பதிக எண்: 1.13. திருவியலூர் நட்டபாடை
பின்னணி:
குரவம் கமழ் நறு (1.013) பின்னணி மற்றும் பாடல் 1 (திதே 0537)
தனது ஐந்தாவது தல யாத்திரையின் ஒரு பகுதியாக கோடிகா, கஞ்சனூர், மாங்குடி, திருமங்கலக்குடி ஆகிய தலங்கள் சென்ற திருஞானசம்பந்தர் பின்னர் வியலூர் சென்றார் என்று பெரியபுராணம் உணர்த்துகின்றது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு திருந்துதேவன்குடி தலம் சென்றார் என்பதையும் நாம் கீழ்க்கண்ட பெரிய புராணப் பாடலிலிருந்து தெரிந்து கொள்கின்றோம். இந்த தலத்து பதிகத்தின் ஐந்தாவது பாடலில், திருஞானசம்பந்தர், கண்ணார் தரும் உருவாகிய கடவுள் என்று கூறியதை ஆதாரமாகக் கொண்டு சேக்கிழார், பெருமான் தனது அருள் வேடம் திருஞானசம்பந்தருக்கு காட்டினர் என்று கூறியுள்ளார் போலும். இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது.
வெங்கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி
அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்டத் தொழுது
செங்கண் மாலுக்கு அரியார் தம் திருந்துதேவன்குடி சேர்ந்தார்
இந்த தலம் கும்பகோணத்திலிருந்து ஏழு கி.மீ தூரத்தில் உள்ளது. இந்நாளில் திருவிசைநல்லூர் என்று அழைக்கப் படுகின்றது. கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து வசதியும் ஆட்டோ வாகன வசதியும் உள்ளது. வியல் என்றால் அகலம் என்று பொருள். இந்த தலத்தில் ஓடும் காவிரி நதி மிகவும் அகன்று ஓடுவதால் வியலூர் என்ற பெயர் வந்தது போலும். சூரியனார் கோயில் தலத்திலிருந்து வேப்பத்தூர் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் இந்த தலம் உள்ளது. இறைவனின் பெயர்; சிவயோகநாதர், யோகாநந்தேசுவரர்; அம்பிகையின் திருநாமம்: சாந்தநாயகி, சௌந்தரநாயகி. ஸ்ரீதர அய்யாவாள், தனது இல்லத்தில், பெருமானின் அருளினால், கங்கை பொங்கி வரச் செய்த தலம். ஜடாயு, அகத்தியர், சூரியன், சப்தரிஷிகள் மற்றும் பிரமன் வழிபட்டு பயன் பெற்ற தலம். ஒரு மகாசிவராத்திரி நன்னாள் அன்று அகத்தியர் வழிபட்டு பயனடைந்த தலம். இன்றும் ஒவ்வொரு சிவராத்திரி நாளில் அகத்தியர் வழிபடுவதாக நம்பப்படுகின்றது, நான்கு யுகங்களையும் கடந்த தலம். க்ருத யுகத்தில் புராதனேசுவரர் என்றும், திரேதா யுகத்தில் வில்வாரண்யேசுவரர் என்றும் துவாபர யுகத்தில் யோகாநந்தேசுவரர் என்றும் கலியுகத்தில் சிவயோகி நாதர் என்றும் அழைக்கப் பட்டதாக தல புராணம் கூறுகின்றது. பிரமன், ஆறு சகோதரர்களுடன் ஒரு அந்தணனாக பிறந்து பெருமானை வழிபட்டார் என்றும், ஒரு சிவராத்திரி நன்னாளில் ஏழு பேருக்கும் பெருமான் தரிசனம் அளித்தார் என்றும், அந்த எழுவரும் சோதி வடிவமாக பெருமானுடன் கலந்தனர் என்றும் கூறுவார்கள். இந்த ஏழு பேரும் இறைவனுடன் கலந்ததை உணர்த்தும் வண்ணம் இலிங்கத்தின் உச்சியில் ஏழு முடிக்கற்றைகள் இருப்பதாக கூறுவார்கள். சித்திரை மாதத்து முதல் மூன்று நாட்களில், சூரியனது கிரணங்கள் நேரே கருவறை சென்று அடைவதை, சூரியன் செய்யும் வழிபாடாக கருதுகின்றனர். கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம். நர்த்தன விநாயகர், திருமால், பிரமன், துர்க்கை ஆகியோரை நாம் கோஷ்டங்களில் காணலாம். மேற்குச் சுற்றில் நாம் வள்ளி தெய்வயானையுடன் முருகப் பெருமானை காணலாம். கிழக்கு நோக்கிய சன்னதியில் சுயம்புவாக மூலவர் உள்ளார். .
நான்கு கால பைரவர்கள் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஞானகால பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் என்று இவர்கள் அழைக்கப் படுகின்றனர். ஒரு மனிதனின் வாழ்நாளில் உள்ள நான்கு பகுதிகளிலும் அவனது தேவைக்கு ஏற்ப அருள் புரியும் பைரவர்கள், அவர்கள் அளிக்கும் பயன்களை குறிப்பிடும் வண்ணம் அவரது பெயர்கள் அமைந்துள்ளன என்று கூறுவார்கள். வாழ்க்கையின் முதல் பகுதியில் ஞானம் பெறுவது மனிதனின் குறிக்கோளாகவும் இரண்டாவது பகுதியில் செல்வம் சேர்ப்பது குறிக்கோளாகவும், மூன்றாவது பகுதியில் விரோதிகள் மற்றும் கடன் தொல்லைகள் இல்லாமல் இருப்பது குறிக்கோளாகவும், நான்காவது பகுதியில் யோகங்கள் பெறுவது குறிக்கோளாகவும் இருப்பதை நாம் உணர்கின்றோம். இந்த பைரவர்களைத் தொழுதால் நான்கு விதமான பேறுகளையும் பெற்று இன்பமாக வாழலாம் என்ற நம்பிக்கை உள்ளது. தேய்பிறை அஷ்டமி நாள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை இராகுகால பூஜைகள் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றன. பைரவர் சன்னதியில் மிளகு தீப வழிபாடு மிகவும் சிறப்பாக கருதப் படுகின்றது. பைரவர்களின் சன்னதி அருகே, பைரவரை தனது குருவாக கருதும் சனீசுவரர், வெள்ளை ஆடை அணிந்து பால சனீசுவரராக காட்சி தருகின்றார். பிராகாரத்தில் பஞ்சபூத லிங்கங்களை காணலாம்.
பொதுவாக சிவாலயங்களில் கோஷ்ட மூர்த்தமாக பெருமாள் இருப்பதை காணலாம். ஆனால் இங்கே சற்று வித்தியாசமாக திருமாலுக்கு தனியாக சன்னதி, சுவாமி சன்னதிக்கு தென்மேற்கு பகுதியில் உள்ளது. இலக்குமி தேவியைத் தனது மடியில் வைத்தபடி அவர் காட்சி கொடுப்பதால், இலக்குமி நாராயணர் என்று அழைக்கப் படுகின்றார். திருவக்கரை திருவீழிமிழலை ஆகிய தலங்களிலும் திருமாலுக்கு தனியாக சன்னதி உள்ளன. நந்தியின் தலை சற்று வலது புறம் திரும்பிய வண்ணம் இருக்கும். ஒரு கால் எடுத்து, எழுந்திருக்கும் நிலையில் நந்தி இருப்பதை நாம் காணலாம். பண்டைய நாளில் வாழ்ந்து வந்த அரிசி வணிகன் ஒருவன், தன்னிடம் அரிசி பிச்சை கேட்டு வந்த வறியவனை படியால் அடித்து கொன்று விடுகின்றான். இவ்வாறு பல பாவங்கள் செய்து வாழ்ந்து வந்த அவன் ஒரு சிவராத்திரி நாளன்று தன்னை அறியாமல், இறைவனது திருநாமத்தை உச்சரிக்கின்றான். தன்னை அழைத்தது யார் என்று அறிந்துவருமாறு பெருமான், நந்தியை ஏவினார். விவரம் அறிந்த நந்தி, பெருமானிடம் தெரிவித்தது. இதனிடையில் அந்த கொடியவனின் வாழ்நாள் முடிந்துவிடவே, அவனது உயிரினை பறிக்கும் நோக்கத்துடன் இயமனின் தூதுவர்கள், வணிகன் இருந்த திருக்கோயிலை நெருங்கினர். சிவபெருமானின்ஆணையின் படி, வணிகனின் உயிரைப் பறிக்க வந்த இயம தூதர்களை நந்தி விரட்டி அடித்தது. இதனைத் தட்டிக் கேட்க வந்த இயமதர்மனை, நந்தி அவனது தலையில் தனது குளம்பு ஒன்றினை வைத்து ஒரு முகூர்த்த நேரம் மயக்கத்தில் ஆழும் வண்ணம் அடக்கினார். இயமனை எதிர்கொள்ளும் நிலைக்கு தயாராக தான் அப்போது இருந்த நிலையில் நந்தி இன்றும் உள்ளது என்று கூறுவார்கள். வேறெங்கும் இல்லாத வகையில் நந்திதேவர், கொடிமரத்தின் முன்னரே இருப்பதை நாம் இந்த திருக்கோயிலில் மட்டுமே காணமுடியும். திருவுந்தியார் என்ற சைவ சித்தாந்த நூல் அருளிய உய்யவந்த தேவனார் அவதரித்த தலம். கோயிலின் தென்புற மதிற்சுவற்றின் அருகே அரைவட்ட வடிவத்தில் அமைந்துள்ள கடிகாரத்தின் மத்தியில் உள்ள இரும்புத் துண்டின் நிழல் இருக்கும் தன்மையைக் கொண்டு நாம் நேரத்தை அறிய முடியும். இராவணனுடன் தொடுத்த போரினால் காயமடைந்த ஜடாயுவின் சிறகுகள் வெட்டப் பட்ட போது ஒரு சிறகு வீழ்ந்த இடமாக இந்த தலம் கருதப் படுகின்றது. அந்த சிறகு விழுந்த இடத்தில் தோன்றியது ஜடாயு தீர்த்தம் என்று கூறுவார்கள்
ஶ்ரீதர அய்யாவாள் வாழ்ந்த தலம். ஒரு முறை தனது முன்னோர்களுக்காக ஸ்ராத்தம் செய்து கொண்டிருந்த போது, இல்லத்தில் வாயிலில் ஒருவன் பிச்சை கேட்டு வந்ததை உணர்ந்த ஶ்ரீதர அய்யாவாள், அவனுக்கு பிச்சை அளித்தார். இதனைக் கண்ணுற்ற அந்தணர்கள் அந்த ஸ்ராத்தத்தில் பங்கேற்க மறுத்தனர். ஶ்ரீதர அய்யாவாள் செய்த பாவத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு, அவர் கங்கை நதியில் நீராட வேண்டும் என்றும், அதன் பின்னரே அவரது இல்லத்தில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் தலத்து அந்தணர்கள் பங்கேற்பர் என்றும் திட்ட வட்டமாக கூறினார்கள். தனது பக்தியின் வலிமையால், ஶ்ரீதர அய்யாவாள் தனது இல்லத்தில் இருந்த கிணற்றினில், கங்கை நீரை வரவழைத்து அதில் நீராடிய பின்னர், தலத்து அந்தணர்கள் அவரது இல்லத்தில் அன்று நடைபெற்ற ஸ்ராத்தத்தில் பங்கேற்றனர் என்றும் சொல்லப் படுகின்றது. அந்த சமயத்தில் ஶ்ரீதர அய்யாவாள் பாடிய தோத்திரம் கங்காஷ்டகம் என்று அழைக்கப் படுகின்றது. இன்றும் கார்த்திகை மாத அமாவாசை அன்று அந்த கிணற்றினில் கங்கை நதி பொங்கி வருவதாக நம்பப் படுகின்றது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னம் நடைபெற்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் காரணமாக இந்த தலம் காசிக்கு சமமாக கருதப் படுகின்றது. இன்றும் கார்த்திகை மாதம் அமாவாசையை ஒட்டி பத்து நாட்கள் கங்காவதரணம் என்று திருவிழா கொண்டாடப் படுகின்றது. அந்த நாளன்று கிணற்றில் நீர் பொங்கி வந்து நீர் மட்டம் உயர்வதை நாம் காணலாம். ஆயிரக் கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் குளித்த பின்னரும் நீர் மட்டம் குறையாமல் இருப்பது ஒரு அதிசயமாக நிகழ்கின்றது. தீர்த்தம் ஜடாயு தீர்த்தம். தலத்தில் எட்டு தீர்த்தங்களும் (நந்தி, இலக்குமி, சரசுவதி, பிரமகுண்டம், கங்கை, சக்கரம், ஆலம், ஜடாயு) எட்டு தல மரங்களும் (வன்னி,வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி ஆகியவை) உள்ளன. இராஜராஜச் சோழன் வழிபட்டு பிள்ளை வரம் வேண்டி, தங்கப் பசுவை தானம் செய்ததாகவும், அதன் பின்னர் அன்னையின் அருளால் இராஜேந்திரனை மகனாகப் பெற்றதாகவும் கூறுவார்கள். இரண்டாம் பராந்தகச் சோழனின் காலத்தைய கல்வெட்டும், இராஜேந்திரன் காலத்தைய கல்வெட்டும், திருக்கோயிலுக்கு நிலமும் வேறு பல கொடைகளும் அளிக்கப் பட்ட செய்தியை உணர்த்துகின்றன. ரிஷப இராசிக் காரர்களும் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய கோயிலாக கருதப் படுகின்றது.
பாடல் 1:
குரவம் கமழ் நறு (1.013) பின்னணி மற்றும் பாடல் 1 (திதே 0537)
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 1 தொடர்ச்சி (திதே 0538)
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 1 தொடர்ச்சி (திதே 0539)
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 1 தொடர்ச்சி (திதே 0540)
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 1 தொடர்ச்சி (திதே 0541)
குரவம் கமழ் நறுமென் குழல் அரிவை அவள் வெருவப்
பொரு வெம் கரி பட வென்று அதன் உரிவை உடல் அணிவோன்
அரவும் அலை புனலும் இளமதியும் நகு தலையும்
விரவும் சடை அடிகட்கு இடம் விரிநீர் வியலூரே
விளக்கம்:
குரவம்=குராமலர்; அரிவை=இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட பெண்களைக் குறிக்கும் சொல். அம்பிகை என்றும் மூப்பு அடையாமல், இளமையும் அழகும் ஒரு சேர வாய்க்கப் பெற்று இருப்பதால் தேவியை அரிவை என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பொரு=போருக்கு சென்ற; கயாசுரன் என்ற அரக்கன், யானை உடலைக் கொண்டவனாக இருந்தவன், சிவபெருமானுடன் போருக்குச் சென்றான். சிவபெருமானால் அவனுக்கு மரணம் நேரும் என்பதை பிரமதேவன் எடுத்துச் சொல்லியிருந்த போதும், அதனை பொருட்படுத்தாமல், தேவர்களுக்கு அடைக்கலம் தந்த காரணத்திற்காக பெருமான் மீது சினங்கொண்டு, போருக்கு சென்றதையே, பொருவெங்கரி என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பட=இறந்து பட உரிவை=தோல்;
விரவும்=ஒன்றாக கலந்திருத்தல்; ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களும் தங்களுக்குள்ளே பகையும் கொண்டுள்ள பொருட்கள் தங்களது பகையினை மறந்து, பெருமானின் சடையினில் இருப்பதை இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். பெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமேது. இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் திருவாரூர் தலத்து பாடல் (4.53.2) ஒன்றினை நினைவூட்டுகின்றது. நங்கை=பார்வதி தேவி: மஞ்ஞை= மயில்: வேழம்=யானை: ஆகம்=உடல்: நிமிர்தல் செய்யா=நிமிர்ந்து நில்லாமல் வளைந்து காணப் படும் பிறை கொண்ட சந்திரன்: உரிவை=தோலாடை:
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று
வேகத்தைத் தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து
பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே
சடையில் சந்திரனைக் கண்ட நாகம், சந்திரனை விழுங்கக் கருதி மிகவும் வேகமாக வருகின்றது அந்த சமயத்தில், மயில் போன்ற சாயலை உடைய கங்கையை கண்டு, தன்னைக் கொத்தித் தின்ன மயில் வந்து விட்டதோ என்ற அச்சத்தில், தனது வேகத்தைத் தவிர்க்கின்றது. இதனிடையே, பாம்பினைக் கண்டு பயந்த, சந்திரன் பெருமான் அணிந்திருக்கும் யானைத் தோலின் அடியில் புகுந்து கொள்வதும், பாம்பு சென்று விட்டதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அடிக்கடி வெளியே எட்டிப் பார்க்கின்றது. அவ்வாறு எட்டிப் பார்க்கும் பொழுது, சந்திரன் முழுமையாகத் தெரியாமல், மேகத்தின் இடையே தோன்றும் மின்னல் கீற்று போன்று காணப்படுவதால், மின்னல் என்று நினைத்து, பாம்பு அடங்கி விடுகின்றது. வானத்தில் மின்னல் தோன்றினால், மயில்கள் மிகவும் மகிழ்ந்து நடமாடும். எனவே மின்னலும் இடியும், மயில்கள் வெளியே வந்து நடமாடும் செய்கைக்கு அறிகுறி என்று கருதி பாம்பு ஒதுங்கியது என்று உணர்த்துகின்றார். இயல்பாக பாம்பினைக் காணும் எவரும் அச்சம் கொள்வார்கள் அல்லவா. அது போன்று கங்கையும் அச்சம் கொண்டதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்டு இருத்தல் தான், இவர்கள் மூவரும், கங்கை நதி, பாம்பு மற்றும் சந்திரன் ஆகிய மூவரும், அடங்கிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்று நகைச்சுவையாக கூறினாலும், இறைவனின் சன்னதியில் பகைமை உணர்ச்சி நீங்கப் பெற்று, கங்கை எனும் நங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவை பகையின்றி சிவபெருமானின் சடையில் உலாவும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார்
பிராட்டியை அரிவை என்று குறிப்பிடும் அப்பர் பிரான், திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.10.8) பெருமானின் மார்பில் புரண்டு கொண்டிருந்த பாம்பினைக் கண்டு தேவி அச்சம் அடைந்ததாக கற்பனை செய்கின்றார். அரிவை என்ற சொல், சடையினில் உள்ள கங்கை நங்கையை குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்ளப் படுகின்றது. சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைகின்றது: சடையில் அடக்கி வைக்கப்பட்டுள்ள கங்கை அசைகின்றது: அந்த கங்கை நீரினில் தோய்ந்த சந்திரன் ஆடுகின்றது. அவரது தலை மாலையில் உள்ள மண்டையோடு தனது பற்களை இழந்த நிலையில் சிரிப்பது போன்று காட்சி அளிக்கின்றது. இந்த காட்சிகளைக் காணும் அப்பர் பிரானின் கற்பனை விரிகின்றது. அந்த கற்பனைக் காட்சி தான் இந்த பாடலில் விளக்கப் படுகின்றது. இந்த பாடலின் நயத்தில் தனது மனதினை பறி கொடுத்த திரு கி.வா.ஜா. அவர்கள், தனது திருமுறை மலர்கள் புத்தகத்தில், மூன்று பக்கங்களுக்கு மேலாக ஒரு கட்டுரை இந்த பாடலுக்கு வரைந்திருக்கின்றார். சடையில் சந்திரனைக் கண்ட நாகம், சந்திரனை விழுங்கக் கருதி மிகவும் வேகமாக வருகின்றது அந்த சமயத்தில், மயில் போன்ற சாயலை உடைய கங்கையை கண்டு, தன்னைக் கொத்தித் தின்ன மயில் வந்து விட்டதோ என்ற அச்சத்தில், தனது வேகத்தைத் தவிர்க்கின்றது. இதனிடையே, பாம்பினைக் கண்டு பயந்த, சந்திரன் பெருமான் அணிந்திருக்கும் யானைத் தோலின் அடியில் புகுந்து கொள்வதும், பாம்பு சென்று விட்டதா இல்லையா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அடிக்கடி வெளியே எட்டிப் பார்க்கின்றது. அவ்வாறு எட்டிப் பார்க்கும் பொழுது, சந்திரன் முழுமையாகத் தெரியாமல், மேகத்தின் இடையே தோன்றும் மின்னல் கீற்று போன்று காணப்படுவதால், மின்னல் என்று நினைத்து, பாம்பு அடங்கி விடுகின்றது. வானத்தில் மின்னல் தோன்றினால், மயில்கள் மிகவும் மகிழ்ந்து நடமாடும். எனவே மின்னலும் இடியும், மயில்கள் வெளியே வந்து நடமாடும் செய்கைக்கு அறிகுறி என்று கருதி பாம்பு ஒதுங்கியது என்று உணர்த்துகின்றார். இயல்பாக பாம்பினைக் காணும் எவரும் அச்சம் கொள்வார்கள் அல்லவா. அது போன்று கங்கையும் அச்சம் கொண்டதாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்டு இருத்தல் தான், இவர்கள் மூவரும் அடங்கிக் கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்று நகைச்சுவையாக கூறினாலும், இறைவனின் சன்னதியில் பகைமை உணர்ச்சி நீங்கப் பெற்று, கங்கை எனும் நங்கை, பாம்பு, சந்திரன் ஆகியவை பகையின்றி சிவபெருமானின் சடையில் உலாவும் தன்மையை நமக்கு உணர்த்துகின்றார். சிவபெருமானின் சடையில் உள்ள பாம்பு அசைவதைக் கண்டு, அருகில் இருக்கும் கங்கை நங்கை அச்சம் அடைகின்றாள். அச்சத்தால் அவள் உடல் நெளியவே, அவளது கரிய கூந்தல் ஆடுவதைக் கண்ட பாம்பு, அவளை மயில் என்று தவறாக நினைத்து பயப்படுகின்றது. தங்களது பகைமையை அடக்கி, தன்னையும் பாம்பையும் தனது சடையில் இறைவன் ஏற்றதால் அந்நாள் வரை அச்சமின்றி சடையில் உலாவிய சந்திரன், தனது பகைவனாகிய பாம்பு அசைவதைக் கண்டு, ஒரு கால் பாம்பு தன்னை விழுங்குவதற்காக வருகின்றதோ என்று பயம் கொள்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொள்வதைக் கண்ட, தலை மாலையில் உள்ள மண்டையோடு சிரிக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கொருவர் அச்சம் கொண்ட சூழ்நிலையை உருவாக்கி, அந்த சூழ்நிலையைக் கண்டு நகைக்கும் மண்டையோட்டினை மாலையில் அணிந்துள்ள கெடில வாணரின் தோற்றம் மிகவும் வியப்புக்கு உரியது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுறக்
கிடந்த பாம்பு அவளையோர் மயில் என்று ஐயுறக்
கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே
கிடந்தது தான் நகு தலை கெடில வாணரே
பிராட்டியை அரிவை என்று குறிப்பிடும் திருமுறைப் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காணலாம்.
வேணுபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.9.1) திருஞானசம்பந்தர் பிராட்டியை வண்டார் குழல் அரிவை என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடல், தனது ஆறாவது தல யாத்திரையை முடித்துக் கொண்டு திருஞானசம்பந்தர் சீர்காழி தலத்தினை நெருங்கிய போது,அருளிய பதிகமாகும். பெண் தான் மிக ஆனான் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். பிரமன் தனது நாவினில் சரசுவதி தேவியை வைத்திருக்க, திருமால் தனது மார்பினில் இலக்குமி தேவியை வைத்திருக்க, பெருமானோ தனது உடலின் இடது பகுதி முழுவதிலும் பிராட்டியை வைத்திருக்கும் நிலையினை ஒப்பிட்டு, பெண் தான் மிக ஆனான் என்று கூறினார் போலும். தவளம்=வெண்மை நிறம்; வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணாகிய பார்வதி தேவியை விட்டு பிரியாது இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டவனும். பிறைச் சந்திரனை அணிந்த முடியினை உடையவனும் ஆகிய பெருமானது ஊர், தாமரை மலரில் வாழும் திருமகள் விளங்கும் வெண்மையான மாட வீடுகள், விண்ணைத் தாங்குவது போன்று உயர்ந்து தாங்குவது போன்று விளங்கும் வேணுபுரம் நகரமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வண்டார் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்
பெண் தான் மிக ஆனான் பிறைச் சென்னிப் பெருமான் ஊர்
தண்டாமரை மலராள் உறை தவளந் நெடு மாடம்
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே
பேணுப்பெருந்துறை என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.42.1) திருஞான சம்பந்தர் பெருமானை செல்வர் என்றும் பிராட்டியை அரிவை என்றும் அழைக்கின்றார். பொதுவாக, அடுத்தவரிடம் பிச்சை ஏற்போர், ஒரு விதமான தயக்கம், வெட்கம் காரணமாக உடலும் உள்ளமும் குறுகிய தன்மை உடையவர்களாக, தமக்கு ஏதும் கிடைக்காதா என்ற நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் இருப்பதை காண்கின்றோம். ஆனால் பிச்சை ஏற்கும் பெருமானோ இறுமாப்புடன் இருப்பதாகவும், பிச்சை இடுவீர்களாக என்று கட்டளை இடுபவராகவும் இருக்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். மேலும் பெருமான், தான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் தங்களது மலங்களை பிச்சையாக இடும் உயிர்களுக்கு, செல்வத்தை அளிக்கும் செல்வந்தர் என்பதை செய்தொழில் பேணி ஓர் செல்வர் என்ற தொடர் மூலம் உணர்த்துகின்றார். முக்திச் செல்வத்தை தனக்கென்று மட்டும் வைத்துக் கொள்ளாமல் தன்னைப் பேணி போற்றும் அடியார்களுக்கு அருளும் செல்வர் அல்லவா பெருமான். பெய்தல்=இடுதல்; செய்தொழில் பேணி=தாங்கள் செய்ய வேண்டிய தொழில்களை போற்றி கொண்டாடி செய்பவர்கள்; பிறவி எடுத்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை, உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானைப் போற்றிப் புகழ்ந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற முயற்சியில் ஈடுபடுவது தானே. அம்மான்=அழகிய; நோக்கி=மான் போன்ற மருண்ட பார்வை உடைய பார்வதி தேவி; தொல்புகழ்= பண்டைய நாளிலிருந்து அழியாமல் நிலைத்து நிற்கும் புகழினை உடையவர்;
பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றி வெண்கொம்பு ஒன்று பூண்டு
செம்மாந்து ஐயம் பெய்கென்று சொல்லிச் செய்தொழில் பேணி ஓர் செல்வர்
அம்மான் நோக்கிய அந்தளிர் மேனி அரிவை ஓர் பாகம் அமர்ந்த
பெம்மான் நல்கிய தொல் புகழாளர் பேணுப்பெருந்துறையாரே
அச்சிறுப்பாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.77.01) திருஞானசம்பந்தர், பிராட்டியை அரிவை என்று குறிப்பிடுகின்றார். குலாய=கலந்த, குலவிய; கொழும் பொடி= வளமையான விபூதி; அகலம்=மார்பு; பொருகடல்=பெரிய கடல்; அழல் நிறம்=நெருப்பு போன்று சிவந்த நிறம்; புரைய=போன்ற; மின்றிரண்டன்ன=மின்னல் திரண்டது போன்று ஒளி வீசுவதும் நுண்ணியதும் ஆகிய இடை; இந்த திருக்கோயிலில் இரண்டு பெருமான் சன்னதிகள் இருப்பதை நாம் காணலாம். கோயிலின் நடுவே கொடிமரத்துடன் கூடிய ஒரு கருவறையும், அதற்கு வலது புறத்தில் இராஜ கோபுரத்திற்கு எதிராக மற்றொரு கருவறையும் இருப்பதை நாம் காணலாம். இவை முறையே ஆட்சிபுரீச்வரர் என்றும் உமை ஆட்சீச்வரர் என்றும் அழைக்கப் படுகின்றன. இந்த தகவல் தான் கீழ்க்கண்ட பாடலில், அன்றிரண்டு உருவம் ஆய எம்மடிகள் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது என்று விளக்கம் அளிக்கின்றனர். உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டுள்ள இறைவனை, ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே உருவத்தில் இரண்டு விதமாகவும் இருக்கும் தன்மையை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. பாண்டிய மன்னன் ஒருவன் கங்கை மணலினை ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டு தனது இருப்பிடம் சென்று கொண்டிருந்த போது, இந்த தலம் வழியாக செல்ல நேர்ந்தது. அப்போது வண்டியின் அச்சு முறிந்ததால், தனது பயணத்தை அவனால் தொடர முடியவில்லை. அந்த சமயத்தில் ஒரு தங்க நிற உடும்பு வண்டிச் சக்கரத்தின் அடியிலிருந்து ஓடுவதைக் கண்ணுற்ற சேவகர்கள், அந்த உடும்பு திருக்கோயிலின் சரக்கொன்றை மரத்தின் அடியில் புகுந்ததையும் கண்டனர். அந்த உடும்பு எப்படி மறைந்தது என்பதை அறியும் முயற்சியில், காவலர்கள் மரத்தினை வெட்டிய போது இரத்தம் வரவே உடும்பு வெட்டுண்டது என்று நினைத்தனர். ஆனால் எவ்வளவு நேரம் தேடியபோதும் உடும்போ உடும்பின் உடலோ அவர்களுக்கு கிடைக்கவில்லை. அப்போது ஒரு அதிசயமாக ஒரு சுயம்பு இலிங்கம் அங்கே வெளிப்பட்டது. அந்த இலிங்கத்தை வழிபட்ட பாண்டிய மன்னன் கோயில் அமைத்து இறைவனுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என முடிவெடுத்தான். அந்த சமயத்தில் ஆங்கே வந்த முனிவர் ஒருவரிடம் கோயில் திருப்பணியை ஒப்படைத்தான். சில மாதங்கள் கழித்து பாண்டிய மன்னன் இந்த தலம் வந்தடைந்த போது, இரண்டு இலிங்கங்கள் வேறுவேறு சன்னதியில் இருப்பதைக் கண்டான். மூன்று கண்களை உடைய அந்த முனிவரிடம், எதற்காக இரண்டு சன்னதிகள் என்று வினவிய போது, அவர் தன்னை ஆட்சி செய்த இறைவனுக்கு ஒரு சன்னதி என்றும், உம்மை (பாண்டிய மன்னனை) ஆட்சி செய்த ஈசனுக்கு மற்றொரு சன்னதி என்றும் பதிலளித்தார். மன்னனை ஆட்கொண்ட இறைவனுக்கு பிரதான வாயிலும், ஏற்கனவே தலத்தில் இருந்த இறைவனுக்கு திருக்கோயிலின் நடுவே இடமும் அமைந்துள்ளன என்றும் கூறினார். பிராகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் உள்ள சுயம்பு இலிங்கத்தின் அருகே த்ரிநேத்ரதாரிமுனிவர், இலிங்கத்தை வழிபட்ட நிலையில் இருப்பதை நாம் இன்றும் காணலாம். இதே பதிகத்தின் மூன்றாவது மற்றும் ஏழாவது பாடல்களிலும் திருஞான சம்பந்தர், பிராட்டியை, அரிவை என்று குறிப்பிடுகின்றார்.
பொன் திரண்டன்ன புரிசடை புரளப் பொருகடல் பவளமொடு அழல் நிறம் புரையக்
குன்று இரண்டன்ன தோளுடை அகலம் குலாய வெண்ணூலொடு கொழும்பொடி அணிவர்
மின் திரண்டன்ன நுண்ணிடை அரிவை மெல்லியலாளை ஓர் பாகமாப் பேணி
அன்று இரண்டு உருவம் ஆய எம்மடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே
சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.112.7) திருஞானசம்பந்தர் பிராட்டியை அரிவை என்று அழைக்கின்றார். அமர்ந்தவன்=விரும்புபவன்; வியன் நகர்=அகன்ற பெரிய நகரம்; இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் மதில்களால் சூழப்பட்ட நகரம் என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் வியன் நகர் என்று குறிப்பிட்டு, அந்நாளில் சிறந்த நகரமாக இருந்த தன்மையை மீண்டும் குறிப்பிட்டு வலியுறுத்துகின்றார். அரிவை=இளமையான பெண், இங்கே பார்வதி. தேவியை குறிக்கும். பெண்களை அவர்களின் வயதின் அடிப்படையில் ஏழு பிரிவினராக பிரிப்பார்கள்; பேதை (எட்டு வயது வரை) பெதும்பை (ஒன்பது மற்றும் பத்து வயது) மங்கை (பதினொன்று முதல் பதினான்கு வயது வரை) மடந்தை (பதினான்கு முதல் பதினெட்டு வயது வரை) அரிவை (பத்தொன்பது முதல் இருபத்துநான்கு வரை) தெரிவை (இருபத்து நான்கு முதல் இருபத்தொன்பது வரை) பேரிளம் பெண் (முப்பது வயதிற்கு மேல்). நான்காவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் குறிப்பிட்ட வண்ணம் இந்த தலத்தில் உள்ள சோலைகள் வந்தடையும் வண்டுகள், தேனை பருகும் செயலில் ஈடுபட்டு தம்மை மறந்து பூவில் அமர்ந்த வண்ணம் இருக்கின்றன என்ற குறிப்பு, கணவன் மனைவியராக இந்த தலத்து அடியார்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைந்து மெய்ம்மறந்து நிற்கின்றனர் என்று உணர்த்துவதாக பொருள் கொள்வதும் பொருத்தமே. பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் கொண்டு நீராட்டப் படுவதில் மிகுந்த விருப்பம் உடைய சிவபெருமான், எப்போதும் அரிவை பிராயத்து பெண் போன்று இளமையாக இருக்கும் பார்வதி தேவி உடனாக பெருமான் பொருந்தி உறைகின்ற நகரம், அகன்ற நகரமாகிய சிவபுரம் ஆகும். பூவில் உள்ள தேனை எடுக்கும் முயற்சியில் தன்னை மறந்து பூவில் அமரும் வண்டுகள் போன்று, இந்த தலத்தில் காணப்படும் நீர்நிலைகளில் உள்ள ஆண் அன்னங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது துணையாகிய பெண் அன்னங்களை தழுவி வாழ்கின்றன என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஆவில் ஐந்து அமர்ந்தவன் அரிவையொடு
மேவி நன்கு இருந்ததோர் வியன் நகர் தான்
பூவில் வண்டமர்தரு பொய்கை அன்னச்
சேவல் தன் பெடை புல்கு சிவபுரமே
சிவபுரம் தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தின் பாடலில் (1.125.1) திருஞானசம்பந்தர், தேவியை, அரிவை என்று அழைக்கின்றார். கலை=மேகலை எனப்படும் ஆபரணம்; அரிவை=அரிவை பிராயத்து பெண் போன்று என்றும் இளமையாக இருக்கும் பார்வதி தேவி; மாதொரு பாகனின் திருக்கோலம் இந்த பாடலில் விளக்கப் படுகின்றது. மாதொரு பாகனாக பெருமான் விளங்கும் தன்மையை குறிப்பிடும் திருமுறைப் பாடல்கள் எண்ணற்றவை. இந்த பாடலில் மாதொரு பாகனாகிய பெருமானின் இடது மார்பில், பெண்ணின் முலை பொருந்தி அமர்ந்துள்ளதாக குறிப்பிடுகின்றார். சற்று அகன்று காணப்படும் இடுப்பினை ஒட்டிய இடத்தில் மேகலை எனப்படும் ஆபரணத்தை அணிந்தவளாக அழகும் இளமையும் பொருந்திய பார்வதி தேவியைத் தனது உருவத்தின் ஒரு பகுதியாக வைத்துக் கொண்டுள்ள இறைவன், தனது உடலின் இடது பகுதியில் பருத்த மார்பகத்தை உடையவனாக இருக்கின்றான். கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட மதில் சுவர்களை உடைய சிவபுர நகரத்தினை தியானித்து தொழும் அடியார்கள் பால், அவர்களை வருத்தும் வினைகளுக்கு இடம் இல்லை. இவ்வாறு வினைகளின் தாக்கத்தால் தங்களது துன்பங்களைத் தீர்த்துக் கொள்ளும் அடியார்களுக்கு மறுமையிலும் துன்பங்கள் ஏதும் இல்லாத இன்பங்களே நிறைந்த முக்தி நிலை ஏற்படும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கலைமலி அகல் அல்குல் அரிவை தன் உருவினன்
முலைமலி தரு திருவுருவம் அது உடையவன்
சிலைமலி மதில் பொதி சிவபுர நகர் தொழ
இலை நலிவினை இருமையும் இடர் கெடுமே
கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.126.2) திருஞானசம்பந்தர் தேவியை, அரிவை என்று அழைக்கின்றார். இந்த பாடல் தாருகவனத்து மகளிர், பெருமானின் பாடலில் மயங்கி நின்ற நிலையை குறிப்பிடுகின்றது. வசிவலன்=தனது அழகால் வசீகரிக்கும் ஆற்றல் வாய்ந்த பெருமான்; பிசைந்து அணிந்த=நீரில் குழைத்து திருநீற்றினை அணிந்து கொண்ட தன்மை; பீடார்=பெருமை மிகுந்த; மாடார்=அருகில் இருந்த, இடது பாகத்தில் பொருந்தியிருந்த; மாடு=அருகே; பிறை நுதல்=பிறைச் சந்திரன் போன்று அழகாக வளைந்த; நச்சி=விரும்பி; உச்சத்தான்=உச்சிப் போதினில்; வெங்கண் ஏறு=கோபத்தை வெளிப்படுத்தும் வண்ணம் சிவந்த கண்களை உடைய இடபம்; வச்சத்தால்=வைத்ததால்; வடம்=வரிசையாக அமைந்த முத்து மாலை; வாரா=பின் தொடர்ந்து வந்து; மாலாகும்=மயக்கம் கொண்டு;
பிச்சைக்கே இச்சித்துப் பிசைந்து அணிந்த வெண்பொடிப் பீடார் நீடார் மாடாரும் பிறை நுதல் அரிவையொடும்
உச்சத்தான் நச்சிப் போது அடர்ந்த வெங்கணேறு ஊராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலி செய் இசை
வச்சத்தான் அச்சுச் சேர் வடங்கொள் கொங்கை மங்கைமார் வாராநேரா மாலாகும் வசிவல அவனது இடம்
கச்சத்தான் மெச்சிப் பூக் கலந்திலங்கு வண்டினம் காரார்காரார் நீள் சோலை கழுமல வளநகரே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.131.1) திருஞானசம்பந்தர், தேவியை அரிவை என்று அழைக்கின்றார். மெய்த்த ஆறு என்பது மெய்த்தாறு என்று சேர்ந்தது; உடலினால் அறியப்படும் ஆறு சுவைகள், உப்பு புளிப்பு இனிப்பு கசப்பு காரம் மற்றும் துவர்ப்பு; ஏழிசைகள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். தமிழ் மொழியில் இவ்வாறு அழைக்கப்படும் இந்த ஏழு இசைகள், வடமொழியில் சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாரம் என்று அழைக்கப் படுகின்றன. சுருக்கமாக சரிகமபதநி என்று கூறுவார்கள்; சுவை, இசை, குணம் ஆகியவை மாயையின் காரியங்கள் என்பதால் அவைகளால் இறைவனை அறிய முடியாது. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பொருளையும் கடந்தவன் இறைவன் என்பதால் வேதங்களாலும் இறைவனை அறிய முடியாது. நடை=நன்னடை. ஒழுக்கமான வாழ்க்கை; ஒத்த ஆறு சமயங்கள்= சைவத்தின் பிரிவான ஆறு அகச்சமயங்கள்; பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வாமனம் பைரவம் மற்றும் சைவம் என்பன சைவ சமயத்தின் ஆறு உட்பிரிவுகள்; இந்த ஆறு சமயங்களும் மாறுபாடு ஏதுமின்றி சிவபெருமானை தலைவனாக ஏற்றுக் கொள்வதால் ஒத்த ஆறு சமயங்கள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. வெதிர்=மூங்கில்; நித்திலம்=முத்து; மூங்கில்கள் வெடித்து அதன் உள்ளே இருக்கும் முத்துக்கள் சிதற அவற்றை அடித்துக் கொண்டு வரும் ஆறு என்பதால் முத்தாறு என்ற பெயர் வந்தது போலும். இந்த பாடலில் மூங்கிலில் முத்து தோன்றும் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். யானையின் தந்தம், பன்றியின் கொம்பு. மூங்கில், தாமரை, கரும்பு, பெண்களின் கழுத்து, சிப்பி, உடும்பு ஆகியவற்றில் முத்து கிடைப்பதாக இலக்கியங்கள் கூறுகின்றன. பல சங்க இலக்கியங்கள் யானை மற்றும் மூங்கில் முத்தின் பிறப்பிடம் என்று கூறுகின்றன. ஆனால் சங்கினைத் தவிர்த்த வேறு எந்த பொருளிலும் முத்துகள் இருப்பதாக நிரூபணம் ஆனதில்லை. காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரம் இலக்கியம் இருபது இடங்களில் முத்து தோன்றுவதாக குறிப்பிடுகின்றது. உடல் உணரும் ஆறு சுவைகளாலும், உடல் கேட்கும் ஏழு இசைகளாலும், எட்டு குணங்களாலும் அறிய முடியாத இறைவன், அனைவரும் விரும்பும் நான்கு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பொருளையும் கடந்து நிற்பதால் நான்கு வேதங்களாலும் அறிய முடியாதவனாக உள்ளான். மேலே குறிப்பிட்டவாறு அறியப்படாமல் இருப்பவனும், ஒழுக்கமான வாழ்வு கொண்டு அன்புடன் அணுகினால் மட்டுமே தெளிவாக அறியப் படுபவனும், பளிங்கு போன்று திருமேனியில் உமை அன்னையை ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளவனும், தங்களுக்குளே மாறுபாடு ஏதுமின்றி ஒத்த கருத்துடன், பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வாமனம் பைரவம் மற்றும் சைவம் ஆகிய சமயங்களால் தலைவனாக ஏற்றுக் கொள்ளப் படுபவனும்; ஆகிய சிவபெருமான் விருப்பமுடன் உறையும் ஊர் முதுகுன்றமாகும். தெளிந்த நீரினை உடைய மணிமுத்தாறு நதி மலையின் கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக் கொணர்ந்து சேர்க்கும் கரைகளை உடைய ஊர் முதுகுன்றமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மெய்த்தாறு சுவையும் ஏழ் இசையும் எண் குணங்களும் விரும்பு நால் வே
தத்தாலும் அறிவொண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம்
ஒத்தாறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்ணீர்
முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முதுகுன்றமே
தருமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.136.3) திருஞானசம்பந்தர், பிராட்டியை அரிவை என்று அழைக்கின்றார். வானளவு உயர்ந்த பெரிய மலை போன்ற இடபத்தின் மேல் ஏறி வருபவரும், கங்கை நதியினைத் தனது சடையில் சூட்டிக் கொண்டவரும், விரிந்தும் சுருண்டும் ஒளி தரும் தோடு விளங்க அணிந்தவரும், கண்ணைக் கவரும் ஒளியுடன் திகழும் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் தலை மாலையாக சூட்டிக் கொண்டவரும், முடை நாற்றம் வீசும் மண்டையோட்டினைத் தனது உண்கலனாகக் கொண்டவரும், பிரமனும் திருமாலும் புகழ்ந்து தொழும் வண்ணம் பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவரும், அரிவை என்று அழைக்கப்படும் பார்வதி தேவியுடன் பிணைந்தும் இணைந்தும் அணைத்துக் கொண்டும் என்றும் பிரியாது இருப்பவரும் ஆகிய சிவபெருமான் உறைகின்ற இடம் தருமபுரம் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். பாடலின் கடை அடி, தலத்தின் தன்மையை உணர்த்துகின்றது.
விண்ணுறு மால் வரை போல் விடை ஏறுவர் ஆறு சூடுவர் விரி சுரியொளி கொள் தோடு நின்றிலங்க
கண்ணுற நின்றொளிரும் கதிர் வெண்மதிக் கண்ணியர் கழிந்தவர் இழிந்திடும் முடைத் தலை கலனாப்
பெண்ணுற நின்றவர் தம் உருவம் அயன்மால் தொழவ் வரிவையைப் பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொடு எண்ணிதழ் மௌவல் மருங்கலர் கருங்கழி கழிந்நெருங்கு நல்தருமபுரம் பதியே
புறவார் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.53.7), திருஞானசம்பந்தர் பிராட்டியை அரிவை என்று குறிப்பிட்டு, பெருமானை மெய்யரிவையர் என்று அழைக்கின்றார். மெய் என்றால் உடல்; தனது உடலில் பெண்ணினை ஓர் பாகமாகக் கொண்டவன் என்று பொருள்.
கையரிவையர் மெல்விரல் அவை காட்டி அம் காந்தளங்குறி
பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
மெய் அரிவையொர் பாகமாகவும் மேவினாய் கழல் ஏத்தி நாடொறும்
பொய்யிலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே
குடவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.58.7) திருஞானசம்பந்தர், பார்வதி தேவியை அரிவை என்று குறிப்பிட்டு, அரிவை போற்றும் ஆற்றலீர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். வாய்மொழி என்ற சொல்லுக்கு, பெருமானின் திருவாயில் இருந்து வெளிப்பட்ட மொழிகள் (வேதங்கள்) என்றும் வேதங்களில் உள்ள சத்தியமான வார்த்தைகளாக விளங்கும் பெருமான் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். ஏறு=இடபம்; பைங்கண்=பசுமையான கண்கள்; அரிவை என்ற சொல் இங்கே உமையன்னையை குறிப்பிடுகின்றது. உமையன்னை போற்றிப் புகழும் வண்ணம், பெருமான் நடனமாடுகின்றார் என்று உணர்த்தப் படுகின்றது. கோடல்= வெண்காந்தள் மலர்; நீடலர்=நெடிது உயர்ந்த; வேதங்களில் உள்ள சத்தியமான வார்த்தைகளின் பொருளாக உள்ளவரும், வேத கீதங்கள் வெளிப்படும் திருவாயினை உடையவரும், பசிய கண்களும் வெண்மை நிறமும் கொண்டுள்ள இடபத்தினைத் தனது ஊர்தியாகக் கொண்டுள்ளவரும், அனைவராலும் போற்றப்படும் வண்ணம் சிறந்த ஆடலாக விளங்கும் நடனத்தை புரிபவரும், உமையன்னைப் புகழ்ந்து போற்றும் வண்ணம் பல அரிய செயல்களை புரியும் ஆற்றல் உடையவரும் ஆகிய பெருமான், வெண்காந்தள் மலர்களில் பொருந்தி தேனெடுக்கும் வண்டுகள் ரீங்காரம் இட்ட வண்ணம் இனிமையான இசை எழுப்பும் சோலைகள் நிறைந்த குடவாயில் தலத்தில் உள்ள நெடிதுயர்ந்த திருக்கோயிலை, தலைவனாக விளங்கும் தான் உறைகின்ற இல்லமாகக் கொண்டு விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பாடலார் வாய்மொழியீர் பைங்கண் வெள்ளேறு ஊர்தியீர்
ஆடலார் மாநடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர்
கோடலார் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில்
நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே
அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.63.4) திருஞானசம்பந்தர் தேவியை, வரியேர் வளையாள் அரிவை என்று அழைக்கின்றார். வரி=வரிசை என்றும் நிறம் என்றும் இரண்டு பொருளைத் தருகின்ற சொல். இரண்டுமே இங்கே பொருத்தமாக உள்ளன. ஏர்=அழகு; வளையாள்=வளையல்கள் அணிந்துள்ள பார்வதி தேவி; கரி ஏர்=கரத்தினை உடைய அழகிய யானை; தும்பிக்கையை யானையின் கரமாக கருதுவது வழக்கம்; அரி=தவளை மற்றும் வண்டு; பழனம்=நெல் வயல்கள்; தனது முன்கையினில் அழகாகவும் வரிசையாகவும் அடுக்கப்பட்ட வளையல்கள் உடைய பார்வதி தேவி அச்சம் கொள்ளும் வண்ணம், தன்னை நோக்கி வேகமாக வந்த மதம் கொண்ட யானையின், தோலை உரித்து, தனது உடல் மீது போர்த்துக் கொண்ட கடவுள் சிவபெருமான்; இரத்தப்பசை கொண்ட யானையின் பசுந்தோல் பெருமானின் உடலுக்கு ஏதும் கேட்டினை விளைவிக்குமோ என்ற எண்ணம் வந்ததால் தேவி அச்சம் கொள்கின்றாள். ஆனால் யானைத் தோலின் இயற்கைத் தன்மையை, பெருமான் மாற்றியதால் அவரது உடலுக்கு அந்த தோல் எந்த கேட்டினையும் விளைவிக்கவில்லை. அத்தகைய ஆற்றல் கொண்ட பெருமான் உறைகின்ற இடம், பொறிகள் நிறைந்து காணப்படும் வண்டுகளும் தவளைகளும் செழிப்பு மிகுந்த நெல்வயல்களும் மிகுந்தும், பொறிகள் போன்று மலர்களை சொரிகின்ற அழகிய புன்னை மரங்கள் கொண்ட சோலைகள் நிறைந்ததும் ஆகிய அரிசிற்கரைப்புத்தூர் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வரியேர் வளையாள் அரிவை அஞ்ச வருகின்ற
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர்
அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்து அங்கு அழகாய
பொரி ஏர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே
அறையணிநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.77.7) திருஞானசம்பந்தர் பிராட்டியை அரிவை என்று குறிப்பிடுகின்றார். வீரமாய வேதியர்=வீரமும் ஞானமும் ஒருங்கே பொருந்திய சிவபெருமான்; வேகமா=வேகத்துடன் எதிர்த்துச் செல்லும் வண்ணம் தாருக வனத்து முனிவர்களால் ஏவப்பட்ட மதயானை; களி=மதக்களிப்பில் திளைத்த யானை; அரிவை=பார்வதி தேவி; ஆரம்=மாலை; வாரம்=அன்பு; பெருமான் யானைத் தோலைத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டதைக் கண்ட பிராட்டி அச்சம் கொண்டாள் என்று பல திருமுறைப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. அத்தகைய அச்சம் தேவையற்றது என்பதை உணர்த்தும் பொருட்டு, பெருமான் தனது உடலின் மீது யானைத் தோலைப் போர்த்துக் கொண்ட வண்ணம், தேவியின் அருகே சென்றார் என்பதை இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
வீரமாகிய வேதியர் வேகமா களி யானையின்
ஈரமாகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம்மிறை
ஆரமாகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர்
வாரமாய் நினைப்பார்கள் தம் வல்வினை அவை மாயுமே
சிரபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.102.1) திருஞானசம்பந்தர் பிராட்டியை, அன்ன மென்னடை அரிவை என்று குறிப்பிடுகின்றார். அமரர் தம் பெருமான் என்ற தொடர், தேவதேவன், மகாதேவன் ஆகிய திருநாமங்களை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. சில பதிப்புகளில் வேதந்தான் என்ற தொடருக்கு பதிலாக வேதாந்தம் என்ற தொடர் பாடபேதமாக காணப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான பதிப்புகளில் வேதந்தாம் என்ற தொடரே காணப்படுகின்றது. எனவே நாமும் அந்த தொடரையே பின்பற்றுவோம். பயத்தல்=கொடுத்தல்; பெருமான் வேதங்களுக்கு பொருள் அருளியதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வேதத்திற்கு பொருள் அருளிச் செய்த படலத்தில் (திருவிளையாடல் புராணம்) பரஞ்சோதி முனிவர், கண்வர் முதலான முனிவர்களுக்கு வேதத்தின் பொருள் சொன்ன நிகழ்ச்சியை மிகவும் விரிவாக சொல்கின்றார். மதுரையிலிருந்து வடநாடு சென்ற வேதியன் ஒருவன், நைமிசாரண்யத்தில் கண்வர் முதலான முனிவர்கள், முகம் வாட்டமடைந்து இருந்ததைக் கண்டு, அதன் காரணத்தை வினவினார். வேதங்களின் பொருளினை அறியமுடியாமல் வருந்துவதாக அவர்கள் கூற, மதுரை வேதியன், மதுரை மாநகரம் சென்று சொக்கநாதப் பெருமானிடம் வேண்டுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறினார். அவ்வண்ணமே கண்வரும் மற்ற முனிவர்களும் மதுரை சென்றடைந்து சொக்கநாதப் பெருமானிடம் வேண்டினார்கள். பின்னர் அவர்கள் ஆங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில் வழிபட்ட போது, வேதியச் சிறுவனாக பெருமான் வெளிப்பட்டு, முனிவர்களை நோக்கி அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அப்போது முனிவர்கள் வேதங்களின் பொருளை அறிந்து கொள்ளவேண்டும் என்பதே தங்கள் அவா என்று கூறவே, வேதியச் சிறுவனாக வந்த பெருமானும் வேதங்களின் பொருளை எடுத்துரைத்தார் என்று திருவிளையாடல் புராணம் உணர்த்துகின்றது. சனகாதி முனிவர்களுக்கு தனது மோன முத்திரையால் வேதத்தின் பொருளை உணர்த்தியவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. அன்னப்பறவை போன்று மென்மையான நடையை உடைய உமை நங்கையுடன் இனிதாக உறைபவரும், தேவர்களின் தலைவராக திகழ்பவரும், மின்னல் போன்று ஒளி வீசும் சிவந்த சடையினில் வெள்ளெருக்கு மலரினைத் சூட்டிக் கொண்டவரும், வேதங்களின் வழியாக வாழ்க்கைக்கு பயன்படும் அரிய கருத்துகளை உலகினுக்கு அளித்தவரும், வேதங்களின் பொருளினை உணர்த்தியவரும், பெரிய மதில்கள் சூழ்ந்த சிரபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரினில் உறைபவரும் ஆகிய பெருமானின் பொன் போன்று அழகிய திருவடிகளைத் தொழும் அடியார்கள் வினைகளுடன் பொருந்த மாட்டார்கள்; அதாவது அவர்களைப் பற்றியுள்ள வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அன்ன மென்னடை அரிவையோடு இனிதுறை அமரர் தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக்கம் மலர் வைத்தவர் வேதம் தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதில் சிரபுரத்தார் சீரார்
பொன்னின் மாமலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே
மாந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.110.2) திருஞானசம்பந்தர், பெருமானை, அரிவை தன் பங்கன் என்று அழைக்கின்றார். விளவு=விளாம் பழம்; வேய்=மூங்கில்; வேய்மணி= மூங்கிலில் உள்ள முத்துக்கள்; துளவமான்மகன் என்ற தொடர் துளவ மால் மகன் என்று, பொருள் புரிந்து கொள்வதற்காக, பிரிக்கப் பட்டுள்ளது. துளவ=துழாய், துளசி; தாமரை அசோகம் குவளை மா முல்லை என்பன மன்மதன் தனது வில்லில் பயன்படுத்தும் அம்புகள்; அளகம்=கூந்தல்; வாள் நுதல்=ஒளி வீசும் நெற்றி; அரிவை என்பது இருபது வயதிலிருந்து இருபத்தைந்து வயதில் இருக்கும் பெண்களை குறிக்கும்; அம்பிகை வயது முதிராமல் என்றும் இளமையாக இருக்கும் நிலையினை குறிக்கும் வண்ணம் அரிவை என்று அம்பிகையை திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். சாதியின் பலம் என்ற தொடருக்கு சாதிக்காய் என்று பொருள் கொண்டு, காவிரி நதியால் சாதிக்காய் அடித்து கொண்டுவரப் படுகின்றது என்றும் சிலர் பொருள் கொள்கின்றனர். பலன்கள் என்று பன்மையில் சொல்லப் பட்டு இருப்பதால், பல வகையான பலன்கள் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. இதே பதிகத்தின் முதல் பாடலில் இறைவனை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ஞானசம்பந்தர், சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் தான் வணங்கும் தன்மை உடையவராக அறியேன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அந்த நிலையினை நாமும் அடைய வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இந்த பாடலில் வெளிப்படுகின்றது. பிரமன் திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களையும், தேவர்கள் என்ற சொல் மூலம் குறிப்பிடும் திருஞான சம்பந்தர், அத்தகைய தேவர்கள் தொழும் இறைவன் என்று சிவபெருமானின் பெருமையை உணர்த்துகின்றார். திருமாலும் பிரமனும் தொழும் பெருமான், என்று உணர்ந்த பின்னர், மற்ற தெய்வங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அல்லவா. அதனால் தான் பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் அறியேன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். விளாம்பழம் போன்று தேனாக இனிக்கும் பலவகையான பயன் தரும் மரங்களின் பழங்களையும், முதிர்ந்த மூங்கிலிலிருந்து உதிரும் முத்துக்களையும் நதி நிறையும் வண்ணம் அடித்துக் கொண்டு வரும் காவிரி நதியின் வடகரையில் உள்ள மாந்துறை தலத்தில் உறையும் இறைவனை, துளசி மாலையை விரும்பி ஏற்றுக் கொள்ளும் திருமாலின் மகனும், ஐந்து விதமான மலர்களை தனது கணைகளாக பயன்படுத்தி உயிர்களிடம் வேட்கையை ஏற்படுத்துபவனும் ஆகிய மன்மதனின் உடல் எரிந்து அழியும் வண்ணம் தனது நெற்றிக் கண்ணை விழித்த இறைவனை, நீண்ட கூந்தலை உடையவளும் அழகாக ஒளி வீசும் நெற்றியை உடையவளும், என்றும் அரிவைப் பருவத்து பெண் போன்று இளமையாக இருப்பவளும் ஆகிய அன்னையைத் தனது உடலின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய இறைவனைத் தவிர்த்து வேறு ஒருவரையும் அடியேன் அறியேன் என்று திருஞானசம்பந்தர் கூறுவதாக அமைந்த பாடல்.
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய்மணி நிரந்து உந்தி
அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானைத்
துளவ மால் மகன் ஐங்கணைக் காமனைச் சுட விழித்தவன் நெற்றி
அளக வாள் நுதல் அரிவை தன் பங்கனை அன்றி மற்று அறியோமே
புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.3.2) திருஞான சம்பந்தர், பிராட்டியை மலையினில் அரிவை என்று அழைக்கின்றார். நிலையுறும் இடர்=நிலையாக உயிருடன் இணைந்து நிற்கும் ஆணவமலம். ஆணவமலம் என்றும் அழியாது, நெல்லுடன் உமி ஒட்டி இருப்பது போன்று, உயிருடன் ஒட்டி இருக்கும் ஆணவ மலத்தினை அடக்கத் தான் முடியுமே தவிர அதனை முற்றிலுமாக ஒழித்து விட முடியாது. எனவே தான் ஆணவமலம் வலுவடைந்து நிற்காத வண்ணம் என்று இங்கே திருஞானசம்பந்தர், நிலையாத வண்ணம் என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். அலைவரு=வருத்தும் நோக்கத்துடன்; இலையுறு மலர்கள்=இலைகளும் மலர்களும், ஏத்துதல்=புகழ்ந்து போற்றுதல் அரிவை=இளம் பெண், இங்கே பார்வதி தேவி; வெருவ=அச்சம் கொள்ளும் வண்ணம்; வன்தோல்=வலிமையான தோல்; கரி=ஆண்யானை; மன்னினை=நிலை பெற்று இருத்தல்; இலையும் மலரும் கொண்டு பெருமானுக்கு அர்ச்சனை செய்து அவரைப் புகழ்வோம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். விபூதிப் பச்சிலையை கரந்தை என்று தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்வதை, சிவபெருமான் மிகவும் விரும்புவதாக கூறுவார்கள். வில்வத்தின் ஐந்து வகைகளாக, நொச்சி, கூவிளம், மாவிலங்கை, கிளுவை மற்றும் விளா இலைகள் கருதப்படுகின்றன. வன்னி இலைகளும் பெருமானை அர்ச்சனை செய்வதற்கு உகந்ததாக கருதப் படுகின்றது. உயிர்களாகிய எங்களுடன் இணைபிரியாது பிணைந்துள்ள ஆணவ மலம் வலிமையுடன் எங்களது உடலில் விளங்குவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் பெருமானே உனது உயர்ந்த திருவடிகளை, நாங்கள் உனது திருவடிகளில் பூவும் இலையும் கொண்டு அர்ச்சனை செய்து உன்னை புகழ்ந்து வணங்குகின்றோம். இமயமலையில் அவதரித்த இளம் பெண்ணாகிய பார்வதி தேவி அச்சம் கொள்ளும் வண்ணம், உன்னை வருத்தும் நோக்கத்துடன் உன்னை நோக்கி பாய்ந்து வந்த மதம் கொண்ட ஆண்யானையின் தோலினை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட பெருமானே, இமையோர்கள் உமது திருவடிகளைத் தொழும் வண்ணம் பார்வதி தேவியோடு நிலையாக அழகுடன் திகழும் சோலைகள் நிறைந்த புகலி நகரினில் நீ வீற்றிருக்கின்றாய் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நிலையுறும் இடர் நிலையாத வண்ணம்
இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம்
மலையினில் அரிவையை வெருவ வன் தோல்
அலை வரு மதகரி உரித்தவனே
இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி
உமையாளொடு மன்னினை உயர் திரு அடி இணையே
பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.13.1) திருஞானசம்பந்தர் பிராட்டியை அன்னமன்னந் நடை அரிவை என்றும் பெருமானை அன்னமன்னந் நடை அரிவை பங்கர் என்றும் அழைக்கின்றார். எயிறு=பற்கள்; மின்னலைப் போன்று ஓளி வீசும் நீண்ட பற்களை உடைய அரக்கர்கள் என்று கூறுகின்றார். உக=அழியும் வண்ணம்; சுளிய=-கோபித்த; விரவலோர்=அன்பற்றவர்களாய், பிறருடன் கலவாது இருந்த திரிபுரத்து அரக்கர்கள்; துன்னிய புரம்=ஒன்றுக்கொன்று ஒரே நேர்க்கோட்டினில் நெருங்கி வந்த மூன்று பறக்கும் கோட்டைகள்; தொன்மையர்=அனைத்து உயிர்களுக்கும் பழமையானவர்; இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் பெருமானை, அரிவை பங்கர் என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் ஒன்பதாவது பாடலில், பெருமானை அரிவை கூறர் என்று அழைக்கின்றார்.
மின்னன எயிறுடை விரவலோர்கள் தம்
துன்னிய புரம் உகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்தராய் நகர்
அன்னம் அன்னந் நடை அரிவை பங்கரே
விசயமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.17.3) திருஞானசம்பந்தர் பெருமானை, அரிவை பாகமாக உடையவர் என்று குறிப்பிடுகின்றார். அக்கு=உருத்திராக்கம்: எலும்பு என்ற பொருளும் பொருத்தமே; அரை=இடுப்பு; தொக்க=சிறந்த; வானவர் தலைவர்=திருமால், பிரமன் இந்திரன் ஆகியோர். திருமால் பிரமன் இந்திரன் ஆகியோர் இந்த தலத்து இறைவனை வழிபட்டு பயன் பெற்றதாக தலபுராணம் கூறுகின்றது. அர்ஜுனன் வழிபட்ட வரலாற்றிலிருந்து, மகாபாரத நாட்களிலும் இந்த தலம் பிரசித்தி பெற்று விளங்கியமை தெரிய வருகின்றது. அதனால் தான் தொன்மை வாய்ந்த நகரம் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். தக்க=தகுதி உடைய; மிக்கவர்=மிகுந்த சிறப்பு வாய்ந்தவர். இந்திரன் பிரமன் திருமால் ஆகியோரினும் சிறப்பு வாய்ந்தவராக தலத்து அடியார்களை திருஞானசம்பந்தர் கருதுவதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஏன் இவ்வாறு கருதுகின்றார் என்பதை நாம் சற்று சிந்திக்கலாம். பிரமன் திருமால் மற்றும் இந்திரன் ஆகியோர் பெருமானின் தொண்டர்களாக திகழ்ந்தாலும், பல சமயங்களில் அவர்கள் சிவபெருமானை மறந்து செயல் பட்ட நிகழ்ச்சிகளை நாம் புராணங்களில் காண்கின்றோம். ஆனால் விசயமங்கைத் தலத்தினில் உறைகின்ற அடியார்களோ எப்போதும் மறவாமல் சிவபெருமானை நினைத்து, அவரை வழிபட்டுக் கொண்டு இருந்தமை காரணமாக, அத்தகைய அடியார்களை, திருமால் ஆகியோரினும் சிறந்தவர்களாக கருதினார் போலும். எலும்பு மாலையினையும் பாம்பினையும் தனது இடுப்பினில் அணிந்தவராக காணப்படும் சிவபெருமான், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார். அவர் சிறந்த இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளார். சோதி வடிவாகவும் தோன்றும் பெருமான், பழமை வாய்ந்த விசயமங்கை தலத்தினை, தனது இருப்பிடமாக கொண்டுள்ளார். தங்களது தகுதியினால் தேவர்களுக்குத் தலைவர்களாக விளங்கும் இந்திரன், பிரமன், திருமால் ஆகியோரும், அவர்களினும் சிறந்தவர்களாக விளங்கும் பல அடியார்களும் நாள்தோறும் இந்த பெருமானைத் தொழுது எழுகின்றனர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அக்கரவு அரையினர் அரிவை பாகமாத்
தொக்க நல் விடையுடைச் சோதி தொன்னகர்
தக்க நல் வானவர் தலைவர் நாள்தொறும்
மிக்கவர் தொழுதெழு விசயமங்கையே
கருக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.21.3) திருஞானசம்பந்தர், அரிவையாகிய பார்வதி தேவி அஞ்சும் வண்ணம் பெருமான்,சுடுகாட்டினில் நடனம் ஆடுகின்றார் என்று கூறுகின்றார். மஞ்சு=மேகம்; மிடறு=கழுத்து; அஞ்சுரும்பு=அழகிய வண்டுகள்; ஆர் குழல்= மொய்க்கப்படும் கூந்தல்; வெஞ்சுரம்=சுடுகாடு; கொடிய காடு; பிரளய காலத்தில் உலகனைத்தும் வெந்து சாம்பலான நிலை; ஊழிக் காலத்தில், உலகங்கள் அனைத்தும் அழிந்து, உலகில் உள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாக மாறிய தருணத்தில் பெருமான் நடனம் ஆட, அந்த நடனத்தைக் காணும் உமையன்னை அஞ்சியதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஆலகால நஞ்சினை உட்கொண்ட போதும், பிரளய காலத்தில் உலகம் எரிந்து அழிந்து உலகமே சுடுகாடாக மாறிய நிலையிலும், எலும்பு மாலை முதலியன பூண்டுகொண்ட போதும், இராவணன் கயிலாய மலையினை அசைத்த போதும், அன்னை அச்சம் கொண்டதாக தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. சுந்தரர் தனது கச்சி ஏகம்பம் திருப்பதிகத்தின் பாடல் ஒன்றினில், கம்பை ஆற்றின் வெள்ளம் பெருகிய போது, தான் வழிபட்டுக் கொண்டிருந்த இலிங்கத் திருவுருவம் அந்த வெள்ளத்தில் கரைந்து விடுமோ என்று அச்சம் கொண்டு, இலிங்கத்தை பார்வதி தேவி இறுகத் தழுவியதாக குறிப்பிடுகின்றார். இந்த வரலாறு பெரிய புராணத்தில் மிகவும் விவரமாக திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணத்தில் சொல்லப் பட்டுள்ளது. சுரும்பார் குழல் அரிவை என்பது தலத்து அம்பிகையின் திருநாமம். மேகங்கள் பொழியும் மழையினால் வளம் பெற்று விளங்கும் சோலைகள் மலிந்த கருக்குடி தலத்தினில் உறைகின்ற பெருமானார், நஞ்சினைத் தேக்கியதால் கருமை நிறம் கறையாக படர்ந்த கழுத்தினை உடையவர் ஆவார். அவர், அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உமையன்னை அஞ்சும் வண்ணம், கொடிய சுடுகாட்டினில் பெருமான் நடனம் புரிவது எதற்காக என்ற கேள்வி பெருமானை நோக்கி கேட்கப்படும் பாடல்.
மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி
நஞ்சுறு திருமிடறு உடைய நாதனார்
அஞ்சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே
வெஞ்சுரம் தனில் விளையாடல் என் கொலோ
அரதைப் பெரும்பாழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.30.8) திருஞானசம்பந்தர், பிராட்டியை அரிவை என்று அழைத்து, பெருமானை அரிவை பாகம் அமர்ந்தார் என்று கூறுகின்றார். அமர்ந்தார்=விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டார்; சரிவு இலா=தளர்ச்சி அடையாத, தளர்வு இல்லாத; நெரிவில் ஆர=நெரிக்கும் தன்மை பொருந்த; தோடலை=தோள் தலை; நெறி=அடர்ந்த; அரிவை= பார்வதி தேவி; தளர்வு அடையாத வலிமை கொண்ட அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்து வேறோர் இடத்தில் வைப்பதற்கு முயற்சி செய்த போது, அவனது தோள்களும் தலைகளும் நெரியும் வண்ணம் அரக்கன் இராவணனை கயிலை மலையின் கீழே அமுக்கிய ஆற்றல் உடைய சிவபெருமான், அடர்ந்தும் மென்மையாகவும் காணப்படும் கூந்தலை உடைய அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டவராக, அடியார்களை விட்டு பிரியாதவராக, அரதைப் பெரும்பாழி தலத்தில் உள்ள திருக்கோயிலில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சரிவிலா வல்லரக்கன் தன் தோடலை
நெரிவிலார அடர்த்தார் நெறி மென் குழல்
அரிவை பாகம் அமர்ந்தார் அடியாரொடும்
பிரிவில் கோயில் அரதைப் பெரும்பாழியே
சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.2) திருஞான சம்பந்தர், பிராட்டியை பங்கய முகத்து அரிவை என்று கூறுகின்றார். இதே பதிகத்தின் முதல் பாடலில் பிராட்டியின் கூந்தலை அழகான கூந்தல் என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர் இந்த பாடலில் பிராட்டியை தாமரை போன்று அழகிய முகத்தினை உடையவள் என்று கூறுகின்றார். அங்கம்=உடல்; விரி=பரந்த; துத்தி=புள்ளிகள்; விரவார=கலந்து திகழ;திரை=அலைகள்; அயலே= அருகினில்; இப்பி=சிப்பிகள்; பரவை=கடல்; திரள்=குவியல்; பிறங்க=விளங்க, வெண்மை நிறமும் சிவப்பு நிறமும் கலந்து விளங்க; புரி சங்கு=வலமாக சுற்றிய சங்கு; அரிவை=பிராட்டி; தரளம்= முத்து; தனது திருமேனியில், புள்ளிகள் கொண்டதும் விரிந்த படத்தினை உடையதும் ஆகிய பாம்பினையும் மார்பினில் ஆமை ஓட்டினையும் கலந்து அணிந்துள்ள பெருமான் மிகுந்த அழகனாகத் திகழ்கின்றான். அவன் தாமரை மலர் போன்று அழகிய முகம் கொண்ட பிராட்டியுடன் பிரியாது உறைகின்ற தலம் சண்பை நகர் என்று அழைக்கப் படுகின்ற சீர்காழி தலம் ஆகும். பொங்கி எழும் கடலலைகள் அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பவளக் குவியல்களின் அருகே வலம்புரி சங்குகளும் முத்துக்களும் குவியலாக குவிந்திருக்க, அதன் ஒளியால் மிகுந்த பிரகாசத்துடன் விளங்கும் சண்பை நகர் தான் பெருமான் வீற்றிருக்கும் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் பத்தாவது பாடலில் பிராட்டியை, எமை ஆளுடைய அரிவை என்று திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவார அமர் மார்பில் அழகன்
பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதி தான்
பொங்கு பரவைத் திரை கொணர்ந்து பவளத் திரள் பொலிந்து அயலே
சங்கு புரி இப்பி தரளத் திரள் பிறங்கொளி கொள் சண்பை நகரே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (3.87.11) பிராட்டியை சிற்றிடை அரிவை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். செறிதரு=நெருங்கி இருக்கும்; சமணர்களுடன் நடைபெற்ற அனல் வாதத்தின் போது, பச்சைப் பதிகம் அடங்கிய திருவேட்டினை, அனலில் இட்ட போது திருஞானசம்பந்தர் அருளியது இந்த பதிகம். இந்த தகவல், கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. நற்றிறம்=நன்மை பயக்கும் தன்மை;
சிற்றிடை அரிவை தன் வனமுலை இணையொடு செறி தரும்
நற்றிறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன
கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய
சொற்றெரி ஒருபதும் அறிபவர் துயரிலர் தூயரே
நாறு சாந்திளமுலை அரிவை என்பது திருத்துருத்தி தலத்து அம்பிகையின் திருநாமம். இந்த பெயர் திருத்துருத்தி மற்றும் திருவேள்விக்குடி ஆகிய இரண்டு தலங்களை இணைத்து திருஞான சம்பந்தர் அருளிய பதிகத்தின் (3.90) ஏழு பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. இந்த பதிகத்தின் இரண்டாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. தூறு=கூட்டமாக அமைந்த சிறிய புதர்ச் செடிகள்; வீறு= பெருமை; தலத்து அம்மையின் திருநாமம், பரிமள சுகந்த நாயகி. இந்த வடமொழிப் பெயர் மிகவும் அழகாக நாறுசாந்து இளமுலை என்று தீந்தமிழ் மொழியில் கொடுக்கப் பட்டுள்ளது. புல்கு= பொருந்திய; அம்மையுடன் உடனாக இருப்பதாக இந்த பதிகத்தின் பல பாடல்களில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார். திருமணம் நடைபெற்ற தலத்தினில் அம்மையுடன் சேர்ந்து உறைவது தானே முறை. உலகினில் உள்ள அனைத்து உடல்களும் எரிந்து அழித்து உலகமே ஒரு சுடுகாடாக காட்சி அளிக்கும் தருணத்தில், ஊழித்தீயினில் நின்று பெருமான் நடனம் ஆடுவது இங்கே உணர்த்தப் படுகின்றது. உலகமே சுடுகாடாக விளங்கும் ஊழி முடிவினில், பிரளயத் தீயில் நின்றவாறு பெருமான் நடனமாடும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று திருவாசகம் சிவபுராணம் இந்த நடனத்தையே உணர்த்துகின்றது. சிறிய முட்செடிகள் ஆங்காங்கே புதராக மண்டிக் கிடக்கும் சுடுகாட்டினில், கொழுந்து விட்டெரியும் நெருப்பினில் நடனம் ஆடும் பெருமான், ஒளிவீசும் சாம்பலை நறுமணம் கமழும் சந்தனச் சாந்தாக பாவித்து மிகுந்த விருப்பத்துடன் தனது உடலில் பூசிக் கொள்கின்றார். பிறைச் சந்திரனைத் தனது முடியினில் பொருத்தியுள்ள பெருமான், பகல் நேரத்தில் திருத்துருத்தி தலத்தினில், நறுமணம் வீசும் சந்தனக்குழம்பு அணிந்துள்ள மார்பகங்களை உடைய இளைய பெண்ணாகிய உமையன்னையுடன் உறைகின்றார். அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கொளி சேர்
நீறு சாந்து என உகந்து அணிவர் பிறை புல்கு சடை முடியார்
நாறு சாந்து இளமுலை அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
வீறு சேர் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே
அம்பர் மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.93.3) திருஞானசம்பந்தர், பெருமானை, அரிவயோடு இருக்கும் அரவினர் என்று குறிப்பிடுகின்றார். படுதலை= இறந்தவர்களின் தலை; பிரம கபாலம், என்று பொருள் கொள்ளவேண்டும்; பிரளய காலத்தில் எரியும் ஊழித் தீயினை இரவினை பகலாக்கும் ஒளி என்று குறிப்பிட்டு, ஊழித் தீயின் வெம்மைத் தன்மையை உணர்த்துகின்றார். இதே பதிகத்தின் நான்காவது ஐந்தாவது ஆறாவது மற்றும் ஒன்பதாவது பாடல்களிலும் பெருமான், அரிவையோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் என்று கூறுகின்றார்.
பரவின அடியவர் படுதுயர் கெடுப்பவர் பரிவிலார் பால்
கரவினர் கனல் அன உருவினர் படுதலைப் பலி கொடேகும்
இரவினர் பகலெரி கானிடை ஆடிய வேடர் பூணும்
அரவினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர் மாகாளம் தானே
திருவதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.25.6) அப்பர் பிரான், பெருமானை, அரிவை பங்கர் என்று குறிப்பிடுகின்றார். வரிமுரி=இசைப் பாடல் வரிகள்: சிலப்பதிகாரத்தில், கானல்வரி, வேட்டுவவரி என்று பல வகையான வரிப் பாடல்கள் காணப்படுகின்றன. அத்தகைய வரிப் பாடல்களின் பாணியிலிருந்து மாறுபட்ட இசைப் பாடல்கள் முரிப்பாடல்கள் ஆகும். வல்லவாறு=இயன்ற அளவுக்கு. இசையுடன் திருமுறை பாடல்கள் பாட வேண்டும் என்று திருமுறைப் பதிகங்களில் கூறப்படுகின்றது. நம்மில் சிலருக்கு இசையுடன் பாடல்கள் பாட முடியுமா என்ற சந்தேகம் ஏற்படலாம். அதனால் தேவாரப் பாடல்களை இசைத்து படுவதற்கு தயக்கம் ஏற்படலாம். அத்தகைய தயக்கத்திற்கு இடம் கொடுக்காமல், நம்மால் இயன்ற அளவுக்கு நம்மை இசைத்துப் பாடச் சொல்லத் தூண்டும் பாடல். காலத்தாலே பாட வேண்டும் என்று சொல்லி, ஒவ்வொரு காலத்திலும் இறைவனைப் பணிந்து பாடுமாறு நமக்கு உணர்த்துகின்றார். நெஞ்சமே, வரிமுரி எனப்படும் பலவகையான இசைப் பாடல்களை உன்னால் இயன்ற அளவுக்கு, யானையின் பசுந்தோலைத் தனது உடலில் போர்க்கும் வல்லமை வாய்ந்த சிவபெருமானின் பெருமைகளை குறிப்பிடும் பாடல்களை ஒவ்வொரு காலத்திலும் பாடுவாயாக. சுருண்டும் முறுக்கடைந்தும் விரிந்தும் காணப்படும் கூந்தலையும், துடி போன்று சிறுத்த இடையினையும், கடல் போன்று பரந்த மார்பினையும் உடைய உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகமாக கொண்டுள்ள சிவபெருமானார் திருவதிகைத் தலத்தில் வீரட்டராய் விளங்குகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வரிமுரி பாடி என்றும் வல்லவாறு அடைந்தும் நெஞ்சே
கரியுரி மூட வல்ல கடவுளைக் காலத்தாலே
சுரிபுரி விரி குழல் ஆடு துடியிடைப் பரவை அல்குல்
அரிவையோர் பாகர் போலும் அதிகை வீரட்டானாரே
அரக்கன் இராவணன் கயிலாய மலையினை அசைத்த போது, அரிவையாகிய அன்னை அச்சம் கொண்டாள் என்று அப்பர் பிரான் பயற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.32.10) குறிப்பிடுகின்றார். மூர்த்தி=தலைவன்; முனிதல்=கோபித்தல்; ஆர்த்தல்=ஆரவாரம் செய்தல்; அடர்த்தல்=நெருக்குதல்; அரிவை=பார்வதி தேவி; யானையின் தோலைத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டதற்கு உமையன்னை அஞ்சியதாக இதே பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரான், பதிகத்தின் கடைப் பாடலில் அரக்கன் இராவணன் கயிலை மலையை அசைத்த போதும், தேவிஅஞ்சியதாக குறிப்பிடுகின்றார். தலைவனாகிய சிவபெருமான் உறையும் மலையாகிய கயிலாய மலையின் மீது புட்பக விமானம் செல்லாது என்று அறிவுரை கூறிய தேர்ப்பாகனது சொற்களை பொருட்படுத்தாது, அதற்கு மாறாக தேர்ப்பாகனை அரக்கன் இராவணன் முனிந்தான். மிகுந்த கோபத்துடன் தனது தேரிலிருந்து கீழே பூமியில் பாய்ந்து குதித்த அரக்கன் கயிலை மலையை நோக்கி ஓடி, மிகுந்த ஆரவாரத்துடன் அதனைப் பேர்த்தெடுக்க முயற்சி செய்தான் அதனால் கயிலை மலையில் ஏற்பட்ட அசைவு கண்டு உமையம்மை அச்சம் கொண்டாள். அந்த அச்சத்தைக் கண்ணுற்ற பெருமான் மலையினைத் தனது கால் விரலால் அழுத்த, மலையின் கீழே அரக்கன் நெருக்குண்டான். தனது தவறினை உணர்ந்த அரக்கன் தேத்தெத்தா என்ற இசையுடன் சாமகானம் பாட, அதனைக் கேட்டு மகிழ்ந்த பெருமான் அரக்கனுக்கு நலன்கள் அளித்தார். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் தான் திருப்பயற்றூரில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மூர்த்தி தன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல்லரிவை அஞ்சத்
தேத்தெத்தே என்னக் கேட்டார் திருப்பயற்றூரனாரே
கயிலாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.47.2) அப்பர் பிரான், தேவியை அரிவை என்று குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களும், ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே என்று முடிகின்றன. பெருமான் சற்று அழுத்தமாக தனது கால் பெரு விரலினை கயிலாய மலையின் மேல் ஊன்றியிருந்தால், அன்றே அரக்கன் இராவணன், கயிலை மலையின் கீழே அகப்பட்டு கூழாக மாறியிருப்பான் என்றும் எவருக்கும் மீண்டும் இராவணனை பார்க்கும் வாய்ப்பே கிடைத்திருக்காது என்றும் அப்பர் பிரான் கூறுகின்றார். கதித்தவன்= உணர்ச்சியால் உந்தப்பட்டு; அதிர்த்தவன்=ஆரவாரத்துடன் வந்தவன்; நிதி என்ற சொல் நெதி என்று எதுகை கருதி திரிந்தது; நிதி=தவம்; நெதித்தவன்=தவம் செய்வோன்;மதித்து=அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்;
கதித்தவன் கண் சிவந்து கயிலை நன் மலையை ஓடி
அதிர்த்து அவன் எடுத்திடல்லும் அரிவை தான் அஞ்ச ஈசன்
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான்
மதித்து இறை ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை அன்றே
கோடிகா தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.51.7) அப்பர் பிரான் பெருமானை, அரிவையோர் பாகத்தன் என்று குறிப்பிடுகின்றார். தழல் உமிழ்=நெருப்பு போன்று எரிக்கும் விடத்தினை உமிழும்: நெருப்பினை ஏந்திய உள்ளங்கையை உடையவனே, இளமையான பெண்ணாகத் திகழும் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவனே, நெருப்பு போன்று உடலினை எரிக்கும் கொடிய நஞ்சினை உடைய பாம்பினை இடுப்பினில் இறுகக் கட்டியவனே, பிரமனின் தலையில் பலி கொள்பவனே, நீ குளிர்ந்த நிழலினைத் தரும் மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிகா தலத்தில், தனது உடலில் நீண்ட கோடுகளைக் கொண்ட வண்டுகள் தேனினை உண்ட மகிழ்ச்சியால் புல்லாங்குழலிலிருந்து எழும் இனிமையான இசையினை உடைய பாடல்கள் பாடும் கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அழல் உமிழ் அங்கையானே அரிவை ஓர் பாகத்தானே
தழல் உமிழ் அரவம் ஆர்த்துத் தலை தனில் பலி கொள்வானே
நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டினங்கள்
குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே
முத்தினை மணியை என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (4.74.2) அப்பர் பிரான், தேவியை அரிவை என்று குறிப்பிடுகின்றார். முன்பின் என்ற சொல் எதுகை கருதி முன்பன் என்று திரிந்து காணப்படுகின்றது. அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியவனாகவும் அனைத்துப் பொருட்களும் அழிந்த பின்னரும் தான் அழியாமல் இருக்கும் தன்மையனாக இருப்பவனும் ஆகிய பெருமான் முன்பின் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றார். பெருமானைத் துதித்து வணங்குவதால் முனிவர்கள் இன்பம் அடைகின்றனர் என்றும் இந்த பாடலில் உணர்த்துகின்றார். இலங்கு=விளங்கித் தோன்றும்; புறத்தே சூரியனாகவும் சந்திரனாகவும் தோன்றும் பெருமான், அனைத்து உயிர்களும் ஞான ஒளியாகவும் இன்ப ஒளியாகவும் உணரும் தன்மையில் இருப்பதை இங்கே கூறுகின்றார். தடக்கை=அகன்ற கையாகிய துதிக்கை; வன்பனை=பனை மரத்தின் அடி போன்று பருத்து வலிமை வாய்ந்த; களிறு=ஆண் யானை; இந்த பாடலில் வேள்விக் களிறு என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தமது மனைவியர்கள் கற்பு நிலை குலைவதற்கு காரணமாக இருந்த பெருமானை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அபிசார வேள்வி செய்து, அந்த வேள்வியிலிருந்து எழுப்பிய யானை என்பதை குறிப்பிடுகின்றார். தாருக வனத்து முனிவர்கள் செய்த அபிசார வேள்வி தான் இங்கே குறிப்பிடப் படுகின்றது. அந்த மத யானை தன்னை எதிர்த்து மிகவும் வேகமாக வந்தது என்பதால், அந்த யானையை அடக்கிய பெருமான், அந்த யானையின் தோலை கிழிக்கின்றார். எனினும் அடிப்படையில் பெருமான் அன்பே உருவமாக இருப்பவன் என்பதை உணர்த்தும் முகமாக அன்பன் என்று அழைக்கின்றார்.
முன்பனை உலகுக்கு எல்லாம் மூர்த்தியை முனிகள் ஏத்தும்
இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள்
அன்பனை நினைத்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே
வெண்ணியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.59.8) அப்பர் பிரான், அஞ்சனக் கண் அரிவை பாகத்தார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் யானையின் தோலினை உரித்த செயலும், தான் அழியும் நிலையில் தன்னைச் சரண் அடைந்த சந்திரனுக்கு கருணையுடன் மறுவாழ்வு அளித்தமையும் விகிர்தனின் செயல்களாக குறிப்பிடப் படுகின்றன. யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று கருதப்பட்டாலும், அந்த தோலினைத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட பின்னரும், தனது உடல் எந்த விதமான கேடும் அடையாமல் நின்றவர் சிவபெருமான். இந்த செயலும் வேறு எவருக்கு சாத்தியம் ஆகாத செயலே. செம்பட்டை நிறத்தில் அமைந்த தனது சடையினில், ஒற்றைப் பிறையுடன் சரண் அடைந்த சந்திரனை சூடிக் கொண்டு, சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்த பெருமான் ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை நகரினில் உறையும் செல்வர் ஆவார். அவர் மை தீட்டப்பட்ட கண்களை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றவர் ஆவார். நான்கு வேதங்களாகவும் அந்த வேதங்களின் ஆறு அங்கங்களாகவும் இருப்பவர் சிவபெருமான் தான். மேகத்தை அடுத்து உள்ளது போன்று உயர்ந்த மாட வீடுகளையும், சோலைகளையும் மதில் சுவர்களையும் உடைய ஆரூர் நகரத்தில் நிலையாக வீற்றிருக்கும் சிவபெருமான், கோபத்துடன் தன்னைத் தாக்க ஓடி வந்த யானையைத் தடுத்து நிறுத்தி அதன் தோலினை உரித்தவர் ஆவார். இவ்வாறு பிறரிடமிருந்து மாறுபட்ட செய்கைகளை உடைய பெருமான் வெண்ணி என்று அழைக்கப்படும் தலத்தில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
செஞ்சடைக்கோர் வெண் திங்கள் சூடினாரும் திருவாலவாய் உறையும் செல்வனாரும்
அஞ்சனக் கண் அரிவை ஒரு பாகத்தாரும் ஆறங்கம் நால்வேதமாய் நின்றாரும்
மஞ்சடுத்த நீள் சோலை மாடவீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும்
வெஞ்சினத்த வேழம் அது உரி செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.72.7) சுந்தரர், பெருமானை அரிவை ஓர் பால் மகிழ்ந்தவர் என்று கூறுகின்றார். பிரளய காலத்தில் அனைத்து உயிர்களின் உடல்களும் அழிகின்றன என்பதால், நரிகள் அந்த சமயத்தில் உலாவுவதில்லை. எனினும் சுடுகாட்டின் பொதுத் தன்மையை குறிக்க நரிகள் குதித்து விளையாடும் காடு என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் வரிபுரி என்று குறிப்பிடப்படும் யாழில் இசை வாசிப்பதாக பெருமான் இருக்கும் நிலையை சுந்தரர் உணர்த்துகின்றார். பஞ்ச பூதங்கள் உட்பட அனைத்தும் அழிந்த நிலையில், மலங்களுடன் பிணைந்து இருக்கும் உயிர்களுக்கு தங்களது மலங்களை கழித்துக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிக்க திருவுள்ளம் கொள்ளும் பெருமான், யாழின் ஒலி மூலம் நாதத்தை எழுப்பி அந்த நாதத்திலிருந்து ஆகாயம் முதலான ஐந்து பூதங்களையும் உருவாக்கும் செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. எரியாடி என்பது பெருமானின் திருநாமமாக பெயர்ச்சொல்லாக வருகின்றது. எரி என்பது பிரளயத் தீயினை குறிக்கும்.
நரி புரி காடரங்கா நடமாடுவர்
வரிபுரி பாட நின்றாடும் எம்மான் இடம்
புரி சுரி வரி குழல் அரிவை ஓர் பால் மகிழ்ந்து
எரி எரியாடி தன் இடம் வலம்புரமே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் (9.17.4) கருவூர்த் தேவர், பெருமானை அரிவை பாகத்தன் என்று குறிப்பிடுகின்றார். அணி=அழகு; சோதி மணி=ஒளி வீசும் இரத்தினம்; இரத்தினக் கல்லில் ஒளி கலந்து இருப்பது இயற்கை. ஒளியையும் அந்த இரத்தினத்தையும் நாம் பிரித்துப் பார்க்க இயலாது. அதே போன்று பெருமான் தனது அடியார்களின் உள்ளத்தில் கலந்து இருக்கின்றான் என்று கருவூர்த் தேவர் இங்கே கூறுகின்றார். அடியார்களின் மனதினில் நீக்கமற பெருமான் கலந்து இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பணி= தொண்டு;தான் செய்கின்ற தொண்டுகளை பெருமான் விரும்பி ஏற்றுக் கொள்வதாக தேவர் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு, நமக்கு அருளாளர்கள் பெருமானின் திருவுள்ளக் குறிப்பினை அறிந்து கொள்ளும் தன்மையராக இருந்தனர் என்பதை உணர்த்துகின்றது. துணி உமிழ்=குறைந்த ஆடை;
அணியுமிழ் சோதி மணியினுள் கலந்தாய் கடியனே கலந்து அடியேன்
பணி மகிழ்ந்து அருளும் அரிவை பாகத்தன் படர்சடை விட மிடற்று அடிகள்
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே
மணி உமிழ் நாகம் மணி உமிழ்ந்து இமைப்ப மருவிடம் திரிவிடைமருதே
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய திருவிசைப்பா பதிகத்தின் பாடலில் திருவாலி அமுதனார், பெருமானை அரிவையோர் கூறுகந்தான் என்று அழைக்கின்றார். உத்தரியம்=மார்பினை மறைக்கும் வண்ணம் ஆண்கள் அணிந்து கொள்ளும் மேலாடை; அங்கவஸ்திரம் என்று அழைக்கப் படும் ஆடை. உத்தரியம் என்ற வடமொழிச் சொல் மாற்றம் ஏதுமின்றி கையாளப் பட்டுள்ளது. புரிபவர்=தன் பால் அன்பு புரியும் அடியார்கள்;
அரிவையோர் கூறுகந்தான் அழகன் எழில் மால் கரியின்
உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார் தம்பிரான்
புரிபவர்க்கு இன்னருள் செய் புலியூர்த் திருச் சிற்றம்பலத்து
எரி மகிழ்ந்து ஆடுகின்ற எம் பிரான் என் இறையவனே
திருமந்திரம் முதல் தந்திரம் ஆகமச் சிறப்பு அதிகாரத்தின் பாடலில் திருமூலர், பெருமானை அரிவையோர் பாகத்தன் என்று குறிப்பிடுகின்றார். அஞ்சனம்=மை; தேவியின் மேனி நிறம் கருமை என்று இங்கே சொல்லப் படுகின்றது. ஆன்மாவின் பால் கருணை கொண்டு, சிவபெருமான் அருளிச் செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு. இந்த ஆகமங்களை பெருமானிடமிருந்து நேரடியாக கேட்டவர்களும், அவர்களிடமிருந்து கேட்டவர்களும் அறுபத்தாறு முனிவர்கள் என்று சொல்லப் படுகின்றது. ஐந்து வேறுவேறு முகங்கள் கொண்டு பெருமான் ஐந்து முனிவர்களுக்கு இந்த ஆகமங்களை சொன்னதாக திருவிளையாடல் புராணம் உணர்த்துகின்றது. தத்புருட முகத்தால் கௌதம முனிவருக்கு சொல்லப்பட்ட ஆகமங்கள், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம் மற்றும் விசுவிம்பம் என்பன. வாமதேவ முகத்தால் காசிப முனிவருக்கு சொல்லப் பட்ட ஆகமங்கள், தீர்த்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான் மற்றும் சுப்பிரபேதம் என்பன. சத்யோஜாதம் முகத்தால் கௌசிக முனிவருக்கு சொல்லப் பட்டவை காமிகம், யோகசம், சிந்தியம், காரணம் மற்றும் அசிதம் என்பன. அகோரம் முகத்தின் மூலம் பரத்வாஜ முனிவருக்கு சொல்லப் பட்ட ஆகமங்கள் விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம் மற்றும் வீரம் என்பன. ஈசானம் முகத்தின் மூலம் அகத்தியருக்கு சொல்லப் பட்ட உபதேசம் செய்யப் பட்டவை புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சருவோத்தமம், பரமேசுரம், கிரணம் மற்றும் வாதுளம் என்பன.
அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும் பொருள் கேட்டதே
திருமந்திரம் நான்காம் தந்திரம் பூரண சத்தி அதிகாரத்தின் பாடலில், திருமூலர், சக்தியை அரிவை என்று குறிப்பிடுகின்றார். அம்பு போன்று கூர்மையான கண்களை உடையவள் அம்பிகை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பொதுவாக பெணகளின் அம்பன்ன கண்கள் என்றால், எதிர்படுவோரின் மனதைக் கிழித்து காம மயக்கத்தை உண்டாக்கும் கண்கள் என்ற பொருள் வரும். அம்பிகையின் கூர்மையான கண்கள் என்றால், ஆன்மாக்களின் மும்மல காரியமாகிய மூன்று புரங்களை எரித்து அழிக்கும் அம்புகள் என்று பொருள் கொள்ளுதல் பொருத்தம். மேலும் செம்பொன் செய் யாக்கை செறி கமழ் என்று குறிப்பிடுகின்றார். செம்பொன் செய் யாக்கை என்று பெருமானின் திருமேனி உணர்த்தப் படுகின்றது. கமழ் என்ற சொல்லின் மூலம் தேவி பெருமானின் திருமேனியின் நறுமணமாக கமழ்கின்றாள் என்று உணர்த்துகின்றார். பெருமானின் திருமேனியை பூவுக்கும் பூவின் நறுமணத்திற்கு தேவியும் ஒப்பிடப் படுகின்றனர். பூவினில் நறுமணம் கண்ணில் படாத வண்ணம் கலந்து இருப்பது போன்று பிராட்டியும் பெருமானுடன் கலந்து இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். அம்பிகை சிவத்தோடு இருந்து உயிர்களுக்கு உபதேசம் செய்வதை இந்த பாடல் உணர்த்துகின்றது. அம்பு போன்று கூர்மையான கண்களை உடையவளும், அரிவை பிராயத்து பெண் போன்று என்றும் அழகும் இளமையும் பொருந்தி இருப்பவளும், அழகிய கூந்தலை உடையவளும், மனோன்மணி என்று அழைக்கப் படுபவளும், நுண்ணிய இடையினை உடையவளும் ஆகிய அம்பிகை, பூவினில் நறுமணம் கலந்திருந்து கமழ்வது போன்று, இறைவனின் பொன்னார் மேனியுடன் கலந்து விளங்கும் அம்பிகை, பரமனை நோக்கியவாறு உயிர்களுக்கு உபதேசம் செய்து கொண்டே இருக்கின்றாள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பன்ன நுண்ணிடைக் கோதை குலாவிய
செம்பொன் செய் யாக்கை செறி கமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின்றாளே
திருமந்திரம் நான்காம் தந்திரம் ஆதார ஆதேயம் அதிகாரத்தின் பாடலில் திருமூலர் தேவியை அரிவை என்று குறிப்பிடுகின்றார். அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கும் பிராட்டியை, சிவபெருமான் பாதுகாத்து நிற்கின்றான் என்பதே இந்த பாடலின் மையக் கருத்து. பாலித்து=பாதுகாத்து; ஆலிக்கும்= எனது உள்ளத்தில் புகுந்து ஆரவாரிக்கும்; பரந்து=அனைத்துப் பொருட்களுடன் கலந்து; உலகில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் மூல காரணமாக இருப்பவள் சக்தி என்பதை உணர்த்தும் வண்ணம், லலிதா சகஶ்ர நாமம், பஞ்ச கிருத்ய பராயணி என்று அழைக்கின்றது. அந்த தன்மை தான் இங்கே வேலைத் தலைவி மற்றும் முதல்வி என்ற சொற்களால் உணர்த்தப் படுகின்றது. வேலை=செயல்கள்; படைத்தல் முதலான ஐந்து தொழில்கள்;
ஆலிக்கும் கன்னி அரிவை மனோன்மணி
பாலித்து உலகில் பரந்து பெண்ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
பாலித்து ஒருவன் உகந்து நின்றானே
இதே அதிகாரத்தின் மற்றொரு பாடலிலும் திருமூலர் அம்பிகையை அரிவை என்று அழைக்கின்றார். இம்மனை என்று உயிர் தங்கியிருக்கும் உடலினை திருமூலர் குறிப்பிடுகின்றார். செம்மனை= செம்மை ஆகிய வீடுபேறு தன்மை; பக்குவம் அடைந்த உயிர்களுக்கு வீடுபேறு அளித்தருளும் அம்பிகை, மற்ற உயிர்களை பக்குவப் படுத்தும் பொருட்டு, தனுபுவன கரண போகங்களில் ஆழ்த்துகின்றாள் என்று கூறுகின்றார். திருமங்கை=ஞானச் செல்வி;
அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கையாய் நிற்கும்
இம்மனை செய்த இருநில மங்கையும்
அம்மனையாகி அமர்ந்து நின்றாளே
இதே அதிகாரத்தின் மற்றொரு பாடலிலும் திருமூலர், பிராட்டியை அரிவை என்று அழைக்கின்றார். ஆரணம்=வேதங்கள்; ஆரணி=வேதத்தின் வடிவமாக இருப்பவள்; ஆராயப் படுகின்ற அறிவின் எல்லையைக் கடந்து அணு வடிவமாக இருப்பவள் பிராட்டி என்று சொல்ல படுகின்றது. மதோமகி என்ற சொல்லுக்கு பதிலாக மனோன்மணி என்று பாடபேதமாகவும் சில பதிப்புகளில் காணப் படுகின்றது. மதோமதி=மதோன்மத்தை, சிவானந்தம் உடையவள் என்பதால் மதக் களிப்பால் செருக்கிய நிலையில் இருப்பவள் என்று பொருள்; ஆராயப் படுகின்ற அறிவின் எல்லையையும் கடந்து நுண்ணிய அணுவாக இருப்பவளும், வேத மந்திரங்களின் பொருளாக இருப்பவளும், சிவானந்த சுந்தரியாக இருப்பவளும், மத்தொன்மத்தையாக இருப்பவளும் ஆகிய தேவி, ஞானிகள் அறியப்படும் பொருளாகவும், அறியப்படும் நெறியாகவும் இருக்கின்றாள் என்பதே இந்த பாடலின் பொருள்.
ஆயும் அறிவும் கடந்தணு ஆரணி
மாயமதாகி மதோமதி ஆயிடும்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயமதாம் நெறியாகி நின்றாளே
பொழிப்புரை:
குரா மலரின் நறுமணம் கலந்து கமழ்வதும், இயற்கையாகவே தனக்குள்ள நறுமணத்துடன் இருப்பதும் ஆகிய கூந்தலை உடைய அழகிய பெண்மணியான உமையன்னை அஞ்சும் வண்ணம், தன்னுடன் சினங்கொண்டு போர் புரிய வந்த கயாசுரனின் தோலை உரித்து தனது உடல் மீது போர்த்துக் கொண்டவன் சிவபெருமான். பாம்பு, அலைகள் வீசும் கங்கை நதி மற்றும் பிறைச் சந்திரன் ஆகியவை ஒன்று சேர்ந்து கலந்து உறையும் நிலையினைக் காணும் சடைமுடியில் உள்ள தலையும் தனது வாயினை திறந்து கொண்டு நகைக்கின்றது. இத்தகைய காட்சியினை உடைய சடைமுடி கொண்டுள்ள பெருமான் உறையும் இடம் நீர்வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.
பாடல் 2:
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 2, மற்றும் பாடல் 3 (திதே 0542)
ஏறார் தரும் ஒருவன் பல உருவன் நிலையானான்
ஆறார் தரு சடையன் அனல் உருவன் புரி உடையான்
மாறார் புரம் எரியச் சிலை வளைவித்தவன் மடவாள்
வீறார் தர நின்றான் இடம் விரிநீர் வியலூரே
விளக்கம்:
ஏறு=இடபம்; நிலையானான்=எல்லா உயிர்களிலும் கலந்து நிலையாக இருப்பவன்; அழிவு என்பது இல்லாமல் என்றும் நிலையாக இருப்பவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஆர் தருதல்=ஊர்தல், பொருத்துதல்; புரிவுடையான்=அன்புடையவன்; உயிர்களிடம் அன்பு செலுத்துவதற்கு காரணம் ஏதும் இல்லாது இருப்பினும் பெருமான் அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருப்பது இங்கே குறிப்பிடப் படுகின்றது. மாறார்=வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கு மாறாக கொள்கை கொண்ட திரிபுரத்து அரக்கர்கள்; வீறு=ஒப்பேதுமின்றி பெருமிதம் அடையும் நிலை; இந்த பாடலில் பல உருவன் என்று சிவபெருமான் பல மூர்த்தங்களாக உள்ள செய்தியும் உணர்த்தப் படுகின்றது. பொதுவாக கருதப்படும் இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களும் சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை என்று பெரியோர்கள் கூறுகின்றனர். ஈசான முகத்திலிருந்து தோன்றிய மூர்த்தங்கள், சோமாஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர்: தத்புருட முகத்திலிருந்து தோன்றியவை, பிக்ஷாடனர், காமாரி (காமனை அழித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), ஜலந்தராரி (ஜலந்தரனை அழித்தவர்), திரிபுராரி (திரிபுரங்களை அழித்தவர்) ஆகும். சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றியவை, இலிங்கோத்பவர், சுகாசனர், உமா மகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), மற்றும் அர்த்த நாரீஸ்வரர் ஆகும். அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜ சம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (பாசுபத மூர்த்தி) மற்றும் நீலகண்டர். வாமதேவ முகத்திலிருந்து தோன்றியவை, கங்காளர், சக்ரதானர், கஜமுகானுக்ரகர் (ஐராவதத்திற்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் ஆகும். இந்த பாடலில், ரிஷபாரூடர், திரிபுராரி ஆகிய இரண்டு கோலங்கள் குறிப்பிடப் படுகின்றன. பதிகத்தின் முதல் பாடலில் கஜசம்ஹாரர், மூன்றாவது பாடலில் பிக்ஷாடனர், ஆறாவது பாடலில் பாசுபதர், ஒன்பதாவது பாடலில் இலிங்கோத்பவர், கடைப் பாடலில் சந்திரசேகரர் ஆகிய மூர்த்தங்கள் குறிப்பிடப் படுகின்றன.
பொழிப்புரை:
எருதினை தனது வாகனமாகக் கொண்டு பல இடங்களுக்கும் ஊர்ந்து செல்பவனும், ஒப்பற்ற தனி ஒருவனாக இருப்பவனும், அடியார்களின் பக்குவம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப பல வேடங்கள் தாங்கி அடியார்களுக்கு காட்சி கொடுப்பவனும், தனது நிலையிலிருந்து மாறாமல் என்றும் அனைத்து உயிர்களுடன் கலந்து நின்று அவற்றை இயக்குபவனும், கங்கை நதி தனது சடையினில் பொருந்தும் வண்ணம் தேக்கியவனும், கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பு போன்று சிவந்த நிறத்தில் திருமேனியை உடையவனும், காரணம் ஏதுமின்றி உயிர்களிடத்தில் அன்பு செலுத்தும் கருணையாளனும், வேதநெறியிலிருந்து மாறுபட்டு நின்ற திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் தீயினில் வெந்து அழியும் வண்ணம் வில்லை வளைத்து அம்பு எய்தவனும், ஒப்புமை இல்லாத வண்ணம் மிகுந்த பெருமிதத்துடன் உமையன்னை இருக்கும் வண்ணம் பல விதமான சிறப்புகளை உடையவனும் ஆகிய சிவபெருமான் உறையும் இடம் நீர் வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.
பாடல் 3:
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 2, மற்றும் பாடல் 3 (திதே 0542)
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0543)
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0544)
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0545)
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0546)
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0547)
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0548)
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0549)
குரவம் கமழ் நறு (1.013) பாடல் 3 தொடர்ச்சி (திதே 0550)
செம்மென் சடை அவை தாழ்வுற மடவார் மனை தோறும்
பெய்ம்மின் பலி என நின்று இசை பகர்வார் அவர் இடமாம்
உம்மென்று எழும் அருவித் திரள் வரை பற்றிட உரை மேல்
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரிநீர் வியலூரே
விளக்கம்:
பெய்தல்=இடுதல்; வரை=மலை, இங்கே குடகு மலை; உரை=சொற்கள், புகழ்ச் சொற்கள்; மடவார்=பெண்கள்; உம்=ஒலிக்குறிப்பு; இங்கே தாருகவனத்து முனிவர்களின் மனைவிகள்; தாருக வனத்து முனிவர்களின் இல்லங்கள் சென்று அவர்களது மனைவியரிடம் பெருமான் பிச்சை ஏற்ற நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது. இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும் இந்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது.; தாருக வனத்து இல்லங்களுக்கு பெருமான் பலியேற்கச் சென்றதை குறிப்பிடும் திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.
திருவலிதாயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.3.2) படிறாக கலனேந்தி பலி கொள்பவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.இலங்கு=பொருந்திய; கடை=வீட்டின் வாயில்; மடை=நீர் வரும் வழிகள்; நிழல்=ஒளி; பதிகத்தின் முதல் பாடலில் வலிதாயம் தலத்தினை நினைக்கும் அடியார்கள் மேல் துன்பங்களும் பிறவிப்பிணி நோயும் படராது என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், இந்த பாடலில் வலிதாயம் தலம் சென்றடையும் அடியார்களை துன்பங்களும் அதனால் விளையும் துயரங்களும் அணுகாது என்று கூறுகின்றார். கள்வன் என்று இந்த பாடலில் திருஞானசம்பந்தர் இறைவனை அழைக்கின்றார். தனது திறமை, ஆற்றல் முதலியவற்றை மறைத்துக் கொண்டு பிச்சைப் பெருமானாக கோலம் கொண்டு உலகெங்கும் பலியேற்றுத் திரியும் பெருமானை கள்வன் என்று அழைப்பது பொருத்தம் தானே. படிறு=வஞ்சகம், பொய்; படைகள் பொருந்திய எட்டு கரங்களை உடையவனாகிய சிவபெருமான், தனது ஆற்றலையும் கோலத்தையும் வஞ்சனையாக மறைத்துக் கொண்டு, பிச்சைப் பெருமானின் வேடத்தை ஏற்றுக் கொண்டு பல வீடுகளின் வாயில்கள் சென்றடைந்து பலியேற்கின்றான். இத்தகைய கள்வன் உறைகின்ற திருக்கோயில் வலிதாயம் தலத்தில் உள்ளது. நீர் நிறைந்த வாய்க்கால்களால் சூழப்பட்ட சோலைகளில் காணப்படும் ஒளிவீசும் மலர்களில் உள்ள தேன் மணம் கமழும் தலமாகிய வலிதாயம் தலம் சென்றடைந்து, ஆங்குறையும் இறைவனைச் சரணடைந்து தொழும் அடியார்களை வினைகளால் விளைகின்ற துன்பங்களும் துயரங்களும் அணுகாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை;
படை இலங்கு கரம் எட்டுடையான் படிறாகக் கலனேந்திக்
கடை இலங்கு மனையில் பலி கொண்டுணும் கள்வன் உறை கோயில்
மடை இலங்கு பொழிலின் நிழல் வாய் மது வீசும் வலிதாயம்
அடைய நின்ற அடியார்க்கு அடையா வினை அல்லல் துயர் தானே
மேற்கண்ட பாடலில் படையிலங்கு கரம் எட்டுடையான் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். எண்தோளன் என்று பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்படும் பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்றபோது தனது எட்டு கைகளிலும் எட்டு ஆயுதங்களை ஏந்திச் சென்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. தக்க யாகத்தை அழிக்கச் சென்ற வீரபத்திரரும் தனது கைகளில் எட்டு வேறுவேறு ஆயுதங்களை ஏந்திச் சென்றார் என்று தக்கயாக பரணி கூறுகின்றது. பொதுவாக மழுவும் சூலமும் ஏந்தியவன் என்று பெருமானை பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிட்டாலும், பெருமானின் மற்ற படைகளும், ஆங்காங்கே தேவாரப் பாடல்களால் உணர்த்தப் படுகின்றன. கட்டங்கம் என்பது எலும்புத் தண்டின் நுனியில் கபாலம் பொருத்தப்பட்ட ஆயுதம். வில்லும் அம்பும் ஏந்தியவனாக பெருமான் திரிபுரம் எரித்த வீரச்செயலை நாம் அனைவரும் அறிவோம். பினாகம் என்றும் சிவதனுசு என்றும் பெருமானின் வில் அழைக்கப் படுகின்றது. சந்திரஹாசம் எனப்படும் வாள், அரக்கன் இராவணனுக்கு அளிக்கப்பட்ட ஆயுதம். பாசுபதம் மற்றும் சக்கரப்படை முறையே அர்ஜுனனுக்கும் திருமாலுக்கும் அளிக்கப்பட்ட ஆயுதங்கள்; எனவே இந்த மூன்று ஆயுதங்களும் பெருமானின் கரங்களை அலங்கரித்த ஆயுதங்கள் என்பது நமக்கு புலனாகின்றது. வேல் வலன் ஏந்திய கையான் என்று பல தேவாரப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. கையலகு என்பது பெருமான் ஏந்திய ஆயுதமாக கருதப்படுகின்றது. கையலகு என்பதற்கு சிறுவாள் என்றும் குறுவாள் என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது. பாசம் என்பதும் சிவபெருமானின் படையாக கருதப்படுகின்றது. முசலம் என்று மழுப்படை உணர்த்தப் படுகின்றது. தஞ்சை பெரிய கோயிலின் உட்புறத்து விமானச் சுவற்றின் வடபகுதியில், காணப்படும் சோழர்கள் காலத்து சிற்பம் ஒன்று, திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போருக்குச் சென்ற கோலத்தை சித்தரிக்கின்றது. இந்த ஒவியத்தில் பெருமானின் எட்டு கரங்களிலும் எட்டு ஆயுதங்கள் வரையப் பட்டுள்ளன. எல்லோரா குகைக் சிற்பங்களிலும் இத்தகைய சிற்பம் ஒன்று காணப்படுகின்றது.
பெருமான் ஆடியும் பாடியும் பலியேற்கச் செல்லும் தன்மை பல திருமுறைப் பாடல்களில் சொல்லப் படுகின்றது. பொதுவாக பிச்சை ஏற்பவர், வேறு வழியின்றி பிச்சை ஏற்கின்றனர் என்பதால், நாணத்துடன் உடலைக் கோணிக் கொண்டு பிச்சை ஏற்பதை நாம் காண்கின்றோம். ஆனால் பெருமான் பிச்சை ஏற்பது தனது தேவைக்கு அல்ல என்பதை நாம் அறிவோம். பக்குவமடைந்த உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களை பெருமானின் கையில் ஒப்படைத்துவிட்டு, மலமற்றவர்களாக முக்தியுலகம் சென்றடைந்து என்றும் அழியாத ஆனந்தத்தில் திளைத்து இருப்பதற்கு தகுதி படைத்தவர்களாக மாறவேண்டும் என்ற நோக்கத்துடன் பெருமான் பலிக்கு செல்கின்றார். எனவே இவ்வாறு பலி ஏற்கச் செல்வதால், மேலும்மேலும் உயிர்கள் தன்னை வந்தடையும் என்ற அவரது மகிழ்ச்சி ஆடலாகவும் பாடலாகவும் வெளிப்படுகின்றது. இந்த நிலையையே பலி மகிழ்வாய் என்று திருஞானசம்பந்தர் நெடுங்களம் தலத்து பதிகத்தின் பாடலில் (1.52.4) குறிப்பிடுகின்றார்.
மலைபுரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழற் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே
குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.4) பார்வதி தேவியைத் தன்னுடலில் ஒரு பாகமாக வைத்தவராக, மாதொருபாகனின் கோலத்துடன் பெருமான் பலியேற்கச் சென்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். மாதொரு பாகனாக, என்றும் பிராட்டியை விட்டு பிரியாமல் இருக்கும் பெருமான், தான் பலியேற்கச் சென்ற போதும் பிராட்டியுடன் சென்றது இயற்கையே. மேலும் உயர்ந்த நோக்கத்துடன், உயிர்களுக்கு உதவும் எண்ணத்துடன் பலி ஏற்பது பெருமைக்கு உரிய செயல் தானே. எனவே அதற்காக வெட்கம் கொண்டு, தேவியை உடன் அழைத்துக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை அல்லவா. போது=மலர்கள்; புனல் சேர் போது என்று குறிப்பிடுவதால், நீரில் மலரும் தாமரை முதலிய மலர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். கந்தம்=நறுமணம்; தாது=மகரந்தப் பொடி; புறவு=காடு; காளம்=விடம்; காளகண்டர்=விடத்தை தேக்கியதால் கருமை நிறத்தில் படர்ந்த கறையினை கழுத்தில் உடையவன்; நீர்நிலைகளில் தோன்றும் தாமரை முதலான பூக்களின் நறுமணம் மேலோங்கி எங்கும் பரவ, அழகு மிகுந்த மகரந்த பொடிகள் நிறைந்த சோலைகளாலும் அழகிய காடுகளாலும் சூழப்பட்டதும் குளிர்ச்சி மிகுந்ததும் ஆகிய குடந்தை நகரத்தில் உள்ள காரோணம் தலத்தில் உறைகின்ற இறைவன், பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனாக பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றார். அவர் தனது காதினில் குழை ஆபரணத்தை அணிந்தவராக, தனது கழுத்தினில் விடத்தின் கறையாக கருமை நிறம் படர்ந்தவராக காணப்படுகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
போதார் புனல் சேர் கந்தம் உந்திப் பொலியவ் வழகாரும்
தாதார் பொழில் சூழ்ந்து எழிலார் புறவில் அந்தண் குடமூக்கில்
மாதார் மங்கை பாகமாக மனைகள் பலி தேர்வார்
காதார் குழையர் காளகண்டர் காரோணத்தாரே
புறவம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.74.6) பெருமான் தாருகவனத்திற்கு பலியேற்கச் சென்ற போது,தாருகவனத்து இல்லத்தரசிகள் பெருமானின் அழகில் மயங்கினார்கள் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கேழல் எயிறு= பன்றியின் கொம்பு; பிறழ=விளங்க; பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்ற பெருமான் பன்றியின் கொம்பினை அணிந்தவாறு சென்ற போதிலும், ஆங்கிருந்த முனிவர்களின் மனைவியர், வந்தவர் சிவபெருமான் என்பதை உணர முடியாமல் பெருமானது அழகில் அவர்கள் மயங்கிய நிலை, இங்கே அழகுடன் பலி தேர்ந்து என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. மடல்=தாழை மடல்; இறைவனின் அழகு தாருகவனத்து இல்லத்தரசிகளை ஈர்த்தது போன்று, இறைவனின் கருணை உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஈர்க்கும் வல்லமை கொண்டது என்ற கருத்து இங்கே உணர்த்தப் படுகின்றது. பின்னப்பட்ட தனது சடைகள் தாழுமாறும், மார்பினில் தான் அணிந்திருந்த பன்றியின் கொம்பு விளங்கி தோன்றுமாறும் தாருகவனம் சென்ற பெருமான், ஆங்கிருந்த அன்னம் போன்று நடை உடையவர்களாக விளங்கிய முனிவர்களின் மனைவியர் இருந்த இல்லங்கள் தோறும் தனது அழகான உருவத்துடன் சென்று பிச்சை கேட்டார். இந்த பெருமான் புன்னை மற்றும் தாழை மடல்கள் நிறைந்த சோலைகள் உடைய அழகான நகரமும், புறவம் என்று அழைக்கப் படுவதும் ஆகிய சீர்காழித் தலத்தினைத் தான் உறையும் இடமாகக் கொண்டு தன்னை இமையோர்கள் வந்து தொழுது புகழும் வண்ணம் உமையன்னையுடன் இணைந்து காணப்படுகின்றான் இவரே என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டவர் ஆவார் என்று திருஞானசம்பந்தர் சொல்வதாக அமைந்த பாடல்.
பின்னு சடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய்
அன்ன நடையார் மனைகள் தோறும் அழகார் பலி தேர்ந்து
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகார் புறவம் பதியாக
என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே
வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.5) தாருகவனம் சென்ற பிச்சைப் பெருமானின் திருக்கோலத்தை திருஞான சம்பந்தர் விவரிக்கின்றார். பொக்கணம்=துணி மூட்டை; தக்கை=இசைக் கருவி; நீண்ட சடையினை உடையவராக, மேனி எங்கும் திருநீறு பூசிக் கொண்டு தாருகவனம் சென்ற பெருமான், தக்கை இசைக் கருவியினை, ஒரு துணி மூட்டையில் வைத்து மறைத்தவராக சென்றார் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். தக்கை இசைக் கருவியை திறம் பட வாசிப்பவர் பெருமான் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர் என்பதால், அந்த இசைக் கருவியை மறைத்து தனது அடையாளத்தையும் மறைத்துக் கொண்டு பெருமான் சென்றதாக குறிப்பிடுகின்றார் போலும். பெருமானது அழகினில் தாருகவனத்து மகளிர் மயங்கிய செய்தியும் இங்கே சொல்லப் படுகின்றது. இட்டு=தோளில் தொங்கவிட்டுக் கொண்டு;
சடையினர் மேனி நீறது பூசித் தக்கை கொள் பொக்கணம் இட்டு உடனாகக்
கடை தொறும் வந்து பலியது கொண்டு கண்டவர் மனம் அவை கவர்ந்து அழகாக
படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி உமையவள் பாகமும் அமர்ந்து அருள் செய்து
விடையொடும் பூதம் சூழ்தரச் சென்று வெங்குரு மேவியுள் வீற்று இருந்தாரே
கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.79.10) திருஞானசம்பந்தர், தையலார் இடும் பலி ஏற்கச் சென்றவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் சமணர்கள் செய்யும் தவத்திற்கும் முனிவர்கள் செய்யும் தவத்திற்கும் உள்ள வேறுபாட்டினை திருஞானசம்பந்தர் விளக்குகின்றார். ஆம்பல தவம் என்று சமணர்கள் செய்து வந்த தவத்தினை குறிப்பிடுகின்றார். அதாவது தங்களால் இயன்ற வரையில் உடலை வருத்திக் கொள்ளும் தவம்; தங்களது உணவுத் தேவையைக் குறைத்துக் கொள்ளாமல், ஐந்து புலன்களை அடக்காமல் செய்யப்படும் தவம். ஆனால் முனிவர்கள் செய்து வந்த தவமோ, உணவையும் வெறுத்து தங்களது உடலினை பல வகையிலும் வருத்திக் கொண்டு, இறைவனைப் பற்றிய நினைப்பைத் தவிர்த்து வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் செய்யப்படும் தவமாக விளங்கியதை நாம் புராணங்கள் மூலம் அறிகின்றோம். கணிசேர்=எண்ணத்தகுந்த; நோம் பல தவம்=துன்பங்களைத் தரும் தவம்;
ஆம்பல தவம் முயன்று அறவுரை சொல்லும் அறிவிலாச் சமணரும் தேரரும் கணிசேர்
நோம்பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனிச்
சாம்பலும் பூசி வெண்டலை கலனாகத் தையலார் இடும் பலி வையகத்து ஏற்றுக்
காம்பன தோளியொடு இனிதுறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசறுமே
இராமனதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.115.1) திருஞானசம்பந்தர், தாருக வனத்து மங்கையர்களின் இல்லங்களுக்கு பலியேற்கச் சென்றவன் பெருமான் என்று கூறுகின்றார். சங்கொளிர் முன் கையர்=சங்கு வளையல்கள் தமது முன்கைகளில் அணிந்த மகளிர், தாருகவனத்து முனிவர்களின் மனைவியர்; பொங்கரவு=சினத்தினால் பொங்கி படமெடுத்தாடும் பாம்பு; அத்தகைய பாம்பினைத் தனது இடுப்பினில் கட்டிக் கொண்டும், உடலின் பல்வேறு இடங்களில் அணிந்து கொண்டும், தனது விருப்பம் போன்று ஆட்டும் இறைவன்; புவனி ஓங்க=உலகத்தவர் உய்யும் பொருட்டு;மன்=நிலையாக இருக்கும்; உலகத்தவர் உய்யும் பொருட்டு, உலகின் பல தலங்களில் உள்ள திருக்கோயில்களில் பெருமான் நிலையாக இருப்பதாக உணர்த்துகின்றார்.
சங்கொளிர் முன் கையர் தம்மிடையே
அங்கிடு பலி கொளும் அவன் கோபப்
பொங்கரவு ஆடலோன் புவனி ஓங்க
எங்கும் மன் இராமனதீச்சரமே
வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.123.7) திருஞானசம்பந்தர், பெருமானை பலி ஏற்பதற்காக மகளிரின் இல்லம் புகுபவன் என்று கூறுகின்றார். மடவரலியர்=மகளிர்: நலி தரு தரை வர மடவரலியர்=தரையில் நடப்பதால் தங்களது மென்மையான பாதங்கள் வருந்துமே என்ற அச்சம் கொண்டு நடை பயிலும் மகளிர் என்று தாருகவனத்து இல்லத்தரசிகளை குறிப்பிடுகின்றார். தாருக வனத்து இல்லங்கள் அனைத்தும் சென்று பெருமான் பிச்சை கேட்டதாக கூறுகின்றார்.
நலி தரு தரை வர நடை வரும் இடையவர்
பொலி தரும் மடவரலியர் மனையது புகு
பலி கொள வருபவன் எழில் மிகு தொழில் வளர்
வலிவரும் மதில் வலிவலம் உறை இறையே
பிரமபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.127.8) திருஞானசம்பந்தர், தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். இந்த பாடல் ஏகபாதம் என்ற வகையைச் சார்ந்த பாடல். ஒரே தொடர் நான்கு அடிகளிலும் காணப்பட்டாலும், ஒவ்வொரு அடியும் வேறுவேறு பொருள் தரும் வண்ணம் சொற்களைப் பிரித்து பொருள் காணும் வண்ணம் அமைந்தது. முதல் அடி; பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன்; பொன்=பொன் போன்று பொலிவினை உடைய; நடி=கூத்தினை உடைய; மாது=காளி; அவர்=பூதகணங்கள்; சேர்=சென்று அடைந்து தங்கும்; புறவம்=ஊருக்கு புறத்தே உள்ளே சுடுகாடு; புறவத்தவன்=சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாக உடையவன்; சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான் என்று உணர்த்துகின்றார். இரண்டாவது அடி; பொன் அடி மாதவர் சேர் புறவம் தவன்; பொன்=தூய்மையான; அடி=வழி, முறையில்; மாதவர்=சிறந்த தவத்தினை புரியும் முனிவர்கள்; சேர்=திரண்டு சேரும்; புறவம்=முல்லை நிலம்; தவன்=தவத்தினை புரியும் சிவபெருமான்; தவம் புரியும் முனிவர்களிலும் சிறந்தவனாக சிவபெருமான் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. தவம் செய்யும் அனைவரும் சடையினை உடையவர்களாக இருந்தாலும் சிவபெருமான் ஒருவனைத் தானே சடையான் என்று தேவாரப் பதிகங்கள் குறிப்பிடுகின்றன. அனைவரிலும் சிறந்த தவம் புரிபவன் சிவபெருமான் என்பதைத் தானே சடையான் என்ற இந்த சொல் நமக்கு உணர்த்துகின்றது. மூன்றாவது அடி: பொன் அடி மாது அவர் சேர்புற அவத்தவன்; பொன் என்ற சொல் செல்வத்திற்கு அதிபதியாக கருதப்படும் இலக்குமி தேவியை குறிக்கும். அடி=அழகிய ஆபரணங்கள்; மாது அவர்=தாருக வனத்து முனிவர்களின் மனைவிகள்; சேர்பு உறு=வந்து அணைந்த, பிச்சை இடுவதற்காக பெருமானை நாடிச் சென்ற; அவம்=பாவம் அவத்தவன்=பாவச் செயல் புரிந்தவன்; அந்நாள் வரை கற்பு குலையாமல் இருந்த தாருகவனத்து இல்லத்தரசிகள், பிச்சை ஏற்று வந்த பெருமானின் அழகினில் மயங்கி தாங்கள் செய்வது இன்னதென்று உணராமல், பெருமானின் பின்னே பின் தொடர்ந்ததை, கற்பு குலைந்த செயலாக புராணங்கள் கருதுகின்றன. இவ்வாறு அவர்கள் மாறுவதற்கு பெருமானின் அழகு காராணமாக இருந்தமையால் அவர்களது கற்பு நிலை குலைவதற்கு காரணமாக இருந்தவன் பெருமான் என்று குறிப்பிட்டு, அத்தகைய பாவம் புரிந்தவன் பெருமான் என்று தாருகவனத்து முனிவர்கள் கருதியதை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தங்களது மனைவியர்களின் நிலையை மாற்றிய பெருமானை, தங்களது பகைவனாக நினைத்து அவனை அழிப்பதற்கு பலவாறும் முயற்சி செய்தமையும், இறுதியில் பெருமானின் பெருமைகளை உணர்ந்துகொண்டு அவனது அடியார்களாக தாருகவனத்து முனிவர்கள் மாறியதும் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள். தாருகவனத்து முனிவர்களின் நிலையினை மாற்றி அவர்களையும் தனது அடியார்களாக மாற்றுவதற்கு பெருமான் செய்த திருவிளையாடலின் ஓர் அங்கம் தான், பிச்சைப் பெருமானாக சென்று, தனது அழகினால் முனிவர்களின் மனைவிகள் மயங்கும் வண்ணம் நடந்தது. இந்த செயல் முனிவர்களின் கண்ணோட்டத்தில் பாவமாக கருதப் பட்டதால், பாவம் புரிந்தவன் என்று இங்கே திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நான்காவது அடி: பொன் அடி மாதவர் சேர் புறவத்தவன்; பொன்னடி=பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்கள்; அடி=பாதம்; மாதவர்=கன்னியர்; சேர்=சேர்ந்து ஒரு இனமாக இருத்தல்; புறவத்தவன்=புறவம் என்று அழைக்கப்படும் பதியில் உறைபவன். இந்த அடியில் உள்ள சொற்களை சற்று மாற்றி அமைத்து, மாதவர் சேர் பொன்னடி புறவத்தவன் என்று கூட்டி, சிறந்த தவ முனிவர்கள் சேரும் பொன் போன்று பொலியும் திருவடிகளை உடைய பெருமான், புறவம் திருத்தலத்தில் உறைபவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பொன் போன்று பொலிவினை உடைய கூத்தினை ஆடும் மாதாகிய காளிதேவியும், பூத கணங்களும் சென்று அடைந்து தங்கும் சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்டவன் சிவபெருமான்; தூய்மையான முறையில் சிறந்த தவம் செய்யும் முனிவர்கள் திரண்டு சேரும் முல்லை நிலத்தில் தானும் தவம் செய்பவனாக விளங்கி அவர்கள் அனைவராலும் சிறந்த தவசியாக மதிக்கப் படுபவன் சிவபெருமான்; அழகிய ஆபரணங்கள் அணிந்து இலக்குமி தேவியைப் போன்று அழகுடன் விளங்கிய தாருகவனத்து இல்லத்தரசிகள், தனது அழகில் மயங்கி தாங்கள் (தாருகவனத்துப் பெண்கள்) செய்வது இன்னதென்று அறியாமல் தன்னைப் பின்தொடர்ந்து வரும் வண்ணம், அவர்களின் முன்னே பிச்சைப் பெருமானாக தோன்றி, அவர்களது கற்பு நிலை குலையச் செய்தவன் பெருமான். பொன்னால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்த பாதங்களை உடைய மகளிர், கூட்டமாக சேர்ந்து வணங்கும் இறைவன், புறவம் தலத்தில் உறைபவன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்
பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்
பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்
பொன்னடி மாதர் சேர் புறவத்தவன்
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.130.2), திருஞானசம்பந்தர் பெருமான், தேவியுடன் பலிக்கு சென்றதாக குறிப்பிடுகின்றார். விடலேறு படம்=விடத்தை மேல் கொண்டுள்ள படம்; விடலம்=நஞ்சு; விடலம் என்ற சொல் விடல் என்று குறைந்தது. விடல் என்ற சொல்லுக்கு வலிமை என்று பொருள் கொண்டு மற்ற உயிர்களை கொல்லும் வல்லமை உடைய பாம்பு என்று சொல்வதும் பொருத்தமே. சுரி சங்கு=கூர்மையான வளைந்த மூக்குகளை உடைய சங்கு; அஞ்சொல்=அம்+சொல், அழகிய சொற்களை உடைய மகளிர்; இங்கே தாருகவனத்து மகளிரை குறிப்பிடுகின்றது. திடல்=மணல்மேடு; கங்குல்=இரவு; காவிரியின் மணல் திடலில் முத்துகள் காணப்படும் செல்வச் செழிப்பு மிகுந்த நகரம் ஐயாறு என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
விடலேறு பட நாகம் அரைக்கு அசைத்து வெற்பரையன் பாவையோடும்
அடலேறு ஒன்று அது ஏறி அஞ்சொலீர் பலி என்னும் அடிகள் கோயில்
கடலேறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகித்
திடல் ஏறி சுரி சங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும் திருவையாறே.
திருவாஞ்சியம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.7.6) நாணம் ஏதும் இல்லாதவராக பெருமான் பல இல்லங்கள் சென்று பலி ஏற்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். பொதுவாக பிச்சை ஏற்பவர்கள், நாணம் கொண்டு, தங்களது உடல் குறுக பிச்சை ஏற்பதை நாம் காண்கின்றோம். பிச்சை ஏற்றாலும் அவர்கள் முழு மனதுடன் அந்த செயலில் ஈடுபடுவதில்லை. தங்களது இயலாமை காரணமாக, வேறுவழி இல்லாமல் பிச்சை எடுப்பதால், அவர்கள் நாணம் கொள்கின்றனர். ஆனால் பெருமானோ தனது இயலாமை காரணமாக பலி ஏற்பதில்லை; பக்குவப்பட்ட உயிர்கள் தங்களது மலங்களை, பிச்சையாக இறைவனிடம் அளித்து, வாழ்வினில் உய்வினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், பெருமான் பிச்சை ஏற்கின்றார். எனவே தான் அவர் நாணம் கொள்ள வேண்டிய அவசியமின்றி, பலி ஏற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். பெருமானின் திருநாமத்தைச் சொல்லி, அவனது புகழினை குறிப்பிடும் அடியார்களின் வினைகள் உடனே தீர்க்கப்படும் என்று கூறுகின்றார். பெருமானின் திருநாமங்கள், அவனது பண்பையும் அவனது கருணைச் செயல்களையும் குறிப்பிடுவதால், நாம் தனியாக பெருமானைப் புகழ வேண்டிய அவசியம் இல்லை; பெருமானின் விரிந்த புகழினை அறியாதவர்களாக நாம் இருந்தாலும் கவலை கொள்ளவேண்டாம்; அவனது நாமங்களைச் சொல்வதே, அவன் புகழினை நாம் பாடுவதாக மாறிவிடும். மைந்தர்=வலிமை வாய்ந்தவர்; தனது காலில் அணிந்துள்ள சிலம்பு ஒலிக்கும் வண்ணம் பெருமான் பலியேற்கச் சென்றார் என்று கூறுகின்றார்.
அரவம் பூண்பர் அணியும் சிலம்பு ஆர்க்க அகம் தொறும்
இரவின் நல்ல பலி பேணுவர் நாணிலர் நாமமே
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திருவாஞ்சியம்
மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.32.6) திருஞானசம்பந்தர் பெருமானை, மகளிர் இடும் பலி கொள்பவன் என்று கூறுகின்றார். பை=நச்சுப் பை; பை அரவு=நச்சுப் பைகள் கொண்ட பாம்பு; படி என்ற சொல்லுக்கு படம் என்று பொருள் கொண்டு படமெடுத்தாடும் பாம்பு என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமான் தனது பாதம் முதல் முடி வரையில் பல இடங்களிலும் பாம்புகளை அணிகலனாக அணிந்திருக்கும் தன்மை இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. கால்களில் கழலாகவும், கோவண ஆடையின் மேல் இடுப்புக் கச்சாகவும், முன்கையினில் கங்கணமாகவும், தோள்களில் வளையமாகவும், மார்பினிலும் கழுத்தினிலும் சடையிலும் மாலையாகவும், காதினில் குண்டலமாகவும் பெருமான் பாம்பினை அணிந்துள்ள செய்தி பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. வண்=வளமை வாய்ந்த; மாதவி= குருக்கத்திச் செடிகள்; பரன்=மேலானவன்; கோதையர்=அழகிய கூந்தல் கொண்ட தாருகவனத்து இல்லத்தரசிகள்; பெறுத்தி=பெறச் செய்து;
பூதமொடு பேய்கள் பல பாட நடமாடிப்
பாதம் முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்திக்
கோதையர் இடும் பலி கொளும் பரமனிடம் பூ
மாதவி மணம் கமழும் வண் திருவையாறே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.37.6) திருஞானசம்பந்தர், பெருமானை நோக்கி, வேதங்களால் வழிபாடு செய்யப்படும் பெருமை உடைய பெருமானே, ஏழு உலகங்களையும் தனது உடமையாகக் கொண்டுள்ள பெருமானே, எதற்காக பண்டைய நாளில் தாருகவனம் சென்று வீடுகள் தோறும் பலி ஏற்றாய் என்ற கேள்வியை கேட்கின்றார். பெருமான் பிச்சை ஏற்றது தனது உணவுத் தேவைக்கு அல்ல என்றாலும், பொதுவாக உணவினை பிச்சையாக ஏற்போர் அவ்வாறு பிச்சை ஏற்ற உணவினை உட்கொள்வதால், பெருமானும் தான் பிச்சை ஏற்ற உணவினை உண்டதாக கூறுகின்றார். முன் என்று பண்டைய நாளில் பெருமான் பலியேற்றதை குறிப்பிடுவதால், தாருகவனம் நிகழ்ச்சி என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தம்.
பல காலங்கள் வேதங்கள் தங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா
உலகு ஏழு உடையாய் கடை தோறும் முன் என் கொல்
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டது தானே
சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.38.5) திருஞானசம்பந்தர், தாருகவனம் சென்றதை குறிப்பிடுகின்றார். ஏழைமார்=மகளிர்; பொதுவாக உடல் வலிமையில் ஆண்களை விடவும் குறைந்தவர்களாக இருப்பதால் மகளிரை ஏழை என்று குறிப்பிடுவார்கள். இங்கே தாருகவனத்து மகளிர் என்று பொருள் கொள்ளவேண்டும். கடை=வாயில்; கூழை=கடைப் பகுதியில்; இங்கே வால் பகுதி என்று பொருள் கொள்ளவேண்டும் பாம்பு தலைப் பகுதியில் சற்று பருத்தும் கீழே செல்லச் செல்ல, உடல் மெலிந்து வால் பகுதியில் மிகவும் மெலிந்து காணப்படும் நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. மாழை=ஒளி வீசும்; நுளைச்சியர்=நெய்தல் நிலத்து மகளிர் நுளைச்சியர் என்றும் ஆண்கள் நுளையர் என்றும் அழைக்கப் படுவார்கள். நெய்தல் என்பது கடலும் கடலைச் சார்ந்த இடமாகும். வண்=செழுமை மிகுந்த, மாழை என்ற சொல்லுக்கு மான் என்று பொருள் கொண்டு, மான் போன்று மருண்ட பார்வையினை உடைய கண்களைக் கொண்ட மகளிர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தாருகவனத்து மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் சென்று அவர்களின் இல்லத்தின் வாயிலில் நின்று, பிச்சை இடுவீர்களாக என்று கேட்டபடியே, ஒளிவீசுவதும் வால் பகுதியில் மிகவும் மெலிந்தும் காணப்படுவதும் ஆகிய பாம்பினை தனது விருப்பப்படி ஆட்டுவிக்கும் பெருமான் உறைகின்ற இடம் சாய்க்காடு தலத்தில் உள்ள கோயிலாகும். ஒளி வீசும் கண்களையும், ஒளி வீசும் வளையல்களை அணிந்த கைகளையும் உடைய நெய்தல் நிலத்து மகளிர்கள் செழிப்பாக வளர்ந்த தாழை வெண் மடல்களை கொய்து மகிழும் இடம் சாய்க்காடு ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஏழைமார் கடை தோறும் இடு பலிக்கென்று
கூழை வாளரவு ஆட்டும் பிரான் உறை கோயில்
மாழை ஒண் கண் வளைக்கை நுளைச்சியர் வண் பூந்
தாழை வெண்மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே
திருநணா என்று அழைக்கப்படும் பவானி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.72.9) திருஞான சம்பந்தர், தாருகவனத்து இல்லங்கள் தோறும் சென்று பலியேற்றதை குறிப்பிடுகின்றார். பலி ஏற்ற கள்வன் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பல பாடல்களில் நால்வர் பெருமானர்கள், பெருமான் பால் தீராத காதல் கொண்ட தலைவியாக தங்களை உருவகித்து, தங்களது மனதினைக் கொள்ளை கொண்ட கள்வன் என்று கூறுவதையும் நாம் உணர்கின்றோம். தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன் என்று தனது முதல் பதிகத்தை தொடங்கிய திருஞானசம்பந்தருக்கு பெருமானை கள்வன் என்று அழைப்பது மிகவும் விருப்பம் போலும். தாருகவனம் சென்ற பெருமான், ஆடியும் பாடியும் பிச்சை ஏற்பவர் போன்று சென்றாலும், அவரது நோக்கம் தாருக வனத்து முனிவர்களின் சிந்தனையை மாற்றுவதே ஆகும். இவ்வாறு தனது நோக்கத்தை மறைத்துக் கொண்டு செயல்பட்ட பெருமானை கள்வர் என்று அழைக்கின்றார் போலும். மேலும் எப்போதும் பலி ஏற்பதற்கு தனது உண்கலனை ஏந்திச் செல்லும் பெருமான், பிச்சை எடுப்பது போன்று தோன்றினாலும், உண்மையில் தனது உணவுத் தேவைக்கு பிச்சை எடுப்பதில்லை அல்லவா. எனவே இந்த செயல் புரியும் பெருமானை கள்வர் என்று அழைப்பது பொருத்தம் தானே. பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த ஆலகால விடத்தை உட்கொண்டு தேக்கியதால், தனது கழுத்தினில் கருமை நிறத்து மணி பதிக்கப்பட்டது போன்ற கழுத்தினை உடையவனும், மங்கை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டவனும், பல இல்லங்களின் வாயில் முன்னே நின்று பிச்சை ஏற்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும் கள்வனும் ஆகிய பெருமான் உறையும் இடம் திருநணா ஆகும். என்றும் பொய்க்காத செய்திகளை உடைய மறையினை எப்போதும் ஓதிக் கொண்டு படைத்தல் தொழிலைச் செய்யும் பிரமனும், நெடிய திருமாலாக வளர்ந்து மண்ணையும் விண்ணையும் ஈரடியால் தாவி அளந்த திருமாலும், பெருமானது திருப்பாதங்களைத் தேடிக் காணும் முயற்சியில் தோல்வி அடைந்த பின்னர், தங்களது தவறினையும் ஆற்றல் இல்லாத தன்மையையும் உணர்ந்த பிரமன் மற்றும் திருமால் நிலத்தில் விழுந்து வணங்கி போற்றும் வண்ணம், நிலை பெற்று செம்மை நிறத்துடன் நீண்ட எரியாக உருவம் எடுத்த பெருமான் உறையும் இடம் திருநணா ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மையார் மணி மிடறன் மங்கையோர் பங்குடையான் மனைகள் தோறும்
கையார் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னிச்
செய்யார் எரியா உருவம் உற வணங்கும் திருநணாவே
வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.6) வீடுகள் தோறும் சென்று பலி கேட்பவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடல் அகத்துறை கூற்றாக அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர், தன்னை பெருமான் பால் காதல் கொண்டுள்ள தலைவியாக உருவகித்து, தனது கவனத்தை ஈர்த்து தன்பால் காதல் கொள்ளச் செய்த பெருமான், தனது வளையல்களையும் கவர்ந்த கள்வராகத் திகழ்கின்றார் என்று கூறுகின்றார். பெருமான் பால் தீராத காதல் கொண்டுள்ள தலைவி, பெருமானுடன் தான் சேர முடியாத ஏக்கத்தினால் மனம் வருந்தி, தனது கை வளையல்கள் கழன்று விழும் வண்ணம் உடல் மெலிந்து இளைத்து இருப்பதாக கூறுகின்றாள். இவ்வாறு தான் உடல் மெலிந்ததற்கு காரணம் பெருமான் பால் தான் கொண்டுள்ள காதல் நிறைவேறாத ஏக்கம் என்று உணர்த்தும் தலைவி, தனது வளையல்கள் கழலும் வண்ணம் செய்த பெருமானை கள்வர் என்று குற்றம் சாட்டுகின்றாள். இருவர் ஆதரிப்பார் என்று கங்கை நதியினைத் தனது சடையில் வைத்தும், உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தும் பெருமான் ஆதரிக்கும் தன்மையை குறிப்பிடுகின்றார். இறைவனின் திருமேனிக்கு ஒப்பாக கூறுவதற்கு எந்த உயிரும் எந்த பொருளும் இல்லை என்பதால், எவராலும் ஒப்பிட முடியாத திருமேனியை உடையவர் சிவபெருமான். இளமையும் அழகும் சேர்ந்த மாதர்கள் இருவரை, கங்கை நங்கையையும் உமை அன்னையையும், முறையே தனது சடையிலும் உடலிலும் வைத்து ஆதரிப்பவர் சிவபெருமான்; பல பூதங்களும் பேய்களும் எப்போதும் அவரைச் சூழ்ந்து கண்டு தாமே அவரது அடையாளம் என்பது போன்று அவரை விட்டு என்றும் பிரியாமல் இருக்கின்றனர். விருப்பு வெறுப்பு ஆகிய குணங்களைக் கடந்த பெருமான் அருவருப்பு ஏதும் இன்றி, உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரம கபாலத்தைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பல இல்லங்களுக்கும் சென்று பலியேற்கும் பெருமான் திருவலஞ்சுழி தலத்தினில் உறைகின்றார். அவரே, என்னை தீராத காதலில் ஆழ்த்தி, பிரிவாற்றாமையால் நான் உடல் மெலிந்து வருந்தும் வண்ணம் செய்து, எனது கைவளையல்கள் நழுவும் வண்ணம் உடல் மெலிய, எனது வளையல்களை கவர்ந்த கள்வர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர் மட மாதர்
இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம்
அருவராததோர் வெண் தலை கை பிடித்து அகம் தோறும் பலிக்கென்று
வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரிவளை கவர்ந்தாரே
கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.107.3) வீடுகள் தோறும் இடும் பிச்சையை மிகுந்த விருப்பத்துடன் உண்பவர் என்று சிவபெருமானை திருஞானசம்பந்தர் உணர்த்துவதை நாம் காணலாம். மேலும்மேலும் உயிர்கள் தன்னை வந்தடைய வேண்டும் என்று விரும்பும் பெருமான் தானே நேரிடையாக, பல வீடுகளுக்கு பிச்சையேற்கச் செல்கின்றார் என்று கூறுகின்றார். சுண்ணம்=திருநீறு;
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பு ஆர்க்கச்
சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவார் அகந்தொறும் இடும் பிச்சைக்கு
உண்ணலாவதோர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து
அண்ணல் நண்ணு கேதீச்சரம் அடைபவருக்கு அருவினை அடையாவே .
புன்முறுவலுடன் பெருமான் தாருகவனத்து மகளிர் இட்ட பலியினை ஏற்றுக் கொண்டதாக வாய்மூர் தலத்து பாடலில் (2.111.7) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திருஞானசம்பந்தர், பெருமானின், பாம்பணிந்த திருமார்பு பொன் போல மிளிர்கின்றது என்று கூறுகின்றார். பொன் என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளும் உள்ளது. கடிபடு=நறுமணம் கமழும்; கண்ணியர்=மாலையை சடையில் அணிந்தவர், பில்கும்=சிதறும்; கனமணி=பருத்த ரத்தினக் கற்கள்; மறுகு=வீதி; வடி= கூர்மை; பொடி=திருநீறு; பெருமானின் திருவடிகளில் தங்களின் தலைகளை வைத்து தேவர்கள் வணங்கும் போது, அந்த திருவடிகளின் ஒளியின் முன்னே எடுபடாது தேவர்களின் முடிகளில் உள்ள பலவகையான கற்களின் ஒளிகள் சிதறுகின்றன என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். மறுகின் நல்லார் என்று தாருக வனத்து வீதிகளில் இருந்த இல்லத்தரசிகளை குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில், பலபல கடிதொறும் பலி தேர்பவர் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கனமணி சேர்
முடிபில்கும் இறையவர் மறுகின் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம் பொன்னென மிளிர்வதோர் அரவினொடும்
வடிநுனி மழுவினொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும் தாருகவனத்து நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. பட்டு இணை=பட்டாடைகளுடன் இணைந்த; அகல் அல்குல்=அகன்ற மார்பகம் உடைய மகளிர்; வட்டணை ஆடல்=வட்டமாக சுற்றிக் கொண்டே ஆடும் நடனம்; புதிய கொன்றை மலர் மாலைகளை அணிந்தவராக, வீணை வாசித்துக் கொண்டு, உமை அம்மை தனக்குத் துணையாக வர, பெருமான் உறைகின்ற இடம் திருவாய்மூர் என்று குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த பெருமான் தான் முன்னர் ஒரு நாள் பட்டாடை அணிந்த தாருகவனத்து மகளிரிடம் பலியேற்றார் என்றும் அவ்வாறு பலியேற்கச் செல்லும் போது, வட்டமாக சுற்றிச் சுற்றி நடனமாடினார் என்றும் கூறுகின்றார். எட்டுணை=எண்+துணை, தனது எண்ணத்தை செயலாக செய்து முடிப்பதன் மூலம் தனக்குத் துணையாக உள்ள உமை அன்னை; பெருமானின் திருவுள்ளக் கருத்தினை உணர்ந்து கொண்டு அவற்றை செயலாக செய்து முடிப்பவள், கிரியா சக்தியாக இயங்கும் பிராட்டி தானே. இந்த பதிகத்தின் பத்தாவது பாடலிலும் தாருகவனத்து மகளிர் பற்றிய குறிப்பு காணப் படுகின்றது.
கட்டிணை புது மலர்க் கமழ் கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமும் அஃதே
எட்டுணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவதோர் இடம் வினவில்
பட்டிணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய
வட்டணை ஆடலொடு இவராணீர் வாய்மூர் அடிகள் வருவாரே
அரதைப் பெரும்பாழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.30.2), பெருமானுக்கு பிச்சையிட வந்த தாருகவனத்து மகளிர், பெருமானின் அழகில் மயங்கி,. அவர் பால் தீராத காதல் கொண்டு, அந்த காதல் நிறைவேறாத நிலையில் பசலை நோய் அடைந்து வாடினர் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். கயல சேல=கயல் போன்ற சேல் போன்ற; பயல=பசலை நோய்; இயலை=நினைந்து; தாருகவனத்து இல்லத்தரசிகள் பெருமானின் அழகில் மயங்கி, பெருமான் பால் தீவிரமான காதல் கொண்டு, அந்த காதல் நிறைவேறாத காரணத்தால் பயலை நோய் கொண்டு வாடி வருந்திய தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இதே பதிகத்தின் முதல் பாடலில், பெருமானின் எளிமையான திருக்கோலம் விவரிக்கப் பட்டுள்ளது. இந்த எளிய கோலமே, பலரையும் கவரும் வண்ணம் மிகவும் அழகு பொருந்திய கோலமாக இருந்த தன்மை, இரண்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. கயல் மீன் போன்று சேல் மீன் போன்றும் அழகிய கருமையான கண்களை உடைய தாருகவனத்து இல்லத்தரசிகள் தன் பால் ஆழமான காதல் கொண்டு ஏங்கும் வண்ணம், அழகிய உருவத்துடன் நாள்தோறும் தாருகவனம் சென்று பிச்சை ஏற்கும் கோலத்துடன் திரிந்தவன் சிவபெருமான். பெருமானுடன் சேர முடியாத ஏக்கத்தில் தாருகவனத்து மகளிர் பயலை நோயால் வருந்தினர். இவ்வாறு எண்ணற்ற தன்மைகளை உடையவனாக விளங்கும் பெருமான், அந்தந்த தன்மைகளுக்கு ஏற்ப எண்ணற்ற திருநாமங்களை உடையவன் ஆவான். அவனது இத்தகைய தன்மைகள் வானோர்களாலும் அவனது அடியார்களாலும் எண்ணுதற்கு மிகவும் அரியதாக உள்ளன. இத்தகைய பெருமான் உறைகின்ற இடம் அரதைப் பெரும்பாழி தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கயல சேல கருங் கண்ணியர் நாள்தொறும்
பயலை கொள்ளப் பலி தேர்ந்து உழல் பான்மையார்
இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும்
பெயரர் கோயில் அரதைப் பெரும்பாழியே
பிரமாபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.37.5) திருஞான சம்பந்தர், பெருமான் தாருகவனத்து மகளிர் இட்ட பிச்சையை பிரம கபாலத்தில் ஏந்தியவன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானே, தாயாகவும் தந்தையாகவும் மற்ற அனைத்துப் பொருட்களாகவும் இருந்து நமக்கு உதவி புரிகின்றான் என்பதை உணர்ந்து, அவனைப் பணிந்து வணங்கும் அடியார்களுக்கு அவன் பல விதங்களிலும் அருள் புரிவான் என்று சொல்கின்றார்.
வாயிடைம் மறையோதி மங்கையர் வந்திடப் பலி கொண்டு போய்ப்
போயிடம் எரி கானிடைப் புரி நாடகம் இனிது ஆடினான்
பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்துறை பிஞ்ஞகன்
தாயிடைப் பொருள் தந்தையாகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே
மயிலாடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.70.5) திருஞானசம்பந்தர், மகளிரின் வீடுகள் தோறும் சென்று பெருமான் பலியேற்றார் என்று குறிப்பிடுகின்றார். கதுப்பு=கூந்தல்; விரிந்து மலர்ந்த பூக்களை கொண்ட கூந்தல் உடைய இளமை வாய்ந்த மங்கையர் என்று தாருகவனத்து மகளிரை குறிப்பிடுகின்றார். மட மங்கையர்=இளம் பெண்கள்; பழமை=பழம்பதி; மது=தேன் கூடுகள்; வெள்ளப் பெருக்குடன் வரும் காவிரி நதி, தனது அலைக் கரங்களால் இரண்டு கரையிலும் மணிகளை வாரி இறைக்க, அந்த ஒளி வீசும் மணிகள் கண்டு அச்சம் கொள்ளும் குரங்குகள் குதித்து பாய்வதால்,மாமரங்களில் உள்ள தேன் கூடுகள் கிழிந்து சிந்தும் தேனை, வண்டுகள் கவர்ந்து உண்கின்றன என்று தலத்தின் நீர் வளத்தையும் நில வளத்தையும் குறிப்பிடுகின்றார்.
பூவிரி கதுப்பின் மட மங்கையர் அகம் தொறும் நடந்து பலி தேர்
பாவிரி இசைக்குரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனலாம்
காவிரி நுரைத்து இரு கரைக்கு மணி சிந்த வரி வண்டு கவர
மாவிரி மதுக் கிழிய மந்தி குதி கொள்ளும் மயிலாடுதுறையே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.76.1) திருஞானசம்பந்தர், காட்டினில் நடமாடியவாறு, பெருமான் தாருகவனத்து மகளிரின் இல்லங்கள் புகுந்து பலி ஏற்றார் என்று கூறுகின்றார். வேதவனம் என்று இந்த தலம் இந்த பாடலில் அழைக்கப் படுகின்றது. இற்பலி=இல்+ பலி; சுரம்=வெப்பம் மிகுந்து பாலைவனம் போன்று காணப்படும் இடம்; கற்பொலி=பருக்கைக் கற்கள் மிகுந்த; மற்பொலி=மல்+பொலி, வளம் மிகுந்த; கலிக் கடல்=ஆரவாரம் செய்யும் கடல்: குவடு=சிகரம்; கொழித்த=குவியலாக குவிக்கும்; விற்பொலி=வில்லினைப் போன்று வளைந்து அழகுடன் காட்சி தரும்; நுதல்=நெற்றி;
கற்பொலி சுரத்தின் எரி கானினிடை மாநடமது ஆடி மடவார்
இற்பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல்
மற்பொலி கலிக் கடன் மலைக் குவடு எனத் திரை கொழித்த மணியை
விற்பொலி நுதற் கொடி இடைக் கணிகைமார் கவரும் வேதவனமே
மாணிகுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.77.2) திருஞானசம்பந்தர், இசைப் பாடல்களை பாடியவாறும் வசியப்படுத்தும் சொற்களை பேசியவாறும், தெருக்களில் உள்ள ஒவ்வொரு இல்லமும் சென்று ஆங்கிருந்த மகளிரிடம் பெருமான் பலியேற்றார் என்று கூறுகின்றார். ஒளி வீசும் திருநீற்றினைத் தனது மேனியெங்கும் பூசிக்கொண்டு தோலாடை அணிந்தும் பெருமான் சென்றார் என்று பிச்சைப் பெருமானின் திருக்கோலம் இங்கே விவரிக்கப் படுகின்றது.
சோதி மிகு நீறது மெய் பூசி ஒரு தோலுடை புனைந்து தெருவே
மாதர் மனை தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம்
தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழன மிக்கு
ஓத மலி வேலை புடை சூழுலகின் நீடுதவி மாணிகுழியே
வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.6) மாதொரு பாகனாக விளங்கும் தோற்றத்துடன், பிச்சை இடுவீராக என்று பல இல்லங்கள் சென்று பெருமான் பலியேற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். கருமான்=கரிய உருவம் கொண்ட விலங்கு, யானை; ஐயம்=பிச்சை; மட மங்கை=இளமை பொருந்திய உமையன்னை; வையம்=உலகத்தில்; விலை மாறிடினும்=பஞ்சத்தின் காரணமாக பண்டங்களின் விலை கூடிய போதிலும்; வெய்ய=கொடிய; தண் புலவர்=இனிய சொற்களை உடைய புலவர்கள்; கடுமையான சொற்களை நெருப்புக்கு ஒப்பிட்டு வெய்ய என்று கூறிய திருஞானசம்பந்தர், இனிய மொழிகளை குளிர்ந்த சொற்கள் என்று குறிப்பிடும் நயத்தை நாம் உணரலாம். தலத்து மாந்தர்களின் கொடைத் தன்மை இந்த பாடலில் எடுத்துரைக்கப் படுகின்றது. பஞ்சத்தின் காரணமாக பொருட்களின் விலை கூடினும், பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படினும், இல்லையெனாது இனிய மொழிகள் கூறி புலவர்களுக்கு உதவி செய்யும் தன்மையர் என்று இந்த தலத்து மக்களை குறிப்பிடுகின்றார். பெருமான் திருநீற்றினைப் பூசிக் கொண்டுள்ள தன்மை, தான் ஒருவனே என்றும் அழியாத உண்மையான மெய்ப்பொருள் என்பதை உயிர்களுக்கு உணர்த்துகின்றது. கருமை நிறம் கொண்ட யானையின் தோலைக் கிழித்த செய்கை, உயிர்களை அறியாமையில் ஆழ்த்தும் அஞ்ஞானத்தை, அறியாமை எனப்படும் ஆணவ மலத்தினைக் கிழிக்கும் பெருமானின் ஆற்றலை உணர்த்துகின்றது. தேவி உடனிருக்கும் தன்மை, உயிர்களுக்கு அருள் வழங்கவும் ஞானம் அளிக்கவும் பெருமான் தயார் நிலையில் இருப்பதை உணர்த்துகின்றது. தேவி ஞான வடிவாகவும் அருள் வடிவாகவும் இருப்பவள் அல்லவா. இந்த வாய்ப்பினை உயிர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று, தானே ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று பெருமான் உணர்த்தும் பொருட்டு பலியேற்கின்றார் என்று திருஞானசம்பந்தர் அறிவுறுத்தும் பாடல் இது. இந்த செயல் உயிர்கள் பால் இறைவன் வைத்துள்ள கருணையை உணர்த்துகின்றது.
செய்ய திருமேனி மிசை வெண்பொடி அணிந்து கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடமாம்
வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவிலாத வகையார்
வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே
திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.86.3) திருஞானசம்பந்தர், தாருகவனத்து மகளிர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெருமானுக்கு பிச்சை அளித்தனர் என்று குறிப்பிடுகின்றார். வளையினர் மனை தோறும் திரிதரு என்று சொற்களை வரிசைப் படுத்தி பொருள் காணவேண்டும். புரிசடை=முருக்குண்ட சடை; அரை=இடுப்பு; பொடி=நீறு, சாம்பல்; பொடி புல்கும் எரி=நீறு பூத்த நெருப்பு; ஈடுலா=முன்கையில் சரிந்து விழும் வளையல்கள்; இந்த பாடலில் தாருகவனத்து மகளிரின் நிலை குறிப்பிடப் படுகின்றது. வரிதரு=கோடுகள் உடைய; பெருமான் தாருகவனம் சென்றபோது, ஆங்கிருந்த முனிவர்கள் முதலில், பெருமானின் வரவினை விரும்பவில்லை; தாங்கள் செய்து கொண்டிருந்த கடமைகளுக்கு இடையூறாக பெருமான் வந்ததாக அவர்கள் கருதியதே இதற்கு காரணம். ஆனால் பெருமான் தாருக வனத்து இல்லங்களுக்கு பிச்சை ஏற்கச் சென்ற போது, தாருகவனத்து முனிவர்களின் மனைவியர், அழகிய தோற்றத்துடன் தங்களது இல்லங்கள் தேடி வந்த பிச்சைப் பெருமானுக்கு பிச்சையிடுவது தங்களது பாக்கியம் என்று கருதி மகிழ்ந்தனர் என்று, முனிவர்களுக்கும் அவர்களது மனைவியருக்கும் இடையே இருந்த வேறுபாட்டினை திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார் போலும். சரிதை=இயல்பு; முறுக்குண்ட சடைமுடியை உடைய பெருமான், தனது இடுப்பினில் புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளார். செம்பவளத்தின் நிறத்தில் அமைந்துள்ள அவரது திருமேனி மீது திருநீறு பூசப்பட்டுள்ள தன்மை நீறு பூத்த நெருப்பு போன்று உள்ளது. அவர் இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்டவர்; தங்களது முன்கைகளில் சரிந்த, கோடுகள் கொண்டுள்ள வளையல்களை அணிந்த தாருகவனத்து இல்லத்தரசிகள் மனம் மகிழும் வண்ணம், அவர்களின் இல்லங்கள் தோறும் சென்று பிச்சையேற்று திரியும் இயல்பினை உடையவராக திகழ்ந்தவர் சிவபெருமான். அத்தகைய பெருமான் உறைகின்ற இடம், வளம் மிகுந்த திருச்சேறை தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபமது ஏறுவர் ஈடுலா
வரிதரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை தொறும்
திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே
விளமர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.88.2) திருஞானசம்பந்தர், பெருமான், தாருகவனத்து மகளிரின் இல்லங்களுக்கு பலியேற்கச் சென்றார் என்று கூறுகின்றார். பட்டாடையால் மூடப்பட்ட மார்பங்களை உடைய மகளிர் என்று தாருகவனத்து மகளிரை குறிப்பிடுகின்றார். ஒட்டு=ஒலி எழுப்பும்; அடி=பாதுகை; மரவடி=மர பாதுகைகள்; பெருமான் நடந்து சென்ற போது, பெருமான் அணிந்திருந்த மர பாதுகைகள் சீரான இசையொலியை எழுப்பின என்று கூறுகின்றார். உமையுறு வடிவினர் என்று மாதொரு பாகனின் திருக்கோலத்தை குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் ஆறாவது பாடலில், பெருமானை, மனைகள் தொறும் இடுபலி கொள்பவர் என்று குறிப்பிடுகின்றார்.
பட்டிலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி
ஒட்டிலகிய இணை மர அடியினர் உமை உறு வடிவினர்
சிட்டிலகு அழகிய பொடியினர் விடை மிடை சேர்வதோர்
விட்டிலகு அழகொளி பெயரவர் உறைவது விளமரே
திருநெல்வேலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.92.2) திருஞானசம்பந்தர் செடிச்சியர் மனை தோறும் பலி கொள்வதும் பெருமானது இயல்பு என்று குறிப்பிடுகின்றார். செடிச்சியர் என்றால் வேடர் குலத்தைச் சார்ந்தவர்கள் என்று பொருள். இதன் மூலம் பெருமான், பக்குவம் அடைந்த ஆன்மாக்கள் எந்த குலத்தைச் சார்ந்தவராக இருப்பினும் அவர்களது மலங்களை பிச்சையாக ஏற்றுக் கொண்டு அதற்கு பதிலாக முக்தி நிலையினை அருளும் தன்மை வாய்ந்தவர் என்று உணர்த்துகின்றார். கேதகைப் போது=தாழை மடல்:
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறதேறிச்
சென்று தாம் செடிச்சியர் மனை தொறும் பலி கொளும் இயல்பதுவே
துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகைப் போது அணைந்து
தென்றல் வந்து உலவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே
பரிதிநியமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.104.7) திருஞானசம்பந்தர், பல மனைகள் சென்று பெருமான் பலி தேர்வதாக குறிப்பிடுகின்றார். இறை=முன்கை; இந்த பாடலிலும் சம்பந்தநாயகி தனது வளையல்களையும் அழகினையும் கவர்ந்த பெருமான் என்று குறிப்பிடுகின்றாள். தயங்க=தாழ்ந்து தொங்க; தாருகவனத்து முனிவர்கள் பெருமான் மீது ஏவிய மழு ஆயுதத்தை, பெருமான் செயலறச் செய்த பின்னர் அதனை தனது கையில் ஏந்திக் கொண்டார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே, தாருகவனத்தில் நடந்த நிகழ்ச்சி தனது வாழ்வினிலும் நடைபெற்றதாக சம்பந்த நாயகி கற்பனை செய்கின்றாள் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. தொங்கிய சடையுடன் திருநீறு அணிந்த திருமேனியுடன் வேதங்கள் ஓதியவராக பெருமான் தாருகவனம் சென்ற காட்சி இங்கே குறிப்பிடப் படுகின்றது. பிறைச் சந்திரனை அணிந்த செஞ்சடை பின்புறம் தொங்க, பெரிய மழுவினைத் தனது கையில் ஏந்தியவாறும், தனது திருமேனியில் வெண்ணீறு பூசியவராகவும் வேத கீதங்கள் ஓதியவராக, பெருமான் பல இல்லங்களுக்கும் பலி ஏற்பதற்காக செல்கின்றார். அவரது அழகிய தோற்றத்தினால், அவர் மீது நான் கொண்டுள்ள தீவிரமான காதலினால், அவருடன் இணைய முடியாத நிலையை நினைத்து வருந்துவதால், அந்த ஏக்கத்தில் எனது உடல் மெலிந்து எனது முன்கையில் இருந்த வளையல்கள் நழுவி விட்டன; மேலும் எனது உடலும் மெலிந்ததால் எனது அழகும் குன்றியது. இந்த நிலைக்கு பெருமானே காரணம். அவரே எனது கைவளையல்கள் மற்றும் அழகினைக் கவர்ந்த கள்வர் ஆவார். இத்தகைய கள்வர் உறையும் இடம், பறையொலி மற்றும் சங்கொலி முழங்க திருவிழாக்கள் நடைபெறும் பரிதிநியமம் தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் எட்டாவது பாடலிலும் மனைகள் பலி தேர்வார் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.
பிறை வளர் செஞ்சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி
மறையொலி பாடி வெண்ணீறு பூசி மனைகள் பலி தேர்வார்
இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
பறையொலி சங்கொலியால் விளங்கும் பரிதிந் நியமமே
கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.113.9) திருஞானசம்பந்தர், தாருக வனத்து முனிவர்களின் மனைவியரின் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். கள்ளன் என்ற சொல் களன் என்று திரிந்துள்ளது. கருங்களன்=கருமை நிறம் படர்ந்த கழுத்தினை உடைய பெருமான். சங்கம்=சங்கமம், கூட்டம்; மணி பொருந்திய பெருமானது கோயில் வாசலின் நிழலையே அருளிடமாகக் கொண்டு அன்பு செய்யும் அடியார்களை விட்டு என்றும் நீங்காதவராக பெருமான் இருப்பார் என்று பாடலின் முதல் அடியில் குறிப்பிடும் திருஞானசம்பந்தர், அத்தகைய அடியார்களின் தொடர்பினை விரும்பும் அன்பர்களின் குழுவே, திருக்கூட்டம் என்று அழைக்கப் படும் தகுதி படைத்தது என்று கூறுகின்றார். வரை=வரையறுக்கப் பட்ட நிலை; மன்னி வரைப் பதி=பெருமான் நிலையாக உறைகின்ற பதியாக தேர்ந்தெடுக்கப் பட்டது; வாரி வயன் மலி=நீர் வளமும் நில வளமும் நிறைந்தது;
நின் மணி ஆவது நீழலையே நேசமது ஆனவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே ஒளி அதனோடு உறு சங்கமதே
கன்னியரைக் கவரும் களனே கடல் விடம் உண்ட கருங்களனே
மன்னி வரைப் பதி சண்பையதே வாரி வயன் மலி சண்பையதே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.114.2), திருஞானசம்பந்தர், பெருமான் மிகுந்த விருப்பத்துடன், வீடுகள் தோறும் சென்று பிச்சை ஏற்கின்றார் என்று கூறுகின்றார். இரண்டாவது அடியில் இரண்டாவதாக வரும் சூலமது என்பதை சூல் அம் அது என்று பிரித்து பொருள் காண வேண்டும். சூல் என்றால் தோண்டி எடுத்தல் என்று பொருள். மீனாக அவதரித்த திருமாலின் கண்ணினை தனது கையால் நோண்டி எடுத்த பெருமான், அந்த கண்ணினைத் தனது கை விரலில் மோதிரமாக அணிந்து கொண்ட செயலை குறிப்பிடுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இந்த செய்தி,மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களால் வாட்போக்கி கலம்பகம் என்ற நூலில் குறிப்பிடப் படுகின்றது. அங்கை என்ற சொல் இங்கே விரலை குறிப்பிடுவதாக பொருள் கொள்ள வேண்டும். கம்பம் என்று திருவேகம்பம் குறிப்பிடப் படுகின்றது.
சடை அணிந்ததும் வெண்டலை மாலையே தம் உடம்பிலும் வெண்டலை மாலையே
படை இலங்கையில் சூலமது என்பதே பரந்து இலங்கையில் சூலமது என்பதே
புடை பரப்பன பூத கணங்களே போற்றி இசைப்பன பூத கணங்களே
கடைகள் தோறும் இரப்பதும் இச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே
ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.115.9) திருஞான சம்பந்தர் செங்கயல் கண்ணினார்கள் இடுகின்ற பிச்சையைப் பெற்றுக் கொள்ளும் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நேடிட=தேடிட; திருமாலொடு தாமரை மலரினைத் தனது இருப்பிடமாகக் கொண்ட நான்முகனும் பெருமானின் திருவடியையும் திருமுடியையும் தேடிக் காண முடியாமல் களைத்து மயக்கத்தில் ஆழும் வண்ணம் உயர்ந்த நல்ல தீப்பிழம்பாக உருவான பெருமான் என்று முதல் அடியில் கூறுகின்றார். துங்க=நெடிது உயர்ந்த; தூய பாடல்களாகிய வேத கீதங்களை தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கும் பெருமான் தான் தீப்பிழம்பாக நின்றது என்று கூறுகின்றார். சிவந்த கயல் மீன்கள் போன்ற கண்களை உடைய தாருகவனத்து மகளிர் இட்ட பிச்சையை ஏற்றுக் கொண்ட பெருமான், பேசிய சொற்களைக் கேட்ட மகளிர் பெருமான் பால் பித்து கொண்டவர் போன்று அவரைத் தொடர்ந்து சென்றனர் என்று மூன்றாவது அடியில் கூறுகின்றார். இடக்கை என்ற சொல் இடது கை மற்றும் இருப்பிடம் என்ற இரண்டு பொருள்கள் தரும் வண்ணம் நான்காவது அடியில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அங்கி=அக்னி;
பங்கயத்துள நான்முகன் மாலொடே பாத நீள்முடி நேடிட மாலொடே
துங்க நற்றழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே
செங்கயல் கணினார்கள் இடு பிச்சையே சென்று கொண்டு உரை செய்வது பிச்சையே
அங்கியைத் திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனது இடக்கையே
திரிகோணமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.123.9) திருஞானசம்பந்தர், பெருமான் வீடுகள் தோறும் சென்று பிச்சை ஏற்கின்றார் என்று கூறுகின்றார். அருவருப்பு ஏதும் இன்றி பிரம கபாலத்தை பெருமான் தனது கையில் ஏந்திச் செல்வதாக குறிப்பிட்டு, பெருமான் வேண்டுவது வேண்டாமை இலாதவன் என்பதை உணர்த்துகின்றார். பெருவரா=பெரிய கடல்: பெயர்ந்த மால்= தனது கண்ணையே பெயர்த்து எடுத்து பெருமானுக்கு மலராக அர்ப்பணித்த திருமால்: திருமாலுக்கு குருவாக சிவபெருமான் இருப்பதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.
அருவராது ஒரு கை வெண்டலை ஏந்தி அகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரும் அறியா வண்ணம் ஒள்ளெரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நன் மாற்கும்
குருவராய் நின்றார் குரை கழல் வணங்கக் கோண மாமலை அமர்ந்தாரே
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளப்பட்ட பதிகத்தின் பாடலில் (4.41.3) அப்பர் பிரான், செல்வராக உள்ள பெருமான், பற்கள் இல்லாத வெண்தலையினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் பல இல்லங்கள் சென்று பிச்சை எடுக்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். கல்=மேரு மலை; மேரு மலையை வில்லாக வளைத்து திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்ற நிகழ்ச்சி குறிப்பிடப் பட்டுள்ளது. இலம்=இல்லம் என்பதன் திரிபு. சொல்=வேதங்கள்: வேதங்களில் காணப்படும் சொல்லாகவும் அந்த சொற்களின் பொருளாகவும் உள்ள தன்மை
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே
எல்லியும் பகலும் முன்னே ஏகாந்தமாக ஏத்தும்
பல்லில் வெண்தலை கையேந்திப் பல் இலம் திரியும் செல்வர்
சொல்லு நன் பொருளும் ஆவார் திருச்சோற்றுத்துறையனாரே
கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.43.1) அப்பர் பிரான், பெருமானை, பிச்சைக்கு என்று அகம் திரிவார் என்று குறிப்பிடுகின்றார். அகம்=இல்லம். பெய்வளை=கைகளில் நெருக்கமாக வளையல்கள் அணிந்த பெண்மணி; இங்கே கங்கை நதியை குறிக்கும். இலங்கும்=விளங்கித் தோன்றும்; தளி=கோயில்; இறை என்பதற்கு தலைவன் என்று பொருள் கொண்டு, காஞ்சி மாநகரத்தை உடையவர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வேதங்கள் ஓதுதல், பிறைச் சந்திரனைத் தனது சடையில் தரித்தல், கங்கை நதியைத் தனது சடையில் அடக்கியது, தேவர்களை காக்கும் பொருட்டு நஞ்சினை உண்டது, அவ்வாறு உண்ட நஞ்சு, ஊழிக்காலத்தில் தனது வயிற்றினில் அடங்கப் போகும் உயிர்களுக்கு கேடு செய்யாத வண்ணம், நஞ்சினை தனது கழுத்தினில் நிறுத்தியமை ஆகியவை பெருமைக்கு உரிய செயல்கள் என்பதில் எவருக்கும் ஐயம் ஏதும் இல்லை. ஆனால் வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுப்பது அத்தகைய பெருமைக்கு உரிய செயல் தானா என்பதில் நமக்கு ஐயம் எழலாம். அந்த செய்கை அனைத்துச் செய்கைகளிலும் மிகுந்த பெருமையை உடையது என்பதை நாம் கீழ்க்கண்ட விளக்கத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். இறைவன் பலி ஏற்பது தனது உணவுத் தேவைக்காக அல்ல; உலகில் உள்ள ஆன்மாக்கள் தங்களிடம் உள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை, இறைவன் ஏற்றிருக்கும் கபாலத்தில் இட்டு, மாயைகளை ஒழித்து உய்வினை அடைய வேண்டும் என்பதற்காகத் தான், என்ற உண்மையை குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபெருமானை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்ற கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான். எனவே தான் பெருமான் அகம் தோறும் திரிந்து பலி ஏற்பதை, அப்பர் பிரான் பெருமைக்குரிய செயலாக கருதி இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். மேலும் மறைகளை ஓதிக் கொண்டு பெருமான் பலி ஏற்கச் செல்வதாக பல திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. வேதங்கள் ஓதுவது எத்துணை பெருமையான செயலாக கருதப் படுகின்றதோ, அத்துணை பெருமையினை உடையது பெருமான் பலி ஏற்பது என்பதை நாம் உணரும் பொருட்டு, வேதங்கள் ஓதுவதையும் பலி ஏற்பதையும் ஒரே அடியில் அப்பர் பிரான் கூறும் நயம் மிகவும் இரசிக்கத் தக்கது
மறையது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமுடி மேல் பெய்வளையாள் தனோடும்
கறையது கண்டம் கொண்டார் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியானாரே
வேதங்களை பாடிக் கொண்டு பல வீடுகள் சென்று பலியேற்கும் பெருமான் தனது சடை முடி மேல் பிறைச்சந்திரனை அணிந்துள்ளார். மேலும் அந்த சடைமுடியில், தனது கைகளில் நெருக்கமாக வளையல்கள் அணிந்துள்ள கங்கை நதியையும் அடக்கி வைத்துள்ள பெருமான் ஆலகால விடத்தை தேக்கியதால் கருமை நிறத்துடன் காணப்படும் கழுத்தினை உடையவர் ஆவார். காஞ்சி மாநகரத்தைத் தனது உடைமையாக கொண்டுள்ள அவர், ஆடல்களும் பாடல்களும் எப்போதும் விளங்கித் தோன்றும் மேற்றளியைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளார் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.44.5) அப்பர் பிரான், பெருமானை இல்லங்கள் தோறும் சென்று பலி தேர்கின்றார் என்று குறிப்பிடுகின்றார். இதே பதிகத்தின் முந்தைய இரண்டு பாடல்களில் தலையால் வணங்குவார் பெரும் பயனையும், தான் வாயினால் வாழ்த்தாமல் இருந்ததற்கு வருத்தமும் தெரிவித்த அப்பர் பிரான், கைகள் கூப்பி இறைவனை வணங்கும் அடியார்கள் பெறுகின்ற நன்மையை உணர்த்துகின்றார். கடை=வீட்டு வாயில்: கடு வினை=கொடிய வினைகள்; குவளை மலர் போன்று நீண்டும், மை பூசப்பட்டதாகவும் உடைய கண்களைக் கொண்ட பார்வதி தேவியாரைத் தனது உடலில் ஒரு பாகத்தில் ஏற்றவரும், கையில் ஒரு கபாலம் ஏந்தி வீடுகள் தோறும் சென்று பிச்சை ஏற்பவரும் ஆகிய சிவபெருமான், தான் விடுத்த அம்பினால் அர்ஜுனனைக் கொல்ல வந்த பன்றியை விரட்டி அவனுக்கு அருள் புரிந்தார். இந்த பெருமான் கச்சி ஏகம்பத்து திருக்கோயிலில் உறைகின்றார். தங்களது கைகளை கூப்பி அந்த பெருமானைத் தொழும் அடியார்கள், தங்களது தீவினைகளைப் போக்கிக் கொள்ளலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மையினார் மலர் நெடுங்கண் மங்கை ஓர் பங்கராகி
கையிலோர் கபாலம் ஏந்திக் கடை தொறும் பலி கொள்வார் தாம்
எய்வதோர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரைக்
கையினால் தொழ வல்லார்க்குக் கடுவினை களையலாமே
பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.58.1) அப்பர் பிரான், உமை அன்னையுடன் ஒன்றியவராக சிவபெருமான் ஊர் பலி ஏற்கச் சென்றார் என்று கூறுகின்றார். கன்றினார்= பகைத்தவர்; நின்றதோர் உருவம்=பிச்சைப் பெருமானாக தாருகவனம் சென்ற கோலம்; நீர்மை= வலிமை; நிறை=கற்பு; பிச்சைப் பெருமானாக, தங்களது இல்லத்தின் வாயின் முன்னே நின்று பலியேற்ற பெருமானின் அழகினைக் கண்ட தாருகவனத்து மாதர்களின் கற்பு நிலை குன்றியது என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தங்களது மனைவியரின் கற்பு தாருகவனத்து முனிவர்களுக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. அந்த கற்பு நிலை குன்றிய பின்னர் அவர்களது வலிமையும் குறைந்தது என்று இங்கே கூறுகின்றார். இதே பதிகத்தின் இரண்டாவது பாடலிலும், அப்பர் பிரான், பெருமானை கடை தோறும் பலி தேர்வார் என்று குறிப்பிடுகின்றார்.
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரியாகச் சீறி
நின்றதோர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு
ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும்
பன்றிப் பின் வேடராகிப் பருப்பதம் நோக்கினாரே
கடும் பகல் நட்டமாடி என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.77.1) பலிக்காக இல்லம் தோறும் திரிகின்ற பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கொடிய பகல் வேளையில், நடனம் ஆடிக்கொண்டே ஒரு கையினில் கபாலம் ஏந்தி தாருகவனத்து மகளிர் இல்லங்களுக்கு பிச்சைப்பெருமானாக திரிந்த இறைவனே, சிறந்த அணிகலன்களை அணிந்தும், சுருண்ட மெல்லிய கூந்தலைக் கொண்டவளாகவும், வளைந்த காதணிகளைஉடையவளாகவும் விளங்கிய இமவான் மகளாகிய பார்வதி தேவி, உமது மனைவியாக உமது வாழ்க்கையில் புகுந்த போதும் நீர் கோவணத்துடன் காட்சிஅளித்தீரோ, அந்த விவரத்தை எனக்கு சொல்வீராக என்று அப்பர் பிரான் பெருமானிடம் விளக்கம் கேட்கும் விதமாக அமைந்த பாடல்.
கடும் பகல் நட்டம் ஆடிக் கையிலோர் கபாலம் ஏந்தி
இடும் பலிக்கு இல்லம் தோறும் உழிதரும் இறைவனீரே
நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென்கூந்தல்
கொடுங் குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.86.4), பெருமான் தானே விரும்பி, பல மகளிரின் இல்லங்கள் சென்று பலி ஏற்பதாக அப்பர் நாயகி உணர்த்துகின்றாள். போனகம்= உணவு: சுடுகாட்டினை தான் விரும்பி நடமாடும் அரங்காக ஏற்றுக்கொண்டவர் சிவபெருமான்: வீடு தோறும் சென்று பலி ஏற்கும் போது, தன்னைத் தேடி வந்து பிச்சையாக இடப்படும் உணவினை, சிவபெருமான் தசை உலர்ந்து முடை நாற்றும் வீசும் தலையோட்டில் தான் ஏற்றுக் கொண்டார்.. அவர் தான், தேன் நிறைந்ததும் நறுமணம் வீசுவதும் ஆகிய பூக்கள் அதிகமாக காணப்படும் திருவொற்றியூரில் உறைகின்றார். அவர் தன்னிச்சைப்படி, வீடு வீடாகச் சென்று பிச்சை கேட்டுத் திரிபவராக திகழ்கின்றார் என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.
தான் அகம் காடு அரங்கா உடையது தன்னடைந்தார்
ஊன் அக நாறு முடை தலையில் பலி கொள்வதும் தான்
தேன் அக நாறும் திருவொற்றியூர் உறைவார் அவர் தாம்
தான் அகமே வந்து போனகம் வேண்டி உழி தர்வரே
நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.97) முதல் பாடலில் அப்பர் பிரான், வீடுகள் தோறும் பிச்சை எடுக்கச் செல்லும் சிவபெருமான், பிச்சையிடும் மகளிரின் வளையல்கள் கழன்று விழுமாறு, அவர்கள் தன் மீது பிரேமை கொள்ள வைத்து அவர்களை ஏங்கச் செய்வது எதற்காக என்று கேள்வி கேட்பதை நாம் உணரலாம். இந்த பாடல், தாருகவனத்து மகளிரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைந்த பாடல் என்று கூறுவார்கள். அட்டுமின்=இடுமின்; கடை=முற்றம், முன் வாயில்: வளை கொள்ளுதல்= சிவபிரானுக்கு பலியிட வந்த பெண்கள், அவர் மீது தாங்கள் கொண்ட காதல் கைகூடாத காரணத்தால், உடல் இளைத்து கைகள் மெலிய, தங்களது கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்: அந்த நிலைக்கு சிவபெருமானே காரணம் என்பதால் அவர் வளையல்கள் கொண்டதாக கூறுதல், சங்க இலக்கியங்களின் மரபை பின்பற்றியது. மட்டு=கள், தேன்; மட்டவிழும் குழலார்=தேன் சிந்தும் நறுமணம் மிக்க புதிய மலர்களை கூந்தலில் அணிந்துள்ள மகளிர்; கொட்டிய பாணி=ஒலிக்கப்பட்ட தாளங்கள்; கோளரவு=கொலைத் தொழிலை புரியும் பாம்பு; கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி சிவபெருமான் தனது இல்லம் வந்ததாக, இந்த பதிகத்தின் பல பாடல்களில் கற்பனை செய்யும் அப்பர் நாயகி, முதல் பாடலில் தாருகாவனத்து மகளிர் இல்லங்களுக்கு சிவபெருமான் பிச்சை ஏற்றுச் சென்றதை நினைத்துப் பார்க்கின்றாள். தங்களது நிலையினை மறந்து, சிவபெருமானின் பின்னே தாருகவனத்து மகளிர் சென்ற காட்சி அவளது மனக்கண்ணில் விரிகின்றது. ஆனால், ஏன் அவ்வாறு நடந்தது என்று அவளுக்கு புலப்படவில்லை
அட்டுமின் இல்பலி என்று அகம் கடை தோறும் வந்து
மட்டவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என் கொலோ
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோளரவும்
நட்ட நின்றாடிய நாதர் நல்லூர் இடம் கொண்டவரே
ஒலிக்கும் தாளங்களுக்கு ஏற்ப, நடனம் ஆடும் போது எடுத்த பாதங்களையும், கொலைத் தொழிலைச் செய்யும் பாம்பினை அணிகலனாகவும், உடையவராய், எப்போதும் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் பெருமான், நல்லூரில் உறைகின்றார். தேன் ஒழுகும் நறுமணம் மிகுந்த புதிய மலர்களைத் தங்களது கூந்தலில் சூடிய தாருகாவனத்து மகளிர்களின் இல்லங்கள் தோறும், பிச்சை கேட்டுச் சென்றதன் காரணம் யாதோ? நான் அறியேன். சிவபெருமானை நினைந்து, தாருகாவனத்து மகளிர் தங்களது கைகளில் இருந்த வளையல்கள் கழன்று விழுமாறு உடல் மெலிய வருத்தமுற்றது ஏனோ என்பதை புரிந்து கொள்ளாமல் தான் இருந்த நிலையை அப்பர் நாயகி உணர்த்தும் பாடல்.
இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் தாருக வனத்து நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கும் அப்பர் நாயகியின் கற்பனை விரிகின்றது. தனது இல்லத்திற்கு பெருமான் எத்தகைய கோலத்தில் வரவேண்டும் என்பதையும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தான் விரும்புவதை பாடலாக (4.97.2) வடிக்கின்றாள். கண்ணிட்டுப் போதல்=கண்ணால் சாடை காட்டிச் செல்லுதல்; கறைக்கண்டர்= நீல நிறத்தை கழுத்தினில் கொண்ட நீலகண்டர்; தாருகாவனத்து மகளிர் இல்லங்களுக்குச் சென்றதன் காரணம் அறியேன் என்று கூறும் அப்பர் நாயகி, நல்லூரில் தனது இல்லத்திற்கு பிச்சை ஏற்க வந்த போது, கண்ணால் சாடை காட்டிச் சென்றதற்கு காரணம் இருப்பதாக கூறுகின்றாள். தாருகாவனம் சென்ற போது பிச்சைப் பெருமான் வேடம் தரித்து இடுப்பில் கோவணமும், உடலில் பாம்புகளை அணிகளாகத் தரித்துச் சென்றதாக கூறப்படுகின்றது. அவ்வாறு பாம்புடன் சென்றால், பிச்சையிட வரும் பெண்மணிகள் பயம் கொள்வர் எனக் கருதி அத்தகைய வேடத்தில் நல்லூர் வரவில்லை என்று அப்பர் நாயகி கற்பனை செய்கின்றாள். சிவபெருமான் வந்ததாக கூறுவதே கற்பனை தான். தாருகாவனம் சென்ற போது சிவபெருமான் யாரையும் தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு அழைக்கவில்லை. அவரது சுந்தர வேடத்தில் மயங்கி, தாருகாவனத்து பெண்மணிகள், தாங்கள் செய்து கொண்டிருந்த செயல்களை விட்டுவிட்டு அவரைப் பின் தொடர்ந்ததாக புராணம் கூறுகின்றது. நல்லூரில் தன்னைக் காணும் பெண்கள், தன் மீது ஆசை கொள்ளும்படி அழகிய வடிவத்துடன் வந்த சிவபெருமான், தான் தற்போது கொண்டுள்ள வடிவம், பண்டைய நாளில் தாருகாவனம் சென்ற போது எடுத்த வடிவம் அல்ல, இன்று பிச்சைக்காக எடுத்தது என்று கூறிக் கொண்டு, பல இல்லங்கள் தோறும் திரியும் சிவபெருமான், நல்லூரில் எனது இல்லத்திற்கு அருகில் வந்தார்; பின்னர் எனது இல்லத்தில் புகுந்தார்; பண்ணோடு கூடிய பாடல்களைப் பாடியவாறு ஆடிக்கொண்டே வந்த சிவபெருமான், சிறிது நேரம் நின்று, எங்களை நோக்கி கண்ணால் சாடை காட்டிச் சென்றதற்கு காரணம் உள்ளது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பெண்ணிட்டம் பண்டையது அன்று இவை பெய்பலிக்கு என்று உழல்வார்
நண்ணிட்டு வந்து மனை புகுந்தார் நல்லூர் அகத்தே
பண்ணிட்ட பாடலர் ஆடலராய்ப் பற்று நோக்கி நின்று
கண்ணிட்டுப் போயிற்றுக் காரணம் உண்டு கறைக் கண்டரே
மேற்கண்ட பாடலில் குறிப்பிடப்படும் கற்பனை அடுத்த பாடலில் (4.97.3) மேலும் விரிகின்றது. சிவபெருமான் மீது தீராத காதல் கொண்ட அப்பர் நாயகி, சிவபெருமான் தனது இல்லம் வந்ததாக கற்பனை செய்து கொண்டு, அவரின் வருகையை பெருமிதத்துடன் மற்ற பெண்மணிகளுக்கும் அறிவிக்கும் பாடல். பட+ஏர்=படவேர்; ஏர்=அழகு; நடவார்=நடவாமல் இருக்கின்றார், நீங்காமல் இருக்கும் நிலை. வாயு பகவானால் கொண்டு வரப்பட்ட கயிலை மலையின் இரு பகுதிகளில் ஒன்று இந்த தலத்திலும் மற்றொரு பகுதி அருகில் உள்ள ஆவூர் பசுபதீச்சரம் தலத்தில் வைக்கப் பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதனால் கயிலை மலைக்கு இணையாக இந்த தலம் கருதப் படுகின்றது. படம் எடுக்கின்ற பாம்பின் தோற்றத்தை ஒத்த அழகிய மார்பகங்களையும் நல்ல குணங்களையும் உடைய பெண்களே, பகல் நேரத்தில், பெண்களிடம் பிச்சை கொள்வார் போல், ஒருவர் எங்கள் இல்லம் புகுந்தார்; புகுந்த அவருக்கு பிச்சை இட்ட பின்னரும் அவர் வீட்டினை விட்டு நீங்காதவராக இங்கேயே நிற்கின்றார்; அவர் யாரென்று நீங்கள் கேட்பீராகில், அவர் தான், வடக்கே கயிலை மலையையும் தெற்கே நல்லூரையும் இடமாக கொண்டு உறைபவரும், தொடர்ந்து நடனம் பயின்று ஆடும் சிவபெருமான் ஆவார் என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.
படவேர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர்
இடுவார் இடைப் பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர் கொலோ
வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே
நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.103.7) மகளிர் இடும் பிச்சைக்கு ஊர் ஊராகத் திரிவது, பெருமானே உமக்கு பெருமை தரும் செயலா என்ற கேள்வி கேட்கப் படுகின்றது. சீர்மலி=சிறப்பு மிக்க செல்வம்: சுலவு=சூழ்ந்த: மாதிமை=பெருமை. சிறப்பு மிக்க செல்வத்தை மிகுதியாக உடைய செம்பொன் மாமலை போன்றவனே, செழிப்பு மிகுந்த சோலைகளால் நிறைந்த கடல் நாகைக் காரோணனே, தங்களது மார்பினை அழகான கச்சுகளால் இறுகக் கட்டிய மாதர்கள் வந்து பிச்சை இடுமாறு ஊர் தோறும் சென்று பிச்சை ஏற்று அந்த உணவினை உண்பது உமது பெருமைக்கு உரிய செயலாகுமா, ஏன் நீர் அவ்வாறு பிச்சை ஏற்க உலகெங்கும் திரிகின்றீர்? நீரே எனக்கு தெளிவுபடுத்துவீராக என்று அப்பர் பிரான் பெருமானிடம் கேட்பதாக அமைந்த பாடல்.
சீர்மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மாமலையே
கார்மலி சோலை சுலவு கடல் நாகைக் காரோணனே
வார்மலி மென்முலையார் பலி வந்திடச் சென்று இரந்து
ஊர்மலி பிச்சை கொடு உண்பது மாதிமையோ உரையே
பவளத் தடவரை என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.113.6) அப்பர் பிரான், பெருமானை, பல கடை தோறும் பலி திரிபவன் என்று குறிப்பிடுகின்றார். உன்மத்தக மலர்=ஊமத்தம் பூ: பன்மத்தகம்=பல்+மத்தகம், பல்லை உடைய மண்டையோடு: கடை=வீட்டு வாயில்: மத்தகம்=தலை: சங்கரன் என்ற சொல்லுக்கு இன்பம் அளிப்பவன் என்று பொருள். வீடுகள் தோறும் சென்று பலி கேட்டாலும், பலி கேட்பதன் நோக்கம், தமது மலங்களை பிச்சையாக இறைவனுக்கு அளித்து, மலங்கள் நீங்கப் பெற்று மக்கள் உய்யவேண்டும் என்ற நோக்கத்தினை உடையது என்பதால், இறைவன் பிச்சை ஏற்கும் செயலும் அடுத்தவருக்கு இன்பம் அளிக்கும் என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. ஊமத்தை மலரைச் சூடியவனும், உலகத்தவர் அனைவரும் தொழுமாறு, ஊழிக் காலத்தையும் கடந்து, தலைமாலை அணிந்து கொண்டு நடமாடும் இறைவனாகிய சிவபெருமான், பல வீடுகள் தோறும் சென்று வாயிலில் நின்று பிச்சை ஏற்கின்றான், அத்தகைய இறைவன் எனது தலை மீது, இரவும் பகலும் என்னை பிரியாது, குடி கொண்டுள்ளான். அவன் தான் தனது தலையில் ஒரு இளம் பிறையினைச் சூடிய சங்கரன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை
உன்மத்தக மலர் சூடி உலகம் தொழச் சுடலைப்
பன்மத்தகம் கொண்டு பல்கடை தோறும் பலி திரிவான்
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அறியான்
தன் மத்தகத்தோர் இளம்பிறை சூடிய சங்கரனே
திருவண்ணாமலை தலத்து பதிகத்தின் பாடலில் (5.5.1), இட்டமாக இரந்து உண்பவன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். இந்த பாடல் தாருகவனத்து நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என்று கூறுவார்கள். இலம்=இல்லம்: இல்லம் என்ற சொல்லின் இடைக்குறை, எவராலும் அடக்க முடியாத காளையினை வாகனமாகக் கொண்டு, அதன் மீது ஏறி, தனது விருப்பம் போல் பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்று உண்பவனாகிய சிவபெருமான் அட்டமூர்த்தியாக விளங்குகின்றான் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். பட்டி=அடக்க முடியாத காளை, பண்டைய நாட்களில் கிராமங்களில், தங்களிடம் உள்ள ஒரு காளை மாட்டினை இறைவனுக்கு என்று நேர்ந்து, அதனை கோயிலில் சேர்த்து விடுவார்கள். அந்த மாடு, தங்களது வயல்களில் அல்லது தோட்டத்தில் மேய்ந்தாலும் அதனை மிரட்டாமலும் அடிக்காமலும் வெளியேற்றுவார்கள். இவ்வாறு தனது விருப்பம் போல் திரிந்து, வேலை ஏதும் செய்யாமல் வாழும் காளை மாட்டினை பட்டிமாடு என்றும் பொலி எருது என்றும் அழைப்பார்கள். வலிமை மிகுந்து காணப்படுவதால், இந்த மாட்டினை எளிதில் அடக்குவதும் கடினம். இந்த மாட்டினைப் போன்று எவர்க்கும் அடங்காத நந்தி என்பதால் பட்டி என்று இங்கே கூறப்பட்டுள்ளது. எவராலும் அடக்க முடியாத காளையினை வாகனமாகக் கொண்டு, அதன் மீது ஏறி, தனது விருப்பம் போல் பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்று உண்பவனாகிய சிவபெருமான் அட்டமூர்த்தியாக விளங்குகின்றான். அவனது அட்ட மூர்த்தி வடிவங்களில் ஒன்றாக வெளிப்பட்ட அண்ணாமலையை தொழுதால், நமது வினைகள் கெட்டுப்போய் விடும். இதனை நீங்கள் கண்கூடாக காண்பீராக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பட்டி ஏறுகந்தேறி பல இலம்
இட்டமாக இரந்து உண்டு உழிதரும்
அட்டமூர்த்தி அண்ணாமலை கை தொழ
கெட்டுப் போம் வினை கேடில்லை காண்மினே
இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலிலும் தாருகவனம் சென்ற நிகழ்ச்சி சொல்லப் படுகின்றது. உணங்கல்=சோறு, பலி, உலர வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்: இந்த பாடல் தாருகாவனத்து முனிவர்கள் மனைவியர்களின் உள்ளங்களைக் கவர்ந்த செய்கையை குறிப்பிடுகின்றது. தசைகள் உலர்ந்து பற்கள் உதிர்ந்த பிரம கபாலம் என்பதைக் குறிக்க பல்லில்லாத மண்டையோடு என்று இங்கே கூறப்படுகின்றது. முந்தைய பாடலில், அண்ணாமலையினைத் தொழுவார், தவம் மற்றும் ஞானம் அடையப் பெறுவார்கள் என்று கூறிய அப்பர் பிரான், இந்த பாடலில் அத்தகைய தவத்தின் பயனாகிய நல்ல நன்மைகளை பெறுவார்கள் என்று கூறுகின்றார். இம்மைக்கு உரிய நன்மைகளை விளைவிக்கும் நல்வினைகள் என்றும் பிறவாமைக்கு ஏதுவாகிய பற்றற நிற்கும் தன்மையும், நல்லன என்ற சொல் மூலம் குறிக்கப் படுகின்றன. பற்கள் உதிர்ந்த, தசைகள் உலர்ந்த மண்டையோட்டினைத் தனது கையில் பாத்திரமாக ஏந்தி, தாருகாவனம் சென்ற பிச்சைப் பெருமான், அங்கே பல இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ள பெண்டிர்களிடம் பிச்சை ஏற்றதுமன்றி, தனது அழகால் அவர்களது உள்ளங்களையும் கவர்ந்தார். அத்தகைய அழகு வாய்ந்த பெருமான், அடியார்களின் அல்லல்களையும் தீர்ப்பவராவார். அவர் விரும்பி உறையும் இடமாகிய, அண்ணாமலையைத் தொழுதால், நமக்கு பல நன்மைகள் வந்தடையும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பல் இல் ஓடு கையேந்திப் பல இலம்
சென்று உணங்கல் கவர்வார் அவர்
அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கை தொழ
நல்லவாயின நம்மை அடையுமே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.6.3) அப்பர் பிரான், பெருமானை, அகம் பலி தேரும் குழகனார் என்று குறிப்பிடுகின்றார். விண்ட=கிள்ளி எறியப்பட்ட பிரமனின் தலை; வாணர் வாழ்நர் என்ற சொல்லின் மருவு. அண்டம் என்பதற்கு மேலுலகம் என்று இங்கே பொருள் கொண்டு தேவர்களுக்கு அருளும் இறைவன் என்று புரிந்து கொள்ளவேண்டும். பிரமனின் ஐந்து தலைகளிலிருந்து கிள்ளப் பட்டதும், தசை நரம்பு ஆகியவை உலர்ந்து வெண்மை நிறத்துடன் காட்சி அளிப்பதும் ஆகிய தலையினை தான் உணவு உட்கொள்ளும் கலனாக ஏற்றுக் கொண்டு வீடுகள் தோறும் பலியேற்கச் செல்லும் இறைவன் மிகவும் அழகியவராக காணப் படுகின்றார். அவர், தேய்ந்து துண்டிக்கப்பட்டது போன்று காணப்படும் பிறையினைத் தனது சடையில் அணிந்தவர்; மேலுலகத்தில் வாழ்கின்ற தேவர்களுக்கும் அருள் புரியும் இறைவனாக விளங்கும் அவர் திருவாரூரர் ஆவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் நான்காவது பாடலிலும் பெருமானை கடைகள் தோறும் திரியும் எம் கண்ணுதல் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.
விண்ட வெண் தலையே கலனாகவே
கொண்டு அகம் பலி தேரும் குழகனார்
துண்ட வெண்பிறை வைத்த இறையவர்
அண்ட வாணருக்கு அருளும் ஆரூரரே
திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.9.6) அப்பர் பிரான், பஞ்சின் மெல்லடிப் பாவையர் கொணர்ந்த பலி என்று கூறுகின்றார். இந்த பாடலில் பலி இடுவதற்காக வந்த பெண்மணி ஒருத்தி, பெருமானின் இடுப்பினில் கச்சையாக இறுகக் கட்டப்பட்டுள்ள ஐந்து தலை பாம்பினைக் கண்டு அச்சத்துடன் நிற்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடலில் குறிப்பிடப்படும் பெண்மணி தாருகவனத்தின் முனி பத்தினியரில் ஒருத்தி என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதாக கருதுகின்றனர். இந்த பாடலில் கூறப்படும் ஐந்தலை பாம்பு, குண்டலினி எனப்படும் சுத்த மாயை என்றும், சிவம், சக்தி, சாதாக்கியம், ஈசுவரம், சுத்த வித்தை எனப்படும் ஐந்து தத்துவங்கள் பாம்பின் ஐந்து தலைகள் என்று உணர்த்தும் உரை ஆசிரியர்கள், சுத்தமாயையினை கொண்டுள்ள தலைவன் என்று பெருமானை, அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்று விளக்கம் அளிக்கின்றனர். எஞ்சியுள்ள 31 தத்துவங்களும் அசுத்த மாயை என்று ஒரு தொகுப்பாக குறிப்பிடப் படுகின்றன. இந்த தத்துவங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளவன் இறைவன் என்பதை பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன. இவ்வாறு இரண்டு வகையான மாயைகளுக்கும் ஆதாரமாகவும் தலைவனாகவும் பெருமான் உள்ள தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. தங்களது உடல் உறக்கத்தில் ஆழ்ந்தாலும், அறிவு விழித்திருந்து, வஞ்சனை ஏதுமின்றி தனது அடியார்களால் நினைக்கப் பட்டு புகழப்படுபவன் திருமறைக்காடு தலத்தில் உறையும் பெருமான். இந்த பெருமானை அடியவர்கள் வலம் வந்து வணங்குகின்றார்கள். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமான், தாருகாவனத்திற்கு பலியேற்கச் சென்ற போது, பஞ்சினைப் போன்று மென்மையான பாதங்களை உடைய முனிபத்தினி ஒருத்தி தான் கொண்டுவந்த பிச்சையினை இடமுடியாத வண்ணம் அச்சம் கொள்ளுமாறு ஐந்து தலை பாம்பினை சிவபெருமான் அணிந்தது ஏனோ என்ற கேள்வி பெருமானை நோக்கி கேட்கப் படுகின்றது.
துஞ்சும் போதும் துயில் இன்றி ஏத்துவார்
வஞ்சு இன்றி வலம் கொள் மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலி கொணர்ந்து
அஞ்சி நிற்பது ஐந்தலை நாகமே
செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (5.36.4) அப்பர் பிரான் இருவராக, பலி ஏற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். கீறு=கிழித்த; அருவராதது=அருவருக்கத் தகாதது; இருவராய்= சக்தியும் சிவமுமாக இருவராய்; கடை=வீட்டு வாயில்; உழலுதல்=திரிதல். இந்த பாடலில் வெறுக்கத் தகாததோர் வெண்தலை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபெருமானுடன் தொடர்பு கொண்ட காரணத்தினால், விலை மதிப்பில்லாத தன்மையை அந்த மண்டையோடு பெறுகின்றது. மேலும் உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை அந்த மண்டையோட்டில் இட்டு உய்வினை அடைவதற்கு உதவுதலால், நாம் அந்த மண்டையோட்டினை மற்ற மண்டையோடு போன்றது என்று கருதி வெறுக்கக் கூடாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து, பெருமான் மண்டையோட்டினை ஏந்தி திரியும் நோக்கத்தை உணர்ந்து கொண்டு, நமது மூன்று வகையான மலங்களையும் அவரது உண்கலத்தில் இட்டு நாம் உய்வினை அடையவேண்டும் என்பதே ஆகும்.
அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து
இருவராய் இடுவார் கடை தேடுவார்
தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார்
ஒருவர் தாம் பல பேருளர் காண்மினே
தாருகவனத்து நிகழ்ச்சியை மீண்டும்மீண்டும் நினைத்துப் பார்க்கும் அப்பர் பிரான், தன்னை பெருமான் பால் காதல் கொண்ட தலைவியின் தாயாக உருவகப் படுத்திக் கொண்டு, பெருமானின் செய்கை நியாயமானதா என்பதை கேள்வியாக கேட்கும் பாடல் (5.45.2) சீர்காழி தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடலாகும். காதலனை அடைய முடியாத ஏக்கத்தில் தலைவி உடல் இளைப்பதாகவும், அவ்வாறு உடல் இளைத்த தலைவியின் கைகளிலிருந்து அவளது வளையல்கள் கழன்று விழுவதாகவும் கூறுவது சங்க இலக்கியங்களில் காணப்படும் நயம். இந்த நிலைக்கு காரணமான தலைவனை வளையல்களை கொண்டவன் என்று கூறுவதும் சங்க இலக்கிய மரபு. அந்த மரபு இங்கே பின்பற்றப்பட்டு, தனது பெண்ணின் வளையல்களைக் கொண்டவன் சிவபெருமான்என்று அப்பர் நாயகியின் தாய் குற்றம் சாட்டுகின்றாள். தனது மகள் தனது பேச்சினை ஏற்காத நிலையில், அந்த நிலைக்கு அவளை மாற்றிய அவளது காதலன் மீது தாயின் கோபம் பாய்வது இயற்கை தானே. பிச்சை கேட்க வந்த இறைவன், பிச்சைப் பொருள் இடப்பட்ட பின்னர் அதனை ஏற்றுக்கொண்டு, செல்வது தானே முறை; அதனை விடுத்து பிச்சையிட்ட பெண்ணின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, அவளது வளையல்கள் கழன்று விழுமாறு அவளை வருத்துவது தகாத செயல் அல்லவா. குறைந்த ஆடைகள் அணிந்தவராய் தனது இல்லத்தின் வாயிலுக்கு வந்த பெருமான் பலி இடுக என்றலும், அவர் மீது பரிவு கொண்டு எனது மகள் அவருக்கு பிச்சை அளித்தாள்; பிச்சை அளித்த பெண், தன் மேல் விருப்பம் கொள்ளுமாறு செய்து, பின்னர் அவளை ஏங்க வைத்து, அவள் ஏக்கத்தினால் உடலிளைத்து தனது வளையல்கள் கழன்று விடும் நிலைக்கு அவளை உட்படுத்துவது, நீர் நிறைந்த வயல்கள் கொண்ட தோணிபுரத்து இறைவரின் பெருமைக்கு தகுந்த செயல் ஆகாது என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர் வயல் தோணிபுரவர்க்குத்
தக்கது அன்று தமது பெருமைக்கே
இதே பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் (5.45.5) பலியிட்ட பெண்ணின் வளையல்களைக் கொள்வது பெருமானுக்கு தகுந்த செயலா என்ற கேள்வி கேட்கப் படுகின்றது. பெய்வளை=கைகளில் அடர்த்தியாக உள்ள வளையல்கள்: சுண்ணம்=திருநீறு: வளை கொள்வது பற்றி இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறிய அப்பர் பிரான், மறுபடியும், சிவபெருமானுடன் இணையாத ஏக்கத்தில், அப்பர் நாயகியின் வளைகள் கழன்று விழுவதை, சிவபெருமான் வளைகள் கவர்ந்து கொண்டார் என்று அவர் மீது ஏற்றிச் சொல்வதை நாம் காணலாம். துறவிக் கோலத்தில் வந்து பிச்சை ஏற்காமல், வேறு விதமாக வந்திருந்தால் ஒருகால் தனது பெண், பெண்ணுக்குரிய அடக்கத்துடன் வீட்டினில் உள்ளே இருந்திருப்பாளோ என்ற எண்ணம் தாய்க்குத் தோன்றுகின்றது. அதனால் தான் இங்கே அப்பர் நாயகியின் தாய், பெருமான் பிச்சை ஏற்று வந்த கோலத்தினை குறிப்பிட்டு, பெருமானிடம் குற்றம் காண்கின்றாள். ஆடம்பரமான ஆடைகளைத் துறந்து திருநீறு உடல் முழுவதும் பூசி, துறவி போன்று காட்சி அளிக்கும் ஒருவர், பிச்சையிட்ட பெண்மணியின் உள்ளத்தைக் கவர்வது, அவர் பூண்டுள்ள துறவிக் கோலத்திற்கு இழுக்கினைத் தேடித்தரும் அல்லவா. சிவபெருமான் தனது மகளின் வளையல்களை கவர்ந்தது அவரது தகுதிக்கு, பெருமைக்கு பொருத்தமான செயல் அல்ல என்று இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறிய தாய், இந்த பாடலிலும் அவ்வாறே கூறுகின்றாள். தாயின் உணர்வு மிகவும் அழகாக நமக்கு எடுத்து உரைக்கப்படும் நயமான பாடல். இனிமையான இராகம் போன்ற மொழியினைக் கொண்ட எனது பெண், எங்களது இல்லத்து வாயிலில் பிச்சை கேட்டு வந்த பெருமானுக்கு பிச்சை இட்டாள்: அந்த பெண்ணை, தனது அழகால் மயக்கிய சிவபெருமான், அவளை பிரிவுத் துயரில் ஆழ்த்தி அவளது வளையல்கள் கழலுமாறு செய்தான்; இத்ததைய செயல், திருநீற்றினால் அபிஷேகம் செய்யப்படுவதை மிகவும் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும், தோணிபுரத்து அண்ணலுக்கு, பெருமை சேர்க்கும் செயலாக கருதப்படாது. எனவே சிவபெருமான், எனது மகளின் காதலை ஏற்றுக்கொண்டு அவளது துயரத்தினைக் களைய வேண்டும் என்று தாயின் கூற்றாக அமைந்த அகத்துறைப் பாடல்.
பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இப்
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ணம் ஆடிய தோணிபுரத்து இறை
அண்ணலாருக்குச் சால அழகிதே
சித்தக் குறுந்தொகை என்று அழைக்கப் படும் பதிகத்தின் பாடலில் (5.97.14) அப்பர் பிரான், பெருமானை, பல இல்லங்கள் சென்று பலி தேர்பவன் என்று குறிப்பிடுகின்றார். அக்கு=சங்குமணி;; எலும்பு என்ற பொருளும் பொருந்தும்; நீர்கள் என்று இழிவுக் குறிப்பு தோன்ற கள் விகுதி சேர்க்கப் பட்டுள்ளது. ஆயுத எழுத்தாகிய ஃ என்பதை முதல் எழுத்தாக கொள்ள முடியாது என்பதால், அந்த எழுத்தினை உணர்த்தும் சொல்லினை நயமாக அப்பர் பிரான் இங்கே பயன்படுத்தியுள்ளார். ஆத்திச்சூடியிலும் அஃகம் சுருக்கேல் என்று கூறப்படுகின்றது. அஃகம் என்றால் எடை மற்றும் அளவு என்று பொருள். வணிகர்களுக்கு ஔவை கூறும் அறிவுரை, (எடையையும் அளவினையும் குறைக்காமல் வாணிபம் செய்ய வேண்டும்) இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் பல பாடல்களில் (நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில்) பெருமானின் பண்புகளையோ தன்மையையோ செயல்களையோ ஏளனம் செய்யாது தேவர்கள் பெருமானை போற்றுவதை அப்பர் பிரான் குறிப்பிட்டார். தேவர்கள் பெருமானின் தன்மையை சரியாக புரிந்து கொண்டது போன்று நாமும் புரிந்து கொண்டு, அவனை ஏளனம் செய்யாமல் வணங்க வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அதற்கு மாறாக ஏளனம் செய்தால், நாம் நரகத்தில் தள்ளப் படுவோம் என்ற எச்சரிக்கையும் இங்கே விடுக்கப் படுகின்றது. எலும்பு மாலையை பூண்டவனாக ஆமை ஓட்டினை அணிந்தவனாக. கையினில் தீச்சுடரினை ஏந்தியவனாக, பல இல்லங்கள் சென்று பிச்சை ஏற்பவனாக இருக்கும் பெருமானை, அவனது தன்மையை புரிந்து கொள்ளாமல் நீங்கள் ஏளனம் செய்து சிரித்தால் நீங்கள் நரகம் புகுவது நிச்சயம். எனவே நீங்கள், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றியவனும் கூட்டமாக தேவர்களால் தொழப்படுபவனும் ஆகிய இறைவனைப் பழிப்பதை ஒழிப்பீர்களாக. தேவர்களை பின்பற்றி, ஏளனத்தை தவிர்த்து, இறைவனின் செய்கைகள் உணர்த்தும் பின்னணியையும் பெருமானின் பெருமைகளையும் ஒழுங்காக புரிந்து கொண்டு, அவனைப் பணிந்து வணங்கி வழிபடுவீர்களாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல்
புக்கு பல் பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவரால் தொழுவானையே
இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (5.97.6) அப்பர் பிரான் பெருமான் வெண்டலை ஏந்தி பிச்சை ஏற்பதற்காக பெருமான் பல இல்லம் புகுகின்றார் என்று கூறுகின்றார். உச்சி=முடி மீது; ஊன் அறாத=பச்சைத் தசை நீங்காத; தங்களுக்கு இடர் வந்த பல தருணங்களில் தேவர்கள் பெருமானே எங்களது அச்சத்தை தீர்த்து அருள் புரிவாய் என்று வேண்டியதை அப்பர் பிரான் இங்கே நினைவு கூர்கின்றார். ஆலகாலம் விடம் பொங்கி வந்த போது, சூரபத்மனால் துன்பங்கள் அடைந்த போது, திரிபுரத்து அரக்கர்களின் ஆற்றலுக்கு பயந்த போது, என்று பல தருணங்கள் இருந்ததை புராணங்கள் உணர்த்துகின்றன. தனது தலையின் உச்சியில் தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் இருந்த சந்திரனை அணிந்ததும், தசைகள் விலக்கப் படாது பசுமைத் தன்மை நீங்காத மண்டை ஓட்டினை கையில் ஏந்தியவாறு, பல இல்லங்களுக்கு பிச்சை ஏற்பதற்காக பெருமான் சென்றதும் அவனது இயலாமையால் அல்ல என்பதை புரிந்து கொண்ட வானவர்கள், வல்லமை வாய்ந்த பெருமானை நோக்கி தங்களது அச்சத்தை தீர்த்து அருள வேண்டும் என்று அவனைப் புகலடைகின்றனர். தேவர்களைப் போன்று நாமும், இறைவனின் பெருமையினை புரிந்து கொண்டு அவனை வணங்கி வழிபடவேண்டும் என்பதே இந்த பாடலில் கூறப்படும் அறிவுரை.
உச்சி வெண்மதி சூடிலும் ஊன் அறாத
பச்சை வெண்தலை ஏந்திப் பல இல்லம்
பிச்சையே புகும் ஆகிலும் வானவர்
அச்சம் தீர்த்து அருளாய் என்று அடைவரே.
நீறு அலைத்ததோர் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலிலும் (5.98.5) பெருமானை, பல இல்லம் தலை ஏந்திச் செல்பவர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கூறேறும்=உடலில் ஒரு கூறாக பொருந்திய; பாறு=மண்டையோடு; பால்=பக்கம்; பாலர்=ஒரு பக்கத்தில் உடையவர்; பாறு=பருந்து, கழுகு; பாறேறு=ஒட்டியிருக்கும் சதைகளை கொத்தித் தின்பதற்காக பருந்துகள் அமரும் தலை; தனது உடலின் ஒரு கூறாக பொருந்திய உமை அம்மையைத் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டுள்ளவரும்: கங்கை ஆற்றினைத் தேக்கி அடக்கிய சடையை உடையவரும்: அத்தகைய சடையின் மீது பிறைச் சந்திரனை சூடிக் கொண்டுள்ளவரும்: ஒட்டிக் கொண்டுள்ள சதைகளை கொத்தித் தின்ன வரும் பருந்துகள் அமரும் மண்டை ஓட்டினை, பிரமனின் உடலிலிருந்து கிள்ளிப் பிரிக்கப்பட்ட தலையினை தனது உண்கலனாக கையில் ஏந்திய வண்ணம் பல இல்லங்களுக்கும் பிச்சை ஏற்கச் செல்பவனும், எருதினை வாகனமாக ஏற்றவனும், எனது தந்தையும் ஆகிய இறைவனை எனது உள்ளம் கண்டு கொண்டது என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல்.
கூறேறும் உமை பாகமோர் பாலராய்
ஆறேறும் சடை மேல் பிறை சூடுவர்
பாறேறும் தலை ஏந்திப் பல இலம்
ஏறேறும் எந்தையைக் கண்டது என் உள்ளமே
காளத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.8.8) அப்பர் பிரான், சில்பலி ஏற்கின்றான் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். சில்பலி=சிறிய அளவிலான பிச்சை; ஒரே இடத்தில் அதிகமான அளவினில் பிச்சை ஏற்றால் அடுத்த பல இல்லங்களுக்குச் செல்ல முடியாது என்பதால், பலரையும் உய்விக்கும் எண்ணத்துடன், சிறிய அளவில் பலி ஏற்கின்றார் போலும். மல்லாடு=வலிமை பொருந்திய; ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் பல இல்லங்களுக்குச் செல்லும் பெருமான், ஒவ்வொரு இல்லத்திலும் சிறிய அளவிலான பிச்சையை ஏற்கின்றான். தேவர்களால் தொழப்பட்டு வேண்டி வணங்கப் படுபவனும், கையினில் வில்லினை ஏந்தி கானகத்தில் அர்ஜுனனைக் கொல்ல வந்த பன்றியின் பின்னே ஓடியவனும், வெண்மை நிறைந்த பூணூலை தனது அகலமான மார்பில் அணிந்தவனும், வலிமை மிகுந்ததும் திரண்டு காணப்படுவதும் ஆகிய தோளின் மேல் மழுவாட் படையை தாங்குபவனும், மலைமகளாகிய பார்வதி தேவியின் மணாளனாக திகழ்பவனும், பண்டைய நாளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து தென்முகக் கடவுளாக நால்வர்க்கு அறம் உரைத்தவனும் திருக்காளத்தி தலத்தில் காணப்படும் காளத்தியானும் ஆகிய இறைவன் எனது மனக் கண்களில் நிறைந்துள்ளான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
இல்லாடி சில்பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்
வில்லாடி வேடனாய் ஓடினான் காண் வெண்ணூலும் சேர்ந்த அகலத்தான் காண்
மல்லாடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள் தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழ் இருந்த காபாலி காண் காளத்தியான் அவன் என் கண்ணுளானே
புறம்பயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.13.8) அப்பர் பிரான், நிறை வளையார் பலி பெய்ய அவர்களது நிறையைக் கொண்ட பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நிரை வளையார்= கைகளில் வளையல்களை நிறைவாக அணிந்த மகளிர்; தனது அழகினால், மொழியின் இனிமையால் பல மகளிரது மனதினைக் கவர்ந்த பெருமானை பொல்லாத வேடத்தர் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பெருமான் தாருகாவனம் சென்று ஆங்கிருந்த முனிவர்களின் மனைவியர் கற்பினை அழித்த திறம் கூறப் படுகின்றது. பண்டைய நாளில். தனது கணவன் அல்லாத வேற்று ஆடவனின் அழகினை நினைத்து மயங்கினால், கற்பு நிலையிலிருந்து தவறியதாக கருதப்பட்டது. தாருகவனத்து முனிவர்களின் மனைவிகள், பிச்சை ஏற்றுக்கொள்ள வந்த பிச்சைப் பெருமானின் அழகில் மயங்கி, தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டு, தங்களது உடைகள் நழுவுவதையும் உணராதவர்களாக பெருமானின் பின்னே சென்றதை, அந்த பெண்களின் கற்பினை பெருமான் அழித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த நிகழ்ச்சி இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. நல்லாள்=நல்ல ஆட்கள்; ஓரிடத்தில் நில்லாது பல ஊர்களுக்கும், பிச்சை எடுக்கச் சென்ற பெருமான், வரிசையாக வளையல்களை தங்களது கையில் அணிந்த தாருகவனத்து மகளிர்கள் இட்ட பிச்சையை ஏற்றுக் கொண்டதும் அன்றி, தனது அழகால் அவர்களை மயக்கி அவர்களது கற்பினையும் கவர்ந்து கொண்டார்; தனது வாகனமாக கொலைத் தொழில் புரியும் காளையைக் கொண்டுள்ள பெருமான், தான் பயன்படுத்தும் கொக்கரை கொடுகொட்டி ஆகிய இசைக் கருவிகளை குடந்தை தலத்தில் விட்டுவிட்டு நல்லூர் சென்றார். குளிர்ந்த பொய்கைகளும் நல்ல ஆடவர்களையும் உடைய நல்லூர் மற்றும் நறையூர் ஆகிய தலங்களிலிருந்து நீங்காமல் இருப்பேன் என்று கூறினாலும், தன்னைக் காணும் மகளிரின் கருத்தைக் கவரும் வண்ணம் அழகாக விளங்கிய பொல்லாத வேடத்தை உடைய பெருமான், மேற்கூறிய தலங்களில் தங்காமல், பூதங்கள் தன்னை பின்தொடர்ந்து சூழ்ந்து வர புறம்பயம் தனது ஊர் என்று சொல்லிக் கொண்டு ஆங்கே சென்று விட்டார். அவ்வாறு புறம்பயம் சென்ற பெருமான் என்னுடைய உள்ளத்தையும் கவர்ந்து சென்று விட்டார் என்று அப்பர் நாயகி சொல்வதாக அமைந்த பாடல்.
நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி நிரைவளையார் பலி பெய்ய நிறையும் கொண்டு
கொல்லேறும் கொக்கரையும் கொடுகொட்டியும் குடமூக்கில் அங்கொழியக் குளிர் தண் பொய்கை
நல்லாளை நல்லூரே தவிரேன் என்று நறையூரில் தாமும் தவிர்வார் போலப்
பொல்லாத வேடத்தர் பூதம் சூழப் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே
இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.17.7) அப்பர் பிரான், இல்லம் தோறும் பிச்சை கொள்வதற்காக பெருமான் செல்கின்றார் என்று கூறுகின்றார். இந்த பாடலில் அப்பர் பிரான் இறைவனை பச்சை நிறம் உடையர் என்று குறிப்பிடுகின்றார். பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்று பல்லாண்டு பதிகத்தில் கூறுவது போன்று அப்பர் பிரான், பெருமான் என்றும் உள்ளார் என்று இந்த பாடலில் இறைவனின் அழியாத தன்மையை குறிப்பிடுகின்றார். பல இல்லங்கள் தேடிச் சென்று பிச்சை எடுத்தாலும், பெருமை குறையாதவர் பெருமான் என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பச்சை நிறம் என்பது பிராட்டியின் நிறமாக கருதப் படுகின்றது. பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் பெருமான் ஏற்றுக் கொண்டதால், பெருமான் பச்சை நிறம் உடையர் என்று குறிப்பிடப் படுகின்றார்.
பச்சை நிறம் உடையர் பாலர் சாலப் பழையர் பிழை எலாம் நீக்கி ஆள்வர்
கச்சைக் கதநாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கையேந்தி இல்லம் தோறும்
பிச்சை கொள நுகர்வர் பெரியார் சாலப் பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர்
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம் கொண்டாரே
நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.22.11) அப்பர் பிரான் பெருமானை படிறன் என்று குறிப்பிடுகின்றார். நேடி=தேடி; படி=உருவம்; சென்றான் என்று இறந்த காலத்தை குறிப்பிடுவதால், பலிக்குச் சென்றதாக இந்த பாடலில் கூறப்படுவது, பண்டைய நாளில் தாருகவனம் சென்றதை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் என்று நாம் பொருள் கொள்ளலாம். ஆங்கே, தாருகவனத்து முனிவர்களின் மனைவிமார்களின் கற்பு நிலையை குலைக்கும் வண்ணம் அழகனாக பெருமான் அவர்களது இல்லத்திற்கு சென்றதால் படிறன் என்று குறிப்பிட்டார் போலும். கடி நாறும்=நறுமணம் கமழும் பூஞ்சோலைகள்
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற
படியானைப் பாம்புரமே காதலானைப் பாம்பு அரையோடு ஆர்த்த படிறன் தன்னைச்
செடிநாறும் வெண்டலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான் தன்னைக்
கடி நாறு பூஞ்சோலை அந்தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணலாமே
நெடிய உருவம் கொண்ட திரிவிக்ரமனாக உலகங்களை தனது திருவடியால் அளந்த திருமாலும், தாமரை மலரில் உதித்த பிரமனும், பெருமானது அடிமுடிகளை தேட முயற்சி செய்த போது, அவர்கள் காணாத வண்ணம் நீண்டு வளர்ந்த அழலுருவமாக நின்ற பெருமானை, பாம்புரம் தலத்தினை விரும்பி ஆங்கே அமர்ந்தவனை, பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கட்டியவனை, முடை நாற்றம் வீசுவதும் மற்றும் உலர்ந்ததால் வெண்மை நிறத்துடன் காட்சியளிப்பதும் ஆகிய மண்டையோட்டினை கையில் ஏந்தி பிச்சை ஏற்கும் கோலத்தில் தாருகவனம் சென்றாலும், தாருகவனத்து இல்லத்தரசிகளின் கற்பினை குலைக்கும் நோக்கத்துடன் சென்றதால் படிறனாக திகழ்ந்தவனை, திருநின்றியூர் தலத்தில் உறைபவனை, சிவபெருமானை, நறுமணம் கமழும் பூஞ்சோலைகள் நிறைந்த அழகிய நாகை நகரத்தில் உள்ள திருநாகைக் காரோணம் திருக்கோயிலில் வீற்றிருப்பதை நாம் எப்போதும் காணலாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.45.4) அப்பர் நாயகி, பெருமான் ஏதும் பேசாதவனாக தனது இல்லம் புகுந்து பலி கேட்டதாக கூறுகின்றாள். தனது இல்லத்திற்கு பலி தேடி வந்த இறைவனிடம், அடிகளே உமது ஊர் யாது என்று வினவிய தலைவிக்கு ஒற்றியூர் என்று இறைவன் பதிலளிக்க, ஒற்றியூர் என்பதை அடமானம் வைக்கப்பட்ட ஊர் என்று பொருள் கொண்டு, தனது தலைவனுக்கு சொந்தமாக ஒரு ஊர் இல்லாதது தனது தீவினை என்று வருத்தம் அடைவதை அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். தனது தீவினையால் பெருமானின் நிலையாக, தனக்கென சொந்தமாக ஊர் ஏதும் இல்லாத நிலை உள்ளது என்று கூறும் தலைவி, அந்த நிலையிலும் பெருமானைத் தனது தலைவனாக ஏற்றுக் கொள்வது பெருமான் பால் அவள் கொண்டுள்ள ஆழ்ந்த காதலை உணர்த்துகின்றது. சொந்த ஊர் என்று ஒன்று இருந்தால் பெருமானை, மீண்டும் அவர் திருவொற்றியூர் வாராத நிலையில், ஆங்கே சென்று அவரைக் காணலாம். அவ்வாறு சொந்த ஊர் ஒன்று இல்லாத நிலையில் அவரை எங்கே சென்று தேடுவது என்ற கவலையினால், இந்த நிலைக்கு தனது தீவினையே காரணம் என்று தன்னை நொந்து கொள்கின்றாள். நரை=வெண்மை நிறம்; விரையாதே=பதட்டம் கொள்ளாமல், அவசரப் படாமல்; வெண்மை நிறத்தினை உடைய காளையைத் தனது வாகனமாகக் கொண்டு, உடல் முழுவதும் திருநீறு பூசி, இடுப்பினில் பாம்பினை கச்சாக இறுகக்கட்டி, பிரமனின் மண்டையோட்டினை கையில் ஏந்தியவாறு எனது இல்லத்திற்கு வந்த பெருமான் பிச்சை வேண்டினார். பெருமான் ஏதும் பேசாது இருந்ததைக் கண்ட நான். அடிகளே உமது ஊர் யாது என்று வினவினேன். வேல் போன்ற கண்களை உடைய நங்காய் என்று என்னை அழைத்த பெருமான், நீ பதற்றம் ஏதும் அடையாமல் கேட்பாயாக என்று சொல்லி, கரையில் விடப்படும் மரக்கலங்கள் நெடுங் கடலில் சென்று தென்படும் காட்சியையும் அலைகளுடன் அடித்துக் கொண்டு வரப்படும் சங்குகள் கரையேறும் காட்சியையும் கொண்டுள்ள கடற்கரையில் உள்ள திருவொற்றியூர் தான் தமது ஊர் என்று கூறினார். இதனைக் கேட்ட நான், ஒற்றியூரை தனது ஊராக கொண்டு, தனக்கென சொந்தமாக வேறு ஊர் ஏதும் இல்லாதவராக, எனது மனதினைக் கவர்ந்த தலைவன் உள்ள நிலை, எனது தீவினையால் ஏற்பட்டது என்று அப்பர் நாயகி தனது வினையினை நொந்து கொள்வதாக அமைந்த பாடல். ஒற்றி என்ற சொல்லுக்கு அடமானம் என்று ஒரு பொருள் உள்ளது. எனவே ஒற்றியூர் என்ற சொல் அடமானம் வைக்கப் பட்ட ஊர் என்று பொருள் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
நரை ஆர்ந்த விடையேறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கையேந்தி
உரையா வந்து இல் புகுந்து பலி தான் வேண்ட எம்மடிகள் உம்மூர் தான் ஏதோ என்ன
விரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய் விடும் கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றும்
திரை மோத கரையேறிச் சங்கம் ஊரும் திருவொற்றியூர் என்றார் தீயவாறே
ஒவ்வொரு வீட்டு வாயிலின் முன்னே நின்ற வண்ணம் பெருமான் பிச்சை ஏற்றார் என்று திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.51.5) அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கலிக்கச்சி=ஆரவாரம் மிகுந்த; கடை=இல்லங்களின் வாசல்; தேரும்=நாடிச் செல்லும்; கங்காளர்=பிரளய முடிவினில் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் உயிரற்ற உடல்களைத் தனது தோளின் மீது போட்டுக் கொண்ட பெருமான்; தார்=மாலை; பெருமான் எப்போதும் வெற்றியையே கண்டமையால், வெல் கொடியார் என்று அழைக்கின்றார்.
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலமே நடமாடுவார்
உடை சூழ்ந்த புலித் தோலர் கலிக்கச்சி மேற்றளியுளார் குளிர் சோலை ஏகம்பத்தார்
கடை சூழ்ந்த பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழுமலர்த் தார்க் குழலியோடும்
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே
வெண்ணி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.59.5) அப்பர் பிரான், பெருமானை, கடை தோறும் பலி கொள்பவர் என்று குறிப்பிடுகின்றார்.ஐம்பூதங்களின் குணங்களாய் பெருமான் இருக்கும் நிலை குறித்து அப்பர் பிரான் கூறுவது நமக்கு திருவாசகம் திருவண்டப் பகுதி அகவலின் வரிகளை நினைவூட்டுகின்றது. தீயினில் வெப்பத்தையும், ஆகாயத்தில் கலக்கும் தன்மையையும், காற்றினில் அசையும் தன்மையையும், நீரினில் குளிர்ச்சியையும், நிலத்தில் திண்மையையும் வைத்தவன் சிவபெருமான் என்று கூறுவது இங்கே ஒப்பு நோக்கத் தக்கது. ஒலி என்பது ஆகாயத்திற்கு உரிய குணமாகும். காற்று தொடு உணர்வு (ஊறு) மற்றும் ஒலி ஆகிய இரண்டு பண்புகளை உடையது. அடுத்த பூதமாகிய தீயின் குணங்கள், உருவம், தொடு உணர்வு மற்றும் ஒலியாகும். நீர், சுவை, ஊறு, உருவம் மற்றும் ஒலி ஆகிய நான்கு பண்புகளை உடையது. நிலமாகிய ஐந்தாவது பூதம், வாசனை (நாற்றம்), சுவை, ஊறு, உருவம் மற்றும் ஒலி ஆகிய ஐந்து பண்புகளை உடையது ஆகும். இலங்கு=இயைந்து இருக்கும் நிலை; கால்=காற்று: கடை=வீட்டு வாயில்; இயைந்து என்ற சொல் நீர், தீ, காற்று, மற்றொரு பூதமாகிய ஆகாயம் ஆகிய அனைத்துக்கும் பொருந்தும் என்பதால், மண் என்ற சொல்லுக்கு முன்னே வைத்து, அனைத்து பூதங்களுடன் இணைத்து பொருள் கொள்ளவேண்டும். ஐந்து பூதங்கள் மற்றும் சூரியன் சந்திரன் ஆன்மா ஆகிய எட்டு பொருட்களுடன் இறைவன் இணைந்து இருக்கும் தன்மை அட்டமூர்த்தி என்ற தொடரால் பல தேவார பதிகங்களில் குறிக்கப் படுகின்றது. அனைத்து உலகங்களையும் உலகப் பொருட்களையும் தோற்றுவித்து, உலகத்துச் செல்வங்களுக்கு உண்மையான உரிமையாளனாக இருந்தாலும், ஊரூராக சென்று பிச்சை எடுக்கும் பெருமானின் செயல், விகிர்தர் என்று பெருமானை அப்பர் பிரான் அழைக்கத் தூண்டியது போலும்.
மண்ணிலங்கு நீர் அனல் கால் வானுமாகி மற்றவற்றின் குணம் எலாமாய் நின்றாரும்
பண்ணிலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்
கண்ணிலங்கு நுதலாரும் கபாலம் ஏந்திக் கடைதோறும் பலி கொள்ளும் காட்சியாரும்
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணியாரும் வெண்ணி அமர்ந்துறைகின்ற விகிர்தனாரே
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களுடன் இணைந்து, அந்த ஐந்து பூதங்களின் பண்புகளாக இருப்பவன் பெருமான்; பண்ணுடன் இணைந்த பாடல்கள் இசைக்கப்பட அத்தகைய பாடல்களுக்கு ஏற்ப ஆடப்படும் கூத்து நிகழ்கின்ற, பருப்பதம் மற்றும் பாசூர் ஆகிய தலங்களில் நிலையாக உறைபவன் சிவபெருமான். மூன்றாவது கண் இணைந்த நெற்றியினைக் கொண்டுள்ள பெருமான், தனது கையினில் கபாலம் ஏந்தி இல்லங்கள் தோறும் சென்று பலி ஏற்கின்றான். வானில் உலவும் பிறைச் சந்திரனைத் தனது தலையில் மாலையாக அணிந்துள்ள பெருமான், மற்றவரிடமிருந்து மாறுபட்ட விகிர்தனாக விளங்கும் பெருமான், வெண்ணி என்று அழைக்கப் படும் தலத்தில் உறைகின்றான் என்பதே மேற்கண்ட பாடலின் பொழிப்புரை.
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.65.7) தனது வறுமை காரணமாக பெருமான் பல இல்லங்கள் சென்று பலி ஏற்கின்றான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பிச்சைப் பெருமானின் கோலத்திற்கு ஏற்ப வறியவனாக சென்ற பெருமான், உண்மையில் வறியவன் அல்லன், சிறந்த செல்வன் என்பதை கயிலைச் செல்வன் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் உணர்த்துகின்றார். உழலும்=திரியும்; தத்துவன்=மேம்பட்டவன்; நல்குரவு=வறுமை; சைவத்தின் ஆறு உட்பிரிவுகள், பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமம், பைரவம், சைவம் இந்த ஆறும் வெவ்வேறு சமயங்கள் போல் தோன்றினாலும், இந்த ஆறு சமயங்களும் பெருமானையே தலைவனாக ஏற்றுக் கொள்கின்றன. தனக்குத் தானே நிகரான உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் சேர்த்தவனும், ஆரவாரத்துடன் கீழே இறங்கி வந்த கங்கையைத் தனது சடையில் அடக்கிய பின்னர் பகீரதன் வேண்டிய போது மிகுந்த விருப்பத்துடன் சிறிது சிறிதாக வெளியேற்றியவனும், வடக்கில் இமயமலையில் உள்ள கயிலை மலையில் உறையும் செல்வனும், அளவற்ற செல்வங்களை உடையவனாய் இருந்தும் வறியவன் போன்று வீடுகள் தோறும் பிச்சைக்கு அலைபவனும், ஆறு வகையான சைவ சமயங்களுக்கும் தலைவனாக இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் மேம்பட்டவனாக இருப்பவனும், உத்தமனாக இருப்பவனும். தனக்குத் தானே நிகரான தலைவனும் ஆகிய பெருமான் அழகு வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கச்சி மாநகரத்தில் உறைகின்ற ஏகம்பன் ஆவான். அவனே எனது எண்ணத்தில் நிறைந்து நிற்கின்றான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
உமையவளை ஒரு பாகம் சேர்த்தினான் காண் உகந்து ஒலிநீர்க் கங்கை சடை ஒழுக்கினான் காண்
இமய வடகயிலைச் செல்வன் தான் காண் இல் பலிக்குச் சென்று உழலும் நல்கூர்ந்தான் காண்
சமயம் அவை ஆறினுக்குத் தலைவன் தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானேயாய
இமையவன் காண் எழிலாரும் பொழிலார் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே
முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.68.6) அப்பர் பிரான் கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடைதோறும் இடு பிச்சைக்குஎன்று செல்லும் பெருமான் என குறிப்பிடுகின்றார். கழல் என்று பெருமான் அணியும் வீரக்கழலும் கைவளை என்று பிராட்டி அணியும் வளையல்களும்குறிப்பிடப்பட்டு, மாதொருபாகனாக பெருமான் பலிக்கு சென்ற கோலம் இங்கே உணர்த்தப் படுகின்றது. விகிர்தன்=மற்றவர்களிடமிருந்து மாறுபட்டவன்: கடை=கடைவாயில், வாயிற்படி; இந்த பாடலில் ஆகாயத்தின் பண்பு ஒலி என்பதை குறிப்பிடும் வண்ணம் விண்ணொலி என்று அப்பர் பிரான்குறிப்பிடுகின்றார். ஆகாயத்தின் பண்பு ஒலி எனப்படும் குணம் ஒன்று தான். காற்று ஒலி மற்றும் ஊறு ஆகிய இரண்டு பண்புகளையும், தீ ஒலி, ஊறு மற்றும்உருவம் ஆகிய மூன்று பண்புகளையும், தண்ணீர் ஒலி ஊறு உருவம் மற்றும் சுவை ஆகிய நான்கு பண்புகளையும் நிலம் ஒலி ஊறு உருவம் சுவை மற்றும்வாசனை ஆகிய ஐந்து பண்புகளையும் உடைத்ததாக விளங்குகின்றன. புகழாகிய ஒளியை உடையவனும், திரிபுரங்களையும் எரித்த தூயவனும், பொன்நிறம் பொதிந்த மேனியினை உடையவனும், அனைத்து உயிர்களுக்கும் பழமையானவனும், ஆகாயத்தின் பண்பாகிய ஒலியாகவும் திருவிழாக் காலங்களில்எழும் ஒலியாகவும் இருப்பவனும், திருவெண்காடு தலத்தில் உறையும் விகிர்தனும், காலில் அணிந்துள்ள வீரக் கழல்களின் ஒலியும் கையில் அணிந்துள்ளவளையல்களின் ஒலியும் கலந்து ஒலிக்க பல இல்லங்களுக்கும் பிச்சை கேட்டுச் செல்பவனும், மேன்மையான ஒளியுடன் திகழ்பவனும் ஆகிய மிகவும்பழமையான முதுகுன்றம் தலத்தில் உறையும் பெருமானை, நான் அறியாமல் திகைத்திருக்கும் நிலையில் என்னை ஆழ்த்திய எனது தீவினைகள் மிகவும்கொடியன அல்லவா என்று அப்பர் பிரான், தான் சமண சமயத்தைச் சார்ந்து இருந்த நாட்களை குறிப்பிட்டு வருத்தம் தெரிவிக்கும் பாடல்.
புகழொளியை புரம் எரித்த புனிதன் தன்னைப் பொன்பொதிந்த மேனியானைப் புராணன் தன்னை
விழவொலியும் விண்ணொலியும் ஆனான் தன்னை வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக்
கழலொலியும் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக் கடைதோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும்
திகழொளியைத் திருமுதுகுன்றுடையான் தன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே
தலையாலங்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.79.7) அப்பர் பிரான், வீடுகள் தோறும் சென்று பெருமான் பலி ஏற்றார் என்று கூறுகின்றார். கடை தோறும்=வீட்டின் வாயில்கள் தோறும்; பலி=பிச்சை; முடை நாற்றம்=இறந்த உடல்களிலிருந்து எழும் நாற்றம்; முதுகாடு=சுடுகாடு; முன்னான் பின்னான் இன்னாளான் என்று மூன்று காலமுமாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இடபத்தின் மீதேறி சென்று பல வீட்டின் வாயில்கள் தோறும் நின்று பிச்சை ஏற்பவனும், அட்ட வீரட்டத் தலங்களில் நிலையாக உறைபவனும், தனது திருமேனியில் வெண்ணீறு அணிபவனும், இறந்த உடல்களிலிருந்து எழுகின்ற நாற்றம் மிகுந்த சுடுகாட்டில் நடனம் ஆடுபவனும், இறந்த காலம் எதிர்காலம் மற்றும் நிகழ் காலம் ஆகிய மூன்று காலங்களாக இருப்பவனும், புலியின் தோலை உரித்து ஆடையாக மிகுந்த மகிழ்ச்சியுடன் அணிபவனும், உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்திருக்கும் ஒப்பற்றவனும், சடைமுடியை உடையவனும், ஆகிய தலையாலங்காட்டில் உறையும் தலைவனைச் சார்ந்து வாழாமல், எனது வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக கழித்து விட்டேன் என்று தனது இளமைக் காலத்தை நினைத்து அப்பர் பிரான் வருந்தும் பாடல்.
விடை ஏறிக் கடை தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண்ணீற்றானை
முடை நாறு முதுகாட்டில் ஆடலானை முன்னானைப் பின்னானை அந்நாளானை
உடை ஆடை உரிதோலே உகந்தான் தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன் தன்னைச்
சடையானைத் தலையாலங்காடன் தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே
ஆலம்பொழில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.86.7) அப்பர் பிரான், பலரும் தன்னை இகழ்ந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் பல இல்லங்கள் சென்று தொடர்ந்து பெருமான் பிச்சை ஏற்கின்றான் என்று கூறுகின்றார். தான் சமண மதத்தில் இருந்த நாளில், தன்னைக் குறித்து கவலை கொண்ட தனது தமக்கையார் திலகவதியார் நாள்தோறும் இறைவனிடம் தனது தம்பி மனம் திருந்தி சைவ சமயத்திற்கு திரும்ப வரவேண்டும் என்று வேண்டிய காலத்தில், ஒரு நாள் சிவபெருமான் அவரது கனவில் தோன்றி, உனது தம்பி முன்னமே என்னை அடைய தவம் செய்தான், யான் அவனுக்கு சூலை நோய் கொடுத்து ஆட்கொள்வேன் என்று கூறியதை, அப்பர் பிரான், தனது தமக்கையார் தன்னிடம் கூற கேட்டிருந்தார் போலும். இதனைத் தான் இங்கே, பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்று இறைவன் தன்னை ஆட்கொள்வதற்கு முடிவு செய்ததை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார் போலும். தூய்மையே வடிவமாக உள்ள இறைவன், தூய்மையான இடத்தைத் தானே விரும்புவான். தமது மனத்தினை பெருமான் உறைவதற்கு தகுதியாக தூய்மை செய்யும் வண்ணம் பெருமான் தன்னை சோதித்தாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அவர் வாழ்வில் எதிர் கொண்ட சோதனைகள் தாம் அப்பர் பிரானை புடம் போட்ட பொன்னாக மாற்றியது என்றால் மிகையாகாது. குற்றங்கள் மிகுந்த எனது உடலில் புகுவதற்கு தீர்மானம் செய்த பெருமான், பல சோதனைகளை அளித்து என்னை சோதித்து எனது மனதினை தூய்மை செய்தவன் தூய்மையே வடிவமான பெருமான் ஆவான். எல்லோரும் தன்னை இகழ்ந்ததையும் பொருட்படுத்தாமல் அந்நாளில், பலி இடுவீர்களாக என்று தாருகாவனத்து முனிவர்களின் இல்லங்களுக்கு சென்று திரிந்தவனும், தனது புகழினையும் திருநாமத்தையும் சொல்லாத மாந்தர்களை நினையாதவனும், தொடர்ந்து தனது பொன்னான திருவடிகளைப் பேணும் அடியார்களுக்கு பரிசாக, அவனது அருளால் அன்றி வேறு எவராலும் செல்ல முடியாத முக்தி நிலைக்குத் தனது அடியார்கள் செல்லுமாறு உதவி செய்பவனும், ஆலம்பொழில் என்ற இடத்தில் உள்ள திருக்கோயிலில் உறைபவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ சிந்திப்பாயாக என்று தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பாடல்.
பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னைப் புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை
எல்லாரும் தன்னை இகழ அந்நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானைச்
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானைத் தொடர்ந்து தன் பொன்னடியே பேணுவாரைச்
செல்லாத நெறி செலுத்த வல்லான் தன்னைத் திருவாலம்பொழிலானை சிந்தி நெஞ்சே
ஆமயம் தீர்த்தென்னை என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாவது பாடலில் (6.96.2) தனக்கு பலி இடவந்த பெண்களது அன்பையும் கொண்டவர் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு மூலம், தாருகவனத்து மகளிர் பெருமான் பால் தீராத காதல் கொண்டனர் என்பதை உணர்த்துகின்றார். வரை=மலை; வரை மார்பு=மலை போன்று பரந்தும் வலிமையுடனும் காணப்படும் மார்பு; முயங்க=பொருந்த; முது கேழல்=பெரிய பன்றி; மருப்பு=விலங்கின் கொம்பு; பூண்=ஆபரணம்; சுரி சங்கு=குவிந்த முகப்பினை உடைய சங்கு; துப்புரவார்=தூய்மை நிறைந்த, ஒளிவீசும் கிரீடங்ளை தங்களது தலையில் தாங்கிய தேவர்கள் பெருமானை வழிபட்டமை இந்த பாடலில் சொல்லப் படுகின்றது. செப்பு=அழகிய கிண்ணம்; அப்பலி=பண்டைய நாளில் தாருக வனத்து முனிவர்களின் மனைவியர் அளித்த பிச்சை; பன்றியாக அவதாரம் எடுத்து, ஒளித்து வைக்கப்பட்டு இருந்த பூமியினை மீட்டுத் தனது இரண்டு கொம்புகளின் இடையிலே தாங்கி வந்த திருமாலின் கொம்புகள் மிகுந்த வலிமை வாய்ந்தாகத் தானே இருக்க வேண்டும். அரக்கனின் உதிரத்தை குடித்ததால் மிகுந்த வெறி கொண்டு திரிந்த பன்றியை அடக்கி, தான் திருமாலை வென்றதன் அடையாளமாக பன்றியின் வலிமையான கொம்பினை ஒடித்தவர் சிவபெருமான். முப்புரி நூல்=மூன்று இழைகள் கொண்ட பூணூல். மூன்று பூணூல்களை அணிந்தவராக பெருமானை திருமுறை பாடல்கள் சித்தரிக்கின்றன. முப்புரி நூல் என்று சொல்லப்படும் பூணூலைத் தனது மார்பினில் பொருத்தியவர் பெருமான்; பெரிய பன்றியாக வடிவெடுத்த திருமால் வெறியுடன் திரிந்த போது அந்த பன்றியை அடக்கிய பெருமான், அந்த பன்றியின் உடலில் முளைத்த கொம்பினை ஒடித்துத் தனது மார்பினில் ஆபரணமாக அணிந்து கொண்டவர் ஆவார். அழகிய கிண்ணம் போன்ற வடிவுடன் அமைந்த மார்பகங்களைக் கொண்டவளும் இமயமலைச் சாரலில் வளர்ந்தவளும் ஆகிய உமையன்னையைத் தனது உடலின் இடது பாகத்தில் கொண்டவர் சிவபெருமான்; சிவந்த நிறத்தில் அமைந்துள்ள தனது திருமேனியின் மேல், வெண்ணீற்றினை பூசிக் கொண்டுள்ள பெருமான் தூய்மையான சுரி சங்கினால் செய்யப்பட்ட தோட்டினை காதினில் அணிந்தவர் ஆவார்; ஒளிவீசும் மணிமுடிகளை அணிந்துள்ள தேவர்கள் ஒன்று கூடி பெருமானைத் தொழுகின்றார்கள். பிச்சை ஏற்கச் சென்ற இடத்தில், தனக்கு பிச்சையிட வந்த தாருகவனத்து இல்லத்தரசிகளின் அன்பையும் கவர்ந்த பெருமான், அடியேனைத் தன்னுடைய அடிமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்று மிகுந்த பெருமையுடன் அப்பர் பிரான் குறிப்பிடும் பதிகம்.
முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார் முதுகேழல் முளை மருப்பும் கொண்டார் பூணாச்
செப்புருவ முலை மலையாள் பாகம் கொண்டார் செம்மேனி வெண்ணீறு திகழக்கொண்டார்
துப்புரவார் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார்
அப்பலி கொண்டு ஆயிழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆளுடைய அடிகளாரே
இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் (6.96.6) அப்பர் பிரான், வாரடங்கு வன முலையார் மையலாகி வந்திட்ட பலியும் கொண்டார் வளையும் கொண்டார் என்று கூறுகின்றார். பளிங்கு=ஈசான முகத்தின் நிறம் என்றும் திருநீற்றின் வெண்மை என்றும் கூறலாம். ஈசனின் ஐந்து முகங்களும் ஐந்து நிறத்தில் அமைந்திருப்பதாக சொல்வார்கள்; கிழக்கு நோக்கி உள்ள முகமாகிய தத்புருஷம் பொன்னின் நிறத்திலும், தெற்கு முகமாக உள்ள அகோரம் கருமை நிறத்திலும் மேற்கு நோக்கிய சத்யோஜாதம் வெண்மை நிறத்திலும் வடக்கு நோக்கி உள்ள வாமதேவம் சிகப்பு நிறத்திலும் மேல்நோக்கி காணப்படும் ஈசான முகம் பளிங்கு நிறத்திலும் இருப்பதாக கூறுகின்றனர். இதனையே நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் என்று மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தில் கூறுகின்றார். பாரிடங்கள்=பூத கணங்கள்; கருவி=இசைக்கருவி; ஒற்றியூர்=அடமானம் வைக்கப்பட்ட ஊர்; தன்னைச் சூழந்துள்ள பூத கணங்கள் பல வகையான இசைக்கருவிகளை தொடர்ந்து இசைக்க, செம்பவள திருமேனியில் பளிங்கு நிறத்தில் உள்ள திருநீற்றினை பூசிய பெருமான், கங்கை நங்கை அடங்கியுள்ள சடைமுடியில் பிறைச் சந்திரனைக் கொண்டுள்ளார். தனது அழகான மிடற்றினில், நீல நிறம் மிளிருமாறு நஞ்சினைத் தேக்கியுள்ள பெருமானார், தனக்கு பிச்சையிட்ட தாருகவனத்து இல்லத்தரசிகள், கச்சையால் இழுத்து கட்டப்பட்ட மார்பகங்களை உடையவர்களாய் பலி கொண்டு வந்து இட்ட போது, தனது அழகினால் அவர்களது மனதினைக் கவர்ந்ததுமன்றி, தன் மீது அவர்கள் கொண்டிருந்த காதலால் உடல் இளைத்து அவர்களது வளையல்கள் கழன்று விழுமாறு செய்தார்; பல தலங்களைத் தனது ஊராக கொண்டுள்ள பெருமான், அடமானம் வைக்கப்பட்ட ஊர் என்ற பொருளில் அமைந்த திருவொற்றியூரையும் தனது ஊராகக் கொண்டு ஆட்சி செய்கின்றார். அவர் தாம் எனது உடலுக்கு உற்ற சூலை நோயினைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவராவார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை. இதே பதிகத்தின் பத்தாவது பாடலிலும் கடை முன்றில் பலி கொண்டார் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். முன்றில்=முற்றம்; கடை=வீட்டு வாயில்;
பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார்
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவும் கொண்டார் நீலநிறம் கோல நிறை மிடற்றில்கொண்டார்
வாரடங்கு வன முலையார் மையலாகி வந்திட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார்
ஊரடங்க வொற்றி நகர் பற்றிக்கொண்டார் உடலுறுநோய் தீர்த்தென்னை ஆட்கொண்டாரே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.6.6) சுந்தரர், பிராட்டியுடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக குறிப்பிடுகின்றார். கூறு பட்ட கொடியும் நீரும் என்று சுந்தரர் குறிப்பிடுவதால், மாதொரு பாகன் கோலத்துடன் பெருமான் பலியேற்கச் சென்றதாக உணர்த்துகின்றார் என்பதை நாம்புரிந்து கொள்ள முடிகின்றது. தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானை காட்டு யானை என்பதை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். மாறுபட்ட=பெருமானை எதிர்த்து வந்த தன்மை சொல்லப் படுகின்றது. தன்னை எதிர்த்து வந்த மதயானையைக் கொன்ற பின்னர் அந்த யானையின்தோலைப் போர்த்துக் கொண்ட போதிலும் தனது உடலுக்கு எந்த விதமான கேடும் அடையாதிருந்த ஆற்றலை உடைய பெருமானின் தன்மைக்கு, பிறர்இடுகின்ற பிச்சையை நாடி அவர்களது இல்லத்திற்கு செல்லுதல், பெருமானின் பெருமைக்கு தகுந்த செயல் அல்ல என்று கூறுகின்றார்.
மாறுபட்ட வனத்தகத்தின் மருவ வந்த வன்களிற்றைப்
பீறி இட்டமாகப் போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம் தோறும்
கூறு பட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றி அடர ஏறி
வேறுபட்டுத் திரிவதென்னே வேலை சூழ் வெண்காடனீரே
அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.9.3), தனது கையில் மண்டை ஓட்டினை ஏந்தியவாறு, மகளிர் தங்களது கைகளை சாய்த்து இடுகின்ற பிச்சையை ஏற்றுக் கொள்ள திரிவது, உண்ணும் உணவினுக்கு வழியற்ற வறியவர் போலத் திரிவது, அட்ட மூர்த்திகளாக விளங்கி உலகின் அனைத்து உயிர்களையும் பொருட்களையும் இயக்கும் ஆற்றல் படைத்த பெருமானின் பெருமைக்கு தக்க செயல் அல்ல என்று சுந்தரர் கூறுகின்றார். சவிதா=சூரியன்; இயமானன்=ஆன்மா;
தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர்
சரிக்கும் பலிக்குத் தலை அங்கை ஏந்தித் தையலார் பெய்யக் கொள்வது தக்கது அன்றால்
முரிக்கும் தளிர்ச் சந்தனத்தோடு வேயும் முழங்கும் திரைக் கைகளால் வாரி மோதி
அரிக்கும் புனல் சேர் அரிசிற்றென் கரை அழகார் திருப்பத்தூர் அழகனீரே
தனது மனைவியுடன் பலி ஏற்கச் சென்றதாக சிவபெருமானை குறிப்பிடும் திருஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரானின் பாடல்கள் நமக்கு, சுந்தரரின் பைஞ்ஞீலி பதிகத்துப் பாடல் ஒன்றினை (7.36.5) நினைவூட்டுகின்றது. இந்த பதிகம் தாருகவனத்து மகளிர் கூற்றாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம் என்று கூறுவார்கள். பெருமானுக்கு பிச்சை இடுவதற்காக வந்த ஒரு பெண், பெருமானின் திருமேனியில் வெண்முத்து போன்று பிரகாசிக்கும் திருநீற்றினைக் கண்டு வியக்கின்றாள். பெருமானின் திருமேனியை உற்று நோக்கிய அவளுக்கு, பெருமானின் இடது பாகத்தில் நீண்ட கண்களோடும் காணப்படும் உமை அம்மை கண்ணில் தெரிகின்றாள். அவளுக்கு உடனே கோபம் வருகின்றது. என்ன துணிச்சல் இருந்தால், தனது உடலில் ஒரு பெண்ணினை வைத்திருக்கும் கோலத்தோடு பிச்சை கேட்க பெருமான் தனது இல்லத்திற்கு வருவார் என்று எண்ணுகின்றாள். அந்த கோபம் பாடலாக வெளிப்படுகின்றது. பெருமானே நாங்கள் உமக்கு பலியிட மாட்டோம், நீர் இந்த விடத்தை விட்டு அகன்று செல்லலாம் என்று கூறுகின்றாள். அவ்வாறு சொன்ன பின்னர் அவளுக்கு வேறு ஒரு சந்தேகம் தோன்றுகின்றது. தனது உடலில் ஒரு பெண் கொடியை கொண்டுள்ள பெருமான் சடையிலும் கங்கையை வைத்துள்ளாரோ என்பது தான் அந்த சந்தேகம். கங்கை ஆற்றினை உமது சடையில் சூடியவாறு வந்தீரோ, சொல்வீராக என்று பெருமானை வினவுகின்றாள். பெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து பெண்மணிகள், அவர் இரண்டு மனைவியருடன் இருப்பதால் கோபம் கொண்டு பிச்சை இட மாட்டோம் என்று சொன்னதாக, சுவையான கற்பனை செய்த பாடல்.
நீறு நும் திருமேனி நித்திலம் நீள் நெடுங் கண்ணினாளொடும்
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடகிலோம் பலி நடமினோ
பாறு வெண்தலை கையில் ஏந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்
ஆறு தாங்கிய சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே
பெருமான் மேலும்மேலும் அதிகமான பக்குவப்பட்ட ஆன்மாக்களிடம் பலியேற்று, அவர்களை உய்விக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஊரூராக திரிந்து பல இல்லங்களிலும் பலி தேருகின்றார் என்ற கருத்து பல திருமுறைப் பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. அவ்வாறு எதற்காக பல இடங்களிலும் திரிய வேண்டும், நான் ஒருத்தியே நுமக்கு தேவையான அளவுக்கு பலி அளிக்கின்றேன், வேறெங்கும் செல்ல வேண்டாம் என்று தாருகவனத்து பெண்மணி ஒருத்தி கூறுவதாக, சுந்தரர் அருளிய பைஞ்ஞீலி பதிகத்தின் முதல் பாடல் (7.36.1) அமைந்துள்ளது. மேலும் பெருமானே நீர் மாலையாக அணிந்து கொள்வதற்கு பாம்பு தான் கிடைத்ததா, வேறேதும் உயர்ந்த பொருள் கிடைக்கவில்லையா என்று கவலையுடன் கேட்பதாகவும் இங்கே சொல்லப் படுகின்றது.
காருலாவிய நஞ்சை உண்டிருள் கண்டர் வெண்டலை ஓடு கொண்டு
ஊருலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓரிடத்திலே கொள்ளும் நீர்
பாரெலாம் பணிந்து நும்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்
ஆரமாவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே
இந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில், பலி இடுவதற்காக வந்த பெண், பெருமானை நோக்கி, பெருமானே நீர் பலிக்கு வரும் போது உமது கையில் பாம்பு வேண்டாமே, நான் பலி இடுவதற்காக உமது அருகில் வரும்போது மூசுமூசு என்று பாம்பு சீறுவது எனக்கு அச்சத்தை உண்டாக்குகின்றது என்று கூறுவதாக அமைந்த பாடல். சிவந்த நெருப்பு போன்று கொடியதாக உள்ள விடத்தைத் தனது வாயினில் கொண்டுள்ள பாம்பு என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். மேலும் சிவந்த கண்களுடன், முழக்கம் இட்ட வண்ணம், உற்று நோக்கும் இடபமும் தனக்கு அச்சத்தை உண்டாக்குவதாக இந்த பெண்மணி கூறுகின்றாள் என்று சுந்தரர் கற்பனை செய்கின்றார்.
சிலைத்து நோக்கும் வெள்ளேறு செந்தழல் வாய பாம்பு அது மூசெனும்
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு காரகில் சண்பகம்
அழைக்கும் பூம்புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே
இந்த பதிகத்தின் மூன்றாவது பாடலில் (7.36.3) மற்றொரு தாருகவனத்துப் பெண்மணி, பெருமானே உமது அழகுக்கு பொருத்தமான உடை அணிந்து வாராமல் கோவண ஆடையுடன் வருகின்ற நீர் பித்தரோ என்று கேள்வி கேட்பதாக சுந்தரர் கூறுகின்றார். தூய்மையாக ஒளிவீசும் கண்களும், தூய்மையான திருவாயும் திருமேனியும் கொண்டுள்ள பெருமான், எதற்காக பேய்கள் புடை சூழ நடனமாடிக் கொண்டு வர வேண்டும் என்ற கேள்வியும் இங்கே கேட்கப்படுகின்றது. தூயவர் என்ற சொல்லுக்கு அழகியர் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பெருமானது அழகுக்கு பொருத்தமாக அவர் அணியும் உடையும், அவருடன் வருவோரும் இருப்பது தானே பொருத்தம் என்பதே அந்த பெண்மணியின் கருத்தாக உள்ளது என்று சுந்தரர் கூறுகின்றார்.
தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில்
பேயோடு ஆடலைத் தவிரும் நீர் ஒரு பித்தரோ எம் பிரானிரே
பாயும் நீர்க்கு இடம் கார் கமலமும் பைந்தண் மாதவி புன்னையும்
ஆய பைம்பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே
இதே பதிகத்தின் நான்காவது பாடலில், பெருமான் தனது கையில் வைத்திருக்கும் பாம்பு தன்னை சங்கடத்தில் ஆழ்த்துகின்றது என்று மற்றொரு பெண் கூறுவதாக அமைந்துள்ளது. பெருமான் தனது கையினில் அணிந்துள்ள பாம்பு படம் எடுத்து ஆடுவதால், அவரை நெருங்கி பலி இடுவதற்கு தனக்கு அச்சமாக உள்ளது என்றும், அதே சமயத்தில் செந்தமிழில் வல்லவராக இருக்கும் பெருமானுக்கு பலி இடாமல் செல்வதற்கு மனது ஒப்பவில்லை என்றும் கூறும் பெண் தனது சங்கடத்திற்கான காரணத்தை இந்த பாடலில் தெரிவிக்கின்றாள். ஆடியும் பாடியும் பிச்சை கேட்டு வந்த பெருமானின் அழகில் மயங்கிய பெண்மணி, நீர் இயல் இசை நாடகம் ஆகிய மூன்று தமிழிலும் வல்லவரோ, எங்கள் மனதினில் கொள்ளை கொண்டு விட்டீரே என்று கேட்பதாக அமைந்த பாடல். பெருமான் மட்டுமா ஆடுகின்றார், அவருடன் சேர்ந்து அவரது கையில் இருக்கும் பாம்பும் படம் எடுத்து ஆடுகின்றது என்று பலியிட வந்த பெண்மணி உணர்த்தும் பாடலாக அமைந்துள்ளது.
செந்தமிழ் திறம் வல்லிரோ செங்கண் அரவம் முன் கையில் ஆடவே
வந்து நிற்கும் இது என் கொலோ பலி மாற்ற மாட்டோம் இடகிலோம்
பைந்தண் மாமலர் உந்து சோலைகள் கந்த நாறு பைஞ்ஞீலியீர்
அந்தி வானமும் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே
தன்னை நாள்தோறும் புகழ்ந்து பாடும் அடியார்கள், உலகத்தில் உள்ள உயிர்கள் மீதும் உலகத்துப் பொருட்கள் மீதும் வைத்துள்ள பற்றினையும், அவர்களது வினைகளையும் அறுத்து எரியும் வல்லமை வாய்ந்த பெருமான் என்று பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.36.6) சுந்தரர் கூறுகின்றார். இரவு வேளைகளில் பலி ஏற்பதற்காக வரும் பிச்சைப் பெருமான், தனது அழகினால் பல மகளிரின் மனதை கொள்ளை கொள்கின்றார் என்றும் அவரிடம் தங்களது மனதினை பறிகொடுத்த மகளிர், அவரை அடைய முடியாத ஏக்கத்தினால் உடல் இளைத்து, தங்களது கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழும் நிலையை அடைந்தனர் என்றும் குறிப்பிடும் சுந்தரர், இவ்வாறு மகளிரின் வளையல்களை கொள்ளை கொள்வதையே தொழிலாகக் கொண்ட இறைவன் என்று கூறுகின்றார். பெருமான் பால் கொண்டுள்ள காதல், சுந்தரர் நாயகியை பெருமானுடன் உடன் செல்லும் வண்ணம் மாற்றுகின்றது என்பதை குறிப்பிடும் வண்ணம், இரவினில் அச்சமின்றி நடந்து போகும் வல்லமை உடையீரோ என்று கேட்கவும் தூண்டுகின்றது.
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழிலாகி நீர்
இரவும் இம்மனை அறிதிரே இங்கே நடந்து போகவும் வல்லிரே
பரவி நாடொறும் பாடுவார் வினை பற்றறுக்கும் பைஞ்ஞீலியீர்
அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே
பெருமான் பால் தீவிர காதல் கொண்டுள்ள தாருகவனத்துப் பெண்மணி, பெருமானை காதல் செய்வதால் தனக்கு என்ன கிடைக்கும் என்பதை சற்று நினைத்துப் பார்க்கின்றாள். அவர் உறைகின்ற இடம் காடாகவும், அவர் தனது கையில் வைத்துக் கொண்டுள்ளது மண்டையோடாக இருப்பதாலும் அவரை காதலிப்போர் அடையக் கூடியது ஏதும் உருப்படியாக இல்லை என்று கருதுவதை, இந்த பதிகத்தின் ஏழாவது பாடல் தெரிவிக்கின்றது. அதே சமயத்தில் பெருமானது அழகு தன்னை மயக்கி, அவர் பால் காதல் கொள்ளச் செய்தது என்பதையும் உணர்த்தும் பாடல். மேலும் எலும்பு மாலையினை அணிவதால், பெருமான் பெறுகின்ற பயன் யாது எனவும் வினவுகின்றாள். பெருமான் எலும்பு மாலையினை அணிவதே, உலகம் முற்றிலும் அழிந்து அனைவரும் இறந்த பின்னரும் எஞ்சியிருப்பது தான் ஒருவன் மட்டுமே என்பதால், என்றும் நிலையாக இருப்பவன் தான் ஒருவனே என்பதை நமக்கு உணர்த்தும் பொருட்டு தானே. பெருமானே, உமது காதலிக்கு கொடுக்கும் சிறந்த செல்வம் ஏதும் உம்மிடம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உமது காதலியை மகிழ்விக்கும் வண்ணம் ஆடல் பாடல்களில் திறமை பெற்றவரா நீர் என்ற கேள்வியும் இந்த பாடலில் கேட்கப் படுகின்றது.
ஏடுலா மலர்க் கொன்றை சூடுதிர் என்பெலாம் அணிந்து என் செய்வீர்
காடு நும் பதி ஓடு கையது காதல் செய்பவர் பெறுவதென்
பாடல் வண்டிசை ஆலும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே
பைஞ்ஞீலி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.36.8) சுந்தரர், பெருமான் தனது தலையில் கொக்கின் இறகினை சூட்டிக் கொண்டுள்ள நிலையை குறிப்பிடுகின்றார். இரத்தம் ஒழுகியவாறு இருக்கும் யானையின் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால், யானையின் ஈருரி போர்த்தவாறு வந்து நின்று பிச்சை கேட்பதேன் என்று, தாருகவனத்து மங்கை ஒருத்தி கேட்பதாக அமைந்த பாடல். உமக்கு பிச்சை இடுவதற்கு எங்களுக்கு விருப்பம் இருந்தாலும், யானையின் ஈருரி போர்த்த உமது அருகில் வந்து பிச்சையிட அச்சமாக உள்ளது என்று உணர்த்தும் பாடல். சிவபெருமான் தனது சடையில், கொன்றை மலர், ஊமத்தை மலர், வன்னி இலைகள், கங்கை நதி, சந்திரன், கொக்கின் இறகு, வெள்ளெருக்கு ஆகியவற்றை நெருக்கமாக அணிந்துள்ளார் என்று பிச்சை இடுவதற்காக வந்த ஒரு மங்கை கூறுவதாக அமைந்த பாடல்.
மத்த மாமலர்க் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும்
மொய்த்த வெண்டலை கொக்கு இறகொடு வெள்ளெருக்கமும் சடையதாம்
பத்தர் சித்தர்கள் பாடி ஆடு பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
அத்தி ஈருரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே
பைஞ்ஞீலி தலத்தின் மீது பாடிய பாடல் ஒன்றினில் (7.36.9), சுந்தரர் பல இசைக் கருவிகளை குறிப்பிட்டு, அவற்றை இயக்கும் திறமை உடையவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பல இசைக் கருவிகளை இசைக்க வல்லவராக இருக்கும் பெருமான், நாட்டியம் ஆடிக்கொண்டு பலியேற்கும் நோக்கத்துடன் பல இல்லங்கள் செல்லும் போது, நல்ல ஆடையையும் அணிகலனையும் அணியாது எலும்பு மாலையையும் ஆமை ஓட்டினையும் அணிந்து செல்வது பொருத்தமா என்று கேட்கும் பாடல்.
தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்கரை குடமுழவின் ஓசை கூடி பாடி நின்று ஆடுவீர்
பக்கமே குயில் பாடும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிறால்
அக்கும் அமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே
இதே பதிகத்தின் பத்தாவது பாடலில் (7.36.10) தாருகவனத்து பெண்மணி ஒருத்தி எப்படி இருக்க வேண்டும் என்பதை பெருமானே நீர் சொல்வீராக என்று கேட்கும் வகையில் அமைந்துள்ளது. உடலின் பல இடங்களில், கையிலொரு பாம்பு, இடுப்பினில் ஒரு பாம்பு, கழுத்தினில் ஒரு பாம்பு, தாழ்ந்து தொங்கும் சடையினில் ஒரு பாம்பு என்று அணிந்து கொண்டு வரும் பெருமானே, நீர் வேதங்கள் ஒதியவாறும் உடல் முழுவதும் திருநீறு பூசியவாறும் வருகின்றீர்; இவற்றில் எந்த கோலமும் பிச்சை எடுப்போருக்கு பொருந்தாமையால் இந்த கேள்வி கேட்கப் படுகின்றது போலும். இந்த பதிகத்தின் கடைப் பாடலில், பிச்சைப் பெருமானை பார்த்த மங்கைமார் பலர் பெருமான் பால் தாங்கள் கொண்டிருந்த காதலின் விளைவாக, சொன்ன மொழிகள் என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார்.
கையோர் பாம்பு அரை ஆர்த்தொர் பாம்பு கழுத்தோர் பாம்பவை பின்பு தாழ்
மெய்யெலாம் பொடிக் கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும்
பையவே விடங்காக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்
ஐயம் ஏற்கும் இது என் கொலோ சொலும் ஆரணீய விடங்கரே
நாகைக்காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் பத்தூர் புக்கு இரந்து உண்ணும் பெருமான், பாவையரிடம் வஞ்சகமான வார்த்தைகள் பேசுவதாக சுந்தரர் கூறுகின்றார். தன்னிடம் உள்ள செல்வத்தை மறைத்து வைத்து விட்டு, தம்மிடம் ஏதும் அணிகலன் இல்லாதவர் போன்று இறந்தவர்களின் எலும்புகளை அணிந்து கொண்டுள்ள பெருமானே, உமது செல்வத்தை எங்கே மறைத்து வைத்துள்ளீர் என்று கேட்கின்றார். கிறி=பொய்யான வார்த்தைகள்; படிறு=வஞ்சகம்; சே=எருது, இடபம்; சேரமான் பெருமாள் நாயனார் தன்னைக் காண்பதற்கு திருவாரூர் வருவதை அறிந்து கொண்ட சுந்தரர், தனது நண்பர் சேரமான் நாயனாரை தகுந்த முறையில் வரவேற்பதற்கும் அவருக்கு இணையான முறையில் தனது தரத்தை உயர்த்திக் கொள்வதற்கும் தேவையான ஆடை ஆபரணங்கள் முதலான பொருட்கள் பொன் ஆகியவற்றை பெருமான் தர வேண்டும் என்று வேண்டும் பாடல். தன்னிடம் மிகுந்த செல்வம் இருந்தும், அடுத்தவருக்கு கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு பெருமான் ஆடுகின்ற நாடகமே எலும்பு மாலையை அணிகலனாக அணிந்த நிலை என்று குறிப்பிடும் சுந்தரர், இவ்வாறு நாடகமாடுவது பெருமானுக்கு புதியதல்ல என்பதை உணர்த்தும் பொருட்டு தாருக வனத்து நிகழ்ச்சியை முதல் அடியில் குறிப்பிடுகின்றார். பல ஊர்கள் சென்று பாமாலைகள் பாடிய வண்ணம் திரிந்து இரந்த பெருமான், எதிர்பட்ட பெண்மணிகளிடம் பொய்யான சொற்களைப் பேசியும், தனது தன்மையை மறைத்துக் கொண்டும் வஞ்சமாக நடந்து கொண்டார் என்று கூறுகின்றார்.
பத்தூர் புக்கு இரந்துண்டு பல பதிகம் பாடி பாவையரைக் கிறி பேசி படிறாடித் திரிவீர்
செத்தார் தம் எலும்பணிந்து சே ஏறித் திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொரு நாள் இரங்கீர்
முத்தாரம் இலங்கி மிளிர் மணி வயிரக் கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும்
கத்தூரி கமழ் சாந்து பணித்தருள வேண்டும் கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.72.9) சுந்தரர், பெருமானுக்கு பலியிட வந் தாருகவனத்து பெண்மணிகள் தங்களது மேலாடை நழுவுவதையும் உணராதவர்களாக இருந்தனர் என்று கூறுகின்றார். வடகம்=மேலாடை; மணற்பாங்கான தலமாக வலம்புரம் இன்றும் காணப் படுகின்றது. கடைகடை=பல இல்லங்களின் வாயிற்புரம்.
சடசட விடு பெணை பழம் படும் இட வகை
பட வடகத்தொடு பலி கலந்து உலவிய
கடைகடை பலி திரி கபாலி தன் இடமது
இடி கரை மணல் அடை இடம் வலம்புரமே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.91.5) சுந்தரர், பெருமானை, துவளும் இடை கொண்ட பெண்மணிகள் இடுகின்ற உணவினை ஏற்றுக் கொள்கின்றார் என்று கூறுகின்றார். உணங்கல்=உலர்ந்த உணவுப் பொருட்கள், சோறு; பணம்=படம்; கணங்கள்=கூட்டம், பூத கணங்கள்; பெருமானுக்கு பலி அளித்த பெண்மணிகள், பெருமானின் உயர்ந்த தன்மையை புரிந்து கொண்டவர்களாக, வணக்கத்துடன் பலியை சமர்ப்பித்தனர் என்று உணர்த்துகின்றார். பணிவுடன் நம்மினும் பெரியோர்க்கு சமர்ப்பிப்பது பலி; வறியவர்க்கு கருணையுடன் அளிப்பது பிச்சை.
பணங்கொள் அரவம் பற்றி பரமன்
கணங்கள் சூழ கபாலம் ஏந்தி
வணங்கும் இடை மென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றியூரே
நன்னிலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.98.1) சுந்தரர், பண் போன்ற இனிய மொழிகளை உடைய பெண்மணிகள் இருக்கும் இடங்களில் திரிந்து பலி ஏற்பவன் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் பெருமானை, பண்டரங்கன் என்று அழைக்கின்றார். தண்ணியல் வெம்மையினான் என்ற தொடர் மூலம் அறக்கருணை மற்றும் மறக்கருணையால் உயிர்களுக்கு அருள் புரிபவன் பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். உயிர்களின் தன்மைக்கு ஏற்றவாறு பெருமானின் கருணைத் திறம் மாறுபடுகின்றது.
தண்ணியல் வெம்மையினான் தலையிற் கடை தோறும் பலி
பண்ணியன் மென்மொழியார் இடம் கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர் முறையாலடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே
மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலைக்கும், பலிக்கு செல்லும் போதும் பிராட்டியைத் தன்னுடன் பெருமான் அழைத்துச் செல்வதற்கும் ஒரு காரணத்தை கற்பனை செய்து திருஞான சம்பந்தர் நகைச்சுவை ததும்ப உணர்த்தும் பாடலை நாம் இறுதியாக காண்போம். இந்த பாடல் தெளிச்சேரி தலத்தின் மீது அருளிய பாடல் (2.3.4). கச்சு அணிந்த மார்பகங்களைக் கொண்ட உமை அன்னையை பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் ஏதும் இல்லாத காரணத்தால், பெருமானே நீர் பிராட்டியையும் உமது உடலில் ஏற்றுக்கொண்டு பலிக்கு செல்கின்றீரோ என்று நகைச்சுவை ததும்ப மாதொரு பாகனின் திருக்கோலத்தை உணர்த்தும் பாடல் தெளிச்சேரி தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடல். ஏர் என்றால் எழுச்சி என்று பொருள்; அழகு என்ற பொருளும் பொருந்தும். பெருமான் பலிக்கு செல்வது, பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தங்களது மலங்களை, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடையவேண்டும் என்ற நோக்கத்துடன் என்பதால், அத்தகைய ஆன்மாக்கள் எழுச்சி பெற்று நிலையான ஆனந்தத்தில் ஆழ்த்தப் படுவதால், ஏருலாம் பலி என்று கூறினார் போலும். ஏகிட=செல்ல;
காருலாம் கடல் இப்பி கண் முத்தம் கரைப் பெயும்
தேருலா நெடு வீதியதார் தெளிச்செரியீர்
ஏருலாம் பலிக்கு ஏகிட வைப்பிடம் இன்றியே
வாருலா முலையாளை ஒர் பாகத்து வைத்ததே
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடல் புராணம் வளையல் விற்ற படலத்தில், தாருகவனத்து மகளிர் தாம் செட்டிப் பெண்களாக பிறந்து மதுரையில் வளர்ந்து, பெருமானிடம் வளையல் பெற்றனர் என்று கூறுகின்றார். இந்த படலத்தின் முதல் பகுதியில், பெருமானுக்கு பிச்சையிட வந்த மகளிர், பெருமானின் அழகிய வடிவத்தைக் கண்டு தாம் கொண்டிருந்த காதல் நிறைவேறாத ஏக்கத்தால் உடல் மெலியவே, தாம் பெருமானுக்கு பிச்சை இட்ட போது, சோறுடன் கலந்து தமது வளையும் பெருமான் கபாலத்தில் விழுந்தது என்றும், அதனை மீண்டும் தருவீராக என்று கேட்டதாகவும் பரஞ்சோதி முனிவர் ஒரு பாடலில் கூறுகின்றார். இந்த கூற்று உணர்த்தும் கருத்து யாதெனின், பெருமான் மீது கொண்ட காதல் நிறைவேறாத ஏக்கத்தால் உடல் மெலிந்து விழுந்த வளையல்கள், தங்களது கையில் மீண்டும் சரியாக பொருந்துமாறு தமது உடல் மகிழ்ச்சியால் பூரிக்கும் வண்ணம், தங்களது விருப்பம், பெருமானுடன் சேர வேண்டும் என்ற விருப்பம் ஈடேற வேண்டும் என்று இறைஞ்சினர் என்பதே ஆகும். மேலும் தங்களது மனைவியரின் செயலால் கோபம் கொண்ட தாருகவனத்து முனிவர்கள், பெருமானிடம் தமது மனதினை பறி கொடுத்த அவர்கள், அடுத்த பிறவியில் செட்டிப் பெண்களாக பிறக்க வேண்டும் என்று சாபம் அளித்தனர் என்றும் கூறுகின்றார். சென்ற பிறவியில் தாம் பறித்துக் கொண்ட வளையல்களை மீண்டும் அந்த மகளிருக்கு அளிக்கும் நோக்கத்துடன், பெருமான் வளையல் வாணிகராக வந்தார் என்றும் கூறுகின்றார். திருவாசகம் சென்னிப்பத்து பதிகத்தின் மூன்றாவது பாடலில் (8.42.3) மணிவாசக அடிகளார், மங்கைமார் கையில் வளையும் கொண்டெம் உயிரும் கொண்டெம் பணி கொள்வான் என்று இந்த செய்தியை குறிப்பிட்டார் போலும்.
பொழிப்புரை:
சிவந்த நிறத்தில் உள்ளதும் மென்மையானதும் ஆகிய சடைகள் தாழும் வண்ணம் காட்சியளித்த பெருமான், வேதங்களின் பாடல்களை இசையுடன் பாடிய வண்ணம், தாருகவனத்து முனிவர்களின் இல்லங்கள் தோறும் சென்று பலி இடுவீர்களாக என்று கேட்டு அருள் புரிந்த பெருமான், உறையும் இடம் திருவியலூர் ஆகும். இந்த தலம், உம் என்ற ஒலியுடன் குடகு மலைச்சாரலில் எழும் அருவிகள் ஒன்று திரண்டு காவிரி நதியாக வர, அந்த நீரினால் பலரும் புகழ்ந்து பேசும் வண்ணம் செழித்து வளரும் வயல்கள் பொருந்திய நீர் வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.
பாடல் 4:
குரவம் கமழ்நறு (1.013) பாடல்கள் 4, 5, 6, 7, 8 (திதே 0551)
அடைவாகிய அடியார் தொழ அலரோன் தலை அதனில்
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடமாம்
கடையார் தரு அகிலார் கழை முத்தம் நிரை சிந்தி
மிடையார் பொழில் புடைசூழ் தரு விரிநீர் வியலூரே
விளக்கம்:
கழை=மூங்கில்; நன்கு முற்றிய மூங்கில், பாம்பின் கழுத்து, யானையின் மத்தகம் ஆகிய இடங்கள் முத்துகள் தோன்றும் இடம் என்று கூறுவார்கள்; அடைவு=முறை என்று சிலரால் பொருள் கூறப்பட்டாலும் சரணடைதல் என்ற பொருள் மிகவும் பொருத்தமாக உள்ளது. கடையார்= உழவர்கள்; கடையார் என்ற சொல்லுக்கு அழகிய கடைகள் என்று பொருள் கொண்டு, இந்த தலத்து கடைகளில் அகில் கட்டைகள் மற்றும் முத்துகள் விற்கப்பட்டன என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர்.
பொழிப்புரை:
பிரம கபாலத்தில் தாருகவனத்து மகளிர் இட்ட பலியை விரும்பி ஏற்றுக்கொண்ட பெருமான், தனது அடியார்கள் சரணம் என்று திருவடிகளைப் பணிந்து தொழ உறைகின்ற இடம் வியலூர் தலம் ஆகும். காவிரி நதி அடித்துக் கொண்டு வரும் அகில் கட்டைகள் சேரும் வயல்களில் உழவர்கள் வரிசையாக நட்ட மூங்கில் மரங்கள் வெடித்து அதிலிருந்த முத்துகள் வரிசையாக சிந்தி நெருங்கிய மரங்களின் இடையே காட்சி அளிக்கும் சோலைகள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து காணப்படும் தலம் வியலூர் ஆகும்.
பாடல் 5:
குரவம் கமழ்நறு (1.013) பாடல்கள் 4, 5, 6, 7, 8 (திதே 0551)
எண்ணார் தரு பயனாய் அயன் அவனாய் மிகு கலையாய்ப்
பண்ணார் தரு மறையாய் உயர் பொருளாய் இறை அவனாய்க்
கண்ணார் தரும் உருவாகிய கடவுள் இடம் எனலாம்
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரிநீர் வியலூரே
விளக்கம்:
எண்=எண்ணம் என்ற சொல்லின் திரிபு; தியானம் என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது; தன்னை நினைத்து தியானம் செய்யும் அடியார்களுக்கு தியானத்தின் பயனாக விளங்குபவன் இறைவன்; இறை=தலைவன்; கண்ணார் தரு உரு=பார்ப்போரின் கண்கள் நிறையும் வண்ணம் அழகாக இருக்கும் இறைவனின் உருவம் அத்தகைய அடியார்களின் மனதினில் என்றும் நீங்காது பதிந்து நிற்கும் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.
இதே பதிகத்தின் இரண்டாவது பாடலில் ஒருவன் பல உருவன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கண்டோம். ஒப்பற்ற ஒருவனாக விளங்கும் பெருமான், தனது அடியார்களுக்கு பல உருவத்தில் காட்சி அளித்த விவரங்களை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். பல அடியார்களின் தன்மையை உலகுக்கு உணர்த்திய பின்னர், திருநீலகண்ட குயவனார், இயற்பகையார், இளையான்குடி மாறனார், அமர்நீதியார், ஏனாதிநாதர், மானக்கஞ்சாறர், அரிவாட்டாயர், ஆனாயர், திருக்குறிப்புத் தொண்டர், சாக்கிய நாயனார், சிறுத்தொண்டர், அதிபத்தர் ஆகிய அடியார்களுக்கு, விடையின் மேல் அமர்ந்த வண்ணம் பிராட்டியுடன் பெருமான் காட்சி கொடுத்ததை நாம் பெரிய புராண சரித்திரத்திலிருந்து உணர்கின்றோம். இலிங்கத்திலிருந்து ஒரு கை வெளிப்பட்டு எழுந்து, தனது மற்றோர் கண்ணினையும் பேர்க்கத் துணிந்த கண்ணப்பரை தடுத்ததையும், சண்டீசருக்கு கொன்றை மாலை சூட்டியதையும், கயிலை மலையில் உமையன்னையுடன் அமர்ந்த நிலையில் காட்சியளித்து காரைக்கால் அம்மையாருக்கு வரம் அருளியதையும், பைரவ கோலத்துடன் சிறுத்தொண்டரது இல்லத்திற்கு உணவு உட்கொள்ளச் சென்றதையும், கயிலை மலையில் சுந்தரருக்கும் சேரமான் பெருமாளுக்கும் காட்சி அளித்ததையும், தனது கழுத்தினை அறுத்து தனது உடலிலிருந்து வெளிவரும் குருதியை இட்டு விளக்கேற்ற முயற்சி செய்த கலியரின் கையினைப் பிடித்து தடுத்து அருள் செய்ததையும், அவர்களது புராணத்தில் காண்கின்றோம். கயிலாய மலை நோக்கி சென்று கொண்டிருந்த அப்பர் பிரானுக்கு வேதியராக காட்சி அளித்ததையும், பெருமானது திருக்குறிப்பினை சரியாக புரிந்து கொள்ளாது இருந்தமை குறித்து வருந்திய அப்பர் பிரானுக்கு முதியவராக தோன்றி வாய்மூர் அழைத்துச் சென்றதையும், பைஞ்ஞீலி செல்லும் வழியில் அப்பர் பிரானின் வரவினை எதிர்பார்த்து பொதி சோற்றுடன் காத்திருந்து அளித்தமையும்,திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் இடம் பெறுகின்றன. திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியாருக்கும், நீலநக்கர் மற்றும் நமிநந்தி அடிகள் ஆகியோருக்கும் கனவின் கண் காட்சி அளித்தமையை நாம் பெரிய புராணத்திலிருந்து உணர்கின்றோம். விடையின் மேல் அமர்ந்தவாறு கீழே வந்திறங்கி, அழுது கொண்டிருந்த குழந்தைக்கு பால் ஊட்டுமாறு பணித்து காட்சி கொடுத்தமை, திருவாய்மூர் தலத்தில் திருஞானசம்பந்தர் அப்பர் ஆகிய இருவருக்கும் நடனக்காட்சி காட்டி அருளியமை, வியலூர் முதலான பல தலங்களில் தனது உருவத்தை காட்டி அருளியது ஆகிய நிகழ்ச்சிகளை திருஞான சம்பந்தரின் வாழ்க்கையில் காண்கின்றோம். பைஞ்ஞீலி தலத்தில் தனது கங்காள வடிவினை சுந்தரருக்கு காட்டிய பெருமான், ஐந்து முறை அந்தணர் வேடத்தில் அவருக்கு காட்சி கொடுத்தமையை அவரது சரித்திரத்தில் காண்கின்றோம். நடக்கவிருந்த திருமணத்தினை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் ஓலை கொண்டு வந்த முதியவராகவும், திருவதிகை சித்த மடத்தில் தனது காலினை சுந்தரரின் முகத்தில் இருமுறை படுமாறு வைத்து திருவடி தீட்சை அருளிய முதியவராகவும், குருகாவூர் செல்லும் வழியில் தயிர் சாதமும் குடிநீரும் வைத்துக் கொண்டு காத்திருந்த முதியவராகவும், திருமுதுகுன்றம் செல்லவிருந்த சுந்தரரை தடுத்து கூடலையாற்றூர் அழைத்துச் சென்ற முதியவராகவும், திருக்கச்சூர் தலத்தில் உள்ள பல இல்லங்களில் நடுப்பகலில் சென்று இரந்து அமுது கொண்டு வந்து ஈந்த அந்தணராகவும் பெருமான் காட்சியளித்த போதும், அவ்வாறு வந்து அருள் புரிந்தவர் பெருமான் தான் என்பதை சுந்தரர் முதலில் உணரவில்லை. சங்கிலி நாச்சியாரை மணமுடிக்க வந்த போதும், பரவை நாச்சியார் சுந்தரருடன் கொண்டிருந்த பிணக்கினைத் தீர்க்க வந்த போதும், வந்தவரை யார் என்று சுந்தரர் அறிந்து கொண்டதையும் நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். மேலும் திருஞானசம்பந்தர் வாழ்ந்த இடமாகிய சீர்காழி தலத்தின் புனிதம் கருதி, அந்த மண்ணின் மீது தனது பாதங்கள் படலாகாது என்ற எண்ணத்துடன், அந்த தலத்தின் உள்ளே செல்லாமல், தலத்தினை சுந்தரர் வலம் வந்த போது, அவருக்கு பெருமான் எதிர் காட்சி காட்டி அருள் புரிந்ததையும் பெரிய புராணம் நமக்கு உணர்த்துகின்றது. இவ்வாறு பல உருவம் கொண்டு, அடியார்களுக்கு அருள் புரிந்தமை இங்கே உணர்த்தப் பட்டு, அந்த சமயங்களில் அடியார்களின் கண்கள் கண்ட காட்சி அவர்களது மனதினில் பதிந்து இருந்தமையும் கண்ணார் தரும் உருவம் என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
பொழிப்புரை:
தன்னை நினைத்து தியானம் செய்யும் அடியார்களுக்கு தியானத்தின் பயனாக விளங்குபவனும், பிரமனாக உலகத்தினை படைப்பவனாகவும், எண்ணற்ற கலைகளாகவும், சந்த இசையோடு கூடிய வேதத்தின் பாடல்களாகவும், அனைவரிலும் உயர்ந்த பொருளாகவும், அனைவர்க்கும் தலைவனாகவும், பார்ப்போரின் கண்கள் நிறையும் வண்ணம் அழகாக இருப்பவனும் ஆகிய கடவுள் உறையும் இடமாவது, தேவர்களும் நிலவுலகத்தாரும் தொழுவதும் நீர்வளம் நிறைந்து காணப் படுவதும் ஆகிய வியலூர் தலமாகும்.
பாடல் 6:
குரவம் கமழ்நறு (1.013) பாடல்கள் 4, 5, 6, 7, 8 (திதே 0551)
வசைவில் கொடு வரு வேடுவன் அவனாய் நிலை அறிவான்
திசை உற்றவர் காணச் செரு மலைவான் நிலையவனை
அசையப் பொருது அசையா வணம் அவனுக்கு உயர் படைகள்
விசையற்கு அருள் செய்தான் இடம் விரிநீர் வியலூரே
விளக்கம்:
அடியார்களுக்கு பல வேடங்களில் வந்து அருள் புரிபவன் இறைவன் என்று முந்தைய பாடலில் கூறிய திருஞான சம்பந்தருக்கு விஜயனுக்கு பாசுபதம் ஈந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது போலும். அப்போது பெருமான் கொண்டிருந்த வேட்டுவ வேடத்தினை இந்த பாடலில் நினைவூட்டுகின்றார். தவத்தினில் ஆழ்ந்திருந்த அர்ஜுனன், இறைவனுடன் சண்டைக்கு செல்லவில்லை. அர்ஜுனனுடன் சண்டை போடுவதற்கு ஒரு காரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இறைவன், தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை தாக்க வந்த ஒரு காட்டுப் பன்றியின் மீது ஒரு அம்பினை தொடுத்தான். காட்டுப்பன்றி தன்னைத் தாக்க வந்ததை உணர்ந்த அர்ஜுனனும் அந்த பன்றியின் மீது அம்பினை எய்தான். இருவரும் எய்த அம்புகள் பன்றியின் உடலைத் துளைக்கவே, எவரது அம்பு முதலில் பன்றியின் உடலைத் தைத்தது என்ற விவாதம் அவர்களுக்குள்ளே எழுந்து, அதுவே அவர்களின் இடையே சண்டை மூள்வதற்கும் காரணமாக இருந்தது. இந்த நிலையினை உணர்த்தும் வண்ணம் பெருமானை செரு மலைந்தான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இவர்கள் இருவருக்கும் இடையே எழுந்த சண்டையைக் காண பலரும் வானில் குழுமினார்கள். நிலையவன்=தவத்தினில் உறைந்து நின்ற அர்ஜுனன்; வசைவில்=வளைந்த வில்; வசை என்ற சொல்லுக்கு பழி என்று பொருள் கொண்டு, உயிர்க்கொலை புரிவதற்கு கருவியாக இருக்கும் பழியினை உடைய வில் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. செரு=சண்டை; மலைதல்= போரிடுதல்; அசைதல்=போரில் களைப்படைந்து வருந்துதல்;
பொழிப்புரை:
வளைந்த வில்லினைக் கொண்டு வேடுவ வேடம் தாங்கி, அர்ஜுனனின் ஆற்றலை உமையம்மை தானே நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் வண்ணம் உமையன்னையுடன், தவத்தில் அர்ஜுனன் ஆழ்ந்திருந்த இடத்திற்கு வந்த இறைவன், அர்ஜுனனை சண்டைக்கு வலிய அழைத்தான். இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற சண்டையைக் காண எண்திசையில் உள்ளோரும் வானோரும் குழுமினார்கள். பல சண்டைகளில் வெற்றி கொண்டு தோல்வி அடையாதவன் என்ற புகழினைக் கொண்டிருந்த அர்ஜுனன் களைப்படைந்து சோர்வடைந்து வருந்தும் வண்ணம் அர்ஜுனனை வெற்றி கொண்ட பெருமான், பின்னர் அவனுக்கு இரங்கி, பின்னாளில் வரவிருந்த பாரதப் போரினில் களைப்படையாமல் போரிடும் வண்ணம் உயர்ந்த பாசுபதக் கருவியினையும், எடுக்கயெடுக்க குறையாமல் வரும் அம்பறாத் தூணியையும், அர்ஜுனனுக்கு அளித்து அருள் புரிந்தான். இத்தகைய வல்லமையும் கருணையும் கொண்ட பெருமான் உறையும் இடம் நீர்வளம் கொண்ட வியலூர் தலமாகும்.
பாடல் 7:
குரவம் கமழ்நறு (1.013) பாடல்கள் 4, 5, 6, 7, 8 (திதே 0551)
மானார் அரவு உடையான் இரவு உடையான் பகல் நட்டம்
ஊனார் தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள்
தானாகிய தலைவன் என நினைவார் அவர் இடமாம்
மேனாடிய விண்ணோர் தொழும் விரிநீர் வியலூரே
விளக்கம்:
இரவு=இரத்தல் தொழிலை உடையவன், பலி ஏற்பவன்; இசை=புகழ்; உயர்விசை=உயர்ந்த புகழ்; தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர்வான நிலை; நாடுதல்=விரும்புதல்;
பொழிப்புரை:
மான் கன்றினைத் தனது இடது கையிலும், பாம்பினைத் தனது உடலின் பல இடங்களிலும் ஏந்திய பெருமான், பல ஊர்கள் திரிந்து பலி ஏற்பதைத் தனது தொழிலாகக் கொண்டவன் ஆவான். பகலில் நடனம் ஆடும் பெருமான், பல உடல்களில் உயிராக நிலைபெற்று விளங்குகின்றான். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்று உயர்ந்த புகழினை உடைய இறைவன், உலகினில் தோன்றும் அனைத்துப் பொருட்களுமாக இருப்பவன் என்றும் தங்களது தலைவன் என்றும் அனைவராலும் தங்களது தலைவன் என்று நினைக்கப் படுபவனும் ஆகிய இறைவன் உறையும் இடம் வியலூர் தலமாகும். முந்திய பிறவியினில் தாங்கள் செய்த நற்செயல்களின் பயனாக மேலுலகம் அடைந்து இன்பம் துய்க்கும் விண்ணோர்கள் தொழும் சிறப்பினை உடையது நீர்வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.
பாடல் 8:
குரவம் கமழ்நறு (1.013) பாடல்கள் 4, 5, 6, 7, 8 (திதே 0551)
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 8 தொடர்ச்சி (திதே 0552)
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 8 தொடர்ச்சி (திதே 0553)
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 8 தொடர்ச்சி (திதே 0554)
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 8 தொடர்ச்சி (திதே 0555)
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 8 தொடர்ச்சி (திதே 0556)
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 8 தொடர்ச்சி (திதே 0557)
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 8 தொடர்ச்சி, மற்றும் பாடல்கள் 9, 10, 11 (திதே 0558)
பொருவார் எனக்கு எதிர் ஆர் எனப் பொருப்பை எடுத்தான் தன்
கருமால் வரை கரம் தோள் உரம் கதிர் நீண்முடி நெரிந்து
சிரம் ஆயின கதறச் செறி கழல் சேர் திருவடியின்
விரலால் அடர்வித்தான் இடம் விரிநீர் வியலூரே
விளக்கம்:
பொருவார்=எதிராக சண்டையிடுவார்; பொருப்பு=மலை, கயிலை மலை; அரக்கன் இராவணனின் வலிமையுடன் தன்னை வெல்பவர் எவரும் இல்லை என்ற அவனது செருக்கும் அடக்கப் பட்டது என்று நயமாக திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். இந்த பாடலில் தனது வலிமையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவனாக, தன்னை எதிர்ப்பவர் எவரும் இல்லை என்ற செருக்குடன் அரக்கன் இராவணன், கயிலை மலையினைப் பேர்த்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, தனது பயணத்தைத் தொடர நினைத்தான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இராவணனின் செருக்கினை உணர்த்தும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.12.8) திருஞானசம்பந்தர் பொல்லாத எண்ணங்களுடன் அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்தெடுக்கச் துணிந்தான் என்று கூறுகின்றார். செது வாய்மைகள்=பொல்லாத சொற்கள்; முது=முதிர்ந்த; வேய்= மூங்கில்; கயிலை மலையின் பெருமையை உணராமல், கயிலை மலை தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி தகாத வார்த்தைகள் பேசி, அரக்கன் இராவணன் கயிலை மலையினை இழித்து கூறிய மொழிகள் இங்கே உணர்த்தப் படுகின்றன. அடுத்த=நெருங்கிய; கது=பிளந்த, மலைப் பிளவுகள் போன்று பெரியதாக பிளந்த; செது வாய்மை என்ற தொடருக்கு வரங்களால் பெற்ற வலிமை குன்றிய நிலை, வலிமைகள் குன்றிய வரங்கள் என்று சிவக்கவிமணியார் விளக்கம் கூறுகின்றார். செது=குறைந்த; வாய்மை=வலிமை; வரங்களால் தான் பெற்றிருந்த வலிமையை மிகவும் பெரியது என்று கருதிய இராவணன், தனது வலிமை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவனாக கயிலை மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தான். ஆனால் பெருமானின் கால் விரலின் வலிமையின் முன்னே தனது உடல் வலிமை எவ்வளவு குறைந்தது என்பதை உணர்ந்தான் என்பதை குறிப்பிடும் வகையில், குறைந்த வலிமை (செது வாய்மை) என்று குறிப்பிட்டார் என உணர்த்தும் விளக்கமும் பொருத்தமாக உள்ளது. தான் செல்லும் வழியில் குறுக்கே நின்றது என்று தவறாக கருதி, கயிலை மலையினை குறித்து பொல்லாத மொழிகளை மனதினில் கொண்டவனாக, கயிலை மலையினை பேர்த்து எடுக்கும் எண்ணத்துடன் அந்த மலையினை நெருங்கிய அரக்கன் இராவணனை, தனது வாய்களை மலைப் பிளவுகளைப் போன்று பெரிதாகத் திறந்து அலறும் வண்ணம், வருத்திய பெருமான், தனது உடல் வலி காரணமாக அரக்கன் பெரிய குரலில் அழுததைக் கண்டார். தேன் நிறைந்த செங்காந்தண் மலர்களின் மீது, நீட்டிய விரல்கள் போன்று காணப்படும் இதழ்கள் மீது, கைகளை நிரப்புவது போன்று, முதிர்ந்த மூங்கில் மரங்கள் முத்துக்கள் உதிர்க்கும் சோலைகள் நிறைந்த தலம் முதுகுன்றம் ஆகும். அத்தகைய பெருமை வாய்ந்த முதுகுன்றம் நாம் சென்று அடைவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
செது வாய்மைகள் கருதிவ் வரை அடுத்த திறல் அரக்கன்
கது வாய்கள் பத்து அலறீ இடக் கண்டான் உறை கோயில்
மதுவாய செங்காந்தண் மலர் நிறையக் குறைவில்லா
முது வேய் கண் முத்து உதிரும் பொழில் முதுகுன்று அடைவோமே
கொடுங்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.14.8) ஒட்டா அரக்கன் என்று அரக்கன் இராவணனை, திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சிவநெறியில் மனம் ஒட்டாத அரக்கன் என்று பொருள் கொள்ள வேண்டும். சிவநெறியில் மனம் சென்றிருந்தால், பெருமானின் தன்மையையும் பெருமான் உறைகின்ற கயிலாய மலையின் பெருமையையும் புரிந்து கொண்டு, கயிலை மலையினை வலம் வந்தவாறு தனது பயணத்தை அரக்கன் தொடர்ந்திருப்பான் அல்லவா என்ற கருத்து தான் இங்கே உணர்த்தப் படுகின்றது. வேய்=மூங்கில்; முட்டா=தடுப்பார் எவரும் இல்லாமல்; மூங்கில்களை மேயும் யானைக் கூட்டங்களை தடுப்பவர் எவரும் இல்லாததால், மிகுந்த கோபம் கொண்ட யானைகள் மூங்கில்களை ஒடித்து உண்ணும் செயல் இங்கே சொல்லப் படுகின்றது. குட்டம்=ஆழம்; குட்டா=எவராலும் அகழப்படாது இயற்கையாகவே ஆழமாக இருக்கும் சுனைகள்; யானைகள் இறங்கி நின்று நீராடும் சுனை என்றால், நாம் அதன் ஆழத்தை புரிந்து கொள்ளலாம். பிட்டான்=இரண்டாக ஒடித்தான்.
முட்டா முது கரியின் இன முது வேய்களை முனிந்து
குட்டாச் சுனை அவை மண்டி நின்று ஆடும் கொடுங்குன்றம்
ஒட்டா அரக்கன்றன் முடி ஒரு பஃதவை உடனே
பிட்டான் அவன் உமையாளொடு மேவும் பெரு நகரே
இடும்பாவனம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.17.8) அரக்கன் இராவணன் சிறிதும் சிந்திக்காமல் கயிலாய மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். ஓராது=யோசிக்காது, ஆராய்ந்து பார்க்காமல்; குணநாமம்=அவனது குணத்தினை ஒட்டி அவனுக்கு அமைந்த பெயர்; கயிலை மலையின் கீழே நெருக்குண்ட அரக்கன், வருத்தம் தாளாமல் உலகம் முழுவதும் கேட்கும் வண்ணம் உரத்த குரலில் அலறினான். அதனைக் கண்ட பெருமான், தனது குரல் உலகெங்கும் கேட்கும் வண்ணம் அலறியவன் என்ற பொருள் பட இராவணன் என்று அழைத்ததை திருஞானசம்பந்தர் இந்த பாடலில் சொல்லுகின்றார். அதற்கு முன்னர் தசக்ரீவன் என்பதே அவனது பெயராக இருந்தது. இவ்வாறு பெருமானால் பெயர் இடப்பட்டு அழைக்கப்பட்ட மற்ற சிவனடியார்கள், சுந்தரர், சண்டீசர், திருநாவுக்கரசர், கண்ணப்பர், மாணிக்கவாசகர் ஆவார்கள்.
தேரார் தரு திகழ் வாளெயிற்று அரக்கன் சிவன் மலையை
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒரு பஃதவை நெரித்துக்
கூரார் தரு கொலை வாளொடு குணநாமமும் கொடுத்த
ஏரார் தரும் இறைவர்க்கிடம் இடும்பாவனம் இதுவே
தருக்குடன் கயிலை மலையினைப் பேர்க்கத் துணிந்த இராவணன் என்று திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.27.8) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். மலையதனார்= மலையது அன்னார், மலை போன்று வலிமை உடையவர்கள்; அடர்த்தல்=நெருக்குதல்; மலைதல் என்ற சொல்லுக்கு சண்டை போடுதல் என்று ஒரு பொருளும் உள்ளது. தேவர்களுடன் போரிட்ட திரிபுரத்து அரக்கர்கள் என்றும் பொருள் சிலர் கொள்கின்றனர். மலைத்தல் என்றால் மலைத்து திகைத்து இருத்தல் என்று ஒரு பொருள். இந்த அடிப்படையில் தங்களது பகைவர்கள் திகைத்து நிற்கும் வண்ணம் வலிமை கொண்ட திரிபுரத்து அரக்கர்கள் என்றும் பொருள் கூறப்படுகின்றது. மலை போன்று வலிமை வாய்ந்த திரிபுரத்து அரக்கர்கள் கொண்டிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், மேருமலையினை வளைத்து செய்யப்பட்ட வில்லில் கூரிய அம்பினைப் பொருத்தி எரித்தவர் சிவபெருமான். அவரே திருப்புன்கூர் தலத்தின் தலைவராக திகழ்கின்றார். வலிமை வாய்ந்த அரக்கன் இராவணன் மிகுந்த செருக்குடன், கயிலாய மலையினைப் பேர்த்து எடுப்பேன் என்ற எண்ணத்துடன் முயற்சி செய்த போது, அந்த கயிலை மலையின் மீது தனது கால் பெருவிரலை அழுத்தி, மலையின் கீழே அரக்கனை நெருக்கி அவனது வலிமையை அழித்து, பின்னர் அரக்கனின் சாமகானத்தை கேட்டு மகிழ்ந்து பல வரங்கள் அளித்தவர் பெருமான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
மலையதனார் உடைய மதில் மூன்றும்
சிலை அதனால் எரித்தார் திருப்புன்கூர்த்
தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே
சோற்றுத்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.28.8) திருஞானசம்பந்தர், கயிலை மலையின் சிறப்பையும் சிவபெருமானின் ஆற்றலையும் எண்ணிப் பாராதவனாக அரக்கன் இராவணன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான் என்று கூறுகின்றார். அண்ணல்=தலைவர்; எண்ணாது=இறைவனின் பெருமையை எண்ணாமலும், தனது செய்கையால் தனக்கு ஏற்படவிருக்கும் பின்விளைவுகளை எண்ணாமலும்; இந்த பதிகத்தின் ஆறாவது மற்றும் ஏழாவது பாடல்களில் நடனம் ஆடிய பெருமானின் திருவடிகளைக் குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், ஏழாவது பாடலில் காலனை உதைத்த திருவடி என்று குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அந்த திருவடியை ஊன்றி அரக்கன் இராவணனின் செருக்கினை அடர்த்த தன்மையை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
பெண்ணோர் பாகம் உடையார் பிறைச் சென்னி
கண்ணோர் பாகம் கலந்த நுதலினார்
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல் சோற்றுத்துறை சென்று அடைவோமே
பாம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.41.8) திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை விடைத்த வல்லரக்கன் என்று குறிப்பிடுகின்றார். விடைத்த=செருக்கு நிறைந்த; வல்லரக்கன்=வலிமை வாய்ந்த அரக்கன். அவனது செருக்குக்கு காரணம் அவனது வலிமையே என்பதை உணர்த்துகின்றார். மடக்கொடி=கொடி போன்று நுண்ணியதும் இளமை வாய்ந்ததும் ஆகிய உடல் கொண்ட மாதர்கள்; படப்பை=தோட்டம்;
விடைத்த வல்லரக்கன் வெற்பினை எடுக்க மெல்லிய திருவிரல் ஊன்றி
அடர்த்தவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள் அனலது ஆடும் எம் அண்ணல்
மடக் கொடியவர்கள் வரு புனலாட வந்திழி அரிசிலின் கரை மேல்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும் பாம்புர நன்னகராரே
திருவோத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.54.8) திருஞானசம்பந்தர், கயிலாய மலையின் சிறப்பினை கருத்தினில் கொள்ளாமல் மிகவும் இழிவாக கருதிய அரக்கன் இராவணனை வென்ற பெருமான் என்று குறிப்பிடுகின்றார். தனது வலிமைக்கு முன்னரே இந்த மலை எம்மாத்திரம் என்று சொல்லியவாறே அரக்கன் இராவணன் கயிலாய மலையை நோக்கி ஆரவாரத்துடன் சென்றதாக கூறுகின்றார். ஒன்றார்=சைவ நெறியில் ஒன்றி ஒழுகாமல், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பாராட்டாமல் பகைவர்களாகத் திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள்; ஏகும்= வெளியேறிச் சென்றுவிடும்.
என்றான் இம்மலை என்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்
என்றார் மேல் வினை ஏகுமே
திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.69.8) தனது ஆற்றல், வலிமை, வீரம் ஆகியவற்றை மிகவும் பெரியதாக கருதிய அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்தான் என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். நிறம்=மார்பு. மாறா எடுத்தான்=தன்னுடன் மாறுபட்டு, பகைவன் போன்று மலையை எடுக்கத் துணிந்த அரக்கன்; இந்த பாடலின் கடை இரண்டு அடிகள் சிவபெருமான் திரிபுரத்தை எரித்த நிகழ்ச்சி குறிப்பிடுவதாக உரை ஆசிரியர்கள் உணர்த்துகின்றனர். பலருக்கு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் கோட்டையை அழிக்க வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய பெருமான், திரிபுரத்தவர்களை அழித்து அறத்தை நிலை நாட்டினான் என்று இந்த பாடலில் கூறுகின்றார்.
மறம் தான் கருதி வலியை நினைந்து மாறா எடுத்தான் தோள்
நிறம் தான் முரிய நெரிய ஊன்றி நிறைய அருள் செய்தார்
திறம் தான் காட்டி அருளாய் என்று தேவரவர் வேண்ட
அறம் தான் காட்டி அருளிச் செய்தார் அண்ணாமலையாரே
குடந்தைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.72.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை, மதம் கொண்டவன் என்று அழைக்கின்றார். விரை=நறுமணம்; உரை=சொற்கள், இங்கே புகழ்ச் சொற்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். உரையார் கீதம்=பலராலும் புகழப்படும் சாம வேத கீதங்கள்; மதம்=கர்வம்; வரை=மலை; பொதுவாக மலர்ப்பாதம் என்றே பல திருமுறைப் பாடல்களில் பெருமானின் திருப்பாதங்கள் குறிப்பிடப் படுகின்றன. தன்னை வணங்கும் அடியார்களுக்கு மலர்ப் பாதத்தை காட்டி அருள் புரியும் பெருமானின் திருப்பாதங்கள், தீயவர்களுக்கு மிகுந்த அழுத்தம் தரும் பாதங்களாக விளங்கும் தன்மையை நாம் உணரவேண்டும். அப்பர் பிரான், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் இறைவனால், தங்களின் தலை மீது, இறைவனின் திருப்பாதங்கள் பதிக்கப் பெற்றவர்கள். அவர்கள் அனைவரும் மலர் அனைய பாதம் என்றே குறிப்பிடுவதை நாம் அறிவோம். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவனும் தனது வலிமையால் மிகுந்த கர்வம் கொண்டு திரிந்தவனும், வாட்போரினில் வல்லவனும், ஆகிய அரக்கன் இராவணன், தான் செல்லும் வழியில் தனக்கு இடையூறாக இருந்தது கயிலாய மலை என்ற எண்ணம் கொண்டவனாக, அந்த மலையினை பேர்த்து எடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு, தனது பயணத்தைத் தொடர முடிவு செய்தவனாக, அந்த மலையினை சென்றடைந்து மலையினை பேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். அப்போது பெருமான், நறுமணம் வாய்ந்த தனது திருப்பாதத்தின் விரல் நுனியை, கயிலாய மலையின் மீது ஊன்ற, மலையின் கீழே அமுக்குண்ட அரக்கனது தலைகள் பத்தும் நொறுங்கும் தன்மையை அடைந்தன. அதனால் கலக்கமடைந்த அரக்கன், பலராலும் புகழப்படும் சாம வேத கீதங்களை பாட, அதனைக் கேட்டு மகிழ்ந்த பெருமான் ஒளி வீசும் சந்திரஹாசம் என்ற வாளினை, அரக்கனுக்கு பரிசாக கொடுத்து அருளினார். இத்தகைய பண்பினை உடைய பெருமான், இரண்டு கரைகளையும் தொடும் வண்ணம் பெருக்கெடுத்து ஓடிய பொன்னி என்று அழைக்கப்படும் காவிரி நதியால் சூழப்பட்டதும், குளிர்ந்தும் காணப்படுவதும் ஆகிய குடந்தை நகரத்தில் உள்ள குடந்தைக் காரோணம் தலத்தினில் காரோணராக உறைகின்றார்
வரையார் திரள் தோள் மத வாளரக்கன் எடுப்ப மலை சேரும்
விரையார் பாத நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும்
உரையார் கீதம் பாடக் கேட்டங்கு ஒளி வாள் கொடுத்தாரும்
கரையார் பொன்னி சூழ் தண் குடந்தைக் காரோணத்தாரே
வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.8), திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை, பாங்கிலா அரக்கன் என்று குறிப்பிடுகின்றார். பாங்கு= நற்பண்பு; கோங்கு, செருந்தி, கூவிளம், ஊமத்தை, கொன்றை ஆகிய மலர்களுடன் பிறைச் சந்திரன், கங்கை நதி பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ள பெருமானது சடை, சிவந்த வண்ணத்தில் அழகாக காணப் படுகின்றது என்பதால், செஞ்சடைச் செல்வர் என்று வெங்குரு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.75.8) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
பாங்கிலா அரக்கன் கயிலை அன்றெடுப்பப் பலதலைமுடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றி அவர்க்கே ஒளிதிகழ் வாளது கொடுத்து அழகாய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தம் கொன்றையும் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கை பொன்மலரார் விரைதரு கோயில் வெங்குரு மேவியுள் வீற்றிருந்தாரே
நல்லம் (தற்போதைய பெயர் கோனேரிராஜபுரம்) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.85.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் தான் செய்யத் துணிந்த செயலின் பின் விளைவுகளை கருத்தினில் எண்ணாது, கயிலாய மலையினை பேர்த்தெடுக்கத் துணிந்தான் என்று கூறுகின்றார். இறையே=மிகவும் சிறிய அளவினில்; இறையே விரல் ஊன்றி=அதிகமான அழுத்தம் கொடுக்காமல்; பெருமான் சற்று அதிகமாக அழுத்தம் கொடுத்திருந்தால், இராவணன் வேறு எவரும் அவனை காணமுடியாத வண்ணம் கூழாக மாறியிருப்பான் என்று அப்பர் பெருமான் ஒரு பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. பெருமானின் ஆற்றலை கருத்தில் கொள்ளாது அரக்கன் இராவணன் செயல்பட்ட தன்மை, திருஞான சம்பந்தருக்கு திரிபுரத்து அரக்கர்களின் செயலை நினைவூட்டியது போலும். ஒரு காலத்தில் அனைவருடன் அன்பு பாராட்டி சைவ நெறியில் வாழ்ந்து வந்த அவர்கள், அந்த நிலையிலிருந்து மாறி அனைவரிடமும் பகைமை பாராட்டி பலரையும் அழித்த அவர்களை நண்ணார் என்று இங்கே குறிப்பிடுகின்றார். நண்ணுதல்=நெருங்குதல்; சிவநெறியை அணுகி தொடர்ந்து செயல்படாமல் விலகிச் சென்றவர்கள்.
பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறை மல்கு
கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை இறையே விரலூன்றி
நண்ணார் புரம் எய்தான் நல்ல நகரானே
அன்னியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.96.8) திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை தூர்த்தன் என்று அழைக்கின்றார். தீர்த்தன்=தூய்மை செய்பவன்; ஆத்தமா=அன்புடன்; ஆப்தம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. நெருங்கிய நண்பனை ஆப்தன் என்று சொல்வதுண்டு. தூர்த்தன்=காமி, பெண்பித்து கொண்டு அலைபவன்; பெண்பித்து கொண்டவனாக திகழ்ந்த அரக்கன் இராவணின் வலிமையைக் குன்றச் செய்து அவனை வெற்றி கொண்ட பெருமான், அன்னியூர் தலத்தில் உறையும் பெருமான், தனது அடியார்களின் மலங்களைத் தீர்க்கும் புனிதனாக விளங்குகின்றான். அவனை உங்களது நெருங்கிய நண்பனாக கருதி அவன் பால் அன்பு வைத்து, அவனை புகழ்ந்து வாழ்த்துவீராக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தூர்த்தனைச் செற்ற
தீர்த்தன் அன்னியூர்
ஆத்தமா அடைந்து
ஏத்தி வாழ்மினே
கண்ணார்கோயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.101.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை, அறிவற்றவன் என்ற பொருள் பட பேதை என்று அழைக்கின்றார். பெருக்கு= பெருமை; வரை=மலை, இங்கே கயிலை மலையினை குறிக்கின்றது; முருக்கு=அழிவு; பெருமான் இராவணனுக்கு தேர் ஈந்ததாக இந்த பாடலில் திருஞான சம்பந்தர் சொல்வதை நாம் உணரவேண்டும். இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் பெருமானின் அடியார்களுக்கு இயமனால் துன்பங்கள் ஏதும் ஏற்படாது என்று கூறிய திருஞான சம்பந்தர், இந்த பாடலில், இயமனால் ஏற்படும் துன்பங்கள் எவ்வாறு தவிர்க்கப்படும் என்பதை உணர்த்துகின்றார். அத்தகைய அடியார்களை, இயமன் நரகத்திற்கு அழைத்துச் செல்வதை தடுத்து, பெருமான் அவர்களை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார் என்று கூறுகின்றார். முந்தைய ஏழு பாடல்களில் இந்த தலம் சென்று இறைவனை வணங்குமாறு நம்மைத் தூண்டும் திருஞானசம்பந்தர், அதற்கு உதாரணமாக இந்திரனும் திருமாலும் வழிபட்டு பயன் அடைந்ததை நமக்கு உணர்த்தும் திருஞான சம்பந்தர், இந்த தலத்திற்கு நேரில் செல்ல முடியவில்லையே என்று வருத்தம் அடையும் அன்பர்களின் நிலையினை உணர்ந்து அத்தகையோர் தலத்தில் உறையும் பெருமானின் திருநாமத்தினை சொல்லி உய்வினை அடையலாம் என்று ஆலோசனை கூறுகின்றார். திருக்கயிலை மலையின் பெருமையை அறியாத அறிவிலியாக விளங்கிய அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, பெருமான் தனது கால் பெருவிரலை மலையின் மீது அழுத்தியதன் விளைவால், அரக்கன் மலையின் கீழே நெருக்குண்டு துன்பம் அடைந்தான். அப்போது தனது தவறினை உணர்ந்த அரக்கன், பெருமானின் நீண்ட கழல்களை நினைத்து புகழ்ந்து சாமகானம் பாடியதை கண்ணுற்ற இறைவன், அரக்கனை அவன் அடைந்த துன்பத்திலிருந்து விடுவித்து, அவனுக்கு ஒளிவீசும் வாளொடு தேரினையும் அருளினார். இத்தகைய கருணை உள்ள கொண்ட பெருமானின் திருநாமத்தை, கண்ணார் என்று சொல்லும் அன்பர்கள் சிவலோகம் சென்று சேர்வார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக் கீழால்
நெருக்குண்ணாத் தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த
முருக்குண்ணாதோர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த
திருக் கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே
சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.104.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை, கயிலை மலையின் புனிதத் தன்மையை அறியாதவன் என்று குறிப்பிடுகின்றார். வில்லிய=ஒளி பொருந்திய; ஒல்லை=விரைவாக உடனே; நண்ணும்=நெருங்கி உறைகின்ற; கயிலை மலையின் கீழே அமுக்கப்பட்ட அரக்கன் இராவணன், தனது உடல் அங்கங்கள் நலிவடைந்து அழியும் தருவாயில் இருந்ததால், பெருமான் மிகவும் விரைவாக செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது என்று உணர்த்துகின்றார். வல்லிய=கொடி போன்று மெலிந்த;
வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும்
நல்லிடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன்
பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றிப் பாடலுமே கை வாள்
ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலியதே
திருவூறல் தலத்தின் (தற்காலத்தில் தக்கோலம் என்று அழைக்கப் படுகின்றது) மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.106.8) திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை, செறுத்தெழு வாளரக்கன் என்று குறிப்பிடுகின்றார். கறுத்த மனம்=சினம் கொண்ட மனம்; பொதுவாக இயமன் எவரது உயிரையும் கவர்வதற்கு தானே நேரில் செல்வதில்லை. தனது தூதர்களையே அனுப்புவது அவனது வழக்கம். சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரை குறிப்பிட்ட காலத்தில் கவர்வதற்கும் இயமன் அவ்வாறே தனது தூதர்களை முதலில் அனுப்பியிருக்க வேண்டும்; ஆனால் அந்த சிறுவன் சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தமையால், அந்த தூதர்கள் சிறுவனின் உயிரினை கவர்வதற்கு தயங்கியவர்களாக திரும்பியதால், வேறு வழியின்றி இயமனே நேரில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது போலும். அதனால் இயமனுக்கு கோபம் வந்தது இயற்கை தானே. இயமனைக் கண்டதும் சிறுவன் கலங்கி மயங்கியதாக திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தனது ஆயுள் பதினாறு வயது தான் என்பதை நன்கு அறிந்தவன் சிறுவன் மார்க்கண்டேயன். இந்த வரையறை இறைவன் தனது தந்தைக்கு கொடுத்த வரத்தின் விளைவு என்பதையும் அறிந்தவன் சிறுவன் மார்க்கண்டேயன். எனவே பதினாறு வயதினில் தனக்கு மரணம் ஏற்படும் என்ற நிலைக்கு பக்குவப்பட்ட சிறுவனுக்கு கலக்கம் இயமனைக் கண்டதால் ஏற்படவில்லை. தான் செய்து கொண்டிருந்த சிவவழிபாட்டினுக்கு இடையூறு வந்ததே என்பதால் தான் அந்த சிறுவன் கலக்கம் அடைந்தான் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும். செறுத்து=கோபம் கொண்டு; ஒறுத்து=தண்டனை அளித்து; தான் செல்லும் வழியில் குறுக்கிட்ட கயிலை மலை என்பதால் கோபம் கொண்டு, மலையை நெருங்கிய அரக்கன் இராவணன், செய்த தவற்றுக்கு, கயிலாய மலையினை அசைத்துப் பார்த்த குற்றத்திற்கு தண்டனை அளித்த பெருமான் பின்னர் இராவணன் சாமகானம் இசைத்து இறைவனைப் புகழ்ந்து பாடியதும் அதே அரக்கனுக்கு பல அருள்கள் புரிந்தான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். எப்போதும் அடியார்களுக்கு அருள் புரிவதில் மகிழ்ச்சி அடையும் பெருமானின் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது.
கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்தலும் கலங்கி
மறுக்குறு மாணிக்கு அருள மகிழ்ந்தான் இடம் வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரம் தோளும் மெய்யும் நெரிய அன்று
ஒறுத்தருள் செய்த பிரான் திருவூறலை உள்குதுமே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.110.8) திருஞானசம்பந்தர், தருக்கின வாளரக்கன் என்று இராவணனை குறிப்பிடுகின்றார். தருக்கின=செருக்குடன் திரிந்த; ஒன்னலர்=பகைவர்: தனது வலிமையில் மிகுந்த செருக்கு உடையவனாக அரக்கன் இராவணன் திரிந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. அந்த செருக்கு தானே பெருமான் வாழ்கின்ற புனிதமான மலை கயிலை மலை என்பதையும் பொருட்படுத்தாமல், தான் செல்லும் வழியில் குறுக்கே நின்றது என்று முடிவு செய்து, கயிலாய மலையினைப் பேர்த்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, தனது பயணத்தை அரக்கன் தொடர்வதற்கு துணியும் நிலைக்கு அடிப்படை காரணமாக அமைந்தது. தனது வலிமையினால் செருக்கு உடையவனாகத் திகழ்ந்த அரக்கன் இராவணன், கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, அரக்கனின் தலைகளும் தோள்களும் கயிலாய மலையின் கீழே அமுக்குண்டு, நெரியும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலாய மலையின் மீது ஊன்றி மலையை அழுத்தியவன் பெருமான். நீண்ட துதிக்கையினை உடைய மதம் கொண்ட யானை, தன்னைத் தாக்க வந்த போது, அந்த யானையை தடுத்து நிறுத்தி அதன் தோலை உரித்தவன் பெருமான். தேவர்களின் பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்து அழித்தவனாகிய பெருமான் உறைகின்ற நகரம் வளம் மிகுந்த இடைமருது ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தருக்கின அரக்கன தாளும் தோளும்
நெரித்தவன் நெடுங்கை மாமத கரியன்று
உரித்தவன் ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே
திருவல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.113.8) அரக்கன் இராவணன், கயிலாய மலையினை இகழ்ந்து கூறிய பின்னர், அந்த மலையை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். நேடுவார்=தேடுபவர்; பிரமனும் திருமாலும் பெருமானின் திருப்பாதத்தைத் தேடி அலைந்து அந்த திருப்பாதத்தை காணமுடியாமல் வருந்தினர் என்றாலும், தன்பால் அன்பு கொண்டு தேடும் அடியார்களின் மனதினில் தானே மிகவும் எளியவனாக வந்து அவர்களது உள்ளத்தில் உறைபவன் பெருமான் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அரக்கன் தனது இருபது கைகளையும் கயிலாய மலையின் கீழே கொடுத்து பேர்த்து எடுக்க முயற்சி செய்த செயல் இங்கே குறிப்பிடப் படுகின்றது.
இகழ்ந்து அருவரையினை எடுக்கலுற்றாங்கு
அகழ்ந்த வல்லரக்கனை அடர்த்த பாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச் செய்தே
திகழ்ந்தவன் உறைவிடம் திருவல்லமே
திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.120.8) திருஞான சம்பந்தர், அரக்கன் இராவணனை, விடைத்த வல்லரக்கன் என்று குறிப்பிடுகின்றார். கயிலாய மலையினை நல் வெற்பு என்று குறிப்பிடுவதன் மூலம் கயிலை மலை பெருமை வாய்ந்தது என்பதை உணர்த்துகின்றார். இறை=சிறிதே; பெருமான் அழுத்தமாக தனது கால் பெருவிரலை ஊன்றவில்லை என்றும், மிகவும் மெதுவாகவே ஊன்றினார் என்றும் கூறுகின்றார், பெருமான் அழுத்தமாக தனது விரலை ஊன்றி இருந்தால், அரக்கனது நிலை என்னவாயிருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். தலைகள் மற்றும் தோள்கள் நெரியும் வண்ணம் ஊன்றியதை குறிப்பிடும் வகையில் முறைமுறை என்று கூறுகின்றார்.
விடைத்த வல்லரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்
அடித் தலத்தால் இறை ஊன்றி மற்றவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
திருவையாறு தலத்தின் மீது அருளிய வேறொரு பதிகத்தின் பாடலில் (1.130.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் அஞ்சாதே கயிலாய மலையெடுத்தான் என்று கூறுகின்றார். தேரிலிருந்து வேகமாக கீழே குதித்து கோபத்துடன் மலையை நோக்கி ஓடிய அரக்கனிடம் அவனது தேர்ப்பாகன், தவறு செய்ய வேண்டாம் என்று சொன்ன அறிவுரை அரக்கனது காதில் விழவில்லை. புனிதமான மலையினை வலம் வந்து வணங்காமல், அந்த மலையினை பேர்த்து எடுக்கத் துணிவது தவறு அல்லவா, அந்த தவற்றின் பின் விளைவுகள் மோசமாக இருக்குமே என்று அச்சம் கொண்டு, தவிர்த்திருக்க வேண்டும். சர்வ வல்லமை உடைய சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாவதால் என்ன நேரிடுமோ என்று கவலை கொண்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய அச்சம் ஏதும் கொள்ளாமல், தனது வலிமையின் மீது அளவு கடந்த நம்பிக்கை உடையவனாக, அரக்கன் இராவணன் தனது வழியில் குறுக்கிட்ட கயிலாய மலையினைப் பேர்த்து எடுத்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, தனது பயணத்தைத் தொடர நினைத்தான். இந்த செய்கையைத் தான் அஞ்சாதே மலை எடுத்தான் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வலிமை என்று உணர்த்தும் மைந்து என்ற சொல், எதுகை கருதி மஞ்சு என்று திரிந்தது. நெரிய=நொறுங்கும் வண்ணம்; அடர்த்த=மலையின் கீழே அமுக்கிய; இன், சாயல் ஆகிய இரண்டு சொற்களும் சேர்ந்து இஞ்சாயல் என்று மாறின. இன்=இனிய; சாயல்=நிழல்; மேதி=எருமை மாடு; இரிந்து=அச்சம் கொண்டு; உழக்கி=காலால் மிதித்து நசுக்கி; தேங்காய் தாமாக மரத்திலிருந்து விழுவதைத் தவிர்த்து எவரும் தேங்காயை பறிப்பதில்லை என்று குறிப்பிட்டு, நகரின் செல்வ வளம் நமக்கு உணர்த்தப் படுகின்றது. செஞ்சாலி=சிறந்த வகை நெல்;
அஞ்சாதே கயிலாய மலை எடுத்த அரக்கர் கோன் தலைகள் பத்தும்
மஞ்சாடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள் புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இளமேதி இரிந்து அங்கு ஓடிச்
செஞ்சாலிக் கதிர் உழக்கிச் செழுங்கமல வயல் படியும் திருவையாறே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.132.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை, கர்வம் மிகுந்த உடலை உடையவன் என்று குறிப்பிடுகின்றார். அளவு கடந்த வலிமை உடையவனாக இருந்த தன்மை தானே, ஆராயாது கயிலை மலையினை பேர்த்தெடுக்கும் செயலில் ஈடுபடத் தூண்டியது; அந்த கர்வம் தானே மிகுந்த ஆரவாரத்துடன் கயிலை மலை நோக்கிச் செல்லவும் காரணமாக இருந்தது. தருப்பம்=செருக்கு; பெருமானின் ஆற்றலை கருத்தினில் கொள்ளாது, தனது வலிமையில் கர்வம் கொண்டவனாக செயல்பட்ட அரக்கன் இராவணனை குறிப்பிட்ட திருஞானசம்பந்தருக்கு, கர்வத்துடன் சிவபெருமானை நாடிச் சென்ற சலந்தரனின் தன்மையும் நினைவுக்கு வந்தது போலும். தனக்கு எதிராக போரிட எவரும் இல்லாத நிலையில், மிகுந்த தோள் தினவுடன், சிவபெருமானுடன் சண்டையிடலாம் என்று தானே சலந்தரன் அவரை நாடிச் சென்றான்.
கருப்பமிகு உடல் அடர்த்துக் காலூன்றிக் கை மறித்துக் கயிலையென்னும்
பொருப்பு எடுக்கலுறும் அரக்கன் பொன்முடி தோள் நெரித்த விரல் புனிதர் கோயில்
தருப்பமிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடு மால் வழிபாடு செய்ய விழிவிமானம் சேர் மிழலையாமே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.133.8) திருஞானசம்பந்தர், இராவணனை ஏணிலா அரக்கன் என்று குறிப்பிடுகின்றார். ஏண்=உறுதி, பெருமை; இரண்டுமே இங்கே அரக்கன் இராவணனின் தன்மைக்கு பொருந்துவதாக உள்ளன. மன உறுதியற்ற அரக்கன் இராவணன் என்று இந்த பாடலில் திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மன உறுதி அற்றவனாகத் திகழ்ந்ததால் தானே, காமத்தின் வயப்பட்டவனாக அவன் விளங்கினான். அதற்காக அடுத்தவரின் மனைவியை திருடவும் துணிந்த செயல் பெருமைக்கு உரியது அல்ல என்பதால், பெருமையற்ற அரக்கன் என்று கூறுகின்றார். பெருமை என்ற பொருள் இங்கே மிகவும் பொருத்தமாக அமைந்து உள்ளது. வாணிலா=ஒளி பொருந்திய நிலா, வாள்+நிலா; புல்கு=பொருந்திய; வாள்=ஒளி வீசும்; அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களும் பெண்களுக்கு, முக்கியமாக இல்லத்து அரசிகளுக்கு இருக்க வேண்டிய குணங்களாக பண்டைய நாளில் கருதப்பட்டு வந்தது. அத்தகைய குணங்களுடன் உயர்ந்த இல்லத்தரசியாக பார்வதி தேவி விளங்கிய தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. பெருமானின் தலைமாலையில் இருக்கும் தலை, நகுதலை என்றும் நகு வெண்டலை என்றும் பல திருமுறை பாடல்களில் சொல்லப்படுகின்றது. வாய் பிளந்த நிலையில் பற்கள் வெளியே தெரியும் வண்ணம் உள்ள மண்டையோடு சிரிப்பது போன்ற தோற்றத்தை அளிப்பதை நாம் உணரலாம். உலகியலில் தாங்கள் அனுபவிக்கும் இன்பமும், உலகியல் வாழ்க்கையும் நிலையற்றது என்பதை உணராமல், அவற்றை நிலையானது என்று கருதி வாழும் மக்களின் அறியாமையை நினைத்து, பெருமானின் தலைமாலையில் உள்ள தலை சிரிக்கின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இந்த பாடலில் பெருமான் தனது கையில் நகுதலையை ஏந்திக் கொண்டு பலியேற்பதற்கு சென்றதாக திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். ஒளி பொருந்திய ஒற்றைப் பிறைச் சந்திரன் பொருந்திய தனது செஞ்சடையினில் பெருமான் ஒளியுடன் திகழும் பாம்பினையும் அணிந்து கொண்டு, நாணம் முதலிய குணங்கள் பொருந்தியவளாக சிறப்பான இல்வாழ்க்கை வாழ்கின்ற பிராட்டியைத் தனது உடலின் இடது பாகத்தில் ஏற்றுக் கொண்டும், சிரிக்கும் தோற்றத்துடன் வாய் பிளந்து காட்சி தரும் மண்டை ஓட்டினைத் தனது கையில் ஏந்திக் கொண்டு பல இடங்களிலும் திரிந்து பலியேற்பவன் சிவபெருமான். பெருமையற்றவனாக, காமத்தை அடக்கும் மனவுறுதி அற்றவனாக வாழ்ந்து வந்த அரக்கன் இராவணனின் நீண்ட முடிகள் பத்தையும் நெரித்தவனாகிய சிவபெருமான், உறைகின்ற தலம் கச்சி மாநகரிலுள்ள திருவேகம்பம் திருக்கோயில். வானளாவிய சோலைகள் நிறைந்த கச்சி மாநகரம் சென்றடைந்து, ஆங்குள்ள ஏகம்பம் திருக்கோயில் சென்றடைந்து இறைவனைத் தொழுது வழிபட, நமது இடர்கள் முற்றிலும் கெட்டுவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வாணிலா மதி புல்கு செஞ்சடை வாளரவம் அணிந்து
நாணிடத்தினில் வாழ்க்கை பேணி நகுதலையில் பலி தேர்ந்து
ஏணிலா அரக்கன் தன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்
சேணுலாம் பொழில் கச்சி ஏகம்பம் சேர இடர் கெடுமே
பராய்த்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.135.8) திருஞானசம்பந்தர், தருக்கின் மிக்க தசக்கிரிவன் என்று குறிப்பிடுகின்றார். தருக்கு=செருக்கு; தேவர்கள் எவராலும் தனக்கு மரணம் ஏற்படாது என்று வரம் வாங்கியமையால் தனது வலிமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததால், சிவபெருமானால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்துடன், அவர் வீற்றிருக்கும் புனிதமான மலை என்பதையும் கருதாமல், அரக்கன் இராவணன், கயிலை மலையைப் பேர்த்து எடுத்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு, தனது பயணத்தைத் தொடர வேண்டும் என்று முடிவு செய்த தன்மையை, தருக்கு என்ற சொல் மூலம் திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். பத்து தலைகளுடன் பிறந்தமையால் அரக்கன் இராவணனுக்கு பெற்றோர் இட்ட பெயர் தசக்கிரிவன் தான். கிரிவன் என்றால் கழுத்தினை உடையவன் என்று பொருள். பெருமானை நீலகிரிவன் என்று ஸ்ரீருத்ரம் அழைக்கின்றது. அவனுக்கு இராவணன் என்ற பெயரை சூட்டியவரே சிவபெருமான் தான். வாளோடு நாமமும் ஈந்தார் சிவபெருமான் என்று பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. இராவணன் என்ற சொல்லுக்கு உலகமெங்கும் கேட்கும் வண்ணம் உரத்த குரலில் அழுதவன் என்று பொருள். பெருமான் தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்ற, கயிலை மலையின் கீழே அமுக்குண்டு, தனது உடல் கூழாக மாறிவிடும் நிலையில் இருந்ததை உணர்ந்த, அரக்கன், பெருமானின் தயவினை வேண்டி சாமகானம் பாடிய போது அதனால் மகிழ்ச்சி அடைந்த பெருமான், தனது கால் விரலால் ஏற்பட்ட அழுத்தத்தை தளர்த்தவே, இராவணனின் துன்பம் நீங்கியது என்று வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டப் பகுதி கூறுகின்றது. இதே பகுதியில் அவனை சிவபெருமான் இராவணன் என்று அழைத்தார் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த செய்தி தான், அரக்கனது இயற் பெயரைக் குறிப்பிட்டு இங்கே உணர்த்தப் படுகின்றது. பருக்கினார்=பருகச் செய்தார்; நுகரச் செய்தார்; நாளோடு வாளும் நாமமும் கொடுத்து அரக்கனை இன்பத்தில் ஆழ்த்தி, இன்பத்தினை பருகச் செய்தமை பருக்கினார் என்ற சொல் மூலம் உணர்த்தப் படுகின்றது. தனது உடல் வலிமையாலும், தான் பெற்றிருந்த வரத்தின் தன்மையாலும் செருக்கு அடைந்தவனாகத் திரிந்த அரக்கன் இராவணனை, கயிலை மலையின் கீழே அமுங்கி நொறுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றியவர் சிவபெருமான். பின்னர் அரக்கன் இராவணன், சாமகானம் பாடியதால், தனது உள்ளம் குளிரவே, அவனுக்கு பல வரங்கள் அளித்து இன்பங்கள் நுகரச் செய்த கருணையாளராகிய பெருமான் உறைவது பராய்த்துறை தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை
நெருக்கினார் விரல் ஒன்றினால்
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை
அருக்கன் தன்னை அடிகளே
வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.2.09) ஆர்த்து வந்த அரக்கனை அடர்த்த பெருமான் என்று திருஞானசம்பந்தர் பெருமானை குறிப்பிடுகின்றார். சீர்மை=பெருமை; தீர்த்த நீர்= புனிதமான நீர்; புண்ணிய நதிகளை, அதன் பெருமை கருதி மலர் தூவி வழிபடும் பண்பாடு தேவார முதலிகளின் காலத்தில் இருந்ததை இந்த பாடல் உணர்த்துகின்றது. இந்த செய்தியின் மூலம், புண்ணிய நதிகளில் நீராடத் தொடங்கும் முன்னர், அந்த நதியின் சிறப்பு கருதி, புண்ணிய தீர்த்தங்களை தொழவேண்டும் என்பது உணர்த்தப் படுகின்றது. குடைவார்=குடைந்து நீராடும் அடியார்கள்; ஆர்த்து வந்த=ஆரவாரம் செய்து வந்த; பலவிதமான பெருமைகள் உடையவர் என்று பதிகத்தின் நான்காவது பாடலில் பெருமானை குறிப்பிட்ட திருஞானசம்பந்தர், அந்நாள் வரை பலரையும் வெற்றி கொண்டு செருக்குடன் திரிந்து கொண்டிருந்த அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கிய பெருமையான செயலை இங்கே குறிப்பிடுகின்றார். அத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் இகழத் தக்க மண்டையோட்டில் பலியேற்பது அவரது பெருமைக்கு தகுதியானதா என்ற கேள்வியை இங்கே திருஞானசம்பந்தர் இங்கே எழுப்புகின்றார். விருப்பு வெறுப்புகளை கடந்த பெருமான் தான் செய்யும் செயல்களின் விளைவாக தோன்றும் நன்மையை கருதுவாரே தவிர, அந்த செயல்களின் தகுதியை கருதுவதில்லை, என்பதே இந்த கேள்விக்கு விடையாகும். இந்த பதிகத்தின் பல பாடல்களில் பெருமான் தனது கையினில் ஏந்தியிருக்கும் மண்டையோட்டின் இழிந்த தன்மையை குறிப்பிடும் திருஞானசம்பந்தர், இந்த பாடலில் பெருமை வாய்ந்த மண்டையோடு என்று குறிப்பிடுகின்றார். பொதுவாக இழிவானதாக மண்டையோடு கருதப்பட்டாலும், பெருமானுடன் இணைந்ததாலும், பக்குவப்பட்ட உயிர்களின் மலங்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் முக்திநிலை பெறுவதற்கு ஒரு கருவியாக செயல்படுவதாலும், பெருமை உடையமண்டையோடு என்று குறிப்பிட்டார் போலும்.
தீர்த்த நீர் வந்து இழிபுனல் பொன்னியில் பன்மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே
திருவான்மியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.4.8) திருஞானசம்பந்தர் தக்கில் வந்த தசக்கிரிவன் என்று அரக்கன் இராவணனை குறிப்பிடுகின்றார். கிரிவம் என்றால் கழுத்து என்று பொருள்; தசக்கிரிவன்=பத்து கழுத்துகளை, அதாவது பத்து தலைகளை உடையவன் என்று பொருள். பெருமான் இராவணன் என்ற பெயரை அரக்கனுக்கு வழங்கும் முன்னர் அவன், தசக்கிரிவன் என்றே அழைக்கப் பட்டான் என்று வால்மீகி இராமயணம் உணர்த்துகின்றது. மலையின் கீழே அகப்பட்டு கதறிய அரக்கனின் குரல் எட்டு திக்குகளிலும் எதிரொலித்தது என்றும், இவ்வாறு உலகத்தவர் கேட்கும் வண்ணம் உரத்த குரல் உடையவன் என்ற பொருள் பட இராவணன் என்று அரக்கன் பெருமானால் அழைக்கப் பட்டான் என்பது திக்கில் வந்தலற என்ற தொடர் மூலம் இங்கே உணர்த்தப் படுகின்றது. தக்கில்=தகுதியற்ற முறையில் வந்த; கயிலாய மலையின் சிறப்பினை கருதி, மிகுந்த பக்தியுடன் அந்த மலையினை அணுக வேண்டும் என்பதே நெறி. ஆனால் அந்த மலை தான் செல்லும் வழியில் குறுக்கே இருந்தது என்ற எண்ணம் அரக்கனுக்குத் தோன்றியதால், அவனுக்கு வந்த கோபம், அவனது கண்களை மறைத்தது. கோபத்தில் என்ன செய்கின்றோம் என்பதை அறியாமல் அந்த அரக்கன் செயல்பட்ட நிலையை தகுதியற்ற நெறிமுறை என்று திருஞான சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தொக்க=இணைந்த; அம்மை உமையோடு துணையாக இணைந்து இருக்கையில், நீர் எதற்காக பல பூத கணங்களும் பேய்க் கணங்களும் சூழ காணப்படுகின்றீர் என்று திருஞான சம்பந்தர் இறைவனை நோக்கி கேள்வி கேட்பதாக அமைந்த பாடல்.
தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்திறத்
திக்கில் வந்த அலறவ் வடர்த்தீர் திருவான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர் அருள் என்சொலீர்
பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே
அனேகதங்காவதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.05.08) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் ஈரமேதும் இலனாக கயிலாய மலையினை பேர்த்தெடுக்க எழுந்தான் என்று குறிப்பிடுகின்றார். ஈரம் என்பதற்கு அன்பு என்று பொருள் கொண்டு, பெருமானின் இருப்பிடமாகிய கயிலாய மலையின் மீது அன்பு வைத்தவனாக, பக்தி உள்ளவனாக இருக்கும் நிலைக்கு மாறாக அரக்கன் இருந்த தன்மை குறிப்பிடப் படுகின்றது. அன்பும் பக்தியும் இன்றி தனது வீரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவனாக அரக்கன் செருக்குடன் இருந்த நிலை இங்கே புலப்படுத்தப் படுகின்றது. ஈரம் என்பதற்கு எதிர்மறை வெம்மை என்பதால் வெம்மை நிறைந்த மனதுடன் அரக்கன் தனது முயற்சியில் ஈடுபட்டான் என்று பொருள் கொள்வது பொருத்தமே. மனதில் வெம்மை என்றால் மனதில் கோப உணர்வு கொண்டவன் என்று பொருள். எனவே, தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்று கருதி அரக்கன் கோபம் கொண்டு மிகுந்த ஆரவாரத்துடன் கயிலை மலையை பேர்த்தெடுக்கும் நோக்கத்துடன் அந்த மலையை நெருங்கினான் என்பது புலனாகின்றது. விலங்கல்=மலை, கயிலாய மலை; விலங்கலான்=கயிலை மலையின் உரிமையாளனாகிய பெருமான்; வாரம்-அன்பு;
ஈரமேதும் இலனாகி எழுந்த இராவணன்
வீரமேதும் இலனாக விளைந்த விலங்கலான்
ஆரம் பாம்பது அணிவான் தன் அனேகதங்காவதம்
வாரமாகி நினைவார் வினையாயின மாயுமே
சிவபெருமானைப் பணிந்து வணங்கி, கயிலை மலையினைக் கடந்து செல்லாமல், அதனைப் பெயர்த்து வேறோர் இடத்தில் வைக்கத் துணிந்த அரக்கன் என்று திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.6.9) திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். உலகிலுள்ள அனைத்து நூல்களுக்கும் பழமையான நூலாக வேதங்கள் கருதப்படுகின்றன. எனவே வேதங்கள் உணர்த்தும் வாழ்க்கை நெறிகள், தொன்மையான வழியாக கருதப்படுகின்றன. அதனை உணர்த்தும் முகமாக தொல் வழி என்று இந்த பாடலில் கூறுகின்றார். வேதங்களில் உணர்த்தப்படும் வாழ்க்கை நெறி தான் யாது. உண்மையான மெய்ப்பொருளாகிய சிவபெருமானின் தன்மைகளை முழுமையாக அறிந்து கொண்டு அவனையே தியானம் செய்து அவனது திருவடிகளை அடைவது தான் உயிரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது தான் வேதங்கள் உணர்த்தும் நெறி. சிவபக்தனாக திகழ்ந்த இராவணன், இந்த உண்மையை அறிந்தவன் தான். எனவே பெருமானையும் பெருமானது இருப்பிடமாகிய கயிலாய மலையையும் மதித்து போற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். எனினும் தனது உடல் வலிமையின் மீது அவன் கொண்டிருந்த அளவு கடந்த கர்வம் அவனை அறியாமையில் மூழ்குவித்து, கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்யும் வண்ணம் தூண்டியது. வரை=மலை; அரக்கன் இராவணனை மலையின் கீழே அடர்த்து வருத்திய பின்னர், பெருமான் அவன் மீது இரக்கம் கொண்டு பல விதங்களிலும் அருள் புரிந்ததை, பெருமான் புரிந்த மற்றொரு கருணைச் செயலாகிய சந்திரனுக்கு அபயம் அளித்ததை குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். மேகலை என்பது பெண்கள் தங்களது இடுப்பினில் அணியும் ஆபரணம். மாதொரு பாகனாக பெருமான் இருக்கும் நிலை, மேகலை அணிந்தவன் என்று பெருமானை குறிப்பிட்டு இங்கே உணர்த்தப் படுகின்றது. வேதங்கள் உரைத்த பழமையான வழியே நின்று சிவபெருமானையும் அவரது இருப்பிடமாகிய கயிலாய மலையினையும் மதித்து போற்றாமல், கயிலை மலையினை பேர்த்து எடுப்பேன் என்று முயற்சி செய்த இலங்கை அரசனாகிய இராவணனை மலையின் கீழே அடர்த்து, அரக்கனது மலை போன்று வலிமையான தோள்களின் வலிமையை அடக்கிய இறைவன், சந்திரன் பால் கருணை கொண்டு அவனுக்கு மறுவாழ்வு அளிக்கும் வல்லமை வாய்ந்த இறைவன், இராவணன் மீதும் கருணை கொண்டு அவனுக்கு பல வரங்கள் அளித்தான். கரை புரண்டோடும் வெள்ளப் பெருக்கினை உடைய காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள திருவையாறு தலத்தின் மீது மிகுந்த விருப்பம் கொண்டுள்ள இறைவன், தனது இடுப்பினில் மேகலை ஆபரணம் அணிந்து மாதொருபாகனாக தான் விளங்கும் தன்மையை உலகுக்கு உணர்த்தும் இறைவன், திருவையாறு தலத்தினைத் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள தலைவன் ஆவான் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
உரை செய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்து மதி சூடிய மைந்தனார்
கரை செய் காவிரியின் வட பாலது காதலான்
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே
சிக்கல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.8.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை, தெற்றல் ஆகிய தென்னிலங்கைக்கு இறைவன் என்று குறிப்பிடுகின்றார். தெற்றல் என்றால் தெளிந்த அறிவினை உடையவன் என்று பொருள். தெளிந்த அறிவினை உடையவனாக இருந்த போதிலும், அவனது அறிவினை மழுங்கடிக்கும் வண்ணம் தனது வலிமை மீது அவன் கொண்டிருந்த கர்வம் இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன் மலை
பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் அடி
உற்று நீ நினையாய் வினையாயின ஓயவே
இரக்கம் ஒன்றிலாத அரக்கன் என்று மழபாடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.9.8) திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை குறிப்பிடுகின்றார். இரக்கம் என்ற சொல், அன்பு, பக்தி என்ற பொருளில் இங்கே கையாளப் பட்டுள்ளது. பெருமான் பால் பக்தி இருந்திருந்தால், பெருமான் உறைகின்ற கயிலாய மலையினை அரக்கன் மதித்திருப்பான் அல்லவா. உரம்=வலிமை; உரக்கை=வலிமை வாய்ந்த கைகள்; ஒண்முடி=ஒளிவீசும் கிரீடங்கள் அணிந்த தலைகள்; விரல் தலை=விரலின் நுனி; மேயவன்=பொருந்தி உறைபவன்; பக்தியற்றவனாக, சிவபெருமானின் திருமலை என்பதையும் கருதாமல், தனது வலிமையான கைகளால் அரக்கன் இராவணன், கயிலை மலையினை பெயர்த்தெடுக்க முயற்சி செய்த போது, அவனது ஒளிவீசும் கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தும் அறுந்து கீழே விழுந்து விடுமோ என்று அவன் அச்சம் கொள்ளும் வண்ணம், அரக்கனது உடல் கயிலை மலையின் கீழே அகப்பட்டு வருந்தும் வண்ணம், தனது கால் பெருவிரலின் நுனியால் கயிலை மலையினை அழுத்தியவன் சிவபெருமான். உமையம்மையுடன் பொருந்தி உறைபவனாக மழபாடியில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமான், தனது அடியார்களுக்கு வரத்தை அளிக்கும் வள்ளலாக விளங்குகின்றான்.
இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மாமலை
உரக் கையால் எடுத்தான் தனது ஒண் முடி பத்து இற
விரல் தலைந் நிறுவி உமையாளோடு மேயவன்
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே
திருவழுந்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.20.9) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் தணியாது மலையை எடுத்தான் என்று கூறுகின்றார். கோபம் வருவது உயிரின் இயற்கை. ஒரு சில நொடிகள் ஆற அமர யோசித்தால் அந்த கோபம் குறைவதையும் நாம் உணர்கின்றோம். அதனால் தானே கோபம் கொள்ளும்போது உடனே செயல்படாமல், சிறிது நேரம் கழித்து எந்த செயலிலும் ஈடுபடுமாறு பெரியோர்கள் ஆலோசனை அளிக்கின்றனர். ஆனால் அரக்கன் இராவணனுக்கோ கயிலை மலையின் மீது கோபம் மிகவும் அதிகமாக இருந்ததால், அந்த கோபம் சிறிதும் தணியாதவனாக அவன் மலையை நெருங்கினான் என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். மணி நீள் முடி=இரத்தினங்கள் பதிக்கப்பட்ட நீண்ட கிரீடம்; அணியார் விரல்=அழகிய விரல்: பணி=பணிகின்ற; மாமடம்=பெருங்கோயில்;
மணி நீள் முடியான் மலையை அரக்கன்
தணியாது எடுத்தான் உடலம் நெரித்த
அணியார் விரலாய் அழுந்தை மறையோர்
பணிமா மடம் மன்னி இருந்தனையே
கருவூர் ஆனிலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.28.8) திருஞானசம்பந்தர், அரக்கனை கோபம் கொண்டவன் என்று குறிப்பிடுகின்றார். கடுத்த=கோபம் கொண்ட; தான் செல்லும் வழியில் குறுக்கே நின்றது என்று கயிலை மலையின் மீது கோபம் கொண்ட அரக்கன் இராவணன். அடர்த்தல்=நெரித்தல்; தாள் என்பது பொதுவாக பாதத்தை குறிக்கும். ஆனால் இங்கே பெருமானின் கால் பெருவிரலை குறிப்பிடுகின்றது. பெருமான் உயிர்களுக்கு தண்டனை அளிப்பது, அவர்கள் தாங்கள் செய்த தவறினை உணர்ந்து மன்னிப்பு கோர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான். எனவே தான் நிக்ரஹம் செய்யும் பெருமான் அனுக்ரஹமும் செய்வான் என்று கூறப்படுகின்றது. அரக்கன் இராவணன் தான் செய்த தவறினை உணர்ந்து பெருமானிடம் இறைஞ்சி சாமகானம் பாடியதைக் கேட்ட பெருமான் கருணை புரிந்த செயலும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. அருள் புரிந்த கூத்தன் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். கூத்து எப்போதும் அதனை, காண்போர்க்கு இன்பம் தரும். தனது கூத்தின் மூலம் உயிர்களுக்கு இன்பம் அளிக்கும் பெருமான், தனது அருள் செயல்கள் மூலம் தனது அடியார்களுக்கு இன்பம் அளிக்கின்றான் என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. தான் செல்லும் வழியில் குறுக்கிட்டுத் தனது பயணத்தைத் தடுத்த கயிலை மலை என்று, அந்த மலையின் மீது கோபம் கொண்டு அந்த மலையினைப் பேர்த்து வேறோர் இடத்தில் வைத்து விட்டு தனது பயணத்தைத் தொடர வேண்டும் என்று முடிவு செய்த அரக்கன், வாளினை உடைய அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்க்க முயற்சி செய்தான்; அந்த அரக்கனது தலைகள், தோள்கள் மற்றும் பாதங்கள் கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நொறுங்குமாறு, தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றியவன் சிவபெருமான். பின்னர் அரக்கன் தனது தவறினை உணர்ந்து, சாமகானம் இசைத்து வேண்டிய போது, அவனுக்கு அருள் புரிந்தவர் சிவபெருமான். இவரே கருவூர் தலத்தில் உள்ள ஆனிலை என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் கூத்த பிரானாக உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கடுத்த வாளரக்கன் கயிலையை
எடுத்தவன் தலை தோளும் தாளினால்
அடர்த்தவன் கருவூருள் ஆனிலை
கொடுத்தவன் அருள் கூத்தன் அல்லனே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.33.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் மிகுந்த கோபத்தோடு கயிலாய மலை நோக்கி வந்தான் என்று உணர்த்துகின்றார். கடுத்து=கோபத்துடன்; வரை=கயிலாய மலை; மிகு தோள்=வலிமையில் மிகுந்த தோள்கள்; அளி= வண்டு; நடத்த=அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும்; கலவைத் திரள்கள்=நறுமணம் மிகுந்த பொருட்களின் கலவை; வைகிய=நிறைந்த
கடுத்து வல அரக்கன் முன் நெருக்கி வரை தன்னை
எடுத்தவன் முடித் தலைகள் பத்து மிகு தோளும்
அடர்த்தவர் தமக்கு இடமது என்பர் அளி பாட
நடத்த கலவைத் திரள்கள் வைகிய நள்ளாறே
திருமயிலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.47.8) திருஞானசம்பந்தர், அரக்கனை தண்ணா அரக்கன் என்று குறிப்பிடுகின்றார். தண்மை என்ற சொல்லுக்கு எதிர்மறை தண்ணா; நெஞ்சில் ஈரமற்றவனாக பலரையும் வருத்திய அரக்கன் இராவணன். பலருக்கும் வருத்தத்தை, வெம்மையை ஏற்படுத்தும் செயல்கள் புரிந்த அரக்கன் இராவணன்; இந்த பாடலில் குறிப்பிடப்படும் அட்டமி நாள் விழா, அடுத்த இரண்டு பாடல்களில் குறிப்பிடப்படும் பொற்றாப்பு மற்றும் பெருஞ்சாந்தி விழாக்கள், பெரும்பாலான திருக்கோயில்களில் தற்போது நடைபெறுவதில்லை. பதினெண் கணங்கள் என்று சிவகணங்களை குறிப்பிடுகின்றார். கண்ணாரக் காண்டல் என்று திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாவினை நேரில் கண்டு களித்தலை குறிப்பிடுகின்றார். இந்த குறிப்பு நமக்கு சேக்கிழார் அருளிய பெரியபுராணப் பாடலை, இந்த பதிகத்துடன் தொடர்பு கொண்ட பாடலை, நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த பாடலில், நிலவுலகில் பிறந்த மனிதர்கள் பெறுகின்ற பயன் இரண்டு என்று சேக்கிழார் கூறுகின்றார். அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தலும் கண்ணிலால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தலும் என்று குறிப்பிடுகின்றார். இந்த இரண்டு செயல்களையே பதிகத்தின் மையக் கருத்தாகக் கொண்டு இந்த பதிகத்தின் பாடல்களில் குறிப்பிட்டு, இந்த நிகழ்ச்சிகளை காணாமல் சென்று விட்டாயே பூம்பாவாய் என்று திருஞானசம்பந்தர் விளிப்பதை நாம் உணரலாம். பத்தரது வேடத்தை பரமனாகவே கருதி, அந்த வேடத்தைக் கொண்டாடி வழிபட்டு, திருவமுது ஊட்டுவது, உடை முதலாக அவர் வேண்டுவதை கொடுப்பது என்பது முதற் பயன். இயற்பகை நாயனார், இளையான்குடி மாற நாயனார், மெய்ப்பொருள் நாயனார், அமர்நீதி நாயனார், ஏனாதிநாதர் நாயனார், மானக்கஞ்சாற நாயனார், திருக்குறிப்புத் தொண்டர், குலச்சிறை நாயனார், அப்பூதி அடிகளார், மூர்க்க நாயனார், முனையடுவார் நாயனார், இடங்கழி நாயனார், சிறுத்தொண்ட நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், கணநாத நாயனார், நரசிங்க முனையரையர், கலிக்கம்ப நாயனார், நேச நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார் ஆகியோர்கள் சிவனடியார்கள் வேண்டியதை அளித்து முக்திநிலை பெற்ற அடியார்கள். இரண்டாவதாக சொல்லப்படும் செயல், பெருமானை சிறப்பித்துச் செய்யப்படும் திருவிழாக்களை கண்டு களித்தல்; பெருமானின் திருவிழாக்களை காணும் அன்பர்கள் இம்மையிலும் மறுமையிலும் பல நன்மைகள் பெறுவார்கள் என்பதை உணர்த்தும் முகமாக நல்விழா என்று கூறுகின்றார்.
தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்
தனது நெஞ்சில் ஈரமற்றவனாக, பலருக்கும் வருத்தம் விளைவிக்கும் செயல்களைச் செய்து வந்த அரக்கன் இராவணனின் வீரம் மிகுந்த தோள்களை சாய்த்து கயிலாய மலையின் கீழே அமுக்கி வருத்திய, கால் பெருவிரலை உடையவன் சிவபெருமான்; அவன் கண்களுக்கு நிறைவு தரும் வகையில் அழகு வாய்ந்த மயிலைத் தலத்தினில் உள்ள கபாலீச்சரம் திருக்கோயிலில் மிகுந்த விருப்பத்துடன் உறைகின்றான். பண்ணுடன் பொருந்திய பாடல்களை பாடியும் ஆடியும், சிவகணங்களாக விளங்கும் அடியார்கள் கொண்டாடும் அட்டமித் திருநாளைக் காணாதே பூம்பாவை ஆகிய நீ இருப்பது முறையோ, சொல்வாயாக என்று இறந்த பெண்ணின் எலும்புகளை, உயிருடைய பெண்ணாகவே பாவித்து, பூம்பாவை என்று அழைத்து திருஞானசம்பந்தர் பாடும் பாடல்.
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.48.8) திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை, உன்மத்தன் என்று குறிப்பிடுகின்றார். மொழியாள்=சொல்லினை உடையவள்; கண்=மயில் தோகையில் உள்ள கண்கள்; மஞ்ஞை=மயில்; கருமை என்று குறிப்பிட்டாலும் அந்த சொல் நீல நிறத்தினை உணர்த்துவதாக நாம் பொருள் கொள்ள வேண்டும். உரம்=வலிமை; மொய்த்த=பொருந்திய; பண் மொய்த்த என்று குறிப்பிடுவதன் மூலம், இனிமையான பண்கள் தாமே சென்று தேவியின் சொற்களில் சென்று அமர்ந்தது போன்ற இனிமையான சொற்களை உடையவள் தேவி என்று திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். உன்மத்தன்=பைத்தியக்காரன்; கயிலாய மலையினை பேர்த்து எடுக்க நினைப்பதே பெரிய குற்றம். அரக்கன் இராவணன் அறியாமையால் செய்தான் என்று எண்ணுவது என்பது தவறு என்று உணர்த்தும் முகமாக, இராமாயணம் தேர்ப்பாகன் அறிவுரை செய்ததை உணர்த்துகின்றது. பல தேவாரப் பாடல்களும், தேர்ப்பாகன் செய்த அறிவுரையை குறிப்பிடுகின்றன. எனவே தான், தேர்ப்பாகன் செய்த எச்சரிக்கையினையும் புறக்கணித்து, கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் எண்ணத்துடன் அந்த மலையை நோக்கி ஓடியவனை பித்துக்குளி என்றும் பைத்தியக்காரன் என்று அழைப்பது மிகவும் பொருத்தம் தானே. சில பதிப்புகளில் உண்மத்தன் என்று காணப்படுகின்றது. எதுகை கருதி உன்மத்தன் என்ற சொல் உண்மத்தன் என்று திரிந்ததாக கருதினார்கள் போலும். பண்கள் தாமே சென்று தேவியின் வாயிலிருந்து வரும் சொற்களில் அமர்ந்தது என்று கருதும் வண்ணம் மிகவும் இனிமையான மொழியினைக் கொண்டுள்ள பார்வதி அன்னை, அச்சம் கொள்ளுமாறு கயிலை மலையினை அசைத்து பேர்த்து எடுக்க முயற்சி செய்த பைத்தியக்கார அரக்கன் இராவணனின் வலிமை குன்றுமாறு அவனை மலையின் கீழே அழுத்தி நெரித்தவனாகிய சிவபெருமான் உறையும் கோயில் திருவெண்காடு ஆகும். அழகிய கண்கள் சென்று பொருந்தியது போன்று காணப்படும் தோகைகளை உடைய நீலமயில்கள் நடமாட, அந்த நடனத்திற்கு ஏற்ப கடல் தனது அலைகளால் ஆரவாரம் செய்யும் காட்சியினையும் வானளாவ உயர்ந்த சோலைகளையும் உடையதும், அந்த சோலைகளில் உடலில் வரிகளை உடைய வண்டுகள் இசை முரல்வதும் ஆகிய தலம் வெண்காடு ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பண் மொய்த்த இன் மொழியாள் பயம் எய்த மலை எடுத்த
உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள் செய்தான் உறை கோயில்
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண் மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே
நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.57.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை, கறுத்த அரக்கன் என்று குறிப்பிட்டு, அரக்கன் இராவணன், கயிலாய மலை, தனது பயணத்திற்கு தடங்கலாக விளங்கியது என்று கோபம் கொண்டான் என்று கூறுகின்றார். மாது=பெருமை, காதல்;. மறுகும்வண்ணம்=கலக்கம் அடையும் வண்ணம்; மாது என்ற சொல்லுக்கு அழகினை உடையவள் என்று பொருள் கொண்டு, தலத்து அம்பிகையின் திருநாமம் கல்யாண சுந்தரி என்பதை உணர்த்துவதாக சிலர் விளக்கம் கூறுவதும் பொருத்தமாக உள்ளது. தனது ஒரு காதினில் வெண்குழை அணிந்தவராகிய நீர், கயிலாய மலை தான் செல்லும் வழியில் குறுக்கே நின்று தனது பயணத்திற்கு இடையூறாக இருந்தது என்று கருதி, மிகுந்த கோபத்துடன் அந்த மலையினை அப்புறப் படுத்தி விட்டு தனது பயணத்தைத் தொடர வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்தேடுக்க முயற்சி செய்த போது, தன்பால் நீர் கொண்டுள்ள அன்பினை மேலும் அதிகரிக்கும் வண்ணம் மென்மையான மொழிகள் பேசும் உமையன்னை, அச்சம் கொண்டு நடுங்கியதைக் கண்ட நீர், மகிழ்ச்சி கொண்டு நகைத்தீர்; தீய செயல்களை விரும்பாத நல்லூர் தலத்து அந்தணர்கள் உம்மைப் புகழ்ந்து போற்றும் வண்ணம், இந்த தலத்தினில் உள்ள பெருமை மிகுந்த திருக்கோயிலினை, தலைவனாகிய நீர் தங்கும் இடமாக, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளீர் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
காதமரும் வெண்குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப
மாதமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டுகந்தீர்
தீதமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திருநல்லூர்
மாதமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
இவ்வாறு பிராட்டி நடுங்கியதைக் கண்ட பெருமான், தனது கால் பெருவிரலை ஊன்றி அன்னை கொண்டிருந்த அச்சத்தை தவிர்த்ததாக பெரும்பாலான பாடல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த விளக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு அவ்வாறு பிராட்டி கலங்கிய போது, பெருமான் மகிழ்ச்சி கொண்டதாக இந்த பாடலில் திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது, சிந்தனைக்குரியது. இவ்வாறு மகிழ்ந்தது பெருமானின் திருவிளையாடல்களில் ஒன்று என்று சான்றோர்கள் பொருள் கண்டனர். கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்ற செயலுக்கு கோபம் கொண்ட பார்வதி அன்னையின் கோபத்தினை தணிப்பதற்காக,பெருமான் இந்த திருவிளையாடலை புரிந்தாரோ என்று நமக்கு தோன்றுகின்றது. இத்தகைய கற்பனை ஒன்றினை உள்ளடக்கி அப்பர் பிரான் பாடிய பாடலை நாம் இங்கே காண்பது பொருத்தமாகும், கயிலை மலையினை அரக்கன் அசைத்த போது, பார்வதி தேவி கொண்ட அச்சத்தினை நீக்கிய பெருமான், அதனை ஒரு வாய்ப்பாக கருதி தேவி தன்னிடம் கொண்டிருந்த ஊடலைத் தீர்த்தான் என்று சுவையாக தனது கற்பனையை ஏற்றி அப்பர் பிரான் பாடிய பாடல் மறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.34) கடைப் பாடலாகும். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அரக்கன் இராவணனின் கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. கங்கை நங்கையை பெருமான் தனது சடையில் மறைத்ததை காரணமாக கொண்டு தேவி ஊடல் செய்ததாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். உருவம் வேறுவேறாக திகழ்ந்தாலும், பெருமானும் பிராட்டியும் இணைந்தே செயல்படுவதாக சைவ சித்தாந்தம் சொல்கின்றது. பெருமானின் கருணை தான் தேவி. எனவே அவர்களுக்குள்ளே ஊடல் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனினும் புலவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி, அப்பர் பிரான், ஒரு கற்பனை நிகழ்ச்சியை புகுத்தி, தேவாரப் பாடலுக்கு நயம் சேர்ப்பதை நாம் இந்த பாடலில் காணலாம்.
கங்கை நங்கையைத் தனது தலையில் மறைத்து வைத்ததால் தேவிக்கு கோபம் ஏற்படுகின்றது. அந்த கோபம் ஊடலாக மாறுகின்றது. அரக்கன் இராவணன் கயிலை மலை அசைத்ததால் ஏற்பட்ட அசைவு, அன்னைக்கு அச்சத்தை ஏற்படுத்த, அந்த அச்சத்தை தீர்க்கும் முகமாக, அன்னையிடம் அஞ்சேல் என்று சொல்லிய பெருமான், தனது கால் பெருவிரலால் மலையினை அழுத்தி, மலையின் ஆட்டத்தை நிறுத்துகின்றார். தேவியின் அச்சம் மட்டுமா மறைகின்றது. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஊடலும் மறைந்து விடுகின்றது என்பதை சொல்லாமல் சொல்லி விளக்கும் நயமான பதிகம்.
கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான் மலையை
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட
அங்கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடு தானே
உலகியலில் வாழும் நாம், எத்தனை கருத்தொத்த தம்பதியராக இருப்பினும் அவர்களின் இடையே, சிறுசிறு விஷயங்களில், கருத்து ஒவ்வாது இருப்பதையும், அந்த வேறுபாடு காரணமாக ஊடல்கள் ஏற்படுவதையும் காண்கின்றோம். சங்க இலக்கியங்களில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் ஊடல் வெகுவாக விவரிக்கப் படுகின்றது. திருக்குறளிலும் ஊடல் காதலுக்கு மேலும் சுவை ஊட்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு ஊடலுவகை என்று தனி அதிகாரம் கொடுக்கப்பட்டு பத்து பாடல்கள் உள்ளன. அந்த ஊடல் அதிக நேரம் நீடிப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் உண்மையான பாசமும் நேசமும் கொண்டு தம்பதியர் திகழ்வதால், அவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறிய இடர் நேர்ந்தாலும், அடுத்தவர் அந்த இடரினைக் களையும் போது, அந்நாள் வரை அவர்களின் இடையே இருந்த ஊடல் காணாமல் போய்விடுகின்றது. இதனை உலக வாழ்க்கையில் அடிக்கடி காண்கின்றோம். அத்தகைய நிகழ்ச்சியாக, இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி கொண்ட அச்சத்தை பெருமான் களைந்த விதத்தினை அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். இறைவனின் செயல் வடிவமே சக்தி. சக்திக்கும் சிவத்திற்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் கிடையாது. சிவபெருமானின் எண்ணத்திற்கு ஏற்ப செயல் படும் சக்திக்கும் சிவத்திற்கும் வேறுபாடு இல்லாத போது, அவர்களிடையே ஊடல் வருவதற்கான வாய்ப்பு அறவே இல்லை. ஆனாலும், அவர்களுக்கு ஊடல் ஏற்பட்டது போன்று அப்பர் பிரான் கற்பனை செய்து அந்த ஊடல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்று இந்த பாடலில் மிகவும் சுவையாக கூறுகின்றார்.
அரிசிற்கரைப்புத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.63.8) திருஞானசம்பந்தர், தான் செல்லும் வழியில் கயிலாய மலை எதிர்ப்பட்டதைக் கண்ட அரக்கன் இராவணன், தனது தேர் பயணத்தைத் தொடரும் வண்ணம் இந்த கயிலாய மலையினை பேர்த்து வேறொர் இடத்தில் வைத்து விட்டு பயணத்தை தொடருவேன் என்று வீரமொழி பேசியவனாக, கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான் என்று கூறுகின்றார். ஏந்தும்=தாங்கும்; எண்ணத்தை தாங்கியவனாக; வரை=மலை; ஒரு முறை அரக்கன் இராவணன் கயிலாய மலையைக் கடந்து செல்ல முயற்சி செய்த போது அவனால் முடியவில்லை. தான் செல்லும் வழியில் குறுக்கே நின்று இடையூறு செய்தது என்று கருதிய அரக்கன், இந்த மலையை பேர்த்து எடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தை மேற்கொள்வேன் என்ற எண்ணத்துடன் செயல்பட்டதை ஏந்தும் என்ற சொல் மூலம் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த தலத்தினை காண வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணம் மேற்கொள்ளும் அடியார்கள் தங்களது வினைகள் நீங்கப் பெறுவார்கள் என்று கூறுகின்றார்.
இத்தேர் ஏக இம்மலை பேர்ப்பன் என்று ஏந்தும்
பத்தோர் வாயான் வரைக் கீழ் அலறப் பாதம் தான்
வைத்தார் அருள் செய் வரதன் மருவும் ஊரான
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே
நனிபள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.84.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை மதியா அரக்கன் என்று குறிப்பிடுகின்றார். கயிலாய மலையின் சிறப்பினை கருதி அந்த மலையினை வலம் வராமல், அதனை பேர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அணுகிய அரக்கனின் செயல் குறித்து மதியா அரக்கன் என்று இங்கே கூறுகின்றார். வாளன்=வாளினை உடையவன்; உலம்=கற்றூண்; நலமிகு கீழுமேலும்= நலமுடைய கீழ் ஏழ் மற்றும் மேலேழ் உலகங்கள்; வலமிகு வாளன் வேலன் என்ற தொடரினை அரக்கன் என்பதுடன் கூட்டி. வலிமை மிகுந்த வாள் வேல் ஆகிய ஆயுதங்களை உடைய அரக்கன் இராவணன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. வலிமை மிகுந்தவனும், சிறந்த வாள் வேல் ஆகிய ஆயுதங்களை உடையவனும் ஆகிய பெருமான், வளைந்த வாள் போன்று நீண்ட பற்களை உடைய அரக்கன் இராவணன், கயிலை மலையை மதியாது அதனைப் பேர்த்து எடுக்கத் துணிந்த போது, அரக்கனது கற்றூண் போன்று வலிமையான தோள்களும் வலிமை இழக்கும் வண்ணம் தனது விரலை மலையின் மீது ஊன்றி அரக்கனை மலையின் கீழே அழுத்தினான். அத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் மிகுந்த விருப்பத்துடன் உறையும் நகரம் தான் நனிபள்ளி. நலங்கள் பல உடைய கீழேழ் மற்றும் மேலேழ் உலகங்களிலும் தனக்கு நிகராக எவரும் இல்லாதவனாக திகழும் சிவபெருமானை, நீதியின் வடிவமாக திகழும் பெருமானை வணங்கி, நாள்தோறும் அவனது திருவடிகளைப் போற்றி புகழும் அடியார்கள் நிறைந்த தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாகஎன்று தனது தொண்டர்களிடம் திருஞானசம்பந்த்ர் கூறும் பாடல்.
வலமிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு
உலமிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர் தான்
நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை
நலமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்
அரக்கன் இராவணன் தனது வலிமையின் மீது அளவு கடந்த செருக்கும் நம்பிக்கையும் கொண்டிருந்த காரணத்தால் தான், அவன் மிகுந்த ஆரவாரத்துடன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்தான் என்பதை நமக்கு உணர்த்தும் பாடல் சீர்காழி தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் பாடல் (2.96.8); கார்கொள் மேனி=கறுத்த உடல்; ஏர்கொள்= அழகுடைய; தார்=பூ; கயிலை மலையின் மேன்மை கருதி எழில் கொள் மலை என்று கூறுகின்றார்.
கார்கொள் மேனியவ் வரக்கன் தன் கடுந்திறலினைக் கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் எரியச்
சீர்கொள் பாதத்தொர் விரலால் செறுத்த எம் சிவனுறை கோயில்
தார் கொள் வண்டினம் சூழ்ந்த தண்வயல் காழி நன்னகரே
கடிக்குளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.104.8) அறிவு இழந்தவனாக அரக்கன் இராவணன் ஆரவாரத்துடன் கயிலாய மலையினை பேர்த்தெடுக்க ஒடினான் என்று திருஞான சம்பந்தர் கூறுகின்றார். மடுத்த=உட்புகுத்திய; பகைவர்களின் உடலில் உட்புகுத்திய என்று பொருள் கொள்ளவேண்டும். இற=முரிந்து விழ; கடுத்து=தனது செயலுக்கு வருந்தி; பேரருள் கூத்தன்=ஞான நாடகமாடும் பெருமான்; பெருமான் ஆடும் நடனத்தை அதன் பயன் கருதி, ஊன நடனம் என்றும் ஞான நடனம் என்றும் பெரியோர்கள் கூறுவார்கள்; கை எடுத்து அலறி என்ற தொடர் மூலம், அரக்கன் உடல் வருத்தத்தினால் அலறியது மட்டுமன்றி, தன்னை காப்பற்றும் வண்ணம் பெருமானை இறைஞ்சி கையெடுத்து கூப்பினான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். குணம் உடையவர் என்று பெருமான் விரும்பும் எட்டு நல்ல குணங்களைக் கொண்ட அடியார்கள் என்று உணர்த்துகின்றார். அக மலர்கள் என்று நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய குணங்கள் எட்டு இங்கே குறிப்பிடப் படுகின்றன. அவை, கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாகும். நாம் அனைவரும் இந்த குணங்களைக் கொண்டு, அக மலர்களாகிய இவைகளால் வழிபடுவதையே கடவுள் விரும்புகின்றார்.
மடுத்த வாளரக்கன் அவன் மலை தன் மேல் மதியிலாமையில் ஓடி
எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரலூன்றக்
கடுத்து வாயொடு கையெடுத்து அலறிடக் கடிக்குளம் தனில் மேவிக்
கொடுத்த பேரருள் கூத்தனை ஏத்துவார் குணமுடையவர் தாமே
வலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.106.8) திருஞானசம்பந்தர், கயிலாய மலை தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதிய அரக்கன் இராவணன் மிகுந்த கோபம் கொண்டான் என்று கூறுகின்றார். மஞ்சு=மேகம்; கெண்டுதல்=கால்களால் கிளறுதல்; விறல்=ஆற்றல், வீரம்; தான் செல்லும் வழியில் இருந்து தனது பயணத்தை தடை செய்த கயிலை மலை என்ற எண்ணம் கொண்டதால், கடுமையான சினம் கொண்டவனாக, வலிமை வாய்ந்த அரக்கன் இராவணன், தனது வலிமையால் கயிலை மலையினை பேர்த்தெடுத்து விட்டுத் தனது பயணத்தை தொடரும் எண்ணத்துடன், அந்த மலையினை பேர்த்து வேறோர் இடத்தில் வைக்க முயற்சி செய்தான்; அந்த முயற்சியில் அவன் ஈடுபட்டபோது, அவனது இருபது தோள்களையும் கயிலை மலையின் கீழே நெருக்கி அவனது வலிமையை அடக்கியவர் சிவபெருமான். அவர், பாற்கடலிலிருந்து பொங்கியெழுந்த நஞ்சினை தேக்கியதால், கருமை நிறம் படர்ந்த அழகிய கழுத்து உடைய தலைவராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் இடம் திருவலஞ்சுழி; தங்களது கால்களால் கிளறி வண்டுகள் தேன் பருகும் மலர்கள் நிறைந்த, மேகங்கள் தழுவும், சோலைகள் நிறைந்த தலம், திருவலஞ்சுழி என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வெஞ்சின வாளரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள்
அஞ்சும் ஓரு ஆறும் இரு நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகாய
நஞ்சிருள் கண்டத்து நாதர் என்று நணுகும் இடம் போலும்
மஞ்சுலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மாநகரே
மாந்துறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.110.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை நிந்தியா எடுத்தார்த்த வல்லரக்கன் என்று குறிப்பிடுகின்றார். நிந்தியா=நிந்தனை செய்து; இந்த பாடலில் பெருமானின் பெருமையை உணராது அவனை நிந்தனை செய்த அரக்கன் இராவணன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கயிலை மலையின் சிறப்பு கருதி அதனை வலம் வந்து தனது பயணத்தை அரக்கன் தொடர்ந்திருந்தால், அவனுக்கு எந்த கேடும் ஏற்பட்டிருக்காது. ஆனால் அரக்கனோ கயிலை மலையினை துச்சமாக மதித்து அதனைப் பேர்த்து எடுப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்தான். இந்த செய்கையைத் தான் திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். நிந்தித்து சிந்தியா=சிந்தனை செய்யாத; தீநெறி= தீயநெறி, நரகம் செல்வதற்கு வழி வகுக்கும் செய்கைகள்; இந்த பாடலில் இறைவனைப் பற்றி சிந்தனை செய்யாது வாழும் மனிதர்கள் தீயநெறியைச் சென்று அடைவார்கள் என்று கூறுகின்றார். பெருமானைச் சிந்தியாத மனிதர்கள் தீநெறி சென்று சேர்வார் என்று கூறுவதன் மூலம், எதிர்மறைக் கருத்தாக, இறைவனைச் சிந்திக்கும் மனிதர்கள் நன்னெறி சேர்வார்கள் என்று நமக்கு திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். மந்திகள் மாந்திட என்று மாற்றி அமைத்து பொருள் கொள்ளவேண்டும். மந்தம்=தென்றல்;
மந்தமார் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை
நிந்தியா எடுத்து ஆர்த்த வல்லரக்கனை நெரித்திடு விரலானைச்
சிந்தியா மனத்தார் அவர் சேர்வது தீநெறி அது தானே
திலதைப்பதி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.118.8) திருஞானசம்பந்தர், மிகுந்த கோபத்துடன் கயிலாய மலையினை நோக்கிச் சென்ற அரக்கன் இராவணன் என்று கூறுகின்றார். கடுத்து=மிகுந்த கோபத்தோடு கனல்=தீ; பூகம்=பாக்கு மரம்; மது=கள், தேன்; மடுத்து=பருகி, உண்டு; கருவரை=சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் என்பதால் கருவரை என்று சொல்லப் படுகின்றது.
கடுத்த வந்த கனல் மேனியினான் கருவரை தனை
எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க்கு இடமாவது
புடைகொள் பூகத்திளம் பாளை புல்கும் மதுப்பாயவாய்
மடுத்து மந்தி உகளும் திலதைம் மதிமுத்தமே
மூக்கீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.120.8) அரக்கன் இராவணனை மூர்க்கன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். உரம்=உடல் வலிமை; அடல்=வலிமை; மூர்க்கன் என்ற சொல்லினை அரக்கன் என்பதற்கு முன்னர் வைத்து பொருள் காணவேண்டும். மொய்ம்பு=வல்லமை மிகுந்த செயல்; முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார் என்ற மொழிக்கு ஏற்ப தேர்ப்பாகனது எச்சரிக்கையையும் புறக்கணித்து செயலில் இறங்கிய இராவணனின் செய்கை, மூர்க்கனது செய்கை என்று குறிப்பிடப் பட்டது. சிவ வழிபாட்டுக்கு எவரும் இடையூறு செய்யலாகாது என்பதை உணர்த்த, கூற்றுவனை உதைத்தவர் சிவபெருமான்; பெருமான் மூவிலைச் சூலம் ஏந்திய செயல், தோற்றுவித்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்று செயல்களையும் செய்வது தான் ஒருவனே என்பதை உணர்த்துகின்றது; இராவணனுக்கு அருள் புரிந்தது இந்நாள் வரை நாம் எந்த தவறுகளைச் செய்திருந்தாலும், இன்று முதல் நாம் இறைவனை வணங்கத் தொடங்கினால், தயக்கம் ஏதுமின்றி இறைவன் நமக்கு அருள் புரிவான் என்பதை உணர்த்தும் பொருட்டு. ஈர்க்கு நீர்=தன்னை நெருங்கும் மனிதர்களை இழுக்கும் தன்மை; கங்கை நதியில் இருக்கும் வெள்ளப் பெருக்கு, நதியினை நெருங்கும் மனிதர்களை இழுத்து வெள்ளச் சுழலில் அழுத்தி மூழ்கடிக்கும் வண்ணம் இருக்கும் தன்மை; ஆர்க்கும்=ஆரவாரம் செய்த; தன்னை நெருங்கும் எவரையும் இழுத்து தனது சுழலில் மூழ்கடிக்கும் வண்ணம் அதிகமான நீர்ப் பெருக்கு உடைய கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்று மறைத்தது, மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்வதற்காக வந்த இயமனை காலால் உதைத்து கீழே தள்ளியது, கூர்மை உடையதும் பல நன்மைகள் செய்யும் ஆற்றல் மிகுந்ததும் ஆகிய மூவிலை வேலினை தனது வலது கையில் ஏந்தியது; மிகுந்த ஆரவாரத்துடன் கயிலை மலையினை பேர்த்தெடுத்து வேறு இடத்தில் வைத்து விட்டு பயணத்தைத் தொடர்வேன் என்று கத்தியவாறு மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த முரடன் அரக்கன் இராவணனின் உடலை கயிலை மலையின் கீழே அமுக்கி அவனது உடல் நொறுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மீது ஊன்றியது ஆகிய செயல்கள், மூக்கீச்சரம் தலத்தினில் உறையும் சிவபெருமான் செய்த செயல்களாகும் என்பதே பாடலின் பொழிப்புரை.
ஈர்க்கு நீர் செஞ்சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும்
கூர்க்கு நன் மூவிலை வேல் வலன் ஏந்திய கொள்கையும்
ஆர்க்கும் வாயான் அரக்கன் உரத்தை நெரித்து அவ்வடல்
மூர்க்கன் மூக்கீச்சரத்து அடிகள் செய்யா நின்ற மொய்ம்பு அதே
திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.121.8) திருஞானசம்பந்தர், அரக்கனது ஊக்கமொழிய தனது விரலை பெருமான் கயிலை மலையின் மீது ஊன்றி, அரக்கனை மலையின் கீழே நெருக்கினார் என்று கூறுகின்றார். ஊக்கம்=தனது வலிமை மீது கொண்டிருந்த செருக்கின் விளைவாக, அரக்கன் இராவணன் மிகுந்த ஊக்கம் கொண்டவனாக கயிலாய மலையினைப் பேர்த்தெடுக்கத் துணிந்தான் என்பதை உணர்த்துகின்றார். வீக்கம்=பெருமை; விலங்கல்=மலை, இங்கே கயிலாய மலை; பாதிரிப் புலியூர் தலத்து இறைவனை தரிசனம் செய்தால், நமது வினைகள் மெலிந்து நுணுகி ஒழிந்துவிடும் என்று கூறுகின்றார்.
வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கல் இடை
ஊக்கம் ஒழிந்து அலறவ் விரலால் இறை ஊன்றினான்
பூக்கமழும் புனல் பாதிரிப் புலியூர் தனை
நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே
கோட்டாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.12.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன் வஞ்சனையாக கயிலாய மலையை பேர்த்தெடுக்கத் துணிந்தான் என்று கூறுகின்றார். கரவு அமரக் கயிலை எடுத்தான் என்று கூறுகின்றார். கரவு=வஞ்சனையான எண்ணம். இராவணன் தனது அண்ணன் என்றும் கருதாது குபேரனுடன் போர் புரிந்து அவனது புட்பக விமானத்தைக் கைப்பற்றிய பின்னர், வேறு பலரையும் வெற்றி கொள்ளும் நோக்கத்துடன் திக்விஜயம் செய்தான். தான் செல்லும் வழியில் எதிர்ப்பட்டது என்று கருதி கயிலாய மலையின் மீது கோபம் கொண்ட அரக்கனுக்கு இரண்டு வழிகள் இருந்தன; முதலாவது கயிலாய மலையின் தலைவனாகிய பெருமானுடன் போரிட்டு வெற்றி கொண்ட பின்னர் அந்த மலையினை அங்கிருந்து அகற்றியிருக்க வேண்டும்; அல்லையேல் பெருமானின் எல்லையற்ற ஆற்றலையும் பெருமானின் முன்னே தான் மிகவும் எளியவன் என்பதையும் கருத்தினில் கொண்டு, பெருமானின் அனுமதி பெற்று தனது பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும்; இந்த இரண்டினில் எதனையும் மேற் கொள்ளாத அரக்கன், தனது தேர்ப்பாகன் சொன்ன அறிவுரையை கருத்தினில் கொண்டு கயிலை மலையினை வலம் செய்தாவது தனது பயணத்தைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் இவை எதையும் செய்யாமல், கயிலாய மலையினை பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைக்கலாம் என்று வஞ்சனையாக செயல்படத் துணிந்தான். இந்த தன்மை தான் இங்கே குறிப்பிடப் படுகின்றது. அரக்கனின் கருமை நிறத்தினை இரவமரும் நிறம் என்று சொல்கின்றார். இருள் படர்ந்த மேனி என்று பொருள்: அவனது உடல் மட்டுமா இருள் படர்ந்து கருமை நிறத்துடன் காணப்பட்டது, அவனது மனமும் அல்லவா வஞ்சனையாகிய இருள் படர்ந்து இருந்தது. அந்த நிலையை குறிப்பாக உணர்த்தினார் போலும்.
இரவமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை
கரவமர்க் கயிலை எடுத்தான் வலி செற்றவன்
முரவமரும் குலமலர்ச் சோலை சூழ்ந்த திருக் கோட்டாற்றுள்
அரவமரும் சடையான் அடியார்க்கருள் செய்யுமே
பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.13.8) தான் செல்லும் வழியில் குறுக்கே நின்று தனது பயணத்தைத் தடை செய்த மலை என்று நினைத்ததால், மிகுந்த கோபம் கொண்டவனாக, அந்த மலையினைப் பேர்த்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு, தனது பயணத்தைத் தொடர வேண்டும் என்று அரக்கன் இராவணன் முடிவு செய்ததை, மா சின அரக்கன் என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். வரை=மலை, இங்கே கயிலாய மலை. காசை=காயாம் பூ. காயாம் பூவினைப் போன்று கரிய நிறம் கொண்ட கூந்தலை உடைய உமையன்னை என்று குறிப்பிடுகின்றார். எயில்=கோட்டை; காய்சின=பிற உயிர்கள் மீது கோபம் கொண்டு, அந்த உயிர்களை தாம் பறந்து சென்று கொண்டிருந்த கோட்டைகளின் கீழே அமுக்கி நசுக்கிய திரிபுரத்து அரக்கர்கள் என்று கூறுகின்றார்.
மாசின அரக்கனை வரையின் வாட்டிய
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்தராய் நகர்க்
காசை செய் குழலுமை கணவர் காண்மினே
திருவுசாத்தனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.33.8) மதியிலா அரக்கன் என்று அரக்கன் இராவணனை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கோபம் அவனது கண்களை மறைக்க, அவன் மதியிலாதவனாக, மிகுந்த ஆத்திரத்துடன் தனது முயற்சியில் ஈடுபட்டதை, சடசட என்ற ஒலிக்குறிப்பு மூலம் உணர்த்துகின்றார். மடவரல்=என்றும் இளமைத் தன்மை உடைய பார்வதி தேவி; திடமென=உறுதியாக
மடவரல் பங்கினன் மலை தனை மதியாது
சடசட எடுத்தவன் தலை பத்து நெரிதர
அடர்தர ஊன்றி அங்கே அவற்கருள் செய்தான்
திடமென உறைவிடம் திருவுசாத்தானமே
கல்லால் நீழல் என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (3.40.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை, தூர்த்தன் என்று அழைக்கின்றார். ஆப்தன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் ஆத்தன் என்பது. நெருங்கிய நண்பன் என்று பொருள். நமக்கு உதவி தேவைப்படும் தருணத்தில் நாம் அவனது உதவியை நாடாது இருந்தாலும் தானே முன்வந்து உதவுபவனே நெருங்கிய நண்பனாக கருதப் படுகின்றான். அத்தகைய நெருங்கிய நண்பனாக அடியார்களின் தேவைகளை புரிந்து கொண்டு தானே முன்வந்து உதவி செய்யும் கருணையாளன் என்பதால் பெருமானை ஆத்தன் என்று திருஞான சம்பந்தர் இங்கே கூறுகின்றார். தூர்த்தன்=தாழ்ந்த அறிவினை உடையவன். தாழ்ந்த அறிவு உடையவனாக, புனிதமான கயிலை மலையினை, இறைவனின் இருப்பிடமாக விளங்கும் மலையினை, பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் வலிமையை அழித்து, பின்னர் தனது தவறினை உணர்ந்த அரக்கன் பெருமானே தனது தலைவன் என்று சாமகானம் பாடி இறைஞ்ச, அவனுக்கு ஒளி பொருந்திய வாளினையும் நீண்ட வாழ்நாளையும் அருளிய கருணையாளனை நமது நெருங்கிய நண்பனாக கருதி அவனைப் புகழ்ந்து வழிபட்டு அவனது கருணைக்கு பாத்திரமாவோமாக என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தூர்த்தன் வீரம்
தீர்த்த கோவை
ஆத்தமாக
ஏத்தினோமே
திருவாலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.51.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை, தூர்த்தன் என்று அழைக்கின்றார். தூர்த்தன்=தீயவன்; ஆத்தன்=ஆப்தன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்; உயிர் நண்பன் என்று பொருள்; ஏத்துதல்=புகழ்ந்து பாடுதல்; பார்த்திவன்=நிலவுலகை ஆளும்; தீயவனாக விளங்கிய அரக்கன் இராவணனின் வீரத்தை அழித்துப் பின்னர் அவனுக்கு அருள் செய்த பெருமானே, ஆலவாய் தலத்தினில் உறைபவனே, உயிர் நண்பனாக எனக்கு அஞ்சேல் என்று சொல்லி பாதுகாப்பீராக; உன்னைப் புகழ்ந்து பாடும் பேற்றினை இழந்த சமணர்கள் இந்த மடத்திற்கு வைத்த தீ, இந்த உலகினை ஆளும் தென்னனாகிய பாண்டிய மன்னனைச் சென்று பற்றட்டும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தூர்த்தன் வீரந் தொலைத்தரு ளாலவாய்
ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
ஏத்தி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பார்த்தி வன்தென்னன் பாண்டியற்காகவே
திருவாலவாய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.52.8) கருத்திலா இலங்கை மன்னன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். கயிலாய மலையின் புனிதத் தன்மை மற்றும் பெருமானின் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாதவனாக அரக்கன் செயல்பட்ட தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. நிறையிலங்கு=புலன்களின் வழியே செல்லாமல், ஒன்றிய மனத்துடன், இறைவன் பற்றிய சிந்தனைகளே மனதினில் நிறைந்து நிற்கும் வண்ணம்; இவ்வாறு இறைவனை வழிபடுவதே முறையான வழிபாடு என்று திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். மறையிலங்கு பாடலாய்=வேதங்களில் உள்ள பாடல்களால் போற்றப் படுபவனே;
கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல்
துறையிலங்கு மன்னனைக் தோள் அடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே
வெண்டுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.61.8) திருஞானசம்பந்தர் மிகுந்த சினத்துடன் அரக்கன் இராவணன் கயிலாய மலையை எடுத்தான் என்று குறிப்பிடுகின்றார். கடுவன் சினமா=கடுமையான கோபத்தினால் ஆட்கொள்ளப்பட்டு; பகைவர்களாக இருந்தாலும் அவர்களை வருத்துவதில் பெருமானுக்கு விருப்பம் ஏதுமில்லை. எனவே, செற்றுகந்தான் என்று இந்த பாடலில் குறிப்பிடுவது, இராவணனுக்கு அருள் புரிந்து பெருமான் மகிழ்ந்த செய்தியை குறிப்பிடுகின்றது என்று பொருள் கொள்வதே பொருத்தம். தனக்குத் தீமை இழைக்க முயற்சி செய்த அரக்கனுக்கு அருள் புரிந்த கருணையாளர், தன்னைப் புகழ்ந்து பாடும் அடியார்களுக்கும் மிகுந்த விருப்பத்துடன் அருள் புரிவார் என்பதை உணர்த்தும் பொருட்டு, பரவவல்லார் வினைகள் அறுப்பான் என்று இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
கரமிரு பத்தினாலும் கடுவன் சினமா எடுத்த
சிரமொரு பத்தும் உடை அரக்கன் வலி செற்றுகந்தான்
பரவ வில்லார் வினைகள் பற்றறுப்பான் ஒரு பாகமும் பெண்
விரவிய வேடத்தினான் விரும்பும் இடம் வெண்டுறையே
திருக்கயிலாய மலையின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.68.8) திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை கருத்திலா ஒருத்தன் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் கால் பெருவிரலினை நிருத்த விரல் என்று இங்கே குறிப்பிட்டு, அதன் நளினத்தையும் மென்மைத் தன்மையையும் நமக்கு உணர்த்துகின்றார். எப்போதும் நடனம் ஆடிக்கொண்டிருக்கும் பெருமானின் பாதங்களும் பாதத்தின் விரல்களும் நளினமாக இருப்பது இயற்கை தானே. மலையின் மீது மோதும் மதயானையின் நிலைக்கு அரக்கன் மிகவும் பொருத்தமாக ஒப்பிடுகின்றார். மருப்பு=கோடு, இங்கே தந்தம் என்று பொருள் கொள்ளவேண்டும். மிகுந்த ஆவேசத்துடன் மலையின் மேல் மோதும் யானையின் தந்தங்களிலிருந்து நெருப்புப் பொறிகள் பறக்கும் தன்மை, தனது வலிமையின் மீது செருக்கு கொண்டு மோதும் யானையின் நிலை, முதலியவை அரக்கனின் நிலையை ஒத்து இருந்ததை நாம் உணரலாம். செரு=போர்; பருத்த=உடல் பருத்த; பொருப்பு=கயிலாய மலை; விருப்புற இருக்கை= விருப்பத்துடன் அமரும் இருக்கை; ஒருக்கு=ஒருங்கே, மலையையும் மலையின் மேல் அமர்ந்திருக்கும் இறைவன், இறைவி மற்றும் அனைவரையும், ஒருங்கே அசைத்து பேர்க்கும் முயற்சி; ஒருத்தி=ஒப்பற்ற உமையன்னை; வெருக்குற=அச்சம் எழ; கருத்தில=மலையின் புனிதத் தன்மை மற்றும் பெருமானின் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல்; மிகுந்த ஆவேசத்துடன், தனது வலிமையின் மீது மிகவும் அதிகமான நம்பிக்கை கொண்டவனாக, தனது வலிமையால் கர்வம் கொண்டவனாக, கயிலாய மலையின் புனிதத் தன்மை மற்றும் பெருமானின் ஆற்றல் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாதவனாக அரக்கன் செயல்பட்ட தன்மை மிகவும் நேர்த்தியாக, மதயானையுடன் தன்மைக்கு ஒப்பிடப்பட்டு, இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.
மருப்பிடை நெருப்பெழு தருக்கோடு செருச் செய்த பருத்த களிற்றின்
பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணரா
ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கென நிருத்த விரலால்
கருத்தில ஒருத்தனை எருத்திற நெரித்த கயிலாய மலையே
திருவைகாவூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.71.8) திருஞானசம்பந்தர், அரக்கனை கடியோன் என்று குறிப்பிடுகின்றார். வையகம்=நிலவுலகம், இங்கே நிலவுலகத்து மக்களைக் குறிக்கின்றது’; மெய்=உடல்; நல காலை=நல்ல காலைப் பொழுது, பெருமானைத் தொழுவதற்கு உகந்த நேரம் விடியற்காலைப் பொழுது என்று கூறுவார்கள். விலங்கல்=மலை; கடியோன்=கொடிய குணங்கள் கொண்ட அரக்கன் இராவணன்; இருபது கைகளும் வலிமை மிகுந்த உடலும் வருந்தும் வண்ணம் முழு முயற்சியுடன், கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த கொடிய குணங்களைக் கொண்ட அரக்கன் இராவணனின் பத்து தலைகளும் ஒருங்கே மலையின் கீழே அமுக்குண்டு நொறுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை அழுத்திய அழகன் சிவபெருமான் தனது இடமாக கருதுவது திருவைகா தலம் ஆகும். தங்களது கையில் நல்ல மலர்கள் கொண்டு தினமும் நல்ல காலைப் பொழுதிலும் மற்றும் மாலை நேரங்களிலும் இறைவனை மனதினில் நினைத்து பல விதமாக அவனது புகழினை பாடிக் கொண்டு உலகிலுள்ள பலரும் சென்று அடைந்து தொழுதும் புகழ்ந்தும் இறைவனை வணங்கும் அழகினை உடைய தலம் திருவைகா ஆகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன்
ஐயிரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன் தன் இடமாம்
கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதிப் பலவிதம்
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே
பட்டிச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.73.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை, நீசன் என்று அழைக்கின்றார். நேசம்=விருப்பம்; பலரையும் வெற்றி கொள்ளும் வண்ணம் திக்விஜயம் செய்யவேண்டும் என்ற விருப்பம் உடையவன்; நீசன்=இழிந்த குணமுடையவன், அடுத்தவரை மதியாத தன்மை உடையவன் என்று குறிப்பிடுகின்றார் போலும்; விறல்=திறன், வலிமை; வரை=எல்லை; உற்றது=தன்மை; நாசம்=பிறந்து இறத்தல்; நண்ணல்= சென்றடைதல். பலரையும் வெற்றி கொண்டு திக்விஜயம் செய்வதில் பெருவிருப்பம் உடையவனாக, தோள் வலிமை உடையவனாக இருந்த அரக்கன் இராவணன் கயிலை மலை, தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்து குறுக்கிட்டது என்று கருதி அந்த மலையினை அப்புறப் படுத்தி விட்டு தனது பயணத்தை தொடரலாம் என்ற எண்ணத்துடன், அந்த மலையினை பெயர்த்து எடுக்க முயற்சி செய்த போது, இழிந்த தன்மை உடைய அந்த அரக்கனது வலிமையை வாட்டி, அரக்கனை மலையின் கீழே அமுக்கிய வல்லமை உடையவர் சிவபெருமான். தனது ஆற்றலின் எல்லையையும் பண்புகளையும் எவரும் உணரமுடியாத வண்ணம் விளங்கும் பெருமான், வளராத ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் சூட்டிக் கொண்டவர் ஆவார். இத்தகைய தன்மை உடைய, சிவபெருமான் உறைகின்ற பட்டீச்சரம் திருக்கோயிலைத் தொழுது புகழ்ந்து போற்றி வணங்கும் அடியார்கள் வினைகள் ஏதும் இல்லாதவர்களாக திகழ்ந்து பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுதலை பெறுதல் வேண்டும் என்ற வேட்கை உடையவர்களாக விளங்கி, சிவஞானம் அடையப் பெற்றவராக இருப்பதால், அவர்கள் தேவருலகம் சென்றடைவதை ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். அவர்கள் அதனினும் உயர்ந்த சிவலோகத்தை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நேசமிகு தோள் வலவனாகி இறைவன் மலையை நீக்கி இடலும்
நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான்
ஈசன் உறை பட்டிசரம் ஏத்தி எழுவார்கள் வினையேதும் இலவாய்
நாசமற வேண்டுதலின் நண்ணல் எளிதாம் அமரர் விண்ணுலகமே
சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.8) அரக்கன் இராவணனை, மதியில் அரக்கன் என்று அழைக்கின்றார். மறுக்கம்=அச்சம்; வரை=மலை, இங்கே இமயமலையினை குறிக்கும்; மதியில் வலிமை=அறிவற்றவனாகவும் வலிமை மிகுந்தவனாகவும் விளங்கிய அரக்கன் இராவணன்; உரம்=மார்பு; அருக்கன்=சூரியன்; ஏழ்விழவு=ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழா; பண்டைய நாட்களில் திருவிழாக்கள் ஏழு நாட்களே நடைபெற்றன போலும். அட்டமி நவமி திதி நாட்கள் நற்காரியங்கள் நடத்த தகுதியற்ற நாட்கள் என்று கருதப் பட்டமையால் அட்டமி நவமி நாட்களில் திருவிழாக்களை தவிர்த்தனர் போலும். இமயமலைக்கு அரசனாகிய இமவானின் மகளாகிய பார்வதி தேவியின் மனம் கலங்கும் வண்ணம், மிகுந்த வலிமை உடையவனாகவும் அறிவற்றவனாகவும் விளங்கிய அரக்கன் இராவணன் கயிலை மலையினை எடுக்கும் முயற்சியில் அசைத்த போது, அந்த அரக்கனது தோள்கள் மார்பு மற்றும் தலைகள் ஆகியவை மலையின் கீழே அகப்பட்டு நொறுங்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது அழுத்தியவன் பெருமான். பின்னர் அரக்கன் தனது தவறினை உணர்ந்து பெருமானை சாமகானம் பாடி போற்றிய போது அவனுக்கு அருள் புரிந்த அழகனாகிய பெருமானின் இருப்பிடம் சண்பை நகரமாகும். சூரியன் முதலான பல தேவர்களும் கலந்து கொள்ளும் திருவிழாக்கள், அட்டமி தினத்திற்கும் முந்திய ஏழு நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவதும், சிறப்பினில் கற்பகச் சோலையினை நெருங்கும் வண்ணம் மக்களுக்கு பல வகையிலும் பயன் அளிக்கும் செழிப்பான சோலைகள் நிறைந்தும், குளிர்ந்த மேகங்கள் தவழும் வண்ணம் உயர்ந்த சோலைகள் உடையதும் ஆகிய நகரம் சண்பை நகரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வரைக்குல மகட்கொரு மறுக்கம் வருவித்த மதியில் வலியுடை
அரக்கனது உரக் கர சிரத்துற அடர்த்து அருள் புரிந்த அழகன்
இருக்கையது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்
தருக்குல நெருக்கு மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே
வேதவனம் என்று அழைக்கப்படும் திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.76.8) அரக்கன் இராவணனை, திருஞானசம்பந்தர், முரட்டுத் தன்மை உடையவன் என்று கூறுகின்றார். புலவர்களின் வறுமை கெட்டு, அந்த வறுமையினால் அவர்கள் அடைந்த துன்பங்கள் பலவும் கெடும் வண்ணம் கொடை அளித்த கொடையாளிகள் நிறைந்த தலம் மறைக்காடு என்று சொல்கின்றார்.
முடித் தலைகள் பத்துடை முருட்டுரு அரக்கனை நெருக்கி விரலால்
அடித்தலம் முன் வைத்துலமரக் கருணை வைத்தவன் இடம் பல துயர்
கெடுத்தலை நினைத்து அறமியற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை
விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே
திருமாணிகுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.77.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனின் செயலை எண்ணமதுவின்றி செய்த செயல் என்று குறிப்பிடுகின்றார். கயிலாய மலையின் பெருமையையும் சிவபெருமானின் அளவுகடந்த ஆற்றலையும் எண்ணிப் பார்க்காமல், முன்யோசனை ஏதும் இல்லாமல் தேவையற்ற துணிச்சலுடன் அரக்கன் இராவணன் செய்த செயல் என்பதை உணர்த்துகின்றார். திறல்=ஆற்றல், வலிமை; பண்ணமரும்=இசைப் பண்கள் சென்று அமர்ந்தது போன்று இனிய மொழிகளை உடைய மகளிர்; பணை=பருத்த; இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் உதவி மாணிக்குழி என்று குறிப்பிடப் பட்டுள்ளமையால் உதவி என்பது இந்த தலத்தின் பெயராகவும் மாணிக்குழி என்பது இந்த திருக்கோயிலின் பெயராகவும் ஒரு காலத்தில் இருந்திருக்கலாமோ என்று சிலர் கருதுகின்றனர்.
எண்ணமதுவின்றி எழிலார் கைலை மாமலை எடுத்த திறலார்
திண்ணிய அரக்கனை நெரித்து அருள் புரிந்த சிவலோகன் இடமாம்
பண்ணமரும் மென் மொழியினார் பணை முலைப் பவள வாய் அழகதார்
ஒண்ணுதல் மடந்தையர் குடைந்து புனலாடுதவி மாணிகுழியே
வேதிகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.78.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணன், தான் செல்லும் வழியில் கயிலாய மலை குறுக்கிட்டது என்ற எண்ணம் உடையவனாக இருந்ததால், அவனது மனம், கோபம் என்ற நெருப்பால் நிரம்பி வழிந்தது என்று கூறுகின்றார். உரக்கர=உரம் மற்றும் கரம்; உரம் என்பது இங்கே நெஞ்சினை குறிப்பிடுகின்றது. வரை=மலை; அங்கணன்=அழகிய கண்களை உடையவன்; முருக்கு=முருங்கைப்பூ;மொய்த்த=மிகவும் அதிகமாக பூசிய; கயிலை மலை தான் செல்லும் வழியில் தடங்கலாக இருந்தது என்பதால் அதனை பேர்த்து எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு, தனது பயணத்தை தொடர நினைத்த அரக்கனின் மனம் கோபம் என்ற நெருப்பால் நிரம்பி வழிந்த தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது.மிகுந்த கோபத்தால், அரக்கன் தனது தோள்களை தட்டிக் கொண்டும் கைகளை ஒன்றோடொன்று அடர்த்து பிசைந்துக் கொண்டும் இருந்ததால்,நெருப்புப் பொறிகள் பறந்தன, என்று அரக்கன் இருந்த ஆவேச நிலையினை இங்கே குறிப்பிடுகின்றார்.
உரக்கர நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள்
அரக்கனை அடர்த்து அவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடமாம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரைக் குழல் மிகக் கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே
அவளிவணல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.82.8) திருஞானசம்பந்தர், இந்த கயிலாய மலையின் மீது பெருமானும் உளனோ என்று மிகவும் இகழ்ச்சியாக பேசிய வண்ணம், தனது பயணத்தைத் தடுத்த மலை என்ற எண்ணத்தினால் மிகுந்த கோபத்துடன் மலையை பேர்த்து எடுக்கும் முயற்சியில் அரக்கன் இராவணன் இறங்கினான் என்று கூறுகின்றார். விறலோன்=வலிமை உடையவன்; கருவரை=கரிய மலை; அன்ன=போன்ற; தன்னை விடவும் வலியவனாக ஒருவரையும் காண்பதை சகிக்க முடியாத அரக்கன் இராவணன், தான் செல்லும் வழியில் குறுக்கிட்ட கயிலை மலையின் மீது பெருமானும் உளனோ என்று செருக்குடன் கேள்வி எழுப்பியவனாக, மிகுந்த கோபத்துடன் பெரிய மலை போன்றும் ஆழமான கடல் போன்றும் வலிமை உடைய தனது கைகள் கொண்டு, கயிலாய மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அந்த அரக்கன், அரிதான கயிலை மலையின் கீழே அகப்பட்டு நொறுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலை கயிலை மலையின் ஊன்றியவன் சிவபெருமான். அத்தகைய வலிமை வாய்ந்த பெருமான் அவளிவணல்லூர் தலத்தினில் உறைகின்றார் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஒருவரையும் மேல்கொடேன் என எழுந்த விறலோன் இப்
பெருவரையின் மேலொர் பெருமானும் உளனோ என வெகுண்ட
கருவரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை
அருவரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே
திருச்சேறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.86.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை, நிட்டுரன் என்று குறிப்பிடுகின்றார். கட்டுரம்=உடல் வலிமை; நிட்டுரன்=நிந்தனைக்கு தகுந்த; நிஷ்டூரன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்; மட்டுரம்=வாசனை; தனக்கு தீங்கு இழைத்த அரக்கன் இராவணனுக்கு கருணை கொண்டு அருள் புரிந்த மலையினை கயிலை நன்மலை என்று கூறுகின்றார். சிட்டர் என்ற சொல் நல்லியல்பு உடையவர், மேலானவர், ஒழுக்க சீலர் என்று பல பொருள் பட திருமுறைப் பதிகங்களில் கையாளப் பட்டுள்ளது. உறுதியான வலிமை கொண்ட தனது உடல் மீது நம்பிக்கை வைத்தவனாக, தனது இருபது கைகள் கொண்டு, கயிலை நன்மலையினைப் பேர்த்தெடுத்து வேறோர் இடத்தில் வைக்க முயற்சி செய்த, நிந்தனைக்கு தகுதி படைத்தவனாக விளங்கிய அரக்கன் இராவணனின், உடல் மற்றும் உயர்ந்த நீண்ட முடிகளைத் தாங்கிய பத்து தலைகளையும் நெரித்தவர் சிவபெருமான். நறுமணம் கமழும் தாமரை மலர்கள் போன்று விளங்கும் அவரது திருவடிகளை தொழுதெழும் அடியவர்களுக்கு அருள் புரிபவரும், மேன்மையானவரும் ஆகிய பெருமானது இடம், வளம் மிகுந்த சோலைகள் சூழ்ந்த திருச்சேறை தலமாகும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை
கட்டுரம் அது கொடு கயிலை நன்மலை மலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி ஒருபது நெரி செய்தார்
மட்டுர மலரடி அடியவர் தொழுதெழ அருள் செயும்
சிட்டர் தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே
திருநள்ளாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.87.8) திருஞானசம்பந்தர், ஆணவமே தனது இயல்பாக உடையவன் தசமுகன் என்று குறிப்பிடுகின்றார். மன்னிய=நிலையான; மத மிகு என்று மானின் மதமாகிய கத்தூரி உணர்த்தப் படுகின்றது என்று பெரியோர்கள் பொருள் கூறுகின்றனர். இந்த பதிகம், சமணர்களுடன் மதுரை நகரினில் பாண்டிய மன்னனின் சபையில் அனல் வாதம் நடைபெற்ற போது, பச்சைப் பதிகம் (1.49) அடங்கிய ஓலையினை நெருப்பினில் இட்ட போது, திருஞானசம்பந்தர் பாடிய பதிகமாகும். மிகுந்த தன்னம்பிக்கையுடன் திருநள்ளாறு பதிகம் அடங்கிய ஓலை நெருப்பினில் இடப்பட்டாலும், அழியாது நிற்கும் என்று உறுதிபட, திருஞான சம்பந்தர் கூறுவதை உணரலாம். இந்த செய்தி இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் உணர்த்தப் படுகின்றது.
மன்னிய வளரொளி மலைமகள் தளிர் நிற மத மிகு
பொன்னியல் மணி அணி கலசமதன முலை புணர்தலின்
தன்னியல் தசமுகன் நெரிய நள்ளாறர் தம் நாமமே
மின்னியல் எரியினில் இடில் இவை பழுதிலை மெய்ம்மையே
கொச்சைவயம் என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.89.8) திருஞானசம்பந்தர், அரக்கன் இராவணனை ஆரவாரம் செய்த வாய்களை உடையவன் என்று குறிப்பிடுகின்றார். அடலெயிறு=வலிமை வாய்ந்த பற்கள்; நெருக்கி=நெருங்கி; அரக்கனார் என்று இகழ்ச்சிக் குறிப்பு தோன்ற ஆர் என்ற மரியாதை விகுதி கொடுக்கப் பட்டுள்ளது. முத்தமும்=முத்து போன்ற அரும்புகளும்; மாடு=அருகே; புன்னை மாடு=புன்னை நிலம்;
அடலெயிற்று அரக்கனார் நெருக்கி மாமலை எடுத்து ஆர்த்த வாய்கள்
உடல் கெடத் திருவிரல் ஊன்றினான் உறைவிடம் ஒளிகொள் வெள்ளி
மடலிடைப் பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே
பெடையொடும் குருகினம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே
துருத்தி மற்றும் வேள்விக்குடி ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து அருளிய பதிகத்தின் பாடலில் (3.90.8) திருஞானசம்பந்தர், தான் செல்லும் வழியில் எதிர்ப்பட்ட கயிலாய மலையினை தோண்டி எடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு பயணத்தை தொடர்வேன் என்று வீரமாக முழங்கியதாக கூறுகின்றார். நீண்டு இலங்கு=நெடுந்தூரம்; அவிர் ஒளி=பிரகாசிக்கும் ஒளி; நீள்வரை= நீண்டு உயர்ந்த கயிலாய மலை; ஆள்வினை-முயற்சி; கீழப்படுத்துதல்=முயற்சி மேலெழுந்து வெற்றி பெறாத வண்ணம் அரக்கனை மலையின் கீழே அழுத்தி, அவனது வலிமையை அழித்து, அவனது முயற்சியினை முறியடித்த செய்கை இங்கே குறிப்பிடப் படுகின்றது.
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடுமுடி அரக்கன் இந் நீள்வரையைக்
கீண்டிடந்து இடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார்
பூண்ட நூல் மார்பினர் அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
வேண்டிடம் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே
இன்னம்பர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.95.8) திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை, தூர்த்தன் என்று அழைக்கின்றார். தூர்த்தன்=பெண்ணாசை மிகுந்தவன்; தொலைவு செய்தல்=வலிமையை அழியச் செய்தல்; கூர்த்த=கூர்மையான அறிவு; ஏத்தரும்=புகழ்வதற்கு அரிய; ஏத்தரும் புகழ் என்ற தொடரினை இறைவனுக்கு அடைமொழியாக கொண்டு பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது. எல்லையில்லாத புகழினை படைத்த இறைவனை நாம் என்ன சொல்லி புகழ்ந்தாலும், அந்த புகழ்ச் சொற்கள் அவனது பெருமையை முற்றிலும் உணர்த்தாது என்பதால், ஏத்தரும் புகழ் உடையவன் என்று இங்கே கூறுகின்றார். முழுவதும் போற்றுதற்கு மிகவும் அரிதான புகழினை உடையவனாக இன்னம்பர் தலத்தினில் பொருந்தி உறையும் பெருமானே, நீர் பெண்ணாசை மிகுந்த தூர்த்தனாகத் திரிந்த அரக்கன் இராவணனின் வலிமையை அடக்கியவரே, தூர்த்தனாகிய இராவணின் வலிமையை அடக்கிய உம்மை தொழும் அடியார்கள் கூர்மையான அறிவும் நல்ல குணங்களும் உடையவர்களாக இருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஏத்தரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனை தொலைவு செய்தீரே
தூர்த்தனை தொலைவு செய்தீர் உமைத் தொழுபவர்
கூர்த்த நல் குணம் உடையோரே
புனிதமான கயிலாய மலையினை பேர்த்தெடுக்க நினைப்பது செய்யத் தகாத செய்கை அல்லவா. பொதுவாக அத்தகைய செயலைச் செய்வதற்கு எவரும் கூச்சம் கொள்வார்கள்; ஆனால், கயிலை மலை தான் செல்லும் வழியில் இருந்து தன்னைத் தடுத்தது என்ற எண்ணத்தினால் அரக்கன் இராவணன் கொண்டிருந்த கோபம், அவனது புத்தியை மழுங்கடிக்கவே, கூச்சம் ஏதும் இலாதவனாக அரக்கன் இந்த இழிவான செயலைச் செய்யத் துணிந்தான் என்று திருஞான சம்பந்தர் நமக்கு உணர்த்தும் பாடல் திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பாடலாகும் (3.107.8). கூசம்=கூச்சம்; புனிதம் வாய்ந்த கயிலாய மலையினை வலம் சென்று தனது பயணத்தைத் தொடராது, அந்த மலையினை பேர்த்து எடுக்க நினைப்பது தவறு என்பதை உணராதவனாக இருந்ததால் அரக்கன் இராவணன் கூச்சம் ஏதும் கொள்ளாமல் தனது முயற்சியினை மேற்கொண்டான் என்பது இந்த பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. அவனது முயற்சியினால் கயிலாய மலை ஆட்டம் கண்டதையும், அதனால் அச்சம் கொண்ட பார்வதி தேவி நடுங்கியதையும் பல தேவாரப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அந்த நிகழ்ச்சியே, அரக்கன் மலையினை குலுங்க எடுத்தான் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இற=அறுந்து வீழ; கரவாதார்=நெஞ்சினில் வஞ்சனை இல்லாமல் இறைவனை வழிபடும் அடியார்கள்.
கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் தோள்
நாசமதாகி இற அடர்த்த விரலான் கரவாதார்
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும்
தேசம் உறப் புகழ் செம்மை பெற்ற திருநாரையூர் தானே
திருவீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.119.8) திருஞானசம்பந்தர் அரக்கன் இராவணனை, கடுத்த வாளரக்கன் என்று குறிப்பிடுகின்றார். இந்த பாடலில் திருஞான சம்பந்தர், கிளிகள் வேதத்தின் சொற்களை ஓதுவதைக் கேட்கும் அந்தணச் சிறுவர்கள் தங்களது காதுகளைத் தீட்டிக் கொண்டு அந்த சொற்களை தாங்களும் கேட்டு இன்பம் அடைவதாக கூறுகின்றார். வேதங்களை எவரேனும் தவறாக ஓதினால், அந்த தவறுகளை திருத்தும் வல்லமை பெற்ற கிளிகள் என்பதால், அந்த கிளிகள் சொல்வதை உன்னிப்பாக சிறுவர்கள் கவனித்தனர் போலும். விடைக்குலம் என்ற சொல்லுக்கு பசுவின் கூட்டம் என்று பொருள் கொண்டு, கிளிகள் சொல்வதைக் கேட்ட பசுக்கள் தங்களது காதுகளை நீட்டி பழக்கிக் கொள்கின்றன என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பாடு=அருகே; படித்த=கற்றுக் கொண்ட, அந்நாளில் வீழிமிழலை தலத்தில் வேத பாடசாலைகள் இருந்தன போலும். கடுத்த=கோபம் கொண்ட; அரக்கன் இராவணன் அஞ்செழுத்தை ஓதியதாக இங்கே திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். எனவே சிவபெருமானின் திருநாமங்களை எடுத்து உரைக்கும் சாமவேத ருத்ரம் மற்றும் சமகம் ஆகியவற்றை இராவணன் பாடினானோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.
கடுத்த வாளரக்கன் கைலை அன்றெடுத்த கரம் உரம் சிர நெரித்தலற
அடுத்ததோர் விரலால் அஞ்செழுத்து உரைக்க அருளினன் தடமிகு நெடுவாள்
படித்த நான்மறை கேட்டிருந்த பைங்கிளிகள் பதங்களை ஓதப்பாடிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே
கயிலை மலையினைக் கடந்து புட்பக விமானம் செல்லாது என்று அறிவுரை கூறிய தனது தேர்ப்பாகன் மீது சினம் கொண்ட அரக்கன் இராவணன் தேரிலிருந்து கீழே குதித்து மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்ததாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தேர்ப்பாகனது அறிவுரையை அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு தசபுராணத் திருப்பதிகத்தின் கடைப்பாடலை நினைவூட்டும். இந்தப் பாடலிலும் தேர்ப்பாகன் கூறிய அறிவுரையை மதிக்காது இராவணன் நடந்து கொண்ட விதம் மிகவும் அழகாக கூறப்பட்டுள்ளது. உனது வீரத்தை நீ பெரிதாக நினைத்து, திருக்கயிலை மலையை பெயர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என்று தெளிவாக கூறிய அறிவுரை புறக்கணிக்கப் படுகின்றது. தனது வலிமையின் மீது இராவணனுக்கு இருந்த நம்பிக்கை அவனை எவ்வளவு வேகமாக செயல்பட வைத்தது என்பதை மிகவும் அழகாக, விடுவிடு என்று சென்று என்ற சொற்களால் அப்பர் பிரான் கூறுகின்றார். அவனது வீரம் பயனற்றுப், போன தன்மையும் இங்கே கூறப்பட்டுள்ளது.
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீர மொழி நீ
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா
விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள்
நெடுநெடு விற்று வீழ விரல் உற்ற பாத நினைவு உற்றது என் தன் மனனே
பொழிப்புரை:
தனக்கு எதிராக சண்டை போடுவார் எவரும் இல்லை என்ற செருக்குடன் கயிலை மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் கரிய மலை போன்ற வலிமையான தோள்கள், கைகள், ஒளிவீசும் நீண்ட கிரீடங்கள் ஆகியவை நொறுங்கும் வண்ணமும், அவனது பத்து தலைகளும் மலையின் அழுத்தத்தை தாங்க முடியாமல் வருந்தி கதறும் வண்ணமும், வீரக்கழல் அணிந்த தனது கால் பெருவிரலால் கயிலை மலையை அழுத்திய பெருமான் உறையும் இடம் நீர்வளம் நிறைந்த வியலூர் தலமாகும்.
பாடல் 9:
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 8 தொடர்ச்சி, மற்றும் பாடல்கள் 9, 10, 11 (திதே 0558)
வளம் பட்டு அலர் மலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால்
அளம் பட்டு அறிவொண்ணா வகை அழலாகிய அண்ணல்
உளம் பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஒரு உருவம்
விளம் பட்டு அருள் செய்தான் இடம் விரிநீர் வியலூரே
விளக்கம்:
அளம் படுதல்=வருந்துதல்; விளம்பட்டு=வெளிப்பட்டு தோன்றி; வளம் பட்டு அலர்=செழிப்பாக வளர்ந்து மலர்ந்த; ஒரு வகையால்=ஒரு வகையாகிய உடன்பாட்டினால், தங்களின் எதிரே தோன்றிய தீப்பிழம்பின் அடியையும் முடியையும் எவர் காண்கின்றனரோ அவரே தங்களில் உயர்ந்தவர் என்ற உடன்பாட்டுடன், இருவரும் அடியையும் முடியையும் காணும் முயற்சியில் ஈடுபட்டமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஒரு வகையால் என்று சொல் இருவரும் வேறுவேறு வழிகளில் தங்களது முயற்சியில் ஈடுபட்டனர் என்பதை குறிக்கும் வண்ணம் அமைந்துள்ளது என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். பிரமன் அன்னமாக உயரப் பறந்தும் திருமால் பன்றியாக கீழே தோண்டியும், முறையே பெருமானது முடியையும் அடியையும் தேடிய முயற்சிகள், மாறுபட்ட இருவேறு முயற்சிகள் என்றும் பொருள் கொள்ளலாம். விள்ளப்பட்டு என்ற சொல் எதுகை நோக்கி விளம்பட்டு என்று திரிந்ததாக கொண்டு பிரமன் திருமால் ஆகிய இருவரின் செருக்கு விள்ளப் பட்டது என்றும் விளக்கம் அளிக்கப் படுகின்றது.
பொழிப்புரை:
செழித்து வளர்ந்து மலர்ந்த தாமரை மேல் உறையும் பிரமனும் திருமாலும் தங்களில் இருவரில் யார் பெரியவன் என்று தொடர்ந்து செய்து கொண்டிருந்த வாதத்தினை ஒரு வகையாக முடிக்கும் பொருட்டு தங்களின் எதிரே தோன்றிய தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பவரே தங்களில் உயர்ந்தவர் என்ற உடன்பாட்டுடன், அன்னமாகவும் பன்றியாகவும் மாறி தங்களது முயற்சியில் ஈடுபட்டனர். தங்களை வருத்திக் கொண்டு கடுமையான முயற்சியில் அவர்கள் இருவரும் ஈடுபட்ட போதும் வெற்றி காண முடியாமல் வருந்தும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்ற அண்ணல், செருக்கு நீங்கிய மனத்தராக இருவரும் வழிபட்டு இறைஞ்சிய போது, அந்த தழல் தூணின் நடுவே இலிங்கமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார். அத்தகைய இறைவன் உறையும் இடம், நீர்வளம் வாய்ந்த வியலூர் தலமாகும்.
பாடல் 10:
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 8 தொடர்ச்சி, மற்றும் பாடல்கள் 9, 10, 11 (திதே 0558)
தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவர மூடிப்
பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர்
கடல் சேர் தரு விடம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் செய்த
விடை சேர் தரு கொடியான் இடம் விரிநீர் வியலூரே
விளக்கம்:
தடுக்கு=ஓலைப்பாய்; பிடக்கு=பிடகம் எனப்படும் புத்தர்களின் புனித நூல்; சீவரம்=பழுப்பு அல்லது காவி நிறம் ஊட்டப் பெற்ற ஆடை;
பொழிப்புரை:
பனை ஓலைத் தடுக்குகளால் தங்களது உடலை மறைத்துக் கொள்ளும் சமணர்களையும், பழுப்பு அல்லது காவி நிறம் தோய்க்கப்பட்ட ஆடையைத் தங்களது உடலின் மீது போர்த்துக் கொண்டு பிடகம் எனப்படும் நூலின் கருத்துகளை உரைத்து திரியும் புத்தர்களையும் ஒரு பொருட்டாக கருதி அவர்களுடன் நட்பு கொள்வதைத் தவிர்த்து வாழும் நமது பெரியோர்கள், கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினைத் தான் உட்கொண்டு அதன் பின்னர் வந்த அமுதத்தை தேவர்களுக்கு வழங்கி அருள் செய்தவனும், விடையினைத் தனது கொடியில் சித்திரமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய பெருமானை வணங்கி வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபடப்படும் பெருமான் உறையும் இடம் நீர்வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.
பாடல் 11:
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 8 தொடர்ச்சி, மற்றும் பாடல்கள் 9, 10, 11 (திதே 0558)
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 11 தொடர்ச்சி (திதே 0559)
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 11 தொடர்ச்சி (திதே 0560)
குரவம் கமழ்நறு (1.013) பாடல் 11 தொடர்ச்சி (திதே 0561)
விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரைத்
தளம் கொண்டதொர் புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்
துளங்கில் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர் என்றும்
விளங்கும் புகழ் அதனோடு உயர் விண்ணும் உடையாரே
விளக்கம்:
விகிர்தன்=ஏனையோரிலிருந்து மாறுபட்ட சாமர்த்தியம் உடையவன். தக்கனது சாபத்தினால் நாளுக்கு ஒரு பிறையாக குறைந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் இருந்த சந்திரனைக் காப்பாற்றுவார் எவரும் இல்லாத நிலையில், சந்திரன் பிரமனை அணுகி தான் பிழைக்கும் வழி யாது என்று கேட்டபோது, பிரமன் சிவபெருமான் ஒருவரே தக்கனது சாபத்திற்கு மாறான வழி சொல்லும் வல்லமை படைத்தவர் என்று கூற, சந்திரன் பெருமானிடம் சரண் அடைந்தான். அந்த ஒற்றைப் பிறையினைத் தனது சடையில் அணிந்து கொண்ட பெருமான் சந்திரனை அழிவிலிருந்து காத்ததை உணர்த்தும் வண்ணம், ஏனையோரிலிருந்து மாறுபட்ட சதுரப்பாடு உடையவன் என்று பொருள் பட விகிர்தன் என்று திருஞானசம்பந்தர் இங்கே அழைக்கின்றார். தளம்=இடம்; துளங்குதல்=நடுக்கம் கொள்ளுதல், அச்சப் படுத்தல், தளர்வடைதல் என்று பல பொருள்கள் உள்ளன. சோர்வு அடையாமல் என்றும் வளத்துடன் திகழும் தமிழ் என்றும், அச்சம் நடுக்கம் சோர்வு ஆகியவற்றை நீக்கும் தமிழ்ப் பாடல்கள் என்றும் இருவகையாக பொருள் கொள்ளலாம். உயர் விண் என்று கூறியமையால், விண்ணுலகத்தை விடவும் உயர்ந்த இடத்தை திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்பது தெளிவாகின்றது. அத்தகைய இடம் சிவலோகம் ஒன்று தானே. தேவாரப் பாடல்களை மூவர் தமிழ் என்று ஔவை மூதாட்டி குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது.
தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனி மொழியும் கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்
இந்த பாடலில் மூவர் தமிழ் என்று குறிப்பிட்டு, தேவாரமே தமிழ் என்று சொல்லி, தேவாரப் பாடல்களின் தமிழ்ப் புலமையை உணர்த்தும் ஔவையார், கருத்தினில் எவ்வாறு வளம் பெற்று தேவாரப் பாடல்கள் திகழ்கின்றன என்பதையும் கூறுகின்றார். நான்மறை முடிவு=வேதங்களில் சொல்லப் படும் கருத்துகளுக்கு முடிவாகிய வேதாந்தம்; முனிமொழி=சிறந்த முனியாகிய வியாச பகவான் வேதங்களுக்கு அருளிய விளக்கவுரை; முனி மொழி என்பதற்கு சிலர் மணிவாசகர் என்று விளக்கம் அளிக்கின்றனர். கோவை திருவாசகம் என்று மணிவாசகர் அருளிய இரண்டு நூல்களும் இங்கே குறிப்பிடப் படுவதால், அந்த விளக்கம் பொருந்தாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; திருக்குறள், வேதங்களின் முடிவாகிய வேதாந்த கருத்துகள், மூவர் பெருமானார்கள் அருளிய தேவாரம், வியாச பகவான் அருளிய வேதங்களின் விளக்கங்கள், திருக்கோவையார் மற்றும் திருவாசக நூல்கள், திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகியவை அனைத்தும் ஒரே கருத்தையே விளக்குகின்றன. அந்த ஒரே கருத்து, சிவபெருமானே உண்மையான மெய்ப்பொருள்; அந்த மெய்ப்பொருளை அடைவதே வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும், அந்த மெய்ப் பொருளைச் சென்றடைந்தால், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, என்றும் அழியாத ஆனந்தத்தில் திளைத்து முக்தி உலகினில் பெருமானுடன் இணைந்து இருக்கலாம் என்பதே ஆகும்.
இந்த பாடலில் திருஞானசம்பந்தர் தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். பல பதிகங்களின் கடைப் பாடல்களில், தமிழ் விரகன் என்றும் தமிழ் வல்ல என்றும் திருஞானசம்பந்தர் கூறுவதை நாம் அறிவோம். தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடும் சில தேவாரப் பாடல்களை நாம் இங்கே காண்போம். நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.15.11) திருஞானசம்பந்தர் தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். நில மல்கிய=நிலவளம் பொருந்திய; நில மல்கிய என்ற தொடருக்கு சிறந்த புகழினை உடைய நெய்த்தானம் தலம் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். சில மல்கிய என்ற தொடரில் உள்ள சில என்ற சொல். சில் (நுண்ணிய பொருள்) என்பதன் திரிபாக கருதி, நுண்ணிய பொருட்களிலும் நிறைந்து நிற்பவன் பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது. இந்த பதிகத்தின் முதல் நான்கு பாடல்கள் மற்றும் ஆறாவது பாடலில், நெய்த்தானம் தலத்தின் சிறப்பு கருதி, திருஞானசம்பந்தர் இந்த தலத்தின் பெயரினை உச்சரித்து உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுவதை நாம் நினைவில் கொள்ளலாம். தல மல்கிய=தலங்களில் சிறந்த தன்மை உடைய; ஒப்பற்ற பலனை தரும் பாடல்கள் என்று இந்த பதிகத்து பாடல்களை ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறைவனின் திருவடிகளைச் சென்றடைந்து சிவகதி பெறலாம் என்று பதிகத்தின் பலனை குறிப்பிடுகின்றார். சிவகதி என்றால் சிவஞானமாகிய நெறி என்று பொருள். சிவபெருமானுடன் ஆன்மா சேர்வதற்கு வழி வகுக்கும் நெறியே சிவஞானம் என்றும் சிவகதி என்றும் அழைக்கப் படுகின்றது. தலங்களில் சிறந்ததாக கருதப்படுவதும், நீர்வளம் மிகுந்ததும் ஆகிய சீர்காழி நகரினைச் சார்ந்தவனும் தமிழ்ப் புலமை பெற்றவனும் ஆகிய ஞானசம்பந்தன், உலகெங்கும் பரவிய புகழினை உடைய நெய்த்தானத்து இறைவனைப் புகழ்ந்து பாடிய, ஒப்பற்ற பலன்களை அளிக்கும் பத்து பாடல்களையும் முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், நுண்ணியமான பொருட்களிலும் நிறைந்து நிற்பவனும், சிறந்த முக்திச் செல்வத்தை உடையவனும் ஆகிய இறைவனது திருவடிகளை, நிறைவான புண்ணியத்தை அளிக்கும் திருவடிகளைச் சார்ந்து என்றும் ஆனந்தத்தில் ஆழ்ந்து சிவகதியில் இருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தல மல்கிய புனல் காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நில மல்கிய புகழான் மிகு நெய்த்தானனை நிகரில்
பல மல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்
சில மல்கிய செல்வன் அடி சேர்வர் சிவகதியே
நின்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.18.11) திருஞானசம்பந்தர், தன்னை தமிழ் ஞானமிகு பந்தன் என்று குறிப்பிடுகின்றார். பொதுவாக பதிகத்தின் கடைக் காப்பினில் இராவணன் குறித்த நிகழ்ச்சி திருஞான சம்பந்தரால் குறிப்பிடப் படுவதில்லை. இந்த பதிகத்தின் எட்டாவது பாடல் சிதைந்ததால், இராவணின் வலிமையை அடக்கிய தன்மையை குறிப்பிடும் திருஞானசம்பந்தரின் பாடல் நமக்கு கிடைக்கவில்லையே என்ற குறை தீர்க்கும் பொருட்டு இந்த குறிப்பு அமைந்துள்ளதோ என்று தோன்றுகின்றது. அப்பர் பிரான் தனது பெரும்பாலான பதிகங்களின் கடைப் பாடலில், அரக்கன் இராவணனுக்கு பெருமான் அருள் புரிந்த தன்மையை குறிப்பிடுகின்றார். தமிழ் என்பது இங்கே தேவாரப் பதிகங்களை குறிக்கும். குன்றாத் தமிழ்=பலன்களை அளிப்பதில் பாடிய நாள் முதல் என்றும் மாறாது விளங்கும் தேவாரப் பதிகங்கள். கயிலை மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் உடலும் தோள்களும், கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நொறுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றிய பெருமானை, நின்றியூர் தலத்தில் உறையும் பெருமானின் புகழினைப் போற்றி, தன்னை வந்தடையும் அடியார்களுக்கு நன்மை அளிக்கும் புகலித் தலத்தில் தோன்றியவனும் தமிழ் மொழியில் எல்லையற்ற ஞானம் உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் சொல்லிய இந்த பத்து பாடல்களை, ஓதுவோருக்கு அன்றைய நாள் முதல் குன்றாத பலன்களை அளிக்கும் வல்லமை பெற்ற இந்த தேவாரப் பாடல்களை, முழு மனதுடன் பக்தி வைத்து சொல்லும் வல்லமை பெற்ற அடியார்கள் வாழ்வினில் குறையேதும் இன்றி நிறைவான புகழினை பெற்று விளங்குவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவாக
நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை
நன்றார் தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக் குறைவின்றி நிறை புகழே
புகலி என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.30.11) திருஞான சம்பந்தர், தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். இரைக்கும் புனல்=மிகுந்த ஆரவாரத்துடன் வானிலிருந்து கீழே இறங்கிய கங்கை நதி; புரைக்கும்=உயர்ந்த; ஒண் மாலை=அழகிய மாலை; பாமாலைக்கு அழகு சிறந்த பொருளை உணர்த்துவதும் இனிமையான சந்தத்தில் இசைத்துப் பாடும் வண்ணம் இருப்பதும் ஆகும். வரைக்கும்=தம் அளவினது ஆக்கும் தொழில். தன்னால் இசையுடன் பொருந்தி, பிழையேதும் இன்றி பாடும் வண்ணம் பழகிக் கொள்ளுதல்.
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான்றன்
புரைக்கும் பொழிற் பூம்புகலி நகர் தன் மேல்
உரைக்கும் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மாலை
வரைக்கும் தொழில் வல்லவர் நல்லவர் தாமே
பனையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.37.11) திருஞானசம்பந்தர், தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்வதை நாம் உணரலாம். பாரார்=நிலவுலகில் அனைத்து இடங்களுக்கும் செல்லும் தன்மை வாய்ந்த இடபம்; ஆராத=மேன்மேலும் விருப்பத்தை ஏற்படுத்தும்; தேவாரப் பாடல்களில் பழக்கம் உடையவர்களுக்கு எவ்வளவு நேரம் அந்த பாடல்களைப் பாடினாலும் சலிப்பு தட்டாது இனிய உணர்வுகளே மேன்மேலும் பெருகும் என்று சொல்லப் படுகின்றது. மேலும் தேவாரப் பாடல்களை, அந்தந்த தலங்கள் சென்று தான் பாட வேண்டும் என்பதில்லை; நமக்கு சௌகர்யமாக ஓரிடத்தில் இருந்து கொண்டே பல தலங்களின் மீது இயற்றப் பட்ட தேவாரப் பாடல்களை பாடி பயனடையலாம் என்றும் சொல்லப் படுகின்றது.
பாரார் விடையான் பனையூர் மேல்
சீரார் தமிழ் ஞானசம்பந்தன்
ஆராத சொன் மாலைகள் பத்தும்
ஊரூர் நினைவார் உயர்வாரே
வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.39.11) தன்னை நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். விண்ணியல்=விண்ணுற ஓங்கிய; புகழுக்கு அடையாளமாக வெண்கொடி எடுத்தல் பண்டைய நாளில் மரபாக இருந்தது. விண்ணுற ஓங்கிய மாட வீடுகளையும் புகழினை உணர்த்தும் வெண் கொடிகள் எங்கும் விரிந்து விளங்கும் வீதிகளையும் உடையதும், சிறப்பு என்றும் வளர்கின்ற காழி நகருக்கு உரியவனும், நற்றமிழில் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன், பெண்ணின் நல்லாள் என்ற திருநாமத்தினை உடைய பிராட்டியை தனது உடலின் ஒரு பாகத்தில் ஏற்றுப் போற்றும் பெருமான், வேட்களத்தில் உறையும் பெருமானின் மேல் பாடிய இந்த பாடல்களை பண்ணுடன் இசைத்துப் பாடும் வல்லமை பெற்ற அடியார்கள் பழி பாவம் இன்றி வாழ்வார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
விண்ணியல் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்து இலங்க
நண்ணிய சீர்வளர் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒரு பாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே
வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.40.11) திருஞானசம்பந்தர், தன்னை, நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். கல்=மலை; கல்லுயர்=மலை போன்று உயர்ந்த; இந்த பாடலிலிருந்து வடமொழி வேதங்களிலும் திருஞானசம்பந்தர் தேர்ச்சி உடையவராக இருந்தார் என்பது புலனாகின்றது. மலைகள் போன்று உயர்ந்து எழுந்து நின்று பேரொலியுடன் கரையினை வந்து அடையும் அலைகள் உடைய கடலின் அருகே உள்ள சீர்காழி எனப்படும் பழமையான ஊரினைச் சார்ந்தவனும், நன்மைகள் விளைவிக்கும் உயர்ந்த நான்மறைகள் ஓதும் நாவினை உடையவனும், நன்மை புரியும் தமிழ் பாடல்கள் அருளியவனும் ஆகிய ஞானசம்பந்தன், வலிமையான சூலம் வெண்மழுவாள் முதலிய ஆயுதங்களை பயன்படுத்துவதில் வல்லவனாகிய பெருமான் உறையும் வாழ்கொளிபுத்தூர் தலத்தினைப் போற்றி, சொன்ன பாடல்களில் வல்ல அடியார்களின் துயர் கெடுதல் மிகவும் எளிதாம் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கல்லுயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழிய மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிதாமே
பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (1.44.11), திருஞானசம்பந்தர், தன்னை நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். அகமலி=உள்ளம் நிறைந்த; தண் தமிழ்=தகுதி வாய்ந்த தமிழ் பாடல்கள்; பண்டைய நாளில் பலன் அளித்தது போன்று, இன்றும் இந்த பதிகத்தை பக்தியுடன் முறையாக பாடும் அடியார்கள் வினைவயத்தால், வரும் நோய்களிலிருந்து விடுதலை பெறுவது கண்கூடு. இந்த பாடலை ஓதும் அடியார்களை வினைகள் சாரா என்று கூறுவதன் மூலம், அந்த வினைகளின் செயலால் உடலுக்கு ஏற்படும் நோய்கள் நீங்கிவிடும் என்று ஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். நகை மலி பொழில்=மலர்ந்த மலர்கள் கொண்ட சோலை; நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று இந்த பாடலில் குறிப்பிடுவது சிந்திக்கத் தக்கது. நற்றமிழ் என்றால் நலம் விளைவிக்கும் தமிழ் என்று பொருள். தான் அருளிய பதிகத்தின் பாடல்கள், ஓதுவோருக்கு பல விதமான நன்மைகளை செய்யும் என்று உணர்த்தும் முகமாக, ஞானசம்பந்தர் இவ்வாறு கூறுகின்றார். புகை என்ற சொல்லுக்கு மணம் என்று பொருள் கொள்ளவேண்டும் என்றும் சிலர் கருதுகின்றார். உள்ளம் நிறைந்த அன்புடன் தொண்டர்கள் வணங்கி வழிபட பாச்சிலாச்சிராமம் தலத்தில் உறைகின்ற சிவபெருமான், அடியார்கள் காட்டும் நறுமணம் மிகுந்த தூபங்கள் பொருந்திய மாலைகளை அணிந்தவரும், தூய்மையும் அழகும் பொருந்தியவராக விளங்குபவரும் ஆகிய சிவபெருமான் அன்று, மலர்ந்த மலர்கள் அழகு செய்யும் சோலைகளால் சூழப்பட்ட சீர்காழி நகரினைச் சார்ந்தவனும், நன்மைகள் விளைவிக்கும் பாடல்கள் கொண்ட பதிகங்களை அருளியவனும் ஆகிய ஞானசம்பந்தன் அருளிய தகுதி வாய்ந்த இந்த பதிகத்தின் பாடல்களை முறையாக ஓதும் அடியார்களை விட்டு வினைகள் நீங்கிவிடும், மேலும் அந்த வினைகளின் தொடர்பால் ஏற்படும் நோய்களும் அவர்களை விட்டு விலகிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்து உறைகின்ற
புகைமலி மாலை புனைந்து அழகாய புனிதர் கொலாம் இவர் என்ன
நகை மலி தண் பொழில் சூழ் தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண்டமிழ் கொண்டு இவை ஏத்தச் சார்கிலா வினை தானே
செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.61.11) திருஞானசம்பந்தர் தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். கறை இலங்கு=கருமை நிறம் பொருந்திய; குவளை மலர்கள் கண் போன்று மலர்ந்து விளங்குவதாக குறிப்பிடுகின்றார். கடி=அழகிய; நறை இலங்கு=நறுமணம் வீசும்; சிறை=கரை; கரைகளில் அடங்கிய வண்ணம் நீர் பாயும் வாய்க்கால்கள்; படப்பை=தோட்டம்; மறை இலங்கு=வேதங்களில் சொல்லப் படும் கருத்துகள் உணர்த்தப்படும் தேவாரப் பாடல்கள்;
கறை இலங்கு மலர்க் குவளை கண் காட்டக் கடி பொழிலின்
நறை இலங்கு வயற் காழித் தமிழ் ஞான சம்பந்தன்
சிறை இலங்கு புனற் படப்பைச் செங்காட்டங்குடி சேர்த்தும்
மறை இலங்கு தமிழ் வல்லார் வானுலகத்து இருப்பாரே
நல்லம் என்று அழைக்கப்படும் கோனேரிராஜபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.85.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். நலமார்=நன்மைகள் புரியும்; கொலை சேர் மழு=கொல்லும் தொழிலைப் புரியும் மழு; பெருமான் மழு ஆயுதத்தினை எவரையும் கொலை செய்வதற்கு பயன்படுத்தவில்லை; பெருமானை அழிக்கும் நோக்கத்துடன் தாருகவனத்து முனிவர்கள் ஏவியது மழுப்படை; அந்த ஆயுதத்தை செயலிழக்கச் செய்த பெருமான், தனது கையில் ஏந்தியுள்ளார். பொருட்சுவை கருதி இந்த பதிகத்தினை கலைகள் என்று சிறப்பிக்கின்றார் போலும்.
நலமார் மறையோர் வாழ் நல்ல நகர் மேய
கொலை சேர் மழுவானைக் கொச்சை அமர்ந்து ஓங்கு
தலமார் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே
குற்றாலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.99.11) திருஞானசம்பந்தர், தன்னை, நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். கோடல்=செங்காந்தள் மலர்; காந்தள் மலர்கள் கூம்பி இருக்கும் நிலை, திருஞானசம்பந்தருக்கு மலர்கள் குற்றாலத்து ஈசனை தொழுவது போல் இருக்கின்றது என்று தோன்றியது போலும்.
மாடவீதி வரு புனல் காழியார் மன்னன்
கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம்
நாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே
திருவாரூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.105.11), திருஞானசம்பந்தர், தன்னை, நற்றமிழ் ஞான சம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். தேவாரப் பதிகங்களை முறையாக பிறர் ஓதக் கேட்கும் அடியார்களும், தங்களது துயரங்கள் தீர்க்கப் படுவார்கள் என்று கூறுகின்றார். துடைத்தல்=இருந்த சுவடு தெரியாமல் அழித்தல்; தேவாரப் பாடல்களைப் பாடுவதே சிறந்த வழிபாடாக கருதப் படுகின்றது.
நல்ல புனற் புகலித் தமிழ் ஞான சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க் கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லதோர் இச்சையினால் வழிபாடிவை பத்தும் வல்லார்
சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே
கொடிமாட செங்குன்றூர் என்று அழைக்கப்படும் திருச்செங்கோடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.107.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று அழைத்துக் கொள்கின்றார். இந்த பாடலில் தலைமகன் என்று தன்னை ஞானசம்பந்தர் குறிப்பிடுவதை நாம் உணரலாம். வேறு எவருக்கும் கிடைக்காத பேற்றினை, அம்மை அளித்த ஞானப்பாலை உண்டவன் என்பதால் பெருமானைத் தனது தந்தையாகவும் பிராட்டியைத் தனது தாயாகவும் பெற்ற பெருமையை உடைய தன்னை, தலைமகன் என்று பொருத்தமாக அழைப்பதை நாம் உணரலாம் மூவிலை நற்சூலம் என்று இதே பதிகத்தின் ஆறாவது பாடலில் உணர்த்திய திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கொலை மலி மூவிலையான் என்று குறிப்பிடுகின்றார். பெருமானின் மூவிலைச் சூலம் அந்தகனின் செருக்கினை அழிக்க பயன்பட்டது. இந்த வீரச்செயல் அட்டவீரச் செயல்களில் ஒன்றாக கருதப் பட்டாலும் மிகவும் குறைவான திருமுறைப் பாடல்களே இந்த செயலை குறிப்பிடுகின்றன. பல பாடல்கள் சூலத்தால் அந்தகனை அழுத்தி செருக்கினை அழித்தமை சொல்லப்படுகின்றது. அலைகள் மிகுந்து குளிர்ச்சி பொருந்திய நீர்நிலைகள் சூழப் பெற்று அழகுடன் காணப்படும் புகலி (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) நகரினைப் போற்றி வாழ்பவனும், பெருமான் மற்றும் உமையன்னை ஆகியோரின் மகனாக வாழும் பெருமையை உடையவனும், தமிழ் மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றவனும் ஆகிய ஞானசம்பந்தன், கொடிமாடச் செங்குன்றூர் தலத்தினில் பொருந்தியவனும், கொல்லும் தொழிலில் சிறந்த படையாகிய மூவிலைத் சூலத்தைத் தனது கையில் ஏந்தியவனும் ஆகிய பெருமானைக் குறித்து பாடிய பாடல்களை, நலமளிக்கும் பாடல்களை முறையாக பாடும் வல்லமை பெற்ற அடியார்களை பிணைந்துள்ள வினைகள் முற்றிலும் நாசமடைந்து அவர்களை விட்டு விலகிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
அலைமலி தண்புனல் சூழ்ந்து அழகார் புகலிந்நகர் பேணும்
தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்
கொலை மலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூர் ஏத்தும்
நலமலி பாடல் வல்லார் வினையான நாசமே
பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.108.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். தன்னொளி=சிவஞான விளக்கம்; எழில் வானகம் என்பதற்கு பலரும் தேவருலகம் என்று பொருள் கொண்டாலும், வானகம் என்பதற்கு உயர்ந்த உலகம் என்று பொருள் கொண்டு, முக்தி உலகம் என்ற விளக்கம் மிகவும் பொருத்தமாக உள்ளது. பல வகையான மலர்கள் பூக்கும் சோலைகளால் சூழப்பட்ட பாதாளீச்சரம் தலம் சென்றடைந்து இறைவனைப் பணிந்து வணங்குமாறு கூறும், பொன் போன்று பொலிவுடன் திகழும் மாடவீடுகள் நிறைந்ததும் புகலி என்று அழைக்கப் படுவதும் ஆகிய சீர்காழி நகரின் தலைவனும் தனது புகழ் உலகெங்கும் பரவி விளங்கும் வண்ணம் உயர்ந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன், சொன்ன பத்து பாடல்களையும் இனிய இசையுடன் பொருத்தி பாடும் வல்லமை வாய்ந்த அடியார்கள் அழகு வாய்ந்த முக்தி உலகம் சென்றடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பன்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியல் மாடம் மல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே
திருவல்லம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.113.11) திருஞானசம்பந்தர் தன்னை, நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். கற்றவர்கள் வாழ்ந்த தலம் என்று இந்த தலத்தினை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தேவாரப் பாடல்கள் சொற் குற்றமும் பொருட் குற்றமும் அற்ற பாடல்கள் என்றும் இங்கே உணர்த்தப் படுகின்றது. இந்நாள் வரையிலும் பரமனுக்கு அடியார்களாக நாம் இல்லாமல் இருந்தாலும், தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கினால், பெருமானின் திருப்பாதங்களைப் பற்றுக் கோடாக கொண்டு வாழத் தொடங்குவோம் என்று, தேவாரப் பாடல்கள் நம்மில் ஏற்படுத்தும் மாற்றத்தையும் இங்கே குறிப்பிடுகின்றார்.
கற்றவர் திருவல்லம் கண்டு சென்று
நற்றமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூற வல்லார்
பற்றுவர் ஈசன் பொற் பாதங்களே
திருமுதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.131.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். பழமலையை குறித்து பாடிய திருஞான சம்பந்தருக்கு, பல ஊழிகளைக் கடந்து பழம் பதியாக திகழும் சீர்காழி தலத்தின் தன்மை நினைவுக்கு வந்தது போலும். அந்த தன்மையையும் இந்த பாடலில் அவர் குறிப்பிடுகின்றார். எரி மூன்று=ஆகவனீயம், காருகபத்யம் மற்றும் தக்ஷிணாக்னியம் என்பன. முழங்கொலி=ஆரவாரம் மிகுந்த ஓசை; கழுமலம் என்பது சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, சீர்காழி, கொச்சைவயம் மற்றும் கழுமலம் என்பன சீர்காழியின் பன்னிரண்டு பெயர்கள். சீர்காழியினை குறிப்பிடும் சம்பந்தர் மூவாத தலம் என்று கூறுகின்றார். மூவா என்ற சொல் அழிவற்ற என்று பொருளில் இங்கே பயன்படுத்தப் பட்டுள்ளது. மிகுந்த ஆரவாரத்துடன் பாயும் மணிமுத்தாறு நதியால், வலம் வந்து பணிந்து இறைஞ்சப் படும் முதுகுன்றத்து இறைவனை, பண்டைய நாளிலிருந்து பன்னிரண்டு பெயர்களால் அழைக்கப் படுவதும் அழிவற்ற தன்மையை உடையதும் ஆகிய கழுமலம் தலத்தினை தனது ஊராகக் கொண்டவனும், ஒலி எழுப்பிய வண்ணம் போற்றப்படும் மூன்று வகையான தீக்களை பேணி வளர்க்கும் குலத்தில் வந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன் உண்டாக்கிய இந்த பதிகத்தினை இசை பொருந்தி கூடும் வண்ணம் பாடி இறைவனை வழிபடும் அடியார்கள், இந்த உலகத்தினை நீண்ட காலம் ஆள்வார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
முழங்கொலி நீர் முத்தாறு வலம் செய்யும் முதுகுன்றத்து இறையை மூவாப்
பழம் கிழமை பன்னிரு பேர் படைத்து உடைய கழுமலமே பதியாக் கொண்டு
தழங்கெரி மூன்று ஓம்பும் தொழில் தமிழ் ஞானசம்பந்தன சமைத்த பாடல்
வழங்கும் இசை கூடும் வகை பாடும் அவர் நீடுலகம் ஆள்வர் தாமே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.133.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். ஏர்=அழகு; மேயவன்=நிலையாக பொருந்தி இருப்பவர்; காரினார்=மேகங்கள் தங்கும்; பாரினார்=உலகில் உள்ளவர்களால் போற்றப்படும்; சீர்= சிறப்பு; அழகு நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட காஞ்சி மாநகரில் உள்ள திருவேகம்பம் கோயிலில் நிலையாக உறையும் பெருமானை, மேகங்கள் தவழும் அழகிய மாடவீடுகள் ஓங்கி விளங்கும் கழுமல நகரத்தில் வாழ்பவனும் உலகத்தவரால் புகழப் படுபவனும் ஆகிய ஞானசம்பந்தன், புகழ்ந்து பாடிய பத்து பாடல்களையும் முறையாகக் கற்றுத் தேர்ந்து இனிய இசையுடன் பொருத்தி பாடும் அடியார்கள், இம்மையில் சிறந்த புகழுடன் ஓங்கி வாழ்ந்து, மறுமையில் தேவர்களுடன் சேர்ந்து வாழும் நிலையை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
ஏரினார் பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பம் மேயவனைக்
காரினார் மணி மாடமோங்கு கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார்
சீரினார் புகழ் ஓங்கி விண்ணவரோடும் சேர்பவரே
அனேகதங்காவதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.5.11) திருஞானசம்பந்தர், தன்னை, நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். கேள்வி என்பதற்கு ஸ்ருதி என்று பொருள் கொள்வது சிறப்பே. வாய்மொழியாக குருவிடமிருந்து சீடன் வேதங்களை கற்றுக் கொள்வதால் ஸ்ருதி என்ற பெயர் வந்தது. தொல்லை என்று பல ஊழிகளைத் தாண்டிய தலம் சீர்காழி என்பது உணர்த்தப் படுகின்றது. நல்லார்கள்=சிவனடியார்கள்;
தொல்லை ஊழிப் பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன்
அல்லல் தீர உரை செய்த அனேகதங்காவதம்
சொல்ல நல்ல அடையும் அடையா சுடு துன்பமே
கச்சி ஏகம்பம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.12.11) திருஞானசம்பந்தர், தன்னை தமிழ் ஞான சம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். அந்தண்=அழகும் குளிர்ச்சியும் பொருந்திய; பூங்கச்சி=அழகிய காஞ்சி நகரம்; பூங்காழி=அழகிய காழி நகரம்; கந்தண்=நீரும் குளிர்ச்சியும் கொண்ட; சந்தம்=இசைப் பாடல்; கலிக் கோவை=ஒலி மாலை; கலி=ஒலி; இசையுடன் தேவாரப் பாடல்களை பாடும் அடியார்கள் பண்டைய நாளில், அந்த இசைக்கேற்ப பாடியும் பெருமானைத் தொழுதார்கள் என்பதை நாம் இந்த பாடலிலிருந்து அறிகின்றோம்.
அந்தண் பூங்கச்சி ஏகம்பனை அம்மானைக்
கந்தண் பூங்காழி ஊரன் கலிக் கோவையால்
சந்தமே பாடல் வல்ல தமிழ் ஞானசம்
பந்தன் சொற் பாடியாடக் கெடும் பாவமே
கைச்சினம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.45.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். கண்ணுதலான்=நெற்றியில் கண் உடைய பெருமான்; மேவி=பொருந்தி; வியன்=அகன்ற; வியனுலகம்=எத்தனை உயிர்கள் வந்து சேர்ந்தாலும் இடம் அளிக்கக் கூடிய முக்தி உலகம்; பண்ணிசையால் ஏத்தி என்ற தொடர், திருஞானசம்பந்தரே, இந்த பாடல்களை உரிய பண்ணுடன் பாடினார் என்பதை உணர்த்துகின்றது.
தண் வயல் சூழ்க் காழித் தமிழ் ஞான சம்பந்தன்
கண்ணுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தைப்
பண்ணிசையால் ஏத்திப் பயின்ற இவை வல்லார்
விண்ணவராய் ஓங்கி வியனுலகம் ஆள்வாரே
கண்காட்டும் நுதலானும் என்று தொடங்கும் திருவெண்காட்டு பதிகத்தின் கடைப் பாடலில் (2.48.11) திருஞானசம்பந்தர், தன்னை தமிழ் ஞான சம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். தண்பொழில்=குளிர்ந்த சோலைகள்; சண்பை என்பது சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. விகிர்தன்=ஏனையோரிடமிருந்து மாறுபட்டவன்; பண்பொலி=பண்ணுடன் இசைந்து பாடுவதால் பொலிவு பெற்று விளங்கும்; பொலிவு=அழகு, சிறப்பு; இந்த பாடலில் சண்பையர் கோன் என்று தன்னை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். சீர்காழி நகரில் இருந்த தொண்டர்களும், மற்ற தலங்களில் இருந்த தொண்டர்களும் திருஞான சம்பந்தரை, சைவ சமயத்தின் தலைவனாக ஏற்றுக் கொண்ட தன்மை, இங்கே சண்பையர் கோன் என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தின் தலைவனாகிய தமிழ் ஞானசம்பந்தன், விண்ணில் பொலிவுடன் உலவும் வெண்மை நிறத்து பிறைச் சந்திரனைத் தனது தலையில் வைத்துள்ளவனும், பல தன்மைகளால் ஏனையோரிலிருந்து வேறுபட்டுள்ளவனும் ஆகிய இறைவன் உறையும் திருவெண்காடு தலத்தினை, பண்ணுடன் இசைத்துப் பாடுவதால் மேலும் அழகாக இனிமையாக விளங்கும் வண்ணம் இயற்றிய இந்த பத்து பாடல்களை பாடும் வல்லமை பெற்றவர், நிலவுலகில் மிகவும் சிறப்புடன் வாழ்ந்து, மறுமையில் சிவலோகத்திலும் சிறப்புடன் வாழ்வார்கள்.
தண் பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ் ஞான சம்பந்தன்
விண் பொலி வெண் பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார்
மண் பொலிய வாழ்ந்து அவர் போய் வான் பொலியப் புகுவாரே
திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.56.11) திருஞானசம்பந்தர், தன்னை, நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். எல்லி=இரவு; அருமறை=கற்பதற்கு அரிய நான்மறைகள்; இடைமருது தலம் இது தானோ என்று பதிகத்தின் (1.32) அனைத்துப் பாடல்களிலும் வினவியவாறு இடைமருது சென்று கொண்டிருந்த திருஞானசம்பந்தர், ஒரு இரவுப் பொழுதினில் இந்த திருக்கோயில் சென்றடைந்ததாக இந்த பாடல் நமக்கு உணர்த்துகின்றது. இந்த பதிகத்தின் பாடல்களில் திருக்கோயிலின் தன்மைகளை திருஞான சம்பந்தர் உணர்த்துவதால், இந்த தலம் சென்ற திருஞானசம்பந்தர் முதன்முதலில் திருக்கோயிலுக்கு சென்றார் என்பதையும் அப்போது இந்த பதிகம் அருளினார் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். எல்லி என்ற சொல்லுக்கு ஒளி என்று பொருள் கொண்டு, ஒளி மிகுந்து பொலிவுடன் விளங்கும் இடைமருது தலம் என்ற விளக்கமும் அளிக்கப் படுகின்றது. இந்த பாடலில் காணப்படும் துயரம் என்ற சொல்லுக்கு, உயிர்கள் மீண்டும்மீண்டும் பிறப்பெடுத்து அடைகின்ற துயரம் என்று பொருள் கொண்டு, அந்த துயரம் தீர்க்கப்படும் என்று அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, இந்த பதிகத்தினை ஓதுவோரும் கேட்போரும், பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுதலை அடைவார்கள் என்று உணர்த்தப் படுகின்றது. கற்கள் கொண்டு கட்டப்பட்ட அழகிய மாட வீடுகளை உடைய கழுமலம் நகரின் காவலனாக, தலைவனாக விளங்கிய ஞானசம்பந்தன், நன்மை தருவதும் கற்பதற்கு அரியதும் ஆகிய நான்கு மறைகளையும் கற்றவனும் தமிழ் மொழியில் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன், ஒரு இரவுப் பொழுதினில் இடைமருது தலத்து திருக்கோயில் வந்தடைந்து, தலத்து இறைவனைப் புகழ்ந்து பாடிய இந்த பத்து பாடல்களையும் முறையாக ஓதுவோரும் அவ்வாறு ஓதுவதை கேட்போரும், இம்மையில் தங்களது வாழ்வினில் துயரம் என்பதே இல்லாதவர்களாகவும் மறுமையில் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டவர்களாக நிலையான முக்தி உலகினில் நிலைத்து இருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான் நற்றமிழ் ஞானசம்பந்தன்
எல்லி இடைமருதில் ஏத்து பாடலிவை பத்தும்
சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே
பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.67.11), திருஞானசம்பந்தர், தன்னை, நற்றமிழ் ஞான சம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். நறை=தேன்; மறை வளரும் தமிழ் மாலை= வேதங்களுக்கு ஒப்பாக வைத்துக் கொண்டாடப்படும் தேவாரப் பதிகங்கள்; நிறை வளர் நெஞ்சினர்= குறை ஏதும் இன்றி நிறைவான மனத்துடன் இருத்தல். ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில் இருந்த சந்திரனுக்கு மறுவாழ்வு அளித்து வளரும் பிறைகள் உடையவனாக மாற்றி, தனது சடை முடியில் அணிந்து கொண்ட பெருமானை, பெரும்புலியூர் தலத்தில் உறையும் இறைவனை, தேன் நிறைந்த மலர்கள் கொண்ட சோலைகள் நிறைந்த சீர்காழி தலத்தில் வாழ்வானும் நற்றமிழ் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன், புகழ்ந்து பாடிய இந்த பாடல்களை, வேதங்களுக்கு ஒப்பான தன்மையையும் புகழினையும் உடைய பாடல்கள் என்று அனைவராலும் கருதப்படும் தமிழ் மாலைகளை, கற்றுத் தேர்ந்து வல்லவர்களாக விளங்கும் அடியார்கள், தங்களது துயரங்கள் முற்றிலும் நீக்கப்பட்டு, குறையேதும் இன்றி நிறைந்த மனத்தவர்களாக இம்மையில் வாழ்ந்து, மறுமையில் நீடிய பேரின்பத்தில் திளைத்து வாழ்வார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பிறை வளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை
நறை வளரும் பொழில் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி
நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடுலகத்து இருப்பாரே
அகத்தியான்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.76.11) திருஞானசம்பந்தர் தன்னை, ஞானம் மல்கு தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். ஆலும்=நடமாடும்; புடை=பக்கம், சூழ்ந்து; சூலப் படையினை நல்ல சூலப்படை என்று குறிப்பிடுகின்றார். தனது அடியார்களுடன் பிணைந்துள்ள, ஆணவம் மாயம் கன்மம் ஆகிய மூன்று விதமான மலங்களையும் அறுத்து ஒழிப்பது சூலப்படை என்று திருவாசகம் திருவெண்பா பதிகத்தில் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது.
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான் பள்ளியுள்
சூல நல்ல படையான் அடி தொழுது ஏத்திய
மாலை வல்லார் அவர் தங்கள் மேல் வினை மாயுமே
வாழ்கொளிபுத்தூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.94.11) திருஞானசம்பந்தர், தன்னை, நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். வலம் கொள்; மற்றவர்கள் வலமாக வந்து வணங்கப்படும் தன்மை உடைய; பண்டைய நாளில் தங்களில் உயர்ந்தவராக கருதப்படுவோரை வலம் வந்து வணங்குதல் பழக்கமாக இருந்தது போலும். போரினில் வென்றவர்களை தோற்றவர்கள் வலம் வந்து வணங்குதலும் பழக்கத்தில் இருந்து வந்தது. எனவே தான் மழுவாளினைத் தனது கையினில் கொண்டுள்ள பெருமான், அனைவராலும் வலம் வந்து வணங்கப் பட்டார் என்று திருஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார். வலம் கொள் வெண்மழுவாளன் என்ற தொடருக்கு தனது வலது கையினில் மழு ஆயுதத்தை உடையன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நறுமணம் நிறைந்த பூக்களை, இறைவனின் திருமேனியின் மீது தூவி வழிபடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதால், அத்தகைய மலர்களை அளிக்கும் சோலைகளை நலம் தரும் பூஞ்சோலைகள் என்று அழைக்கின்றார். நன்னெறி எய்துவர் என்று திருஞானசம்பந்தர் கூறுவது, நமச்சிவாய மந்திரத்தை ஓதுவதால் நன்னெறி அடையலாம், அதாவது என்றும் அழியாத பேரின்பத்தை அளிக்கும் முக்திநிலையினை அடையலாம் என்று அப்பர் பிரான் நமச்சிவாய திருப்பதிகத்தில் (4.11.10) கூறுவதை நமக்கு நினைவூட்டுகின்றது. தாருக வனத்து முனிவர்களால் பெருமான் மீது ஏவப்பட்ட மழு ஆயுதத்தை, பெருமான் செயலிழக்கச் செய்து தனது வலது கரத்தினில் மிகவும் இலாவகமாக ஏற்றுக் கொள்கின்றார். தனது ஆற்றலை இழந்து தோல்வி அடைந்த மழுவாள், பெருமானை வலம் வந்து சரண் அடைந்தது என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. நலம் தரும் பூஞ்சோலைகள் நிறைந்த காழி நகரத்தைச் சார்ந்தவனும், நன்றாக தமிழ் மொழியில் தேர்ச்சி அடைந்தவனும் ஆகிய ஞானசம்பந்தன், அனைவராலும் வலம் வந்து வணங்கப் படுபவனும் வெண்மழுவினைத் தனது வலது கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவனை, வாழ்கொளிபுத்தூர் தலத்தில் உறையும் இறைவனை, தனது சடையில் விளங்கித் தோன்றும் வண்ணம் பிறைச் சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை, புகழ்ந்து பாடிய இந்த பத்து தமிழ் பாடல்களையும் பாடும் வல்லமை பெற்றவர், அனைவர்க்கும் நன்மை பயக்கும் சிந்தையர்களாக மாறி, நன்னெறியில் ஈடுபடுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நலம் கொள் பூம்பொழில் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை
இலங்கு வெண் பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்
நலம் கொள் சிந்தையராகி நன்னெறி எய்துவர் தாமே
கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.24.11) திருஞானசம்பந்தர், தன்னை அருந்தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். கருந்தடம்=கரிய சேறு உடைத்து அகன்ற; கரிய சேறு நிறைந்த அகன்ற நீர்நிலைகளும், தேன் நிறைந்த மலர்கள் அதிகமாக காணப்படும் சோலைகளும் உடைத்து மிக்க வளத்துடன் விளங்கும் கழுமல நகரினில், பெரியதும் அகன்றதும் ஆகிய மார்பகங்களை உடைய பார்வதி தேவியுடன் உறைகின்ற எமது தலைவனை, அரிய தமிழ் மொழியில் வல்லவனாகிய ஞானசம்பந்தன் அருளிய செந்தமிழ் பாடல்கள் கொண்ட இந்த திருப்பதிகத்தை விரும்பி ஓதும் வல்லமை உடையவர்கள் விண்ணுலகை ஆளும் தகுதி படைத்தவர்களாக விளங்குவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே
நாகைக் காரோணம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.116.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞான சம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். கேள்வி=கேள்வி ஞானத்தினால் அறியப் படும் வேதங்கள்; வடமொழி வேதங்களிலும் வல்லவனாக தான் இருந்த தன்மையை திருஞான சம்பந்தர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். ஒழுகும்=நன்னெறியில் ஒழுகும்; வல்லவாறு= ஓதுவோரின் துயரங்களைத் தீர்க்கும் வல்லமை பெறும் வண்ணம், அனைவரையும் சிவநெறியில் ஈடுபடுத்தும் வண்ணம்;
மல்கு தண் பூம்புனல் வாய்ந்து ஒழுகும் வயற் காழியான்
நல்ல கேள்வித் தமிழ் ஞான சம்பந்தன் நல்லார்கள் முன்
வல்லவாறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ்
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே
திலதைப்பதி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.118.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். தலத்தின் பெயர் திலதைப்பதி; கோயிலின் பெயர் மதிமுத்தம்; மதிமுத்தர்=மதிமுத்தம் கோயிலில் பொருந்தி உறையும் இறைவன்; மந்தம்= தென்றல்; மந்தமாரும்=தென்றல் காற்று வீசும்; கந்தமாரும்=நறுமணம் நிறைந்த;
மந்தமாரும் பொழில் சூழ் திலதைம் மதிமுத்தர் மேல்
கந்தமாரும் கடற் காழி உள்ளான் தமிழ் ஞானசம்
பந்தன் மாலை பழி தீர நின்றேத்த வல்லார்கள் போய்ச்
சிந்தை செய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே
புனவாயில் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.11.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். பொற்றொடி=பொன் வளையல்கள்; கற்றவர்=வேதங்கள் மற்றும் சைவ ஆகமங்கள் கற்றுத் தேர்ந்தவர்; நற்றமிழ்=வீடுபேற்றை அருளி நன்மை செய்யும் வல்லமை வாய்ந்த தேவாரப் பாடல்கள்; அற்றம்=குற்றம், சொற்குற்றம் மற்றும் பொருட்குற்றம் ஏதும் இல்லாத தேவாரப் பாடல்கள்;
பொற்றொடியாள் உமை பங்கன் மேவும் புனவாயிலைக்
கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்ற கடற் காழியான்
நற்றமிழ் ஞான சம்பந்தன் சொன்ன தமிழ் நன்மையால்
அற்றமில் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே
பஞ்சாக்கரப் பதிகத்தின் கடைப் பாடலிலும் (3,.22.11), திருஞானசம்பந்தர், தன்னை நற்றமிழ் ஞான சம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். உன்னிய=நினைத்து பாடிய; அற்றம் இல் மாலை=கேடு அவமானம் முதலியன வாராமல் தடுக்கும். நற்றமிழ் ஞானசம்பந்தன்=நன்மைகளை தரும் பாடல்களை அருளிய ஞான சம்பந்தன். ஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்களை ஓதும் அடியார்கள் அடையும் பயன், பாச நீக்கம் மற்றும் சிவப்பேறு என்று சிவக்கவிமணியார் பெரிய புராண விளக்கம் புத்தகத்தில் கூறுகின்றார். நன்மைகள் புரியும் தமிழ் பாடல்களை அருளியவனும் நான்மறைகளை கற்றவனும், சீர்காழி நகரின் தலைவனும் ஆகிய ஞானசம்பந்தன், பெருமானை மனதினில் நினைத்து பாடிய பத்து பாடல்களை, ஓதுவோர்க்கும் கேடு அவமானம் முதலியன வருவதை தடுக்கும் பாடல்களை, அஞ்செழுத்தினை உள்ளடக்கிய பாடல்களை பாடும் வல்லமை பெற்றவர்கள் உயர்ந்தவர்கள் ஆவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நற்றமிழ் ஞானசம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே
திருவிற்கோலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.23.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். கூகம்=கூவம் நதி; கோடல்=வளைந்த ஒற்றைப் பிறை; சேடு=பெருமை;
கோடல் வெண் பிறையனைக் கூகம் மேவிய
சேடன செழு மதில் திருவிற் கோலத்தை
நாட வல்ல தமிழ் ஞான சம்பந்தன
பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே
திருந்துதேவன்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.25.11) திருஞான சம்பந்தர், தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். சேடர்=பெருமை உடையவர்கள்; நாட=விரும்பி; பெருமை உடைய சான்றோர்கள் வாழும் திருந்துதேவன் குடி தலத்தில் வாழும் தேவதேவனை புகழ்ந்து, ஓங்கிய மாடங்கள் மற்றும் குளிர்ந்த சோலைகள் நிறைந்த சீர்காழி நகரத்தினைச் சார்ந்தவனும் தமிழ் மொழியில் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன்,விருப்பத்துடன் பாடிய இந்த பத்து பாடல்களை ஓதும் வல்லமை வாய்ந்த அடியார்களுக்கு பாவங்கள் ஏதும் வந்து சேரா என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
சேடர் தேவன்குடி தேவர் தேவன் தனை
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்
நாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லையாம் பாவமே
சக்கரப்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.27.11) தன்னை செந்தமிழ் ஞான சம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். மெய்=உடல்; ஐம்புலன்களில் ஒன்றாகிய உடலினைக் குறிப்பிடுவதன் மூலம், மற்ற நான்கு புலன்களையும் திருஞானசம்பந்தர் இங்கே உணர்த்துவதாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. மெய்ப்பாவம் என்ற தொடருக்கும் உடலுடன் இணைந்த பாவம் என்று விளக்கம் அளிக்கப்பட்டு, நாம் செய்யும் பாவங்கள் வினைகளாக உயிர் பொருந்தியுள்ள உடலுடன் இணைந்து உயிருக்கு துன்பம் தரும் தன்மையை குறிப்பிடுகின்றது என்றும் அறிஞர்கள் உணர்த்துகின்றனர். மேலும் மனம் வாக்கு காயம் ஆகிய மூன்று கருவிகளால் செய்யப்படும் செயல்களில் உடலால் செய்யப்படும் செயல்களே வெளிப்படையாக தெரிவதால், மெய்ப்பாவம் என்று திருஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார் என்ற விளக்கமும் பொருத்தமானதே. நீர் வளம் மிகுந்ததால் குளிர்ந்து காணப்படும் வயல்கள் சூழ்ந்து அழகு செய்யும் சக்கரப்பள்ளி தலத்தில் உறைபவனும், நெற்றியில் கண் உடையவனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகளை, வளம் பொருந்திய கழுமலம் தலத்தினைச் சார்ந்தவனும் செந்தமிழ் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் சொன்ன இந்த பாடல்களை முறையாக பக்தியுடன் பாடும் அடியார்களின் ஐந்து புலன்களும் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தண்வயல் புடையணி சக்கரப்பள்ளி எம்
கண்ணுதல் அவனடிக் கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவை சொலப் பறையும் மெய்ப் பாவமே
நமச்சிவாயப் பதிகத்தின் கடைப் பாடலில் (3.49.11), திருஞானசம்பந்தர், தமிழ் ஞானசம்பந்தன் என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்றார், சந்தஸ்=வேதங்களுக்கு உரிய இசைப் பாகுபாடு; முதல் பதிகத்தின் கடைக்காப்பில் திருநெறிய தமிழ் என்று குறிப்பிட்ட அரு நெறிய மறை வல்லவனாகிய திருஞானசம்பந்தர், சந்தையால் தமிழ் என்று குறிப்பிட்டு, தனது வாழ்க்கையில் அருளிய முதல் பதிகம் மற்றும் தனது வாழ்வினில் அருளிய கடைப்பதிகம் ஆகிய இரண்டிலும் தேவாரப் பாடல்கள் தமிழ் வேதங்கள் என்பதை உணர்த்துகின்றார். திருவைந்தெழுத்தே நான்மறைகளின் சாரமாகவும் திருமுறைகளின் சாரமாகவும் இருக்கும் தன்மையையும் இந்த குறிப்புகளிலிருந்து நாம் உணரலாம். நமது வினைகளைக் குறைத்தும் அழித்தும் நன்மை புரியும் ஆற்றல் உடைய பெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய என்ற மந்திரத்தை, சந்தம் மிகுந்த தமிழ் பாடல்கள் கொண்டு ஞானசம்பந்தன் சொன்னவற்றை, முறையாகக் கற்றுணர்ந்து, தங்களது சிந்தை மகிழும் வண்ணம் பாடி, பரமனை புகழும் அடியார்கள், தங்களை உலகப் பொருட்களுடன் பிணைக்கும் பந்த பாசங்களிலிருந்து விடுபட்டு, முக்தி நிலை அடைவதற்கான பக்குவம் அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே
திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.57.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். ஒண் பிறை=சிறந்த ஒளி; மல்கு=விளங்கித் தோன்றும்; சென்னி=தலை; புனை=கூடிய, இணைந்த; விண் புனை மேலுலகம்=சுவர்கம்; பெருமானது அடியார்கள் சொர்கம் செல்லும் வாய்ப்பு அடைந்த போதிலும், வீடுபேறு பெற்று நிலையான, இன்பத்தில் ஆழ்ந்து இருப்பதையே விரும்புவார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம், விருப்பு வீடு என்று குறிப்பிடுகின்றார்.
ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரைச்
சண்பையர் தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
பண் புனை பாடல் பத்தும் பரவிப் பணிந்து ஏத்த வல்லார்
விண் புனை மேலுலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே
சாத்தமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலிலும் (3.58.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். சாத்தமங்கை என்பது தலத்தின் பெயர். அயவந்தி என்பது திருக்கோயிலின் பெயர். இமையோரிலும் முந்துவர் என்று, இமையோர் அடைய முடியாத வீடுபேற்றினை, பெருமானது அடியார்கள் அடைவார்கள் என்று குறிப்பிடுகின்றார். நிறை= மனம் ஒன்றி மனம் முழுவதும் சிவ சிந்தனையுடன் இருக்கும் தன்மை;
மறையினார் மல்கு காழித் தமிழ் ஞானசம்பந்தன் மன்னும்
நிறையினார் நீலநக்கன் நெடு மாநகர் என்று தொண்டர்
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும்
முறைமையால் ஏத்த வல்லார் இமையோரிலும் முந்துவரே
குடமூக்கு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.59.11), திருஞானசம்பந்தர், தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். விறல்=பெருமை; வெண் கொடிகள் அசைகின்ற ஓங்கி உயர்ந்த மாடங்கள் நிறைந்த பெருமையினை உடைய வெங்குரு என்று அழைக்கப்படும் சீர்காழி நன்னகரினைத் சார்ந்தவனும், அனைவருடன் நட்புடன் பழகும் தன்மை உடையவனும், சிறந்த புகழினை உடையவனும், தமிழ் மொழியில் நல்ல புலமை உடையவனும் ஆகிய திருஞானசம்பந்தன், நன்கு குளிர்ந்த குடமூக்கு தலத்தினில் உறையும் இறைவனின் திருவடிகளில் சேர்த்த தமிழ் பாடல்கள் பத்தினையும் முறையுடன் ஓதும் வல்லமை பெற்ற அடியார்கள், வானிலுள்ள சுவர்க்க லோகத்தை அடைந்து இன்பம் அடைவார்கள். அவர்களுக்கு முக்திப் பேறு கை கூடுவதும் மிக எளிதே என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன்னகரான்
நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல
தண் குடமூக்கு அமர்ந்தான் அடிசேர் தமிழ் பத்தும் வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே
திருவக்கரை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலிலும் (3.60.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். தண் புனல்=குளிர்ந்த நீர் கொண்ட கங்கை நதி; பிறை தோய்=சந்திரன் பதியும் வண்ணம் உயர்ந்த மாட வீடுகள் உடைய தன்மை; வண் பொழில்=வளம் வாய்ந்த சோலைகள்; தேவாரப் பாடல்களை பாடும் ஆற்றல் உடைய அடியார்கள் பாச நீக்கம் அடையப் பெற்று, தங்களது வினைகளிலிருந்தும் விடுதலை பெறுவார்கள் என்று கூறுகின்றார். பண்புனை=பண்ணுடன் பொருந்திய;
தண் புனலும் அரவும் சடை மேல் உடையான் பிறை தோய்
வண் பொழில் சூழ்ந்து அழகார் இறைவன் உறை வக்கரையைச்
சண்பையர் தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
பண்புனை பாடல் வல்லார் அவர் தம் வினை பற்றறுமே
கச்சி நெறிக்காரைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.65.11) திருஞானசம்பந்தர், தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். கண்ணாரும்=கண்ணுக்கு இனிமை தரும் வண்ணம் பசுமையான தோற்றம் கொண்ட; பெண்ணாரும்=பார்வதி தேவி பெண்ணின் வடிவத்தில் பொருந்திய தன்மை; தண்ணாரும்=குளிர்ந்த; பண்ணாரும்=பண்களுடன் பொருந்தி இணைந்த;
கண்ணாரும் கலிக் கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாரும் திருமேனிப் பெருமானது அடி வாழ்த்தி
தண்ணாரும் பொழில் காழித் தமிழ் ஞானசம்பந்தன்
பண்ணாரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே
வேட்டக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.66.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். தெண்டிரை=தெளிந்த நீரலைகள்; வயல் உடுத்த= வயல்களால் சூழப்பட்ட; தண்டலை=சோலை; கலிக்காழி=ஆரவாரம் மிகுந்த; ஒண் தமிழ்=சிறந்த தமிழ்; உண்டுடுப்பில் வானவரோடு=தேவர்கள் போன்று சிறந்த உணவு மற்றும் உடை உடையவர்களாக;
தெண்டிரை சேர் வயல் உடுத்த திருவேட்டக் குடியாரைத்
தண்டலை சூழ் கலிக்காழித் தமிழ் ஞானசம்பந்தன்
ஒண்டமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய்
உண்டு உடுப்பில் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே
சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.75.11) திருஞான சம்பந்தர் தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். வார்=மார்பு கச்சை; நங்கை=மகளிரில் சிறந்தவள்; சங்கரன்=நன்மையைச் செய்பவன்; சாரின்=வீதி முதலான இடங்கள்; மலி=மிகுந்த, மிகுந்த புகழ் என்பதை நிலையான புகழ் என்று பொருள் கொள்ளவேண்டும். கச்சை பொருந்திய மார்பங்களை உடையவளும், பெண்களில் சிறந்தவளும் ஆகிய உமை அன்னையுடன், அனைத்து உயிர்களுக்கும் நன்மை விளைவிப்பவனாகிய சங்கரன் மகிழ்ந்து உறைவதும், கடலலைகள் எழுப்பும் ஒலி போன்று ஆரவாரம் நிறைந்த ஒலிகள் வீதிகளிலிருந்து உயர்ந்து எழுந்து வானளாவச் செல்லும் சிறப்பினை உடையதும், ஆகிய சண்பை நகரின் மீது, உலகினில் நிலையான புகழினைக் கொண்டவனும் தமிழ் மொழியில் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் உரைத்த, சிறப்பு வாய்ந்த இந்த பத்து செந்தமிழ் பாடல்களை முறையாக ஓதும் அடியார்கள் சிவலோகத்தினை அடைவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
சாரின் முறல் தென் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல்
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரை செய்
சீரின் மலி செந்தமிழ்கள் செப்பும் அவர் சேர்வர் சிவலோக நெறியே
நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.83.11) திருஞானசம்பந்தர், தன்னை தமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். திரை=அலை; பரசு=மழு ஆயுதம்; விரை=நறுமணம்; செய்=வயல்; விதி=பிரமன்; காவிரி நதி தனது இரு கரைகளிலும் அலைகள் மோதும் வண்ணம் பாய்வதால் நீர்வளம் மிகுந்து செழிப்புடன் விளங்கும் திரு நல்லூர் தலத்தினில் உறைபவனும், மழு ஆயுதத்தைத் தனது கையில் ஏந்தியவனும் ஆகிய சிவபெருமானை, செழிப்பான வயல்கள் கொண்ட தோணிபுரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தின் தலைவனாகிய ஞானசம்பந்தன், போற்றி பாடிய இந்த இன்னிசை மாலையை உரிய இசையுடன் பொருத்தி பாடும் அடியார்கள், பிரமனால் சிறந்த நறுமணம் உடைய பூக்கள் கொண்டு வழிபடப்படும் சிவபெருமானின் திருவடிகளைச் சென்றடைந்து என்றும் அந்த திருவடிகளைப் பேணும் பேற்றினை பெறுவார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல்
பரசு தரு பாணியை நலம் திகழ் செய் தோணிபுர நாதன்
உரை செய் தமிழ் ஞானசம்பந்தன் இசை மாலை மொழிவார் போய்
விரை செய் மலர் தூவ விதி பேணுகதி பேறு பெறுவாரே
பந்தணைநல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.121.11) திருஞானசம்பந்தர் தன்னை, நற்றமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். பல்லிசை=பற்கள் பொருந்திய; பகு வாய்=அகன்று திறந்த வாய், மண்டையோடு; கல்லிசை=கற்பதனால் ஏற்படும் ஓசை; பல தரப்பட்ட மக்களும் ஏதேனும் கற்றுக் கொண்டே இருப்பதால் எழும் ஆரவாரம்; ஓவா=நீங்காத; நல்லிசை=நல்ல பெருமை; புல்லிசை= புன்மைத் தன்மையுடன் இணைந்த சொற்கள், புறச்சமயவாதிகளின் கீழ்மையான மொழிகள்; பொதுவாக பதிகத்தின் பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்கள் பற்றிய குறிப்பினை அளிப்பது திருஞான சம்பந்தரின் பழக்கம். இந்த பதிகத்தின் பத்தாவது பாடல் சிதைந்ததால், அத்தகைய குறிப்பினை நாம் காண முடியவில்லை. எனினும் புல்லிசை என்று சமணர்கள் மற்றும் புத்தர்களின் கீழ்த்தரமான பேச்சுகளை குறிப்பிட்டு அத்தகைய மொழிகளை புறக்கணிப்பவன் தான் என்பதை உணர்த்தி, நாமும் அவ்வாறே அத்தகைய மொழிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற அறிவுரை பதிகத்தின் கடைப் பாடலில் நமக்கு உணர்த்தப் படுகின்றது. பலவகை மக்களும் ஏதேனும் ஒரு கலையை கற்றுக்கொண்டே இருப்பதால் எழும் ஆரவாரம் ஓயாததும் தொன்மை வாய்ந்ததும் ஆகிய கழுமலம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களின் ஒன்று) தலத்தில் தோன்றியவனும், பெருமை உடையவனும், புறச்சமய வாதிகளின் கீழ்மைத் தன்மை மிகுந்த சொற்களைக் கேளாதவனும், நன்மை செய்யும் தமிழ் பாடல்களை அருளுபவனும் ஆகிய ஞான சம்பந்தன், பற்களுடன் கூடி பிளந்த வாயினை உடைய மண்டையோட்டினை ஏந்தி பிச்சை ஏற்கும் பெருமானை, பந்தணைநல்லூர் தலத்து இறைவனைப் புகழ்ந்து சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்லும் வல்லமை உடையவார்கள் மேல், அவர்களைத் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பழைய வினைகள் சூழாது; ஏற்கனவே சூழ்ந்து இருக்கும் தொல்வினைகளும் நீங்கும் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
கல்லிசை பூண கலையொலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்
நல்லிசையாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம்பந்தன்
பல்லிசை பகுவாய்ப் படுதலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்
சொல்லிய பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழ கிலாவே
திருநாரையூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.102.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். தண்மதி=குளிர்ந்த சந்திரன்; தாழ்=தவழும்; குளிர்ந்த சந்திரன் தவழ்கின்ற சோலைகளை உடையதும் புகலி என்று அழைக்கப் படுவதும் ஆகிய சீர்காழி நகரினில் அவதரித்த, தமிழ் மொழி வல்லவனாகிய ஞானசம்பந்தன், ஒளியுடன் விளங்கும் பிறைச்சந்திரனைத் தனது சடையில் மீது வைத்துள்ளவனும் திருநாரையூர் தலத்தில் உறைபவனும் ஆகிய பெருமானின் மீது அருளியதும், ஓதும் அடியார்களுக்கு இசையறிவினை ஊட்டும் பத்து பாடல்களையும் இடைவிடாது ஓதும் அடியார்கள், தங்களது வினைகளை முற்றிலும் நீக்கிக் கொள்வார்கள்; மண்ணுலக வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்ந்த அவர்கள் இந்த உலகினில் தொடர்ந்து வாழ்வதை விரும்பாதவர்களாக இருப்பதால், அவர்கள் வானோர்கள் எதிர்கொள்ள, சிறப்பான முறையில் வானுலகம் சென்று சேர்வார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ் ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர் சடையான் உறையும் திருநாரையூர் தன் மேல்
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி
மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர் கொளவே
வலம்புரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.103.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று சொல்லிக் கொள்கின்றார். வல்லியம்=புலி; நல்லியல்=நல்லொழுக்கம்; புகலி=சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று; செல்வன்=வேறு எவராலும் அளிக்க முடியாத சிறந்த முக்திச் செல்வத்தை உடைய பெருமான்; நல்லொழுக்கம் உடையவர்களாய் நான்கு மறைகளையும் கற்ற வல்லவர்கள் வாழ்கின்ற புகலி எனப்படும் தலத்தில் பிறந்தவனும், தமிழ் மொழியினில் நல்ல தேர்ச்சி பெற்றவனும் ஆகிய ஞானசம்பந்தன், புலித்தோலை ஆடையாக உடுத்திய பெருமானும் வலம்புர நன்னகரினில் உறைபவனும் ஆகிய சிவபெருமானை புகழ்ந்து குறிப்பிட்ட பத்து பாடல்களையும் நன்கு கற்றறிந்து பொருளுணர்ந்து மனம் ஒன்றி, பொருத்தமான பண்ணுடன் இணைத்து பாடும் வல்லமை பெற்றவர்கள், தங்களது பழவினைகள் முற்றிலும் தீர்க்கப் பெற்று, உயர்ந்த முக்திச் செல்வத்தை உடைய செல்வனாகிய பெருமானின் திருவடிகளைச் சார்ந்து என்றும் அழியாத இன்பத்தில் திளைத்திருப்பார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
நல்லியல் நான்மறையோர் புகலித் தமிழ் ஞான சம்பந்தன்
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன்னகரை
சொல்லிய பாடல்கள் பத்தும் வல்லவர் தொல்வினை போய்ச்
செல்வன சேவடி சென்று அணுகிச் சிவலோகம் சேர்வாரே
பரிதிநியமம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.104.11) திருஞானசம்பந்தர், தன்னை, தமிழ் ஞானசம்பந்தன் என்று குறிப்பிடுகின்றார். பையரவம்=படம் எடுக்கும் நாகம்; விம்மு=தழைத்து வளரும்; பொய்யிலி மாலை என்ற தொடருக்கு இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். இந்த பதிகம் உணர்த்தும் பொருள் என்றும் உண்மையாக நிலையாக நிலைத்து நிற்கும் என்றும், பெருமான் பால் உண்மையான அன்பு கொண்டு திருஞானசம்பந்தர் அருளிய பாடல் என்றும் பொருள் கொள்ளலாம். மேலும் பொய்யிலி என்பது பெருமானின் திருநாமங்களில் ஒன்றாகும். உலகில் உள்ள அனைத்து பொருட்களும் உயிர்களும் ஒரு நாள் அழியும் நிலையில் உள்ளன. ஆனால் பெருமானோ என்றும் அழியாத உண்மைப் பொருளாக விளங்குகின்றார் என்பதை உணர்த்தும் பொருட்டு பெருமானுக்கு இந்த திருநாமம் அமைந்துள்ளது. எனவே பொய்யிலியாகிய பெருமானின் புகழினை உணர்த்தும் வண்ணம் புனைந்த பாடல் என்றும் பொருள் கொள்வதும் சிறப்பே. பூந்துருத்தி தலத்தில் உறையும் பெருமானின் திருநாமம் பொய்யிலி; படமெடுக்கும் பாம்பினைப் போன்று விரிந்த மலரினை உடைய காந்தள் செடிகள் செழித்து மலரும் சோலைகள் நிறைந்த பரிதி நியமத்துத் தலைவனும், அன்னை பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்த வண்ணம் உறைபவனும் ஆகிய சிவபெருமானை, தமிழ் மொழியில் வல்லவனாகிய ஞானசம்பந்தன் உண்மையான அன்புடன் இறைவனைப் புகழ்ந்து புனைந்த பாமாலையில் உள்ள பத்து பாடல்களையும் பாடி இறைவனைத் தொழும் அடியார்கள் பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபடுவது திண்ணம். இதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. மேலும் அவர்கள் இந்த நிலவுலக வாழ்வினில் துன்பம் ஏதுமின்றி இன்பமுடன் வாழ்வார்கள் என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.
பையரவம் விரி காந்தள் விம்மும் பரிதிந் நியமத்து
தையலொர் பாகம் அமர்ந்தவனைத் தமிழ் ஞானசம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்து ஏத்த
ஐயுறவில்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே
பொழிப்புரை:
தனது சடை மேல் பொலிந்து விளங்கும் பிறைச் சந்திரனை உடையவனும், ஏனையோரிலிருந்து மாறுபட்ட சதுரப்பாடு உடையவனும் ஆகிய வியலூர் இறைவனை, புகலி நகரினைத் தனது இடமாகக் கொண்டுள்ள தமிழ் அறிஞன் ஞானசம்பந்தன் சொன்ன, என்றும் வளமுடன் விளங்கும் தமிழ்ப் பாடல்களை பாடி இறைவனைத் தொழுது புகழ்ந்து போற்றும் அடியார்கள், நிலையான புகழோடு இம்மையில் வாழ்ந்து, மறுமையில் உயர்ந்த சிறப்பு வாய்ந்த சிவலோகம் அதனைத் தனது இடமாகக் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
முடிவுரை;
பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் சன்னதியில் பகைமை உணர்ச்சிக்கு இடமில்லை என்று குறிப்பிட்டு, பாம்பு, கங்கை நதி, சந்திரன் ஆகியோர் தம்மிடையே உள்ள பகையை மறந்து சடையில் உறைவதாகவும் அந்த காட்சியைக் கண்டு தலை மாலையில் உள்ள தலை நகைப்பதாகவும் நகைச்சுவை உணர்வு தோன்ற திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஒப்பற்ற ஒருவனாக விளங்கும் பெருமான், பல திருவிளையாடல்கள் புரிந்து இருபத்தைந்து மூர்த்தங்களாகவும் அறுபத்துநான்கு மூர்த்தங்களாகவும் விளங்கும் நிலை இரண்டாவது பாடலில் உணர்த்தப் படுகின்றது. மூன்றாவது பாடலில், தாருகவனத்து முனிவர்களின் இல்லங்கள் தோறும் பலி கேட்டுச் சென்ற பெருமான் என்று குறிப்பிட்டு முனிவர்களின் போக்கினை மாற்றி அருள் புரிந்தமை உணர்த்தப் படுகின்றது. நான்காவது பாடலில் அடியார்கள் தொழ பிச்சையேற்கும் பெருமான் என்று குறிப்பிட்டு இன்றும் பெருமான் பிச்சை ஏற்று உலகெங்கும் திரிகின்றான் என்றும் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு நமது மலங்களை அவனது பிச்சைப் பாத்திரத்தில் இட்டு நாம் உய்வினை அடையவேண்டும் என்ற செய்தி குறிப்பால் உணர்த்தப் படுகின்றது. ஐந்தாவது பாடலில் தன்னை தியானிக்கும் உயிர்களுக்கு அந்த தியானத்தின் பயனாக இறைவன் விளங்கும் நிலை குறிப்பிடப்பட்டு இறைவனை நாம் தியானித்து பயனடைய வேண்டும் என்ற அறிவுரை கூறப்படுகின்றது. இறைவனை நோக்கி தியானம் செய்த அர்ஜுனன் பெற்ற பயன் ஆறாவது பாடலில், முந்தைய பாடலில் அடங்கிய செய்திக்கு எடுத்துக்காட்டாக சொல்லப் படுகின்றது. ஏழாவது பாடலில் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களாக விளங்கி சர்வ வியாபியாக இறைவன் இருக்கும் நிலை உணர்த்தப் படுகின்றது. எட்டாவது மற்றும் ஒன்பதாவது பாடல்கள் இராவணன், பிரமன் திருமால் ஆகியோர் தமது செருக்கு நீங்கி வழிபட்ட போது இறைவன் அவர்களுக்கு அருளிய தன்மை குறிப்பிடப்பட்டு, செருக்கு ஏதுமின்றி இறைவனை நாம் வழிபடவேண்டும் என்று திருஞானசம்பந்தர் அறிவுரை கூறுகின்றார். பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்கள் கூறும் தவறான உரைகளை பொருட்படுத்தாமல் பெரியோர்கள் இருப்பார்கள் என்று குறிப்பிட்டும், இந்நாளில் மாற்று மதத்தவர்கள் பெருமானைக் குறித்து சொல்லும் இழி சொற்களை நாம் பொருட்படுத்தாமல், சிவபெருமானைத் தொடர்ந்து தொழவேண்டும் என்றும் திருஞானசம்பந்தர் உணர்த்துகின்றார். ஏனையோரிலிருந்து எவ்வாறு இறைவன் மாறுபட்டவன் என்று கடைப்பாடலில் உணர்த்தும் திருஞானசம்பந்தர், இந்த பதிகத்தை ஓதி இறைவனின் புகழினைப் பாடும் அடியார்கள் சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று கூறுகின்றார். வியலூர் விகிர்தனின் வித்தியாசமான அருட் குணங்களை அறிந்து கொண்டு, பெருமானை போற்றி வணங்கி, இம்மையில் புகழுடன் வாழ்ந்து மறுமையில் சிவலோகம் சென்று சேர்வோமாக.
குரவங்கமழ் நறுமென் (Kuravangamazh Narumen) is a poetic phrase in Tamil that evokes rich imagery and sensory experience, typically found in classical Tamil literature and devotional hymns. Let’s break it down:
குரவம் (Kuravam): Refers to the Kuravam flower, which is the Pandanus flower, known for its strong, sweet fragrance. The Kuravam flower is often associated with beauty, fertility, and love in Tamil literature.
கமழ் (Kamazh): Means fragrance or scent. It refers to the pleasant smell that emanates from something, typically flowers or sandalwood in poetic descriptions.
நறு (Naru): Means strong or sweet when referring to fragrance, enhancing the richness of the scent.
மென் (Men): Refers to something soft or gentle. Here, it describes the softness and delicacy of the fragrance.
"குரவங்கமழ் நறுமென்" can be translated as "the soft and sweet fragrance of the Kuravam flower." It is a poetic expression that brings out the imagery of a gentle, pleasing, and aromatic scent wafting through the air.
In classical Tamil poetry, particularly Sangam literature and devotional texts, such descriptions are used to convey the beauty of nature, divine presence, or the atmosphere of a sacred place. Flowers like the Kuravam are often used as symbols of natural beauty, spiritual purity, and love. Their fragrance represents the divine blessings or the bliss that a devotee experiences in the presence of the divine.
In devotional poetry, the phrase could be part of a description of a deity's surroundings or the environment of a temple, where the air is filled with the fragrance of sacred flowers, symbolizing purity and divine presence.
Thus, "குரவங்கமழ் நறுமென்" paints a picture of a serene, fragrant, and spiritually charged atmosphere, often associated with temples, gardens, or natural settings where divinity is felt.