இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


குண்டைகுறட்பூதம்

குண்டைகுறட்பூதம்

1.046 குண்டைக் குறட்பூதம் திருவதிகை வீரட்டம் தக்கராகம்

பின்னணி:

தமது ஐந்தாவது தல யாத்திரையில் பல சோழநாட்டுத் தலங்களும், பாண்டி நாட்டுத் தலங்களும் சென்று ப்ரமனைப் பணீந்து வணங்கி, பல பதிகங்கள் பாடிய திருஞானசம்பந்தர், சீர்காழி த்லம் திரும்பிய பின்னர், சில நாட்கள் கழித்து காஞ்சிபுரம் உள்ளிட்ட தொண்டை நாட்டுத் தலங்கள் செல்லும் விருப்பம் உடையவராக, தனது ஆறாவது தலயாத்திரையை தொடங்குகின்றார். முதலில் தில்லைச்சிதம்பரம் சென்ற திருஞானசம்பந்தர், பின்னர் திருத்தினை நகர்,மாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூர், வடுகூர், திருவக்கரை, அரசிலி மற்றும் இரும்பை மாகாளம் ஆகிய தலங்கள் சென்ற பின்னர், திருவதிகை வீரட்டானம் வந்தடைந்தார். அப்போது பெருமான் பூத கணங்கள் புடை சூழ தான் நடனம் ஆடும் காட்சியை திருஞானசம்பந்தருக்கு காட்டி அருளினார் என்று பெரியபுராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். இந்த அதிசயம் நிகழ்ந்த பின்னர், பெருமானைப் புகழ்ந்து பாடிய பதிகம் இந்த பதிகம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமான் வீரட்டானத்தில் நடனம் ஆடியதாக திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திரிபுரத்து அரக்கர்களை வென்ற பின்னர்,பெருமான் நடனம் ஆடியது நமது நினைவுக்கு வருகின்றது. வேத பாரகர்= வேதத்தில் கரை கண்டவர்; பெருமானின் அருளால், எண்ணரிய சிவஞானம் கலந்து கொடுக்கப் பட்ட பாலை குடித்த திருஞானசம்பந்தர் வேதங்களில் தேர்ச்சி பெற்று இருந்தமையில் வியப்பு ஏதும் இல்லை அல்லவா. வீரஸ்தானம் என்ற வடசொல் வீரட்டானம் என்று தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளது. திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து வீழ்த்திய இடமாக இந்த தலம் கருதப்படுகின்றது.

ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீரட்டானம் சென்றணைபவர் முன்னே

பூதம் பாட நின்றாடுவார் திருநடம் புலப்படும்பை காட்ட

வேதபாரகர் பணிந்து மெய் உணர்வுடன் உருகிய விருப்போடும்

கோதிலா இசை குலவு குண்டைக் குறட் பூதம் என்றெடுத்து ஏத்தி

பாடல் 1

குண்டைக் குறட் பூதம் குழும அனலேந்திக்

கெண்டைப் பிறழ் தெண்ணீர்க் கெடில வடபக்கம்

வண்டு மருள் பாட வளர் பொன் விரிகொன்றை

̀ விண்ட தொடையலான் ஆடும் வீரட்டானத்தே

விளக்கம்:

கெடில நதியின் வடக்கே இந்த தலம் இருக்கும் செய்தி இங்கே குறிப்பிடப்படுகின்றது. குண்டை= பருமானான; குறள்=குள்ளமான; பிறழ்ந்து=புரண்டு விளையாடும்; மருள் என்பது மருளிந்தளம் என்ற பண்ணை குறிக்கும் என்று தருமபுரம் ஆதீனக்குறிப்பு விளக்கம் அளிக்கின்றது. விண்ட= மலர்ந்த;தொடை=மாலை; தொடையலான்=மாலையை அணிந்தவன்: பெருமான் அணிந்துள்ள கொன்றை மலர் மாலை, அன்றலர்ந்த மலர்கள் கொண்ட மாலை என்பதால், அதனில் உள்ள தேனைப் பருக வரும் வண்டுகள் ரீங்காரம் இடுவது இன்னிசை பாடுவதாக குறிப்பிடப் படுகின்றது. பெருமான் அணிந்துள்ள கொன்றை மலரைச் சுற்றி வண்டுகள் இன்னிசை பாடிக்கொண்டிருக்கும் காட்சி, பெருமானைச் சார்ந்துள்ள அடியார்கள் பெருமானின் புகழினை இன்னிசைப் பாடல்களாக பாடுவதை நினைவூட்டுகின்றது என்ற விளக்கமும் அறிஞர்களால் அளிக்கப் படுகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அதிகை வீரட்டானம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். அதிகை என்பது தலத்தின் பெயர். வீரட்டானம் என்பது திருக்கோயிலின் பெயர். மருள் என்பதற்கு மயக்கம் என்று பொருள் கொண்டு, தேனுண்ட மயக்கத்தில் வண்டுகள் பாடுவதாக சொல்கின்றார் என்றும் பொருள் கொள்ளலாம்.

பொழிப்புரை:

பருத்து குள்ளமான உருவத்துடன் காணப்படும் பூத கணங்கள் புடை சூழ, தனது கையில் தீப்பிழம்பை ஏந்தியவனாக காட்சி அளிக்கும் பெருமான், தேன் குடித்த மயக்கத்தில் ரீங்காரத்துடன் இன்னிசை பாடும் வண்டுகளால் சூழப்பட்டதும் நறுமணம் வாய்ந்ததும், அன்றலர்ந்ததும், பொன்னிறத்தில் அழகாக விரிந்து மலர்ந்து காணப்படுவதும் ஆகிய கொன்றை மலர் மாலைகளை அணிந்த பெருமான், திருவதிகை வீரட்டானம் தலத்தில் நடனமாடுகின்றான். இந்த தலம், கெண்டை மீன்கள் புரண்டு விளையாடுவதும் குளிர்ந்த தெளிந்த நீரினை உடையதும் ஆகிய கெடில நதியின் வடபக்கத்தில் உள்ள தலமே திருவதிகை.

பாடல் 2

அரும்பும் குரும்பையும் அலைத்த மென்கொங்கைக்

கரும்பின் மொழியாளோடு உடன் கை அனல் வீசிச்

சுரும்புண் விரி கொன்றைச் சுடர் பொற்சடை தாழ

விரும்பும் அதிகையுள் ஆடும் வீரட்டானத்தே

விளக்கம்:

அலைத்த=வருந்தச் செய்த, வருந்தும் வண்ணம் வெற்றி கொண்ட; பிராட்டியின் மார்பகங்கள் மென்மையிலும் வடிவத்திலும் தாமரை அரும்பு மற்றும் குரும்பை ஆகியவற்றை வெற்றி கொள்ளும் வகையில் உள்ளன என்று கூறுகின்றார். சுரும்பு=வண்டுகள்; இந்த பாடலில் கரும்பின் மொழியாள் என்று பிராட்டியை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பிராட்டியின் மொழி இனிமை, கரும்பு, தேன், பால், பாகு ஆகிய பொருட்களின் இனிமைக்கும், மழலை,குயில், கிளி, ஆகியவற்றின் குரல் இனிமைக்கும், வீணை, குழல், யாழ் ஆகிய கருவிகள் எழுப்பும் இன்னிசைக்கும் இனிமையான பண்ணுக்கும், பல திருமுறைப் பாடல்களில் ஒப்பிடப் படுகின்றது. கரும்பின் இனிமையுடன் ஒப்பிடப்படும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம். புறம்பயம் தலத்தின் பிராட்டியின் திருநாமம், கரும்படு சொல்லம்மை என்பதாகும். இந்த திருநாமம் திருஞானசம்பந்த்ர் இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.30.5) சொல்லப் படுகின்றது. சுரும்பு=வண்டு; பிணியற்றவன் பெருமான். ஆமயம் என்றால் நோய் என்று பொருள். நோய்கள் ஏதும் அணுகாத தன்மை உடைய பெருமானை நிராமயன் என்று வடமொழியில் கூறுவார்கள். தனது நோயினைத் தீர்த்து தன்னை ஆட்கொண்டவன் பெருமான் என்பதை உணர்த்தும் பொருட்டு ஆமயம் தீர்த்து என்னை என்று ஒரு பதிகத்தினை அப்பர் பிரான் தொடங்குகின்றார். பெரும் பிணிகள், பிறப்பு மற்றும் இறப்பு இல்லாதவனும், தனது உடலின் ஒரு பாகத்தில் கரும்படுசொல்லம்மை என்று அழைக்கப்படும் உமையன்னையை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு உள்ளவனும், வண்டுகள் தேனை உண்பதால் அரும்புகள் மலராக மலர்வதும் இதழ்கள் பிரிந்து எழுவதும் ஆகிய கொன்றை மலர்களை விரும்பி அணிபவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்கின்ற பெருமான் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

பெரும்பிணி பிறப்பினொடு இறப்பிலை ஒர் பாகம்

கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்

சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை

விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே

பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.2.10) திருஞானசம்பந்தர் பிராட்டியை, கரும்பன்ன மென்மொழியாள் என்று குறிப்பிடுகின்றார். கலவம்= தோகை; கலவ மாமயிலார்=தோகை உடைய அழகிய மயில் போன்ற; இயல்=சாயல்; கதிர் வாள் நுதல்=ஒளிக்கதிர்களை வீசும் நெற்றி; அலவை=தகாத சொற்கள்; பலரும் பெருமானின் தன்மைகளை நன்கு உணர்ந்து அவரைப் புகழ்ந்து பேச, அந்த தன்மையிலிருந்து மாறுபட்டு தகாத சொற்களைப் பேசும் சமணர்கள் மற்றும் புத்தர்கள் என்று கூறுகின்றார். ஆதர்=அறிவற்ற மூடர்கள்;நண்ணுதல்=நெருங்கி அணுகுதல்: பெருமானை மனம் வாக்கு மொழியால் அணுகி வழிபடுதல்; சிவபோகத்தை நல்குவான் என்று பொருள் கொள்ளவேண்டும். ஆக்கினான் என்ற சொல் மூலம், சமணர்கள் மற்றும் புத்தர்களின் நிலைக்கு பெருமானே காரணம் என்று கூறுகின்றார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற திருவாசகத் தொடர் உணர்த்துவது போன்று, அவன் அருள் இருந்தால் தான் அவனைப் பணிந்து நாம் வழிபடமுடியும். அவ்வாறு நாம் பெருமானை வழிபடுவதற்கும், சென்ற பிறவிகளில் நாம் செய்த புண்ணியமே காரணம் என்பதையும் நமக்கு அருளாளர்கள் உணர்த்துகின்றனர். எனவே சமணர்களும் புத்தர்களும் சென்ற பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாக, இந்த பிறவியில் பெருமானை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடையும் பாக்கியம் இல்லாதவர்களாக விளங்குகின்றனர். உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப இந்த பிறவியின் தன்மை அமைகின்றது என்பதையும் அதனை நிர்ணயம் செய்பவ்ன் பெருமான் ஒருவன் தான் என்பதையும் நாம் அறிவோம். எனவே சமணர்களாகவும் புத்தர்களாகவும் பிறந்து, பெருமானை அவர்கள் வழிபடாது இருக்கும் தன்மையை உண்டாக்கியவன் இறைவன் என்பதும் புலனாகின்றது. இதனை உணர்த்தும் பொருட்டே, இந்த பாடலில் தேரமண் ஆதர்கள் ஆக்கினான் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

கலவ மாமயிலார் இயலாள் கரும்பன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல்

குலவு பூங்குழலாள் உமை கூறனை வேறுரையால்

அலவை சொல்லுவார் தேரமண் ஆதர்கள் ஆக்கினான் தனை நண்ணலும் நல்கும் நற்

புலவர் தாம் புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே

கரும்பிலிருந்து கிடைக்கும் பாகினும் இனிய மொழியை உடையவள் என்று பிராட்டியின் மொழி இனிமையை திருஞானசம்பந்தர், பூந்தராய் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) பதிகத்தின் பாடலில் (3.13.4) குறிப்பிடுகின்றார். நாகம்=வாசுகி பாம்பு; வரை=மேரு மலை; மாகம்= ஆகாயம்;மாகமார்=ஆகாயத்தில் பொருந்திய; மறித்த=தடுத்து அழித்த; பூகம்=கமுகு; பாகு அமர் பொழி=வெல்லப்பாகு போன்ற இனிமை சேர்ந்த மொழி; பூந்தராய் தலத்தினில் வீற்றிருக்கும் பெருமானைக் கண்டு, அவரை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடையுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

நாகமும் வரையுமே நாணும் வில்லுமா

மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்

பூகமார் பொழிலணி பூந்தராய் நகர்ப்

பாகமர் பொழியுமை பங்கர் காண்மினே

திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.24.1) அப்பர் பிரான், கரும்பு படர்ந்த இனிய சொல் உடைய பிராட்டி என்று கூறுகின்றார். கொப்பளித்த=படர்ந்த; இருள்+பு என்பதன் மருவு இரும்பு என்பது. தான் என்ற அகந்தையால் தாருகவனத்து முனிவர்களால் வேள்வியிலிருந்து, பெருமானை கொல்வதற்காக ஏவப்பட்ட யானை; இரும்பினை ஒத்த நிறத்தை உடைய யானை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.ஈருரி= ஈரப்பசை மிகுந்த தோல்; இரத்தப்பசை மிகுந்த தோலை இறைவன் போர்த்துக் கொண்ட செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. காரிகை=இங்கே பார்வதி தேவியை குறிக்கும். சுரும்பு=வண்டு இனத்தில் ஒன்று. சுரும்பு கொப்பளித்த கங்கை, வண்டுகள் தேன் உண்பதற்காக மொய்க்கும் தன்மை உடைய மலர்களை அடித்துக்கொண்டு வரும் கங்கை நதி; துவலை=துளி;

இரும்பு கொப்பளித்த யானை ஈருரி போர்த்த ஈசன்

கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகமாகச்

சுரும்பு கொப்பளித்த கங்கைத் துவலை நீர் சடையிலேற்ற

அரும்பு கொப்பளித்த சென்னி அதிகை வீரட்டனாரே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.28.7) கரும்பின் இன்மொழிக் காரிகை என்று பார்வதி தேவியை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அடியார்கள் விரும்பும் பல வேறுவேறு வடிவங்களை உடையவன் பெருமான்; அவன் வேதங்கள் வெளிப்படுத்தும் உருவமும் தன்மையும்கொண்டவனாக இருக்கின்றான். கரும்பு போன்று இனிய மொழிகள் பேசும் தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்று, அந்த தேவியின் வண்ணமாகவிளங்குபவனும் அவனே; தன்னை விரும்பும் அடியார்களின் வினைகளைத் தீர்ப்பது அவனது பண்பு. மலராத அரும்பு, தனது நறுமணத்தை தன்னுள்ளேஅடக்கி வைத்திருப்பது போன்று தனது புகழினை வெளிக்காட்டாமல் அடக்கி வைத்துள்ளவன் இறைவன். இவ்வாறு பல தன்மைகளையும் பண்புகளையும்உடையவனே திருவையாறு தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவான்.

விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்

கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்

விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும்

அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே

தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.1.6) அப்பர் பிரான் தேவியை கரும்பமரும் மென் மொழியாள் என்று குறிப்பிடுகின்றார்.சுரும்பு=வண்டு; துளக்கு=அசைவு. காற்றில் அசைவதால் விளக்குகள் அணைந்து போவதுண்டு; அவ்வாறின்றி என்றும் அணையாத சுடர் விளக்காக பெருமான் விளங்கும் தன்மை, துளக்கிலா விளக்கு என்ற தொடர் மூலம் விளக்கப் படுகின்றது. வேதங்களின் ஆறு அங்கங்களாக கருதப்படுவன: சிக்ஷை,வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிடம், கல்பம் என்பன. வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்களைப் பற்றி கூறுவது சிக்ஷை எனப்படும் பகுதி.எழுத்துக்கள் ஒலிக்கப்பட வேண்டிய முறை, மாத்திரை அளவுகள், மற்றும் அந்தந்த எழுத்துக்களுக்கு உரிய தேவதைகள் முதலிய பல விவரங்கள் அடங்கிய பகுதிகள் சிக்ஷை என்று அழைக்கப்படும். பல எழுத்துக்களால் உருவான சொற்களைப் பற்றி கூறுவது வியாகரணம். சந்தஸ் என்பது வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்களின் எழுத்து எண்ணிக்கையை குறிக்கும் பகுதியாகும். நிருக்தம் என்றால் விளக்கிச் சொல்லுதல் என்று பொருள்.வேதங்களில் வரும் சொற்களுக்கு விளக்கம் அளிக்கும் வேதத்தின் பகுதிகள் நிருக்தம் என்று அழைக்கப்படுகின்றன. ஜோதிடம் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியான கணிதத்தில், கால தத்துவங்கள், வருடம், அயனம், திதி, வாரம், மாதம், வளர்பிறை/தேய்பிறை விவரங்கள் மற்றும் அந்தந்த காலங்களில் செய்யக்கூடிய காரியங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியான ஹோரையில், இதுவரை நடந்த சம்பவங்கள், தற்போது நடக்கும் சம்பவங்கள், இனி நடக்க இருக்கும் சம்பவங்கள் என்பவை கோள்களின் பயணத்தின் அடிப்படையில் கணித்து சொல்லப்படுகின்றன. கல்பம் என்றால் பிரயோகம் என்று பொருள்; வேதங்களில் சொல்லப் பட்டுள்ள கர்மாக்களை செய்யவேண்டிய வழிமுறைகள் அடங்கிய பகுதிகள் கல்பம் என்று அழைக்கப்படுகின்றன

கரும்பமரும் மொழி மடவாள் பங்கன் தன்னைக் கனவயிரக் குன்று அனைய காட்சியானை

அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை அருமறையோடு ஆறங்கம் ஆயினானைச்

சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென்னாரூர்ச் சுடர்க் கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க

பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.51.6) அப்பர் பிரான், தேவியை இன்சொல் கரும்பனையாள் என்று குறிப்பிடுகின்றார்.ஏரார்=அழகு வாய்ந்த; தில்லை சிதம்பரம் தலத்தில் நடராஜப்பெருமானின் சன்னதிக்கு பின்னர் கிழக்கு பார்த்த சன்னதியில் மூலட்டானர் உறைகின்றார்.இந்த சன்னதி இங்கே குறிப்பிடப்படுகின்றது. ஏத்த=புகழ்ந்து வழிபட;

பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பாழியார் பெரும்பற்றப் புலியூர் மூலட்டானத்தார்

இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏரார் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன்சொல்

கரும்பனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார்

விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே

பொழிப்புரை:

தாமரை அரும்பு மற்றும் குரும்பை ஆகியவற்றை அழகால் வெற்றி கொண்ட மென்மையான மார்பகங்களை உடையவளும், கரும்பு போன்று இனிய மொழிகளை பேசுபவளும் ஆகிய உமை அன்னையுடன் கூடியவராக விளங்கும் பெருமான், அனல் ஏந்திய தனது கையினை வீசிக்கொண்டும், வண்டுகள் படிந்து தேனை உண்பதால் விரிந்து காணப்படும் கொன்றை மலர்கள் கூடியதும். பொன் போன்று ஒளிவீசுவதும் ஆகிய சடை தாழவும், மிகுந்த விருப்பத்துடன் திருவதிகை வீரட்டானம் தலத்தில் நடனம் ஆடுகின்றார்.

பாடல் 3

ஆடல் அழல் நாகம் அரைக்கிட்டு அசைத்தாடப்

பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான்

மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள்

வேடம் பல வல்லான் ஆடும் வீரட்டானத்தே

விளக்கம்:

படுதம் என்பது கூத்தில் ஒரு வகை, சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில் இந்த நடனத்திற்கு விளக்கம் அளிக்கப்ப்டுகின்றது. பல தேவாரப் பாடல்களில் பெருமான் இந்த கூத்து ஆடும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. பலியேற்கச் செல்லும் போது பாடியும் ஆடியும் செல்வது பெருமானின் பழக்கம்.பக்குவப்பட்ட உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை பிச்சையாக அளிப்பதை எதிர்பார்த்து மிகவும் மகிழ்வுடன் பெருமான் செல்வதால், அந்த மகிழ்ச்சி ஆடலாகவும் பாடலாகவும் வெளிப்படுகின்றது.

பறியலூர் வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பாடலிலும் (1.134.5) இந்த கூத்தினை படுதம் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.கரிந்தார்=இறந்தவர், சுடுகாட்டு நெருப்பினில் எரிந்து கருகிய தன்மையுடன் காணப்படும் உயிரற்ற உடல்கள்; புரிந்தார்=வினைகளை புரிந்தவர்; தெரிந்தார் மறையோர்=தெரிந்து ஆர் மறையோர்=வேதங்களை ஆராய்ந்து அறிந்து கொண்ட அந்தணர்கள்; இடுகாடு என்பதற்கு பிரளய காலத்தில் உலகின் நிலை என்று பொருள் கொள்ள வேண்டும். ஊழிக்காலத்தின் முடிவினில், அனைத்து உல்கப் பொருட்களும் உலகில் உள்ள அனைத்து உடல்களும் முற்றிலும் அழிந்த பின்னர், உலகினில் எஞ்சி இருப்பது சாம்பல் மட்டுமே. அந்த சமயத்திலும் அழியாமல் இருக்கும் பெருமான், அந்த சாம்பலை பூசிக் கொண்டு, தான் ஒருவன் மட்டுமே என்றும் நிலையானவன் என்றும் மற்ற அனைத்துப் பொருட்களும் உயிர்களும் நிலையற்றவை என்றும் உணர்த்துகின்றார். மேலும் இவ்வாறு அனைத்துப் பொருட்களையும் எரித்து அழித்த ஊழித்தீயினில் நின்ற வண்ணம் பெருமான் அப்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் நடனம் ஆடுகின்றார். அந்நாள் வரை எண்ணற்ற பிறவிகள் எடுத்து, அத்தகைய பிறவிகளில் இன்ப துன்பங்களை அனுபவித்து, களைத்திருக்கும் உயிர்களுக்கு தேவைப்படும் இளைப்பாற்றலை வழங்கியதை நினைத்து பெருமான் மகிழ்ச்சி அடைந்து நடனம் ஆடுகின்றார். பின்னர், இளைப்பாறும் பொருட்டு தனது வயிற்றில் ஒடுங்கிய உயிர்களை விடுவிக்கும் பெருமான், அந்த உயிர்கள் மலங்களுடன் பிணைந்து இருப்பதை கண்ணுற்று, அந்த உயிர்கள் தமது மலங்களை நீக்கிக் கொண்டு மலமற்றவையாகத் திகழ்ந்து முக்தி உலகினை அடைந்து நிலையான பேரின்பத்தில் ஆழ வேண்டும் என்று விரும்புகின்றார். அதற்காக மீண்டும் உலகினைப் படைத்து, அந்த உயிர்கள் தகுந்த உடல்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்று திருவுள்ளம் கொள்கின்றார். இவ்வாறு உயிர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்ததை நினைத்து மகிழும் பெருமான், தொடர்ந்து நடனம் ஆடுகின்றார். இவ்வாறு மேற்கண்ட இரண்டு காரணங்கள் பெருமானுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதால் அந்த மகிழ்ச்சி ஆரவாரம் மிகுந்த நடனமாக, கால்களைப் பெயர்த்து வீசியாடும் நடனமாக வெளிப்படுகின்றது.

கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி

புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும்

தெரிந்தார் மறையோர் திருப்பறியலூரில்

விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத்தானே

கடவூர் வீர்ட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.80.3) திருஞானசம்பந்தர் பெருமானை படுதம் பலவும் பயில்வார் என்று குறிப்பிடுகின்றார்.ஈடல்=ஒப்பில்லாத; இசைய=விருப்பத்துடன்; பயில்வார்=தொடர்ந்து ஒரு செயலைச் செய்தல்; இந்த பாடலில் இசைக்கும் இசைக்கருவிகளின் பின்னணியில் பாடுவதும் படுதம் எனப்படும் கூத்தினை ஆடுவதும் பெருமானின் செயல்களாக உணர்த்தப்படுகின்றன. ஒப்பற்ற இடபத்தின் மீது மிகுந்த விருப்பமுடன் செல்லும் விகிர்தனார், தனது கையில் மழு ஒன்றினை ஏந்திய வண்ணம் காட்சி தரும் இறைவனார், காட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள இறைவனார், கடவூர் மயானத்தில் உறைகின்றார். இசைக்கருவிகளுக்கு ஏற்ப தொடர்ந்து பாடியும் படுதம் எனப்படும் கூத்தினை ஆடியும் செல்லும் இறைவர், படம் எடுத்தாடும் பாம்பினைத் தந்து உடலின் பல இடங்களில் பொருத்தியவராக காணப்படுகின்றார். அவரே பெருமான் அடிகள் என்று அழைக்கப்படும் எமது தலைவராவார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஈடலிடப மிசைய வேறிமழுவொன் றேந்திக்
காடதிடமா வுடையார் கடவூர்மயான மமர்ந்தார்
பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார்
ஆடலரவ முடையார் அவரெம்பெருமா னடிகளே

திருமீயச்சூர் தலத்தின் மீது அருளிய பாடலிலும் பெருமான் உமை அன்னையுடன் இணைந்த மாதொருபாகனாக இந்த கூத்தினை ஆடுவதாக திருஞானசம்பந்தர் கூறுகின்றார். வேகமத யானை=வேகத்துடன் பெருமானை எதிர் நோக்கி வந்த மத யானை; பொதுவாக யானைகள் நல்ல இயல்பினை கொண்டவை. மனிதர்களுடன் நட்பாக பழகும் தன்மை கொண்டவை என்பதால் நல்ல யானை என்று அதன் பொது இயல்பினை குறிப்பிடுகின்றார்.நம்பன்=எல்லா உயிர்களாலும் விரும்பப் படுபவன்;

வேக மத நல்லியானை வெருவ உரி போர்த்து

பாகம் உமையோடாக படிதம் பல பாட

நாகம் அரைக்கசைத்து நடமாடிய நம்பன்

மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே .

தாளத்திற்கு ஏற்ப தனது கால்களைப் பெயர்த்து பெருமான் படுதம் எனப்படும் நடனம் ஆடுவதாக அப்பர் பிரான் பேரெயில் தலத்து பதிகத்தின் பாடலில் குறிப்பிடுகின்றார். பாணி=பாட்டுக்கு இசைக்கப் படும் தாளம்; பாணியார்=தாளத்திற்கு பொருந்தும் வண்ணம் பாடும் வல்லமை பெற்றவர்; தாளத்துடன் ஒத்து பாடப்படும் பாடல்களுக்கு தகுந்த வண்ணம் கால் பெயர்த்து நடனம் ஆடும் வல்லமை உடையவர்; தூணி=அம்பறாத்தூணி, எடுக்க எடுக்க குறையாமல் அம்புகள் கொடுக்கும் தன்மை உடைய அம்பறாத்தூணியையும் பாசுபத அத்திரத்துடன் அர்ஜுனனுக்கு பரமன் அளித்தார் என்று மகாபாரதம் குறிப்பிடுகின்றது. மாணி=பிரம்மச்சாரி; திருமால் எடுத்த வாமன அவதாரம் உணர்த்தப்படுகின்றது. மாணியாய் மண் அளந்தவன்=வாமனனாக மூன்றடி மண் கேட்டு, திரிவிக்ரமனாக மூன்று உலகங்களையும் அளந்த திருமால்; திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவராலும் போற்றப்பட்ட பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.

பாணியார் படுதம் பெயர்ந்து ஆடுவர்

தூணியார் விசயர்க்கு அருள் செய்தவர்

மாணியாய் மண் அளந்தவன் நான்முகன்

பேணியார் அவர் பேரெயில் ஆளரே

ஆடல் அழல் நாகம்=படமெடுத்து ஆடும் தன்மை கொண்டதும், நெருப்பு போன்று கொடிய விடத்தை உடையதும் ஆகிய பாம்பு; அரை=இடுப்பு; பெருமான் இசை நுணுக்கங்களை அறிந்தவனாக உரிய இசையுடன் பாடுவதாலும், வேதங்களுக்கு உரிய விளக்கம் அளித்து கேட்போரின் சந்தேகங்களை தீர்க்கும் ஆற்றல் உடையவனாக இருப்பதாலும், மறை வல்லான் என்று கூறுகின்றார். சனகாதி முனிவர்களுக்கு பெருமான் வேதங்களின் பொருளை உணர்த்தி அவர்கள் கொண்டிருந்த ஐயங்கள் போக்கியதை நாம் அனைவரும் அறிவோம். நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு வேதங்களின் பொருளை எடுத்துரைத்த வரலாறு திருவிளையாடல் புராணம் வேதம் விரித்த படலத்தில் விவரமாக சொல்லப்படுகின்றது. மேலும் பார்வதி தேவிக்கு வேதங்கள் மற்றும் ஆகமங்களின் உபதேசம் செய்ததும் திருமுறைப் பாடல்களிலும், உத்தரகோசமங்கை தல புராணத்திலும் சொல்லப் படுகின்றது. முகடு-வீட்டின் உச்சி;

வேடம் பல வல்லான்=பற்பல வேடங்களை மிகவும் பொருத்தமாக ஏற்றுக்கொள்ளும் ஆற்றல் உடையவன்; பெருமானின் திருக்கோலங்களை,இருபத்தைந்து மாகேச்சுர மூர்த்தங்கள் என்றும் அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் (அறுபத்து நான்கு திருக்கோலங்கள்) நூற்றெட்டு கோலங்கள் என்றும் பல வகையாக பிரித்து கூறுகின்றனர். இந்த திருக்கோலங்கள் தவிர்த்து, தனது அடியார்களுக்கு அருள் புரியவும், அவர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கவும், பெருமான் பல வேடங்கள் தரித்ததை நாம் பெரிய புராணம் மற்றும் திருவிளையாடல் புராணம் ஆகிய நூல்களிலிருந்தும் அறிகின்றோம்.இந்த புராணங்களில் சொல்லப் படாத வேடங்கள் பலவற்றையும் தரித்தவர் பெருமான். இந்த தன்மையைத் தான் பல பல வேடமாகும் பரன் நாரிபாகன் எங்கள் பரமன் என்று கோளறு திருப்பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் உண்ர்த்துகின்றார்.

பொழிப்புரை:

படமெடுத்தாடும் இயல்பினை உடையதும், நெருப்பு போன்று கொடிய விடத்தை உடையதும் ஆகிய பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சாக இறுகக் கட்டிய பெருமான், தனது விருப்பம் போன்று அந்த பாம்பினை அசைத்து ஆட்டுகின்றான். நான்மறைகளையும் உரிய இசையுடன் பொருத்தி பாடுவதிலும்,நான்மறைகளின் பொருளை ஐயம் திரிபற பலருக்கும் விரித்து விளக்கம் அளிப்பதிலும் வல்லவனாக பெருமான் விளங்குகின்றான். அவன் கால்களைப் பெயர்த்து படுதம் எனப்படும் நடனம் ஆடுவதிலும் மிகவும் வல்லவன், தனது அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு எண்ணற்ற வேடங்கள் எடுப்பவன் ஆவான். இத்தகைய ஆற்றல் கொண்ட இறைவன், சந்திரன் தோய்ந்து செல்லும் வண்ணம் உயர்ந்த மாடவீடுகள் கொண்ட திருவதிகை தலத்தினில் நடனம் ஆடுபவனாக விளங்குகின்றான்.

பாடல் 4

எண்ணார் எயில் எய்தான் இறைவன் அனலேந்தி

மண்ணார் முழவு அதிர முதிரா மதிசூடிப்

பண்ணார் மறை பாட பரமன் அதிகையுள்

விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே

விளக்கம்:

எண்ணார்=சிவநெறியை நினைத்து அதன் வழி நடவாத திரிபுரத்து அரக்கர்கள்; எயில்=அரண்; இங்கே திரிபுரத்து அரக்கர்களுக்கு வலிமை வாய்ந்த அரணாக விளங்கிய மூன்று பறக்கும் கோட்டைகள்; மண்=கருமை நிறத்து மண் போன்ற பொடி; மத்தளம் வாசிப்போர் சீரான ஓசை எழுப்புவதற்காக சாந்து போன்று மண் போன்ற ஒரு பொடியை கெட்டியாக குழைத்து இரு பக்கங்களிலும் தடவுவார்கள். அதனை ரவை என்றும் மார்ச்சனை என்றும் தற்காலத்தில் அழைக்கின்றன்ர். அவ்வாறு கருஞ்சாந்து பூசப்பட்ட முழவம் நிலம் அதிரும் வண்ணம் ஒலி எழுப்ப பெருமான் நடமாடுவதாக சொல்லப் படுகின்றது.பொதுவாக நந்தியம்பெருமான் சிவபிரானின் நடனத்திற்கு மிருதங்கம் வாசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ வேளையில் திருமால் மத்தளம் வாசிப்பதாக சிவானந்த லஹரியில் ஆதி சங்கரர் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திருமால் எவ்வாறெல்லாம் பரமனுடன் இணைந்து இருக்கின்றார் என்பதை ஆதி சங்கரர் விளக்குகின்றார். திரிபுரத்து அரக்கர்களுடன் இறைவன் தொடுத்த போரினில் அம்பாகவும், தேரின் அச்சு முறிந்த நிலையில் இறைவன் அமரும் இடப வாகனமாகவும், பார்வதி தேவியாக உடலின் இடது பாகத்திலும், பன்றியாக திருவடியை காண முயற்சி செய்தவராகவும், மோகினி வடிவில் தோழியாகவும், பிரதோஷ கால நடனத்தில் மிருதங்கம் வாசிப்பவராகவும் இருந்த திருமால், தனது கண்ணினை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார் என்று ஆதி சங்கரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

பாணத்வம் வ்ருஷபத்வம் அர்த்தவபுஷா பார்யாத்வம் ஆர்யாபதே

கோணித்வம் ஸஹிதா ம்ருதங்கவஹதா சேத்யாதி ரூபம் ததௌ

த்வத்பாதே நயனார்ப்பணஞ்ச க்ருத்வா த்வத் தேஹோ பாகோ ஹரி

பூஜ்யாத் பூஜ்யதரஸ் ஸ ஏவ ஹி ந சேத் கோ வா ததன்யோ திக

தேவர்கள் போற்ற நின்று நடனம் ஆடுவதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை எரித்து அவர்களை அழித்த பின்னர், பெருமான் பண்டரங்கம் என்ற நடனம் ஆடியதாக சொல்லப்படுகின்றது. அந்த நடனத்தைக் கண்ட தேவர்கள் பெருமானை போற்றி பாராட்டினர். இந்த தலத்துடன் தொடர்பு கொண்ட நடனம் என்பதால் திருஞானசம்பந்தருக்கு அந்த நடனத்தை தேவர்கள் பாராட்டியது நினைவுக்கு வந்தது போலும்.

பொழிப்புரை:

சிவநெறியையும் வேதநெறியையும் எண்ணாமல் விலகிச் சென்று அனைவர்க்கும் பகைவர்களாக மாறிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் அம்பினால் வீழ்த்தி எரித்து அழித்த இறைவன் தனது கையில் தீப்பிழம்பை ஏந்திய வண்ணம், நடனமாடுகின்றான். கருஞ்சாந்து பூசப்பட்டு நிலம் அதிர ஓசையெழுப்பும் மத்தளம் முழங்கும் பின்னணியில் நடனமாடும் பெருமான், அந்தணர்கள் வேத மந்திரங்களை முறையாக பண்ணில் பொருத்தி பாடும் பின்னணியில், தனது சடையில் வளராத ஒற்றைப் பிறைச் சந்திரனை சூட்டிக் கொண்டு திருவதிகை வீரட்டானத்தில் நடனமாடுகின்றான்..

பாடல் 5

கரி புன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்

திரு நின்று ஒருகையால் திருவாம் அதிகையுள்

எரி ஏந்திய பெருமான் எரி புன் சடை தாழ

விரியும் புனல் சூடி ஆடும் வீரட்டானத்தே

விளக்கம்:

கழிந்தார்=இறந்தவர்கள்; புன்=இழிந்த தன்மை வாய்ந்த; திரு=செல்வத்திற்கு அதிபதியாகிய இலக்குமி தேவி: ஒருகையால்=அகலாமல் இருப்பதால்;புன்சடை=சுருண்டு முறுக்கேறிய சடை; விரியும்=மிகுதியான நீர்ப்பெருக்குடன் பாய்ந்த வந்த கங்கை நதி;

பொழிப்புரை:

எரிந்த உயிரற்ற உடல்கள் இருப்பதால் கருமை நிறத்துடன் காணப்படுவதும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ளதும் ஆகிய நிலத்தில், இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படும் இடுகாட்டில், தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தியவனாக, எரியும் நெருப்பினை ஒத்து பொன்னின் நிறத்தில் காணப் படுவதும் சுருண்டு இருப்பதும் ஆகிய தனது சடைகள் தாழ்ந்து தொங்கும் வண்ணம் குனிந்தும் நிமிர்ந்தும் பெருமான் நடனம் ஆடுகின்றான். திருமகள் அகலாமல் தங்குவதால் செல்வ வளம் நிறைந்து காணப்படும் திருவதிகை தலத்தினில், மிகுந்த வேகத்துடன் விரிந்து பரந்து கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் தாங்கியவனாக பெருமான் நடனக் கோலத்தில் காட்சி அளிக்கின்றான்.

பாடல் 6

துளங்கும் சுடர் அஙகைத் துதைய விளையாடி

இளங்கொம்பன சாயல் உமையோடு இசை பாடி

வளம் கொள் புனல் சூழ்ந்த வயலார் அதிகையுள்

விளங்கும் பிறை சூடி ஆடும் வீரட்டானத்தே

விளக்கம்:

துளங்கும்=அசையும்; பெருமான் மிகவும் வேகமாக நடனமாடுவதால், அவர் தனது கையில் ஏந்தியிருக்கும் தீப்பிழம்பு அலை பாய்ந்து அசைகின்றது.எனினும், அந்த தீச்சுடர் அணையாமல் இருப்பதற்கு காரணம், பெரிய அளவில் அந்த தீச்சுடர் இருப்பது தான் காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். துதைய=நெருங்க; தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு பெருமான் நடனமாடுவது அவருக்கு மிகவும் எளிதான செயல் என்பதை உணர்த்தும் பொருட்டு, விளையாடி என்ற சொல்லினை திருஞானசம்பந்தர் கையாண்டுள்ளார். சாயல்=மென்மையான தோற்றம்; பொதுவாக கொடி மெலிந்தும் ஆங்காங்கே மலர்களுடன் அழகாகவும் காணப்படும். அதுவும் இளமையான கொடி என்பது மேலும் அழகுடன் திகழும். கொடி என்பது ஒரு கொழு கொம்பினைப் பற்றுகோடாகக் கொண்டு படரும் தன்மை உடையது. பிராட்டியும் எப்போதும் பிரியாமல், பெருமானைப் பற்றுக்கோடாகக் கொண்டு இருப்பதுடன், மெலிந்த உடலுடன் அழகாக காணப்படுவதால் இளங்கொம்பன்ன சாயல் உமை என்று குறிப்பிடுகின்றார். கொடியிடை நாயகி (வடமுல்லைவாயில்) மோகனவல்லி (திருவூறல்) இளங்கொம்பனையாள் (பறியலூர் வீரட்டம்) பவளக்கொடி அம்மை (தென் குரங்காடுதுறை) பொற்கொடி நாயகி (திலதைப்பதி) கொம்பியல் கோதை (வைகல் மாடக்கோயில்) மாணிக்கவல்லி (மாணிக்குழி) கற்பகவல்லி (பூவனூர்) சௌந்தரவல்லி(அவளிவணல்லூர்) பூங்கொடி மடவாள் (ஒமாம்புலியூர்) சிற்றிடை நாயகி (இடையாறு) இளங்கொம்பன்னாள் மின்னனையாள் (திருபூவணம்) மரகதவல்லி(ஈங்கோய்மலை) இமயமடக்கொடி (திருவிடைச்சுரம) என்பன பிராட்டியின் திருநாமங்கள்.

பிராட்டியை கொடியிடையாள் என்றும் கொடி போன்ற சாயல் உடையவள் என்றும் குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.திருவீழிமிழலை மற்றும் சீர்காழி தலங்களை இணைத்து அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (1.4.11) திருஞானசம்பந்தர் பிராட்டியை பூங்கொடி என்று அழைக்கின்றார். திருஞானசம்பந்தர் இந்த பதிகம் பாடுவதற்கு முன்னர், வீழிமிழலை விமானத்தில் காழி நகரத்து திருக்கோயிலில் உள்ள கோலத்துடன் பெருமான் எவருக்கும் காட்சி தரவில்லை. சீர்காழி தலத்தின் கோலத்தை ஆங்கு செல்லாமல் வீழிமிழலை தலத்திலேயே திருஞானசம்பந்தர் கண்டு களிக்கலாம் என்பதை கனவினில் உணர்த்தியதை நனவாக்கிய இறைவனின் செயலை வித்தகம் என்று குறிப்பிட்டு திருஞானசம்பந்தர் தனது வியப்பையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றார். சீர்காழி தலத்து அந்தணர்கள் வீழிமிழலை வந்த போது, சீர்காழி பெருமானை திருஞானசம்பந்தர் தரிசனம் செய்து பல மாதங்கள் கழிந்து விட்டனவே என்று தங்களது கவலையை தெரிவித்தனர் போலும். அத்தகைய கவலை எவருக்கும் வேண்டாம் என்று உணர்த்தும் முகமாக பெருமான் செய்த திருவிளையாடல் போலும். தனது பதிகத்தின் கடைப் பாடல்களில் திருஞானசம்பந்தர் தமிழ் விரகன் என்றும் நான்மறை ஞானசம்பந்தன் என்றும் சொல்லிக் கொள்வதை நாம் காண்கின்றோம். ஆனால் எந்த பாடலிலும் இல்லாத வகையில் இந்த பாடலில் நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுவதை நாம் காண்கின்றோம். இந்த அடைமொழிகளை, தன்னுள் இருந்து தனதுரையாக பாடல்களை இறைவன் பாடவைத்த தன்மைக்கு கொடுக்கப்பட்ட அடைமொழிகள் என்று தருமபுர ஆதீனக்குறிப்பு உணர்த்துகின்றது

விண்ணிழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இதென்று சொல்லிப்

புன்ணியனைப் புகலி நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி

நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன

பண்ணியல் பாடல் வல்லார்கள் இந்த பாரொடு விண் பரிபாலகரே

கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.19.4) திருஞானசம்பந்தர், பிராட்டியை கொடியிடை என்று குறிப்பிடுகின்றார்.முடிகெனில்=முடிக+எனின்; முடிய வேண்டும் என்று விரும்பினால்; தொழுதெழு என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து இறைவனை வணங்கி பின்னர் எழும் நிலையினை குறிப்பிடுகின்றார். புனை கொடியிடை என்ற தொடரினை, பிறைச்சந்திரனுடன் இணைத்து கொடியிடையாளாகிய கங்கை நதி என்றும் பொருள் கொள்ளலாம். அதே தொடரினை உடலுடன் தொடர்பு கொண்டு, பெருமானின் உடலில் பாதியில் விளங்கும் உமையன்னை என்றும் பொருள் கொள்ளலாம். தாருகவனத்து முனிவர்கள் அபிச்சார ஹோமம் என்று அழைக்கப்படும் ஒரு வகை யாகத்தினை செய்து, பல பொருட்களை தீயினில் இட்டு அந்த தீயிலிருந்து ஓர் காட்டு யானையினை எழுப்பி, பெருமான் மீது ஏவியதை குறிப்பிடும் வண்ணம், பொருள் படுதரு களிறு என்று கூறுகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். பொருள் தரு என்ற தொடரினை கொடியிடை என்ற சொல்லுடன் இணைத்து, அன்னையைத் தனது உடலின் ஓர் அங்கமாக,பொருளாக ஏற்றுக்கொண்ட இறைவன் என்ற விளக்கமும் பொருத்தமே. கதிர்=சூரியன்

வினை கெட மன நினைவது முடிகெனில் நனி தொழுதெழு குல மதி

புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன்

மனை குடவயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி

கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினனது அதிர் கழல்களே

கோளிலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.62.11) திருஞானசம்பந்தர் பிராட்டியை கொம்பனையாள் என்று குறிப்பிடுகின்றார். மாடு=செல்வம்;நம்பனை=நம்பத் தகுந்தவனை; பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் உணர்த்தப் படும் செய்திகள், பெருமான் மிகவும் நம்பத் தகுந்தவன் என்பதை வலியுறுத்துகின்றன. அதனை மீண்டும் நமக்கு நினைவூட்டும் வண்ணம், நம்பன் என்று இந்த பாடலை தொடங்குகின்றார் போலும். எனவே தான் இவ்வாறு பெருமானின் அருளுக்கு பாத்திரமாகி இருக்கும் தன்மையை மிகவும் பெரிய செல்வம் என்று அடியார்கள் கருதிய தன்மையும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. வம்பு=நறுமணம்; கொம்பு=பூங்கொம்பு; தண்=குளிர்ந்த; வண்டமிழ்=சிறந்த, வளம் பொருந்திய; இன்பமர=இன்பத்துடன் விளங்க;

நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்கும்
கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்
டின்பமர வல்லார்கள் எய்துவர்க ளீசனையே

வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.7) திருஞானசம்பந்தர், வல்லி நுண்ணிடையாள் என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். மறுகிட=அச்சம் கொள்ள; வெருவல்=பயம்; கருப்பு வில்லை=கரும்பு வில்லினை உடைய மன்மதன்; நலிந்திட உற்று வந்த=வருத்தமடைந்து வந்த; சிவபிரானது அம்சம் கொண்ட பிள்ளையால் மட்டுமே சூரபதுமனை வெல்ல முடியும் என்பதால், சிவபிரானது தவம் கலையப்பெற்று அவர் உமை அன்னையை மணந்து கொள்ள வேண்டும் என்று தேவர்கள் விரும்பினர். அதற்காக மன்மதனை, பெருமானின் தவம் கலைந்து அவர் பார்வதி தேவியை விரும்பும் வண்ணம், காமத்தை தூண்ட வேண்டும் என்று கட்டளையிட்டனர். பெருமானின் தவத்தைக் கலைத்து பெருமானின் கோபத்திற்கு ஆளாக மன்மதன் விரும்பவில்லை என்பதால் இந்திரனின் கட்டளையை ஏற்க மறுத்தான். ஆனால் திருமால், நான்முகன் இந்திரன் மற்றுமுள்ள தேவர்கள் அனைவரும், அவன் தங்களது கட்டளையை ஏற்க மறுத்தால், அவன் மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரும் என்று பயமுறுத்தினர். எனவே மிகுந்த வருத்தத்துடன் மன்மதன், இந்திரனின் கட்டளையை நிறைவேற்ற வந்ததை, நலிந்திடலுற்று வந்த மன்மதன் என்று குறிப்பிடுகின்றார். ஒல்லை=மிகவும் விரைவில்; களிறு=ஆண் யானை;

வல்லி நுண்ணிடையாள் உமையவள் தன்னை மறுகிட வருமத களிற்றினை மயங்க

ஒல்லையில் பிடித்தங்கு உரித்தவள் வெருவல் கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்

நல்லறம் உரைத்து ஞானமோடு இருப்ப நலிந்திடலுற்று வந்த அக்கருப்பு

வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே

வடுகூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.87.6) திருஞானசம்பந்த்ர் பிராட்டியை தளரும் கொடியன்னாள் என்று குறிப்பிடுகின்றார்.கிளரும்=விளங்கித் தோன்றும், ஒளிரும்=ஒளி வீசும். தளரும் கொடி=மலர்களின் சுமை தாங்காது தளர்ந்து இருக்கும் கொடி;

தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடனாகிக்

கிளரும் அரவம் ஆர்த்துக் கிளரும் முடி மேலோர்

வளரும் பிறை சூடி வரி வண்டிசை பாட

ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே

புகலி (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.104.8) நுண்ணிடையாள் என்று உமை அன்னையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். வில்லிய=ஒளி பொருந்திய; ஒல்லை=விரைவாக உடனே; நண்ணும்=நெருங்கி உறைகின்ற; கயிலை மலையின் கீழே அமுக்கப்பட்ட அரக்கன் இராவணன், தனது உடல் அங்கங்கள் நலிவடைந்து அழியும் தருவாயில் இருந்ததால், பெருமான் மிகவும் விரைவாக செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று உணர்த்துகின்றார்.

வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும்

நல்லிடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன்

பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றிப் பாடலுமே கை வாள்

ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலியதே

தருமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.136.6) பொற்கொடியிடை என்று திருஞானசம்பந்தர் பிராட்டியை குறிப்பிடுகின்றார். அழகிய கூந்தலையும், தனது கணவரால் தழுவப்படும் மெல்லிய மார்பகங்களையும், தேமல் கூடிய மேனியையும், பொற்கொடி போன்ற இடையையும், பவளம் போன்று சிவந்த வாயினையும், மாவடு போன்ற கண்ணையும் உடைய தேவி அழகும் இளமையும் உடையவள் என்று கூறுகின்றார். வலம் மலி=பகைவர்களைத் தோற்கடித்து அவர்களால் வலம் வந்து வழிபடும் வெற்றியை தேடித்தரும் படைக்கலங்கள்;

கூழையங் கோதை குலாவ அவள் தம் பிணை புல்க மல்கு மென் முலைப் பொறிகொள்

பொற்கொடி இடைத் துவர்வாய்

மாழை ஒண்கண் மடவாளை ஓர் பாகம் மகிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடி கொடும் மழுவ்வாள்

யாழையும் எள்கிட ஏழிசை வண்டு முரன்று இனம் துவன்றி மென் சிறஃகு அறையுற

நறவு விரியும் நல்

தாழையும்ஞாழலும் நீடியகானலின் அள்ளலிசை புள்ளினம் துயில் பயில் தருமபுரம்பதியே

இரும்பூளை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.36.4) திருஞானசம்பந்தர் பிராட்டியை காமக்கொடி என்று அழைக்கின்றார். கச்சி காமகோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் காமாட்சி தேவியை காமக்கொடி என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் அடியார்களிடம் வினாவை எழுப்பி, அதற்கு அவர்கள் அளிக்கும் விடையை மிகவும் விரும்புவராக திருஞானசம்பந்தர் இருப்பதை நாம் உணரலாம். பெருமானின் தன்மைகளை முற்றிலும் அறிந்தவராக இருந்த போதிலும், பெருமானின் பெருமையை அடுத்தவர் சொல்லக் கேட்பதில் தான் அருளாளர்களுக்கு எத்துணை விருப்பம். பொதுவாக பிச்சையேற்று உண்பவர்கள் இரவில் சென்று பிச்சை கேட்பது பழக்கம். அன்றாடம் தயாரிக்கும் உணவு ஏதேனும் செலவாகாமல் மிகுதியாகி விட்டால், அதனை அடுத்த நாளுக்காக வைத்துக் கொள்ளாமல் பிச்சைக்காரர்களுக்கு அளிப்பது பண்டைய நாளில், குளிர் பதனப் பெட்டி இல்லாத காலத்தில், பழக்கமாக இருந்தது போலும். எனவே பிச்சைக்காரர்கள் இரவில் பிச்சை கேட்டு சென்றனர். பெருமான் தனது உணவுத்தேவைக்காக பலி ஏற்பதில்லை அல்லவா. எனவே எந்த நேரத்தில் சென்றாலும் ஒன்று தானே. தாருகவனத்து இல்லத்தரசிகளிடம் பலியேற்கச் சென்றபோதும், அவன் அவ்வாறு சென்றது பகல் நேரத்தில் தானே.

நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்

கச்சிப் பொலி காமக்கொடியுடன் கூடி

இச்சித்து இரும்பூளை இடம் கொண்ட ஈசன்

உச்சித் தலையில் பலி கொண்டுழல் ஊணே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.41.5) திருஞானசம்பந்தர் அன்னையை கொடியிடை என்று அழைக்கின்றார். இந்த பதிகத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பாடல்கள் மூலம், பெருமானின் வழிபாட்டினில் நம்மை ஈடுபடுத்திய சம்பந்தர், பெருமானை வழிபடுவதால் நாம் உயர்ந்தவர்களாக உலகத்தவரால் மதிக்கப்படுவோம் என்று கூறுகின்றார். கோங்கு=கோங்கின் அரும்பு; கொழும்=செழிப்பான; பணை=மூங்கில்;பாங்கு=பக்கம்; பாங்கென்ன வைத்து=ஒரு பாகத்தில் வைத்து; சாய்க்காட்டான் என்று தலத்து இறைவனின் திருநாமம் இங்கே குறிப்பிடப் படுகின்றது.கொடி போன்று துவளும் மெல்லியை இடையினை உடையவள் பிராட்டி என்று இங்கே சொல்லப்படுகின்றது.

கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணைத் தோள் கொடியிடையைப்

பாங்கென்ன வைத்து உகந்தான் படர்சடை மேல் பால் மதியம்

தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ்

ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே

தலச்சங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.55.7) திருஞானசம்பந்தர் கொடி புல்கு மென் சாயல் உமை என்று பிராட்டியை குறிப்பிடுகின்றார். பைங் கழல்கள்=பசுமையான பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்கள்; தலத்து அம்பிகையின் திருநாமம் சௌந்தர நாயகி; அந்த பெயரினை நினைவூட்டும் வண்ணம் கொடி போன்ற சாயலை உடைய உமையம்மை என்று இங்கே குறிப்பிடுகின்றார். புல்கு=ஒத்து; கடி=காவல்;

அடி புல்கு பைங் கழல்கள் ஆர்ப்பப் பேர்ந்து ஓர் அனல் ஏந்தி

கொடி புல்கு மென் சாயல் உமையோர் பாகம் கூடினீர்

பொடி புல்கு நூல் மார்பர் புரி நூலாளர் தலைச் சங்கைக்

கடி புல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.75.7) திருஞானசம்பந்தர், பெருமானை கொடியிலங்கும் இடையோளொடும் குடி கொண்டவன் என்று குறிப்பிடுகின்றார். கலி=ஆரவாரம். முடி இலங்கும் சிந்தை என்று துவாத சாந்தம் குறிப்பிடப்படுகின்றது. ஆழ்ந்த தியானத்தினால், மூலாதாரத்தில் இருக்கும் கனலை சிறிது சிறிதாக மேலே ஏற்றி, துவாதசாந்தப் பெருவெளியில் நிறுத்தி இறைவனை தியானிக்கும் முனிவர்களின் செய்கை இங்கே உணர்த்தப்படுகின்றது. மின்னல் கொடி போன்று ஒளியுடனும் மெலிந்தும் காணப்படும் இடையினை உடைய அன்னை என்று சொல்லப்படுகின்றது.

முடி இலங்கும் உயர் சிந்தையான் முனிவர் தொழ

வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும்

கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலைக்காழியுள்

கொடி இலங்கும் இடையாளொடும் குடிகொண்டதே

தென்முல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.88.5) திருஞானசம்பந்தர் பிராட்டியை கொம்பு அன்ன மின்னின் இடையாள் என்று குறிப்பிடுகின்றார். கொம்பு=பூங்கொடியின் கொம்பு; கூறன்=ஒரு கூறாக கொண்டுள்ளவன்; விடை=இடபம்; குழகன்=அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவன்; சென்னி=தலை; ஒண்=ஒளிவீசும்; கணவர்=கண்களை உடைய பெண்கள்; அணி=அழகிய; செவ்வி=செம்மையான; பூங்கொம்பு போன்றும் மின்னல் போன்றும் மெலிந்த இடையினை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், இடபத்தின் மீது ஏறிக்கொண்டு நாள்தோறும் பல இடங்கள் செல்பவனும், அழகும் இளமையும் ஒருங்கே பொருந்தியவனும், நமது நம்பிக்கைக்கு பாத்திரமாக உள்ளவனும், நம் பால் மிகுந்த அன்பு கொண்டுள்ளவனும், முதன்முதலாக நான்மறைகளையும் ஓதிய நாவினை உடையவனும், வானில் உலவும் பிறைச்சந்திரனைத் தனது தலையில் வைத்துள்ளவனும் ஆகிய பெருமான் உறையும் தலம் திருமுல்லைவாயிலாகும். அம்பு போன்று ஒளி மிகுந்த கண்களை உடைய மகளிர் நடமாடும் அரங்குகளும் அழகிய கோபுரங்களும் அணிகலன் போன்று அழகினை மேம்படுத்த, செம்பொன் போன்று அழகிய செம்மையான மாடங்கள் கொண்ட தலம் திருமுல்லைவாயிலாகும்.

கொம்பு அன்ன மின்னின் இடையாளொர் கூறன் விடை நாளும் ஏறு குழகன்

நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானில் மதியேறு சென்னி அரனூர்

அம்பன்ன ஒண் கணவர் ஆடரங்கின் அணி கோபுரங்கள் அழகார்

செம்பொன்ன செவ்வி தருமாட நீடு திருமுல்லைவாயில் இதுவே

கொச்சைவயம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.89.10) பிராட்டியை ஒண்கொடி என்று அழைக்கின்றார். ஒண் கொடி=ஒளி வீசுவதும் கொடி போன்று மெலிந்தும் உள்ள உமையன்னை; கொண்டல்=மேகம்; மேகம் தவழும் உயர்ந்த மாட வீடுகள் கொண்ட தலம் என்று கூறுகின்றார். வண்=நெருங்கிய, இங்கே சாயம் ஏற்றப்பட்ட என்று பொருள் கொள்வது பொருத்தம்; மிண்டர்=முரடர்கள்;

குண்டர் வண் துவராடை போர்த்ததோர் கொள்கையினார்கள்

மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டன்

பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்கொடியோடும்

கொண்டல் சேர் மணி மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே

வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.94.4) திருஞானசம்பந்தர், மேகலை உடையார் என்றும் நுண்ணிடை உடையார் என்றும் மாதொருபாகனாக பெருமான் விளங்கும் தன்மையை உணர்த்துகின்றார். கொந்து=கோபம்; கொந்து என்ற சொல்லுக்கு பூங்கொத்து என்று பொருள் கொண்டு பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வேல் என்ற விளக்கமும் பொருத்தமே. அஞ்சு=ஐந்து புலன்கள்; குஞ்சி=சடைமுடி; குஞ்சி மேகலை=சைவத் துறவிகள் சிலர் தங்களது சடைமுடியை மறக்கும் வண்ணம் துவராடை அணிவார்கள்; அத்தகைய ஆடையினை பெருமான் அணிந்துள்ளதாக இங்கே குறிப்பிடுகின்றார். குஞ்சிமேகலை என்ற தொடருக்கு பதிலாக குஞ்சி மேற்கலை என்று இருந்ததோ என்று வித்துவான் மாணிக்கவாசக முதலியார் அவர்கள் தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட விளக்கத்தில் கூறுகின்றார். இந்த கருத்து ஆய்வுக்கு உரியதாகும். அணியார்=மிகவும் அருகினில் இருப்பவர்;

பஞ்சின் நுண்துகில் அன்ன பைங்கழல் சேவடி உடையார்

குஞ்சி மேகலை உடையார் கொந்தணி வேல் வலன் உடையர்

அஞ்சும் வென்றவர்க்கு அணியார் ஆனையின் ஈருரி உடையார்

வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே

திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.8) திருஞானசம்பந்தர், பிராட்டியை குயிலின் நேர்மொழியாள் என்றும் கொடியிடையாள் என்றும் மயிலின் நேரன்ன சாயலாள் என்றும் குறிப்பிடுகின்றார். ஆன்மாவினை, தனது தலைவனுடன் சேரத் துடிக்கும் தலைவியாக உருவகித்து,இறைவனைத் தலைவனாக உருவகித்து, ஆன்மா எவ்வாறு இறைவனுடன் சேர்ந்து என்றும் அவனிடமிருந்து பிரியாமல் இருப்பதற்கு தலைப்படவேண்டும் என்றும், தனது ஆசை நிறைவேறாத ஆன்மா எவ்வாறு வருந்தி, தனது விருப்பத்தை இறைவனிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இத்தகைய அகத்துறைப் பாடல்கள் மூலம் அருளாளர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றனர். எதற்காக தணியாத வேட்கை ஆன்மாவிடம் ஏற்படவேண்டும் என்று கேள்வி கேட்போர்க்கு விடையளிக்கும் முகமாக, இந்த பாடல் அமைந்துள்ளது. பரகதி=உயர்ந்த நிலை, முக்தி நிலை; தொடர்ந்து இறைவனின் புகழினைப் பாடும் அடியார்கள் பரகதி அடைவார்கள் என்றும், அவ்வாறு இறைவனின் புகழினை நினைக்காதவர்கள் பரகதி அடைய மாட்டார்கள் என்றும் கூறுகின்றார்.இறைவனின் புகழினைப், பெருமையினைப் புரிந்து கொண்டு அவனது மேன்மையை உணர்வதே இறை வழிபாட்டின் முதற்படி என்பதால், அந்த முதற்படி,படிப்படியாக நம்மை உயர்த்தி, பக்குவம் அடையச் செய்து உய்வினை அளிக்கும் என்பதால், இறைவனின் புகழினை நாம் உணரத் தலைப்பட வேண்டும் என்று கூறுகின்றார்.

குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய

கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர்முடி தோள் இருபதும் ஊன்றி

மயிலின் நேர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானைப்

பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே

பூந்தராய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.2.3) நுண்ணிடைத் தையலாள் என்று பிராட்டியை, திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.பையரா=படம் எடுத்தாடும் பாம்பு; வரும் கொள்=போன்ற; பஞ்சின் ஏர் அடி=பஞ்சு போன்று மெல்லியதும் அழகியதும் ஆகிய திருவடி; வஞ்சி=வஞ்சிக்கொடி;செய்=வயல்; கழுநீர்=செங்கழுநீர்ப் பூக்கள்: தேறல்=தேன்; மலர்களிலிருந்து ஒழுகும் தேன் நிலத்தில் ஊறி சேறான தன்மை மூலம் நீர்வளம் உணர்த்தப்படுகின்றது. பொய்யிலா மறையோர் என்று நிலையற்ற உலகப் பொருட்களின் மீது நாட்டம் கொள்ளாமல், உண்மையான் மெய்ப்பொருளாகிய சிவபெருமானை நாடும் மறையோர்கள் என்று உணர்த்தப் படுகின்றது.

பையரா வரும் அல்குல் மெல்லியல் பஞ்சின் நேரடி வஞ்சி கொள் நுண்ணிடைத்

தையலாள் ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம்

செய்யெலாம் கழுநீர் கமலம் மலர்த் தேறல் ஊறலில் சேறு உலராத நற்

பொய்யிலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே

பூந்தராய் என்று அழைக்கப்பட்ட சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.2.9) திருஞானசம்பந்தர் பிராட்டியை கொடியேர் இடையாள் என்று அழைக்கின்றார். ஏர்=அழகு வாய்ந்த; கொங்கு=நறுமணம்; கொங்கு சேர் குழலாள் என்று பிராட்டியின் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் வாய்ந்தது என்று கூறுகின்றார். நிழல்=ஒளிவீசும்; நறுமணம் பொருந்திய கூந்தல், ஒளி வீசும் வெண்மை நிறத்து பற்கள், கொவ்வைக்கனி போன்று சிவந்த வாய், கொடி போன்று அழகிய இடை ஆகியவை கொண்ட பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.உலகனைத்தையும் மூழ்கடிக்கும் வண்ணம் பொங்கி எழுந்த பிரளய வெள்ளம் மிகவும் உயரமாக எழுந்தது என்று கூறுகின்றார். படர் தீ=வானும் நிலனும் ஊடுருவிச் செல்லும் வண்ணம் எழுந்த நெருப்புத்தூண்; மங்குல்=மேகம்; மங்குல் வண்ணன்=கரிய நிறம் கொண்ட திருமால்; வான் மிசை=ஆகாயத்தைத் தொடும் வண்ணம். பிரளய வெள்ளத்திலும் மூழ்கடிக்கப்படாது உயர்ந்து நின்ற தலம் சீர்காழி என்று சொல்லப் படுகின்றது.

கொங்கு சேர் குழலாள் நிழல் வெண்ணகைக்

கொவ்வை வாய்க் கொடியேர் இடையாள் உமை

பங்கு சேர் திருமார்புடையார் படர் தீ உருவாய்

மங்குல் வண்ணனும் மாமலரோனும்

மயங்க நீண்டவர் வான்மிசை வந்தெழு

பொங்கு நீரின் மிதந்த நற்பூந்தராய் போற்றுதுமே

வைகல் மாடக்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.18.4) திருஞானசம்பந்தர் பிராட்டியை கொம்பியல் கோதை என்று குறிப்பிடுகின்றார்.கோச்செங்க்ட்சோழன் கட்டிய எழுபத்திரண்டு மாடக்கோயில்களில் ஒன்று. கொம்பியல் கோதை என்பது தலத்து அம்பிகையின் திருநாமம். இயல்=போன்ற;பூங்கொடி போன்ற சாயலை உடையவள்; தும்பி=தும்பிக்கை உடைய விலங்கு; குஞ்சரம்=யானை; துங்கர்=மேலானவர்; வம்பு=நறுமணம்;வம்பியல்=நறுமணம் உடைய; செம்பியன்=சோழன்:

கொம்பியல் கோதை முன் அஞ்சக் குஞ்சரத்

தும்பியது உரி செய்த துங்கர் தங்கிடம்

வம்பியல் சோலை சூழ் வைகல் மேற்றிசைச்

செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே

சாத்தமங்கை தலத்தின் மீது அருளீய பதிகத்தின் பாடலில் (3.58.2) திருஞானசம்பந்தர் பிராட்டியை கொடியன சாயலாள் என்று குறிப்பிடுகின்றார். தலத்தின் பெயர் சாத்தமங்கை திருக்கோயிலின் பெயர் அயவந்தி. நீலநக்க அடிகள் புகழ்ந்து ஏத்தி வணங்க அயவந்தி அமர்ந்த பெருமான் என்று இந்த தலத்தில் வாழ்ந்த அடிகளாரை குறிப்பிடுகின்றர். கொடி அன சாயலாள்=பூங்கொடி போன்று அழகிய தோற்றத்தை உடையவள்;

பொடி தனைப் பூசு மார்பில் புரிநூல் ஒரு பால் பொருந்த

கொடியன சாயலாளோடு உடனாவதும் கூடுவதே

கடிமணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை

அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே

கச்சி நெறிக்காரைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.65.3) திருஞானசம்பந்தர் பிராட்டியை கொடியிடை என்று குறிப்பிடுகின்றார்.கலி=ஆரவாரம். ஆரவாரம் மிகுந்த காஞ்சி மாநகர் என்று கூறுகின்றார். அப்பர் பிரான் மற்றும் திருஞானசம்பந்தர் காலத்தில் பல்லவ மன்னரின் தலைநகராக இருந்த காஞ்சி மாநகரம் மிகுந்த சிறப்புடன் இருந்தது. பாண்டிய நாட்டிலிருந்து திரும்பிய திருஞானசம்பந்தர், காஞ்சி மாநகரம் சென்று ஏகாம்பர நாதரைத் தொழ வேண்டும் என்பதற்காக தொண்டை நாட்டுத் தலயாத்திரை மேற்கொண்டது நமது நினைவுக்கு வருகின்றது. ஆனேறு=இடபம்;

கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடை மேல் இளமதியோடு

ஆறணிந்தார் ஆடரவம் பூண்டுகந்தார் ஆன் வெள்ளை

ஏறணிந்தார் கொடியதன் மேல் என்பணிந்தார் வரை மார்பில்

நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.4) திருஞானசம்பந்தர், பிராட்டியை கொடியிடை என்று குறிப்பிடுகின்றார். மேலும் இந்த பாடலில் கங்கை நதியினை பெருமான் தனது சடையில் ஏற்றுகொண்டதற்காக பிராட்டி கோபம் கொண்டதாக கூறுகின்றார். நிமலர்-இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர், அடியார்களின் மலங்களை நீக்கும் ஆற்றல் உடையவர்; கூற்றினர்=திரிபுரத்து அரக்கர்களுக்கு கூற்றுவனாக விளங்கி அவர்களை அழித்தவர்; முனிவுற=கோபம் கொள்ள, பிணங்க; குலவு கங்கை=மிகுந்த மகிழ்ச்சியுடன் சடையில் சேர்ந்த கங்கை நதி. கங்கை நதி விருப்பம் ஏதுமின்றி பெருமானின் சடையில் சேர்ந்தது என்பதை நாம் அறிவோம். மேலும் பெருமானின் சடையிலிருந்து எளிதில் விடுபட்டு வெளியேறிவிடலாம் எனவும் எண்ணியது. ஆனால் கங்கை நதியின் எண்ணம் பலிக்கவில்லை. எனவே கங்கை நதி மகிழ்ச்சியுடன் பெருமானின் சடையில் சேரவில்லை என்பது புலனாகின்றது. எனினும் புலவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி, கங்கை நதி குலாவி பெருமானின் சடையில் தங்கியதாகவும், அதனால் பிராட்டி கோபம் கொண்டதாகவும் இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பகீரதன் தான் செய்த தவத்தின் பயனை அடைய வேண்டும் என்பதற்காகத் தானே, பெருமான் கங்கை நதியைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டார் என்பதையும் நன்றாக அறிந்தவள் பிராட்டி. எனவே உண்மையில் பிராட்டி கோபம் அடையவில்லை, பெருமானுடன் ஊடலும் கொள்ளவில்லை. எனினும் பாடலில் நயம் சேர்க்கும் பொருட்டு இத்தகைய கற்பனகள் மூவர் பெருமானார்களால் செய்யப்படுகின்றன.

நீற்றினர் நீண்டவார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை

ஏற்றினர் எரிபுரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும்

கூற்றினர் கொடியிடை முனிவுற நனிவரும் குலவு கங்கை

ஆற்றினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே

ஓமாம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தை (3.122) திருஞானசம்பந்தர், பூங்கொடி மடவாள் என்ற தேவியின் திருநாமத்துடன் தொடங்குகின்றார்.வீங்கிருளில் பெருமான் நட்டம் ஆடுகின்றார் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பிரளயம் ஏற்படும் போது அனைத்து உயிர்களும் இறைவனிடத்தில் ஒடுங்குகின்றன. அத்தகைய உயிர்கள் அனைத்தும் மலத்துடன் இணைந்து இருப்பதால், அந்த உயிர்களால் முக்திநிலை அடைந்து நிலையான ஆனந்தம் பெறமுடிவதில்லை. அந்த உயிர்களுக்கு, தங்களது மலங்களை கழித்துக் கொள்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, இறைவன் உலகினை மீண்டும் படைப்பதற்கு திருவுள்ளம் கொள்கின்றார். அந்த தருணத்தில் அவர் ஆடுகின்ற நடனத்திலிருந்து நாதம் பிறக்கின்றது. நாதத்திலிருந்து ஆகாயமும் பின்னர் மற்ற நான்கு பூதங்களும் தோன்ற, பஞ்ச பூதங்களின் கலப்பாகிய உலகத்து பொருட்களும் தோன்ற,உயிர்களும் அவற்றின் வினைத் தொகுதியின் தன்மைகளுக்கு ஏற்ப உடல்களுடன் இணைக்கப் படுகின்றன. இவ்வாறு உலகம் மீண்டும் தோன்றுவதற்கு இறைவனின் நடனம் மூல காரணமாக இருப்பதை நாம் உணரலாம். இந்த செய்தியை உணர்த்தும் பொருட்டு வீங்கிருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் என்று சம்பந்தர் கூறுகின்றார். இங்கே விகிர்தர் என்று திருஞானசம்பந்தர் கூறுவதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். விகிர்தர் என்றால் மாறுபட்ட இயல்பு உடையவர் என்று பொருள்; மேலே குறிப்பிடப்பட்ட செய்திகளில் உள்ள சில அம்சங்ளை நாம் மீண்டும் நினைவு கூர்வோம். பிரளய காலத்தில் எஞ்சி நிற்பவர் இறைவன் மட்டுமே. அனைவரும் நல்ல ஒளியின் பின்னணியில் நடனம் ஆடுவதை விரும்புவர்; ஆனால் இறைவனோ நள்ளிருளில் நடனம் ஆடுகின்றார். அவ்வாறு ஆடும் நடனத்தில் இசைக்கப்படும் உடுக்கையின் ஓசை, ஆதி நாதமாக உலகத்தைத் தோற்றுவிக்கின்றது. இத்தகைய செயல்களை இறைவனைத் தவிர்த்து வேறு எவரும் செய்ய முடியாது என்பதை குறிப்பிடும் வண்ணம், ஏனையோரிடமிருந்து மாறுபட்டவர் என்று உணர்த்தும் வண்ணம் விகிர்தர் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். தேங்கமழ்=இனிமையான நறுமணம்; செறிந்த=நெருங்கிய, அடர்ந்த; கோதுதல்=குடைதல், கிளறுதல்;வீங்கிருள்=அடர்ந்த இருள், பிரளய காலத்து இருள்;

பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி அடிகள்

வீங்கிருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்

தேங்கமழ் பொழிலில் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்

ஓங்கிய புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே

திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.13.2) அப்பர் பிரான் உமை அன்னையை கொம்பரார் மருங்குல் மங்கை என்று கூறுகின்றார்.கோல் வளையாள்=அழகிய வளையல்களை அணிந்த உமையம்மை: மருங்குல்=இடை; செம்பவளம் போன்று அழகிய வடிவினை உடையவராய், ஒளி வீசும் குழைகளை காதினில் அணிந்தவராய் காட்சி அளிக்கும் சிவபெருமான், கொம்பினை விரும்பிப் படரும் கொடி போன்று மெல்லிய இடையினைக் கொண்டவளும் அழகான வளையல்கள் அணிந்தவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக கொண்டவர் ஆவார். புதியதாக மலர்ந்து நறுமணம் வீசும் கொன்றை மலரினைத் தனது சடையின் மேல் வைத்து மகிழ்பவனும் அழகிய செம்மையான பவளத்தின் நிறத்தை உடையவனும் ஆகிய ஐயாற்றுப் பெருமானுக்கு ஆளாக மாறி நான் உய்ந்தேன். என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.

. செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்

கொம்பு அமரும் கொடி மருங்குல் கோல் வளையாள் ஒரு பாகர்

வம்பு அவிழும் மலர்க் கொன்றை வளர்சடை மேல் வைத்து உகந்த

அம்பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே

திருமங்கலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.73.1) அப்பர் பிரான் பிராட்டியை கொம்பனையாள் என்று குறிப்பிடுகின்றார்.தங்கலப்பிய=தம்+கலப்பிய, உறவினால் தன்னுள் கலந்த; தக்கன் தனக்கு மாமன் என்பதால், பெருமான் தக்கன் செய்த தவற்றினை கண்டிக்கத் தவறவில்லை. இதனை உணர்த்தும் முகமாகவே அப்பர் பிரான், இந்த பாடலில் தக்கனை பெருமானுக்கு உறவினன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானை புறக்கணித்து தக்கன் யாகம் செய்யத் துணிந்ததற்கு காரணம் மிகவும் விளக்கமாக கந்த புராணத்தில் சொல்லப் படுகின்றது. ஒரு முறை தனது மகளையும் மாப்பிள்ளையாகிய பெருமானையும் காண்பதற்காக தக்கன் கயிலாயம் சென்ற போது, வாயில் காப்பாளராக இருந்த நந்தி தேவர், பெருமானின் அனுமதி பெற்ற பின்னர் உள்ளே செல்லலாம் என்று கூறியதை தனக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாக தக்கன் கருதினான். இந்த நிகழ்ச்சிக்கு சில நாட்கள் கழித்து, பிரமதேவன் தொடங்கிய யாகத்திற்கு, பெருமானின் பிரதிநிதியாக நந்திதேவர் வந்திருந்தார். யாகத்திற்கு வந்த நந்திதேவரை முறைப்படி வரவேற்று உபசரித்த பிரமன், அவருக்கு மிகவும் உயர்ந்த ஆசனத்தை அளித்து கௌரவித்தார். இதனைக் கண்டு கோபம் கொண்ட தக்கன், தன்னை அவமதித்த பெருமானுக்கு அவிர்ப்பாகம் கொடுக்கக் கூடாது என்று வற்புறுத்தினான். பெருமானுக்கு அவிர்ப்பாகம் கொடுக்காமல் நடத்தப்படும் யாகம் அழிக்கப்படும் என்று நந்திதேவர் கூறவே, தக்கனுக்கும் நந்திதேவருக்கும் பயந்த பிரமன், யாகத்தை பாதியில் நிறுத்திவிட்டார். இதே பயத்தின் காரணமாக, எவரும் சில காலம் வேள்விகள் செய்யாமல் இருந்து வந்தனர். பெருமானை புறக்கணித்து யாகம் செய்து உலகிற்கு முன்மாதிரியாக இருக்க நினைத்த தக்கன் வேள்வி செய்ய தீர்மானித்தான். பெருமானுக்கும் தனது மகள் தாட்சாயணிக்கும் அழைப்பு விடுக்காமல், தேவர்கள், முனிவர்கள் அனைவரையும் தக்கன் தான் நடத்தவிருந்த யாகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தான். நாரதர், அகத்தியர், சனகாதி முனிவர்கள் நால்வர், வசிட்டர், அத்ரி, பிருகு, பராசரர், துர்வாசர் உள்ளிட்ட பல முனிவர்கள் தக்கனின் அழைப்பினைப் புறக்கணித்து யாகத்திற்கு வராமல் இருந்தார்கள். ததீசி முனிவர், யாகம் நடைபெறும் இடத்திற்கு வந்து தக்கனுக்கு அறிவுரை கூறி, பெருமானை யாகத்திற்கு வரவழைக்க முயற்சி செய்தார், மேலும் பெருமானை புறக்கணித்து செய்யப்படும் யாகம் பலன் அளிக்காது என்றும், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு விரோதமானது என்றும், அவ்வாறு செய்யப்படும் யாகம் பல தீங்குகளை விளைவிக்கும் என்று தக்கனுக்கு எடுத்துக் கூறினார். ஆனால் பிடிவாதமாக இருந்த தக்கன் அவரது அறிவுரையை ஏற்க மறுத்து யாகத்தைத் தொடங்கவே,ததீசி முனிவரும் யாகத்தினைப் புறக்கணித்து சென்று விட்டார். எனவே தவறான முன்மாதிரியாக விளங்கவிருந்த இந்த யாகத்தை அழிப்பது, வேதங்களின் நாயகனான பெருமானின் கடமையாக மாறிவிடுகின்றது. அலக்கழித்து=சின்னா பின்னம் செய்து, வேள்வி தொடர்ந்து நடைபெறாத வகையில், வேள்விக்கு சேமிக்க வைக்கப் பட்டிருந்த பொருட்கள் வேள்விச்சாலை எங்கும் சிதறின. தக்கன், வேள்வித் தலைவன், அக்னி, சூரியன், சந்திரன் உட்பட பல தேவர்கள்,யாகத்தில் பங்கு பெற்றதற்காக தண்டனை அடைந்தனர். ஆனால் வீரபத்திரர் எவரையும் கொல்லவில்லை. இவ்வாறு எவரது உயிரினையும் அழிக்காமல் தண்டனை மட்டும் அளித்ததை, இறைவன் செய்த அருள் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தக்கன் தனது தலையை இழந்த போதிலும், ஒரு ஆட்டின் தலை அவனுக்கு பொருத்தப் பட்டு, அவன் உயிருடன் வாழ வகை செய்யப்படுகின்றது. தக்கனும் தனது தவறினை உணர்ந்து சிவபெருமானை புகழ்ந்து பாடுகின்றான். யசுர் வேதத்தின் ஒரு பகுதியான ஸ்ரீருத்ரத்தின் ஒரு பகுதி தக்கன் பெருமானைப் புகழ்ந்து கூறிய சொற்களாக கருதப் படுகின்றன.இந்த பகுதியில் அனைத்துச் சொற்களும் மே என்று ஆடு கத்துவது போன்று முடிவதை நாம் உணரலாம். தன்னை அனைவரின் முன்னிலையிலும் வெகுவாக அவமதித்தவனை, தனது மனைவியை ஏசியவனை, அவன் தலையினை இழந்த பின்னரும் அவன் உயிருடன் வாழும் வண்ணம் ஆட்டின் தலையைப் பொருத்தி வாழ வகை செய்தது தலை சிறந்த கருணைச் செயல் அல்லவா. அத்தகைய நல்ல நெஞ்சினை உடையவராக இருந்த பெருமான், பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்று பாரதி பாடுவதற்கு காரணமாக இருந்தாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. நாம் சற்று சிந்தித்தால் இறைவனுக்கு பகைவர் என்றும் உற்றார் என்றும் எவரும் இல்லை என்பது நமக்கு விளங்கும். கொங்கு=தேன்; அலர்=மலர்; குழல்=கூந்தல்; கொம்பு அனையாள்=பூங்கொம்பு போன்ற மென்மையான உடலை உடைய உமை அம்மை.

தங்கலப்பிய தக்கன் பெரு வேள்வி

அங்கு அலக்கழித்து ஆரருள் செய்தவன்

கொங்கலர்க் குழல் கொம்பனையாளொடு

மங்கலக்குடி மேய மணாளனே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6,32,7) அப்பர் பிரான் பிராட்டியை கொம்பனைய நுண்ணிடையாள் என்று குறிப்பிடுகின்றார்.வம்பு=நறுமணம். அரும்பொருள்= கிடைத்தற்கு அரிய பொருள். மற்றவர்களுக்கு கிடைத்தற்கு அரிய பொருளாக இருந்தாலும், அடியவர்களுக்கு மிகவும்எளிமையானவன் என்பதால், அடியவர்களுக்கு கிட்டுபவன் என்று பொருள் கொள்ளவேண்டும்

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி

கொம்பனைய நுண்ணிடையாள் கூறாபோற்றி குரைகழலால் கூற்றுதைத்த கோவேபோற்றி

நம்பும் அவர்க்கு அரும்பொருளே போற்றி போற்றி நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி

செம்பொனே மரகதமே மணியே போற்றி திருமூலட்டானனே போற்றி போற்றி

திருப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.76.3) அப்பர் பிரான் உமை அன்னையை மின் காட்டும் கொடி மருங்குல் என்று குறிப்பிடுகின்றர்.வலி=வலிமை மிகுந்த; மருங்கே=அருகில்; புனம்=நிலம்; தென்=இசை; புறவு=முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் மயங்கிய தன்மை; இந்த பாடலில்திருவிளையாடல் புராண நிகழ்ச்சி, தருமிக்கு பொற்கிழி அளித்தது குறிப்பிடப்படுகின்றது. பரஞ்சோதி முனிவர் தாம் அருளிய திருவிளையாடல்புராணத்தில், இந்த நிகழ்ச்சியை, தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் மற்றும் கீரனை கரையேற்றிய படலம் ஆகிய இரண்டு படலங்களில் கூறுகின்றார்.பெருமான் தருமிக்கு எழுதிக் கொடுத்த பாடல் குறுந்தொகை எனப்படும் சங்க இலக்கியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வண்டினை நோக்கி பாடுவதாக அமைந்த இந்த பாடலின் கருத்து; நறுமணத்தினை ஆராய்ந்து திரியும் வாழ்க்கையை உடைய அழகிய சிறகுகளை உடைய வண்டே, பயிற்சி மிக்க நட்பும் மயில் போன்ற சாயலும் நெருங்கிய பற்களும் உடைய எனது தலைவியின் கூந்தலில் வீசும் நறுமணத்தினை விடவும் அதிகமான நறுமணம் கொண்ட பூவினை நீ இதுவரை கண்டதுண்டோ. எனது கேள்விக்கு விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி உண்மையான பதிலை நீ கூறுவாயாக. இந்த பாடல் பொருட்குற்றம் உள்ள பாடல் என்று நக்கீரன் உரைக்க, இறைவன் நேரில் தோன்றி, நக்கீரனிடம், நீ வணங்கும் ஞானப் பூங்கோதையின் (திருக்காளத்தி தலத்து அம்மை)கூந்தலுக்கு கூட இயற்கையில் நறுமணம் இல்லையா என்று கேட்க, நக்கீரன் இல்லை என்று முதலில் பதில் உரைத்தார். பின்னர் தான் தவறு செய்தேன் என்று ஒப்புக்கொண்டு, கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, கோப பிரசாதம், திருவெழுகூற்றிருக்கை ஆகிய பாடல்களை (பதினோராம் திருமுறை)பாடியதாகவும் பரஞ்சோதி முனிவர் கூறுகின்றார். புலவர் தருமிக்கு அருளிய நிகழ்ச்சியை குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு வண்டினை நோக்கி கேள்விகேட்பதாக இறைவன் எழுதிக் கொடுத்த பாடல் நினைவுக்கு வந்தது போலும், பெருமான் வண்டினை குறிப்பிட்டு பாடல் எழுதியதைப் போன்று தானும் ஒருவண்டினை வைத்து ஒரு கற்பனை செய்கின்றார். அந்த கற்பனையே இந்த பாடலில் கடை இரண்டு அடிகளாக மிளிர்கின்றது. பொதுவாக அப்பர் பிரானின்பாடல்களில் இயற்கைக் காட்சிகள் இடம் பெறுவதில்லை. கொன்றை மலர்கள் பொன்னின் நிறத்தில் இருப்பதும், காந்தள் மலர்கள் பூத்து இருக்கும் நிலைநீட்டிய விரல்களுடன் இருப்பதும் வண்டுகள் இன்னிசை பாடுவதும் இயற்கை. ஆனால் இந்த இயற்கை நிகழ்ச்சியின் மீது கற்பனை ஏற்றிச் சொல்லும்நயத்தை இந்த பாடலில் நாம் காணலாம். இவ்வாறு கூறும் நயத்தை தற்குறிப்பேற்ற அணி என்று இலக்கணம் கூறுவார்கள். வண்டுகள் இன்னிசை பாட,அந்த இன்னிசைக்கு பரிசு அளிப்பது போன்று கொன்றை மரங்கள் பொன்னினை உதிர்ப்பதாகவும், காந்தள் மரங்கள் தங்களது கைகளை நீட்டி,வண்டுகளின் சார்பாக அந்த பொன்னினைப் பெற்றுக் கொள்வதாகவும் இந்த கற்பனை அமைந்துள்ளது.

மின் காட்டும் கொடி மருங்கில் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலிச் சிலைக் கையோன் காண்

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினான் காண்

பொன் காட்டக் கடிக் கொன்றை மருங்கே நின்ற புனக்காந்தள் கைக் காட்டக்கண்டு வண்டு

தென் காட்டும் செழும் புறவின் திருப்புத்தூரில் திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.89.2) அப்பர் பிரான் பிராட்டியை கொம்பனாள் என்று குறிப்பிடுகின்றார். வம்பு=நறுமணம்.அரும்பொருள்=கிடைத்தற்கு அரிய பொருள். மற்றவர்களுக்கு கிடைத்தற்கு அரிய பொருளாக இருந்தாலும், அடியவர்களுக்கு மிகவும் எளிமையானவன்என்பதால், அடியவர்களுக்கு கிட்டுபவன் என்று பொருள் கொள்ளவேண்டும்.

கோழிக் கொடியோன் தன் தாதை போலும் கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்

ஊழி முதல்வரும் தாமே போலும் உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும்

ஆழித் தேர் வித்தகரும் தாமே போலும் அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்

ஏழு பிறவிக்கும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.24.9) சுந்தரர், கொடியேரிடையாள் என்று தேவியை குறிப்பிடுகின்றார். மறி=மான் கன்று; வேதங்கள் அருளியதன் மூலம் உலகுக்கு வாழும் நன்னெறியை புகட்டியவன் என்பதை உணர்த்தும் முகமாக நெறியே என்று பெருமானை அழைக்கின்றார்.

நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிச் செய்யும்

குறியே நீர்மையனே கொடியேரிடையாள் தலைவா

மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே

அறிவே நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

கருப்பறியலூர் தலத்தின் மீது அருளீய பதிகத்தின் பாடலில் (7.30.7) சுந்தரர் பிராட்டியை கொடி கொள் பூ நுண்ணிடையாள் என்று குறிப்பிடுகின்றார்.மேதி=எருமை மாடு; செடி கொள்=துன்பம் தருகின்ற; கடி=நறுமணம்; தடம்=கரை, நதிக்கரை, வாய்க்கால் கரை;

செடிகொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்தொழிய சிந்தை செய்ம்மின்

கடிகொள் பூந்தடம் மண்டிக்கருமேதி கண்படுக்கும் கருப்பறியலூர்

கொடிகொள் பூ நுண்ணிடையாள் கோல்வளையாள் அவளோடும் கொகுடிகோயில்

அடிகளை என் மனத்தினால் நினைந்த போது அவர் நமக்கு இனியவாறே

வடமுல்லைவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.69.2) சுந்தரர் பிராட்டியை கொடியிடை உமையவள் என்று குறிப்பிடுகின்றார். அற்சனை பாட்டேயாகும் ஆதலின் மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்று இறைவன் பணித்ததற்கு ஏற்ப, பல தலங்கள் சென்று பதிகங்கள் பாடிய தான், ஒரே இடமாகிய திருவொற்றியூரில் இருப்பது எவ்வாறு என்பதை பெருமானுக்கு எடுத்துரைக்கும் சுந்தரர், தான் திருவொற்றியூரை விட்டு நீங்கியதற்காக தனது கண் பார்வையை பெருமான் பறித்துக்கொண்டது சரியா என்பதை சொல்லாமல் சொல்லும் நேர்த்தியை நாம் இங்கே உணரலாம்.

கூடிய இலயம் சதி பிழையாமைக் கொடியிடை உமையவள் காண

ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்குற்றாய் என்று

தேடிய வானோர் சேர்திருமுல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.83.7) சுந்தரர், பிராட்டியை கொம்பன் நுண்ணிடையாள் என்று கூறுகின்றார். உயிர்கள் இடருற்ற காலத்தில் உதவும் சேமநிதி போன்று இருப்பவன் இறைவன் என்று குறிப்பிடுகின்றார்.

கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த

வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமரர்

செம்பொனை நன்மணியைத் தென் திருவாரூர் புக்கு

என் பொனை என் மணியை என்றுகொல் எய்துவதே

கூடலையாற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (7.85.10) சுந்தரர், உமை அன்னையை கொடியிடை என்று குறிப்பிடுகின்றார்.திருமுதுகுன்றம் செல்ல எண்ணிய சுந்தரர், தான் செல்லும் வழியில் தென்பட்ட முதியவர் ஒருவரிடம், திருமுதுகுன்றம் செல்லும் பாதையை சுட்டிக் காட்டுமாறு வேண்ட, முதியவரும் அதற்கு உடன்பட்டு தானும் அந்த வழியே செல்வதாக கூறி, முதுகுன்றம் அழைத்துச் செல்வதற்கு பதிலாக கூடலையாற்றூர் வழியில் அழைத்துச் சென்றார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. அந்த தலத்திற்கு அருகில் சென்றபோது, முதியவர் மறைந்துவிடவே, தன்னுடன் வந்தது பெருமான் தான் என்பதை சுந்தரர் புரிந்து கொள்கின்றார். பெருமானின் இந்த திருவிளையாடலை சுந்தரர் அதிசயம் என்று குறிப்பிட்டு, தன்னுடன் வந்தது பெருமான் என்பதை தான் புரிந்து கொள்ள முடியாமல் இருந்த நிலை குறித்து வருத்தம் தெரிவிக்கின்றார்

கூடலையாற்றூரில் கொடியிடை அவளோடும்

ஆடல் உகந்தானை அதிசயம் இதுவென்று

நாடிய இன் தமிழால் நாவலவூரன் சொல்

பாடல்கள் பத்தும் வல்லார் தம் வினை பற்றறுமே

திருநாகேச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.99.4) சுந்தரர், பிராட்டியை கொடியேர் இடையாள் என்று அழைக்கின்றார். வெருவ=அச்சம் கொள்ள; வென்றி=வெற்றி கொள்ளும் வண்ணம் வலிமை வாய்ந்த; முன்றில்=வீட்டில் முன்னே; கமுகுப் பாளைகளில் தேன் கூடுகள் கட்டப்படுவது இயற்கை.

குன்ற மலைகுமரி கொடியேரிடையாள் வெருவ

வென்றி மதகரியின் உரி போர்த்ததும் என்னை கொலாம்

முன்றில் இளங்கமுகின் முதுபாளை மது அளைந்து

தென்றல் புகுந்துலவும் திருநாகேச்சரத்தானே

திருவாசகம் பாடல் ஒன்றினில் திருச்சதகம் — காருணியத்து இரங்கல்) பாடலில் மணிவாசகர் கொடியிடையாள் என்று உமையம்மையை குறிப்பதை நாம் உணரலாம். வானத்து அவரவர் ஏறு (தலைவர்) என்று குறிப்பிடுவதன் மூலம், தேவலோகத்தில் இருக்கும் வானவர்கள் எவராயினும் அவர்களுக்கெல்லாம் தலைவர் சிவபிரான் என்று குறிப்பிடுகின்றார். பிரமனை பொன்னன் என்றும், திருமாலை கரியவன் என்றும் அவர்கள் நிறத்தை குறிப்பிட்டு அழைப்பது போல் சிவபிரானை செம்பிரான் என்று மணிவாசகர் இங்கே அழைக்கின்றார். உம்பர் என்பது இங்கே முக்தி உலகை குறிக்கின்றது. ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேன் என்று அப்பர் பிரான் கூறுவது போல், மணிவாசகரும் என்னை ஆளுடை ஒருவ என்று இறைவனை அழைக்கின்றார்.

எம்பிரான் போற்றி வானத்து அவரவர் ஏறு போற்றி

கொம்பரார் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி

செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம்பலவ போற்றி

உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி

பொழிப்புரை:

தனது கையில் ஏந்திய தீப்பிழம்பு அசைந்து ஆடும் வண்ணம் மிகவும் வேகமாக நடனமாடும் பெருமான், இளங்கொம்பு போன்ற சாயலில் அழகுடன் விளங்கும் உமை அன்னையுடன் கூடி இசைப் பாடல்கள் பாடுபவனாக உள்ளான். வளமை வாய்ந்து நீர் நிறைந்த வாய்க்கால்களால் சூழப்பட்ட வயல்கள் நிறைந்த அதிகை நகரினுள், தனது சடையின் மீது பொருத்திக் கொண்டுள்ள ஒற்றைப் பிறைச் சந்திரன் விளங்கும் வண்ணம் பெருமான் நடனமாடுகின்றான்.

பாடல் 7

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி

பூதம் புடை சூழப் புலித்தோல் உடையாகக்

கீதம் உமை பாடக் கெடில வடபக்கம்

வேத முதல்வன் நின்றாடும் வீரட்டானத்தே

விளக்கம்:

உமையன்னை கீதம் பாட பெருமான் நடமாடுபவராக இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பரமேட்டி=அனைவரிலும் மேலானவன்; தன்னால் தொழப்படும் தகுதி படைத்தவர் எவரும் இல்லாத தன்மையன்; பரமேச்வரன் என்ற சொல்லும் இந்த பொருளையே உணர்த்துகின்றது. உயர்ந்தவர்கள் அனைவருக்கும் தலைவனாக உள்ள பெருமான் என்பதே அந்த பொருள். பல திருமுறைப் பாடல்களில் பரமேட்டி என்று இறைவன் அழைக்கப்படுகின்றான், அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

வேணுபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.9.3) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று குறிப்பிடுகின்றார். கடம்=மதநீர்;அவர்=தாருகவனத்து முனிவர்கள்; அரவக்குழை= பாம்பினை குழையாக தனது காதில் அணிந்த தன்மை; பாம்பின் விடம், அந்த விடத்தை உண்டவரையும்,பாம்பினால் கடி பட்டவரையுமே கொல்லும். ஆனால் மகளிரின் கண் பார்வைக்கு இலக்காக மாறிய ஆடவரையும் தன்வயபடுத்தி பித்தம் கொள்ளுமாறு செய்யும் வல்லமை வாய்ந்தமையால், மேலான விடம், சக்தி வாய்ந்த விடம் என்று கூறுகின்றார்.

கடந்தாங்கிய கரியை அவர் வெருவ உரி போர்த்துப்

படந்தாங்கிய அரவக் குழை பரமேட்டி தன் பழவூர்

நடம் தாங்கிய நடையார் நல பவளதுவர் வாய் மேல்

விடம் தாங்கிய கண்ணார் பயில் வேணுபுரம் அதுவே

அன்பில் ஆலந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.33.7) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். செடி=முடை நாற்றம்; பெருமான் பலியேற்கச் செல்வது, பக்குவமடைந்த ஆன்மாக்கள் தங்களது மலங்களை இறைவன் ஏந்தியிருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் என்பது பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப்படுகின்றது. எனவே எவரேனும் தங்களது மலங்களை அந்த பிச்சைப் பாத்திரத்தில் இட்டால், மிகவும் மகிழ்ச்சி அடைவது சிவபெருமான் தான். இந்த செய்தி தான் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.பெருமான் வைத்திருப்பது பிச்சைப் பாத்திரம் என்பதாலும், அவர் பலி ஏற்கச் செல்கின்றார் என்று சொல்வதாலும், அடியார்கள் அந்த பாத்திரத்தில் சமர்ப்பிக்கும் ஆணவம் கன்மம் மாயை முதலான மலங்கள் உணவாக உருவகப்படுத்தப் பட்டு பெருமான் மகிழ்ச்சியுடன் உண்கின்றார் என்று சொல்லப் படுகின்றது. இந்த தன்மை திருமூலரால் ஒரு பாடலில் விளக்கப்படுகின்றது. படியார்=தன்மையன்; சீர்=சிறப்பு, புகழ்;

செடியார் தலையில் பலி கொண்டு இனிதுண்ட

படியார் பரமன் பரமேட்டி தன் சீரைக்

கடியார் மலரும் புனல் தூவி நின்று ஏத்தும்

அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே

மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.38.8) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். சிரம்=பிரம கபாலம்;பரம்=மேன்மை; அடுத்தவர்களின், பக்குவன்மடைந்த உயிர்களின், மலங்களை தான் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு முக்திநிலை வழங்கும் தன்மை, மிகவும் உயர்ந்த தன்மை என்று உணர்த்தப்படுகின்றது. அரங்க= நெறியும் வண்ணம்: வலி=வலிமை; செற்ற-அடக்கி வெற்றி கொண்ட; வரம் கொள்=வணங்கும் அடியார்களுக்கு பல நன்மைகளை அளிக்கும் தலம் மயிலாடுதுறை என்று கூறுகின்றார்.

சிரம் கையினில் ஏந்தி இரந்த

பரம் கொள் பரமேட்டி வரையால்

அரங்கவ் வரக்கன் வலி செற்ற

வரம் கொள் மயிலாடுதுறையே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.49.1) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று கூறுகின்றார். சென்ற பல பிறவிகளில் ஈட்டிய வினைத் தொகுதிகளின் பயனை, இன்பமாகவும் துன்பமாகவும் அனைத்து உயிர்களும் கழிக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. உயிர் பிறப்பெடுக்கும் அந்த தருணத்திலேயே அந்தந்த உயிர்கள் அந்த பிறவியில் கழிக்கப்பட வேண்டிய வினைகள் அந்த உயிர்களுடன் பொருந்துகின்றன. இது இறைவனின் செயல் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தேவி என்றாலும் இறைவன் என்றாலும் ஒருவரைத் தானே குறிக்கின்றது. இந்த தன்மையே,போகமார்த்த பூண்முலையாள் என்ற தொடர் மூலம் உயிர்கள் அனுபவித்துக் கழிக்க வேண்டிய வினைகளின் பயன்களை, இன்ப துன்ப அனுபவங்களாகிய போகத்தை, தனது மார்பகத்திலே தேக்கி, உயிர்களுக்கு தேவி அளிக்கின்றாள் என்ற குறிப்பு தோன்றும் வண்ணம் பயன்படுத்தப் பட்டுள்ளது போலும்.ஆர்த்த=நிறைந்த, சேர்ந்துள்ள, பிணைந்து நிற்கும்; அகலம்=மார்பு; ஆகம்=உடல், இங்கே மார்பு என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம்;பெருமானின் திருமேனி பொன் போன்று மிகவும் அழகாகவும் சிவந்த நிறத்தில் இருப்பதை உணர்த்த பொன்னகலம் என்று கூறுகின்றார்.பரமேட்டி=அனைவரிலும் மேலானவன், தனக்கு மேலாக ஒருவரும் இல்லாதவன்;

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே

திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.105.2) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று கூறுகின்றார். வண்டுகளில் இலட்சக் கணக்கான வகைகள் உள்ளன என்று கூறுவார்கள். சுரும்பு என்பது ஒரு வகை. ஆலை=கரும்பாலை; நெய் பால் தயிர் என்று குறிப்பிட்டமையால், கோமியம் பசுஞ்சாணம் ஆகியவை கலந்த பஞ்சகவ்யம் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. இறைவனை அனுதினமும் காலையும் மாலையும் பணிந்து வணங்குதல் நம் அனைவரின் கடமை என்று இந்த பாடலில் நமக்கு அறிவுரை கூறுகின்றார். பயின்றாடும்=தொடர்ந்து நடனமாடும்

சோலையில் வண்டினங்கள் சுரும்போடு இசை முரலச் சூழ்ந்த

ஆலையின் வெம்புகை போய் முகில் தோயும் ஆரூரில்

பாலொடு நெய் தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்

காலையும் மாலையும் போய் பணிதல் கருமமே

பிரமபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.40.9) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். அகலத்தான்=அகன்ற மார்பினை உடையவன்; கரிய மேனியை உடைய திருமாலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் காண முடியாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்றவனும், தனக்கு மேலாக வேறொருவர் இல்லாதவனும், பாம்புகள் அழகு செய்யும் அகன்ற மார்பினை உடையவனும்,சொற்களையும் எண்ணங்களையும் கடந்து, அவற்றால் அறிய முடியாத வண்ணம் இருப்பவனும் ஆகிய பெருமான் உறையும் பிரமபுரம் தலத்தினைத் சென்றடைந்து பெருமானைப் பணிந்து வணங்கும் அடியார்கள், ஏழு உலகங்களையும் ஆட்சி புரியும் உரிமையை உடையவர்கள் ஆவார்கள்.

கரியானும் நான்முகனும் காணாமைக் கனல் உருவாய்

அரியானாம் பரமேட்டி அரவம் சேர் அகலத்தான்

தெரியாதான் இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர

உரியார் தாம் ஏழுலகும் உடன் ஆள உரியாரே

சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.41.4) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் பெருமானைக் குறித்து செய்யப்படும் வழிபாடு, நமக்கு நல்வினைகளைத் தேடித் தரும் என்று உணர்த்திய திருஞான சம்பந்தர், இந்த பாடலில் அத்தகைய வழிபாட்டினை எவ்வாறு தொடங்குவது என்பதை கற்றுக் கொடுக்கின்றார். கட்டு அலர்த்த=அரும்பாக இருந்த நிலை கட்டப்பட்ட நிலை என்று சொல்லப் படுகின்றது. பூவின் நறுமணமும் பூவினில் உள்ள தேனும் எவரும் உணரமுடியாத வண்ணம் இருக்கும் நிலை என்பதால் கட்டுண்ட நிலை என்று சொல்வது மிகவும் நயமாக உள்ளது. கட்டு அலர்த்த மலர் என்று குறிப்பிட்டு, அப்போது மலர்ந்த மலர்கள் என்பதை திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். இயன்ற=போன்று; முருகு=மணம்; உயிர்க்கும்=வெளியே பரப்பும்;

கட்டு அலர்த்த மலர் தூவிக் கை தொழுமின் பொன் இயன்ற

தட்டு அலர்த்த பூஞ்செருந்தி கோங்கு அமரும் தாழ் பொழில் வாய்

மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம்

பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே

திருமீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.1) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். முருகப்பெருமான்,மாமரமாகி மாயமாக நின்ற சூரபத்மனை கொன்றதை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மைந்தன்=வலிமை வாய்ந்தவன்; காயம்=உடல்; செவ்வி=அழகிய;அழகிய உடலை படைத்த மன்மதன் என்று அடைமொழி கொடுக்கின்றார். மீயச்சூர் தலத்தைத் தொழுவதால் நாம் நமது வினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றார். வீட்டும்=அழித்துவிடும்.

காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்

பாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி

மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தன் தாதை தன்

மீயச்சூரே தொழுது வினையை வீட்டுமே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.75.2) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். மேலும் இந்த பாடலில்திருஞானசம்பந்தர், மடவாளொடும் சென்று பலி ஏற்பதை விரும்பியவன் என்று குறிப்பிடுகின்றார். பரமேட்டி=தனக்கு மேலாக எவரும் இல்லாதவன்;மடவாள்=உமை அன்னை; கலி=வறுமை முதலிய துன்பங்கள்; நம்பன்=விருப்பனாக இருக்கும் தன்மை; நலிய=துன்பம் அடைந்து மனம் வருந்தும் வண்ணம்;பல துன்பங்களை அளித்து நமது மனதினை நலியச் செய்யும் வினைகளை தீர்க்கும் பரமன், நமது விருப்பத்திற்கு உகந்தவனாக இருப்பது இயற்கை தானே.

வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும்

பலி விரும்பியதொர் கையினான் பரமேட்டியான்

கலியை வென்ற மறையாளர் தம் கலிக் காழியுள்

நலிய வந்த வினை தீர்த்துகந்த எம் நம்பனே

இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (2.75.6) திருஞானசம்பந்தர் பெருமானை, பரமேட்டி என்று குறிப்பிடுகின்றார். சுழி=நீர்ச்சுழிகள் நிறைந்த கங்கை நதி;சடையாகவே=சடையுள் அடஙகி சடையாகவே மாறிவிட்ட நிலை; மொழி=இனிய மொழி என்று பொருள் கொள்ளவேண்டும்; மட மங்கை=அழகும் இளமையும் ஒருங்கே பெற்ற உமையன்னை; கழி=உப்பங்கழி; இலங்கும்= தோன்றும்; பெருமானின் செய்கைகளின் தன்மையை புரிந்து கொள்ளும் அடியார்கள், அவனைப் புகழ்வரே அன்றி பழிப்பதில்லை. அவனது செய்கைகளின் தன்மைகளை புரிந்து கொள்ளாத அறிவற்ற மூடர்கள் பழிப்பதை பெருமான் பொருட்படுத்துவதில்லை. பழியோரார் என்று சிராப்பள்ளி தலத்து பதிகத்தின் பாடலில் திருஞானசம்பந்தர் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. எனவே பழி இல்லாதவனாக, பழிச் சொற்களால் ஏற்படும் துயரம் அற்றவனாக பெருமான் இருக்கின்றான் என்பதே இங்கு உணர்த்தப்படுகின்றது.

சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடையாகவே

மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன்

கழி இலங்கும் கடல் சூழும் தண் கலிக் காழியுள்

பழி இலங்கும் துயர் ஒன்றிலாப் பரமேட்டியே

சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.102.9) திருஞானசம்பந்தர், பெருமானை பரமேட்டி என்று குறிப்பிடுகின்றார். மாயன்=திருமால், அர்க்கர்களை வெல்ல பல மாயங்கள் புரிந்தவன் என்பதாலும், கண்ணனாக அவதரித்த போது செய்த லீலைகள் காரணமாகவும் மாயன் என்று அழைக்கப்படுகின்றார். மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என்று தொடங்கும் திருப்பாவை பாடல் நமது நினைவுக்கு வருகின்றது. சங்க இலக்கியங்களில் திருமால் மாயன் என்றே குறிப்பிடப்படுகின்றார். வண்டு சென்றணை= வண்டுகள் சென்று மொய்க்கும்;கிளறியும்=தோண்டிச் சென்றும்; பண்டு கண்டது காணவே=புதிதாக ஒன்றும் காணாத நிலை; தீப்பிழம்பாக அளித்த தோற்றம் தவிர்த்து, தீப்பிழம்பின் அடியையோ முடியையோ காணாத நிலை; பசுபதி=அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக உள்ள பெருமான்; சிவபெருமான் வீற்றிருப்பதே தலங்களுக்கு உயர்ந்த செல்வமும் சிறப்பும் என்று கூறுகின்றார்.

வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று

கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய்க் கிளறியும் பறந்தும் தாம்

பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி

கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுதெழ வினையவை கூடாவே

திலதைப்பதி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.118.5) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். திலதைப்பதி என்பது தலத்தின் பெயர். மதிமுத்தம் என்பது திருக்கோயிலின் பெயர். மரவம்=குங்குமம்; ஏழு குதிரைகள் பூட்டிய தேரினில் சூரியன் வலம் வருவதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு வாரத்தின் ஏழு நாட்களையும், வெண்மை நிறத்தில் கலந்துள்ள ஏழு நிறங்களையும் ஏழு குதிரைகள் குறிப்பதாக கூறுவார்கள். சூரியன் இறைவனை வழிபட்ட தலம் திலதைப்பதி. பரவி=புகழ்ந்து ஏத்தி; விரவி=கலந்து; ஞாழல்= புலிநகக்கொன்றை மரம்; மவ்வல்=மல்லிகை;

புரவி ஏழும் மணிபூண்டு இயங்கும் தேரினான்

பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர்

விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள்

மரவவ்வல் மலரும் திலதைம் மதிமுத்தமே

திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.121.5) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார்.ஆகம்=உடல்; ஆகநல்லார்=பெருமானின் உடலில் ஒரு கூறாக உள்ள பார்வதி தேவி; பெருமான் உட்கொண்ட ஆலகால நஞ்சினை அமுதமாக மாற்றியது பிராட்டி என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். போக நல்லார்=இல்லற சுகத்தை முறையான வழியில் அளிக்கும் இள மங்கையர்; நயந்து=விரும்பி; அழல் ஐந்தலை நாகம்=நெருப்பு போன்ற கொடிய விடம் கொண்ட ஐந்தலை பாம்பு; விடம் கொண்ட பாம்பினையும் அடக்கி, தன்வயப்படுத்திய தன்மையை நல்லோர்கள் போற்றுகின்றனர் என்று கூறுகின்றார்.

ஆக நல்லார் அமுதாக்க உண்டான் அழல் ஐந்தலை

நாக நல்லார் பரவந் நயந்து அங்கு அரை ஆர்த்தவன்

போக நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர் தனுள்

பாக நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே

திருக்கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.8.5) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். கடம்=மதநீர்;கடமணி=கடம்+அணி=மதநீர் ஒழுகும் யானை; சுடர்மணி=ஒளி வீசும் உருத்திராக்க மணி; சுண்ண வெண்ணீறு=வாசனை வீசும் திருநீறு;சுழல்வாயதோர்=வட்டமிட்டு அசைத்து ஆடும் படம் உடைய தன்மை; அரை=இடுப்பு; மா= பொதுவாக விலங்கு என்று பொருள்; இங்கே யானை என்று பொருள் கொள்ள வேண்டும்; விடமணி கண்டன்=மாணிக்கக் கல் பதித்தது போன்று கருமை நிறம் படர்ந்த கழுத்து;

சுடர்மணிச் சுண்ண வெண்ணீற்றினானும் சுழல்வாயதோர்

படமணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும்

கடமணி மா உரித் தோலினானும் கடவூர் தனுள்

விடமணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே

இராமேச்சுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.10.7) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் எட்டு பாடல்களில் இராமபிரான் மற்றும் அரக்கன் இராவணனுடன் தொடர்பு கொண்ட செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. கோள்களால் தனக்கு கேடு நேரிடும் என்பதை சொதிடம் கேட்டுணர்ந்த அரக்கன் இராவணன், கோள்களின் பால் கோபம் கொண்டு, அனைத்து கோள்களையும் சிறை வைத்து மகிழ்ந்த செய்தி இங்கே உணர்த்தப்படுகின்றது. சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கள் என்று ஐந்து கோள்களும் தீயன என்று எஞ்சிய நான்கு (செவ்வாய், குரு, இராகு கேது) கோள்களும் உணர்த்தப் படுகின்றன. அரக்கன் இராவணனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பழியை தீர்த்துக்கொள்ள இராமபிரான் நிறுவிய திருக்கோயில் என்றும் இந்த பாடலில் சொல்லப்படுகின்றாது.

சனிபுதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பல தீயன

முனிவது செய்து உகந்தானை வென்றவ் வினை மூடிட

இனி அருள் நல்கிடென்று அண்ணல் செய்த இராமேச்சுரம்

பனிமதி சூடி நின்றாடவல்ல பரமேட்டியே

திருப்புனவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.11.4) திருஞானசம்பந்தர், பெருமானை பரமேட்டி என்று குறிப்பிடுகின்றார். அழலை அங்கழல் என்று குறிப்பிட்டு அழகிய தீப்பிழம்பு என்று கூறுகின்றார். பெருமானுடன் இணையும் அனைத்துப் பொருட்களும் அழகாக இருப்பதாக நால்வர் பெருமானார்கள் கருதுகின்றனர். பெருமானுடன் இணையும் பல பொருட்களை குறிப்பிட்டு, அம்ம அழகிதே என்று முடிக்கும் அப்பர் பெருமானின் திருநாரையூர் தலத்து குறுந்தொகைப் பதிகம் நமது நினைவுக்கு வருகின்றது. பைங்கண்=பசிய கண்கள்;

சங்க வெண்தோடணி காதினானும் சடை தாழவே

அங்கையில் அங்கழல் ஏந்தினானும் அழகாகவே

பொங்கரவம் அணி மார்பினானும் புனவாயிலில்

பைங்கண் வெள்ளேற்று அண்ணலாகி நின்ற பரமேட்டியே

கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.12.2) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று குறிப்பிடுகின்றார். பால்=பக்கம், ஒரு பாகமாக; கோலம்=அழகு; ஏலம்=மயிர்ச் சாந்து; அறம் என்பது அறம், பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பொருட்களை குறிக்காது, வேதங்களின் உண்மைப் பொருளை குறிக்கும். சனகாதி முனிவர்கள் வேதங்கள் சொல்லும் வழியில் வீடுபேறு அடையும் முறையில் தங்களுக்கு இருந்த ஐயப்பாட்டினை தீர்த்துக் கொண்டு தெளிவு பெறும் பொருட்டு பெருமானை அணுகினார்கள்.

ஏலமலர்க் குழல் மங்கை நல்லாள் இமவான் மகள்

பால் அமரும் திருமேனி எங்கள் பரமேட்டியும்

கோல மலர்ப்பொழில் சூழ்ந்து எழிலார் திருக்கோட்டாற்றுள்

ஆல நீழற்கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே

சண்பை நகர் மீது (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.5) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்றும் பகவன் என்றும் அழைக்கின்றார். கெழுவு= பொருந்திய, அம்=அழகிய; பணம்=பண்+அம்; பண்ணுக்கு அழகு இனிமை; பரமேட்டி=மேலானவர்கள் என்று கருதப்படும் தேவர்களால் பெரிதும் விரும்பப் படுபவன் என்றும் தன்னால் தொழப்படுவார் எவரும் இல்லாதவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இரண்டும் பெருமானுக்கு பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம்; புறாக்கள் உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சியுடன் உலாவுகின்றன என்ற குறிப்புக்கு ஒரு சுவையான விளக்கமும் தரப் படுகின்றது. சிபிச் சக்ரவர்த்தியை சோதிக்க புறா வடிவினில் வந்த அக்னி, தான் செய்த தவறினுக்கு வருந்தி புறா வடிவினில் பெருமானை வழிபட்டு பயன் அடைந்ததை நினைத்து, தங்களது இனத்தில் ஒரு புறாவுக்கு இறைவன் அருள் புரிந்த இடம் என்று பெருமையுடன் புறாக்கள் மகிழ்வதாக இந்த விளக்கம் அமைந்துள்ளது.

பணம் கெழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்

அணங்கு எழுவு பாகம் உடையாக முடை அன்பர் பெருமானது இடமாம்

இணங்கெழுவி ஆடு கொடி மாட மதில் நீடு விரையார் புறவு எல்லாம்

தணம் கெழுவி ஏடலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே

கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.81.3) திருஞானசம்பந்தர் பெருமானை, பரமேட்டி என்றும் தேவர்களின் பழி தீர்த்தவன் என்றும் குறிப்பிடுகின்றார். பாற்கடலிலிருந்து பொங்கி வந்த கடுமையான ஆலகால விடம், தனது தன்மையால் அனைவரையும் அச்சுறுத்தி திசைக்கு ஒருவராக ஓடச் செய்த போதிலும், அந்த விடத்தின் தன்மையையும் கடந்தவராக பெருமான் விளங்கிய தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் பழி தீர்த்த பரமேட்டி என்று சம்பந்தர் கூறுகின்றார். அமுதம் கடையச் சென்ற தேவர்கள் அடைந்த பழி இங்கே குறிப்பிடப் படுகின்றது. அந்த பழி தான் யாது. பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற வேண்டும் என்ற ஆவலில், தங்களது முயற்சியைத் தொடங்கும் முன்னர் பெருமானை வழிபட்டு அவரது ஆசியினைப் பெற்ற பின்னர் தங்களது முயற்சியைத் தொடங்கவேண்டும் என்பதை தேவர்கள் மறந்தனர். அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பழி, பொங்கி வந்த விடத்தினுக்கு அஞ்சி, பெருமானை வேண்டியதால் தீர்ந்தது. பெருமானும் விடத்தினை உட்கொண்டு அவர்களை காப்பாற்றியதுமன்றி, பாற்கடலிலிருந்து அமுதம் வெளிவருவதற்கும் அருள் புரிந்தார்.

வண்டரவு கொன்றை வளர் புன்சடையின் மேல் மதியம் வைத்துப்

பண்டரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீரக்

கண்டு அரவம் ஒண் கடலின் நஞ்சு அமுது உண்ட கடவுள் ஊர்

தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரமாமே

திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.102.6) திருஞானசம்பந்தர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார்.வாய்மையினார்=உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள்; பரமேட்டி=தனக்கு மேல் ஒருவரும் இல்லாத தன்மை உடையவன்; சீருறு= சிறப்பான முறையில்; மறுகு=வீதிகள்; இறைவன் தனது உடலில் ஏற்றுக்கொண்ட பொருட்கள் ஒன்றோடொன்று பொருந்தாத தன்மை உடைய பொருட்களாக காணப்படுகின்றன என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தனது சடையினில் கங்கை நதியினை ஏற்றுள்ள இறைவன் சந்திரனையும் பாம்பினையும் தனது சடையினில் வைத்துள்ளான். இவை மூன்றும் ஒன்றோடொன்று ஒவ்வாமல் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப்படுகின்றது.

பாருறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைங்கொன்றைத்

தார் உறு மார்புடையான் மலையின் தலைவன் மலைமகளைச்

சீர் உறு மா மறுகில் சிறை வண்டு அறையும் திருநாரை

ஊர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றோடொன்று ஒவ்வாவே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.52.6) அப்பர் பிரான் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். பள்ளி கொண்ட பெருமாளாக விளங்கும் திருமாலை, கண் துஞ்சும் நெடுமால் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். துஞ்சும்=தூக்கம் கொள்ளும்; பாற்கடலில் பள்ளி கொள்பவனும் கரிய திருமேனியை உடையவனும் நெடிய உருவம் எடுத்து மூன்று உலகங்களை அளந்தவனும் ஆகிய திருமால், வக்கரனை கொல்வதற்காக வலிமையான ஆயுதம் பெற வேண்டி, குறைந்த மலருக்கு பதிலாக தனது கண்ணினை நோண்டி மலராக தனக்கு அர்ச்சனை மலராக படைத்ததைக் கண்ட பெருமான், திருமால் வெளிபடுத்திய அன்பினுக்கு பரிசாக தான் வைத்திருந்த சக்கராயுதத்தை அருளினான். வண்டுகள் உண்ணும் தேனை உடைய கொன்றை மலர்கள், வன்னி. ஊமத்தை மலர்கள் அணியப் பெற்ற தனது சடையினில். வானில் இருந்து மிகவும் வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியை அடக்கி மறைத்தவன் சிவபெருமான். பண் போன்று இனிய சொற்களை உடைய பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும்,அனைவர்க்கும் மேலான தலைவனாக விளங்குபவனும், தனக்கு மேலாக வேறு ஒருவரும் இல்லாதவனும், வெண்மை நிறத்து பிறைச் சந்திரனையும் பாம்பினையும் தனது சடையினில் ஒருங்கே வைத்துள்ளவனும் ஆகிய இறைவன் சிவபெருமான். அடர்ந்த சோலைகள் சூழ்ந்திருப்பதால் குளிர்ந்து காணப்படும் திருவீழிமிழலை தலத்தில், விண்ணுலகத்திலிருந்து திருமாலால் கொண்டுவரப் பெற்ற விமானத்தை உடைய திருக்கோயிலில் இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் உறைகின்றார்.

கண்துஞ்சும் கருநெடுமால் ஆழிவேண்டிக் கண் இடந்து சூட்டக் கண்டு அருளுவான் காண்

வண்டு உண்ணும் மதுக் கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடைக் கரந்த மாதேவன் காண்

பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண்

வெண்திங்கள் அரவொடு செஞ்சடை வைத்தான் காண் விண்ணிழி தண்வீழிமிழலையானே

திருவஞ்சைக்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.4.6) சுந்தரர் பெருமானை பரமா பரமெட்டி என்று அழைக்கின்றார். பரமன் என்றால் உயர்ந்தவன் என்று பொருள். பரமன் என்று பெருமானை அழைத்த சுந்தரருக்கு, உலகத்தவர் பலரையும் பரமன் என்று அழைப்பதால், அத்தகைய பரமர்களினின்றும் மாறுபட்டு மேலும் உயர்ந்தவன் சிவபெருமான் என்பதை சுட்டிக் காட்டவேண்டும் என்று தோன்றியது போலும். பரமா பரமேட்டி என்று அழைத்து, உயர்ந்த பரமர்களாக கருதப்படும் பலராலும், விரும்பித் தொழப்படுபவன் என்றும் தன்னால் தொழப்படுபவர் எவரும் இல்லாதவர் சிவபெருமான் என்றும் உணர்த்துகின்றார். இரவம்=இராப்பொழுது; பெருமான் பிச்சை ஏற்பதால், அவனைத் தொழும் அடியார்கள் பெறுகின்ற பேறு தான் என்னே என்ற கேள்வியை எழுப்பி நம்மை சுந்தரர் சிந்திக்க வைக்கின்றார். பெருமான் பிச்சை ஏற்பதால், மிகவும் உயர்ந்த முக்திப்பேறு அவனது அடியார்களுக்கு வாய்க்க இருக்கின்றது என்பதை உணர்த்துகின்றார். அவன் பலி ஏற்பதால் தானே, பக்குவமடைந்த உயிர்கள் தங்களது மலங்களை அவனிடத்தில் அர்ப்பணித்துவிட்டு மலமற்றவர்களாகத் திகழ்ந்து முக்தி உலகம் செல்ல முடிகின்றது. இந்த பெறுதற்கரிய பெரும் பேறே இங்கு உணர்த்தப்படுகின்றது.

இரவத்திடு கட்டெரி ஆடிற்றென்னே இறந்தார் தலையில் பலி கோடலென்னே

பரவித் தொழுவார் பெறு பண்டமென்னே பரமா பாமேட்டி பணித்தருளாய்

உரவத்தொடு சங்கமோடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு

அரவக்கடல் அங்கரை மேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே

கழிப்பாலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.23.10) சுந்தரர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். கடற்கரைத் தலமாகிய கழிப்பாலை, கடல் அடித்துக் கொண்டு வரும் செல்வங்களாகிய முத்து சங்கு ஆகியவற்றை கொண்டது. பெருமானை பழியற்ற புகழினை உடையவன் என்று சுந்தரர் கூறுகின்றார். பெருமானின் செயல்கள் எதுவுமே தனது நலனுக்காக செய்யப்பட்டவை அல்ல. அனைத்தும் அடியார்கள் நலன் கருதியும், பொதுவாக உலகத்தவர் நலன் கருதியும் செய்யப்படுபவை. எனவே அவ்னது செயல்களால் அவனைச் சாருகின்ற புகழ், எந்த விதமான பழியையும் அவனுக்கு பெற்றுத் தருவதில்லை. அவனது ஒரு சில செய்கைகளை, நஞ்சு உண்டது, பலியேற்பது, போன்றவற்றின் உண்மையான நோக்கத்தையும் அதனால் விளையும் பலன்களையும் புரிந்து கொள்ளாமல் அறியாமையில் ஆழ்ந்திருக்கும் ஒரு சிலர், அந்த செயல்களுக்காக பெருமானை பழித்தாலும், பெருமான் அந்த பழிச்சொற்களை பொருட்படுத்தாமல், தொடர்ந்து அந்த செயல்களை செய்து கொண்டே வருகின்றான். எனவே உண்மையாக பழி அவனைச் சென்று அடைவதில்லை. இந்த தன்மை தான் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

பழி சேரில் புகழான் பரமன் பரமேட்டி

கழியார் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானைத்

தொழுவான் நாவலர் கோன் ஆரூரன் உரைத்த தமிழ்

வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே

இடையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.31.8) சுந்தரர் பரமனை பரமேட்டி என்று அழைக்கின்றார். தேசன்=ஒளி மயமாக விளங்குபவன்;பாசன்=அனைத்து உயிர்கள் பாலும் பற்று கொண்டவனாக திகழ்ந்து, அவற்றுடன் இணைந்து நின்று இயக்குபவன்;

தேசனூர் வினை தேய நின்றான் திருவாக்கூர்

பாசனூர் பரமேட்டி பவித்த பாவ

நாசனூர் நனிப்பள்ளி நள்ளாற்றை அமர்ந்த

ஈசனூர் எய்த மான் இடையாறு இடைமருதே

கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.53.3) சுந்தரர் பெருமானை, பலி தேர்ந்துண்ணும் பரமேட்டி என்றும் பித்தன் என்றும் அழைக்கின்றார். அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் ஒருவரே தலைவர், தாய் தந்தை மற்றுமெல்லாம், என்று சொல்லுவதன் மூலம், பெருமானை விடவும் உயர்ந்தவர் எவரும் இல்லை என்பதை உணர்த்தி, பரமேட்டி என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருத்தமாக பெருமான் உள்ளார் என்பதை உணர்த்துகின்றார்.

காயும் புலியின் அதளுடையர் கண்டர் எண்தோள் கடவூரர்

தாயும் தந்தை பல்லுயிர்க்கும் தாமேயாய தலைவனார்

பாயும் விடை ஒன்றதுவேறிப் பலி தேர்ந்துண்ணும் பரமேட்டி

பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே

திருவாவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.70.8) சுந்தரர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். இந்த பாடலிலும் பரமா என்று அழைத்த பின்னர் பரமேட்டி என்று சுந்தரர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பெருமானை கோதிலா அமுதே என்று கூறுகின்றார். அமுதுக்கும் குறை உள்ளது என்பதைத் தானே, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விடம் என்ற முதுமொழி உணர்த்துகின்றது. அந்த குறையும் இல்லாத அமுதமாக இருப்பவன் பெருமான் என்று இங்கே கூறுகின்றார். கோ=அரசன், தலைவன்; இறைவனைத் தவிர்த்து நமக்கு வேறெவரும் நமக்கு நிரந்தரமான உறவில்லை என்பதை சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். இதே கருத்து மணிவாசக அடிகளாரின் வாய்மொழியாக வாழாப்பத்து பதிகத்தின் முதல் பாடலில், ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் என்று வருகின்றது. இதே கருத்து அப்பர் பிரானின் திருவானைக்கா பதிக்த்தின் முதல் பாடலிலும் (6.62.1) செத்தால் வந்து உதவுவார் ஒருவரில்லை என்ற தொடர் மூலம் வெளிப்படுகின்றது.

கோதிலா அருள் பெருகு கோலமே இமையோர் தொழு கோவே

பாதி மாதொரு கூறுடையானே பசுபதீ பரமா பரமேட்டி

தீதிலா மலையே திருவருள் சேர் சேவகா திருவாவடுதுறையுள்

ஆதியே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

வெண்பாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.89.8) சுந்தரர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். கார்=கருமேகம்; கருமேகம் படர்ந்தது போன்று கருமையான கறையை கழுத்தினில் உடைய பெருமான் என்று கூறுகின்றார். பாரிடம்=பூதங்கள்; வார்=மார்பில் பெண்கள் அணியும் கச்சு; இந்த பாடல் வெண்பாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் என்றாலும் இந்த பாடலில் வெண்பாக்கம் தலத்தின் பெயர் இடம்பெறவில்லை.திருவொற்றியூர் தலமே இடம் பெறுகின்றது. திருவொற்றியூர் நகரினை விட்டுப் பெயர்ந்ததன் விளைவாக தனது கண் பார்வையை தான் இழக்க நேர்ந்ததை குறிப்பிட்டு, அதனால் தான் வெண்பாக்கத்து பெருமானை தான் தனது கண்களால் பார்க்க முடியாமல், இங்கிருந்தாயோ என்று பதிகத்தின் பாடல் தோறும் குறிப்பிட்டவருக்கு, இந்த நிலைக்கு காரணம் திருவொற்றியூர் பெருமான் என்பது நினைவுக்கு வந்தது போலும். இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் மகிழ மரத்தின் கீழே சென்று இருப்பாய் என்று தான் வேண்டியதையும், பத்தாவது பாடலில் சங்கிலிக்காக கண் பார்வையை பறித்தாய் என்றும் கூறுகின்றார்.முதல் ஒன்பது பாடல்களில் வெண்பாக்கம் தலத்தின் பெயரை குறிப்பிடாத சுந்தரர், பதிகத்தின் பத்தாவது பாடலில் வெண்கோயில் என்று குறிப்பால் உணர்த்துகின்றார். பதிகத்தின் கடைப்பாடலில் வெண்பாக்கம் இடம் கொண்ட பெருமான் என்று குறிப்பிட்டு இந்த பதிகம் வெண்பாக்கம் தலத்தின் மீது அருளப்பட்டது என்பதை உணர்த்துகின்றார்.

வார் இடங்கொள் வனமுலையாள் தன்னோடு மயானத்துப்

பாரிடங்கள் பல சூழப் பயின்றாடும் பரமேட்டி

காரிடம் கொள் கண்டத்தன் கருதும் இடம் திருவொற்றி

ஊர் இடம் கொண்டிருந்த பிரான் உளோம் போகீர் என்றானே

புக்கொளியூர் அவினாசி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.92.1) சுந்தரர் பெருமானை பரமேட்டி என்று அழைக்கின்றார். இனிமேல் தான் எடுக்கவிருக்கும் பிறவிகள் அனைத்திலும் பெருமானை தான் மறக்காமல் இருப்பேன் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். திருவெண்ணெய்நல்லூர் தலத்தினில், பெருமான் தன்னை ஆட்கொண்டபோதே, தான் அணுக்கத் தொண்டனாக கயிலாயத்தில் பணி புரிந்ததையும், திருநாவலூரில் நம்பி ஆரூரனாக பிறந்ததன் காரணத்தையும் உணர்ந்து கொண்டவருக்கு, தனக்கு இனிமேல் பிறவியில்லை என்பதையும் நன்கு உணர்ந்தவராகத் தானே சுந்தரர் இருந்திருப்பார். எனினும் எழுமைக்கும் மறக்கேன் எம்பெருமானையே என்று நமக்கு அறிவுரையாக இந்த பாடலில் கூறுகின்றார்.

எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம் பெருமானையே

உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்

புற்றாடு அரவா புக்கொளியூர் அவினாசியே

பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே

பொழிப்புரை:

அனைவரிலும் உயர்ந்தவராக இருப்பவரும், தன்னால் தொழப்படுபவர் எவரும் இல்லாத உயர்ந்த நிலையில் இருப்பவரும் ஆகிய பெருமானின் திருப்பாதங்களை பலரும் தொழுகின்றனர். அவர், பூத கணங்கள் புடை சூழ, புலித்தோலை ஆடையாக உடுத்தியவராக, உமை அன்னை பாடுவதற்கு ஏற்ப நடனம் ஆடுகின்றார். கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகை வீரட்டம் தலத்தினில், வேத முதல்வனாகிய பெருமான் நட்னம் ஆடுகின்றார்.

பாடல் 8:

கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின் வாட

ஒல்லை அடர்த்து அவனுக்கு அருள் செய்து அதிகையுள்

பல்லார் பகுவாய நகு வெண்டலை சூடி

வில்லால் எயில் எய்தான் ஆடும் வீரட்டானத்தே

விளக்கம்:

கவின்=அழகு; வாட=கெட; ஒல்லை=விரைவாக, தாமதம் ஏதும் செய்யாமல்; பெருமான் தாமதம் செய்திருந்தால் கயிலை மலையின் அழுத்தம் தாளமுடியாமல், அரக்கன் இராவணன் கூழாக மாறியிருப்பான் என்பதை உணர்த்தும் பொருட்டு, ஒல்லை அருள் புரிந்தார் என்று கூறுகின்றார். ஒல்லை என்ற சொல்லினை அடர்த்து என்ற சொல்லுடன் கூட்டி பொருள் கொள்ள வேண்டும்; தடந்தோள்=அகன்ற தோள்கள்; பகுவாய=பிளவு பட்ட வாயினை உடைய;திறந்த நிலையில் உள்ள வாய் என்று பொருள் கொள்ள வேண்டும்; பல்லார்-பற்கள் பொருந்திய; நகு வெண்டலை என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.பெருமான் தனது கையில் வைத்திருக்கும் பிரம கபாலம் ஏன் சிரிக்கின்றது என்பதற்கு சான்றோர்கள் மிகவும் அருமையான விளக்கம் அளிக்கின்றனர்.அறியாமையில் ஆழ்ந்து, இந்த உலகப் பொருட்கள் நிலையானவை என்றும் அந்த பொருட்களால் நாம் அனுபவிக்கும் சிற்றின்பம் நிலையானது என்றும் கருதி வாழும் மனிதர்களைப் பார்த்து பிரம கபாலம் சிரிக்கின்றது என்றும் அந்த சிரிப்பினை புரிந்து கொண்டு நாம், நமது சிந்தனையை மாற்றுக் கொள்ள வேண்டும் என்பது உணர்த்தப்படுகின்றது என்பதே அந்த விளக்கம். நகு வெண்டலை என்றும் நகுதலைமாலை என்றும் குறிப்பிடும் பதிகங்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

திருவண்ணாமலை பதிகத்தின் பாடலில் (1.10.7) திருஞானசம்பந்தர் நகு வெண்டலை என்று கூறுகின்றார். கழுதாடிய காட்டில் என்று சில பதிப்புகளில் காணபப்டுகின்றது. கழுது என்றால் பேய் என்று பொருள். பேய்கள் திரியும் காட்டினில் நடமாடும் பெருமான் என்று பெரும்பாலான தேவாரப் பாடல்களில் வருகின்ற தொடர் கருதி அவ்வாறு வெளியிட்டுள்ளனர் போலும். திருவண்ணாமலை ரமணாச்சிரமத்தில், ஸ்ரீ ரமண பகவான் பயன்படுத்திய தேவாரப் புத்தகத்தில் கழுதாடிய என்று அவரே தனது கைப்பட திருத்தியமை இங்கே நினைவு கூரத்தக்கது. உயிரற்ற உடல்கள் இடப்படும் காட்டினில் உள்ள பிணங்களின் தசைத்துண்டங்களை கொத்தித் தின்பதற்கு கழுகுகள் வருவது இயற்கை தானே. கரிகாலன குடர் கொள்வன என்ற விவரங்கள் கழுகுகளுக்கு பொருந்துவதை நாம் உணரலாம். பொதுவாக சுடுகாட்டில் உள்ள பிணங்களின் தலைகளை உருட்டி விளையாடுவதும், அந்த மண்டையோட்டில் ஒட்டியிருக்கும் தசைத்துணுக்குகளை உண்பதும் நரிகள் செய்யும் செய்கைகள். தசைத் துணுக்குகள் அற்று, பற்கள் வெளியே தெரியும் வகையில் காணப்படும் மண்டையோடுகளை நகு வெண்தலை என்று கூறுகின்றார். இவ்வாறு கழுகுகள் உலவுவதும் நரிகள் விளையாடுவதும் சுடுகாட்டின் பொதுத்தன்மை. பிரளய காலத்தில் உலகமே சுடுகாடாக காட்சி அளிக்கும் தருணத்தில், நரிகள் கழுகுகள் உட்பட அனைத்து உயிர்களும் இறந்த நேரத்தில்,நரிகளும் கழுகுகளும் காணப்படா. எனினும் சுடுகாட்டின் பொதுத் தன்மை கருதி, நரிகள் மற்றும் கழுகுகள் உலவும் காடு என்று சொல்லப்படுகின்றது.எரியாடிய= ஊழித்தீயினில் நடமாடும் தன்மை; அரி=செவ்வரி; கண்களில் சிவப்பு நிறக் கோடுகள் காணப் படுவது, உடல் நலமாக இருப்பதன் அறிகுறிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு சமயத்தில் மருத்துவர்கள், நமது கண்களின் கீழிமையை இழுத்துப் பார்த்து, கண்களில் ஓடும் கோடுகளின் நிறத்தின் தன்மையை பார்ப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

கரிகாலன குடர் கொள்வன கழுகாடிய காட்டில்

நரியாடிய நகு வெண்டலை உதை உண்டவை உருள

எரியாடிய இறைவர்க்கிடம் இன வண்டிசை முரல

அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே

வியலூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.13.1) திருஞானசம்பந்தர் நகுவெண்டலை என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில்திருஞானசம்பந்தர் பெருமான் தனது சடையில் பாம்பு, கங்கை நங்கை, இளம் பிறைச் சந்திரன், மற்றும் சிரிக்கும் கபாலம் ஆகியவற்றை வைத்திருப்பதாக கூறுகின்றார், ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களைக் கொண்ட பொருட்கள் ஒரே இடத்தில் கலந்து இருக்கின்றன என்பதை குறிப்பிடும் வண்ணம் விரவும் சடை என்று கூறுகின்றார். விரவும்=ஒன்றாக கலந்திருத்தல்; குரவம்=குராமலர்; அரிவை=இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட பெண்களைக் குறிக்கும் சொல். அம்பிகை என்றும் மூப்பு அடையாமல், இளமையும் அழகும் ஒரு சேர வாய்க்கப் பெற்று இருப்பதால் தேவியை அரிவை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொரு=போருக்கு சென்ற; கயாசுரன் என்ற அரக்கன், யானை உடலைக் கொண்டவனாக இருந்தவன், சிவபெருமானுடன் போருக்குச் சென்றான். சிவபெருமானால் அவனுக்கு மரணம் நேரும் என்பதை பிரமதேவன் எடுத்துச் சொல்லியிருந்த போதும், அதனை பொருட்படுத்தாமல்,தேவர்களுக்கு அடைக்கலம் தந்த காரணத்திற்காக பெருமான் மீது சினங்கொண்டு, போருக்கு சென்றதையே, பொருவெங்கரி என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பட=இறந்து பட உரிவை=தோல்;

குரவம் கமழ் நறுமென் குழல் அரிவை அவள் வெருவப்

பொரு வெங்கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன்

அரவும் அலை புனலும் இளமதியும் நகு தலையும்

விரவும் சடை அடிகட்கு இடம் விரிநீர் வியலூரே

திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.22.4) திருஞானசம்பந்தர் நகுதலை

என்று குறிப்பிடுகின்றார். இதழி=கொன்றை மலர்; கனகி=ஊமத்தை: முகை=மொட்டு; சுர நதி=தேவ லோகத்திகிருந்து கீழே இறங்கிய கங்கை நதி;தல=பூதலம், நிலவுலகம்; இந்த பதிகத்து பாடல்களில் நான்காவது அடியின் கடையெழுத்து தவிர்த்த அனைத்தும் குறில் எழுத்துகளாக இருக்க வேண்டும் என்பதற்காக மறைக்காடு என்ற பெயர் மறைவனம் என்று மாற்றப்பட்டுள்ளது. தன்னை வழிபடுவோரில் மனிதர் முனிவர் என்ற பேதம் பாராமல், பெருமான் அனைவரின் மலங்களையும் அறுப்பதே நினைவாக கொண்டு அருள் புரிகின்றான் என்று கூறுகின்றார்.

நலமிகு திருவிதழியின் மலர் நகு தலையொடு கனகியின் முகை

பல சுரநதி பட அரவொடு மதி பொதி சடைமுடியினன் மிகு

தல நிலவிய மனிதர்களொடு தவ முயல்தரு முனிவர்கள் தம

மலமறு வகை மன நினை தரு மறைவனம் அமர் தரு பரமனே

வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.39.1) திருஞானசம்பந்தர் நகுதலை என்று கூறுகின்றார். அந்தம்=முடிவு; சங்கார காரணனாக இறைவன் இருக்கும் நிலை; ஆதி=தொடக்கம், சங்கார காரணனாக இருக்கும் இறைவன், மீண்டும் உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. நமது கண்ணெதிரே விரிந்து பரந்து காணப்படும் உலகும், உலகிலுள்ள பலவகையான பொருட்களும் நிலையானவை என்ற மாயத் தோற்றத்தை அளிப்பதால், அந்த நிலை உண்மை நிலையல்ல என்பதை தெளிவுபடுத்தும் சம்பந்தர், இறைவன் ஒருவனே நிலையானவன் என்றும், அவனே உலகம் மற்றும் உலகப் பொருட்கள் அழிவதற்கு காரணமாக இருப்பவன் என்பதையும் இங்கே உணர்த்துகின்றார். மேலும் இந்த உலகமும் உலகப் பொருட்களும் மீண்டும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவனும் சிவபெருமான் தான் என்பதை உணர்த்தும் வண்ணம் ஆதியும் ஆகிய அண்ணல் என்றும் கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம் ஒவ்வொரு ஊழியின் முடிவிலும், உலகத்தை அழிப்பதும் மீண்டும் உலகத்தை படைப்பதும் செய்பவன் இறைவன் என்பதனை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். உலகத்தின் தோற்றத்திற்கும் அழிவுக்கும் இடைப்பட்ட காலத்தில், உலகத்தில் உள்ள உயிர்களையும் உலகப் பொருட்களையும் பாதுகாப்பதும் இறைவன் தான் என்பதை சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்ததை குறிப்பட்டு திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். கங்கை நதியை பெருமான் தனது சடையில் மறைத்த செய்தியை குறிப்பிட்டு, பெருமான் கரத்தல் தொழிலை புரிவதை நமக்கு உணர்த்துகின்றார். உலகினை மீண்டும் மீண்டும் படைப்பதே, உயிர்கள் தங்களது எஞ்சிய வினைகளை அனுபவித்து கழித்துக் கொண்டு, தன்னை வந்தடையவேண்டும் என்று நோக்கத்துடன் என்பதால், உயிர்களுக்கு இறைவன் தொடர்ந்து அருள் புரிந்து கொண்டிருப்பதும் இங்கே உணர்த்தப் படுகின்றது. இறைவன் தனது கூத்து மூலம், ஐந்து தொழில்களை தொடர்ந்து செய்யும் தன்மையை உணர்த்துவதை, தில்லைச் சிதம்பரத்தில் உணர்ந்த திருஞானசம்பந்தர், அந்த நினைவிலே மகிழ்ந்து திளைத்தார் போலும். அதனால் தான் திருவேட்களம் பதிகத்தின் முதல் பாடலிலும் பெருமான் ஐந்து தொழில்களையும் புரியும் தன்மையை குறிப்பிடுகின்றார். ஆரழல்=வேறு எவராலும் பொறுக்க முடியாத தீப்பிழம்பு; மந்த முழவம்=குறைந்த ஸ்தாயியில் அடிக்கப்படும் மத்தளம்; சந்தம்=அழகிய மலர்கள்; நகுதலை=வாய் பிளந்த நிலையில் இருப்பது போன்று காணப்படும் மண்டையோடு; வெந்த வெண்ணீறு=உலகத்தின் அனைத்து உடல்களும் பொருட்களும் பிரளய நெருப்பினில் எரிந்து அழிந்த பின்னர் காணப்படும் சூடான சாம்பல்;

அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்து இலங்க

மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்றாடிச்

சந்தம் இலங்கு நகுதலை கங்கை தண்மதியம் அயலே ததும்ப

வெந்த வெண்ணீறு மெய் பூசும் வேட்கள நன்னகராரே

திருப்பாம்புரம் தலத்தின் அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.41.5) திருஞானசம்பந்தர், நகுதலை மாலை அணிந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றார்.மனிதர்கள் அனைவரும் தங்களது உடல் நிலையானது என்ற எண்ணத்துடன் இருப்பதைக் கண்டு அந்த தலைகள் சிரிப்பதாக திருஞானசம்பந்தர் கற்பனை செய்வதாக அழகான விளக்கம் ஒன்றினை திரு தண்டபாணி தேசிகர் அளிக்கின்றார். கதியதுவாக=நடன கதி அதுவாக; கான்=சுடுகாடு, ஓத்து ஒலி=வேதங்களின் ஒலி; ஓவா=நீங்காத; பாம்புர நகரத்து வேதியர்கள் முறையாக வேள்விகள் செய்தனர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

நதியதன் அயலே நகுதலை மாலை நாண் மதி சடை மிசை அணிந்து

கதி அதுவாகக் காளி முன் காண கானிடை நடம் செய்த கருத்தர்

விதியது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்தொலி ஓவாப்

பதி அதுவாகப் பாவையும் தாமும் பாம்புர நன்னகராரே

புறவம் என்று அழைக்கப்ப்டும் சீர்காழி தலத்தின் மீது (1.74.5) அருளிய பதிகத்தின் பாடலில், திருஞானசம்பந்தர், நகுவெண்டலை என்று குறிப்பிடுகின்றார்.முகிழ்தல்=முளைத்தல்; சரி= தொங்கும்; பிளவு பட்டு வாய் திறந்து இருப்பது போன்று காட்சி அளிப்பதால் சிரிக்கும் தோற்றத்தினைக் கொண்டுள்ள தலை என்பதை உணர்த்த நகுவெண்தலை என்று கூறுகின்றார். நகுவெண்தலையை சடையில் சூட்டிக் கொண்டவன் என்று பெருமான் தலைமாலை தலைக்கு அணிந்துள்ள நிலையினை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.

செங்கண் அரவு நகு வெண் தலையும் முகிழ் வெண் திங்களும்

தங்கு சடையன் விடையன் உடையன் சரி கோவண ஆடை

பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகார் புறவம் பதியாக

எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

நாகைகாரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.84.1) திருஞானசம்பந்தர், நகு வெண்டலை என்று குறிப்பிடுகின்றார்.கனைதல்=அலைகள் எழுப்பும் ஒலி; கடவுள் என்ற சொல்லினை கொன்றை என்ற சொல்லுடன் சேர்த்தும் புனல் என்ற சொல்லுடன் சேர்த்தும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். கடவுள் புனல்=தேவாம்சம் பொருந்திய கங்கை நதி; கொன்றைக்கடவுள்=கொன்றை மலரை சூட்டிக்கொள்ளும் கடவுளாகிய சிவபெருமான். இந்த பாடலில் முறையாக இறைவனை வழிபடும் அடியார்களை வினை நீங்கிய அடியார்கள் என்று குறிப்பிடுகின்றார்.

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல் பாய

நனையும் சடை மேலோர் நகு வெண்டலை சூடி

வினையில் அடியார்கள் விதியால் வழிபட்டுக்

கனையும் கடல் நாகைக் காரோணத்தானே

எருக்கத்தம்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.89.6) திருஞானசம்பந்தர் நகு வெண் தலை என்று குறிப்பிடுகின்றார். அயம்=ஐயம்,பிச்சை; அயம் பெய்ய=பெண்கள் பிச்சை இடும் பொருட்டு; ஐயம் என்ற சொல் திரிந்து அயம் என வந்தது; தகைந்து=பொருந்தி; தொகுவன்=கூர்ந்து வெளிப்பட நிற்பவர்; வாய் பிளந்த நிலையில் இருக்கும் பிரமகபாலத்தை, நகு வெண்தலை என்று நகைச்சுவை தோன்ற சம்பந்தர் கூறுகின்றார் என்றும் சிலர் பொருள் கொள்கின்றனர்.

நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடிப்

புகுவான் அயம் பெய்யப் புலித்தோல் பியற்கு இட்டுத்

தகுவான் எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கே

தொகுவான் கழல் ஏத்த தொடரா வினை தானே

திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.124.1) திருஞானசம்பந்தர் நகுதலை என்று குறிப்பிடுகின்றார். வீழிமிழலை தலத்தை நினைக்கும் ஆற்றல் வாய்ந்தவர், கலைமகள் தலைமகன் என்று சொல்லத்தக்க தகுதியை அடைந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். இலை=வில்வ இலைகள்; இசைதரு= பொருந்திய; நிலை மலி=நிலையாக பெருமான் வீற்றிருக்கும் இடம்;

கலைமகள் தலைமகன் இவனென வருபவர்

அலைமலி தரு புனல் அரவொடு நகுதலை

இலைமலி இதழியும் இசைதரு சடையினர்

நிலைமலி மிழலையை நினைய வலவரே

கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (.1.29.5) திருஞானசம்பந்தர் நகுவெண்டலை என்று குறிப்பிடுகின்றார்.ஏர்=அழகு; பெருமானின் சடையில் இடம் பெற்றுள்ள பொருட்களை, பாம்பு, திங்கள், கங்கை, வன்னி, மத்தம், நகுதலை என்று பட்டியல் இடுகின்றார்.அழகுடன் விளங்கும் வண்ணம் சுதை மாடங்கள் கொண்ட வீடுகள் நிறைந்த நகரம் என்று குறிப்பிடுகின்றார்.

ஊர்கின்ற அரவம் ஒளிவிடு திங்களொடு வன்னி மத்தம் மன்னும்

நீர்நின்ற கங்கை நகு வெண்டலை சேர் செஞ்சடையான் நிகழும் கோயில்

ஏர் தங்கி மலர் நிலவி இசை வெள்ளி மலை என்ன நிலவி நின்ற

கார் வண்டின் கணங்களால் கவின் பெருகு சுதை மாடக் கழுமலமே

கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.133.8) நகுதலையில் பலி தேர்பவன் என்று சிவபெருமானை, திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். வாணிலா=ஒளி வீசும் சந்திரன்; வாள் அரவம்=ஒளி பொருந்திய உடலை உடைய பாம்பு; அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்பவை குல மகளிருக்கு இருக்க வேண்டிய குணங்களாக கருதப் படுகின்றன். நாணிடத்தின்=நாணத்தை உடைய உமையன்னை; ஏண்=உறுதி; சிறந்த ஆற்றல் உடையவனாக அரக்கன் இராவணன் இருந்த போதிலும், பெருமான் தனது கால் விரலை கயிலை மலையின் மீது ஊன்றிய போது விளைந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் இருந்த தன்மை உறுதியற்ற அரக்கன் என்று உணர்த்தப் படுகின்றது. சேணுலாம்=வானளாவ உயர்ந்து வளர்ந்த; சேண்=ஆகாயம்;

வாணிலா மதி புல்கு செஞ்சடை வாளரவம் அணிந்து

நாணிடத்தின் இல் வாழ்க்கை பேணி நகுதலையில் பலி தேர்ந்து

ஏணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவன் ஊர்

சேணுலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே

பெரும்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.67.3) திருஞானசம்பந்தர் நகுதலை மாலை என்று குறிப்பிடுகின்றார். பிள்ளை மதி=இளம் பிறைச் சந்திரன்; கள்ளம்=பொய்; திருமாலை விடவும் தான் அதிகமான ஆற்றல் உடையவன், அதனால் திருமாலை விடவும் பெரியவன் என்று நிரூபிக்கவேண்டும் என்ற முனைப்புடன் அன்னமாக உருவெடுத்து பறந்து சென்று பெருமானின் முடியினைக் காண்பதற்கு பிரமன் பெருமுயற்சி செய்தார்.மிகவும் உயரமாக பறந்து சென்ற போதிலும் அவரால் பெருமானின் சடையினை காணமுடியவில்லை. எனினும் தனது முயற்சியை தொடர்ந்த பிரமன் தான் பறந்து சென்ற வழியினில், ஒரு தாழை மலரின் இதழ் கீழே விழுவதைக் கண்டார். தாழை மலரின் இதழை நோக்கிய பிரமன், நீ எங்கிருந்து வருகின்றாய் என்று கேட்ட போது, தாழை மலர் தான் சிவபெருமானின் சடையிலிருந்து கீழே விழுந்ததாகவும், தான் வெகு தூரம் கீழே இறங்கிய பின்னர் பிரமனைக் கண்டதாகவும் கூறியது. இதனைக் கேட்ட பிரமன், எவ்வாறேனும் திருமாலை விடவும் தான் பெரியவன் என்பதை உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பிரமன், தாழை மடலிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். பிரமனாகிய தான் பெருமானின் சடையைக் கண்டதாகவும் அதற்கு சாட்சியாக தாழை மடலும் பொய் சொல்ல வேண்டும் என்று வேண்டினார். பின்னர் கீழே இறங்கி வந்த பிரமன் திருமாலிடம் தான் பெருமானின் முடியைக் கண்டதாக பொய் சொன்னார். இவ்வாறு பொய் சொன்ன பிரமனை, கள்ளம் மதித்த பிரமன் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். அப்போது அங்கே தோன்றிய பைரவர், பொய் சொன்ன பிரமனின் தலையை தனது நகத்தால் கிள்ளவே, உடலிலிருந்து பிரிக்கப் பட்ட அந்த தலை உலர்ந்து பிரமனின் கபாலமாக மாறியது. இந்த கபாலத்தைத் தனது கையினில் பிச்சைப் பாத்திரமாக பெருமான் ஏற்றுக் கொண்டார். இதுவே பொய் சொன்ன பிரமனின் தலை,பெருமானின் உண்கலனாக மாறிய வரலாறு. இந்த இரண்டு செய்திகளையும் உணர்த்தும் வகையில் கள்ளம் மதித்த கபாலத்தைத் தனது கையினிலே ஏந்திய பெருமான் என்று பாடலின் முதல் அடியில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பொய் சொல்வதை தவறு என்பதை கருத்தினில் கொண்டு, பொய்யினை தவிர்க்காமல், அந்த பொய்யான சொல் மூலம் புகழினை அடையக் கருதியதால் பிரமனை பொய்யினை, கள்ளத்தை மதித்த பிரமன் என்று இழிவாக கூறுகின்றார். பெருமான் தனது கையினில் பிரமகபாலத்தை ஏந்தி பலிக்காக திரிவதை தொழில் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உலக இயக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டி பெருமான் நடனமாடுவதை தொழில் என்று கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமான் தன்னிடம் ஏதுமில்லை என்பதற்காக பிச்சை எடுக்கவில்லை என்பதை உணர்த்தும் வண்ணம், செல்வர் என்று குறிப்பிடும், திருஞானசம்பந்தர், எழில் மிகு செல்வர் என்று குறிப்பிட்டு, அழகான உருவத்துடன் பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்றதை உணர்த்தும் பாங்கினையும் நாம் இந்த பாடலில் காணலாம்.

கள்ளம் மதித்த கபாலம் கை தனிலே மிக ஏந்தித்

துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர்

வெள்ள நகு தலை மாலை விரிசடை மேல் மிளிர்கின்ற

பிள்ளை மதிப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே

கடவூர் மயானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.80.5) திருஞானசம்பந்தர் பெருமானை, நகு வெண்டலையார் என்று குறிப்பிடுகின்றார். விரி தோடு=ஒளியுட்ன் மிளிரும்; தெளிவான சிந்தை உடைய சிவஞானிகளின் மனதினில் உறையும் பெருமான் என்று இந்த பதிகத்தின் நான்காவது பாடலில் குறிப்பிட்ட திருஞானசம்பந்தருக்கு, அத்தகைய தெளிவினை அளித்த பெருமானது தன்மை நினைவுக்கு வந்தது போலும். துள்ளும் இள மான் மறியார் என்ற தொடர் மூலம் அந்த தன்மையை குறிப்பிடுகின்றார். முரட்டுத் தன்மை வாய்ந்த காட்டு மானை, தாருக வனத்து முனிவர்கள் ஏவிய போது, அந்த மானை துள்ளி விளையாடும் மான் கன்றாக மாற்றி த்னது கையில் ஏந்தியவர் பெருமான். இளங்கன்று பயமறியாது என்ற முதுமொழிக்கு ஏற்ப, துள்ளி விளையாடும் மான் கன்றினை ஒரே இடத்தில் நிலையாக நிறுத்தி வைப்பது எத்துணை கடினமான செயல் என்பதை நாம் அறிவோம். எதற்காக பெருமான் இந்த காட்சியை பெருமான் நமக்கு வழங்குகின்றார் என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும்; ஒரே சமயத்தில் பல இடங்களிலும் அலை பாயும் மனதினை கட்டுப்படுத்தி மனமொன்றி ஒரு செயலில் ஈடுபடுவது மிகவும் கடினமாக காரியம். அந்த செயலைச் செய்வதற்கு பெருமானின் அருள் வேண்டும். ஏனெனில் அவன் ஒருவனுக்குத் தானே அந்த ஆற்றல் இயற்கையாகவே அமைந்துள்ளது. அந்த ஆற்றலைத் தான் கொண்டுள்ள தன்மையையே, துள்ளித்திரியும் மான் கன்றினைத் தனது கையில் நிலையாக ஏந்தியுள்ள தன்மை மூலம் பெருமான் நமக்கு உணர்த்துகின்றான். விரிதோடு ஒரு காதிலங்க என்ற தொடரின் மூலம்,ஒரு காதினில் தோடும், மற்றொரு காதினில் குழையும் அணிந்தவனாக, மாதொரு பாகனின் தோற்றத்தை நினைவூட்டும் வகையில் பெருமான் உள்ள நிலை உணர்த்தப்படுகின்றது. பிள்ளை மதி=வளராத ஒற்றைப் பிறைச் சந்திரன்; கள்ள நகு வெண்டலையார் என்று பெருமான் தனது தலையில் சூட்டிக் கொண்டுள்ள மண்டையோடு கள்ளச் சிரிப்பு சிரிப்பதாக இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். நிலையற்ற உலகம், என்றேனும் ஒரு நாள் அழியும் நிலையில் உள்ள உலகப்பொருட்கள், இந்த உலகத்தில் உள்ள உயிர்களும் பொருட்களும் தருகின்ற நிலையற்ற சிற்றின்பம் ஆகியவற்றை நிலையாக கருதி வாழும் மனிதர்களின் மடமை கண்டு ஏளனமாக சிரிப்பதாக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். வாய் பிளந்த நிலையில் மண்டையோடு இருப்பதை,சிரிப்பதாக திருஞானசம்பந்தர் இங்கே கற்பனை செய்கின்றார். மான் ஏந்திய கரம், அவனது அருளால் மட்டுமே நாம் நம்து மனதினை ஒரு நிலையில் நிறுத்த முடியும் என்பதையும், தலைமாலையின் கள்ளச்சிரிப்பு வாழ்க்கை நிலையாமையையும், ஒற்றைப் பிறைச் சந்திரன் தன்னிடம் அடைக்கலம் புகுந்தோரை அழிவிலிருந்து காக்கும் பெருமானின் ஆற்றலையும், மாதொரு பாகனின் தோற்றம் சிவமும் சக்தியும் ஒன்றே என்பதையும் உணர்த்துவதால், பெருமானின் தோற்றமே, நமக்கு பல முக்கியமான செய்திகளை அளிப்பதை நாம் உணரலாம்.

வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோடொருகா திலங்கத்
துள்ளுமிளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக்
கள்ளநகுவெண் டலையார் கடவூர்மயான மமர்ந்தார்
பிள்ளைமதிய முடையார் அவரெம்பெருமா னடிகளே

அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.103.6) திருஞானசம்பந்தர், பெருமானை நகுதலை நிகழ வைத்தவர் என்று அழைக்கின்றார்.திலதம்=திலகம்; உள் நிலா= உள்ளத்தில் நிலாவுகின்ற; பெருமான் பற்றிய சிந்தனை உள்ளத்தில் நிலாவ வேண்டும் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர் அத்தகையவர் யாராக இருந்தாலும், அவர் உயர்வாக வாழ்வார்கள் என்று கூறுகின்றார்.

கண்ணுலாவிய கதிரொளி முடிமிசைக் கனல்விடு சுடர் நாகம்

தெண்ணிலாவொடு திலதமும் நகுதலை திகழ வைத்தவர் மேய

மண்ணுலாம் பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்

உள் நிலா நினைப்பு உடையவர் யாவர் இவ்வுலகினில் உயர்வாரே

கீழ்வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.105.5) திருஞானசம்பந்தர், நகுதலை என்று குறிப்பிடுகின்றார். வடம்=கயிறு; சிரம்=தலைகள்;சிரமாலை=தலைகள் கோர்க்கப்பட்ட மாலை; மணமிகு=சிறப்பு மிக்க, மாதவம் புரிவோர்கள் உலாவும் சிறப்பினை கொண்ட; நிமலன்= இயற்கையாகவே மலங்களிலிருந்து நீங்கியவன்; இயற்கையாகவே மலங்களிலிருந்து நீங்கிய பெருமான், தனது அடியார்களின் வினைகளை நீக்கி அவர்களையும் தனது நிலைக்கு உயர்த்துவது திண்ணம் என்று கூறுகின்றார்.

துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை வடமணி சிரமாலை

மன்றுலாவிய மாதவர் இனிதியல் மணமிகு கீழ்வேளூர்

நின்று நீடிய பெருந்திருக்கோயிலின் நிமலனை நினைவோடும்

சென்று உலாவி நின்றேத்த வல்லார் வினை தேய்வது திணமாமே

பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.14.5) விழியிலா நகுதலை என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். விழியிலார் என்ற பாடபேதமும் சொல்லப் படுகின்றது. தாருகவனத்து முனிவர்கள் அபிச்சார வேள்வி செய்து அதனின்று, ஒரு பார்வையற்றதும் நகும் தன்மை உடையதும் ஆகிய தலையினை எழுப்பி, பெருமானின் மீது ஏவினார்கள் என்று கந்த புராணம் (தக்ஷகாண்டம்) குறிப்பிடுகின்றது. பெருமானின் பெருமையை புரிந்து கொள்ளும் அறிவினை இழந்தவர்களாக தாருகவனத்து முனிவர்கள் இருந்தமையால், அவர்களை அறிவுக்கண் இல்லாத குருடர்கள் என்பதை உணர்த்தும் வண்ணம் விழியிலார் என்று தாருகவனத்து முனிவர்களை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று சுவையான விளக்கம் சிலர் கூறுகின்றனர். அறிவுக்கண் இல்லாத இல்லாத தாருகவனத்து முனிவர்கள் அபிசார ஒமத்திலிருந்து எழுப்பிய நகுதலை என்ற பொருள்பட இந்த விளக்கம் அளிக்கப்படுகின்றது. இந்த முனிவர்கள் யாகத்திலிருந்து எழுப்பிய தலை (முண்டம்), கண்கள் இன்றியும் பற்கள் இன்றியும் இருந்தமையால், சிரிப்பது போன்று தோன்றியமை, இந்த பாடலில் விழியிலா நகுதலை என்று குறிப்பிடப் பட்டுள்ளது என்ற விளக்கமும் பொருத்தமாக உள்ளது. விழியிலா நகுதலை என்பதற்கு, வாய் பிளந்த நிலையில் காணப்படும் பிரமகபாலம் என்றும் பொருள் கொள்வது பொருத்தமே. உலர்ந்த மண்டையோடு என்றாலும், பெருமானின் கையினில் பொருந்தி இருக்கையில், அந்த மண்டையோடும் அழகுடன் பொலிவதாக கூறுகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். கிழி என்ற சொல்லுக்கு கிழிக்கப்பட்ட கோவண ஆடை என்றும், சித்திரங்கள் எழுதப்படும் திரைச் சீலை என்று இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். கேண்மை=நட்பு, உறவு, நட்பினால் ஏற்படும் அன்பு; கிழியிலார் கேண்மை என்ற தொடருக்கு செல்வம் இல்லாதவர்களுக்கு உறவாகிய வறுமை என்று பொருள் கொண்டு, அத்தகைய வறுமையினை அழிப்பவன் பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

விழி இலா நகுதலை விளங்கி இளம் பிறை

சுழியிலார் வரு புனல் சூழல் தாங்கினான்

பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்

கிழியிலார் கேண்மையைக் கெடுக்கல் ஆகுமே

தேவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.74.2) திருஞானசம்பந்தர் நகு வெண்டலை என்று குறிப்பிடுகின்றார். வரத்து=வளர்தலை உடைய;கோளரவு=கொலைத் தொழிலை உடைய பாம்பு; வனி=வன்னியிலை; வாளரவு=ஒளி பொருந்திய உடலினை உடைய பாம்பு; தண்=குளிர்ந்த; வேள் அரவு=மன்மதனும் விரும்பும் வண்ணம்; தேளரவு=தேள் கொட்டுவதைப் போன்று துன்பம் செய்கின்ற; தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு வருத்தம் தருகின்ற தென்றல் காற்று; நிறைவு ஒன்றி=நிறைந்து;

கோளரவு கொன்றை நகுவெண்டலை எருக்கு வனி கொக்கிறகொடும்

வாளரவு தண் சலமகள் குலவு செஞ்சடை வரத்து இறைவனூர்

வேளரவு கொங்கை இளமங்கையர்கள் குங்குமம் விரைக்கு மணமார்

தேளரவு தென்றல் தெருவெங்கும் நிறைவொன்றி வரு தேவூர் அதுவே

புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.84.7) நகு தலை வடம் முடிமிசை அணிந்தவர் என்று பெருமானை,திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். வரி தரு=வரிசை வரிசையாக கோடுகள் உடைய; அதள்=தோல்; பிரிதரு=பிரிந்து வந்த, வடம்=மாலை; மிசை=மேலே;பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் தத்தமது உடலிலிருந்து பிரிந்த பின்னர், உயிரற்ற உடல்களிலிருந்த பிரிந்த தலைகளை மாலையாக அணிந்து கொள்ளும் பெருமை சிவபெருமான் ஒருவருக்கு மட்டும் தானே கிடைக்கும். பிரளயத்திற்கு பின்னர், திருமால் பிரமன் வேறு எவரும் உயிருடன் இருப்பதில்லை அல்லவா. எனவே தான் பிளந்த வாயுடன் சிரிப்பது போன்று காணப்படும் தலைகளை மாலையாக அணிந்த பெருமையை உடையவர் என்று சிவபெருமானை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பிரிதரு குழல்=பின்னப்பட்ட கூந்தல்; பிறவிப் பிணியினை நீக்கும் வல்லமை வாய்ந்தவர் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் சுட்டிக் காட்டி, இரண்டாவது மற்றும் மூன்றாவது பாடல்களில் அவரது அடையாளங்களை நமக்கு உணர்த்தி,நான்காவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் அவரது ஆற்றலையும் குறிப்பிட்டு, நாம் நமது வினைகளை மேலும் மேலும் பெருக்கிக் கொள்வதற்கு காரணமாக விளங்கும் ஆணவ மலத்தினை அடக்கும் ஆற்றல் வாய்ந்தவர் சிவபெருமான் ஒருவர் தான் என்று பதிகத்தின் ஆறாவது பாடலில் குறிப்பிடும் ஞானசம்பந்தர்,பிறப்பிறப்பினைக் கடந்த நிலையில் சிவபெருமான் இருக்கும் தன்மையை இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார்.

வரி தரு புலியதள் உடையினர் மழு எறி படையினர்

பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர்

எரிதரும் உருவினர் இமையவர் தொழுவதொர் இயல்பினர்

புரிதரு குழல் உமையொடும் இனிதுறை பதி புறவமே

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.85.3) பெருமானை, வித்தக நகுதலை உடையவர் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.மைத்தகு=மை படர்ந்த; மதர்=மதர்த்த விழி, மலர்ந்த விழி; தமை மருவினார்=தம்மை அடைந்த அடியார்கள்; தெத்தென=தாள் ஒத்துகளுடன் கூடிய இசைப் பாடல்கள்; இசை முரல்=இசை பாடும்; சரிதையர்=புகழ் உடையவர்; வித்தகம் என்ற சொல் அதிசயம் என்ற பொருளில் வந்துள்ளது. பிரமனின் தலை என்பதை உணர்த்த வித்தக நகுதலை என்று கூறினார் போலும்.

மைத்தகு மதர் விழி மலைமகள் ஒரு பாகமா

வைத்தவர் மதகரி உரிவை செய்தவர் தமை மருவினார்

தெத்தென இசைமுரல் சரிதையர் திகழ்தரும் அரவினர்

வித்தக நகுதலை உடையவ்ர் இடம் விழிமிழலையே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.86.1) திருஞானசம்பந்தர் நகுதலை என்று குறிப்பிடுகின்றார். முறி=தளிர்; முறியுறு=தளிர் போன்ற; கருமை நிறம் கொண்ட தேவியை, பசுமை நிறம் கொண்டவள் என்று குறிப்பிடுவது இலக்கிய மரபு; முகிழ்=அரும்பு, தாமரை மற்றும் கோங்கு அரும்புகள் பார்வதி தேவியின் மார்பகங்களுக்கு உவமையாக சொல்லப் படுகின்றன. வெருவ=அச்சம் அடைய; வெறியுற=மதம் கொண்ட; கரி=ஆண் யானை; அதள்=தோல்: பட= போர்வையாக திகழும் வண்ணம்; விறல்=திறமை, வல்லமை; நறியுறு=நறுமணம் உடைய; இதழியின் மலர்=இதழ்களை உடைய மலர்; இங்கே கொன்றை மலரை குறிக்கின்றது; திறந்த வாயுடன் காணப்படும் மண்டையோட்டினை நகுதலை என்று இங்கே அழைக்கின்றார். செறியுறு=ஒன்றுக்கொன்று நெருக்கமாக; அடிகள்=தலைவர்; பெருமானின் சடைமுடியில் ஒன்றுக்கொன்று நெருக்கமாக காணப்படும் பொருட்களை குறிப்பிட்டு,பெருமானின் தனித்துவத்தை ஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். எவரும் அணியாத கொன்றை மலர்களை அணியும் பெருமான் என்று குறிப்பிட்டு அவர் விருப்பு வெறுப்பு அற்றவர் என்று குறிப்பிடும் ஞானசம்பந்தர், வேறு எவரும் காப்பாற்ற முடியாத தன்மையால் அழிவின் விளிம்பில் இருந்த சந்திரனுக்கு மறுவாழ்வு கொடுத்த கருணையாளர் என்றும், ஆணவத்துடன் கீழே வேகமாக இறங்கிய கங்கை நதியின் ஆற்றலை அடக்கித் தனது சடையில் கரந்தவர் என்றும், தான் ஒருவரே என்றும் அழியாமல் இருப்பவர் என்பதை உணர்த்தும் பொருட்டு, நகை செய்யும் தலைமாலை அணிந்தவர் என்றும் இங்கே குறிப்பிடுகின்றார்.

முறியுறு நிறம் மல்கு முகிழ்முலை மலைமகள் வெருவ முன்

வெறியுறு மதகரி அதள்பட உரி செய்த விறலினர்

நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை

செறியுறு சடைமுடி அடிகள் தம் வளநகர் சேறையே

திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.87.7) திருஞானசம்பந்தர் நகுதலை என்று கூறுகின்றார். இந்த பதிகம் பாண்டிய மன்னனின் அவையில், சமணர்களுடன் அனல் வாதம் புரிகையில், போகமார்த்த பூண்முலையாள் என்று தொடங்கும் பதிகத்தினை நெருப்பினில் இடும் முன்னர்,நள்ளாற்றுப் பெருமானை வேண்டி ஞானசம்பந்தர் அருளிய பதிகம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பெருமானின் புகழினை உள்ளடக்கிய பதிகம் எழுதப்பெற்ற ஓலை கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இட்டாலும் பழுதாகாது என்பது சத்தியம் என்று சொல்வதாக அமைந்துள்ளன. பதிகத்தின் கடைப்பாடலில், பாண்டிய மன்னனின் அவையில், நெருப்பின் நடுவில் தேவாரப்பதிகம் அடங்கிய ஓலை இட்டபோது ஓதிய பதிகம் என்று கூறுகின்றார்.

கார்மலி நெறிபுரி சுரிகுழல் மலைமகள் கவினுறு

சிர்மலி தருமணி அணிமுலை திகழ்வொடு செறிதலின்

தார்மலி நகுதலை உடைய நள்ளாறர் தம் நாமமே

ஏர்மலி எரியினில் இடில் இவை பழுதிலை மெய்ம்மையே

ஒரு பொதுப்பதிகத்தின் பாடலில் (4.8.7) அப்பர் பிரான், பெருமானை நகுவெண்டலையர் என்று குறிப்பிடுகின்றார். நகை=விளக்கம்; எளிதில் அடையாளம்கொண்டு கொள்ளும் விதத்தில் அதிகமாக வளர்ந்து காணப்படும் மலர். துன்று=நெருங்கிய: நகு வெண்தலை=சதைப் பகுதிகள் நீக்கப்பட்டு எலும்பும்,பற்களும், மண்டையோடும் காட்சி தரும் தலைகள். பற்கள் வெளியே காணப்படுவதால், நகைப்பது போன்று தோற்றம் உடைய தலை என்று குறிப்பிடும்வகையில் நகு வெண்தலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாகர்=நாகம், பகையை வளர்ப்பதால் இகழ்ச்சி குறிப்பு தோன்ற ஆர் என்ற மரியாதைக்குஅடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. சங்கார காலத்தில் அழித்தல் செயலைச் செய்யும் சிவபெருமான் கோபம் கொண்ட கோலத்தில் இருப்பார்; அந்தசமயத்தில் கையில் அனலேந்தி அவர் வேகமாக ஆடும் நடனத்திற்கு ஏற்ப கோப உணர்ச்சிகள் தொனிக்கும் பாடல்களை உமையம்மை படுவதாககூறுவார்கள். இந்த நிகழ்ச்சி தான் இந்த பாடலின் மூன்றாவது அடியில் குறிப்பிடப் படுகின்றது.

நகை வளர் கொன்றை துன்று நகு வெண்தலையர் நளிர் கங்கை தங்கு முடியர்

மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணி செய் மிடறர்

முகை வளர் கோதை மாதர் முனி பாடுமாறும் எரியாடுமாறும் இவர் கைப்

பகை வளர் நாகர் வீசி மதி இயங்குமாறும் இது போலும் ஈசர் இயல்பே

மற்றொரு பொதுப் பதிகத்தின் பாடலில் (4.111.4) நகுவெண்டலை என்று குறிப்பிடுகின்றார். வெஞ்சமர்=கொடிய போர்: வேழம்=யானை: காய்ந்த மண்டையோடுகள், வாய் திறந்த நிலையில் பற்கள் வெளியே தெரியுமாறு காணப்படுவதால், சிரிக்கும் தலைகள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். கொடியபோரிட்டு அழிக்க வந்த யானையைக் கொன்று அதன் தோலினை போர்வையாகத் தனது உடலின் மீது போர்த்தவனே,உன்னிடம் அடியேனுக்கு ஒரு விண்ணப்பம் உள்ளது: கூறுகின்றேன் கேட்பாயாக: தவமிருந்து தன்னை வரவழைத்த பகீரதனுக்கு உதவி செய்யாது,உலகத்தையே அடித்துக் கொண்டு கடலில் சேர்த்துவிடும் வஞ்சனையான நோக்கத்துடன் வேகமாக கீழே இறங்கி வந்து உனது சடையில் தாங்கப்பட்ட கங்கை நதியும், வானில் உலவும் பிறைச் சந்திரனும், கொடிய விடம் கொண்ட பெரிய பாம்புகளும், சிரிக்கின்ற தோற்றத்தில் காணப்படும் தலைகள் கோர்க்கப்பட்ட தலைமாலையும், தசை உலர்ந்து வாய் திறந்த நிலையில் இருக்கும் பிரமதேவனின் கபாலமும், கலந்து உலவும் இடமாக எனது நெஞ்சம் மாறவேண்டும்: அவ்வாறு நீ அருள் செய்து எனது நெஞ்சத்தினை ஒப்பற்ற தனி நெஞ்சமாக மாற்றுவாயாக என்ற அப்பர் பிரானின் விண்ணப்பம் அடங்கிய பாடல்.

வெஞ்சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு

வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான்மதியும்

நஞ்சமா நாகம் நகு சிரமாலை நகு வெண் தலை

தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே

கற்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.60.4) அப்பர் பிரான், பெருமானை நகுதலை ஊண் நயந்தான் என்று கூறுகின்றார்.:நற்றவன்=மென்மையான தவத்தினை செய்பவன்; முந்நீர்= கடல்; மண்டை ஓட்டினில் இடப்படும் பிச்சையை, உணவாக மகிழ்ந்து ஏற்றுக் கொள்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெருமான் ஆடியும் பாடியும் பலியேற்கச் செல்லும் தன்மை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. பொதுவாக பிச்சை ஏற்பவர், வேறு வழியின்றி பிச்சை ஏற்கின்றனர் என்பதால், நாணத்துடன் உடலைக் கோணிக் கொண்டு பிச்சை ஏற்பதை நாம் காண்கின்றோம். ஆனால் பெருமான் பிச்சை ஏற்பது தனது தேவைக்கு அல்ல என்பதை நாம் அறிவோம். பக்குவமடைந்த உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களை பெருமானின் கையில் ஒப்படைத்துவிட்டு, மலமற்றவர்களாக முக்தியுலகம் சென்றடைந்து என்றும் அழியாத ஆனந்தத்தில் திளைத்து இருப்பதற்கு தகுதி படைத்தவர்களாக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமான் பலிக்கு செல்கின்றார். எனவே இவ்வாறு பலி ஏற்கச் செல்வதால், மேலும் மேலும் உயிர்கள் தன்னை வந்தடையும் என்ற அவரது மகிழ்ச்சி ஆடலாகவும் பாடலாகவும் வெளிப்படுகின்றது.இந்த நிலையையே பலி மகிழ்வாய் என்று ஞானசம்பந்தர் நெடுங்களம் தலத்து பதிகத்தின் பாடலில் (1.52.4) குறிப்பிடுகின்றார். எனவே பலியேற்பதன் மூலம் பெருமைக்குரிய செயலைச் செய்கின்ற பெருமான் எதற்காக நாணம் அடையவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக நாணாது நகுதலை ஊண் நயந்தான் என்று கூறுகின்றார்.

நற்றவனைப் புற்றரவ நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான் தன்னை

முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான் தன்னைப்

பற்றவனைப் பற்றார் தம் பதிகள் செற்ற படையானை அடைவார் தம் பாவம் போக்க

கற்றவனைக் கற்குடியில் விழுமியானைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே

கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிக்த்தின் பாடலில் (7.28.7) சுந்தரர் நகு வெண்டலை என்று குறிப்பிடுகின்றார். பெருமானை எதிர்த்து வந்த யானையை இகழ்ச்சி குறிப்பு தோன்ற ஆர் மரியாதை விகுதி கொடுத்து, கரியார் என்று அழைக்கின்றார். கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்று பொன் நிறத்தில் மின்னும் சடை என்று உணர்த்துகின்றார்.

எரியார் புன்சடை மேல் இளநாகம் அணிந்தவனே

நரியாரும் சுடலை நகு வெண்டலை கொண்டவனே

கரியார் ஈருரியாய் கடவூர் தனுள் வீரட்டத்தெம்

அரியாய் என்னமுதே எனக்கார் துணை நீ அலதே

முடிப்பது கங்கையும் என்று தொடங்கும் பொதுப் பதிகத்தின் பாடலில் (7.44.4) சுந்தரர், சிவபெருமானின் தோற்றம் இகழத்தக்கது போல் தோன்றினாலும்,அந்த தோற்றத்தின் உண்மை நிலையை புரிந்து கொண்டு, என்றும் அவனை விட்டு பிரியாது வணங்குவீர்களாக என்று கூறுகின்றார். ஓரி என்ற சொல்லும் நரியையே குறிக்கும். ஊழிக் காலத்தில் அனைத்து உடல்களில் இருந்தும் உயிர்கள் பிரிக்கப்பட்டு உலகமே சுடுகாடாக காட்சியளிக்கும் நிலையில் நடனமாடும் இறைவன், சுடுகாட்டினைத் தனது நடன அரங்காக தேர்ந்து எடுப்பதில் வியப்பேதும் இல்லை. இதன் மூலம் தான் ஒருவனே என்றும் அழியாது இருப்பவன் என்பதை நமக்கு பெருமான் நினைவூட்டுகின்றார். சுடுகாடு என்பதால் நரிகளும் பேய்களும் உலவுவது இயற்கை தானே. ஊழிக்காலத்தில் இறந்து பட்ட உடல்களின் தலையினை மாலையாக அணிந்து கொள்வதும், அவரைத் தவிர்த்து அனைவரும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியவர்கள் என்பதை நினைவூட்டவே. வாய் பிளந்த நிலையில் உள்ள அந்த தலைகள் சிரிதலை என்று கூறுகின்றார்.

நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள்

எரிதலைப் பேய் புடை சூழ வாரிருள் காட்டிடைச்

சிரி தலை மாலை சடைக்கணிந்த எம் செல்வனைப்

பிரிதலைப் பேசன்மின் தொண்டர்காள் எம் பிரானையே

கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய் பதிகத்தின் பாடலில் (7.53.2) நகுதலையர் என்று பெருமானை, சுந்தரர் அழைக்கின்றார். தலத்து இறைவனின் நாமமாகிய காலகாலர் என்பதை இந்த பாடலில் சுந்தரர் குறிப்பிடுகின்றார். கடவூர் வீரட்டம் தலத்தில் நிகழ்ந்த ஒரு வீரச்செயலை குறிப்பிட்ட சுந்தரருக்கு,மற்றொரு வீரட்டத்தில் நிகழ்த்திய வீரச்செயலையும், திரிபுரத்து அரக்கர்களின் குறிப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தது போலும். கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகம் என்றாலும், இந்த தலத்துடன் தொடர்பு கொண்ட கடவூர் மயானத்தையும் அந்த தலத்து இறைவனையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் மார்பர் வேத கீதத்தர்

கண்ணார் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர்

எண்ணார் புரம் மூன்று எரி செய்த இறைவர் உமையோர் ஒரு பாகம்

பெண்ணானவர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே

பொழிப்புரை:

கற்கள் பொருந்திய கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் அகன்ற தோள்கள், தங்களது அழகு குலைந்து வாடும் வண்ணம், கயிலாய மலையின் மீது தனது கால் பெருவிரலை ஊன்றி வருத்திய சிவபெருமான், மிகவும் விரைந்து அந்த அழுத்தத்தை திரும்பி வாங்கி,பெருமான் அரக்கனுக்கு அருள் புரிந்தார். அவரே திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், வில் கொண்டு அம்பு எய்தி அழித்தவர் ஆவார். பற்கள் வெளியே தெரியும் வண்ணம் பிளந்த நிலையில் உள்ளதும் சிரிப்பது போல் தோன்றுவதும் ஆகிய வெணமை நிறத்து தலைமாலை சூட்டிக் கொண்டவராக திருவதிகை வீரட்டானம் தலத்தில் நடனமாடுகின்றார்.

பாடல் 9:

நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்

பொடியாடு மார்பானைப் புரிநூல் உடையானைக்

கடியார் கழுநீலம் மலரும் அதிகையுள்

வெடியார் தலை ஏந்தி ஆடும் வீரட்டானத்தே

விளக்கம்:

வெடி=முடை நாற்றம்: வெடியார்=முடை நாற்றம் உடைய; நிமிர்ந்தான்=தங்களிடையே வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் திருமால் ஆகியோரின் இடையே வானளாவிய நெருப்புப் பிழம்பாக உயர்ந்த பெருமான்; கடி=நறுமணம்; நெடியான்=திரிவிக்ரமனாக வளர்ந்த திருமால்;

பொழிப்புரை:

திரிவிக்ரமனாக வளர்ந்து மூன்று உலகங்களையும் ஈரடியால் அளந்த ஆற்றல் உடைய திருமாலும், நான்முகனும், தங்கள் இருவரில் யார் பெரியவர் என்று நீண்ட வாதம் செய்து கொண்டிருந்த போது, தங்களின் முன்னே எழுந்த வானளாவ நிமிர்ந்த தழற்தூணின் அடியையும் முடியையும் காண முடியாமல்,தங்களின் முயற்சியில் தோல்வி அடைந்தனர். இத்தகைய ஆற்றல் உடைய பெருமான், தனது உடல் முழுவதும் திருநீற்றினை பூசிக்கொண்டவனாகவும் மார்பில் முப்புரி அணிந்தவனாகவும் விளங்குகின்றான். நறுமணம் கமழும் நீலநிறத்து பூக்கள் மலரும் திருவதிகை தலத்தில், முடை நாற்றம் வீசும் மண்டையோட்டினைத் தனது கையில் ஏந்தியவனாக நடனம் ஆடுகின்றான்.

பாடல் 10

அரையோடு அலர் பிண்டி மருவிக் குண்டிகை

சுரையோடு உடன் ஏந்தி உடை விட்டு உழல்வார்கள்

உரையோடுரை ஒவ்வாது உமையோடு உடனாகி

விரை தோய் அலர் தாரான் ஆடும் வீரட்டானத்தே

விளக்கம்:

அரை=அரச மரம்; அலர்=தழைத்து வளர்ந்த; பிண்டி=அசோக மரம்; சுரைக்குடுக்கையில் நீர் எடுத்துச் செல்வது பண்டைய நாளில் பழக்கமாக இருந்தது.மருவி=புனிதமாக கருதி நெருங்கி போற்றும்; உழல்தல்=திரிதல்:

பொழிப்புரை:

அரச மரத்தையும் தழைத்து வளர்ந்த அசோக மரத்தையும் புனிதமாக கருதி, அவற்றை நெருங்கி போற்றி வணங்கும் புத்தர்களும் சமணர்களும், நீர் எடுத்துச் செல்லும் பாத்திரமாக சுரைக் குடுக்கையை ஏந்திச் செல்வார்கள். மேலும் சமணர்கள் உடையின்றித் திரிவார்கள். அத்தகையோர் சொல்லும் உரைகளை,உலகத்தவரே உண்மைக்கு பொருந்தாத உரைகள் என்பதால், பொருட் படுத்தாமல் விலக்குவீர்களாக. உமை அம்மையுடன் கூடியவனாக பெருமான்,நறுமணம் கமழும் மாலைகள் அணிந்து அதிகை வீரட்டானத்தில் நடனமாடுகின்றான்.

பாடல் 11

ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்

வேழம் பொரு தெண்ணீர் அதிகை வீரட்டானத்துச்

சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை

வாழும் துணையாக நினைவார் வினை இலரே

விளக்கம்:

ஞாழல்=புலிநகக்கொன்றை வேழம்=ஒரு வகை நாணல், ஆற்றின் கரைகள் நீர்ப்பெருக்கினால் கரைந்து போகாமல் காக்கும் பொருட்டு நடப்படுவது; நமது வாழ்க்கைத் துணையாக நாம் தேவாரப் பாடல்களை கொள்ளவேண்டும் என்று திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார்.

பொழிப்புரை:

புலிநகக்கொன்றை மலர்களின் நறுமணம் கமழும் சீர்காழி தலத்தைச் சார்ந்த ஞானசம்பந்தன், நாணல் செடிகளால் நீர்ப்பெருக்கால் அரிக்கப்படாமல் காக்கப்படும் கரையினை உடையதும், தெளிந்த நீரினை உடையதும் ஆகிய கெடிலம் நதிக்கரையில் அமைந்துள்ள திருவதிகை வீரட்டானம் தலத்தில் உறைபவனும் வீரக்கழல்கள் அணிந்த திருப்பாதங்களை உடையவனும் ஆகிய பெருமானைப் புகழ்ந்து சொன்ன தமிழ்மாலையாகிய பாட்ல்களை, தங்களது வாழ்க்கைத் துணையாக நினைத்து, முறையாக அந்த பாடல்களை ஓதும் அடியார்கள் வினைகள் அற்றவர்களாக வாழ்வார்கள்.

குண்டைகுறட்பூதம் (Kundaikkuradpootham) is a Tamil phrase that has a specific cultural and historical context. Let’s break down the meaning of each component:

Breakdown of the Phrase:

குண்டை (Kundai): Means "ball" or "sphere". It refers to something round or spherical in shape.

குறட்பூதம் (Kuradpootham): This can be translated as "a ghost or spirit in a confined space". Here, "குறட்பூதம்" can be broken into "குறடு" (Kuradu), meaning "a confined or narrow place", and "பூதம்" (Pootham), meaning "ghost" or "spirit".

Full Meaning:

"குண்டைகுறட்பூதம்" translates to "a spirit or ghost in a ball" or "a confined spirit in a spherical shape." The phrase is often used in a cultural or literary context to describe something that is trapped or confined in a particular form or shape.

Context:

Cultural Significance: The phrase is rooted in traditional Tamil literature and folklore. It is used to describe a mythical or supernatural entity that is confined within a spherical object. In some contexts, it might refer to the concept of a spirit or entity that cannot escape from its confinement.

Literary Usage: In Tamil literature, particularly in works related to folklore or mythology, "குண்டைகுறட்பூதம்" might be used to describe magical or mystical objects that contain spirits or supernatural forces.

Symbolic Meaning: Metaphorically, the phrase can be used to describe a situation where something is trapped or limited within a particular boundary or shape. It can symbolize constraint or confinement in a broader sense.

Example in Context:

In a traditional Tamil story or poem, "குண்டைகுறட்பூதம்" might be used to describe a magical object or artifact that holds a spirit or ghost, reflecting themes of confinement and supernatural elements.

Conclusion:

"குண்டைகுறட்பூதம்" captures the idea of a spirit or entity confined within a spherical shape. It reflects themes of confinement, supernatural forces, and the mystical aspects of traditional Tamil literature and folklore. The phrase is used to evoke imagery of trapped or contained entities and can symbolize broader themes of limitation and restriction.



Share



Was this helpful?