பாடல்கள் கொண்ட சிறப்பினை உடையவை.

இந்த பதிகம் பாடிய பின்னர் திருவையாற்று தலத் தொண்டர்களின் விருப்பத்திற்கு இசைந்து சில நாட்கள் இந்த தலத்தில் தங்கிய திருஞானசம்பந்தர், அதன் பின்னர் பெரும்புலியூர் சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. பெரும்புலியூர் மற்றும் பல தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர் மீண்டும் திருவையாறு வந்தடைந்தார் என்று சேக்கிழார் குறிப்பிடுவது, இந்த தலத்து இறைவனைக் காண எத்தனை ஆர்வம் திருஞானசம்பந்தர் கொண்டிருந்தார் என்பதை நமக்கு புலப்படுத்துகின்றது. புலனைந்தும் என்று தொடங்கும் பதிகம் மற்றும் இந்த பதிகம் தவிர்த்து, திருஞானசம்பந்தர் மேலும் மூன்று பதிகங்கள் திருவையாறு தலத்தின் மீது அருளியுள்ளார். இந்த மூன்று பதிகங்களும் மதுரை சென்ற பின்னர் சீர்காழி திரும்பிய போது பாடப்பட்ட பதிகங்களாகும்.

பலமுறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத்தொண்டரோடு

நிலவு திருப்பதி அதன் கண் நிகழு நாள் நிகரிலா நெடுநீர் கங்கை

அலையும் மதி முடியார் தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றிக்

குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில்

திருவையாறு தலத்தில் இறைவனை வழிபட்டு பலன் அடைந்த அடியார்களில் சுசரிதன் என்ற சிறுவனும் ஒருவன். இந்த சிறுவன், அருகில் உள்ள திருப்பழனம் தலத்தில் இருந்த போது, தனது வாழ்நாட்கள் இன்னும் ஐந்து நாட்கள் தான் என்பதை, இயமனின் மூலமாக அறிந்து கொண்டான். தனது தாயின் அறிவுரை படி பல சிவத்தலங்கள் சென்று இறைவனை தரிசிப்பதை தொடர முடியாமல் போய்விடுமோ என்று கவலை கொண்டான். தனது கவலையை இறைவனிடம் தெரிவித்த போது, இறைவன், சிறுவனை திருவையாறு வருமாறு பணித்தார். திருவையாறு திருக்கோயிலின் தென் வாயிலின் அருகே அமர்ந்த வண்ணம்,சிறுவன் இறைவனையே தியானித்து வந்த போது, ஒரு நாள் இயமன் தோன்றி சிறுவனின் உயிரினைக் கவர முயற்சி செய்தான். சோதி வடிவில் தோன்றி சிறுவனுக்கு காட்சி கொடுத்த இறைவன், பின்னர் இயமனை தனது காலால் உதைத்து வீழ்த்தி, சிறுவனுக்கு நீண்ட ஆயுள் கொடுத்தார். சிறுவனும் பல சிவத்தலங்கள் சென்று இறைவனை தரிசித்து தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான். இவ்வாறு சிறுவனுக்கு அருள் புரிந்த பெருமானே ஆட்கொண்டார் என்ற பெயரில் திருவையாறு தென் வாயிலில் வாயில் காப்பாளராக உறைகின்றார் என்று கூறுவார்கள். இந்த சன்னதி அருகே உய்யக்கொண்டார் என்ற சன்னதியும் உள்ளது.

இந்த தலத்தில் உள்ள இலிங்கம் சுயம்பு லிங்கம். கரிகாற் சோழன் இந்த வழியாக வந்த போது, தனது தேர் தடைப்பட்டு ஏதோ ஒரு விசையினால் இழுக்கப்படுவதையும் உணர்ந்தான். உடனே தேரிலிருந்து கீழே இறங்கிய மன்னன் பூமியின் அடியே ஒரு இலிங்கம் இருந்ததைக் கண்டெடுத்து, அதனை நிறுவி கோயில் கட்டி வழிபட்டான் என்று கூறுவார்கள். பண்டைய நாளில் இந்த கோயிலில் பூஜை செய்து வந்த அந்தணர் ஒருவர் காசி செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். இன்று போல் போக்குவரத்து வசதிகள் இல்லாத பண்டைய நாளில், காசி யாத்திரை கடுமையானதாகவும் அபாயம் நிறைந்ததாகவும் கருதப்பட்டது. குறித்த காலத்தில் காசி யாத்திரை சென்றவர்கள் திரும்பாவிடில், அவர்களை இறந்தவர்களாகவே கருதுவார்கள். இந்த சூழ்நிலையில் காசி சென்ற வேதியர் திரும்பி வருவதற்கு கால தாமதம் ஆனபடியால், அவர் இறந்திருக்கலாம் என்று சொல்லி, அவர் செய்து வந்த வழிபாட்டு உரிமைகளை அவரது சுற்றத்தார் கவர முயற்சி செய்தனர். ஆனால் உண்மை நிலையை அறிந்திருந்த இறைவன், அந்த வேதியர் தனக்கு தொடர்ந்து பூஜைகள் செய்யவேண்டும் என்ற விருப்பத்துடன், ஒரு நாள் தானே அந்த வேதியரின் உருவில் தோன்றி, தனக்குத் தானே பூஜை செய்து கொண்டார். இதன் மூலம் அந்த வேதியர்களின் உறவினர்கள் செய்த வஞ்சகத் திட்டம் தகர்க்கப் பட்டது. தனது கணவனின் உருவத்தில் இல்லத்திற்கு வந்த இறைவனைக் கண்ட அவரது மனைவி, காசியிலிருந்து நலமாக தனது கணவர் திரும்பினார் என்று கருதி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். காசி யாத்திரை என்றால் இராமேச்சரத்தில் தொடங்கி காசி சென்று மீண்ட பின்னர், மீண்டும் இராமேச்சரம் சென்று கங்கை நீரினை இராமேச்சரத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்த பின்னரே தங்களது ஊருக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு இராமேச்சரம் சென்ற வேதியர் காவிரி நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக காவிரியின் தென்கரையில் தங்கிவிட்டார். மறுநாள் வெள்ளம் வடிந்ததும், அவர் தனது வீடு சென்றடைந்தார். மூட்டை முடிச்சுகளுடன் வீடு திரும்பிய கணவரைக் கண்ட மனைவி, முந்தைய நாளில் திருக்கோயில் வழிபாட்டினை முடித்து விட்டு வீடு திரும்பியது யார் என்று திகைத்து நிற்க, முன்னர் வந்தது இறைவன் தான் என்பதை கணவன் மனைவி ஆகிய இருவரும் புரிந்து கொண்டார்கள். மேலும் இந்த திருவிளையாடல், வேதியரின் சுற்றத்தார் செய்த சூழ்ச்சியினை முறியடிக்க செய்யப்பட்டது என்பதையும் புரிந்து கொண்டு, இறைவனின் கருணையை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். இந்த நிகழ்ச்சியை, மணிவாசகர், கீர்த்தித் திருவகவல் பதிகத்தில், ஐயாறு அதனில் சைவன் ஆகியும் என்று குறிப்பிடுகின்றார்.

அப்பர் பெருமானின் காலத்திற்கு முன்னமே இந்த தலத்திற்கு பூலோக கயிலாசம் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். அஸ்தினாபுரத்து மன்னன் சுரதன் என்பவன் குழந்தை இல்லாமல் வெகு காலம் வருந்திய போது, அவனை ஒரு மண்டலம் கயிலாய மலையைச் சுற்றி வருமாறு பெரியோர்கள் ஆலோசனை கூறினார்கள். கயிலை யாத்திரை மேற்கொள்வதில் உள்ள இடர்களை அறிந்த மன்னன், திருவையாறு தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த தனது குரு துர்வாசரை அணுகி என்ன செய்யலாம் என்று அவரிடம் ஆலோசனை கேட்டான். முனிவர் இறைவனிடம் கயிலாய மலையினை இந்த தலத்திற்கு கொண்டு வந்து மன்னனுக்கு அருள் புரியுமாறு வேண்டினார். இறைவனும் அதற்கு இசைந்து, கயிலாய மலையின் ஒரு பகுதியை இந்த தலத்தில் வைக்குமாறு இடப தேவருக்கு ஆணையிட்டார். தான் தூக்கி வந்த மலையின் பகுதியை இரண்டு பிளவாக்கி, ஒரு பகுதியை ஐயாறப்பன் சன்னதிக்கு தென் புறத்திலும் மற்றொன்றை வட புறத்திலும் இடபதேவர் வைத்தார். சுரத மன்னனும் இந்த மலைகளை வலம் வந்து பலனடைந்தான் என்று தலபுராணம் கூறுகின்றது. பின்னாளில் சோழ அரசியர்கள் இந்த இடங்களில் இரண்டு கோயில்கள் எழுப்பினார்கள். தியானம் ஞானம் ஆகிய இரண்டும் புலனடக்கத்துடன் இணைந்தது என்பதை உணர்த்தும் வகையில், தென்முகக் கடவுள் ஆமை ஓட்டின் மீது அமர்ந்திருப்பதை நாம் இந்த தலத்தில் காணலாம். நான்கு கரங்களுடன், வலது மேல் கரத்தில் கபாலம், இடது மேல் கரத்தில் சூலம், வலது கீழ் கரத்தில் அபய முத்திரை, இடது கீழ் கரத்தில் ஓலைச் சுவடி ஆகியவை உடையவராக தென்முகக் கடவுள் காட்சி தருகின்றார்.

நான்கு கரங்களுடன், தனது மேல் இரண்டு கைகளில் சங்கும் சக்கரமும் தரித்து, வலது கீழ் கரம் அபய முத்திரை காட்ட, இடது கீழ் கரம் தொடையின் மீது பதிந்துள்ள கோலத்தில் அம்பிகை காட்சி தருகின்றாள். திருமாலின் அம்சமாக தேவி காட்சி தருவதை உணர்த்தும் வண்ணம் அரி அலால் தேவியில்லை என்று இந்த தலத்து பாடல் ஒன்றினில் அப்பர் பிரான் கூறுகின்றார். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மாலை நேரத்தில், இலக்குமியின் உருவச் சிலை அம்பிகையின் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டு, அம்பிகைக்கு தீப ஆராதனை நடைபெறுகின்றது. இந்த வழிபாடு இலக்குமி தேவி திருமாலுக்கு செய்யும் வழிபாடாக கருதப் படுகின்றது. உட்பிராகாரத்தின் வடக்கு பகுதியில் இலக்குமி தேவி தவம் செய்வதாக கருதப்படுவதால், அந்த தவத்திற்கு இடையூறு ஏற்படலாகாது என்பதால் பிராகாரத்தை முழுவதுமாக வலம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை

கரி அலால் போர்வை இல்லை காண்தகு சோதியார்க்கு

பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரான் என்று ஏத்தும்

அரி அலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

பாடல் 1:

கோடல் கோங்கம் (2.006) பின்னணி மற்றும் பாடல் 1 (திதே 0628)

கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர்

ஓடு கங்கை ஒளி வெண் பிறை சூடும் ஒருவனார்

பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண்ணாகவே

ஆடுமாறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே

விளக்கம்:

கோடல்=வெண் காந்தள் மலர்; கூவிளம்=வில்வம்; குலாய=பொருந்திய, தழுவிய; அய்யன்= தலைவன்; மூன்று வகை மலர்களுடன் கங்கை மற்றும் பிறைச்சந்திரன் சேர்த்து பெருமான் தனது சடையில் ஐந்து வகையான பொருட்களை சூடிக் கொண்டுள்ள நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. ஐந்து வகையான பொருட்களை சூடிக் கொண்டுள்ள பெருமான் நடனம் ஆடுகின்றான் என்று சொல்வது பெருமான் ஐந்தொழில்கள் புரியும் தன்மையை, அவனது திருக்கூத்து உணர்த்தும் தன்மையை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது.

படைத்தல் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் நாதத்தை எழுப்பும் உடுக்கை ஏந்திய திருக்கரம் படைத்தல் தொழிலையும், அபயம் காட்டும் வலது திருக்கரம் காத்தல் தொழிலையும், தீச்சுடர் ஏந்திய திருக்கரம் அழித்தல் தொழிலையும், ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளும் தொழிலையும் குறிப்பதாக கூறுவார்கள். இந்த ஐந்து தொழில்களும் உயிர்கள் தனது வினைத் தொகுதிகளுக்கு ஏற்ப ஒரு உடலுடன் பொருந்தி, வினைகளின் விளைவால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்து, வினைகளை கழித்துக் கொள்ள வழி வகுப்பதால் இந்த நடனம் ஊன நடனம் எனப்படுகின்றது. பெருமான் அடியார்களுக்கு அருள் புரியும் தன்மை பற்றி, அவர் புரியும் நடனம் ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் அழைக்கப் படுகின்றது. ஊன நடனத்தின் தன்மையை விளக்கும் மனவாசகம் கடந்தார் அருளிய உண்மை விளக்கம் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. திதி ஸ்திதி என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்.; அங்கி=அக்னி; சங்காரம் என்றால் அழிக்கும் தொழில்;

தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்

சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் — ஊற்றமா

ஊன்று மலர்ப் பதத்தில் உற்ற திரோதம் முத்தி

நான்ற மலர்பதத்தே நாடு

இதே நடனம் எவ்வாறு ஆன்மாக்கள் வீடுபேறு பெறுவதற்கு வழி வகுத்து, ஞான நடனமாக திகழ்கின்றது என்பதை அடுத்த பாடலில் ஆசிரியர் விளக்குகின்றார். உடுக்கை ஏந்திய திருக்கை மாயா மலத்தை உதறுகின்றது; தீச்சுடர் ஏந்திய திருக்கரம் கன்ம மலத்தை சுட்டு எரிக்கின்றது; ஊன்றிய திருவடி ஆணவ மலத்தின் வலிமையை அடக்கி அதை அழுத்தி செயலிழக்கச் செய்கின்றது; இவ்வாறு மலங்களின் பிடியிலிருந்த விடுபட்ட ஆன்மாவுக்கு, தூக்கிய திருவடி பேரானந்தத்தை அருள, அபயகரம் அந்த ஆன்மாவை பேரின்பத்தில் அழுத்துகின்றது. இவ்வாறு ஆன்மாவை பேரானந்தத்தில் ஆழ்த்தும் செயல் ஞான நடனம் என்று கருதப்படுகின்றது. சிவாயநம என்ற பஞ்சாக்கர மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களும் ஐந்து பொருட்களை குறிக்கின்றன. சி என்ற எழுத்து சிவபிரானையும், வா என்ற எழுத்து அவனது அருட்சக்தியாகிய அம்மையையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும், ந என்ற எழுத்து திரோதான மலத்தையும் ம என்ற எழுத்து ஆணவ மலத்தையும் குறிக்கும். ய என்று உணர்த்தப்படும் ஆன்மா, சிவ எனப்படும் ஞான நடனத்தையும், நம எனப்படும் ஊன நடனத்தையும் நுகர்வதாக, பஞ்சாக்கர மந்திரம் உணர்த்துவதாகவும் விளக்கம் கூறுவார்கள். நடராஜப் பெருமானின் நடனத் தோற்றம், பெருமான் மேலே குறிப்பிட்ட வழிகளில் உயிர்களுக்கு அருள் புரிவதுடன் பெருமான் புரியும் ஐந்து தொழில்களின் தன்மையையும், பஞ்சாக்கர மந்திரத்தின் ஐந்து எழுத்துகளையும் உணர்த்துகின்றன என்ற விளக்கம், நடராஜப் பெருமானை தரிசனம் செய்யும் போது நாம் உணர வேண்டியது என்னென்ன என்பதை நமக்கு சொல்லிக் கொடுக்கின்றது.

மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம்

சாய அமுக்கி அருள் தான் எடுத்து — நேயத்தால்

ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்

தான் எந்தையார் பரதம் தான்

இவ்வாறு பெருமான் ஞான நடனம் ஆடும் தன்மையை உணர்த்தும் வண்ணம் ஞானக் கூத்தா என்று அப்பர் பிரான் சோற்றுத்துறை பதிகத்தின் பாடல் (4.44.4) ஒன்றில் அழைக்கின்றார். நம்பன்= நம்பிக்கைக்கு உகந்தவனாக இருப்பதால் அனைவராலும் விரும்பப் படுபவன்.

நம்பனே நான்மறைகள் ஆயினானே நடமாட வல்லானே ஞானக் கூத்தா

கம்பனே கச்சி மாநகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த

அம்பனே அளவிலாப் பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆனேறு ஏறும்

செம்பொனே திருச்சோற்றுத்துறை உளானே திகழொளியே சிவனே உன் அபயம் நானே

நம்பிக்கைக்கு உகந்தவனாக இருப்பதால் அனைவராலும் விரும்பப் படுபவனே, நடனம் ஆடுவதில் வல்லவனே, பக்குவப்பட்ட ஆன்மாக்களை முக்தி நிலைக்கு உயர்த்த வல்ல ஞானக் கூத்தினை நிகழ்த்துபவனே, கச்சி ஏகம்பம் தலத்தில் உறையும் ஏகம்பனே, எளிதில் அழிக்க முடியாத நிலையினைத் தந்த வரத்தின் பயனாக, தாங்கள் பெற்றிருந்த, வலிமை மிகுந்த மூன்று பறக்கும் கோட்டைகளும் எரிந்து சாம்பல் பொடியாக மாறுமாறு திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை அழித்த அம்பினை உடையவனே, எல்லையற்ற பெருமையை உடையவனே, அடியார்களுக்கு தெவிட்டாத அமுதமாகத் திகழ்பவனே, எருதினை வாகனமாகக் கொண்டனவே, பொன் போன்ற மேனியை உடையவனே, சந்திரன் சூரியன் ஆகிய அனைத்து ஒளிகளுக்கும் மூல காரணமாக திகழும் ஒளியே, சோற்றுத்துறை இறைவனே, சிவபெருமானே, அடியேன் உன்னை சரணடைந்து உனக்கு அடைக்கலப் பொருளாக மாறியுள்ளேன் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

பொழிப்புரை:

வெண் காந்தள் மலர், குளிர்ந்த வில்வமாலை, கோங்கம் பூக்கள் ஆகியவற்றைத் தனது சடையினில் சூடிக் கொண்டுள்ள பெருமான், சிறப்பு வாய்ந்த கங்கை நதி மற்றும் ஒளிவீசும் வெண்பிறை ஆகியவற்றையும் தனது சடையில் பொருந்தும் வண்ணம் சூடிக் கொண்டுள்ள ஒப்பற்ற ஒருவனாக காணப்படுகின்றான். பாடல்களும், வீணை முழவம், குழல் மொந்தை ஆகிய இசைக் கருவிகளும் முறையான தாளத்துடன் இணைந்து ஒலிக்க, அந்த பாடலுக்கும் இசைக்கும் ஏற்ப நடனம் ஆடும் வல்லமை பெற்றவன் திருவையாறு தலத்தில் உறைகின்ற தலைவன் ஆவான்.

பாடல் 2:

கோடல் கோங்கம் (2.006) பாடல் 2 (திதே 0629)

கோடல் கோங்கம் (2.006) பாடல் 2 தொடர்ச்சி (0630)

கோடல் கோங்கம் (2.006) பாடல் 2 தொடர்ச்சி (0631)

கோடல் கோங்கம் (2.006) பாடல் 2 தொடர்ச்சி (0632)

கோடல் கோங்கம் (2.006) பாடல் 2 தொடர்ச்சி (0633)

தன்மை யாரும் அறிவாரிலை தாம் பிறர் எள்கவே

பின்னும் முன்னும் சில பேய்க்கணம் சூழத் திரிதர்வர்

துன்ன ஆடை உடுப்பர் சுடலைப் பொடி பூசுவர்

அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே

விளக்கம்:

தன்மை யாரும் அறிவாரில்லை என்று திருஞானசம்பந்தர் கூறுவது, அப்பர் பிரான் அருளிய ஒரு பொது பதிகத்தின் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இறைவனின் திருவுருவக் காட்சியினைக் காண்பதற்கே அவனருள் வேண்டும். அவனுக்கு ஒப்பாக சொல்வதற்கு எவரும் இல்லை, அவன் ஓரூரில் உறைபவன் அல்லன்: அவனது உருவத்திற்கு உவமை ஏதும் இல்லை: எனவே இறைவனின் நிறம் இன்னது, அவனுக்கு உவமையாக இந்த பொருட்கள் உள்ளன என்று எவராலும் சொல்ல முடியாது என்ற கருத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடலை நாம் இங்கே காணலாம் (6.97.10)

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்

ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர் உவமனில்லி

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்ட ஒணாதே

திருவலிதாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.3.9) இருவருக்கும் அறிவொண்ணா வடிவினன் பெருமான், என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வரை=மலை; சிலை=வில்; மலைவு=மாறுபாடு; மலைவுற்றார்=வேதாகம வழியிலிருந்து மாறுபட்டு வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள்; எயில்=கோட்டை; ஒருவன்=ஒப்பற்றவன்; இருவர்=பிரமன் மற்றும் திருமால்; உரியர்=கடமையாக உடையவர்; பெரிய மேரு மலையை வில்லாக வளைத்த பெருமான், அந்த வில்லினில் ஒரு அம்பினை பூட்டி எய்தி, வேதாகமங்கள் குறிப்பிடும் நெறியிலிருந்து மாறுபட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்த ஒப்பற்ற ஆற்றல் உடையவனும், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் அடியையும் முடியையும் காண முடியாத வண்ணம் நெடிய தழற்பிழம்பாக நிமிர்ந்தவனும் ஆகிய பெருமான் உறைவது வலிதாயம் தலத்தினில். இத்தகைய பெருமை வாய்ந்த வலிதாயம் தலத்தைத் தொழுவதைத் தங்களது கடமையாக கொண்ட அடியார்களை, சிறந்த பெரியோர்கள் என்று கருதி உலகத்தவர் போற்றுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெரிய மேரு வரையே சிலையா மலை உற்றார் எயில் மூன்றும்

எரிய எய்த ஒருவன் இருவர்க்கு அறிவொண்ணா வடிவாகும்

எரியதாகி உற ஓங்கியவன் வலிதாயம் தொழுதேத்த

உரியராக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே

திருவல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.113.9) அறிவில் சிறியவர்கள் சிந்தை செய்து உணர்வதற்கு அரியவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தங்கள் இருவரை விடவும் பெரியன் ஒருவன் இருக்கின்றான் என்று வேதங்கள் உணர்த்திய போதிலும், தங்கள் இருவரில் யார் பெரியவர் என்று பொருளற்ற முறையில் விவாதம் செய்து கொண்டிருந்த திருமால் பிரமன் ஆகிய இருவரும், அறிவு இழந்தவர்களாகத் தானே தொடர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்தனர். மேலும் அவர்களது அறியாமை தானே, தங்களின் முன்னே நெடிய தீப்பிழம்பாக எழுந்தது பெருமான் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தடுத்தது. பெருமானின் அருளால் ஞானம் வாய்க்கப் பெற்றால் தான், பெருமானை அறியமுடியும் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. பெரியவன்= அனைவரிலும் பெரியவனாக இருக்கும் பெருமான். தெரியவன்=தன் பால் அன்பு செலுத்தும் அன்பர்களுக்கு தெரிபவன்;

பெரியவன் சிறியவர் சிந்தை செய்ய

அரியவன் அருமறை அங்கம் ஆனான்

கரியவன் நான்முகன் காணவொண்ணாத்

தெரியவன் வளநகர் திருவல்லமே

திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.131.1) வேதங்களாலும் அறிய முடியாதவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மெய்த்த ஆறு என்பது மெய்த்தாறு என்று சேர்ந்தது; உடலினால் அறியப்படும் ஆறு சுவைகள், உப்பு புளிப்பு இனிப்பு கசப்பு காரம் மற்றும் துவர்ப்பு; ஏழிசைகள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். தமிழ் மொழியில் இவ்வாறு அழைக்கப்படும் இந்த ஏழு இசைகள், வடமொழியில் சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாரம் என்று அழைக்கப் படுகின்றன. சுருக்கமாக சரிகமபதநி என்று கூறுவார்கள்; சுவை, இசை, குணம் ஆகியவை மாயையின் காரியங்கள் என்பதால் அவைகளால் இறைவனால் அறியமுடியாது. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பொருட்களையும் கடந்தவன் இறைவன் என்பதால் வேதங்களாலும் இறைவனை அறியமுடியாது. நடை=நன்னடை. ஒழுக்கமானவாழ்க்கை; ஒத்த ஆறு சமயங்கள்= சைவத்தின் பிரிவான ஆறு அகச்சமயங்கள்; பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வாமனம் பைரவம் மற்றும் சைவம் என்பன சைவ சமயத்தின் ஆறு உட்பிரிவுகள்; இந்த ஆறு சமயங்களும் மாறுபாடு ஏதுமின்றி சிவபெருமானை தலைவனாக ஏற்றுக் கொள்வதால் ஒத்த ஆறு சமயங்கள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. வெதிர்=மூங்கில்; நித்திலம்=முத்து; மூங்கில்கள் வெடித்து அதன் உள்ளே இருக்கும் முத்துக்கள் சிதற அவற்றை அடித்துக் கொண்டு வரும் ஆறு என்பதால் முத்தாறு என்ற பெயர் வந்தது போலும். இந்த பாடலில் மூங்கிலில் முத்து தோன்றும் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். யானையின் தந்தம், பன்றியின் கொம்பு. மூங்கில், தாமரை, கரும்பு, பெண்களின் கழுத்து, சிப்பி, உடும்பு ஆகியவற்றில் முத்து கிடைப்பதாக இலக்கியங்கள் கூறுகின்றன. பல சங்க இலக்கியங்கள் யானை மற்றும் மூங்கில் முத்தின் பிறப்பிடம் என்று கூறுகின்றன. ஆனால் சங்கினைத் தவிர்த்த வேறு எந்த பொருளிலும் முத்துகள் இருப்பதாக நிரூபணம் ஆனதில்லை. காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரம் இலக்கியம் இருபது இடங்களில் முத்து தோன்றுவதாக குறிப்பிடுகின்றது.

உடல் உணரும் ஆறு சுவைகளாலும், உடல் கேட்கும் ஏழு இசைகளாலும், எட்டு குணங்களாலும் அறிய முடியாத இறைவன், அனைவரும் விரும்பும் நான்கு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பொருட்களையும் கடந்து நிற்பதால் நான்கு வேதங்களாலும் அறிய முடியாதவனாக உள்ளான். மேலே குறிப்பிட்டவாறு அறியப்படாமல் இருப்பவனும், ஒழுக்கமான வாழ்வு கொண்டு அன்புடன் அணுகினால் மட்டுமே தெளிவாக அறியப் படுபவனும், பளிங்கு போன்று திருமேனியில் உமை அன்னையை ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளவனும், தங்களுக்குளே மாறுபாடு ஏதுமின்றி ஒத்த கருத்துடன், பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வாமனம் பைரவம் மற்றும் சைவம் ஆகிய சமயங்களால் தலைவனாக ஏற்றுக் கொள்ளப் படுபவனும்; ஆகிய சிவபெருமான் விருப்பமுடன் உறையும் ஊர் முதுகுன்றமாகும். தெளிந்த நீரினை உடைய மணிமுத்தாறு நதி மலையின் கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக் கொணர்ந்து சேர்க்கும் கரைகளை உடைய ஊர் முதுகுன்றமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மெய்த்தாறு சுவையும் ஏழ் இசையும் எண் குணங்களும் விரும்பு நால் வே

தத்தாலும் அறிவொண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம்

ஒத்தாறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்ணீர்

முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முதுகுன்றமே

திருமீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.7) திருஞானசம்பந்தர், பெருமானை, தமது கொள்கை பிறர் அறியவொண்ணாமல் இருப்பவர் என்றும் தனக்கு நிகராக வேறு எவரும் இல்லாதவர் என்றும் குறிப்பிடுகின்றார். நீல வடிவினில் கழுத்தினை உடைய பெருமான், திருமாலும் பிரமனும் அறிய முடியாத வண்ணம் நெடிய வடிவினராக நீண்ட தீப்பிழம்பாக விளங்கியவர்; நிகரற்றவராகவும், அழகிய பல வடிவங்கள் கொண்டவராகவும் விளங்கும் அவர், இன்ன தன்மையர் என்று எவராலும் அறியமுடியாதவர்; தனது காலில் வீரக்கழல் அணிந்தவராகவும் கையில் மழுப்படை ஏந்தியவராகவும் உள்ள பெருமான், தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்தவர் ஆவார். அனைவர்க்கும் மேன்மையானவராக விளங்கும் அவர், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூட்டிக் கொண்டு சந்திரனுக்கு வாழ்வளித்த கருணையாளராகவும், உயிர்கள் தத்தம் வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவித்துக் கழிக்க வழிவகுப்பவராகவும் உள்ளார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பாடலில் குறிப்பிடப்படும் பல தன்மைகள், பெருமானுக்கு நிகராக வேறொருவர் இல்லாத தன்மையை உணர்த்துகின்றன.

நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்

கோல வடிவு தமதாம் கொள்கை அறிவொண்ணார்

காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்

மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே

புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.122.11) திருஞானசம்பந்தர், பெருமானை, உயிர்கள் தமது அறிவால் அறிந்து கொள்ள முடியாதவன் என்று குறிப்பிடுகின்றார். கைதவம்=வஞ்சனை; உலகியல் பொருட்கள் பற்றிய அறிவு பாச ஞானம் என்றும் உயிர்களைப் பற்றிய அறிவு பசு ஞானம் என்றும் அழைக்கப் படும். இறைவன் பற்றிய அறிவு பதி ஞானம் என்று அழைக்கப்படும். பசு ஞானமோ பாச ஞானமோ, இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள உதவாது. அந்த தன்மை தான் இங்கே எய்தவொண்ணா என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. இறைவன் பால் அன்பு செலுத்தி, அவனது அருளால் பெறப்படும் ஞானம் மட்டுமே இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என்பதே இங்கு உணர்த்தப் படுகின்றது. தேவாரப் பாடல்கள் பாடும் அடியார்கள் சிவலோகம் சென்றடைந்து, தேவர்கள் புகழும் வண்ணம் இருப்பார்கள் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

எய்த வொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக்

கைதவம் இல்லாக் கவுணியன் ஞானசம்பந்தன் சீர்

செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில்

எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே

இதே கருத்தினை உள்ளடக்கி, திருஞான சம்பந்தர் வைகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (3.71) நான்காவது பாடலில் சிவபெருமான் இன்ன உருவினன், இன்ன நிறத்தவன் என்று அறிவது அரிது என்று கூறுகின்ற பாடலை நாம் இங்கே காண்போம். அனைத்து புண்ணியங்களும் சேர்ந்த வடிவினன் என்று புண்ணியங்கள் சொல்லும் வகையில் தவக்கோலம் பூண்டவன் சிவபெருமான் என்றும் இந்த பாடலில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார். அறிவதேல் அரிது=இறைவனின் அருளும் ஞானமும் இல்லையேல் அறிய முடியாதது; மிகுத்த தவன்=மிகுந்த தவத்தினை உடையவன்; நீதியொடு=அருளோடு; நீதி பலவும்=பலவாகிய புண்ணியங்களும்; வகையினால்=முறைமைப்படி முழுதுணர்ந்து; மன்ன= நிலை பெற்று; மருவி=அடைந்து; இன்ன உருவத்தை உடையவன் இன்ன நிறத்தை உடையவன் என்று பெருமானின் திறத்தினை, நமது சிற்றறிவின் துணை கொண்டு அறிவது மிகவும் அரிதான செயல். அவனது கருணையும் அவனது அருளும் இருந்தால் தான் அவனது தன்மையை நாம் உணர முடியும். புண்ணியங்கள் அனைத்தும் தனது உருவம் என்று சொல்லும் வண்ணம் சிறந்த தவக்கோலத்தை உடையவன் பெருமான்; அவன் அடியார்களுக்கு அருளும் பொருட்டு அமர்ந்து உறையும் இடம் திருவைகா. பண்டைய வினைகள் அனைத்தையும் கழித்து ஒழிக்கும் வகையினை அறிந்து முற்றிலும் உணர்ந்து கொண்டு வினைகளை கழிக்கும் வழியினில் ஈடுபட்டு தவநிலை கூடுவதற்கு முயற்சி செய்யும் முனிவர்கள் காலை மாலை என்று இரண்டு பொழுதிலும் நிலையாக தொழுது போற்றும் வண்ணம் சென்று சேரும் தலம் திருவைகா ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும்

தன்ன உருவாம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம்

முன்னை வினை போய் வகையினான் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர்

மன்ன இரு போதும் மருவித் தொழுது சேரும் வயல் வைகாவிலே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.23.2) அப்பர் பிரான், ஒருத்தராலும் அறியவொண்ணாதவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். காம்பு=மூங்கில். கருத்தன்=ஒன்றிய கருத்து உடையவன். கருத்தனாய் பாடுதல் என்றால், பாடும் பாடலின் பொருளை புரிந்து கொண்டு அந்த பொருளில் உள்ளம் ஒன்றி பாடுதல் என்று பொருள். கையொன்று செய்ய, மனம் ஒன்று நினைக்க, நாவொன்று பாடுதல் வழிபாடாகாது. ஒன்றியிருந்து நினைமின்கள் என்று தனது கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தில் நமக்கு அறிவுரை கூறும் அப்பர் பிரான் உள்ளம் ஒன்றியே அனைத்துப் பாடல்களை பாடியிருந்தாலும், மனம் ஒன்றி பாடவேண்டும் என்ற கருத்தினை நமக்கு வலியுறுத்துவதற்காக, இங்கே இவ்வாறு கூறியுள்ளார். திருத்தம் என்றால் திருத்துதல் என்று பொருள். உயிர்கள் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொண்டு அந்த உயிர்களை நல்வழிப் படுத்தும் சிவபெருமான் உறையும் தில்லைநகர் என்பதால் திருத்தமாம் தில்லை என்று இங்கே கூறப்பட்டுள்ளது என்றும் விளக்கம் கூறுவார்கள். சிவபெருமான் அறிவுக்கு எட்டாதவன். ஆனால் பக்தியுடன் அணுகும் அடியார்களுக்கு அருள் புரியும் தன்மை கொண்டவன். தங்களது அறிவிலும் திறமையிலும் நம்பிக்கை கொண்டவர்களாக பிரமன் திருமால் ஆகிய இருவரும் அடிமுடி தேடிய போது அவர்களுக்கு அகப்படாத சிவபிரான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பின்னர் அவர்களுக்கு, இலிங்க வடிவினனாக காட்சி கொடுக்கின்றான். மணிவாசகர், திருவாசகத்தில் பத்தி வலையில் படுவோன் என்று சிவபிரானைக் குறிப்பிடுகின்றார். மூங்கில் போன்ற மென்மையான தோள்களை உடைய உமாதேவியை தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே, எவரும் தங்களது அறிவினைக் கொண்டு அறிய முடியாத திருவடிவத்தை உடைய சோதியே, நான் பாடும் பாட்டின் பொருளில் மனம் ஒன்றி உன்னை பாடமாட்டேன். தூய்மையான தில்லை மாநகரில் பொலிந்து விளங்கும் சிற்றம்பலம் தன்னில் ஆடும் திருக்கூத்தினை நான் நேரே காண்பதற்காக வந்து கொண்டு இருக்கின்றேன் என்று அப்பர் பிரான், பெருமான் என்று வந்தாய் என்று கேட்ட கேள்விக்கு விடை கூறுவதாக அமைந்த பாடல்.

கருத்தனாய் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா

ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திருவுரு உடைய சோதீ

திருத்தமாம் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே

நிருத்த நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்து பாடல் ஒன்றினில் (4.27.8) அப்பர் பிரான், காட்சிக்கு அரியவராக விளங்கும் பெருமான் இன்ன தன்மையன் இன்ன உருவினன் என்று சுட்டிக் காட்ட இயலாத வண்ணம் இருப்பதால் கருத்தில் வாரார் என்று கூறுகின்றார், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகப் பெருமான் சொல்வது போன்று, நமது கருத்தினில் பெருமான் பற்றிய சிந்தனை வருவதற்கும் அவனது அருள் வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். திருத்தலார்=திருத்த வேண்டிய அவசியம் இல்லாத படி செம்மையாக இருப்பவர். திருத்தத்திற்கு அப்பாற்பட்டவர். பொருத்தலாகார்=தம்மோடு பொருந்தச் செய்வதற்கு எந்த பொருளும் இல்லாதவர்: பல பொருட்களை சிவபெருமான் தனது உடலிலும், சடையிலும் தரித்துக் கொண்டிருந்தாலும், அனைத்துப் பொருட்களும் அவரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்டவையே அன்றி, அவரது விருப்பம் இன்றி எந்த பொருளும் அவரைச் சென்று அடையவில்லை. துறக்கலாகார்= உயிர்களால் துறக்க முடியாதவர், உயிர்களோடு இணைந்து இருத்தலால், உயிர்களை விட்டு அவரை எவரும் நீக்க முடியாது. நாணிலா ஐவர்=நாணம் இல்லாத ஐந்து பொறிகள். உயிரின் விருப்பத்திற்கு தடையாக செயல்படும் ஐந்து பொறிகளும் தாம் செய்யும் செயல்கள் தவறு என்பதை நன்றாக உணர்ந்தவை. எனினும் செய்யும் தவறுகளைப் பற்றி கவலைப் படாமல், கூச்சம் ஏதும் இல்லாமல், தொடர்ந்து அந்த தவறுகளை செய்து கொண்டிருப்பதால், நாணம் இல்லாத ஐவர் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடலில், இறைவன் நமது பழைய வினைகளுக்கு ஏற்ப உடலினை அளித்து, உடன் இருந்து, கருவி கரணங்களை அளித்து நமது வினைகளைக் கழித்துக் கொள்வதற்கு வழி வகுத்துத் தந்த கருணைச் செயல் குறிப்பிடப் படுகின்றது. சிவபெருமான் உயிர்கள் காண்பதற்கு அரியவராகவும், உயிர்கள் தங்கள் கருத்தால் உணரப்படுவதற்கு மிகவும் அரியவராகவும் உள்ளவர். அவர் செம்மையான குணங்களுடன் நிறைந்து காணப்படுவதால், திருத்தம் ஏதும் தேவையில்லாத நிலையில் இருப்பவர்: அவரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருட்களே அவருடன் பொருந்தி நிற்க முடியும்; ஏனைய பொருட்கள் அவருடன் பொருந்த இயலாது; இன்ன தன்மை என்றும் இன்ன உருவம் என்றும் நம்மால் உணர்ந்து அறியப்பட முடியாத பெருமான், பிறப்பு இறப்பினைக் கடந்தவர்; அனைத்து உயிர்களிலும் பொருந்தி இருக்கும் அவரை, எந்த உயிரும் துறக்க முடியாது; ஆண் பெண் ஆகிய இரு கோலங்களையும் கடந்த அவர், என் உயிருடன் எப்போதும் இணைந்து இருப்பது மட்டுமன்றி, எனது உயிர் தான் உய்யும் வகையினைத் தேடும் வழிக்கு உதவுவதற்காக கருவி கரணங்களை அளித்துள்ளார். ஆனால் தாம் செய்யும் தவறுகளுக்கு வருத்தமோ நாணமோ ஏதும் கொள்ளாமல் தொடர்ந்து தவறுகளே செய்து செயல்படும் ஐந்து பொறிகளுடன் கலந்து வாழுமாறு என்னை இந்த உலகத்தில் தங்க வைத்துள்ளார். அத்தகைய பெருமான், கெடில நதியை ஒரு புறத்தில் வேலியாகக் கொண்டுள்ள அதிகை நகரத்தில் உறைகின்றார். அவர் தான் ஐந்து பொறிகளின் பிடியிலிருந்து என்னை விடுவிக்க முடியும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தலாகார்

ஏணிலார் இறப்பும் இல்லார் பிறப்பிலார் துறக்கலாகார்

நாணிலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார்

ஆணலார் பெண்ணும் அல்லார் அதிகை வீரட்டனாரே

இறைவனின் திருவுருவத்தைத் தங்கள் கண்ணால் கண்ட அருளாளர்கள் ஒரு சிலரே. அவர்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டு தான், நாம் இறைவன் இப்படியிருப்பான் என்று நமது மனதினில் உருவகித்துக் கொண்டு வழிபடுகின்றோம். அவ்வாறு இறைவனைக் கண்ட அருளாளர்களும் தாங்கள் கண்ட தோற்றத்தை முழுவதும் வார்த்தைகளில் வடிக்கவோ அல்லது சிற்பமாக செதுக்கவோ அல்லது ஓவியமாக வரையவோ திறன் படைத்தவர்களா என்றால் அதுவும் இல்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு இருக்கையில், ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் வரையறைக்குள்ளே எப்படி நாம் இறைவனின் தோற்றத்தையோ குணத்தையோ அடக்க முடியும். அதனால் தான் அவனது அடையாளத்தையும் (குறி) குணத்தையும் யார் அறிய முடியும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த கருத்தினை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.77.2) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கோவணத்தை இடுப்பில் உடுத்து, கொடிய பாம்பினை இடுப்பினில் இறுகக் கட்டி அதனை ஆட்டுவித்து, தீயினைப் போன்று சிவந்த மேனியில் சாம்பலைப் பூசியும், செந்தாமரைக் காடு என்று தோன்றும் வண்ணம் செந்தாமரை நிறத்தில் மேனியை உடையவராகவும், புலியின் ஆடையை உடுத்தவராகவும், மேரு மலையினை வளைத்து அழகாக செய்யப்பட்ட வில்லினை உடையவரும் ஆகிய சிவபெருமானின் உருவத்தை யாரால் முழுமையாக சித்திரத்தில் வரைய முடியும்? எவராலும் முடியாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும்

தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்

பூவணக் கிழவனாரை புலியுரி அரையனாரை

ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே

இன்ன தன்மையன் என்று கூறவொண்ணா தன்மையன் என்பதால் அவனது குணத்தினை அறிந்தவர்கள் எவரும் இல்லை என்று அப்பர் பிரான் கூறும் பாடல் பூந்துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலாகும் (4.88.2). மறி=மான் கன்று; பொறி=புள்ளிகள்; அரவம்=பாம்பு; குறி= அடையாளம்; மாமலை=சிறந்த இமயமலை; வடமொழியில் பர்வதம் என்றால் மலை என்று பொருள். இமயமலையில் வளர்ந்த அன்னையை, பர்வதவர்த்தனி என்றும் பார்வதி என்றும் அழைக்கின்றனர். இந்த பாடலில் மாமலை மங்கை என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். பல திருமுறை பாடல்கள் மலைமங்கை என்றும் மலைமகள் என்று தேவியை குறிப்பிடுகின்றன. மலையில் வளர்ந்த மங்கை இறைவனின் காதலியாக மாறியதை உணர்த்தும் வண்ணம் மலைவளர் காதலி என்று பாடல் தோறும் குறிப்பிட்டு, தாயுமானவர் மலைவளர் காதலி என்ற பதிகத்தை, இராமேச்சரம் தலத்து இறைவி மீது பாடியுள்ளார். தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மான்கன்றின் முரட்டுத் தன்மையை மாற்றி தனது கையினில் ஏந்தியவனும், மழுவாட் படையினை உடையவனும், சிறப்பு வாய்ந்த இமயமலைச் சாரலில் வளர்ந்த மங்கை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டு அத்தகைய உருவத்தையே தனக்கு சிறந்த அடையாளமாக கொண்டவனும், இத்தகைய குணத்தினை உடையவன் என்று எவரும் அறிந்து கொண்டு சுட்டிக் காட்டி கூற முடியாத வண்ணம் உள்ளவனும், புள்ளிகள் உடையதும் கொலைத் தொழிலினைக் கொண்டுள்ளதும் ஆகிய பாம்பினைத் தனது உடலில் பூண்டுள்ளவனும். ஞான வடிவினனாக உள்ளவனும் ஆகிய பெருமான் பூந்துருத்தி தலத்தில் மிகவும் மகிழ்ந்து ஆதிபுராணன் என்ற நாமத்துடன் உறைகின்றான். அவனது திருவடிகளை நாம் போற்றுகின்றோம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மறி உடையான் மழுவாளினன் மாமலை மங்கை ஓர் பால்

குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன்

பொறியுடை வாளரவத்தவன் பூந்துருத்தி உறையும்

அறிவுடை ஆதி புராணனை நாம் அடி போற்றுவதே

வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.90.5). இடபத்தை வாகனமாகக் கொண்டு பல இடங்களிலும் திரியும் பெருமானின் பெயர்களையோ குணங்களையோ, வேடத்தின் அடையாளங்களையோ எவராலும் முழுமையாக அறிய முடியாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். .இறுதி அடியில் இருக்கும் ஆன் என்ற சொல்லுக்கு பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். கை மான் அணைந்து ஆடுபவன் என்று குறிப்பிடுவதன் மூலம், துள்ளித் திரிந்து ஓடும் மான் கன்றினை அடக்கி ஓரிடத்தில் நிலையாக நிற்கச் செய்யும் பெருமான் ஒருவன் தான், அலை பாயும் நமது மனதினை ஓரிடத்தில் நிலை பெறச் செய்வதற்கு உதவுபவன் என்று உணர்த்தப் படுகின்றது.

ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் கை

மான் அணைந்து ஆடு மதியும் புனலும் சடை முடியன்

தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திருவேதிகுடி

ஆன் அணைந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.99.5) அப்பர் பிரான், எவரெவரால் பெருமானின் தன்மையை அறிந்து கொள்ள முடியாது என்று பட்டியல் இடுவதை காணலாம். உரைக்கும் கழிந்து=சொற்களைக் கடந்து நிற்கும் நிலை, சொற்களால் அறிய முடியாதவன்: சொற்களால் அறிய முடியாதவன் என்பதால் தான், உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்று சேக்கிழார் தனது பெரிய புராணத்தைத் தொடங்குகின்றார். இந்த பாடலில் கதிரோர்கள் என்று பன்மையில் குறிப்பதால், பன்னிரண்டு ஆதித்தர்களை குறிப்பதாக பொருள் கொள்ள வேண்டும். பன்னிரண்டு ஆதித்தர்கள், பதினொன்று ஏகாதசர்கள், எட்டு வசுக்கள், இரண்டு மருத்துவர்கள் என்று இந்த தொகையைக் கூட்டினால் நாம் முப்பத்து மூன்று என்று பெறலாம். இதன் மூலம் பிரமன், மால் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அறிய முடியாத சிவபெருமான் என்பதை. அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். சொற்களால் தனது பெருமையைச் சொல்ல இயலாதவன் சிவபெருமான்: மனத்தாலும் உணர்வாலும் எவரும் அறிய முடியாமல் இருந்தாலும், தன்னை நினைப்பவர்களின் வினைகளை கரைக்கும் கருணை உள்ளம் கொண்டவன்: இத்தகைய கருணை உள்ளமும், வல்லமையும் படைத்த சிவபெருமானை, நறுமணம் கொண்ட மலர்களைத் தூவி பிரமனும், திருமாலும், ஏகாதச உருத்திரர்களும், எண் வசுக்களும், உரத்த குரலால் துதிக்கின்றார்கள். பிரமன், திருமால், பன்னிரண்டு சூரியர்கள், அட்ட வசுக்கள், ஏகாதச உருத்திரர்கள், இரண்டு மருத்துக்கள் ஆகியோரால் அறிந்து உணரப் படாதவராகத் திகழ்பவர் சிவபெருமான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையைக்

கரைக்கும் எனக் கை தொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம்

விரிக் கொண் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள்

இரைக்கும் அமிர்தர்க்கு அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே

பெருமானது அருளின்றி, உயிர்கள் தமது முயற்சியால் மட்டுமே அறிய முடியாத திருவடிகள் பெருமானின் திருவடிகள் என்று இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.100.8) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். புன்மை=கீழ்மை: சயம்பு=ஸ்வயம்பு, சுயம்பு என்ற சொற்களின் திரிபு: தானாக முளைத்தது: தாணு=சிவபெருமானின் ஒரு திருநாமம்: நிலையான பொருளானவன் சதுர்-நான்கு. இந்த தலத்து மூர்த்தம் சுயம்புவாகத் தோன்றியதும் இந்த பாடலில் உணர்த்தப் பட்டுள்ளது. சிவபெருமானின் திருவடிகள், நம்மிடையே அச்சத்தையும் கீழ்மையையும் தோற்றுவிக்கும் பாவங்களைத் தவிர்ப்பன. தாமரை மலர் போன்று மென்மையான இந்த திருவடிகள், தனது குலத்தைச் சார்ந்தவை என்று மென்மையில் தாமரை மலரை ஒத்து இருக்கும் பார்வதி தேவியின் மார்பகங்களுடன் நட்பு பூண்டு கொண்டாடின: தங்களது முயற்சியால் மட்டுமே சென்று அடைய முடியாததும், தோற்றுவிப்பார் எவரும் இன்றி தானே முளைத்த திருவடிகள் என்றும் நிலையான பொருள் என்றும் நான்கு வேதங்களாலும் போற்றி புகழப் படுவன இந்த திருவடிகள்: இத்தகைய சிறப்புகள் பெற்றவை இன்னம்பரில் வீற்றிருக்கும் பெருமானின் இணை அடிகள் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பயம் புன்மை சேர் தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி தன்

குயம் பொன்மை மாமலராக குலாவின கூடவொண்ணாச்

சயம்பு என்றே தகு தாணு என்றே சதுர் வேதங்கள் நின்று

இயம்பும் கழலின இன்னம்பரான் தன் இணை அடியே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.47.4) அப்பர் பிரான், பெருமானை யாரும் அறிவொண்ணாத் தகைமையர் என்று குறிப்பிடுகின்றார். இமையா முக்கண்ணினர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருமானின் நெற்றியில் இருக்கும் கண் எப்போதும் மூடியே இருக்கும்; மற்ற இரண்டு கண்கள் எப்போதும் திறந்தே காணப்படும். இமையாத கண்கள் இமைத்து நிலை மாறிய போது விபரீதங்கள் ஏற்பட்டதை நாம் புராணங்களிலிருந்து அறிகின்றோம்,. எப்போதும் மூடியிருக்கும் நெற்றிக் கண் திறந்ததால், மன்மதன் உடல் எரிந்ததை நாம் அனைவரும் அறிவோம். சிவபெருமானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்கள் என்று சொல்லப்படும். ஒருமுறை விளையாட்டாக, பார்வதி தேவி, பெருமானின் கண்களை மூட, அனைத்து உலகங்களும் இருளில் மூழ்கின, உலகில் மொத்த இயக்கமும் நின்று போனது. தனது தவற்றினை உணர்ந்த பார்வதி தேவி, உடனே சிவபெருமானின் கண்களை மறைத்த தனது கைகளை எடுத்து விட்டார். பார்வதி தேவி தனது கண்களை மறைத்திருந்த கணப்பொழுதில் ஏற்பட்ட உலகத்தின் இருளைப் போக்குவதற்காக தனது நெற்றிக் கண்ணை, சிவபெருமான் திறந்ததாக அப்பர் பிரான் கூறுகின்றார்.. தனது தவறினுக்கு வருந்திய பார்வதி தேவி, திருப்பாம்புரம் தலத்திற்கு வந்து, அங்கே தவம் செய்து ஒரு சிவராத்திரி நாள் அன்று, இறைவனின் தரிசனம் கிடைக்கப் பெற்றார். இந்த தகவல் அப்பர் பிரானால், தசபுராணப் பதிகத்தில் கூறப்படுகின்றது. இமையாத மூன்று கண்களை உடைய பெருமான் எனது நெஞ்சத்தில் உள்ளார். அவரின் உண்மையான தன்மையையும் பெருமையையும் எவரும் அறிய முடியாது. தேவர்கள் புகழ்ந்து பாராட்டும் வண்ணம் கச்சி ஏகம்பத்தில் உறையும் பெருமானை, நம்மை ஆளும் இறைவனை நீங்கள் தொழுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர்

தமை யாரும் அறிவொண்ணாத் தகைமையர்

இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன்

நமை ஆளும் அவனைத் தொழுமினே

பூவனூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.65.2) அப்பர் பிரான், பெருமானை, இன்ன தன்மையன் என்று அறிய இயலாதவன் என்று கூறுகின்றார். இயற்கை=இயல்பு; என்னன்=எனக்கு உற்ற துணையாக இருப்பவன்; தன்னன்=தனக்குத் தானே உவமையாக இருப்பவன், தனக்கு நேராக எவரும் இல்லாதவன்; பல நிலைகளிலும் இருந்து இறைவன் தனக்கு உதவுவதாக அப்பர் பிரான் சொல்கின்றார். எனக்கு உற்ற துணையாக இருக்கும் இறைவனே, நீ எனது மனையாளாக இருந்து எனது தேவைகள் அனைத்தையும் கவனித்து நிறைவேற்றுகின்றாய்; எனது தந்தை என்னை பாதுகாத்தது போன்று என்னை பாதுகாக்கும் நீ, எனது ஆருயிராக விளங்குகின்றாய். தனக்குத் தானே உவமையாக விளங்குபவனாகிய நீ, தனக்கு ஒப்பார் எவரும் இல்லாத நீ, என்னை உனது அடியானாக ஏற்றுக் கொண்டாய்; எனக்கு பொன் போன்று மிகவும் உயர்ந்த செல்வமாக உள்ளவன் நீயே; பூவனூர் தலத்தில் பொருந்தி உறையும் இறைவனாகிய பெருமான், மேலே குறிப்பிடப் பட்டுள்ள பொருட்களாக இருப்பது மட்டுமன்றி, இன்னவென்று அறிய முடியாத தன்மையுடன் இருப்பது இறைவனின் இயற்கையாக உள்ளது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

என்னன் என் மனை எந்தை என் ஆருயிர்

தன்னன் தன் அடியேன் தனமாகிய

பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்

இன்னன் என்று அறிவொண்ணான் இயற்கையே

ஒரு குறுந்தொகைப் பதிகத்தை (5.92) கண்டு கொள்ள அரியான் என்று இறைவனை குறிப்பிட்டு அப்பர் பிரான் தொடங்குகின்றார். கேட்டிரேல்=கேட்பீராகில்: சூழலே=சூழ வேண்டாம். கனிவித்து=அன்பு பாராட்டி கனியச் செய்து, பக்குவப்படுத்தி: பாணி=கை: துன்னுதல்=சூழுதல்: பாழிமை=அடிமைத் திறத்தின் வலிமை. இந்த பாடல் இயமனின் தூதுவர்களுக்கு எச்சரிக்கை விடும் பதிகத்தின் பாடல். பெருமானின் தொண்டர்களை நீர் சென்று சூழாதீர்கள்; அவர்களது உயிரினைப் பறித்து நரகத்துக்கு கொண்டு போகும் நோக்கத்துடன் சென்று சூழ்ந்தால் உங்களுக்கு தீங்கு விளையும் என்று இந்த பதிகத்து பாடல்களில் அப்பர் பிரான் எச்சரிக்கை விடுகின்றார். கண்டு கொள்வதற்கு மிகவும் அரியவனாக காணப்படும் சிவபெருமானிடம் நான் அன்பு பாராட்டி, அவனுக்கு அடிமையாக மாறினேன்: அவனுக்கு அடிமையாக இருந்த போது அவனது தன்மையை நான் அறிந்து கொண்டதால், இயமனின் தூதர்களாகிய உங்களுக்கு அதனை சொல்கின்றேன்; நீங்கள் கேளுங்கள்: சிவபெருமான் தனது அடியார்களிடம் மிகவும் பற்று கொண்டவன்: எனவே கைகளில் தாளம், கொடுகொட்டி ஆகிய இசைக் கருவிகளைக் கொண்டு, சிவபெருமானின் புகழினை பாடும் பாடல்களுக்கு ஏற்ப இசைக்கும் அடியார்களை நீங்கள் சென்று சூழாதீர்கள். அவ்வாறு சூழ்ந்தால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

கண்டு கொள்ள அரியானைக் கனிவித்துப்

பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்

கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்

கொண்ட தொண்டரை துன்னிலும் சூழலே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.27.6) அப்பர் பிரான், பெருமானை, திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரையும் கடந்தவனாக, எளிதில் அறியமுடியாத பொன் மலையாக விளங்குகின்றான் என்று கூறுகின்றார். பொறை=சுமை, துன்பச் சுமைகள்; குரோதம்=கோபம், அடுத்தவரிடம் நமக்கு பிடிக்காத குணம் இருப்பதால், அவரிடம் பகைமை பாராட்டுகின்றோம். அதனால் விளைவதே கோபம் என்பதால் செற்றக் குரோதம் என்று கூறுகின்றார். பெருமாநிலம்=உலகம். கர்வம், கோபம், கஞ்சத்தனம், துன்பச் சுமைகள், காமம் ஆகியவற்றுக்கு இடமாகத் திரியும் அரம்பையர்களே, இந்த உலகத்தின் எல்லை வரை அனைத்து இடங்களிலும் திரியும் குணம் கொண்டவர்களே, நீங்கள் கருதிய செயலை (என்னை மயக்கி உங்கள் வசப்படுத்தும் செயல்), உங்களால் முடிப்பது அரிது. தாமரைப் பூவினில் வசிக்கும் பிரமன், மற்றும் திருமால் ஆகிய இருவருமாகி, அவர்கள் இருவரையும் கடந்தவனாகி, எளிதில் அறியமுடியாத, செம்மையான பொன்மலையை ஒத்த பெருமானை, திருவாரூரில் உறையும் செல்வனை, நான் சென்று அடைவேன். உங்களின் வசப்பட்டு நீங்கள் நினைக்கும் செயல்களை நான் செய்யமாட்டேன்.

பொங்கு மத மானமே ஆர்வச் செற்றக் குரோதமே உலோபமே பொறையே நீங்கள்

உங்கள் பெரு மாநிலத்தில் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல்

அங்கமலத்து அயனொடு மாலுமாகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்றாகி அறிய வொண்ணா

செங்கனகத் தனிக் குன்றைச் சிவனை ஆரூர்ச் செல்வனைச் சேர்வேன் நும்மால் செலுத்துணேனே

தனது வாழ்க்கையின் கடைப் பகுதியில், அப்பர் பிரான் புகலூர் தலத்தினை அடைந்து அங்கே திருமடம் ஒன்று நிறுவி, திருப்பணிகள் செய்திருந்தார். பல பதிகங்களும் பாடி, இறைத் தொண்டு செய்து வந்த அப்பர் பிரானின் பெருமையை உலகறியச் செய்வதற்காக சிவபெருமான் ஒரு திருவிளையாடல் புரிந்தார். அப்பர் பெருமான் உழவாரம் செய்ய வந்த இடங்களில் பொன்னும் நவமணிகளும் கற்களுடன் கலந்து தரையில் இருந்தன. ஒளி வீசிக் கொண்டிருந்த பொன்னினையும் நவமணிகளையும், கற்களுக்கு சமமாக பாவித்த, அப்பர் பிரான் அவை அனைத்தையும் கற்களுடன் வாரிக் கொண்டு, அருகில் இருந்த குளத்தில் வீசி எறிந்தார். கல்லுக்கும் நவமணிக்கும் இருந்த வேற்றுமையை உணர முடியாமல் இருந்த அப்பர் பிரானின் பண்பினை உலகுக்கு அறிவித்த பெருமான் அடுத்த திருவிளையாடல் புரிகின்றார். வானத்திலிருந்து நடன மங்கையர்கள் புகலூர் வந்தடைந்தனர். அப்பர் பிரான் உழவாரப் பணி செய்து கொண்டு இருந்த இடத்திற்கு வந்து அங்கே, மின்னற் கொடிகள் போன்ற தோற்றம் கொண்ட இந்த மங்கையர்கள், தமது கண்களை அகல விரித்து பாடல்கள் பாடினார்கள். அப்பர் பிரானைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு சில மங்கையர்கள் ஆடத் தொடங்கினார்கள். சில மங்கையர்கள் ஆட, சிலர் மலர்களை மழை போல் பொழிய, சிலர் அப்பர் பிரானின் அருகே சென்று அவரைத் தழுவவும் முயற்சி செய்தனர். ஆடல் பாடல்களில், தங்களை மறந்த நிலையில் இருந்த அந்த மங்கையர்களின் கூந்தல் அவிழ்ந்தன; சிலரின் இடுப்புகள் துவண்டன; சிலரின் உடைகள் நழுவின; மொத்தத்தில் அந்த மங்கையர்கள் நடந்து கொண்ட விதம், காண்போர் எவருக்கும் காம உணர்ச்சி மேம்படுமாறு இருந்தது. தேவமகளிர் இவ்வாறு பலவகையிலும், காம இச்சைகளைத் தூண்டும் செயல்களைச் செய்த போதும், அப்பர் பிரான் தனது நிலையில் இருந்து மாறாதவாறு தான் செய்து வந்த பணியில் சிறிதும் தளர்வு ஏற்படாமல், தொடர்ந்து அந்த பணியினைச் செய்யலானார். மேலும் அந்த மங்கையர்களைப் பார்த்து, நான் திருவாரூர்ப் பெருமானுக்கு அடிமை; உங்களால் எனக்கு ஆக வேண்டிய செயல் ஏதும் எனக்கு இல்லை; நீங்கள் வீணாக என் முன்னர் அலையவேண்டாம் என்ற கருத்து அமைந்த பதிகத்தை பாடினார். அந்த பதிகத்தின் ஆறாவது பாடல் தான் மேற்கண்ட பாடலாகும். மேலும் தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டு இருந்தால், அவர்கள் குறித்து திருவாரூர் பெருமானிடம் முறையிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர், நடன மாதர்கள், அந்த இடத்தினை விட்டு அகன்று சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது.

பொருங்கை மதகரி என்று தொடங்கும் திருவாரூர் பதிகத்தின் (6.33) இரண்டாவது பாடலில் அற்புதன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அற்புதன் என்ற சொல்லுக்கு இன்ன தன்மையன் என்று அறிய முடியாதவன் என்று சிவக்கவிமணி திரு சி.கே. சுப்பிரமணியம் அவர்கள் பெரிய புராண விளக்கம் நூலில் கூறுகின்றார். அற்புதன் காண்க அநேகன் காண்க என்பது திருவாசகம் திருவண்டப் பகுதியின் ஒரு வாக்கியம். கற்பக மரத்தின் அடியில் நிற்பவர் நினைப்பதைத் தர வல்லது கற்பக மரம் என்று கருதப் படுகின்றது. பெருமானும் தனது அடியார்கள் விரும்புவன அனைத்தையும் அளிக்க வல்லவர் என்பதால் கற்பக மரத்துடன் பெருமான் ஒப்பிடப் படுகின்றார். தொடர்ந்து ஒரு காரியத்தைச் செய்தல் பயிலுதல் என்று கூறப்படுகின்றது. நாம் நமது வாழ்க்கையில் கற்கும் கல்வி பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ முடிவதில்லை. இறுதி வரை நாம் தினமும் ஏதாவது ஒரு புதிய உண்மையை, செய்தியை அறிந்து கொண்டு வாழ்கின்றோம். எனவே தான் கல்வி பயிலுதல் என்று கூறப்படுகின்றது. உலகினில் தொடர்ந்து இனப்பெருக்கம் நடைபெற்றால் தான் வினைகளால் கட்டுண்ட உயிர்கள் புகுவதற்கு பொருத்தமான உடல்கள் கிடைக்கும். இந்த தேவையை நிறைவேற்றும் பொருட்டு தனது திறமையால் உயிர்களின் மனதினில் காம இச்சையைத் தூண்டி விடும் மன்மதனும் அந்த செயலைத் தொடர்ந்து செய்கின்றான். எனவே தான் விற்பயிலும் மதன் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பொற்பு=பொலிவு, அழகு; அற்புதன்=அல்+புதன், இருளாக இருப்பவன்; அல்=இரவு, இருள்; புதன்=ஞானம், புதன் கோள் ஞானத்திற்கு அதிபதியாக கருதப்படுவதால் புதன் என்ற சொல் ஞானத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. சிவநெறியில் பொருந்தாதார் மனம் ஞானம் இன்றி இருளாக இருக்கும் நிலையும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. வேண்டுவார்க்கு வேண்டுவதை அளிக்கும் கற்பகமாகத் திகழ்பவனும், சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களாக விளங்கி உலகினுக்கு ஒளி அளிப்பவனும், கயிலை மலை மற்றும் காளத்தி மலை ஆகிய தலங்களில் உறைபவனும், உலகினில் தொடர்ந்து இனப்பெருக்கம் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது தொழிலைத் தொடர்ந்து செய்யும் மன்மதனின் உடல் அழியும் வண்ணம் நெற்றிக் கண்ணை விழித்தவனும், வேடுவக் கோலம் பூண்டு தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனன் முன்னே நின்றவனும், அழகு பொலியும் சோலைகள் நிறைந்த ஆரூர் நகரத்து மூலட்டானத்தில் பொருந்தி உறைகின்ற பெருமானும், சிவநெறியில் பொருந்தாத மனிதர்களின் சிந்தைக்கு பொருந்தாமல் அவர்களது மனதினில் இருள் நிறைந்திருக்குமாறு செய்பவனும், ஆரூர் அரநெறி தலத்தில் அரநெறியப்பன் என்ற பெயருடன் விளங்குபவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை சரண் அடைந்து, அடியேன் தீர்க்க முடியாத எனது வினைகளை நீக்கிக் கொண்டேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

கற்பகமும் இரு சுடரும் ஆயினானைக் காளத்தி கயிலாய மலையுளானை

விற்பயிலும் மதன் அழிய விழித்தான் தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னைப்

பொற்பமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம் பெருமானைப் பொருந்தார் சிந்தை

அற்புதனை அரநெறியில் அப்பன் தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்தவாறே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.42.8) அப்பர் பிரான் வஞ்சனை நிறைந்த மனதினை உடைய மனிதர்கள் காண முடியாதவன் பெருமான் என்று கூறுகின்றார். அஞ்சப் புலன்=அஞ்சு+அ+புலன்; ஐந்து புலன்களும் தங்களது ஆற்றலை பயன்படுத்தி, தாங்கள் நினைத்த வண்ணம் உடலினையும் உயிரினையும் செயல்படுத்தி, உடலுக்கு பல கொடிய நோய்களை தேடித் தருகின்றன; இவ்வாறு நோய்களுக்கு இருப்பிடமாகவும் நிலையற்ற தன்மை கொண்டதாகவும் உள்ள உடலினை நிலையானதாக கருதி தஞ்சம் அடையும் உலகத்தவரே, இவ்வாறு தாழ்ந்த நிலையினை அடைந்து புலன்கள் தரும் இன்பத்தில் ஆழ்ந்து இருப்பதை தவிர்ப்பீர்களாக; தன்னைப் பற்றுக்கோடாக கருதாமல், தன்னை அடையாத வஞ்சக மனத்தினை உடைய மனிதர்களால் காண முடியாதவனும், நஞ்சினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கரிய மணி போன்ற கறையினை உடையவனும், வானவர்களால் தங்கள் தலைவன் என்று புகழப் படுபவனும், அடியார்களின் நெஞ்சத்திற்கு மிகவும் இனிமையாக இருப்பவனும் ஆகிய பெருமான் உறைகின்ற நெய்த்தானம் நன்னகரத்தில் அமைந்துள்ள திருக்கோயிலை, மனதில் நினைத்து வணங்கினால் நீர், வாழ்வினில் உய்வினை அடையலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அஞ்சப் புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அருநோய்க்கு இடமாகிய உடலின் தன்மை

தஞ்சம் எனக் கருதித் தாழேல் நெஞ்சே தாழக் கருதுதியே தன்னைச் சேரா

வஞ்ச மனத்தர்கள் காணவொண்ணா மணிகண்டன் வானவர் தம் பிரான் என்று ஏத்தும்

நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்றுநினையுமா நினைந்தக்கால் உய்யலாமே

எவராலும் மனத்தாலும் அணுக முடியாதவன் பெருமான் என்று வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.9) அப்பர் பிரான் கூறுகின்றார். நெதி=நிதி, செல்வம்; கார்=நீர்; பதி=தலைவன்; பாம்போடு திங்கள் பயில வைத்த மதியவன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தன்னை அடைந்த பாம்பும் திங்களும் தங்களின் இடையே இருந்த பகையை மறந்து பழகும் வண்ணம். அவையிரண்டின் தன்மையையும் தன் போல் பெருமான் மாற்றிய தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. சிறந்த முக்திச் செல்வத்தை உடையவனும், எவரும் மனதினாலும் நினைத்துப் பார்க்க முடியாத நீதி நிலையில்இருப்பவனும், வேதங்களை சிறந்த முறையில் ஓதுபவனும், தன்னை விருப்பத்துடன் நினைக்கும் அடியார்கள் சென்று சேரும் கதியாக இருப்பவனும், நீர் நெருப்பு முதலான ஐந்து பூதங்களாக இருப்பவனும், பல ஊழிக் காலங்களிலும் கலந்து நின்று அவற்றை கடந்தவனாக விளங்குபவனும், அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவனும், சுவை நிறைந்த பழமாகவும் பழத்தின் சாறாகவும் இனிமையாக உள்ளவனும், பகை உணர்வு கொண்ட பாம்பும் சந்திரனும் தங்களின் பகையை மறந்து ஒரே இடத்தில் தொடர்ந்து பழகும் நிலையில் வைத்தவனும், ஞானம் உடையவனும் வானவர்களால் வணங்கி ஏத்தப் படுபவனும், வலிவலம் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமான் எனது மனதினில் நிலையாக உள்ளான் என்று பெருமையாக அப்பர் பிரான் சொல்லும் பாடல்.

நெதியவன் காண் யாவர்க்கும் நினையவொண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும்

கதியவன் காண் காரவன் காண் கனலானான் காண் காலங்கள் ஊழியாய்க் கலந்து நின்ற

பதியவன் காண் பழமவன் காண் இரதந்தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த

மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்துளானே

கோகர்ணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.49.8) அப்பர் பிரான் இன்னவுரு என்று அறிவொண்ணாதான் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். பின்னப்பட்ட சடையின் மேல் பிறைச் சந்திரனை வைத்தவனும், பேரருளானாக விளங்குபவனும், பிறவாமல் தோன்றியவனும், நெடுங்காலம் முன்னமே தோன்றிய உலகங்களுக்கும் முன்னம் தோன்றியவனும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் வெற்றி கொண்டு அழித்து உள்ளம் மகிழ்ந்தவனும், இன்ன தன்மையன் என்று எவராலும் அறிய முடியாதவனாக விளங்குபவனும், ஏழ் கடலாகவும் ஏழ் உலகங்களாகவும் இருப்பவனும், நிலைபெற்று விளங்கும் தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனும் ஆகிய பெருமான், பெரிய கடல் சூழ்ந்த கோகர்ணம் தலத்தில் மிகுந்த விருப்பமுடன் எழுந்தருளியுள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேரருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண்

முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூவெயிலும் செற்றுகந்த முதல்வன் தான் காண்

இன்னவுருவு என்று அறிவொண்ணாதான் காண் ஏழ்கடலும் ஏழுலகும் ஆயினான் காண்

மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே

கயிலாய மலையின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் முதல் (6.57.1) பாடலில் அப்பர் பிரான் பரிசை அறியாமை நின்றாய் போற்றி என்று கூறுகின்றார். பரிசு=தன்மை; பலவகை தன்மைகளாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. இவ்வாறு நாம் உணர்ந்த பல தன்மைகளை தாண்டியும் வேறோர் தன்மை எடுக்கும் திறமை உடையவன் இறைவன் என்பதால், பரிசு அறியாமை நின்றாய் என்று கூறுகின்றார். தொடை=தொடுக்கப் பட்டது; பாட்டான நல்ல தொடை=இசை பொருந்திய நல்ல பாடல்களால் தொடுக்கப்பட்ட மாலை; மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையினை விடவும் இறைவன் மிகவும் விரும்புவது நல்ல இசையுடன் பொருந்திய பாடல்களே ஆகும். இதனை இறைவன் தனது வாய்மொழியாலே சுந்தரரிடம் கூறுவதை நாம் பெரிய புராணம் தடுத்தாட் கொண்ட புராணம் பகுதியில் காணலாம். பாட்டான நல்ல தொடையாய் என்ற தொடருக்கு, இனிமையான தோத்திரப் பாடல்களாக உள்ளவர் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சூட்டான=கண்ணி, தலை மாலை; அடங்கார் என்பதற்கு அறிவிலாதார் என்றும் சிலர் பொருள் கொள்கின்றனர். தங்களுக்கு சொந்த அறிவு இன்மையால் தானே, திரிபுரத்து அரக்கர்கள், திருமால் மற்றும் நாரதரின் வார்த்தைகளில் மயங்கி நாத்திகர்களாக மாறி வேத நெறிகளுக்கு எதிராக செயல்பட தொடங்கினார்கள். அருளாளர்கள் பலரும் அருளிய உயர்ந்த பாமாலைகள் உடையவனே, இன்ன தன்மையென்று பிறரால் அறியப்படா வண்ணம் நிற்பவனே, தூய்மையான ஊமத்தை மாலையைத் பிறைச் சந்திரனுடன் தலையில் அணிந்தவனே, பசுவிலிருந்து கிடைக்கப் பெறும் ஐந்து பொருட்களையும் கொண்டு விருப்பமுடன் நீராடுபவனே, எவருக்கும் அடங்காது தங்களது விருப்பம் போல் அனைவருக்கும் தீங்கு இழைத்து வந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் அழியும் வண்ணம் புன்முறுவல் பூத்தவனே, உன்னை எதிர்த்து வந்த காட்டானையின் தோலை உரித்து தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனே, கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாக கொண்டவனே, உன்னை நான் பலமுறையும் போற்றி வணங்குகின்றேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி

சூட்டான திங்கள் முடியாய் போற்றி தூமாலை மத்தம் அணிந்தாய் போற்றி

ஆட்டானது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி

காட்டானை மெய்த்தோல் உரித்தாய் போற்றி கயிலை மலையானே போற்றிபோற்றி

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.7) அப்பர் பிரான், எவரும் பெருமானின் பெருமையை அறிய இயலாது என்று கூறுகின்றார். மகா சங்கார காலத்தில் உலகப் பொருட்களும் உலகத்தில் உள்ள உயிர்களும் முற்றிலும் அழிவதில்லை; அவை இறைவனிடத்தில் ஒடுங்குகின்றன. அவ்வாறு ஒடுங்கும் பொருட்களும் உயிர்களும், இறைவன் உலகத்தை மீண்டும் படைப்பதற்கு திருவுள்ளம் கொள்ளும் போது இறைவனால் விரிக்கப் படுகின்றன. உமிழ்தல்=வெளிப்படுத்துதல்; இதையே குவித்தல் மற்றும் உமிழ்தல் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அத்தகைய செயல்களை செய்யும் இறைவனை, விரிந்தான் என்றும் உமிழ்ந்தான் என்றும் அப்பர் பிரான் அழைக்கின்றார். பண்டான்=பண்டையன்; குவித்தல்= ஒடுக்குதல்; உடையான்=உரிமையாளன், விண்டான்= நீங்கியவன்; உலகமெல்லாம் உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை என்ற தொடருக்கு திருமாலை உடலின் ஒரு பாகத்தில் உடையவன் என்று சிலர் பொருள் கூறுகின்றனர். கண்ணனாக அவதாரம் செய்த காலத்தில், மண்ணை உண்ட திருமால், தனது அன்னை யசோதை பிராட்டி, வாயைத் திறந்து காண்பிக்குமாறு மிரட்டிய தருணத்தில், தனது வயிற்றில் உலகம் இருப்பதை காட்டிய நிகழ்ச்சியாக குறிப்பிட்டு திருமால் என்று விளக்கம் கூறுவது பொருத்தம் தானா என்பது சிந்தனைக்கு உரியது. மேலும் குவிந்தானை என்ற சொல்லுடன் இணைத்துப் பார்க்கும்போது உலகத்தை ஒடுக்கிய செயலையே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றிய பண்டையனும், உலகெங்கும் பரந்து இருப்பவனும், மகா சங்கார காலத்தில் அனைத்து உயிர்களையும் உலகப் பொருட்களையும் ஒடுக்குபவனும், அவ்வாறு ஒடுக்கியவற்றை உட்கொண்டு தனது வயிற்றினில் அடக்கியவனும், பின்னர் உலகத்தினை மீண்டும் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் தருணத்தில் அனைத்து உயிர்களையும் உலகப் பொருட்களையும் வெளிப்படுத்துவானும், உலகம் உலகப்பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களை அனைத்தையும் தனது உடமையாக கொண்டுள்ளவனும், எவராலும் அறிய முடியாத வண்ணம் பெருமை உடையவனாக அனைவரின் அறிவுக்கும் அப்பாற்பட்டவனாக விளங்குபவனும், சிவநெறியை விட்டு நீங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் கொடிய தீயினில் அகப்பட்டு பொடியாக மாறும் வண்ணம் அம்பினை எய்தவனும், அனைவர்க்கும் மேலானவனும் ஆகிய இறைவன் கற்குடி தலத்தில் கற்பகமாக எழுந்தருளி இருப்பதை அடியேன் எனது கண்களால் கண்டு உய்ந்தேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் தன்னைப் பாரானை விண்ணாய் இவ்வுலகம் எல்லாம்

உண்டானை உமிழ்ந்தானை உடையான் தன்னை ஒருவரும் தன் பெருமை தனை அறிய ஒண்ணா

விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும் வெவ்வழலில் வெந்து பொடியாகி வீழக்

கண்டானைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.63.7) உலகத்தவரால் அறிய வொண்ணாதவன் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஆதியன்=அனைவர்க்கும் முற்பட்டவன்; பட்டன்=புலமை பெற்றவன்; வைணவக் கோயில்களில் பூஜை செய்வோரை பட்டர் என்று பொதுவாக அழைக்கின்றனர். வடமொழியில் தேர்ச்சி பெற்று தோத்திரங்கள் சொல்வதுடன், திவ்யப் பிரபந்த பாசுரங்களை சொல்லி இறைவனை வழிபட்டு, இரண்டு மொழியிலும் புலமை பெற்றவர்களாக இருப்பதால் அவர்களை பட்டர் என்று அழைக்கின்றனர் போலும். அறிவில் சிறந்த பெருமானை இங்கே அப்பர் பிரான் பட்டர் என்று அழைக்கின்றார். எறிமணி=ஒலிக்கும் மணி; நமது கண்களால் காணமுடியாவிட்டாலும் மணியின் ஓசை சுற்றி இருக்கும் இடங்களில் பரவி இருப்பது போன்று, இறைவனை நாம் நமது கண்களால் காண முடியாது; எனினும் அவன் அனைத்து இடங்களிலும் பரவி இருக்கின்றான். அனைவர்க்கும் தொன்மையான பெருமான் அணிந்துள்ள பூணூலும் மிகவும் தொன்மையான நூலாகத் தானே இருக்க வேண்டும். எனவே தான் அவன் அணிந்துள்ள பூணூலை தொன்னூல் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அனைத்து உயிர்களுக்கும் முற்பட்டவனும், ஒலிக்கின்ற மணியின் ஓசை பல இடங்களில் பரவி இருப்பது போன்று உலகெங்கும் பரந்து இருப்பவனும், உலகத்தவர்களால் அறிய முடியாத வண்ணம் உலகங்களையும் கடந்து பரவிய சோதி வடிவினனும், தூய்மையான வேதங்களின் பொருளாக உள்ளவனும், வண்டுகள் தங்கும் கொன்றை மலர்களை அணிந்தவனும், அனைவர்க்கும் முன்னமே பூணூல் அணிந்து வேதியனாக விளங்குபவனும், அறத்தினை சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்த புலவனாக விளங்குபவனும், தாமரை மலரின் விளங்கும் பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை அறுத்து நீக்கியவனும், திருவானைக்கா தலத்தில் உறைபவனும், செழிப்பான நீர்த்திரளின் வடிவமாக இருப்பவனும் ஆகிய பெருமானை அடியேன் சென்று அடைந்தேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

ஆதியனை எறிமணியின் ஓசையானை அண்டத்தார்க்கு அறிவொண்ணாது அப்பால் மிக்க

சோதியனைத் தூமறையின் பொருளான் தன்னைச் சுரும்பமரும் மலர்க்கொன்றை தொன்னூல் பூண்ட

வேதியனை அறம் உரைத்த பட்டன் தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றைச்

சேதியனைத் திருவானைக்கா உளானை செழுநீர் திரளைச் சென்று ஆடினேனே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.1) அப்பர் பிரான், பெருமானை, அறியவொண்ணா மாயவன் என்று அழைக்கின்றார். தீயவன் என்பதை தீ+அவன் என்று பிரித்து பொருள் கொள்ள வேண்டும். அணியான்=அருகில் இருப்பவன்; சேயவன்= தொலைவில் உள்ளவன். நிழல் என்ற சொல்லுக்கு ஒளி என்ற பொருளும் உள்ளது. மாயவன் என்பதற்கு திருமால் என்று பொருள் கொண்டு, மாயவனை மறையவனை என்ற தொடருக்கு திருமாலாகவும் பிரமனாகவும் இருக்கும் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. எவராலும் காண முடியாதவனாக விளங்குவதால் மாயம் நிறைந்தவன் என்ற பொருள் பட மாயவன் என்று சொல்கின்றார் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. இந்த பாடலில் அப்பர் பிரான் இறைவனை, மறையோர்களின் மந்திரன் தந்திரன் என்று கூறுகின்றார். தந்திரம் என்ற சொல்லுக்கு, வழிமுறைகள் என்றும் ஆகமங்கள் என்று இரண்டு பொருள்கள் கூறப்படுகின்றன. மறையோர்கள் தங்கள் மந்திரன் தந்திரன் என்று கூறுவதால், வேள்வி போன்ற சடங்குகளில் மந்திரங்களைச் சொல்லுகையில் பின்பற்ற வேண்டிய செயல் முறைகளை குறிப்பதாக பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. பல தேவாரப் பாடல்களில் மந்திரமும் தந்திரமுமாக இருக்கும் இறைவன் என்று கூறப்பட்டுள்ளது.. உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் தாயாக விளங்குபவனும், உயிர்த் தொகுதிகளில் உயர்ந்ததாக கருதப்படும் தேவர்களுக்கும், தேவர்கள் அல்லாத ஏனைய உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவனும், கயிலை மலையில் உறைபவனும், எல்லா உலகங்களாக இருப்பவனும், தனது அடியார் அல்லாதவருக்குத் தொலைவாக இருப்பவனும், தனது அடியார்களுக்கு மிகவும் அருகில் இருப்பவனும், தீப்பிழம்பு போன்று பிரகாசமாக இருப்பவனும், பிறரால் அறியப்படாத வண்ணம் மாயவனாக இருப்பவனும், வேதங்களின் உட்பொருளாக இருப்பவனும், அந்தணர்கள் தியானிக்கும் மந்திரமாகவும், அந்த மந்திரங்களைச் சொல்லும் போது பின்பற்றக் கூடிய வழிமுறையாக இருப்பவனும், வேள்விகளில் வளர்க்கப்படும் தீயாக இருப்பவனும், நாகேச்சரத்து நகரினில் உறைபவனும் ஆகிய இறைவனைச் சேராதார்கள், நல்ல நெறியில் செல்லாதவர்கள் ஆவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தாயவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம்

ஆயவனைச் சேயவனை அணியான் தன்னை அழலவனை நிழலவனை அறிய வொண்ணா

மாயவனை மறையவனை மறையோர் தங்கள் மந்திரனைத் தந்திரனை வளராநின்ற

தீயவனைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே

முண்டீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.85.3) அப்பர் பிரான், அவன் இவன் என்று யாவர்க்கும் அறியவொண்ணாச் செம்பொன் என்று பெருமானை அழைக்கின்றார். நம்பன்=நம்புதற்கு உரியவன். திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற போது, தேரின் அச்சு முறிந்து விடவே, திருமால் இடபத்தின் வடிவம் எடுத்து பெருமானைத் தாங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த மால்விடையிலிருந்து வேறுபடுத்தி காட்டும் வண்ணம், நந்தியம்பெருமானை நரை விடை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். நரை விடை=வெண்மை நிறத்து இடபம்; நவிலுதல்=பாடுதல். சிவபெருமானை இமையாத முக்கண் ஈசன் என்று பல தேவாரப் பாடல்களில் அருளாளர்கள் கூறுகின்றனர். பெருமானின் மூன்றாவது கண் எப்போதும் மூடியபடியே இருக்கும். பொதுவாக மற்றவர்களுக்கு இருப்பது போல் இருக்கும் இரண்டு கண்களும் எப்போதும் திறந்தபடியே இருக்கும். அதனால் தான் இமையாத முக்கண் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இந்த கண்கள், இமைத்தால், அதாவது தங்களது நிலையிலிருந்து மாறினால் என்ன ஏற்படும் என்பதை தேவாரப் பாடல்கள் விளக்குகின்றன. எப்போதும் திறந்தே இருக்கும் இரண்டு கண்கள் மூடியபோது உலகம் இருண்ட செய்தி தச புராணத் திருப்பதிகத்தின் பாடலில் (4.14.8) கூறப்பட்டுள்ளது. எப்போதும் மூடியிருக்கும் நெற்றிக் கண் திறந்த போது மன்மதன் எரிந்து சாம்பலாக மாறினான் என்பதை நாம் அறிவோம். அடியார்களின் நம்பிக்கைக்கு உரியவன் என்பதால் அடியார்களால் மிகவும் விரும்பப் படுபவனும், வெண்மை நிறத்தில் காணப்படும் எருதினைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டு அதன் மீது உலவுபவனும், அனைத்து உயிர்களுக்கும் தலைவனும், எப்போதும் வேத கீதங்களை பாடுபவனும், அனைவர்க்கும் இன்பத்தைத் தருபவனும், இமையாத மூன்று கண்களை உடையவனும், தன்னை விரும்பி வழிபடும் அடியார்களுக்கு என்றும் அன்புடையவனாக இருப்பவனும், அனலைக் கையில் ஏந்தி ஆடுபவனும், அவன் என்றும் இவன் என்றும் யாராலும் சுட்டிக் காட்டி அறிய முடியாதவனும், செம்பொன்னின் நிறத்தினை உடைய மேனியானும் ஆகியவன் சிவபெருமான். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான், முண்டீச்சரத்து தலத்தில் சிவலோகநாதன் என்ற பெயரில் உறைகின்றான். அவன் எனது சிந்தையிலும் பரவி இருக்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் நான்காவது பாடலில், அப்பர் பிரான், அயற்கு அரிக்கும் அறிய வொண்ணா நின்றவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண் கீதத்தை நவிற்றினான் காண்

இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏசற்று மனம் உருகும் அடியார் தங்கட்கு

அன்பன் காண் ஆரழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா

செம்பொன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.88.7) அப்பர் பிரான், பெருமானை, மறையாலும் அறியவொண்ணாக் கலையான் என்று குறிப்பிடுகின்றார். மலையானை=கயிலை மலையை உடையவனை; கலை=மான் கன்று; கடிவானை=கோபம் கொண்டு நீக்குபவன்; துங்கம்=உயர்ச்சி: ஒலையாத=ஒழுக்கத்தில் தளராத; கயிலை மலையினைத் தனது இருப்பிடமாக உடையவனும், மலை போன்ற பெரிய உருவத்துடன் தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து அந்த யானையை வென்றவனும், வேதங்களில் உள்ளவனும், வேதங்களும் அறிய முடியாத பல கலைகளில் வல்லவனும், மான் கன்றினை கையில் ஏந்தியவனும், அடியார்கள் படும் துயரங்களைக் கடிந்து நீக்குபவனும், ஒழுக்கம் தவறாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் தலத்தின் தலைவனாக விளங்கும் உத்தமனும், வானில் பறந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் வீழ்த்திய வில்லினை உடையவனும் வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன் என்று அப்பர் பிரான் சமண சமயத்தைச் சார்ந்து இருந்த தனது இளமைக் காலத்தைக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவிக்கும் பாடல்.

மலையானை வரும் மலை ஒன்று உரி செய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணாக்

கலையானைக் கலையாரும் கையினானைக் கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம்

உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனைப் புரம் மூன்றெய்த

சிலையானை வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

மேற்கண்ட பாடல் நமக்கு திருச்சிராப்பள்ளி தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடலை (1.98.8) நினைவூட்டுகின்றது. மல்கு=பொருந்திய; இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணாதவன் என்றும் சொற்களைக் கடந்தவன் என்றும் பெருமானின் இயல்புகள் பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டு வருகின்றது. வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நெறிகளையும் எடுத்துரைக்கும் வேதங்கள் சொல்லாத செய்தியே இல்லை என்று பொதுவாக கூறுவார்கள். ஆனாலும் பல செய்திகளையும் தத்துவங்களையும் விளக்கமாக உரைக்கும் வேதங்களும், அருளாளர்கள் இயற்றிய பாடல்களும்,பெருமானின் ஒரு சில செய்கைகளையே சொல்ல முடிகின்றது என்று உணர்த்தி, பெருமானின் பெருமை சொற்களையும் கடந்தது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் அருட்செய்கைகளும் வீரச் செயல்களும் பலவாக விரிந்து கொண்டே இருப்பதால், அவற்றை சொல்வதற்கு வேதங்களாலும் கீதங்களாலும் இயலவில்லை என்று உணர்த்துகின்றார். இந்த பாடலில் பழியினையும் பொருட்படுத்தாமல் பெருமான் தொடர்ந்து பலி ஏற்கின்றான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதை உணராத சிலர் பெருமான் பிச்சை ஏற்பதை இழித்துக் கூறினும், அத்தகைய பழிச் சொற்களை பொருட்படுத்தாமல், பிச்சை ஏற்பதன் மூலம் பல பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு உய்வினை அளிப்பதை தொடர்ந்து இறைவன் செய்து வருகின்றார். இந்த தன்மையே இங்கே உணர்த்தப் படுகின்றது. மலை போன்று பருத்தும் வலிமை வாய்ந்ததும் ஆகிய தோள்கள் பொருந்திய அரக்கன் இராவணனின் வலிமை கெடும் வண்ணம், அவனது உடலை கயிலை மலையின் கீழே அடர்த்து நொறுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான்; அவர், பிறரது பழிச்சொற்களையும் பொருட்படுத்தாமல், பிரம கபாலத்தை ஏந்தியவராக பல ஊர்கள் திரிந்து தொடர்ந்து பலி ஏற்கின்றார். பெருமானின் பெருமையினை எடுத்து உரைக்கும் வல்லமை வாய்ந்த வேதங்களும் அருளாளர்களின் கீதங்களும், முழுமையாக அவரது வீரச்செயல்கள் மற்றும் கருணைச் செயல்களின் தன்மையை சொல்லும் ஆற்றல் இல்லாமல் நிற்கின்றன. அவைகளால் ஒரு சில செயல்களையோ ஒரு சில தன்மைகளையோ தான் சொல்ல முடிகின்றது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மலை மல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்

தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார்

சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்

சிலவல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே

எதிர்கொள்பாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.7.10) சுந்தரர், வேதங்களில் வல்லவர்களும் அறிய முடியாதவர் சிவபெருமான் என்று கூறுகின்றார். சுருதி=வேதங்கள்; சுருதியார்=வேதங்களில் வல்லவர்கள்; மருது கீறி ஊடு போன மால்=உரலுடன் பிணைத்துக் கட்டப் பட்டிருந்த கண்ணன், அருகருகே வளர்ந்திருந்த இரண்டு மருத மரங்களின் இடையே சென்று மருத மரங்களை சாய்த்த வரலாறு உணர்த்தப் படுகின்றது. குழல் என்ற சொல் பெண்களின் கூந்தலை குறிப்பிடும் சொல். குழலும் சடையும் கொண்டவனாக மாதொரு பாகனின் கோலத்தில் பெருமான் இருப்பதை சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார்.

குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற்சடையன்

மருது கீறி ஊடு போன மாலயனும் அறியாச்

சுருதியார்க்கும் சொல்ல வொண்ணா சோதி எம் ஆதியான்

கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.57.6) சுந்தரர், பெருமானை, ஒன்றா அறிவொண்ணா மூர்த்தி என்று குறிப்பிடுகின்றார். திரு=இலக்குமி தேவி; பிரான்= தலைவன்; செய்வான்=செய்யும் பொருட்டு; மருவுதல்=பொருந்துதல்; தனது அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு எண்ணற்ற வேடங்களை பெருமான் தரிக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சுந்தரர், மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே என்று கூறுகின்றார். மாணிக்க வண்ணர் என்பது இந்த தலத்து இறைவனின் திருநாமம். சிவபெருமானை மறந்து வேறெதனையும் நினையேன் என்று தனது கொள்கையை சுந்தரர் உணர்த்துகின்றார்.

திருவின் நாயகனாகிய மாலுக்கு அருள்கள் செய்திடும் தேவர் பிரானை

உருவினானை ஒன்றா அறிவொண்ணா மூர்த்தியை விசயற்கு அருள் செய்வான்

செரு வில் ஏந்தி ஓர் கேழற் பின் சென்று செங்கண் வேடனாய் என்னொடும் வந்து

மருவினான் தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே

இதே கருத்தைத் தான் இன்ன தன்மையன் என்று அறிவொண்ணாதவன் என்று சுந்தரர் ஒரு திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.59.1) கூறுகின்றார். இன்ன தன்மையன் என்று வரையறுத்துச் சொல்ல முடியாதவன் சிவபெருமான் என்று கூறுவதால் அணுக முடியாதவன் என்று நினைத்து நாம் ஒதுங்கிவிடக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் சிவபெருமான் மிகவும் எளிமையானவன் என்று உணர்த்தி, அவன் பால் அன்பு வைத்தால் அவனை நாம் எளிதில் அடையலாம் என்று கூறும் பாங்கு ரசிக்கத்தக்கது. சுந்தரர் வேண்டிய போதெல்லாம் அவருக்கு, சிவபெருமான் பொன்னும் பொருளும் வழங்கியதை நாம் அனைவரும் அறிவோம். பொன்னையும் பொருளையும் கொடுத்த இறைவன், அவற்றை அனுபவிக்கும் பாக்கியத்தையும் அளித்ததாக சுந்தரர் இங்கே கூறுகின்றார். பலவிதமான செல்வங்கள் இருந்தும் அவற்றை அனுபவிக்க முடியாமல் பலர் இருப்பதை நாம் உலகினில் காண்கிறோம். நமக்கு உள்ள செல்வத்தை அனுபவிக்கும் வாய்ப்பும், இறைவனின் அருள் இருந்தால் தான் நிறைவேறும். தனக்கு அத்தகைய அருள் இருந்ததாக சுந்தரர் இந்த பாடலில், போகமும் புணர்ப்பானை என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திரு என்ற சொல், செல்வத்துள் உயர்ந்த செல்வமாகிய வீடுபேற்றினை குறிப்பிடுகின்றது. தான் சுந்தரனாக எடுத்த இந்த பிறவியின் முடிவில் வீடுபேறு, தனக்கு அருளப்படும் என்பதை உணர்ந்த சுந்தரர், திருவும் புணர்ப்பானை என்று எதிர்காலத்தை குறிப்பிட்டு உணர்த்துவதை நாம் இந்த பாடலில் காணலாம். பழைய வினைகளின் பயனாக நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை நுகரும் போது, மேலும் பல தவறுகளைச் செய்து வினைகளைப் பெருக்கிக் கொள்வது மனித இயல்பு. அவ்வாறு தான் பிழை செய்யாத வண்ணம் காப்பவன் இறைவன் என்றும் இங்கே சுந்தரர் கூறுகின்றார். இன்ன தன்மையன் என்று அறிவதற்கு அரியவன் என்றாலும் அடியார்களுக்கு எளியவனாக இருப்பது பெருமானின் சிறப்புத் தன்மை. எனவே எளிவந்த பிரான் என்று கூறி, பெருமானின் தன்மையினை நாம் உணரமுடியாமல் போனாலும், அவனது அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்பதை உணர்த்தி சுந்தரர் ஊக்குவிப்பதையும் நாம் உணரலாம். மணிவாசகரும் சிவபுராணத்தில், சொல்லற்கரியான் என்று சிவபெருமானை குறிப்பிட்டு, சொல்லற்கரியானது திருநாமத்தைச் சொல்லி, அவனது திருவடிகளை வணங்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகின்றார்.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானைப்

பின்னை என் பிழையைப் பொறுப்பானைப் பிழை எலாம் தவிரப் பணிப்பானை

இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மானை எளிவந்த பிரானை

அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே

வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.86.1), பெருமானை, சுந்தரர், யாவர்க்கும் அறிவொண்ணாதவன் என்று கூறுகின்றார். இந்த பாடலில் வேதத்தின் பொருளாக உள்ளவன் இறைவன் என்று சுந்தரர் கூறுகின்றார். அடையில்= அடைந்தால் இறைவன் தன்னைச் சாரும் அடியார்கள் பால் அன்பு வைத்துள்ளார் என்று சுந்தரர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். தன்னை அடைந்தவர்களுக்கு அன்புடன் அருள் புரியும் பெருமானைச் சாராமல் வேறு எவரையேனும் சார்ந்து இருந்தால் உரிய பயன் கிடைக்காது என்பதையும் சுந்தரர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.

விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை

அடையில் அன்பு உடையானை யாவர்க்கும் அறிவொண்ணா

மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்

சடையில் கங்கை தரித்தானைச் சாராதார் சார்பு என்னே

இன்ன தன்மையன் என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இறைவனை நாம் உணர்வினால் அவன் இருப்பதை புரிந்து கொண்டு அவனை வழிபட்டு வணங்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் அவனது தன்மை யாது என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது தவறு என்பதை உணர்த்தும் திருவாசகப் பாடலை இங்கே நாம் சிந்திப்பது பொருத்தமாகும். இந்த பாடலில் இறைவனை உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் கூறுகின்றார். எப்படி உண்மையாகஇருக்கும் பொருள், இல்லாத பொருளாக மாற முடியும். நமது உணர்வினால் உணரப் படுபவன் இறைவன். எனவே அவன் உள்ளதை, அவன் இருக்கும்உண்மையை நாம் யாவரும் உணர்வால் அறிந்து உணர்கின்றோம். ஆனால் அதே இறைவனை நமது அறிவின் துணையால் இன்ன தன்மையன் என்று ஆராயத்தொடங்கினால் அவனை நாம் உணர முடியுமா. முடியாது என்பதே விடை. எனவே தான் அறிவினால் கண்டறியாத பொருள் என்று உணர்த்தும் பொருட்டுஇன்மையுமாய் உள்ளவன் என்று கூறுகின்றார். உணர்வால் உணர முடியும் இறைவனை அறிவினால் உணர முடியாது என்பதை சுட்டிக் காட்டவேஉண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். வளி=காற்று; ஊன்=உடல்; பொம்மலாட்டத்தில் திரையில் பொம்மைகள் கைகால்களை அசைத்து ஆடுவதையும் பாடுவதையும் நாம் காண்கின்றோம். ஆனால் உண்மையில் அந்த செயல்களை பொம்மைகள் செய்வதில்லை என்பதையும், பின்னாலிருந்து எவரோ இயக்குகின்றனர் என்பதையும் நாம் அறிவோம். அதே போன்றது தான் நமது வாழ்க்கையும் என்று அடிகளார் இங்கே உணர்த்துகின்றார். நாம் எல்லோருமே நான் யார் தெரியுமா என்றும், இவை எல்லாம் எமது சொத்துக்கள் என்றும் நமது கைகளையும் கால்களையும் ஆட்டி பேசுகின்றோம். இவ்வாறு நம்மை ஆட வைக்கும் தலைவன், பேச வைக்கும் தலைவன் தான், இறைவன் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாய் என் சொல்லி வாழ்த்துவனே

மேற்கண்ட பாடலில், மணிவாசக அடிகளார், பெருமானின் தகுதியையும் தனது தகுதி இன்மையையும் ஒப்பிட்டு, பெருமானைப் புகழ்ந்து பாடுவதற்கு தான் தகுதியற்றவன் என்று கூறுகின்றார். அட்ட மூர்த்தங்களாக, ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் மற்றும் அனைத்து உயிர்களுடன் கலந்து எங்கும் பரந்து நிற்பவன் என்றும், அனைத்து உயிர்களுக்கும் தலைவன் என்றும், அனைத்து உயிர்களையும் ஆட்டுவிப்பவன் என்றும் இறைவனின் தன்மைகளை குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களுக்கும் யான் மற்றும் எனது என்ற அகப்பற்றையும் புறப்பற்றையும் பிணைத்து, அத்தகைய பற்றுகள் மூலம் பல செயல்களை செய்யும் வண்ணம் தூண்டுபவன் பெருமான் என்றும் சொல்லப் படுகின்றது. இந்த தகுதிகள் ஏதும் இல்லாதவன் என்று தன்னை குறிப்பிடுகின்றார். மேலும் அனைத்து உயிர்களுடன் கலந்து நின்று அந்த உயிர்களை இயக்குபவனும் பெருமான் தான் என்று அடிகளார் கூறுகின்றார்.

திருவாசகம் திருவேசறவு பதிகத்தின் ஏழாவது பாடலிலும் மணிவாசக அடிகளார் (8.38.7) தனது பிறப்பினை அறுத்தவன் பெருமான் என்றும் இமையவர்க்கும் அறியவொண்ணாதவன் என்றும் பெருமானை குறிப்பிட்டு மகிழ்கின்றார். பிறப்பினை பாலைப் பிறப்பு என்று அடிகளார் கூறுவது சிந்திக்கத் தக்கது;பாலைவனத்தில் எங்கும் வெப்பமே நிறைந்து காணப்படும். அது போல் நமது பிறவி, உலகியல் மாயங்களில் சிக்குண்டு மேன்மேலும் துன்பங்களை அனுபவிப்பதற்கு வழி வகுப்பதால் பாலைப் பிறவி என்று சொல்லப் பட்டுள்ளது. இடையிடையே நாம் அனுபவிக்கும் இன்பங்களும் நிலையானவை அல்ல என்பதை உணராத நாம், அத்தகைய இன்பங்களைத் தேடிக் கொண்டு அலைகின்ற தன்மை, பாலைவனத்தில் கானல் நீரினைத் தேடி அலைந்துக் களைப்பதை ஒத்துள்ளதை நாம் உணரலாம். இறைவன் தனது மனதினில் புகுந்தமையால் தான், தனது மனம் அவன் பால் வைத்துள்ள அன்பினால் உருகியது என்று அடிகளார் கூறுகின்றார். எனவே இறைவன் பால் காதல் கொண்டு கசிந்து உருகும் நிலை நமக்கு ஏற்படுவதற்கும், அவனின் அருள் தேவைப் படுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருப்பெருந்துறையில் பெருமான் தன்னை ஆட்கொண்ட போதே, அவரது அருள் கருணை தன் மீது பதிந்து விட்டதாக அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார்.

என்பாலை பிறப்பறுத்து இங்கு இமையவர்க்கும் அறியவொண்ணா

தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான்

அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது

என்பாலே நோக்கியவாறு அன்றே எம் பெருமானே

பெருமான் பால் அன்பு செலுத்தாமல் எத்தகைய கடுமையான தவம் புரிந்தாலும், பெருமானை நாம் அடைய முடியாது என்று திருமூலர், திருமந்திரம் முதல் தந்திரம் அன்புடைமை அதிகாரத்தின் பாடலில் கூறுகின்றார். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, அகம் குழைதல் ஆகிய ஞானத்தால் மட்டுமே இறைவனை நாம் அடைய முடியும் என்று கூறுகின்றார். தமது உடல் உறுப்புகளையே ஆகுதியாக வேள்வித் தீயினில் இட்டு, அரக்கர்கள் தவம் செய்ததை நாம் புராணங்களில் காண்கின்றோம். அத்தகைய தவம் சிவபெருமானை அடைவதற்கு உதவி புரியாது என்று திருமூலர் கூறுகின்றார்.

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்

பொன் போல் கனலில் பொறிய வறுப்பினும்

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி

என் பொன் மணியினை எய்த வொண்ணாதே

இதே தந்திரத்தின் கல்லாமை அதிகாரத்தின் பாடலில் திருமூலர் கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன் என்று குறிப்பிடுகின்றார். குரம்பை=உடல்; இறைவனைப் பற்றிய கல்வியே இங்கே ஞானமாக கருதப் படுகின்றது. இறைவன் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானவன் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. எனினும் உலக மாயையில் கட்டுண்டு, நிலையற்ற உலகப் பொருட்களை நிலையானவை என்றும் நிலையற்று என்றோ ஒரு நாள் அழியக்கூடிய உடலை நிலை என்றும், அந்த உடல் தருகின்ற சிற்றின்பங்களை நிலையானது என்றும் நினைத்து, நிலையான பேரின்பத்தை தரும் இறைவனை நாடாது இருப்போரை, வாழ்க்கையின் நோக்கத்தை புரிந்து கொண்டு பின்பற்றாத மூடர்களை, கல்லாதார் என்று அழைக்கின்றார். அனைத்து உயிர்களுடனும் பிணைந்து அவற்றை இயக்கும் இறைவன், அத்தகைய கல்லாதாரின் உடலுடனும் இணைந்து நின்றாலும், அவர்களால், அவ்வாறு இறைவனை தன்னுள் இருப்பதை உணரமுடியாது என்று கூறுகின்றார்.

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து

நில்லாக் குரம்பை நிலை என்று உணர்வீர்காள்

எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்

கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே

இதே அதிகாரத்தின் மற்றொரு பாடலில், சைவ சித்தாந்தத்தில் சொல்லப்படும் தத்துவங்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டு, அந்த தத்துவங்களை முறையாக பயன்படுத்தி, இறைவனைப் பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ளும் உயிர்கள் மட்டுமே இறைவனை உணரமுடியும் என்று திருமூலர் கூறுகின்றார். முதல் இரண்டு அடிகளில் சொல்லப் படும் கணக்கு என்ற சொல், தொகை என்ற பொருளில், தத்துவங்களை குறிக்கும் என்றும் மூன்றாவது அடியில் உள்ள கணக்கு என்ற சொல் எல்லை என்ற பொருளிலும் நான்காவது அடியில் வரும் கணக்கு என்ற சொல் அளவு என்ற பொருளிலும் கையாளப் பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சைவ சித்தாந்தமே கல்வி என்று சொல்லப் படுகின்றது. தத்துவங்களின் தொகையையும், அவை தொழிற்படும் அளவையும் அறிந்தவரால் மட்டுமே, தத்துவங்களை கடந்தவனாகிய சிவத்தை அறிவதற்கு உதவும் ஞானம் சித்திக்கும்; எனவே தத்துவங்களின் தன்மையை முழுவதுமாக அறிந்து கொண்டு, அவற்றின் உதவியால் மெய்ப்பொருளின் தன்மையை உணர்ந்து, மெய்ப்பொருளை அணுக தலைப்படும் உயிர்களே கற்றவர்கள் என்று அழைக்கப் படுவார்கள். தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பன ஒரு தொகுப்பாக தசகாரியம் என்று அழைக்கப் படுகின்றன.

கணக்கு அறிந்தார்க்கு அன்றிக் காண வொண்ணாது

கணக்கு அறிந்தார்க்கு அன்றிக் கைகூடா காட்சி

கணக்கு அறிந்து உண்மையை கண்டண்ட நிற்கும்

கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே

பொழிப்புரை:

சிவபெருமானின் தன்மையை உண்மையாக அறிந்தவர் எவரும் இல்லை. அவனது தன்மை புரியாமல் அவனை பலரும் இகழ்கின்றனர். ஆனால் பெருமானோ, அவ்வாறு பலர் இகழ்வதையும் பொருட்படுத்தாமல், பூதகணங்கள் முன்னும் பின்னும் தன்னைத் தொடர்ந்தும் சூழ்ந்தும் வர, எங்கும் திரிபவராக உள்ளார். அவர், தைக்கப்பட்ட கோவண ஆடையினை அணிந்தும் சாம்பல் பொடியினைத் தனது உடலெங்கும் பூசியும் எளிமையான கோலத்துடன் இருக்கின்றார். அன்னங்கள் ஒலிக்கும் நீர்த்துறைகள் உடைய திருவையாறு தலத்திற்கு தலைவனாக அவர் உள்ளார்.

பாடல் 3:

கோடல் கோங்கம் (2.006) பாடல்கள் 3, 4, 5, 6 (திதே 0634)

கூறு பெண் உடை கோவணம் உண்பது வெண்தலை

மாறிலாரும் கொள்வார் இலை மார்பில் அணிகலம்

ஏறும் ஏறித் திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே

ஆறு நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே

விளக்கம்:

ஆறு=வேதத்தின் ஆறு அங்கங்கள்; நான்கு=நான்கு வேதங்கள்; சிட்சை, வியாகரணம், நிருத்தம், ஜோதிடம், கல்பம், சந்தஸ் என்பன ஆறு அங்கங்கள். வாய்மொழியாக தலைமுறை தலைமுறையாக குருவிடமிருந்து அவரது சீடனுக்கு சொல்லப்பட்டு பரவிய வேதங்களுக்கு இந்த ஆறு அங்கங்கள் அரணாக இருந்து தவறாக வேதங்கள் ஓதப்படுவதை தவிர்த்தன. எனவே தான் வேதங்களையும் அங்கங்களையும் ஒன்றாக கற்றுக் கொள்வது அவசியமாக கருதப் பட்டது. இந்த ஆறு அங்கங்களில் ஒன்று ஊனமடைந்தாலோ அல்லது ஒன்று இல்லாமல் போனாலோ, ஓதப்படும் வேதம் குறைபாடு உடையதாக மாறுகின்றது. எனவே இந்த ஆறு அங்கங்களும் முறையாக இருக்குமாறு வேதங்கள் ஓதப் படவேண்டும். இந்த ஆறு அங்கங்களும் எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் இப்போது பார்ப்போம்.

சிட்சை என்றால் எழுத்து என்று பொருள். வேதத்திற்கு அழகு சேர்ப்பது சிட்சை எனப்படும் அங்கமாகும். ஒரு மனிதனுக்கு அவனது மூக்கு அழகு சேர்ப்பதைப் போன்று சிட்சை அழகு சேர்ப்பதால், இதனை வேத புருடனின் மூக்கு என்றும் கூறுவார்கள். மூக்கும் முழியுமாக இருப்பதைத் தானே அழகாக இருப்பதாக நாம் கருதுகின்றோம். மூக்குக் குழாய் பழுதடைந்தால், நமது சொற்களின் உச்சரிப்பு சரியாக இருப்பதில்லை. ஜலதோஷம் பாதிக்கும் போது நமது குரல் கெட்டுப் போவதை நாம் உணருகின்றோம். ஒவ்வொரு எழுத்தினையும் அதற்கு உரிய முறையில் உச்சரித்தால் தான் வேதம் கேட்பதற்கு அழகாகவும் முறையாகவும் தவறில்லாமலும் இருக்கும்.

சிட்சைக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுவது வியாகரணம். வியாகரணம் என்றால் இலக்கணம் என்று பொருள். வழக்கத்தில் உள்ள பல சொற்கள், சற்று மாறுபட்டு பாடல்களில், இலக்கியங்களில் கையாளப் படுவதை நாம் காண்கின்றோம். இலக்கியங்களில் நாம் காணும் பல சொற்கள் காலப்போக்கில் திரிந்து, இன்று நாம் பயன்படுத்தும் நிலையில் உள்ளதைக் காண்கின்றோம். ஆனால் அத்தகைய இலக்கியச் சொற்கள், கவிதைகளின் இலக்கணத்திற்கு ஏற்ற வகையில் அமைந்திருப்பதை, சற்று ஆராய்ந்தால் நாம் உணரலாம். அவ்வாறே வேதத்தில் காணப்படும் பல சொற்கள் இன்றும் நாம் நடைமுறையில் கையாளும் வடமொழிச் சொற்களிலிருந்து மாறுபட்டு இருக்கின்றன. அத்தகைய வேதச் சொற்கள், இன்றைய நடைமுறைச் சொற்களிலிருந்து வேறுபட்டாலும் இலக்கண ரீதியில் சரியாக இருப்பதை, நாம் உணரலாம். இவ்வாறு பல சொற்களின் பயன்பாட்டினை நமக்கு உணர்த்தும் வியாகரணம், வேதத்தில் அமைந்திருக்கும் சொற்களை பாதுகாக்கின்றன. எனவே வியாகரணத்தை வேதத்தின் மெய்க்காப்பாளன் என்றும் வேத புருடனுக்கு வாய் என்றும் கூறுவார்கள். மேலும் ஒரே சொல்லுக்கு பல பொருட்கள் உள்ளதை நாம் தமிழ் மொழியில் காண்பது போல், வடமொழியிலும் காணலாம். பலவிதமான அர்த்தங்கள் கொண்ட சொற்களை பயன்படுத்தும் முறையும் வியாகரணத்தில் விளக்கப் படுகின்றது.

வேதங்களில் கூறப்படும் பல மந்திரங்களுக்கு உரிய முனிவர்கள், சந்தம், தேவதை ஆகியவற்றின் பெயர்களை சொன்ன பின்னரே அந்த மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பது விதி. சந்தம் என்பது அந்தந்த மந்திரங்களில் அமைந்துள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். மந்திரங்களில் உள்ள எழுத்துக்களில், ஒரு எழுத்தைக் குறைத்தோ அல்லது கூட்டியோ சொல்வதைத் தவிர்ப்பதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. அந்தணர்கள் தினமும் சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரத்தில் இருபத்து நான்கு எழுத்துகள் இருப்பதாக வேதம் கூறுகின்றது. சந்தஸ் என்று வடமொழியில் அழைக்கப்படும் இந்த அங்கம், மூன்றாவது முக்கிய அங்கமாக கருதப்படுகின்றது. இந்த அங்கம் வேத புருடனின் பாதமாக கருதப் படுகின்றது.

அடுத்த அங்கம் நிருக்தம் என்று அழைக்கப் படுகின்றது. நிருக்தம் என்றால் விளக்கிச் சொல்லுதல் என்று பொருள். பல பொருள்களைக் கொண்ட சொற்கள், வேதங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த விளக்கத்தினைத் தெரிந்து கொண்டால் தான், அந்தந்த இடங்களுக்கு ஏற்ப, வேதத்தின் பல சொற்கள் உணர்த்தும் சரியான பொருளை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இவ்வாறு சரியான விளக்கங்களை அறிந்து கொள்வதற்கு வியாகரணமும் உதவி செய்கின்றது. எனவே சொற்களின் விளக்கம், இலக்கணம் ஆகியவற்றை அறிந்து கொண்டால் தான், சரியான உச்சரிப்புடன் பல வேத மந்திரங்களை நாம் சொல்ல முடியும். இந்த அங்கம் வேத புருடனின் காதுகளாக கருதப் படுகின்றன.

அடுத்ததாக சொல்லப்படும் ஜோதிடம் என்ற அங்கம், வேத புருடனின் கண்ணாக கருதப் படுகின்றது. இது கணித ஸ்கந்தம் என்றும் ஹோரா ஸ்கந்தம் இரண்டு பிரிவாக உள்ளது. முதல் பகுதியில் கால தத்துவங்கள் சொல்லப் படுகின்றன. மேலும் அந்தந்த காலங்களில் செய்ய வேண்டிய கடமைகள், காரியங்கள் ஆகியவற்றை குறிப்பிடுகின்றன, மேலும் பல சுப மற்றும் அசுப நிகழ்ச்சிகள், வேள்விகள், பூஜைகள் செய்ய வேண்டிய காலங்களை எவ்வாறு நிர்ணயிப்பது என்பதையும் விளக்குகின்றன. இரண்டாவது பிரிவான ஹோரை, ஜாதகங்களின் மூலம் நடந்த நிகழ்ச்சிகள், நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை அறிய உதவுகின்றன.

கல்பம் என்றால் பிரயோகம் என்று பொருள். வேள்வி முதலான பல சடங்குகளை, பல விதமான மந்திரங்களை பயன்படுத்தும் முறை இந்த அங்கத்தில் சொல்லப் படுகின்றது. மேற்கூறிய விளக்கங்கள் எவ்வாறு அங்கங்கள், வேதங்களை ஓதுவதிலும், வேதத்தின் பொருளை புரிந்து கொள்வதிலும், வேத மந்திரங்களை பயன்படுத்துவதிலும் எவ்வாறு நமக்கு உதவியாக உள்ளன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த அங்கத்தை வேத புருடனின் கைகள் என்று கருதுகின்றனர். எனவே வேதங்களை முற்றும் கற்றால் மட்டும் போதாது, வேதங்களின் அங்கங்களையும் முறையாக கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தினை நாம் உணர்கின்றோம். மேலும் இந்த அங்கங்கள் மூலம், உணர்வதற்கு மிகவும் அரியனவாக காணப்படும் வேதங்களை நாம் அறிந்து கொள்ள அங்கங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். மேலும் இந்த ஆறு அங்கங்களும் வாய்மொழியாக சொல்லிக் கொடுக்கப்பட்ட வேதங்களில் பிழைகள் ஏற்படுவதை தவிர்க்கின்றன என்பதையும் நாம் கண்டோம். எனவே தான் வேதங்களை விரித்து சொன்ன பெருமான், இந்த ஆறு அங்கங்கள் பற்றியும் கூறியுள்ளார்.

சிவபெருமான் தனது மார்பினில் அணிந்துள்ள அணிகள், ஆமையோடு, பன்றிக் கொம்பு இளநாகம் என்று தோடுடைய செவியன் பதிகத்தின் இரண்டாவது பாடலில் திருஞான சம்பந்தர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. முற்றல்=முதிர்ந்த; ஆமை என்பது இங்கே ஆமை ஓட்டினை குறிக்கும். வெகு காலத்திற்கு முன்னர் தோன்றிய கூர்மாவதாரம் என்பதைக் குறிப்பிட முற்றல் ஆமை என்று குறிப்பிட்டார்.; ஏனம்=பன்றி; முளைக் கொம்பு=பன்றியாகிய திருமாலின் வாயினில் பல் போன்று முளைத்த கொம்பு; பூண்டு=ஆபரணமாக அணிந்து கொண்டு; வராக அவதாரம் எடுத்த திருமாலின் பல் அரக்கனின் உடலில் பட்டமையால் அவனது தீய குணங்கள் இவரை ஆட்கொள்ள, அரக்கனைக் கொன்ற பின்னரும், வராகராகிய திருமால், மிகுந்த வெறியுடன் குதித்த போது, அவரது தொல்லை தாளாமல் தேவர்கள் அனைவரும் பெருமானிடம் முறையிட, பெருமான் அந்த பன்றியினை அடக்கி ஆட்கொண்டார். இவ்வாறு பன்றியை அடக்கியதை உணர்த்தும் பொருட்டு, பன்றியின் கொம்பினைத் தனது மார்பினில் சிவபெருமான் ஆபரணமாக அணிந்தார் என்று புராணம் கூறுகின்றது. இளநாகம்=அடிக்கடி தனது சட்டையை உரிப்பதால், நரை திரையின்றி இருக்கும் பாம்பு. இவ்வாறு எளியவனாக இருக்கும் பெருமானின் தன்மை, தனது உள்ளத்தைக் கவர்ந்ததாக திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

முற்றல் ஆமை இளநாகமோடு ஏன முளைக் கொம்பு அவை பூண்டு

வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த

பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

இத்தகைய எளிய ஆபரணங்களை வேறு எவரும் விரும்புவதில்லை அல்லவா. எனவே தான், பெருமானின் இந்த ஆபரணங்களைப் பெற்றுக் கொண்டு அதற்கு மாறாக தாங்கள் அணிந்துள்ள நகைகளை வேறு எவரும் தரமாட்டார்கள் என்று நகைச்சுவையாக திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு எளிமையாக இருக்கும், பெருமானின் செய்கை, நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் உலகுக்கு உணர்த்திய செய்கை, மிகவும் உயர்ந்ததாக இருக்கும் தன்மையையும் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

உமை அம்மையைத் தனது உடலின் ஒரு கூறாக வைத்துள்ள பெருமான், கோவணத்தை மட்டுமே தனது உடையாக ஏற்றுக் கொண்டுள்ளார். அவரது உண்கலம் காய்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் மண்டையோடு; அவர் தனது மார்பினில் அணிகலனாகக் கொண்டுள்ள ஆமை ஓட்டினையும் பன்றிக் கொம்பினையும் பாம்பினையும் பண்டமாற்றாக ஏற்றுக் கொள்பவர் எவரும் இல்லை. அவர் இடபத்தின் மீது ஏறியவாறு உலகெங்கும் திரிகின்றார். தேவர்கள் அனைவரும் தன்னைப் புகழ்ந்து வணங்கும் வண்ணம், அவர் நான்கு வேதங்களையும் அதன் அரணாகத் திகழும் ஆறு அங்கங்களையும் உலகினுக்கு உணர்த்தியவர் ஆவார். இவர் ஐயாறு தலத்தினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள தலைவர் ஆவார்.

பாடல் 4:

கோடல் கோங்கம் (2.006) பாடல்கள் 3, 4, 5, 6 (திதே 0634)

பண்ணின் நல்ல மொழியார் பவளத் துவர் வாயினார்

எண்ணில் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார்

வண்ணம் பாடி வலி பாடித் தம் வாய்மொழி பாடவே

அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே

விளக்கம்:

துவர்=செம்மை நிறம்; எண்ணில்=எண்ணிக்கையில் அடங்காத; அண்ணல்=தலைவன்; பண்ணின் நல்ல=நல்ல பண்ணிசை உடைய; திருவையாறு தலத்தில் உள்ள இளம் பெண்கள் பெருமானின் தன்மையையும் வீரச்செயல்களையும் பாடுவதைக் கேட்கும் பெருமான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். இந்த தலம் சென்ற போது, தலத்து மகளிர் முறையான இசையுடன் பாடல்கள் பாடியதை தான் கேட்டு மகிழ்ந்ததை, புலனைந்தும் என்று தொடங்கும் பதிகத்தின் ஆறாவது பாடலில் (1.130.6) திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. தேந்தாம்=இசையுடன் இணைந்து ஒலிக்கும் முழவினை உணர்த்தும் குறிப்புச் சொல்; நன்னெறி=உயிர்கள் வினைகளின் பிணைப்பிலிருந்தும் விடுதலை அளித்து, என்றும் அழியாத பேரின்பத்தில் ஆழ்த்தும் முக்தி நெறி. .சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரும் முக்தி நிலை அளிக்க முடியாது என்பதால், சிவபெருமானை ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவர் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தாமம்=மாலை; மக்களை ஆட்சி செய்யும் வேந்தனுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம், மக்களை காப்பதும் அவர்களுக்கு நல்ல வழி காட்டுவதும் தானே.

வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறி காட்டும் விகிர்தனாகி

பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்

காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாடக் கவினார் வீதித்

தேந்தாம் என்று அரங்கு ஏறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே

பொழிப்புரை:

இனிமையான இசையினையும் தோற்கடிக்கும் வண்ணம் இனிய மொழிகளைப் பேசுபவர்களும், பவளம் போன்று சிவந்த உதடுகளை உடையவர்களும், எண்ணிக்கையை கடந்த பல நல்ல குணங்களை உடையவர்களும், அழகு அகலம் கூர்மை ஆகிய குணங்களில் வேலினை வென்ற இணையான இரண்டு கண்களை உடையவர்களும் ஆகிய மகளிர், பெருமானின் பல தன்மைகளையும், வல்லமை வெளிப்படுத்தப்பட்ட பல வீரச் செயல்களையும் குறிப்பிட்டு பாடல்கள் பாடுவதைக் கேட்டு மகிழும் தலைவனாகிய பெருமான், திருவையாறு தலத்தினைத் தனது இருப்பிடமாகக் கொண்ட ஐயன் ஆவான்.

பாடல் 5:

கோடல் கோங்கம் (2.006) பாடல்கள் 3, 4, 5, 6 (திதே 0634)

வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே

வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார்

தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி

ஆனஞ்சு ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே

விளக்கம்:

வேனல்=வெம்மை, இங்கே கோபம் என்று பொருள் கொள்ள வேண்டும். வெருவ=அஞ்ச; எண்ணெய் காப்பிட்டு பெருமானை நீராட்டிய பின்னர், பஞ்சகவ்யம் பால் தயிர் நெய் தேன் இளநீர் பழச்சாறு கருப்பஞ்சாறு சந்தனம் மற்றும் திருநீறு ஆகியவை கொண்டு நீராட்டுவதை நாம் பல கோயில்களில் இன்றும் காணலாம். அந்த முறையே இந்த பாடலின் மூன்றாவது மற்றும் நான்காவது அடிகளில் குறிப்பிடப் படுகின்றது. மைந்தனார்=வலிமை வாய்ந்தவர்; தக்கனின் சாபத்தினால் நாளொரு கலையாக தேய்ந்து முற்றும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்ட சந்திரன், தன்னை அழியாமல் காக்குமாறு பிரமன் உள்ளிட்ட பல தேவர்களிடம் சென்று முறையிடுகின்றான். ஆனால் எவரும் அவனைக் காக்கும் வல்லமை அற்றவர்களாக இருந்தமையால், இறுதியில் சிவபெருமானிடம் தஞ்சம் அடைகின்றான். சிவபெருமான், எஞ்சியிருந்த ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணம் அடைந்த சந்திரனைத் தனது சடை மீது சூட்டிக் கொண்டு மறுவாழ்வு அளிக்கின்றார். பெருமானின் இந்த வலிமை தான், இங்கே மதி சூடிய மைந்தனார் என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை:

மிகுந்த கோபத்துடன் தன்னை எதிர் நோக்கி வந்த மதயானை அஞ்சும் வண்ணம், அதன் தோலை உரித்து தனது உடல் மீது போர்த்துக் கொண்டவர் சிவபெருமான்; ஈரப்பசை மிகுந்த யானையின் தோல் உடலுக்கு ஏதேனும் கேடு விளைவிக்குமோ என்று உமையன்னை கொண்டிருந்த அச்சத்தையும் பொருட்படுத்தாமல், அந்த யானைத் தோலினை போர்த்துக் கொண்டு, தனது உடல் ஏதும் கேடு அடையாமல் இருந்தவர் சிவபெருமான்; வானில் உள்ள மேகங்களையும் ஊடறுத்துச் செல்லும் சந்திரனின் சாபத்தை போக்கி ஒற்றைப் பிறையைத் தனது சடையில் சூடிக் கொண்டு, அவனுக்கு மறுவாழ்வு அளித்த வல்லமை உடையவர் சிவபெருமான். அவர், தேன் நெய் பால் தயிர் இளநீர் தெளிந்த கரும்புச் சாறு ஆகிய பொருட்களுடன் பஞ்சகவ்யமும் கொண்டு விருப்பத்துடன் நீராடுகின்றார். இத்தகைய பண்புகள் கொண்ட பெருமான் ஐயாறு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்ட தலைவன் ஆவார்.

பாடல் 6:

கோடல் கோங்கம் (2.006) பாடல்கள் 3, 4, 5, 6 (திதே 0634)

கோடல் கோங்கம் (2.006) பாடல் 6 தொடர்ச்சி (திதே 0635)

கோடல் கோங்கம் (2.006) பாடல் 6 தொடர்ச்சி (திதே 0636)

கோடல் கோங்கம் (2.006) பாடல் 6 தொடர்ச்சி (திதே 0637)

கோடல் கோங்கம் (2.006) பாடல்கள் 6 தொடர்ச்சி, 7, 8 (திதே 0638)

எங்குமாகி நின்றானும் இயல்பு அறியப்படா

மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும்

பங்கமில் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய்

அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே

விளக்கம்:

இன்ன தன்மையன் என்று அறிய முடியாதவன் என்ற தன்மையே, இயல்பு அறியப்படாதவன் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. உணர்வு=கருப்பொருள்; பதினெட்டு=பதினெண் புராணங்கள்; பதினெட்டு புராணங்களில் பத்து புராணங்கள் சிவபுராணங்கள். எஞ்சிய எட்டில் நான்கு திருமாலின் பெருமையை குறிப்படும் விஷ்ணு புராணங்கள் (விஷ்ணு புராணம், பாகவதம், நாரத புராணம் கருட புராணம் என்பன; பத்ம புராணம் மற்றும் பிரம்ம புராணம் ஆகிய இரண்டும் பிரமனின் தன்மையை குறிப்பிடுகின்றன. மற்ற இரண்டு புராணங்கள், அக்னி புராணம் பிரம்ம கைவர்த்த புராணம் (சூரியனை குறிப்பது). திருமால், பிரமன், அக்னி, சூரியன் ஆகிய அனைவரும் சிவபெருமானின் கட்டளைக்கு இணங்க, தங்களது கடமைகளை நிறைவேற்றுகின்றனர் என்பதாலும், அவர்களை இயங்க வைப்பது பெருமான் என்பதாலும், இந்த புராணங்களும் சிவபெருமானின் தன்மையை குறிப்பிடுகின்றன என்று கூறுவார்கள். அரசனின் ஆணை வழியே செயல்படும் மந்திரிகளின் செயல்களை, அவர்கள் தாமே செய்தததாக கருதி அந்த மந்திரிகளை மக்கள் புகழ்வது போன்று, இந்த எட்டு புராணங்களும் சிவபெருமானால் இயக்கப்படும் பிரமன், திருமால் அக்னி மற்றும் சூரியன் ஆகியோரின் பெருமையை கூறுவதாக அமைந்துள்ளன. எனவே தான் பதினெட்டு புராணங்களுக்கும் கருப்பொருளாக அமைந்துள்ளவன் சிவபெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இயல்பு அறியப்படா என்ற தொடரினை, மங்கை என்ற சொல்லுடன் பொருத்தி, பெருமானைப் போன்று பிராட்டியும் தனது இயல்பு அறியப்படாதவளாக விளங்குகின்றாள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

வேதங்களை விரித்து ஓதியது போன்று, வேதங்களுக்கு அரணாக விளங்கும் அங்கங்களின் தன்மையை மிகவும் விவரமாக நாம் இதே பதிகத்தின் இரண்டாவது பாடலின் விளக்கத்தில் சிந்தித்தோம். இந்த ஆறு அங்கங்களை உலகினுக்கு உபதேசம் செய்தவன் பெருமான் என்று பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய திருமுறைப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். சிவ ஆகமங்களையும் வேதங்களையும் இறைவன் தனது திருவாயால் வேறுவேறு முனிவர்களுக்கு அருளினான் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. நான்மறைகளை அருளிய காரணத்தால் சிவபெருமான் நான்மறையான் என்று இங்கே அழைக்கப் படுகின்றார். வடகிழக்கை நோக்கி உள்ள பளிங்கு நிறமான ஈசான முகத்தில் இருந்து சிவ ஆகமங்களும், கிழக்கு நோக்கிய தத்புருஷ முகத்தில் இருந்து இருபத்தியொரு சாகைகள் கொண்ட இருக்கு வேதமும், தெற்கு நோக்கிய கருநிற அகோர முகத்தில் இருந்து நூறு சாகைகள் கொண்ட யஜுர் வேதமும், வடக்கு நோக்கிய செம்மை நிற வாமதேவ முகத்தில் இருந்து ஆயிரம் சாகைகள் கொண்ட சாம வேதமும், மேற்கு நோக்கிய சத்தியோஜாதம் முகத்தில் இருந்து ஒன்பது சாகைகள் கொண்ட அதர்வண வேதமும் தோன்றியது. இதனைக் குறிக்கும் திருவிளையாடல் புராணம் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

கீழ்த்திசை முகத்தொன்று அடுத்த நால் ஐந்தில் கிளைத்ததால் இருக்கு அது தென்பால்

ஈட்டிய இரண்டாம் வேத நூறு உருவோடு எழுந்தது வட திசை முகத்தின்

நீட்டிய சாமம் ஆயிரம் முகத்தான் நிமிர்ந்தது குடதிசை முகத்தில்

நாட்டிய ஒன்பது உருவோடு கிளைத்து நடந்தது நான்கதாம் மறையே

திருப்பரங்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.100.2) திருஞானசம்பந்தர் அங்கம் ஓராறும் அருமறையும் அருள் செய்தவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். பொங்கு வெண்ணூல்=அழகு பொங்கும் பூணூல்;

அங்கம் ஓராறும் அருமறை நான்கும் அருள் செய்து

பொங்கு வெண்ணூலும் பொடியணி மார்பில் பொலிவெய்துச்

திங்களும் பாம்பும் திகழ் சடை வைத்தோர் தேன்மொழி

பங்கினன் மேய நன்னகர் போலும் பரங்குன்றே

பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.108.4) திருஞானசம்பந்தர் பெருமானை அங்கமும் நான்மறையும் அருள் செய்தவன் என்று குறிப்பிடுகின்றார். அஞ்சொல்=அழகிய சொல்; உகளும்=புரளும்; செறு=வயல்; பங்கயம்=தாமரை மலர்; செழிப்புடன் ஒளி வீசும் தாமரை மலர்கள் மலரும் வயல்கள் என்று குறிப்பிட்டு, தலத்தின் நீர்வளமும் நிலவளமும் உணர்த்தப் படுகின்றது. குலம் கோத்திரம் ஏதுமற்ற பெருமான் எனினும், வேதங்களை அருளிய காரணத்தால், பெருமான் சிறந்த அந்தணனாக கருதப் படுகின்றான். பெரிய புராணத்தில் விவரிக்கப் படும் பல அடியார்களில் வாழ்வினில், பெருமான் அந்தணர் வேடம் தாங்கி வந்ததை நாம் காண்கின்றோம். இந்த காரணங்கள் பற்றியே திருஞானசம்பந்தர் பெருமானை மறையோன் என்று குறிப்பிட்டார் போலும். பல திருமுறைப் பாடல்கள் பெருமானை, அந்தணன் என்றும் மறையோன் என்றும் வேதியன் என்றும் குறிப்பிடுகின்றன. உலகினில் நாம் சிறப்புடன் வாழ்வதற்கான நெறிமுறைகளை எடுத்துரைக்கும் நான்மறைகளையும் அந்த நான்மறைகளுக்கு துணையாக இருக்கும் ஆறு அங்கங்களையும் முதன்முதலாக வழங்கி அருள் புரிந்தவனும், அழகிய சொற்களைப் பேசும் உமையன்னையைத் தனது உடலினில் ஒரு கூறாகக் கொண்டவனும், வேதங்களை அருளியதால் மறையோன் என்று அழைக்கப் படுபவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருக்கோயில், செங்கயல் மீன்கள் புரண்டு விளையாடும் வயல்களால், செழுமையாக வளர்ந்து பிரகாசத்துடன் திகழும் தாமரை மலர்கள் மலர்ந்து காணப்படும் வயல்களால் சூழப்பட்டுள்ள பாதாளீச்சரம் தலத்தினில் உள்ளது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அங்கமும் நான்மறையும் அருள் செய்து அழகார்ந்த அஞ்சொல்

மங்கையோர் கூறுடையான் மறையோன் உறை கோயில்

செங்கயல் நின்று உகளும் செறுவில் திகழ்கின்ற சோதிப்

பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே

சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.109.2) திருஞானசம்பந்தர், பெருமானை அங்கமோடு அருமறை அருள் புரிந்தான் என்று குறிப்பிடுகின்றார். சிரபுரம் என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்றாகும்.

அங்கமொடு அருமறை அருள் புரிந்தான்

திங்களொடு அரவணி திகழ் முடியன்

மங்கையொடு இனிதுறை வளநகரம்

செங்கயல் மிளிர் வயல் சிரபுரமே

திருவல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.113.9) அருமறையாகவும் அந்த மறைகளுக்கு அரணாகிய அங்கமாகவும் இருப்பவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சிறியவர் சிந்தை செய்ய அரியவன் என்ற குறிப்பு, பாடலின் மூன்றாவது அடியில் குறிப்பிடப்படும் நான்முகன் மற்றும் திருமால் பெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முடியாமல் நின்ற நிகழ்ச்சியின் பின்னணியில், நான்முகன் திருமால் உட்பட அனைத்து உயிர்களும் பெருமானை விடவும் மிகவும் சிறியவர்கள் என்பதை உணர்த்துகின்றது.

பெரியவன் சிறியவர் சிந்தை செய்ய

அரியவன் அருமறை அங்கம் ஆனான்

கரியவன் நான்முகன் காணவொண்ணாத்

தெரியவன் வளநகர் திருவல்லமே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.120.4) அருமறை ஆறங்கம் ஆய்ந்தவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அருமறையையும் ஆறங்கத்தையும் ஆராய்ந்து அறிந்தவன் தானே, ஐயம் திரிபற அடுத்தவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியும். வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலத்தில் (திருவிளையாடல் புராணம்) பரஞ்சோதி முனிவர், கண்வர் முதலான முனிவர்களுக்கு, பெருமான், வேதத்தின் பொருள் சொன்ன நிகழ்ச்சியை மிகவும் விவரமாக எடுத்துச் சொல்கின்றார். மதுரையிலிருந்து சென்ற வேதியன் ஒருவன், நைமிசாரண்யத்தில் கண்வர் முதலான முனிவர்கள், முகம் வாட்டமடைந்து இருந்ததைக் கண்டு, அதன் காரணத்தை வினவினார். வேதங்களின் பொருளினை அறிய முடியாமல் வருந்துவதாக அவர்கள் சொல்லவே, மதுரை வேதியன், மதுரை மாநகரம் சென்று சொக்கநாதப் பெருமானிடம் வேண்டுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறினார். அவ்வண்ணமே கண்வரும் மற்ற முனிவர்களும் மதுரை சென்றடைந்து சொக்கநாதப் பெருமானிடம் வேண்டினார்கள். பின்னர் அவர்கள் ஆங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் வழிபட்ட போது, வேதியச் சிறுவனாக பெருமான் வெளிப்பட்டு, முனிவர்களை நோக்கி அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது முனிவர்கள் வேதங்களின் பொருளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே தங்கள் அவா என்று கூறவே, வேதியச் சிறுவனாக வந்த பெருமானும் வேதங்களின் பொருளை எடுத்துரைத்தார் என்று திருவிளையாடல் புராணம் உணர்த்துகின்றது. சனகாதி முனிவர்களுக்கு தனது மோன முத்திரையால் வேதத்தின் பொருளை உணர்த்தியவர் பெருமான் தானே.

வாய்ந்த வல்லவுணர் தம் வளநகர் எரியிடை

மாய்ந்து அற எய்தவன் வளர்பிறை விரிபுனல்

தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்

ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.11.1) திருஞானசம்பந்தர் நான்மறையோடு ஆறங்கம் வல்லான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். நல்லான்= நன்மையே வடிவமானவன்; சிவன் என்ற சொல்லுக்கு மங்கலமே வடிவமானவன் என்று பொருள். அனைத்து உயிர்களும் தாங்கள் பெறுகின்ற நன்மையைத் தானே மங்கலமாக கருதுகின்றன. எனவே சிவன் என்ற வடமொழிச் சொல்லுக்கு நல்லான் என்ற பொருள் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. இயலும்=இயல்பாக பொருந்தும்; வேதங்களில் வல்லவனாக பெருமான் இருத்தலின், வேதங்களை நன்கு கற்றுணர்ந்த மறையோர்களை பெரிதும் விரும்பி, அவர்களது வாயில் வருகின்ற சொல்லாக பெருமான் இருக்கின்றான் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இல்லான்=வீடாகக் கொண்டவன்;

நல்லானை நான்மறையோடு இயல் ஆறங்கம்

வல்லானை வல்லவர் பால் மலிந்து ஓங்கிய

சொல்லானைத் தொன்மதில் காழியே கோயிலாம்

இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே

திருமணஞ்சேரி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.16.6) திருஞானசம்பந்தர் பெருமானை ஆறங்கம் பகர்வான் என்று குறிப்பிடுகின்றார். வடமொழியாகவும் தமிழ் மொழியாகவும் பெருமான் இருக்கும் தன்மை மொழியானை என்ற சொல் மூலம் குறிப்பிடப் படுவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். உலகத்தில் தோன்றிய முதல் இரண்டு மொழிகளாக தமிழும் வடமொழியும் கருதப் படுகின்றன. மேலும் இந்த இரண்டு மொழிகளும் மிகவும் சிறப்பு வாய்ந்த மொழிகளாகவும் உள்ளன. வடமொழியில் வேதங்கள் அருளியவன் சிவபெருமான். மேலும் சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டின் அரசனாக இருந்து, தமிழ் சங்கத்தில் பங்கேற்று தமிழ் மொழியை வளர்த்த பெருமான், அகத்தியருக்கு, இன்னம்பர் தலத்தில் தமிழ் இலக்கணம் கற்பித்ததாக கருதப் படுகின்றது. அகத்தியர் இயற்றிய அகத்தியம் எனப்படும் நூலே தமிழ் இலக்கணத்திற்கான முதல் நூல் என்றும், தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக விளங்கியது அகத்தியம் என்றும் கூறுவார்கள். பழியாமை=பிழையின்றி சொல்லுதல்; வேதங்களை வகுத்தவன் சிவபெருமான் என்பதால் அந்த வேதங்களை பிழையின்றி அடுத்தவர் சொல்ல வேண்டும் என்பதிலும், வேத மந்திரங்களின் பொருளையும் சரியாக அனைவரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் பெருமானை விடவும் வேறு எவருக்கும் அதிகமான அக்கறை இருக்க முடியாது. எனவே தான் வேதங்களுக்கு உரிய பண்ணையும் ஆறு அங்கங்களையும் பெருமான் படைத்தான் என்பது புலனாகின்றாது. வடமொழியாகவும் தென் தமிழ் மொழியாகவும் இருப்பவனும், பண்டைய நாளில் நான்கு வேதங்களையும் அந்த வேதங்களைக் காக்கும் பொருட்டு ஆறு அங்கங்களையும் படைத்தும் அந்த வேதங்களை எவரும் பழியாதவாறு காத்தும், இசையுடன் கலந்து அந்த வேதங்களை பாடுபவனும், நல்ல நெறியில் வாழ்வினை அமைத்துக் கொண்டு செல்ல வழி வகுத்தவனும் ஆகிய பெருமான் விண்ணவர்கள் ஏத்தும் வண்ணம் திருமணஞ்சேரி தலத்தில் வீற்றிருக்கின்றான். அவனை இகழாது புகழ்ந்து ஏத்தும் அடியார்களுக்கு என்றும் இன்பங்களே எய்தும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மொழியானை முன்னொரு நான்மறை ஆறங்கம்

பழியாமைப் பண்ணிசையான பகர்வானை

வழியானை வானவர் ஏத்து மணஞ்சேரி

இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே

கருப்பறியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.31.5) திருஞானசம்பந்தர் பெருமானை, அங்கம் அவை ஓதும் கருத்தவன் என்று குறிப்பிடுகின்றார். நிருத்தன்=நடனம் ஆடுபவன்; நித்தன்=அழியாமல் என்றும் இருப்பவன்; விருத்தன்=முதியவன் என்று பொதுவான பொருள்; இங்கே அனைவர்க்கும் முன்னே தோன்றியவன் என்பதால் அனைவரையும் விடவும் முதியவன் என்று சொல்லப் படுகின்றது; அனைவர்க்கும் மூத்தவன் என்று பொருள் பட விருத்தன் என்று கூறப்பட்டுள்ளது. கருத்தவன் என்பதற்கு வேதங்களின் பொருளை கருத்தில் கொண்டுள்ளவன் என்பது பொருள். வேதங்களின் பொருளை நன்கு ஆராய்ந்து தனது மனதில் கொண்டுள்ள பெருமான் என்பதால் தானே சனகாதி முனிவர்கள் வேதங்களின் பொருளை சரியாக புரிந்து கொள்வதற்கும் தங்களது ஐயப்பாட்டினைத் தீர்த்துக் கொள்வதற்கும் பெருமானை நாடினார்கள். தனக்கு நேராக எவருமின்றி ஒப்பற்றவளாக திகழும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனும், எப்போதும் நடனம் ஆடுபவனும், நித்தம் இருப்பவனாக என்றும் அழியாமல் இருப்பவனும், நன்னெறி காட்டுபவனும், அனைவர்க்கும் முன்னே தோன்றியமையால் முதியோனாக கருதப் படுபவனும், வேதங்கள் ஒதுபவனும், வேதங்கள் மற்றும் ஆறு அங்கங்களின் பொருளை தனது மனதினில் எப்போதும் கொண்டிருப்பவனும் ஆகிய இறைவன் உறையும் இடம் கருப்பறியலூர் ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஒருத்தி உமையோடும் ஒரு பாகம் அதுவாய

நிருத்தன் அவன் நீதியவன் நித்த நெறியாய

விருத்தன் அவன் வேதமென அங்கம் அவை ஓதும்

கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே

கேதாரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.114.2) திருஞானசம்பந்தர் பெருமானை, வேதம் நான்கும் பதினெட்டோடு ஆறும் விரித்தார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். பதினெட்டு என்பது பதினெண் புராணங்களை குறிக்கும். ஆறு என்ற சொல் ஆறு அங்கங்களை உணர்த்துகின்றது. உகளும்=புரண்டு மகிழும்; வண்டுகளின் ரீங்காரம் மிகவும் இனிமையாக இருப்பதால், அதனை கேட்டு மகிழும் மந்திகள் தரையில் புரண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. மகரந்தத் தூள்கள் கலந்த மதுவினை உண்ணும் வண்டுகள் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வண்டுகள் மூலமாக மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு, மலர்கள் காயாகவும் பழமாகவும் மாறுகின்ற தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே

வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம்

தாது விண்ட மது உண்டு மிண்டி வரும் வண்டினம்

கீதம் பாடல் மடமந்தி கேட்டுகளும் கேதாரமே

திருப்பூவணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.20.2) திருஞானசம்பந்தர் பெருமானை, அங்கம் ஓதிய ஞானன் என்று கூறுகின்றார். தென்முகக் கடவுளை ஞானத்தின் வ்டிவமாகத் தானே நாம் காண்கின்றோம்.

வானணி மதி புல்கு சென்னி வண்டொடு

தேனணி பொழில் திருப்பூவணத்து உறைகின்ற

ஆன நல் அருமறை அங்கம் ஓதிய

ஞானனை அடிதொழ நன்மையாகுமே

திருவிற்கோலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.23.6) ஆறு அங்கங்களையும் வகுத்தவன் சிவபெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். இந்த தலம் தற்போது கூவம் என்று அழைக்கப் படுகின்றது; மிகுத்தவன்=தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல், ஆற்றலில் அனைவரையும் மிஞ்சியவன்; மிகுத்தவர்=செருக்கினில் மிகுத்து பல கொடுமைகள் செய்த திரிபுரத்து அரக்கர்கள்; செகுத்தவன்=அழித்தவன், எரித்து அழித்தவன் என்று பொருள் கொள்ள வேண்டும். வேதங்களை பார்வதி தேவிக்கும் பல முனிவர்களுக்கும் உபதேசம் செய்த பெருமான், ஆகமங்களை நந்தியம்பெருமானுக்கு உபதேசம் செய்தார் என்று கூறுவார்கள்.

தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்

வகுத்தவன் வளர்பொழில் கூகம் மேவினான்

மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்

செகுத்தவன் உறைவிடம் திருவிற்கோலமே

வேட்டக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.66.5) திருஞானசம்பந்தர் நான்மறை மற்றும் ஆறு அங்கங்களையும் சனகாதி முனிவர்களுக்கு உணர்த்திய பெருமான், அற நூல்களை கற்பதால் ஏற்படும் பயனாகிய அனுபவத்தையும் உணர்த்தினார் என்று கூறுகின்றார். அலற=கலக்கப்பட; பருவரை=பெரிய மலை, இங்கே மேரு மலை; அரவு=வாசுகிப் பாம்பு; உழல=திரிய; மேரு மலையை மத்தாக நட்டு வாசுகிப் பாம்பினை கயிறாக அந்த மத்தின் மீது சுற்றி பாற்கடலை கடைந்த நிகழ்ச்சி இங்கே சொல்லப் படுகின்றது.

பங்கமார் கடல் அலறப் பருவரையோடு அரவு சுழலச்

செங்கண் மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி

அங்கம் நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயனளித்த

திங்கள் சேர் சடையாரும் திருவேட்டக்குடியாரே

திருந்துதேவன்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.25.6) திருஞானசம்பந்தர், பெருமானை அங்கம் ஆறும் சொன்ன அடிகள் என்று குறிப்பிடுகின்றார். பங்கம்=இழிவு; புங்கம்=உயர்வு; பெருமானின் திருவேடத்தின் பொலிவினை உணர்ந்து, அந்த திருவுருவத்து அடையாளங்களின் பெருமையை உணர்ந்து, பெருமான் பால் அன்பு கொண்டு வழிபடும் அடியார்களின் செயல்கள் எவ்வாறு கருதப்படுகின்றன என்பதை திருஞான சம்பந்தர் இந்த பாடலில் விளக்குகின்றார். இறைவனின் அடையாளங்களின் பெருமையை உணர்ந்து தகுந்த மதிப்பினை அளித்த அடியார்களின் செய்கை, எத்தகைய தன்மையதாக இருந்தாலும், அந்த செயல்களால் அவர்களுக்கு இழிவு ஏற்படாது என்றும் அத்தகைய செயல்களால் அவர்களுக்கு பழியேதும் ஏற்படாது என்றும் திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அடியார்களின் அத்தகைய செயல்களின் உயர்ந்த தன்மையை உணர்த்த, உயர்வு என்ற சொல் பொருத்தமற்றது என்பதால், உயர்வு என்று சொல்ல மாட்டார்கள் என்று திருஞான சம்பந்தர் மிகவும் நயமாக கூறுகின்றார். சிவ வேடத்திற்கு மதிப்பு கொடுத்த அடியார்களது செயல்கள் பல பொதுவான இயல்புக்கு மாறுபட்டு இருந்தாலும், அந்த செயல்களை எவரும் பழிப்பதில்லை; மேலும் அந்த செயல்களால் அவர்களுக்கு எந்தவிதமான பாவமும் சேர்வதில்லை; உயர்வு என்ற சொல் அவர்கள் புரிந்த செய்கையின் மிகவும் உயர்ந்த தன்மையை முற்றிலும் உணர்த்த போதாது என்பதால், உயர்வு என்ற சொல்லை பயன்படுத்தி அத்தகைய செய்கைகளை எவரும் குறிப்பிடுவதில்லை; மேலும் அத்தகைய செயல்கள் புகழுக்கு உரிய செயல்களாக கருதப் படுகின்றன. சந்திரன் தவழும் வண்ணம் உயர்ந்த மரங்கள் கொண்ட சோலைகள் நிறைந்த திருந்துதேவன்குடி தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் வேதங்களையும், வேதங்களுக்கு பாதுகாப்பான அரணாக விளங்கும் ஆறு அங்கங்களையும் உலகுக்கு அறிவித்தவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பங்கம் என்னப் படர் பழிகள் என்னப்படா

புங்கம் என்னப் படர் புகழ்கள் என்னப்படும்

திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி

அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே

மெய்ப்பொருள் நாயனார், ஏனாதிநாத நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், புகழ்ச்சோழ நாயனார், கலிக்கம்ப நாயனார் ஆகியோரின் சரித்திரங்கள், அவர்களது செயல்கள் இயற்கைக்கு மாறாக இருந்தாலும் அந்த செயல்களால் அவர்களுக்கு பழியேதும் வாராமல் புகழினையே தேடித் தந்தது என்பதை உணர்கின்றோம். தன்னெதிரே இருந்தவன் வண்ணான் என்பதையும் தனது குடிமகன் என்பதையும் புறக்கணித்து, அவனது வேடம், திருநீற்றினை நினைவூட்டியது என்று, தான் பவனி வந்த யானையிலிருந்து கீழே இறங்கி, வண்ணானை வணங்கிய சேரமான் பெருமாள் நாயனாரின் செயல் எவராலும் இகழப்படவில்லை. வஞ்சகமாக தன்னை கத்தியால் குத்தியவன் முத்தநாதன் என்பதை பொருட்படுத்தாமல் சேதி நாட்டு அரசர் மெய்ப்பொருள் நாயனார், எதிரி நாட்டானை, நண்பனாக கருதி, எந்த தீங்கும் விளைவிக்காமல் தனது நாட்டெல்லை வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று தனது மெய்க்காப்பாளனுக்கு ஆணையிட்டார்; திருநீறு தரித்திருந்ததால் தனது எதிரியையும் பாதுகாத்த அந்த அடியாரை அனைவரும் போற்றுகின்றோம் அல்லவா.தங்களது இல்லத்தில் பல நாட்கள் முன்னர் பணி செய்தவன் தான், அமுதுண்ண வந்த சிவனடியார் என்பதை உணர்ந்த கலிக்கம்பரின் மனைவி, அந்த அடியாருக்கு உரிய முறையில் மரியாதை செய்ய மறுத்தபோது, மனைவியைக் கடிந்த கலிக்கம்பர் தானே முன்வந்து அந்த அடியாருக்கு உரிய மரியாதை செய்ததுமன்றி, மனைவியின் கையையும் வாளால் வெட்டினார். மனைவியின் கையை வெட்டிய கலிக்கம்பரின் செயல் பழிக்கப் படவில்லை; அதனால் அவருக்கு எந்த பாவமும் சேரவில்லை. தன்னிடம் தனியாக போரிட்ட அதிசூரன் தோற்றுப் போகும் நிலையில் இருந்த தருணத்தில் அந்த சமயம் வரை தனது முகத்தை மறைத்திருந்த கேடயத்தை நீக்கவே, அவனது முகத்தில் இருந்த திருநீற்றின் பொலிவினை கண்ட ஏனாதிநாதர், அதிசூரனை கொல்லாமல் விட்டார்; மேலும் அதிசூரன் கொண்டிருந்த சிவக்கோலத்திற்கு மதிப்பளித்து அவனிடம் தோற்றுப் போகவும் முடிவு செய்தார். எனினும் நிராயுதபாணியை கொன்றான் என்ற பழி அதிசூரனுக்கு வருவதை தடுக்க, தான் போரிடுவதைப் போன்று பாவனையும் செய்தார். வேண்டுமென்றே தோற்றதற்காக ஏனாதிநாதரை எவரும் பழிக்கவில்லை; மாறாக அவர் சிவவேடத்திற்கு கொடுத்த மதிப்பினை கருதி அவரை அனைவரும் புகழ்ந்தனர். தான் வெற்றி கொண்ட மாற்றானின் படையின் இடையே திருநீறு அணிந்த ஒரு சடைத்தலை இருந்ததை அறிந்த புகழ்ச்சோழர், சிவவேடத்திற்கு தான் கொடுக்க வேண்டிய மதிப்பினை அளிக்கத் தவறிய குற்றத்திற்காக தான் தற்கொலை புரிந்து கொள்வதன் மூலம் தனக்கு தண்டனை அளித்துக் கொண்ட விவரம், பெருமானின் சின்னங்களை அவர் மிகவும் உயர்வாக மதித்தமையை நமக்கு உணர்த்துகின்றது. தன்னை அணுகிய சிவனடியாரின் தோற்றத்திற்கு மதிப்பளித்து, தனது மனைவியையும் அவருக்கு அளித்த இயற்பகை நாயானாரின் செய்கை, முதலில் அவரது உறவினர்களால் பழித்து கூறப்பட்டாலும், பின்னர் அவருக்கு எத்தகைய உயர்வினை தேடித் தந்தது என்பதையும் நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். ஆதிரைத் திருநாளில் தன்னிடமிருந்து பொற்காசுகள் பெறுவதற்காக வந்த ஒரு சிவனடியார் காமக்குறி கலந்த உடலுடன் அனைவரும் இகழத்தக்க கோலத்தில் வந்த போதிலும், மற்றவர்கள் அவரை இகழ்ந்து பரிகசித்த போதிலும், தான் அவரை இகழாது அவருக்கு இரட்டிப்பு பொன் கொடுத்து, பெருமானின் அடையாளங்களுக்கு உரிய மதிப்பு அளித்தவர் நரசிங்க முனையரையர். மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும், பெருமானின் அடையாளங்களுக்கு மதிப்பு கொடுத்த அடியார்களின் செய்கைகள் புகழப்பட்டன என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.07.07) அப்பர் பிரான், பெருமானை நான்மறையோடு ஆறங்கம் வல்லான் என்று குறிப்பிடுகின்றார். துகள்=களங்கம்: நல்லான்=நலம் உடையவன். சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம்(நலன்) என்று பொருள். சிவன் என்ற வடமொழிச் சொல்லுக்கு இணையான பொருள் தரும் வகையில் அப்பர் பிரான் நல்லான் என்ற சொல்லினை கையாண்டு இருக்கின்றார். நிறைந்த மங்கலத்தைத் தரக்கூடியவனும், நலன்களைத் தரக்கூடிய நான்மறைகளிலும் வேதங்களின் ஆறு அங்களிலும் வல்லவனாகத் திகழ்பவனும் ஆகிய சிவபெருமான், தன்னை உணரவல்லும், நினைக்கவல்லும் அடியார்களின் மனத்தினில் உறைகின்றான். மிகுந்த வல்லமை உடைய அவன், சொல்லாகவும், சொற்கள் உணர்த்தும் பொருளாகவும் உள்ளான். களங்கம் ஏதும் இல்லாத அவனை, நான் எனது மனத்தினில் வைத்துள்ளேன் என்று அப்பர் பிரான் கூறுவதாக அமைந்த பாடல்.

நல்லானை நல்லான நான்மறையோடு ஆறங்கம்

வல்லானை வல்லார் கண் மனத்து உறையும் மைந்தனைச்

சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்

இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தேனே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.10.2) அப்பர் பிரான் வேதமும் அங்கமும் கூறியவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கீறின=கிழிக்கப்பட்ட: மான், புலி, யானை ஆகிய விலங்குகளின் தோல் என்றும், கிழிக்கப்பட்ட கோவண ஆடை என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள். ஏறு=காளை மாடு: ஏழை=பார்வதி தேவி: பொதுவாக ஆண்களை விடவும் பெண்கள் உடல் வலிமையில் குன்றியவர்கள் என்பதால் பெண்களை ஏழைகள் என்று கூறுவது இலக்கிய மரபு. காளை மாட்டினை வாகனமாகக் கொண்டவர் சிவபெருமான்: அவர் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவர்; வேதங்களையும் வேதங்களின் ஆறு அங்கங்களையும் மற்றவர்களுக்கு விரித்து கூறியவர்: கங்கை ஆற்றினை தனது சடையில் நிறுத்தியவர்: கிழிந்த கோவண ஆடையினை உடையவர்: மேற்கண்ட தன்மைகளை உடைய பெருமான் தான் கெடில வாணராக திருவதிகை வீரட்டத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு

கூறினர் கூறினர் வேதம் அங்கமும்

ஆறினர் ஆறிடு சடையர் பக்கமும்

கீறின உடையினர் கெடில வாணரே

விடம் தீர்த்த பதிகத்தின் பாடலில் (4.18.6) அப்பர் பிரான் பெருமானை ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன என்ற குறிப்பின் மூலம், பெருமான் ஆறு அங்கங்களை படைத்தார் என்று கூறுகின்றார். பெருமான் படைத்த வேதத்தின் அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகிய ஆறு. அவரது மகனார் முருகனின் முகங்கள் ஆறு. அவர் சூடியிருக்கும் மாலையைச் சூழும் வண்டுகளின் கால்கள் ஆறு. அவரால் ஏற்படுத்தப்பட்ட சுவைகள், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என்னும் ஆறு வகையில் அடங்குவன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. தார்=மாலை;

ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன

ஆறு கொலாம் அவர் தம் மகனார் முகம்

ஆறு கொலாம் அவர் தார் மிசை வண்டின் கால்

ஆறு கொலாம் சுவை ஆக்கினதாமே

இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.35.4) அப்பர் பிரான் பெருமானை, வேதங்கள் நான்கும் அங்கம் பண்ணினார் என்று குறிப்பிடுகின்றார். விண்ணுலகம் என்றும் சொர்க்கம் என்றும் தேவர்கள் வாழும் உலகத்தை சொல்வதுண்டு. சிவபெருமான் உறையும் சிவலோகம், தேவலோகத்தை விடவும் சிறந்ததாக கருதப் படுவதால், விண்ணின் மிக்கார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பண்ணின் மிக்க பாடல்கள்=மேம்பட்ட பண்களைக் கொண்ட பாடல்கள்; நுதல்=நெற்றி: எண்ணின் மிக்கார்=மேம்பட்ட எண்ணங்களை உடைய அடியார் மனதினில்; கண்=கருத்து; தேவர்கள் வாழும் தேவலோகத்தை உடையவராகிய பெருமான், அந்த தேவலோகத்தை விடவும் உயர்ந்ததாகிய சிவலோகத்தைத் தனது இருப்பிடமாக உடையவர். நான்கு வேதங்களையும், அவற்றை பாதுகாக்கும் அரணாக உள்ள ஆறு அங்கங்களையும் உலகம் அறியச் செய்தவர் சிவபெருமான்; அவர் சிறப்பான பண்களை உடைய தேவாரப் பாடல்களையும் மற்ற பாடல்களையும் உடையவர் ஆவார்; அவர் அடியார்களின் பாவங்களைப் போக்கும் கருத்தை உடையவர்; இரண்டு கண்களுக்கும் மேலாக உள்ள மூன்றாவது கண்ணினை நெற்றியில் உடையவர் ஆவார்; அந்த நெற்றிக் கண்ணினால் காமனை வெகுண்டு எரித்த பெருமான், அடியார்களின் மேம்பட்ட எண்ணத்தில் உறைகின்றார். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம்

பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும்

கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமற் காய்ந்த

எண்ணினார் எண்ணின் மிக்க இடைமருது இடம் கொண்டாரே

இன்றும் பலர் வேதங்களோடு அங்கமும் ஓதுவதற்கு காரணமாக இருப்பவர் பெருமான் என்ற பொருள் பட அங்கமது ஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே என்று திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.38.6) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வெண்சங்கினை அறுத்து செய்யப்படும் குழைஆபரணத்தை அணிந்தவர் சிவபெருமான்; அவர் தனது திருமேனி முழுவதும் சாம்பலை பூசியவராக காணப்படுகின்றார். உலகில் உள்ள உயிர்கள் வளர்ச்சிஅடையும் பொருட்டு வெய்யிலை வீசும் சூரியனை இயங்கச் செய்பவரும் அவரே; விரிந்த சோலைகள் சூழ்ந்த உலகம் அனைத்தையும் படைத்தவர் அவரே; உலகம் பயனடையும் பொருட்டு இரவும் பகலும் மாறிமாறி வரும் வண்ணம் வரையறுத்தவர் சிவபெருமான்; வினைகளை போக்கிக் கொள்ளும்வழிமுறைகளை வகுத்து உலகுக்கு அறிவித்தவரும் அவரே. வேதங்களின் அரணாகத் திகழும் ஆறு அங்கங்களையும் உணர்ந்து வேதங்களை, தவறேதும்இன்றி முறையாக நாம் ஓதுவதற்கு வழி வகுத்த அவரே. நமது தலைவனாகிய ஐயாறனார் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சங்கணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார்

வெங்கதிர் எரிய வைத்தார் விரிபொழில் அனைத்தும் வைத்தார்

கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார்

அங்கமது ஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே

கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.51.3) அப்பர் பிரான், பெருமான், நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் மற்றும் ஆகமங்கள் உரைத்து உலகத்தவர்க்கு அருள் புரிந்தவன் என்று கூறுகின்றார். அறம்=உறுதிப் பொருளாகிய சிவ ஆகமங்கள்: நிழல்=ஒளி. பாற்கடலைக் கடைந்த போது நஞ்சு வெளிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. பல தேவாரப் பாடல்களிலும் பாற்கடல் கடைந்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. கொடிய விடத்தின் கருமையான நிறத்தினால் பாற்கடலும் அதன் நிறம் மாறி கருமையாக காட்சி அளித்தது என்பதை உணர்த்த இவ்வாறு கூறுகின்றார் போலும். கந்த புராணத்தில் திருமாலின் நிறம் கருநிறமாக மாறியது பாற்கடலிலிருந்து எழுந்த நஞ்சின் தாக்கத்தால் என்று கூறப்படுவதை நாம் இங்கே நினைவு கூரலாம். நஞ்சினால் நிறம் மாறிய பாற்கடலை இங்கே கருமையான கடல் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். திருநீற்றினை உடல் முழுதும் பூசியவனே, ஒளி வீசும் மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தியவனே, இடபத்தை வாகனமாக ஏற்றுக் கொண்டு உகந்து ஏறுபவனே, வெண்மை நிறம் கொண்டிருந்த பாற்கடலின் நிறத்தினை விடம் கருமையாக மாற்றிய பின்னர் அந்த பாற்கடலிலிருந்து எழுந்த அமுதம் போன்று இனிப்பவனே, நான்கு வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் சைவ ஆகமங்களையும் தனது வாய்மொழியால் உரைத்து உணர்த்தியவனே, பார்வதி தேவியாகிய பெண்ணைத் தனது உடலின் ஒரு கூறாக ஏற்றவனே, நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய்

நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே

ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே

ஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானே

கூறும் ஓர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே

ஐயாறப்பனின் திருவடிகளின் பெருமையை குறிப்பிடும் பதிகத்தின் பாடலில் (4.92.2), பெருமானின் திருவடிகள், நான்கு வேதங்களாகவும் ஆறு அங்கங்களாகவும் இருப்பதாக அப்பர் பிரான் கூறுகிறார். ஏழ் பிறப்புகள்=தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவைகள், விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் ஆகிய ஏழு வகையான பிறப்புகள்: ஆறு அங்கங்கள்=சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகியவை வேதங்களின் ஆறு அங்கங்கள். இழித்தன பிறப்பு=இழிந்ததாக கருதப்படும் பிறப்பு; ஒரு பிறப்பு அடுத்த பிறவிக்கு அடிகோலி, தொடர்ந்து உயிரினை பிறவிப் பிணியில் அழுத்துவதால், பிறப்பு இழிவாக ஞானிகளால் கருதப்படுகின்றது. இந்த பாடலில் திருவடியின் கருணைச் செயல்கள் இறந்த காலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். ஏழேழ் பிறப்பு அறுப்பன என்பதனை, தொழும் அடியார்களுடன் தொடர்பு கொண்ட ஏழு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் முக்தி அளிப்பன என்றும் பொருள் கொள்ளலாம். மணிவாசகர் போற்றித் திருவகலில், மூவேழ் சுற்றம் முரண் உறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி என்று கூறுவதும் நாம் இங்கே கருதத் தக்கது, ஐயாறனின் திருவடிகள், இகழ்வாகக் கருதப்படும் ஏழு வகைப் பிறப்புகளையும் அறுத்து எனக்கு முக்தி அளித்து எனது மனதினில் இன்பத்தைப் பொழிந்தன; கூற்றினை உதைத்து, சிவபிரானை வழிபட்டுப் போற்றிய சிறுவன் மார்க்கண்டேயனைக் காத்தன; மேன்மையான முறையில் செய்ய வேண்டும் என்று தக்கனால் தொடங்கப் பட்ட வேள்வியை அழித்து, அந்த வேள்விக்குத் துணை செய்தவர்களையும் தண்டித்தன. அத்தகைய திருவடிகள், வேதங்களின் ஆறு அங்கங்களாகத் திகழ்கின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. தக்கன் செய்த வேள்வியினை அழித்த திருவடிகள் என்று இங்கே குறிப்பிடுகின்றார். வேதங்கள் உணர்த்தும் நெறிமுறைக்கு மாறாக செய்யப்பட வேள்வி என்பதால், அந்த வேள்வியினை அழித்து, வேதங்களில் சொல்லப் பட்டுள்ள முறையினை நிலைநாட்டி, வேதங்களின் பெருமையை காப்பாற்றுவது பெருமானின் கடமையாகத் திகழ்ந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இழித்தனவே ஏழேழ் பிறப்பும் அறுத்தன என் மனத்தே

பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய்

கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழ முன் சென்று

அழித்தன ஆறங்கம் ஆனவை ஐயாறன் அடித்தலமே

கண்டியூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.93.9) அப்பர் பிரான் பெருமானை அங்கம் ஆறினையும் ஆய்ந்த பிரான் என்று குறிப்பிடுகின்றார். அனங்கை= அனங்கன் என்று அழைக்கப்படும் மன்மதன். தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதனின் உடலை எரித்து அழித்த பின்னர், இரதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி மன்மதனுக்கு மறுபடியும் உயிர் கொடுத்தாலும், இறைவன் அவனுக்கு உடலைக் கொடுக்கவில்லை. தனது மனைவி இரதிதேவியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரியும் வண்ணம் வரம் அளித்ததால், மற்றவர் கண்களுக்கு புலப்படாத அவன், உருவமற்றவன் என்ற பொருள்பட, அனங்கன் என்று அழைக்கப் படலானான். கடுமையான சூலை நோயினால் வருந்திய அப்பர் பிரான், தமக்கை திலகவதியாருடன் திருவதிகை வீரட்டானம் திருக்கோயில் சென்று பெருமானை வழிபட்டவுடன், அவரது சூலை நோய் மிகவும் விரைவாக தீர்க்கப்பட்டது. இவ்வாறு மிகவும் விரைவாக இறைவன் செயல்பட்ட விதம், அப்பர் பிரானுக்கு மன்மதனை எரித்த சம்பவத்தை நினைவூட்டியது போலும். வில்லினில் அம்பினைக் கோத்து, அம்பு எய்த பின்னரே திரிபுரத்து மூன்று கோட்டைகளும் அழிந்தன. ஆனால் இறைவன் தனது நெற்றிக் கண்ணினை திறந்து விழித்த மாத்திரத்தில் மன்மதன் எரிந்து சாம்பலாக மாறினான். எனவே தனது தீவினைகளை பெருமான் விரைவாக அழித்ததை நினைவு கூர்ந்த அப்பர் பிரானுக்கு மன்மதனை எரித்த செய்தி அவரது நினைவுக்கு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியினை இந்த பாடலில் கூறுகின்றார். மேலும் உடலினைப் பற்றியுள்ள அறுவகைக் குற்றங்களில் (காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம்) காமம் முதலாக கூறப்படுகின்றது. காமத்தை வெற்றி கொள்வதே, மற்ற குற்றங்களை வெல்வதை விட, கடினமான செயலாக கருதப் படுகின்றது. எனவே நம்மை வெற்றி கொள்ளும் குற்றமாக கருதப் படும் காமத்தையும் வென்ற பெருமான் என்று, அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான கண்டியூர் குறித்த பதிகத்தில், மற்றொரு அட்ட வீரட்டச் செயலாகிய காமனை எரித்த செயலையும் அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் ஏழாவது பாடலிலும் ஆய்ந்தது வேதம் ஆறங்கம் என்று பெருமானின் செயலை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். எனது பெருமான் என்னை ஆட்கொண்ட காரணத்தால், எனது தீவினைகள் மடிந்து போயின; என்னைப் பற்றியிருந்த பிறவிப்பிணி மங்கி தனது செயல் திறமையை இழந்ததால், அடியேன், பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுபட்டேன்; நாம் வெற்றி கொள்வதற்கு மிகவும் கடினமாக விளங்கும் காம உணர்வினை நம்மில் உண்டாக்கும் மன்மதனை, வெகுண்டு அழித்து வீரச்செயல் புரியும் பெருமான் கண்டியூர் தலத்தில் உறைகின்றான். அவன் நான்கு வேதங்களையும், வேதங்களுக்கு அரணாக அமைந்துள்ள ஆறு அங்கங்களையும் ஆராய்ந்த பெருமான். அவன் அல்லவா என்னை ஆட்கொண்டுள்ளான்என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மாய்ந்தன தீவினை மங்கின நோய் கண் மறுகி விழத்

தேய்ந்தன பாவம் செறுக்க கில்லா நம்மைச் செற்ற அநங்கைக்

காய்ந்த பிரான் கண்டியூர் எம் பிரான் அங்கம் ஆறினையும்

ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே

திருப்பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.30.2) நான்மறையோடு ஆறங்கம் பாடியவர் பெருமான் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த பாடலில் பெருமான் தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையைக் கொன்றதும், அந்த வனத்திற்கு பலி ஏற்கச் சென்ற போது வேதங்களை இசைத்துக் கொண்டு சென்றதும் குறிப்பிடப் படுகின்றன. சிரேஷ்டர் என்ற வடமொழிச் சொல் சேடனார் என்று தமிழ்ப்படுத்தப் பட்டுள்ளது. முதன்மையானவர் என்று பொருள். களி=மதம் கொண்டதால் வந்த செருக்கு; வினைகளை நீக்கும் வல்லமை படைத்த பெருமான் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் தெரிவித்த அப்பர் பிரான், தனது வினைகளை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அவரைத் தேடிக் கொண்டு செல்வேன் என்று இந்த பாடலில் சொல்கின்றார். இவ்வாறு சொல்வதன் மூலம் நாமும் அவரைத் தேடிச் சென்று வணங்கி. நமது வினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குகின்றார். தன்னை மறைத்துக் கொள்வது இறைவனின் இயல்பு. அவனைச் சென்று அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்பது ஆன்மாவின் விருப்பம். எனவே ஆன்மா இறைவன் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்கின்றது. ஆன்மாவாக தன்னை பாவித்து, ஆன்மாவின் விருப்பத்தை அப்பர் பிரான் உணர்த்தும் பாடலாக இதனை பெரியோர்கள் கருதுகின்றனர். ஆன்மாவின் விருப்பத்தை உணர்ந்து கொள்ளாமல் உடல் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற ஆன்மாவின் விருப்பம் நமக்கு இங்கே கூறப்படுகின்றது. சேடன் என்ற சொல்லுக்கு மூலமாக சேஷம் என்ற வடமொழிச் சொல் விளங்குகின்றது என்று பொருள் கொண்டு, பிரளய காலத்தில் அனைத்து உடல்களும் பொருட்களும் அழிந்த பின்னரும் எஞ்சி இருப்பவன் பெருமான் ஒருவனே என்று விளக்கம் கொள்வது சிறப்பு. மதம் கொண்டு செருக்குடன் தன்னை எதிர்த்து வந்த யானையைக் கொன்ற பின்னர் இரத்தம் ஒழுகியதால் ஈரப்பசை மிகுந்த அதன் தோலினைத் தனது உடலின் மீது போர்வையாக மூடியவர் சிவபெருமான். அவர் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் இசைத்தவாறு, தாருகவனத்திற்கு பலி ஏற்கச் சென்றவர் ஆவார். அனைவரிலும் முதன்மையவராக விளங்கும் சிவபெருமான் தென்னாட்டில் உள்ள பராய்த்துறை தலத்தில் உறைகின்றார். அவரைத் தேடிக் கொண்டு சென்று அடியேன் காண்பேன் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

மூடினார் களி யானையின் ஈருரி

பாடினார் நான்மறை நான்கினோடு ஆறங்கம்

சேடனார் தென்பராய்த்துறைச் செல்வனார்

தேடிக் கொண்டு அடியேன் சென்று காண்பனே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.49.7) அப்பர் பிரான், பெருமானை, நான்மறையோடு ஆறங்கம் விரித்தவன் என்று குறிப்பிடுகின்றார். புன்சடை= முறுக்குண்ட சடை: பொதுவாக கல்வியும் வீரமும் இணைந்து இருப்பதை நாம் மிகவும் அரிதாக காண்கின்றோம். ஆனால் உலக நியதிகளுக்கு அப்பாற்பட்ட பெருமான், இரண்டையும் ஒருங்கே உடையவனாக இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. வேதங்களை கற்பவர்கள் அதன் ஆறு அங்கங்களையும் கற்றால் தான், வேதங்களை முறையாகவும் தவறின்றியும் சொல்ல முடியும். சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவையே அந்த ஆறு அங்கங்கள். எனவே தான் வேதங்களை உலகுக்கு அருளிய பெருமான், அந்த வேதங்களுக்கு துணையாக நிற்கும் ஆறு அங்கங்களையும் அருளினார். முறுக்குண்ட தனது சடையில், கங்கை நதி, பாம்பு மற்றும் சந்திரன் ஆகிய மூன்றையும் தரித்தவன் சிவபெருமான். கீழ்மக்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்த சிவபெருமான், நான்கு வேதங்கள் மற்றும் அதன் ஆறு அங்கங்களை விவரித்து உணர்த்தியவன் ஆவான். இவ்வாறு வீரமும் கல்வியும் ஒருங்கே உடையவனாக விளங்கிய பெருமான் உறைகின்ற வெண்காடு தலம் சென்று அடைந்து அவனை வழிபட்டு, நெஞ்சமே நீ பயன் பெறுவாயாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன்

புரித்த புன்சடையான் கயவர் புரம்

எரித்தவன் மறை நான்கினோடு ஆறங்கம்

விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே

ஆக்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.21.2) அப்பர் பிரான், பெருமானை வேதத்தோடு ஆறங்கம் சொன்னார் என்று குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களுக்கும் ஆதியாய் பெருமான் விளங்குவதால், ஆதி என்ற சொல் உணர்த்தும் பொருளாக, ஆதி என்பதற்கு அளவுகோலாக பெருமான் விளங்குகின்றார் என்று நயமாக அப்பர் பிரான் கூறுகின்றார்; ஞானத்தின் வடிவமாக இருக்கும் பெருமான், எந்த நூலினையும் படித்து ஞானம் பெற வேண்டிய தேவையில்லை அல்லவா; முற்றிலும் உணரும் தன்மை பெருமானின் எட்டு குணங்களில் ஒன்றாக கருதப் படுகின்றது. எட்டு குணங்களாவன; தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். இந்த எட்டு குணங்களே சைவ சித்தாந்தத்தில் சிவபெருமானது குணங்களாக கூறப்படுகின்றன. எந்த நூலையும் ஓதாமலே அனைத்தையும் உணர்ந்தவர் சிவபெருமான்; தனது காதினில் ஒளி வீசும் குழை ஆபரணத்தை அணிந்தவர் சிவபெருமான்; தனது அடியார்களுக்கு கவலைக்கு இடமளிக்கும் துன்பங்கள் வராமல் காப்பவர் சிவபெருமான்; வேதங்களையும் அதன் அரண்களாக விளங்கும் ஆறு அங்கங்களையும் சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் விளக்கியவர் சிவபெருமான்; விடத்தை தேக்கியதால் கருமை நிறத்துடன் காணப்படும் கழுத்தினை உடையவர் சிவபெருமான்; உலகிலுள்ள அனைத்து பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக விளங்கும் பெருமான், ஆதி என்ற சொல்லுக்கே ஒரு அளவுகோலாக விளங்குகின்றார். அத்தகைய பெருமான் திருவாக்கூர் தலத்தில் தான்தோன்றி அப்பராக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும் உணரப் படாதது ஒன்றில்லை போலும்

காதில் குழை இலங்கப் பெய்தார் போலும் கவலைப் பிறப்பு இடும்பை காப்பார் போலும்

வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்

ஆதிக்கு அளவாகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

புள்ளிருக்கு வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.54.4), அப்பர் பிரான், பெருமானை, ஆறங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற பொருளன் என்று குறிப்பிடுகின்றார். ஆறு அங்கங்கள் மற்றும் நால் வேதங்களால் முழுவதும் அளந்து சொல்ல முடியாத வண்ணம் பெருமை உடையவனை, ஆறு அங்கங்கள் மற்றும் நான்கு வேதங்களின் பொருளை ஐயம் திரிபற உரைக்கும் ஆற்றல் படைத்தவனை, ஆறு அங்கங்கள் மற்றும் வேதங்களை உலகினுக்கு அருளியவனை, அவற்றை கடந்தவன் என்று சொல்வது தானே பொருத்தம். அனைத்து உயிர்களும், அதற்கு முன்னர் பல பிறவிகளில் சேர்த்து வைத்த நல்வினை தீவினைகளின் ஒரு பகுதியை, இந்த பிறப்பில் அனுபவித்து கழிக்கின்றன. நல்வினையை புண்ணியம் என்றும் தீவினையை பாவம் என்றும் நாம் கூறுகின்றோம். இவ்வாறு பிறவிகள் பாவ புண்ணியத்தால் கட்டுண்டு இருக்கும் நிலையினை, மணிவாசகர் அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டுண்டு என்று சிவபுராணத்தில் கூறுகின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான் இடர் பாவம் என்று, நமக்கு வரும் துன்பங்களையும், அந்த துன்பங்களுக்கு காரணமான தீயவினைகளையும் குறிப்பிடுகின்றார். கொடிய சூலை நோயினால் தான் அடைந்த துன்பங்களை, தனது தீயவினைகளின் பயனாக அப்பர் பிரான் கருதுவதை நாம் உணரலாம். அறிவில் ஏழையாக இருந்த தன்னை, ஏழையேன் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தனது இளைய வயதினில் அடுத்தடுத்து வந்த இழப்புகளால், வாழ்க்கையில் பற்று ஏதும் இன்றி வாழ்ந்த மருள்நீக்கியார் (அப்பர் பிரானின் இயற்பெயர்) நல்ல நெறியினை தெரிந்து கொள்வதற்காக சமண சமயம் சார்ந்தவர், அங்கே தனது சிந்தை தெளிவடையவில்லை என்பதை இந்த பாடல் மூலம் நமக்கு தெரிவிக்கின்றார். ஆதிமா தவத்துள்ளான் என்று தவம் என்பதை முதன் முதலில் செய்து அடுத்தவர்களுக்கு வழி காட்டியவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். தவம் செய்யும் பல முனிவர்கள் சடை வளர்த்தார்கள் என்பதை நாம் அறிகின்றோம். ஆனால் எந்த முனிவரும் சடையை உடையவன் என்ற பொருள் பட சடையான் என்று அழைக்கப் படவில்லை. உபநிடதங்களும் முனிவர்களுக்குள் பெரிய முனிவன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றது. எனவே சிவபெருமான் ஒருவனுக்கே சடையான் என்ற பெயர் பொருந்துகின்றது.

இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்யத்

தெருளாத சிந்தை தனை தெருட்டித் தன் போல் சிவலோக நெறி அறியச் சிந்தை தந்த

அருளானை ஆதி மாதவத்து உளானை ஆறங்கம் நால்வேதத்து அப்பால் நின்ற

பொருளானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.93.6) அப்பர் பிரான், பெருமானை, அருமையோடு ஆறு அங்கம் ஆய்ந்தவன் என்று குறிப்பிடுகின்றார். ஆய்ந்தவன்= ஆராய்ந்தவன்; ஆகம்=உடல்; அரிய வேதங்களையும் அந்த வேதங்களுக்கு அரணாக விளங்கும் ஆறு அங்கங்களையும் ஆராய்ந்து அறிந்தவனும், படமெடுத்து ஆடும் நாகத்தோடு எலும்பு மாலையும் ஆமை ஓட்டினையும் அணிகலனாக அணிந்தவனும், தனது நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பிழம்பினால் மன்மதனின் உடலை கருக்கியவனும், மிகுந்த கோபத்துடன் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர முயற்சி செய்த இயமனை பாய்ந்து உதைத்து வீழ்த்தியவனும், காய்ந்த சருகுகளை தனது வாயிலிருந்து வரும் நூலினால் இணைத்து பண்டைய நாளில் பந்தல் அமைத்த சிலந்திக்கு நாட்டினை செல்வமாக அளித்தவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஆய்ந்தவன் காண் அருமறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடரவோடு என்பும் ஆமை

காய்ந்தவன் காண் கண்ணழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழப்

பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்குப் பார் ஆள செல்வம்

ஈந்தவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.66.2) அப்பர் பிரான், பெருமானை ஆறங்கம் நால்வேதம் தெரித்தான் என்று குறிப்பிடுகின்றார். மின்னார் ஒளி முடி=மின்னலைப் போன்று ஒளி வீசும் சடைமுடி; தரியலர்=பகைவர்: தெரித்தல்=விளக்குதல்; அரித்தான்=அறுப்பவன், அழிப்பவன்; தன்னை எதிர்த்து வந்த மதயானையை அடக்கி அதன் தோலை உரித்தவனும், மின்னல் போன்று ஒளி வீசும் சடைமுடியினை உடையவனும், உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் தரித்தவனும், பகைவர்களான திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை ஓர் அம்பினை எய்தி எரித்தவனும், தன்னைச் சரணடையும் அடியார்களின் வினைகள் மற்றும் அந்த வினைகளால் வரும் பிறவி நோய், பாவம் அனைத்தையும் போக்குபவனும், ஆலமரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம், பொருள். இன்பம் வீடு ஆகிய நான்கு பொருட்களின் உண்மை நிலையை உணர்த்துவதும் ஆறு அங்கங்களை உடையதும் ஆகிய வேதங்களின் பொருட்களை விளக்கமாக கூறியவனும், நாகேச்சரத்து நகரினில் உறைபவனும் ஆகிய இறைவனைச் சேராதார்கள், நல்ல நெறியில் செல்லாதவர்கள் ஆவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை,

உரித்தானை மதவேழம் தன்னை மின்னார் ஒளி முடி எம் பெருமானை உமையோர் பாகம்

தரித்தானைத் தரியலர் தம் புரம் எய்தானைத் தன்னடைந்தார் தம் வினை நோய் பாவம் எல்லாம்

அரித்தானை ஆலதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறங்கம் வேதம்

தெரித்தானைத் திருநாகேச்சரத்து உளானை சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே

குடந்தை கீழ்க்கோட்டம் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பதிகத்தின் பாடலில் (6.75.1) அப்பர் பிரான், ஆறு அங்கமாக இருப்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சொல் மலிந்த=சிறப்பான சொற்கள் நிறைந்த; வேதங்களில் உள்ள சொல்லாக இருப்பவனும் அந்த சொற்களுக்குத் துணையாக இருப்பவனும் பெருமான் தான் என்று பல திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. வேதங்களை உலகுக்கு உரைத்தவனும் வேதங்களுக்கு விளக்கம் அளித்தவனும் பெருமான் தானே. அதனால் தான் சொற்றுணை வேதியன் என்று நமச்சிவாய பதிகத்தினை (4.11) அப்பர் பிரான் தொடங்குகின்றார். புனிதமான சொற்களைக் கொண்டவை வேதங்கள். வேதங்களில் வல்லவனை வேதியன் என்று செல்வார்கள், வேதங்களுக்கு பொருள் சொன்னவனும், வேதங்களை விரித்து ஓதியவனும் ஆகிய பெருமானை விடவும் வேதியன் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் வேறு எவர் உள்ளனர். சொற்பொருளை கடந்தவன் பெருமான் என்று இங்கே குறிப்பிடுகின்றார். பெருமானின் அழகையோ, உருவத்தையோ, திறனையோ சொற்களால் வடிக்க முடியாது. வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதவன் பெருமான். எனவே தான் சொற்கள் உணர்த்தும் பொருளையும் கடந்தவன் என்பதை சொற்பொருளும் கடந்தவன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். வாணர்= வாழ்பவர்; வாழ்நர் என்ற சொல் வாணர் என்று காலப் போக்கில் மருவியதாக கூறுவார்கள். மடிப்பு மலைகள் வகையைச் சார்ந்த இமயமலை அடுக்கு மலைகளாக உள்ள தன்மை புவியியல் ஆராயச்சியாளர்களால் கடந்த இருநூறு ஆண்டுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் நமது சைவ சமயம் முன்னமே இந்த செய்தியை கல் மலிந்த மலை என்று உணர்த்தியிருப்பது நமக்கு பெருமை தருகின்றது. மன்=வலிமையாக நிலை பெற்று விளங்கும்; புனிதமான சொற்கள் நிறைந்த நான்கு வேதங்களாகவும், அந்த வேதங்களுக்க்கு அரணாக செயல்படும் ஆறு அங்கங்களாகவும் இருப்பவனும், ஒளிப் பிழம்பாக சுடர் விடும் தன்மையில் சொற்களையும் சொற்கள் உணர்த்தும் பொருளையும் கடந்தவனாக இருப்பவனும், மடிப்பு மலைகளாக அமைந்து, கற்கள் நிறைந்து திகழும் இமயமலையில் வாழ்பவனும், பாற்கடலிலிருந்து திரண்டு எழுந்த நஞ்சினை தனது கழுத்தினில் தேக்கியதால் கருநிறமாக மாறிய கழுத்தினை உடையவனும், மலை போன்று வலிமையானதும் அழகியதும் ஆகிய தோள்களை உடையவனும், மலைக்கு அரசனாக திகழ்ந்த இமவானின் மகளும் இளமையான அழகினை உடையவளும் ஆகிய பார்வதி தேவியின் மணாளரும், கொலைத் தொழில் புரிவதில் பழக்கம் உடையதும் மூன்று இலைகள் சேர்ந்தது போன்ற அமைப்பினை உடையதும் ஆகிய சூலத்தினை உடையவனும், குடந்தை நகரின் கீழ்க் கோட்டம் திருக்கோயிலில் கூத்தனாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

சொல் மலிந்த மறை நான்கு ஆறங்கமாகிச் சொற்பொருளும் கடந்த சுடர்ச் சோதி போலும்

கல் மலிந்த கயிலை மலை வாணர் போலும் கடல் நஞ்சம் உண்டிருண்ட கண்டர் போலும்

மன் மலிந்த மணிவரைத் திண் தோளர் போலும் மலையரையன் மடப் பாவை மணாளர் போலும்

கொல் மலிந்த மூவிலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்தெம் கூத்தனாரே

திருவாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (6.78.4) அப்பர் பிரான் நான்மறையோடு ஆறங்கம் சொன்னவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மாறிலா மேனி= மூப்பும் இறப்பும் அடையாத திருமேனி; மாயையின் காரணமாக தோன்றி அழியும் உடலன்றி, இறைவன் தனது இச்சையால் கொள்ளும் திருமேனி; மா=பெருமை; சந்திரனுக்கு அழகு பெருமை முதலியன பெருமான் தனது சடையின் மீது தன்னிடம் சரணடைந்த ஒற்றைப் பிறையை சூட்டிக் கொண்டதால் கிடைத்தது என்பதை உணர்த்தும் வண்ணம் பெருமை படைத்தவன் என்று சந்திரனை கூறினார் போலும். பாறினார்=அழிந்தவர். தேறினார்= பெருமானின் இயல்புகளை முறையாக அறிந்து கொண்டு தேறிய மெய்ஞ்ஞானிகள்; நறுமணம் கமழும் கொன்றை மலர்களை சூடிய சடையினை உடையவரும், நான்மறைகள் மற்றும் அதற்கு அரணாக விளங்கும் ஆறு அங்கங்களையும் முறைப்படி ஓதுபவரும், மூப்பும் இறப்பும் இன்றி என்றும் இளமைப் பொலிவு மாறாத திருமேனியை உடையவரும், அழகிய பிறைச் சந்திரனைத் தனது செஞ்சடை மேல் வைத்தவரும், அழியும் தன்மை கொண்ட பிரமனது மண்டை ஓட்டினைத் தனது உண்கலனாக கொண்டவரும், பழையனூர் தலத்தினை மிகவும் விருப்பத்துடன் தனது இருப்பிடமாகக் கொண்டவரும்., தனது இயல்புகளைத் தெளிவாக உணர்ந்த மெய்ஞானிகளின் சித்தத்தில் இருப்பவரும் ஆகிய இறைவன் திருவாலங்காடு தலத்தில் உறையும் செல்வனாக விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நாறு பூங்கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறங்கம் சொன்னார் தாமே

மாறிலா மேனி உடையார் தாமே மாமதியம் செஞ்சடை மேல் வைத்தார் தாமே

பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே

தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே

திருமாற்பேறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.80.10) அப்பர் பிரான், நான்மறையோடு ஆறங்கம் விரித்தவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். சங்கரன்=இன்பம் செய்பவன்; சம்பு=இன்பம் விளைவிப்பவன்; வடமொழிச் சொற்களாகிய சங்கரன், சம்பு மற்றும் உருத்திரன் ஆகிய சொற்களுக்கு காஞ்சி புராணத்தில் விளக்கம் அளிக்கப் படுகின்றது. இன்பம் செய்தலில் சங்கரன் எம்பிரான் இன்பம் ஆக்கலில் சம்பு, இடும்பை நோய் என்பது ஓட்டும் இயல்பினான் உருத்திரன், என்பதே காஞ்சி புராணத்து தொடர். உருத்திரன் என்றால் நோய்களையும் துன்பங்களையும் தீர்ப்பவன் என்று பொருள். அம்மான்=தலைவன் தரியலர்கள்=பகைவர்கள்; நான்மறைகளையும், மறைகளுக்கு அரணாகத் திகழும் ஆறு அங்கங்களையும் விரித்து உலகுக்கு வெளிப்படுத்தியவனும், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயன்ற அரக்கன் இராவணனை, தனது கால் பெருவிரலினை மலையின் மீது ஊன்றுவதன் மூலம் மலையின் கீழே நெருக்கியவனும், குற்றங்கள் ஏதும் இல்லாதவனும், அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக விளங்குபவனும், பிறைச் சந்திரன் தங்கிய சடையில் நீர் நிறைந்த கங்கை நதியைத் தாங்கியவனும், அனைத்து உயிர்களுக்கும் இன்பம் செய்பவனும், அனைத்து உயிர்களுக்கும் இன்பம் தரும் காரணனாக இருப்பவனும், பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் வெந்து அழியுமாறு சிரித்தவனும், ஒளிப்பிழம்பாக விளங்குபவனும், சிவந்த பவளக் குன்று போன்ற திருமேனியை உடையவனும் ஆகிய இறைவனை அடியேன் திருமாற்பேறு தலம் சென்றடைந்து கண்டு களித்தேன் என்று அப்பர் பிரான் மிகுந்த பெருமையுடன் சொல்லும் பாடல்.

விரித்தானை நான்மறையோடு அங்கமாறும் வெற்பெடுத்த இராவணனை விரலால் ஊன்றி

நெரித்தானை நின்மலனை அம்மான் தன்னை நிலா நிலவு செஞ்சடை மேல் நிறை நீர்க் கங்கை

தரித்தானைச் சங்கரனைச் சம்பு தன்னைத் தரியலர்கள் புரம் மூன்றும் தழல்வாய் வேவச்

சிரித்தானைத் திகழொளியைத் திருமாற்பேற்று எம் செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன் நானே

திருப்பாசூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.83.2) அப்பர் பிரான் ஆறங்கமாகவும் நால்வேதமாகவும் இருப்பவன் பெருமான் என்று உணர்த்துகின்றார். கொண்டல்= கிழக்கிலிருந்து வீசும் காற்றினை பண்டைய நாட்களில் கொண்டல் என்று அழைத்தனர். இந்த காற்றே மழை பொழியும் மேகங்களை கொணர்ந்து தமிழகத்திற்கு மழை பொழிய காரணமாக உள்ளது என்று கூறுவார்கள். வடக்கிலிருந்து வீசும் காற்றினை வாடைக் காற்று என்றும், மேற்கிலிருந்து வீசும் காற்றினை கோடைக் காற்று என்றும் தெற்கிலிருந்து வீசும் காற்றினை தென்றல் காற்று என்றும் பெயரிட்டு பண்டைய நாட்களில் அழைத்ததாக தெரிகின்றது. கூதல்=விடாது பொழியும் சிறு தூறல்கள்; மலைப் பகுதிகளில் இத்தகைய தூறல்களை நாம் காணலாம். குவலயம்=பூமி; பாசு என்றால் மூங்கில் என்று பொருள். மூங்கிலின் அடியே பெருமான் சுயம்புவாக தோன்றி நின்ற நிலையை குறிக்கும் வண்ணம், தலத்தின் பெயர் பாசூர் என்று வந்தது போலும். இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலில் அப்பர் பிரான் பெருமானை, அருமறையோடு ஆறங்கம் ஆய்ந்து பாடினார் என்று குறிப்பிடுகின்றார். நான்கு வேதங்களாகவும், அந்த வேதங்களை பாதுகாக்கும் அரணாக விளங்கும் ஆறு அங்கங்களாகவும், பெருகி வளரும் பொருட்கள் உயிர்கள் ஆகிய அனைத்திற்கும் மூலமான வித்தாகவும், இடைவிடாது சிறு தூறல்களாக பொழியும் மழையாகவும், அனைத்து உலகங்களாகவும், கிழக்கிலிருந்து வீசி மழை பொழிவிக்கும் கொண்டல் காற்றாகவும், அன்பின் மிகுதியால் வானவர்களால் போற்றிபோற்றி என்று புகழ்ந்து நறுமணம் கொண்ட மலர்களால் அர்ச்சிக்கப் படுவானும், தனது உடலின் ஒரு பாகத்தில் உமையம்மையை ஏற்றவனும் ஆகிய பெருமான் பாசூர் தலத்தில் மேன்மையான பரஞ்சுடராக உறைகின்றான். அவனைக் கண்டு தொழுது அடியேன் வாழ்வினில் உய்வினை அடைந்தேன் என்று அப்பர் பிரான் சொல்வதாக அமைந்த பாடல்.

வேதமோர் நான்காய் ஆறங்கமாகி விரிகின்ற பொருட்கெல்லாம் வித்துமாகிக்

கூதலாய்ப் பொழிகின்ற மாரியாகிக் குவலயங்கள் முழுதுமாய்க் கொண்டலாகிக்

காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி நின்ற

பாதியோர் மாதினனைப் பாசூர் மேய பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உய்ந்தவாறே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.71.3) சுந்தரர், பெருமானை, அங்கங்களும் மறை நான்குடன் விரித்தான் என்று கூறுகின்றார். கப்பல்களில் கட்டப்பட்டுள்ள பாய்மரங்கள் காற்றின் விசையை தடுத்து நிறுத்துவதால், வளைந்து ஒரு புறமாக கூம்பியிருக்கும் நிலையினை, கப்பல்கள் தங்களது கைகளாகிய பாய்மரம் கொண்டு பெருமானை வணங்குவதாக சுந்தரர் கற்பனை செய்கின்றார். இத்தகைய கற்பனையை தற்குறிப்பேற்ற அணி என்று தமிழ் இலக்கணம் குறிப்பிடுகின்றது. தெங்கம்=தென்னை மரங்கள்; நெடும் பெண்ணை=நீண்டு உயர்ந்த பனை மரங்கள்; படப்பை=சோலைகள், இங்கே கடற்கரைச் சோலைகள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

அங்கங்களும் மறை நான்குடன் விரித்தான் இடம் அறிந்தோம்

தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணற் படப்பைச்

சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி

வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே

பொழிப்புரை:

எங்கும் நீக்கமற நிறைந்தவனும், தனது இயல்பு எவராலும் அறியப்படாமல் இருப்பவனும், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், அழியும் நிலையில் இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்று கொண்டு காக்கும் வல்லமை படைத்தவனும், குற்றங்கள் ஏதும் இல்லாத பதினெட்டு புராணங்கள், நான்கு வேதங்கள் ஆகியவற்றுக்கு கருப் பொருளாக இருப்பவனும், வேதங்களை அழியாமல் பாதுகாக்கும் அரணாக உள்ள ஆறு அங்கங்களை விரித்து சொன்னவனும் ஆகிய பெருமான், ஐயாற்றினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள தலைவன் ஆவான்.

பாடல் 7:

கோடல் கோங்கம் (2.006) பாடல்கள் 6 தொடர்ச்சி, 7, 8 (திதே 0638)

ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகெலாம்

சோதியாய் நிறைந்தான் சுடர்ச் சோதியுள் சோதியான்

வேதியாகி விண்ணாகி மண்ணோடு எரி காற்றுமாய்

ஆதியாகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே

விளக்கம்:

இந்த பாடலில் சோதியாய் நிறைந்தான் என்று திருஞானசம்பந்தர் கூறுவது, சுசரிதன் வாழ்க்கையில் பெருமான் சோதி வடிவினில் காட்சி அளித்தமையை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இவ்வாறு சுசரிதனுக்கு காட்சி அளித்தவரும், அவனுக்காக இயமனை உதைத்தவரும் ஆகிய பெருமான் தான், ஆட்கொண்டாராக இந்த தலத்தினில் எழுந்தருளி இருப்பதாக கருதப் படுகின்றார். தெற்கு வாயிலில் உள்ள இந்த வாயில் காப்பாளர், இயமனை காலின் கீழே போட்டு உதைப்பவராக காட்சி தருகின்றார். இவருக்கு வடைமாலை சாத்தும் பழக்கமும் உள்ளது. இந்த சன்னதியின் முன்னர் இன்றும் குங்கலியம் ஏற்றப் படுகின்றது. பெருமானுக்கு செம்பொன் சோதீஸ்வரர் என்பதும் ஒரு திருநாமம். ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று தொடங்கும் அப்பர் பிரானின் திருத்தாண்டகப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலும், திருவையாறு அகலாத செம்பொற்சோதீ என்று முடிவடைகின்றன.

நமது அறிவின் துணை கொண்டு பெருமானின் தன்மைகளை ஆராயப் புகுந்தாலும், பெருமானைக் காணலாம் என்று முயற்சி செய்தாலும், பெருமானின் தன்மைகளை நம்மால் அறிய முடியாது; பெருமானை நாம் காணவும் முடியாது பெருமான் பால் அன்பு கொண்டு உணர்வு பூர்வமாக முயற்சி செய்தால் தான்,நாம் அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும். மேலும் அவனது திருவருளே நமது கண்ணாக செயல்பட்டால் தான், அவனை நாம் காணவும் முடியும் என்பதை நாம் இந்த பதிகத்தின் முந்திய பகுதியில் கண்டோம். இந்த கருத்து தான் இங்கே மீண்டும், ஓதி யாரும் அறிவார் இல்லை என்று திருஞான சம்பந்தரால் கூறப்படுகின்றது. வேதி=வேத வடிவினன். எரி=தீ

பொழிப்புரை:

பெருமானின் அருளினைத் துணையாகக் கொள்ளாமல், தங்களது அறிவின் துணை கொண்டு பெருமானின் தன்மைகளை முழுவதுமாக அறிந்தவர் எவரும் இல்லை. உயிர்களை ஓதவைத்து தனது தன்மைகளை உணரவைக்கும் பெருமான், சோதி வடிவினனாக எங்கும் நிறைந்துள்ளான். சுடர் விட்டு ஒளிரும் சூரியன் மற்றும் சந்திரனுக்கு ஒளி தருபவனாக உள்ளவனும் அவனே. வேதங்களின் வடிவினனாகவும், ஆகாயம் நிலம் தீ காற்று நீராக இருக்கும் பெருமான், உலகிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் மூலமாக நிற்பவனும் ஆகிய பெருமான், திருவையாறு தலத்தினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள தலைவன் ஆவான்.

பாடல் 8:

கோடல் கோங்கம் (2.006) பாடல்கள் 6 தொடர்ச்சி, 7, 8 (திதே 0638)

கோடல் கோங்கம் (2.006) பாடல் 8 தொடர்ச்சி (திதே 0639)

கோடல் கோங்கம் (2.006) பாடல்கள் 8 தொடர்ச்சி, 9, (திதே 0640)

குரவ நாண்மலர் கொண்டு அடியார் வழிபாடு செய்

விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே

பரவி நாடொறும் பாட நம் பாவம் பறைதலால்

அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே

விளக்கம்:

குரவம்=குரா மலர்கள்; நாண்மலர்=அன்று அலர்ந்த; விரவி=எங்கும் கலந்து; பறைதல்=அழிதல், நீங்குதல்; பரவுதல்=வாழ்த்துதல், புகழ்தல்; அன்று மலர்ந்த மலர்கள் கொண்டு இறைவனை வழிபட வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். பூக்களைத் தேர்ந்தெடுத்து இறைவனை அடியார்கள் வழிபடுகின்றனர் என்று திருஞானசம்பந்தர் உணர்த்தும் திருவோத்தூர் பதிகத்தின் முதல் பாடல் நமது நினைவுக்கு வருகின்றது. பெருமானை சிறந்த மலர்கள் கொண்டு வழிபட வேண்டும். அத்தகைய மலர்களை நாம் ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். தற்போது பணம் கொடுத்து மலர்களை வாங்கி இறைவனுக்கு அர்ச்சிப்பது என்பது பழக்கமாக மாறிவிட்டது. ஆனால் இன்றும் ஒரு சில வீடுகளில், அவர்களது இல்லத்தில் வளரும் முல்லை, மல்லிகை, பாரிஜாதம், கருங்குவளை முதலிய மலர்களைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பதை நாம் காண்கின்றோம். இவ்வாறு நாமே மலர்களை பறித்து இறைவனுக்கு சமர்ப்பிப்பதே சிறந்த வழிபாடாக கருதப்படுகின்றது. சேதமடைந்த மலர்களை தவிர்த்தும் புதியதாக மலர்ந்த மலர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டும், பெருமானின் வழிபாட்டினுக்கு தேவையான அபிடேகப் பொருட்கள், தூபம் தீபம் முதலானவை கொண்டு உமது பொன்னான திருவடிகளைப் புகழாதாவர்கள் எவருமில்லை என்பதை எண்ணுகையில் திருவோத்தூர் தலத்தினில் பொருந்தி உறைபவரும் ஒளிவீசும் மழுவாட் படையை தனது அழகிய கையினில் ஏந்தியவரும், நடனமாடுபவரும் ஆகிய பெருமானே, உமது குணநலன்கள் தாம் என்னே என்று எம்மை வியக்க வைக்கின்றதுஎன்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி

ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால்

ஓத்தூர் மேய ஒளிமழுவாள் அங்கைக்

கூத்தீர் உம்ம குணங்களே

வாய்மூர் தலத்தின் மீது பாடிய பதிகத்தின் பாடலில் (2.111.8) திருஞானசம்பந்தர் பெருமான் புதிய கொன்றை மலர்களை சூட்டிக் கொண்டவராக திகழும் தன்மையை குறிப்பிடுகின்றார். பாடலின் மூன்றாவது அடியில் தாருகவனத்து மகளிரின் தோற்றம் குறிப்பிடப் படுகின்றது. வட்டணை=வட்டமாக சுற்றிச் சுற்றி வந்து தாளம் இடுதல்; எட்டுணை=எண்+துணை=எட்டு மடங்கு; கட்டிணை=இணையாக கட்டப்பட்ட; இவ்வாறு ஆடியும் பாடியும் பெருமான் பலியேற்ற செய்கை தாருகவனத்து மகளிரின் உள்ளத்தைக் கவர்ந்தது போலும். .

கட்டிணை புதுமலர்க் கமழ் கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமும் அஃதே

எட்டுணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவதொரிடம் வினவில்

பட்டிணை அகல் அல்குல் விரிகுழலார் பாவையர் பலியெதிர் கொணர்ந்து பெய்ய

வட்டணை ஆடலொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே

திருவானைக்கா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.53.5) திருஞானசம்பந்தர், பெருமானை, நாண்மலர் கொன்றை துன்று சென்னியான் என்று குறிப்பிடுகின்றார். வெய்ய=கொடிய, வெப்பம் மிகுந்த; ஆண்ட சீர்=தேவர்களைக் காத்து ஆண்ட சிறப்பினை உடைய; துன்று=நெருக்கமாக; கொடிய பாவங்கள் உங்களை விட்டு விலக வேண்டும் என்று விரும்பும் அன்பர்களே, தேவர்களைக் காத்து அருள் புரியும் வண்ணம் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால நஞ்சினைத் தனது கழுத்தினில் அடக்கிக் கொண்டு கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடையவனாக இருப்பவனும், வெப்பம் மிகுந்த நெருப்புச் சுடரைத் தனது கையில் ஏந்திய வண்ணம் நடனம் ஆடுபவனும், அன்றலர்ந்த கொன்றை மலர்களைத் தனது சடையில் நெருக்கமாக அணிந்து கொண்டவனும் ஆகிய பெருமான் உறைவதும், நீர் நிலைகள் மிகுந்ததும் ஆகிய ஆனைக்கா தலம் சென்றடைந்து பெருமானை வணங்குவீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்ட சீர்

மை கொள் கண்டன் வெய்ய தீ மாலை ஆடு காதலான்

கொய்ய விண்ட நாண்மலர்க் கொன்றை துன்று சென்னி எம்

ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே

மலர்களைப் பறித்து வழிபடுவதில், மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் வியாக்ரபாதர். வண்டுகள் பூக்களில் உள்ள தேனைச் சுவைப்பதால், மலர்களின் தூய்மை குறைகின்றது என்று எண்ணிய முனிவர் அத்தகைய பூக்கள் இறைவனின் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்தார். அதனால் வண்டு சுவைக்கும் முன்னரே பூக்களைப் பறிக்க ஆசைப்பட்டார். அதற்கு வசதியாக விடியற்காலை இருட்டினில் தனக்கு கண்கள் நன்றாக தெரிய வேண்டும் என்றும், தான் மரத்தினில் ஏறும்போது பனியினால் நனைந்து இருக்கும் மரங்களின் தண்டுகளும் கிளைகளும், வழுக்காமல் இருக்க வேண்டும் என்றும் விரும்பிய முனிவர், தனக்கு புலிக்கு உள்ளது போன்ற கண்களும் கால்களும் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். இறைவன் அருளால் அவரது ஆசை நிறைவேறியது. அன்று முதல் முனிவர் வியாக்ரபாதர் என்றும் புலிக்கால் முனிவர் என்றும் அழைக்கப் பட்டார். வியாக்ரம் என்றால் வடமொழியில் புலி என்று பொருள். இறைவனை வழிபட உதவும் மலர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று கூறும் அப்பர் பிரானுக்கு, வியாக்ரபாதர்நினைவு வந்தது இயற்கையே. தில்லைத் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றினில் (5.01.02) பெரும்பற்றப் புலியூர் என்று தில்லைச் சிதம்பரத்தை குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் மற்ற பாடல்களில் தில்லை என்றும், அம்பலம் என்றும், தில்லைச் சிற்றம்பலம் என்றும் சிற்றம்பலம் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த பாடலில் மட்டும் வியாக்ரபாதர் செய்த வழிபாட்டினை நினைவூட்டும் வகையில் பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரினை பயன்படுத்துகின்றார். இறைவன் பால் வியாக்ரபாதர் பெரும் பற்று கொண்டிருந்தமை, சிறந்த பூக்களைப் பறித்து பெருமானுக்கு படைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தமை, நமக்கு புரிகின்றது. மலர் கொண்டு தூவித் தொழுமினோ என்று அப்பர் பிரான் கூறுவதன் காரணம், அடுத்த அடியில் விளக்கப் பட்டுள்ளது. மன்மதனும் தனது கரும்பு வில்லில் மலர்களைப் பூட்டி, இறைவன் மேல் பொழிந்தான். ஆனால் அவனது செய்கையில் பக்தி இல்லை; இறைவனது தவத்தினைக் கலைக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இருந்தது. அதனால் தான் அவன் இறைவனால் எரிக்கப்பட்டான். மலர்கள் கிடைக்காத போது, பக்தியுடன் இலை கொண்டு வழிபடுவதையும் சிவபெருமான் ஏற்றுக் கொள்கின்றார் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் பாடலும் நமது நினைவுக்கு வருகின்றது. ஏன், கல் எறிந்த சாக்கியருக்கும் அருள் செய்தவன் அல்லவா. சிவபெருமான். மறவாது கல் எறிந்த சாக்கியர் என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடுகின்றார். ஒருநாளும் மறவாது, தினமும் தான் உண்பதன் முன்னர், கல் கொண்டு இறைவனை வழிபட்டவர் சாக்கிய நாயனார். அவரது பக்தியின் காரணமாக, அவர் எறிந்த கல்லும், மலராக கருதப்பட்டு, இறைவன் அவருக்கு முக்தி அளித்த வரலாறு பெரிய புராணத்தில் காணப்படுகின்றது.தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த, மன்மதனை, கரும்பு வில்லால் அழிவு தேடிக் கொண்ட மன்மதனை, தனது நெற்றிக் கண்ணை விழித்து எரித்தவனும் பெரும்பற்றப் புலியூரில் உறைபவனும் ஆகிய நமது தலைவனை, மொட்டுகளை நீக்கியும், வண்டுகள் நுகராத மலர்களையும் தேர்ந்தெடுத்து, அத்தகைய மலர்களைக் கொண்டு அவனது திருப்பாதங்களில் மலர்களைத் தூவி வழிபடுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

அரும்பு அற்றப்பட ஆய்மலர் கொண்டு நீர்

சுரும்பு அற்றப்படத் தூவித் தொழுமினோ

கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்

பெரும்பற்றப் புலியூர் எம் பிரானையே

இவ்வாறு இறைவனை மலர் தூவித் தொழுவதால் நமக்கு கிடைக்கும் பயன் என்ன என்பதை அப்பர் பிரான் திருவையாற்றுப் பதிகத்தின் ஒரு பாடலில் கூறுகின்றார் (பதிக எண்: 4.80). சகம்=உலகம், இங்கே உலகத்தில் உள்ள உயிர்களைக் குறிக்கின்றது. துணை என்ற சொல் இணை என்ற பொருளில் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபெருமானுக்கு ஒப்பாக சொல்லக் கூடியவர் வேறு எவரும் இல்லை என்ற உண்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. நாண்மலர்=அன்று பூத்த மலர்கள்; தங்கள் நகங்கள் தேயும் அளவுக்கு மலர்களைப் பறித்து, பக்தியினால் கண்ணீர் சோர இறைவனை வணங்கும் அன்பர்களின் மனதினைக் கோயிலாகக் கொண்டு, அங்கே இறைவனை குடி கொள்வான் என்று நமக்கு உணர்த்தி, இறைவனை நாம் எவ்வாறு வணங்க வேண்டும் என்று அப்பர் பிரான் சொல்லிக் கொடுக்கும் பாடல் இது.

சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை

நகம் எலாம் தேயக் கையால் நாண் மலர் தொழுது தூவி

முகம் எல்லாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர்

அகம் அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே

சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.85.1) காலையில் எழுந்து தூய்மையான மலர்கள் கொண்டு வந்து இறைவனுக்கு சமர்பிக்க வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தூயன=முறைப்படி தூய்மையாக உள்ள மலர்கள். இந்த பாடலில் அப்பர் பிரான் மலர்களைத் தேர்ந்தெடுத்து இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கூறுகின்றார். அதிகாலையில் எழுந்தால் தானே, வண்டுகள் சுவைக்கும் முன்னர் நாம் மலர்களைப் பறிக்க முடியும். எனவே தான் காலை எழுந்து தூய்மையானதும் நறுமணங்கள் வீசுவதுமாகிய மலர்களை பறிக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

காலை எழுந்து கடிமலர் தூயன தாம் கொணர்ந்து

மேலை அமரர் விரும்பும் இடம் விரையால் மலிந்த

சோலை மணம் கமழும் சோற்றுத்துறை உறைவார் சடை மேல்

மாலை மதியம் அன்றோ எம் பிரானுக்கு அழகியதே.

இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.14.1) அப்பர் பிரான், இடைமருது தலத்து அடியார்கள், நாள்தோறும் நாண்மலர் கொண்டு இறைவனை வழிபடுகின்றனர் என்று கூறுகின்றார். நாண்மலர்=அன்றைய நாளில் பூத்த மலர்; பாசம்=உலகப் பொருட்களின் மீதும் உலகத்தில் உள்ள உயிர்களின் மீதும் கொண்டுள்ள விருப்பம்; பூச=தைப் பூச நாள்; தை மாதம் பூச நாளன்று காவிரி நதியில் நீராடுதல் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. வைகலும்= தினமும்; பத்தர்=பத்து சிறந்த குணங்களை கொண்ட அடியார்கள். சிவனடியார்கள் கொள்ள வேண்டிய குணங்கள் அக குணங்கள் என்றும் புற குணங்கள் என்றும் வகைப் படுத்தப் பட்டுள்ளன. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், பெருமானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபெருமானின் புகழைக் கேட்கும் போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் என்பன ஆகும். உலகப் பொருட்கள் மற்றும் உலகத்தில் உள்ள உயிர்கள் நிலையற்றவை என்பதை உணர்ந்து கொண்டு, அவற்றின் மீது தாங்கள் முன்னம் வைத்திருந்த பாசங்களை நீக்கியவராக உள்ள பத்தர்கள், இடைமருது தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது அன்பு உடையவர்களாக, அன்று மலர்ந்த மலர்களை இறைவனின் திருப்பாதங்களில் தூவி, இறைவனை வணங்கி நாள்தோறும் வழிபடுகின்றார்கள். இவ்வாறு சிறப்பான அடியார்களால் வணங்கப்படும், இடைமருது இறைவனை நாமும் வணங்கி, அருகிலுள்ள காவிரி நதியில் தைப்பூச நாளில் நீராடி பயன் அடைவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பாசம் ஒன்று இலராய்ப் பல பத்தர்கள்

வாச நாண்மலர் கொண்டு அடி வைகலும்

ஈசன் எம் பெருமான் இடை மருதினில்

பூச நாம் புகுதும் புனல் ஆடவே

இதே பதிகத்தின் இரண்டாவது பாடலிலும் (5.14.2) வானவர்களும் முனிவர்களும் நாண் மலர் கொண்டு இறைவனை வழிபடுவதாக அப்பர் பிரான் கூறுகின்றார். மறையின்=மறைகளில் விதித்துள்ள வழிமுறையின் வழியே; உள்குதல்=நினைத்தல்; ஈசன்=தலைவன். மறைகளில் சொல்லப்பட்டுள்ள முறையின் வழியே, தேவர்களும் முனிவர்களும் அன்று அலர்ந்த மலர்களை, இறைவனின் மீது தூவி வழிபாடு செய்கின்றார்கள். அவ்வாறு கொண்டாடப்படும் இறைவனை, எனது பெருமானை, எல்லோர்க்கும் தலைவனாக விளங்குபவனை, இடைமருது தலத்தில் உறையும் இறைவனை, எனது உள்ளம் எப்போதும் நினைக்கும் என்று அப்பர் பிரான் மிகுந்த பெருமையுடன் சொல்லும் பாடல்.

மறையின் நாண்மலர் கொண்டு அடி வானவர்

முறையினால் முனிகள் வழிபாடு செய்

இறைவன் ஈசன் எம் பெருமான் இடை மருதினில்

உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே

திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.24.6) புதுமலர்கள் கொண்டு இறைவனை வழிபட வேண்டும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். போது=மொட்டு என்றும் பொழுது என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். தாழ்ந்து=நீக்கி என்றும் தலை சாய்த்து வணங்கி என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன. எனவே மொட்டுகளை நீக்கி புது மலர்களை கொண்டு இறைவனை வணங்குதல், தமது தலையை சாய்த்து வணங்கி புது மலர்கள் கொண்டு வழிபடுதல் என்று இரண்டு விதமான வழிபாடுகள் பாடலின் முதல் அடியில் குறிப்பிடப் படுகின்றன. பறையும்=அழியும்; நீர்மாது=கங்கை நதி; மாது என்ற சொல்லினை நீர் என்ற சொல்லுடன் இணைத்து கங்கை நதி என்று பொருள் கொண்டு, மொட்டுகளை தவிர்த்து புது மலர்களைத் தனது சடையில் சூடிய பெருமான், கங்கை நதியினையும் சூடிக் கொண்டுள்ளார் என்று சிலர் பொருள் கூறுகின்றனர்

போது தாழ்ந்து புதுமலர் கொண்டு நீர்

மாது தாழ்சடை வைத்த மணாளனார்

ஓது வேதியனார் திருவொற்றியூர்

பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே

பாலைத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.51.7) அப்பர் பிரான், பெருமானை அன்று அலர்ந்த மலர்களைச் சூட்டிக் கொண்டவன் என்று குறிப்பிடுகின்றார். குரவனார்=குருவாக இருப்பவர்: நாண்மலர்=அன்றைய நாளில் பறித்த மலர்கள், புது மலர்கள்: சிவபெருமான் வீணை வாசிப்பது பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. திருவாசகம் திருவண்டப்பகுதி அகவலில், மணிவாசகர் இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க என்று குறிப்பிடுகின்றார். அனைவருக்கும் குருவாக விளங்குபவரும், கொடுகொட்டி, கொக்கரை மற்றும் வீணை ஆகிய இசைக் கருவிகளிலிருந்து எழும் இசையுடன் கலந்து இருப்பவரும் ஆகிய சிவபெருமான், அழகிய மல்லிகை, செண்பகம் என்று புதியதாக மலர்ந்த மலர்களைக் கொண்ட நிலப் பரப்பினை உடையதும் காவிரி நதிக் கரையில் உள்ளதும் ஆகிய பாலைத்துறை தலத்தில் உறையும் இறைவன் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை

விரவினார் பண் கெழுமிய வீணையும்

மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்

பரவு நீர்ப் பொன்னிப் பாலைத் துறையரே

திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.54.1) அப்பர் பிரான், பெருமானை, எட்டு நாண்மலர் கொண்டு வழிபடும் அடியார்களின் வினைகள் மாய்ந்து விடும் என்று கூறுகின்றார். நாண்மலர்=அன்று பூத்த மலர்.. மட்டு அலர்=தேன் நிறைந்த மலர்கள்; அன்று புதியதாக மலர்ந்த எட்டு வகைப் பட்ட மலர்களைக் கொண்டு சிவபெருமானின் திருவடிகளில், அத்தகைய தேன் நிறைந்த மலர்களை இட்டு அர்ச்சனை செய்து வழிபடும் அடியவர்களின் வினைகள் மாயும். எனவே கரும்புக் கட்டியும் தேனும் கலந்தது போன்று இனிக்கும், கெடில வீரட்டப் பெருமானின் திருவடிகளைச் சென்று சார்ந்து பயன் அடையுங்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பதிகத்தில் எட்டு மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட வேண்டும் என்ற கருத்து பதிகம் முழுவதும் இருப்பதை நாம் உணரலாம். சிவபெருமான் விரும்பி அணிகின்ற எட்டு மலர்கள், புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை, பாதிரி, அலரி, செந்தாமரை. நம்மிடம் இருக்க வேண்டிய எட்டு குணங்களை அகமலர்கள் என்று கூறுவார்கள். கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு ஆகியன அந்த எட்டு குணங்களாகும். நாம் அனைவரும் இந்த குணங்களைக் கொண்டு, அக மலர்களாகிய இவைகளால் வழிபடுவதையே கடவுள் பெரிதும் விரும்புகின்றார்.

எட்டு நாண்மலர் கொண்டு அவன் சேவடி

மட்டு அலர் இடுவார் வினை மாயுமால்

கட்டித் தேன் கலந்தன்ன கெடிலவீ

ரட்டனர் அடி சேரும் அவருக்கே

திருவெறும்பியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.74.5) அப்பர் பிரான் அன்று மலர்ந்த கொன்றை மலர்களை சூட்டிக் கொண்டுள்ள பெருமான் என்று கூறுகின்றார். வான்=சிறந்த; துறும்பு=நெருங்கிய அல்லது பொருந்திய; நாகம்=ஞாழல் பூக்கள்; நாண்மலர்= அன்றைய நாளில் மலர்ந்த மலர்; பெருமானுக்கு மிகவும் விருப்பமானவை அன்று அலர்ந்த பூக்கள். எனவே தான் பல திருமுறை பாடல்களில் நாண்மலர்கள் தூவி இறைவனைத் தொழவேண்டும் என்று கூறப்படுகின்றது. அன்று அலர்ந்ததும் பொன்னிறமும் உடைய கொன்றை மலர்களும் ஞாழல் மலர்களும் நெருக்கமாக பொருந்திய செஞ்சடையில், தன்னைச் சரண் அடைந்ததால் தூய்மை அடைந்த பிறைச் சந்திரனை வைத்துள்ளவன் பெருமான். சிறப்பு வாய்ந்ததும் பொன் போன்ற நிறத்தில் காணப்படுவதும் ஆகிய இமயமலையில் வளர்ந்த பேதையுடன் அனைத்து தலங்களிலும் வீற்றிருக்கும் பெருமான், எறும்பியூர் மலையிலும் உறைகின்றான். அவனே எங்கள் தலைவனாவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நறும் பொன் நாண்மலர்க் கொன்றையும் நாகமும்

துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்து வான்

உறும் பொன் மால் வரைப் பேதையோடு ஊர் தொறும்

எறும்பியூர் மலையான் எங்கள் ஈசனே

திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (5.82.6), அன்று பூத்த மலர்களை இறைவனின் திருமேனியின் மீது தூவி, பெருமானை நினைக்க நாம் செய்யும் முயற்சிகளை தடுக்கும் ஐந்து பொறிகளின் வஞ்சகச் செயல்களுக்கு அச்சம் கொண்டு, நாம் வருத்தம் கொண்டு அழுதால், பொறிகள் செய்யும் வஞ்சனையை ஈசன் நீக்கிவிடுவான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஐவர்=ஐந்து பொறிகள்: வஞ்சம்=உயிர் இறைவனை நினைக்க விடாமல் தடுத்து வஞ்சனை செய்யும் ஐம்புலன்களின் செய்கைகள்: தீர்த்திடும்=நீக்கிடும்: உயிர், தான் உய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவனை நினைக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும், உயிரின் நோக்கம் நிறைவேறாதவாறு புலன்கள் தடையாக இருக்கும் நிலையும் அந்த தடையினை நீக்க வல்லவன் சிவபெருமான் ஒருவனே என்பதும் இங்கே அப்பர் பிரானால் உணர்த்தப் படுகின்றது. ஐந்து பொறிகளும் தமது வழியில் உயிரும் மனமும் செல்லவேண்டும் என்ற ஆசை கொண்டு செயல்படும் நிலை பல தேவாரப் பாடல்களில் விளக்கப் பட்டுள்ளது.

நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்

பஞ்சின் மெல்லடியாள் உமை பங்க என்று

அஞ்சி நாண்மலர் தூவி அழுதிரேல்

வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே

இதே பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (5.82.9), அப்பர் பிரான், பெருமானின் திருமேனி மீது நாண்மலர்கள் தூவி பெருமானை வலம் வந்தால், நமது வாட்டங்களை பெருமான் தீர்த்து அருள் புரிவார் என்று கூறுகின்றார். ஓரிரண்டு வாசல்கள் இல்லாமல், ஒன்பது வாசல்கள் கொண்ட உடலினை ஓட்டை மாடம் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். ஒன்பது வாசல்களைக் கொண்டு ஓட்டை மாடமாகத் திகழும் உடல் நிலையற்றது. என்றேனும் ஒரு நாள் உடலினை விட்டு உயிர் பிரியக் கூடியது. அவ்வாறு உயிரினைப் பிரிந்த பின்னர், சுடுகாட்டில் எரிக்கப்பட்டு உடல் வெந்து போவதற்கு முன்னர், உமது மனதினில் இறைவன் சிவபெருமானின் திருவடிகளை நிலை நிறுத்தி, திருவான்மியூர் ஈசனை, புதியதாக மலர்ந்த மலர்களைக் கொண்டு வணங்கி வழிபட்டு, அவனை வலம் வந்து துதித்தால், உங்களது வாட்டங்களைத் தீர்க்கும் கருணை உள்ளம் கொண்டவன் சிவபெருமான் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்

காட்டில் வேவதன் முன்னம் கழலடி

நாட்டி நாண்மலர் தூவி வலம் செயில்

வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே

வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.86.3), அந்த தலத்தில் உள்ள அடியார்கள், அன்றலர்ந்த பூக்களைக் கொண்டு இறைவனின் திருமேனியின் மீது தூவி இசையுடன் பொருந்திய பாடல்களை பாடி இறைவனை வணங்குகின்றார்கள் என்று சுந்தரர் கூறுகின்றார். மேலும் பெருமானின் புகழினை உணர்த்தாத பேச்சுகள் பேச்சுகளாக மதிக்கப்படா என்றும் கூறுகின்றார். படிறன்=வஞ்சகக் கள்வன்; உயிர்களோடு இணைந்து இருந்தாலும் உயிர்கள் காணாதபடி மறைந்து இறைவன் இருப்பதால், அவனை படிறன் என்று அழைத்தார் போலும்.

தண்ணார் மதி சூடித் தழல் போலும் திருமேனிக்கு

எண்ணார் நாண்மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள்

பண்ணார் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர்

பெண் ஆண் ஆய பிரானைப் பேசாதார் பேச்சு என்னே

பெருமானின் திருவடிகள் அன்றலர்ந்த மலர் போன்று இருப்பதாக பொற்சுண்ணம் பதிகத்தின் பாடல் ஒன்றினில் மணிவாசகர் கூறுகின்றார். திருப்பெருந்துறையில் பெருமானின் திருவடி தீட்சை பெற்ற ஆனந்த அனுபவத்தை நினைவுகூரும் அடிகளார், பெருமானின் திருவடிகளை அன்றலர்ந்த மலர்கள் போன்று மிருதுவானவை என்று கூறுகின்றார். தன்னையும் தன்னைப் போன்று பெருமானின் அருள் பெற்ற அடியார்களையும் பெண்களாக உருவகித்து, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பெருமானுக்கு திருப்பொற்சுண்ணம் இடிப்போம் என்று கூறுகின்றார். நலக்க=நன்மை அடைய;

உலக்கை பல ஓச்சுவார் பெரியோர் உலகம் எலாம் உரல் போதாது என்றே

கலக்க அடியவர் வந்து நின்றார் காண உலகங்கள் போதாது என்றே

நலக்க அடியோமை ஆண்டு கொண்டு நாள்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த

மலைக்கு மருகனைப் பாடிப் பாடி மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே

பார் முழுதும் பரந்தும் விரிந்தும் இருக்கும் பரமனின் நீராடலுக்கு மிகவும் அதிகமாக சுண்ணம் தேவைப்படும் அல்லவா. எனவே தான் பல அடியார்கள் சுண்ணம் இடிப்பதற்காக வந்து சேர்கின்றனர். ஒருவரோ இருவரோ இடிப்பதானால் ஓர் உரல் போதும்; ஆனால் பலரும் இந்த திருப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தயாராக இருக்கும் போது ஒரு உரல் எவ்வாறு போதுமானதாக இருக்கும். உலக்கை பல ஓச்சுவார் என்று குறிப்பிட்டு ஏற்கனவே பல பெரியோர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருப்பதாக கூறும் அடிகளார், பல உரல்கள் பயன்படுத்தப் பட்ட பின்னரும், தேவையான உரல்கள், இல்லாமையால் இந்த திருப்பணிக்கு வந்தவர்களில் சிலர் தங்களது வாய்ப்புக்காக காத்து நிற்கின்றனர் என்று கூறுகின்றார். இந்த வைபவத்தை அனைவரும் கண்டு மகிழவேண்டும் என்ற விரும்பும் அடிகளார் இதனைக் காண்பதற்கு உலகங்கள் போதாது என்றும் கூறுகின்றார். சுண்ணம் இடிப்போர்கள், அலுப்பு தெரியாத வகையில் பெருமானின் புகழினைப் பாடியவாறு சுண்ணம் இடிக்கலாம் வாருங்கள் என்று அனைவரையும் அடிகளார் அழைக்கின்றார்.

பெருமான், அன்புடன் அடியார்களால் தன் மீது எறியப்படும் கற்களையும் புதுமலராக பாவித்து ஏற்றுக் கொள்கின்றான் என்று சாக்கிய நாயனாரை குறிப்பிடும் அப்பர் பிரானின் பாடல் வீழிமிழலை தலத்து பதிகத்தின் பாடலாகும் (6.52.6). மெய்த்தவன்=உட்பொருளாகிய பயன்; இருப்பு=இரும்பு என்பதன் திரிபு; பெருமான் மீது உண்மையான விருப்பம் கொள்ளாத மனிதர்களின் மனதினை இரும்பு மனம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். உயிரின் வேட்கை இறைவனைச் சென்று அடைவது. இதனை புரிந்து கொள்ளாத நாம், உயிரின் விருப்பத்தை விட்டுவிட்டு, இந்த உடலின் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் நமது விருப்பங்களை இறைவனிடம் தெரிவிக்கின்றோம். இந்த உடலின் தேவைகள் அனைத்தும் நிலையற்றவை, ஒரு நாள் அழியக் கூடியவை. ஆனால் உயிர் விரும்பும் முக்தி நிலை, என்றும் அழிவற்றது, சற்றும் குறையாத பேரின்பத்தை கொடுக்க வல்லது. எனவே அந்த முக்தி நிலையை வேண்டிப் பெறாது, அழியும் இன்பங்களை வேண்டுவோரை கல்மனவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்

மெய்த்தவன் காண் மெய்த்தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பிலா இருப்பு மன வினையர்க்கு என்றும்

பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண்

உய்த்தவன் காண் உயர்கதிக்கே உள்கினாரை உலகனைத்தும் ஒளித்திட்டு உய்யச் செய்யும்

வித்தகன் காண் வித்தகர் தாம் விரும்பி ஏத்தும் விண்ணிழி தண்வீழி மிழலையானே

புத்தன்=புத்த மதத்தைச் சார்ந்த சாக்கிய நாயனார். சுந்தரரும் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் மறவாது கல் எறிந்த சாக்கியர் என்றே கூறுகின்றார். சாக்கிய நாயனார் புத்தத் துறவியாக காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்தவர். தான் புத்த துறவியாக இருந்த போதும் சிவபெருமான் மீது பற்று உடையவராக இருந்தார். இவ்வாறு சிவபெருமான் மீது பற்று கொண்டவராக திகழ்ந்த சாக்கியர், பெருமானின் இலிங்கத் திருமேனியைக் கண்ட பின்னரே உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். அவ்வாறு இருக்கையில், பெருமான் மீது வைத்திருந்த பாசம் முற்றிய நிலையில், உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிய நிலையில், ஒரு நாள் செய்வது என்ன என்பதை அறியாத நிலையில் இருந்த அவர், அருகில் இருந்த ஒரு கல்லினை எடுத்து பெருமானின் இலிங்கத் திருவுருவத்தின் மீது எறிந்தார். அன்பு மிகுதியால் செய்யப்பட்ட இந்த செயலை, பெருமானும் மகிழ்ச்சியுடன், அந்த கல்லினை மலராக ஏற்றுக் கொண்டார். ஒரு நாள், மறதியின் காரணமாக, பெருமானுக்கு கல்லினால் அர்ச்சனை செய்யத் தவறிய நாயனாருக்கு, அவர் உணவு உட்கொள்ளவிருந்த சமயத்தில் பெருமானின் நினைவு வரவே, உணவு உட்கொள்வதை நிறுத்தி விட்டு, பெருமானைக் கண்டு தரிசித்து, அகம் மலர்ந்து ஒரு கல்லினை எடுத்து பெருமானின் திருவுருவத்தின் மீது எறிந்தார். அவருக்கு பெருமான் இடபத்தின் மீது அமர்ந்தவாறு துணைவியோடும் காட்சி கொடுத்து, அவருக்கு முக்தி நிலையையும் அளித்தார். இந்த நிகழ்ச்சியை அப்பர் பிரான் மிகவும் சுருக்கமாக, புத்தன் மறவாது ஓடி எறி செல்லி புதுமலர்கள் ஆக்கினான் காண் என்று இறைவன், சாக்கியர் எறிந்த கற்களை மலர்களாக ஏற்றுக் கொண்ட தன்மையை குறிப்பிடுகின்றார்.

முற்றூழி காலத்தில் உலகமும் உலகப் பொருட்களும் உலகத்தில் உள்ள உயிர்களும் முற்றிலும் அழிவதில்லை. அவை அனைத்தும் பெருமானிடம் ஒடுங்குகின்றன. இவ்வாறு தான் ஒடுக்கிய உலகத்தினை, மறுபடியும் பெருமான் தோற்றுவிக்க திருவுள்ளம் கொள்கின்றார். அவர் நினைத்த மாத்திரத்தில், உலகங்கள் ஒடுங்கிய நிலையிலிருந்து விரிகின்றன. இந்த செயலை ஒளித்து அளித்திட்டு உய்யச் செய்யும் என்ற தொடரால் அப்பர் பிரான் விளக்குகின்றார். ஒடுக்கப் பட்ட உலகத்தினை ஏன் பெருமான் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு எழலாம். முற்றூழிக் காலத்தில் அழியும் உடல்களை விட்டுப் பிரிந்த பல உயிர்களுடன் பிணைந்திருக்கும் வினைகளை, உயிர்கள் அதற்கு பின்னர் எடுக்கும் பிறவிகளில் நுகர்ந்து கழித்துக் கொண்டு, தன்னை வந்தடைய வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். அதனால் தான் உயிர்கள் தங்களது வினைகளை கழித்துக் கொள்ள மற்றும் ஒரு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு, உலகம் ஒடுங்கிய நிலையிலிருந்து விரிக்கப் படுகின்றது. வித்தகன்=திறமைசாலி; வினையர்= தீவினையாளர்கள்;

உண்மையான தவத்தில் ஈடுபடும் ஞானிகளுக்கு, தவத்தின் உட்பயனாக விளங்குபவனும், தன் மீது விருப்பம் கொள்ளாத இரும்பு போன்ற வலிய மனத்தினை உடைய மனிதர்களுக்கு தனது உருவத்தைக் காட்டாது மறைந்து நிற்பவனும் ஆகிய இறைவன் சிவபெருமான்., உணவு உட்கொள்ளவிருந்த புத்த மதத்தைச் சார்ந்த சாக்கிய நாயனார், ஒரு நாள், தான் பெருமானுக்கு கல்லினால் அர்ச்சனை செய்யாமல் மறந்ததை நினைவு கூர்ந்து ஓடி வந்து பெருமானின் திருவுருவத்தின் மீது கல்லை எறிந்தார். இவ்வாறு மறவாது தினமும் அர்ச்சனை செய்ய பயன்படுத்திய கற்களை புது மலர்களாக ஏற்றுக்கொண்டு அவருக்கு முக்தி நிலையை அருளியவன் சிவபெருமான். உயர்கதியை அடைய வேண்டும் என்று தன்னை தியானிக்கும் அடியார்களுக்கு உயர்கதி அளித்து பெருமான் உய்விக்கின்றார், முற்றூழிக் காலத்தில் அனைத்து உலகங்களையும் தன்னிடம் ஒடுக்கி ஒளிக்கும் பெருமான், மீண்டும் உலகங்களை தோற்றுவித்து உயிர்களுக்கு தங்களது வினைகளை கழித்துக் கொள்ள ஒரு வாய்ப்பினை அளிக்கும் திறமையுடையவன் ஆவார். பல்வேறு திறமைகளை உடைய தேவர்களால் விரும்பி ஏத்தப் படுபவன் பெருமான். அடர்ந்த சோலைகள் சூழ்ந்திருப்பதால் குளிர்ந்து காணப்படும் திருவீழிமிழலை தலத்தில், விண்ணுலகத்திலிருந்து திருமாலால் கொண்டுவரப் பெற்ற விமானத்தை உடைய திருக்கோயிலில் இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் உறைகின்றார் என்பதே மேற்கண்ட திருவீழிமிழலைப் பதிகத்து பாடலின் பொழிப்புரை.

பொழிப்புரை:

அன்றலர்ந்து புத்தம் புதியதாக உள்ள குரா மலர்கள் கொண்டு அடியார்கள் வழிபாடு செய்ய, தங்களது திருமேனி எங்கும் திருநீற்றினைப் பூசியுள்ள தொண்டர்கள் பெருமானது தன்மைகளை அறிந்து வியப்படைந்து அவனைப் புகழ்ந்து போற்றி பாடுகின்றனர். பாம்பினைத் தனது உடல் மீது பல இடங்களிலும் விரும்பி அணிந்து கொண்டுள்ள இறைவனைப் புகழ்ந்து பாடுவதால், நமது பாவங்கள் முற்றிலும் நீங்கிவிடும். இத்தகைய இறைவன், ஐயாறு தலத்தினைத் தனது இருப்பிடமாக உடைய தலைவன் ஆவான்.

பாடல் 9:

கோங்கம் (2.006) பாடல்கள் 8 தொடர்ச்சி, 9, (திதே 0640)

கோங்கம் கோடல் (2.006) பாடல்கள் 9 தொடர்ச்சி, 10, 11, 12 (திதே 0641)

உரை செய் தொல்வழி செய்து அறியா இலங்கைக்கு மன்

வரை செய் தோள் அடர்த்து மதி சூடிய மைந்தனார்

கரை செய் காவிரியின் வடபாலது காதலான்

அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே

விளக்கம்:

உலகிலுள்ள அனைத்து நூல்களுக்கும் பழமையான நூலாக வேதங்கள் கருதப்படுகின்றன. எனவே வேதங்கள் உணர்த்தும் வாழ்க்கை நெறிகள், தொன்மையான வழியாக கருதப் படுகின்றன. அதனை உணர்த்தும் முகமாக தொல்வழி என்று இந்த பாடலில் கூறுகின்றார். வேதங்களில் உணர்த்தப்படும் வாழ்க்கை நெறி தான் யாது. உண்மையான மெய்ப் பொருளாகிய சிவபெருமானின் தன்மைகளை முழுமையாக அறிந்து கொண்டு அவனையே தியானம் செய்து அவனது திருவடிகளை அடைவது தான் உயிரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது தான் வேதங்கள் உணர்த்தும் நெறி. சிவபக்தனாக திகழ்ந்த இராவணன், இந்த உண்மையை அறிந்தவன் தான். எனவே பெருமானையும் பெருமானது இருப்பிடமாகிய கயிலாய மலையையும் மதித்து போற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். எனினும் தனது உடல் வலிமையின் மீது அவன் கொண்டிருந்த அளவு கடந்த கர்வம் அவனை அறியாமையில் மூழ்குவித்து, கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்யும் வண்ணம் தூண்டியது. வரை=மலை; அரக்கன் இராவணனை மலையின் கீழே அடர்த்து வருத்திய பின்னர், பெருமான் அவன் மீது இரக்கம் கொண்டு பல விதங்களிலும் அருள் புரிந்ததை, பெருமான் புரிந்த மற்றொரு கருணைச் செயலாகிய சந்திரனுக்கு அபயம் அளித்ததை குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். மேகலை என்பது பெண்கள் தங்களது இடுப்பினில் அணியும் ஆபரணம். மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் நிலை, மேகலை அணிந்தவன் என்று பெருமானை குறிப்பிட்டு இங்கே உணர்த்தப் படுகின்றது.

தலைச்சங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.55.8) திருஞானசம்பந்தர், பெருமானை, தனது இடுப்பினில் மேகலை ஆபரணம் அணிந்தவன் என்று குறிப்பிடுகின்றார். திரை=அலைகள்; வரை=மலை; ஆர்ந்த=பொருந்திய, போன்ற, மேகலை என்பது பெண்கள் தங்களது இடுப்பினில் அணியும் ஒரு ஆபரணம். மேகலையாள் என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. திருமீயச்சூர் இளங்கோயிலில் உள்ள அம்பிகை மேகலாம்பிகை என்றே அழைக்கப் படுகின்றாள். மேகலை அணிந்த அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக கொண்டுள்ள இறைவன் என்ற பொருள் பட அரை ஆர்ந்த மேகலையீர் என்று இறைவனை திருஞான சம்பந்தர் இங்கே அழைக்கின்றார். அலைகள் பொருந்திய பெரிய கடலால் சூழப்பட்ட தென்னிலங்கைத் தீவுக்கு அரசனாகிய இராவணனின், மலை போன்று வலிமை வாய்ந்த தோள்கள் கயிலை மலையின் கீழ் அமுக்குண்டு வருந்துமாறு, கால் விரலை ஊன்றி மலையினை அழுத்தும் பெருவீரம் உடையவரே, தனது இடுப்பினில் மேகலை என்ற ஆபரணத்தை அணிந்துள்ள தேவியை உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவரே,அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தினில் முறையாக அமைந்துள்ள கோயிலினை, நீர் உமது கோயிலாகக் கொண்டுள்ளீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

திரை ஆர்ந்த மாகடல் சூழ் தென் இலங்கைக் கோமானை

வரை ஆர்ந்த தோள் அடர விரலால் ஊன்று மாண்பினீர்

அரை ஆர்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை

நிரை ஆர்ந்த கோயிலே கோயிலாக நினைத்தீரே

இடைமருது தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.56.2) மேகலையாள் பாகம் கொண்டீர் என்று இறைவனை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மேகலை எனப்படும் ஆபரணத்தை அணிந்தவளாக மிகவும் அழகுடன் விளங்கும் தேவி என்று இங்கே குறிப்பிடுகின்றார். பூதப் படையை உடையவர் என்று இதே பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பூத கணங்கள் பெருமானைப் புகழ்ந்து பாடல்கள் பாடுவதாக கூறுகின்றார். நீர்=கங்கை; ஆர்ந்த=தங்கிய; நிகழ்வித்தீர்=விளங்குமாறு செய்தவர்: போர்க்கருவியாக இருப்பினும் மழு ஆயுதம் பயன்படுத்தப் படாமல் இரத்தக்கறை ஏதும் படியாமல் வெண்மை நிறத்துடன் இருப்பதால், வெண்மழு என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது. தாருகவனத்து முனிவர்கள், பெருமானை கொல்வதற்காக ஏவிய மழுப்படையினை செயலறச் செய்த பெருமான், தனது கையினில் அந்த ஆயுதத்தை ஏந்திய வண்ணம் காட்சி தருவது உணர்த்தப் படுகின்றது. எந்த ஆயுதத்தாலும் வெல்ல முடியாதவர் சிவபெருமான் என்பது இதன் மூலம் உணர்த்தப் படுகின்றது. ஏர்=அழகு; கங்கை நதி தேக்கி வைக்கப்பட்ட செஞ்சடையை உடைய பெருமானே, தனது நெற்றியில் அழகிய கண் கொண்டு விளங்குபவரே, சிறந்த போர்க் கருவியாகிய வெண் மழுவினை ஏந்தியவரே, சூழ்ந்துள்ள பூத கணங்கள் மகிழ்ந்து உம்மைப் புகழ்ந்து பாடும் வண்ணம் வீற்றிருப்பவரே, அழகிய மேகலை ஆபரணம் அணிந்த பார்வதி தேவியாரை தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவரே, நீர் இடைமருதில் உள்ள சிறப்பு மிகுந்த திருக்கோயிலை, தலைவனாகிய நீர் உறைகின்ற இடமாக கருதி, சென்றடைந்து எழுந்தருளியுள்ளீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்

போர் ஆர்ந்த வெண்மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர்

ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடை மருதில்

சீர் ஆர்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.6.1) அப்பர் பிரான் பார்வதி தேவியை மேகலை ஆபரணம் அணிந்தவள் என்று குறிப்பிடுகின்றார். சிவபெருமான் மீது தீராத காதல் கொண்ட தலைவியின் நிலை கண்டு அவளது அன்னை கூறும் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தனது தலைவன் தன்னுடன் வந்து இணையாததால் மனவருத்தம் அடையும் அப்பர் நாயகி, உடல் மெலிகின்றாள். இதனைக் கண்ட அவளது அன்னை, தனது மகளின் உடல் மெலிவுக்குக் காரணம் ஆய்ந்து அறியும் பொருட்டு, மகளின் நடவடிக்கையை கூர்ந்து கவனிக்கின்றாள். தனது மகள் எப்போதும் சிவபெருமானின்நினைவாகவே, அவனது உருவ அடையாளங்களைச் சொல்லி பிதற்றுவதை உணர்ந்த தாய், அந்த அடையாளங்களைக் கொண்டு தனது மகள், கழிப்பாலையில் உறையும் சிவபெருமானைக் கண்டு காதல் கொண்டுள்ளாள் என்ற முடிவுக்கு வருகின்றாள். இதனை விவரிக்கும் விதமாக, அனைத்துப் பாடல்களும் அமைந்து ஒரு அகத்துறைப் பதிகமாக அமைந்துள்ளது. கன பவளம்=பெரிய பவளம்: தானவன்=தேவர்களுள் ஒருவனாக கருதப் படாமல், தனியாக நிற்கும் ஒப்பற்ற தலைவன், சிவபெருமான். எனவே வானவர்களில் ஒருவனாக அவரை எண்ணுதல் தகாது, அவர் மற்றைய தேவர்களிலிருந்து மாறுபட்டவர் என்று இங்கே அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். தக்கனது பதவிக்கு அஞ்சி, சிவபெருமானை புறக்கணித்து அவன் செய்யும் யாகத்தில் அவிர்பாகம் பெறுவது தவறு என்று தெரிந்தும், அதனைத் தவிர்க்க முடியாமல், அவனது யாகத்திற்குச் சென்ற தேவர்கள், பாற்கடலில் நஞ்சு திரண்டு எழுந்த போது, தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது என்பது தெரியாமல், மிகுந்த பயம் கொண்டு சிவபெருமானிடம் முறையிட்டனர். அடுத்தவரின் பதவியை நினைத்து அவர்க்கு பயப்படுவதும், தங்களை காப்பாற்ற வேறொருவர் தேவைப்படும் நிலையில் இருப்பதும் தெய்வத்தின் குணங்கள் அல்லவே: இந்த இரண்டு நிகழ்ச்சிகளே, தேவர்களும், உலகில் உள்ள மற்ற உயிர் வகைகளில் ஒருவர் என்பதை புலப்படுத்துகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான் சிவபெருமானை அப்பாலைக்கு அப்பாலன் என்று கூறுகின்றார். பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் இறைவனிடத்தில் ஒடுங்கி விடுகின்றன. அவ்வாறு தன்னிடம் ஒடுங்கியுள்ள உயிர்கள், தங்களது ஆணவ மலத்தினை நீக்கிக் கொண்டு உய்யும் பொருட்டு சிவபெருமான் மறுபடியும் ஐந்தொழில்கள் ஆற்ற முனைகின்றான். இந்த ஐந்து தொழில்களை ஆற்றுவதற்கு இடமாக உள்ள இடம் சுத்த மாயா பிரபஞ்சம் அல்லது சுத்த மாயா புவனம் எனப்படுகின்றது. இதனைத் தான் அப்பர் பிரான் இங்கே பிரளயத்திற்கு அப்பாலோர் அண்டம் என்று நின்ற திருத்தாண்டகத்தின் இரண்டாவது பாடலிலும் இந்த பாடலிலும் குறிப்பிடுகின்றார். எனது மகள், தனது பவளம் போன்று அழகிய உதடுகளைக் கொண்ட வாயினால் சொல்லும் சொற்களை நான் கூறுகிறேன்: நீங்கள் கேட்பீர்களாக, தேவர்களுக்கு ஒப்பற்ற தலைவனாக விளங்குபவன் என்றும், சினம் கொள்ளும் சமயத்தில் சிவந்து பவளம் போன்று காட்சி அளிக்கும் திண்ணிய தோள்களின் மேல் சேர்ந்து விளங்கும் வெண்மையான திருநீறு அணிந்தவனே என்றும், அன்னம் போன்ற நடையினையும் பவளங்களின் நிறம் கொண்ட மேகலையை உடையாக அணிந்த உமையம்மையுடன் அண்டங்களையும் கடந்த இடத்தில் உறைபவனே என்றும், எனது மகள் எப்போதும் பிதற்றிக் கொண்டே இருக்கின்றாள். பெரிய அளவிலான பவளங்களைக் கரையில் கடல் சேர்க்கும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும் என்று அப்பர் நாயகியின் கூற்றாக அமைந்த பாடல்.

வனபவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால்

சினபவள திண்தோள் மேல் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின்றாளால்

அனபவள மேகலையொடு அப்பாலைக்கு அப்பாலன் என்கின்றாளால்

கன பவளம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

மீயச்சூர் இளங்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.11.6) அப்பர் பிரான், பிராட்டியை மின்னு மேகலையாள் என்று அழைக்கிறார். மின்னு மேகலையாள் என்பது தலத்து இறைவியின் திருநாமம்; ஒளிவிட்டு மின்னும் மேகலை எனப்படும் ஆபரணத்தை இடையினில் அணிந்த தேவி என்று பொருள்; இன்ன நாள்=இன்றைய நாள். பொன்னின் நிறத்தில் காணப்படும் கொன்றை மலர்களையும், பல பூக்களையும் இணைத்து கட்டப்பட்ட மாலையினையும், நெருக்கமாக உள்ள தனது செஞ்சடையின் மேல் அணிந்துள்ள பெருமான், அந்த சடையின் மேல் பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளார். திருமீயச்சூர் தலத்தில் உள்ள இளங்கோயிலில், மின்னு மேகலையாள் என்ற திருநாமத்தால் அழைக்கப்படும் தேவியிடமிருந்து இன்றைய நாளிலும் அகலாமல் இருப்பவராக பெருமான் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பொன்னம் கொன்றையும் பூவணி மாலையும்

பின்னும் செஞ்சடை மேல் பிறை சூடிற்று

மின்னு மேகலையாளொடு மீயச்சூர்

இன்ன நாள் அகலார் இளங்கோயிலே

பாலைத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.51.9) அப்பர் பிரான், மேகலை ஆபரணத்துடன் இடுப்பினில் நாகத்தை கச்சாக அணிந்தவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். மேகலை=பெண்கள் இடுப்பினில் அணியும் நகை. மாதொரு பாகனாக விளங்கும் பெருமான் என்பதால் மேகலை அணிந்தவராக காணப்படுகின்றார். மேகலை என்ற சொல்லினை நாகத்துடன் இணைத்து, நாகத்தை மேகலையாக அணிந்து கொண்டுள்ளார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மேகத்தினிடையே உலாவும், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவர் சிவபெருமான். மேகலை அணியுடன் நாகங்கள் சூழ்ந்த இடுப்பினை உடையவர் அவர். நல்ல இயல்பினை உடையவளும், இன்பத்தினை அளிக்கக்கூடிய மார்பகங்களை உடையவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்து இருக்கும் சிவபெருமான், திருப்பாலைத்துறையில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. வினை வயப்பட்ட உயிர்கள் இன்ப துன்பங்களை நுகர்ந்து வினைகளைக் கழித்து கொள்ளும் செயலினை பிராட்டி செய்கின்றாள் என்ற பொருள் பட, போகம் தோய்ந்த புணர்முலை மங்கை என்று கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் சிறப்பே. போகமார்த்த பூண் முலையாள் என்பது தானே திருநள்ளாறு தலத்து பிராட்டியின் திருநாமம்.

மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை

நாகம் தோய்ந்த அரையினர் நல்லியல்

போகம் தோய்ந்த புணர்முலை மங்கையோர்

பாகம் தோய்ந்தவர் பாலைத் துறையரே

புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.13.9) அப்பர் பிரான், பிராட்டியை, அரையேறு மேகலையாள் என்று அழைக்கின்றார். விரையேறு=நறுமணம் கமழும்; திரை= அலைகள், இங்கே அலைகள் உடைய கங்கை நதி; அரை=இடை; மேகலை=பெண்கள் இடுப்பினில் அணியும் ஆபரணம்; ஆரிடம்=மற்றவர் அணுகுதற்கு மிகவும் அரிதான இடம். சுடுகாடு; புரை=உயர்வு; நறுமணம் கமழும் திருநீற்றினைத் தனது உடலில் பூசியும், ஆமையோட்டினை தனது மார்பினில் அணிந்தும், ஒரு காதினில் சங்க வெண் தோட்டினை அணிந்தும், இடது கையினில் வீணை ஏந்தியும், அலைகள் நிறைந்த கங்கை நதியை அடக்கிய சடையினில் பிறைச் சந்திரனை சூடியும், காட்சி தரும் பெருமான், தக்கனது சாபத்தால் அழியும் நிலையிலிருந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்து, நான்கு திசைகளிலும் அவனது ஒளி பரவுமாறு அருள் புரிந்தார்; கொழுந்து விட்டெரியும் தீயின் வண்ணத்தில் திருமேனி உடைய பெருமான், தனது இடையினில் மேகலை எனப்படும் ஆபரணத்தை அணிந்த பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டார். ஏனையோர் அணுகுதற்கு அச்சம் கொள்ளும் சுடுகாட்டினில் நடனம் ஆடும் எனது தலைவன், அவ்வாறு ஆடுதலையும் தவிர்த்து விட்டு, சிறந்த காளை வாகனத்தின் மீது ஏறிக்கொண்டு, தனது ஊர் புறம்பயம் என்று சொல்லியவாறு ஆங்கே சென்றுவிட்டார். அவ்வாறு புறம்பயம் சென்ற பெருமான் என்னுடைய உள்ளத்தையும் கவர்ந்து சென்று விட்டார் என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.

விரையேறு நீறணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணைஏந்தித்

திரையேறு சென்னி மேல் திங்கள் தன்னைத் திசை விளங்க வைத்து உகந்த செந்தீவண்ணர்

அரை ஏறு மேகலையாள் பாகமாக ஆரிடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன்

புரையேறு தாம் ஏறிப் பூதம் சூழப் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

மாதொரு பாகனின் திருக்கோலத்தை குறிப்பிடும் களந்தை ஆதித்தேச்சரம் பதிகத்தின் பாடலில் (9.9.9) கருவூர்த் தேவர், மேகலை ஆபரணத்தை குறிப்பிடுகின்றார். இரண்டு செவிகளில் ஒன்றினில் குழை அணிந்தவன் என்று குறிப்பிடுவதன் மூலம், மற்றோர் காதினில் தோட்டினை அணிந்தவன் சிவபெருமான் என்று உணர்த்தும் பாடல், கருவூர்த் தேவர் களந்தை ஆதித்தேச்சரம் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் ஒன்பதாவது பாடலாக உள்ளது. களம்=கழுத்து: நீர்=நீர்மை என்பதன் இடைக்குறை, தன்மை; குமுத மலர் போன்று சிவந்த வாயினையும், கருங்குவளை போன்று கரிய கழுத்தினையும், ஒரு செவியினில் குழை ஆபரணத்தையும், சடையில் புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டு நெளிகின்ற பாம்பினையும், இடது பகுதியில் தூய்மையான மேகலையையும், தாமரை மலர் போன்ற முகத்தினையும் கண்களையும். பொன் மயமான பாதுகைகளையும், களங்கமற்ற தன்மையையும் கொண்டவராக பெருமான் விளங்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இருசெவி ஒரு பால்

விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறிவரி நாகம்

கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர்

அமலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச்சரமே

பொழிப்புரை:

வேதங்கள் உரைத்த பழமையான வழியே நின்று சிவபெருமானையும் அவரது இருப்பிடமாகிய கயிலாய மலையினையும் மதித்து போற்றாமல், கயிலை மலையினை பேர்த்து எடுப்பேன் என்று முயற்சி செய்த இலங்கை அரசனாகிய இராவணனை மலையின் கீழே அடர்த்து, அரக்கனது மலை போன்று வலிமையான தோள்களின் வலிமையை அடக்கிய இறைவன், சந்திரன் பால் கருணை கொண்டு அவனுக்கு மறுவாழ்வு அளிக்கும் வல்லமை வாய்ந்த இறைவன், இராவணன் மீதும் கருணை கொண்டு அவனுக்கு பல வரங்கள் அளித்தான். கரை புரண்டோடும் வெள்ளப் பெருக்கினை உடைய காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள திருவையாறு தலத்தின் மீது மிகுந்த விருப்பம் கொண்டுள்ள இறைவன், தனது இடுப்பினில் மேகலை ஆபரணம் அணிந்து மாதொருபாகனாக தான் விளங்கும் தன்மையை உலகுக்கு உணர்த்தும் இறைவன், திருவையாறு தலத்தினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள தலைவன் ஆவான்.

பாடல் 10:

கோங்கம் கோடல் (2.006) பாடல்கள் 9 தொடர்ச்சி, 10, 11, 12 (திதே 0641)

மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்

காலம் காம்பு வயிரம் கடிகையன் பொற்கழல்

கோலமாய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டதோர்

ஆல நீழல் உளானும் ஐயாறு உடை ஐயனே

விளக்கம்:

காம்பு=மூங்கில்; கடிகை=தோள்வளை; கடிகையன்=தோள்வளை அணிந்தவன்; கால்= அடிப்பகுதி; வாய்மையான்=உண்மையானவன்; மற்ற உயிர்கள் அனைத்தும் ஒரு நாள் அழிந்து விடுவதால், ஒரு நாள் இருந்து மற்றொரு நாள் இறந்து அழிந்து விடுகின்றன. எனவே அவை அனைத்தும் பொய்யானவை. என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் இறைவன் ஒருவனே உண்மையானவன். எனவே தான் அவனை வாய்மையாளன் என்று இங்கே கூறுகின்றார். சோதி மலர்=ஒளி வீசும் தாமரை மலர்; கோலம்=அழகு;

பொழிப்புரை:

திருமாலும், ஒளி வீசும் தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் அறியமுடியாத உண்மைப் பொருளாக இருப்பவன் சிவபெருமான். மூங்கில் மரத்தின் அழகிய அடிப்பாகத்தைப் போன்று வயிரம் பாய்ந்தது போன்று திரண்டு காணப்படும் தோள்களில் வளை ஆபரணத்தை அணிந்த பெருமானின் அழகிய பொற்கழல்கள், ஆலங்கொழுந்து ஈன்ற பழங்களின் நிறத்தினால், பவளம் திரண்டது போன்று காணப்படுகின்ற ஆலமரத்தின் நீழலில் அமர்ந்த வண்ணம் இருக்கின்றான். இத்தகைய பெருமான் ஐயாறு எனப்படும் தலத்தின் தலைவனாக உள்ளான்.

பாடல் 11:

கோங்கம் கோடல் (2.006) பாடல்கள் 9 தொடர்ச்சி, 10, 11, 12 (திதே 0641)

கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையால்

மெய்யைப் போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய்யல

மை கொள் கண்டத்து எண் தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே

ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே

விளக்கம்:

உழல்வார்=திரிபவர்; ஐயம்=பிச்சை; தேர்ந்து=தேர்ந்தெடுத்து, ஆன்மாவின் பக்குவ நிலை கண்டறிந்து, அத்தகைய ஆன்மாக்கள் பிச்சையாக இடும் மலங்களை ஏற்றுக் கொண்டு அருள் புரிதல்; ஐயம் என்ற சொல்லுக்கு சந்தேகம் என்று பொருள் கொண்டு, நமது உள்ளத்தில் உள்ள தடுமாற்றம் சந்தேகம் ஆகியவற்றை தீர்த்து தெளிவான நிலை ஏற்பட அருள் புரிபவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஆல மரத்தின் நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை போக்கி, வேதத்தின் பொருளை தெளிவாக அறிந்து கொள்வதில் அவர்களுக்கு உதவிய பெருமான், நம்மைப் போன்ற உயிர்களின் மனதினிலும் சஞ்சலம் அற்று தெளிவான நிலை ஏற்படுத்துகின்றான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது, இறைவன் உயிர்கள் பால் கொண்டிருக்கும் கருணையை உணர்த்துகின்றது.

பொழிப்புரை:

தங்களது கையினில் உணவை ஏந்திக்கொண்டு உண்பதற்காக திரியும் சமணர்களும், துர்நாற்றம் அடிக்கும் துவர் ஆடையால் தங்களது உடலைப் போர்த்துத் திரியும் புத்தர்களும், பெருமானைக் குறித்து பேசும் சொற்கள் உண்மையான சொற்கள் அல்ல. எனவே அத்தகைய பொய்யான சொற்களை ஒதுக்கி விட்டு, விடத்தை தேக்கியதால் கருமை நிறம் உடையவனும், மூன்று கண்களை உடையவனும் ஆகிய பெருமானின் திருப்பாதங்களை வாழ்த்துவீர்களாக. அவ்வாறு வாழ்த்தினால், பக்குவம் அடைந்த அடியார்களின் நிலையை அறிந்து, அவர்களைத் தேடிச் சென்று அவர்கள் பிச்சையாக இடும் மலங்களை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு முக்தி நிலையினை அளிக்கும் சிவபெருமான், நமக்கு பாதுகாப்பினை அருளுவான். அவனே ஐயாறு தலத்தினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள தலைவன் ஆவான்.

பாடல் 12:

கோங்கம் கோடல் (2.006) பாடல்கள் 9 தொடர்ச்சி, 10, 11, 12 (திதே 0641)

பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினைக்

கலி கடிந்த கையான் கடற் காழியர் காவலன்

ஒலி கொள் சம்பந்தன் ஒண் தமிழ் பத்தும் வல்லார்கள் போய்

மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே

விளக்கம்:

வேள்விகள் செய்வதன் மூலம், கலி புருடனின் தாக்கத்தை குறைக்கலாம் என்ற நம்பிக்கை தேவார முதலிகள் வாழ்ந்த காலத்தில் இருந்து வந்தது. அந்தணர்கள் குலத்தில் அவதரித்து, அவ்வப்போது வேள்வி செய்து வந்த தன்னை கலி கடிந்த கையான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சொல்மாலை என்று தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலில் (4.12.10) அப்பர் பிரான், அப்பூதி அடிகளை அஞ்சிப் போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி என்று குறிப்பிடுகின்றார்.

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்

பஞ்சிக் கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்

அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி

குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடு இயையே

திருஞான சம்பந்தப் பெருமானும், தனது தில்லைத் திருப்பதிகத்தின் (பதிக எண்:1.80) முதல் பாடலில், வேள்விகள் வளர்த்து கலியின் செய்கையை வென்ற மறையவர்கள் என்று தில்லையில் வாழ்ந்த அந்தணர்களை குறிப்பிடுகின்றார். வேதங்களைக் கற்று, கற்ற கல்விக்குத் தக்கவாறு வேள்விகள் வளர்த்த அந்தணர்கள் செய்கையால் கலியை வரவிடாமல் வென்றார்கள் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.

கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாரமே

செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்துப் பாடல் (3.43.4) ஒன்றிலும், திருஞானசம்பந்தர் சீர்காழி அந்தணர்களை கலி கடிந்த கையார் என்று குறிப்பிடுகின்றார். தமது மனதினை வருத்தும் குற்றங்களும், தீவினைகளால் தமது உடலை வருத்தும் நோய்களும், மெலிந்து நம்மை விட்டு விலக வேண்டும் என்று விரும்பும் மனிதர்கள், தங்களது கையினால் வேள்வி வளர்த்துக் கொடிய கலியினால் ஏற்படும் துன்பங்களை ஓட்டும் அந்தணர்கள் வாழ்வதும் கடலால் சூழப்பட்டதும் ஆகிய காழி நகரில் வீற்றிருக்கும் பெருமானின் திருவடிகளை, அலைகள் கொண்ட கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்றுள்ள பெருமானின் திருவடிகளை, போற்ற வேண்டும் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.

நலியும் குற்றமும் நம்முடன் நோய் வினை

மெலியுமாறு அது வேண்டுதிரேல் வெய்ய

கலி கடிந்த கையார் கடற் காழியுள்

அலை கொள் செஞ்சடையார் அடி போற்றுமே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.119.7) திருஞான சம்பந்தர், இந்த தலத்து அந்தணர்களை கலியை வென்ற வேதியர்கள் என்று குறிப்பிடுகின்றார். மண்ணுலகம் என்பது உயிர்கள் தங்களது வினைகளைக் கழித்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. எனவே இங்கே உள்ள உயிர்கள், தங்களது வினைகளுக்கு ஈடாக இன்பமும் துன்பமும் மாறிமாறி நுகர்ந்து கழிக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அனுபவிக்கும் துன்பங்கள் கலி புருடனின் சேர்க்கையால் மேலும் கொடுமையாக உள்ளன. இத்தகைய துன்பங்களை, வேள்வி முதலான செய்கைகளால் வென்ற அந்தணர்கள் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். கலி என்ற சொல்லுக்கு வறுமை என்று பொருள் கொண்டு, வறுமை வாராமல் காக்கும் அந்தணர்கள் என்றும் சிலர் பொருள் கொள்கின்றனர்.

தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கு அருள் என்று

அன்று அரி வழிபடு இழிச்சிய விமானத்து இறைவன் பிறையணி சடையன்

நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை

வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என வினை கெடுமே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.88.2) சுந்தரர், இந்த தலத்து அந்தணர்களை, திடங்கொள் சிந்தையினார் கலி காக்கும் திருமிழலை என்று குறிப்பிடுகின்றார். தங்களது உறுதியான மனத்தினால், எத்தகைய காலத்திலும் தங்களது கடமைகளை, (உலக நலனுக்காக வேள்வி முதலியன செய்தல் மற்றும் செய்வித்தல்), தொடர்ந்து செய்யும் அந்தணர்களால் கலியின் கொடுமை தவிர்க்கப் படுகின்றது என்று இங்கே சுந்தரர் கூறுகின்றார்.

விடம் கொள் மாமிடற்றீர் வெள்ளைச் சுருள் ஒன்றிட்டு விட்ட காதினீர் என்று

திடங்கொள் சிந்தையினார் கலி காக்கும் திருமிழலை

மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும்

அடங்கல் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளிதிரே

பண்டங்கன்=பாண்டரங்கம் எனப்படும் கூத்தினை ஆடுபவன்; திரிபுரங்களை எரித்த மகிழ்ச்சியில் பெருமான் ஆடிய பதினோரு வகை கூத்துகளில் இந்த கூத்து ஒன்றாகும். மேய=பொருந்திய; காவலன்=தலைவன்; பலி திரிந்து உழல்பவன் என்று பெருமானை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உழல்பவன்=வருத்தம் அடைபவன்; விருப்பமுடன் பிச்சை ஏற்கும் பெருமான் என்றும், பலர் இகழ்வதையும் பொருட்படுத்தாமல் பலியேற்கும் பெருமான் என்றும் தேவார ஆசிரியர்கள் மூவராலும் போற்றப்படும் பெருமான், எதற்காக வருத்தம் அடைய வேண்டும். உயிர்கள் தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு, முக்தி அடைந்து தன்னுடன் கலந்து இருப்பதையே பெரிதும் விரும்பும் பெருமான், பக்குவம் அடைந்த உயிர்கள் தங்களது மலங்களைத் தனது ஓட்டினில் பிச்சையாக இட்டு முக்தி நிலை அடைய விரும்பும் உயிர்களைத் தேடிக் கொண்டு பலி ஏற்க வருகின்றான். ஆனால் அந்த நிலையில் உள்ள உயிர்கள் மிகவும் குறைவாக இருப்பதால், அவன் வருத்தம் அடைகின்றான் போலும்.

பொழிப்புரை:

பலியேற்று உலகெங்கும் திரிந்து வருத்தம் அடைபவனும், பாண்டரங்கம் எனப்படும் கூத்தினை திரிபுரங்களை எரித்த மகிழ்ச்சியில் ஆடியவனும், ஐயாறு தலத்தில் பொருந்தி உறைபவனும், ஆகிய பெருமானைப் புகழ்ந்து, கலியின் தாக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் வேள்விகள் செய்யும் உரிமை படைத்தவனும் சீர்காழி நகரத்தின் தலைவனும் ஆகிய ஞானசம்பந்தன் இயற்றியதும், இனிமையான இசையொலியுடன் கூடியதும் சிறந்த தமிழாக கருதப் படுவதும் ஆகிய இந்த பத்து பாடல்களை முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், புகழ் நிறைந்த வானுலகில் பொருந்தியிருக்கும் நிலையான சிறப்பினை பெறுவார்கள்.

முடிவுரை:

ஐந்து விதமான பொருட்களைத் தனது சடையில் சூட்டிக் கொண்டு நடமாடும் பெருமான் என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்டு, ஐந்து வகையான தொழில்களையும், (படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருள் புரிதல்), புரிபவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். ஐவகைத் தொழில்களைப் புரிந்து சர்வ வல்லமை உடையவனாக இருக்கும் இறைவன், மிகவும் எளியவனாக இருக்கும் தன்மை, பதிகத்தின் இரண்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் மூன்றாவது பாடலில், வேறு எவரும் விரும்பி ஏற்றுக் கொள்ளாத பொருட்களை, விருப்பத்துடன் அணிந்து கொள்ளும் பெருமான் என்று பெருமானின் எளிய தன்மையை மீண்டும் குறிப்பிடுகின்றார். இறைவனின் தன்மைகளை புரிந்து கொண்ட ஐயாறு தலத்தின் மகளிர், அவனது புகழினை தீஞ்சுவைப் பாடல்களாக பாட, அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடையும் பெருமான் என்று நான்காவது பாடலில் குறிப்பிட்டு, நாம் எதற்காக பெருமானின் புகழினை பாடல்களாக பாட வேண்டும் என்று நமக்கு திருஞான சம்பந்தர் உணர்த்துகின்றார். பெருமானின் புகழினைப் பாடும் நாம், அடுத்து பெருமான் விரும்பும் பொருட்களைக் கொண்டு அவனை நீராட்ட வேண்டும் என்று ஐந்தாவது பாடல் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். வாழ்க்கை நெறிகளை எடுத்துரைக்கும் வேதங்களையும் புராணங்களையும் உலகுக்கு முதன்முதலாக உணர்த்தியவன் பெருமான் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அனைத்துப் பொருட்களுக்கு மூல காரணமாக இருப்பவன் பெருமான் தான் என்பதை ஏழாவது பாடலில் உணர்த்தும் திருஞானசம்பந்தர், பெருமானின் இத்தகைய தன்மையைக் கண்டு அடியார்கள் வியப்படைந்து அவனை மேன்மேலும் புகழ்கின்றனர் என்று எட்டாவது பாடலில் கூறுகின்றார். பெண்மையின் விருப்பத்தை மதித்து மாதொருபாகனாக திகழ்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாக பெருமான் இருக்கும் நிலை ஒன்பதாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. சனகாதி முனிவர்களின் ஐயங்களை போக்கி வேதங்களின் பொருளை தெளிவாக உலகு அறிய வழி வகுத்தவன் பெருமான் என்று பத்தாவது பாடலில் உணர்த்துகின்றார். அவனை வாழ்த்தும் அடியார்கள் மனத்தெளிவு அடைந்தவர்களாக நிறைந்த வாழ்க்கை வாழ வழிவகுக்கும் பெருமான் என்று பதினோராவது பாடலில் கூறுகின்றார். பெருமானின் பெருமையை உணர்த்தும் பாடல்களை பாடி அவனை வழிபடும் அடியார்கள் வானுலகில் சிறந்த இடத்தைப் பெற்று சிறப்பாக இருப்பார்கள் என்று கடைப் பாடலில் குறிப்பிட்டு, தேவாரப் பாடல்கள் பாடுவதால் நாம் அடையவிருக்கும் பலனை, குறிப்பிடுகின்றார். பெருமானின் பெருமைகளையும் அவர் அருள் புரியும் தன்மைகளையும் திருஞானசம்பந்தரின் பதிகத்தின் மூலம் தெரிந்து கொண்ட நாம், அவரைப் போற்றி வழிபட்டு, இம்மையிலும் மறுமையிலும் இன்பமுடன் வாழ்வோமாக.



Share



Was this helpful?